சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 22 குறுந்தொகைப் பெருஞ்செல்வம் (பாகம் - 2) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 22 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 12 + 440 = 452 படிகள் : 1000 விலை : உரு. 280/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களைக் காலவரிசையில் பொருள்வழிப் பிரித்துச் சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலைப் பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதைப் படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவுபடுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும் பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை குறுந்தொகைப் பெருஞ்செல்வம் பக்கத்து வீட்டுக்காரி வாழ்க! 3 என் நெஞ்சு நோகும் 5 குற்றம் யார் மேல்? 8 காமம் என்பது ஒரு விருந்து 11 பசலைக்கும் அறிவுண்டோ? 14 அறியாமையால் காமுற்றேன் 17 அன்னியர் போலவே நீயும் சொன்னாய் 19 மற்றொருவர் மணக்க வந்தால் 22 வேறொரு நினைப்பும் இல்லை 25 காகத்தால் கவலையற்று இருந்தாள் 28 உண்மை உணர்ந்தால் துன்பம் இல்லை 31 வருந்தேல் இன்று வருவர் 34 கருணையற்ற கார்காலம் 36 நமது உயிர்க்கு உயிர் தலைவரே 39 துன்பந் தவிர்க்க இதுவே சமயம் 42 மாலைக் காலத்தைப் பார் 45 முல்லை மலர்ந்தன, அவரோ வாரார் 48 இவளால்தான் நம் எண்ணம் ஈடேறும் 50 துன்பத்திற்குக் காரணம் நீயேதான் 53 ஊமன் கொண்ட உள்ளத்துயர் 56 இவர்களா காதலர்கள்? 59 தலைவன் தவறு செய்திலன் 62 காமத்திற்கு அறிவில்லை 65 நினைத்தால் வராமல் இருப்பாரோ? 68 மூடி திறந்த பொன் பெட்டி 71 எல்லாம் மாலைக் காலந்தான் 73 வாடையே வருத்தாதே 75 இன்பத்தைத் திருப்பித் தந்துவிடு 78 என் நெஞ்சம் என்னிடம் இல்லை 80 உன் உறுதியும் ஆச்சு! நீயும் ஆச்சு! 83 வளையல்கள் வீழ்ந்தன தோளும் சோர்ந்தது 86 மலையைப் பார்த்து மனம் வருந்தேன் 89 யாம் தாங்கினோம்; கண்கள் தாங்கவில்லை 92 கருத்து ஒருமித்த காதல் வாழ்வு 95 இனி அவனை நினையேன் 98 கலங்காதே! காதலன் மணந்து கொள்வான் 100 தாய்க்குத் தலைவனைத் தெரியும் 103 மலைக்காட்சியால் மனத்துயர் நீங்கினேன். 106 ஆடவர் அன்பு 108 பொய்ப்பருவம் கண்டு புலம்பாதே! 110 கற்புள்ள காதலியின் செய்கை 112 உனது நிலைமையை உணரவில்லை 115 செல்வத்தைக் கருதி என்னை மறந்தனர் 117 கருதியதை முடித்துத் திரும்புவார் காதலர் 119 அவள் கண்கள் என் செலவைத் தடுத்தன 122 வந்தால் இன்பம்; பிரிந்தால் துன்பம் 124 தலைவி அழகிழந்தாள்: நீ வரவேண்டாம் 126 உனது உயர்வு உனக்கே தெரியும் 129 வருவார் வருந்தாதே! 132 இரவெல்லாம் விழித்திருந்தேன் 134 தாய் தனியாகக் தவிக்கட்டும் 137 காம நோய்க்கு இதுவா மருந்து? 140 அவர் அன்பை நான் அறிவேன் 143 பழிக்கு நாணும் பண்புடையோன் 145 நன்றி மறப்பது நன்றாகுமா? 148 இன்புறுவதே பிறப்பின் பயன் 150 எதைக் கேட்பதற்கும் ஆற்றல் இல்லை 153 இது நல்ல சமயம் 156 வெற்றியிலே மகிழ்ச்சி 159 இன்பம் ஒரு நாள் துன்பம் பல நாள் 161 அடைவதற்கு அரிய அரும் செல்வம் 163 துன்பமும் இன்பமாகும் 166 ஓசை கேட்கின்றது, சென்று காண்போம் 169 வழக்குத் தொடுத்து என் காதலியைப் பெறுவேன் 172 குற்றமற்ற துறவியே கூறுக 175 எம்மை நினையார் இரக்கம் அற்றவர் 177 வருவதற்குரிய காலம் வந்தும் அவர் வரவில்லை 180 அவர் படும் இன்னல் கருதி ஏங்கினேன் 182 அறிவுள்ளவர் நம்மைப் பழிக்கமாட்டார் 185 இரவும் பகலும் வரவையே எதிர்பார்க்கின்றேன் 187 அவளை நான் நன்றாக அறிவேன் 190 தலைவர் நம்மைத் துறக்கத் துணியார் 192 அன்பர் செய்யும் இன்பமே துன்பமும் 194 இவ்வூரார்க்கு இக்கவலை ஏன் 196 இரக்கம் உள்ளவரே காமத்தின் இயல்பறிவார் 198 கிளிகள் அஞ்சாத இனிய இசையாள் 200 அவன் அடையும் துன்பம் பெரிது 203 தோழியே என்ன வியப்பு இது! 205 உலகமே கிடைத்தாலும் உன்னைக் கைவிடேன் 207 இரவிலும் உறங்கேன் 210 ஊருக்கு அஞ்சுவதால் என்ன பயன்? 212 தலைவியின் துயர் தீர வழி தேடுக 214 பகைமை தரும் நட்பு 217 உதவுவார் ஒருவரும் இல்லை 220 நெஞ்சமே ஏன் மறந்து விடுகின்றாய்? 223 நாம் அழும்படி விட்டுச் சென்றார் 226 உனது நன்மைக்கே தலைவன் சென்றான் 229 துன்பம் செய்யினும் அன்பைக் கை விடோம் 231 என் துயரை எடுத்துரைப்பார் யார்? 233 அவன் வந்து போவதை ஆயத்தார் அறிந்து விட்டனர் 235 கள்ளத் தனத்திலே தேர்ந்த காதலி 237 எங்கள் உறவு என்றும் பிரிக்கமுடியாதது 240 என்னைத் தழுவ இன்னும் வந்திலர் 242 தலைவன் எண்ணப்படி நடப்பேன் 244 அன்னை அறியின் ஆருயிர் தரியேன் 246 நாமில்லாமல் உயிர் வாழான் தலைவன் 249 சொல்லிப் பயனில்லை; தானே அறிய வேண்டும் 251 மழைக் கால மாலைப்பொழுது 254 வீண்பழி சொல்லும் கொடியவர்கள் 256 உண்மையைச் சொல்லிவிடுவேன் 259 நாமே அவர்பால் நடந்து செல்வோம் 262 தனித்து வாழும் நாள் பதர்நாள் 264 இருவர் பொருட்டும் இரங்குகின்றேன் 266 பொய்யென்று நினைத்தேன்; போ என்றேன் 269 ஒரு நாள் துறப்பில் பல நாள் துன்பம் 272 ஆறே! உன் கொடுமை அதிகம் 275 பழிச் சொல்லால் நன்மை தான் விளையும் 278 என் கண்கள் தூங்கவில்லையே? 281 மாலைப் பொழுதும் துன்பமும் அங்கில்லையோ? 283 அரும் பொருளுக்காக அவர் பிரியார் 285 உன் துன்பத்தை உரைத்தால் என்ன? 287 நமது இரகசியத்தை வெளியிட்டால் என்ன? 289 அவன் இன்றேல் யான் வாழேன் 291 இரவிலே அவளைக் காண முடியாது 293 இரவில் வருவதால் இன்பமில்லை 296 அவள் சிறுமி அல்லள் 298 துன்பந் தொலைய வந்தான் தலைவன் 300 துன்பம் நேர்ந்தால் இன்பத்தை நினை 302 தாழை போல் தவிக்கின்றேன் 304 நம்பிக்கையுண்டு; உயிர் வாழ்வேன் 306 வருமுன்னர்க் காவாதான் வாழ்வு 309 புலியைக் கொல்லும் யானை 312 அவர்கள் தவம் புரிந்தவர்கள் 315 தலைவியின் அன்பு 317 சொல்ல முடியாத சோர்வு 319 அவளும் வந்தால் அல்லல் இல்லை 321 உன்னை வருந்தவிட்டுப் போகார் 323 கொடுத்ததை வாங்குதல் கொடுமை 325 தடுக்கவில்லை - சென்றார் 328 இனி பழிக்க இடமில்லை 331 இரவிலே எப்படி அறிந்தாய்? 333 இந்த ஆற்றலை எப்படிப் பெற்றாள்? 335 அந்நாளில் அழகாக இருந்தன 337 வருந்தேல்! முல்லைகள் மலர்ந்தன பார்! 339 இதுவன்றோ கற்புடைமை 341 அவன் வராமல் இருப்பதே நன்று 343 காந்தள் செடியே என்னைக் காத்தது 346 சினம் உறேல்! வினவுகின்றேன் 348 அன்புடையாளைப் பிரிதல் அறமோ? 350 அவரேதான் என்னைத் தேடி வந்தார் 352 அவள் உறங்க மாட்டாள்; கண்ணீர் சிந்துவாள் 355 முன் செய்த வினையினால் முடிந்தது 357 அதோ பார் அவருடைய மலை 359 இனித் தலைவனோடு இருந்து இன்புறுவேன் 361 புறப்பட்டுப் போவோம் 363 எல்லாம் அவன் விருப்பமே 365 அன்பு அடங்கவில்லை 367 ஊரார் பழிக்கின்றனர் 369 அவன் தொடர்பு என்றும் அறாது 371 உண்மையுரைத்தேன்; நன்மை விளைந்தது 373 காவலர் கண்ணுறங்கார் 375 தண்மையும் தருவாள்; வெம்மையும் தருவாள் 377 நான் பொறுத்தேன்; நீ வருந்துவது ஏன்? 379 அவள் சென்ற வழி இன்பந் தருக 381 உன்னைக் காதலித்த தலைவன் எங்கே? 383 பனிப்பருவத்தில் என் செய்வோம் 385 இன்பத்தின் பயன் துன்பமா? 387 இது புது மழை, பருவ மழை அன்று 389 வாக்குறுதியை மீறலாமா? 391 உன் உறுதியை எப்படி நம்புவது? 393 அன்றுபோல் இன்றும் அன்பினர் 395 மாலையை இப்பொழுதுதான் காண்கின்றேன் 397 இரவை நீந்துவது எப்படி? 399 பாலையும் சோலையாம் 401 விருந்திட்டு வாழ்த்துவோம் 403 இரவில் இவ்வழியில் போகாதீர் 405 கார் காலந்தான் கவலையளித்தது 407 அறம் கூற அஞ்ச வேண்டாம் 409 பழிதான் வளர்ந்தது 412 அன்று இன்பம்; இன்று துன்பம் 414 நாணம் அழிந்தால் அழியட்டும் 416 காளையுடன் கடுநெறி சென்றாள் 419 உன் அன்பால் தான் உயிர் வாழ்கின்றாள் 421 கண் துடைப்போரைக் காணேன் 423 பசலையின் பாங்கைப் பார் 425 தலைவியின் உயிரையே தந்தாய் 427 நாம் செய்த தவறுதான் காரணம் 429 முடிவுரை 431 தழிழறிஞர் சாமி. சிதம்பரனார் 433 குறுந்தொகைப் பெருஞ்செல்வம் (பாகம் - 2) (1955) பக்கத்து வீட்டுக்காரி வாழ்க! பாட்டு 201 தமக்கு நன்றி செய்தவரை என்றும் மறவாமலிருப்பது நல்லோர் இயல்பு. செய்த நன்றியை மறப்பதைப் போலத் தீமை வேறொன்றும் இல்லை என்பர். பிறர் செய்த தீமையை உடனே மறந்துவிட வேண்டும்; நன்றியை என்றும் மறக்கவே கூடாது என்பது தமிழர் நீதி. வேறு எந்த நன்மைகளை மறந்தாலும் மறக்கலாம். ஆனால் பிறர் செய்த நன்மையை மட்டும் மறந்துவிடவே கூடாது. வேறு எந்த நன்மைகளை மறந்தாலும் பிறர் செய்த நன்றியை மறந்தவர்கள் அத்தீமையிலிருந்து தப்பவே முடியாது. இவ்வாறு நீதி நூல்கள் எல்லாம் முழங்குகின்றன. இத்தகைய சிறந்த நீதியை, அறத்தைப் பண்டைத் தமிழர்கள் பெரிதாகப் போற்றி வந்தனர். இத் தமிழர் பண்பை இக்காதற் செய்யுளிலும் காணலாம். தலைவனும் தலைவியும் மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்துகின்றனர். தோழி அவர்களுடைய மனை வாழ்க்கையைக் கண்டு மகிழ்வதற்காக வந்திருந்தாள். காதலனும், காதலியும் கருத்தொருமித்து வாழ்வதைக் கண்டாள். காதலி, தன் காதலன் மேல் காட்டுகின்ற அளவற்ற அன்பு முறையையும் பார்த்தாள். தோழியின் உள்ளத்திலே உவகையும் வியப்பும் தோன்றின. நீ உன் காதலனை மணந்து கொள்ளும் வரையில் உன் காதலை எப்படித் தாங்கியிருந்தாய் என்று கேட்டாள் தோழி. அதற்குத் தலைவி நான் என் காமநோயைப் பொறுத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் பக்கத்து வீட்டுக்காரிதான். அவள், உன் காதலன் உன்னை நாடி வருவது உறுதி. அவன் உன்னை மணந்து கொள்ளுவது திண்ணம் என்று எனக்குக் கூறி என் துயரைத் தணித்தாள். அவள் இனிய உணவுகளை உண்டு இன்பமாக வாழ்க என்று கூறினாள். தலைவி இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! நமது பக்கத்து வீட்டுத் தலைவி அமிழ்தத்தை அருந்தி இன்பமாக வாழ வேண்டும். நீல நிறமுள்ள மெல்லிய சிறகுகளையும், கூர்மையான நகங்களையும் உடைய வவ்வால்கள் மாமரத்தை நாடிச் செல்லும். அம்மரத்தின் பால் கலந்தாற் போன்ற இனிய பழங்களைத் தெவிட்டும் வரையிலும் தின்னும். அதன்பின் அந்தத் தெவிட்டல் தீரப் புளிக்கின்ற நெல்லிக்கனிகளை உண்ணும். இவ்வாறு உண்ட மயக்கம் தீரப் பக்கத்திலே உள்ள முள் இல்லாத மூங்கிலிலே தொங்கிக் கொண்டு உறங்கும். இப்படிப்பட்ட மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்ற மலையையுடைய நாடு அவனுடைய நாடு. இந்த மலைநாட்டுத் தலைவன் உன்னை மணந்து கொள்ள வருவான் என்று உரைத்தாள் அவள், ஆதலால் அவள் அமிழ்துண்டு நீடூழி வாழ்வாளாக! இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். தலைவி கூற்று. பாட்டு அமிழ்தம் உண்க, நம் அயல் இல் ஆட்டி; பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, நீல மென் சிறை வள் உகிர்ப்பறவை, நெல்லியம் புளி மாந்தி, அயலது, முள்ளில் அம்பணை மூங்கில் தூங்கும், கழை நிவந்து ஓங்கிய சோலை, மலைகெழு நாடனை, வரும் என்றோனே. பதவுரை:- நம் அயல் இல் ஆட்டி - நமது பக்கத்து வீட்டின் தலைவி. அமிழ்தம் உண்க- இனிய அமிழ்தத்தை உண்டு வாழ்வாளாக. பால் கலப்பு அன்ன- சர்க்கரையையும், பாலையும் கலந்தது போன்ற, தேம் கொக்கு அருந்துபு- இனிய மாம்பழத்தைத் தின்று. நீல மெல் சிறை- நீல நிறமுள்ள மெல்லிய சிறகுகளையும். வள்உகிர்- கூர்மை யான நகங்களையும் உடைய. பறவை - வவ்வால்கள். நெல்லி அம்புளி மாந்தி- நெல்லியினது புளிப்புள்ள காயையும் தின்று. அயலது- பக்கத்தில் உள்ள. முள் இல் அம்பணை- முள் இல்லாத அழகிய பருத்த. மூங்கில் தூங்கும்- மூங்கிலிலே தொங்கிக் கொண்டிருக்கின்ற. கழை நிவந்து ஓங்கிய - மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்ற. சோலை- சோலையோடு கூடிய. மலை கெழு நாடனை- மலைகள் நிறைந்த நாட்டையுடைய தலைவனைப் பற்றி. வரும் என்றோள் ஏ- அவன் மணந்து கொள்ள வருவான் நீ அஞ்சாதே; வருந்தாதே என்று கூறினாள். கருத்து:- தலைவன் மணந்து கொள்ள வருவான் என்று எனக்கு உறுதி கூறிய அயல் வீட்டுத் தலைவி வாழ்க. இச்செய்யுளின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. என் நெஞ்சு நோகும் பாட்டு 202 பண்டைத் தமிழன் ஒரு வகையில் பெண்களை அடக்கித் தான் ஆண்டான். தன் விருப்பம்போல் பல பெண்களை மணந்து கொண்டான். இதைத் தவிரப் பரத்தையர் - விலைமாதர்- பொதுமகளிர்- என்று சொல்லப்படும் பெண்களையும் நேசித்து வந்தான். இது பண்டைத் தமிழனுடைய வழக்கமாக இருந்தது. ஆனால் அக்காலத்திலேயே பெண்கள் ஆண்களின் இவ் வழக்கத்தை வெறுத்தனர். ஒருவனைப் பற்றியிருத்தலே பெண்களின் கடமை- கற்பு- அறம் என்று கருதப்பட்டது. ஆண்கள் மட்டும் இந்த அறத்திற்கு விரோதமாக நடந்து வந்தனர். அயினும் எந்தப் பெண்களும் தம் கணவன் பரத்தையர்பால் நேசங் கொண்டிருப் பதை விரும்பவில்லை. தன் காதலன் பரத்தையர் வீட்டுக்குப் போய் வந்தான் என்று தெரிந்தால் போதும்; அவன் மீது சினந்து கொள்ளுவார்கள்; அவனிடம் முகங்கொடுத்தும் பேச மாட்டார்கள். அவனுடைய நடத்தையைக் கண்டிப்பார்கள். இது வழக்கமாக ஒவ்வொரு வீட்டிலும் நடந்து வந்தது. இந்த வழக்கத்தை இச் செய்யுளால் காணலாம். தலைவன் பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்தான். நேரே மனைவியிடம் செல்ல அவன் நெஞ்சம் துணியவில்லை. தன் செய்கை அவளுக்குக் கோபத்தை விளைவித்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் தலைவியின் தோழியிடம் நெருங்கினான். தலைவியின் சினத்தை ஆற்றித் தன்னுடன் சமாதானம் செய்து வைக்க வேண்டிக் கொண்டான். தோழியும் தலைவனுடைய இரங்கத்தக்க நிலையைக் கண்டாள். தலைவியிடம் சென்று தலைவனுடைய பரிதவிப்பை எடுத்துச் சொன்னாள். அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளு கின்றான்; இனிமேல் இத்தகைய குற்றம் புரியமாட்டேன் என்று உறுதிமொழியுரைக்கின்றான். அவன் குற்றத்தை மன்னித்து அவனிடம் அன்பு காட்டவேண்டியது நமது கடமைதான் என்றாள். உடனே தலைவி அவர் இப்பொழுது முன்புபோல் இல்லை. அவருடைய நடத்தை மாறிவிட்டது. அவருடைய ஒழுக்கம் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது. அவரை நான் எப்படி ஏற்றுக் கொள்ளுவேன்? என்று கூறினாள். இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதுதான் இச்செய்யுள். தோழியே, என் நெஞ்சம் அளவற்ற துக்கத்தால் ஆட்டி அலைக்கழிக்கின்றது. அவருடைய நடத்தை எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. அவர் இவ்வளவு அன்பற்றவராக மாறிவிடுவார் என்று அப்பொழுது நான் நினைக்கவே யில்லை. அவர் நெருஞ்சியைப் போன்றவர் என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். முல்லை நிலத்திலே வளர்ந்த சிறிய இலைகளோடு கூடிய நெருஞ்சியின் மலர் ஆரம்பத்தில் அழகாகத்தான் காணப்படும்; கண்ணுக்கு இனிய காட்சியாகத்தான் இருக்கும். பின்னால் அதுவே முள்ளாக மாறி நாம் அடி வைக்கும்போது சுருக்கென்று தைக்கும். இதைப்போலவே நமக்கு முதலில் அன்புடன் மகிழ்ச்சி தந்த காதலர் இப்பொழுது துன்பஞ் செய்கின்றார். அவருடைய இத்தீய நடத்தையினால் என் மனம் மிகவும் வேதனையடை கின்றது. இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே; புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கு இன்புதுமலர், முள்பயந்தா அங்கு, இனிய செய்த நம் காதலர், இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே. பதவுரை:- நோம் என் நெஞ்சே- பெரிதும் வருந்தும் என்மனம். நோம் என் நெஞ்சே- பெரிதும் வருந்தும் என் மனம். புன் புலத்து- முல்லை நிலத்திலே. அமன்ற- முளைத்திருக்கின்ற. சிறியிலை நெருஞ்சி - சிறிய இலைகளையுடைய நெருஞ்சியின். கட்கு இன்புதுமலர்- கண்ணுக்கு இனிமையான புதிய மலர். முள் பயந்து ஆங்கு- பின்பு முள்ளைப் பெற்று நடப்பவரைத் துன்புறுத்து வதைப் போல. இனிய செய்த - முன்பு நமக்கு நன்மையைச் செய்த நம் காதலர்- நமது அன்பர். இன்னா செய்தல்- இப்பொழுது நமக்குத் துன்பம் செய்வதை நினைக்கும் போது. நோம் என் நெஞ்சு - மிகவும் வருந்துகின்றது எனது உள்ளம். கருத்து:- தலைவர் நடத்தை எனக்குத் துன்பந்தருவதால் என் மனம் வருந்துகின்றது. விளக்கம்:- இது அள்ளூர் நன் முல்லை என்னும் புலவர் பாட்டு. பரத்தையர் வீட்டுக்குப் போய் வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியிடம் தலைவி சொல்லியது. மருதத் திணை. பயந்தாஅங்கு; அ, உயிர் அளபெடை. ஏ; அசைகள். நோம்- நோகும்; வருந்தும். புன்புலம்- முல்லைநிலம். அமன்ற- முளைத்த முன்பு இன்பமும், பின்பு துன்பமும் செய்த காதலனுக்கு நெருஞ்சியின் வேரும் முள்ளும் உவமை; இது இயற்கையான உவமை. ஒரு கணவன், தன் மனைவிக்குத் துன்பம் செய்தல், மற்றொருத்தியிடம் அன்பு காட்டுவதாகும். எந்த மனைவியும் மற்றொருத்தியிடம் அன்பு காட்டும் கணவனிடம் ஆத்திர மடையாமல் இருக்கமாட்டாள். இது பெண்ணின் இயல்பு. குற்றம் யார் மேல்? பாட்டு 203 ஒவ்வோர் ஆண்மகனும், தன் மனைவி தன் மேல் அன்புடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவான். மனைவி இதற்கு எதிராக இருந்தால் அதற்குக் காரணம் அவள் மட்டும் அல்லள். பெரும்பாலும் கணவன்தான் காரணமாக இருப்பான். காதலன் நேர்மையான முறையிலே நடந்து கொண்டால்- மனைவியிடம் உண்மையாக நடந்து கொண்டால்- அன்புடன் நடந்து கொண்டால் அவனை அவன் மனைவி வெறுக்க மாட்டாள். அவன் மேல் அவளுக்கு ஒவ்வொரு நாளும் அன்பும் மதிப்பும் வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படி நடக்கத் தவறும் ஆடவர்கள்தான் மனைவிமார்களால் வெறுக்கப்படுவார்கள். இந்த உண்மையை இப்பாடல் காட்டுகின்றது. இதுவும் முன் செய்யுளைப் போலவே, பரத்தையர் வீட்டுக்குப் போய் வந்த தலைவனைப் பற்றியது. பரத்தையர் வீட்டிலே கிடந்து வந்த தலைவன், தன்னை ஏற்றுக் கொள்ளும் படி தோழியின் மூலம் தலைவியை வேண்டிக் கொண்டான். தோழியும் தலைவனுக்காகப் பரிந்து பேசினாள். அப்பொழுது தலைவி, தலைவனுடைய குற்றத்தை எடுத்துக்காட்டினாள். முன்பு என் மனமும் அவன் அன்பும் ஒன்றுபட்டிருந்தன. இப்பொழுது அவன் மாறிவிட்டான். அவன் அன்பைத் துறந்துவிட்டான். ஆதலால்தான் அவன் என்னிடம் அணுக அஞ்சுகின்றான். இதற்கு நான் என்ன செய்ய முடியும்; என்று கூறினாள். இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதுதான் இச்செய்யுள். தோழியே! அவர் தொலை தூரத்தில் இல்லை. அவருடைய நாட்டையும் நாம் இருக்கும் நாட்டையும் எந்த மலையும் தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவருடைய ஊரையும் எந்தப் பெரியகாடும் இடையில் நின்று தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவர் ஊரும் நம்மூரும் பக்கத்தில் பக்கத்தில்தான் இருக்கின்றன. கண்ணால் காணும்படி விரைந்து வரக்கூடிய அண்மையில்தான் இருக்கின்றன. இருந்தும் அவர் நம்மைவிட்டுப் பிரிந்தார். உள்ளமும் உடம்பும் அழுக்கேறியிருப்பவர்கள் நல்லொழுக்கமுள்ள முனிவர் களைக் கண்டால் அவர்களிடம் நெருங்க மாட்டார்கள். எட்டி விலகிப் போவார்கள். அதைப்போல, மாசற்ற என்னைக் காண அவன் அஞ்சுகின்றான். பரத்தையரை நேசித்த அவன் குற்றம் அவனையே என்னிடம் அணுக விடாமல் தடுக்கின்றது. இத்தகைய என் தலைவனிடம், முன்பு நான் அன்புள்ள வளாயிருந்தேன். அப்பொழுது அவனும் குற்றமற்றவனாயிருந்தான். இப்பொழுது குற்றமுடையவனாகி விட்டான். ஆதலால் அவனிடம் நான் வைத்திருந்த அன்பு இப்பொழுது போய்விட்டது இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு மலையிடை யிட்ட நாட்டரும் அல்லர்; மரம்தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணில் காண நண்ணுவழி யிருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல, ஒரீஇ ஒழுகும் என்ஐக்குப், பரியலென், மன், யான் பண்டொரு காலே. பதவுரை:- மலையிடையிட்ட - மலை நடுவிலே மறைத்துக் கொண்டிருக்கின்ற. நாட்டரும் அல்லர்- தூர நாட்டில் இருப்பவரும் அல்லர். மரம் தலை தோன்றா- மரங்கள் நிறைந்த காட்டினால் காணப்படாத. ஊரரும் அல்லர்- எட்டத்து ஊரில் உள்ளவரும் அல்லர். கண்ணில் காண - கண்ணால் காணும்படி. நண்ணு வழியிருந்தும்- விரைந்து வந்து சேரும் படியான அண்மையிலிருந்தும். கடவுள் நண்ணிய- முனிவரை நெருங்கிய. பாலோர் போல- குற்றத்தன்மையுடையவர்களைப் போல. ஒரீ ஒழுகும்- என்னை அணுகாமல் பிரிந்து அன்பின்றி நடக்கின்ற. என் ஐக்கு- என் தலைவன் பொருட்டு. யான் பண்டு ஒருகால்- நான் முன்னொரு காலத்தில். பரியலென்- அன்பு கொண்டிருந்தேன். மன்- இப்பொழுது அந்த அன்பு மறைந்துவிட்டது. கருத்து:- தலைவர் இப்பொழுது என்னைப் புறக் கணிக்கிறார். நானும் முன்புபோல் அன்பு பாராட்டவில்லை. விளக்கம்:- இது நெடும் பல்லியத்தன் என்னும் புலவர் செய்யுள். பரத்தையர் வீட்டுக்குப் போய் வந்த தலைவனுக்காகப் பரிந்து பேசிய தோழியிடம் தலைவி சொல்லியது. மருதத்திணை. பரியலென் மன் யான் பண்டொரு காலே என்னும் இறுதியடி யான் பண்டு ஒரு கால் பரியலென், மன் என்று மாற்றப்பட்டது. ஒரீஇ, உயிர் அளபெடை. ஏ- அசை. நண்ணுவழி- விரைவில் வருவதற்குரிய வழி. கடவுள்-முனிவர். ஆசைகளைக் கடந்தவர்; கடவுள். என்ஐ- என் தலைவன். காமம் என்பது ஒரு விருந்து பாட்டு 204 காமம் கடக்க முடியாதது; காமத்திலே வீழ்ந்தவர் மீண்டும் கரையேற முடியாது. காமத்திற்குக் கரையில்லை. அதைக் கடப்பதற்கு எத்தகைய ஆதரவும் இல்லை. இவ்வாறு காமத்தைப் பற்றிக் கூறுவோர் உண்டு. காமத்திலே அகப்பட்டவர், தம் இச்சை நிறைவேறாவிட்டால் உயிர் வாழ மாட்டார்கள். அவ்வளவு கொடியது காமம். அது நம்மைப் பிடித்துக் கொண்டால் எந்த வகையாலும் அதை அகற்றிவிட முடியாது என்று நம்புவோரும் உண்டு. உடலிலே வலிமை; உள்ளத்திலே உரம்; அறிவிலே தெளிவு இவற்றை உடையவர்களைக் காமம் ஒன்றும் செய்ய முடியாது. காமத்தின் வழியிலே அவர்கள் நடக்க மாட்டார்கள். அவர்கள் வழியிலேதான் காமம் நடக்க வேண்டும். உலக இன்பமே வேண்டாம் என்று வெறுக்கும் உரம் படைத்தவர்கள் காமத்தைக் கண்டா அஞ்சுவார்கள்? அஞ்சமாட்டார்கள். மயங்கமாட்டார்கள். இந்த உண்மையை எடுத்துக்காட்டுகிறது இச்செய்யுள். ஒரு தலைவன் காமத்தால் வருந்தினான். யாரோ ஒருத்தி மீது காதல் கொண்டு தவித்தான். நான் விரும்பிய மங்கையின் அன்பைப் பெற்றால்தான்- அணைப்பை அடைந்தால்தான்- உயிர் வாழ்வேன். இன்றேல் என்னுயிர் என் பிடியிலே நிற்காது. என் உடம்பை விட்டுப் புறப்பட்டு ஓடிவிடும், என்றெல்லாம் புலம்பினான். அதைக்கண்ட தோழன் அவனுக்குக் காமத்தின் நிலையை எடுத்துரைத்தான். காமம் நிலைத்த இன்பமுடையது அன்று. நமது அறிவுதான் காமத்தை இன்பமாகக் கருதுகின்றது. ஆகவே காமம் இன்பமாக இருப்பதற்கும், துன்பமாக இருப்பதற்கும் நமது நினைப்புத்தான் காரணம். நல்ல வலிமையுள்ள நீ காமத்தால் கலங்குதல் தகாது, என்று அறிவுரை புகன்றான் பாங்கன். காமம்! காமம்! அறிவற்றவர்கள்தாம் அதை இகழ்ந்து பேசுவார்கள். அதை ஒரு பெரிய துன்பம் என்று நினைப்பதும் தவறு; ஒரு தீராத நோய் என்று எண்ணுவதும் தவறு. ஆராய்ந்து பார்த்தால் நமது நினைப்பின் காரணமாக நமக்கு இன்பத்தைத் தரும் ஒரு பொருள்தான் காமம் என்பது. பழைய கொல்லையாகிய ஒரு மேட்டு நிலத்திலே இளம்புல் கொழுந்துவிட்டு வளர்ந்திருக்கின்றது. ஒரு கிழப் பசு அந்தப் புல்லை மேயப் போகின்றது. பல் போன அக்கிழப் பசுவால் அந்தப் புல்லைக் கடித்துத் தின்று அதன் சுவையை நுகர முடியவில்லை. ஆனால் நாக்கினால் அப்புல்லைத் தடவுகின்ற அளவிலேயே அந்தப் பசு இன்பம் அடைகின்றது. இதற்குக் காரணம் அப்புல்லின் சுவையன்று; அந்தப் பசுவின் ஆசைதான். அப்பசுவின் ஆசையின் அளவாகப் புல்லின் சுவை நிற்கின்றது. அது போலவே காமமும் நமது நினைப்பின் அளவிலேயே நமக்கு இன்பத்தை அளிக்கின்றது. நமது அறிவால் அதனை அடக்கிக் கொள்ளமுடியும். அறிவால் அடக்கிக் கொண்டால் காமத்தால் இன்பமும் தோன்றாது; துன்பமும் பிறக்காது. பருத்த தோள்களையுடைய வீரனாகிய நீ இந்த உண்மையை உணர்ந்து கொள். இதுவே இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். பாட்டு காமம், காமம், என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல், மூதா தை வந்தாங்கு விருந்தே காமம்; பெருந்தோ ளோயே. பதவுரை:- பெரும் தோளோயே- பருத்த தோள்களை யுடைய வீரனே. காமம் காமம் என்ப- அறியாதவர்கள்தான் காமம், காமம் என்று இகழ்ந்துரைப்பார்கள். காமம்- காமமானது, அணங்கும்- துன்பமும். பிணியும் அன்று - நோயும் அன்று. நினைப்பின் - ஆராய்ந்து பார்த்தால். முதைச் சுவல்- பழைய மேட்டு நிலத்திலே. கலித்த- தழைத்த. முற்றா இளம்புல்- முற்றாத கொழுந்துப் புல்லை. மூது ஆ- கிழப்பசு. தை வந்து ஆங்கு- கடித்து மெல்ல முடியாமல், நாக்கினால் தடவி இன்புறுவது போல. காமம் விருந்தே- காமம் நமது நினைப்பினால் புதிய இன்பத்தைத் தருவதாகும். கருத்து:- காமம், நமது அறிவை மீறியது அன்று. அறிவால் கட்டுப்படுத்துக் கூடியது தான். விளக்கம்:- இது மிளைப் பெருங்கந்தன் என்னும் புலவர் பாட்டு. காமத்தால் வருந்திய தலைவனுக்குப் பாங்கன் உரைத்தது. குறிஞ்சித்திணை. பெருந்தோளோயே என்ற இறுதித்தொடர் முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. விருந்தே காமம் என்பது, காமம் விருந்தே என்று மாற்றப்பட்டது. ஏ-அசை. விருந்து -புதுமை. காமத்தை விருந்தென்று கூறியது அதன் நிலையாமையைக் கருதி. சிறிது பொழுது இன்பந்தந்து மறையும் தன்மையுள்ளது காமம். ஆதலால் விருந்து என்று பெயர் பெற்றது. முதை- முதுமை, பழமை. சுவல்- மேடு. முது ஆ- மூதா. அறிவுள்ளவர்பால் காமம் தோன்றாது. அறிவில்லாமல் மனம் போன போக்கில் நடப்பவர்க்குத்தான் காமம் இன்பந்தரும் என்ற குறிப்பு இச்செய்யுளில் அடக்கம். பசலைக்கும் அறிவுண்டோ? பாட்டு 205 உள்ளத்தில் மகிழ்ச்சியிருந்தாலும் சரி, அல்லது துக்க மிருந்தாலும் சரி, அதை மறைத்துக் கொள்ள முடியாது. அவை, எந்த உருவத்திலாவது வெளிப்பட்டே தீரும். ஒருவருடைய முகத்திலே, அல்லது கண்களிலே, அல்லது மெய்யிலே காணப்படும் குறிகளைக் கொண்டு அவர் உள்ளம் எத்தகையது என்பதை முடிவு கட்டி விடலாம்; அக்குறிகளைக் கொண்டு அவர் மனத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றதா? அல்லது துக்கம் நிறைந்திருக்கின்றதா? என்று துணிவாகச் சொல்லிவிடலாம். காதலன் பொருள் தேடப் பிரிந்து போனான். காதலி தனித்து வருந்தியிருக்கின்றாள். அவள் வருந்துகின்றாள் என்பதை அவள் நெற்றியிலே படர்ந்த மாமை நிறம் வெளிப்படுத்தி விடுகின்றது அவள் தன் பிரிவுத் துன்பத்தை வாய் விட்டுச் சொல்லவில்லை. ஆயினும் அவள் நெற்றியிலே படர்ந்த பசலை நிறம் அதைச் சொல்லி விடுகின்றது. இந்த உண்மையை இச்செய்யுள் வெளிப்படுத்துகின்றது. நெய்தல் நிலத்துப் பெண் ஒருத்தி. அவளும் அவள் காதலனும் ஓருயிர் இரண்டுடலாக வாழ்ந்தனர். வெளிப்பட்ட வாழ்க்கை யிலே இன்னும் அவர்கள் வாழவில்லை. கள்ளக் காதலர்களாகத் தான் இன்புற்று வாழ்ந்து வந்தனர். இப்படியே நீண்டநாள் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. மணம் புரிந்துகொண்டு கற்பு நெறியிலே கண்டோர் பழிக்காத வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன் பொருட்டுக் காதலன் பொருள் தேடப் போனான். அப்பொழுது தலைவி தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் உள்ளடக்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆயினும் அவள் நெற்றியிலே பசப்பு நிறம் படர்ந்து வந்தது! அதைக் கண்ட தோழி வருந்தினாள். தலைவியின் தனிமையைக் கண்டு- தவிப்பைக் கண்டு துக்கமடைந்தாள். தோழி இவ்வாறு இரங்குவதைக் கண்ட தலைவி, தன் இயல்பை எடுத்துக் கூறுகின்றாள். இந்த முறையிலே அமைந்தது இச்செய்யுள். கடற்கரையையுடைய தலைவன் பொருள் தேடச் சென்றான். என்னோடு ஒன்று சேர்ந்திருக்க வேண்டிய கார் காலத்திலே பிரிந்து போனான். மின்னலோடு கூடிய மேகங்கள் மழையைப் பெய்து கொண்டிருக்கும் போதே போனான். வானத்திலே பறக்கின்ற அன்னப்பறவை உயர்ந்து பறப் பதைப் போல, பொன்னால் செய்த பக்கங்களையுடைய வெண்மையான தேரில் ஏறிப்போனான். அவனுடைய தேர்ச் சக்கரங்களை, கடலின் நீர்த்துளிகள் நனைக்கும்படி பிரியத்தகாத இக்காலத்தில் பிரிந்து சென்றான். அவன் சென்றதை என் உள்ளே அடங்கியிருந்த பசப்பு நிறம் எப்படித்தான் அறிந்து கொண்டதோ தெரியவில்லை. அது வெளிப்பட்டு எனது நெற்றியிலே படர்கின்றது. நான் எவ்வளவுதான் என் துன்பத்தை அடக்கிக் கொண்டிருந் தாலும், இந்தப் பசலை நிறம் என் துக்கத்தை வெளியில் இழுத்துத் தள்ளி விடுகின்றது. இவ்வாறு தலைவி தனது நிலையைத் தோழியிடம் எடுத்துரைத்தாள். பாட்டு மின்னுச்செய் கருவிய பெயன் மழை தூங்க, விசும்பாடு அன்னம், பறை நிவந்தாங்குப், பொலம்படைப் பொலிந்த வெண்தேர் ஏறிக் கலங்குகடல் துவலை, ஆழி நனைப்ப, இனிச் சென்றனனே இடுமணல் சேர்ப்பன்; யாங்கு அறிந்தன்று கொல்? தோழி! என் தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. பதவுரை:- தோழி! இடுமணல் சேர்ப்பன்- அலைகள் கொண்டு வந்து இட்ட மணல் நிறைந்த கடற்கரையையுடைய தலைவன். மின்னுச்செய்- மின்னலைச்செய்கின்ற. கருவிய- தொகுதியான. பெயல் மழை தூங்க- மழையைப் பெய்யும் மேகமானது மழை பெய்ய. விசும்பு ஆடு- வானத்திலே பறக்கின்ற. அன்னம் பறை நிவந்து ஆங்கு- அன்னப்பறவை பறப்பதிலே உயர்ந்தது போல, பொலம் படைப் பொலிந்த - பொன்னால் செய்த பக்கங்களுடன் விளங்குகின்ற. வெண் தேர் ஏறி- யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட வெண்மையான தேரில் ஏறிக் கொண்டு. கலங்கு கடல் துவலை- அசைகின்ற கடல் அலையின் துளிகள். ஆழி நனைப்ப- சக்கரங்களை நனைக்கும்படி. இனிச் சென்றனனே- இப்பொழுது போய்விட்டான். யாங்கு அறிந்தன்று கொல் - இதை எப்படி அறிந்து கொண்டதோ. என் தேம் கமழ் திருநுதல்- எனது மணம் வீசுகின்ற அழகிய நெற்றியிலே. பசப்பு ஊர் தரும்- பசப்பு நிறம் படர்கின்றது. கருத்து:- தலைவன் பிரிவால் என் நெற்றியிலே பசப்பு நிறம் படர்கின்றது. விளக்கம்:- தலைவன் பிரிந்ததனால் தலைவிக்குத் துன்பம் நேர்ந்தது. இத்துன்பத்தைத் தலைவியால் தாங்க முடியாது என்று தோழி வருந்தினாள். அத்தோழிக்குத் தலைவி தன் நிலையை எடுத்துரைத்தாள். நெய்தல்திணை. இச்செய்யுளை இயற்றிய புலவர் உலோச்சன் என்பவர். தோழி என்னும் சொல்லையும், இடுமணல் சேர்ப்பன் என்னும் சொற்றொடரையும் முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. இறுதி அடியில் உள்ள ஊர்தரும் பசப்பே என்பதைப் பசப்பு ஊர்தரும் என்று மாற்றிப் பொருள் உரைக் கப்பட்டது. தூங்க- பெய்ய, விசும்பு- வானம். ஆடுதல்-பறத்தல். பறை- பறத்தல். நிவந்து -உயர்ந்தது. துவலை-நீர்த்துளி. இனி- இப் பொழுது. விரைந்து செல்லும் தேருக்கு வானத்தின் உயரப் பறக்கும் அன்னப்பறவை உவமானம். அறியாமையால் காமுற்றேன் பாட்டு 206 காமம் உள்ளத்திற்கும், உடலுக்கும் இன்பத்தைத் தரும். ஆயினும் அதனால் வரும் இன்பத்தைவிடத் துன்பமே பெரிதாகும். ஆதலால்தான் அறிஞர்கள் காமத்தைக் கடிந்துரைக்கின்றனர். காமத்தைக் கடந்தவரே அழியாத இன்பத்தை எய்த முடியும் என்று கூறுகின்றனர். இந்தக் கருத்தை இச்செய்யுளிலே காணலாம். தனது நண்பன் ஒருத்தியிடம் காதல்கொண்டு விட்டான். அவன் எப்பொழுதும் அவளைப் பற்றியே எண்ணுவதையும் பேசுவதையும் பார்த்தான் நண்பன். அவள் இல்லாவிட்டால் அவன் உயிர் வாழமாட்டான் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டான். நலிவுறும் நண்பனுக்கு நன்மை செய்வதுதான் நட்பின் தன்மை. இதையறிந்த அந்த நண்பன் காமத்தால் சூழப்பட்ட தன் நண்பனுக்குப் புத்திமதி கூறினான். `காமத்திலே அறிவைச் சிதறவிட்டுக் கலங்கக்கூடாது; அது அறிவுடையோர்க்கு அழகன்று; மனத்தை அடக்கிக் கொள்ளும் தன்மையே சிறந்தது என்று இடித்துரைத்தான். இதைக் கேட்ட காமுற்ற நண்பன் தனது நிலையை எடுத்துரைத்தான். நான் காதலித்த மங்கை மிகவும் சிறந்தவள். அமிழ்தத்தைப் போன்ற அழகான இனிய சொற்களையுடையவள். சொல்லில் மட்டும் இனிமையாக இருந்து குணத்தில் கெட்டவள் அல்லள். அவள் சொல்லைப் போலவே பண்பிலும் இனியவள். இத்தகைய இனிய சொல்லும், அரிய குணமும் படைத்த அவள்மீது கொண்ட காதலே எனக்குப் பெரிய துன்பத்தைத் தருகின்றது. ஆதலால் காமம் நம்முடன் வாழ்வதற்கு அரியதாகும். அறிவுள்ளவர்களே! அதனை நெருங்காதீர்கள். அதனிடம் போகாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அறியாமையால் நான் காமத்தின் வசமாகி வருந்துகின்றேன். இவ்வாறு காமங்கொண்ட தலைவன் ஒருவன் அதன் இயல்பை எடுத்துக் கூறுவதே இச்செய்யுள். பாட்டு அமிழ்தத்து அன்ன அம்தீம் கிளவி, அன்ன இனியோள்; குணனும் இன்ன; இன்னா அரும்படர் செய்யும் ஆயின் உடன் உறைவு அறிதே காமம்! குறுக;ல ஓம்புமின்! அறிவுடையீரே! பதவுரை:- அமிழ்தத்து அன்ன- அமுதத்தைப் போன்ற. அம் தீம் கிளவி- அழகிய இனியசொல்லையுடையவள். அன்ன குணனும் இனியோள்- அது போலவே குணத்திலும் நல்லவள். இன்ன- இத்தகையவள்மீது கொண்ட காமமே. இன்னா அரும்படர் செய்யும் ஆயின்- மிகுந்த துன்பத்தைத் தருமாயின். காமம் உடன் உறைவு அரிது- காமம் நம்முடன் கூடிவாழ்வதற்கு அரியதாகும். ஆதலால் அறிவுடையீரே- அறிவுள்ளவரே. குறுகல் ஓம்புமின் அதனிடம் நெருங்க வேண்டாம். கருத்து:- காமம் துன்பந்தரக் கூடியது. அறிவுடையோர் அதை வெறுப்பர். விளக்கம்:- இது ஐயூர் முடவன் என்னும் புலவர் பாட்டு. தனக்குப் புத்திமதி கூறிய நண்பனிடம். தலைவன் கூறியது. குறிஞ்சித்திணை. அன்ன இனியோள் குணனும் என்பதை அன்ன குணனும் இனியோள் என்றும், உடன் உறைவு அரிதே காமம் என்பதை காமம் உடன் உறைவு அரிது என்றும், குறுகல் ஓம்புமின்- அறிவுடையீரே என்பதை அறிவுடையீரே குறுகல் ஓம்புமின்- என்றும் மாற்றிப் பொருள் உரைக் கப்பட்டது. அம்- அழகிய. தீம் - இனிமை. இன்னா- துன்பம். படர் துன்பம். அரும்- பெரிய. இன்னா அரும்படர்- மிகவும் கொடிய துன்பம். அன்னியர் போலவே நீயும் சொன்னாய் பாட்டு 207 நம்மிடம் அன்புள்ளவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசுவோம். நம் குறைகளை அவரிடம் கூறுவோம். நம் குறை களைத் தீர்க்கும்படி கேட்போம். தீர்க்காவிட்டால் சினந்தும் பேசுவோம். ஏன் என் குறைகளைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை என்று கடிந்து கேட்போம். நம்மிடம் அன் பில்லாதவர்களிடம் இவ்வளவு உரிமையுடன் உரையாடமாட் டோம். இது ஒவ்வொருவரிடமும் உள்ள பண்பாகும். இந்த இயற்கைப் பண்பை அடிப்படையாகக் கொண்ட செய்யுள் இது. பொருள் தேடச் செல்ல நினைத்த தலைவன் தன் தலைவியினிடம் சொல்லாமலே புறப்பட்டுப் போய்விட்டான். சொல்லிக் கொண்டால் போகமுடியாது; பிரிவு தடைப்படும்; தான் எண்ணிய காரியம் கைகூடாது; ஆதலால் சொல்லாமல் போவது தான் நலம் என்று துணிந்தபின் அவன் போனான். இவ்வாறு அவன் பிரிந்து சென்றதைக் கண்ட பலர் தலைவியிடம் உரைத்தனர். அவர்கள் கூறும்போது தலைவி பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இதே செய்தியை அவளுடைய தோழியும் கூறினாள். அப்பொழுது தான் தலைவி, அவளை உரிமையோடு கோபித்துக் கொண்டாள். எல்லோரையும் போலவே நீயும் இச்செய்தியை என்னிடம் கூறுகின்றனை. நீ என்னிடம் இரக்கம் உடையவளாயிருந்தால், தலைவனைப் போகவிடாமல் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. இதுதானா நீ என்னிடம் வைத்திருக்கும் அன்பு? என்று கடிந்து கூறினாள். நாம் செல்வதைப் பற்றித் தலைவியிடம் உரைத்தால் நமது செலவு தடைப்படும். ஆதலால் சொல்லாமல் செல்வதே நலம் என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு அவர் போனார். அவர் சென்ற வழி மிகவும் கொடுமையானது. யாரும் அவருக்கு வழித் துணையும் இல்லை. ஓமை மரக்கிளையிலே தனித்து உட்கார்ந்து வருந்திக்கொண்டிருக்கும் பருந்து புலம்பும் ஓசையே அவ் வழியிலே நடப்போர்க்குத் துணையாகும். இத்தகைய மலையின் பக்கத்திலேயுள்ள பழைய ஒற்றையடிப்பாதை வழியே அவர் நடந்துபோனார். அவர் கால்களின் சுவடு அந்த வழியிலே அழுந்தும்படி நடந்து போனார். இச்செய்தியைக் கேட்ட நம் அன்பினர் பலர். அவர்கள் என்னிடம் இச்செய்தியை உரைத்தனர். நீயும் அவர்களைப் போலவே என்னிடம் இச்செய்தியை உரைத்தாய். இவ்வாறு கூறினாள் தலைவி. இப்பொருளமைந்த செய்யுள் கீழ்வருவது; பாட்டு செப்பினம் செலினே செலவு அரிதாகும்; என்று அத்தஓமை அம்கவட்டு இருந்த இனம் தீர்பருந்தின் புலம்புகொள் தெள்விளி சுரம் செல்மாக்கட்கு உயவுத்துணையாகும் கல்வரை அயலது தொல்வழங்கு சிறு நெறி, நல் அடி பொறிப்பத் தாஅய்ச் சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. பதவுரை:- செப்பினம் செலின்- நாம் தலைவியிடம் சொல்லிவிட்டுப் போவோமாயின். செலவு அரிது ஆகும்- போக முடியாது. என்று- என்று சொல்லிவிட்டு. அத்தம் ஓமை- பாலை நிலத்திலேயுள்ள ஓமை மரத்தின். அம்கவட்டு இருந்த- அழகிய கிளையிலே இருந்த. இனம்தீர் பருந்தின்- தன் இனமாகிய துணையற்ற பருந்தின். புலம்புகொள்- புலம்பு தலைக்கொண்ட. தெள்விளி- தெளிந்த ஓசையே. சுரம்செல் மாக்கட்கு - பாலை நிலத்தின் வழியே நடந்து போகும் மக்களுக்கு. உயவுத்துணை ஆகும்- பேச்சுத்துணையாக இருக்கின்ற. கல்வரை அயலது- கற்கள் நிறைந்த மலையின் பக்கத்தில் உள்ளதாகிய தொல்வழங்கு சிறு நெறி- பழமையான சிறிய ஒற்றையடிப்பாதையிலே. நல் அடி பொறிப்ப- தமது நல்ல அடிகளின் சுவடுபடும்படி. தாய்ச் சென்று என- விரைந்து சென்றார் என்று. கேட்ட நம் ஆர்வலர்- கேள்விப் பட்ட நமது அன்பர்கள். பலர்- பலர் உள்ளனர். கருத்து:- தலைவர் பொருள்தேடச் சென்ற செய்தி எனக்கு முன்னமே தெரியும். விளக்கம்:- இது உறையன் என்னும் புலவர் பாட்டு. தலைவர் நம்மிடம் சொல்லாமல் பிரிந்துபோனார். என்று தோழி கூறினாள். அப்பொழுது நமது அன்பினர் பலர் இதை எனக்குக் கூறினார்கள். அதையே நீயும். brhštjdhš v‹d ga‹? என்ற கருத்துடன் தலைவி கூறியது, பாலைத் திணை அத்தம் - வழி. ஓமை- ஒருவகை மரம். சுவடு - கிளை. இனம் தீர்- இனத்தைவிட்டு நீங்கிய. தெள்விளி- தெளிந்த ஓசை. உயவுத்துணை- உசாவுத்துணை; கேள்வித்துணை; பேச்சுத்துணை, பொறிப்ப- அடையாளம் இட; சுவடுபட. ஆர்வலர்- அன்புடையவர். மற்றொருவர் மணக்க வந்தால் பாட்டு 208 தலைவியை எப்படியும் வெளிப்படையாக மணம் புரிந்து கொள்ளத் தீர்மானித்தான் தலைவன். அதன் பொருட்டு அவன் பொருள் தேடப் போனான். அவன் வருவதற்குக் கொஞ்சம் காலந் தாழ்ந்தது. அதைக் கண்டு தலைவி வருந்தினாள். அவள் தலைவன் வருவானோ மாட்டானோ என்று எண்ணி வருந்தவில்லை. தலைவன் தன்னைக் கைவிட மாட்டான்; அவன் வந்து மணம் புரிந்து கொள்ளுவது உறுதி என்ற நம்பிக்கை அவளுக்குண்டு. ஆனால், அவர் உள்ளத்திலே வேறொரு ஐயம் புகுந்து அவளைத் துக்கமடையும்படி செய்தது. அந்த ஐயத்தால் அவள் வருந்தினாள். அப்பொழுது, அவளுடைய தோழி அவளை நோக்கி நீ பொறுத்திருக்க வேண்டும்; வருந்தக்கூடாது; துக்கம் வெளிப் படும்படி நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறினாள். அதற்குத் தலைவி கீழ்வருமாறு விடையிறுத்தாள். தோழியே! நான் தலைவனோடு பொருந்தாத தன்மை யுடையள் அல்லேன். அவனோடு ஒன்றுபட்டு வாழ்வதற்குரிய தன்மையுடையேன். ஆதலால் அவன் என்னை வெறுப்பான் -கைவிடுவான் என்று எண்ணுவதற்கு இடமேயில்லை. ஆனால் ஒரேகாரணத்தால் அவனோடு பொருந்தாதவளாயிருக்கின்றேன். அவன் சிறந்த மலை நாட்டையுடையவன். அவனுடைய மலையிலே, ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்ற ஆண் யானைகளால் மிதிக்கப்பட்ட அடர்ந்த அடிப்பாகத்தையுடைய வேங்கைமரம் மீண்டும் தழைத்து வளரும். குறமகளினர் கூடி நின்று மலர்களைப் பறித்துத் தங்கள் கூந்தலிலே முடித்துக் கொள்ளும்படி மலர்ந்து காட்சியளிக்கும். இந்த வேங்கை மரம் போல் நான் ஆகமாட்டேன். என்னை வேறு யாரேனும் விரும்பி என் பெற்றோரிடம் கேட்கலாம். அவர்கள் அந்த வேற்றானுக்குக் கொடுக்கச் சம்மதிக்கலாம். ஆனால் நான் என் காதலனைத் தவிர மற்றொருவனை மணக்க ஒருப்படமாட்டேன். ஆயினும் வேற்றோர் யாரேனும் என்னைப் பெண் கேட்க என் பெற்றோர்களிடம் வருவாரோ என்ற ஐயத்தால் தான் நான் வருந்துகின்றேன். வேறு எக்காரணத்தாலும் வருந்த வில்லை, என்று கூறினாள். பாட்டு ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை, குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் நின்று கொய மலரும், நாடனொடு ஒன்றேன் தோழி! ஒன்றி னானே. பதவுரை:- தோழி ஒன்றேன் அல்லேன்- தோழியே நான் தலைவனோடு பொருந்தாத தன்மையுடையவள் அல்லள். ஒன்று வென்- பொருந்தும் தன்மையுடையவளேதான். குன்றத்து- அவனுடைய மலையிலே, பொரு களிறு மிதித்த- போர் செய்யும் ஆண்யானைகளால் மிதிக்கப்பட்ட நெரிதாள் வேங்கை அடர்ந்த அடியையுடைய வேங்கை மரம் பட்டுப் போகாமல் தழைத்து வளர்ந்து. குறவர் மகளிர்- குறப்பெண்கள். கூந்தல் பெய்மார்- தமது கூந்தலிலே சூடிக் கொள்ளும் பொருட்டு. நின்று கொய- நின்று கொண்டு மலர் பறிக்கும்படி. மலரும் - மலர்ந்திருக்கும். நாடனொடு- மலை நாட்டையுடைய தலைவனோடு. ஒன்றனானே- என்னை வேறு யாரேனும் மணந்து கொள்ள விரும்புவோர் என்பெற்றோரிடம் வந்து பெண் கேட்பார்களோ என்ற ஒரு காரணத்தால் மட்டும். ஒன்றேன்- அவனோடு பொருந்த மாட்டேன். கருத்து:- தலைவர் இன்னும் வந்திலர். ஆதலால் வேறு யாரேனும் என்னை விரும்பி வருவரோ என்ற காரணத்தால் வருந்துகின்றேன். விளக்கம்:- இது கபிலர் பாட்டு. நீ துக்கப்படவேண்டாம். பொறுத்திரு என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. ஒன்றேன் தோழி ஒன்றனானே என்ற இறுதியடியில் உள்ள தோழி என்னும் சொல்லை முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒன்றனானே ஒன்றேன் என்று மாற்றிக் கொள்ளப்பட்டது. பெய்ம்மார்- சூடிக் கொள்ளும் பொருட்டு. கொய- கொய்ய; பறிக்க. என் காதலன், மற்றொருத்தியை விரும்பினாலும் விரும்பலாம். ஆனால் நான் மட்டும் வேறு மணம் புரிய விரும்பமாட்டேன். இந்த வகையில்தான் நான் அவரோடு ஒத்த குணமுடையவள் ஆகமாட்டேன் என்ற கருத்தையே தலைவி இவ்வாறு கூறினாள். பண்டைத் தமிழ்ப்பெண்கள் தாம் முதலில் காதலித்த ஆடவனைத் தவிர மற்றொருவனை மணக்க விரும்புவதில்லை என்ற உண்மையை இச்செய்யுளின் வாயிலாக அறியலாம். வேறொரு நினைப்பும் இல்லை பாட்டு 209 ஒரு பொருளிலே அளவு கடந்த பற்றுள்ளவர்கள், அப் பொருளை எப்பொழுதும் மறக்கமாட்டார்கள். எப்பொழுதும் அப்பொருளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள். இதுவே பற்றுக்கு அடையாளம். இதைப் போலவே ஒருவரிடத்திலே அன்புள்ளவர்கள்- காதல் உள்ளவர்கள்- எங்குச் சென்றாலும் தம் காதலுக்குரியவர்களை மறந்துவிட மாட்டார்கள். அவர்கள் எங்கே போனாலும் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலரை மனக்கண்ணால் பார்த்துக் கொண்டே தான் இருப்பார்கள். இந்த உண்மையை இச்செய்யுளால் நாம் அறிகின்றோம். பொருள் தேடப்போனத் தலைவன் திரும்பி வந்தான்; இல்லறத்திற்கு இன்றியமையாத செல்வப் பொருளைத் தேடிக் கொண்டு வந்தான். வந்தவன் தன் அன்பைத் தன் காதலி அறிய வேண்டும் என்று விரும்பினான். தான் பொருள் தேடச் சென்ற இடத்திலும் எப்பொழுதும் தன் காதலியின் நினைவாகவே இருந்ததை வெளியிட்டுச் சொல்ல வேண்டுமென்று விரும்பினான். ஆதலால் அவன் தன் காதலியின் தோழியிடம் தன் அன்பை வெளிப்படுத்தினான். தோழியே! நான் சென்ற மலை நெறியிலே நெல்லி மரங்கள் உண்டு. அவை தருமத்தின் பொருட்டு வளர்க்கப்பட்டவை. வழி நடப்போர், அம்மரங்களின் பசுமையான காய்களை உண்டு களைப்பு நீங்குவர்; தாகத்தைத் தணித்துக் கொள்ளுவர். அம் மரங்களின் அடியிலே, புலிக்குட்டிகள் பொறுக்கிக் கொள்ளுதற் குரியனவாகக் காய்கள் உதிர்ந்து கிடக்கும். அந்த மலை நெறி, கடந்து செல்லுதற்கு முடியாத வழி. அதைக் கடந்து சென்ற நாம் தலைவியை மறக்கவேயில்லை. காட்டிலே தழைத்திருக்கின்ற வளைந்த கிளைகளையுடைய வெட்சியின் மலர்ந்த பூக்கள் பலவற்றை அணிந்திருக்கின்ற கூந்தலையுடைய என் காதலியை நான் மறக்கவே யில்லை உன்று உரைத்தான். இச்செய்தியை உரைப்பது இச்செய்யுள். பாட்டு அறம் தலைப்பட்ட நெல்லிஅம் பசுங்காய் மறப்புலிக் குருளைக் கோள் இடம் கறங்கும், இறப்பரும் குன்றம் இறந்த யாமே குறுநடை! பல உள்ளலமே நெறிமுதல் கடற்றில் கலித்த முடச்சினை வெட்சித் தளை அவிழ் பல்போது கமழும் மையிரும் கூந்தல் மடந்தை நட்பே. பதவுரை:- குறுநடை- குறுகிய நடையை உடைய தோழியே அறம் தலைப்பட்ட- தருமத்தின் பொருட்டு வளர்த்து வைக்கப் பட்ட. நெல்லி அம் பசும் காய்- நெல்லி மரத்தின் அழகிய பசும்காய்கள். மறப்புலிக்குருளை - வலிமையுள்ள புலியின் குட்டிகள். கோள் இடம்- பொறுக்கிக் கொள்ளுதற்குரிய இடத்திலே. கறங்கும் -உதிர்ந்து உருண்டு கிடக்கின்ற. இறப்ப அரும் குன்றம்- கடத்தற்கரிய மலை வழியை. இறந்தயாம்- கடந்து சென்ற யாம், நெறி முதல்- வழியிலே. கடற்றில்- காட்டிலே. கலித்த- தழைக்கின்ற. முடச்சினை வெட்சி- வளைந்த கிளையையுடைய வெட்சியின். தளை அவிழ் பல்போது- மலர்ந்த பல மலர்களை அணிந்து. கமழும்- மணம் வீசும். மை இரும் கூந்தல்- கருமையான நீண்ட கூந்தலையுடைய. மடந்தை நட்பு- தலைவியின் நட்பைத் தவிர. பல உள்ளலம் - வேறு பலவற்றை நினைத்தறியோம். கருத்து:- நான் பொருள் தேடப்போன இடத்திலும் தலைவியையே நினைத்திருந்தேன். வேறு நினைப்பே இல்லை. விளக்கம்:- இது பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடச் சென்று திரும்பி வந்த தலைவன், தோழியை நோக்கி உரைத்தது. நான் பொருள் திரட்டச் சென்ற இடத்திலும் தலைவியை மறந்தறியேன்; என்று கூறித் தலைவியிடம் தான் கொண்டிருக்கும் அன்பை வெளியிட்டான். பாலைத்திணை. குறுநடை என்பதை முதலிலும், பல உள்ளலம் ஏ என்பதை இறுதியிலும் வைத்துப் பொருள் கூறப்பட்டது. கோள் இடம்-கொள்ளும் இடம். கறங்கும்- உருள்கின்ற அல்லது ஒலிக்கின்ற. நெறி முதல்- வழியிடத்தில். கடற்றில்- காட்டில். முடம்- வளைவு. இரும்- பெரிய; நீளமான. உள்ளலம்- நினையேம். பாலை நிலத்திலே, மக்கள் வழி நடைப் பாதையிலே, வழிச் செல்வோர்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு நெல்லி மரங்களை வைத்து வளர்ப்பர். இது ஒரு அறமாகும். இவ்வறத்தைப் பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்தனர் என்று இச்செய்யுளால் தெரிகின்றது. காகத்தால் கவலையற்று இருந்தாள் பாட்டு 210 வீட்டுக் கூரையின் மேல் விடியற்காலத்திலே காக்கை உட்கார்ந்து கரைவதுண்டு. இதனை அவ்வீட்டிற்கு விருந்தினர் வருவதற்கு அடையாளம் என்பர். இது ஒரு பழைய நம்பிக்கை. இந்த நம்பிக்கை இன்றும் தமிழகத்தில் நிலவி வருகின்றது. இந்த நம்பிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் களிடம் குடிகொண்டிருந்தது. இச்செய்யுள் இந்த நம்பிக்கையை அறிவிப்பதாகும். பொருள் தேடிக்கொண்டு திரும்பிவந்த தலைவன் தோழியைப் பாராட்டினான். நான் பிரிந்துபோயிருந்த காலத்தில் தலைவியை நீதான் வருந்தாமல் பாதுகாத்து வந்தாய். நீ இல்லா விட்டால் தலைவியினால் துக்கத்தைத் தாங்கிக் கொண்டிருந் திருக்க முடியாது; அவளுடைய உயிருக்கே ஆபத்து வந்தாலும் வந்திருக்கும். அப்படி ஒன்றும் தீங்கு நேராமல் பாதுகாத்த உனக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்று புகழ்ந்து கூறினான். அதற்குத் தோழி கூறிய விடைதான் இச்செய்யுள். தலைவனே, அவள் துன்புறாமல் பொறுத்திருந்தமைக்கு நான் காரணம் அல்லள்; விருந்தினர் வருக என்று கூவிக்கரைந்த காக்கைதான் காரணமாகும். கண்டீரக்கோ பெருநள்ளி என்பவன் சிறந்த வள்ளல். அவனது முல்லை நிலத்திலே ஆயர்களால் காக்கப்படும் பசுக்களின் நெய் மிகவும் கொழுப்புள்ளது. தொண்டியென்னும் ஊரிலே விளைந்த வெண்ணெல்லால் ஆகிய வெண்சோறும் மிகவும் சத்துள்ளது. அந்த நெய்யுடன் கலந்த சோற்றை ஏழு பாண்டங்களிலே ஏந்திக் கொடுத்தாலும் காக்கை உணவாகக் கொள்வது சிறிதளவேதான். ஆதலால் என் தலைவியின் தோளை இளைக்கச் செய்த துன்பம் நீங்கும்படி, காக்கை கரைவதற்காக நான் சிறு சோற்றைத்தான் அவற்றிற்குக் கொடுத்து வந்தேன். ஒவ்வொரு நாளும் நான் கொடுக்கும் சிறு சோற்றுப்பலியை விரும்பி வரும் காக்கைகள் கரைவதைக் கண்டு, நீ வந்து விடுவாய் என்று அவள் மகிழ்ந்தாள். இவ்வாறு தோழி, தன்னைப் புகழ்ந்த தலைவனிடம் கூறினாள். பாட்டு திண்தேர் நள்ளி கானத்து, அண்டர் பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி முழுதுடன் விளைந்த வெண்நெல் வெம்சோறு, எழுகலத்து ஏந்தினும் சிறிது, என்தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு, விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே. பதவுரை:- திண்தேர் நள்ளி- வலிமையுள்ள தேரை யுடைய நள்ளி என்னும் வள்ளலின். கானத்து- காட்டிலே. அண்டர்- ஆயர்களால் வளர்க்கப்படும். பல் ஆ பயந்த- பல பசுக்கள் தந்த. நெய்யில்- நல்ல நெய்யுடன் கலந்த. தொண்டி- தொண்டி என்னும் ஊரிலுள்ள வயல்களிலே. முழுது உடன் விளைந்த- முற்றி நன்றாக விளைந்த. வெண்நெல் வெம்சோறு- வெண்ணெல்லால் ஆகிய விரும்பத்தகுந்த சோற்றை, எழுகலத்து ஏந்தினும்- ஏழு பாண்டங்களிலே நிறைய ஏந்தினாலும். என்தோழி- எனது தோழியின். பெரும் தோள் நெகிழ்த்த- பெரிய தோளை இளைக்கச் செய்த. செல்லற்கு- துன்பத்திற்குப் பரிகாரமாக விருந்துவரக் கரைந்த- விருந்தினர் வருவர் என்பதற்கு அடையாளமாகக் கரைந்த. காக்கையது பலி- காக்கையின் உணவு. சிறிது - சிறிதளவு தான் நான் கொடுத்தது. கருத்து:- காக்கை கரைதலைக் காட்டி நீ வந்து விடுவாய் என்று சொல்லித் தலைவியின் துன்பத்தை மாற்றினேன். விளக்கம்:- இது காக்கை பாடினியார் என்னும் புலவர் பாட்டு. பிரிவிலிருந்து மீண்ட தலைவன் தோழியைப் புகழ்ந்த போது அவள் கூறியது. தோழி கூற்று. முல்லைத்திணை. சிறிது என்னும் சொல்லை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. நள்ளி; இவன் கடையெழு வள்ளல்களிலே ஒருவன். தொண்டி, மேற்குக் கடற்கரையில் உள்ளது. சேரர்களின் துறைமுகப்பட்டினம். இச்செய்யுள் தோன்றிய காலத்திலே தொண்டி சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்கவேண்டும். நள்ளியின் காட்டிலே வளரும் பசுவின்நெய்யும், தொண்டியிலே விளைந்த நெல்லும் மிகுந்த சுவையும் கொழுப்பும் உள்ளவை. நள்ளி - கண்டீரக்கோ பெருநள்ளி. கானம்- காடு; முல்லை நிலம். அண்டர்- ஆயர். பல்ஆ- பல பசுக்கள். முழுது உடன் விளைந்த- நன்றாக விளைந்த. செல்லல் - துன்பம். காக்கை கூவு தலைக்கரைதல் என்று சொல்வது மரபு. காக்கைக்கு உணவிடுவது பழந்தமிழ் நாட்டு வழக்கம். இன்றும் இவ்வழக்கம் உண்டு. தலைவி, தலைவன் இன்னும் வரவில்லை, என்பது குறித்து வருந்தாமலிருக்கும்படி நாள்தோறும் காக்கைக்குப் பலியிட்டு வந்தாள் தோழி. அக்காக்கைகள் கூரையில் உட்கார்ந்து கரைவது கேட்டுத் தலைவி வருந்தாமலிருந்தாள், இது தலைவியின் கவலையைத் தணிக்கத் தோழி செய்த தந்திரம். உண்மை உணர்ந்தால் துன்பம் இல்லை பாட்டு 214 ஒரு நிகழ்ச்சிக்குக் காரணமான உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்; உண்மைக்காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால் அந்தச் செயலை நாம் நமது விருப்பப்படி நடத்தி வைக்கமுடியும்; அடக்கி ஆளமுடியும். நம்மைமீறிச் செல்லாமல் தடுத்து ஒரு எல்லைக்குள்ளே நிறுத்தி விடமுடியும். உண்மையை உணராவிட்டால்- அல்லது தப்பான ஒரு காரணத்தையே அச்செயலின் அடிப்படையாக நினைத்துக் கொண்டுவிட்டால்- நாமும் தவறான நெறியிலேயே செல்வோம். அதனால் நாம் நினைத்த செயலும் நிறைவேறாது. இறுதியில் பழிப்பும் அவமானமும் அடைவோம். இந்த உண்மையை இச்செய்யுள் எடுத்துக்காட்டுகின்றது. ஒரு பருவமங்கை. அவள் தினைப்புனங் காவல் புரிந்து வந்தாள். அப்பொழுது அங்கு வந்த ஒரு ஆடவனுக்கும் அவளுக்கும் காதல் மூண்டது. இருவரும் பலமுறை அடிக்கடி எதிர்ப்பட்டு இன்பம் நுகர்ந்து வந்தனர். இந்தச் செய்தி, அந்தப் பருவமங்கையின் தோழிக்குத் தெரியும். முதல் முதல் அந்தப் பருவ மங்கையாகிய தலைவியின் அன்பைப் பெறுவதற்காகத் தலைவன் தழையுடை கொண்டு வந்தான். தழையினால் ஆடைபோலத் தொடுத்த பொருளைக் காதலன் கொண்டு வந்து தோழியிடம் கொடுத்தான். அவள் அதைத் தலைவியிடம் அளித்தாள். தலைவியும் அதை ஏற்றுக் கொண்டாள். இது முதல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகிறது. இது அக்கால வழக்கம். இந்த முறையில் தலைவிக்கும் தலைவனுக்கும் சந்திப்பு ஏற்பட்டு அவர்கள் காதல் மணவாழ்வு நடத்தி வந்த காலத்தில் தினைக்கதிர்கள் முற்றிவிட்டன. தினைக்கதிர்களையும் குறவர்கள் அறுத்து விட்டனர். அதனால் தினைப்புனங் காக்கவேண்டிய வேலையும் தலைவிக்கு இல்லாமற் போய் விட்டது. தலைவி வீட்டிலேயே வாழவேண்டிய நிலைமை வந்துவிட்டது. ஆனால் தலைவி தன் காதலனைக் காணாத துயரத்தால் நாளுக்கு நாள் இளைத்துப் போனாள். அவளிடம் எப்பொழுதும் இருந்த கல கலப்பு இல்லை. எதையோ எண்ணிக் கவலைப்படுகிறவள் போலச் சோர்ந்திருந்தாள். அதைக் கண்ட அவ்வூரில் உள்ள அவளுடைய சுற்றத்தினர் கவலைப்பட்டனர். அவளுடைய தாய் முதலிய சுற்றத்தினர் முருகனால்தான் அவள் நோய்க்கு ஆளானாள்; முருகனுக்குப் பூசை போட்டால் அவளுடைய நோய் நீங்கிவிடும் என்று நினைத்தனர். உடனே அரளி மலர் மாலையை முருகனுக்குச் சூட்டி, தம் பெண்ணின் நோய் நீங்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதைக் கண்ட தோழி இவளுடைய நோயின் உண்மையை அறியாமல், இவர்கள் இப்படி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களே! அறியாமையால் வருந்துகின்றார்களே! என்று சொல்லி வருந்தினாள். அவ்வாறு வருந்தியதோடு அவள் நின்றுவிடவில்லை. தலைவியின் தாயார் முதலியவர்களிடமே உண்மையையும் உரைத்து விட்டாள். அன்று ஒரு தலைவன், இவள் தினைப் புனத்திலிருக்கும்போது செயலைத் தழையால் செய்த ஆடையை உதவினான் அதுதான் இவள் நோய்க்குக் காரணம் அவனைத் தேடிப் பிடித்து இவளுக்கு மணம்புரிந்து விட்டால் இவள் நோய் ஒழிந்து விடும் என்று கூறினாள். இந்நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். குறவன், வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளினான். அந்த நிலத்தை உழுதான். அதிலே தினையை விதைத்தான் தினையும் நன்றாக வளர்ந்து கதிர்கள் முற்றின. அத்தினைப் புனத்தை, பின்புறத்திலே வளர்ந்து தொங்குகின்ற கூந்தலை யுடைய தலைவி காத்து வந்தாள். அவள் அசைந்த நடையுடையவள். அவளுடைய இடைக்கு ஏற்ற தழை ஆடையை அன்றொரு தலைவன் உதவினான். அவன் தழையொடித்த அசோகமரம் அப்படியோ நிற்கின்றது. அதைப் பார்க்காமல், அதன் பக்கத்திலிருக்கும் அரளிச் செடியில் உள்ள மலர்களைப் பறித்து அதை மலையாகத் தொடுத்து முருகனுக்குச் சூட்டி விழா வெடுக்கின்றனர். இப்படிச் செய்து இவளுடைய சுற்றத்தார் வருந்துகின்றனர். இது அறியாமை என்றாள் தோழி. தோழியின் இக்கூற்றாகவே உள்ளது இச்செய்யுள், பாட்டு மரம்கொல் கானவன்புனம் துளர்ந்து வித்திய பிறங்குகுரல் இறடி காக்கும், புறம்தாழ் அம்சில் ஓதி அசைஇயல் கொடிச்சி, திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச், செயலை முழுமுதல் ஒழிய, அயலது அரலை மாலை சூட்டி ஏமுற்று அன்றுஇவ் அழுங்கல்ஊரே. பதவுரை:- மரங்கொல் கானவன்- மரங்களை வெட்டிய குறவன். புனம்துளர்ந்து வித்திய- நிலத்தை உழுது விதைத்த. பிறங்குகுறல்- விளங்குகின்ற கதிரையுடைய. இறடிகாக்கும்- தினையைக் காத்துக் கொண்டிருந்த. புறம்தாழ் அம்சில் ஓதி- புறத்திலே தொங்குகின்ற அழகிய சில கூந்தலையும். அசைஇயல்- தளர்ந்து நடக்கும் தன்மையையும் உடைய, கொடிச்சி- தலைவியின். திருந்து இழை அல்குற்கு- சிறந்த ஆபரணங்களை அணிந்த இடைக்குத் தகுந்த. பெரும்தழை உதவி- தழையுடையைத் தந்த தலைவனுக்கு மிகுந்த தழையைத்தந்து. செயலை- அசோக மரமானது. முழுமுதல் ஒழிய- தழை முழுவதும் அடியோடு ஒழிந்து நிற்க. (அதைக் காணாமல்) அயலது- அதன் பக்கத்திலே யிருந்த. அரலை - அரளிமலர்களைப் பறித்து. மாலை சூட்டி- அவற்றை மாலையாகத் தொடுத்து, முருகனுக்குச் சூட்டி விழா வெடுத்து. இவ்அழுங்கல் ஊர்ஏ- துன்பத்தையுடைய இவ்வூரில் உள்ள சுற்றம். ஏமுற்று அன்று- மயங்கி வருந்துகின்றது. கருத்து:- தழையுடை தந்தவனால் தலைவி வருந்துகின்றாள் என்பதை அவள் சுற்றத்தார் அறியவில்லை. விளக்கம்:- இது கூடலூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் சோர்வுக்கான உண்மைக் காரணத்தை உணராமல், அவள் சுற்றத்தார் முருகனுக்குப் பூசை போட்ட பொழுது தோழி கூறியது, குறிஞ்சித்திணை. இவ்வழுங்கல் ஊர்ஏமுற்றன்று என்று இறுதியடி மட்டும் மாற்றப்பட்டது. துளர்ந்து- கிளறி; உழுது. குரல்- கதிர். இறடி- தினை. செயலை -அசோகு; அசோகமரம். அரலை- அரளி. அழுங்கல்- துன்பம். ஏமுற்றன்று- மயங்கிற்று; வருந்திற்று. வருந்தேல் இன்று வருவர் பாட்டு 215 மனம் வருந்துவோர்க்கு ஆறுதல் கூறுவதும் ஒரு நல்ல கலையாகும். அவர் நம்பும்படி நல்ல காரணங்காட்டி ஆறுதல் மொழிகள் உரைத்தால் யாரும் மனத்துயரம் தணிவார்கள். இதுதான் ஆறுதல் உரைப்போர் அறிய வேண்டிய கலை. இக்கலைத் தன்மை இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது. தலைவன் பிரிவால் தலைவி வருந்தியிருக்கின்றாள். அவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கியிருக்கிறாள். அவளுடைய ஏக்கத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் மொழி உரைக் கின்றாள். தோழி வருந்தாதே! தலைவர் இன்று மாலைக்குள் வருவது உறுதி. அவர் சென்ற வழி பாலைநில வழி. அங்கு தண்ணீர் கிடைப்பது அருமை. அங்கே வறண்டு போன குளங்கள் தாம் உண்டு. ஆண் யானை தண்ணீரை விரும்பி நீர் அற்ற குளத்தைத் தேட வரும். அதில் நீர் கிடைக்காமையால், குண்டுக் கற்களுக்குப் பக்கத்திலே தன் பிடியைத் தழுவிக் கொணடு நிற்கும். கொடுமையான புலியினால் தன் பிடி யானைக்கு- தன் அன்புக்குரிய பெண் யானைக்கு- யாதொரு துன்பமும் வராமல் காப்பாற்றும். பெரிய மலையிடத்தில் இத்தகைய காட்சியை அவர் காண்பார். பாலை நில வழியிலே செல்லும் அவர் இக்காட்சியைக் காணாமல் இருக்க முடியாது. ஆண் யானை, தன் பெண் யானையிடம் காட்டும் காதலைக் கண்டால் அவர் உள்ளம் கனியும். நம்மிடம் உள்ள காதல் அவரை விரைவில் திரும்பச் செய்யும். ஆதலால் அவர் இன்று வருவர். நம்முடைய துன்பமும் மெதுவாக மறைந்து கொண்டிருக்கின்றது. ஒளி விடுகின்ற கதிரவன் மேற்கு மலையிலே மறைகின்ற மாலைக் காலத்திலே அவர் வந்து விடுவார். ஆதலால் நீ வருந்தாதே; என்றாள் தோழி. தோழி கூறிய இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கும் செய்யுள் இது. பாட்டு படரும் பைபயப்பெயரும்; சுடரும், என்றூழ் மாமலை மறையும்; இன்று அவர் வருவர்கொல்; வாழி தோழி! நீர் இல் வறும்கயம் துழைஇய இலங்கு மருப்புயானை, குறும் பொறை மருங்கின், அமர்துணை தழீஇக் கொடுவரி இரும்புலி காக்கும்; நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே! பதவுரை:- வாழி தோழி- வாழ்க தோழியே. நீர் இல்- தண்ணீர் இல்லாத. வறும் கயம் துழைஇய- வறண்ட குளத்தைத் துழாவிய. இலங்கு மருப்பு யானை- விளங்குகின்ற தந்தங்களுடைய ஆண் யானை. குறும் பொறை மருங்கின்- குண்டுக் கற்களின் பக்கத்திலே. அமர் துணை தழீஇ- தனது அன்புள்ள துணையான பிடி யானையைத் தழுவிக் கொண்டு. bfhL tÇ ïU« òÈ.