மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2 பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 2 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 512 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 480/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1974ஆம் ஆண்டு வெளியிட்ட கொங்குநாட்டு வரலாறு - பழங்காலம் - கி.பி. 250வரை எனும் நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மகேந்திர வர்மன்(1955) வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1957), மூன்றாம் நந்தி வர்மன்(1958) ஆகிய நூல்களை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்நூல்களில் காணப்படும் பல்லவ மன்னர்களின் வரலாறு இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலமாக வெளிவந்த தமிழ்நாடு - சங்ககாலம் - அரசியல் என்ற நூலில் இலங்கையில் தமிழர் என்ற ஒரு பகுதியை மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் எழுதியுள்ளார். அப்பகுதியும் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொருண்மை யோடு தொடர்புள்ள வேறுசில பத்திரிகைக் கட்டுரைகளும் இத்தொகுதியில் சேர்க்கப் பட்டுள்ளன. பண்டைத் தமிழ்ச்சமூகம் துளு நாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வரலாறுகள் உண்டு. இவற்றுள் கொங்கு நாடு என்பது பல்வேறு வளங்களைக் கொண்ட நிலப்பதியாகும். இப்பகுதி குறித்து தமிழில் பலரும் பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப் பட்டுள்ளன. தமிழகத்தின் வேறுபகுதிகளுக்கு மிகக் குறைந்த அளவில் வரலாறு எழுதப்பட்டிருந்தாலும் கொங்குநாடு தொடர்பாகவே விரிவாகஎழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கான காரணம் இப்பகுதி தொடர்பான விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதே ஆகும். இப்பகுதியில்தான் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர். கோசர் போன்ற பல்வேறு குடிகளும் இப்பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு கூறுகளைக் கொங்குநாட்டு வரலாற்றின் மூலமாகவே அறிய முடிகிறது. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என அனைத்து மன்னர்களும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தியதை அறிகிறோம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல்லவ வரலாறு, கொங்கு நாட்டு வரலாற்றிற்கு அடுத்த நிலையில் அமைவதாகும். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், ஆகியவர்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய வரலாறு தனித்த நிலையில் கூறத் தக்கதாகும். தமிழில் அவரே விரிவான பதிவுகளை முதல் முதல் செய்தவர் எனலாம். பல்லவ மன்னர்களின் அனைத்து அம்சங்களையும் மேற்குறித்த நூல்களில் அவர் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் மன்னர்களின் வரலாறு தொடர்பானவை மட்டும் தனித்து கொடுக்கப் பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய செய்திகள் இப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96 ஏப்ரல் 2010 தங்கள் வீ. அரசு தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் பண்டைத் தமிழக வரலாறு முன்னுரை 1. கொங்குநாட்டு வரலாறு 25 2. கொங்கு நாட்டு குறுநில மன்னர்கள் 53 3. கொங்குநாட்டில் சேரர் ஆட்சி 69 4. அந்துவஞ்சேரல் இரும்பொறை 71 5. செல்வக் கடுங்கோ வாழியாதன் 74 6. பெருஞ்சேரல் இரும்பொறை 83 7. குட்டுவன் இரும்பொறை 89 8. இளஞ்சேரல் இரும்பொறை 94 9. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 105 10. கணைக்கால் இரும்பொறை 112 11. செங்கட்சோழன் கணைக்கால் இரும்பொறைகாலம் 116 12. வேறு கொங்குச் சேரர் 121 13. இரும்பொறை அரசரின் ஆட்சி முறை 129 14. கொங்கு நாட்டுச் சமயநிலை 131 15. பயிர்த்தொழில் கைத்தொழில் வாணிபம் 136 16. அயல்நாட்டு வாணிகம் 140 17. கொங்கு நாட்டுப் புலவர்கள் 152 18. கொங்கு நாட்டுச் சங்க நூல்கள் 169 19. சங்க காலத்துத தமிழெத்து 175 20. கொங்கு நாட்டுப் பிராமி எழுத்துச சாசனங்கள் 178 தமிழ் நூல்கள் பல்லவர் 1. மகேந்திரவர்மன் 208 2. வேறு அரசர்கள் 215 3. சமயநிலை 228 நரசிம்மவர்மன் 1. நரசிம்மவர்மன் 244 2. வேறுஅரசர்கள் 254 3. சமயம் 270 4. சைவசமய அடியார்கள் 273 5. வைணவ ஆழ்வார்கள் 280 6. தமிழ் இலக்கியம் 296 7. வற்கடம் 301 மூன்றாம் நந்திவர்மன் 1. மூன்றாம் நந்திவர்மன் 307 2. வேறுஅரசர்கள் 324 3. சமயநிலை 346 பாண்டியர் 1. பாண்டியர் 375 இலங்கை வரலாறு 1. இராவணன் இலங்கை 439 2. இலங்கைத் தீவில் தமிழ்நாட்டுத் தெய்வங்கள் 447 3. சங்க கால தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும் 458 4. இலங்கையில் தமிழர் 463 பண்டைத் தமிழக வரலாறு கொங்கு நாடு - பல்லவர் - இலங்கை வரலாறு குறிப்பு: கொங்கு நாட்டு வரலாறு (1974) எனும் தலைப்பில் வெளியிட்ட நூல் இத்தொகுதியில் இடம் பெறுகிறவை. முன்னுரை கொங்கு நாடு ஆதிகாலம் முதல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடைய முடியாது. தமிழ் நாட்டின் சரித்திரம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரையும் தொடர்ந்து முழுமையாக எழுதப்படாதது போலவே கொங்கு நாட்டின் சரித்திரமும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இதுவரையில் எழுதப்படவில்லை. அங்கும் இங்குமாகச் சில சரித்திரப் பகுதிகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. அவ்வளவுதான். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழகத்தின் வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. சங்ககாலத்துத் தமிழகம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்பவை, துளு நாடு, அரபிக் கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே சேர நாட்டுக்கு வடக்கே இருந்தது. இப்போது அது தென் கன்னட வட கன்னட மாவட்டங்களில் அடங்கி மைசூர் (கன்னட) தேசத்தில் சேர்ந்து இருக்கிறது. துளு நாட்டுக்குத் தெற்கே அரபிக் கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே சேரநாடு இருக்கிறது. பழைய சேர நாடு இப்போது மலையாள நாடாக மாறிக் கேரள இராச்சியமாக அமைந்திருக்கிறது. துளு நாடும் சேரநாடும் பிற்காலத்தில் தமிழகத்தி லிருந்து தனியாகப் பிரிந்து போய்விட்டன. பாண்டி நாடு தமிழகத்தின் தெற்கே, வங்காளக்குடாக் கடல், இந்துமா கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களுக்கிடையே இருக்கிறது. பாண்டி நாட்டுக்கு வடக்கே, வங்காளக்குடாக் கடல் ஓரமாகச் சோழநாடு இருக்கிறது. சோழ நாட்டுக்கு வடக்கே வங்காளக்குடாக் கடலையடுத்துத் தொண்டை நாடு இருக்கிறது. தொண்டை நாடு வடபெண்ணை ஆறு வரையில் இருந்தது. இவ்வாறு துளுநாடும் சேரநாடும் பாண்டிய நாடும் சோழநாடும் தொண்டை நாடும் கடற்கரையோரங்களில் அமைந்திருந்தன. ஆறாவது பிரிவாகிய கொங்கு நாடு கடற்கரை இல்லாத உள் நாடு. அது இப்போதைய பழனிமலை வட்டாரத்திலிருந்து வடக்கே கன்னட நாட்டில் பாய்கிற காவிரி ஆறு வரையில் (ஸ்ரீரங்கப்பட்டணம் வரையில்) பரந்திருந்தது, அதனுடைய மேற்கு எல்லை, மேற்குத் தொடர்ச்சி மலைகள். கிழக்கு எல்லை, சோழ தொண்டை நாடுகளின் மேற்கு எல்லைகள். சங்க காலத்திலே பெரிய நிலப்பரப்பாக இருந்த கொங்கு நாடு பிற்காலத்திலே குறைந்து குறுகிவிட்டது. சங்க காலத்திலே, பெரிய பரப்புள்ளதாக இருந்த கொங்கு நாட்டைச் சிறுசிறு குறுநில மன்னர்கள் அரசாண்டார்கள் .சேர, சோழ, பாண்டியரைப்போல முடிதரித்து அரசாண்ட பெருமன்னர் அக் காலத்தில் கொங்கு நாட்டில் இல்லை. சிறுசிறு ஊர்களைச் சிற்றரசர் பலர் அரசாண்டு வந்தனர். அந்தச் சிற்றரசர்களை வென்று கொங்கு நாட்டைக் கைப்பற்றி அரசாளச் சேரரும் பாண்டியரும் சோழரும் முயன்றார்கள். ஆகவே, சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே பல போர்கள் நடந்தன. கடைசியில், சேர அரசர் கொங்கு நாட்டில் கால் ஊன்றினார்கள். பிறகு அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொங்கு இராச்சியத்தை யமைத்து அரசாண்டார்கள். கொங்கு நாட்டை யரசாண்ட சேரர், இளையகால் வழியினரான பொறையர். அவர்களுக்கு இரும்பொறை என்றும் பெயர் உண்டு. மூத்தக் கால் வழியினரான சேரர் சேர நாட்டையும், இளைய கால் வழியினரான பொறையர் கொங்கு நாட்டையும் அரசாண்டார்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் சேர நாட்டையாண்ட சேர அரசரே கொங்கு நாட்டையும் அரசாண்டார்கள் என்று தவறாகக் கருதிகொண்டு அவ்வாறே சரித்திரம் எழுதியுள்ளனர். அவர் கூற்று தவறானது. ஒரே குலத்தைச் சேர்ந்த மூத்த வழி, இளைய வழியினராக இருந்தாலும், சேர நாட்டை யாண்ட சேர அரசர் வேறு, கொங்கு நாட்டை யரசாண்ட பொறைய அரசர் வேறு. கொங்கு நாட்டு வரலாற்றின் சரித்திரக் காலம், இப்போது கிடைத்துள்ள வரையில், ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிறது. கி. பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிற கொங்கு நாட்டுச் சரித்திரம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் (ஏறத்தாழ கி. பி. 250இல்) முடிகிறது. அதாவது, தமிழ்நாடு களப்பிர அரசருக்குக் கீழடங்கியபோது கொங்கு நாட்டுச் சரித்திரத்தின் பழைய வரலாறு முடிவடைகிறது. ஒரு நாட்டின் வரலாறு எழுதுவதற்கு நல்ல சான்றுகளாக இருப்பவை ஆர்க்கியாலஜி (பழம்பொருள் அகழ்வாராய்ச்சி), எபிகிராபி (சாசன எழுத்துக்கள்), நூமிஸ்மாட்டிக்ஸ் (பழங்காசுகள்), இலக்கியச் சான்றுகள் முதலானவை. கொங்கு நாட்டுப் பழைய சரித்திரம் எழுதுவதற்கு இந்தச் சான்றுகளில், இலக்கியச் சான்றுகளைத் தவிர, ஏனைய சான்றுகள் மிகமிகக் குறைவாக உள்ளன. அகழ்வராய்ச்சி (ஆர்க்கியாலஜி) கொங்கு நாட்டில் தொடங்க வில்லை என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய மண்டலங் களில் ஆர்க்கியாலஜி முறையாகவும் தொடர்ந்தும், முழுமையுமாகச் செயற்படாமலிருப்பது போலவே, கொங்கு மண்டலத்திலும் ஆர்க்கியாலஜி அதிகமாகச் செயற்படவில்லை. ஆகவே, ஆர்க்கியா லஜி சான்றுகள் நமக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை. எபிகிராபி (பழைய சாசன எழுத்துச் சான்று) ஓரளவு கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கிற படியால் நம்முடைய கொங்கு நாட்டுப் பழைய சரித்திரத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கின்றன. பிராமி எழுத்துச் சாசனங்கள், கொங்கு நாட்டில் உள்ளவை, முழுமையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. கிடைத்திருக்கிற பிராமி எழுத்துச் சாசனங்களும் அக்காலத்து அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறவில்லையாகையால் இவையும் நமக்கு அதிகமாகப் பயன்படவில்லை. ஆனால், இந்தச் சாசன எழுத்துகள் அக்காலத்துச் (மத) சமயங்கள் சம்பந்தமாகவும் சமூக வரலாறு சம்பந்தமாகவும் நமக்குப் பயன்படுகின்றன. கொங்கு நாட்டில் கிடைத்துள்ள பெரும்பான்மையான பிற்காலத்து வட்டெழுத்துச் சாசனங்கள் நம்முடைய பழங்கால ஆராய்ச்சிக்குப் பயன்பட வில்லை. நூமிஸ்மாட்டிக்ஸ் என்னும் பழங்காசுச் சான்றுகள் கிடைத்திருக் கிற போதிலும், இவை கொங்கு நாட்டுக்கேயுரிய பழங்காசுகளாக இல்லாமல், உரோமாபுரி நாணயங்களாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழங்காசுகளிலிருந்து கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தையறிய முடியவில்லை. ஆனால், இந்த ரோமாபுரிப் பழங்காசுகள் அக்காலத்துக் கொங்கு நாட்டின் வாணிக வரலாற்றை யறியப் பயன்படுகின்றன. இவ்வளவு குறைபாடுகள் உள்ள நிலையில் கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தை எழுத வேண்டியிருக்கிறது. இப்போது கிடைத்துள்ள ஒரே கருவி சங்க இலக்கியங்கள் மட்டுமே. சங்க இலக்கியம் என்பவை எட்டுத்தொகை நூல்களாகும். அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்பவை எட்டுத்தொகை நூல்களாம். எட்டுத் தொகையில் பதிற்றுப்பத்தும், புறநானூறு, அகநானூறும், நற்றிணையும் ஆகிய நான்கு நூல்கள் கொங்கு நாட்டுப் பழைய சரித்திர ஆராய்ச்சிக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்த நான்கு நூல்களின் உதவியும் சான்றும் இல்லாமற்போனால் கொங்குநாட்டின் பழைய வரலாறுகள் கொஞ்சமும் தெரியாமல் அடியோடு மறைந்து போயிருக்கும். நற்காலமாக இந்த நூல்களில் கொங்குநாட்டின் பழைய வரலாற்றுச் செய்திகள்அங்கும் இங்குமாகக் காணப்படுகின்றன. அவை முறையாக அமையாமல் அங்கும் இங்குமாக ஒவ்வோரிடங்களில் குறிக்கப் பட்டுள்ளன. வரலாறு கூறுவது என்பது இந்தப் பழைய இந்நூல்களின் நோக்கம் அன்று. தங்களைப் போற்றிப் புரந்த அரசர், சிற்றரசர் முதலானோரைப் புகழ்ந்து பாடிய செய்யுள்களாக அமைந்துள்ள இந்தப் பழைய நூல்களில் சரித்திர வரலாற்றுச் செய்திகளும் தற்செயலாக இடம் பெற்றிருக்கின்றன. இந்த வரலாற்றுச் செய்திகளைத் தக்க முறையில் ஏனைய செய்திகளுடன் பொருத்தி ஆராய்ந்து, வரலாற்றை அமைக்க வேண்டியது சரித்திரம் எழுதுவோரின் கடமையாகிறது. கொங்குநாட்டுப் பழைய வரலாறு எழுதுவதற்குப் பெருந் துணையாக இருக்கிற இந்த நூல்களைப் பற்றிச் சிறிது கூறுவோம். பதிற்றுப்பத்து சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்து, சங்க காலத்துச் சேர அரசர்கள் மேல் பாடப்பட்டது. ஒவ்வொரு அரசன் மேலும் பத்துப்பத்துச் செய்யுளாகப் பத்து அரசர் மேல் பாடப்பட்டபடியால் இது பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது. இப்போது கிடைத்துள்ள பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் பத்தாம் பத்தும் காணப்படாதபடியால் எட்டுப் பத்துக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே, பதிற்றுப்பத்தில் எட்டு அரசர்களைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கின்றது. சேர நாட்டு அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப் பத்துக் கும் கொங்குநாட்டு வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று கேட்கலாம்; இப்போது பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கிறபடி, பதிற்றுப்பத்து சேர நாட்டு வரலாற்றை மட்டுங் கூறவில்லை; கொங்குநாட்டு வரலாற்றையுங் கூறுகிறது. முதல் ஆறு பத்துகள் சேர நாட்டுச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. அடுத்த நான்கு பத்துகள், கொங்கு நாட்டையாண்ட கொங்குச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உண்மையை இது வரையில் சரித்திரக்காரர்கள் உணரவில்லை. பதிற்றுப்பத்து அரசர்களை மூத்தவழியரசர் என்றும் இளைய வழியரசர் என்றும் இருபிரிவாகப் பிரிக்கலாம் மூத்த வழியரசர்கள் சேர நாட்டை யரசாண்டார்கள். இளைய வழியரசர்கள் கொங்குநாட்டை யரசாண்டார்கள். கொங்கு நாட்டை யரசாண்ட இளையவழி யரசர் களுக்குக் கொங்குச் சேரர் என்று பெயர் கூறலாம். சங்க இலக்கியங் களில் அவர்கள் பொறையர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆனால், மூத்த வழிப் பரம்பரையாருக்கும் இளையவழிப் பரம்பரையாருக்கும் கொங்குநாட்டுச் சரித்திரத்தில் பெரும் பங்கு உண்டு. மூத்த வழியைச் சேர்ந்த சேர அரசர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிச் சேர சாம்ராச்சியத்தோடு (சேரப் பேரரசோடு) இணைத்துக் கொள்ள பல காலம் முயன்றனர். கொங்கு நாடு, சேர இராச்சியத்துக்கு அடங்கிய பிறகு சேர அரசர்களின் இளைய பரம்பரையார் கொங்கு நாட்டில் வந்து தங்கி கருவூரைத் தலைநகரமாக அமைத்துக்கொண்டு கொங்குச் சேரர் என்னும் பெயர் பெற்றுக் கொங்கு நாட்டை யரசாண்டார்கள். இந்த வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணையாக இருப்பது பதிற்றுப்பத்து. முக்கியமாக 7, 8, 9 ஆம் பத்துகள் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றை அறிவதற்கு உதவியாக உள்ளன. புறநானூறு புறநானூறு சங்க காலத்திலிருந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் மேலும், சிற்றரசர்கள் மேலும் புலவர்கள் அவ்வப் போது பாடிய செய்யுள்களின் தொகுப்பு ஆகும். புறநானூற்றுச் செய்யுள்களில் சேர அரசரைப் பற்றிய செய்யுள்களும் உள்ளன. கொங்குச் சேரர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கூறப்பட்ட வரலாறுகள் சில புறநானூற்றுச் செய்யுள்களிலும் கூறப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் கூறப்படாத கொங்கு நாட்டு அரசர் செய்திகளும் புறநானூற்றில் கூறப்படுகின்றன. மேலும், கொங்கு நாட்டை அக்காலத்தில் அரசாண்ட சிற்றரசர்கள் (பதிற்றுப்பத்தில் கூறப்படாதவர்) சிலர் புறநானூற்றில் கூறப்படுகின்றனர். ஆகவே, புறநானூறு கொங்கு நாட்டுச் சரித்திரத்தை அறிவதற்கு இன்னொரு முக்கியக் கருவி நூலாக இருக்கிறது. அகநானூறு அகநானூறு, அகப்பொருளாகிய காதற்செய்திகளைக் கூறுகிற நூல். ஆகையால் அதில் பொதுவாகச் சரித்திரச் செய்திகளும் வரலாற்றுச் செய்திகளும் இடம்பெறுவதில்லை. ஆனால், அச்செய்யுள் களைப் பாடிய புலவர்களில் சிலர், தங்களை ஆதரித்த அரசர், சிற்றரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை இந்தக் காதற் செய்யுள்களில் புகுத்திப் பாடியுள்ளனர். இப்படிப்பட்ட வரலாற்றுச் செய்திகள் சில, கொங்கு நாட்டு வரலாற்றை அறிவதற்கு உதவியாக இருக்கின்றன. எனவே, அகநானூற்றுச் செய்யுள்களும் நமது சரித்திர ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கின்றன. நற்றிணை நானூறு அகநானூற்றைப் போலவே, நற்றிணை நானூறும் அகப் பொருளைக் கூறுகிறது. அகநானூற்றுச் செய்யுள்கள் சில அரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுபோல நற்றிணைச் செய்யுட் கள் சிலவற்றிலும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. அதனால், நற்றிணைச் செய்யுள்களில் சில கொங்குநாட்டு வரலாற்றுக்குத் துணைசெய்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற வேறு சில அகப்பொருள் நூல்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் காணப் படுகிற வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும் இந்த நூலை எழுதுவதற்குத் துணையாக இருந்தது. பதிற்றுப்பத்தில் கூறப்படுகிற சேரர்களைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் காணப் படுகின்றன. ஆகவே. இந்த வரலாறு எழுதுவதற்கு இது துணை செய் கின்றது.மேலும், கொங்குநாட்டுப் பொறைய அரசர்களின் காலத்தைக் கணித்து நிறுவுவதற்கும் சிலம்பு பெரிய உதவியாக இருக்கிறது. இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு ஆகும். கொங்கு நாட்டின் புகழூரை அடுத்த மலைப்பாறையில் எழுதப்பட்ட பிராமி எழுத்துச் சாசனம், கொங்கு நாட்டை யாண்ட பெருங் கடுங்கோன், இளங் கடுங்கோன், இளங்கோன் என்னும் மூன்று அரசர்களைக் கூறுகிறது. அவர்களைப்பற்றிய வரலாறு தெரியவில்லை. நமக்குக் கிடைத்த வரையில் உள்ள சான்று களை யெல்லாம் தொகுத்து வரன்முறையாக எழுதப்பட்ட சங்க காலத்துக் கொங்கு நாட்டுச் சரித்திரம் இது. இவ்வாறு சங்க காலத்துக் கொங்கு நாட்டு வரலாற்றை எழுது வதற்கு என்னென்ன சாதனங்களும் கருவிகளும் சான்றுகளும் கிடைத்திருக்கின்றனவோ (அவை மிகச் சில) அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு இந்தக் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றினை எழுதுகிறேன். இதைச் சரியாகச் செய்திருக்கிறேனா என்பதை வாசகர்தான் கூறவேண்டும். இந்த நூலை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவருக்கு நன்றி செலுத்துகிறேன். பொள்ளாச்சிப் பெருந்தகையார் திரு. நா. மகாலிங்கம் அவர்கள், இந்நூலை எழுதுமாறு என்னைத் தூண்டி ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் தூண்டுகோல் இல்லாமற்போனால் இந்நூலை நான் எழுதியிருக்க முடியாது. அவர்களுக்கு என்னுடைய நன்றியைச் செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன். இந்நூலை அழகாக அச்சிட்டு வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிலையத்தாருக்கு நன்றி கூறுகிறேன். இந்த வரலாற்று நூலைப் பொதுமக்கள் ஆதரித்து எனக்கு மேன்மேலும் ஊக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன். இது போன்ற பணிகளில் என்னைச் செலுத்தித் தமிழகச் சமய வரலாறு, மொழி வரலாறு, சமுதாய வரலாறு, நுண்கலை வரலாறுகளை எழுத உதவியருள வேண்டுகிறேன். சென்னை - 4 19.09.74 மயிலை சீனி. வேங்கடசாமி 1. கொங்கு நாட்டு வரலாறு கொங்கு நாடு கடைச் சங்க காலத்திலே, 1,800 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, அருவா நாடு, கொங்கு நாடு என்பவை. இந்த ஆறு நாடுகளில் துளு நாடும் சேர நாடும் மேற்குக் கடற்கரை யோரத்தில் இருந்தன. துளு நாடு இப்போது தென்கன்னடம் வட கன்னடம் என்று பெயர் பெற்று மைசூர் இராச்சியத்தோடு இணைந் திருக்கின்றது. சேர நாடு இப்போது கேரள நாடு என்று பெயர் பெற்று மலையாளம் பேசும் நாடாக மாறிப் போயிற்று. தமிழகத்தின் தென் கோடியில் பாண்டிநாடு மூன்று கடல்கள் சூழ்ந்த நாடாக இருந்தது. சோழ நாடும் அருவா நாடும் (தொண்டை நாடு) கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளன. கொங்கு நாடு தமிழகத்தின் இடை நடுவே கடற்கரை இல்லாத உள்நாடாக அமைந்திருந்தது (முன்பக்கப்படம் காண்க). கொங்கு நாடு இப்போது சேலம் வட்டம், கோயம்புத்தூர் வட்டங்களில் அடங்கியிருப்பதாகக் கூறுவர். பிற்காலத்திலே சுருங்கிப்போன கொங்கு நாட்டைத்தான் அதாவது கோயம்புத்தூர் சேலம் வட்டங்களைத்தான், இக்காலத்தில் கொங்கு நாடு என்று கூறுகின்றோம். ஆனால், சங்க காலத்திலிருந்த கொங்கு நாடு இப்போதுள்ள கொங்கு நாட்டைவிட மிகப் பெரியதாக இருந்தது. பிற்காலத்துச் செய்யுள்கள் கொங்கு நாட்டின் எல்லையைக் குறுக்கிக் கூறுகின்றன. “வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக் குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று - கிழக்குக் கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடா குழித்தண் டலையளவே கொங்கு” என்றும்; “வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக் குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும் களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாட்டுக் குளித்தண் டலையளவே கொங்கு” என்றும் கூறுகின்றன பழம் பாடல்கள். கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் எல்லைகளை இவ்வாறு கூறுகிறது. “மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக் கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவிவிண்ணோர் மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே” இவ்வாறு கூறுவன எல்லாம் பிற்காலத்து எல்லைகள். ஆனால், மிக முற்காலத்திலே, கடைச்சங்க காலத்தில் கொங்கு நாடு பரந்து விரிவாக இருந்தது. அதன் தெற்கு எல்லைக்கு அப்பால் பாண்டி நாடு இருந்தது. அதன் மேற்கு எல்லை, சையகிரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேரநாடும் துளுநாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழநாடும் தொண்டை நாடும் இருந்தன. அதன் வடக்கு எல்லை, மைசூரில் பாய்கிற காவிரி யாறு (சீரங்கப்பட்டணம்) வரையில் இருந்தது. இவ்வாறு பழங்கொங்கு நாட்டின் பரப்பும் எல்லையும் மிகப் பெரியதாக இருந்தன. இப்போது பாண்டி நாட்டுடன் இணைந்து இருக்கிற (மதுரை மாவட்டம் மதுரை வட்டாரத்தில் சேர்ந்திருக்கிற) வையாவி நாடு (பழனிமலை வட்டாரம்) அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியாக இருந்தது. பழனிமலை சங்க காலத்தில் பொதினி என்று வழங்கப் பெற்றது. பொதினி பிற்காலத்தில் பழனியாயிற்று. கொங்கு நாட்டின் தென்கோடியாகிய வையாவி நாட்டை அக்காலத்தில் வையாவிக்கோ என்னும் அரச பரம்பரையார் அரசாண்டார்கள். சேர நாடு, துளுநாடுகளின் கிழக்கே, வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கிற சைய மலைகள் (மேற்குத் தோடர்ச்சி மலைகள்) கொங்கு நாட்டின் மேற்கு எல்லைகளாக அமைந்திருந்தன. யானைமலைப் பிரதேசம் கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. அது அக்காலத்தில் உம்பற்காடு என்று பெயர் பெற்றிருந்தது (உம்பல் - யானை) மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாலைக்காட்டுக் கணவாய், சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் இணைத்துப் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது. மற்ற இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைகள் உயரமாக அமைந்து இரண்டு நாடுகளுக்கும் போக்குவரத்து இல்லாதபடி தடுத்துவிட்டன பாலைக் காட்டுக்கு அருகில் மலைகள் தாழ்ந்து கணவாயாக அமைந்து இருப்பதால் அது சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கின்றது. இந்தக் கணவாய் வழியாகச் சேர அரசர் படையெடுத்து வந்து கொங்கு நாட்டைக் கைப்பற்றினார்கள். இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்ந்திருக்கிற கரூர் வட்டமும் வேறு சில பகுதிகளும் பழங்காலத்தில் கொங்கு நாட்டில் சேர்ந்திருந்தன. அக்காலத்தில் கருவூர், கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த அந்தப் பகுதிகள், ஆங்கி லேய கிழக்கிந்தியக் கும்பினியார் நாடு பிடித்து அரசாளத் தொடங்கிய பிற்காலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன. பழங்கொங்கு நாட்டின் வடக்கெல்லை மைசூரில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் நெடுந்தூரம் பரவியிருந்தது என்று கூறினோம். இக்காலத்தில் மைசூர் இராச்சியத்தின் தென்பகுதிகளாக இருக்கிற பல நாடுகள் அக்காலத்தில் வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. பேர்போன புன்னாடு, கப்பிணி ஆற்றங்கரை மேல் உள்ள கிட்டூரைத் (கட்டூர்) தலைநகரமாகக் கொண்டிருந்தது. அது சங்க காலத்தில் வட கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. எருமை ஊரை அக்காலத்தில் அரசாண்டவன் எருமையூரன் என்பவன். எருமை ஊர் பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது. (எருமை - மகிஷம். எருமையூர் -மைசூர். எருமை ஊர், மைசூர் என்றாகிப் பிற்காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் பெயராக அமைந்துவிட்டது.) இப்போதைய மைசூர் நாட்டில் உள்ள ஹளேபீடு (ஹளே - பழைய, பீடு - வீடு) அக்காலத்தில் துவரை என்று வழங்கப்பட்டது. துவரை, இக்காலத்தில் துவார சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு பெரிய ஏரியும் அதற்கு அருகிலே உள்ள மலையடிவாரத்தில் அழிந்து போன நகரமும் உள்ளன. இந்த நகரம் சங்க நூல்களில் கூறப்படுகின்ற அரையம் என்னும் நகரமாக இருக்கக்கூடும். துவரையையும் அதற்கு அருகில் இருந்த அரையத்தையும் புலிகடிமால் என்னும் அரச பரம்பரை யரசாண்டது. மிகப் பிற்காலத்தில் மைசூரை யரசாண்ட ஹொய்சளர், பழைய புலிகடிமால் அரச பரம்பரையார் என்று தோன்று கின்றனர். ஹொய்சள என்பது புலிகடிமால் என்பதன் மொழிப் பெயர்ப்பாகத் தெரிகின்றது. கொங்கு நாட்டின் வடஎல்லை பழங்காலத்தில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மைசூர் நாட்டில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் இருந்தது என்று கூறுவது வெறும் கற்பனையன்று, சரித்திர உண்மையே. அக்காலத்தில் கன்னட நாடு (வடுகநாடு) வடக்கே வெகுதூரம் கோதாவரி ஆறு வரையில் பரவியிருந்தது. இப்போது மகாராட்டிர நாடாக இருக்கிற இடத்தின் தென்பகுதிகள் அக்காலத்தில் கன்னடம் பேசப்பட்ட கன்னட நாடாக இருந்தன. பிற்காலத்தில் மகா ராட்டிரர், வடக்கே இருந்த கன்னட நாட்டில் புகுந்து குடியேறினார்கள். காலஞ்செல்லச்செல்ல அந்தப் பகுதி மகாராட்டிர நாடாக மாறிப் போயிற்று. இதன் காரணமாக, மகாராட்டிர பாஷையில் பல கன்னட மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காண்கின்றோம். இக்காலத்தில் உள்ள கன்னட (மைசூர்) நாட்டின் தென் பகுதிகள் அப்பழங் காலத்தில், தமிழ் நாடாக (வடகொங்கு நாட்டின் பகுதியாக) இருந்தன. வடக்கேயிருந்த கன்னட நாட்டில் மராட்டியர் புகுந்து குடியேறியபோது, கன்னடர் தெற்கே வடகொங்கு நாட்டு எல்லையில் புகுந்து குடியேறினார்கள். மைசூரில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு வடக்கிலிருந்து வடக்கே கோதாவிரி ஆறு வரையில் பழங்காலத்தில் கன்னட நாடு பரவியிருந்தது என்று கூறுவதற்குக் கன்னட இலக்கண நூல் சான்று கூறுகின்றது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிருபதுங்க அரசன் (கி.பி. 850 இல்) இயற்றிய கவிராஜ மார்க்கம் என்னும் கன்னட இலக்கண நூலில், பழங் கன்னட நாட்டின் எல்லை கூறப்படுகின்றது. அதில் கன்னட நாட்டின் அக்காலத் தென் எல்லை மைசூரில் பாய்கிற காவிரி ஆறு என்று கூறப்படுகின்றது. காவேரியிந்த மா கோதாவரி வரமிர்ப நாடதா கன்னட தொள் பாவிஸித ஜனபதம் வஸுதாவளய விலீன விஸத விஷய விஸேஷம் (கவிராஜ மார்க்கம் 1-36) இதனால் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கன்னட நாட்டின் எல்லை காவிரி ஆறு (மைசூர் நாட்டில் பாயும் காவிரி ஆறு) என்று தெளிவாகத் தெரிகின்றது. 9 ஆம் நூற்றாண்டிலே இது கன்னட நாட்டின் தென் எல்லையாக இருந்தது என்றால் அதற்கு முற்பட்ட சங்க காலத்தில் (கி.பி. 200 க்கு முன்பு) பழைய கன்னட நாட்டின் தென் எல்லை காவிரி ஆற்றுக்கு வடக்கே இருந்திருக்கவேண்டுமென்பதில் ஐயம் என்ன? கன்னடர், தமிழகமாக இருந்த வடகொங்கு நாட்டில் வந்து பரவியதும், பிற்காலத்தில் அந்தப் பகுதிகள் கன்னட மொழியாக மாறிப்போனதும் பிற்காலத்தில் (கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு) ஏற்பட்டவையாகும். எனவே, நமது ஆராய்ச்சிக்குரிய கடைச் சங்க காலத்தில் கொங்கு நாடு, மைசூர் நாட்டுக் காவிரி ஆற்றுக்கு அப்பால் வடக்கே வெகுதூரம் பரவி யிருந்தது என்பதும் அந்த எல்லைக்குள் இருந்த புன்னாடு பகுதியும் கொங்கு நாட்டில் அடங்கியிருந்தது என்பதும் நன்கு தெரிகின்றன. கொங்கு நாடு நெய்தல் நிலமில்லாத (கடற்கரையில்லாத) உள்நாடு என்று கூறினோம். அங்கு மலைகள் அதிகம். எனவே, அங்கே குறிஞ்சி நிலம் அதிகமாயிருந்தது. காடும் காட்டைச் சேர்ந்த முல்லை நிலங் களும் அதிகம். நெல்பயிரான மருத நிலங்களும் இருந்தன. கொங்கு நாட்டிலிருந்த ஊர்கள், மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முழு விபரங்கள் சங்க நூல்களில் கிடைக்கவில்லை; சில பெயர்கள் மட்டும் தெரிகின்றன. நமக்குக் கிடைத்துள்ள வரையில், சங்க இலக்கியங்களில் கூறப்படுகின்ற கொங்கு நாட்டின் இடங்களைக் கீழே தருகிறோம். உம்பற் காடு (யானை மலைக்காடு) இது கொங்கு நாட்டின் தென்மேற்கிலுள்ள யானை மலைப் பிரதேசம் (உம்பல் -யானை). இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தை அடுத்திருக்கின்றது. யானை மலைகள் சராசரி 7, 000 அடி உயரமுள்ளவை. யானைமுடி மிக உயரமானது. அதன் உயரம் 8, 837 அடி. இங்குள்ள காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தது பற்றி யானை மலைக்காடு (உம்பற் காடு) என்று பெயர் பெற்றது. சேர நாட்டு அரசர் கொங்கு நாட்டைப் பிடிக்கத் தொடங்கின போது முதல் முதலாக யானை மலைப் பிரதேசத்தைப் பிடித்தார்கள். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுடைய தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் உம்பற் காட்டை வென்று கைப்பற்றினான். இவன், ‘ உம்பற் காட்டைத் தன்கோல் நிரீஇயினான்’என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப்பதிகங் கூறுகின்றது. அவனுடைய தமயனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (செங்குட்டுவனுடைய தந்தை) தன்மீது 2 ஆம் பத்துப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்தான் (இரண்டாம் பத்துப் பதிகம் அடிக்குறிப்பு) சேரன் செங்குட்டுவன் தன்மீது ஐந்தாம் பத்துப் பாடிய பரணர்க்கு உம்பற்காட்டு வாரியை (வருவாயை)க் கொடுத்தான் (ஐந்தாம் பத்துப் பதிகம் அடிக்குறிப்பு). இதனால் யானை மலைப் பிரதேசங்களைச் சேர மன்னர் கைப்பற்றி இருந்தார்கள் என்பது தெரிகின்றது. உம்பற் காட்டில் பல ஊர்கள் அடங்கியிருந்தன. ஓகந்தூர் இது கொங்கு நாட்டிலிருந்த ஊர். இது இருந்த இடம் தெரியவில்லை. கொங்கு நாட்டையரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் இந்த ஊரைத் திருமால் கோயிலுக்குத் தானஞ் செய்தான் என்று பதிற்றுப்பத்து ஏழாம் பத்துப் பதிகங் கூறுகிறது. கருவூர் இது கொங்கு நாட்டில் மதிலரண் சூழ்ந்த ஊர். ஆன் பொருநை யாற்றின் கரைமேல் அமைந்திருந்தது. இது சேரரின் கொங்கு இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருந்தது. சேரர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, தங்கள் சேர நாட்டுத் தலைநகரமான கருவூரின் பெயரையே இதற்கு இட்டனர் என்று தோன்றுகிறது. இதற்கு வஞ்சி என்றும் வேறு பெயர் உண்டு. இவ்வூரில் வேண்மாடம் என்னும் பெயருள்ள அரண்மனையை யமைத்துக்கொண்டு ‘இரும்பொறை யரசர்’ கொங்கு நாட்டை யரசாண்டனர். இப்போது இந்தக் கருவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர் வட்டத்தில் இருக்கிறது. ஏறத்தாழ கி.பி. 150 இல் இருந்த தாலமி (Karoura) என்பவர் தம்முடைய நூலில் இதைக் கரொவுர (ptolemy) என்று கூறுகின்றார். இவ்வூர் உள்நாட்டில் இருந்தது என்றும் கேரொபொத்ரருக்கு (கேரள புத்திரர்க்கு) உரியது என்றும் கூறுகின்றார். இக்கருவூர் உள்நாட்டில் இருந்ததென்று கூறுகிறபடியால், கடற்கரைக்கு அருகில் இருந்த சேர நாட்டுக் கருவூர் அன்று என்பதும், கொங்குநாட்டுக் கருவூரைக் குறிக்கின்றது என்றும் தெரிகின்றன. மேலும், இக்கருவூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத்திருப்பது இவ்வூரில் யவன வாணிகத் தொடர்பு இருந்ததைத் தெரிவிக்கின்றது. சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத் தில் இரண்டு கருவூர்கள் இருந்தன. ஒன்று மேற்குக் கடற்கரையில் சேரரின் தலைநகரமாக இருந்த கருவூர். இன்னொன்று கொங்கு நாட்டில் இருந்த இந்தக் கருவூர். இவ்விரண்டு கருவூருக்கும் வஞ்சி என்று வேறு பெயரும் உண்டு. இரண்டு கருவூர்களையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், ஒரே கருவூர் இருந்ததாகக் கருதிக்கொண்டு, சேரர் தலைநகரமாகிய கருவூர் வஞ்சி, சேரநாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா என்று சென்ற தலை முறையில் அறிஞர்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இது பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் இரு தரத்தாராலும் எழுதப்பட்டன. ஒரே காலத்தில் இரண்டு (கருவூர்) வஞ்சி மாநகர்கள், சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இருந்தன என்பதை அறியாதபடியால் இந்த ஆராய்ச்சி நடந்தது. கொங்கு நாட்டையாண்ட சேர அரசர் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் கருவூர் கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. இது ஒரு பெரிய வாணிக நகரமாகவும் இருந்தது. சங்கப் புலவர்களில் சிலர் இவ்வூரினராவர். கண்டிரம் இப்பெயரையுடைய ஊர் கொங்கு நாட்டிலிருந்தது. அது எந்த இடத்திலிருந்தது என்பது தெரியவில்லை. கண்டிர நாட்டில் பெரிய மலையொன்று தோட்டிமலை என்று பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டை யரசாண்ட மன்னர்கள் கண்டீரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவன் நள்ளி என்னும் பெயருடையவன். தோட்டி மலையையும் அதன் அரசனாகிய நள்ளியையும் வன்பரணர் கூறுகின்றார்.1 கண்டிர நாட்டின் சோலைகளிலே காந்தள் முதலிய மலர்கள் மலர்ந்தன என்று பரணரும் கபிலரும் கூறுகின்றனர் (அகம் 152: 15-17, 238: 14-18). நள்ளியின் கண்டிர நாட்டுக் காடுகளில் இடையர் பசு மந்தைகளை வளர்த்தனர் என்றும், அவ்வூர் நெய்க்குப் பேர் போனது என்றும் காக்கைபாடினியார் கூறுகிறார்.2 கண்டிரத்துக் காட்டில் யானைகளும் இருந்தன. கண்டிர நாட்டில் நள்ளியின் பெயரால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்ததைக் கொங்கு நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகின்றது. கட்டி நாடு கட்டி நாடு என்பது தமிழகத்தின் வடக்கேயிருந்தது. அது கொங்கு நாட்டைச் சேர்ந்தது. கட்டி நாட்டையாண்ட அரசர் பரம்பரையார் ‘கட்டியர்’, ‘கட்டி’ என்று பெயர் பெற்றிருந்தனர். கட்டி நாட்டின் வட எல்லை வடுக (கன்னட) நாட்டின் எல்லை வரையில் இருந்தது. கட்டி நாட்டுக்கு அப்பால் மொழி பெயர் தேயம் (வேறு மொழி கன்னட மொழி) பேசும் தேசம் இருந்தது. கட்டி நாடு வடகொங்கு நாட்டில் இருந்தது. கட்டியரசு பரம்பரை விசயநகர அரசர் காலத்திலும் இருந்தது. காமூர் இதுவும் கொங்கு நாட்டிலிருந்த ஊர். இங்கு இடையர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவன் கழுவுள். கழுவுளின் காமூரில் பலமான கோட்டையிருந்தது. அது ஆழமான அகழியையும் உயரமான கோட்டை மதிலையுங் கொண்டிருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பெருஞ்சேரலிரும்பொறை காமூரை வென்று அதைத் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான். பெருஞ்சேரலிரும்பொறை காமூரை முற்றுகையிட்டபோது வேளிர்கள் (சிற்றரசர்) அவனுக்கு உதவியாக இருந்தார்கள். குதிரைமலை இது கொங்கு நாட்டிலிருந்த மலை. இதை ‘ஊராக் குதிரை’ என்று கூறுகிறார் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் (ஊராக்குதிரை -சவாரி செய்யமுடியாத குதிரை. அதாவது குதிரைமலை). ‘மைதவழ் உயர் சிமைக் குதிரைமலை’ என்று இம்மலையை ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார் (அகம் 143 : 13). குதிரை மலையையும்அதனைச் சார்ந்த நாட்டையும் பிட்டங்கொற்றன் அரசாண்டான். இம்மலையில் வாழ்ந்த குறவர்கள் மலைச்சாரலில் தினையரிசியைப் பயிர் செய்து அந்த அரிசியைக் காட்டுப் பசுவின் பாலில் சமைத்து உண்டார்கள் (புறம் 168: 1-14). குதிரைமலை, உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததென்று கருதுகின்றார். நன்றாமலை இது கொங்கு நாட்டில் இருந்த மலை. இந்த மலையின் மேலிருந்து பார்ப்பவர்களுக்கு இதைச் சூழ்ந்துள்ள ஊர்கள் தெரிந்தன ஆகையால் இது ‘நாடுகாண் நெடுவரை’ என்று (பதிற்று. 9 ஆம் பத்து5:7) கூறப்படுகின்றது. “நாடுகாண் நெடுவரையென்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய” மலை என்று இதற்குப் பழைய உரையாசிரியர் விளக்கம் கூறுகின்றார். செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் 7 ஆம் பத்துப் பாடியபோது அவருக்கு அவ்வரசன் இந்த மலைமேலிருந்து கண்ணிற் கண்ட நாடுகளைக் காட்டி அந்நாடுகளின் வருவாயை அவருக்குப் பரிசாக அளித்தான் என்று 7 ஆம் பத்து அடிக்குறிப்புக் கூறுகின்றது. “பாடிப் பெற்ற பரிசில், சிறுபுறமென நூறாயிரங் காணங்கொடுத்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாங் காட்டிக் கொடுத்தான் அக்கோ” என்று அடிக்குறிப்புக் கூறுகின்றது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், திருஞான சம்பந்தர் காலத்தில் இவ்வூர் திருநணா என்று பெயர் வழங்கப்பட்டது. விச்சி நாடு சங்க காலத்துக் கொங்கு நாட்டிலே இருந்த ஊர்களில் விச்சி என்பதும் ஒன்று. பச்சைமலை என்று இப்போது பெயர் வழங்குகிற மலை அக்காலத்தில் விச்சிமலை என்று பெயர் பெற்றிருந்தது. சேலம், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் விச்சிமலை (பச்சைமலை) இருக்கின்றது. இந்த மலை ஏறக்குறைய 200 மைல் நீளம் உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்துக்குமேல் ஏறத்தாழ 2000 அடி உயரம் உள்ளது. மலை யின் மேலே வேங்கை, தேக்கு, கருங்காலி, சந்தனம், முதலிய மரங்கள் உள்ளன. விச்சி நாட்டு மலைப் பக்கங்களில் பலா மரங்கள் இருந்தன என்று கபிலர் கூறுகிறார் (புறம் 200 :1-2) விச்சி மலைமேல் ‘ஐந்தெயில்’ என்னும் கோட்டையிருந்தது. அது காட்டரண் உடையதாக இருந்தது. விச்சி நாட்டையரசாண்ட பரம்பரையாருக்கு விச்சிக்கோ என்று பெயர் இருந்தது. கொங்குச் சேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறை, ஐந்தெயில் கோட்டையை வென்று விச்சி நாட்டைக் கைப்பற்றினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகின்றது. வெள்ளலூர் கோயம்புத்தூருக்குத் தென்கிழக்கில் ஐந்து மைல் தூரத்தில் இவ்வூர் இருக்கின்றது. இங்குப் ‘பழங்காலத்துப் பாண்டு குழிகள்’ உள்ளன. இந்தப் பண்டவர் குழிகளிலிருந்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. 1842ஆம் ஆண்டில் இவ்வூரில் பழங்காசுப் புதையல் ஒரு மண்பாண்டத்தில் கிடைத்தது. அப்புதையலில் 522 உரோம் தேசத்து நாணயங்கள் இருந்தன. அந்தக் காசுகளில் உரோமாபுரிச் சக்கரவர்த்திகளான அகஸ்தஸ், தைபீரியர், கலிகுல்லா, கிளாடியஸ் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் வழங்கப்பட்ட காசுகள். இதிலிருந்து அக்காலத்தில் இந்த ஊரில் யவனருடன் வியாபாரத் தொடர்பு இருந்தது என்பது தெரிகின்றது. வையாவி நாடு இது கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. ஆவி நாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வைகாவூர் என்றும் வையாபுரி என்றும் பெயர் வழங்கப்பட்டது. இது இப்போது மதுரை மாவட்டத்து மதுரை தாலுகாவில் இருக்கின்றது. பழனி மலை வட்டாரம் பழைய வையாவி நாடாகும். வையாவி நாட்டின் தலைநகரம் பொதினி. ஆவி (வையாவி) நாட்டையாண்ட அரசர்‘வேள் ஆவிக்கோமான்’ என்று பெயர் பெற்றனர்.3 பொதினி என்னும் பெயர் இப்போது பழனி என்று மருவி வழங்குகிறது. வேள்ஆவி அரசர்கள் சேர அரசர் பரம்பரையில் பெண்கொடுத்து உறவு கொண்டார்கள். வையாவிக்கோப்பெரும்பேகனும் வேள் ஆவிக் கோமான் பதுமனும் இவ்வூரை ஆண்ட அரசர்கள். வையாவிக் கோப்பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார், நல்லூர் நத்தத்தனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இதனால் இவர்கள் சம காலத்தில் இருந்தவர் கள் என்பது தெரிகின்றது. வேளாவிக்கோமான் பதுமனுடைய மகள் ஒருத்தியைக் குடக்கோ நெடுஞ்சேரலன் மணஞ் செய்திருந்தான் (4ஆம் பத்துப் பதிகம், 6ஆம் பத்துப் பதிகம்). இன்னொரு மகளைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் (குடக்கோ நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பி) மணஞ் செய்திருந்தான் (8ஆம் பத்துப் பதிகம்). கொல்லி மலையும் கொல்லிக் கூற்றமும் கொங்கு நாட்டுப் பேர்போன கொல்லிமலையைச் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. கொல்லி மலையை இந்தக் காலத்தில் சதுரகிரி என்று பெயர் கூறுகிறார்கள். பார்வைக்குச் சதுர வடிவமாக அமைந்திருப்பதனால் சதுரகிரி என்று பெயர் பெற்றது. கொல்லிமலை, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்திலும் நாமக்கல் வட்டத்திலும் அடங்கியிருக்கின்றது. ஏறக்குறைய 180 சதுர மைல் பரப்புள்ளது. கொல்லிமலைகள், கடல் மட்டத்துக்கு மேலே 3500 அடி முதல் 4000 அடி வரையில் உயரம் உள்ளன. கொல்லி மலைகளில் வேட்டைக்காரன் மலை (ஆத்தூர் வட்டம்) உயரமானது; அது கடல் மட்டத்துக்கு மேலே 4663 அடி உயரமாக இருக்கிறது. கொல்லிமலைகளில் ஊர்கள் உள்ளன. பல அருவிகளும் உள்ளன. மலையிலேயே தினை, வரகு, ஐவன நெல் முதலிய தானியங்கள் பயிரிடப்பட்டன. மலைகளில் மூங்கிற் புதர்களும், சந்தனம், கருங்காலி, தேக்கு முதலிய மரங்களும் வளர்ந்தன. அக்காலத்தில் தேக்கு மரம் இல்லை. பலா மரங்கள் இருந்தன.4 கொல்லிமலைத் தேன் பேர் போனது. பிற்காலத்து நூலாகிய கொங்கு மண்டல சதகமும் கொல்லி மலையைக் கூறுகிறது. “முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத் தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள்ளோர்க்குஞ் சுவைமதுரக் கொத்தீட் டியபுதுப் பூத்தேனும் ஊறுங் குறிஞ்சியின் தேன் வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே” கொங்கு நாட்டிலே மற்ற இடங்களில் கிடைத்தது போலவே கொல்லி மலையிலும் விலையுயர்ந்த மணிகளும் கிடைத்தனவாம்.5 கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் பேர் போன ‘கொல்லிப் பாவை’ என்னும் உருவம் அழகாக அமைந்திருந்ததாம். பெண் வடிவமாக அமைந்திருந்த அந்தப் பாவை தெய்வத்தினால் அமைக்கப் பட்டதென்று கூறப்படுகிறது.6 இயற்கையாக அமைந்திருந்த அழகான அந்தக் கொல்லிப் பாவை, காற்றடித்தாலும் மழை பெய்தாலும் இடியிடித்தாலும் பூகம்பம் உண்டானாலும் எதற்கும் அழியாததாக இருந்தது என்று பரணர் கூறுகிறார்.7 கொல்லி மலையில் கொல்லிப் பாவை இருந்ததைப் பிற்காலத்துக் கொங்கு மண்டல சதகமும் கூறுகிறது. “தாணு முலகிற் கடன் முர சார்ப்பத் தரந்தரமாய்ப் பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருது மலர்ப் பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லை வாணகை யாலுள் ளுருக்குவதுங் கொங்கு மண்டலமே” இப்படிப்பட்ட கொல்லிப் பாவை இப்போது என்ன வாயிற்று என்பது தெரியவில்லை. இப்போதுள்ள பொய்ம்மான் கரடு போன்று கொல்லிப் பாவையும் உருவெளித் தோற்றமாக இருந்திருக்கக்கூடும். கொல்லிமலை வட்டாரம் ‘கொல்லிக்கூற்றம்’ என்று பெயர் பெற்றிருந்தது. சங்க காலத்தில் கொல்லிக் கூற்றத்தையும் கொல்லி மலைகளையும் ஓரி என்னும் அரச பரம்பரையார் ஆட்சி செய்து வந்தார்கள். கடை எழுவள்ளல்களில் ஓரியும் ஒருவன். ஓரி அரசருக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றத்தைப் பிற்காலத்தில் கொங்கு நாட்டுச் சேரர் கைப்பற்றிக் கொண்டு அரசாண்டனர். இந்த வரலாற்றை இந்நூலில் வேறு இடத்தில் காண்க. திருச்செங்கோடு கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மலை இது. செங்கோட்டு மலையில் நெடுவேளாகிய முருகனுக்குத் தொன்று தொட்டுக் கோவில் உண்டு. அக்காலத்தில் முருகன் எழுந்தருளியிருந்த இடங்களில் செங்கோடும் ஒன்று என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் (குன்றக் குரவை) என்று கூறுவது காண்க. பழைய அரும்பதவுரையாசிரியர், ‘செங்கோடு - திருச்செங்கோடு’ என்று உரை எழுதியுள்ளார். மதுரையை விட்டு வெளிப்பட்ட கண்ணகியார் பதினான்கு நாள்களாக இரவும் பகலும் நடந்து சென்று “நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப், பூத்தவேங்கைப் பொங்கர்க்கீழ்”த் தங்கியபோது அவர் உயிர் பிரிந்தது என்று சிலப்பதிகாரம் (கட்டுரை காதை 190 -91) கூறுகிறது. அந்த நெடுவேள் குன்றம் என்பது திருச்செங்கோடுமலை என்று பழைய அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார். மீண்டும் வாழ்த்துக் காதையில், கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டிய செய்யுளில், வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என்னோடுந் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம் என்று கூறுகின்றார். இதற்கு உரை எழுதிய பழைய அரும்பத உரை யாசிரியர் “வென்வேலான்குன்று - செங்கோடு. நான் குன்றில் வந்து விளையாடுவேன்; நீங்களும் அங்கே வாருங்களென்றாள்” என்று விளக்கங் கூறுகிறார். இதனால், அரும்பதவுரையாசிரியர் காலத்தில் கண்ணகியார் உயிர்விட்ட இடம் திருச்செங்கோடுமலை என்ற செவிவழிச் செய்தி இருந்தது என்பது தெரிகின்றது. கொங்குச் சேரரின்கீழ் இருந்த கொங்கிளங்கோசர், செங்குட்டுவன் சேர நாட்டில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த பிறகு தாங்களும் கொங்கு நாட்டில் கண்ணகிக்கு விழாச் செய்தார்கள் என்று சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கூறுகின்றது. கொங்கிளங்கோசர் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததும் திருச்செங்கோட்டு மலையில் என்று தோன்றுகிறது. பழைய அரும்பதவுரையாசிரியருக்குச் சில நூற்றாண்டுக் குப் பிறகு இருந்த அடியார்க்குநல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியர், கண்ணகியார் உயிர் நீத்த இடம் திருச்செங் கோடுமலை என்று அரும்பதவுரையாசிரியர் கூறியிருப்பதை மறுக்கிறார். சிலப்பதிகாரப் பதிகம் மூன்றாவது அடியில் வரும் ‘குன்றக்குறவர்’ என்பதற்கு உரை எழுதுகிற அவர் கண்ணகியார் உயிர்விட்ட இடம் சேர நாட்டில் உள்ள செங்குன்று என்றும், கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு அன்று என்றுங் கூறுகிறார். அவர் எழுதுவது: “குன்றக்குறவர் ஏழனுருபுத் தொகை. குன்றம் - கொடுங்கோளூருக்கு அயலதாகிய செங்குன்றென்னு மலை. அது திருச்செங்கோடென் பவாலெனின், அவரறியார். என்னை? அத்திருச்செங்கோடு வஞ்சிநகர்க்கு (சேரநாட்டு வஞ்சி நகர்க்கு) வடகீழ்த்திசைக் கண்ணதாய் அறுபதின் காதவாறு உண்டாகலானும் அரசனும் (செங்குட்டுவன்) உரிமையும் மலை காண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையினென்க.” பழைய அரும்பதவுரையாசிரியர் கூறுவதையும் அடியார்க்கு நல்லார் கூறுவதையும் ஆராய்வதற்கு இப்போது நாம் புகவில்லை. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு மலையில், கண்ணகியார் உயிர் நீத்தார் என்று பழைய செவிவழிச் செய்தி அரும்பதவுரையாசிரியர் காலத்தில் இருந்தது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. அரும்பதவுரையாசிரியர், திருச்செங்கோட்டில் கண்ணகியார் உயிர் நீத்தார் என்று கூறுதற்குக் காரணம் இருக்க வேண்டும். இல்லாமல் அவர் கூறியிருக்க மாட்டார். நன்றா மலை இந்த மலையின் உச்சியிலிருந்து பார்ப்பவருக்கு இதனைச் சுற்றிலுமுள்ள ஊர்கள் நன்றாகத் தெரிந்தன. ஆனது பற்றி இது ‘நாடு காண் நெடுவரை’ என்று கூறப்பட்டது.“தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கில், கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை” (9ஆம் பத்து 5: 7. “நாடுகாண் நெடுவரை என்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஒழுக்கமுடைய மலை என்றவாறு, இச்சிறப்பானே இதற்கு, நாடுகாண் நெடுவரை என்று பெயராயிற்று” என்று இதன் பழைய உரை கூறுகிறது. செல்வக் கடுங்கோ வாழியாதன் மேல் 7ஆம் பத்தைப் பாடிய கபிலருக்கு அவ்வரசன் இந்த நன்றாமலை மேலிருந்து பரிசில் வழங்கினான் என்று ஏழாம்பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகின்றது. “பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றா வென்னுங் குன்றேறி நின்றுதன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ” என்பது அந்த வாசகம். நன்றா என்னும் பெயர் பிற்காலத்தில் நணா என்று மாறி வழங்கிற்று. திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுத் திருநணா என்னும் திருப்பதியைப் பாடியுள்ளார். சுவாமி பெயர் சங்கமுக நாதேசுவரர், தேவியார் வேதமங்கையம்மை. பவானி ஆறு காவிரியாற்றுடன் சேருமிடமாகையால் இந்த இடம் பவானி கூடல் என்று பெயர் வழங்கப் படுகிறது. இப்போது ஊராட்சிமலை என்று பெயர் கூறப்படுவது நன்றாமலையாக இருக்குமோ? இது ஆராய்ச்சிக்குரியது. படியூர் கொங்கு நாட்டிலிருந்த படியூர் விலையுயர்ந்த மணிகளுக்குப் பேர் போனது. இப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவில் படியூர் இருக்கிறது. வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டில் விலையுயர்ந்த நீலக்கற்கள் கிடைத்தது போலவே படி யூரிலும் நீலக்கற்கள் (Beryl) கிடைத்தன. சங்கச் செய்யுள்களில் படி யூரைப் பற்றிக் காணப்படவில்லை. ஆனால், கொங்கு நாட்டில் விலை யுயர்ந்த திருமணிகள் கிடைத்ததை அக்காலத்துப் புலவர்கள் கூறுகின்றனர். கொங்கு நாட்டில் உழவர் நிலத்தை உழுகிற போது சில சமயங்களில் திருமணிகள் கிடைத்தன என்று அரிசில் கிழார் கூறுகிறார். “கருவி வானம் தண்தளி சொரிந்தெனப் பல்விதை உழவில் சில்லேராளர் ... ... இலங்கு கதிர்த்திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடுகிழவோயே” (பதிற்று. 8ஆம் பத்து 6: 10 - 15). இதற்குப் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “தண்டளி’ (மழை) சொரிந்தென ஏராளர் கதிர்த் திருமணி பெறூம் நாடெனக் கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக் கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திருமணிகளை எடுத்துக் கொள்ளு நாடெனவுரைக்க.” கபிலரும் கொங்கு நாட்டில் மணிக்கல் கிடைத்ததைக் கூறுகிறார். “ வான் பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின் இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம், அகன் கண்வைப்பின் நாடுகிழ வோனே” (7 ஆம் பத்து 6:18 - 20). “திருமணி பெறுவார் அந்நாட்டாராகக் கொள்க” என்பது பழைய உரை. பொதுவாகக் கொங்கு நாட்டில் திருமணிகள் கிடைத்ததைப் புலவர் கூறினாலும் சிறப்பாகப் படியூரில் கிடைத்ததை அவர்கள் கூற வில்லை. ஆனால் அக்காலத்து யவனர்கள் எழுதியுள்ள குறிப்புகளி லிருந்து படியூரில் திருமணிகள் கிடைத்ததையும் அதை யவன வாணிகர் கப்பல்களில் வந்து வாங்கிக்கொண்டு போனதையும் அறிகிறோம். பிளைனி (Pliny) என்னும் யவனர் இச்செய்தியை எழுதியுள்ளார். இவர் படியூரை படொரஸ் (Paedoros) என்று கூறுகின்றார். படொரஸ் என்பது படியூரென்பதன் திரிபு. இச்சொல்லின் இறுதியில் அஸ் என்னும் விகுதியைச் சேர்த்திருக்கிறார். (படியூரைப்பற்றி Indian Antiquary Vol. V. p. 237 இல் காண்க). இந்தப் படியூர் மணிச் சுரங்கத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. மிகப் பிற்காலத்தில் கி.பி 1798 இல் இவ்வூர்வாசிகள் மறைவாக மணிக் கற்களை எடுத்தனர் என்று கூறப்படுகின்றது. இதை எப்படியோ அறிந்த ஒரு ஐரோப்பியன் கி. பி. 1819 - 20 இல் இந்தச் சுரங்கத்தை வாடகைக்கு எடுத்துத் தோண்டியதில் அந்த ஒரே ஆண்டில் 2196 மணிகள் (Beryls) கிடைத்தனவாம். அவை, 1201 பவுன் மதிப்புள்ளவையாம். பிறகு இந்தச் சுரங்கத்தில் நீர் சுரந்து அகழ முடியாமற் போய்விட்டது (Rice, EP. Car IV P.4). கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன. புகழியூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் என்னும் புகழியூர் இருக்கிறது. இவ்வூருக்கு இரண்டுக் கல் தொலைவிலுள்ள ஆறு நாட்டார் மலை என்னும் குன்றில் இயற்கையாயுள்ள குகையிலே கற் படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. பிராமி எழுத்து கி.பி. முதல் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. பிராமி எழுத்துச் சாசனங்களில் ஒன்று கடுங்கோ என்னும் இரும்பொறை யரசன் இளங்கோவாக இருந்த காலத்தில் செங்காயபன் என்னும் முனிவர் இந்தக் குகையில் வசிப்பதற்காகக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. கோ ஆதன் சேரலிரும் பொறை மகன் பெருங்கடுங்கோன் என்றும் அவனுடைய மகன் இளங் கடுங்கோ என்றும் இந்தக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. இங்கு வேறு சில பிராமிக் கல்வெட்டெழுத்துகளும் உள்ளன. ஆறு நாட்டார் மலைக்கு ஏழுகல் தூரத்தில் அர்த்த நாரிபாளையம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூர் வயல்களுக்கு இடையில் பெரிய கற்பாறை ஐவர் சுனை என்று பெயர் பெற்றிருக்கிறது. இங்கு ஒரு நீர் ஊற்றுச் சுனையும் ஐந்து கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தக் கற்படுக்கைகள் கி.பி. முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. இங்கு அக்காலத்தில் முனிவர்கள் தங்கித் தவம் செய்தனர் என்பது தெரிகிறது. புன்னாடு புன்னாடு, சங்க காலத்தில் வடகொங்கு நாட்டில் இருந்தது. இக்காலத்தில் இது மைசூர் இராச்சியத்தின் தெற்கில் ஹெக்கட தேவன தாலுகாவில் சேர்ந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலே புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் கூறப்படுகின்றன. காவிரி ஆற்றின் உப நதியாகிய கபிணி ஆற்றைச் சூழ்ந்து புன்னாடு இருந்தது. கபிணி ஆறு கப்பிணி என்றும் கூறப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டாகிக் கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து (மைசூரில் நரசபூருக்கு அருகில்) காவிரியுடன் சேர்கிறது. பிற்காலத்தில் இது புன்னாடு ஆறாயிரம் என்று பெயர் பெற்றிருந்தது. சங்க காலத்தில் புன்னாட்டைச் சிற்றரசர் ஆண்டு வந்தனர். புன்னாட்டின் தலைநகரமான கட்டூர், கபிணி ஆற்றங்கரைமேல் அமைந்திருந்தது. பிற்காலத்தில் கட்டூர், கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது, இன்னும் பிற்காலத்தில் கித்திபுரம் என்றும் பிறகு கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது. புன்னாட்டில் அந்தக் காலத்திலேயே ஒரு வகையான நீலக்கல் கிடைத்தது. அந்தக் கற்கள் புன்னாட்டுச் சுரங்கத்திலிருந்து அகழ்ந் தெடுக்கப்பட்டன. நவரத்தினங்களில் ஒன்றான இந்தக் கல் அந்தக் காலத்தில் உலகத்திலேயே புன்னாட்டில் மட்டுந்தான் கிடைத்தது. அக்காலத்தில் பேர் பெற்றிருந்த உரோமாபுரி சாம்ராச்சியத்து மக்கள் இந்தக் கற்களை அதிகமாக விரும்பினார்கள். ஆகவே, தமிழ்நாட்டுக்கு வந்த யவன வாணிகர் இந்த நீலக் கற்களையும் பாண்டிநாட்டு முத்துக் களையும் சேரநாட்டு மிளகையும் வாங்கிக்கொண்டு போனார்கள். புன்னாட்டு நீலக்கற்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால், மேல்நாட்டவரான தாலமி (Ptolemy) என்னும் யவனர் எழுதியுள்ள பூகோள நூலில் இதைப்பற்றிக் கூறியுள்ளார். ஸிடொஸ்தொமஸ் (Psedostomse) என்னும் இடத்துக்கும் பரிஸ் (Beris) என்னும் இடத்துக்கும் இடையே நீலக்கல் (Beryl) கிடைக்கிற பொவுன்னட (Pounnata) என்னும் ஊர் இருக்கிறது. என்று அவர் எழுதியுள்ளார். பொவுன்னட என்பது புன்னாடு என்பதன் கிரேக்க மொழித் திரிபு என்று அறிஞர்கள் கண்டுள்ளனர். (‘Mysore and Coorg from Inscriptions’, z. Rice, Indian Culture, III., pp. 10, 146;Roman Trade With Deccan’, Dr. B.A. Saletore in Proceedings of the Deccan History Conference First Hyderabad Session, 1945 pp. 303 - 317). நீலக்கல் வாணிகத்தினால் புன்னாட்டாருக்குப் பெரும் வருவாய் கிடைத்தது. புன்னாட்டையடுத்து அதற்கு மேற்கில் இருந்தது துளு நாடு. அக் காலத்தில் துளு நாட்டை யரசாண்ட நன்னன் என்னும் அரசன் புன்னாட்டைக் கைப்பற்றிக்கொள்ள எண்ணி அதன்மேல் போர் செய்ய எண்ணினான். புன்னாட்டின் நீலக்கல் வாணிகம் நன்னனைக் கவர்ந்த காரணத்தால் அந்த வாணிகத்தின் ஊதியத்தைத் தான் பெறுவதற்கு அவன் எண்ணினான் என்று தெரிகிறது. இச்செய்தி தெரிந்தவுடன், நன்னனுடைய பகையரசனான சேரநாட்டுக் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என்பவன் தன்னுடைய சேனைத் தலைவனாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினான் என்பவனைத் துளு நாட்டு நன்னனுக்கு எதிராகப் புன்னாட்டு அரசனுக்கு உதவிசெய்ய அனுப்பினான். ஆய் எயினன் புன்னாட்டு அரசனுக்கு உதவியாகச் சென்று, அவனை அஞ்ச வேண்டாம் என்று உறுதிமொழி கொடுத்த தோடு நன்னனுடைய துளு நாட்டின் மேல் படை எடுத்துச் சென்றான். நன்னனுடைய சேனாதிபதியான மிஞிலி என்பவன் பாழிப்பறந்தலை என்னும் இடத்தில் ஆய்எயினனுடன் போர் செய்தான். அந்தப் போரில் ஆய் எயினன் இறந்து போனான். “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகிற் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆஅ யெயினன், இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது” (அகம் 396: 2-6). “வெளியன் வேண்மான் ஆஅயெயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம் 208: 5 -9). பிறகு, சேர அரசனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்கும் நன்னனுக்கும் நடந்த போரில் நன்னன் தோற்றான். துளு நாடு, சேரன் ஆட்சிக்குக் கீழடங்கிற்று. புன்னாட்டு அரசனும் கொங்கு நாட்டுச் சேரருக்குக் கீழடங்கினான். புன்னாட்டின் தலை நகரமான கட்டூரின் மேல், பெரும்பூண் சென்னி என்னும் சோழ அரசனுடைய சேனாதிபதி படையெடுத்துச் சென்றான். அந்தச் சேனாதிபதியின் பெயர் பழையன் என்பது. சோழ நாட்டுக் காவிரிக்கரையில் இருந்த போர் என்னும் ஊரில் பழையன் பரம்பரையார் சோழரின் படைத் தலைவராகப் பரம்பரை பரம்பரையாக இருந்தனர். (அகம் 326: 9 - 12). பழையன் கட்டூரின்மேல் படையெடுத்து வந்தபோது, கொங்குச் சேரனுக்குக் கீழடங்கியிருந்த நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்னும் சிற்றரசர்கள் பழையனுடன் போர் செய்து அவனைப் போர்க்களத்தில் கொன்றுவிட்டனர். இவ்வாறு சோழ னுடைய கட்டூர்ப் படையெடுப்பு தோல்வியாக முடிந்தது. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி. பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென” (அகம் 44: 7 - 11). இதற்குப் பிறகு புன்னாட்டின் வரலாறு தெரியவில்லை. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் புன்னாட்டு அரசர் பரம்பரை புன்னாட்டை யரசாண்டு வந்தனர். ஸ்கந்தவர்மன் என்னும் புன்னாட்டு அரசனுக்கு ஆண்மகன் இல்லாதபடியால் அவனுடைய ஒரே மகளைக் கங்க அரசனான அவனிதனுடைய மகனான துர்வினிதன் மணம் செய்து கொண்டான். துர் வினிதன் கி. பி. 482 முதல் 517 வரையில் கங்க நாட்டை யரசாண்டான். புன்னாட்டு அரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்ட இவன் புன்னாட்டைத் தன்னுடைய கங்க இராச்சியத் தோடு இணைத்துச் சேர்த்துக் கொண்டான் (Mysore from inscriptions by B. Leuies Rice. 1909). புன்னாட்டின் வரலாறு இவ்வாறு முடிவடைகிறது. எருமையூர் (எருமை நாடு) எருமையூரையும் அதனை யரசாண்ட எருமையூரனையும் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. இது வட கொங்கு நாட்டின் வட எல்லையில் இருந்தது. “நாரரி நறவின் எருமையூரன்” என்றும் (அகம் 36 :17) “நேராவன்றோள் வடுகர் பெருமகன். பேரிசை எருமை நன்னாடு” என்றும் (அகம் 253 : 18 - 19) கூறுவது காண்க. எருமையூரன் குடநாட்டையும் (குடகு நாட்டை) அரசாண்டான் என்பது “நுண்பூண் எருமை குடநாடு” (அகம் 115 : 5) என்பதனால் தெரிகின்றது (எருமை - எருமையூரன்). எருமை நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தது. “நேரா வன்றோள் வடுகர் பெருமகன், பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை, அயிரி ஆறு” (அகம் 253: 18 - 20), “கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, அயிரை யாற்றடைகரை வயிரின் நரலும் காடு” (அகம் 177 : 10 - 11). இந்த அயிரி ஆறு, சேர நாட்டில் அயிரி மலையில் தோன்றுகிற அயிரி ஆறு (பெரியாறு) அன்று. தலையாலங்கானம் என்னும் ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும் போர் செய்தபோது சோழ, சேரர் களுக்குத் துணையாக இருந்த ஐந்து வேள் அரசர்களில் எருமை யூரனும் ஒருவன் (அகம் 36 :13 - 20). எருமையூரன் வடுகர் பெருமகன் என்று கூறப்படுகின்றான். ஹொய்சள அரசர் காலத்திலும் எருமை என்னும் பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டிருந்ததென்பதை அவ்வரசர்களுடைய சாசன எழுத்திலும் காண்கிறோம் (Erumai = Erumainadu of Tamil Literature and Erumainadu of the Hoysala Records, Epi. Car., X c. w. 20). எருமையூர் என்னும் பெயர் பிற்காலத்தில் மைசூர் என்று வழங்கப்பட்டது. எருமை என்பதற்குச் சமஸ்கிருதச் சொல் மகிஷம் என்பது. எருமை ஊர் மகிஷஊர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று. மைசூர் (எருமையூர்) என்னும் இவ்வூரின் பெயர் மிகமிகப் பிற் காலத்தில் கன்னட தேசம் முழுவதுக்கும் பெயராக மைசூர் என்று அமைந்துவிட்டது. துவரை (துவார சமுத்திரம்) இதுவும் இப்போதைய தெற்கு மைசூரில் இருக்கும் ஊர். இப்போது ஹளெபீடு என்று பெயர் பெற்று இருக்கிறது. (ஹளெ - பழைய, பீடு - வீடு. அதாவது, பழைய படைவீடு என்பது பொருள். படைவீடு - பாடிவீடு, பாசறை). இப்பொழுதும் துவரையில் துவார சமுத்திரம் என்னும் பெரிய ஏரி இருக்கின்றது. இங்கு அரையம் என்னும் ஊரில் இருங்கோவேள் அரச பரம்பரையார் இருந்து அரசாண்டார்கள். அந்த அரையம் என்னும் நகரம் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. இருங்கோவேள் அரசர் புலிகடிமால் என்று பெயர்பெற்றிருந்தார். (இந்தப் புலிகடிமால் அரசராகிய இருங்கோவேள் அரசரின் சந்ததியார் பிற்காலத்தில் ஹொய்சளர் என்று புதுப்பெயர் பெற்றுச் சிறப்பாக அரசாண்டார்கள் என்று தோன்றுகின்றது.) பாரி வள்ளல் என்னும் அரசனுடைய பரம்பு நாட்டை மூவேந்தர் வென்றுகொண்ட பிறகு, பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோ வேள் மறுத்துவிட்டான். (இச்செய்திகளையெல்லாம் புறம் 201, 202 இல் காண்க.) தலையாலங்கானத்தில் சேரனும் சோழனும் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போர் செய்தபோது சேர, சோழர்களுக்கு உதவியாக இருந்த ஐந்துவேள் அரசர்களில் இருங்கோவேளும் ஒருவன். “தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான்” (அகம் 36 : 18 - 19). இருங்கோவேளுடன் எருமையூரனும் அப்போரில் கலந்து கொண்டான். குறிப்பு : சங்கச் செய்யுளில் இவ்வளவு தெளிவான நல்ல சான்று இருந்துங்கூட, அதனைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், கிருஸ்து சகாப்தத்தின் தொடக்கக் காலத்தில் மைசூருக்கு எருமை நாடு என்று பெயர் இருந்ததில்லை என்று ஒரு சரித்திரக்காரர் எழுதுகிறார். பழைய கர்நாடகம்: துளுவ நாட்டு வரலாறு என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பாஸ்கர் ஆனந்த சாலிதொரெ என்பவர் இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார்: “எருமை நாட்டுக்கு மேற்கில் துளு நாடு இருந்தது என்று அகம் 294 ஆம் செய்யுள் கூறுகிறது. கிருஸ்து சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் மைசூருக்கு அந்தப் பெயர் (எருமை நாடு என்னும் பெயர்) இருந்தது என்பதற்குச் சான்று இல்லை என்று கூறலாம். சங்க காலத்துப் புலவர்கள் கர்நாடக தேசத்தின் பழைய பெயர்களைக் கூறாத படியினாலே - உதாரணமாகக் கழபப்பு (இப்போதைய சந்திரகிரிமலை), புன்னாடு, குந்தளநாடு முதலியன - கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் மைசூர் (எருமைநாடு) மகிஷ மண்டலத்தைக் குறிக்கிறது என்னும் கருத்தை ஒதுக்கிவிடலாம். ஆகவே, அகம் 294 ஆம் செய்யுள் பழைய துளு நாட்டின் பழமையைத் தீர்மானிப் பதற்கு உதவவில்லை”8 இவ்வாறு இவர் நன்றாக ஆராயாமலும் விஷயத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலும் எழுதுகின்றார். முதலில் இவர் மேற்கோள் காட்டுகிற அகம் 294 ஆம் செய்யுளில் துளு நாட்டைப் பற்றியோ எருமை நாட்டைப் பற்றியோ ஒன்றும் இல்லை. இவர் குறிப்பிட விரும்புவது அகம் 15ஆம் செய்யுள் என்று தோன்றுகிறது. இந்தச் செய்யுளில் துளு நாடு குறிப்பிடப்படுகிறது. கர்நாடக தேசத்தின் (கன்னட தேசத்தின்) பழைய ஊர்ப்பெயர்களைச் சங்க நூல்கள் கூறவில்லை என்று இவர் சுட்டிக்காட்டுகிறார். சங்கப் புலவர்கள் சந்தர்ப்பம் நேர்ந்த போது சில ஊர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லா ஊர்ப்பெயர்களையும் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை . சாலித்தொரே அவர்கள் கூறுவது போல, புன்னாட்டின் பெயரைச் சங்கப் புலவர் கூறாமல் விடவில்லை. அந்தப் பெயரைக் கூறவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தபோது புன்னாட்டின் பெயரைக் கூறியிருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவனைப் பாடிய பரணர் என்னும் சங்ககாலப் புலவர், துளு நாட்டு அரசர் நன்னன் என்பவன் புன்னாட்டின் மேல் போர் செய்ததைக் கூறுகிறார் (அகம் 266:2). “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென.” சாலிதொரே அவர்கள் இதையறியாமல், சங்கச் செய்யுளில் புன்னாட்டின் பெயர் சொல்லப்படவில்லை என்று கூறுவது பொய்யாகிறது. புன்னாடு, எருமைநாடு (மைசூர்), துளு நாடு முதலிய பெயர்கள் சங்கச் செய்யுள்களில் கூறப்படுவதைச் சாலித்தொரே அவர்கள் அறியாமல் தவறாக எழுதியுள்ளதைப் பிழையெனத் தள்ளுக. பூழி நாடு இது கொங்கு நாட்டைச் சேர்ந்தது அன்று. சேரநாட்டைச் சேர்ந்தது. இங்குத் தோண்டி, மாந்தை என்னும் துறைமுகப் பட்டினங்கள் இருந்தன. இத்துறைமுகங்கள் கொங்குச் சேரருக்கு உரியதாக இருந்தபடியால் இது பற்றி இங்குக் கூறுகிறோம். பூழி நாடு, சேர நாட்டுக்கும் துளு (கொங்கணம்) நாட்டுக்கும் இடையில் கடற்கரையோரமாக இருந்தது. பூழி என்றால் புழுதிமண் என்பது பொருள். பெரும்பாலும் புழுதி மண்ணாக இருந்தபடியால் இந்த நாட்டுக்குப் பூழி நாடு என்று பெயர் கூறப்பட்டது. பூழி நாடு கடற்கரையோரமாக அமைந்திருந்ததை அம் மூவனாரின் குறுந்தொகைச் செய்யுளினால் அறிகின்றோம். “யாரணங் குற்றனை கடலே; பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன மீனார் குருகின் கானலம் பெருந்துறை வெள்வீத் தாழைத் திரையலை நள்ளென் கங்குலுங் கேட்டும்நின் குரலே.” (குறுந். 163) பூழி நாட்டின் கிழக்குப் பக்கத்தில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் செருப்பு என்பது பெயர். அந்த மலையைச் சார்ந்து காடுகளும் முல்லை நிலங்களும் புல்வயல்களும் இருந்தன. அங்கு ஆடுமாடுகளை வளர்த்துக் கொண்டு ஆயர்கள் வாழ்ந்து வந்தனர். மலைக்காடுகளில் விலையுயர்ந்த கதிர்மணிகளும் கிடைத்தன. “முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் மிதியல் செருப்பில் பூழியர் கோவே!” (3ஆம் பத்து 1 : 20 - 23) (கோவலர் -ஆயர், இடையர். ஆபரப்பி - பசுக்களை மேயவிட்டு. கல் - மலை. மிதியல் செருப்பு -காலுக்கு அணியாத செருப்பு , அதாவது செருப்பு என்னும் மலை.) “மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் நாள்மேய லாரும் மாரி எண்கின் மலைச் சுரம்.” (நற். 192 :3.5) (துரு -ஆடு மாடுகள். எண்கு - கரடி. சுரம் - காட்டுவழி) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தம்பியாகிய பல் யானைச் செல்கழு குட்டுவன் (நார்முடிச் சேரலுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் சிற்றப்பன்), பூழியர்கோ (பூழி நாட்டின் அரசன்) என்று கூறப்படுகிறான் (3 ஆம் பத்து 1: 20 - 23). இவன் பூழி நாட்டையாண்டதோடு கொங்கு நாட்டின் சில ஊர்களை வென்றான். பூழி நாட்டை 25 ஆண்டு அரசாண்ட பிறகு இவன் அரசைத் துறந்து காட்டுக்குத் தவஞ் செய்யப் போய்விட்டான் (3 ஆம் பத்துப் பதிகம்). ஆதிகாலம் முதல் சேரருக்கு உரியதாக இருந்த பூழி நாட்டை அதன் வடக்கிலிருந்த துளு நாட்டு நன்னன் கைப்பற்றிக் கொண்டான். அதனால், சேரர் தாங்கள் இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. சேர நாட்டை யரசாண்ட களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நன்னனோடு போர் செய்து அவனை வென்று தனக்குக் கீழடக்கிக்கொண்டதோடு அவன் கைப்பற்றி யிருந்த பூழி நாட்டையும் மீட்டுக்கொண்டான். “ ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில் பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து. (4ஆம் பத்து, பதிகம்) “குடா அது இரும்பொன் வாகை பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன, வளம்.” (அகம். 199: 18-23) பூழி நாட்டுக்குக் கொங்கானம் என்று பெயர் இருந்ததென்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கே.ஜி.சேஷ ஐயர் முதலியோர் கூறுவது தவறு.9 கொங்காண நாட்டரசனாகிய நன்னன் பூழி நாட்டை வென்று சிலகாலம் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். ஆனால், பூழி நாட்டுக்குக் கொங்காணம் என்று பெயர் இருந்ததில்லை. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பூழிநாட்டை மீட்டுக் கொண்டதையறிந்தோம். ஆனாலும், பூழிநாடு சேர அரசர்களுக்கு இல்லாமல் கொங்குச்சேரருக்கு உரியதாக இருந்து வந்தது. ஏனென்றால், உள்நாடாகிய கொங்கு நாட்டுக்குக் கடற்கரையும் துறைமுகமும் இல்லாத படியால், கொங்கு நாட்டையரசாண்ட கொங்குச் சேரர்களுக்குத் துறை முகப்பட்டினம் வேண்டியதாக இருந்தது. கொங்கு நாட்டை யடுத்து மேற்கிலிருந்த பூழி நாட்டிலே தொண்டி, மாந்தை என்று இரண்டு துறைமுகப்பட்டினங்கள் இருந்த படியால் இத்துறைமுகங்களையுடைய பூழி நாட்டைச் சேர அரசர், கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேர நாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத்துறைமுகங்களையும் பூழிநாட்டைச் சேர அரசர் கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேரநாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத் துறைமுகங் களையும் பூழி நாட்டைச் சேர அரசர் கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேரநாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத் துறைமுகங்களையும் பூழி நாட்டையும் கொங்குச் சேரர்களுக்குக் கொடுத்தார்கள் என்று தெரிகின்றது. பிறகு, பூழிநாடும் அதன் துறைமுகப் பட்டினங்களும் கொங்குச் சேரர்களிடம் இருந்தன. கொங்கு நாட்டரசர்கள் பூழியர்கோ என்றும் பூழியர் மெய்ம்மறை என்றும் கூறப்பட்டனர். செல்வக்கடுங்கோ வாழியாதன், “ஊழி வாழி பூழியர் பெருமகன் பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாள் செல்வக் கடுங்கோ வாழியாதன்” (புறம். 387 - 28 -30) என்று கூறப்படுகின்றான். அவனுடைய மகனான தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை ‘பூழியர் மெய்ம்மறை’ (8ஆம் பத்து 3: 13) என்று கூறப்படுகின்றான். அவனுக்குப் பிறகு கொங்கு நாட்டையரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை ‘பூழியர் கோவே’ என்றும் (9ஆம் பத்து 4:6) ‘பூழியர் மெய்ம்மறை’ என்றும் (9ஆம் பத்து 10:27) கூறப்படு கின்றான். இதனால் கொங்குச் சேரர் பூழி நாட்டையும் அதனைச் சேர்ந்த மாந்தை, தொண்டி என்னுந் துறைமுகப்பட்டினங்களையும் வைத்திருந் தனர் என்பது தெரிகின்றது. பூழி நாடு மேற்குக் கடற்கரையோரத்தில் துளுநாட்டுக்குத் தெற்கிலும் சேரநாட்டுக்கு வடக்கிலும் அமைந்திருந்ததையறிந் தோம். இந்த நாட்டின் இயற்கை வளத்தையும் இங்கிருந்த தொண்டித் துறைமுகத்தையும் குறுங்கோழியூர்கிழார் கூறுகின்றார். “குலையிறைஞ்சிய கோள்தாழை, அகல்வயல் மலைவேலி நிவந்த மணல் வியன்கானல் தெண்கழிமிசைத் தீப்பூவின் தண்தொண்டியோர் அடுபொருந” (புறம். 17: 9 - 13) கடலை மேற்கு எல்லையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையைக் கிழக்கு எல்லையாகவும் கொண்ட இந்த நாடு, தாழை (தென்னை) மரச் சோலைகளும் அகன்ற நெல் வயல்களும் கடற்கரை உப்புக்கழிகளும் உடையதாய், தொண்டித் துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது என்று இதனால் தெரிகின்றது. மாந்தை பூழி நாட்டில் மாந்தை என்னுந் துறைமுகப்பட்டினம் இருந்ததும், அது தொன்றுதொட்டுச் சேரருக்குரியதாக இருந்ததும் அறிந்தோம். துறைமுகப்பட்டினமாக இருந்த படியால் அங்கு அயல் நாட்டுக் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். அதனால், சேரர்களுக்குச் சுங்க வருவாய் கிடைத்தது. இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் மாந்தைப் பட்டினத்தில் பொன் முதலான பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார். “வலம்படு முரசிற் சேரல் ஆதன் முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணிதிறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவன் நிலந் தினத் துறந்த நிதியம்” (அகம். 127 : 3 -10) மாந்தைப் பட்டினம் மரந்தை என்றுங் கூறப்பட்டது. “குரங்குகளைப் புரவிக் குட்டுவன் மரந்தை யன்ன என்நலம்” (அகம். 376 : 17 - 18) எதுகை நோக்கி இவ்வாறு சில பதிப்புகளில் மரந்தை என்று கூறப்பட்டது. சில பதிப்புகளில் இது ‘ மாந்தை’ என்றே பதிப்பிக்கப்பட்டுள்ளது. “குட்டுவன் ... .. ... .. கடல்கெழு மாந்தை” (நற். 395 :4- 9) என்றும், ‘குட்டுவன் மாந்தை’ (குறுந். 34 :6) என்றும், ‘துறைகெழு மாந்தை’ (நற் 35: 7) என்றும் இது கூறப்படுகிறது. செல்வக்கடுங்கோ வாழியாதன், மாந்தரன் என்று கூறப்படுகின்றான். “பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல் போர் மாந்தரம், பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம்போல” (அகம். 142 : 3-6.) அவனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறை ‘விறல்மாந்தரன் விறல் மருக’ என்று (9ஆம் பத்து 10:13) கூறப்படுகின்றான். இதனால், மாந்தைத் துறைமுகப்பட்டினம் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்தி லிருந்து கொங்குநாட்டுத் துறைமுகமாக இருந்தது என்று தெரிகின்றது. தொண்டி சங்க காலத்தில் தமிழகத்தில் இரண்டு தொண்டித் துறைமுகப் பட்டினங்கள் இருந்தன. ஒன்று, கிழக்குக் கடற்கரையில் பாண்டியருக்கு உரியதாக இருந்தது. மற்றொன்று, மேற்குக் கடற்கரையில் பூழி நாட்டில் சேரருக்கும் பொறையருக்கும் உரியதாக இருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களுக்குத் துறைமுகப் பட்டினம் இல்லாத படியால், அவர்கள் தொண்டியைத் தங்களுடைய துறைமுகப்பட்டின மாகக் கொண்டிருந்தார்கள். சங்கச் செய்யுள்கள் தொண்டிப் பட்டினத்தைக் கூறுகின்றன. “ வெண்கோட்டியானை விறல்போர்க் குட்டுவன், தெண்திரைப் பரப்பில் தொண்டி முன்துறை” (அகம். 290, 12 :18) என்றும், “ திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை” என்றும் (குறுந். 128 : 2). “வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந” என்றும் (9ஆம் பத்து 4 :21), “திண் தேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (அகம் 60 : 7), “கல்லெண் புள்ளியன் கானலந் தொண்டி” என்றும் (நற் . 195:5), “அகல் வயல், அரிநர் அரிந்தும் தருவநர்ப் பெற்றும், தண்சேறு தாய் மதனுடை நோன்றாள், கண்போல் நெய்தல் போர் விற்பூக்கும். திண்டேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (நற். 8: 5 - 9) இந்தப் பட்டினம் கூறப்படுகிறது. தொண்டிப் பட்டினத்தைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. கோட்டை வாயிலின் கதவில் மூவன் என்பவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தது என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. “மூவன் , முழுவலி முள்ளெயிறு அழுத்தியகதவில், கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்” (நற் 18: 2 -5). யவனர்கள் தொண்டியைத் ‘திண்டிஸ்’ (Tindis) என்று கூறினார்கள். *** அடிக்குறிப்புகள் 1. `இரும்பு புனைந்தியற்றாப் பெரும் பெயர் தோட்டி. அம்மலை காக்கும் அணி நெடுங்குன்றில், பளிங்கு வகுத்தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி’ (புறம்: 150: 25-28) (கோட்டி - யானைப்பாகர் யானைகளை அடக்கி நடத்துகிற ஓர் ஆயுதம். இது இரும்பினால் செய்யப்படுவது. அந்தப் பெயரையுடைய இந்த மலை `இரும்பு புனைந்து இயற்றா தோட்டி’ எனப்பட்டது. 2. `திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்’ (குறும் 210: 1-2) (நள்ளி - கண்டிரக்கோ அரசன் பெயர், அண்டர் - ஆயர், இடையர்) 3. “முருகன் நன்பேர் நெடுவேள் ஆவி, அறுகோட்டியானைப் பொதினி” (அகம். 1:3-4) “முழபுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி, பொன்னுடைய நெடுநகர்ப் பொதினி” (அகம். 61: 15-16). 4. “பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம். 208:22) “செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.” (நற். 201:5) 5. “தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன், பன்மணிக் குவையெடும் விரைஇக் கொண்பெனச், சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை, ஓங்கிருங் கொல்லிப் பொருநன்”. (புறம், 152: 28-31) “பகல்செலப், பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப், பெருமரங்கொன்ற கால்புகுவியன்புனத்து, எரிமருள் கதிர திருமணி யிமைக்கும், வெல்போர்வானவன் கொல்லிக் குடவரை” (அகம். 213: 111-5). 6. “கடவுள் எழுதிய பாவை”. (அகம் 62:15) “தெய்வம் எழுதிய வின்மான் பாவை” (நற். 185-10) 7. “செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித் தெய்வங்காக்கும் தீதுநீர் நெடுங்கோட் அவ்வெள்ளருவிக் குடவரையகத்துக் கால் பொரு திடிப்பினும் கதமுறை கடுகினும், உருமுடன் நெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலங்கிளறினுந் திருநலவுருவின், மாயர் இயற்கைப் பாவை”. (நற்றினை. 201: 5-11). 8. (Ancient karnataka. Vol. I. History of Tuluva. Baskar. Anand Saletore 1936) 9. P. 33. Cera kings of the sangem period K.G. Sesha Aiyar 1937. “சங்க காலச் சிறப்புப் பெயர்கள்” பக்கம் 258, 335. “வேளிர் வரலாறு” பக்கம். 65. 2. கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள் அதிகமான் அரசர் கொங்கு நாட்டைச் சேர அரசர் கைப்பற்றுவதற்கு முன்பு அந் நாட்டைப் பல சிற்றரசர் பரம்பரை யரசாண்டு கொண்டிருந்தது. அச் சிற்றரசர்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவரையில் கூறுகின்றோம். கொங்குநாட்டை யரசாண்ட சிற்றரசர்களில் தகடூரை யரசாண்ட அதிகமான் அரசர் பேர்போனவர். அவர்கள்அதிகமான் என்றும், அதியமான் என்றும் கூறப்பட்டனர். தகடூர் இப்போது தர்மபுரி என்று பெயர் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி வட்டமே பழைய தகடூர் நாடு. தகடூர்அதிகமான் அரசர் தகடூரில் கோட்டைக் கட்டிக் கொண்டு அரசாண்டார்கள். அது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றிருந்தது. அதிகமான் கோட்டை என்பது பிற்காலத்தில் ‘அதமன் கோட்டை’ என்று சிதைந்து வழங்கப்பட்டது. இந்த அதிகமான் கோட்டை தகடூரிலிருந்து (தர்மபுரியிலிருந்து) தென்மேற்கே 5 மைல் தூரத்திலிருக்கின்றது. சேலத்திலிருந்து வடக்கே 29 மைலில் இருக்கிறது. தகடூரை, அதிகமான் அரசர் பரம்பரை பரம்பரையாக அரசாண்டார்கள். சங்க காலத்தில் அரசாண்ட தகடூர் அதிக மான்களில் மூவர் பெயர் மட்டும் தெரிகின்றது. அதிகமான் அரசர்களின் முன்னோன் ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து கொங்கு நாட்டில் பயிராக்கினான் என்று ஒளவையார் கூறுகிறார்.1 தேவலோகத்தி லிருந்து கரும்பு கொண்டுவந்தான் என்பது மிகைப்படக் கூறலாகும். வேறு ஊர் எங்கிருந்தோ அவன் கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கினான் என்பதே சரியாகும். அதிகமான் அரசர்களில் முதன்முதலாக அறியப் படுகிறவன் நெடுமிடல் அஞ்சி என்பவன். சேர நாட்டு அரசனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நெடுமிடல்அஞ்சியை ஒரு போரில் வென்றான் என்று பதிற்றுப்பத்துச் செய்யுள் கூறுகிறது.2 இதில் கூறப்படுகிற நெடுமிடல் என்பது அதிகமான் அரசர்களில் ஒருவனுடைய பெயர் என்று பழைய உரையாசிரியர் கூறுகிறார். “நெடுமிடல் அஞ்சி இயற்பெயராம்” என்று உரையாசிரியர் தெளிவாகக் கூறுவது காண்க. பரணர், தம்முடைய செய்யுள் ஒன்றில் நெடுமிடலைக் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறுகிற நெடுமிடல் அஞ்சியே இந்த நெடு மிடல் என்பதில் ஐயமில்லை. இந்த நெடுமிடல் பசும் பூண் பாண்டியனுடைய நண்பனாகவும் சேனைத் தலைவனாகவும் இருந்தான். பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் சிலர், நெடுமிடலுடன் போர் செய்து அவனை வென்றார்கள் என்று பரணர் கூறுகிறார்.3 இந்த அதிகமான் நெடுமிடல் அஞ்சியும் பசும் பூண் பாண்டியனும் நண்பர்கள் என்பது அகம் 162 செய்யுளினால் தெரிகின்றது.4 (குறிப்பு : இந்தப் பசும்பூண் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாகிய பசும் பூண்செழியன் அல்லன்; இவனுக்கு முன்பு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் காலத்திருந்தவன். இரண்டு பசும்பூண் பாண்டியரில் முதல் பசும்பூண் பாண்டியன் அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் காலத்திலிருந்தவன்.) பசும்பூண் பாண்டியன் துளுநாட்டு நன்னன்மேல் படையெடுத்துச் சென்றான். அவனுடைய படைக்குச் சேனாதிபதியாக இருந்தவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி. துளு நாட்டு வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் துளு நாட்டுச் சேனாதிபதியாகிய மிஞிலிக்கும் நெடுமிடல் அஞ்சிக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் நெடுமிடல் அஞ்சி இறந்து போனான்.5 அதிகமான் நெடுமிடல் அஞ்சிக்குப் பிறகு தகடூர் நாட்டுக்கு அரசனானவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகமான் நெடுமான் அஞ்சி ஒளவையாரை ஆதரித்தவன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஒளவையார் இவனுடைய வீரத்தையும் வெற்றிகளையும் பாடியுள்ளார் (புறம். 87, 88 ,89, 90, 91, 92, 93, 94, 95, 97, 98, 315, 390). இவன் ஏழு அரசர்களோடு போர் செய்து வென்றதை ஒளவையார் கூறுகிறார்.6 இவன், மலையமான் திருமுடிக்காரியின் கோவலூரின் மேல் படையெடுத்துச் சென்று போரில் வென்றான் என்றும் அந்த வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடினார் என்றும் ஒளவையார் கூறுகின்றார். இவனுடைய வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடிய செய்யுள் இப்போது கிடைக்கவில்லை. கோவலூர்ப் போரை இவன் வென்றோனேயல்லாமல் கோவலூரை இவன் பிடிக்கவில்லை. அதிகமான் நெடுமான் அஞ்சி வேறு சில போர்களில் வெற்றிபெற்றான் என்று ஒளவையார் கூறுகிறார். “கடிமதில் அரண்பல கடந்த நெடுமான் அஞ்சி” (புறம் 92: 5- 6). இந்தப் போர்கள் யாருடன் எங்கு நடந்தன என்பதும் தெரியவில்லை. உண்டவரை நெடுங்காலம் வாழச் செய்கிற கிடைத்ததற்கரிய கரு நெல்லிக்கனி அதிகமான் நெடுமான் அஞ்சிக்குக் கிடைத்தது. அக் கனியை அவன் தான் உண்ணாமல் பெரும் புலவராகிய ஒளவை யாருக்குக் கொடுத்தான். அவர் அதையுண்ட பிறகுதான் அது கிடைத்தற்கரிய கருநெல்லிக்கனி என்பது அவருக்குத் தெரிந்தது. அப்போது அவர் இவனை வியந்து பாடினார்.7 இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையுங் கூறுகின்றது. அதிகமான் அரசர் கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கி யதையும் ஒளவைக்குக் கருநெல்லிக்கனி கொடுத்ததையும் பிற்காலத்து நூலாகிய கொங்குமண்டல சதகமுங் கூறுகின்றது. “சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக் காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர் மாதிரஞ் சூழரண் மேவுவதுங் கொங்கு மண்டலமே” இவ்வதிகமான் ஒளவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான் என்பது ஒளவையார் பாடிய புறம் 95 ஆம் செய்யுளிலிருந்து தெரிகின்றது. இந்தத் தூது எதன் பொருட்டு அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை. அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு ஒரு மகன் பிறந்தான். அப்போது போர்க்களத்தில் போர் செய்துகொண்டிருந்த அதிகமான் இந்தச் செய்தி அறிந்து போர்க்கோலத்தோடு விரைந்து வந்து தன் மகனைக் கண்டு மகிழ்ந்தான். அந்தக் காட்சியை ஒளவையார் பாடி யுள்ளார் (புறம் 100). அந்த மகனுடைய பெயர் பொகுட்டெழினி என்பது. இவர்கள் காலத்தில் தென் கொங்கு நாட்டையரசாண்ட பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்தான். அவனை நெடுமான் அஞ்சியும் பொகுட்டெழினியும் எதிர்த்துப் போர் செய்தார்கள். பெருஞ்சேரலிரும்பொறை வெற்றி பெற்றுத் தகடூரைக் கைப்பற்றினான். நெடுங்காலம் சுதந்தரமாக அரசாண்டிருந்த அதிகமான் அரசர் தகடூர்ப் போருக்குப் பிறகு கொங்குச் சேரருக்குக் கீழடங்கி அரசாண்டார்கள். அதிகமான் அரசர் பரம்பரை கி.பி. 13ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன. கடைச்சங்க காலத்தில் இருந்த அதிகமான் அரசர் பரம்பரையில் கீழ்க்கண்டவர் நமக்குத் தெரிகின்றனர்: அதிகமான் நெடுமிடல் அஞ்சி அதிகமான் நெடுமான் அஞ்சி அதிகமான் பொகுட்டெழினி ஓரி கொங்கு நாட்டைச் சேர்ந்த கொல்லி மலையையும் அதனைச் சார்ந்த கொல்லிக் கூற்றத்தையும் அரசாண்ட மன்னர் ஓரி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்களுடைய வரலாறு முழுவதும் கிடைக்க வில்லை. அவர்களில் ஒருவன் ஆதனோரி. இவன் வள்ளலாக விளங்கினான். இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கு யானையை யும் தானங் கொடுத்தான்.8 இவன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாகக் கூறப்படுகின்றான். இவன் போருக்குப் போகும்போது தன்னுடைய ஓரி என்னும் பெயருள்ள குதிரைமேல் அமர்ந்து செல்வான். இவனும் இவனுடைய கொல்லி நாட்டுக்கு அடுத்திருந்த தகடூர் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் நண்பர்களாக இருந்தார்கள். முள்ளூர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி, கொல்லி மலை ஓரியுடன் போர் செய்தான். காரி, தன்னுடைய காரி என்னும் குதிரை மேல் அமர்ந்தும் ஓரி தன்னுடைய ஓரி என்னுங் குதிரைமேல் அமர்ந்து போர் செய்தார்கள்.9 போரில் ஓரி இறந்துபோக, காரி ஓரியின் ஊரில் வெற்றியோடு புகுந்தான்.10 ஓரியின் கொல்லி நாட்டை வென்ற காரி அந்நாட்டைத் தன்னுடைய அரசனாகிய பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கொடுத்தான்.11 ஓரி அரசர், பரம்பரையாக ஆண்டு வந்த கொல்லி நாடு பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில், சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. கழுவுள் கொங்கு நாட்டுக் காமூரில் வாழ்ந்த இடையர்களின் தலைவன் கழுவுள். காமூரைச் சூழ்ந்து பலமான கோட்டைமதிலும் அகழியும் இருந்தன. இவனுக்கு முன்பு காமூரையர சாண்ட இவனுடைய பரம்பரை யரசர் இன்னாரென்று தெரியவில்லை. கொங்குச் சேரர் தங்களுடைய கொங்கு இராச்சியத்தை விரிவாக்கினபோது, பெருஞ்சேரல் இரும் பொறை கழுவுள் மேல் படையெடுத்துச் சென்று போர்செய்தான். கழுவுளும் பலமுடையவனாக இருந்தபடியால் அவனை எதிர்த்துப் போர் செய்தான். பெருஞ்சேரல் இரும் பொறைக்கு உதவியாகப் பதினான்கு வேள் அரசர் கழுவுளுக்கு எதிராகப் போர்செய்து கழுவுளை வென்றார்கள்.12 கடைசியில் கழுவுள் பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கீழடங்கினான். காமூர் சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்தது. இந்தப் போர், பெருஞ்சேரலிரும் பொறை கொல்லிக் கூற்றத்தையும் தகடூர் நாட்டையும் பிடிப்பதற்கு முன்பு நடந்தது. கொங்குச் சேரர் தங்கள் இராச்சியத்தைப் பெரிதாக்கிய காலத்தில் அவர்களில் ஒருவனான பெருஞ்சேரலிரும் பொறை கழுவுள் மேல் படையெடுத்துச் சென்று போர்செய்தான். அவனுக்கு உதவியாகப் பதினான்கு வேளிர் வந்து கழுவுள்மேல் போர்புரிந்தார்கள். கடைசியில் கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலிரும் பொறைக்கு அடங்கினான். குமணன் கொங்கு நாட்டில் முதிரம் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் குமணன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். வள்ளலாக இருந்த அவன் புலவருக்கும் மற்றவர்களுக்கும் தான தருமம் செய்தான்.13 பெருஞ்சித்திரனார் இவனைப் பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.14 இளவெளிமானிடஞ் சென்று பரிசு கேட்டபோது அவன் சிறிது கொடுக்கக் கொள்ளாமல் பெருஞ்சித்திரனார் குமணனிடம் வந்து யானையைப் பரிசில் கேட்டார்.15 அவன் யானை கொடுக்க, அதைக் கொண்டு போய் வெளிமானூர்க் காவல் மரத்தில் கட்டி ஒரு செய்யுள் பாடினார்.16 குமணனுடைய தம்பி இளங்குமணன் என்பவன் தமயனாகிய குமணனைக் காட்டுக்கு ஓட்டி நாட்டைக் கைப்பற்றி யரசாண்டான். குமணன் காட்டில் தங்கியிருந்தான். அப்போது பெருந்தலைச்சாத்தனார் குமணனைக் கண்டு ஒரு செய்யுள் பாடினார்.17 அச்செய்யுளில் அப் புலவருடைய வறுமை நெஞ்சையுருக்கும் தன்மையதாக இருந்தது. அச் செய்யுளைக் கேட்ட குமணன், தன்னுடைய துன்பத்தைவிடப் புலவரின் துன்பம் கொடியது என்று உணர்ந்து, தன் கையில் பொருள் இல்லாதபடியால், தன்னுடைய வாளைப் புலவரிடம் கொடுத்து, தன் தலையை வெட்டிக் கொண்டுபோய்த் தன் தம்பியிடங் கொடுத்தால் அவன் பரிசாகப் பொருள் கொடுப்பான் என்று கூறினான். வாளைக் கையில் வாங்கிக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் வாள்கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. குமணனைப் பற்றி இவ்வளவுதான் தெரிகின்றது. குமணனுடைய முதிரம் என்னும் ஊர் கொங்கு நாட்டில் எவ்விடத்தில் இருந்தது என்பது தெரியவில்லை. இளங்குமணனைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை. விச்சியரசர் விச்சிமலையையும் அதனைச் சார்ந்த நாட்டையும் அரசாண்டவர் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தனர். விச்சியூரில் விச்சிமலை இருந்தது. பச்சைமலை என்று இப்போது பெயர் பெற்றுள்ள மலையே பழைய விச்சிமலை என்று கருதுகிறார்கள். பச்சைமலை இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கின்றது. விச்சியரசரைக் ‘கல்லக வெற்பன்’ என்றும் ‘ விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ’ என்றும் கபிலர் கூறுகின்றார். விச்சிமலைமேல் இருந்த ஐந்தெயில் என்னும் கோட்டையில் விச்சியரசர் வாழ்ந்தார்கள். விச்சி நாட்டில் குறும்பூர் என்னும் ஊர் இருந்தது. அங்குப் பாணர் என்னும் இனத்தார் வசித்து வந்தார்கள். விச்சி மன்னன் பகைவரோடு போர் செய்தபோது, அவன் புலி போன்று வீரமாகப் போர் செய்ததைப் பாணர்கள் கண்டு ஆரவாரஞ் செய்து மகிழ்ந்தார்கள் என்று பரணர் கூறுகின்றார்.18 பாரி வள்ளல் போரில் இறந்தபிறகு, அவனுடைய பரம்பு நாட்டைப் பகைமன்னர் கைக்கொண்ட பின்னர், பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் அழைத்துக் கொண்டு விச்சிக்கோவிடம் வந்து அவர்களைத் திருமணஞ் செய்துகொள்ளும்படி கேட்டார். அதற்கு விச்சியரசன் இணங்கவில்லை (புறம் 200 அடிக்குறிப்புக் காண்க) விச்சியரசன் தம்பி இளவிச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான். சுதந்தரமாக அரசாண்டுகொண்டிருந்த விச்சியரசரை இளஞ் சேரல் இரும்பொறை வென்று விச்சி நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். விச்சியரசனுடைய ஐந்தெயில் கோட்டையை இளஞ்சேரல் இரும்பொறை முற்றுகையிட்ட போது விச்சியரசர்களுக்குப் பாண்டியனும் சோழனும் உதவியாக இருந்தார்கள். ஆனாலும், இளஞ்சேரல் இரும்பொறை விச்சியை வென்று அவனுடைய ஐந்தெயில் கோட்டையைக் கைப்பற்றினான்.19 கட்டியரசர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆதிகாலம் முதல் அரசாண்டவர் கட்டி என்னும் பெயர் பெற்ற பரம்பரையரசர். கட்டியர்அரசாண்ட பகுதி வடகொங்கு நாட்டில், வடுக தேசமாகிய கன்னட தேசத்தின் தெற்கு எல்லையைச் சார்ந்திருந்தது.20 வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் சோழனுடைய சேனைத் தலைவனான பழையன் படையெடுத்துச் சென்று போர்செய்தபோது புன்னாட்டு அரசனுக்கு உதவியாகப் பழையனை எதிர்த்துப் போர்செய்த கொங்கு நாட்டு அரசர்களில் கட்டியரசனும் ஒருவன்.21 ஒரு கட்டியரசன், உறையூரை யாண்ட தித்தன் வெளியன் என்னுஞ் சோழன்மேல் போருக்குச் சென்று உறையூர்க் கோட்டையை யடைந்தபோது, கோட்டைக்குள் தித்தன் வெளியனுடைய பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் கிணைப்பறை கொட்டப்பட்ட முழக்கத்தைக் கேட்டுப் போர் செய்யாமல் திரும்பிப் போய்விட்டான்.22 கட்டியரசர், கொங்கு நாட்டையாண்ட பொறைய அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்று தோன்றுகின்றனர். கட்டி பரம்பரையார் மிகமிகப் பிற்காலத்திலும், விசயநகர ஆட்சிக் காலத்திலும் இருந்தார் கள். இக்காலத்தில் அவர்கள் கெட்டி முதலியார் என்று பெயர் பெற்றிருந்தார்கள். கட்டி என்னும் பெயரே பிற்காலத்தில் கெட்டி என்று மருவியது. குதிரைமலைக் கொற்றவர் கொங்கு நாட்டில் குதிரைமலையும் அதனை அடுத்து முதிரம் என்னும் ஊரும் இருந்தன. பிட்டங்கொற்றன் என்பவன் இங்குச் சிற்றரசனாக இருந்தான். இவன் சேரனுடைய சேனாபதி என்றும் வள்ளல் என்றும்ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார். குதிரைமலைக் கொற்றன் ஈகைக் குணம் உடையவன் என்று கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் கூறுகிறார்.23 இவன் வானவனுடைய (சேரனுடைய) மறவன் என்றும் போர் செய்வதில் வல்லவன் என்றும் கூறப்படுகிறான்.24 வடம வண்ணக்கன் தாமோதரனார், பிட்டங்கொற்றனையும், அவனுடைய அரசனான கோதையையும் கூறுகிறார்.25 மாவண் ஈகைக் கோதையும் பிட்டனுடைய இறைவனும் கோதை எனப்படுகிறான். கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது. உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம் 170 : 6-8) இவனைப் பாடியுள்ளார். குதிரைமலை நாட்டை ஆண்ட எழினி என்பவன் ஒருவன் கூறப் படுகிறான். இவன் பிட்டங்கொற்றனுக்குப் பிறகு இருந்தவன் எனத் தோன்றுகிறான். (இந்த எழினி தகடூரை யாண்ட அதிகமான் குலத்தில் இருந்த எழினியல்லன்.) குதிரைமலை எழினி வள்ளலாகவும் இருந்தான். “ஊராதேந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினி” என்று (புறம் 158:8.9) இவன் கூறப்படுகிறான். எழினிக்குப் பிறகு முதிரத்தையும் குதிரைமலையையும் அரசாண்டவன் குமணன் என்பவன். இவன் வள்ளல்களில் ஒருவன்.26 குமணனைப் புகழ்ந்து பெருஞ்சித்திரனார் பாடிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 160, 161, 162, 163). குமணனுக்குத் தம்பி யொருவன் இருந்தான். அவனுக்கு இளங்குமணன் என்று பெயர். இளங்குமணன், தமயனான குமணனைக் காட்டுக்கு ஓட்டிவிட்டு நாட்டைக் கைப்பற்றி யரசாண்டான். குமணன் காட்டிலே இருந்தான். புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டிலே கண்டு ஒரு செய்யுளைப் பாடினார். அதில் அவர் தம்முடைய வறுமைத் துன்பத்தைக் கூறினார் (புறம் 164). குமணன் செய்யுளைக் கேட்டு மனம் உருகித் தன்னிடம் அப்போது பொருள் இல்லையே என்று கலங்கி தன்னுடைய போர்வாளைப் புலவரிடம் கொடுத்துத் தன்னுடைய தலையை வெட்டிக்கொண்டுபோய் இளங் குமணனிடங் கொடுத்தால் அவன் பெரும்பொருள் கொடுப்பான் என்று கூறினார். புலவர் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, நேரே இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டிக் குமணன் வாள் கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. முதிரைமலைக் குமணனும் குதிரைமலைக் குமணனும் வெவ்வேறு ஆட்கள் போலத் தோன்றினாலும் இருவரும் ஒருவரே. முதிரமலைக்குக் குதிரைமலை என்றும் பெயர். நள்ளி கண்டிரம் என்னும் நாட்டை யரசாண்ட மன்னர்கள் கண்டிரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் நள்ளி என்பவன் ஒருவன். இவனைக் கண்டிரக்கோ பெருநள்ளி என்பர். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவனைக் ‘கண்டிரக்கோபெருநள்ளி’ என்பர். தேர் (வண்டி)களையும் யானைகளையும் பரிசிலர்களுக்குக் கொடுத்துப் புகழ் படைத்திருந்தான். நள்ளி ஊரில் இல்லாதபோது இரவலர் அவனுடைய மாளிகைக்கு வந்தால் அவனுடைய பெண்டிர் அவர் களுக்கு யானைக் கன்றுகளைப் பரிசாக அளித்தார்கள் (புறம் 151:1-7). நள்ளியின் கொடைச் சிறப்பைச் சிறுபாணாற்றுப்படையும் (அடி 104-107) கூறுகிறது. பெருஞ்சித்திரனாரும் இவனுடைய வள்ளன்மையைக் கூறுகிறார் (புறம் 158 : 13 -14). வன்பரணர் என்னும் புலவர் நள்ளியின் தோட்டிமலைக் காடுகளின் வழியே பயணஞ் செய்தபோது பசியினால் சோர்ந்து ஒரு பலாமரத்தின் அடியில் உட்கார்ந்துவிட்டார். அருகில் ஊர் இல்லாத காடாகையால் உணவு கிடைக்கவில்லை. அப்போது நள்ளி அங்கு வந்து மான் ஒன்றை வேட்டையாடிக் கொண்டு வந்து அதன் இறைச்சியை நெருப்பிலிட்டுச் சமைத்துப் புலவருக்குக் கொடுத்து அவர் பசியை நீக்கினான். இச்செய்தியை அவர் தாம் பாடிய செய்யுளில் கூறுகிறார் (புறம் 150). நள்ளியின் பெயரினால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்தது. புகழூர்மலைக் குகையில் உள்ள பிராமி எழுத்துச் சாசனம் நள்ளியூரைக் கூறுகிறது (Epl - coll 296 of 1963 - 64). புன்னாட்டரசர் புன்னாடு வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்தது. கி. பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்த தாலமி என்பவர் (Ptolemy) புன்னாட்டைத் தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார். அவர் அதை பொவுன்னாட (Pounnata) என்று கூறுகிறார். புன்னாட்டில் உலகப் புகழ் பெற்ற நீலக்கல் சுரங்கம் இருந்ததையும் அந்த நீலக்கற்களை உரோம தேசத்தவர் மதித்து வாங்கிச் சென்றதையும் முன்னமே கூறினோம். புன்னாட்டு வழியாகக் காவிரி, கப்பிணி என்னும் இரண்டு ஆறுகள் பாய்ந்தன. கப்பிணி ஆறு காவிரியின் ஒரு கிளை நதி. கப்பிணி ஆற்றங்கரையில் புன்னாட்டின் தலைநகரமான கட்டூர் இருந்தது (Mysore Archaeological Report for 1917, p. 40 -44). கட்டூரைப் பிற்காலத்தில் கிட்டூர் என்றும் கிட்டிபுரம் என்றும் பெயர் வழங்கினார்கள். தலைநகரமான கட்டூரில் புன்னாட்டரசர் இருந்து அரசாண்டார்கள். இது பிற்காலத்தில் புன்னாடு ஆறாயிரம் என்று பெயர் பெற்றிருந்தது. வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த புன்னாடு இப்போது மைசூர் இராச்சியத்தில் ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக்கிறது. துளு நாட்டு அரசனான நன்னன் புன்னாட்டைக் கைப்பற்ற முயன்றான். அப்போது ஆய் எயினன் (வெளியன் வேண்மான் ஆய் எயினன்) புன்னாட்டு அரசனுக்கு உதவியாகத் துளு நாட்டரசனின் மேல் படையெடுத்துச் சென்றான். துளு நாட்டரசனின் சேனாதிபதியான மிஞிலி, பாழி என்னும் போர்க்களத்தில் ஆய்எயினனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.27 இந்த வெளியன் வேண்மான் ஆய்எயினன், சேர நாட்டரசனாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலினுடைய சேனாதிபதி, துளு நாட்டு நன்னன் தான் கருதியது போல் புன்னாட்டைக் கைப்பற்ற முடியவில்லை. புன்னாட்டரசர் கொங்குச் சேரர்களுக்குக் கீழ் அடங்கி யிருந்தனர் என்று தெரிகின்றது. பெரும்பூண் சென்னி என்னுஞ் சோழன் புன்னாட்டைக் கைப்பற்ற எண்ணித் தன்னுடைய சேனாதிபதி பழையன் என்பவன் தலைமையில் தன்னுடைய சேனையை யனுப்பினான். பழையன் புன்னாட்டுக் கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றான். புன்னாட்டரசனுக்கு உதவியாகக் கங்க அரசன், கட்டியரசன், அத்தி, புன்றுறை முதலியவர்கள் இருந்து பழையனுடன் போர் செய்தார்கள். அப்போரில் பழையன் இறந்து போனான்.28 புன்னாட்டரசர் சங்க காலத்துக்குப் பிறகும் கி.பி.5 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அரசாண்டனர். புன்னாட்டில் கிடைத்த ஒரு சாசன எழுத்து புன்னாட்டரசர் சிலருடைய பெயர்களைக் கூறுகின்றது (Indian Antiquary, xii 13, xviii 366). இதில் கீழ்க்கண்ட அரசரின் வழிமுறை கூறப்படுகிறது. ராஷ்ட்ரவர்மன், இவன் மகன் நாகதத்தன், இவன் மகன் புஜகன் (இவன் சிங்கவர்மன் மகளை மணஞ் செய்து கொண்டான்). இவனுடைய மகன் ஸ்கந்தவர்மன், இவனுடைய மகன் இரவிதத்தன் (Mysore and Coorg from its Inscriptions, B. Lewis Rice, 1909, p. 146). (புன்னாட்டரசர் பரம்பரையில் கடைசி அரசனுக்கு ஆண் பேறு இல்லாமல் ஒரே ஒரு பெண் மகள் மட்டும் இருந்தாள். கங்க நாட்டரசன் அவனிதனுடைய மகனான துர்வினிதன் (கி .பி. 482 - 517) புன்னாட்டரச னுடைய மகளை மணஞ் செய்து கொண்டான். அதன் பிறகு புன்னாடு கங்க நாட்டுடன் இணைக்கப்பட்டது. கடைச் சங்க காலத்தில் புன்னாடு வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. சாலிதொரெ என்பவர் புன்னாடு சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் படவில்லை என்று தவறான, உண்மைக்கு மாறான, செய்தியைக் கூறுகிறார் (B.A. Saletore, ‘History of Tuluva’, Ancient Karnataka, Vol. I, p. 51). சங்க இலக்கியத்தில் கூறப்படுகிற எருமையூரன் (எருமை நாடன்) என்பவனுடைய எருமையூர் பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது என்றும் (எருமை - மகிஷம், எருமை ஊர் - மகிஷ ஊர், மைசூர்) மைசூர் என்னும் பெயரே பிற்காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் வழங்கப் படுகிறது என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிற உண்மை. இதைச் சாலிதொரெ மறுக்கிறார். மறுப்பதற்கு இவர் கூறுகிற காரணம் தவறாக இருக்கிறது. கர்நாடக தேசத்திலிருந்த பழைய பெயர்களான கழபப்பு (இப்போதைய சந்திரகிரி), புன்னாடு, குந்தளம் முதலிய பெயர்கள் சங்கச் செய்யுள்களில் கூறப்படாதபடியால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த எருமையூர் பிற்காலத்தில் மகிஷூர் (மைசூர்) என்றாயிற்று என்று கருதுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்று இவர் எழுதுகிறார். எருமையூரைக் கூறுகிற சங்கச் செய்யுள் புன்னாடு முதலிய வேறு ஊர்ப் பெயர்களைக் கூறவில்லை. ஆகையால் எருமையூர் என்று சங்கச் செய்யுள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். புன்னாட்டின் பெயரைச் சங்க இலக்கியம் கூற வில்லை என்று இவர் கூறுவது வியப்பாக இருக்கிறது. புன்னாட்டின் பெயரைச் சங்க செய்யுள் கூறுவதை மேலே காட்டியுள்ளோம். சாலிதொரெ அவர்கள் உண்மையறியாமல் தவறாக எழுதியிருக் கிறார். எருமையூரைக் கூறுகிற சங்கச் செய்யுள் புன்னாட்டையும் கூறுகிறது. கோசர் கோசர் என்னும் ஓர் இனத்தவர் போர் செய்வதையே தங்க ளுடைய குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். அவர்களுடைய தாய்நாடு, அக்காலத்தில் தமிழ்நாடாக இருந்த துளு நாடு. துளு நாட்டைத் தாய் நாடாகக் கொண்டிருந்த இவர்கள் பாண்டிநாடு, சோழநாடு, கொங்கு நாடு முதலிய பல நாடுகளிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் தமிழ்நாட்டு அரசரின் கீழே அவர்களுடைய படைகளில் சேர்ந்திருந்தார்கள். சில சமயங்களில், குடிமக்கள் அரசருக்குச் செலுத்த வேண்டிய இறைப் பணத்தை வசூல் செய்யும் சேவகர்களாகவும் இருந்தார்கள். இந்த முறையில் சில ஊர்களில் இவர்களில் சிலர் ஊராட்சியினராகவும் . இருந்தனர். எண்ணிக்கையில் சிறு தொகையினராக இருந்தும் தமிழக மெங்கும் பேர் பெற்றிருந்தார்கள். போருக்கு அஞ்சாத இவர்கள் ஆற்றலும் உறுதியும் கண்டிப்பும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் குறுநிலமன்னர் அல்லர்; ஆனாலும், நாட்டில் இவர்களுக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. போர்ப் பயிற்சியே இவர்களுடைய குலத்தொழில். குறி தவறாமல் வேல் எறிவதிலும் அம்பு எய்வதிலும் கை தேர்ந்தவர்கள். கோசர் குலத்து இளைஞர்கள், உயரமான மரக்கம்பத்தை நிறுத்தி அதன் உச்சியைக் குறியாகக் கொண்டு வேல்களை (ஈட்டிகளை) எறிந்து பழகினார்கள். அம்புகளை எய்து பயின்றார்கள். ஓங்கியுயர்ந்து வளர்ந்த முருக்க மரத்தின் பக்கக் கிளைகளை வெட்டிக் களைந்து நீண்ட நடு மரத்தை மட்டும் வைத்துக்கொண்டு வேல் எறிந்தும் அம்பு எய்தும் போட்டி போட்டுப் பழகினார்கள்.29 போர்க்களத்தில் உயிருக்கு அஞ்சாமல் போர் செய்து வெற்றியடைந்தனர்.30 போர்க் களத்தில் ஆயுதங்களினால் காயமடைந்ததனால் இவர்களுடைய முகத்தில் வடுக்கள் இருந்தன.31 உடம்பு முழுவதும் நகைகளை அணிந்திருந் தார்கள். இவர்கள் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.32 கோசர் தமிழ்நாட்டுக்கு அப்பால் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர் என்று சிலர் கருதுகின்றனர்.33 இது தவறு. கோசரின் தாய்நாடு துளு நாடு. “மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர், கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகலார்கைப் பறைக்கட் பீலித், தோகைக் காவின் துளு நாடு” (அகம் 15 : 2-5). துளுநாட்டுச் செல்லூருக்குக் கிழக்கில் இவர்கள் இருந்தார்கள். “அருந்திறற் கடவுள் செல்லூர்க்குணா அது, பெருங்கடல் முழக்கிற்றாகி யாணர் இருப்பிடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்” (அகம் 90: 9 -12). துளுநாட்டு நாலூரிலும் இவர்கள் இருந்தார்கள். “ நாலூர்க் கோசர்” (குறுந். 15: 3). துளு நாட்டில் நால்கூர் என்னும் ஊர் இருக்கிறது (நால்கு - நான்கு). போர் வீரர் ஆகையால் இவர்கள் கள் அருந்தினார்கள். இவர்களுடைய வீடுகளில் மதுபானம் இருந்தது. மதுவருந்திக் குரவைக் கூத்தாடினார்கள். “ நனைக் கள்ளின் மனைக்கோசர், தீந்தேறல் நறவு மகிழ்ந்து, தீங்குரவைக் கொளைத்தாங்குந்து” (புறம். 396: 7- 9) கோசர் கொங்கு நாட்டிலும் இருந்தனர். அவர்கள், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததையறிந்து கொங்கு நாட்டிலும் கண்ணகிக்கு விழாச் செய்தனர். இதனை, “அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழாவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று” என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுவதிலிருந்து அறியலாம். கொங்கு நாட்டுக் கோசர், பொறையரசருக்கு அடங்கி அவர்களின் கீழ் ஊழியஞ் செய்திருந்தனர் என்று தோன்றுகிறது. கோயம்புத்தூர் என்பது கோசர் பெயரால் ஏற்பட்ட ஊர். கோசர் என்பது கோயர் என்றாகி கோயம்புத்தூர் என்று வழங்குகிறது. கோயன்+புத்தூர் = கோயன்புத்தூர். பிறகு இப்பெயர் கோயம்புத்தூர் என்றாயிற்று. சோழநாட்டில் ஓர் ஊரையரசாண்ட அஃதை என்பவன் இடத்திலும் கோசர் இருந்தனர் (அகம் 113 : 4-7) *** அடிக்குறிப்புகள் 1. “அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும்பெறல் மரபில் கரும்பு இவண் தந்தும், நீரக விருக்கை யாழி சூட்டிய, தொன்னிலை மரபின் முன்னோர்.” (புறம் 99: 1-4). “அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன. கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே”. (புறம். 392: 19-21) 2. “நெடுமிடல் சாயக்கொடுமிடல் துமியப், பெருமுலை யானையொடு புலங்கெட இறுத்து”. (4 ஆம் பத்து, 2010-1) 3. `யாழிசை மறுகின் நீடூர் கிழவோன், வாய்வாள் எவ்வி ஏவல் மேவார், நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பெருந்தலர், அரிமணவாயில் உறந்தூர்’ (அகம் 266: 10-13). 4. “சுழல்தொடி அதிகன், கோளற, வறியாப், பயங்கெழு பலவின், வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன், களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்றருவி” (அகம்.162: 18-23). 5. “கறையடி யானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்சுவர பேஎய்க், கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேமமாகிய பெரும்பெயர். வெள்ளாத்தானைஅதிகன் கொன்று வந்து, ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு” (அகம். 142: 9-14) கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண்பாண்டியன், வினைவல் அதிகன், களிறொடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொண்கர் ஆர்ப்பு.” (குறும். 393: 3-6). 6. “செருவேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரோடு முரணிச் சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோன்றிய அன்றும் பாடற்கரியை” (புறம். 99: 8-11). “இன்றும், பரணன் பாடினன் மற்கோல் மற்றுநீ. முரண்மிகு கோவலூர் நூறிநின், அரண்டு திகிரியேந்திய தோளே” (புறம். 99: 11-14). 7. “நீலமணி மிடற்று ஒருவன் போல, மன்னுகபெரும நீயே தொன்னிலை பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது. ஆதனின்னதத் தடக்கிச் சாதல் நீங்க வெமக்கீத் தனையே” (புறம். 91: 5-11) கமழ்பூஞ்சாரல் கவினியநெல்லி. அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கீந்த உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல், அரவக் கடற்றானை யதிகன்” (சிறுபான். 100-103). 8. “இழையணி யானை இரப்போர்க் கீயும், சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை, அடுபோர் ஆனா ஆதனோரி, மாரி வண்கொடை” (புறம். 153: 2-5) “வெம்போர். மழவர் பெருமகன் மாவள்ளோரி, கைவளம்”. (நற். 52: 8-10) 9. காரிக்குதிரை காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரியும் (சிறுபாண் 110-111). 10. “ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில், காரிபுக்க நேரார் புலம் போல், கல்லென்றால் ஊரே.” (நற். 320: 4-7). 11. “முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்தவில்வில், ஓரிக்கொன்று சேரலர்க்கீத்த, செல்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லி” (அகம். 209: 12-15). 12. “வீயாவிழுப்புகழ் வின்தோய் வியன்குடை, ஈரெழுவேளிர் இயைந் தொருங்கெறிந்த கழுவுள் காழூர்” (அகம். 135: 11-33) 13. “அதிரா யாணர் முதிரத்துக கிழவன், இவண்விளகு சிறப்பின் இயல்தேர்க் குமணன்” (புறம். 158: 25-76). 14. “அரிது பெறு பொலங்கலம் எளிதினின்வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத் தோனே.” (புறம். 160: 11-3) “பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேற்குமணன்”. (புறம். 163: 89). 15. (புறம். 160, 161, 162, 163). 16. (புற. 161, 162). 17. (புறம். 164). 18. “வில்கெழுதானை விச்சியர் பெருமகன், வேந்தரோடு பொருத ஞான்றைப் பாணர், புலிநேர் குறழ் நிலைகண்ட, கலிகெழு குறும்பூர் ஆர்ப்ப” (குறும். 326: 5-8). 19. `வெருவருதானையொடு வெய்துறச் செய்து சென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ வருமிளைக் கல்லகத் ததந்தெயில் எறிந்து’ (9ஆம் பத்து பதிகம்) 20. குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர், மொழி பெயர் தேயம். (குறும். 11: 5:7) 21. `நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை என்றாங்கு. அன்றமர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன்பட்டென” (அகம். 44: 7-11) 22. “தித்தன் வெளியன் உறந்தை நாளவைப், பாடின் தெண்கிணைப் பாடுகேட்டஞ்சிப் போரடுதானை கட்டி. பொராஅ தோடிய ஆர் ப்பு” (அகம். 226: 14-7) 23. “வசையில் வெம்போர் வானவன் மறவன், நசையில் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும். பொய்யா வாய்வாள் புனைகழல் பீட்டன். மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன், அகலறை நெடுஞ்சுனை” (அகம். 143: 10:14) 24. “ஊராக் குதிரைக்கிழவ கூர்வேர்.... கைவள் ஈகைக்கடுமான்கொற்ற”(புறம். 168: 14-17). ஊராக்குதிரை - குதிரைமலை) “வானவன் மறவன் வணங்கு விற்றடக்கை, ஆனா நறவின்வண்மகிழ்ப் பிட்டன்” (அகம். 17-15-16) 25. “வன்புல நாடன் வயமான் பிட்டன், அரமர் கடக்கும் வேலும் அவன் இறை, மாவள ஈகைக் கோதையும் மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே” (புறம். 172:8-11) உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம். 170: 6-8) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் (புறம். 169, 171) இவனைப் பாடியுள்ளனர். 26. `அதிரா யாணர் முதிரத்துக்கிழவன், இவன் விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமணன்’ (புறம். 158:25, 26) “அரிதுபெறு பொலங்கலம் எளிதினில் வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத்தோனே” (புறம். 60: 11-18). 27. “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகின் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆ.அய் எயினன். இகலடுகற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயர் கொடுத்தனன்” (அகம், 396: 2-6). “வெளியின் வேண்மான்ஆஅய் எயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப்பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற - செருவிற்புண் கூர்ந்து, ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம். 208:5-9) 28. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇ அளங்பருங்கட்டூர்ப்,பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென” (அகம். 44: 7-11). 29. “வென்வேல், இளம்பல் கோசர் விளங்குபடை கண்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெருமரக் கம்பம்.” (புறம். 169: 8-11). 30. “கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்” (மதுரைக்காஞ்சி. 773). 31. “இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்” (அகம். 90:1) 32. “மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்”(அகம். 15:2) “வாய்மொழி நிலைஇய சேண் விளங்குநல்லிசை, வளங்கெழு கோசர்” (அகம். 205: 9-20) 33. 1.87. Ancient India and south Indian History and Culture Vol. I. Dr. S. Krishnaswami Aiyengar. 3. கொங்கு நாட்டில் சேரர் ஆட்சி கொங்குவைச் சேரர் கைப்பற்றியது பழங்கொங்கு நாட்டைச் சிற்றரசர்கள் அரசாண்டார்கள் என்றும் அக்காலத்தில் அந்நாட்டில் பேரரசர் இல்லை என்றும் அறிந்தோம். கொங்கு நாட்டின் சுற்றுப்புறங்களில் இருந்த சேர, சோழ, பாண்டியர் கொங்குச் சிற்றரசர்களை வென்று அந்நாட்டைத் தங்கள் தங்கள் இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ளக் கருதி அவர்கள் தனித்தனியாகப் படையெடுத்து வந்து கொங்கு நாட்டில் போர் செய்தார்கள். கொங்கு நாட்டரசர் தங்கள் நாட்டை எளிதில் விட்டுவிடவில்லை. படையெடுத்துப் போருக்கு வந்த அரசர்களோடு அவர்கள் கடுமையாகப் போர் செய்து எதிர்த்தார்கள். இவ்வாறு பல காலமாகக் கொங்கு நாட்டில் போர்கள் நடந்தன. கடைசியாகச் சேர அரசர் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியில் சில ஊர்களைக் கைப் பற்றினார்கள். பாலைக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டில் வந்து சேர அரசர், யானைமலைக் காடுகளை முதலில் கைப்பற்றினார்கள். யானை மலைப் பிரதேசத்துக்கு அக்காலத்தில் உம்பல் காடு என்று பெயர் இருந்தது (உம்பல் - யானை). அங்குப் பல ஊர்கள் இருந்தன. சேர மன்னர் கொங்கு நாட்டில் கால் ஊன்றுவதைக் கண்ட சோழ அரசரும் பாண்டிய மன்னரும் சும்மா இருக்கவில்லை. சேரருக்கு எதிராக அவர்கள் போர் செய்து சேரரின் ஆதிக்கத்தைத் தடுத்தார்கள் அவர்கள் கொங்குச் சிற்றரசர் களுக்கு உதவியாக இருந்து, சேர அரசரின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். இதன் காரணமாகச் சேர மன்னர் கொங்கு நாட்டை எளிதில் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியோடு போர் செய்து கொங்கு நாட்டில் சிறிதுசிறிதாகச் சேர அரசர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். சேர நாட்டு அரசனான உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள். அவர்கள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் (பதிற்றுப் பத்து 2 ஆம் பத்தின் தலைவன்) பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் (பதிற்றுப்பத்து 3 ஆம் பத்துத் தலைவன்) ஆவர். இளையனாகிய குட்டுவன் பெரிய யானைப்படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று பெயர் பெற்றான். இவன் உம்பற் காட்டையும் (யானைமலைப் பிரதேசம்) அகப்பா என்னும் கோட்டையையும் வென்றான். உம்பற் காட்டை வென்ற இவன் அங்குத் தன் ஆட்சியை நிறுவினான். நிறுவித் தன்னுடைய உறவினரில் முதியவர்களுக்கு அந்நாட்டைப் பிரித்துக் கொடுத்தான். இதை “உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு மதியுறழ் மரபின் முதியவரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்து” என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பதிகங் கூறுகின்றது. “முதியரை மதியுறழ் மரபிற் றழீஇ மண்வகுத்தீத்தெனக் கூட்டித் தன்குலத்தில் தனக்கு முதியரை மதியொடொத்த தன் தண்ணிளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன் நாட்டைப் பகுத்துக் கொடுத்து என உரைக்க” என்பது பழைய உரை. உம்பற்காடு என்னும் நாட்டை அடக்கி அதனைத் தன்னுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது இவனுடைய முக்கியச் செயலாகும். இவனுடைய தமயனான நெடுஞ் சேரலாதன், தன்னைப் பாடிய (இரண்டாம் பத்து) குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறூர் களைப் பிரமதாயமாகக் கொடுத்தான் (பதிற்றுப்பத்து 2 ஆம் பத்துப் பதிகக் குறிப்பு). இதனால் உம்பற்காடு அக்காலத்தில் சேர அரசர்களுக்கு உரியதாயிற்று என்பது தெரிகின்றது. *** 4. அந்துவஞ்சேரல் இரும்பொறை உதியஞ்சேரலுடைய தம்பி, அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன். அந்துவஞ்சேரல் இரும்பொறை உதியஞ்சேரலுடைய தாயாதித்தம்பி. இவன் தளராத ஊக்கத்தோடு போர் செய்து தென் கொங்கு நாட்டில் சில நாடுகளைக் கைப்பற்றினான். இதனால், “மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று கூறப்பட்டான் (7 ஆம் பத்துப் பதிகம்). இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றினபோது இவனுக்கு உதவியாக இருந்தவன் இவனுடைய தமயன் மகனான பல் யானைச் செல்கெழு குட்டுவன். இதனை, “மாகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல்” (3ஆம் பத்து 2: 15 -16) என்பதனால் அறிகிறோம். இவன் காலத்தில் கொங்கு நாட்டில் சேர இராச்சியத்தை அமைப்பதற்குக் கால் இடப்பட்டது என்று கருதலாம். கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர் அரசர்களில் இவனே முதலானவன் என்று தோன்றுகிறான். அந்துவஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டுக் கருவூரை வென்று அதைத் தன்னுடைய தலைநகரமாக்கிக் கொண்டான். அங்கு வேண்மாடம் என்னும் அரண்மனையை அமைத்துக் கொண்டு அங்கிருந்து அரசாண்டான். அப்போது அவன் ‘சேரமான் கருவூ ரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று பெயர் பெற்றான். நரிவெரூஉத்தலையார் அவனை நேரில் கண்டு பாடினார் (புறம். 5). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று நின் உடம்பு பெறுவாயாகென, அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்ற நரிவெரூ உத்தலையார் பாடியது” என்று கூறுகிறது. இந்தக் கொங்கு நாட்டுக் கருவூர் வேறு, சேரநாட்டுக் கடற் கரையிலிருந்த கருவூர் வேறு. அந்துவன் சேரல் இரும் பொறை இந்த ஊரை வென்றபோது இதற்குச் சேர நாட்டுத் தலைநகரமாகிய கருவூரின் பெயரையே சூட்டினான். சேர நாட்டுக் கருவூருக்கு வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது போலவே இந்தக் கொங்கு நாட்டுக் கருவூருக்கும் வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது.1 கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கருவூர் வேண்மாடத்தில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவருடன் இருந்தபோது, சோழன் முடித்தலைக்கோ பெருநற் கிள்ளி அவ்வூர் வழியாக யானை மேல் வந்தான். அது கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, சோழன் தன் மேல் போருக்கு வருகின்றானோ என்று ஐயங்கொண்டான். அப்போது அருகிலிருந்த சோழ நாட்டுப் புலவரான உறையூர் முடமோசியார், சோழன் போருக்கு வரவில்லை என்று கூறி இவனுடைய ஐயத்தை நீக்கினான் (புறம். 13). இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து பாடியது” என்று கூறுகிறது. அந்துவஞ் சேரல் இரும்பொறையும் கருவூர் ஒள்வாட் பெருஞ் சேரல் இரும்பொறையும் ஒருவரே. இவர்கள் வெவ்வேறு அரசர் என்று கே.ஜி.சேஷ ஐயர் கருதுகிறார்.2 அவர் கருத்து தவறென்று தோன்றுகிறது. அந்துவன் பொறையனுடைய அரசியின் பெயர் பொறையன் பெருந்தேவி என்பது. அவள் ஒருதந்தை என்பவனின் மகள். இவர்களுக்குப் பிறந்த மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இதனை “மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி யந்துவற்கு ஒரு தந்தை யீன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன் ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. செல்வக் கடுங்கோ வாழியாதன்” என்னும் 7ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம். (‘இதன் பதிகத்து ஒருதந்தை யென்றது பொறையன் பெருந் தேவியின் பிதாவுடைய பெயர்’ என்று பழைய உரை கூறுகிறது.) சேர அரசரின் இளையபரம்பரையைச் சேர்ந்த அந்துவன் பொறையன் கொங்கு இராச்சியத்தை அமைத்தான். அந்துவன் பொறையன், தன்னுடைய மகனான செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஆவிநாட்டுச் சிற்றரசனாகிய வேளாவிக் கோமான் மகளாகிய பதுமன்தேவி என்பவளைத் திருமணஞ் செய்வித்தான். அவனுடைய தாயாதித் தமயனாகிய உதியஞ்சேரலும் தன்னுடைய மகனாகிய (இமயவரம்பன்) நெடுஞ்சேரலாதனுக்கு மேற்படி வேளாவிக் கோமானின் இன்னொருமகளைத் திருமணஞ் செய்வித்திருந்தான். எனவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் மணஞ் செய்திருந்த மனைவியர் தமக்கை தங்கையர் என்பது தெரிகின்றது. அந்துவன் பொறையனுக்கு அந்துவஞ்செள்ளை என்று ஒரு மகள் இருந்தாள் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஊகிக்கிறார்.3 இவர் கூற்றுக்குச் சான்று இல்லை; வெறும் ஊகமாகக் கூறுகிறார். அந்துவஞ்சேரல் இரும்பொறை, வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்து இறந்துபோனான் என்று திரு. கே. ஜி சேஷையர் கருதுகிறார். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் அந்துவஞ் சேரலும் ஒருவரே என்று அவர் கருதுகிறார்.4 ஆனால், அந்துவஞ் சேரலும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்கு அவர் சான்று காட்டவில்லை. புறம் 62, 63 ஆம் செய்யுட்களின் அடிக் குறிப்புகள், “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்தாரைப் பாடியது” என்று கூறுகின்றன. அந்துவஞ் சேரலும் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்குச் சான்று இல்லை. சேஷையா ஊகம் சரியன்று என்று தோன்றுகிறது. *** அடிக்குறிப்புகள் 1. சங்க காலத்தில் இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், சென்ற தலைமுறையில் சில ஆராய்ச்சிக்காரர்கள் `கருவூர் சேர நாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா’ என்பது பற்றி வாதங்கள் நிகழ்த்திக் கட்டுரைகள் எழுதினார்கள். சங்ககாலத்தில் சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் வெவ்வேறு கருவூர்கள் இருந்ததை அவர்கள் அறியவில்லை. 2. (P. 36. Cera Kings of the Sangam period K.G. Sesha Aiyer. (1937). 3. (PP. 506, 507, A Comprehensive History of India, Edited by K.A. Nilakanta Sastri). 4. (P. 37, 51, Cera Kings of the Sangam Period). 5. செல்வக் கடுங்கோ வாழியாதன் மாந்தரன் 1 அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (செ. க. வா. ஆ.) சிக்கற் பள்ளி என்னும் ஊரில் இறந்தபடியால் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன் என்று இவன் பிற்காலத்தில் பெயர் பெற்றான். செல்வக்கோமான் (7ஆம் பத்து 7 : 23) என்று பெயர் பெற்ற இவன் போரில் மிக்க வலிமையுடையவனாக இருந்தது பற்றிக் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். “மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல், துப்புத்துறை போகிய கொற்றவேந்தே” என்று இவனைக் கபிலர் கூறுவது காண்க (7ஆம் பத்து2: 8-9). திறல் -ஆற்றல், வல்லமை.) ‘செல்வக் கோவே சேரலர் மருக’ என்று கபிலர் கூறுகிறார் (7ஆம் பத்து 3: 16) ஆதன் என்பது இவனுக்குரிய பெயர். செ. க. வா. ஆதனுக்கு மாந்தரன், மாந்தரஞ்சேரல் என்னும் பெயரும் இருந்தது. இவ்வரசன் காலத்தில் வாழ்ந்தவரும் சேர அரசர் பரம்பரையை நன்கறிந்தவருமான பரணர் இப்பெயரைத் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். அகநானூறு 142ஆம் செய்யுளில் இப்புலவர் இவ்வரசனை ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ’ என்று கூறுகிறார். சிலப்பதிகாரக் காவியத்திலும் இவன் மாந்தரம் பொறையன் (கட்டுரை காதை, அடி 84) என்று கூறப்படுகிறான். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை ‘ மாந்தரன் மருகன்’ (மாந்தரனுடைய பரம்பரையில் வந்தவன்) என்று பெருங்குன்றூர்கிழார் கூறுகிறார். போர்செய்வதில் திறலுடைய வீரன் இவன் என்றும் அதுபற்றியே இவன் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் என்றும் அறிகிறோம். ஆனால், இவன் செய்த போர்களின் விபரந் தெரிய வில்லை. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியைச் சேர்ந்த பொறையர், கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாக வென்றனர். இவன் தந்தையாகிய அந்துவன் பொறையன் ‘மடியா உள்ளத்து மாற்றோர்ப் பிணித்தவன்’ என்று கூறப்படுகிறான். அவனைத் தொடர்ந்து கொங்கு இராச்சியத்தை விரிவுபடுத்திய இவ் வரசனும் கொங்கு நாட்டிலிருந்த பல சிற்றரசர்களுடன் போர்செய்து அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருக்கவேண்டும். இவ்வரசன் மேல் ஏழாம் பத்துப் பாடிய கபிலர் இவ் வரசனைப் போர்க்களத்திலே பாசறையில் சந்தித்தார். போர்க்களங்களிலே இவனுடைய உடம்பில் பல வெட்டுக் காயங்கள் பட்டிருந்தன என்றும் அந்த விழுப்புண் தழும்புகளை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான் என்றும் கபிலர் கூறுகிறார் (“எஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து, சாந்தெழில் மறைந்த சான்றோர் பெருமகன்” -7ஆம் பத்து, 7: 17 - 18). ஆனால், எந்தெந்தப் போர்க்களத்தில் எந்தெந்த அரசனுடன் இவன் போர் செய்தான் என்பது தெரியவில்லை. சோழ, பாண்டியர் ஒன்று சேர்ந்து வந்து இவன் மீது போர்செய்தனர் என்றும் அவர்களை இவன் வென்று ஓட்டினான் என்றும் கபிலர் கூறுகிறார்.1 சேர அரசர் கொங்குநாட்டுச் சிற்றரசருடன் நாடு பிடிக்கப் போர் செய்தபோதெல்லாம் சோழ பாண்டியர் கொங்கு நாட்டுச் சிற்றரசருடன் சேர்ந்து சேர அரசரை எதிர்த்தார்கள். அவ்வாறு சோழ, பாண்டியர் சேரரை எதிர்த்த ஒன்றைத்தான் இது கூறுகிறது. செ.க.வா. ஆதன் கொங்கு நாட்டுச் சிற்றரசர்களோடு போர்செய்து வென்று அவர் களுடைய ஊர்களைக் கைக்கொண்டான் என்பது தெரிகின்றது. இவனுடைய கொங்கு இராச்சியம் சிறிதாக இருந்ததைப் பெரியதாக்க வேண்டும் என்று இவன் கருதிப் போர் செய்து வென்று சில நாடுகளை இவன் தன் இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்பதைக் கபிலர் கூறுகிறார். சேரலாதனுக்குச் சூரியனை ஒப்புமை கூறுகிறவர் சேரலாதனுக்குச் சூரியன் இணையாக மாட்டான் என்று கூறுகிறார்.2 பல அரசர்களை வென்று இவன் அவ்வெற்றிகளுக்கு அறிகுறியாக வேள்விகளைச் செய்தான். செ. க.வா. ஆதனின் கொங்கு இராச்சியம் கொங்குநாட்டின் தென் பகுதியில் மட்டும் இருந்தது. இவனுடைய இராச்சியத்தின் வடக்கி லிருந்த கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை இவன் வெல்ல வில்லை. அவற்றை வென்று சேர்த்துக் கொண்டவன் இவனுடைய மகனான பெருஞ்சேரல் இரும் பொறையாவான். செல்வக் கடுங்கோ வாழி ஆதன், ஆவி நாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்த (இப்போதைய பழநிமலை வட்டாரம்) நாட்டின் சிற்றரசனாகிய வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவ னுடைய பெண்களில் ஒருத்தியைத் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்தான். இவ்வரசியின் பெயர் வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி என்பது (8ஆம் பத்து, பதிகம் அடி 1 -2). இந்த அரசியின் தமக்கையை இவனுடைய தாயாதித் தமயனான சேரலாதன் (இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்) மணஞ்செய்திருந்தான். அந்த அரசிக்கும் ‘வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி’ என்று பெயர் இருந்தது (4ஆம் பத்து, பதிகம் 1-3).எனவே, செ.க.வா ஆதனும் நெடுஞ்சேரலாதனும் சம காலத்தில் முறையே கொங்கு நாட்டையும் சேரநாட்டையும் அரசாண் டனர் என்று தெரிகின்றது. இவர்களுக்குப் பெண் கொடுத்த மாமனா ராகிய வேள் ஆவிக்கோமான் பதுமன், பொதினி என்னும் வையாவி நாட்டையாண்ட சிற்றரசன் என்று கூறினோம். அந்த வையாவி நாடு அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. இக்காலத் தில் அது பழனி என்னும் பெயருடன் பாண்டி நாட்டு மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது. (மூத்தவழி) (இளையவழி) சேரநாட்டுச் சேரர் கொங்கு நாட்டுப் பொறையர் உதியஞ்சேரல் = அந்துவன் பொறையன் = வேண்மாள் நல்லினி பொறையன் பெருந்தேவி இமயவரம்பன் பல்யானைச் செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதன் செல்கெழுகுட்டுவன் வாழியாதன் = = வேளாவிகோமான் வேளாவிகோமான் பதுமன்தேவி I பதுமன்தேவி II செ. க. வா. ஆதனுக்கும் அவனுடைய அரசியாகிய பதுமன் தேவிக்கும் இரண்டு ஆண்மக்கள் பிறந்தனர் என்று அறிகிறோம்.3 இவ்விரு புதல்வர்களில் ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை. (பிற்காலத்தில் தகடூரை வென்று புகழ்பெற்றவன். 8ஆம் பத்துப் பதிகம்). இளைய மகன் பெயர் குட்டுவன் இரும்பொறை என்பது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று சிவராச பிள்ளை கருதுகிறார்.4 இவர் கருதுவது தவறு. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு மக்கள் இருந்ததையறியாமல், ஒரே மகன் இருந்தான் என்று கருதிக்கொண்டு இவ்வாறு எழுதினார் என்று தோன்றுகிறது. கே. ஜி. சேஷ ஐயரும் இதே தவற்றைச் செய்துள்ளார்.5 நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தவற்றைச் செய்தேன். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதினேன்.6 அது தவறு என்பதை இப்போது அறிந்து திருத்திக்கொண்டேன். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் துணைப் புதல்வர் (இரண்டு பிள்ளைகள்) இருந்தனர் என்பது திட்டமாகத் தெரிகிறது. செ.க. வா. ஆதன் பதிற்றுப்பத்து 7ஆம் பத்தைப் பாடியவர் கபிலர். பறம்பு நாட்டின் அரசனாக இருந்த கொடை வள்ளல் என்று புகழ்பெற்ற பாரி மன்னனின் புலவராக இருந்த கபிலர், அம் மன்னன் இறந்தபிறகு கொங்கு நாட்டுக்கு வந்து செ.க.வா. ஆதனைப் பாசறையில் கண்டு அவன் மீது 7 ஆம் பத்துப் பாடினார். செ.க.வா. ஆதன் இருபத்தைந்துயாண்டு அரசாண்டான் என்று ஏழாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு கூறுகிறது. இவ்வரசன் திருமாலை வழிபட்டான். அந்தத் திருமாலின் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங்கொடுத்தான் (“மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்கு, ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து” 7ஆம் பத்துப் பதிகம் அடி 8-9). இவன் தன்னுடைய புரோகிதனைப் பார்க்கிலும் அறநெறி யறிந்தவனாக இருந்தான் என்று 7ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.7 செ.க.வா. ஆதன் சில யாகங்களைச் (வேள்விகளைச்) செய்து பிராமணருக்குத் தானங்கொடுத்தான். இவன் வேள்வியில் பிராமணருக்குப் பொன்னை நீர்வார்த்துக் கொடுத்தபோது அந்நீர் பாய்ந்து தரையைச் சேறாக்கியது என்று கூறப்படுகிறது. இதனால் இவனுடைய தானம் மிகப் பெரிதாக இருந்தது என்பது தெரிகின்றது.8 புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து இவ்வரசன் போற்றினான். இசைவாணர்களையும் இவன் ஆதரித்தான். ‘பாணர் புரவல, பரிசிலர் வெருக்கை’ என்று இவன் புகழப்படுகிறான்(7ஆம் பத்து 5:11). இவ்வரசனிடம் பரிசில் பெறச் சென்ற குண்டுகண் பாலியாதனார் என்னும் புலவருக்கு இவன் பெருஞ்செல்வம் வழங்கினான். யானை, குதிரை, ஆட்டுமந்தை, மாட்டுமந்தைகள், மனை, மனையைச் சார்ந்து வயல்கள், வயல்களில் வேலை செய்யக் களமர் (உழவர்) இவைகளை யெல்லாம் இவ்வரசன் இப்புலவருக்கு வழங்கினான். இவைகளை யெல்லாங் கண்ட இந்தப் புலவர் இது கனவா நனவா என்று அறியாமல் திகைத்துப் போனதாக அவரே கூறுகிறார் (புறம். 387). வயிரியரை (இசைவாணரை) இவன் ஆதரித்தான். தான் ஆதரித்ததல்லாமல், தான் இல்லாதபோது அவர்கள் அரண்மனை வாயிலில் வந்தால் தன்னைக் கேளாமலே அவர்களுக்குப் பொருளை யும் குதிரைகளையும் வண்டிகளையும் கொடுத்தனுப்பும்படி தன்னுடைய அரண்மனை அதிகாரி களுக்குக் கட்டளையிட்டிருந் தான்.9 இவனுடைய கொடைச் சிறப்பைக் கபிலர் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ‘என்னைப் புரந்த பாரிவள்ளல் இறந்து போனபடியால் உம்மிடம் பரிசுபெற உம்மை நாடிவந்தேன் என்று நினைக்க வேண்டாம். செல்வக்கடுங்கோ வாழியாதன் பெரிய வள்ளல், இரவலரை ஆதரிக்கும் வண்மையன் என்று பலருங் கூறக்கேட்டு நேரில் கண்டு மகிழ வந்தேன்’ என்று கூறுகிறார். “புலர்ந்த சாந்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன்அளிக்கென இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் ஈத்த திரங்கான் ஈத்தொறும் மகிழான் ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலுநின் நல்லிசை தர வந்திசின்” (7ஆம் பத்து 1: 7-14) இவன் மீது ஏழாம் பத்தைப் பாடிய கபிலருக்கு இவ்வரசன் பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்தான். கைச்செலவுக்கென்று நூறாயிரங் காணம் (ஒரு லட்சம் பொற்காசு) கொடுத்து, கொங்கு நாட்டிலுள்ள நன்றா என்னும் மலைமேல் ஏறி நின்று அங்கிருந்து காணப்பட்ட நாடுகளின் வருவாயை அவருக்குக் கொடுத்தான்.10 செ.க.வா. ஆதனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை ஒன்பதாம் பத்தில் பாடிய பெருங்குன்றூர்கிழார், செ.க.வா. ஆதன் நாடு காண் நெடுவரை மேல் இருந்து கபிலருக்குக் காட்டிக் கொடுத்து நாடுகளைப் பற்றித் தம்முடைய செய்யுளில் குறிப்பிட்டுள்ளார். “கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச் சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையின் நெஞ்சின் நனவின் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே” (9ஆம் பத்து 5: 7-13) பொறையன் மரபைச் சேர்ந்த இந்தச் செல்வக் கடுங்கோவுக்கு மாந்தரங் கடுங்கோ என்ற பெயரும் வழங்கி வந்தது என்பது தெரிகிறது. இவன் காலத்தவராகிய பரணர் தம்முடைய செய்யுள் ஒன்றில் இப்பெயரையும் இவனுடைய வள்ளன்மையையுங் கூறுகிறார். “இலவ மலரன்ன அஞ்செந் நாவில் புலமீக் கூறும் புரையோர் ஏத்தப் பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல் நிறையருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல நன்றும் உவவினி வாழிய நெஞ்சே.” (அகம். 142:1-7) இவ்வரசனைப் பரணர் மாந்தரன் என்று கூறியது போலவே கபிலரும் இவனை மாந்தரன் என்று கூறியுள்ளார். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை 9ஆம் பத்தில் பாடிய பெரும்குன்றூர்கிழார் அவனை மாந்தரனுடைய மரபில் வந்தவன் என்று கூறுகிறார் (9ஆம் பத்து 10: 9-13). மாந்தரன் பெரும் புகழ் படைத்து அறம் வாழ்த்த நன்றாக அரசாண்டான் என்று கூறுகிறார். “ வாள்வலி யுறுத்துச் செம்மை பூண்டு அறன் வாழ்த்த நற்காண்ட விறன் மாந்தரன் விறன் மருக.” (9ஆம் பத்து 10: 11- 13) செ.க.வா. ஆதனின் சமகாலத்தில் இருந்த பாண்டிய அரசன் ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் இவர்கள் காலத்துச் சோழ அரசன் யார் என்பது தெரியவில்லை. கொங்கு நாட்டை யரசாண்ட இவன் காலத்துச் சேர அரசர் இவனுடைய தாயாதித் தமயன் மாராகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் (இ. வ. நெ. சேரலாதன்) அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் ஆவர். இ. வ. நெ. சேரலாதன், வேளாவிக் கோமான் மகளைத் திருமணம் செய்திருந்தான். அவளுடைய தங்கையை (வேளாவிக் கோமான் பதுமனுடைய இளைய மகளை) செ.க.வா. ஆதன் மணஞ்செய் திருந்தான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். எனவே இவர்கள் இருவரும் சமகாலத் திருந்தவர் என்பது ஐயமில்லாமல் தெளிவாகத் தெரிகின்றது. இரண்டாம் பத்தின் தலைவனான இ.வ.நெ. சேரலாதனும், மூன்றாம் பத்தின் தலைவனான பல்யானை செல்கெழுகுட்டுவனும் ஏழாம் பத்துத் தலைவனான செ.க.வா. ஆதனும் சமகாலத்திலிருந்த தாயாதிச் சகோதரர்கள். இ. வ. நெ. சேரலாதன் 58 ஆண்டு அரசாண்டான். இவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டு அரசாண்டான். மாந்தரன் கடுங்கோவாகிய செ.க.வா. ஆதன் 25 ஆண்டு அரசாண்டான். ஆகையால் இவன், இ. வ. நெ. சேரலாதன் காலத்திலேயே இறந்து போனான் என்பதும், இவனுக்குப் பிறகு இவன் மகனான பெருஞ் சேரலிரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான் என்பதும் தெரிகின்றன. அதாவது, இ. வ. நெ. சேரலாதன் சேர நாட்டை ஆட்சிச் செய்த காலத்திலேயே கொங்கு நாட்டை செல்வக்கடுங்கோ வாழி யாதனும் அவன் மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறையும் (தகடூரை எரித்தவன்) அரசாண்டார்கள். இவர்கள் மூவரும் (இ. வ. நெ. சேரலாதன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன், செ.க.வா. ஆதன்) சமகாலத்தில் இருந்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்திலிருந்தும் அறிகிறோம். சோழ நாட்டி லிருந்த பராசரன் என்னும் பிராமணன் வேதம் ஓதுவதில் வல்லவனாக இருந்தான். அவன், சமகாலத்தில் சேரநாட்டையும் கொங்கு நாட்டை யும் அரசாண்ட இந்த மூன்று அரசர்களிடத்தில் போய் வேதம் ஓதிப் பரிசு பெற்றான். பராசரன் முதலில், ‘வண் தமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த, திண்திறல் நெடுவேல் சேரலனை’க் (பல்யானைச் செல்கெழு குட்டுவனை) காணச் சேர நாட்டுக்குச் சென்று அவனுடைய அவையில் பார்ப்பனருடன் வேதம் ஓதி அவர்களை வென்று ‘பார்ப்பனவாகை’ சூடினான். அப்போது அவ்வரசன் இவனுக்குப் பல பரிசுகளை வழங்கினான். பரிசுகளைப் பெற்ற பராசரன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் இடத்திலும் சென்று பரிசுகளைப் பெற்றான். பிறகு கொங்கு நாட்டுக்கு வந்து மாந்தரஞ் சேரலாகிய செ.க.வா. ஆதனிடத்திலும் பரிசு பெற்றான். இவன் பெற்ற பரிசுகளை மூட்டைக் கட்டிக் கொண்டு தன்னுடைய ஊருக்குத் திரும்பி வருகிற வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் என்னும் ஊரில் அரசமர மன்றத்தில் தங்கி இளைப்பாறினான். தங்கியிருந்தபோது தனக்குப் பரிசுகளை வழங்கிய இம்மூன்று மன்னர்களையும் அவன் வாழ்த்தினான். “காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தன் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க.” (சிலம்பு, கட்டுரை காதை: 79-84) என்றும் வாழ்த்தினான். இதில் முதல் இரண்டு அடிகள் பல்யானைச் செல்கெழு குட்டுவனையும் மூன்றாம் நான்காம் அடிகள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், ஐந்தாம் ஆறாம் அடிகள் மாந்தரன் கடுங்கோ ஆகிய செ.க.வா. ஆதனையுங் குறிப்பிடுகின்றன. இம்மூன்று அரசர்களிடத் திலும் பராசரன் பரிசுகளைப் பெற்றபடியால் இம்மூவரையும் வாழ்த்தினான். இதனாலும் இம்மூவரும் சமகாலத்து அரசர்கள் என்பது உறுதியாகின்றது. பராசரன் பாண்டி நாட்டில் தண்காவில் தங்கிய காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன் வெற்றிவேற் செழியன். செல்வக் கடுங்கோ வாழியாதன் ஏறத்தாழ கி.பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். *** அடிக்குறிப்புகள் 1. `குன்று நிலை தளர்க்கும் உருமிற்சீறி, ஒரு முற்றிருவர் ஓட்டிய ஒள்வாள், செருமிகுதானை வெல்போ ரோயே’, (7ஆம் பத்து. 3: 10-12) ஒரு முற்று - ஒன்றாகச் சேர்ந்து முற்றுகையிட்டு. இருவர் - சோழ பாண்டியர். 2. “இடஞ் சிறிதென்னும் ஊக்கந்துரப்ப, ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக், கடந்தடு தானைச் சேரலாதனை, யாங்ஙன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம்”. (புறம். 8: 3-6). “நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி வெருவருதானை கொடு செருப்பல கடந்து ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி” (7ஆம் பத்து, பதிகம் அடி. 4-7). 3. `வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்’. 7 ஆம் பத்து 10: 20-22. 4. (P. 124. The Chronology of Early Tamils 1932). 5. (P. 44. Cera Kings of the Sangam period 1937). 6. சேரன் செங்குட்டுவன், பக்கம் 25.சேர அரசர் பரம்பரைகாண்க. மயிலை சீனி. வேங்கசாமி. 7. இவன் `புரோசு மயக்கினான்’ (7ஆம் பத்து பதிகம்) `புரோசு மயக்கி’ என்பது `தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்த தென்றவாறு’ என்று பழைய உரை கூறுகிறது. 8. *(`அறங் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய, உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு, இருஞ்சேறாடிய மணல் மலி முற்றம்’ (7ஆம் பத்து 4: 3-6). 9. `புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகு படையறுத்த கொய்சுவல் புரவி. அலங்கும் பாண்டில் இழையணித் தீமென, ஆனாக் கொள்கையை’ (7ஆம் பத்து 4:8-11). 10. “சிறுபுறமென நூறாயிரங்காணங் கொடுத்து நின்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ”. (7ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு). 6. பெருஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை யரசாண்டான். இவன், தன் இராச்சியத்தில் அடங்காமல் சுதந்தரமாக இருந்த கொங்கு அரசர்களை வென்று அவர்களின் நாடுகளைத் தன்னுடைய இராச்சியத் துடன் சேர்த்துக் கொண்டான். இவன் ‘கொடித் தேர்ப்பொறையன்’, ‘சினப்போர்ப் பொறையன்’, ‘பொலந்தேர் யானை இயல் தேர்ப் பொறையன்’ என்று கூறப்படுகிறான். இவன் ‘புண்ணுடை எறுழ்த் தோள்’ உடையவன். அதாவது, எப்பொழுதும் போர் செய்து அதனால் ஏற்பட்ட புண் ஆறாத வலிமையுடைய தோள்களை யுடையவன். தகடூர் நாட்டை வென்றபடியால் இவன், ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை’ என்று பெயர் பெற்றான். இவன் வென்ற போர்களில் மூன்று போர்கள் முக்கியமானவை. அவை காமூர்ப் போர், கொல்லிப் போர், தகடூர்ப் போர் என்பவை. காமூர்ப் போர் கொங்கு நாட்டில் காமூர் என்னும் ஊர் இருந்தது. அதன் அரசன் கழுவுள் என்பவன். முல்லை நிலமாகிய காமூரில் இடையர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களின் தலைவனாகிய கழுவுள், பெருஞ் சேரலிரும்பொறைக்கு அடங்காமல் சுதந்தரமாக அரசாண்டான். பெருஞ்சேரல் இரும்பொறை காமூரை வெல்ல எண்ணிக் காமூரின் மேல் போருக்குச் சென்றான். காமூர் பலமான கோட்டையுடையதாக ஆழமான அகழியையும் பலமான மதிற்சுவர்களையுங் கொண்டிருந்தது. பெருஞ் சேரல் இரும்பொறை கழுவுளுடன் போர்செய்து காமூரை வென்றான். கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலுக்கு அடங்கினான்.1 காமூர்அரசனாகிய கழுவுள் எளிதில் பணியவில்லை. பெருஞ் சேரல் இரும்பொறைக்குச் சார்பாகப் பதினான்கு வேள் அரசர் போர் செய்து காமூரை வென்றனர். இந்த விபரத்தைப் பரணர் கூறுகிறார்.2 அந்தப் பதிநான்கு வேளிரின் பெயர்கள் தெரியவில்லை. கொல்லிப் போர் பெருஞ்சேரலிரும்பொறை செய்து வென்ற இன்னொரு பெரிய போர் கொல்லிப் போர். கொல்லி மலைகளும் கொல்லி நாடும் கொல்லிக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்தன. அதை ஓரி என்னும் அரசன் சுதந்தரமாக அரசாண்டு வந்தான். ஓரி, புலவர்களை ஆதரித்த வள்ளல். பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியுடன் போர் செய்து வென்று அந்த நாட்டைத் தன்னுடைய இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டான், இந்தப் போரின் விபரத்தைச் சங்கப் புலவர்களின் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம். பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின் கொல்லி நாட்டின் மேல் நேரே படையெடுத்துச் செல்லவில்லை. அவன், மலையமான் திருமுடிக்காரியைக் கொண்டு ஓரியை வென்று கொல்லி நாட்டைத் தன் இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான். கோவலூர் மன்னர்களான மலையமான் அரச பரம்பரையினர் சேர, சோழ, பாண்டியர்களில் யாரேனும் விரும்பினால், அவர்களுக்குச் சேனாதிபதியாக இருந்து போர் செய்வது வழக்கம். மலையமான் திருமுடிக்காரி, பெருஞ்சேரல் இரும்பொறைக்காக ஓரியுடன் போர் செய்து அவனைப் போரில் கொன்று கொல்லி நாட்டைப் (கொல்லிக் கூற்றத்தை) பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கொடுத்தான். கபிலர், பரணர் முதலான புலவர்கள் இச்செய்தியைக் கூறுகின்றனர். ஓரியின் குதிரைக்கு ஓரி என்றும், காரியின் (மலையமான் திருமுடிக்காரியின்) குதிரைக்கு காரி என்றும் பெயர். இவ்விருவரும் தத்தம் குதிரை மேல் அமர்ந்து போர் செய்தனர் என்று இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகிறார் (“காரிக் குதிரை காரியொடு மலைந்த, ஓரிக்குதிரை ஓரியும்” - சிறுபாண். 110- 111). இந்தப் போரில் ஓரி இறந்து போனான். வெற்றி பெற்ற காரி, ஓரியின் ஊரில் புகுந்தான்.3 கல்லாடனார் இதை இன்னும் தெளிவாக விளக்கிக் கூறுகிறார். முள்ளூர் மன்னனாகிய காரி ஓரியைப் போரில் கொன்று கொல்லி நாட்டை வென்று அதைச் சேரலனுக்குக் கொடுத்தான் என்று கூறுகிறார்.4 இங்குச் சேரலன் என்பவன் பெருஞ்சேரல் இரும்பொறையாவான். இப்போர் பரணரின் காலத்தில் நடந்தது. சேரன் செங்குட்டுவனை 5ஆம் பத்தில் பாடிய பரணர் இப்போர் நடந்த காலத்தில் இருந்தவர். அவர் ஓரியின் கொல்லியைப் பாடினார்.5 அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால், பரணர் காலத்திலேயே ஓரிக் குரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரலிரும் பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது. 8ஆம் பத்துப் பதிகம், பெருஞ்சேரலிரும்பொறை ‘கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை’ போர்வென்றான் என்று கூறுகிறது. இதற்குப் பழைய உரை இவ்வாறு விளக்கங் கூறுகிறது: “இதன் பதிகத்துக் கொல்லிக் கூற்றமென்றது, கொல்லி மலையைச் சூழ்ந்த மலைகளை யுடைய நாட்டினை. நீர்கூர்மீமிசை யென்றது அந்நாட்டு நீர்மிக்க மலையின் உச்சியை.” தகடூர்ப் போர் கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றின பிறகு பெருஞ் சேரலிரும் பொறை தகடூர் அதிகமான்மேல் படையெடுத்துச் சென்று தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அப்பொழுது பாண்டியனும் சோழனும் அதிகமானுக்கு உதவியாகச் சேனைகளை யுதவினார்கள். தகடூர்ப் போர் நிலைச் செருவாகப் பல காலம் நடந்தது. பெருஞ்சேரலிரும் பொறைக்கு அவனைச் சார்ந்த சிற்றரசர் பலர் துணை நின்றார்கள். கொல்லி நாட்டை வென்ற மலையமான் திருமுடிக்காரி இந்தப் போரிலும் பெருஞ்சேரலிரும்பொறையின் பக்கம் இருந்து போர் செய்தான். தகடூர்க் கோட்டை பலம் பொருந்தியதாக இருந்தபடியாலும் அதன் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் அவன் மகனான பொருட்டெழினியும் போரில் புறங்கொடா வீரர்களாக இருந்த படியாலும் அதை எளிதில் வெல்ல முடியவில்லை. அதிகமானுடைய சேனைத்தலைவன் பெரும்பாக்கன் என்பவன். தகடூர்ப் போர்க்களத்தை நேரில் கண்ட புலவர்கள் அரிசில் கிழார், பொன்முடியார் முதலியவர்கள் கடைசியில் தகடூரைப் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். அந்த வெற்றியை அரிசில்கிழார் அவன்மேல் 8ஆம் பத்துப் பாடிச் சிறப்பித்தார்.6 தகடூர்ப் போரை பற்றித் தகடூர் யாத்திரை என்னும் நூல் இருந்தது. அது சென்ற 19ஆம் நூற்றாண்டில் மறைந்து விட்டது.7 பெருஞ்சேரலிரும்பொறை தன் ஆட்சிக் காலத்தில் சில நாடுகளைக் கைப்பற்றித் தன்னுடைய இராச்சியத்தைப் பெரிதாக்கினான். அவன் தன்னை 8ஆம் பத்தில் பாடிய அரிசில் கிழாரைத் தன்னுடைய அமைச்சராக்கினான் (8ஆம் பத்துப் பதிகச் செய்யுள்). வெற்றிகளைப்பெற்ற பெருஞ்சேரலிரும்பொறை தன்னுடைய குலதெய்வமாகிய அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டு வணங்கினான். தான் வென்ற பகையரசரின் யானைகளுடைய தந்தங்களை அறுத்து அந்தத் தந்தங்களினால் கட்டில் (ஆசனம்) செய்து அதன்மேல் கொற்றவையை இருத்தித் தன்னுடைய வெற்றி வாளில் படிந்துள்ள இரத்தக் கறையைக் கழுவினான். இவ்வாறு வெற்றிவிழாக் கொண்டாடுவது அக்காலத்து வழக்கம். இச்செய்தியை இவனை 8ஆம் பத்தில் பாடியவரும் இவனுடைய அமைச்சருமாகிய அரிசில்கிழார் கூறுகிறார்.8 இவ்வரசன் தெய்வ பக்தியுள்ளவன் அறநெறியறிந்தவன். தன்னுடைய வயது சென்ற புரோகிதனுக்கு அறநெறி கூறி அவனைத் தவஞ் செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.9 பெருஞ்சேரலிரும் பொறைக்கு மக்கட் பேறில்லாமலிருந்து பிறகு இவனும் இவனுடைய அரசியும் நோன்பிருந்து விரதம் நோற்று வேள்வி செய்து ஒரு மகனைப் பெற்றார்கள் என்று 8ஆம் பத்து 4ஆம் செய்யுள் கூறுகிறது.10 இதில், இவனுடைய மகன் பெயர் கூறப்பட வில்லை. அவன் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும் பொறை என்று கருதப்படுகிறான். தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று 8ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. இவன் ஏறத்தாழ கி.பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இவன், சேரன் செங்குட்டுவன் சேரநாட்டையரசாண்ட காலத்தில் இருந்தவன். அவனுடைய தாயாதித் தமயன் முறையினன். இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன். சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே பெருஞ்சேரலிரும்பொறை இறந்து போனான். பெருஞ்சேரல் இரும்பொறை, தன்மேல் 8ஆம் பத்துப் பாடிய அரிசில்கிழாருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தான். (அரிசில் கிழார் காண்க.) இவன், மோசிகீரனார் என்னும் புலவரைப் போற்றினான். அப் புலவர் இவனுடைய அரண்மனையில் சென்று இவனைக் கண்டார் கண்டபிறகு, அரண்மனையில் இருந்த முரசு வைக்கும் கட்டிலின் மேல் படுத்து உறங்கிவிட்டார். முரசு கட்டில் புனிதமாகக் கருதப்படுவது. அவர் அதன்மேல் படுத்து உறங்குவதைத் தற்செயலாகக் கண்ட அரசன், அரண்மனைச் சேவகர் இதனைக் கண்டால் புலவருக்குத் துன்பஞ் செய்வார்கள் என்று கருதி, அவ்வாறு நேரிடாதபடி தான் அவர் அருகில் நின்று கவரியினால் வீசிக்கொண்டிருந்தான். விழித்துக் கொண்ட புலவர், நடந்ததையறிந்து தம்முடைய செயலுக்குப் பெரிதும் வருந்தினார். அரசனுடைய பெருந்தன்மையைப் புகழ்ந்து பாடினார் (புறம் 50). அச் செய்யுளின் அடிக்குறிப்பு, “ சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறை முரசுக்கட்டில் அறியாதேறிய மோசிகீரனாரைத் தவறு செய்யாது அவன் துயிலெழுந் துணையும் கவரி கொண்டு வீசியானைப் பாடியது” என்று கூறுகிறது. *** அடிக்குறிப்புகள் 1. “குண்டுகண் அழிய குறுந்தண் ஞாயில், ஆரெயில் தோட்டி வௌவினை ஏறொடு, கன்றுடை யாயந்தரீ இப் புகல்சிறந்து, புலவுவில் இளையர் அங்கை விடுப்ப, மத்துக் கயிறாடா வைகற் பொழுது நினையூஉ, ஆன்பயன் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப், பதிபாழாக.” (8ஆம் பத்து 1: 12-18) 2. “வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை, ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த, கழுவுள் காழூர்.” (அகம். 135: 11-13). 3. “பழவிறல், ஓரிக்கொன்ற ஒரு பெருந் தெருவில், காரி புக்க நேரார் புலம்போல், கல்லென்றன்றால் ஊரே.” (நற். 330: 4-7). 4. “முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரீக்கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி”. (அகம். 209: 12-15). 5. ‘ஓரி, பல்பழம் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகம். 208: 21-22) என்றும், `கைவண் ஓரிகானம்’ (புறம். 199: 3) என்றும், `வல்வில் ஓரி கானம்’ (நற். 6:9) என்றும், மாரி வண்மகிழ் ஓரி கொல்லி’ (நற். 265:7) என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஓரியின் கொல்லியைக் கூறின பரணர் இன்னொரு செய்யுளில் `வெள்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி’ (அகம். 62: 12-13) என்று கூறுகிறார். அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால் பரணர் காலத்திலே ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது. 6. “பல்பயன் நிலைஇய கடறுபடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம்பூரிந்து காக்கும், வில்பயில் இரும்பில் தகடூர் நூறி”. (8 ஆம் பத்து 8: 7-9) “பல்வேல தானையதிக மானோடு, இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று, முரசுங் குடையுங் கலனுங் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத், துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத், தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய, அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ் சேரலிரும் பொறை”. (8ஆம் பத்து, பதிகம்.) 7. (இது பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய `மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும்புத்தகத்தில் காண்க). 8. “கொல் களிற்றியானை பெருத்தம் புல்லென, வில்குலையறுத்துக் கோலின் வாரா, வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்தவர், அரசுவா வழைப்பக் கோடறுத்தியற்றிய, அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து, தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படின் அல்லது, மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபில், கடவுள் அயிரை.” (8ஆம் பத்து 9: 10-18). 9. “முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை. வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபாடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமை யானே” (8ஆம் பத்து 4: 24: 28) “நரைமூதாள னென்றது புரோகிதனை”. பழைய உரை). தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பசும்பூட் பொறையன் என்றும் (அகம். 308: 4) பெரும்பூட் பொறையன் என்றும் (குறும். 89:4) சிறப்புப் பெயர் உண்டு. 10. (`சால்பும் செம்மையும் உளப்படப் பிறிவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வன் பெற்றனை’ (8ஆம் பத்து. 19-21). 7. குட்டுவன் இரும்பொறை குட்டுவன் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் இரண்டு பிள்ளைகள் (துணைப் புதல்வர்) இருந்தார்கள் என்றும் அவ்விரண்டு பிள்ளைகளில் மூத்தவன் பெயர் பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் இளைய பிள்ளையின் பெயர் குட்டுவன் இரும்பொறை என்றும் அறிந்தோம். குட்டுவன் இரும்பொறை இளவரசனாக இருந்தபோதே இறந்து போனான். இவன் ஏதோ ஒரு போரில் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இவனுக்கு ஒரு மகன் இருந்தான் என்பதும் அவன் பெயர் இளஞ்சேரல் இரும் பொறை என்பதும் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் பதிகத்தினால் அறிகிறோம். குட்டுவன் இரும்பொறை, அந்துவஞ்செள்ளை (மையூர் கிழான் மகள்) என்பவளை மணஞ் செய்திருந்தான் என்றும் இவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் 9ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. பதிற்றுப்பத்துக் கூறுகிறபடி இவர்களின் வழிமுறை இவ்வாறு அமைகிறது. அந்துவன் பொறையன் (= பொறையன் பெருந்தேவி) செல்வக் கடுங்கோ வாழியாதன் = (வேளாவிக் கோமான் பதுமன் தேவி) பெருஞ்சேரல் இரும்பொறை குட்டுவன் இரும்பொறை (தகடூரை எறிந்தவன்) (= அந்துவஞ்செள்ளை) யானைக்கட் சேய் மாந்தரஞ் இளஞ்சேரல் சேரல் இரும்பொறை இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் (துணைப் புதல்வர்) இருந்தார்கள் என்று 7ஆம் பத்துத் தெளிவாகக் கூறுகின்றது. இதைச் சரித்திர அறிஞர்கள் கவனிக்கவில்லை. செல்வக் கடுங்கோவுக்கு அந்துவஞ்செள்ளை என்னும் ஒரு சகோதரி இருந்தாள் என்று நீலகண்ட சாஸ்திரி ஊகமாக எழுதியுள்ளார். இதற்குச் சான்று ஒன்றும் இவர் காட்டவில்லை. இவ்வாறு கற்பனையாகக் கற்பிக்கிற இவர் அந்துவஞ் செள்ளையை யாரோ ஒரு குட்டுவன் இரும்பொறை என்னும் சேர அரசன் மணஞ் செய்துகொண்டான் என்று மேலும் கற்பனை செய்கிறார். குட்டுவன் இரும்பொறை, செல்வக் கடுங்கோவின் இளைய மகன் என்பதற்கு மேலே சான்று காட்டியுள்ளோம். இந்த அகச் சான்றையறியாமல், இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்ட நீலகண்ட சாஸ்திரி, அந்துவஞ்செள்ளை மையூர்கிழானின் மகள் என்று (9ஆம் பத்துப் பதிகம்) கூறுகிறபடியால், தான் தவறாக யூகித்துக் கொண்ட தவற்றைச் சரிபடுத்துவதற்காக, மையூர்கிழான் என்பது அந்துவன் பொறையனுடைய இன்னொரு பெயர் என்று இன்னொரு தவற்றைச் செய்துள்ளார். இதுவும் இவருடைய கற்பனையே. பொறைய னாகிய சேர அரசன் எப்படி கிழானாக இருக்க முடியும்? நீலகண்ட சாஸ்திரி இவ்வாறெல்லாம் தன் மனம் போனபடி கற்பனைகளைச் செய்துள்ளார்.1 அந்துவன், அந்துவஞ்செள்ளை என்பதில் ‘அந்துவன்’ என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இவர் இப்படியெல்லாம் ஊகஞ் செய்கிறார். இதற்குக் காரணம் செல்வக் கடுங்கோ வழியாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள் என்பதை இவர் அறியாததுதான். பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும் பொறையும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதையறிந்தோம். குட்டுவன் இரும் பொறை அந்துவஞ்செள்ளையை (மையூர் கிழான் மகளை) மணஞ் செய்து இருந்ததையும் இவர்களுக்கு இளஞ்சேரல் இரும்பொறை என்னும் மகன் இருந்ததையும் (9ஆம் பத்துப் பதிகம்) அறிந்தோம். பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர்ப் போரைச் செய்த காலத்தில் அவன் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறை உயிர் வாழ்ந்திருந்தான். இதைத் தகடூர் யாத்திரைச் செய்யுள்களினால் குறிப்பாக அறிகிறோம். “சால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி” (புறத்திரட்டு 776,தகடூர் யாத்திரை) இந்தச் செய்யுளில் பொறையன் என்பது பெருஞ்சேரல் இரும் பொறையை. நும்பி என்றது அவனுடைய தம்பியாகிய குட்டுவன் இரும்பொறையை, இதனால், தகடூர்ப் போர்நிகழ்ந்த காலத்தில் எக்காரணம் பற்றியோ இவ்விருவருக்கும் பிணக்கு ஏற்பட்டிருந்தது என்பதும் அப்பிணக்கைப் புலவர் தீர்க்க முயன்றனர் என்பதும் தெரிகின்றன. பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவன் இரும் பொறை என்று ஒரு தம்பி இருந்ததையறியாதவர், தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தம்பி முறையுள்ளவன் என்றும் இச் செய்யுளில்‘நும்பி’ என்றது அதிகமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கிறது என்றும் கூறுவர். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் யாதொரு உறவும் இல்லை. சேரமன்னருக்கும் தகடூர் மன்னருக்கும் அக்காலத்தில் உறவு முறை கிடையாது. புறத்திரட்டுப் பதிப்பாசிரியராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், இச்செய்யுளில் வருகிற நும்பி என்பதைச் சுட்டி காட்டி இதற்கு இவ்வாறு விளக்கம் எழுதுகிறார். “புறத்திரட்டில் வரும் செய்யுளொன்றால் (புறத். 776) சேர மானுக்கு அதிகமான் என்பவன் தம்பி முறையினன் என்பது பெறப் படுகின்றது. ஆகவே தகடூர் யாத்திரைச் சரித்திரம் பாரதம் போன்று தாயத்தாரிடை நிகழ்ந்த போரின் வரலாற்றினை விளங்கக் கூறுவதாம்.”2 பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவன் இரும்பொறை என்னும் உடன் பிறந்த தம்பி ஒருவன் இருந்தான் என்பதையறியாதபடியால், இவர் ‘நும்பி’ என்பதற்கு அதிகமான் என்று பொருள் கொண்டார். இது தவறு. நும்பி என்றது குட்டுவன் இரும்பொறையைக் குறிக்கிறது. தகடூர் யாத்திரைச் செய்யுள் இன்னொன்றிலும் இந்தத் தமயன் தம்பியர் குறிக்கப்படுகின்றனர். புறத்திரட்டு 785ஆம் செய்யுளில் (தகடூர் யாத்திரைச் செய்யுள் ) இவர்கள் இவ்வாறு குறிக்கப்படுகின்றனர். அச்செய்யுட் பகுதி இது: “நும்மூர்க்கு நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை நும்முன் நுமக்குத் துணை யாகலும் உரியன்; அதனால் தொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி.” இச்செய்யுளில் நீ என்பது குட்டுவன் இரும்பொறையையும் ‘நும்முன்’ என்பது இவன் தமையனான பெருஞ்சேரல் இரும்பொறையையும் குறிக்கின்றன. குட்டுவன் இரும் பொறையின் வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. தகடூர்ப் போர் நடந்தபோது இருந்த இவன், அப்போரிலோ அல்லது வேறு போரிலோ இறந்திருக்க வேண்டும். இவனைப் பற்றிய செய்யுள் ஒன்றும் தொகை நூல்களில் காணப்பட வில்லை. இவனுடைய மகன் இளஞ்சேரல் இரும்பொறை பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் தலைவன் என்பதை யறிந்தோம். கொங்கு நாட்டை அரசாண்ட இவர்கள் காலத்தில் (பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை) சேர நாட்டை அரசாண்டவன் சேரன் செங்குட்டுவன். அவனுக்குக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் பெயர் உண்டு. பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை வென்ற பிறகு நீண்ட காலம் அரசாளவில்லை. அவன் ஏதோ ஒரு போரில் இறந்துபோனான் எனத் தோன்றுகிறது. அவன் அரசாண்ட காலம் 17 ஆண்டுகள் அவனுக்கு முன்னமே அவன் தம்பியான குட்டுவன் இரும்பொறை இறந்து போனான். பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு அரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறையும் 16 ஆண்டுதான் அரசாண்டான். இவர்கள் இருவருடைய ஆட்சிக்காலம் 33 ஆண்டுகளேயாகும். சேரன் செங்குட்டுவனோ 55 ஆண்டு அரசாண்டான் என்று 5ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, இவ்விரு கொங்கு நாட்டரசரும் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இறந்து போனார்கள். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா எடுப்பதற்கு முன்னமே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். அதனை இந்நூலில் இன்னொரு இடத்தில் (இரும்பொறையரசர்களின் கால நிர்ணயம்) காண்க. பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு, அவனுடைய தம்பி குட்டுவன் இரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான். குட்டுவன் இரும்பொறை, பெருஞ் சேரலிரும்பொறைக்கு முன்னமே இறந்து போனதை அறிந்தோம். பெருஞ்சேரலிரும் பொறையின் மகன் சிறுவனாக இருந்தபடியால், அப்போது வயதுவந்தவனாக இருந்த இளஞ்சேரலிரும்பொறை அரசனானான். இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார் 9ஆம் பத்துப் பாடினார். ‘பாடிப்பெற்ற பரிசில்’ “ மருளில் லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான் விட்டான் அக்கோ” (9ஆம் பத்துப் பதிகக் குறிப்பு). இளஞ்சேரல் இரும்பொறை போரில் வெற்றி பெற்றான் என்று பெருங்குன்றூர்கிழார் கூறுகிறார். எந்தப் போரை வென்றான் என்பதைக் கூறவில்லை. இவனுடைய முன்னோர்கள் வென்ற போர்களைச் சிறப்பித்துக் கூறி அவர்களின் வழிவந்த புகழையுடையவன் என்று கூறுகிறார். ‘காஞ்சி சான்ற செருப்பல’ செய்தான் என்று கூறுகிறார். இவன், ‘சென்னியர் பெருமான்’ (சோழன்) உடன் போர் செய்தான் என்றும் அப்போரில் சோழன் தோற்றுப் போனான் என்றும் கூறுகிறார் (9ஆம் பத்து 5) “பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்.” இந்தச் சென்னியர் பெருமான், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய முன்னோர் களைப் போலவே கொங்கு நாடு முழுவதும் அரசாண்டான். பூழியர்கோ கொங்கர்கோ, தொண்டியர் பொருநன், குட்டுவர் ஏறு, பூழியர் மெய்ம் மறை, மாந்தையோர் பொருநன், கட்டூர் வேந்து என்றும், கொங்கு நாட்டில் பாயும் ‘வானி நீரினும் தீந்தண் சாயலன் என்று கூறப் படுகிறான். 9ஆம் பத்தில் இவன் பலமுறை ‘வல்வேற் குட்டுவன்’, ‘வென்வேற் பொறையன்’, ‘பல்வேல் இரும்பொறை’ என்று கூறப் படுகிறான். 9ஆம் பத்தின் பதிகத்தில் இவன் ‘விச்சியின் ஐந்தெயிலை’ எறிந்தான் என்றும் அப்போரில் சோழ, பாண்டியர் தோற்றனர் என்றும் கூறப்படுகிறான். மற்றும் “பொத்தியாண்ட பெருஞ் சோழனையும் வித்தையாண்ட இளம் பழையன் மாறனையும்” வென்றான் என்று கூறப்படுகிறான். *** அடிக்குறிப்புகள் 1. P. 506, 567, 526, 540. A Comprehensive History of India Vol. II Edited by K.A. Nelakanta Sastri 1957. 2. பக்கம் XIV - XIVI புறத்திரட்டு. ராவ்சாகிப் S. வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1939. 8. இளஞ்சேரல் இரும்பொறை தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு இராச்சியத்தை அரசாண்டவன் அவனுடைய தம்பியின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்று கூறினோம். இவன் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவன். இளஞ்சேரல் இரும்பொறையைக் குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறை என்றும் சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை யென்றும் கூறுவர். இவன் கொங்கு நாட்டின் அரசன் என்றும் பூழி நாடு, மாந்தை நகரம், கட்டூர், தொண்டி, இவைகளின் தலைவன் என்றுங் கூறப்படுகிறான்.1 கட்டூர் என்பதற்குப் பொதுவாகப் பாசறை என்பது பொருள். ஆனால், இங்குக் கூறப்பட்ட கட்டூர் என்பது புன்னாட்டின் தலை நகரமான கட்டூர், பிற்காலத்துச் சாசனங்களில் இவ்வூர் கிட்டூர் என்றும் கூறப்படுகிறது. புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் இப்போது மைசூருக்குத் தெற்கேயுள்ள ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக் கின்றன. சங்க காலத்தில் இவை வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. காவிரியாற்றின் ஓர் உபநதியாகிய கபிணி அல்லது கப்பிணி என்னும் ஆற்றங்கரை மேல் கட்டூர் இருந்தது. இவ்வூர் பிற் காலத்தில் கிட்டூர் என்றும் கித்திப்புரம், கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில் வானியாறும் ஒன்று. “சாந்துவரு வானி நீரினும், தீந்தண் சாயலன்” (9ஆம் பத்து 6: 12- 13) என்று இவன் புகழப்படுகிறான். இவன் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாடு முழுவதும் இவனுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. இவனுடைய பெரிய தந்தையான பெருஞ்சேரலிரும் பொறை கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை வென்று கொங்கு இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டதை முன்னமே அறிந்தோம். இவனுடைய தந்தையாகிய குட்டுவனிரும்பொறை தகடூர்ப் போரிலோ அல்லது அதற்கு அண்மையில் நடந்த வேறு ஒரு போரிலோ இறந்து போனான் என்று அறிந்தோம். ஆகவே இவன் கொங்கு நாட்டின் வடபகுதிகளை வென்று தன்னுடைய கொங்கு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான். விச்சிப் போர் இளஞ்சேரல் இரும்பொறை விச்சியூரை வென்றான். விச்சியூர் கொங்கு நாட்டிலிருந்தது. விச்சியூரிலிருந்த விச்சிமலைக்கு இப்போது பச்சைமலை என்று பெயர் வழங்குகிறது. இங்கு விச்சியூர் என்று ஓர் ஊர் உண்டு. அதன் அரசன் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான். விச்சியூர், மலை சார்ந்த நாடு (புறம். 200 : 1-8). விச்சிக்கோ, விச்சியர் பெருமகன் என்றுங் கூறப்படுகிறான் (குறுந். 328 :5). விச்சியூர் மலைமேல் விச்சிக்கோவுக்கு ஐந்தெயில் என்னும் பெயருள்ள கோட்டையிருந்தது.1 இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் அந்த விச்சிக்கோவின் மகனான இன்னொரு விச்சிக்கோ விச்சி நாட்டையரசாண்டான். இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய ஆட்சிக்கு அடங்காமலிருந்த விச்சிக்கோவின் மேல் படையெடுத்துச் சென்று போர் செய்தான். விச்சிக்கோவுக்குச் சோழனும் பாண்டியனும் தங்கள் சேனைகளை உதவினார்கள். ஆனாலும், விச்சிக்கோ போரில் தோற்றான். அவனுடைய ஐந்தெயில் கோட்டையும் இளஞ்சேரலிரும் பொறைக்குரியதாயிற்று. “இருபெரு வேந்தரும் விச்சியும்வீழ, வருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து” (9 ஆம் பத்து, பதிகம்). சோழனுடன் போர் சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ் சேனையை யனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலை நகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும் பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாபதி பழையன் எதிர்த்தான். இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கி யிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்), ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை எதிரிட்டுப் போர் செய்தார்கள். பழையன் இவர்களை யெல்லாம் எதிர்த்துத் தனிநின்று கடும் போர்செய்தான். ஆனால், பலருடைய எதிர்ப்புக்குத் தாங்காமல் போர்க்களத்தில் இறந்து போனான். தன்னுடைய சேனைத் தலைவனான பழையன் கட்டூர்ப் போரில் மாண்டு போனதையும் தன் சேனை தோற்றுப் போனதையும் அறிந்த சோழன் பெரும்பூண் சென்னி மிக்க சினங்கொண்டான். அவன் தன்னுடைய சேனையுடன் புறப்பட்டுக் கொங்குநாட்டிலிருந்த இளஞ் சேரலிரும் பொறைக்கு உரியதான கழுமலம் என்னும் ஊரின் மேல் சென்று போர் செய்தான். அவ்வூரின் தலைவனான கணயன், சோழனை எதிர்த்துப் போரிட்டான். சோழன் போரில் வெற்றிகொண்டு கழுமலத்தைக் கைப்பற்றினதோடு கணயனையும் சிறைப்பிடித்தான். இந்தப் போர்ச் செய்திகளையெல்லாம் குடவாயிற் கீரத்தனார் கூறுகிறார்.2 சோழன் பெரும்பூண் சென்னியைச் சோழன் செங்கணான் என்று தவறாகக் கருதுகிறார் சேஷ ஐயர்.3 இது தவறு. இளஞ்சேரல் இரும்பொறையின் கீழ் கழுமலத்தில் சிற்றரசனாக இருந்த கணையனைக் கணைக்காலிரும் பொறை என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவறாகக் கருதுகிறார்.4 கணையன் வேறு கணைக்காலிரும்பொறை வேறு. சோழன் பெரும்பூண் சென்னியும் சோழன் செங்கணானும் வெவ்வேறு காலத்தி லிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறையும் கணைக்காலிரும்பொறையும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறைக்குப் பின் ஒரு தலைமுறைக்குப் பிறகு இருந்தவன் கணைக்காலிரும்பொறை. கழுமலத்தில் இரண்டு போர்கள் நடந்திருக் கின்றன. முதற்போர், சோழன் பெரும்பூண் சென்னிக்கும் இளஞ்சேரல் இரும்பொறையின் கீழடங்கின கணையனுக்கும் நடந்தது. அதன்பிறகு இரண்டாவது போர் சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் நடந்தது. சோழன் பெரும்பூண் சென்னி கொங்கு நாட்டின் மேல் படை யெடுத்துவந்து போர் செய்து கழுமலத்தைக் கைப்பற்றியதையறிந்த இளஞ்சேரல் இரும்பொறை சினங்கொண்டு, அந்தச் சென்னியைப் பிடித்து வந்து தன் முன்னே நிறுத்தும்படித் தன்னுடைய சேனைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் போய்ப் பெரும்பூண் சென்னியோடு போர் செய்தார்கள். அந்தப்போர் பெரும்பூண் சென்னி கைப்பற்றியிருந்த கழுமலம் என்னும் ஊரில் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் போரிலே சோழனுடைய படை வீரர்கள் தோற்றுத் தங்களுடைய (வேல்களை) ஈட்டிகளைப் போர்க்களத்திலே விட்டுவிட்டு ஓடினார்கள் அவர்கள் போர்க்களத்தில் போட்டு விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கை, செல்வக் கடுங்கோ வாழியாதன் (இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டன்) தன்னை ஏழாம் பத்தில் பாடின கபிலருக்குப் பரிசாகக் கொடுத்த ஊர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது.5 இதிலிருந்து சோழன் தோற்றுப் போன செய்தி தெரிகிறது. சோழன் பெரும்பூண் சென்னியுடன் போர்செய்து வென்றபிறகு இளஞ்சேரல் இரும்பொறை இன்னொரு சோழனுடன் போர்செய்தான். இளஞ்சேரலிரும்பொறை பெருஞ்சோழன் என்பவனையும் இளம்பழையன் மாறன் என்பவனையும் வென்றான்.6 இந்தப் பெருஞ் சோழன் என்பவன் வேறு. மேலே சொன்ன பெரும்பூண் சென்னி வேறு என்று தோன்றுகிறது. இளம்பழையன் மாறன் என்பவன், கட்டூர்ப் போரில் முன்பு இறந்து போன பழையன் என்னும் சேனாதிபதியின் தம்பியாக இருக்கலாம். (இந்தப் பழையன் மாறனுக்கும் பாண்டி நாட்டில் மோகூரில் இருந்த பழையன் மாறனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இவன் வேறு, அவன் வேறு.) இளஞ்சேரல் இரும்பொறை சோழ நாட்டில் சென்று சோழனுடன் போர் செய்து வென்றான் என்றும் சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத் தில் காவல் தெய்வங்களாக இருந்த சதுக்கப்பூதம் என்னுந் தெய்வங்களைக் கொண்டு வந்து தன்னுடைய வஞ்சிக் கருவூரில் அமைத்து விழாச் செய்தான் என்றும் அறிகிறோம்.7 காவிரிப்பூம் பட்டினத்துச் சதுக்கப் பூதரை எடுத்துக்கொண்டு வந்து இவன் வஞ்சி நகரத்தில் வைத்து விழா கொண்டாடினதைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.8 இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டனாக இருந்தவன் மையூர் கிழான். மையூர் கிழான் இவனுடைய தாய்ப்பாட்டன். மையூர்கிழானின் மகளான அந்துவஞ்செள்ளை இவனுடைய தாயார். இவனுடைய அமைச்சனாக இருந்த மையூர் கிழான் இவனுடைய தாய் மாமனாக இருக்க வேண்டும். அதாவது, இவனுடைய தாயாருடன் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அமைச்சனை இவன் புரோசு மயக்கினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகிறது. “மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி” “அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கியென்றது தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி” என்று இதன் பழைய உரை கூறுகிறது.9 (புலவர் பெருங்குன்றூர் கிழார் இவ்வரசனிடம் பரிசு பெறச் சென்றார். இவன் பரிசு கொடுக்காமல் காலந் தாழ்த்தினான். பல நாள் காத்திருந்தும் பரிசு வழங்கவில்லை. அப்போது இப்புலவர் வருந்திப் பாடிய இரண்டு செய்யுட்கள் (புறம். 210, 211) இவருடைய வறுமைத் துன்பத்தைத் தெரிவிக்கின்றன. பரிசு கொடுக்காமல் காலந் தாழ்த்தின இவ்வரசன் இப்புலவருக்குத் தெரியாமல் ஊர், வீடு, நிலம் முதலியவற்றை அமைத்துப் பிறகு இவருக்குக் கொடுத்தான். “ அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து , ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்து”க் கொடுத்தான் என்று ஒன்பதாம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை மீது ஒன்பதாம் பத்துப் பாடினார். அதற்கு அவன் முப்பத்தீராயிரம் பொற் காசு வழங்கினான். “பாடிப்பெற்ற பரிசில் மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்தான் அக்கோ” என்று பதிகத்தின் கீழ்க் குறிப்புக் கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை பதினாறு ஆண்டு வீற்றிருந்தான் என்று 9ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. இளமையிலேயே ஆட்சிக்கு வந்த இவன் குறுகிய காலத்திலேயே இறந்து போனான் என்று தெரிகிறபடியால் இவன் ஏதோ போர்க்களத்தில் இறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். எங்கே எப்படி இறந்தான் என்பது தெரிய வில்லை. ஆனால், இவனுடைய மூத்தவழித் தாயாதிப் பெரிய தந்தை யாகிய சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இறந்து போனான் என்பது ஐயமில்லாமல் தெரிகிறது. இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். சேரன் செங்குட்டுவன், கண்ணகியாருக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்து கொண்டிருந்த போது, இவனுடைய தூதனாகிய நீலன், கனக விசயரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டிவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன், கனக விசையரைச் சிறைப்பிடித்து வந்ததைப் பாராட்டாமல் சோழனும் பாண்டியனும் இகழ்ந்து பேசினதைத் தெரிவித்தான். அது கேட்ட செங்குட்டுவன் சினங்கொண்டு அவர்கள் மேல் போருக்குச் செல்ல எண்ணினான். அவ்வமயம் அருகிலிருந்த மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனின் சினத்தைத் தணிக்கச் சில செய்திகளைக் கூறினான். “ உனக்கு முன்பு அரசாண்ட உன்னுடைய முன்னோர் பெருவீரர்களாக இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மாய்ந்து மாண்டு போனார்கள். அது மட்டுமா? உன்னுடைய தாயாதித் தம்பியும் அத் தம்பி மகனுங்கூட முன்னமே இறந்து போனார்கள். ஆகவே, சினத்தைவிட்டு மறக்கள வேள்வி செய்யாமல், அறக்கள வேள்வி செய்க” என்று கூறினான். இவ்வாறு கூறியவன் இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போன செய்தியையும் கூறினான். “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்!” (சிலம்பு, நடுகல் 147 - 150) இதில்,“ சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன்” என்றது இளஞ்சேரல் இரும்பொறையை. இளஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய தாயாதிப் பெரிய தந்தையான சேரன் செங்குட்டுவன் இருக்கும்போதே, அவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமேயே இறந்து போனான் என்பது நன்கு தெரிகின்றது. இந்த உண்மையை யறியாமல் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இளஞ்சேரல் இரும்பொறை வாழ்ந்திருந்தான் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுவது தவறாகும். செங்குட்டுவன் உத்தேசமாக கி.பி. 180 லும், குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறை உத்தேசம் கி.பி. 190 இலும் இருந்தனர் என்று இவர் எழுதியுள்ளார்.10 செங்குட்டுவன் காலத்திலேயே இறந்து போன குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகும் எப்படி வாழ்ந் திருக்க முடியும்? செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்த காலத்தில் இவன் இல்லை. இலங்கையரசனான முதலாம் கஜபாகுவின் சம காலத்த வனான செங்குட்டுவன், கஜபாகுவுக்கு வயதில் மூத்தவனாக இருந்தான். இவன் தன்னுடைய 50ஆவது ஆட்சியாண்டில் ஏறக் குறைய கி.பி. 175 இல் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கருதலாம். அந்த ஆண்டுக்கு முன்பே இளஞ்சேரல் இறந்து போனான் என்று சிலம்பு கூறுகிறது. எத்தனை ஆண்டுக்கு முன்பு என்பது தெரியவில்லை. ஏறத்தாழக் கி. பி. 170இல் இறந்து போனான் என்று கொள்ளலாம். இவன் பதினாறு ஆண்டு ஆட்சி செய்தான் என்பதனால், உத்தேசம் (170 - 16= 154) கி. பி. 154 முதல் 170 வரையில் இவன் ஆட்சி செய்தான் என்று கருதலாம். குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையின் சம காலத்திலிருந்த அரசர்கள், சேர நாட்டில் சேரன் செங்குட்டுவனும் பாண்டி நாட்டில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனும் (வெற்றிவேற் செழியன்) இருந்தார்கள். சோழ நாட்டில் சோழன் பெரும்பூண் சென்னி (பெருஞ்சோழன்) இருந்தான். ஒரு விளக்கம் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் தலைவனும் கொங்கு நாட்டின் அரசனுமாகிய இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும் பொறையின் மகன். இவனை ( தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும் பொறையின் மகன் என்று கருதுவது தவறு. இந்தத் தவறான கருத்தைச் சரித்திரகாரர் பலருங் கொண்டிருந் தார்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இவன் என்று கே. என். சிவராசப் பிள்ளை யவர்களும்11 கே. ஜி. சேஷையரும்12 கருதினார்கள். மு. இராகவையங்கார் அவர்கள் தம்முடைய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இவ்வாறே தவறாக எழுதியுள்ளார்.மேற்படி நூலில் சேர வமிசத்தோர் என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும்பொறையின் இராணியின் பெயர் அந்துவஞ் செள்ளை என்றும் இவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் இவர் எழுதியுள்ளார். இவர் கூறியதையே வி. ஆர். இராமச்சந்திரதீட்சிதரும் கூறியுள்ளார். (தீட்சிதர் அவர்கள் மு. இராகவையங்காரின் துணைகொண்டு சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.) அவர், தம்முடைய சிலப்பதிகார ஆங்கில மொழிப்பெயர்ப்பின், முகவுரையில் 13ஆம் பக்கத்தில் ‘சேரர் தாய்வழிப் பட்டியல்’ என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும் பொறைக்கும் (குட்டுவன் இரும்பொறை) வேண்மாள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்று எழுதுகிறார். அதாவது. பெருஞ்சேரலிரும் பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதுகிறார். அவர் இவ்வாறு பட்டியல் எழுதிக் காட்டுகிறார்.13 செல்வக் கடுங்கோ வாழியாதன் பெருஞ்சேரல் இரும்பொறை (குட்டுவன் இரும்பொறை) வேண்மாள் அந்துவஞ் செள்ளை (இராணி) இளஞ்சேரல் இரும்பொறை14 இந்நூலாசிரியரும் இவ்வாறே தவறாகக் கருதியிருக்கிறார்.15 இது தவறு என்பதை இப்போதறிந்து கொண்டேன். டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் இளஞ்சேரலிரும் பொறையைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. “பெருஞ்சேரல் இரும்பொறையுடன் மாறுகொண்ட இப்பெயர் இவனை அவன் மகனெனக் குறிக்கும் நோக்குடன் ஏற்பட்ட தொடர் என்பது தோன்றும். அதனுடன் உண்மையில் பதிகமே (9ஆம் பத்துப் பதிகம்) அவன் குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர்கிழான் மகள் அந்துவஞ் செள்ளைக்கும் புதல்வன் என்று கூறுகிறது” என்று எழுதுகிறார்.16 இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனா, குட்டுவன் இரும் பொறையின் மகனா என்று அவர் திட்டமாகக் கூறாமல் விட்டு விட்டார். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர் இருந்தனர் என்பதை இவர் அறியாதபடியால் இந்தத் தவறு நேர்ந்தது. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் என்று அவனைப் பாடிய ஏழாம்பத்துக் கூறுகிறது. “வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்” (7ஆம் பத்து 10: 222) இந்தத் துணைப் புதல்வரின் (இரண்டு மகன்களில்) மூத்தவன் பெருஞ் சேரல் இரும்பொறை (8ஆம் பத்துப் பதிகம்), இளைய மகன் குட்டுவன் இரும்பொறை (9ஆம் பத்துப் பதிகம்). குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ்சேரல் இரும்பொறை. இதனைக் கீழ்க்கண்ட பட்டியலில் விளக்கமாகக் காண்க: செல்வக்கடுங்கோ வாழியாதன் (7ஆம் பத்துத் தலைவன்) (மூத்த மகன்) (இளைய மகன்) பெருஞ்சேரல் இரும்பொறை குட்டுவன் இரும்பொறை (8ஆம் பத்துத் தலைவன்) அந்துவஞ்செள்ளை இளஞ்சேரல் இரும்பொறை (9ஆம் பத்துத் தலைவன்) கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இளஞ்சேரலிரும்பொறையைப்பற்றி விசித்திரமாக ஓர் ஊகத்தைக் கற்பிக்கிறார். செல்வக்கடுங்கோ வாழி யாதனுக்கு அந்துவஞ்செள்ளை என்று ஒரு தங்கை இருந்தாளென்றும் அவளைக் குட்டுவன் இரும்பொறை மணம் செய்து கொண்டா னென்றும் அவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் கற்பனையாகக் கூறுகிறார். அந்துவன் பொறையன், அந்துவஞ்செள்ளை என்னும் பெயர் களில் உள்ள அந்துவன் என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இவர் இவ்வாறு ஊகிக்கிறார். அந்துவஞ் செள்ளை மையூர்கிழானுடைய மகள். அந்துவன் பொறையன் வேறு, மையூர் கிழான் வேறு. இருவரையும் ஒருவர் என்று சாஸ்திரி இணைப்பது தவறு, இவருடைய ஊகமும் கற்பனையும் ஆராய்ச்சிக்குப் பொருந்தாமல் வெறுங்கற்பனையாக உள்ளன. இதுபற்றி முன்னமே கூறினோம். *** அடிக்குறிப்புகள் 1. நாரரி நறவிற் கொங்கர் கோவே. (9ஆம் பத்து 8: 19) “கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே, மட்டப் புகர்விற் குட்டுவர் ஏறே, எழாத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை, இலங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந, வெண்பூ வேளையொடு சுரை தலை மயக்கிய விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே” (9ஆம் பத்து 10:25-30) “வளைகடல் முழவில் தொண்டியோர் பொருந” (9ஆம் பத்து 8:21). 2. பாரி இறந்த பிறகு பாரிமகளிரைக் கபிலர் விச்சிக் கோவிடம் அழைத்து வந்து அவர்களை மணஞ் செய்துகொள்ளும்படி வேண்டினார். அதற்கு அவன் இணங்க வில்லை (புறம் - 200) 3. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுத்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழிஇய அளப்பருங்கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன் பட்டெனக், கண்டது நோனானாகித் திண்தேர்க், கணையன் அகப்படக் கழுமலந்தந்த, பிணையலங் கண்ணிப் பெரும்பூண்சென்னி”(அகம் 44: 7-14). 4. P. 68 Ceras of Sangam Period K.G.Sesha aiyar). 5. பெரிய புராண ஆராய்ச்சி பக்கம் 86- 94. Date of Ko - Chenganan, Journal of Madras University Vol. XXXI No. 2. P. 177-82). 6. நன்மரம் துவன்றிய நாடு பல தரீஇப், பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான், இட்டவெள்வேல் முத்தைத் தம்மென, ...... உவலை கூராக் கவலையில் நெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன் பெற்ற ஊரினும் பலவே.” (9ஆம் பத்து 5) இந்தச் செய்யுளின் பழைய உரை இதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறது. “இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து தம்மினெனத் தம்படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் ..... கபிலன் பெற்ற ஊரினும் பல.” 7. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று” (9ஆம் பத்து பதிகம்) 8. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையாண்ட இளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று, வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி” “அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்க மர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிரீஇ, ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு” (9ஆம் பத்து -பதிகம்). 9. “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன். (சிலம்பு, நடுகற் காதை (147-148) சதுக்கப்பூதர் என்பதற்குச் சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர், `அமரா பதியிற் பூதங்கள்’ என்று உரை எழுதியுள்ளார். கொங்குநாட்டுக் கருவூருக்கு (வஞ்சிநகர்) பிற்காலத்தில் அமராபதி என்றும் பெயர் வழங்கிற்று. இதைத்தான் அவர் அவ்வாறு எழுதினார். 10. (மையூர்கீழானைப் பற்றியும் அவன் மகள் அந்துவஞ் செள்ளையைப் பற்றியும் திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பல யூகங்களைக் கூறித் தவறு செய்கிறார். அந்துவனுக்கு(அந்துவன் பொறையனுக்கு) மையூர்கிழான் என்று பெயர் உண்டு என்றும் அந்துவன்பொறையனே அமைச்சனான மையூர்கிழான் என்னும் பெயருடன் இருந்தான் என்றும் இல்லாததைப் புனைந்துரைக்கிறார். P. 506,507, 526. A Comprehensive History of India. Vol. II Edited by K.A. Nilakanta Sastri. 1957. 11. (P. 522, 539. A Comprehensive History of India Vol. II 1957. P. 119. A History of South India 1955) சாஸ்திரியைப் போலவே கே.ஜி. சேஷையரும் எழுதியுள்ளார். (P. 52. Cera Kings of the Sangam Period. K.G. Sesha Aiyar 1937. 12. (P. 136. The Chronology of the Early Tamils K.N. Sivaraja Pillai 1932). 13. (P. 44. Cera Kings of the Sangam Period K.G. Sesha Aiyar 1937. 14. (P. 12,13 Introduction, The Silappadikaram English Translation by V.R. Ramchandra Dikshidar 1939). 15. பக்கம் 24. சேரன் செங்குட்டுவன், சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு, மயிலை சீனி. சேங்கடசாமி, Annuals of Oriental Research, University of Madras. (Vol XXI Part I 1966). 16. பக்கம் 121, 122 சேரன் வஞ்சி. திவான்பகதூர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார். (1946). 9. யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்டவன் அவனுடைய தம்பி மகனான இளஞ்சேரல் இரும்பொறை (ஒன்பதாம் பத்தின் தலைவன்). இளஞ்சேரல் இரும் பொறைக்குப் பின் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை யரசாண்டான். மாந்தரன் சேரல் என்பது இவனுடைய பெயர். யானையின் கண் போன்ற கண்ணையுடையவன் (புறம். 22:29). ஆகையால் யானைக்கட் சேய் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். ‘வேழ நோக்கின் விறல் வெஞ்செய்’ என்றும் இவன் கூறப்படுகின்றான். வேழம் - யானை; நோக்கு - பார்வை. சேய் - பிள்ளை, மகன். இவனுடைய பாட்டனான செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மாந்தரஞ் சேரல் என்னும் பெயரும் உண்டு. இவனுக்கும் மாந்தரஞ் சேரல் என்னும் பெயர் உண்டு. ஒரே பெயரைக் கொண்டிருந்த இவ்விருவரையும் பிரித்துக் காட்டுவதற்காக, ‘யானைக்கட்சேய்’ என்னும் அடைமொழி கொடுத்து இவன் கூறப் படுகிறான். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (யா.சே.மா. சே.இ.) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கு மக்கட்பேறு இல்லாமலிருந்தும் வேள்வி செய்து ஒரு மகனைப் பெற்றான் என்று அறிந்தோம். அந்த வேள்வியினால் பிறந்த மகன் இவனாக இருக்கலாம் என்று தோன்றுகிறான்.1 யா. சே. மா. சே. இரும்பொறை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சில போர்களைச் செய்தான். அப்போர்களில் இவனுக்கு வெற்றியுந் தோல்வியுங் கிடைத்தன. விளங்கில் என்னும் ஊரில் இவன் பகைவருடன் போர் செய்து வெற்றிபெற்றான். அவ்வமயம், இந்த வெற்றியைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் மனவருத்தம் அடைந்தான். (இவனுடைய பாட்டனான செல்வக் கடுங்கோ வாழியாதனைக் (மாந்தரஞ் சேரலைக்) கபிலர் ஏழாம் பத்துப் பாடினார்.) தன்னைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் வருந்தியதைக் கண்டு பொருந்தில் இளங் கீரனார், கபிலரைப் போலவே நான் உன்னைப் பாடுவேன் என்று கூறினார். “செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த வேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயின் நன்றுமன் என்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவல் மன்னால் பகைவரைக் கடப்பே” (புறம். 53: 11-15) புலவர் இளங்கீரனார் இவ்வாறு கூறிய பிறகு இவன் மேல் ஒரு பத்துச் செய்யுட்களைப் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் பத்து, பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தாக இருக்கவேண்டும். பத்தாம்பத்து இப்போது கிடைக்கவில்லை. அது மறைந்து போயிற்று. யா. சே. மா. சே. இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் நடந்தது. அந்தப் போர் எந்த இடத்தில் நடந்ததென்று தெரியவில்லை. அந்தப் போரில் இவன் வெற்றி யடைவது திண்ணம் என்று இவன் உறுதியாக நம்பினான். ஆனால், இவனுக்குத் தோல்வி ஏற்பட்டது. சோழன் வென்றான். சோழனுடைய வெற்றிக்கும் இவனுடைய தோல்விக்கும் காரணமாக இருந்தவன் மலையமான் அரசனாகிய தேர்வண்மலையன் என்பவன். போர் நடந்த போது தேர்வண்மலையன் சோழனுக்கு உதவியாக வந்து இவனைத் தோல்வியுறச் செய்தான். இந்தச் செய்தியைப் புறநானூறு 125ஆம் செய்யுளினால் அறிகிறோம். இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சேர மான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடியது” என்று கூறுகிறது. (பொருதவழி - போர் செய்தபோது; துப்பு - பலம்.) இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அந்தப் பாண்டியனுடன் யா.சே.மா.சே. இரும்பொறை போர் செய்தான். போர் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, அந்தப் போரில் இவன் தோற்றது மட்டுமல்லாமல் பாண்டியனால் சிறைப் பிடிக்கப் பட்டுச் சிறையில் வைக்கப்பட்டான். ஆனால், எவ்விதமாகவோ சிறையிலிருந்து தப்பி வெளிவந்து தன்னுடைய நாட்டை யரசாண்டான். இந்தச் செய்தியைக் குறுங்கோழியூர் கிழார் இவனைப் பாடிய செய்யுளி லிருந்து அறிகிறோம் (புறம். 17). அந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதிற் போய்க் கட்டி வெய்தினானைப் பாடியது” என்று கூறுகிறது. (பிணி யிருந்த - கட்டப்பட்டிருந்த, சிறைப் பட்டிருந்த. கட்டில் எய்தினானை -சிம்மாசனம் ஏறியவனை; கட்டில் -சிம்மாசனம்.) கருவூர்ப் போர் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோல்வியடைந்ததை யறிந்தோம். இவன் காலத்தில் சோழ நாட்டைச் சில சோழ அரசர்கள் அரசாண்டு வந்தனர். அவர்களில், உறையூரிலிருந்து அரசாண்ட கிள்ளி வளவனும் ஒருவன். இந்தக் கிள்ளிவளவனைப் பிற்காலத்தவர் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்றுங் கூறுவர். குளமுற்றம் குராப்பள்ளி என்னும் இரண்டு இடங்களில் இவன் இறந்துபோனான் என்பது இதன் பொருள் அன்று. குளமுற்றம், குராப்பள்ளி இரண்டும் ஒரே இடத்தைக் குறிக் கின்றன. குராப்பள்ளியில் இறந்த கிள்ளிவளவன் வேறு, குளமுற்றத்தில் இறந்து போன கிள்ளிவளவன் வேறு என்று கருதவேண்டா. இரு பெயரும் ஒருவரையே குறிக்கின்றன.2 இந்தக் கிள்ளிவளவன் கருவூரை (கொங்கு நாட்டுக் கருவூரை) முற்றுகையிட்டான். அப்போது கருவூர்க் கோட்டைக்குள் இருந்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இரும்பொறை, வெளியே வந்து கிள்ளிவளவனுடன் போர் செய்யாமல் கோட்டைக் குள்ளேயே இருந்தான். அப்போது ஆலத்தூர்கிழார் என்னும் புலவர் சோழனிடம் வந்து, ‘போருக்கு வராமல் இருக்கிறவனுடன் நீ போர் செய்து முற்றுகை இடுவது தகுதியன்று’ என்று கூறினார்.3 கிள்ளி வளவன் புலவர் சொல்லை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து முற்றுகை செய்தான். மாந்தரஞ் சேரல், போருக்கு வராமலிருந்த காரணம், தனக்கு வெளியிலிருந்து வரவேண்டிய அரசரின் உதவியை எதிர்பார்த் திருந்ததுதான். இவன் எதிர்பார்த்திருந்த உதவி கிடைத்தபிறகு இவன் கிள்ளிவளவனுடன் போர்செய்தான். போரின் முடிவு அவனுக்குத் தோல்வியாக இருந்தது. சோழன் கிள்ளிவளவனே வென்றான். போரில் கருவூர்க் கோட்டையைக் கிள்ளிவளவன் தீயிட்டுக் கொளுத்தினான். மாடமாளிகைகள் எரிந்து விழுந்தன.4 சோழன், கொங்கு நாட்டின் தலைநகரை வென்றபடியால் கொங்குநாடு முழுவதையுமே வென்றான் என்பது பொருளன்று. கோவூர்க்கிழார் கிள்ளிவளவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார் (“கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” என்றும், “வஞ்சி முற்றம் வயக்களனாக, அஞ்சாமறவர் ஆட்போர் பழித்துக் கொண்டனை பெரும குடபுலத்திதரி” என்றுங் கூறுகிறார் - புறம் 373). வஞ்சி - கருவூர், குடபுலம் - கொங்கு நாடு. இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரெறிந்தானைப் பாடியது” என்று கூறுகிறது. மாறோக்கத்து நப்பசலையாரும் சோழனுடைய கருவூர் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.5 கிள்ளிவளவன் கருவூரை வென்றபோதிலும் அதை அவன் ஆட்சி செய்யவில்லை. யா.க.சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறை அதை மீட்டுக் கொண்டிருக்க வேண்டும். கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரை முற்றுகை செய்திருந்த காலத்தில் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த படிமம் (தெய்வ உருவம்) ஒன்றை எடுத்துக் கொண்டு போனான் என்பது தெரிகின்றது. கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டபோது, யா. க. சே. மாந்தரஞ்சேரல் இரும் பொறைக்கு உதவி செய்யச் சேரன் தன்னுடைய சேனை களைக் கொங்கு நாட்டுக்கு அனுப்பியிருக்கக் கூடும். அந்தச் சமயத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் முசிறியை முற்றுகையிட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியன் முசிறியை முற்றுகையிட்டு அங்கிருந்து படிமத்தைக் கொண்டுபோன செய்தியைத் தாயங் கண்ணனாரின் செய்யுளிலிருந்து அறிகிறோம்.6 இந்தப் பாண்டியனின் காலத்தவரான நக்கீரரும் இவனுடைய முசிறிப் போரைக் கூறுகிறார்.7 பாண்டியன் முசிறியிலிருந்து கொண்டுபோன படிமம், சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகியின் பத்தினிப் படிவமாக இருக்கக் கூடும் என்று எளங்குளம் குஞ்சன் பிள்ளை தாம் மலையாள மொழியில் எழுதிய கேரளம் அஞ்சும் ஆறும் நூற்றாண்டுகளில் என்னும் நூலில் எழுதுகிறார். அது கண்ணகியின் படிமமாக இருக்க முடியாது; வேறு ஏதோ படிமமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குஞ்சன் பிள்ளையின் கருத்தை இந்துசூடன் அவர்களும் மறுத்துக் கூறுகிறார்.8 குளமுற்றத்துத் (குராப்பள்ளித்) துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டின் தலை நகரத்தை முற்றுகையிட்டு வென்றதும், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு வென்றதும் ஆகிய நிகழ்ச்சிகள், அக் காலத்தில் சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் சேர அரசர்கள் வலிமை குறைந்து இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. சேரன் செங் குட்டுவன் காலத்துக்குப் பிறகு சேர அரசர்கள் பலமில்லாதவர்களாக இருந்தார்கள் என்பது தெரிகின்றது. யா. க. சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை, சோழநாட்டு இளஞ் சேட் சென்னியை வென்றான் என்றும் சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களைத் தன்னுடைய தலைநகரத்தில் கொண்டுவந்து அமைத்தான் என்றும் அறிந்தோம். அந்தப் பூதங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த பேர்போன பூதங்களாக (தெய்வங்களாக) இருக்கக் கூடும். அந்தத் தெய்வ உருவங்களை இளஞ்சேரல் இரும்பொறை அங்கிருந்து கொண்டுவந்து தன் நாட்டில் அமைத்துத் திருவிழாச் செய்தான். அந்தப் பகையை ஈடுசெய்வதற்காகவே குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரின் மேல் படை யெடுத்துச் சென்றான் என்று கருதத் தோன்றுகிறது. கிள்ளிவளவன் தன் போர் முயற்சியில் வெற்றியைக் கண்டான். சேர நாட்டின் மேற்குக் கடற்கரையில் இருந்த பேர்போன தொண்டித் துறைமுகப்பட்டினம் இவன் காலத்திலும் கொங்குச் சோழரின் துறை முகமாக இருந்தது. தொண்டிப் பட்டினத்தின் கடற்கரையில் கழிகளும் தென்னை மரங்களும் வயல்களும் மலைகளும் இருந்தன. “கலையிறைஞ்சிய கோட்டாழை அகல்வயல் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் தெண்கழிமிசை தீப்பூவின் தண்தொண்டியோர் அடுபொருந” (புறம். 7: 19-13) (தாழை - தென்னை) இவன் நீதியாகச் செங்கோல் செலுத்தினான். ‘அறந்துஞ்சும் செங்கோலையே’ (புறம். 20:17). தேவர் உலகம் போல இவனுடைய நாடு இருந்தது. ‘புத்தேளுலகத்தற்று’ (புறம். 22 : 35). இவனுடைய ஆட்சியில் மக்களுக்கு அமைதியும் இன்பமும் இருந்தது. குறுங்கோழியூர்கிழார் இவ்வரசனைப் பாடியுள்ளார் (புறம். 17 :20, 22). பொருந்தில் இளங்கீரனார் இவனைப் பாடினார் (புறம். 53) இப் புலவரே இவன்மீது பத்தாம் பத்தைப் பாடியிருக்க வேண்டும் என்பதை முன்னமே கூறினோம். புலத்துறை முற்றிய கூடலூர்கிழாரை இந்த அரசன் ஆதரித்தான். இவரைக் கொண்டு இவன் ஐங்குறுநூறு என்னும் தொகைநூலைத் தொகுப்பித்தான். (“இத்தொகை தொகுத்தார், புலத் துறை முற்றிய கூடலூர்கிழார்; இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையார்” என்று ஐங்குறுநூற்றின் இறுதியில் எழுதப்பட்டிருக்கிறது.) யா.சே.மா.சே. இரும்பொறை எத்தனை யாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் வானநூல் அறிந்தவர். ஒருநாள் இரவு வானத்தில் விண்மீன் ஒன்று சுடர்விட்டு எரிந்து விழுந்ததை அவர் கண்டார். அப்போது அவர் வான நூலைக் கணித்துப் பார்த்து யா.சே.மா.சே. இரும்பொறை ஏழாம் நாள் இறந்து விடுவான் என்று அறிந்தார். வானத்தில் விண்மீன் எறிந்து விழுந்தால் அரசன் இறந்து விடுவான் என்பது வானநூலார் நம்பிக்கை. புலவர் கணித்துக் கூறியபடியே ஏழாம் நாள் இவ்வரசன் இறந்து போனான். அப்போது அப்புலவர் இவன்மீது ‘ஆனந்தப் பையுள்’ பாடினார் (புறம் 229). இச்செய்யுளின் அடிக்குறிப்பு “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது” என்று கூறுகிறது (துஞ்சுதல் -இறந்துபோதல்). யா.சே. மா.சே. இரும்பொறை ஏறாத்தாழ கி. பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். யா.சே. மா.சே. இரும்பொறையின் காலத்தில் சோழநாட்டையர சாண்டவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டிநாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன், சேர நாட்டை யரசாண்டவன் செங்குட்டுவனின் மகனான குட்டு வஞ்சேரல் (கோக்கோதை மார்பன்). இவர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு (கி.பி. 180க்குப் பிறகு) அரசாண்டார்கள். *** அடிக்குறிப்புகள் 1. `1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ என்னும் பெயரினால் ஆங்கிலத்தில் முதன் முதலாகத் தமிழ் நாட்டுச் சரித்திரத்தை எழுதியவர் கனகசபைப் பிள்ளையவர்கள். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் அச்சில் வராமல் ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஆகவே சங்க இலக்கியங்களை ஏட்டுச் சுவடியில் படித்து அந்நூலை எழுதினார். அதில் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனுடைய மகன் என்று பிழையாக எழுதினார். அவர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் அப்படியே எழுதி விட்டார். அவரைப் பின்பற்றி பானர்ஜி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய `ஜூனியர் ஹிஸ்டரி. ஆப் இந்தியா’ என்னும் நூலில் 94 ஆம் பக்கத்தில் அதே தவற்றைச்செய்து விட்டார். கே.ஜி. சேஷையர் அவர்கள் யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறையைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். The last Great cera of the Sangam Period by K.G. Sesha Aiyer, Dr. S.K. Aiyengar Commemoration Volume. P. 217 -221). 2. I.A. XXIX. P, 250 N. 2 P. 49-5). The Colas Vol. I K.A. Nilakanta Sastri (1935). 3. “தண்ணென் பொருறை வெண்மனல் சிதையக் கருங்கைக் கொல்லன் யரஞ்செய் யவ்வாய், நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொறுங், கடிமரந்தடியும் ஓசை தன்னூர், நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப, ஆங்கினி திருந்த வேந்தனொடீங்குநின், சிலைத்தார் முரசங் கறங்க, மலைத்தனையென்பது நாணுத்தக வுடைத்தே. (புறம்: 36: 5-13) இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந்தானைப் பாடியது” என்று கூறுகிறது. 4. “வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு, உருமு எறி மலையின்இருநிலஞ்சேர” (புறம். 379: 19-21) 5. எழு சமங்கடந்த எழுவுறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ, யாங்கன மொழிகோ யானே ஓங்கிய, வரையளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு, இமயஞ் சூட்டிய ஏமவிற்பொறி, மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய, வாடாவஞ்சி நாட்டு நின், பீடுகெழு நோன்றாள் பாடுங்காலே.” (புறம். 39: 11-18) இமயஞ்சூட்டிய ஏமவிற்பொறி - சேர அரசரின் முன்னோன் ஒருவன் இமயமலை யுச்சியில் பாறை பொன்றின்மேல் பொறித்து வைத்த வில்லின் அடையாளம். வானவன் - சேர அரசர்பரைக்குப் பொதுப் பெயர். வாடாவஞ்சி - வஞ்சி மாநகரமாகிய கருவூர். 6. “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும், வளங்கெழு முசிறியார்ப் பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய, நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்” (அகம். 149: 7-13). 7. “கொய்சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன், முதுநீர் முன்னுறை முசிறி முற்றிக், களிறுபட வெருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண்ணுறுநர்”. (அகம். 57: 14-17). 8. P. 83 - 84 The Secret Chamber V.T. Indo Chudan 1969. 10 கணைக்கால் இரும்பொறை யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறைக்குப் பிறகு கொங்குநாட்டை யரசாண்டவன் கணைக்கால் இரும்பொறை. இவன், முன்னவனுக்கு எந்த முறையில் உறவினன் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றிய முழுவரலாறுந் தெரியவில்லை. கொங்குச் சேரரின் துறைமுகமாகிய தொண்டிப் பட்டினத்தின் கோட்டைக் கதவில் கணைக் காலிரும்பொறை, தனக்கு அடங்காத மூவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தான் என்று அப்பட்டினத்திலிருந்த கணைக் காலிரும் பொறையின் புலவர் பொய்கையார் கூறுகிறார்.1 இவன் காலத்தில் சோழ நாட்டை அரசாண்டவன் செங்கணான் என்பவன். செங்கட்சோழன் என்றும் இவனைக் கூறுவர். செங்கட் சோழன் பாண்டியனையும் கொங்குச் சேரரையும் வென்று அரசாண்டான். சோழ நாட்டுப் போர் (திருப்போர்ப் புரம்) என்னும் ஊரில் செங்கணானுக்கும் கணைக்காலிரும் பொறைக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் கணைக்காலிரும்பொறை தோல்வியடைந்ததுமல்லாமல் சோழனால் சிறைப்பிடிக்கப்பட்டுக் குடவாயில் (கும்பகோணம்) சிறையில் வைக்கப் பட்டான். அப்போது கணைக்காலிரும்பொறையின் புலவராகிய பொய்கையார் இவனை விடுவிப்பதற்காகச் செங்கட்சோழன்மேல் களவழி நாற்பது என்னும் நூலைப் பாடினார். குடவாயிற் சிறைச்சாலையிலிருந்த கணைக்காலிரும் பொறை நீர் வேட்கை கொண்டு ‘தண்ணீர் தா’ என்று கேட்டபோது சிறைச் சாலையி லிருந்தவர் உடனே தண்ணீர் தராமல் காலங்கழித்துக் கொடுத்தனர். கணைக் காலிரும்பொறை அந்நீரை யுண்ணாமல் ஒரு செய்யுளைப் பாடித் துஞ்சினான் (துஞ்சினான் - உறங்கினான்). அந்தச் செய்யுள் புறநானூற்றில் 74ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அச்செய்யுள் இது: “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார். தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத் தானே.” இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானொடு திருப்போர்ப் புரத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடாவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.” (திருப்போர்ப்புரம் - போர் என்னும் ஊருக்கு அருகில். பொருது - போர் செய்து. பற்றுக்கோட்பட்டு - பிடிக்கப்பட்டு. பெயர்த்துப் பெற்று - காலந்தாழ்ந்துப் பெற்று. துஞ்சிய - இறந்த, தூங்கின.) பிற்காலத்து நூலாகிய கலிங்கத்துப் பரணி இதைக் கூறுகிறது. பொய்கையார் களவழி பாடின பிறகு அதைக் கேட்டுச் சோழன் கணைக் காலிரும்பொறையை விடுதலை செய்தான் என்று அந்நூல் கூறுகிறது.2 களவழி நாற்பது செங்கட் சோழனைச் செங்கண்மால் (செய்யுள் 4, 5, 11) என்றும் செங்கட்சினமால் (செய்யுள் 15, 21, 29, 30, 40) என்றும் செம்பியன் (சோழன் - செய்யுள் 6, 23, 33,38) என்றும் சேய் (செய்யுள் 13, 18) என்றும் பைம்பூட்சேய் (செய்யுள் 34) என்றும் கூறுகிறது. தோற்றுப் போன கணைக்காலிரும் பொறையின் பெயரைக் கூறவில்லை. ‘கொங்கரை அட்டகளத்து’ என்றும் (செய்யுள் 14) ‘புனநாடன் வஞ்சிக்கோ’ என்றும் (செய்யுள் 39) கூறுகிறது. கணைக்காலிரும்பொறைக்கும் செங்கட் சோழனுக்கும் இரண்டு இடங்களில் போர்கள் நடந்தன. கழுமலம் என்னும் ஊரிலும் பிறகு போர் என்னும் ஊரிலும் நடந்தன. கொங்கு நாட்டுக் கழுமலத்தில் செங்கணான் போரை வென்றான். இதைக் ‘காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்’ (செய். 36) ‘புனல் நாடன் வஞ்சிக்கோ அட்டகளத்து’ (செய். 39) என்பதனால் அறிகிறோம். கழுமலப்போரில் தோற்ற கணைக்காலிரும் பொறை பிறகு சோழநாட்டில் போர் என்னும் இடத்தில்3 சென்று செங்கணானுடன் போர்செய்தான். அந்தப் போரில் அவன் சிறைப் பட்டான். சிறையிலிருந்தபோது பொய்கையார் களவழி பாடினார். இச்செய்தியைக் களவழி நாற்பதின் பழைய உரைக்காரர் கூறுவதி லிருந்து அறிகிறோம். அவர் கூறுவது: “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையும் திருப்போர்புரத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று.” புறம் 74ஆம் பாட்டின் அடிக்குறிப்பு துஞ்சினான் என்று கூறுகிறது. துஞ்சினான் என்பதற்கு இறந்து போனான், தூங்கினான் என்று இரண்டு பொருள்கள் உண்டு. களவழி நாற்பதின் இறுதி வாசகம் ‘பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார்’ என்று கூறுகிறது. அதாவது களவழி நாற்பது பாடி, சிறையிலிருந்த கணைக்காலிரும்பொறையை விடுவித்தார் என்று கூறுகிறது. எனவே, கணைக்கா லிரும்பொறை இறக்கவில்லை என்பதும் அவன் விடுதலை யடைந்தான் என்பதும் தெரிகின்றன. இதனால், கணைக்கால் இரும்பொறை செங்கணானுக்குக் கீழடங்கி இருந்தான் என்பதும் செங்கணான் கொங்கு நாட்டின் அரசனானான் என்பதும் தெரிகின்றன. சோழன் செங்கணானும் கணைக்கால் இரும்பொறையும் ஏறத்தாழக் கி.பி. 200க்கும் 250க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்தவராகலாம். சங்க காலத்துக் கொங்கு நாட்டு வரலாறு கணைக்கால் இரும் பொறையோடு முடிவடைகிறது. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியினரான பொறையர் கொங்கு நாட்டை ஏறத்தாழ கி. பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் ஏறத்தாழ இருநூறு ஆண்டு அரசாண்டார்கள். அவர்களில் கடைசி அரசன் கணைக்கால் இரும் பொறை. கணைக்கால் இரும்பொறை, சோழன். செங்கணானுக்குக் கீழடங்கிக் கொங்கு நாட்டை நெடுங்காலம் அரசாளவில்லை. ஏறத்தாழக் கி.பி. 250இல் தமிழகத்தைக் களப்பிரர் அல்லது களப்பாளர் என்னும் பெயருள்ள அயல்நாட்டு அரசர் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டார்கள். களப்பிரர், சேர சோழ பாண்டிய நாடுகளைக் கைப் பற்றி ஏறத்தாழ முந்நூறு ஆண்டு அரசாண்டார்கள். அப்போது கொங்கு நாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும். களப்பிரர் ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகத் தெரிகிறது. *** அடிக்குறிப்புகள் 1. “மூவன், முழுவலி முள்எயிறு அழுத்திய கதவில், கானலந் தொண்டிப் பெருநன் வென்வேல், பெறலருந் தானைப் பொறையன்.” (நற். - 18: 2-5) 2. `களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்’தாழிசை - 18. (கலிங்கத்துப் பரணி, இராசபாரம்பரியம்) உதியன் - சேரன், இங்குக் கணைக்கா லிரும்பொறையைக் குறிக்கிறது. கால்வழித்தளை - காலில் இடப்பட்ட விலங்கு. 3. போர் அல்லது போஓர் என்பது சோழநாட்டுக் காவிரிக் கரைமேல் இருந்த ஓர் C. அவ்வூரிலிருந்த பழையன் என்பவன் சோழரின் சேனைத் தலைவன்.(அகம். 186: 15-16; 326: 9-12, நற்.10: 7-8) போர் என்னும் ஊரில் வேறு சில பேர்களும் நடந்திருக்கின்றன. (புறம். 62, 63, 368. இவற்றின் அடிக்குறிப்பு காண்க.) 11. செங்கட் சோழன், கணைக்கால் இரும்பொறை காலம் செங்கட் சோழனும் கணைக்கால் இரும்பொறையும், கடைச்சங்க காலத்தின் இறுதியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்று கூறினோம். இவர்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்று சில சரித்திரக் காரர்கள் தவறாகக் கூறியுள்ளதை இங்கு விளக்கிக் காட்ட விரும்புகிறோம். சோழன் செங்கணான் கி. பி. 6ஆம் நூற்றாண்டில், பல்லவ அரசர் காலத்தில் இருந்தான் என்று இவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்குச் சான்று கிடையாது. இவர்கள் காட்டும் ஒரே சான்றும் தவறானது. அதாவது, சங்க காலப் புலவரான பொய்கையாரும் பக்தி இயக்க காலத்தில் இருந்த பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று இவர்கள் தவறாகக் கருதுவதுதான். தமிழர் வரலாறு என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பி.தி. சீனிவாச அய்யங்கார் முதன்முதலாக இந்தத் தவறு செய்தார். களவழி பாடிய பொய்கையாரும் விஷ்ணு பக்தரும் பல்லவர் காலத்திலிருந்தவ ருமான பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று தவறாகக் கருதிக் கொண்டு, பொய்கையாரால் களவழியில் பாடப்பட்ட சோழன் செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவன் என்று எழுதினார்.1 இதே காரணத்தைக் கூறி மு. இராகவையங்காரும், களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் முதல் திருவந்தாதி பாடிய பொய்கை யாழ்வாரும் ஒருவரே என்று எழுதினார். டி.வி., மகாலிங்கமும் தாம் ஆங்கிலத்தில் எழுதிய தென்னிந்தியப் பழைய வரலாற்றில் காஞ்சீபுரம் என்னும் நூலில், இவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு, சோழன் செங்கணான் கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறியதோடு அல்லாமல் அவன் சிம்மவிஷ்ணு பல்லவன் காலத்தில் இருந்தவன் என்றும் எழுதிவிட்டார்.2 இவர்கள் இப்படி எழுதியிருப்பது ‘கங்காதரா மாண்டாயோ’ என்னும் கதை போலிருக்கிறதே தவிர உண்மையான சான்றும் சரியான ஆதாரமும் இல்லாத கருத்தாகும். பொய்கையார் என்னும் பெயர் பொய்கையூரில் பிறந்தவர் என்னும் காரணப் பெயர். பொய்கையூர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்திருக் கலாம். குளப்பாக்கம், குளத்தூர், ஆற்றூர், ஆற்றுப்பாக்கம் என்னும் பெயர்கள் போல. வெவ்வேறு ஊரிலிருந்த பொய்கையார்களை ஒரே பொய்கையார் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? களவழி பாடிய பொய்கையாரும், முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாரும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாடுகளில் இருந்தவர்கள். களவழி நாற்பது பாடிய பொய்கையார் மேற்குக் கடற்கரையில் இருந்த தொண்டிப் பட்டினத்தில் சேர நாட்டில் கடைச் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவர். முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த தொண்டை நாட்டில் பிறந்து பக்தி இயக்கக் காலத்தில் (பல்லவ ஆட்சிக் காலத்தில்) இருந்தவர். (பக்தி இயக்கக் காலம் என்பது கி. பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம்.) பக்தி இயக்கக் காலத்தில், ஏறத்தாழ கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கை யாழ்வார் மானிடரைப் பாடாமல், விஷ்ணுவையே பாடித் தொழுதுகொண்டிருந்தவர். அவர் எந்த அரசனையும் வணங்கித் துதித்துப் பாடியவர் அல்லர். ‘வாய் அவனை அல்லது வாழ்த்தாது’ (11) என்றும் ‘மால் அடியை அல்லால் மற்றும் எண்ணத்தான் ஆமோ’ (31) என்றும் ‘நாளும் கோள் நாகணை யான் குரைகழலே கூறுவதே’ (63) என்றும் ‘நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்’(83) என்றும் ‘மாயவனை அல்லாமல் இறையேனும் ஏத்தாது என் நா’ (94) என்றும் உறுதி கொண்டிருந்த பொய்கையாழ்வார் மனிதரைப் பாடாத திருமால் பக்தர். ஆனால், கடைச்சங்க காலத்தில் இருந்த பொய்கையாரோ, மனித னாகிய செங்கட்சோழன் மேல் களவழி நாற்பது பாடிய புலவர்.மேலும் அவர், சேரமான் கோக் கோதை மார்பனையும், பொறை யனையும் புகழ்ந்து பாடியுள்ளார். ‘தெறலழுந்தானைப் பொறையன் பாசறை’யைப் பாடி யுள்ளார் (நற். 18). மேலும், சேரமான் கோக் கோதை மார்பனை அவர், “கள் நாறும்மே கானலத் தொண்டி அஃதெம் ஊரே, அவன் எம் இறைவன்” (புறம் 48) (அவன் - கோதை மார்பன்) என்றும், “நாடன் என்கோ ஊரன் என்கோ பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ யாங்கன மொழிகோ ஓங்குவாள் கோதையை” (புறம் 49) என்றும் பாடியுள்ளார். செங்கண் சோழனையும், கொங்கு நாட்டுப் பொறையனையும் சேரமான் கோக்கோதை மார்பனையும் பாடிய இந்தப் பொய்கையார், திருமாலையோ அல்லது வேறு கடவுளையோ பாடியதாக ஒரு செய்யுளேனும் கிடைக்கவில்லை. எனவே, மனிதரை (அரசரைப்) பாடிக்கொண்டிருந்த பொய்கை யாரும், மானிடரைப் பாடாமல் திருமாலையே பாடிக்கொண்டிருந்த பொய்கையாழ்வாரும் ஒருவராவரோ? வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு பொய்கையார்கள் எப்படி ஒரே பொய்கையார் ஆவர்? பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா? எனவே, பொய்கையார் வேறு பொய்கையாழ்வார் வேறு என்பது நன்றாகத் தெரிகிறது. இனி டிவி. மகாலிங்கம் கூறுவதை ஆராய்வோம். தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ அரசர் மரபைச் சேர்ந்த சிம்மவர்மனுடைய மகனான சிம்மவிஷ்ணுவின் காலத்தில், புறநானூற்றிலும் களவழி நாற்பதிலுங் கூறப்பட்ட செங்கணான் இருந்தான் என்று இவர் எழுதுகிறார்.3 சிம்மவிஷ்ணு சோழநாட்டின் மேல் போருக்குச் சென்ற போது அவனை எதிர்த்தவன் செங்கட் சோழன் என்று கூறுகிறார். செங்கட் சோழனும் சிம்விஷ்ணுவும் 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்றும், செங்கணான் சேரனை (கணைக்காலிரும்பொறையை) வென்ற பிறகு அவனுடைய கடைசிக் காலத்தில் சிம்மவிஷ்ணு செங்கணானை வென்றான் என்றும் எழுதுகிறார்.4 இவர் கூறுவது இவருடைய ஊகமும் கற்பனையும் ஆகும். பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டை வென்றான் என்றும் பல்லவரின் பள்ளன்கோவில் செப்பேடு கூறுகிறது (சுலோகம் 5). சிம்மவிஷ்ணு இன்னொரு சிம்மவிஷ்ணு என்பவனை வென்றான் என்று அதே சாசனம் (சுலோகம் 4) கூறுகிறது. இதிலிருந்து சோழ நாட்டையரசாண்ட சிம்மவிஷ்ணுவைத் தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ சிம்மவிஷ்ணு வென்று சோழநாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆனால், மகாலிங்கம், பல்லவ சிம்மவிஷ்ணு, சோழன் செங்கணானுடன் போர் செய்து சோழ நாட்டை வென்றான் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? சாசனம் கூறுகிற பெயரை மாற்றி இவர் தம் மனம் போனபடி கூறுவது ஏற்கத்தக்கதன்று. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டையரசாண்டவர் களப்பிர அரசர்கள். களப்பிரருக்குக் கீழ்ச் சோழ அரசர் அக்காலத்தில் சிற்றரச ராக இருந்தார்கள். ஆகவே, சுதந்தரமும் ஆற்றலும் படைத் திருந்த செங்கட் சோழன், களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கிச் சிற்றரசனாக வாழ்ந்திருந்திருக்க முடியாது. அவன், களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு சோழர்கள் சுதந்தரர்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தான் வாழ்ந்திருக்க வேண்டும். கடைச்சங்க காலத்துக்குப் பிறகு (கி.பி. 250க்குப் பிறகு) சோழ நாடு களப்பிரர் ஆட்சிக்குக் கீழடங்கியிருந்தது. ஏறத்தாழ கி. பி. 575இல் பல்லவ சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து வென்று கைப் பற்றினான். பிறகு, சோழ நாடு கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சிக்குப்பட்டிருந்தது. கி.பி 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சோழர்கள் மறுபடியும் சுதந்திரம் பெற்றுப் பேரரசர்களாக அரசாண்டார்கள். ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையில் சோழர்கள் களப்பிரருக்கும் பின்னர் பல்லவருக்கும் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் சோழன் செங்கணான் இருந்திருக்கமுடியாது. செங்கணான், களப்பிரர் சோழ நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னரே கி.பி. 250க்கு முன்பு இருந்தவனாதல் வேண்டும். பள்ளன்கோவில் செப்பேடு கூறுகிறபடி, பல்லவ சிம்மவிஷ்ணு வென்ற சோழ நாட்டுச் சிம்ம விஷ்ணு களப்பிர அரசன் என்பது சரித்திர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ள உண்மையாகும். சரித்திரக் காரர்களின் இந்த முடிவுடன் மகாலிங்கம் புதிதாகக் கற்பனையாகவும் ஊகமாகவும் கூறுகிற செய்தி முரண்படுகிறது. பொய்கையாரைப் பொய்கையாழ்வாருடன் இணைத்துக் குழப்புவதும், பிறகு பொய்கையார் களவழியில் பாடிய செங்கணானைக் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று இணைத்துக் குழப்புவதும். பிறகு அந்தச் செங்கணானைப் பல்லவ சிம்மவிஷ்ணுவின் சம காலத்தவன் என்று ஊகிப்பதும், பிறகு செங்கணானைச் சோழ நாட்டில் அரசாண்ட சிம்மவிஷ்ணுவுடன் (களப்பிர அரசனுடன்) இணைத்துக் குழப்புவதும் உண்மையான சரித்திரத்துக்கு உகந்ததன்று. முதற் கோணல் முற்றுங்கோணல் என்னும் பழமொழி போல, பொய்கையாழ்வாரில் தொடங்கிய தவறு பல தவறுகளில் வந்து முடிந்தது. எனவே, நாம் தொடக்கத்தில் கூறியதுபோல, சோழன் செங்கணானும் அவன் வென்ற கணைக்கால் இரும்பொறையும் அவர்கள் காலத்தி லிருந்த பொய்கையாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தார்கள் என்பதே சரியாகும். *** அடிக்குறிப்புகள் 1. (P. 608 - 610 History of the Tamils, P.T. Srinivasa Iyengar. 1929). 2. (P. 49, 38-59. Kanchipuram in Early South Indian History, T.V. Mahalingam. 1969). 3. (P. 49. K.E.S.I.H.) 4. (P. 58-59 K.E.S.I.H). 12. வேறு கொங்குச் சேரர் சங்க இலக்கியங்கள், அரசர் வரலாறுகளைத் தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கூறவில்லை. அவ்வாறு கூறுவது அச்செய்யுள் களின் நோக்கமும் அன்று. ஆகையால், அவை கூறுகிற அரசர் வரலாறுகளைச் சான்றுகளுடன் சீர் தூக்கிப் பார்த்து ஆராய்ந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் கொங்கு நாட்டுச் சேர அரசர் பரம்பரையை ஆராய்ந்தோம். சங்க இலக்கியங்களில் காணப்படாத கொங்குச் சேரர் சிலர் அக்காலத்துப் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் காணப்படு கின்றனர். கொங்கு நாட்டுப் புகழியூரில் ஆறுநாட்டார் மலைக் குகையில் எழுதப்பட்டுள்ள இரண்டு பிராமி எழுத்துச் சாசனங்கள் மூன்று கொங்குச் சேர அரசர்களின் பெயரைக் கூறுகின்றன. இந்தப் பெயர்கள் புதியவை. இரண்டு சாசனங்களும் ஒரே விஷயத்தைக் கூறுகின்றன. இளவரசனாக இருந்த இளங்கடுங்கோ என்பவன், அமணன் ஆற்றூர்ச் செங்காயபன் என்னும் முனிவருக்கு ஆறு நாட்டார் மலைக் குகையில் கற்படுக்கைகளை யமைத்துத் தானஞ் செய்ததை இவை கூறுகின்றன தானங் கொடுத்த இளங்கடுங்கோவின் தந்தை பெருங்கடுங்கோவையும் அத்தந்தையின் தந்தையாகிய கோ ஆதன் சேரலிரும்பொறையையும் இந்தச் சாசனங்கள் கூறுகின்றன. இச்சாசனங்களின் வாசகங்கள் இவை: 1. “அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆக அறத்த கல்.” 2. “அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் கடுங்கோ இளங்கடுங்கோ ஆக அறத்த கல்.” இவ்விரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் கூறுகின்றன. இவற்றில், பாட்டனான கோ ஆதன் சேரலிரும் பொறையும் தந்தையான பெருங்கடுங்கோனும் அவனுடைய மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். இளங்கடுங்கோ, இளவரசனாக இருந்த போது இந்தத் தானத்தை இம்முனிவருக்குச் செய்தான். இந்த மூன்று அரசர்களைப் பற்றிப் புகழியூர்க் கல்வெட்டில் கூறியுள்ளோம். ஆதனவினி கொங்குச் சேர அரசர் பரம்பரையைச் சேர்ந்தவன் ஆதனவினி. இவன் கொங்கு நாட்டின் ஒரு சிறுபகுதியை யரசாண்டிருக்கவேண்டு மென்று தோன்றுகிறது. ஐங்குறுநூறு முதலாவது மருதத்திணையில், வேட்கைப் பத்து என்றும் முதற்பத்தில் இவன் பெயர் கூறப்படுகிறது. “வாழி யாதன் வாழி யவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க.” “வாழி யாதன் வாழி யவினி விளைக வயலே வருக விரவலர்.” “வாழி யாதன் வாழி யவினி பால்பல வூறுக பகடுபல சிறக்க.” “வாழி யாதன் வாழிய வினி பகைவர் புல்லார்க பார்ப்பா ரோதுக.” “வாழி யாதன் வாழி யவினி பசியில் லாகுக பிணிசேண் நீங்குக.” “வாழி யாதன் வாழி யவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக.” “வாழி யாதன் வாழி அவனி அறம்நனி சிறக்க அல்லது கெடுக.” “வாழி யாதன் வாழி யவினி யரசுமுறை செய்க களவில் லாகுக.” “வாழி யாதன் வாழி யவினி நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக.” “வாழி யாதன் வாழி யவினி மாரி வாய்க்க வளநனி சிறக்க.” இவ்வாறு இவன் பத்துச் செய்யுட்களிலும் வாழ்த்தப் படுகிறான். இதன் பழைய உரை, “ ஆதனவினி யென்பான் சேரமான்களிற் பாட்டுடைத் தலை மகன்” என்று கூறுகிறது. இவ்வரசனைப் பற்றி வேறொன்றுந் தெரியவில்லை. ஐங்குறுநூறு யா.க.சே.மா.சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாகையால், அந்நூலில் கூறப்படுகிற ஆதன் அவினி, இவ்வரசன் காலத்திலோ அல்லது இவனுக்கு முன்போ இருந்தவனாதல் வேண்டும். கொங்குச் சேரர் பரம்பரை 1. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை. அந்துவன்பொறையன் = பொறையன் பெருந்தேவி (7ஆம் பத்து, பதிகம்) (ஒரு தந்தையின் மகள்) 2. செல்வக்கடுங்கோ வாழியாதன் = வேளாவிக் கோமான் பெருந்தேவி. 7ஆம் பத்தின் தலைவன். 25 ஆண்டு ஆண்டான். சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவன் இவனே. இவனுக்கு இரண்டு மக்கள் ‘இளந் துணைப்புதல்வர்’ இருந்தார்கள். (7ஆம் பத்து 10:21) 3. பெருஞ்சேரல் இரும் குட்டுவன் இரும்பொறை = பொறை (தகடூர் வேண்மாள் அந்துவஞ் எறிந்தவன்) 17ஆண்டு செள்ளை, மையூர்கிழான் அரசாண்டான். 8ஆம் மகள். (9ஆம் பத்து, பதிகம்) பத்தின் தலைவன். 5. யானைக்கட்சேய் 4. இளஞ்சேரல் இரும் மாந்தரஞ்சேரல் பொறை 16 ஆண்டு இரும்பொறை (பெருஞ்சேரல் அரசாண்டான். இரும்பொறையின் (9ஆம் பத்துத் தலைவன்). மகன் எனத் தோன்றுகிறான். 10ஆம் பத்தின் தலைவன் இவனாக இருக்கலாம்). 6. சேரமான் கணைக்கால் இரும்பொறை. (இவன் யானைக்கட்சேயின் மகனா, இளஞ்சேரல் இரும்பொறையின் மகனா என்பது தெரியவில்லை). இரும்பொறை அரசர்களின் கால நிர்ணயம் இனி, கொங்கு நாட்டைக் கடைச்சங்க காலத்தில் அரசாண்ட சேர மன்னர்களின் காலத்தை நிர்ணயிக்கவேண்டியது கடமையாகும். (காலத்தைக் கூறாத சரித்திரம் சரித்திரம் ஆகாது.) இந்த அரசர்களில் மூன்றுபேர் (7, 8, 9ஆம் பத்து) ஒவ்வொருவரும் இத்தனையாண்டு அர சாண்டனர் என்பதைப் பதிற்றுப்பத்துப் பதிகக் குறிப்புகள் கூறுகின்றன. 7ஆம் பத்தின் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டும், இவன் மகன் 8ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17ஆண்டும், இவனுடைய தம்பி மகன் 9ஆம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டும் அரசாண்டனர் என்று அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னும்பின்னும் அரசாண்டவர் ஒவ்வொருவரும் எத்தனை யாண்டு அரசாண்டனர் என்பது தெரியவில்லை. கிடைத்துள்ள குறிப்பு களைக் கொண்டு இவர்களின் காலத்தை ஒருவாறு நிர்ணயிக்கலாம். இந்தக்கால நிர்ணயத்திற்கு அடிப்படையான கருவியாக இருப்பது செங்குட்டுவன் - கஜபாகு சமகாலம் ஆகும். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை யரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன். முதலாம் கஜபாகு இலங்கையை கி.பி. 171 முதல் 191 வரையில் அரசாண்டான் என்று மகா வம்சம், தீபவம்சம் என்னும் நூல்களினால் அறிகிறோம். சரித்திரப் பேராசிரியர்கள் எல்லோரும் இந்தக் கால நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (கஜபாகு, செங்குட்டுவனைவிட வயதில் இளையவன்). செங்குட்டுவன் பத்தினிக் கோட்ட விழாச் செய்தபோது அவனுடைய ஆட்சியாண்டு ஐம்பது. அவன் ஆட்சிக்கு வந்தபோது (இளவரசு ஏற்றபோது) அவன் இருபது வயதுடையவனாக இருந்தான் என்று கொள்வோமானால், அவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் அவனுக்கு வயது எழுபது இருக்கும். செங்குட்டுவன் தன்னுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் (அதாவது தன்னுடைய 70ஆம் வயதில்) கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழாக் கொண்டாடினான். “வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை.” (சிலம்பு, நடுகல்.129 - 132) கஜபாகு வேந்தன் தன்னுடைய எத்தனையாவது ஆட்சியாண்டில் பத்தினிக் கோட்டத்துக்கு வந்தான் என்பது தெரியவில்லை. அவனுடைய ஆட்சிக்காலத்தின் இடைப்பகுதியில் உத்தேசமாகக் கி.பி. 180இல் கஜபாகு பத்தினிக் கோட்டத்துக்கு வந்தான் என்றுகொள்ளலாம். அப்போது செங்குட்டுவனின் ஆட்சியாண்டு ஐம்பது. அவன் 55 ஆண்டு ஆட்சி செய்தான் என்று பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, அவன் உத்தேசம் கி.பி. 185ஆம் ஆண்டில் கால மானான் என்று கருதலாம். அதாவது, சேரன் செங்குட்டுவன் உத்தேசமாக கி.பி. 130 முதல் 185 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்தை உத்தேசமாக நிர்ணயித்துக் கொண்டபடியால், இதிலிருந்து கொங்கு நாட்டுச் சேரஅரசர் அரசாண்ட காலத்தை (ஏறத்தாழ) எளிதில் நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதற்குச் சிலப்பதிகாரக் காவியம் நமக்கு மீண்டும் உதவி செய்கிறது. 9ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டைப் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று பதிகக் குறிப்புக் கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனின் தாயாதிச் சகோதரனுடைய மகன் என்பதை அறிவோம். செங்குட்டுவன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் இளஞ்சேர லிரும் பொறை கொங்கு நாட்டை யரசாண்டான். ஆனால், செங்குட்டுவ னுடைய ஆட்சிக் காலத்திலேயே, அவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்ட விழாச் செய்வதற்கு முன்னமேயே, இவன் இறந்து போனான். அதாவது, செங்குட்டுவனுடைய 50ஆவது ஆட்சி யாண்டுக்கு முன்பே, (செங்குட்டுவனுடைய 70ஆவது வயதுக்கு முன்னமே, உத்தேசம் கி.பி. 180க்கு முன்னமே) இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான். இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்” (சிலம்பு, நடுகல் 147-150) சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களை வஞ்சியில் (கொங்கு நாட்டுக் கருவூர் வஞ்சியில்) அமைத்தவன் இளஞ்சேரல் இரும்பொறை யாவன். இதை இவனைப் பாடிய 9ஆம் பத்துப்பதிகமுங் கூறுகிறது. “அறந்திறல் மரபில் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல் இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை” (9ஆம் பத்துப் பதிகம்) இதனால் கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரலிரும் பொறை, சேர நாட்டையர சாண்ட செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்திலேயே (பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்பே) இறந்து போனான் என்று திட்டமாகத் தெரிகிறது. கி.பி. 175க்கு முன்னமே இறந்துபோனான் என்று தெரிவதால் (உத்தேசம்) கி.பி. 170இல் இவன் இறந்து போனான் என்று கருதலாம். இவன் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று தெரிகிற படியால் (170 - 16 = 154) கி.பி. 154இல் இவன் சிம்மாசனம் ஏறினான் என்பது தெரிகிறது. எனவே, இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசமாக கி.பி. 154 முதல் 170 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம். சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதையறியாமல், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும் கே.ஜி. சேஷையரும் அவன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இருந்தான் என்று எழுதியுள்ளனர். இளஞ்சேரல் இரும்பொறை ஏறத்தாழ கி.பி. 190இல் இருந்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது முழுவதும் தவறு. செங்குட்டுவனுக்கு முன்னே இறந்து போனவன் அவனுக்குப் பின்னே எப்படி வாழ்ந்திருக்க முடியும்? இளஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்டவன் அவனுடைய பெரிய தந்தையாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்று அறிந்தோம். அவன் பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று 8ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே, அவன் உத்தேசமாகக் கி.பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். இவனுடைய ஆட்சிக்காலமும் சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே அடங்கிவிட்டது. பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாகிய செல்வக் கடுங்கோவாழியாதன் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான் என்று 7ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, இவன் உத்தேசமாக கி.பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். செல்வக் கடுங்கோவின் தந்தையாகிய அந்துவன் பொறையன் எத்தனையாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இருபது ஆண்டு அரசாண்டான் என்று கொள்வோம். அப்படியானல் அவன் உத்தேச மாகக் கி.பி. 92 முதல் 112 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்டவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று அறிந்தோம். அவன் எத்தனைக் காலம் அரசாண்டான் என்பது தெரிய வில்லை. இருபது ஆண்டு ஆட்சி செய்தான் என்று கொண்டால் அவன் உத்தேசமாகக் கி.பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலுக்குப் பிறகு அரசாண்ட கணைக்கால் இரும் பொறையும் இருபது ஆண்டு அரசாண்டான் என்று கருதலாம். இவன் உத்தேசம் கி.பி. 190 முதல் 210 வரையில் இவன் அரசாண்டான் எனக் கொள்ளலாம். இவனுக்குப் பிறகு, கொங்கு நாட்டு அரசாட்சி சோழர் கைக்குச் சென்றது. சோழன் செங்கணான் கொங்கு நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான். ஏறக்குறைய 120 ஆண்டுக் காலம் கொங்கு நாடு, சேர பரம்பரையில் இளைய பரம்பரையைச் சேர்ந்த பொறையர் ஆட்சியில் இருந்தது. மேலே ஆராய்ந்தப்படி கொங்கு நாட்டுச் சேர அரசரின் காலம் (உத்தேசமாக) இவ்வாறு அமைகிறது: அந்துவன் பொறையன் (உத்தேசமாக) கி.பி. 92 முதல் 112 வரையில் செல்வக்கடுங்கோ ” ” 112 முதல் 137 ” வாழியாதன் பெருஞ்சேரலிரும் பொறை ” ” 137 முதல் 154 ” இளஞ்சேரலிரும் பொறை ” ” 154 முதல் 170 ” யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை ” ” 170 முதல் 190 ” கணைக்காலிரும்பொறை ” ” 190 முதல் 210 ” 13. இரும்பொறை அரசரின் ஆட்சி முறை தமிழ்நாட்டில் மட்டுமன்று, பாரத நாடு முழுவதிலும் அந்தப் பழங் காலத்தில் அரசர்கள் ஆட்சி செய்வதற்குத் துணையாக ஐம்பெருங் குழுவினர் இருந்தார்கள். ஐம்பெருங்குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் என்பவர்கள். ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர் சிலர் இருந்தார்கள், புரோகிதர் என்பவர் மதச் சார்பான காரியங்களைக் கவனித்தனர். அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்று நான்கு வகையான சேனைகள் அரசர்களுக்கு இருந்தன. கொங்கு நாட்டு அரசருக்குச் சிறப்பாக யானைப்படை இருந்தது. ஒவ்வொரு படைக்கும் ஒவ்வொரு தலைவனும், அவர்களுக்குத் தலைவனாக சேனாதிபதி யும் இருந்தனர். தூதுவர்கள் அரசன் கட்டளைப்படி அரச காரியங்களை வேற்றரசரிடஞ் சென்று காரியங்களை முடித்தார்கள். ஒற்றர்கள் மாறு வேடம் பூண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் அரசியல் இரகசியங்களைத் தெரிந்துவந்து அரசனுக்குக் கூறினார்கள். தமிழ் நாட்டு அரசர்களிடத்திலும் இவ்வாறு ஐம்பெருங்குழுக்கள் இருந்து அரசாட்சி செய்தன. கொங்கு நாட்டிலும் ஐம்பெருங் குழுவைக் கொண்டு அரசாட்சி நடந்தது. ஆனால், கொங்கு நாட்டு ஐம்பெருங் குழுவைப் பற்றிஅதிகமாகத் தெரிய வில்லை. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சர் அரிசில் கிழார் என்னும் புலவர். சிறந்த புலவராக இருந்த இவர் இவ்வரசன்மேல் 8ஆம் பத்துப் பாடினார். இச்செய்திகளை 8ஆம் பத்துப் பதிகத்தினாலும் அதன் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம். இப்புலவரின் செய்யுட்கள் சில தகடூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகின்றன. இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சராக இருந்தவர் மையூர் கிழான் என்பவர். இவர். இவ்வரசனுடைய தாய்மாமன் ஆவர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய வயது சென்ற அரண்மனைப் புரோகிதனைத் தவஞ்செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.1 இளஞ்சேரலிரும் பொறை தன்னுடைய அமைச்சனான மையூர்கிழானைத் தன்னுடைய புரோகிதனைக் காட்டிலும் அறநெறி யுடையவனாகச் செய்தான்.2 பெருஞ்சேரல் இரும்பொறையின் மறவன் (சேனைத் தலைவன்) பிட்டங்கொற்றன் (புறம். 172:8-10; அகம். 77:15-16, 143:10-12). அரசன் பகையரசர்மேல் போருக்குச் சென்றால், அவன் கீழடங்கிய சிற்றரசர்கள் தங்களுடைய சேனைகளை அழைத்துக் கொண்டு அவனுக்கு உதவியாகச் சென்றனர். குடிமக்களிடமிருந்து இறை(வரி) தண்டுவதற்குச் சிலர் நியமிக்கப் பட்டிருந்தார்கள். கொங்குநாட்டில் வரி வசூல் செய்தவர் கோசர் என்பவர். அவர்கள் கண்டிப்புள்ளவர். அவர்கள் ஊர்ஊராகப் போய்ப் பொது அம்பலத்தில் (ஆலமரம், அரச மரங்களின் கீழே) தங்கிச் சங்குகளை முழங்கியும் பறையடித்தும் தாங்கள் இறை வசூல் செய்ய வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். பிறகு, ஊராரிடத்தில் இறைத் தொகையை வசூல் செய்துகொண்டு போய் அரசனிடங் கொடுத்தார்கள். இந்தச் செய்தியைக் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த ஒளவையார் கூறுகிறார்.3 இரும்பொறையரசர்களின் ஆட்சிமுறை பற்றி அதிகமாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆட்சி சேர சோழ பாண்டியரின் ஆட்சியைப் போலவே இருந்தது என்பதில் ஐயமில்லை. *** அடிக்குறிப்புகள் 1. (முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை உண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென, வேறுபடு நனந்தலைப் பெயரக்,கூறினை பெருமநின் படிமையானே), (8ஆம் பத்து 4: 24-28) 2. *(`மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசுமயக்கி’ (9ஆம் பத்து பதிகம் அடி 11-12) புரோசு - புரோகிதன். 3. (“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறை கொள்பு, தொன் மூதாலத்துக் பொதியிற் றோன்றிய, நாலூர்க் கோசர் நன்மொழிபோல, வாயாகின்றே.” (குறும் - 15: 1-4) 14.கொங்கு நாட்டுச் சமய நிலை ஏனைய தமிழ்நாடுகளில் இருந்ததுபோலவே கொங்கு நாட்டிலும் அக்காலத்தில் சிவன், திருமால், முருகன், கொற்றவை முதலிய தெய்வ வழிபாடுகள் நடந்தன. முருகன் வழிபாடு அக்காலத்தில் சிறப்பாக இருந்தது. குன்றுகளிலும் மலைகளிலும் முருகனுக்குக் கோயில்கள் இருந்தன. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடுமலை அக்காலத்தில் முருகன் கோயிலுக்குப் பேர்பெற்றிருந்தது. திருமால் (மாயோன்) வழி பாடும் இருந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதன் மாயவண்ணனாகிய திருமாலை வழிபட்டான். அவன் திருமால் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங் கொடுத்தான்.1 ஆயர்கள் திருமாலைக் கண்ணன் உருவில் வழிபட்டனர். வெற்றிக் கடவுளாகிய கொற்றவை வீரர்களின் தெய்வம். அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசர், தங்களுடைய குல தெய்வமாக வணங்கினார்கள். கொங்கு நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அயிரை மலையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசரும் கொங்குச் சேரரும் குலதெய்வமாக வழிபட்டார்கள். பூதம் என்னும் தெய்வ வழிபாடும் கொங்கு நாட்டில் அக்காலத்தில் இருந்தது. கொங்கு நாட்டின் தலைநகரமான வஞ்சிக் கருவூரில் இளஞ் சேரல் இரும்பொறை பூதங்களுக்குக் கோயில் கட்டித் திருவிழாச் செய்தான்.2 சிலப்பதிகாரம் நடுகற் காதையிலும் இச்செய்தி கூறப்படுகிறது.3 தமிழ்நாட்டின் வேறு ஊர்களிலும் பூதவழிபாடு அக்காலத்தில் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் நடுவிலே, பட்டினப்பாக்கத்துக்கும் மருவூர்ப்பாக்கத்துக்கும் மத்தியில் இருந்த நாளங்காடித் தோட்டத்தில் பூதசதுக்கம் என்னும் இடத்தில் பூதத்துக்குப் பேர்போன கோயில் இருந்தது. அது நகரத்தின் காவல் தெய்வம் (சிலம்பு. 5: 65- 67). சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் அவ்வூரார் இந்தப் பூதத்தை வணங்கின சிறப்புக் கூறப்படுகிறது (அடி. 