- வளைந்த கோடுகளையுடைய பெரிய புலியின். காக்கும்- தாக்கு தலுக்கு ஆளாகாமல் காப்பாற்றுகின்ற. நெடுவரை மருங்கின்- பெரிய மலையிடத்திலேயுள்ள. சுரன் இறந்தோர் ஏ- பாலைவன நெறியைக் கடந்தவர், படரும் பை பயப் பெயரும்- துன்பமும் மெதுவாக மறைந்து கொண்டிருக்கும். சுடரும் என்றூழ்- கதிர் விடுகின்ற சூரியன். மாமலை மறையும்- மேற்கு மலையிலே மறைகின்றது. இன்று அவர் வருவர்- இன்று மாலையில் அவர் திரும்பி வந்துவிடுவார். கருத்து:- தலைவர் இன்று மாலையில் வருவது உறுதி. விளக்கம்:- இச்செய்யுளை இயற்றிய புலவர் பெயர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் என்பது. தலைவன் பிரிவால் வருந்தியிருந்த தலைவிக்குத் தோழி கூறியது பாலைத்திணை. சுரன் இறந்தோரே என்னும் இறுதித் தொடருக்குப் பின் படரும் பை பயப் பெயரும், சுடரும் என்றூழ், மாமலை மறையும், இன்று அவர் வருவர் கொல் என்ற அடிகளை இணைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. துடைஇய- இ உயிர் அளபெடை. தழீஇ-இ உயிர் அளபெடை. கொல், ஏ- அசைகள். படர் - துன்பம். பைபய - மெதுவாக. குறும் பொறை- பாராங்கற்கள்; கயம்- குளம். கருணையற்ற கார்காலம் பாட்டு 216 துக்கத்தை வெளியிலே தோன்றாமல் அடக்கிக் கொண்டிருப்பது அருமை. ஒரு சிலரால்தான் அப்படி அடக்கிக் கொண்டிருக்க முடியும். தம்மைத்தாம் அடக்கியாளும் ஆற்றல் அற்றவர்கள் துக்கத்தை அடக்கிக் கொள்ளுவதால் அதிகமான தொல்லைக்கு ஆளாவார்கள் ஆரிடத்திலாவது வாய்விட்டுக் கூறினால் தான் அவர்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்படும். தன்னிடம் அன்புள்ளவர்களிடம் தன் துன்பத்தை உரைத்தால் இன்னும் சிறிது ஆறுதல் வளரும். இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டது இச்செய்யுள். கார் காலத்திலே திரும்பி விடுவேன்; அது வரையிலும் வருந்தாமல் இரு என்று சொல்லிவிட்டுப் பொருள் தேடச் சென்றான் தலைவன். கார்காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் மட்டும் அவன் கூறிய தவணைப்படி வந்து சேரவில்லை. அதனால் வருந்திய தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் உரைக்கின்றாள். அவர் நன்மை தரும் சிறந்த செல்வத்தைத் தேடுவதற்காகப் போனார். கார்காலம் வருவதற்குள் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பசுமையான இலைகள் வாடா மலிருக்கின்ற வள்ளிக் கொடிகள் படர்ந்த காட்டின் வழியைக் கடந்து போனார். நானோ அவரைப் பிரிந்த துக்கத்தால் வருந்தினேன். அவர் இன்னும் வரவில்லையே என்று ஏங்கினேன். உள்ளத்துயர் காரணமாக என் உடம்பும் இளைத்துவிட்டது. ஆதலால் என் கையிலே கோத்திருக்கின்ற ஒளி பொருந்திய வளையல்கள் தாமே கழன்று விழுகின்றன. நான் கவலையடைந்தேன். சிறந்த படுக்கை யிலே கிடந்தேன். உறக்கம் வராமல் துன்புற்றுக் கிடக்கின்றேன். தோழியே! என்னுடைய இந்த நிலையைக் கண்டு இந்தக் கரிய மேகம் சிறிதும் மனம் இரங்கவில்லை. இவள் துன்பத்தால் வருந்துகின்றாள்; இரங்கத்தக்கவள் என்று எண்ணவே யில்லை; என்னுடைய உயிரைக் கவரவே நினைக்கின்றது. ஆதலால் இன்னும் மிகுந்த மழையைப் பெய்வதற்காக இடியிடிக்கின்றது; மின்னுகின்றது, இந்த நிலையில் நான் எப்படி உயிர் வாழ்வேன்; என் செய்வேன் என்றாள் இது தலைவியின் கூற்று. இப்பொருள் அமைந்த செய்யுள்தான் கீழ் வருவது. பாட்டு அவரே, கேடுஇல் விழுப்பொருள் தருமார், பரசிலை வாடா, வள்ளி அம் காடு இறந்தோரே; யானே, தோடுஆர் எல்வளை நெகிழ ஏங்கிப் பாடுஅமை சேக்கையில் படர் கூர்ந்திசினே; அன்னள் அளியன் என்னாது, மாமழை இன்னும் பெய்ய முழங்கி மின்னும் தோழி என்இன் உயிர் குறித்தே பதவுரை:- தோழி- தோழியே. அவர் ஏ கேடு இல் விழுப் பொருள்- அவர் கெடுதியில்லாத சிறந்த செல்வத்தை. தருமார்- தேடிக் கொண்டு வருவதற்காக. பாசிலை வாடா- பசுமையான இலைகள் வாடாத. வள்ளி அம்காடு- வள்ளிக்கொடி படர்ந்த அழகிய காட்டை. இறந்தோர் ஏ- கடந்து சென்றார். யானே- நானோ அவர் பிரிந்த துக்கத்தால். தோடு ஆர்- தொடுத்துக் கிடக்கின்ற. எல்வளை நெகிழ- ஒளி பொருந்திய வளையல்கள் கழலும்படி. ஏங்கி- கவலையடைந்து. பாடு அமை சேக்கையில்- சிறப்பாக அமைந்த படுக்கையிலே கிடந்து. படர் கூர்ந்திசின் ஏ- துன்பம் மிகுந்து வருந்துகின்றேன். அன்னள் அளியன் என்னாது- அப்படிப்பட்டவள் இரங்கத் தக்கவள் என்று நினைக்காமல். மா மழை- இந்தக் கரிய மேகமானது. என்இன் உயிர் குறித்து- எனது இனிய உயிரை வாங்குவதற்கு எண்ணி. இன்னும் பெய்ய- இது வரையிலும் பெய்தது போதென்று இன்னும் மழை பெய்வதற்காக முழங்கி - இடிஇடித்து. மின்னும் - மின்னிக் கொண்டிருக்கின்றது. கருத்து: இந்தக் கார்காலத்தால் மிகவும் வருந்துகின்றேன். விளக்கம்: இச்செய்யுளை இயற்றியவர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் என்னும் புலவர். கார்காலத்தில் தன் காதலன் திரும்பி வராமையால் வருந்திய தலைவி, தன் துன்பத்தைத் தன் தோழியிடம் கூறினாள். பிரிவை உணர்த்துதலின் பாலைத்திணை. `மாமழை என் இன்னுயிர் குறித்தே இன்னும் பெய்ய முழங்கி மின்னும் என்று இறுதியடிகள் மாற்றப்பட்டன. தோழி என்பது முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஏ- அசைகள். செல்வம் எப்பொழுதும் அழியாதது. அச்சிறப்பு செல்வத்திற்கு உண்டு. செல்வத்தைப் பெற்றவர்தான் அழிவர்; செல்வம் என்றும் நிலைத்திருப்பது இந்த உண்மையைக் `கேடு இல் விழுப்பொருள் என்ற தொடர் காட்டுகீன்றது. பாசிலை - பசுமையான இலை. பாசி - பசுமை. தோடு - தொடுத்தல். எல் - ஒளி. ஏக்கம் - கவலை. குறித்து - எண்ணி. உன் முடிவு நன்றுதான் பாட்டு 217 காதலன், காதலர்கள். இன்னும் மணமாகாதவர்கள். காதலி தினைப்புனத்திலே காவலிருந்தாள். அவளை அவன் - காதலவன் - அடிக்கடி சந்தித்து உறவாடி வந்தான் இப்பொழுது காவல் முடிந்துவிட்டது. தினைக் கதிர்களைக் கொய்துவிட்டார்கள். ஆதலால் தலைவி வீட்டுக்குப் போய்விட்டாள். வீட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்கப்பட்டுவிட்டாள். பருவமடைந்த பெண்ணாதலின் பெற்றோர்களின் கட்டுக்காவலுக்கு அடங்கியிருந்தாள். பகலிலே தலைவியைத் தலைவனால் சந்திக்க முடியாமல் போய்விட்டது. இரவிலே சந்திப்பதற்கும் முடீயவில்லை. தலைவியும், அவள் தோழியும் இரவிலே சந்திப்பதற்கு இணங்கவில்லை. தலைவியை இரவிலே ஒரு குறி3த்த இடத்திலே சந்திப்பதென்றால், தலைவன், காடு, மலை, நீரோடை முதலியவற்றைக் கடந்து வரவேண்டும். தலைவனை இவ்வழிகளைக் கடந்து வருமாறு கூறினால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் நேர்ந்தால் - என்ன செய்வது என்றே தலைவியும் தோழியும் எண்ணிக் கலங்கினர். ஆதலால் தான் இரவிலே சந்திப்பதற்கு இடந்தரவில்லை. இவ்வாறு தலைவனும், தலைவியும் சந்திக்கமுடியாமல் வருந்தும்போது, ஒரு நாள் தலைவன் தோழியைச் சந்தித்தான். தோழி அவனிடம், பகலிலோ, இரவிலோ சந்திக்க முடியாத நிலைமை ஏற்பட்டதற்காக வருந்தினாள். அப்பொழுது தலைவன் வேறொன்றைச் சிந்தித்தான். தலைவியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய்விடலாம் என்று எண்ணினான். இதைச் செய்வதன் மூலம் தனது உறுதியை மெய்ப்பிக்கலாம்; தனது கற்பையும் காப்பாற்றிவிடலாம்; தன்னூர்க்குத் தலைவியை அழைத்துச் சென்று கற்பு மணம் புரிந்துகொள்ளலாம் என்று எண்ணினான். இவ்வெண்ணத்தைத் தோழி பாராட்டினாள். பிறகு தலைவியின் சம்மதத்தைப் பெறுவதற்காகத் தோழி இச்செய்தியைத் தலைவியிடம் தெரிவித்தாள். `இப்பொழுது தினைப்புனம் காப்பதை விட்டு விட்டோம் ஆதலால் இனிப்பகலிலே தலைவியைச் சந்திக்க இயலாது. மீண்டும் தினைப்புனங் காக்கச் செல்லுங்கள் என்று எம்மை வெளியில் அனுப்பி வைத்தால்தான் தலைவியைப் பகலிலே காணமுடியும். இரவு நேரத்திலே நீ வந்து காணலாம் என்றாலோ, நீ வரும் வழியிலே உள்ள இடையூறுகளை எண்ணி அஞ்சுகின்றேன். உன்னைப் போலவே நாங்களும் காமநோயால் வருந்துகின்றோம். இத்துன்பத்தை நீக்க என்னதான் செய்வோம் என்று நான் நமது துன்பம் முழுவதையும் எடுத்துக் கூறினேன். நான் கூறிய எல்லாவற்றையும் கேட்ட தலைவன், வேறொன்றை நினைத்துப் பெருமூச்சு விட்டான். உன்னைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய்விடலாமென்று எண்ணியே அதை வாயால் சொல்லமுடியாமல் பெருமூச்சுவிட்டான். காமநோய் மிகவும் நுண்மையானது என்பதை அறிந்தேன். உடனே நான் `நீ நினைத்தது அறிவுள்ள செய்கைதான்; அறமுள்ள செயலுமாகும்; ஆனால் உண்மை தெரியாத ஊரார் பழிப்பார்கள் என்று சொன்னேன். இவ்வாறு தோழி தலைவியிடம் கூறினாள். உடன்போக்கு நலந்தான் என்ப8தையும் குறிப்பாகத் தெரிவித்தாள். பாட்டு தினைகிளி கடிகெனில் பகலும் ஒல்லும்; இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; யாங்குச் செய்வாம் எம்இடும்பை நோய்க்கென், ஆங்குயான் கூறிய அனைத்திற்குப், பிறிதுசெத்து, ஓங்குமலை நாடன் உயிர்த்தோன்; மன்ற ஐதே காமம்; யானே கழிமுதுக் குறைமையும்பழியும் என்றிசினே. பதவுரை:- தினைகிளி கடிக எனில்- மீண்டும் தினைப் புனத்திற்குச் சென்று கிளிகளை ஓட்டுங்கள் என்றால். பகலும் ஒல்லும்- பகல் காலத்திலும் சந்திக்க முடியும். இரவு நீ வருதலின்- இரவு நேரத்திலே நீ வந்து சந்திப்பதாயின். ஊறும் அஞ்சுவல் - வழியிலுள்ள இடையூறுகளுக்காக அஞ்சுவேன். யாங்குச் செய்வாம்- என்னதான் செய்வோம். எம்இடும்பை நோய்க்கு- எமது துன்பமாகிய நோய்க்கு. என ஆங்கு- என்று அப்படி. யான் கூறிய அனைத்திற்கு- நான் கூறிய அதற்கு. பிறிது செத்து- வேறு ஒன்றை நினைத்து. ஓங்குமலை நாடன்- உயர்ந்தமலை நாட்டை யுடைய தலைவன். உயிர்த்தோன்- வாயினால் தன் எண்ணத்தைச் சொல்ல முடியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றான். மன்ற ஐது ஏ காமம்- உறுதியாக நுண்மையானதுதான் காமம் என்பது. யானே- ஆதலால் யான். கழிமுதுக் குறைமையும்- நீ எண்ணியது மிகுந்த அறிவுடைமையும். பழியும்- சிறிது பழிக்கிடமுமாகும். என்றி சின் ஏ- என்று கூறினேன். கருத்து:- தலைவன் உன்னைத் தன்னூர்க்கு அழைத்துக் கொண்டு போக விரும்புகின்றான். விளக்கம்:- இச்செய்யுள் தங்கால் மூடக் கொல்லனார் என்னும் புலவர் பாடியது. காதலன், தன் காதலியைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. ஆதலால் அவன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பினான். இச்செய்தியைத் தோழி தலைவியிடம் உரைத்தாள். தோழிகூற்று. பாலைத் திணை. உள்ளம் இணைந்த காதலர்கள் இருவர், தங்கள் பெற்றோர் அறியாமல் சேர்ந்து சென்று மணம்புரிந்து கொள்வது பண்டைத் தமிழர் வழக்கம். ஒல்லும்- வாய்க்கும். ஊறு- இடையூறு. அனைத்திற்கு- அதற்கு. செத்து- எண்ணி. ஐது- நுண்மையானது. முதுக் குறைமை- அறிவுடைமை. ஏ- அசை. நமது உயிர்க்கு உயிர் தலைவரே பாட்டு 218 தலைவன் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள் தலைவி. அவள் நிலையைக் கண்டு தோழி இரங்கினாள். தோழியின் இரக்கத்தைக் கண்ட தலைவி அவளிடம் தன் உள்ளக் கருத்தை உரைத்தாள். தோழியே! தலைவர் நமது உயிருக்கு உயிர் போன்றவர். ஆதலால் அவர் இல்லாமல் ஒரு இமைநேரங்கூட நம்மால் வாழ முடியாது; இத்தகைய நீங்காத நெடுங்காதலை யுடையவர்கள் நாம். இத்தகைய நம்மை அவர் மறந்தார். பொருள் தேடச் சென்ற இடத்திலே தங்கிவிட்டார். இவ்வாறு தனித்திருக்கும் வல்லமை யுள்ள அவர் சார்பாக நாம் என்ன செய்யமுடியும்? பிரிந்த தலைவர் விரைந்து வரவேண்டும் என்பதற்காக நாம் ஒன்றும் செய்யவில்லை. பிளப்பும் குகையும் அமைந்த மலையிலே உள்ள சூலப்படையையுடைய துர்க்காதேவிக்கு வேண்டிக் கொண்டு பலி கொடுக்கும் கடனைச் செய்யாமலிருக்கின்றோம். அத் தெய்வத்தை வேண்டிக்கொண்டு கையிலே காப்புக் கட்டிக் கொள்ளாமலிருக்கின்றோம். பறவைகளின் சகுனத்தையும் பார்க்கா மலிருக்கின்றோம். பிறர் சொல்லும் நல்ல மொழியைக் கேட்கும் விரிச்சி என்னும் சொல்லைக் கேட்பதற்கும் நாம் நிற்கவில்லை இவற்றைப் பற்றி நாம் நினைக்காமலும் இருக்கின்றோம்; என்று கூறினாள். பாட்டு விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம்; புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; உள்ளலும் உள்ளாம்; அன்றே; தோழி! உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று இமைப்புவரை அமையா நம்வயின் மறந்த, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே. பதவுரை:- தோழி- தோழியே. உயிர்க்கு உயிர் அன்னர்- தலைவர் நமது உயிருக்கு உயிர்போன்றவர். ஆதலின் - ஆதலால். தம் இன்று- அவருடைய தொடர்பு இல்லாமல். இமைப்புவரை- இமைப் பொழுதுகூட. அமையா நம்வயின்- பிரிந்திருப்பதற்கு முடியாத நம்மை. மறந்து ஆண்டு- மறந்துவிட்டுப் பொருள் தேடச் சென்ற அவ்விடத்திலே. அமைதல்- தங்கியிருப்பதற்கான. வல்லியோர் மாட்டு ஏ- வல்லமையுடைய அவர் பொருட்டு. விடர் முகை அடுக்கத்து- பிளப்பும் குகையுமுள்ள மலையிலே உள்ள. விறல் கெழு சூலிக்கு- வெற்றி நிறைந்த துர்க்காதேவிக்கு. கடனும் பூணாம். பலியிடுகிறோம் என்ற நேர்த்திக் கடனையும் மேற்கொள்ளோம். கைநூல் யாவாம்- கையிலே காப்பு நூலையும் கட்டிக் கொள்ளோம். புள்ளும் ஓராம்- பறவை சகுனத்தையும் பாராமலிருக்கின்றோம். விருச்சியும் ஓராம்- நல்ல சொல்லைக் கேட்பதற்கும் நிற்காமலிருக்கின்றோம். உள்ளலும் உள்ளாம்- நினைக்கவும் செய்யாமலிருக்கின்றோம். அன்று, ஏ, mir.ச் சொற்கள். கருத்து: நம் அன்பின் மிகுதியை அறிந்து திரும்பிவர வேண்டுவது தலைவர் கடமை. அதற்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. விளக்கம்:- இச்செய்யுள் கொற்றன் என்னும் புலவரால் பாடப்பட்டது. தன்னிடம் இரக்கங்காட்டிய தோழியிடம் தலைவி உரைத்தது. பாலைத்திணை. விடர்முகை.......m‹nw’ என்ற வரிகளை வல்லியோர் மாட்டே என்றஇறுதித்தொடருக்கு¥பின்வைத்து¥பொருŸகூறப்பட்டது. தலைவனிடம் அகலாதஅன்புடையவர்கள்tறுதெய்tங்கiளவேண்oக்கொள்ளமாட்டார்கŸ. தலைவனுடைய அன்பு ஒன்றையே எதிர்பார்த்து நிற்பார்கள். இதுவே cண்மையுள்ளfற்பும்,fதலும்cள்ளbபண்களின்ïயல்பாகும்.ï¡bfhŸifia விளக்கிற்று இச்செய்யுள். விடர்- ãளப்பு.Kif-Fif. அடுக்கம்- மலை. சூலி- துர்க்கா தேவி; சூலத்தைக் கையிலே வைத்திருப்பவள் சூலி, தெய்வத்தை வேண்டிக் கொள்ளுகிறவர்கள் கையிலே நூல் கட்டிக் கொள்ளுவார்கள். இதற்குக் காப்பு என்று பெயர். விரிச்சி என்பது பிறர் கூறும் நல்லசொற்களை, நல்ல சகுனமாகவும், தெய்வவாக்காவும் நினைத்துக் கொள்ளுவது; தெய்வத்திற்குப் பூசையிட்டு, இத்தகைய நல்வாக்கைக் கேட்க நின்றுகொண்டிருப்பது. தலைவனுடைய அன்பைப் பெறாதவர்கள், அவன் பொருட்டாகத் தெய்வத்தை வேண்டிக் கொள்வதனால் பயன் இல்லை என்ற கருத்தும் இச்செய்யுளில் அமைந்து கிடக்கின்றது. துன்பந் தவிர்க்க இதுவே சமயம் பாட்டு 219 தலைவனும் தலைவியும் பல நாட்களாகக் காதல் மண மக்களாய்க் காலங்கடத்தி வருகின்றனர். இவ்வாறு காலங் கடத்துவது தலைவிக்குப் பிடிக்கவில்லை. தங்கள் கள்ள நட்பை ஊரார் உணர்ந்துவிட்டால் அவமானம்; ஆதலால் தலைவன் தன்னை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். இதைத் தலைவனுக்குத் தெரிவித்து விடவேண்டும் என்பது அவள் ஆசை. ஒருநாள் தலைவன் வேலிக்குப் புறத்திலே வந்து மறைந்து நின்றான். அப்பொழுது அவன் காதிலே கேட்கும்படி தலைவி தன் தோழியிடம் கூறுகின்றாள். தன்னை மணந்து கொள்வதற்கு இதுதான் தக்க தருணம் என்பதை எடுத்துக் கூறுகின்றாள். தோழியே! என் உடம்பைப் பசலை நோய் பீடித்துக் கொண்டு விட்டது. எனது காதல் அவரிடமே இருக்கின்றது. அவருடைய அன்பற்ற நெஞ்சிற்குள்ளே சென்று அடங்கியிருக்கின்றது. இதனால் என்னுடைய அடக்கமும் என்னை விட்டு நெடுந்தூரத்திலே போய்விட்டது. ஆயினும் என்னுடைய அறிவு என்னிடம் அடங்கி நிற்கவில்லை. தலைவர் இருக்கும் அவ்விடத்தை நோக்கிப் புறப்படுவோம் எழுக என்று சொல்லுகின்றது; இவ்வாறு நம்மால் முடியாத காரியத்தைச் சொல்லி இங்கேயே தங்கியிருக்கும் என்னுடைய நிலைமை இதுவாகும். நீங்கள் எந்த நிலையிலிருக்கின்றீர்கள் என்று அன்போடு கேட்டு எம் குறையைத் தீர்க்க விரும்புவாரானால் அவர் இப்பொழுதே உதவி செய்ய வேண்டும்; முள்ளோடு கூடிய இலையையும், பருத்த அடியையும் உடைய தாழைகள் நிறைந்த கடற்கரையையுடைய தலைவனுக்கு எமக்கு உதவி செய்ய இதுவே தக்க இடமாகும்; ஏற்ற சமயமாகும் இப்பொழுதே அவன் நம்மை மணந்து கொள்ள ஏற்பாடு செய்வதே தலைவன் தனது காதலின் உறுதியை வெளிப்படுத்தும் சமயமாகும். இவ்வாறு தலைவி தன் விருப்பத்தை எடுத்துரைத்தாள். இந் நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். பாட்டு பயப்பு என்மேனி அதுவே; நயப்பு அவர் நார் இல் நெஞ்சத்து ஆர் இடை அதுவே செறிவும் சேண் இகந்து அன்றே; அறிவே; ஆங்கண் செல்கம் எழுகென ஈங்கே வல்லா கூறி இருக்கும்; முள் இலைத் தடவு நிலைத்தாழைச் சேர்ப்பர்க்கு இடம்: மன்; தோழி! எந்நீரிரோ எனினே. பதவுரை:- தோழி- தோழியே. பயப்பு- பசலை நிறம். என் மேனி அதுவே- என் உடம்பின் மேல் உள்ளது. நயப்பு -எனது காதல். அவர் நார் இல் நெஞ்சத்து- அவருடைய அன்பற்ற நெஞ்சமாகிய. ஆர் இடை அதுவே- அரிய இடத்தில் உள்ளது. செறிவும்- எனது அடக்கமாகிய நாணமும். சேண் இகந்து அன்று ஏ- நெடுந்தூரத்தில் நீங்கி விட்டது. அறிவு ஏ- எனது அறிவோ. ஆங்கண் செல்கம்- தலைவன் இருக்கும் அவ்விடத்திற்குச் செல்வோம். எழுக என- புறப்படுக என்று சொல்லி. ஈங்கே வல்லா கூறி இருக்கும்- இங்கேயே நம்மால் முடியாதவற்றைச் சொல்லிக் கொண்டு இருக்கும். எந்நீரிரோ எனினே- எத்தன்மையுடன் இருக்கின்றீரோ என்று கேட்டு நலம் புரிய நினைப்பாராயின். முள் இலை- முள்ளமைந்த இலையும். தடவுநிலை- பருத்த அடியும் உள்ள. தாழை சேர்ப்பர்க்கு- தாழைகள் வளர்ந்த கடற்கரையை யுடைய தலைவனுக்கு. இடம்- உதவி செய்வதற்குத் தக்க சமயம் இதுவே யாகும். கருத்து:- தலைவர் நம்மை வரைந்து கொள்ளுவதற்கு ஏற்ற காலம் இதுதான். விளக்கம்:- இச்செய்யுள் வெள்ளூர் கிழார் மகனார் வெண் பூதியார் என்னும் புலவர் பாடியது. வேலிப்புறத்திலே நின்ற தலைவன் காதிலே கேட்கும்படி, தலைவி தன் தோழியிடம் உரைத்தது. தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தைத் தலைவன் அறியக் கூறியது. தலைவி கூற்று. நெய்தல் திணை. தோழி என்னும் சொல் முதலில் வைக்கப்பட்டது. எந்நீரிரோ எனின் ஏமுள் இலைத் தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு இடம் மன் என்று இறுதி அடிகள் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. மன்-அசைச்சொல். பயப்பு- பசலை; நயப்பு- காதல்; அன்பு. நார்- அன்பு. ஆர்- இடை- அரிய இடம்; தங்குதற்கரிய இடம். செறிவு- அடக்கம்; நாணம் என்றும் கூறலாம். அடக்கத்தன்மை நாணத்தை வளர்க்கும். வல்லா- மாட்டாதவற்றைச் செய்ய முடியாதவை. மாலைக் காலத்தைப் பார் பாட்டு 220 பொருள் தேடச் சென்ற தலைவன், கார்காலத்திலே கட்டாயம் வந்துவிடுவேன் என்று தலைவியிடம் சொல்லிச் சென்றான். கார் காலமும் வந்துவிட்டது. ஆனால் தலைவன் வரவில்லை. கார் காலத்திலே, மாலைக்காலத்திலேதான் புதுமணக்காதலர்கள் பால் காதல் உணர்ச்சி மிகுந்து நிற்கும். ஆதலால் அன்புள்ள காதலன் எங்குச் சென்றாலும் மாலைக் காலத்திலே திரும்பி விடுவான்; தனித்திருக்கும் காதலியின் கலக்கத்தை நீக்க வந்துவிடுவான். இந்தத் தலைவனோ கார்காலம் வந்தும் மாலைக் காலம் ஆகியும் வந்திலன். ஆதலால் உள்ளம் வருந்திய தலைவி தன் துயரத்தைத் தோழியிடம் உரைக்கின்றாள். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். தோழியே! அதோ பார்! முன்பு பெய்த மழையால் செழித்து வளர்ந்த வரகின் கதிர்களைக் கொய்து விட்டனர். கதிர் அற்ற தட்டைகள் நிற்கின்றன. அத்தட்டையில் உள்ள இலைகளை மான்கள் மேய்ந்தன. இப்பொழுது அவ்வரகுப் பயிரின் அடிப் பாகங்கள் மட்டும் நிற்கின்றன. அவற்றின் பக்கத்திலே முல்லைக் கொடிகள் பூத்திருக்கின்றன. அவற்றின் அரும்புகள் காட்டுப்பூனை சிரித்தால் அதன் பற்கள் எப்படிக் காணப்படுமோ அப்படிக் காணப் படுகின்றன. இவ்வாறு மணம் வீசும் முல்லை மலர்கள் காணப்படும். முல்லை நிலத்திலே வண்டுகள் அம்மலர்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கின்றன மாலைக் காலமும் வந்து விட்டது. இந்த மாலைக் காலத்திலும் பொருள் தேடப் பிரிந்து நம் தலைவர் வரவில்லை. இதை நீ எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மாலைக் காலத்திலும் அவர் வராத காரணத்தால் நம் மீது கொண்ட காதலை மறந்தாரோ என்று ஐயப்படுகின்றேன். நான் என்ன செய்வேன்,! பாட்டு பழமழைக் கலித்த புதுப்புன வரகின், இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை, இருவி சேர் மருங்கில், பூத்த முல்லை, வெருகு சிரித்தன்ன, பசுவீ மென்பிணிக் குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப்புறவின், வண்டு சூழ் மாலையும் வாரார்; கண்டிசின்! தோழி! பொருள் பிரிந்தோரே. பதவுரை:- தோழி பொருள் பிரிந்தோர் ஏ- தோழியே! பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்த நம் தலைவர். பழமழை கலித்த- முன்பு பெய்த மழையால் செழித்து வளர்ந்த. புதுப்புன வரகின்- புதிதாக நிலத்திலே விளைந்த வரகினது. இலை மேய்ந்த மானால் மேயப்பட்ட. குறை தலைப்பாவை- குறைந்த தலையை யுடைய வரகின் அடிப்பாகத்தின் இருவி சேர் மருங்கின்- கதிர் கொய்த தட்டையின் பக்கத்தில். பூத்த முல்லை- மலர்ந்திருக்கின்ற முல்லைக் கொடியின். வெருகு சிரித்து அன்ன- காட்டுப்பூனை சிரித்துக் கொண்டிருப்பது போன்ற. பசுவீ- பசுமையான புற இதழ்களையுடைய. மெல் பிணி குறுமுகை- மென்மையாக மூடிக் கொண்டிருக்கின்ற மலரும் பருவம் உள்ள சிறிய மொட்டுகள், அவிழ்ந்த- மலர்ந்த. நறு மலர்ப்புறவின்- நறுமணமுள்ள மலர் களையுடைய முல்லைநிலத்திலே. வண்டு சூழ் மாலையும்- வண்டுகள் அம்மலர்களில் மொய்த்துக் கொண்டிருக்கின்ற இந்த மாலைக் காலத்திலும். வாரார் - அவர் முன்பு உறுதி கூறியபடி வந்திலர். கண்டிசின்- இதை நீ எண்ணிப்பார். கருத்து:- பிரிந்தவர் இந்தக் கார் காலத்து மாலைப் பருவத்திலும் வரவில்லை. விளக்கம்:- இது ஒக்கூர் மாசாத்தி என்னும் புலவர் பாட்டு. தலைவன் தான் சொல்லியபடி வராததைக் கண்ட தலைவி தோழியிடம் உரைத்தது. தலைவி கூற்று. முல்லைத்திணை. வரகின் கதிர்கள் கொய்யப்பட்டு விட்டன. வரகின் தாளை மான்கள் மேய்ந்து விட்டன. அவற்றின் பக்கத்திலே முல்லைக் கொடிகளிலே மலர்கள் பூத்திருக்கின்றன. அவை மணம் வீசுகின்றன. அம்மலர்களிலே வண்டுகள் மொய்க்கின்றன. இவை கார்காலத்து மாலைக் காலக் காட்சி. காட்டுப்பூனையின் பற்கள் முல்லைமொட்டுக்களுக்கு உவமை. கலித்த- தழைத்த. இரலை- மான். பாவை -வரகின்தாள். இருவி- வரகுத்தட்டை. வெருகு- காட்டுப்பூனை. பசுவீ- மலரும் பக்குவமுள்ள மொட்டின் புறவிதழ். புறவு- முல்லை நிலம். முல்லை மலர்ந்தன, அவரோ வாரார் பாட்டு 221 தலைவி தன் துக்கத்தை வாய்விட்டுச் சொல்லவில்லை. நெஞ்சிலே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தாள்.கார் காலம் வந்துவிட்டது. கார் காலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற காதலர் இன்னும் வரவில்லை. v‹d fhuznkh? என்று ஏக்கம்கொண்டிருந்தாள். தலைவியின் உள்ளத்துயரை உற்றுணர்ந் தாள் தோழி. நீ அவர் வரும் வரையில் பொறுத்திருக்க வேண்டும்; மனந்தளரக் கூடாது என்று வற்புறுத்தினாள். இதைக் கேட்ட தலைவி நான் எப்படிப் பொறுத்திருப்பேன்? என்று விடையிறுத்தாள். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதுதான் இச்செய்யுள். தோழியே நீ, என்னைப் பொறுத்துக் கொண்டிருக்கும்படி சொல்லுகின்றாய். நானும் பொறுத்துத்தான் பார்க்கின்றேன். ஆனால் காலம் என்னைச் சும்மாவிட வில்லை. கவலையைத்தான் வளர்க்கின்றது. நீயே நன்றாகப் பார்! கார் காலத்திலே மலர்கின்ற முல்லைக் கொடிகளும் பூத்துப் பொலிந்திருக்கின்றன. ஆடு மேய்க்கின்றவர்கள், மழை பெய்தால் தலையிலே கவிழ்த்துக் கொள்ளும் பறியைக் கையிலே வைத்துக் கொண்டிருக்கின்றனர். குட்டிகளையுடைய ஆடுகளுடன் சென்று தங்கியிருப்பதற்காகக் கறந்த பாலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வருகின்றான். வீட்டிலே பக்குவம் செய்த பால் சோற்றுடன் ஆடுகள் இருக்கும் இடத்திற்குத் திரும்புகின்றான். அதோ அந்த ஆட்டு இடையனைப் பார். அவன் தலையிலே சூடியிருக்கும் மலர்களை யெல்லாம் பார். அவை அனைத்தும் சிறிய பசுமையான முல்லை மொட்டுகளேயாகும். இந்தக் கார்காலத்திலும் பிரிந்த அவர் வரவில்லை. ஆதலால் நான் எப்படித்தான் பொறுத்திருப்பேன். பாட்டு அவரோ வாரார்; முல்லையும் பூத்தன; பறியுடைக் கையர்; மறி இனத்து ஒழியப், பாலொடு வந்து, கூழொடு பெயரும், யாடுடை இடைமகன், சென்னிச் சூடிய எல்லாம், சிறுபசு முகையே. பதவுரை:- அவரோ வாரார்- அவரோ இன்னும் வந்திலர்; முல்லையும் பூத்தன- கார் காலத்திலே பூக்கும் முல்லை மலர்கள் எங்கும் பூத்துவிட்டன. பறி உடைக்கையர்- ஆடுமேய்க்கின்ற வர்கள் பறியைக் கையிலே ஏந்தியிருக்கின்றனர். மறி இனத்து ஒழிய- குட்டிகளையுடைய ஆட்டு மந்தையுடன் சென்று தங்கு வதற்காக. பால் ஓடு வந்து- கறந்த பாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து. கூழொடு பெயரும்- பக்குவம் செய்த பாற் சோற்றுடன் திரும்பிச் செல்லுகின்ற. யாடு உடை இடைமகன் - ஆடுகளையுடைய இடையன். சென்னி சூடிய எல்லாம்- தலையிலே சூட்டிக் கொண்டிருக்கின்ற, மலர்கள் எல்லாம். சிறுபசுமுகையே- சிறிய தளதளப்பான முல்லை மொட்டுகளேயாகும். கருத்து:- கார் காலத்திலும் தலைவர் வரவில்லை. அவர் கூறிய வாக்கைக் காப்பாற்றவில்லை. விளக்கம்:- இது உறையூர் முது கொற்றன் என்னும் புலவர் செய்யுள். தன்னைப் பொறுத்திருக்கும்படி புகன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது. முல்லைத்திணை. இதுவும் கார் காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் செய்யுள். கார் காலத்திலே மழையால் நனையாமல் இருப்பதற்காகக் கையிலே பனையோலையால் செய்த பறியை வைத்திருக்கின்றனர். இடையர் கறந்தபாலை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆட்டு மந்தைக்குத் திரும்புகின்றனர். அவர்கள் தலையிலே முல்லை மலர்களை அணிந்திருக்கின்றனர். இது கார்காலக் காட்சி பறி - பனையோலையால் செய்யப்பட்டது. மழைக்காக இடையர்கள் அதைத் தலையிலே கவித்துக் கொள்ளுவர். மறி- ஆட்டுக்குட்டி. கூழ்- உணவு. இவளால்தான் நம் எண்ணம் ஈடேறும் பாட்டு 222 ஒரு தலைவன், ஒரு தலைவியின் காதலைப் பெறுவதற்குப் பல வகையில் முயற்சி செய்து பார்த்தான். அடிக்கடி, தலைவி வந்து விளையாடும் சோலைக்கு வந்து போவான். தலைவியை எட்டி நின்று காண்பான். அவளுடன் உரையாடி அவள் உள்ளத்தை உணர்ந்து கொள்ளுவதற்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை. அதனால் ஏமாந்து திரும்பி விடுவான். ஒரு நாள் தலைவன் வந்த சமயத்தில் தலைவியும், அவள் தோழியும் ஒன்று சேர்ந்திருந்தனர். அக் காட்சியைக் கண்டான். தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டான். அவன் உள்ளத்திலே, இனிமேல் தலைவியின் அருளைப் பெற்றுவிடமுடியும் என்று துணிவு கொண்டான்- இத்தோழியின் வாயிலாகவே தலைவியின் அன்பை அடைய முடியும் என்று எண்ணினான். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பதே இச்செய்யுள். அழகிலே சிறந்த இத்தலைவியின் கண் பிச்சிப்பூவின் முதுகைப் போன்று சிறந்து விளங்குகின்றது. மழைக் காலத்திலே மலர்ந்து, மழைத்துளியால் நனைந்து நீர் சிந்துகின்ற கொழுத்த பிச்சியின் முதுகும் இவள் கண்களும் ஒத்திருக்கின்றன. அக்கண்கள் அழகிய கடையையும் குளிர்ச்சியையும் கொண்டிருக்கின்றன. இவள் மேனியோ குளிர்ந்த மழைத்துளி பொருந்திய தளிர் போன்ற மென்மையை உடையது. இத்தகைய தன்மையுள்ள தலைவி, தோழி என்ன செய்கிறாளோ அதையே தானும் செய்கின்றாள். தோழி தெப்பத்தின் தலையைக் கையால் பிடிக்கும் போது இத்தலைவியும் அத்தலையைப் பிடிக்கின்றாள், தோழி அத் தெப்பத்தின் கடைப்பகுதியைக் கையால் பிடிக்கும்போது இவளும் அந்தக் கடைப்பகுதியைத் தன் கையால் பிடிக்கிறாள். தோழி தெப்பத்தைக் கைவிட்டு அத் தோழியிடன் தண்ணீரிலே மிதந்து செல்வாள் போலவே காணப்படுகின்றாள். இவ்வாறு தலைவன் தானே எண்ணிக் கொண்டான். நீராடும் போது தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து உள்ளத்திலே நம்பிக்கை கொண்டான். பாட்டு தலைப்புணைக் கொளினே தலைப்புணைக்கொள்ளும் கடைப்புணைக்கொளினே கடைப்புணைக்கொள்ளும்; புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், ஆண்டும் வருகுவள் போலும்; மாண்ட மாரிப் பித்திகத்து, நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும், கொழும்கடை மழைக்கண், துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. பதவுரை:- மாண்ட மாரிப்பித்திகத்து- சிறந்த மழைக் காலத்து பிச்சியின்; நீர்வார்- நீர் ஒழுகுகின்ற. கொழுமுகை- கொழுத்த மொட்டின். செவ்வரிந் உறழும்- சிவந்த முதுகைப் போன்ற. கொழும் கடை மழைக்கண்- கொழுத்த கடைப் பகுதியை யுடைய குளிர்ந்த கண்களை உடையவள். துளி தலைத் தலைய- மழைத் துளியைத் தன்னிடத்திலே பொருந்திய. தளிர் அன்னோள் ஏ- தளிர்போன்ற மெல்லிய மேனியையும் உடையவள் (தலைவி). புணைதலைக் கொளின் ஏ- தோழியானவள் தெப்பத்தின் தலையைக் கையினால் பற்றிக் கொண்டால். புணைதலைக் கொள்ளும்- இத்தலைவியும் அத்தெப்பத்தின் தலையைப் பிடித்துக் கொள்ளுவாள். புணை கடைக் கொளினே- தோழியானவள் தெப்பத்தின் கடைப் பகுதியைப் பிடித்துக் கொள்ளுவாள் ஆனால், புணைகடை கொள்ளும்- இவளும் தெப்பத்தின் கடைப் பகுதியைப் பிடித்துக் கொள்ளுவாள். புணை கைவிட்டு- தோழியானவள் தெப்பத்தைக் கைவிட்டு. புனலோடு ஒழுகின்- தண்ணீரின் போக்கிலே போவாளாயின். ஆண்டும் வருகுவள் போலும்- அப்பொழுதும் அத்தோழியுடன் சேர்ந்து வருவாள் போலவே காணப்படு கின்றாள். கருத்து:- இத்தோழியும் தலைவியும் ஒத்த மனமுள்ளவர்கள். தோழியின் சொல்லைத் தலைவி மறுக்கமாட்டாள். விளக்கம்:- இது, சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் அன்பைப் பெறாது தவித்தான் ஒரு தலைவன். அவன், தலைவியும் தோழியும் ஒன்றாக நீராடிக் கொண்டிருந்த போது கண்டான். அப்பொழுது தனக்குத்தானே சொல்லிக் கொண்ட செய்தியே இச் செய்யுள். தலைவன் கூற்று. குறிஞ்சித் திணை. மாண்டமாரிப் பித்திகத்து நீர்வார் கொழு முகைச் செவ்வெரிந் உறழும், கொழும் கடை மழைக்கண் தளிதலைத் தலை இய தளிர் அன்னோளே, என்ற அடிகளை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. தலைவியின் கண்களுக்குப் பித்தி மொட்டின் புறமும், உடம்புக்கு மழைக்காலத்து மெல்லிய தளிரும் உவமானம். பிச்சி என்னும் மலர் மழைக்காலத்தில் மலரக்கூடியது. புணை- தெப்பம். புணை தலை; புணைகடை என்பன தலைப் புணை, கடைப்புணை என மாறி நின்றன. வெரின் - முதுகு; புறம்- கொழும்கடை- செழித்த கடைக்கண். மழைக்காலத்தில் மொட்டின் மேலும், தளிரின் மேலும் மழைநீர் விழிந்து ஒழுகிக் கொண்டிருக்கும்; ஆதலால் நீர்வார் கொழு முகை என்றும், துளி தலைத் தலைஇய தளிர் என்றும் கூறப்பட்டன. ஏ-அசைச்சொற்கள். தலைஇய- இ உயிர் அளபெடை. துன்பத்திற்குக் காரணம் நீயேதான் பாட்டு 223 தலைவியை விரைவில் மணம் புரிந்து கொள்ளவேண்டும், என்பதே தலைவனுடைய ஆவல். அதற்காகவே அவன் பொருள் தேடப் புறப்பட்டுப் போய்விட்டான். அவன் திரும்பி வரக் காலம் தாழ்ந்தது. அதனால் தலைவி உள்ளம் சோர்ந்தாள். உடலும் இளைத்தாள். அச்சமயத்திலே தோழி ஆறுதல் மொழிகள் உரைத்தாள் உன் பொருட்டாகத்தானே தலைவன் பொருள் தேடப் போயிருக்கிறான். நீ இப்படி நெஞ்சம் நைந்து வருந்தலாமா? வருந்தாதே! பொறுத்திரு என்றாள் தோழி. இதைக் கேட்ட தலைவி, அத்தோழிக்கு மறுமொழி உரைக்கின்றாள். இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். தோழியே! நீ தான் முன்பு எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்படும்படி செய்தாய். எங்கள் அன்பை ஒன்றாக்கி முடிச்சுப் போட்டவள் நீயேதான். அந்நாளில் நமது பெரிய ஊரிலே உள்ளவர்கள் விழா நடத்தினர். மிகவும் ஆரவாரத்துடன் அந்த விழாவை நடத்தினர். அந்த விழாவுக்குச் சென்றால் தலைவனைக் காணலாம், என்றாய். அதன் பொருட்டு விழாவுக்குப் போவோம். விழாவுக்குப் போவோம் என்று என்னை வற்புறுத்தினை. உன் சொல்லைக் கேட்டு நானும் உன்னுடன் விழாக் காணப் புறப்பட்டு வந்தேன். அப்பொழுது நல்லவர்கள் பல நல்ல சொற்களை நவின்றனர். அச்சொற்கள் நமக்கு நல்ல சகுனமாக இருந்தன. தலைவனையும் கண்டு களித்தோம். அதன் பிறகு தலைவன் நம்மைச் சந்தித்தபோது பல பரிசுகளைத் தந்தான். கிளிகளை ஓட்டுவதற்குச் சாதனமாகிய தழல், தட்டைகளைத் தந்தான். தழை உடையையும் கொடுத்தான். இவை எல்லாம் உனக்கே ஏற்றவை, என்று இனிமையாகப் பேசினான். இன்னும் என் உள்ளத்தைக் கவர்வதற்காகப் புனைந்துரைகள் பலவற்றைக் கூறினான். இவ்வாறு செய்தும், உரைத்தும், அவன் என்னுடைய பெண் நலத்தைக் கவர்ந்தான். என் அன்னையால் என்னிடம் இருக்கும்படி பாதுகாக்கப்பட்ட என் பெண்ணலத்தை அவன் கொள்ளை கொண்டான். யாம் இப்பொழுது பெண்ணலத்தை இழந்து இந்த நிலையில் இருக்கின்றோம். பாட்டு பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில், செல்வாம்! செல்வாம்! என்றி! அன்று இவண் நல்லோர் நல்லபல; ஆல் தில்ல, தழலும் தட்டையும் முறியும் தந்து, இவை ஒத்தன நினக்கு, எனப் பொய்த்தன கூறி, அன்னை ஓம்பிய ஆய் நலம் என்னைக் கொண்டான்; யாம் இன்னம் ஆல் இனியே. பதவுரை:- பேர் ஊர் கொண்ட- பெரிய ஊரினர் முன்பு செய்வதற்கு எடுத்துக்கொண்ட. ஆர் கலி விழவின்- ஆரவார முள்ள திருவிழாவுக்கு. செல்வாம் செல்வாம் என்றி- தலைவனைக் காணும் பொருட்டுப் போவோம் போவோம் என்றனை. அன்று இவண் - அவ்விழாவுக்குப் புறப்பட்ட அன்று இங்கேயிருந்த. நல்லோர் நல்ல பல- நல்லவர்கள் நல்ல சகுனமாக நல்ல பல சொற்களைக் கூறினார்கள். தழலும், தட்டையும் முறியும் தந்து - அதன் பின் தலைவன் தழல், தட்டை, தழை இவைகளைக் கொண்டு வந்து கொடுத்து. இவை நினக்கு ஒத்தன என- இவை உனக்கு ஏற்றவை என்று சொல்லி. பொய்த்தனகூறி- நாம் நம்பும்படி பொய்யுரைகள் பலவும் பேசி. அன்னை ஓம்பிய ஆய் நலம்- என் அன்னையால் பாதுகாக்கப்பட்ட சிறந்த எனது பெண் நலத்தை. என்னைக் கொண்டான்- என்னிடத்திலிருந்து கவர்ந்து கொண்டான். யாம் இனி இன்னம் ஆல்- அதனால் யாம் இப்பொழுது பெண்ணலத்தை இழந்து இந்நிலையிலிருக்கின்றோம். கருத்து:- தலைவனால் முன்பு என் பெண்ணலத்தை இழந்தேன். அதை எண்ணியே இப்பொழுது வருந்துகின்றேன். விளக்கம்:- இச்செய்யுளை இயற்றியவர் மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன் என்னும் புலவர். தலைவர் பிரிவால் வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் உரைத்த போது தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. இவை ஒத்தன நினக்கு என்பது இவை நினக்கு ஒத்தன என்றும், யாம் இன்னம் ஆல் இனியே என்பது யாம் இனி இன்னம் ஆல் என்றும் மாற்றப்பட்டன. ஆல், தில்ல, ஏ, ஆல், முதலியன அசைச்சொற்கள். ஒரு காரியத்தைக் கருதிப் புறப்படும் பொழுது யாரேனும் நன்மொழிகள் கூறுவார்களானால் அதை நல்ல சகுனமாகக் கொள்வது பண்டை வழக்கம். தழல்- சுற்றுவதனால் ஓசை உண்டாகும் ஒரு கருவி. கவரே என்றும் கூறுவர். தட்டை- தட்டி ஓசை எழுப்புவது. முறி- தழை. தழையால் செய்த உடை. அன்னை, என்னை வெளியிலே செல்லாமல் வீட்டில் வைத்துக் கொண்டு என் பெண்மை நலத்தைக் காப்பாற்றினாள். நீ என்னை விழாவுக்கு அழைத்துச் சென்று என் பெண்மை நலத்தை இழக்கச் செய்தாய் என்று தோழியின் மேல் குறை கூறினாள் தலைவி. ஊமன் கொண்ட உள்ளத்துயர் பாட்டு 224 தலைவியின் துக்கம் எல்லை கடந்துவிட்டது. அவள் இன்னும் தலைவனைக் காணவில்லையே என்று ஏங்கிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள். உண்ணவில்லை; உடுத்தவில்லை; ஒருவரோடும் உரையாடவும் இல்லை. கவலை தேங்கிய முகத்துடன் கண் கலங்கியிருந்தாள். தலைவியின் இந்த நிலையைக் கண்ட தோழி இன்னது செய்வதென்று தோன்றாமல் இன்னல் உற்றாள். தலைவி துக்கம் தாங்கமுடியாமல் உயிர் துறப்பாளோ என்று எண்ணி வருந்தினாள். தோழியின் துயரம் தலைவியின் உள்ளத்தை வெதுப்பிற்று தலைவரை எண்ணி வருந்துவதைவிட இத்துக்கம் மிகுந்து பெருகிற்று. அதனால் தோழிபடுந் துன்பத்தை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பேன், என்று சொல்லி ஏங்கினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது இச்செய்யுள். என் காதலர் என்னைப் பிரிந்து துன்பந்தரும் வழியிலே நடந்துபோனார். அவர் சென்ற வழியிலே எந்த வழியாகப் போகலாம் என்ற ஐயத்தை எழுப்பும் பல கிளை வழிகள் உண்டு; அவ்வழியிலே யா மரங்கள் வளர்ந்திருக்கும்; அது நீண்ட வழியுமாகும். அவருடைய கொடுமையை எண்ணித் தூங்காமல் துன்புறுகின்றேன். இந்தத் துன்பத்தைக் காட்டினும் என் தோழியின் துன்பத்தைக் கண்டு மிகவும் வருந்துகின்றேன். இந்தத் துன்பத்தை வாயினால் சொல்லமுடியாமல் வாடுகின்றேன். கபில நிறமுள்ள பசுவொன்று இராப்பொழுதிலே ஒரு கிணற்றிலே விழுந்துவிட்டது. அதிலிருந்து வெளிவர முடியாமல் வருந்துகின்றது. அதை உயர்திணையைச் சேர்ந்த ஊமை ஒருவன் பார்க்கின்றான். அவனால் அந்தப் பசுவைக் காப்பாற்றவும் முடியவில்லை. கூச்சல்போட்டு மற்றவர்களை அழைத்து அப் பசுவைக் காப்பாற்றும்படி செய்யவும் முடியவில்லை. ஆதலால் என்செய்வதென்று ஏங்கித் தவிக்கின்றான். அவனைப் போலவே நானும் வருந்துகின்றேன். இத்தோழிபடும் துயரைக்கண்டு, பொறுக்க முடியாமல் வருந்துகின்றேன் என்று கூறினாள் தலைவி. இப்பொருள் அமைந்த பாடல் வருமாறு: பாட்டு கவலை, யாத்த, அவலம் நீள்இடைச் சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா நோயினும் நோய் ஆகின்றே; கூவல் குரால் ஆன படுதுயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே. பதவுரை:- கவலை- பலகிளை வழிகள். யாத்த- யாமரங்கள் நிறைந்தவை. அவலம் நீள்இடை- துன்பந்தரும் நீண்டவழி- ஆகிய இந்நெறியிலே. சென்றோர் - பிரிந்து சென்றவருடைய. கொடுமை எற்றி- கொடுமையை நினைத்து. துஞ்சாநோயினும்- தூங்காமல் இருக்கின்ற துன்பத்தைக் காட்டிலும். நோய் அ ஏ- இப்பொழுது மிகுந்த துன்பம் உண்டாகின்றது. கூவல்- கிணற்றிலே வீழ்ந்து விட்ட. குரால் ஆன்- கபில நிறமுள்ள பசுவானது. படுதுயர் இராவில் கண்ட- படுகிற துன்பத்தை இரவிலே பார்த்த. உயர்திணை ஊமன்- உயர்திணையைச் சேர்ந்த ஊமை ஒருவன். போல- அடைகின்ற உள்ளக் கவலையைப் போல. தோழி நோய்க்கே- தோழியானவள் என் பொருட்டு வருந்தும் துயரத்துக்காக. துயர் பொறுக்கல்லேன்- என் துயரத்தைப் பொறுக்க முடியாமல் உள்ளம் புழுங்குகின்றேன். கருத்து:- அவர் பிரிந்த துயரைக்காட்டிலும், தோழியின் துயரத்துக்காக மிகவும் வருந்துகின்றேன். விளக்கம்:- கூவன்மைந்தன் என்னும் புலவர் இயற்றிய செய்யுள் இது. தன் பொருட்டு வருந்திய தோழியின் துன்பத்தைக் கண்டு தலைவி கூறியது. பாலைத்திணை. தோழி நோய்க்கே துயர்பொறுக்கல்லேன் என்று இறுதி அடிமட்டும் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. கிணற்றிலே விழுந்த பசுவின் துன்பத்தைக் கண்டு வருந்தும் ஊமன் துயரமும், தன் துயரமும் ஒன்றென்று உரைத்தாள் தலைவி. பசுவின் துயர்கண்ட ஊமை அதைப் பிறரிடம் சொல்ல வாயில்லாமல் வருந்துவதுபோல நானும் தோழியின் துயரைக் கண்டு பிறரிடம் சொல்லமுடியாமல வருந்துகின்றேன் என்று கூறினாள் தலைவி. என் துன்பத்தை ஆற்றவேண்டியவள் தோழி. அவள் இதைச் செய்யாமல், என்னை இன்னும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கினாளே என்ற கருத்தும் இச்செய்யுளில் அமைந்து கிடக்கின்றது. கவலை- பிளவு; பல கிளைவழிகள். யா என்பது ஒரு வகை மரம். அவலம்- துன்பம். கூவல்- கிணறு. குரால் ஆன் - மயிலைப் பசு; மயிலை நிறத்தையே கபிலநிறம் என்பர். ஊமன்- ஊமை. ஊமன் என்பது கோட்டானுக்கும் ஒரு பெயர். ஆதலால் இங்கே மனிதன் என்பதை உணர்த்த உயர்திணை ஊமன் என்று உரைத்தார் கவிஞர். எற்றி- நினைத்து. இவர்களா காதலர்கள்? பாட்டு 229 பண்டைக்காலத் தமிழ் மக்கள் தலைவிதியிலே நம்பிக்கை வைத்திருந்தனர். காதல் மணத்திற்குக்கூட விதிதான் காரணம் என்று எண்ணி வந்தனர். அவர்களுடைய ஊழ்வினையே அவர்களைச் சந்திக்கச் செய்தது; காதலை வளர்த்தது, மண மக்களாக்கி மகிழ்ந்து வாழச் செய்தது; இதுவே அவர்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை இச்செய்யுளிலே காணலாம். ஒரு காதலனும் அவன் காதலியும் தனித்து நடந்து போகின்றனர். அவர்களுக்கு இன்னும் கற்பு மணம் நடை பெறவில்லை. தாங்கள் என்றும் பிரியாத காதலர்களாக இணைந்து விட்டனர் என்பதை ஊரார்க்கு அறிவிக்கவே அவர்கள் இருவரும் புறப்பட்டு விட்டனர். தாங்கள் களவு மணம் வெளிப்பட்ட பின்போ- அல்லது வெளிப்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சியோ தான் அவர்கள் புறப்பட்டனர். காதலன், தன் காதலியை அவர்களுடைய பெற்றோர் அறியாமல் தன்னூர்க்கு அழைத்துக் கொண்டு போகிறான். இவ்வாறு காதலி தன் காதலனுடன் சேர்ந்துபோவதை உடன்போக்கு என்பர். அவர்கள் சென்றவழி பாலைவன வழி. அக்காதலர்களை வழியிலே சிலர் கண்டனர். அவர்களுக்கு அவர்கள் இன்னார் என்று தெரியும். சிறு வயதில் அவர்கள் விளையாடும் போதும் பார்த்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் சின்ன வயதிலே அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக் கொள்ளுவார்கள். சிறுமியின் செவிலித் தாயார்கள் அச் சண்டைகளிலே தலையிட்டுத் தடுப்பார்கள். தடுத்தும் நிற்க மாட்டார்கள். இந்தச் சிறு பருவவிளையாட்டு அவர்கள் நினைவுக்கு வந்தது. அன்று அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் இன்று காதலர்களாய்க் களிப்புடன் செல்கின்றனர். இதற்குக் காரணம் `ஊழ்வினை தான் என்று தாமாகவே சொல்லிக் கொண்டனர். அந்த ஊழ்வினையையும் வாழ்த்தினர். இச் செய்தியை உரைப்பது தான் இச்செய்யுள். சிறு பருவத்திலே இவர்கள் இருவரும் இணைந்து விளையாடுவார்கள். அப்பொழுது இந்தக் குறும்புக்காரப் பிள்ளை இவளுடைய கூந்தலைப் பிடித்து இழுப்பான். இந்தச் சுட்டிப் பெண்ணும் சும்மா விடமாட்டாள். இவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுப்பாள். இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது செவிலித்தாயர் தடுப்பார்கள். அவர்கள் தடுத்தாலும் இவர்கள் அடங்கமாட்டார்கள்; மீண்டும் மீண்டும் இப்படியே சின்னச்சின்ன சண்டை போட்டுக்கொண்டேயிருப் பார்கள். இப்பொழுது மலர் தொடுத்த இரட்டை மாலையைப் போன்று இணைந்துவிட்டனர். இவ்வாறு இவர்கள் மணம்புரிந்து கொண்டு மகிழும் இயல்பை உண்டாக்கி விட்டாய். ஊழ்வினையே நீ மிகவும் நல்ல தன்மை உடையாய்; நிச்சயமாக நீ நல்லைதான். உன்னை வாழ்த்துகின்றோம். இதுவே இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். பாட்டு இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன் தலை ஓரிவாங்குநள் பரியவும் காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறு செரு உறுப; மன்னோ! நல்லை மன்ற அம்ம! பாலே மெல்இயல் துணை மலர்ப் பிணையல் அன்ன இவர், மணமகிழ் இயற்கை காட்டி யோயே! பதவுரை:- இவன் இவள் ஐம்பால் பற்றவும்- விளையாடும் போது இவன் இவளுடைய கூந்தலைப் பிடித்து இழுக்கவும். இவள் இவன் புன்தலை ஓரி- அதற்குப் பதிலாக இவள் இவனுடைய சிறிய தலைமயிரை. வாங்குநள் பரியவும்- வளைத்து இழுத்துக் கொண்டு ஓடவும், காதல் செவிலியர்- இதைக் கண்ட அன்புள்ள செவிலித்தாயர். தவிர்ப்பவும்- இவர்களுடைய சண்டையைத் தடுக்கவும். தவிராது- சண்டையை விடாமல். ஏதில் சிறு செரு உறுப- பகைமையுடன் சிறு சண்டையிலே மீண்டும் ஈடுபடுவார்கள். மெல் இயல்- மெல்லிய தன்மையுள்ள. துணை மலர்ப்பிணையல் அன்ன- ஒன்றுசேர்ந்த இரண்டு மலர் மாலையைப் போல். இவர்- இவர்கள் இன்று. மணம் மகிழ் இயற்கை- மணமக்களாகி மகிழும் தன்மையை. காட்டியோயே- இப்பொழுது உண்டாக்கிக்காட்டிய. பாலே- ஊழ்வினையே. நல்லை மன்ற - நீ நிச்சயமாக நல்ல தன்மையே உடையாய். கருத்து:- இவர்கள் ஊழ்வினையின் வலிமையால்தான் காதலனும், காதலியும் ஆனார்கள். விளக்கம்:- இது, மோதாசனார் என்னும் புலவர் பாட்டு. தலைவனும், தலைவியும் பாலைவன வழியிலே உடன் சேர்ந்து போனபோது, அவர்களைப் பார்த்தவர்கள் கூறியது. பாலைத் திணை. பாலே நல்லை மன்ற அம்ம என்று ஐந்தாவதடியை மாற்றி இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. மன், ஓ, அம்ம இடைச்சொற்கள், அசைகள். ஐம்பால்- ஐந்து பகுதி. பண்டைக்காலப் பெண்கள் தங்கள் தலைமயிரை ஐந்து வகையாக முடிந்து கொள்வார்கள். ஆதலால் ஐம்பால் என்று பெயர். ஓரி- ஆண்மயிர். சிறு பருவத்திலே சண்டை சச்சரவிட்டுக் கொண்டிருந்த இவர்கள், இன்று கருத்து ஒருமித்த காதலர்களாகச் செல்வதைக் கண்டு வியந்தனர். ஊழ்வினையைப் பாராட்டினர். காதலர் இருவருக்கும் இணைந்த மலர் மாலை உவமை. மலர் மாலை தனித்தனியாக இணைந்திருந்தாலும், தோற்றத்தில் இரண்டு. மணத்திலும் நிறத்திலும் ஒன்றேதான். இவர்களும் உருவத்தில் வெவ்வேறாயிருப்பினும், உள்ளத்தில்- அழகில்- ஒத்திருக்கின்றனர். தலைவன் தவறு செய்திலன் பாட்டு 230 தலைவியையே உயிராகக் கொண்டு ஒழுகிய தலைவன். இடையிலே சில நாட்கள் தலைவியைச் சந்திக்க முடியவில்லை. தவிர்க்க முடியாத வேலைகள் காரணமாக வெளியூருக்குப் போய் விட்டான். மீண்டும் வந்த பின் தலைவியைச் சந்திக்க விரும்பி வந்தான். தோழியைக் கண்டு உண்மையை உரைத்தான். தலைவியைக் கூடும்படி செய்ய வேண்டுமென்று குறையிரந்தான். தோழி தலைவியின்பால் பேரன்பு பூண்டவள். அவள் தன் காதலனுடன் அன்போடு வாழ்ந்து மகிழ்வதைக் காண வேண்டும் என்னும் ஆசையுள்ளவள். தலைவியின் நல்வாழ்வுக்காக எதையும் செய்வதென்ற துணிவு கொண்டவள். தலைவனுக்கும் தலைவிக்கும் எக்காரணத்தினாலும் மன வேற்றுமையுண்டாகக் கூடாது என்ற எண்ணம் படைத்தவள். ஆதலால், தலைவன் இதுவரை தலைவியைச் சந்திக்காமல் போனதற்கு அவன்மீது பழி சுமத்தக் கூடாது என்று நினைத்தாள். தலைவனைக் குற்றமற்றவனாகவே காட்ட வேண்டும் என்று கருதினாள். இப்படிக் காட்டினால்தான் தலைவன்மேல் அவள் வைத்திருக்கும் அன்பிலே அசைவு உண்டாகாது என்று நம்பினாள். இந்த முடிவுடன் தலைவியிடம் தலைவன் வந்திருக்கும் செய்தியை உரைத்தாள். அப்பொழுது தலைவிக்கு உள்ளத்திலே மகிழ்ச்சிதான். ஆயினும் அதை வெளியிலே காட்டிக் கொள்ள வில்லை. கோபங்கொண்டவள் போல நடித்தாள். இத்தனை நாள் என்னை மறந்திருந்தவருக்கு இப்பொழுது என்ன வேலையாம் என்னை எதற்காகச் சந்திக்க வேண்டுமாம்! என்று இழுத்தாற் போலப் பேசினாள். உடனே தோழி தலைவியே அவன் வராத குற்றம் அவனுடையதன்று. நான் தான் அவனை வரவேண்டாம் என்று தடுத்து வைத்திருந்தேன். அவன் ஒரு நாளும் அப்படிப் பிரிந்திருக்க மாட்டான். நான்தான் உனக்குத் தவறு செய்தேன். என்னுடைய அறியாமையைப் பொறுத்துக் கொள். என்று தலைவி நம்பும்படி கூறினாள். தலைவன் குற்றமற்றவன் என்று எண்ணும்படி செய்தாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! கோபித்துக் கொள்ளாதே! உண்மையை உரைக்கின்றேன் கேள்; முன்னே அத்தலைவன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். கொடுமையான சுறா மீன்கள் அலைகின்ற நீர் நிறைந்த வழியை, அஞ்சாமல் கடந்து வந்து கொண்டிருந்தான்! இப்படிப்பட்டவன் சில நாட்களாக வரவை நிறுத்திவிட்டான். இதனால் அவன் அன்பு குறைந்துவிட்டான் என்று எண்ணாதே. தானாகவே துணிந்து, அவன் வராமல் இருக்கவில்லை. உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் உள்ளமோ, பிரிந்திருந்தால் பொறுத் திருக்கும் துணிவோ அவனிடம் இல்லை. நான்தான் அவனை என் அறியாமையால் உன்னிடம் நெருங்காமல் விலக்கி வைத்திருந்தேன். நான் உன்னிடம் வைத்திருக்கும் உரிமையின் காரணமாகவே இப்படிச் செய்தேன். இதனால் உனக்குத் துன்பத்தை உண்டாக்கினேன். என் குற்றத்தைப் பொறுத்துக் கொள். தலைவன் குறையைத் தவிர்த்து விடு இதுவே இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். பாட்டு அம்ம! வாழி தோழி! கொண்கன் தான் அதுதுணிகுவன் அல்லன்; யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது, ஒன்று உடையேன்; கொல்லோ வயச்சுறா வழங்கும் நீர் அத்தம், சின்னாள் அன்ன வரவு அறியானே. பதவுரை:- வாழி தோழி அம்ம- வாழ்க தோழியே நான் கூறுவதைக் கேள். கொண்கன்- தலைவன். வயச் சுறா வழங்கும்- வலிமையுள்ள சுறா மீன் திரிந்து கொண்டிருக்கின்ற. நீர் அத்தம்- நீர் நிறைந்த வழியைக் கடந்து. சில்நாள்- சில நாட்களாக. அவன் வரவு அறியான் ஏ- முன் போல் வந்து போவதை மறந்தான். தான் அது துணிகுவன் அல்லன்- தானாகவே அவ்வாறு வராமலிருப் பதற்குத் துணியக்கூடியவன் அல்லன் அவன். யான் என் பேதமையால் - நானே எனது அறியாமையினால். பெரும் தகை கெழுமி -உன்னிடம் எனக்குள்ள பெரிய உரிமையுடன், நோதகச் - செய்தது- நீ துன்புறும்படி செய்ததாகிய, ஒன்று உடையேன்- ஒரு குற்றத்தையுடையேன். கருத்து:- தலைவன் வராதிருந்தமைக்குக் காரணம் அவன் அல்லன்; நானே தான். ஆதலாம் அவன் மேல் சினவாதே. விளக்கம்:- இது, அறிவுடைநம்பி, என்னும் புலவர் பாட்டு. தலைவனைச் சில நாட்களாகக் காணாமல் தலைவி பிணங்கி யிருந்தாள். அவளிடம் தோழி தலைவன் குற்ற வாளியல்லன்; நானே தான் குற்றவாளி என்று சமாதானம் சொன்னாள். தோழி கூற்று. நெய்தல் திணை. வாழி தோழி அம்ம! கொண்கன், வயச் சுறா வழங்கும் நீர் அத்தம், சின்னாள், அன்ன வரவு அறியான் ஏ; தான் அது துணிகுவன் அல்லன்; யான் என் பேதைமையால், பெருந்தகை கெழுமி, நோதகச் செய்தது ஒன்று உடையேன்; கொல் என்று பதங்கள் மாற்றிப் பொருள் கூறப்பட்டது. கெழுமி- பொருந்தி; கொண்டு- உடன். நோ- துன்பம். தக- உற. வயம்- வலிமை; அதனால் கொடுமை செய்யும். நீர் அத்தம் - நீர் வழி. கொல், ஓ, ஏ, அசைச்சொற்கள். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், அன்று நீர் வழியைக் கடந்துவந்தான். ஆதலால் சில நாட்களாக வராமைக்கு அவன் காரணமாக இருக்க மாட்டான் என்று தெளிவுபடுத்தினாள் தோழி. காமத்திற்கு அறிவில்லை பாட்டு 231 தலைவன் செல்வச் சிறப்புள்ளவன். சேரிப் பரத்தையோடு கூடி வாழ்வதிலே சிறப்பு உண்டு என்று நம்பியவன். அடிக்கடி அவர்களோடு கூடிக்குலாவும் கொள்கையுள்ளவன். தலைவி வீட்டுக்கு விலக்காக இருக்கும் போதெல்லாம் பரத்தையர் சேரிக்குப் போய் விடுவான். பின்னர்த் தலைவியிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ்வான். இது அவனுடைய வழக்கம். ஒரு முறை பரத்தையர் இன்பத்தைத் தேடிச் சென்ற தலைவன் பல நாட்களாக வீட்டைத் திரும்பிப் பார்க்கவில்லை. விலைமாதர்களின் இன்பத்திலேயே மயங்கிக் கிடந்துவிட்டான். பின்னர் நல்லறிவு பிறந்ததும் தன் இல்லத்தை நாடி வந்தான். தலைவியின் முகத்திலே எப்படி விழிப்பது என்ற வெட்கம் அவனைப் பிடித்துக் கொண்டது; வீட்டிற்குள் தாராளமாக அடியெடுத்து வைக்க விடாமல் அவனைத் தடுத்தது. தன் செய்கையை எண்ணிச் சினத்துடன் இருக்கும் தலைவியிடம் எப்படிச் சென்று உரையாடுவது என்ற அச்சமும் அவன் உள்ளத்தை உலுக்கியது. ஆதலால் அவன் தோழியிடம் அணுகினான். தன் குறையைப் பொறுத்துக் கொண்டு தன்னை வரவேற்கும்படி தலைவிக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தோழியும் தலைவியிடம், தலைவனுடைய வேண்டுகோளைக் கூறினாள். இப்படித் தலைவனுக்காகப் பரிந்து பேசிய தோழியைப் பார்த்துத் தலைவி, தலைவன் மீதுள்ள குற்றத்தை எடுத்துக் காட்டிக் காய்ந்து விழுந்தாள். அவருக்கு என்னிடம் சிறிதும் அன்பில்லை. இருந்தால் இதே ஊரில் இருந்த அவர் என்னிடம் வராமல் இருப்பாரா? என்னுடன் பேசாமல் இருப்பாரா? என்னைப் பார்த்தால்கூட யாரோ எவரோ என்று போய்க் கொண்டிருப்பாரா? நான் அவர் மீது கொண்டிருக்கும் காதல் என்னைவிட்டு ஓடும்படி அவரேதான் செய்து கொண்டார். இதற்கு நான் என்ன செய்வது என்றாள் தலைவி. இச் செய்தியை நல்ல உவமானங்களுடன் உரைத்தாள் தலைவி. இச்செய்தியைக் கூறுவதே இப்பாடல். தோழியே! இன்று அவர் சொல்வதை நாம் எப்படி நம்புவது? அவர் எந்த ஊருக்கும் போய் விடவில்லை. இந்த ஊரிலேயே தான் அவர் வாழ்கின்றார். நாமும் இந்த ஊரிலேயே இருக்கின்றோம். இருந்தும் அவர் நமது தெருவின் பக்கமே வருவதில்லை. தப்பித் தவறி நாம் இருக்கும் சேரியின் பக்கம் வந்தாலும் அவர் நம்மைக் காண்பதில்லை. அவரையே நினைத்து வாடியிருக்கும் என்னைக் கண்டு எனது ஆசை தீர நன்றாகத் தழுவிக் கொள்ளுவதும் இல்லை. நாணத்தையும் கொன்று நல்லறிவையும் இழந்த எனது காமம், வில்லில் இருந்து விடுபட்ட கணையைப் போலத் தூரத்தில் போய்த் தொலையும்படி அவர் செய்து விடுகிறார். அயலாருடைய சுடுகாட்டைக் கண்டு விலகிச் செல்வது போலவே என்னைக் காணாமல் ஒதுங்கிப் போய் விடுகின்றார். ï¥go¥g£ltÇ‹ brhšiy eh« v¥go e«òtJ? பாட்டு ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப மன்னே; நாண் அட்டு நல் அறிவு இழந்த காமம், வில் உமிழ் கணையின் சென்று சேண்படவே. பதவுரை:- ஓர் ஊர் வாழினும்- தோழியே தலைவர் நம்மோடு ஒரே ஊரில் இருந்தாலும். சேரி வாரார்- நாம் இருக்கும் தெருவுக்கு வரமாட்டார். சேரி வரினும்- இத் தெருவுக்கு அவர் வந்தாலும். ஆரமுயங்கார்- நம்மைக் கண்டு நன்றாகத் தழுவிக் கொள்ள மாட்டார். நாண் அட்டு- நாணத்தைக் கொன்று. நல் அறிவு இழந்த காமம்- நன்மை யாது தீமை யாது என்று உணரும் அறிவை யிழந்த காமமானது. வில் உமிழ் கணையின்- வில்லால் விடப்பட்ட அம்பைப் போல. சென்று சேண்பட- சென்று நெடுந்தூரத்தில் வீழ்வதைப் போல் அழிந்து விடும்படி. ஏதிலாளர் சுடலை போல- அயலார் சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்வது போல, காண கழிப- நம்மைக் கண்டும் விலகிச் செல்வார். கருத்து:- தலைவன் செய்கையைக் காணும்போது அவருக்கு என்னிடம் அன்பில்லை என்று தெளிவாகின்றது. விளக்கம்:- இது, பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. தலைவனுக்காகப் பரிந்து பேசிய தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது, மருதத்திணை. ஓரூர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆரமுயங்கார்; நாண் அட்டு நல் அறிவு இழந்த காமம், வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே, ஏதிலாளர் சுடலைக் காணாக் கழிபமன்னே என்று பதங்கள் மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது. மன். ஏ, அசைச்சொற்கள். சேரி- தெரு, சேர்ந்திருக்கும் இடம் சேரி. ஏதிலார்- அயலார். அட்டு- அழித்து; கொன்று. காதல் விரைவில் நீங்குவதற்கு, வில்லிலிருந்து விடுபட்ட அம்பு உவமானம். அயலார் சுடுகாட்டில் அடிவைக்காமல் விலகுவர். என்னையும் அச்சுடுகாடு போல் தலைவர் எண்ணுகிறார் என்று கூறினாள் தலைவி. நினைத்தால் வராமல் இருப்பாரோ? பாட்டு 232 பிரிந்து போனவரிடம் இருந்து எந்தச் செய்தியும் கிடைக்க வில்லை. அவரும் திரும்பி வரவில்லை. திரும்பி வருவதற்கான அடையாளங்களும் காணப்படவில்லை. அந்த நிலையிலே பிரிந்தவரை எதிர்பார்த்திருப்பவர் என்னதான் நினைப்பார்? அவர் நம்மை மறந்துவிட்டாரோ? என்று நினைக்கக் கூடும் அல்லவா? காதலன் வெளியூருக்குப் புறப்பட்டுப் போய்ப் பல நாட்கள் கடந்துவிட்டன. காதலி ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். பார்த்த கண்கள் பூத்துப் போயினவே அன்றிப் பயன் இல்லை. காதலனைக் காணவில்லை. இப்படிப் பல நாட்கள் சென்றபின் காதலிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. காதலன் இன்னும் வரவில்லை. அவர் நம்மை மறந்துவிட்டாரோ! வேறு யாரையாவது கைப்பிடித்து விட்டாரோ! என்பதுதான் அந்த ஐயம். உடனே அவள் தன் ஐயத்தைத் தோழியிடம் உரைத்தாள். தலைவி எழுப்பிய ஐயம் தோழியின் உள்ளத்திலே வேறொரு ஐயத்தை எழுப்பிவிட்டது. காதலன் கருதிச்சென்ற காரியம் இன்னும் கைகூடவில்லையாக்கும். அதனால்தான் அவன் திரும்பி வருவதற்குரிய வேளையைப் பெற வில்லைபோலும் என்பதுதான் தோழியின் உள்ளத்திலே உதித்த ஐயம். காதலியை அவன் மறந்துவிடமாட்டான். கட்டாயம் திரும்பி வந்துவிடுவான் என்ற உறுதி தோழிக்கு உண்டு. ஆதலால் தான் அவள் உள்ளத்திலே இத்தகைய ஐயம் எழுந்தது. தன் ஐயத்தைத் தலைவியிடம் அறிவிக்கும் முறையிலே காலந் தாழ்ந்தாலும், காதலன் திரும்பி வந்துவிடுவான், காரியம் கைகூடிய வுடன் மீள்வான் என்று குறிப்பாகத் தெரிவித்தாள். தோழி இதைத் தெரிவிக்கும்போது- தலைவியிடம் சொல்லும் போது- தலைவன் சென்ற வழியிலே கண்ட காட்சி ஒன்றையும் எடுத்துக்காட்டினாள். அக்காட்சியைக் கண்ட அவன் காரியம் நிறைவேறியதும் திரும்பி வருவது உறுதி என்பதையும் குறிப்பாகக் கூறினாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! மலையின் பக்கத்திலே உள்ள பாலைவனம். அதிலே உணவு தேடித்திரிந்தது ஆண் மான். அது மரப்பட்டை யாகிய உணவைத் தின்றபின் படுத்துறங்கிக் களைப்பாற இடம் தேடிற்று. செழித்த புல்தரையோ வளர்ந்து பரந்த மரநிழலோ கிடைக்கவில்லை. யாமரம் ஒன்றின் நிழல்தான் கிடைத்தது. அந்த மரத்தின்மேலும் தழைகள் இல்லை. அதன் தழைகளை உரல் போன்ற கால்களையுடைய யானை ஒடித்துத் தின்றுவிட்டது. அம்மரத்தில் தின்னாமல் விடப்பட்ட சில தழைகளே இருந்தன. அதனால் தரையிலே விழுந்த நிழல் அடர்த்தியாக இல்லாமல் வரிவரியாக இருந்தது. அந்த நிழலைக் கண்ட ஆண்மான் இதுவாவது கிடைத்ததே என்று அதன் அடியிலே உறங்கிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சியை வழியிலே பார்த்துக் கொண்டே போன அவர் நம்மைப்பற்றி நினைக்காமல் இருந்து விட்டாரோ? அல்லது, நினைத்தும் கருதிச் சென்ற காரியத்தை முடித்துக்கொண்டு திரும்புவதற்குரிய வேளையை அறியாத காரணத்தால் அவர் வரவில்லையோ? அறியேன். இதுவே இப் பாட்டில் அமைந்துள்ள பொருள். பாட்டு உள்ளார் கொல்லோ தோழி? உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ? மரல்புகா அருந்திய மாஎருத்து இரலை, உரல்கால் யானை ஓடித்து உண்டு எஞ்சிய யாஅவரி நிழல் துஞ்சும், மாயிரும் சோலை மலை இறந்தோரே. பதவுரை:- தோழி மரல் புகா அருந்திய- தோழியே மரப் பட்டையாகிய உணவை அருந்திய. மா எருத்து இரலை- பெரிய பிடரியை உடைய ஆண்மான். உரல் கால் யானை- உரலைப் போன்ற காலையுடைய யானையானது. ஓடித்து உண்டு எஞ்சிய- தன் உணவுக்காகத் தழையை ஒடித்துத் தின்று மீதப்பட்டிருக்கின்ற, யாவரி நிழல்- யா மரத்தின் அடர்த்தி யற்ற கோடு கோடான நிழலிலே. துஞ்சும்- தூங்கிக் கொண்டிருக்கின்ற காட்சியைக் கண்டு. மாயிரும் சோலை- மிகப் பெரிய சோலையை யுடைய. மலை இறந்தோர்ஏ- மலையின் பக்கத்தில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றவர். உள்ளார் கொல்ஓ- நீ நினைப்பதுபோல நினைக்காமல் தான் இருந்துவிட்டாரோ அல்லது உள்ளியும்- நினைத்துங்கூட. வாய்ப்பு உணர்வு இன்மையின்- காரியம் முடிந்து திரும்பும் சமயத்தை அறியாத காரணத்தால் வாரார் கொல். ஓ- வராமல் தாமதிக்கின்றாரோ! கருத்து:- காதலர் கருதிச் சென்ற காரியம் கை கூட வில்லை. ஆதலால்தான் வந்திலர். விரைவில் வருவார். விளக்கம்:- இது, ஊண்பித்தை என்னும் புலவர் பாட்டு தலைவன் பிரிந்திருந்தபோது வருந்திய தலைவிக்குத் தோழி கூறிய சமாதானம். பாலைத்திணை. ஓ, ஏ, அசைச்சொற்கள். உள்ளார் கொல்லோ, தோழி உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார்கொல்லோ என்னும் இரண்டு அடிகளையும் இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. வாய்ப்பு- காரிய சித்தி. மரம்- மரப்பட்டை. புகா- உணவு. இரலை- ஆண்மான். யா- யாமரம். ஆண்மான் உணவுண்டபின் யாமர நிழலில் தூங்குவதைக் கண்டால், நாமும் காரியத்தை முடித்தபின்; வீடு சென்று காதலியுடன் இளைப்பாறுவோம் என்ற எண்ணம் தலைவருக்கு உண்டாகும். இக்குறிப்பை உணர்த்துவதே இந்த இயற்கை நிகழ்ச்சி. தலைவியின் உள்ளத்திலே நம்பிக்கை உண்டாக வேண்டும் என்பதற்காகவே தோழி இந்த இயற்கைக் காட்சியை எடுத்துக் காட்டினாள். காரியம் முடிந்தபின் ஓய்வுபெற விரும்புவது இயற்கையாகும். மூடி திறந்த பொன் பெட்டி பாட்டு 233 காதலர்களுக்குள் ஒற்றுமை யிருக்கவேண்டும்; அப்பொழுது தான் அவர்கள் வாழ்க்கையிலே இன்பங் காணமுடியும். வயதிலே ஒற்றுமை; உருவத்திலே ஒற்றுமை; அறிவிலே ஒற்றுமை; குணத்திலே ஒற்றுமை. ஒழுக்கத்திலே ஒற்றுமை; இருவர் பிறந்தகத்தாருள் ஒற்றுமை இவையெல்லாம் காதலர்களை என்றும் பிரியாமல் இறுக்கிப் பிணிக்கும் பாசக்கயிறுகள். இவற்றுள் முதன்மை யானது காதலர்களின் கருத்தொற்றுமைதான். இந்தப் பொருத்தங் களுடன்தான் பெரும்பாலான திருமணங்கள் நடை பெற்று வருகின்றன. பண்டைக் காலத்திலுங்கூட இத்தகைய பொருத்த முள்ள இளைஞர்கள் தாம் காதல் தம்பதிகளாக வந்திருக்கின்றனர் என்று எண்ணுவதற்கு இடம் உண்டு. இதற்கு இச்செய்யுள் ஓர் உதாரணமாகும். ஒரு தலைவன் அவனும் செல்வக்குடியிலே பிறந்தவன். அவன் காதலித்த தலைவியும் செல்வக்குடியிலே பிறந்தவள் தான்; அத்தலைவன் தேர் ஊர்ந்து செல்பவன்; இதனாலே அவன் குடி செல்வக்குடி என்பது தெரிகின்றது. இத்தலைவனுக்கும் இவன் காதலித்த தலைவிக்கும் இன்னும் வெளிப்படையாகத் திருமணம் நடக்கவில்லை. இந்நாளில் தலைவன் அரசகாரியத்தின் பொருட்டு வெளியூர் சென்று திரும்பினான். அவன் திரும்பி வரும் வழியிலே காதலியின் ஊர் இருந்தது. அந்த ஊர் இருநத இடம் முல்லை நிலம். அவ்வூரை அவன் தன் தேர்ப்பாகனுக்குச் சுட்டிக் காட்டுகின்றான். அப்பொழுது தன் காதலியின் பெற்றோர் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றான். அவ்வூரின் அழகையும் குறிப்பிடுகின்றான். தன் காதலியின் ஊரைக் கண்டவுடன் தலைவன் உள்ளத்திலே உவகை பிறந்துவிட்டது. பிறந்துவிட்டது. அவளை மணந்து மகிழ்ந்து வாழப் போகின்றோம் என்ற ஆவல் வளர்ந்தது. ஆதலாலே தான் அவன் தன் தேர்ப்பாகனிடம் தன் நெஞ்சிலே நிகழ்வதை ஒளிக்காமல் கூறினான். இச்செய்தியை உரைப்பதே இப் பாடல். தேர்ப்பாகனே அதோ பார்; அதுதான் என் காதலியின் ஊர். என் காதலி கைகளிலே வரிசையாகக் குறுகிய வளையல் களை அணிந்தவள். செல்வக் குடியிலே பிறந்த மகள். அவள் தந்தை தன்னிடம் வந்த உயர்ந்தவர்களுக்கு நீரோடு பொன்னைச் சேர்த்துத் தானமாக வழங்குவான். தானம் கொடுத்து மிஞ்சிய பொருளையும் தான் மட்டும் நுகரமாட்டான். யார் வந்தாலும் தடையில்லாமல் சோறு போடுவான். இத்தகைய வள்ளல்தான் அவள் தந்தை. இத்தந்தையின் ஊர் முல்லை நிலத்திலே இருக்கின்றது. கிழங்கைக் கல்லி எடுத்த அகலமான பெரிய குழிகளிலே கொன்றை மலர்கள் வீழ்ந்து நிரம்பிக் கிடக்கின்றன. அதைக் காணும்போது செல்வம் படைத்தவர்கள் வீட்டில் உள்ள பொன் வைத்திருக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்திருப்பது போலக் காணப்படுகின்றது. கார்காலத்தைக் கொண்ட இத்தகைய முல்லை நிலத்தில்தான் என் காதலியின் தந்தை வாழும் ஊர் இருக்கின்றது. இதுவே இப்பாடலின் பொருள். பாட்டு கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி, கொன்றை ஓள் வீதாஅய்ச், செல்வர் பொன்பெய் பேழை மூய்திறந்த அன்ன, கார் எதிர் புறவின் அதுவே; உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றி, நிரைகோல் குறுந்தொடி தந்தை ஊரே. பதவுரை:- உயர்ந்தோர்க்கு- கல்வி அறிவு ஒழுக்கங்களிலே சிறந்தவர்களுக்கு. நீரொடு சொரிந்த மிச்சில்- நீருடன் தானம் செய்த பொன்னின் மீதியைக் கொண்டு. யாவர்க்கும்- எல்லோர்க்கும். வரை கோள் அறியாச் சொன்றி- தடை செய் வகை அறியாமல் வழங்குகின்ற சோற்றையுடையவன். நிரை கோல் குறுந்தொடி - வரிசையாக அடுக்கிய கோல் வடிவான குறுகிய வளையல்களை அணிந்த என் தலைவியின். தந்தை ஊர் ஏ- தந்தையாக இருப்பவன் வாழும் ஊர். கவலை கெண்டிய- கவலை எனும் கிழங்கைக் கெல்லி எடுத்ததனால் உண்டான. அகல் வாய்ச்சிறு குழி- அகலமான வாயையுடைய சிறு குழியிலே கொன்றை ஓள் வீ- கொன்றை மரத்தின் ஒளி பொருந்திய மலர்கள். தாய்- பரவிக் கிடப்பதனால். செல்வர்- செல்வம் பொருந்தியவர்களின். பொன்பெய் பேழை- பொன் வைத்த பெட்டியின். மூய் திறந்த அன்ன- மூடி திறந்து கிடைப்பதைப் போலக் காணப்படுகின்ற. கார் எதிர்- கார் காலத்தைப் பெற்ற. புறவின் அது - முல்லை நிலத்தில் இருக்கின்றது. கருத்து:- முல்லை நிலத்திலே காணப்படும் அவ்வூர்தான் என் காதலியின் ஊராகும். விளக்கம்:- இச்செய்யுள், பேயன் என்னும் புலவர் பாடியது களவு மணம் வெளிப்பட்ட பிறகு கூடத் தலைவன் தலைவியை மணந்து கொள்ளவில்லை. வினை புரியும் பொருட்டு வெளியூருக்குச் சென்று திரும்பினான். தலைவியை மணப்போம் என்ற ஆவலுடன் திரும்பினான். திரும்பும் போது தலைவியின் ஊரைத்தன் தேர்ப்பாகனுக்குக் காட்டிக் களிப்படைந்தான். உயர்ந்தோர்க்கு என்பது முதல் பின் மூன்று அடிகளையும் முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. தாஅய்- உயிர் அளபெடை. ஏ- அசை. கவலை- ஒருவகைக் கிழங்கு. கெண்டிய- கெல்லிய; கிண்டுதல் என்பர் இக்காலத்தில். வீ-மலர். மூய்- மூடி மிச்சல்- மீதம். வரைகோள் -தடைசெய்தல். சொன்றி- சோறு. பொன், மஞ்சள் நிறம். கொன்றை மலரும் மஞ்சள் நிறம். குழியிலே கொன்றை மலர்கள் பரவிக் கிடப்பது, பொன் பொதிந்த பெட்டி திறந்து கிடப்பது போல் காணப்படுகின்றது. இது இயற்கைக் காட்சி. இது பொருத்தமான உவமை. எல்லாம் மாலைக் காலந்தான் பாட்டு 234 உள்ளத்திலே துக்கம் நிரம்பியவர்க்கு எல்லாப் பொழுதும் ஒரே பொழுதுதான். இது இன்பந்தரும் காலம்; இது துன்பந்தரும் காலம் என்ற பாகுபாடு இல்லை அவர்கள் எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டது இச்செய்யுள். தனித்திருக்கின்றாள் தலைவி; மாலைக் காலமும் வந்து விட்டது. இன்னும் காதலன் வரவில்லை. அது கண்ட தோழி கலக்கம் அடைந்தாள். இந்த மாலைக் காலத்திலே இவள் எப்படித் தனித்திருப்பாள்? என்று எண்ணினாள்; ஏங்கினாள்; இதைக் கண்ட தலைவி அத்தோழிக்குக் கீழ் வருமாறு உரைத்தாள்; சூரியன் மறைந்த பொழுதையே மாலைக்காலம் என்று சிலர் கூறுகின்றனர். இது அறியாமை யாகும். எனக்கு விடியற்காலம்; பகற்காலம் எல்லாம் மாலைக் காலமாகவே இருக்கின்றது. ஆதலால் புதிதாக வருத்தம் ஒன்றும் உண்டாகப் போவதில்லை. நீ ஏன் கவலைப் படுகின்றாய்? என்று கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவதுதான் இச்செய்யுள். தோழியே! சூரியன் மறைந்த பின் வானம் சிவந்து தோன்றும் இந்தச் சிறு பொழுதையே மாலைப் பொழுது; அந்திக்காலம் என்று கூறுகின்றனர். இந்தக் காலத்திலே முல்லைகளும் மலர் கின்றன. இதையும் அந்திக்காலம் வந்து விட்டதற்கு அடையாளம் என்று நம்புகின்றனர். இவ்வாறு செவ்வானத்தையும், முல்லை மலரையும் கண்டு மாலைப் பொழுது வந்துவிட்டது என்று கூறுவது அறியாதார் கூற்றாகும். ஆனால் இப்படிச் சொல்வது சிலருக்குப் பொருத்தமற்றது. எனக்கு எல்லாக் காலமும் மாலைக் காலமாகவேதான் இருக்கின்றது. உச்சியிலே கொண்டையை உடைய சேவல் கோழி பெரிய நகரில் உள்ளவர்களை எழுப்பு வதற்காகக் கூவும் விடியற் காலமும் எனக்கு மாலைக் காலந்தான். பகலும் மாலைக் காலந்தான். காதலரைப் பிரிந்திருப்போருக்கு இவ்வாறு எல்லாக் காலமும் மாலைக் காலமாகத்தான் துன்புறுத்தும். ஆதலால் மாலையிலே எனக்குப் புதிய துன்பம் ஒன்றும் வந்து விடவில்லை; நீ வீணாக ஏன் கலங்குகின்றாய்? இதுவே இச் செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு சுடர் செல்வானம் சேப்பப், படர்கூர்ந்து, எல்அறு பொழுதின், முல்லை மலரும் மாலை என்மனார் மயங்கி யோரே; குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை; பகலும் மாலை; துணை இலோர்க்கே. பதவுரை:- சுடர் செல்வானம்- சூரியன் மறைந்த பின் வானமானது. சேப்ப- சிவப்பு நிறம் பெறுவதால். படர்கூர்ந்து- துன்பம் அடைந்து. எல் அறு பொழுதின்- ஒளி மறைகின்ற அந்த நேரத்தை. முல்லை மலரும்- முல்லைகள் பூக்கின்ற, மாலையென் மனார்- மாலைக்காலம் என்று கூறுவர். மயங்கியோர் ஏ- அறியாமை யுள்ளவர்கள். தான் இப்படிக் கூறுவார்கள். குடுமிக்கோழி- உச்சியிலே கொண்டையுடைய சேவற்கோழி. நெடுநகர் இயம்பும்- பெரிய நகர் நடுவிலே நின்று கூவுகின்ற. பெரும் புலர் விடியலும்- பெரிய இரவுப்பொழுது நீங்குகின்ற விடியற்காலமும். மாலை- மாலை நேரந்தான். பகலும் மாலை- நடுப்பகல் கூட மாலைப் பொழுதுதான். துணை இலோர்க்கு- கணவனைப் பிரிந்திருப் போருக்கு இவ்வாறு எல்லாக் காலமும் மாலைக் காலத்தைப் போலவே துன்பந் தரும் காலமாக இருக்கும். கருத்து:- காதலரைப் பிரிந்திருப்போர்க்கு எல்லாப் பொழுதும் மாலைப் பொழுதைப் போலவே துன்பந் தருகின்றது. வாடையே வருத்தாதே பாட்டு 235 உண்மையான காதலர்கள் பிரிந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் மறக்கமாட்டார்கள். தனித்திருக்கும் போதும் தம் காதலரின் நலத்தையே நாடியிருப்பர். தம் காதலருக்கு எவ்வித இன்னலும் வரக்கூடாது என்பதிலே கவலை காட்டுவார்கள். இத்தன்மை ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். இதுதான் ஒரு மனப்பட்ட காதலர்களின் தன்மை. ஒத்த குணம் இல்லாதவர்கள் ஒரு மனப்பட்ட காதலர்களாய் ஒன்றுபட்டு வாழ்வதுதான் எப்படி? தலைவியை மணந்து கொள்வதற்கு முன் தலைவன் பிரிந்து போனான்; மணம் புரிந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடவே பிரிந்து போனான். கருதிச் சென்ற காரியம் கைகூடிய பின் திரும்புகின்றான். விரைவிலே தனது காதலியைக் கற்பு மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற காதலுடனேயே திரும்பி வருகிறான். வருகிற வழியிலே தலைவியின் ஊர் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் அவன் உள்ளத்திலே ஓர் எண்ணம் உதித்தது. தலைவியின் ஊர் மலையின் மேல் உள்ளது. மலையிலிருந்து அருவிநீர் வழிந்து கொண்டே இருக்கிறது. தலைவியின் ஊரிலே வைக்கோல் வேய்ந்த பல குடிசைகள் உண்டு; அக்குடிசைகளின் முன்னும் பின்னும் பக்கங்களிலும் செடி