59 - 88). பூதம் என்றால் இந்தக் காலத்தில் துர்த் தேவதை என்றும் இழிந்தவர் வழிபடப்படும் சிறுதெய்வம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், சங்க காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் பூதம் என்றால் சிறந்த தெய்வமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் மனிதருக்குப் பூதத்தின் பெயர் சூட்டப்பட்டது. சங்கப் புலவர் சிலர் பூதன் என்னும் பெயர் கொண்டிருந்ததைக் காண்கிறோம். இளம்பூதனார், ஈழத்துப் பூதன் தேவனார், கரும்பிள்ளை பூதனார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதனார், காவன் முல்லைப் பூதனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், குன்றம்பூதனார், கோடை பாடிய பெரும்பூதனார், சேந்தம் பூதனார், மருங்கூர் பாகை சேந்தன் பூதனார், பூதபாண்டியன், வெண்பூதனார் முதலியோர் பூதன் என்னும் பெயர் பெற்றிருந்ததை அறிகிறோம். பிற்காலத்தில் பூதத்தாழ்வார் என்று பெயர் பெற்ற வைணவப் பக்தர் இருந்தார். பூதம் என்னும் தெய்வ வழிபாடு பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்தில் தமிழ்நாடாக இருந்த துளு நாட்டிலும், அக்காலம் முதல் இக்காலம் வரையில் பூத வழிபாடு நடந்து வருகிறது. அங்குள்ள பூதக் கோயில்களுக்குப் பூததான என்று இக்காலத்தில் பெயர் கூறப்படுகிறது (பூததான - பூதஸ்தானம்). துளு நாட்டுப் பூததானக் கோவில்களில் பூதத்தின் உருவம் இல்லை. அத்தெய்வத்தின் ஊர்திகளான புலி, பன்றி, மாடு முதலியவற்றின் உருவங்கள் வைக்கப் பட்டுள்ளன. சில பூத தானங்களில் வாள் இருப்பதும் உண்டு. பூசாரி தெய்வம் ஏறி மருள் கொண்டு ஆடும்போது அந்த வாளைக் கையில் ஏந்தி ஆடுவார். பூதங்களின் மேல் பாடதான என்னும் பாட்டு (துளு மொழியில்) பாடப்படுகிறது. பாடதான என்பதற்குப் பிரார்த்தனைப் பாட்டு என்பது பொருள். துளுவ மொழி திராவிட இனத்து மொழி. அம்மொழியில் சிதைந்து போன பல தமிழ்ச் சொற்கள் இன்றும் வழங்கி வருகின்றன. துளு மொழியில் உள்ள பாடதானத்தைப்பற்றி இந்தியப் பழமை என்னும் ஆங்கில வெளியீட்டில் காண்க.4 துளு நாட்டிலும் இப்போது பூத வணக்கம் மறைந்து வருகிறது. சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே வழிபடப்பட்டு வந்த பூதத் தெய்வ வணக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. பத்தினித் தெய்வமாகிய கண்ணகியார் வீடுபேறடைந்தது கொங்குநாட்டில் என்று கருதப்படுகின்றது. இது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. இது எப்படியானாலும் கொங்கிளங் கோசர், கொங்கு நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டது உண்மை. செங்குட்டுவன் சேர நாட்டு வஞ்சி மாநகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்வதைக் கண்ட கொங்கிளங் கோசர், பத்தினித் தெய்வத்துக்குக் கொங்கு நாட்டில் கோயில் கட்டி வழிபட்டதைச் சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகிறது.5 கொங்கிளங் கோசர் பத்தினித் தெய்வத்துக்குத் திருச்செங்கோடு மலைமேல் கோயில் அமைத்தனர் என்றும், அந்தக் கோயில் பிற்காலத்தில் (தேவாரக் காலத்திலேயே) அர்த்தநாரீசுவரர் கோயில் என்று மாற்றப்பட்டது என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் கொங்கு நாட்டுக் கருவூரில் ஆண்டுதோறும் நடந்த பேர் போன திருவிழா உள்ளிவிழா என்பது. அவ்விழாவில் கொங்கர் மணிகளை அரையில் கட்டிக்கொண்டு கூத்தாடினார்கள்.6 பௌத்தர், ஜைனர் ஆகிய மதத்தாரும் அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்தார்கள். அந்த மதங்களின் துறவிகள் ஊர்களில் தங்காமல் காடுகளிலே மலைக் குகைகளில் இருந்து தவஞ் செய்தார்கள். அவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்பட வில்லை. அக்காலத்துத் துறவிகள் குன்றுகளிலும் மலைகளிலும் தங்கியிருந்து தவஞ் செய்ததைச் சங்கச் செய்யுளிலிருந்து அறிகிறோம். “பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை நீடிய சடையோ டாடா மேனிக் குன்றுறை தவசியர் போலப் பலவுடன் என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும் அருஞ்சுரம்.” (நற்றிணை 141: 3-7) (ஞெமிர்ந்த - பரந்த. கொன்றை - சரக்கொன்றை மரம். புழற்காய் - துளை பொருந்திய. ஆடாமேனி - அசையாத உடம்பு, அசையாமல் தியானத் தில் அமர்ந்திருத்தல்; நீராடாத உடம்பையுடையவர் என்றும் பொருள் கூறலாம். ஜைன முனிவர் நீராடக் கூடாது என்பது அவர்கள் கொள்கை. தவசியர் - தவம் செய்வோர்.) ஆனால், கொங்கு நாட்டு மலைக்குகைகள் சிலவற்றில் காணப் படுகின்ற கற்படுக்கைகளும் அங்கு எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் களும் அக்காலத்தில் அங்கே பௌத்த, சமண சமய முனிவர்கள் தங்கி யிருந்ததைத் தெரிவிக்கின்றன. அந்த முனிவர்கள் கல்லின் மேலே படுப்பது வழக்கமாகையால் ஊரார் மலைக் குகைகளிலுள்ள கரடு முரடான பாறைகளைச் சமப்படுத்திப் பாயுந் தலையணையும்போல வழவழப்பாக அமைத்துக் கொடுத்தார்கள். அவைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்கள் அப்படுக்கைகளின் அருகில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டன. அந்தக் கற்படுக்கைகளும் எழுத்துகளும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகளினாலே அக்காலத் தில் கொங்கு நாட்டிலும் சமண, பௌத்தர்கள் இருந்தனர் என்பது தெரிகின்றது. இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களைப் பற்றி இந்நூலில் வேறு இடத்தில் காண்க. கரூர் தாலுகாவைச் சேர்ந்த புகழூருக்கு 2 கல் தூரத்தில் ஆறு நாட்டார்மலை என்னும் மலையில் கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் உள்ளன. இவ்வெழுத்துக்கள், இக்குன்றில் பௌத்த அல்லது ஜைன மதத் துறவிகள் அக்காலத்தில் தங்கியிருந்து தவஞ் செய்ததைக் குறிக்கின்றன. ஆறுநாட்டார்மலைக்கு ஏழு கல்லுக்கப்பால் உள்ள அர்த்தநாரி பாளையம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரின் பழைய பெயர் தெரிய வில்லை. இவ்வூர் வயல்களின் மத்தியில் கற்பாறைக் குன்றும் அதில் நீர் உள்ள சுனையும் இருக்கின்றன., இங்குள்ள பொடவில் ஐந்து கற் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குக் கடைச்சங்க காலத்தில் சமண அல்லது பௌத்த சமயத் துறவிகள் தங்கியிருந்தனர் என்பதை இக் கற்படுக்கைகள் சான்று கூறுகின்றன. இக்குன்று இக்காலத்தில் பஞ்ச பாண்டவ மலை என்றும் இங்குள்ள சுனை ஐவர் சுனை என்றும் பெயர் பெற்றுள்ளன.7 கோயம்புத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுக்காவில் ஈரோடுக்குப் போகிற சாலையில் உள்ளது அரசலூர் மலை. இம்மலையில் ஓரிடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் சில கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இவை, கடைச்சங்க காலத்தில் இங்கு சமண முனிவர்கள் இருந்ததைத் தெரிவிக்கின்றன.8 திருச்செங்கோடு மலைமேல் ஓரிடத்தில் சமண முனிவர்கள் இருந்து தவஞ் செய்தனர் என்பதற்குச் சான்றாக அங்குக் கற்பாறைகளில் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. கொங்கு நாட்டிலிருந்த கடைச்சங்க காலத்துச் சைவ வைணவக் கோயில்கள் எவை என்பது தெரியவில்லை. திருச்செங்கோட்டுமலை மேல் உள்ள முருகன் (சுப்பிரமணியர்) கோயில் மிகப் பழமையானது. இங்குள்ள அர்த்தநாரீசுவரர் கோயில் என்று இப்போது பெயர் பெற்றுள்ள கோயில் ஆதிகாலத்தில் கண்ணகிக் கோயிலாக இருந்து பிற் காலத்தில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டது என்பது பேராசிரியர் முத் தமிழ்ப் புலவர் விபுலாநந்த அடிகள் போன்ற அறிஞர்கள் கண்ட முடிவு. பொதினி (பழனி) மலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலும் மிகப் பழமையானது. பழனி மலைகள் சங்க காலத்தில் கொங்கு நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்திருந்தன. *** அடிக்குறிப்புகள் 1. “மாயவண்ணனை மனனுறப் பெற்று அவற்கு, ஒத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து” (7ஆம் பத்து, பதிகம்) 2. அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்கமர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ, ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல், இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை (9ஆம் பத்து, பதிகம்) 3. சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து, மதுக்கொள் வேள்வி வேட்டோன். (நடுகற்காதை 147 - 148). 4. Indian Antiquary XXIII. P. 19. 5. அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்று மாறாதாயிற்று. (உரைபெறு கட்டுரை). 6. கொங்கர், மணியரை யத்து மறுகின் ஆடும், உள்ளி விழவு. அகம். 368: 16-18) `மதுரை ஆவணி அவிட்டமே உறையூர் பங்குனி உத்திரமே கருவூர் உள்ளிவிழாவேயென இவை’ (இறையனார் அகப்பொருள் 17ஆவது சூத்திர உரை.) 7. Annual Report on South Indian Epigraphy. 1927 - 28. Part II Para I. 8. சுதேசமித்திரன் 1961, ஜீன் 4தேதி, Annual Report on S.I. Epigraphy, 1961 - 62. P. 10. 15. பயிர்த் தொழில், கைத்தொழில், வாணிபம் மற்றத் தமிழ் நாடுகளில் இருந்தது போலவே கொங்கு நாட்டிலும் பலவகையான தொழில்கள் நடந்து வந்தன. கொங்கு நாடு கடற்கரை இல்லாத உள்நாடு. ஆகையால், கடல்படு பொருள்களாகிய உப்பும் உப்பிட்டு உலர்த்திய மீன்களும் சங்குகளும் நெய்தல் நிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. அவை மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைப் பக்கங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. உமணர் (உப்பு வாணிகர்) உப்பு மூட்டைகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு உள் நாடுகளில் வந்து விற்றனர். கொங்குநாட்டில் வாழ்ந்தவரான ஒளவையாரும் இதைக் கூறுகிறார் (‘உமணர் ஒழுகைத்தோடு’ - குறுந். 388: 4). உப்பு வண்டி மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஓசை காட்டுவழிகளில் ஒலித்தது.1 உப்பு வண்டிகளில் பாரம் அதிகமாக இருந்தபடியால், சில சமயங்களில் வண்டிகள் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கும் போது அச்சு முறிந்துவிடுவதும் உண்டு. அதற்காக அவர்கள் சேம அச்சுகளை வைத்திருந்தார்கள்.2 கடற்கரைப் பக்கங்களில் சங்கு கிடைக்கும் இடங்களில் கடலில் முழுகிச் சங்குகளைக் கொண்டு வந்து வளையல்களாக அறுத்து விற்றனர். அக்காலத்தில் தமிழ்நாட்டு மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்திருந்தனர். சங்கு வளைகளை அணிவது நாகரிகமாகவும் பண்பாடாகவும் மங்கலமாகவும் கருதப் பட்டது. குடில்களில் வாழ்ந்த ஏழைப் பெண்கள் முதலாக அரண்மனை களில் வாழ்ந்த அரசியர் வரையில் எல்லாப் பெண்களும் சங்கு வளையல்களை அணிந்திருந்தார்கள். செல்வச் சீமாட்டிகளும் அரசிகளும் பொன்வளையல்களை அணிந்திருந்ததோடு சங்கு வளையல்களையும் கட்டாயமாக அணிந்திருந்தனர். செல்வம் படைத்தவர்கள் வலம்புரிச் சங்குகளை அணிந்தார்கள். சாதாரண மகளிர் இடம்புரிச்சங்கு வளையல்களை அணிந்தார்கள். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி, கைகளில் பொன் தொடிகளை அணிந்திருந்தாள்.3 கோவலனுடைய மனைவி கண்ணகியார் பொன்தொடி முதலான நகைகளை எல்லாம் விற்ற பிறகும் சங்கு வளையை மட்டும் கடைசி வரையில் அணிந்திருந் தார். அவர் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கொற்றவை கோயிலின் முன்பு தன்னுடைய சங்கு வளையை உடைத்துப் போட்டார்.4 கைம்பெண்களைத் தவிர ஏனைய மகளிர் எல்லோரும் முக்கியமாக மணமானவர்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்திருந்தார்கள். இதைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். தமிழ்நாட்டு மகளிர் மட்டுமல்லர். ஏனைய பாரத நாட்டு மகளிர் எல்லோரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். இந்த வழக்கம் மிகப் பிற்காலத்தில் மறைந்துபோய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. பாரத நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பு ஏற்பட்ட பிறகு இந்த மாறுதல் உண்டாயிற்று. இப்போதுங்கூட வடநாடுகளில் சில இடங்களில் மகளிர் சங்கு வளைகளை அணிந்து வருகின்றனர். கொங்குநாட்டு மகளிரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். சங்கு வளைகள் கடற்கரை நாடுகளிலிருந்து கொங்கு நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாகச் சங்கு வளைகளும் இருந்தன. ஆகையால், சங்கு வளை வாணிகம் அக்காலத்தில் பெரிதாக இருந்தது. கொங்கு நாட்டில் பெரும்பாலும் மலைகள் உள்ள குறிஞ்சி நிலங்களும், காடுகள் உள்ள முல்லை நிலங்களும் இருந்தன. நீர்வளம், நிலவளம் பொருந்தின மருதநிலங்களும் இருந்தன. குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் மலைகளிலும் மலைச் சாரல்களிலும் தினை அரிசியையும் ஐவனநெல் என்னும் மலை நெல்லையும் பயிரிட்டார்கள். மலைகளில் வளர்ந்த மூங்கிலிலிருந்து மூங்கில் அரிசியும் சிறிதளவு கிடைத்தது. மூங்கிலரிசியைச் சமைத்து உண்டனர். அதை அவலாக இடித்தும் உண்டனர். மலைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைச் சாரல்களில் பலா மரங்கள் இருந்தன. அகில், சந்தனம், வேங்கை முதலிய மரங்களும் இருந்தன. முல்லை (காட்டு) நிலத்தில் வாழ்ந்தவர்கள் வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவர்கள் பசுக்களையும் ஆடுகளை யும் வளர்த்தார்கள். அவைகளிலிருந்து பால், தயிர், வெண்ணெய், நெய் கிடைத்தன. அவரை, துவரை முதலிய தானியங்களும் விளைந்தன. மருத நிலங்களில் வயல்களிலே நெல்லும் கரும்பும் பயிராயின. கரும்பை, ஆலைகளில் சாறு பிழிந்து வெல்லப் பாகு காய்ச்சினார்கள். கொங்கு நாடு கரும்புக்குப் பேர்போனது. ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் கரும்பு இல்லை. கொங்குநாட்டுத் தகடூரையரசாண்ட அதிகமான் அரசர் பரம்பரையில், முற்காலத்திலிருந்த ஒரு அதிகமான் கரும்பை எங்கிருந்தோ கொண்டுவந்து தமிழகத்தில் நட்டான் என்று ஒளவையார் கூறுகிறார் (புறநானூறு. 99: 1-4, 392: 20-21). கரும்புக்கு பழனவெதிர் என்று ஒரு பெயர் உண்டு (பழனம்- கழினி. வெதிர் - மூங்கில்). மூங்கிலைப் போலவே கரும்பு கணுக்களையுடையதாக இருப்பதனாலும் கழனி களில் பயிர் செய்யப்படுவதாலும் பழனவெதிர் என்று கூறப்பட்டது. மருத நிலங்களில் உழவுத் தொழிலுக்கு எருமைகளையும் எருதுகளை யும் பயன்படுத்தினார்கள். குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தவர் களைவிட மருத நிலத்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள். பருத்திப் பஞ்சும் கொங்கு நாட்டில் விளைந்தது. பருத்தியை நூலாக நூற்று ஆடைகளை நெய்தார்கள். நூல் நூற்றவர்கள் பெரும் பாலும் கைம்பெண்களே. அக்காலத்தில் பண்டமாற்று நடந்தது. அதாவது, காசு இல்லாமல் பண்டங்களை மாற்றிக்கொண்டார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். குளங்களிலும் ஏரிகளிலும் மீன் பிடித்து வந்து அந்த மீன்களை நெல்லுக்கும் பருப்புக்கும் மாற்றினார்கள். பால், தயிர், நெய்களைக் கொடுத்து அவற்றிற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக்கொண்டார்கள். இவ்வாறு பண்டமாற்று பெரும்பாலும் நடந்தது. அதிக விலையுள்ள பொருட்களுக்கு மட்டும் காசுகள் வழங்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து, அதாவது உரோம தேசத்திலிருந்து வந்த யவனக் கப்பல் வாணிகர், வெள்ளிக்காசு, பொற்காசுகளைக் கொடுத்து இங்கிருந்து விலையுயர்ந்த பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். *** அடிக்குறிப்புகள் 1. `உமணர், கணநிரை மணியின் Mக்கும்’ (அகம். 303: 17-18). 2. `எருதே இளைய நுகமுணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே, அவல் இழியினும் மிசை ஏறினும் அவணதறியுநர் யாரென உமணர், கீழ்மரத் தியாத்த சேமவச்சு’ (புறம். 102: 1-5). 3. `பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை. வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து’ நெடுநல்வாடை 141 - 142. 4. `கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து’ (சிலம்பு கட்டுரைகாதை - 181) இங்குப் பொற்றொடி என்றது பொன் வளையலையன்று, சங்கு வளையை. `பொற்றொடி பொலி வினையுடைய சங்கவளை. துர்க்கை கோயில் வாயிலே தன் கை வளையைத் தகர்த்து’ என்று பழைய அரும்பத வுரையாசிரியர் எழுதுவது காண்க. 16. அயல் நாட்டு வாணிகம் சங்க காலத் தமிழகம் வெளிநாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது போலவே கொங்கு நாடும் அயல்நாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆனால், கொங்கு நாட்டின் கடல் வாணிகத் தொடர்பைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் யாதொரு செய்தியும் காணப்படவில்லை. சங்கச் செய்யுள்களில் முசிறி, தொண்டி, நறவு, கொற்கை, புகார் முதலிய துறைமுகப்பட்டினங்களில் யவனர் முதலியவர்களின் கப்பல்கள் வந்து வணிகஞ் செய்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால், கொங்கு நாட்டுடன் அயல்நாட்டு வாணிகர் செய்திருந்த வாணிகத்தைப் பற்றிய செய்திகள் காணப் படவில்லை. ஆனாலும், கிரேக்க உரோம நாட்டவராகிய யவனர்கள் எழுதியுள்ள பழைய குறிப்புகளிலிருந்து கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் இருந்த வாணிகத் தொடர்பு தெரிகின்றது. முசிறி, தொண்டி, நறவு முதலிய மேற்குக் கடற்கரைப் பட்டினங் களில் யவனர்கள் முக்கியமாக மிளகை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். பாண்டியரின் கொற்கைத் துறைமுகப்பட்டினத்திலிருந்து யவனர் முக்கியமாக முத்துக்களை வாங்கிக்கொண்டு போனார்கள். சோழநாட்டுப் புகார்த் (காவிரிப்பூம்பட்டினம்) துறைமுகப்பட்டினத்தி லிருந்து, சாவக நாடு எனப்பட்ட கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து கிடைத்த சாதிக்காய், இலவங்கம், கர்ப்பூரம் முதலிய வாசனைப் பொருள்களையும், பட்டுத் துணிகளையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். உள்நடாகிய கொங்கு நாட்டிலிருந்து அக்காலத்தில் உலகப் புகழ்பெற்றிருந்த நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். யானைத் தந்தங்களையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். கொங்கு நாட்டிலிருந்தும் யானைத் தந்தங்கள் அனுப்பப் பட்டன. கொல்லிமலையில் இருந்தவர் யானைக் கொம்புகளை விற்றார்கள்.1 கொங்கு நாட்டு நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக் கொண்டு போனதைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்புகொண்ட வரலாற்றை யறிந்து கொள்வது முக்கியமாகும். கிரேக்க நாட்டாரும் உரோம நாட்டாருமாகிய யவனர்கள் வருவதற்கு முன்னே, அதாவது கிருஸ்து சகாப்தத்துக்கு முன்னே, அரபிநாட்டு அராபியர் தமிழ்நாட்டுடனும் வட இந்திய நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் முக்கியமாக இந்தியத் தேசத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்குத் தங்களுடைய சிறிய படகுகளில் வந்து வாணிகஞ் செய்தார்கள். அந்தக் காலத்தில் தெரிந்திருந்த உலகம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே. ஆப்பிரிக்கா கண்டத்தில் எகிப்து தேசமும் சில கிழக்குப் பகுதி நாடுகளும் தெரிந்திருந்தன. ஆப்பிரிக்காவின் தெற்கு மேற்குப் பகுதி நாடுகள் உலகம் அறியாத இருண்ட கண்டமாகவே இருந்து வந்தன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டமாகிய மேற்குத் தேசங்களையும் ஆசியாக் கண்டமாகிய கிழக்குத் தேசங்களையும் தொடர்புபடுத்தியது எகிப்து நாட்டு அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினம். அலக் சாந்திரியம், கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைத்து நடுநாயகமாக விளங்கிற்று. பல நாட்டு வாணிகரும் அந்தத் துறை முகத்துக்கு வந்தார்கள். எல்லா நாட்டு வாணிகப் பொருள்களும் அங்கு வந்து குவிந்தன. நீலநதி மத்திய தரைக் கடலில் கலக்கிற புகர் முகத்துக்கு அருகில், அக்காலத்து உலகத்தின் நடுமத்தியில், அலக் சாந்திரியம் அமைந்திருந்தது. அங்குக் கிரேக்கர், உரோம நாட்டார், பாபிலோனியர், பாரசீகர், அராபியர், இந்தியர், சீனர் முதலான பல நாட்டு மக்களும் வாணிகத்தின் பொருட்டு வந்தனர். பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து இந்திய வாணிகர் அலக்சாந்திரியம் சென்றனர். ஆனால், காலஞ் செல்லச்செல்ல அராபியர் இந்திய நாட்டுப் பொருள்களைத் தாங்களே வாங்கிக் கொண்டுபோய் அலக்சாந்திரியத்தில் விற்றார்கள். இதற்குக் காரணம் அலக்சாந்திரியத்துக்கும் பாரத நாட்டுக்கும் இடைமத்தியில் அரபுநாடு இருந்ததுதான். இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த அரபுநாட்டு அராபியர் கப்பல் வாணிகத்தைத் தங்கள் கையில் பிடித்துக்கொண்டார்கள். மேலும் கிரேக்க, உரோம நாட்டு யவன வாணிகர் இந்திய நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வராதபடியும் அவர்கள் செய்துவிட்டார்கள். கிரேக்க, உரோம நாட்டு யவனர்கள் இந்திய நாட்டுடன் நேரடியாக வாணிகத் தொடர்பு கொண்டால் தங்களுக்குக் கிடைத்த பெரிய ஊதியம் கிடைக்காமற் போய்விடும் என்று அராபியர் அறிந்தபடியால், யவனர்களை இந்தியாவுக்கு வராத படித் தடுத்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் கப்பல்கள் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை யோரமாகவே பிரயாணஞ் செய்தன. அவ்வாறு வந்த யவனக் கப்பல்களை அராபியர் கடற்கொள்ளைக் காரரை ஏவிக் கொள்ளையடித்தனர். அதனால், யவனக் கப்பல்கள் இந்தியாவுக்கு வருவது தடைப்பட்டது. அராபியர் மட்டும் இந்தக் கப்பல் வாணிகத்தை ஏகபோகமாக நடத்திப் பெரிய இலாபம் பெற்றார்கள். அவர்கள் சேர நாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப்பட்டினத்தின் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் இருந்து வாணிகஞ் செய்த இடம் பந்தர் என்று பெயர் பெற்றிருந்தது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். அதன் பொருள் அங்காடி, பண்டசாலை, துறைமுகம் என்று பொருள். சென்னை மாநகரில் ‘பந்தர் தெரு’ என்னும் பெயருள்ள ஒரு கடைத் தெரு இருக்கிறது. இங்கு முன்பு முஸ்லீம்கள் அதிகமாக வாணிகஞ் செய்திருந்தார்கள். அதனால் அந்தந் தெருவுக்கு இப்பெயர் ஏற்பட்டது. முசிறித் துறைமுகத்தில் அராபியர் பந்தர் என்னும் இடத்தில் வாணிகஞ் செய்திருந்ததைப் பதிற்றுப்பத்துச் செய்யுளினால் அறிகிறோம்.2 உரோமபுரி சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் (Augustus) சக்கரவர்த்தி காலத்தில் யவன வாணிகர் நேரடியாகத் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அகஸ்தஸ் சக்கரவர்த்தி கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையில் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் அலக்சாந்திரியம் உட்பட எகிப்து தேசமும் மேற்கு ஆசியாவில் சில நாடுகளும் உரோம சாம்ராச்சியத்தின் கீழடங்கின. அரபு நாட்டின் மேற்குக் கரையில் இருந்த (செங்கடலின் கிழக்குக் கரையிருந்த) அரபுத் துறைமுகங்களை இந்தச் சக்கரவர்த்தி தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். பிறகு யவனக் கப்பல்கள் இந்திய தேசத்தின் மேற்குக் கடற் கரைப் பட்டினங்களுக்கு நேரடியாக வந்து வாணிகஞ் செய்யத் தலைப் பட்டன. இவ்வாறு கிரேக்க, உரோமர்களின் வாணிகத் தொடர்பு கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. அப்பொழுது யவனக் கப்பல்கள் நடுக்கடலின் வழியாக வராமல் கடற்கரையின் ஓரமாகவே பிரயாணஞ் செய்தன. கரையோரமாக வருவதனால் மாதக் கணக்கில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், ஏறத்தாழ கி.பி. 47இல் ஹிப்பலஸ் என்னும் கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடலின் ஊடே கப்பலைச் செலுத்தி விரைவாக முசிறித் துறைமுகத்துக்கு வந்தான். அந்தப் பருவக்காற்றுக்கு யவன மாலுமிகள், அதைக் கண்டுபிடித்தவன் பெயரையே வைத்து ஹிப்பலஸ் என்று பெயர் சூட்டினார்கள். இதன் பிறகு, யவனக் கப்பல்கள் அரபிக்கடலின் ஊடே முசிறி முதலிய துறை முகங்களுக்கு விரைவாக வந்து போயின. இதனால் அவர்களுக்கு நாற்பது நாட்கள் மிச்சமாயின. தொடக்கக் காலத்தில் யவனர் செங்கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் கடலுக்கு எரித்திரைக் கடல் என்று பெயர் கூறினார்கள். எரித்திரைக் கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, அவர்கள் செங்கடலுக்கு இப்பால் பாரசீகக் குடாக்கடலுக்கு வந்த போது, இந்தக் கடலுக்கும் எரித்திரைக் கடல் என்று அதே பெயரிட்டார் கள். பிறகு, அரபிக் கடலில் வந்து வாணிகஞ்செய்தபோது அரபிக் கடலுக்கும் அப்பெயரையே சூட்டினார்கள். பின்னர் இந்து சமுத்திரம், வங்காளக்குடாக் கடல்களில் வந்து வாணிகஞ் செய்தபோது இந்த கடல்களுக்கும் எரித்திரைக் கடல் என்றே பெயரிட்டார்கள். இந்தக் கடல்களில் எல்லாம் வந்து எந்தெந்தத் துறைமுகப் பட்டினங்களில் யவனர் வாணிகஞ் செய்தார்கள், என்னென்ன பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தார்கள் என்பதைக் குறித்து யவன நாட்டார் ஒருவர் கி.பி. 89ஆம் ஆண்டில், பழைய கிரேக்க மொழியில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரை (The Periplus Maris Erythrai) என்பது. அகஸ்தஸ் சக்கரவர்த்தி யவன - தமிழக வாணிகத்தைப் பெருக்கினான். தமிழ்நாட்டு மிளகும் முத்தும் இரத்தினக் கற்களும் யானைத் தந்தங்களும் யவன நாட்டுக்கு ஏற்றுமதி யாயின. மிளகு பெரிய அளவில் ஏற்றுமதியாயிற்று. அதற்காக அகஸ்தஸ் சக்கரவர்த்தி பெரிய மரக்கலங்களைக் கட்டினான். மேலும், மிளகு முதலிய பொருள்களை வாங்குவதற்குப் பொன் நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் அனுப்பினான். இவ்வாறு, கி.பி. முதல் நூற்றாண்டில் யவன - தமிழகக் கடல் வாணிகம் சிறப்பாக நடக்கத் தொடங்கிற்று. தமிழகத்தில் வந்த யவனர்கள் ஏற்றுமதி செய்து கொண்டு போன பொருள்களில் முக்கியமானது மிளகு. இதற்காகவே முக்கியமாகப் பெரிய கப்பல்கள் கட்டப்பட்டன என்றும், பொற்காசுகளும் வெள்ளிக் காசுகளும் அனுப்பப்பட்டன என்றும் உரோம நாட்டுச் சரித்திரத்தி லிருந்து அறிகிறோம். இந்தச் செய்தியைச் சங்கச் செய்யுள்களும் கூறுகின்றன. சேரஅரசர்களின் முசிறித் துறைமுகப்பட்டினத்தில் அழகான யவனக் கப்பல்கள் வந்து பொன்னை (பொற்காசை)க் கொடுத்துக் கறியை (கறி - மிளகு) ஏற்றிக்கொண்டு போயின என்று சங்கப் புலவர் தாயங்கண்ண னார் கூறுகிறார். “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த விளைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” (அகம். 149 : 7- 11) முசிறித் துறைமுகம் யவனர்களின் பெரிய மரக்கலங்கள் வந்து தங்குவதற்குப் போதுமான ஆழமுடையதாக இல்லை. ஏனென்றால், அங்குக் கடலில் கலந்த பெரியாறு மண்ணை அடித்துக் கொண்டுவந்து ஆழத்தைத் தூர்த்துவிட்டது. அதனால், ஆழமில்லாமற் போகவே யவன மரக்கலங்கள் துறைமுகத்துக்கு அப்பால் கடலிலே நங்கூரம் பாய்ச்சி நின்றன. மிளகு மூட்டைகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு போய்க் கடலில் நின்றிருந்த யவன மரக்கலங்களில் ஏற்றிவிட்டு அதற்கு ஈடாக யவனப் பொற்காசுகளைத் தோணிகளில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று பரணர் என்னும் சங்கப் புலவர் கூறுகிறார். “மனைக் குவைஇய கறிமூடையாற் கலிச்சும் மைய கரை கலக்குறுந்து கலந்தந்த பொற் பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்குகடல் முழவின் முசிறி!” (புறம். 343 :3-10) யவன மரக்கலங்கள் மிளகை ஏற்றுமதி செய்துகொண்டு போனதை. இப்புலவர்கள் நிகழ்காலத்தில் கூறுவதைக்காண்க., அக் காலத்தில் மிளகு கிரேக்கர், உரோமர் முதலிய மேலைத் தேசத்தவர்க்கு முக்கியமான உணவுப் பண்டமாக இருந்த படியால் மிளகு வாணிகம் முதன்மை பெற்று இருந்தது. யவனர் மிளகை விரும்பி அதிகமாக வாங்கிக் கொண்டுபோன காரணத்தினாலே சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு யவனப் பிரியா என்று பெயர் கூறப்பட்டது. அந்தக் காலத்தில் தான் கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் வாணிகத் தொடர்பு ஏற்பட்டது. கொங்கு நாட்டிலே சிற்சில சமயங்களில் கதிர் மணிகள் உழவர்களுக்குக் கிடைத்தன என்று பழஞ் செய்யுள்களி லிருந்து அறிகிறோம். கொங்கு நாட்டின் வடக்கிலிருந்த புன்னாட்டின் நீலக்கல் சுரங்கம் இருந்தது என்று பிளினி என்னும் யவனர் எழுதி யிருக்கிறார்.3 படியூரிலும் இந்தக் கதிர்மணிகள் கிடைத்தன. (சேலம் மாவட்டத்துப் படியூர்). கோயம்புத்தூர் மாவட்டத்து வாணியம் பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன. அந்தக் காலத்தில் இந்த நீலக்கற்கள் உலகத்திலே வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. கொங்கு நாட்டில் மணிகள் கிடைத்ததைக் கபிலர் கூறுகிறார்.4 அரிசில்கிழாரும் இதைக் கூறுகிறார்.5 யவனர் இங்கு வந்து இவற்றை வாங்கிக்கொண்டு போனார்கள். உரோம சாம்ராச்சியத்திலிருந்த சீமாட்டிகள் இந்தக் கற்களைப் பெரிதும் விரும்பினார்கள். உரோம சாம்ராச்சியத்தில் இந்த நீலக் கற்கள் ஆக்வா மரினா (aqua marina) என்று பெயர் பெற்றிருந்தது. யவன வாணிகர்கள் கொங்கு நாட்டுக்கு வந்தது, முக்கியமாக இந்தக் கதிர்மணிகளை வாங்குவதற்காகவே. யவனர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்து நீலக் கற்களை வாங்கிக் கொண்டு போனதற்கு இன்னொரு சான்று, அவர் களுடைய பழைய நாணயங்கள் கொங்கு நாட்டில் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான். கொங்கு நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி, வெள்ளலூர், கரூர் முதலிய ஊர்களில் பழைய காலத்து உரோம நாணயங்கள் பெருவாரியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேர நாடு, பாண்டி நாடு, புதுக்கோட்டை முதலிய இடங்களிலும் பழங்காலத்து உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கொங்கு நாட்டில் கிடைத்த உரோம சாம்ராச்சியப் பழங்காசுகளை மட்டுங் கூறுவோம். பொள்ளாச்சி (கோயம்புத்தூர் மாவட்டம்): இங்கு ஒரு பானை நிறைய உரோமாபுரி வெள்ளிக்காசுகள் 1800ஆம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்டன. 1809ஆம் ஆண்டிலும் ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் புதையலில் கிடைத்த காசுகள் பொற்காசுகளா, வெள்ளிக் காசுகளா என்பது தெரிய வில்லை. 1888ஆம் ஆண்டிலும் உரோமபுரிக் காசுப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளலூர் (கோயம்புத்தூர் அருகில் போத்தனூருக்குச் சமீபம்): இவ்வூரிலும் உரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்தன. 1842ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட புதையலில் 378 வெள்ளிக் காசுகளும் 1850ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 135 வெள்ளிக் காசுகளும் 1891ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 180 வெள்ளிக் காசுகளும் இருந்தன. 1931 ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 121 காசுகள் இருந்தன. இவற்றில் 23 நாணயங்களில் முத்திரையில்லாமல் வெறுங்காசாக இருந்தன. முத்திரையிடுவதற்கு முன்பு அவசரமாக இவை தங்கச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டன என்று தெரிகிறது. கரூர் (கோயம்புத்தூர் மாவட்டம்): இங்கு 1800 ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பொற்காசு ஒன்று கிடைத்தது. 1806ஆம் ஆண்டிலும் இன்னொரு பொற்காசு கிடைத்தது. 1888ஆம் ஆண்டில் 500 வெள்ளிக் காசுகள் உள்ள புதையல் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் 117 காசுகள் தேய்மானமில்லாமல் புதியவையாக இருந்தன. இவை ஒவ்வொன்றும் 3. 76 கிராம் எடையுள்ளவை. கலயமுத்தூர் (பழனிக்கு மேற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது): இவ்வூரில் 1856 ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பழங்காசுகள் கிடைத்தன. இவையில்லாமல், ஏறக்குறைய 1000 வெள்ளிக் காசுகளைக் கொண்ட உரோமாபுரி நாணயங்கள் ஒரு பெரிய மட்பாண்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. இவை மதராஸ் படியில் ஐந்து, ஆறு படி கொண்ட நாணயங்கள். இக்காசுகள் உருக்கிவிடப்பட்டனவாம். இவை கொங்கு நாட்டில் கிடைத்தவை. இடம் குறிப்பிடப்படவில்லை. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுவதும், இறந்தவரைத் தாழியில் இட்டுப் புதைப்பதும் சங்க காலத்து வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட ஒரு பண்டவர் குழியில் (கொங்கு நாட்டில்) ஒரு உரோம தேசத்து வெள்ளிக் காசு கண்டெடுக்கப்பட்டது (1817).6 கொங்கு நாட்டில் இன்னும் பல உரோம தேசத்து நாணயப் புதையல்கள் இருக்கக்கூடும். கிடைத்துள்ள காசுகள் எல்லாம் பொற் காசுகளும் வெள்ளிக் காசுகளுமாக உள்ளன. செப்புக் காசுகள் மிகச் சில. இக்காசுகள் எல்லாம் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட உரோமச் சக்கரவர்த்திகளின் தலையுருவம் பொறிக்கப்பட்டவை. சில காசுகளில் அவ்வரசர்களின் மனைவியரின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட அரசர்களின் உருவங்களும் முத்திரைகளும் இக்காசுகளில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலம் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கடைச்சங்க காலத்தின் இறுதியாகும். இந்தக் காசுகள், அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கும் உரோமாபுரி நாட்டுக்கும் நடந்த வாணிகத் தொடர்பை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகின்றன. கிடைத்துள்ள இந்தக் காசுகளிலே கீழ்க்கண்ட உரோமச் சக்கரவர்த்திகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை: துருஸஸ் (Drusus the Elder - கி.மு. 38 முதல் கி.பி. 9 வரையில் அரசாண்டான்), அகஸ்தஸ் (கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையில் அரசாண்டான்), தைபிரியஸ் (கி.பி. 14 முதல் 37 வரையில் அரசாண்டான்), கெலிகுலா (கி.பி. 37 முதல் 41 வரையில் அரசாண்டான்), கிளாடியஸ் (கி.பி. 41 முதல் 54 வரையில் அரசாண்டான்), நீரோ (கி.பி. 54 முதல் 68 வரையில் அரசாண்டான்) டொமிஷியன் (கி.பி. 81 முதல் 96 வரையில்), நெர்வா (கி.பி. 96 முதல் 98 வரையில்), திராஜன் (98 முதல் 117), ஹேத்திரியன் (117 முதல் 138 வரையில்), கம்மோடியஸ் (180 முதல் 193 வரையில்). மற்றும், துருஸஸின் மனைவியான அந்தோனியாவின் முத்திரை பொறிக்கப்பட்டதும், ஜர்மனிகஸின் மனைவியான அக்ரிப் பைனாவின் உருவ முத்திரை பொறிக்கப்பட்டதுமான காசுகளும் கிடைத்திருக்கின்றன.7 தமிழ்நாட்டுக்கு வந்து பொருள்களை வாங்கிக்கொண்டு போன யவனக் கப்பல் வியாபாரிகள் காசுகளைக் கொடுத்தே பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள். இந்தச் செய்தியைச் சங்க செய்யுட்கள் கூறுகின்றன. அக்காலத்திலிருந்த பிளைனி (Pliny) என்னும் உரோமாபுரி அறிஞரும் இதைக் கூறியுள்ளார். பரணர், தாம் பாடிய புறம். 343 ஆம் செய்யுளில், “மனைக் குவைஇய கறிமூடையாற் கலிச்சும் மைய கரை கலக்குறுந்து கலந்தந்த பொற் பரிசம் கழித்தோணியாற் கரை சேர்க்குந்து.” (புறம். 343 : 3- 6) என்று கூறுகிறார். சேர நாட்டு முசிறித் துறைமுகத்தில் யவனக் கலங்கள் (மரக் கலங்கள்) பொற்காசுகளைக் கொண்டு வந்து நின்றபோது, தோணிகளில் கறி (மிளகு) மூட்டைகளை ஏற்றிக்கொண்டு போய் யவன மரக்கலங்களில் இறக்கிவிட்டு அதற்கு விலையாக அவர்கள் கொடுத்த பொற்காசுகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்பது இதன் பொருள். புலவர் தாயங்கண்ணனாரும் இதைக் கூறுகிறார். “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி. “ (அகம். 149: 7- 11) இதில், யவனருடைய மரக்கலங்கள் முசிறித் துறை முகத்துக்கு வந்து கறியை (மிளகை) ஏற்றிக்கொண்டு பொன்னைக் (பொன், வெள்ளிக் காசுகளை) கொடுத்துவிட்டுச் சென்றது கூறப்படுகிறது. உரோமாபுரியிலிருந்த பிளைனி (Pliny) என்னும் அறிஞர் கி.பி. 70ஆம் ஆண்டில் உரோமாபுரிச் செல்வம் கிழக்கு நாடுகளுக்குப் போவதைக் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நூறா யிரம் ஸெஸ்டர் (11, 00, 000 பவுன்) மதிப்புள்ள பொன்னும் வெள்ளியும் வாணிகத்தின் பொருட்டுக் கிழக்கு நாடுகளுக்குப் போய்விடுவதை அவர் கண்டித்திருக்கிறார். உரோம நாட்டுச் சீமான்களும் சீமாட்டி களும் வாசனைப் பொருள்கள், நகைகள் முதலியவைக்காக உரோம நாட்டுப் பொன்னை விரயஞ் செய்ததாக அவர் கூறியுள்ளார். சங்கப் புலவர்கள், யவன வாணிகர் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துப் பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள் என்று கூறியது போலவே பிளைனியும் உரோமாபுரிப்பொன் கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுகிறது என்று கூறியிருப்பது காண்க. உரோமாபுரிச் சாம்ராச்சியத்தில் அக்காலத்தில் ஸ்பெய்ன் தேசமும் அடங்கியிருந்தது. அந்த ஸ்பெய்ன் தேசத்தில் தங்கச் சுரங்கம் இருந்தபடியால், அங்கிருந்து உரோமாபுரிச் சக்கரவர்திகளுக்கு ஏராளமாகப் பொன் கிடைத்தது. அகஸ்தஸ் சக்கரவர்த்தி இந்தப் பொன்னைக் கொண்டு நாணயங்கள் அடித்து வெளிப்படுத்தினார். அந்த நாணயங்களைக் கொண்டுவந்த யவன மாலுமிகள், அதிகச் சரக்குகளை (முக்கியமாக மிளகை) ஏற்றிக் கொண்டு போவதற்காகப் பெரிய மரக்கலங்களைக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடைப்பெற்ற யவன - தமிழ வாணிகத்தினால் கொங்கு நாடு கதிர் மணிகளை யவன நாட்டுக்கு விற்றுப் பெரும் பொருள் ஈட்டியது. அந்த யவன நாட்டுப் பழங்காசுகளில் சிறு அளவுதான் இப்போது அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ள உரோம நாணயங்கள். இன்னும் புதையுண்டிருக்கிற உரோம நாணயங்கள் எவ்வளவென்று நமக்குத் தெரியாது. கொங்கு நாட்டிலிருந்து யவன வாணிகர் வாங்கிக்கொண்டுபோன இன்னொரு பொருள் யானைத் தந்தம். கொங்கு நாட்டைச் சார்ந்த யானைமலைக் காடுகளிலும் ஏனைய காடுகளிலும் யானைக் கொம்புகள் கிடைத்தன. சேர நாட்டு மலைகளிலும் யானைக் கோடுகள் கிடைத்தன. யவன வாணிகர் யானைக் கோடுகளையும் வாங்கிச் சென்றார்கள். கொங்கு நாட்டுக் கொல்லி மலை ஓரிக்கு உரியது. கொல்லி மலையில் வாழ்ந்த குடிமக்கள், விளைச்சல் இல்லாமல் பசித்தபோது தாங்கள் சேமித்து வைத்திருந்த யானைக் கொம்புகளை விற்று உணவு உண்டார்கள் என்று கபிலர் கூறுகிறார்.8 சேரன் செங்குட்டுவன் வேனிற்காலத்தில் சேரநாட்டுப் பெரியாற்றுக் கரையில் சோலையில் தங்கியிருந்தபோது அவனிடம் வந்த குன்றக் குறவர் பல பொருள்களைக் கையுறையாகக் கொண்டு வந்தனர். அப் பொருள்களில், யானைக் கொம்பும் அகிற் கட்டைகளும் இருந்தன.9 சேரநாட்டு, கொங்குநாட்டு மலைகளில் யானைக் கொம்புகள் கிடைத்தன என்பது இதனால் தெரிகிறது. யவனர் வாங்கிக்கொண்டு போன பொருள்களில் யானைக் கொம்பும் கூறப்படுகிறது. கொங்கு நாடு உள்நாடாகையால் அதற்குக் கடற்கரை இல்லை; ஆகையால் துறைமுகம் இல்லை. ஆனால், கொங்குநாட்டை யரசாண்ட ‘பொறையர்’ சேர அரசரின் பரம்பரை யாராகையால், அவர்கள் சேர நாட்டுத் துறைமுகங்களில் இரண்டைத் தங்களுக்கென்று வைத்திருந் தார்கள். அவற்றின் பெயர் தொண்டி, மாந்தை என்பன. கொங்கு நாட்டுப் பொறையர் மேற்குக் கடற்கரைத் தொண்டியைத் தங்களுக்குரிய துறை முகப்பட்டினமாக வைத்துக் கொண்டு வாணிகஞ் செய்தனர். கொங்கு நாட்டையரசாண்ட இளஞ்சேரலிரும் பொறை ‘வளைகடல் முழவில் தொண்டியோர் பொருநன்’ என்று கூறப்படுகிறான் (9ஆம் பத்து 8 : 21). ‘திண்டேர்ப் பொறையன் தொண்டி’ (அகம். 60 : 7). யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, `தன் தொண்டியோர் அடுபொருநன்’ என்று கூறப்படுகிறான் (புறம். 17 : 13). குறுந்தொகை 128ஆம் செய்யுள் ‘திண்டேர்ப் பொறையன் தொண்டி’ என்று கூறுகிறது (குறுந். 128 :2). யவனர் தொண்டியைத் திண்டிஸ் என்று கூறினார்கள். இதனால், கொங்கு நாடு சேர அரசர் ஆட்சிக் குட்பட்டிருந்த காலம் வரையில், தொண்டித் துறைமுகம் கொங்கு நாட்டின் துறைமுகப் பட்டினமாக அமைந்திருந்தது என்று கருதலாம். பிற்காலத்தில் சோழர், கொங்கு நாட்டைக் கைப்பற்றி யரசாண்டபோது தொண்டி, கொங்குத் துறைமுகமாக அமையவில்லை. *** அடிக்குறிப்புகள் 1. `காந்தளஞ் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரை’. (குறும். - 100: 3-5) 2. “இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சம் பந்தர் கமழுந்தாழைக் கானலம் பெருந்துறை” (6ஆம் பத்து. 5: 3-5) (“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” (7ஆம் பத்து. 7: 1-2) “கொடு மணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (8ஆம் பத்து, 4: 5-6). 3. Pliny, Nat. Hist. BK. XXXVII. Cap. V. 4. இலங்கு கதிர்த்திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடு, 7ஆம் பத்து 6-19 -20). 5. கருவிவானந் தண்டளி சொரிந்தெனப், பல்விதையுழவர் சில்லேறாளர், பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச்சூடி, இலங்குகதிர்த் திருமணி பெறூஉம், அகன் கண் வைப்பின் நாடு” 8ஆம் பத்து 6: 10-15). 6. M. J.L.S. XIII. P. 214. 7. M.J.L.S. Vol. XIII., Roman Coins found in India, J.R.A.S. XXIII. J.B.B.R.A.S.I (1843) P. 294 Num. Chrn. 1891, Roman History from Coins. Michael Grant. 1968. 8. “காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக்கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரி கொல்லிக் குடவரை.” (குறும். 100: 3-5). வேழத்துக்கோடு - யானைக்கொம்பு. நொடுத்து - விலை கூறி விற்று. 9. “யானைவெண்கோடும் அகிலின் குப்பையும்”. (சிலம்பு. காட்சி - 37.) 17. கொங்கு நாட்டுப் புலவர்கள் புலவர் நிலை சங்க காலத்துக் கொங்கு நாட்டின் கல்வி நிலை ஏனைய தமிழ் நாட்டிலிருந்தது போலவே இருந்தது. புலவர்களுக்கு உயர்வும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. புலவர்கள் ஒரே ஊரில் தங்கிக் கிணற்றுத் தவளைகளைப் போலிராமல், பல ஊர்களில் பல நாடுகளிலும் சென்று மக்களிடம் பழகி நாட்டின் நிலை, சமுதாயத்தின் நிலைகளை நன்கறிந் திருந்தார்கள். மக்களிடையே கல்வி பரவாமலிருந்தாலும், கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தபடியால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர் முயன்று கல்வி கற்றனர். ஆண்பாலார், பெண் பாலார், அரசர், வாணிகர், தொழிலாளர் முதலியவர்கள் அக்காலத்தில் புலவர்களாக இருந்தார்கள். அந்தப் பழங்காலத்திலே இருந்த அந்தப் புலவர்கள் இரண்டு பொருள்களைப் பற்றிச் சிறப்பாகச் செய்யுள் இயற்றினார்கள். அவற்றில் ஒன்று அகப்பொருள், மற்றொன்று புறப் பொருள். அகப்பொருள் என்பது காதல் வாழ்க்கையைப் பற்றியது. புறப்பொருள் என்பது பெரும் பாலும் வீரத்தையும் போர்ச் செயலையும் பற்றியது. சங்க இலக்கியங்களில் சிறப்பாக இவ்விரு பொருள்கள் பேசப்படுகின்றன. பலவகையான சுவைகள் இச்செய்யுட்களில் காணப் படுகிறபடியால், இவற்றைப் படிக்கும்போது இக்காலத்திலும் மகிழ்ச்சி யளிக்கின்றன. மேலும், சங்கச் செய்யுட்கள், அக்காலத்து மக்கள் வாழ்க்கை வரலாற்றை யறிவதற்குப் பேருதவியாக இருக்கின்றன. புலவர்கள் பொதுவாக அக்காலத்தில் வறியவராக இருந்தார்கள். அவர்கள் செல்வர்களையும் அரசர்களையும் அணுகி அவர்களுடைய சிறப்புகளைப் பாடிப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். புலவர்கள் பொதுவாக யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் (வண்டிகள்) பரிசாகப் பெற்றார்கள். பரிசாகப் பெற்ற இவைகளை விற்றுப் பொருள் பெற்றனர். சில சமயங்களில் அரசர்கள் புலவர்களுக்கு நிலங்களையும் பொற் காசுகளையும் பரிசாகக் கொடுத்தார்கள். பொருள் வசதியுள்ளவர்கள் - அரசர், வாணிகர் பெருநிலக்கிழார் போன்றவர்கள் - கல்வி இன்பத்துக் காகவே கல்வி பயின்று புலவர்களாக இருந்தார்கள். அவர்களும் அகப் பொருள் புறப்பொருள்களைப் பற்றிச் செய்யுள் இயற்றினார்கள். ஆனால், அக்காலத்தில் கல்வி கற்றவர் தொகை மிகக் குறைவு. பொதுவாக நாட்டு மக்கள் கல்வியில்லாதவர்களாகவே இருந்தார்கள். பொதுவாகப் புலவர்களுடைய வாழ்க்கை வறுமையுந் துன்பமுமாக இருந்தது. பிரபுக்கள் எல்லோரும் அவர்களை ஆதரிக்க வில்லை, சிலரே ஆதரித்தார்கள். அவர்கள் பெற்ற சிறு பொருள், வாழ்க்கைக்குப் போதாமலிருந்தது. ஆகவே, புலவர்கள் புரவலர்களை நாடித் திரிந்தனர். அவர்களில் நல்லூழ் உடைய சில புலவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்கள். கொங்குநாட்டுப் புலவர் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது. சங்க காலத்தில் இருந்த கொங்கு நாட்டுப் புலவர்களைப் பற்றிக் கூறுவோம். அஞ்சியத்தைமகள் நாகையார் இவர் பெண்பால் புலவர். நாகை என்பது இவருடைய பெயர். அஞ்சி யத்தைமகள் என்பது சிறப்புச் சொல். தகடூர் அதிகமான் அரசர்களில் அஞ்சி என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தார்கள். அந்த அஞ்சியரசர்களில் ஒருவருடைய அத்தை மகள் இவர். ஆகையால் அஞ்சி யத்தை மகள் நாகையார் என்று பெயர் கூறப்பெற்றார். அத்தை மகள் என்பதனால் அஞ்சியினுடைய மனைவி இவர் என்று சிலர் கருதுகின்றனர். அஞ்சியின் அவைப் புலவராக நெடுங்காலம் இருந்த ஒளவையாரிடம் இந்த நாகையார் கல்வி பயின்றவராக இருக்கலாமே? இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 352ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. குறிஞ்சித் திணையைப் பாடிய இந்தச் செய்யுள் இனிமையுள்ளது. பாறையின்மேல் இருந்து ஆடுகிற மயிலுக்குப் பின்னால் பெரிய பலாப்பழத்தை வைத்திருக்கிற கடுவன் குரங்கு. ஊர்த்திருவிழாவில் விறலியொருத்தி பரதநாட்டியம் ஆடும்போது அவளுக்குப் பின்னாலிருந்து முழவுகொட்டும் முழவன்போலக் காட்சி யளித்ததை இவர் இச்செய்யுளில் கூறுகிறார். மணப் பெண் ஒருத்தி தன்னுடைய தோழியிடம் தன்னுடைய மனநிறைந்த மகிழ்ச்சியைக் கூறியதாக இவர் கூறியுள்ளது படிப்பவருக்குப் பேருவகை தருகின்றது. அஞ்சியரசன்மேல் புலவர் பாடிய செய்யுளுக்கு இசையமைத்துப் பாடும் பாணனுடைய இசையில், இசையும் தாளமும் ஒத்திருப்பது போலவும் காதலன்- காதலியின் திருமண நாள் போலவும் அந்த மணப்பெண் நிறை மனம் பெற்றிருந்தாள் என்று இவர் கூறுவது படித்து இன்புறத்தக்கது. “கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி நல்லிசை நிறுத்த நயவரு பனுவல் தொல்லிசை நிறீஇய வுரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினும் இனியனால் எமக்கே” இதனால் இப்புலவர் இசைக் கலையைப் பயின்றவர் என்பது தெரிகின்றது. அதியன் விண்ணத்தனார் அதியன் என்பது குலப்பெயர். விண்ணத்தன் என்பது இவருடைய இயற்பெயர். அதியன் (அதிகன், அதிகமான்) என்பது தகடூர் நாட்டை யரசாண்ட அரச பரம்பரையின் குலப்பெயர். இப்புலவர் அந்த அரச குலத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகிறார். எனவே, இவர் கொங்கு நாட்டுப் புலவர் என்பதில் ஐயமில்லை. இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 301ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அரிசில்கிழார் இந்தப் புலவரின் சொந்தப் பெயர் தெரியவில்லை. அரிசில் என்னும் ஊரின் தலைவர் என்பது இவர் பெயரால் தெரிகிறது. அரிசில் என்னும் ஊர் சோழ நாட்டில் இருந்தது என்று சிலர் கூறுவர். அரிசில் என்னும் பெயருள்ள ஊர் கொங்கு நாட்டிலும் இருந்தது. அரிசில்கிழார் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். இப்புலவர் அகப்பொருள் துறையில் பாடிய ஒரு செய்யுள் (193) குறுந்தொகையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. வையாவிக் கோப்பெரும் பேகனை அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக இவர் ஒரு செய்யுள் பாடினார் (புறம். 146). இதே காரணம் பற்றி வையாவிக் கோப்பெரும்பேகனைக் கபிலரும் (புறம். 143), பரணரும் (புறம். 141, 142, 144, 145) பெருங்குன்றூர்க் கிழாரும் (புறம். 147) பாடியுள்ளனர். இதனால், இப்புலவர்கள் காலத்தில் அரிசில்கிழாரும் இருந்தார் என்பது தெரிகின்றது. இவர் பாடிய புறப்பொருட்டுறை பற்றிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 281, 285, 300, 304, 342). பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமான் நெடுமானஞ்சியின் தகடூரின்மேல் படையெடுத்துச் சென்று முற்றுகையிட்டுப் போர் செய்த போது அரிசில்கிழார், போர்க்களத்தில் இருந்து அந்தப் போர் நிகழ்ச்சியை நேரில்கண்டார். பொன்முடியாரும் அப்போர் நிகழ்ச்சி களை நேரில்கண்டவர். தகடூர்ப் போரைப் பற்றித் தகடூர் யாத்திரை என்னும் ஒரு நூல் இருந்தது. அந்த நூலில் இப்புலவர்கள் பாடிய செய்யுட்களும் இருந்தன. அந்த நூல் இப்போது மறைந்துவிட்டது. சில செய்யுட்கள் மட்டும் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஒளவையாரும் இவர்கள் காலத்திலிருந்தார். அதிகமான் நெடுமானஞ்சியின் மகனான எழினி, தகடூர்ப் போர்க் களத்தில் வீரப்போர் செய்து இறந்தபோது அரிசில்கிழார் அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடினார் (புறம். 230). தகடூர் யாத்திரையில் அரிசில்கிழாருடைய செய்யுள்களும் இருந்தன என்று கூறினோம். தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத் திணையியலின் உரையில், உரையாசிரியர் நச்சினார்க் கினியர், தகடூர் யாத்திரையிலிருந்து அரிசில்கிழாரின் செய்யுட் கள் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ எனத் தொடங்கும் 8ஆம் சூத்திரத்தின் ‘பொருளின்று உய்த்த பேராண் பக்கம்’ என்பதன் உரையில் “மெய்ம்மலி மனத்தினம்மெதிர் நின்றோன்” என்னும் செய்யுளை மேற்கோள் காட்டி “இஃது அதிகமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது” என்று எழுதுகிறார். புறத்திணையில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ என்று தொடங்கும் 12ஆம் சூத்திரத்தில் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் ‘கலை யெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி, “இது சேரமான் (பெருஞ் சேரலிரும்பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது” என்று விளக்கங் கூறியுள்ளார். தகடூர்ப் போரை வென்ற பெருஞ்சேரலிரும்பொறை மேல் அரிசில்கிழார் பத்துச் செய்யுட்களைப் பாடினார் (பதிற்றுப் பத்து, எட்டாம் பத்து). அச்செய்யுள்களில் அவ்வரசனுடைய வெற்றிகளையும் நல்லியல்புகளையும் கூறியுள்ளார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அவ் வரசன் அவருக்கு ஒன்பது லட்சம் பொன்னையும் தன்னுடைய அரண் மனையையும் தன்னுடைய சிம்மாசனத்தையும் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான். புலவர் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் அரசனுக்கு அமைச்சராக இருந்தார். இவைகளை எட்டாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பினால் அறிகிறோம். அக்குறிப்பாவது: “பாடிப் பெற்ற பரிசில் தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.” (கோயிலாள் - இராணி. கோயில் - அரண்மனை. காணம் - அக்காலத்தில் வழங்கின பொற்காசு. அரசு கட்டில் - சிம்மாசனம். அமைச்சு- மந்திரி பதவி) இது, புலவர் வேறு எவரும் அடையாத பெருஞ் சிறப்பாகும். அரிசில்கிழாரைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. உம்பற்காட்டு இளங்கண்ணனார் உம்பற்காடு என்பது கொங்கு நாட்டு ஊர். இளங் கண்ணனார் என்பது இவருடைய பெயர். யானை மலைப்பிரதேசமாகிய உம்பற் காட்டில் வாழ்ந்தவராகையால் இப்பெயர் பெற்றார். இவர் பாடின செய்யுள் ஒன்று அகநானூற்றில் 264ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. ஒளவையார் ஒளவை (அவ்வை) என்பது உயர்குலத்துப் பெண் பாலார்க்கு வழங்கப்படுகிற பெயர். இது இவருக்குரிய இயற்பெயர் அன்று. உயர்வைக் குறிக்கும் சிறப்புப் பெயர். ஒளவையார் என்று சிறப்புப் பெயர் பெற்ற பெண்பாற் புலவர் சிலர் இருந்தனர். அவர்களில் இவர், காலத்தினால் முற்பட்டவர். கொங்கு நாட்டில் வாழ்ந்த இவர், கொங்கு நாட்டுத் தகடூரை யரசாண்ட அதிகமான் நெடுமானஞ்சியின் புலவராக இருந்தார். தகடூர், இப்போதைய சேலம் மாவட்டத்தினின்றும் பிரிந்து தர்மபுரி மாவட்டம் என்று பெயர் வழங்கப்படுகின்றது. ஒளவையார் முதன்முதலாக நெடுமானஞ்சியிடம் பரிசில் பெறச் சென்றபோது அவன் பரிசு தராமல் காலந்தாழ்த்தினான். அப்போது இவர் ஓரு செய்யுளைப் பாடினார் (புறம். 206). பிறகு, அதிகமான் பரிசில் வழங்கி இவரை ஆதரித்தான். அதிகமான் அஞ்சியை ஒளவையார் அவ்வச் சமயங்களில் பாடியுள்ளார். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு மகன் பிறந்தபோது அவன் போர்க்களத்திலிருந்து வந்து மகனைப் பார்த்தான். அவ்வமயம் அவன் இருந்த காட்சியை ஒளவையார் பாடியுள்ளார். கையில் வேலும் மெய்யில் வியர்வையும் காலில் வீரக் கழலும் மார்பில் அம்பு தைத்த புண்ணும் உடையவனாக வெட்சிப் பூவும் வேங்கைப்பூவும் விரவித் தொடுத்த மாலையையணிந்து கொண்டு புலி யுடன் போர் செய்த யானையைப் போல அவன் காணப்பட்டான் என்று கூறுகின்றார் (புறம். 100). அவனுடைய மகன் பெயர் பொகுட்டெழினி. அதிகமான் ஒரு சமயம் ஒளவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான். இவரை வரவேற்றுத் தொண்டைமான் தன்னுடைய படைக்கலச் சாலையைக் காட்டினான். போர்க் கருவிகள் எண்ணெயிடப்பட்டு மாலைகள் சூட்டி வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதுகண்ட ஒளவையார், தன்னுடைய அதிகமான் அரசனின் போர்க் கருவிகள் பழுது தீர்க்கப்டுவதற்காகக் கொல்லனுடைய உலைக்களத்தில் இருக்கின்றன என்று ஒரு செய்யுள் பாடினார் (புறம். 95). அதாவது, அதிகமான் தன்னுடைய ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொண்டே யிருந்தபடியால் அவற்றை அவன் ஆயுதச் சாலையில் வைக்கவில்லை என்பது கருத்து. எளிதில் கிடைக்காத அருமையான நெல்லிக்கனி நெடு மானஞ்சிக்குக் கிடைத்தது. அதனை அருந்தியவர் நெடுங்காலம் வாழ்ந் திருப்பார்கள். அந்தக் கனியை அவன் அருந்தாமல் ஒளவையாருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்டபிறகுதான் அக்கனியின் சிறப்பை ஒளவையார் அறிந்தார். அப்போது, அதிகமானுடைய தன்னலமற்ற பெருங்குணத்தை வியந்து வாழ்த்தினார் (புறம் 91). நெடுமான் அஞ்சியை ஒளவையார் வேறு சில பாடல்களிலும் பாடியுள்ளார். அவை புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 87, 88, 89, 90, 91, 94, 97, 98, 101, 103, 104, 315, 320). நெடுமானஞ்சியின் மகனான பொகுட்டெழினியையும் ஒளவையார் பாடியுள்ளார். அவன் அக்காலத்து வழக்கப்படி, பகைவருடைய நாட்டில் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து வந்ததைப் பாடியுள்ளார் (குறுந். 80 : 4-6). அவனுடைய வீரத்தையும் நல்லாட்சியையும் பாடி இருக்கிறார் (புறம். 102). அவன் பகைவருடைய கோட்டையொன்றை வென்றபோது ஒளவையாருக்குப் புத்தாடை கொடுத்து விருந்து செய்தான் (புறம். 392). ஒளவையார் காலத்தில் பாரிவள்ளல் இருந்தான். மூவேந்தர் பாரியின் பரம்புமலைக் கோட்டையை முற்றுகை யிட்டிருந்த போது, கிளிகளைப் பழக்கிக் கோட்டைக்கு வெளியேயிருந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்த செய்தியை ஒளவையார் கூறுகிறார் (அகம். 303: 10- 14). ஒளவையார் காலத்தில் தகடூர்ப் போர் நிகழ்ந்தது. கொங்கு நாட்டில் தங்கள் இராச்சியத்தை நிறுவிய இரும்பொறையரசர்கள் தங்கள் இராச்சியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரின்மேல் படையெடுத்து வந்து, கோட்டையை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அந்தப் போரில் இரு தரப்பிலும் பல வீரர்கள் மாண்டார்கள். அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பில் அம்பினால் புண் உண்டாயிற்று. அப்போது ஒளவையார் அவனைப் பாடினார் (புறம். 93). பிறகு அப்புண் காரணமாக அவன் இறந்துபோனான். அப்போதும் அவனை ஒளவையார் பாடினார் (புறம். 236, 231). அவனுக்கு நடுகல் நட்டு நினைவுக்குறி யமைத்தார்கள். அச்சமயத்திலும் ஒளவையார் ஒரு செய்யுளைப் பாடினார் (புறம். 232). ஒளவையார், அதிகமான் நெடுமான் அஞ்சியாலும் அவன் மகன் பொகுட்டொழினியாலும் ஆதரிக்கப்பட்டவர். தகடூரில் அதிகமானுடன் போர் செய்த பெருஞ்சேரல் இரும் பொறையையும் அவனுடைய தாயாதித் தமயனான சேரன் செங்குட்டுவனையும் அரிசில்கிழாரும் பரணரும் பாடியிருக்கிறார்கள். ஒளவையாரின் காலத்திலிருந்த பாரியைக் கபிலர் பாடியுள்ளார். ஆகவே, இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் ஒளவையாரும் வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. பாரியைப் பாடின கபிலர், செங்குட்டுவனின் தாயாதிச் சிற்றப்பனான செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது 7ஆம் பத்துப் பாடினார் செங்குட்டுவனும் செல்வக்கடுங்கோ வாழியாதனும் ஏறத்தாழ சமகாலத்தில் இருந்தவர். மேலும் கபிலரும் பரணரும் சமகாலத்தில் இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். ஆகவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தவர் என்பது தெரிகின்றது. மேலும், செங்குட்டுவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடி களும் இவர்களின் நண்பராகிய சீத்தலைச் சாத்தனாரும் ஒளவையார் காலத்தில் இருந்தவர்கள். ஒளவையாரின் செய்யுட்கள் தொகை நூல்களில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இவருடைய, செய்யுள்கள் அகநானூற்றில் நான்கும், குறுந்தொகையில் பதினைந்தும், நற்றிணையில் ஏழும், புறநானூற்றில் முப்பத்து மூன்றும் ஆக மொத்தம் ஐம்பத்தொன்பது செய்யுட்கள் கிடைத்திருக்கின்றன. இவருடைய செய்யுட்களில் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படுகிற செய்திகள் காணப்படுகின்றன. அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்களில் ஒருவன் கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் முதல்முதலாகப் பயிர் செய்தான் என்று ஒளவையார் கூறுகிறார் (புறம். 99, 392). கரூவூர்க் கண்ணம்பாளனார் இவர் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்தவர். இவருடைய செய்யுட்கள் அகநானூற்றிலும் (180, 263) நற்றிணையிலும் (148) தொகுக்கப்பட்டுள்ளன. அகம். 263இல் ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சியன்ன வளநகர் விளங்க என்று இவர் கூறுகிறார். இதில் கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையைக் குறிப்பதாகலாம். பெருஞ்சேரலிரும் பொறைக்குக் ‘கோதை’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. வஞ்சி என்பது கருவூரின் இன்னொரு பெயர். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்த இவர் அகம் 309, நற். 343, புறம் 168 ஆகிய மூன்று செய்யுட்களைப் பாடியிருக்கிறார். கதப்பிள்ளை யார் என்னும் இன்னொரு புலவர் குறுந்தொகை (64, 265, 380), நற்றிணை (135), புறம் (380) ஆகிய செய்யுட்களைப் பாடியுள்ளார். இவ்விருவரை யும் ஒருவர் என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கருதுகிறார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்று தோன்றுகின்றனர். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் புறம் 168 இல் குதிரைமலைப் பிட்டங்கொற்றனைப் பாடுகிறார். பிட்டங்கொற்றன், கொங்கு நாட்டில் குதிரைமலை நாட்டில் இருந்தவன். இவன் கொங்குச் சேரரின் கீழ் சேனைத் தலைவனாக இருந்தான். கருவூர்க் கலிங்கத்தார் கலிங்க நாட்டில் (ஒரிசா தேசம்) சென்று நெடுங்காலந் தங்கி யிருந்து மீண்டும் கருவூருக்கு வந்து வாழ்ந்திருந்தவர் இவர் என்பது இவருடைய பெயரிலிருந்து அறிகிறோம். (கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லிருந்தே தமிழ் வாணிகர் கலிங்க நாட்டுக்குச் சென்று அங்கு வாணிகஞ் செய்துவந்தனர் என்பதைக் கலிங்கநாட்டில் காரவேலன் என்னும் அரசன் ஹத்திகும்பா குகையில் எழுதியுள்ள சாசனத்திலிருந்து அறிகிறோம்.) கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த இவர் வாணிகத்தின் பொருட்டுக் கலிங்க நாடு சென்றிருந்தார் போலும். பாலைத் திணையைப் பாடிய இவருடைய செய்யுள் ஒன்று அகம் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. கருவூர் கிழார் இவர் இருந்த ஊரின் பெயரே இவருடைய பெயராக அமைந் திருக்கிறது. இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 170ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. கருவூர்க் கோசனார் கோசர் என்பது ஒரு இனத்தவரின் பெயர். சங்ககாலத்தில் கோசர், போர் வீரர்களாகவும், அரச ஊழியர்களாகவும் தமிழகமெங்கும் பரவி யிருந்தார்கள். கொங்கு நாட்டில் இருந்த கொங்கிளங் கோசர், சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு விழாச் செய்தது போலவே, இவர்களும் கொங்கு நாட்டில் பத்தினித் தெய்வத்துக்கு விழாச் செய்தார்கள் என்று சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். கோயம்புத்தூர் என்பது கோசர் (கோசர் - கோயர்) என்னும் பெயரினால் ஏற்பட்ட பெயர். கோசர் இனத்தைச் சேர்ந்த இந்தப் புலவர் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்தபடியால் கருவூர்க் கோசனார் என்று பெயர் பெற்றார். பாலைத் திணையைப் பாடிய இவருடைய செய்யுள் ஒன்று நற்றிணையில் (214) தொகுக்கப்பட்டிருக்கிறது. கருவூர் சேரமான் சாத்தன் சாத்தன் என்னும் பெயருள்ள இவர் சேரமன்னர் குலத்தைச் சேர்ந்தவர். இவர் இருந்த கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர் என்று தோன்றுகிறது. இவருடைய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 268 ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. கருவூர் நன்மார்பனார் நன்மார்பன் என்னும் பெயருள்ள இப்புலவர் கருவூரில் வாழ்ந்தவர். இவருடைய வரலாறு தெரியவில்லை. இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 277ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. வெயிற்காலத்தில் செந்நிறமாக மலர்கிற (கலியாண) முருக்க மலர்க்கொத்து, சேவற்கோழி வேறு சேவலுடன் போர் செய்யும் போது சிலிர்த்துக்கொள்ளும் கழுத்து இறகு போல இருக்கிறது என்று இவர் உவமை கூறியிருப்பது மிகப் பொருத்தமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. “அழலகைந் தன்ன காமர் துதை மயிர் மனையுறை கோழி மறனுடைச் சேவல் போர்புரி எருத்தம் போலக் கஞலிய பொங்கழல் முருக்கின் ஒண்குரல்” (அகம் 277 : 14 - 17) கருவூர்ப் பவுத்திரனார் பவுத்திரன் என்பது இவருடைய பெயர். இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 162ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக் கிறது. பசுக்கூட்டம் ஊருக்குத் திரும்பி வருகிற மாலை வேளையில் முல்லை முகைகள் பூக்குந் தருவாயிலிருப்பதைக் கண்டு தலைமகன் கூறியதாக அமைந்த இந்தச் செய்யுள் படிப்பதற்கு இன்பமாக இருக்கிறது. கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பேய், பூதம், சாத்தன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மக்களுக்குப் பெயராக வழங்கப்பட்டன. பேய், பூதம் என்னும் பெயர்கள் அந்தக் காலத்தில் தெய்வம் என்னும் பொருளில் உயர்வாக மதிக்கப்பட்டன. பிற்காலத்திலுங்கூட இப்பெயர்கள் வழங்கப்பட்டன. பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. மிகப் பிற்காலத்தில், பேய் பூதம் என்னும் பெயர்கள் சிறப்பான உயர்ந்த பொருளை இழந்து தாழ்வான பொருளைப் பெற்றன. கொங்கு நாட்டுக் கருவூரில் பூதம் என்னுந் தெய்வத்துக்குக் கோயில் இருந்தது. இந்தப் புலவருக்கு அந்தத் தெய்வத்தின் பெயரை இட்டனர் போலும். கருவூர்ப் பூதஞ் சாத்தனார் இயற்றிய செய்யுள் ஒன்று அகநானூற்றில் ஐம்பதாம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனாதனார் இவர் கருவூரில் பெருஞ்சதுக்கம் என்னும் இடத்தில் இருந்தவர் என்று தோன்றுகிறார். இவருடைய பெயர் பூதன் ஆதன் என்பது. இவருடைய வரலாறு தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிலிருந்து (பட்டினி நோன்பிருந்து) உயிர்விட்டபோது அவன் மீது இவர் கையறுநிலை பாடினார். அந்தச் செய்யுள் புறநானூற்றில் 219 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. கொல்லிக் கண்ணனார் கண்ணன் என்பது இவருடைய பெயர். கொல்லி என்பது இவருடைய ஊர்ப்பெயர். கொல்லி என்னும் ஊரும் கொல்லி மலைகளும் கொல்லிக் கூற்றத்தில் இருந்தன. ஓரி என்னும் அரசன் கொல்லிக் கூற்றத்தை யரசாண்டான் என்றும் பெருஞ்சேரல் இரும்பொறை அவனை வென்று அவனுடைய நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்றும் அறிந்தோம். கொல்லிக் கண்ணனார், கொல்லிக் கூற்றத்துக் கொல்லி என்னும் ஊரிலிருந்தவர் என்பது தெரிகிறது. இந்தப் புலவரைப் பற்றிய வரலாறு ஒன்றுந் தெரிய வில்லை. இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 34ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. மருதத்திணையைப் பற்றிய இந்தச் செய்யுளில் ‘குட்டுவன் மாந்தை’யைக் கூறுகிறார். மாந்தை என்பது கொங்குச் சேரருக்குரிய மேற்குக் கரையிலிருந்த துறைமுகப்பட்டினம். குட்டுவன் என்னும் பெயருள்ள அரசர் பலர் இருந்தனர். அவர்களில் இவர் கூறுகிற குட்டுவன் யார் என்பது தெரியவில்லை. சேரமான் கணைக்காலிரும்பொறை கொங்கு நாட்டையாண்ட இவன் கொங்குச் சேரரின் கடைசி அரசன் என்று கருதப்படுகிறான். இவன் புலவனாகவும் திகழ்ந்தான். இவன் பாடிய செய்யுள் புறநானூற்றில் 74ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. அந்தச் செய்யுளை இவனுடைய வரலாற்றுப் பகுதியில் காண்க. பாலை பாடிய பெருங்கடுங்கோ சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் இவரைக் கூறுவர். கொங்கு நாட்டுச் சேரர்களில் கடுங்கோ என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர். செல்வக்கடுங்கோ (வாழியாதன்), மாந்தரன் பொறையன் கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங் கடுங்கோ என்று சிலர் இருந்தனர். கடுங்கோ என்பது இவருடைய பெயர். இவருக்குப்பிறகு இளங்கடுங்கோ ஒருவர் இருந்தார். பாலைத் திணையைப் பற்றிய செய்யுட்களைப் பாடினபடியால் இந்தச் சிறப்பையுஞ் சேர்த்துப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று பெயர் பெற்றார். கொங்கு நாட்டைச் சேர்ந்த புகழூர் ஆறுநாட்டார் மலையில் உள்ள இரண்டு பழைய பிராமிக்கல்வெட்டெழுத்துக்கள் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோக்களைக் கூறுகின்றன. ‘அமணன் ஆற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்’ என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம். இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற பெருங்கடுங்கோன், பாலை பாடிய பெருங்கடுங்கோவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால், இவருடைய தந்தை, கோஆதன் சேரலிரும்பொறை யாவான். கோஆதன் சேரலிரும்பொறையின் மகன் பெருங்கடுங் கோனுக்கு இளங்கடுங்கோ என்று பெயருள்ள ஒரு மகன் இருந்தான் என்பதை இந்தக் கல்வெட்டு எழுத்தினால் அறிகிறோம். இந்த இளங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங்கோவும் ஒருவராக இருக்கலாமோ? பாலை பாடிய பெருங்கடுங்கோவின் அறுபத்தெட்டுச் செய்யுட்கள் சங்கத் தொகைநூல்களில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அக நானூற்றில் பன்னிரண்டும் (அகம். 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379), கலித்தொகையில் முப்பந்தைந்தும் (பாலைக்கலி முழுவதும்), குறுந் தொகையில் பத்தும் (குறுந். 16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398), புறநானூற்றில் ஒன்றும் (புறம். 282), நற்றிணையில் பத்தும் (நற். 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391) ஆக அறுபத்தெட்டுச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவருடைய செய்யுட்கள் அழகும் இனிமை யும் பொருள் செறிவும் சொற்செறிவும் உடையவை. இவர் காட்டும் உவமைகளும் உலகியல் உண்மைகளும் அறிந்து மகிழத் தக்கவை. “அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும்.” (அகம். 155:1-3) என்று இவர் கூறியது என்றும் மாறாத உலகியல் உண்மையாகும். “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை யிரவினும் இளிவெனச் சொல்லிய வன்மைத் தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி” (குறுந். 283: 1-4) இது எல்லோரும் கொள்ளவேண்டிய பொன்மொழி யன்றோ? திருவிழாவின்போது உயரமான கம்பத்தில் இராத்திரியில் பல விளக்குகளை ஏற்றிவைப்பது அக்காலத்து வழக்கம். இந்தக் கம்ப விளக்கை, மலைமேல் வளர்ந்த இலையுயர்ந்த இலவ மரம் செந்நிறப் பூக்களுடன் திகழ்வது போல இருக்கிறது என்று உவமை கூறியிருப்பது இயற்கையான உண்மையைத் தெரிவிக்கின்றது. “அருவி யான்ற வுயர்சிமை மருங்கில் பெருவிழா விளக்கம் போலப் பலவுடன் இலையில மலர்ந்த இலவம்” (அகம். 185: 10- 12) நம்பியும் நங்கையும் காதலரானார்கள். நங்கை நம்பியுடன் புறப்பட்டு அவனுடைய ஊருக்குப் போய்விட்டாள். அவள் போய்விட்டதை யறிந்த செவிலித்தாய் அவளைத் தேடிப் பின் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. தொடர்ந்து நெடுந்தூரஞ் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. ஆனால், துறவிகள் சிலர், அவ்வழியாக வந்தவர் எதிர்ப்பட்டனர். அவர்களை அவ்வன்னை ‘நம்பியும் நங்கையும் போவதை வழியில் கண்டீர்களோ’ என்று வினவினாள். அவர்கள், நங்கையின் அன்னை இவள் என்பதையறிந்தனர். அவர்கள் அன்னைக்குக் கூறினார்கள்: ‘ஆம், கண்டோம். நீர் மனம் வருத்த வேண்டா. நங்கை நம்பியுடன் கூடி வாழ்வதுதான் உலகியல் அறம். அந்த நங்கை நம்பிக்குப் பயன்படுவாளே தவிர உமக்குப் பயன்படாள். மலையில் வளர்ந்த சந்தனமரம் மலைக்குப் பயன்படாது: கடலில் உண்டாகும் முத்து கடலுக்குப் பயன்படாது; யாழில் உண்டாகிற இன்னிசை வாசிப்பவருக் கல்லாமல் யாழுக்குப் பயன்படாது. உம்முடைய மகளும் உமக்கு அப்படித்தான்’ என்று கூறி அன்னையின் கவலையைப் போக்கினார்கள் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ உலகியல் அறத்தை அழகும் இனிமையும் உண்மையும் விளங்கக் கூறுகிறார். அவை: “புலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.” இவ்வாறு பாலை பாடிய பெருங்கடுங்கோவின் செய்யுட்களில் பல உண்மைகளையும் அழகுகளையும் இனிமையையும் கண்டு மகிழலாம். இவர் போர் செய்திருக்கிறார் என்றும் அப்போரில் வெற்றி பெற்றிருக் கிறார் என்றும் பேய்மகள் இளவெயினியார் இவர்மேல் பாடிய செய்யுளினால் அறிகிறோம். பேய்மகள் இளவெயினி பேய் என்பது இவருடைய பெயர். பேய், பூதம் என்னும் பெயர்கள் சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் தெய்வங்களின் பெயராக வழங்கி வந்தன. பேயாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. எயினி என்பதனாலே இவர் எயினர் (வேடர்) குலத்துப் பெண்மணி என்று தெரிகிறார். இவர் சிறந்த புலவர். பெரும்புலவரும் அரசருமாக இருந்த பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடி இவர் அவரிடம் பரிசு பெற்றார். இவர் பாடிய பாடல் புறநானூறு 11ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுளில் இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோவை, “விண்பொரு புகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப்புடைய அரண் கடந்து துப்புறுவர் புறம்பெற்றிசினே” என்று கூறுகிறார். இவரும் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் கொங்கு நாட்டில் சமகாலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது. பொன்முடியார் கொங்கு நாட்டுப் புலவராகிய இவர் சேலம் மாவட்டத்துத் தகடூர் நாட்டைச் சேர்ந்த பொன்முடி என்னும் ஊரினர். இவ்வூர்ப் பெயரே இவருக்குப் பெயராக வழங்கியது. இவருடைய சொந்தப் பெயர் தெரிய வில்லை. இவரைப் பெண்பாற் புலவர் என்று சிலர் கருதுவது தவறு. அதிகமான் நெடுமான் அஞ்சியின் தகடூர்க் கோட்டையைப் பெருஞ் சேரல் இரும்பொறை முற்றுகையிட்டுப் போர் செய்த காலத்தில் பொன் முடியார் அந்தப் போர்க்களத்தை நேரில் கண்டவர். அரிசில்கிழார் என்னும் புலவரும் அந்தப் போர் நிகழ்ச்சிகளை நேரில் கண்டவர். இவர்கள் காலத்திலே, அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஒளவையாரும் இருந்தார். எனவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தில் இருந்தவர்கள். பொன்முடியாரின் வரலாறு தெரிய வில்லை. இப்புலவருடைய பாடல்கள் புறநானூற்றிலும் தகடூர் யாத்திரையிலும் தொகுக்கப் பட்டுள்ளன. புறநானூறு 299, 310, 312ஆம் பாட்டுகள் இவர் பாடியவை. இவை முறையே குதிரைமறம், நூழிலாட்டு, மூதின்முல்லை என்னுந் துறைகளைக் கூறுகின்றன. இவர் பாடிய “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று தொடங்கும் மூதின்முல்லைத் துறைச் செய்யுள் (புறம். 312) பலரும் அறிந்ததே. தகடூர்ப் போர் நிகழ்ச்சியைக் கூறுகிற தகடூர் யாத்திரை என்னும் நூலில் பொன்முடியாரின் பாட்டுகளும் தொகுக்கப் பட்டிருந்தன. ஆனால், அந்நூல் இப்போது மறைந்துபோன படியால் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. அந்த நூற் செய்யுட்கள் சில புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொன் முடியாருடைய செய்யுட்கள் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ என்னுந் தொடக்கத்து 8ஆம் சூத்திரத்தில் ‘வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமையானும்’ என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார், ‘கார்த்தரும்’ எனத் தொடங்கும் பாட்டை மேற்கோள் காட்டி (புறத்திரட்டு 1369ஆம் செய்யுள்) “இது பொன்முடியார் ஆங்கவனைக் (?) கண்டு கூறியது” என்று எழுதியுள்ளார். புறத்திணையியலில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ எனத் தொடங்கும் 12ஆம் சூத்திரத்தின் ‘தொல் எயிற்கு இவர்தலும் என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் (பக்கம் 11 - 12) ‘மறனுடைய மறவர்’ என்று தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி ‘இது பொன்முடியார் பாட்டு என்று எழுதுகிறார். மேற்படி சூத்திரத்தின் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் ‘கலையெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி “இது சேரமான் (பெருஞ்சேரல் இரும் பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படை பட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறிய விளக்கம்” என்று கூறியுள்ளார். மேற்படி சூத்திரம் ‘உடன்றோர் வருபகை பேணார் ஆர்எயில் உளப்பட’ என்னும் அடிக்கு உரை எழுதியவர் “இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது’ என்று விளக்கங் கூறுகிறார். பொன்முடியாரின் செய்யுட்கள் இவ்வளவுதான் கிடைத்திருக் கின்றன. இவர் பாடியவை எல்லாம் புறத்துறை பற்றிய செய்யுட்களே. பெருந்தலைச் சாத்தனார் இவர்ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனா ரென்றும் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்றுங் கூறப்படுகிறார். இவருடைய பெயர்க் காரணத்தைப் பற்றிப் “பெரிய தலையையுடையராதலிற் பெருந்தலைச் சாத்தனார் எனப்பட்டார் போலும்” என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் நற்றிணை பாடினோர் வரலாற்றில் எழுதுகிறார். இது ஏற்கத்தக்கதன்று. சாத்தனார் என்னும் பெயருள்ள இப்புலவர் பெருந்தலை என்னுமூரில் இருந்தது பற்றிப் பெருந்தலைச்சாத்தனார் என்று பெயர் பெற்றார் என்று கருதுவது பொருத்தமானது. கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிப் பாளையம் தாலுகாவில் பெருந்தலையூர் என்னுமூர் இருக்கிறது. இப்புலவர் அவ்வூரினராக இருக்கலாம். பெருந்தலையூர்ச் சாத்தானார் என்பது சுருங்கிப் பெருந்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பட்டது. அகநானூற்றில் 13, 224ஆம் செய்யுள்கள் இவர் பாடியவை. அகம் 13ஆம் செய்யுளில் ‘தென்னவன் மறவனாகிய கோடைப் பொருநன்’ என்பவனைக் குறிப்பிடுகிறார். இவன் பாண்டியனுடைய சேனைத் தலைவன் என்பதும் கோடைக்கானல் மலைப்பகுதியை இவன் ஆண்டான் என்பதும் தெரிகின்றன. நற்றிணை 262ஆம் செய்யுளும் இவர் பாடியதே. இவர் பாடிய ஆறு செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. புறம் 151ஆம் செய்யுளின் கீழ்க்குறிப்பு, “இளங்கண்டீரக் கோவும் இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீரக்கோவைப் புல்லி இளவிச்சிக்கோவைப் புல்லாராக, என்னை என் செயப் புல்லீராயினீரென, அவர் பாடியது” என்று கூறுகிறது. கண்டீரக்கோ, விச்சிக்கோ என்பவர்கள் கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள். கொங்கு நாட்டுக் குதிரை மலை நாட்டை யரசாண்ட குமணனை அவன் தம்பி காட்டுக்கு ஓட்டிவிட்டுத் தான் அரசாண்டான். வறுமையினால் துன்புற்ற பெருந்தலைச் சாத்தனார் காட்டுக்குச் சென்று அங்கிருந்த குமணனைப் பாடினார் (புறம். 164). இச் செய்யுளில் இவருடைய வறுமைத் துன்பம் பெரிதும் இரங்கத்தக்கதாக உள்ளது. அப்போது குமணன் என் தலையை வெட்டிக் கொண்டுபோய் என் தம்பியிடங் கொடுத்தால் அவன் உமக்குப் பொருள் தருவான் என்று கூறித் தன்னுடைய போர் வாளைப் புலவருக்குக் கொடுத்தான். அந்த வாளைப் பெற்றுக் கொண்ட புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் கொடுத்த வாளைக் காட்டிப் புறம் 165ஆம் செய்யுளைப் பாடினார். கோடைமலைப் பொருநனாகிய கடிய நெடுவேட்டுவனைப் பாடியுள்ளார் (புறம் 205). இவனை இவர் தம்முடைய அகம் 13 ஆம் செய்யுளில் குறிப்பிட்டுள்ளதை முன்னமே கூறினோம். மூவன் என்பவனிடம் சென்று பரிசில் பெறுவதற்குப் புறம் 209ஆம் செய்யுளைப் பாடினார். புறம் 294ஆம் செய்யுளில் ஒரு போர் வீரனுடைய தானைமறத்தைப் பாடியுள்ளார். மருதம் பாடிய இளங்கடுங்கோ இவர் பெயர் கடுங்கோ என்பது. பெருங்கடுங்கோ என்று ஒருவர் இருந்தது பற்றி இவர் இளங்கடுங்கோ என்று பெயர் பெற்றார். மருதத் திணை பற்றிய செய்யுள்களைப் பாடினபடியால் மருதம் பாடிய இளங் கடுங்கோ என்று இவர் அழைக்கப் பெற்றார். பாலை பாடிய பெருங் கடுங்கோவின் மகனாக இவர் இருக்கக்கூடுமோ? அல்லது தம்பியாக இருக்கக்கூடுமோ? (பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னுந்தலைப்புக் காண்க.). இவர் கொங்கு நாட்டிலிருந்த அரசர் மரபைச் சேர்ந்த புலவர். இவர் பாடிய செய்யுட்கள் அகநானூற்றில் இரண்டும் (அகம். 96, 176) நற்றிணையில் ஒன்றும் (நற். 50) தொகுக்கப்பட்டுள்ளன. பாலை பாடிய பெருங்கடுங்கோ, அவரைப் பாடிய பேய்மகள் இளவெயினி ஆகிய இவர்கள்காலத்தில் இப்புலவர் இருந்தார். அவர்களுக்கு இவர் வயதில் இளைஞர். *** 18. கொங்கு நாட்டுச் சங்க நூல்கள் பதிற்றுப்பத்து கடைச்சங்க காலத்து நூல்களில் பதிற்றுப்பத்தும் ஒன்று. இதில் சேர நாட்டுச் சேர அரசர்கள் அறுவரும் கொங்கு நாட்டுச் சேர அரசர் நால்வரும் பாடப்பட்டுள்ளனர். ஆகையால், இந்நூலின் பிற்பகுதி கொங்கு நாட்டுப் பொறையரைப் பற்றியது. இவற்றில் ஏழாம் பத்து, கொங்கு நாட்டை யரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் பாடியது. இதற்குக் கபிலர் நூறாயிரம் (ஒரு லட்சம்) காணம் பரிசாகப் பெற்றார்., மற்றும், கொங்கு நாட்டிலுள்ள நன்றா (இப்போது திருநணா?) என்னும் மலை மேலிருந்து கண்ணுக்குத் தெரிந்த நாடுகளின் வருவாயை இவ்வரசன் கபிலருக்குக் கொடுத்தான் என்று 7ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்புக் கூறுகிறது. பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மேல் அரிசில்கிழார் பாடியது., இதற்காக இவர் பெற்ற பரிசு ஒன்பது நூறாயிரம் (ஒன்பது இலட்சம்) காணமும் அமைச்சுப் பதவியுமாம். தகடூர்ப் போர் நடந்தபோது அரிசில்கிழார் போர்க்களத்தில் இருந்து அப்போரை நேரில் கண்டவர். அக்காலத்தில் இவர் பாடிய செய்யுட்கள் தகடூர் யாத்திரை என்னும் நூலில் தொகுக்கப் பட்டிருந்தன. பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து, இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது. இதற்கு இவர் 32 ஆயிரம் காணமும் ஊரும் மனையும் நிலங்களும் பரிசாகப் பெற்றார் என்று பதிகச் செய்யுளின் அடிக்குறிப்புக் கூறுகிறது. பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்து இப்போது மறைந்து விட்டது. இது சேரமான் (யானைக்கட்சேய்) மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது என்று கருதப்படுகிறது. இப்படிக் கருதுவதற்குக் காரணம் புறநானூறு 53 ஆம் செய்யுள், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை விளங்கில் என்னும் ஊரில் பகைவருடன் போர் செய்து வென்றான். அப்போது அவன் தன்னைப் பாடுவதற்கு இக்காலத்தில் கபிலர் இல்லையே என்று கவலையடைந்தான். (இவனுடைய பாட்டனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனை 7ஆம் பத்தில் பாடிய கபிலர் முன்னமே இறந்து போனார்.) அரசன் கவலைப்படுவதை அறிந்த பொருந்தில் இளங் கீரனார் கபிலரைப் போன்று உம்மை நான் பாடுவேன் என்று கூறினார். “செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயின் நன்றுமன் என்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவல் மன்னாற் பகைவரைக் கடப்பே” (புறம். 53: 11-15) இவ்வாறு இந்தப் புலவர் பாடியிருக்கிறபடியால் இவரே இவ்வரசன் மேல் பத்தாம் பத்துப் பாடியிருக்கலாம் என்று கருதுவது தவறாகாது. பதிற்றுப்பத்தில் 7, 8, 9, 10ஆம் பத்துகள் கொங்குச் சேரர் மேல் பாடப்பட்டவை என்பதும், ஆகவே அவை கொங்கு நாட்டு இலக்கியம் என்பதும் தெரிகின்றன. பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் வெறும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் மட்டுமன்று. இச்செய்யுட்கள் இசையுடன் பாடப்பட்டன என்பது தெரிகிறது. ஒவ்வொரு செய்யுளின் அடிக்குறிப்புகளிலிருந்து இதனை யறிகிறோம். ஆகவே, புலவர்கள் இயற்றின இந்தச் செய்யுட்களை அந்தந்த அரசர் முன்னிலையில் பாடியபோது பாணரைக் கொண்டு இசையுடன் பாடப்பட்டன என்பது தெரிகிறது. ஒவ்வொரு செய்யுளின் அடியிலும் துறை, தூக்கு, வண்ணம் என்னும் தலைப்பில் இசைக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. துறை என்பதில் காட்சி, வாழ்த்து, செந்துறைப் பாடாண்பாட்டு, பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு வஞ்சித் துறை பாடாண்பாட்டு முதலான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. தூக்கு என்பதில் செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் என்று தூக்கு (தூக்கு - தாளம்) குறிப்பிடப்பட்டுள்ளன. வண்ணம் என்பதில் ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணம் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இசைத்தமிழைப் பற்றிய குறிப்புகள். தகடூர் யாத்திரை கொங்கு நாட்டில் தகடூரை அரசாண்டவர் அதிகமான் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் என்றும் அவர்கள் தகடூரைச் சூழ்ந்து கோட்டை மதிலைக் கட்டி அரண் அமைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கொங்கு நாட்டின் தென் பகுதிகளை அரசாண்ட பெருஞ்சேரலிரும்பொறை, தன் காலத்திலிருந்த அதிகமான் நெடுமான் அஞ்சியின் மேல் படை யெடுத்துச் சென்று தகடூரை முற்றுகையிட்டுப் போர் செய்தான் என்றும் அந்தப் போர் பலகாலம் நடந்து கடைசியில் பெருஞ்சேரலிரும்பொறை அதைக் கைப்பற்றினான் என்றும் கூறினோம். அந்தத் தகடூர்ப் போரைப் பற்றி ஒரு நூல் அக்காலத்திலேயே செய்யப்பட்டிருந்தது. அது சிலப்பதிகாரத்துக்கு முன்னரே இயற்றப்பட்ட நூல் என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. அதுதான் தகடூர் யாத்திரை என்னும் நூல். அக்காலத்தில் அரசர்கள் போர்செய்யும்போது புலவர்களும் போர்க்களத்துக்குச் சென்று எந்தெந்த வீரன் எந்தெந்த விதமாகப் போர் செய்கிறான் என்பதை நேரில் கண்டு அவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவது அக்காலத்து வழக்கமாக இருந்தது. தகடூர்ப் போரிலும் சில புலவர்கள் போர்க்களஞ் சென்று போர்ச் செயலைக் கண்டு பாடினார்கள். அவர்கள் பாடிய அந்தப் பாடல்களின் தொகுப்புதான் தகடூர் யாத்திரை என்னும் நூல். இப்போது நூல் முழுவதும் கிடைக்காதபடியால் அந் நூலில் எந்தெந்தப் புலவர்களின் செய்யுள்கள் இருந்தன என்பது இப்போது தெரியவில்லை. ஆனால், பொன்முடியார், அரிசில்கிழார் என்னும் புலவர்களின் செய்யுள்களும் அந்நூலில் இருந்தன என்பது திண்ணமாகத் தெரிகிறது. சரித்திரச் செய்தியைக் கூறுகிற தகடூர் யாத்திரை இப்போது மறைந்து விட்டது. அந்நூலின் சில செய்யுட்கள் மட்டுமே இப்போது கிடைத் துள்ளன. இந்நூல் சென்ற 19ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் இருந்தது. பிறகு, இந்தச் சுவடி மறைந்து போயிற்று. இதுபற்றி டாக்டர் உ.வே.சாமி நாதையர் என் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார். “அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியி லிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை ... ... பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியதுபோது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல இந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.” கொங்கு நாட்டு அரசர்கள் இருவர் நடத்திய போரைக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நூல். இதில் அக்காலத்தி லிருந்த புலவர்கள் இந்தப் போரைப் பற்றிப் பாடிய செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருந்தன. எனவே, இந்த நூல் கொங்கு நாட்டில் உண்டான நூல்களில் ஒன்றாகும். இந்நூலைத் தொகுத்தவர் யார், தொகுப்பித்தவர் யார் என்பதும் தெரியவில்லை. நூலே மறைந்துவிட்டபோது இச்செய்திகளை எவ்வாறு அறியமுடியும்? மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில், தகடூர் யாத்திரை என்னுந் தலைப்பில் இந்நூலைப் பற்றிய ஏனைய விஷயங்களை அறியலாம். ஐங்குறுநூறு ஐங்குறுநூறு, எட்டுத்தொகை நூல்களில் மூன்றாவது தொகை நூல். அகவற் பாக்களினால் அமைந்த இந்நூல் மிகக் குறைந்த அடிகளைக் கொண்டது. மூன்று அடிச் சிற்றெல்லையையும் ஆறடிப் பேரெல்லையையுங் கொண்டது. ஐந்து அகப் பொருள் துறைகளைப் பற்றிக் கூறுகிறது. இக்காரணங்களினாலே இந்நூல் ஐங்குறுநூறு என்று பெயர் பெற்றுள்ளது. ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதல் ஆந்தையார், பேயனார் என்னும் ஐந்து புலவர்கள் இந்நூற் செய்யுள்களைப் பாடியவர்கள். “மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன், கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே, நூலையோ தைங்குறு நூறு.” என்னும் பழைய செய்யுளால் இதனையறியலாம். இந்த நூலைத் தொகுப்பித்தவர், கொங்கு நாட்டையரசாண்ட யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. தொகுத்தவர் இவ்வரசனால் ஆதரிக்கப்பெற்றவராகிய புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். புலவர் கூடலூர்கிழார், இவ்வரசன் இறந்த பிறகும் வாழ்ந்திருந்தார். இவ்வரசன். இறந்தபோது இவன்மேல் கையறுநிலை பாடினார் (புறம். 229). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது” எள்று கூறுகிறது. ஐங்குறுநூறுக்குப் பிற்காலத்திலே கடவுள் வாழ்த்துப் பாடியவர், பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தப் பெருந்தேவனாரே ஏனைய தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடினார். ஐங்குறுநூற்றுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அந்த உரையாசிரியரின் பெயர் தெரியவில்லை. இந்நூல் 1903ஆம் ஆண்டில் முதல்முதலாக அச்சுப் புத்தகமாக வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் அவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்தாரும் திருமலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்களும் ஜே.எம். வேலுப்பிள்ளையவர்களும் ஆழ்வார் திருநகரி தே. இலக்குமணக் கவிராயர் அவர்களும் தங்களுடைய கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து இந்நூலைப் பதிப்பிக்க உதவி செய்தனர். இந்நூல் மருதத்திணை, வேட்கைப் பத்து, வேழப்பத்து, கள்வன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப்பத்து, தோழிகூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது. நெய்தல்திணை, தாய்க்குரைத்த பத்து, தோழிக்குரைத்த பத்து, கிழவற்குரைத்த பத்து, பாணற்குரைத்த பத்து, ஞாழற் பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, சிறுவெண் காக்கைப் பத்து, தொண்டிப் பத்து, நெய்தற் பத்து, வளைப்பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது. குறிஞ்சித்திணை, அன்னாய் வாழிப் பத்து, அன்னாய்ப் பத்து, அம்மவாழிப்பத்து, தெய்யோப் பத்து, வெறிப்பத்து, குன்றக் குறவன் பத்து, கேழற் பத்து, குரக்குப் பத்து, கிள்ளைப் பத்து, மஞ்ஞைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது. பாலைத்திணை, செலவழுங்குவித்த பத்து, செலவுப் பத்து, இடைச்சுரப்பத்து, தலைவியிரங்கு பத்து, இளவேனிற்பத்து, வரவுரைத்த பத்து, முன்னிலைப் பத்து, மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து, உடன் போக்கின் கண் இடைச்சுரத்துரைத்த பத்து, மறுதரவுப் பத்து என்னும் பத்துப் பிரிவுகளையுடையது. முல்லைத்திணை, செவிலிகூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, விரவுப்பத்து, புறவு அணிப் பத்து, பாசறைப் பத்து, பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து என்னும் பத்துத் துறைகளைக் கொண்டுள்ளது. நெய்தற்றிணையில், கிழவற்குரைத்த பத்தில் 9ஆம் 10ஆம் செய்யுட்கள் மறைந்து போய்விட்டன. முல்லைத் திணையில் கிழவன் பருவம் பாராட்டுப் பத்தில் ஆறாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் தேர்வியங்கொண்ட பத்தின் பத்தாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் சில எழுத்துகள் மறைந்துள்ளன. ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர் எல்லோரும் கொங்கு நாட்டவர் அல்லர். கபிலர் மட்டுங் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்தவர். இந்நூலைத் தொகுத்த கூடலூர் கிழார், கொங்கு நாட்டுப் புலவர். *** 19. சங்க காலத்துத் தமிழெழுத்து கடைச்சங்க காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்தின் வரி வடிவம் எது என்பது இக்காலத்தில் ஒரு கேள்வியாக இருக்கிறது. தமிழகத்தில் பழங்காலத்தில் வழங்கி வந்தது வட்டெழுத்து தான் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கருதி வந்தனர். அக்காலத்தில் பிராமி எழுத்து தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட வில்லை. பிறகு, பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பாண்டி நாடு, புதுக்கோட்டை, தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகிய நாடுகளில் மலைக்குகைகளில் கற்பாறைகளிலே பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையில்லாமல், அரிக்கமேடு, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் முதலிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது அவ்விடங்களில் கிடைத்த மட்பாண்டங்களிலும் பிராமி எழுத்துக்கள் காணப் பட்டன. இவ்வெழுத்துகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இந்தச் சான்றுகளைக் கொண்டு சிலர் சங்க காலத்தைக் கணக்கிடுகிறார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை யரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் வட இந்தியாவி லிருந்து பிராமி எழுத்தைப் பௌத்தப் பிக்குகள் தமிழகத்தில் கொண்டு வந்தார்கள் என்றும் இந்தப் பிராமி எழுத்து வந்த பிறகு இதைத் தமிழர் நூல் எழுதப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை என்றும் இப்போது ஒரு சிலர் கூறுகின்றனர். பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு இங்கு எழுத்தே கிடையாது என்பது இவர்கள் கூற்று இதுதவறான கருத்து. பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து வழங்கி வந்தது. அந்த எழுத்தினால் சங்க நூல்கள் எழுதப் பட்டன. பிராமி எழுத்தின் தோற்றத்தைப் பற்றி வெவ்வேறு அபிப் பிராயங்கள் கூறப்படுகின்றன. அசோகச் சக்கரவர்த்தி காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிராமி எழுத்து இருந்து வந்தது. ஆகவே, அசோகர் காலத்துக்கு முன்னமே தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வழங்கி வந்தது என்பது ஒரு கருத்து. பிராமி எழுத்து, தென் இந்தியாவில் தோன்றி வளர்ந்து பிறகு வடஇந்தியாவுக்குச் சென்றது என்பது இன்னொரு கருத்து. தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வருவதற்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து இருந்து வந்தது. பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வந்து வேரூன்றிய பிறகு பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்துவிட்டது என்பது வேறொரு கருத்து. பிராமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இல்லை என்பதற்குச் சான்று இல்லை. பிராமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கியிருக்க வேண்டும். வேறு வகையான எழுத்து இருந்ததா இல்லையா என்பதற்குச் சான்று வேண்டுமானால், சங்க காலத்திலே நடப்பட்ட நடுகற்களைக் (வீரகற்களைக்) கண்டுபிடிக்க வேண்டும். சங்ககாலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப் படவில்லை. சங்க காலத்து நடுகற்கள் போரில் இறந்துபோன வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்டவை. அந்த நடுகற்களில் இறந்த வீரனுடைய பெயரையும் சிறப்பையும் எழுதியிருந்தபடியால், அந்த நடுகற்களைக் கண்டுபிடித்தால், அவற்றில் எழுதப்பட்ட எழுத்து பிராமி எழுத்தா அல்லது வேறு வகையான எழுத்தா என்பது விளங்கிவிடும். ஆனால், அந்தக் காலத்து வீர கற்கள் இதுவரையில் ஒன்றேனும் கண்டு பிடிக்கப்படவில்லை. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற படியால், அக்காலத்து நடுகற்களிலும் பிராமி எழுத்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கருதக்கூடும். இப்போது தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பழைய பிராமி எழுத்துக்கள், பௌத்த, சமண முனிவர்கள் தங்கித் தவஞ்செய்வதற்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே எழுதப் பட்டவை. ஆனால், பௌத்த, சமணர் அல்லாத துறவிகள் மலைக்குகைகளில் தங்கித் தவஞ் செய்யவில்லை. பௌத்த, சமணர்களுக்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறபடியால் இவ்வெழுத்துக்களைப் பௌத்த மதத்தாரும் சமண மதத்தாரும் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும். பௌத்த, சமண மதத்தாரல்லாத அரசர் முதலியோர் அக் குகைகளைத் தானஞ் செய்திருந்தாலும், அவை வடநாட்டு மதங்களைச் சார்ந்த பௌத்த, சமணருக்காக அமைக்கப்பட்டபடியால் அவற்றில் பிராமி எழுத்தை எழுதியிருக்கவேண்டும். பௌத்த, சமணரல்லாத ஏனைய மதத்தாரும் நாட்டு மக்களும் அக்காலத்தில் பிராமியல்லாத ஏதோ ஓரு பழைய தமிழ் எழுத்தை வழங்கி இருக்கக்கூடும். இதன் உண்மையை யறிவதற்குத்தான் பழைய காலத்து நடுகற்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறுகிறோம். கடைச்சங்க காலத்துக்கு முன்னே, பிராமி எழுத்து வருவதற்கு முன்பு, ஏதோ ஒரு வகையான எழுத்து தமிழ்நாட்டில் வழங்கியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. பிராமி எழுத்து வந்த பிறகு தமிழர் புதிய பிராமி எழுத்தை ஏற்றுக்கொள்ளாமல் பழைய எழுத்தையே வழங்கியிருக்க வேண்டும். அப்போது பௌத்த, சமணர் பிராமியையும், மற்றத் தமிழர் பழைய தமிழ் எழுத்தையும் ஆக இரண்டெழுத்துக் களும் சிலகாலம் வழங்கியிருக்க வேண்டும். மிகப் பழைய காலத்தில் கால்டியா போன்ற தேசங்களில் சமய குருமார் எழுதிவந்த எழுத்து வேறாகவும் அதேசமயத்தில் பாமர மக்கள் எழுதிவந்த எழுத்து வேறாகவும் இருந்தது போல, கடைச்சங்க காலத் தமிழகத்திலும் (தொடக்கக் காலத்தில்) ஜைன, பௌத்த மதத்தவர் வழங்கின பிராமி எழுத்து வேறாகவும் மற்றவர் வழங்கின பழைய எழுத்து வேறாகவும் இருந்தன என்று தோன்றுகிறது. பௌத்த, சமண மதங்கள் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு அவர்கள் பள்ளிக் கூடங்களைத் தங்கள் பள்ளிகளில் அமைத்துப் பிள்ளை களுக்குக் கல்வி கற்பித்தபோது பிராமி எழுத்தைப் பிரசாரஞ் செய்தனர். பிராமி எழுத்து பிரசாரஞ் செய்யப்பட்ட பிறகு, பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்து போயிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எந்தக் கருத்தானாலும் உண்மை தெரிய வேண்டுமானால், முன்பு கூறியதுபோல, பழைய நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நூற்றுக் கணக்காக நடப்பட்ட சங்க காலத்து நடுகற்கள் பூமியில் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்தால் அவற்றில் எழுதப்பட்டுள்ள அக்காலத்து எழுத்தின் வரிவடிவம் நன்கு விளங்கும். இப்போது நமக்குத் தெரிந்திருக்கிற வரையில் பிராமி எழுத்தே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய எழுத்து என்பதில் ஐயமில்லை. பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டெழுத்துகள் கொங்கு நாட்டிலுங் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு ஆராய்வோம். *** 20. கொங்கு நாட்டுப் பிராமி எழுத்துச் சாசனங்கள் அரசலூர் கோயம்புத்தூர் மாவட்டத்து ஈரோடு தாலுகாவில் உள்ளது அரசலூர். இது ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தூரத்தி லிருக்கிறது. இங்குள்ள மலைக்கு நாகமலை என்றும் அரசலூர் மலை யென்றும் பெயர் உண்டு. இந்த மலையில் தரை மட்டத்திலிருந்து அறுபதடி உயரத்தில் ஆண்டிப்பாறை என்னுங் குகையும் அக்குகையில் கற்படுக் கைகளும் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளன. கல்வெட்டெழுத் துக்களில் ஒன்று பிராமி எழுத்து. மற்ற இரண்டு வட்டெழுத்து. இங்கு நம்முடைய ஆய்வுக்குரியது பிராமி எழுத்து மட்டுமே. இங்குக் கல்வெட்டெழுத்துக்கள் இருப்பதை 1961ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி, ஈரோடு புலவர் செ. இராசு மற்றுஞ் சில நண்பர்கள் சென்று கண்டு, இவ்வெழுத்துக்களைக் காகிதத்தில் மைப்படி எடுத்துச் சுதேசமித்திரன்,1 செந்தமிழ்ச் செல்வி பத்திரிக்கைகளில் வெளியிட்டு உலகத்துக்கு அறிமுகப் படுத்தினார்கள். இந்த விவரம் தெரிந்த பிறகு அரசாங்கத்து எபிகிராபி இலாகா இம்மலைக்குச் சென்று இந்தச் சாசனங்களைக் கண்டு 1961-62 ஆண்டு அறிக்கையில் வெளியிட்டது.2 இந்த இலாகாவின் 1961 - 62ஆம் ஆண்டின் 280-282 எண்களுள்ள சாசன எழுத்துகளாக இந்த கல்வெட்டெழுத்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. எபிகிராபி இலாகாவின் 1963-64ஆம் ஆண்டின் 4362-4364ஆம் எண்ணுள்ள போட்டோ (நிழற்பட) நெகிடிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தை (280 of 1961 - 62) ஆராய்வோம். இந்தப் பிராமி எழுத்துக்கள் இரண்டு வரிகளாக எழுதப்பட்டுள்ளன. முதல்வரியில் பதினான்கு எழுத்துகளும் இரண்டாவது வரியில் பதி மூன்று எழுத்துக்களும் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை எபிகிராபி இலாகா இவ்வாறு படித்திருக்கிறது: (அரசலூர் பிராமி எழுத்து) எழுத்துப் புணர்(ரு)த்தான் மா(லை)ய் வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இவ்வெழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்.3 ஏழு தானம் பண்வ (வி)த்தான் மணிய் வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன் மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் இந்த ஏழு படுக்கைகளைச் (ஆசனங்களை) செய்வித்தான் என்று இதற்கு இவர் விளக்கங் கூறுகிறார். இவர் ‘ஏழு படுக்கைகள்’ என்று கூறுவது தவறு. இக் குகையில் மூன்று படுக்கைகள் மட்டும் இருக்கின்றன. ஆகவே, இவர் ஏழு படுக்கைகள் என்று கூறுவது பிழைபடுகிறது. கல்வெட்டில் ‘எழுத்தும்’ என்னும் வாசகம் தெளிவாகத் தெரிகிறது. டி.வி. மகாவிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை வேறு விதமாக வாசித்துள்ளார்.4 சித்தம், தீர்த்தம் பூண தத்தான் மாளாய வண்ணக்கன் தேவன் சாத்தன் என்று இவர் படிக்கிறார். இந்தச் சாசன எழுத்துகளில் இரண்டாவது வரியின் வாசகம் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் யாருக்கும் யாதொரு ஐயமும். இல்லை. இதை எல்லோரும் கருத்து மாறுபாடு இல்லாமல் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். முதல் வரி எழுத்துக்களை வாசிப்பதில் மட்டும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசித்துள்ளனர். இதுபற்றி ஆய்ந்து பார்த்து இதன் சரியான வாசகம் இன்னதென்பதை நாம் காண்போம். முதல் வரியின் முதல் எழுத்து வட்டமாகவும் நடுவில் புள்ளி யுடனும் காணப்படுகிறது. இது ‘சித்தம்’ என்னும் மங்கலச் சொல்லின் குறியீடு என்று டி. வி. மகாலிங்கம் கருதுகிறார். சாசன எழுத்து இலாகா இதை எ என்று வாசித்திருக்கிறது. ஐ. மகாதேவன் அவர்கள் ஏ என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் கூறுவது போல இது ‘சித்தம்’ என்பதன் குறியீடு அன்று. பிராமி எழுத்து எ என்பதாகும். முக்கோண வடிவமாக வுள்ளது பிராமி எ என்னும் எழுத்து. அது கல்வெட்டில் வட்டமாகவும் சில சமயங்களில் எழுதப்படுகிறது. உதாரணமாக, மதுரைக்கு அடுத்துள்ள யானைமலைப் பிராமி எழுத்தில் எகர எழுத்து ஏறக்குறைய வட்டமாக எழுதப்பட்டிருப்பது காண்க. இந்த எழுத்து எகரம் என்பதில் ஐயமே யில்லை. ஐ. மகாதேவன் அவர்கள் இதை ஏ என்று வாசிப்பது சரியன்று. ஏனென்றால், இந்த எழுத்தின் உள்ளே ஒரு புள்ளி தெளிவாகக் காணப்படுகிறது. புள்ளியிருப்பதினாலே ஏகாரமன்று, எகரமே என்பது தெளிவாகத் தெரிகிறது. மெய்யெழுத்துகளும் எகர ஒகரக் குற்றெழுத் துகளும் புள்ளி பெறும் என்று இலக்கணம் கூறுகிறது. ஆகவே, அந்த இலக்கணப்படி இது ஏகாரம் அன்று, எகரமே என்பது திட்டமாகத் தெரிகின்றது. (புள்ளி பெற வேண்டிய எழுத்துகளுக்குப் பெரும்பாலும் புள்ளியிடாமலே ஏட்டுச்சுவடியிலும் செப்பேட்டிலும் கல்லிலும் எழுதுவது வழக்கம். அபூர்வமாகத்தான் புள்ளியிட்டெழுதப்படுகின்றன. இந்த எகர எழுத்துக்குப் புள்ளியிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.) அடுத்த இரண்டாவது எழுத்தைப் பார்ப்போம். இதை டி.வி. மகாலிங்கம் அவர்கள் தி என்று வாசிக்கிறார். இது ழு என்பது தெளிவு. சாசன எழுத்து இலாகாவும் ஐ. மகாதேவனும் இதை ழு என்றே சரியாக வாசித்திருக்கிறார்கள். முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தே எழு என்றாகிறது. இனி அடுத்த 3ஆவது 4ஆவது எழுத்துகளைப் பார்ப்போம். இவை த்து என்பவை. சாசன எழுத்து இலாகா த்து என்றே வாசித் திருக்கிறது. மகாலிங்கம் த்த என்று வாசிக்கிறார். ஐ. மகாதேவன் தாந என்று வாசிக்கிறார். இப்படி வாசிப்பதற்கு யாதொரு காரணமும் இல்லை. இவ்வெழுத்துக்கள் ‘த்து’ என்பதே. ஐந்தாவது எழுத்து ம அல்லது ம் என்பது. புள்ளியில்லை யானாலும் ம் என்றே வாசிக்கலாம். ஐ. மகாதேவனும் டி.வி. மகாலிங்கமும் ம் என்றே சரியாக வாசித்துள்ளனர். சாசன எழுத்து இலாகா இந்த எழுத்தை ப் என்று படித்திருக்கிறது. இவ்வெழுத்து ம் என்பதில் ஐயமில்லை. முதல் ஐந்து எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் எழுத்தும் என்றாகிறது. இனி அடுத்த ஆறு எழுத்துக்களைப் (6 முதல் 11 வரை) பார்ப்போம். 6ஆவது எழுத்து பு என்பது. 7ஆவது எழுத்து ண என்பது. 8ஆவது எழுத்து ரு என்பது. சாசன இலாகா இதை ர என்றும் ர் என்றும் வாசிக்கிறது. டி.வி. மகாலிங்கம் த என்றும், ஐ மகாதேவன் வ (வி) என்றும் வாசிக்கிறார்கள். இது பிராமி ரு என்பதில் ஐயமில்லை. ர் என்று இருக்க வேண்டிய இது ரு என்று எழுதப்பட்டிருக்கிறது. 9ஆம் பத்தாம் எழுத்துக்கள் த்தா என்பன. 11ஆவது எழுத்து ன் என்பது. இந்த எழுத்துக்களை ஒன்றாகச் சேர்த்தால் புணருத்தான் என்றாகிறது. ஐ. மகாதேவன் இவற்றைப் பண்வித்தான் என்றும் டி.வி. மகாலிங்கம் பூணதத்தான் என்றும் வாசிப்பது சரியாகத் தோன்றவில்லை. சாசன இலாகா படித்துள்ள புணர்த்தான் அல்லது புணருத்தான் என்பதே சரியென்று தெரிகிறது. ஆகவே, முதல் பதினொரு எழுத்துக்களைச் சேர்த்து வாசித்தால் எழுத்தும் புணர்த்தான் என்றாகிறது. இனி முதல் வரியில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களைப் பார்ப்போம். பன்னிரண்டாவது எழுத்து ம என்பது. இதற்கு அடுத்த (13ஆவது) எழுத்து சரியாக எழுதப்படாததால் பலவித ஊகங்களுக்கு இடமளிக்கிறது. எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு இது. இதை ணி என்று கொள்வதே பல விதத்திலும் பொருத்தமாகத் தோன்றுகிறது. இந்தச் சாசனத்தில் வேறு மூன்று ணகர எழுத்துக்கள் தெளிவாகப் பொறிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த ணி எழுத்தைக் கற்றச்சன் செம்மையாகப் பொறிக்காமல் விட்டுவிட்டான். கடைசி (14ஆவது) எழுத்து ய அல்லது ய் என்பது. இதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை. இந்த மூன்று எழுத்துக் களையும் சேர்த்து மணிய் என்று வாசிக்கலாம். இந்தப் பிராமி எழுத்தின் முழு வாசகமும் இவ்வாறு அமைகிறது: எழுத்தும் புணரு(ர்)த்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் (முனிவருக்கு இக்குகையைத் தானஞ் செய்தது மட்டும் அல்லாமல், இந்த எழுத்துக் களையும்) புணர்த்தினான் (எழுதினான், பொறித்தான்) என்பது இதன் கருத்து. விளக்கம்: மணிய் வண்ணக்கன் என்பது மணிக்கல் வண்ணக்கன் என்று பொருளுள்ளது. இகர, ஈற்றுச் சொல்லுடன் யகரமெய் சேர்த்து மணிய் என்று எழுதப்படுகிறது. இப்படி எழுதுவது அக்காலத்து வழக்கம். கொங்கு நாட்டில் விலையுயர்ந்த மணிக்கற்கள் அக்காலத்தில் அதிகமாகக் கிடைத்தன. வண்ணக்கன் என்பது பொன், வெள்ளி நாணயங்களின் பரிசோதனை என்னும் பொருள் உள்ள சொல். சங்க இலக்கியங்களில் சில வண்ணக்கர்கள் கூறப்படுகின்றனர். புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் என்னும் புலவர் நற்றிணை 294 ஆம் செய்யுளைப் பாடியவர். வடம வண்ணக்கன் தாமோதரனார் குறுந்தொகை 85 ஆம் செய்யுளைப் பாடியவர். வண்ணக்கன் சோருமருங்குமரனார் என்பவர் நற்றிணை 257ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். அரசலூர் மலைக் குகையில் தவஞ் செய்த முனிவருக்குக் கற்படுக்கையைத் தானஞ் செய்த தேவன் சாத்தன் மணிக்கல் வண்ணக்கன். மணிக்கல் வண்ணக்கனான தேவன் சாத்தன் இம்மலைக் குகையில் முனிவருக்கு இடங்களைத் தானஞ் செய்ததோடு இந்தச் சாசன எழுத்துக்களையும் பொறித்தான் என்பது இதன் கருத்தாகும். எழுத்தும் புணர்த்தான் என்பதிலுள்ள உம் என்னும் இடைச்சொல், இவனே சாசன எழுத்தையும் பொறித்தான் (எழுதினான்) என்பதைக் குறிக்கிறது. புகழியூர் (புகழூர்) திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. இந்த ஊர், திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் ஒரு நிலையமாக இருக்கிறது. புகழூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஆறுநாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்றுகளில், இயற்கையாக அமைந்துள்ள குகைகள் இருக்கின்றன. இக்குகைகளின் பாறையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. பிராமி எழுத்துக்கள் கி.பி. 300க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தபடியால் இவை கடைச்சங்க காலத்திலே எழுப்பப் பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடங்கள் கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளாக இருந்தவை. பௌத்த மத, ஜைன மதத் துறவிகள் ஊருக்கு அப்பால் மலைக் குகைகளில் இருந்து தவம் செய்வது அக்காலத்து வழக்கம். அவர்கள் படுப்பதற்காகக் கல்லிலேயே பாய் தலையணைபோல அமைத்துக் கொடுப்பது ஊரார் கடமையாக இருந்தது. அந்த முறையில் இந்தக் குகைகளிலே, கற்படுக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்குள்ள பிராமி எழுத்துக்கள் இந்தப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் களின் பெயரைக் கூறுகின்றன. ஆறு நாட்டார் மலையில் உள்ள பிராமி எழுத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் 1927- 28ஆம் ஆண்டின் 343ஆம் பதிவு எண்ணுள்ள எழுத்துக்கள் இவை (343 of 1927 - 28). இந்த எழுத்துக்கள் இரண்டு வரியாக எழுதப் பட்டுள்ளன. முதல் வரியில் பத்து எழுத்துக்களும், இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும் இருக்கின்றன. இந்தக் கல்லில் புள்ளிகளும் புரைசல்களும் இருப்பதனால் சில எழுத்துகள் செம்மையாகத் தெரியவில்லை. ஆனாலும், கூர்ந்து பார்த்து அவற்றைப் படிக்க இயலும் (படம் காண்க). திரு டி.வி மகாலிங்கம் இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்:5 ‘கருவூர் பொன் வாணிகள், நேர்த்தி அதிட்டானம்.’ இவ்வாறு படித்து, நேர்த்தி என்றால் நேர்ந்து கொள்ளுதல் (பிரார்த்தனை செய்துகொள்ளுதல்) என்று விளக்கங் கூறுகிறார். கருவூர் பொன் வாணிகள் நேர்ந்துகொண்டு அமைக்கப்பட்ட அதிஷ்டானம் என்று கருத்துத் தெரிவிக்கிறார். திரு. ஐரவாதம் மகாதேவன் இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்:6 கருவூர் பொன் வாணிகன், நத்தி அதிட்டானம் வாணிகன் நத்தி என்பதை வாணிகன் + அத்தி என்று பிரித்து, ‘கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்)’ என்று பொருள் கூறுகிறார். இவர்கள் ‘கருவூர் பொன் வாணிகன் ... ... அதிட்டானம்’ என்று வாசித்தது முழுவதும் சரியே. தவறு இல்லை. ஆனால், இரண்டாவது வரியின் முதல்மூன்று எழுத்துகளை வாசித்தலில் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்துகளில் கல் பொளிந்து எழுத்துகளின் சரியான உருவம் தெரியவில்லை. இக்காரணத் தினால் மகாலிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை நேர்த்தி என்று வாசிக்கிறார். மகாதேவன் அவர்கள் நத்தி என்று வாசிக்கிறார். இப்படிப் படிப்பது பொருத்தமாகத் தோன்ற வில்லை. இரண்டாவது வரியின் முதலெழுத்தை உற்று நோக்கினால் அது பொ என்று தோன்றுகிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துகளையும் சேர்த்து வாசித்தால் பொத்தி என்று படிக்கலாம். அதாவது கருவூர் பொன் வாணிகனுடைய பெயர் ‘பொத்தி’ என்பது. ஆகவே, இந்த எழுத்துகளின் முழு வாசகம் இது: கருவூர் பொன் வாணிகன் பொத்தி அதிட்டானம் கருவூரில் பொன் வாணிகம் செய்த பொத்தி என்பவர் இந்த அதிட் டானத்தை (முனிவர் இருக்கையை) அமைத்தார் என்பது இதன் கருத்து. இருக்கையை யமைத்தார் என்றால், குகையிலுள்ள பாறைகளைச் செப்பஞ் செய்து கற்படுக்கைகளை அமைத்தார் என்பது பொருள். விளக்கம்: கருவூர், கொங்கு நாட்டையரசாண்ட சேர அரசர்களுக்குச் சங்க காலத்தில் தலைநகரமாக இருந்தது என்பதை அறிவோம். அவ்வூர் அக் காலத்தில் பேர்போன வாணிகப் பட்டணமாக இருந்தது. இங்கு, கிரேக்க ரோமர்கள் (யவனர்கள்) வந்து வாணிகஞ் செய்தார்கள். இவ்வூரில் பொன் வாணிகஞ் செய்தவர்களில் ஒருவர் பெயர் பொத்தி என்பது. பொத்தன், பொத்தி என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. பொத்த குட்டன் என்னுந் தமிழன் ஒருவன் இலங்கை அநுராத புரத்திலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன், தான் விரும்பிய படியெல்லாம் இலங்கை மன்னர்களைச் சிம்மாசனம் ஏற்றினான் என்று மகாவம்சத்தின் பிற்பகுதியான சூலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. பொத்தி என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பொத்தியார் என்று கூறப்படுகிறார். அவர் இயற்றிய செய்யுட்கள் புறநானூற்றில் (புறம். 217, 220, 221, 222, 223) உள்ளன. எனவே, இந்த எழுத்துக்களில் காணப்படுகிற பொன் வாணிக னுடைய பெயர் பொத்தி என்பதில் ஐயமில்லை. மகாதேவன் நெத்தி என்று படிப்பது தவறு. நெத்தி என்னும் பெயர் இருந்ததாகச் சான்று இல்லை. டி.வி. மகாலிங்கம் நேர்த்தி என்று படிப்பதும் பொருத்தமாக இல்லை. அதிட்டானம் என்பது அதிஷ்டானம் என்னும் சொல்லின் தமிழாக்கம். இங்கு இது இந்தக் குகையைக் குறிக்கின்றது.  புகழூர்ச் சாசனம் இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவில் 1927 - 28ஆம் ஆண்டு தொகுப்பில் 346ஆம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரே வரியில் இருபத்தொரு பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பாறைக் கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதால் சில எழுத்துக்களின் சரியான வடிவம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது ஆனாலும் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் காணப்படுகிற பிராமி எழுத்துகளின் வரிவடிவம் இது. புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள். இதன் இப்போதைய எழுத்து வடிவம் இது: ந ள ளி வ ஊ ர ப பி ட ந தை ம க ன கீ ர ன கொ ற்ற ன இவ்வெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறாகிறது. நள்ளிவ் ஊர்ப் பிடந்தைமகன் கீரன் கொற்றன் திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு படிக்கிறார்: நாளாளபஊர் பிடந்தை மகன் கீரன்கொற்றன் இவ்வாறு படித்துப் பின்னர்க் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார். ஆதன் + தந்தை = ஆந்தை என்பது போல, பிடன் + தந்தை = பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டரான். தந்தை = பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன்.7 பிடன் தந்தை மகன் கீரன் கொற்றன் என்றும், நாளாளப ஊர் என்றும் இவர் கூறுவது சரியெனத் தோன்றவில்லை. திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு வாசிக்கிறார்: நல்லிய் ஊர்ஆ பிடந்தை மகள் கீரன்கொற்ற ... ... இவ்வாறு வாசித்த இவர் நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்) என்று விளக்கங் கூறுகிறார். மகள் என்பதை மக்கள் என்று கூறுகிறார்.8 திரு. மகாலிங்கம் நாளாளப ஊர் என்று படிப்பது தவறு. திரு. மகாதேவன் நல்லி ஊர் என்று படிப்பது ஓரளவு சரி. 7ஆவது எழுத்தை மகாலிங்கம் அடியோடு விட்டுவிட்டார். மகாதேவன் அவர்கள் அதைப் பிராமி அ என்று வாசித்துள்ளார். அது பிராமி ப் என்னும் எழுத்தாகும். மகாலிங்கம் மகன் என்று படிப்பது சரி. மகாதேவன் மகள் என்று வாசித்து மக்கள் என்று பொருள் கூறுவது சரியெனத் தோன்ற வில்லை. மகன் என்பதே சரியானது. கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று மகாலிங்கம் கூறுவது சரி. கீரன், கொற்றன் இரண்டு ஆட்கள் என்று மகாதேவன் கூறுவது சரியெனத் தோன்றவில்லை. இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம். நள்ளிவ்ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்ற(ன்) என்பது இதன் வாசகம். கொற்றன் என்பதில் கடைசி எழுத்தாகிய ன் சாசனத்தில் இல்லை. இதை விளக்கிக் கூறுவோம். முதல் மூன்று எழுத்துகளை நள்ளி என்று படிப்பதே சரியாகும். பிராமி எழுத்துகளில் ல, ள எழுத்துகளுக்கு மிகச் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலது பக்கத்தின் கீழே, கீழாக வளைந்த கோடு இட்டால் ளகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகரமாகத் தோன்றுவதைக் காணலாம். ஆகையால், நள்ளி என்று வாசிப்பதுதான் சரி என்று தெரிகிறது. மேலும், நல்லி என்ற பெயர் சங்க காலத்தில் காணப்படவில்லை. நள்ளி என்னும் ஒரு அரசன் கூறப்படுகிறான். நளிமலை நாடன் நள்ளி (சிறுபாண். 107), கழல் தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி (அகம். 238: 14), திண்தேர் நள்ளி கானம் (குறுந். 210:1), வல்வில் இளையர் பெருமகன் நள்ளி (அகம். 152:15),  கொள்ளார் ஓட்டிய நள்ளி (புறம். 158 : 28) என்பன காண்க. கண்டீரக் கோப் பெருநள்ளி சங்கச் செய்யுட்களில் கூறப்படுகிறான். இவன் கொங்கு நாட்டில் கண்டீரம் என்னும் ஊரின் அரசன். இவன் பெயரால் அக்காலத்தில் நள்ளி ஊர் என்னும் ஊர் இருந்திருக்க வேண்டும் என்பது இந்தக் கல்வெட்டெழுத்தினால் தெரிகிறது. இனி, இதற்கு அடுத்தபடியாக உள்ள நான்கு எழுத்துகளைப் பார்ப்போம். கல்வெட்டில் இவ்வெழுத்துகள் வ்ஊர்ப் என்று காணப்படுகிறது. இதில் முதல் எழுத்தை மகாலிங்கம் அவர்கள் ப என்று படித்து முதல் மூன்று எழுத்துகளுடன் சேர்த்து நாளாளப என்று படித்துள்ளார். மகா தேவன் அவர்கள் ய் என்று படித்து முதல் மூன்று எழுத்துக்களுடன் சேர்த்து நல்லிய் என்று படித்துள்ளார். இந்த எழுத்தை உற்று நோக்கினால் வ் என்று தோன்றுகிறது. இதனுடன் அடுத்துள்ள ஊகார எழுத்தைச் சேர்த்தால் வ்ஊ என்றாகும். வூ என்னும் எழுத்துதான் இவ்வாறு வ்ஊ என்று எழுதப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் எழுத்துகள் சாசனங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருப்பதைக் கல்வெட்டெழுத்துகளிலும் செப்பேடுகளிலும் காணலாம். இந்த நான்கு எழுத்துக்களை (வ்ஊர்ப்) முன் மூன்று எழுத்துகளுடன் கூட்டினால் நள்ளிவ்வூர்ப் என்றாகிறது. பிறகு, இதற்கு அடுத்த நான்கு எழுத்துகளைப் பார்ப்போம் (8 முதல் 11 எழுத்துகள்). அது பிடந்தை என்றிருக்கிறது. இதை மகாலிங்கமும் மகாதேவனும் பிடந்தை என்று சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால், பிடந்தை என்பதை பிட்டன் + தந்தை என்று பிரித்து, பிட்டனுடைய தந்தை என்றும் பிடன் என்பதற்குப் படாரன், பட்டாரன் என்றும் மகாலிங்கம் அவர்கள் விளக்கங் கூறுவது சரியாகவும் இல்லை, பொருத்தமாகவும் இல்லை. பிட்டன் என்னும் பெயருள்ள சேனைத் தலைவன் ஒருவன் சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறான் (அகம். 77, 143; புறம். 172, 186; புறம். 169, 171 செய்யுள்களின் அடிக்குறிப்பு). அவன் பிட்டங்கொற்றன் என்றுங் கூறப்படுகிறான். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறம். 171ஆம் செய்யுளில் பிட்டங்கொற்றனைக் கூறுகிறார். அச்செய்யுளில் அவர் பிட்டங்கொற்றனை எந்தை என்று கூறுகிறார் (புறம். 171: 12). புலவர் ஒரு அரசனை எந்தை என்று கூறவேண்டிய தில்லை. அப்படிக் கூறிய மரபும் இல்லை. பிட்டெனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்திருக்க வேண்டுமென்று இதனால் தெரிகிறது. பிட்டெந்தை என்னும் பெயரே இந்தச் சாசன எழுத்தில் பிடந்தை என்று எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதற்கு அடுத்துள்ள மூன்று எழுத்துக்கள் மகன் என்பது. இதை மகாதேவன் மகள் என்று படித்து அது மக்கள் என்னும் பொருளுடைய சொல் என்று கருதுகிறார். மகன் என்பதே சரியான வாசகம். கடைசியாக உள்ள ஏழு எழுத்துக்கள் கீரன் கொற்றன் என்று முடிகின்றன. இவற்றை மகாலிங்கமும் மகாதேவனும் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால் மகாதேவன், கீரன், கொற்றன் என்று இரண்டு பெயரைக் குறிக்கின்றன இவை என்று கருதுகிறார். இது தவறு என்று தெரிகிறது. பிட்டந்தையாகிய பிட்டனுக்குக் கொற்றன் என்றும் பெயர் உண்டு என்பதைச் சங்கச் செய்யுள்களிலிருந்தும் அறிந்தோம். பிட்டங்கொற்றன் என்னும் பெயரை எடுத்துக் காட்டினோம். அதுபோலவே, அவன் மகனான கீரனும் கொற்றன் என்று இதில் கூறப்படுகிறான். ஆகவே, கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளைக் குறிக்கிறது. பிடந்தை மகன் கீரன் கொற்றன் நள்ளியூரில் இருந்தான் என்பதும் அவன் புகழூர் மலைக்குகையில் கற்படுக்கைகளை முனிவர்களுக்காக அமைத்துக் கொடுத்தான் என்பதும் இந்தக் கல்வெட்bத்துக்களினால் அறியப்படுகின்றன. நள்ளியூர் என்று எழுதப்படவேண்டிய சொல் நள்ளிவ்ஊர் என்று வகர ஒற்றுச் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை நள்ளியூர் என்று திருத்திப் படிக்க வேண்டும்.  புகழூரில் இன்னொரு சாசனம் மேலே சொன்ன சாசனத்தோடு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இது, சாசன எழுத்து இலாகாவின் 1963-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டெழுத்தை திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள் தம்முடைய நூலில் ஆராயாமலும் குறிப்பிடாமலும் விட்டுவிட்டார். இதன் காரணம் தெரியவில்லை. ஆனால் திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இதைத் தம்முடைய கட்டுரையில் ஆராய்கிறார்.9 இது இரண்டு வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. முதல் வரியில் பதினைந்து எழுத்துகளும், இரண்டாம் வரியில் பதினொரு எழுத்துக்களும் உள்ளன. (படம் காண்க). இதை இவர் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்: 1. நல்லிஊர் ஆ பிடன் குறும்மகள் 2. கீரன் நோறி செயிபித பளி இவ்வாறு படித்த பிறகு, நல்லியூர் பிடன் மக்களாகிய கீரனும் ஓரியும் செய்வித்த பள்ளி என்று விளக்கங் கூறுகிறார். கீரனும் ஓரியும் என்று இரண்டு மக்கள் இருந்தனர் என்று கூறிய இவர், இன்னொரு இடத்தில் கீரன் நோரி என்பவன் ஒரே மகன் என்று எழுதியுள்ளார்.10 இதில் மூன்றாவது எழுத்தாகிய லி மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டி யுள்ளார். இந்தக் கல்வெட்டெழுத்தை இவர் நேரில் பார்த்துக் கையால் எழுதியிருக்கிறதாகத் தோன்றுகிறது. பார்த்து எழுதியதில் இவர் எழுத்துக்களைத் தவறாக எழுதியிருக்கிறார் என்பது தெரிகின்றது. இந்த 296ஆம் எண்ணுள்ள சாசனம் 346ஆம் எண்ணுள்ள சாசனத்தோடு தொடர்புடையது என்பதை இவர் அறியவில்லை (296 of 1963-64, 346 of 1926 - 27). இவர் காட்டியபடி முதல் வரியின் மூன்றாம் எழுத்து முறைதவறி எழுதப்பட்டிருக்கிறது இவர் படிக்கிற நல்லி என்பது நள்ளி என்பதாகும். இந்த ல, ள வித்தியாசத்தை மேல் சாசனத்தில் விளக்கிக் கூறியுள்ளேன். முதல் வரியில் 6ஆவது எழுத்தை இவர் பிராமி ஆ என்று வாசித்திருக் கிறார். இது பிராமி ப் என்னும் எழுத்து. அடுத்து வரும் பிடன் என்பதுடன் இவ்வெழுத்தைச் சேர்த்தால் ‘நள்ளி ஊர்ப்பிடன்’ என்றாகிறது. பிடன் என்பது பிட்டன் ஆகும். (பழங்காலத்தில் ட எழுத்து ட்ட என்று வாசிக்கப்பட்டது என்று தோன்றுகிறது. வட்டதளி என்பது வட தளி என்று எழுதப்பட்டது காண்க). மேல் சாசனத்தில் கூறப்படுகிற பிடந்தையும் இந்தப் பிடனும் (பிட்டன்) ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்து உள்ள ‘குறும்மகள்’ என்பதில் மகர ஒற்று மிகையாகக் காணப்படுகிறது. அது ‘குறுமகள்’ என்றிருக்க வேண்டும். இளம் பெண் என்னும் பொருளுடைய குறுமகள் என்னுஞ்சொல் சங்கச் செய்யுள்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம். ‘நோவல் குறுமகள்’ (அகம். 25 :16), ‘ஒள்ளிழைக் குறு மகள்’ (நற். 253: 5), ‘மேதையங் குறுமகள்’ (அகம். 7 :6). ‘பொலந்தொடிக் குறுமகள்’ (அகம். 219:9), ‘வாணுதற் குறுமகள்’ (அகம். 230:5), ‘பெருந்தோட் குறுமகள்’ (நற். 221:8), ‘ஆயிழை குறுமகள்’ (அகம். 161: 11), ‘மாண்புடைக் குறுமகள்’(நற். 352:11), ‘மெல்லிய குறுமகள்’ (நற். 93:8), ‘வாழியோ குறுமகள்’ (நற். 75 :4), ‘மடமிகு குறுமகள்’(நற். 319:8), ‘எல்வளைக் குறுமகள்’ (நற். 167:10), ‘அணியிற் குறுமகள்’ (நற். 184:8) முதலியன. குறும் மகள் என்பதை மகாதேவன் அவர்கள் குறும்மக்கள் என்று படிக்கிறார். இச்சாசனத்தில் குறும்மகன் என்று இருப்பதாக ஐ. மகாதேவன் எழுதுகிறார். குறும்மகன் என்பது பிழை என்றும் அது குறுமகன் என்று இருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டுகிறார். குறுமகன் என்பதற்கு இளையமகன் என்றும் பொருள் கூறுகிறார்.11 இது முற்றிலும் தவறு. குறுமகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் கிடையாது. அதற்குக் கீழ்மகன் என்பது பொருள். ஆனால், குறுமகள் என்றால் இளைய மகள், இளம்பெண் என்பது பொருள். இப்பொருளில் இச்சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வந்திருப்பதை மேலே எடுத்துக் காட்டினோம். குறு மகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் அன்று; கீழ்மகன், இழிந்தவன் என்பதே பொருள் உண்டு. உதாரணங் காட்டுவோம். குறுமகன் (சிலம்பு. 15: 95), குறுமகனால் கொலையுண்ண (சிலம்பு. 29. உரைப்பாட்டுமடை), கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப (சிலம்பு. 29. காவற்பெண்டரற்று), உருகெழுமூதூர் ஊர்க் குறு மாக்கள் (சிலம்பு. 30:109). பழைய அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறுமகன் என்பதற்குக் கீழ்மகன் என்று உரை எழுதி யிருப்பதைக் காண்க. இதன் பொருளை யறியாமல் ஐ. மகாதேவன், குறுமகள் என்பதன் ஆண்பாற் பெயர் குறுமகன் என்று கருதுகிறார். சில பெண்பாற் பெயர்களுக்கு நேரான ஆண்பாற் பெயர்கள் இல்லை என்பதும் அப்படி வழங்குகிற ஆண்பாற் சொற்களுக்குத் தாழ்ந்த இழிவான பொருள் உள்ளன என்றும் அறிஞர்கள் அறிவார்கள். உதாரணமாக, இல்லாள் - இல்லான் என்னுஞ் சொற்களை எடுத்துக் கொள்வோம். இல்லாள் என்றால் வீட்டரசி, மனைவி, இல்லற வாழ்க்கையை நடத்துகிறவள் என்பது பொருள். இல்லாள் என்னுஞ் சொல்லுக்கு ஆண்பாற் சொல் கிடையாது. இல்லான் என்னுஞ் சொல் புருஷன், கணவன், இல்லறத்தை நடத்துகிறவன் என்னும் பொருள் உடையதன்று. மாறாக வறுமையாளன், தரித்திரமுடையவன் என்பது பொருள். “இல்லானை இல்லாளும் வேண்டாள்” (நல்வழி. 34) என்பது காண்க. இது போலவே, குறுமகள் என்பதற்குப் பொருள் வேறு. குறுமகன் என்பதற்குப் பொருள் வேறு. ஐ. மகாதேவன், இச்சாசனத்தில் வருகிற குறுமகள் என்பதைக் குறுமகன் என்று தவறாகப் படித்து அதற்கு எக்காலத்திலும் இல்லாத இளைய மகன் என்று பொருள் கூறியிருப்பது பொருந்தாது. இச்சாசனத்தில் உள்ள சொல் குறும்மகள் (குறுமகள்) என்பதே ஆகும். (முந்திய சாசனத்தில் கீரன் கொற்றன் கூறப்பட்டது போல இந்தச் சாசனத்தில் கீரன் கொற்றி கூறப்படுகிறாள். முன் சாசனத்தில் கூறப்பட்ட கீரன் கொற்றன் பிடந்தையின் மகனாக இருப்பதுபோல, இச்சாசனத்தில் கூறப்படுகிற கீரன் கொற்றியும் பிடன் (பிடந்தை) மகள் என்று கூறப்படுகிறாள். எனவே, கீரன் கொற்றனும் கீரன் கொற்றியும் தமயன் தங்கையர் என்றும் இவர்கள் பிடன் (பிடந்தையின்) மக்கள் என்றும் தெரிகின்றனர். பிடனாகிய பிட்டன், ‘கொற்றன்’ என்று கூறப்பட்டது போலவே இவர்களும் கீரன் கொற்றன், கீரன் கொற்றி என்று கூறப் படுவதும் இதனை வலியுறுத்துகிறது. இந்தச் சான்றுகளினாலே, புகழூர்க் குகையில் தமயனும் தங்கையுமான இவர்கள் இருவரும் சேர்ந்து முனிவர் ளுக்கு இவ்விடத்தைத் தானஞ் செய்தார்களென்பது தெரிகின்றது. மேல் இரண்டு பிராமி எழுத்துக்களைக் கொண்டு இக்குகையில் கற்படுக்கைகளைத் தானம் செய்தவர் பரம்பரையை இவ்வாறு அமைக்கலாம்: பிடந்தை (பிடன், பிட்டன்) கீரன் கொற்றன் கீரங்கொற்றி (மகன்) (மகள்) (346 of 1927-28) (296 of 1963-64) குறிப்பு: பக்கம் 223, 228இல்1 பிராமி எழுத்துகளின் படத்தில் முதல் எழுத்துக்க என்று எழுதப்பட்டுள்ளது தவறு; அந்த எழுத்துகள் என்று எழுதப்பட வேண்டும். ஓவியரின் தவறு இது. புகழூருக்கு அடுத்த வேலாயுதம்பாளையம் என்னுங் கிராமத்து ஆறுநாட்டார் மலைக் குகையில் ஒரு பிராமி எழுத்து இருக்கிறது. இது, சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் சாசனத் தொகுப்பில் 1927-28ஆம் ஆண்டு 344 ஆம் எண் உள்ளது (No. 344 of 1927- 28) இந்த எழுத்தின் படம் காண்க. இந்த பிராமி எழுத்துகள் பெரும்பாலும் தெளிவாகக் காணப் படுகிற போதிலும் சில எழுத்துக்கள் புரைசல்களுடன் சேர்ந்து காணப் படுகின்றன. இந்த எழுத்தின் வாசகத்தைத் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள், 1. கொற்றந்தை ளவன் 2. மூன்று என்று படித்து, கொற்றந்தை (இ)ளவன் . . . மூன்று. . . (ஒரு முற்றுப் பெறாத சாசனம்) என்று விளக்கங் கூறியுள்ளார். 12 முதல் வரியில் நான்காவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதை இவர் ந் (தந்தகரம்) என்று வாசிக்கிறார். அதற்கு அடுத்துள்ள எழுத்தும் (ஐந்தாவது எழுத்து) புரைசல்களுடன் காணப்படுகிறது. அதை இவர் தை என்று வாசிக்கிறார். முதல் வரியில் கடைசி இரண்டு எழுத்துக்களை இவர் வன் என்று வாசிக்கிறார். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசல்களுடன் சேர்ந்திருக்கிறது. இதை இவர் மு என்று வாசிக்கிறார். இவ்வாறு இவர் வாசித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. முதல் வரியின் கடைசி இரண்டு எழுத்துகள் இவர் படிப்பதுபோல வன் அல்ல. அவை எயி என்னும் எழுத்துகள். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசலுடன் சேர்ந்து மு போலக் காணப்பட்டாலும் அது ம என்னும் எழுத்தே. திரு. டி.வி மகாலிங்கம் அவர்கள் இந்த எழுத்துக்களைப் படித்து ஏறக்குறைய சரியான முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இதன் கருத்தைத் தெளிவாகவும் நன்றாகவும் விளக்காமல் விட்டுவிட்டார்.13 இந்தச் சாசனத்தின் முதல் வரியில் ஐந்தாவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து இன்ன எழுத்து என்று தெளிவாகத் தெரியவில்லை. ஞை என்றும் தை என்றும் சொ என்றும் படிக்கும்படி இது காணப்படுகிறது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதைத் தை என்று வாசித்திருப்பதை மேலே சுட்டிக்காட்டினோம். டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை எ என்று வாசித்திருப்பது சரிதான். இதை எ என்றும் ஏ என்றும் வாசிக்கலாம். கடைசி எழுத்தை மகாதேவன் அவர்கள் ன் என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் அவர்கள் யி என்று வாசிக்கிறார். இது ய போலவும் தோன்றுகிறது. இந்த யகரத்தின் கீழே ஒரு கோடு ர கரத்தைக் குறிப்பது போன்று காணப்படுகிறது. இதை மகாலிங்கம் கவனித்திருக் கிறார். ஆனால், இது கல்லில் இயற்கையாக உள்ள புரைசல் என்று தோன்று கிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளை மகாலிங்கம் அவர்கள் சரியாகவே மன்று என்று வாசித்துள்ளார். 1. கொற்றக் கொள எயி 2. மன்று என்று வாசித்துக் கொற்ற என்பதற்கு ‘அரசனுக்குரிய’ அல்லது ‘வீரமுடைய’ என்று விளக்கங்கூறி, மன்று என்பது மண்டபத்தைக் குறிக்கிறது என்று கூறி முடிக்கிறார். ஆனால், இவர் படித்த கொள என்பதற்கு இவர் விளக்கங்கூறவில்லை. அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டுவிட்டார். எயி என்று இருப்பது எயினரைக் குறிக்கிறது என்று கூறுகிறார். இவர் படித்துள்ள வாசகமும் தெளிவு இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது. இந்த எழுத்துகளை நாம் படிப்போம். முதல் வரியில் முதல் நான்கு எழுத்துகளில் ஐயம் ஒன்றும் இல்லை. அவை கொற்றக் என்னும் எழுத்துகள். ஐந்தாவது எழுத்து அதிகப் புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதைத் தை என்றும் கொ என்றும் படித்தார்கள். அதைக் க என்று படிப்பதே பொருத்தமும் சரியும் ஆகும். ககரத்தை யடுத்துக் கல்லில் புரைசல் இருக்கிறது. அதனுடன் அடுத்த ள கரத்தைச் சேர்த்துக் கள என்று வாசிக்கலாம். இதற்கு அடுத்த எழுத்துகள் எயி என்பவை. இதன் பக்கத்தில் ஒரு எழுத்து இருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் காணப்படவில்லை. அது ல் ஆக இருக்கலாம். அதைச் சேர்த்துப் படித்தால் கடைசி மூன்று எழுத்துகள் எயில் என்றாகிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளின் வாசகம் மன்று என்பது. (மகரத்தின் கீழேயுள்ள புரைசல் மு போலத் தோன்றுகிறது.) எனவே, இந்த எழுத்துகளை, என்றும் தை என்றும் சொ என்றும் படிக்கும்படி இது காணப்படுகிறது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதைத் தை என்று வாசித்திருப்பதை மேலே சுட்டிக்காட்டினோம். டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை எ என்று வாசித்திருப்பது சரிதான். இதை எ என்றும் ஏ என்றும் வாசிக்கலாம். கடைசி எழுத்தை மகாதேவன் அவர்கள் ன் என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் அவர்கள் யி என்று வாசிக்கிறார். இது ய போலவும் தோன்றுகிறது. இந்த யகரத்தின் கீழே ஒரு கோடு ர கரத்தைக் குறிப்பது போன்று காணப்படுகிறது. இதை மகாலிங்கம் கவனித்திருக் கிறார். ஆனால், இது கல்லில் இயற்கையாக உள்ள புரைசல் என்று தோன்று கிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளை மகாலிங்கம் அவர்கள் சரியாகவே மன்று என்று வாசித்துள்ளார். 1. கொற்றக் கொள எயி 2. மன்று என்று வாசித்துக் கொற்ற என்பதற்கு ‘அரசனுக்குரிய’ அல்லது ‘வீரமுடைய’ என்று விளக்கங்கூறி, மன்று என்பது மண்டபத்தைக் குறிக்கிறது என்று கூறி முடிக்கிறார். ஆனால், இவர் படித்த கொள என்பதற்கு இவர் விளக்கங்கூறவில்லை. அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டுவிட்டார். எயி என்று இருப்பது எயினரைக் குறிக்கிறது என்று கூறுகிறார். இவர் படித்துள்ள வாசகமும் தெளிவு இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது. இந்த எழுத்துகளை நாம் படிப்போம். முதல் வரியில் முதல் நான்கு எழுத்துகளில் ஐயம் ஒன்றும் இல்லை. அவை கொற்றக் என்னும் எழுத்துகள். ஐந்தாவது எழுத்து அதிகப் புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதைத் தை என்றும் கொ என்றும் படித்தார்கள். அதைக் க என்று படிப்பதே பொருத்தமும் சரியும் ஆகும். ககரத்தை யடுத்துக் கல்லில் புரைசல் இருக்கிறது. அதனுடன் அடுத்த ள கரத்தைச் சேர்த்துக் கள என்று வாசிக்கலாம். இதற்கு அடுத்த எழுத்துகள் எயி என்பவை. இதன் பக்கத்தில் ஒரு எழுத்து இருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் காணப்படவில்லை. அது ல் ஆக இருக்கலாம். அதைச் சேர்த்துப் படித்தால் கடைசி மூன்று எழுத்துகள் எயில் என்றாகிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளின் வாசகம் மன்று என்பது. (மகரத்தின் கீழேயுள்ள புரைசல் மு போலத் தோன்றுகிறது.) எனவே, இந்த எழுத்துகளை, 1. கொற்றக்களஎயி(ல்) 2. மன்று என்று வாசிக்கலாம். கொற்றக் களத்து (கொற்றக்களம் - வெற்றிக்களம்) எயிலைச் சேர்ந்த மன்று என்பது இந்த வாசகத்தின் கருத்து. கொற்றக்களம் என்பது ஒரு இடத்தின் பெயர். கொற்றக்களம் என்னும் ஊரில் இருந்த எயிலுக்கு (கோட்டைக்கு) உரியது இந்த மன்று (குகை). அதாவது, கொற்றக்களத்து எயிலைச் சேர்ந்தவர்கள் இந்த மன்றத்தை முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்தார்கள் என்பது இதன் திரண்ட பொருளாகும். புகழூரில் உள்ள இன்னொரு கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். இதுவும் மேற்சொன்ன இடத்திலேயே இருக்கிறது. இது சாசன எழுத்து இலாகாவில் 1927 - 28 ஆம் ஆண்டில் 347 ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து எழுதியுள்ள பாறையில் புரைசலும் புள்ளியும் கலந்திருப்பதனால் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை (படம் காண்க). இந்த எழுத்துகளை ஐ. மகாதேவன் அவர்கள், ` ... ... ணாகன் மகன் (இ)ளங்கீரன்’ என்று வாசிக்கிறார்.14 இந்தப் பிராமி எழுத்தின் இன்னொரு படம் இவ்வாறு காணப்படுகிறது. திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு வாசித்திருக்கிறார்.15 ‘ணாகன் மகன் பெருங்கீரன்’. இவர் இவ்வாறு படிப்பது சரியான வாசகமே. நாகன் என்று இருக்கவேண்டியது ணாகன் என்று டண்ணகரத்தில் தொடங்கப்பட்டிருப்பது பிராகிருத பாஷையின் சாயல் என்று இவர் கூறுகிறார். எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய பிழை என்றும் கருதலாம். பிராமி எழுத்துக்களில் ந கரத்துக்கும் ண கரத்துக்கும் மிகச் சிறு வேறுபாடுதான் உண்டு. இந்த வேறுபாட்டைச் சிற்பி உணராத படியால் இத்தவறு ஏற்பட்டிருக்கிறது. நாகன், கீரன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மனிதருக்குப் பெயராக வழங்கி வந்தன. இப்பெயர்கள் சில அடைமொழிகளுடன் சேர்த்து வழங்கி வந்தன. இளநாகன், இளிசந்தநாகன், வெண்ணாகன், நன்னாகன், மூப்பேர்நாகன் முதலிய பெயர்களைக் காண்க. அல்லங் கீரன், இளங்கீரன், புல்லங்கீரன், கழார்க்கீரன், கீரங்கீரன், குறுங்கீரன், நக்கீரன், மோசிகீரன், மூலங்கீரன் முதலிய பெயர்களைக் காண்க. இந்தக் கல்வெட்டெழுத்தில் கூறப்பட்டவன் பெருங்கீரன் என்பவன். இவன் நாகனுடைய மகன். நாகனுடைய மகன் பெருங்கீரன் இந்தக் குகையில் கற்படுக்கையை அமைத்ததாக இந்தச் சாசனம் கூறுகிறது. கீழ்க்கண்டவை புகழூர் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் சரித்திர ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானவை. 1927 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்ட இவை, எபிகிராபி இலாகாவின் 1927 - 28 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்படுகின்றன.16 ஒரே கருத்துள்ள இந்தச் சாசனம் இரண்டு இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு சாசனங்களாகக் கருதப்பட்டாலும் உண்மையில் இவை இரண்டும் ஒன்றே. இரண்டின் வாசகமும் ஒன்றே. இரண்டாவது சாசனத்தில் சில எழுத்துகள் மறைந்து விட்டன. ஆனால், இரண்டு சாசன எழுத்துகளையும் ஒப்பிட்டுப்பார்த்து, விடுபட்டுள்ள எழுத்துகளைச் சேர்த்துப் படித்துப் பொருள் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தச் சாசன எழுத்துக்கள் இவை: இவற்றின் வாசகம் இது: தி அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் சேல்லிரும் பொறை மகன் பெருங் கடுங்கோன் மகனிளங் கடுங்கோ ளங்கோ ஆக அறுத்த கல் இரண்டாவது பிராமி எழுத்தின் படம் சிதைந்திருப்பதனால் அந்தப் படம் இங்குக் கொடுக்கப் படவில்லை. இந்த இரண்டு சாசனக் கல்வெட்டுகளும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. அமணன் யாற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் சே(ர)லிரும் பொறை மகன் பெருங் கடுங்கோன் மகனிளங்கடுங்கோ இளங்கோ ஆக இருந்தபோது அறுத்த கல் என்பது இதன் பொருள். இடையில் எழுத்து மறைந்துபோன இரண்டாவது சாசனத்திலும் இதே செய்தி கூறப்படுகிறது. இரண்டு சாசனங்களின் கடைசிச் சொற்களில் மட்டும் சிறு வேறுபாடு காணப்படுகிறது. அது, முதல் சாசனத்தில் அறுத்த கல் என்றும், இரண்டாவது சாசனத்தில் அறுபித (அறுபித்த) கல் என்றும் காணப்படுகின்றன. இவ்விரண்டிலும் மூன்று அரசர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. கோ ஆதன் சே(ர)லிரும்பொறையும் அவன் மகனான பெருங் கடுங்கோனும் அவன் மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். பேரனான இளங்கடுங்கோன் இளவரசனாக இருந்தபோது அமண முனிவராகிய ஆற்றூர் செங்காயபன் என்பவர் (மலைக்குகையில்) வசிப்பதற்கு அறுத்துக் கொடுத்த கல் (மலைக்குகை) என்று இச்சாசனங்கள் கூறுகின்றன. சமண முனிவர்கள் மலைக்குகைகளில் வசித்துக் கற்பாறைகளில் படுத்து உறங்குவது அக்காலத்து வழக்கம் என்று அறிவோம். அரச பரம்பரையைச் சேர்ந்த இளங்கடுங்கோ மலைக்குகையின் கற்றரையைச் செம்மையாக அமைத்து முனிவருக்குத் தானமாகக் கொடுத்தான் என்பது இதன் கருத்து. இந்தச் சாசன எழுத்துக்களை ஐ. மகாதேவன் ஆராய்ந்திருக் கிறார்.17 டி.வி.மகாலிங்கம் ஆராய்ந்திருக்கிறார்.18 ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.19 முதல் வரியில் முதல் எழுத்தாக இருப்பது தி. இது தா என்று வாசிக்கும்படியும் இருக்கிறது. ஐ. மகாதேவன் இதை தா என்று படித்து இதற்கு முன்பு இ என்னும் எழுத்தை இட்டு இதா என்று வாசிக்கிறார். இதா என்று வாசித்து ‘இதோ’ என்று பொருள் கூறுகிறார். ஆனால், இங்குக் காணப்படுவது தி என்னும் ஒரு எழுத்துதான். இதன் பொருள் திரு என்பது. இந்தச் சாசனம் எழுதப்பட்ட சமகாலத்தில் வெளியிடப் பட்ட சாதவாகன அரசர்களின் நாணயங்களில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் முதல் எழுத்து தி என்றும் த்ரி என்றும் எழுதப்பட்டுள்ளன. இது திரு (ஸ்ரீ) என்பதைக் குறிக்கிறது என்பது இங்குக் கருதத்தக்கது. ஆகவே, இச்சாசனத்தின் முதலில் உள்ள தி என்பது திரு என்னும் சொல்லாக இருக்கலாம். இதைவிட வேறு பொருள் கொள்வதற்கு இல்லை. ‘இதோ’ என்று கூறுவதாக மகாதேவன் கருதுவது பொருத்தமாக இல்லை. அமணன் என்று இருக்க வேண்டிய சொல் அமண்ணன் என்று ணகர ஒற்று இடப்பட்டிருக்கிறது. இது கற்றச்சனின் தவறாக அல்லது எழுதியவரின் தவறாக இருக்கலாம். யாற்றூர், செங்காயபன் என்னும் சொற்களில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை. முதல் வரியின் கடைசியில் உறைய என்னுஞ் சொல் இருக்கிறது. இதை மகாதேவன் உறைய் என்று வாசித்துள்ளார். இது தவறு என்று தோன்றுகிறது. உறைய என்பதே இதன் வாசகம். “ஆற்றூர் செங்காய பன் உறைய ... ... அறுத்த கல்” என்று வாக்கியம் செம்மையாக முடிகிறது காண்க. இதற்கு மாறாக வாசிப்பது தவறு என்று தோன்றுகிறது. இனி இந்தச் சாசனங்களில் வருகிற அரசர்களின் பெயர்களைப் பார்ப்போம். முதல் சாசனத்தில் கோ ஆதன் சேரலிரும்பொறை என்று பெயர் காணப்படுகிறது. இரண்டாவது சாசனத்தில் இது (சே)ல்லிரும் புறை என்று எழுதப்பட்டிருக்கிறது. இரும்பொறை என்பதே சரியான வாசகம். சேரலிரும்பொறை என்னும் பெயரில் இரண்டாவது எழுத் தாகிய ரகரம் கல்வெட்டில் விடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் சேரலிரும்பொறை என்னும் பெயரைக் காண்கிறோம். குடக்கோ இளஞ் சேரலிரும்பொறை, அஞ்துவஞ்சேரல் இரும்பொறை, கோப் பெருஞ் சேரலிரும்பொறை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் பெயர்களைக் காண்க இதனால், சேரலிரும்பொறை என்னும் பெயர் இந்தச் சாசனங்களில் சேல்லிரும்பொறை என்று தவறாக எழுதப்பட்டிருப்பது நன்கு தெரிகின்றது. ஆனால், ஐராவதம் மகாதேவன் செல்லிரும்பொறை என்று படிக்கிறார். இதற்குச் சான்றாக இவர் காட்டுகிற சான்றுகளாவன: செல்லிக்கோமான் (அகம். 216), செல்வக் கோமான் (பதிற்று. 67), செல்வக்கடுங்கோ (பதிற்று. பதிகம் 8), சேரமான் இக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் (புறம். 387), செல்லிக்கோமான், செல்வக் கோமான், செல்வக்கடுங்கோ என்னும் பெயர்களில் செல் இருக்கிற படியால், இந்தக் கல்வெட்டில் வருகிற பெயர் செல்லிரும் பொறை என்று இவர் எழுதுகிறார். இது பற்றி வாதிக்கவேண்டுவ தில்லை. இவர் கூறுவதில் உள்ள செல், செல்வம் என்னும் சொல் இச்சாசனத்தில் இடம் பெறவில்லை. சேரல் என்பதே தவறாக சேலிரும் பொறை என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனங்களில் கூறப்படுகிற அரசர்கள் யார் என்பது பற்றிப் பார்ப்போம். திரு. ஐ. மகாதேவன், இச்சாசனங்களில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்துக்களின் தலைவர்களுடன் பொருந்திக் கூறுகிறார். ‘கோ ஆதன் செல்லிரும்பொறை’ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 7 ஆம் பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும், கடுங்கோன் என்று கல்வெட்டில் கூறப் படுகிறவன் 8ஆம் பத்தின் தலைவனாகிய தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறை என்றும், இளங்கடுங்கோ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 9 ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரலிரும் பொறை என்றும் பொருந்திக் கூறுகிறார். கல்வெட்டில் கூறப்படுகிற முதல் அரசன் பெயர் கோ ஆதன் சே(ர)ல்லிரும் பொறை என்பது. ஐ. மகாதேவன் ‘செல்லிரும் பொறை’ என்று வாசிப்பது தவறு. 7 ஆம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான். இதில் வருகிற கடுங்கோ என்னும் பெயர் இந்தக் கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. கல்வெட்டுகள் கூறுகிற கோ ஆதன் சே(ர)லிரும் பொறைக்குக் கடுங்கோ என்னும் பெயர் இருந் திருந்தால் அப்பெயரைச் சாசனங்கள் கூறியிருக்கு மன்றோ? மற்ற இரண்டு அரசர்களைப் பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன் என்றும் கல்வெட்டுகள் சிறப்பாகக் கூறுகின்றன. முதல் அரசனுக்கு கடுங்கோ என்னும் பெயரைக் கல்வெட்டுக்கள் கூறாதபடியால், சேரலிரும் பொறையும் செல்வக் கடுங்கோவாழியாதனும் வெவ்வேறு அரசர் என்பதும் இருவருக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை என்பதும் வெளிப்படை திரு. மகாதேவன் செல் என்னும் பிழையான பொருளற்ற சொல்லை வைத்துக்கொண்டு செல்வக் கடுங்கோவுடன் பொருத்துவது ஏற்கத்தக்கதன்று. ‘செல்லிரும் பொறை’ என்று எந்த அரசனுக்கும் பெயர் இருந்ததில்லை என்பதைச் சங்க இலக்கியம் பயின்றோர் நன்கறிவார்கள். கல்வெட்டுகள் இரண்டாவது அரசனாகக் கூறுகிற பெருங்கடுங் கோனைப் பதிற்றுப்பத்தின் 8ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறு. இவ்விரண்டு அரசர்களுக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. ஏனென்றால், 8 ஆம் பத்தில் பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடுகிற அரிசில் கிழார் அவனுடைய அமைச்சனாக இருந்தவர். மேலும், அவன் செய்த தகடூர்ப் போரில், போர்க்களத்தில் உடன் இருந்தவர். அவர் இவ்வரசனைப் பாடிய செய்யுட்களில் இவனைக் கடுங்கோன் என்று ஓரிடத்திலாவது கூறவில்லை. தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கடுங்கோன் என்று பெயர் இருந்திருக்குமானால் அந்தச் சிறப்பான பெயரை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? ஆகவே சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் பதிற்றுப்பத்து 8 ஆம் பத்துத் தலைவனாகிய பெருஞ்சேரலிரும்பொறை யல்லன் என்பது வெளிப்படை. ஐ. மகாதேவன் இருவரையும் ஒருவராக இணைத்துப் பிணைப்பது ஏற்கத்தக்கதன்று. கல்வெட்டுகள் கூறுகிற இளங்கடுங்கோவைப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறாக இருக்கிறது. இளஞ்சேர லிரும்பொறை மீது 9ஆம் பத்துப் பாடின பெருங் குன்றூர்கிழார் அச்செய்யுட்கள் ஒன்றிலேனும் அவனைக் கடுங்கோ அல்லது இளங்கடுங்கோ என்று கூறவே இல்லை. இந்தச் சிறப்பு அவனுக்கு இருந்திருக்குமானால் இதனை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? இப் பெயர் இவனுக்கு இல்லாதபடியால் அவர் இப்பெயரைக் கூறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும், சாசனங்கள் பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ என்று கூறுகின்றன. திரு. மகாதேவன், பெருங்கடுங்கோவைத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்றும், இளங்கடுங்கோவை அவன் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்றுங் கூறுகிறார். இதிலும் இவர் தவறு படுகிறார். தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையின் மகன் இளஞ்சேரலிரும்பொறை என்று இவர் கூறுவது தவறு. பெருஞ்சேரலிரும்பொறையின் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ்சேரலிரும்பொறை என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. செல்வக்கடுங்கோ வாழியாதன் (7ஆம் பத்து) பெருஞ்சேரலிரும்பொறை குட்டுவன்இரும்பொறை (எட்டாம் பத்து) இளஞ்சேரலிரும்பொறை (ஒன்பதாம் பத்து) எனவே, கல்வெட்டுகளில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்து அரசர்களுடன் பொருத்துவது பொருத்தமாக இல்லை; தவறாகவே இருக்கிறது. (பாலை பாடிய) பெருங்கடுங்கோ, (மருதம் பாடிய) இளங்கடுங்கோ என்னும் இரண்டு சேர அரசர்களைச் சங்க இலக்கியங்கள் கூறுவதை திரு. மகாதேவன் அறியவில்லை. இவ்விரு பெயர்களும் சாசனப் பெயர்களுடன் பொருந்துவது வெளிப்படை. இப்பெயர்களுடன் அவர் பொருந்திக் கூறாமல் அல்லது மறுத்துக் கூறாமல் விட்டது இந்தப் பெயர்களை அவர் அறியாததுதான் காரணம். சங்க காலத்துக் கல்வெட்டுக்களை அறிவதற்குச் சங்க காலத்து இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. பாலை பாடிய பெருங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங் கோவும் இக்கல்வெட்டுகளில் கூறப்படுகிற பெருங்கடுங்கோவும் இளங்கடுங்கோவுமாக இருக்கக்கூடுமோ? கல்வெட்டுகளில் கூறப் படுகிற இவர்கள், தந்தையும் மகனும் என்று கூறப்படுகின்றனர். அன்றியும், ‘பாலை பாடிய’, ‘மருதம் பாடிய’ என்னும் அடை மொழிகள் சாசனங்களில் கூறப்படவில்லை. சங்க இலக்கியங்கள் கூறுகிற இவர்கள் தந்தையும் மகனுமா என்று தெரியவில்லை. பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ இருவரை யும் சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோ இளங்கடுங்கோவுடன் பொருத்திக் கூறலாம் என்று தோன்றுகிறது. ஆனால், உறுதியாகத் துணிந்து கூற இயலவில்லை. எனவே, புகழூர்ச் சாசனங்கள் குறிப்பிடுகிற கோ ஆதன் சேரலி ரும்பொறை, அவன் மகன் பெருங்கடுங்கோன், அவன் மகன் இளங் கடுங்கோன் ஆகிய மூவரையும் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்துகளின் அரசர்களாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளம்சேரலிரும்பொறை என்பவர் களுடன் பொருத்துவதற்குப் போதிய சான்று இல்லை. அதுபோலவே, சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் இளங்கடுங்கோன் என்பவரைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோவுடன் பொருத்துவதற்கும் சான்று இல்லை. வேறு சான்றுகள் கிடைக்கிற வரையில், இவர்களைப் பிணைத்துப் பொருத்திச் சரித்திரத்தில் குழப்பம் உண்டாக்காமலிருப்பதே இப்போதைக்குச் சரி என்று தோன்றுகிறது. இந்தச் சாசனங்களில் காணப்படுகிற அரசர்கள் கொங்கு நாட்டை யரசாண்ட இரும்பொறையரசர் மரபைச் சேர்ந்தவர் என்பதும் இவர்களும் கொங்கு நாட்டை யரசாண்டவர்கள் என்பதும் திட்டமாகத் தெரிகின்றன. ஆனால், இவர்களின் வரலாறு தெரியவில்லை. கொங்கு நாட்டு மலைகளில், இன்னும் சில பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. அவற்றைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். முக்கியமாகக் கொங்கு நாட்டவர் இதுபற்றி முயற்சி செய்வார்களாக. *** அடிக்குறிப்புகள் 1. 1961 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சுதேசமித்திரன். (உள்ளூர்) சென்னை பதிப்பு. 2. Annual Report on Indian Epigraphy for 1961 - 62. P. 10. 3. Corpus of Tamil Brahmi Inscriptions by Iravatham Mahadevan. P. 67. Seminar on Inscriptions 1966. 4. PP. 290 - 298. Early South Indian Palaeography by T.V. Mahalingam. 1967. 5. P. 281-82 Early South Indian Palaeography - 1967. 6. No 66. P. 67. Seminar on Inscriptions, 1966. 7. Page, 283 - 84, Early south Indian Palaeography, 1967. 8. No. 58. P. 66 Seminar on Inscriptions 1966. Historical Tamil Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Ceminar held at Kula Lumpur, 1966. 9. No. 59 page 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil - Brahmi Inscriptions. (I. Mahadevan. Paper read at the Tamil conference ceminar held at Kula lumpur, 1966. 10. Historical Tamil Brahmi Inscription Kula lumpur, 1966. 11. Historical Tamil Brahmi Inscription. 12. No. 65, Page 67. Corpus of the Tamil - Brahmi Inscriptions. Seminar on Inscriptions 1966. 13. P. 282 - 83. Early South Indian Palaeography, 1967. 14. No. 67, Page 67. Corpus of the Tamil - Brahmi Inscriptions. Seminar on Inscription. 1966. 15. P. 428 Early South Indian Palaeography. 1967. 16. Annual Report S.I. Epigraphy 1977 - 1978. Pt II Para I. 17. Corpus of the Tamil brahmi Inscriptions. 18. P. 279 - 80 Early South Indian Palaeography. 19. Historical Tamil - Brahmi Inscriptions. I. Mahadevan, Paper read at the Tamil Conference ceminar held at Kula lumpur. 1966. BIBLIOGRAPHY 1. The Silappadikaram, English Translation by V.R. Ramachandra Dikshitar, 1939. 2. Mysore and Coorg from Inscriptions, Lewis. Rice, 1909. 3. Indian Culture. 4. Roman Trade with Deccan, Dr. B.A., Salitore, Preceedings of the Deccan History Conference, Hydrabad Session, 1945. 5. Epigraphia Carnatica. 6. Ancient Karnataka: History of Tuluva, Baskar Anand Saletore, 1936. 7. Ancient India and South Indian History and Culture, Dr. S. Krishnaswami Aiyengar. 8. Cera Kings of the Sangam Period, K.G. Sesha Aiyer, 1937. 9. A Comprehensive History of India,Vol. II, Edited by K.A.Nilakanta Sastri, 1957. 10. The Chronology of Early Tamils, K.N. Sivaraja Pillai, 1932. 11. The Colas, Vol, I. K.A. Nilakanta Sastri. 12. The Secret Chamber, V.T. Indo-Chudan, 1969. 13. The History of the Tamils, P.T. Srinivasa Iyengar, 1929. 14. Kanchipuram in Early South Indian History, T.V. Mahalingam, 1969. 15. ‘Historical Tamil Brahmi Inscriptions‘, Iravatham Mahadevan, 1966. 16. Early South Indian Palaeography, T.V. Mahalingam, 1967. 17. Mahavamso, English Translation, W. Geiger, 1912. 18. Dipavamso, Edited and Translated by H. Oldenberg, 1879. 19. South Indian Epigraphy, (Annual Report on), Madras. 20. Indian Antiquary. 21. The Journal of the Numismatic Society of India. 22. Journal of Bombay Branch of Royal Asiatic Society. 23. Roman History from Coins, Michael Grant. 1968. 24. The Commerce Between Roman Empire and India, Warmington, 1928. 25. ‘Roman Coins found in India‘, R. Sewell, pp. 591-637, I.R.A.S., 1904. 26. ‘Corpus of Tamil Brahmi Inscriptions‘, Iravatham Mahadevan, Seminar on Inscriptions, 1966. 27. Salem Manual. 28. Salem Gazeteer. 29. Coimbatore Manual. 30. Coimbatore Gazeteer. தமிழ் நூல்கள் 1. அகநானூறு (அகம்) 2. புறநானூறு (புறம்) 3. நற்றிணை (நற்) 4. குறுந்தொகை (குறும்) 5. ஐங்குறுநூறு (ஐம்) 6. பதிற்றுப்பத்து (பதிற்று) 7. சிலப்பதிகாரம் (சிலம்பு) 8. முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்) 9. களவழி நாற்பது - பொய்கையார். 10. சேரன் செங்குட்டுவன் - மயிலை சீனி. வேங்கடசாமி. 11. சேர மன்னர் வரலாறு - ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை 12. சேரன் செங்குட்டுவன் - மு. இராகவையங்கார் 13. சேர வேந்தர் செய்யுட்கோடை - மு. இராகவையங்கார். 14. சேரன் வஞ்சி - டாக்டர்எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார். 15. கவிராஜ மார்க்கம் - (கன்னட மொழிச் செய்யுளிலக்கணம்) நிருபதுங்கவர்மன். 16. கேரளம் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் - எளங்குலம்குஞ்சன்பிள்ளை (மலையாளம்) 17. புறத்திரட்டு - வையாபுரிப்பிள்ளை பதிப்பு. சென்னைப் பல்கலைக்கழகம். 18. துளுநாட்டுவரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி. 19. கொங்கு மண்டல சதகம் - கார்மேகக் கோனார். 20. கொங்கு நாடு - புலவர் குழந்தை 1968. 21. சேரர் வரலாறு - துடிசைகிழார். 22. கொங்குநாடு - கி.அ. முத்துசாமிக்கோனார். 23. அப்பர், சம்பந்தர் - தேவாரம். 24. திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி. (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்) பல்லவர் குறிப்பு: மகேந்திரவர்மன் (1955), என்ற தலைப்பில் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது. 1. மகேந்திர வர்மன் அரசியல் மகேந்திரவர்மனுடைய தகப்னரான சிம்மவிஷ்ணு காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ இராச்சியத்தை அரசாண்டார். சிம்மவிஷ்ணு ஆட்சியை ஏற்றுக் கொண்டபோது, அவருடைய பல்லவ இராச்சியம் ஆந்திர நாட்டையும் தொண்டைமண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு சிம்மவிஷ்ணு சோழநாட்டை வென்று தமது பல்லவ இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டார். இச்செய்தி வேலூர்ப் பாளையம், காசாகுடி செப்பேட்டுச் சாசனங்களினாலே தெரிகிறது. “நெல் வயல்களையும் கமுகஞ் சோலைகளையும் தனக்கு நகைகளாகப் பூண்டு விளங்குகின்ற கவீரனுடைய மகளினால் (காவிரி ஆற்றினால்) பொலிகின்ற சோழர்களின் சோழநாட்டை அவன் (சிம்மவிஷ்ணு) விரைவில் கைப்பற்றினான்” என்று வேலூர்ப்பாளையச் சாசனத்தின் 10 ஆவது வடமொழிச் செய்யுள் கூறுகிறது.1 “பிறகு அவனிசிம்மனாகிய சிம்மவிஷ்ணு அரசாட்சிக்கு வந்தான். அவன் தன் பகைவர்களை ஒழிக்கக் கருதி மலய களபா மாளவ சோழ பாண்டிய அரசர்களையும், தன் கைவன்மையினால் தருக்கியிருந்த சிங்கள அரசனையும் கேரளனையும் வென்றான்.” என்று காசாகுடி செப்பேட்டுச் சாசனம் 20 ஆவது செய்யுளில் கூறுகிறது.2 இந்தச் சாசனப் பகுதிகளினாலே நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால், சிம்மவிஷ்ணு சோழநாட்டின் மேல் படையெடுத்தபோது, சோழனுக்குத் துணையாகக் களபர, மாளவ, பாண்டிய, சிங்கள, கேரள அரசர்கள் வந்தார்கள் என்பதும் அவர்களையெல்லாம் சிம்மவிஷ்ணு வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதும் ஆகும். இவ்வாறு சிம்மவிஷ்ணு காலத்தில் பல்லவ இராச்சியம் வடக்கே கிருஷ்ணாநதி முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவி யிருந்தது. அஃதாவது ஆந்திரதேசம் தொண்டைமண்டலம் சோழ மண்டலம் ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டிருந்தது. சிம்மவிஷ்ணுவின் மகனாகிய மகேந்திரவர்மன் இளவரசனாக இருந்தபோது ஆந்திரநாட்டிலே தங்கியிருந்தான். தெலுங்கு நாட்டிலே குண்டூர் மாவட்டத்திலே சேஜர்லா என்னும் இடத்தில் உள்ள கபோதே சுவரன் கோவில் சாசனம் ஒன்று, மகnதிரவர்மன் அக்கோயிலில் திருப்பணி செய்ததைக் கூறுகிறபடியினாலே இளவரசனாக இருந்த போது இவன் தெலுங்கு நாட்டில் இருந்தான் என்பது நன்கு தெரிகிறது. சிம்மவிஷ்ணு ஏறக்குறைய கி. பி. 600 இல் காலமானான். பிறகு, அவன் மகனான மகேந்திரவர்மன் அரசன் ஆனான். மகேந்திரவர்மன் ஏறக்குறைய கி. பி. 600 முதல் 630 வரையில் அரசாண்டான். பல்லவ அரச குடும்பத்தில் ம்கேந்திரன் என்னும் பெயர் உடை யவர்களில் இவன் முதல்வன். ஆகையினாலே சரித்திரத்தில் இவன் மகேந் திரவர்மன் முதலாவன் (மகேந்திரவர்மன் ஐ) என்று கூறப்படுகிறான். மகேந்திரவர்மன், தன் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்டான். மகேந்திரன் காலத்தில் பல்லவ இராச்சியத்தின் வட எல்லை குறைந்துவிட்டது. எப்டி என்றால், வாதாபி (பாதாமி) என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட சளுக்கிய அரசனாகிய இரண்டாம்புலிகேசி (இவன் கி. பி. 609 முதல் 642 வரையில் அரசாண்டான்) கி. பி. 610 இல் பல்லவ இராஜ்ஜியத்தின் மேல் படையெடுத்து வந்து ஆந்திர தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அல்லாமலும் பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேலும் படையெடுத்து வந்தான். ஆனால், மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் புலிகேசியை எதிர்த்துப் போரிட்டு அவனை முறியடித்துத் துரத்திவிட்டான். காசாகுடி செப்புப் பட்டயம் மகnதிரனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது: “அதன் பிறகு மகேந்திரனுடைய புகழைப் போன்று புகழ் படைத்தவனும் ஆணையைச் செலுத்துபவனும் புள்ளலூரில் தன் பகைவரைப் புறங்கண்டவனுமான மகேந்திர வர்மன் என்னும் அரசன் மண்ணுலகத்தை அரசாண்டான்.”1 ‘மகேந்திரன் வென்ற அரசன் யார்?’ என்று இந்தப் பட்டயம் கூறவில்லை. ஆனால், இரண்டாம் புலிகேசி யைத்தான் இந்தச் சாசனம் குறிப்பிடுகிறது என்று தெரிகிறது. ஏனென்றால், அய்ஹொளெ சாசனம் புலிகேசியை இவ்வாறு புகழ்கிறது: “அவன் (புலிகேசி), தன்னுடைய சேனையின் தூசியினாலே தன்னை எதிர்த்த பல்லவ மன்னனுடைய ஆற்றலை மழுங்கச்செய்து அவனைக் காஞ்சிபுரத்தின் மதிலுக்குள் மறையும்படி செய்தான்.” (செய்யுள் 20) “பல்லவர்களின் சேனையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுஞ் கிரணமுள்ள சூரியனைப்போன்ற அவன் (புலிகேசி, சோழ பாண்டிய கேரளர்களுக்குப் பெரும் மகிழ்சியையுண்டாக்கினான்.” (செய்யுள். 31)2 இந்தச் சாசனங்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து மகேந்திர வர்மனுடன் போர் செய்த சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி என்பது ஐயமற விளங்குகிறது. மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர் செய்து வெற்றிகொண்ட இடமாகிய புள்ளலூர், செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் காஞ்சிபுரத்திற்கு வடக்கே 15 மைல் தூரத்தில் இருக்கிறது. சளுக்கிய அரசனான புலிகேசியை மகேந்திரன் முறியடித்துத் துரத்திவிட்ட போதிலும், பல்லவநாட்டின் ஆந்திரப் பகுதி புலிகேசியின் வசமாயிற்று. தான் கைப்பற்றிய ஆந்திரநாட்டில், தன் தம்பியாகிய விஷ்ணுவர்த்தனனைப் புலிகேசி இளவரசனாக்கினான். வெங்கி என்னும் நகரத்தில் இளவரசனாக அமர்ந்த விஷ்ணுவர்த்தனன், தன்னைப் புலிகேசி இளவரசனாக்கினான். வெங்கி என்னும் நகரத்தில் இளவரச னாக அமர்ந்த விஷ்ணுவர்த்தனன், பிற்காலத்தில் தனி அரசனாகப் பிரிந்து கீழைச் சளுக்கிய வம்சத்தை உண்டாக்கினான். ஆகவே, பாதாமியைத் தலை நகரமாகக் கொண்டிருந்த மூல சளுக்கிய வம்சம், மேலைச் சளுக்கிய வம்சம் என்று சரித்திரத்தில் பெயர் பெறுவதாயிற்று. புலிகேசி, பல்லவ இராச்சியத்தின் ஆந்திரப் பகுதியை வென்று கொண்ட படியினாலே, மகேந்திரனுடைய பல்லவ இராச்சியம், வடக்கே வட பெண்ணை யாற்றிலிருந்து தெற்கே புதுக்கோட்டை வரையில் தொண்டைமண்டலத்தையும் சோழ மண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. அஃதாவது, நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி (வட பெண்ணைக்குத் தென்பகுதி), சித்தூர், செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய இராச்சியமாக இருந்தது. பல்லவரின் தலைநகரம் காஞ்சிபுரம் மகேந்திரவர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்டான். பல்லவரின் துறைமுகப்பட்டினம் கடன்மல்லை. கடன்மல்லையிலே மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் (முதலாவன்) (இவனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயர் உண்டு) இளவரசனாக இருந்தான். மல்லை அல்லது கடன்மல்லை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு மகேந்திரன் காலத்தில் மகாபலிபுரம் என்னும் பெயர் வழங்கவில்லை. மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் பல்லவ நாட்டின் மன்னனான பிறகு, தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை மல்லைக்குச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். (மாமல்லபுரம் என்னும் பெயர் பிற்காலத்தில் மகாபலிபுரம் என்று மருவி வழங்கலாயிற்று) ஆகவே, மகேந்திரவர்மன் காலத்தில் மாமல்லபுரம் மல்லை என்றும் கடல்மல்லை என்றும் பெயர்பெற்றிருந்தது.1 இவன் தன் பெயரினால் மகேந்திரமங்களலம் என்னும் ஊரை மாமண்டூர்ப்பற்றில் ஏற்படுத்தினான் என்பதைத் திருப்பருத்திக் குன்றத்து வர்த்தமானர் கோயில் சாசனத்தினால் அறியலாம்.1 மாமண்டூரில் ஓர் ஏரியைச் சித்ரமேகத் தடாகம் என்று தன் பெயரினால் ஏற்படுத்தினான். தன் பெயரினால் இன்னொரு ஊராகிய மகேந்திர வாடியை (மகேந்திரபாடி) உண்டாக்கினான். இவ்வூர் வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா சோளிங் கூருக்குத் தென் கிழக்கே மூன்று மைலில் உள்ளது. மகேந்திரவாடியில் மகேந்திரத் தடாகம் என்னும் ஏரியைத் தன் பெயரினால் உண்டாக்கினான். மகேந்திரன் சோழநாட்டிலே தன் பெயரால் மகேந்திரப்பள்ளி என்னும் ஊரையமைத்து அதில் தன் பெயரால் மகேந்திரப்பள்ளி என்னும் சிவன்கோயிiல அமைத்தான் என்று தெரிகிறது. மகேந்திரப்பள்ளி என்பது மயேந்திரப் பள்ளி என்று மருவி வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் இந்தக் கோயிலைக் பாடியுள்ளார். அவர் பாடிய ஒரு பாடல் இது: “நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுட் கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.” மகேந்திரவர்மன் குகைகோயில்களை அமைத்ததோடு செங்கல் கருங்கல் முதலியவைகளைக் கொண்டும் சில கோயில்களை அமைத்தான். அவ்வாறு அமைத்த கோயில்களில் மயேந்திரப்பள்ளிக் கோயிலும் ஒன்றாக இருக்கலாம். இவன் கட்டுக் கோயிலையும் அமைத்தான் என்பதை துப்ராய் அவர்கள் எழுதிய ‘மகேந்திரவர் மனின் காஞ்சி புரக் கல்வெட்டுக்கள்.’2 என்னும் சிறு நூலில் காண்க. மகேந்திரவர்மன் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தான். மகேந்திரன், மகேந்திரவர்மன்,மகேந்திர விக்ரமவர்மன், மகேந்திரப்போத்தரசன், பகாப்பிடுகு, லளிதாங்குரன், குணபரன், மத்தவிலாசன், அவனிபாஜனன், சத்யசந்தன், புருஷோத்தமன், சத்துருமல்லன், சங்கீர்ணஜாதி, சித்ரகாரப்புலி, சேத்தகாரி, விசித்ரசித்தன், அலுப்தகாமன், கலகப்பிரியன், அபிமுகன், மகாமேகன், நரேந்திரன் முதலிய சிறப்புப்பெயர்களை இவன் கொண்டிருந்தான். 1. மயேந்திரப் போத்தரெசரு 2. ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி ராஜன் 3. ஸ்ரீ மஹேந்த்ர விக்கிரம இந்தப் படத்தில் முதலாவது, மகேந்திரவர்மன் காலத்துத் தமிழ் எழுத்து. வல்லம் குகைக் கோயிலில் உள்ளது. ‘மயேந்திரப் போத்த ரெசரு’ என்பது இதன் வாசகசம். இரண்டாவது வடமொழி எழுத்து. ‘ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி ராஜன்’ என்பது இதன் வாசகம். இது மகாபளி புரத்து வராகப்பெருமாள் குகைக் கோயிலில் உள்ளது. இது பிராகிருதப் பெயர் என்று தோன்றுகிறது. மூன்றாவது வடமொழி எழுத்து. இது பல்லா வரத்துக் குகைக் கோயிலிலும் திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலிலும், எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீ மஹேந்த்ர விக்ரம’ என்பது இதன் வாசகம். கீழேயுள்ளது மகnதிரவர்மன் காலத்துத் தமிழ் எழுத்து; திருச்சிராப் பள்ளி குகைக்கோயிலில் உள்ளது. ‘பிணபிணக்கு’ என்பது இதன் வாசகம். பிணபிணக்கு என்பது இவன் சிறப்புப் பெயர்களில் ஒன்று. பிணபிணக்கு சிவிபுந்து, நில்விலோனையம்பு, வேந்துலவித்து, பசரம்பு, சிலம்பு, மலாயு, கடுந்தரம்பு, நயம்பு முதலிய தெலுங்குப் பெயர்களையும் இவன் கொண்டிருந்தான். இப் பெயர்களை இவன் ஆந்திர நாட்டில் இளவரசனாக இருந்தபோது பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இவன் சிற்பக்கலை இசைக்கலை ஓவியக்கலை காவியக்கலை முதலிய கலைகளில் சிறந்தவன். குகைக் கோயில்களைத் தமிழ்நாட்டில் முதன் முதலாக அமைத்தவன் இவனே. இதனால் இவனுக்குச் சேதகாரி என்னும் பெயர் ஏற்பட்டது. இசைக்கலையின் நுட்பத்தை அறிந்தவனாதலால், இவனுக்குச் சங்கீர்ணஜாதி என்னும் பெயர் உண்டாயிற்று. ஓவியக்கலையில் தேர்ந்தவன் ஆனபடியினாலே இவனுக்குச் சித்திரகாரப்புலி என்னும் பெயர் உண்டாயிற்று. மத்த விலாசம் என்னும் நகைச்சுவை நாடக நூலை இயற்றிய படியினாலே இவனுக்கு மத்த விலாசன் என்னும் பெயர் ஏற்பட்டது. 2. வேறு அரசர்கள் மகேந்திரவர்மன் காலத்தில் வட இந்தியாவை அரசாண்ட மன்னன் புகழ்பெற்ற ஹர்ஷவர்த்தனன். கன்னோசி நாட்டின் அரசனாகிய ஹர்ஷன் கி.பி. 606 முதல் 647 வரையில் அரசாண்டான். இவன் ஆட்சிக்கு வந்தவுடன் ஆறு ஆண்டு போர்செய்து பதினெட்டு அரசர்களை வென்று அவர்களின் நாடுகளைத் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். மேலும், கிழக்கே காமரூப (அஸ்ஸாம்) நாட்டின் அரசனாயிருந்த துருவபட்டன் என்பவனும் இவனுக்கு அடங்கிக் கப்பங்கட்டி வந்தனர்.1 இவ்வாறு வட இந்தியா முழுவதையும் வென்று மகாராசன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற ஹர்ஷவர்த்தனன், தக்கிண தேசத்தையும் கைப்பற்ற எண்ணி, சளுக்கிய நாட்டின் மேல் படையெடுத்தான். சளுக்கிய அரசனான புலிகேசி (இரண்டாவன்), நருமதை யாற்றங்கரையில் ஹர்ஷனை எதிர்த்துப் போர்செய்து வெற்றி கொண்டான். இது கி. பி. 620 இல் நடந்தது. தோல்வியுற்ற ஹர்ஷன் அதன் பிறகு நருமதி யாற்றுக்குத் தெற்கே வரவில்லை. ஹர்ஷ வர்த்தனுடைய ஆட்சி, தெற்கே நருமதை யாற்றிலிருந்து வடக்கே இமயமலை வரையில் வட இந்தியா முழுவதையும் கொண்டிருந்தது. ஹர்ஷவர்த்தனனுடைய இராச்சியத்திற்குத் தெற்கே தக்கண இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட மன்னன் இரண்டாம் புலிகேசி. இவன் சளுக்கிய மரபைச் சார்ந்தவன் ஆகையால், இவனுடைய நாடு சளுக்கிய நாடு என்று பெயர் பெற்றது. சளுக்கியருக்கு வல்லபர் என்னும் பெயரும் உண்டு. புலிகேசி கி. பி. 608 முதல் 642 வரையில் அரசாண்டான். இவன் அரசாட்சி பெற்றவுடன் நளர், மௌரியர், கடம்பர், காலசூரி, கங்கர், ஆலூபர், லாடர், மாளவர், கூர்ச்சரர் கலிங்கர் முதலிய அரசர்களை வென்று அவர்கள் நாட்டைத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டு தனது இராச்சியத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். இவன் வென்றவர்களில் நளர் என்பவர் நளவாடி விஷயம் என்னும் நாட்டினர். இது பல்லாரி கர்னூல் மாவட்டங்களில் அடங்கியிருந்தது. மௌரியர் என்பவர், மகத நாட்டை யாண்ட மௌரிய அரசர் வழிவந்தவர் என்று கருதப்படுகின்றனர். இவர் மேற்குக் கடற்கரைப் பக்கத்தில் இருந்ததாகக் கருதப்படுகின்றனர். அக நானூறு என்னும் சங்க நூலில் கூறப்படுகிற வம்பமோரியர் என்பவர் இந்த மௌரியரின் முன்னோராக இருக்கக்கூடும். கடம்பர என்பவர் மைசூர் நாட்டின் ஒரு பகுதியில் இருந்தவர். கங்கர் என்பவர் கங்கவாடி நாட்டைச் சேர்ந்தவர். லாடர் என்பவர் லாட (குஜராத்தி) நாட்டவர். பிஷ்டபுரம் (பித்தாபுரம்) என்னும் கோட்டையையும் (கோதாவரி மாவட்டத்தில் உள்ளது) புலிகேசி கைப்பற்றினான்.1 பல்வர்களுக்குரியதாக இருந்த ஆந்திர நாட்டைப் புலிகேசி, மகேந்திரவர்மனுடன் போர்செய்து கைப்பற்றிக் கொண்டான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். வடஇந்தியாவை அரசாண்ட ஹர்ஷ வர்த்தனன் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, அவனை எதிர்த்து முறியடித்தவன் இந்தப் புலிகேசியே. இதனால் புலி கேசியின் புகழ் எங்கும் பரவிற்று. பாரசீக நாட்டை அரசாண்ட குஸ்ரு (இரண்டாவன்), புலிகேசியின் புகழைக் கேள்விப்பட்டு, இவனிடம் தூதரை அனுப்பி இவனுடன் நட்புக்கொண்டான். புலிகேசியின் சளுக்கிய இராச்சியம் வடக்கே நருமதையாறு முதல் தெற்கே வடபெண்ணையாறு வரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்காளக்கூடாக் கடல் வரையிலும் பதவியிருந்தது. இந்தச் சளுக்கி இராச்சியத்தின் கிழக்குப் பகுதியைப் புலிகேசி தன் தம்பியாகிய குப்ஜவிஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்தான். குப்ஜ விஷ்ணுவர்த்தனன் கலியாணியைத் தலைநகராக கொண்டிருந்தான் சளுக்கிய நாட்டின் மேற்குப் பகுதியைப் புலிகேசி அரசாண்டான். இவன் தலைநகரம் வாதாபி என்னும் பாதாமி நகரம். இவ்வாறு மகேந்திர வர்மன் காலத்தில் வட இந்தியாவை ஹர்ஷ வர்த்தனனும் தக்கண இந்தியாவைப் புலிகேசியும் அரசாண்டனர். புலிகேசியின் சளுக்கிள இராச்சியத்திற்குத் தெற்கே மகேந்திர வர்ம னுடைய பல்லவ இராச்சியம் இருந்தது. இந்தப் பல்லவ இராச்சியம், தொண்டைமண்டலம் சோழமண்டலம் என்னும் இரண்டு மண்டலங் களைக் கொண்டிருந்தது. அஃதாவது வடக்கே வடபெண்ணையாறு முதல், தெற்கே புதுக்கோட்டை வரையில் இருந்தது. சோழ அரசர், பல்லவ அரசர்களுக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். உறையூர், திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் சோழ குடும்பத்தவர் பல்வருக்குக் கீழ்ச் சிற்றரசராக அரசாண்டு வந்தனர். பல்லவ இராச்சியத்திற்குத் தெற்கே பாண்டிநாடு இருந்தது. மகேந்திரவர்மன் காலத்தில் பாண்டிநாட்டை அரசாண்ட பாண்டியன் சேந்தன் என்பவன். இந்தச் சேந்தன், பாண்டியன் மாறவர்மனுடைய மகன்; பாண்டியன் கடுங்கோனுடைய பேரன். இந்தச் சேந்தன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. “மற்றவர்க்கு மருவினிய ஒரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வெளிற்பட்டு விலங்கல்வேல் பொறி வேந்தர் வேந்தன் சிலைத் தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன்.”1 இந்தச் செங்ககோற் சேந்தனுடைய மகன், நெடுமாறன் என்பவன். “நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன்” என்று இவனைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கூறுகிறார். இந்த நெடுமாறன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான். பிறகு திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தவனாக்கப்பட்டான். திருநாவுக் கரசர் பாண்டிநாட்டில் தல யாத்திரை செய்தபோது அவரை வர வேற்றுப் போற்றியவன் இவனே. பாண்டி நாட்டிற்கு மேற்கே சேரநாடு இருந்தது. இக் காலத்தில் சேர நாட்டை யரசாண்ட சேர மன்னன் பெயர் தெரியவில்லை. மகேந்திரவர்மன் காலத்தில் பாரத நாட்டின் அரசியல் நிலை இத. இனி, பாரத நாட்டுடன் சேர்ந்ததும் தமிழ் நாட்டின் அருகில் உள்ளதுமான இலங்கைத் தீவின் அரசியல் நிலை இக் காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். தமிழ்நாட்டின் தென் கிழக்கில் சிங்களத் தீவு என்னும் இலங்கைத் தீவு இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்தத் தீவிற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஏனென்றால், பௌத்த சமயம் தமிழ் நாட்டில் சிறப்படைந்திருந்தது. காஞ்சிபுரம், நாகைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம், போதிமங்கை முதலிய இடங்களில் பௌத்தப் பள்ளிகளும் பௌத்த விகாரைகளும் இருந்தன. ஆகவே பௌத்த நாடாகிய இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதும், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘இலங்கைக்குச் செல்வதும் வழக்கமாயிருந்தது. அன்றியும் இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், அடிக்கடி தமிழ்நாட்டு அரசர்களின் துணையை நாடினார்கள். ஆகவே, சமயச்சார்பாகவும் அரசியல் சார்பாகவும் தமிழ் நாட்டிற்கும் இலங்கைத் தீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இலங்கை வரலாற்றைக் கூறுகிற மகாவம்சம் என்னும்நூலின் பிற்பகுதியாகிய சுல்லவம்சம் என்னும் நூலின் 44 ஆம் அதிகாரத்தி லிருந்து இந்தக் காலத்து அரசியல் நிலையை அறியலாம். அதனைக் கூறுவோம். மகேந்திர வர்மன் காலத்தில் இலங்கைத் தீவின் அரசியல் நிலை, மிகக் குழப்பமான நிலையில் இருந்தது. அரச பதவிக்காகச் சிலர், அடிக்கடி கலகம் உண்டாக்கியும் போர் செய்தும் வந்தபடியினாலே நாட்டில் அமைதி நிலவவில்லை. ஏறக்குறைய கி. பி. 500 முதல் 630 வரையில், அஸதாவது மகேந்திரவர்மன் பல்லவ நாட்டை அரசாண்ட அதே காலத்தில் அக்கபோதி, ஜேட்டதிஸ்ஸன், தாட்டோபதிஸ்ஸன், கஸ்ஸபன் என்னும் நான்கு அரசர்கள் இலங்கைத் தீவின் அரசாட்சிக் காகப் பல முறை போர் செய்தார்கள். இவர்களைப்பற்றிய வரலாறு இது: இரண்டாம் அக்கபோதி: இவன் ஏறக்குறைய கி. பி. 601 முதல் 611 வரையில் அரசாண்டான். இவன் முதலாம் அக்கபோதியின் மகன். இவனைக் குட்ட ராசன் என்றும் குட்ட அக்கபோதி என்றும் கூறுவர். (குட்ட என்றால் இளைய என்பது பொருள்.) இவன், சங்கபத்திரை என்பவளை மணஞ் செய்திருந்தான். இவன் காலத்தில் கலிங்கநாட்டு அரசன் அரசு துறந்து தன் மனைவியுடனும் அமைச்சனுடனும் இலங்கைக்கு வந்து, தூபராம விகாரையின் தலைவராக இருந்த ஜோதிபாலர் என்னும் பௌத்தபிக்கு விடத்தில் துறவு பூண்டான். இவர்களை அக்கபோதியும் சங்கபத்திரை யும் போற்றி வந்தனர். (கலிங்கமன்னன் அரசு துறந்து இலங்கைக்கு வந்ததன் காரணம், சளுக்கிய அரசன் புலிகேசி இவனுடன் போர் செய்து இவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதனால் என்று கருதப்படுகிறது.) இரண்டாம்அக்கபோதி காலஞ்சென்ற பிறகு, சங்க திஸ்ஸன் என்பவன் அரசனானான். இவன் ஏறக்குறைய கி. பி. 611 முதல் 617 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் உரோகண நாட்டில் இருந்த மொக்கல்லானன் என்பவன் அரசபதவிக்காக இவனுடன் போர் செய்தான். இருவருக்கும் போர் நடக்கும்போது, சங்கதிஸ்ஸனுடைய சேனாபதி சங்கதிஸ்ஸனையே எதிர்த்துப் போரிட்டான். இரண்டு சேனைகளுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட சங்கதிஸ்ஸன் போர்க் களத்தில் போராடியபோது, அவனுடைய பட்டத்து யானை ஒரு மர நிழலை நாடிச்சென்றது. அப்போதுமரக்கிளை தடுத்தபடியினாலே அரசனுடைய கொற்றக்குடை கீழே விழுந்துவிட்டது. அக்குடையை மொக்கல்லானனுடைய வீரர்கள் கொண்டுபோய் மொக்கல்லானனிடம் கொடுத்தார்கள். அவன் குன்றின்மேல் ஏறி நின்று அக்குடையை உயர்த் தினான். அது கண்ட சங்கதிஸ்ஸனுடைய சேனைகள் மொக்கல்லானன் வெற்றி பெற்றதாக நினைத்து அவனிடம் போய்விட்டார்கள். இவ்வாறு தனக்குத் தோல்வி ஏற்பட்டதைக் கண்ட சங்கதிஸ்ஸன் தன் மகனுடன் அருகில் இருந்த காட்டினுள் ஓடி ஒளிந்தான். வெற்றிபெற்ற மொக்கல்லானன், இலங்கையின் அரசனானான். இவனை மூன்றாம் மொக்கல்லானன் என்றும் தல்ல மொக்கல்லானன் என்றும் கூறுவர். இவன் 6 ஆண்டு அரசாண்டான். தோல்வியுற்றுக் காட்டிற்கு ஓடிய சங்கதிஸ்ஸனும் அவன் மகனும் பௌத்தபிக்குகளைப் போல வேடம் பூண்டு உரோகண நாட்டிற்குப் போனார்கள். போகும் வழியில் இவர்கள், மொக்கல்லானன் ஆட்களால் அடையாளம் கண்டறியப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு இறந்த சங்கதிஸ்ஸ னுடைய இன்னொரு மகன் ஜேட்ட திஸ்ஸன் என்பவன், மலைய நாட்டில் சென்று மறைந்திருந்தான். மொக்கல்லானனுடைய சேனாபதி சிலாமேகவண்ணன் என்பவன். இவன் அரசனைப் பகைத்து உரோகண நாட்டிற்குப் போய்ச் சேனை யொன்றைச் சேர்த்துக்கொண்டு, மலைய நாட்டில் மறைந்திருந்த ஜேட்டதிஸ்ஸனுடன் (இவன் சங்கதிஸ்ஸனுடைய மகன்) நட்புக் கொண்டு அரசனாகிய மொக்கல்லானன் மேல் படையெடுத்துச் சென்றான். மொக்கல்லானன் சிலாமேகவண்ணனைப் போர்க்களத்தில் எதிர்த்தான். ஆனால் போரில் தோற்று ஓடினான். அவனைச் சிலாமேகவண்ணன் சீயகிரிக்கு அருகில் கொன்றான். மொக்கல்லானனைக் கொன்று வெற்றிபெற்ற சிலா மேக வண்ணன், ஜேட்டதிஸ்ஸனை அநுராதபுரத்திற்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தான். ஆனால், இவனுடைய உண்மையான நோக்கத்தை யறிந்த ஜேட்டதிஸ்ஸன், தன்னைக் கொன்றுவிடுவான் என்று தெரிதந்து, இவனிடம் வராமலே மலைய நாட்டிலேயே இருந்து விட்டான். ஆகவே, சிலாமேகவண்ணன் இலங்கையின் அரசனானான். ஜேட்டதிஸ்ஸனுடைய அம்மாமன் சிறீநாகன் என்பவன் தமிழ் நாட்டிற்கு வந்து ஒரு சேனையைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்குப் போய்ச் சிலாமேகவண்ணனுடன் போர் செய்தான். ஆனால், இப் போரிலும் சிலாமேகவண்ணனே வெற்றி பெற்றான். இவன் ஒன்பது ஆண்டு அரசாண்டான். கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவனுக்குப் பிறகு அக்கபோதி என்பவன் அரசானானான். இவனை மூன்றாம் அக்கபோதி என்று கூறுணுவர். சிறீசங்கபோதி என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. அக்கபோதிக்கு மானா என்னும் பெயருள்ள தம்பியொருவன் இருந்தான். அக்கபோதி, மானாவைத் துணை வேந்தனாக்கி அவனைத் திக்கிண தேசத்திற்கு அரசனாக்கினான். அக்கபோதி நெடுங்காலம் அரசாளவில்லை. அவன் அரசாட்சிக்கு வந்த ஆறாவது மாதத்தில், மலைநாட்டில் ஒதுங்கியிருந்த ஜேட்டதிஸ்ஸன் (சங்கதிஸ்ஸனுடைய மகன்) சேனையொன்றைத் திரட்டிக்கொண்டு தாட்டா சிவன் என்னும் அமைச்சனுடன் அநுராதபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். அக்க போதி, ஜேட்டதிஸ்ஸனுடன் போர்செய்து தோற்றான். தோற்று மாறுவேடம் பூண்டு தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தான். வெற்றிபெற்ற ஜேட்டதிஸ்ஸன் இலங்கையின் அரசனானான். இவனை மூன்றாம் ஜேட்டதிஸ்ஸன் என்பர். இவனும் நெடுங்காலம் அரசாளவில்லை. ஏனென்றால், போரில் தோற்றுத் தமிழ் நாட்டிற்கு ஓடிய அக்கபோதி தமிழச் சேனையொன்றைத் திரட்டிக்கொண்டு இலங்கைக்கு வந்து ஜேட்டதிஸ்ஸனை எதிர்த்தான். இவன் அழைத்து வந்த தமிழப்படையின் தலைவன் வெலுப்பன் என்பவன். வெலுப்பன் என்பது வேலப்பன் என்பதன் திரிபாக இருக்கக் கூடும். காலவாபி என்னும் இடத்திலே அக்கபோதி அழைத்துவந்த தமிழச்சேனையை ஜேட்டதிஸ்ஸனுடன் போர்செய்து அவனைக் கொல்ல முயற்சித்தான். வெலுப்பனால் தான் உயிர் இழப்பது உறுதி யென்றறிந்த ஜேட்டதிஸ்ஸன் தன் உடைவாளினால் தன்னைத்தானே குத்திக் கொண்டு இறந்தான். ஆகவே அக்கபோதி மiபடியும், இரண்டாம் முறையாகத் தமிழப்படையின் உதவியினால் இலங்கைக்கு அரசனானான். இவன் அழைத்துவந்த தமிழப் படையினரில் பெரும்பாலோர் அநுராதபுரத்திலே தங்கிவிட்டார்கள். இவன் முன் போலவே தன் தம்பியாகிய மானா என்பவனைத் துணைவேந்தனாக்கி இலங்கையை அரசாண்டான். ஆனால், மானா அரண்மனையின் அந்தப்புரத்திலே கூடாபொழுக்கமாக நடந்துகொண்டபடியால்அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். ஆகவே மற்றொரு தம்பியாகிய கஸ்ஸபன் என்பவனைத் துணை வேந்தனாக்கினான். போர்க்களத்திலே உயிரைவிட்ட ஜேட்டதிஸ்ஸனுடைய அமைச்சனான தாட்டாசிவன், தன்னுடைய அரசன் இறந்துவிட்டபடியாலும், அக்கபோதி வெற்றியடைந்தபடியாலும் தனஙககு இலங்கையில் செல்வாக்கு இல்லை யென்பதையறிந்து தமிழ் நாட்டில் சென்று அடைக்கலம் புகுந்தான் அடைக்கலம் புகுந்த தாட்டாசிவன் அக்க போதியை வென்று இலங்கையரசைத் தான் அடைவதற்குச் சமயம் பார்த்திருந்தான். இச்சமயத்தில் மானா என்னும் உபராசன் கொல்லப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்டு உடனே புதியதோர் தமிழச்சேனைகளை அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்திற்கு அருகில் உள்ள திந்திணி என்னும் ஊரில் பாசறை யமைத்தான். தாட்டாசிவன் தமிழப்படையுடன் தமிழ்நாட்டிலிருந்து போருக்கு வந்த செய்தியை அறிந்த அக்கபோதி, சேனையுடன் சென்று அவனுடன் போர்செய்தான். இந்தப் போரில் தாட்டாசிவன் வெற்றி யடைந்து அக்க போதி தோல்வுயுற்றான். தோல்வியடைந்த அக்க போதி, முடி முதலிய அரச சின்னங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏகா வலி என்னும் பெயருள்ள முத்துமாலை ஒன்றைமட்டும் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடினான். தமிழச் சேனையினால் வெற்றிபெற்று அரசாட்சியைக் கைப்பற்றிய தாட்டாசிவன், ஏகாவலி என்னும் முத்துவடம் ஒன்று தவிர மற்ற அரச சின்னங்களை அணிந்து இலங்கையின் அரசனானான். அரசனான பிறகு தாட்டாசிவன்தன் பெயரைத் தாட்டோபதிஸ்ஸன் என்று மாற்றிக்கொண்டான். இவன் தமிழ்நாட்டில் எங்கிருந்து தமிழச் சேனைகளை அழைத்து வந்தான் என்பது தெரியவில்லை. பாண்டிய நாட்டிலிருந்து அழைத்து வந்திருக்கக்கூடும். தோற்று ஓடிய அக்கபோதி தமிழ்நாட்டிலே எந்த அரசனிடம் அடைக்கலம் புகுந்தான் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழப் படையை அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து தாட்டோபதிஸ்ஸ னுடன் போர் செய்தான். இந்தப் போரில் அக்கபோதி வெற்றியடைந்து தாட்டோபதிஸ்ஸன் தோல்வியடைந்தான். ஆகவே, அக்கபோதி மூன்றாவது முறையாக மீண்டும் அரசனானான். போரில் தோற்று அரசை இழந்த தாட்டோபதிஸ்ஸன் மீண்டும் படைதிரட்டத் தமிழ்நாடு சென்றான். இவ்வாறு தாட்டோபதிஸ்ஸனும் அக்கபோதியும் பலமுறை போர் செய்து, தோற்பதும் வெல்வதும் அரசாள்வதும் அரசு துறப்பது மாக மாறி மாறி இலங்கையை அரசாண்டார்கள். இவர்கள் தமிழ்நாட்டி லிருந்து அடிக்கடி போர்வீரர்களை அழைத்துக் கொண்டு வந்த படியால், தமிழ வீரர்கள் அநுரையில் அதிகமாகக் குடியேறினார்கள். அநுராத புரத்தில் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று. அக்க போதியும் தாட்டோபதிஸ்ஸனும் மாறிமாறிப் போர் செய்து கொண்டிருந்தபடியால், போரின் காரணமாக நாட்டிலே வறுமை உண்டாயிற்று. நாட்டுமக்கள் பொருளை இழந்து துன்பப்பட்டனர். நிலபுலன்கள் விளையாமல் மக்கள் அல்லல் அடைந்தார்கள். அடிக்கடி போர் செய்தபடியினாலே அரசர்களிடம் பொருள் இல்லாமற் போயிற்று. ஆகவே, அவர்கள் பௌத்தப் பள்ளிகளிலும் விகாரைகளிலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து அப் பொருள்களைப் போருக்காகச் செலவுசெய்தார்கள். தாட்டோபதிஸ்ஸன் மகா விகாரை, அபயகிரி விகாரை, ஜேதவன விகாரை என்னும் விகாரைகளில் இருந்த பொன்னையும் பொருளை யும் கவர்ந்து கொண்டதோடு, தாகோப (தாதுகர்ப்பம்) என்னும் பௌத்தப் பள்ளிகளில் இருந்த விலையுயர்ந்த பொருள்களையும், பொன் நகைகளையும், பொன்னால் செய்யப்பட்டிருந்த புத்த விக் கிரகங்களையும் கவர்ந்து கொண்டான், தூபாராமம் என்னும் பள்ளியில் இருந்த பொன் கலசங்களையும் அதைச்சேர்ந்த சேதியத்தில் அமைத் திருந்த நவரத்தினங்கள் பதித்த பொற்குடையையும் கவர்ந்து கொண்டான். இவ்வாறு இவன் பௌத்தப் பள்ளிகள், பௌத்த விகாரைகள் முதலியவற்றில் இருந்த செல்வங்களைக் கவர்ந்து அவைகளைப் போருக்காகச் செலவு செய்தான். இவ்வாறே அக்கபோதியும் புத்த விகாரைகளில் இருந்த பொருள்களைக் கவர்ந்து கொண்டான். அக்கபோதியின் தம்பியாகிய கஸ்ஸபன் (உபராசன்) தூபராம சேதியத்தைத் திறந்து, அதற்கு முன்னைய அரசர்கள் தானமாக வழங்கியிருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். தக்கிண விகாரையிலிருந்த சேதியங்களுக்குரிய பொன்னையும் நிதிகளையும் கவர்ந்தான். இவ்வாறு இந்த அரசர்கள் தமக்குள் அடிக்கடி செய்து வந்த போர் களுக்காகப் பௌத்த மடங்களையும் பௌத்தக் கோயில்களையும் கொள்ளையிட்டு அவற்றின் பொருள்களை கவர்ந்து கொண்டார்கள் கடைசியாகத் தாட்டோபதிஸ்ஸன் அக்கபோதியை வென்று மீண்டும் அரனானான். தோற்றுப்போன அக்கபோதி, உரோகண நாட்டிற்குச் சென்றான்; அங்கே நோய்வாய்ப்பட்டு இறந்தான். அக்கபோதி இறந்த பிறகும் தாட்டோபதிஸ்ஸன் அமைதியாக அரசாள முடியவில்லை. ஏனென்றால், அக்கபோதியின் தம்பியும் உபராசனுமாக இருந்த கஸ்ஸபன் படையெடுத்து வந்து போர்செய்த தாட்டோபதிஸ்ஸனை வென்றான். போரில் தோற்ற தாட்டோபதிஸ்ஸன் பொன்முடி மணிவடம் முதலிய அரச சின்னங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான். வெற்றி பெற்ற கஸ்ஸபன், அரச சின்னங்களை அணியாமலே இலங்கைக்கு மன்னனானான். இந்தக் கஸ்ஸபனை, இரண்டாம் கஸ்ஸபன் என்று சரித்திர நூலோர் கூறுவர். கஸ்ஸபன் இலங்கைக்கு அரசனான சில ஆண்டு கழித்துத் தோற்று ஓடிய தாட்டோபதிஸ்ஸன் படை திரட்டிக்கொண்டு போருக்கு வந்தான். கஸ்ஸபன் அவனை எதிர்த்துப் போர் செய்தான். இந்தப் போரில் தாட்டோப திஸ்ஸன் இறந்துபோனான். ஆகவே, கஸ்ஸபனே இலங்கையை அரசாண்டு வந்தான்.1 போரில் இறந்த தாட்டோபதிஸ்ஸனுடைய தங்கை மகனும் உபராசனாக இருந்தவனும் ஆன ஹத்ததா தன் என்பவன் போர்க்களத்தில் உயிர் தப்பிப்பிழைத்துத் தமிழ் நாட்டிற்கு ஓடிவந்து அடைக்கலம் புகுந்தான். மகேந்திரவர்மன் காலத்திலே இலங்கைத் தீவின் அரசியல் நிலை இது. இதனால், இலங்கை அரசியலில் மறைமுகமாகத் தமிழ் நாட்டின் தொடர்பும் இருந்து வந்ததை அறிகிறோம். அக்காலத்தில் இலங்கையின் தலைநகராமாக அநுராதபுரத்தில் தமிழ் வீரர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகமாக இருந்தது. 3. சமயநிலை 1. சமண சாக்கிய மதங்கள் மகேந்திரவர்மன் காலத்திலே தமிழ்நாட்டிலே சமண சமயமும் சாக்கிய மதமும் செழித்திருந்தன. சமண சமயம் என்பது, ஆருகத மதம்; அஃதாவது ஜைன சமயம். சாக்கிய மதம் என்பது, பௌத்த சமயம். இந்த இரண்டு சமயங்களும் சேர சோழ பாண்டியநாடு என்னும் மூன்று தமிழ்நாடுகளிலும் பரவி நிலை கொண்டிருந்தன. இந்த மதங்களை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். சமணருடைய பள்ளிகளும் பாழிகளும், பௌத்தருடைய பள்ளிகளும் விகாரைகளும் நாடெங்கும் ஊரெங்கும் நிறைந்திருந்தன. சமணத் துறவிகளும் பௌத்தப் பிக்குகளும் எங்கும் நிறைந்திருந்தனர். இந்த நிலையைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ஞானசம்பந்தருடைய தந்தையாராகிய சிவபாத விருதயர், நாட்டில் சைவம் குன்றியிருந்ததையும் சமண சாக்கியம் பெருகியிருந்ததையும் கண்டு மனம் வருந்தினர் என்று சேக்கிழார் இவ்வாறு கூறுகிறார்: - “மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே ஆதியரு மறைவழக்கம் அருகியான் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறு தொழியக்கண்டு ஏதமில்சீர்ச் சிவபாத இரு தயர்தாம் இடருழந்தார்.” (திருஞான - கஅ.) சிவபாதவிருதயர் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தவர். ஆனால், ஞானசம்பந்தர் இவருக்கு மகனாக இன்னும் பிறக்கவில்லை. நாவுக்கரசரும் இக்காலத்தில் இருந்தவராவர். தொண்டைநாட்டையும் சோழநாட்டையும் அரசாண்ட மகேந்திவர்மனே சமண சமயத்ததவ னாக இருந்தான். பிற்காலத்தில் இவன் நாவுக்கரசரால் சைவசமயத்தில் சேர்க்கப்பட்டான். இவ்வாறே பாண்டியநாட்டிலும் சமணசமயம் பெருகிச் சைவ சமயம் குன்றியிருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார் :- “பூழியர் தமிழ்நாட் டுள் பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு மூழிநீர் கையிற் பற்றி அமணரே யாகி மொய்ப்ப.” “பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியுமுக் குடையு மாகித் திரிபவர் எங்கும் ஆகி அறியுமச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங் காலை” (திருஞான : 601-2) இக்காலத்தில் பாண்டியநாட்டை அரசாண்ட மன்னன் செங்கோற் சேந்தன். இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் சமணசமயமும் பௌத்தமதமும் பெருகிற் செழித்திருந்தன; சைவ வைணவ சமயங்கள் குன்றியிருந்தன. 2. சைவ வைணவ மதங்கள் சூமண சாக்கிய மதங்கள் சிறப்புற்றிருந்தன என்று சொன்னால், மற்றச் சைவ வைணவ மதங்கள் இல்லாமற் போயின என்று கருதக் கூடாது. அக்காலத்தில் சைவ வைணவ சமயங்களும் இருந்தன. சைவக் கோயில்களும் வைணவக் கோயில்களும் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்தன. ஏன்? சைவ மடங்கள்கூடச் சிற்சில இடங்களில் அக்காலத் தில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், சைவ வைணவச் சமயங்கள் சிறப்புப் பெறாமல் இருந்தன. சைவ சமயப் பிரிவுகள் அக்காலத்திலே சைவசமயத்தில் காபாலிகம், பாசுபதம், பைரவம் முதலான பிரிவுகள் இருந்தன. என்னை? “விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் தெருவீனிற் பொலியும் திருவாரூர் அம்மமானே.” என்றும், “தலையிற் றரித்தவென்புத் தலைமயிர் வடமும்பூண்ட விலையிலா வேடர்வீழி மிழலையுள் விகிர்தனாரே.” என்றும், “தலையறுத்த மாவிரதம் தரித்தான் தன்னை.” “பசுபதியைப் பாசுபத வேடத்தானை.” “பஞ்சவடி1 மார்பினானை.” என்றும் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறுவது காண்க. மகேந்திரவர்மனும் தான் எழுதிய மத்தவிலாசப் பிரஹசனம் என்னும் நூலிலே, திருவேகம்பத்தில் காபாலிகர், பாசுபதர் இருந்த செய்தியைக் கூறுகிறான். இவற்றினால் அக்காலத்தில் இந்த மதங்கள் இருந்தன என்பது தெரிகிறது. 3. பக்தி இயக்கம் பௌத்த சமண மதங்கள் பெருகிச் சைவ வைணவ மதங்கள் குன்றியிருந்தபோதிலும் அக்காலத்தில் பக்தியியக்கம் தோன்றி யிருந்தது. பிற்காலத்திலே சைவ வைணவ சமயங்கள் செழித்து வளரவும் பௌத்த சமண மதங்கள் குன்றி மறையவும் காரணமாக இருந்தது இந்தப் பக்தி இயக்கந்தான். சைவ நாயன்மார்களும் வைணவ அடியார்களும் இந்தப் பக்தி இயக்கத்தைப் பரவச் செய்தார்கள். மகேந்திரவர்மன் காலத்தில் சமயப் பூசல்கள் மும்முரமாக நிகழ்ந்தன. சமண சமயம், பௌத்த மதத்தையும் சைவ வைணவ சமயங்களையும் தாக்கிற்று. அவ்வாறே பௌத்த மதம் சமணமதத்தையும் சைவ வைணவ மதங்களையும் தாக்கிற்று. அங்ஙனமே சைவ வைணவ சமயங்கள் சமண சமயத்தையும் பௌத்த மதத்தையும் தாக்கின. நாளடைவில் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது. சமண பௌத்த மதங்கள் குன்றத் தொடங்கின. மகேந்திரவர்மன் காலத்தில் பௌத்த மதத்தையும் சமண மதத்தையும் எதிர்த்துச் சைவசமயத்தை ஆதரித்துப் பக்தியைப் பரவச் செய்தவர் திருநாவுக்கரசு நாயனார். இவர் சைவசமயப் பிரசாரம் செய்யத் தொடங்கியது. இவருடைய வயோதிக காலத்தில். முதன் முதலாகச் சைவ சமயப்பிரசாரம் செய்யக்கிளம்பி ஊர்ஊராகச் சுற்றுப் பிரயாணம்செய்து சைவத்தை நிலைநாட்டியவர் இவரே ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக இவர் தமது முதுமைக்காலத்தில் சமயத்தொண்டு செய்து தமது 81 ஆவது வயதில் சிவகதியடைந்தார். 4. திருநாவுக்கரசர் திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் இருந்த புகழனார், மாதினியார் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்து மருணீக்கியார் என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். சைவசமயத்திலே பிறந்த இவர் இளமையில் கல்வியை நன்குகற்றுத் தேர்ந்தார் வாலிபப் பருவத்திலே பெற்றோரை இழந்தார். உண்மைச் சமயம் எது என்பதை யறிய ஆவல் கொண்டு பல சமயக் கொள்கை களை ஆராய்ச்சி செய்தார். அக்காலத்தில் பாடலிபுரம்1 என்னும் இடத்தில் இருந்த, பேர்போன சமண மடத்தில் சேர்ந்து சமண சமய நூல்களையெல்லாம் துறைபோகக் கற்றுத் தேர்ந்தார். இவருடைய சமய அறிவையும் கல்வி அறிவையும் கண்ட சமணர்கள் இவரைத் தம் மதகுருவாக அமைத்துத் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்துப்போற்றினார்கள். தருமசேனர் பாடலிபுரத்துப் பள்ளியிலே சமண சமயத் தலைவராக இருந்தார். நெடுங்காலம் சமண குருவாக இருந்து தமது வாழ்நாளின் பெரும்பாகத்தை அங்கே கழித்தார். தருமசேனருடைய முதுமைப்பருவத்தில் இவருக்குக் கொடிய சூலைநோய் கண்டது. அந்நோய் நாளுக்கு நாள் கடுமையாக இருந்தது. மணி மந்திர மருந்துகளினாலும் இவருடைய சூலைநோய் தீரவில்லை. நோயின் துன்பத்தை இவர் தமது திருவதிகைப் பதிகத்தில் நன்கு விளக்கிக் கூறுகிறார். “தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்,” என்றும், “சுடுகின்றது சூலை” என்றும், “பயந்தே யென்வயிற்றினகம்படியே பறித்துப் புரட்டி யறுத்து ஈர்த்திட நான் அயர்ந்தேன்” என்றும், “கலித்தே யென் வயிற்றி னகம் படியே கலக்கிமலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்தேன்” என்றும் இவர் கூறுவதிலிருந்து இந்நோயின் கொடுமையை நன்கறியலாம். இந்நோய் தீராதென்று கைவிடப்பட்ட இவர், நோய் பொறுக்க முடியாத நிலையில், தம் தமக்கையாரான திலகவதியார் இருந்த திரு வதிகை என்னும் ஊருக்குச் சென்று அவரைக் கண்டார். தமக்கையார், சிவபெருமானை வழிபட்டால் சூலைநோய் தீரும் என்று கூற அவ் வாறே இவர் சைவசமயத்தில் சேர்ந்து சிவபெருமானை வழிபட்டார். அப்போது அவருக்கிருந்த சூலைநோய் நீங்கிவிட்டது. அது முதல் இவர் சைவசமயத்தையும் பக்தியியக்கத்தையும் பரவச் செய்வதில் தமது வாழ்நாட்களைக் கழித்தார். தருமசேனர், சமண சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வந்த பின்னர், இவருக்குத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் சூட்டினார்கள். வடமொழியாளர் திருநாவுக்கரசர் என்னும் பெயரை வாகீசர் என்று மொழி பெயர்த்துக் கொண்டார்கள். திருநாவுக்கரசர் சைவசமயத்திற்கு வந்து பக்தி இயக்கத்தைப் பிரசாரம் செய்தது, இவரது இளமை கழிந்த முதுமைப் பருவத்திலாகும். இதனை இவர் தமது பாடலகளிலே குறிப்பிட்டீருக்கிறார். இவர் சமணசமயத்தை விட்டுச் சைவசமயத்தில் புகுந்தபோது இவருக்கு வயது ஐம்பத்தைந்து அல்லது அறுபது இருக்கலாம். என்னை? “ழனபெலாம் இளைய காலம் ழர்த்தியை நிளையா தேரடிக் கண்கண இருமி நாளும் கருத்தழிந் தருத்த மின்றிப் பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்டனாரே” (திருவதிகை வீரட்டம், நேரிசை ச.க.) “பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிபொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே” (திருக்கொண்டீச்சரம். திருநேரிசை. கூ.) “விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளந் திளைக்கின்ற முடியி னான்றன் திருவடி பரவ மாட்டாது இளைக்கின்றேன் இருமி யூன்றி என்செய்வான் தோன்றி னேனே.” (குறைந்த திரு நேரிசை.) “தயைவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த இளையனு மல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே.” (குறைந்த திருநேரிசை.) தடியொடுங்கி வந்தடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப வெல்லாம். (திருவாரூர்.2) என்று இவரே தம்மைப்பற்றிக் கூறுவது காண்க. இவ்வாறாக, சமண சமயத்தைவிட்டுச் சைவமதத்தைச் சேர்ந்த பின்னர், திருநாவுக்கரசர் திருமணம் செய்து கொண்டு மக்களைப் பெற்றுக் குடும்பத்தோடு வாழ்ந்திருந்து பின்னர் மீண்டுந் துறவுபூண்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக்காரர் எழுதுகிறார்.1 இதற்கு இவர் காட்டும் சான்று என்ன வென்றால், “மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ் சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் தலம தோரேன்.” என்னும் குறைந்த நேரிசை (உ) செய்யுளாகும். இதனை ஆதார மாகக் கொண்டு, நாவுக்கரச்ர திருமணம் செய்து கொண்டு பிள்ளைப் பேற்றுடன் வாழ்ந்தார் என்று இவர் கூறுவது பொருந்தாது. நாவுக்கரசர் திருமணஞ்செய்து கொண்டார் என்று பெரியபுராணம் கூறவில்லை. மேலும் இளமை கழிந்த முதிய வயதில் இவர் சைவரானார் என்பதே துணிபு. திருமணஞ்செய்து இல்லறத்தில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு இவர் மேற்கோள் காட்டுகிற அதே குறைந்த நேரிசைப் பதிகத்தின் கூ ஆவது பாடலில், “தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த இளையனு மல்லே னெந்தாய் என் செய்வான் தோன்றி னேனே.” என்று கூறுவது இக்கருத்துக்கு மாறுபடுகிறது. நாவுக்கரசர் சமணசமயத்தைவிட்டுச் சைவசமயத்துக் வந்த பின்னர்த் திருமணஞ் செய்து கொண்டிருந்தால், அதனைத் தவறாமல் பெரியபுராணம் கூறுமன்றோ? அவ்வாறு கூறாதபடியினாலும், சைவ சமயத்துக்கு வந்த போது முதிய வயதினராகையினாலும் இவர் திருமணஞ் செய்து கொண்டார் என்பது சிறிதும் பொருந்தாது. அப்படி யானால், நாவுக்கரசர் வாக்கினாலேயே அகச்சான்று இருக்கிறதே; ஆகவே, மணம் செய்து கொண்டார் என்பது உண்மைதானே என்று மக்கள் கருதுவர். அவ்வாறு கருதுவது தவறு அடியார்கள், மனi மக்கள் இல்லாதவர்களாயிருந்தாலும் குடும்பப்பாசம் உடையவர் போல ஆண்டவனிடம் முறையிடுவது மரபு. இந்த மரபையொட்டிப் பாடிய ஒரு செய்யுளை மட்டும் ஆதாரங் காட்டி இவர் மணஞ்செய்து கொண்டு வாழ்ந்தார் என்று கூறுவது பொருந்தாது. ஏனைய சான்றுகள், மணஞ்செய்து கொண்டார் என்பதற்கு மாறுபடு கின்றன. கனி மரப் பாராமல், ஏனைய சான்றுகளையும் ஆராயாமல் ஏதோ ஓர் ஆதாரத்தை மட்டும் மேற்கோள் காட்டி ஒரு கருத்தை நிலை நாட்ட “ஆராய்ச்சி” யாளர்கள் முற்படுவார்களாகும். அது பெருங்கேடாக முடியும். உதாரணமாக ஒன்று கூறுவோம்: காரைக்கால் அம்மையார் என்பவர் பெண்பாலார் என்பதும் எல்லோரும் அறிந்த செய்தி. இவ்வம்மையார் இயற்றியுள்ள திரு விரட்டை மணிமாலையில், “நினையா தொழுதிகண் டாய்நெஞ்ச மேயங்கோர் தஞ்சமென்று மனையா ளையுமக்க டம்மையுந் தேறியோ ராறுபுக்கும் நனையாச் சடைமுடி நம்பனந் தாதைநொந் தாதசெந்தீ யனையா னமார் பிரானண்ட வாண னடித்தலமே.” என்று பாடியுள்ளார். பெண்பாலாராகிய அம்மையார், இப் பாடலில் மனையாளையும் மக்கள் தம்மையும் என்று கூறியுள்ளது கொண்டு, இது அவரே கூறிய அகச்சான்று ஆகையால், “காரைக்கா லம்மையார் பெண்பாலார் அல்லர்; ஆண் மகன். அவர் பெண்ணாக இருந்தால் கணவனையும் மக்களையும் என்று கூறியிருப்பார். அப்படிக் கூறாமல் மனையாளையும் மக்களையும் என்று கூறியபடியால் காரைக்கால் அம்மையார் ஆண்மகனே” என்று ஓர் ஆராய்ச்சியாளர் கிளம்புவா ரானால் எப்படியிருக்கும்! ஆகவே கவி மரபாகவோ அன்றி வழுவமை தியாகவோ கவிஞர்கள் கூறிய செய்திகளைப் பகுத்தறிவுகொண்டும் ஏனைய சான்று கொண்டும் ஆராயாமல் மனம்போனவாறு கூறத் துணிவது உண்மைக்கு மாறுபட்ட தவறான முடிபாகும். நிற்க. சமணசமயத் தலைவராக இருந்தபோது தருமசேனர் என்று பெயர் பெற்றிருந்த மருணீக்கியார், சைவசமயத்தில் சேர்ந்தபோது நாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார் என்று கூறினோம். பிற்காலத்திலே இவருடன் சேர்ந்து சைவசமயத்தைப் பரப்பிய இவருக்கு மிக இளையரான ஞானசம்பந்தர், இவரை முதன்முதல் கண்டபோதும் அதன் பிறகும் இவரை “அப்பரே” என்று அழைத்தார். அதாவது தந்தை போன்ற பெரியவர் என்பது பொருள். ஆகவே, சம்பந்தர் காலத்தில் நாவுக்கரசர் மிக்க வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பது இதனால் தெரிகிறது. 5. மகேந்திரன் சைவனானது நாவுக்கரசர், சமணசமயத்தவனாக இருந்த மகேந்திர வர்மனைச் சைவசமயத்தில் சேர்த்தார் என்று கூறுவர். இதற்குப் பெரியபுராணச் செய்யுள் ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால், பெரியபுராணம் மகேந்திரன் பெயரைக் கூறவில்லை; பல்லவ அரசர்களின் பொதுப் பெயராகிய காடவன், பல்லவன் என்னும் பெயர்களை மட்டும் கூறுகிறது காடவ அரசன் சைவசமயத்தைச் சேர்ந்தபிறகு பாடலிபுரத்தி லிருந்த சமணப் பள்ளியை, (அப்பர் தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த அதே சமணப் பள்ளியை) இடித்து அந்தக் கற்களைக் கொண்டுபோய் திருவதிகைச் சிவன் கோயிலிலே குணதரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரியபுராணம் கூறுகிறது. “வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித் துககொணர்ந்து குணதாவீச் சரம்எடுத்தான்.” என்பது அச்செய்யுள். இப் பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் குணதரவீச்சரம் என்று கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பது இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்னும் பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன் குணதரன் என்னும் இரண்டு சொற்களும் ஒரே அரசனைக் குறிக்கின்றன என்றும், இப்பெயர்கள் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்கள் என்றும், ஆகவே அப்பால் சைவனாக்ப்பட்டவன் மகேந்திரவர்மன்தான் என்றும், அவ்வரசன் தனது சிறப்புப் பெயராகிய குணதரன்1 (குணபரன்) என்னும் பெயரால் குணதரவீச்சரம் கட்டினான் என்றும் சரித்திர ஆராய்ச்சிக் காரர் கூறுவர். வல்லம் குகையில் உள்ள தமிழ் எழுத்து. “குணபரன்” என்பது இதன் வாசகம் திருவதிகையில் குணதரவீச்சரம் கட்டிய காடவனாகிய பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவன் என்றும், அவனைத்தான் நாவுக்கரசர், சமணமதத்திலிருந்து சைவமதத்திற்கு மாற்றினார் என்றும், நாவுக்கரசரும் மகேந்திரவர்மனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் முதன் முதலாக ஆராய்ந்து கூறியவர் திரு. வி. வெங்கையா அவர்களாவார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது :- திருநாவுக்கரசர் அல்லது அப்பர் என்பவருடைய காலத்தில் இருந்த திருஞானசம்பந்தர் அப்பருக்கு இளையவர். பெயர் குறிக்கப் படாத ஒரு பல்லவ அரசன் நாவுக்கரசரை முதலில் துன்புறுத்திப் பிறகு அவரைப் போற்றினான். இந்த அரசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. குணதரன் என்பது. இந்த அரசனுக்குக் கீழ்ப்பட்டுச் சிற்றரசனாக இருந்த ஒருவன் தன்னுடைய அரசன் பெயரினால் குணதரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. செங்கல் பட்டுக்கு அடுத்த வல்லம் கிராமத்துக் குகைக்கோயில் சாசனம் ஒன்று குணபரனை மகேந்திர போத்தரசன் என்று கூறுகிறது. டாக்டர் ஹல்ட்ஸ்1 என்பவர், ஊதயேந்திரச் செப்பேட்டுச் சாசனத்தில் கூறப்படுகிற இரண்டு மகேந்திரவர்மன் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். குணதரன், குணபரன் என்னும் பெயர்களில் மிகச் சிறுவேறுபாடுதான் காணப் படுகிறது. வல்லம் குகைக்கோயில் சாசனத்தில் கூறப்படுகிற குணபரன் என்னும் மகேந்திரன்தான், திருநாவுக்கரசரை முதலில் துன்புறுத்திப் பிறகு போற்றினான் என்றும், பெரிய புராணம் கூறுகிற குணதரன் ஆவன் என்றும் துணிந்து கூறலாம். ஞானசம்பந்தர், முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தில் இருந்தவர் என்று முன்னமே கூறியுள்ளேன். ஞான சம்பந்தருக்கு மூத்தவர் நாவுக்ரசர் ஆகையினாலே, வல்லம் சாசனம் கூறுகிற குணபாரனாகிய மகேந்திரபோத்தரசன் (இவனைப் பெரிய புராணம் கூறுகிற குணதரன் என்று துணிந்து கூறுகிறேன்) முதலாம் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மனாகத்தான் இருக்க முடியும்.2 பெரியபுராணம் கூறுகிற குணதரன் என்னும் பெயரும் வல்லத்துச் சாசனம் கூறுகிற குணபரன் என்னும் பெயரும் ஒரே அரசனைத்தான் குறிக்கின்றன; அந்த அரசன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவன் என்று திரு. வி. வெங்கையா அவர்கள் கொண்ட முடிவைச் சரித்திர ஆசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மகேந்திர வர்மனும் நாவுக்கரசரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.1 தமது முதிர்ந்த வயதிலே, சமணசமயமும் பௌத்த மதமும் வலிமை பெற்று இருந்த காலத்திலே, தன்னந்தனியே தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப்பிரயாணஞ் செய்து பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் வளர்த்துப் பரப்பிய முதல் சமயகுரவர் திருநாவுக்கரசரே. ஏனைய சமயங்களின் ஆதிக்கம் வலுப்பட்டிருந்த காலத்திலே, தளர்ந்த வயதிலும் அஞ்சாமல் சென்று பரப்பி மற்றவர்களுக்கு வழிகாட்டிய பெருமை நாவுக்கரசருக்கேயுரியது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகச் சமயப் பிரசாரம் செய்தபிறகு இவருக்குத் துணையாக ஞான சம்பந்தர் தோன்றினார். 6. அப்பரின் சமயப் பற்று திருநாவுக்கரசர் சைவசமயத்தில் திண்மையான பற்றும் அழுத்த மான உறுதியும் கொண்டிருந்தார். இந்த உறுதி இவரிடத்தில் மேன் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. இந்த உறுதியை இவர் தமது திருப்பாக்களில் ஆங்காங்கே கூறியுள்ளார். அவற்றில் சில வருமாறு: “பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும் சுற்றா யலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு உற்றான் உமையவட் டகன்பன் திருப்பா திரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன் மொய்கழலே.” “மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்h திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.” “வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்டு ஊனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.” “கண்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சருங்கிப் பன்னெடுஞ் காலம் மழைதான் மறக்கினும் பஞ்சமுண்டென் றென்னொடும் சூளறும் அஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண் பொன்நெடுங் குன்றமொன் றுண்டுகண் டீர்இப் புகலிடத்தே.” “தப்பி வானந் தரணிகம் பிக்கிலென் ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவி அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.” 7. அப்பர் காலத்து நாயன்மார் திருநாவுக்கரசர் காலத்தில் இருந்த சைவ அடியார்கள் அப்பூதி யடிகள், முருக நாயனார், சிறுத்தோண்டர், திருநீல நக்கர், நெடுமாற நாயனார், பாண்டிமாதேவியார், குலச்சிறையார், குங்குலியக்கலயர், ஞானசம்பந்தர், திருநீல கண்ட யாழ்ப்பாணர் முதலானோர். திருநாவுக்கரசர், மகேந்திரவர்மன் காலத்திற்குப் பிறகு அவன் மகன் மாமல்லன் முதல் நரசிம்மவர்மன் காலத்திலும் உயிர்வாழ்ந் திருந்தார். நரசிம்மவர்மனுடைய படைத்தலைவர்களில் யானைப் படைத் தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் எனப்படும் சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர், சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் தலை நகரான வாதாபியை வென்றார் என்று பெரியபுராணம் கூறுகிறது.1 இது நிகழ்ந்த ஆண்டு கி. பி. 642 என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். வாதாபியை வென்றபிறகு சிறுத் தொண்டர், படைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கி சைவத் தொண்டு செய்துவந்தார். அக்காலத்தில் சிறுத்தொண்டர் நாவுக்கரசருடனும் மிக இளைஞரான ஞானசம்பந்த ருடனும் நண்பர் ஆனார். வாதாபியை வென்றபிறகு சிறுத் தொண்டருக்குக் குழந்தை பிறந்ததென்றும், அக்குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்ட காலத்தில் ஞானசம்பந்தர் அவர் இல்லஞ்சென்றார் என்றும் பெரிய புராணம் கூறுகிறது. அதாவது ஏறக்குறைய கி. பி. 648 இல் சம்பந்தரும் சிறுத்தொண்டரும் சந்தித்திருக்கவேண்டும். சிறுத்தொண்டர் நாவுக் கரசரைத் திருப்புகலூரில் சந்தித்ததும் இதே ஆண்டாக இருக்கலாம். இந்த ஆண்டிற்குப் பிறகு, கி. பி. 649 இல் ஞானசம்பந்தர் பாண்டியன் மாற வர்மனை (நெடுமாறனை)ச் சைவனாக்கியிருக்கவேண்டும். நெடுமாறன் சைவனான பிறகு நாவுக்கரசர் பாண்டிய நாட்டிற்கு யாத்திரை சென்றார். பாண்டிநாட்டில் நாவுக்கரசரைப் பாண்டியன் நெடுமாறனும் பாண்டி மாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வரவேற்றனர். பாண்டி நாட்டு யாத்திரையிலிருந்து திரும்பிவந்த சிலநாட்களுக்குப் பிறகு (ஏறக் குறைய கி. பி. 650 இல்) நாவுக்கரச் சிவகதியடைந்திருக்கக் கூடும். நாவுக்கரசர் சிவகதிபெற்றது, அவரது 81-ஆவது வயதில் என்று சைவநூல்கள் கூறுகின்றன. எந்த ஆண்டில் என்பது தெரியவில்லை. ஆனால், ஏறக்குறைய கி.பி. 650 இல் நாவுக்கரசர் சிவகதியடைந்தார் என்று கொள்ளலாம். எனவே இவர் பிறந்த ஆண்டு ஏறக்குறைய கி. பி. 569 ஆகும்.1 8. முகம்மது நபி2 திருநாவுக்கரசர் பக்தி நெறியைத் தமிழ்நாட்டிலே பரப்பிய அதே காலத்தில் மற்றொரு பெரியால் இன்னொரு நாட்டிலே ஒரு புதிய மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இங்குக் குறிப்பிட வேண்டியது முறையாகும். ஏனென்றால், அந்தப் புதிய மதம் இப்போது உலக மதங்களில் ஒன்றாகப் பொலிகிறது. நாம் குறிப்பிடுவது முகம்மது நபி என்பவரையும், அவர் உண்டாக்கிய இஸ்லாம் மதத்தையும் ஆகும். அரபு நாட்டிலே மெக்கா என்னும் நகரத்திலே அப்துல்லா என்பவர் ஒருவர் இருந்தார். அப்துல்லாவின் மனைவியார் அமீனா என்பவர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை கி. பி. 569 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு முகம்மது என்று பெயரிட்டார்கள். முகம்மது என்னும் குழந்தை வளர்ந்து மணஞ்செய்யும் வயதடைந்தபிறகு கதிஜா என்னும் சீமாட்டியை மணஞ்செய்து கொண்டு வர்த்தகத்தொழில் செய்துவந்தார். இவ்வாறு வாழ்ந்துவந்த முகம்மது, தமது நாற்பதாவது வயதில் கடவுளின் திருவருள் கிடைக்கப்பெற்றார். கடவுளின் திருவருள் முழுவதும் கிடைக்கப்பெற்ற முகம்மது நபி (கடவுளால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி) என்று போற்றப் பெற்றார். ஆகவே இவர் முகம்மதுநபி என்றும், நபி நாயகம் என்றும் அழைக்கப்பெற்றார். இவர் கண்ட சமயத்துக்கு இஸ்லாம் என்பது பெயர். இஸ்லாம் சமயத்தின் வேதத்துக்குக் குர்ஆன் என்பது பெயர். குர்ஆன் வேதம் அரபிமொழியில் எழுதப்பட்டது. முகம்மதுநபி தாம் கண்ட புதிய இஸ்லாம் சமயத்தை மெக்கா நகரத்து மக்களுக்குப் போதித்தார். அவர்களில் சிலர் இவர் மதத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், பலர் பழைய கொள்கையைவிடாமல் இவரைப் பகைத்தார்கள். பகைத்து இவரைக் கொல்லவும் சூழ்ச்சிசெய்தார்கள். அவர்களின் கொடிய எண்ணத்தை அறிந்த நபிநாயகம் அவர்கள், ஒருவரு மறியாமல் மெக்காவைவிட்டு மதீனா என்னும் நகரத் திற்குப் போய் விட்டார். இவ்வாறு மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் போனதை முஸ்லிம்கள் ஹிஜ்ரா என்று கூறுவர். ஹிஜ்ரா கி.பி. 622 இல் ஏற்பட்டது. முகம்மது நபி தமது இஸ்லாம் மதத்தை மக்களுக்குப் போதித்தார். அதனால் பகைமையுண்டாகித் தம்மை எதிர்த்தவர்களுடன் போர் செய்து அவர்களை வென்றார். இவர் காலத்திலேயே இவருடைய மதம் அரபு நாடு முழுவதும் பரவிவிட்டது. நபிநாயகம் அவர்கள் இஸ்லாம் மதத்தின் மதகுருவாகவும், அரசியல் தலைவராகவும் விளங்கினார். இவர் கி.பி. 632 ஆம் ஆண்டில் ஜூன் திங்கள் 7 ஆம் நாள் காலமானார். மகேந்திரவர்மனும், திருநாவுக்கரசரும் வாழ்ந்திருந்த அதே காலத்தில், உலகப் பெரியார்களில் ஒருவராகிய முகம்மது நபி அவர்களும் வாழ்ந்திருந்தார். ஆகையினாலே, கால ஒற்றுமையைக் கருதி அவரைப்பற்றி ஈண்டுக் குறிப்பிடவேண்டியதாயிற்று. 1.நரசிம்மவர்மன் அரசியல் மாமல்லன் என்னும் இயற் பெயரையுடைய நரசிம்மவர்மன் மகேந்திர வர்மனுடைய மகன். இவனை முதலாம் நரசிம்மவர்மன் என்று சரித்திரம் கூறுகிறது. மாமல்லன் நரசிம்மவர்மன், சளுக்கிய அரசரின் தலை நகரமான வாதாபி நகரத்தை வென்று கொண்டபடியினாலே வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று பெயர்பெற்றான். இவன், பல்வ இராச்சியத்தை கி.பி. 630 முதல் 668 வரையில் அரசாண்டான். இவனுடைய தலைநகரம் காஞ்சிபுரம். வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், தன் தந்தையாகிய மகேந்திர வர்மன் காலத்தில் மாமல்லன் என்னும் பெயருடன் இளவரசனாக இருந்த போது, கடல்மல்லை என்னும் துறைமுகப்பட்டினத்தில் வாழ்ந் திருந்தான். சோழர்களுக்குக் காவிரிப்பூம்பட்டினமும், பாண்டியருக்குக் கொற்கையும், சேரருக்கு முசிரியும் துறைமுகப்பட்டினமாக இருந்தது போல, பல்லவ அரசர்களுக்குக் கடல்மல்லை துறைமுகப்பட்டினமாக இருந்தது. மாமல்லன் அரசனான பிறகு, இத் துறைமுகப்பட்டினத்துக்குத் தன் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரைச்சூட்டி மாமல்புரம் என்று புதுப்பெயர் கொடுத்தான். இப் பட்டினத்தைப் புத்தம் புதிதாக உண்டாக் கினான் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறு. இவ்வூர் நீர்ப்பெயற்று என்றும் மல்லை என்றும் கடல்மல்லை என்றும் பண்டைக்காலத்தில் பெயர் பெற்றிருந்தது. இந்தப் பழைய பெயரை மாற்றித் தன் பெயரைச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். மாமல்லபுரம் என்னும் பெயர் பிற்காலத்திலேர மகாபலிபுரம் என்று மருவி வழங்கப்பட்டது. பாமரமக்கள் இப்போது இதனை மாவலிவரம் என்று கூறுகின்றனர். மாமல்லன் முடிசூட்டிக் கொண்டபோது நரசிம்மவர்மன் என்னும் பட்டப்பெயரைப் பெற்றா மாமல்லன் நரசிம்மவர்மன், மாமல்ல புரத்திலே சில குகைக் கோயில்களை அமைத்தான். அன்றியும், “இரதங்கள்” என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற பாறைக் கோயில்களையும் அமைத்தான். அழகான சிற்ப உருவங்கள் சிலவற்றையும் அமைத்தான். இவற்றைப் பற்றி இந் நூலில் வேறு இடத்தில் கூறுவோம். நரசிம்மவர்மன் இளவரசனாக இருந்தபோது, இவனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மன் ஆட்சியில், சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான்.1 அன்றியும், தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேல் புலிகேசி படை யெடுத்து வந்தான். மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் எதிர்த்துப் போர்செய்து அவனை முறியடித்தான். இந்தப் போரில் இளவரசனாகிய நரசிம்மவர்மனும் போர் செய்திருக்கக்கூடும். மகேந்திரவர்மனுக்குப் பிறகு நரசிம்மவர்மன் அரசனானான். நரசிம்மவர்மன் காலத்தில், இலங்கையரசுக்குரிய மானவம்மா (மான வர்மன்) என்பவன் அரசு இழந்து காஞ்சிபுரத்துக்கு வந்து நரசிம்ம வர்மனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். மானவர்மன் நெடுங்காலம் இவன் ஆதரவில் இருந்தான். காஞ்சியின்மேல் சளுக்கிய அரசன் புலிகேசி படையெடுத்து வந்த காலங்களில் மானவர்மன் நரசிம்மனுடன் சேர்ந்து புலிகேசியை எதிர்த்துப் போரிட்டான். நரசிம்மன் வாதாபியை வென்ற பிறகு, தன் சேனையை மானவர்மனுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்று மானவர்மனை அந்நாட்டுக்கு அரசனாக்கினான். நரசிம்மவர்மன் காலத்திலும் புலிகேசி, மீண்டும் பலமுறை காஞ்சி புரத்தின்மேல் படையெடுத்து வந்தான். படையெடுத்துவந்த புலிகேசியை நரசிம்மவர்மன் பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங் களில் எதிர்த்துப் போர் செய்து முறியடித்தான். போர் நடந்த சூரமாரம், பரியளம் என்னும் ஊர்கள் எவை என்பது இப்போது தெரியவில்லை. மணி மங்கலம் என்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு தாலூகா வில் உள்ள மணிமங்கலம் என்னும் கிராமம் ஆகும். இது பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு இருபது மைல் தூரத்தில் இருக்கிறது. மாமல்லன் புலிகேசியைத் துரத்தியதொடு நிற்கவில்லை. தன் தந்தை காலத்தில், பல்லவர்களுக்குரிய ஆந்திர நாடுகளைக் கவர்ந்து கொண்ட புலிகேசி காஞ்சிபுரத்தின் மேல் படையெடுத்து வந்ததையும், பின்னர் தன் காலத்தில் மீண்டும் பலமுறை காஞ்சியின்மேல் படை யெடுத்து வந்ததையும் மாமல்லன் மறக்கவில்லை. பல்லவரின் பிறவிப் பகைவனாய் அடிக்கடி பல்லவ அரசருடன் போர்தொடுக்கிற புலிகேசியை அடியோடு அழிக்க வேண்டும் என்னும் எண்ணம் இவனுக்கு உண்டாயிற்று. இதற்காக இவன் சமயம் பார்த்திருந்தான். தக்க சமயமும் வாய்த்தது. புலிகேசி, நரசிம்மவர்மன் மேல் மீண்டும் படையெடுத்து வந்தான். அப்போது நரசிம்மவர்மன் அவனை எதிர்த்துப போர் செய்து அவனைக் கொன்றான். பிறகு, புலிகேசியின் தலைநகரமான வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்று அந்த நகரத்தையும் கைப்பற்றினான். இதனால் இவனுக்கு வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் பெயரும உண்டாயிற்று. கூரம் செப்பேட்டுச் சாசனம் இவனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது :- “நரசிம்மவர்மனுடைய (சிம்ம விஷ்ணுவினுடைய) பேரன், உதயகிரியிலே சூரியனும் சந்திரனும் தோன்றியதுபோல இந்த அரசகுடும்பத்திலே தோன்றி, இந்த அரசகுடும்பத்தின் தலைவணங்கி யறியாத மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போன்று விளங்கிப் பகைமன்னராகிய யானைகளுக்கு அரிமா போன்று, நரசிங்க மூர்த்தியே மண்ணுலகத்தில் அரசகுமாரனாக அவதரித்தாற் போலப் பிறந்தான். இவன் சோழர் கேரளர் களபார் பாண்டியர்களைப் பலமுறை வென்று நூற்றுக் கணக்கான போர்களைச் செய்து ஆயிரங்கை படைத்தவனை (கார்த்த வீரியார்ச்சுனனைப்) போன்று விளங்கினான். மேலும் பரியளம், மணிமங்கலம், சூராமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புறங் காட்டி யோடிய புலிகேசியின் முதுகிலே விஜயம் (வெற்றி) என்னும் சொல்லைச் செம்புப் பட்டயத்தில் எழுதுவதுபோல எழுதினான். பிறகு, கும்ப முனி (அகத்தியர்) வாதாபியை (வாதாபி என்னும் அசுரனை) அழித்தது போல, வாதாபியை (வாதாபி நகரத்தை) அழித்தான்.”1 உதயேந்திரச் செப்புப் பட்டயம் இவ்வாறு கூறுகிறது: “பரியள மணி மங்கல சூரமார முதலான இடங்களில் வல்லப ராஜனைப் பலமுறை வென்று, வாதாபியை அழித்த அகத்தியரைப்போல வாதாபியையழித்த நரசிம்ம வர்மன், அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு) மகனாகப் பிறந்தான்.”2 வேலூர்ப்பாளைய சாசனம் இவ்வாறு எழுதுகிறது: “உபேந்திரனை (விஷ்ணுவை)ப்போன்று புகழ்படைத்தவனும் பகைவர் கூட்டங்களை வென்று வாதாபி நகரத்தின் நடுவில் வெற்றித் தூணைக் கைக்கொண்ட வனுமாகிய நரசிம்மவர்மன், மகேந்திரவர்மனுக்கு மகனாகப் பிறந்தான்.”1 காசாகுடி செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு புகழ்கிறது : “அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு) வெற்றி வீரனாகிய நரசிம்மவர்மன் பிறந்தான். இவன், இலங்கையை வென்று, இராமனுடைய வீரப்புகழுக்கு மேம்பட்ட புகழை யடைந்து, பகைவர்களுக்குத் தூமகேதுவைப் போல இருந்து, குடமுனியைப்போல வாதாபியை வென்றான்.”2 (குடமுனியாகிய அகத்தியர் வாதாபி என்னும் அசுரனை வென்றது போல இன்னும் சளுக்கியரின் வாதாபி நகரத்தை வென்றான் என்பது கருத்து.) புலிகேசியின் மகனான முதலாம் விக்ரமாதித்தியனுடைய கர்நூல் செப்பேட்டுச் சாசனம், “மூன்று அரசர்கள் சேர்ந்து புலிகேசியை வென்றார்கள் என்று கூறுகிறது.”3 புலிகேசியைவென்ற மூன்று அரசர்களில் மாமல்லனாகிய நரசிம்மவர்மன் ஒருவன். மற்ற இருவரில் மானவம்மமா என்பவன் ஒருவன். இவன் இலங்கையரசுக்கு உரிய வனாய் அரசு இழந்து நரசிம்மவர்மனிடம் வந்து அடைக்கலம் புகுந்து காஞ்சிபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தவன். இவன் நரசிம்ம வர்மனுடன் சேர்ந்துப் புலிகேசியுடன் போர்செய்தான் என்று சூல வம்சம் (47-ஆம் அதிகாரம்) என்னும் நூல் கூறுகிறது.4 நரசிம்மவர்மனுக்கு உதவியாக இருந்த இன்னொரு அரசன் புதுக் கோட்டையைச் சேர்ந்த கொடும்பாளூரில் இருந்த சமராபிராமன் என்பவன். இந்தச் சமரா பிராமன், சளுக்கிய அரசனை அதிராஜ மங்கலம் என்னும் ஊரில் கொன்றான் என்றும், இவனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபி நகரத்தை வென்றான். என்றும் கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சாசனம் கூறுகிறது.5 இதில், சளுக்கிய அரசனை அதிராஜமங்கலத்தில் சமராபி ராமன் கொன்றான் என்பதை, சளுக்கிய அரசனான புலிகேசியை அதிராஜ மங்கலம் என்னும் மணிமங்கலத்தில், சமராபிராமன் கொன்றான் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். போர்க்களத்திலே புலிகேசி இறந்த பிறகு, அவனுடைய வாதாபி நகரத்தின்மேலே நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்றபோது, சமராபிராமனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனனும் அவனுடன் போய் வாதாபியை அழித்தான் என்பது தெரிகிறது. இவ்வாறு நரசிம்மவர்மன், மானவர்மன், கொடும்பாளூர் சிற்றரசன் (தந்தை மகன் இருவரும்) ஆகிய மூன்று அரசர்களும் சேர்ந்து புலிகேசியை வென்றார்கள் என்பது தெரிகிறது. நரசிம்மவர்மனுடைய படைத்தலைவராக இருந்தவர் பரஞ் சோதியார் என்பவர். இவருக்குச் சிறுத்தொண்டர் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவர் நரசிம்மவர்மனுடைய யானைப் படைத்தலைவ ராக இருந்து வாதாபி நகரை வென்றார். இவர் வாதாபி நகரத்தை வென்ற செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது: “மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரைத் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பூன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனவெண்ணில கவர்ந்தே யிகலரசன் னகொணர்ந்தார்.” (சிறுதொண்ட நாயனார் புராணம்: 6.) வாதாபியை (வாதாபி எனினும் வாதாவி எனினும் ஒன்றே.) வென்ற பிறகு சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் அரச ஊழியத்தைவிட்டு, பக்தியில் ஈடுபட்டு, இவர் காலத்தில் சமயத்தொண்டு செய்துவந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் என்னும் சைவ நாயன்மார்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பெரியபுராணத்தில் கூறப்படுகிற சிறுத் தொண்ட நாயனார் என்பவர் இவரே. நரசிம்மவர்மன் வாதாபியை வென்றது கி. பி. 642-இல் ஆகும் புலிகேசியைக் கொன்று வாதாபியைக் கைப்பற்றியதனால், மகேந்தி ரவர்மன் காலத்தில் புலிகேசி கவர்ந்து கொண்ட பல்லவ அரசின் ஆந்திரப் பகுதி, மீண்டும் பல்லவர் வசம் ஆயிற்று என்று கருதலாம். அஃதாவது, நரசிம்மவர்மன் தன் தந்தையார் இழந்த ஆந்திரநாடுகளை மீட்டுக் கொண்டான். ஆனால் மீட்கப்பட்ட அந்நாடுகள் நெடுங்காலம் இவனிடத்தில் இருக்கவில்லை; ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதிகள் மீண்டும் சளுக்கியர் வசம் ஆயின. வாதாபி நகரத்தை வென்ற நரசிம்மவர்மன் அந் நகரத்திலே வெற்றிக் கம்பம் ஒன்றை நாட்டினான். இந்த வெற்றிக் கம்பம் பிற்காலத் தில் உடைக்கப்பட்டது. இந்தக் கம்பத்தின் உடைபட்ட ஒரு பகுதி இன்றும் அந்நகரத்தில் காணப்படுகிறது. சிதைந்துபோன சாசன எழுத்துக் களும் இதில் காண்ப்படுகின்றன. இதில் “மாமாமல்லன்” “ஹிதி]பஜாங் கரேஸர பல்லவ” “(நர)சிம்மவிஷ்ணு” என்னும் சொற்கள் பல்லவக் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளான.1 நரசிம்மவர்மன் வாதாபி நகரத்தை வென்ற பிறகு, அந்நகரம் பதின்மூன்று ஆண்டுவரையில் அரசன் இல்லாமல் இருந்தது. இதற்குக் காரணம், புலிகேசியின் மக்கள் அரசுரிமைக்காகத் தம்முள் கலகஞ் செய்து போரிட்டுக் கொண்டதேயாகும். பிறகு கி. பி. 655-இல் புலிகேசி யின் பிள்ளைகளில் ஒருவனான விக்கிரமாதித்தியன் (முதலாவன்) சளுக்கிய நாட்டின் அரசனானான். இவன் அரசனானவுடன் சேனையைத் திரட்டிக்கொண்டு பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். இவன் கி. பி. 655-முதல் 381 வரையில் அரசாண்டான். ஆகவே, நரசிம்மவர்மனும் அவனுடைய மகனும் பேரனும் விக்கிரமாதித்திய னுடன் அடிக்கடி மகனும் பேரனும் விக்கிரமாதித்தியனுடன் அடிக்கடி போர்செய்ய நேரிட்டது. விக்கிரமாதித்தியன், நரசிம்மவர்மன் மீட்டுக் கொண்ட ஆந்திரப் பகுதி நாடுகளை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன், வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. மகாபலிபுரத்துத் திரி மூர்த்திக் குகைக் கோயிலில் மல்ல என்னும் பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனமும், திருக்கழுக்குன்றத்து ஒற்றைக்கல் மண்டபம் என்னும் குகைக் கோயிலிலே “வாதாபிகொண்ட நரசிங்கப் போத்தரசர்” என்னும் தமிழ் எழுத்துச் சாசனமும் காணப்படுகின்றன. ‘வாதபிகொண்ட நரசிங்கப் போத்தரசர்’ என்பது இதன் வாசகம் 7-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்து தன் தந்தையாகிய மகேந்திரவர்மனைப் போலவே நரசிம்ம வர்மனும் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தான். மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவ இராச்சியம், வடக்கே வடபெண்ணை ஆறு முதல் தெற்கே வெள்ளாறு வரையில் பரவியிருந்தது. அஃதாவது தொண்டைநாடு சோழநாடு ஆகிய இரண்டு நாடுகளைக் கொண்டிருந்தது. மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்ல புரத்திலே, தர்மராசரதம் என்று வழங்கப்படுகிற கற்கோயிலில் இவ னுடைய சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பாறைக் கோயிலில் காணப்படுகிற இவனுடைய சிறப்புப் பெயர்களாவன ‘ஸ்ரீநரசிம்ம’ என்பது இதன் வாசகம். வடமொழி எழுத்து ஸ்ரீநரசிம்ம. (இப் பெயர் இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது), பிருதிவீசார. (உலகத்தின் சாரமாகவுள்ளவன்), ஸ்ரீபர (செல்வத்தைத் தாங்கி யுள்ளவன்), புவன பாஜன (உலகத்தை உரிமையாகக் கொண்டவன்), ஸ்ரீமேக (செல்வக் கொண்டல்), திரைலோக்ய வர்த்தன (மூவுலகத்தை யும் வளர்ப்பவன்), விதி (உலக ஒழுக்கத்தை அமைப்வன்), அநேகோ பாய (பல சூழ்ச்சியறிந்தவன்), ஸ்திரபக்தி (நிலைத்த பக்தியுள்ளவன்), மதனாபிராம (மன்மதன் போன்ற அழகுள்ளவன்), அப்ரதிஹத ஸாஸன (மறுக்கமுடியாத ஆணையை யுடையவன்), காம லலித (காமனைப் போன்ற அழகன்), அமேய மாய (காணமுடியாத சூழ்ச்சிகளை யுடையவன்), சகல கல்யாண (எல்லா நன்மைகளையும் உடையவன்), நயனமனோகர (காட்சிக்கு இனியன்), பராபர (ஆற்றல் வாய்ந்தவன்), அநுபம (நிகரற்றவன்), நயாங்குர (அறிவுக் கொழுந்து), லலித (இனியன்), சர்வதோபத்ர (அகில புனிதன்), ஸ்ரீநிதி (செல்வமுடையவன்), திருத்தர (நிகரற்றவன்), விப்ராந்த (மனவெழுச்சியுள்ளவன்), சத்ய பராக்ரமன் (உண்மை வீரன்), ரணஜெய (போரில் வெற்றி கொள்பவன்).2 நரசிம்மவர்மன் காலத்தில் ஹியூங் சுவாங் என்னும் சீன நாட்டுப் பௌத்த யாத்திரிகர் கி. பி. 640-இல் காஞ்சிபுரத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார்; இவன் காலத்திலே சைவ சமயாசாரியர்களான, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்ட நாயனார், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், திருநீல கண்டப்பெரும்பாணர், திருநீலநக்கர், முருக நாயனார் முதலியோரும், முதலாழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் வாழ்ந்திருந்தார்கள். நரசிம்மவர்மன் சைவ சமயத்தைச் சார்ந்தவன். இவன் தன் வாழ் நாட்களில் பெரும்பாகத்தைச் சளுக்கிய அரசனுடனும் மற்ற அரசர் களுடனும் போர் செய்வதிலே கழித்தான். ஆயினும், மாமல்ல புரத்திலே “இரதங்கள்” என்று கூறப்படுகிற பாறைக் கோயில்களையும் சில குகைக் கோயில்களையும் அமைத்தான். தர்மராச ரதம் என்று இப்போது வழங்கப்படுகிற அத்யந்தகாம பல்லவேசுவரம் என்னும் மாடக் கோயிலிலே பாறைச் சுவரிலே இவனுடைய உருவம்3 புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவத்தில் நரசிம்மவர்மன் (மாமல்லன்) நீண்ட கிரீடம் அணிந்து, காதுகளில் அணிந்த குண்டலங்கள் தோள்களிலே புரள, கழுத்தில் மணி மாலை விளங்க, மார்பிலே தடித்த பூனூலை அணிந்திருக்கிறான். இடக் கையை இடுப்பில் ஊன்றி வலக் கையைத் தொங்கவிட்டிருக்கிறான். அரையில் மட்டும் பட்டாடை அணிந்திருக்கிறான். அக்காலத்து வழக்கப்படி (போர்வை சட்டை முதலியன அணியாமல்) வெற்றுடம் பாக இருக்கிறான். அகன்று பரந்த முகத்தில் அமைதியும் மன உறுதியும் ஆழ்ந்த சிந்தனையும் தோன்றுகின்றன. பாதங்கள் முற்றுப்பெறாமல் பாறையோடு பாறையாகக் காணப்படுகின்றன. இந்தச் சிற்பத்தை அமைத்த சிற்பி எக்காரணத்தினாலோ பாதங்களை முற்றும் அமைக்காமல் அரைகுறையாக விட்டுவிட்டான். நரசிம்மவர்மனுடைய இந்தச் சிற்ப உருவம் பட்ட மகிஷியில் லாமல் தனியாக அமைக்கப்ட்டுள்ளது. பல்லவ அரசர்களின் உருவச் சிலைகள் எல்லாம் பட்டமகிஷியரோடு அமைக்கப்பட்டுள்ளன. மாமல்ல புரத்து வராகப் பெருமாள் குகைக்கோயிலில் இருக்கிற மகேந்திரவர்ம னுடைய உருவச்சிற்பம் பட்டமகிஷியரோடு அமைந்துள்ளது. அங்கே யுள்ள இன்னொரு சிற்பமும் (சிம்ம விஷ்ணுவின் சிற்பம்) பட்டமகிஷிய ரோடு அமைக்கப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்து அர்ச்சுன இரதத்தில் இருக்கிற பல்லவ அரசரின் சிற்ப உருவமும, உத்தரமேரூர் மாடக் கோயிலில் இருக்கிற மற்றொரு பல்லவ அரசனுடைய சிற்ப உருவமும் பட்டமகிஷியருடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நரசிம்ம வர்மனுடைய உருவச்சிற்பம் மட்டும் பட்டமகிஷியில்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இச் சிற்ப உருவம் அமைக்கப்பட்ட காலத்தில் பட்டமகிஷி இறந்துவிட்டாள் போலும். அடிக்குறிப்புகள் 1. Ind. Atni. Vol. IX. P. 199. 2. S.I.I. Vol. I. குறிப்பு. இந்தச் சிறப்புப் பெயர்களுடன் இந்தக் கற்கோயிலில் அத்யந்தகாம என்னும் இன்னொரு பெயரும் இன்னொருவகையான எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பெயர் நரசிம்ம வர்மனுடைய பேரனான பரமேஸ்வரவர்மனைக் குறிக்கும். 3. புடைப்புச் சிற்பம் - Bas relief. 2. வேறு அரசர்கள் மாமல்லன் ஆன நரசிம்மவர்மன் காலத்திலே, பல்லவ தேசத்தைச் சூழ்ந்திருந்த இராச்சியங்களைப் பற்றியும் அவற்றை அரசாண்ட அரசர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். வடநாடு அக்காலத்தில் வடஇந்தியாவை அரசாண்ட மன்னன் ஹர்ஷ வர்த்தனன் என்பவன். இவனுடைய இராச்சியம் வடக்கே இமய மலையிலிருந்து தெற்கே நருமதை ஆறுவரையிலும் பரவியிருந்தது. அக்காலத்தில் பரதகண்டத்து அரசர்களில் பேரரசனாக விளங்கியவன் ஹர்ஷவர்த்தனனே. இவன் கி.பி. 606 முதல் 647 வரையில் அரசாண்டான். இவன் இறந்தபிறகு இவனுடைய பேரரசு சிறு சிறு நாடுகளாகச் சிதறுண்டு போயிற்று. ஹர்ஷனுக்கு மக்கட் பேறு இல்லை. ஆகவே, அவனுடைய இராச்சியத்தை அவனுக்குக் கீழடங்கியிருந்த அரசர்கள் சுயேச்சையாக அரசாளத் தொடங்கினார்கள். ஹர்ஷ னுடைய அமைச்சனான அருணாஸ்வன் (அர்ச்சுனன்) என்பவனும் இராச்சியத்தின் ஒருபகுதியைத் தன்வயப்படுத்திக் கொண்டான். சீனநாட்டு அரசன், ஹர்ஷவர்த்தனனிடம் தன் தூதர்களை அனுப்பினான். அத்தூதர்கள் இந்தியாவுக்கு வந்தபோது ஹர்ஷன் இறந்துபோய், அவன் மந்திரி அருணாஸ்வன், ஆட்சிசெய்து கொண் டிருந்தான். இவன் சீனத் ஷத்தர்களைக் கொன்றுவிட்டான். ஆனால், துதர்களின் தலைவனாகிய வாங்-ஹூன்-த்ஸி1 என்பவன் தப்பி ஓடித் திபெத்து நாடு சென்றான். திபெத்து நாட்டரசன் சீனமன்னனின் உறவின னாகையால், அவன் சீனத்தூதுவனுக்குத் தன் சேனையைக் கொடுத்து உதவினான். தூதுவன், சேனையுடன் வந்து அருணாஸ்வனுடன் போர் செய்து வென்று அவனைச் சிறைப்பிடித்துச் சென்றான். நரசிம்மவர்மன் காலத்தில் வட இந்தியாவில் நிகழ்ந்த செய்தி இது. தக்கிணநாடு ஹர்ஷ இராச்சியத்திற்குத் தெற்கே தக்கிண இந்தியாவைச் சளுக்கியர் அரசாண்டனர். சளுக்கிய இராச்சியம், வடக்கே நருமதை ஆறுமுதல் தெற்கே வடபெண்ணை ஆறுவரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையிலும் பரவி யிருந்தது. இந்தப் பெரிய இராச்சியத்தை நரசிம்மவர்மன் காலத்தில் அரசாண்டவன் புலிகேசி என்பவன். இவனை இரண்டாம் புலிகேசி என்பர். புலிகேசியைப் புளகேசி என்றும் கூறுவர். புலிகேசிக்கு சத்யாஸ்ரயன், வல்லவன், வல்லபராசன், பிருதுவி வல்லபன், பரமேசுவரன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. புலிகேசியின் தலைநகரம் வாதாபி என்பது. இதனைப் பாதாமி என்றுங் கூறுவர். புலிகேசி, தன்மேல் படையெடுத்து வந்த ஹர்வூர்த்தனனை வென்று புகழ்பெற்றவன். இவன் புகழ் உலகமெங்கும் பரவியிருந்தது. புலிகேசி, தன்னுடைய இராச்சியத்திற்குத் தெற்கேயிருந்த பல்லவ இராச்சியத்தையும் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்பி, அடிக்கடி பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். மண்ணாசை கொண்டு பல்லவநாட்டின்மேல் படையெடுத்து வந்தபோதெல்லாம், இவன் பல்லவர்களால் முறியடிக்கப்பட்டான். கடைசியாகக் காஞ்சிபுரத்துக்கு அடுத்த மணிமங்கலத்தில் நடந்த போரில் புலிகேசி, கொல்லப்பட்டான் என்பதையும், பிறகு நரசிம்ம வர்மன் புலிகேசியின் தலைநகரமான வாதாபியைக் கைப்பற்றி அதில் வெற்றிக்கம்பம் நாட்டினான் என்பதையும் முன்னமே கூறினோம். நரசிம்மவர்மன் புலிகேசியைக் கொன்று வாதாபி நகரத்தைக் கைப்பற்றியது கி. பி. 642 - ஆம் ஆண்டிலாகும். பிறகு வாதாபி நகரம் 13 ஆண்டுகள் அரசனில்லாமல் இருந்தது. பிறகு கி. பி. 655-இல் புலிகேசியின் இளைய மகனான விக்கிரமாதித்தியன், சளுக்கிய இராச்சியத்தின் அரசனானான். இவனை முதலாம் விக்கிரமாதித் தியன் என்பர். இவன் கி. பி. 655 முதல் 681 வரையில் அரசாண்டான். இவனுக்குச் சத்தியாஸ்ரயன், ரணரசிகன், அநிவாரிதன், ராஜ மல்லன், வல்லபன், ஸ்ரீ பிருதுவி வல்லபன், மகாராஜாதிராஜ பரமேசு வரன், பட்டாரகன் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் அரசனானவுடன், நரசிம்மவர்மன் கைப்பற்றிக் கொண்ட சளுக்கிய நாட்டின் தென்பகுதிகளை மீட்டுக் கொண்டான். இரண்டாம் புலிகேசியை நரசிம்மவர்மன் வென்று புலிகேசியின் சில நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டதையும், சில ஆண்டுகளுக்குப் பிறகு விக்கிர மாதித்தியன் நரசிம்மன்மேல் படையெடுத்துச் சென்று அவனை வென்று, புலிகேசி இழந்த நாடுகளை மீட்டுக்கொண்டதையும் கர்னூல் சாசனம் இவ்வாறு கூறுகிறது : “திருமகளுக்கும் மண்மகளுக்கும் மணாளனும், சிறந்த போர் வீரனாய் வடநாடு முழுவதையும் அரசாண்ட ஹர்ஷவர்த்தனனை வென்று பரமேசுவரன் என்று பெயர் படைத்தவனுமான பரமேசுவர சத்யாஸ்ரய மகாராசன் (புலிகேசி ) உடைய அருமை மகனான விக்கிர மாதித்திய சத்யாஸ்ரயன், மூன்று அரசர்களால் தன் தந்தையிடமிருந்து கைப்பற்றிக் கொள்ளப்பட்ட பூமியைத் தன்னுடைய சித்தகண்டம் என்னும் குதிரையின் உதவியினாலும் வாளாயுதத்தின் கூர்மை யினாலும் அனேக போர்களை வென்று கைப்பற்றினான்.” இவ்வாறு சாசனம் கூறுகிறபடியினாலே, நரசிம்மவர்மன் புலிகேசியிடமிருந்து கைப்பற்றிய ஆந்திரப் பகுதிகளைப் பிற்காலத்தில் விக்கிரமாதித்தியன் மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் என்பது தெரிகிறது.2 அன்றியும் தன் தந்தையைப் போலவே விக்கிரமாதித்தியனும், பல்லவ நாட்டின் மேல் பலமுறை படையெடுத்து வந்தான். ஆகவே, பல்லவ மன்னனாகிய நரசிம்மவர்மன் இவனுடன் போரிடவேண்டியதாயிற்று. புலிகேசி, சாளுக்கிய இராச்சியத்தின் கிழக்குப் பகுதியைத் தன் தம்பி யாகிய விஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்தான். விஷ்ணுவர்த்தனன் சுயேச்சையரசனானான். இவன் வெங்கியைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டான். ஆகவே, சளுக்கிய இராச்சியம், மேலைச்சளுடக்கிய இராச்சியம் என்றும், கீழைச்சளுக்கிய இராச்சியம் என்றும் இரு பிரிவாகப் பிரிந்தது. மேலைச்சளுக்கிய இராச்சியத்தை மேலே கூறிய படி இரண்டாம் புலிகேசியும் அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தி யனும் அரசாண்டார்கள். கீழைச்சளுக்கிய இராச்சியம் வடக்கே விசாகப்பட்டணம் ஜில்லா விலிருந்து தெற்கே வடபெண்ணையாறு வரையில் பரவியிருந்தது. இதனை யரசாண்ட விஷ்ணு வர்த்தனனுக்கு,குப்ஜ விஷ்ணுவர்த்தனன் மகரத்துவஜன், விஷமசித்தி, பிட்டரசன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் எப்போது காலமானான் என்று திட்டமாகக் கூறமுடிய வில்லை. விஷ்ணுவர்த்தனனுக்குப் பிறகு இவன் மகன் மகாராஜ ஜய சிம்மன் என்பவனும் அவனுக்குப் பிறகு அவன் தம்பி இந்திரவர்மனும் அவனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம் விஷ்ணுவர்த்தனனும் அரசாண்டனர். நரசிம்மவர்ம பல்லவன், மேலைச்சளுக்கிய அரசனான புலிகேசியை வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றிய போது, இந்தக் கீழைச்சளுக்கிய அரசர்கள் தங்கள் உறவினரான மேலைச் சளுக்கியர்களுக்கு உதவி செய்யவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் தக்கிண தேசத்தின் நிலைமை இது. ரேணாடு ஏழாயிரம் சளுக்கிய இராச்சியத்துக்கும் பல்லவ இராச்சியத்திற்கும் இடையிலே ரேணாடு ஏழாயிரம் என்னும் பெயருள்ள சிறு இராச்சியம் இருந்தது. இது, இப்போது ஆந்திர நாட்டில் அடங்கியுள்ள கடப்பை, கர்நூல் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் இச் சிறு நாட்டை அரசாண்டவன் சோழர் பரம்பரையைச் சேர்ந்த புண்ணிய குமாரன் என்பவன். இவன் சோழ மகாராசன் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தான். இவன், தன்னைக் கரிகாற் சோழன் வழிவந்தவன் என்றும் நான்கு தலைமுறையாக இவன் முன்னோர் இந்த ரேணாட்டை யரசாண்டு வருகின்றனர் என்றும் மலெபாடு செப்புப் பட்டயத்தில் கூறிக் கொள்கிறான். கடப்பை மாவட்டத்தைச் சேர்ந்த மதனபல்லிக்கு அருகில் உள்ள சிப்பிலி என்னும் ஊரில் இருக்கிற வீரகல் சாசனம் ஒன்று புண்ணிய குமாரன் என்னும் அரசனைக் கூறுகிறது.3 மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் பாரததேசத்தில் சுற்றுப் பிராயாணம் செய்த ஹியூங்சுவாங் - என்னும் சீனநாட்டு யாத்திரிகர் கி. பி. 