கொடிகள் புற்பூண்டுகள் செழித்துத் தழைத்திருக்கின்றன. ஆதலால் அக்குடிசைகளின் முன் மான் கூட்டங்கள் கீழே வீழ்ந்து கிடக்கும் நெல்லிக் கனிகளைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றன. காலமோ மாரிக்காலம். வாடைக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இக்காட்சியைக் கண்டவுடன், தலைவியைப் பற்றி அவனுக்கு இரக்கம் உண்டாயிற்று. அவள் இந்த வாடைக் காற்றால் வருந்துவாளே என்று நினைத்தான். உடனே காதல் மிகுதியால் `வாடைக்காற்றே என் காதலியை வருத்தாதே! காப்பாற்று என்று வேண்டிக் கொண்டான். இச்செய்தியைக் கூறுவதே இச்செய்யுள். வாழ்க வாடைக் காற்றே! கீழே வீழ்ந்து சிதறிக் கிடக்கின்ற நெல்லிக் கனிகளை மான் கூட்டங்கள் அருந்திச் சுவைக்கின்றன. இக்காட்சி உள்ள வாசல்களையுடைய குடிசைகள் நிறைந்த ஊர் தான் நான் காதலிக்கும் நல்லவளுடைய ஊர். அக்குடிசைகள் எல்லாம் வைக்கோலால் வேயப்பட்டவை. இந்த ஊர் மலையின் உயரத்தில் அமைந்திருக்கின்றது. அம்மலையிலிருந்து பாம்பின் அசைகின்ற சட்டை போல வெண்மையான அருவிநீர் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய குளிர்ந்த இடத்தில் உள்ள என் காதலியைத் துன்புறாமல் காப்பாற்றுவாயாக பாட்டு ஓம்புமதி! வாழியோ வாடை! பாம்பின் தூங்குதோல் கடுக்கும் தூவெள் அருவிக் கல்உயர் நண்ணி அதுவே; நெல்லி மரையினம் ஆரும் முன்றில் புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே. பதவுரை:- வாழி ஓ வாடை- வாழ்க வாடைக்காற்றே. நெல்லி - நெல்லிக்கனிகளை. மரையினம் ஆரும்- மான் கூட்டங்கள் பொறுக்கித் தின்று கொண்டிருக்கின்ற. முன்றில்- வாசலை யுடைய. புல் வேய் குரம்பை - வைக்கோல் போட்ட கூரை வீடுகளை யுடைய. நல்லோள் ஊர் ஏ- நல்லவளுடைய ஊரானது. பாம்பின் தூங்கு தோல்- பாம்பின்- அசைகின்ற சட்டையை. கடுக்கும்- ஒத்திருக்கின்ற, தூவெள் அருவி- சுத்தமான வெண்ணிற முள்ள அருவி வீழ்கின்ற. கல் உயர் - மலையின் உயரத்திலே. நண்ணியதுவே- அமைந்திருக்கின்றது. ஓம்பு மதி- ஆதலால் அவளைத் துன்புறுத் தாமல் காப்பாற்றுவாயாக. கருத்து:- வாடையே! என் தலைவியை வருத்தாதே! காப்பாற்றுவாயாக. விளக்கம்:- இது மாயேண்டன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பொருளீட்டிக் கொண்டு திரும்பி வரும்போது, கார்காலம் வந்துவிட்டது. ஆதலால் அவன், தலைவி வாடையால் மெலிவாள் என்று எண்ணினான். அவளை நலியாமல் காப்பாற்ற வேண்டும் என்று வாடைக் காற்றை வேண்டிக் கொண்டான். பாலைத்திணை. வாழியோ வாடை, நெல்லி மரையினம். ஆரும் முன்றில் புல்வேய் குரம்பை, நல்லோர் ஊர் ஏ, பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூவெள் அருவி கல் உயர் நண்ணியதுவே ஓம்புமதி என்று கொண்டு கூட்டப்பட்டது. மதி- முன்னிலை அசைச்சொல். தொங்குகின்ற வெண்மை யான பாம்புத்தோல் அருவிக்கு உவமை. கல்- மலை. உயர்- உச்சி. குரம்பை- குடிசை, நல்லோள்- நல்ல குணங்கள் நிரம்பியவள். இன்பத்தைத் திருப்பித் தந்துவிடு பாட்டு 236 தலைவன் பொருள் தேடுவதற்காகப் போக விரும்பினான். அவனுக்கும் அவன் காதலிக்கும் இன்னும் வெளிப்படையாகத் திருமணம் நடக்கவில்லை. விரைவில் திருமணம் நடக்கவேண்டும் என்பதே அவன் ஆவல். அதற்காகச் செல்வத்தைச் சேர்த்துக் கொண்டு வருவதற்காகவே தலைவியைவிட்டுச் சில நாட்கள் பிரிந்திருக்க நினைத்தான். அவன் தனது முடிவைத் தோழியிடம் உரைத்தான்! தோழியோ தலைவி வேறு, தான் வேறு என்று நினைப்பவள் அல்லள். தலைவியின் இன்பதுன்பங்களும் தன்னுடைய இன்ப துன்பங்களும் ஒன்றேயென்னும் உள்ள முடையவள்; தலைவியின் பால் ஆராத அன்புடையவள். ஆதலால் தலைவன் சொல்லைக் கேட்டவுடன் திகைத்தாள். தலைவன் திரும்பிவரும் வரையிலும் தலைவி எப்படிப் பொறுத்திருப்பாள் என்று எண்ணிவருந்தினாள். உடனே தலைவனை நோக்கிக் கீழ்வருமாறு சொல்லி அவன் பிரிவைத் தடுத்தாள். குன்றைப் போல மணல் குவிந்துகிடக்கின்ற கடற்கரை. அங்கே புன்னை மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. அவற்றின் கிளைகள் நிலத்திலே படும்படி பரந்து தழைத்திருக்கின்றன. அங்கே இரைதேடுவதற்குப் புதிய நாரை ஒன்று வந்தது. அதற்கு எந்த இடத்திலே நல்ல மீன்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆதலால் அது ஒரு புன்னை மரக்கிளையில் உட்கார்ந்து கழிகளிலே மீன்கள் உள்ள இடத்தைத் துருவிப் பார்த்துக்கொண்டிருக் கின்றது. இத்தகைய கடற்கரையின் தலைவனே! நீ இப்பொழுது பிரிந்து போவாயானால் இவளைக் கைவிட்டோம் என்று எண்ணிக் கொண்டே போவாயாக. நீ, சென்ற இடம் உன்னை எப் பொழுது திருப்பி அனுப்புகின்றதோ அப்பொழுது நீ திரும்பி வருக. இது உனக்குச் சம்மதமானால் நீ செல்லலாம். ஆனால் நீ இதுவரையில் அனுபவித்த என் பெண்ணலத்தைத் திருப்பித் தந்துவிட்டுப் போகவேண்டும். திருப்பித்தராமல் போவாயானால், நான் நலன் இழந்து உயிர் வாழமாட்டேன். இப்பொருளமைந்ததே இச்செய்யுள். பாட்டு விட்டுஎன, விடுக்கும் நாள்வருக; அதுநீ நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ! குன்றத்துஅன்ன குவவுமணல் அடைகரை நின்ற புன்னை நிலம் தோய் படுசினை வம்ப நாரை சேக்கும், தண் கடல் சேர்ப்ப! நீ உண்ட என் நலனே. பதவுரை:- குன்றத்து அன்ன- சிறு குன்றைப்போல. குவவு மணல்- குவிந்துகிடக்கின்ற மணல்களையுடைய. அடைகரை- மணல் அடர்ந்த கடற்கரையிலே. நின்ற புன்னை - செழித்துத் தழைத்து நின்ற புன்னை மரத்தின். நிலம் தோய்படுசினை- நிலத்தைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற தாழ்ந்த கிளையிலே. வம்ப நாரை- புதியநாரை. சேக்கும்- வந்து தங்கியிருக்கின்ற. தண்கடல் சேர்ப்ப- குளிர்ந்த கடற்கரையை உடையவனே. விட்டு என- கைவிட்டோம் என்று கருதிப் பிரிந்து செல்க விடுக்கும் நாள் வருக- சென்ற இடம் உன்னைத் திரும்ப அனுப்பும் நாளிலே திரும்பி வருக. அது நீ நேர்ந்தனை ஆயின்- அத்தகைய பிரிவை நீ ஒப்புக்கொள்ளுவாயானால். நீ உண்ட என் நலன்- நீ உண்டுச் சுவைத்த என் பெண் தன்மையை. தந்தனை சென்மோ- திருப்பித் தந்துவிட்டுப்போ. கருத்து:- இவளைப் பிரிந்து போதல் தகாது. உன்னால் பெண் தன்மை கவரப்பட்ட இவள் உயிர் வாழ்வாள் என்ற உறுதியில்லை. விளக்கம்:- இது நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் செய்யுள். பொருள்தேட எண்ணிய தலைவன், தலைவியைப் பாதுகாப்பாயாக என்று தோழியிடம் கூறினான். உடனே, தோழி, தலைவி என்ன பதில் கூறுவாளோ அதே பதிலைத் தலைவிக்கு மாற்றாகத் தானே கூறினாள். தோழி கூற்று, நெய்தல் திணை. குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை நின்ற புன்னை நிலம் தோய்படுசினை, வம்பநாரை சேக்கும். தண் கடல் சேர்ப்ப விட்டு என விடுக்கும் நாள் வருக. அது நீ நேர்ந்தனை ஆயின் நீ, உண்ட என் நலன் ஏ தந்தனை சென்மோ என்று பதங்கள் கொண்டு கூறப்பட்டன. நேர்தல்- சம்மதித்தல். தந்தனை- தந்து; திருப்பித் தந்து விட்டு. சென்மோ- செல்லுக; முன்னிலைச் சொல். வம்பு- புதுமை. வம்பநாரை- புதிய நாரை. சேக்கும்- தங்கும். புதிய நாரை மீன் இருக்கும் துறை அறியாமல், புன்னைக்கிளையில் தங்கி இருந்தது. நீயும் தலைவியுடன் அதிக நாள் பழகவில்லை; ஆதலால் இவள் பண்பறியாமல் பிரிந்து செல்ல நினைத்தாய். இக்கருத்து படுசினை வம்பநாரை சேக்கும் என்ற தொடரிலே அமைந்து கிடக்கின்றது. என் நெஞ்சம் என்னிடம் இல்லை பாட்டு 237 தலைவன் பொருள் தேடிக்கொண்டு திரும்பி வருகின்றான். தலைவியை விரைவிலே காணவேண்டும் என்னும் ஆசை அவனை வாட்டுகின்றது. எப்பொழுது தலைவியிருக்கும் இடத்தை அடைவோம் அடைவோம் என்று அவன் உள்ளம் துடிக்கின்றது. அவன் நெஞ்சம் அவனிடம் இல்லை. தொலைவில் இருக்கும் தலைவியிடம் பறந்து போய்விட்டது. அப்பொழுது அவன் தன் தேர்ப்பாகனைப் பார்த்துத் தன் காதலையும், ஆவலையும் எடுத் துரைத்தான். உள்ளத்தில் எழும் ஆசையையும் துன்பத்தையும் அடக்கிவைத்திருப்பது ஆருக்கும் அருமையாகும். அவற்றை உற்ற நண்பர்களிடம் உரைத்தால் தான் சிறிதாவது மன ஆறுதல் உண்டாகும். இக்கருத்தும் இச்செய்யுளிலே அமைந்து கிடக்கின்றது. இச்செய்யுளில் காணப்படும் நிகழ்ச்சிதான் கீழ்வருவது. நான் பிரிந்து வந்துவிட்டபின் தலைவியின் நிலை எப்படி இருக்கின்றதோ! எவ்வாறு வருந்துகின்றாளோ! என்னைப்பற்றி என்ன நினைக்கின்றாளோ என்று நினைத்து நான் அஞ்சுகின்றேன். இந்த அச்சத்தை அறியாத என் நெஞ்சு நான் விரும்புகின்ற தலைவி யைத் தழுவிக்கொள்ளும் பொருட்டு நம்மைப் பிரிந்து சென்று விட்டது. இப்படிச் சென்றதனால் என்ன பயன்? கைகளால் கட்டித் தழுவிக் கொண்டால்தான் உண்மையான இன்பத்தை நுகரமுடியும். கையால் தழுவிக் கொள்வது தளருமாயின் இன்பம் ஏது? அவள் இருக்கும் இடத்திற்கும் நான் இருக்கும் இடத்திற்கும் இடைவெளி மிக அதிகம்; நெடுந்தூரம். இந்நிலையில் அவளைக் கைகளால் கட்டி அணைத்து மகிழ்வது எப்படி? அவள் இருக்கும் இடத்திற்கும் நான் இருக்கும் இடத்திற்கும் இடையிலே பெரிய காடு அடர்ந்து கிடக்கின்றது. அந்தக் காட்டிலே பெரிய கடல் அலையைப் போல ஆரவாரம் பண்ணிக்கொண்டு, கண்டோரைக் கொல்லும் புலிகள் வலமாக எழுந்து உலாவுகின்றன. இச்சோலையிலே ஆபத்தைத் தரும் இடையூறுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. நானும் அவளும் தழுவிக் கொள்ளுவதற்குத் தடையாகவே இத்தகைய ஆபத்துக்கள் இருக்கின்றன. ஆதலால் என் நெஞ்சுமட்டும் அவளையடைந்து இன்புற முடியாது; நானும் அவளிடம் போனால் தான் அவளைக் கட்டித் தழுவி, உள்ளத்தாலும், உடலாலும் இன்பத்தை அடைய முடியும். ஆதலால் பாகனே! தேரை விரைவாக ஓட்டுக; பாட்டு அஞ்சுவது அறியாது அமர்துணை தழீஇய நெஞ்சு, நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய கைபிணி நெகிழின் அஃதுஎவனோ; நன்றும் சேயஅம்ம இருவரும் இடையே; மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு கோள்புலி வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ, முயக்கு இடை மலைவே. பதவுரை:- அஞ்சுவது அறியாது- நான் அவள் நிலையை நினைத்து அஞ்சுவதை உணராமல். அமர்துணை - நான் விரும்பு கின்ற துணைவியை. தழீஇய- தழவிக்கொள்ளும் பொருட்டு. நெஞ்சு- என் நெஞ்சம். நம் பிரிந்தன்று - நம்மைவிட்டுப் பிரிந்து, ஆயினும் எஞ்சிய- ஆயினும் குறைபாடாக இருக்கின்ற. கைபிணி நெகிழின்- கையால் கழுவிக்கொள்வது தளர்ச்சியடையுமானால். அஃது எவன் ஒ- நெஞ்சுமட்டும் சென்று தழுவிக்கொள்ளும் அதனால் என்ன பயன்? இருவரும் இடையே- எங்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி. நன்றும் சேய அம்ம- மிகவும் தொலைவில் இருக்கின்றது. மாகடல் திரையின்- பெரிய கடல் அலைபோல். முழங்கி- ஆரவாரித்து. வலன் ஏர்பு- வலமாக எழுந்து. கோள்புலி வழங்கும் - கொல்லும் வலிமையுள்ள புலிகள் அலையும். சோலை- சோலையிலே. முயக்கு இடை- அவளை நான் தழுவிக் கொள்வதற்கு இடையிலே. மலைவு ஏ- தடையாக உள்ளவை எனைத்து என்று எண்ணுகோ- எவ்வளவு என்று நினைப்பேன்? (எத்தனையோ இடையூறுகள் இருக்கின்றன. அவை அளவிட முடியாதவை). கருத்து:- தலைவி நெடுந்தூரத்தில் இருக்கின்றாள். நம் நெஞ்சு மட்டும் அவளை அடைந்து என்ன பயன்? விளக்கம்:- இது அள்ளுர் நன் முல்லை என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடிக்கொண்டு திரும்பி வரும் தலைவன் தன் பாகனை நோக்கிக் கூறியது, தலைவிக்கும் எனக்கும் உள்ள தொலைவு மிகுதி. அவளை உள்ளத்தால் தழுவிக்கொள்வதால் மட்டும் பயன் இல்லை. உடம்பாலும் தழுவிக் கொண்டால்தான் இன்பம் உண்டு. ஆதலால் விரைந்து தேரை ஓட்டுவாயாக என்று கூறினான். பாலைத்திணை. முயக்கிடை மலைவு ஏ எனைத்து என்று எண்ணுகோ என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. தழீஇய- இ உயிர் அளபெடை. ஓ; ஏ; அம்ம; அசைச்சொற்கள். நன்றும்- மிகவும். ஏற்று- எழுந்து, கோள்- வலிமை. முயக்கு - தழுவுதல். மலைவு - தடை. உன் உறுதியும் ஆச்சு! நீயும் ஆச்சு! பாட்டு 238 மருத நிலத்திலே வாழ்கின்றவன் தலைவன்; அவனுக்கு எல்லா வசதியும் இருந்தன. உணவுக்கோ, உடைக்கோ, ஏனைய செல்வங்களுக்கோ பஞ்சம் இல்லை. மருதநிலத்தில் வாழும் செல்வனைப் பஞ்சம் பற்றுவதில்லை. இவன் தன் மனைவியை விட்டுப் பரத்தையர்களிடம் சென்று வரும் வழக்கமும் உள்ளவன். இவன் நடத்தையை இவன் மனைவியும் வெறுத்தாள்; தோழியும் வெறுத்தாள். ஒருநாள் பரத்தையர் வீட்டிலேயிருந்த தலைவன் தன் வீட்டுக்குத் திரும்பினான். தோழியைக் கண்டான், நான் பரத்தையர்களை நம்பமாட்டேன்; அவர்களுடைய பொய்யன்பைத் தெரிந்துகொண்டேன். இனி அவர்கள் இருக்கும் திசையைக் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டேன். நான் செய்த குற்றத்தை மன்னிக்கும் படி தலைவியிடம் சொல். நான் சொல்லுவது உறுதி என்று ஏதேதோ சொல்லத் தொடங்கினான். தலைவன் சொல்லைக்கேட்ட தோழி சினம் உற்றாள். இம் மாதிரி அவன் எத்தனையோ முறை உறுதி மொழி சொல்லிய துண்டு. ஆனால் பரத்தையர் நேசத்தை மட்டும் விட்டவன் அல்லன். இது அவள் அறிந்த உண்மை. ஆதலால் தலைவிக்கு மாற்றாக அவளே பேசினாள்; தலைவி பேசினால் எப்படிப் பேசுவாளோ, என்ன சொல்வாளோ, அப்படிப் பேசினாள். அதையே சொன்னாள். தலைவனே! போதும் நிறுத்து! நீயும் ஆச்சு உன் உறுதியு மாச்சு. இப்பொழுதுதான் புதிதாக உறுதிமொழி சூள் உரை கூறுகின்றாயா? தொண்டி நகரத்திலே, ஒளிவீசும் வளையல்களை அணிந்த பெண்கள் அடிக்கடி அவல் இடிப்பார்கள். கருமையான வயிரம் பாய்ந்த உலக்கையால் பச்சை அவல் இடிப்பார்கள். அவல் இடித்து முடிந்தபின் அந்த உலக்கையை, நல்ல நெற்பயிர் விளைந்திருக்கின்ற வயலின் வரப்பிலே படுத்துத் தூங்கவைப் பார்கள், அதன்பின் அவர்கள் விளையாடி மகிழ்வார்கள். இப்படிப் பட்ட வளமான காட்சியுள்ளது தொண்டி நகரம். என்னுடைய (என் தலைவியின்) பெண்மை நலம் அந்தத் தொண்டிப் பட்டினத்தைப் போன்றது. அந்த நலத்தை நீ பறித்துக் கொண்டிருக்கிறாய். அதைத் திருப்பிக் கொடுத்துவிடு; நீ சொல்லும் உறுதிமொழி எனக்கு வேண்டாம்; நீயே திருப்பி எடுத்துக்கொள்; வந்த வழியைப் பார்த்துக் கொண்டுபோ என்று கடிந்துரைத்தாள் தோழி. நான் உனக்கும் தலைவிக்கும் தூதாக இருக்கமுடியாது என்று மறுத்தாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இச்செய்யுள். பாட்டு பாசவல் இடித்த கரும்காழ் உலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பு அணைத்துயிற்றி ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ! மகிழ்ந! நின் சூளே. பதவுரை:- மகிழ்ந- மருதநிலத் தலைவனே, பசு அவல் இடித்த- பசுமையான அவலை இடித்த. கரும்காழ் உலக்கை- கருமையான வயிரம் பாய்ந்த உலக்கையை. ஆய்கதிர்- சிறந்த கதிர்களையுடைய நெல்லின்- நெற்பயிர் நிறைந்த வயலில். வரம்பு அணைதுயிற்றி- வரப்பாகிய அணையிலே படுக்க வைத்துவிட்டு. ஒள்தொடி மகளிர்- ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்கள். வண்டல் அயரும்- விளையாடிக் கொண்டிருக்கின்ற. தொண்டி அன்ன- தொண்டி நகரத்தின் அழகைப் போன்ற. என் நலம் தந்து- என்னுடைய பெண்மை நலத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நின்சூள்- உன்னுடைய உறுதி மொழியை. கொண்டனை சென்மோ- திருப்பி எடுத்துக்கொண்டு செல்க. கருத்து:- உன்னுடைய உறுதிமொழியைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் ஏமாறமாட்டோம். விளக்கம்:- இது குன்றியன் என்னும் புலவர் பாட்டு, பரத்தையர் வீட்டுக்குச் சென்றுவந்த தலைவன் தோழியிடம் இனிப்பரத்தையரிடம் செல்வதில்லையென்று உறுதிமொழி கூறத் தொடங்கினான். மருதத்திணை. மகிழ்ந என்னும் சொல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நின்சூள் கொண்டனை சென்மோ என இறுதி அடியில் மாற்றப் பட்டது. பசு அவல்- பாசவல். நெல்லை வறுக்காமல் இடித்துச் செய்த அவலுக்குப் பாசவல் என்று பெயர். வரம்பு- வரப்பு. அணை- படுக்கை. வண்டல்- மகளிர் விளையாட்டு. சூள்- உறுதிமொழி சத்தியம். தொண்டி நகரம் நெல்வயல்கள் நிறைந்த சிறந்த நகர மாயிருந்தது. மருத நிலமாக இருந்தது. மருத நிலத்திலேதான் செழிப்பும் அழகும் சிறந்திருக்கும். மருத நிலத்தைப் பெண்களின் அழகுக்கு ஒப்பிடுவது பழந்தமிழ்ப் புலவர்களின் வழக்கம். வளையல்கள் வீழ்ந்தன தோளும் சோர்ந்தது பாட்டு 239 கள்ளத்தனமாக மறைந்து வாழ்வதைப் பெண்கள் விரும்பு வதில்லை. வெளிப்படையாகக் கணவனுடன்- காதலனுடன்- இணைந்து வாழவே விரும்புவார்கள். காதலால் கள்ள நட்புக் கொண்டாலும் விரைவில் அந்த நட்புக் கற்பாக மாற வேண்டும் என்பதே என்றும் அவர்கள் விருப்பம். ஆண்களுக்கு அவ மானத்தைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுண்டு. பெண்களால் பழிச்சொல்லைத் தாங்கமுடியாது. இந்த உண்மையை இச் செய்யுளிலே காணலாம். தலைவனும் தலைவியும் நீண்ட நாட்களாகக் காதல் வாழ்வு நடத்திவருகின்றனர். தங்கள் களவொழுக்கம் வெளிப்படுவதற்கு முன்பே கற்பு மணம்புரிந்து கொள்ள விரும்பினாள் தலைவி. தலைவன் ஆகட்டும், ஆகட்டும் என்று தட்டிக்கழித்துக் கொண்டே வந்தான். அப்பொழுது ஒரு நாள் தலைவன் வந்தான். அவன் தலைவியைச் சந்திப்பதற்காக வழக்கம்போல் வந்து தங்கும் மறைவிடத்திலே நின்றான். அவன் எப்பொழுதும் வந்து நிற்கும் இடம் கொல்லையின் வேலிக்குப் பின்புறம். அவன்வந்து நின்றதை அறிந்தாள் தலைவி. உடனே அவன் காதில் விழும்படியாகத் தன்னை மணந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தும் முறையில் சில சொற்களைக் கூறினாள்; தலைவன் மணந்து கொள்ளாமையால் தான் அடையும் துன்பத்தை எடுத்துரைத்தாள். அதனால் தனக்கு உண்டாகும் இழிவையும், அவமானத்தையும் சொல்லிக் காட்டினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதுதான் இச்செய்யுள். தோழியே! குறுகிய சிறகுகளையுடைய வண்டுகள் பிளப்பையும், குகைகளையும் உடைய மலைப்பக்கம் எங்கும் மணம் கமழும் படி, அசைந்துகொண்டிருக்கின்ற கொத்துக்களில் உள்ள காந்தள் மலர்களின் மகரந்தங்களை ஊதிக் கொண்டிருக்கும். அந்த மலர்களின் மணம் மலையெங்கும் ஏற்கனவே கமழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது வண்டுகள் மகரந்தங்களை ஊதிப்பறக்கச் செய்வதனால் அந்த மணம் இன்னும் பரவிக் கொண்டிருக்கின்றது. சிவப்பு நிறமுள்ள காந்தள் மலர்களிலே நீலமணிபோன்ற வண்டுகள் மகரந்தங்களை ஊதுவதற்காக உட்கார்ந்திருக்கும் காட்சி வியப்பைத் தருகின்றது. அவ்வண்டுகள் பாம்புகள் கக்கிய இரத்தினங்களைப் போலக் காணப்படுகின்றன. இக்காட்சியோடு மூங்கில்களும் வேலியாக முளைத்து அடர்ந் திருக்கின்றன. இத்தகைய மலையை உடைய தலைவன் பொருட்டு நான் அடையும் துன்பத்திற்கு அளவில்லை. என் தோள்களிலும் கைகளிலும் அணிந்திருக்கும் வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்தன. தோள்கள் மெலிந்துசோர்ந்து அழகை யிழந்தன. துறக்கக் கூடிய நாணம் இல்லை. முன்பே அது என்னை விட்டுப்போய்விட்டது. இருந்தால் தானே துறக்கமுடியும்? காந்தளின் மகரந்தங்களை ஊதி அதன் மணத்தை எங்கும் பரவச் செய்யும் தும்பியைப் போல அவர் எனது நலத்தை நுகர்ந்து என் பழியை எங்கும் பரவச் செய்து விட்டார். பாட்டு தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே, விடும் நாண் உண்டோ தோழி விடர் முகைச் சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள் நறுந்தாது ஊதும் குறும் சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியில் தோன்றும் முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. பதவுரை:- தொடி நெகிழ்ந்தன ஏ- தோள்வளையல்களும் கழன்றன. சாயினஏ- என் தோள்கள் மெலிந்து சோர்ந்தன. தோழி- தோழியே! விடுநாண் உண்டோ- இனிநான் துறக்கக் கூடிய நாணமாவது என்னிடம் உண்டா? (இல்லை) விடர்முகை- பிளப்பும் குகைகளும் உடைய. சிலம்பு உடன்- பக்கமலைகளில் எல்லாம், கமழும் - முன்பே மணம் வீசிக் கொண்டிருக்கின்ற. கொத்துகளில் உள்ள காந்தள் மலர்களின்மேல் உட்கார்ந்து. நறும் தாது ஊதும்- மணம் உள்ள மகரந்தத்தை ஊதி மேலும் மணத்தைப் பரப்புகின்ற. குறும் சிறைத் தும்பி- குறுகிய சிறகுகளை உடைய வண்டுகள். பாம்பு உமிழ்- பாம்புகள் கக்கியிருக்கின்ற. மணியில் தோன்றும்- நீலமணிகளைப் போன்று காணப்படுகின்றன. முந்தூழ் வேலிய - மூங்கில் வேலிகளை உடைய. மலைகிழவோற்கு- மலையின் தலைவனாகிய அவன் பொருட்டு நான் இப்படியானேன். கருத்து:- என்னைத் தலைவன் விரைவில் மணந்து கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் என் துன்பம் தணியும். விளக்கம்:- இச்செய்யுள் ஆசிரியன் பெருங்கண்ணன் என்பவரால் பாடப்பட்டது. தலைவன் தலைவியைக் காண மறைந்து நிற்கின்றான். அப்பொழுது அவன் காதில் விழும்படி தலைவன் தன்னை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தோழியிடம் வலியுறுத்திக் கூறுகிறாள் தலைவி. குறிஞ்சித்திணை. விடர்- பிளப்பு. முகை- முழை; குகை, சிலம்பு- மலை. முந்தூழ்- மூங்கில். பாம்பு- காந்தளுக்கும், மணி வண்டுக்கும் உவமானங்கள். காந்தள் மலரிலே வண்டு அமர்ந்திருப்பது பாம்பும் அதன் மணியும் போலப் பயங்கரமான காட்சியாக இருக்கின்றது. அதைப்போல எங்களுடைய கள்ள நட்பும் பயங்கரமானது. மணந்து கொண்டால்தான் அமைதியான வாழ்க்கையிலே வாழலாம் இக்கருத்து இந்த உவமையிலே அமைந்திருககின்றது. மலையைப் பார்த்து மனம் வருந்தேன் பாட்டு 240 தனித்திருக்கின்றாள் தலைவி. தலைவன் பொருள் தேடப் போயிருக்கின்றான். தலைவியை மணப்பதற்காகவே பொருள் தேடப் போயிருக்கின்றான். தலைவி, அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் பகற் காலத்தில் அவ்வளவு துக்கப் படுவதில்லை. மாலைக் காலத்திலேதான் தலைவனை எண்ணி அதிகமாக அவதிப்படுவாள். காதலன் குறிஞ்சி நிலத் தலைவன். அவனுடைய மலை கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இருந்தது. இதனால் தலைவி அந்த மலையைப் பார்த்துக்கொண்டே மன ஆறுதல் பெற்றிருப்பாள். மாலைக் காலத்திலே அந்த மலை கண்ணுக்குத் தெரியாமல் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து விடும். அப்பொழுது தலைவியின் துக்கமும் வளர்ந்து கொண்டிருக்கும். இதுதான் அவள் பகற்காலத்தில் அதிகமாக வருந்தாமலிருப் பதற்கும் மாலைக் காலத்தில் மனம் வருந்துவதற்கும் காரணமாக இருந்தது. தலைவியின் இந்த உண்மை நிலையை உணராத தோழி ஒரு நாள் மாலைக் காலத்திலே, தலைவியின் துன்பத்தைக் கண்டு வருந்தினாள். இவள் எப்படித்தான் தலைவன் வரும் வரையிலும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருப்பாளோ என்று எண்ணினாள். அப்பொழுது தலைவி அத்தோழியைப் பார்த்து உண்மையை உரைத்தாள். பகற்காலத்திலே அவர் மலையைப் பார்த்து ஒருவாறு துன்பந்தணிந்திருக்கின்றேன். மாலையில் அந்த மலை என்னால் காணமுடியாமல் மறைகின்றது. ஆதலால் வருந்துகின்றேன் என்றாள். இந்த நிகழ்ச்சியையே இச்செய்யுள் எடுத்துரைக்கின்றது. அவருடைய அழகிய பெரிய மலையிலே குளிர்ந்த புதரிலே படர்ந்திருக்கின்ற பசுமையான கொடியையுடைய மொச்சைகள் மலர்ந்திருக்கின்றன. அவை பல நிறமுள்ள மலர்கள். கிளியின் மூக்கைப் போல அம்மலர்கள் காணப்படுகின்றன. ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. காட்டுப்பூனையின் பற்களைப் போல் முல்லை மொக்குகள் வெள்ளை வெளேர் என்று காட்சியளிக் கின்றன. வாடைக்காற்றும் வீசிக் கொண்டிருக்கின்றது. அவ்வாடை என்னைத் துன்புறுத்துவதாயினும் பகல் காலத்திலே இக்காட்சியைக் கண்டு அதிலே உள்ளத்தை ஊன்றியிருப்பேன். மாலைக் காலத்திலே அவருடைய இந்த மலை, கடலிலே அழுந்துகின்ற கப்பலைப் போல மறைகின்றது. ஆதலால் வருந்து கின்றேன். இதை நீயே பார். பாட்டு பனிப்புதல் இவர்ந்த பைம்கொடி அவரைக் கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பன்மலர் வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞல வாடை வந்ததன் தலையும் நோய் பொரக் கண்டிசின்! வாழி! தோழி! தெண்திரைக் கடல் ஆழ் கலத்தில் தோன்றி, மாலைமறையும் அவர் மணிநெடும் குன்றம். பதவுரை:- பனிப்புதல் இவர்ந்த- குளிர்ந்த புதரிலே படர்ந்த. பைம்கொடி அவரை- பசுமையான கொடியையுடைய மொச்சையின். கிளிவாய் ஒப்பின்- கிளி மூக்கைப் போல். ஒளிவிடு பன் மலர்- ஒளி வீசிக் கொண்டிருக்கின்ற பல மலர்களும். வெருக்கு- காட்டுப் பூனையின். பல் உருவின்- பற்களைப் போல் காணப்படுகின்ற, முல்லையொடு கஞல- முல்லை மொக்குகளோடு நெருங்கும் படி. வாடை வந்ததன் தலையும்- வாடைக்காற்று வீசும் காலம் வந்ததன் பிறகும். நோய் பொர- தலைவன் பிரிவால் உண்டான வருத்தம் என்னைத் தாக்கும்படி. அவர் மணி நெடும் குன்றம்- பகலில் காணப்பட்ட அவருடைய அழகிய பெரிய மலை. தென் திரை கடல் ஆழ் கலத்தில் - தெளிந்த அலைகளையுடைய கடலிலே மூழ்குகின்ற கப்பலைப் போலத் தோன்றிக் காணப்பட்டு, மாலை மறையும் - மாலையிலே முற்றும் மறைந்து விடுகின்றது. கண்டி மன்- இதைக் காண்பாயாக ,வாழி தோழி- வாழ்க தோழியே. கருத்து:-அவர் மலையைக் கண்டு துன்பத்தைத் தாங்கினேன். மலை மறைந்தபோது வருந்தினேன். விளக்கம்:- இது கொல்லன் அழிசி என்னும் புலவர் பாட்டு. தன் துயரைக் கண்டு வருந்திய தோழியிடம் தலைவி உரைத்தது. முல்லைத்திணை. அவர் மணி நெடும் குன்றே தென் திரைகடல் சூழ்கலத்தில் தோன்றி மாலை மறையும் கண்டிசின் வாழி தோழி என்று பிற்பகுதியில் சில அடிகள் மாற்றப்பட்டன. அவரை- மொச்சை. மொச்சை பூவுக்குக் கிளிமூக்கு உவமை. மாலையில் மறையும் மலைக்குக் கடலில் அழுந்தும் கப்பல் உவமை. கஞல- நெருங்க. வெருக்கு- காட்டுப்பூனை. கலம்- கப்பல். யாம் தாங்கினோம்; கண்கள் தாங்கவில்லை பாட்டு 241 யாரும் தம்மைக் கோழை என்று சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை; எதற்கும் அஞ்சமாட்டோம் என்று சொல்லிக் கொள்ளத்தான் விரும்புவார்கள். துக்கம் நேர்ந்தால் அதைப் பொறுக்கமாட்டோம்; அதற்காக மனம் உடைந்து போவோம் என்று கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு துன்பம் வந்தாலும் பொருட்படுத்த மாட்டோம், தாங்கிக் கொள்ளுவோம் என்று சொல்லிக் கொள்வதிலும் பலருக்கு ஆசையுண்டு. பெண்கள் கூட இவ்வாறு சொல்லிக் கொள்வதில் பெருமையுண்டு என்று கருதுவார்கள். இந்தக் கருத்து இச்செய்யுளில் அடங்கியிருக் கின்றது. தலைவன் பொருள் தேடப் புறப்பட எண்ணியிருக்கின்றான். இது தோழிக்குத் தெரியும். அவள் தலைவியை நோக்கினாள். தலைவன் பிரிந்திருக்கும்போது இவள் எப்படித்தான் துன்பத்தைத் தாங்கிக்கொண்டிருப்பாளோ என்று எண்ணினாள். இக்குறிப்பை அறிந்தாள் தலைவி. தலைவிக்கும் தலைவன் பொருள் தேடப் புறப்படும் செய்தி தெரியும். ஆதலால் அவள் கண்களில் கண்ணீர் பொங்கிக் கொண்டிருந்தது. அந்நிலையில் அவள் தோழியை நோக்கிக் கூறுகின்றாள். தோழியே! தலைவனுடைய மலை மிகவும் சிறந்த வளமுடையது. கன்றுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்ற சிறிய தலையையுடைய சிறுபிள்ளைகள் அந்த மலையின் மன்றத்திலே யுள்ள வேங்கை மரத்தைக் கண்டனர். அவ்வேங்கை மரத்திலே யுள்ள மொக்குகள் மலரும் பருவத்தைக் கண்டனர். வேங்கை, மரத்திலே தெய்வம் இருக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை ஆதலால் அச்சிறுவர்கள் வேங்கை மலர் பறிக்க அம்மரத்தின்மேல் ஏறவில்லை. கீழே நின்றுகொண்டே அந்த மலர்களைக் கண்டு இன்பம் அடைந்து புலி புலி என்று ஆரவாரம் புரிந்தனர். அந்த ஆரவாரம், வான் அளாவிய அந்த மலையின் குகைகளில் எதிர் ஒலியை எழுப்புகின்றது. இத்தகைய மலைநாட்டின் தலைவனாகிய அவனைக் கண்ட எம் கண்கள் அவன் பிரிவை எண்ணி அழுதன யாம் மன உறுதியுடன் காதல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் இக்கண்கள் தாம் அவனிடம் வைத்திருந்த உரிமை காரணமாக அழுதன. இதற்கு யாம் என்ன செய்வோம் என்று கூறினாள் தலைவி. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் அறிவும் எமக்கு உண்டு; தாங்கிக் கொண்டுதான் இருந்தோம். கண்கள் தமக்குள்ள உரிமை காரணமாக அழுதால் அதற்கு யாம் என்ன செய்வது? என்ற கருத்தைத் தான் மேற்காட்டியவாறு விரித்துக் கூறினாள். இப்பொருள் அமைந்த பாடல்தான் இது. பாட்டு யாமே காமம் தாங்கவும், தாம்தம் கெழுதகைமையின் அழுதன, தோழி! கன்று ஆற்றுப்படுத்த புன்தலைச் சிறாஅர், மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப்பூசல் விண்தோய் விடர் அகத்து இயம்பும் குன்ற நாடன் கண்ட எம் கண்ணே. பதவுரை:- தோழி யாமே காமம் தாங்கவும்- தோழியே யாம் காதல் துன்பத்தை வெளிக்காட்டாமல் தாங்கிக் கொண்டி ருக்கவும், கன்று ஆற்றுப் படுத்து- கன்றுகளை வழியிலே ஒட்டிக் கொண்டு சென்ற. புன்தலைசிறார்- புல்லிய தலையையுடைய சிறுவர்கள். மன்ற வேங்கை- பலர் காணும் பொது இடத்தில் வளர்ந்து நின்ற வேங்கைமரம். மலர் பதம் நோக்கி- மலரும் பருவத்திலிருப்பதைப் பார்த்து. ஏறாது- அவர்கள் அந்த மரத்தின் மேல் ஏறாமல். இட்ட ஏமப்பூசல்- போட்ட இன்பகரமான ஆரவாரம், விண்தோய்- வானத்தை யளாவிய மலையின். விடர் அகத்து- குகைகளில் எல்லாம். இயம்பும்- எதிர் ஒலிக்கும். குன்றநாடன்- குன்று பொருந்திய நாட்டையுடையவனை. கண்ட எம் கண் ஏ- பார்த்த எம் கண்கள். தாம்தம்- தாம் தம்முடைய. கெழுதகைமையின்- உரிமையினால் அழுதன. என்னைக் கேட்காமலே அழுதுவிட்டன. கருத்து:- நான் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளத்தான் நினைத்தேன். ஆனால் அது என்னை மீறிவிட்டது. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தலைவன் பிரிவுத் துன்பத்தை இவளால் தாங்க முடியாது என்று வருந்திய தோழிக்குத் தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. தோழி யாமே காமம் தாங்கவும். கன்று ஆற்றப்படுத்த புன் தலைச்சிறாஅர், மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, ஏறாது ஏமாப்பூசல் விண்தோய் விடர் அகத்து இயம்பும் குன்ற நாடன் கண்ட எம் கண் ஏ தாம் தம் கெழுதகைமையின் அழுதன என்று கொண்டு கூட்டப்பட்டது. மன்றம்-பொது இடம். பதம்- பருவம் வேங்கை மரத்தில் தெய்வம் இருப்பதாகப் பழங்கால மக்கள் நம்பினர். இயம்புதல் - எதிர் ஒலித்தல், வேங்கை மலரைப் பறிக்க விரும்புவோர் புலி புலி என்று ஆரவாரம் புரிவார்கள். சிறுவர்கள் கன்றுகளை ஓட்டிச் செல்வதும் வேங்கைமரம் பூத்திருப்பதைக் காண்பதும் அம்மலரை விரும்பிப் புலிபுலி என்று ஆரவாரிப்பதும் ஆகிய மலைக்காட்சி ஒன்றை இச் செய்யுளிலே காணலாம். கருத்து ஒருமித்த காதல் வாழ்வு பாட்டு 242 தன் மகள் கணவனுடன் ஒத்துவாழ வேண்டும். மருமகனும் மகளும் அன்புடன் இல்லறம் நடத்த வேண்டும்; அவர்கள் வாழ்விலே இன்பமும் மகிழ்ச்சியும் வளர வேண்டும் இதுவே ஒரு தாய் விருப்பம். தன் மகள் அவள் காதலனுடன் ஒன்றுபட்டு வாழ்வதைக் கண்டால் எந்தத் தாயும் மனம் மகிழாமல் இருக்க மாட்டாள். மகள் காதலனுடன் அவன் ஊருக்குப் போய்விட்டாள் அவள் அவனுடன் அன்புடன் இல்லறம் நடத்தி வருகின்றாள். அவன் விட்டுப் பிரிவதேயில்லை. அரசன் ஆணை காரணமாகப் பிரிந்து செல்ல நேர்ந்தாலும் சென்ற இடத்தில் தங்கிவிட மாட்டான் தாமதமில்லாமல் வந்துவிடுவான். இவ்வளவு அன்புடன் அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கையைத் தாய் நேரே காணவில்லை. ஆகையால் அவள், தன் மகள் காதலனுடன் எப்படி வாழ்கின்றாளோ, அவன் அவளை எப்படி நடத்துகின்றானோ என்று கவலைப் பட்டாள். ஆகையால் செவிலித்தாயை அழைத்து மகள் வீட்டுக்கு அனுப்பினாள். மகள் எப்படி இல்லறம் நடத்துகின்றாள்; அவள் காதலன் அவளிடம் எவ்விதம் நடந்து கொள்ளுகின்றான் என்பதைப் பார்த்துக் கொண்டு வருமாறு கூறினாள். செவிலித்தாயும் மகளுடைய இல்லத்திற்கு வந்தாள். சிலநாள் தான் வளர்த்த மகளுடன் தங்கினாள். மகளும் மருமகனும் அன்புடன் பழகுவதைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் என்றும் பிரியாமல் வாழ்வதைப் பார்த்தாள். காதலன் வெளியூர்க்குச் சென்றாலும் உடனே திரும்பி வந்து விடுவதையும் பார்த்தாள். மனம் மகிழ்ந்தாள். பின்னர்த் தன்னூர்க்குத் திரும்பி வந்தாள். நற்றாயிடம் மகளின் வாழ்க்கைச் சிறப்பைப் பற்றியும் காதலன் அவளிடம் கொண்டிருக்கும் அன்பைப் பற்றியும் பாராட்டிக் கூறினாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். கானாங் கோழியின் சேவல் புதர் ஓரத்திலே மேயும்; அப்பொழுது அதன் ஒளியுள்ள புள்ளிகள் பொருந்திய கழுத்திலே குளிர்ந்த நீர்த்துளிகள் படும்படி புதரிலிருந்து தண்ணீர் ஒழுகும். இன்னும் பலமலர்களும் பூத்து மணம் வீசும். இத்தகைய முல்லை நிலத்திலே ஒரு சிற்றூரில்தான் மகள் வாழ்கின்றாள். அவள் கணவன் அவளை விட்டுப் பிரிவதில்லை. அரசன் கட்டளை யிட்டால் தான் அதைத் தட்டமுடியாமல் அத்தொழிலைச் செய்வதற்காகப் பிரிந்து போவான். போனாலும் அவனுடைய தேர், சென்ற இடத்திலே தங்கிவிட்டு வரும் வழக்கத்தை அறியவே அறியாது, காரியம் முடிந்தவுடன் காலந்தாழ்த்தாமல் வந்து விடுகின்றான். பாட்டு கானம் கோழிக் கவர் குரல் சேவல் ஓள் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப், புதல் நீர் வாரும் பூ நாறு புறவில், சீறூ ரோளே மடந்தை; வேறு ஊர் வேந்து விடு தொழிலொடு செலினும் சேந்துவரல் அறியாது செம்மல் தேரே. பதவுரை:- கானம் கோழி- காட்டுக் கோழியினது, கவர் குரல் சேவல்- பல குரல்கள் ஒன்று சேர்ந்த குரலையுடைய சேவலின், ஒண் பொறி எருத்தில்- ஒளியுள்ள புள்ளிகளையுடைய கழுத்திலே. தண்சிதர் உரைப்ப- குளிர்ந்தநீர்த் துளிகள் படும்படி, புதல் நீர்வாரும்- புதரிலிருந்து நீர் ஒழுகும், பூ நாறு புறவில்- பூமணம் கமழ்கின்ற முல்லை நிலத்திலே உள்ள. சிறு ஊ ரோள் ஏ மடந்தை- சிறிய ஊரில் தன் கணவனுடன் இன்புற்றிருக்கின்றாள் நமதுமகள். வேறு ஊர்- அவன் வேற்றூருக்கு. வேந்து விடு தொழிலொடு செலினும்- அரசன் கட்டளையிட்ட தொழிலை மேற்கொண்டு. சென்றாலும், செம்மல் தேர், ஏ- தலைவனுடைய தேர். சேந்து வரல் அறியாது- தங்கியிருந்து பிறகு வருவதை அறியாது; உடனே வந்து சேரும். கருத்து:- தலைவனும் தலைவியும் கருத்து ஒருமித்துப் பிரிவின்றி வாழ்கின்றனர். விளக்கம்:- இச்செய்யுள் குழற்றத்தன் என்னும் புலவரால் பாடப்பட்டது. காதலனும் காதலியும் ஒன்றுபட்டுப் பிரியாமல் வாழ்வதைக் கண்டு வந்த செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது. முல்லைத்திணை. கானம் கோழி- கான் கோழி, காட்டுக் கோழி, கவர்குரல் பிளவுபட்ட குரல்; பலகுரல்கள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் குரல். பொறி - புள்ளி. எருத்து- கழுத்து. சிதர்- நீர்த்துளி. புறவு - முல்லை நிலம். சேந்துதல் - தங்குதல். அரசன் இடும் கட்டளையைத் தட்டாமல் பிரிந்து செல்கின்றானே தவிர, வேறு எக்காரணத்தை முன்னிட்டும் அவன் பிரிந்து செல்வதில்லை. இவ்வாறு தலைவன் அன்பை எடுத்துக் காட்டினாள். இனி அவனை நினையேன் பாட்டு 243 தலைவி வருந்துவதைக் கண்டாள் தோழி. தலைவன் பிரிந்து சென்ற காரணத்தால்தான் அவள் வருந்தியிருக்கின்றாள் விரைவில் வந்து விடுவேன் என்றுசொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே என்று எண்ணும்போது அவள் நெஞ்சிலே ஏக்கம் மிகுந்தது; பெருமூச்சு விட்டாள். இதனால் அவள் உள்ளமும் உடம்பும் சோர்ந்தன. தலைவியின் இத்துயரைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் உரைத்தாள். தலைவன் வரும் வரையிலும் நீ பொறுத்திருக்க வேண்டும். அவன் உன் நன்மைக்காகத்தான் பொருள் தேடப் போயிருக்கிறான்; விரைவில் வந்துவிடுவான் என்று கூறினாள். இதைக் கேட்ட தலைவி, நான் என்ன செய்வேன், தலைவனை நினைப்பதனால் தான் எனக்குத் துக்கம் உண்டாகின்றது. எனக்குத் துக்கம் உண்டாகாமல் இருக்க வேண்டுமானால் நான் அவனை நினைக்காமலிருக்க வேண்டும். இனி நான் அப்படித்தான் இருக்கப் போகின்றேன் என்றாள். அடும்புக் கொடிகள் படர்ந்து கிடக்கும் அக் கொடிகளில் உள்ள இலைகள் குதிரையின் குளம்பைப் போலப் பிளவுபட்டுக் காணப்படும். அக் கொடிகளிலே பூத்திருக்கும் மலர்களோ குதிரையின் கழுத்திலே போட்டிருக்கும் மாலையில் உள்ள மணிகளைப் போலக் காணப்படும். ஒளிபொருந்திய வளையலை அணிந்த பெண்கள் இந்த அடும்புக் கொடியில் உள்ள மொக்குகளைத் தம் கைகளால் பிடித்து இதழ்களைப் பிய்த்து மலரும்படி செய்வார்கள். இவ்வாறு பெண்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். பல பறவைகள், கடலிலும் கடற்கரையிலும் பறந்தும், உட்கார்ந்தும், ஓசையிட்டுக் கொண்டிருக்கும். இத்தகைய காட்சியையுடையது கடற்கரை. இக்கடற்கரையின் தலைவனாகிய என் காதலனை நினைப்பதனால் தான் என் உள்ளத்தில் துன்பம் வளர்கின்றது; கண்களும் உறங்க மறுக்கின்றன; ஆதலால் இனி அவரை நான் நினைக்கமாட்டேன்; என்கண்கள் நன்றாக இமைகளை மூடிக் கொண்டு உறங்குவதாக. பாட்டு மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் தார் மணி அன்ன ஒண்பூக் கொழுதி ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை, உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே! பதவுரை:- தோழி மான் அடி அன்ன- குதிரையின் பாதத்தில் உள்ள குளம்பைப் போல. கவட்டு இலை அடும்பின்- பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பங் கொடிகளில் உள்ள. தார் மணி அன்ன- குதிரையின் கழுத்தில் கட்டிய மாலையில் உள்ள மணி போன்ற. ஒள்பூ கொழுதி - ஒளி பொருந்திய மலர்களைக் கையால் வலிந்து மலரச் செய்து. ஒள் கொடி மகளிர்- ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்கள். வண்டல் அயரும்- விளை யாடுகின்ற. புள் இமிழ்- பறவைகள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற. பெரும் கடல் சேர்ப்பனை- பெரிய கடற்கரையின் தலைவனை. உள்ளேன்- இனி நினைக்கமாட்டேன். என் கண் ஏ படீயர்- என் கண்களே இனி நன்றாக உறங்குவனவாக. கருத்து:- தலைவனை நினைக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் என் துன்பமும் தணியவில்லை. விளக்கம்:- இது நம்பி குட்டுவன் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் துன்பத்தைக் கண்டு நீ பொறுத்திருக்க வேண்டும். என்று வலியுறுத்திய தோழிக்குத் தலைவி கூறியது. நெய்தல்திணை. என் கண் படீஇயர் என்று இறுதித்தொடர் மட்டும் மாற்றப்பட்டது. படீஇயர்- உயிர் அளபெடை. ஏ- அசை. மான்- குதிரை. தார்- மாலை. கொழுதி- கையால் கோதி. இமிழ்- ஒலிக்கின்ற. அடும்பின் இலைக்குக் குதிரைக் குளம்பு உவமானம். அடும்பு மலருக்கு மாலையில் உள்ள மணி உவமானம். அடும்புக் கொடி படர்ந்து கிடக்கும். அதன் இலைகள் குதிரைக் குளம்புகள் போன்றவை. அதன் மலர்கள் மாலையில் தொடுத்த மணிகள் போல் காணப்படும். பெண்கள் அம்மலர்களை அலர்த்தி விளையாடிக் கொண்டிருப் பார்கள். பறவைகள் பல ஓசையிட்டுக் கொண்டிருக்கும். இக் கடற்கரையின் காட்சி. இக் காட்சியை இச் செய்யுள் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது. கலங்காதே! காதலன் மணந்து கொள்வான் பாட்டு 247 காதலனுக்கும் காதலிக்கும் சந்திப்பு ஏற்பட்டுப் பல நாட்களாயின. காதலியைக் காவலிலே வைத்துவிட்டனர். ஆதலால் அவளைச் சந்திக்க காதலனால் முடியவில்லை. நீண்ட நாள்கள் காதலனைப் பற்றிய செய்தி ஒன்றும் காதலிக்கு தெரியவில்லை. அதனால் அவள் கவலைப்பட்டாள். காதலன் தன்னை மறநது விட்டானோ? கை விட்டானோ? என்பதுதான் அவள் கவலை. காதலன் சும்மா இருக்கவில்லை. காதலியின் பெற்றோரிடம் பெண் கேட்டு விட்டான். அவர்களும் சம்மதங்கொடுத்தும் விட்டனர்; விரைவில் திருமணம் நடக்கப் போகின்றது. இச் செய்தியைத் தோழி அறிந்தாள். உடனே அவள் தலைவியிடம் உரைத்தாள். கவலையுடன் இருக்கும் தலைவியின் உள்ளத்திலே களிப்பூட்டினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதுதான் இச்செய்யுள். இச்செய்யுளிலே இரண்டு அறங்கள் அமைந்துகிடக்கின்றன. ஒன்று திறமையுள்ளவர்கள் அறமுள்ள செயல்களைச் செய்வார்கள் என்பது. மற்றொன்று இல்லத்தார் கடமை தம் சுற்றத்தினரைக் காக்கவேண்டும் என்பது. இச்சிறந்த நீதிகளைக் கொண்ட அரிய செய்யுள் இது. தோழியே! வேங்கை மரத்தின் வலிமையான கிளை களிலிருந்து நிறைந்த மலர்கள் கீழே சிந்திக்கிடக்கும். அந்த மலர்களை மெல்லிய படுக்கையாகக் கொண்டு யானைகள் உறங்கும். அப்பொழுது அவைவிடும் குறட்டை ஒலி கேட்கும். இத்தகைய சிறந்த நாட்டின் தலைவன் நம்மை மறந்து விடவில்லை. அவனுடைய மார்பைத் தழுவிக்கொண்ட குற்றமற்ற நட்பு வீணாகி விடவில்லை. அந்த நட்பு மிகவும் அழகானது. அந்த நட்பின் பயனை விரைவில் அடையப் போகின்றோம். திறமையுள்ளவர்கள் தீமை தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள். அவர்கள் செய்வது அறத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும். நமது காதலர் திறமையுள்ளவர் ஆதலால் அவர் நல்லது செய்யவே துணிவுகொண்டார். அவர் செய்யும் இச்செயல் நமது உறவினர்க்கு ஒரு ஆதரவாகவும், பற்றுக்கோடாகவும், இருக்கப் போகிறது. இவ்வுண்மையை நான் அறிந்தேன். ஆதலால் நீ வருந்தாமல் இரு. பாட்டு எழில்மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்; திறவோர் செய்வினை அறவது ஆகும் கிளைஉடை மாந்தர்க்குப் புணையுமார் இவ் என ஆங்கு அறிந்திசினே தோழி, வேங்கை வீயாமென் சினை வீ உக, யானை ஆர் துயில் இயம்பும் நாடன், மார்பு உரித்தாகிய மறு இல்நட்பே பதவுரை:- தோழி- தோழியே. வேங்கை- வேங்கை மரத்தின். வீயாமென்சினை- கெடாத மெல்லிய கிளைகளில் உள்ள. வீ உக- மலர்கள் கீழே விழுந்துகிடக்க. யானைகள் ஆர்துயில்- அம் மலர்களின் மேல் யானைகள் படுத்துறங்கும்போது விடும் மூச்சுக் காற்றின் ஒலி. இயம்பும்- எங்கும் கேட்கின்ற. நாடன்- சிறந்த மலைநாட்டையுடைய தலைவனுடைய. மார்பு உரித்தாகிய- மார்பைத்தழுவும் உரிமை பெற்றதான. மறு இல் நட்பு ஏ- குற்ற மற்ற உறவானது. எழில்மிக உடையது- மிகவும் அழகுடைய தாயிற்று. ஈங்கு அணிபடும்- அந்த நட்பின் பயன் இங்கே விரைவிலே கைகூடும். திறவோர் செய்வினை- திறமையுள்ளவர் செய்கின்ற காரியம். அறவது ஆகும்- அறமுடையதாகவே இருக்கும். கிளையுடை மாந்தர்க்கு- உறவுத்தன்மையுள்ள மக்களுக்கு. புனையுமார் இல்- ஆதரவாகவும் இருக்கும் இச்செயல். என ஆங்கு அறிந்திசின்- என்று அங்ஙனம் அறிந்துகொண்டேன். கருத்து:- தலைவன் விரைவிலே வந்து உன்னை மணந்து கொள்வான்; மனம் வருந்தாதே. விளக்கம்:- இது சேந்தம் பூதன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் தன்னை மணப்பானோ மணக்கமாட்டானோ என்று கவலைகொண்டிருந்த தலைவிக்குத் தோழி கூறியது; தலைவன் உன்னை மணப்பான்; அதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன. இதை நான் அறிவேன் என்று தோழி கூறிய உறுதி மொழி. குறிஞ்சித்திணை. தோழி! வேங்கை வீயா மென் சினை வீ உக யானை ஆர்துயில் இயம்பும் நாடன்மார்பு உரித்தாகிய மறுஇல் நட்பே என்பதை முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. படூஉம் - உ உயிர் அளபெடை. ஏ- அசை. அணிபடும்- அண்மையில் உண்டாகும். திறவோர்- திறமை உள்ளவர்; நீதி நூலோர். புணை- தெப்பம்; ஆதரவு. அறிந்திசின்- அறிந்தேன். வீயா- கெடாத, வீ - மலர். ஆர்- பொருந்திய. தலைவனைப் பற்றி ஐயுற்ற தலைவியின் மனக்கவலை நீங்கும் படி தோழி அவனைத் திறமையுள்ளவன்; அறத்தைச் சிதைக்க மாட்டான் என்றும் கூறினாள். தாய்க்குத் தலைவனைத் தெரியும் பாட்டு 248 காதலனை இரவிலோ பகலிலோ சந்திக்கமுடியவில்லை. அவன் இன்னும் தன்னை மணம் பேசி வந்ததாகவும் தெரியவில்லை. அவன் விரைவில் மணப்பேன் என்று கூறிய உறுதிமொழியை அவன் நிறைவேற்றுவதற்கு என்ன முயற்சி எடுத்துக்கொண்டான் என்றும் தெரியவில்லை. இதனால் தலைவி உள்ளம் வருந்தி யிருந்தாள். ஆனால் தலைவியைப் பெற்ற தாய் சும்மா விருக்கவில்லை. தன் மகள் துன்பத்தைக் கண்டு தெய்வக்கோளாறோ என்று வருந்தினாள். ஆதலால் வேலனுக்குப் பூசை போட்டாள். வெறியாடும் வேலன் உண்மையைச் சொல்லிவிட்டான். உன் மகளுக்கு வேறு எத்துன்பமும் இல்லை. முருகன் போன்ற ஒரு இளைஞன்மேல் காதல் கொண்டாள். அதுதான் அவளது மாற்றத்திற்குக் காரணம் என்று சொல்லிவிட்டான். தாயும் அன்று முதல் தன் மகள் காதலித்த மணாளனைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறாள். இது தோழிக்குத் தெரியும். வருந்தியிருக்கும் தலைவியினிடம் தோழி இச்செய்தியைக் கூறி அவள் துன்பத்தை அகற்றுகின்றாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! கடற்கரைச் சோலையிலே அடும்புக்கொடிகள் படர்ந்துகிடக்கின்றன. மணற்குவியல் வர வர உயர்ந்து கொண்டே போகிறது. கோடைக் காற்று மணலைக்கொண்டு வந்து குவிப்பதனால் அக்குவியல் உயர்கின்றது. மணற்குவியல் உயர்வதனால் அங்கே வளர்ந்திருக்கின்ற பனைமரங்களின் அடிப்பாகம் மணலிலே புதைகின்றது. அதனால் அம்மரங்களின் உயரம் குறைகின்றது; குள்ளமாகின்றது. இத்தகைய கடற்கரைத் தலைவனைப் பற்றி, வேலன் மேல் ஏறிய பெரிய தெய்வம் கூறியதனால், நமது தாய் அவன் இன்னான் என்று தெரிந்து கொண்டாள். ஆதலால் நாம் விரும்பும் அந்தத் திருமண நாள் இனிவராமலிருக்க முடியாது; விரைவில் வரப்போகின்றது. அக்காதலன் மார்பைத் தழுவி இன்புறுக என்று கூறும் நாள் நெருங்கி வந்துகொண்டிருக் கின்றது. இப்படிப்பட்ட காலத்தில் உனக்கு ஏன் துன்பம் உண்டா கின்றது? நீ துன்புறுவது தகாது; இன்புறும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் போது யாரேனும் துன்புறுவார்களோ? பாட்டு அதுவரல் அன்மையோ அரிதே, அவர் மார்பு உறுக என்ற நாளே குறுகி, ஈங்கு ஆகின்றே; தோழி! கானல் ஆடு அரை புதையக் கோடை யிட்ட அடும்பு இவர் மணல் கோடு ஊர, நெடும்பனை குறிய ஆகும், துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனளே. பதவுரை:- தோழி- தோழியே. கானல்- கடற்கரைச் சோலையில் உள்ள. ஆடு அரை புதைய- அசைகின்ற அடி மரம் புதையும் படி. கோடையிட்ட- மேல் காற்றால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட. அடும்பு இவர்- அடும்புக் கொடிகள் படர்ந்த. மணல் கோடு ஊர்- மணல் குவியல் மேலும் உயர்ந்ததனால். நெடும்பனை- நீண்டபனை மரங்கள். குறிய ஆகும் - குட்டையாகப் போகும். துறைவனை- கடல் துறையையுடைய நமது தலைவனைப் பற்றி. பெரிய கூறி- தெய்வச் செயலால் சேர்ந்ததென்று கூறியதனால். யாய் அறிந்தனள் ஏ- தாய், தலைவன் இன்னார் என்று தெரிந்து மணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றாள். அது- ஆகையால் அத்திருமணம். வரல் அன்மையோ அரிது ஏ- வராமல் இருப்பதில்லை. அவன் மார்பு உறுக என்ற நாள் ஏ- அவன் மார்பைத்தழுவி இன்புறுக என்று கூறும் நாள். குறுகி- நெருங்கி வருகின்றது. ஈங்கு ஆகின்று ஏ- நீ இங்கு இவ்வாறு வருந்தியிருப்பது தகாது; மகிழ்ந்திரு. கருத்து:- விரைவில் திருமணம் நடக்கப்போகின்றது. இச் சமயத்தில் நீ துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளாமலிருப்பது நன்றன்று. விளக்கம்:- இது உலோச்சன் என்னும் புலவர் பாட்டு. திருமணம் நடைபெறும் நாள் நீண்டு கொண்டே போயிற்று. அதனால் தலைவி வருந்தியிருந்தாள். அப்பொழுது அவளை நோக்கித் தோழி கூறியது இச்செய்யுள். நெய்தல்திணை. அது வரல் அன்மையோ அரிதே, அவன் மார்பு உறுக என்ற நாளே குறுகி ஈங்கு ஆகின்றேஎன்னும் முதற்பகுதியை யாய் அறிந்தனளே என்னும் இறுதித் தொடருக்குப்பின் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கரை- அடிமரம். கோடை- மேல் காற்று. ஊர- உயர. பெரிய கூறி- தெய்வத்தால் நேர்ந்தது என்ற பெரிய உண்மையைச் சொல்லி. மேல் காற்றின் முயற்சி காரணமாக, நீண்ட பனைமரம் கைக்கு எட்டும் அளவு குட்டையாகின்றது அதுபோல் நம் தாயின் முயற்சியால் எட்டியுள்ள திருமண நாள் குறுகி வந்து கொண்டிருக்கின்றது. இக்குறிப்பு இச்செய்யுளில் அடங்கியிருக் கின்றது. மணல் மேடு உயர உயரப் பனை மரத்தின் உயரம் குறுகுவது இயற்கை. மலைக்காட்சியால் மனத்துயர் நீங்கினேன். பாட்டு 249 தலைவன் பொருள் தேடப் பிரிந்தான். அப்பொழுது தலைவி யிடம் வேறுபாடு காணப்பட்டது. அவள் நெற்றியிலே பசலை நிறம் படரத் தொடங்கியது. முகத்திலே கவலைக்குறி தோன்றியது. அதைக் கண்ட தோழியின் உள்ளமும் வருந்தியது. தலைவன் பிரிகின்ற இப்பொழுதே நின் அழகு குன்றுகிறது. உன் மேனியின் நிறத்திலே மாறுதல் காணப்படுகின்றது. இப்பொழுதே இப்படி யானால், தலைவனைப் பிரிந்திருக்கும் காலம் முழுவதும் உன்னால் துக்கத்தைத் தாங்கிக் கொண்டிருக்க முடியுமா? அதற்கேற்ற ஆற்றல் உனக்கு உண்டா? என்று கேட்டாள் தோழி. உடனே தலைவி நான் தலைவனது குன்றத்தைப் பார்த்து உளத்திலே மகிழ்ச்சி அடைகின்றேன். அக்குன்றத்தின் காட்சி என் மனக் கவலையை வளர விடாமல் தடுக்கின்றது. நானும் மனத்துயரம் நீங்கினேன். இப்பொழுது என் நெற்றியைப் பார். தலைவன் பிரிவதற்கு முன் எப்படி அழகுடன் விளங்கியதோ, அத்தகைய அழகுடன் விளங்கவில்லையா? நான் இனி நெஞ்சம் துணுக்குற மாட்டேன். காதலனுடைய மலைக்காட்சியை இங்கு இருந்தபடி கண்டு என் துன்பத்தை அடக்கிக் கொண்டிருப்பேன்! என்றாள். தலைவியின் இக்கூற்றை எடுத்துரைப்பதே இச்செய்யுள். கூட்டமாக மயில்கள் உட்கார்ந்து மேகங்கள் வானத்திலே தவழ்வதைக் கண்டு ஆனந்தமாக அகவிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய மயில்கள் நிறைந்த மரங்கள் நெருங்கியசோலை. இச் சோலையிலே வெள்ளை முகத்தையுடைய கருங்குரங்களும், இருக்கின்றன. அவை தங்கள் குட்டிகளுடன் குளிர் தாங்காமல் நடுங்கும்படி ஓவென்ற இரைச்சலுடன் மழை பொழிகின்றது. இத்தகைய மலைச்சாரலையுடைய அவர் நாட்டில் உள்ள அவருடைய மலையை நோக்கினேன். அம்மலையில் உள்ள இனிய காட்சி என் உள்ளத்தைக் கவர்கின்றது. அதனால் நான் அவர் பிரிந்த துக்கத்தை மறந்தேன். இப்பொழுது எனது நெற்றியைப் பார். அவர் பிரியாமல் என்னுடன் சேர்ந்திருந்த போது எப்படி அழகாக விளங்கிற்றோ அப்படியே அழகாக விளங்கவில்லையா? பாட்டு இனமயில் அகவும் மரம் பயில் கானத்து நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்பப், படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக், குன்றம் நோக்கினேன்! தோழி! பண்டை அற்றோ! கண்டிசின் நுதலே! பதவுரை:- தோழி- தோழியே! இனமயில் அகவும்- கூட்டமாக மயில்கள் உட்கார்ந்து ஆரவாரித்துக் கொண்டிருக்கின்ற. மரம் பயில் கானத்து- மரங்கள் நெருங்கியிருக்கின்ற காட்டிலே. நரைமுக ஊகம்- வெளுத்த முகத்தையுடைய கருங்குரங்கு. பார்ப்பொடு பனிப்ப- தம் குட்டியோடு குளிரால் நடுங்கும்படி. படு மழை பொழிந்த- ஒலியுடன் மழை பெய்த. சாரல்- மலைச் சாரலையுடைய. அவர் நாட்டு - அவருடைய நாட்டில் உள்ள. குன்றம் நோக்கினேன்- மலையைப் பார்த்தேன். நுதல் ஏ- அதனால் என்னுடைய நெற்றி. பண்டை அற்றோ- முன்னிருந்த அத்தன்மையுடன் காணப்பட வில்லையா? கண்டிசின்- நீ நன்றாகப் பார். கருத்து:- தலைவருடைய குன்றத்தைப் பார்த்துக் கொண்டி ருப்பேன்; அதனால் என் துக்கத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பேன் விளக்கம்:- இது கபிலர் பாட்டு தலைவன் பிரியும்போது வருந்திய தலைவியைப் பார்த்து இப்பொழுதே இப்படி வருந்தினால் தலைவன் பிரிந்த பின் எப்படிப் பொறுத்திருப்பாய் என்று தோழி கேட்டாள். அதற்குத் தலைவி கூறிய விடைதான் இச்செய்யுள். குறிஞ்சித்திணை. தோழி என்னும் சொல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நுதல் பண்டை அற்றோ கண்டிசின் என்று இறுதி அடிமாற்றப் பட்டது. இனம்- கூட்டம். நரைமுகம்- வெளுத்த முகம். ஊகம்- கருங்குரங்கு. பார்ப்பு - குரங்குக்குட்டி. பனித்தல்-குளிரால் நடுங்குதல். படுதல்- ஒலித்தல். சாரம்- மலைச்சாரல். மழையைக் கண்டு மயில்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் புரிகின்றன. குரங்குகளும், குரங்குக்குட்டிகளும் குளிரால் நடுங்கு கின்றன. மரஞ்செடி கொடிகள் எல்லாம் தழைத்துப் பூத்துக் காணப்படுகின்றன. இக்காட்சியைக் காண்போர் மனக்கவலை மறையும். இது இயற்கை. இந்த இயற்கையை எடுத்துரைத்தது இச்செய்யுள். ஆடவர் அன்பு பாட்டு 250 உத்தமப் பெண்கள் தம் காதலர் மீது என்றும் பிரியாக் காதல் கொண்டிருப்பர். இதைப் போலவே ஆடவர்களும், தாம் விரும்பிய காதலிகளின் மேல் அன்பு பூண்டிருப்பார்கள். அன்புள்ள ஆடவர்கள் தம் காதலிமார்களைப் பிரிந்திருக்கும் போதும் அவர்களை மறப்பதில்லை. அவர்கள் எந்த வேலையி லீடுபட்டிருந்தாலும், அவ்வேலையை விரைவிலே வெற்றியுடன் செய்து முடிக்க வேண்டும் தம் காதலி இருக்கும் இடத்தை அடைந்து அவர்களின் பிரிவுத் துன்பத்தை நீக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இந்த உண்மையை உரைக்கின்றது இச்செய்யுள். தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் ஒருவன் அவன் எந்த வேலைக்குச் சென்றானோ அந்த வேலையை வெற்றியுடன் செய்து முடித்தான். தன் காதலியைக் காண வேண்டும் என்ற ஆவல் அவனை விரட்டத் திரும்பி வருகின்றான். அப்பொழுது அவன் தன் தேர்ப்பாகனை நோக்கித் தேரை விரைவாக ஓட்டும் படி கூறுகின்றான். மாலைக் காலம் வந்தால் தலைவி வருந்துவாள் அவள் வருத்தம் தீர மாலைக்காலம் வருவதற்குள் விரைவாகத் தேரை ஓட்டுக என்று கூறினான். இச்செய்தியையே இச்செய்யுள் எடுத்துரைக்கின்றது. நாம் செல்லும் வழியிலே நீர் நிறைந்த பள்ளங்கள் இருக்கின்றன. அப்பள்ளங்களிலே பரல் கற்களும் கிடக்கின்றன; அதனால் நீரும் தெளிந்து காணப்படுகின்றது. அந்த நீரை நல்ல ஆண் மான், தன் துணையான பெண் மானோடு அருந்தித்திரிகின்றது. வழியிலே இத்தகைய காட்சியைக் காணக்கூடிய மாலைக் காலம் வருவதற்கு முன் நமது தேரை விரைவாக ஓட்டுக காற்றைப் போல் விரைந்து செல்லக் கூடிய குதிரைகள் கட்டிய தேரை விரைவாக ஓட்டுவதற்கு எந்த இடையூறும் இல்லை. நீரிலே திரிகின்ற கயல் மீன்களைப் போன்ற மையுண்ட கண்களையுடையவள்; ஆராய்ந்த இனிய மொழிகளை யுடையவள்; இத்தகைய என் தலைவி நல்ல மாலைக் காலம் வந்தால், தனித் திருப்பதால் வருந்துவாள் ஆதலால் அவள் துன்பத்தில் அகப் படாமல் தப்பித்துக் கொள்ளும்படி விரைவில் தேரை ஓட்டுக. பாட்டு பரல், அவல், படுநீர் மாந்தித் துணையோடு இரலை நன்மான் நெறிமுதல் உகளும், மாலை வாரா அளவைக், கால்இயல் கடுமாக் கடவு மதி பாக நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரிதீம் கிளவி தெருமரல் உயவே. பதவுரை:- பரல்- பருக்கைக் கற்கள் நிறைந்த. அவல்படுநீர்- பள்ளங்களிலே நிறைந்த தண்ணீரை. மாந்தி- அருந்தி. துணையோடு- தன் துணையான பெண் மானுடன். இரலை நல்மான்- நல்ல ஆண் மான், நெறிமுதல் உகளும்- வழியிடத்திலே திரிந்து கொண்டிருக் கின்ற. மாலை வாரா அளவை- மாலைக் காலம் வருவதற்கு முன்பே. நெடுநீர் பெருகயல் - பெரிய நீர் நிலையிலே ஒன்றோடு ஒன்று எதிர்க்கின்ற கயல் மீன்களோடு. முரணிய- ஒத்த, உண்கண்- மையுண்ட கண்களையும், தெரிதீம் கிளவி- ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி. தெருமரல் உயஏ- தனித்திருக்கும் துன்பத்திலிருந்து தப்பும்படி. கால் இயல்- காற்றின் தன்மை போல். கடுமா- விரைந்து செல்லும் குதிரைகளை. கடவு- செலுத்துக. பாக- பாகனே. கருத்து:- பாகனே! தலைவியின் துன்பத்தை நீக்குவதற்காக, மாலைக்காலம் வருமுன் தேரினை விரைவாக ஒட்டுக. விளக்கம்:- இது நாமலார் மகன் இளங்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. தலைவியைப் பிரிந்து சென்று திரும்பி வரும் தலைவன், தன் தேர்ப்பாகனை நோக்கி உரைத்தது. பாலைத்திணை. கால் இயல் கடுமா கடவுமதி பாக என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. பரல்- பருக்கைக் கற்கள். அவல்- பள்ளம். இரலை- ஆண்மான். கால்- காற்று. தெருமரல்- துன்பம். பொய்ப்பருவம் கண்டு புலம்பாதே! பாட்டு 251 கார் காலத்திலே திரும்பி வருகிறேன் என்று தலைவன் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் குறிப்பிட்ட கார் காலம் வந்து விட்டது. ஆனால் தலைவன் மட்டும் வரவில்லை. அதைக் கண்டு தலைவி மனம் வருந்தினாள். அது கண்ட தோழி தலைவியைப் பார்த்து ஆறுதல் உரைத்தாள். இது தலைவர் சொல்லிச் சென்ற கார்காலம் அன்று; நீ வருந்தாதே என்றாள்! அதோ பார் மயில் ஆடுகின்றது பிடாக்கொடிகள் மலர்ந்திருக்கின்றன; இவை கார் காலத்து நிகழ்ச்சிகள் அல்லவா? இந்நிகழ்ச்சி கண்டு கார் காலம் அன்றென்று சொல்கின்றாயே! c‹ brhšiy v¥go e«òtJ? என்றாள் தலைவி. அதற்கு தோழி மறுமொழி கூறுகின்றதாக அமைந்திருக்கின்றது இச்செய்யுள். சென்ற கார் காலத்திலே சரியாக மழை பெய்யவில்லை. பெய்யவேண்டிய நீரைமேகங்கள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பழைய நீரையே இப்பொழுது புது நீராகக் கொள்ளும்படி மேகங்கள் பெய்தன. ஆகவே இது கார் காலத்து மேகங்கள் அல்ல. பழைய மேகங்கள் ஆகும். இந்த மேகங்கள் முழங்கும் ஓசையைக் கேட்டுத்தான் மயில்கள் ஆடின; பிடவுகள் பூத்தன. அவை அறியாமை காரணமாக மழைக்காலம் வந்து விட்டதாக எண்ணிக்கொண்டு இவ்வாறு ஆடுகின்றன; பூக்கின்றன. ஆதலால் உண்மையில் இது கார் காலம் அன்று; தோழியே உன் துன்பம் ஒழிக! உண்மையான கார் காலத்தில் உன் காதலர் சொன்னமொழி தவறாமல் வந்து விடுவார்! பாட்டு மடவ, வாழி! மஞ்ஞை மாயினம், கால மாரி பெய்துஎன, அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; கார் அன்று இகுளை! தீர்க நின் படரே; கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய உகுத்தரும் நொதுமல் வானத்து, முழங்கு குரல்கேட்டே. பதவுரை:- கழிந்த மாரிக்கு- சென்ற கார் காலத்திலே. ஒழிந்த பழநீர்- பெய்யாமல் நின்றுவிட்ட பழைய நீரை. புதுநீர் கொளீஇய - புதுநீர் என்று எண்ணிக் கொள்ளும்படி. உகுத்தரும்- மழையாகச் சிந்துகின்ற. நொதுமல் வானத்து- கார் காலத்துக்கு வேறான மேகத்தின். முழங்கு குரல் கேட்டுஏ- ஒலிக்கும் ஓசையைக் கேட்டு. மடவ- அறியாமை யுடையனவாதலால். மஞ்ஞை மாயினம்- மயில்களாகிய கரிய கூட்டங்கள். கால மாரி பெய்து என - கார் கால மழை பெய்தது என்று நினைத்துக் கொண்டு, அதன் எதிர் - இம்மழைக்கு எதிராக. ஆவலும் ஆலின - சிறை விரித்து ஆடின, பிடவும் பூத்தன - பிடாக்களும் மலர்ந்தன, கார் அன்று- ஆதலால் இது கார்காலம் அன்று. இகுளை- தோழியே. தீர்க நின் படர் ஏ- ஒழிக உன் துன்பம். வாழி- வாழ்க. கருத்து:- இது உண்மையான கார் காலம் அன்று; நீ துன்புற வேண்டாம். விளக்கம்:- இது இடைக்காடன் என்னும் புலவர் பாட்டு. கார் காலம் வந்தும் பிரிந்த தலைவன் வராமை கண்டு வருந்திய தலைவிக்குத் தோழி கூறியது. முல்லைத்திணை. கழிந்த மாரிக்கு என்று தொடங்குவது முதல் மூன்று அடிகளையும் முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. ஏ அசைகள். மா- கருமை. பிடவு - ஒரு வகைக் கொடி. ஆலுதல்- ஆடுதல். இகுளை- தோழி. படர்- துன்பம். கொளீஇய- உயிர் அளபெடை. நொதுமல்- அயல்; வேறு. வானம்- மேகம். கற்புள்ள காதலியின் செய்கை பாட்டு 252 கற்புள்ள காதலி தன் காதலன் செய்த குற்றத்தை மறந்து விடுவாள். அவனைக் கண்டபோது முகமலர்ந்து உள்ளம் மகிழ்ந்து வணங்கி வரவேற்பாள்; இதுவே கற்பு நிறைந்த பெண்களின் இயல்பு. நற்குணம் நிரம்பியவர்கள் தம்மைப்பற்றிப் புகழ்ந்தாலும் அதற்கு நாணுவார்கள். தம் எதிரில் தம்மைப்பற்றி பிறர் புகழ்வதை விரும்பமாட்டார்கள். புகழுக்கே அவர்கள் இவ்வாறு நாணுவார் களாயின் அவர்களை இகழ்ந்தால் அவர்கள் அதை எவ்வாறு பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? பொறுக்க மாட்டார்கள். இந்த இரண்டு உண்மைகள் இச்செய்யுளிலே அடங்கி யிருக்கின்றன. தலைவன் பரத்தையர் கூட்டத்தை நாடிச்சென்றான். பல நாள்கள் கழிந்தபின் திரும்பினான். அவனை அவன் காதலி- வெறுக்காமல்- விரட்டாமல் அன்புடன் வரவேற்றாள். அதைக் கண்ட தோழி தலைவியைப் பார்த்து நீ சிறிதும் சினம் கொள்ளாமல் தலைவனை வரவேற்றாயே! V‹ ï¥go¢ brŒjhŒ? என்று கேட்டாள். அவன் நல்ல குணம் உள்ளவன்; பழித்துரைத்தால் அதற்கு மிகவும் அஞ்சுவான்; ஆதலால் அவன் செய்த குற்றத்தை நான் எடுத்துக்காட்டவில்லை. அவனை வரவேற்றேன் என்றாள் தலைவி. இச்செய்தியை எடுத்துரைப்பது தான் இச்செய்யுள். தோழியே! நீ வருந்தாதே! அவன் உன்னைவிட்டுப்பிரிந்து பரத்தையர் வீட்டுக்குப் போனான்; உன்னுடைய தோள்களை இளைக்கும்படி செய்தான்; தோள்வளைகளைத் தாமே கழலும் படிச்செய்தான்; இத்தகைய கொடுமை செய்த மலைநாட்டான் அவன். அவன் திரும்பிவரும்போது நீ சிறிதும் முகம் கோண வில்லை; இனிய முகத்துடன் தெய்வத்தன்மை பொருந்திய கற்புடையவளாய் அவன் எதிரே சென்று வரவேற்றாய்; நீ அறியாமையுள்ளவள், என்று என்னிடம் கேட்டு வருந்தாதே, அறிவுள்ளவர்கள் தம்மைப் புகழ்வதைக் கண்டாலே நாணுவார்கள்; அப்படியிருக்க அவர்களைப் பழித்தால் அதற்கு முன் அவர்கள் நிற்கமாட்டார்கள்; அப்பழிச் சொல்லைக் கேட்டு மிகவும் தளர்ச்சியடைவார்கள். ஆதலால்தான் அறிவுள்ள என் காதலனை நான் பழிக்காமல் வரவேற்றேன். பாட்டு நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த கொடியன் ஆகிய குன்றுகெழு நாடன் வருவது ஓர் காலை, இன்முகம் திரியாது, கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி, மடவை மன்றநீ! எனக் கடவுபு, துனியல் வாழி தோழி சான்றோர் புகழும் முன்னர் நாணுப; பழியாங்கு ஒல்பவோ காணும் காலே. பதவுரை:- நெடியதிரண்ட- உயர்ந்து திரட்சியான. தோள்வளை நெகிழ்த்த - தோள்வளையல்களைத்தான் பிரிந்து சென்றதனால் தாமே கழலச் செய்த. கொடியன் ஆகிய- கொடுமை செய்தவனாகிய. குன்றுகெழுநாடன்- மலைகள் நிறைந்த நாட்டை உடைய தலைவன். வருவது ஓர் காலை- பரத்தையர் இல்லத் திலிருந்து திரும்பி வந்தபோது. இன்முகம் திரியாது- இனிய முகத்திலே வெறுப்பைக் காட்டாமல். கடவுள் கற்பின்- தெய்வத் தன்மையுள்ள கற்பினால். அவன் எதிர்பேணி - அவன் எதிர் சென்று அன்பு காட்டி வரவேற்றாய். மடவை மன்ற - சிறிதும் அறிவில்லாதவள் நீ. எனக் கடவுபு - என்று கேட்டு. துனியல் - வருந்தாதே. வாழி தோழி - வாழ்க தோழியே. சான்றோர்- அறிவு நிறைந்தவர்கள். புகழும் முன்னர்- புகழ் மொழிக்கு எதிரிலும். நாணுப- நாணம் அடைவார்கள். காணும் கால்- எண்ணிப் பார்க்கும்போது. பழி- பழிமொழிக்கு. யாங்கு ஒல்பவோ- எவ்வாறு பொறுப்பார்கள். (*பொறுக்க மாட்டார்கள்.) கருத்து:- தலைவன் அறிவுள்ளவன்; பழிக்கு அஞ்சும் தன்மையுள்ளவன்; ஆதலால் அவனைப் பழிக்காமல் ஏற்றுக் கொண்டேன். விளக்கம்;- இது கிடங்கில் குலபதி நக்கண்ணன் என்னும் புலவர் செய்யுள் பரத்தையர் வீட்டுக்குப் போய் வந்த தலைமகனைத் தலைவி வரவேற்றாள் நீ ஏன் இப்படிச் செய்தாய் என்று தோழி கேட்டாள். அதற்குத் தலைவி கூறிய விடையே இச்செய்யுள். குறிஞ்சித்திணை. கடவுள் கற்பு- தெய்வத்தன்மையுள்ள கற்பு, கணவனையே தெய்வமாகப் போற்றும் கற்பே தெய்வக்கற்பு என்பது முன்னோர் கொள்கை. துனியல்- வருந்தற்க. ஒல்ப- பொறுப்ப. ஒல்பது- பொறுப்பது. உனது நிலைமையை உணரவில்லை பாட்டு 253 பிரிந்துபோன தலைவனை நினைத்துத் தலைவி வருந்திக் கொண்டிருந்தாள். அது கண்ட தோழி அவளுக்குச் சமாதானம் சொல்லத் தொடங்கினாள். தோழியே அவர் உன்னிடம் காதல் மிகுந்தவர்; நீ இங்குப் படும் துயரம் அவருக்குத் தெரியாது; அவரிடம் போய்ச் சொல்லுவார் இல்லை. உன் துன்பத்தை அவர் கேட்டால், அவர் கருதிச் சென்ற காரியத்தையும் கைவிட்டு விரைவில் வந்து விடுவார்; ஆதலால் நீ வருந்தாதே என்று கூறினாள். இவ்வாறு கூறிக் காதலனுடைய அன்பின் பெருமையை எடுத்துரைத்தாள் தோழி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதுதான் இச்செய்யுள். உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்திருக்கும்; காற்றினால் அவை ஒன்றோடு ஒன்று உரசி, ஒலித்துக்கொண்டிருக்கும். இத்தகைய மலைச்சாரலிலே, புலியானது குகையிலே புலால் உணவைக் கொண்டுபோய்த் திணித்து வைத்திருக்கும். வழிநடந்து செல்வோர் புலால்நாற்றம் வீசும் அந்தக் கல் குகையிலே வெய்யில் தாங்காமல் தங்குவார்கள். உயர்ந்த சிகரங்களுடைய இத்தகைய மலைகளைத் தாண்டிப் பொருள்தேடச் சென்றார் உன் காதலர். அவர் உன் துன்பத்தைப் பற்றி அறியவில்லை. அவரிடம் போய்ச் சொல்லுவார் யாரும் இல்லை. அவர் உன் துன்பத்தைக் கேள்வியுற்றால் சிறிதும் காலந்தாழ்த்தமாட்டார். தான் தேடிச் சென்ற சிறந்த செல்வம் கிடைக்காமல் போவதாயிருந்தாலும் உடனே திரும்புவார். நூலால் தொடுத்த மலர்கள் உதிர்ந்து கிடக்கின்ற படுக்கையிலே சோர்ந்து கிடக்கும் படி அழகு தொலைந்த உனது துன்பம் நீங்கும்படி உடனே புறப்பட்டு வந்துவிடுவார்; சிறிதும் தாமதிக்க மாட்டார்; ஆதலால் தோழியே நீ வருந்தாதே. பாட்டு கேளார் ஆகுவர்; தோழி! கேட்பின், விழுமிது கழிவது ஆயினும் நெகிழ்நூல் பூச்சேர் அணையில் பெரும்கவின் தொலைந்தநின் நாள்துயர் கெடப்பின் நீடலர்; மாதோ! ஒலிகழை நிவந்த ஓங்கு மலைச்சாரல், புலிபு கா