640-இல் காஞ்சிபுரத்துக்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார் என்று முன்னமே கூறினோம். இந்த யாத்திரிகர் எழுதியுள்ள யாத்திரைக் குறிப்பில், சளுக்கிய இராச்சியத்திற்குப் பிறகு சுலியெ என்னும் இராச்சியத்தையும் அதற்குத் தெற்கே திராவிட (பல்லவ) தேசத்தையும் குறிப்பிடுகிறார். திராவிட நாட்டிற்குப் பிறகு, சோழநாட்டைக் குறிப் பிடாமல் மலய (பாண்டிய) நாட்டைக் குறிப்பிடுகிறார். திராவிட (பல்லவ) நாட்டிற்கும் மலய (பாண்டிய) நாட்டிற்கும் இடையே சோழ நாட்டை ஏன் இவர் குறிப்பிடவில்லை என்றால், அந்தக் காலத்தில் சோழநாடு பல்லவ இராச்சியத்துடன் சேர்ந்திருந்தது. சோழ அரசர் பல்லவருக்குக் கீழடங்கிச் சிற்றரசராய் இருந்தனர். ஆனால், சளுக்கிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் இடையே இருந்ததாக இவர் கூறுகிற சுலியெ என்னும் நாடு, ரேணாட்டைக் குறிக்கிறது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுவர். இவர்கள் கூறுவது பொருத்தமாகவும் சரியாகவும் இருக்கிறது. சுயீலயெ என்பது சோழியர் (சோழர்) என்பதன் மரூஉ. ரேணாட்டையாண்ட அரசர் தம்மைச் சோழர் வழிவந்தவர் என்று கூறிக் கொண்டது கருதத்தக்கது. கொடும்பாளூர் நாடு ரேணாட்டுக்குத் தெற்கே திராவிடநாடு இருந்ததென்று ஹியூங்-சுவாங் கூறுகிறார். இவர் கூறுகிற திராவிட தேசம் என்பது தொண்ட மண்டலத்தையும் சோழமண்டலத்தையுங் கொண்டிருந்தது. இதனைப் பல்லவ அரசர் ஆட்சி புரிந்தனர். பல்லவ இராச்சியத்திற்குத் தெற்கே சீனயாத்திரிகர் கூறுகிற மலயநாடு, அஃதாவது பாண்டிய நாடு இருந்தது. பல்லவ இராச்சியத்துக்கும் பாண்டிய இராச்சியத்துக்கும் இடையிலே கொடும்பாளூர் நாடு என்னும் சிறு நாடு இருந்தது. அது இப்போது புதுக்கோட்டை என்று வழங்குகிறது கொடும்பாளூர் நாட்டின் தலைநகரம் கொடும்பாளூர் என்பது, கொடும்பாளூர் சிற்றரசர்கள் சுயேச்சையரசராக இருந்தனர் என்பது கொடும்பூளூரிலுள்ள மூவர் சூகாவில் சாசனத்தினால் தெரிகிறது.4 சுயேச்சையரசர்களாக இருந்தபோதிலும் இவர்கள் சில சமயங்களில் பல்லவ அரசர்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள். மூவர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிற அரசர்களில் நிருப கேசரி, பரதுர்க்கமர்த்தனன், சமராபிராமன் என்னும் அரசர்கள் மூவரும் பல்லவ அரசர்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள் என்பது இச் சாசனத்தினால் தெரிகிறது. முதலில் நிருபகேசரி என்னும் அரசனைப்பற்றி ஆராயவேண்டும். ஏனென்றால், மூவர் கோயில் சாசனத்தை இது வரையில் ஆராய்ந்த எல்லா சரித்திர ஆசிரியர்களும் இவனைப்பற்றி ஆராயாமலே விட்டு விட்டார்கள். நிருபகேசரி தனது இளமைப் பருவத்தில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று இந்தச் சாசனம் கூறுகிறது. பாம்புகளோடு வளர்ந்தான் என்றால் பொருள் என்ன? மனிதனாகிய இவன் பாம்பு களுடன் வளர்ந்தான் என்று கூறுவது பொருந்தாது. பாம்பு என்பது நாகம் என்றும் பெயர்பெறும். ஆகவே, பாம்புகளோடு வளர்ந்தான் என்றால் நாகர் என்னும் வகுப்பாருடன் வளர்ந்தான் என்பது கருத்து. அப்படியானால் நாகர் என்பவர் யார்? நாகர் என்பது பல்லவ அரசரைக் குறிக்கும். எப்படி என்றால், பல்லவ அரசர்களின் மூதாதை ஒருவன், நாக அரசன் மகளை மணஞ் செய்துகொண்டு, நாக அரசனிடமிருந்து அரசாட்சி உரிமையைப் பெற்றான் என்று கூறப்படுகிறான். அவன் மரபு நாகர் மரபு எனப்பட்டது. பல்லவர் பாம்பு (நாக) மரபைச் சேர்ந்தவராகையினாலே, பாம்புக் கொடியையும் பெற்றிருந்தனர். சூது என்றால் நாகம் என்பது பொருள். வேலூர்ப் பாளைய சாசனம், பல்லவ அரசர் பரம்பரையைக் கூறும் இடத்தில் சூதுபல்லவன் என்னும் அரசன் பெயரைக் கூறுகிறது. மேலும், வீர கூர்ச்சன் என்னும் பல்லவ அரசன் நாக அரசகுமாரியை மணஞ் செய்துகொண்டு நாக அரசனுடைய அரசாட்சி உரிமைகளைக் கவர்ந்து கொண்டான் என்றும் கூறுகிறது. காஞ்சிபுரத்துப் பரமேச்சுவிண்ணகரத்தை (வைகுண்டபெருமாள் கோயிலை)க் கட்டிய பரமேசுவரவர்மன் என்னும் பல்லவ மன்னனைத் திருமங்கையாழ்வார் பாம்புக் கொடியையுடையவன் என்று கூறுகிறார். “தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்றுசென்ற பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர மதுவே.”5 என்று அவர் கூறியது காண்க. உத்திமேரூரில் உள்ள சுந்தரவரதப்பெருமாள் கோயில் பல்லவ அரசர் கட்டிய மாடக் கோயிலாகும். இக்கோயிலில் துவாரபாலகர் உருவங்கள் முடிதரித்த அரசர் உருவங்கள்போல் இருக்கின்றன. இத் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் உள்ளன. இந்தத் துவாரபால கரின் கிரீடத்துக்கு மேலே பாம்புப் படம் எடுத்தது போன்ற உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத் துவாரபாலகருக்குச் சூதுராஜன் என்று பெயர் கூறுகிறார்கள். சூது என்பதற்குப் பாம்பு, நாகம் என்னும் பொருள் கூறப்படுகிறது. சூதுராஜன் என்று கூறப்படுகிற இந்தத் துவாரபாலகரின் உருவம், பல்லவ அரசரின் உருவம்போலும். பல்வ அரசன் கட்டிய கோயிலில், நாகப்பாம்புப் படத்துடன் பல்லவ அரசர் உருவம் துவாரபாலகராக அமைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதுதான். எனவே, கொடும்பாளூர் சிற்றரசன் நிருபகேசரி தனது இளமை வயதில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று மூவர் கோயில் சாசனம் கூறும் கருத்து என்னவென்ன வென்றால், அவன் நாக பரம்பரையின ரான பல்லவ அரசர்களோடு வளர்ந்தான் என்பதே. இந்த நிருபகேசரி, சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காலத்திலும் அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் இருந்தவன் என்று தெரிகிறான். நிருபகேசரியின் மகன் பரதுர்க்க மர்த்தனன் என்பவன். இவனுக்கு வரதரபிஜித் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. வாதாபிஜித் என்றால், வாதாபி நகரத்தை வன்றவன் என்பது பொருள். பரதுர்க்க மர்த்தனனுடைய மகன் சமராபிராமன் என்பவன். இவன், யதுவம்சகேது என்றும், சோழன்மகளான அநுபமை என்பவனை மணந்தவன் என்றும் கூறப்படுகிறான். அன்றியும் அதிராசமங்கலத்தில் சளுக்கியனை வென்றவன் என்றும் கூறப்படுகிறான். கொடும்பாளூர் அரசர்களாகிய பரதுர்க்க மர்த்தனனும், அவன் மகன் சமராபிராமனும் மாமல்லனான் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவர்கள். அன்றியும் அவனுக்கு நண்பராகவும் இருந்தவர்கள். நரசிம்மவர்மன் மீது சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி படை யெடுத்து வந்தபோது, அவனை நரசிம்மவர்மன் போரில்கொன்று, பிறகு அவனுடைய வாதாபி நகரத்தின்மேல் படையெடுத்துச் சென்று அந் நகரைக் கைப்பற்றிக்கொண்டு, வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று பெயர்பெற்றான் என்று சரித்திரம் கூறுகிறது. புலிகேசியுடன் நரசிம்ம வர்மன் போர்செய்தபோது, கொடும்பாளூர் அரசனான சமராபிராமனும் பல்லவனுடன் சேர்ந்து சளுக்கியனான புலிகேசியை வென்றான் போலும். ஆகவே, இவன் சளுக்கியனை வென்றவன் என்று பெயர்பெற்றான். இவனுடைய தந்தையாகிய பரதுர்க்கமர்த்தனன், நரசிம்மவர்மன் சார்பாக வாதாபி நகரப்போரில் கலந்துகொண்டு வாதாபிநகரத்தை வென்று “வாதாபிஸ்ரீத்” என்னும் பெயரையும் பெற்றான். இதனால், கொடும் பாளூர் அரசர்களாகிய இவர்கள், நரசிம்மவர்மன், புலிகேசியை வெல்வதற்குத் துணையாக இருந்தார்கள் என்பது தெரிகிறது. இது இன்னொரு விதத்திலும் உறுதிப்படுகிறது. புலிகேசியின் மகனான முதலாம் விக்ரமாதித்தியன், தன் தந்தையான புலிகேசியின் இராச்சியத்தின் தென்பகுதியை மூன்று அரசர்கள் சேர்ந்து கைப்பற்றி னார்கள் என்று தன் சாசனம் ஒன்றில் கூறுகிறான். அப்படியானால் புலிகேசியை வென்றவர் மூன்று அரசர்கள் என்று தெரிகிறது. அம் மூவர் யாவர்? மாமல்லனான நரசிம்மவர்மன் ஒருவன். அவனுக்கு உதவியாக இருந்த இலங்கை மன்னன் மானவம்மா என்னும் மான வர்மன் மற்றொருவன். புலிகேசியை எதிர்த்த மூன்றாவது அரசன் யார்? இதற்கு விடை, கொடும்பாளூர் மூவர் கோவில் சாசனம் கூறுகிறது. புலிகேசியை எதிர்த்து வென்ற மூன்றாவது அரசன், (அரசர்) கொடும் பாளூர் மன்னன் பரதுர்க்கமர்த்தனனும் அவன் மகன் சமராபிராமனும் ஆவர். எனவே, மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், கொடும்பாளூர் நாட்டையரசாண்ட கொடும்பாளூர் வேளிரான சிற்றரசர்கள், பல்லவருக்கு உதவியாக இருந்தார்கள் என்பது தெளிவாகிறது. மூவர் கோயில் சாசனத்தை ஆராய்ந்த சில சரித்திர ஆசிரியர்கள், பரதுர்க்க மர்த்தனனும் சமராபிராமனும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தவர் அல்லர் என்றும் பிற்காலத்தவர் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் கூற்று ஆராய்ச்சிக்குப் பொருந்த வில்லை; பாண்டிய நாடு கொடும்பாளூருக்குத் தெற்கே பாண்டிய நாடு இருந்தது. நரசிம்மவர்மன் காலத்திலே, பாண்டிய நாட்டை அரசாண்டவன் நெடுமாறன் என்னும் பாண்டியன். இவன் சைவ அடியார்கள் அறுபத்து மூவரில் ஒருவன். “நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப் பட்டவன் இவனே. பெரியபுராணத்தில் கூன்பாண்டியன் என்றும் நெடுமாறன் என்றும் இவன் கூறப்படுகிறான். என்றும் நெடுமாறன் இவன் கூறப்படுகிறான். வேள்விக்குடி செப்பேட்டுச் சாசனம் அரி கேசரி, அசமசமன், அலங்க்யவிக்ரமன், அகாலகாலன், மாரவர்மன் என்று இவன் பெயர்களைக் கூறுகிறது. பாழி, திருநெல்வேலி, செந்நிலம், புலியூர் முதலிய இடங்களில் நடைபெற்ற போர்களில் இவன் வெற்றி கண்டான்; பலமுறை கேரள (சேர) அரசனை வென்றான் என்று சாசனங்கள் இவனைப் புகழ்கின்றன. இறையனார் அகப்பொருள் உரையன் இடையிடையே மேற்கோள் காட்டப்படுகிற கோவைச் செய்யுள்கள் (பாண்டிக் கோவை) இவன் மீது பாடப்பட்டன என்பர். பாண்டியன் நெடுமாறன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான். பின்னர், திருஞான சம்பந்தரால் சைவனாக மாற்றப்பட்டான். இவன் அரசியார் மங்கையர்க் கரசியார். இவர், பல்லவ அரசரின் ஞகழ் சிற்றரசராக இருந்த சோழ அரசனுடைய மகளார். குலச்சிறையார் என்பவர் இவ்வரசனின் அமைச்சர் இவ்வரசன், அரசி, அமைச்சன் ஆயி மூவரும், திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்று உபசரித்தார்கள். இம் மூவரும் சைவநாயன்மார் திருக்கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காணலாம். இவ்வரசனை, வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது: 51. “...... மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி உதய கிரி மத்யம 52. த்துறு சுடர்போலத் தெற்றென்று திசை நடுங்க மற்ற வன் வெளிற்பட்டுக்கு 53. ழியானை செலவுந் திப் பாழிவாய் அமர்கடந்து வில்வேலிக் கடற்றாணையை 54. நெல்வேலிச் செறுவென்றும் விரவிவந்தணையாத பர வரைப் பாழ்படுத் 55. துமறு காலினம் புடை திளைக்குங் குறுநாட்டவர் குலங் கெடுத்து 56. ங் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செறுவென்றும் பாரளவுந் 57. தனிச் செங்கோற் கேரளனைப் பலமுறையு முரிமைச் சுற்றமோடவர் யானை 58. யும் புரிசைம்மதிற் புலியூர்ப் பகனாழிகை இறவாமை இகலா 59. ழியுள் வென்று கொடும் வேலாழியும் வியன் பரம்புமே லாமை சென் 60. றெறிந் தழித்தும் ஹிரண்ய கர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்து 61. அந்தணற்கும் அசக்தற்கும் வந்தணைக என்றீத்தளித்த மகரிகை அணிமணி 62. நெடுமுடி அரிகேசரி அசமசமன்ஸ்ரீமாறவர்மன்”......6 இந்தச் சாசனத்தின் வடமொழிப்பகுதி இவ்வாறு கூறுகிறது : “கும்பசம்பவன் (அகத்திய முனிவர்) கையினால் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னர்கள் அரசாண்டு கழிந்த பின்னர், மூவுலகத்தாலும் போற்றப்பட்ட நற்குணங் களையும் புகழையும் உடைய மாரவர்மன் என்னும் அரசன் பிறந்தான். இவன், ஆதிசேஷன் போன்ற தனது பெருந்தோளினால் பூபாரத்தை நெடுங்காலந்த தாங்கிக் கொண்டு, ஆதிசேஷனுடைய இளைப்பை மாற்றினான். புலவரைக் காத்த இவன் போர்க்களத்திலே பகைவர் கூட்டத்தை வென்று அமிர்த் கர்ப்பத்தில் பிறந்து (இரணிய கர்ப்பம் புகுந்து) முறைப்படி பொற்குவியலைத் தானம் செய்தான்.”7 சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனம் இவனை இவ்வாறு கூறுகிறது : 15. “பகைப் பூபர் தலைபனிப்பப் பரமேஸ்வரன் வெளிற் பட்டு அரிகேச 16. ரி அஸமஸமன் அலங்க்யவிக்ரமன் அகாலகாலன் னெனத்தன 17. க்குரியன பலகுண நாமமுலகுமுழு துகந்தேத்தப் பரா 18. வனிபகுல மிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கித் தராசுரர 19. திடரகலத் தனவர்ஷம் பொழிதற்கு வலாஹத்தின் விரதம்கொண் 20. டு துலாபார மினிதேறி ஸரண்யனா யுலகளித்து ஹிரண்ய 21. கர்ப்ப மிருகால் புக்கு கோஸஹஸ்ரத் துடக்கத்துக் குருதா 22. ‘னம் பல செய்து வாசவன்போல வீற்றிருந்தனன் வஸு 23. தாபதி மாரவர்மன்” 8 மாரவர்மன், பல அரசர்களைப்போரில் வென்றதோடு சேர அரசனையும் வென்று அந்நாட்டைத் தன் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஆகையால் இவன் பரமேசுவரன் என்றும் கூறப்படுகிறான். சேரநாடு பாண்டிய நாட்டிற்கு மேற்கே சேரநாடு இருந்தது. இந்தக் காலத்தில் சேரநாட்டில் இருந்த சேர அரசன் பெயரி தெரியவில்லை. ஆனால், இந்தச் சேரனைப் பாண்டியன் நெடுமாறன் பலமுறை வென்றான் என்று சின்னமனூர்ச் சாசனம் கூறுகிறது. இதனால், சேரநாடு பாண்டிய அரசுக்குக் கீழடங்கியிருந்தது என்பது தெரிகிறது. இலங்கைத் தீவு தமிழ்நாட்டின் அருகிலேயுள்ளது இலங்கைத் தீவு. இதற்குச் சிங்களத்தீவு என்றும் பெயர் உண்டு. இது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், இலங்கைத் தீவின் அரசியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்போம். இக்காலத்தில் சிங்களத்தீவை அரசாண்ட மன்னன் கஸ்ஸபன் என்பவன். இவனை இரண்டாங் கஸ்ஸபன் என்பவர். கஸ்ஸபனுக்குப் பகைவனாக இருந்து அரசாட்சியைக் கைப்பற்றுவதற்காக அவனுடன் போராடியவன் தாட்டோபதிஸ்ஸன் என்பவன். இவ்விருவருக்கும் நடந்த போரிலே கஸ்ஸபன் வெற்றியடைந்தான். தோல்வியடைந்த தாட்டோப திஸ்ஸன், முடி முதலிய அரசு சின்னங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டான். ஆகவே, கஸ்ஸபன் முடி தரிக்காமலே இலங்கையை அரசாண்டான். தமிழ்நாட்டிற்கு வந்த தாட்டோ பதிஸ்ஸன் படைதிரட்டிக்கொண்டு இலங்கைக்குச் சென்று மறுபடியும் கஸ்ஸபனுடன் போர் செய்தான். அந்தப் போரிலே தாட்டோப திஸ்ஸன் உயிர் துறந்தான், ஆனால், அவனுடன் இருந்த அவன் மருகனான ஹத்ததாட்டன் தமிழ் நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்தான். கஸ்ஸபன் பல ஆண்டுகள் அரசாண்டான். இவனுக்குப் பல மக்கள் இருந்தார்கள். ஆனால், எல்லோரும் வயது நிரம்பாத சிறுவர்கள். இவர்களில் மானகன் (மானா) என்பவன் மூத்தவன். கஸ்ஸபன் நோய்வாய்ப்பட்டு தான் உயிர் பிழைக்க முடியாதென்று அறிந்து, உரோகண நாட்டிலிருந்த தன் தங்கைமகனான மானா என்பவனை அழைத்து, அவனிடம் தன் மக்களை ஒப்படைத்து, அவர்கள் வயது அடையும் வரையில் அரசாட்சியை நடத்தும்படி அவனை நியமித்தான். அவ்வாறே, மருகனான மானா, கஸ்ஸபனுடைய மூத்தமகனான மானாவையும் அவன் தம்பியரையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டான். கஸ்ஸபன் நோயினால் இறந்தான். பிறகு மானா, உரோகண நாட்டிலிருந்த தன் தந்தையாகிய தப்புலன் என்பவனை அநுராதபுரத்திற்கு அழைத்து அவனை இலங்கைக்கு அரசனாக்கினான். இந்தத் தப்புலன் என்பவன், காலஞ் சென்ற கஸ்ஸபனுடைய தங்கையின் கணவன் தப்புலன் இலங்கைக்கு மன்னன் ஆக்கப்பட்டதை அநுராதபுரத்திலிருந்த தமிழர்கள் விரும்ப வில்லை. இக்காலத்தில் இலங்கையின் தலை நகரமான அநுராத புரத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். தமிழரின் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. ஆகவே தமிழர்கள் தலைநகரமாகிய அநுரையைக், கைப்பற்றிக்கொண்டு, தமிழ்நாட்டில் புகல் அடைந்திருந்த ஹத்த தாட்டனை இலங்கைக்கு வரும்படி அழைத்தார்கள். ஹத்ததாட்டன் உடனே தமிழச் சேனையுடன் புறப்பட்டு அநுரைக்கு வந்தான். இதை யறிந்த தப்புலன், அரண்மனையிலிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக கொண்டு அநுரையை விட்டுத் தனது உரோகண நாட்டிற்குப் போய்விட்டான். அவன் மகனான மானாவும் கிழக்கு மாகாணத்திற்குப் போய்விட்டான். ஆகவே, அநுரைக்கு வந்து சேர்ந்த ஹத்ததாட் டன் எதிர்ப்பு இல்லாமல் அரசனானான். ஆனால், கிழக்கு மாகாணத் தில் இருந்த மானா, படையெடுத்து வந்து ஹத்ததாட்டனுடன் போர் செய்தான். அப் போரிலே மானா இறந்தான். தன் மகன் மானா இறந்த செய்தியைக் கேட்டு உரோகனை நாட்டிலிருந்து தப்புலன் துயர மடைந்து இறந்து போனான். இந்தத் தப்புலன் இலங்கை மன்னனாக ஆறு நாட்கள் மட்டும் இருந்தான். மானாவைக் கொன்று இலங்கையின் மன்னன் ஆன ஹத்த தாட்டன் தன் பெயரைத் தாட்டோபதிஸ்ஸன் என்று மாற்றிக் கொண்டான். இவனைத் தாட்டோபதிஸ்ஸன் இரண்டாமவன் என்று சரித்திர நூலோர் கூறுவர். இவன் தன் சிற்றப்பன் மகனான அக்கபோதி என்பவனைத் தக்கின தேசத்திற்கு இளவரசனாக்கினான். மானா என்பவனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த கஸ்ஸப அரச னுடைய மூத்த மகனான மானா என்பவன், இப்போது வயது நிரம்பப் பெற்று, மலையநாட்டை அரசாண்ட ஒரு சிற்றரசனுடைய மகளான சங்கை என்பவளை மணஞ்செய்துகொண்டு, உத்தர தேசத்தில் (இலங் கையின் வடபகுதியில்) ஒருவரும் அறியாமல் மறைந்து வசித்திருந் தான். கஸ்ஸப அரசன் மகனான மானா தன் நாட்டிலே மறைந்து வாழ்கிறான் என்பதையும் அவன் என்றைக்காவது தன்னை எதிர்த்து அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்பதையும் ஒற்றரால் அறிந்த தாட்டோபதிஸ்ஸன் அவன்மேல் கண் வைத்திருந்தான். தாட்டோப திஸ்ஸன் தன்னைத் தெரிந்து கொண்டான் என்பதை யுணர்ந்த மானா, உடனே புறப்பட்டுக் காஞ்சிபுரம் வந்து, நரசீகன் (நரசிம்மவர்மன்) இடத்தில்தான் இன்னான் என்பதையும் தன் வரலாற்றையும் கூறி, அவனிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் மானாவுக்கு அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் மானாவுக்கு அடைக்கலங் கொடுத்து ஆதரித்தான். பிறகு மானா இலங்கையிலிருந்த தன் மனைவியைக் காஞ்சிபுரத்திற்கு அழைத்துக்கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். இவன் பல்லவர்களைப் போலவே வர்மன் என்னும் பட்டத்தைத் தன் பெயருடன் சேர்த்து மானவர்மன் என்று வைத்துக் கொண்டான். இலங்கை நூல்கள் மானவர்மன் என்பதை மானவம்மா என்று கூறுகின்றன. மானவர்மன் பல ஆண்டுகள் நரசிம்மவர்மன் ஆதரவில் இருந்தான். சளுக்கியவேந்தன் புலிகேசி, பல்லவ நாட்டின் மேல் படையெடுத்து வந்தபோது, மானவர்மன் நரசிம்மவர்மனுக்கு உதவியாகப் போர் செய்தான். சில ஆண்டு கழிந்த பிறகு நரசிம்மவர்மன், மானவர்மனுக்குத் தன் சேனையைக் கொடுத்து இலங்கையரசைக் கைப்பற்றிக் கொள்ளும் படி அனுப்பினான். மானவர்மன் சேனையுடன் இலங்கைக்குச் சென்று அந் நாட்டின் வடகுதியைப் பிடித்துக்கொண்டு அநுடராதபுரத்தின்மேல் சென்றான். இதையறிந்த தாட்டோபதிஸ்ஸன் அநுரையை விட்டு ஓடினான். மானவர்மன் அநுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அவ் வமயத்தில், நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் நோயாய்க் கிடக்கிறான் என்று ஒரு வதந்தி பரவிற்று. அதைக்கேட்ட பல்லவச் சேனை வீரர்கள் உடனே காஞ்சிபுரத்திற்குப் போய்விட்டார்கள். மானவம்மா சேனைப் பலமில்லாமல் இருப்பதை யறிந்து, தாட்டோப திஸ்ஸன் அநுரையின் மேல் படையெடுத்து வந்தான். சேனைப் பலமில்லாத நிலையில், தாட்டோபதிஸ்ஸனுடன் போர்செய்து அறியாமையால் உயிரை இழப்பதைவிட, தப்பி ஓடி உயிர்பிழைத்து மற்றொருமுறை வந்து அரசாட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணி மானவர்மனும் அநுரையைவிட்டுக் காஞ்சிபுரம் போய்விட்டான். ஆகவே, தாட்டோப திஸ்ஸன் பழையபடியே இலங்கையை அரசாண்டான். தாட்டோபதிஸ்ஸன் 12 ஆண்டு அரசாண்டு காலமான பிறகு, இளவரசனாயிருந்த அக்கபோதி அரசனானான். இவனை அக்கபோதி நாலாமவன் என்று சரித்திரக்காரர்கள் கூறுவார்கள். இவனுக்கு ஸ்ரீ சங்கபோதி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இக்காலத்தில் அநுரையில் தமிழரின் செல்வாக்கு அதிகமாக இருந்ததென்று முன்னமே கூறினோம் அல்லவா? அக்கபோதியின் காலத்தில் தமிழரின் செல்வாக்கு உச்சநிலையில் இருந்தது. பொத்த குட்டன், மகாகந்தகன் என்னும் இரண்டு தமிழ்த் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் அமர்ந்து அதிகாரபலம் பெற்றிருந்தார்கள். தமிழர்களாகிய இவர்கள் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பொத்தகுட்டன் பெருஞ் செல்வனாகவும் அரசாங்கத்தில் அதிக பலம் உள்ளவனாகவும் இருந்தான். இலங்கையின் மன்னர்களை அரச பதவியிலிருந்து விலக்கவும் நியமிக்கவும் வல்லமையுடையவ னாக இருந்தான். பௌத்தச் சமயத்திற்கு இவன் பல தான தருமங் களைச் செய்தான். மாடம்பிய பரிவேணை என்றும் பௌத்தக் கலா சாலையைக் கட்டி அதற்குப் பல ஊழியர்களைத் தானமாகக் கொடுத்த தோடு தந்தவாயிக சாட்டிகா, நித்தில வெட்டி என்னும் கிராமங்களை யும் நில புலங்களையும் அம்பலவாபி என்னும் ஏரியையும் அந்தச் சாலைக்குத் தானம் செய்தான்.9 மேலும், அபயகிரி விகாரையைச் சேர்ந்த கப்பூர பரிவேணையிலும், குருண்டபில்லக விகாரையிலும் மகாராஜகர விகாரையிலும் பாசாடைகளை இவன் கட்டினான். விகாரைகளுக்கு மூன்று கிராமங்களைத் தானம் செய்தான். மற்றொரு தமிழத் தலைவனான மகா கந்தகனும் பௌத்த மதத்திற்குத் தான தருமங்களைச் செய்தான். இவன் தன் பெயரினால் கந்தக பரிவேணை என்னும் பௌத்தப் பள்ளியைக் கட்டினான். இவ்விரு தமிழர்களை அரசியல் தலைவர்களாகக்கொண்டு இலங்கையை யரசாண்ட அக்கபோதி, பதினாறு ஆண்டு அரசாண்டான். பிறகு இவன் பொலநுவரா என்னும் புலத்திநகரத்தில் காலமானான். தமிழத் தலைவனாகிய பொத்தகுட்டன், இளவரசனாக இருந்த தாட்டாசிவன் என்பவனைச் சிறையில் அடைத்து விட்டு, தத்தன் என்பவனை அழைத்து வந்து அவனுக்கு முடிசூட்டி இலங்கைக்கு அரச னாக்கினான். இந்தத் தத்தன் இலங்கை யரசரின் பரம்பரையைச் சேர்ந்தவன்; தனபிட்டி என்னும் ஊரில் இருந்தவன். இரண்டு ஆண்டுகள் அரசாண்ட பிறகு இந்தத் தத்தன் காலமானான். ஆகவே பொத்த குட்டன், உணாநகரத்தில் இருந்த ஹத்ததாட்டன் என்பவனை அழைத்து அவனுக்கு முடிசூட்டி அவனை இலங்கைக்கு அரசனாக்கினான். ஹத்ததாட்டன் அரசாட்சியை ஏற்றுக்கொண்ட ஆறாம் திங்களில், நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன், பல்லவச் சேனையுடன் இரண்டாம் முறையாக இலங்கையின்மேல் படையெடுத்து வந்தான். ஹத்ததாட்டன், பொத்தகுட்டன் உதவியுடன் மானவர்மனை எதிர்த்துப் போரிட வந்தான். இருவர் சேனையும் ஒன்று சேர்ந்தால் எதிர்த்துப போரிட முடியாததென்பதையறிந்த மானவர்மன், பொத்தகுட்டன் சேனையையும் ஹத்ததாட்டன் சேனையையும் ஒன்று சேராதபடி பிரித்துவைத்து ஹத்ததாட்டனுடன் போர்செய்து உயிர் இழந்தான். மானவர்மன் இலங்கைக்கு அரசனானான். மானவர்மன் வெற்றியடைந்த படியினாலே, பொத்த குட்டன் மலைய நாட்டிலுள்ள மேருகுண்டாம் என்னும் ஊருக்குப் போனான். மேருகுண்டரத்தை யரசாண்ட சிற்றரசன், பொத்த குட்டனுடைய உயிர் நண்பன். இவன் இப்போது தர்மசங்கடமான நிலையை யடைந்தான். எப்படியென்றால், மானவர்மன் இப்போது இலங்கைக்கு மன்னனாய் விட்டான். அவனுக்குப் பகைவனாகிய பொத்தகுட்டனுக்கு அடைக் கலங்கொடுத்துத் துரோகம் செய்ததாகும். இந்தத் தர்மசங்கட நிலையில் அகப்பட்ட இந்த உத்தமன், தன் நண்பனுக்கும் துரோகம் செய்யாமல், அரச துரோகத்துக்கும் உட்படாமல், தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தான். தன் நண்பனான பொத்தகுட்டனை வரவேற்றுத் தன் இல்லத்தில் இடங்கொடுத்தான். பிறகு, நஞ்சு இடப்பட்ட அப்பத்தைத் தின்று தன் உயிரைவிட்டான். இவன் இவ்வாறு செய்ததைப் பின்னர் அறிந்த பொத்தகுட்டன், தானும் நஞ்சுகலந்த அப்பத்தை உண்டு உயிர்நீத்தான். தான் விரும்பிய படி யெல்லாம் இலங்கையரசர்களை அமைத்து இலங்கை ஆட்சியை நடாத்திவந்த பொத்தகுட்டனுடைய வாழ்வு கடைசியில் இவ்வாறு முடிவுற்றது. நாடுவிட்டோடி நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன் நெடுங்காலத்திற்குப்பிறகு, நரசிம்மவர்மன் உதவியி னாலே இலங்கையின் மன்னனானான். இவன் அரசனானது நரசிம்ம வர்மனுடைய இறுதிக்காலத்தில் ஆகும்.10 மானவர்மனை முதலாம் மானவர்மன் என்பர் வரலாற்றாசிரியர். இவன் கி.பி. 668 முதல் 703 வரையில் இலங்கையை அரசாண்டான். அடிக்குறிப்புகள் 1. Wang - Hiuen - tse. 2. PP. 226 and 228 J.B.B.R.A.S. Vol. XVI 1882-85. 3. Ep. Rep. 1904 - 5. P. 48., Epi.Ind. Vol. XI. P. 337. 4. Ins. Pudu. State No, 14., Chro. Ins. Pudu. State, No. 14. 5. பெரிய திருமொழி 2 ஆம் பத்து. 9ஆம் திருமொழி -5. 6. Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291- 309. 7. Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291 - 309. 8. Copper plate grants sinnamanur. P. 463. South Indian Inscriptions: vol. III, part IV. 9. E.z. II, P. 10. Note 5. 10. J.R.A.S. 1913, P. 523. 3. சமயம் 1. சமண சாக்கிய மதங்கள் கி.பி. 5,6,7 ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயமும் சாக்கிய (பௌத்த) சமயமும் தமிழ்நாட்டிலே பெரிதும செழித்து வளர்ந்திருநதன. முககியமாக 7 ஆம் நூற்றாண்டில் இந்த மதங்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் மிக உச்சநிலையில் இருந்தன. சைவ வைணவ சமயங்கள் மங்கிக் கிடந்தன. மக்கள் பெரிதும சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். ஏன், அரசரங்வட சமண மதத்தைத் தபவியிரந்தனர். கி.பி. 600 மதல் 630 வரையில் அரசாண்ட மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னன் சமண சமயத்தவனாக இரந்தான். அவனைத் திரநாவுக்கரசர் சைவசமயத்தில் சேர்த்தார். திரநாவுக்கரசரே முதலில் சமணசமயத்தில் இருநதவர்; பிறகுதான் சைவரானார். பாண்டிநாட்டை அரசாண்டு வந்த நெடுமாறன் என்னும் பாண்டிய அரசனும் சமண சமயத்தவனே. அவனைத் திருஞானசம்பந்தர் சைவராக்கினார். இந்த 7 ஆம் நூற்றாண்டிலேதான் சைவ அடியார்களான நாயன்மார்களும் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் “பக்தி” இயக்கத்தை ஆயுதமாகக்கொண்டு சமண சாக்கிய சமயங்களை அழிக்கவும், சைவ வைணவ சமயங் வளர்க்கவும் முற்பட்டார்கள். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலே சமணசமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டிலே செழிததிருந்தது என்பதற்குச் சைவ நூல்களே சான்று கூறுகின்றன. இந்நூற்றாண்டின் தொடக்கத்திலே வாழ்ந்திருநத சிவபாத இருதயர், சமணசாக்கிய மதங்கள் மிகுந்திருந்ததைக் கண்டு துன்பம் அடைந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. “மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு ஏதமில்சீர்ச் சிவபாத இருதயர்தாம் இடருழந்தார்.1” “செய்வகை இடையேதப்பும் தென்னவன் பாண்டிநாட்டு மெய்வகை நெறியில்நில்லா வினைஅமண் சமயம் மிக்குக் கைவகை முறைமைத்தன்மை கழியமுன் கலங்குங்காலை.” “தென்னவன் தானும்முன்செய் தீவினைப் பயத்தினாலே அந்நெறிச் சார்வுதன்னை அறமென நினைந்துநிற்ப மன்னிய சைவவாய்மை வைதிக வழக்க மாகும் நன்னெறி திரிந்துமாறி நவைநெறி நடந்ததன்றே.” “பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள்எல்லாம் பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவுமாகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு மூழிநீர் கையிற்பற்றி அமணரே யாகிமொய்ப்ப.” “பறிமயிர்த் தலையும்பாயும் பீலியும் தடுக்கும்மேனிச் செறியுமுக் குடையுமாகித் திரிபவர் எங்குமாகி அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச்சைவ நெறியினிற் சித்தஞ்செல்லா நிலைமையில் நிகழுங்காலை.2” பாண்டிநாட்டு ஆனைமலை முதலிய எட்டுக் குன்றுகளிலே சமண முனிவர்கள் வசித்தார்கள் என்று பெரிய புராணமும், ஞானசம்பந்தரின் ஆலவாய்ப் பதிகமும் கூறுகின்றன. இம் மலைகளில் உள்ள சாசனங்களும் இதற்குச் சான்றாக இருக்கின்றன. இதற்கு ஒப்பவே, நரசிம்மவர்மன் காலத்தில் (கி.பி. 640 இல்) தமிழ் நாட்டிற்கு வந்த ஹியூங் சுவாங் என்னும் சீனநாட்டுப் பௌத்த யாத்திரிகரின் யாத்திரைக் குறிப்பும் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் 100 க்கு மேற்பட்ட பௌத்தப்பள்ளிகள் இருந்தன என்றும், அவற்றில் 1000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் இருந்தனர் என்றும் கூறுகிறார். 80 க்கு மேற்பட்ட ஆலயங்கள் இருந்தன என்றும் அவைகளில் பெரும்பாலும் திகம்பரர்களுக்கு (சமணர்களுக்கு) உரியது என்றும் எழுதுகிறார். இங்கு அசோக சக்கரவர்த்தியாற் கட்டப்பட்ட ஒரு பௌத்தப்பள்ளி இருந்ததையுங் கூறுகிறார். இலங்கைத் தீவிலிருந்து 300 பௌத்த பிக்குகள் காஞ்சிபுரத்திற்கு வந்ததையும் அவர்களுடன் இந்த யாத்திரிகர் உரையாடியதையும் குறிப்பிடுகிறார். பாண்டிநாட்டின் தலைநகரத்தில் அசோக சக்கரவர்த்தியின் தம்பியாகிய மகேந்திரன் கட்டிய பௌத்தவிகாரை இருந்ததென்றும் இங்குப் பௌத்தர்கள் சிறுபான்மை யோராகவும் திகம்பரர் (சமணர்) பெரும்பான்மை யோராகவும் இருந்தனர் என்றும் எழுதுகிறார். தமிழ்நாட்டில் மட்டும் பௌத்த சமண சமயங்கள் செழித்திருந்தனவென்று கருதவேண்டா; வடநாட்டிலும் இந்த மதங்கள் பெரிதும பரவியிருந்தன. சைவ வைணவ மதங்கள் (இந்துமதங்கள்) குன்றி மறைந்திருந்தன. தமிழ்நாட்டிலே இந் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமண பௌத்த சமயங்களை அழிக்கச் சமயப்போர் தொடுத்துவிட்டார்கள். இவர்களுக்குக் கிடைத்த தகுந்த வாய்ப்பான ஆயுதம் பக்திக் கொள்கையே. இவர்கள் நாடெங்கும் சென்று, சமண பௌத்த சமயங்கள் பயனற்றவை என்றும், சைவ வைணவ சமயங்கள் சிறந்தவை என்றும் கூறிப் பிரசாரம் செய்தனர். நாயன்மார்கள் சென்று திருப்பதிகம் பாடிய ஊர்களை யெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், அந்த ஊர்களில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் பெரும்பான்மையோராக இருந்ததைக் காணலாம். இனி, நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த சைவ அடியார்களும் வைணவ அடியார்களும் யார் யார் என்பதை ஆராய்வோம். அடிக்குறிப்புகள் 1. திருஞான சம்பந்தர் - 18. 2. திருஞானசம்பந்தர், 599, 600, 601, 602. 4. சைவசமய அடியார்கள் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த சைவ சமய அடியார்களை ஆராய்வோம். திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீல நக்கர், முருக நாயனார், குங்கிலியக்கலயர் முதலான சைவ அடியார்கள் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவோம். திருநாவுக்கரசர் இவர், திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே வாழ்ந்திருந்த புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்து மருணீக்கியார் என்னும் பெயருடன் வளர்ந்து இளமையிலேயே பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு, அக்காலத்திலே செழித்து வளர்ந்திருந்த சமண சமய நூல்களைக் கற்று அச் சமயத்தை மேற்கொண்டார். இவருடைய கல்வி அறிவு ஒழுக்கங்களைக்கண்ட சமணர், இவருக்குத் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்துச் சமணசமயத் தலைவராக்கிப் பாடலிபுரத் தில் இருந்த சமண சமய மடத்தின் தலைவராக அமர்த்தினார்கள். நெடுங்காலமாக இவர் சமண சமயத் தலைவராக இருந்தார். தருமசேனருடைய முதுமை வயதில் இவருக்குச் சூலைநோய் உண்டாயிற்று. மணிமந்திர ஒளஷதங்களினாலும் அந்நோய் தீராதபடி யினாலே, அவர் பெரிதும் வருந்தினார். பிறகு, இவருடைய தமக்கை யாரான திலகவதியாரால் சைவசமயத்தில் சேர்க்கப்பட்டார். பிறகு, இவருடைய சூலைநோய் தீர்ந்தது. அதுமுதல் பக்தி இயக்கத்தையும் சைவசமயத்தையும் பரவச் செய்யும் பணியில் இறங்கித் தமது ஆயுள் காலம் வரையிலும் அவற்றை செய்து கொண்டிருந்தார். சைவ சமயத்தில் சேர்ந்தபிறகு, இவருக்குத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் உண்டாயிற்று. பல்லவ அரசனான குணபரன் என்னும் மகேந்திரவர்மன் (கி. பி. 600-630) சமண சமயத்தவனாக இருந்தான். அவ் வரசனைத் திருநாவுக்கரசர் சைவசமயத்தில் சேர்த்தார். நரசிம்மவர்மன் அரசனானான். இவ் வரசன் காலத்திலும் இவர் வாழ்ந்திருந்தார். இவர் மிகுந்த வயதுசென்ற “தொண்டு” கிழவராக இருந்தபோது, சீகாழியில் இருந்த ஐந்து வயது சிறுவராகிய திருஞானசம்பந்தரைக் கண்டார். அதுமுதல் இவ்விரு நாயன்மார்களும் நண்பராக இருந்தனர். அப்பூதியடிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமா நாயனார், மங்கையர்க் கரசியார், குலச்சிறை நாயனார் முதலியவர்கள் இவருடன் பழகிய நாயன்மார்களாவர். பாண்டிநாட்டிலே அரசுபுரிந்த பாண்டியன் நெடுமாறன் சமணனாக இருந்தான். அவனைத் திருஞானசம்பந்தர் சைவசமயத்தில் சேர்ந்த பிறகு, திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தலயாத்திரை செய்தார். அப்போது பாண்டியன் நெடுமாறனும் அரசி பாண்டிமா தேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் ,வரை வரவேற்றார்கள். பாண்டிநாட்டு யாத்திரைக்குப் பிறகு திருநாவுக்கரசர் தமது எண்பத்தொன்றாவது வயதில் சிவபதம் அடைந்தார். இவர் உத்தேசம் கி. பி. 569 முதல் 650 வரையில் வாழ்ந்திருந்தார்.1 திருஞானசம்பந்தர் சீர்காழியிலே சிவபாதவிருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப் பிறந்தவர் திருஞானசம்பந்தர். மூன்றாவது வயதிலே திருவருள் பெற்று, சிவபெருமானை இனிய பாடல்களினாலே பாடித் துதிக்கும் ஆற்றல் அடைந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் பாணர் இவர் பாடிய இசைப்பாட்டுகளை யாழில் அமைத்து வாசித்துக் கொண்டிருந்தார். இவருக்கு முன்பே பக்தியியக்கத்தையும் சைவ சமயத்தையும் பரப்பிவந்த மிக வயோதிகரான திருநாவுக்கரசர், மிக இளையவரான ஞானசம்பந்தரைச் சீகாழிக்கு வந்து கண்டு மகிழ்ந்தார். முதிர்ந்த வயதினரான திருநாவுக்கரசரைக் கண்ட இளைஞரான ஞானசம்பந்தர், அவரை அப்பா என்று அழைத்தார் ஆதலினாலே, திருநாவிக்கரசருக்கு அப்பர் என்னும் பெயரும் வழங்கலாயிற்று. திருஞானசம்பந்தர், பௌத்த ஜைன சமயங்களையழித்துப் பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் நிலைநாட்டுவதில் தமது வாழ் நாளைக் கழித்தார். இவருடன் சிறுத்தொண்டர், திருநீல நக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலயர் முதலியவர்கள் நண்பராக இருந்தனர். திருநாவுக்கரசு சுவாமிகள், குணபரன் என்னும் மகேந்திரவர்ம பல்லவ அரசனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியதுபோலவே, திருஞான சம்பந்தரும் கூன்பாண்டியன் என்னும் பாண்டியன் நெடுமாறனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். பின்னர், ஞானசம்பந்தரின் பதினாறாவது வயதில் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அத் திருமணத்தின் முடிவில் தோன்றிய ஒளியிலே, ஞானசம்பந்தரும் அத் திருமணத்திலிருந்த மற்ற எல்லோரும் புகுந்து மறைந்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவருடைய பிரிவான வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் காண்க. நெடுமாறர் பாண்டிய மன்னனாகிய இவருக்கு நெடுமாறன் என்று பெயர். கூன்பாண்டியன் என்றுங் கூறுவர். வேள்விக் குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வரசனை அரிகேசரி, அசம சமன், மாறவர்மன் என்று கூறுகிறது. சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் அரிகேசரி, அசம சமன், அலங்கிய விக்ரமன், அகாலகாலன், மாறவர்மன் என்னும் பெயர்களைக் கூறுகிறது. எனவே இவனுக்கு இப்பெயர்கள் எல்லாம் வழங்கியதாக அறிகிறோம். பாண்டிக்கோவை இவ்வரசன் மீது பாடப்ப ட்டதென்பர். இவன் வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் அரசன் காலத்தில் இருந்தவன். இவன் காலத்தில், தமிழ்நாடு எங்கும் சமண சமயம் சிறப்பாக இருந்ததுபோலவே, இவனுடைய பாண்டிய நாட்டிலும் சிறந்திருந்தது. இந்த அரசனும் சமண சமயத்தவனாக இருந்தான். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிநாடு சென்று சமண சமயத்தவனாக இருந்த இந்தப் பாண்டியனைச் சைவனாக்கினார்.2 இவன் சைவனானவுடனே 80 வயதுடையவரான திருநாவுக்கரசு நாயனார் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தார். அப்போது, இப் பாண்டிய னும் இவன் அரசியான மங்கையர்க்கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் நாவுக்கரசரை வரவேற்றார்கள். இப்பாண்டியன் வரலாற்றைப் பெரியபுராணம் நெடுமாற நாயனார் புராணத்தில் காண்க. பிரம சூத்திரத்தின் பூர்வ மீமாம்சைக்கு ஆசாரிய சுந்தர பாண்டியர் என்பவர் ஒரு விரிவுரை யெழுதியிருக்கிறார். அந்த உரையை, ஆதி சங்கராச்சாரியாரும் குமாரில பட்டரும் தங்களுடைய பிரமசூத்திர பாடியத்திலே போற்றிப் புகழ்ந்திருப்பதோடு, அந்த உரைப் பகுதிகளையும் மேற்கோள் காட்டுகிறார்கள். இவ்வாறு இவர்களால் போற்றப்படுகிற ஆசாரிய சுந்தரபாண்டியர் என்பவர் நெடுமாற நாயனாராக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். அரிகேசரி மாறவர்மன், கூன்பாண்டி யன், நெடுமாறன், சுந்தரபாண்டியன் என்று கூறுப்படுகிற இவ்வரசனே ஆசாரிய சுந்தரபாண்டியனாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.3 அப்பூதியடிகள் இவர், சோழநாட்டுத் திங்களூரிலே இருந்த பிராமணர், திருநாவுக்கரசர், நாடெங்கும் தலயாத்திரை செய்து பக்தி இயக்கத்தை யும் சைவ சமயத்தையும் பரப்பி வருவதைக் கேள்விப்பட்ட இவர், அவர்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டார். ஆகவே, தமது பிள்ளைகளுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைச் சூட்டினார். திரு நாவுக்கரசர் பெயரால் பல தண்ணீர்ப்பந்தல்களையும் அறச்சாலை களையும் ஏற்படுத்தினார். திருநாவுக்கரசரை நேரில் காணாமலே இவ்வாறெல்லாம் செய்து சிறந்த சிவனடியாராக விளங்கினார் அப்பூதியடிகள். திருநாவுக்கரசர், சோழநாட்டுத் தலயாத்திரை செய்தபோது திங்களூருக்குச் சென்றார். அப்பூதியடிகள் அவரை வரவேற்றுத் தமது மனையில் உபசரித்தார். இவரது விரிவான வரலாற்றைப் பெரிய புராணம், அப்பூதியடிகள் நாயனார் புராணத்தில் காண்க. முருகநாயனார் சோழநாட்டுத் திருப்புகலூரில் இருந்தவர். அவ்வூர் வர்த்த மானீச்சுரம் என்னும் சிவன் கோயிலில் வழிபாடு செய்துகொண் டிருந்தார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர் (பரஞ்சோதியார்) இவர்களின் நண்பராக இருந்தார். திருஞான சம்பந்தரின் திருமணத்திற்குச் சென்று, அவர் சோதியில் கலந்தபோது இவரும் சோதியில் கலந்தார். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணம் முருகநாயனார் புராணத்தில் காண்க. குங்கிலியக் கலயர் சோழநாட்டுத் திருக்கடவூரில் இருந்தவர். அவ்வூர்ச் சிவன் கோயில் குங்கிலியத் தூபம் இடுகிற திருத்தொண்டினைச் செய்து வந்தார். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருக்கடவூருக்குத் தலயாத் திரையாகச் சென்ற போது அவர்களை வரவேற்று உபசரித்தார். இவருடைய முழுவரலாற்றினைத் திருத்தொண்டர் புராணம் குங்கிலியக் கலநாயனார் புராணத்தில் கண்டுகொள்க. திருநீலநக்கர் சோழநாட்டுச் சாத்தமங்கை என்னும் ஊரில் இருந்தவர். திருஞானசம்பந்தரிடம் மிகுந்த அன்புள்ள நண்பர். திருஞான சம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது இவர் புரோகிதராக இருந்தார். பிறகு, அத் திருமணத்தின் போது திருஞானசம்பந்தருடன் சோதியில் கலந்தார். இவர் வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணம் திருநீல நக்க நாயனார் புராணத்தில் காண்க. சிறுத்தொண்டர் இவருக்குப் பரஞ்சோதியார் என்றும் பெயர் உண்டு, சோழ நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் இருந்தவர். பல்லவ அரசனிடம் (மாமல்லன் நரசிம்மவர்மனிடம்) சேனைத்தலைவராக இருந்தவர். அவ்வரசன் கட்டளைப்படி வாதாபி (வாதாபி) என்னும் நகரத்தின்மேல் படையெடுத்துச்சென்று அந்நகரை (கி. பி. 642-இல்) வென்றார். பிறகு சேனைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கிக் கணபதீச்சரத்துச் சிவன் கோயிலில் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தார். அப்போது சீராளன் என்னும் மகன் இவருக்குப் பிறந்தான். இவர் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் முதலிய நாயன்மாருடன் நண்பராக இருந்தார். இவர் திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு முன்பே இறைவன் அடியைச் சேர்ந்தார். இவருடைய விரிவான வரலாற்றைப் பெரிய புராணம் சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் காண்க. பாண்டிமா தேவியார் இவருக்கு மங்கையர்க்கரசியார் என்னும் பெயர் உண்டு. சோழ அரசனுடைய மகளார். இவருடைய தந்தையான சோழ அரசன், பல்லவ அரசனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக இருந்தவன். பாண்டியன் நெடுமாறனுக்கு வாழ்க்கைப்பட்ட மங்கையர்க்கரசியார், சைவ சமயப் பற்றுடையவர். திருஞானசம்பந்தரைப் பாண்டி நாட்டிற்கு அழைத்துப் பாண்டியனைச் சைவனாக்கிப் பாண்டி நாட்டில் சைவமதத்தைத் தழைக்கச் செய்வதற்கு முதற் காரணமாக இருந்தவர். திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்று உபசரித்தார். இவரது வரலாற்றினைப் பெரியபுராணத்தில் காண்க. குலச்சிறை நாயனார் பாண்டி நாட்டிலே மணமேற்குடி என்னும் ஊரிலே பிறந்தவர். பாண்டியன் நெடுமாறனிடம் அமைச்சராக இருந்தவர். சைவசமயத்தில் பற்றுள்ள இவர், பாண்டி நாட்டில் சமண சமயம் செழித்துச் சைவசமயம் குன்றியிருந்ததைக் கண்டு, சைவசமயத்தை வளர்க்கவும் சமணனாக இருந்த பாண்டியனைச் சைவனாக மாற்றவும் எண்ணங்க கொண்டார். அதற்காகப் பாண்டிமா தேவியாருடன் சேர்ந்து ஞானசம்பந்தரைப் பாண்டியநாட்டிற்கு அழைத்தார். திருநாவுக்கரசர் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்றார். இவரது வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க. திருநீலகண்ட யாழ்ப்பாணர் நடுநாட்டில் திருஎருக்கத்தம்புலியூரில் பிறந்தவர். பாணர் மரபைச் சேர்ந்தவர். பாணர்கள் இசைப்பாட்டிலும் யாழ் வாசிப்பதிலும் தொன்றுதொட்டுப் பேர்போனவர்கள். சங்க காலத்திலே (கி. பி. 300-க்கு முன்பு) பாணர்கள் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படவில்லை. அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்குச் சமநிலையில் இருந்தார்கள். ஆனால், பிற்காலத்திலே தாழ்த்தப்பட்டுத் தீண்டப்படாதவராகக் கருதப்பட்டனர். இந்த நிலையில் தான் கி. பி. 7-ஆம் நூற்றாண்டிலே நீலகண்ட யாழ்ப்பாணர் இருந்தார். யாழ் வாசிப்பதில் தேர்ந்தவராகிய இவர், சிவபெருமான் மீது பக்தி யுள்ளவராய், திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானைப் பாடி யாழ் வாசித்துக்கொண்டிருந்தார். தீண்டப்படாதவர் என்னும் நிலையில் கோயிலுக்கு வெளியிலேயிருந்து இப்பணியைச் செய்துவந்தார். மதுரைச் சொக்கனாதர் ஆலயத்தில் இவர் இசைபாடியபோது, இவருடைய பக்திக்கும் இன்னிசைக்கும் மனமுருகி அடியார்கள் இவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று இசை வாசிக்கச் செய்தனர். அது மட்டுமன்றி பொற்பலகை இட்டு அதன்மேல் இருந்து வாசிக்கச் செய்தனர். திருவாரூரிலும் அவ்வாறே கோயிலுக்குள் அழைத்துச் சென்று இவரை இசைபாடச் செய்தனர். இவ்வாறு நெடுங்காலம் யாழ்வாசித்த இவர், இளைஞராகிய திருஞான சம்பந்தர் இனிய இசைப்பாடல்களைப் பாடுவதையறிந்து சீகாழிக்கு வந்து அவருடைய பாடல்களை யாழில் இட்டு வாசித்தார். அதுமுதல் ஞானசம்பந்தருடனே தங்கியிருந்து அவருடைய பதிகங்களை யாழில் வாசித்துக கொண்டிருந்தார். இவர் கடைசியில், ஞானசம்பந்தரின் திருமணத்தில் அவருடன் ஒளியில் கலந்தார். இவர் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க. அடிக்குறிப்புகள் 1. இந்நூலாசிரியர் எழுதிய மகேந்திரவர்மன் என்னும் நூலைக் காண்க. 2. திருஞானசம்பந்த நாயனாரைவிட இப் பாண்டியன் வயதில் இளைஞன் என்று ஒரு சரித்திரப் பேராசிரியர் கூறுகிறார். (The pndian Kingdom by K.A. Nilakanta Sastri) ஞான சம்பந்தர் தமது 16 ஆவது வயதில் இறைவனை அடைந்தார். சம்பந்தர் தமது 16ஆவது வயதில் இறைவனை அடைந்தார். அவர் பாண்டியனைச் சைவனாக்கியபோது ஏறக்குறைய 14 வயது இருக்கும். பாண்டியன் அவருக்கு வயதினால் சிறியவனாக இருந்தால், பாண்டியனுக்கு 13 அல்லது 12 வயதாக இருக்க வேண்டும். இவ்வளவு சிறுவயதில் நெடுமாறன் அரசாட்சிக்கு வந்தான் என்பதற்கு இலக்கியம், சாசனம் முதலிய யாதொரு சான்றும் கிடையாது. ஆகவே சரித்திர ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவது கொள்ளத்தக்கதல்ல. 3. J.O.R.M. 1927. P. 5. 15. சுந்தரபாண்டியன், நெடுமாற நாயனார் அல்லர். நெடுமாறனுக்கு முன்பிருந்தவராகக் கூடும் என்று வேறு சிலர் கருதுகிறார்கள். 5. வைணவ ஆழ்வார்கள் இக்காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியிருந்ததை முன்னரே கூறினோம். நரசிம்மவர்மனான மாமல்லன் காலத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், அப்பூதியடிகள், முருகநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலிய நாயன்மார்கள் இருந்தார்கள் என்பதையும், அவர்களில் அப்பரும், சம்பந்தரும் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து பௌத்த மதத்தையும் சமண சமயத்தையும் கண்டித்துச் சைவசமயப் பிரசாரம் செய்தார்கள் என்பதையும் கூறினோம். இக்காலத்திலேயே வைணவ சமயத்து ஆழ்வார்கள் யீசலர் இருந்தார்கள். இவ் ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தையும் வைணவ சமயத்தையும் தமிழ்நாட்டில் பரப்புவதற்குப் பாடுபட்டார்கள். இவர்கள் காலத்தில் இருந்த ஆழ்வார்கள் நால்வர். இவர்களில் பொய்கை யாழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் என்பவர் மூவரும் முதலாழ்வார் என்று கூறப்படுவார்கள். திருமழிசை ஆழ்வார் என்பவர் முதலாழ்வார் கள் காலத்திலே இருந்தவர். ஆனால், வயதினால் அவர்களுக்கு இளையவர். இந்த நான்கு வைணவ ஆழ்வார்களும் நரசிம்மவர்மனான மாமல்லன் காலத்தில் இருந்தவர்கள். இவர்களில் முதலாழ்வார் மூவரும் பக்திநிலையில் நின்று யோகிகளாக இருந்தவர்கள். ஆகவே இவர்கள் சமண பௌத்த சமயங்களைத் தாக்காமலே தமது கொள்கையை மட்டும் நிலைநிறுவினார்கள். இவர்களுக்கு இளையரான திருமழிசை யாழ்வார், பக்தி இயக்கத்தையும் வைணவ சமயத்தையும் நிலை நாட்டுவதில் அதிக ஊக்கமுடையவராயிருந்தார். இவர் சமண பௌத்த மதங்களைமட்டுமல்லாமல் சைவ மதத்தையும் கண்டித்துப் பிரசாரம் செய்தார். இவர்கள் வரலாற்றினைச் சுருக்கமாக ஆராய்வோம். பொய்கையாழ்வார் காஞ்சீபுரத்திலே திருவெஃகா என்னும் திருக்கோயிலுக்கு அருகிலே இவர் பிறந்தவர் என்று வைணவ வரலாறு கூறுகிறது. பொய்கையிலே (குளத்திலே) பிறந்தபடியினாலே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. பொய்கையூர் அல்லது பொய்கைநாட்டைச் சேர்ந்தவர் ஆகையினால் பொய்கையார் என்னும் பெயர் பெற்றார் என்று கருதுவது தவறாகாது பொய்கையார் என்னும் பெயருடைய புலவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். கடைச்சங்க காலத்திலே இருந்த களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் இந்தப் பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். கி. பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் செங்கட் சோழன் காலத்தில் இருந்த பொய்கையார் வேறு, கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கை யாழ்வார் வேறு.1 திருமாலிடத்தில் பக்தியுடையவரான இவர் யோகியாய்த் தியானத்தில் அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். உலகப்பற்றை அறவே ஒழித்த இவர், தமது காலத்தில் நிகழ்ந்த பௌத்த சமண சமயக் கலகங்களிலும் கருத்தைச் செலுத்தாமல் ஒதுங்கியிருந்தார். ஆகையினால் தான் இவருடைய பாடல்களில் பௌத்த சமண சமயங்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படவில்லை. இவர், இயற்பா முதல் திருவந்தாதியை இயற்றினார். இது அந்தாதித் தொடரில் நூறு வெண்பாக்களையுடையது. இவர், பேயாழ்வார் பூதத்தாழ்வார் ஆகிய இருவரையும் திருக் கோவலூரில் சந்தித்தார் என்றும், திருமழிசையாழ்வாருடனும் பழகியவர் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. பூதத்தாழ்வார் இவர் கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திலே பிறந்தவர். இவரும் திருமால் பக்தராக இருந்தவர். உலகப்பற்றை அறவே நீத்தவர். பௌத்த சமண சமயக் கலகங்களில் தலையிடாமல் யோகியாக வாழ்ந்தவர். பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் ஆழ்வார் களுடனும் திருமழிசையாழ்வாருடனும் நட்புடையவன். இவர் இயற்றிய இயற்பா - இரண்டாந் திருவந்தாதி, நூறு வெண்பாக்களாலான அந்தாதித் தொடையால் அமைந்தது. பேயாழ்வார் இவர் சென்னைப்பட்டினத்துக்கு அடுத்த மயிலாப்பூரில் பிறந்தவர் இவரும் திருமால் பக்தராயும் யோகியாயும் இருந்தவர். மற்றச் சமயப் பூசல்களில் தலையிடாதவர் பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் இவர்களுடன் நட்புடையவர். இவர் இயற்றிய இயற்பா - மூன்றாந் திருவந்தாதி, அந்தாதித் தொடையில் நூறு வெண்பாக்களாலானது. சைவ சமயத்தவராக இருந்த திருமழிசையாழ்வாரை வைணவ சமயத்தில் சேர்த்துத் திருமாலடியாராகத் திகழச் செய்தவர் பேயாழ்வார். அதுபற்றி, “பெருக்க முடன் திருமிழிசைப் பிரான் தொழுவோன் வாழியே.” என்று வைணவர்கள் இவரை வாழ்த்துவது வழக்கம். திருமழிசையாழ்வார் தொண்டை நாட்டிலே திருமிழிசை என்னும் ஊரில் பிறந்தவர். ஆகையினாலே இவருக்குத் திருமழிசையாழ்வார் என்று பெயர் அமைந்தது. இளமையில் கல்விகற்றுத் தேர்ந்து, திருநாவுக்கரசரைப் போலவே, பல சமயங்களை ஆராய்ந்தவர். அதன் பயனாகச் சிலகாலம் பௌத்தராகவும் சில காலம் சமணராகவும் இருந்து பிறகு சைவ சமயத்தில் சேர்ந்து சிவவாக்கியர்1 என்னும் பெயர் பூண்டிருந்தார். இவர் சைவ சமயத்தவராக இருந்த காலத்தில், பேயாழ்வார் இவரை வைணவராக்கித் திருமால் பக்தராகச் செய்தார் என்றும், வைணவராகி இவர் யோகத்தில் அமர்ந்திருந்த போது முதலாழ்வார்கள் மூவரும் வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார்கள் என்றும் இவருடைய வரலாறு கூறுகிறது. இவருக்குப் பக்திசாரர் என்று வேறு பெயரும் உண்டு. இவர் காஞ்சீபுரஞ் சென்று திருவெஃகா என்னும் திருப்பதியில் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டிருந்தார். அக்காலத்தில், கணிகண்ணன் என்பவர் இவரிடம் வந்து சீடராக அமர்ந்து இவருக்கும் தொண்டு செய்திருந்தார்.காஞ்சி நகரத்திலிருந்து பல்லவ அரசனுடைய அரண்மனைக்குக் கணிகண்ணர் பிச்சைக்காகச் செல்வதுண்டு. ஒரு செய்யுள் பாடச் சொன்னான். அவர் அரசனைப் பாடாமல் காஞ்சி நகரத்தைப் பாடினார். அதனால் சினங்கொண்ட பல்லவ மன்னன் அவரை ஊரைவிட்டுப் போகும்படி சொன்னான். அவரும் ஆழ்வாரிடம் வந்து நடந்ததைக் கூறித் தனக்கு விடை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். ஆழ்வார், தாமும் அவருடன் வருவதாகக் கூறிக் கோயிலிலிருந்த பெருமாளையும் அழைத்துக் கொண்டு மூவருமாகப் புறப்பட்டுப் போயிவிட்டார்கள். பெருமாள் போய்விட்டதை யறிந்த அரசன், அவர்களை மீண்டும் நகரத்துக்கு வரும்படி அழைத்தான். அதற்கு உடன்பட்டு ஆழ்வாரும் கணி கண்ணரும் பெருமாளுடன் காஞ்சிக்குத் திரும்பி வந்தனர் என்று இவருடைய வரலாறு கூறுகிறது. காஞ்சியை விட்டுப்போய் இவர்கள் ஓர் இரவு தங்கியிருந்த ஊருக்கு ஓரிரவிருக்கை என்று பெயர் உண்டாயிறு. இவ்வூர் காஞ்சிக்குத் தெற்கே இரண்டு மைலுக்கப்பால் இருக்கிறது. கணிகண்ணரை அரசன் நகரம் கடத்தியதும் அவருடன் திருமழிசை யாழ்வார் சென்றதும், அரசனைப் பாடாததற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையன்று. சமய சம்பந்தமாகக் காஞ்சியில் ஏதோ கலகம் ஏற்பட்டிருக்கலாம்; அக் கலகத்தில் கணிகண்ணரும், மறைமுகமாக ஆழ்வாரும் தொடர்பு கொண்டிருக்கலாம். இதனால்தான் இவர்கள் நகரத்தினின்று வெளியேற்றப்பட்டனர் என்று கருதுவது தவறாகாது. பின்னர், அக் கலகம் சமாதான முறையில் அடக்கப்பட்ட பிறகு இவர்கள் நகரத்திற்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு திருமழிசையாழ்வார், காஞ்சிமா நகரத்தைவிட்டுக் குடந்தை என்னும் கும்பகோணத்திற்குப் போய் அங்கே கடைசிவரையில் தங்கியிருந்தார். குடந்தைக்குப் போகிற வழியில், பெரும்புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் தங்கினார். சிதம்பரத்தில் தங்கிய இவர், தில்லைத் திருச்சித்ர கூடத்தைப் பாடவில்லை. ஏனென்றால் இவர் காலத்தில் தில்லைக் கோவிந்தராசப் பெருமாளுக்குத் திருக்கோயில் அமைக்கப் படவில்லை. இவருக்குப் பின் வந்தவரான திருமங்கையாழ்வார் காலத்தில் தில்லைக் கேவிந்த ராசனுக்குத் திருக்கோயில் அமைக்கப்பட்டிருந்தபடியால், திருமங்கை யாழ்வார் தில்லைத் திருச்சித்ர கூடத்தைப் பாடியிருக்கிறார். திருமழிசையாழ்வார் தமது பாடல்களில் பௌத்தர் சமணர், சைவர் ஆகிய மூன்று சமயத்தவரையும் கண்டிக்கிறார். இவர் ,யற்றிய இயற்பா - நான்முகன் திருவந்தாதி, அந்தாதித் தொடையாக அமைந்த தொண்னூற்றாறு வெண்பாக்களையுடையது. இவர் பாடிய திருச்சந்த விருத்தம் நூற்றிருபது ஆசிரிய விருத்தத்தைக் கொண்டது. “அன்புடன் அந்தாதி தொண்னூற்றா றுரைத்தான் வாழியே” என்றும், “எழிற் சந்த விருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே” என்றும் வைணவர் இவரைப் போற்றுகிறார்கள். இந்த ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. முதலாழ்வார், திருமழிசையாழ்வார்காலஆராய்ச்சி. I பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இம்மூவரும் முதலாழ்வார் எனப்படுவர். இம் மூவரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள். இவர்கள் காலத்தில் இருந்த திருமழிசையாழ்வார் இவர்களுக்கு இளையவர். ஆனால், நால்வரும்,ஒரே காலத்தில் இருநதவர்கள் என்பதற்கு இவர்களின் வரலாறு சான்று கூறுகிறது. வைணவ அடியார்களான இவர்கள், சைவ அடியார்களான நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சிறுத் தொண்டர், முருகநாயனார் முதலிய சைவ நாயன்மார்கள் வாழ்ந்திருந்த அதே காலத்தில், அஃதாவது மாமல்லன் நரசிம்மன் காலத்தில் இருந்தவர்கள். இந்த ஆழ்வார்களின் காலத்தை எளிதாகக் கண்டு இவர்கள் நூல்களிலே சான்றுக;ள இல்லை. ஆனால், பூதத்தாழ்வார் தமது செய்யுளில் மாமல்லபுரத்தைக் குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பைக்கொண்டு, இவரும் இவருடனிருந்த மற்ற ஆழ்வார் களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்ம வர்ம பல்லவன் காலத்தில், இருந்தவர்கள் என்று தீர்மானிக்கலாம். இதனை ஆராய்வோம். பூதத்தாழ்வார் பாடிய திருவந்தாதியில், தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும் மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே ஏவல்ல எந்தைக்கு இடம். என்னும் செய்யுளைப் பாடியுள்ளார்.1 இச்bசய்யுளில் மாமல்லபுரத்தை மாமல்லை என்று கூறுகிறார். பூதத்தாழ்வார் பிறந்ததும்மாமல்லபுரந்தான். மாமல்லபுரம் இப்போது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. மாமல்லை என்னும் மாமல்லபுரம் பல்லவ அரசர்களின் துறைமுகப் பட்டினம். ஆகவே, இங்குப் பல்லவஇளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். தந்தையாகிய மகேந்திவர்மன் காலத்தில், இளவரசனாயிருந்த நரசிம்ம வர்மன்இந் நகரத்தில் வாழ்ந்திருந்தான். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயரும் உண்டு. இவன் காலத்து முன்பு இத்துறைமுகப் பட்டினத்துக்கு மாமல்லபுரம் என்னும் பெயர் இல்லை. வேறு பெயர் இருந்தது. மாமல்லன் காலத்தில் இவ்வூருக்கு இவன் பெயர் சூட்டப்பட்டு மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டது. மாமல்லபுரம் மாமல்லை என்று சுருக்கமாக வழங்கப்பட்டது. தமது செய்யுளிலே மாமல்லபுரத்தைக் குறிப்பிடுகிற படியால், பூதத்தாழ்வார் மாமல்லன் காலத்திலாவது அவன் காலத்திற்குப் பின்னராவது வாழ்ந்திருக்க வேண்டும். ழூவோ தூப்ராய் அவர்கள் தமது `பல்லவர் பழமை’ என்னும் நூலிலே, நரசிம்மவர்மன்தம் சிறப்புப் bபயராகிய மாமல்லன் என்னும் பெயரினால் மாமல்லபுரத்தைப் புதிதாக உண்டாக்கினான் என்று கூறுகிறார்.1 இவர் கூறுவதுபோல மாமல்லன் புத்தம்புதிதாக இவ்வூரை உண்டாக்கவில்லை. இவ்வூரின் பழைய பெயரை மாற்றித் தன் பெயரைச் சூட்டினான். அரசர்கள், ஊரின் பழைய பெயரை மாற்றித் தமது பெயரைச் சூட்டுவது மரபு. இதற்குச் சாசனங்களில் பல சான்றுகள் உள்ளன. மாமல்லபுரம் சங்ககாலம் முதல் வேறு பெயருடன் இருந்து வந்ததென்றும், பெரும்பாணாற்றுப் படையில் கூறப்படுகிற நீர்ப்பெயற்று அல்லது நீர்பெயர்த்து என்பது அதன் பழைய பெயர் என்றுங் கூறுவர்.2 நீர்ப்பாயல் என்று இவ்வூருக்குப் பெயர் இருந்ததென்றும் அப் பெயரையே பிற் காலத்தவர் ஜலசயனம் என்று வழக்கனிhர்கள். என்று கருதுவோரும் உளர். கடல்மல்லை என்பது இதன் பழைய பெயர் என்றும், பிறகு மாமல்லன் தன் பெயரை இட்டு மாமல்லபுரம் என்று வழங்கினான் எனக் கூறுவோரும் உளர். இதன் பழைய பெயர் எதுவாக இருந்தாலும், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த முதலாம் நரசிம்மவர்மனால் மாமல்லபுரம் என்னும் புதியபெயர் இடப்பெட்டதென்பதில் சிறிதும ஐயமில்லை. பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்தவர் என்று சொல்லப்டு கிறபடியாலும், அவ்வூரை மாமல்லை என்று அவர் தமது செய்யுளிலே கூறுகிற படியாலும், அவ்வூருக்கு மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்ட பிறகு இருந்தவராதல்வேண்டும். ஏனைய ஆதாரங்களை ஒத்திட்டுப் பார்க்குமபோது, பூதத்தாழ்வார், நரசிம்மவர்மன் காலத்திலே, மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்ட காலத்திலேயே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே, பூதத்தாழ்வாரும் அவருடன் நண்பர்களாக இருந்த பொய்கை யாழ்வார் பேயாழ்வார் திருமழிஐசயாழ்வார் ஆகிய ஏனைய மூன்று ஆழ்வார்களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலே வாழ்நதிருந்தவர் என்பது தெரிகிறது. இதே கருத்தைத் திரு. கோபி நாதராயரும் கொண்டுள்ளார்.1 பூதத்தாழ்வார் தாம் பிறந்த மாமல்லபுரத்தை மாமல்லை என்று வெளிப்படையாகக் கூறியிருக்க, மு. இராகவையங்கார் அவர்கள் தமது ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில், மல்லை என்பதை மா என்னும் அடைமொழியுடன் ஆழ்வார் கூறினார் என்று பண்டிதர் முறையில் வலிந்து பொருள் கூறுகிறார். அவர் கூறுவது இது: “மல்லை என்றும் அவ்வூர் ஆழ்வார் திருவாக்குகளில் வழங்குகின்றது. `மாமல்லை கோவல்மதிற் குடந்தை’ என்று பூதத்தாழ்வார் அருளிய தொடருள் `மல்லை’ என்பதற்குக் கொடுககப்பட்ட விசேடணம்: “நீளோதம், வந்தலைக்கு மாமயிலை மாவல்லிக் கேணியான்” என்ற திருமழிசைப்பிரான் வாக்கிற்போல வந்த அடை சொல்லாககட் கொள்ளற்குரியதன்றி, மாமல்லபுரம் என்பதன் திரிபாகவே கொள்ள வேண்டும் என்னும் நியதியில்லை.2 இவ்வாறு மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பதன் திரிபு அல்ல என்றும், மாமல்லை என்பதில் மா என்பது விசேடணம் (அடைமொழி) என்றும் வலிந்து பொருள் கூ றுகிறார் அய்யங்கார். அப்படியானால், பூதத்தாழ்வார். “மாமல்லை மாகோவல் மாக்குடந்தை என்பரே” என்று கூறாமல், “மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே” என்று ஏன் கூறினார்? மல்லைக்குக் கொடுத்த மா என்னும் அடையைக் கோவலுக்கும் குடந்தைக்கும் ஏன் கொடுக்கவில்லை? இந்த ஐயம் அவருக்கும் ஏற்பட்டுப் பிறகு மாமல்லை என்பது மாமல்லபுரமாகத்தான் இருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறார். அவர், அதே ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் 32 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “இவ்வாறு கடல்வளம் பெற்றிருந்த பண்டைத் துறைமுகப் பட்டினம், முதல் நரசிம்மவர்மனால் பின்பு புதுப்பிக்கப்பட்டு மாமல்லன் என்ற அவன் சிறப்புப்பெயரைப் பெற்றிருத்தலும், அதனால், கடன் மல்லை என்ற தன் பழம் பெயரை யன்றி, மாமல்லபுரம்என்று புதுப் பெயரும் அதற்குப் பெரு வழக்காயமைந்திருத்தலும் கூடியனவே.” இவ்வாறு மாமல்லை என்பதற்கு மாமல்லபுரம் என்னும் பொருளை இவர் ஒப்புக்கொள்கிறார். இதனோடு நிற்கவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய முதலாம் மகேந்திரவர்மனுக்குச் சத்துரு மல்லன் என்னும் சிறப்புப் பெயர் உண்டென்பதைக் கூறி சத்துருமல்லன் என்னும் பெயரால் மல்லை என்னும் பெயர் வந்திருக்கக்கூடும் என்று குறிப்பாகக் கூறுகிறார்.1 இவர் குறிப்பாகக் கூறுவது போல இவ்வூருக்குச் சத்துருமல்லபுரம் என்ற பெயர் வழங்கியதாக இதுவரையில் சாசனங்களிலும் இலக்கியங்களிலும் சான்று கிடையாது. ஆகவே, மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பது உறுதியாகிறது. மேலும், அய்யங்கார் அவர்கள் மாமல்லபுரத்து ஆதிவராகர் சந்நிதியுள் மகேந்திரவர்மனுக்கும் அவன் தந்தை சிம்ம விஷ்ணுவுக்கும் சிலையுருவங்கள் உள்ளன என்று கூறி அதனால் அக் கோயில் நரசிம்மவர்மன் காலத்துக்கு முன்பே ஏற்பட்ட தென்று கூறுகிறார். இதுவும் தவறு. ஆதிவராகர் சந்நிதியுள், நரசிம்மவர்மன் காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட சிங்கத்தூண்கள் இருப்பதனால், அக்கோயில் நரசிம்மன் காலத்துக்கு முற்பட்டதல்ல. எனவே, பூதத்தாழ்வார் மாமல்லையாகிய மாமல்லபுரத்தைக் கூறுகிறபடியினாலே, அப்பெயர் ஏற்பட்ட மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அல்லதுஅதற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவராதல் வேண்டும். மற்ற ஆதாரங்களைக் கொண்டு பார்கிறபோது, நரசிம்ம வர்மன் காலத்திலே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே அவர் காலத்தில் அவருடன்நண்பர்களாக இருந்த மற்ற மூன்று ஆழ்வார் களும் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. II பூதத்தாழ்வார் காலத்தில் மேலே ஆராய்ந்து, அவர் காலம் நரசிம்மவர்மன் காலம் என்று கூறினோம். அவருடன் அவர் காலத்தில் இருநத பொய்கையாழ்வாரைப் பற்றிய சில ஐயங்களைப் பற்றி இங்கு ஆராய்வோம். நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பொய்கை ஆழ்வாரும், கடைச்சங்ககாலத்தின் இறுதியில் இருந்த களவழி நாற்பது பாடியவரும் ஆன பொய்கையாரும் ஒருவரே என்றும், ஆகவே பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்தவர் என்றும் சிலர் கருதுகீறார்கள். பொய்கை என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றைமட்டும் சான்றாகக்கொண்டு இவ்வாறு கூறுகின்றனர். இது பொருந்தாது. சங்ககாலத்தின் கடைசியில் இருந்த பொய்கையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர அரசனுடைய அவைப்புலவர். இவரே கோக்கோதை மார்பன் என்னும் சேர அரசனையும் பாடியிருக்கிறார். (புறம். 48, 49). சோழன் செங்கணான், கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று பிடித்துச் சிறைவைத்தபோது, அவனைச் சிறை மீட்பதற்காகப் பொய்கையார் களவழி நாற்பது பாடினார். அரசரைப்பாடி அரசரிடம் ஊழியம் செய்து வாழ்ந்தவர் பொய்கையார் என்னும் புலவர். பொய்கையாழ்வாரோ, மானிடரைப் பாடாதவர். திருமாலைத் தவிர வேறு ஒருவரையும் மறந்தும் பாடாதவர். இதனை இவரே தெள்ளத் தெளியக் கூறுகிறார்: “திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்” என்றும்1. “நாடிலும் நின்னடியே நாடுவன் நாள்தோறும் பாடினும் நின்புகழே பாடுவன்” என்றும்,2 “மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என்நா.” என்றும்,3 பொய்கையாழ்வார் கூறுவது காண்க. ஆகவே, களவழி நாற்பது பாடிய பொய்கையார் வேறு; முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. ஆனால், பொருந்தாக் காரணத்தைப் பொருத்திக்கூறி இருவரும் ஒருவரே என்று சொல்பவரும் உளர். “.....சோழன் கோச் செங்கணானைக் களவழி நாற்பது என்ற நூலாற் புகழ்ந்த பொய்கையார், மேற்கூறிய தமிழ் முனிவரான பொய்கையாழ்வாராகவே இருத்தல் கூடும் என்பது என் கருத்து” என்று மு. இராகவையங்கார் அவர்கள் கூறுகிறார்கள்.1 கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று அய்யங்கார் அவர்கள் கருதுகிற பொய்கையார் என்னும் புலவரே பொய்கை யாழ்வாராக இருப்பாரானால், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாருடன் அவர் எப்படி நண்பராக இருக்க முடியும்? பூதத்தாழ்வார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்று மேலே காட்டினோம். ஆகவே அவருடன் நண்பராக இருந்த பொய்கையாழ்வாரும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வேண்டும். எனவே, சோழன் செங்கணானைப் பாடிய பொய்கையார் என்னும் புலவரே பொய்கையாழ்வாராக இருக்க முடியாது. பொய்கையார் என்னும் பெயரையுடையவர் பலர் வெவ்வேறு காலத்தில் இருந்திரக்கிறார்கள். களவழி நாற்பது பாடிய பொய்கை யாரை யன்றி, பன்னிருபாட்டியல்என்னும் நூலில் காணப்படுகிற இலக்கண சூத்திரங்களை எழுதிய பொய்கையாரும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோள் காட்டப்படுகிற செய்யுள்களைப் பாடிய பொய்கையாரும், இன்னிலை என்னும் நூலைப் பாடியவர் என்று கூறப்படுகிற பொய்கை யாரும் இவ்வாறு பல பொய்கையார்கள் இருந்திருக்கின்றனர். பொய்கையார் என்னும் பெயர் முறகாலத்தில் மக்கள் பெயராகப் பலருக்கு வழங்கி வந்துள்ளது. ஆகவே பெயர் ஒற்றுமையை மட்டும்ஆதாரமாகக் கொண்டு சங்ககாலத்துப் பொய்கை யாரையும் நரசிம்மவர்மன் காலத்துப் பொய்கையாரையும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பர் என்று கூறப்படுகிறப்படியால் பொய்கை யாழ்வாரும் இக்காலத்திலேதான் இருந்திருக்க வேண்டும். மற்றொரு நண்பரான பேயாழ்வாரும் இக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். III பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவர் காலத்திலே அவர்களோடு நண்பர்களாக இருந்தவர் திருமழிசையாழ்வார். ஆனால், இவர் மற்ற மூவரிலும் ஆண்டில் இளையவர், திருமழிசையாழ்வார் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதியில், காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பு அங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! உன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்”. என்று பாடுகிறார். இதில் குணப்பரனே என்று வருவதால், குணப்பரன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மனை (முதலாவன்) இது குறிக்கிறது என்றும், ஆகவே, திருமழிசையாழ்வார் மகேந்திர வர்மன் காலத்தவர் என்றும் சீநிவாசஅய்யங்கார் அவர்கள் கூறுகிறார்.1 மு. இராகவையங்கார் அவர்களும் இதனை ஒருவாறு ஏற்றுக் கொள்கிறார். “ஆழ்வாரும் (திருமழிசையாழ்வாரும்) குணபரப் பெயரை வழங்கினர் என்பது ஏற்றுக் கொள்ளப்படின், அப் பெயர்கொண்ட மகேந்திரவர்மனது ஆட்சிக் காலத்தைத்(618 - 646) திருமழிசை யாழ்வாரது வாழ்நாளின் பிற்பகுதியாகக் கொள்ளலாம்” என்று அவர் எழுதுகிறார்.2 மேலும், “இவற்றால், சமயவாதஞ் செறிந்து நிகழ்ந்த மகேந்திரவர்மனது ஆட்சிக்காலமே திருமழிசைப் பிரானுக்கும் உரியதென்று கொள்வதுபெரிதும் பொருந்தும் என்னலாம் இதற்கேற்ப, குணபரன் என்ற பல்லவன் பெயரையே, பொருடபேறு சிறத்தல்பற்றி அவ்வாழ்வார் திருமாலுக்கு வழங்கலாயினர் என்று மேற்கூறிய கருத்தும் ஏற்புடைத்தாயின், அப்பல்லவன் ஆட்சிபுரிந்த 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கமே, திருமழிசையாரது வாழ்நாளின் பிற்பகுதியென்று துணியத் தடையில்லை”3 என்று கூறுகிறார். ஆழ்வார், குணப்பரனே என்று கூறியது குணபரன் என்னும் மகேந்திரவர் மனைத்தான் குறிக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இவர்கள், இவ் வாழ்வாருக்கு முடிவு கட்டுகிற காலம் எமது ஆராய்ச்சிக்கு ஏறக்குறைய இணைந்து வருகிறது. இவர்கள், திருமழிசையாழ்வார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்கின்றனர். எமது ஆராய்ச்சியில், இவ்வாழ்வார் அதே நூற்றாண்டில் ஆனால், மகேந்திரவர்மன் மகனான மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது தெரிகிறது. இதனை ஆராய்வோம். திருமழிசை ஆழ்வாரையும் அவர் சீடரான கணிகண்ணரையும் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பல்லவ அரசன் “நாடு கடத்தினான்” என்று வரலாறு கூறுகிறது. இவர்களை “நாடு கடத்திய “பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் ஆக இருக்கக்கூடும் என்றும், இவ் வரசர்கள் மிகுந்த சைவப் பற்றுள்ளவர்கள் என்றும் ஸ்ரீநிவாச அய்யங்கார் கருதுகிறார்.1 இவர்களை மகேந்திரவர்மன் நாடு கடத்தியிலிருக்க முடியாது. அவன் மகனான முதலாம் நரசிம்மவர்மன்தான் நாடு கடத்தியிருக்கக் கூடும் ஏனென்றால், மாமல்லபுரத்திற்கு அப்பெயரைச் சூட்டியவன் நரசிம்மவர்மனே. மாமல்ல புரமாகிய மாமல்லனையைப் பூதத்தாழ்வார் தமது செய்யுளில் பாடியிருப்பதை மேலே காட்டினோம். ஆகவே, மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பரும் சமகாலத்தவருமான திருமழிசையாழ்வாரை அந்த நரசிம்மவர்மன் நாடு கடத்தியிருக்கக்கூடும் என்பது பொருத்தமானது. இதனாலும், இந்த ஆழ்வார்கள் நால்வரும் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி.7 ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்பது மேலும் உறுதியாகிறது. திருமழிசையாழ்வாரைக் காஞ்சியிலிருந்து பல்லவ அரசன் நாடு கடத்தியதற்குக் காரணம் ஒன்று கூறப்படுகிறது. ஆழ்வாரின் சீடராகிய கணிகண்ணரை அரசன் தன்னைப் பாடும்படி கேட்டான் என்றும், அதற்குஅவர் மறுக்கவே அவன் அவரை நகரத்தைவிட்டுப் போகும்படி கட்டளையிட்டான் என்றும், அதனால் கணிகண்ணருடன் திருமழிசையாழ்வாரும்அவருடன் கோயிலிலிருந்த பெருமாளும் நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு அரசன் அவர்களைத் திரும்பி வரும்படி கேட்டுக் கொண்டான் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காரணம் சரியென்று தோன்றவில்லை. வேறு காரணம் இருக்க வேண்டும். அக்காரணம் யாது? கணிகண்ணருடன் திருமழிசை யாழ்வார் காஞ்சீபுரத்தில் இருந்த போது இவர்களால் அந்நகரத்தில் சமயப்பூசல் நேரிட்டிருக்கலாம். அஃதாவது சைவ வைணவர் கலகம் ஏற்பட்டிருக்கலாம். சைவனாகிய நரசிம்மவர்மன் கலகத்தை யடக்க இவர்களைக் காஞ்சியிலிருந்து “நாடு கடத்தி” யிருக்கலாம். திருமழிசை யாழ்வார் பாடல்களில் இதற்கு சான்றுகள் உள்ளன. இவர் பௌத்த சமண சமயங்களைக் கடுமையாகத் தாக்கிப் பாடுகிறார். அதனுடன் சைவர்களையும் கடுமையாகத் தாக்குகிறார். இதனால் சைவர்கள் சினங்கொண்டு எதிர்வாதம் செய்திருக்கக் கூடும். இதனால் சமயப் பூசலும் குழப்பமும் ஏற்பட்டிருக்கும். நகரத்தில் இருக்கும் அரசன், இக்குழப்பத்துக்குக் காரணராயிருந்த திருமழிஐசயாழ்வாரையும் கணிகண்ணரையும் தற்காலிகமாக நாடு கடத்தியிருக்கக் கூடும். கலகம் அடங்கியவுடன் அரசன் நகரத்திற்கு வர அனுமதியளித்திருக்கக் கூடும். திருமழிசையாழ்வாராது பாடல்களில் சைவர்களைத் தாக்கும் செய்யுள்கள் சிலவற்றைக் காட்டுவோம். “அறியயார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய மாயவனை மாலவனைமாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலால் இன்று”1 “ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலையுகத் துஐரத்தான் மெய்த்தவத்தோன் - ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு”2 “குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு.”1 “முண்டன்நீறன் மக்கள் வெப்புமோடி அங்கி ஓடிடக் கண்டுநாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே”2 விரிவஞ்சி நிறுத்துகிறோம் சிவவாக்கியர் என்னும் பெயருடன் பழுத்த சைவ அடியாராக இருந்து சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தவ இவர். பேயாழ்வாரால் வைணவ பக்தராக்கப்பட்ட பிறகு, இவ்வாறெல்லாம் சிவனையும் சைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பாடியது சைவருக்கு ஆத்திரம் மூட்டியிருக்கலாம். இதனால் நகரத்தில் சைவ வைணவ கலகங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கலகத்தை யடக்குவதற்காக, அதற்கு முதுற் காரணராயிருந்த ஆழ்வாரை நாடு கடத்தியிருக்கலாம். இவ்வாறு இவரை நாடு கடத்திய பல்லவ அரசன் மாமல்லனான நரசிம்மவர்மனாகத்தான் இருக்க முடியும். இதனாலும, திருமழிசையாழ்வாரும் மற்ற மூன்று ஆழ்வார்களும் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பது தெரிகிறது. IV இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பொய்கை பூதம் பேய் திருமழிசை என்னும் ஆழ்வார்கள் நால்வரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலே மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவர்கள் என்பது தெரிகிறது. திரு. மு. இராகவையங்கார் அவர்கள் இவ்வாழ்வார்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தவர்கள் என்று கூறுகிறார்கள்: “இதுவரை கூறியவற்றால் முதலாழ்வார் மூவரும திருமழிசையாழ்வாரும் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வாழ்ந்த பேரடியார்கள் என்பது... ஒருபடியாகத் தெரியலாம்.3 என்றும் “முதல் நந்திவர்மன் (கி.பி. 534) சிம்ம விஷ்ணு(கி.பி. 590) போன்ற பரம பாகவதரான அரசர்களதாட்சியில் பூதத்தாழ்வார் போன்றவர் களும், மகேந்திரவர்மனை குணபரனதாட்சியில் திருமழிசையாழ்வாரும் விளங்கியவர்கள் என்ற என் கருத்து எவ்வகையினும் பொருந்து வதாதல் அறிந்து கொள்ளத்தக்கன”1 என்றும் கூறுகிறார். இவர் கூறும் காலம் ஏற்கத்தக்கதல்ல. பூதத்தாழ்வார் தமது பாடலில் மாமல்லையைப் பாடியிருப்பதால், அவர் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பதையும் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற பேயாழ்வார் பொய்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார்களும் இவ்வரசன் காலத்தில் இருநதவர்கள் என்பதையும் மேலே விளக்கினோம்.இராகவையங்கார் அவர்கள் தமதுஆராய்ச்சி முடிவை உறுதியாகக் கூறாமல் வழவழவென்று நெகிழ்த்திக் கொண்டே போகிறார். முதலில் இவர் பொய்கையாழ்வாரைக் களவழி நாற்பது நூலின் தலைவனாகிய செங்கட் சோழன் காலத்தவர் என்று கூறினார். செங்கட் சோழன காலம் உத்தேசம் கி.பி. 350 இல் ஆகும். அவன் மகள் காலத்தில் களபரர் என்னும் கலியரசர்வந்து சேரசோழ பாண்டிய நாடுகளைப் பிடித்துஅரசாண்டனர். அவ்வாறு அரசாண்ட களபர அரசர்களில்அச்சுதவிக்கந்தன் என்பவன் கி.பி. 450 இல் சோழநாட்டை யரசாண்டான். ஆகவே சோழன் செங்கணான் கி.பி. 350 இல் இருந்தவனாதல் வேண்டும். அக்காலத்திலேயே, அய்யங்கார் கருத்துப்படி பொய்கையாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் இருந்தவராதல் வேண்டும். ஆனால், மேலேகாட்டியபடி முதல் நந்திவர்மன் (கி.பி. 534) சிம்மவிஷ்ணு (கி.பி.590) போன்ற பல்லவ அரசர் ஆட்சியில் பூதத்தாழ்வார் முதலியவர்கள் இருந்தார்கள் என்கிறார். இவ்வாறு உறுதியில்லாமலும உறுதியான சான்றுகள் இல்லாமலும கூறுகிற இவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் காலத்தை நீட்டுகிறார். ஏறக்குறைய 250 ஆண்டுகளை இவ்வாழ்வார் களின் ஆயுள் காலமாகக் காட்டுகிறார். ஆழ்வார்கள் யோகிகளாய்ப் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருந் தார்கள் என்பதைச் சமய நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர்கள் நம்பட்டும் ஆனால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவ்வளவு நீண்ட காலத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஒப்புக் கொள்வதும் தவறு, இவ்வாழ்வார்கள் நால்வரும் பொதுவாக நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள் என்றுகொண்டு, உத்தேசம் கி.பி. 600 முதல் 700 வரையில் இருந்தவர்கள் என்று கருதலாம். மாமல்லன் நரசிம்மவர்மன் ஆட்சியும் இக்காலத்தில் அடங்குகிறது. சைவ அடியார்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் காலமும இதில் அடங்குகிறது. பக்தி யியக்கம் சிறந்திருந்த காலமும் இதுவே. திவான்பகதூர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள், வான நூல் முறைப்படி கணித்து ஆழ்வார்கள் காலத்தை முடிவு கூறுகிறார். பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் கி.பி. 719 இல் பிறந்தவர்கள் என்றும் திருமழிசை யாழ்வார் கி.பி. 720 இல் (ஜனவரி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை) பிறந்தவர் என்றும் கூறுகிறார்.* இது ஒரு நூற்றாண்டு பின் தள்ளிப் போகிறது. அன்றியும் ஏனைய சரித்திர ஆதாரங்களுக்கு ஒத்திருககவில்லை. ஆகவே இந்த முடிவையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொய்கை, பூதம், பேய், திருமழிசை ஆழ்வார்கள் மாமல்லன் நரசிம்மவர்மன் (கி.பி. 630 - 668) காலத்தில் இருந்தவர்கள் என்பதும், இதே காலத்தில் சைவ அடியார்களாகிய நாவுக்கரசரும் ஞானசம்பந்தர் முதலியவர்களும் இருந்தார்கள் என்பதும் எமது ஆராய்ச்சியின் முடிவு ஆகும். அடிக்குறிப்புகள் 1. நாலாயிரம், இரண்டாம் திருவந்தாதி 70. 2. Pallava Antiquities Vol. I, G. Jouvean Dubreuil. 3. Mamalla puram at the Sangam age by Pandit M. Raghava Aiyangar, Journal of Oriental Research, Madras. P. 152 -155. Vol. II, 1928. 4. P. 16. History of Sri Vaishnavas by T.A. Gopinatha Rao. 1923. 5. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம். 32 - 33. 6. பக்கம். 62. 7. முதல் திருவந்தாதி: 64 8. முதல் திருவந்தாதி : 88. 9. முதல் திருவந்தாதி: 94. 10. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 28. 11. P. 305 Tamil studies by M. Srinivasa Aiyengar, 1914. 12. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 37. 13. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 41. 14. P. 306. Tamil Studies by M.Srinivasa Aiyengar, 1914. 15. நான்முகன் திருவந்தாதி : 6. 16. மேற்படி : 17. 17. மேற்படி : 9. 18. திருச்சந்த விருத்தம் : எ. 72. 19. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 48. 20. மேற்படி பக்கம். 6.தமிழ் இலக்கியம் நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை ஆராய்வோம். அக்காலத்தில் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடினார்கள். அப் பாடல்கள் இசைத் தமிழ் ஆக இருந்தாலும் அவை இயற்றமிழாகவும் விளங்குகின்றன. நாவுக்கரசர் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்களைப் பாடினார். “இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவுக்கரையன்” என்று சுந்தரமூர்த்திகள் கூறியுள்ளார். ஞானசம் பந்தர் பதினாறாயிரம் பதிகங்களைப் பாடினார். இவர்கள் பாடிய பாடல்கள் பனையேடுகளில் எழுதப்பட்டுச் சிதம்பரத் திருக்கோயிலிலுள்ள ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன. இவை கையாளப் படாமலும் அவ்வப்போது துப்புரவு செய்யப்படாமலும் இருந்த படியால், நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அபய குலசேகர சோழ மகா ராசன் இவ் வறைகளைத் திறந்து பார்த்தபொழுது ஏடுகள் கறையான் அரித்து மண்தின்று கிடந்தன. அழியாமல் எஞ்சிநின்றவை, அப்பர் பாடல்கள் முன்னூற்றுப் பன்னிரண்டு பதிகங்களும், ஞானசம்பந்தர் பாடல்கள் முன்னூற்று எண்பத்துநான்கு பதிகங்களும் ஆகும். எனவே அப்பர் சம்பந்தர் பாக்களில் பெரும்பகுதிகள் இப்போது மறைந்து விட்டன. இவையல்லாமல், பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந் தாதி நூறு வெண்பாக்களும், பூதத்தாழ்வார் இயற்றிய இரண்டாந் திரு வந்தாதி நூறு வெண்பாக்களும், பேயாழ்வார் இயற்றிய மூன்றாந் திரு வந்தாதி நூறு வெண்பாக்களும், திருமழிசையாழ்வார் இயற்றிய நான் முகன் திருவந்தாதி தொண்னூற்றாறு வெண்பாக்களும், திருச்சந்த விருத்தம் நூற்றிருபது விருத்தப் பாக்களும் அக்காலத்தில் இயற்றப் பட்ட தமிழ் இலக்கியங்களாகும். மேலும், கூன்பாண்டியன் என்னும் நெடுமாறன் மீது இயற்றப்பட்ட (இறையனால் அகப்பொருள் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட) பாண்டிக்கோவையும் அக் காலத்தில் தோன்றிய இலக்கியம் ஆகும். தமதுட காலத்தில், செல்வர்கள் புலவர்களை ஆதரித்தார்கள் என்பதை ஞானசம்பந்தர் தமது பாடல்களில் கூறுகிறார்: “கலை நிலவிய புலவர்களிடர் களைதரு கொடை பயில்பவர் மிகு சிலைமலி மதில்புடை தழுவிய பொழில் வளர்தரு மிழலையே.”1 என்றும், “உரவார் கலையின் கவிதைப் புலவர்க் கொருநாளும் கரவா வண்கைக் கற்றவர் சேருங் கலிக்காழி.”2 என்றும், “வையம் விலைமாறிடினும் ஏறும்புகழ் மிக்கு இழிவிலாத வகையார் வெய்ய மொழிதான் புலவருக்கு உரை செய்யாதவர் வேதி குடியே.”3 என்றும் அவர் கூறியிருப்பது காண்க. சிவபெருமான் மதுரையில் தொகை நூலைத் தொகுத்தார் என்னும் கதையை ஞானசம்பந்தர் கூறுகிறார்: “அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்பு நோக்கிற் பெற்றன் றுயர்ந்த பெருமான் பெருமானு மன்றே”4 இப் பாட்டுக்கு உரை கூறுவதுபோல, சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் இவ்வாறு பாடியுள்ளார்: “ஆன அற்றன்றி என்ற அத்திருப்பாட்டிற் கூடல் மாநகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத்தேறா ஈனர்கள் எல்லைக்கிட்ட எடுநீர் எதிர்ந்து செல்லில் ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.”5 நாவுக்கரசர் கூறுவதையும் இதனுடன் ஒத்திட்டுப் பார்ப்போம். “மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல் ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் றோவென் னாருயிரே.”6 “அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக் களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.”7 “விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல் உரைக்கி லரும்பொரு ளுள்ளவா கேட்கில் உலகமுற்றும்.”8 சம்பந்தர், மதுரைத்தொகையாக்கினான் என்று கூறுவதும், அப்பர், விழுமியநூல் ஆய்ந்தான், களவுகண்டனள் என்று கூறுவதும் இறையனார். அகப்பொருள் என்னும் நூலை கருத்தில் கொண்டு கூறியதாகத் தோன்றுகின்றது. சம்பந்தர் தமது காலத்தில் வழங்கிய கிளிவிருத்தம் எலி விருத்தம் என்னும் நூல்களைக் கூறுகிறார். இந் நூல்களைச் சமணர் இயற்றினர். “கூட்டினார் கிளியின் விருத்த முரைத்ததோ ரெலியின்தொழில் பாட்டு மெய்சொலிப் பக்கமே செலும் எக்கர் தங்களை .........”9 அப்பா சுவாமிகள் நரிவிருத்தத்தைக் கூறுகிறார். “அரியயற் கரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தம தாகுவர் நாடரே.”10 பிற்காலத்தில், 11-ஆம் நூற்றாண்டிலே உண்டான வீர சோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலே, அந்நூல் உரையாசிரியர் கிளி விருத்தம், எலிவிருத்தம், நரி விருத்தம் என்னும் நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது: “குண்டலகேசி விருத்தம் கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலியவற்றுள் கலித்துறைகளு முளவாம்.” என்பது. சம்பந்தர் கூறிய கிளிவிருத்தம் எலிவிருத்தம் என்னும் நூல்கள் இப்போது மறைந்துவிட்டன. அப்பர் கூறிய நரிவிருத்தம் என்னும் நூல் இப்போதும் இருக்கிறது. நரிவிருத்தம், சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சீவக சிந்தாமணியை இயற்று வதற்கு முன்னர் நரிவிருத்தத்தைத் திருத்தக்கதேவர் இயற்றித் தமது ஆசிரியரிடம் காட்டினார் என்றும் அதனைக் கண்ட ஆசிரியர், சீவக சிந்தாமணியை இயற்ற அனுமதியளித்தார் என்றும் வரலாறு கூறப் படுகிறது. அப்பர் சுவாமிகள் நரிவிருத்தத்தைக் கூறுகிற படியினாலே, அக்காலத்திலேயே சீவக சிந்தாமணியும் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் சாசனங்களும் செப்பேடு களும் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்களும் செப்பேடுகளும் இதுகாறும் கிடைக்க வில்லை. அவன் காலத்தில் எழுதப்பட்ட ஒரே ஒரு தமிழ்ச்சாசனம் மட்டும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அது, திருக்கழுக்குன்றத்து மலைமேல் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறப்படுகிற குகைக்கோயிலில் எழுதப்பட்டுள்ள சாசனம் ஆகும். அச் சாசனத்தின் அமைப்பைக் கீழே காண்க. அதிலிருந்து அக் காலத்துத் தமிழ் எழுத்து எப்படியிருந்தது என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். “ஸ்ரீரி திருக்கழுக்குன்றத்து பெருமான்னடிகளுக்கு களத்தூர் கோட்டத்து ... ... திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமலைமேல் மூலட்டானத்து பெருமானடிகளுக்கு வழிபாட்டுப்புறமாக வாதாபிகொண்ட நரசிங்கப் போத்தரசர் (i வத்தது” என்பது இதன் வாசகம். இதில் சில எழுத்துக்கள் மறைந்தும், சில எழுத்துக்கள் மழுங்கியும் காணப்படுகின்றன. அடிக்குறிப்புகள் 1. சம்பந்தர் I திருவீழிமிழலை. 3 2. சம்பந்தர் I சீகாழி. 1. 3. சம்பந்தர் III திவேதிகுடி. 6. 4. சம்பந்தர் III திருப்பாசுரம் 11. 5. சம்பந்தர் புராணம் 843. 6. அப்பர் I ஆருயிர்த் திருவிருத்தம் 6. 7. அப்பர் II திருவாவடுதுறை 2. 8. அப்பர் I திருக்கழுமலம் 4. 9. திருவாலவாய்ப் பதிகம் 5. 10. ஆதிபுராணக் குறுந்தொகை 7. 7. வற்கடம் நரசிம்மவர்மன் காலத்தில் பல போர்கள் நடந்தன. சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி, பலமுறை பல்லவநாட்டில் படை யெடுத்து வந்தான். அந்தப் போர்களில் அவனை எதிர்த்து நரசிம்ம வர்மன் போராடி வெற்றிபெற்றான். அல்லாமலும், நரசிம்மவர்மன் புலி கேசியின் தலைநகரமான வாதாபிநகரைத் தாக்குவதற்குச் சேனையைத் திரட்டி அந் நகரத்தைத் தாக்கி வெற்றிபெற்றான். சளுக்கியருடன் நிகழ்ந்த போர்கள் அல்லாமல் சோழர், பாண்டியர், சேரர், களபர ருடனும் போர்செய்து வென்றான் என்று கூறப்படுகிறான். போரினால் நாட்டிற்கு வறுமையும் துன்பமும் உண்டாகும். அடிக்கடி பல்லவ நாட்டில் நடைபெற்ற போரின் காரணமாகப் பொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்க வேண்டும். அதனுடன் மழை பெய்யாமல் வற்கடமும் உண்டாயிற்று. இதனால், நாட்டில் விளைவு குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. நரசிம்மவர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப்பற்றி, இவன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தமது தேவாரங்களில் குறிப்பிடுகிறார்கள். “கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப் பூன்னெடுங் காலம் மழைதான் மறக்கினும் பஞ்சழண்டென் றென்னோடும் சூளறும் அஞ்சல்நெஞ்சே! இமையாத முக்கண் பொன்னெடுங் குன்றம் ஒன்றுண்டு கண்டீர்! இப்புகலிடத்தே” என்றும், “தப்பில் வானம் தரணி கம்பிக்கி லென் ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் செப்பமாஞ் சேறைச் செந்நெறி மேவிய அப்பனாருளர்; அஞ்சுவ தென்னுக்கே!” என்றும் திருநாவுக்கரசர், நாட்டில் அரசர்கள் சீறிப் போர் செய் ததையும் மழைபெய்யாமல் பஞ்சம் உண்டானதையும் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர், “விலங்கலமர் புயல் மறந்து முன்சனிபுக்கு ஊன் சலிக்கும் காலந்தானும் கலங்கலிலா மனப் பெருவண்மை யுடைய மெய்யர் வாழ் கழுமலமே.” என்று, வானத்தில் கோள் மாறியபடியினால் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டதைக் குறிப்பாகக் கூறுகிறார். இவ்விரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணம், இவ் விருவரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த போது வற்கடம் நேரிட்டதென்றும், அதற்காக நாயன்மார்கள் இருவரும் கவலைகொள்ள சிவபெருமான் இவர்களுக்குப் பொற்காசு நாள்தோறும் கொடுத்து வந்தார் என்றும், அக்காசைக் கொண்டு இருவரும் தத்தம் மடங்களில் நாள்தோறும் அடியார்களுக்கு அமுதளித்தார்கள் என்றும், பஞ்சம் நீங்கும் வரையில் சிவபெருமான் இவர்களுக்குப் பொற்காசு அளித்து வந்தார் என்றும் கூறுகிறது: “சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சிலநாட் சென்றதற் பின் மாரிசுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவருகி நிலவும் பலமன் னுயிர்க ளெலாம் பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர் வறுமை பரந்ததால்.” “வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர் வருத்தழற நையும் நாளில் பிள்ளையார் தமக்கும், நாவுக்கரசருக்கும் கையில் மானும் மழுவுமுடன் காணக் கனவில் எழுந்தருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலையுடையார் அருள்செய்வார்.” “கால நிலைமை யால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர் எனினும் ஏல உம்மை வழிபடுவார்க் களிக்க அளிக்கின் றோம்என்று கோலங் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயனார்.” “விண்ணின் றிழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண்டகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறுங்காசு படிவைத் தருள நானிலத்தில் எண்ணில் அடியார் உடன்அமுது செய்தங் கிருந்தார் இருவர்களும்.”1 “மண்ணின்மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யரற்றா மிக்க பெரும் பசிஉலகில் விரவக்கண்டு பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப் பாலறா வாயருடன் அரசும் பார்மேல் நண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங் கவலைவருமோ என்று கருத்திற் கொண்டார்.”2 அப்போது சிவபெருமான் இவர்கள் கனவில் தோன்றி இவ்வாறு உரைத்தாராம்: “உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த துய உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால் நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மைவாட்டம் நீங்குதற்கு உத்தமமோர் காசு நீடும் இலகுமணிப்பீடத்துக் குணக்கு மேற்கும் யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால் அலகில் புகதீர்! தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர்.3 அடுத்தநாள் காலையில் கோவிலுக்குச் சென்றபோது இரண்டு பொற்காசுகள் பலிபீடத்தில் இருப்பதை இருவரும் கண்டார்கள். அக் காசைக்கொண்டு இருவரும் தத்தம் மடத்தில் சிவனடியார் களுக்கு அமுது ஊட்டுவித்தனர். இவ்வாறு பஞ்சம் நீங்கும் வரையில் நாள் தோறும் இவர்களுக்குப் பொற்காசு கிடைத்து வந்தது. இந்த வற்கடமும் பஞ்சமும் கி. பி. 640-க்கு 650-க்கும் இடைப் பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். சம்பந்தரும் அப்பரும் குறிப்பிடுகிற பஞ்சம் இரண்டாம் நரசிம்ம வர்மனான இராஜசிம்மன் காலத்தில் ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்.4 இவர்கள், அப்பரும் சம்பந்தரும் இராஜசிம்ம பல்வன் காலத்தில், கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதுகிறார்கள். இராஜசிம்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தையே இவர்கள் தமது தேவாரத்தில் குறிப்பிடுவதாக இவர்கள் கருதிக்கொண்டு, அப்பரும் சம்பந்தரும் இவ் வரசன் காலத்தில் கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திர வர்மன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அப்பரும் சம்பந்தரும் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதனால் இவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பஞ்சங்கள் பல காலங்களில் ஏற்படக்கூடும். இராஜசிம்மன் காலத்துப் பஞ்சத்தை இவர்கள் தேவாரத் தில் குறிப்பிடுகிறார்கள் என்றும் ஆகவே இவர்கள் இராஜசிம்மன் காலத்தவர் என்றும் முடிவுகட்டுவது, ஏனைய சான்றுகளுக்கு மாறுபட்ட கருத்தாகும். அக்காலத்தில் பஞ்சங்கள் அடிக்கடி ஏற்பட்ட தற்குக் காரணம் சில உண்டு. அடிக்கடி அரசர்கள் போர் செய்தபடி யினாலே, பயிர்த்தொழில் கவனிக்கப்படாமல், குடியானவர் சேனையில் சேர்ந்திருக்கக்கூடும். போரினால், உணவுப் பொருள்கள் மக்களுக்குப் போதிய அளவு கிடைக்காமல் சேனைகளுக்கு அதிகப் பகுதி செலவாயிருக்கும். மழை பெய்யாமலும் விளைச்சல் குன்றி யிருக்கும். பௌத்தமதமும் சமண சமயமும் பெருகியிருந்த படியினாலே, இந்த மதங்களில் துறவிகள் அதிகமாக இருந்தபடியால், உணவுப் பண்டங்களை உண்டாக்கும் தொழிலில் ஆட்கள் குறைந்து உணவுப் பண்டங்கள் உற்பத்தி செய்ய முடியாமலிருக்கலாம். அதுபோல, பிராமணர்கள் உழவுத்தொழில் முதலிய முக்கியத் தொழில்களில் ஈடுபடாமல் இருந்தனர். வேறு நாடுகளிலிருந்து உணவுப் பொருள் களைக் கொண்டுவரப் போக்குவரவு சாதனங்கள் குறைவாகவும் தாமதமாகவும் இருந்தது. மற்றொரு காரணமாகும். போர்களினாலே நிலங்கள் அழிக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். இவ்வாறு பல காரணங்களினாலே அக் காலத்தில் பஞ்சம் உண்டாகியிருக்கக்கூடும். அடிக்குறிப்புகள் 1. திருநாவுக்கரசர்: 255, 256, 258. 2. திருஞானசம்பந்தர் புராணம் - 562. 3. திருஞானசம்: 564. 4. C. Minakshi: Administration and Social life under the Pallavas. PP. 117, 118., K.A.N. Sastri. Pandian Kingdom. மூன்றாம் நந்திவர்மன் குறிப்பு:மூன்றாம் நந்திவர்மன் (1958) என்னும் தலைப்பில் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது. 1. மூன்றாம் நந்திவர்மன் நந்திவர்மன் வரலாறு தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பல்லவ இராச்சியத்தை ஏறக் குறைய இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவன் அரசாண்ட காலம் கி. பி. 847 முதல் 872 வரையில் என்பர். தமிழ்நாட்டுச் சரித்திரத் தில் புகழ்வாய்ந்த இந்த அரசன், பல்லவ அரசர் பரம்பரையில், நந்தி என்னும் பெயர்பெற்ற அரசர்களில் மூன்றாவன். ஆகவே இவனை மூன்றாம் நந்திவர்மன் என்று கூறுவர். பெற்றோர் இவனுடைய தந்தையின் பெயர் தந்திவர்மன் என்பது. நந்தி வர்மன் மனைவி, கடம்ப அரசர் குலத்தில் பிறந்தவளான அக்கள நிம்மதி என்பவள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவன் நந்திவர்மன் மூன்றாவன். இவன் அரசாட்சிக்கு வந்தவுடன் பல பேர்களைச் செய்து வெற்றி பெற்றான். இச்செய்திகளை வேலூர்ப்பாளையத்துச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. “வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை ஆளும் ஆற்றல் படைத்த இந்தப் பல்லவ மாகராசனுக்கு (தந்திவர்மனுக்கு), முப்புரங்களை வென்ற வீரனுக்குக் (சிவபொரு மானுக்கு) கௌரி மனைவியாக வாய்த்ததுபோல, கடம்பகுல சூளாமணியான புகழ் வாய்ந்த அரசனுடைய மகளான அக்களநிம்மதி என்பவள் மனைவியாக வாய்ந்தாள்.” “ஒளியை (சூரியனை) வைகறைப்பொழுது தந்தது போலவும், வியக்கத்தக்க வேலையுடைய குமரக் கடவுளை அம்பிகை தந்தது போலவும், வெற்றிமிக்க சயந்தனைச் சசி தந்ததுபோலவும், புகழ்வாய்ந்த நந்திவர்மனை இவள் (அக்களநிம்மதி) தந்தாள்.” “இவன் (நந்திவர்மன்), தன் தோள்வலியினாலும் ஆற்றலினாலும், தன் வாளினால் கொன்ற யானைகளின் மருப்புக்களிலிருந்து வெளிப்பட்ட முத்துக்கள் நகைப்பது போலக் காணப்பட்ட போர்க்களத்திலே, தன் பகைவர்களைக் கொன்று, மற்றவர்களால் கைப்பற்ற முடியாத அரசாட்சியைக் கைப்பற்றினான்.”1 தந்திவர்மன் அரசாண்ட காலத்தில், வரகுண பாண்டியன், பல்லவ இராச்சியத்தின் தென் பகுதியாகிய சோழ நாட்டின்மேல் படையெடுத்து வந்து, சோழநாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே, பல்லவ இராச்சியத்துக்குட்பட்டிருந்த சோழ நாடு பாண்டியன் வசமாயிற்று. தந்திவர்மன் காலஞ்சென்ற பிறகு, அவன் மகனான நந்திவர்மன் அரசனானான். பல்லவ அரசர் பரம்பரை நந்திவர்மன் I | சிம்ம விஷ்ணு பீம வர்மன் | | மகேந்திர வர்மன் I புத்த வர்மன் | | நரசிம்ம வர்மன் I ஆதித்ய வர்மன் (மாமல்லன்) | | கோவிந்த வர்மன் மகேந்திரவர்மன் II பரமேசுவர வர்மன் I | | இரணிய வர்மன் நரசிம்ம வர்மன் II | (இராஜசிம்மன்) நந்திவர்மன் II | (பல்லவ மல்லன்) மகேந்திர வர்மன் III பரமேசுவர வர்மன் II | தந்தி வர்மன் | நந்தி வர்மன் III (தெள்ளாறெறிந்தவன்) பகைவரும் நண்பரும் மூன்றாம் நந்திவர்மன் அரசாட்சியை ஏற்றுக்கொண்டவுடன் பல பகையரசருடன் போர் செய்ய நேரிட்டது. மேலே கூறியபடி, பல்லவ இராச்சியத்துக்குட்பட்டிருந்த சோழநாட்டை வரகுண பாண்டியன் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக் கொண்டு, தொண்டை நாட்டையும் கைப்பற்றிக்கொள்ள முயற்சி செய்தான். பாண்டியனுக்கு உதவியாக அவன் மகன் ஸ்ரீ மாறனும், சேர அரசனும், நந்தியின் தாயாதி முறையினரான தம்பிமார்களும் இருந்தார்கள். அதே காலத்தில், வடக்கிலிருந்து இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷன் என்பவனும் பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். அவனை முதலாம் அமோகவர்ஷன் என்றும் கூறுவர். அவனுக்கு சர்வன் என்னும்பெயரும் உண்டு. நந்திவர்மன், அமோகவர்ஷனைக் குறுகோடு என்னும் இடத்தில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரிலே நந்திவர்மன் வெற்றி பெற்றான். தோல்வியடைந்த அமோவர்ஷன், நந்திவர் மனுடன் நட்புக்கொண்டான். இந்த நட்பு இருவருக்கும் நன்மையாக முடிந்தது. நந்தியின் நட்பு அமோகவர்ஷனுக்கும், அவனுடைய நட்பு நந்திவர்மனுக்கும் தேவையாக இருந்தன. ஏனென்றால், அமோகவர்ஷனைக் கீழைச்சாளுக்கிய அரசனும் மேலைக்கங்க அரசனும் எதிர்த்துப் போரிட்டார்கள். நந்திவர்மனைப் பாண்டியனும் அவனுடன் சேர்ந்தவர்களும் எதிர்த்துப் போரிட்டார்கள். இவ்வாறு பல்லவனும் இராஷ்டிரகூட அரசனும் நட்புக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நட்பு உறவை உறுதிப்படுத்த அமோகவர்ஷன் தன் மகளான சங்கை என்பவனை நந்திவர்மனுக்கு மணஞ்செய்த கொடுத்தான். மேலும், தன் மகன் தேவன் என்பவனை நந்திவர்மனுக்குத் துணையாகப் பாண்டியனை எதிர்க்க அனுப்பினான். குறுகோட்டை குறுகோடு என்னும் குறுகோட்டையை நந்திவர்மன் வென்றதை, நந்திக் கலம்பகம் என்னும் நூல் கூறுகிறது. தன் யானைப் படையினால் நந்திவர்மன் குறுகோட்டைப் போரை வென்றான். “இனவேழம், கோமறுகிற் சீறிக் குறுகோட்டை வென்றாடும்” “குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டங்குறி குறுக்கோட்டையின்மேல் சென்றஞ்சப் பட்டதெல்லாம்படும் மாற்றலர் திண்பதியே” “குறுகோட்டை குறுகாமன்னர் போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்தவாளி” “கேளார், குஞ்சரங்கள் சாயக் குருகோட்டையைத்தனையும் மஞ்சரங்கள் ஆர்த்தான்”2 என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது. குறுகோடு என்னும் பெயருள்ள ஊர்கள் சில இப்போதும் உள்ளன. அவற்றில் ஒன்று ஆந்திரநாட்டில் பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி தாலுகாவில் இருக்கிறது. இது, இப்போது குறுகோடே என்று பெயர் கூறுப்படுகிறது. இங்குச் சாளுக்கியர் மரபுப்படி அமைக்கப்பட்ட கோயில்களும், குன்றின் மேலே ஒரு கோட்டையும் உள்ளனவாம். மற்றொரு குறுகோடு, மைசூரைச் சேர்ந்த கோலார் மாவட்டத்தில் இருக்கிறது. இதற்கு இப்போது தொட்ட குறுகோடே என்று பெயர் வழங்கப்படுகிறது. (தொட்ட என்றால் பெரிய என்பது பொருள்). இது கங்க அரசர்களின் தலைநகரமாக இருந்ததென்று கருதப்படுகிறது. இந்த இரண்டு குறுகோடுகளில் நந்தி வென்றது எது என்பது தெரியவில்லை. சாளுக்கியருக்குரியதா யிருந்த பல்லாரி மாவட்டத்துக் குறுகோட்டையை வென்றதாகக் கருதலாம். தெள்ளாற்றுப் போர் மேலே கூறியபடி, பல்லவ அரசரின் சோழநாட்டை வரகுண பாண்டியன் கைப்பற்றிக் கொண்டு தொண்டை மண்டலத்துக்கு வந்து பெண்ணாற்றங்கரையின் மேலுள்ள அரைசூரில் பாசறை அமைத்தான்3 நந்திவர்மன், பாண்டியனைத் தெள்ளாறு4 என்னும் ஊரில் எதிர்த்துப் போர் செய்தான். இப்போரில் நந்தி, பாண்டியனையும் அவனுக்குத் துணையாய் வந்த மற்ற அரசர்களையும் முறியடித்து வெற்றி கொண்டான். அன்றியும், தோற்றுப் பின்னடைந்த பாண்டியனைத் துரத்திச் சென்று சோழ நாட்டுப் பழையாறு, நள்ளாறு5 என்னும் ஊர்களிலும் அவர்களுடன் போர் செய்து வென்றதோடு, பாண்டி நாட்டில் வைகைக் கரை வரையில் துரத்திச் சென்றான்6 இந்தப் போர்களில் நந்திவர்ம னுக்கு உதவியாக இருந்தவன், அவன் மாமனாகிய இராஷ்டிரகூட அரசன். இராஷ்டிர கூட அரசன் மகன் தேவன் என்பவன் (நந்தியின் மைத்துனன்), பழையாறையில் போர் வென்ற செய்தியை இராஷ்டிரகூட அரசன் சாசனம் ஒன்று கூறுகிறது.7 நந்திவர்மன் செய்த போர்களிலே தெள்ளாற்றுப் போர் மிக முக்கியமானது. ஆகையினால், அப்போரை வென்ற இவனுக்குத் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. தெள்ளாற்றுப் போர், நந்திவர்மன் ஆட்சியின் 10-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், 10-ஆம் ஆண்டில் எழுதப் பட்ட அவனுடைய தில்லஸ்தானக் கல்வெட்டுச் சாசனம், தெள்ளா றெறிந்த நந்திவர்மன் என்று கூறுகிறது.8 இதற்கு முந்தியுள்ள சாசனங்கள் இப்போரைக் குறிக்கவில்லை. பாண்டியன் உறவு தோல்வியடைந்த பாண்டியன், நந்திவர்மனிடம் நட்புக்கொண்டான். அதன் காரணமாகப் பாண்டியன் மகளை நந்திவர்மன் மணஞ்செய்து கொண்டான் எனத் தெரிகிறது. அதாவது, பாண்டியன் மகள் மாறன் பாவை என்பவளை மணஞ் செய்துகொண்டான். மாறன் பாவை, ஸ்ரீமாறன் என்னும் பாண்யனின் மகள்போலும் வரகுண னுடைய பேர்த்தி. இராஷ்டிரகூட அரசன் மகள் சங்கை என்பவளை நந்திவர்மன் மணம் செய்திருந்ததை முன்னமே கூறினேன். அந்தச் சங்கை என்னும் மனைவிக்குப் பிறந்தவன் நிருபதுங்க வர்மன் என்பவன். போர்க்களங்கள் நந்திவர்மன் தெள்ளாற்றுப் போர் வென்றதை அவனுடைய கலம்பகம் பலமுறை கூறுகிறது. “குரைகழல் விறல்நந்தி, அமரிற்றெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் தரசர்கள் திரள்போகும்” “கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்” “தன்மீது, தெள்ளாற்று நள்ளார் முனையு மன்றேக முனிந்த பிரான்” “தெள்ளாற்றுக்கண் சிவந்தான்” “தெவ்வர் தேயத், தெள்ளாற்றில் செருவென்ற செங்கோல் நந்தி” “தெள்ளாற்றில் வென்ற கோன்” “இகல்வேல் மன்னர், சினக்கரியும் பாய்மாவும் தெள்ளாற்றுச் சிந்துவித்த செங்கோல்நந்தி” “மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவாறி மீண்டான் நந்தி”9 வெள்ளாறு என்னும் இடத்தில் நந்திவர்மன் போர் வென்றதை நந்திக் கலம்பகம் இவ்வாறு கூறுகிறது: “விரவாத மன்னரெல்லாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்ட கோன்” “அரசர் கோமான் அடுபோர் நந்தி மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த செருவேல் உயர்வு” “தோள் துணையாக மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த அண்ணல் நந்தி”10 மேலும், நந்திவர்மன் வெறியலூர்ச், பழையாறை என்னும் ஊர்களில் போர் வென்றதை, “வெறியலூர்ச் செருவென்றேன்” என்றும், “படையாறு சாகப் பழையாறு வென்றான்” என்றும் நந்திக் கலம்பகம் கூறுகிறது11 பாண்டியனுடைய தொண்டி நகரத்தைக் கைப்பற்றி யதையும் கலம்பகம் கூறுகிறது. “தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக வென்ற தலைமான் வீரதுவசன் செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செருவென்ற பாரி” என்று இவன் வென்ற அரசரைக் கூறுகிறது.12 இராச்சியத்தின் பரப்பு தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பகைவரை வென்று தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் அரசாண்டான். இவனுடைய இராச்சி யம், வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவியிருந்தது.வடவேங்கட நாடுடை மன்னர்பிரான் என்றும், வாழ்கின்றதோர் புகழ்நந்தி தன் வேங்கடமலை என்றும், தொண்டையர் கோன் நந்திபல்லவன் என்றும், தொண்டை நாடுடைய கோவே என்றும், காவிரி வளநாடன் என்றும், தொண்டையர் வேந்தன் கோனாடன் என்றும் நந்திக் கலம்பகம் கூறுவதிலிருந்தும் இவனுடைய சாசனங்களைக் கொண்டும் இதனை அறியலாம். நந்திவர்மனைக் “குமரிக் கொண்கன் கங்கை மணாளன்” என்று கலம்பகம் கூறுவது மிகைபடக் கூறல் என்று தோன்றுகிறது. இவ்வரசன் கடற்படையைக் கொண்டிருந்த படியினாலே, குமரித்துறையையும் கங்கையாற்றையும் உடையவன் என்று கூறியதாகக் கொள்ளலாம். ஆனால், இவன் கங்கையாற்றையும் குமரித்துறையையும் வென்று கொண்டதாகச் சான்று இல்லை. சிற்றரசர்கள் நந்திவர்மன் காலத்தில் சோழநாடுபல்லவ அரசுக்குட் பட்டிருந் தது. ஆதிகாலத்தில் சுதந்தரராhக இருந்த சோழ அரசரைக் களபரர் என்பவர் கி. பி. 4-ஆம் நூற்றாண்டிலே வென்று சோழநாட்டை அரசாண்டனர். பின்னர், சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் களபரரை வென்று சோழநாட்டைத் தொண்டை நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஆகவே, சோழ அரசர்கள் முதலில் களபரருக்கும் பின்னர் பல்லவ அரசருக்கும் கீழடங்கி இருந்தார்கள். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும் சோழர்கள் அவனுக்குக் கீழடங்கியே யிருந்தார்கள். சோழ அரச குடும்பத்தார், உறையூர், பழையாறை, குடந்தை, திருவாரூர் முதலிய ஊர்களில் சிற்றரசர்களாக இருந்தார்கள். பல்லவ இராச்சியத்தின் சில பகுதிகளை நந்திவர்மனுக்குக் கீழடங்கிச் சில சிற்றரசர்கள் அரசாண்டார்கள். சிற்றரசரைச் சாமந்த அரசர் என்றும் கூறுவர். நந்திவர்மனுக்குக் கீழடங்கிய சிற்றரசர் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. ஆனால், குமாராங்குசன், சாத்தன் பழியிலி, விக்கிரமாதித்தியன், நரசிங்க முனையரையர் என்னும் நால்வர் பெயர் தெரிகின்றன. குமாராங்குசன் என்னும் சிற்றரசன் சோழர்குலத்தைச் சேர்ந்தவன். சோழ நாட்டின் தென் பகுதியை அரசாண்டான். இவனுடைய தலைநகரம் தஞ்சாவூர். விக்கிரமாதித்தியன் என்பவன் வாண (பாண) அரசர் பரம்பரையைச் சேர்ந்தவன். “பாண வாணாதிராயனான விக்கிரமாதித்தியன்” என்று இவனை இவனுடைய சரசனம் கூறுகிறது. தொண்டமண்டலத் தின் வடபகுதியிலுள்ள குடிமல்லம், திருவல்லம் முதலிய பகுதிகளை இவன் அரசாண்டான். இவன், நந்திவர்மனுடைய 17-ஆம் ஆண்டில், மூன்று கிராமங்களை ஒன்றாக இணைத்து அதற்கு விடேல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதிமங்கலம் என்று பெயர் இட்டான்.13 விடேல் விடுகு என்பது நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர். நந்தியின் சிறப்புப் பெயரையும் தன்னுடைய இயற்பெயரையும் ஒன்று சேர்த்து இவ்வூருக்கு இவ்வாறு பெயரிட்டான். இவனுடைய இன்னொரு சாசனம், சித்தூர் மாவட்டத்து சந்திரகிரி தாலூகா அவிலால கிராமத்து கபிலேசுவரர் கோவிலில் இருக்கிறது. இது, விஜயநந்தி விக்கிரமவர்மனின் 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. இந்தச் சாசனத்தில் இச் சிற்றரசன் விக்கிரமாதித்திய மகாபலி வாணராயர் என்று கூறப்படுகிறான்.14 நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்ட சிற்றரசர். திருநாவலூர் என்பது இவருடைய தலைநகரம். நரசிங்க முனையரையர் சைவ அடியார்களில் ஒருவர். “தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்” என்று இவரைப் பெரியபுராணம் கூறுகிறது.15 இவர், தெம்முனை கள் பல கடந்து (பல போர்களில் பகைவரை வென்று) அரசாண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறபடியினாலே, இவர் தமது மன்னராகிய நந்திவர்மன் செய்த போர்களிலே பங்கு கொண்டார் என்று கருதலாம். இந்த நரசிங்க முனையரையர், நம்பி ஆரூராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வளர்ப்புத் தந்தை என்று பெரியபுராணம் கூறுகிறது.16 தென் ஆர்க்காடு மாவட்டத்து திருக்கேயிலூர் தாலுகா மணலூர் பேட்டைச் சாசனம் ஒன்று, நந்திவர்மனுடைய சாமந்த அரசர்களில் வயிரமேகன் என்பவனைக் கூறுகிறது.17 இவன், திருக்கோயிலூர் வட்டாரத்தை அரசாண்ட சிற்றரசனாகக் காணப்படுகிறான். இவன் தகப்பன் பெயர் வாணகோவடிகள் சித்தவடவன் என்பது. சேனைத் தலைவர் நந்திவர்மனுடைய சேனைத் தலைவர்களில் கோட் புலி என்பவரும் ஒருவர். இவரைக் கோட்புலிநாயனார் என்று பெரிய புராணம் கூறுகிறது. கோட்புலியார், நந்தியின் சேனைத் தலைவர் என்பதற்கு நேரான சான்றுகள் இல்லை என்றாலும், நன்திவர்மன் காலத்தில் அவனுடைய நாட்டில் வாழ்ந்திருந்த இச் சேனைத் தலைவர், நந்திவர்மனுடைய சேனைத் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. “செங்கோல் அரசன் அருளுரிமைச் சேனாபதியாம் கோட்புலியன்”18 என்றும், “நலம்பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண் குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியன் எனும்பெயரார் தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியராய் வேற்றுப் (பார்”19 புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப் என்றும், “வேந்தன் ஏவலின் பகைஞர் வெம்போரில் செல்கின்றார்”20 என்றும், “மன்னவன்தன் தெம்முனையில் வினைவாய்த்து மற்றவன்பால் நன்நிதியின் குவைபெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்”21 என்றும் பெரியபுராணம் கூறுகிறது. “கூடாமன்னரைக் கூட்டத்துவென்ற கொடிறன் கோட்புலி” என்று, இவருடைய நண்பராகிய சுந்தரமூர்த்தி நாயனார் இவரைத் திருநாட்டியத்தான்குடி பதிகத்தில் கூறுகிறார். சோழநாட்டு நாட்டியத்தான்குடி என்னும் ஊரில் இருந்த கோட் புலியாரை, வளவன் (சோழன்) சேனாபதி என்று பெரிய புராணம் கூறுகிறதுபோலும். உண்மையில் பல்வ மன்னனுடைய சேனாபதியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னை? சோழ அரசர்கள் அக் காலத்தில் பல்லவருக்குக் கீழடங்கிக் குறுநில மன்னர்களாக இருந் தார்கள். அவர்கள் வேற்றரசருடன் சுதந்தரராகப் போர் செய்திருக்க முடியாது. பல்லவருக்குக் கீழடங்கிய அவர்கள் பல்லவ அரசர் சார்பாகத்தான் போர் செய்திருக்க முடியும். ஆகவே, கோட்புலியார், நந்திவர்மன் கீழ் சேனாபதியாக இருந்து போர்செய்து வென்றார் என்பதே பொருத்தமாகும். அதே காலத்தில், சோழநாட்டுத் திருமங்கலம் என்னும் ஊரில் இருந்த, ஏயர்கோன் கலிக்காமர் என்பவரைச் சோழருடைய சேனா பதிக்குடியில் பிறந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. சோழ நாட்டுக் கஞ்சாறூரில் இருந்த மானக்கஞ்சாரரும், அரசரிடம் சேனாபதித் தொழில் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவருடைய மகனை மேற்சொன்ன ஏயர்கோன் கலிக்காமர் மணஞ் செய்தார். இவர்கள், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில், அதாவது நந்திவர்மன் காலத்தில் இருந்தவர்கள். ஆனால், இவர்கள் போர்க்களம் சென்று போர் செய்ததாகப் பெரிய புராணம் கூறவில்லை. நந்திவர்மனுடைய முதல் அமைச்சராக இருந்தவன், அக்ரதந்த மரபில் வந்த நம்பன் என்பவன்.22 சிறப்புப் பெயர்கள் தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குச் சில சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை: விடேல் விடுகு, அவனிநாரணன் உக்ரதகோபன், குவலய மார்த்தாண்டன், தேசபண்டாரி, மானோதயன், நயபரன், கழற்சிங்கன், பல்லவர் கோளரி முதலியன. இவ்வரசன் பேரில் இயற்றப்பட்ட நந்திக் கலம்பகம் இப்பெயர்களைக் கூறுகின்றன. பாரத வெண்பா; இவனைப் பண்டிதவத்சலன் என்று கூறுகிறது. விடேல் விடுகு என்னும் பெயர், நந்திவர்மன் முடிசூடியபோது பெற்ற பெயர். இப்பெயர் இவனுடைய ஆணையைக் குறிக்கிறது. இப்பெயரை இவனுடைய பாட்டனான இரண்டாம் நந்திவர்மனும் கொண்டிருந்தான். பாட்டன் கொண்டிருந்த திருவாணைப் பெயராகிய விடேல்விடுகு என்னும் பெயரை இவனும் பெற்றிருந்தான் என்பதை நந்திக் கலம்பகத்தினாலும் அறியலாம். “வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான் விடைமண் பொறியோலை விடேல்விடுகே” என்பது நந்திக் கலம்பகம். இதில், விடைமண் பொறியோலை என்பது, விடை (எருது) முத்திரை பொறிக்கப்பட்ட திருமுக ஓலை என்பதாம். பல்லவ அரசரின் முத்திரை எருது. ஆகவே, அவர் களுடைய திருமுகங்களிலும் செப்பேட்டுச் சாசனங்களிலும் எருது (விடை) முத்திரை பொறிக்கப்படுவது வழக்கம். விடேல் விடுகு என்பது பல்லவ அரசரின் ஆணையைக் குறிப்பது. “வினைவார்கழல் நந்தி விடேல் விடுகின், கணைவார் முரசு” என்றும், “விண்தொடும் கிரியளவும் வீரஞ்செல்லும் விடேல் விடுகு”23 என்றும் கலம்பகம் இப்பெயரைக் கூறுகிறது. விடேல் விடுகு என்னும் சிறப்புப் பெயரையுடைய ஊர்களும் ஏற்படுத்தப்பட்டன. விடேல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதி மங்கலம் என்பதும், விடேல் விடுகு குதிரைச்சேரி24 என்பதும் அவ்வாறு ஏற்பட்ட பெயர்களாம். அவனி நாராயணன் என்னும் பெயரையும் கலம்பகம் கூறுகிறது. “அலைகதிர் வேல்படை அவனி நாராயணன்” என்றும், “அதிர்குல மணிநெடுந்தேர் அவனிநாரணன்”25 என்றும் கூறுவது காண்க. வட ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காவேரிப்பாக்கத்தின் பழைய பெயர் அவனி நாராயண சதுர்வேதிமங்கலம் என்பது. இப்பெயர் நந்திவர்மனுடைய சிறப்புப் பெயரினால் ஏற்பட்டது.26 உக்ரமகோபன், குவலய மார்த்தாண்டன், தேசபண்டாரி, மானோதயன், நயபரன், நயபானு என்னும் பெயர்களையும் நந்திக்கலம்பகம் கூறுகிறது.27 முரசு தெள்ளாறெறிந்த நந்திவர்மனுடைய முரசு, கடுவாய்ப் பறை என்று பெயர் பெற்றிருந்தது. “விண்ட வேந்தர் தந்நாடும் வீரத் திருவும் எங்கோனைக் கண்ட வேந்தர் கொண்மின்கள் என்னும் கன்னிக் கடுவாயே”28 “கடுவாய் இரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட வங்கண் மறுகே”29 “கடுவாய் போல் வளையதிர நின்னோடு மருவார்மன்னர் மனந் துடிக்கும்மே”30 என்பன நந்திக் கலம்பகம். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் கடுவாய்ப்பறையைப் பெற்றிருந்தது போலவே இவனுடைய பாட்னான இரண்டாம் நந்திவர்மனும் கடுவாய்ப் பறையைப் பெற்றிருந்தான். இதனைத் திருமங்கையாழ்வார் கூறுகிறார்: “கறையுடையவாள் மறமன்னர் கெடக் கடல்போல் முழங்கும்குரல் கடுவாய் பறையுடைப் பல்லவர் கோன்” என்பது அப்பாசுர வாசகம்.31 கழற்சிங்கன் தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குக் கழற்சிங்கன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. போரில் வெற்றி பெற்ற வீரர்கள் தமது கால்களில் வீரக்கழல் அணிவது வழக்கம். வீரக்கழல் அணிந்த வீரர்களைப் பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. தெள்ளாறு, நள்ளாறு, பழையாறு, குறுகோடு முதலிய போர்களில் பகைவரை வென்ற நந்திவர்மன் காலில் வீரக்கழல் அணிந்து சிங்கன் (போரில் சிங்கம் போன்றவன்) என்று சிறப்புப் பெயர் படைத்திருந்ததில் வியப் பில்லை. நந்திக்கலம்பகம், குறைகழல் நந்தி என்றும், பொற்கழல் நந்தி என்றும், அறைகழல் முடித்தவன் என்றும் கூறுகிறது.32 மேலும் பல்லவர் கோளரி என்றும் கூறுகிறது.33 (கோளரி = சிங்கம்) கழற்சிங்கன் இவ்வரசன் காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியது தெள்ளாறெறிந்த நந்திவர்மனைத்தான் என்று சரித்திரம் ஆராய்ந்தோர் கூறுகிறார்கள். “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்” என்று நிகழ் காலத்திலே கூறுகிறபடியினாலே, சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் இருந்தான் என்பது தெரிகிறது. காடவர் என்பது பல்லவ அரசர்களின் குலப்பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், “மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையால் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே” என்று கோயில் பதிகத்தில் பாடியதும் இப்பல்லவனையே என்பர். காடவர்கோன் கழற்சிங்கனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மனைச் சிவனடியார் களில் ஒருவனாகச் சுந்தர மூர்த்தி நாயனார் கூறியதுபோலவே, நந்திக்கலம்பகமும் இவனைச் சிறந்த சிவபக்தன் என்று கூறுகிறது. “இலகொளி மூவிலை வேல் இறைவாநின் இயற்கயிலைக் குலகிரியும் அரும றையும் குளிர்விசும்பும் வறிதாக அலைகதிர்வேல் படைநந்தி அவனி நாராயணன் இவ் உலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே” என்றும் “சிவனை முழுதும் மறவாத சிந்தையான்” என்றும் கூறுவது காண்க.34 இவ்வரசனுடைய வேலூர்ப் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனமும் இவனைச் சிவபக்தன் என்று கூறுகிறது. வடமொழியில் கூறப்பட்ட அந்தச் சாசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது:- “எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போகிறவர்களே! அரசர்களுக்குக் கொடிபோன்ற நந்திவர்மன், சிவபெருமானுடைய மலரடிக ளாகிய சூளாமணியால் விளங்கப்பெற்ற தனது தலையை வணங்கித், தாமரைபோன்ற கைகளைக்குவித்து இந்த நல்ல வேலையை (இந்த அறச்செயலை) எப்போதும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறான்.”35 ஆகவே இவன் சிறந்த சிவபக்தன் என்பதில் ஐயமில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் கூறிய காடவர்கோன் கழற்சிங்கரும், பெரியபுராணம் கூறுகிற கழற்சிங்க நாயனாரும், தெள்ளா றெறிந்த நந்திவர்மனும் ஒருவரே என்று சரித்திரம் ஆராய்ந்தோர் கூறுவது சாலவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. “கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்” என்று இவ்வரசனைச் சுந்தரர் கூறியதற்கு ஏற்பவே, நந்திக் கலம்பகமும் இவனை, “அவனை நாராயணன்” என்று கூறுகிறது. மேலும், “வடவரை யளவும் தென்பொதி யளவும் விடையுடன் மங்கல விசையமும் நடப்ப” என்றும், “அலைகதிர்வேல் படை தந்தி அவனிநாராயணன் இவ் உலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே” என்றும் கலம்பகம்36 கூறுவதனால், இவன் பாரத நாட்டிலே அக் காலத்தில் பேர்பெற்ற அரசனாக விளங்கினான் என்பதை அறியலாம். குறுகோடும் வாதாபியும் குறுகோட்டைப் போரைப் பற்றித் தவறான கருத்துக்கள் கூறுப்படுவதை இங்குக் காட்ட விரும்புகிறேன். நந்திக் கலம்பகம் 2, 16, 35, 84-ஆம் செய்யுள்களில் நந்திவர்மன் குறுகோட்டையை வென்றான் என்று கூறுகிறது. கொடும்பாளுர் மூவர்கோயில் சாசனம் கூறுகிற விக்கிரமகேசரியின் பாட்டனான் வாதாபிஜித் என்பவனை, குறு கோட்டைப் போருடன் சில சரித்திரக்காரர்கள் இணைக்கிறார்கள். திரு. சி. மீனாட்சி, தாம் எழுதிய பல்லவர்காலத்து அரசாட்சியும் சமூக வாழ்க்கையும் என்னும் ஆங்கில நூலில் இந்தக் கருத்தை வெளி யிட்டிருக்கிறார்.37 அவர் எழுதுவதன் கருத்து இது : “விக்கிரமகேசரியின் பாட்டன் பாதாபிஜித் (வாதாபியை வென்றவன்) என்று கூறப்படுகிறான். 9-ஆம் நூற்றாண்டின் இடையில் இருந்த அந்தச் சிற்றரசனுடைய சிறப்புப் பெயர், இதுவரையில் அறிஞர்களைத் திகைக்கச் செய்திருந்தது. அவர்களுக்கு இப்போது இந்த யோசனையைக் கூறுகிறேன். அது என்னவென்றால்: மூன்றாம் நந்திவர்மனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசனாகிய பரதுர்க்கமர்த்தனன், நந்திவர்மனின் வடநாட்டுப் படையெடுப்பில் கலந்து கொண்டிருக்கக் கூடும். இராஷ்டிரகூட அரசனுடன் நடந்த அந்தப் போரிலே, இராஷ்டிர கூட அரசனுக்கு உதவியாக, அவனுக்குக் கீழடங்கியிருந்த சளுக்கிய சிற்றரசனும் வந்திருக்கக் கூடும். குறுகோட்டைப் போரிலே, அந்தச் சளுக்கிய சிற்றரசனைத் தென்னாட்டுக் குறுநில மன்னன் (கொடும் பாளூர் பரதுர்க்கமர்த்தனன்) வென்றதினாலோ, இராஷ்டிரகூட அரசனைக் குறுகோட்டைப் போரில் வென்ற பிறகு வாதாபி நகரத்தின் மேல் பல்லவ அரசன் நரேடியாகப் படையெடுத்துச் சென்றபோது, பரதுர்க்கமர்த்தனனும் அவ்வாதாபிப் போரிலே கலந்துகொண்ட படியினாலோ, அவன் வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கக்கூடும். சுழற்சிற்க நாயனாரைப் பற்றிப் பெரியபுராணம், அவ்வரசன் வடநாட்டுப் போரை வென்றதாகக் கூறுவதனாலும் அக்காலத்து இலக்கியங்களையும் சாசனங்களையும் ஆராய்ந்து பார்ப்பதனாலும் இது தெரியும்.” இவ்வாறு கூறிய அவர், மேற்படி அடிக்குறிப்பில் மேலும் கூறுகிறார்: “குறுகோட்டையை வென்றபடியினாலேயே பரதுர்க்க மர்த்தனன் வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளக் காரணமாயிருந்தது” என்று கூறுகிறார். இவர் கூறுவதைப் பகுத்தறிவுள்ளவர் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரையுடைய பரதுர்க்க மர்த்தனன், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் காலத்தில் இருந்தவன். அவனை கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்த தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவனாகக் கூறுவது தவறு. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில், கொடும்பாளூர் சிற்றரசர், பல்லவ அரசருக்கு உதவியாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், முத்தரையர் என்னும் சிற்றரசர் பல்லவர் சார்பில் இருந்ததைச் சாசனங்கள் கூறுகின்றன. மூன்றாம் நந்திவர்மன், குறுகோட்டையை வென்றதாக நந்திக்கலம்பகம் கூறுகிறதே தவிர, வாதாபி நகரத்தை வென்றதாக எங்கும் கூறவில்லை. அவனுடைய சாசனங்களும் கூறவில்லை. நந்திவர்மன் வாதாபியை வென்றிருந்தால் கட்டாயம் அச்செய்தியை நந்திக்கலம்பகம் கூறியிருக்கும். பரதுர்க்கமர்த்தனன் குறுகோட்டையை வென்றிருந்தால், குறுகோட்டைஜித் என்று பெயர் பெறுவானேயல்லாமல், வாதாபிஜித் என்று எப்படிப் பெயர்பெறுவான்? வாதாபிஜித்தாகிய பரதுர்க்கமர்த்தனன், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், வாதாபிப் போரில் கலந்து கொண்டவன். அவனை நந்திவர்மன் காலத்தவனாகக் கூறுவது பொருந்தாது. அதிலும், குறுகோட்டையை வென்றபடியால் வாதாபிஜித் என்று பெயர் பெற்றான் என்பது சிறிதும் பொருந்தாது. இதுபற்றி இந் நூலாசிரியர் எழுதியுள்ள “மாமல்லன் நரசிம்மவர்மன்” என்னும் நூலில் விரிவாகக் காண்க. அடிக்குறிப்புகள் 1. S.I.I. Vol. II. P. 501 - 517. 2. நந்திக் கலம்பகம், 2,16, 35, 84. 3. Ep. col. No. 105 of 1905. 4. தெள்ளாறு, வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது. 5. பழையாறு என்பது பழையாறை. இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்குத் தெற்கே 5 மைலில் இருக்கிறது. நள்ளாறு என்பது மேற்படி மாவட்டத்தில் காரைக்காலுக்கு அருகில் இருக்கிறது. 6. Ind Ant. Vol. XXXVI. P. 172. 7. E.C. X cd. 76. 8. Ep. Col. No. 52 of 1895. 9. நந்திக் கலம்பகம் 28, 29, 33, 38, 49, 52, 53, 71. 10. நந்திக் கலம்பகம் 19, 23, 61. 11. நந்திக் கலம்பகம் 27, 31. 12. நந்திக் கலம்பகம் 81. 13. S.I.I. Vol. III P. 93. 14. Ep. Col. 188 of 1937 - 38. 15. நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 1. 16. தடுத்தாட் கொண்ட புராணம் 5. 17. Ep. Col. 469 of 1937 - 38. 18. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 37. 19. கோட்புலி நாயனார் புராணம் 1. 20. கோட்புலி நாயனார் புராணம் 3. 21. கோட்புலி நாயனர் புராணம் 6. 22. S.I.I. Vol. II P. 509. 23. நந்திக்கலம்பகம் 13, 74. 24. S.I.I. Vol. III. P. 93, 12 of 1895. 25. நந்திக்கலம்பகம் 1, 14, 18, 22, 64, 66. 26. S.I.I. Vol. III. part. I. P. 95. 27. நந்திக் கலம்பகம் 20, 55, 29, 2, 4, 87, 66, 80, 7, 51. 28. நந்திக் கலம்பகம் 5. 29. நந்திக் கலம்பகம் 6. 30. நந்திதக் கலம்பகம் 61. 31. பெரிய திருமொழி 2ஆம் பத்து 9 ஆந் திருமொழி 9. 32. நந்திக் கலம்பகம் 28, 30, 60. 33. நந்திக் கலம்பகம் 59. 34. நந்திக் கலம்பகம் 1. 35. S.I.I. Vol. II. . 501 - 517. 36. நந்திக் கலம்பகம் 1. 37. A.S.L.W.P. by C. Minakshi, P. 302 - 303. 2. வேறு அரசர்கள் வடநாட்டரசர் விஜயாதித்தியன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் நந்திவர்மன் காலத்தில் பல்லவ நாட்டிற்கு வடக்கே இருந்த அரசர்கள் யார் என்பதைப் பார்ப்போம். அக்காலத்தில் கீழைச் சாளுக்கிய இராச்சியத்தை அரசாண்டவன் விஜயாதித்தியன் (இரண்டாவன்). இவன் வெங்கியைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டான். இவன், இராஷ்டிரகூட அரசர்களின் கீழடங்கி இருந்தான். கி. பி. 847-இல் காலமானான். இவனுக்குப் பிறகு இவன் மகன் விஷ்ணுவர்த்தனன் (ஐந்தாவன்) அரசனானான். இவன் நெடுங்காலம் அரசாளவில்லை. கி. பி. 848-இல் காலமானான். பிறகு, இவன் மகன் விஜயாதித்தியன் (மூன்றாமவன்) அரசாட் சியை ஏற்றான். இவனுடைய அமைச்சன் வினயாதி சர்மன் என்பவன். இவனுடைய சேனைத் தலைவர்கள் கடெயராசன் என்பவனும் அவன் மகனான பாண்டரங்கனும் ஆவர். இவர்களைக் கொண்டு இவன் பல போர்களை வென்றான். பல்லவ அரசருக்கு உரியதாக இருந்த நெல்லூரை (நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது) இவன் கைப்பற்றிக் கொண்டான். கங்க அரசனை வென்றான். இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷனுக்குப் பிறகு அரசாண்ட கிருஷ்ணன் (இரண்டாவன்) என்பவனையும் அவனுக்கு உதவியாக இருந்த காலசூரி அரசன் சங்கிலன் (சங்குவன்) என்பவனையும் கிரணபுரத்தில் வென்றான். இராஷ்டிரகூட தேசத்து அசலபுரத்தையும் சக்கர கூட நகரத்தையும் கெளுத்தி எரித்தான். இவ்வாறு இராஷ்டிரகூட அரசனை வென்று அவனுடைய தலைமையிலிருந்து விலகிச் சுதந்தரனாக் அரசாண்டான் விஜயாதித்தியன். விஜயாதித்தியன் கி. பி. 848 முதல் 892 வரையில் நாற்பத்து நான்கு ஆண்டு அரசாண்டான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை : குணகன், பரசக்கர ராமன், ரணரங்க சூத்ரகன், மனுஜப் பிரகாரன், விக்ரம தவலன், நிருபதி மார்த்தாண்டன், விருதங்கபீமன், புவனகந்தர்ப்பன், அரசங்ககேசரி, திபுரமர்த்திய மகேஸ்வரன், திரிபுவனாங்குசன் என்பன. அமோசுவர்ஷன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இராஷ்டிரகூட இராச் சியத்தை அரசாண்டவன் சர்வன் என்பவன். சர்வனுக்கு அமோக வர்ஷன் என்னும் பெயரும் உண்டு. இவன் கி. பி. 814 முதல் 878 வரையில்அரசாண்டான். இவன் அரசாட்சிக்கு வந்தபோது இவனுக்கு வயது பதினான்கு. ஆகவே, இவனுடைய உறவினனும் குஜராத்து தேசத்தில் சாமந்த அரசனாக இருந்தவனும் ஆன கர்க்கன் என்பவன், இவன் வயது அடையும்வரையில் அரசாட்சியை நடத்தினான். இவன், ஏறக்குறைய கி. பி. 830 -இல், வெங்கியிலிருந்து கீழைச்சளுக்கிய இராச்சியத்தை அரசாண்ட விஜயாதித்தியனை (இரண்டாமவன்) வென்று தன் கீழடக்கினான். ஆனால், மேலே கூறியபடி, விஜயாதித் தியன் பேரனான மூன்றாம் விஜயாதித்தியன், தன் சேனைத் தலைவன் பாண்டுரங்கன் உதவியினால் கி. பி. 845-இல் அமோக வர்ஷனை வென்று சுதந்தரம் அடைந்தான். அமோகவர்ஷன் கங்க அரசர்களுடன் விடாமல் போர் செய்தான். இப்போர் ஏறக்குறைய இருபது ஆண்டு நடந்தது. கடைசியில் கி. பி. 860-இல் அமோகவர்ஷன் சேனையைக் கங்க அரசன் முறியடித்துத் துரத்தினான். பிறகு, அமோகவர்ஷன் தன் குமாரத்தி சந்த்ரோபலப்பை (சந்தோபலவ்வை) என்பவளை பூதுகன் என்னும் கங்க அரசனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இத் திருமணத் துக்குப் பிறகு கங்க ராஷ்டிரகூடப் போர் ஓய்ந்தது. அமோகவர்ஷன் மாளவ தேசத்தைக் கைப்பற்ற அடிக்கடி படையெடுத்துச் சென்றான். அந்த மாளவ தேசத்தைக் கைப்பற்ற பிரதிஹார அரசனும் முயற்சி செய்தான். அந்தப் போர்களில் அமோக வர்ஷனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன. கடைசியில் மாளவ தேசத்தைப் பிரதிஹார அரசன் கைப்பற்றிக் கொண்டான். அங்கம், வங்கம், மகதம் என்னும் தேசங்களை அமோகவர்ஷன் கைப்பற்ற முயன்றான். இந்தத் தேசங்கள் பால அரசர்களுக்குரியதாக இருந்தன. ஆகவே, இவன் பால அரசனான தேவபாலனுடன் போர் செய்தான் என்று தெரிகிறது. குஜராத்தை அரசாண்ட சாமந்த அரசனான கர்க்கன்(அமோகவர்ஷனின் உறவினன்) கி. பி. 830-இல் காலமானான். அவனுக்குப் பிறகு, அவன் மகன் துருவன் (முதலாவன்) அரசனானான். துருவனுக்கும் அமோக வர்ஷனுக்கும் எக்காரணத்தினாலோ பகை மூண்டது. 845-இல் துருவன் கொல்லப்பட்டிறந்தான். துருவன் மகன் அகால வர்ஷன், அமோகவர்ஷனுடன் போராடினான். அகால வர்ஷன் இறந்த பிறகு அவன் மகன் துருவன் (இரண்டாவன்) ஆட்சிக்கு வந்தான். அந்தச் சமயத்தில் கூர்ஜ்ஜர பிரதிஹார அரசனாகிய போஜன் என்பவன் இராஷ்டிரகூட தேசத்தின்மேல் படையெடுத்துவர முயற்சி செய்தான். இதையறிந்த துருவனும் அமோகவர்ஷனும் தம்மில் போர் செய்வதை நிறுத்திக் கொண்டு இருவரும் சேர்ந்து பிரதிஹார அரசன் போஜனை எதிர்க்க ஆயத்தமாக இருந்தனர். இவ்வாறு இவர்க ளுடைய போர் கி. பி. 860-இல் சமாதானமாக முடிந்தது. எதிர் பார்த்த படி, போஜன் இவர்கள்மேல் படையெடுத்து வரவில்லை. அமோகவர்ஷன் புலவர்களை ஆதரித்தான். கன்னட மொழிப் புலவர்களான ஆதிபுராணம் இயற்றிய ஜினசேனரும், கணித சாரார்த்தத சங்கிரகம் எழுதிய மகா வீராசாரியாரும், அமோக விருத்தியை இயற்றின சாகடாயனரும் இவ்வரசன் காலத்திலிருந்த புலவர்கள், அமோகவர்ஷன், கன்னடச் செய்யுள் இலக்கண நூலாகிய கவிராஜ மார்க்கம் என்னும் நூலை இயற்றினான். அமோகவர்ஷனுக்கு நிருபதுங்கன், மகாராஜ ஷண்டன், வீரநாராயணன், அதிசயதவ்லன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. நந்திவர்மன் பல்லவ மல்லன் காலத்தில், பல்லவ இராச்சியத்தின் வடக்கிலிருந்த இராஷ்டிரகூட அரசனும் கீழைச் சாளுக்கிய அரசனும் தங்களுக்குள் போர்செய்து கொண்டிருந்தபடியினாலே அவர்களுக் கும் பல்லவனுக்கும் அடிக்கடி போர் நிகழவில்லை. ஆனால், அவன் பேரனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன், இராஷ்டிரகூட அரசனுடன் போர்செய்ய நேரிட்டது. அவன் குறுகோடு என்னும் இடத்தில் செய்த போரை நந்திக் கலம்பகம் கூறுகிறது. குறுகோட்டைப் போரைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். தென்னாட்டரசர் முத்தரையர் பல்லவ இராச்சியத்துக்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் முத்தரையர் என்னும் சிற்றரசர் அரசாண்டனர். முத்தரையரை முத்தரசர் என்றும் கூறுவர். முத்தரையர் ஆண்ட நாடு, இப்போதைய தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் அடங்கி இருந்தது. முத்தரையரின் தலைநகரம் தஞ்சாவூர். முத்தரையரை நாலடியார் என்னும் நூல் குறிப்பிடுகிறது. “பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோ றார்வர் கயவர்”1 என்றும், “நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார்”2 என்றும் கூறுகிறது. முத்தரையரைச் சிலர், பாண்டிய அரசரின் குலத்தவர் என்று கூறுகிறார்கள். இது தவறு என்று தோன்றுகிறது. முத்தரையர் களபர அரசரின் வழியினர் போலத் தோன்றுகின்றனர். முத்தரையர், பல்லவ அரசருக்குக் கீழடங்கியிருந்தனர். பாண்டியர், பல்லவ இராச்சியத்தின் மேல் படையெடுத்து வந்தால், அவரை எதிர்த்துத் தடுப்பதற்காக முத்தரையர் பல்லவருக்கு உதவியாக இருந்தார்கள். முத்தரையர் பல்லவருக்குக் கீழடங்கி யிருந்தபோதிலும், பாண்டியர் அவரை வென்ற காலத்தில், பாண்டியருக்குக் கீழடங்கி யிருந்தார்கள். முத்தரைய அரசர் பரம்பரையில் பேர் பெற்ற சில அரசர் இருந்தார்கள். அவர்களுடைய சாசனங்கள் சில செந்தலை, நாரதத்தமலை, சிவலப்பேரி, திருமய்யம், குன்னாண்டார் கோயில் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இருந்த முத்தரையன் சாத்தன் பழியிலி என்பவன். இவன், விடேல் விடுகு முத்தரையனுடைய மகன். சாத்தன் பழியிலி, நார்த்த மலையில் பாறையைக் குடைந்து ஒரு குகைக் கோயிலை அமைத்தான். இவனுக்குச் சிறிய நங்கை என்னும் பெயருள்ள மகள் ஒருத்தியிருந்தாள். இவள், மீனவன் தமிழதிரையன் என்னும் சிறப்புப் பெயருடைய மல்லன் அநந்தன் என்பவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.3 சாத்தம் பழியிலியின் சாசன எழுத்து. “விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தம் பழியிலி” என்பது இதன் வாசகம். சோழ அரசர் அக்காலத்தில் சோழநாடு பல்லவ அரசுக்குக் கீழ்ப்பட்டிருந்தது. சோழ அரச குடும்பத்தார் உறையூர், திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் பல்லவ அரசருக்குக் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்தார்கள். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த சோழ அரசன் குமாராங்குசன் என்பவன். இவனைப்பற்றி நந்திவர்மனுடைய வேலூர்பாளைய சாசனம் இவ்வாறு கூறுகிறது. “தன்னுடைய வீரத்தினாலே விளங்கப்பட்டவனும் தன்னுடைய ஈகையினாலே கர்ணனுக்குச் சமானமானவனும் நல்ல ஒழுக்கமுடை யவனும் வீரமிக்க சோழ குலத்துக்குச் சூளாமணி போன்றவனுமான் குமாரராங்குசன்” என்றும், “சோழ மகாராசன்” என்றும் கூறுகிறது. பாண்டிய நாடு தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே பாண்டிய நாட்டை வரகுணமகாராசனும் அவனுக்குப் பிறகு அவன் மகனான ஸ்ரீ மாறனும் அரசாண்டார்கள். வரகுணனை வரகுண பாண்டியன் என்றும் வரகுண மகாராசன் என்றும் கூறுவர். இவனே முதலாம் வரகுணபாண்டியன் ஆவான். மாணிக்கவாசக சுவாமிகள் தமது திருக்கோவையாரில் கூறுகிற வைகுண பாண்டியன் இவனே. வரகுண பாண்டியனுக்கு மாறஞ்சடையன் என்னும் பெயரும் உண்டு. இவன் அரசாண்ட காலத்தைத் திட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், கி. பி. 825 முதல் 840 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனம் இவனைக் கூறுகிறது. ஆனால், அவன் செய்த போர்களைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. இவனுக்குப் பிறகு அரசாண்ட இவன் மகன் ஸ்ரீ மாறனுக்கு, ஸ்ரீ வல்லபன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன் என்னும் பெயர்கள் உண்டு. இவன் பல போர்களை வென்றான் என்று சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. பாண்டிய அரசர் பரம்பரை4 1. கடுங்கோன் (பாண்டியாதிராசன்) (கி. பி. 300-க்குப் பிறகு பாண்டி நாட்டை அரசாண்ட களபரரை வென்று மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைநாட்டினான்.) | 2. மாறவர்மன் அவனை சூளாமணி | 3. செழியன் சேந்தன் | 4. அரிகேசரி மாறவர்மன் (அசமசமன், வில்வேலி நெல்வேலிப் போரை வென்றவன்.) | 5. கோச் சடையன் (ரணதீரன்) | 6. தேர்மாறன் (இராஜசிம்மன் I) (அரிகேசரி பராங்குசந் மாரவர்மன் அரிகேசரி5 பல்லவமல்லனை வென்றான்.) (பராங்குசன்) | | 7. ஸ்ரீடிலன் (நெடுஞ்சடையன்) (பராந்தகன்) ஜடிலன் இராஜசிம்மன் II | வரகுண மகாராசன் (மாரஞ் சடையன்) | ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் (ஏகவீரன், பரசக்கர கோலாகலன்) பாண்டியன் வெற்றி பாண்டியன் வரகுண மகாராசன், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்திலும் அவன் மகனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத் திலும் பாண்டி நாட்டை அரசாண்டான். தந்திவர்மன் காலத்தில் வர குணன், பல்லவ இராச்சியத்தின்மேல் படையெடுத்துச் சென்று, பல்லவர்க்குரியதாக இருந்த சோழநாட்டை வென்றான். முதலில் இடவை என்னும் ஊரைக் கைப்பற்றினான்.6 திண்டுக்கல்லுக்கடுத்த இராமநாதபுரத்தில் மாறஞ்சடையன் காலத்துச் சாசனம், பராந்தகப்பள்ளி வேளானான நக்கம்புள்ளன் என்பவன் ஒரு ஏரியைத் தோண்டினான் என்று கூறுகிறது. இந்த நக்கம் புள்ளன், பாண்டியனுடைய சேனைத் தலைவர்களில் ஒருவன் போலும். பாண்டியன் சோழநாட்டில் சென்று இடவை என்னும் ஊரை வென்றபோது, இந்த நக்கம்புள்ளன் பாண்டியன் சார்பாகப் போர் செய்தான். இந்தப் போர் தந்திவர்மன் காலத்தில் நடைபெற்றது.7 திருச்சிராப்பள்ளி, அம்பாசமுத்திரம் என்னும் ஊர்களில் உள்ள வரகுண பாண்டியனுடைய சாசனங்கள், வேம்பில் என்னும் ஊரைப் பிடித்து அங்கிருந்த கோட்டையை அழித்தான் என்று கூறுகின்றன.8 வேம்பில் என்பது வேம்பத்தூர். இப்போது இது திருவிசலூர் என்று சொல்லப்படுகிறது. திருச்சிராப்பள்ளி குகைக்கோயிலில் இவ்வரசனுடைய இன்னொரு சாசனம் காணப்படுகிறது.9 இன்னொரு சாசனம் சோழ தேசத்தில் மண்ணிநாட்டுத் திருவிசலூரில் இருக்கிறது.10 திருச்சி குகைக்கோயில் சாசனங்கள் இப் பாண்டியனைப் பாண்டியாதி ராசன் வரகுணதேவன் என்று கூறுகின்றன. வாகுணபாண்டியன் காலத்து எழுத்து. “ஸ்ரீ வரகுணமஹராஜர்” என்பது இதன் வாசகம். இதில் வட்டெழுத்தும் கிரந்த எழுத்தும் சேர்ந்துள்ளன. வரகுணபாண்டியன், சோழ நாட்டை வென்றான் என்பதைப் பழைய திருவிளையாடற் புராணமும் கூறுகிறது. “மற்று நேரொவ்வா வரகுணன், பெருவலி வளவன் துற்று சேனையும் சுந்தரன் அருளினால் தொலைந்து வெற்றி பூண்டபின் மகிழ்ந்தவன் மேதகு நாடும் கொற்ற மேன்மையும் கொண்டனன் மண்தலம் மதிக்க.”11 இதில், வரகுணபாண்டியன், பெருவலியுடைய சோழனுடைய சேனையைச் சுந்தரேசுவரர் அருளினால் வென்று சோழ நாட்டை அரசாண்டான் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறுகிறார். சோழ அரசர், அக்காலத்தில் குறுநில மன்னராய்ப் பல்லவருக்குக் கீழடங்கி இருந்தனர். ஆகவே சோழர் பெருவலியுடையவர்களாய் இருந்திருக்க முடியாது. பல்லவ சேனையுடன் போர் செய்து, வரகுண பாண்டியன் சோழ நாட்டைக் கைப் பற்றினான் என்பதே சரித்திர உண்மையாகும். சோழநாட்டைப் பிடித்து அரசாண்ட படியால், வரகுணபாண்டியன் சோழனுடன் போர் செய்து வென்றான் என்று திருவிளையாடல் ஆசிரியர் கருதினார் போலும்.12 மணிவாசகர் வரகுண பாண்டியனின் அமைச்சராக இருந்தவர் வாதவூரராகிய மாணிக்கவாசகர். சிவனடியாராகி மாணிக்க வாசகர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்பு, வரதவூரர், வரகுண பாண்டியனிடத்தில் தென்வன்பிரமராயன் என்னும் சிறப்புப் பெயருடன் அமைச்சராக இருந்தார் என்று கருதப்படுகிறார். வரகுணபாண்டியன், சோழ நாடிலும், பல்வர் நாட்டிலும், இலங்கைத் தீவிலும் படையெடுத்துச் சென்று போர் செய்தான். அதற்காக அவனுக்குக் குதிரைப் படை தேவைப்பட்டது. ஆகவே, பாண்டியன் அவரை ஒறுத்தான் என்று வரலாறு கூறுகிறது. மாணிக் வாசகர் கால ஆராய்ச்சியை இந்நூலில் வேறு இடத்தில் காண்க. பாண்டியன் தோல்வி பல்வருக்குரியதாக இருந்த சோழ நாட்டை வரகுண பாண்டியன் வென்று கொண்டது, தந்திவர்மன் காலத்திலாகும். தந்திவர்மன் இறந்த பிறகு, அவன் மகன் நந்திவர்மன் பல்லவ இராச்சியத்திற்கு அரசனானான். நந்திவர்மன் காலத்தில் வரகுணபாண்டியன், சோழ நாட்டைக் கடந்து தொண்டை நாட்டிற்கு வந்து, பெண்ணாற்றங்கரையிலிருக்கும் அரசூரில் பாசறை அமைத்துத் தங்கினான் என்று அம்பாசமுத்திர சாசனம் கூறுகிறது.13 இதனால், இவன் பல்லவ அரசனின் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முயற்சி செய்தான் என்பது தெரிகிறது. வரகுண பாண்டியன் காஞ்சீபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். நந்திவர்மன், வரகுண பாண்டியனைக் காஞ்சீபுரத்துக்குத் தெற்கே 35 மைல் தூரத்தில் உள்ள தெள்ளாறு என்னும் ஊரில் எதிர்த்துப் போர் செய்தான்.14 போர் செய்து வென்றான். போரில் பின்னடைந்து சென்ற பாண்டியனைத் தொடர்ந்து சென்று வெள்ளாறு நள்ளாறு முதலிய இடங்களில் போர் செய்து வென்று, முன்பு பாண்டியன் பிடித்துக்கொண்ட சோழ நாட்டை மீட்டுக் கொண்டான். தெள்ளாற்றுப் போர் மிக முக்கியமானது. அதை வென்ற படியால், நந்திவர்மனுக்குத் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்”என்னும் சிறப்புப் பெயர்ஏற்பட்டது. தெள்ளாற்றுப் போர், நந்திவர்மனுடைய பத்தாவது ஆண்டில், அதாவது கி. பி. 840 நடந்ததென்று கருதப்படுகிறது. நந்திவர்மன் பாண்டியனை வென்ற பிறகு, பாண்டியன் மகளைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. அடிகள் மாறன் பாவை என்பது அவ்வரச குமாரியின் பெயர். ‘பல்லவர் குல திலக நந்திவர்மன் மனைவி அடிகள் மாறன் பாவையார்’ என்று சாசனம் கூறுகிறது.16 இந்த மாறன் பாவையார்’ என்று மாறனுடைய மகளும், வரகுண பாண்டிய னின் பேர்த்தியுமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இலங்கைப் போர் வரகுண பாண்டியன் இலங்கைத் தீவையும் வென்றான். இந்தச் செய்தியை, மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூல வம்சத்தில் 50-வது அத்தியாயத்தில் காணலாம். அது கூறும் செய்தியின் சுருக்கம் இது: இலங்கையைச் சேனன் (முதலாம் சேனன்) என்னும் அரசன் ஆட்சி செய்த காலத்தில், பாண்டிய அரசன் இலங்கைமேல் படையெடுத்துச் சென்று அதன் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பிறகு, மகா தாளித கிராமம் என்னும் ஊரில் பாசறை தங்கினான். இலங்கையரசன், தன் சேனாபதியான பத்தன் என்பவன் தலைமையில் சேனையை அனுப்பிப் போர் செய்தான். பாண்டியன் சிங்களச் சேனையைச் சிதறடித்தான். ஆகவே, இலங்கை மன்னனாகிய சேனன், தலை நகரத்தைவிட்டுத் தெற்கே மலையநாட்டிற்குப் போய்விட்டான். பிறகு, சேனனுடைய தம்பியும் யுவராசனுமான மகிந்தன் என்பவன், பாண்டியனுடன் போர் செய்து இறந்தான். அதன் பிறகு, சேனனுடைய இளைய தம்பியான கஸ்ஸபன் என்பவனும் பாண்டியனுடன் போர் செய்து இறந்தான். கடைசியில், பாண்டியன் இலங்கையின் இராசதானியைக் கைப்பற்றிக் கொண்டு, அரண்மனையிலும் அபயகிரி விகாரை தூபாராம விகாரை முதலிய பௌத்தப் பள்ளிகளிலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். தோல்வியுற்ற இலங்கை மன்னனாகிய சேனன், யானைகளையும் பொன்னையும் பொருளையும் பாண்டியனுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டான். இவற்றைப் பெற்றுக் கொண்டு பாண்டியன் தன் நாடு திரும்பினான். இந்தச் செய்தியைக் கூறுகிற சூல வம்சம் என்னும் நூல், இலங்கையின்மேல் படையெடுத்துச் சென்ற பாண்டியன் பெயரைக் கூறவில்லை. அப்பாண்டியன் வரகுண மகாராசன் என்பதை ஆராய்ச்சியினால் அறிகிறோம். வரகுண பாண்டியன், தானே நேரில் சென்று இலங்கையில் போர் செய்யவில்லை. இளவரசனாகிய தன் மகன் ஸ்ரீ மாறனை அனுப்பி அவன் மூலமாக இலங்கையை வென்றான். இதனால்தான், சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், வரகுண மகாராசன் இலங்கையை வென்றதாகக் கூறாமல், அவன் மகன் ஸ்ரீ மாறன் இலங்கையை வென்றதாகக் கூறுகிறது.16 ஸ்ரீ மாறன் வரகுண பாண்டியனுக்குப் பிறகு அவன் மகனான ஸ்ரீ மாறன் பாண்டிய நாட்டின் அரசனானான். ஸ்ரீ மாறனுக்கு ஏகவீரன், ஸ்ரீ வல்லபன், பரசக்கர கோலாகலன், பல்லவ பாஞ்சனன், அவனிப சேகரன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் அரசாண்ட காலம் ஏறக்குறைய கி.பி. 840 முதல் 861 வரையில் ஆகும். இவன் குன்னூர், சிங்களம் (இலங்கை), விழிஞம் என்னும் ஊர்களில் பகைவர்களுடன் போர் செய்து வென்றான் என்றும், குடமூக்கில் (கும்பகோணத்தில்) வந்து இவனை எதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் முதலியவர்களின் கூட்டுச் சேனையை வென்றான் என்றும் சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.17 இப் போர்களில், சிங்களப் போரை, இவன் இளவரசனாக இருந்தபோது செய்தான் என்று முன்னமே கூறினோம். வரகுண பாண்டியனுடைய மகன் அரசாண்ட காலத்தில், சோழ அரசன் கருநாடகருடன் சேர்ந்து பாண்டியனுடன் போர் செய்ய வந்தான் என்றும், சொக்கப் பெருமான் அட்டாலைச் சேவகனாக வந்து பாண்டியன் சேனையுடன் சேர்ந்து, விடைக் குறியம்பு எய்து பகைவரை வென்று பாண்டியனுக்கு வெற்றியுண்டாக்கினார் என்றும் பழைய திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “வரகுண மன்னவற்கு மனமகிழ் மைந்தன் வென்றிப் பொருவிலா அறிவினானோர் பூழியன் மதுரை தன்னுள்” என்றும், “வரகுணன் மைந்தன் என்று வந்தித்தான் அன்றுமுன்னாப் பரவு பாண்டியர்கள் எல்லாம் வந்தித்தார் பகைகள்தீர” என்றும் மேற்படி புராணம் கூறுவது காண்க.18 இதில், வரகுணன் மைந்தன் என்று கூறப்படுபவன் ஸ்ரீ மாறன் ஆவான். இவன்மேல் படையெடுத்துச் சென்ற சோழன், பல்லவ அரசன் சார்பாகச் சென்றிருக்க வேண்டும்; அக்காலத்தில் சோழன் பல்லவ அரசருக்குக் கீழடங்கியிருந்தவனாகலின். (ஸ்ரீ மாறன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்துக்குப் பிறகு, அவன் மகன் நிருபதுங்கவர்மன் காலத்திலும் இருந்தான். இவனுடைய ஆட்சியின் பிற்காலத்தில், மாயா பாண்டியன் என்பவன் இவனுடன் அரசு உரிமைக்காகக் கலகஞ் செய்தான். மாயா பாண்டியனுக்கு இலங்கை யரசன் சேனன் என்பவன் உதவி செய்தான். பல்வ மன்னன் நிருபதுங்க வர்மனும் மாயா பாண்டியனுக்கு மறைமுகமாக உதவி செய்தான் என்று தெரிகிறது. இந்தப் போரில் ஸ்ரீ மாறன் புண்பட்டுத் தோற்றுப் போனான். இப்போர், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் நிகழவில்லை. அவன் மகனான நிருபதுங்க வர்மன் காலத்தில் நிகழ்ந்தது. ஆகவே, அப்போரைப் பற்றி இங்கு நாம் கருதவேண்டியதில்லை.) சின்னமனூர் செப்பேடு வரகுண மகாராசனைப் பற்றியும் அவன் மகனான ஸ்ரீ மாறனைப் பற்றியும் சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. வடமொழிப் பகுதி : “....... அவன் மகன், புகழ் பெற்றவனும் ஒழுக்கத்தில் சிறந்தவனுமான இராஜசிம்மன். அவன் மகன் பெரிய வீரனான வரகுணன். அவன் மகன், கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரும் புகழுடையவனும் திருமகள் மணாளனுமான ( ஸ்ரீ வல்லபனான) ஸ்ரீ மாறன். இவன் இணையற்ற வீரன்; குடிமக்களால் நேசிக்கப்பட்டவன். மாயா பாண்டியனையும் சேரனையும் சிம்மளனையும் பல்லவனையும் வல்லபனையும் வென்று ஒற்றைக் குடைக்கீழ் உலகத்தை அரசாண்டான்.” தமிழ்ப் பகுதி : “கொற்றவர்கள்தொழு கழற்கால் கோவரகுண மஹாராஜனும் ஆங்கவற் காத்மஜனாகி19 அவனிதலம் பொறைதாங்கித் தேங்கமழ் பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகை சூடிக்கோடாத செங்கோல் நடாவிக் கொங்கலர் பொழிற் குடமூக்கிற் போர் குறித்து வந்தெதிர்ந்த கங்க பல்லவ சோளகாலிங்க மாகாதாதிகள் குருதிப் பெரும்புனல் குளிப்பக் கூர்வெங்கணை தொடை ஞெகிழ்த்துப் பகுதி ஆற்றலொடு விளங்கின பரசக்கிர கோலாகலனும்.”20 தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே பாண்டி நாட்டை வரகுண மகாராசன் என்னும் மாறஞ்சடையனும் அவனுக்குப் பிறகு அவன் மகன் பரசக்கர கோலாகலன் ஆகிய ஸ்ரீ மாறனும் அரசாண்டார்கள். நெடுமாறன் யார்? இக்காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவதிககைத் திருவீரட்டானப் பதிகத்தில் நெடுமாறன் என்று குறிப்பிடுவது வரகுண மகாராசனைத்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் வரகுண மகாராசனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு. இந்த மாறனைத்தான் நெடுமாறன் என்று சுந்தரர் கூறுகிறார் போலும். “பொன்னானை மயிலூர்தி முருகவேள்தாதை பொடியோடுந் திருமேனி நெடுமாறன் முடிமேற் றென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் சேராத சிந்தையான் செக்கர் வானந்தி.21” என்று அவர் கூறுவது காண்க. வரகுண பாண்டியனாகிய நெடுமாறன் சோழ நாட்டையும் இலங்கைத் தீவையும் வென்று அரசாண்டபடியாலும் சிறந்த சிவபக்தன் ஆனமையினாலும் அவனைச் சுந்தரர் “பொடியாடுந் திருமேனி நெடுமாறன்” என்று கூறினார் என்று கருதலாம். சேரநாடு சேரமான் பெருமாள் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சேரநாட்டையாண்ட அரசர் யார் என்பது சாசனங்கள் மூலமாகத் தெரியவில்லை. ஆனால், இக்காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனாருடன் சேரமான் பெருமாள் என்னும் சேர அரசன் நண்பராக இருந்தார் என்று தெரிகிறபடியால், அந்தச் சேரமான் பெருமாள் சேரநாட்டையரசாண்டார் என்று கொள்ளலாம். இந்தச் சேரமான் பெருமாளுக்குப் பெருமாக்கோதையார் என்றும் கழறிற்றறிவார் என்றும் பெயர்கள் உண்டு.22 திருவஞ்சைக் களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகரமாகக்கொண்டு இவர் அரசாண்டான்.23 சேர அரசன் குடியில் பிறந்த இவர் திருவஞ்சைக் களத்தில் இருந்த சிவன் கோயிலில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தார். மிகுந்த சிவபக்தர், சைவ நாயன்மார் அறுபத்துமூவரில் இருவரும் ஒருவர். சேரநாட்டை யாண்ட செங்கோற் பொறையன் என்னும் சேர அரசன், அரசாட்சியைத் துறந்து சென்ற பிறகு, அமைச்சர்கள், அரசாட்சிக்கு உரியவராகிய பெருமாக் கோதையாரையே அரசராகத் தேர்ந்தெடுத்தனர்.24 அக்காலத்தில் சேரநாடு தமிழ்நாடாகவே இருந்தது. மலையாள மொழி அக்காலத்தில் ஏற்படவில்லை. ஆனால் மலையாள நாடு என்று மட்டும் பெயர் பெற்றிருந்தது. சேரமான் பெருமாள் (பெருமாக் கோதையார்) சிவபக்தர் மட்டுமல்லர்; சிறந்த புலவரும் ஆவர். இவர் இயற்றிய பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) என்னும் நூல்கள் சைவ சமயத் தாருக்குரிய பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. பாணபத்திரன் என்னும் இசைப் புலவனுக்குப் பொருள் கொடுத்தனுப்பும்படி சொக்கப் பெருமானாகிய ஆலவாய்க் கடவுள், இந்தச் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பினார் என்றும் அதன்படியே இச்சேர அரசன் பாணபத்திரருக்குப் பெரும் பொருளை நன்கொடையாகக் கொடுத்தனுப்பினார் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. இவ்வரலாறு பெரும்பற்ற நம்பி திருவிளை யாடற் புராணத்திலும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திலும்25 பெரிய புராணத்திலும்26 கூறப்படுகிறது. பாணபத்திரல், வரகுணபாண்டியன் அவையில் இசைப்புலவராக இருந்தார் என்று பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.27 இதனால், வரகுண மகாராசன் என்னும் பாண்டிய அரசன் காலத்திலே சேரமான் பெருமாள் இருந்தார் என்பது தெரிகிறது. வரகுணபாண்டியன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவன் என்று முன்னமே அறிந்தோம். சுந்தரும் சேரமானும் சிவபக்தராகிய சேரமான் பெருமாள், சைவ சமயாசாரியாராகிய சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புடையவராக இருந்தார். இருவரும் சேர்ந்து தல யாத்திரை செய்தார்கள். இவர்கள் பாண்டிய நாட்டில் தல யாத்திரை செய்தபோது, பாண்டிய அரசனுடனும் அவன் மகளை மணஞ்செய்துகொண்டு அங்குத் தங்கியிருந்த சோழ அரசனுடனும் சில நாட்கள் தங்கியிருந்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது.28 “தென்னவப்ரகோன் மகளாரைத் திருவேட்டு முன்ரே தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார் அன்னவர்கள் உடன்கூட அணையஅவ ருங்கூடி மன்னுதிரு வாலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்” “செம்பியனா ருடன்செழியர் தாம்பணிந்து சேரருடன் நம்பியுமுன் புறத்தணைய நண்ணியபே ருவகையால் உம்பர்பிரான் கோயிலினின் றுடன்கொடுபோய் இருவர்க்கும் பைம்பொன் மணிமாளிகையில் குறைவறுத்தார் பஞ்சவனார்” சுந்தரரையும் சேரமானையும் வரவேற்ற பாண்டியன், வரகுண பாண்டியன் மகனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனாக இருத்தல் வேண்டும். சேரமான், சுந்தரருடன் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்த பிறகு சுந்தரரைத் தமது ஊருக்கு அழைத்துச் சென்றார். சிலநாள் கழித்து இருவரும் திருக்கயிலாயம் சென்றார்கள் என்று வரலாறு கூறுகிறது. இலங்கைத் தீவு சிலாமேகன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சேனன் என்னும் பெயருள்ள இரண்டு அரசர்கள் இலங்கைத் தீவை அரசாண்டார்கள். முதலாம் சேனன் ஏறக்குறைய கி. பி. 821 முதல் 841 வரையிலும், இரண்டாம் சேனன் கி. பி. 841 முதல் 876 வரையிலும் அரசாண்டார்கள். இவர்களுடைய வரலாறு மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சத்தில் 50, 51-வது அத்தியாயங்களில் கூறப்படுகிறது. அதன் சுருக்கம் இது: ஒன்பதாம் அக்கபோதிக்குப் பிறகு, முதலாம் சேனன் இலங்கைக்கு அரசனானான். இவனுக்குச் சிலாமேகன் என்னும் பெயரும் உண்டு. இவனுக்குத் தலைநகரம் புலத்தி நகரம். இந்தச் சனேனுக்கு உறவினனும் அரசுரிமையுடையவனுமான மகிந்தன் என்பவன் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்தான். (தமிழ்நாட்டில் எங்கே யாரிடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தான் என்பது தெரிய வில்லை.) சேனன், தன்னுடைய ஆட்களை அனுப்பி மகிந்தனைக் கொன்றுபோட்டு, தன் அரசாட்சிக்குப் போட்டி இல்லதபடி செய்து கொண்டான் சேனனுக்குத் தம்பியர் மூவர் இருந்தனர். அவர்கள் பெயர் மகிந்தன், கஸ்ஸபன், உதயன் என்பன. சேனன், மூத்த தம்பியாகிய மகிந்தனை யுவராசனாக்கினான். பாண்டியன் போர் இவன் காலத்தில் பாண்டிய நாடிலிருந்து பாண்டியன் படை யெடுத்து வந்து இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றிக்கொண்டு, மகாதாளிதகாமம் என்னும் ஊரில் சேனையுடன் தங்கியிருந்தான். அப்போது, இலங்கையிலே அநுராதபுரம் முதலிய ஊர்களில் தங்கி வாழ்ந்திருந்த தமிழர்கள், பாண்டியனுடன் சேர்ந்து கொண்டார்கள். சேனன், பாண்டியனை எதிர்க்கும்படி தனது சேனாபதியான பத்தன் என்பவன் தலைமையில் சிங்களச் சேனையை அனுப்பினான். பாண்டியன் சேனையுடன் சிங்களச் சேனை போர் செய்து சிதறி ஓடிற்று. தன்னுடைய சேனை தோற்றுப் போனதைக் கண்ட சேனன், பொன்னை யும் பொருளையும் எடுத்துக்கொண்டு புலத்தி நகரத்தை விட்டுத் தெற்கே மலைய நாட்டிற்குப் போய்விட்டான். யுவராசனாகிய மகிந்தன், சேனையுடன் வந்து பாண்டியனுடன் போர் செய்தான். போரில், பாண்டியனை வெல்லமுடியாமல் தற்கொலை செய்துகொண்டிருந்தான். பிறகு, அவன் தம்பியாகிய கஸ்ஸபன் போருக்கு வந்து போரிட்டுத் தோல்வியடைந்து கொண்டிவாதம் என்னும் ஊருக்குத் தப்பி ஓடினான். ஆனால், பாண்டிய வீரர்கள் அவனைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டார்கள். பாண்டியன் இலங்கையின் தலைநகரமாகிய புலத்தில் நகரத்தைப் பிடித்துக் கொண்டான். தலைநகரத்தைக் கைப்பற்றிய பாண்டியன், அரண்மனையிலும் நகரத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். அபயகிரி விகாரையைச் சேர்ந்த அரதனப்பாசாதத்துப் பொன் புத்த உருவத்தையும், வேறு விகாரங்களிலிருந்த பொன் உருவச் சிலை களையும் கவர்ந்து கொண்டான். மேலும், தூபாராம விகாரையின் மேற் கூரையில் வேயப்பட்டிருந்த பொற்றகடுகளையும் வெள்ளித் தகடு களையும் கவர்ந்து கொண்டான். இலங்கை மன்னனுடைய வீரமுரசை யும் இரத்தினக் கிண்ணம் முதலியவற்றையும் கைப்பற்றினான். மலைய நாட்டிலே ஓடி ஒளிந்த சேனன், பாண்டியனுடன் சமா தானம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டான். யானைகளையும் பொன்னையும் பொருளையும் பாண்டியனுக்குக் கொடுத்து அவனுடன் சமாதானம் செய்துகொண்டான். ஆகவே, பாண்டியன் இலங்கையை விட்டுத் தன் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டான். சேனன், தலைநகரமாகிய புலத்தி நகரத்துக்குத் திரும்பி வந்து அரசாண்டான். தன் கடைசி தம்பியாகிய உதயனை யுவராசனாக்கினான். சிறிது காலத்தில் உதயன் இறந்து விடவே, தன் மூத்த தம்பியாகிய கஸ்ஸபன் மகன் சேனன் என்பவனை யுவராசனாக் கினான். இவனுடைய அமைச்சர்கள் உத்தரன், வஜிரன், ரக்கஸன் என்பவர். சேனன் இருபது ஆண்டு அரசாண்டான். (சேனன் மேல் போர் செய்த பாண்டியன் பெயரைச் சூலவம்சம் என்னும் நூல் கூறவில்லை. பாண்டியன் வரகுண மகாராசன் இப் போரை நடத்தியிருக்க வேண்டும் வரகுண மகாராசன், நேரில் இலங்கைப் போரைநடத்தவில்லை. அவனுடைய மகனும் இளவரசனுமான ஸ்ரீ மாறனுடைய தலைமையில் இலங்கைப் போர் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.) ஸ்ரீ சங்க போதி சேனன் இறந்த பிறகு, யுவராசனாக இருந்த சேனன் அரசனா னான். இந்தச் சேனன், முதலாம் சேனனுடைய மூத்த தம்பியாகிய கஸ்ஸபனின் மகன். இந்தச் சேனனை இரண்டாம் சேனன் என்பர். இவனுக்கு ஸ்ரீ சங்க போதி என்னும் பெயரும் உண்டு. இவன் கி. பி. 841 முதல் 876 வரையில் அரசாண்டான் என்று முன்னமே கூறினோம். இவனுடைய சேனாபதி குட்கன் என்பவன். இவன் அரசாட்சிக்கு வந்தபோது, முன்பு பாண்டியன் இலங்கையிலிருந்து கொண்டுபோன் பொருள்களை எல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும் என்று எண்ணினான். அதற்காக அவன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வரச் சமயம் பார்த்திருந்தான். அப்போது, அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. பாண்டிய நாட்டிலே பாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், (மாயா பாண்டியன் என்பவன்) பாண்டிய நாட்டின் அரசுரிமைக்காகக் கலகம் செய்தான்.29 பாண்டியன் அவனை விரட்டித் துரத்திவிட்டான். துரத்தப்பட்டவன் இலங்கைக்கு வந்து சேனனுடைய உதவியை வேண்டினான். பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்துச் செல்ல எண்ணியிருந்த சேனனுக்கு, இது ஓர் நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆகவே, சேனன், தன் சேனாபதியான குட்டகன் தலைமையில் பெருஞ் சேனையைப் பாண்டிய நாடிற்கு அனுப்பினான். சிங்களச் சேனாபதி குட்டகன், சேனையுடன் மதுரைக்குச் சென்று பாண்டியனுடன் போர் செய்து வென்று, முன்பு இலங்கையி லிருந்து பாண்டியன் கொண்டுபோன பொருள்களையெல்லாம் மீட்டுக் கொண்டு இலங்கைக்குச் சென்றான். செல்வதற்கு முன்பு, இலங்கை மன்னனிடம் அடைக்கலம் புகுந்த பாண்டியன் உறவினனுக்கு (மாயா பாண்டியனுக்கு) முடிசூட்டிப் பட்டாபிஷேகம் செய்து அவனை அரசனாக்கினான்.30 இந்தச் சேனன் பல தான தருமங்களைச் செய்தான். மாவலி கங்கையாற்றில் மணிமேகலை என்னும் அணையைக் கட்டினான். மணிஹீர ஏரிக்குக் கலிங்கு கட்டினான். கட்டந்த நகரத்துக்கருகிலிருந்த பழைய ஏரியைப் புதுப்பித்தான். சேதிமலையின் மேல்நோயாளி களுக்கு மருத்துவச் சாலை கட்டினான். இவன் 35 ஆண்டு அரசாண்டான். (இவன், தன்னிடம் அடைக்கலம் புகுந்த மாயா பாண்டியனுக்கு முடிசூட்டினான் என்றும் அவனுக்கு எதிராக இருந்த பாண்டியனைப் போரில் கொன்றான் என்றும் சூலவம்சம் கூறுகிறது. ஆனால், சின்ன மனூர் செப்பேட்டுச் சாசனம், பாண்டியன் ஸ்ரீ மாறன் (வரகுண பாண்டியன் மகன்) மாயா பாண்டியனை வென்றதாகக் கூறுகிறது. “அவன் (வரகுணன்) மகன், கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரும் புகழுடையவனாகிய ஸ்ரீ வல்லபனான ஸ்ரீ மாறன். இவன் இணையற்ற வீரன், குடிமக்களால் நேசிக்கப் பட்டவன், மாயா பாண்டியனையும் கேரளனையும் சிம்மளனையும் பல்லவனையும் வல்லபனையும் வென்று ஒற்றைக் குடைக்கீழ் உலகத்தை அரசாண்டான்” என்று சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனத்தின் வடமொழிப் பகுதி கூறுகிறது. ஆகவே, இலங்கை நூலாகிய சூலவம்சம், பாண்டியனைச் சிங்கள சேனாபதி கொன்று விட்டான் என்று கூறுவது நம்பத்தகுந்ததல்ல.) அடிக்குறிப்புகள் 1. தாளாண்மை 10. 2. மானம் 6. 3. Narathamalai Inscriptian P. 27. The Journal of S.I. Association Vol. II. (1911 - 12). 4. M. Epi. Rep. G.O. No. 574, 17th July 1908, Page 62-68. 5. M. Epi. Rep. G.O. No. 503, 27th June 1907, Page 63 - 65. 6. Epi. Col. 690 of 1905. 7. Epi. Col. 690 of 1905. 8. Epi. Col. 413 of 1904, 105 of 1905. 9. Epi. Col. 1914 of 1904, EP. Rep. P. 18. 10. Epi. Col. 17 of 1907. 11. திருவாலவாயுடையார் திருவிளையாடல் 16. 12. திருவிளையாடல் புராணஆசிரியர் காலத்திலும் பல்லவ அரசர் வரலாறு மறைந்திருந்தது போலும் மறைந்து கிடந்த பல்லவர் வரலாறு, சுமார் முபபது ஆண்டுகளாகத்தான் சாசன ஆராய்ச்சி கொண்டு எழுதப்படுகிறது. அதற்கு முன்பு பல்லவர் வரலாறும், மற்ற அரசர் வரலாறும் பெரிதும் மறைந்து கிடைந்தன. 13. Epi. Col. 105 of 1905. 14. தெள்ளாறு, வட ஆர்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் இருக்கிறது. 15. Epi. Col. 303 of 1901. 16. ஸ்ரீமாறன் அரசாட்சிக் காலத்தில், இலங்கைமேல் படையெடுத்து இலங்கையை வென்றதாகச் சிலர் கருதுகிறார்கள். இது ஆராய்ச்சிக்குப் பொருந்தவில்லை. ஸ்ரீ மாறன் இளவரசனாக இருந்த காலத்தில், அவனுடைய தந்தையாகிய வரகுண பாண்டியன் ஆட்சியில் இலங்கைப் போர் நிகழ்ந்தது என்பதுதான் ஆராய்ச்சிக்கு பொருந்துகிறது. 17. No. 206, 5.I.I. Vol. III. 18. விடைக்குறி யம்பெய்த திருவிளையாடல் 1. 23. 19. ஆத்மஜனாகி - மகனாகி. 20. No. 206, S.I.I. Vol. III. 21. திருவதிகைத் திருவீரட்டானம் 8. 22. சேரமான் பெருமாள் நாயனார் புராணம் - 6, 14, 16. 23. சேரமான் பெருமாள் நாயனார் புராணம் 1. 24. சேரமான் பெருமாள் நாயனார் 5, 7, 10, 11, 16. 25. திருமுகங் கொடுத்த படலம். 26. கழறிற்றறிவர் புராணம், 26. முதல் 39 ஆம் செய்யுள் வரையில். 27. விறகு விற்ற படலம் - 2. 28. கழறிற்றறிவார் புராணம் - 92, 95. 29. வரகுண பாண்டியன் இறந்தபின் அவன் மகன் ஸ்ரீ மாறன் அரசாட்சி செய்த காலத்தில் இக்கலகம் ஏற்பட்டது. 30. சேனனுடைய பாண்டி நாட்டுப் படையெடுப்புப் பற்றி இவன் காலத்துச் சாசனங்களும கூறுகின்றன. இந்தச் சாசனங்களில், சேனன், ஸ்ரீ சங்கபோ என்று கூறப்படுகிறான். ஸ்ரீ சங்கபோ என்பது ஸ்ரீ சங்கபோதி ஆகும். E.Z. Vol. II 39. 44 FF. E.Z. Vol. I. P. 164, 176. 3. சமயநிலை 1. பௌத்த சமண சமயங்கள் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சாக்கிய மதம் என்னும் பௌத்த மதமும் சமண சமயம் எனப்படும் ஜைன சமயமும் தமிழ் நாட்டிலே இருந்தன. ஆனால், அச்சமயங்கள் சிறப்புப் பெற்றிருக்க வில்லை. சைவ வைணவ மதங்களினால் தாக்குண் வலிவிழந்து வீழ்ச்சி யடையும் நிலையில் இருந்தன. பழைய பெருமை இழந்து வலிமை குன்றியிருந்தபோதிலும் பௌத்த சமண சமயத்தவரும் அவருடைய பௌத்த சமணக் கோயில்களும் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்தன. நந்திவர்மனுடைய 19-ஆம் ஆண்டில், தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பெருமாண்டூரில் உள்ள ரிஷபநாதர் கோயில் என்னும் ஜைனக் கோயிலுக்குத் தானம் செய்ததை ஒரு சாசனம் கூறுகிறது.1 அக்காலத்தில் இருந்த சைவ சமயாசாரியாராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகள், தமது தேவாரப் பதிகங்களின் இடையிடையே பௌத்த சமண சமயங்களைக் குறிப்பிடுகிறார். அவை : “குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராகிலும் கொள்ளக் கண்டாலுங் கருதேன் எருதேறுங் கண்ணா நின்னல தறியேன்”2 “வெற்றரைக்கற் றமணும் விரையாது விண்டால முணுந் துற்றரைத் துற்றறுப்பான் துன்னவாடைத் தொழிலுடையீர்”3 “குண்டாடுஞ் சமணரும் சாக்கியரும் புறங்கூறுங் கொகுடிக் கோயில்”4 “நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் மென்றிவர் குமணமாமலைக் குன்றுபோல்நின்று தங்கள் கூரை ஒன்றின்றியே ஞமண ஞாஞண ஞாண ஞோண மென்றோதி யாரையும் நாணிலா அமணராற் பழிப்புடையரோ நமக்கடிகளாகிய அடிகளே”5 இதில், நந்திகணம் சேனகணம் முதலிய பிரிவுகளைச் சேர்ந்த சமண சமயத் துறவிகள் பிராகிருத மொழியில் மந்திரங்களைக் கூறியதைக் குறிப்பிடுகிறார். பிராகிருத மொழியில் ங, ஞ, ண, ந, ம, ன என்னும் மெல்லோரைச் சொற்கள் அதிகமாக வழங்கப்படுகின்றன. அதைக் குறிக்கவே “ஞமண ஞாஞண ஞாண ஞோணம்” என்று கூறினார். “கரியமனச் சமண் காடியோடு கழுக்களால் எரிய வசணவுந் தன்மையோ............”6 “இருந்துண்தேரரும் நின்றுண்சமணுரும் ஏச நின்றவன்”7 “பொய்ச் சமண் பொருளாகி ஈண்டு நம்பி”8 “ நன்மையொன் றிலாத்தேரர் புன்சமணாம் சமயம மாகிய தவத்தினா ரவத்தத் தன்மைவிட்டு”9 “ நமையெலாம் பலர்இகழ்ந் துரைப் பதன்முன் நன்மை யொன்றிலாத் தேரர் புன்சமணாஞ் சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மை விட்டுழி நன்மையை வேண்டில்”10 “குண்டாடியும் சமணாடியும் குற்றுடுக்கையர்தாமும் கண்டார்கண்ட காரணம்மவை கருதாது கைதொழுமின்”11 “குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கிய ரறியா மிண்டாடியவது செய்தது வானால் வருவிதியே”12 “குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண்சாக்கியப்பேய் மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோ”13 “மோடுடைய சமணர்க்கும் உடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்ற மன்றே”14 சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஜைனர்களைப் பற்றியும் பௌத்தர்களைப் பற்றியும் இவ்வாறு பல முறைகளில் கூறியிருக்க, ஜைனர்களைப் பற்றி ஒரு இடத்திலும் கூறவில்லை என்று திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது! “ஜைனர்களைப் பற்றி ஒரு குறிப்பாவது காணப்படவில்லை” என்று திரு. எஸ். வையாபுரிப் பளிள்யைவர்கள் எழுதுகிறார்.15 சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்த பிள்ளையவர்கள் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு கூறுவது வருந்தத்தக்கது. அதிலும், தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வாறு மாறுபட எழுதுவது கண்டிக்கத்தக்கது. இது உண்மைக்கு மாறு பட்ட தவறான கருத்து என்பது, மேலே சுந்தரர் தேவாரத்திலிருந்து காட்டப்பட்ட மேற்கோள்களினால் நன்கு விளங்குகிறது. ஜைன பௌத்த மதங்கள் கி. பி. 9-ஆம் நூற்றாண்டிலே வலிமை குன்றியபோதிலும் உடனே அவை அழிந்துவிடவில்லை. பையப்பையத் தளர்ச்சி யடைந்து கொண்டே அச்சமயங்கள் 12, 13-ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைநின்றிருந்தன. பௌத்த மதம் பின்னர் அடியோடு மறைந்துவிட்டது. ஆனால், சமண சமயம், குன்றிப்போன நிலையிலாயினும் இன்னும் நிலைபெற்றிருக்கிறது. 2. வைணவ சமயம் அக்காலத்தில் வைணவ சமயமும் சிறப்படைந்திருந்தது. சைவ சமயத்தைப் போலவே வைணவ சமயமும் பக்தி இயக்கத்தில் ஈடுபட்டுச் சமண பௌத்த மதங்களைத் தாக்கிற்று. தெள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மல்லன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலைநிறுத்தினார். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த வைணவ அடியார்கள் யார் என்பது தெரியவில்லை. 3. சைவ சமயம் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சைவ சமயம் உயர்ந்த நிலையில் இருந்தது. சைவ சமய ஆர்வம் நாடெங்கும் பரவியிருந்தது. அப்பர் சம்பந்தர் காலத்தில் இருந்த காபாலிகம், பரசுபதம், பைரவம் முதலிய சைவ சமய உட்பிரிவுகள் இக்காலத்திலும் இருந்தன. இந்த உட்சமயங்கள், பௌத்த சமண சமயங்கள் மறைகிற வரையில் தமிழ் நாட்டில் இருந்து பிறகு பையப் பைய மறைந்துவிட்டன. இந்த மதங்கள் பௌத்த சமண சமயங்களை அழிப்பதில் முனைந்து நின்றதாகத் தெரிகின்றன. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் முதலியோர் சைவ சமயத்திற்குப் பெரிதும் உழைத்தனர். அவர்களைப்பற்றி இங்கு ஆராய்வோம். சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டுத் திருநாவலூரில் சடையனார் என்னும் ஆதிசைவப் பிராமணர், இசைஞானியார் என்னும் மனைவியாருடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு நம்பி ஆரூரர் என்று பெயரிட்டு வளர்த்தார்கள். இந்தக் குழந்தை பிற்காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் என்றும் வன்றொண்டர் என்றும் தம்பிரான் தோழர் என்றும் சேரமான் தோழர் என்றும் பெயர்பெற்று விளங்கிற்று. அக்காலத்தில் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டவர் நரசிங்க முனையரையர் என்னும் சிற்றரசர். இவர் சிறந்த சிவபக்தர், சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். பல்லவ அரசர்களுக்குக் கீழ் சிற்றரசராக இருந்தவர். நரசிங்க முனையரையர், நம்பி ஆரூரார் என்னும் குழந்தையின் அழகைக் கண்டு அதன்மேல் ஆசை கொண்டார். குழந்தையின் தந்தையாராகிய சடையனாரின் இசைவு பெற்று, அக்குழந்தையைத் தமது மாளிகைக்கு அழைத்துக கொண்டு போய் அன்போடு வளர்த்து வந்தார். அக்குழந்தை இளமைப் பருவத் திலேயே ஆதி சைவருக்குரிய ஆகம நூல்களையும் அரசர்க்குரிய யானையேற்றம் குதிரையேற்றம் முதலிய கலைகளையும் கற்றுத் தேர்ந்து காளைப்பருவம் அடைந்தது. பதினாறு வயதடைந்த நம்பி ஆரூரருக்குத் திருமணம் செய்ய எண்ணினார்கள். அதன்படி சடங்கவி சிவசாரியார் என்பவர் மகளை மணம் பேசி நாள் குறித்தார்கள். குறித்த நாளிலே திருமணம் நடக்கும் வேளையிலே முதியவர் ஒருவர் கோலூன்றி நடந்து அவ்விடம் வந்து, மணமகனாகிய நம்பி ஆரூரார் தமக்கு அடிமை ஆள் என்று வழக்காடினார். வழக்கின் முடிவில், ஆரூரார் முதியவருக்கு அடிமை என்று தீர்ப்பாயிற்று. முதியவர், ஆரூரரை அழைத்துக கொண்டு திருவெண்ணெய் நல்லூருக்குப் போய் அங்குத் திருவருட்டுறை என்றும் கோயிலில் புகுந்து மறைந்தார். ஆரூரர், கோயிலுள் புகுந்த முதியவரைக் காணாமல் திகைத்துப் பிறகு தம்மை ஆட்கொண்டவர் சிவபெருமானே என்று துணிந்தார். அப்போது அவருக்குக் கடவுளிடம் பக்தி தோன்றிற்று. அவர் திருப்பாடல்களைப் பாடித் துதிப்பாரானார். கடவுள், தம்மை ஆட்கொண்டதை ஆரூரர் தமது தேவாரத் தில் கூறுகிறார். ‘திருவெண்ணெய்நல்லூரும் திரு நாவலூரும் பதிகத்தில், வெண்ணெய்நல்லூரில் வைத்தென்னை யாளுங் கொண்டார் என்று ஒவ்வொரு பாட்டிலும் கூறுகிறார். அன்றியும், “தன்மையினா லடியேனைத் தாமாட்கொண்ட நாட்சபைமுன் வன்மைகள்பேசிட வன்றொண்ட னெப்தோர் வாழ்வு தந்தார்” என்றும் கூறுகிறார். திருவாவடுதுறைப் பதிகத்தில், “மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலியவந் தென்னை ஆண்டு கொண்டான் என்றும் கூறுகிறார். “அன்றுவந் தெனைய கலிடத் தவர்முன் ஆளதாக வென்று ஆவணங் காட்டி நின்று வெண்ணெய் நல்லூர் மிசை யொளித்த நித்திலத் திரட்டொத்தினை........”16 என்றும், “சொற்பதப் பொருள் இருளறுத் தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணங் காட்டி யடியனா வென்னை யாளது கொண்ட, நற்பதத்தை”17 என்றும் கூறுவது காண்க. நம்பி ஆரூராகிய சுந்தரமூர்த்தி நாயனார், பக்திமேலிட்டுத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு பல திருப்பதிகளுக்குச் சென்று கடவுளை வணங்கினார். பிறகு, திருவாரூருக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, திருவாரூர் திருக்கோயில் ஆலய வழிபாடு செய்துவந்த உருத்திர கணிகையர் குலத்தில் பிறந்த பரவை நாச்சியார் என்பவரைக் கண்டு அவர்மேல் காதல்கொண்டு அவரை மணஞ் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் கோட் புலி நாயனால் என்னும் அடியார் சுந்தரரைத் தமது ஊராகிய நாட்டியத்தான்குடிக்கு அழைத்துச் சென்று சிறப்புச் செய்தார். பின்னர், சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை நாட்டில் தல யாத்திரை செய்துகொண்டு திருவொற்றியூருக்கு வந்து அங்கே சில காலம் தங்கியிருந்தார். அப்போது சங்கிலி நாச்சியார் என்பவரைக் கண்டு காதல்கொண்டு, மகிழமரத்தடியில் “உன்னைப் பிரியமாட் டேன்” என்று வாக்களித்து அவரை மணஞ் செய்தார். சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்திருந்து, மீண்டும் திருவாரூருக்குப் போகப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில், சங்கிலியாருக்குக் கொடுத்த வாக்கைத் தவறி அவரைப் பிரிந்து சென்றபடியினால், அவருக்குப் பார்வை மறைந்தது. அப்போது ஒற்றியூர் இறைவனைப் பாடிய பதிகத்தில், “வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம் ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றியூ ரெனும் ஊருறை வானே” என்று பாடினார். இதில், ஒழுக்க என் கண்ணுக்கு ஒரு மருந்து உரையாய் என்பதில், “கண்படலம் நீங்குவதற்குத் தகுந்த ஒரு மருந்தை எனக்குக் கூறுவாயாக” என்று ஒரு பொருளும், “கண்ணுக்கு இடுவாயாக” என்னும் மற்றொரு பொருளும் தரும்படியாகப் பாடியிருப்பது காண்க. மேலும், பார்வை மறைந்ததை மிகத் துயரத்தோடு பாடினார். “மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண் கொள்வ தென்னே கணக்கு வழக்காகில் ஊன்று கோலெனக் காவதொன் றருளாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே” என்றும், “மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய் மைந்தனே மணியே மண வாளா அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் அழையேல் போகுரு டானெத் தரியேன்” என்றும் பாடியது மனத்தை உருக்குகிறது. அடியவர் சிலர் வழிகாட்டச் சுந்தரமூர்த்திகள் திருவெண்பாக்கம் சென்று கடவுளை வணங்கித் தமது பார்வை மறைந்ததைக் கூறி வருந்தினார். அப்போது இறைவன் அவருக்கு ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தருளினார். அப்போது அவர் பாடிய பாடல்கள் மேலும் மனத்தை யுருக்குவன. “பிழையுளன பொறுத்திருவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு காதா! கோயிலுளாயே? என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.” இவ்வாறு அவலச்சுவை ததும்பப் பாடிய இவர், காஞ்சீபுரம் சென்று திருவேகம்பரை வணங்கியபோது இவருக்கு ஒரு கண் பார்வை தெரிந்தது. இதனைத் திருவேகம்பப் பதிகத்தின் பதினொரு பாடலிலும், “கால காலனைக் கம்பனெம் மானைகாணக் கண்ணடியேன் பெற்ற வாறே” என்று கூறுகிறார். பின்னர், திருவாரூர் சென்று ஒரு கண் பார்வையில்லாமல் இருப்பதைக் கூறிப் பதிகம் பாடினார். “மீளாவடிமை உமக்கே ஆளாய்ப் பிறரைவேண்டாதே முளாத் துப்போல் உள்ளே களன்று முகத்தான் மிகவாடி ஆளா யிருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர், திருவாரூரீர், வாழ்ந்து போதீரே.” “ஏற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் ஞநரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே.” “என்றும் முட்டாப் பாடுமடியார் தங்கண் காணாது குன்றின் முட்டிக் குழியின் வீழ்ந்தால் வாழ்ந்து போதீரே” “சந்தம் பலவும் பாடு மடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே.” “பாரூ ரறிய என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதுரே.” அப்போது, இறைவன் அருளால் மற்றக்கண் படலம் நீங்கிப் பார்வை தெரிந்தது. அக்காலத்தில், கலிக்காம நாயனார் என்னும் தொண்டருடன் நண்பரானார். சேரநாட்டை அரசாண்ட சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி நாயனாரைக் காண்பதற்காகத் திருவாரூருக்கு வந்தார். சுந்தரர் அவருடன் நட்பு கொண்டு இருவரும் தல யாத்திரை செய்யப் புறப்பட்டுப் பாண்டிநாடு சென்று அந்நாட்டுத் தலங்களை வணங் கினார்கள். பின்னர் பாண்டிய மன்னன் அரண்மனையில் தங்கினார்கள். அங்கே, பாண்டியன் மகளைத் திருமணஞ் செய்து கொண்ட சோழ அரசன் தங்கியிருந்தான். இவர்கள் நால்வரும் திருப்பரங்குன்றம் சென்று கடவுள் வழிபாடு செய்தார்கள். அவ்வமயம் சுந்தரர், “திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும்” என்னும் பதிகம் பாடினார். அப்பதிகத்தின் கடைசியிலே, தமிழ்நாட்டுப் பழைய முடியுடை வேந்தர் மூவரும் ஒருங்கிருப்பதைக் குறிப்பிட்டுப் பாடினார். அச்செய்யுள் இது : “அடிகேள் உமக்காட்செய அஞ்சுதும் என்றமரர் பெருமானை ஆரூரனஞ்சி முடியா லுலகாண்ட ஓர்நான்கும் ஒரோன்றினையும் படியா யிவைகற்று வல்ல வடியார் பரங்குன்ற மேய பரமனடிக்கே குடியாகி வானோர்க்குமோர் கோவு மாகிக் குலவேந்தராய் விண்முழு தாள்பவரே.” பாண்டிய நாட்டிலிருந்து வந்த பிறகு சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தியைத் தமது சேர நாட்டுக்கு அழைத்துச் சென்றார். சேர நாட்டில் சிலநாள் தங்கிய பிறகு சுந்தரர் மீண்டும் திருவாரூருக்கு வந்தார். சிலநாட்கள் சென்ற பிறகு, சுந்தரமூர்த்தி நாயனார் மீண்டும் சேர நாடு சென்று சேரமான் பெருமாளுடன் தங்கினார். தங்கியிருந்தபோது, இவ்வுலக வாழ்வை விட்டு வெள்ளையானை ஏறித் திருக்கயிலாயஞ் சென்று சிவகதி பெற்றனர். அவ்வமயம் அவர் பாடிய 18திருநொடித்தான் மலைப் பதிகத்தில் வெள்ளை யானைமீது ஏறிச் சென்றதைக் கூறுகிறார் : “வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே.” “விண்ணுல கத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.” “இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திரமா முனிவர் இவனாரென் எம்பெருமான் நந்தமர் ஊரனொன்றான் நொடித்தான்மலை உத்தமனே.” “இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லம் வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திரமா முனிவர் இவனாரென் எம்பெருமான் நந்தமர் ஊரனொன்றான் நொடித்தான்மலை உத்தமனே.” சுந்தரமூர்த்தி நாயனார் தமது பதினாறு வயது முதல் பதினெட்டு வயது வரையில் இரண்டு ஆண்டுகள் கடவுளிடம் பக்திசெய்து அடியாராக இருந்தார். மிகச் சுருங்கிய காலத்தில் சிவகதி யடைந்த சிவனடியார்களில் இவரும் ஒருவர். இவர் பாடியருளிய தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்டு ஏழாந் திருமுறை என்று வழங்கப்படுகிறது. இவர் முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடினார் என்பர். “பின்புநில நாளின்கண் ஆரூரர் நம்பி பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர் பித்தா என்னும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும் ஈறாய்முப் பத்தெண்ணா யிரமதாக இன்புபகன் றவர்நொடித்தான் மலையிற் சேர்ந்தார்” என்பது திருமுறை கண்ட புராணம். இப்போது உள்ள திருப்பதிகங்கள் நூறு மட்டுமே. வெள்ளிப் பாடல் என்னும் காரோனைப் பதிகம், பிற்காலத்தில் இடைச்செருக லாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு பெரிய புராணத்திலே இடை யிடையே கூறப்படுகிறது. தடுத்தாட்கொண்ட புராணத்திலும், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்திலும், கழறிற்றிவார் என்றும் சேரமான் பெருமாள் நாயனார் புராணத்திலும், வெள்ளானைச் சருக்கத்திலும் இவருடைய வரலாறு கூறப்பட்டுள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் இவர் சேரநாட்டரசர். பெருமாக்கோதையார் என்பது இவருடைய பெயர். கடற்கரையை யடுத்த மகோதை என்னும் கொடுங்கோளூரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாட்சி செய்தார். இவருக்குக் கழறிற்ற றிவார் என்னும் பெயரும் உண்டு. சைவ சமயப் பற்றும் சிவபக்தியும் உடையவர். சைவ சாத்திரங்களை நன்கு கற்றவர். தமிழில் கவிபாடும் புலமை மிகுந்தவர். இவர் யானையேறி நகர்வலம் செய்தபோது, ஒருவண்ணான் உவர் மண்ணைச் சுமந்துகொண்டு எதிரிலே வந்தான். அவன் உடல் முழுவதும் உவர்மண் படிந்து நீறு பூசியது போலக் காணப்பட்டது. அவனைக் கண்ட சேரமான் பெருமாள் அவனைச் சிவனடியார் என்று நினைத்து, யானை யினின்று இறங்கிவந்து வணங்கினார். வண்ணான் அச்சங்கொண்டு, அரசரை வணங்கி, “அடியேனை யாரெனக் கொண்டது! அடியேன் அடிவண்ணான்” என்று கூறினான். பெருமாளும், “அடியேன் அடிச் சேரன். திருநீற்று வேடத்தை நினைப்பித்துர்! வருந்தாமல் போம்” என்று விடையிறுத்தார். இதனால், இவருடையட சிவசமயப் பற்று நன்கு விளங்குகிறது. மதுரைச் சொக்கநாதப் பெருமான் அனுப்பிய திருமுகப் பாசுரத்தின்படி, இவர் தம்மிடம் வந்த பாணபத்திரன் என்னும் இசைவாணருக்குப் பொருநிதி அளித்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் சிவபக்தியினைக் கேள்வியுற்று, அவரைக் காணவேண்டும் என்னும் விருப்பத்தினால் திருவாரூக்கு வந்தார். வரும் வழியில் சிதம்பரத்தில் தங்கிக் கூத்தப்பெருமானை வணங்கிப் பொன்வண்ணத் தந்தாதி என்னும் நூலை இயற்றி அரங்கேற்றினார். பின்னர்த் திருவாரூரை அடைந்து சுந்தரமூர்த்தி நாயனாரால் வரவேற்கப்பட்டு அங்குத் தங்கி தியாகப்பெருமானை வணங்கினார். அக்காலத்தில், திருவாரூர் மும்மணிக் கோவை என்னும் நூலை இயற்றித் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் முன்னிலையில் அரங்கேற்றினார். பிறகு, சுந்தரருடன் வேதாணியம் சென்று, இறைவனை வணங்கிச் சிவபெருமான்மேல் ஒரு அந்தாதி பாடினார். அந்த அந்தாதி இப்போது கிடைக்க வில்லை. பிறகு, பாண்டிய நாட்டில் சுந்தரரோடு தலயாத்திரை செய்து திரும்பி வந்து திருவாரூரில் தங்கினார். சிலநாட்களுக்குப் பிறகு, சுந்தரரை அழைத்துக்கொண்டு தமது ஊருக்குச் சென்றார். சுந்தரர் சிலநாட்கள் கொடுங்கோளூரில் தங்கியிருந்து, மீண்டும் திருவாரூருக்கு வந்தார். நெடுநாள் ஆனபிறகு, சுந்தரமூர்த்தி நாயனார் மீண்டும் சேரமான் பெருமாளைக் காண்பதற்குக் கொடுங்கோளூர் சென்றார். அங்கிருந்த போது திருக்கயிலாயத்திலிருந்து வெள்ளையானை வர, சுந்தரர் அதில் ஏறிக்கொண்டு திருக்கயிலாயஞ் சென்றார். அதனையறிந்த சேரமான் பெருமாள் குதிரை ஏறி, சுந்தரரைத் தொடர்ந்து சென்று கயிலாயம் அடைந்தார். அடைந்து, தாம் இயற்றிய ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞான உலாவை அரங்கேற்றினார். அவ்வுலா பின்னர் திருப்பிடவூரிலே வெளியிடப்பட்டது. இவர் இயற்றிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானவுலா ஆகிய மூன்றும் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. சேரமான் பெருமாள் நாயனாரின் விரிவான வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தில், கழறிற்றறிவார் புராணத்தில் (சேரமான் பெருமாள் நாயனார் புராணத்தில்) காண்க. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தமது திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில், “கார்கொண்ட கொடைக்கழிறிற் றறிவார்க்கும் அடியேன்” என்று இவரைச் சிறப்பித்திருக்கிறார். நரசிங்கமுனையரையர் இவர் குறுநில மன்னர், திருமுனைப்பாடி என்னும் நாட்டிற்கு அரசர். பல்லவ அரசன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவர். இவரைப் பற்றிப் பல்லவர் சாசனங்களில் கூறப்படவில்லை. ஆனால், அவ்வரசர் காலத்தில் இருந்தவர் என்பது நன்கு அறியப் படுகிறார். இவர் பகைவரைப் போரில் வென்றார் என்று கூறப்படுகிற படியால், தெள்ளறெறிந்த நந்திவர்மனுக்குத் துணையாக இருந்து இவர் பகைவர்களை வென்றிருக்கக்கூடும். நரசிங்க முனையரையர் பகைவர் களைப் போரில் வென்று, சிவபக்தி யுடையவராக வாழ்ந்திருந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. “இம்முனையர் பெருந்தகையார் இருந்தரசு புரந்துபோய்த் தெம்முனைகள் பலகடந்து தீங்குநெறிப் பாங்ககல மும்முனைநீள் இலைச்சூல முதற்படையார் தொண்டுயீபரி அம்முனைவர் அடிஅடைவே அரும்பெரும்பே றெனஅடைவார்”19 நரசிங்கமுனையரையர் காலத்தில், திருமுனைப்பாடி நாட்டில் ஆதிசைவ குடும்பத்தைச் சேர்ந்த சடையைனார்க்கும் அவர் மனைவியார் இசைஞானியார்க்கும் நம்பியாரூரர் மகவாகப் பிறந்தார். அந்தச் சுந்தரக் குழந்தையை நரசிங்க முனையரையர் கண்டு அன்புகொண்டு பெற்றோரின் இசைவு பெற்று அக்குழந் தையைத் தமது மாளிகையில் வளர்த்து வந்தார்.20 நம்பியாரூரர் என்னும் அக்குழந்தை வளர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் பெயருடன் சைவ சமயகுரவர் நால்வரில் ஒருவராகத் திகழ்ந்தது. நரசிங்கமுனையரையர் சைவத் தொண்டு செய்து கொண்டிருந் தார். திருவாதிரையில் சிவபெருமானுக்குச் சிறப்புப் செய்து, தம்மிடம் வருகிற சிவனடியார்க்குத் திருவமுது அளித்து அவர்களுக்குத் தனித்தனியே நூறு பொன் கொடுப்பார். ஒரு திருவாதிரையின்போது, நல்லொழுக்கமில்லத தூர்த்தனாகிய ஒருவன், காசு பெறும் பொருட்டு, திருநீறணிந்து அங்கு வந்தார். அந்தத் தூர்த்தனைக்கண்ட மற்றவர்கள் இகழ்ந்து ஒதுங்கினார்கள். அவரைக்கண்ட நரசிங்கமுனையரையர், அவரை இகழாமல், அவர் அணிந்திருந்த நீற்றுக்கு மதிப்புக் கொடுத்து, அவருக்கு இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார். இவ்வாறு சிவபக்தராகத் திகழ்ந்த இந் நாயனார், சைவ அடியார் அறுபத்துமூவரில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார். இவரால் வளர்க்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தமது திருத்தொண்டத் தொகைப் பாசுரத்தில், “மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” என்று இவரைப் போற்றினார். அன்றியும் தமது தேவாரத் திருப்பதிகத்தில், “நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன் ஆகரித்தீசனுக் காட்செயுமூர் அணிநாவலூர்......”21 என்று சிறப்பித்துப் பாடினார். கடையனார், இசைஞானியார் திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ள திருநாவலூரில் வாழ்ந்திருந்தவர் ஆதிசைவ குலத்தவராகிய சடையனார். இவருடைய மனைவியார் இசைஞானியார். இவருக்கு மகனாகத் தோன்றியவர் நம்பி ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார். சைவ சமய துரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளை உலகத்துக்களித்த பெருமை வாய்ந்தவர்கள் இவர்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருத்தொண்டத் தொகையில், இவர்களைப் போற்றியுள்ளார். “என்னவனாம் அரனடியே யடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே” என்று அவர் பாடியுள்ளார். மேலும் தாம் அருளிய கலைய நல்லூர் தேவாரத்திலும், “நண்புடைய நற்படையன் இசைஞானி சிறுவன் நாவலூர்க் கோன்” என்று இவர்களையும் தம்மையும் கூறியுள்ளார். மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறூரில் பரம்பரரைச் சேனாபதித் தொழில் புரியும் குடும்பத் தில் மானக்கஞ்சாற நாயனார் பிறந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சைவ அடியார்களுக்குத் தொண்டு செய்பவர். பிள்ளைப் பேறின்றி இருந்த இவருக்குச் சிவபெருமான் திருவருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து மணப்பருவம் அடைந்தது. பெருமங்கலம் என்னும் ஊரிலே ஏயர்குடியிலே பிறந்த கவிக்காமர் என்பவர், சில பெரியோர்களை அனுப்பி, மானக்கஞ்சாறர் மகளைத் தமக்கு மணம் செய்விக்கும்படி கேட்டார். மானக்கஞ்சாறர் அதற்கு உடன்படவே திருமணத்திற்கு நன்னாள் குறிக்கப்பட்டது. அச் சமயத்தில் மாவிரத சைவத்தைச் சேர்ந்த ஒரு முனிவர், மணமகள் இல்லத்திற்கு வந்தார். வந்த முனிஒவரை மானக்கஞ்சாறர் வரவேற்று வணங்கினார். முனிவர், “உமது இல்லத்தில் என்ன சிறப்பு நடை பெறுகிறது?” என்று கேட்க, அடியார், “அடியேன் மகளுக்குத் திருமணம் நிகழ்கிறது” என்று கூறி, மகளை அழைத்து முனிவரை வணங்கச் செய்தார். மணமகளுடைய கரியநீண்ட கூந்தலைக் கண்ட மாவிரத முனிவர், “இந்த மயிர் பஞ்சவடிக்குத் தகுந்தது” என்று கூறினார். பஞ்சவடி என்பது மயிரினால் செய்யப்பட்ட பூணூல். மயிரினால் அகலமாகப் பின்னப்பட்ட பூணூலையும் எலும்பினால் செய்யப் பட்ட மணியையும் மாவிரதிகள் அணிவது வழக்கம். மகளின் மயிர் பஞ்சவடிக்கு உதவும் என்று கூறியதைக் கேட்ட மானக்கஞ்சாறர். முன்பின் சிந்திக்காமல், தமது உடைவாளை எடுத்துத் தமது மகளின் கூந்தலை அடியோடு அரிந்து அவரிடம் கொடுத்தார். அவள் மணப்பெண் என்பதை அவர் சிறிதும் சிந்திக்கவில்லை. அடுத்த நாள் மணமகனாகிய ஏயர்கோன் கலிக்காமனார் வந்து நிகழ்ந்ததை அறிந்து, அவரும் சிவனடியார் ஆகையால், மானக்கஞ்சாறரின் செயலுக்கு மகிழ்ந்தார். ஆனாலும், முண்டிதம் ஆன பெண்ணை மணஞ் செய்யலாமா என்று தயங்கினார். அப்பொழுது சிவபெருமானே வந்து அப்பெண்ணை மணஞ் செய்துகொள்ளும்படி கூற, அவர் மணம் செய்து கொண்டார். இவ்வாறு மானக்கஞ்சாறர் சிறந்த சிவபக்தராய் விளங்கிப் பின்னர் சிவபதம் அடைந்தார்.22 “மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்” என்று இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் பாராட்டியுள்ளார். ஏயர்கோன் கலிக்காமர் கலிக்காமர் சோழ நாட்டுத் திருமங்கலக்குடி என்னும் ஊரில் ஏயர்குடியில் பிறந்தவர்; ஆகையால், ஏயர்கோன் கலிக்காமர் என்று கூறப்படுகிறார். அரசரிடம் சேனாபதித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த சிவ பக்தர். இவரைப் போலவே, சேனாபதித் தொழில் புரியும் குடும்பத்தைச் சேர்ந்த, மானக்கஞ்சாற நாயனாரின் மகளை இவர் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்தார்.23 இவர், திருப்புன்கூர் என்னும் ஊரிலேயுள்ள திருக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பரவையாரிடத்தில் சிவபெருமானைத் தூது அனுப்பிய செய்தியைக் கலிக்காமர் கேள்விப்பட்டார்; பெருஞ் சினங் கொண்டார். சிவபெருமானை ஒரு பெண்ணிடம் தூது அனுப்பலாமா? அவனை நேரில் காண்பேனானால் என்ன நிகழுமோ! என்று சினந்து பேசினார். சுந்தரரிடம் அடங்காச் சீற்றங் கொண்டார். இதனை யறிந்த சுந்தரர் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் கலிக்காமருக்கு வயிற்றில் சூலை நோயை உண்டாக்கி, அவர் கனவில் தோன்றி “இந்நோய். சுந்தரனால் அல்லாமல் தீராது” என்று கூறினார். பிறகு, சுந்தரரிடம், ‘நீ போய் கலிக்காமன் வயிற்று வலியைத் தீர்த்துவிட்டு வா” என்று சொன்னார். சுந்தரர் கலிக்காமரிடம் சென்றார். அவர் வருகையை யறிந்த கலிக்காமர், சுந்தரரால் சூலை நோய் நீங்குவதைவிட உயிர் விடுவதே மேல் என்று நினைத்துக் கைவாளினால் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டார். சுந்தரர் வந்து நடந்ததை அறிந்து தாமும் உயிர்விடத் துணிந்து அங்கிருந்த வாளை எடுத்தார். அப்போது கலிக்காமர், அவர் கையைப் பிடித்துத் தடுத்தார். சுந்தரர் இவரை வணங்க, இவரும் அவரை வணங்கினார். பின்னர் இருவரும் நண்பர்காளகித் திருப்புன் கூருக்குச் சென்று கடவுளை வணங்கினார்கள். பிறகு, கலிக்காமர் சுந்தரருடன் திருவாரூருக்குச் சென்று அவருடன் சிலகாலம் தங்கியிருந்து, தமது ஊருக்குத் திரும்பினார். “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைத் திருத்தொண்டத் தொகையில் பாராட்டியுள்ளார். மேலும், “ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து” அருள் செய்ததையும் திருப்புன்கூர்ப் பதிகத்தில் (3) கூறியுள்ளார். கோட்புலி நாயனார் சோழ நாட்டு நாட்டியத்தான் குடி இவருடைய ஊர்; இவர், அரசனிடம் சேனாபதி தொழில் செய்தவர். சிறந்த சிவபக்தர். சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்தபோது, அவரிடம் சென்று அவரைத் தமது ஊருக்கு அழைத்தார். அவ்வாறே சுந்தரர் நாட்டியத்தான் குடிக்குச் சென்றபோது, கோட்புலியார் அவரைச் சிறப்பாக வரவேற்றார். வரவேற்றுத் தமது குமாரத்திகளாகிய சிங்கடியார், வனப்பகையார் என்பவர்களை அழைத்து அவரை வணங்கச் செய்தார். பிறகு, அடியேன் பெற்ற மக்களிவர் அடிமையாகக் கொண்டருளிக் கடிசேர் மலர்த்தாள் தொழுதுயக் கருணை அளிக்வேண்டும் என்று வேண்டினார். சுந்தரர் அரனை மறுத்து, “இவர்கள் எனது மகளாகக் கடவர்” என்று கூறி, அவர்களைத் தமது குமாரத்திகளாக ஏற்றுக் கொண்டார்.24 சுந்தரர், கோட் புலியாரையும் அவரது குமாரத்திகளையும் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். “கூடாமன்னரைக் கூட்டத்துவென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்குழல் சிங்கடியப்பன் திருவாரூரன் உரைத்த பாடீராகிலும் பாடுமின் தொண்டீர் பாடநும் பாவம் பற்றறுமே.”25 “நாணியூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்.”26 என்றும், “சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடியப்பன்”27 என்றும், “இளங்கிளை யாரூரன் வனப்கை யவள் அப்பன்”28 என்றும், “திருநாவலூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்”29 என்றும், “நறவம் பூம்பொழில் நாவலூரன் வனப்பகை யப்பன் சடையன்தன் சிறுவன் வன்றென்ட னூரன் பாடிய பாடல பத்திவை வல்லவர்”30 என்றும், “செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை மறந்துநான் மற்று நினைப்பதே தென்று வனப்பகை யப்ப னூரன் வன்தொண்டன்”31 “வஞ்சியும்வளர் நாவலூரன் வனப்பகை யவளப்பன் தொண்டன்”32 என்றும் அவர் பாடியது காண்க. கோட்புலி நாயனார் சிறந்த சிவபக்தர் என்று கூறினோம். இவர், சிவபெருமானுக்குத் திருவமுது செய்விக்க நெல்லை விலைக்கு வாங்கிக் கொடுத்தார். ஒரு சமயம் அரசன் இவரைப் பகைவருடன் போர்செய்ய அனுப்பினான். போர்க்களம் போவதற்கு முன்பு இவர் நெற் குவியலை விலைக்கு வாங்கிவைத்து, “ஒருவரும் இதனை எடுக்கக் கூடாது” என்று சுற்றத்தாருக்குத் தனித் தனியே சொல்லிவிட்டுச் சென்றார். சில காலத்துக்குப் பிறகு நாட்டில் கருப்பு ஏற்பட்டு மக்கள் உணவுக்கு வருந்தினார்கள். அப்போது, இவருடைய சுற்றத்தார் பசி பொறுக்க முடியாமல் இவர் வைத்துப்போன நெற் களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுத்து உண்டார்கள். போருக்குச் சென்ற கோட்புலியார், பகைவரை வென்று அரசனிடம் சிறப்புப் பெற்று ஊருக்குத் திரும்பிவந்தார். வந்து, நாம் வைத்த நெல் எடுக்கப்பட்டதைக் கண்டு சினங்கொண்டார். அதனை எடுத்து உண்ட தனது சுற்றத்தார் எல்லோரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். “தந்தையார் தாயார் மற்றும் உடன்பிறந்தார் தாரங்கள் பந்தமார் சுற்றத்தார் பதியடியார்.......” முதலிய எல்லோரையும் வாளினால் துண்டித்தார். கடைசியாக ஒரு சிறு குழந்தையையும் வெட்டத் துணிந்தார். அப்போது, இவருடைய ஏவலாளனாகிய கோட்புலி என்பவன் தடுத்து, “இது குழந்தை நெல்லை உண்ணவில்லை” என்று கூறினான். “இது நெல்லை உண்ணவில்லை, நெல்லையுண்டவள் பாலை யுண்டது” என்று கூறிஅதனையும் வெட்டி வீழ்த்தினார். அப்போது சிவபெருமான் தோன்றி, “உன்னால் வெட்டுண்டவர் விண்ணுலகம் எய்தட்டும். நீ நம்மிடம் வா” என்று அருளினார். இவ்வரலாற்றைப் பெரியபுராணம், கோட்புலி நாயனார் புராணத்தில் காண்க. சுந்தரமூர்த்தி சுவாமிகள், இவரை “அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்” என்று சிறப்பித்தார். சேரமாசிமாறர் சோழ நாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் இருந்தவர்; பிராமணர். இவருடைய இயற் பெயர் மாறன் என்பது. சோமயாகம் செய்த படியினாலே சோமயாஜி என்னும் காரணப்பெயர் பெற்றார் என்றும், சோமயாஜி என்பது சோமாசி எனத் திரிந்தது என்றும் கூறுவர். சிவபெருமானிடத்தும் சைவ அடியாரிடத்தும் மிகுந்த அன்புள்ளவர். திருவாரூரில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து, அவரிடத் தில் பக்தி செய்து கொண்டிருந்து கடைசியிலி சிவபதம் அடைந்தார். “நட்பரான் சோமாசி மாறனுக்கடியேன்” என்று சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பாராட்டியுள்ளார். பெருமிழலைக் குறும்பர் மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரில் இருந்தவர். சிறந்த சிவபக்தியும் சைவ அடியார்களைப் போற்றிச் சிறப்புச் செய்யும் அடியார் தொண்டும் செய்து வந்தார். அன்றியும் யோகம் செய்யும் யோகியாகவும் இருந்தார். இவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிவ பக்தியை அறிந்து, அவரிடம் பக்திகொண்டு அவரைச் சிந்தித்து வணங்கி வந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவஞ்சைக்களஞ் சென்றிருந்தபோது, அவர் வெள்ளையானை ஏறித் திருக்கயிலாயஞ் செல்லப் போகிறதைப் பெருமிழலைக் குறும்பர், தமது யோக சக்தியால் முன்னமே யுணர்ந்தார். சுந்தரர் இவ்வுலகத்தை விட்டு நீங்குவதற்கு முன்பே, நானும் இவ்வுலகத்தைவிட்டு நீங்குவேன் என்று உறுதி செய்துகொண்டு, தமது யோக சக்தியால் உடலிலிருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு திருக்கயிலாயம் சென்றார். கழற்சிங்க நாயனார் இவர் பல்லவ அரச குலத்தில் வந்த பல்லவ மன்னன். கழற்சிங்கன் என்பது இவருடைய சிறப்புப் பெயர். இவரே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆவர்.33 கழற்சிங்க நாயனார் ஒரு சமயம் மாதேவியோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினார். அவருடன் சென்ற அரசியார் அங்கிருந்த பூவொன்றைக் கையிலெடுத்து மோந்தார். அதனைக் கண்டு, அங்கிருந்த செருத்துணை நாயனார் சினங் கொண்டு, சிவபெருமானுடைய பூவை மோந்த மூக்கை அரிவேன் என்று கூறி, தம் கையிலிருந்த கத்தியினால் அவர் மூக்கை அரிந்தார். மாதேவியார் கூச்சலிட்டு அலறினார். உடனே கழற்சிங்கர் வந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று சினந்து கேட்டார். செருந்துணை நாயனார் தாமே இப்படிச் செய்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினார். அப்போது, கழற்சிங்கர், “மூக்கை அரிந்ததுமட்டும் போதாது; புவை எடுத்த கையையும் துண்டிக்க வேண்டும்” என்று கூறி வாளை எடுத்துத் தமது மனைவியாரின் கையைத் துண்டித்தார். இக் கதையைப் பெரியபுராணம் கழற்சிங்க நாயனார் புராணத்தில் காண்க. சுந்தரமூர்த்தி நாயனார், இந்த நாயனாரைத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில், “கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று சிறப்பித்திருக்கிறார். செருந்துணை நாயனார் சோழ மண்டலத்து மருகல் நாட்டுத் தஞ்சாவூரிலே இருந்த சிவபக்தர் செருந்துணை நாயனார். இவர் திருவாரூர் திருக்கோயிலில் சென்று வன்மீக நாதரை வழிபட்டு அக்கோயிலில் திருத்தொண்டுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருநாள், கழற்சிங்க நாயனார் தமது மாதேவியாரோடு அக்கோயிலுக்கு வந்து கடவுளை வணங்கினார். அவருடன் வந்த மாதேவியார், கோயிலில் கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதனைக் கண்ட செருந்துணையார், சிவபெருமானுடைய பூவை மோந்ததற்காகக் கோபங்கொண்டு, அரசியாரின் மூக்கைக் கத்தியினால் அரிந்தார். இவ்வாறு, சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியுடையவராக இருந்து கடைசியில் சிவகதியடைந்தார். விறன்மிண்ட நாயனார் இவர் மலைநாட்டிலே செங்குன்றூரில் இருந்தவர். சிவபக்தியும் சிவனடியார் பக்தியும் உடையவர். அவர் திருக்கோயில்களுக்குப் போகும்போது முதலில் சிவனடியார்களை வணங்கிப் பிறகு சிவபெருமானை வணங்கும் இயல்புள்ளவர். இவர் பிற்காலத்தில், திருவாரூரில் சென்று அங்குத் தங்கியிருந்தார். திருவாரூரில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு நாள் கோயி லுக்குச் சென்றபோது, அங்கிருந்த சிவனடியார்களை வணங்காமல் கோயிலுக்குள் சென்றார். அப்போது அவர்களுடன் இருந்த விறன் மிண்டர், “அடியார்களை வணங்காமல் போகிற வன்தொண்டன் அடியார்களுக்கு வேறுபட்டவன்” என்று கூறினார். அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார், அவருடைய அடியார் பக்தியை வியந்தார். உடனே, திருத் தொண்டத்தொகை என்னும் பதிகத்தைப் பாடினார். இவர் பாடிய திருத்தொண்டத் தொகை, பிற்காலத்தில் திருத்தொண்டர் புராணம் பாடுவதற்கு முதல் நூலாக இருந்தது. சுந்தரர், திருத்தொண்டத் தொகையில், “விரிபொழில் சூழ்குன்றை யார் விறன்மிண்டர்க் கடியேன்” என்று விறன்மிண்டரைக் கூறினார். விறண்மிண்ட நாயனாரைப் பற்றி வேறு சில கதைகள் வழங் கப்படுகின்றன. அக்கதைகள் பெரியபுராணத்தில் கூறப்படவில்லை. வரகுண பாண்டியன் வரகுண பாண்டியன், நந்திவர்மன் காலத்தில், பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற அரசனாக இருந்ததோடு, சிறந்த சிவபக்தனாகவும் இருந்தான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வரசனைத் தமது திருத் தொண்டத்தொகையில் கூறாமற் போயினும், வேறு பதிகத்தில் கூறி யுள்ளார். வரகுண பாண்டியனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு. இப்பெயரைச் சுந்தரர், திருவதிகைத் திருவீரட்டானப் பதிகத்தில் (8) பொடியாடும் திருமேனி நெடுமாறன் என்று கூறுகிறார். இந்த நெடு மாறன், “நெல்வேலி வென்ற நெடுமாறன்” அல்லன், “பொடியாடும் திருமேனி நெடுமாறன்” ஆவன். வரகுணபாண்டிய னாகிய மாறன் (நெடுமாறன்), மிகுந்த சிவபக்தனாய் போருக்குச் செல்லும்போதும் உடம்பு முழுவதும திருநீறு பூசிப் (பொடியாடிப்) போருக்குச் செல்வான் என்று கூறுப்படுவதால், சுந்தரர் கூறிய “பொடியாடிடுந் திருமேனி நெடுமாறன்” வரகுணபாண்டியனே என்று உறுதியாக நம்பலாம். இவன் பெயர் திருத்தொண்டத் தொகையில் கூறப்படாதபடியால் இவனைச் சிவனடியார்களில் ஒருவனாகப் பெரியபுராணம் கூறவில்லை. ஆனால், இவனுடைய உயர்ந்த சிவபக்தியைத் திருவிளையாடற் புராணங்களும், பட்டினத்துப் பிள்ளையாரும் கூறுகிறார்கள். சிவபக்தனாகிய வரகுண பாண்டியன், நேரில் சிவலோகம் சென்று தரிசிக்கவேண்டுமென்று ஆசைப்பட, அதையறிந்த சிவபெருமான் நந்திதேவரைக் கொண்டு அரசனுக்குச் சிவலோகத்தைக் காட்டியதாகப் புராணக்கதை கூறுகிறது.34 வரகுணபாண்டியனுடைய சிவபக்தியைப்பற்றி வேறு சில கதை களும் கூறப்படுகின்றன. கள்ளன் ஒருவனைப் பிடித்துக் கொண்டுவந்து இவர் முன்பு விட்டார்கள்; அக்கள்ளன் உடம்பு முழுவதும் திருநீறு பூசியிருந்தான். அதனைக் கண்ட வரகுணபாண்டியன், அவனைச் சிவனடியார் என்று எண்ணித் தண்டிக்காமல் விட்டு விட்டார். நரிகள் ஊளையிட்டதைக் கேட்டு, அவனை சிவபெருமானை வாழ்த்தியதாக நினைத்து, அவைகளுக்கு உடுத்தும்படி துணிகளை வழங்கினார். கார்காலத்தில் குளத்தில் தவளைகள் அரற்றிய “அரகர” என்னும் ஓசையைக் கnடு அத் தவளைகள் சிவபெருமான் பெயரைப் பாடியதாகக் கருதிக் காசையும் பொன்னையும் அக்குளத்திலே தூவினாராம். சிவபெருமான் திருமஞ்சனத்துக்காக எண்ணெய் ஆட்ட எள்ளைக்கொண்டு வந்து காயவைத்திருந்தார்கள். ஒருவன் அந்த எள்ளை எடுத்துத் தின்றான். இந்தப்பாவஞ் செய்தவனைக் கையும் பிடியுமாகப் பிடித்துக்கொண்டுபோய் வரகுணனிடம் விட்டார்கள். இந்தச் சிவபாவத்தை ஏன் செய்தாய் என்று கேட்க, அவன், சிவனுடைய எள்ளைத் தின்றால் சிவகதி கிடைக்கும் என்று கூறினான். அப்படி யானால், உன் வாயில் இருக்கும் எள்ளை எனக்கும் கொடு என்று கேட்டாராம். சோழநாட்டுத் திருவிடைமருதூரில், இவ்வரசன் இருந்த போது இறந்தவனுடைய மண்டையோடு தரையில் கிடந்ததைக் கண்டு, அதனைக் கையில் எடுத்து, “இந்தப் புண்ணிய நகரத்தில் உன் தலையோடு இருக்க என்ன புண்ணியம் செய்தனையோ! என் தலை யோடும் இவ்வாறு சிவ க்ஷேத்திரத்தில் கிடக்கும்படி அருள் கிடைக்க வேண்டும்” என்று வேண்டினாராம். திருவிடைமருதூர்க் கோயிலில், ஒரு நாய் மலம் கழிக்க அதனைத் தமது கையினால் எடுத்து அப்புறப்படுத்திக் கோயிலைத் தூய்மை செய்தாராம். வேப்ப மரத்தில் வேப்பங்காய்கள், சிவலிங்கம் போன்ற உருவத்தோடு இருப்பதைக் கண்டு, அவற்றைச் சிவலிங்கமாகவே எண்ணி, அம் மரங்களுக்குப் பந்தல் அமைத்தாராம். அன்றியும், தமது தேவியைச் சிவ பெருமானுடைய திருக்கோயிலில் ஊழியம் செய்ய அனுப்பினாராம். இச்செய்திகளைப் பழைய திருவிளையாடல் புராணம் கூறுகிறது. “மிஞ்சிடை மருதர் கோயில் பதக்கணம் வரும் வீதிக்கண் அஞ்சிநாய்க் கட்டங்கண் டீதெடுத்தவர்க்கு அவனி பாதி நெஞ்சினால்கொடுப்பலென்றே நினைத்தனன் எடுப்பக்காணான் பஞ்சவன் பகுதி யில்லென்றெடுத்தனன் பரிவட்டத்தால்” “தேம்படு பழனஞ் சூழ்ந்த திருவிடை மருதினெல்லைப் பாம்பொடு டமதியஞ் சூடும் பரமனார் உருவம் என்னக் காம்பவிழ்ந் துதிர்ந்த செய்ய கனியுருக் கண்டாங் கெல்லாம் வேம்புகட் குயர்விமானஞ் சாத்தினான் வேந்தர் வேந்தன்.” “பரிந்திடை மருதர் நன்னீ ராடமுன் பரப்பும் எள்ளைக் கரந்தொரு கள்ளன் தின்னக் கண்டவர் கொடுசெலுங்கால் அருந்திய தென்னை என்ன அரன்றமர்க் கடிமை யாக வரும்பிறவியின்கண் என்றான் மன்னவனயின்றான் வாங்கி.” “சோதிசேர் மருதர் தேர்போம்வீதியில் தொழுவான் செல்லும் போதில் முன்கிடந்த பொல்லாப் புன்தலை ஓடுகண்டு நாத! இத்தலைபோல் என்தன் நாய்த்தலை ஓடும் இந்த வீதியிற்கிடக்க என்றே மிலைந்தனன் இலங்குதென்னன்.” “கள்ளனைக் கட்டிச் செல்லுங் காலையில் கள்ளன் ஈமத் தெள்ளிய நீற்றின் வீழ்ந்து சிரித்தரகர என்றெய்த (மிக்க உள்ளம் வாழ்ந்தெதிர்கொள் வேந்தன்விடும்விடும் உயர்பால் வெள்ளரைக் கள்ளர் என்றோ விளம்புவதெனப் பணிந்தான்.” “தேடருஞ் சிறப்பின் மிக்க திருவிடை மருதினெல்லைக் காடிடை நரிகள் விட்ட கடுங்குரல் ஓசை கேட்டுப் பீடுடை இறைவன் தன்னைப் பேசரும் விருப்பத்தோடும் பாடிய வென்று தென்னன் பல்பெரும் படாம் கொடுத்தான்.” “நேசமார் தேவிதன்னை நின்னுடை யடிமைக்கா மென்று ஆசைகூர்ந் தளித்தவ் வேந்தன், வாவியில் தவளை பல்கால் தேசுற ஒலிப்பக் கேட்டுச் சிவனையே பாடிற்றென்று காசொடு பொன்னும் மின்னக் கலந்து தூவினன் கசிந்து.35” வரகுண பாண்டியனுடைய இந்தச் சிவபக்தியைப் பட்டினத்துப்பிள்ளையார் மிக அழகாகக் கூறுகிறார்: “வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையில் கட்விழ்ப் பித்தும், ஓடும் பன்னரி ஊளைகேட்ட டரனைப் பாடின வென்று படாம்பல அளித்தும், குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் தன்னை ஏத்தின என்று காசும் பொன்னும் கலந்து தூவியும், வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளை தின்னக் கண்டு பிடித்தலும் அவன் இப்பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும், மருத வட்டத் தொருதனிக் கிடந் தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்மித் தலையும் கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத் திரந்தும், கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்தன என்று நாய்க்கட்டம் எடுத்தும், காம்புகுத்து உதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும், விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும்”36 இவ்வாறு, வரகுணபாண்டியன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான் என்று புராணங்கள் கூறுகின்றன. பாணபத்திரர் வரகுணபாண்டியன் அவையில் பேர்போன இசைப்புலவராக இருந்தவர் பாணபத்திரர் என்பவர். இவருடைய வரலாற்றை இந்நூல் இசைக்கலை என்னும் பகுதியில் காண்க. பாணபத்திரரும் சிறந்த சிவபக்தர். இவர்பொருட்டுச் சிவபெருமான் சாதாரி பாடின திருவிளையாடல், திருமுகங்கொடுத்த திருவிளையாடல், பலகையிட்ட திருவிளையாடல்களைச் செய்தருளினார் என்று திருவிளையாடற் புராணங்களினால் அறிகிறோம். மாணிக்கவாசகர் பாண்டி நாடிலே திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். அவருக்குப் பிள்ளைப் பருவத்தில் இடப்பட்ட பெயர் வாதவூரர் என்பது. இவர் இளமைப் பருவத்திலேயே பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் மொழிக் கல்வியை நன்கு கற்றவர் என்பது இவர் பிற்காலத்தில் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களிளிலருந்து தெரிகிறது. இவர் தக்க வயதடைந்தபோது பாண்டிய அரசன் இவரைத் தன்னுடைய அமைச்சராக நியமித்தான்; இவருக்குத் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டப் பெயரும் அளித்தான். பாண்டியனுக்குக் குதிரைப்படை தேவையாக இருந்தது. குதிரைகள் வாங்கும் பொருட்டுப் பெருந்தொகையான பொருளைத் தென்னவன் பிரமராயரிடம் கொடுத்துத் துறைமுகத்திற்கு அனுப்பினான் பாண்டியன். அப்பொருளைக்கொண்டு குதிரைகள் வாங்கச் சென்ற அமைச்சர், பெருந்துறை என்னும் துறைமுகத்திற்குச் சென்றார். சென்றவர் அங்குக் குருத்த மரத்தடியிலே மாணாக்கர் சூழவீற்றிருந்த ஒரு ஞானா சிரியரைக் கண்டார். கண்டு அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். தாம் வந்த காரியத்தை மறந்து பக்தியில் ஈடுபட்டுத் தம்மிடமிருந்த பெரும் பொருளை யெல்லாம் சைவத் திருப்பணிக்குச் செலவு செய்தார். குதிரைகள் வந்து சேராதபடியினாலே பாண்டியன் திருமுகம் எழுதி அனுப்பினான். அதனைக் கண்ட அமைச்சர் மதுரைக்குச் சென்று, குதிரைகள் வந்து சேரும் தேதியை அரசனுக்குச் சொன்னார். குறித்த நாளில் குதிரைகள் வந்து சேரவில்லை. அரசன், சேவகரை ஏவிப் பொருளை அமைச்சரிடமிருந்து பெற்று வரும்படி கட்டளை யிட்டான். சேவகர் சென்று பொருள் தரும்படி வருத்தினார்கள். அமைச்சர் கடவுளை வேண்டினார். அன்று மாலை குதிரைத் திரள் பாண்டி நாட்டிற்கு வந்து சேர்ந்தது. பாண்டியன் மகிழ்ந்து அமைச்சரைத் துன்புறுத்தாமல் விட்டான். ஆனால், வந்த குதிரைகள் அன்று இரவிலேயே நரியைப் போல் ஊளையிட்டுக் கொண்டு ஓடி மறைந்தன. அதனை அறிந்த அரசன், அமைச்சர் மாயம் செய்து ஏமாற்றினார் என்று அவரை, கடும் வெயிலில் நிறுத்தியும் புளியம் வளாரால் அடித்தும் வருத்தினான். அப்போது, வைகை ஆற்றில் வெள்ளம் பெருகிவந்து ஊரை அழிக்கும் நிலையில் இருந்தது. அச்சமயத்தில் அரசன் வாதவூரரை விடுதலை செய்து விட்டான். வாதவூரர் திருப்பெருந்துறை முதலிய திருப்பதிகளுக்குச் சென்று திருவாசகப் பாக்களை அருளிச்செய்தும் திருக் கோவையாரை இயற்றியும் பக்தி செலுத்தினார். சிதம்பரத்தில் ஈழ நாட்டரசன் மகளான ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தார் என்றும் பௌத்தரை வாதில் வென்றார் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவர் திருவாக்குகள் மாணிக்கம் போன்றிருந்தபடியால் மாணிக்கவாசகர் என்னும் பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. பட்டினத்துப் பிள்ளையார், மாணிக்க வாசகரை பெருந்துறைப்பிள்ளை என்று கூறுகிறார். இவர், தமது முப்பத்திரண்டாவது வயதில் சிவகதியடைந்தார். இவர், அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் இருந்தவர் என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பரஞ்சோதி முனிவர் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர். பழைய திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றியது), வாதவூரடிகள் காலத்தில் இருந்த பாண்டியன் பெயரைக் கூறவில்லை. புதிய திருவிளையாடல் புராணம், வாதவூரடிகள் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் இருந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம், சரித்திர ஆராய்ச்சி, கால ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற நூல் அன்று. பெரும்பற்ற நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம், சரித்திர ஆராய்ச்சிக்கு உதவுகிறது. ஆகவே, சரித்திர ஆராய்ச்சிக்கு உதவாததும் தவறுகளை யுடையதுமான புதிய (பரஞ்சோதியார்) திருவிளையாடல், மாணிக்க வாசகரை அரிமர்த்தன பாண்டியன் காலத்தவர் என்று கூறுவது தவறானது. மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில் வரகுண பாண்டியனைக் கூறுவதால், அவர் அவ்வரசன் காலத்தவர் என்பதே பொருத்தமானதாகும். இந்நூலில், மாணிக்கவாசகர் காலஆராய்ச்சி என்னும் இணைப்பு காண்க. தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் காலத்திலே பதினாறு சைவ அடியார்கள் இருந்ததைக் கண்டோம். ஆகவே, அக்காலத்தில் சைவ சமயம் உயர்ந்தோங்கி இருந்ததென்பதும், பக்தி இயக்கம் நாட்டில் நன்கு வேரூன்றியிருந்ததென்பதும் தெரிகின்றன. *** அடிக்குறிப்புகள் 1. No. 847. S.I.I. Vol. VII. 2. நாட்டியத்தான் குடி 9. 3. பழமண்ணிப் படிக்கரை 9. 4. கருப்பறியலூர் 10. 5. நமக்கடிகளாகிய அடிகள் 9. 6. முடிப்பது கங்கை 9. 7. திருவாழ்கொளிபுத்தூர் 10. 8. நம்பி என்ற திருப்பதிகம் 9. 9. திருத்தினை நகர் 9. 10. தினைநகர் 9. 11. மறைக்காடு 9. 12. திருச்சுழியல் 9. 13. திருநாகேச்சரம் 10. 14. கோயில் 9. 15. P. 110. History of Tamil Language and Literature, 1959. 16. திருககோலக்கா 5. 17. திருநள்ளாறு 6. 18. திருநொடித்தான் = கயிலாயமலை. 19. நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 2. 20. தடுத்தாட்கொண்ட புராணம் 5. 21. திருவெண்ணெய் நல்லூரும், திருநாவலூரும் 11. 22. இவருடைய வரலாற்றை மானக்கஞ்சார நாயனார் புராணத்தில் விரிவாகக் காணலாம். 23. மானக்கஞ்சாற நாயனார் புராணம் 16, 17, 34, 35, 36. 24. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 30-42. 25. திருநாட்டியத்தான்குடி 10. 26. நாட்டு தொகை 11. 27. கற்குடி 10. 28. குறுகாவூர் 10. 29. நமக்கடிகளாகிய அடிகள் 10. 30. புகலூர் 11. 31. நள்ளாறு 10. 32. பனையூர் 10. 33. கழற்சிங்க நாயனாரை, இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன் என்று சிலர் கருதுகின்றனர். அக்கருத்துத் தவறானது என்று தோன்றுகிறது. தெள்ளாறெறிந்த நந்திவர்மனே கழற்சிங்க நாயனார் என்பதை இந்நூலில் வேறு இடத்தில் ஆராயப் பட்டிருப்பதைக் காண்க. 34. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடல். பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற்புராணம். வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம், பரஞ்சோதியார் திரு விளையாடற் புராணம். 35. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்: வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல் 23 - 29. 36. திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 28. பாண்டியர் குறிப்பு: தமிழ்நாடு சங்ககாலம் (அரசியல்) (1983) என்ற நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது. 1. பாண்டியர் பாண்டிய நாடு தமிழகத்தின் தென்கோடியில் கிழக்கே வங்காளக் குடாக் கடலையும், தெற்கே குமரிக் கடலையும், மேற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. யவனர் இம் மூன்று கடல்களையும் செங்கடல் என்றும் பொருட்பட எரித்திரையக்கடல்1 என்று அழைத்தனர். பாண்டிய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் உள்ளது. இராமேசுவரத்திற்கு வடபால் உள்ள கடற்பகுதி ‘பாக்’ கடலிணைப்பு என்றும், தெற்கிலுள்ள சிறு பகுதி ‘மன்னார் வளைகுடா’ என்றும் வழங்கப்படுகின்றன. இக் கடற்பகுதிகளைப் பெரிபுளூஸ் நூல் ‘ஆர்கலஸ்’2 என்றும், தாலமி ‘ஆர்கலிக் கடல்’ என்றும் குறிப்பிடு கின்றனர். இதனால் ‘ஆர்கலி கடல்’ என்னும் பெயர்3 இப் பகுதிக்கு வழங்கிய தாகக் கொள்ளலாம்.4 இப்போது இராமேசுவரம் இருக்கும் பாம்பன் தீவு முற்காலத்தில் பாண்டிய நாட்டோடு இணைந்திருந்தது. நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர் வந்து வாணிகம் செய்த காலத்தில் பெரும்புயல் ஒன்று அடித்து இந் நிலப்பகுதி கரைந்து தீவாக உருக் கொண்டது. ஆகையால், சங்க காலத்தில் இந்தத் தீவு பாண்டிய நாட்டோடு இணைந் திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ள இலங்கைத் தீவும் பாண்டிய நாடும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கிலும், கிழக்கிலும் அக்காலத்தில் நிலங்கள் இருந்தன. பின்னர் அவ்வப் போது தோன்றிய புயல்களினாலும், கடல் கொந்தளிப்பினாலும் கரைந்தும் சிதைந்தும் அந்நிலப் பகுதிகள் மறைந்துபோயின. இப்பொழுது இலங்கை என்று வழங்கப் பெறும் நிலப்பகுதி சங்க காலத்தில் ‘ஈழம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. இலங்கை தனியாகப் பிரிந்துபோன பிறகும், எஞ்சியிருந்த நிலப் பகுதிகளில் பல, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் முழுகிப் போயின. முழுகிப்போன பகுதிகளில் பல பாண்டியருடைய ஆட்சியில்இருந்தன. பாண்டிய அரசர்கள் அமைத்திருந்த தலைச்சங்கம். இடைச்சங்கம் என்ற இரண்டு தமிழ்ச் சங்கங்களும், கடலில் மூழ்கிப்போன நாட்டில் இருந்தன என்று பழைய செவிவழிச் செய்தி கூறுகிறது. சிலப்பதிகார மும், கலித் தொகையும், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரமும் பாண்டிய நாட்டின் தெற்கே பரவியிருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிப் போனதைப்பற்றிக் கூறுகின்றன.5 இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இச் செய்தியை வலியுறுத்துகிறது.6 அக் காலத்திலும் குமரித்துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் குமரித் துறையில் இருந்து இலங்கைப் பக்கமாக கடலில் இடையிடையே பாறைக்கற்கள் காணப்பெற்றதை மணிமேகலை கூறுகிறது.7 இந்திய நாட்டு மக்கள் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பிறகு குமரித் துறையிலும் நீராடினர். பாண்டிய நாட்டிற்குத் தெற்கே இலங்கை வரையில் இருந்து பின்னர் மூழ்கிப்போன நிலம் ‘லெமூரியா’ என்றும். ‘குமரிக்கண்டம்’ என்றும் கூறப்படுகிற பழங்காலப் பெரிய நிலப் பரப்பு அன்று. இப்பொழுது இந்தியப் பெருங்கடல் என்று கூறப் பெறுகிற பெரிய நிலப்பரப்பு மிகப்பழைய காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டம் முதல் ஆஸ்திரேலியா வரையில் பரந்த பெரிய நிலமாக இருந்தது என்றும், அதற்கு ‘லெமூரியா’ என்னும் பெயர் வழங்கிய தென்றும், பின்னர் அக்கண்டம் மறைந்துபோய் இந்தியப் பெருங்கடல் தோன்றியதென்றும் நிலப் பொதியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழங்காலத்தில் இருந்த லெமூரியாக் கண்டம் வேறு; சங்க காலத்தில் கன்னியாகுமரிக்கு அருகிலே இருந்து மறைந்து போன நிலப்பரப்பு வேறு. இவை இரண்டையும் ஒன்றாகக் கூறுவது கூடாது.8 மேற்கு எல்லைப் பகுதி சங்க காலத்துப் பாண்டிய நாடு மேற்குக் கரைப்பக்கத்தில் இப்போதைய தென்திருவாங்கூர் வரையில் பரவி இருந்தது. பொதிகை மலை நாடும், நாஞ்சில் நாடும் தென்திருவாங்கூர் வரையில் பாண்டிய நாட்டுடன் சேர்ந்திருந்தன. ஆய் என்னும் வேள் அரசர் பொதிகை மலை நாட்டை அரசாண்டார். பாண்டிய அரசர்களைச் சேர்ந்திருந்த ஆய்ச் சிற்றரசர்களின் நாடு, மேற்குக் கடற்கரை வரையில் விரிந்து இருந்தது. வடக்கு எல்லைப் பகுதி முதுகோடி (தனுஷ்கோடி) பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.9 தென்வெள்ளாறும் அதன் பகுதியாகிய கொடும்பாளூரும் பாண்டிய நாட்டின் வடஎல்லைகளாகும். கொடும் பாளூரையாண்ட குறுநில மன்னர்கள் இருங்கோவேள் என்பவராவர்.10 திண்டுக்கல் பாறையும், கோடைக்கானல் மலைகளும் பாண்டிய நாட்டின் வடக்கே இருந்தன. கோடைக்கானலில் தென்னவன் மறவனான கோடைப் பொருநன் பாண்டியருடைய சேனாதிபதியாக இருந்தனன்.11 பன்றிமலைகள் எனப்படும் வராக மலைகளும் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன. அரபிக் கடலை அடுத்திருந்த வேணாடு சங்ககாலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது. பாண்டிய நாட்டு மலைகள் இருங்குன்றம் இக் குன்றம் அக்காலத்தில் கீழ்இரணியமுட்ட நாட்டைச் சேர்ந் திருந்தது. ஓங்கிருங்குன்றம். கேழிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமால்குன்று. திருமால் இருஞ்சோலை, சோலைமலை முதலான சிறப்புப் பெயர்கள் இதற்கு வழங்கின. இம் மலையில் கண்ணன். பலராமன் ஆகிய இருபெருந் தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன.12 புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகள் இங்கிருந்தன.13 சிலம்பாறு அல்லது நூபுரகங்கை இம் மலையில் தோன்றிப் பாய்ந்தது. சுமார் 16 கி. மீ. நீளமுள்ள இம் மலைகளின் குகைகளில் பல சமண முனிவர்கள் வாழ்ந்தனர். திருப்பரங்குன்றம் சங்ககாலத்துப் புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற தெய்வம், திருப்பரங் குன்றத்து முருகனாகும். இக் குன்றத்தின் உச்சியில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் முனிவர்களின் கற்படுக்கை களும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளில் சங்க காலத்திய நல்லந்துவனார் பெயர் காணப்படுகிறது.14 ஆனைமலை சங்கச் செய்யுள்களில் ஆனைமலையைப்பற்றி ஒன்றும் சொல்லப் பெறவில்லை. எனினும் ‘சங்க கால எழுத்துகள் இம்மலையில் உள்ளன. பறம்பு மலை பாண்டிய நாட்டில் இருந்த இம் மலைக்குத் தலைவன், பாரி வள்ளலாகும். பொதிகை மலை பொதியில், பொதியம் என்று வழங்கப்பெறும் இம் மலைக்குத் தென்னவன் பொதியில், ஆய்பொதியில் என்னும் பெயர்கள் வழங்கப் பெறுவதால், இது பாண்டிய நாட்டு மலை என்பது தெளிவாகும். சங்கப் புலவர்களில் ஒருவராகிய அகத்தியர் பொதிகை மலையில் இருந்ததாகக் கூறப்படும் கதை கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. சிலப்பதிகாரத்தில் கூறப்பெறும் பொதியில் முனிவர் அகத்தியர் அல்லர். வடமொழியில் உள்ள பாகவத புராணத்தில் பொதிகை கூறுகிறதேயன்றி, அகத்தியர் தவம் செய்ததாகக் கூறவில்லை. கழுகு மலை மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்துள்ள இந்த மலையைப் பற்றிச் சங்கப் பாடல்களில் குறிப்புகள் இல்லை. எனினும் சங்க காலத்துக் கல்வெட்டுகள் இந்த மலையில் காணப்பெறும் சமணர் குகைகளில் உள்ளன. பாண்டிய அரசன் நெடுஞ்செழியன்பற்றியம் அவனது பகைவன் கடலன் வழுதிபற்றியும் அக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.15 ஆறுகள் வையை, சிலம்பாறு, பஃறுளி, குமரி ஆகிய ஆறுகள் பாண்டிய நாட்டில் பாய்ந்தன என்று சங்கப்பாடல்களால் அறிகிறோம். இவற்றுள் குமரியாறும் பஃறுளியாறும் கடலில் மூழ்கிப்போன நிலப்பகுதியில் வாய்ந்தன. வையையாற்றிற்கு வைகை என்னும் பெயரும் வழங்கியது. இவ்வாற்றின் தென்கரையில் மதுரை நகரம் இருந்தது. இந் நகரம் வட்ட வடிவமாக தாமரைப் பூப்போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நகரத்தின் கோட்டைச் சுவருக்கு வெளியே அதைச் சூழ்ந்திருந்த அகழியில் வையை நதியின் நீர் பாய்ந்தது.16 வையையில் திரு மருதந் துறை என்னும் இடத்தில் சங்ககாலத்து மக்கள் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தனர். சிலம்பாறு திருமாலிருஞ்சோலை மலையில் தோன்றிப் பாய்ந்தது.17 பஃறுளியாறு இது கன்னியாகுமரிக்குத் தெற்கிலிருந்த ஓர் ஆறு. கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன் கடல்கோளினால் மறைந்து போயிற்று. குமரியாறும் மேற்கூறப்பெற்ற கடல்கோளினால் மறைந்தது.18 துறைமுகப் பட்டினங்கள் சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் நிலைபெற்றிருந்த தொண்டி, மருஞ்கூர்ப் பட்டினம், கொற்கை, குமரி, விழிஞம் முதலிய துறை முகங் களைப்பற்றிச் சற்று விரிவாகக் காணலாம். இக்காலத்தில் தொண்டி என்ற துறைமுகங்கள் இரண்டில் ஒன்று மேற்குக் கரையில் சேர நாட்டிலும், மற்றொன்று பாண்டியநாட்டுக் கிழக்குக் கரையிலும் இருந்தது. கிழக்குக் கரையிலிருந்த தொண்டி, பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது. இத் துறைமுகத்தில் கிராம்பு, இலவங்கம், தக்கோலம், சாதிக்காய், கற்பூரம் முதலிய நறுமணப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பெற்றன.19 இத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் மறைந்து இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் சிற்றூராக இருக்கிறது. மருங்கூர்ப்பட்டினம் மருங்கை என்றும் வழங்கியது. இதற்கு மேற்கில் ஊணூர் என்னும் இடமும், அதைச் சூழ்ந்து மதிலும், அம் மதிலைச் சூழ்ந்து நெல் வயல்களும் இருந்தன.20 நெல் வயல்கள் மிக் கிருந்த ஊர் சாலியூர் இதற்கும் நெல்லினூர் என்னும் பெயர் பெற்றிருந்த ஊருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். நெல்லினூர்த் துறைமுகத்தில் பெரிய நாவாய்கள் தங்கிச் சென்றன. தாலமி என்ற யவன ஆசிரியர், ‘சாலோர்’ என்று குறிப்பிடும் இடம் சாலியூர் ஆகலாம்.21 கொற்கை, குமரி, விழிஞம் உலகப் புகழ்பெற்ற பாண்டி நாட்டுத் துறைமுகப்பட்டினம் கொற்கை யாகும். இத் துறைமுகம் ஒரு வளைகுடாவில் இருந்ததனால் முத்துக் குளிக்கும் இடமாகவும், சங்கு எடுக்கும் இடமாகவும் விளங்கியது. கொற்கையில் கிடைத்த முத்துகள் உலகப் புகழ் பெற்றவையாகும். சங்கப் புலவர்களும் இங்குக் கிடைத்த முத்துகளின் பெருமையைப் புகழ்ந் துள்ளளனர். கொற்கை, பாண்டிய இளவரசர்களுடைய இருக்கை யாகவும் திகழ்ந்தது. யவனர்கள் ‘கொல்கொய்’ என்று வழங்கிய துறை முகம் கொற்கையேயாகும்.22 கடல் கொண்ட கவாடபுரம் கொற்கையாக இருக்கலாம் எனச் சில அறிஞர்கள் கருதுவர். பாண்டிய நாட்டின் தென் கோடியில், கன்னியாகுமரிக்கருகில் குமரித்துறைமுகம் இருந்தது. இது துறைமுகமாகவும் புனித நீராடும் இடமாகவும் கருதப் பெறுகிறது. தமிழ் நாட்டவரும், மற்றையோரும் இங்குப் புனித நீராடுவதுண்டு. குமரித் துறைமுகத்திற் கருகில் குமரி என்னும் ஊரும், அங்கு ஒரு கப்பல் அமைக்கும் தொழிற்சாலையும் இருந்ததென்று யவனர்களுடைய குறிப்புகளிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டின் மேற்குக் கடற் கடற்கரையில் ஆய் நாட்டில் விழிஞம் என்னும் துறைமுகப்பட்டினம் இருந்தது. ஆய் நாட்டுக் குறுநிலமன்னர்கள் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் ஆவர். ஆய் நாட்டில் (எலங்கோன்) என்னும் துறைமுகம் இருந்ததென்று தாலமி என்னும் ஆசிரியர் கூறியுள்ளது விழிஞம் துறைமுகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.23 முற்காலப் பாண்டிய நாட்டு நகரங்கள் கடல்கொண்ட மதுரை கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த நிலப்பரப்பில் ஆதி மதுரை இருந்து பின்னர்க் கடலில் மூழ்கியது.24 இக்கடல்கோளுக்குப் பிறகு கவாடபுரம் பாண்டியர்களுடைய தலைநகராயிற்று. 25 இக் கவாடபுரத்தில்தான் இடைச்சங்கம் இருந்ததெனச் செவிவழிச் செய்தி கூறுகிறது. இரண்டாவது கடல்கோளில் இக் கவாடபுரம் அழிந்து போbற்று. கவாடபுரத்தில் முடத்திருமாறன் என்ற பாண்டிய அரசன் இருந்ததாகவும், அவ் வரசவையை யாற்றங்கரையில் மதுரை நகரத்தை அமைத்து அதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் எனவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.26 கூடல் நகர் கவாடபுரம் கடலில் மூழ்கியபிறகு கூடல் நகரம் பாண்டிய நாட்டின் தலைநகரமாயிற்று. இந் நகரம் தாமரை மலர்போல் வட்ட வடிவமாக அமைக்கப் பெற்றதென்றும், அம் மலரின் நடுவிலுள்ள பொகுட்டுப்போலப் பாண்டியனுடைய அரண்மனை இருந்ததாகவும், அரண்மனையைச் சூழ்ந்திருந்த தெருக்கள் தாமரை மலரின் இதழ்களைப் போலவும், அந் நகரத்தில் வாழ்ந்த மக்கள் மலரில் இருந்த மகரந்தப் பொடிபோல இருந்தனர் எனவும் கூறப்பெறுகிறது.27 மதுரை நகரத்தைச் சூழ்ந்து மூன்று மதில்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. கோட்டை மதிலுக்கு வெளியே மிளைக்காடு நிறைந்த காவற்காடு இருந்தது. மிளைக் காட்டைச் சூழ்ந்து அகழி இருந்தது. கோட்டை வாயிலின் மேலே பாண்டியருடைய கயற்கொடி பறந்தன. கையில் பந்து ஏந்திய பெண் பாவை உருவங்கள் கோட்டை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்தன. கூடல் நகரத்திற்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது.28 கோட்டை வாயிலில் யவன வீரர்கள் காவல் புரிந்தனர். அவர்களுடைய தோற்றம் அஞ்சத்தக்கதாக இருந்தது.29 தாலமி ‘மதௌர’ என்னும் பெயரால் இந் நகரைச் சுட்டியுள்ளார். மதுரை நகரக் கோட்டையைப் பகைவர்களிட மிருந்து காப்பாற்றுவதற்காக மதிலின்மீது போர்க்கருவிகள் வைக்கப் பட்டிருந்தன.30 மதுரைக்கு அஅருகில் மோகூர் இருந்தது. பிற்காலத்தில் இது 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் எனப் பெயர் பெற்றது. பாண்டிய மன்னர்களின் படைத்தலைவனாகிய பழையன் மாறன் இவ்வூர்ப்பகுதியின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இவனது காவல்மரமாகிய வேம்பு, இவ்வூரில் ஓங்கி வளர்ந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் பழையனை வென்று இதனை வெட்டிச் சாய்த்தான். தங்கால் என்னும் ஊர் திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ளது. இது திருத்தங்கால் என்றும் அழைக்கப்பெறுகிறது. தங்கால் பொற் கொல்லன் வெண்ணாகனார், தங்கால் ஆத்திரேயன், செங்கண்ணனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அலைவாய் எனபப்டும் திருசிசெந்தில் பாண்டிய நாட்டின் கீழைக்கரை ஓரத்தில் உள்ளது. சங்ககாலம் முதல் இங்கு முருகன்கோயில் ஒன்று இருந்து வருகிறது. பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த மற்றோர் ஊராகும். இவ்வூரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையாருக்கும் சோழ நாட் டரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.31 இவை சங்க காலத்துப் பாண்டிய நாட்டின் எல்லைகளையும் அந் நாட்டில் சிறந்து காணப்பெற்ற மலைகள், ஆறுகள், பட்டினங்கள், நகரங்கள் ஆகியவற்றையும்பற்றிச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிவனவாகும். இனி, அக்காலத்துப் பாண்டிய மன்னர்களைப் பற்றி ஆராய்வோம். பாண்டிய மன்னர்களின் குலம்32 1. அயலகக் குறிப்புகளால் அறியப்படும் பாண்டிய மன்னர்கள் பாண்டிய மன்னர்களைப்பற்றிய வரலாறு தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கிடைக்கப்பெறவில்லை. அயல் நாட்ட வருடைய குறிப்புகளைக் கொண்டு சில பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை அறியமுடிகிறது. இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங் களில் குறிப்புகள் இல்லை. கி.மு. நான்காம் நூற்றாண்டுப் பாண்டியன் இலங்கை நாட்டின் முதல் அரசனான விசயனுக்குப் பெண் கொடுத்த பாண்டியன் ஒருவனைப்பற்றித் தீபவம்சம், மகாவம்சம் ஆகிய இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. விசயன், தன்னுடைய 700 தோழர்களோடு வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, அங்கு அரசு செலுத்தி வந்த இயக்கர் என்னும் இனத்தாரை வென்று, தனது அரசை நிறுவீனான். விசயனுக்கு முடிசூட்ட விரும்பிய அரசன் அவனது புதல்வியை மணம் பேசித் திருமணம் செய்வித்தனன். ஆனால், விசயனுக்கு மகட்கொடை செய்த பாண்டிய அரசனுடைய பெயர் இவ் வரலாற்று நூல்களில் குறிப்பிடப் பெறவில்லை. மற்றும் விசயனுக்குப் பாண்டியன் மகளைத் திருமணம் செய்வித்த அவனுடைய 700 தோழர்களும் பாண்டிய நாட்டுப் பெருங்குடியிலிருந்து மகளிரை மணந்து கொண்டனர் என்றும் இந் நூல்கள் கூறுகின்றன. மணமகளான பாண்டிய குமாரியையும், மற்றும் பிற மணமகளிரையும் படைச் சிறப்புடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அவர்களோடு தன் நாட்டிலிருந்து கொல்லர். தச்சர், உழவர், குயவர் முதலான பதினெட்டு வகையான தொழிலாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆயிரவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இலங்கை மன்னனாகிய விசயன் தன்னுடைய மாமனாராகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு இலட்சம் பொன் பெறுமானம் உள்ள முத்துகளைக் காணிக்கையாக அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிகழ்ச்சிகள் கி.மு. நான்காம் நூற்றாண்டில் நடந்ததாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இச் செய்திகளை உறுதி செய்யக்கூடிய சான்றுகள் தமிழ் நாட்டில் கிடைக்கவில்லை. இலங்கை மன்னன் விசயனுக்கு மகட்கொடை அளித்ததைத் தவிர, அப் பாண்டிய மன்னனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. பாண்டிய அரசி சந்திரகுப்த மௌரியருடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 304-ல் செலியூகஸ் நிகேட்டாருடைய தூதனாகப் பாடலிபுத்திரத்தில் இருந்த மெகஸ்தனீஸ் தாம் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு பெண் ஆட்சி செய்தாள் என்று கூறியுள்ளார். அவளது பெயர் தடாதகைப் பிராட்டி என்று தமிழ்ப் புராணங்கள் கூறினாலும் அவளுடைய சரியான பெயர் தெரியவில்லை. கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகன் தனது பாறைக் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய அரசர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான்.33 தன்னுடைய தருமத்தை மக்களிடையே பிசாரம் செய்யவும். மக்களுக்கும் விலங்குகளுக்கும் உதவி செய்வதற்கும் பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பெற்றதாகக் கூறி யுள்ளான். இக் கல்வெட்டுகள் பாண்டியர்கள் என்று குறிக்கின்றன வேயன்றிக் குறிப்பிட்ட அரசனுடைய பெயரைக் கூறவில்லை. கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் ஏறத்தாழக் கி. மு. 185 இல் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்து தமிழ் நாட்டு மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து பொன், மணி, முத்துகள் முதலியவற்றைப் பெற்றான் என்று கூறும் அத்திகும்பா கல்வெட்டிலும் பாண்டிய மன்னனுடைய பெயர் குறிப்பிடப்பெறவில்லை. ஆகையால், இயற்பெயர் தெரியாத இந்தப் பாண்டிய அரசனும் அரசியும் அயலகக் குறிப்புகளால் அறியப்படும் அரச அரசியர் ஆவர். 2. செழியன் என்னும் பெயருடைய அரசர்கள் செழியன் இப் பெயர் பொதுவாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டுவதாகும். தெளிவாக அறியப்பெறும் செய்திகளின் அடிப்படையில் சமணரைப் பேணியவன், ஆரியப் படை கடந்தவன். தலையாலங்கானத்துச் செருவென்றவன் ஆகிய மூவரைக் காலவரிசைப்படக் கூறலாம். எனினும், இவர்களது ஆட்சிக் காலங் களுக்கு இடையில் நிலவிய நிகழ்ச்சிகளைப் பற்றியோ அரசர்களைப் பற்றியோ தெளிவாக அறியமுடியவில்லை. சமணரைப் பேணிய நெடுஞ்செழியன் இவனைப்பற்றிய செய்திகள் மீனாட்சிபுரம் தாமிழிக் கல் வெட்டுகளால் அறியப்பெறுகின்றன. வானநூல் அறிஞரான நந்தி என்னும் சமணப் பெரியாருக்கு, இந்த நெடுஞ்செழியன் மலைக் குகையில் கற்படுக்கைகளைச் சமைத்துக் கொடுத்தான் என்ற செய்தியை இக் கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும், இக் கல்வெட்டில் கடலன் வழுதி என்னும் பெருந்தச்சனைப்பற்றியும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத் தச்சன் கற்படுக்கை களின் தரையைச் செம்மைப்படுத்தினான். சடிகன், இளஞ்சடிகன் ஆகிய இருவருடைய பெயர்களும் இக் கல்வெட்டில் காணப் பெறுகின்றன.34 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப் பெறுகிறது. இப் பாடல் கல்வியின் சிறப்பைச் சித்திரிக்கிறது. இதில் அக்காலத்திய நான்கு வருணங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்த குறிப்பும் காணப் பெறுகிறது.35 கோவலனைக் கொலைசெய்தவன் ‘வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்’36 என்று குறிப்பிடப்படுகிறான். இவ்வாறு குறிப்பிடப்பெறும் ‘ஆரியப் படை கடந்த’ என்னும் தொடரும் புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடும் ‘ஆரியப்படை கடந்த’ என்னும் தொடரும் ஒன்றாக அமை வதால் இவ்விருவரும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இவனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இவனது வரலாற்று நிகழ்ச்சிகளே என்று கூறலாம். வார்த்திகனைச் சிறையிட்டது சோழநாட்டில் பராசரன் என்னும் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவன் சேரஅரசன் ஒருவன் மறையவன் ஒருவனுக்கு வீடுபேறு கொடுத்த செய்தியைக் கேள்விப்பட்டு (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) அவனைத் தானும் நேரில் கண்டு பரிசில் பெற்றுத் திரும்பினான்; வழியில் தங்கால் என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் தங்கி இளைப் பாறினான். அப்போது பார்ப்பனச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பராசரன் தன்னோடு வழுவின்றி வேதம் ஓதுபவர்க்கு ஒரு பரிசு நல்குவதாகக் கூறினான். அவ்வூரில் வாழ்ந்த வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் வழுவின்றி வேதம் ஓதக் கேட்டுத் தன்னுடைய முத்துப் பூணூலை அச் சிறுவனுக்கு அளித்தான். ஏழை வார்த்திகன் மகனின் மார்பில் விலையுயர்ந்த முத்துப் பூணூலைக் கண்ட அரசு காவலர் அரண்மனையில்திருடிய குற்றம் சாட்டி வார்த்திகனைச் சிறையிலிட்டனர். வார்த்திகனின் மனைவி கார்த்திகை தன் மகனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமையை ஐயை கோயிலில் முறையிட்டு அழுதாள். ஐயைத் தெய்வம் தன் கோயிற் கதவுகளை அடைத்துக் கொண்டது. தன்னாட்சி யில் கொடுங்கோன்மை நிகழ்ந்துள்தோ என வினவிப் பாண்டியன் ஆராய்ந்தபோது, காவலர் வார்த்திகனுக்கு உண்டாக்கிய துனபத்தைக் கூறினர். மன்னன் வார்த்திகனை வருவித்து அவனிடம் மன்னிப்பு வேண்டினான். ஐயை கோயில்கதவு திறந்து கொண்டது. இங்குக் குறிப்பிடப்படும் மன்னனுடைய பெயரும் ஆரியப்படை கடந்த நெடுட்ஞசெழியன் என்று கருதத்தக்கது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மதுரைநகர் (அரண்மனை) அழியும் என்ற நிமித்திக வாக்கு மக்களிடையே நிலவி வந்தது.37 அரியணையில் அமர்ந்த படியே இறந்துபோனமையால் இந்தப் பாண்டியன் அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். வார்த்திகன் நிகழ்ச்சியில், அறியாத மக்களின் சொல்லைக் கேட்டு, இவன் கொடுமை செய்தது போலவே கோவலன் நிகழ்ச்சியிலும் அரண்மனைப் பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு இவன் கோவலனைக் கொன்றுவிடச் செய்கிறான். முனனர்ச் சிறையில் இருந்து விடுதலையால் அப் பிழை பொறுக்கப் பட்டது. இப்பொழுது கொலையுண்ட உயிருக்கு ஈடாகத் தன் உயிரையே கொடுக்கவேண்டிய நிலை நேர்ந்துவிடுகிறது. தன் தவற்றினை உணர்ந்தபோது, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர்துறந்தான். பாண்டி மாதேவியும் கோவலன் கொலைக்கு ஒருவகையில் காரணமாகயைhல் கணவனுடன் தானும் மாண்டு செங்கோலை நிலை நாட்டுகிறாள். ஆரியப்படையை வென்றது தமிழ்நாட்டுத் தெற்கிலிருந்த நிலப்பகுதியைக் கடல் கொண்டமையால் தமிழர், தம் நாட்டுப் பரப்பை வடக்கில் விரிவாக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆரியரும், தெற்கில் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர். இந்தப் போட்டியில் நிகழ்ந்த போர்களில் நெடுஞ்செழியன் ஆரியப் படைகளை வென்றிருத்தல் வேண்டும். ஆகையால், இவனுக்கு ‘ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்’ என்னும் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இங்குச் சுட்டப்படும் ‘ஆரியர்’, தொடக்க காலப்பல்லவராக இருத்தல் கூடும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அப்போரில் ஏழு அரசர்களை வென்றவன் ஆவான்; வென்வேற் செழியன் என்றும் ஒரு பாடலில் குறிப்பிடப்படுகிறான்.38 இப் பாடல் பாண்டியன் நெடுஞ்செழியன்மீது பாடப்பட்டதாகக் குறிப்பிடப் படுகிறது.39 எனவே, ‘வென்வேற் செழியன்’பாண்டியன் நெடுஞ் செழியன்’ ஆகிய பெயர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டு கின்றன. இப் போரில் ஏழு பேரை வென்ற அரசனைப் ‘பசும்பூட் செழியன்’ என்று குறிப்பிடப்படும் அரசனும் இவனே எனத் தெரிகிறது.40 வென்வேற் செழியன் என்னும் பெயர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையில் அரியணை ஏறிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரை நினைவுபடுத்துகிறது.41 இவன் தொடக்கத்தில் கொற்கை கோமான் என்றும், மதுரையை ஆண்ட அரசன் என்றும் குறிப்பிடப் படுகிறான்.42 கொற்கையில் ஆட்சியைத் தொடங்கிய இவன் ‘கடுந்தேர்ச் செழியன்’ என்றும், ‘தென்புலங் காவலர் மருமான்’ என்றும் குறிப்பிடப் படுகிறான். மற்றொரு பாடல் ‘இயல்தேர்ச் செழியன்’, ‘நெடுந்தேர்த் தென்னவர் கோமான்’ எனவும் குறிப்பிடுகிறது.43 தேர் அடைமொழியும், தென்னர் குடித் தலைமையும் சேர்ந்து மேலே கண்ட கருத்துகளை உறுதிப் படுத்துகின்றன. மற்றும் ‘கொடித்தேர்’ என்னும் அடைமொழியாலும் சிறப்பிக்கப் படுகிறான்.44 அடுபோர், வெம்போர், மறப்போர், நெடுந்தேர், கடுந்தேர், இயல்தேர், கொடித்தேர், திண்டேர் முதலிய சொற்கள் தலையாலங்கனாத்துச் செருவென்ற பாண்டி யனைக் குறிக்கின்றன எனக் கூறலாம். வெற்றிவேற் செழியன் என்பதும் இவனையே உணர்த்தியது என்றும் நினைக்கலாம். நாடு தொடக்க நிலையில் இவன் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்திருந்த நிலப்பரப்பை ஆண்டு வந்தான். கொற்கையை அடுத்த கடலில் முத்து எடுக்கப்பட்டது. அந்தக் கடற்பகுதியும் இவனாட்சிக்கு உட்பட்டிருந்தது.45 தென்னர் கோமான் என்றும், தென்புலம் காவலர் மருமான் என்றும் இவன் கூறப்படுவதால் தென் பாண்டிநாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததெனத் தெரிகிறது. ஆலங்கானப்போர் இவனது இளமைப் போர் எனத் தெரிய வருவதால் அப் போருக்குப் பின்னர், இவன் தன்னாட்டின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான் எனத் தெரிகிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இன்மையால், பாண்டிய நாடு மழை வளங்குன்றி நலிவுற்றது.46 இந் நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.47 பின்னர்த்தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல்நகரைக் கைப்பற்றி அரச னானான்.48 பின் இவன் எவ்வியை வென்று அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றினான். வேளிரை வென்று முத்தூற்றுப் பகுதியைக் கைப்பற்றினான். கொங்கர்களை அவர்களது நாட்டைவிட்டுத் துரத்தினான். சேர அரசனுடைய முசிறியையும் கைப்பற்றினான். இவ் வகையில் இவனது நாட்டுப் பரப்பு விரிவடைந்தது. இவற்றால் அள்ளூர், சிறுமலை முதலிய பகுதிகள் இவனது ஆட்சிக்குட்பட்டன.49 போர்கள் ஏழு அரசர்கள் ஒருங்குகூடித் தலையாலங்கானம் என்னு மிடத்தில் இந்த நெடுஞ்செழியனைத் தாக்கினர்.50 சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஏழு அரசர்கள் இந்தக் கூட்டுக் குழுவிலிருந்த பகையரசர் களாவர்.51 இப் போர் நடந்தபோது நெடுஞ்செழியன் மிகவும் இளைஞனாக இருந்தான் என்று தெரிகிறது.52 இந்தப் போரைப்பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களில் குறித்துள்ளனர். வேற்படையின் துணைகொண்டு அவன் வெள்ளிபெற்றதுபற்றியும், பிற அரசர் துணையின்றிப் போரிட்டு வென்றது. போருடை அணிந்த வீரர்கள் பேரெண்ணிக் கையில் வந்து தாக்கியது, கிணை முழக்குடன் ஒரு பகலிலேயே ஆரவாரமின்றி அடக்கத்துடன் திறமையாகப் போரிட்டது. தலையாலங்கானப் போரின் தொடர்ச்சியாகப் பகைவர்களைத் துரத்தியடித்து அவர்களுடைய அரண்களைத் தாக்கும் போரில் ஈடுபட்டது. கூலிப்படையின் துணையால் பகைவர் நாடுகளைச் சூறையாடியது. திங்கள் தோன்ற ஞாயிறு மறைந்ததுபோல அவர்களை வென்றது முதலான செய்திகள் கூறப் பெற்றுள்ளன. பகை மறவரின் மூதிற் பெண்கள் அழுதரற்ற வென்று, ஒரு பகலில் வெற்றிபெற்றுப் பகைவரின் முரசு, குடை முதலியவற்றைக் கைப்பற்றிக் களவேள்வி செய்த வீரச் செயல்களையும்பற்றி மேற்கூறப் பெற்ற புலவர்கள் கூறியுள்ளனர். இப் புலவர்களில், இடைக் குன்றூர் கிழார், கல்லாடனார், குடபுலவியனார், நக்கீரர், வெங்கண்ணியார், மாங்குடி மருதனார் முதலியோர் முக்கிய மானவர் ஆவர். ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியன் உழிஞைப் பூச்சூடிப் போரிட்டான் என்று கூறப்பட்டுள்ளது.53 இவ்வகைப் போர் பகைவரின் கோட்டையைத் தாக்கும் போர்முறை என்பதை நாம் அறிவோம். இதனால், நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தை முதலில் தாக்கினான் என்பதும், அத் தாக்குதலை முறியடிக்கவே ஏழு அரசர்கள் ஒன்று சேர்ந்தனர் என்பதும் தெரியவருகின்றன. அப் போரில் நெடுஞ் செழியனை எதிர்த்த எழுவரில் ஐவர் குறுநில மன்னர்கள், எஞ்சிய இருவர் முடியுடை வேந்தர்கள் ஆவர். நெடுஞ்செழியனை எதிர்த்த சேரஅரசன் இன்னான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சேரல் என்று அவனது பெயர் பொதுவகையால் சுட்டப் பெற்றுள்ளது. சேரல் என்னும் பொதுப் பெயருடன் நெடுஞ்சேரலாதன், நார்முடிச்சேரல், அந்துவஞ்சேரல், மாந்தரஞ்சேரல், பெருஞ்சேரல், இளஞ்சேரல் ஆகிய பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் ஆதன் என்னும் பின் அடையோ, இளமை, பெருமைப் பண்பை உணர்த்தும் முன் அடையோ இன்றிக் காணப்படும் அரசர்கள் நார்முடிச் சேரல், குட்டுவன்சேரல், மாந்தரஞ்சேரல் என்னும் மூவரேயாவர். இந்த மூவரில் மாந்தரஞ்சேரல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையி லிருந்து தப்பிச் சென்றான் என்று ஒரு பாடலில் கூறப்படுவதால், மேற் கூறப்பட்ட போரில் இந்தப் பாண்டியனை எதிர்த்துத் தோற்றவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையே என்று நாம் கருதலாம். இவன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற செயல், குழியில் அகப்பட்ட யானை, குழியைத் தூர்த்துக் கொண்டு தப்பிச் சென்றது போல் அமைந்திருந்தது என்று கூறப்படுவதால், சிறையில் அடைக்கப் பட்டான் என்பது தெளிவாகிறது. நெடுஞ்செழியனை எதிர்த்த சோழன் இவன் பெயர் செம்பியன் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் வழியில் வந்தவன் எனலாம். இச்செய்தியின் விளக்கத்தைச் சோழர் வரலாற்றில் நாம் கண்டோம். கடற்போர் தலையாலங்கானத்துப் போர் நெடுஞ்செழியனுடைய இளமைக் காலத்தில் நடந்த தாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையை ஆண்ட அரசன் இன்னான் என்பது தெளிவாக விளங்கவில்லை. பசும்பூண் பாண்டியன் போன்ற அரசர்கள் இடைக் காலத்தில் அரசாண்டு உட்பூசலில் மாண்டுபோய், நாடு அரசனின்றி இருந்தது எனக் கருதலாம். இந்நிலையில் நெடுஞ்செழியன் கூடல் நகரத்தைத் தாக்கிப் பாண்டிய நாட்டின் அரியணையைக் கைப்பற்றி யிருக்க வேண்டும்.54 நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டினைக் கைப் பற்றுவதைச் சோழனும் சேரனும் எதிர்த்துள்ளனர். இவர் களுடைய முயற்சி வெற்றிபெறாது. தங்களுடைய முரசங்களைப் போர்க்களத்திலேயே போட்டு விட்டு ஓடினர். நெடுஞ்செழியன் பெருவெற்றி பெற்றான்.55 எவ்வி, வேளிரோடு போர் நெடுஞ்செழியன் கொற்கையிலிருந்து மதுரைக்குத் தலை நகரை மாற்றிக் கொள்ளவே, பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் கிழக்குப் பகுதியில் மிழலைக் கூற்றத்தை ஆண்டுவந்த எவ்வி என்ற குறுநில மன்னன் பாண்டியனுக்குக் கப்பம் கட்டாது ஆளத்தொடங்கினான் போலும். இதனால், நெடுஞ்செழியன் எவ்வியைத் தாக்கி நல்லூரைத் தன்னகத்தே கொண்ட அவனது மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அக்காலத்தில் முத்தூறு என்னும் பகுதியில் வாழ்ந்த தொன்முது வேளிர் என்னும் குடிமக்கள், தம்முள் ஒன்று கூடி நெடுஞ்செழியனை எதிர்த்தனர். நெடுஞ்செழியன் அவர்களை வென்று, அவர்களது முத்தூற்றுகூற்றத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான். பல்குட்டுவரை வென்றது சேர அரசர்களில் இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவர் ஏறு என்று கூறப் பெறுகின்றான். இவனது தந்தை குட்டுவன் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறான். எனவே, பொறையர் குடியைச் சேர்ந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறைக்குக் குட்டுவர் குடியைச் சேர்ந்த சிற்றரசர்கள் உறுதுணையாய் விளங்கி வந்தனர். நெடுஞ்செழியன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தாக்கிய பொழுது பல குட்டுவர்களுடன் போரிட நேர்ந்தது. முசிறிப்போர் பல்குட்டுவரை வென்றதன் காரணமாக, கீழைச் சேரர் செல்வாக்கை ஓரளவு இவன் அடக்கிவிட்டான். அப்போது மேலைச் சேரர் இவனை எதிர்த்து நின்றனர். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல், குட்டுவன்கோதை என இருமக்கள் இருந்தனர். குட்டுவன் சேரல் பரணருக்குப் பணிவிடையாளாகக் கொடுக்கப் பட்டான். குட்டுவன் கோதையே நாட்டையாண்டு வந்தான்; தன் தந்தை செங்குட்டுவனுக்குப் பிறகு தொண்டி, வஞ்சி முதலிய இடங்களில் ஆட்சி புரிந்தான். குட்டுவன் கோதையின் துறைமுகப் பட்டினமாகிய முசிறியை நெடுஞ்செழியன் தாக்கி, அவனுடைய யானைப் படையை அழித்தான். குட்டுவன் கோதையும் தோல்வியுற்றான். இதனால் நெடுஞ் செழியன் பல குட்டுவரை வென்றவன் என்று பாராட்டப் பெற்றான். நெல்லினூர் கொண்டது பெருங் கப்பல்கள் வந்து தங்கி, வாணிகச் சிறப்புடன் விளங்கிய ‘நெல்லினூர்’ என்னும் ஊரையும் நெடுஞ்செழியன் கைப்பற்றினான். நெல் சிந்தம் என்னும் மேற்குக் கடற்கரைத் துறைமுகம் வாணிகத்தில் சிறப்புற்று விளங்கி, பாண்டியர்களுக்குரியதாய் விளங்கியது பற்றியும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நெல்லினூரையே அவர்கள் நெல்சிந்தம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நெல்லி னூரையே நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.56 குட்டுவரையும் முசிறியையும் வென்ற செய்திகளுக்கு இவ்வெற்றி தொடர்புடைய தாகிறது. முதுவெள்ளிலையும், முதுபொழில் மண்டிலமும் முதுவெள்ளிலை மருதநில வளமும் நெய்தல்நில வளமும் ஒருங்கமையப்பெற்ற ஓர் ஊர். இவ்வூரை நெடுஞ்செழியன் கைப்பற்றிக் கொண்ட பிறகு இவனது நல்லாட்சியில் மகிழ்ந்து அவ்வூர் மக்கள் அவனைப் பெரிதும் பாராட்டினர்.57 முதுபொழில் மண்டிலம் என்பது சிறப்பாக ஓர் இடத்தைக் குறிப்பது அன்று. நாவலந் தன் பொழிலாகிய நாடு முழுவதுமே முதுபொழில் மண்டியலமாகும். இவன் பல நாடுகளை வென்று தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்த செயலே முதுபொழில் மண்டலம் முற்றியதாகக் கூறப்படுகிறது.58 ஆட்சி குளம் வெட்டி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்க வேண்டும் என்று புலவர் ஒருவர் இவனிடம் அறிவுரை கூறினார்.59 இவரது அறிவுரைப் படி இவன் பெருங்குளம் என்னும் பெயருடைய குளத்தை அமைத்தான்.60 இவன் நான் மறைகள் கூறும் வேள்விகளைச் செய்தான்.61 அன்றியும் களச்சோறு வழங்கும் வேள்வியும் செய்தான்.62 இந்த வேள்விகள் பல நாடுகளை வென்றதன் நினைவாகச் செய்த அறக் கொடைகள் ஆகும். இந்த அறக்கொடைகள் வீரர்க்கும், பாணர் முதலானோர்க்கும், நான்மறைவல்ல அந்தணர்களுக்கும் வழங்கியவையாகும். புறநானூற்றுச் செய்யுளில் நம்பி நெடுஞ்செழியனைப்பற்றிக் கையறு நிலையில் பேரெயின் முறுவலார் என்ற புலவர் பாடியுள்ளார். நம்பி நெடுஞ்செழியன் போரில் ஈடுபட்டு உயிரிழந்தான். போர்க் களத்தில் இறந்த அவனுடைய தலைமாத்திரம் கிடைத்த நிலையில் பேரெயின் முறுவலார் பின்வருமாறு இரக்கம் கொண்டு பாடியுள்ளார். ‘நம்பி நெடுஞ்செழியன், சந்தனம் பூசி மலர்மாலையணிந்து உரிமை மகளிரைத் தழுவி மகிழ்ந்தான்; பகைவர்களை அடியோடு ஒழித்தான்; நண்பர்களுக்கு உயர்வளித்தான். தன்னைவிட வலிமை உடையவ ராயின் அவர்களிடம் வணங்குவதோ, தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்தவர்கள் முன்னிலையில் தன்னைப் புகழ்ந்துபேசிக் கொள்வதோ இவனிடம் காணமுடியாத பண்புகள். பிறரிடம் இரப்பதோ, இரந்தவர் களுக்குக் கொடுக்க மறுப்பதோ இவனிடம் கிடையாது. பல அரசர்கள் கூடியிருந்த சபையில் தலைமை தாங்கினான்; தாக்க வரும் படையை எதிர்க்கத் தான் முதலில் சென்றான்; பல படைகள் தன் முன் நிற்க மாட்டாது புறமிட்டு ஓடியதைக் கண்டு மகிழ்ந்தான்; குதிரைமீதும், தேர்மீதும், களிறுமீதும் ஊர்ந்து சென்று அந்தந்தப் படைகளின் தலைமையை ஏற்றுப் போரிட்டான்; பாணர்களின் பசியைத் தீர்த்தான்; மிகுதியாகக் குடிக்காமல், அளவோடு பருகி, கள் மயக்கம் கொண்டு பேசும் வழக்கம் இவனிடம் இல்லை. இத்தகைய நற்பண்புகள் உடையவனாக இருந்தான்.63 நம்பி நெடுஞ்செழியன் பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் அரசன் ஒருவன் சங்க காலத்தில் விளங்கினான்.64 நம்பி நெடுஞ்செழியன் என்ற பெயரை நோக்குகையில் இவனை அறிவுடை நம்பியின் மகன் என்று கருதலாம். 3. மாறன் என்னும் பெயருடைய அரசர்கள் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர்களான மருதன் இளநாகனாரும் நக்கீரரும் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் நேரில் கண்டு பாடியுள்ளனர்.65 இவனைப் பாடியுள்ள பிற புலவர்களை நோக்கும் போது இவன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சி புரிந்தவன் எனத் தோன்றுகிறது. நெடுஞ்செழியனுக்கும் இவனுக்கும் இருந்த உறவையும் நெடுஞ்செழியனுக்கு அடுத்து அரியணையில் அமர்ந்தான் என்பதையும் திட்டவட்டமாகக் கூற இயலாத நிலை உள்ளது. இவன் நெடுஞ்செழியனுடைய மகனா என்பது பற்றியும் கூறமுடியவில்லை. நெடுஞ்செழியன் மதுரையில் வேரரசனாக விளங்கியபோது இவன் கொற்கைப் பகுதியில் இருந்து நாடுகாவல் புரிந்து வந்தான் என்று கருதலாம். இவனை நேரில் கண்டு வாழ்த்திய புலவர் ஒருவர் செந்தில் கடற்கரையில் உள்ள மணலினும் மேலான பல காலம் இவன் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றார்.66 எந்த இடத்திலும் இவன் மதுரையில் இருந்து அரசாண்டான் என்று குறிப்பிடப்பெறவில்லை. பாண்டியப் பேரரசர்களின்கீழ் ஆண்ட அரசன் என்ற நிலையிலேயே இவன் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது. பிறர் நாட்டைக் கைப்பற்றும் போது அவர்களது வயல்களிலுள்ள விளைச் சல்களை வீரர்கள் கவர்ந்து கொண்டாலும் கொள்ளட்டும்; அவர்களது பேரூர்கள் எரியூட்டப்பட்டாலும் படட்டும்; பகைவீரர்களைக் கொன்றாலும் கொல்லட்டும். ஆனால், பகையரசர்களுடைய காவல்மரத்தை மட்டும் வெட்டவேண்டா என்று புலவர் ஒருவர் இவ்வரசனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரை இவன் போருக்கு எழுந்தபோது, போர் வேண்டா என்று தடுத்துரைத்த அறிவுரையாகலாம்.67 இவன் தாராள மாகக் கொடை வழங்கியதாகத் தெரியவில்லை. பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தியிருக்கக்கூடும். இவனது போக்கைக் கண்டித்துப் புலவர்கள் இவன் நோயின்றி வாழ்ந்தால் சரி என்று வாழ்த்தியுள்ளார்கள்.68 இவனது மனைவி கடவுள் சான்ற கற்பினை உடையாள்; சிறந்த செம்பொன் அணிகலன்களுடன் விளங்கினாள்; பெண்மைக்குரிய மடயைத் தன்மை கொண்டவள்.69 இவனுக்கு ஆண்மக்கள் சிலர் இருந்தனர். அவர்கள் கிண்கிணி அணிந்த காலுடன் விளங்கியதைக் கண்ட புலவர்கள் வாழ்த்தியுள்ளனர். காலைக் கதிரவன் போலவும், வளர்பிறை போலவும் இவன் வாழவேண்டும் என்று வாழ்த்தும் புலவர் ஒருவர் இவன் சினத்தால் எமனையும், வலிமையிற் பலராமனையும் புகழால் திருமாலையும், எண்ணிய செயலை முடித்தலில் முருகனையும் ஒத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார்.70 ‘பூந்தார் மாற’71 என்று இவன் கூறப்படுவதிலிருந்து இவரது மலர் மாலை அணிந்து விளங்கிய கோலத்தையும், ‘கடுமான் மாற’72 என்று கூறப்படுவதிலிருந்து இவனது குதிரைச் சவாரியையும் ‘திண்டேர் அண்ணல்’73 என்று கூறப்படுவதிலிருந்து இவன் தேரில் உலாவச் சென்ற காட்சியையும் நாம் உணரமுடிகிறது. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பெயர் இவன் இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் மாண்டதைத் தெரிவிக்கிறது. இலவந்திகை என்னும் சொல் தாமரைக் குளத்தை சூழ்ந்த சோலையாகும். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் இவனைப் பாடிய புலவர் வேறு எந்த அரசனையும் தமது பாடல் களில் குறிப்பிடவில்லை. ஆகவே, இவனது காலத்தை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் அல்லர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விருவரும் ஒருவராயின் இவரால் பாடப்பெற்ற இந்த நன்மாறன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் என்று கூறலாம். இவனது அகன்ற மார்பில் முத்தாரம் அணிந்திருந்தான். இவனது கைகள் முழந்தாள்வரை நீண்டு இருந்தன. பகைவர்களைக் காய்வதில் இவன் ஞாயிறு போன்றவன்; பொய் என்பதை முற்றிலும் வெறுத்தவன். இவனது இறுதிக்காலம் சித்திரமாடம் என்னுமிடத்தில் முடிவுற்றது. இஃது ஒரு மாளிகையின் பெயராகவோ, ஊர்ப் பெயராகவோ இருக்கலாம். முடத்திருமாறன் இவன் ககாடபுரத்தில் இருந்த இடைச்சங்கத்தைப் புரந்து வந்தான் என்றும், கபாடபுரம் கடல்கோளுக்கு இரையானபோது தப்பி மதுரைக்கு வந்து கடைச்சங்கத்தை நிறுவினான் என்றும் இவனைப்பற்றிச் செவிவழிச் செய்தி கூறுகிறது.74 சிறந்த புலவனாகவும் விளங்கிய இவனது பாடல்கள் இரண்டு சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவன் தனது நண்பனான குட்டுவன் என்னும் சேர அரசனைத் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளான். இவன் குடவரைப் பகுதிக்கு அரசன். குடவரை என்பதை மேற்குத் தொடர்ச்சிமலையாகக் கொள்ளலாம். நீரும் நிழலும் இல்லாத வழியில் பொருள் தேடச் செல்லும் தலைவன் தன் காதலியை நினைத்துக்கொண்டு கவல்வதாகவும், களவு வழியில் காதலியைப்பெறத் தலைவன் மின்னல் வெளிச்சத்தில் வழியை அறிந்து வரும் அச்சந்தரும் காட்சியையும் தனது இரு பாடல்களில் சிறப்பித்துப் பாடியுள்ளான்.75 மாலைமாறன் மாறன் என்று பாண்டியரை உணர்த்தும் சொல் இவனது பெயரில் உள்தால் இவனது வரலாற்றை இங்குக் கூறுகிறோம். மற்றபடி, இவன் ஒரு புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். இவனது பாடல் சங்கநூலில் இடம் பெற்றுள்ளது.76 களவு வழியில் கூடிய தலைவனை எண்ணி எண்ணி உருக்குலைந்த தன் நிலையைப்பற்றிக் கூடக் கவலைப்படாது, தலைவன் மீது பழிதூற்றுவார்களே என்று தலைவி ஒருத்தி வருந்துவதாக இவன் பாடியுள்ள பாடல் பெண்களின் பெருந்தகைமையைப் புலப்படுத்துவதாக உள்ளது.77 பழையன் மாறன் பழையன் என்னும் பெயர் கொண்ட இருவர் சங்ககால வரலாற்றில் காணப்படுகின்றனர். ஒருவன் மோகூர் மன்னன் என்ற முறையில் அறிமுகமாகிறான்.78 மற்றொருவன் ‘போர்’ என்னும் ஊரின் தலைவன். மோகூர்ப் பழையன் பாண்டிய அரசர்களுக்கு உறுதுணையாய் விளங்கியவன். போர்ப் பழையன் சோழர் படைத்தலைவன். வித்தை என்னும் இடத்தை ஆண்ட அரசன் ‘இளம் பழையன்’ மாறன் என்னும் பெயர் பெற்றுள்ளான்.79 மோகூர் அரசனைச் சேரன் செங்குட்டுவன் வென்றான். விந்தை அரசன் இளம்பழையன் மாறனை இளஞ்சேரல் இரும் பொறை வென்றான். போர் அரசன் பழையனை நன்னன் முதலான ஏழுபேர் கூட்டாகத் தாக்கிப் போரில் கொன்றனர். மாறன் என்றால் இவனையே குறிக்கும் அளவிற்கு இவனது பெயர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் பரவியிருந் தமையால் இவன், பெரும்பெயர் மாறன் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறான்.80 பாண்டியன், மோகூரின் ஆட்சிப் பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்திருந்தான்; கோசர் இவனது அரசவையைச் சிறப்பித்தனர்.81 இவனுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் கூடல் நகரில் ஒரு போர் நடந்தது.82 கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மதுரையில் வெற்றி பெற்ற செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தொடர்நிகழ்ச்சியை உய்த்துணர உதவி செய்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். கோவலனது கொலையால் இவன் தன் அரியணையி லிருந்து வீழ்ந்து இறந்தான். பிறகு பழையன் மாறன் மதுரையில் செல்வாக்குப் பெற முயன்றான்.83 அந்த முயற்சியில் சோழன் கிள்ளி வளவன் வெற்றி பெறவே, மதுரை சோழர் வசமாகிவிட்டது. பழையன் மாறன், பின் மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரலானான். சோழன் கிள்ளிவளவன் பசும்பூண் பாண்டியன் என்பவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாகச் சில காலம் ஆண்டுவரச் செய்தான். பசும்பூண் பாண்டியன் சோழருக்குட்பட்டு அவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு, நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். இந்நிலை பாண்டியரின் விடுதலையுணர்வைத் தூண்டி தன்னாட்சி பெறும் மனப்பான்மையை வளர்த்தது. இந்த உயர்வே வெற்றிவேற்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற நிலையில் நமக்கு அறிமுகமாகி மதுரையைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்ச்சியில் முடிந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வெற்றியில் சோழனும் சேரனும் தோல்வியுற்றத்தை அவனது வரலாற்றில் காணலாம். மதுரை நகரில் அரியணையில் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் அமர்ந்தபின் பழையன் மாறன் அவன் படைத் தலைவனாக விளங்கினான். மோகூர் ஆட்சிப் பொறுப்பும் அவனிடம் இருந்தது. கோசர் படையில் தலைவனாகவும் கோசர் குடிமக்களைத் தன் அரசவையில் கொண்ட மன்னனாகவும் இவன் விளங்கினான். மேற்கூறப்பெற்ற போரில் இவனது காவல்மரமான வேம்பு வெட்டி வீழ்த்தப்பட்டது. அம் மரத்தின் அடித்துண்டை வெற்றி பெற்ற செங்குட்டுவன் முரசு செய்து கொள்வதற்காகத் தன் தலைநகருக்கு இழுத்துச் சென்றான். போரில் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோன்பிற்காகக் களைந்த தலைமயிரைக் கொண்டு கயிறு திரித்து அந்தக் கயிற்றில் வெட்டிய வேப்பமரத்துண்டைக் கட்டி யானைகளில் பிணைத்து தன் தலைநகர்க்கு இழுத்துச் சென்றான். இந்தப் போரில் பழையன் மாறன் மாண்டிருக்கலாம்.84 சிறப்புகள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு இவன் பலபோர்களில் வெற்றி தேடிச் தந்திருக்கிறான். இதனைப் பாராட்டி நெடுஞ்செழியன் இவனுக்கு வேலைப்பாடு அமைந்த மாலை ஒன்றைச் சூட்டிச் சிறப்பித்தான்; மாறன் என்னும் பட்டத்தையும் அளித்தான்.85 பழையன் என்று பொதுப்பட வழங்கப்பட்டுவந்த இவன், இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பழையன் மாறன்’ என்று வழங்கப்பட லானான் என்பதைப் ‘பெரும்பெயர் மாறன்’ என்னும் தொடர் உணர்த்துகிறது. தோற்றம் - குடி ‘நெடுந்தேர் இழையணி யானைப் பெரும்பெயர் மாறன்’ என இவன் சிறப்பிக்கப் படுதலால், தேரிலும் யானையிலும் இவன் உலாப்போந்த காட்சி நமக்குக் காட்டப் படுகிறது. பழையன் இவனது பெயர். இவன் பழையர் குடியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இளம் பழையன் மாறன் இவன் ‘வித்தை’ என்னும் இடத்தையாண்ட அரசன். இவன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டுத் தோல்வியுற்றான்.86 பெயர் அமைதிகொண்டு பழையன் மாறனின் தம்பியாக இவன் இருக்கக்கூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இருவரும் மாறன் என்ற பட்டம் பெற்றிருப்பதும், சேர அரசர்களிடம் தோல்வியடைந்ததும் இக் கருத்திற்கு வலுவூட்டுகின்றன. 4. வழுதி என்னும் பெயருடைய அரசர்கள் ‘வழுதி’ என்பது பாண்டியர்க்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று. இச்சொல் ‘வழித்தோன்றல்’ என்னும் பொருளில் தோன்றியதாக எண்ண இடமுண்டு. இப் பெயரைக் கொண்ட அரசர்கள் சங்க காலத்தில் பலர் இருந்தனர். பெருவழுதி என்னும் பெயர்பெற்றுள்ள அரசர்கள் நால்வேறு அடைமொழிகளைக் கொண்ட நிலையில் காணப் படுகின்றனர். சிறப்பு அடைமொழிகளை நோக்கி, இவர்களை வெவ்வேறு அரசர்கள் என்று கொள்வதே பொருத்தமாக அமைகின்றது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வழுதி எனப்படும் அரசர்களுள் இவனே காலத்தால் முந்தியவ னாகக் காணப்படுகிறான்.87 இவனை வாழ்த்தும் புலவர் பஃறுளியாற்றின் மணலைக்காட்டிலும் பல்லூழி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.88 பஃறுளியாறு சங்ககாலத்திலேயே கடலால் கொள்ளப்பட்டது. எனவே, இவன் அந்த ஆறு கடலால் கொள்ளப்படுவதற்குமுன் வாழ்ந்தவன் என்று தெரிகிறது. ஆதலால், இவனைப் பிறரினும் பழமையானவன் என்று நாம் கொள்ளலாம். இவனைப் பாடிய எல்லாப் புலவர்களும் இவனை மட்டுமே பாடியுள்ளனர். இவர்கள் வேறு அரசர்களையும் பாடியிருந்தால் அவ்வாறு பாடப்பெற்ற அரசர்களின் காலத்தைக் கொண்டு இவ்வரசனுடைய காலத்தைக் கணிக்கக் கூடும். இவன் பஃறுளியாறு கடலோடு கலக்குமிடத்தில் நிகழ்ந்த விழாவில் கலந்துகொண்டான்.89 அவ் விழாவில் யாழில் வல்ல வயிரியர்களுக்குச் சொக்கத் தங்கத்தைப் பரிசாக வழங்கினான்.90 அத்துடன், தன் கோமகனையும் அவர்களுக்குப் பரிசாக அனுப்பி வைத்தான். அவன் ‘கடல்விழா நடத்தி மகிழ்ந்த நெடியோன்’ என்னும் பெயரினன்.91 கடல்விழா என்பது வணிகர்விழா. முதுகுடுமிப் பெரு வழுதியின் மகன் நெடியோன் ஆவான். இவன் ‘குடுமி தன்கோ’ என்று குறிப்பிடப்படுகிறான். முதுகுடுமியின் மகனான நெடியோனின் கால்வழித் தோன்றியவன்தான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.92 போர்கள் முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான். இமய மலைக்கு வடக்கிலுள்ள நாடுகளிலும், குமரி முனைக்குத் தெற்கிலுள்ள கடல் தீவுகளிலும், கீழைக்கடலிலும், மேலைக்கடலிலும் இருந்த தீவுகளிலும் இவனது புகழ் பரவியது.93 இவனிடம் கடற்படையும் யானைப்படையும் இருந்தனவாகக் கருதலாம். இவற்றைக் கொண்டு இவன் இந்த வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். தான் வெற்றிபெற்ற இடங்களில் கிடைத்த செல்வங்களைக்கொண்டு தன்னிடம் பரிசில் நாடி வருவோர்க் கெல்லாம் வாரி வழங்கினான். நல்வேள்ளி என்று சிறப்பிக்கப்படும் வேள்வியை இவன் செய்தான்.94 கள்ளும் கறிச் சோறும் அளித்தான், போரில் வெற்றிபெற உதவியவர் களையும் வெற்றி பெற்றபின் பாராட்டியவர்களையும் தானே அழைத்து, வேண்டிய பரிசில்களைக் கொடுத்துக் கொண்டாடும் வேள்வி, நல்வேள்வியாகும்.95 இந்த நல்வேள்வியில் நான்மறை முனிவரை இவன் பாராட்டாதது கண்ட புலவர் ஒருவர்96 மனம் வருந்தி நான்மறை முனிவர்க்குத் தலை வணங்கியும், சிவ பெருமான் நகர்வலம் வரும்போது தன் குடையைச் சாய்த்துப் பிடித்தும் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறினார். முதுகுடுமி, புலவர் அறிவுரையை ஏற்று அவர் விருப்பப்படி செய்தான். நான்மறை முறைப்படி யூபம் என்னும் வேள்வித் தூண்கள் பல நட்டான், நான்மறை வல்ல அந்தணர்களைக் கொண்டு பல வேள்விகளைச் செய்வித்தான்.97 இவ்விதம் பல வேள்விகளைச் செய்தமையால் இவன் ‘பல்யாகசாலை’ என்னும் அடைமொழியுடன் வழங்கப்பட்டான். புலவர்களுக்கும் பொற்றாமரைப் பூக்களைப் பரிசளித்துச் சிறப் பித்ததும், புலவர்களுக்கு யானைகளையும், தேர்களையும் பரிசில் களாக நல்கியதும் இவனது கொடைகளில் நினைவுகூரத் தக்கவை. பகைவர் நாட்டின் தேர் சென்ற தெருக்கள் எல்லாவற்றிலும் கழுதைகளைப் பிணைத்துத் திரியவிட்டதும். அறுவடை செய்யும் நிலையில் உள்ள விளைச்சல் வயல்களில் தன்னுடைய தேர்ப்படை யுடன் சென்று பாழாக்கியதும் இவன், தனது பகைவர்கள் நாட்டிற்குச் செய்த கொடுமையாகும். இஃது அக்காலப் போர் மரபாகக் கருதப் பட்டதுபோலும். முதுகுடுமி என்னும் இவனது பெயர் முதுமையை உணர்த்தும் நரைத்தலை முடி உடையவனாக இவன் விளங்கியதால் அமைந்திருக்கலாம். போரில் மிகுதியாகப் பழகியதால், இவனது மனைவிமார் ஊடல் கொண்டபோதும் அன்பாகப் பேசாமல் அடக்கு முறையைப் பின் பற்றி வந்தான். இதனால் மகளிர் சினந்தால், எதிராகச் சினங்கொள்ளக்கூடாது என்று புலவர் இவனுக்கு அறிவுரை கூறினார்.99 கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி100 இவனது பெயரை நமக்கு அறிவிப்பவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியரே ஆவர். அவர் ஓரிடத்தில் கடந்த என்னும் சொல்லாலும் மற்றோரிடத்தில் ‘தந்த’ என்னும் சொல்லாலும் இவனைக் குறிப்பிடுகிறார். கானப்பேர் எயில்பற்றியும், அதனை வேங்கைமார்பன் என்பவன் ஆண்டதுபற்றியும், காவற்காடு. காவல் சிற்றூர்கள், ஆழ்ந்த அகழி, உயர்ந்த மதில், முன் பூத்தன்ன ஞாயில் ஆகியவற்றைக் கொண் டிருந்த தன் கானப்பேர் எயில் கோட்டையைப் பறிகொடுத்துவிட்டு வேங்கைமார்பன் ஓலமிட்டு வருந்தியது பற்றியும் சங்கப் பாடல்களில் தெளிவான செய்திகள் உள்ளன. இந்த வெற்றி இவனது வரலாற்றில் மிகவும் சிறப்புடையதாய் விளங்கியதுபற்றி, இவன் ‘கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டான். மூவேந்தர் நட்பு தமிழக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக எண்ணத்தக்க மூவேந்தர் நட்பு இவன் காலத்தில் அமைந்தது. சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோருடன் இவனும் சேர்ந்து முத்தீப் போல அமர்ந்திருந்து செயல்படும் காட்சியைப் புலவர் ஒருவர் கண்டு வாழ்த்தியுள்ளார்.101 பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் தாரை வார்த்துத் தரவேண்டும் என்றும், மகளிர் பொற்கலத்தில் ஊட்டும் தேறலை உண்டு மகிழ்ந்து களித்திருக்க வேண்டும் என்றும் கூறி அவர் வாழ்த்தினார். மூவேந்தரின் இத்தகைய கூட்டுறவு பாரியைப் பொறுத்தமட்டில் தீதாய் முடிந்தாலும், தமிழைப் பொறுத்தமட்டில் நன்மையாக முடிந்தது. தமிழ்நாட்டு மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. பாண்டியன் தமிழில் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டான். உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. நெடுந்தொகை அல்லது அகநானூறு என்னும் நூலைத் தொகுக்கும் பணியைத் தானே மேற்கொண்டான்; உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரைத் தலைமைப் புலவராக அமர்த்தி அத் தொகுப்புப் பணியைச் செய்து முடித்தான். திருக்குறள் அரங்கேற்றமும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் என்பார் எழுதிய உரையும் இவனது அவையில் அரங்கேற்றப்பெற்றன என்பது செவிவழிச் செய்திகளாகும். நாஞ்சில் வள்ளுவன் இவன் காலத்தில் வாழ்ந்தவன்.102 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி103 சோழ அரசன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் இந்தப் பாண்டிய அரசனும் ஒருங்கிருக்கக் கண்ட புலவர் ஒருவர் இவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டுமென்று வாழ்த்துகிறார். இவர்கள் கூடியிருந்த இடம் சோழ நாட்டுத் தலைநகர் என்பது. புலவர் சோழனை முன்னிலைப்படுத்தியும் பாண்டியனைப் படர்க்கையில் குறிப்பிட்டும் பாடியிருப்பதிலிருந்து தெரிகிறது. இவ்வரசனைப் பாடிய புலவர். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும்104 பிட்டங்கொற்றனையும் தனித்தனியே நேரில் கண்டு பாடியுள்ளார்.105 பிட்டங்கொற்றன், சேர அரசன் கோதையின் படைத்தலைவன் என்பதும்106 கோதை அல்லது கோதை மார்பன். கிள்ளி வளவனிடம் பழையன் மாறன் மதுரையில் தோற்றபோது மகிழ்ந்தான் என்பதும்107 பல பாடல்களைத் திரட்டி அறியப்படும் சமகால நிகழ்ச்சிகள். இந் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எண்ணும்போது பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்காக மதுரையில் போரிட்டான். அச்சமயத்தில் பாண்டியநாட்டு அரியணையைப் பெறப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் உதவியை வேண்டி னான். அப்போதுதான் சோழன் அவையில் இருவரையும் ஒருங்கு கண்டு புலவர் வாழ்த்தினார். பெருந்திருமா வளவன் குராப்பள்ளியில் துஞ்சியவன் என்பது அவனது பெயரால் தெளிவாகிறது.108 அந்த அடை மொழியைக் கொண்ட கிள்ளிவளவன் என்பது இவனே ஆவான்.109 திருமாவளவன் என்பது இச் சோழனின் இயற்பெயர். கிள்ளிவளவன் என்பது கிள்ளியின் மகன் வளவன் என்று விளங்கும் பெயர். கிள்ளிவளவன் தன்னை நாடிவந்து உதவி வேண்டிய வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிக்கு உதவினான். பாண்டியனின் கூடல் நகரத்தைத் தாக்கி வென்று, பெருவழுதிக்கு அளித்தான். இந்தப் பெருவழுதி மதுரையில் இருந்து அரசாண்டு வரும்போது, வெள்ளி யம்பலம் என்று வழங்கப்பெறும் மதுரைச் சொக்கநாதர் கோயில் மன்றத்தில் உயிர்நீத்தான்.110 இந்தப் பெருந்திருமாவளவனும், பெரு வழுதியும் சேர்ந்து வென்ற நாடுகளில் புலிச் சின்னமும் கயற்சின்னமும் சேர்த்துப் பொறிக்கப்படவேண்டும் என்று புலவர் அறிவுரை கூறினார். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ, பாண்டிய நாட்டு இலச்சினைகள் இவ்வாறு விளங்கின எனக் கொள்ளலாம். (இந்த கூட்டுச் சின்னத்தை மீண்டும் தனிச் சின்னமாக்கியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.) பாண்டியர் ஐந்து கூறுகளாகப் பிரிந்து நாடாண்டு வந்தனர்.111 இளம்பெருவழுதி இவன் புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். வழுதி என்னும் பெயர் அமைதியை எண்ணி, ஏதாவது ஓரிடத்தில் இளவரசனாக வேனும் இருந்திருக்கக்கூடும் என்று கருதலாம். வழுதியர் குடியில் தோன்றியவன் எனக் கொள்ளலாம். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பெயரால் இவனைப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். தேவாமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாமல் பகுத்துண்ணல், பிறர் அஞ்சுகிறார்களே என்று தானும் பழிக்கு அஞ்சிச் செயலாற்றுதல், புகழ் தரத்தக்க செயலுக்காக உயிரையே கொடுத்தல், பழிக்கத்தக்க செயல்களில் உலகமே பரிசாகக் கிடைப்பதாயினும் அவற்றைச் செய்யாமை, தனது ஊக்கமான செயல் முயற்சிகளைப் பிறர் நலம் கருதிச் செய்தல் ஆகிய சிறந்த பண்புடையவர்கள் உலகில் வாழ் வதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான்.112 இவன் கடலுள் மூழ்கி இறந்து போனான். கடற்போரில் ஈடுபட்டிருந்தபொழுது இந்தச் சாவு நிகழ்ந்து இருக்கலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதையும், செங்குட்டுவன் கடல் வாணிகத்திற்கு உதவும் பொருட்டுப் போரிட்டதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதைக் கண்டோம். இப் பாண்டியன் கடலில் மாண்டவன் என்பது தெரிகிறது. இருவர் பெயர்களும் பெருவழுதி என்றமைந்துள்ளன. ‘முது’, ‘இள’ என்னும் அடைமொழிகள், மூத்தவன், இளையவன் என்னும் பொருளைத் தருவன வாய் இவர்களுக்கு அமைந்தனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது. பெரும்பெயர் வழுதி இவன் (பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்) ‘வழுதி’ என்று குறிப்பிடப் படுகிறான். பாண்டியருள் ‘கவுரியர்’ என்னும் குடி யினரும் ஒருவராவர். தனுஷ்க்கோடியை அடுத்த பகுதியிலும் கவிரம் என்று சங்ககாலத்தில் வழங்கப்பெற்ற செங்கோட்டைப் பகுதியிலும் இவர்கள் வசித்தனர். இவர்களுடைய வழித் தோன்றல்களில் ஒருவன் பெரும்பெயர் வழுதி.113 இவன் போரில் வெற்றி பெற்று யானை மீதேறி உலா வந்தான். ‘தவிரா ஈகைக் கவுரியர் மருக’ என்று கூறப்படும் பகுதியில்இவனது முன்னோர் கொடைச் சிறப்புடன் இவனது கொடைச் சிறப்பும் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. வழிப்பறிமிக்க காட்டு வழிகளில் புலவர்கள் இவனை நாடிப் பரிசில் பெறுவதற்கு வருவார்கள் என்றும். அவர்கள் வந்ததும் அவர்களுடைய குறிப்பறிந்து உதவ வேண்டும் என்றும் அவனுக்கு அறிவுறுத்திப் புலவர் பாடியுள்ளனர். அகன்ற மார்பு, உலர்ந்த சந்தனம், கால்களில் பொன்னால் செய்யப் பெற்ற வீரக்கழல் இவற்றுடன் காணப்பட்டான். நிலமே தலைகீழாக மாறினாலும் வாக்குத் தவறக்கூடாது என இவன் அறிவுறுத்தப் பட்டிருக்கிறான். இவனுடைய மனைவி செம் பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த கற்பரசியாக விளங்கினாள். இவன் மதுரையில் இருந்த ஆட்சி செலுத்தியதாகத் தெரிகிறது.114 கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வழுதி ஒருவன் ‘வாடா வேம்பின் வழுதி’ என்றும், ‘அரண் பல கடந்த முரண் கொள் தானை’ உடையவன் என்றும் கூறப்படுகிறான்.115 கூடல் நகரத் தலைமை வேறு எந்த வழுதிக்கும் குறிப்பிடப்படாததால் இவனைக் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி’ என்றே கருதலாம். இவன் பல கோட்டைகளை வென்றபோது இவனுடைய வலிமைமிக்க கைகளில் ஒளிபொருந்திய வாள் ஒன்று சிறப்புற்று விளங்கியது. இதனால் இவன் ‘கருங்கை ஒள்வாள்’ என்ற அடைமொழியைத் தன் பெயருக்குமுன் பெற்றான். குறுவழுதி ‘அண்டர் மகன் குறுவழுதியார்’ என்னும் பெயருடன் குறிக்கப்படும் இவரும் புலவர் என்ற நிலையிலேயே காணப்படுகிறார். அண்டர் என்போர் ஒரு குடியினர் ஆவர்.116 நள்ளி என்ற அரசனுடைய தோட்டிமலைப் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.117 நார்முடிச் சேரல் இவர்களை வென்று பின்னிடும்படி துரத்தினான்.118 அண்டர் அல்லது ஆயர்குடியில் தோன்றியவர் என்பதும், ஆட்சிப் பொறுப்பேற்று விளங்கியவர்கள் என்பதும் பெறப்படும். பாண்டியரில் ஒரு கிளைக் குடியினர் கண்டீரமலைப் பகுதியில் அண்டர் என்னும் பெயருடன் செல்வாக்குப் பெற்று விளங்கினார்கள் எனலாம். இந்த அண்டர் களுக்குப் பெருந்தலைவனாக விளங்கியவன்தான் குறுவழுதி. இவன் சிறந்த புலவனாக விளங்கியதால் ‘ஆர்’ என்னும் சிறப்பு அடை மொழி சேர்த்துக் ‘குறுவழுதியார்’ என்று வழங்கப்பட்டான். இவனுடைய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகிய மூன்றிலும் காணப்பெறுகின்றன. இவன் பாண்டிய மரபில் தோன்றியவனாகத் தெரியவில்லை. நல்வழுதி நல்வழுதியர் என்னும் புலவராக அறிமுகமாகும் இவரை வழுதி என்ற பெயரைக் கொண்டு, ஒரு சிறு பகுதிக்கு மன்னனாக விளங்கி யிருக்கலாம் எனக் கொள்கிறோம். வையை ஆற்றைச் சிறப்பித்துப் பாடும் இவர் அதனைப் ‘போரடு தானையான் யாறு’119 என்று குறிப்பிடுகிறார். இதனால், வையை அவருக்கு உரிய ஆறு அன்று என்பது பெறப்படுகிறது. இவர் பிற வழுதியரைப் போலவே, பாண்டிய நாட்டின் தென்பகுதியில் ஒருபால் ஆண்டுவந்தார் என்று கருதலாம். பாண்டியன் மாறன் வழுதி பாண்டியன் பன்னாடு தந்தானும் பாண்டியன் மாறன் வழுதியும் ஆகிய இருவரும் புலவர்களாகக் கருதப்பெறுகின்றனர்,120 இந்த இரண்டு பெயர்களும் ஒருவனையே குறிப்பன என்று கொள்ளத்தக்க வகையில் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற நிலையில் அமைந்த பெயரும் காணப்படுகிறது. இப் பெயர் கொண்டவன் நற்றிணை என்னும் தொகுப்பு நூலை உருவாக்கியவன்.121 ‘கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி’ என்பானை பல புலவர்கள் பாடியுள்ளனர். தமிழ்நாடு. மூவேந்தர்க்கும் பொது என்று கூறினால் இவன் பொறுக்கமாட்டானாம். தனக்கே உரியது என்று ஆககிக்கொள்ளப் போருக்கு எழுவானாம். இவ்வாறு போருக்கெழுந்த போது. ஏதோ ஒருவகையில் தமிழ்நாடு முழுவதும் இவனுக்குரிய தாயிற்று என்ற நிலை வந்ததுபோலும். அதன்பின்னும் இவனது போர்வேட்கை தணியவில்லை. ‘வடபுல மன்னர் வாட அடல்குறித்து’ எழுந்தான்,122 இதன் விளைவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு வடக்கில் இருந்த சில சிற்றரசர்களையேனும் இவன் வென்றிருக்கலாம். சினப்போர் வழுதி‘, ‘இயல்தேர் வழுதி’ என்னும் அடைமொழிகள் இவனது சினமிகுதியையும், தேரில் உலா வந்த பாங்கையும் நம் நினைவிற்குக் கொண்டுவருகின்றன. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், இந்த மாறன் வழுதியும் ஒரே காலத்தில் அகத்திணைத் தமிழ்ப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் பாடிய புலவர்களைக் கொண்டு இவர்கள் சமகாலத்தவர் என்பதை உணரலாம்.123 கடலன் வழுதி மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்த கழுகுமலையில் உள்ள சமணர் படுக்கைகளுக்குமேல் உள்ள பாறைகளில் சங்க காலத்துத் தாமிழ் எழுத்துகள் உள்ளன. அந்த எழுத்துகள் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்த எழுத்துகளில் கடலன் வழுதி என்ற பெயர் வருகிறது. இந்த வழுதி நெடுஞ்செழியனின் பணி மேற் கொண்டவன்.124 இவன் கவிஞனாகிய நந்தி என்னும் சமணத் துறவிக்கு கழுகுமலைப் பாறையில் படுக்கை வெட்டிக் கொடுத்தான் மருங்கை வழுதி மருங்கூரைத் தலைநகராகக் கொண்டு வழுதி என்ற ஒருவன் ஆண்டுவந்தான். இவன் பசும்பூண் வழுதி என்று குறிப்பிடப்படுகிறான். கொற்கை வழுதி கொற்கைத் துறைமுகத்தைக் தலைநகராகக் கொண்டு வெற்றி வேற்செழியன் ஆண்டுவந்ததுபோல இவன் ‘நற்றேர் வழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.125 பிற வழுதி அரசர்கள் ‘தாடோய் தடக்கை வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவன் தன் வேலை உயர்த்திப் பகைவர்களைப் புறங்கண்டான்,126 சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் இவனைப் போலவே தாடோய் தடக்கை வழுதி என்று கூறப்படுகிறான். இதனால் இருவரும் ஒருவராக இருக்கலாம். இவன் ‘வெல்போர் வழுதி’ என்றும் சிறப்பிக்கப் பட்டுள்ளான். ‘போர்வல் வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவனுக்குப் பகைவர்கள் பெறற்கரிய உயர்ந்த திறைப்பொருள்களைக் கொடுத்தனர். இப் போர்வல் வழுதி மேற்கூறப்பெற்ற சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுண்டு.127 கடல்போன்ற பெரிய படையைக் கொண்ட ‘கலிமா வழுதி’ என்ற பெயரும் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைக் குறிக்கக்கூடும். புலிமான் வழுதி என்பவன் தன் மனைவி மக்களுடன் சென்று திருப்பரங்குன்றத்து முருகவேளை வழிபட்டதாகத் தெரிகிறது. அகநானூறு தொகுக்கப்படக் காரணமாக இருந்த உக்கிரப்பெரு வழுதிக்கு இப் பெயர் வழங்கியது என்று கருதலாம். 5. பாண்டியன் என்னும் பெயருடைய அரசர்கள் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் இவனது பாடல்களில் இரண்டு. சங்க நூல்களில் இடம் பெற்றுள்ள வகையில் புலவனாக இவன் நமக்கு அறிமுகமாகிறான். என்றாலும், இவனது வஞ்சினப் பாடலும் இவன் பெயருக்குமுன் உள்ள ‘ஒல்லையூர் தந்த’ என்னும் அடைமொழியும் இவன் சிறந்த அரசனாக நாடாண்டு வந்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய பகைவர்களைப் புறம் காணாவிட்டால் தனக்குத் தன் மனைவியைப் பிரிந்து வாழும் நிலை நேரட்டும். அறநெறி தவறாத அரசவையில் திறமை இல்லாத ஒருவனை அமர்த்தித் தீமை செய்தவன் என்ற பழி நேரட்டும். மையற் கோமான் மாவன், எலாந்தை, அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகிய ஐவருடனும் பிறருடனும் கூடி மகிழ்ந்திருக்கும் பேறில்லாமல் வறண்ட நிலத்தின் மன்னனாக அடுத்த பிறவி அமையட்டும் என்றெல்லாம் இவன் வஞ்சினம் கூறுமிடத்து இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன,128 ஒல்லையூர் என்பது இப்பொழுது உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த நாடு. இவன் அந்த நாட்டில் நடந்த போரின்போது இவ்விதம் வஞ்சினம் கூறினான். தான் கூறியவாறு ஒல்லையூர் நாட்டை வென்று தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இறந்ததற்காகப் பாணர்கள் பெரிதும் வருந்திய செய்தியைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.129 இந்தச் சாத்தன் இறந்தது பூதப்பாண்டியன் நடத்திய போரில் நிகழ்ந்திருக்கலாம். தமிழ் இலக்கியங்களில் வடக்குப் பகுதியிலுள்ள மலைகளைக் கடந்து பொருள் தேடச் சென்றவர்களைப் பற்றியே மிகுதியாகப் பேசப் படுகிறது. ஆனால், இவன் தமிழக மக்கள் பொதிய மலையைக் கடந்து பொருள் தேடச் சென்ற மக்களைக் குறிப்பிடுவது நினைவுகூரத்தக்து.130 பொதிமலைப் பகுதியில் திதியன் என்பவன் ஆண்டு வந்ததை இவன் குறிப்பிடுவதோடு, அவனது செல்வச் செழிப்பையும், அவனது அரண்மனையில் முழங்கிய இன்னிசை முழக்கத்தையும் பாராட்டிக் கூறியுள்ளான். இதனால் திதியன் இவனது சிறந்த நண்பன் என்பது தெரிகிறது. இத் திதியன், பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ் செழியனை எதிர்த்துத் தாக்கியது அவர்களது வரலாறுகளில் காணலாம். தலையாலங்கானத்துப் போர், நெடுஞ்செழியன் கொற்கை யில் ஆண்டு கொண்டிருந்தபொழுது நிகழ்ந்ததாகையால் அக்காலத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ பூதப்பாண்டியன் மதுரையிலிருந்து அரசாண்டான் என்று கூறலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழிய னுக்குப் பின்னும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்கு முன்னும் உள்ள இடைப் பட்ட காலத்தில் இவன் ஆட்சி செலுத்தினான் என்று கூறலாம். போரில் வஞ்சினம் கூறியபோது, புறங்காணாவிட்டால் ‘பேர் அமர் உண்கண் இவளினும் பிரிசு’ என்று வஞ்சினம் கூறும் அளவிற்கு இவனது அன்பு. மனைவியிடம் சிறந்து விளங்கியது. இவனைப் போலவே இவனது மனைவியும் இவன்மீது பேரன்பு கொண்டு விளங் கினாள். பூதப்பாண்டியன் இறந்தபோது அவளும், அவனை எரித்த தீயில் பாய்ந்து உயிர்துறந்தாள். அவள் பெயர் பெருங்கோப்பெண்டு.131 பசும்பூண் பாண்டியன் ‘பசும்பூண்’ என்னும் அடைமொழியைமட்டும் கொண்டு இந்தப் பாண்டியனைத் தனியான ஓர் அரசன் என்று கொள்ள முடியுமா என்பது ஆய்விற்குரியது.132 இப் பெயர் கொண்ட அரசன், மதுரையில் இருந்து மிகச் சிறப்புடன் அரசாண்டதாகத் தெரிகிறது. அப்படி யிருந்தும் எந்தப் புலவரும் இவனை நேரில் கண்டு வாழ்த்திப் பாடியதாகப் புறநானூற்றில் பாடல்கள் இல்லை. எனவே, பசும்பூண் பாண்டியன் என்னும் பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனாக இருக்கலாமென்று கருதப்படுகிறது. அரசுகட்டிலைக் கைப்பற்றிய போர் பாண்டிய நாட்டின் அரியணையைக்கைப்பற்றவே இவன் போராடி இருக்கிறான். போரில் வெற்றிகண்டதால் வெண்கொற்றக் குடையை உயர்த்திப் பெரும்புகழுடன் அரசாண்டிருக்கிறான்.133 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் இதே நிலையினன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகனை வென்றது அதிகன் என்பவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசன். பசும்பூண் பாண்டியன் ஒரு யானைப் படையுடன் சென்று அதிகனை வென்று தன் வெற்றிக்கொடியை உயர்த்தி. அவனது கொல்லி மலையில் யானைப் படையின் வெற்றி அணிவகுப்பை நடத்தினான். இப் போருக்குப்பின் அதிகன் பாண்டியனுடைய நண்பன் ஆனான். பின்னர்த் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் நாட்டைப் பறிகொடுத்து இந்தப் பாண்டியனின் பரடத்தலைவனாக மாறிவிட்டான்.134 கொங்கரை ஓட்டியது அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவன். பசும்பூண் பாண்டியனம் அதிகனும் நண்பர்களாக மாறியபின் கீழைக் கொங்கரும் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். இந்நிலையில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்களுடன் சேர்ந்துகொண்டு பாண்டியனுக்கு எதிர்ப்பாய் விளங்கினர். பசும்பூண் பாண்டியன் இந்தக் கொங்கர்களோடு போரிட்டு அவர்களை நாட்டைவிட்டே துரத்தி விட்டான்.135 தங்களது வேற்படைகளைப் போர்க்களத்திலேயே எறிந்து விட்டுத் தப்பியோடிய கொங்கர், குடகடல்பக்கம் ஓடிவிட்டனர். இந்தப் போரில் இவனுக்கு ஆய் அரசன் உதவி செய்தான் எனத் தெரிகிறது.136 ஓடிய கொங்கர்களில் சிலர் வழியில் இருந்த நாட்டில் அரசாண்ட நன்னனுடன் சேர்ந்துகொண்டனர். நன்னன் மூவேந்தருக்கும் எதிரியாக இருந்தான். வாகைப் பறந்தலைப் போர் ஆய் எயினனுக்கும் நன்னது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனின் தலைநகர் பாழியில் போர் நடந்தது. போரில் ஆய் எயினன் மாண்டான். இந்நிலையில் ஞிமிலி, ஆய் எயினனின் நகர் வாகையைக் கைப்பற்ற முயன்றான். வாகையைப் பாதுகாக்கப் பசும்பூண் பாண்டியன் தன் படைத்தலைவன் அதிகனை அனுப்பியிருந்தான். பாண்டியன் தலைவ னான அதிகனுக்கும், ஞிமிலிக்கும் வாகைப்பறந்தலையில் போர் நடந்தது. போரில் நன்னனுக்கு உதவியாகக் கொங்கர்கள் உதவினர். யானை மீதிருந்து போரிட்ட அதிகன் யானையுடன் கொல்லப்பட்டான். இந்த நிகழ்ச்சியில் கொங்கர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.137 பொதியமலை வெற்றி அதிகனை வென்று கொல்லிமலையில் யானைகளை வெற்றி உலாவரச் செய்தான் இப் பாண்டியன் என்பதை முன்னரே பார்த்தோம். அதுபோலவே, இவன் பொதியமலையைக் கைப்பற்றினான் போலும்,138 இதன் பயனாகப் பொதியமலை அரசன் ஆய், அதிகனைப் போலப் பாண்டியனின் நண்பன் ஆனான். அதிகன் வாகைப் பறந்தலையில் பாண்டியனுக்காகப் போரிட்டது போலவே, ஆய் அரசன் கொங்கர்களை ஓட்டுவதில் பசும்பூட் பாண்டியனுக்கு உதவினான்.139 நெடுமிடல் படைத்தலைமை பசும்பூண் பாண்டியனுக்குப் படைத்தலைவனாக விளங்கியவன் நெடுமிடல் என்பவனாவான்.140 பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் இப் படைத்தலைவனைக் கொன்ற பிறகு அரிமணவாயில் உறத்தூரில், கள்ளுடைப் பெருஞ்சோறு உண்டு வெற்றிவிழாக் கொண்டாடினர் என்று அறிகிறோம்.141 இந்த நெடுமிடல் என்பவனுடன் கொடுமிடல் என்பவனும் மற்றொரு படைத்தலைவனாக இருந்தவன் எனத் தெரிகிறது. இவர்களைப் போரில் கொன்றவன் நார்முடிச் சேரல் என்று கூறப்படுகிறது.142 இதைக் கருதுமிடத்துப் பசும்பூண் பாண்டியன் வடக்கில் கொல்லிமலை, தெற்கில் பொதியமலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட பெருநிலப்பரப்பை, அதிகன் முதலிய சிறப்பு மிக்க வள்ளல்களின் துணையுடன் அரசு புரிந்தான் எனக் கொள்ளலாம். பாண்டியன் அறிவுடைநம்பி இவனை நேரில் கண்டு பாடிய புலவர் ‘அறிவுடைவேந்தன்’ என்னும் தொடரைப் பொதுப்படையாகக் குறிப்பிடுகிறார்.143 இதனால் இவனை அறிவுடைநம்பி என்று குறித்தார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. இவனது பாடல்கள் இன்பப் பயனை விளக்குவன வாக உள்ளன. நம்பி என்னும் பெயர், முறுக்கான உடற்கட்டுக் கொண்டு அழகுடன் பொலிவும் ஆடவர்க்கெல்லாம் வழங்கப்பெற்ற பொதுப் பெயர் ஆகும். இவன் அரியணையில் அமர்வதற்குமுன் அரசியல் அலுவலர்கள் குடிமக்களின் நிலையைப் பார்த்து மிகுதியான வரிகளை வசூலித்த தாகத் தெரிகிறது. புலவர் இவனை நேரில் கண்டு சிறிது சிறிதாகப் பல தவணைகளில் மக்கள் வரிகளைச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தினார்.144 அரசன், புலவரின் அறிவுரையை ஏற்று மக்களின் விருப்பம்போல் பல தவணைகளில் வரி செலுத்த அனுமதித்தான் எனலாம். வாழ்க்கையில் பலவகையான செல்வ வளங்களும் ஒருங்கமையப் பெற்றிருந்தாலும் மக்கட்செல்வம் இல்லாவிட்டால் இன்பம் அமையாது என்று இவன் தன்னுடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளான்.145 சங்கப்பாடல் தொகுதிகளில் இவனுடைய பாடல்களாக அகத் துறைப் பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. தினைப் புனம் காக்கச் சென்ற பெண் ஒருத்தி அதனை மறந்து அவளது காதலனோடு கூட மகிழ்ந்தே காலம் போக்குவதை அவளது தோழி பக்குவமாகத் தவறு என்று அறிவுறுத்தும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது.146 காதலன் ஒருவன் அடிக்கடி காதலியிடம் கள்ளத் தொடர்பு கொள்வதைத் தோழி வன்மையாகக் கண்டிப்பதாய் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.147 கற்பரசி ஒருத்தியின் கையில் இருந்த குழந்தையைப் பேய் ஒன்று பிடுங்கிக் கொண்டது போலத் தோழியிடமிருந்து தலைவியைத் தலைவன் பிடுங்கிக் கொண்டான் என்றும், பூப்போன்ற அவளைத் தேனீப் போன்று நலம்நுகர்ந்து சென்றனான் என்றும் நயம்படப் பாடிய பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது.148 நம்பி நெடுஞ்செழியன் எனும் பெயர் கொண்ட அரசன் ஒருவன் மிகச் சிறந்த போர்த்திறம் படைத்த அரசனாக விளங்கியதை நெடுஞ்செழியன் வரலாற்றில் காணலாம் இந்தப் பெயர் நம்பியின் மகன் நெடுஞ்செழியன் என்பதாக இருக்கக்கூடும். பாண்டியன் கீரஞ்சாத்தன் கீரன் மகன் சாத்தன் என்னும் பெயர் கீரஞ்சாத்தன் என்று அமைந்திருக்கக்கூடும். பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு இவன் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் அல்லது பாண்டியர் படைத் தலைவன் என்பது தெரியவருகிறது. கள்ளுண்ட மயக்கத்தால் கடமையை மறந்து சில போர்வீரர்கள் அஞ்சியிருந்தபோது, எஞ்சிய படையினருக்குப் பாதுகாவலனாகத் தழுவிக் கொண்டு போரில் குதித்து முன்னேறிச் சென்றான். போர் வீரர்கள் காயம்பட்டு உணவு கொள்ளாமல் இருந்தபொழுது இவன், நீங்கள் உணவு கொள்ளாவிட்டால் நானும் உண்ணமாட்டேன்’ என்று சூளுரைத்து அவர்களை உண்ணும்படி செய்தான். இதனால் இவன் சிறந்த படைத்தலைவனாகவும், படை வீரர்களைத் தன் உயிரைப்போல் போற்றும் உயர்ந்தோனாகவும் விளங்கினான். பாண்டியன் என்னும் பெயர், பாண்டிய அரசர்கள் இவனைப் பாடிய புலவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியுள்ளார். ஆகையால், இவன் நன்மையுடைய படைத்தலைவனாக இருந்தான் என்று கூறலாம்.149 6. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள் தமிழ்நாட்டில் வழங்கும் சில மரபு வழிச் செய்திகள் பாண்டிய மன்னர்களுடைய செயல்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில புராணத் தலைவர்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் உண்மையான வரலாற்றுச் செய்திகள் என்று கொள்ள முடியவில்லை. வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலப்பகுதியைத் தங்கள் நாட்டுப் பரப்பில் கொண்டிருந்ததோடு நீர்ப்பரப்பாகிய கடலையும் ஓர் எல்லை வரையில் தங்களுக்கு உரியதாகப் பாண்டிய மன்னர்கள் கொண்டிருந்தனர். அந்த எல்லைப் பகுதி எதுவரையில் என்று பாண்டிய அரசன் ஒருவன் தன்னுடைய வேலை வீசிக் காட்டினான்.150 வடிம்பு என்பது வேலின் நுனியாகும். எனவே, இவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். இவன் தன்மீது வேலை வீசியதால் சினங்கொண்ட கடல் பொங்கியெழுந்தது; பாண்டிய நாட்டின் நிலப்பகுதியை விழுங்கியது. இதனால், பாண்டியன் தன் நாட்டுப் பரப்பில் குமரியாறு பாய்ந்த நிலம், குமரிக்கோடு முதலான பல மலைகளைக் கொண்டிருந்த நிலம் ஆகியவற்றை இழந்தான். இந்த நில இழப்பை ஈடுசெய்வதற்காக அவன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்று கங்கைச் சமவெளியையும் இமயமலைப் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டான். இந்த அரசன் தென்னன் என்று குறிப்பிடப்படுகிறான். நெடியோன் என்னும் பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவ னாகவும், ‘நிலந்தருவின்’ நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டவனாகக் காட்டப்படுவதால் இந்த அரசனை வடிவம்பல நின்ற பாண்டியன் என்று கருதுகின்றனர். பிற்காலத் தமிழ்நூல் ஒன்று இவனை ‘ஆழி வடிவு அலம்ப நின்றான்’ என்று குறிப்பிடுகிறது. இந்நூல் இவனை யதுகுல அரசன் என்றும், ஏழிசை நூல் சங்கத் தலைவன் என்றும், தேவர்களுக்காகத் தூது சென்றவன் என்றும், பாரதப் போரில் கலந்துகொண்டவன் என்றும் குறிப்பிடுகிறது. இந்திரன் ஆரம்பூண்ட பாண்டியன் தேவர்கோனாகிய இந்திரன் எல்லா அரசர்களையும் விருந்திற்கு அழைத்தான். விருந்திற்குச் சென்ற அரசரெல்லாரும் இந்திரன்முன் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தினர். பாண்டியன் மாத்திரம் தலை தாழ்த்தி வணக்கம் செய்யாது, தன் பெருமிதம் தோன்ற நிமிர்ந்து சென்றான். இதைக்கண்ட இந்திரன் தன் முத்தாரத்தை அந்தப் பாண்டியனுக்கு அளித்துப் பெருமைப்படுத்தினான். மழை பிணித்தாண்ட மன்னவன் பாண்டியன் ஒருவன் இந்திரனுடைய தலையிலிருந்த முடி வளையை உடைத்து எறிந்தான். அதனாற் சினங்கொண்ட இந்திரன் தனது ஆணைக்குட்பட்டு நடந்துவந்த மேகங்களை அழைத்துப் பாண்டிய நாட்டில் பெய்யக்கூடாதென்று கூறித் தடுத்துவிட்டான். இதனால் பாண்டிய நாட்டில் மழையில்லாமல் போயிற்று. பாண்டியன் ஒருவன் அந்த மேகங்களைத் தடுத்து மழைபெய்யச் செய்தான். பொற்கைப் பாண்டியன் இவனுடைய ஆட்சிக் காலத்தில் மதுரை நகரில் வாழ்ந்த கீரந்தை என்பான் தன்னுடைய மனைவியைத் தனியே வீட்டில் விட்டு வெளியூருக்குப் போனான். பாண்டியனுடைய ஆட்சி, தனித்திருக்கும் தன் மனைவிக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவனுடைய நம்பிக்கை. கீரந்தை வெளியூருக்கும் போயிருப்பதை அறிந்த பாண்டியன் இரவில் நகர்வலம் வரும்போது கீரந்தையின் மனைவிக்கு யாதொரு தீங்கும் நேராதபடி அவள் அறியாமலே காத்துவந்தான். நெடுநாள் சென்றபிறகு, நள்ளிரவில் கீரந்தை வீட்டிற்குள் யாரோ இருவர் பேசுங் குரல் கேட்டது. நள்ளிரவில் நகர்வலம் வந்த பாண்டியன், யாரேனும் கீரந்தையின் மனைவிக்குத் தீங்குசெய்ய வந்தனரோ என்று கருதி அந்த வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளிருந்து கணவனாகிய கீரந்தை யின் குரல் ‘யார் அது?’ என்று கேட்டது. கீரந்தை ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டான். அவனுடைய பேச்சுக்குரல்தான் உள்ளிருந்து கேட்டது. கதவைத் தட்டினபடியால் அவன் அவள்மீது ஐயப்படுவானே. அவனுடைய ஐயத்தைப் போக்கவேண்டும்’ என்று கருதிய பாண்டியன் அந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிக்கொண்டே அரண்மனைக்குப் போய்விட்டான். அடுத்தநாள் அந்த வீதியில் உள்ளோர் எல்லோரும் முன்னிரவு தங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ தட்டிவிட்டுச் சென்றார்கள் என்று மன்னனிடம் முறையிட்டனர். தன் மனைவியின்மீது ஐயங்கொண்ட கீரந்தை எல்லாம் வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டதை அறிந்த தன் மனைவியின்மேல் ஐயம் நீங்கினான். பிறகு பாண்டியன் தானே அந்தக் குற்றம் செய்ததை அரசவையில் ஒப்புக்கொண்டு, கதவுகளைத் தட்டின குற்றத்திற்காகத் தன்னுடைய கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான் என்று கதை கூறப்படுகிறது. மலையத்துவச பாண்டியன் மலயத்துவசன் என்னும் பெயர் மலையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்டவன் என்ற பொருளுடையதாகும். சங்க இலக்கியத்துள் இவனைப் பற்றிய குறிப்பு இல்லை. மலையத்துவச பாண்டியன் காஞ்சனை என்ற பெயருள்ள பாண்டி மாதேவியோடு வாழ்ந்தான். இவ்விருவருக்கும் மகப்பேறில்லாமையால் தவம் செய்து ஒரு பெண்மகவைப் பெற்றனர். அக் குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிடப்பெற்றது. அப்பெண் பாண்டிய நாட்டை அரசாண்டாள் என்று புராணம் கூறுகிறது. மலையத்துவச பாண்டியனைப் பற்றி வடமொழி பாகவத புராணம் மற்றொரு வரலாற்றைக் கூறுகிறது. இப் புராணக் கதைகள் நம்பத் தகுந்தன அல்ல. தடாதகைப் பிராட்டியார் மலையத்துவச பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசாண்டதாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன? அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி அம்மையே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் செலியூகஸ் நிகேடாரின் தூதுவராக இருந்த மெகஸ்தனீஸ் தம்முடைய காலத்தில் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி அரசாண்டாள் என்று கூறியுள்ளார். ஹெர்க்குலிஸ் என்ற கிரேக்க வீரனுக்குப் பண்டேயா என்று பெயரிட்டான் என்பதும், பாண்டிய நாட்டைத் தடாதகையார் அரசாண்டார் என்பதும் ஒரே வரலாற்றைக் குறிக்கின்றன எனலாம். பாண்டிய அரசைப்பற்றி மெகஸ்தனீஸ் இன்னொரு செய்தியையும் கூறியுள்ளார். பாண்டிய அரசிக்கு 365 ஊர்கள் இருந்தன. ஒவ்வோர் ஊராரும் அரண்மனைக்கு நாள்தோறும் கடமை செலுத்தினார்கள். இந்த அரசிறை. காசாக இல்லாமல் பொருளாகச் செலுத்தப் பட்டிருக் கலாம் எனத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி என்ற இடைக்குல மடந்தை அரண்மனைக்குச் சேரவேண்டிய இறைவரியை நெய்யாகச் செலுத்தினாள் என்று கூறப்பட்டுள்ளது. ஆரியப்படை கடந்து, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் கடைச் சங்ககாலத்தில் ஆட்சிசெய்த பாண்டியரில் சிலர் நெடுஞ் செழியன் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களின் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்களை, இன்னின்ன நெடுஞ் செழியர் என்று பிரித்தறிவதற்கு அவர்பெயர்களுடன் சில அடை மொழியிட்டு வழங்கினார்கள். நம்பி நெடுஞ்செழியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பெயர்களைக் காண்க. இங்கு ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்வோம். மதுரையிலிருந்து பாண்டி நாட்டை யரசாண்ட இந்த நெடுஞ் செழியன் கல்விகற்ற அறிஞன்; செய்யுள் இயற்ற வல்ல கவிஞன். கவிஞனாக விளங்கிய இவன் இயற்றிய செய்யுட்கள் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. நற்காலமாக இவன் இயற்றிய ஒரே ஒரு செய்யுள் புறநானூற்றில் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுள் இது: “உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும். ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடை யோனாறு அரகஞ் செல்லும். வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின், மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.” (திணை - பொதுவியல்; துறை - பொருள்மொழிக் காஞ்சி. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.) விழுமிய பொருள் பொதிந்த இந்தச் செய்யுள் புற நானூற்றில் தொகுக்கப்டும் சிறப்புப்பெற்றுள்ளது. இச்செய்யுளை இயற்றிய இந்தப் பாண்டியன் யாரிடங் கல்வி பயின்றான் என்பது தெரியவில்லை. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்றபோது பாண்டி நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இந்த நெடுஞ்செழியனே. மதுரையில் வாணிகஞ் செய்து பொருளீட்ட எண்ணிய கோவலன், வாணிக முதலீட்டுக்காகக் கண்ணகியின் பொற்சிலம்பை விற்கச் சென்று வஞ்சகன் ஒருவனால் ‘கள்வன்’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட போது, அக்குற்றத்தைத் தீர விசாரிக்காமல் அவனைக் கொல்வித்த வனும் இந்த நெடுஞ்செழியனே. கோவலன் மேல் சுமத்தப்பட்ட பொய்ப்பழியை நீக்குவதற்காகக் கண்ணகி வழக்குத் தொடுத்து வாதாடியபோது, தான் கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்தது அரசநீதி என்று எடுத்துக்காட்டியவனும் இந்த நெடுஞ்செழியனே. பிறகு கண்ணகி, குற்றஞ்செய்யாதவன்மேல் பொய்க்குற்றஞ் சாட்டிக் கொலை செய்வது அநீதி என்று சான்று காட்டி நிறுவிய போது, தான் செய்தது தவறுதான் என்று கண்டு, தன் தவற்றை யுணர்ந்து அஞ்சி நடுங்கி அரசுகட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்தபடியே உயிர் விட்டவனும் இந்த நெடுஞ்செழியனே. இவனுடைய ஆட்சிக்காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரையின்மேல் படையெடுத்து வந்து போர் செய்த ஆரியப்படையை வென்று ஓட்டித் துரத்தியவனும் இந்த நெடுஞ் செழியனே. இவற்றையெல்லாம் சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தின் இறுதிச் செய்யுளினால் அறிகிறோம். “வட வாரியர் படை கடந்து தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன் அரைசு சட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்” என்பது அதன் வாசகம். கல்வி கற்றுப் புலவனாக விளங்கிய இந்தப் பாண்டியன் போர்க்களத்தில் பகைவரை வென்று புகழ் பெற்று விளங்கினான். அந்த வெற்றியின் காரணமாக இவன் “ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்” என்று சிறப்புப்பெயர் பெற்றான். அரசுக் செல்வமும், கல்விச் செல்வமும் கைவரப் பெற்ற இந்தப் பாண்டியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுக் கோவலனைக் கொன்ற தவற்றின் காரணமாகக் கண்ணகி இவன்மீது தொடுத்த வழக்கில் தோற்றுத் தான் செய்தது தவறு என்று கண்டபோது மனம் பதறித் தான் நடத்தியது கொடுங்கோல் என்பதை அறிந்து நெஞ்சம் பதறிச் சிம்மாசனத்திலேயே உயிரை விட்டான். இவன் அரசு கட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்து உயிர்விட்டபடியால் “அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்” என்றும் பெயர் பெற்றான். இஃது இவன் இறந்த பிறகு பெற்ற பெயர். நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றான் என்று கூறப்படுகிறான். ஆரியப்படை இவன்மேல் படையெடுத்து வந்தார்? இவன் ஆரியப் படையின்மேல் போருக்குச் சென்றானா? ஆரியப் படை என்றால் என்ன? இவை பற்றி ஆராய வேண்டியது சரித்திரம் அறிவதற்கு முதன்மையானது. சங்க காலத்துத் தமிழர் பாரதநாட்டை மூன்று பெரும் பிரிவுக ளாகப் பிரித்திருந்தார்கள். அவை தமிழகம் (தமிழ் நாடு), வடுக நாடு மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையில் நீண்டிருந்தது. வடுக நாட்டின் மேற்குப் பகுதியைக் கன்னடரும் கிழக்குப் பகுதியைக் கலிங்கரும் (ஆந்திரரும்) ஆட்சி செய்தனர். கன்னட நாடும் ஆந்திர நாடும் சேர்ந்ததே வடுக நாடு. கன்னடரும், ஆந்திரரும் வடவர் அல்லது வடுகர் என்று பெயர் பெற்றனர். வடுக நாட்டுக்கு அப்பால் (விந்திய மலைக்கு வடக்கே) இருந்தது ஆரியநாடு. அது வடஇந்தியா முழுவதும் அடங்கியிருந்தது. ஆரிய நாட்டிலே இருந்தவர் ஆரியர். ஆரிய நாட்டிலிருந்த படை ஆரியப்படை. கடைச்சங்க காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் வட மேற்கு இந்தியாவில் சில கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தாரில் யௌத் தேயர், அர்ச்சுனீயர் என்னும் பிரிவினர் முக்கிய மானவர். இவர்களுடைய தொழில் போர் செய்வது. யுத்தம் (போர்) செய்வதை வாழ்க்கையாகக் கொண்டவர்யௌத் தேயர். அர்ச்சுனீயர் என்பவர் அர்ச்சுனன் வழியில் வந்த போர் வீரர். இவர்களுக்கு அரசன் இல்லை. இவர்கள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். யாரெனும் அரசன் இவர்களைத் துணைக்கு அழைத்தால் அவனைச் சார்ந்து அவனுடைய பகைவனுடன் போர் செய்வது இவர்களுடைய தொழில். சில சமயங்களில் இவர்கள் கூட்டமாக வேறு நாட்டுடன் போர் செய்வதும் உண்டு. யௌத்தேய கணம் (கணம் - கூட்டம்) தமிழ்நாட்டின் மேல் அடிக்கடி போருக்கு வந்தது. யௌத்தேய கணத்தைச் சங்ககாலத் தமிழர் ஆரியப்படை என்று பெயரிட்டழைத்தனர். வடுக நாட்டுக்கு அப்பால் ஆரிய நாட்டிலிருந்து வந்தவர் ஆகையால் அவர்கள் ஆரியப்படை என்று பெயர் பெற்றனர். ஆரியப் படை (யௌத்தேய கணம்) யின் வரலாற்றை நான் எழுதிய கட்டுரையில் காண்க. (ஆரியப்படையும் யௌத்தேய கணமும். பக்கம் 128-134, கல்வெட்டுக் கருத்தரங்கு. 1966.) அகநானூறு 386 ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஆரியப் பொருநன், ஆரியப் படையைச் சேர்ந்தவன் என்று தோன்றுகிறான். சோழநாட்டு வல்லத்துக் கோட்டை மேல் ஆரியப்படை வந்து முற்றுகை யிட்டபோது அக்கோட்டையிலிருந்த சோழன் அவ்வாரியப் படையை வென்று துரத்தினான். ஆரியப்படை உடைந்து ஓடிற்று. இதனை அகநானூறு 336 ஆம் செய்யுளினால் அறிகிறோம். பாண்டியன் நெடுஞ் செழியன் காலத்தில் ஓர் ஆரியப்படை போர் செய்ய மதுரைக்கு வந்ததையும் அப்படையை அவன் வென்று துரத்தியதையும் சிலப்பதிகார மதுரைக்காண்டம் கட்டுரைச் செய்யுளி னாலும், புறநானூறு 183 ஆம் செய்யுளின் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம். இவ்வளவு சிறந்த வீரனும் அறிஞனும் புலவனுமாக இருந்த இந்தப் பாண்டியன், மகளிர் மாட்டு வேட்கையுடையனாய்ச் சிற்றின்பப் பிரியனாக இருந்தான் என்பதை இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்தவ ரான இளங்கோவடிகள் (சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார்) கூறுகிறார். சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் இதனை இவர் கூறுகிறார்: “கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்த வென்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக் குலமுதற் றேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைக்கா ணகவயின்.” (வரி, 131 - 140) இச் செய்தியையே இளங்கோவடிகள் கட்டுரை காதையில் மதுராபதி தெய்வத்தின் வாயிலாக மீண்டும் கூறுகிறார். பாண்டியன் கல்வி கற்றுப் புலமை வாய்ந்தவனாக இருந்தும், மனத்தை அடக்காமல் சிற்றின் பத்தில் நாட்டஞ் செலுத்தினான் என்றும், ஆனாலும் இவ்வொழுக்கம் அரச குடியில் பிறந்த இவனுக்கு இழுக்காகாது என்றும் மதுராபதி கூறியதாக இளங்ககோவடிகள் கூறுகிறார்: “நன்னுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத் திளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா வுள்ளத் தோடும் ஆயினும் ஒழுக்கொடு புணர்ந்த இவ்விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கந்த தாராது.” (கட்டுரைகாதை, 35-41.) இந்த நெடுஞ்செழியனிடத்தில் இன்னொரு குறைபாடும். இருந்தது. அஃது அரசர்மாட்டிருக்கக் கூடாத குறைபாடு. நீதி விசாரணைகளை இவன் பொறுப்பேற்று நடத்தாமல் தன் கீழ்ப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டான். அதனால், அவர்கள் தம்முடைய விருப்பம்போல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள். அவர்கள் செய்த பிழைபட்ட தவறான தீர்ப்பு இவ்வரசனுக்குக் கெட்ட பெயரை யுண்டாக்கிற்று. இச் செய்தியையும் இளங்கோவடிகளே கூறுகிறார். இதனை விளக்கிக் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் சேர நாட்டில் இருந்தவன்’ பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இந்தக் குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தில் பாடியவர் பாலைக் கௌதமனார். அவருக்குக் குட்டுவன் பெருஞ் செல்வங் கொடுத்ததை யறிந்த சோழ நாட்டுப் பார்ப்பான் பராசரன் என்பவன், அவனிடஞ் சென்று வேத பாராயணஞ் செய்து பொன்னையும் மணியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் (திருத்தண்கால்). என்னும் ஊரில் வந்து அரச மரத்தடியில் இளைப்பாறி னான். அப்போது அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவர் அவனிடஞ் சென்றனர். பராசரன் அவ்விளைஞர்களை அழைத்துத் தன்னுடன் வேதம் ஓதும்படி கூறினான். அவ்விளைஞர்களில் தக்கிணன் என்னும் சிறுவன் பிழையில்லாமல் வேதம் ஓதியபடியால், பராசரன் தக்கிணனுக்கு முத்துப் பூணூலையும் பொன் கடகத்தையும் பரிசாகக் கொடுத்தான். பிறகு அவன் தன் சோழ நாட்டுக்குப் போய் விட்டான். முத்துப் பூணூலையும் பொற் கடகத்தையும் பரிசாகப் பெற்ற தக்கிணன் என்னும் சிறுவன் அவற்றை அணிந்து கொண்டான். அதனைக் கண்டு பொறாமை கொண்ட அவ்வூர்ப் பார்ப்பனர், தக்கிண னுடைய தந்தையான வார்த்திகன் என்னும் பிராமணன் இந்த நகைகளை எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்தான் என்று ஊர் அதிகாரிகளிடம் கூறினார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அந்த ஊழியர்கள், தீர விசாரியாமல் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். வார்த்திகன் அந்த நகைகளைக் களவாடியிருக்க வேண்டும், அல்லது அவனுக்குப் புதையல் கிடைத்திருக்க வேண்டும். களவு செய்தது குற்றம். புதையல் கிடைத்திருந்தால், அதை அரசாங்கத் தில் சேர்க்காமல் போனது குற்றம் என்று அவர்கள் தீர்ப்புக் கூறினார்கள். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் வருந்தி அழுதாள். அப்போது அவ்வூர் ஐய (கொற்றவை) கோவிலின் கதவு திறவாமல் மூடிக்கொண்டது.இச் செய்தி அரசன் செவிக்கு எட்டியது. பாண்டியன், தண்காலில் இருந்த அரச ஊழியர்களை யழைத்து விசாரித்தான் அப்போது முத்துப் பூணூலின் வரலாறு தெரிந்தது. அரசன் வார்த்தி கனை விடுதலை செய்து தன் ஊழியர் ஆநீதி செய்ததற்குத்தண்டமாக அவனுக்கு வயலூரில் நிலத்தைத் தானஞ் செய்தான். பிறகு கொற்றவைக் கோயில் கதவு திறந்து கொண்டது. இச் செய்திகளைக் கட்டுரைகாதை (வரி, 61-131) யில் காண்க. இதனால், இவன் நீதி விசாரணையில் கண்டிப்பாக இராமல் தன் கீழ்ப்பட்ட ஊழியரிடத்தில் அதிகாரத்தை விட்டிருந்தான் என்பது தெரிகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பொது மக்களுக்கு இவன்மீது நம்பிக்கை போய் விட்டது. ஒரு சோதிட வார்த்தையும் உலவ ஆரம்பித்தது. அது, “ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டரைசு கேடுறும்” (கட்டுரை. 133 136) என்பது. வழக்கு விசாரணைகளைச் சரிவரச் செய்யாமல் போனது இவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. பாண்டிமாதேவி யின் பொற்சிலம்பைத் திருடின கள்ளன் தன்னிடம் இருக்கிறான் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறியபோது, பாண்டியன் அதனை நன்றாக விசாரணை செய்யவில்லை. அல்லது, தக்க பொறுப்புக்க அதிகாரியிடத்தில் ஒப்படைத்து விசாரிக்கச் செய்யவும் இல்லை. அவன் தன் கடமையைச் செய்யாமல் தவறினான். இஃது அவனுடைய இயற்கை. பொற்கொல்லனுடைய வார்த்தையை அவன் முழுவதும் நம்பினான். விசாரணை செய்யாமலே, ஊர் காப்பாளரை அழைப்பித்து, “தாழ்பூங் கோதைத்தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு” என்று கட்டளை யிட்டான். இந்தச் சோர்பு இவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இவன்மீது கண்ணகி வழக்குத் தொடுத்து வழக்காடிய போது, இவ்வரசன் தான் செய்தது பிழை என்பதை அறிந்தான். அறிந்து அரசு கட்டிலிலேயே உயிர்விட்டான். ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில், துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனின் இந்த வரலாறுகளை யெல்லாம் சிலப்பதிகாரத்தி லிருந்து அறிகிறோம். இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசர்கள், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவன் தம்பியான பல்யானைச் செல் கெழுகுட்டுவனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர். கொங்கு நாட்டில் சேரரின் இளைய வழியைச் சேர்ந்த மாந்தரஞ்சேரல் (செல்வக் கடுங்கோவாழியாதன்) அரசாண்டிருந்தான். சோழ நாட்டில் இருந்தவன் வடிவேற்கிள்ளி. தொண்டை நாட்டைக் காஞ்சியிலிருந்து அரசாண்டவன் வடிவேற்கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி, இவர்கள் எல்லோரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனைப்பற்றித் திரு. ச. வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஓரிடத்தில் சரியாகவும் வேறொரிடத்தில் தவறாகவும் எழுதியிருக்கிறதைச் சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது. 1940 ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாசம் வெளியிட்ட சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்) என்னும் நூலின் பதிப்பாசிரியராக இருந்தவர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள், அந்த நூலில், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னுந் தலைப்பில், இவன் பாடிய புறம் 183 ஆம் செய்யுளைப் பிள்ளை யவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ்மொழி’ தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 145 ஆம் பக்கத்தில் இந்தப் பாண்டியனைச் சந்தேகிக்கிறார். (இந்த ஆங்கில நூல் 1956 ஆம் ஆண்டில் இவர் காலஞ் சென்ற பிறகு அச்சிடப்பட்டது). இந்த அரசன் உண்மையில் உயிர்வாழ்ந்திருந்தானா என்று இவர் ஐயப்படுகிறார். சங்க இலக்கியத்தை அச்சிட்டபோது இவருக்கு இல்லாத ஐயம் பிற்காலத்தில் இவருக்கு எப்படி ஏற்பட்டது! இந்தப் பாண்டியன் கற்பனைப் புருஷன் என்றால், இவன் பாடிய செய்யுள் எப்படிப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கும்? ஆனால், வையாபுரிப் பிள்ளையின் நண்பரும் தமிழ் நூல்களும் தமிழ் நாட்டுச் சரித்திரங்களும் பிற்காலத்தவை என்று கூறுகிறவருமான திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்தப் பாண்டியனைப்பற்றி ஐயப்பட வில்லை. இந்தப் பாண்டியன் உண்மையில் வாழ்ந்திருந்தவன் என்றும் புறநானூற்று 183ஆம் செய்யுளைப் பாடியவன் என்றும் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்திலிருந்தவன் என்றும் கோவலனைத் தவறாகக் கொன்று அந்தத் தவற்றைப் பிறகு அறிந்து சிம்மாகனத்தி லிருந்தபடியே உயிர் விட்டவன் என்றும் சாஸ்திரியார் எழுதுகிறார். (P. 524/ 544. A Comprehensive History of India. Vol. 2. 1957). ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான வெற்றி வேற் செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன், மதுரைக்கு வந்து அரசாண்டான். அவனுக்குப் பிறகு பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் சங்க காலத்திலே, மதுரைமா நகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப் பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச் சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப் பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி. பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும், நேர்மையாகவும், சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி.5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல் காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர் எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்த படியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமரை மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள்கூட, ஆராய்ந்து பார்த்து உண்மை காணத் தெரியாமல், பிள்ளையவர்களின் தவறான முடிபுகளை உண்மை யானவை எனக்கொண்டு மயங்குகிறார்கள். பிள்ளையவர்கள் பதிப் பித்த நூல்கள் போற்றற் குரியவை; பழைய நூல்களைப் பதிப்பிப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், சொந்தமாக அவர் எழுதிய நூல்களில் மெய்போலத் தோன்றுகிற பல தவறான செய்திகள் கூறப் படுகின்றன. பொறுப்பு வாய்ந்த உயர்ந்த பதவியி லிருந்துகொண்டு, அதிலும் சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற நிலையத்தில் தமிழ்ப் பகுதியின் தலைமைப்பீடத்தில் அமர்ந்துகொண்டு பிள்ளையவர்கள் வெளியிட்ட தவறான’ ஆராய்ச்சி முடிபுகளை, அசைக்கமுடியாத உண்மைகள் என்று இன்றும் பலர் கருதிக்கொண்டிருப்பதில் வியப்பில்லை. அவருடைய முடிபுகள் தவறானவை என்பதை இதுவரையில் யாரும் விளக்காமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது. பையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே வெளிவந்த அவருடைய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே (History of Tamil Language and Literature (1956) New Century Book House, Madras 2.) பல பிழைபட்ட தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது ஆங்கில நூலாக இருப்பதனாலே, இதனைப் படிக்கிற தமிழ் அறியாத மற்றவர்கள், இவருடைய பிழையான கருத்துக்களை உண்மையானவையென்று நம்புகிறார்கள். இவருடைய தவறான கருத்துக்கள் மேலைநாடுகளிலும் பரவி, தமிழ்மொழியைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப்பற்றியும் பிழைபடக் கருதும்படி செய்கின்றன ஏன்? நமது நாட்டிலும் இவருடைய தவறான முடிபுகளை நம்புகிறவர்களும் பலர் உள்ளனர். இங்கு, பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பிள்ளை யவர்கள் கூறும் கருத்தை ஆராய்வோம். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார்: “வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி. பி. 470-இல் நிறுவப் பட்டது. தொல்காப்பியம் இச்சங்கத்தின் முதல் வெளியீடாக வெளிப் பட்டிருக்கக் கூடும் (பக்கம் 14). கி. பி. 470-இல் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு முதன்மையான நிகழ்ச்சி ஏற்பட்டது. அந் நிகழ்ச்சி என்ன வென்றால், மதுரையிலே வச்சிர நந்தியின் மேற் பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கமாகும். (பக்கம்-58) பழைய பாண்டியருக்குரிய சாசனங்களில், சின்னமனூர்ச் சிறய செப்பேட்டுச் சாசனம் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டு)மதுரையில் இருந்த சங்கத்தைக் கூறுகிறது. தலையாலங்கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு இருந்த ஒரு பாண்டியனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப் பட்டதாக இச் சாசனம் கூறுகிறது. இச் சாசனம் கூறுகிற சங்கம் வச்சிர நந்தி ஏற்படுத்திய சங்கம் ஆகும். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கக்கூடும். (பக்கம் 59) மதுரையில் இருந்த சங்கம் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மூன்று கழகங்களும் சமணர்களால் உண்டாக்கப்பட்டவை. இவை சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர் களின் முயற்சியால் உண்டாக்கப்பட்டவை என்பதைச் சங்கம் என்றும் பெயர் ஆதரிக்கிறது. (பக்கம் 60) வச்சிர நந்தியின் சங்கத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்கம் ஏற்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவு இலக்கண நூல்களும் அற நூல்களும் வெளி வந்திருப்பது அதனுடைய பெரிய வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. (பக்கம் 161) பிள்ளையவர்கள் இவ்வாறு தமது ‘தமிழ் மொழி, இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே எழுதியிருக்கிறார். இந்தத் தெளிவான பொருள் என்னவென்றால் - வச்சிரநந்தி என்னும் சமணர் கி. பி. 470 இல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர், சமணர்கள்தாம் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தில் தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டது. தொல்காப்பியமும் தமிழ்ச் சங்கமும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பனவாம். இவற்றை நாம் ஆராய்வோம். சின்னமனூர்ச் செப்பேட்டை இவர் ஆதாரம் காட்டுகிறார். அச் செப்பேட்டின் செய்தி இது. “தடம் பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் அரும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியும் தலையாலங் கானத்திற் றன்னொக்க விருவேந்தனரைச் கொலைவாளிற் றலைதுயித்துக் குறைத்தலையின் கூற்தொழிந்தும் மஹாபாரதத் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்துப் மஹாராஜரும் ஸார்வ பௌமரும் தம்மகிமண்டலங் காத்திருந்தபின்...” வையாபுரிப் பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டாத இன்னொரு பாண்டியனுடைய செப்பேட்டுச் சாசனமும் பாண்டிய மன்னர் மதுரை யில் தமிழ்ச் சங்கம் நிறுவிய செய்தியைக் கூறுகிறது. பாண்டியர் பராந்தகன் வீரநாராயணன் எழுதிய அந்த செப்பேட்டுச் சாசனத்தின் பகுதி இது. “மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் ஈன்செய்தியும் கடிநாறு கலினலங்கற் களப்பாழர் குலங்கனைந்தும் முடிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின்” இந்த இரண்டு செபேட்டுச் சாசனங்களும் பாண்டிய அரசர்களின் காலத்தில் எழுதப்பட்டவை. இச் சாசனங்கள் இரண்டும் பாண்டிய அரசர் மதுரை மாநகரத்தில் தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தியதைக் கூறுகின்றன. பட்டம் பகல் வெட்ட வெளிச்சம்போல் தெரிகிற இந்தச் செய்தியைப் பிள்ளையவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந் திருக்கவேண்டும். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் சமணர் என்று கூறுகிறார். இந்தச் சாசனங் களிலே, வச்சிர நந்தியோ வேறு சமணர்களோ தமிழ்ச் சங்கம் வைத்த தாகக் கூறவில்லை; பாண்டிய மன்னர் தமிழ்ச்சங்கம் வைத்து நடத்திய தாகத் தான் கூறுகின்றன. பிள்ளையவர்கள், பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தோடு, வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தை இணைத்துப் பிணைத்து முடிபோடுகிறார். சாசனங்களிலும் பழைய நூல்களிலும் கூறப் படுகிறபடி பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்தார்கள் என்னும் செய்தியை அடியோடு மறைத்துவிடுகிறார். வச்சிர நந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச்சங்கம் வேறு என்பதை அறியாமல் இரண்டும் ஒரே சங்கம் என்று காரணம் கூறாமல், சான்று காட்டாமல் எழுதுகிறார். இது பிள்ளையவர்கள் செய்த முதல் தவறு. இனி, மேலே செல்வோம். வச்சிநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526-இல் (கி. பி. 470) மதுரையில் திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது தர்சனசாரம் என்னும் நூலில் எழுதியிருக்கிறார். இந்தச் சான்றைக் காட்டி வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திரமிள சங்கந்தான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் என்று கூறுகிறார். இந்தச் செய்தியில், பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிரநந்தியின் திரமிள சங்கமும் ஒன்று என்று கூறப்படவில்லை. பிள்ளையவர்கள் தாமாகவே இட்டுக்கட்டிக் கூறுகிறார். இனி, வச்சிரநந்தியின் திரமிள சங்கம் என்பது யாது என்பதை ஆராய்வோம். வச்சிரநந்தி சமண சமயத்தைச் சேர்ந்த முனிவர். இவர் மதுரையிலே திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார். திரமிளம் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றே. இவற்றின் பொருள் தமிழ் என்பது. திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராயும் சங்கம் அன்று; தமிழ்ச் சங்கம் அன்று; தமிழச் சங்கம், சமண சமய சம்பந்தமான சங்கம். அதாவது, சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்துப்பட்ட சங்கம். சமணத் துறவிகள் அந்தக் காலத்தில் பெருங் கூட்டமாக இருந்தனர். சமண முனிவர்களின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். பௌத்த பிட்சுக்களின் கூட்டத்திற்கும் சங்கம் என்பது பெயர் சமண முனிவரின் சங்கங்கள் (கூட்டங்கள்) நான்கு பெரும் பிரிவுகளாகவும், பல உட்பிரிவுகளாகவும் அக்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பெரும் பிரிவுகள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பன. (கணம் - சங்கம்). இந் நான்கு கணங்களில் நந்தி கணம் பேர் போனது. திரமிள சங்கத்தை ஏற்படுத்திய வச்சிரநந்தியும் நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. நந்தி கணத்தில் சமண முனிவர் கூட்டம் அதிகமாகப் பெருகிவிட்டபடியினாலே, வச்சிரநந்தி ஆசாரியர், அந்தக் கணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்குப் பழைய நந்திச் சங்கம் என்றும், மற்றொரு பிரிவுக்குத் திரமிள சங்கம் என்றும் பெயர் கொடுத்தார் என்பது சமண சமய வரலாறு. தமிழ் முனிவர்கள் அதிகமாக இருந்த படியினாலே திரமிள சங்கம் என்று பெயர் சூட்டினார். நந்தி சங்கத்தின் பிரிவுதான் திரமிள சங்கம் என்பதற்குக் கன்னட தேசத்தில் உள்ள ஒரு சாசனச் செய்யுள் சான்றாக இருக்கிறது. அச் செய்யுள் இது:- “ஸ்ரீமத் திரமிள லங்கேஸ்மிம் நந்தி லங்கேஸ்தி அருங்களா! அன்வயோ பாதி நிஸ்ஸேடி ஸாஸ்த்ர வராஹி பாரஹைஹி” இந்தச் சுலோகத்திலே நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வயம் என்னும் பிரிவு கூறப்படுதல் காண்க. எனவே, சமண முனிவராகிய வச்சிர நந்தி மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் என்றால், சமண முனிவரின் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பது பொருளாகும். அதாவது மத சம்பந்தமாக சமண முனிவரின் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார் என்பது பொருள். வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழச் சங்கம் தமிழ் மொழியை ஆராய்வதற்காக ஏற்பட்ட சங்கம் அன்று. சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கம் ஆகும். இதை அறியாமல் வையாவுரிப் பிள்ளையவர்கள், வச்சிர நந்தியின் தமிழ்ச் சங்கமும் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் ஒன்றே என்று கூறுகிறார். முதற் கோணல் முற்றுங்கோணல் என்பது பழமொழி. வச்சிரநந்தியின் சமண முனிவர் சங்கமும், பாண்டியரின் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமும் ஒன்றே என்று தவறான முடிவு கொண்ட பிள்ளையவர்கள், கி. பி. 470-இல் தான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்றும் இந்தச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறி மற்றும் பல தவறான முடிவுகளைக் கூறுகிறார். கடுந் துறவிகளாகிய சமண முனிவர்கள் - சிற்றின்பத்தையும், கொலைகளையும் கடுமையாக வெறுக்கிற சமண முனிவர்கள் - தமிழ்ச் சங்கம் வைத்துக்கொண்டு காதற் செய்திகளையும், போர்ச் செய்திகளை யும் கூறுகிற அகநானூறு, நற்றிணை நானூறு பிற நானூறு, முதலிய செய்யுள்களை ஆராய்ந்தனர், இயற்றினர் என்று கூறுவது எவ்வளவு அசம்பாவிதம்! முற்றத் துறந்த சமண முனிவர்கள் இசையையும் நாடகத்தையும் ஆராய்ந்தனர் என்று கூறுவது எவ்வளவு முரண்பட்ட செய்தி! சங்கம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருளை ஆராயாமல் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு நோக்கமுடைய சங்கங்களை ஒன்றாக இணைத்து முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ! வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள கட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்”களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டிநாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. அதனால் பிற்காலத்திலே சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றி, சமண சமயத்துடன் சமயப் போர் நிகழ்த்தினர். இச் செய்தியைப் பெரிய புராணம் முதலிய நூல்களில் காண்கிறோம். எனவே, வையாபுரிப் பிள்ளை கூறுகிறபடி, வச்சிரநந்தி உண்டாக்கிய திரமிள சங்கமும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கமும் ஒன்றல்ல, வெவ்வேறு சங்கங்கள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் ஆட்களால் உண்டாக்கப் பட்டவை. இரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கூறுவது தவறாகும். பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி. பி. 300 க்குப் பிறகு இருந்திருக்க முடியாது. கி. பி. 300-க்கு முன்புதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும். இதனைத் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றைக்கொண்டு அறியலாம். ஏறக்குறைய கி. பி. 300-இல் களபரர் என்னும் அரசர் தமிழ்நாட்டிற்கு வந்து, சேர, சோழ, பாண்டியர் ஆகிய தமிழ்நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தக் களபரர் தமிழகத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள். களபரர் தமிழகத்தைக் கைப்பற்றிய பிறகு சேர, சோழ, பாண்டிய மன்னர் களபரருக்குக்கீழ் அடங்கியிருந்தார்கள். களபரரின் ஆட்சி ஏறக்குறைய 300 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்தது. பிறகு ஏறக்குறையக் கி. பி. 600-இல், கடுங் கோன் என்னும் பாண்டியன் களபரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டான். ஏறக் குறைய அதே காலத்தில், தொண்டை நாட்டி லிருந்த சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசன் களபரரை வென்று சோழநாட்டைக் கைப் பற்றிக் கொண்டான். அப்போது, களபரருக்குக் கீழ் அடங்கி யிருந்த சோழர், பல்லவர்களுக்குக்கீழ் அடங்கவேண்டிய தாயிற்று. ஏறக் குறைய அதே காலத்தில் சேர நாடும் களபரர் ஆட்சியி லிருந்து சுயேச்சையடைந்தது. களபரர் ஆட்சிக் காலத்தில் தான் வச்சி ரநந்தி கி. பி. 470-இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். களபரர்கள் சமண, பௌத்தச் சமயங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் தமிழ் மொழியை ஆதரித்ததாகத் தெரியவில்லை. கி. பி. 470-இல் அரசாண்ட களபர அரசன் அச்சுத விக்கந்தன் என்பவன். எனவே, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் கி. பி.300-க்கும் 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்க முடியாது. கி. பி. 300-க்கு முற்பட்ட காலத்திலேதான் ஏற்பட்டிருக்கமுடியும். கி. பி. 600-க்குப் பிறகு பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால் கி. பி. 630-இல் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரப் பதிகத்திலே தமிழ்ச் சங்கம் நீண்ட காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறுகிறார். எனவே, கி. பி. 470-இல் களபரர் ஆட்சிக் காலத்தில் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் தமிழ் ஆராய்ச்சிச் சங்கம் அன்று. அது சமண சமயம் பற்றிய சமண முனிவர்களின் சங்கமாகும். இந்த விதத்திலும் வையாபுரிப் பிள்ளையின் கருத்துத் தவறாகிறது. இதுகாறும் ஆராய்ந்ததி லிருந்து தெரிகிறது என்னவென்றால், வையாபுரிப் பிள்ளையவர்கள், பொருளைத் தவறாகக் கருதிக் கொண்டு பொருந்தாத காரணங்களைப் பொருத்திக் காட்டியிருக்கிறார் என்பதும், அவருடைய முடிபுகள் தவறானவை என்பதும் ஆகும். வச்சிர நந்தியின் திராவிட சங்கம்வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்பது இங்கு நன்கு விளக்கப்பட்டது. பாண்டியரின் சங்கம் கி.பி.300-க்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது. வையாபுரிப் பிள்ளை பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தைப்பற்றிக் கூறுகிற இன்னொரு செய்தியையும் ஆராய்வோம். தலையாலங் கானத்துச் செருவென்றபாண்டியன் நெடுஞ்செழியனுடைய காலத்துக்குப் பிறகுதான் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒரு பாண்டியனால் நிறுவப்பட்டது என்று சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது என்பதைப் பிள்ளை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள் (பக்.59). உண்மைதான். மேலே நாம் காட்டியுள்ள சின்னமனூர்ச் சாசனப் பகுதி, பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டியதுபோல, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதாகக் கூறுகிறது. அச் சாசனப் பகுதிக்குக் கீழே நாம் காட்டியுள்ள பாண்டியனுடைய மற்றொரு செப்பேட்டுச் சாசனப் பகுதி அதற்கு மாறாகக் கூறுகிறது. தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு பாண்டியன் நெடுஞ் செழியன் இருந்ததாக இச் சாசனம் கூறுகிறது. ஆகவே, பிள்ளை யவர்கள் கூறுவதுபோல நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட தென்பது தவறாகிறது. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இக்கட்டுரை பெருகி விரியும். ஆகையினாலே, இது பற்றித் தனியாக எழுதுவோம். ஒன்றைமட்டும் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன், கடைச் சங்க காலத்திலே, தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே இருந்தவர் என்பது உறுதி. நெடுஞ் செழியன் காலத்துக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்று கூறுவது தவறு என்பதைக் கூறிக் கொண்டு இதனை முடிக்கிறேன். பிள்ளை யவர்களின் ஏனைய ஆராய்ச்சிகளைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். *** அடிக்குறிப்புகள் 1. எரித்திரையக் கடலின் ஆதிப்பெயர் `Erythraean’ `e’ என்பதாகும். எரிதிரியன்கள் (என்போர்) என்ற செந்நிறமுடைய மக்கள் அக் கடல்களில் வாணிகம் செய்துவந்தனர். 2. Argalus 3. Orgalic s.a. 4. முதுமொழிக்காஞ்சி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று கூறுமிடத்து அச்சொல் கடலின் பொதுப் பெயராக அமைந்திருந்ததைக் காணலாம். 5. `பஃறுளி யாற்றுடன் பண்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (சிலப் 11 : 19-20) `மலி திரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவா நாடு இடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ (கலித். 104 - 1- 4) `அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரையும் கபாடரமும் என்ப.’ (இறையனார் அகப் பொருள் உரைப்பாயிரம்) 6. மகாவம்சம், 22:20. 7. மணிமே. 5 : 37. 8. லெமூரியாபற்றிய தீர்ந்த முடிவு இதுகாறும் கிடைக்கவில்லை. எனினும், லெமூரியாக் கண்டம் இருந்தது உண்மையே என்றும் 1,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும் மென்றும் இந்நூலின் முதல் தொகுதியில் `தொல்பழங்காலம்’ பக்கம் 25 இல் விளக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என்று தீர்மானமாகக் கூற முடியாவிட்டாலும் தென்னிந்தியாவை ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா வுடன் இணைத்த ஒரு பெருநிலப்பகுதி இருந்திருக்கலாம். அண்மையில் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந்திருப்பதாகச் சில அறிஞர் கூறுகின்றனர். கபாடபுரத்தை வடநாட்டுக் காப்பியங்கள் குறிப்பிடுவதி லிருந்து ஒரு நிலப்பகுதி குமரிக்குத் தெற்கில் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. 9. `வென்வேற் கவுரியர் தொன்முது கோடி’ (அகம். 70-13). 10. கொடும்பளூர் இக்காலத்திய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 11. அகம். 13:10 12. பரிபா. 1:1-5, 2:19-21, 13 : 27-33, 15 : 13-14. 13. சிலப். 11 : 94 - 97. 14. இந்நூலின் அடிப்படைச் சான்றுகள் - II, கல்வெட்டு வரிசை எண் 44 முதல் 46 வரை. 15. இந்நூலின் அடிப்படைச் சான்றுகள் -II, கல்வெட்டு வரிசை எண் 1-6. 16. பரிபா. 12 : 9-10; கலி, 67 : 3-4. 17. சிலப். 11 : 108; பரிபா. 15 : 21-23. 18. `அக்காலத்து அவர் நாட்டிற்குத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதம் - கடல் கொண்டு ஒழிதலால் குமரியாகிய பௌவம் என்றார்’. சிலப். 8 : 1-2 அடியார் உரை. 19. சிலப். 14 : 108-112 20. அகம் : 220 : 13. 21. பெரிபுளூஸ் `நெல்சிந்தா’ என்று குறிப்பிடும் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்தையும் `நெல்லினூர்’ என்று கொள்ள இடமுண்டு, இதுவும் பாண்டியருக்குச் சொந்தமானது என்று பெரிபுளூஸ் நூல் கூறுகிறது. 22. Kol Kei. 23. Elankon of Ptolemy. 24. `சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப’. (களவியலுரை) 25. `அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்தென்ப, அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.’ (களவியலுரை) 26. இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம். 27. பரிபா. தி. 7 : 1-5. 28. முருகு, 67-77. 29. சிலப். 14 : 67. 30. சிலப். 1 5 : 207-16. 31. புறம். 215 : 6-7. 32. திருக்குறளின் சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் `குடிமை’ என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது திருக்குறளுக்குப் பொருள் கூறுமிடத்துப் `பழங்குடி’ என்னும் சொல்லிற்குச் `சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்’ எனக் கூறியுள்ளார். ஆகையால், பாண்டியர் குலம் இன்ன காலத்தில் தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற இயலாது. தென்னிந்தியத் தலபுராணங்களில் பாண்டியர்கள் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பெறுகிறது. இக் கூற்றுகள் பாண்டிய மன்னர்களுடைய நீண்டகாலத் தொடர்பைக் குறிக்கின்றன. பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சார்ந்தவர்கள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளனரா? என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சில வரலாற்றாசிரியர்கள் தென்தமிழ்நாட்டு மறவர் குலத்தைப் பாண்டிய மன்னர்களுடைய சந்ததியார் என்று கூறுவர். மற்றும் சிலர் கள்ளர்கள் இனத்தைச் சார்ந்தவர்களே பாண்டியர்களுடைய சந்ததியார் ஆவர் என உரைப்பர். இப்பொழுது தென்மாவட்டங்களில் வாழும் `பள்ளர்’ இனத்தைச் சேர்ந்தவர்களே பாண்டிய மன்னர்களின் மூதாதையர்கள் என்றும், `மள்ளர்’ என்று சங்க இலக்கியங்களில் காணப்படும் குலப்பெயர் பள்ளர் என்று திரிந்துவிட்டது என்றும் சிலர் கூறுவர். இக்கூற்றில் எவ்வளவு வரலாற்றுண்மை பொதிந்துள்ளது’ என்பது அறிஞர்களின் ஆய்விற்கு உரியதாகும். சங்க இலக்கியங்களில் பயன்றுள்ள `மள்ளர்’ என்னும் சொல் பள்ளர் எனத் திரிந்தது என்பதற்கு, இப் பள்ளர்கள் பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. (ப-ர்.) 33. Rock Edicts II and XIII. 34. இந்நூல் அடிப்படைச் சான்றுகள் II, கல்வெட்டு எண்கள் 1 முதல் 6 . 35. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னரது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம். 183) 36. சிலப். 23 : கட்டுரை 14-18. 37. `ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழற்குட் டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும் உரையும் உண்டே நிரைதொடி யோயே’ (சிலப். 23 : 133-137) 38. `தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து மன்னுயிரப் பன்மையும் கூற்றத்து ஒருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழியே! (புறம். 19 : 2-4) 39. புறம். 19 : 2-4. 40. புறம். 76 : 9. 41. கொள்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (சிலப். உரைபெறு கட்டுரை) 42. `கொற்கைக் கோமான் தென்புலங் காவலர் மருமான்’ (சிறுபாண். 62-63). 43. அகம். 209 : 3-4. 44. `இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15) 45. `முத்தின்தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (அகம். 137 : 13-14). 46. சிலப். 23 : உரைபெறு கட்டுரை. 47. பசும்பூண் பாண்டியன் எனக் கொள்ள இடமுண்டு. 48. அகம். 149 : 13-14. 231 : 12-13; நற். 39 : 9-10. 49. அகம். 46 : 14, 47 : 16. 50. இத்தலையாலங்காணம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது. 51. அகம். 36 : 15-20. 52. புறம். 77 :6 53. புறம் 76 : 5-9 54. `நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’ (நற். 39 : 7-10) 55. `ஆடுகொள்முரசின் அடுபோர்ச் செழியன் மாடுமூதூர் மதிற்பறம் தழீஇ - யாத்தகுடை (அகம். 335 : 10-14) 56. சிலர் நெல்சிந்தம் என்பது கிழக்குக் கடற்கரைத் துறைமுகமெனக் கூறுவர். அங்ஙனமாயின் அது பாண்டியருடைய துறைமுகமாகும். அதனைக் கைப்பற்றப் பாண்டியன் முயன்றிருக்க இயலாது. 57. மதுரைக் 119. 58. மதுரைக். 190. 59. புறம். 18 : 28-30. 60. நற். 340 : 3 61. புறம். 26 : 13-15. 62. புறம். 372 : 5-12. 63. புறம். 239. 64. `பாண்டியர்’ என்னும் பகுதியில் விளக்கம்’ 65. புறம். 55, 56. 66. புறம். 55 : 18-21. 67. புறம். 57: 5-11. 68. புறம். 57. 69. புறம். 196 : 13-15. 70. புறம். 198 : 10, 56 : 9-15. 71. புறம் 55 : 6. 72. புறம் 198 : 2. 73. புறம் 198 : 6. 74. இறையனார் களவியல் உரை. 75. நற். 105 : 15-10, 228. 76. குறுந். 245. 77. குறுந் 2.6. 78. பதிற். 44 : 14, 49 : 8; பதி. 5 : 13. 79. பதிற். பதி. 9:7. 80. மதுரைக். 772-74. 81. `பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன’ (மதுரைக். 508 - 509) 82. அகம். 346 : 19-22. 83. மதுரையில் நடந்த போரில் பழையன் மாறன் கிள்ளிவளவனிடம் தோற்றுத் தன் கோநகரமாகிய மதுரையையும் யானைகளையும் குதிரைகளையும் இழந்து மோகூர் என்னும் ஊருக்கு ஒடி, அதைக் கோநகரமாகக் கொண்டு ஆளத் தொடங்கினான். இவனது தோல்வியைக் கேட்ட சேரன் கோதைமார்பன் மகிழ்ச்சியடைந்தான். 84. பழையன் மாறன் என்னும் பெயர்கொண்ட ஒருவன் பாண்டியன் தலையாலங் கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனாக விளங்கினான். இவனுடைய பெயரிலிருந்து மோகூர் அரசன் பழையனின் மகனாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 85. அகம். 346 : 19. 86. வித்தை போர்ப்பயிற்சி என்று கொள்வாரும் உளர். 87. அடுத்த வழுதி சங்ககாலக் கல்வெட்டில் காணப்படும் கடலன் வழுதி. 88. புறம். 9 : 10-11. 89. காவிரி கடலோடு கலக்குமிடத்தில் புகாரில் நடைபெற்ற இந்திரவிழாவில் சோழ அரசர்கள் கலந்துகொள்வது போன்று. 90. `வயிர்’ என்னும் ஒருவித இசைக்கருவியை இயக்குபவர்கள். 91. `முந்நீர் விழவின் நெடியோன்’ (புறம். 9-10) 92. மதுரைக். 759 - 768. 93. புறம் 6 : 1-8. 94. மதுரைக். 760. 95. வேள்வி - யாகம். 96. புறம். 6 : 19-20. 97. புறம். 15 : 17-21. 98. புறம். 20 : 13-14. 99. புறம். 21. 100. புறம். 367 : 13. 101. புறம். 367. 102. புறம். 58. 103. புறம். 57. 104. புறம். 169, 171. 105. புறம். 172 : 8-11. 106. அகம். 346 : 25. 107. புறம். 373. 108. புறம். 50, 68, 197. 109. `துஞ்சினான்’ என்பதற்கு ஓய்வு எடுத்துக்கொண்டான் என்னும் பொருளும் உண்டு எனக் கூறப்பெறுகிறது. 110. மதுரைக் 775, பொலம்பூன் ஐவர். 111. புறம். 182. 112. புறம். 3 : 13 - உரை. 113. அகம். 315 : 7-8. 114. அகம். 315. 115. குறுந். 117 : 3; அகம். 59: 5. 116. குறுந். 210: 1. 117. பதிற் 88 : 7-10. 118. பரிபா. 12: 86. 119. நற். 97. 301 : குறுந். 270. 120. சங்க இலக்கியங்கள், `வரலாறு’, வையாபுரிப்பிள்ளை, பக் 1373 121. புறம். 52 : 5. 122. புறம். 52:5. 123. மருதன் இளநாகனார், ஒளவையார். 124. அடிப்படைச் சான்றுகள் - 11 கல்வெட்டு எண்1. 125. அகம். 130 : 11. 126. அகம். 312 : 11-12. 127. கலி. 41 : 24-25. 128. புறம். 71 : 4-19. 129. புறம். 242. 130. அகம். 25 : 20. 131. புறம். 246 : 13-15. 132. நற். 279 : 2; பெருபாண் 458; பரிபா. 3: 53. 133. அகம். 231 : 12. 134. அகம். 162 : 18. 135. அகம். 253 : 4-5. 136. புறம். 130 : 5-6. 137. குறுந். 393 : 3-6. 138. அகம். 338.: 5-6. 139. புறம். 130.: 5-6. 140. அகம். 266.: 12. 141. `அரிமண வாயில்’ என்பது புதுக்கோட்டைக்கருகில் உள்ள அரிமளம். 142. பதிற். 32 : 9-11. 143. புறம். 184 : 5. 144. புறம். 184. 145. புறம். 188. 146. அகம். 28 : 3-14. 147. அகம். 28. 148. நற். 15 : 7-10. 149. புறம். 196. 150. சிலப். 11 : 17-22. இலங்கை வரலாறு 1. இராவணன் இலங்கை* தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதிவந்தனர், வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதிவருகின்றனர் போலும். `தென் இலங்கை’ என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, `அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை’ என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். “வென்வேற் கவுரியர் தொன்முதுகோடி, முழங்கிரும் பௌவம் இரங்கு முன்றுறை, வெல்போரிராமன் அருமறைக் கவிந்த பல்வீழ் ஆலம்” (அகநானூறு, 70) இராமேசுவரத்தைத் தொடர்ந்து இலங்கைத் தீவின் வடபுறம் வரையில் கடலில் காணப்படும் கற்பாறைகளைச் சேது அல்லது அணை என்றும், இவ்வணையை வானரப் படைகள் அமைத்தன என்றும் கதை வழங்கப்படுகிறது. ஆனால், குமரி முனையிலிருநது இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். “குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை” என்று கூறியிருப்பது காண்க. நச்சரின்கதை பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சியில், “தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழருவிப் பொருபபிற் பொருந” என வரும் அடிகட்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருந்தாக் கதையொன்றைப் புனைந்துரைக்கிறார்: “இராவணனைத் தமிழ் நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனா யிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே” என்று உரை எழுதுகிறார். தென்னாட்டை இராவணன் ஆண்டான் என்றும், அகத்தியர் அவனுடன் இசைப்போர் செய்து வெற்றி கொண்டு அவனைத் தமிழ் நாட்டிற்கு அப்புறம் துரத்திவிட்டார் என்றும் இவ்வுரையாசிரியரே தொல்காப்பிய உரையில் எழுதுகிறார். இவர் கொள்கைப்படி, இராவணன் முதலில் தென்னாட்டை (தமிழ்நாட்டை) அரசாண்டான் என்றும், பிறகு இலங்கைக்குப் போய்விட்டான் என்றும் கருத வேண்டியிருக்கிறது. ஆனால், இவர் கூற்றுக்கு இவர் சான்று காட்டினார் இல்லை. எனவே, இது பிற்காலத்தில் இட்டுக்கட்டி வழங்கப்பட்ட கட்டுக்கதை எனக் கருத வேண்டும். வால்மீகி கூறுவது இராமாயணக் கதையே கட்டுக்கதை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இராமாயணம் கட்டுக்கதையாயினும் ஆகுக; அன்றி, உண்மையில் நடைபெற்ற கதையாயினும் ஆகுக. இராமாயணத்தை முதன்முதல் வடமொழியில் இயற்றிய வால்மீகி முனிவர் கூறுகிற இலங்கை, அயோத்தி, கிஷ்கிந்தை முதலிய இடங்களெல்லாம் இந்தியாவில் ஒவ்வோரிடத்தில் இருந்த நிலப்பகுதிகள் என்பது மட்டும் உண்மையே. இதில் சிறிதும் ஐயமில்லை. நமது ஆராய்ச்சிக்கு இராமாயணத்தை உண்மைக் கதை என்றே கொள்வோம். அங்ஙனமாயின், சிங்களத் தீவு இராவணன் ஆண்ட இலங்கையா என்பது கேள்வி. இவ்வாராய்ச்சிக்குக் கம்ப இராமாயணம், துளசி இராமாயணம் முதலிய இராமாயணங்கள் பயன்படா. வால்மீகி முனிவர் இயற்றிய வடமொழி இராமாயணம் மட்டுந்தான் பயன்படும். வால்மீகி முனிவர் இலங்கையைப் பற்றிக் கூறும் குறிப்புகள் இரண்டு உள. அவை: 1. இராவணனுடைய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இருந்தது. 2. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன், சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் ஏற்றிக்கொண்டு, திரிகூடமலையைச் சூழ்ந்திருந்த `சாகரத்தை’க் கடந்து இலங்கைக்குச் சென்றான். சாகரம் என்பது கடலன்று வால்மீகி முனிவர் கூறியுள்ள இந்த இரண்டு குறிப்புகளைக் கொண்டு, இராவணன் ஆண்ட இலங்கை, சிங்களத் தீவாகிய இலங்கை அன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கணியாம். என்னை? சிங்களத் தீவாகிய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இல்லை; இது ஒரு தீவாக உள்ள கழுதை பூட்டிய வண்டியைச் செலுத்திக்கொண்டு போகக் கூடியபடி அவ்வளவு சிறிய கடல் (சாகரம்), அன்று சிங்கள இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல். மலையின் உச்சியில் இருந்த இராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்த `சாகரம்’ உண்மையில் கடல் அன்று; ஏரிபோன்ற சிறிய நீர்நிலையாகும். கிருஷ்ணராஜ சாகரம், இராம சாகரம், இலக்ஷ்மண சாகரம் என்று பெயருள்ள ஏரிகள் சில இப்போதும் உள்ளன. அவைபோன்று சிறு நீர்நிலைதான் இராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்தது என்பது ஆராய்ச்சி வல்லார் துணிபு. பரதமசிவ ஐயர் கூற்று இராவணன் ஆண்ட இலங்கையானது, மத்திய இந்தியாவில் உள்ள இந்த்ரனா மலையுச்சியில் இருந்ததென்றும், இம்மலையைச் சூழ்ந்து மூன்று புறத்திலும் ஹிரான் என்னும் ஆறு பாய்கிறதென்றும், மாரிக்காலத்தில் இவ்வாறு பெருகி மலை முழுவதும் (அகழிபோல்) சூழ்ந்து ஒருபெரிய ஏரிபோல ஆகிறதென்றும், இதுவே வால்மீகி முனிவர் தமது இராமாயணத்தில் கூறிய `சாகரம்’ என்றும், மற்றும் பல சான்றுகளைத் தேசப்படத்துடன் காட்டுகிறார் திரு. டி. பரமசிவ ஐயர் அவர்கள். இவர் ஆங்கிலத்தில் இயற்றியுள்ள “இராமாயணமும் இலங்கையும்” என்னும் நூல் காண்க. இந்த இடம் விந்திய மலையை அடுத்து இருந்ததென்று கூறுகிறார்.1 பந்தர்கரின் முடிவு திரு. பந்தர்கர் என்பவர், தாம் எழுதிய “தண்ட காரண்யம்” என்னும் கட்டுரையில், மகாராட்டிர தேசந்தான் பண்டைக் காலத்தில் தண்டகாரண்யமாக இருந்தது என்றும், இலங்கை, கிஷ்கிந்தை முதலியன மத்திய இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தன என்றும் கூறுகின்றார்.2 ஹிராலால் ஆராய்ச்சி திரு. ஹிராலால் என்பவர், தாம் எழுதிய “இராவணன் இலங்கை இருந்த இடம்” என்னும் கட்டுரையில் இச்செய்திகளைக் கூறுகிறார்: “விந்தியமலையைச் சார்ந்த மேகலா மலைத்தொடரின் அமரகண்ட சிகரத்தில் இராவணன் இலங்கை இருந்தது; கொண்டர், ஓரானர், சபரர் முதலிய குறிஞ்சிநில மக்கள் அவ்விடங்களில் வாழ்கின்றனர். இவர்களில் கொண்டர் தம்மை இராவண வமிசத்தினர் என்று கூறிக்கொள்வதோடு, 1891 இல் எடுத்த ஜனக்கணக்கில் தம்மை இராவணவம்சம் என்றே பதிவு செய்துள்ளனர். 400 ஆண்டுகளுக்கு முன் இருந்த இவர்களுடைய அரசன் ஒருவன், தனது பொன் நாணயத்தில், தன்னைப் `புலத்திய வமிசன்’ என்று பொறித்திருக்கிறான். இதனால், கொண்டர் இராவண குலம் என்று சொல்லிக்கொள்வது உறுதிப்படுகிறது. ஓரானர் என்னும் இனத்தவர் பண்டைய வானரர் இனத்தைச் சேர்ந்தவர். கொண்டர்களுக்கும் சபரர்களுக்கும் பகை இருந்தபடியால், சரபர் இராமன் பக்கம் சேர்ந்தனர். (இராமனுக்கு விருந்திட்ட சபரி என்பவள் சபரர் குலத்தைச் சேர்ந்தவள். இது அவள் இயற்பெயர் அன்று; குலப்பெயர்.) இராமன் இலங்கைக்குக் கடந்து சென்ற `சாகரம்’ கடல் அன்று; ஏரியாகும்.” இவ்வாறு இவர் தம்முடைய கட்டுரையில் கூறுகிறார்.3 கிபியின் கூற்று திரு. கிபி என்பவர் தாம் எழுதிய “அமரகண்டக் மலையில் இருந்த இராவணனுடைய இலங்கைக்குச் சுற்றுப் புறத்திலிருந்த மக்கள்” என்னும் கட்டுரையில், இராவணனுடைய இலங்கை மத்திய இந்தியாவில் இருந்ததென்றும், அதற்கு அருகிலே தண்டகாரண்யம், சித்திரகூடம், அகத்திய ஆசிமரம், பஞ்சவடி, கிரௌஞ்சம், பம்பை, கிஷ்கிந்தை, அயோத்தி முதலியன இருந்தனவென்றும் தேசப்படத்துடன் விளக்குகிறார்.4 இராமதாசர் கூற்று திரு. இராமதாஸ் என்பவர், இராவணன் இலங்கையும் அமர்தீபமும் ஒன்று என்றும், இது அமரகண்டக் மலையில் இருந்தது என்றும், நருமதை, மகாநதி என்னும் இரண்டு ஆறுகள் உண்டாகிற மேட்டுநிலப் பகுதியே இந்த இடம் என்றும் கூறுகிறார். அன்றியும், மத்திய இந்தியாவில் மத்திய மாகாணத்தில் உள்ள கூயி இனத்தார் இராவணன் மரபினர் என்றும், அமரகண்டக் மலைகள் உள்ள கொண்டவானா என்னும் இடத்தில் உள்ள கொண்டு, கூயி, கோய் என்னும் இனத்தார் இராவணன் மரபினர் என்றும் கூறுகிறார்.5 தீட்சிதர் கூற்று திரு. தீட்சிதர் என்பவர், சிங்களத் தீவாகிய இலங்கையும் இராவணன் ஆண்ட இலங்கையும் வெவ்வேறு இடங்கள் என்று கூறுகிறார்.6 மிஷ்ரா கூறுவது திரு. மிஷ்ரா என்பவர், இராவணன் இலங்கை, ஆந்திர தேசத்தில் கடற்கரையைச் சேர்ந்த ஓர் இடம் என்கிறார்.7 வதர் கூறுவது திரு. வதர் என்பவர், இராவணன் இலங்கை பூமியின் மத்திய இடமாகிய உஷ்ணமண்டலத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.8 இலங்கைகள் பல இதுகாறும் காட்டிய சான்றுகளால், சிங்களத் தீவாகிய இலங்கை, இராமாயணத்தில் கூறப்படும் இராவணன் ஆண்ட இலங்கை அன்று என்பதும், இரண்டும் வேறிடங்கள் என்பதும் விளங்குகின்றன ஆனால், எக்காரணத்தினாலோ, சிங்களத் தீவை இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் தவறாகக் கருதிவருகிறார்கள். இந்தத் தவறான எண்ணம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் இலங்கை என்னும் பெயர் ஒற்றுமையேயாகும். `இலங்கை’ என்னும் பெயருடைய ஊர்கள் பல உள்ளன என்பதைப் பலர் அறியார். இலங்கை என்னும் பெயருள்ள ஊர்களைக் கீழே தருகிறோம். கீழ்க்கோதாவரி மாவட்டம் சோடவரம் பிரிவில் பூசுலலங்கா, தேமுடு லங்கா என்னும் ஊர்களும், கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு தாலுகாவில் சொவ்வாட லங்கா என்னும் ஊரும் உள்ளன. தமிழ்நாட்டில், தென் ஆற்காடு, மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் மாவிலங்கை (கீழ் மாவிலங்கை, மேல்மாவிலங்கை) என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரைச் சங்க காலத்தில், ஓவியப் பெருமகன் நல்லியக் கோடன் என்னும் அரசன் ஆண்டான் என்பதைப் பத்துப்பாட்டுச் சிறுபாணாற்றுப்படையினால் அறிகிறோம்: “தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்ன ருள்ளும் மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள் உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” என்று வருதல் காண்க (சிறுபாண். அடி 119-122) “பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்” என்றும் (புறம். 176) “நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லி யாதன்” என்றும் (புறம். 379) நன்னாகனார் என்னும் புலவர் தொண்டை நாட்டிலிருந்த இலங்கையைக் கூறுகிறார். இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில் கீழ்திருவிலங்கை என்னும் ஊரும், முதுகுளத்தூர் தாலுகாவில் மாவிலங்கை என்னும் ஊரும், பரமகுடி தாலுகாவில் மற்றொரு மாவிலங்கை என்னும் ஊரும் உள்ளன. செங்கற்பட்டு மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் புதுமாவிலங்கை என்னும் ஊரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் தாலுகாவில் மாவிலங்கை என்னும் இனாம் கிராமமும் உள்ளன. மேற்கூறிய இராமநாதபுரம் மாவட்டத்திலேயே, பரமகுடி தாலுகாவில் மாவிலங்கை என்னும் இனாம் கிராமமும், சிவகங்கை தாலுகாவில் மாவிலங்கை என்னும் ஜமீன்கிராமமும் திருவாடானை தாலுகாவில் மாவிலங்கை என்னும் பெயருள்ள ஜமீன், இனாம் ஆகிய இரண்டு கிராமங்களும் உள்ளன. கேரள நாட்டில் பாதாள லங்கா என்னும் இடமும், தென் கன்னட மாவட்டமாகிய துளுநாட்டில் மூல்கி என்னும் ஊருக்கு அருகில் வள லங்கா என்னும் இடமும் இருந்தன என்று தெரிகின்றன. இவையாவும் இலங்கை என்னும் பெயரால் முடிவது காண்க. அன்றியும், ஆறுகள் கடலுடன் கலக்கிற இடத்தில் பல கிளைகளாகப் பிரிந்து ஏற்படுகிற டெல்ட்டா (Delta) என்று சொல்லப்படுகிற தீவுகளுக்கு ஆந்திர நாட்டில் லங்கா என்று பெயர் கூறப்படுகிறதென்று தெரிகிறது. ஆகவே, இராவணன் ஆண்ட ஊர் ஒன்றுக்கு மட்டுந்தான் இலங்கை என்று பெயர் உண்டு என்று கருதுவது தவறு. பண்டைக் காலத்தில், இலங்கை என்னும் பெயருள்ள பல ஊர்கள் இருந்தன என்பதற்கு மேலே சான்றுகள் காட்டப்பட்டன. முடிவுரை எனவே, தமிழ்நாட்டுக்கு அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைக்கும் இராவணன் ஆண்ட இலங்கைக்கும் தொடர்பு இல்லை என்பதும், இத்தொடர்புடைய கதைகள் பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டவை என்பதும் தெளிவாகின்றன. இலங்கையின் புராதன நூலாகிய மகாவம்சம் என்னும் நூலில் இராவணன், இலங்கை என்னும் பெயர்களே கூறப்படவில்லை. இராவணன் ஆண்ட இலங்கை, இப்போது மராட்ட நாடு உள்ள பகுதியில், விந்தியமலையைச் சார்ந்த இடத்தில் இருந்தது என்பது ஆராய்ச்சியாளரின் முடிபு. அங்ஙன மாயின், மலையமலை, பாண்டியனுடைய கபாடபுரம் முதலியவை வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகின்றனவே என்றால், இந்தச் சுலோகங்கள் இடைச் செருகல்களாகும். வடமொழியிலே இராமாயணத் திலும், பாரதத்திலும், வேறு நூல்களிலும் பல இடைச் செருகல் சுலோகங்கள் காலந்தோறும் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது. அடிக்குறிப்புகள் 1. “Ramayana and Lanka” by T. Paramasiva Ayyar, Bangalore. 2. “Dandakaranya” by Dr. D.R. Bhandarkar, Jha Commemoration Volume. 3. The Situation of Ravana’s Lanka” by Dr. Hiralal, Jha Commemoration Volume. 4. “Inhabitants of the Country around Ravana’s Lanka in Amarakantak:” by M.V. Kibe. A Volume of Eastern and Indian Studies, presented to Professor F.W. Thomas. Edited by S.M. Katre and P.K. Gode. “Ravana:’s Lanka located in Central India” by Sardar M.V. Kibe. Indian Historical Quarterly. Vol. IV. “Cultural Descendants of Ravana” by M.V. Kibe, pages 264-266. A Volume of Studies in Indology. 5. “Ravana’s Lanka” by G. Ramadas. The Indian Historical Quarterly, Vol. IV, Pages. 281; Vol. Vï pages. 284, 555. 6. “Ceylon and Lanka are Different” Quarterly Journal of Mythic Societyï Vol. XVIII. 7. “The Search for Lanka” by Mishra. Maha Kosala Historical Society’s Paper, Vol. I. 8. “Situation of Ravana’s Lanka on the Equator” by V.H. Vadar. Quart. Jour., Mythic Society, Vol. XVII. 2. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்* தமிழ் நாட்டுக்கு மிக நெருக்கமாக உள்ளது இலங்கைத்தீவு. சங்க காலத்திலே தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. அக்காலத்திலே தமிழர் இலங்கையில் சென்று தங்கினார்கள்; தங்களுடைய தெய்வ வணக்கத்தையும் இலங்கையில் நிறுவினார்கள். பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னமே சங்க காலத் தமிழர் தமது தெய்வ வழிபாட்டினை இலங்கையில் நிறுவினர். பௌத்தமதம் இலங்கைக்கு முதன்முதலாக வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தேவனாம்பிரிய தில்ஸன் என்னும் அரசன் காலத்திலாகும். அக்காலத்தில் பாரத நாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி, மகேந்திரன் சங்கமித்திரை என்னும் பிக்கு பிக்குணிகளைக் கொண்டு பௌத்த மதத்தை இலங்கையில் பிரசாரம் செய்வித்தார். பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்பே தமிழருடைய தெய்வ வழிபாடு அங்குச் சென்று நிலைப்பெற்றிருந்தது. `மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையான் சொல்லியும் படுமே’ என்பது தொல்காப்பிய (அகத்திணையியல் 5-ஆம்) முல்லை நிலத்தில் திருமால் வணக்கமும், குறிஞ்சி நிலத்தில் முருகன் வணக்கமும், மருத நிலத்தில் இந்திரன் வணக்கமும், நெய்தல் நிலத்தில் வருணன் வணக்கமும் தமிழ் நாட்டிலே அக்காலத்திலே நிகழ்ந்தன. இந்தத் தெய்வங்களின் வழிபாடு அக்காலத்திலே இலங்கையிலும் பரவி, அக்காலத்தில் அங்கிருந்த இயக்கர், நாகர், வேடர் முதலியவர்களால் மேற் கொள்ளப்பட்டிருந்தது. பிறகு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்தமதம் இலங்கைக்கு வந்து அது அரசாங்க மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மெல்ல மெல்ல இலங்கை முழுவதும் பரவிற்று. பௌத்தம் இலங்கையில் அரசாங்க மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு செல்வாக்கடைந்தபோது, அங்கு முன்பு இருந்து வந்த தமிழர் தெய்வ வழிபாடு பின்னிலையடைந்தது. பின்னிலை யடைந்ததே தவிர மறைந்து அழிநது விடவில்லை. பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர் இன்றுங்கூட மாயோன், சேயோன் முதலிய தமிழ்த் தெய்வங்களை வழிபடுகின்றனர். இதனைச் சற்று விளக்கிக் கூறுவோம். முருகன், திருமால், வருணன், இந்திரன் என்னும் பழைய தெய்வங்களைத் தமிழர் வழிபட்டனர். இத்தெய்வங்களில் முருகன், திருமால், வருணன் என்னும் மூன்று தெய்வங்கள் இலங்கையில் முற்காலத்திலும் பிற்காலத்திலும் வழிபடப்பட்டனர். இந்திரன் வணக்கம் இலங்கையில் நடைபெறவில்லை. மற்ற மூன்று தெய்வங்கள் இலங்கையில் தொன்று தொட்டு, அங்குப் பௌத்த மதம் வருவதற்கு முன்னரேயே, வழிபடப் பட்டனர். இத் தெய்வங்களில் வருணன் வணக்கம், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது போலவே, இலங்கையிலும் மறைந்து விட்டது. ஆனால் முருகன் வணக்கமும் திருமால் வணக்கமும் தமிழ் நாட்டில் இன்றும் நிகழ்ந்து வருகிறது போலவே இலங்கையிலும் தொன்று தொட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் வாழ்கிற தமிழர்களால் முருகனும் திருமாலும் வழிபடப்படுகின்றனர் என்பது மட்டும் அல்ல; தமிழரல்லாத பௌத்தராகிய சிங்கள மக்களாலும் முருகனும் திருமாலும் தொன்று தொட்டு இன்றுகாறும் வழிபடப்படுகின்றனர். முருகன் சிங்களவர் களால் ஸ்கந்தன் என்றும் கந்தன் என்றும் வழிபடப்படுகிறார். திருமால், விஷ்ணு என்றும் மாவிஸ் உன்னானே என்றும் சிங்களவர்களால் வழிப்படப்படுகிறார். இவற்றை விளக்கிக் கூறுவோம். ஸ்கந்தன் - (முருகன்) ஸ்கந்தனாகிய முருகனை (இலங்கைத் தமிழர் வழிபடுவது மட்டுமல்லாமல்) சிங்களவரும், இலங்கைக் காட்டில் வாழும் வேடர் களும் வழிபடுகின்றனர். ஸ்கந்தனைக் கெலெதெவியோ (கல்தெய்வம், கல்-மலை, தெவியோ - தெய்வம்) என்றும் கலெ இயக்க (கலெ - மலை, இயக்க - சிறுதெய்வம்) என்றும் கூறுகிறார்கள். கந்தன், கடலுக்கப்பா லிருந்து (இந்தியாவிலிருந்து) இலங்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள். இதனால், கந்தன் வழிபாடு தமிழ் நாட்டிலிருந்து கடல்கடந்து இலங்கைக்குச் சென்றது என்பது வலியுறுகின்றது. இலங்கையில் கந்தனுடைய முக்கிய கோவில் கதிர் காமத்தில் இருக்கிறது. இலங்கையில் தென்கிழக்கே மாணிக்க கங்கை ஆற்றின் கரையிலே கதிர்காமம் அல்லது கதரகாமம் என்னும் இடம் இன்றும் பேர் பெற்றிருக்கிறது. இங்குக் கந்தனுக்கும் வள்ளிக்கும் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் திருவிழா நடக்கிறது. கதிர்காமக் கோவிலுக்கு அறுபதாயிரம் ஏக்கர் நிலம் உண்டு. இந்தக் கோவிலைச் சேர்ந்த காடுகளில், இலங்கை வேடர்களில் ஒரு இனத்தவாகிய கோவில் வனமை வேடர் என்பவர் வசித்து வந்தார்கள். இந்த வேடர்களின் முன்னோர், வள்ளியம்மையைக் குழந்தை உருவத்துடன் ஒரு வயலில் கண்டெடுத்து வளர்த்ததாகவும், வள்ளி வயதடைந்த பிறகு கந்தன் அவளை மணம் செய்து கொண்டதாகவும் இவ்வேடர்கள் கூறுகிறார்கள். இப்போது இவ்வேடர்கள் இங்கு இல்லை. கி.பி. 1886 இல் இவ்வேடர்களின் சந்ததியார் இங்குச் சிலர் இருந்ததாகவும் அவர்களும் மிகவும் வறுமையுற்றிருந்தனர் என்றும் ஒருவர் கூறுகிறார்.1 கதர்காமத்தெய்வம் (கந்தன்), வயலைக் காத்துக் கொண்டிருந்த வள்ளியின் முன்பு பசி தாகத்தினால் இளைத்த பண்டாரம்போல வந்ததாகவும், அப்போது அங்கு வந்த யானைக்கு அஞ்சிய வள்ளி அப்பண்டாரத்தினிடம் அடைக்கலம் புகுந்ததாகவும், பிறகு பண்டாரமாகிய கந்தன் வள்ளியை மணம் செய்ததாகவும் கூறுகின்றனர். இது தமிழ் நாட்டில் கூறப்படுகிற முருகன் கதையோடு மிகவும் பொருந்தியுள்ளது. கதிர்காமக் கோவிலுக்கு 4 மைல் தூரத்தில் ஒரு பாறைக் கல்லில் யானையினுடைய கால் அடையாளம் காணப் படுகிறது. அது வள்ளியைத் துரத்திவந்த யானையின் காலடி அடையாளம் என்று கூறப்படுகிறது. கதிர்காம முருகனைப்பற்றி ஒரு கதை வழங்குகிறது. கதிர்காமத்துக்கு அருகில் ஒரு குன்றின்மேல் ஆதியில் முருகன் எழுந்தருளி இருந்ததாகவும், அவ்வழியாகச் செல்லும் தமிழர்களை முருகன் விளித்துத் தன்னைக் கீழே கொண்டுபோய் விடும்படி பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அத்தமிழர்கள் அதற்கு உடன்படாமல் மறுத்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது. பிறகு முருகன், அவ்வழியாகச் சென்ற சிங்களவரை விளித்துத் தன்னைக் கொண்டுபோய்க் கீழே விடும்படி கேட்டுக்கொள்ள அதற்கு அவர்கள் உடன்பட்டுக் குன்றின்மேல் இருந்த முருகனைக் கீழே கொண்டுவந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதையிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகன் மலைமேல் எழுந்தருளி இருக்க வேண்டியவன். ஆகவே அவனைக் குன்றிலிருந்து கீழே கொண்டுவரத் தமிழர்கள் மறுத்துவிட்டனர். ஆனால், தமிழர் மரபு அறியாத சிங்களவர் முருகனைக் குன்றிலிருந்து கீழே கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு, முருகன் இருந்த அந்த இடத்தில் சிங்களவர் ஒரு பௌத்தத் தகோபாவை (தாதுகர்ப்பத்தைக்) கட்டிவிட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்த துட்டகமுனு என்னும் சிங்கள அரசன், தன் பகைவனாகிய ஏலேலனைப் போரில் வெல்வதற்குக் கதிர்காமத் தெய்வத்தின் அருளைப் பெற்றான் என்றும் அதற்காக அவன் கதிர்காமக் கோவிலுக்குத் தானங்களைக் கொடுத்தான் என்றும், மகாவம்சம் என்னும் நூலில் கூறப்படுகிறான். கதிர் காமத்தில் மட்டுமல்ல; இலங்கையின் ஊவா மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேற்கு மாகாண, கண்டி முதலிய இடங்களிலும் கலெதெவியோ (Gale Deviyo) என்னும் மலைத் தெய்வமாகிய கந்தன் வழிபடப்படுகிறான். ஆண்டு தோறும் வேடர் (சிங்களவருங்கூட) மலையுச்சிகளில் உள்ள பாறைகளில் கந்தனுக்கு வெறியாடுகிறார்கள். இது, தமிழ் நாட்டில் சங்க காலத்தில், நடந்துவந்த வேலன் வெறியாடலை நினைவுறுத்துகிறது. குருநாக்கல் காட்டில் உள்ள ரிட்டிகலா, ரணகிரியா முதலிய மலைகளில் கந்தன் வணக்கம் இன்றும் சிங்களவர்களால் நடை பெறுகிறது இலங்கைக் காடுகளில் வாழும் வேடர்கள் வணங்கும் பல தெய்வங்களில் ஸ்கந்தனாகிய கல் யக்கனும் (மலை இயக்கன்) ஒன்று. கண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் `பிரஹா’ என்னும் உற்சவத்தில் ஸ்கந்தனுக்கு முதலிடம் தரப்பட்டிருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த முதலிடம் புத்தருடைய பல் ஊர்வலத்துக்குத் தரப்பட்டது. ஆனால், பண்டைக்காலம் போலவே இன்றும் இலங்கையில் பௌத்தர்களால் முருகன் (ஸ்கந்தன்) வணக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. திருமால் இலங்கையில் திருமால் வணக்கமும் மிகப் பழைய காலத்திலிருந்து நிகழ்ந்து வருகிறது. திருமால், இலங்கைத் தீவில் விஷ்ணு என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். சிங்கள மொழியில் திருமாலாகிய விஷ்ணுவை மாவிஸ் உன்னானெ என்று கூறுவர். இது மஹாவிஷ்ணு என்பதன் சிதைவாக இருக்கலாம். இலங்கையிலே கதிர்காமத் தெய்வம் என்றும் கலெதெய்யோ என்றும் கூறப்படுகிற ஸ்கந்தனுக்குத் தனியாகக் கோயில்கள் உண்டு. கந்தனை பௌத்தக் கோவிலுக்குள் வைத்துப் பூசிப்பது இல்லை. ஆனால் விஷ்ணுவை பௌத்தக் கோயில்களிலும் வைத்துப் பூசிக்கிறார்கள். கருடவாகனம் உடையவராக, சங்கு சக்கரம் ஏந்தியவராகத் திருமாலைச் சிங்களவர் இன்றும் வழிபடுகிறார்கள். இலங்கையில் தம்புல்ல என்னும் ஊர் உண்டு. இது கண்டியி லிருந்து 18-மைல் தூரத்திலுள்ள மாத்தளை என்னும் ஊரிலிருந்து வடக்கே 28-மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு அருகிலே பாறைக்கல்லால் அமைந்த மலையொன்று உண்டு. 500 அடி உயரமுள்ள இந்த மலைமேலே இயற்கையாக அமைந்த ஐந்து குகைக் கோவில்கள் இருக்கின்றன. இக்குகைக் கோவில்களில் புத்தர் பெருமானுடைய உருவங்கள் வழிபடப்படுகின்றன. இக்குகைகளில் முதலாவது குகைபெரியது. இதில் புத்தர் பெருமான் பள்ளிகொண்டிருப்பது போன்ற உருவம் கற்பாறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நீளம் 42-அடி. இவ்வுருவத்தின் தலைப்பக்கத்தில் விஷ்ணு (திருமால்)லின் உருவம் நின்ற கோலமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது மரத்தினால் செய்யப்பட்ட உருவம். இந்த விஷ்ணுவின் பெயரினாலே இந்தக் குகை தேவராஜவிகாரை என்று பெயர் பெற்றிருக்கிறது. தேவராஜன் என்பது விஷ்ணுவின் பெயர். இதற்கு அடுத்த இரண்டாவது குகையிலும் புத்தர் உருவமும் வேறு சில பௌத்தத் தெய்வங்களின் உருவங்களும் காணப்படுகின்ன. பாறையில் வர்ணத்தினால் எழுதப்பட்ட தெய்வ உருவங்களும் காணப்படுகின்றன வர்ணத் திருவுருவங்களில் விஷ்ணுவின் திருவுருவமும் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்தக் குகைக் கோவில்கள் கி.மு. 104-இல் இலங்கையை யாண்ட வலகம்பாகு (வடகெமுனு) என்னும் அரசன் காலத்தில் ஏற்பட்டவை. கந்தன் இலங்கைத் தீவின் தெற்குத் திசைக்கும், விஷ்ணு மேற்குத் திசைக்கும் காவல் தெய்வங்கள் என்று கூறப்படுகின்றனர். மேற்குத் திசையின் காவல் தெய்வமாகிய விஷ்ணுவே, பிற்காலத்தில், விபீஷணனை மேற்குத் திசையில் காவல் தெய்வமாக அமைத்தார் என்றும் கூறுகிறார்கள். இலங்கை முழுவதுக்கும் காவல் தெய்வமாகப் புத்தர் இந்திரனை ஏற்படுத்தினார் என்றும், அக்கடமையை ஏற்றுக்கெண்ட இந்திரன் பிற்காலத்தில், தன் தம்பியாகிய விஷ்ணுவை இலங்கையின் காவல் தெய்வமாக அமைத்தான் என்றும் மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. வருணன் தமிழ்நாட்டில் நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன். கடல் கடந்து கப்பல் வாணிகம் செய்த பண்டைக் காலத்துத் தமிழ் வியாபாரிகளும் வருணனை வழிபட்டனர். தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலும் வருணன் வணக்கம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. வருணன் மேய பெருமணல் உலகம்’ என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதிலிருந்து, கடற்கரையோரத்தில் வாழ்ந்த மக்களும் மாலுமிகளும் வருணனை வழிபட்டனர் என்பது அறியப்படுகிறது. சங்க இலக்கியங்களிலே வருணனைப்பற்றி அதிகமாகக் காணப்படவில்லை. வருணனைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றிலும் வருணன் என்று நேரே பெயர் கூறப்படாமல் `கடல் தெய்வம்’ என்று கூறப்படுகிறது. அவை: `கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்காட்டி அரியசூள் பொய்த்தார் அறனிலரென்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய ‘ (சிலம்பு - கானல்வரி -5) `பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வத்தின் மலரடி வணங்குதும்’ (சிலம்பு - கானல்வரி - 51) சிலப்பதிகாரத்தின் முதல் இரண்டடிகளுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், நெய்தற்றிணையைக் கூறுமிடத்தில் “கடற்றெய்வங் காட்டிக்காட்டி, என்பதனால் வருணனும்..... கூறுகிறார்” என்று எழுதுவது காண்க. சங்க இலக்கியங்களிலே வருணனைப்பற்றி அதிகமாகக் காணப்படாததன் காரணம் என்னவென்றால், கடல் தெய்வமாகிய பழைய வருணனுக்குப் பதிலாக மற்றொரு கடல் தெய்வம் புதிதாகப் புகுத்தப்பட்டதுதான். புதிதாகப் புகுத்தப்பட்ட கடல் தெய்வத்தின் பெயர் மணிமேகலை என்பது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே அசோக சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த சமயம் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பரவிற்று. (மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய `பௌத்தமும் தமிழும்’ என்னும் நூலில் காண்க.) பௌத்த மதம் பரவியபோது பௌத்த மதச் சிறு தெய்வங்களின் வழிபாடும் பரவிற்று. அவ்வாறு பரவிய பௌத்தச் சிறு தெய்வ வழிபாட்டில் ஒன்று மணிமேகலை வணக்கம். மணிமேகலை வணக்கம் புகுத்தப்பட்ட பிறகு வருணன் வணக்கம் மெல்ல மறைந்து விட்டது. கடல் தெய்வமாகிய மணிமேகலையைப் பற்றிப் பௌத்தமத நூலில் ஒரு கதை உண்டு. சக்கன் (சக்கரன்) ஆகிய இந்திரன், கடலில் கப்பல் யாத்திரை செய்கிறவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆபத்துக்குட்பட்டவர் நல்லவராக இருப்பார்களானால், அவரைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மணிமேகலா தெய்வத்தைக் கடற்காவல் தெய்வமாக ஏற்படுத்தினான் என்பது அக்கதை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டுவரைப் பௌத்த மதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தபடியால், பௌத்தமதத் தெய்வமாகிய மணிமேகலை வழிபாடும் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற்றது. பெறவே, பழைய கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் பையப்பைய மறைந்து விட்டது. மணிமேகலைத் தெய்வ வழிபாடு எவ்வளவு ஆழமாகப் பரவியிருந்தது என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மணிமேகலை என்னும் தெய்வத்தின் பெயரைத் தனக்குப் பெயராகக் கொண்ட மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாறு தான் மணிமேகலை காவியம். புத்த ஜாதகக் கதைகளிலே, மணிமேகலா தெய்வம் கப்பல் யாத்திரிகருக்கு உதவிசெய்து அவர்களைத் துன்பத்திலிருந்து காத்த செய்திகள் கூறப்படுகின்றன. பௌத்த மதம் இலங்கையில் பரவுவதற்கு முன்னே, வருணன் வணக்கமும் இலங்கையில் (தமிழ் நாட்டிலிருந்துபோய்) இருந்தது. முருகன், திருமால் வணக்கம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு ஆதிகாலத்தில் சென்று அங்கு வழிபடப்பட்டது போலவே, வருணன் வணக்கமும் தமிழ் நாட்டிலிருந்து சென்று இலங்கையில் வழிபடப் பட்டது.2 தமிழ்நாட்டில் பௌத்மதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவியது போலவே, தமிழ் நாட்டுக்கு அடுத்துள்ள இலங்கைத் தீவிலும் பௌத்தமதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவியது. பௌத்த மதத்துடன் மணிமேகலை வழிபாடு இலங்கையில் புகுந்த பிறகு இலங்கையில் வழிபடப்பட்டிருந்த வருணன் வணக்கம் பையப் பைய மறைந்துவிட்டது. ஆனாலும், இலங்கையின் தென்கோடியில் இருந்த துறைமுகப்பட்டினமாகிய தொண்டர பட்டினத்தில் நெடுங்காலமாக வழிபடப்பட்டிருந்த வருணன் வணக்கம் பிற்காலத்திலுங்கூட மிகப் புகழ்பெற்று விளங்கியது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கக்கூடும். இலங்கையில் பழைமையான துறைமுகப்பட்டினங்களில் தொண்டர பட்டினமும் ஒன்று இது இலங்கையின் தென்கோடியில் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. தேவ நுவர (தேவ நகரம்) என்னும் சிங்களப்பெயர் தேவுந்தர என்று திரிந்து வழங்கிற்று. தேவுந்தர என்னும் பெயரை இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர் தொண்டர என்று மாற்றி விட்டார்கள். எனவே, தேவ நுவர என்னும் சொல்லின் ஆங்கிலச் சிதைவு தொண்ட்ர என்பது. தேவ நுவர இலங்கையின் பழைய பேர் போன துறைமுகப் பட்டினம். இது இலங்கையின் தென்கோடியில் இருந்தது. (இப்போது இலங்கையில் உலகப் புகழ்பெற்று விளங்குகின்ற கொளும்பு துறை முகப்பட்டினம் மிகச் சமீப காலத்தி ஏற்பட்டது). தேவ நுவரப் பட்டினத்திலே மிகப் பழைய காலத்திலிருந்து வருணனுக்குக் கோவில் இருந்து வந்தது. அந்த வருணன் கோவில் உலகப் புகழ்பெற்றுச் சிறப்புற்றிருந்தது. கடலிலே கப்பல் யாத்திரை செய்தவர்களுக்கு இந்தக் கோவிலின் கோபுரங்களும் கட்டிடங்களும் ஒரு பெரிய நகரம் போலத் தெரிந்தனவாம். இந்த வருணனைச் சிங்கள மக்களும் தமிழரும் வழிபட்டனர். சிங்க அரசர்கள் இக்கோவிலைப் போற்றி மானியம் அளித்துப் பாதுகாத்தார்கள். ஆண்டு தோறும் அந்தக் கோவிலிலே வருணனுக்குத் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் வருணனுக்கு உரிய முத்துக்குடை ஊர்வலமாகக் கொண்டு போகப்பட்டது. இலங்கைத் தீவிலே தேவ நுவரப் பட்டினத்தில் இருந்த வருணன் கோவிலைப்பற்றிய வியப்பான செய்தி என்னவென்றால், அந்தக் கோவிலை அங்கே முதுன் முதலாக அமைத்தவன் கப்பல் வாணிகனாகிய தமிழ் நாட்டுத் தமிழன் என்பதே. இச் செய்தியை இலங்கைச் சரித்திர நூல்கள் கூறுகின்றன. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அந்த வருணன் கோவிலில் பூசை முதலிய வழிபாடுகளைச் செய்தவர்களும் தமிழர்களே! வருணனைச் சிங்களவர் உபுல்வன் என்று கூறினர். உதகபால வருணன் என்னும் சொல் சிதைந்து சிங்கள மொழியில் உபுல்வன் என்று ஆயிற்று என்பர். உதகபாலன் என்றால் நீரை ஆட்சி செய்கிறவன் என்பது பொருள். அதாவது நீர்க் கடவுள். சிங்கள இலக்கண முறைப்படி உதகபால என்பது உதபால என்றாகிப் பின்னர் உபுல என்றாயிற்று என்பர். வருணன் என்பது வணன் என்றாகிப் பின்னர் வணன் என்பது வன் என்றாயிற்று என்பர். எனவே உதகபால வருணன் என்னும் சொல் சிதைந்து சிங்கள மொழியில் உபுல்வன் என்றாயிற்று. தேவ நுவரவிலிருந்து வருணனைப் பிற்காலத்திலே கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் விஷ்ணு (திருமால்) ஆக மாற்றிவிட்டனர். வருணனை விஷ்ணுவாக மாற்றியவர்கள் தமிழர்களே. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் காபர் என்னும் முகமதியன் தில்லியிலிருந்து தென்னாட்டுக்கு வந்து கோவில்களைக் கொள்ளையடித்து நாசப்படுத் தினான் என்னும் செய்தி சரித்திரம் கூறும் உண்மை. அக்காலத்திலே, தமிழ் நாட்டிலே இருந்த சில வைணவப் பிராமணர்கள் தங்கள் குடும்பத்தோடு இலங்கைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அவர்களைச் சிங்கள அரசன் ஆதரித்து தேவ நுவர வருணன் கோயிலில் பரிசாரக வேலை செய்யும்படி அமர்த்தினான். அந்த வைணவப் பிராமணர்கள் நாளடைவில் பையப்பைய வருணனை விஷ்ணுவாக மாற்றிவிட்டார்கள். ஆயினும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையில் உபுல்வன் கோயில் (வருணன் கோயில்) என்றே பெயர் பெற்றிருந்தது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையைப் போர்ச்சுகீசுக்காரர் பிடித்து ஆட்சி செய்தனர். போர்ச்சுகீசியர் மத வெறியர். போர்ச்சுகீசியச் சேனைத் தலைவன் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பேர் பெற்ற உபுல்வன் கோயிலைக் (வருணன் கோயிலை) கொள்ளை யடித்து இடித்துத் தகர்த்தழித்துப் போட்டான். போர்ச்சுகீசியர் இலங்கையில் இருந்த புகழ்பெற்ற கோயில்கள் பலவற்றை அழித்தனர். அவ்வாறு அழிக்கப்பட்ட முக்கியமான கோயில்களில் உபுல்வன் (வருணன்) கோயிலும் ஒன்று. இலங்கைப் பழம்பொருள் ஆராய்ச்சி இலாகா (ஆர்க்கியாலஜி இலாகா) வைச் சேர்ந்த டாக்டர் பரண விதான என்பவர், மறைந்துபோன உபுல்வன் (வருணன்) கோயிலைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சி நூல் எழுதியிருக்கிறார்.3 அந்நூலில் அவர், வைதிகப் பிராமணர் வட இந்தியாவிலிருந்து வருணன் வணக்கத்தை இலங்கையில் புகுத்தி யிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கண நூல்களைப் படித்திருப்பாரானால் பண்டைத் தமிழர் தமிழ் நாட்டில் வருணன் வணக்கம் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதை அறிந்திருப்பாரானால், இந்தத் தவறான முடிவுக்கு வந்திருக்கமாட்டார். தமிழ் நாட்டில்வருணன் வணக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது என்பதை அவர் அறியாதபடியால், தமிழ் நாட்டிலிருந்து வருணன் வணக்கம் இலங்கையில் புகுந்தது என்பதை அறியாமல், வட நாட்டிலிருந்து வைதிக மதத்தவரால் வருணன் வணக்கம் இலங்கையில் புகுத்தப்பட்டது என்று எழுதியுள்ளார். பக்கத்து நாட்டுச் சரித்திரம் அறியாததால் ஏற்பட்ட தவறு இது. தமிழ் நாட்டிலிருந்து முருகன் (கந்தன்), திருமால் (விஷ்ணு), வருணன் (உபுல்வன்) என்னும் தெய்வ வணக்கம் தமிழ்நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே புகுத்தப்பட்டு அங்கு இத்தெய்வ வழிபாடுகள் நடைபெற்று வந்தன என்பதை இதனால் அறிகிறோம். இலங்கையில் பௌத்த மதம் பரவின கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுத் தெய்வங்கள் அங்குச் சிங்களவர்களிடம் முதன்மை பெறவில்லை. ஆனால், தமிழரின் தெய்வங்கள் இலங்கையிலும் சிங்களவர்களால் சிறு தெய்வங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்தத் தெய்வ வணக்கம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். அடிக்குறிப்புகள் 1. (P. 156, The Veddas by C.G. Seligmann and Brenda z. Seligmann 1911). 