உறுத்த புலவு நாறு கல்சுனை, ஆறு செல் மாக்கள் சேக்கும் கோடுயர் பிறங்கல் மலையிறந் தோரே பதவுரை:- தோழி- தோழியே, வருந்தாதே. ஒலி கழை நிவந்த- காற்றினால் உரசி ஒலித்துக் கொண்டிருக்கின்ற மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்ற. ஓங்கு மலைச்சாரல்-உயர்ந்த மலைப் பக்கத்திலே. புலி புகா உறுத்த- புலி உணவுக்காகப் புகுத்தி வைத்திருக்கின்ற. புலவு நாறுகல் சுனை- புலால் நாற்றம் வீசும் கல் குகையிலே. ஆறு செல்மாக்கள்- வழிநடந்து போகும் மக்கள். சேக்கும்- தங்குகின்ற. கோடு உயர்- சிகரங்கள் உயர்ந்த. பிறங்கல் மலை- விளக்கமுள்ள மலையை. இறந்தோர்- கடந்து சென்றவர். கேளார் ஆகுவர்- உன் துன்பத்தைக் கேளார் ஆயினார். கேட்பின்- யாராவது சொல்லக் கேட்டாராயின், விழுமிது- தான் தேடிச் சென்ற சிறந்த செல்வம். கழிவது ஆயினும்- கிடைக்காமல் போவதாயினும். நெகிழ்நூல்- முறுக்கற்ற நூலிலே தொடுத்த. பூச்சேர்- மலர்கள் உதிர்ந்து கிடக்கின்ற. அணையில் - படுக்கையிலே சோர்ந்துகிடக்கின்ற. பெரும்கவின் தொலைந்த- பெரிய அழகு குலைந்த. நின் நாள்துயர் கெட- உனது ஒவ்வொரு நாளின் துன்பமும் நீங்கும்படி. பின்நீடலர்- பின்னும் தாமதித்து நிற்க மாட்டார், மாது ஓ அசைச்சொற்கள். கருத்து:- காதலர் உனது நிலைமையை அறியவில்லை அறிந்தால் உடனே திரும்பி வந்து விடுவார். விளக்கம்:- இது பூங்கண்ணன் என்னும் புலவர் பாட்டு தலைவன் பிரிவினால் வருந்துகின்ற தலைவியை நோக்கித் தோழி கூறியது. தலைவர் உன் துன்பத்தை அறிந்தால் உடனே அவர் வந்து விடுவார். அவர் அறியவில்லை; அதனால்தான் தாமதம் என்று கூறினாள். தோழி கூற்று. பாலைத்திணை. ஒலிகழை நிவந்த என்பது முதல் இறுதி நான்கு அடிகளையும் முதலில் வைத்துப்பொருள் உரைக்கப்பட்டது. விழுமிது- சிறந்தது. இங்குச் செல்வப் பொருளைக் குறித்தது. அறத்தையும், இன்பத்தையும், தருவது செல்வம்; ஆதலால் அது சிறந்தது என்னும் பெயர் பெற்றது. கவின்- அழகு. புகா- புகுத்தி, உறுத்த- வைத்த. சேக்கம் - தங்கும். கோடு- சிகரம். பிறங்கல்- மலை; இங்கு விளக்கம் என்னும் பொருளில் வந்தது. செல்வத்தைக் கருதி என்னை மறந்தனர் பாட்டு 254 கார் காலமே காதலர்களுக்கு இன்பம் ஊட்டும் காலம். பிரிந்து சென்ற காதலன், எப்படியும் கார் காலத்தில் திரும்பி வந்து விடுவான்; காதலியின் துன்பத்தை நீக்குவான். இதுவே உலக வழக்கம். கார் காலத்தில் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லிப் பொருள்தேடச் சென்றான் ஒரு தலைவன். கார் காலம் வந்துவிட்டது; தலைவன் வரவில்லை. அதை நினைத்துத் தலைவி வருந்தியிருந்தாள். அவளுக்குத் தோழி நீ வருந்தாதே; அவர் வரும் வரையிலும் பொறுத்துக் கொண்டிரு என்றாள். கார் காலம் வந்து விட்டது; அவர் வரவில்லை. அவர் வருவார் என்று அறிவிக்கும் தூது கூட வரவில்லை. அவர் என்னை மறந்து விட்டார் என்றே நினைக்கிறேன் என்று சொல்லி வருந்தினாள் தலைவி. இச் செய்தியை உரைப்பது தான் இச் செய்யுள். தோழியே! அதோ பார்! அந்தக் கோங்க மரத்தின் கிளைகளிலே இலைகளே இல்லை; அதுவும் ஓர் அழகாகத்தான் காணப்படுகின்றது; அக்கிளைகளிலே மூலக் காம்பைப் போல மெல்லிய மொக்குகள், மலரும் பருவத்தில் காட்சி அளிக்கின்றன. அந்த மொக்குகளைச் சுற்றி வண்டுகள், மலரும் பருவத்தை நோக்கிக் குவியலாகப் பறந்து கொண்டிருக்கின்றன. மொக்குகளும் அவ்வண்டுகளுக்கு விருந்தளிக்க முதல் முதலாக மலர்ந்தன. இது கார்ப் பருவம் வந்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இந்நிலையிலே இனிமையாகத் தூங்குவதற்குரிய இரவு தூக்கத்தையும் மறந்தனர்; பழகிய என்னுடைய மணம் கமழும் கூந்தலைப் பாயாகக் கொண்டு உறங்கும் இன்பத் தூக்கத்தையும் நினைக்காமல் விட்டார்; சேர்ப்பதற்குரிய பொருளைச் சம்பாதிக்க விரும்பிச் சென்றவர், தன் காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டு வரக்கூடிய தூதும் இன்னும் வரவில்லை. அவர் என்னை மறக்காமல் இருந்தால் தூதுவர்கள் வந்திருப்பார்கள். மறந்ததால் தான் தூதர்கள் வந்திலர். தோழியே! இந்நிலையில் நான் வருந்தாமல் என்ன செய்வது? பாட்டு இலைஇல் அம்சினை இன வண்டு ஆர்ப்ப முலைஏர் மெல்முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன வாரா தோழி துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் பயில்நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் செய்பொருள் தரல்நசைஇச் சென்றோர் எய்தினர்ஆல் என வரூஉம் தூதே. பதவுரை:- இலைஇல் அம்சினை- இலை உதிர்ந்த அழகிய கிளைகளிலே. இன வண்டு ஆர்ப்ப- கூட்டமாகிய வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்ய. முலை ஏர்- முலைக் காம்பைப் போல அழகுடன். மெல்முகை அவிழ்ந்த- மெல்லிய மொட்டுகள் விரிந்த. கோங்கின்- கோங்க மரத்திலே. தலை அலர் வந்தன- முதல் மலர்கள் காணப்பட்டன. துயில் இன் கங்குல்- தூங்குவதற்கு இனிய இரவிலே. துயில் அவர் மறந்தனர். என்னுடன் சேர்ந்து உறங்கும் உறக்கத்தை அவர் மறந்தனர். பயில்- அழகிய. நறும் கதுப்பின்- மணம் வீசுகின்ற கூந்தலாகிய. பாயலும் உள்ளார்- பாயையும் நினைக்காமல் மறந்து விட்டனர். செய் பொருள் தர - ஆதலால் தான் சேர்க்கின்ற பொருளைத் தேடிக் கொண்டு வருவதற்காக. நகைஇச் சென்றோர்- விரும்பிச் சென்றவர். எய்தினர்- இதோ வந்து விட்டார். என வரும் தூது- என்று சொல்லிக் கொண்டு வருகின்ற தூதர்களும். வாரா தோழி- வரவில்லை தோழியே. (நான் வருந்தாமல் என் செய்வேன். கருத்து:- தலைவர் என்னை மறந்து விட்டார் போலும்; அதனால்தான் அவரிடமிருந்து தூது வரவில்லை. விளக்கம்:- இது பார்காப்பான் என்னும் புலவர் பாட்டு. வருந்தாமலிருக்கும்படி ஆறுதல் கூறிய தோழிக்குத் தலைவி கூறியது. பாலைத்திணை. வாரா தோழி என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. நசைஇ, வரூ உம்; உயிர் அளபெடைகள். ஆல், ஏ அசைச்சொற்கள். கார் காலத்தில் மலர்வது கோங்க மரம். கதுப்பு- கூந்தல். செய் பொருள்- செல்வம்; ஆக்கம் என்பது இப்பொருள் அமைந்த சொல். செய்யப்படுவது செய்பொருள்; ஆக்கப்படுவது ஆக்கம். கருதியதை முடித்துத் திரும்புவார் காதலர் பாட்டு 255 தலைவன் தன் மீது கொண்டிருக்கும் அன்பைத் தலைவி அறிவாள். பொருள் தேடச் சென்ற தலைவன் தன் மேல் கொண்ட அன்பு காரணமாகப் பொருள் தேடப் போகாமல் திரும்பி வந்து விடுவானோ என்று எண்ணி வருந்தினாள். அப்பொழுது தோழி தலைவியை நோக்கிக் கூறினாள். அவர் கடந்து செல்லும் பாலை நிலத்திலே யானை தன் சுற்றத்தைப் பாதுகாக்கும் காட்சியைக் காண்பார். நாமும் நமது இல்லறத்தை நன்றாக நடத்துவதற்குப் பொருள்தேடிச் செல்வது இன்றி அமையாதது என்று நினைப்பார். ஆதலால் அவர் கருதிச் சென்ற காரியத்தைக் கைவிட்டுத் திரும்ப மாட்டார் என்று கூறினாள் தோழி. இச் செய்தியையே இச் செய்யுள் கூறுகின்றது. தோழியே, இன்றி அமையாத ஒவ்வோரிடத்திலும் தம் கடமையைச் செய்ய வேண்டுமானால் அதற்குப் பொருள் வேண்டும்; செல்வம் இன்றேல் இல்லறத்தார் தம் கடமைகளைச் செய்ய முடியாது. ஆதலால் தன் கடமையைக் கருதிப் பொருள் தேடச் சென்ற நமது விருப்பத்திற்குரிய காதலர் இடை வழியிலேயே திரும்பி வந்து விட்டால் அவர் சென்ற வழியிலே செல்வத்தின் மேல் அவருக்குக் காதலை உண்டாக்கும் காட்சியை அவர் காண்பார். போரையில்லாத வயிரம் பாய்ந்த யாமரம்; அருவியின் பக்கத்திலே நிற்கும் அதன் பொரிந்த அடிமரத்தைத் தன் கொம்பு களால், நன்றாகப் பதியும்படி குத்தும்; அதிலிருந்து வடிகின்ற நீரை, தனது நீண்ட கையினால் வாங்கும். சோர்ந்த நடையினை யுடைய- சிறிய கண்களையுடைய- பெருங்கூட்டமாகிய பிடி யானைகளின் பசியைத் தீர்க்கும்; இத்தகைய நீண்ட வலிமையுள்ள கொம்புகளையுடைய யானையை அவர் கண்டார். ஆகையால் அவர் திரும்பமாட்டார். பொருள் தேடிக்கொண்டு வந்து அந்த யானையைப் போலத் தன் சுற்றத்தைக் காக்கவேண்டும் என்றே உறுதி கொள்ளுவார்! பாட்டு பொத்து இல் காழ, அத்த யாஅத்துப் பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி, மறம்கெழு தடக்கையின் வாங்கி, உயங்குநடைச் சிறுகண் பெருநீரை உறுபசி தீர்க்கும் தடமருப்பு யானை கண்டனர்; தோழி! தம் கடன் நிறீஇயர் எண்ணி இடம்தொறும் காமர் பொருள் பிணிப் போகிய நாம் வெம் காதலர் சென்ற ஆறே. பதவுரை:- தோழி- தோழியே. இடம்தொறும்- கடனாற்ற வேண்டிய இடங்களில் எல்லாம். தம் கடன்- தமது கடமையை - நிறீஇயர் எண்ணி- செய்து நிற்பதற்கு நினைத்து. காமர்- விருப்பத்தை உண்டாக்கும். பொருள் பிணிபோகிய- பொருளைச் சேர்க்கும் பொருட்டுச் சென்ற. நாம்வெம் காதலர்- நாம் விரும்பும் நமது காதலர். சென்ற ஆறு- சென்ற வழியிலே; பொத்து இல்காழ- ஓட்டையில்லா வயிரம் பாய்ந்த, அத்தாயத்து- வழியிலே நின்ற யாமரத்தின். பொரி அரை- பொரிந்த அடிமரத்திலே. முழு முதல் உருவ குத்தி- முழுவதும் பதியும்படி குத்தி. மறம் கெழு - வலிமை நிறைந்த. தடம் கையின்-நீண்ட கையினால், வாங்கி- அதில் இருந்து வடியும் நீரை ஏந்தி- உயங்கு நடை- சோர்ந்த நடையையும். சிறுகண் - சிறிய கண்களையும் உடைய. பெருநிரை- பெரிய யானைக் கூட்டத்தின். உறு பசி தீர்க்கும்- மிகுந்த பசியை நீக்குகின்ற. தடம் மருப்பு யானை- வளைந்த கொம்புள்ள யானையை. கண்டனர்- பார்த்தனர். (ஆதலால் அவர் திரும்ப மாட்டார்.) கருத்து:- தலைவர் தான் கருதிச் சென்ற காரியத்தை முடிக்காமல் திரும்பமாட்டார். விளக்கம்:- இது கடுகு பெருந்தேவன் என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடச் சென்ற தலைவன் தன்மீதுள்ள காதல் மிகுதியால், பொருள் தேடாமல் திரும்பி விடுவாரோ என்று தலைவி வருந்தினாள். அப்பொழுது அவளுக்குத் தோழி காதலன் நிலையை எடுத்துரைத்தாள். தோழி கூற்று. பாலைத்திணை. தோழி இடந்தோறும் தம் கடன் நிறீ இயர் எண்ணிக் காமர் பொருட் பிணிப்போகிய நாம் காதலர் சென்ற ஆறு என்ற அடிகளை முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. யாஅத்து; நிறீஇயர்; உயிர் அளபெடைகள். ஏ- அசைச் சொல், அத்தம்- வழி. யா- யாமரம். உயங்குதல்- சோர்தல். காமர்- ஆசை. பொருள்பிணி- பொருளிலே உள்ளம் பிணிக்கப்பட்டு. இல்லறத் திலுள்ளோர் தம் கடமையைச் செய்வதற்கு முதற் கருவியாயிருப்பது செல்வம் என்பதை இச்செய்யுள் வலியுறுத்தியது. அவள் கண்கள் என் செலவைத் தடுத்தன பாட்டு 256 அன்பாலும் அழுகையாலும் ஒருவர் தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளமுடியும். அன்புக்கும் அழுகைக்கும் இரங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இவ்வுண்மை இச்செய்யுளிலே அமைந்து கிடக்கின்றது. பொருள்தேடும் பொருட்டு வெளியூருக்குப் போக நினைத் தான் ஒரு தலைவன். mt‹ j‹ fhjÈÆl« ‘eh‹ nghŒ¥ bghUŸ nr®¤J¡ bfh©L ÉiuÉny tªJ ÉLnt‹; mJ tiuÆY« Ú bghW¤J¡ bfh©L jŤâU¡f Koíkh? என்றான். உடனே அவள் அழத் தொடங்கி விட்டாள். அது கண்ட தலைவன், தான் பிரிந்து போவதை நிறுத்திவிட்டான்; கைவிட்டான். இச்செய்தியைக் கூறுகிறது இச்செய்யுள். ஒளி வீசுகின்ற காதணியை உடைய தலைவியே நான் பொருள் தேடச் செல்லலாம் என்று நினைக்கின்றேன். அறுகம் புல், நீலமணி நீளமாகக் கிடப்பதுபோல் பரந்துகிடக்கும்; பின்னிக் கொள்ளாமல் தனித்தனியே காணப்படுகின்ற அதன் மெல்லிய தண்டுகளை ஆண் மான், தன் பெண்மானுடன் சேர்ந்து மேய்ந்து கொண்டிருக்கும். இத்தகைய காட்டைக் கடந்து பொருள் தேடச் செல்லவேண்டும். நான் சென்று என் தொழிலிலே வெற்றிபெற்றுத் திரும்புவேன். அதுவரையிலும், நீ என் பிரிவைத் தாங்கிக் கொண்டிருக்க முடியுமா? என்று கேட்டேன். உடனே அவளுடைய கண்கள் முன்னிருந்த நிலையிலே இல்லை; கண்களிலே நீர் சுரந்து மறைத்து விட்டது; இவ்வாறு அழுதலோடு நிற்காமல், நான் ஏறிப் போவதற்கு நின்ற தேரையும் செல்லாமல் தடுத்து விட்டன; நானும் பிரிந்து செல்லாமல் நின்று விட்டேன். பாட்டு மணிவார்ந்து அன்ன மாக்கொடி அறுகை, பிணிகால் மென்கொம்பு பிணையொடும் ஆர்ந்த, மான் ஏறு உகளும் கானம் பிற்பட, வினை நலம் படீஇ வருதும்; அவ்வரைத் தாங்கல் ஒல்லுமோ? பூங்குழை யோய்! எனச் சொல்லா முன்னர் நில்லா ஆகி, நீர் விலங்கு அழுதல் ஆனா, தேர் விலங்கின வால், தெரிவை கண்ணே. பதவுரை:- மணிவார்ந்து அன்ன- நீலமணி நீண்டு கிடப்பதைப் போன்ற. மாகொடி அறுகை- கடுமையான கொடியாகிய அறுகம்புல்லின். பிணிகால்- பின்னிக் கொள்ளாமல் தனித்து நிற்கின்ற. மெல் கொம்பு- மெல்லிய தண்டை. பிணையொடும் ஆர்ந்த- பெண் மானோடு சேர்ந்து மேய்ந்த. மான் ஏறு உகளும் - ஆண் மான் திரிந்து கொண்டிருக்கும். கானம் பின்பட - காடு பின்னாகும்படி கடந்து. வினைநலம்படீ- செல்லும் காரியத்திலே நன்மை பெற்று. வருதும்- திரும்பி வருவோம். அவ்வரை- அது வரையிலும். தாங்கல் ஒல்லுமோ- உன்னால் என் பிரிவைத் தாங்க முடியுமோ. பூம்குழை யோய் - ஒளி பொருந்திய காதணியை யுடைய காதலியே. எனச் சொல்லாமுன்னர்- என்று சொல்லுவதற்கு முன்னே. தெரிவை கண் ஏ- அப்பெண்ணின் கண்கள். நில்லா ஆகி- முன்னிருந்த நிலையிலே நிற்காமல். நீர் விலங்கு- கண்ணீரால் மறைக்கப்பட்டு. அழுதல் ஆனா- அழுவதோடு நின்று விடாமல். தேர் விலங்கின ஆல்- நான் புறப்படுவதற்காக இருந்த தேரையும் புறப்படாமல் நிறுத்திவிட்டது. கருத்து:- நான் பொருள் தேடப் பிரிந்து செல்வதற்குத் தலைவி உடன்படவில்லை; ஆதலால் நான் பொருள் தேடச் செல்லவில்லை. விளக்கம்:- இச்செய்யுளின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருள் தேடச் செல்வதற்காக எண்ணிய தலைவன், தன் காதலியின் துன்பத்தைக் கண்டு, தன் செலவை நிறுத்திவிட்டான். இச்செய்தியை உரைத்தது இச்செய்யுள். தலைவன் கூற்று. பாலைத்திணை. தெரிவை கண் நில்லா ஆகி, நீர் விலங்கு, அழுதல் ஆனா, தேர் விலங்கின ஆல் என்று இறுதி வரிகள் மட்டும் மாற்றப்பட்டன. மணி- நீலமணி; இரத்தினம். பிணை- பெண்மான். மான் ஏறு- ஆண்மான். வினைநலம் படீ- தொழிலிலே நன்மை பெற்று; தொழிலிலே நன்மை பெறுதலாவது, கருதிச் சென்ற காரியத்திலே வெற்றி பெறுவது. ஆனா- அமையாது; நிற்காமல். படீஇ: உயிர் அளபெடை. ஆல்; ஏ; அசைச்சொற்கள். வந்தால் இன்பம்; பிரிந்தால் துன்பம் பாட்டு 257 கள்ளக் காதலன்; கள்ளக் காதலி; இருவரும் ஒவ்வொரு நாளும் சந்திப்பதற்கு இடம் இல்லை. சந்திக்கும்போது இருவரும் இன்பம் அடைவார்கள்; சந்திக்காதபோது இருவரும் காமத்தால் வருந்துவார்கள். இந்நிலையிலே, காதலன், காதலியை வெளிப் படையாக மணந்துகொள்ள முடிவு செய்தான். இச்செய்தியைத் தோழி, தலைவியிடம் கூறினாள். இதைக் கேட்டதும், தலைவனைக் கண்டபோது இன்பம் அடைந்தேன்; அவனைக் காணாதபோது அவனையே எண்ணி வருந்தினேன்; இனி அவனோடு எப்பொழுதும் இணைபிரியாமல் இருப்பேன்; ஆதலால் இனி எனக்கு இன்பமே அன்றித்துன்பம் இல்லை என்று கருத்துத் தோன்றும்படி தலைவி பதில் உரைத்தாள். இச்செய்தியைக் கூறுகின்றது இச்செய்யுள். தோழியே, நமது தலைவனுடைய மலை சிறந்த வளம் பொருந்தியது. அந்த மலையிலே உள்ள பலா மரங்களில், வேரிலும், அடிமரத்திலும், கிளைகளிலும் பழங்கள் தொங்கிக் கொண்டி ருக்கும்; அவை ஒரே மாதிரியாகத் தொடுத்து வைத்திருப்பது போலக் கீழே தாழ்ந்து வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அப்பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுத்திருக்கும். இத்தகைய வளமும், ஆரவாரமும் உடைய மலையின் தலைவன் என்னைக் காணவரும் போதெல்லாம் காமமாகிய பகை எனக்கு இன்பத்தையே தரும். பிறகு அவன் என்னை விட்டுப்பிரிந்து போகும்போதும், அக்காமமாகிய பகை- துன்பம்- என்னை விட்டுப்பிரியாமல் என்னைத் துன்புறுத்தும்; எனக்குப் பகையாகவே நிற்கும். அவன் என்னை வெளிப்படையாக மணந்தால் அந்தக் காமமாகிய பகை என்னைத் துன்புறுத்த முடியாது. பாட்டு வேரும், முதலும், கோடும், ஓராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின், ஆர்கலி வெற்பன், வருதொறும் வரூஉம்; அகலினும், அகலாது ஆகி, இகலும்; தோழி! நம் காமத்துப் பகையே. பதவுரை:- வேரும், முதலும், கோடும் - வேரிலும், மரத்திலும், கிளையிலும். ஒரு ஆங்கு - ஒரே விதமாக. தொடுத்த போல- தொடுத்திருப்பதுபோல. தூங்குபு தொடரி- தொங்கிக் கொண்டு தொடர்ச்சியாக. கீழ் தாழ்வு அன்ன- கீழே தாழ்ந்திருப்பது போன்ற. வீழ்கோள் பலவின்- விழுவதுபோன்ற பழக் கொத்துக்களையுடைய பலா மரத்தின். ஆர்கலி வெற்பன்- ஆரவாரத்தையுடைய மலையின் தலைவரின். வருதொறும்- என்னிடம் வரும் போதெல்லாம். வரூம் - எனக்கு இன்பம் உண்டாகும். தோழி நம் காமத்துப் பகை- தோழியே நமது காமமாகிய பகை. அகலினும்- அவன் நம்மைவிட்டு நீங்கிய பின்னும். அகலாது ஆகி- நம்மைவிட்டு நீங்காமல் நின்று. இகலும்- நம்மைப் பகைத்துத் துன்புறுத்தும். (ஆதலால் அவன் நம்மை மணந்து கொண்டால் இத்துன்பம் இல்லை). கருத்து:- தலைவனைப் பிரியாமல், என்றும் அவனுடன் கூடியிருப்பதே எனக்கு இன்பமாகும். விளக்கம்:- இச்செய்யுள், உறையூர்ச் சிறு கந்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் உன்னை மணந்து கொள்ளப் போகிறான். என்று தோழி கூறினாள். அதைக் கேட்டதும் தலைவி, இனி நான் எப்பொழுதும் இன்பம் அடைவேன் என்று கூறினாள். தலைவி கூற்று, குறிஞ்சித்திணை. தோழி நம் காமத்துப்பகை அகலினும் அகலாது ஆகி இகலும் என்று இறுதி அடிகள் மட்டும் மாற்றப்பட்டன. கோடு- கிளை. தூங்குதல்- தொங்குதல். வீழ்கோள்- கீழே விழுகின்ற நிலையில் உள்ள குலைகள்; அல்லது விரும்பத்தக்க குலைகள்; என்றும் உரைக்கலாம். இகலும்- பகைக்கும். வரூஉம்; உயிர் அளபெடை. காமத்துப்பகை- காமமாகிய பகை. காமத்து இயல்பு இன்னதென்பதை விளக்கி உரைத்தது இச்செய்யுள். தலைவி அழகிழந்தாள்: நீ வரவேண்டாம் பாட்டு 258 பரத்தையர் வீட்டுக்குப் போன தலைவன் திரும்பி வந்தான்; அவனைக்கண்ட தோழி கடிந்து கூறினாள். தலைவியின் அழகு சிதைந்து போய்விட்டது. இனி நீ வருவதனால் பயன் இல்லை. நீ வருவதனால் வீண் பழிதான் உண்டாகும். ஆதலால் நீ நாங்கள் இருக்கும் பக்கமே வரவேண்டாம் உன் மாலையையும் கொடுக்க வேண்டாம் என்று கூறினாள். இச்செய்யுளிலே ஆர்க்காட்டை ஆண்டவன் அழிசி என்பதும், ஆர்க்காடு சிறந்த நகரமாக விளங்கியதென்பதும் குறிக்கப் பட்டிருக்கின்றது. சேந்தன் என்பவன் அழிசியின் மைந்தன்; அவன் சோழ நாட்டையும் சேர்த்து அரசாட்சி புரிந்தவன் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுக் குறிப்பு ஒன்று இச்செய்யுளிலே அடங்கியிருக்கின்றது. எம்பெருமானே! போதும்! போதும்! நீ வந்த வழியைப் பார்த்துக்கொண்டு திரும்பிப் போகலாம். சேந்தன் என்பவன் சிறந்த யானைப் படைகளை உடையவன்; பலரும் நீராடுகின்ற பெரிய காவிரித் துறையிலே, மருத மரத்திலே கட்டியிருக்கின்ற ஆண்யானைகளை உடையவன் அச்சேந்தனுடைய தந்தை சிறந்த கள் உணவினை உடையவன்; விலங்கின் தொகுதிகளை வேட்டையாடுகின்றவன்; எதிர்ப்பவர்களுக்குத் துன்பத்தைத் தருகின்ற ஒளிபொருந்திய வாளையுடையவன்; இளமை பொருந்திய சிறந்த வீரர்களின் தலைவன்; அழிசி என்னும் பெயருள்ளவன். அவனுடைய ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற இவளுடைய சிறந்த அழகு தொலைந்துவிட்டது. இதைக் கண்டும் நீ வருவதில் பயன் இல்லை. ஆகையால் நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீ வரவேண்டாம், உனது மாலையையும் எனக்குப் பரிசாகத் தரவேண்டாம். நீ வருவதனால் வீண் பழிச்சொல்தான் உண்டாகும். பாட்டு வாரல் எம்சேரி; தாரல் நின் தாரே; அலர் ஆகின்று ஆல்; பெரும! காவிரிப் பலர் ஆடு பெரும்துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியலம் புகலின், அம்கோட்டு வேட்டை நிரைய ஓள்வாள், இளையர் பெருமகன்; அழிசி; ஆர்க்காடு அன்ன இவள், பழிதீர் மாண்நலம் தொலைதல் கண்டே. பதவுரை:- பெரும- பெருமானே. காவிரி பலர் ஆடுபெரும் துறை- காவிரியின் பலரும் நீராடுகின்ற பெரிய துறையிலே. மருதொடு பிணித்த- மருத மரத்தோடு சேர்த்துக்கட்டிய. ஏந்து கோட்டு- முன்புறம் உயர்ந்த தந்தங்கள் பொருந்திய. யானை- யானைகளையுடைய. சேந்தன் தந்தை- சேந்தன் என்பவனுடைய தந்தையும். அரியலம் புகவின்- சிறந்த கள்ளுணவினையும். அம்கோட்டு வேட்டை- தொகுதியான மிருகங்களை வேட்டையாடும் தொழிலையும். நிரைய ஒள்வாள்- எதிர்ப்போர்க்குத் துன்பத்தைத் தரும் ஒளி பொருந்திய வாளினையும் உடையவன். இளையர் பெருமகன் - வீரம் பொருந்திய இளைஞர்களின் தலைவன். அழிசி- அழிசி என்பவனுடைய. ஆர்க்காடு அன்ன- ஆர்க்காடு என்னும் ஊரைப்போன்ற. இவள் பழி தீர் மாண் நலம்- இவளுடைய குற்றமற்ற சிறந்த அழகு. தொலைதல் கண்டு- தொலைந்து போனதைக் கண்ட பின்பு. வாரல் எம்சேரி- வராதே எம்முடைய ஊர்க்கு. தாரல் நின் தார் ஏ- தராதே உன்னுடைய மாலையை. அவர் ஆகின்று- நீ வருவதனாலும், மாலையைத் தருவதனாலும், பழிதான் உண்டாகிறது. கருத்து:- நீ இனி இங்கே வரவேண்டாம்; வருவதனால் பயன் இல்லை; வீண் பழிதான் ஏற்படும். விளக்கம்:- இது பரணர் என்னும் புலவர் பாட்டு. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பி வந்த தலைவனைத் தோழி தடுத்துக் கூறியது. தோழி கூற்று. மருதத்திணை. வாரல் எம்சேரி, தாரல் நின்தாரே, அலர் ஆகின்றால் என்னும் தொடர்களை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப் பட்டது. அரியலம்- கள். புகவு- உணவு. தோடு- தொகுதி, தோட்டு என நின்றது. நிரையம் நரகம்; துன்பத்தைக் குறித்து வந்தது. அழிசி என்பவன் ஆர்க்காட்டிலிருந்து ஆட்சி புரிந்தவன்; சேந்தன் என்பவன் உறையூரில் இருந்து அரசாண்டான்; உறையூரின் காவிரித்துறைக்குத் திருமருத முன் துறை என்று பெயர். காவிரிப் பலரோடு பெருந்துறை மருதோடு என்ற தொடர் திருமருத முன் துறையைக் குறிக்கின்றது. அழிசி என்பவன் மகன், சேந்தன். வரலாற்றுக் குறிப்புள்ள குறுந்தொகைப் பாடல்களில் இதுவும் ஒன்று. உனது உயர்வு உனக்கே தெரியும் பாட்டு 259 தலைவியின் நடத்தையிலே தாய்மார்க்கு ஐயம் பிறந்து விட்டது. அவர்கள் குறிகேட்டல், முருகனுக்குப் பூசை போடுதல் முதலியவற்றைச் செய்து, தலைவியிடம், தோன்றியுள்ள மாறு பாட்டைத் தெரிந்துக்கொள்ள விரும்பினர். அப்பொழுது தோழி, அந்தத் தாய்மார்களிடம் உண்மையை உரைத்து விட்டாள். தலைவி அவளுக்கேற்ற உருவும், திருவும், பருவமும் உள்ள ஒரு காதலன் மேற்கொண்டிருக்கும் அன்புதான் அவள் மாறுதலுக்குக் காரணம் என்று கூறிவிட்டாள். இவ்வாறு உண்மையை உரைப்பதற்கு அறத்தோடு நிற்றல் என்று பெயர். தலைவனும் தலைவியும் சந்திப்புக்குத் தடையேற்பட்டால், தலைவன், விரைவிலே தலைவியைக் கற்பு மணம் புரிந்து கொள்வான் என்பது தலைவியின் நம்பிக்கை. இதனாலேயே அவள் உண்மையைக் கூறிவிட்டாள். இதன் பின் தலைவியை வெளியே போகவிடாமல் இரவும் பகலும் தாயார்கள் பாதுகாத்து வந்தனர். தலைவியும் தலைவனைச் சந்திக்க முடியாமல் வருந்தியிருந்தாள். இச் சமயத்திலே, தோழி, நான் ஏன் உண்மை கூறி அறவழியிலே நின்றேன் என்பதைத் தலைவியிடம் உரைத்தாள். இச் செய்தியை உரைப்பதே இச் செய்யுள். மேகங்கள் கூடி மழை பொழிந்து கொண்டிருக்கின்ற மலை; அம்மலையிலே வழிந்து வீழ்கின்ற அருவி; அதன் பக்கத்திலே வளர்ந்து பூத்திருக்கின்ற குளிர்ந்த நறுமணமுள்ள காந்தள் செடிகள்; அந்தக் காந்தளின் மொக்குகள் மலர்ந்து இடையறாமல் மணம் வீசிக் கொண்டிருக்கின்ற நல்ல நெற்றியையும், பல இதழ்களையும் தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்களையும் உடைய மாந்தளிர் போன்ற நிறமுடையவளே நீ என் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டாலும் சரி, அல்லது என்னைத் தண்டித் தாலும் சரி, நான் உனது நன்மையைக் கருதியே அறநெறியிலே நின்றேன். உன் பெருமை உனக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் மெய்யைப் போலப் பொய்யுரைப்பதனால் என்ன பயன்? உண்மை யாகவே உன் காதல் நோயைப் பற்றித் தாய்மார்களிடம் தெரிவித்து விட்டேன். இதற்குக் காரணம் உண்டு. தலைவன் உறுதியுள்ளவன்; உன்பால் நல்ல அன்பு நிறைந்த உள்ளமுடையவன்; ஆதலால் அவன் உன்னை மணம் புரிந்து கொள்ளுவான் என்பதில் ஐயம் இல்லை. ஆதலால் தான் நான் அறத்தில் நின்றேன். பாட்டு மழை சேர்ந்து எழுதரும் மாரிக்குன்றத்து, அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள், முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல், பல் இதழ் மழைக் கண், மாஅ யோயே! ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் பொய்மொழி கூறல் அஃதுஎவனோ; நெஞ்சம் நன்றே நின்வயி னானே. பதவுரை:- மழை சேர்ந்து- மேகங்கள் கூடி. எழுதரும்- மழை பெய்வதற்காக எழுகின்ற. மாரிகுன்றத்து- மழை நிறைந்த மலையிலே. அருவி ஆர்ந்த- அருவியின் பக்கத்திலே உள்ள. தண் நறும் காந்தள்- குளிர்ந்த நல்ல காந்தளின். முகை அவிழ்ந்து- மொக்குகள் விரிந்து, ஆனா நாறும்- இடைவிடாமல் மணம் வீசுகின்ற. நறுநுதல் - நல்ல நெற்றியையும். பல இதழ் மழை கண்- பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்ணையும் உடைய. மாயோயே- மாந்தளிர் போன்ற மாமை நிறம் பொருந்தியவளே. ஒல்வை ஆயினும்- நீ என் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டாலும் சரி. கொல்வை ஆயினும்- பொறுக்காமல் என்னை வருத்து வாயானாலும் சரி. நீ அளந்து அறிவை நின்புரைமை- நீயே உன் பெருமையை அறிவாய், வாய் போல்- உண்மையைப் போல. பொய் மொழி கூறல்- பொய்யுரைத்தலாகிய. அஃது எவன் ஓ- அதனால் என்ன பயன்? (ஒன்றும் இல்லை என்று கருதியே உண்மை கூறினேன்) நின்வயினான் ஏ- உன்னிடத்தில். நெஞ்சம் நன்று- அவனுடைய நெஞ்சம் நல்ல அன்புடையதாகும் என்பதனை நான் அறிவேன். கருத்து:- நான் அறநெறியிலே நின்று உண்மையை உரைத்ததனால் உனக்கு நன்மைதான் உண்டாகும்; விரைவில் அவன் உன்னை மணந்துகொள்ளுவான். விளக்கம்:- இது பரணர் செய்யுள். தலைவியின் களவொழுக்கத்தைத் தாயார்க்குக் கூறி அற நெறியிலே நின்ற தோழி, தான் என்பதைத் தலைவியிடம் உரைத்தது. தோழி கூற்று. குறிஞ்சித் திணை. ஏ- ஓ- அசைகள். மாஅயோயே; உயிர் அளபெடை. ஆர்த்தி- அமைந்த. புரைமை- பெருமை. வாய்- உண்மை. வருவார் வருந்தாதே! பாட்டு 260 தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கின்றாள் ஒரு தலைவி. அவன் வர வேண்டிய மழைக்காலமும் வந்துவிட்டது. ஆனால் அவன் மட்டும் வரவில்லை. தலைவியின் உள்ளத்துயரைக் கண்டாள் தோழி. தலைவியே! நீ வருந்தாதே; தலைவன் வருவான் என்பதைக் குறிக்கும் நல்ல சகுனங்கள் காணப்படுகின்றன; ஆதலால் அவன் வருவது உறுதியாகும் என்று ஆறுதல் உரைகள் கூறினாள் தோழி. இச்செய்தியையே இப்பாடல் உரைக்கின்றது. தோழியே நீ வீணாக உள்ளத்தை வருந்திக் கொள்ள வேண்டாம். கலங்காமலிரு! அதோபார் நல்ல சகுனங்களை; நாரையும் வானத்தில் உயரத்திலே எழும்பிப் பறக்கின்றது. அந்தப் புதரைப் பார் அதிலே படர்ந்த கொடிகளில் உள்ள மொக்குகள் வண்டுகள் சுற்றி மொய்ப்பதனால் வாய்விரிந்து மணம் வீசுகின்றன. சங்கு வளையலை அணிந்து சோர்ந்து இளைத்துப் போன தோள்கள். இப்பொழுது பருத்து, வளையல்கள் இறுகுகின்றன. இவை எல்லாம் நல்ல சகுனங்களாகும். போர் செய்து தோற்றுப்போனவர்களின் நாட்டிலே விளைந்த பொருள்களை உண்டு வாழும் யானைகளையுடைய வர்கள்; சிறந்த தேர்களையுடையவர்கள்; இத்தகைய தொண்டை நாட்டு மன்னர்களின் மலைச்சாரல்களில் சுரபுன்னை மரங்கள் நிறைந்திருக்கும். அங்கேயுள்ள சிறிய அடிப்பாகத்தையுடைய ஓமைமரங்கள், கன்றையிழந்த பசுவைத் தம் நிழலிலே தங்க வைத்துக் காப்பாற்றும். இந்த வழியைக் கடந்து பொருள் தேடச் சென்ற நம் தலைவர் விரைவில் வந்து விடுவார். ஆதலால் நீ வருந்தவேண்டாம். பாட்டு குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் வரிவண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; சுரி வளைப்பொலிந்த தோளும் செற்றும்; வருவர் கொல் வாழி! தோழி! பொருவார்; மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக் கன்று இல் ஓர் ஆ விலங்கிய புன்தாள் ஓமைய சுரன் இறந்தோரே. பதவுரை:- குருகும்- நாரையும். இரு விசும்பு இவரும்- பெரிய வானத்திலே உயரப்பறக்கும். புதலும்- புதரில் உள்ள மொக்குகளும். வரிவண்டு ஊத- கோடுகள் அமைந்த சிறகுகளை யுடைய வண்டுகள் தம் சிறகுக் காற்றை வீசுவதனால். வாய் நெகிழ்ந்தன- வாய் விரிந்து மலர்ந்தன. சுரிவளைப் பொலிந்த- சுருங்கி வளையல் அமைந்த தோளும் செற்றும்- இளைத்த தோளும் இப்பொழுது பருத்து வளையல்கள் இறுகின, (ஆதலால் பொருவார் மண்எடுத்து- போர் செய்கின்றவர்களின் நிலத்திலே விளைந்தவற்றை எடுத்து. உண்ணும்- உண்டு வாழ்கின்ற. அண்ணல் யானை- சிறந்த யானை களையும். வண் தேர்- பெரிய தேர்களையும் உடைய. தொண்டையர்- தொண்டைமண்டல வேந்தர்களின். வழை அமல்- சுரபுன்னை மரங்கள் அமைந்த. அடுக்கத்து- மலைப்பக்கத்திலே. கன்று இல் ஓர் ஆ- கன்றில்லாத ஒரு பசுவை. விலங்கல்- தடுத்துத் தம் நிழலிலே நிறுத்திக் கொண்டிருக்கின்ற. புள்தாள் ஓமைய- சிறிய அடிப்பாகங் களுடைய ஓமை மரங்கள் நிறைந்த. சுரன் இறந்தோர்- வழியைக் கடந்து சென்றவர். வருவர்- இப்பொழுது வந்து விடுவார், வாழி தோழி- வாழ்க தோழியே. கருத்து:- வருந்தாதே! நல்ல சகுனங்கள் காணப்படுகின்றன; அவர் விரைவில் வந்து விடுவார். விளக்கம்:- இது, கல்லாடனார்; என்னும் புலவர் பாட்டு. தலைவன் வரவைக் காணாமல், வருந்திய தலைவிக்குத் தோழி கூறியது. பாலைத்திணை. வருவர் கொல் வாழி தோழி என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஏ. கொல். ஏ- அசைகள். செற்றும்- இறுகும்! செறியும். வழை- சுரபுன்னை மரம். அமல்- பொருந்திய. இரவெல்லாம் விழித்திருந்தேன் பாட்டு 261 கள்ளக்காதல் நடத்திய தலைவிக்கு அந்த வாழ்வு பிடிக்க வில்லை. விரைவில் கற்பு மணம் புரிந்து கொண்டு வெளிப்படையாக வாழ விரும்பினாள். இவ்விருப்பத்தைத் தலைவனுக்கு அறிவிக்க நினைத்தாள். ஒரு நாள் தலைவன், இரவு நேரத்திலே குறித்த இடத்திலே, வந்து நின்றான். தலைவி அவன் வந்ததை அறிந்தாள். தலைவரது வரவை எதிர்பார்த்து, எதிர்பார்த்து இரவெல்லாம் தூங்கவில்லை. விழித்துக் கொண்டிருந்தேன் என்று தோழியிடம் உரைத்தாள்! நான் இவ்வாறு கண் விழித்துக் கொண்டு கவலைப் படாமல் வாழ வேண்டுமானால், அவன் விரைவிலே என்னை மணந்து கொள்ள வேண்டும்; இதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்தையே இவ்வாறு மறைமுகமாகக் கூறினாள் தலைவி இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். மிகுந்த மழை பொழிந்ததால், எள்ளுப்பயிரின் பதம் அழிந்தது; உள்ளே விதை பிடிக்காத எள்ளுக்காய்கள் தாம் அப்பயிரிலே இருந்தன. விடாமல் சிறுதூற்றல்கள் போட்டுக் கொண்டே இருக்கின்ற இத்தகைய மழைக்காலத்திலே, இறுதி நாளிலே, எருமைகளும் சேற்றை வெறுத்தன; சிவந்த கண்களை யுடைய எருமைகள், தாம் நிற்கும் இடம் சேறாயிருப்பதைக் கண்டு நள்ளிரவிலே ஐயென்று கத்திக் கொண்டிருக்கும். இத்தகைய அஞ்சத்தக்க இரவு நேரத்திலும், என் கண்கள் உறங்கவில்லை. காவலர்கள் இரவிலே நாழிகைக் கணக்கை ஆராய்ந்து வருந்து வதைப் போல, வருந்தி, என் நெஞ்சம் புண்பட்டுத் துன்பத்தால் உழன்று கண்மூடாமல் இருந்தேன். பாட்டு பழமழை பொழிந்து எனப் பதன் அழிந்து உருகிய சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயல் கடைநாள், சேற்றுநிலை முனைஇய செங்கண் கார்ஆன், நள்என் யாமத்து, ஐஎனக் கரையும் அஞ்சுவரு பொழுதி னாலும், என்கண் துஞ்சா; வாழி தோழி; காவலர் கணக்கு ஆய்வகையின் வருந்தி, என் நெஞ்சு புண்உற்ற விழுமத் தானே பதவுரை:- பழமழை பொழிந்து என- பழமையான மழை பொழிந்தது. பதன் அழிந்து- அதனால் பதங்கெட்டுச் சிதைந்த. சிதட்டுக்காய் - உள்ளே விதை பிடிக்காத காய்களையுடைய- எண்ணின் - எள்ளுச் செடிகள் நிறைந்த. சில்பெயல் கடைநாள்- குறைந்த மழையையுடைய கார்காலத்தின் இறுதியிலே. சேற்றுநிலை- சேற்றிலே நிற்பதை. முனைய- வெறுத்த. செம்கண்கார் ஆன்- சிவந்த கண்களையுடைய கரிய எருமைகள். நள் என் யாமத்து- நள்ளிருட்டிலே. ஐ எனக் கரையும்- ஐ என்று கத்துகின்ற; அஞ்சு பொழுதினாலும்- அஞ்சும்படி வருகின்ற அந்த இரவுப் பொழுதிலும். காவலர்- நாழிகைக் கணக்கைக் காணத்திரியும் காவலர்கள், கணக்கு ஆய்வகையின்- அந்தக் கணக்கை ஆராய்ந்து வருந்துவதைப் போல. வருந்தி என் நெஞ்சு- வருந்தி எனது மனம். புண் உற்ற-புண்பட்ட; விழுமத்தான்- துன்பத்தினால். என் கண்- என்னுடைய கண்கள். துஞ்சா- தூங்காமல் விழித்திருந்தன. வாழி தோழி- வாழ்க. தோழியே. கருத்து:- தலைவன் வரவை எதிர்பார்த்து நான் இரவு முழுவதும் தூங்கவில்லை; இன்னும் எவ்வளவு நாள் இவ்வாறு வாழ முடியும்? விளக்கம்:- இது கழார்க்கீரன் எயிற்றி என்னும் புலவர் பாட்டு. இரவுக்குறியிலே, தலைவன் வந்து மறைவிலே நின்றான்; அப்பொழுது தலைவி, விரைவில் தலைவன் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தைத் தலைவன் காதில் விழும்படி தோழியிடம் உரைத்தாள். தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. என் கண் துஞ்சா வாழி தோழி என்னும் தொடரை இறுதியிலே வைத்துப் பொருள் கூறப்பட்டது. பதன்- செழித்த தன்மை; செல்வி என்றும் கூறலாம். சிதட்டுக் காய்- உள்ளீடு இல்லாதகாய்; உள்ளே வெறுங்கூடாக இருக்கின்ற காய். கார் ஆன்- எருமை. காவலர்- நாழிகைக் கணக்கர். கணக்கு- நாழிகைக் கணக்கு. நாழிகைக் கணக்கர் இரவிலே உறங்கமாட்டார்கள். நாழிகையை அறிந்து, அதனை மணியோசையின் மூலம் ஊரார்க்கு அறிவிப்பர். அவரைப் போல நானும் உறக்கம் அற்றேன்; அவர்கள் உறங்கி விட்டால், நாழிகையின் கணக்கு அறிவிப்பதும் தவறிவிடும். அதைப் போல் நான் உறங்கி விட்டால், தலைவன் வந்த நேரத்தை அறியாமல் அவனைச் சந்திப்பதும் தவறிவிடும் என்ற கருத்தைத் தலைவி அறிவித்தாள். முனைஇய - உயிர் அளபெடை. ஏ - அசை. தாய் தனியாகக் தவிக்கட்டும் பாட்டு 262 களவு மணவாழ்வு நீண்ட நாளாக நடைபெற்று வந்தது. மகளின் இல்வாழ்க்கையைத் தாய் தெரிந்து கொண்டாள். அதனால் அவளைத் தாய் மிகவும் தொல்லைப்படுத்தினாள்; அங்கேயிங்கே போகாமல் வீட்டிற்குள் அடைத்து வைத்தாள்; தப்பித்தவறித் தெருப்பக்கம், கொல்லைப்பக்கம் போனால் கோல் கொண்டு அடிப்பாள், வைவாள், காதலித்த கணவனுக்கு மணம்புரிந்து கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. இதைக்கண்ட தோழி, தலைவியின் கற்பைக் காப்பாற்றத் துணிந்தாள். தலைவனுடன் பேசி, அவன் இவளைத் தன்னூர்க்கு அழைத்துக் கொண்டு போகும்படி ஏற்பாடு செய்து விட்டாள். இவ்வாறு தலைவன், தான் காதலித்த தலைவியை, அவள் பெற்றோர் உற்றார் அறியாமல் அழைத்துக் கொண்டு போவதற்கு உடன் போக்கு என்று பெயர். தோழி தான் செய்திருக்கும் இந்த ஏற்பாட்டைத் தலைவியிடம் உரைத்தாள். இதுவே இச் செய்யுளில் கூறப்படும் செய்தி. தோழியே! நான்தான் உடன்போக்குக்கு ஏற்பாடுசெய்தேன். ஊரில் உள்ளவர்கள் பழித்துப் பேசவும், இச்சேரியில் உள்ளவர்கள் கல் என்று ஆரவாரம் புரியவும் இடைவிடாமல் துன்புறுத்துகிறாள் அன்னை; அறத்தைப் பின்பற்றாத இத்தகைய அன்னை தன் வீட்டிலே தானே தனியாக வாழட்டும், நீ உன் காதலனுடன் சேர்ந்து நெடுந்தூரத்தில் உள்ள நாட்டுக்குச் செல்லும் வழி, நடந்து செல்வதற்கு அரிய வழிதான். அவ்வழியிலே வானத்தை முட்டும்படி வளர்ந்த மலைகள் உண்டு. அந்த மலைப்பக்கத்திலே பெரிய ஆண் யானைகள் நடந்து கால் அடிகள், பள்ளமாகப் பதிந்திருக்கின்றன. அவ்வடிகளிலே நீர் நிறைந்திருக்கிறது; கரும்பை நடுவதற்காகக் கட்டப்பட்ட, நீர் பாய்ச்சிய பாத்திகளைப் போல, அவை காணப் படுகின்றன. நீ உன் காதலனொடும் சேர்ந்து, நெல்லிக்காயைத் தின்ற உன் கூர்மையான பற்கள் விளங்கும்படி, நீ அந்த நீரை உண்டு மகிழ்ந்து செல்வதைக் காண நான் விரும்பினேன்! பாட்டு ஊஉர் அலர் எழச், சேரி கல் என, ஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை, தானே இருக்க தன் மனையானே; நெல்லிதின்ற முள்எயிறு தயங்க, உணல் ஆய்ந்திசினால் அவரொடு: சேய்நாட்டு விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅன், கரும்பு நடுபாத்தி அன்ன, பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே. பதவுரை:- ஊர் அலர் எழ- ஊரிலே பழிச்சொற்கள் உண்டாக. சேரி கல் என- சேரியிலே கல் என்று ஆரவாரம் உண்டாக. ஆனாது அலைக்கும்- இடைவிடாமல் துன்புறுத்தும். அறன்இல் அன்னை- அறநெறியை நினைக்காத நமது அன்னை. தன் மனையான்- தன் வீட்டிலே. தானே இருக்க- தானே தனியாக இருக்கட்டும். சேய் நாட்டு- தொலை நாட்டுக்குச் செல்லும் வழியிலே. விண்தொட நிவந்த- வானத்தை முட்டும்படி உயர்ந்த. விலங்குமலைக்கவான்- குறுக்கேயுள்ள மலையின் அடிவாரத்திலே. கரும்பு நடு பாத்தி அன்ன- கரும்பை நடுவதற்காகச் செய்யப்பட்ட நீர் பாய்ச்சிய பாத்தியைப் போல. பெரும் களிற்று நடந்தகால் - அடிகளின் பள்ளத்திலே. நிலை இயநீர்- நிலைத்திருக்கின்ற தண்ணீரை. நெல்லி தின்ற முள்எயிறு தயங்க- கூர்மையான பற்கள் விளங்கும்படி. அவரொடு- உன்காதலராகிய அவருடன், சேர்ந்து. உணல்- நீ உண்ணுவதை. ஆய்ந்திசின்- நான் எண்ணினேன். கருத்து:- நீ தலைவனுடன் சேர்ந்து செல்வதற்கு நான் சம்மதித்து விட்டேன். அது உனது நன்மையைக் கருதியேதான். விளக்கம்:- இது பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. தலைவனுடன், தலைவி சேர்ந்து செல்வதற்குத் தோழி உடன்பட்டாள். அவ்வாறு தான் உடன்பட்டதை, அவள் தலைவியிடம் தெரிவித்தாள். தோழி கூற்று. பாலைத்திணை. தன் மனையானே என்பதற்குப்பின் சேய் நாட்டு விண் தொட நிவந்த விலங்கு மலைக்கவாஅன் கரும்பு நடு பாத்தி அன்ன, பெரும்களிற்று அடிவழி நிலைஇய நீரே, நெல்லி தின்ற முள் எயிறுதயங்க அவரொடு உணல் ஆய்ந்திசினாய் என்று அடிகள் பதம் மாற்றிக் கூறப்பட்டன. ஊஉர்; கவாஅன்; நிலைஇய; உயிர் அளபெடைகள். ஏ, ஆல் அசைகள். அலர்- பழிச்சொல், தயங்க- விளங்க, ஆய்ந்திசின்- எண்ணினேன். கவான்- சாரல். காதலித்த காதலனை மணக்க விடுவதே அறன்; அதற்கு இணங்காமை அறமற்ற செயல்; ஆதலால் இதற்கு ஒப்பாத அன்னையை அறன்இல் அன்னை என்றார். நீர் இல்லாத வழியிலே நடந்து செல்வோர், தாகந்தணிய நெல்லிக்கனியை உண்பர். நெல்லிக்கனியைத் தின்றபின் தண்ணீர் அருந்தினால் அத்தண்ணீர் இனிக்கும். நெல்லிதின்ற முள் எயிறு தயங்க உணல் என்பது இவ்வழக்கத்தை உணர்த்தியது. கரும்பு நடுவதற்குச் சிறுசிறு பாத்திகள் கட்டுவர். அதிலே நீர் பாய்ச்சுவர். யானையின் கால்கள் பதிந்த பள்ளங்களில் நீர் நிறைந்திருப்பது கரும்பு நடும் பாத்தியைப் போல் காணப்படுகின்றன. இது இயற்கை உவமை. காம நோய்க்கு இதுவா மருந்து? பாட்டு 263 தலைவியிடம் நாளுக்கு நாள்மாறுதல் தோன்றி வளர்ந்து வந்தது. இதைக் கண்ட தாய் என்னமோ ஏதோவென்று எண்ணினாள்; முருகனுக்குப் பூசை போடமுடிவு செய்தாள். ஒரு நாள் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக மறைவிடத்திலே வந்து நின்றான். அப்பொழுது அவன் காதிலே விழும்படி, தோழி இச்செய்தியைத் தலைவியிடம் உரைத்தாள். தலைவன், விரைவிலே தலைவியை மணம்புரிந்து கொள்ள முன் வரவேண்டும் என்னும் கருத்துடனேயே தோழி இச்செய்தியை உரைத்தாள். இந் நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுளாகும். தோழியே! நமது தலைவன் எப்பொழுதும் மேகங்கள் தவழ்ந்துகொண்டிருக்கின்ற பெரிய மலைகள் நிறைந்த நாட்டை யுடையவன். நாம் அவனிடம் நீங்காத காதல் கொண்டிருக் கின்றோம். அவனோடு களவு மணத்திலே ஈடுபட்டுக் காலம் கடத்தி வருகின்றோம். இதை உணராத நமது அன்னை வெறியாட்டு எடுக்க முயலுகின்றாள். ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையால் செய்த பலிகளை வைத்து, நீர் ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்றின் நடுத்திட்டிலே, பல வாத்தியங்கள் முழங்கும்படி பூசைபோடத் தொடங்கினால்; அது நமக்கு மனத்துயரையே உண்டாக்கும். இந்தப் பூசை வெறும் ஆடம்பரமே அல்லாமல், அது நமது காமநோய்க்கு மருந்தாகாது. நமக்குத் தெய்வம் காதலர்தான். அவரை வாழ்த்தாமல் வேறு பல தெய்வங்களைப் பணிந்து வாழ்த்துவதனால் பலன் இல்லை. அத்தெய்வங்கள் தோன்றி இவள் பேய் பிடிக்கப்பட்டாள் என்று கூறுமாயின் அது வருந்தத்தக்கது; நமது காமநோய் அத்தெய்வங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதலால் இத்தகைய பூசைபோடுவதற்கு நாம் இடம் தரக்கூடாது. பாட்டு மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச், செல்ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத், தோற்றம் அல்லது நோய்க்கு மருந்துஆகா; வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்திப், பேஎய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல், நோதக்கு அன்றே; தோழி! மால்வரை மழைவிளையாடும் நாடனைப், பிழையேம் ஆகிய நாம், இதன்படவே. பதவுரை:- மால்வரை- பெரிய மலைகளிலே. மழை விளையாடும்- எப்பொழுதும் மேகங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்ற. நாடனை- நாட்டின் தலைவனாகிய நமது காதலன்பால். பிழையேம் ஆகிய- மாசற்ற அன்பு கொண்டவர் களாகிய. நாம் இதன்பட ஏ- நாம் சிக்கனவொழுக்கத்திலே வாழவும். (இதனை அறியாமல்) மறிக்குரல் அறுத்து- ஆட்டின் கழுத்தை அறுத்து. தினைப்பிரப்பு இரீஇ - அவ்விரத்தம் கலந்த தினைப்பலியை வைத்து. செல் ஆற்று- நீரோடும் ஆற்றின். கவலை- நடுத்திட்டிலே. பல்இயம் கறங்க- பல வாத்தியங்கள் முழங்க. தோற்றம் அல்லது- வெறும் தோற்றமே அல்லாமல். நோய்க்கு மருந்து ஆகா- நமது காமநோய்க்குச் சிறிதும் மருந்தாகாத. வேற்றுபெரும் தெய்வம்- வேறான பெருந் தெய்வங்கள். பல உடன் வாழ்த்தி- பலவற்றை வாழ்த்தி அவற்றால். பேய்க் கொளீயள்- பேயால் பிடிக்கப்பட்டாள். இவள் எனப்படுதல்- இவள் என்று சொல்லப் படுதல். தோழி நோதக்கு அன்று ஏ- தோழியே வருந்தத்தக்கதாகும். கருத்து:- தாய், நம் பொருட்டுத் தெய்வங்களுக்குப் பூசை போட நினைத்தாள்; அதை நாம் தடுக்கவேண்டும். விளக்கம்:- இது பெருஞ்சாத்தன் என்னும் புலவர் பாட்டு. தாய், மகள் பொருட்டு வெறியாட்டு எடுக்க விரும்பியிருப்பதைத் தலைவன் அறியும்படி தோழி தலைவியிடம் உரைத்தாள். குறிஞ்சித்திணை. மால்வரை என்பது முதல் இறுதி அடிகளை முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. இரீஇ; பேஏய் கொளீ இயள்; உயிர் அளபெடைகள், ஏ- அசைகள். குரல்- கழுத்து. பிரம்பு- பிண்டமாகப் பிடித்துவைக்கும் பலி. கவலை- ஆற்றிடைக்குறை; ஆற்றின் நடுவில் உள்ள திட்டு. இதை அரங்கம் என்றும் உரைப்பர். கற்புடைப் பெண்கள் கணவனைத் தவிர வேறு தெய்வங்களை வணங்கமாட்டார் என்ற கருத்து இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது. அவர் அன்பை நான் அறிவேன் பாட்டு 264 தலைவி தன் துக்கத்தை வாய்விட்டுச் சொல்லவில்லை. அவன் பிரிந்தது முதல் அவன் விரைவில் வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். அவனுடைய அன்பிலே உறுதி கொண்டிருந்தாள். ஆயினும் அவன் பிரிவால் ஏற்பட்ட கவலை அவள் உள்ளத்தை உலுக்கிக் கொண்டுதான் இருந்தது. அவளுடைய உள்ளத்துயர் அவள் உடம்பிலும் காணத் தொடங்கி விட்டது. அது பசலை நிறமாகப் படர்ந்துவிட்டது. அதைக் கண்ட தோழி வருந்தினாள். தோழியின் துயரைக்கண்ட தலைவி; நான் அவர் நட்பின் உறுதியை உணர்வேன்; அவர் என்னை மறந்து விடமாட்டார்; நான் அவர் வரும் வரையிலும் பொறுத்திருப்பேன் இப்பசலை என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று உரைத்தாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! நான் இப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் வல்லமையுடையேன். நமது தலைவன் வளம் பொருந்திய நாட்டையுடையவன். அவனுடைய நாட்டிலே ஆரவாரத்துடன் பெய்யும் மழையினால் காட்டாறுகளிலும் வெள்ளம் பெருகி ஓடிக்கொண்டேயிருக்கும். அக்காட்டாற்றின் தாழ்வான கரைகளிலே சோலைகள் செழித்திருக்கும் அச் சோலைகளில் உள்ள மயில்கள், தமது அழகிய தோகைகளை விரித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஆடும். ஆடுவதோடு நில்லாமல் களிப்புடன் கூவும். இத்தகைய வளம் பொருந்திய நாட்டையுடைய நமது தலைவன் தானே விரும்பி வந்து நட்புக் கொண்டான். அவனுடைய நட்புக்காரணமாக நம்மிடம் பசலை தோன்றினாலும் அப்பசலை நம்மோடு பொருந்தி நில்லாது; விரைவில் மறைந்துவிடும். இத்தகைய உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால் நீ வருந்தாதே. என்னைப் பிரிவுத் துன்பம் ஒன்றும் செய்துவிடமுடியாது. பாட்டு கலி மழை கெழீஇய கான்யாற்று இகுகரை; ஒலி நெடும்பீலி துயல்வர, இயலி. ஆடும் மயில் அகவும் நாடன்; நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே. பதவுரை:- கலிமழை - ஓசையுடன் பெய்கின்ற மழை. கெழீஇய - நீர் நிறைந்த. கான்யாற்று இகுகரை- காட்டாற்றின் தாழ்ந்த கரையிலே. ஒலி நெடும் பீலி- ஒலிக்கின்ற நீளமான தோகை. துயல்வர- அசையும்படி. இயலி ஆடும்- அழகாக நடந்து ஆடுகின்ற. மயில் அகவும் நாடன்- மயில்கள் அகவுகின்ற பொருந்திய நாட்டையுடைய தலைவன். நம்மொடு நயந்தனன்- நம்முடன் தானே விரும்பியவனாகி, கொண்டகேண்மை- ஏற்றுக் கொண்ட நட்பானது. பயந்தக்காலும்- நமக்குப்பசலை நிறத்தைத் தந்தது ஆயினும். பயப்பு ஒல்லாது ஏ- அப்பசலை நிறம் நம்முடன் பொருந்தி நிற்காது; விரைவில் மறைந்து போய்விடும். கருத்து:- என் உடம்பில் அவர் நட்பின் காரணமாக வேறுபாடு தோன்றினாலும், அது நிலைத்து நிற்காது; அவர் அன்பிலே எனக்கு நம்பிக்கையுண்டு. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தலைவன் பிரிவால் வருந்தி இருந்த தலைவியைக் கண்டு தோழி வருந்தினாள். அத் தோழிக்குத் தலைவி ஆறுதல் உரைத்தாள். குறிஞ்சித்திணை. கெழீஇய- உயிர் அளபெடை. ஏ- அசை. கலி- ஓசை. இடி, காற்று முதலியவற்றால் உண்டாவது. இகுகரை- உயரமற்ற தாழ்வான கரை. இயலி- நடந்து. மயில் கூவுதற்கு அகவுதல் என்று சொல்லுதல் மரபு. நயந்தனன் கொண்ட கேண்மை என்பது தலைவனுடைய உறுதியான மாறாத பேரன்பைக் குறித்தது. அவனே வந்து நம்மைக் காதலித்தான்; அவன் நம்மை மறக்க மாட்டான்; கைவிடமாட்டான் என்று தலைவி அவனிடம் வைத்திருந்த உறுதியையும் இத்தொடர் உணர்த்தியது. பழிக்கு நாணும் பண்புடையோன் பாட்டு 265 அறிவுள்ளவர்கள், பழிப்புக்கு நாணுவார்கள்; தம்மை யாரும் இழிவாகப் பேசாத முறையில் நடந்துகொள்ளவேண்டு மென்று தான் ஆசைப்படுவார்கள். பிறர் குறை கூறும்படியான செயல்களை விட்டொழிப்பார்கள்; பிறர் புகழும் செயல்களைச் செய்யவே துணிவார்கள். இதுவே அறிவும், அறிவுக்கேற்ற குணமும் உள்ளவர்களின் தன்மை, இந்த உண்மையை இச்செய்யுள் எடுத்துக்காட்டுகின்றது. களவு மணத்திலே ஒழுகிய தலைமகன் பொருள் தேடப் பிரிந்துபோனான். பொருள் தேடிக் கொண்டுவந்து, தன் காதலியை வெளிப்படையாகக் கற்பு மணம் புரிந்துகொள்ள வேண்டு மென்பதே அவனுடைய முடிவு. அவன் பிரிந்தபின், தலைவி பிரிவினால் வருந்தினாள். அது கண்ட தோழி தலைவியைப் பார்த்து அவளுக்குச் சமாதானம் கூறினாள். தலைவன் நல்லெண்ணத்துடனேயே பிரிந்து போனான். நமது களவுக் காதல் வெளிப்பட்டால் ஊரார் பழிப்பார்கள். அத்தகைய பழிச்சொல் புறப்படுவதற்குமுன்பே நம்மை மணந்து கொள்ளுவதற்காகவே பொருள் தேடப் போனான். அவன் இரவிலே அரியவழிகளைக் கடந்து வருவதற்காக நீ அஞ்சுகின்றாய், உன்னை வெளியிலே போய்விடாமல் கட்டுக் காவலில் வைத்திருப்பதனால் அவனை அடிக்கடி சந்திக்க முடியாமல் துன்புறுகின்றாய். உன்னுடைய துயரத்தை அவனுக்குக் கூறினேன்; எப்பொழுது மணம்புரிந்து கொள்ளப்போகிறாய் என்று கேட்டேன். உடனே அவன் நாணம் அடைந்தான். இனி இத்தகைய களவு ஒழுக்கம் நிகழக்கூடாது என்று எண்ணினான். ஆதலால்தான் மணம் செய்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடப்போனான் என்று தோழி கூறிய செய்தியையே இச்செய்யுள் செப்புகின்றது. அழகிய காந்தள் மொக்குகள் காணப்படுகின்றன. வண்டுகள் அவை மலரும் வரையிலும் காத்திருக்கவில்லை. அவற்றைச் சுற்றிப் பறந்து மலரச் செய்கின்றன. அந்த மொக்குகள் தங்கள் இதழ்களைத் திறக்கும் பொழுது வண்டுகளைத் தம்மிடத்தே வரவேற்கின்றன. சான்றோரை அன்பொடு அவர்களுக்குச் செய்யவேண்டிய கடைமைகளைச் செய்து வரவேற்பவர்களைப் போல அம்மலர்கள், அவ்வண்டுகளை வரவேற்கின்றன. அவ் வண்டுகள் அமர்வதற்கு அம்மலர்கள் தங்கள் இதழ்களைத் தருகின்றன. இத்தகைய காட்சியமைந்த உயர்ந்த மலையின் தலைவன் மாசற்ற மனமுள்ளவன். உன்னுடைய நிலைமையை நான் அவனுக்கு எடுத்துரைத்தேன். உடனே அவன் மிகவும் வெட்கத்துடன் தலை கவிழ்ந்தான். இனி, பழிப்பை உண்டாக்கக் கூடிய களவு வாழ்க்கையைக் கடிவதற்காக அவன் பொருள் தேடப் பிரிந்து போனான்! பாட்டு காந்தள் அம்கொழுமுகை காவல் செல்லாது வண்டுவாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறிசெம்மைச் சான்றோர் கண்ட, கடன்அறி மாக்கள் போல, இடன்விட்டு இதழ்தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் நன்னர் நெஞ்சத்தன்; தோழி! நின்நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆகத் தான் நாணினன் இஃது ஆகாவாறே. பதவுரை:- காந்தள் அம் கொழுமுகை- காந்தளின் அழகிய கொழுத்த மொட்டுகள். காவல் செல்லாது- மலரும் வரையிலும் காத்துக் காலம் கடத்தாமல். வண்டு- வண்டுகள் மொய்த்துப் பறந்து. வாய் திறக்கும் பொழுதில்- அம் மொட்டுகளின் வாயை மலரச் செய்யும் பொழுது. பண்டும்- முன்பும். தாம் அறிசெம்மை- தாம் அறிந்த நடுநிலைமையுள்ள. சான்றோர் கண்ட- பெரியோர் களின் வரவைக் கண்ட. கடன் அறிமாக்கள் போல- சான்றோருக்குச் செய்யும் கடமைகளை அறிந்த அறிவுள்ள மக்களைப் போல. இடன்விட்டு - அவ்வண்டுகள் தங்குவதற்கு இடம் கொடுத்து. இதழ்தளை அவிழ்ந்த- இதழ்களின் பிணிப்பு நீங்கி மலர்ந்த, ஏகல் வெற்பன்- உயர்ந்த மலையை உடைய தலைவன். நன்னர் நெஞ்சத்தன் - என்றும் நல்ல மனத்தையுடையவன். தோழி நின்நிலை- தோழியே அவன் இன்னும் மணம்புரிந்து கொள்ளாமையால், நீ அடையும் கவலையை. யான் தனக்கு உரைத்தனென் ஆக- நான் அவனுக்கு எடுத்துரைத்தேன். உடனே. தான் நாணினன்- அவன் நாணம் அடைந்தான். இஃது ஆகா ஆறு ஏ- இனி இக்களவொழுக்கம் நடைபெறாமல், மணம் புரிந்து வாழும்வழியை நினைத்துப் பொருள் தேடப் போனான். கருத்து:- உன்னை மணந்து கொள்ளும் பொருட்டே தலைவன் பொருள் தேடப் பிரிந்து போனான்; ஆதலால் நீ வருந்தாதே. விளக்கம்:- இது கருவூர்க் கதப்பிள்ளை என்னும் புலவர் பாட்டு. பொருள்தேடப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணித் தலைவி வருந்தினாள். அவளுக்குத் தோழி, தலைவன் பிரிந்து போனக் காரணத்தைக் கூறிச் சமாதானப்படுத்தினாள். தோழி கூற்று. குறிஞ்சித்திணை. செம்மைச் சான்றோர்- நடுநிலையுள்ள பெரியோர்கள். கடன்- கடமை, கடன்-பெரியோர்களை வரவேற்கும் கடமையை அறிந்த மக்கள்; அறிமாக்கள்- பெரியோர்களைக் கண்டால் எதிர் கொண்டு அழைத்தல், இன் சொற்கூறி வரவேற்றல், ஆசனம் அளித்தல், அவர்களைக் களைப்புத்தீர உபசரித்தல் முதலியவை கடமையாகும். நன்றி மறப்பது நன்றாகுமா? பாட்டு 266 பிறர் செய்த நன்றியை மறப்பது நன்றன்று. நன்மை செய்தவர், எங்கேயிருப்பினும், அவரிடம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். நன்றி செய்தவர் நலத்திலே நாட்டம் உள்ளவராயிருக்க வேண்டும்; தம்முடைய நன்மை தீமைகளையும் அவர் அறியும்படி செய்ய வேண்டும். இது நன்றி மறவாமையின் செயல். இக்கருத்து இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது. பொருள் தேடச் சென்ற தலைவன், தலைவியிடம் சொல்லாமலே பிரிந்து போனான். பிரிந்து போனபின் அவனுடைய செய்தி ஒன்றும் தெரியவில்லை. அப்பொழுது தலைவி, தோழியைப் பார்த்துக் கீழ்வருமாறு சொல்லுகின்றாள். தோழியே அவர் பிரிந்துபோன காலத்தில் நமக்கு ஒன்றும் சொல்லவில்லை. எதற்காகப் பிரிந்து போகின்றேன்; எப்பொழுது வருகின்றேன் என்று கூடச் சொல்லவில்லை. நம்மை மணந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடப்பிரிந்து போயிருப்பாராயின்; என்னைக் கொடுக்கும் படிக்கேட்டு எமது உறவினர் பால் தூது அனுப்பியிருப்பார்; இன்னும் அனுப்பவில்லை. இது போகட்டும். இரவு நேரத்திலே நமது வீட்டுத்தோட்டத்திலேயுள்ள வேங்கை மரத்தின் அடியிலே தான் அவர் என்னைக் காண்பார். இதற்கு உதவி செய்த அந்த வேங்கை மரத்திற்குக் கூடத் தூது அனுப்ப வில்லை. ஆதலால் அவரைப்பற்றி நான் என்ன நினைப்பது? என்று சொல்லி வருந்தினாள். இந்நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே நம்மைப் பிரிந்து சென்று பொருள் தேடும் வன்னெஞ்சம் படைத்தவர் நம் தலைவர். இளகிய உள்ளம் படைத்தவராயிருந்தால் நம்மை விட்டுப் பிரியத் துணிந்திருக்க மாட்டார். அவர் பிரிந்து போகும் பொழுதும் நமக்கு ஒன்றும் சொல்லி விட்டுப் போகவில்லை. ஆயினும் சந்திக்காவிட்டால் துன்பத்தைத் தரும் இரவு நேரத்திலே, நமது வீட்டுத் தோட்டத்திலே நிற்கும் வேங்கை மரம் துணை செய்துவந்தது. தகுந்த இனிய துணையாக நின்று என்னைச் சந்திப்பதற்கு உதவியது. நம் உறவினர்க்குத் தூது அனுப்பாவிட்டாலும் அந்த மரத்திற்காவது பறவைகளைத் தூதாக அனுப்பியிருக்கக்கூடாதா? அந்த வேங்கை செய்த நன்றியையும் மறந்தாரோ? பாட்டு நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ, மறப்பரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதுஏ. பதவுரை:- துறத்தல் வல்லியோர்- நம்மை பிரிந்துப் செல்லத் துணிந்த வல்லமையுள்ள தலைவர். நமக்கு ஒன்று உரையார் ஆயினும்- நமக்கு ஒன்றும் சொல்லாமல் சென்றார் ஆயினும். தமக்கு ஒன்று- தமக்குப் பொருந்திய; இன்னா இரவின்- துன்பந்தரும் இரவுக்குறியிலே. இன் துணையாகிய- என்னைக் காண்பதற்கு நல்ல துணையாக இருந்த. படப்பை வேங்கைக்கு- நமது தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்காவது. புள்வாய்த் தூது - பறவையின் வாயிலாகத் தூதனுப்பித் தன் கருத்தை அறிவிப்பதையும். மறந்தனர் கொல் ஓ- மறந்துவிட்டாரோ? கருத்து:- தலைவர் விரைவில் வருவார் என்பதற்காக அடையாளம் ஒன்றுமே தெரியவில்லை. விளக்கம்:- இது நக்கீரர் செய்யுள். தலைவியை மணந்து கொள்ளாமல் தலைவன் பிரிந்து போனான்; அவன் பிரிந்தபின் அவனைப் பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. அப்பொழுது தலைவி தோழியிடம் தன் கவலையைத் தெரிவித்தாள். தலைவி கூற்று. பாலைத்திணை. துறத்தல் வல்லியோர், நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணை ஆகிய படப்பை வேங்கைக்குப் புள்வாய்த்தூது மறந்தனர் கொல் என்று பதங்கள் மாற்றப்பட்டன ஒ.ஏ. அசைச்சொற்கள். படப்பை- தோட்டம். வல்லியோர்- வல்லமையுள்ளோர். புள்- பறவை. இன்புறுவதே பிறப்பின் பயன் பாட்டு 267 இளமைப் பருவம் திரும்பி வருவதில்லை. செல்வத்தை இளமையிலும் சேர்க்க முடியும்; முதுமையிலும் சேர்க்க முடியும்; ஆனால் இளமைப் பருவத்தில் எய்தக்கூடிய இன்பத்தைத் துறந்து விட்டால், பிறகு அதைப்பெற முடியாது. ஆதலால் இளம் பருவத்தில் அமையக்கூடிய இன்பத்தைச் சுவைத்துக் கழிப்பதே சிறந்தது என்ற கருத்து இச்செய்யுளில் அமைந்து கிடக்கின்றது. பண்டைக்காலத்தில் ஒவ்வொருவரும் தாமே வருந்திப்பாடு பட்டுத்தேடிய பொருளைக் கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தனர். தலைவியுடன் கூடி இன்புற்றிருந்த ஒரு தலைவன், நாமும் நமது முன்னோரைப் போலப் பொருள் தேடச் செல்வோம் என்று எண்ணினான். உடனே அவன் உள்ளத்திலே தன் காதலியுடன் நுகர்ந்து வரும் இன்பம் பற்றிய நினைவு எழுந்தது. நானும் இளமைப் பருவம் உள்ளவன்; என் காதலியும் இளமைப் பருவம் உள்ளவள். நாங்கள் இருவரும் நுகர்ந்து வரும் இன்பத்தை விட்டுப் பொருள் தேடப் பிரிதலால் இளமை இன்பம் பாழாகும். நாம் வாழ்வதும் உறுதியில்லை. கூற்றுவன் எப்பொழுது கொடுமை செய்வான் என்று கூறமுடியாது. ஆதலால் இளமை யிருக்கும் போதே இன்பத்தை நுகர்ந்து கழிப்பது தான் நலம் என்று முடிவு செய்தான். முறையாக வந்து சேரும் கூற்றுவனது இரக்கமற்ற கொடுஞ் செயலை நன்றாக அறிந்தவர்கள், இளமைப் பருவத்தை வீணாகக் கழிக்கமாட்டார்கள். இவ்வுலகிலே மிகுந்த பயனைத் தரக்கூடிய செல்வம் எல்லாம் ஒன்றாகக் கிடைப்பதாயிருந்தாலும் சரி, வாழ்க்கையின்பத்தை வீணாக்கமாட்டார்கள். கரும்பின் அடிக் கரணையைச் சுவைப்பது போன்ற இதழ் நீரை உடையவள்; வளையல்களை அணிந்தவள்; இளமைப் பருவம் உள்ளவள்; இத்தகைய காதலியை விட்டுப் பொருள் தேடுவதற்குப் பிரிந்து சென்ற இளம் பருவத்தை வீணாக்க மாட்டார்கள். பாட்டு இரும்கண் ஞாலத்து ஈண்டு பயம் பெருவளம் ஒருங்குடன் இயைளவது ஆயினும், கரும்பின் கால்எறி கடிகைக் கண்அயின்று அன்ன, வால்எயிறு ஊறிய வசைஇல் தீ நீர்க், கோல் அமை குறும் தாடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கின் பிரியார் நாளும் உறன் முறை மரபின் கூற்றத்து அறன்இல் கோள் நற்கு அறிந்திசினோரே. பதவுரை:- நாளும் உறல் முறை மரபின் - நாள்தோறும் வருகின்ற முறையையுடைய வழக்கம் உள்ள. கூற்றத்து- எமனுடைய, அறன்இல் கோள்- அறமற்ற கொலைத் தன்மையை, நன்கு அறிந்திசினோர் ஏ- நன்றாக அறிந்தவர்கள், யாக்கை நிலைமையை அறிந்திருப்பர். இரும் கண் ஞாலத்து- பெரிய இடமான இவ்வுலகிலே, ஈண்டு பயம் பெருவளம் - நிறைந்த பயனைத் தரும் மிகுந்த செல்வம். ஒருங்கு உடன் இயைவது ஆயினும்- ஒன்றாக உடனே சேர்வதானாலும். கரும்பின் கால்- கரும்பின் அடியிலே. எறி கடிகை கண் - வெட்டப்பட்ட துண்டத்தை. அயின்று அன்ன- தின்றால் உண்டாகும் இனிமையைப் போன்ற. வால் எயிறு ஊறிய - தூய்மையான பற்களின் அடியிலே ஊறிய. வசை இல் குற்றமற்ற தீ நீர்- இனிய நீரையும்; கோல் அமைகுறும் தொடி, -கோல்வடிவிலே அமைந்த குறுகிய வளையல்களையும் - குறுமகள் உடைய - இளம்பருவ மங்கை. ஒழிய- தனித்து நிற்கும்படி. ஆள் வினை மருங்கின்- பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு. பிரியார்- பிரிந்து செல்ல மாட்டார்கள். கருத்து:- நான் இளமை இன்பத்தைத் துறந்து பொருள் தேடப் போகமாட்டேன். விளக்கம்:- இது, கால் ஏறி கடிகையார் என்னும் புலவர்பாட்டு ஒரு தலைவன் தன் முன்னோரைப் போலத் தானும் பொருள் தேடப்பிரிந்து செல்ல நினைத்தான் உடனே அவன் நெஞ்சில் வாழ்நாள் நிலையற்றது என்ற எண்ணம் தோன்றியது; தலைவியின் இன்ப நுகர்ச்சியும் மனதைக் கவர்ந்தது ஆதலால் பிரிவதில்லை என்று தீர்மானித்தான். பாலைத்திணை. நாளும் உறன்முறை மரபின் கூற்றத்து, அறன் இல்கோள் நற்கு அறிந்திசினோரே என்ற அடிகளை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஈண்டு பயம்- நிறைந்த பயன். வளம்- செல்வம். கடிகை- துண்டம். தீநீர்- இனிய நீர். குறுமகள்- இளம் பருவமுள்ளபெண். ஆள்வினை- முயற்சி. ஏ அசைச்சொல். எதைக் கேட்பதற்கும் ஆற்றல் இல்லை பாட்டு 268 நமக்கு மற்றொருவரால் ஒரு காரியம் முடிய வேண்டும். யாரால் காரியம் முடிய வேண்டுமோ, அவருடன் நேரில் பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம். ஆனால் சிலருடன் சில செய்திகளை நேரில் பேச முடியாது; அப்படிப்பட்டவர்களுடன் நமக்கு வேண்டிய நண்பரைக் கொண்டு பேசச் செய்துதான் காரியத்தை முடிக்க வேண்டும். இதுதான் காரியம் வெற்றி பெறுவதற்கான வழி. ஒரு தலைவனும் ஒரு தலைவியும் அடிக்கடி இரவிலே சந்திக்கின்றனர். இவ்வாறு இரவில் சந்திப்பதை நிறுத்திவிட வேண்டும். விரைவில் தலைவனை மணம் புரிந்து கொண்டு அவனுடன் இணைபிரியாமல் வாழ வேண்டும், என்று தலைவி. விரும்பியதற்குக் காரணம் உண்டு. தலைவன் இரவு நேரத்திலே, மழை- பனி- இருட்டு என்று பார்க்காமல் கொடிய விலங்கினங்கள் நிறைந்த வழியைக் கடந்து வருகின்றான். இதனால் அவனுக்கு ஆபத்துண்டானால் என்ன செய்வது என்ற அச்சம் ஒன்று. தனது களவு ஒழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து விட்டால், அவர்கள் பழிப்பார்களே என்ற காரணம் ஒன்று. இந்த இரண்டுமே விரைவில் காதலனைக் கற்பு மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் விரும்பியதற்குக் காரணம். தலைவியின் எண்ணத்தை அவளுடைய தோழி அறிந்தாள். ஒரு நாள் இரவு தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக வீட்டின் வேலிக்கு அப்பால் வந்து நின்றான். அப்பொழுது தோழி, தலைவியின் உள்ளக்கருத்துத் தலைவனுக்குத் தெரியும்படி தலைவியிடம் பேசினாள். தலைவன் விரைவில் மணந்து கொள்வதே நலம் என்று கருத்துப்படப் பேசினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இச்செய்யுள். தலைவியே இடி இடித்து மழைபெய்கின்ற நள்ளிரவாயினும் அவர் காலம் தாழ்த்துவதில்லை. படமுள்ள பாம்பின் பெரிய தலை துண்டாக இற்று விழும்படி இடி இடிக்கின்றதே! மழை பெய்கின்றதே! நள்ளிரவாக இருக்கின்றதே! என்று அஞ்சாமல் அவர் அடிக்கடி வந்து சேர்கின்றார். உன்னுடைய நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோள்களைத் தழுவி இன்புறுகின்றார். அவர் தழுவி இன்புற்ற பின் நீர் திரும்பிச் செல்கின்றீரோ என்று சொல்வதற்கும் நமக்கு வலிமை இல்லை. மீண்டும் வருவீரோ என்று கேட்பதற்கும் நமக்கு வலிமை இல்லை. திரும்பிச் செல்லும்போது, வழியிலே அவர்க்கு ஆபத்துண்டு; மீண்டும் வரும் போதும் அவருக்கு வழிநடை ஆபத்துண்டு; ஆதலால் நாம் என்னதான் செய்வது? அவரை விட்டு நாம் என்றும் பிரியாமல் வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியுடன் வாழலாம்; அச்சமின்றி வாழலாம். பாட்டு சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம்; வருவிரோ என வினவலும் வினவாம்; யாங்குச் செய்வாம் கொல்! தோழி! பாம்பின் பையுடை இரும்தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து நெடுமென் பணைத்தோள் அடைத்திசினேரே பதவுரை:- தோழியே. பாம்பின் பைஉடை இரும்தலை- பாம்பின் படம்உள்ள பெரியதலையை. துமிக்கும்- துண்டித்து எழும்படி செய்யும். ஏற்றொடு - இடியும் மழையும் நிறைந்த. நடுநாள் என்னார்- நள்ளிரவு என்று அஞ்சாமல். வந்து - வழி நடந்துவந்து. நெடுமெல் பணைத்தோள்- உன்னுடைய நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோள்களை. அடைந்திசினோர்ஏ- தழுவி இன்புற்றவரிடம். சேறிரோஎன- பிரிந்து செல்கின்றீரோ என்று. செப்பலும் ஆற்றாம்- சொல்லுதற்கும் வல்லமையற்ற வராயினும். வருவிரோ என- சென்று மீண்டுவருவீரோ என்று. வினவலும் வினவாம்- கேட்பதையும் செய்யமாட்டோம். யாங்குச் செய்வாம்- நாம் வேறு எதை எப்படிச் செய்வோம். கருத்து:- தலைவர் விரைவில் வரைந்து கொள்ளுவதுதான் நாம் வருந்தாமல் வாழ்வதற்கு வழியாகும். விளக்கம்:- இச்செய்யுள், கருவூர் சேரமான் சாத்தன். என்னும் புலவரால் பாடப்பட்டது. இரவு நேரத்திலே தலைவியைச் சந்திக்க வந்து மறைந்து நின்றான் தலைவன். அப்பொழுது அவள் காதிலே விழும்படி தோழி தலைவியிடம் உரைத்தது. தோழி கூற்று. குறிஞ்சித் திணை. தோழி பாம்பின் என்ற மூன்றாம் அடியின் பகுதி தொடங்கி இறுதி அடிகளை முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. கொல், ஏ- அசைச்சொற்கள். யாங்கு- எப்படி. துமிக்கும்- துண்டிக்கும். ஏற்றொடு- இடியோடு. ஏறு- இடி. என்னார்- என்று நினைத்து அஞ்சாமல்- பணை- மூங்கில். இது நல்ல சமயம் பாட்டு 269 தலைவியும் நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவள்; தலைவனும் நெய்தல் நிலத் தலைவனேதான். இருவரும் காதலுற்றுக் களவுமண வாழ்வு நடத்தி வந்தனர். ஒருசமயம், தலைவியின் தந்தை மீன் பிடிக்கச் சென்றிருந்த போது, சுறாமீனால் அடிக்கப்பட்டுக் காயம் அடைந்தான். அதனால் அவன் அந்தப் புண் ஆறும் வரையிலும் வீட்டிலேயே தங்கியிருந்தான். அவனுக்கு உதவியாக அவள்தாயும் வீட்டிலேயே இருந்தாள். ஆதலால் தலைவியால், கண்ட காதல் தலைவனைத் தான் அளவளாவ முடியவில்லை. தந்தை குணமடைந்து மீன்பிடிக்கப் போய் விட்டான்; தாய் உப்பு விற்பதற்காகப் போய் விட்டாள். இச்சமயத்தில் தலைவன், தலைவியைக் காண்பதற்காக வந்து மறைவிடத்திலே நின்றான். அதை உணர்ந்த தலைவி, தலைவன் எங்கே அவசரப்பட்டுத் திரும்பிப் போய் விடுவானோ என்று நினைத்தாள். உடனே அவள் தோழியிடம், இப்பொழுது கிடைத்துள்ள வாய்ப்பைத் தலைவன் இழந்து விடக்கூடாது என்று தலைவன் காதிலே கேட்கும்படிக் கூறினாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச் செய்யுள். தோழியே! வலிமையுள்ள சுறாமீனால் தாக்கப்பட்ட என் தந்தையின் புண் ஆறிவிட்டது. ஆதலால் அவன் வழக்கம் போல் மீன் வேட்டைக்காக, நீல நிறமுள்ள திரைக்கடலிலே போயிருக்கின்றான். என் தந்தையின் புண் ஆறும் வரையிலும் வீட்டிலே தங்கியிருந்த என் தாயும் வீட்டில் இல்லை. உப்பைவிற்று வெண்மையான நெல்லை வாங்கி வருதற்காக, உப்பைச் சேகரித்துக் கொண்டு வரும் பொருட்டு உப்பளத்திற்குப் போய் விட்டாள். இப்பொழுது நாம் தனித்திருக்கின்றோம். ஆதலால் நமது கடல்துறைத்தலைவனுக்குத் தூது அனுப்ப வேண்டும். இப்பொழுது இங்கே வந்தால் தலைவியைக் கண்டு இன்புறுவது எளிது என்பதை அறிவிக்கும் தூதை அனுப்ப வேண்டும். விரைந்து செல்லுவதற்கு வருந்தாமல் நெடுந்தூரம் சென்று தலைவனிடம் இச்செய்தியை உரைத்து அவன் சம்மதத்தைக் கேட்பவரை நாம் இப்பொழுது துணையாகப் பெறுவதே நலன்; இதுவே என் விருப்பம் பாட்டு சேய் ஆறு சென்று, துனைபரி அசாவாது உசாவு நர்ப் பெறினே நன்றுமன், தில்ல; வயச்சுறா எறிந்த புண்தணிந்து எந்தையும் நீலநிறப் பெரும் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வேண்டுதல் தரீ இய உப்பு விளைகழனிச் சென்றனள்; அதனால் பனி இரும்பரப்பின் சேர்ப்பற்கு இனிவரின் எளியன் என்னும் தூதே. பதவுரை:- வயம் சுறா- வலிமையுள்ள சுறாமீன். எறிந்த புண்தணிந்து - அடித்ததனால் உண்டான புண் ஆறி. எந்தையும் நீல நிறப் பெரும் கடல்- எம் தந்தையும் நீல நிறமுள்ள பரந்த கடலிலே. புக்கனன்- மீன்பிடிப்பதற்காகப் போய்விட்டான். யாயும்- அன்னையும். உப்பை மாறி- உப்பை விற்று. வெண்நெல் தரீஇய- வெண்மையான நெல்லை வாங்கிக் கொண்டு வரும் பொருட்டு. உப்பு விளை கழனி சென்றனள்- உப்பு விளைகின்ற -அளத்திற்குப் போய் விட்டாள்; அதனால்- ஆகையால். பனிஇரும் பரப்பின்- குளிர்ந்த பெரிய கடலின். சேர்ப்பற்கு- கரையின் தலைவனுக்கு. இனிவரின் எளியள் - இனி வந்தால் தலைவி எளிதில் காண்பதற்கு உரியவள். என்னும் தூதுஏ- என்று கூறும் தூதுரைத்து வருவதற்கு. சேய் ஆறு சென்று- நீண்டவழியிலே நடந்து சென்று. துனைபரி அசாவாது - விரைந்து சென்றதனால் வருந்தாமல். உசாவுநர் பெறின் ஏ- தலைவன் கருத்தைக் கேட்டறிகின்றவரை இச்சமயத்தில் துணைவராகப் பெற்றால். நன்றுமன்- மிகவும் நல்லது. தில்ல- இதுவே என் விருப்பமாகும். கருத்து:- தலைவன் என்னைக் கண்டு மகிழ்ந்து இன்புறு வதற்கு ஏற்ற சமயம் இதுதான். விளக்கம்:- கல்லாடனார் என்னும் புலவர் செய்யுள். தாயும் தந்தையும் தலைவனைச் சந்திப்பதற்கு முட்டுக்கட்டை களாக இருந்தனர் இப்பொழுது அவர்கள் தங்கள் வேலையின் மேல்போய் விட்டனர். நாம் தனித்திருக்கின்றோம். நம்மைச் சந்திக்கத் தலைவருக்கு இனி நல்ல வாய்ப்புக் கிடைத்து விட்டது. என்று தலைவி, தன் தோழியிடம் உரைத்தது. வயம் சுறா எறிந்த புண்தணிந்து எந்தையும் நீல்நிறப்பெரும் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி, வெண்ணெல் தரீஇய உப்பு விளைகழனிச் சென்றனள். அதனால் பனி இரும்பரப்பின் சேர்ப்பற்கு இளிவரின் எளியன் என்னும் தூது ஏ, சேய் ஆறு சென்று துனைபரி அசாவாது, உசாவுநர்ப்பெறின் ஏ நன்றுமன், தில்ல என்று பதங்கள் மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டன. துனைபரி- விரைந்து செல்லுதல். அசாவுதல்- வருந்துதல். வயம்- வலிமை. பனியிரும்பரப்பு- கடல். சேர்ப்பன்- கடற்கரைத் தலைவன். தரீஇய- உயிர் அளபெடை. ஏ- அசை. வெற்றியிலே மகிழ்ச்சி பாட்டு 270 எண்ணியதை நிறைவேற்றியவர்கள் இன்பம் அடைவார்கள். தொடங்கிய காரியத்திலே வெற்றி கண்டவர்கள் மன மகிழ்ச்சி அடைவார்கள். வெற்றிதான் மகிழ்ச்சிக்கு அடிப்படை; இன்பத் திற்கும் வழி வகுப்பதாகும். இந்த உண்மையை இச் செய்யுளிலே காணலாம். பொருள் தேடச் சென்ற தலைவன் வெற்றியுடன் திரும்பி வந்தான். தலைவியிடம் தவணை கூறிச்சென்ற மழைக் காலத்திலே திரும்பி வந்துவிட்டான். பொருளீட்டி வந்ததனால் அறத்தைப் புரிவதற்குப் பின்வாங்காதவனாயிருந்தான் தலைவியைச் சேர்ந்து விட்டதனால் இன்பத்தையும் துய்ப்பவனாக இருந்தான். ஆகவே அறம், பொருள், இன்பம் மூன்றுக்கும் உரியவனாக இருந்த அவன் மழையைக் கண்டு மனம் தளரவில்லை. இடித்து முழங்கிப் பெய்கின்ற மழையைக் கண்டு வாழ்த்தினான். இன்னும் நன்றாகப் பெய்க என்று சொல்லி மகிழ்ந்தான். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக் கின்றது இச்செய்யுள். மழையே! உன்னுடைய ஆர்ப்பாட்டத்தைக் கண்டு நான் சோர்வடையமாட்டேன். தங்கியிருக்கின்ற இருள் அழியும்படி நன்றாக மின்னொளியை வீசுக! குளிர்ச்சியாக இருக்கும்படி இனி மழைத்துளிகளை வாரி இறைப்பாயாக. குறுந்தடியால் அடித்து ஓசையையெழுப்பும் முரசொலியைப் போல இடி இடிப்பாயாக! இடைவிடாது ஓவென்று பெய்து வாழ்வாயாக! பெரிய மேகமே! எம் உள்ளத்திலே சிறிதும் சோர்வில்லை; குறையும் இல்லை. செய்யத் தொடங்கிய காரியத்தை முடித்து வெற்றி பெற்றோம் என்ற நிறைந்த மனத்துடன் இருக்கின்றோம். எம் இன்பத்திற்கு உறையுளாகிய எம் காதலியுடன் கூடியிருக்கின்றோம். குவளை மலர்களின் சிறிய இதழ்களால் நறுமணம் கமழும் இவளுடைய நல்ல கூந்தலையே மெல்லிய பாயாகக் கொண்டு படுத்து மகிழ்ந்திருக்கின்றோம். Mjyhš Ú e‹whf¥ bgŒJ thœf! பாட்டு தாழ் இருள் துமிய மின்னித், தண்என வீழ் உறை இனிய சிதறி, ஊழின் கடிப்பு இகுமுரசின் முழங்கி, இடித்து இடித்துப் பெய்து இனி வாழியோ! பெருவான்! யாமே, செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு இவளின் மேவினம் ஆகிக், குவளைக் குறும்தாள் நாள் மலர் நாறும் நறுமென் கூந்தல்மெல் அணையேமே. பதவுரை:- தாழ் இருள்துமிய மின்னி- தங்கியிருக்கின்ற இருட்டு அழியும்படி மின்னி. தண்என வீழ்- குளிர்ச்சியுடன் வீழ்கின்ற. உறை சிதறி- பெருந்துளிகளைச் சிந்தி. ஊழின்- முறைப் படி. கடிப்பு இகு முரசின் முழங்கி- குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல ஓசையிட்டு. இடித்து இடித்து- காது செவிடுபடும் படி இடித்து இடித்து. பெய்து இனி வாழி ஒ- பெய்து இப்பொழுது வாழ்வாயாக. இன்பம் ஒரு நாள் துன்பம் பல நாள் பாட்டு 271 தலைவன் மருத நிலத்திலே வாழ்கின்றவன்; செல்வக் குடியிலே பிறந்தவன். அவன் மணம் புரிந்து கொண்டபின் காதலியுடன் ஒரே நாள் தான் இன்புற்று வாழ்ந்தான். அதன் பின் அவன் பரத்தையர் நட்பை நாடிச் சென்று விட்டான். ஆயினும் காதலி மணந்த கணவனே தெய்வம் என்று கருதி வாழ்ந்தாள். பரத்தையரை நாடிச் சென்றிருந்த காதலன் திரும்பி வந்தான். தோழியைக் கண்டான்; தன் குற்றத்தை மன்னித்துத் தலையுடன் சமாதானம் செய்து வைக்கும்படி வேண்டினான்: தோழியும் அதற்கு ஒத்துக் கொண்டாள். அவள் தலைவியிடம் சென்று தலைவன் தன் குற்றத்தை உணர்ந்தான்; உன் மேல் அன்பு மிகுந்து திரும்பி வந்தான்; அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினாள். நான் தலைவன் நல்லவன் என்று நம்பினேன்; என்னை விட மாட்டான் என்று தெளிந்தேன். இதனால் அவனை அன்று நான் ஏற்றுக் கொண்டேன். அது எனக்குப் பல நாள் துன்பமாக முடிந்தது. இத்தனை நாட்களாக அவன் இழைத்த தீமையை எண்ணி வருந்தியிருந்தேன். என் செய்வது? நான் அவனுக்கு உரிய வளாகிவிட்டேன். அவனை வரவேற்று ஏற்றுக் கொள்வது தான் எனக்குரிய அறமாகும். வெறுப்பது என் கற்புடைமைக்கு இழுக்காகும் என்ற கருத்தைத் தலைவி அறிவித்தாள் இச் செய்தியை உரைப்பதே இச் செய்யுள். அருவியைப் போலப் பெரிய மழைத் தாரைகள் பொழியும் அதனால் ஆறுகளில் எல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்து ஓவென்று இரைந்து கொண்டு ஓடும். இத்தகைய மழைவளம் குன்றாநாட்டின் தலைவன் நல்லவன்- ஒழுக்கம் உள்ளவன்- அன்புள்ளவன் என்று தெளிந்தேன். இத்தெளிவு ஏற்பட்ட பின்பே அவனுடன் நட்புக் கொண்டேன். இவ்வாறு நான் நட்புக் கொண்ட அந்த ஒருநாள் எனக்கு இன்பமாகத் தான் இருந்தது. ஆனால் அது மிகப் பல நாட்களின் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டது, அவன் பலநாட்கள் எனது தோளைத் தழுவி எனது தோளிலே இணைந்து கிடக்கும் அழகைக் கவருகின்ற துன்பத்தை எனக்குக் கொடுத்து விட்டது. பாட்டு அருவி அன்ன பரு உறை சிதறி யாறு நிறை பகரும் நாடனைத் தேறி, உற்றது மன்னும் ஒரு நாள், மற்றஅது தவப்பன்னாள் தோள் மயங்கி வௌவும் பண்பின் நோய் ஆகின்றே பதவுரை:- அருவி - நீர் வீழ்வதைப் போல. பரு உறை சிதறி- பெரிய மழைத்துளியைச் சிந்தி. யாறு நிறை பகரும்- அதனால் ஆறுகளின் வெள்ளம் நிறைந்து ஓசையிட்டுக் கொண்டு ஓடும். நாடனைத் தேறி- நாட்டையுடைய தலைவனை நல்லவன் என்று தெளிந்து; உற்றது- நட்புக் கொண்டது. மன்னும் ஒருநாள்- என் உள்ளத்திலே நிலைத்திருக்கும் அந்த ஒரேநாள் தான். மற்றது அந்த ஒருநாள் உறவு. தவபல் நாள்- மிகப்பல நாட்கள், தோள் மயங்கி- என் தோளொடு அவன் தழுவியிருந்தது. வௌவும் பண்பின்- என் தோள்களின் அழகைக் கவரும் தன்மையிலே. நோய். ஆகின்றுஏ- எனக்குத் துன்பத்தைச் செய்தது. கருத்து:- தலைவனை ஏற்றுக் கொள்ளுவதுதான் எனக்குரிய கடமையாகும். விளக்கம்:- இச்செய்யுள் அழிசி நச்சாத்தனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. பரத்தையரிடம் சென்று திரும்பிய தலைவன் பொருட்டுத் தோழி தூதாக வந்தாள். அவனிடம் தலைவனை நான் ஏற்றுக் கொள்கிறேன் அதுதான் எனது கற்புக்குரிய கடமை என்று தலைவி கூறினாள். தலைவி கூற்று. மருதத்திணை. பருஉறை- பெரிய துளி; மழைத்தாரை. நிறை- வெள்ளம் பகரும்- ஒலிக்கும். தவ- மிகவும் வௌவுதல்- கவர்தல். ஏ- அசை. அடைவதற்கு அரிய அரும் செல்வம் பாட்டு 272 தான் கண்டு காதலித்த மங்கையின் நினைவாகவே வருந்தியிருந்தான் தலைவன்; அவன் நிலையைக் கண்ட பாங்கன் கடிந்து கொண்டான். நல்ல கல்வியும், அறிவும், ஆண்மையும், அமைந்த நீ ஒரு பெண்ணை நினைத்துக் கலங்கலாமா? ஒரு பெண்ணுக்காக ஆண்மையை இழப்பது- அறிவைச் சிதறவிடுவது உன் போன்ற ஆண் மகனுக்கு அழகா? என்று இடித்துரைத்தான். உனக்கென்ன தெரியும் அவளைப்பற்றி. அவளைக் கண்டவர்கள் யாராயிருந்தாலும் நெஞ்சத்தைப் பறி கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். அவளுடைய கண்கள் யாரையும் கொள்ளை கொண்டுவிடும். அவளுடைய கூட்டுறவைப் பெறுவது எளிதன்று; மிகவும் அரிது என்று தலைவன் மறுமொழி கூறினான். இந்தச் செய்தியை எடுத்துரைப்பதே இச்செய்யுள். கையிலே வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்காகப் புறப்படுபவர்; சீழ்க்கை அடிப்பார்கள்; கல்லை எடுத்துப் புதர்களிலே வீசி அவற்றிலே பதுங்கியிருக்கும் விலங்குகளை எழுப்புவார்கள். அச்சமயத்திலே, அப்பெரிய கானகத்தே தன் இனத்தைவிட்டுப் பிரிந்த பெண்மான் அவர்கள் கண்களிலே காணப்பட்டால்போதும் அந்த மான் அவர்களைக் கண்டு அஞ்சுவதற்காகச் சிறிதும் நெஞ்சம் இரங்கமாட்டார்கள். நான் கண்ட அந்த நங்கையின் தமையன்மார்கள். அம்மடமானின் நிலையைக் கண்டும், அதன் கலைமானைத் தப்பிப் போகவிட மாட்டார். சிலையை வளைத்து மிகுந்த விரைவுடன் பாயும் அம்புகளைக் கலைமானின் கழுத்திலே அழுத்தும்படி ஏவுவார்கள். அதனால் அது கண்டு கீழே விழுந்து பின், இரத்தத்திலே தோய்ந்திருக்கும் அவ்வம்புகளைப் பறிப்பார்கள். பறித்தெடுத்த அவ்வம்புகள் செந்நிறத்துடன் கூர்மையாகக் காணப்படும். அத்தகைய அம்புகள் ஒன்றோடு ஒன்று எதிர் எதிராக இருப்பதைப் போன்ற கண்களை உடையவள் அவள். மையணிந்த கண்களை யுடையவள்; மணம் கமழும் நீண்ட அடர்ந்த கூந்தலையுடையவள்; மணம் கமழும் இத்தகைய தலைவியின் தோள்களை மீண்டும் தழுவி இன்புறும் பேறு எனக்கு உண்டாகுமோ.!? பாட்டு தீண்டலும் இயைவது கொல்ஓ; மாண்ட வில்உடை வீளையர் கல்இடுபு எடுத்த நனம் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்படத் தன் ஐயர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி, மாறு கொண்டு அன்ன, உண் கண், நாறு இரும் கூந்தல், கொடிச்சி தோளே. பதவுரை:- மாண்ட - சிறந்த, வில்உடை வீளையர்- வில்லை யுடையர், சீழ்க்கையடிப்பவர். கல் இடுபு எடுத்த - அவர்கள் புதர்களிலே கற்களை வீசி எழுப்பிய. நனம் தலைகானத்து - தன் இனத்தை விட்டுப் பிரிந்த, புன் கண்- அச்சத்தையுடைய, மடமான்- பெண்மான். நேர்பட- எதிர்ப்பட்டவுடன், தன் ஐயர்- அவள் தன் தமயன்மார்கள். சிலை - தங்கள் வில்லிலிருந்து. மாண் கடுவிசை- மிகுந்த விரைவுடன் செல்லும் அம்பை ஏவி. கலைநிறத்து அழுத்தி- அப்பெண் மான் பார்த்திருக்க ஆண் மான் கழுத்திலே அழுந்தச் செய்து, குருதியொடு பறித்த - மீண்டும் அவ்வம்பை இரத்தத்தோடு பிடுங்கிய. செங்கோல் வாளி- நேரான கோல்வடிவமான அம்புகள். மாறு கொண்டு அன்ன- எதிர் எதிராக நின்றது போன்ற. உண் கண்- மையுண்ட கண்களையும். நாறு இரும் கூந்தல்- மணம் வீசும் நீண்டு அடர்ந்த கூந்தலையும் உடைய. கொடிச்சிதோள் ஏ - தலைவியின் தோள்கள். தீண்டலும்- மீண்டும் நான் தழுவிக் கொள்ளுவதற்கும். இயைவது கொல்ஒ - எனக்குக் கிடைக்குமோ? அறியேன். கருத்து:- அந்தக் கொடிச்சியின் தோள்களைத் தழுவிக் கொள்ளும் செல்வம்- இன்பம்- எனக்கு மீண்டும் கிடைக்குமோ அறியேன். விளக்கம்:- இது, ஒரு சிறைப் பெரியன் என்னும் புலவர் செய்யுள். தலைவன் காதலைக் கண்டு தோழன் இடித்துரைத்தான்; உன் அறிவுக்கு ஏற்றதன்று உன் செயல் என்று சினந்துரைத்தான். அவனுக்குத் தலைவன் உரைத்த மறுமொழி. தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. தீண்டலும் இயைவது கொல் ஏ என்னும் முதல் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஓ.ஏ அசைச் சொற்கள். வீளை - ஒலி. சீழ்க்கை, உதட்டை மடித்துக் கொண்டு எழுப்பும் ஒலி. இதைச் சீட்டி அடிப்பது என்றும் உரைப்பர். எடுத்த- எழுப்பிய. நனம்தலை- பெரிய இடம். புண்கண்- அச்சம். ஐயர்- தலைவர்; இங்குத் தமயன்மார்களைக் குறித்தது. மாண்கடு விசை- சிறந்த கடியவிசையையுடையது; இது அம்பு; காரணப் பெயர். கலை- ஆண்மான். மடமான்- பெண்மான், நிறம்- கழுத்து. கொடிச்சி- குறிஞ்சி நிலத்துப் பெண். குறிஞ்சி நிலத்தவர்கள் அஞ்சா நெஞ்சம் உள்ளவர். நான் கண்ட கொடிச்சியின் அண்ணன்மார்கள் இரக்கம் அற்றவர்கள். அவர்களுடைய பாதுகாப்பில் உள்ள அவளை நான் எப்படி அடைவேன் என்று தலைவன் வருந்தினான். இக் கருத்தும் இச் செய்யுளில் காணப்படுகின்றது. இக் கருத்தை விளக்கவே அவர்களுடைய வேட்டையை எடுத்துக் கூறினான் தலைவன். துன்பமும் இன்பமாகும் பாட்டு 274 துன்பம் வரும் போது மனத்திற்கு மகிழ்ச்சிதரும் ஒன்றை உள்ளத்திலே நினைத்துக் கொண்டால் அத்துன்பம் ஒன்றும் செய்யாது. நாம் எண்ணிய, அதைப் பெற்று இன்பம் அடைவோம் என்ற நம்பிக்கை, வந்த துன்பத்தின் வலிமையை வாட்டும். இந்த உண்மையை இச் செய்யுளிலே காணலாம். ஒரு தலைவன் பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைத்தான். உடனே தான் செல்லவேண்டிய வழியைப் பற்றிய எண்ணம் எழுந்தது. வருவோர் உயிரைக் கவர வழி பார்த்திருக்கும் இரக்க மற்றவர்கள் நிறைந்த பாலைவனத்தைப் பற்றிய, நினைப்பும் தோன்றியது. அதை நினைத்தவுடன் உள்ளத்திலே அச்சமும் எழுந்தது; பாலைவனத்தின் தாங்க முடியாத வெம்மையும் நினைவுக்கு வந்து வாட்டியது. உடனே வேறு ஒன்றை நினைத்தான்; தலைவியுடன் இணைந்து இன்புற்று வாழவே பொருள் தேடப் போகின்றேன். பொருள் சேர்த்துக் கொண்டு வந்தால், இல்லறத்திலே இன்புற்று வாழ முடியும்; தலைவியையும் அருமையுடன் வைத்துக் காப்பாற்ற முடியும். வேண்டிய பொருள் இருந்தால் தான், கவலையின்றிக் காதலியுடன் இணைந்து எல்லா இன்பங் களையும் நுகரமுடியும். ஆதலால் இத்தகைய இன்பக் காதலியின் உருவை எண்ணிக் கொண்டே செல்வேனாயின், எனக்குப் பாலைவனத்தின் கொடுமை தோன்றாது என்று முடிவு செய்தான். இவ்வாறு ஒரு தலைவன் தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்ட நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். புறாவின் முதுகைப்போன்ற அடிப்பாகத்தையுடைய மெல்லிய உகாய் மரத்தின் கனிகள் பொன்மணிகள் போலக் காணப்படும். பாலைவன மக்கள் அக்கனிகள் உதிரும்படி வில்லில் கணை தொடுத்து விடுவார்கள். அவர்கள் வில் எடுத்துக் கொண்டு மலையின் உச்சியிலே ஏறி நிற்பார்கள்; வழிப்பறி செய்வதற்காக அவ்வழியிலே யார் வருகின்றார் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் இரக்கமற்ற ஆண்மக்கள். தண்ணீர்த் தாகம் எடுத்தால் அவ்வழியிலே நீர் கிடைக்காது. மரப்பட்டையை மென்று அதன் சாற்றைக் குடித்துத்தான் தாகந் தணிய வேண்டும். இத்தகைய துன்பம் நிறைந்த பாலைவனம் அது. பொன்னிழைகளும், மணியிழைகளும் அணிந்த என் காதலியின் அழகிய மார்பை நினைத்துக்கொண்டே செல்வேனாயின் அவ்வழி எனக்கு இனிய வழியாகவே காணப்படும். பாட்டு புறவுப் புறத்து அன்ன புன்கால் உகாஅய்க், காசின் அன்ன நளிகனி உதிர விடுகணை, வில்லோடு பற்றிக் கோடு இவர்பு வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும் இன்னாக் கானமும் இனிய; பொன்னொடு மணிமிடை அல்குல் மடந்தை, அணிமுலை ஆகம் உள்கினம் செலினே. பதவுரை:- புறவுப் புறத்து அன்ன- புறாவின் முதுகைப் போன்ற. புன்கால்- மெல்லிய அடிப்பாகத்தையுடைய. உகாய்- உகாய்மரத்தின். காசின் அன்ன- பொன்னைப்போன்ற. நளிகனி உதிர- பழுத்த கனிகள் உதிரும்படி. விடுகணை- விடுகின்ற கணையை. வில்லொடு பற்றி- வில்லுடன் பிடித்துக் கொண்டு. கோடு இவர்பு- மலைச்சிகரத்திலே ஏறி நின்று. வருநர் பார்க்கும்- வழி நடந்து வருவோரை எதிர்பார்த்திருக்கும். வன்கண் ஆடவர்- இரக்கமற்ற ஆண்மக்கள். நீர்நசை- நீரை விரும்புகின்ற. வேட்கையின்- தாகத்தினால். நார்மென்று- மரப்பட்டையை மென்று அதன் சாற்றை விழுங்கி. தணியும் - தாக வேட்கை தணிகின்ற. இன்னா கானமும்- துன்பந்தரும் பாலை நிலமும். பொன்னொடு மணிமிடை அல்குல்- பொன்னாலும், மணிகளாலும், இயன்ற அணிகள் நிறைந்த அல்குலையுடைய. மடந்தை- என் தலைவியின். அணி முலை ஆகம்- அழகிய முலைகள் அமைந்த மார்பை. உள்கினம் செலின் ஏ- நினைத்துக் கொண்டே செல்வோமாயின். இனிய- துன்பமின்றி இன்பம் உள்ளனவாகவே காணப்படும். கருத்து:- தலைவியை நினைத்துக்கொண்டே செல்வோ மாயின் நாம் செல்லும் பாலைவனமும் சோலைவனமாகவே இன்பந்தரும். விளக்கம்:- இது உருத்திரன் என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடச் செல்ல நினைத்த தலைவன், பாலைவனத்தின் கொடுமையை நினைத்தான். தலைவியின் உருவத்தை எண்ணிக் கொண்டே சென்றால், பாலைவனக் கொடுமை ஒன்றும் செய்யாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். தலைவன் கூற்று. பாலைத்திணை. ஆறாவது அடியில் உள்ள இனிய என்னும் சொல்லை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. உகாஅய்: உயிர் அளபெடை. ஏ அசை. உகாய்- ஒருவகை மரம். இம்மரத்தின் கனிகள் பொன் மணிகளைப் போல் காணப்படும். கோ- மலை உச்சி; சிகரம். வன்கண்- இரக்கமற்ற தன்மை. ஆகம்- மார்பு. பாலை நில மக்களின் தொழில் வழிப்பறி செய்தல். ஓசை கேட்கின்றது, சென்று காண்போம் பாட்டு 275 கார் காலத்திலே வந்து விடுவதாகச் சொல்லிப் பொருள் தேடப் போனான் தலைவன். கார்காலமும் வந்துவிட்டது. ஆனால் தலைவன் வரவில்லை. தலைவி, தலைவன் வராமையால் வருந்துவாள் என்று கருதினாள் தோழி. உடனே அவள் தலைவியை நோக்கி தலைவன் வருவதற்கான அறிகுறி காணப்படுகின்றது. அவனுடைய கட்டிய மணியோசை போன்ற ஒலி வருகின்றது. அது தலைவர் ஊர்ந்து வரும் தோரொலிதானா என்பதைக் காண்போம் என்று கூறினாள். உயர்ந்த இடத்திலே ஏறி நின்று பார்ப்போம் நீயும் வா என்று தலைவியை அழைத்தாள். ஊர்க்குச் சென்றவர் எப்பொழுது வருவார் என்று எதிர் பார்ப்பது, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் அமைந்திருக்கும் குணம். மனைவி கணவன் வரவை எதிர்பார்த்து வீட்டுக்கும் தெருவுக்கும் நடந்து கொண்டிருப்பாள். குழந்தைகள் தந்தை வரும் வழியிலேயே நடந்து சென்று எதிர்பார்ப்பார்கள். ஊருக்குச் சென்றவர் குறித்த காலத்தில் வராவிட்டால் இவ்வாறு நிகழ்வது இயற்கை. இந்த இயற்கை உண்மை இச் செய்யுளில் அமைந்து கிடக்கின்றது. தோழியே என்னுடன் வா அங்கே ஏதோ மணி போலக் கேட்கின்றது. அவ்வொலி இன்னதென்று துணிய முடியாமல் பலவிதமாக அமைந்திருக்கின்றது. புல் மேயச்சென்ற காளைகளும், பசுக்களும் புல் மேய்ந்து விட்டு மாலைக் காலத்திலே ஊரை நோக்கித் திரும்பி வருகின்றன. அவற்றில் நல்ல பசுவின் கழுத்திலே கட்டியிருக்கின்ற மணியோசை தானா? அல்லது, சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்த நிறை மனத்துடன் திரும்பி வரும் தலைவர்- வலிமையான வில்லையுடைய இளம் வீரர்கள் பக்கத்திலே சூழ்ந்து போற்றும்படி வருகின்ற தலைவர்- ஈரமான காட்டு வழியிலே ஏறி ஊர்ந்து வரும் தேரில் கட்டிய மணியோசை தானோ? தெரியவில்லை. ஆதலால் நாம் சென்று, முல்லைக்கொடி படிந்த கல்லின் மேல் ஏறி நின்று பார்த்து வருவோம். இப்பொழுதே போவோம்; புறப்படுக. பாட்டு முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக், கண்டனம் வருகம்; சென்மோ தோழி எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் புல் ஆர் நல் ஆன் பூண்மணி கொல்லோ? செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு வல்வில் இளையர் பக்கம் போற்ற ஈர்மணல் காட்டாறு வரூஉம் தேர் மணி கொல்? ஆண்டு இயம்பிய உளவே. பதவுரை:- தோழியே - ஆண்டு - அங்கே. இயம்பிய உளஏ- ஓசை கேட்கின்றவை. எல் ஊர் சேர்தரும்- மாலை நேரத்திலே ஊரை நோக்கி வருகின்ற. ஏறு உடை இனத்து- காளையை உடைய பசு மந்தையிலே. புல் ஆர் நல் ஆன்- புல்லை மேய்ந்து வருகின்ற நல்ல பசுவின். பூண்மணிகொல் ஓ- கழுத்திலே பூண்டிருக்கும் மணியின் ஓசையோ. செய்வினை- செய்யக்கருதிச் சென்ற செயலை முடித்த- வெற்றியுடன் நிறைவேற்றிய. செம்மல் உள்ளமொடு- நிறைந்த மனத்துடன். வல்வில் இளையர்- வலிய வில்லையேந்திய இளைய வீரர்கள். பக்கம் போற்ற- பக்கத்திலே சூழ்ந்து பாராட்ட. ஈர்மணல் - ஈரமான மணல் பொருந்திய. காட்டு ஆறுவரும் -காட்டு வழியிலே வருகின்ற. தேர் மணிகொல்- தலைவனுடைய தேரின் மணியோசையோ. முல்லை ஊர்ந்த- முல்லைக்கொடி படர்ந்த. fš ca® V¿- fšÈ‹nkš.- ஏறிநின்று. கண்டனம் வருகம்- கண்டு வருவோம். சென்மோ- இப்பொழுதே போவோம். கருத்து:- தேரின் மணியோசை கேட்கின்றது; தலைவன் வருகின்றான்; வா நாம் போய்ப் பார்ப்போம். விளக்கம்:- இது ஒக்கூர் மாசாத்தி என்னும் புலவர் பாட்டு. கார் காலத்திலே தலைவன் வருகையை எதிர்பார்த்திருந்தாள் தலைவி. அவளுக்குத் தோழி தலைவன் வருகின்றான் என்று குறித்துக் கூறியது. தோழி கூற்று. முல்லைத்திணை. தோழி ஆண்டு இயம்பிய உள ஏ; எல் ஊர்ச் சேர்தரும் ஏறு உடை இனத்து, புல் ஆர் நல் ஆன் பூண் மணி கொல்ஓ; செய்வினை முடித்த செம்மல் உள்ள மொடு, வல்வில் இளையர் பக்கம் போற்ற ஈர் மணல் காட்டு ஆறு வரும் தேர் மணி கொல், முல்லை ஊர்ந்தகல் உயர் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ, என்று பதங்கள் மாற்றப்பட்டுப் பொருள் உரைக்கப்பட்டது. வரூஉம்; அளபெடை ஓ. ஏ. அசைச்சொற்கள். எல்- இரவு. ஏறு- காளை, இங்குப் பொலி காளையைக் குறித்தது. ஆன்- பசு. கார் காலம் ஆதலின். காட்டில் ஈரமணல் நிறைந்திருந்தது. வழக்குத் தொடுத்து என் காதலியைப் பெறுவேன் பாட்டு 276 தலைவியுடன் களவு மணத்தால் ஒன்றுபட்டுக் காதல் வாழ்வு நடத்தி வந்தான் ஒருவன். அவனை எக்காரணத்தாலோ, தோழி, தலைவியிடம் நெருங்க முடியாமல் தடுத்துவிட்டாள். தலைவியையும் அவனையும் பிரித்துவிட்டாள். தலைவி மணம் புரிந்து கொள்ளுவதற்கேற்ற வயதுடையவள் அல்லள்; அவளை உன்னால் அடைய முடியாது; என்று சொல்லி தலைவனை விலக்கினாள் தோழி. அப்பொழுது தலைவன் தனக்கும் தலைவிக்கும், ஏற்பட்ட உறவை எடுத்துரைத்தான் அவளும் நானும் கணவன் மனைவிகளாக ஆகிவிட்டோம் என்று கூறினான். நான் மடலேறிச் செல்வேன். அறங்கூறும் அவையத் தோர் அறிய தலைவியால் நான் அடைந்த துன்பத்தை எடுத்துரைப்பேன். தலைவியை மனைவியாகப் பெற எனக்குள்ள உரிமைகளை எடுத்துரைப்பேன். அப்பொழுது தோழியால் என்னைத் தடுக்க முடியாது. தோழி முயற்சி தோல்வியாகத்தான் முடியும். நானே வெற்றி பெறுவேன் என்று உரைத்தான். இந்த நிகழ்ச்சியைச் சித்திரிப்பதுதான் இச் செய்யுள். என் காதலி மூங்கில் போன்ற திரண்ட குளிர்ந்த தோள்களை யுடையவள். இளம் பருவம் உள்ளவள். அவள் விளையாடு வதற்காகப் பதுமை புனைந்து கொடுத்தேன்; அதற்காக- அப் பதுமையைச் செய்வதற்காகப் பஞ்சாய்க்கோரை முளைத்துக் கிடக்கும் நீர் நிறைந்த பள்ளங்களில் எல்லாம் சுற்றினேன். மற்றும் இவளுடைய நல்ல தோற்றமுள்ள அழகிய முலைகளிலே தொய்யில் எழுதிப் பார்த்து மகிழ்ந்தேன். இவற்றை, அவளைப் பாதுகாப்போர் அறிய மாட்டார்கள். யான் மடலேறிச் சென்று, நீதி முறை செய்யும் அரசனுடைய நீதிமன்றத்திலே என் உரிமையை உரைப்பேன். தலைமகளை நோக்கி யான் அவளுக்குச் செய்த இச் செயல்களைப் பற்றிக் கேட்பேன். அப்பொழுது தோழியின் இந்த மறுப்பு என்னஆகும்? நானே வெற்றி பெறுவேன் வருந்தத்தக்க இவ்வூர் மிகவும் அறியாமையையுடையது; இது மிகவும் இரங்கத்தக்கது. பாட்டு பணைத்தோள் குறு மகள், பாவை தைஇயும், பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று இவள் உருத்து எழுவன முலை ஒளி பெற எழுதிய தொய்யில், காப்போர் அறிதலும் அறியார்; முறை உடை அரசன் செங்கோல் அவையத்து, யான் தன் கடவின் யாங்காவது கொல்? பெரிதும் பேதை; மன்ற அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே. பதவுரை:- பணைத்தோள்- மூங்கில் போன்ற தோள்களை யுடைய. குறுமகள்- இளைய என் காதலி. பாவை தையும்- விளையாடுவதற்கேற்ற பதுமையைத் தைத்துக் கொடுத்தும். பஞ்சாய்ப்பள்ளம் சூழ்ந்தும்- அதற்க்காகப் பஞ்சாய்க் கோரை முளைத்திருக்கும் பள்ளத்தைச் சுற்றிலும். மற்று இவள். அன்றியும் இவளுடைய, உருத்து எழு- கண்ணுக்கினிய உருப்பெற்று வளர்ந்திருக்கின்ற. வனமுலை ஒளி பெற- அழகிய முலைகள் ஒளி பெறும் படி,. எழுதிய தொய்யில்- நான் எழுதிய தொய்யிலையும், காப்போர் அறிதலும் அறியார்- இவளைப் பாதுகாப்போர் அறிய மாட்டார்கள். முறை உடை அரசன்- ஆதலால் நீதி முறையை யுடைய அரசனது. செங்கோல் அவையத்து- நல்லாட்சிக்கு இலக்காக விளங்குகின்ற நீதி மன்றத்திலே. யான் தன் கடவின்- யான் அவளை, இவற்றைப்பற்றி யெல்லாம் கேட்டால். யாங்காவது கொல்- தோழியின் தடைமுயற்சி எப்படி முடியும்? இவ் அழுங்கல் ஊர் ஏ- இந்தத் துன்பம் உள்ள ஊர். பெரிதும் பேதை- மிகவும் அறியாமையை உடையது மன்ற அளிது ஓதான்- மிகவும் இரங்கத்தக்கது. கருத்து:- மடலேறிச் செல்வேன்; நீதி மன்றத்திலே வழக்கிடுவேன்; தலைவியை மனைவியாகப் பெறுவேன். விளக்கம்:- இது கூழிக் கொற்றன் என்னும் புலவர் பாட்டு. தலைவியைக் காணமுடியாமல், தலைவனைத் தடுத்து விலக்கினாள் தோழி. அப்பொழுது தலைவன், நான் தலைவியை அடைந்தே தீர்வேன் என்று கூறினான். தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. இல் அழுங்கல் ஊர் ஏ, பெரிதும் பேதை, என்ற அளிது ஓதான் ஏ என்று இறுதி அடிகளில் மட்டும் பதங்கள் மாற்றப் பட்டன. பாவை- விளையாடும் பதுமை. இது பஞ்சாய்க் கோரையால் செய்யப்படுவது. உருத்து எழு- உருவு கொண்டு எழுகின்ற. செங்கோல் அவையம்- நீதி மன்றம். தன் - தலைவி தன்னை. கடவின்- கேட்டால். தைஇ உயிர் அளபெடை. கொல், ஓ, தான், ஏ, ஏ, அசைச் சொற்கள். தான் காதலித்த பெண்ணை அப் பெண்ணின் உறவினர் மணம் செய்து கொடுக்க மறுத்தால், நீதி மன்றத்திலே வழக்கிட்டு. அப் பெண்ணைப் பெறும் உரிமை காதலனுக்கு இருந்தது என்பதை இதனால் காணலாம். குற்றமற்ற துறவியே கூறுக பாட்டு 277 பழந்தமிழ் நாட்டிலே துறவிகள் இருந்தனர்; அவர்களை அறிஞர்கள் என்று மக்கள் அனைவரும் மதித்தனர். அத்துறவிகள் புலால் உண்ண மாட்டார்கள்; குற்ற மற்றவர்கள் வாழும் தெருவிலே புகுந்து ஒரு வீட்டில் கிடைக்கும் பிச்சைச் சோற்றைப் பெற்று உண்பர்; வீடு வீடாகச் சென்று பிச்சையெடுக்க மாட்டார்கள். இந்தச் செய்தி இச் செய்யுளால் தெரிகின்றது. பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. அவன் கார் காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். அந்தக் கார் காலமும் இன்னும் வரவில்லை. கார் காலம் வந்தால்தான் தலைவன் வருவான். ஆதலால் தலைவி, அக்காலத்தை நோக்கி ஏங்கியிருந்தாள். இதைக் கண்ட தோழி, ஒரு துறவியை- அறிஞனைச் சந்தித்து கார்ப்பருவம் எப்பொழுது தொடங்கும்? சொல்வாயானால் உனக்கு வேண்டியதை நீ எளிதிலே அடைவாய் என்று கேட்டாள். இந்த நிகழ்ச்சியை இச் செய்யுள் எடுத்துரைக்கின்றது. குற்றமற்ற ஒழுக்கம் நிறைந்த மக்கள் வாழும் தெருவிலே நுழைவாய்; நாய் இல்லாத பெரிய இல்லத்தின் வாயிலை அடைவாய்; செந்நெல்லால் ஆகிய சத்துள்ள சோறு- மிகவும் வெண்மை நிறமுள்ள நெய் கலந்த சோறு- இதனை ஒரு வீட்டில் பிச்சையாகப் பெற்று வயிறு நிறைய உண்பாயாக: அன்றியும் விடியற் காலத்திலே பயன்படுவதற்காகச் சேமித்து வைப்பதற்குரிய உன் செம்பிலே, வெந்நீரையும் பெறுவாயாக. மின்னல் போன்ற இடையை உடைய என் தலைவி பிரிவாற்றாமையால் நடுங்குதற் குரிய மழையையுடைய குளிர் காலம் எப்பொழுது வரும்? இதை நீ அறிந்து கூறுவாயானால் உன்னை நாங்கள் வாழ்த்துவோம். நீ கூறும் அக்காலத்தில் தான் எம் காதலர் திரும்பி வருவார் என்று துணிந்து மகிழ்ந்திருப்போம். பாட்டு ஆசு இல் தெருவில் நாய் இல் வியன்கடைச் செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது, ஓர் இல் பிச்சை, ஆர மாந்தி, அல்சிரம் வெய்ய, வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே மின் இடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவது என்றி; அக்கால் வருவர் எம்காத லோரே பதவுரை:- ஆசுஇல் தெருவில்- குற்றமற்ற குடிகள் வாழும் தெருவிலே. நாய் இல் வியன்கடை- நாயில்லாத பெரிய வீட்டின் வாயிலிலே நின்று. செம் நெல் அமலை- செந்நெல்லால் ஆகிய சோற்றை. வெண்மை வெண் இழுது- மிகவும் வெண்மையான நெய்யுடன். ஓர் இல் பிச்சை- ஓர் இல்லத்திலே பிச்சையாகப் பெற்று. ஆர்மாந்தி- வயிறு ஆர உண்டு. அல்சிரம்- விடியற் காலத்துக்கு வேண்டி. வெய்ய- விரும்பத்தக்க. வெப்பத் தண்ணீர் - வெந்நீரை. சேமச் செப்பில் - நீரைச் சேர்த்து வைக்கும் கமண்டலத்திலே. பெறீஇயர் ஓநீ ஏ- பெறுகநீ. மின் இடை நடுங்கும்- மின்னல் போன்ற இடையையுடைய என் தலைவி துணையில்லாமல் நடுங்குகின்ற. கடைப்பெயல் வாடை- மழையின் முடவையுடைய குளிர்காலம் எக்கால் வருவது- எப்பொழுது வரக்கூடும். என்றி - என்று கூறுவாயாக. அக்கால் வருவர் எம் காதலோர் ஏ- அப்பொழுது தான் எம் காதலர் திரும்பி வருவார். கருத்து:- அறிஞனே வாடைக் காலம் எப்பொழுது வரும் என்று கூற வேண்டுகின்றேன். விளக்கம்:- இது, ஓரில் பிச்சையார் என்னும் புலவர் பாட்டு. ‘jiyt‹ âU«ã tUtjhf¢ brhšÈ¢ br‹w gUt¡fhy« v¥bghGJ tU«? என்று தோழி ஒரு துறவியைக் கேட்டாள். தோழி கூற்று. பாலைத்திணை. குற்றமற்றோர் வாழும் தெரு; நாய் இல்லாத வீடு; நெய்ச் சோறு; என்றதனால் துறவி, புலால் உண்ணாதவன் என்று தெரிகிறது. பண்டைக் காலத்தில் புலால் உண்ணாதவர்கள் தம் வீட்டில் நாயும் கோழியும் காணப்படுவதில்லை. அவர்கள் அவற்றை வளர்க்க மாட்டார்கள். அமலை- சோறு. சேமச் செம்பு- சேமித்து வைத்திருக்கும் செம்பு. அல்சிரம்; அற்சிரம் இரவின் முடிவு; விடியற்காலம். பெறீஇயர்; உயிர் அளபெடை. அரோ, ஏ, அசைகள். எம்மை நினையார் இரக்கம் அற்றவர் பாட்டு 278 தலைவன் பிரிந்து சென்றிருந்த காலத்தில் தலைவி வருந்தி யிருந்தாள். அவள் துக்கத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள். தலைவர் குறித்த காலத்தில் நம்மைக் குறுகாமல் இரார்; அவர் உரைத்த உறுதி மொழியை ஒருபொழுதும் உதறித் தள்ளிவிட மாட்டார். ஆதலால் அவர் வரும் வரையிலும் உன் மனத்துயரைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். உள்ளத்திலே தோன்றும் துயரை ஓங்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது தான் உத்தமப் பெண்களுக்கு உரிய கடமை என்று வலியுறுத்திக் கூறினாள் தோழி! அதற்குத் தலைமகள், அவர் எம்மை மறந்தே போய் விட்டார். எம்மை மறக்காமல் இருந்தால், இத்தனைநாள் வந்திருப்பார். முன்பு நல்லவராயிருந்த அவர் இப்பொழுது கொடியவராகி விட்டார். mjyhš eh‹ tUªjhkš v‹d jh‹ brŒtJ? என்றாள் தலைவி. இந்நிகழ்ச்சியை உரைப்பது இச்செய்யுள். தோழியே அவர் மலை வழியைக் கடந்து பொருள் தேடப் போனார். அவர் கடந்து சென்ற மலைச் சோலைகளிலே உள்ள இயற்கைக் காட்சி கூட அவர் மனத்தை மாற்றவில்லை யென்றே நினைக்கிறேன். ஆண்குரங்கு பழுத்த மரத்தின் மேல் ஏறி மிகவும் கனிந்த இனிய பழங்களைக் கீழே உதிர்த்துத் தள்ளும். கீழே இருக்கும், குட்டிகளையுடைய பெண் குரங்கு, அக்கனிகளிலே வேண்டியவற்றைப் பொறுக்கிப் பொறுக்கித் தின்று கொண்டி ருக்கும்; குரங்குக் குட்டிகளும் அவ்வாறே செய்யும் இத்தகைய காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் அவர் மலைவழியைக் கடந்து சென்றார். காற்றிலே அசைகின்ற மெல்லிய அழகிய மாந்தளிரைப் போன்ற மெல்லிய அடிகளையுடைய சிறிய பசுமையான பதுமையையும் மறந்தனர். இப்பதுமையும் அவர் செய்து வந்தது தான். எம்மையும் நினைக்காமல் மறந்தனர். ஆதலால் அவர் கொடியவர் ஆயினும் அவர் எத்துன்பமும் எய்தாமல் இனிது வாழ்க பாட்டு உறுவளி உளரிய அம்தளிர் மாஅத்து முறிகண்டு அன்ன, மெல் என் சீறடிச் சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் கொடியர்; வாழி தோழி கடுவன் ஊழ்உறு தீங்கனி உதிர்ப்பக், கீழ் இருந்து ஏற்பன ஏற்பன உண்ணும், பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே. பதவுரை:- தோழி கடுவன்- தோழியே ஆண்குரங்கு மரத்தில் ஏறி. ஊழ் உறு தீம்கனி உதிர்ப்ப- முற்றிய இனிய கனியை உதிர்க்க. கீழ் இருந்து ஏற்பன ஏற்பன உண்ணும்- கீழே இருந்து தகுந்த கனிகளைப் பொறுக்கிப் பொறுக்கித் தின்னுகின்ற. பார்ப்பு உடை மந்திய- குட்டிகளோடு கூடிய பெண் குரங்குகளை யுடைய. மலை இறந்தோர் ஏ- மலையைத் தாண்டிச் சென்றவர். உறுவளி உளரிய- காற்றால் அசைந்த. அம்தளிர் மாத்து- அழகிய தளிரையுடைய, மாமரத்தின் முறிகண்டு அன்ன- கொழுந்து இலையைப் பார்த்தது போன்ற. மெல்என் சீறுஅடி- மெல்லிய சிறிய அடிகளையுடைய. சிறு பசும் பாலையும்- அவரே செய்து கொடுத்த சிறிய பசுமையான பதுமையையும். எம்மும்- எம்மையும். உள்ளார்- நினைக்கமாட்டார். கொடியர்- அவர் மிகவும் கொடுமையுள்ளவர். வாழி- ஆயினும் எத்தகைய துன்பமும் இல்லாமல் வாழ்க. கருத்து:- தலைவர் எம்மை மறந்தார்; இரக்க மற்றவர்; ஆயினும் அவர் வாழ்க. விளக்கம்:- இது பேரிசாத்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியைப் பார்த்து வருந்தாதே என்று தோழி வற்புறுத்தினாள். அப்பொழுது தலைவி தோழிக்குரைத்த மறுமொழி. தலைவி கூற்று. பாலைத்திணை: தோழி கடுவன் என்ற தொடர் உள்ளிட்ட இறுதி அடிகளை முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. மாசு; உயிர் அளபெடை. ஏ- அசை. சீறு அடி - சிறுஅடி. முறி- தளிர். கடுவன்- ஆண். மந்தி- பெண். பார்ப்பு- குட்டி. ஆண் குரங்கு பெண் குரங்குளிடம் காட்டும் அன்பைக் கண்டும், அவர் எம்மை மறந்தனர். ஆதலால் அவர் கல்மனம் படைத்தவர் என்ற பொருளும் இச்செய்யுளில் பொருந்தியிருக்கின்றது. காதலி விளையாடுவதற்காகப் பதுமை செய்து கொடுப்பது அக்காலக் காதலர்களின் வழக்கம். அப்பதுமை பசுமையான கோரைப்புல்லால் செய்யப்படும். வருவதற்குரிய காலம் வந்தும் அவர் வரவில்லை பாட்டு 279 பிரிந்த காதலன் வரவில்லையே; இந்த இராப் பொழுதை எப்படி நாம் கழிப்போம். கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் உறக்கம் வரவில்லையே என்று வருந்தினாள் தலைவி. அவளுக்குத் தோழி, எவ்வளவோ சாமாதான மொழிகள் சாற்றினாள். தலைவி, நான் என் துக்கத்தை அடக்கிக் கொள்ளத்தான் முயல்கின்றேன். ஆயினும் இப்பொழுது நடை பெறும் நிகழ்ச்சி என் நெஞ்சைக் கிண்டுகின்றது; துன்பத்தை நெஞ்சிலே பாய்ச்சித் துடிக்கச் செய்கின்றது; நான் என்ன செய்ய முடியும்? என்றாள். தோழியே அவர் மழைவளம் குறைந்த மலையைக் கடந்து சென்றார். மழை பெய்யாமையால் தூசு படிந்த குண்டுக்கற்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவை புழுதி படிந்த யானைகளைப் போலக் காட்சியளிக்கின்றன. இத்தகைய பெரிய பல மலைகளைக் கடந்து சென்றார் அவர். என் தோள்களை மறந்தே போய்விட்டார். முறுக்கிய கொம்புகளையுடைய கருமையான நிறமுள்ள எருமைகளின் கழுத்திலே மணிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அம்மணிகள் பிளந்த வாயையும் தெளிவாகக் கேட்கும் ஓசையையும் உடையன. நான் வருந்திக் கொண்டிருக்கின்ற இந்த நள்ளிரவிலே அவ்வெருமைகள் அசையும் போதெல்லாம் அவற்றின் கழுத்திலே தொடுத்திருக்கும் மணிகள் ஒலிக்கின்றன. அவ்வோசை என் துக்கத்தை ஒட்டித் துன்பத்தைக் கூட்டுகின்றது. ïªj neu¤âY« mt® tuhkÈUªjhš eh‹ v¥go¤jh‹ bghW¤J¡ bfh©oU¥ng‹? பாட்டு:- திருமருப்பு எருமை இருள் நிறமைஆன் வருமிடறு யாத்த பகுவாய்த் தெள்மணி புலம்புகொள் யாமத்து இயங்கு தொறு இசைக்கும், இது பொழுது ஆகவும் வாரார்; கொல்ஓ மழை கழூஉ மறந்தமா இரும் துறுகல், துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்; இரும் பல் குன்றம் போகித், திருந்து இறை பணைத்தோள் உள்ளாதோரே. பதவுரை:- மழைகழூஉ மறந்த - மழை பெய்து கழுவாத. மா இரும் துறுகல்- பெரிய குண்டுக்கற்கள். துகள் சூழ் யானையின் புழுதி படிந்த யானையைப் போல. பொலியத் தோன்றும்- விளக்கமுடன் காணப்படுகின்ற, இரும்பல் குன்றம்- பெரிய மலைகள் பலவற்றை, போகி- கடந்து சென்று. திருந்து இறை- அழகிய முன் புறத்தையுடைய. பணைத்தோள்- மூங்கில் போன்ற தோளை- உள்ளாதார் ஏ- நினைக்காமல் மறந்தவர். திரி மருப்பு எருமை- முருக்கிய கொம்புகளையுடைய எருமையின். இருள் நிறமை ஆன். இருளின் நிறத்தைப் போன்ற கருமையான எருமையின். வருமிடறு யாத்த- வளர்ந்து வரும் கழுத்திலே கட்டியிருக்கின்ற. பகுவாய்- பிளந்த வாயையுடைய. தெள்மணி- தெளிந்த ஓசையை யுடைய மணிகள். புலம்பு கொள் யாமத்து- வருத்திக் கொண்டி ருக்கின்ற இந்த நள்ளிரவிலே. இயங்கு தோறும் இசைக்கும்- அவ்வெருமைகள் அசையும் போதெல்லாம் ஓசையிடுகின்ற. இது பொழுது ஆகவும்- இந்நேரம் ஆகியும் கூட. வாரார்- அவர் வரவில்லை. கருத்து:- தலைவர் வருவதற்குரிய காலம் இதுதான், ஆயினும் அவர் வந்திலர்; ஆதலால் வருந்துகின்றேன். விளக்கம்:- இது மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர்பாட்டு. பிரிவால் வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறும் போது வர வேண்டிய காலத்திலும் அவர் வரவில்லையே; நான் என் செய்வேன் என்று தலைவி விடையிறுத்தாள். தலைவி கூற்று. முல்லைத்திணை. மழைகழூஉமறந்த என்னும் ஐந்தாவது அடிமுதல் இறுதி அடிகளை முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. கழூஉ- உயிர் அளபெடை. கொல், ஓ, ஏ, அசைச் சொற்கள் இறை - முன்புறம். புலம்பு- தனிமை. துன்பம் திரிமருப்பு- முறுக்கிய கொம்பு. அவர் படும் இன்னல் கருதி ஏங்கினேன் பாட்டு 283 தன் முயற்சியால் சேர்த்த செல்வத்தைக் கொண்டே இல்லறம் நடத்த வேண்டும் முன்னோர் தேடிவைத்த பொருளைக் கொண்டு இல்லறம் நடத்துவது முறையன்று. முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும் பிச்சை வாங்கும் சிறு முயற்சியைக் கொண்டாவது பொருள் சேர்த்து இல்லறம் நடத்தி வாழ்வதே சிறந்ததாகும். இதுவே முன்னோர் கொள்கை. இக்கொள்கையை வலியுறுத்துகிறது இச் செய்யுள். தலைவன் பொருளீட்டப் போயிருந்தான்; அப்பொழுது தலைவியின் நிலையைக் கண்ட தோழி வருந்தினாள். தலைவி தனிமையால் வருந்துவாள் என்று எண்ணித் துன்புற்றாள் அதைக் கண்ட தலைவி தோழியை நோக்கிப் பின்வருமாறு உரைத்தாள். தோழியே நான் என்னுடைய இன்பத்தை இழந்தேன் என்று வருந்தவில்லை. தலைவன் சென்ற வழி மிகவும் துன்பந்தரும் வழி; அவ் வழியிலே அவர் அடையும் துன்பத்தை எண்ணியே வருந்து கின்றேன்; அவர் செல்லும் வழியிலே உள்ளவர்கள் மிகவும் கொடியவர்கள் அவர்களால் தலைவருக்கு ஏதும்நேருமோ என்று எண்ணித்தான் வருந்துகின்றேன்; அஞ்சுகின்றேன் என்றாள் தலைவி. தோழியே நான் தலைவன் பிரிந்த துன்பத்தால் வருந்த வில்லை. அவர் வரும் வரையிலும் தனிமைத் துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் எனக்கு உண்டு. முன்னோர் தேடி வைத்த செல்வத்தைச் செலவழிப்பவர் என்று சொல்ல மாட்டார்கள்; அவர்கள் செல்வம் தொலைந்து விரைவிலே வறுமைக்கு ஆளாவார்கள். முயற்சி யில்லாமல் வாழ்கின்றவர்களின் வாழ்க்கையைக் காட்டிலும், இழிந்தது வேறொன்றும் மில்லை. பிறரிடம் கையேந்திப் பிச்சை யெடுத்து வாழ்வதை விட அது மிகவும் இழிவான வாழ்க்கை யாகும். இந்த நீதியை அவரே நமக்கு நன்றாக எடுத்துக் கூறியிருக்கிறார். இந்த நீதியை உணர்ந்த ஆண்மையுடையவர் அவர். அவர் தம்முடைய ஆற்றலை விளக்கும் பொருட்டுப் பொருள் தேடச் சென்றார். அவர் சென்ற பாலை நில வழியிலே கூற்றத்தைப் போன்ற மறவர்கள் உள்ளனர். அவர்கள் பிறரைக் கொல்லும் வேற்படையை உடையவர்கள். வழியிலே தங்கியிருந்து, அவ்வழியில் வருவோரைக் கொன்று அவர்களிடம் உள்ள பொருளைப் பறிப்பார்கள். அவர்களால் கொல்லப்பட்டவர்களின், புலால் நாற்றம் வீசும் பிணங்களைப் பருந்துகள் தமக்கு உணவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். இந்த வழி மிகவும் நீளமான பழைய வழி நீரில்லாத வறண்ட வழி. இந்த வழியைக் கடக்க அவர் சென்றார். இதைக் கருதியே நான் வருந்துகின்றேன். பாட்டு:- உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்; இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு; எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர்; வாழி தோழி என்றும் கூற்றத்து அன்ன கொலைவேல் மறவர் ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த, படுமுடை, பருந்து பார்த்து இருக்கும் நெடுமூது இடைய: நீர் இல் ஆறே. பதவுரை:- உள்ளது சிதைப்போர் - தம் முன்னோரால் தேடி வைத்தச் செல்வத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பார். உளர் எனப்படார்- செல்வம் உள்ளவர் என்று சொல்லப் படமாட்டார். இல்லோர் வாழ்க்கை- முயற்சி யில்லாமல் முன்னோர் பொருளைச் செலவழித்து வாழ்கின்றவர்களின் வாழ்வு. இரவினும் இளிவு - பிச்சையெடுத்து வாழ்வதைவிட இழிவானதாகும். எனச் சொல்லிய- என்று கூறிய. வன்மை- அவருடைய ஆற்றலை. தெளியக்காட்டி- நாம் அறியும்படி எடுத்துக்காட்டி, என்றும் கூற்றத்து அன்ன- எப்பொழுதும் எமனைப் போன்ற. கொலை வேல் மறவர்- கொல்லுகின்ற வேற்படையையுடைய மறவர்கள், ஆற்று இருந்து அல்கி- வழியிலே தங்கி மறைந்து, வழங்குநர்ச் செகுத்த- வழியில் வருவோரைக்கொன்ற. படுமுடை- மிகுந்த நாற்றமுள்ள பிணங்களை. பருந்து பார்த்திருக்கும்- பருந்துகள் உணவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற. நெடுமூது இடைய- நீண்ட பழமையான வழியாகிய. நீர் இல் ஆறு ஏ- நீர் இல்லாத வழியை. ,சென்றனர் - அவர் கடந்து சென்றார். வாழி தோழி- அவர் வாழ்க தோழியே. கருத்து:- தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைத்தே வருந்துகின்றேன். விளக்கம்:- இது பாலை பாடிய பெருங் கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. தோழிக்குத் தலைவி கூறிய சமாதான மொழி. தலைவி கூற்று. பாலைத்திணை. சென்றனர் வாழி தோழி என்ற நான்காவது அடியின் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஏ- அசை, படாஅர்- அளபெடை. சிதைப்போர்- அழிப்போர்; இளிவு - இரவு. மறவர்- பாலைநில மக்கள். அவர் தொழில் வழிப்பறி செய்தல். அல்கி- மறைந்து; ஒடுங்கி; செகுத்த- கொன்ற. படுமுடை - பிணம்; மிகுந்த புலால் நாற்றம் உடையது. இது சிறந்த நீதியைக் கொண்ட செய்யுள். அறிவுள்ளவர் நம்மைப் பழிக்கமாட்டார் பாட்டு 284 தலைவன் தலைவியை மணந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடப் போயிருந்தான். அப்பொழுது தலைவி வருந்தினாள். தலைவன் தான் சொல்லியபடி குறித்தகாலத்தில் வந்து நம்மை மணப்பானோ? மாட்டானோ? குறித்த காலத்தில் வந்து அவன் நம்மை மணக்காவிட்டால் இவ்வூரார் நம்மைப் பழிப்பார்களே என்று வருந்தினாள். உடனே தோழி தலைவன் நல்லவனா கட்டும்; அல்லது கெட்டவனாகட்டும் ஊரார் நம்மைப் பழிப்பதனால் என்ன பயன்? அறிவில்லாதவர்கள் நம்மைப் பழிப்பார்கள்; ஆதலால் நாம் நாணமடைய வேண்டியதில்லை. என்றாள். இந்த நிகழ்ச்சியையே இச் செய்யுள் கூறுகின்றது. தலைவனுடை நாடு நல்ல வளமான காட்சி நிறைந்த காடு மரத்தடிகளில் உள்ள நெருங்கிய கற்களிடையிலே, செங்காந்தள் மலர்கள் ஒளியுடன் மலர்ந்திருக்கும். அவை போர் செய்த யானை களின் புள்ளி பொருந்திய முகங்களைப் போலக் காணப்படும். இத்தகைய நாட்டையுடைய தலைவன் நம்மைப் பிரிந்து பொருள் தேடப் போய் இருக்கின்றான். அவன் அறநெறியைப் பின்பற்றும் நல்லவனாயினும் ஆகுக; அல்லது கெட்டவன் ஆயினும் ஆகுக. மலையிலேயிருந்து வரும் வெண்மையான அருவி நீர் இச்சிற்றூரில் உள்ள இலைவேய்ந்த குடிசைகளின் அருகிலே ஓடி வருகின்றது. இவ்வூர் நமக்குத் துன்பந்தரும் ஊராக இருக்கின்றது. இச்சிற்றூரிலே உள்ளவர்கள் நம்மைப் பழித்துரைப்பார்களா? அவர்களுக் கென்றே சொந்த அறிவில்லையா? ஆதலால் அவர்கள் சொல்வதை நாம் பொருட் படுத்தவேண்டாம். பாட்டு பொருத யானைப் புகர்முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன்; அறவன் ஆயினும்; அல்லன் ஆயினும், நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையில் தாழ்ந்த வால் வெள் அருவி கொன் இலைக் குரம்பையின் இழிதரும், இன்னாது இருந்த, இச் சிறுகுடியோரே. பதவுரை:- பொருத யானை- போர் செய்த யானையின். புகர் முகம் கடுப்ப- புள்ளி பொருந்திய முகத்தைப் போல. மன்றம் துறுகல் மீமிசை- மரத்தடியிலே உள்ள நெருங்கிய கற்களின் மேல். பல உடன்- பல. ஒண்செங்காந்தள் அவிழும்- ஒளி பொருந்திய செங்காந்தள் மலர்கள் விரிந்திருக்கின்ற. நாடன் நாட்டையுடைய நமது தலைவன். அறவன் ஆயினும்- நல்லவனாயினும், அல்லன் ஆயினும்- கெட்டவன் ஆயினும். வரையின் தாழ்ந்த- மலையிலிருந்து விழுகின்ற. வால் வெள் அருவி- தூய வெண்மையான அருவி நீர். கொன் இலை- அச்சத்தைத் தரும் இலை வேய்ந்த. குரம்பையின்- குடிசையின் பக்கத்திலே. இழி தரும்- ஓடி வருகின்ற. இன்னாது இருந்த- நமக்குத் துன்பந்தருவதாக இருந்த. இச்சிறு குடியோர் ஏ- இச் சிற்றுரில் உள்ளவர்கள். நம் ஏசுவரோ- நம்மை இகழ்ந்துரைப் பார்களோ? தம் இலர் கொல் ஓ- தமக்கென்று ஓர் அறிவும் இல்லாதவர்களோ? கருத்து:- தலைவன் செய்த தவறுக்காக நம்மைப் பழிப்பவர்கள் அறிவில்லாதவர்கள். விளக்கம்:- இது மிளைவேள்தித்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் வந்து குறித்த காலத்தில் நம்மை மணந்து கொள்ளாவிட்டால் ஊரார் பழிப்பர் என்று வருந்திய தலைவிக்குத் தோழி கூறியது. தோழி கூற்று. குறிஞ்சித்திணை. நம் ஏசுவரோ, தம் இலர் கொல்லோ என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஓ.ஏ. அசைகள். துறுகல்- நெருங்கிய கற்கள். ஏசுதல்- பழித்தல். கொன்- அச்சம். குரம்பை- குடிசை. இரவும் பகலும் வரவையே எதிர்பார்க்கின்றேன் பாட்டு 285 தலைவன் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற பருவ காலம் வந்துவிட்டது. தலைவி, அப்பருவ காலத்தை நோக்கி உள்ளம் கவன்றாள்; உடல் வாடினாள். அதைக் கண்ட தோழி நீ வருந்தாதே அவர் விரைவில் வந்து விடுவார்; அவர் சொல்லிய மொழியைச் சோர விடமாட்டார் என்றாள். அதற்குத் தலைவி தலைவர் வந்து சேர்வதாகச் சொல்லிச் சென்ற பருவகாலம் இது தான். நான் இரவிலும் பகலிலும் அவர் வரவையே எதிர்பார்த்து ஏங்குகின்றேன். விடிந்தால் வந்து விடுவார் என்று இரவில் நினைப்பேன்; பொழுது போனால் வந்துவிடுவார் என்று பகலில் நினைப்பேன்; என் நம்பிக்கை பாழாயிற்று என்றாள். இச் செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே இனிய ஆண்புறாவானது முறையே பல தடவை தன் பெண் புறாவைக் கூவியழைத்துத் தன்னுடன் அணைத்துக் கொள்கின்றது இமை நேரத்திலே அது அடையும் இன்பம் பெரிதாகும். ஊன் உண்ண விரும்பும் பருந்து ஞெமை மரத்தின் உச்சியிலே ஏறி உட்கார்ந்து நாற்றிசையையும் பார்த்துக் கொண்டிருக்கும். இத்தகைய காட்சியை உடைய வழியிலே நடந்து, வானளாவிய தோற்றத்தையுடைய மலை நெறியைக் கடந்து சென்றார் நம் தலைவர். அவர் வருவார் வருவார் என்று நாள் தோறும் நான் எதிர்பார்த்து ஏங்குகின்றேன். பகல் காலத்திலே அவர் வருவார் என்று எதிர்பார்ப்பேன்; அப்பொழுதும் வந்திலர். பகல் நீங்கி இரவு வந்த பிறகாவது வருவார் என்று எதிர் பார்த்திருப்பேன்; அப்பொழுதும் அவரைக் காணேன். இங்கே அவர் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற பருவமும் வந்து விட்டது; இதுதான் அவர் சொல்லிய பருவகாலம். இந்நிலையில் நான் வருந்தாமல் என்னதான் செய்வேன்! அவர் எங்கே யிருக்கின்றாரோ? அதுவும் தெரியவில்லை! பாட்டு வைகல் வைகல் வைகவும் வாரார்; எல்லா எல்லை எல்லையும் தோன்றார்; யாண்டு உளர் கொல்லோ தோழி: யீண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ் புன்புறப் பெடையொடு பயிரி இன்புறவு இமைக்கண் ஏது ஆகின்றோ; ஞெமைத்தலை ஊன் நசைஇ ஒரு பருந்து இருக்கும், வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. பதவுரை:- பல் ஊழ்- பலமுறை. புன்புறப் பெடையொடு- மெல்லிய சிறகுகளையுடைய பெட்டைப் புறாவுடன். பயிரி- அதை அழைத்து. இன்புறவு - இனிய ஆண் புறா. இமைக்கண்- இமைப் பொழுதில். ஏது ஆகின்று ஓ- எத்தகைய இன்பத்தை அடைகின்றது. ஞெமைத்தலை- ஞெமை மரத்தின் உச்சியிலே. ஊன் நசை- ஊன் உணவை விரும்பி. ஒரு பருந்து இருக்கும்- ஒரு பருந்து உட்கார்ந்து இருக்கும். வான் உயர் பிறங்கல் மலை- இத்தகைய வழிக் காட்சியமைந்த வான் அளாவிய தோற்றத்தை யுடையே மலையை. இறந்தோர் ஏ- தாண்டிச் சென்ற தலைவர், வைகல்- நாள் தோறும். வைகல் வைகவும்- பகலிலே எதிர்பார்த்து இருக்கவும். வாரார்- வந்திலர். எல்லா எல்லை- எல்லாப் பகலின் முடிவாகிய. எல்லையும் தோன்றார்- இரவிலும் காணப்பட மாட்டார். யாண்டு உளர் கொல் ஓ- அவர் இப்பொழுது எங்கே இருக்கின்றாரோ. தோழி ஈண்டு இவர் சொல்லிய- தோழியே இங்கே இவர் வருவதாகக் கூறிய. பருவமோ இதுவே- பருவ காலமும் இதுதான். கருத்து:- தலைவர் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவ காலமும் வந்துவிட்டது; அவர் வரவில்லை. விளக்கம்:- இது பூதத்தேவன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் வருவதாகக் கூறிய பருவ காலமும் வந்தது. தலைவி வருந்தினாள். அவளுக்குத் தோழி ஆறுதல் கூறினாள். அப்பொழுது தலைவி உரைத்தது. தலைவி கூற்று. பாலைத்திணை. பல்லூழ் என்பது முதல் பின்னுள்ள நான்கு அடிகளையும் முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஓ, ஏ. எ. அசைகள் நசைஇ- அளபெடை. வைகல்- பகல்; விடியற்காலம். எல்லை- முடிவு; இரவு. பல் ஊழ்- பல முறை; பல தடவை. புன்புறம்பெடை- மெல்லிய முதுகையுடைய பெண்புறா என்று பொருள். பயிர்தல் -அழைத்தல். பிறங்கல்- தோற்றம். ஆண்புறா, பெண்புறாவை அழைத்து அணைத்து இன்புறுதல் போல், காதலன் தன்னைத் தழுவி இன்புறவில்லையே என்ற ஏக்கமும் தலைவியின் உள்ளத்தில் இருந்தது. புறாவின் செய்தியைத் தலைவி கூறியதனால் இதனை அறியலாம். அவளை நான் நன்றாக அறிவேன் பாட்டு 286 தலைவன், தன் காதலியை ஒரு முறை கண்டான்; அவளுடன் கலந்து மனமகிழ்ந்தான், இன்பம் நுகர்ந்தான். மறுமுறை அவளைக் காணமுடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அவளைக் கண்ணாற் கண்டு, உரையாடி உள்ளங் களிக்க முடியாமல் தவித்தான். ஆயினும் தான் ஒரு முறை சந்தித்துக் காதல் கொண்ட அவளையே மணப்பது என்ற உறுதி கொண்டான் அவன். தலைவியின் தோழி மூலமாக அவள் சந்திப்பைப் பெற விரும்பிய தலைவன் தோழியைச் சந்தித்தான். அவளிடம் தான் தலைவியுடன் நட்புடையவன் என்பதை அவள் அறியும்படி மிகவும் பணிவுடன் உரைத்தான். தலைவியின் தோற்றத்தை அப்படியே எடுத்துரைத்தான். அவளை என் உள்ளத்திலே எப்பொழுதும் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். என்பதையும் எடுத்தியம்பினான். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். என் காதலியை நான் மறந்தவன் அல்லேன்; அவளுடன் பழகி அவள் தோற்றத்தையும் பண்பையும் நன்றாக அறிந்திருக் கிறேன். அவள் முட்களைப்போன்ற கூர்மையான பற்களை யுடையவள். அமிழ்தம் போன்ற நீர் ஊறுகின்ற அழகிய சிவந்த வாயையுடையவள் அகில் புகையின் மணமும், சந்தனமணமும் வீசும் கருமணல் போன்ற கூந்தலையுடையவள்; பெரிதாக அமைந்த குளிர்ந்த நோக்க முள்ள கண்களையுடையவள். இத்தகைய என் தலைவியின், புன்னகையையும் நான் ஒருபொழுதும் மறந்தேன் அல்லேன். நினைத்துப் பார்க்கின்றவன் போலவே இருப்பேன். பாட்டு உள்ளிக் காண்பென் போல்வள், முள் எயிற்று அமிழ்தம் ஊறும் அம் செவ்வாய்க், கமழ்அகில் ஆரம் நாறும்அறல் போல் கூந்தல், பேர்அமர் மழைக்கண் கொடிச்சி, மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. பதவுரை:- முள்எயிற்று- முள்போன்ற பற்கள் அமைந்த. அமிழ்தம் ஊறும்- அமிழ்தம் போன்ற வாய்நீர் ஊறுகின்ற. அம் செவ்வாய்- அழகிய சிவந்த வாயையும். கமழ் அகிழ்- மணம் கமழ் கின்ற அகில் புகையோடு, ஆரம் நாறும்- சந்தனமணம் வீசுகின்ற அறல் போல் கூந்தல்- கருமணல் போன்ற கூந்தலையும், பேர்அமர் மழைக்கண் - பெரிதாக அமைந்த குளிர்ந்த கண்களையும் உடைய கொடிச்சி - தலைவியின். மூரல் முறுவலோடு- பற்கள் சிறிது மட்டும் தோன்றுகின்ற புன்சிரிப்போடு கூடிய. மதைஇய நோக்கு- செருக்கோடு சேர்ந்த பார்வை. உள்ளிக்காண்பென் போல்வல்- இவற்றை எப்பொழுதும் நினைத்துப் பார்க்கின்றவனாகவே காணப்படுகின்றேன். கருத்து:- யான் கலந்து மகிழ்ந்த என் தலைவியை இனிக் காண்பது அரிது போலும். விளக்கம்:- இது எயிற்றியனார் என்னும் புலவர் செய்யுள். தலைவியைத் தோழியின்மூலம் சந்தித்து மகிழ நினைத்த தலைவன் தோழியினிடம் உரைத்தது. தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. உள்ளிக் காண்பென் போல்வன் என்ற முதல் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. மதைஇய- உயிர் அளபெடை ஏ. அசை. எயிறு- பல். ஆரம்- சந்தனம். அறல்- கரு மணல். மழை- குளிர்ச்சி. மூரல்- பல். முறுவல்- புன்சிரிப்பு. அமிழ்தம் ஊறும் அம் செவ்வாய் என்னும் தொடர் தலைவன் தலைவியுடன் கூடி மகிழ்ந்ததைக் குறித்தது. அவள் வாயின் நீர் அமுதம் போன்றது என்பதை நுகர்ந்து சுவைத்துக் கூறியதாகும். பேர் அமர் மழைக்கண் என்பதும், தலைவி தன்னிடம் அன்புடையாள்; தன்னை விரும்பும் தன்மையுள்ளவள் என்பதைக் குறிக்கவே கூறியனவாகும். தலைவர் நம்மைத் துறக்கத் துணியார் பாட்டு 287 தலைவன் பிரிந்து சென்றிருந்தபோது, தலைவி வருந்தினாள். அவர் நம்மை விட்டுப் பிரிந்து போனார்; இனி எங்கே வரப் போகிறார். அவர் நம்மைக் கைவிட்டார் என்றுதான் நினைத்துக் கவலையடைகின்றேன் என்றாள். அதற்குத் தோழி தலைவியே வருந்தாதே நம்பிக்கையை இழக்காதே இதோ பார். மேகங்கள் தவழ்கின்றன. அவை மலை உச்சியை எட்டிப்பிடித்துக் கொண்டிருக் கின்றன. இது கார்காலம் வந்த விட்டதற்கு அடையாளம். இதைத் தலைவர் காண்பார். நம்மிடம் வராமலிருக்க மாட்டார் என்றாள். இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே வருந்தாதே! வாழ்க! நான் சொல்வதைக்கேள். அதோ அந்த நீர்உண்ட மேகங்களைப் பார். அவை பன்னிரண்டு மாதக்கர்ப்பம் நிறைந்த பெண்களைப் போலக் காணப்டுகின்றன. பச்சைப் புளிக்கு ஆசைப்படும் அந்தக் கரு முதிர்ந்த மகளிரைப் போல மெதுவாக அசைந்து அசைந்து செல்லுகின்றன. அப் பெண்களைப் போல இந்த மேகங்களும் வானத்தில் விரைந்து செல்ல முடியாமல், தான்கொண்ட தண்ணீரின் சுமையைத் தாங்கிக் கொண்டு தவழ்கின்றன. செழித்த பல குன்றுகளை நோக்கிச் சென்று ஒன்று கூடி, பெரிய ஆரவாரத்துடன் எழும்பிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய கார்காலத்தை நமது தலைவர் காண்பாரானால் அவர் நம்மை மறந்துவிடமாட்டார். இப்பொழுது இப்பருவத்தை அவர் பார்த்த பின்பும் நம்மைக் கைவிடத் துணிவாரா? ஒருக்காலும் துணியமாட்டார். விரைவில் வருவார். வந்து நம்மை மகிழ்விப்பார் பாட்டு அம்ம! வாழி! தோழி! காதலர் இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ? முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக், கடும்சூல் மகளிர் போல, நீர் கொண்டு விசும்பு இவர்கல்லாது, தாங்குபு புணரிச், செழும்பல் குன்றம் நோக்கிப் பெரும்கலி வானம் ஏர்தரும் பொழுதே. பதவுரை:- வாழி தோழி- அம்ம- நான்சொல்வதைக் கேட்பாயாக. முந்நால் திங்கள்- பன்னிரண்டுமாதம். நிறை பொறுத்து- கர்ப்பத்தைத் தாங்கி. அசைஇ- தளர்ச்சியடைந்து. ஒதுங்கல் செல்லா - நடக்க முடியாத. பசும்புளி வேட்கை- பச்சைப்புளியைத் தின்பதற்கு விரும்புகின்ற கடும்சூல் மகளிர்போல- முதிர்ந்த கருவாய்த்த பெண்களைப் போல. நீர்கொண்டு- தண்ணீரைச் சுமந்துகொண்டு. விசும்பு இவர்கல்லாது- வானத்தின் மேல் ஏறிச் செல்ல முடியாமல். தாங்குபுபுணரி- அந்த நீரைத் தாங்கிக் கொண்டு மேகங்கள் ஒன்று சேர்ந்து. செழும்பல் குன்றம்நோக்கி - செழித்த பல குன்றுகளையும் நோக்கி. பெரும் கல்வானம்- பெரிய முழக்கத்தையுடைய மேகங்கள். ஏர்தரும் பொழுதுஏ- எழுந்து செல்லும் இக்கார்காலத்தை, காதலர் - நம்மைப் பிரிந்து சென்ற காதலர். இன்னேகண்டும் இப்பொழுது பார்த்துங்கூட. துறக்குவர் கொல்ஒ- நம்மைக் கைவிட்டு விடுவாரோ? விடமாட்டார். கருத்து:- தலைவர் நம்மைக் கைவிடமாட்டார். கார்காலம் வந்துவிட்டது; திரும்பிவந்துவிடுவார். விளக்கம்:- இது கச்சிப்பேட்டு நன்னாகையார் என்னும் புலவர் செய்யுள். தலைவர் நம்மைவிட்டுப் பிரிந்தார்; இனி வரமாட்டார் என்று தலைவி வருந்தினாள். அப்பொழுது தோழி அவளுக்குச் சொல்லியது, தோழி கூற்று. முல்லைத்திணை. காதலர் இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ என்னும் அடிகளை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஓ ஏ அசைச்சொற்கள். அசைஇ. உயிர் அளபெடை முந்நால் திங்கள் - பன்னிரண்டு மாதங்கள். நிறை- கர்ப்பம் சூல்- கர்ப்பம். புணரி ஒன்று சேர்ந்து. நீர் நிறைந்த மேகம் அசைந்து செல்வதற்கு, பன்னிரண்டு மாதக்கர்ப்பமுள்ள பெண் உவமானம். பெண்கள் பத்துமாதமே கருக்கொண்டிருப்பர். பத்தாவது மாதம் கருவுயிர்ப்பர். இது இயல்பு. பெண்கள் பன்னிரண்டு மாதம் கருக் கொண்டிருப்பதும் உண்டு என்பதை இச்செய்யுள் எடுத்துரைக் கின்றது. கருக்கொண்ட மகளிர் மாங்காய், புளிபோன்ற புளிப்புப் பண்டங்களைத் தின்ன ஆசைப்படுவார்கள். இது இயல்பு. அன்பர் செய்யும் இன்பமே துன்பமும் பாட்டு 288 அன்புள்ளவர்கள் நமக்குச் செய்யும் காரியம், நமக்குத் துன்பத்தைத் தருவதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கருத்து நமக்கு இன்பமளிப்பதுதான். நோய்க்கு மருந்து நமது நாவுக்கும், மனத்துக்கும் இனிமை தருவதில்லை. ஆயினும் மருந்தால் நோய் தணிந்து மகிழ்ச்சியடைகின்றோம். இது போலவே நம்மேல் அன்புடையார் நமது நலத்தைக் கருதி, நமக்குச் செய்யும் சில செய்கைகள் முதலில் நமக்கு இன்பந்தராமல் இருக்கலாம். முடிவில் அவையே நமக்கு இன்பம் அளிக்கும் இனிய செயல்களாகக் காணப்படும். இந்த உண்மை இச்செய்யுளில் அடங்கியிருக்கின்றது. தலைவன் பொருள் தேடப் போயிருந்தான். அவன் குறித்துச் சென்ற காலத்தில் வரவில்லை. காலங்கடந்து கொண்டே போயிற்று. அப்பொழுது தோழி தலைவியின் உள்ளத்தை உணர்ந்து கொள்ள ஒரு தந்திரம் செய்தாள். தலைவன் நம்மிடம் அன்பில்லாதவன்; ஆதலால்தான் வரவில்லை அவன் என்று உரைத்தாள். இச் சமயத்திலே தலைவன் வந்துவிட்டான். அவன் வந்ததை அறிந்த தலைவி. தலைவனுடைய பெருமையைத் தோழியிடம் உரைத்தாள். நம்மீது அன்புள்ள உறவினர் நமக்குச் செய்யும் இன்னள் தேவர் உலகத்தில் உள்ள இன்பத்தைவிடச் சிறந்ததாகும் என்று கூறினாள். இதன் மூலம் தலைவனுடைய உயர்ந்த குணத்தைப் பாராட்டினாள். இச்செய்தியை உரைப்பது தான் இச்செய்யுள். தோழியே நமது தலைவன் குணமற்றவன் அல்லன். இனிய பண்புள்ளவன். அவனுடைய மலையிலே மிளகுக் கொடிகள் நன்றாகவே வளர்ந்து பலன் கொடுக்கும். அங்கே குரங்குகள் நமக்குப் பிடித்த நல்ல தளிர்களை உண்டு கும்பல்களாகக் குதூகலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும். இத்தகைய காட்சிய மைந்த பெரியமலை நாட்டையுடையவன் நமது தலைவன். அவன் மிகவும் இனிய பண்புகள் நிறைந்தவன். ஆதலால் ஒரு காலும் அவன் நம்மை மறக்க மாட்டான். கைவிடவும் கருதமாட்டான். நம்மிடம் அன்புள்ள உறவினர் செய்த துன்பம் துன்பமாகாது. இன்பமாகவே முடியும் அவர் செய்த துன்பம் இனிமை. நிரம்பியிருக்கிறது என்று சொல்லப்படும் தேவலோக இன்பத்தை விடச் சிறந்ததாகும். தேவலோக இன்பம், இத் துன்பத்திற்கு ஒப்பாகாது. இணையாகாது. பாட்டு கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும்கல் நாடன் இனியன் ஆகலின், இனத்தின் இயன்ற இன்னா மையினும், இனிதோ, இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே. பதவுரை:- கறிவளர் அடுக்கத்து- மிளகுக் கொடிகள் வளர்ந்திருக்கின்ற மலைப்பக்கமாகிய. ஆங்கண்- அவ்விடத்திலே. முறி அருந்து- தளிர்களை உண்ணுகின்ற. குரங்கு ஒருங்கு இருக்கும்- குரங்குகள் ஒன்றாகக் கூடியிருக்கின்ற. பெரும்கல்நாடன்- பெரிய மலை நாட்டையுடைய தலைவன். இனியன் ஆகலின்- நல்ல பண்புள்ளவன் ஆதலால். இனத்தின்இயன்ற- உறவுள்ளவர்களால் செய்யப்படும். இன்னாமையினும்- துன்பத்தைக் காட்டினும்; இனிது எனப்படும் - இன்பம் நிரம்பியது என்று சொல்லப்படும். புத்தேள் நாடு- தேவருலகம். இனிதோ- சிறந்த இன்பத்தைக் கொண்டதோ? (இல்லை). கருத்து:- அன்புள்ள தலைவன், எது செய்தாலும் அது நமக்கு இன்பத்தையே தரும். விளக்கம்:- இது கபிலர் என்னும்புலவர் பாட்டு. தலைவனைப் பழித்துரைத்த தோழிக்குத் தலைவி கூறிய மறுமொழி. தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. இனிதோ என்ற சொல்லை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. படூஉம் - உயிர் அளபெடை. ஏ அசை. அடுக்கம்- மலைப் பக்கம். முறி- தளிர். இனம்- உறவினர். அன்புள்ளவர். தேவருலகம் இன்பம் நிறைந்த உலகம் என்ற நம்பிக்கை பண்டைத் தமிழ் மக்களிடம் இருந்தது. கற்புள்ள மாதர்கள் தம் காதலர் மீது பிறர்குற்றம் சாற்றுவதைப் பொறுக்க மாட்டார்கள். குற்றங் கூறினால் அதை மறுத்துரைப்பார்கள். இதுவே பழந்தமிழ் மாதரின் பண்பு. இப்பண்பும் இப்பாடலில் அமைந்து கிடக்கின்றது. இவ்வூரார்க்கு இக்கவலை ஏன் பாட்டு 289 கார்காலம் வந்தது. பிரிந்து சென்ற தலைவன் வரவில்லை. இதைக் கண்டாள் தோழி. மழை பெய்கின்றது. தலைவர் வரவில்லை. தலைவி வருந்துகின்றாள்; இவளை இப்படி ஏங்கித் தவிக்கும்படி செய்த தலைவர் கொடுமையுள்ளவர் என்று தோழி வருந்தினாள். தோழியின் துக்கத்தை அறிந்தாள் தலைவி. அவருடைய பிரிவால் நாம் துன்புறுகின்றோம். இச்சமயம் மழையும் மயங்கிப் பெய்கின்றது: காலமல்லாக் காலத்தில் பெய்கின்ற மழைதான் இது. இவ்வூரினர் நம்மிடம் இரங்கங் காட்டுகின்றவர்களைப் போல நமது தலைவரைப் பழிக்கின்றனர். இவர்கள் ஏன் பழிக்க வேண்டும்? என்றாள் தலைவி. இந்நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே தலைவர் இல்லாமையால், நமக்குக் காமநோய் வளர்பிறையைப் போல நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. நமது உடம்பு இளைக்கின்றது. முன்கையில் உள்ள வளையல்கள் தாமே கழன்று விழுகின்றன. இத்தகைய துன்பநோயைப் பெற்று விட்டோம். தளிரைக் கையினால் கசக்கியதைப் போல மெலிந்து விட்டோம். நமது பக்கத்திலே இருக்கவேண்டியவர் நம் பக்கத்தில் இல்லாமையால் வருந்துகின்றோம். அன்றியும், இந்த மழையும் காலமல்லாக் காலத்திலே மயங்கிப் பெய்கின்றது. இந்த மழை பெய்வதற்கு முன்பே இவ்வூரினர் நம்மிடம் நடிக்கின்றனர். நமது காதலரிடம் இரக்கம் காட்டி வருந்தும் நம்மைவிட இவ்வூரினர் நமக்காக வருந்துகின்றனர். பாட்டு வளர்பிறை போல வழிவழிப் பெருகி, இறைவளை நெகிழ்த்த எவ்வம் நோயொடு, குழைபிசைந்து அனையேம் ஆகிச் சாஅய் உழையர் அன்மையின் உழப்பது அன்றியும், மழையும் தோழி மான்றுபட்டு அன்றே; பட்டமாரி படாஅக் கண்ணும் அவர்திறத்து இரங்கும் நம்மினும் நம்திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே பதவுரை:- தோழி வளர்பிறை போல- வளர்பிறைச் சந்திரனைப் போல. வழிவழிப் பெருகி- மேலும் மேலும் வளர்ந்து. இறைவளை நெகிழ்த்த முன்கை- வளையல்களைக் கழன்றுவிடும் படி செய்த. எவ்வம் நோயொடு- துன்பத்தைத் தரும் காமநோயினால். குழை பிசைந்து அளையேம் ஆகி- தளிரைக் கையால் கசக்கியது போன்றவர் ஆகி, சாய்- மெலிந்து சோர்ந்து. உழையா அண்மையின்- நம்பக்கத்தில் இருக்க வேண்டிய தலைவர் பக்கத்தில் இல்லாமை யால். உழப்பது அன்றியும்- நாம் வருந்துகின்றதும் அல்லாமல். மழையும் மான்றுபட்டது அன்று ஏ- இப்பொழுது பெய்யும் மழையும் மயங்கிப் பெய்கின்றது. பட்டமாரி- இப்பொழுது பெய்கின்ற மழை. படாக்கண்ணும் - பெய்யாதபொழுதும். அவர் திறத்து- அவர் பொருட்டு. இரங்கும் நம்மினும்- வருந்துகின்ற நம்மைக் காட்டிலும். இவ்அழுங்கல் ஊர் ஏ- இந்தத் துன்பமுள்ள ஊரில். நம் திறத்து இரங்கும்- நமக்காக வருந்துகின்றனர். கருத்து:- நம் தலைவர் ஊரினர் கொடியவர் என்று பழிப்பதற்காகவே நான் வருந்துகின்றேன். விளக்கம்:- இது பெருங்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் துன்பத்தைக் கண்டு வருந்திய தோழிக்குத் தலைவி கூறியது. தலைவி கூற்று. முல்லைத்திணை. இவ்வழுங்கல் ஊர் நம் திறத்து இரங்கும் என்று அடிமட்டும் மாற்றப்பட்டது. தோழி என்னும் சொல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இறைவளை- முன்கையிலுள்ள. வளையல். எவ்வம் நோய்- துன்பம் தரும் நோய்: காமநோய். காமநோயின் வளர்ச்சிக்குப் பிறை மதி உவமை, மெல்லிய மேனியின் சோர்வுக்குக் கசங்கிய தளிர் உவமானம். இரக்கம் உள்ளவரே காமத்தின் இயல்பறிவார் பாட்டு 290 காதல் மிகுந்தால் அதைப் பொறுத்திருக்க முடியாது; காதல் நிறைவேறாதபோது, சாதலாக முடிவதும் உண்டு; இந்த உண்மையை உணராதவர்களே காதலரைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பர்; இக்கருத்தைக் கூறுகின்றது இச்செய்யுள். தலைவன் பிரிவால் வருந்திக் கொண்டிருந்தாள் தலைவி. அவளைப் பார்த்து நீ உன் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றாள் தோழி. தோழியின் சொல்லைத் தலைவியால் தாங்க முடியவில்லை. அவள் மேல் தலைவிக்குச் சினம் உண்டாயிற்று. ஆதலால் அவள் சாடையாகத் தோழியைக் கடிந்துரைத்தாள். காமத்தின் இயல்பை அறியாதவர்களே காமத்தைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள். இவர்கள் இரக்கமற்றவர்கள், இரக்கமுள்ளவர்களே அதன் தன்மையை அறிவார்கள். காதல் உள்ளவர்கள், தம் காதலரைப் பெறா விட்டால்- காலம் நீடித்தால் உடல் மெலிந்து உள்ளம் சோர்ந்து இறுதியில் உயிரையும் இழப் பார்கள் என்றாள் இந்நிகழ்ச்சியை எடுத்துரைப்பது இச்செய்யுள். காமத்தைத் தாங்கி கொண்டிரு; அதற்காக மனம் வருந்தாதே என்று கூறுகின்றவர்கள் அறியாதவர்கள். அவர்களுக்குக் காமத்தின் தன்மையே தெரியாது; தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும் அவர்கள் அவ்வளவு நெஞ்சுவலிமை படைத்தவர்களா? கன் மனம் பெற்றவர்களா யாம் எமது காதலரைக் காணாவிட்டால் மிகுந்த துயரம் அடைவோம். தாங்க முடியாத மனத் துயரத்துடன் நாளும் நாளும் நலிந்து விடுவோம். பெரிய வெள்ளத்திலே மிதந்து வரும் சிறிய நுரை, கல்லிலே மோதிக் கரைந்து மறைந்து போவது போல நாமும் தலைவர் பிரிவை நினைத்து நினைத்து நிலையழிந்து சாவோம்! பாட்டு காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது அறியலர் கொல்லோ? அனை மதுகையர்கொல் யாம் எங் காதலர்க் காணேம் ஆயின் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல் பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல் ஆகுதுமே. பதவுரை:- காமம் தாங்கு என்போர்- காமத்தால் வருந்தாதே பொறுத்துக் கொண்டிரு என்று உரைப்போர். தாம் அஃது- தாம் அந்தக் காமத்தின் தன்மையை. அறியலர் கொல் ஓ- அறியாதவர் களோ. அனை மதுகையர் கொல்- அவ்வளவு வலிமையுள்ள நெஞ்சம் படைத்தவர்களோ. யாம் எம் காதலர் காணேம் ஆயின்- நாம் நமது காதலரைக் காண முடியாமல் காலம் நீளுமானால், செறிதுனி பெருகிய- மிகுந்த துன்பம் நிறைந்த. நெஞ்சமொடு - நெஞ்சத்துடன் உடல் மெலிந்து. பெரு நீர்- பெரிய வெள்ளத்திலே மிதந்து வந்து. கல் பொரு சிறு நுரை போல- கல்லிலே மோதி அழிகின்ற சிறிய நுரையைப் போல. மெல்ல மெல்ல- நாமும் சிறிது சிறிதாக இளைத்து. இல் ஆகுதும்- இறுதியிலே மறைந்து விடுவோம். கருத்து:- தலைவர் வராமல் காலந் தாழ்த்துவாரானால் என் உயிர் சிறிது சிறிதாக மறைந்து விடும். விளக்கம்:- இது, கல் பொரு சிறு நுரையார் என்னும் புலவர் செய்யுள். இச்செய்யுளிலுள்ள தொடரே இவருக்குப் பெயராக அமைந்தது. தலைவன் பிரிந்திருந்த போது நீ பொறுத்திரு என்ற தோழிக்குத் தலைவி உரைத்தது. தோழியைச் சாடையாகப் பழித்துரைத்தாள் தலைவி. தலைவி கூற்று. நெய்தல்திணை. மதுகை- வலிமை. இங்கு, மனவலிமையும், இரக்கம் இன்மையையும் குறித்தது, செறிதுனி- மிகுந்த துக்கம். ஓ. ஏ அசைகள். தலைவனை நினைத்து நினைத்துத் தலைவியின் உயிர் போவதற்கு, கல்லில் மோதி மோதிக் கரையும் நுரை உவமை. அழகான உவமை. நுரையும் மென்மையானது, தலைவியின் உடம்பும் மென்மையானது; உள்ளமும் மென்மையானது. கிளிகள் அஞ்சாத இனிய இசையாள் பாட்டு 291 தலைவியிடம் காதல் கொண்டு தவிக்கும் தலைவனைப் பார்த்து அவன் பாங்கன் பரிகசித்தான். அப்பொழுது தலைவன், தான் காதலுற்ற தலைவி இருக்கும் இடத்தையும். அவளுடைய இயல்பையும் எடுத்துரைத்தான். தலைவி தினைப்புனங் காக்கின்றாள். அவள் பாடிக்கொண்டே கிளிகளை ஓட்டுகின்றாள். ஆனால் கிளிகள் ஓடவில்லை. அவள் பாட்டிலே மயங்கின; அவள் குளிர் என்னும் வாத்தியத்தை வாசிக்கும் போதும், அதன் ஓசையிலே ஈடுபட்டன. ஆதலால் கிளிகளை அவளால் ஓட்ட முடியவில்லை. கிளிகள் மேலும் மேலும் வந்து தினைக்கதிர்களைக் கவர அப்புனத்திலே குவிகின்றன. இதைக்கண்டு, தலைவி என்னால் இக்கிளிகளை ஓட்டமுடியவில்லையே! தினைக்கதிர்கள் சேதமாகாமல் காப்பாற்ற முடியவில்லையே என்று அழுகின்றாள். இத்தகைய சிறப்புடையவள் என்தலைவி; என்காதலி என்று கூறுகின்றான் தலைவன். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இச் செய்யுளாகும். தோழனே! நான் காதலித்த தலைவியின் தன்மையை நீ உணரவில்லை. ஆதலால்தான் என்னைப் பரிகசிக்கின்றாய்! அவள் நிலையைச் சொல்லுகின்றேன் கேள். மரங்களைச் சுட்டெரித்து நிலத்தைப் பண்படுத்திய இடத்திலே தினைப்பயிர் செழித்து வளர்ந்திருக்கின்றது. அதன் முற்றிய கதிர்களைத் தின்பதற்காகக் கிளிகள் வந்து வீழ்கின்றன. அவற்றை ஓட்டுவதற்காக என் தலைவி தன் கையில் உள்ள குளிர் என்னும் வாத்தியத்தை வாசிக்கின்றாள். அது இசையோடு பொருந்தி இனிய தாளத்தோடு முழங்குகின்றது. அந்த இன்னிசையை, அவள் தம்மை அழைக்கும் ஒலியென்று கருதிய கிளிகள் தினைப்புனத்தை விட்டுப் புறப்படவில்லை மேலும் வந்து வீழ்ந்து தினைக்கதிர்களைத் தின்று கொண்டே இருந்தன. அதைக்கண்ட தலைவிக்கு அழுகை வந்து விட்டது. நம்மால் இக்கிளிகளை ஓட்டமுடியவில்லையே என்று நினைத்து அழுதாள். நீர்சுரந்து அழுத அவளுடைய கண்கள் ஆழமான பசுமையான சுனையிலே பூத்த குவளைமலர்களைப் போல இருந்தன. வண்டுகள் படிகின்ற அக்குவளைமலர்களின் பல இதழ்களும் கலைந்து குளிர்ந்த மழைத்துளியைத் தாங்கிக் கொண்டிருப்பது போல அவளுடைய அழுத கண்கள் காணப்பட்டன. பாட்டு சுடுபுன மருங்கில், கலித்த ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே, இசையின் இசையா இன்பாணித்தே; கிளி அவள் விளி என எழல்ஒல்லாவே; அதுபுலந்து அழுத கண்ணே, சாரல் குண்டுநீர்ப்பைம் சுனைப் பூத்த குவளை, வண்டு பயில் பல் இதழ் கலைஇத் தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றனவே. பதவுரை:- சுடுபுனம் மருங்கில்- மரங்களை வெட்டிச் சுட்டெரித்துப் பண்படுத்திய கொல்லையிடத்திலே. கலித்த ஏனல்- செழித்து வளர்ந்து கதிர் விட்டிருக்கும் தினையிலே. படுகிளி கடியும்- வந்து விழுகின்ற கிளிகளை ஓட்டுகின்ற. கொடிச்சிகை குளிர் ஏ- தலைவியின் கையில் உள்ள குளிர் என்னும் கருவி, இசையின் இசையா- இசையோடு பொருந்தி. இன்பாணித்து ஏ- இனிய தாளத்தோடும் முழங்கும். கிளி- அந்த இசையைக் கேட்ட கிளிகள். அவள் விளி என- அத்தலைவி தம்மை அழைக்கும் ஓசை என்று எண்ணி. எழல் ஒல்லா ஏ- தாம் இருக்கின்ற தினையிலிருந்து எழும்புவதற்கு விரும்பவில்லை. அது புலந்து அழுதகண் ஏ- தலைவி அதைக் கண்டு வருந்தி அழுத கண்கள். சாரல்- மலைச் சாரலிலே. குண்டுநீர்- ஆழமான நீர் நிறைந்த. பைம் சுனையிலே மலர்ந்த குவளைப் பூக்கள். வண்டு பயில்- வண்டுகள் படிந்த. பல் இதழ்கலைஇ- பல இதழ்களும் கலைந்து. தண்துளிக்கு ஏற்ற- குளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக் கொண்டிருக்கின்ற. மலர் போன்றனவே- அந்த மலர்களைப் போலக் காணப்படுகின்றன. கருத்து:- தலைவி தினைப்புனங் காக்கின்றவள்; இனிய குரலோசையுள்ளவள்; இனியமொழியாள். விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தன்னைப் பழித்துரைத்த பாங்கனுக்குத் தலைவன் உரைத்தது. தலைவி இருக்கும் இடம் இது; அவள் இத்தகையவள் என்று தலைவன் உரைத்தான். தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. குறவர்கள் மலைச்சாரலில், காட்டை அழித்துத் தினைப்பயிர் செய்வார்கள். மூங்கிலை வீணை போல் செய்து, அதிலே நரம்பைக் கட்டி விரலால் தெறித்து, ஓசை யெழுப்பும் ஒரு வகைக் கருவிக்குக் குளிர் என்று பெயர். இது குளிர்ந்த ஒலியையுடையது. அழுகின்ற கண்ணுக்கு மழைத்துளியை ஏற்று நிற்கும் மலர்ந்த குவளைமலர்கள் உவமை. இசையா- இசைந்து: பொருத்தி. பாணி- தானம். விளி- அழைப்பு. கலைஇ - கலைந்து. கலைஇ - அளபெடை. ஏ. ஏ. ஏ. ஏ அசைகள். அவன் அடையும் துன்பம் பெரிது பாட்டு 298 காதலுற்ற தலைவனால், தலைவியைக் காண முடியவில்லை. அவன் பல தடவை தலைவியைக் தேடி வருகின்றான். தலைவியைக் காணமுடியாமல் வருந்தித் திரும்புகின்றான். தோழியைச் சந்திக் கின்றான். அவளிடம் நீங்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் செய்வேன் என்று இனிமை மொழிகளைச் சொல்லுகின்றான். அப்படியும் தலைவியைக் காணமுடியவில்லை. இந்தக் கவலையால் அவன் துன்புறுகின்றான். தலைவனுடைய இந்நிலையைக் கண்ட தோழி, அவன் மடலேறத் துணிவான் என்று நினைத்தாள். அச் செய்தியை அவள் தலைவியிடம் உரைத்தாள். இந்நிகழ்ச்சியை உரைப்பதுதான் இச்செய்யுள். தோழியே! உன்னைக் காதலிக்கும் தலைவன், நம்முடைய தெருவைக் காண்பதற்காக ஒவ்வொரு நாளும் மெல்ல மெல்ல வந்து போகின்றான். அவன் வந்தபோது அருமையாக வாய் திறந்து பேசுகின்றான். நமக்கு நன்மை தரும் இனிய மொழிகளைக் கூறுகின்றான். ஒவ்வொரு நாளும் அவனுடைய உருவம் மாறுபடு கின்றது; அவன் உடல் நிறம் வேறுபடுகின்றது. அவன் பார்க்கும் பார்வை மிகவும் துன்பம் நிறைந்த பார்வை. அப் பார்வை அவன் உள்ளத்தில் இருக்கும் காதலையும் துன்பத்தையும் வெளியிடும் பார்வையாக இருக்கின்றது அவன் நிலையைப் பற்றி நீ நினைத்துப் பார்க்க வேண்டும். இனிமையும் கடுமையும் நிறைந்த கள்ளினையுடையவன் அகுதை என்பவன். அவன் பின்னே சென்று குறி சொல்லும் மகளிர் நிற்பார்கள். அவர்கள் கையிலே வெண்மையான முனையையுடைய சிறு கோலை வைத்திருப்பர். அவர்களுக்கு அவன் பெண் யானைகளைப் பரிசாக அளிப்பான். அவர்கள் உரைக்கும் நற்சொல்லைக் கருதி அவ்வாறு பரிசளிப்பான். அதைப் போல அத்தலைவன் அடிக்கடி வந்து நீண்ட நேரம் என்பின் நின்று இனிய சொல்லைக் கூறிச் செல்லுவதில் வேறு ஏதோ கருத்துண்டு என்று கருதுகின்றேன்! பாட்டு சேரி சேர, மெல்ல வந்து வந்து, அரிது வாய்விட்டு, இனிய கூறி வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும், அவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி; இன்கடும் கள்ளின் அகுதை பின்றை வெண்கடைச் சிறுகோல் அகவல் மகளிர், மடப்பிடி பரிசின் மானப், பிதறிதொன்று குறித்தது அவன் நெடும்புறம் நிலையே. பதவுரை:- சேரி சேர- நம்முடைய தெருவை அடைவதற்காக. மெல்ல வந்து வந்து- அவன் மெதுவாக வந்து வந்து. அரிது வாய்விட்டு- அருமையாக வாய் திறந்து. இனிய கூறி- இனிய சொற்களைச் சொல்லி. வைகல் தோறும்- ஒவ்வொரு நாளும். நிறம் பெயர்ந்து உறையும் - நிறம் மாறுபட்டு இருக்கும். அவன் பைதல் நோக்கம் - அவனுடைய துக்கமுள்ள பார்வையை. நினையாய் தோழி - நினைத்துப் பார்க்க வேண்டும் தோழியே. இன் கடும் கள்ளின் - இனிய கடுமையான கள்ளையுடைய. அகுதை பின்றை- அகுதை என்பவன் பின்னே நிற்கின்ற. வெண்கடைச் சிறுகோல் - வெண்மையான கூர்மையையுடைய சிறுகோலைக் கொண்ட. அகவல் மகளிர்- குறிகூறும் பெண்கள் பெறுகின்ற. மடப்பிடிப் பரிசில் மான- பெண் யானைப் பரிசு போல. அவன் நெடும்புறம் நிலை- அவன் நீண்ட நேரம் என் பின்னே நிற்பது. பிறிது ஒன்று குறித்தது -வேறொரு காரியத்தை நினைத்தேயாகும். கருத்து:- தோழியே தலைவன் கருத்து மடலேறுவதுதான். விளக்கம்:- இது பரணர் என்னும் புலவர் பாட்டு. தலைவன் மடலேறத் துணிந்தான் என்ற செய்தியைத் தோழி தலை மகளுக்கு உரைத்தாள். தோழி கூற்று. குறிஞ்சித்திணை. அவன் நெடும்புறநிலை பிறிது ஒன்று குறித்தது என்று இறுதி அடி மட்டும் மாற்றப்பட்டது. ஏ, அசை. பைதல் நோக்கம் - துன்பம் நிறைந்த பார்வை. வெண்கடை - வெண்மையான, கூர்மை- குறி சொல்லும் பெண்டிர் கையில் வைத்திருக்கும் கோல் கூர்மையுள்ள சிறிய கோலாக இருக்கும். அகவல் மகளிர் குறி சொல்லும் பெண்கள். அகுதை- மதுரையில் இருந்த ஒரு கொடை வள்ளல். தோழியே என்ன வியப்பு இது! பாட்டு 299 தலைவி களவு மணத்தில் வாழ விரும்பவில்லை. களவு முறையினால், எப்பொழுதும் தலைவனுடன் வாழும் வாய்ப்பில்லை. இரவில் அவன் வரும் போதுதான் கண்டு மகிழ முடிகிறது. அவனுடன் காலங்கழிப்பது இன்பமாக இருக்கிறது. அவன் இல்லாதபோது துன்பத்தால் வாட வேண்டியிருக்கிறது. ஆதலால் கற்பு மணம் புரிந்து கொண்டால்தான் காதலனுடன் எப்பொழுதும் பிரியாமல் வாழ்ந்து இன்புறலாம் என்று நினைத்தாள். தன் நினைப்பைத் தலைவி, காதலனுக்கு அறிவிக்க எண்ணினாள். ஒரு நாள் தலைவன் அவளைச் சந்திப்பதற்காக மறைவிடத்திலே வந்து நின்றான். அப்பொழுது அவன் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தைத் தோழியிடம் தெரிவித்தாள். தான் சொல்லுவது தலைவன் காதிலே விழும்படி கூறினாள். இச் செய்தியை உரைப்பதே இச்செய்யுள் தோழியே! பழமையான கடல்நீர் வந்து படிகின்ற கடற்கரைச் சோலை. பறவைகள் வந்து கூச்சலிட்டுக் கொண்டு தங்கி இருக்கின்ற கடற்கரைச் சோலை. அந்தச் சோலையிலே மலர் நிறைந்த புன்னை மரம் நிற்கும் ஒரு மணல் மேடு. அந்த மணல் மேட்டிலே புன்னை மரத்தின் நிழலிலே தலைவன் குறிப்பிட்ட இடத்திலே அவனைச் சந்திக்கும் நாளிலே இன்பம் அடைகிறேன். என் கண்கள் என் காதலனைக் கண்ட போது மகிழ்ச்சி அடைகின்றன. என் காதுகள் அவன் சொல்லும் இனிய சொற்களைக் கேட்டு இன்பம் அடைகின்றன. என்னுடைய விசாலமான மெல்லிய தோள்கள், அவன் தழுவும் போது சிறந்த அழகைப் பெற்று விளங்குகின்றன. அவன் பிரியும் போது சோர்ந்து வாடுகின்றன. இதைப் பார்க்கும் போதும் எண்ணும்போதும் வியப்பாக இருக்கின்றது! இப்படி வியப்பைத் தருவதற்குக் காரணம் என்னவோ! பாட்டு இது மற்று எவனோ தோழி! முதுநீர்ப் புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல், புணர் குறி வாய்த்த ஞான்றைக், கொண்கண் கண்டனம் மன் எம் கண்ணே அவன் சொல் கேட்டனம் மன் எம் செவியே! மற்று அவன் மணப்பின் மாண்நலம் எய்தித், தணப்பின் ஞெகிழ்ப, எம் தடம் மென் தோளே. பதவுரை:- முதுநீர்ப் புணரித் திளைக்கும்- பழைய நீராகிய கடல் நீர் வந்து படிகின்ற. புள் இமிழ் கானல்- பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையில் உள்ள. இணர் அவிழ் புன்னை- பூங்கொத்துக்கள் மலர்ந்திருக்கின்ற புன்னை மரம் நிற்கின்ற. எக்கர் நீழல்- மணல் மேட்டிலே அப்புன்னை மரத்தின் நிழலிலே. புணர் குறி வாய்த்த ஞான்றை- தலைவனைச் சேர்ந்து மகிழும் குறித்த இடத்தை அடைந்த நாளில். கொண்கன்- காதலனை- கண்டன எம் கண்ணே - கண்டு மகிழ்ந்தன எம் கண்கள். அவன் சொல் கேட்டன எம் செவியே - அவனுடைய இனியசொற்களைக் கேட்டு இன்புற்றன எனது செவிகள். மற்று அவன்- அக்காதலன். மணப்பின்- தழுவினால். மாண் நலம் எய்தி- சிறந்த அழகைப் பெற்று. தணப்பின்- பிரிந்தால். எம் தடம் மெல்தோள் ஏ- எமது பெரிய மெல்லிய தோள்கள். ஞெகிழ்ப- சோர்ந்து இளைக்கின்றன. தோழி இது மற்று எவன் ஓ- தோழியே இது என்ன வியப்பு. கருத்து:- தலைவன் அடிக்கடி வந்திலன். எப்பொழுதாவது வருகின்றான்; ஆதலால் வருந்துகின்றேன். விளக்கம்:- இது வெண்மணிப்பூதி என்னும் புலவர் செய்யுள். தலைவன் மறைவிடத்தில் வந்து நின்றான். அவன் காதில் கேட்கும்படி தலைவன் தன்னை மணந்து கொள்ளுவது தான் நலம் என்ற கருத்தைத் தோழியிடம் தெரிவித்தாள். தலைவி கூற்று. நெய்தல் திணை. என் தடம் மென் தோள் ஞெகிழ்ப என்று இறுதி அடி மாற்றப்பட்டது. இது மற்று எவனோ தோழி என்று முதல் அடியை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. மற்று, ஓ, ஏ, மன், அசைச் சொற்கள்- முதுநீர் பழமையான நீர். புணரி- கடல். எக்கர்- மணல்மேடு. ஞெகிழ்தல்- சோர்தல். உலகமே கிடைத்தாலும் உன்னைக் கைவிடேன் பாட்டு 300 ஒரு ஆண்மகன், ஒரு மங்கையைக் குறிஞ்சி நிலத்திலே சந்தித்தான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டனர். காந்தர்வ மணம் போன்ற காதல் மணம்- களவு மணம்- புரிந்து கொண்டனர். நீண்ட நேரம் அவர்கள் இன்பத்திலே திளைத் திருந்தனர். பின்னர்த் தலைமகன் என் உயிரினும் சிறந்த காதலியே நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்; பிரிந்தால் என்னால் உயிர் வாழ முடியாது, என்று உரைத்தான். தான் பிரிந்து போய் மீண்டும் வருவேன் என்பதற்காகவே இவ்வாறு சொன்னான். இதைக் கேட்ட தலைவி தலைவன் பிரிகின்றான் என்று எண்ணி அஞ்சி ஏங்கினாள். தலைவியின் உள்ள நடுக்கத்தைக் கண்டான் தலைவன். காதலியே நீ சிறிதும் அஞ்சாதே! நான் உன்னைக் கைவிட மாட்டேன். இவ்வுலகமே எனக்குப் பரிசாகக் கிடைப்ப தாயினும், அதைக் காட்டினும் உன்னையே பெரிதாகக் கருதுவேன் என்று உறுதிமொழி உரைத்தான். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். குவளை மலர்களின் மணம் வீசுகின்ற அடர்ந்த நீண்ட கூந்தலையுடையவளே! ஆம்பல் மலரின் மணம் வீசுகின்ற தேன் போன்ற இனிய மொழியும் நீரும் பொருந்திய சிவந்த வாயை யுடையவளே! ஆழமான நீரிலே முளைத்துப் பூத்திருக்கின்ற தாமரை மலரில் உள்ள மகரந்தத்தைப் போன்ற சிறிய பல தேமல் புள்ளிகளையுடையவளே! மாமைநிறம் பொருந்திய என் மனங்கவர்ந்த மங்கையே! நான் பிரிய மாட்டேன் நீ அஞ்சாதே என்ற என் சொல்லைக் கேட்டு நீ சிறிதும் அஞ்ச வேண்டாம். நான் உன்னை எக்காலும் கைவிடமாட்டேன். குறுகிய கால்களை யுடைய அன்னப் பறவைகள் மணல் முட்டிலே படுத்துறங்குகின்ற கரையையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகமே பரிசாகக் கிடைத்தாலும் சரி, நான் உன்னுடைய நட்பைக் கைவிட நினைக்கவே மாட்டேன்! பாட்டு குவளை நாறும் குவை இரும் கூந்தல், ஆம்பல் நாறும் தேம் பொதி துவர்வாய்க், குண்டு நீர்த் தாமரைக் கோங்கின் அன்ன நுண்பல் தித்தி, மாஅ யோயே! நீயே அஞ்சல் என்ற என்சொல் அஞ்சலையே! யானே, குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் பெறினும், விடல் சூழலன், நான் நின்னுடைய நட்பே. பதவுரை:- குவளை நாறும்- குவளை மலர்களின் மணம் கமழும். குலை இரும் கூந்தல்- அடர்ந்த நீண்ட கூந்தலையும். ஆம்பல் நாறும்- அல்லி மலரின் மணம் வீசுகின்ற. தேம்பொதி துவர்வாய்- இனிமை நிறைந்த சிவந்தவாயையும். குண்டு நீர்த் தாமரை- ஆழமான நீரிலே முளைத்தெழுந்த தாமரை மலரின். கோங்கின் அன்ன- மகரந்தப் பொடிகளைப் போன்ற. நுண்பல் தித்தி- சிறிய பல தேமல் புள்ளிகளையும் உடைய. மாயோய் ஏ- மாமை நிறம் பொருந்தியவளே. நீஏ- நீ. அஞ்சல் என்ற - அஞ்சாதே என்று உரைத்த. என் சொல் அஞ்சலை ஏ- என் சொல்லைக் கேட்டு அஞ்ச வேண்டாம். யான் ஏ- நான். குறும் கால் அன்னம்- குறுகிய கால்களையுடைய அன்னப் பறவைகள். குவவு மணல் சேக்கும்- குவிந்த மணல் முட்டுக்களிலே தங்கியிருக்கும் கரையை யுடைய. கடல் சூழ் மண்டிலம்- கடல் சூழ்ந்த இந்தப் பூமண்டலத்தையே. பெறினும்- பரிசாகப் பெறுவேன் ஆயினும். நான் நின்னுடைய நட்புஏ- நான் உன்னுடைய உறவை. விடல் சூழலன்- விட்டுவிட நினைக்கவே மாட்டேன். கருத்து:- நீயே எனக்குயிர்; உன்னை என்றும் பிரிய மாட்டேன். விளக்கம்:- இது சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர் பாட்டு. முதல் முதல் காதல் கொண்டு கலந்து களித்த தலைவன்பிரிய எண்ணியது கண்டு தலைவி அஞ்சினாள். அப்பொழுது தலைவிக்குத் தலைவன் தந்த உறுதிமொழி. தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. `நான் நின்னுடைய நட்பு ஏ- விடல் சூழலன் என்று இறுதி அடி மட்டுமே மாற்றப்பட்டது. தேம்- இனிமை. தேன் என்றும் பொருள் கூறலாம். துவர்- சிவப்பு. கொங்கு -மகரந்தம். மாஅ யோய்; உயிர் அளபெடை. ஏ, அசைகள். பண்டைக்காலத்தில் ஒரு முறை காதலித்த ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றுபட்டு வாழ்வார்கள். அவர்கள் காதல் தெய்வீகக் காதல் ஆகும். இவ்வுண்மை இச் செய்யுளில் அமைந்து கிடக்கின்றது. இரவிலும் உறங்கேன் பாட்டு 301 தலைவன் தலைவியை மணந்து கொள்ளும்பொருட்டுப் பொருள் தேடப் போய் இருந்தான். அப்பொழுது தோழி தலைவியை நோக்கி நீ தலைவன் பிரிந்ததனால் உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமோ? அத்தகைய ஆற்றல் உனக்குண்டோ? என்று கேட்டாள். அதற்குத் தலைவி. அவன் விரைவில் வரவில்லை ஆயினும் அவன் வருவான் என்ற நம்பிக்கையால் உயிர் வாழ்கின்றேன். அவன் வந்துவிடுவான் என்ற நினைவால் நான் இரவில் உறங்காமல் இருக்கின்றேன்; அவனையே எதிர்பார்த்து விழித்துக் கொண்டிருக்கின்றேன் என்றாள். இந் நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! மத்தளத்தைப் போன்ற அடிப்பாகத்தை யுடைய பனைமரம், அது வளைந்து வளர்ந்து நிற்கின்றது. அதன் செழித்த மடலிலே கருமையான கால்களையுடைய அன்றில் பறவைகள் சிறிய குச்சிகளைக் கொண்டு கூடு கட்டியிருக்கின்றன. அக் கூட்டிலேயுள்ள அழகிய முதிர்ந்த கருவையுடைய அன்றிற் பறவை வருத்தத்துடன், நள்ளிரவிலே தனது ஆண் பறவையை அழைக்கும். இத்தகைய நள்ளிரவிலே என் தலைவர் தேரில் ஏறி வருவதுண்டு. மரத்தடிகளைச் சக்கரம் பிளக்கும்படி, நிறைந்த மணிகள் கட்டிய தேரையூர்ந்து வருவதுண்டு, அவருடைய இவ்வழக்கத்தை எண்ணி, அவர் வராவிட்டாலும் வருவதுபோன்ற ஓசையை எண்ணிக் கொண்டு நான் உறங்கமாட்டேன். என் காதிலே அவர் வருவது போன்ற ஓசை கேட்பதனால் என் கண்கள் தூங்குவதை மறந்து விட்டன. பாட்டு முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் கொழுமடல் இழைத்த சிறு கோல் குடம்பைக் கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல் வயவுப்பெடை அகவும், பானாட் கங்குல், மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் வாராது, ஆயினும் வருவது போலச் செவி முதல் இசைக்கும் அரவமொடு, துயில் துறந் தனவால் தோழிஎன் கண்ணே. பதவுரை:- முழவுமுதல் அரைய- மத்தளம் போன்ற அடி மரத்தையுடைய. தடவுநிலைப் பெண்ணை- வளைந்து நிற்கின்ற பனைமரத்தின். கொழுமடல் இழைத்த- செழித்த மடலிலே கட்டிய. சிறு கோல் குடம்பை- சிறிய குச்சிகளால் ஆகிய கூட்டினுள் இருக்கின்ற. கருங்கல் அன்றில்- கருமையான கால்களையுடைய. வயவுப்பெடை - வருந்துகின்ற பெண். அன்றில் அகவும்- தன் துணையை அழைக்கின்ற. பால்நாட்கங்குல்- பாதி நாளாகிய இரவிலே. மன்றம் போழும்- மரத்தடிகளில் உள்ள நிலத்தைச் சக்கரத்தால் பிளந்துகொண்டு வருகின்ற. இனமணி நெடுந்தேர்-( என் காதலனுடைய) வரிசையாக மணி கட்டிய பெரிய தேரானது. வாராது ஆயினும்- வராவிட்டாலும். வருவது போலச் செவி முதல் இசைக்கும் - வருவது போலக் காதிலே கேட்கின்ற ஓசையினால். தோழி என் கண் ஏ- தோழியே என் கண்கள். துயில் துறந்தனவால்- தூக்கத்தை விட்டன; விழித்திருக்கின்றன. கருத்து:- தலைவன் வரவை எதிர்பார்த்து இரவில் தூங்காமல் விழித்திருக்கின்றேன். விளக்கம்:- இது குன்றியன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவை உன்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமோ என்று கேட்ட தோழிக்குத் தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. தோழி என் கண் ஏ, துயில் துறந்தன ஆல் என்று இறுதி அடி மட்டும் மாற்றப்பட்டது. முழவு- மத்தளம், பனைமரத்தின் அடிப்பாகத்திற்கு உவமை. தடவு- வளைவு, குடம்பை- கூடு. அரை- அடிமரம். ஊருக்கு அஞ்சுவதால் என்ன பயன்? பாட்டு 302 தலைவன் பொருள் தேடச் சென்றிருந்த போது தலைவியின் நிலையைக் கண்டாள் தோழி, இவள் தலைவன் பிரிவை எப்படித் தான் பொறுத்துக்கொண்டிருக்கப் போகின்றாளோ என்று துன்புற்றாள். அதைக் கண்ட தலைவி தலைவனைப் பிரிந் திருப்பதனால் வரும் துன்பத்தை நம்மால் பொறுக்க முடியவில்லை. இதை விட இறந்துபடுவோம் என்று நினைத்தால் அதுவும் அஞ்சுதற்குரிய செய்கையாகும். தலைவன் ஏன் இன்னும் வரவில்லை? ஊரார் கூறும் பழிச் சொல்லுக்குப் பயந்து கொண்டு வந்திலன் என்று நினைக்கின்றேன். அவனையும், எம்மையும் சேர்த்து ஊரார் உரைக்கும் சொல்தான் எம் உயிரைக் காப்பதாகும். இந்த உண்மையை உணராத தலைவன், ஊரார் சொல்லுக்கு அஞ்சுவது, நன்றாகாது என்று உரைத்தாள். இந்நிகழ்ச்சியை உரைக்கின்றது இச்செய்யுள். தோழியே, தலைவன் பிரிந்ததனால் உண்டான கொடிய துன்பத்தைத் தாங்குவதற்கும் ஆற்றல் இல்லை. இவ்வாற்றல் இல்லாத காரணத்தால் இறந்து விடுவோம் என்று நினைப்பது இன்னும் அச்சத்தைத் தருகின்றது. ஆதலால் இறப்புக்கும் அஞ்சுகின்றோம். நாமும், தலைவனும் பிரியாத உறவுள்ளவர்கள் என்று ஊரார் உரைக்கின்றனர். நமது மலை நாட்டுத் தலைவன், ஐயோ! இந்த அலர்மொழிக்கு அஞ்சுகின்றானோ; ஆதலால்தான் அவன் பலரும் தூங்குகின்ற நள்ளிரவிலே கூட இவ்வூரில் வர அஞ்சுகின்றான். என் நெஞ்சத்தில் வருகின்றானே அல்லது, நேராக வருவதற்கு அஞ்சுகின்றான். இது தலைவனுக்குப் பெருமை தரும் செயலாகுமா? தோழியே நீயே சொல்லுக. பாட்டு உரைத்திசின் தோழி, அது புரைத்தோ! அன்றே; அரும்துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன் தலைப் பெரும் பிறிது ஆகல் அதனினும்! அஞ்சுதும் அன்னோ! இன்னும், நம் மலை நாடன், பிரியா நண்பினர் இருவரும் என்னும் அலர் அதற்கு அஞ்சினன் கொல்ஒ; பலருடன் துஞ்சூர் யாமத் தானும் என் நெஞ்சத்து அல்லது வரவு அறியானே. பதவுரை:- அரும்துயர் உழத்தலும் ஆற்றாம்- தலைவன் பிரிவினால் உண்டான கொடிய துயரத்தால் வருந்துவதையும் பொறுக்க மாட்டோம். அதன் தலை- அதே சமயத்தில். பெரும் பிறிது ஆகல் - இறந்துபடுவதை. அதனினும் அஞ்சுதும்- அதைக் காட்டிலும் அஞ்சுகின்றோம். அன்னே இன்னும்- ஐயோ இன்னும் கூட. நன் மலைநாடன்- நல்ல மலை நாட்டையுடைய தலைவன். பிரியா நண்பினர் இருவரும்- பிரியாத உறவுள்ளவர்கள் அவர்கள் இருவரும். என்னும் அலர் அதற்கு- என்று ஊரார் உரைக்கின்ற பழிமொழிக்கு. அஞ்சினன் கொல் ஓ- பயந்த விட்டானோ. பலர் உடன் துஞ்சு ஊர்- பலரும் நன்றாக உறங்குகின்ற இவ்வூரிலே. யாமத்தானும்- நள்ளிரவிலுங்கூட. என் நெஞ்சத்து அல்லது- என் உள்ளத்திலே வந்து புகுவானே அல்லாமல். வரவு அறியான் ஏ- நேரே வருவதற்கு எண்ணாதவனுடைய அது. புரைத்தோ- அச்செய்கை சிறந்ததோ. உரைத்திசின் தோழி - நீயே கூறுவாய் தோழியே. கருத்து:- தலைவனை நான் எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்கின்றேன்; ஆனால் அவன் மட்டும் வரவில்லை. விளக்கம்:- இது, மாங்குடி கிழார் என்னும் புலவர் செய்யுள். தலைவன் பிரிவால் வருந்தியிருக்கும் தலைவியைக் கண்டு தோழி வருந்தினாள்; இவள் இத்துயரத்தை எப்படிப் பொறுப்பாள் என்று ஏங்கினாள். அப்பொழுது அவளுக்குத் தலைவி உரைத்தது. குறிஞ்சித்திணை. அது புரைத்தோ அன்று ஏ உரைத்திசின் தோழி என்று முதல் அடியை மாற்றி இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. அன்று. ஏ, ஓ, ஏ, அசைச் சொற்கள். புரைத்தோ- பெருமையோ. அதன் தலை- அதற்கு மேலும், பெரும் பிறிது- பெரிதும் வேறானது; இறத்தல் அன்னோ- ஐயோ. தலைவியின் துயர் தீர வழி தேடுக பாட்டு 303 தலைவியின் உள்ளத்திலும், உடலிலும் உண்டான வேற்றுமையை அவள் தாய் கண்டாள். அவளுடைய நடத்தையிலே ஐயுற்றாள். ஆதலால் அவளை வெளியே போக விடாமல் வீட்டிலேயே வைத்து விட வேண்டும் என்று நினைத்தாள். தாயின் இவ்வுள்ளத்தை அறிந்தாள் தலைவியின் தோழி. அடுத்த நாள் தலைவியைக் காண வந்தான் அவளைக் காதலித்து வாழும் தலைவன். அவனிடம் தோழி, தலைவியின் தாய் செய்யக் கருதி இருப்பதைக் கூறினாள். இனி நீ தலைவியுடன் சேர்ந்து இன்பம் துய்க்க வேண்டுமானால் அவளை மணந்து கொண்டால் தான் முடியும். இப்பொழுது போல் இரவிலோ, பகலிலோ தலைவியை மறைவிலே காணமுடியாது என்று இச் செய்தியை உரைப்பதே இச்செய்யுள். கடல் துறையையுடைய தலைவனே! உன்னுடைய கடற் கரையிலே தாழை மரங்கள் நிறைந்திருக்கின்றன. நீர்க்கழிகளிலே தமக்கு வேண்டிய உணவைத் தேடி உண்ட கருமையான கால்களை யுடைய வெண்மையான நாரைகள் அத்தாழை மரங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கும். அவை பெரிய கடலிலே காற்றால் எழுந்து உடைந்து விழுகின்ற அலைஓசையை இனிய கீதம் போலக் கேட்டுக் கொண்டு உறங்கும். இத்தகைய கடற்கரையை உடையவன் நீ. என்னுடைய தோழியாகிய தலைவி என்னோடு கூடி, பிரகாசிக்கின்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரநிழலிலே நண்டுகளை விரட்டிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளுடைய பழமையான வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்தன; அவளும் இங்கே மிகவும் பசலை நிறத்தை யடைந்தாள். பாட்டு கழிதேர்ந்து அசைஇய கரும் கால் வெண்குருகு, அடை கரைத் தாழைக் குழீஇப், பெருங்கடல் உடைதிரை ஒலியில் துஞ்சும் துறைவ! தொல் நிலை நெகிழ்ந்த. வளையள் ஈங்குப் பசந்தனள் மன்; என்; தோழி என்னோடு மின் இணர்ப் புன்னை அம் புகர் நிழல் பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே பதவுரை:- கழி தேர்ந்து - கழியிலே மீன் உணவை ஆராய்ந்து. அசைஇய- உண்டு தங்கிய. கரும் கால்வெண்குருகு- கருமையான கால்களையுடைய வெண்மையான நாரைகள். அடைகரை தாழை- மணல் அடைந்த கரையிலுள்ள தாழை மரங்களிலே. குழீஇ- கூடியிருந்து. பெரும் கடல் உடைதிரை ஒலியின் - பெரிய கடலில் காற்றால் எழும்பி உடைந்து விழுகின்ற அலையோசையினால். துஞ்சும் துறைவ- தூங்கிக் கொண்டிருக்கின்ற கடல் துறையை யுடைய தலைவனே. என் தோழி என்னோடு- என் தோழியாகிய உன் காதலி என்னோடு கூடி, மின் இணர் புன்னை- பிரகாசிக்கின்ற பூங்கொத்துக் களையுடைய புன்னை மரத்தின். அம்புகர் நிழல்- அழகிய புள்ளி பொருந்திய நிழலிலே. பொன்வரி அலவன் - பொன் போன்ற கோடுகளையுடைய நண்டுகளை. ஆட்டிய ஞான்று - வருத்தி விளையாடிய பொழுதில். தொல்நிலை நெகிழ்ந்த வளையல்- பழைய நிலையிலிருந்து கழன்று வீழ்ந்த வளையலை உடையவளானாள், ஈங்கு பசந்தனள்மன்- அவள் இப்பொழுது நிறமும் மாறுபட்டு பசலை நிறம் பெற்றாள். (ஆதலால் அவளை அவள் தாய் இனி வெளியில் வரவிட மாட்டாள்). கருத்து:- தலைவியை அவள் தாய் இனி வீட்டிலே வைத்துப் பாதுகாப்பாள்; ஆதலால் அவளை இனி நீ மணந்துகொள்ள வேண்டும். விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் செய்யுள், தலைவியின் மாறுபாட்டைத் தாய் அறிந்து கொண்டாள். ஆதலால் அவளை இனி வெளியே விடமாட்டாள். அவளை நீ விரைவில் மணந்து கொண்டால்தான் அவளைச் சந்திக்க முடியும் என்று தோழி தலைவனிடம் உரைத்தாள். நெய்தல்திணை. தொன்னிலை நெகிழ்ந்த வளையள்ஈங்குப் பசந்தனள் மன் என்னும் தொடர்களை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அசைஇ, குழீஇ; உயிர் அளபெடை. மன் ஏ- அசைகள். கடல்கரையில் உள்ள சிறுமிகள் நண்டுகளை விரட்டி விளையாடுவது இயற்கை. நாரைகள் உணவுண்டு அலையோசையால் உறங்குவது போல நீயும் என் தலைவியின் இன்பத்தைப் பெற்று அவளுடன் இனிது உறங்க வேண்டும்; மணம் புரிந்துகொண்டால்தான் இவ் வின்பத்தை நீ எய்த முடியும் என்ற கருத்துடனேயே நாரையின் செய்தியை உரைத்தாள் தோழி. பகைமை தரும் நட்பு பாட்டு 304 நெய்தல் நிலத் தலைவன் ஒருவன் அவன் தான் காதலித்து வந்த தலைவியைப் பலரும் அறிய மணந்து கொள்வதற்காகப் பொருள் தேடப் போயிருந்தான். அச்சமயத்தில் தலைவியின் தோழி மிகவும் வருந்தினாள். தலைவன் வரும் வரையிலும் இவள் தனித்திருக்கும் துன்பத்தைத் பொறுத்துக்கொண்டிருக்கும் ஆற்றல் உடையவளோ என்று எண்ணிக் கவலையடைந்தாள் தோழி. தோழியின் இக் கவலையைக் கண்ட தலைவி அவளிடம் தனது நிலையை எடுத்துரைத்தாள். தலைவனுடன் நாம் செய்த நட்பு நமக்கே பகையாக முடிந்தது. அவன் இல்லாத போது நம்முடைய அழகு தொலைகிறது; நமது தோள்கள் இளைத்து மெலிகின்றன; என் துன்பத்தைப் பிறர் அறிந்து சிரிக்கின்றனர். இந்த நிலையை அடைந்தோம் என்று கூறினாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! வளைந்த திமிலையுடைய மீன் பிடிக்கும் படகிலே, மீன் வேட்டைக்காகக் கடலிலே சென்ற பரதவர்கள் சுறாமீனை வேட்டையாடுவார்கள். கொல்லுந் தொழிலை யுடைய கூர்மையான எறிஉளியைக் காய்ந்த மூங்கிலின் முனையிலே பொருத்தி வைத்திருப்பார்கள். அந்த மூங்கில் மிகவும் உறுதியுள்ள தாக இருக்கும். அந்தக் கருவியை நிறைந்த நீர் வழியிலே ஓடிக் கொண்டிருக்கும் சுறாமீன் மேல் வீசி எறிவார்கள். உளியின் வாயில் சிக்கிய சுறாமீனை இழுப்பார்கள். அவர்கள் சுறாமீன் மேல் அந்த உளி பொருந்திய மூங்கிலை விசையுடன் வீசும்போது, கரையிலே யிருக்கும் குறுகிய கால்களையுடைய அன்னப் பறவைகள் பயந்து பறந்தோடும் இத்தகைய மலர்கள் நிறைந்த கடற்கரைச் சோலை; தாழங்காடு நிறைந்த கடல் துறையின் தலைவன் நம் காதலன். அவனுடன் நாம் செய்த நட்பு நமக்கே பகையைத் தருகின்ற நட்பாக முடிந்தது. நான் என்ன செய்வேன். பாட்டு கொல்வினைப் பொலிந்த கூர்வாய் எறி உளி முகம்பட மடுத்த முளி வெதிர். நோன்காழ் தாங்கரு நீர்ச்சுரத்து எறிந்து வாங்கு விசைக் கொடும்திமில் பரதவர் கோட்டுமீன் எறிய நெடுங்கரை இருந்த குறுங்கால் அன்னத்து வெண்தோடு, இரியும் வீ ததை கானல், கைதை அம் தண்புனல் சேர்ப்பனோடு செய்தனெம் மன்ற ஓர் பகைதரு நட்பே. பதவுரை:- கொல்வினை பொலிந்த- கொல்லுந்தொழி லுடன் விளங்குகின்ற. கூர்வாய் எறி உளி- கூர்மையான வாயை உடைய எறிவதற்குரிய உளியை. முகம்பட மடுத்த- முனையிலே தோன்றும்படி பொருந்திய. முளி வெதிர் நோன் காழ்- காய்ந்த மூங்கிலின் வலிமையுள்ள காம்பை. தாங்கரு நீர்ச்சுரத்து எறிந்து- தாங்கமுடியாத நீர் நிறைந்த வழியிலே வீசி, எறிந்து. வாங்கு- மீண்டும் கைக்கொள்ளுகின்ற. விசை கொடும் திமில் பரதவர்- விரைந்து செல்லும் வளைந்த திமிலாகிய மீன் பிடிக்கும் படகையுடைய பரதவர்கள். கோட்டு மீன் எறிய- சுறாமீனைக் குறி பார்த்து அக்கருவியை வீச அதைக்கண்டு, நெடும்கரையிருந்த- நீண்ட கரையிலே கூடியிருந்த - குறும்கால் அன்னத்து- குறுகிய கால்களையுடைய அன்னப்பறவைகளின். வெண்தோடு- வெண்மையான கூட்டம். இரியும்- பயந்து அவ்விடத்தை விட்டு நீங்குகின்ற. வீ ததை கானல்- மலர்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளையும். கைதை- தாழையையும் உடைய. அம் தண்புனல் சேர்ப்பனொடு- அழகிய குளிர்ந்த நீர் நிறைந்த கடல்துறையின் தலைவனோடு. மன்ற -நிச்சயமாக, ஓர் பகைதரும் நட்புஏ- ஒரு பகையை நமக்குத் தருகின்ற நட்பை. செய்தனெம்- உண்டாக்கிக் கொண்டோம். கருத்து:- தலைவன் பிரிவு நமக்குத் துன்பத்தையே தருகிறது; இவ்வாறு துன்பந்தரும் நட்பை நாம் ஏற்படுத்திக் கொண்டோம். விளக்கம்:- கணக்காயன் தத்தன் என்னும் புலவர் செய்யுள். தலைவன் பிரிந்தான்; அதனால் தலைவி வருந்துவாள் என்று தோழி வருந்தினாள். அவளுக்குத் தலைவி தன் வருத்தத்தை எடுத்துரைத்தாள்.தலைவி கூற்று. நெய்தல்திணை. மன்ற ஓர்பகை தரும் நட்பு செய்தனெம் என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. எறி உறி- வீசி எறிகின்ற உளி. முகம்- முனை, பட - தோன்ற, மடுத்த- பொருத்திய; அமைத்த. காழ்- காம்பு. திமில்- மீன்பிடிக்கும் படகு. கோட்டு மீன்- கொம்புள்ள மீன்; சுறாமீன். மூங்கிலின் முனையிலே வளைந்த உளியைப் பொருத்தி யிருப்பர்; அதைச் சுறாமீன் மேல் வீசி யெறிந்து அதைப் பிடிப்பார்கள்; இது மீன் பிடிக்கும் கருவிகளில் ஒன்று. மீனவர்களின் தொழில் இச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. உதவுவார் ஒருவரும் இல்லை பாட்டு 305 தலைவியின் நடத்தையிலே ஐயங்கொண்டே உறவினர் அவளை வீட்டிலேயே வைத்துவிட்டனர். வெளியிலே செல்ல விடாமல் காவல் வைத்துத் தடுத்து விட்டனர். அப்பொழுது அவள், தன் மனதுக்கினிய காதலனைக் காணமுடியாமல் வருந்தி யிருந்தாள். அவள் தன் தோழியைப் பார்த்துத் தன் துயரத்தைத் தெரிவித்தாள். நாம் தலைவனைக் காணமுடியவில்லை; அவராலும் நம்முடைய துன்பத்தைக் களைய முடியவில்லை; வேறு உதவி செய்பவரையும் காணோம். ஆதலால் நாம் உண்மையை உரைத்து, நம் உறவினர்களின் மூலம், நமது காதலரை மணக்க வழி தேட வேண்டும்; இதைத்தவிர நம் துன்பந்தீர வேறு வழியில்லை என்றாள். இக்கருத்தடங்கியதே இச்செய்யுள். நமது கண்களே நமக்குக் காமநோயைத் தந்தன. அக்காதலரை நமது கண்கள் சந்தித்தன; நமது உள்ளத்திலே அவரை நுழையும் படி செய்து விட்டன. இப்பொழுது அக்காமம் நமது உள்ளத்திலே நெருப்பாக நின்று நம்மைச் சுடுகின்றது. நம்முடைய எலும்பு மெலியும்படி வருத்துகின்றது ஆயினும், அவரை விரும்பி அவர் குறித்த இடத்திலே சென்று அவரைக் காண்பதற்கு முடியாத வராகி விட்டோம். நாம் இருக்கும் இடத்திற்கு அவர் வந்து நம்முடைய துன்பத்தை நீக்குவதற்கும் அவரால் முடியவில்லை. குப்பையைக் கிளறுவதைப் பிறவிக்குணமாகக் கொண்ட கோழிகளைச் சண்டை செய்ய விடாமல் தடுக்க மாட்டார் களாயினும், அவை சண்டையிடும் போது அவற்றைச் சண்டை யிடாமல் பிரித்து விடமாட்டார்களாயினும், அவற்றின் சண்டை ஓய்வதில்லை. தாமே சண்டையிட்டு இறுதியில் அழியுமே அல்லாமல் சண்டையை நிறுத்தாது. அது போல் யான் அடைந்த காம நோயைக் களைவாரைக் காணேன். இந்நோயால் நான் மடிவதைத் தவிர வேறு வழியில்லை. பாட்டு கண்தர வந்த காம ஒள்எரி என்பு உற நலியினும் அவரொடு பேணிச் சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே; வந்து, அஞர் களைதலை அவர் ஆற்றலரே; உய்த்தனர் விடாஅர், பிரித்து இடை களையார்; குப்பைக் கோழித் தனிப் போர் போல; விளி வாங்கு விளியின் அல்லது; களைவோர் இலை யான் உற்ற நோயே. பதவுரை:- கண்தரவந்த- தலைவரைக் கண்டவுடன் கண்களால் கொடுக்கப் பட்ட. காம ஒள்எரி- காமமாகிய ஒளி பொருந்திய நெருப்பு. என்பு உற நலியினும்- நம் எலும்பை மிகவும் வருத்தினாலும், அவரோடு பேணி- அவரை விரும்பி. சென்று-குறியிடத்தேசென்று. நாம் முயங்கற்கு- நாம் அவரைத் தழுவிக் கொள்ளு வதற்கு. அரும் காட்சியம் ஏ- முடியாத தோற்றத்தை உடையவரானோம். வந்து அஞர் களைதலை- தாமே வந்து நம் துன்பத்தை நீக்கும் செயலையும், அவர் ஆற்றலர்ஏ- அவர் செய்யவில்லை. உய்த்தனர்விடார்- செலுத்திவிடாராயினும், பிரித்து இடைகளையார்- பிரித்து நடுவிலே போரை நிறுத்தி விடாராயினும். குப்பைக் கோழி- குப்பையைக் கிளறும் தன்மை யுள்ள கோழிகள். தனிப்போர் போல- தனித்து நின்று சண்டை செய்து மாள்வது போல. விளிவாங்கு விளியின் அல்லது- நம் காமநோயும் தானே அழிவுவந்து அழிந்தால் அல்லாமல். யான் உற்ற நோய் ஏ- யான் அடைந்த துன்பத்தை. களைவோர் இலை- உதவி செய்து நீக்குவோர் யாரும் இல்லை. கருத்து:- என் துன்பத்தை நீக்கி உதவி செய்வார் யாரும் இல்லை; ஆதலால் உண்மையை அன்னையிடம் உரைப்பதே நலம். விளக்கம்:- இது குப்பைக் கோழியார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இச்செய்யுளில் வந்திருக்கும், குப்பைக் கோழி என்னும் தொடரே இப்புலவருக்குப் பெயராயிற்று. வீட்டிலே காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவி தனது நிலையைத் தோழியிடம் கூறினாள். உண்மையை உரைத்து, நாம் காதலித்த ஆடவனை மணக்க வேண்டியதே நமது கடமை என்பதைக் கூறாமல் கூறினாள். தலைவி கூற்று. மருதத்திணை. யான் உற்ற நோய் களைவோர் இலை என்று இறுதி அடி மட்டும் மாற்றப்பட்டது. விடாஅர். அளபெடை. ஏ அசை. கோழிகள் சண்டையிடத் தொடங்கினால், அவற்றை விலக்கி விடாமல் அல்லது சண்டையை நிறுத்தாது. இறுதி வரையிலும் ஆத்திரத்துடன் சண்டையிட்டு மடியும். சண்டைக் கோழிகளின் இயல்பு இது. பிறர் தடுத்து நிறுத்தினால் கோழிச் சண்டை நிற்கும்; அதுபோல பிறர் உதவினால்தான் தன் காமநோய் ஒழியும் என்றாள் தலைவி. காம ஒள் எரி என்று காமத்தைத் தீயாக உருவகம் செய்யப்பட்டது. அன்பு உற நலியினும் என்பது வெளியில் காணப்படாமல் உள்ளத்தில் இருந்து துன்புறுத்தும் என்பதைக் குறித்தது. நெஞ்சமே ஏன் மறந்து விடுகின்றாய்? பாட்டு 306 தலைவி, யாரிடமோ காதல் கொண்டிருக்கின்றாளென்பதைப் பெற்றோர் அறிந்து விட்டனர். ஆதலால் அவளை அல்லும் பகலும் வீட்டை விட்டு வெளியில் போகாமல் காத்து வந்தனர். இச் செய்தி தலைவனுக்கும் தெரியும். ஆயினும் அவன் இன்னும் தலைவியைக் கற்புமணம் புரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. காலங்கடத்திக்கொண்டே வந்தான். இதனால் அவன் மேல் தலைவி வெறுப்புக் கொண்டாள். அவனைப் பார்க்கும் போது அவனிடம் இனிய மொழிகளைப் பேசுவதில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பாள். ஆயினும் சில சமயங்களில் தலைவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்கும் போது வரவேற்று இன்சொற் பேசி மகிழ்வாள். அவனைக் காணாதபோது எண்ணியிருந்தவை மறந்தே போய்விடும். இதைப்பற்றித் தலைவி தானே தன் நெஞ்சை நோக்கிச் சொல்லிக் கொண்டாள். இந்நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். என் நெஞ்சே எனது நிலையைத் தலைவன் அறிவான். அறிந்தும் இன்னும் மணந்துகொள்ளுவதற்கு முயலாமல் காலங் கடத்தி வருகின்றான். ஆதலால் இனி அவனைக் காணும் போது முகங்கொடுத்துப் பேசுவதில்லை; மென்மையான- இனிமையுள்ள விரும்பத்தக்க- மொழிகளை அவனுடன் பேசுவதில்லை என்றுயாம் உன்னிடம் சொல்லியிருக்கின்றோம். அழகிய மாமரத்திலே உள்ள, மகரந்தங்கள் நிறைந்த பூவிலே, வண்டுகள் பல படிந்து, தேனை நுகர்ந்து கொண்டிருக்கின்ற கடற்கரைச் சோலையை யுடைய தலைவனைக் காணும்போது நாம் சொல்லியவற்றை மறந்து விடுகின்றாய். அந்தக் கடல் துறைவனைக் கண்டவுடன் களிப்படை கின்றாய். மெல்லிய- இனிய- விரும்பத்தக்க மொழிகளைப் பேசி மகிழ்ச்சி அடைகின்றாய்; ஏன் இப்படிச் செய்கின்றாய். நான் சொல்லியிருப்பவற்றை மறந்து விட்டதனால் தான் இப்படிச் செய்கின்றாயா? பாட்டு மெல்லிய, இனிய மேவரு தகுந இவை மொழியாம்; எனச் சொல்லினும், அவை நீ மறத்தியோ! வாழி என் நெஞ்சே! பலவுடன் காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் வண்டு வீழ்பு அயரும், கானல், தண்கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே. பதவுரை:- வாழி என் நெஞ்சே- வாழ்க என் உள்ளமே. மெல்லிய- ஓசையால் மெல்லியனவும். இனிய- பொருளால் இனிமை நிறைந்தனவும். மேவருதகுந - விரும்பத் தகுந்தவையுமான. இவைமொழியாம் - இவைபோன்ற சொற்களை அவரைக் காணும் போது பேசமாட்டோம். எனச் சொல்லினும்- என்று உன்னிடம் சொல்லியிருந்தும். காமர் மாஅத்து- அழகிய மா மரத்திலே உள்ள. தாது அமர் பூவின்- மகரந்தம் பொருந்திய பூவிலே. பலவுடன் வண்டு வீழ்பு. பல வண்டுகள் ஒருங்கே படிந்து. அயரும்- தேனை அருந்தி விளையாடும். கானல்- சோலையுள்ள. தண்கடல் சேர்ப்பனை- குளிர்ந்த கடல் துறையை உடைய தலைவனை. கண்டபின்- நேரே கண்டபிறகு. அவை நீ மறத்தியோ - முன்பு நான் சொல்லியிருந்த அச் சொற்களை நீ மறந்து விட்டாயோ. கருத்து:- தலைவனைக் காணும் போது அவன் மீது கொண்டிருந்த வெறுப்பு மறைந்து விடுகின்றது. விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் இன்னும் தன்னைக் கற்புமணம் புரிந்து கொள்ள வில்லையே என்று கவலை கொண்டிருந்த தலைவி, தன் நெஞ்சத்திற்கு உரைத்தது; நெய்தல்திணை. வாழி என் நெஞ்சே! மெல்லிய இனிய மேவரு தகுந, இவை மொழியாம் எனச் சொல்லினும் காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் பல உடன் வண்டு வீழ்பு அயரும் கானல் தண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே அவை நீ மறத்தியோ என்று பதமாற்றம் செய்து பொருள் உரைக்கப்பட்டது. மாஅத்து- உயிர் அளபெடை. ஏ- அசை. காமர்- அழகு. மா- மாமரம். தாது- மலரில் உள்ள மகரந்தப் பொடி. உண்மைக் காதல் உள்ளவர்கள் ஆண் ஆயினும் பெண் ஆயினும் தங்கள் காதலுக்கு உரியவர்களைக் காணின் உள்ளங் கனிந்து ஒன்று கூடுவர். காணாத போது அவர்களிடம் தோன்றி யிருந்த சினம் இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போகும். இவ்வுண்மையை இச் செய்யுள் தெரிவிக்கின்றது. நாம் அழும்படி விட்டுச் சென்றார் பாட்டு 307 தலைவனைக் காணாமல் தலைவி வருந்தியிருந்தாள். அது கண்ட தோழி நீ இவ்வாறு வருந்துதல் தகாது; பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினாள். அதற்குத் தலைவி அவர் நாம் வருந்தி அழும்படி நம்மை, விட்டுப் பிரிந்து போனார். இன்னும் வந்திலர். நம்மை மறந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன். இச்சமயத்திலே வானத்திலே பிறைச் சந்திரனும் வந்து தோன்றி நம்மைத் துன்புறுத்துகின்றது நான் வருந்தாமல் என்ன தான் செய்வேன்; என் துக்கத்தை எப்படித் தாங்கியிருப்பேன் என்றாள். இச் செய்தியை உரைக்கின்றது இச் செய்யுள். தோழியே! அதோ பார்! உடைந்த சங்கினைப் போன்ற பிறைச்சந்திரன் பெண்கள் பலரும் வணங்கும்படி திடீர் என்று வானத்திலே வந்து தோன்றியிருக்கிறது. அது இப்பொழுதுதான் தோன்றிய புதிய சந்திரனாகக் காணப்படுகின்றது. அது மறைய வில்லை. இன்னும் பிறந்து கொண்டேயிருப்பது போலக் காணப்படுகின்றது. அவர் கடந்து சென்ற வழியோ நீரில்லாத வறண்ட பாலைநிலம். அங்கே திரியும் ஆண்யானை, தனது அழகிய பெண் யானையின் துன்பத்தைக் கண்டு பொறுக்காது; நிலைத்து உயரமாக வளர்ந்திருக்கின்ற யாமரத்தைத் தன் தந்தங்களால் அழியும் படி குத்தும். அதன் வெண்மையான நாரைப் பறித்துக் கையினால் அதைச் சுவைத்துப் பார்க்கும். அதிலே நீர் இல்லாமையைக் கண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கும். துன்பந்தாங்காத உள்ளத்துடன் பிளிறும். இத்தகைய வறண்ட வழியிலே, நாம் இங்கிருந்து அழும்படி நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை. ஆதலால், ஐயோ, அவர் நம்மை மறந்து விட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி எண்ணும் போது உள்ளத்திலே துக்கம் தோன்றாமல் இருக்க முடியுமா? பாட்டு வளை உடைத்து அனையது ஆகிப், பலர்தொழச் செவ்வாய் வானத்து ஐ எனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று, பிறையே; அன்னோ! மறந்தனர் கொல்லோதாமே; களிறுதன் உயங்கு நடை மடப்பிடி வருத்தம் நோனாது நிலை உயர் அம் தொலையக்குத்தி வெள்நார்கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும், அத்தம் நீள் இடை அழப் பிரிந்தோரே. பதவுரை:- வளை உடைத்து அனையது ஆகி- சங்கை உடைத்தது போன்ற உருவுடன். பலர் தொழு- பெண்கள் பலரும் வணங்கும்படி. செவ்வாய் வானத்து- செம்மை நிறமுள்ள அந்தி வானத்திலே. ஐ எனத் தோன்றி- திடீரென்று புறப்பட்டு. இன்னம் பிறந்தன்று பிறை ஏ- இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றது. இப் பிறைச் சந்திரன். களிறு - ஆண் யானை. தனது உயங்கு நடை மடப்பிடி- தனது வருந்துகின்ற நடையை உடைய அழகிய பெண் யானையின். வருத்தம் நோனாது- துன்பத்தைக் கண்டு பொறுக்க முடியாமல். நிலை உயர் யாஅம்- நிலைத்து உயர்ந்திருக்கின்ற யாமரம். தொலையக்குத்தி- அழியும் படி தந்தங்களால் குத்தி. வெள்நார் கொண்டு- அதன் வெண்மையான நாரைப் பிய்த் தெடுத்து. கை சுவைத்து- கையால் சுவைத்துப் பார்த்து நீர் இன்மையைக் கண்டு. அண்ணாந்து- வானை நோக்கி. அழுங்கல் நெஞ்சமொடு- துன்புற்ற நெஞ்சத்துடன். முழங்கும்- பிளிறுகின்ற. அத்தம்நீள் இடை வழியாகிய நீண்ட பாலைவனத்திலே. அழப் பிரிந்தோர் ஏ- நாம் இங்கே இருந்து வருந்தி அழும்படி பிரிந்து சென்றவர். அன்னோ- ஐயோ. மறந்தனர் கொல் ஓ தாம் ஏ- மறந்து விட்டாரோ அவர்தாம் நம்மைப் பற்றிய நினைப்பை. கருத்து:- பிரிந்த தலைவர் என்னை மறந்து விட்டார் போல் காணப்படுகின்றது. விளக்கம்:- இது கடம்பனூர் சாண்டிலியன் என்னும் புலவர் செய்யுள். பிரிந்து சென்ற தலைவன் வராமலிருப்பது கண்டு தலைவி வருந்திக் கூறியது. பாலைத்திணை. அன்னோ மறந்தனர் கொல்லோ தாமே என்ற தொடர்களை இறுதியமைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஓ, ஏ. அசைகள். யாஅம்- உயிர் அளபெடை. வளை- சங்கு. உயங்குதல்- சோர்வுறல். நோனாது- பொறுக்காமல். கை- தும்பிக்கை. பிறைச் சந்திரனைப் பெண்கள் வணங்குவார்கள். பிறைச் சந்திரனுக்கு உவமை உடைந்த சங்கு. ஆண் யானை தன் பெண் யானையிடம் காட்டும் அன்பைக் கண்டும் தலைவர் நம்மை மறந்தாரோ என்று தலைவி உரைத்தாள். உனது நன்மைக்கே தலைவன் சென்றான் பாட்டு 308 தலைவன் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து சென்ற போது தலைவி வருந்தி இருந்தாள். அவளைப் பார்த்துத் தோழி ஆறுதல் மொழிகள் கூறினாள். தலைவியே நம் காதலன் நமது நன்மைக்காகவே பொருள் தேடப் போயிருக்கிறான். அவன் செல்வப் பொருளைச் சேர்த்துக் கொண்டு வந்தவுடன் உன்னை மணந்து கொள்வான்; என்றும் பிரியாமல் இணைந்திருந்து இல்லறத்தை இனிது நடத்துவான்; நீயும் துன்பம் நீங்கி இன்பத்துடன் வாழ்வாய். ஆதலால் வருந்தாதே என்று எடுத்துக் கூறினாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே நமது மலை நாட்டுத் தலைவன் உனது நன்மைக்காகவே பொருள் தேடப் போயிருக்கிறான். அவன் உனது அருமையை அறியாதவன் அல்லன். அவனுடைய மலையிலே தெய்வம் பிடித்த யானையின் தலையை வாழைச் சோலையில் உள்ள வாழைக் குருத்துக்கள் வருந்தித் தடவுகின்றன. சுருண்ட வாழைக் குருத்துக்கள் தடவுவதினால் அந்த யானையின் வலிமை குறைகின்றது. மதங்கொண்டு மயங்கிய அந்த யானையின் நிலையைக் கண்டு வருந்திய அதன் பெண்யானை அந்த ஆண் யானையின் முதுகைத் தடவிக் கொண்டிருக்கின்றது. அதனால் அந்த ஆண்யானை தண்ணீர் ஓடி வருகின்ற மலையின் பக்கத்திலே படுத்து அருமையாகத் தூங்குகிறது. இத்தகைய மலையை உடைய அவனது நட்பு நமக்கு நன்மையையே தருவதாகும். அதன் பிரிவு நாம் அவனுடன் சேர்ந்து இன்புறும் செய்கையைக் கொண்டதே யாகும். ஆதலால் அவன் பிரிவால் வருந்த வேண்டாம். பாட்டு சோலை வாழைச் சுரி நுகும்பு, இனைய, அணங்குடை அரும்தலை நீவலின், மதன் அழிந்து, மயங்கு துயர் உற்ற மையல் வேழம், உயங்குயிர் மடப்பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும், மாமலை நாடன், கேண்மை, காகம் தருவதோர் கை தாழ்ந்தன்றே. பதவுரை:- சோலைவாழை- சோலையிலே உள்ள வாழையின். சுரி நுகும்பு- சுருண்டகுருத்து. இனைய- தான் வருந்தும் படி. அணங்கு உடை- தெய்வத்தை உடைய. அரும் தலை நீவலின்- அரிய தலையைத் தடவுதலினால். மதன் அழிந்து- வலிமை குறைந்து. மயங்கு துயர் உற்ற- கலக்கமுள்ள துன்பத்தை யடைந்த. மையல் வேழம்- மயக்கத்தையுடைய ஆண்யானையின் பால் அன்புள்ள. உயங்கு உயிர் மடப்பிடி- வருந்துகின்ற உயிரையுடைய அழகிய பெண்யானை. உலைபுறம் தைவர- வருந்துகின்ற அவ் வாண் யானையின் முதுகைக் கையினால் தடவிக் கொண்டிருக்க. ஆம் இழி சிலம்பின்- நீர் வழிந்தோடி வருகின்ற மலையின் பக்கத்திலே. அரிது கண்படுக்கும்- அருமையாகப் படுத்து உறங்குகின்ற. மாமலை நாடன்- சிறந்த மலைநாட்டையுடைய தலைவனது. கேண்மை- உறவனாது. காமம் தருவது- நமக்கு இன்பத்தைத் தருவதாகிய, ஓர்கை தாழ்ந்தன்று ஏ- ஒரு செய்கையிலேயே அமைந்திருப்பதாகும். கருத்து:- உனக்கு நன்மை செய்யும் பொருட்டுத் தலைவன் பிரிந்து சென்றான். விளக்கம்:- இது, பெருந்தோட் குறுஞ் சாத்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவால் வருந்தியிருந்த தலைவிக்குத் தோழி உரைத்த ஆறுதல் மொழி. குறிஞ்சித்திணை. சுரிநுகுப்பு- சுருண்ட குருத்து. அணங்கு- தெய்வம். அணங்குடை அரும்தலை- தெய்வம் ஏறியது போன்ற மதங் கொண்ட தலை. மதங்கொண்ட யானையைக் குறித்தது. ஆம்- நீர். கை- செயல். மதங்கொண்ட யானையின் தலையிலே வாழைக்குருத்தால் தடவினால் மதம் தணியுமென்று நம்பினர். வாழைத்தண்டால் யானையின் மதத்தை அடக்கலாம் என்று இன்றும் கூறுவர். பெண் யானையின் தடவுதலால் ஆண் யானை வருத்தந் தணிந்து தூங்குகின்றது. அக்காட்சியைக் காணும் தலைவர் உன் தழுவுதலைப் பெற்று இன்பத்துடன் உறங்க வேண்டுமென்று நினைக்காமலிருக்க மாட்டார். ஆதலால் விரைவில் வருவார்: மணப்பார்! என்று மலையில் நிகழும் நிகழ்ச்சியின்மூலம் தலைவியைச் சமாதானப்படுத்தினாள் தோழி. துன்பம் செய்யினும் அன்பைக் கை விடோம் பாட்டு 309 பரத்தையர் வீட்டுக்குப் போய்ப் பல நாள் தங்கிய தலைவன் மீண்டும் திரும்பி வந்தான். தோழியிடம் தன்னைத் தலைவியிடம் சேர்க்கும்படி வேண்டிக் கொண்டான். அப்பொழுது தோழி, நீ எமக்குத் துன்பம் செய்தாலும் சரி, உனக்கு நாங்கள் துன்பம் செய்ய மாட்டோம். நாங்கள் கற்பு நெறியிலே வாழும் கடமை யுள்ளவர்கள். எங்களுக்கு உன்னுடன் இணைந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. என்று உரைத்துத் தலைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினாள். இந் நிகழ்ச்சியைச் சொல்லுவதே இச் செய்யுள். தலைவனே! உனது ஊரிலே உழவுத் தொழில் புரியும் உழவர்கள், தமது தொழிலைச் செய்யும்போது, வயலிலே உள்ள களைகளைப் பிடுங்கிக் கரையிலே போடுகின்றனர். வண்டுகள் தேன் அருந்தும்படி மலர்ந்திருக்கின்ற நெய்தற் பூக்களையும் பறித்து வரப்பிலே போட்டு விடுகின்றனர். அவை வெய்யிலிலே வாடிவதங்கும்படி விடப்படுகின்றன. அவ்வாறு போடப்பட்டாலும் அம்மலர்கள், இந்த உழவர்கள் கொடியவர்கள்; ஆதலால் இனி நாம் இந்த வயலிலே முளைக்கக் கூடாது வேறு நிலத்தில் போய் முளைப்போம் என்று எண்ணுவதில்லை. மீண்டும் அந்த வயலிலே முளைத்துப் பூக்கின்றன. நாங்களும் உன்னுடைய ஊரில் உள்ள நெய்தல் மலர்களைப் போன்றவர்களே. ஆதலால் நீ எமக்கு எவ்வளவு துன்பங்களைச் செய்தாலும் சரி, கை விட மாட்டோம். உன்னை விட்டுப் பிரிந்தால் எமக்கு வாழ்வு இல்லை. நீ எங்களோடு இல்லா விட்டால் எங்களால் உயிர் வாழவும் முடியாது. நீ இல்லாமல் உயிர் வாழக்கூடிய வல்லமையும் எங்களிடம் இல்லை. உன்னோடு உறைவதுதான் நாங்கள் கொண்டிருக்கும் கற்பு நெறி பாட்டு கைவினை மாக்கள், தம் செய்வினை முடிமார், சுரும்புண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, நீடின வரம்பின் வாடிய விடினும், கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது, பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும், நின் ஊர் நெய்தல் அனையேம்! பெரும! நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், நின் இன்று அமைதல் வல்லாம் ஆறே. பதவுரை:- கைவினை மாக்கள்- கையால் ஏர் பிடித்து வாழும் தொழிலைச் செய்யும் உழவர்கள். தம் செய்வினை முடிமார்- தம் தொழிலைச் செய்பவர்களாய். சுரும்பு உண மலர்ந்த- வண்டுகள் தேன் உண்ணும்படி மலர்ந்திருக்கின்ற மலர்களின், வாசம் கீழ்ப் பட- மணம் அழிந்துவிட. நீடின வரம்பின்- நிலைத்திருக்கின்ற வரம்பின் மேல். வாடிய விடினும் - வாடும்படி பிடுங்கிப் போட்டாலும். கொடியர்- இவர்கள் கொடுமையானவர்கள். நிலம் பெயர்ந்து உறைவேம்- வேறு நிலத்திற்குப் போய் வாழ்வோம். என்னாது- என்று எண்ணாமல். பெயர்த்தும்- மீண்டும். கடிந்த செறுவில் பூக்கும்- தம்மைக் களைந்த வயலிலே முளைத்துப் பூக்கின்ற. நின்னூர் நெய்தல் அனையேம்- உன்னுடைய ஊரில் உள்ள நெய்தல் மலர்களைப் போன்றவர்கள் நாங்கள். பெரும - தலைவனே. நீ எனக்கு இன்னாதன பல செய்யினும்- ஆதலால் நீ எங்களுக்குத் துன்பங்கள் பலவற்றைச் செய்தாயானாலும். நின் இன்று அமைதல் - நீ இல்லாமல் உயிர் வாழ்வதற்கு. வல்லாம்- நாங்கள் வல்லவர் அல்லோம். ஆறு ஏ- உன்னுடன் பொருந்தி வாழ்வதே நாங்கள் பின்பற்றக் கூடிய வழி. கருத்து:- நீயில்லாமல் நாங்கள் வாழ முடியாது; ஆதலால் நீ துன்பங்கள் செய்தாலும் உன்னை ஏற்றுக் கொள்கிறோம். விளக்கம்:- இது உறையூர்ச் சல்லியன் குமாரன் என்னும் புலவர் பாட்டு. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவனிடம் தோழி கூறியது. மருதத்திணை. கை விடப்பட்ட மகளிர் மீண்டும் கணவனையே சேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதற்கு வரப்பின் மேல்களைந்தெறியப்பட்ட நெய்தல் மலர் உவமை. கணவன் செய்த துன்பங்களை மறந்து அவனுடன் இணைந்து வாழ்வதே கற்புடை மங்கையர் தன்மை என்பதையும் இச் செய்யுள் குறித்தது. கைவினை- உழவுத்தொழில். முடிமார்- முடிப்பாராகி. வரம்பு- வரப்பு. சென்று- வயல். ஊ. ஏ.அசைகள். என் துயரை எடுத்துரைப்பார் யார்? பாட்டு 310 தலைவியை மணந்து கொள்ளுவதற்காகப் பொருள் தேடப் போயிருந்தான் தலைவன். அப்பொழுது தலைவி வருந்துவதைக் கண்டு, தோழி அவளுக்குத் துக்கத்தைப் பொறுத்துக் கொண்டி ருக்கும்படி ஆறுதல் உரைத்தாள்; தலைவிக்குக் கோபம் வந்து விட்டது, சும்மா பொறுத்துக் கொள் பொறுத்துக்கொள், என்று சொல்லுவதனால் என்ன பயன்? என் துக்கத்தைத் தலைவர் எப்படி அறிவார்? நான் படும் துயரை அவர் அறிந்தாலாவது விரைவில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்ந்திருப்பேன். mtÇl« br‹W v‹ ï‹diy vL¤Jiu¥gh® vtiuí« fhnz‹; eh‹ v¥go cÆ® thœnt‹? என்றாள் தலைவி. இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே! பறவைகளும் ஓசையிட்டுக் கொண்டிருக் கின்றன; மலர்கள் எல்லாம் குவிந்துவிட்டன; விரிந்திருந்த மலர்கள் மூடிக்கொண்டன. கடற்கரைச் சோலையிலும் யாரும் உலவவில்லை. அதுவும் மிகவும் தனித்திருக்கும் தன்மையை அடைந்து விட்டது. வானமும் நம்மைப் போலவே மயக்கம் உற்றது என்று சொல்லும் படி காட்சியளிக்கின்றது; பகற் காலம் கழிந்தது. புல்லென்று ஒரு நிகழ்ச்சியும் இல்லாமல் சும்மா காணப்படுகின்றது. இந்த நிலையுள்ள மாலைக்காலத்திலே நான் படும் பாட்டை யார் அறிய முடியும்? எங்கோ சென்றிருக்கும் என் காதலர் எப்படிக் காண்பார்? உணர்வார்? குளிர்ச்சியுடன் மணம் வீசுகின்ற ஞாழல் பூக்கள் நிறைந்த, குளிர்ந்த கடல் துறையை யுடைய தலைவனுக்கு என்னுடைய இந்த நிலையை எடுத்துரைப் பாரைக் காணேன். அவரிடம் போய் என் நிலைமையை எடுத்துச் சொல்வாரைப் பெற்றேனாயின் இன்னும் நான் உயிர் வாழ்வேன். இன்றேல் உயிர் வாழமுடியாது. பாட்டு புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி, எல்லை கழியப் புல் என்று அன்றே; இன்னும் உளனே! தோழி! இந்நிலை தண்ணிய கமழும் ஞாழல் தண் அம் துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறினே, பதவுரை:- புள்ளும் புலம்பின- பறவைகளும் ஓசையிடு கின்றன. பூவும் கூம்பின- மலர்களும் குவிந்துவிட்டன. கானலும்- கடற்கரைச் சோலையும். புலம்புநனி உடைத்தே- தனித்திருக்கும் நிலையை மிகவும் அடைந்தது. வானமும்- வானமும். நம்மே போலும் மம்மர்த்து ஆகி- நம்மைப் போன்றே மயக்க முடையதாகி. எல்லை கழிய- பகற் பொழுது நீங்கியதனால், புல் என்று அன்றே- கம்மென்று அடங்கியிருக்கின்றது. இந்நிலை- இந்த நிலையைக் கண்டு வருந்தும் என்னைப் பற்றி. தண்ணிய கமழும்- குளிர்ந்த மணம் வீசும். ஞாழல் - புலிநகக் கொன்றையின் பூக்கள் சிந்திக் கிடக்கின்றது. தண் அம் துறைவர்க்கு- குளிர்ந்த கடல் துறைவரிடம் சென்று. உரைக்குநர் பெறின் ஏ- சொல்லி எனக்கு உதவி செய்பவரைத் துணையாகப் பெறுவேனாயின். இன்னும் உளனே தோழி- இன்னும் நான் உயிர் வாழ்ந்திருப்பேன் தோழியே. கருத்து:- என் துன்பத்தைப் பற்றித் தலைவனிடம் சென்று உரைப்பார் யாரேனும் கிடைத்தால் தான் நான் உயிர் வாழ்வேன். விளக்கம்:- இது பெருங்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. தனக்கு ஆறுதல் கூறிய தோழியைப் பார்த்துத் தலைவி சினந்து சொல்லியது. நெய்தல்திணை. இன்னும் உளனே தோழி என்ற தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. எல்லை- பகல்; சூரியன் என்றும் உரைக்கலாம். ஞாழல் புலிநகக் கொன்றை. மம்மர்- மயக்கம். ஏ- அசை. பறவைகள் ஒலித்துக் கொண்டு தமது உறைவிடத்தை யடைவதும், தாமரை போன்ற மலர்கள் குவிவதும் மாலைக்காட்சி. அவன் வந்து போவதை ஆயத்தார் அறிந்து விட்டனர் பாட்டு 311 தலைவியைச் சந்திப்பதற்காக, இரவிலே தலைவன் வந்தான். அவன் வழக்கம் போல் அவளைச் சந்திக்கும் இடத்திலே- மறைவாக வந்து நின்றான். அதை அறிந்தாள் தலைவி. தோழியிடம் ஊரார் உரைக்கும் பழியைப் பற்றி உரைத்தாள்.தலைவன் நள்ளிரலே, தேர் மீது ஏறிக் கொண்டு இங்கு வந்து போவதை என்னுடன் விளையாடும் பெண்கள் அறிந்துவிட்டனர்; அவர்கள் வாயிலாக இச் செய்தி ஊரார்க்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் இப்பொழுது எனக்கும் தலைவனுக்கும் உள்ள கள்ளக் காதலைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டனர். ஆதலால் இனி அவன் நம்மை மணம் புரிந்து கொண்டால்தான் பழிப்பின்றி வாழலாம். என்றாள். தலைவியின் இச்செய்தியைப் பற்றிக் கூறுவதே இப்பாடல். பெரிய கடலின் புலால் நாற்றம் வீசுகின்ற துறையின் அருகாகவே தலைவன் தேர் வந்தது. கல்லென்ற ஓசையுடன் விரைந்து வந்த அத்தேர், தேரோட்டும் பாகனாலும் தடுக்க முடியாமல் விரைவிலே திரும்பிப் போய்விட்டது. இந்தத் தேரை நள்ளிரவிலே நான் பார்த்தேனா? இல்லையா? அதைப் பற்றிக் கவலையில்லை, உயர்ந்த வெண்மையான மணற் குன்றிலே பரவி வளர்ந்திருக்கின்ற புன்னை மரத்திலேயுள்ள, மகரந்தம் பொருந்திய- பிரகாசம் உள்ள மலர்களைக் கொய்யும் கூட்டமான பெண்கள் அனைவரும் அந்தத் தேரின் போக்குவரவைக் கண்டனர். ஆதலால் ஊர் எங்கும் நம் கள்ளக்காதல் நிகழ்ச்சி வெளிப்பட்டுப் பரவிவிட்டது. ஊரார் நம்மைப் பற்றிப் பலவாறு ஏதேதோ பேசுகின்றனர். இத்தகைய பழிப்புப் பேச்சு எப்படி ஒழியும்? பாட்டு அலர் யாங்கு ஒழிவ? தோழி! பெரும்கடல் புலவு நாறு அகன்துறை, வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த, கல் என் கடுந்தேர், யான்கண்டனனோ இலனோ? பானாள் ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த, புன்னைத் தாது சேர் நிகர் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன் றே. பதவுரை:- பெரும்கடல் - பெரிய கடற்கரையிலே. புலவு, நாறு அகன்துறை- புலால் நாற்றம் வீசும் அகன்ற துறையின் வழியே. வலவன் தாங்கவும்- தேர்ப்பாகன் நிறுத்தவும். நில்லாது கழிந்த- நிற்காமல் சென்று மறைந்த. கல் என் கடும் தேர்- கல்லென்ற ஓசை யுடன் விரைந்து வந்த தலைவனுடைய தேரை. யான்கண்டனனோ இலனோ- நான் பார்த்தேனோ இல்லையோ. பால்நாள்- நள்ளிரவே வந்து சென்ற தலைவன் தேரை. ஓங்கல் வெண்மணல்- உயர்ந்த வெண்மையான மணல் மேட்டிலே, தாழ்ந்த புன்னை- பரவலாகத் தழைத்திருக்கின்ற புன்னை மரத்தின். தாதுசேர்- மகரந்தங்களை யுடைய. நிகர் மலர் கொய்யும்- ஒளி பொருந்திய மலர்களைக் கொய்கின்ற. ஆயம் எல்லாம்- மகளிர் கூட்டத்தினர் அனைவரும். உடன் கண்டன்றே- ஒன்றாகக் கண்டார்கள். அலர் யாங்கு ஒழிவ தோழி- ஆதலால் நம்மைப் பற்றி எழுந்த பழிச் சொற்கள் எப்படி ஒழியும்? தோழியே! நீயே சொல். கருத்து:- இரவிலே தலைவன் வந்து போவதை எல்லோரும் அறிந்துவிட்டனர். விளக்கம்:- இது சேந்தன் கீரன் என்னும் புலவர் பாட்டு. இரவு நேரத்திலே தலைவியைக் காணத் தலைவன் மறைவிடத்திலே வந்து நின்றான்; அப்பொழுது தலைவி தன் தோழியிடம் உரைத்தது. தலைவன் தன்னை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை இவ்வாறு உரைத்தாள். தலைவி கூற்று. நெய்தல் திணை. அலர் யாங்கு ஒழிவ தோழி என்னும் முதல் வரியை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. வலவன்- தேர்ப்பாகன்; தேர் ஓட்டுவான். கல் என் கடும் தேர்- ஓசையும் விரைவும் உள்ள தேர்; நள்ளிரவில் இத்தேர் வந்து திரும்புவதானாலும் அதன் ஓசையால் பலர் அதைத் தலைவனுடைய தேர் என்று அறிந்து கொண்டனர். ஓங்கல்- உயர்வு. நிகர்- ஒளி, ஆயம்- மகளிர் கூட்டம். கள்ளத் தனத்திலே தேர்ந்த காதலி பாட்டு 312 கள்ளக்காதல் வாழ்வு நடத்திவரும் பெண் ஒருத்தி. அவள் தன் நடத்தையை யாரும் அறியாதபடி மிகவும் திறமையுடன் நடந்து கொள்ளுகின்றாள். இரவிலே தலைவனைச் சந்திக்கும் போது அவன் உள்ளங்களிக்கும்படி ஒழுகுவாள். பகலிலே தன் உறவினர் தன் மீது சிறிதும் ஐயுறாதபடி மிகவும் சாதுவான- கள்ளங் கபடறியாத பெண் போல நடந்து கொள்ளுவாள். ஒரு நாள் பகல் காலத்தில் அவள் காதலன் அவள் வீட்டுக்கே விருந்தினனாக வந்தான். அப்பொழுது கூட அவள் அவனுக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று ஒருவர் உள்ளத்திலும் ஐயம் பிறக்காத படி நடந்து கொண்டாள். இவ்வாறு தலைவி நடந்து கொள்வதைக் கண்டு தலைவனுக்கு வியப்புத் தோன்றியது. பகலிலே ஒரு விதமாகவும் இரவிலே ஒரு விதமாகவும் நடந்து கொள்ளும் அவளுடைய இருவித ஒழுக்கத்தை அவன் பாராட்டினான். அவளுடைய திறமையான நடத்தையைக் கண்டு, அன்பின் மிகுதியினால், அவளை, இரண்டு வித நடத்தையை அறிந்த கள்வி என்று சொல்லிப் புகழ்ந்தான். இச்செய்தியைக் கூறுவதே இப்பாடல். நம்முடைய காதலி, இரண்டு விதமாக நடக்கும் முறையை அறிந்த கள்ளத்தனம் உள்ளவள், எப்பகையையும் எற்றுக் கொள்ள அஞ்சாத- மிகுந்த வலிமை பொருந்திய- செம்மை நிறம் பொருந்திய வேலாயுதத்தைக் கொண்ட- மலையமான் திருமுடிக் காரியின் முள்ளூர்க் காட்டைப் போல நறுமணத்துடன் நள்ளிரவிலே நாம் குறித்த இடத்திற்கு இவள் வருவாள்; நம்மைக்கண்டு, நம்மைப் போலவே நம்முடன் கூடியிருப்பாள்; சிறிதும் வேற்றுமையின்றி நம்முடன் ஒன்றுபட்டுக் கலந்திருப்பாள். இரவிலே அவளுடைய நடத்தை இதுவாகும். விடிந்தபின் அவளுடைய நடத்தையை மற்றவர் அறியாதபடி மாற்றிக் கொள்ளுவாள். இரவிலே நாம் அவளுடைய கூந்தலிலே சூட்டிய பல மலர்களையும், அவை இருந்த அடையாளமே தெரியாமல் களைந்து விடுவாள். மயிர்ச்சாந்து அணிந்த நல்ல கூந்தலிலே எண்ணெய் தடவிச் சீவிக்கொள்ளுவாள். அமைதி நிறைந்த முகத்தையுடையவள் போலவே அவர்களுடன் ஒன்றுபட்டு உறைவாள். பாட்டு இரண்டறி கள்வி நம் காதலோளே; முரண் கொள் துப்பின், செவ்வேல் மலையன், முள்ளூர்க் கானம் நாற வந்து, நள் என் கங்குல் நம்மோர் அன்னள்; கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச் சாந்து உளர் நறும்கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தள் ஆகித் தமர் ஒர் அன்னள் வைகறை யானே பதவுரை:- இரண்டு அறிகள்வி- இருவித நடத்தைகளை அறிந்த கள்ளத்தனம் உள்ளவள். நம் காதலோள் ஏ, - நம்முடைய காதலியாவாள் முரண்கொள் துப்பின்- எப்பகையையும் ஏற்றுக் கொள்ளும் வலிமையமைந்த. செவ்வேல் மலையன்- சிவந்த வோலாயுதத்தையுடைய மலையமான் திருமுடிக்காரி என்பவனுடைய. முள்ளூர்க்கானம்- முள்ளூர்க்காட்டைப் போல. நாற வந்து- மணம் கமழும்படி வந்து. நள் என் கங்குல்- நள் என்னும் இரவிலே. நம் ஓர் அன்னள்- நம்மைப் போன்றே நம்முடன் தங்கிச் செல்வாள். கூந்தல் வேய்ந்த- இரவிலே அவள் கூந்தலிலே நாம் புனைந்த. விரவு மலர் உதிர்த்து- பலவகை மலர்களையும் காலையில் ஒருவரும் காணாதபடி உதிர்த்து விட்டு, சாந்து ஊர் நறும் கதுப்பு- சாந்து அணிந்த கோதிய நல்ல கூந்தலிலே. எண்ணெய் நீவி- எண்ணெய் தடவிச் சீவிப் பின்னிக் கொண்டு, அமரா முகத்தள் ஆகி- அமைதி அடைந்த முகத்தை யுடையவளாகி. தமர் ஓர் அன்னள்- உறவினரை ஒத்து வேற்றுமை யின்றியிருப்பாள். வைகறையான் ஏ- விடியற் காலத்திலே இவ்வாறு இரவிலிருந்த நிலைக்கு மாறுபட்டிருப்பாள். கருத்து:- தலைவி, அவளுக்கும், நமக்கும் உள்ள காதலைப் பிறர் அறியாதபடி மறைத்து ஒழுகுவதிலே வல்லவள். விளக்கம்:- இது கபிலர் இயற்றிய கவிதை. இரவிலே தலைவியைக்கண்டு, கலந்து மகிழ்ந்து திரும்பிய தலைவன் தலைவியின் திறமையை வியந்தான்; அதைத் தன் நெஞ்சம் அறியச் சொல்லிக் கொண்டான். தலைவன் கூற்று, குறிஞ்சித்திணை. முரண்கொள்- பகையை ஏற்றுக் கொள்ளுகின்ற. துப்பு- வலிமை. முள்ளுர்க்காடு என்பது மலையமான் திருமுடிக்காரிக்குச் சொந்தமானது. வளம் நிறைந்த காடு. அமரா- அமர்த்த. வைகறை- விடியற்காலம். மலையமான் திருமுடிக்காரி கடையெழு வள்ளல்களிலே ஒருவன்: கோவலூரை ஆண்டவன். சேர, சோழ பாண்டியர்களில் இவன் யார் பக்கத்தில் இருக்கின்றானோ அவர்களுக்கே போரில் வெற்றி கிடைக்கும். ஆதலால் இவன் முரண்கொள் துப்பின் மலையன் என்று பாராட்டப்பட்டான். தலைவியிடமிருந்து வீசும் நறுமணத்திற்கு முள்ளூர்க் கானத்தில் கமழும் நறுமணம் உவமை; பெண்கள் தங்கள் நடத்தையையும், எண்ணத்தையும் பிறர் அறியாதபடி மறைத்துக் கொண்டு ஒழுகுந்திறம் உள்ளவர்கள் என்ற கருத்து இச்செய்யுளில் பொதிந்து கிடக்கின்றது. எங்கள் உறவு என்றும் பிரிக்கமுடியாதது பாட்டு 313 தலைவன் தலைவியை மணந்து கொள்ளாமல் காலங் கடத்திக் கொண்டே வருகிறான். இரவிலே வந்து தலைவியைக் கண்டு களித்துச் செல்லுகின்றான். தலைவனுக்கும் தலைவிக்கும் விரைவில் கற்புமணம் நடைபெற வேண்டுமென்பது தோழியின் ஆவல். ஆதலால் அவள் ஒரு நாள் தலைவன் இரவிலே மறை விடத்திலே வந்து நின்ற போது அவன் செயலைப் பழித்துக் கூறினாள். தலைவன் நல்லவன் அல்லன் என்று அவன் குணத்தை இகழ்ந்து பேசினாள். இதைக் கேட்ட தலைவி தோழியின் பேச்சை மறுத்துப் பேசினாள். தலைவனுடைய நட்பு என்றும் அழியாதது, அவர் நமது நிலையை அறியாதவர் அல்லர்; விரைவில் நம்மை மணந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வார் என்பதில் ஐயமில்லை. வீணாக அவரைப் பழித்துப் பேசாதே என்று உரைத்தாள். இதை மறைவிலே நின்ற தலைவன் கேட்டு மகிழ்ந்தான். இந்த நிகழ்ச்சியைச் சொல்லுவதே இப்பாடலாகும். பெரிய கடற்கரையிலே சிறிய வெண்மை நிறமுள்ள காக்கை வாழும். அந்தக் காகம் வெள்ளம் பெருகிய நீர் நிறைந்த பெரிய கழிகளிலே தமக்கு வேண்டிய உணவைத்தேடி உண்ணும். உண்ட களைப்புத் தீர பூமணம் கமழும் சோலையிலே இன்பத்தோடு தங்கியிருக்கும். இத்தகைய கடல் துறையையுடைய தலைவனுடன் நாம் தொடர்பு கொண்டோம். உறுதியாகப் பிணைத்துக் கொண்டோம். அந்த நட்பு உறுதியாகக் கட்டப்பட்டது ஆகும். இனி யாராலும், அவிழ்த்துவிட முடியாதபடி அவ்வளவு உறுதியான முடிச்சுடன் அமைந்தது அந்தப் பிணைப்பு. பாட்டு பெரும்கடல் கரையது சிறு வெண்காக்கை நீத்து, நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு, பூக்கமழ் பொதும்பில் சேக்கும்; துறைவனொடு, யாத்தேம்; யாத்தன்று நட்பே; அவிழ்த்தற்கு அரிது, அது முடிந்து அமைந்து அன்றே. பதவுரை:- பெரும் கடல் கரையது- பெரிய கடற்கரையில் உள்ளதாகிய. சிறு வெண் காக்கை- சிறிய வெண்மையான காக்கையானது. நீத்து-வெள்ளத்தையுடைய. நீர் இரும் கழி- நீர் நிறைந்த பெரிய கழியிலே. இரைதேர்ந்து உண்டு- இரையைத் தேடி உண்டு. பூ கமழ் பொதும்பில்- மலர் மணம் கமழ்கின்ற சோலையிலே. சேக்கம்- தங்கியிருக்கின்ற. துறைவனொடு - கடல் துறையை உடைய தலைவனோடு. யாத்தேம்- நாம் பிணைத்துக் கொண்டோம். யாத்தன்று நட்பு - உறுதியாகக் கட்டப்பட்டது அந்த நட்பு. அவிழ்த்தற்கு அரிது- யாராலும் அவிழ்த்து விட முடியாதபடி. அது முடிந்து அமைந்தன்று- அந்த நட்பு உறுதியாக முடிக்கப்பட்டு அமைந்திருக்கின்றது. கருத்து:- தலைமகனுடன் நாம் கொண்டிருக்கும் நட்பு என்றும் பிரிக்க முடியாதது. விளக்கம்:- இப்பாடலின் ஆசிரியர் பெயர் காணப் படவில்லை. தலைவனைத் தோழி பழித்துக் கூறினாள். அவளுக்குத் தலைவி விடையிறுத்தாள். தலைவி கூறிய விடையைத் தலைவன், இரவிலே மறைவிலே நின்று கேட்டுக் கொண்டிருந்தான். தலைவி கூற்று. நெய்தல்திணை. நீத்து- வெள்ளத்தையுடையது. பொதும்பு- சோலை. சேக்கும்- தங்கும். யாத்தல் - கட்டுதல். முடிந்து அமைந்தன்று- முடிச்சுப் போடப்பட்டது. ஏ- அசைகள். காக்கை, இரையைக் கவர்ந்து உண்டு சோலையில் தூங்குவதைப் போல, அவனும் தலைவியைக் கைக்கொண்டு சென்று இன்பத்துடன் தன் இல்லிலே உறைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியது இச்செய்யுள். என்னைத் தழுவ இன்னும் வந்திலர் பாட்டு 314 தலைவன் பொருள் தேடப் போனபோது கார் காலத்திலே வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்றான். அவன் குறித்த கார் காலம் வந்துவிட்டது. அவன் வரவில்லை. ஆதலால் தலைவியின் உள்ளத்திலே கவலை பிறந்தது. கவலையால் அவள் உடலிலும் வேறுபாடு காணப்பட்டது. அதைக் கண்டதோழி தலைவன் வரும் வரையிலும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிரு என்று ஆறுதல் உரைத்தாள், அவளுக்குத் தோழியே! இதோபார்! இந்தக் கார்கால நிகழ்ச்சிகள் என்னைப் பயமுறுத்துகின்றன. என் நெஞ்சத்தைக் கலங்கச் செய்கின்றன. நான் எப்படித் துக்கத்தைத் தாங்கி யிருப்பேன் என்றாள் தலைவி, இந்த நிகழ்ச்சியை உரைக்கின்றது இச்செய்யுள். தோழியே! அவர் கார்காலத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றார். துன்பங்கள் நிறைந்த இடத்தையுடைய பாலை நில வழியைக் கடந்து போனார். அவரைப் பற்றிய செய்தி ஒன்றுமே தெரியவில்லை. மிக உயரத்திலே வானத்திலே நீர் நிறைந்த கருக்கொண்ட மேகங்கள் குழுமின; குளிர்ந்த குரலை எழுப்பின. ஒளி பொருந்திய மின்னல்களை வீசி இமைக்கின்றன. மழை பெய்கின்றது. வெளிச்சம் இல்லாமல் இருண்டு விட்டது. இந்த மாலைக் காலத்திலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மின்னல் பொருந்திய என் இளைய மார்புகளைத் தழுவிக்கொள்ள அவர் வரவில்லை. இந்நிலை கண்டும் எனக்கு ஆறுதல் மொழிகள் கூறும் தோழியே நீ வாழ்க. பாட்டு சேய் உயர் விசும்பின், நீர் உறு கமம்சூல், தண் குரல் எழிலி, ஒண்சுடர் இமைப்பப், பெயல் தாழ்பு இருளிய புலம்புகொள் மாலையும் வாரார்; வாழிதோழி; வரூஉம் மின் உறழ் இளமுலைஞெமுங்க இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே. பதவுரை:- இன்னாவைப்பின்- துன்பங்கள் நிறைந்த இடமான. சுரன் இறந்தோர் ஏ- பாலைவன நெறியைக் கடந்து சென்ற நமது தலைவர். சேய் உயர் விசும்பின்- மிக உயர்ந்த வானத்திலே. நீர் உறு கமம்சூல் - நீர் நிறைந்த கருப்பத்தையுடைய. தண்குரல் எழிலி- குளிர்ந்த ஒலியையுடைய மேகம். ஒண் சுடர் இமைப்ப -ஒளி பொருந்திய மின்னலை மின்னிக்கொண்டு. பெயல் தாழ்பு- மழையைப் பெய்து. இருளிய- இருண்டுபோன. புலம்பு கொண் மாலையும்- துன்பத்தைத் தரும் இந்த மாலைக் காலத்திலும். வரூஉம் - வளர்ந்து கொண்டிருக்கின்ற. மின் உறழ்- பளபளப்பு அமைந்த. இளமுலை ஞெமுங்க- எனது இளம் முலைகள் அழுந்தும்படி தழுவிக் கொள்வதற்கு. வாரார்- அவர் வரவில்லை. வாழி தோழி- எனக்கு ஆறுதல் உரைக்கும் தோழியே நீ வாழ்க. கருத்து:- அவர் வருவதாகக் கெடு வைத்த கார் காலம் வந்துங் கூட அவர் வரவில்லை. விளக்கம்:- இது பேரிசாத்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் வருவதாகச் சொல்லிய கார் காலம் வந்தும் தலைவன் வரவில்லை. அதுகண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது. தலைவி கூற்று. முல்லைத்திணை. இன்னா வைப்பின் சுரம் இறந்தோர் ஏ, சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம்சூல், தண்குரல் எழிலி, ஒண்சுடர் இமைப்ப. பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும், வரூஉம் மின் உறழ் இளமுலை ஞெமுங்க வாரார்; வாழி தோழி என்று பதங்கள் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. வரூஉம் - உயிர் அளபெடை. ஏ- அசை. சேய்- தூரம். சேய் உயர்- மிக உயர்ந்த. கமம்- கருப்பம். சூல்- கருப்பம். கமம்சூல்- முதிர்ந்த கருப்பத்தையுடைய. எழிலி- மேகம். சுடர்- மின்னல். தலைவன் எண்ணப்படி நடப்பேன் பாட்டு 315 தலைவன் குறிப்பறிந்து வாழ்தலே தலைவியின் கடமை. காதலன் விரும்புவதைப் புரிவதே காதலியின் கடமை. தலைவன் கருத்துக்கு மாறாக நடக்க விரும்பாமையே கற்புள்ள மங்கையின் மாண்பு. இவ்வுண்மையைக் கூறுகின்றது இச்செய்யுள். தலைவன், தன் காதலியைக் கற்பு முறைப்படி மணம் புரிந்து கொள்ள முடிவு செய்தான். அதன் பொருட்டுப் பொருள் தேடச் சென்று வர எண்ணினான். இதனைத் தோழி அறிந்தாள். தலைவன் பொருள் தேடப் பிரிந்துபோனான், அவன் திரும்பும் வரையிலும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருப்பாயா? m¤jifa M‰wš cd¡F c©nlh? என்று கேட்டாள். அதற்குத் தலைவி தோழியே! உன் கேள்வி எனக்கு வியப்பைத் தருகின்றது. எனக்கென்ற தனிக் கருத்து எதுவும் இல்லை. தலைவன் உள்ளம் எப்படியோ அப்படித் தான் என் உள்ளமும். அவன் கதிரவன்; நான் நெருஞ்சிப்பூ. ஆதலால் அவன் நினைப்பின்படியே நான் நடந்து கொள்ளுவேன் என்றாள். இச்செய்தியை உரைப்பது தான் இப்பாடல். நான்கே வரிகளைக் கொண்ட இப்பாடல் மிகவும் பொருட் செறிவுள்ள இனிய பாடல். தோழியே, தலைவன் உயர்ந்த மலைநாட்டையுடையவன் அவனுடைய மலையிலே கடலிலே உதித்துக் கிளம்புகின்ற சந்திரனைப் போல வெண்மையான அருவி நீர் ஓடிக்கொண்டே யிருக்கும் அவன் கதிரவனைப் போன்றவன். அவனுக்காகவே அமைந்திருக்கின்ற என்னுடைய தோள்கள் நெருஞ்சிப் பூவைப் போன்றவை. நெருஞ்சி மலர் சூரியனையே பார்த்துக் கொண்டு மலர்ந்து நிற்கும்; சூரியன் கிழக்கேயிருந்தால் அவையும் கிழக்கு நோக்கி இருக்கும்; உச்சியிலே நின்றால் நிமிர்ந்து உச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும், மேற்கே சென்றால், மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும். இதைப் போலவே என் தோள்களும் அவனையே எதிர்நோக்கியிருக்கும். ஆதலால் நான் வருந்த மாட்டேன். பாட்டு எழுதரு மதியம் கடல் கண்டா அங்கு, ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன், ஞாயிறு அனையன்; தோழி! நெருஞ்சி அனைய; என் பெரும் பணைத்தோளே. பதவுரை:- தோழி! எழுதரு மதியம்- கிளம்புகின்ற சந்திரனை. கடல் கண்ட ஆங்கு- கடலிலே பார்ப்பதுபோல. ஒழுகு வெள் அருவி- ஒழுகிக் கொண்டிருக்கின்ற வெண்மையான அருவியை யுடைய. ஓங்கு மலைநாடன்- உயர்ந்த மலை நாட்டையுடைய தலைவன். ஞாயிறு அனையன்- எனக்குக் கதிரவனைப் போன்றவன். என் பெரும்பணைத்தோள் ஏ- என்னுடைய பெரிய மூங்கில் போன்ற தோள்கள். நெருஞ்சி அனைய- நெருஞ்சி மலர்களைப் போன்றவை. கருத்து:- தலைவன் எண்ணமே என் எண்ணம்; ஆதலால் நான் அவன் பிரிவினால் வரும் தனிமையைத் தாங்கி நிற்பேன். விளக்கம்:- இது மதுரை வேளாதத்தன் என்னும் புலவர் பாட்டு தலைவன், மணம் புரிந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடப் பிரியும் போது நீ துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்க முடியுமா? என்று கேட்டாள் தோழி. அவளுக்குத் தலைவி உரைத்த மறுமொழி இச் செய்யுள். குறிஞ்சித்திணை. தோழி, எழுதரு மதியம் கடல்கண்ட ஆங்கு, ஒழுகு வெள் அருவி, ஓங்கு மலைநாடன், ஞாயிறு அனையன், என் பெரும் பணைத்தோள் ஏ, நெருஞ்சி அனைய என்று பதங்கள் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. அருவிக்குச் சந்திரன் உவமை. மலைக்குக் கடல் உவமை. தலைவனுக்கு ஞாயிறு உவமை தலைவியின் உள்ளத்திற்கு நெருஞ்சிமலர் உவமை இச்சிறிய செய்யுளிலே நான்கு உவமைகள் அமைந்திருக்கின்றன. தலைவி தன் உள்ளத்தைக் குறிக்கவே தன் தோள்களைக் குறித்துக் கூறினாள். எழுதரு- எழுகின்ற; உதிக்கின்ற. கண்டா அங்கு- உயிர் அளபெடை. ஏ- அசை. நெருஞ்சி மலரின் இயல்பு இச்செய்யுளில் காணக்கிடக்கின்றது. அன்னை அறியின் ஆருயிர் தரியேன் பாட்டு 316 தலைவன் பொருள் தேடப் பிரிந்து போயிருக்கின்றான். களவு மணத்திலே வாழும் தன் காதலியைக் கற்பு மணம் புரிந்து கொள்ளும் பொருட்டே பொருள் தேடப் போயிருக்கிறான். ஆனால் அவன் குறித்தகாலத்தில் திரும்பி வரவில்லை. அதனால் தலைவியின் நெஞ்சிலே கவலை வளர்ந்தது; அவளுடைய மனக் கவலை உடம்பிலும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டது. அதைக் கண்டு, தோழி வருந்தினாள். அப்பொழுது தலைவி தலைவன் என்னை வரைந்து கொள்ள இன்னும் வரவில்லை. அதற்காகக் கூட நான் வருந்தவில்லை. என் துன்பத்தை அன்னை அறிந்து கொள்வாளோ என்றுதான் அஞ்சுகிறேன். அன்னை அறிந்து விட்டால் நான் உயிர் துறப்பேன். அன்னை எங்கே என் துயரத்தைத் தெரிந்து கொண்டு விடுவாளோ என்று நினைத்து அஞ்சுவதால் தான் என்னிடம் மாறுதல் காணப்படுகின்றது என்றாள் தலைவி. இந்நிகழ்ச்சியைச் சொல்லுவதே இப்பாடல். கடல் அலைகள் வந்து மோதுகின்ற மணல் அடைந்து கிடக்கும் கடற்கரையிலே, விளையாட்டுப் பெண்கள் கூடி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அங்கே காணப்படும் நண்டுகளை ஒரே மாதிரியாக ஆட்டி வைக்கின்றனர். அந்நண்டுகள் அவர்களுக்கு அஞ்சி விரைவாக அங்கு மிங்கும் ஓடுகின்றன. அப்பொழுது உயர்ந்து வந்து பரந்த ஒரு அலை அந்த நண்டு களைக் கடலில் அடித்துக்கொண்டு போயிற்று; அந்நண்டுகளின் துனபத்தை நீக்கிற்று. இத்தகைய கடல் துறையின் தலைவன், அன்று நமக்குக் கூறிய உறுதிமொழி; இன்று பொய் மொழியாக முடிந்தது; அதனால்நான் அணிந்திருக்கும் அழகிய வளைகள் கழல்கின்றன. என் உடம்பிலே சோர்வு வந்து குடி கொள்ளு கின்றது. இவ்வாறு துன்பத்திலே மிகுந்து நிற்கும் என்னுடைய வருத்தத்தை, என் அன்னை அறிந்துவிட்டால் என் செய்வேன்! நான் உயிருடன் இருப்பேனா? என்பதை நினைத்துத் தான் வருந்துகின்றேன். என் துன்பத்தை அன்னை அறியாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் எனது பெரிய கவலை. பாட்டு ஆய்வளை ஞெகிழவும், அயர்வு பெய் நிறுப்பவும், நோய் மலி வருத்தம் அன்னை அறியின், உளெனோ? வாழி! தோழி! விளியாது உரவுக் கடல், பொருத விரவு மணல் அடைகரை, ஓரை மகளிர் ஓர் ஆங்கு ஆட்ட, வாய்ந்த அலவன் துன்புறு துனைபரி, ஓங்கு வரல் விரிதிரை களையும்; துறைவன், சொல்லோ பிற ஆயினவே. பதவுரை:- வாழி தோழி- விளியாது - ஓய்வில்லாமல். உரவுக் கடல்பொருத - வலிமையுள்ள கடல் அலைகள் வந்து மோதுகின்ற. விரவு மணல் அடைகரை- கலந்த மணல் அடைந்து கிடக்கின்ற கரையிலே. ஓரைமகளிர்- விளையாடும் பெண்கள். ஓர் ஆங்கு ஆட்ட- ஒரே விதமாகத் துன்புறுத்தி. வாய்ந்த அலவ- அவர்களிடம் அகப்பட்ட நண்டு. துன்புறு துனைபுரி- துன்பத்தையடைந்து விரைந்து ஓடுகின்ற துயரத்தை. ஓங்கு விரல்- உயர்ந்து வருகின்ற. விரிதிரைகளையும்- பரந்த அலையானது நீக்கி இன்புறுத்துகின்ற. துறைவன்- கடல் துறையையுடைய தலைவனது. சொல் ஓ பிற ஆயின ஏ- உறுதி மொழியானது இப்பொழுது வேறுபட்டு விட்டது. இதனால் ஆய்வளை ஞெகிழவும்- நான் அணிந்திருக்கும் அழகிய வளைகள் கழலவும். அயர்வு மெய் நிற்பவும்- சோர்வை என் உடம்பிலே நிலை நிறுத்தவும் வருகின்ற. நோய்மலி வருத்தம்- துன்பம் நிறைந்த என் துக்கத்தை அன்னை அறியின்- என் அன்னை தெரிந்து கொள்ளுவாளானால், உளெனோ- அதன் பின் நான் உயிருடன் இருப்பேனோ? கருத்து:- தலைவன் வராமையால் நான் வருந்துகின்றேன்; என் துக்கத்தை அன்னை அறிந்து விட்டால் என் செய்வேன்? விளக்கம்:- இது, தும்பி சேர் கீரன் என்னும் புலவர் பாட்டு. தலைவன், பொருள் தேடச் சென்றிருந்த போது வருந்திய தலைவி, தன் தோழியிடம் உரைத்தது. ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிற்பவும், நோய்மலி வருத்தம் அன்னை அறியின் உளெனோ என்ற அடிகளை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. விளியாது- ஓய்வு இல்லாமல். ஓரை மகளிர்- விளையாட்டுப் பெண்கள். ஆட்ட- துன்புறுத்த. துனைபுரி- மிகுந்த விரைவு. மகளிரால் துன்புறுத்தப்பட்ட நண்டை, கடல் அலை வந்து கொண்டுபோய், அதன் துன்பத்தை நீக்கியதுபோல அன்னை என்னைத் துன்புறுத்தத் தொடங்குவதற்கு முன் தலைவன் வந்து என்னை மணந்து செல்ல வேண்டும் என்னும் குறிப்புள்ளது இச் செய்யுள், நாமில்லாமல் உயிர் வாழான் தலைவன் பாட்டு 317 தலைவன் பிரிந்து போயிருந்தான். அப்பொழுது தலைவி அவனை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள், அவள் துயரத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள், தலைவன் விரைவில் வந்துவிடுவான்; வாடைக் காற்றைக் கண்டு மெலிந்த மேகம் தெற்குத் திசையை நோக்கிப் படர்வதைப் பார். இதுபோல நம் தலைவனும் குளிர்ந்த பனிப் பருவத்தைக் கண்டு ஓடி வருவான், நாம் இல்லாமல் அவனால் வாழ முடியாது. ஆதலால் நீ சிறிதும் வருந்தாமல் இரு என்று உரைத்தாள். இச் செய்தியை உரைப்பதே இச் செய்யுள். விரும்பக்கூடிய அழகுள்ள காட்டு மானின், கருமையும் பெருமையும் உள்ள ஆண் மான் நெல்லிக்கனியைத் தின்றபின், பக்கத்திலேயுள்ள நீர்ச் சுனையை நாடிச் செல்லும். அச்சுனையிலே தேன் வழிந்தோடுகின்ற மலர்கள் நிறைந்திருக்கும். அம்மலர்கள் அசையும்படி மூச்சுவிட்டுக் கொண்டு நீரை ஆவலுடன் அருந்தும். இத்தகைய காட்சியுள்ள பசுமையான சுனை பொருந்திய உயர்ந்த மலை நாட்டையுடையவன் நமது தலைவன். மிகுதியாக வட திசையிலிருந்து வந்த வாடைக் காற்றுக்கு எதிர் நிற்க முடியாமல் சிதறிய மேகங்கள் தென் திசையை நோக்கிச் செல்லுகின்ற காலம் இது. இக்குளிர்ந்த பனிக்காலத்தில் மலை நாடராகிய நமது காதலர் வராமலிருக்க மாட்டார்; நம்மைவிட்டு அவர் தனித்திருக்க முடியாது; அவருடைய வாழ்வுக்கு இன்றியமையாத நாமில்லாமல் அவரால் வாழமுடியாது ஆதலால் விரைவில்வந்து சேர்வார். என்றாள் தோழி பாட்டு புரிமட மரையான் கருநரை நல்ஏறு, தீம்புளி நெல்லி மாந்தி, அயலது தேம்பாய் மாமலர் நடுங்க, வெய்துயிர்த்து, ஓங்கு மலைப் பைஞ்சுனை பருகும்; நாடன், நம்மைவிட்டு அமையுமோ மற்றே; கைம்மிக வடபுல வாடைக்கு அழிமழை தென்புலம் படரும் தண் பனி நாளே. பதவுரை:- புரிமட மரையான் - விரும்பத்தக்க அழகமைந்த காட்டுமானின். கருநரை நல் ஏறு- கருமையும் பெருமையும் பொருந்திய நல்ல ஆண்மான். தீம்புளி- இனிய புளிப்புள்ள. நெல்லிமாந்தி- நெல்லிக் கனிகளை உண்டு. அயலது - பக்கத்தில் உள்ள. தேம்பாய் மாமலர் நடுங்க- தேன் ஒழுகுகின்ற பெரிய மலர்கள் அசையும்படி. வெய்து உயிர்த்து- வெப்பமான மூச்சு விட்டுக்கொண்டு. ஓங்குமலை பைஞ்சுனை பருகும்- உயர்ந்த மலையில் உள்ள பசுமையான நீர்ச்சுனையிலே தண்ணீர் குடிக்கின்ற. நாடன்- நாட்டையுடைய நமது தலைவன். கைம்மிக- மிகுதியாக வீசுகின்ற. வடபுல வாடைக்கு- வடதிசையிலிருந்து வந்த குளிர் காற்றுக்கு. அழிமழை சிதைந்த மேகங்கள். தென் புலம் படரும்- தென்திசையை நோக்கிச் செல்லுகின்ற. தண்பனி நாள் ஏ- இந்தக் குளிர்ந்த பனிக்காலத்தில். நம்மைவிட்டு நம்மைவிட்டுப் பிரிந்து, அமையுமோ தனிமையாக வாழ்ந்திருப்பானோ? கருத்து:- தலைவனால் இக் குளிர் காலத்தில் தனித்து வாழ முடியாது; விரைவில் வந்து விடுவான். விளக்கம்:- இச் செய்யுள், மதுரைக் கண்டரதத்தன் என்னும் புலவர் பாடியது. தலைவன் பிரிந்திருந்த போது, வருந்திய தலைவிக்குத் தோழி உரைத்த ஆறுதல் மொழி. குறிஞ்சித்திணை. நம்மை விட்டு அமையுமோ மற்றே என்னும் அடியை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. மற்று ஏ, அசைச் சொற்கள். புரிமடம் - விரும்பத்தகுந்த அழகு, நரை- பெருமை நெல்லிக்கனி முதலில் புளிப்பும், பிறகு இனிப்பும் அளிக்கும். ஆதலால்- தீம்புளி என்று குறிக்கப்பட்டது. வாடைக் காற்றால், மேகம் தென்திசையை நோக்கிச் செல்வது இயல்பு. வாடை- வடதிசைக்காற்று. சொல்லிப் பயனில்லை; தானே அறிய வேண்டும் பாட்டு 318 கற்பு மணம் புரிந்து கொள்ளாமல் காலம் கடத்துவதை விரும்பவில்லை. தன் உள்ளத்தைத் தலைவனிடம் தெரிவிக்க விரும்பினாள் அவள். ஒரு நாள் இரவிலே தலைவியைச் சந்திப்பதற்காக அவன் குறித்த இடத்திலே - மறைவிலே- வந்து நின்றான். அச்சமயம் தலைவன் வஞ்சக் கள்வன்; அன்று உன்னை விட்டுப் பிரியேன் என்று சூளுரைத்தான். அவன் உரைத்த உறுதி மொழியைக் காப்பாற்றவில்லை; அவனுடைய உறுதி மொழியை அவனேதான் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்றாமல் கைவிடு வானாயின், நாம் சொல்லுவதால் என்ன பயன்? ஒரு பயனும் உண்டாகாது என்றாள் தலைவி. தலைவன் இன்னும் காலங் கடத்தாமல், விரைவில் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு உரைத்தாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். தன்னை எதிர்ப்பவர்களைக் கொம்பால் எறிந்து கொல்லும் சுறாமீன் நிறைந்திருக்கின்ற கடலின் கரை. அந்தக் கடற் கரையிலே நல்ல மணம் கமழ்கின்ற புலிநகக் கொன்றை மலர்களும், புன்னை மலர்களும், பரவிக்கிடக்கும். அக்காட்சி, தெய்வத்திற்குப் பூசைபோடும் வெறியாடும் இடத்தைப் போலக் காணப்படும். இத்தகைய கடல் துறையையுடைய தலைவன் நம் காதலன். அவன் என்னை மணந்து கொள்ளுவதைப்பற்றி நினைத்தாலும் சரி, நினைக்காமலிருந்தாலும் சரி, என்னை வேறு யாராவது என் பெற்றோரிடம் கேட்டு மணந்து கொள்ள வருவார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் எண்ணாமல் இருக்கின்றான் அவன். அவனுக்கு நான் என்னதான் சொல்லுவேன். இன்று இளைத்திருக்கின்ற இந்த மூங்கில் போன்ற அழகிய தோள்களை அவன் தழுவிக் கொண்ட அந்நாளில் நமக்குச் சூளுரைத்தான் மணம்புரிந்து கொள்ளுவேன்; தவற மாட்டேன் என்பதே அவன் உரைத்த உறுதிமொழி. அத்தகைய கள்வனும் அவன்தான்; அவ்வுறுதி மொழியை நிறைவேற்றும் கடமையுள்ளவனும் அவன்தான்; நாம் காமவெள்ளத்தைக் கடப்பதற்குத் தெப்பமாக இருப்பவனும் அவனேதான். பாட்டு எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், நறுவி ஞாழலொடு புன்னை தாஅய், வெறி அயர் களத்தினில் தோன்றும், துறைவன், குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று அறியாற்கு உரைப்பவோ யானே! எய்த்த இப் பணை எழில் மென்றோள் அணைஇய அந்நாள், பிழையா வஞ்சினம் செய்த கள்வனும், கடவனும், புணைவனும் தானே. பதவுரை:- எறிசுறா கலித்த- அடுத்தாரைக் கொல்லுகின்ற சுறாமீன்கள் நிறைந்திருக்கின்ற. இலங்கு நீர் பரப்பின்- விளங்கு கின்ற கடலின் கரைவெளியிலே. நறுவீ ஞாழலொடு- நறுமண முள்ள மலர்களாகிய புலிநகக் கொன்றையோடு. புன்னைதாய்- புன்னை மலர்களும் கலந்து கிடக்கும் காட்சி. வெறி அயர் களத்தினில்- தெய்வத்திற்கு விழாச் செய்யும் இடத்தைப் போல. தோன்றும்- காணப்படுகின்ற. துறைவன்- கடல்துறையை யுடைய தலைவன். குறியான் ஆயினும்- நம்மை மணந்து கொள்வது பற்றி எண்ணான் ஆயினும். குறிப்பினும்- எண்ணுவானாயினும், பிறிது ஒன்று - என்னை வேறொருவர் மணக்க விரும்பக் கூடும் என்ற வேறொரு செய்தியைப் பற்றி. அறியாற்கு- அறியாமலிருக்கின்ற அவனுக்கு. உரைப்பவோ யானே- அவ்வுண்மையைச் சொல்லு வேனோயான். எய்த்த- இளைத்துப்போன. இப்பணை எழில் மெல்தோள்- இந்த மூங்கில் போன்ற அழகிய மெல்லிய தோள்களை. அணைஇய அந்நாள்- தழுவிக் கொண்ட அந்த நாளிலே. பிழையா வஞ்சினம் செய்த- தவறு செய்ய மாட்டேன் என்று சூளுரைத்த. கள்வனும்- கள்ளத்தன்மையுள்ள வஞ்சகனும். கடவனும்- தான் உரைத்த உறுதிமொழியை நிறைவேற்றக் கடமைப்பட்டவனும். புணைவனும்- நமக்குத் துன்பக்கடலைக் கடக்கத் தெப்பமாக இருப்பவனும். தானே- அவனே தான். கருத்து:- தலைவன் அன்று உரைத்த உறுதி மொழியைக் கை விடாமல் மணந்து கொள்ள வேண்டும். விளக்கம்:- இது, அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் மறைவிலே, தலைவியைச் சந்திக்க வந்து நின்றான். அப்பொழுது தலைவி, அவன் காதிலே விழும்படி தோழியிடம் உரைத்தது. நெய்தல்திணை. தாஅய்; அணைஇய; உயிர் அளபெடைகள். கலித்த- செழித்து வளர்ந்திருக்கின்ற. வெறி அயர் களம்- விழாச்செய்யும் இடம். சுயபுத்தி இல்லாதவனுக்குச் சொற்புத்தி என்ன பயன் தரும்? என்ற கருத்தை இப்பாடல் கொண்டுள்ளது. அந்நாள் தலைவன் உரைத்த வஞ்சினம் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்; பிரிந்தால் உயிர் வாழ மாட்டேன் என்பது. தலைவியை முதலில் சந்தித்தபோது தலைவன் உரைத்த உறுதி மொழி இது. இதைத் தலைவி நினைப்பூட்டினாள். புணைவன் என்பதனால், தலைவனைத் தவிர வேறு கதியில்லை என்பதையும் உரைத்தாள் தலைவி. மழைக் கால மாலைப்பொழுது பாட்டு 319 தலைவன் மீண்டு வருவதாக உரைத்துப் போன கார் காலம் வந்து விட்டது. அந்நாளில் ஒரு மாலைக் காலத்தில், மன வேதனை யுடன் உட்கார்ந்து இருக்கின்றாள். தலைவியின் கலக்கத்தைக் கண்ட தோழி வருந்தாதே! தலைவன் விரைவில் வந்து விடுவான்; அதுவரையிலும் பொறுத்துக் கொண்டிரு என்று சொன்னாள். அதைக் கேட்ட தலைவி, அதோ பார்? விலங்குகள் கூட இந்த மாலைக் காலத்தில் தனித்துறைய விரும்பவில்லை. ஆண் விலங்குகள், தத்தம் பெண் விலங்குகளை அணைத்துக் கொண்டு தம் உறை விடத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கின்றன. ï¡fh£áia¡ f©L« v‹dhš v¥go¤ J‹g¤ij¤ jh§»¡ bfh©oU¡f Koí«? என்றாள். இச் செய்தியை எடுத்துரைக்கின்றது இச் செய்யுள். தோழியே! அதோ பார், இந்தக் கார் பருவ மாலைக் கால நிலையைக் கண்ணாலே பார்! ஆண் மான்கள் தம் பெண்மான் களைத் தழுவிக் கொண்டு, மயக்க மடைந்து, காட்டிலே அமைந்த தாம் வாழும் புதருக்குள் சென்று அடங்கியிருக்கின்றன. வலிமையான கையையுடைய நல்ல ஆண் யானைகள், தம் பெண் யானைகளோடு கூடி, மேகங்கள் படிந்திருக்கின்ற பக்கத்தையுடைய மலையிடத்தை அடைகின்றன. மாரிக் காலத்திலே பெரிய மழை பொழிகின்ற மாலைக் காலம் இத்தகைய காட்சியுடன் வந்திருக்கின்றது. இந்த மேனியின் அழகைச் சிதைத்தவர் அவர் தான். அத்தகையவர் இன்னும் வந்து என் துயரத்தை ஓட்டாமல் இருப்பாராயின். நம்முடைய அரிய உயிரின் நிலைமை எப்படி முடியும்!. பாட்டு மான் ஏறு மடப்பிணை தழீஇ, மருள் கூர்ந்து, கானம் நண்ணிய புதன் மறைந்து ஒடுங்கவும் கையுடை நன் மாப் பிடியொடு பொருந்தி, மை அணி மருங்கின் மலை அகம் சேரவும்: மாலை வந்தன்று மாரி மாமழை; பொன் ஏர் மேனி நல்நலம் சிதைத்தோர், இன்னும் வாரார் ஆயின், என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே. பதவுரை:- தோழி! மான் ஏறு- ஆண் மான்கள். மடம்பிணை தழீஇ- அழகிய பெண்மான்களைத் தழுவிக் கொண்டு. மருள் கூர்ந்து - மயக்கம் அடைந்து. கானம் நண்ணிய- காட்டிலே அமைந்த, புதல் மறைந்து ஒடுங்கவும்- புதரிலே மறைந்து அடங்கவும். கை உடைநல்மா- வலிய கையை உடைய நல்ல ஆண்யானைகள். பிடியொடு பொருந்தி- தம் பெண் யானைகளுடன் சேர்ந்து. மை அணி மருங்கின்- மேகங்கள் பொருந்திய பக்கத்தையுடைய. மலை அகம்சேரவும்- மலையிடத்தை அடையவும். மாரி மா மழை- மாரிக்காலத்திலே பெரிய மழையைப் போன்ற. மாலை வந்தன்று- மாலைக்காலம் வந்தது. பொன் ஏரி மேனி- இந்த மாலைக் காலத்திலும், பொன் போன்ற அழகுள்ள எனது உடம்பின். நல்நலம் சிதைத்தோர்- நல்ல அழகைக் கெடுத்தவர். இன்னும் வாரார் ஆயின்- இன்னும் வந்து நமது துன்பத்தைப் போக்காமலிருப் பராயின். நம் இன் உயிர்நிலை- நமது உயிரின் நிலைமை. என் ஆம்- என்ன ஆகும்? கருத்து:- தலைவர் வந்து சேராவிட்டால் எனது உயிர் நிலைக்காது. விளக்கம்:- இது தாயங்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. கார் காலத்து மாலை நேரத்தைக் கண்டு வருந்துகின்ற தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறினாள். அப்பொழுது தலைவி தோழியிடம் உரைத்தது இச் செய்யுள். முல்லைத்திணை. மாரி மா மழை மாலை வந்தன்று என்றும், நம் இன் உயிர் நிலை என் ஆம் என்றும் பதங்கள் மாற்றப்பட்டன. தோழி என்னும் சொல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தழீஇ; உயிர் அளபெடை. மருள் - மயக்கம். மை- மேகம். வந்தன்று- வந்தது. மான்கள் புதர்களில் வாழும்; யானைகள் மலைப்பாறைகளில் வாழும். வீண்பழி சொல்லும் கொடியவர்கள் பாட்டு 320 தலைவன், தன் காதலியைக் காண, மறைவிடத்திலே வந்து நின்றான். அதை அறிந்தாள் தலைவி; இனிக் களவொழுக்கத்திலே வாழ்வதைத் தான் விரும்பவில்லை என்பதைத் தலைவன் அறியும்படி, தோழியிடம் உரைக்கின்றாள்; இன்னும் நாம் தலைவனுடன் ஒரு நாள் கூடக் கலந்து மகிழ்ந்து விளையாடிய தில்லை. ஆனால் இவ்வூரிலே உள்ளவர்கள் தலைவனையும் என்னையும் சேர்த்துக் கதை கட்டி விடுகின்றார்கள். எங்களுக்குள் கள்ள உறவு இருப்பதாகப் பழித்துப் பேசுகின்றார்கள். இவ்வூரில் உள்ளவர்கள் கொடுமையானவர்கள். ஆதலால் தலைவன் நம்மை மணந்து கொண்டால்தான் நம் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழிச் சொற்கள் ஒழியும் என்றாள். பரதவர்கள் கடலிலே பிடித்துக் கொண்டு வந்து காய வைத்திருக்கும் மீன்கள், நீந்தமுடியாத வெள்ளம் நிறைந்த வழிகளிலே பிடித்து இறாமீன் கருவாட்டுடன் காய வைக்கப் பட்டிருக்கும். இதனால் நிலாப் போன்ற வெண்மையான மணலிலே புலால் நாற்றம் வீசும். இந்தப் புலால் நாற்றம் மணல் மேடுகளில் எல்லாம் சென்று பரந்திருக்கும். இத்தகைய கடற்கரைத் தலைவனோடு நாம் ஒருநாள் கூடியிருந்து கலந்து விளையாடிய பழிகூட நமக்கில்லை இருந்தும் மொட்டுக்கள் விரிந்திருக்கின்ற பொன் போன்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரங்கள் நிறைந்த இந்தச் சேரியிலே உள்ளவர்கள் மிகவும் கொடியவர்கள்; இதைச் சொல்லலாமா? கூடாதா? என்று எண்ணிப் பார்க்காத இயல்புள்ளவர்கள் நம் மீது வீணாகப் பழி சொல்லுகின்றனர்! பாட்டு பெரும் கடல் பரதவர் கொள் மீன் உணங்கல், அரும் கழிக் கொண்ட இறவின் வாடலொடு நிலவு நிற வெண்மணல் புலவப், பலவுடன் எக்கர் தொறும் பரக்கும், துறைவனொடு, ஒருநாள் நக்கது ஓர் பழியும் இலமே; போது அவிழ் பொன் இணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப் புன்னையம் சேரி, இவ்வூர், கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே. பதவுரை:- பெரும்கடல்- பெரிய கடலிலே சென்று. பரதவர் கொள்மீன்- பரதவர்கள் பிடித்துக் கொண்டு வந்த மீன்களின். உணங்கல் -வற்றல். அரும்கழி கொண்ட- நீந்த முடியாத ஆழமான கழிகளிலே பிடித்துக்கொண்டு வந்த. இறவின் வாடலொடு- இறாமீனின் வற்றலொடு சேர்ந்து. நிலவு நிற வெண்மணல்- நிலாப் போன்ற வெண்மையான மணல். புலவ- புலால் நாற்றம் வீசும் படி பரந்து கிடப்பதால். பல உடன் எக்கர்தொறும் - பலவான மணல்மேடுதோறும். பரக்கும்- அந்நாற்றம் பரவிருக்கின்ற. துறைவனொடு- கடல் துறையை உடைய தலைவனோடு. ஒரு நாள் நக்கது ஓர்- ஒரு நாளாவது சேர்ந்திருந்து விளையாடியதாகிய. ஒரு பழியும் இலமே- பழியும் இல்லாதவர் நாம். போது அவிழ் பொன் இணர் மரீஇய- அப்படியிருக்க, மொட்டுக்கள் விரிகின்ற பொன்போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய. புள் இமிழ்- வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற. பொங்கர்- கிளைகளை யுடைய. புன்னை அம்சேரி- புன்னைமரங்கள் நிறைந்த சேரியாகிய. இவ்வூர்- இவ்வூரில் உள்ளவர்கள். தம் கொடுமையானே- தம்மிடம் உள்ள கொடுந்தன்மையால். கொன் அலர் தூற்றும்- வீணாக நம்மைப் பழித்துரைப்பார்கள். கருத்து:- ஊரார் பழி கூறுகின்றனர்; ஆதலால் தலைவன் நம்மை மணந்து கொள்ளுதலே பழியை நீக்குவதற்கு வழியாகும். விளக்கம்:- இது தும்பி சேர் கீரன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் மறைவிடத்திலே வந்து தலைவியைக் காணக் காத்திருந் தான். அப்பொழுது தலைவி, நமது ஒழுக்கம் வெளிப்பட்டு விட்டது. ஊரார் பழிக்கின்றனர். ஆதலால் அவன் நம்மை மணந்து கொள்ள வேண்டும். இதுதான் தலைவன் கடமை என்று தோழியிடம் உரைத்தாள். நெய்தல்திணை. இவ்வூர் தன் கொடுமையானே கொன் அலர் தூற்றும் என்று இறுதியடி மாற்றப்பட்டது. மரீ இய; உயிர் அளபெடை. உணங்கல்; வாடல்; இவை காய்ந்த மீன்கள்; கருவாடு என்பர். நக்கது- மகிழ்ந்து விளையாடியது. இமிழ் - ஒலி. புள்- வண்டுகள். கொன்- வீண். கருவாட்டின் நாற்றம் கடற்கரை முழுவதும் வீசுவது போல, அவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஊர் முழுவதும் பரவி விட்டது என்று கூறினாள் தலைவி. நெய்தல் நிலத்துப் பெண் தன் அனுபவத்தை உதாரணமாகக் கூறினாள். உண்மையைச் சொல்லிவிடுவேன் பாட்டு 321 தலைவி கள்ளத்தனமாகக் காதல் வாழ்விலே ஈடுபட்டிருக் கிறாள். விரைவில் தனக்கும் தன் காதலனுக்கும் கற்பு மணம் நடந்தேற வேண்டும் என்பது தலைவியின் விருப்பம். இதற் கிடையிலே தலைவியின் உள்ளத்திலே ஒரு சந்தேகம் பிறந்தது. தான் காதலித்திருக்கும் தலைவனைத் தவிர வேறு யாராவது, தன் பெற்றோரிடம் வந்து தன்னை மணம் புரிந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வது என்பதுதான் அந்தச் சந்தேகம். தலைவி இச் சந்தேகத்தைப் பற்றித் தோழியிடம் கேட்டாள். வேறு யாரேனும் பெண் கேட்டு வந்தால் என்ன செய்வது? அப்பொழுது நீ எப்படி நடந்து கொள்வாய் என்றாள் தலைவி. உடனே தோழி நான் அறநெறியிலே நடந்து கொள்வேன். நீ காதலித்திருக்கும் தலைவன் இன்னான் என்பதை உன் பெற்றோரிடம் தெரிவித்து விடுவேன். நீ உன் காதலனுக்கே உரியவள் என்பதையும் தெளிவாக உரைப்பேன்! என்றாள் தோழி. இச் செய்தியைச் சொல்லுவதே இப்பாட்டு. அழகிலே சிறந்து விளங்கும் அரிவையே! உன் மார்பைத் தழுவிக் கொள்ளும் பொருட்டு தலைவன் நள்ளிரவிலே நமது மனைக்கு வந்து திரும்புகின்றான். அவன் மலையிலே பிறந்த சிவந்த சந்தனத்தையும் முத்து மாலையையும் மார்பிலே அணிந்தவன். சுனைகளிலே மலர்ந்த குவளை மலர்களைத் தொடுத்து வண்டுகள் மொய்க்கும்படி அணிந்திருக்கின்ற மாலையையுடையவன். இவன் நள்ளிரவிலே நமது மனையை நோக்கி வரும்போது, அவன், வரும் வழியிலே பயங்கரமான காட்சி நடைபெறும். பொது நிலத்திலே மேயும் காட்டு மான் இனத்தைச் சேர்ந்த ஆண்மானைச் சிவந்த கண்களையுடைய புலியானது கொன்று விடும். கொன்று விட்டு பயங்கரமாக முழங்கும். ஆகையால் நமது களவு மண வாழ்க்கையை மறைக்கக் கூடிய காலம் இது அன்று. அன்னையே வேற்றார் உன்னை விரும்பி வரும் போது இந்த ரகசியத்தை நான் திறந்து சொல்லி விடுவேன். கதவை மூடி வைத்துக் கொண்டிருக்க மாட்டேன். இதை நீ விரும்புக. நீ வாழ்க! பாட்டு மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்; சுனைப் பூங்குவளைச் சுரும்பார் கண்ணியன்; நடுநாள் வந்து நம் மனைப் பெயரும்; மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன்துணை; மன்ற வரை ஆ இரிய ஏறு அட்டுச் செங்கண் இரும்புலி குழுமும்; அதனால் மறைத்தற் காலையோ அன்றே; திறப்பல்; வாழி! வேண்டு அன்னை நம் கதவே. பதவுரை:- மடவரல் அரிவை- அழகுவளர்கின்ற பெண்ணே. நின் மார்பு அமர்- உன்னுடைய மார்பைத் தழுவிக் கொள்ள விரும்புகின்ற. இன் துணை- இனிய துணைவன். மலை செஞ்சாந்தின்- மலையிலே பிறந்த செஞ்சந்தனத்தையும். ஆரம்- முத்து மாலையையும் அணிந்த. மார்பினன்- மார்மை உடையவன். சுனைப் பூம்குவளை- சுனையிலே பூத்த குவளை மலர்களை. சுரும்பு ஆர்- வண்டுகள் மொய்க்கும்படி கட்டிய. கண்ணியன்- மாலையை அணிந்தவன். நடுநாள் நம்மனை வந்து பெயரும்- நள்ளிரவிலே நமது வீட்டுக்கு வந்து திரும்புவான். மன்றம் - அவன் வருகின்ற பொது விடத்திலே. மரையா இரிய- காட்டு மான்பயந்து ஓடும்படி. ஏறு அட்டு- அதன் ஆண் மானைக் கொன்று. செம்கண் இரும்புலி குழுமும்- சிவந்த கண்களையுடைய பெரிய புலி முழக்கமிடும். அதனால்- ஆகையால் மறைத்தற்காலை ஓ அன்று. ஏ- நமது களவு மணத்தை மறைக்கக் கூடிய காலம் இது அன்று அன்னை- தோழியே. நம் கதவு- நமது கள்ளமாகிய கதவை. திறப்பல்- திறந்து இரகசியத்தை அன்னையிடம் வெளிப்படுத்தி விடுவேன். வேண்டு- இதை நீ விரும்புக. வாழி- வாழ்க. கருத்து:- தலைவியே நான் உண்மையை உரைத்து அறநெறியிலே நிற்பேன். விளக்கம்:- இது யாரால் பாடப்பட்ட தென்று தெரியவில்லை. தலைவி தோழியை நோக்கி என் காதலனைத் தவிர வேறு யாராவது என்னை மணம் புரிநது கொள்வதற்கு வந்தால் நீ என்ன செய்வாய்! என்று கேட்டபோது தோழி கூறியது. குறிஞ்சித்திணை. மடவரல் அரிவை, நின் மார்பு அமர்இன் துணை மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்; சுனைப் பூங்குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்; நடுநாள் நம் மனை வந்து பெயரும்; மன்ற மரையா இரிய ஏறு அட்டு செங்கண் இரும்புலி குழுமும்; அதனால் மறைத்தற் காலையோ அன்றே; அன்னை நம் கதவு திறப்பல் வேண்டு வாழி என்று பதங்கள் மாற்றிப் பொருள் உரைக்கப் பட்டது. ஏறு அட்டு- ஆண்யானையைக் கொன்று. குழுமும்- முழங்கும். காலை- காலம்; பொழுது. கதவு- இரகசியமாகிய கதவு; மந்தனம் என்பது இரகசியத்தைக் குறிக்கும் சொல். ஓ. ஏ. அசைகள். நாமே அவர்பால் நடந்து செல்வோம் பாட்டு 322 தலைவன் தலைவியை வழக்கம் போல் சந்திக்கும் இடத்திற்கு ஒருநாள் காலந்தாழ்த்து வந்தான். வரவேண்டிய காலத்தில் வந்து சேரவில்லை. தலைவி அவன் வரவை எதிர்பார்த்து நின்றாள் அப்பொழுது தோழி தலைவியைப் பார்த்து தலைவன் தன்மை வேறு; நம்முடைய தன்மை வேறு; இருவர் தன்மையும் ஒத்தன அல்ல என்று தலைவனைப் பழித்துப் பேசினாள். அச்சமயத்திலே தலைவன், மறைவிடத்திலே வந்து நின்றான். அவன் வந்து நிற்பதைத் தலைவி அறிந்து விட்டாள். தலைவன் வராவிட்டால் போகட்டும். நாமாவது அவர் இருக்கும் இடந்திற்கு நடந்து போவோம். அவர் நமது இயல்புக்கு ஒவ்வாராயினும், நாம் அவருடன் பழகி, அவருடைய பண்புக்குத் தக்கவாறு நடந்து கொள்வோம்; இதுவே நமது கடமை என்றாள் தலைவி. இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். காட்டிலே வேட்டையாடச் சென்ற வேட்டுவர்கள், தம் கண்ணெதிரே காணப்பட்ட விலங்குகளை, விரட்டினார்கள். அப்பொழுது அங்கே வசிக்கின்ற காட்டுப் பசுவின் கன்று- அழகிய காதுகளையுடைய கன்று - ஒன்று தம் இனத்தை விட்டுப் பிரிந்து பயந்து ஓடிற்று; ஓடிய அக்கன்று அக்காட்டிலே இருந்த ஒரு சிற்றூரிலே போய்ப் புகுந்தது. அதைக் கண்ட இளம் பெண்கள் அதை அன்புடன் ஆதரித்துப் பாதுகாத்து வந்தனர். அதுவும், அந்த இடத்தை விரும்பி, அம் மகளிர் மனையிலே வாழ்வதற்குத் தகுதியாகிவிட்டது. அது போல நாமும், நமது காதலனைச் சேர்ந்து அவன் தன்மைக்குத் தகுந்தபடி நம்மை அமைத்துக் கொண்டு வாழ்வதே சிறந்தது; அதைவிட நமக்கு இன்பந் தருவது வேறு ஒன்றும் இல்லை. ஆதலால் நம்மால் முடிந்தவரையிலும் மெதுவாக நடந்து அவன் இருக்கும் இடத்தையே அடைவோம். தோழியே! இதுதான் சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. பாட்டு அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி கானவர் எடுப்ப, வெரீஇ இனந்தீர்ந்து, கானம் நண்ணிய சிறுகுடிப்பட்டு என; இளையர் ஓம்ப மரீஇ; அவண் நயந்து, மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு; மருவியின் இனியவும் உளவோ? செல்வோம் தோழி ஒல்வாங்கு நடந்தே. பதவுரை:- அமர்கண் ஆமான்- தங்குவதற்கு இடமான காட்டுப் பசுவின். அம் செவிக்குழவி- அழகிய காதுகளையுடைய இளங்கன்று, கானவர் எடுப்ப- வேட்டுவர்கள் எழுப்பியதனால். வெரீஇ - பயந்து. இனம் தீர்ந்து - தன் இனத்தை விட்டுப் பிரிந்து. கானம் நண்ணிய- காட்டிலே அமைந்திருக்கின்ற. சிறுகுடி பட்டென- சிற்றூரிலே புகுந்து அகப்பட்டதாக. இளையர் ஓம்ப- அக்கன்றை மகளிர் பாதுகாக்க. மரீஇ அவண் நயந்து- அக்கன்றும் அவர்களோடு சேர்ந்து அந்த இடத்தை விரும்பி. மனை உறை வாழ்க்கை- அவர்கள் மனையிலே வாழ்கின்ற வாழ்க்கைக்கு. வல்லியாங்கு - ஏற்றாற் போல வாழ்வதை ஒத்து. மருவின்- நாமும் தலைவனை அடைந்து அவன் இயல்போடு ஒத்து வாழ்ந்தால். இனியவும் உளவோ- அதைக் காட்டிலும் நமக்கு இன்பந்தருவன வேறு உண்டோ? தோழி - ஆதலால் தோழியே. ஒல்வாங்கு நடந்தே- நம்மால் முடிந்த வரையிலும் நடந்து. செல்வோம்- காதலன் இருக்கும் இடத்திற்குப் போவோம். கருத்து:- தலைவர் நாம் இருக்கும் இடத்துக்கு வரா விட்டாலும், நாம் அவர் இருக்கும் இடத்திற்குப் போவோம். விளக்கம்:- இது ஐயூர் முடவன் என்னும் புலவர் பாட்டு. தலைமகன் வருவதற்கு நேரம் ஆயிற்று; அப்பொழுது அவன் தன்மையைத் தோழி பழித்துரைத்தாள். அதற்குத் தலைவி பதில் உரைத்தாள். குறிஞ்சித்திணை. தோழி ஒல்லாங்கு நடந்தே செல்வோம் என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. வெரீஇ; மரீஇ; உயிர் அளபெடைகள். குழவி- கன்று. கானவர்- வேடர். ஆமான்- காட்டுப்பசு. சிறுகுடி- சிற்றூர். காட்டுப் பசுவின் கன்று, தனக்கு ஒவ்வாத குடியில் வாழ்ந்தாலும், அக்குடியினர்க்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளும். அதுபோல, நாமும் நமது இயல்புக்கு ஒவ்வாத தலைவனை அடைந்தாலும், அவன் இயல்புக்கேற்ப நாம் நடந்து கொள்வோம் என்றாள் தலைவி. தனித்து வாழும் நாள் பதர்நாள் பாட்டு 323 வினைமேற் சென்ற தலைவன், வினை முடித்தபின் திரும்பி வருகின்றான். காதலியைக் கண்டு மகிழ வேண்டும் என்ற ஆவல் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கின்றது. தலைவியைக் காண்பதற்காகத் தேரை வேகமாக ஓட்டும்படி பாகனிடம் சொல்ல நினைத்தான். தலைவியின் தோளைத் தழுவி வாழும் நாட்கள் தான், நாம் இவ்வுலகிலே பிறந்ததன் பயனைப் பெறும் நாளாகும். அவள் இல்லாமல் கழியும் ஏனைய நாட்கள் எல்லாம் பயனற்ற நாள்; அவை வெறும் கருங்காய்; அதாவது பதர் போன்ற நாள் என்று சொல்லியதன் மூலம் விரைவாகத் தேரை ஓட்டும்படித் தேர்ப்பாகனுக்கு அறிவித்தான் தலைவன்; தேர்ப்பாகனிடம் இச்செய்தியைச் சொல்லுவதே இப்பாடல். பாணர்கள் படுமலைப்பண் என்னும் இசையை வாசிப் பார்கள். அப்பண்ணிசை வானத்தின் உச்சியிலே எழுந்து பரவும். அந்த நல்ல இசையின் ஒலியைப் போல ஒலித்துக் கொண்டு மழை பெய்யும். அவ்வாறு மழை பெய்த கொல்லையிலே முல்லைகள் பூத்திருக்கும். அம்முல்லையின் பசுமையான மொட்டுக்களில் உள்ள மகரந்தப் பொடிகளின் நறுமணங் கமழும் நல்ல நெற்றியை உடையவள் எனது தலைவி. அத் தலைவியின் தோள்களிலே படுத்துறங்கிக் கழிக்கின்ற நாட்களே இன்பம் நிறைந்த நாட்களாகும். அந்நாட்கள் தாம் இவ்வுலகில் நாம் பயன் பெற்று வாழும் நாட்களாகும். அவள் இணைப்பைப் பெறாத ஏனைய நாட்கள் எல்லாம் என்ன பயனை யுடையன? அவை பயனற்ற பதர் நாட்களேயாகும். பாட்டு எல்லாம் எவனோ? பதடி வைகல்; பாணர் படுமலை பண்ணிய எழாலின் வானத்து எழும் சுவர், நல் இசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசு முகைத்தாது நாறும், நறுநுதல் அரிவை தோள் இணைத்துஞ்சிக், கழிந்தநாள் இவண் வாழும் நாளே. பதவுரை:- பாணர் படுமலைப் பண்ணிய- பாணர் படுமலைப் பண் என்பதை வாசித்த. எழாலின் - இசையினது. வானத்து எழும் சுவர்- வானத்திலே எழுந்து உச்சியிலே சென்ற. நல் இசை வீழ - நல்ல ஒலியைப் போன்ற. ஓசையாகும்படி. பெய்த புலத்து- மழை பெய்த கொல்லையிலே. பூத்த முல்லை- பூத்திருக்கின்ற முல்லையின். பசு முகைத்தாது- பசுமையான மொட்டுக்களில் உள்ள மகரந்தத்தின் மணம். நாறும் நறுநுதல்- வீசுகின்ற நல்ல நெற்றியையுடைய. அரிவை- தலைவியின். தோள் இணை துஞ்சி- தோள்களிலே படுத்துறங்கி. கழிந்தநாள்- கழிந்த நாட்கள் தாம். இவண் வாழும் நாளே- இவ்வுலகில் பயன் பெற்று வாழும் நாட்களாகும். எல்லாம்- மற்றைய எல்லா நாட்களும். எவனோ- என்ன பயனுடையன? பதடிவைகல்- அவை எல்லாம் பதர் நாட்களேயாகும். கருத்து:- தலைவியிருக்கும் இடத்தை விரைவில் அடைந்து அவளைக் கண்டு களிக்க வேண்டும். விளக்கம்:- இது பதடிவைகலார் என்னும் புலவர் பாட்டு. இச்செய்யுளில் உள்ள பதடி வைகல் என்னும் தொடரே இவருக்குப் பெயராயிற்று. எல்லாம் எவனோ பதடி வைகல் என்னும் முதல் அடியை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. பதடி- பதர்; கருக்காய். சுவர்- உச்சி படுமலைப் பண்- ஒரு வகைப்பண். எழால்- இசை. மழையின் ஒலிக்குப் படுமலைப் பண்ணோசை உவமானம். இருவர் பொருட்டும் இரங்குகின்றேன் பாட்டு 324 தலைவியை அடிக்கடி சந்தித்துக் கலந்து மகிழ்ந்து செல்லும் தலைவனிடம் ஒருநாள் தோழி ஒரு உண்மையை உரைத்தாள். தலைவியை இனி வெளியிலே வர விட மாட்டார்கள்; அவளை வீட்டிலேயே பத்திரமாக வைத்து விடுவார்கள் என்றாள். அதற்குத் தலைவன், இனி நான் இரவிலே வருவேன்; தலைவியைக் கண்டு மகிழ்ந்து திரும்புவேன்? அதன் பிறகு அவளை நான் முறைப்படி மணம் புரிந்து கொள்வேன் என்றான். அதற்குத் தோழி நீ தலைவிபால் கொண்ட காதலால் வருவாயானால், அதை நான் தடுப்பது தகாது; நீ இரவிலே வருவதனால், உனக்கு வழியிலே ஏதாவது இன்னல் நேருமோ என்று தலைவி அஞ்சுவாள். ஆதலால் இரவிலே நீ வருவது ஏற்றதன்று. இவ்வகையினால் உங்கள் இருவர்க்கும் துன்பம் உண்டாகும். நானோ, ஒரு தாய், தன்னுடைய இரட்டைப் பிள்ளைகள் நஞ்சை உண்டுவிட்டால், அவ்விரு குழந்தை களுக்காகவும் எப்படி வருந்துவாளோ அப்படி வருந்துவேன். நான் உங்கள் இருவரிடத்திலும் இரக்கங் காட்டுகின்றேன் என்றாள். தலைவனே! நீ இரவிலே கடற்கரைச் சோலையையும், நீர் நிலைகளையும் கடந்து தலைவியைக் காண வரவேண்டும். நீ வரும் வழியிலே ஆழமான நீர் நிலைகள் உண்டு; அந்த நீர் நிலைகளிலே வளைந்த கால்களும், கொல்லுந் தன்மையும் அமைந்த ஆண் முதலைகள் உண்டு. அவை வழிச் செல்வோரைத் தடுத்து ஒழிக்கும். கூட்டமாக மீன்கள் வாழ்கின்ற பெரிய கழிகள் உண்டு. இவற்றை யெல்லாம் நீ கடந்து வர வேண்டும். நீ தலைவியிடம் வைத்திருக்கும் அன்பு காரணமாக இந்த இடையூறுகளையெல்லாம் கடந்து வருகின்றாய். இவளோ, நீ வரும் வழியிலே உனக்கு என்ன ஆபத்து நேருமோ என்று அறியாமையால் வருந்துவாள். நானோ அது குறித்து இரட்டைக் குழந்தைகள் நஞ்சைத் தின்று விட்டால், அவற்றின் தாய் வருந்துவது போல, என் நெஞ்சிலே உங்கள் இருவரையும் எண்ணி வருந்துவேன். பாட்டு கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை வழிவழக்கு அறுக்கும் கானல் அம்பெரும்துறை, இனமீன் இருங்கழி நீந்தி, நீநின் நயன் உடைமையின் வருதி: இவள்தன் மடன் உடமையின் உயங்கும்; யான் அது கவை மக நஞ்சுண்டு ஆஅங்கு அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே. பதவுரை:- கொடும்கால் முதலை- வளைந்த கால்களை யுடைய முதலையின். கோள்வல் ஏற்றை- கொல்வதிலே வல்ல ஆண்முதலை. வழிவழக்கு அறுக்கும்- வழியிலே பிறர் செல்வதைத் தடுக்கும். கானல் அம் பெருந்துறை- சோலையுள்ள பெரிய நீர்த்துறையை அடுத்த. இனமீன் இரும்கழி நீந்தி- கூட்டமான மீன்கள் நிறைந்த பெரிய கழியைக் கடந்து. நீ நின் நயன் உடைமையின்- நீ உன்னுடைய அன்புடைமை காரணமாக. வருதி- இரவிலே வருகின்றாய். இவள்தன் மடன் உடைமையின் - இவளோ தன்னுடைய அறியாமை காரணமாக. உயங்கும் - வழியிலே உனக்கு என்ன இடையூறு நேரிடுமோ என்று நினைத்து வருந்துவாள். யான் அது - நானோ அது காரணமாக. கவைமக நஞ்சு உண்டாங்கு- இரட்டைப் பிள்ளைகள் நஞ்சை அருந்தினால் அவற்றின் தாய் வருந்துவதைப் போல. என் நெஞ்சத்தானே- என் மனத்திலே. அஞ்சுவல் பெரும - உங்கள் இருவர் பொருட்டும் இரக்கமுற்று அஞ்சுவேன் தலைவனே. கருத்து:- நீ இரவில் வந்தால் தலைவியும் வருந்துவாள் நானும் அஞ்சுவேன்; ஆதலால் இரவில் வரவேண்டாம். விளக்கம்:- இது கவைமகன் என்னும் புலவர் பாடிய பாட்டு. செய்யுளில் வந்துள்ள கவைமக என்னும் தொடரே இப் புலவருக்குப் பெயர் ஆயிற்று. தலைவன், நான் இரவிலே வந்து தலைவியைக் காண்பேன் என்று உரைத்த போது, தோழி அவனுக்கு உரைத்தது. நெய்தல் திணை. என் நெஞ்சத்தானே அஞ்சுவல் பெரும என்று இறுதி அடிமட்டும் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. ஆஅங்கு; உயிர் அளபெடை. கொடுங்கால்- வளைந்தகால். ஏற்றை- ஆண்முதலை. வழக்கு அறுக்கும்- வழக்கத்தை ஒழிக்கும். நயன்- அன்பு. உயங்கும்- வருந்தும். கவைமகவு- இரட்டைப் பிள்ளைகள். முதலைகள் வாழும் நீர் நிலைகளைத் தலைவன் கடந்து வர வேண்டும். அதனால் ஆபத்துண்டு என்று தலைவி வருந்துவாள். தலைவனுக்குள்ள ஆபத்தான வழிநடப்புக்காகவும், தலைவியின் துன்பத்துக்காகவும் தோழி வருந்துவாள். இச் செய்தி இச் செய்யுளில் அமைந்துள்ளது. தலைவி, தலைவன், இருவர் துன்பத்தையும் எண்ணி வருந்தும் தோழிக்கு இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டது கண்டு வருந்தும் தாய் உவமானம். இரண்டு குழந்தைகளுக்கும் மருந்தளித்து நஞ்சுநீக்கிப் பிழைக்க வைப்பது போல, தலைவன் தலைவி இருவரும் வருந்தாமல் அவர்கள் மணம்புரிந்து கொள்ளுவதுதான் இன்புற்று வாழும் வழி என்ற கருத்தை இந்த உவமையினால் காணலாம். பொய்யென்று நினைத்தேன்; போ என்றேன் பாட்டு 325 பிரிந்து போன தலைவன் இன்னும் வரவில்லை. அவன் வராத இந்த இடைக் காலத்திலே தலைவி எப்படித் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருப்பாள். அவளால் தாங்கமுடியாது என்று நினைத்துத் தோழி வருந்தினாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி தலைவன் நான் பிரிவேன், பிரிவேன் என்று பல தடவை சொல்லிக் கொண்டேயிருந்தான்; ஆனால் பிரிந்து செல்லவில்லை; ஒருநாள் அவன் இவ்வாறு பலதடவை சொன்னான். அதைக் கேட்ட நான் சிறிது சினமுற்றேன். இவன் பிரிந்து போகமாட்டான்? வழக்கம்போல் பொய் சொல்லுகிறான் என்று எண்ணினேன்; ஆதலால் என் பக்கத்தில் நில்லாமல் பிரிந்து போ என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிவிட்டேன். அதையே காரணமாக வைத்துக்கொண்டு தலைவன் பிரிந்து போனான் என்றாள். இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். பிரிந்து செல்வேன்; பிரிந்து செல்வேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தான். ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும்போது அது அவன் வழக்கமாகச் சொல்லும் பொய்ச் சொல் என்று நினைத்தேன். என் பக்கத்தில் நில்லாமல் போ; நிலையாகவே பிரிந்து போய்விடு என்று கோபத்துடன் சொல்லி விட்டேன். அதனால் அவன் பிரிந்து போனான். ஐயோ! அவன் தான் நமக்குத் துணை; அவனைத் தவிர நமக்கு வேறு ஆதரவு ஒருவரும் இல்லை. அந்த எம் தலைவன் இப்பொழுது எங்கே யிருக்கிறானோ தெரியவில்லை. நான் விடும் கண்ணீர் என் மார்பின் இடையிலே நிறைந்துவிட்டது. கரிய கால்களையுடைய வெண்மையான நாரைகள் இரை தேடிக்கொண்டிருக்கும் பெரிய குளம் போல அக்கண்ணீர் பெருகி நிற்கின்றது. அவன் பிரிந்ததனால் இத்தகைய இன்னலை அடைந்தேன்! பாட்டு சேறும்! சேறும்! என்றலின், பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கற்று, மன்னிக் கழிகென் றேனே, அன்னோ! ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ? கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே. பதவுரை:- சேறும் சேறும் என்றலின் - பிரிந்து செல்வேம் செல்வேம் என்று தலைவன் பலதடவை சொல்லிக் கொண்டே இருந்தான் ஆதலின். பண்டைத்தன் மாயம் செலவா- ஒருநாள் அவன் அவ்வாறு சொல்லும் போது பண்டு அவன் கொல்லுகின்ற பொய்ச் சொல் போன்றதே இதுவும் என்று. செத்து- நான் நினைத்து. மருங்கு அற்று- பக்கத்தில் இல்லாமல். மன்னிக் கழிக என்றேனே - நிலையாகப் பிரிந்து போய்விடு என்றேன். அன்னோ- ஐயோ. ஆசு ஆகு எந்தை- அதன் காரணமாகப் பிரிந்த ஆதரவான எம் தலைவன். யாண்டு உளன் கொல்ஓ- இப்பொழுது எங்கே இருக்கின்றானோ. என் இடை முலை- என் முலைகளின் இடையிலே. நிறைந்தே- நாம் விடும் கண்ணீர் நிறைந்து. கரும்கால் வெண்குருகு மேயும் - அது கருமையான கால்களையுடைய வெண்மையான நாரை இரை தேடிக் கொண்டிருக்கின்ற. பெரும் குளம் ஆயிற்று- பெரியகுளம் போல ஆகிவிட்டது. கருத்து:- தலைவன் பிரிவினால் உண்டாகும் துன்பத்தை என்னால் தாங்கமுடியவில்லை. விளக்கம்:- இது நன்னாகையார் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிந்த போது, அத்துக்கத்தைத் தாங்காத மனைவி தன் தோழியைப் பார்த்து உரைத்தது. தலைவன் பிரிவுக்கு நானே காரணம் என்று சொல்லி வருந்தினாள். தலைவி கூற்று. நெய்தல் திணை. என் முலையிடை, நிறைந்தே கருங்கால் வெண்குருகு மேயும், பெரும் குளமாயிற்று என்று இறுதி இரண்டு அடிகளில் மட்டும் பதங்கள் மாற்றப்பட்டன. சேறும்- செல்வேன். மாயம்- பொய். செத்து- நினைத்து. மருங்கு- பக்கம். ஆசு- துணை; பற்றுக்கோடு; ஆதரவு. எந்தை- எம் தலைவன். ஓ, ஏ.அசைகள். தம் சொல்லால் தான் தலைவன் பிரிந்து போனான் என்று தலைவி எண்ணுந்தோறும் அவள் கண்களிலே நீர் சுரந்து வழிந்தது. அது அவள் மார்பிலே குளம்போல நிரம்பியது. இது தலைவியின் துக்க மிகுதியைக் காட்டுவது. தான் செய்த பிழையைத் தானே உணரும் போது எவ்வளவு மனவேதனை உண்டாகும் என்ற உண்மையை இச் செய்யுள் எடுத்துக் காட்டிற்று. ஒரு நாள் துறப்பில் பல நாள் துன்பம் பாட்டு 326 தலைவி தன் காதலனிடம் ஆராத அன்பு கொண்டவள். அவனைப் பிரிந்து ஒரு கணம் வாழ்வதைக் கூட அவளால் தாங்க முடியவில்லை என்றும், எப்பொழுதும் அவனோடு இணைந்து வாழ்வதே இன்பத்தைத் தரும் என்பதை அவள் அறிந்தவள். ஆதலால் என்றும் பிரிவில்லாமல் அவனோடு வாழ வேண்டு மானால், அவன் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் கள்ளக் காதல் வாழ்வைக் கைவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். ஒருநாள் தலைவன், தலைவியைச் சந்திப்பதற்காக, மறை விடத்திலே வந்து நின்றான். அப்பொழுது தலைவி, தோழியைப் பார்த்துக் கீழ்வருமாறு கூறினாள். தோழியே! நாம் கள்ளக் காதல் வாழ்வில் ஈடுபட்டிருப்பதால், தலைவனுக்கும் நமக்கும் அடிக்கடி பிரிவு நேர்கின்றது. ஒரு நாள் தலைவன், நம்மைப் பிரிந்திருந் தாலும், அது பல நாள் உண்டாகும் துன்பத்தைப் போன்றதாக இருக்கின்றது. ஆதலால் எப்பொழுதும் பிரிவில்லாமல் அவனோடு வாழ வேண்டுமானால், அவன் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் கள்ளக் காதல் வாழ்வைக் கைவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். ஒருநாள் தலைவன், தலைவியைச் சந்திப்பதற்காக, மறை விடத்திலே வந்து நின்றான். அப்பொழுது தலைவி, தோழியைப் பார்த்துக் கீழ்வருமாறு கூறினாள். தோழியே! நாம் கள்ளக்காதல் வாழ்வில் ஈடுபட்டிருப்பதால், தலைவனுக்கும் நமக்கும் அடிக்கடி பிரிவு நேர்கின்றது. ஒரு நாள் தலைவன், நம்மைப் பிரிந்திருந் தாலும், அது பல நாள் உண்டாகும் துன்பத்தைப் போன்றதாக இருக்கின்றது. ஆதலால் எப்பொழுதும் பிரிவில்லாமல் சேர்ந்து வாழ்க்கை நடத்தக்கூடிய இல் வாழ்க்கையில் ஈடுபடுவது தான் சிறந்த வாழ்வாகும். ஆகையால் தலைவன் நம்மை மணந்து கொள்ளுவதுதான் பிரியாமல் வாழ்வதற்கு வழியாகும் என்றாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடலாகும். தோழியே! என்னுடன் சேர்ந்து கடலாடும் மகளிர்கள் மலரை வைத்துத் தொடுத்த மாலையை அணிந்தவர்கள்; மூங்கிலைப் போல் பருத்த தோள்களை உடையவர்கள்; அவர் களுடன் சேர்ந்து ஒருநாள் நான் கடற்கரைச் சோலையிலே விளையாடிக் கொண்டிருந்தேன்; மணலால் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே வந்து என் உள்ளத்தைக் கவர்ந்து என்னை அணைத்தான் காதலன். அன்று முதல் கடல் துறையை உடைய அத்தலைவன், ஒருநாள் என்னைக் காணாமல் துறந்திருந்தாலும் என்னால் தாங்க முடிவ தில்லை; பல நாள் பிரிவால் வருகின்ற துன்பத்தையடைகின்றேன். பாட்டு துணைத்த கோதைப் பணைப் பெருந்தோளினர் கடல் ஆடு மகளிர், கானல் இழைத்த, சிறு மனைப் புணர்ந்த நட்பே, தோழி! ஒரு நாள் துறைவன் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. பதவுரை:- துணைத்த கோதை- கட்டிய மலர் மாலையை அணிந்த. பணை பெருந்தோளினர்- மூங்கில் போலப் பருத்த தோள்களை உடையவர்களாகிய. கடல் ஆடுமகளிர்- கடலிலே நீராடி விளையாடுகின்ற மகளிருடன் சேர்ந்து. கானல் இழைத்த- கடற்கரைச் சோலையிலே கட்டிய. சிறுமனை புணர்ந்த- சிறிய மணல் வீட்டிலே தலைவன் என்னைக் கண்டு சேர்ந்த. நட்பு- உறவானது. தோழி ஒருநாள் துறைவன் துறப்பின்- தோழியே ஒரு நாள் அக்கடல் துறையை உடையவன் நம்மைக் காணாமல் பிரிந்திருந்தாலும். பல நாள் வரூஉம்- பலநாள் பிரிந்திருப்பதனால் உண்டாகின்ற. இன்னாமைத்தே- துன்பத்தை யுடையதாகும். கருத்து:- தலைவன் சிறிது பொழுது பிரிந்திருந்தாலும், அது எனக்குப் பெரிய துன்பத்தைத் தருகின்றது. விளக்கம்:- இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை தலைவனுடன் என்றும் பிரியாமல் வாழ விரும்பினாள் தலைவி. மணம் புரிந்து கொண்டால் அவ்வாறு வாழ முடியும் என்று தீர்மானித்தாள். தலைவன் மறைவிடத்திலே வந்து தலைவியைச் சந்திக்கக் காத்திருந்த போது, அவள் கருத்தைத் தோழியிடம் உரைத்தாள். இதன் மூலம் தலைவன் உணரும்படி செய்தாள். நெய்தல் திணை. துணைத்த- கட்டிய; தொடுத்த. இன்னாமைத்து- துன்பத்தை யுடையது. ஆறே! உன் கொடுமை அதிகம் பாட்டு 327 தலைவனும், தலைவியும் நீண்ட நாட்களாகக் கள்ளக் காதலிலே ஈடுபட்டு வாழ்ந்தனர். தலைவி விரைவில் தலைவனை மணந்து கொண்டு மனை வாழ்வு நடத்த விரும்பினாள். தலைவன் ஆகட்டும் விரைவில் மணந்து கொண்டு ஏற்பாடு செய்கின்றேன் என்று சொல்லிக் கொண்டே காலங்கடத்திக் கொண்டிருந்தான். தலைவன் இவ்வாறு தட்டிக் கழிப்பது தலைவிக்குப் பிடிக்க வில்லை. அவன் நடத்தை சரியானதன்று. கள்ளக்காதல் வாழ்வை ஊரார் அறிந்து விட்டால் பரிகசிப்பார்களே என்பதைப் பற்றித் தலைவன் கவலைப்படவேயில்லை என்று நினைத்த போது அவளுக்கு அவன் மேல் ஆத்திரம் பிறந்தது. அவன்பால் அன்புடைய தனக்குத் தலைவன் தீங்கிழைப்பதாக நினைத்தாள். ஒரு நாள் தலைவன், அவளைக் காண்பதற்காக வழக்கம் போல் மறைவிடத்திலே வந்து நின்றான்; அப்பொழுது அவன் கொடுமையை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று கருதினாள். உடனே தன் எதிரில், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆற்றை நோக்கிப் பின்வருமாறு பேசினாள். ஏ வெள்ளப் பெருக்குடைய ஆறே! உனக்கு உறவுடைய மலையிலிருந்து வாழையைப் பறித்து இழுத்துக் கொண்டு வருகின்றாய். தலைவன் பால் அன்புடைய எனக்குத் தலைவன் துன்பம் செய்வது போல, உன்பால் அன்புடைய மலைக்கு நீ துன்பம் செய்தாய் என்று உரைத்தாள். இதன் மூலம் தலைவன் என்னை வரைந்து கொள்ளாமல் காலங் கடத்துவது எனக்குத் துன்பம் செய்வதாகும், நன்றியறிவற்ற தன்மையும் ஆகும் என்று அறிவுறுத்தினாள். இச்செய்தியை உரைப்பதே இச் செய்யுளாகும். தீமை நிறைந்த வெள்ளப் பெருக்குடைய ஏ ஆறே நாம் செல்லும் பக்கத்து மனையில் இருக்கும் இளம் பெண், இந்த வாழையைப் போன்ற மெல்லிய தன்மையுள்ளவள்; மிகவும் இரங்கத்தக்கவள் என்று சிறிதுகூட நினைக்க மாட்டாய்; உன் பிறப்புக்கு இடமாகி நின்று, உனக்கு நன்மை செய்யும் மலைப் பக்கத்தின் வளம் அறியும்படி, அங்குள்ள வாழை மரங்களைப் பறித்து இழுத்துக்கொண்டு வருகிறாய். தான் இரக்கங் காட்டினால் தான் வாழ முடியும் என்ற நிலையில் உள்ள வறியவர்கள்பால், இரக்கங் காட்டாமல் இருப்பதுதான் நன்று என்று நினைக் கின்றான் எம் தலைவன்; இதுதான் நன்மையானது என்று உணர்ந்து கொண்டிருக்கின்றான், அந்த மலைநாட்டுத் தலைவன்; அவனைக் காட்டிலும், உனது நிலைமை மிகவும் கொடுமையானதாகும். பாட்டு நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின், நயன் இலர் ஆகுதல் நன்றென உணர்ந்த குன்ற நாடன் தன்னினும், நன்றும் நின்நிலை கொடிதால்: தீய கலுழி! நம் மனை மடமகள் இன்ன மென்மைச் சாயலள், அளியள் என்னாய்! வாழை தந்தனையால் சிலம்பு புல் எனவே. பதவுரை:- தீய கலுழி- தீமை நிறைந்த வெள்ளப் பெருக்குள்ள காட்டாறே. நம்மனை மடமகள்- நாம் செல்லும் பக்கத்து மனையில் உள்ள இளம் பெண். இன்ன மென்மை சாயலாள்- இவ்வாழையைப் போன்ற மெல்லிய தன்மையுடைவள். அளியள்- இரங்கத்தக்கவள். என்னாய்- என்று நினைக்காமல். சிலம்பு புல் எனவே- உனக்கு உறவுள்ள மலைப் பக்கம் பாழாகும்படி - வாழை தந்தனை ஆல்- வாழை மரங்களைப் பறித்து இழுத்துக் கொண்டு வந்தாய். நல்கின் வாழும்- தான் இரக்கங் காட்டினால்தான் வாழும் நிலையில் உள்ள. நல் கூர்ந்தோர் வயின்- வறுமையுற்றவர்களிடம், நயன் இலர் ஆகுதல்- அன்பில்லாமல் நடந்துகொள்ளுவதே. நன்று என உணர்ந்த- நன்மையான செயல் என்று அறிந்த குன்ற நாடன் தன்னினும்- மலை நாட்டுத் தலைவனாகிய எனது காதலனைவிட. நன்றும் நின்நிலை கொடியது ஆல்- மிகவும் உனது நிலமை கொடுமையுள்ளதாகும். கருத்து:- தலைவன் என் விருப்பத்தின்படி மணந்து கொள்ளாமல் ஒழுகுகின்றான்; அவன் கொடியவன். விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. மணந்து கொள்ளாமல் காலங் கடத்திவரும் தலைவன், தலைவியைக் காண மறைவிடத்திலே வந்து நின்றபோது, அவன் கேட்கும்படி, தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. தீயகலுழி என்பது முதல் பின்னுள்ள அடிகளை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. நல்கூர்ந்தோர்- வறியோர்; ஆதரவற்றோர். நயன்- அன்பு கலுழி- வெள்ளம்: இங்கு ஆற்று வெள்ளத்தைக் குறித்தது நன்றும்- மிகவும். சாயல்- மென்மைத் தன்மை.