2. வருணனை ஆதி காலத்தில் ஆரியரும் வழிபட்டனர். வடமொழி வேதங்களில் வருணன் வணக்கம் கூறப்படுகிறது. வட இந்தியாவில் வாழ்நதிருந்த திராவிட சமூகத்தினர் வருணனை வழிபட்டனர். என்றும் அவர்களிடமிருந்து ஆரியர் வருணன் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு வழிபட்டனர் என்றும் ஆராய்ச்சிக் காரர் கூறுகின்றனர். திராவிடராகிய தமிழரும் வருணனை வணங்கினர். இது பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டுவது இல்லை. 3. The Shrine of Upulvan at Devundara, by Dr. S. Paranavitana 1953, Memolrs of the Archaeological Survey of Ceylon. Vol. VI. 3. சங்ககாலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்* சங்க காலத்திலே தமிழர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தனர். அவர்கள் மரக்கலம் ஏறிக் கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். அவர்கள் கடல் கடந்து அக்கரை நாடுகளுக்குச் செல்லும்போது தம்முடன் தம்முடைய பெண்டிரை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. இதனைத் தொல்காப்பியரும் கூறுகின்றார். “முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை” (தொல். அகத்திணை- 37) இதற்கு இளம்பூரண அடிகள் கூறும் உரை இது: “இதுவும் பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்: (ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு, காலிற் பிரிவும் கலத்தில் பிரிவும் என இரு வகைப்படும் அவற்றுள்) கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை. எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும் என்றாவாறாம்”. இதனால், கடல் கடந்த நாடுகளுக்குச் செல்லும் போது பெண் மகளிரைத் தம்முடன் அழைத்துச் செல்வது தமிழரின் வழக்கம் அன்று என்பதும், காலில் செல்லும் போது (தரை வழியாக அயல்நாடுகளுக்குப் போகும் போது) பெண்டிரை அழைத்துச் செல்லுவதும் உண்டு என்பதும் அறிகிறோம். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்துக்கு நேர்பொருள் கொள்ளாமல், சுற்றி வளைத்துப் பொருத்தமல்லா உரை கூறுகின்றார். முந்நீர் என்பதற்குக் கடல் என்று நேர் பொருள் கொள்ளாமல் `மூன்று தன்மை’ என்று பொருள் கூறுகிறார். இவர் கூறும் உரை இது: “இதன் பொருள்: ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லும் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று.... இனி இச்சூத்திரத்திற்குப் `பொருள் வயிற் பிரிவின்கட் கலத்திற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற்பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு’ என்னும் பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறி வழக்கம் இன்மை உணர்க”. இதில், நச்சினார்க்கினியர் இளம்பூரணர் கருத்தை மறுக்கிறார். தரை வழியாக அயல்நாடுகளுக்குச் செல்லும் போது பெண்டிரையும் உடன்கொண்டு செல்லும் வழக்கம் உண்டு என்று இளம்பூரணர் கூறியதை இவர் மறுக்கிறார். அதாவது, கடல் வழியாக அயல் நாடுகளுக்குச் செல்லும் தமிழன் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அன்றியும் தரை வழியாக அயல் நாடுகளுக்குச் செல்லும் தமிழனும் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று கூறுகிறார். இவ்வுரையாசிரியர்கள் இதில் மாறுபடக் கூறுகின்றார்கள். எனவே இளம்பூரணர் உரை சரியா, நச்சினார்க்கினியர் உரை சரியா என்பதை ஆராய்வோம். இதற்கு, எபிகிறாபி என்னும் சாசனம் எழுத்துச் சான்றும், ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருள் ஆராய்ச்சிச் சான்றும் உதவி புரிகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே (அதாவது கடைச் சங்க காலத்திலேயே) தமிழ் நாட்டிலிருந்து தமிழ் வாணிகர் (சாத்துக் கூட்டத்தினர்) கலிங்க தேசத்துக்குச் சென்று வாணிகம் புரிந்ததையும், அவர்கள் நாளடைவில் அங்குச் செல்வாக்குப் பெற்றுக் கலிங்க நாட்டின் ஆட்சிக்கு ஆபத்தாக விளங்கினார்கள் என்பதையும், அந்த ஆபத்தை அறிந்த அக்காலத்தில் கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் அத்தமிழ் வாணிகச் சாத்தை அழித்து ஒடுக்கினான் என்பதையும் கலிங்க நாட்டிலுள்ள ஹத்திகும்பா குகைச் சாசனம் கூறுகின்றது. இந்த ஹத்திகும்பா குகைச் சாசனத்தை எழுதியவன் காரவேலன் என்னும் அரசனே. இவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க தேசத்தையரசாண்டான். இவன் தன்னுடைய பதினோராவது ஆட்சி ஆண்டில் (கி.மு. 165 இல்) தமிழ்நாட்டு வாணிகச் சாத்தை அழித்தான். அந்தத் தமிழ் வாணிகச் சாத்தினர், அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு 113 ஆண்டுகளாகக் கலிங்க நாட்டில் தங்கி வாணிகம் புரிந்து வந்தனர். எனவே, (கி.மு. 165 + 113) - 278) கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அத்தமிழ் வாணிகச் சாத்துக் குழு, கலிங்க நாட்டிற் சென்று வாணிகம் செய்யத் தொடங்கிற்று என்பது தெரிகின்றது. நூற்றுப்பதின் மூன்று ஆண்டுகளாகக் கலிங்க நாட்டிலேயே தங்கி வாணிகம் புரிந்த தமிழர்கள், தங்களுடன் மனைவிமக்களையும் அழைத்துக் கொண்டு போய் இருப்பார்களல்லவா? மனைவி மக்களுடன் வாழாமலா அவர்கள் பரம்பரை பரம்பரையாக அத்தனை ஆண்டுக்காலம் அங்கே தங்யிருப்பார்கள்? எனவே, தரைவழியாக அயல்நாடுகளுக்குச் சென்றபோது, கடைச் சங்ககாலத் தமிழன் தன்னுடன் மனைவியையும் அழைத்துச் சென்றான் என்பது இதனால் பெறப்படுகின்றது. இதற்கு இன்னொரு சான்றும் கிடைத்திருக்கின்றது. ஆந்திர தேசத்திலே பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்த அமராவதி நகரத்திலே தமிழ் வணிகர்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தோடு அங்குத் தங்கி இருந்தார்கள். அவர்களில் இருவர், பேர்பெற்ற அமராவதி பௌத்த ஸ்தூபிக்குத் திருப்பணிக் கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இச்செய்தி அங்குக் கிடைத்த சாசன எழுத்துக் கல் எழுத்துக்களினால் தெரிகின்றது. (பேர்பெற்ற அமராவதி பௌத்தத்தூபி ஏறத்தாழ கி.மு. 200 இல் தொடங்கப்பெற்று கி.பி. 150 அல்லது 200இல் முடிக்கப்பட்டது என்பர். இந்தக் காலம் கடைச்சங்க காலமாக அமைவது ஈண்டுக் கருதத்தக்கது. பிற்காலத்தில், இந்த அமராவதி ஸ்தூபி சிதைந்து அழிந்த பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுச் சிதையுண்ட கற்களும் சிற்பங்களும் சேகரிக்கப்பட்டுச் சென்னை மாநகரப் பொருட்காட்சி சாலையில் சில கற்களும், இங்கிலாந்தில் லண்டன் மாநகரத்துப் பொருட்காட்சி சாலையில் சில கற்களும் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளன.) அமராவதி பௌத்த ஸ்தூபிக் கட்டடத்திலிருந்து கிடைத்த தூண்கல் ஒன்றில், தமிழன் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் அவன் தங்கை நாகை (நாகம்மாள்) என்பவளும் சேர்ந்து அந்தத் தூண் திருப்பணியைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனக் கல்லின் அளவு 2 அடி 8 அங்குல அகலமும், 3 அடி 6 அங்குல உயரமும் உள்ளது. இதில் எழுதப்பட்டுள்ள எழுத்து பழைய பிராமி எழுத்தாகவும் பாஷை பாலி பாஷையாகவும் உள்ளன. இந்தச் சாசனத்தின் வாசகம் இது. “தமிளா கணஸ பாதுணம் சுலகணஸ நாகாய ச(தான)ன மஹாசே தியபாத மூலே உதம்பதோ.1” `தமிழக் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் தங்கை நாகையும் இந்த மகா சைத்தியத்திற்கு அமைத்த உதம்பதக்கல்’ என்பது இச் சாசனத்தின் பொருள். இத் தமிழன், சகோதர சகோதரிகளுடனும் மனைவி மக்களுடனும் தரை வழியாக அயல்நாடு சென்று வாழ்ந்து வந்த செய்தி பெறப்படுவது காண்க. உதம்பதம் என்பது தூண்கல் என்று பொருள்படும். இதில் கூறப்படுகிற கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் தமிழ் நாட்டிலிருந்து சென்று அமராவதி நகரத்தில் தங்கியவர்கள் என்பது தமிழ்க் கண்ணன் என்பதிலிருந்து தெரிகின்றது. கடைச் சங்ககாலத்தில் அண்ணன் தம்பியர் ஒரே பெயருடன்வழங்கப்பட்டது போலவே - (சான்றாக, குமணன்-இளங்குமணன்,பெருஞ்சேரலிரும்பொறை- இளஞ்சேரiரும்பொறை, தத்தன் - இளந்தத்தன், விச்சிக்கோ -இளவிச்சிக்கோ, வெளிமான் - இளவெளிமான் முதலியன) - இவர்களும் கண்ணன் -இளங்கண்ணன்என்றுகூறப்பட்டிருப்பது நோக்குக. (சுலண என்பது சுல்லகண்ணன் அதாவது இளங்கண்ணன் என்பது பொருள்.) பாலி மொழியில்பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இந்தச்சாசனம் அமராவதி பௌத்தச் சயித்தியம்(பௌத்த ஸ்தூபம்) கட்டப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. அமராவதி பௌத்தச் சயித்தியம் கட்டப்பட்ட காலம் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையில் உள்ளகாலம் என்று கூறுகிறார்கள். அதாவது நேர் கடைச் சங்ககாலம் எனவே கடைச் சங்ககாலத்தில் எழுதப்பட்ட சாசனம் இது. பௌத்த மதத்தாரின் “தெய்வ பாஷை”யாக அக்காலத்தில் பாலி பாஷை இருந்தபடியால் இச்சாசனம் பாலிமொழியில்எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் ,தமிழ் நாட்டிலிருந்து தரை வழியாக அயல் நாட்டுக்குக் குடும்பத் தோடு சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது.சங்க காலத்தில் தமிழர் தரை வழியாகப் பெண்டிரையும் அழைத்துக் கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்றனர் என்னும் செய்தியை, கலிங்கநாட்டுக் காரவேல அரசரின் ஹத்திகும்பா சாசனமும் அமராவதி பௌத்த சயித்தியக் கல்வெட்டெழுத்துச் சாசனமும் சற்றும் ஐயத்துக்கிடமில்லாமல் உறுதிப்படுத்துகின்றன. எனவே, `முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை’ என்னும் தொல்காப்பியர் சூத்திரத்துக்கு உரை எழுதிய இளம்பூரண அடிகள், “காலில் (தரை வழியாக அயல்நாடு களுக்குச செல்வது) பிரிவு தலைமகளை உடன் கொண்டு பிரியவும் பெறும’ என்று கூறியுள்ளது சரியானதென்பதும், நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சரியானதென்று என்பதும் இந்தப் பழம்பொருள் சாசனச் சான்றுகளினால் அறியப்படுகின்றன. அடிக்குறிப்பு 1. No. 80, P. 20 Notes on the Amaravati Stupa by J. Burgess, 1882. Archaeological Survey of South India. 4. இலங்கையில் தமிழர்* சங்ககாலத்து இலங்கை நில அமைப்பு தமிழகத்துக்குத் தென்கிழக்கே, பாண்டி நாட்டுக்கு அருகிலே, இலங்கைத் தீவு இருக்கிறது. தமிழகத்துக்கு மிகச் சமீபத்திலே இருப்பதனாலே இலங்கைக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. சமயத் தொடர்பும் வாணிகத் தொடர்பும் அக்காலத்தில் இருந்தன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தனித் தீவாகப் பிரிந்திருக்கிற இலங்கை, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பாண்டி நாட்டோடு இணைந்திருந்த நிலம் இலங்கையோடு இணைந்து சேர்ந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர்க் காலந்தோறும் ஏற்பட்ட கடல்கோள்களினாலே அந்த நிலப்பகுதி சிறிது சிறிதாக அரிக்கப்பட்டுத் தனித் தீவாகப் பிரிந்து இலங்கை என்று பெயர் பெற்றிருக்கிறது. அதன் பிறகு, குமரிமுனை யோடு இணைந்து இருந்த நிலப்பகுதி, அவ்வப்போது நிகழ்ந்த சில கடல்கோள்களினாலே சிறிது சிறிதாகக் கடலில் முழுகி இப்போதுள்ள நிலையை யடைந்தது. தமிழ் நாட்டின் கரையோரங்களைச் சுற்றிலும் இலங்கைத் தீவின் கரை யோரங்களைச் சுற்றிலும் இப்போதுள்ள கடல் ஆழமில்லாமல் இருக்கிறது. இந்தக் கடல் ஆழமில்லாமலிருப்பது, முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி நிலமாக இருந்து இலங்கை யும் தமிழகமும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது. சங்ககாலத்தில் இலங்கையில் இருந்த இடங்களை இனிப்பார்க்கலாம்: அநுராதபுரம் இதை அநுரை என்றும் கூறுவர். சிறு கிராமமாக இருந்த இந்த ஊரைச் பாண்டுகாபய அரசன் இலங்கையின் தலைநகரமாக்கினான். பின்னர் இது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிய நகரமாயிற்று. சிங்கள இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த இந்த நகரத்தில் சிங்கள அரசரும் தமிழ் அரசரும் தங்கி அரசாண்டார்கள். தேவனாம்பிய திஸ்ஸன் காலத்தில், அசோகச் சக்கரவர்த்தி புத்தகயாவிலிருந்து அனுப்பிய போதி (அரச) மரத்தின் கிளை இந் நகரத்தில் நடப்பட்டது. இப்போதுள்ள அரசமரம் அந்த அரசமரக் கிளைகள் என்று கூறப்படுகிறது. புகழ்பெற்றுப் பெருஞ்சிறப்பாக இருந்த அநுராதபுரம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றிவிட்டது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் புலத்தி நகரம் (பொலனறுவா) இலங்கையின் தலைநகரமானபோது அநுராதபுரம் பெருமை குன்றிக் காலப்போக்கில் சாதாரண நகரமாக மாறி விட்டது. இடைக்காலத்தில் இந்த நகரம் பாழஐடந்து காடுபிடித்து நெடுங்காலம் மறைந்துகிடந்தது. சென்ற நூற்றாண்டில் இந்த நகரம் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மறைந்து கிடந்த பல இடங்களும், விகாரைகளும், தாகோபாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்நகரத்தில் தங்கியிருந்து வாணிகஞ்செய்த தமிழ் வணிகரின் மறைந்துபோன மாளிகையும் ஒன்று. அங்கு எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்தினால் இது தெரிகிறது. உரோகண நாடு உரோகண நாடு பழைய இலங்கையின் ஒரு பிரிவு. இலங்கையின் தென்கிழக்கில் இந்த நாடு அமைந்திருந்தது. இதனுடைய கிழக்கிலும் தெற்கிலும் கடல் எல்லையாக இருந்தது. இதனுடைய தலைநகரம் மாகாமம் (மாகாமம் பிற்காலத்தில் திஸ்ஸமாகாமம் என்று கூறப்பட்டது). மாணிக்க கங்கை என்னும் ஆறு உரோகண நாட்டில் வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. சம்பந்திட்டை என்னும் துறைமுகப்பட்டினம் இதன் தெற்கில் இருந்த பேர்பெற்ற துறைமுகப்பட்டினம். இப்போது இஃது ஹம்பந்தோட்டம் என்னும் சிறு துறைமுகமாக இருக்கிறது. முருகக் கடவுளின் (ஸ்கந்த முருகனின்) பெயர்பெற்ற கதிர்காமம் உரோகண நாட்டில் இருந்தது. இப்போதும் கதிர்காமம் பேர்பெற்றுள்ள திருப்பதியாக இருக்கிறது. கதிர்காமத்தைச் சிங்களவர் `கதரகாமம்’ என்றும், `கஜரகாமம்’ என்றும், காசரகாமம்’ என்றும் கூறுவர். கதிர்காம முருகனைச் சிங்களவர் `கதரகாம தெவியோ’ (கதிர்காமத் தெய்வம்) என்று கூறுவர்.இலங்கையின் நான்கு பெரிய காவல் தெய்வங்களில் கதிர்காமக் கந்தனும் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டான். பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த இலங்கைக்கு முருகன் வழிபாடு சென்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாண்டிநாட்டுத் தமிழர் உரோகண நாட்டுக்கு வந்து குடியேறியபோது அவர்கள் தங்களுடைய முருக வழிபாட்டை உரோகண நாட்டில் நிறுவினார்கள். முருகன் குறிஞ்சிநிலக் கடவுள் ஆகையால், தமிழரின் வழக்கப்படி அவர்கள் கதிர்காம மலைமேல் முருகனுக்குக் கோயில் கட்டி வழிபட்டார்கள். பிற்காலத்தில் பௌத்த மதம் இலங்கையில் பரவினபோது பௌத்த பிக்குகள் மலைமேல் இருந்த முருகனைக் கீழே இறக்கிவிட்டு மலைமேல் தாகோபா (தாதுகர்ப்பத்தைக்) கட்டிவிட்டனர். உரோகண நாட்டில் தமிழா வழிபட்ட இன்னொரு கோயில் அட்டாலயம் என்பது. அது சிவன் கோயிலா, கொற்றவை கோயிலா என்பது தெரியவில்லை. தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பியான மகாநாகன். தன்னுடைய உயிருக்கு அஞ்சி உரோகண நாட்டு மச்சமகாராசனிடம் அடைக்கலம் புகச் சென்ற போது இந்த அட்டாலயத்தில் அவனுடைய மனைவி குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தைக்கு அவன் அட்டாலய திஸ்ஸன் என்று பெயர் இட்டான்.1 உரோகன நாட்டில் இருந்த இன்னொரு கோயில் சிவன்கோயில் என்று தோன்றுகிறது. அந்தக் கோயில் ஏரகாவில்ல என்னும் ஊரில் இருந்தது. நெடுங்காலமாக இருந்த அந்தக் கோயிலைப் பிற்காலத்தில் மகாசேனன் என்னும் சிங்கள அரசன்(கி.பி. 325-352) பௌத்தமத வெறிகொண்டு இடித்துப்போட்டு அங்குப் பௌத்த விகாரை ஒன்றைக் கட்டினான்.2 தமிழர் குடியேறி வாழ்ந்த உரோகண நாட்டைப்பாண்டியன் மரபைச் சேர்ந்த மச்சமகாராசர் (பாண்டியரின் அடையாளம்மீன்)கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு.2 ஆம் நூற்றாண்டு வரையில் அரசாண்டனர். பல நூற்றாண்டுகளாக உரோகண நாட்டில் நிலையாகத்தங்கியிருந்த அவர்கள் பாண்டியரோடு தொடர்பு இல்லாமலே தனித்து இருந்தனர். அவர்கள் பிற்காலத்தில்பௌத்த மதத்தைத் தழுவியிருந்தனர். அவர்களிடம் தேவனாம்பிய திஸ்ஸனின் தம்பியான மகாநாகன் அடைக்கலம் புகுந்து உரோகண நாட்டில் தங்கியிருந்தான். பிறகு, அவனும் அவனுடைய மகனும் மச்ச மகாராசரை அழித்து அவர்களுடைய உரோகணநாட்டை கைப்பற்றிக் கொண்டார்கள். இவ்வாறு உரோகண நாட்டை அரசாண்ட மச்சமகாராசர் அழிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அக்காலத்தில் கற்பாறைகளில் எழுதிவைத்துள்ள பிராமி எழுத்துச் சாசனங்களும்அச் சாசனங்களோடு பொறிக்கப்பட்டுள்ள மீன் அடையாளங்களும் அவர்களைப்பற்றிக் கூறுகின்றன. சமந்தம் இது இலங்கையின் நடுவில் உள்ள மலையநாட்டில் மிக உயரமான மலை. இது `சமனொளி மலை’ என்றும் `சமந்த கூடம்’ என்றும்கூறப்பட்டது. இந்த மலையின் உச்சியில் புத்தருடைய அடிச்சுவடு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பௌத்தர்கள் இந்த மலையைப் புனிதமாகக் கருதி அங்கு யாத்திரை போகிறார்கள். மணிமேகலைக் காவியமும் இந்த மலையைக் கூறுகிறது. `இரத்தின தீவத்து ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை’ புத்தருடைய பாதச்சுவடு இருப்பதாகக் கூறுகிறது.3 `இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பு’ எனவும் கூறுகிறது.4 பிற்காலத்தில் இங்கு வந்தமுகமதியர்களும், கிறித்தவர்களும் இந்த மலையை `ஆதம் மலை’ என்று கூறினார்கள். மணிபல்லவம் ( சம்பு கொலப்பட்டினம்) தமிழில் மணிபல்லவம் என்றும், சிங்கல மொழியில் சம்புகொலப் பட்டினம் என்றும் பெயர்பெற்ற இந்தத் துறைமுகம் மிகப் பழைமையானது. இது இலங்கையின் வடகோடியில் நாகநாட்டின் (இப்போதைய யாழ்ப்பாணத்தின்) வடக்கே இருந்தது. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. இங்குப் பெரிய பட்டினம் (ஊர்) இல்லை. இங்கு ஏற்றுமதி, இறக்குமதிகள் நடைபெறவில்லை. ஆனால், தமிழருக்கு முக்கியத் துறைமுகமாக இருந்தது. சோழ நாடு, பாண்டிய நாடுகளிலிருந்து தூரக்கிழக்கு நாடாகிய சாவக நாட்டுக்குப் (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) போன வணிகக் கப்பல்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்கிருந்து கடல் பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. மணிமேகலைக் காவியத்தில் இந்தத் துறைமுகம் சிறப்பாகக் கூறப்படுகிறது. இலங்கையின் பழைய தலைநகரமாயிருந்த அநுராதபுரத்துக்கு நெடுஞ்சாலையொன்று மணிபல்லவத் துறையிலிருந்து சென்றது. இலங்கையை அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் (கி.மு. 247-207), அக்காலத்தில் இந்திய தேசத்தை அரசாண்ட அசோகச் சக்கர வர்த்தியிடம் தூதுக்குழுவை அனுப்பியபோது, அந்தத் தூதுக்குழு சம்புகொலத் (மணிபல்லவத்) துறையிலிருந்து கப்பலேறிச் சென்றது.5 அந்தத் தூதுக்குழு மீண்டும் திரும்பி வந்தபோது இந்தத் துறை முகத்தில் வந்து இறங்கி அநுராதபுரத்துக்குச் சென்றது.6 அசோகச் சக்கரவர்த்தி, சங்கமித்திரையின் தலைமையில் மகாபோதிக் கிளையை இலங்கைக்கு அனுப்பியபோது அந்தக் கப்பல் இந்தத் துறைமுகத்தில் வந்து இறங்கிற்று.7 போதிமரக் கிளையுடன் அனுப்பப்பட்ட எட்டுப் போதிமரக் கன்றுகளில் ஒரு கன்றைத் தேவனாம்பிய திஸ்ஸன் இங்கு நட்டான்.8 பிறகு இந்தபோதி மரத்தின் அடியில் புத்தருக்குப் பாதபீடிகை அமைக்கப்பட்டது. இந்தப் பீடிகைக்கு மணிபல்லங்கம் (பல்லங்கம் - பலகை என்று பெயர். மணிபல்லங்கம் என்னும் பெயர் தமிழில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கியது. இந்தப் பீடிகையை மணிமேகலைக் காப்பியம் `மணிபீடிகை’ என்றும் `தரும பீடிகை’ என்றும் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிபல்லவத் துறை இருந்தது.9 கோவலன் மகள் மணிமேகலை பௌத்த சமயத்தை சேர்ந்த பிறகு மணி பல்லவஞ் சென்று அங்கிருந்த புத்த பாதபீடிகையை வணங்கித் திரும்பி வந்தாள்.10 யாழ்ப்பாண நாட்டை (நாக நாட்டை) அக்காலத்தில் அரசாண்ட வளைவணன் என்ற நாக அரசனுடைய மகளான பீலிவளை, மணிபல்லவத் துறையிலிருந்து கப்பல் ஏறிக் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்த நெய்தலங்கானலில் சில நாள் தங்கியிருந்தாள்.11 மணிமேகலை சாவகநாடு சென்று அந்நாட்டுஅரசன் புண்ணியராசனோடு மணிபல்வத்துக்கு வந்து அங்கிருந்த பாத பீடிகையை வணங்கினாள்.12 மணிபல்லவத் துறைமுகம், சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் கப்பல்கள் தங்குவதற்கு வாய்ப்பான துறைமுகமாக இருந்தது. ஆனால், அது வாணிகப் பண்டங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் துறைமுகமாக அமைந்திருக்கவில்லை. மாதிட்டை இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார்குடாக்கடலில், பாண்டி நாட்க்கு எதிர்க்கரையில் இருந்தபேர்பெற்ற பழைய துறைமுகம் இது. மகாதிட்டை என்பது மாதிட்டை என்று மருவி வழங்கிற்று. பிற்காலத்தில் இந்தப் பட்டினம் மாதோட்டம் என்று கூறப்பட்டது. இது மாந்தை என்றும் வழங்கப்பட்டது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன் பாண்டியனுடைய மகளை மணஞ் செய்துகொண்டான். அவனுடைய 700 தோழர்களும் பாண்டி நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டார்கள். பாண்டியன் மகளும், பாண்டிநாட்டு மணமகளிரும் பரிவாரங்களோடு இலங்கைக்கு வந்தபோது மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.13 கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட ஏலார அரசன்மேல் துட்டகமுனு போர் செய்தபோது, ஏலாரனுக்கு உதவி செய்யப் பல்லுகன் என்பவன் சோழ நாட்டிலிருந்து சேனையை அழைத்துக்கொண்டு மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினான்.14 வட்டகாமணி அரசனுடைய ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஏழு வீரர்கள் கி.மு. 29 இல் தங்கள் சேனைகளோடு மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.15 கி.பி. முதல் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட இளநாகனை. இலம்பகன்னர் அரசைவிட்டு ஓட்டியபோது. அவன் மகாதிட்டைத் துறைமுகத்தில் கப்பல்ஏறித் தமிழ்நாட்டுக்கு வந்து புகல் அடைந்தான்.16 தமிழ்நாட்டிலிருந்து வாணிகத்துக்காகவும் பிற அலுவல் காரணமாகவும் இலங்கைக்குச் சென்றவர்கள் மாதிட்டைத் துறை முகத்தில் இறங்கிச் சென்றார்கள். அவ்வாறே இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களும் இந்தத் துறைமுகத்தில் வந்து கப்பல் ஏறினார்கள். (அந்த காலத்தில் இப்போது உள்ள கொழும்புத் துறைமுகம் இல்லை. கொழும்புத் துறைமுகம் மிகப் பிற்காலத்தில் ஐரோப்பியர் வந்து வாணிகஞ் செய்யத் தொடங்கிய போது புதிதாக ஏற்பட்டது). மாதிட்டை என்னும் பழைய பெயர் காலப்போக்கில் மாதோட்டம் என்றாகி, பிறகு அது மாந்தோட்டம் என்று மாறிக் கடைசியில் மாந்தை என்றும் வழங்கப்பட்டது. சங்ககாலத்தில் சேரநாட்டுத் துறைமுகமாயிருந்த மாந்தைப் பட்டினத்தை இந்த மாந்தை என்று கருதுவது தவறு. சேரநாட்டு மாந்தைத் துறைமுகத்தைக் `குட்டுவன் மாந்தை’ என்று சங்கநூல்கள் கூறுகின்றன. சங்கநூல்களில் கூறப்படுவது சேரநாட்டு மாந்தைத் துறை முகத்தையே; திரு. நவரத்தினம் அவர்கள் மாதோட்டத்தை, (மகாதிட்டையை) மாந்தை என்று சங்கநூல்கள் கூறுவதாகக் கருதிக்கொண்டு தவறாக எழுதியுள்ளார். சங்ககாலத்திலும் அதற்கு அடுத்த காலத்திலும் மாதிட்டைக்கு மாந்தை என்று பெயர் இருக்கவில்லை. இப்பெயர் மிக மிகப் பிற்காலத்தில்தான் அங்கு வழங்கப்பட்டது. எனவே, சேரநாட்டில் இருந்த மாந்தைப் பட்டினத்தை இலங்கையில் சங்க காலத்தில் இருந்த மாதிட்டைத் துறைமுகத்துடன் இணைப்பது தவறாகும். மாவலி கங்கை மாவலி கங்கை இலங்கையில் உள்ள பெரிய ஆறாகும். இலங்கையின் மத்தியில் உள்ள மலையநாட்டில் (கண்டிமலைப் பிரதேசங்களில்) இது உற்பத்தியாகிக் கிழக்காகப் பாய்ந்து பிறகு வடகிழக்காக ஓடிக் கடைசியில் வங்காளக் குடாக்கடலில் உள்ள திருக்கோண மலைக்கு அருகில் கடலில் சேர்கிறது. மாவில கங்கையின் சரியான பெயர் மகாவாலுக கங்கை என்பது. (மகா = பெரிய, வாலுகம் = மாணல், கங்கை = ஆறு. எனவே, `பெருமணல் ஆறு’ என்பது இதற்குப் பொருள்.) மகாவாலுக கங்கை என்னும் பெயர் சுருங்கி மாவலி கங்கை என்று வழங்கப்படுகிறது. மாவலி கங்கை இலங்கையை வடக்குப்பகுதி என்றும், தெற்குப் பகுதி என்றும் இரு கூறாகப் பிரிக்கிறது. சிங்கள இராச்சியத்தின் (இராசாட்டத்தின்) தெற்கு எல்லையாக இந்த ஆறு இருந்தது. இந்த ஆற்றின் தெற்கே மலைய நாடும். உரோகண நாடும் இருந்தன. இந்த நாடுகள் சிங்கள ஆட்சிக்கு அடங்காமல் இருந்தன. இலங்கையின் பழங்குடி மக்கள் இலங்கையில் ஆதிகால முதல் நிலையாகத் தங்கி வாழ்ந்தவர்கள் இயக்கர். நாகர், வேடர் என்னும் பழங்குடி மக்களாவர். இந்தப் பழங்குடி மக்களைப்பற்றிய இலங்கை வரலாற்றைத் தீபவம்சம், மகாவம்சம் என்னும் நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் வாழ்ந்த புத்தர் பெருமான். இலங்கைக்கு மூன்று முறை வந்தார் என்றும், முதல் முறை வந்தபோது அவர் இயக்கரை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றினார் என்றும், இரண்டாம் முறை. மூன்றாம் முறை வந்தபோது அவர் நாகர் என்னும் இனத்தாருக்குப் பௌத்த மதத்தைப் போதித்துச் சென்றார் என்றும் கூறுகின்றன. ஆனால், புத்தர் பெருமான் வடஇந்தியாவிலேயே தம்முடைய வாழ்நாள் முழுவதையும் கழித்தார் என்றும் தென்னிந்தியாவுக்கோ, இலங்கைக்கோ, வேறு நாடுகளுக்கோ அவர் போகவில்லை என்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. ஆனால், புத்தரை இலங்கையோடு சம்பந்தப்படுத்த வேண்டும் என்னும் ஆசையினாலே, தீபவம்சமும் மகாவம்சமும் புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்துபோனார் என்று கூறுகின்றன. புத்தர் பெருமான் போதிஞானம் அடைந்தபிறகு ஒன்பதாவது திங்களில் இலங்கைக்கு வந்தார் என்றும், அப்போது இலங்கையில் வாழ்ந்திருந்த இயக்கர் ஆற்றங்கரையிலே இருந்த மகாநாகத் தோட்டத்திலே வழக்கம்போலக் கூடியிருந்ததைக் கண்டு அவர், அவர்களை அச்சுறுத்த எண்ணிக் காரிருளையும் புயற்காற்றையும் பெருமழையையும் உண்டாக்க, அவர்கள் அஞ்சி நடுங்கித் தங்களை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்றவேண்டும் என்று புத்தரை வேண்டிக்கொள்ள, அவர் தமக்கு இருக்கச் சிறிதளவு இடந்தந்தால் அந்தத் துன்பத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதாகக் கூற, அவர்கள் அவருக்குத் தம் நாட்டில் இருக்க இடந்தந்தனர் என்றும், இடம்பெற்ற புத்தர் புயலையும் மழையையும் அகற்றிக் கீழே இறங்கிவந்து தம்முடைய தோல் ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்தபோது, அது அகன்று விரிந்து கொண்டு போக, இயக்கர் ஒதுங்கிச் சென்று கடற்கரையில் நின்றனர் என்றும், அப்போது புத்தர் அருகில் கடலில் இருந்த கிரித் நீவு என்னும் தீவைத் தம்முடைய இரித்தி (சித்தி)யினால் இலங்கைக்கு அருகில் வரவழைக்க. இயக்கர் அந்த கிரித் தீவில் சென்றுவிட அவர் அத் தீவை முன்போலக் கடலிலிருந்து அகன்று போய்விடச் செய்தார் என்றும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு, புத்தர் இலங்கையிலிருந்து இயக்கரை வேறு தீவுக்கு அனுப்பிவிட்டார் என்று கூறுகின்றன.17 இலங்கை நூல்கள் கூறுகிற இந்தச் செய்தியைப் புத்தருடைய வரலாறு கூறவில்லை. ஆகையால், இது ஒரு கற்பனைக் கதை என்று தெரிகிறது. புத்தர், கொடியவரையும் நல்லவராக்கி அவர்களுக்குப் பௌத்தக் கொள்கையை உபதேசித்தார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது. ஆனால், இலங்கை நூல்கள் அவர் அப்படிச் செய்யாமல் இயக்கரை வேறு தீவுக்கு அனுப்பிவிட்டார் என்று கூறுகின்றன. இயக்கரை வேறு தீவுக்கு ஓட்டியபிறகு தேவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் என்றும், அவர்களுக்குப் புத்தர் திரிசரணம், பஞ்சசீலம் முதலான உபதேசகங்களைச் செய்தார் என்றும், இந் நூல்கள் கூறுகின்றன.18 இந்தத் தேவர்கள் யார், எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்று இந் நூல்கள் கூறவில்லை. இலங்கையிலிருந்த இயக்கரைத் துரத்திவிட்டுத் தேவருக்குத் தருமோபதேசம் செய்த புத்தர் மீண்டும் வடஇந்தியாவுக்குப் (உருவேல் என்னும் இடத்துக்குப் போய்விட்டார்.19 இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால், ஆதி காலத்தில் இலங்கையில் இயக்கர் என்னும் பழங்குடிமக்கள் பெருவாரியாக வாழ்ந்திருந்தனர் என்பதே இயக்கள் இலங்கையிலிருந்து கிரித் தீவுக்கு ஓட்டப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகிறபோதிலும், இயக்கர்கள் எல்லோரும் இலங்கையை விட்டுப் போய்விடவில்லை. ஏனென்றால், இயக்கரும் அவர்களுடைய அரசர்களும் இலங்கையில் பிற்காலத்திலும் வாழ்ந்திருந்தனர் என்பதை மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றன. இலங்கையில் அந்தப் பழங்காலத்திலே நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்ததையும் நாக அரசர்கள் அவர்களை ஆண்டு ஆட்சி செய்ததையும் தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. புத்தர் வடஇந்தியாவில் ஜேதவனம் என்னும் இடத்தில் இருந்தபோது (அவர் புத்த பதவியடைந்த ஐந்தாவது ஆண்டில்) இலங்கையில் இருந்த நாகர் குலத்து அரசர்களான மகோதான், குலோதான் என்பவர்கள் ஒரு மணியாசனத்துக்காகப் போர் செய்யப்போவதையறிந்து, அவர்கள் மேல் இரக்கங்கொண்டு புத்தர் இலங்கைக்கு வந்து அவர்களுடைய போரை நிறுத்தித் தருமோபதேசம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன.20 இலங்கையின் வடக்கில் கடல் பிரதேசத்தில் (இப்போதைய யாழ்ப்பாணத்தில்) நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர். அவர்களுடைய அரசனான நாகராசனுக்கு இரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். நாகராசன் தன்னுடைய மகளை மலை நாட்டில் வாழ்ந்திருந்த நாகராசனுக்கு மணஞ்செய்து கொடுத்துத் தன்னிடத்தில் இருந்த மணியாசனத்தையும் அவளுக்குப் பரிசாக கொடுத்தான். அவளுக்குக் குலோதரன் என்னும் ஒரு மகன் பிறந்தான். யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த நாகராசன் இறந்துபோன பிறகு அவனுடைய மகனான மகோதரன் யாழ்ப்பாணத்தை (நாக நாட்டை) அரசாண்டான், அப்போது அவனுடைய மருகனான (தங்கையின் மகனான) குலோதரன் அரசாண்டு கொண்டிருந்தான். மகோதரன் தன் தந்தை தன்னுடைய தங்கைக்குப் பரீசாகக் கொடுத்த மணியாசனத்தைப் பெற எண்ணிக் குலோதரன் மேல் படையெடுத்துப் போர்செய்யச் சென்றான். இருவரும் போர்க்களத்திலே சந்தித்தபோது புத்தர்பெருமான் போர்க்களத்திலே உயரத்தோன்றிப் பேரிருளை உண்டாக்கினார். அந்த இருட்டைக் கண்ட நாகர் நடுங்கி அஞ்சினார்கள். அப்போது புத்தர் வெளிச்சத்தை உண்டாக்கினார். நாகர்கள் மகிழ்ந்து புத்தரை வணங்கி அவருக்கு மணியாசனத்தைக் கொடுத்து அதில் அமரச் செய்தார்கள். மணியாசனத்தில் அமர்ந்த புத்தர் அவர்களுக்குத் தருமோபதேசம் செய்தார். போர்செய்யக் காரணமாக இருந்த மணியாசனம் புத்தருக்கு உரியதாயிற்று. இவ்வாறு நாகர்களின் போரை நிறுத்திய புத்தர். பிறகு வடஇந்தியாவுக்குப் (ஜேதவனத்துக்கு) போய்விட்டார். அவர் அமர்ந்து உபதேசம் செய்த மணியாசனத்தை நாகர் வழிபட்டு வணங்கினார்கள்.21 மணியாசனத்துக்காக நாக அரசர் போர் செய்ததையும், அப்போது புத்தர் வந்து அந்தப் போரை நிறுத்தியதையும் மணிமேகலைக் காப்பியமும் கூறுகிறது.22 நாக அரசர் போர் செய்யக் கூடியிருந்தபோது இலங்கையில் கலியாணி நாட்டையாண்ட மணியக்கன் என்னும் நாகராசனும் போர்க்களத்துக்கு வந்திருந்தான். அவன் யாழ்ப்பாணத்தை ஆண்ட நாக அரசனான மகோதரனுடைய தாய்மாமனாவான். அவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்தான். அவன் கலியாணி நாட்டுக்கு அரசன். கலியாணி நாடு என்பது இலங்கையில் மேற்குக் கரைப்பக்கம் இருந்தது. (இப்போதைய கொழும்புப் பக்கத்தில் கெலனிஓயா என்னும் கெலனியாறு பாய்கிற பிரதேசந்தான் பழைய கலியாணிநாடு.) கலியாணி நாட்டில் நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை ஆண்ட மணியக்கன் புத்தரைத் தன்னுடைய நாட்டுக்கு வருமாறு அழைக்க, புத்தர் தம்முடைய சீடர்களோடு அங்குச் சென்றார். மணியக்கன் மணியாசனத்தில் புத்தரை அமர்த்தி அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு கொடுத்தான். உணவு கொண்ட பிறகு புத்தர் மணியாசனத்தில் அமர்ந்து தருமோபதேசம் செய்தார் என்று மகாவம்சம் கூறுகிறது.23 இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இலங்கையில் பழங்காலத்தில் நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந் திருந்தனர் என்பதும், அவர்கள் இலங்கையின் வடபகுதியிலிருந்த நாகநாட்டிலும் (இப்போதைய யாழ்ப்பாணம்). இலங்கையின் நடுப்பகுதியான மலையநாட்டிலும், இலங்கையின் மேற்குப் பகுதியான கலியாணி நாட்டிலும் வாழ்ந்திருந்தனர் என்பதும் தெரிகின்றன. சங்ககாலத் தமிழகத்திலேயும் இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சங்கநூல்களிலிருந்து அறிகின்றோம். தமிழ்நாட்டு இயக்கரும் நாகரும் தமிழரின் ஒரு பிரிவினர். அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போனார்கள். விசயன் வருகை இந்தியாவின் மேற்கே இலாட தேசத்திலிருந்து (இப்போதைய குஜராத்து நாட்டிலிருந்து) விசயன் என்னும் அரச குமரன் தன்னுடைய எழுநூறு தோழர்களோடு இலங்கைக்கு வந்தான். விசயன் வங்காள தேசத்திலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறுவதும் உண்டு. அவன் வந்ததும். புத்தர் பரிநிரு வாணம் அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் இலங்கை நூல்கள் புத்தரை இலங்கையோடு தொடர்பு படுத்துவதற்காக, அவர் பரிநிருவாணம் அடைந்த அதே நாளில் விசயன் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றன. புத்தர்பெருமான் வட இந்தியாவில் குசி நகரத்தில் பரிநிருவாணம் அடைந்த அன்று, சக்கன் (தேவேந்திரன்) அவரிடம் சென்றான். பரிநிருவாணம் அடைகிற நிலையில் இருந்த புத்தர் இந்திரனிடம், `விசயன் இலாடதேசத்திலிருந்து இலங்கைக்கு வருகிறான்; இலங்கையில் பௌத்த தர்மம் பரவப்போகிறது; ஆகையால், அவனையும் அவனுடைய தோழர்களையும் காப்பாற்றுக’ என்று கூறினாராம். அதுகேட்ட இந்திரன், உற்பல வண்ணனை (நீலத்தாமரை வண்ணனை) அதாவது திருமாலை (விஷ்ணுவை) இலங்கையில் பாதுகாப்பாளராக நியமித்தானாம்.24 விசயனும் அவனுடைய 700 தோழர்களும் கப்பலில் வந்து இலங்கையில் தம்பபாணி என்னும் இடத்தில் தங்கினார்கள். அவர்கள் தங்கின இடம். இப்போது அநுராதபுரம் உள்ள இடத்தைச் சார்ந்திருந்தது. அது இயக்கர் வாழ்ந்த இடம். இயக்க அரனுடைய மகளான குவண்ணி என்பவளோடு விசயன் தொடர்பு கொண்டு, அவளுடன் வாழ்ந்தான். குவண்ணி, இயக்க நாட்டை விசயன் கைப்பற்றுவதற்கு உதவி செய்தாள். அவளுடைய உதவியினாலே, விசயனும் அவனுடைய தோழர்களும் இயக்க அரசனைக் கொன்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றிய இயக்கருடைய தலைநகரத்தின் பெயர் `சிர்சவத்து’ என்பது.25 விசயனுடைய தோழர்கள் ஆங்காங்கே கிராமங்களை அமைத்துக்கொண்டனர். அநுராதன் என்பவன் கடம்ப நதிக்கரையில் (இப்போதைய மல்வட்டெஓயா) அநுராத கிராமத்தையும், உபதிஸ்ஸன் கிராமத்தையும் உண்டாக்கினார்கள். உச்சேனி, உருவேலா, விஜிதம் முதலான ஊர்களையும் அமைத்தார்கள்.26 பாண்டிநாட்டுத் தொடர்பு இயக்க அரசன் மகளான குவண்ணிக்கும் விசயனுக்கும் ஓர் ஆணும் பெண்ணும் பிறந்திருந்தனர். விசயனுடைய தோழர்கள், விசயனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்க விரும்பினார்கள். அவர்கள் தங்கள் எண்ணத்தை அவனுக்குக் கூறினபோது, அவன் இயக்க குலத்துக் குவண்ணியை இராணியாக்கி முடிசூட்டிக்கொள்ள விரும்பவில்லை. நல்ல அரச குலத்து மகளை மணந்து அவளை இராணியாக்கி முடிசூட்டிக்கொள்ள விரும்பினான். அவனுடைய தோழர்கள் எண்ணிப்பார்த்து இலங்கைக்கு அக்கரையில் உள்ள பாண்டிநாட்டு அரசனிடம் மகள் கேட்க, முத்து மணிகள் முதலான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்துத் தூதர்களை அனுப்பினார்கள். தூதர்கள் மதுரைக்குச் சென்று பாண்டியன் மகளை விசயனுக்கு மணம் செய்விக்கக் கேட்டார்கள். பாண்டியன் அமைச்சர் களோடு கலந்து ஆய்ந்து தன் மகளை மணஞ் செய்விக்க இசைந்தான். மற்ற எழுநூறு தோழர்களும், பாண்டி நாட்டில் பெருங்குடி மக்கள் வீடுகளிலிருந்து மணப்பெண்களை மணம் பேசி முடித்தனர். மதுரை யிலிருந்து பாண்டியன் மகளும் மற்ற மணப்பெண்களும் பரிவாரங் களோடும் யானை, குதிரை, தேர் முதலான வற்றோடும் பதினெட்டு வகையான கைத்தொழில் செய்யும் சாத்தர்களோடும் அவர்களைச் சார்ந்த ஆயிரம் குடும்பங்களோடும் இலங்கைக்குச் சென்றனர். சென்றவர்களை விசயனும் அவனுடைய தோழர்களும் வரவேற்று அவர்கள் தங்குவதற்குரிய இடங்களை அமைத்துக் கொடுத்தார்கள். விசயன் குவண்ணியையும் அவளுடைய மக்களையும் துரத்தி விட்டான். தங்கள் அரசனையும் நாட்டையும் காட்டிக் கொடுத்த குவண்ணியை இயக்கர்கள் கொன்றுவிட்டார்கள். பிறகு விசயனும் அவனுடைய தோழர்களும் முறையே பாண்டிய அரச குமாரத்தியையும் பாண்டி நாட்டு மகளிரையும் திருமணஞ்செய்து கொண்டார்கள். தோழர்கள் விசயனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்கினார்கள்.27 பாண்டியன் மகளைத் திருமணம் செய்துகொண்டு முடிசூடிய விசயன் தன் மாமனாகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு நூறாயிரம் (இரண்டு இலட்சம்) பொன் மதிப்புள்ள முத்துகளைக் காணிக்கையாகச் செலுத்திவந்தான். விசயன் 38 அண்டுகள் அரசாண்டான்.28 இவ்வாறு கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலே இலங்கையரசனுக்கும் பாண்டிய அரசனுக்கும் அரசியல் தொடர்பும் திருமணத் தொடர்பும் ஏற்பட்டது. விசயன் இலங்கை முழுவதும் அரசாளவில்லை. விசயன், அநுராதபுரத்தைச் சூழ்ந்துள்ள நாட்டை அரசாண்டான். இலங்கையின் மற்ற இடங்களை இயக்கரும் நாகரும் அரசாண்டார்கள். இலங்கையின் வடபகுதியாகிய நாகநாட்டை (யாழ்ப்பாணப் பிரதேசம்) நாக அரசனும், கலியாணி நாட்டை இன்னொரு நாக அரசனும், மலைய நாட்டையும் உரோகண நாட்டையும் வேறு வேறு அரசர்களும் அரசாண்டார்கள். மகாவலி கங்கை என்னும் ஆற்றின் வடகரைக்கும் நாகநாட்டின் தென் எல்லைக்கும் இடையில் இருந்த சிங்கள நாட்டை விசயன் அரசாண்டான். விசயன் கி.மு. 483 முதல் 443 வரையில் 38 ஆண்டுகள் அரசாண்டான் என்பர். அவனுக்கு மக்கட்பேறு இல்லை. பாண்டி நாட்டிலிருந்து மணமகளிரோடு இலங்கைக்குச் சென்ற 18 வகையான தொழிலாளிகள் இலங்கையின் தலை நகரத்தை அமைத்தார்கள் என்று தோன்றுகிறது. விசயன் இறந்த பிறகு, ஓராண்டு வரையில் சிங்கள இராச்சியத்தை அவனுடைய அமைச்சர்கள் அரசாண்டார்கள். அப்போது நாட்டுக் குடிமக்களான இயக்கர், அரசியல் காரணமாகக் கலகஞ்செய்தனர் என்று தோன்றுகிறது. அதன் பிறகு, பாண்டு வாசுதேவன் என்பவன் இலங்கையை அரசாண்டான். அவன் விசயனுடைய தம்பியாகிய இலாடதேசத்தை அரசாண்ட சுமித்தனுடைய இளையமகன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால், இவன் பாண்டிநாட்டுப் பாண்டிய அரசகுலத்தவனாக இருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். தீபவம்சம் இவனைப் பாண்டுவாசன் என்றுதான் கூறுகிறது.29 ஆனால், அதற்குப்பின் எழுதப்பட்ட மகாவம்சம் பாண்டு வாசனைப் பாண்டுவாசுதேவன் என்று மாற்றிக் கூறுகிறது.30 பாண்டுவாசன் என்பதன் பொருள் `வெள்ளாடை அணிந்தவன்’ என்றும் `பாண்டி நாட்டில் இருந்து வந்தவன்’ என்றும், ஆகும். வெள்ளாடை அணிந்தவன் என்பதைவிடப் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவன்; அதாவது, பாண்டி நாட்டவன் என்று கூறுவதே பொருத்தமாகும்.31 ஆனால் மகாவம்சம், புத்தர் இலங்கைக்கு வந்தார் என்று கூறி அவரை இலங்கையோடு தொடர்புபடுத்தியது போலவே, பாண்டுவாசனைப் பாண்டி நாட்டிலிருந்து சென்ற பாண்டிய அரச மரபினனாகத் தோன்றுகிறான். இவன் கி.மு. 444 முதல் 414 வரையில் 30 ஆண்டுகள் அரசாண்டான். சிங்களவர் ஆட்சி பாண்டுவாசனுக்குப் பத்து ஆண் மக்களும் ஒரு மகளும் பிறந்தனர். மூத்தமகனுக்கு அபயன் என்றும், கடைசி மகளுக்கு சித்தா என்றும் பெயர். சித்தாவின் மகன் தன்னுடைய அம்மான்களைக் (பாண்டுவாசனுடைய மக்கள் பதின்மரைக்) கொன்றுபோட்டு அரசாள்வான் என்று நிமித்திகர்கள் கூறினார்கள். ஆகவே, அந்த அம்மான்கள் தங்கள் தங்கைக்கு மகன் பிறந்தால் அவனைக் கொன்று விடுவதற்கு வழிசெய்திருந்தார்கள். சித்தாவுக்கும் தீககாமணி என்பவனுக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்த ஆண்குழந்தையை அம்மான்களிடம் அகப்படாதபடி ஒளித்து வைத்து வளர்த்தார்கள். அவனுக்குப் பெயர் பாண்டுகாபயன் என்பது. பாண்டுவாசன் இறந்தபிறகு அவனுடைய மூத்தமகனான அபயனுக்கு முடிசூட்டினார்கள். அவனுடைய தம்பிமார் ஒன்பது பேரும், தங்கள் தங்கையின் மகனைக் கொல்ல அவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பாண்டுகாபயன் அவர்கள் கையில் அகப்படாமல் மகாவலி கங்கையாற்றின் தென்கரையில் மறைந்து வாழ்ந்திருந்தான். அவன் பதினாறு வயதடைந்தபோது தனக்குச் சேனையைச் சேர்த்துக் கொண்டான். அவன் சேதியா என்னும் பெயருள்ள இயக்கியின் உதவியினால் தன்னுடைய அம்மான்களைப் போரில் கொன்றான். கடைசியில் தன்னுடைய மூத்த அம்மானாகிய அபயனையும் வென்று சிங்கள இராச்சியத்தைக் கைப்பற்றினான். பாண்டுகாபயன், பழைய தலைநகரான உபதிஸ்ஸ கிராமத்தை விட்டு, அநுராதபுரத்தைத் தலைநகரமாக்கினான். இவன் அநுராத புரத்தின் காவல்தெய்வங்களாக இயக்கரை அமைத்தான். நகரத்தின் கிழக்குப் பக்கத்தின் காளளேள என்னும் இயக்கரை நியமித்தான். அபயவாவி என்னும் ஏரியின் (இப்போதைய பசவக்குளம்) கரைமேல் சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வத்தை அமைத்தான். அநுராத புரத்தின் தெற்கு வாயிலில் இயக்கிக்கு ஒரு கோயில் கட்டினான். அரண் மனையை அடுத்து, போரில் தனக்கு உதவி செய்த சேதியா என்னும் இயக்கிக்குக் கோயில் அமைத்தான். இந்த இயக்கத் தெய்வங்களுக்கும் வேறு இயக்கத் தெய்வங்களுக்கும் இவன் பூசைகளையும் விழாக் களையும் நடத்தினான். நாட்டில் குடிமக்களாக இருந்த இயக்கர்களை மகிழ்விப்பதற்காக இத் தெய்வங்களைக் கொண்டாடினான் என்று தெரிகிறது. திருவிழாக்காலங்களில் இவன் சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வத்தின் அருகில் அமர்ந்து விழாவைக் கொண்டாடினான்.32 பாண்டுகாபயன் அநுராதபுரத்தில் முடிசூடி எழுபது ஆண்டு (கி.மு. 377 - 307) அரசாண்டான். சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வங்களைக் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டும், இயக்க பூதங்களை நண்பர்களாகக் கொண்டும் அரசாண்டான்.33 விசயன் இலங்கையில் சிங்களராச்சியத்தை அமைத்தபோது, அவன் இயக்கருடைய இராச்சியத்தை இயக்கியாகிய குவண்ணியின் உதவியினால் கைப்பற்றினான். அதனால், இயக்கர் அவனுக்குப் பகைவராக இருந்தனர். அவர்கள் தங்களையும் தங்கள் அரசனையும் காட்டிக்கொடுத்த குவண்ணியைக் கொன்றுவிட்டார்கள். ஆனால், பாண்டுகாபயன் இயக்கருடைய உதவி கொண்டு தன்னுடைய அம்மான்களை வென்று சிங்கள இராச்சியத்தை அமைத்தான். இவன் இயக்கரைப்போற்றி அவர்களுக்கு உயர்ந்த இடங்கொடுத்து, இயக்கத் தெய்வங்களுக்குக் கோயில் கட்டித் திருவிழா செய்து வழிபட்டான். இவனுக்குக் குடிமக்களான இயக்கர் ஆதரவு இருந்தது. உரோகண நாட்டில் பாண்டியர் ஆட்சி பாண்டுகாபயன் காலத்திலோ, இவன் காலத்துக்கு முன்போ, இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்தில் உள்ள உரோகண நாட்டில், பாண்டிய அரசர் குலத்தைச் சேர்ந்தவர் வந்து அந்நாட்டையும் அதற்கு வடக்கேயுள்ள கிழக்கு இலங்கையையும் கைப்பற்றி அரசாண்டனர். அவர்களைப்ற்றிய வரலாற்றைத் தீபவம்சமும் மகாவம்சமும் பேசவில்லை அந்தப் பாண்டிய குலத்து அரசர்கள் உரோகண நாட்டிலே நிலைகொண்டு அப்பகுதிகளை அரசாண்டு கொண்டிருந் தார்கள். அவர்களுடைய வழியினர் பிற்காலத்தில் எழுதிவைத்த பிராமி எழுத்துச் சாசனங்களிலிருந்து அவர்களைப்பற்றி ஒருவாறு அறிகிறோம். பாண்டுகாபயன் அநுராதபுரத்தில் கி.மு. 307 இல் காலமான பிறகு, அவனுடைய மகனான முட்டசிவன் அநுராதபுரத்தில் சிம்மாசனம் ஏறிச் சிங்கள இராச்சியத்தை அரசாண்டான். சிவன் என்று பெயர் பெற்றிருந்தமையால் இவன் சைவ சமயத்தவன் என்று கூறலாம். இவன் சிங்கள இராச்சியத்தை அறுபது ஆண்டுகள் (கி.மு. 307 - 247) அரசாண்டான். இவன் ஆட்சிக் காலத்திலும் இலங்கையைச் சேர்ந்த உரோகண நாட்டில் பாண்டிய குலத்தார் அரசாண்டு கொண்டிருந்தார்கள். உரோகண நாட்டில் மாகாமம் (மகாகிராமம்) என்னும் ஊரைத் தலைநகரமாக்கிக்கொண்டு அவர்கள் அரசாண்டார்கள். முட்ட சிவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டாவது மகனான திஸ்ஸன் அரசாண்டான். திஸ்ஸனைத் தேவனாம்பிய திஸ்ஸன் (தேவனாம்பிரிய திஸ்ஸன்) என்று கூறுவர். தேவனாம்பிரிய திஸ்ஸன் கி.மு. 247 முதல் 207 வரையில் அரசாண்டான். பாரத தேசத்தை அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியும் திஸ்ஸனும் சமகாலத்தில் இருந்த அரசர்கள். அசோகச் சக்கரவர்த்தி, `தேவனாம்பிரியின்’ என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தது போலவே, இலங்கையையாண்ட திஸ்ஸனும் `தேவனாம்பிரியன்’ என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தான். திஸ்ஸன், தூதரை அசோகச் சக்கரவர்த்தியிடம் அனுப்பி, பகவான் புத்தர் போதிஞானம் பெற்ற போதிமரத்தின் கிளையை இலங்கைக்கு அனுப்பும்படியும், பௌத்த மதத்தை இலங்கையில் பரவச் செய்வதற்காகச் சங்கமித்திரை முதலான பௌத்தப் பிக்குகளை அனும்பும்படியும் கேட்டுக்கொண்டான். அவ்வாறேஅசோகச் சக்கரவர்த்தி போதிமரக் கிளையையும், பிக்குணிகளையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தார்.34 இதற்கு முன்பே அசோக சக்கரவர்த்தி மகிந்தன் (மகேந்திரன்) என்னும் பிக்குவை இலங்கைக்கு அனுப்பி பௌத்தமதப் பிரசாரம் செய்வித்திருந்தார்.35 திஸ்ஸ அரசன் புத்தகயாவிலிருந்து வந்த போதிமரக் கிளையை அநுராதபுரத்தில் நட்டபோது அந்த விழாவிற்கு இலங்கையில் இருந்து அரசர்களும் பெருமக்களும் வந்திருந்தார்கள். அவர்களில் கஜர காமத்திலிருந்து (கதிர்காமத்திலிருந்து - அதாவது உரோகண நாட்டிலிருந்து) அதன் பெருமக்களும் வந்திருந்தனர்.36 மகாவம்சம், கதிர்காமப் பெருமக்கள் என்று கூறகிறதே தவிர அவர்களின் பெயரைக் கூறாமலே மறைத்துவிட்டது. கதிர்காமத்துப் பெருமக்களில் உரோகணநாட்டுப் பாண்டிய குல அரசனும் முக்கிய மானவன் என்பதில் ஐயமில்லை. மகாவம்சம் உரோகண நாட்டுப்பாண்டிய குல அரசர்களைக் கூறாமல் விட்டபோதிலும், வேறு இடத்திலிருந்து இந்தப் பாண்டியரின் செய்திகள் கிடைக்கின்றன. உரோகண நாட்டில் அரசாண்டிருந்த பாண்டியகுலத்து அரசரை, தேவனாம்பிரிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாகன் கொன்று அந்த இராச்சியத்தைக் கைப்பற்றினான். மகாநாகனுக்கு உபராச மகாநாகன் என்னும் பெயரும் உண்டு. இவன் எப்படி உரோகண நாட்டுப் பாண்டியப் பரம்பரையை அழித்தான் என்பதைக் கூறுவதற்கு முன்பு, அந்தப் பாண்டிய குலத்தரசரைப் பற்றிக் கூறுவோம். இலங்கைத் தீவின் தென்கிழக்கில் உரோகணநாடு இருக்கிறது. அதன் பழைய தலைநகரம் மாகாமம் (மகாகிராமம்) என்பது. அதன் துறைமுகப்பட்டினம் சம்பந்திட்டை. இக்காலத்தில் அது ஹம்பந்தோட்டம் என்று கூறப்படுகிறது. சம்பந்திட்டை பழங்காலத்தில் பேர்பெற்ற துறைமுகப்பட்டினமாக இருந்தது. உரோகண நாட்டின் மற்றொரு தலைநகரம் கதிர்காமம். கதிர்காமத்தைச் சிங்கள நூல்கள் கதரகாமம் என்றும், கஜரகாமம் என்றும் கூறுகின்றன. கதிர்காமம், முருகன் கோயிலுக்குப் பேர்பெற்றது. மாணிக்க கங்கை என்னும் ஆற்றின் அருகில் கதிர்காமக் கோயில் இருக்கிறது. அந்தப் பழங்காலத்தில், கதிர்காமக் கோயில் ஒரு குன்றின்மேல் இருந்தது. தமிழர் முருகனைக் குன்றின் மேல்வைத்து வணங்குவது வழக்கம். உரோகண நாட்டை யரசாண்ட பாண்டிய குலத்தவர் கதிர்காம முருகனைப் பழைய வழக்கப்படி குன்றின்மேல் கோயில் கட்டி வணங்கினார்கள். (பிற்காலத்தில் சிங்களவர், குன்றின்மேல் இருந்த முருகனைக் கீழே கொண்டுவந்து இப்போதுள்ள கோயிலில் வைத்தனர்.) உரோகண நாட்டில் அக்காலத்திலிருந்த இன்னொரு கோயில் அட்டாலயம் என்பது. அதுவும் முருகன் கோயில் என்று தோன்றுகிறது. அசோகச் சக்கரவர்த்தி அனுப்பிய போதிமரத்துக் கிளையை அநுராதபுரத்தில் திஸ்ஸ அரசன் நட்டுச் சிறப்புச் செய்தபோது, அவ் விழாவுக்கு வந்திருந்த பெருமக்களில் கதிர்காமத்துப் பெருமக்களும் வந்திருந்தனர் என்று மகாவம்சம் கூறுகிறது37 பெருமக்கள் என்று பன்மையில் கூறுகிற படியால் உரோகண நாட்டை அரசாண்டவர் பாண்டிய சகோதரர்கள் என்று தெரிகிறது. உரோகண நாட்டரசர்கள் காமணி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்கள் உரோகண நாட்டையும் அதற்கு வடக்கே கடற்கரையோரமாக இருந்த கிழக்கு இலங்கையையும் அரசாண்டார்கள் என்பதை அவர்கள் அங்கு எழுதியுள்ள பாறைக்கல் சாசன எழுத்துகளிலிருந்து அறிகிறோம் என்பதை முன்னமே கூறினோம். இலங்கையில் அம்பரை மாவட்டத்தில் ஹெனன்னெகல என்னும் இடத்திலுள்ள மலைக்குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்தக் கல்வெட்டு வாசகத்தின் இறுதியில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மீன் அடையாளம் பாண்டியருக்குரியது என்பதை அறிவோம். இந்தச் சாசனம் எழுதிய அரசர் பாண்டியர் மரபைச் சேர்ந்தவர் என்பதற்கு இது முக்கியமான சான்றாகும்.38 மேலும், இந்தச் சாசனத்தில் மஜிமகாராசன் என்னும் பெயர் கூறப்படுகிறது. அதாவது, மச்ச (மீன்) மகாராசன் என்று கூறப்படுகிறான். பழைய சிங்கள மொழியில் மஜி என்றால் மச்சம் (மீன்) என்பது பொருள். ஆகவே, மஜிமகாராசன் என்றால் மீன் அடையாளத்தையுடைய மகாராஜன் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்தச் சாசனத்தின் இறுதியிலுள்ள மீன் உருவம், இவனுடைய அடையாளம் மீன் (கயல்) என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கிறது. ஆகவே, இந்த அரசர் பரம்பரை மீன் அடையாளத்தையுடைய பாண்டியப் பரம்பரை என்பது தெரிகிறது. மச்ச மகாராசனும் அவனுடைய மகனான காமணி திஸ்ஸனும் சேர்ந்து பௌத்தப் பிக்குகளுக்குச் சில கிராமங்களையும் அவற்றைச் சேர்ந்த பொருள்களையும் தானஞ் செய்ததை இந்தக் கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. இந்த அரசர்கள் பௌத்த பிக்குச் சங்கத்துக்கு ஏழு கிராமங்களைத் தானஞ்செய்ததையும், அந்த ஏழு கிராமங்களின் பெயர்களையும் இச் சாசனம் கூறுகிறது. இவ்வரசர்கள் எழுதியுள்ள 16 பிராமி எழுத்துச் சாசனங்கள் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களின் இறுதியில் இவர்களுடைய மீன் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. மீன் அடையாளம் அந்த அரசர் பாண்டிய மரபைச் சேர்ந்தவர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது. இந்தப் பிராமி எழுத்துச் சாசனங்களையும் அதன் வாசகங்களையும் அச் சாசனங்களின் இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள மீன் உருவங்களையும் பரணவதானே அவர்கள் தொகுத்துப் பதிப்பித்துள்ள இலங்கைச் சாசனங்கள் முதலாம் தொகுதியில் காணலாம்.39 உரோகண நாட்டை அரசாண்ட காமணி அபயன் என்னும் (மீனன், பாண்டிய பரம்பரையரசன்) அரசனுக்குப் பத்து மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் தசபாதிகர் என்று பெயர் இருந்ததை முன்னமே கூறினோம். (தசபாதிகர் - பத்துச் சகோதரர்). அந்தப் பத்துச் சகோதரர்களில் மூத்தவன் பெயர் தர்மராசன் என்றும், அவனுடைய மகன் பெயர் மகாதிஸ்ஸ ஐயன் என்றும் போவட்டெகல பிராமி எழுத்துச் சாசனம் கூறுகிறது. `காமணி அரசனுடைய குமாரர்களான தசபாதிகர்களில் மூத்தவன் பெயர் தர்மராசன். அவனுடைய மகனான மகாதிஸ்ஸன். மகாசுதர்சனம் என்னும் பெயருள்ள இந்த மலைக் குகையைப் பௌத்த சங்கத்துக்குத் தானங்கொடுத்தான்’ என்று இந்தக் குகைச் சாசனங் கூறுகிறது.40 இந்த மலைக்குகையில் உள்ள இன்னொரு சாசனம். `காமணி அரசனுடைய மகன் உதிராசன், உதிராசனுடைய மகன் அபயன். அபயனுடைய மகள் அநுராதி என்பவள், இந்தக் குகையைப் பிக்குகளுக்குத் தானஞ் செய்தாள்’ என்று கூறுகிறது.41 உரோகண நாட்டையாண்ட பாண்டிய மரபைச் சேர்ந்த காமணி அரசனுடைய பரம்பரையைப்பற்றிக் கொட்டதாமூஹெல குகையில் உள்ள பிராமி எழுத்துச் சாசனங்களும் கூறுகின்றன. `தர்மராசனின் மகனான மகாதிஸ்ஸ ஐயனுடைய மகளும், அபயராசனுடைய மகனின் மனைவியுமான சவெர, புத்தசங்கத்துக்கு இந்தக் குகையைத் தானங் கொடுத்தாள்’ என்று ஒரு சாசனம் கூறுகிறது.42 `தர்மராசனுடைய மகனான மகாதிஸ்ஸ ஐயனுடைய மகளும், அபய அரசனுடைய மகனான திஸ்ஸனுடைய மனைவியுமான சவர இந்தக் குகையைப் பௌத்த சங்கத்துககுத் தானங்கொடுத்தாள்’ என்று இன்னொரு பிராமி எழுத்துச் சாசனம் கூறுகிறது.43 இவற்றிலிருந்து உரோகண நாட்டை யரசாண்ட பாண்டிய குல அரசர் கால்வழியை இவ்வாறு அறிகிறோம். மஜிமகாராசன் (மச்சமகாராசன்) காமணி அபயன் (தேவனாம்பிய திஸ்ஸனுக்கும் அசோகச் சக்கரவர்த்திக்கும் சமகாலத்தில் இருந்தவன். அநுராதபுரத்தில் போதிமரத்தைத் திஸ்ஸன் நட்டு விழாக் கொண்டாடியபோது, அவ்விழாவுக்குச் சென்றிருந்தான். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகா நாதன், உயிருக்கு அஞ்சி இவனிடம் அடைக்கலம் அடைந்த போது, அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்தான்.) தர்மராசன் உதிராசன் மற்றும் எட்டு மக்கள் (தசாபாதிகர்) மகாதிஸ்ஸன் அநுராதி (மகள்) சவெர (மகள்) (மகள்) (பௌத்த சங்கத்துக்கு 14 குகைகளைத் தானங் கொடுத்தாள். கொட்ட தாமூஹெல சாசனங்கள்.)44 மகாநாகன் அடைக்கலம் புகுந்தது உரோகணநாட்டை அரசாண்ட பாண்டிய மரபு மச்சராசர் பரம்பரையைக் கூறினோம். இனி, தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாதன். உரோகண நாட்டுக்குப் போய்க் காமணி திஸ்ஸனிடம் அடைக்கலம் அடைந்ததையும், புகலிடம் பெற்றுக் காமணி திஸ்ஸனுடைய மக்கள் தசாபதிகரைக் (பத்துச் சகோதரர்களைக்) கொன்று உரோகண இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டதையும் விளக்கிக் கூறுவோம். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பியை மகாநாதன் என்று கூறுவர். அவன் அரச பதவிக்கு வரவேண்டியவனாகையினால் அவனை உபராச மகாநாகன் என்றும் கூறுவர். அவனை அரச பதவிக்கு வராதபடி செய்து தன்னுடைய மகனை (தேவனாம்பிய திஸ்ஸனுடைய மகனை) அரச பதவிக்கு வரச்செய்ய, தேவனாம்பிய திஸ்ஸனுடைய இராணி கருதினாள். ஆகவே, உபராச மகாநாகனைக் கொல்ல அவள் சூழ்ச்சி செய்தாள். மகாநாகனும் இந்த இராணியின் மகனும் தரச்ச என்னும் ஊரில் தங்கி ஏரி ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தபோது, அநுராதபுரத்திலிருந்து இராணி மாம்பழங்களை மகாநாகனுக்கு அனுப்பினார்கள். அந்தக் கூடையில் உயர்தரமான நல்ல மாம்பழங்களை வைத்திருந்தாள். அவை நஞ்சு இடப்பட்டவை. அவற்றைத் தின்று மகாநாகன் இறந்துபோவான் என்று இராணி கருதினாள். மாம்பழங் களைக் கண்ட இராணியின் மகன் (தேவனாம்பிய திஸ்ஸனின் மகன்), அந்த மாம்பழத்தை எடுத்துத் தின்றான். அது நஞ்சிடப்பட்டிருந்த படியால் அவன் இறந்துபோனான். அவன் இறந்து போன காரணத்தை யறிந்த மகாநாகன், இராணியால் தன் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அறிந்து தன்னுடைய குடும்பத்தோடு இராச்சியத்தைவிட்டு அயல் இராச்சியத்துக்குப் போய்விட எண்ணி, உரோகண நாட்டுக்குச் சென்று அங்கு மச்சராசனின் மகனான காமணி திஸ்ஸனிடம் அடைக் கலம் புகுந்தான். காமணி திஸ்ஸன் அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்தான்.45 உரோகண நாட்டுக்குப் போகிறபோது வழியில் அட்டாலயம் என்னும் கோயிலில் மகாநாகனுடைய மனைவி ஒரு மகனைப் பெற்றாள். அந்தப் பிள்ளைக்கு அவன் பிறந்த இடத்தின் பெயரையும் மகாநாகனுடைய தமயனான திஸ்ஸராசனின் பெயரையும் இணைத்து அட்டாலய திஸ்ஸன் என்று பெயரிட்டான். பிறகு, அவன் உரோகண நாட்டுக்கு வந்து மகாகாம நகரத்தில் தங்கி உரோகண நாட்டை யரசாண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 22 :7-8). இதனைக் கூறுகிற மகாவம்சம், உரோகண நாட்டரசனான காமணி திஸ்ஸன் அடைக்கலங்கொடுத்து ஆதரித்ததையும், காமணி திஸ்ஸன் இறந்த பிறகு அவனுடைய ஆட்சியை மகாநாகன் கைப்பற்றிக் கொண்ட துரோகச் செயலையும், மகாநாகனுடைய மகன், காமணி திஸ்ஸனுடைய மக்கள் பதின்மரைக் (தசபாதிகர்) கொன்று தானே உரோகண நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதையும் கூறாமல் அடியோடு மறைத்து விட்டது. ஆனால், மகாவம்சம் மறைத்துவிட்ட வரலாற்றைத் தாதுவம்சம் என்னும் நூல் கூறுகிறது. மகாநாகனுக்கு அட்டாலய திஸ்ஸன் என்னும் ஒரு மகன் பிறந்தான் என்று கூறினோம். மகாநாகனுக்கு உரோகண நாட்டரசனான காமணி திஸ்ஸன் அபயங்கொடுத்து ஆதரித்து அவனுக்கு ஜாவக நாயகன் என்னும் சிறப்புப் பெயர் அளித்துக் காப்பாற்றினான். பிறகு மகாநாகனுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்குக்கோதாபயன் என்றும், அய்ய அபயன் என்றும், அபயன் என்றும் பெயர் உண்டு. தனக்குப புகலிடங் கொடுத்துக் காப்பாற்றிய காமணி அபயன் (மச்சராசன்) காலமான பிறகு, மகாநாகன் உரோகண நாட்டு ஆட்சியைத் தானே கவர்ந்துகொண்டான். காமணி அபயனுக்குப் பத்துக் குKரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குத் தசபாதிகர் (பத்துச் சகோதரர்கள்) என்பது பெயர் என்றும் கூறினோம். காமணி அபயனுக்குப் பிறகு அவர்களே உரோகண நாட்டு ஆட்சிக்கு உரியவர்கள்.ஆட்சியை அவர்களிடம் கொடுக்காமல் மகாநாகன் உரோகண நாட்டு ஆட்சியைத் தானே கைப்பற்றிக் கொண்டான். பிறகு மகாநாகனுடைய இளைய மகனான கோதாபயன் (அபயன்) தசபாதிகரைக் கொன்று உரோகண நாட்டைத் தானே கைப்பற்றிக் கொண்டான். கைப்பற்றிக் கொண்ட பிறகு, கோதாபயன் தான் செய்த மகாபாதகத்தைக் கழுவுவதற்காகப் பல பௌத்த விகாரைகளைக் கட்டினான் என்று தாதுவம்சம் என்னும் நூல் கூறுகிறது.9 உரோகண நாட்டை அரசாண்ட பழைய பாண்டியர் ஆட்சி இவ்வாறு அழிக்கப்பட்டது. அவர் களுடைய கால்வழியைப் பின்னர் விளக்குவோம். மகாநாகனும்அவனுடைய மகனும் உரோகண நாட்டைத் துரோகமாகக் கைப்பற்றி அரசாண்டபோது இராஜராட்டிரத்தைத் (அநுராதபுரம் இராச்சியத்தை) தேவனாம்பிரிய திஸ்ஸன் அரசாண்டான். அவன் கி.மு.247முதல் 207 வரையில் நாற்பது ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரண்டாவது தம்பியான உத்தியன் கி.மு. 207 முதல் 197 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப்பிறகு அனுடைய தம்பியான மகாசிவன் கி.மு. 197 முதல் 187 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான சுவண்ணபிண்ட திஸ்ஸன் அரசனானான். அவன் முடிசூடிய பிறகு சூரதிஸ்ஸன் என்று பெயர் பெற்றான். அவன் கி.மு. 187 முதல் 177 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பௌத்தமதம் இலங்கையில் பரவிற்று. அநுரையில் தமிழர் ஆட்சி சூரதிஸ்ஸன் அநுராதபுரத்தில் இருந்து இராஜராட்டிரத்தை அரசாண்டு கொண்டிருந்தபோது, கி.மு. 177 இல் இரண்டு தமிழர்கள் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் இலங்கையை அரசாண்டார்கள். இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் ஒன்றுமே கூறவில்லை. ஆனால், இலங்கை நூல்களான தீபவம்சம், மகாவம்சம், தூபவம்சம், பூஜாவளி, இராஜாவளி ஆகிய நூல்கள் இந்தத் தமிழர் இலங்கையை அரசாண்டதைக் கூறுகின்றன. இவர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் எந்த நாட்டிலிருந்து இலங்கைக்குச சென்றவர்கள் என்பது தெரியவில்லை. தமிழராகிய சேனனுஓம் குட்டகனும் கப்பல் வாணிகர் என்றும், இவர்கள் இலங்கையில் குதிரைகளைக்கொண்டுவந்து குதிரை வாணிகஞ் செய்தார்கள் என்றும் (அஸ்ஸநாவிகர் - அஸ்வநாவிகர்), இவர்கள் சூரதிஸ்ஸ அரசனை வென்று இருவரும் இலங்கையை இருபத்திரண்டு ஆண்டுகள் நீதியாகச் செங்கோல் செலுத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றது (மகாவம்சம் 21: 10-11; துபவம்சம் 18: 47). தமிழ் நாட்டில் குதிரைகள் உற்பத்தியாகவில்லை. ஆனால், அரசர்கள் குதிரைப்படை வைத்திருந்த படியால், அவர்களுக்குக் குதிரைகள் தேவைப்பட்டன. குதிரைகள் அரேபியா, பாரசீகம் முதலான அயல்நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதியான குதிரைகளைத் தமிழ் வாணிகர் இலங்கைக்குக் கொண்டு போய் விற்றார்கள். சங்ககாலத்தில் சோழ நாட்டை அரசாண்ட இரண்டாம் கரிகாலனைப் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத் துறை முகத்தில் வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறுகிறார். `நீரின் வந்த நிமிர்பரிப் புரவி’49 தொண்டைநாட்டின் துறைமுகப்பட்டினமாகிய எயிற்பட்டினத்திலும் குதிரைகள் கப்பலில் கொண்டுவரப்பட்டு இறக்குமதியாயின என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப்படையில், `வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம், நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை’50 எனக் கூறுகிறார். வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்து இறக்குமதியான குதிரைகளைத் தமிழக குதிரை வாணிகர் தமிழ்நாட்டில் விற்றது போக எஞ்சிய குதிரைகளை இலங்கைக்குக் கொண்டுபோய் விற்றார்கள். அவர்கள் மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை நூல்களில் `அஸ்ஸநாவிகர்’ (அசுவநாவிகர், அசுவம் - குதிரை, நாவிதர் - நாவாய்க் கப்பல்களை வைத்து வாணிகம் செய்பவர்) என்று கூறப்பட்டனர். இலங்கையரசைக் கைப்பற்றின சேனனும், குட்டகனும் அசுவநாவிகனின் (குதிரை வாணிகனின்) மக்கள் என்று மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றது. அந்தக் காலத்தில், வாணிகர் தங்களுக்குப் பாதுகாப்பாக வில்வீரர்களை வைத்திருந்தார்கள். தமிழ்நாடு வாணிகர் மட்டு மல்லர், வேற்று நாட்டு வாணிகரும் வீரர்களைத் தங்களுக்குப் பாதுகாப்பாக அக்காலத்தில் வைத்திருந்தார்கள். இலங்கையில் குதிரை வாணிகஞ் செய்த சேனனும் குட்டகனும் வீரர்படையை வைத்திருந்தபடியால் அவர்கள் இலங்கை அரசனான சூதிரஸ்ஸனைப் போரில் வென்று அரசாட்சியைக் கைப்பற்றினார்கள்.51 மகாவம்சம் குட்டகன் என்று கூறுகிற பெயரைத் தீபவம்சம் குட்டபரிந்தன் என்று கூறுகிறது. சேனனும் குட்டகனும் இலங்கையை நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சம் கூறுவது போலவே தீபவம்சமும் கூறுகிறது.52 தன்னுடைய ஆட்சிக் காலத்தில் குட்ட பரிந்தன் (குட்டகன்) பௌத்தமத விகாரைகளுக்குத் தானஞ் செய்தான். அவன் தானஞ் செய்ததைக் கூறுகிற கல்வெட்டெழுத்துச் சாசனம் அண்மைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.53 சேனகுட்ட பரிந்தகர்களைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர்கள் .கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள். கி.மு. 155 இல் சிங்கள அரசர் பரம்பரையில் வந்த அசேலன் என்பவன் இவர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிப் பத்து ஆண்டுகள் அரசாண்டான். ஏலாரன் (ஏலேலசிங்கன்) இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி அமைந்தது. உயர் குலத்தைச் சேர்ந்தவனும் சோழநாட்டுத் தமிழனுமான ஏலாரன் என்பவன் அசேலனை வென்று இலங்கையை நாற்பத்து நான்கு ஆண்டுகள் அரசாண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது. இவன் கி.மு. 145 முதல் 101 வரையில் அரசாண்டான். இவனைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் ஒன்றும் காணப்படவில்லை. ஏலாரனை ஏலேல சிங்கன் என்றும் கூறுவர். ஏலேலசிங்கன், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைத் தன்னுடைய குருவாகக் கொண்டிருந்தான் என்று ஒரு செவிவழிச் செய்தி உண்டு. தமிழனாகிய ஏலாரன் சைவ சமயத்தவனாக இருந்தும், பௌத்த நாடாகிய இலங்கையை மதக் காழ்ப்பு இல்லாமல் நீதியாக அரசாண்டான் என்றும், பகைவர் நண்பர் என்று கருதாமல் எல்லோரையும் சமமாகக் கருதிச் செங்கோல் செலுத்தினான் என்றும் மகாவம்சம் கூறுகிறது; இவனுடைய நேர்மையும் நீதியுமான ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இவ்வரசன் தன்னுடைய படுக்கை அறையில் ஆராய்ச்சிமணி யொன்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். அந்த மணியை அடிப்பதற்குவாய்ப்பாக நீண்ட கயிற்றை அரண்மனைவாயிலில் கட்டிவைத்தான். முறையிடுவோரும் நீதிவேண்டு வோரும் அரண்மனைவாயிலில் உள்ள கயிற்றை இழுத்து மணியடித்தால் அரசன்நேரில் வந்து அவர்களுடைய முறையீடுகளைக் கேட்டு நீதி வழங்குவான் (மகாவம்சம்21 : 15). ஏலார மன்னனுக்கு ஒரே மகன் இருந்தான். அந்த அரச குமரன் ஒரு நாள் திஸ்ஸவாவி என்னும் ஏரிக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு பசுவின் கன்று துள்ளி ஓடிவந்து அரச குமரனுடைய தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு மாண்டுபோயிற்று. அதைக் கண்ட தாய்ப்பசு தீராத துயரமடைந்து, அரண்மனைக்கு வந்து கயிற்றை இழுத்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன்வெளியே வந்து பசுவின் துயரத்தையறிந்து, அதன் கன்று சாவதற்குக் காரணமாக இருந்த தன்னுடைய ஒரே மகனைத் தேர்ச் சக்கரத்தில் மடியும்படிசெய்தான் (மகாவம்சம் 21 : 15 - 18).இது திருவாரூரை அரசாண்ட மனுநீதிச் சோழன் வரலாறு போல இருக்கிறது. பனைமரத்தின் மேலே கூட்டுக்குள் இருந்த ஒரு குருவிக் குஞ்சை ஒரு பாம்பு பனைமரத்தின் மேல் ஏறி விழுங்கிவிட்டது. அதனைக்கண்ட தாய்க்குருவி அரண்மனைக்கு வந்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன் வந்து செய்தியறிந்து அந்தப் பாம்பைப் பிடித்து வரச் செய்து, அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியில் எடுத்துவிட்டு, பாம்பை அந்த மரத்தில் தூக்கிக் கட்டித் தண்டித்தான் என்று இன்னொரு கதையை மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 21 :எ 19-20). ஏலார மன்னன், புத்த சங்கத்தாராகிய பௌத்தப் பிக்குகளை உணவு கொள்ள அழைப்பதற்காக அவர்கள் இருந்த சேதிய மலைக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு பௌத்தத் தூபிக் கட்டடத்தில் அவனுடைய தேரின்அச்சுப்பட்டுச் சில கற்கள் விழுந்தன. அருகிலிருந்த அமைச்சன் கட்டடத்திலிருந்து கற்கள் விழுந்துவிட்டதைத் தெரிவித்தான். அரசன், தேரிலிருந்து இறங்கித் தேர்ச்சக்கரத்தின் அருகே படுத்துக்கொண்டு தன் மேல் தேரைச் செலுத்திக் கொல்லும்படி கூறினான். அமைச்சன், `எங்கள் புத்தர் பெருமான் ஒருவருக்கும் தீமை செய்வதைச் சம்மதிக்கமாட்டார். சிதைந்துபோன தூபியைப் பழுது) தீர்ப்பதுதான் முறை’ என்று கூறினான். அரசன் அவ்வாறே பழுது தீர்த்தான். விழுந்து போன பதினைந்து செங்கற்களுக்கு ஈடாகப் பதினைந்தாயிரம்காப்பணம் (அக்காலத்தில் வழ’கிய ஒரு நாணயம் 9.48 கிராம் எடையுள்ளது) செலவு செய்து அந்தத் துபியைப் பழுது தீர்த்தான் (மகாவம்சம் 21 : 21-26). கிழவியொருத்தி வெய்யிலில் உலர வைத்திருந்த அரிசியை மழை பெய்து நனைத்துவிட்டது. அவள் ஆராய்ச்சி மணியை அடித்து முறையிட்டாள். அரசன் பட்டினி நோன்பிருநது தன் குல தெய்வத்திடம் பகலில் மழை பெய்யாமல் இரவில்மழை பெய்விக்கும்படி இந்திரனிடம் கூறும்படி கேட்டுக்கொண்டான். அவ்வாறே பகலில் மழை பெய்து மக்களுக்கு இடுக்கண் நேராமல் இரவில்மழை பெய்து கொண்டிருந்தது என்று இன்னொரு கதையை மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 21: 27-33). இந்தக் கதைகள் எல்லாம் இவ்வரசன் நீதியாகவும் நேர்மையாகவும் குடிமக்களின் நன்மையைக் கருதி அரசாண்டான் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன. இந்தக் கதைகளை இலங்கை வரலாற்றைக் கூறுகிற மகாவம்சம் சொல்லுகிறது. ஏலார மன்னனுடைய இலங்கை இராச்சியம் கிழக்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் கடலையும், தெற்குத் திசையில் மாவலி கங்கைஎன்னும் ஆற்றையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இந்த ஆறு இலங்கையில் உள்ள ஆறுகளில் பெரியது. ஏலார மன்னன் தெற்கு எல்லiல் பல கோட்டைகளை அமைத்து ஆங்காங்கே சேனைகளையும் சேனைத் தலைவர்களையும் நிறுத்தியிருந்தான். ஏலாரனுடைய இராச்சியத்தின் தென்கிழக்கில் உரோகண நாடு இருந்தது.ஏலேல அரசன் காலத்தில் உரோகண நாட்டைஅரசாண்டவன் காகவன்ன திஸ்ஸன் என்பவன். அவன் உரோகண நாட்டை அரசாண்ட பழைய (பாண்டியர் குலத்தைச் சேர்ந்த) அரசர்களைக் கொன்று அநீதியாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட உபராச மகாநாகனுடைய பேரன். காகவன்ன திஸ்ஸனுக்குத் திஸ்ஸ அபயன் என்னும் பெயர் உண்டு. அவனுடைய மனைவியின் பெயர் விகாரமகாதேவி. அவர்களுடைய மூத்த மகன் பெயர் கமுனு என்பது. இந்தக் கமுனு, ஏலேல மன்னன் மேல் போர் செய்து இலங்ரைக இராச்சியத்தைக் கைப்பற்றும்படி தன் தந்தையான காகவன்ன திஸ்ஸனுக்கு அடிக்கடி கூறினான். அவன் அதற்கு இணங்கவில்லை. நீதியாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஏலேல அரசனைக் குடிமக்கள் பக்தியோடு நேசித்தார்கள். மேலும், ஏலேலன் தன்னுடைய இராச்சியத்தில் ஆங்காங்கே பலமான சேனைகளை நிறுத்தியிருந்தான். ஆகையால், அவனை வெல்ல முடியாது என்று காகவன்ன திஸ்ஸன் அவன்மேல் போருக்குப் போக விரும்பவில்லை. ஆகவே, கமுனு தன் தந்தைமேல் சினங்கொண்டு `என் தந்தை ஆண் மகன் அல்லன், பெண் மகள்’ என்று கூறி, அவனுக்குக் கைவளை களையும் பெண்களுக்குரிய ஆடையணிகளையும் அனுப்பினான். அதனால், அவன் துட்டகமுனு (துஷ்ட கமுனு) என்று பெயர் பெற்றான். காகவன்ன திஸ்ஸன் காலஞ்சென்ற பிறகு அவன் மகனான துடடகமுனு ஏலேல மன்னன் மேல் போர்செய்ய வந்தான். உரோகண நாட்டில் சிங்கள அரசர் இங்குத் துடடகமுனுவுடையப ரம்பரையைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாகன் தன்னுடைய உயிருக்கு அஞ்சித் தன்னுடைய குடும்பத்தோடு உரோகண நாட்டுக்குச்சென்று அங்கு அரசாண்டிருநத பாண்டிய குலத்து அரசனான காமணி அபயனிடம் அடைக்கலம் புகுந்ததையும், காமணி அபயன் அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்ததையும், காமணி அபயன் காலமான பிறகு மகாநாகன் உரோகண நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டதையும், மகாநாகனுடைய இளைய மகனான கோதாபயன் உரோகண நாட்டு அரசகுமாரர்கள் (காமணி அபயனுடைய மக்கள்) பதின்மரையும் கொன்று உரோகண நாட்டையே கைப்பற்றிக் கொண்டதையும் முன்னமே அறிந்தோம். பத்து இராச குமாரர்களைக் கொன்று உரோகண நாட்டுஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட கோதாபயன், தன்னுடைய மகனான காகவன்ன திஸ்ஸனுக்கு உரோகண நாட்டுப் பாண்டியர் பரம்பரையில் வந்த சவெர என்பளைத் திருமணம் செய்துவைத்து உரோகண நாடுதன்னுடைய பரம்பரைக்கே சேரும்படி செய்துகொண்டான். காகவன்ன திஸ்ஸன் கலியாணி நாட்டு (இலங்கையின் மேற்குப் பக்கத்தில் கொழும்புப் பிரதேத்தைச் சேர்ந்த நாடு) அரசன் மகளான விகாரமகாதேவி என்பவளையும் திருமணஞ்செய்திருந்தான். காகவன்ன திஸ்ஸனுக்கும் விகாரமகாதேவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன்தான் ஏலேல சிங்கன் மேல் போர் செய்ய வந்த துட்டமகமுனு, அவனுடைய கால்வழியை அடுத்த பக்கத்தில் தருகிறோம். காகவன்ன திஸ்ஸன் இறந்த பிறகு துட்டகமுனு ஏலேல அரசன்மேல் போர் செய்யப்பெருஞ்சேனைனையத் திரட்டினான். அவனுடைய தாயான விகாரமகாதேவியும் ஏலேல மன்னன் மேல் போர் செய்யும்படி மகனைத் தூண்டி ஊக்கப்படுத்தினாள். என்னதான் தங்களுக்குச்nசனைப் பலம் இருந்தாலும், குடிமக்கள் ஏலேல அரசனைத் தெய்வம்போலக் கருதியிருந்தபடியால் அவனை நேர்மையாகவும் வீரமாகவும் வெல்ல முடியாது என்று அறிந்து அவர்கள்(விகாரமகாதேவியும் துட்டகமுனுவும்) யோசித்துச் சூழ்ச்சியினால் போரில் வெல்லத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டபடியே துட்டகமுனு பெரிய சேனையோடு மாவலி கங்கையைக் கடந்து ஏலேல மன்னன் மேல் போர் செய்ய வந்தான். தன்னுடைய சேனையோடு ஐந்நூறு பௌத்தப் பிக்குகளின் சேனையையும் அழைத்துக்கொண்டு வந்தான். ஐந்நூறு பௌத்தப் பிக்குகள் போர் செய்வதற்காக அல்லர்; ஐந்தாம்படை வேலை செய்வதற்காக, குடிமக்களிடத்தில் போய் அவர்களுக்கு மதவெறியையூட்டி ஏலேல மன்னனுக்குஎதிராக அவர்களைக் கிளப்பிவிடுவது அவர்கள் வேலையாக இருந்தது. சேனைகளோடு பிக்குகளை ஐந்தாம்படை வேலை செய்ய அழைத்துக் கொண்டது மல்லாமல், துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகா தேவியையும் போர்க்களத்துக்கு அழைத்து வந்தான். போரில் வெல்லமுடியாமல் இருந்த இடங்களில் துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகாதேவியைப் பகைவனின் தளபதிக்குக் காட்டி மயக்கி வெற்றி பெற்றான். தளபதிகள் அவளை மணஞ்செய்து கொள்ளும் ஆசையினால், போரைச் சரியாகச் செய்யாமல் நழுவி விட்டார்கள். அப்போது துட்டகமுனு எதிரிப்படைகளை வென்று வெற்றிபெற்றான். மஹேல நகரத்துக் கோட்டைமேல் போர் செய்த துட்டகமுனு அந்நகரத்தைப் போர் செய்து வெல்ல முடியாதென்று கண்டு, அக்கோட்டைத் தலைவனான மகேலன் என்னும் தமிழ்ச் சேனாதிபதிக்கு விகாரமகாதேவியைக் காட்டிச் சூதாகப்போரை வென்றான் (மகாவம்சம் 25 : 48 - 49). அம்பதித்தகக் கோட்டை மேல் போர் செய்தபோது அக்கோட்டையைத் துட்டகமுனு வெல்ல முடியவில்லை. ஆகையால், அக்கோட்டையிலிருந்த தித்தம்பனுக்கு விகாரமகாதேவியைக் காட்டி ஏய்த்துச் சூதாகப் போர் வென்றான். சிங்கள அரச பரம்பரை உரோகண நாட்டுப் பாண்டியர் பரம்பரை மஜிமகராஜன் மகாநாகன் காமணி அபயன் (தேவனாம்பிய திஸ்ஸனின் (மகாநாகனுக்கு அடைக்கலந் தந்தவன்) தம்பி; காமணி அபயனிடம் அடைக்கலம் புகுந்தவன்; காமணி அபயன் காலமான பிறகு அவனுடைய ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்) அட்டாலய கோதாபயன் தர்மராசன் உதிராசன் மற்றும் திஸ்ஸன் (அய்ய அபயன்) 8 சகோதரர்கள் (காமணி (உரோகண நாட்டு திஸ்ஸன்) அரச குமாரர் 10 பேரைக் கொன்று நாட்டைக் கைப் மகா திஸ்ஸன் அநுராதி பற்றினான்) விகாரமகா = காகவன்ன = சவெர தேவி திஸ்ஸன் (கலியாணி (திஸ்ஸ நாட்டு அபயன் அரசன் மகள்) துட்டகமனு (கி.மு. 161 - 137) (மகாவம்சம் 25: 8-9). இவ்வாறு விகாரமகாதேவியைக் காட்டியும் பௌத்தப் பிக்குகளின் ஐந்தாம்படைச் செயலினாலும் துட்டகமுனு போர்களைவென்று கடைசியாக காசப்பட என்னும் இடத்துக்கு வந்து பாசறை இறங்கினான். காசப்பட என்னும் இடம் தலைநகரமான அநுராதபுரத்துக்குத் தென்கிழக்கே 29 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஏலேல மன்னனுடைய சேனாதிபதியான தீகஜாந்து என்பவன் தன் சேனையை நடத்திக்கொண்டுபோய்த் துட்ட கமுனு மேல் போர் செய்தான். இந்த இடத்திலும் துட்டகமுனு சூழ்ச்சி செய்து சூதாகப் போர் செய்தான். துட்டகமுனு தன்னைப்போல் மரத்தினால் ஒரு பிரதிமை செய்து,அந்த பிரதிமையைப் போர்க்களத்தில் தன்னுடைய சேனைக்கு நடுவில் நிறுத்தினான். நிறுத்தி அந்தப் பதுமைக்கு அருகில் கொற்றக் குடையைப் பிடிக்கச்செய்தான். அரசர்கள் போர் செய்யும்போதும் போர்க்களத்தில் கொள்ளக் குடை பிடிப்பது அக்காலத்து வழக்கம். கொற்றக் குடையின் கீழே தன்னுடைய பதுமையை நிற்கச் செய்தான். அதனைத்துட்டகமுனுஎன்று கருதித் தீகஜEந்து அங்குச் சென்று அந்த அரசன்மேல் (பதுமையின் மேல்) பாய்ந்து வாளால் வீசினான். வீசின வேகத்தில் பதுமை கீழே விழுந்தபோது தீகஜாந்து அதை வெட்ட ஓங்கினான். அப்போது துட்டகமுனுவின் வீரனானசூரநிமிலன் என்பவன் அவன் மேல் பாய்ந்து அவனைக் கொன்று விட்டான் (மகாவம்சம் 25 : 55 - 64) சேனாபதி இறந்துபோகவே தமிழச்சேனை தோற்றுவிட்டது. தன்னுடைய சேனாதிபதி போர்க்களத்தில் இறந்த செய்தியறிந்து ஏலேல மன்னன் தானே போர்க்களத்துக்குச் சென்று போர் செய்தான் தன்னுடைய பட்டத்து யானையாகிய மகா பப்பதம் (மகாபர்வதம்) என்னும் யானை மேல் அமர்ந்து ஏலேல மன்னன் போர் செய்தான். வயது முதிர்ந்த கிழவனாகிய ஏலேல மன்னனுக்கும் இளைஞனான துட்டகமுனுவுக்கும் அநுராதபுரத்தின் தெற்கு வாயிலின் அருகில் குயவர் கிராமத்துக்கு அருகே போர் நடந்தது. ஏலேல மன்னன் போரில் இறந்துபோனான். துட்டகமுனு வெற்றியடைந்தான் (மகாவம்சம் 25: 69 - 70). ஏலேல மன்னன் இறந்தது அறிந்து குடிமக்கள் துக்கம் அடைந்தனர். தெய்வம்போல் இருந்த மன்னனை அவர்கள் அன்போடு நேசித்தார்கள். போர்க்களத்தில் வீரப்போர் செய்து இறந்த ஏலேல மன்னனுக்குத் துட்டகமுனு கடைசி மரியாதை செய்தான். அரசனுடைய உடம்பை நகர மக்களின் முன்பு கொளுத்தி எஞ்சியிருந்த எலும்புச் சாம்பலின் மேல் ஏலேல மன்னனுக்கு நினைவுச்சின்னமாக ஒரு சேதிமக் கட்டடம் கட்டினான். நான்கு வகையான பெரியவர்களுக்கு நினைவுச் சின்னமாக சேதிமம் அமைக்கவேண்டும் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், சக்கரவர்த்திகள் ஆகிய நான்கு வகையான பெரியவர்கள் இறந்துபோனால் அவர்களுக்குச் சேதிமங்கள் கட்டவேண்டும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. அந்த முறைப்படி துட்டகமுனு ஏலேலச் சக்கரவர்த்திக்குச் சேதிமம் கட்டிச் சிறப்புச் செய்தான். 13 `இன்றும் இந்தச் சேதிமத்தின் அருகிலே இலங்கை அரசர்கள் வரும்போது மரியாதையின் அறிகுறியாக வாத்திய கோஷங்களை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி அமைதியாகவும் வணக்கமாகவும் நடந்து இந்த இடத்தைக்கடந்து போகிறார்கள், என்று மகாவம்சம் கூறுகிறது. (மகாவம்சம் 25: 72 - 74). ஏலேல மன்னனுக்குப் பிறகு மீண்டும் சிங்கள அரசர்கள் இலங்கையை அரசாண்டார்கள்.அவர்கள் 58 ஆண்டுகள் அரசாண்டார்கள் துட்டகமுனு (கி.மு. 101 -77), ஸத்த திஸ்ஸன் (கி.மு. 77-59), தூலத்தனன் (கி.மு. 59), வஞ்சதிஸ்ஸன் (கி.மு. 59-50), கல்லாட நாகன் (கி.மு. 50-43) ஆகியோர் அரசாண்ட பிறகு, வாட்டகாமணி அர சனானான். வாட்டகாமணி காலத்தில் இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி ஏற்பட்டது. ஐந்து தமிழர் ஆட்சி வாட்டகாமணி ஆட்சிக்கு வந்த ஐந்தாம் மாதத்தில் உரோகண நாட்டில் மகாகாமம் என்னும் ஊரில் இருந்த திஸ்ஸன் என்பவன், தனக்கு அரசாளும் ஊழ் இருக்கிறது என்று சோதிடர் சொன்ன வார்த்தையை நம்பிச் சேனையைத் திரட்டிக்கொண்டு வாட்டகாமணிமேல் போருக்கு வந்தான். அதே காலத்தில் ஏழு தமிழச் சேனாதிபதிகள் சேனைகளோடு இலங்கைக்குச் சென்று மகாதிட்டை (மாதோட்டம்) என்னுந் துறைமுகத்தில் இறங்கினார்கள். அவர்கள் கொற்றக் குடையைத் (அரசாட்சியை) தங்களிடம் கொடுக்கும்படி வாட்டகாமணிக்குத் தூதனுப்பினார்கள். உரோகண நாட்டிலிருந்து படையெடுத்து வந்த திஸ்ஸனும் ஆட்சியைத்தன்னிடம் கொடுக்கும்படி அரசனுக்குத் தூது அனுப்பினான். வாட்டகாமணி, `தமிழர்களை வென்று அரசாட்சியை எடுத்துக்கொள்’ என்று திஸ்ஸனுக்குத் தெரிவித்தான். ஆகவே, திஸ்ஸன் தமிழப் படைமேல் போருக்கு வந்து போர் செய்து தோற்றுப் போனான் (மகாவம்சம் 33: 37 - 41). பிறகு, ஏழு தமிழத் தலைவர்களும் வட்டகாமணியின் மேல் படையெடுத்துச் சென்று அநுராதபுரத்துக்கு வடக்கேயுள்ள கொலம்பாலக் என்னும் ஊரில் பாசறை இறங்கினார்கள். வாட்டகாமணி தன் சேனையுடன் போர்க்களத்துக்கு வந்து அவர்களோடு போர் செய்தான். போரில் தமிழர் வெற்றிபெற்றனர். தோல்வியடைந்த வாட்டகாமணி உரோகண நாட்டுக்கு ஓடிப் போனான். போரில் வெற்றிபெற்ற ஏழு தமிழத் தலைவர்களும் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார்கள். அவர்களுள் ஒருவன் போரில் தோற்று ஓடிப்போன வாட்டகாமணி விட்டுவிட்டுச் சென்ற இளைய இராணியாகிய சோமதேவியை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்குப் போய்விட்டான். இன்னொரு சேனாதிபதி, பகவான் புத்தரின் பாத்திரம்என்று புனிதமாகப்போற்றிவைத்துக்கொண்டிருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தன் ஊருக்குப் போய்விட்டான். மற்ற ஐந்து சேனாதிபதிகளும் அநுராதபுரத்தில் தங்க ஒருவருக்குப் பின் ஒருவராக இலங்கையை ஆட்சி செய்தார்கள்(மகாவம்சம் 33: 54-55). இந்தத் தமிழத் தலைவர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்பெறு கிறார்கள். இவர்களுடைய பெயரைப் பாலி மொழியில் மகாவம்சம் இவ்வாறு கூறுகிறது. தீபவம்சம் இவர்கள் பெயரை அலவத்தன், பிஹியன், பழையமாறன், பலயன், தாட்டிகன் என்று கூறுகிறது. புலஹததன் மூன்று ஆண்டு அரசாண்டான். அவனுக்குச் சேனாதிபதியாக இருந்த பாகியன் அவனைக் கொன்று இரண்டு ஆண்டு அரசாண்டான். பாகியனுடைய சேனாதிபதியான பனையமாறன், பாகியனைக் கொன்று ஏழு ஆண்டு அரசாண்டான். அவனுக்குச் சேனைத்தலைவனாக இருந்தவன் பிலயமாறன். இவன் பனையமாறனைக் கொன்று ஏழு மாதம் அரசாண்டான். பிலயமாற னுடைய சேனாதிபதி தாட்டிகன், பிலயமாறனைக் கொன்றுவிட்டு இரண்டு ஆண்டுஅரசான்டான். இவ்வாறு ஐந்து தமிழரும் பதினான்கு ஆண்டு ஏழு திங்கள்கள் (கி.மு. 44-29) அரசாண்டார்கள் (மகாவம்சம் 33 : 56-61; தீபவம்சம் 19: 16; 20 : 15-18).இந்தத் தமிழர்கள் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவர் என்று கூறினோம். இவர்களில் பிலயமாறன் என்பவன் பழைய மாறன் ஆவான். பழையன்மாறன் என்னும் குடிப் பெயருள்ளவர் பாண்டியர் களுக்குச் சேனைத் தலைவராக இருந்தார்கள். அவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள மோகூரில் வாழ்ந்து வந்தனர். மோகூர்ப் பழையன் மாறனைச் சேரன் செங்குட்டுவன் போரில் கொன்றான் என்று சங்கச் செய்யுள் கூறுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனின் சேனாதிபதி யாக இருந்தவன் இன்னொரு பழையன் மாறன். கிள்ளிவளவன் என்னும் சோழன், பாண்டியன் மேல் போருககு வந்தபோது இந்தப் பழையன் மாறன் அவனைப் போரில்வென்றான் என்று நக்கீரர் கூறுகிறார். (அகம். 346 : 18-24). பழையன் மாறன் பரம்பரை, பாண்டியருக்குச் சேனாதிபதிகளாக இருந்ததையறிகிறோம். இலங்கையை அரசாண்ட பழையமாறன் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தபடியால் அவன் இந்தப் பழையன் மாறர்களுக்கு முன்னோன் என்பது தெரிகிறது. மீண்டும் சிங்களவர் ஆட்சி முன்பு இவர்களுக்குப் போரில் தோற்று ஓடிப்போன வாட்டகாமணி அபயன் பதினான்கு ஆண்டுக்குப் பிறகு சேனையைச் சேர்த்துக்கொண்டு படையெடுத்து வந்து தாட்டிகனைப் போரில் கொன்று மீண்டும் அரசனானான். இவன் கி.மு. 29 முதல் 17 வரையில் பன்னிரண்டு யாண்டு அரசாண்டான் (மகாவம்சம் 33 : 95 - 102). அவனுக்குப் பிறகு அவனுடைய தமயன் மகனான மகாசூளிக மகாதிஸ்ஸன் பதினான்கு ஆண்டு (கி.மு. 17-3) அரசாண்டான். இவன் ஆடசி செய்த காலத்தில், வாட்டகாமணியின் மகனான மகாநாகன், தான் ஆட்சியைப் பெறுவதற்காகக் கலகஞ் செய்து கொண்டிருந்தான். அதனால், அவன் சோரநாகன் என்று பெயர் பெகற்றான். மகாசூளிக மகாதிஸ்ஸன் இறந்தபிறகு மகாநாகன் (சோரநாகன்) முடிசூடிப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரையில்) அரசாண்டான்.இவன் கலகஞ் செய்து கொண்டிருந்த காலத்தில் தனக்குப் புகலிடம் கொடுக்காமலும் உதவி செய்யாமலும் இருந்த பௌத்தப் பிக்குகளின் மேல் பகைகொண்டு, அரசாட்சிக்கு வந்தபோது அவர்களுடைய விகாரைகளை அழித்தான். பதினெட்டுப் பௌத்த விகாரைகளை இவன் அழித்தான். இவனுடைய அரசியான அநுலாதேவி இவனை நஞ்சிட்டுக் கொன்றான் (மகாவம்சம் 34:11-14). சோரநாகனுக்குப் பிறகு, மகாசூளிக மகாதிஸ்ஸனுடைய மகனான திஸ்ஸன் அரசனாகிக் கி.பி. 9 முதல் 12 வரையில் அரசாண்டான்.அநுலாதேவி இவனையும் நஞ்சிட்டுக் கொன்று, தானே அரசாட்சியை ஏற்று நடத்தினாள். இவள் ஒருவருக்குப் பின் ஒருவராகப் பலரை மணந்து அவர்களையெல்லாம் நஞ்சிட்டுக் கொன்றுவிட்டாள். இவள் அநுராதபுரத்தில் பெருந்தச்சனாக இருந்த வட்டுகன் என்னும் தமிழன் மேல் விருப்பங்கொண்டு அவனுக்கு அரசாட்சியைக் கொடுத்தாள். அவன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனைக் கொன்றபிறகு, அரண்மனையில் பூசைக்காரியங்களைச் செய்து கொண்டிருந்த நிலியன் என்னும் தமிழப் பிராமணனுக்கு ஆட்சியைக் கொடுத்தாள். அவன் ஆறு திங்கள் ஆட்சி செய்த பிறகு அவனையும் நஞ்சிட்டுக் கொன்றாள். பிறகு தானே நான்கு ஆண்டு (கி.பி. 12-16) அரசாண்டாள். குட்டகண்ண திஸ்ஸன் என்பவன், அநுலாதேவியைக் கொன்று இருபத்திரண்டு ஆண்டு (கி.பி. 16-38) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான பாதிகாபயன் முடிசூடி இருபத்தெட்டு ஆண்டு (கி.பி. 38-66) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாதாட்டிக மகாநாதன் முடிசூடிப் பன்னிரண்டு ஆண்டுகள் (கி.பி. 66-78) ஆட்சி செய்தான். இவனுடைய இராணியின் பெயர் தமிளா தேவி (தமிழத்தேவி). இதனால், இவன் தமிழ அரசன் குமாரத்தியைத் திருமணம் செய்திருந்தான் என்று தெரிகிறது. இந்தத் தமிழத் தேவி சேர, சோழ பாண்டியரில் யாருடைய மகள் என்பது தெரியவில்லை. தமிளாதேவி இளமையும் அழகும் உள்ளவள். அவள் அம்பத்தல என்னுமிடத்தில் இருநத பௌத்தக் கோயிலுக்குச் சென்றபோது அங்கு அவளைக் கண்ட சித்தன் என்னும் பௌத்தப் பிக்கு அவளுடைய அழகில் ஈடுபட்டு அவளை வியந்தான். சில காலத்துககுப் பிறகு அவள் இறந்துபோனை அந்தப் பிக்குவிடஞ் சென்னபோது அதை அவன் நம்பவில்லை. இந்தச் செய்தியை, அங்குத்தர நிகயா என்னும் பௌத்த மத நூலின் உரையாகிய மனோரத பூரணி என்னும் நூலிலிருந்த அறிகிறோம். மகாதாட்டிக மகாநாகனுக்கும் தமிளாதேவிக்கும் பிறந்த மகன் ஆமண்டகாமணி. ஆமண்டகாமணி ஒன்பது ஆண்டு எட்டுத் திங்கள்கள் (கி.பி. 78-88) அரசாண்டான். அவனுடைய தம்பியாகிய கணிராஜானு திஸ்ஸன், அவனைக் கொன்று மூன்று ஆண்டுகள் (கி.பி. 88-91) அரசாண்டான். அவனுக்குப் பிறகு சூளாபயன் ஓராண்டும் (கி.பி. 91-92), அவனுடைய தங்கையான சீவாலி நான்கு திங்களும் (கி.பி. 92) அரசாண்டனர். சீவாலியின் உறவினனான இளநாகன் அவளை அரச பதவியிலிருந்து இறக்கித் தான் ஆட்சியைக் கைப்பற்றி அரசாண்டான். இளநாகன் ஆட்சியைக் கைப்பற்றி அரசாண்டபோது அரச ஊழியத்தில் இருந்த இலம்பகன்னர் என்னும் இனத்தாருக்கும் இவனுக்கும் பகை ஏற்பட்டது. இலம்பகன்னர் பாண்டி நாட்டினர் என்பது தெரிகின்றது. அரச ஊழியத்திலிருந்த இலம்பகன்னர் இளநாகனை அரண்மனையில் சிறைப்படுத்தி ஆட்சியைத் தாமே நடத்தினர். சிறைப்பட்ட இளநாகன் சிறையிலிருந்து தப்பி மகாதிட்டைத் துறைமுகத்துக்குச் சென்று, அங்கிருந்து தமிழ் நாட்டுக்குப் போய்விட்டான். அவன் தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். தமிழ்நாட்டில் எந்த இடத்தில் தங்கினான் என்பது தெரியவில்லை. இளநாகன், மூன்று ஆண்டுக்குப் பிறகு தமிழச் சேனையைச் சேர்த்துககொண்டு கப்பலில் பிரயாணஞ்செய்து இலங்கையின் தென்கிழக்கிலிருந்த உரோகண நாட்டில் வந்து இறங்கினான். பிறகு, அங்கிருந்து அநுராதபுரத்துக்கு வந்து இலம்பகன்னர் மேல் போர்செய்து அவர்களை வென்று ஆட்சியை மீட்டுக் கொண்டான். இளநாகன் ஆறு ஆண்டுகள் (கி.பி. 95-101) அரசாண்டான் (மகாவம்சம் 35: 15-45). இளநாகனுடைய மகன் சந்தமுக சிவன் (சந்திரமுக சிவன்)என்பவன். இளநாகன், சந்தமுக சிவனுக்குத் தமிழ் நாட்டு அரசன் மகளைத் திருமணஞ் செய்திருந்தான். இந்தத் திருமணம், இளநாகன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் நடந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. சந்தமுக சிவன் இலங்கையை எட்டு ஆண்டு எட்டுத்திங்கள்கள் (கி.பி. 101-110) அரசாண்டான். இவனுடைய இராணியின் பெயர் தமிளாதேவி (தமிழத்தேவி). சந்தமுக சிவன் மணிகாரகாமகம் என்னும் ஊரில் ஓர் ஏரியை அமைத்து, அந்த ஏரியை இஸ்ஸர பௌத்த விகாரைக்குத் தானமாகக் கொடுத்தான். அதாவது, அந்த விகாரையி லிருந்த பௌத்தப் பிக்குகளின் உணவுக்காகப் பயிர் செய்யப்படும் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச அந்த ஏரியைத் தானஞ் செய்தான். இவனுடைய இராணியாகிய தமிழத்தேவியும், மணிகாரகாமகத் திலிருந்து தனக்குக் கிடைத்த இறைப் பணத்தைப் பௌத்தப் பிக்குகளுக்குத் தானஞ் செய்தாள் (மகாவம்சம் 35: 45- 48). சந்தமுக சிவனடைய தம்பியான அசலாலக திஸ்ஸன், சந்தமுக சிவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றி ஏழு ஆண்டு எட்டுத் திங்கள்கள் (கி.பி. 110-118) அரசாண்டான். அசலாலக திஸ்ஸனும் அவனுடைய அரண்மனைக் காவலனான சுபன் என்பவனும் உருவத்தில் ஒரேவிதமாகக் காணப்பட்டனர். இவர்களைக் கண்டவர் இவர்களில் யார் அரசன், யார் காவற்காரன் என்பதை அறிய முடியாம லிருந்தனர். சில சமயங்களில் அசலாலக திஸ்ஸன், காவற்காரனாகிய சுபனை அரசவேடத்தில் சிம்மாசனத்தில் வைத்துத் தான் காவற்காரன் உடையில் வாயிலில் நிற்பான். அமைச்சர் முதலானவர் வந்து சிம்மாசனத்தில் இருககும் காவற்காரனை உண்மையரசன் என்று கருதி அவனை வணங்குவார்கள். அதனைக் கண்டு காவற்காரனாக நிற்கும் உண்மையரசன் நகைப்பான். இவ்வாறுபலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் இவ்வாறு நிகழ்ந்தபோது, சிம்மாசனத்தில் இருந்த காவற்காரனாகிய சுபன், காவற்காரன் உடையில் இருந்த அசலாலக திஸ்ஸனைச் சுட்டிக்காட்டி, `இவன் ஏன் மரியாதையில்லாமல் நகைக்கிறான்? இவனைக் கொண்டு போய்த் தலையை வெட்டுங்கள்’ என்று தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அதன்படியே அவன் கொல்லப்பட்டுக் காவற்காரனாகிய சுபன் அரசாட்சிசெய்தான். அரசாட்சிக்கு வந்தபோது சுபன், சுபராசன் என்று பெயர் பெற்றான். சுபராசன் இலங்கையை ஆறு ஆண்டுகள் (கி.பி. 118-124) அரசாண்டான். இலம்பகன்னர் ஆட்சி சுபராசன் ஆட்சிக் காலத்தில் நிமித்திக வதந்தியொன்று நாடெங்கும் பரவிற்று. `வசபன் என்னும் பெயருள்ளவன் ஒருவன், சுபராசனை வென்று அரசாளப் போகிறான்’ என்பது அந்தவதந்தி.14 இந்த நிமித்திக வதந்தியைக் கேட்ட சுபராசன், நாட்டில் உள்ள வசபன் என்னும் பெயருள்ளவர்களையெல்லாம் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். அவ்வாறே வசபன் என்னும் பெயர்கொண்டவர் கொல்லப்பட்டார்கள். சுபராசனுடைய சேனையிலே வசபன் என்னும் பெயருள்ள போர் வீரன் ஒருவன் இருந்தான். அவன், தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சி அநுரையிலிருநது தப்பி ஓடி மலையநாட்டுக்குச் சென்றான். சென்றவன் அங்கே ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அநுராதபுரத்தின் மேல் படையெடுத்து வந்து போர் செய்தான். சுபராசன் போரில் தோற்றான். வசபன் அரசாட்சியைக் கைப்பற்றி இலங்கையை நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி.பி. 124-168) அரசாண்டான் (மகாவம்சம் 35 : 51- 100). வசபன், இலம்பகன்னர் இனத்iதச் சேர்ந்தவன். இலம்பகன்னர் பாண்டி நாட்டுத் தமிழ இனத்தைச் சேர்ந்தவர் என்றும், பாண்டி நாட்டிலிருந்து வட இலங்கையில் குடியேறி அரச ஊழியம் செய்தவர் என்றும் தெரிகின்றது. வசபன், இலம்பகன்னர் ஆடசியைத் தொடங்கிய முதல் அரசன். இலம்பகன்னர் என்பதன் பொருள் நீள்செவியர் என்பது. அந்த இனத்தார் காதுகளைத் தொங்குமபடி நீட்டி வளர்த்தபடியால் இலம்பகன்னர் என்று பெயர் பெற்றனர். (லம்ப - நீளம், கன்னர் - கர்ணர், செவியையுடையவர்.) தமிழர்களில் சில இனத்தவர் காதுகளை நீளமாகத் தொங்கும்படி வளர்த்தனர். இலம்பகன்ன இனத்த வனாகிய வசபனுக்குப் பிறகு அவனுடைய மகனான வங்கநாசிக திஸ்ஸன் இலங்கையை அரசாண்hன். வங்கநாசிக திஸ்ஸன் சுபராசனுடைய மகளான மகாமத்தா என்பவளைத் திருமணஞ் செய்திருந்தான். அவன் இலங்கையை மூன்று ஆண்டு (கி.பி. 168-71) அரசாண்டான். (இவன் காலத்தில்,nசாழ நாட்டை அரசாண்ட சோழன கரிகால் வளவன், இலங்கைமேல் படையெடுத்துச் சென்று பன்னிரண்டாயிரம் சிங்களவரைச் சிறைப் படுத்திக் கொண்டுபோய்க் காவிரிக்குக் ககைட்டினான் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மையென்று தோன்றவில்லை. இலங்கையின் பழைய நூல்களான மகாவம்சமும் தீபவம்சமும் இச்செய்தியைக் கூறவில்லை. கரிகால் வளவன் மேல் பாடப்பட்ட பட்டினப்பாலையும் பொருநராற்றுப்படையும் இதுபற்றி ஒன்றும் கூறவில்லை. பிற்காலத் தவையான சிங்க நூல்களும் தமிழ் நூல்களுந்தாம் இதனைக் கூறுகின்றன. எனவே, கரிகாலன் இலங்கைமேல் போர் செய்தான் என்பதும, கஜபாகு அரசன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாற்று நிகழ்ச்சிகள் என்று கருதுவதற்கில்லை). இந்தக் காலத்தில் இலங்கையின் வடக்கிலிருந்த நாகநாட்டை (இப்போதைய யாழ்ப்பாண நாடு) வளைவணன் என்னும் நாகராசன் அரசாண்டான். நாகர் திராவிட இனத்தவர். வளைவணனுடைய அரசியின் பெயர் வாசமயிலை. இவர்களின் மகள் பீலிவளை. பீலிவளை நாகநாட்டிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்தைச் சார்ந்த நெய்தலங்கானலில் வந்திருநதபோது, சோழநாட்டு நெடுமுடிக் கிள்ளி அவளைக் கண்டுகாதல் கொண்டான். அவர்கள் சிலகாலம் வாழ்ந்த பிறகு பீலிவளை நாகநாட்டிற்குச் சென்றுவிட்டாள். நாகநாட்டில் அவளுக்குப் பிறந்த குழந்தையை அவள் மணிபல்லவத் (சம்புகொலப்பட்டினம்) துறைமுகத்தில் வந்த கம்பளச் செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து, அச்சிறுவனைச் சோழனிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பினாள். ஆனால், வழியில் அந்தச் சிறுவன் கடலில் முழுகி இறந்து போனான் (மணிமே. 24: 27-60; 25 : 178 - 196). கஜபாகு - 1 வங்கநாசிக திஸ்ஸனுக்கும் மகாமத்தாவுக்கும பிறந்த மகன் பேர்பெற்ற கஜபாகு அரசன். கஜபாகுவைக் கநுபாகு காமணி என்றும், கஜ்ஜபாகுக காமணி என்றும, கயவாகு என்றும் கூறுவர். சிலப்பதிகாரம் கயவாகு என்று கூறகிறது. கஜபாகு காமணி இருபத்திரண்டு ஆண்டுகள் (கி.பி. 171-193) அரசாண்டான்.15 கஜபாகுவின் காலத்தில் சேர நாட்டையரசாண்ட சேரன் செங்குட்டுவன் பத்தினித் தேவிக்கு வஞ்சிமா நகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்துசசிறப்புச் செய்தான். அந்த விழாவுக்கு வந்து சிறப்புச் செய்த மன்னர்களுள் கஜபாகுவும் ஒருவன். கஜநபாகு வேந்தன் இலங்கையில் பத்தினித் தெய்யோ (பத்தினித் தெய்வ) வழிபாட்டை உண்டாக்கினான். கஜபாகு வேந்தன் வஞ்சிமா நகரத்துக்கு வந்திருந்தபோது பத்தினித் தேவியைத் தன்னுடைய நாட்டிலும் வந்தருள வேண்டுமென்று வரங்கேட்டதும், அத்தெய்வம் வரந்தந்ததும், பிறகு அவன் பத்தினி வழிபாட்டை இலங்கையில் உண்டாக்கியதும் ஆகியவற்றைச் சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது. குடகக்கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென்றெழுந்த தொருகுரல் (சிலப். 30: 159 - 164) `தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, பிறகு தன்னுடைய நாட்டுக்குச சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து விழாச் செய்ததைச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை இவ்வாறு கூறுகிறது: ஆடித் திங்க ளகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழைவீற் றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடா யிற்று (சிலப். உரைபெறுகட்டுரை 3) கஜபாகு வேந்தன்இலங்கையில் பத்தினித் தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தினான் என்று சிலப்பதிகாரம் கூறுவதை இலங்கை நூல்களான மகாவம்சமும் துபவம்சமும் கூறவில்லை. அந்த நூல்கள் இலங்கை அரசர்கள் பௌத்த மதத்துக்குச் செய்த தொண்டுகளையும் சிறப்புகளையும் கூறுவதையே நோக்கமாகக் கொண்டு பௌத்தமதப் பிக்குகளால் எழுதப்பட்ட நூல்கள். ஆகவே, கஜபாகு பௌத்த மதத்துக்குச் செய்த தொண்டுகளை மட்டும் கூறி, பௌத்தமதமல்லாத இந்துமத சார்பான பத்தினி வணக்கத்தைப் பற்றி ஒன்றும் கூறாமல் விட்டன. அந்த நூல்கள் பொதுவான வரலாற்று நூல்கள் அல்ல; பௌத்தமதச் சிறப்புக் கூறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள். பௌத்தமதச் சார்பான அந்த நூல்கள் புறமதச் சார்பான பத்தினி வழிபாட்டைப்பற்றிக் கூறாமல் விட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. கஜபாகுவுக்குப் பிறகு அவனுடைய மைத்துனனான மஹல்லக நாகன் ஆறு ஆண்டுகள் (கி.பி. 193-199) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான பாதிக திஸ்ஸன் இருபத்து நான்கு ஆண்டுகள் (கி.பி. 199 - 223) அரசாலண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான கனிட்ட திஸ்ஸன் பதினெட்டு ஆண்டுகள் (கி.பி. 223-241) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான குஜ்ஜநாகன் ஓராண்டும், பிறகு அவனுடைய தம்பியான குஞ்சாதன் இரண்டு ஆண்டுகளும் (கி.பி. 241-243) அரசாண்டார்கள். ஏறக்குறைய இந்தக் காலத்தில் கடைச் சங்ககாலம் முடிவடைகிறபடியால் இந்த வரலாற்றை இதனோடு நிறுத்துகிறோம். சங்ககாலத்து இலங்கையில் தமிழர் வாணிகம் சங்ககாலத்து இலங்கையில், இலங்கையை அரசாண்ட சிங்கள மன்னர்களைப் பற்றியும் இடையிடையே அரசாண்ட தமிழ மன்னர் ஆட்சியைப்பற்றியும் மகாவம்சம், தீபவம்சம் என்னும் இலங்கைப் பௌத்த நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு சுருக்கமாகக் கூறினோம். இனி, இலங்கையில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழரைப் பற்றியும், முக்கியமாக அக்காலத்துத் தமிழா வாணிகத்தைப் பற்றியும் கூறுசூவாம். ஆதிகாலத்திலிருந்தே இலங்கைத் தீவில் திராவிட இனத்தவராகிய நாகரும் இயக்கரும் வாழ்ந்திருந்தனர். தமிழரில் ஓரினத்தவராகியஅவர்கள், சங்க காலத்தில் தமிழ்நாட்டிலும இருநததைச் சங்க நூல்களில் காணப்படுகிற குறிப்புகளிலிருந்து அறிகிறோம். இலங்கையிலிருந்த நாகரும் இயக்கரும தமிழைத்தான் பேசினார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் திராவிட மொழியைச் சேர்ந்த ஏதோ ஒரு மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும். பழங்காலத்திலிருந்தே தமிழர், இலங்கைப் பழங்குடி மக்களான நாகருடனும் இயக்கருடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த தனால் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ வாணிகர் அப்பழங்காலத்திலேயே இலங்கைக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள். பிறகு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த விசயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் தமிழகத்திலிருந்து பாண்டிய நாட்டு மகளிரை மணஞ் செய்து கொண்டதை முன்னமே அறிந்தோம். பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற எழுநூறு மணமகளிரோடு அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும, பதினெட்டு வகையான தமிழத் தொழிலாளர் குடும்பங்கள்ஆயிரமும் இலங்கைக்குப் போனார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்கள் எல்லோரும் தமிழ்மொழி பேசியவர்கள்.அதனால், காலப்போக்கில் தமிழ்மொழியும் வட இந்திய மொழியும் சேர்ந்து புதுவைகையான பழைய சிங்கள மொழி (ஈளுமொழி) தோன்றிற்று. இந்தக் கலப்புத் திருமணத்தின் காரணமாகத் தோன்றிய சந்ததியார் சிங்களவர் அல்லது ஈழவர் என்று பெயர் பெற்றனர். சிங்கள மொழியில் பேரளவிற்குத் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளதற்கு இதுவே காரணமாகும். தமிழ் - சிங்கள உறவு அந்தப் பழங்காலத்தோடு நின்றுவிட் வில்லை. இடையிடையே அவ்வக் காலங்களில் தமிழகத்திலிருந்து சில தலைவர்கள் தமிழ்ச்சேனையை அழைத்துக்கொண்டுபோய் இலங்கையாட்சியைக் கைப்பற்றிச் சில பல காலம் அரசாண்டதையும் வரலாற்றில் கண்டோம். அந்தத் தமிழர் ஆட்சிக் காலத்தில் தமிழ வீரர்களும் தமிழக் குடும்பங்களும் இலங்கையில் தங்கி வாழ்ந்தனர். அவர்களில் சிலர் சிங்களவர்களாக மாறியிருக்கக்கூடும். இதன் காரணமாகவும் தமிழ்ச் சொற்கள் சிங்களமொழியில் கலந்துவிட்டன. இவ்வாறு அரசியல் காரணமாகத் தமிழர் இலங்கையில் குடீயேறினது மட்டுமல்லாமல், வாணிகத் தொடர்பு காரணமாகவும் தமிழ வாணிகர் இலங்கையில் சென்று தங்கி வாணிகம் செய்தார்கள். அந்த வாணிகக் குழுவினர் அந்தக் காலத்தில் தங்கள் வாணிகப் பொருள்களின் பாதுகாப்புக்காகச் சிறு சேனைகளை வைத்திருநதார்கள். தமிழ்நாட்டிலேயும் வாணிகச் சாத்துக் குழுவினர் வாணிகப் பொருள்களை வெவ்வேறு ஊர்களுககும் நாடுகளுக்கும் கொண்டுபோனபோது, இடைவழியில் கொள்ளைக்காரர் வந்து கொள்ளையடிப்பதைத் தடுக்கும பொருட்டு, வில்வீரர்களை அழைத்துச் சென்றதை, சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம். அதுபோலவே, இலங்கைக்குச சென்று வாணிகஞ் செய்த தமிழர் தங்களுடைய பொருள் பாதுகாப்புக்காக வில்வீரர்களை வைத்திருநதார்கள். சேனன், குடடகன் என்னும் இரண்டு தமிழ் வாணிகர், சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் (கி.மு. 177-155) அரசாண்டார்கள் என்பதைக் கண்டோம். அந்தப் பழங்காலத்திலே தமிழ் வாணிகர் இலங்கையில் தங்கி வாணிகம் செய்தபோது வணிகச் சாத்தை (வணிகச் சங்கத்தை) நிறுவி வாணிகஞ் செய்ததை அக்காலத்துச் சாசன எழுத்துகளிலிருநது அறிகிறோம். இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரத்திலே தமிழ் வாணிகரின் வாணிகச் சங்கக் கட்டடம் இருந்ததைச் சமீப காலத்தில் இலங்கை அரசாங்கத்துத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டுபிடித்தது. அந்தப் பழைய வாணிகச் சங்கக் கட்டடம் பிற்காலத்தில் இடிந்து தகர்ந்து மண்மூடி மறைந்து போயிற்று. அந்தக்கட்டடத்தைச் சார்ந்திருந்த கற்பாறைகளில் எழுதப்பட்டுள்ள அக்காலத்துப் பிராமி எழுத்துக்கள் அக்கட்டடம்கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. இலங்கையில் இலுபரத என்னும் ஊரீல் வாழ்ந்ருந்த ஸமன என்று பெயர் பெற்றிருந்த தமிழ் வாணிகத் தலைவன் அநுராதபுரத்தில் அந்த வாணிகச் சங்கக் கட்டடத்தைக் கட்டினான் என்று அந்த எழுத்துகள் எகூறுகின்றன. ஈடு என்னும் பழைய சிங்கள மொழியில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டெழுத்தின் வாசகம் வருமாறு: இலுபாதஹி தமேட ஸமணெ கரிதெ தமட ககபதிகன பஸதெ ஸகஸ அஸநெ நஸதஸ அஸநெ கஃதிஸஹ அஸனெ ... அஸநெ குபிர ஸுஜதஹ நவிக காரவ்வஹ அஸநே16 இதன் பொருள்: இலுபாதத்தில் வாழும் ஸமண என்னும் தமிழன் செய்வித்த தமிழக் குடும்பிகளின் மாளிக ஸக என்பவரின் இருக்கை, நஸதரின் இருககை, சுஃதிஸ்ஸரின் இருக்கை... உடைய இருக்கை, குபிர ஸுஜதகரின் இருக்கை, நாவிகராகிய காரவ்வரின் இருக்கை. குடும்பிகள் என்பது வாணிகரைக் குறிக்கிறது. ஆசனம் (இருக்கை) என்பது அவரவர் அமர்ந்திருந்த இடத்தைக் குறிக்கிறது. நாவிகன் என்பது கப்பல் தலைவன். நாவிகராகிய காரவ்வரின் பெயர் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவர் கடல் கடந்த நாடுகளுடன் கப்பலில் வாணிணகஞ் செய்தவர். இந்த வாணிகச் சாத்து இலங்கையில் பௌத்த மதம் வருவதற்கு முன்பு அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இலங்கையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகம் செய்தவரின் பெயர் இன்னொரு கல்வெட்டெழுத்தில் கூறப்படுகிறது. இலங்கையில் வாவுண்ணி மாவட்டத்தில் பெரிய புளியங்குளம் என்னும் இடத்தில் உள்ள ஒரு மலைக்குகையில் இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு விசாகன் என்னும் தமிழ் வாணிகன் பெயரைக் கூறுகிறது. அதன் வாசகம் இது: தமெட வயிஜ க(ப)தி விஸகஹ விணே தமெட வணிஜ கபதி விஸகணுஹ ஸேணி மென 17 இதன் பொருள்: தமிழ் வாணிகக் குடும்பிகள் விஸாகனுடைய (செய்வித்த) குகை தமிழ வாணிகக் குடும்பிகன் விஸாகன் செய்வித்த படிகள். இப்போது பெரிய புளியங்குளம் என்னும் பெயர் பெற்றுள்ள இடத்தில் உள்ள மலைக்குகையில், தமிழ வாணிகக் குடும்பிகனான விஸாகன் என்பவர் பௌத்த முனிவர்கள் தங்கியிருப்பதற்காக (அக்காலத்தில் (கி.மு. 2ஆம் நூற்றாண்டில்) அமைத்துக்கொடுத்த குகையைப்பற்றி இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. இன்னொரு கல்வெட்டெழுத்து இலங்கையிலிருந்த தமிழ்வாணிகக் குடும்பத்தைக் கூறுகிறது. அம்பரை மாவட்டத்தில் குடுவில் என்னுமிடத்தில் உள்ள மலைக்குகையில் பழைய சிங்கள மொழியாகிய ஈளுவில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளஇந்தக் கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்த எழுத்துகளின் இடையே சில எழுத்துகள் காலப்பழமையினால் மறைந்துபோயின. இந்தக் கல்வெட்டெழுத்தில் வாசகம் இது: திகவபி ப(பொ) ரண வணிஜ ........... ய புதன் பரியய தமெட திஸய (ணெ)18 இதன் பொருள்: துகவாபி என்னும் ஊரில் வாழும்....... உடையமக்களாகிய வாணிகரும் தமிழ திஸ்ஸனுடைய மனைவியும் சேர்ந்து செய்வித்த குகை. மேலே கூறப்பட்ட கல்வெட்டெழுத்துகள் பழைய சிங்கள மொழியாகிய ஈளு மொழியில், அக்காலத்தில் வழக்கத்திலிருந்த பிராமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்று கூறினோம். அந்தக் கல்வெட்டெழுத்துகளில் ழுகூறப்படுகிற தமிழ வாணிகருடைய பெயர்கள் சிங்களப் பெயர்களாக இருக்கின்றன. இதனால், இவர்கள் சிங்கள நாட்டிலே நெடுங்காலம் தங்கியிருந்தவர்கள் என்பது தெரிகிறது. இவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும், இரண்டாம் நூற்றாண்டிலும் இலங்கைக்குச்சென்று வாணிகஞ் செய்தார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் சென்று வாணிகஞ் செய்த அயல்நாட்டிலே அவர்கள் தாங்கள் ஈட்டிய பொருள்களில் ஒரு பகுதியினை அந்நாட்டிலே தருமம் செய்தனர் என்பது இக்கல்வெட்டு எழுத்துகளினால் அறிகின்றோம். அந்தப் பழங்காலத்திலே இலங்கைக்குப் போய் வாணிகஞ் செய்த தமிழர் எல்லோரையும்பற்றித் தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் கல்வெட்டுச் சாசனம் எழுதிவைக்கவில்லை. ஆனால், பெருந்தொகையான தமிழ் வாணிகர் இலங்கைக்கு வாணிகஞ் செய்யச் சென்றிருநதனர் என்பது தெரிகிறது. அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுபேகாய் விற்ற பொருள்கள் இன்னின்னவை, இலங்கையிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவந்து விற்ற பொருள்கள் இன்னின்னவை என்பது தெரியவில்லை. அக்காலத்தில் ஈழ நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் காவிரிப் பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் கொண்டுவரப்பட்டு இறக்குமதி யாயின என்று அறிகிறோம். `ஈழத்து உணவும் காழகத்துஆககமும்’ (பட்டினப். 191) என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார். ஈழநாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்த பொலாலையன் என்னும் தமிழருஐடய பெயர் (கடைச்சங்க காலத்தவர்) ஒரு கல்வெட்டெழுத்தில் காணப்படுகிறது. பாண்டிநாட்டுத் திருப்பரங் குன்றத்து மலைக்குகையொன்றில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டு இதைக் கூறுகிறது.19 இந்தத் தமிழ வாணிகன் பெயரை `எருக்காட்டூர் ஈழக்குடும்பிகன் பொலாலையன்’ என்று கல்வெட் டெழுத்துக் கூறுகிறது. பாண்டிநாட்டில் எருக்காட்டூரில் இருந்தவரும் ஈழத்தில் சென்று வாணிகம் செய்தவருமான பொலாலையன் என்பது இதன் பொருள். ஈழநாடாகிய இலங்கையில் சங்ககாலத்திலே தமிழர்சென்று வாழ்ந்திருந்தனர் என்பதை அறிகிறோம். அவர்களில் ஒருவர் பெகயர் பூதன்தேவனார் என்பது, ஈழத்தில் வாழ்ந்து வந்தபடியால் அவர் ஈழத்துப் பூதன்தேவனார் என்று கூறப்பட்டார். அவர் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர். அவருடைய செய்யுள்கள் சங்கத் தொகைநூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன (அகம்.231: 10-13). அகநானூற்றுச் செய்யுளில் இவர், .........பொருவர், செல்சமங்கடந்த செல்லா நல்லிசை விசும்புஇவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன் பாடுபெறு சிறப்பிற் கூடல் என்று பசும்பூண் பாண்டியனைக் குறிப்பிடுகிறார். இந்தப் பசும்பூண் பாண்டியன் கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு கட்டிலில் துஞ்சிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு இருந்தான். ஆகவே, இவர் கடைச்சங்க காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்) இருந்தவர் எனக் கூறலாம். அடிக்குறிப்புகள் 1. மகாவம்சம், 22 ஆம் பரிச்சேதம் 7-8. 2. மேற்படி 37 : 41. 3. மணிமே. 11 : 21-22. 4. மேற்படி 28 : 107-108. 5. மகாவம்சம், 11 : 23-24. 6. மேற்படி 11 : 33. 7. மகாவம்சம் 19 : 23. 8. மேற்படி 19 : 60. 9. மேற்படி. 10. மேற்படி 25 : 120 - 127. 11. மேற்படி 25 : 178 - 192. 12. 13. மகாவம்சம், 7 : 58. 14. மேற்படி, 25 : 80. 15. மேற்படி 30 : 39. 16. மேற்படி 35 : 15-45. 17. மகாவம்சம், 1 : 19-31. 18. மகாவம்சம், 1 : 32. 19. மேற்படி 1 : 43. 20. மேற்படி 1 : 44-47. 21. மகாவம்சம், 1 : 44 - 62. 22. மணிமே. 9 : 58-63, 10 : 58-71. 23. மகாவம்சம், 1 : 71-77. 24. மகாவம்சம், 7 : 1-5. 25. மகாவம்சம், 7 : 10-42. 26. மேற்படி 7: 43 - 45. 27. மகாவம்சம், 7 : 45 - 71. 28. மேற்படி 7 : 72-74. 29. தீபவம்சம், 10 : 2. 30. மகாவம்சம், 8 : 10. 31. On the Chronicles of Cylone Bimala Churn Lake, PP. 50-52. 32. மகாவம்சம், 10 : 84-88. 33. மேற்படி 10 : 103-105. 34. மகாவம்சம், 18, 19 : 1-52. 35. மேற்படி - 8. 36. மேற்படி 19 : 53 - 55. 37. மகாவம்சம், 19 : 54. 38. பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு நாடுகளில் தங்கி அரசாண்டனர். அவர்கள் மீன் இலச் சினையைத் தங்களுக்கு அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள். போவட்டகல கதரகாமத்துக்கு அருகிலுள்ள கொட்டதாமு கல, பட்டிக் குகாலவ மாவட்டத்தில் உள்ள ஹெனன்னெகல, வடமத்திய மாகாணத்தில் கிழக்குத் தமன் கடுவலில் உள்ள கண்டேகமகண்ட ஆகிய இடங்களில் காணப்படுகிற கல்வெட்டெழுத்துகளுடன் காணப்படுகிற மீன் உருவங்கள், அந்தப் பழைய அரசர்கள் ஆதிகாலத்தில் அநுராதபுரத்துச் சிங்கள அரசருக்குக் கட்டுப்படாமல் சுதந்தரமாக இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அவர்கள் இந்தப் பகுதிகளில் ஆதிகாலத்தில் வந்து குடியேறியவர்களின் சந்ததியாரின் வழிவந்தவர் என்று தெரிகின்றது. (Mendis, Dr. G.C., A comprehensive History of India. Vol. II, P. 575, Edited by K.A. Nilakanta Sastri, 1957. The titles of Sinhalese Kings as recorded in the inscriptions of 3rd Century B.C. to 3rd Century A.D. by C.W. Nicholes, University of Ceylon Review, Vol. VII. 39. Inscriptions of Ceylon, Vol. I, Edited by Paranavathana, 1970, Nos. 406, 549 to 558, 561 to 569. 40. Ibid, Vol. I, P. 42, No. 549. 41. Ibid, Vol. I, P. 42, No. 550. 42. Ibid, Vol. I, P. 43, No. 556. 43. Ibid, Vol. I, P. 43, No. 557. 44. Ibid, Vol. I, P. Nos. 556 to 569. 45. மகாவம்சம், 22: 2-6. 49. பட்டினப். 185. 50. பெரும்பாண். 320 - 321. 51. சங்க காலத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டு வாணிகர் இலங்கையில் சென்று வாணிகஞ் செய்தது போலவே, அக்காலத்துத் தமிழர் வடக்கே கலிங்க நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்தனர். கலிங்க நகரத்தில் கி.மு. 278ஐ யடுத்த ஆண்டுகளில் அவர்கள் அந்நகரத்தில் தங்கிப் பெரிய வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் நூற்றிருபது ஆண்டுகளாக அந்தக் கலிங்க நகரத்திலே வாணிகஞ் செய்து செல்வாக்குள்ளவர் ஆனார்கள். அவர்களிடத்தில் சேனை இருந்தபடியால் கலிங்கநாட்டு ஆட்சியையே கைப்பற்றிக் கொள்ளும் அளவு பலம் பெற்றிருந்தார்கள். தமிழ் வாணிகரினால் நேரிடக் கூடிய ஆபத்தைக் கண்டு அஞ்சிய கலிங்கநாட்டரசன் காரவேலன் என்பவன் கி.மு. 165 ஆம் ஆண்டில் (தன்னுடைய 11 ஆவது ஆட்சியாண்டில்) தமிழ் வணிகச் சாத்தரை அழித்து ஒடுக்கினான். இந்தச் செய்தியைக் காரவேலன் கலிங்கநாட்டு ஹத்திகும்பா மலைக்குகையில் எழுதிவைத்துள்ள கல்வெட்டுச் சாசனத்தில் கூறுகிறான். 52. ஸூரத்திஸ்ஸம் கஹேத்வான தமிளா சேன குட்டகா துவே த்வாஸ வஸ்ஸானி ரஜ்ஜம் தம்மேன காரயும் (தீபவம்சம், 18 : 47). சேனன் குட்டகன் என்னும் தமிழர் சூர திஸ்ஸனை வென்று இருபத்திரண்டு ஆண்டுகள் நீதியாக இராச்சியத்தை அரசாண்டார்கள் என்பது இதன் பொருள். 53. Anuradhapura Slab Inscriptions of Kutta parinda by S. Pranavatana, Epigraphia zelonica, vol. IV,pt. III, P.15. 54. `பிக்குகளே!தூபிகள் (சேதிமங்கள்)அமைக்கப்படுவதற்குத்தகுதியுள்ளவர் நால்வர். அந்தநால்வர் யாவர்? தாதாகர்என்று சொல்லப்பட்ட அர்ஹந்தராகிய நான்கு உண்மைகளைத் தாமாகவே அறிந்தவராகிய புத்த பகவான், பிரத்தியேக புத்தர், புத்தருடையசீடர்களாகிய அர்ஹந்தர், அரசச் சக்கரவர்த்தி. இந்த நால்வரும் தூபங்கள் அமைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர்கள்’ என்று தீகநிகாயம் (மகாபரி நிப்பாண குத்தந்தம் 12ஆம் அதிகாரம்) என்னும் நூல் கூறுகிறது.) என்னும் நூலும் கூறுகிறது. இந்தப் பௌத்த சமய மரபின்படி துட்டகமனு, ஏலேல மன்னனுக்குச் சேதிமம் அமைத்தான். அரசர்கள் போர்க்களத்திலே இறந்து போனால், அவருக்குப் பள்ளிப்படை என்னும் கோயில் அமைப்பது தமிழரின் பழங்கால வழக்கம். ஏலேல மன்னனுக்கு அமைக்கபட்டது, தமிழர் முறைப்படி அமைக்கப்பட்ட பள்ளிப்படை அன்று, பௌத்த மதப்படி அமைக்கப்பட்ட சேதிமக் கட்டடம் ஆகும். ஏலேல மன்னனுக்கு அமைக்கப்பட்ட சேதிமத்துக்கு `ஏலார படிமக்ககம்’ (ஏலாரப் படிமக்கிருகம்) என்று மகாவம்ச டீகா (டீகா - டீகை, உரை) கூறுகிறது. ஏலேல மன்னனை இலங்கை நூல்கள் ஏலாரன் என்று கூறுகின்றன. 55. சுபராசன் இலங்கையை யரசாண்ட காலத்தில் பாண்டி நாட்டை அரசாண்டவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். சுபராசனை வசபன் என்னும் பெயருள்ளவன் கொன்று இராச்சியத்தைக் கைப்பற்றுவான் என்னும் நிமித்திக வதந்தி இருந்தது போலவே, பாண்டி நாட்டிலும் நெடுஞ்செழியனைப் பற்றியும் ஒரு நிமித்திக வதந்தி இருநதது. ஓர் ஆடி மாதத்தில் தேய்பிறையில் அட்டமி வெள்ளிக் கிழமையில் மதுரை நகரமும் அரசாட்சியும் அழிந்துவிடும் என்பது அந்த நிமித்திகவாக்கு (சிலப். 23 : 133 -37). அக்காலத்தில் நிமித்திக வதந்திகளை மக்கள் நம்பினார்கள். இந்த இரண்டு நிமித்திக வதந்திகளும் உண்மையாகவே நிறைவேறி விட்டன என்பதை மகாவம்சத்தினாலும சிலப்பதிகாரத்தினாலும் அறிகிறோம். 56. முதலாம் கஜபாகு கி.பி. 171 முதல் 193 வரை அரசாண்டான் எனக் கூறுவது பழையமரபு. டாக்டர் பர்னவிதானேவின் ஆராய்ச்சியால் இக்காலக்கணிப்புத் தவறானது என்றுநிலைநாட்டப்பட்டுள்ளது. இவனுடைய காலம் கி.பி. 112-134 என்று மறுகணிப்புச் செய்துள்ளனர். காண்க: Paranavitana, S., Op.cit., University of Ceylon, Colombo, 1959, Vol. I, p. 125. (பார்.)* 57. Inscriptions of Ceylon, Vol. I., p. 7, 94 (a) Edited by S.Paranavitana, 1970; See also Plate XI No. 94, Edited by S. Paranavitana, Tamil House - holders’ Terrace, Anuradhapura, Annual Bibiliography of Indian Archeaology, Kern Institute, Lydon,Vol. XIII, 1940; Tamil House-holders’ Terrace : S. Paranatana, Journal of Ceylon, Branch of the Royal Asiatic Society, Colombo, Vol. XXXV, 1942. pp. 54-56. 58. Inscriptions of Ceylon, Vol. I. p. 28. Nos. 356 (19), 357 (20) Edited by Paranavitana, S., 1970. See also plate XXXV, Nos. 356, 357 Edited by Paranavitana, S, 1970. 59. Ibid, Vol. I, p. 37, No. 480, Edited by S. Paranavitana, 1970. 60. Madras Epigraphy Collections, A.R. No. 333 of 1908, p. 65, No. 51. Tamil Brahmi Inscriptions, Seminar on Inscriptions (1966), Edited by R. Nagaswamy, p. 255. Early South Indian Palaeography by T.V. Mahalingam, 1967. 1. S. I. I. Vol II. Page, 501 - 516 2. S. I. I. Vol II. Page, 342 - 361 1. S. I. I. Vol II. Page, 342 - 361 2. S. I. I. Vol IV. Page, 11. 1. Epi. Ind. Vol II. No 15. P. 115. 2. Conjeevaram Inscriptions of Mahendravaram 1. Epi. Ind. Vol. X. P. 105. 1. Ind. Anti. Vol VIII P. 237 1. PP. 291-309. Epi. Ind. XVII. 1. இந்தக் கஸ்ஸபன் மகன் மானவம்மா என்பவன். மானவம்மா பிற்காலத்தில் அரசாட்சி இழந்து, காஞ்சிபுரத்திற்கு வந்து, மகேந்திரவர்மன் மகனான மாமல்லன் என்னும் நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்தான். 1. பஞ்சவடி என்பது மாவிரத சமயத்தார் பூணும் மயிர்ப் பூணூhல். 1. பாடலிபுரம், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இருக்கிறது. இங்கிருந்த சமணப் பள்ளி அக்காலத்தில் பேர்போன மடமாக இருந்தது. இந்தச் சமணப் பள்ளியில் தான் லோகவிபாகம் என்னும் நூலைச் சர்வநந்தி என்பவர் சக ஆண்டு 380 இல் எழுதி முடித்தார். அஃதாவது கி. பி. 458 இல் சிம்மவர்மன் என்னும் பல்லவமன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த காலத்தில் அவ்வரசனுடைய 22 ஆவது ஆட்சி ஆண்டில் லோகவிபாகம் பாகத மொழியிலிருந்து வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. (Mys. Arhl. Rep. 1909-10, Para. 112) அதாவது நாவுக்கரசர் பிறப்பதற்கு 160 ஆண்டுகளுக்கு முன்னே இந்நூல் இந்தப் பள்ளியில் மொழி பெயர்க்கப்பட்டது. 1. Origin and early History of Saivism in South India. by C. V. Narayana Ayyar, Page, 390. 1. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் குணதரவீச்சரம் என்று கூறியிருக்கிறார். பெரியபுராணம் பதிப்புகள் எல்லாவற்றிலும் குணதரவீச்சரம் என்றே காணப்படுகிறது. பெரிய புராண வசனம் எழுதிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களும் குணதரவீச்சரம் என்றே எழுதியிருக்கிறார். ஆனால், 1950-ஆம் ஆண்டில் (விக்ருதி ஆண்டு ஆவணி மூலநாள்) திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தார் வெளியிட்ட பெரியபுராணத்தில் குணதர வீச்சரம் என்னும் பெயர் குணபரவீச்சரம் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் கூறப்படவில்லை. இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்களின் ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இச்சொல் இவ்வாறு மாற்றப்பட்டது போலும். இதுபோலவே, சில ஆண்டுகளுக்கு முன்னர்த் தேவாரத்தை பதிப்பித்த சைவப் பெரியார் ஒருவர், நாவுக்கரசர் தேவாரத்தில் “குலங்கெடுத்துக் கோணீக்க வல்லான் தன்னை” என்ற அடியை மாற்றி, “குலங்கொடுத்துக் கோணீக்க வல்லான் தன்னை” என்று தம் விருப்பப்படி மாற்றி அச்சிட்டிருக்கிறார். பதிப்பாசிரியர்கள் நூலிலுள் சொல்லையோ அடியையோ மாற்றினால் அதற்குக் காரணம் கூறவேண்டுவது முறையாகும். காரணங்கூறாமலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நூலில் சொற்களை மாற்றியமைப்பது பெருந்தவறாகும். சைவத்திற்கு தமிழிற்கும் தொண்டு செய்வதாகாது. 1. Dr. Hultzsch. 2. Epi. Ind. Vol. III. 1. முதல் மகேந்திரவர்மனுடைய பேரனான இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் இருந்தார் என்று ஒரு ஆசிரியர் கூறுகிறார். (Studies in South Indian Jainism. P. 66 by M. S. Ramaswami Aiyengar.) இந்தக் கருத்தைச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் இருந்தார் என்பது எந்தவிதத்திலும் பொருந்தவில்லை. ஆகவே, இக்கருத்து தவறானது. நாவுக்கரசர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலே இருந்தவர் என்பதுதான் ஆராய்ச்சிக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது. 1. திருநாவுக்கரசர் கி. பி. 600 முதல் 681 வரையில் உயிர் வாழ்ந்திருந்தார் என்று சிலர் கருதுவது தவறாகும். மகேந்திரவர்மனைத் திருநாவுக்கரசர் சைவனாக மாற்றிய காலத்தில் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்று பெரிய புராணத்தினால் அறிகிறோம். அஃதாவது அப்போது நாவுக்கரசருக்கு 50 வயதுக்கு மேலிருக்கவேண்டும். மகேந்திரவர்மன் கி. பி. 630 க்குப் பிறகு வாழவில்லை என்பது சரித்திர ஆசிரியர்களின் முடிபு. 2. அப்பர் கி.பி. 600 இல் பிறந்தவரானால், அவர் தமது 30 ஆவது வயதில் மகேந்திரவர்மனைச் சைவனாக்கியருக்க வேண்டும். ஆனால் இவர் வரலாறு இதற்கு மாறுபட்டதாகத் தெரிகிறது. ஆகவே கி. பி. 600 க்கும் 681 க்கும் இடையில் நாவுக்கரசர் வாழ்ந்திருந்தார் என்று கூறுவது தவறு. 1. இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூல் காண்க. 1. A Pallava grant from Kuram. P. 144-155. S. I. I. Vol.I 2. Udayendram Plates of Nandivarman Pallava Malla. S. I. I. Vol. II. P. 361- 371. 1. Velurpalayam Plates of Vijaya Nandivarman S. I. I. Vol. II. P. 501-517. 2. Kasakudi Plates of Nandivarman, Pallava Malla. S. I. I. Vol. P. 342-361. 3. Karnul Plates of Vikramaditya I, B. B. R. A. S. XV. I. P. 226. 4. No. 14.P.9-10. Inscriptions (Texts) of the Pudukkottai State. No.14. Chronological List of Inscriptoins of the Pudukkottai State. 5. Ind. Atni. Vol. IX. P. 199. சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் (1970) நூலில் உள்ள கட்டுரை. * தமிழ்நாடு - சங்க காலம் அரசியல் (1983) நூலில் உள்ள கட்டுரை.