மென்மைச் சாயலள்- மிகவும் மெல்லிய தன்மையுள்ளவள். ஆல்- அசை. தலைவியின் மென்மைத் தன்மைக்கு, வாழையின் மென்மைத் தன்மை உவமை. தலைவன், தன்னுடன் பழகியவரிடம் அன்பில்லா தவன். அதுபோல நீயும் நீ பழகிய மலையிடம் அன்பில்லாமல் அதற்கு அழகைத் தரும் வாழையைப் பறித்துக் கொண்டு வந்தாய். என்று ஆற்றைப் பார்த்து உரைத்தாள். பழிச் சொல்லால் நன்மை தான் விளையும் பாட்டு 328 தலைவியை மணந்து கொள்ளும் பொருட்டுத் தலைவன் பொருள் தேடப் போயிருந்தான். அப்பொழுது தலைவி, அவன் பிரிவை நினைத்து மனம் வருந்திக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தோழி ஆறுதல் கூறினாள். நம்மைப்பற்றி ஊரார் பழி கூறினாலும் அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை; அவர்கள் சொல்லும் பழிமொழிகளால் நமக்கு எத்தகைய இடையூறும் ஏற்படாது; அதற்கு மாறாக நன்மைதான் உண்டாகும்; தலைவன் விரைவிலே வந்து நம்மை மணந்து கொள்ளுவான் என்றாள். இச் செய்தி அடங்கியதே இப்பாடல், சிறிய மலர்களையுடைய புலிநகக் கொன்றை மரத்தின் அடியிலே நண்டுகள் வளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. அந் நண்டுகளின் சிறிய வீடுகள் அழியும்படி அலைகள் வந்து மோதி அழிக்கின்றன. இவ்வாறு அலைவீசும் கடல் குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல் முழங்குகின்றது. இத்தகைய கடல் துறையை உடைய தலைவன், நம்மிடம் இரக்கத்துடன் கூடியிருந்த நாட்கள் சிலவேதான். ஆயினும், இதன் காரணமாகத் தோன்றிய அலரோ மிகவும் பெரிது, விற்படையை யுடைய சேனைகளின் பெருக்கத்தை யுடையவன் விச்சியர்களுக்குத் தலைவனாகிய வேந்தன். அந்த விச்சியர்கோன், தன் பகைவர் களுடன் போர் செய்த பொழுது பாணர்கள் அப்போர்க் களத்திலே புகுந்து நின்றார்கள். அவர்கள் விச்சியர்கோன் படைகளையும், எதிரிகளின் படைகளையும் புலியைப்போல நோக்கினார்கள். அவர்கள் அவ்வாறு நோக்குவதைக் கண்டு, போர் நடக்கும் குறும்பூரில் உள்ளவர்கள் பெரிய ஆரவாரம் புரிந்தார்கள். அவர்களுடைய ஆரவாரத்தைக் காட்டினும், இவ்வூரார் நம்மைப்பற்றி உரைக்கும் அலராகிய பழிச்சொல் பெரிதாக இருக்கின்றது. ஆயினும் அது நமக்கு நன்மையே தரும். பாட்டு சிறுவீ ஞாழல் வேர், அளைப் பள்ளி. அலவன் சிறுமனை சிதையப், புணரி குணில்வாய் முரசின் இரங்கும், துறைவன், நல்கிய நாள் தவச்சிலவே; அலரே, வில் கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரொடு பொருத ஞான்றைப், பாணர் புலி நோக்கு உறழ் நிலைகண்ட கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. பதவுரை:- சிறுவீ ஞாழல் வேர்- சிறிய மலர்களையுடைய புலிநகக் கொன்றையின் வேரிலே அமைக்கப்பட்ட. அளைப்பள்ளி- வளையிடமாகிய. அலவன் சிறு மனை- நண்டின் சிறிய வீடு. சிதைய- அழியும்படி. புணரி- அலைகள் வந்து. குணில்வாய் முரசின்- குறுந்தடியால் அடிக்கப்படும் முரசொலியைப் போல. இரங்கும் - ஓசையிட்டுக்கொண்டு மோதும். துறைவன்- கடல் துறையையுடைய தலைவன். நல்கிய நாள்- நம்மிடம் இரக்கங் காட்டி அன்பைத் தந்த நாள். தவச்சிலவே. மிகச்சில நாட்கள்தாம். அலரே- அதனால் எழுந்த பழியோ. வில்கெழுதானை- வில் யுத்தத்திலே சிறந்த சேனைகளையுடைய. விச்சியர் பெருமகன்- விச்சியர்களின் தலைவன். வேந்தரொடு பொருத ஞான்றை- தன் பகைவரோடு போர் செய்த காலத்தில். பாணர்- பாணர்கள் அப்போர் களத்திலே போய்நின்று. புலிநோக்கு உறழ் நிலைகண்ட- புலியின் பார்வையைப் போலப் பார்க்கின்ற நிலையைக் கண்ட. கலிகெழுகுறும்பூர்-- ஆரவாரம் நிறைந்த குறும்பூரில் உள்ளார் செய்த. ஆர்ப்பினும் பெரிதுஏ- முழக்கத்தைவிடப் பெரியதாகும். கருத்து:- இவ்வூரார் நம்மைப் பற்றிக் கூறும் பழி மிகுந்து விட்டது. விளக்கம்:- அது பரணர் இயற்றிய பாட்டு. தலைவன் மணம் புரிந்து கொள்ளுவதற்காகப் பொருள் தேடப் போயிருந்தான். அப்பொழுது தோழி தலைவியைப் பார்த்து நம்மைப்பற்றி ஊரார் மிகுதியாகப் பழிக்கின்றனர். ஆயினும் அது நமக்கு நன்மையே உண்டாக்கும் என்று உரைத்தாள். தோழி கூற்று. நெய்தல்திணை. அளை- பொந்து. பள்ளி- இடம். குணில்- குறுந்தடி. தவ- மிகவும். விச்சியர் பெருமகன்- விச்சிக்கோ என்னும் வீரன்; இவன் பலருக்கும் உதவி செய்த கொடையாளியாக விளங்கினான். போரிலே சிறந்தவீரன். குறும்பூர் இடம் மன்னவன் போர் செய்த இடம். பாணர்கள் போர்க்களத்திற்குச் சென்று போர் நடப்பதைக் காண்பார்கள். வெற்றி பெற்ற மன்னர்களின் மேல் களவழிப்பாட்டு, பரணி முதலிய பாடல்களைப் பாடுவது வழக்கம். என் கண்கள் தூங்கவில்லையே? பாட்டு 329 தலைவன் பிரிந்திருக்கும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் வருந்தினாள் தலைவி. அவள் துன்பந்தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதாள், இரவிலும் தூங்காமல் துக்கப்பட்டுக் கொண்டேயிருந்தாள். அதைத் தோழி நீ இப்படி அழுவதும், உறங்காமலிருப்பதும் தகாது; துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றாள். அதற்குத் தலைவி என்னால் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்க முடியும்; ஆயினும் என் கண்கள் எனக்கு அடங்கவில்லை. அவைதாமே துக்கத்தை விட்டு விட்டன; அழுகின்றன; நான் என்ன செய்வேன் என்றாள். இந்நிகழ்ச்சியை உரைப்பதே இச் செய்யுள். தோழியே! நான் என்னதான் செய்வேன்! காட்டிலே வளர்ந்திருக்கின்ற இருப்பை மரங்களிலே, வேனிற் காலத்திலே வெண்மையான மலர்கள் நிறைந்திருக்கின்றன. அம்மரத்தின் கிளைகளிலே காற்று வீசுகின்றது. அதனால் அக்கிளைகள் தம்மிடம் உள்ள மலர்களை உதிர்க்கின்றன. அம்மலர்கள் காம்புகளிலிருந்து கழன்று விழுகின்றன. இந்த மலர்கள், யானைகள் நடந்து செல்லும் சிறிய வழிகளிலே பரந்து கிடக்கின்றன. இவ்வாறு விளங்குகின்ற மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியிலே அவர் சென்றார்; அந் நிலத்தைக் கடந்து அவர் பொருள் தேடப் போனார். அவரைப் பற்றியே நான் நினைத்துக் கொண்டிருப்பதனால், மிகுந்த இருள் நிறைந்த நள்ளிரவிலும் என் கண்கள் தூக்கத்தை மறந்தன. தெளிந்த நீர் நிலையிலே, ஒளியுடன் மலர்ந்திருக்கும் பூக்களைப் போன்றவை என் கண். நன்றாக மலர்ந்த குளிர்ந்த என் கண்களிலே குளிர்ந்த நீர்த்துளிகள் எளிதாகத் தோன்றிச் சிந்துகின்றன. ïj‰F eh‹ v‹d jh‹ brŒnt‹! பாட்டு கான இருப்பை, வேனல் வெண்பூ வளிபொரு நெடும் சினை உகுத்தலின், ஆர்கழல்பு. களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்; பிறங்குமலை அரும்சுரம் இறந்தவர்ப் படர்ந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிதாகித், தெள்நீர் நிகர் மலர் புரையும், நன்மலர் மழைக் கணிற்கு எளியவால் பணியே. பதவுரை:- கானம் இருப்பை- காட்டிலே வளர்ந்திருக்கும் இருப்பை மரத்தின். வேனல் வெண்பூ- வேனில் காலத்திலே பூத்த வெண்மையான மலர்கள். வளிபொரு நெடும்சினை- காற்று மோதுகின்ற நீண்ட கிளைகள். உகுத்தலின்- சிந்துவதனால். ஆர்கழல்பு- காம்பிலிருந்து கழன்று. களிறு வழங்கு சிறுநெறி- யானைகள் நடக்கின்ற சிறிய வழிகள். புதைய தாஅம்- மறையும் படி படர்ந்திருக்கின்ற. பிறங்குமலை- விளங்குகின்ற மலைகளை யுடைய. அரும்சுரம்- அரிய பாலைவன வழியை. இறந்தவர் படர்ந்து- கடந்து சென்ற தலைவரை நினைத்து. பயில் இருள் நடுநாள்- மிகுந்த இருட்டுள்ள நள்ளிரவிலும். துயில் அரிது ஆகி- தூங்காமல், தெள்நீர் நிகர் மலர்புரையும்- தெளிந்த நீரிலே பூத்த ஒளி பொருந்திய மலரைப் போன்ற. நன்மலர் மழைக்கணிற்கு- நன்றாக விளங்குகின்ற குளிர்ந்த கண்களுக்கு. பனிஏஎளிய ஆல் குளிர்ந்த துளியைச் சிந்துவது எளிதாயிற்று. கருத்து:- நான் பொறுத்துத்தான் பார்க்கின்றேன்; என் கண்கள் தூங்காமல் வருந்துகின்றன என் செய்வேன்? விளக்கம்:- இது ஓதலாந்தையார் என்னும் புலவர் பாட்டு. பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிரு என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறியது. ‘eh‹ bghW¥ng‹; v‹ f©fŸ bghW¡f Éšiyna; v‹ brŒnt‹? என்று தலைவி கூறினாள். தலைவி கூற்று; பாலைத்திணை. பனி எளிய வால் என்று இறுதித் தொடர்மட்டும் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. தாஅம்; உயிர் அளபெடை, ஏ, ஆல் அசைகள். இருப்பை- இருப்பை மரம். இலுப்பை என்று வழங்குவர். வேனல்- கோடை. வளி - காற்று. படர்ந்து- நினைந்து. துயில் அரிது ஆகி- தூக்கம் இல்லாமல். நிகர் மலர்- ஒளி பொருந்திய மலர். பனி - குளிர்ந்த கண்ணீர்த்துளிகள். இருப்பை மரம் கோடை காலத்திலே பூக்கும். மாலைப் பொழுதும் துன்பமும் அங்கில்லையோ? பாட்டு 330 தலைவன் பொருள் தேடப் போயிருந்த போது, மாலைக் காலத்தைக் கண்டு தலைவி வருந்தினாள். அவள் தன் தோழியைப் பார்த்து இந்த மாலைக் காலமும், தனிமையும் எனக்குத் துன்பத்தைத் தருகின்றன; தலைவர் பிரிந்திருப்பதால் இவை இரண்டும் என்னை வருத்துகின்றன. இந்த மாலையும்; தனிமையும், தலைவர் சென்றிருக்கும் நாட்டில் இல்லையா! இருந்தால் அவை என்னைத் துன்புறுத்துவது போலவே அவரையும் துன்புறுத்தியே தீரும். அவர் அத்துன்பத்தை ஒழிப்பதற்காக என்னிடம் வந்திருப்பார். அவர் சென்ற நாட்டில் இவை இல்லாத காரணத்தால் தான் துன்புறாமல் இருக்கின்றார் என்று நினைக்கிறேன் என்றாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே! துணியை வெளுக்கும் வண்ணாத்தி, துணியைக் கஞ்சிப் பசையிலே தோய்த்து எடுக்கின்றாள். அதை முதல் தடவை அடித்துத் துவைத்து அழுக்கினைப் போக்கியபின் குளிர்ந்த குளத்து நீரிலே போட்டு அலசுகின்றாள். அப்பொழுது அப்பெரிய துணி பிரியாமல் முறுக்கிக் கொண்டு இருக்கின்றது. இந்தத் துணியின் முறுக்கைப்போலப் பெரிய இலையையுடைய பகன்றை மரத்தின் குறுக்குடை மொட்டுகள் காணப்படும். அம் மொட்டுகள் விரிந்த மலர்கள் வெண்மையாகக் காணப்படும். அம்மலர்கள் இனிமையும், கடுமையும் பொருந்திய கள்ளைப் போல நறுமணம் இல்லாமலிருக்கும்; தீ நாற்றம் வீசும்; இக் காட்சியமைந்த துன்பத்தைத் தருகின்ற மாலைக் காலமும், தனிமையும், அவர் சென்ற நாட்டில் இல்லையோ! தோழியே இவை அங்கு இல்லை யென்று தான் நினைக்கின்றேன். பாட்டு நலத்தகைப் புலத்திபசை தோய்த்து எடுத்துத் தலைப் புடைப் போக்கித், தண்கயத்து இட்ட, நீரில் பிரியா பரூ உத்திரி கடுக்கும். போ இலைப் பகன்றைப் பொதி, அவிழ் வான்பூ, இன்கடும் கள்ளின் மணம் இல கமழும்; புன்கண் மாலையும், புலம்பும், இன்று கொல் தோழி அவர் சென்ற நாட்டே. பதவுரை:- நலம்தகைபுலத்தி- நற்குணமும் அழகும் உள்ள வண்ணாத்தி. பசை தோய்த்து எடுத்து- வெளுக்கும் துணியைக் கஞ்சியிலே தோய்த்து எடுத்து. தலைப்புடை போக்கி- முதலில் துவைக்க வேண்டிய முறைப்படி துவைத்துவிட்டு. தண் கயத்து இட்ட- அதன்பின் குளிர்ந்த நீர் நிலையிலே போட்டபின். நீரில் பிரியா- அந்த நீரிலே முறுக்கவிழாமல். பரூஉத்திரிகடுக்கும்- பெரிய துணியின் முறுக்கை ஒத்திருக்கும். பெரு இலை பகன்றை- பெரிய இலையையுடைய பகன்றையின். பொதி அவிழ் வால்பூ- முறுக்குடைய மொட்டுக்கள் விரிந்த வெண்மையான மலர்கள். இன்கடும் கள்ளின்- இனிய கடுமையாகிய கள்ளைப் போல. மணம் இல கமழும்- நறுமணமற்ற பிறமணம் வீசும். புன்கண் மாலையும்- துன்பந்தரும் மாலைக்காலமும்: புலம்பும்- தனிமையும். தோழி அவர் சென்ற நாட்டு ஏ- தோழியே அவர் போயிருக்கும் நாட்டிலே. இன்று கொல்- இல்லையோ. கருத்து:- மாலைக் காலமும், தனிமையும் எனக்குத் துன்பத்தைத் தருகின்றன. விளக்கம்:- இது கழார்க்கீரன் எயிற்றியன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிந்திருக்கும் போது தலைவி, அவன் போயிருக்கும் நாட்டிலே, மாலைக்காலமும், தனிமையும் இல்லையோ என்று வருந்திக் கூறினாள். தலைவி கூற்று. மருதத்திணை. அவர் சென்ற நாட்டு ஏ இன்று கொல் என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. பரூஉ; உயிர் அளபெடை. ஏ- அசை. நலம்- நன்மை. தகை- அழகு. புலைத்தி- வண்ணாத்தி. பசை- கஞ்சிப்பசை. தலைப்புடை- முதல்துவைப்பு. பரூஉத்திரி- பெரிய துணியின் முறுக்கு. பகன்றை ஒரு வகை வெண்மையான மலர். பகன்றையின் மொட்டு தோற்றத்தில் முறுக்கிய துணியைப் போல் காணப்படும். முறுக்கிய துணி பகன்றை மொட்டுக்கு உவமானம். அம்மலரின் மணம், கள் நாற்றம் போல் வெறுக்கும் தன்மை யுள்ளதாக இருக்கும். புன்கண்- துன்பம். புலம்பு- தனிமை. அரும் பொருளுக்காக அவர் பிரியார் பாட்டு 331 தலைவன் பொருள் தேடச் செல்வதற்கு நினைத்தான்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். தலைவியிடம் தன் எண்ணத்தைத் தெரிவிப்பதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தலைவனுடைய நினைப்பைத் தலைவி அறிந்து கொண்டாள். அவன் பிரிந்து சென்றால் என்ன செய்வது என்ற எண்ணம் அவளை வாட்டத்தொடங்கியது. இதை அறிந்த தோழி தலைவிக்குச் சமாதானம் சொன்னாள். தலைவன் பாலைவன வழியைக் கடந்துதான் போக வேண்டும். அவ்வழியிலே இரக்கமற்ற மறவர்கள் திரிவார்கள்; அவர்கள் வழிச் செல்வோரைக் கொல்லும் கொடுந்தன்மையுள்ளவர்கள். அவ்வழியைப் பற்றித் தலைவனுக்குத் தெரியும். ஆதலால் அவன் நம்மை விட்டுப் பிரிந்து போக மாட்டான் என்று பாலைவனத்தின் கொடுமையை எடுத்துரைத்தாள் தோழி. இச்செய்தியை உரைக்கின்றது இப்பாட்டு. தோழியே! அவர் கடந்து செல்ல வேண்டிய பாலை நில வழி மிகவும் கொடுமை நிறைந்தது. அங்கே வளர்ந்த மூங்கில் குருத்துக்கள் காய்ந்து நிற்கும்; நீரில்லாமல் வறண்டு போயிருக்கும் வழி, நடந்து செல்ல முடியாமல் முள்ளும், கல்லும், ஏற்றத்தாழ்வும் பொருந்திய வழி. வழி நடந்து செல்லும் புதியவர்கள் இறக்கும்படி அவர்களை எதிர்த்து, கொடுமையான வில்லையுடைய மறவர்கள் அம்பெய்வார்கள்; காட்டிலே கொள்ளையடிப்பார்கள். இவர் களைத் தவிர அஞ்சாத்தன்மையுள்ள யானைகள் அலைந்து கொண்டிருக்கும். இத்தகைய கொடுமையான வழி அது. நல்ல வடுக்கள் நிறைந்த பசுமையான மாமரத்தின் அழகிய தளிர் போன்ற நமது ஒளி பொருந்திய உடம்பு பசலை நிறம் பெறும்படி அவர் பிரிந்து போக மாட்டார். நம்மைக் காட்டினும் சிறந்த தென்று அவர் நினைக்கும் அரிய செல்வத்தைத் தேடுவதற்காக அவர் அந்தக் கொடுவழியிலே போக நினைக்க மாட்டார். பாட்டு நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை, ஆறு செல் வம்பலர் தொலைய, மாறுநின்று, கொடும் சிலை மறவர்கடறு கூட்டுண்ணும், கடுங்கண் யானைக், கானம் நீந்தி இறப்பர் கொல்? வாழி! தோழி! நறுவடிப் பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன, நன் மா மேனி பசப்ப, நம்மினும் சிறந்த அரும்பொருள் தரற்கே. பதவுரை:- வாழி! தோழி- வருந்தாதே வாழ்க தோழியே. நறுவடி -நல்ல வடுவையுடைய. பைம் கால் மாத்து- பசுமையான அடியையுடைய மாமரத்தின். அம்தளிர் அன்ன- அழகிய தளிரைப் போன்ற. நம் மா மேனி- நமது நல்ல ஒளியமைந்த உடம்பின் நிறம். பசப்ப- பசலை நிறமாகும்படி. நம்மினும் சிறந்த- நம்மைவிடச் சிறந்ததென்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும். அரும் பொருள் தரற்கு- அரிய செல்வத்தைத் தேடிக் கொண்டு வருவதற்காக. நெடும் மழை திரங்கிய- நீண்ட மூங்கில்கள் காய்ந்து போயிருக்கின்ற. நீர் இல் ஆர் இடை- தண்ணீர் இல்லாத அரிய வழியிலே. ஆறு செல் வம்பலர் தொலைய- வழி நடந்து செல்லும் புதியவர்கள் இறக்கும்படி. மாறுநின்று- எதிர்நின்று. கொடும் சிலை மறவர்- அம்பெய்யும் கொடுமையான வில்லையுடைய மறவர்கள். கடறு கூட்டுண்ணும்- காட்டிலே கொள்ளையடித்து உண்பதையே வாழ்க்கையாக உடையவர்கள். கடும் கண் யானை- அஞ்சாமையுள்ள யானைகளும் திரிந்து கொண்டிருக்கும். கானம் நீந்தி- இத்தகைய காட்டைக் கடந்து. இறப்பர் கொல்- அவர் செல்வாரோ? (செல்ல மாட்டார். ஆதலால் வருந்த வேண்டாம்.) கருத்து:- அவர் செல்ல வேண்டிய பாலைவனத்தின் கொடுமையை நினைத்தால், அவர் பொருள் தேடப் பிரிந்து செல்ல மாட்டார். விளக்கம்:- இது வாடாப் பிரமந்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பொருள் தேடப் பிரிவானோ என்று எண்ணி வருந்தினாள் தலைவி; அவளுக்குத் தோழி கூறியது. பாலைத்திணை. வாழி தோழி நறுவடி என்பது முதல் பின் உள்ள அடிகளை முன் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. மாஅத்து; உயிர் அளபெடை. ஏ- அசை. கழை- மூங்கில். திரங்கிய- காய்ந்திருக்கின்ற. ஆர்இடை- துன்பம் நிறைந்த வழி. கடறு - காடு. மாமேனி - ஒளி பொருந்திய மேனி. உன் துன்பத்தை உரைத்தால் என்ன? பாட்டு 332 தலைவனும் தலைவியும் காதல் மணவாழ்வு நடத்தி வந்தனர். விரைவில் அவர்கள் கற்புமணம் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்பது தோழியின் விருப்பம். தலைவியின் ஆவலும் இதுதான். தலைவனும் விரைவில் மணந்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்தானே அன்றி அதற்கான ஏற்பாடு ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறு இருக்கும் போது, ஒரு நாள் தலைவன் வந்தான். வழக்கம் போல் தலைவியைக் காண்பதற்காக மறைவிடத்திலே நின்றான். அப்பொழுது தோழி தலைவியைப் பார்த்துத் தலைவன் மணந்து கொள்ளாமையால் நீ படும் துன்பத்தை நீயே அவனிடம் விளக்கமாக ஏன் எடுத்துரைக்கக் கூடாது! தானே தெரிந்து கொள்ளாதவனுக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும்? brhšyhkÈUªjhš c‹ J‹gªjh‹ v¥go¤ ÔU«? என்றாள் தோழி. இச்செய்தியைக் கூறுவதே இப்பாட்டு. தோழியே! இனியும் காலந்தாழ்த்துவதிலே பயன் இல்லை. அவனுடைய மலையிலே உள்ள ஆண் யானை, மணம் வீசும்படி மூச்சுவிடுகின்ற அழகிய பெண் யானையைத், தன் நீண்ட கைகளால் தழுவிக் கொள்ளும், அவ்வாறு தழுவிக் கொண்டு அக்குன்றிலே உள்ள சிற்றூரை நோக்கிச் செல்லும். அவ்வூரின் கண் உள்ள பொது இடத்தை யடையும். இக்காட்சியுள்ள மலையின் தலைவனாகிய அவனிடம் வாடைக்காற்றும், மழைத் துளிகள் சிலவும் வீசுகின்ற கடையாமத்திலே, வருத்தத்திலே கடந்து உழலும், நின்னுடைய கொடுந்துயர் நீங்கும்படி, நீ விரும்பிக் கூறினால் என்ன? m¥bghGjhtJ mt‹ ÉiuÉš kzªJ bfhŸs K‹tukh£lhndh? பாட்டு வந்த வாடைச் சில்பெயல் கடைநாள், நோய்நீந்து அரும்படர் தீர, நீ நயந்து, கூறின் எவனோ? தோழி! நாறு உயிர் மடப்பிடி தழீஇத் தடக்கை யானை, குன்றச் சிறுகுடி இழிதரும் மன்றம் நண்ணிய மலைகிழ வோற்கே. பதவுரை:- தோழி நாறு உயிர்- தோழியே மணம் வீசும்படி மூச்சுவிடுகின்ற. மடம்பிடி தழீஇ - அழகிய பெண் யானையைத் தழுவிக்கொண்டு, தடம்கையானை- நீண்ட கையையுடைய ஆண் யானை. குன்றம் நண்ணிய- மலையிலே பொருந்திய. சிறுகுடி இழி தரும் - சிற்றூரை நோக்கி இறங்கிச் செல்லுகின்ற. மலை கிழவோற்கு ஏ- மலையையுடைய தலைவனுக்கு. வந்த வாடை- வந்து வீசுகின்ற குளிரும். சில்பெயல் - சில மழைத் துளிகளும் உடைய. கடைநாள்- கடைசிச்சாமத்திலே. நோய் நீந்து- காமநோயிலே கிடந்து நீந்திக் கொண்டிருக்கின்ற. அரும்படர் தீர்- கொடிய துன்பத்தை நீக்கும்படி. நீ நயந்து- நீ விரும்பி. கூறின் எவன் ஏ- (அவனிடம்) கூறினால் என்ன? (ஏன் கூறக் கூடாது?) கருத்து:- தலைவியே உனது துன்பத்தின் கொடுமையைத் தலைவனுக்கு நீயே எடுத்துரைக்க வேண்டும். விளக்கம்:- இது மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் என்னும் புலவர் பாட்டு. தோழி, தலைவியைப் பார்த்து வரைந்து கொள்ளாமல் காலம் போக்கும் தலைவனிடம் உனது துன்பத்தை நீயே ஏன் சொல்லக் கூடாது என்றுகேட்டாள். தோழி கூற்று. குறிஞ்சித்திணை. தோழி நாறு உயிர் என்பது முதல் உள்ள இறுதி அடிகளை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. தழீஇ; உயிர் அளபெடை. ஓ.ஏ. அசைகள். சில் பெயல் - சில மழைத்துளிகள்; சிறு தூற்றல். கடைநாள் - கடைச்சாமம்; இரவின்கடை. படர் - துன்பம். உயிர் - மூச்சு தடக்கை - யானை மடப்பிடியைத் தழுவிச் செல்லும் என்ற குறிப்பு தலைவியைத் தலைவன் வெளிப்படையாக மணந்து கொண்டு பலரும் காண இன்புற்று வாழ வேண்டும் என்னும் கருத்தைத் கொண்டதாகும். நமது இரகசியத்தை வெளியிட்டால் என்ன? பாட்டு 333 தலைவனும் தலைவியும் காதல் வாழ்வு நடத்தி வந்தனர். தலைவியின் நடத்தையிலே அவளுடைய பெற்றோருக்கு ஐயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தலைவியைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டனர். அவளைப் பகலிலும் இரவிலும் வெளியில் செல்லாதபடி காத்து வந்தனர். அதனால் தலைவன் அவளைச் சந்திக்க முடியாமல் தவித்தான். தலைவியும் தலைவனைக் காண முடியாமல் வருந்தியிருந்தாள். நாளுக்கு நாள் அவள் துன்பம் வளர்ந்து வந்தது. இதைக்கண்ட தோழி தலைவியைப் பார்த்து தலைவனுடைய துன்பம் நீங்கும்படி நம்முடைய இரகசியத்தை நம் அன்னையிடம் வெளிப்படுத்தி விட்டால் என்ன? தலைவன் பெண் கேட்க வரும்போது நம் பெற்றோர், அவனுக்கு நம்மை மணம் செய்து கொடுக்க எளிதில் இணங்கி விடுவார்கள் அல்லவா? ஆதலால் தலைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை வெளியிடுவதுதான் நலம் என்றாள். இப்பொருளை அமைத்துக் கூறுவதே இச் செய்யுள். தோழியே தினைப்புனத்தை மேயவந்த யானையைக் குறுகிய அம்பையும் வளைந்த வில்லையும் உடைய வேட்டுவன் விரட்டி யடிக்கிறான். நல்ல தழைகளை அணிந்த மகளிர் தினைப்புனத்தை மேய வரும் கிளிகளை விரட்டுகின்றனர். அதனால் பசுமையான கண்களையுடைய யானையும், கிளிகளும் குறுகிய பாராங் கற்களின் மேல் சென்று நிற்பதற்காக அவற்றை அண்ணாந்து பார்க்கின்றனர். இத்தகைய மலைநாட்டையுடைய நமது தலைவன் நம்மை மணந்து கொள்ளுவதற்காகச் செய்யும் முயற்சி நிறைவேறாமலிருக்கின்ற துன்பம் நீங்கும்படி நாமும் துணை செய்ய வேண்டும். ஆகையால் நமது மறையை- இரகசியத்தை- அன்னையிடம் துணிந்து கூறிவிட்டால் என்ன? அதனால் நமது தலைவன் பணியும் எளிதாகும்; நமக்கும் நன்மையாக முடியும். பாட்டு குறும்படைப் பகழிக் கொடுவில் கானவன் புனம் உண்டு, கடிந்த, பைம்கண் யானை, நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையோடு, குறும்பொறைக்கு அணவும் குன்ற நாடன் பணிக்குறை வருத்தம் வீடத், துணியின் எவனோ? தோழி நம் மறையே. பதவுரை:- குறும் படைப்பகழி- குறிய படையாகிய அம்பையும். கொடுவில்- வளைந்த வில்லையும் உடைய. கானவன்- வேடன். புனம் உண்டு- தினைப் புனத்தை மேய்ந்ததனால். கடிந்த- அம்பை எய்து ஒட்டிய. பைம் கண் யானை- பசுமையான கண்களையுடைய யானையும். நறும் தழை மகளிர்- நல்ல தழையை உடையாக அணிந்த பெண்கள். ஓப்பும் கிள்ளையொடு- தினையை மேயாமல் ஓட்டுகின்ற கிளிகளுடன். குறும் பொறைக்கு- குறுகிய பாராங்கல்லை அடைவதற்காக. அணவும் - அண்ணாந்து பார்க்கின்ற. குன்றநாடன் - மலை நாட்டையுடைய தலைவன். பணிக்குறை- செய்யும் பணி நிறைவேறாததால் வரும் வருத்தம். வீட - துன்பம் ஒழியும்படி. தோழி நம் மறையே - தோழியே நமது இரகசியத்தை - (தலைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை) துணியின் எவன் ஓ- சொல்லத் துணிந்து விட்டால் என்ன? கருத்து:- அன்னையிடம் உண்மையை உரைத்து அறநெறியிலே நிற்பேன். விளக்கம்:- இது உழுந்தினைம் புலவன் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி அன்னையிடம் உண்மையை உரைத்து, நம்மை விரும்பி வரும் தலைவன் மண மகனாக ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன் என்றாள். குறிஞ்சித்திணை. தோழி நம் மறையே துணியின் எவனோ என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. பகழி- அம்பு. புனம் - தினைப்புனம். பொறை- பாராங்கல். அணவும்- அண்ணாந்து நோக்கும். பணிக்குறை- முயற்சி முடியாமை. வீட - அழிய. அவன் இன்றேல் யான் வாழேன் பாட்டு 334 ஒருநாள் தன் தலைவியைப் பார்த்துத் தோழி கேட்டாள்: நீயும் அவனும் எத்தனை காலந்தான் இப்படி மறைந்து வாழ முடியும்? என்னை அவன் மணந்து கொண்டால்தானே ஒரு கவலையும் இல்லாமல் இன்புற்று வாழலாம்? உன்னை மணந்து கொள்ளும் பொருட்டு அவன் பொருள் தேடப் போக வேண்டும். அவன் பிரிந்து போவானாயின் அப்பொழுது, அவன் இல்லாமை யால் உண்டாகும் துன்பத்தை உன்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? அத்தகைய வல்லமை உனக்கு உண்டா? என்று கேட்டாள். அதற்குத் தலைவி, அவன் பிரிந்து சென்றால் என்னுடைய உயிர்தான் போகும்; அதைத்தவிர என்னை விட்டு நீங்குவது வேறொன்றும் இல்லை என்றாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே நமது காதலன் கடல்துறையின் தலைவன் அவனுடைய கடற்கரையிலே சிவந்த வாயையுடைய சிறிய வெண்ணிறக் காகங்கள் கூட்டமாக வாழும்; கடலிலேயிருந்து கரையை நோக்கி வந்து மோதி அடிக்கின்ற அலைகளிலிருந்து வீசும் நீர்த்துளிகள். அக்காக்கைகளின் ஈரமான முதுகை நனைத்து விடுகின்றன. அதனால் அவை குளிரை வெறுத்துக் கொண்டு அங்கேயே தங்கியிருக்கின்றன. கடற்கரைச் சோலையிலே பலவிதமான மலர்கள் வீழ்ந்து பரவிக் கிடக்கின்றன. இத்தகைய கடல் துறையையுடைய தலைவன், நம்மை விட்டுப் பிரிவானாயின் அத்துன்பத்தை என்னால் எப்படிப் பொறுக்க முடியும்? அவன் பிரிவால் நாம் இழக்கப்போவது நமது அருமையான ஒப்பற்ற உயிரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பாட்டு சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு, எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்பப் பனிபுலந்து உறையும், பல்பூம் கானல், விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று எவனோ? தோழி நாம் இழப்பதுவே. பதவுரை:- சிறு வெண்காக்கை- சிறிய வெண்மையான காக்கையின். செவ்வாய் பெரும் தோடு- சிவந்த வாயையுடைய பெரிய தொகுதி. எறிதிரைத் திவலை - வீசுகின்ற அலைகளின் துளிகள். ஈர்ம்புறம் நனைப்ப- ஈரம் உள்ள முதுகுப் புறத்தை நனைப்பதனால் உண்டான. பனி புலந்து உறையும்- குளிச்சையை வெறுத்துக் கொண்டு அங்கேயே உறைகின்ற. பல்பூ கானல்- பல பூக்கள் உதிர்ந்து கிடக்கின்ற கடற்கரைச் சோலையையுடைய. விரிநீர்ச் சேர்ப்பன்- பெரிய நீர் நிறைந்த கடற்கரையின் தலைவன். நீப்பின்- நம்மை விட்டுப் பிரிந்தால். தோழி நாம் இழப்பது- தோழியே, நாம் இழந்து விடுவது. ஒரு நம் இன் உயிர் அல்லது- ஒப்பற்ற நமது இனிய உயிரைத்தவிர. பிறிது ஒன்று எவன் ஓ- வேறு ஒன்று என்ன? ஒன்றும் இல்லை. கருத்து:- தலைவன் பிரிந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் விளக்கம்: இது, இளம்பூதனார், என்னும் புலவர் பாட்டு. தலைவியைப் பார்த்து, தலைவன் பொருள் தேடப் பிரிந்தால் நீ அவன் வரும் வரையிலும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருப் பாயோ என்று கேட்டாள் தோழி. அதற்குத் தலைவி உரைத்த மறுமொழியே இச்செய்யுள். தலைவி கூற்று. நெய்தல் திணை. தோழி நாம் இழப்பதுவே, ஒரு நம் இன் உயிர் அல்லது பிறிது ஒன்று எவன் ஓ என்று இறுதியடிகளில் மட்டும் பதங்கள் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. ஓ, ஏஅசைகள். பெருந்தோடு- பெரிய கூட்டம். தோடு- தொகுதி; கூட்டம். திவலை- நீர்த்துளிகள். புறம் - முதுகு. பனி- குளிர். எவன்- என்ன. தலைவனும், தலைவியும் கள்ளக் காதலர்களாயினும், அவர்கள். என்றும் பிரியாத இயல்புள்ளவர்கள்; தலைவியின் உயிரும்; தலைவனின் உயிரும் ஒன்று என்னும்படி காதல் கொண்டு வாழ்ந்தனர் என்ற கருத்தை இப்பாடல் கொண்டிருக்கின்றது. இரவிலே அவளைக் காண முடியாது பாட்டு 335 தலைவனும்; தலைவியும் பகற் காலத்திலே அடிக்கடி சந்திப்பார்கள். காதல் மிகுந்து களித்து மகிழ்ந்தார்கள். அவர்களிடையே இவ்வாறு களவு மணவாழ்வு நடந்து கொண்டி ருந்தது. இச்சமயத்தில் தலைவியை வீட்டில் பாதுகாப்பில் வைத்துவிட அவளுடைய பெற்றோர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்தாள் தோழி. தலைவனிடம் இவ்வுண்மையை உரைத்தாள். அப்பொழுது அவன் இனி இரவிலே வந்து தலைவியைச் சந்திக்கின்றேன் என்றான். அதற்குத் தோழி தலைவனே! நீ செய்ய நினைக்கும் செயல் கொடுமையானது; உனக்கும் என் தலைவிக்கும் ஆபத்தை உண்டாக்கக் கூடியதுமாகும். தலைவியின் ஊர் மலையிலே இருக்கின்றது. தலைவியின் அண்ணன் மார்களோ நீண்ட அம்புகளையும், வலிமையான வில்லையும் உடையவர்கள். காட்டிலே வேட்டையாடுவதிலே வல்லவர்கள். ஆதலால் இரவிலே வந்து தலைவியைக் காண்பது என்பது ஆபத்தானது; ஆகையால், எப்படியாவது அவளை நீ மணந்து கொள்ள முயல்வதுதான் நலம் என்று உரைத்தாள். இச் செய்தியை உரைப்பதுதான் இப்பாடல். தலைவனே! பெரிய தோள்களையுடைய தலைவி, வேட்டை யாடுவதிலே வல்லவர்களின் தங்கை. அவர்கள் அவளுடைய அண்ணன்மார்கள் நீண்ட அம்புகளையும், வலிமையுள்ள வில்லையும் வைத்திருப்பவர்கள். அவள் வாழும் ஊர் மலையின் மேல் இருக்கின்றது. அந்த மலையிலே குரங்குகள் நிறைந் திருக்கின்றன. வரிசையாக முன்கையிலே வளையல்களையும், அழகான அணிகலன்களையும் அணிந்திருக்கும் பெண்கள், பெரிய கல்லின் அகலமான இடத்திலே சிவந்த தினையைக் காய வைத்திருப்பார்கள். அவர்கள் சுனைநீரிலே இறங்கி நீராடுவார்கள். மரக்கிளைகளிலே உட்கார்ந்து அச்சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெண் குரங்குகள், தம் குட்டிகளுடன் இறங்கி வந்து, காய வைத்திருக்கும் தினைகளைக் கவர்ந்து செல்லும். இத்தகைய மலையிலேதான்; தலைவியின் ஊர் அமைந்திருக் கின்றது. ஊரோ மலையின்மேல் இருக்கின்றது; அவள் அண்ணன்மார்களோ கொடியவர்கள்; ஆதலால் நீ இரவிலே வந்து தலைவியைச் சந்திப்பது எப்படி? அது அவ்வளவு எளிதான காரியம் அன்று. பாட்டு நிரைவளை முன்கை நேர் இழை மகளிர், இரும்கல் வியல் அறைச் செந்தினை பரப்பிச், சுனைபாய் சோர்வு இடை, நோக்கிச் சினை இழிந்து பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும், வெற்பிடை நண்ணி யதுவே; வார்கோல் வல்வில் கானவர் தங்கைப், பெருந்தோள் கொடிச்சி, இருந்த ஊரே. பதவுரை:- வார்கோல் - நீண்ட அம்புகளையும். வல்வில்- வலிமைபொருந்திய வில்லையும் உடைய; கானவர்- வேடர்களின். தங்கை- தங்கையாகிய. பெரும்தோள் கொடிச்சி- பெரிய தோள் களையுடைய தலைவி, இருந்த ஊர்- இருக்கின்ற ஊர். நிரைவளை முன்கை- வரிசையான வளையல்களைப் பூண்ட முன்கையும். நேர் இழை- அழகான ஆபரணங்களையும் பூண்ட. மகளிர்- பெண்கள். இருங்கல் வியல் அறை- பெரிய கல்லின் மேல் அகன்ற இடத்திலே. செந்தினை பரப்பி- சிவந்த தினையைக் காயும் பொருட்டுப் பரப்பி வைத்து விட்டு. சுனைபாய்- அவர்கள் சுனையிலே இறங்கி நீராடு கின்ற. சோர்வு இடை நோக்கி- காவலற்ற சமயத்தைப் பார்த்து. சினையிழிந்து - மரக்கிளையிலிருந்து இறங்கி வந்து. பைம் கண் மந்தி - பசுமையான கண்களையுடைய பெண் குரங்குகள். பார்ப்பொடு கவரும்- தம் குட்டிகளுடன் அத்தினையைக் கவர்ந்து செல்லும். வெற்பு இடை- மலையினிடத்திலே. நண்ணியதுவே- அமைந்திருக்கிறது. கருத்து:- தலைவியை இரவிலே கண்டு அளவளாவுதல் அரிது. அவள் ஊர் மலையில் உள்ளது. அவள் அண்ணன்மார்களும் கொடியவர்கள். விளக்கம்:- இது இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்னும் புலவர் பாட்டு. இரவிலே வந்து தலைவியைச் சந்திக்க விரும்பிய தலைவனுக்குத் தோழி கூறியது. குறிஞ்சித்திணை. வார்கோல் என்பது முதல் பின் இரண்டு அடிகளையும் முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஏ- அசை. நிரை வளை- வரிசையான வளையல். நேர் இழை. பொருத்தமான அணிகலன் என்றும் கூறலாம். சோர்வு உடை- காவலிலே தளர்ச்சி நேர்ந்த சமயம். பார்ப்பு- குரங்குக்குட்டி. தலைவியை மணந்து கொள்ள முயற்சிப்பது தான் நல்வழி; இரவிலே அவளைச் சந்தித்து இன்புற விரும்புவது அவ்வளவு எளிதன்று; அதனால் நன்மையும் இல்லை, என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்தினாள். இரவில் வருவதால் இன்பமில்லை பாட்டு 336 தலைவனும் தலைவியும் பகலிலே சந்திக்க முடியாத நிலைமை உண்டாகிவிட்டது. அப்பொழுது, தலைவன் தோழியிடம் வந்தான்; இனி நான் இரவிலே ஒரு குறித்த இடத்திலே வந்து தலைவியைக் காண விரும்புகிறேன், என்று வேண்டிக்கொண்டான். அதற்குத் தோழி தலைவனே நீ விரும்புவது நல்லதன்று; இரவிலே நீ வரும்போது எப்படியும் ஊரார் அறிந்து விடுவர். அதனால் பழிச் சொல் பிறக்கும். ஆகையால் நீ முறைப்படி தலைவியை மணம் புரிந்து கொண்டு வாழ்வதுதான் நல்லது. இதுதான் தலைவியின் துன்பத்தைத் தணிக்கும் வழியும் ஆகும் என்றாள். இவ்வாறு கூறித் தலைவனை மணம் புரிந்து கொள்ளும் படி வலியுறுத்தினாள் தோழி. இந்நிகழ்ச்சியை உரைப்பதே இச் செய்யுள். மலர்களிலிருந்து தேன் சிந்திப் பாய்கின்ற நீர்த்துறையை உடைய தலைவனே! நீ நினைக்கும் எண்ணத்தால் பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகும். என் தலைவிக்குத் துன்பம் உண்டாகும். இவ்வாறு எதிரிக்கு இன்பமும் நண்பர்க்குத் துன்பமும் உண்டாகும் படி நீ இரவிலே வர நினைப்பது அறிவுடைமை யாகாது. ஆதலால் இவ்வெண்ணத்தைக் கைவிடு; உன் காதலியை முறைப்படி மணந்து கொள்ள முயற்சி செய். நீ பிரிந்ததனால்- உன்னைக் காண முடியாமையால் தலைவி மிகவும் வருந்தியிருக்கிறாள். சிறிய நாக்கையுடைய ஒளி பொருந்திய மணிகள் விளரிப் பண்ணைப் போல் ஆரவாரிக்கும்படி விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் சக்கரம் ஏறியதால் மெலிந்த நெய்தல் மலரைப் போலத் தலைவி வாடிப் போனாள்; தனது நிலையழிந்தாள். ஆதலால் அவள் மிகவும் இரங்கத்தக்கவள். பாட்டு செறுவர்க்கு உவகை யாகத், தெறுவர, ஈங்கனம் வருபவோ; தேம்பாய் துறைவ சிறு நாஒள் மணி விளரி ஆர்ப்ப, கடும் நெடுந்தேர் நேமி போகிய, இரும்கழி நெய்தல் போல, வருந்தினள்; அளியள்; நீ பிரிந்திசினோளே. பதவுரை:- செறுவர்க்கு உவகையாக- பகைவர்க்கு மகிழ்ச்சி யுண்டாகும்படியும். தெறுவர- எமக்குத்துன்பம் உண்டாகும் படியும். ஈங்கினம் வருபவோ - இவ்வாறு அறிஞர்கள் வரத்துணி வார்களா? தேம்பாய் துறைவ- தேன்பரவுகின்ற நீர்த் துறையை உடைய தலைவனே. சிறுநா ஒள்மணி- சிறிய நாக்கையுடைய ஒளி பொருந்திய மணிகள். விளரி ஆர்ப்ப- விளரிப் பண்ணைப் போல் ஆரவாரிக்க. கடுமா- விரைந்து வரும் குதிரைகள் பூட்டிய. நெடும்தேர்- பெரிய தேரின். நெமிபோகிய- சக்கரம் ஏறியதனால் சீரழிந்த. இரும்கழி நெய்தல் போல- பெரிய கழியிலே பூத்த நெய்தல் மலரைப்போல. நீ பிரிந்திசினோள் ஏ- நீ பிரிந்த தலைவி. வருந்தினள்- வருந்திக் கொண்டிருக்கின்றாள். அளியள்- அவள் மிகவும் இரங்கத்தக்கவள். கருத்து:- நீ இரவிலே வருதல் தகாது; அவளை மணந்து கொள்ளுதல்தான் நலன். விளக்கம்:- இது குன்றியன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் தோழியிடம் வந்து இரவிலே தலைவியைக் காண்பதற்குத் துணை செய்ய வேண்டும் என்று வேண்டினான். அப்பொழுது தோழி தலைவனுக்குக் கூறிய அறிவுரை. நெய்தல் திணை. நீ பிரிந்திசினோள் ஏ வருந்தினள் அளியள் என்று இறுதியடி மட்டும் மாற்றப்பட்டது. செறுவர்- பகைவர். தெறு- துன்பம், தேம்- தேன். விளரி- நெய்தல் நிலத்திற்குரிய பண். இது இரக்கத்தைக் காட்டும் இசை. முகாரிராகம் போன்றது. ஏ அசை. தலைவியின் வாடிய தோற்றத்திற்கு, தேர்ச்சக்கரம் ஏறிக் கசங்கிய நெய்தல் மலர் உவமை. நீ இரவிலே தலைவியைத் தேடிவருவதால், வழியிலே உனக்குத் துன்பம் உண்டாகலாம். அது உன் பகைவர்க்கு மகிழ்ச்சியைத்தரும். ஆதலால் உன் பகைவர் கண்டு மகிழ்கின்ற செயலை நீ செய்வது உனக்கு அறிவுடைமையாகாது என்று தோழி அறிவுறுத்தும் கருத்தும் இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது. அவள் சிறுமி அல்லள் பாட்டு 337 தலைவியைக் கண்டு காதலுற்றான் தலைமகன். அவன் மீண்டும் அவளைச் சந்திக்க முடியவில்லை. ஒரு முறை சந்தித்தான் அவளுடைய அழகிலே வீழ்ந்து விட்டான்; அதன்பிறகு அவளைக் காண்பதற்கு எத்தனையோ தடவை முயன்றான்; முடியவில்லை. அதனால், அவன், அத்தலைவியின் தோழியண்டை வந்தான். தனக்கும் தலைவிக்கும் எப்படியாவது சந்திப்பை உண்டாக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். தோழி, அவள் அறியாப் பருவமுள்ளவள், சிறுமி. அவளால் உனக்கு என்ன பயன்? ஆதலால் அவளைச் சந்திக்க முடியாது, இதற்கு நான் துணை நிற்கவும் இயலாது என்றாள். உடனே தலைவன் நீ கூறுவது பொய்! நான் நம்ப மாட்டேன்; அவள் மங்கைப் பருவம் வாய்ந்தவள்; அவளை நான் கண்ட போது, அவள் என்னைத் துன்புறுத்தி விட்டாள்; அவளை நான் அறிவேன் என்று கூறினான். தலைவியின் தோற்றத்தைத் தான் கண்டவிதம் பற்றி எடுத்துரைத்தான். இதைப்பற்றி உரைப்பதே இப்பாடல். அவளுடைய முலைகளின் முனைகள் அரும்பியிருக் கின்றன. தலையிலே அடர்ந்த மெல்லிய மயிர்க்கொத்து வளர்ந்து தொங்குகின்றது. நெருங்கி வரிசையாக இருக்கின்ற பற்கள், விழுந்து முளைத்தவை. அவளுடைய உறுப்புகளிலே சிலச்சில தேமல் புள்ளிகளும் தோன்றிவிட்டன. அவள் என்னைத் துன்புறுத்தும் இந்நிலையிலே நான் அறிவேன். ஆனால் அவள் என்னை அறியமாட்டாள். பெரிய பழைய செல்வக்குடியிலே பிறந்தவள் அவள்; ஒப்பற்ற அழகு நிறைந்தவள்; அவள் எத்தன்மை யுள்ளவளோ? என்னிடம் இரக்கம் பாராட்டும் இயல்புள்ளவளோ அல்லளோ அறியேன். பாட்டு முலையே முகிழ் முகிழ்த்தனவே; தலையே கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந்தனவே; செறிநிரை வெண்பலும் பறி முறை நிரம்பின; சுணங்கும் சில தோன்றினவே; அணங்குதற்கு யான் தன் அறிவலே; தான் அறியலளே; யாங் காகுவள் கொல்தானே; பெருமுது செல்வர் ஒரு மட மகளே பதவுரை:- முலையே முகிழ்முகிழ்த்தன- முலைகளில் அரும்புகள் தோன்றின. தலையே- தலையிலே. கிளைஇய மென்குரல்- அடர்ந்து வளர்ந்த மெல்லிய மயிர்க்கொத்து. கிழக்கு வீழ்ந்தன- வளர்ந்து கீழே தொங்கின. செறிநிரை வெண்பலும்- நெருங்கி வரிசையாக இருக்கின்ற வெண்மையான பற்களும். பறிமுறை நிரம்பின- விழுந்து பிறகு முறையாக முளைத்தவை. சுணங்கும் சில தோன்றின- தேமல் புள்ளிகளும் அவள் அவயவங்களிலே சில தோன்றியிருக்கின்றன. அணங்குதற்கு யான்- அவளால் துன்புறு வதற்காக நின்ற யான். தன் அறிவல்- அவளை அறிவேன். தான் அறியலள்- ஆனால் அவள் என்னை அறிய மாட்டாள். பெருமுது செல்வர்- பெருகிய பழமையான செல்வர்களின் குடியிலே பிறந்த. ஒரு மடமகள்- ஒப்பற்ற அழகுடைய அவள். யாங்கு ஆகுவள் கொல்- என்மாட்டு எத்தகையினளாய் இருப்பாளோ அறியேன். கருத்து:- தலைவி தக்க பருவம் அடைந்தவள்; ஆதலால் தான் அவள் பார்வையாலேயே என்னைத் துன்புறுத்தினாள். விளக்கம்:- இது பொதுக்கயத்து கீரந்தை என்னும் புலவர் பாட்டு. தலைவியின் கூட்டுறவை வேண்டி வந்த தலைவன், தோழியிடம் வேண்டிக் கொண்டான். அவள் தலைவி சிறுமி என்று சொல்லித் தட்டிக் கழித்தாள். அப்பொழுது தலைவன், அவள் தக்க பருவம் அடைந்தவள்; அவளால் நான் வருந்தினேன் என்று உரைத்தான். தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. பெருமுது செல்வர் ஒரு மடமகள் யாங்கு ஆகுவள் தானே, என்று இறுதியடிகள் மட்டும் மாற்றப்பட்டன. கிளைஇய- உயிர் அளபெடை. ஏ; அசைகள். குரல் - கொத்து. கிழக்கு- கீழே. அணங்குதற்கு- வருந்து வதற்கு. நெறிநிறை வெண்பல் என்பது நெருங்கி வரிசையாக வெண்மையுடன் காணப்படுவதே அழகான பற்கள் என்பதைக் குறித்தது. தலைவி செல்வக் குடியிலே பிறந்தவள். அவளை உன்னுடைய உதவி இல்லாமல் சந்திக்க முடியாது என்று கூறித் தலைவன் தோழியை வேண்டிக் கொண்டான். துன்பந் தொலைய வந்தான் தலைவன் பாட்டு 338 பின்பனிக்காலம்; தலைவனைப் பிரிந்த தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். அவள் பக்கத்தில் உள்ள தோழி, அவளுக்கு எவ்வளவோ இனிய மொழிகளைக் கூறியும் அவள் துக்கம் அடங்கவில்லை. தலைவன் வந்தால் அன்றித் தலைவியின் துன்பந்தணியாது என்பது தோழிக்குத் தெரியும். தலைவன் சொன்னசொல் தவறாதவன். எப்படியும் தலைவியின் துன்பத்தைப் போக்க வந்து விடுவான் என்று தோழி நம்பினாள். ஆதலால் அவள் தலைவியே! நீ வருந்தாதே! தலைவன் ஏறிவரும் தேரொலி கேட்கின்றது; அவன் இதோ வந்து விட்டான். உன்னைப் பிடித்த துன்பத்தை விரட்டியடிக்க அவன் வந்து சேர்ந்தான் என்று துணிவுடன் கூறித் தலைவியின் துக்கத்தைத் தணிக்க முயன்றாள் தோழி. இச்செய்தியைக் கூறுவதே இப்பாடல். மூங்கில் போன்ற பருத்த தோள்களை உடையவளே! சிறந்து விளங்குகின்ற வீட்டிலே அடங்கிக் கிடக்கின்ற கற்புடையவளே! அழகு பொருந்திய தலைவியே! நீ வருந்தாதே. உன்னுடைய தனிமைத் துன்பம் நீங்கும்படி தலைவன் வந்து விட்டான். முறுக்கிய கொம்புகளையுடைய மான்களிலே சிறந்த ஆண்மான் தனது மென்மையும் அழகும் பொருந்திய பெண் மானுடன் தான் தங்கு வதற்குரிய மரநிழலிலே தங்கியிருக்கும்; மலர்கள் நிறைந்த அடர்ந்த புதரிடையிலே படுத்துறங்கும்; இதனால் பொழுது கழிந்தமை கண்டு, உடனே எழுந்து செழித்த பயற்றம் செடிகளைக் கடித்துத் தின்னும். இத்தகைய துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தையும் பின்பனி பெய்யும் கடைச்சாமத்தையும், உடைய குளிர்ந்த பனியை யுடைய இந்தப் பின்பனிக் காலத்திலே பெரிய வெற்றியையுடைய தலைவனது தேர் வந்து விட்டது. ஆதலால் இனி நீ வருந்த வேண்டாம். உன்னுடைய தனிமைத் துன்பம் தொலைந்து விட்டது. பாட்டு திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு, அரிமடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ; வீததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செலச் செழும் பயறு கறிக்கும்; புன்கண் மாலைப், பின்பனிக் கடை நாள். தண்பனி அச்சிரம் வந்தன்று பெருவிறல்தேரே; பணைத்தோள், விளங்கு நகர் அடங்கிய கற்பின், நலம்கேழ் அரிவை, புலம்பு அசாவிடவே. பதவுரை:- பணைதோள்- மூங்கில் போன்ற தோள்களையும். விளங்குநகர்- சிறந்து விளங்குகின்ற வீட்டிலே. அடங்கிய கற்பின்- அடங்கியிருக்கின்ற கற்பினையும் உடைய. நலம்கேழ் - அழகு பொருந்திய. அரிவை- தலைவியே. புலம்பு அசாவிட - தனிமையால் நீ படும் துன்பம் நீங்கும்படி. திரி மருப்பு இரலை- முறுக்கிய கொம்பையுடைய மானின் அண்ணல். நல் ஏறு- சிறந்தநல்ல ஆண். அரிமடம் பிணையோடு- தனது மென்மையும் அழகும் பொருந்திய பெண்மானுடன். அல்குநிழல் அசைஇ- எப்பொழுதும் தங்கும் நிழலிலே தங்கி. வீததை- பிறகு மலர்கள் நெருங்கியிருக்கின்ற. வியல் அரில் துஞ்சி- பெரிய புதரிலே தூங்கியிருந்து. பொழுது செல- பொழுதுபோனதைக் கண்டவுடன். செழும் பயறு கறிக்கும்- செழித்து வளர்ந்திருக்கும் பயற்றம் செடியைக் கடித்துத் தின்னுகின்ற. புன்கண்மாலை- துன்பந்தருகின்ற மாலைக் காலத்தையும். பின்பனி கடை நாள்- பின்பனி செய்யும் கடைச் சாமத்தையும் உடைய தண்பனி- குளிர்ந்த பனி பெய்கின்ற. அச்சிரம்- பின்பனிக்காலத்திலே. வந்தன்று- வந்துவிட்டது: பெருவிரல் தேர்- தலைவனுடைய பெரிய வெற்றியமைந்ததேர். கருத்து:- தலைவன் விரைவிலே வந்து விடுவான்; வருந்தாதே. விளக்கம்:- இது பெருங் குன்றூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்குதலைவன் வந்து விட்டான்; வருந்தாதே! என்று சொல்லி அவள் துக்கத்தைத் தணித்தாள் தோழி. பாலைத்திணை. பணைத்தோள் என்பது முதல் பின் இரண்டு அடிகளையும், முன் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அசைஇ; உயிர் அளபெடை ஏ அசை. திரி- முறுக்கு. இரலை- மான். அரி- மென்மை. பிணை- பெண்மான். அல்குதல்- தங்குதல். வியல் அரில்- அகலமான புதர்தூறு. கறிக்கும்- கடிக்கும். அச்சிரம்- பின்பனிக்காலம். நகர்- வீடு; மனை. நலம்- அழகு. கேழ்- பொருந்திய. அசாவிட- நீங்கும் வண்ணம். துன்பம் நேர்ந்தால் இன்பத்தை நினை பாட்டு 339 தலைவன் பொருள் தேடிக் கொண்டு வரும் பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிந்து போனான். அப்பொழுது தலைவி வருந்திக் கொண்டிருந்தாள்; தலைவன் வரவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதாள். அவள் துக்கத்தைக்கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள். முன்பு தலைவனோடு சேர்ந்திருந்த போது இன்பம் அடைந்தாய்; மகிழ்ந்திருந்தாய், இப்பொழுது தலைவன் பிரிந்து போயிருப்பதும் உனக்காகத்தான், பொருள் தேடிக் கொண்டு வந்து உன்னை மணம் புரிந்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே போயிருக்கிறான். அப்படியிருக்க நீ ஏன் அழுகின்றாய்? இது அறியாமையன்றோ? முன் அடைந்த இன்பத்தை நினைத்துத் துக்கப்படாமல் இருப்பது தான் அறிவுடைமையாகும். ஆதலால் வருந்தாதே தோழி. இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். வாழ்க தோழியே! வீணாக வருந்தாதே. தினைப்பயிர் செய்யும் பொருட்டுக் கானவர்கள் புனத்தில் உள்ள மரங்களை அகிலோடு சேர்த்துச் சுட்டனர். அப்பொழுது வாசனையுள்ள அகில் கட்டையிலிருந்து மணமுள்ள புகை எழுந்தது. விளங்கிய காய்ந்த காட்டிலிருந்து கிளம்பிய அந்த மணமுள்ள புகை, நீரில்லாத வெண் மேகம்போல வானத்திலே எழுந்து போயிற்று. அப் புகை மலைப்பக்கத்திலேயுள்ள குறவர்களின் ஊரில் இறங்கி மணம் வீசிற்று. இத்தகைய சிறந்த நாட்டையுடைய தலைவன் பல மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த உன்மார்பைத் தழுவிக்கொண்டான். அப்பொழுது நீ இன்பம் உற்று மகிழ்ந்தாய். இப்பொழுது, கரிய இதழ்களையுடைய குவளை மலர்களைப் போன்ற மையுண்ட கண்கள் அழுகின்றன. பசலை நிறத்தையும் பெற்றாய். இப்பசலை நிறத்தைப் பெறுவதற்கு முன்பு மிகவும் இன்பத்தைப் பெற்று இனிதாக இருந்தனை. அதை நினைத்து இப்பொழுது துன்புறாமல் இருப்பதே சிறந்த குணமாகும். முன்பு இன்புற்றதை மறந்து இப்பொழுது வருந்துதல் அறியாமையாகும். பாட்டு நறை அகில் வயங்கிய நளிபுனம் நறும்புகை, உறை அறு மையின் போகிச், சாரல் குறவர் பாக்கத்து இழிதரு நாடன் மயங்கு மலர்க்கோதை நன்மார்பு முயங்கல், இனிதுமன்; வாழி! தோழி; மாயிதழ்க் குவளை உண்கண் கலுழப், பசலை ஆகா ஊங்கு அலம் கடையே. பதவுரை:- வாழி தோழி. நறை அகில்- மணம் பொருந்திய அகிலின். வயங்கிய- விளங்கிய. நளிபுனம் நறும்புகை - அடர்ந்த காட்டிலிருந்து தீப்பற்றியதால் எழுந்த மணமுள்ள புகை. உறை அறுமையின்- நீரற்ற வெண்மேகத்தைப் போல. போகி- வானத்திலே படர்ந்து சென்று. சாரல்குறவர் பாக்கத்து- மலைப்பக்கத்திலே குறவர்களின் ஊரிலே. இழிதரும் - இறங்குகின்ற. நாடன்- நாட்டையுடைய தலைவன். மயங்கு மலர்க்கோதை- கலந்த மலர்மாலையை அணிந்த. நன் மார்பு முயங்கல்- உனது நல்ல மார்பைத் தழுவிக் கொள்ளுவது. மாயிதழ் குவளை- கரிய இதழையுடைய குவளை மலர்போன்ற. உண்கண் கலுழ- மையுண்ட கண்கள் அழும்படி. பசலை ஆகா- பசலைநிறமும் பெறாத. ஊங்கு கடை- அப்பொழுது. இனிது மன் - மிகவும் இனிதாக இருந்தது. கருத்து:- அவன் தழுவியபோது, இன்புற்ற நீ, பிரிந்தபோது துன்பறல் தகாது. விளக்கம்:- இது பேயார் என்னும் புலவர் பாட்டு. பிரிந்து சென்றிருக்கும் தலைவனை நினைத்து வருந்தினாள் தலைவி. அவளுக்கு முன்பு நீ அடைந்த இன்பத்தை நினைத்து வருந்தாமல் இரு என்று தோழி கூறினாள். குறிஞ்சித்திணை. வாழிதோழி என்பதை முதலிலும் இனிதுமன் என்பதை இறுதியிலும் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஊங்கு அல்அம் கடைஏ எனப் பிரித்து, அல், அம், ஏ இவற்றைச் சாரியைகளாகத் தள்ளிவிட வேண்டும். செய்யுள் ஓசையை நிரப்ப வந்த சொற்கள் இவை. நறை- மணம். உறை- நீர்த்துளி. மை- மேகம். மா- கருமை. உண்கண்- மையுண்ட கண்கள். தாழை போல் தவிக்கின்றேன் பாட்டு 340 இருவரையும் ஒன்றாகப் பிணைப்பதே அன்பாகும்; நம்முடைய அன்பர்க்கு வரும் துக்கத்தை நமது துக்கமாகவே கருத வேண்டும் இன்பத்தையும் நமது இன்பமாகவே எண்ணவேண்டும். இன்பதுன்பம் இரண்டிலும் ஒத்த பங்கு கொள்ளுவதே அன்பின் உண்மைத் தன்மையாகும். இந்தக் கருத்தை இச்செய்யுளில் காணலாம். ஒரு காதலனும் ஒரு காதலியும் பகலிலே அடிக்கடி கூடி மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்புக்கு இனி வாய்ப்பில்லாமல் போய் விட்டது. தலைவியை அவள் வீட்டார் வெளியில் போகாமல் இல்லத்திலேயே இருக்கும்படி செய்துவிட்டனர். இதன்பின் தலைவன் தன் காதலியை இரவிலே ஒரு குறித்த இடத்திலே சந்திக்க விரும்பினான். அவன் தன் முடிவைத் தோழியிடம் அறிவித்தான். அவள் அவன் கருத்தைக் காதலியிடம் கூறினாள், அப்பொழுது தலைவி அவர் இரவிலே என்னைத் தேடி வருவதனால் அவருக்கு ஏதேனும் துன்பம் உண்டாகுமோ என்று எண்ணித் துடிக்கின்றேன்; நான் வருந்தும் போதெல்லாம் என் நெஞ்சமும் வருந்துகின்றது; ஆதலால் அவர் இரவிலே வராமல், வேறு வழியில் என்னைக்கண்டு இன்புற முயற்சிப்பதே ஏற்றதாகும் என்ற கருத்தைத் தெரிவித்தாள். தோழியே! அவர் எப்பொழுதும் என் நெஞ்சிலேயே குடியிருந்து வருகின்றார். எனக்கு அவரிடம் உள்ள காதல் மிகுதியாகும்போது, என் நெஞ்சம் அவரிடம் போய் விடுகின்றது; அவரது வரவை விரும்பு கின்றது. ஆயினும் அவர் வருகின்ற வழியிலே உள்ள துன்பங்களை எண்ணி வருந்துவேனாயின் என் நெஞ்சமும் என்னுடன் சேர்ந்து வருந்துகின்றது. என் உள்ளம் ஒரு நிலையிலே நிற்பதில்லை. கடற் கரையிலே பூத்துமணம் வீசிக் கொண்டு நின்ற தாழை, நீர்க்கழியிலே வெள்ளம்பெருகி வரும்போது அதிலே மூழ்கித் தலை நிமிர்ந்து நிற்கின்றது: அந்த வெள்ளம் வடிய வடிய அத்தாழையும் தளர்ச்சியடை கின்றது. அது போல என் உள்ளமும, அவரை நினைக்கும்போது தளர்ச்சியும் இன்பமும் அடைகின்றது. பாட்டு காமம் கடையின், காதலர்ப் படர்ந்து, நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி, ஒரு பால் படுதல் செல்லாது, ஆயிடை, அழுவம் நின்ற அலர்வேய் கண்டல் கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் பெயர்தரப் பெயர்தந்த ஆங்கு, வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே. பதவுரை:- தோழி அவர் இருந்த என் நெஞ்சு ஏ- தோழியே அவர் எப்பொழுதும் குடியிருந்த எனது உள்ளம். காமம் கடையின்- காதல் மிகுமானால். காதலர்ப் படர்ந்து- தலைவரை நினைத்து அவரிடம் சென்று. நாம் அவர்ப் புலம்பின் - நாம் அவர் வரும் வழியில் உள்ள ஏதங்களை எண்ணி வருந்துவோமாயின். நம்மோடு ஆகி- நம்முடன் கூடி வருந்தி. ஒரு பால் படுதல் செல்லாது - ஒரு நிலையிலே நிற்காமல். ஆயிடை- அவ்விடத்திலே. அழுவம் நின்ற- கடற்கரையிலே வளர்ந்து நின்ற. அவர் வேய் தண்டல்- பூவையுடைய தாழை. கழி பெயர் மருங்கின்- நீர்க்கழியிலே வெள்ளம் குறையும் போது. ஒல்கி- தளர்ந்து. ஓதம் பெயர் தர- அவ்வெள்ளம் மிகும் போது. பெயர்தந்த ஆங்கு- தன் தளர்ச்சி நீங்கியது போல. வருந்தும்- துன்புறுகின்றது. கருத்து:- தலைவன் இரவிலே என்னைத் தேடி வருவானாயின் நான் வருந்துவேன். விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் இரவிலே வருவான் என்று தோழி கூறிய போது அதை மறுத்துத் தலைவி கூறியது. நெய்தல்திணை. தோழி இருந்த என் நெஞ்சு என்ற இறுதித் தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. நெஞ்சத்துக்குத் தாழை உவமை. வெள்ளம் மிகும் போது தாழை உயர்ந்து நிற்கின்றது; அதுபோலக் காதல் மிகுந்தபோது காதலரை எண்ணி மனம் மகிழ்கின்றது. வெள்ளம் வடிந்தபோது தாழையின் உயர்வு குறைகின்றது; அதுபோலக் காதல் தணிந்த போது காதலரை எண்ணி மனம் வருந்துகின்றது. இதுவே தாழைக்கும் உள்ளத்துக்கும் அமைந்த உவமைப் பொருத்தம். ஏ- அசை. கடையின்- மிகும்போது. படர்ந்து - நினைத்துச் சென்று. புலம்பின்- வருந்தினால். அழுவம்- கடற்கரை. கண்டல்- தாழை. ஓதம்- வெள்ளம். நம்பிக்கையுண்டு; உயிர் வாழ்வேன் பாட்டு 341 மக்கள் வாழ்விலே துணையாக நிற்பவற்றில் முதன்மை யானது நம்பிக்கை. முயற்சிக்கும், உழைப்புக்கும் முதற்காரணம் நம்பிக்கைதான். நம்பிக்கையற்றவர்களின் வாழ்வு சிறக்காது, உயிர் வாழ்வதற்கு அடிப்படை நம்பிக்கைதான். இந்த உண்மையை இச்செய்யுளில் காணலாம். காதலன், மரஞ்செடி கொடிகள் தழைத்துப் பூத்துக் குலுங்கும் கார்காலத்தில் திரும்பி வந்துவிடுகிறேன் என்று சொல்லிப் பொருள் தேடப் போனான். கார் காலம் வந்து விட்டது. தலைவன் வரவில்லை. அதுகண்ட தோழி, தலைவி எப்படித்தான் தன் தனிமையைத் தாங்கிக் கொண்டிருப்பாளோ என்று எண்ணி வருந்தினாள். தோழியின் துன்பத்தைக் கண்ட தலைவி அவளுக்கு ஆறுதல் உரைத்தாள். தலைவன் உறுதி மொழியிலே எனக்கு நம்பிக்கை யிருக்கின்றது; அதனால் நான் அவர் வரும் வரையிலும் உயிர் வாழ்வேன் என்று கூறினாள். தோழியே! குரா மரங்களின் கிளைகளிலே எண்ணற்ற மலர்கள் பூத்திருக்கின்றன; புன்க மரத்தின் கிளைகளிலே நெற்பொரி போன்ற மலர்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் இச் சோலையிலே அழகு நிலவியிருக்கின்றது. நம் கண்களுக்கு இனிய காட்சியாக விளங்குகின்றது. இச் சமயத்திலே நமது காதலர் நம்மை விரும்பி வந்து பாதுகாக்காமல் போனாலும் நமக்கு ஆபத்தில்லை. என் உள்ளத்திலே ஒரு நம்பிக்கை இருக்கின்றது. பெரியோர் தம் உள்ளத்திலே நினைத்த வீரச் செயலைச் செய்து முடிக்கத் தவறமாட்டார்கள். அவர்கள் நினைத்தது பிழை படுவதில்லை. இதுவே எனது நம்பிக்கை. ஆதலால் முன்பு உயிர் வாழத் துணியாத என் நெஞ்சமே, இப்பொழுது உயிர்வாழத் துணிந்தது. ஆதலால் எனது உள்ளத்தில் நம்பிக்கையின் மூலந் தோன்றிய அஞ்சாமையால் உயிருடன் வாழ்கின்றேன். பாட்டு பல்வீ பட்ட பசுநனைக் குரவம், பொரிப்பூம் புன்கொடுபொழில் அணிக்கொளாஅச், சினை இனிது ஆகிய காலையும், காதலர், பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என வலியா நெஞ்சம் வலிப்ப, வாழ்வேன் தோழி! என் வன்கண் ஆனே. பதவுரை:- பல்வீபட்ட- பலமலர்கள் தோன்றிய. பசுநனை குரவம்- பசுமையான மொட்டுகளையுடைய குரவமரம். பொரி பூம் புன்கொடு - நெற்பொரி போன்ற மலர்களையுடைய புன்க மரத்துடன். பொழில் அணிகொளா- சோலையிலே அழகுடன் விளங்குகின்ற. சினை இனிது ஆகிய- குரவம், புன்னை இவற்றின் கிளைகள் கண்ணுக்கு இனிமையாகக் காணப்படும். காலையும்- இந்தப் பருவ காலத்திலும், காதலர் பேணார் ஆயினும்- நமது காதலர் வந்து நம்மைக் காப்பாற்றாவிட்டாலுங்கூட. பெரியோர் நெஞ்சத்து- பெரியோர்கள் தம் உள்ளத்திலே. கண்ணிய ஆண்மை- செய்ய நினைத்த வீரச் செயலிலே. கடவது அன்று- தவறிவிடுவ தில்லை. என- என்று நம்பி. வலியா நெஞ்சம்- முன்பு துணிவு கொள்ளாத மனம். வலிப்ப- இப்பொழுது துணிவு கொள்வதனால். என்வன்கணான் ஏ- எனது மனோ வலிமையினால், வாழ்வேன் தோழி- இப்பொழுது உயிர் வாழ்கின்றேன் தோழியே. கருத்து:- தலைவர் ஆற்றல் உடையவர்; அவர் சென்ற காரியத்திலே வெற்றி பெற்றுத் திரும்பிவருவார். இந்த நம்பிக்கை யுடன் உயிர் வாழ்கின்றேன். விளக்கம்:- இது மிளைகிழான் நல் வேட்டன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் வருவதாகக் கூறிய பருவகாலம் வந்து விட்டது. தலைவனைக் காணாமையால் தலைவி வருந்துவாள் என்று தோழி வருந்தினாள். அப்பொழுது தலைவி தோழியைப் பார்த்துக் கூறியது. முல்லைத்திணை. புன்னைப் பூவுக்கு நெய்பொரி உவமானம். பெரியோர்- அறிவு ஆற்றல்களிலே சிறந்தோர். கொளா- கொண்டு. கொளாஅ; உயிர் அளபெடை. சினை- கிளை. கண்ணிய- நினைத்த. கடவது- தவறுவது. வலியா- துணியாத. வலிப்ப- துணிய. காதலி தன் காதலனை அறிவும், ஆற்றலும் நிறைந்த பெரியோன் என்று கருதினாள். ஆதலால் அவன் எண்ணிச் சென்ற செயலை முடித்துத் திரும்பி வருவது உறுதி என்று நம்பினாள். அதனால் வன்கண்மை பொருந்திய நெஞ்சுடன் உயிர் வாழ்கின்றாள். வன்கண்மை- வலிய தன்மை; அஞ்சாமை. வருமுன்னர்க் காவாதான் வாழ்வு பாட்டு 342 முதலில் காதலனும் காதலியும் பகலிலே சந்தித்து இன்புற்று வந்தனர். பின்பு இரவுப்பொழுதிலே சந்தித்து வந்தனர். இப்பொழுது இரவிலும் சந்திக்க முடியாதபடி தலைவியை அவள் பெற்றோர் தடுத்து விட்டனர். இந்நிலையிலும், காதலன், அத் தலைவியை எப்படியாவது இரவிலே சந்திக்க விரும்பினான். தன் விருப்பத்தைத் தோழியிடம் தெரிவித்தான்; அப்பொழுது தோழி அத் தலைவனுக்கு அறிவுரை கூறினாள். இன்னும் நீ தலைவியை இரவிலே கண்டு, கூடி வாழ வேண்டும் என்று எண்ணுவது தவறு; உன் எண்ணத்தை அறிந்தால் தலைவியும் வருந்துவாள். ஆதலால் இனி நீ அவளை மணம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். இதுதான் நீ செய்யத்தகுந்த செயல் என்று கூறினாள். தானாகப் பழுத்து மணம் வீசுகின்ற சுளையையுடைய பலாப் பழத்தை ஆண்குரங்கு ஒன்று கண்டது. உடனே அது தன் கையால் அப்பழத்தைப் பிளந்து அதில் இருந்த சுளைகளைச் சுவைத்துத் தின்றுவிட்டது. அதைக் கண்டான் வேடன். முதலிலேயே அப்பழத்தைப் பாதுகாக்க மறந்த அவன், பழம் பறிபோனபின் பாதுகாக்க முனைந்தான். பலாப் பழங்களின் மணம் வீசும் மரங்களில் எல்லாம்- குரங்குகளைப் பிடிக்கக் கூடிய- குரங்குகள் வந்தால் மாட்டிக் கொள்ளக்கூடிய வலைகளை விரித்து வைத்தான். இத்தகைய குன்றுகளையுடைய நாட்டின் தலைவனே! பசுமையான சுனையிலே மலர்ந்த குவளைப் பூக்களை இடையிடையே வைத்துத் தொடுத்த தழை உடையை அணிந்த தலைவி இங்கு வருந்தியிருக்கும் படி செய்வது உனக்குத் தகுந்த செயலாகுமா? உன்னை விரும்பியவர்களின் துன்பத்தைத் தீர்க்கும் நற்செயலின் பயனைப் பெறா உன் பண்பு உனக்குத் தகுதியுடையது அன்று. உன்னை விரும்புகின்றவர்களின் துன்பத்தைத் தீர்ப்பதே சிறந்த பண்பாகும். அதுவே உனக்குச் சிறந்த பயனும் ஆகும். பாட்டு கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம், காவல் மறந்த, கானவன், ஞாங்கர்க். கடி உடை மரந்தொறும் படுவலை மாட்டும் குன்ற நாட! தகுமோ? பைஞ்சுனைக் குவளைத் தண்தழை இவள் ஈண்டுவருந்த, நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயம் தலைப்படா அப்பண்பினை, எனினே. பதவுரை:- கலைகை தொட்ட- ஆண்குரங்கு தன் கையால் தோண்டித் தின்ற. கமழ்சுளைப் பெரும்பழம் - மணம் வீசுகின்ற சுளைகளையுடைய பலாப்பழத்தை. காவல் மறந்த கானவன்- முதலில் பாதுகாக்காமல் மறந்துபோன வேடன். ஞாங்கர்- குரங்கு அப்பழத்தைத் தின்றபின். கடிஉடை மரந்தொறும்- பலாப் பழமணம் கமழும் மரங்களில் எல்லாம். படுவலை மாட்டும்- குரங்குகள் அகப்பட்டுக் கொள்கின்ற வலையை மாட்டிப் பழங்களைப் பாதுகாக்கின்ற. குன்ற நாட- மலைகள் நிறைந்த நாட்டையுடையவனே. பைம்சுனை- பசுமையான நீர்ச்சுனையிலே தோன்றிய. குவளைத் தண்தழை- குவளைப்பூக்களைச் சேர்த்துத் தொடுத்த குளிர்ந்த தழை உடையை அணிந்த. இவள் ஈண்டு வருந்த- இத்தலைவி இங்கே வருந்தியிருக்கும்படி. நயந்தோர்- தன்னை விரும்பி யிருப்பவரின். புன்கண் தீர்க்கும்- துன்பத்தை நீக்குகின்ற. பயம் தலைப்படா - பயனுள்ள செயலில் ஈடுபடாத. பண்பினை எனின் ஏ- குணத்தையுடையவன் என்று சொல்லப்படுவாயாயின். தகுமோ- அது உனக்குத் தகுதியாகுமோ? கருத்து:- நீ இன்னும் மணந்து கொள்ளாமல் உன் காதலி யுடன் கலந்து மகிழ விரும்புவது நலமன்று. விளக்கம்:- இது காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் என்னும் புலவர் பாட்டு. தலைவியைச் சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்ட பின்பும் அவளை மணந்து கொள்ள முயலாமல், அவளுடன் கலந்து வாழ விரும்பினான் தலைவன். அவனுக்குத் தோழி உண்மையை எடுத்துரைத்துத் தலைவியை மணந்துகொள்ளும்படி உரைத்தது. குறிஞ்சித்திணை. தகுமோ என்ற சொல்லை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது; படாஅ; உயிர் அளபெடை. கலை- ஆண் குரங்கு. கமழ்சுனைப் பெரும் பழம்- பலாப்பழம். ஞாங்கர்- பின்னர். கடி - வாசனை. பயம்- பயன். காவலற்ற பழத்தைக் குரங்கு தின்றது என்ற செய்தி தலைவி கட்டுக் காவலின்றி வெளியிலே உலவிய போது தலைவன் அவளுடன் கூடியிருந்தான் என்பதைக் குறித்தது. குரங்குகளைப் பிடிக்க மரங்கள் தோறும் வலைகளை மாட்டிய செய்தி, தலைவி காவலுக்குட் பட்டுவிட்டாள்; இனி அவளை அடைய முடியாது என்ற கருத்தைக் கொண்டதாகும். மலர்களையும் தழைகளையும் தொகுத்து உடையாகத் தரித்துக் கொள்ளுவது பண்டைக் காலத்து மலைநாட்டுப் பெண் களின் வழக்கம். புலியைக் கொல்லும் யானை பாட்டு 343 களவு மணத்தில் வாழ்ந்த தலைவன் தலைவியை வெளிப் படையாக மணம் புரிந்து கொள்ள முடியவில்லை; தலைவியின் பெற்றோர்களின் இணக்கத்தைப் பெற இயலவில்லை. அதனால், தலைவியை இரவோடு இரவாகத் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல முடிவு செய்தான். அதற்குத் தோழியும் இணங்கினாள். தோழி, தலைவன் கொண்ட கருத்தைத் தலைவிக்குக் கூறினாள். தலைவன் சிறந்த வீரன்; எத்தகைய எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ளும் இயல்புள்ளவன். வெற்றி பெறும் மாண்புள்ளவன்; ஆதலால் அவனுடன் செல்வதால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறி வாழ்த்தினாள். தோழியே! தலைவன் வளம் பொருந்திய மலைநாட்டை யுடையவன். அவனுடைய மலையிலே யானைகள் உண்டு; புலிகளும் உண்டு. அந்த மலையிலே நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறேன். ஒருநாள் வலிமையுள்ள பெரிய புலி ஒன்று ஒரு யானையைக் கண்டது. அது மதங்கொண்ட யானை. அதன் காதின் வழியாக மதநீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அது மிகப் பெரிய யானை. புலி, தன் வாயைப் பிளந்து கொண்டு அந்த யானையின் அழகிய முகத்திலே பாய்ந்தது அது கண்ட யானை அஞ்சவில்லை. தன் தந்தங்களால் அப்புலியைக் குத்திக் கொன்றது, இதனால் தந்தங்கள் இரத்தக் கறைபட்டுச் செந்நிறமடைந்தன. இதைத் தவிர யானைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. யானையின் முகத்திலே பாய்ந்த புலிதான் இறந்தது; அது, மேல் காற்றால் வீழ்த்தப்பட்ட அருமையான அடிப்பாகத்தையுடைய வேங்கை மரத்தின் வாடிய மலர்களையுடைய கிளையைப்போல இறந்து கிடந்தது. இத்தகைய காட்சி நிறைந்த மலையின் தலைவன் அவன். அவனுடன் சேர்ந்து செல்வதைப் பற்றி எண்ணுவாயாக; நீ நீடூழி வாழ்க. பாட்டு நினையாய் வாழி! தோழி நனைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்து என, மிகுவலி இரும்புலிப் பகுவாய் ஏற்றை, வெண்கோடு செம்மறுக் கொளீஇ, விடர் முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடுபூம் சினையில் கிடக்கும் உயர்வகை நாடனொடு பெயரும் ஆறே. பதவுரை:- வாழி தோழி- வாழ்க தோழியே. மிகுவலி- மிகுந்தவலிமையுள்ள. பகுவாய் ஏற்றை- பிளந்த வாயையுடைய ஆணாகிய. இரும்புலி- பெரிய புலியானது. நனைகவுள்- மதத்தால் நனைகின்ற கன்னங்களையுடைய. அண்ணல்யானை- பெரிய யானையின். அணிமுகம் பாய்ந்து என - அழகிய முகத்திலே பாய்ந்தது. வெண்கோடு- பாய்ந்த அப்புலி யானையின் வெண்மை யான தந்தங்களை. செம்மறுக் கொளீஇ- சிவந்த கறைபடும்படி செய்து. விடர்முகை- பிளந்த கல்லின் பள்ளத்திலே யுள்ள. கோடை ஒற்றிய - மேல் காற்றால் வீழ்த்தப்பட்ட. கரும் கால் வேங்கை- கருமையான அடிப்பாகத்தையுடைய வேங்கை மரத்தின். வாடுபூம் சினையின் கிடக்கும்- வாடிய மலர்களை யுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும். உயர்வரை நாடனொடு - உயர்ந்த மலைநாட்டுத் தலைவனுடன். பெயரும் ஆறு- கூடிச் செல்லும் விதத்தைப்பற்றி. நினையாய்- எண்ணுவாயாக. கருத்து:- நீ உன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் சேர்ந்து செல்லுதலே நலம். விளக்கம்:- இச் செய்யுள் ஈழத்துப்பூதன் தேவன் என்னும் புலவரால் பாடப்பட்டது. தோழி தலைவியைப் பார்த்து, தலைவனுடன் சேர்ந்து செல்வதற்கு விரும்புக; அதுவே உனக்கு நலம் என்று கூறியது. தோழிகூற்று. பாலைத்திணை. வாழி தோழி! மிகுவலி. gFthŒ V‰iw ïU«òÈ, eidfîŸ m©zš ahid mÂKf« ghŒªbjd, bt©nfhL br«kW¡ bfhçï, Él®Kif¡ nfhil x‰¿a fU§fhš nt§if, thL óŠáidÆš »l¡F« ca®tiu ehlbdhL bgaU« MW V ÃidahŒ! என்று பதங்கள் மாற்றப்பட்டன. கொளீஇ: உயிர் அளபெடை. கவுள்- கன்னம். அண்ணல்- பெரிய. பகுவாய்- பிளந்தவாய். ஏற்றை- ஆண்புலி. மறு- கறை. விடர்- பிறப்பு. முகை - பள்ளம். கோடை- மேல்காற்று. இறந்து கிடக்கும் ஆண் புலிக்கு, ஒடிந்து கிடக்கும் வேங்கை மரக்கிளை உவமை. இவ்வுவமை தலைவன் பெறாமையைக் குறித்து வந்தது. அவர்கள் தவம் புரிந்தவர்கள் பாட்டு 344 பிரிந்து சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. மாலைக் காலம் வந்துவிட்டது. அக்காட்சியைக் கண்ட தலைவி இன்னும் என் தலைவனைக் காணவில்லையே என்று வருந்திக் கொண்டிருக் கின்றாள். அச்சமயத்திலே தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகின்றாள். தனக்கு ஆறுதல் மொழி சொல்லும் தோழியைப் பார்த்துத் தலைவி கூறுவதாக அமைந்திருக்கின்றது இச் செய்யுள். தோழியே! இந்த மாதம், எங்குப் பார்த்தாலும் குளிர்ந்த பனித்துவலைகள் வீழ்கின்ற கடுமையான குளிர்ச்சியுள்ள மாதம். காளைகளும், பசுக்களும் மேயப் புலத்தினை நாடிச் சென்றன; வயிறார மேய்ந்தன. பசுக்கள் நிலத்திலே தொடும்படியான அலை தாடியை உடையன; பருத்த காம்புகள் அமைந்த மடியை உடையன; அவை தம் கன்றை நினைத்துக் காதலால் பாலைச் சொரிகின்றன; தமது மந்தையை விட்டுப் பிரிந்து பெரிய காளையுடன், மாலைக் காலத்திலே ஊரை நோக்கி வருகின்றன. இத்தகைய மாலைக் காலத்திலே, சிறந்த பொருளீட்டக் கருதிக் காதலிமார்களைப் பிரிந்து போன காதலர்கள் திரும்பி வருவதைக் காண்கின்ற பெண்கள் தாம் தவம் புரிந்தவர்கள். யான் என் காதலனைக் காணேன்; ஆதலால் தவம் புரிந்தேன் அல்லேன். பாட்டு நோற்றோர் மன்ற தோழி, தண் எனத் தூற்றும் துவலை பனிக்கடும் திங்கள், புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு, நிலம் தூங்கு அணல, வீங்குமுலைச் செருத்தல், பால்வார்பு குழவி உள்ளி, நிரை இறந்து, ஊர்வயின் பெயரும், புன்கண்மாலை, அரும்பெறல் பொருட் பிணிப்போகிப் பிரிந்து உறை காதலர் வரக் காண்போரே. பதவுரை:- தோழி. தண்என- குளிர்ச்சியாக. துவலை பனித்துவலை. தூற்றம்- பனித்துளிகள் சிந்துகின்ற. கடும்திங்கள்- கடும் குளிர் நிறைந்த மாதத்திலே. புலம் பயிர் அருந்த- நிலத்திலே முளைத்த புல்லை மேயச் சென்ற பசுக்கள். அண்ணல் ஏற்றொடு- பெரிய காளையுடன். நிலம் தூங்கு அணல- நிலத்திலே உரசுகின்ற அலை தாடியையுடைய. வீங்குமலைச்செருத்தல்- பெரிய முலைக் காம்பையுடைய பசு. குழவி உள்ளி பால்வார்பு- தம் கன்றை நினைத்துப் பாலைச் சொரிந்து கொண்டு. நிறையிறந்து- பசு மந்தையை விட்டுப் பிரிந்து. ஊர்வயின் பெயரும்- ஊரை நோக்கி வருகின்ற புன்கண் மாலை- அற்பமாகிய மாலைப் பொழுதிலே. அரும்பெறல்- அரிதிலே தேடிப் பெறக் கூடிய. பொருள் பிணி போகி- பொருளைச் சேர்ப்பதாகச் சென்று. பிரிந்து உறை காதலர் - பிரிந்து வாழ்கின்ற காதலர்கண். வரக்காண்போர் ஏ- திரும்பி வருவதைக் காணும் காதலிமார்கள். மன்றநோற்றோர்- நிச்சயமாகத் தவம் புரிந்தவர்களே ஆவார்கள். கருத்து:- பிரிந்த கணவன் வரவை மாலைக்காலத்திலே கண்டு மகிழ்ந்த மங்கையரே தவம் புரிந்தவர்கள். விளக்கம்:- இது குறுங்குடி மருதன் என்னும் புலவர் பாட்டு. காதலன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறினாள் தோழி. அத்தோழிக்குத் தலைவி கூறியது. தலைவி கூற்று. முல்லைத்திணை. மன்ற நோற்றோர் என்ற தொடரை இறுதியில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. பால் வார்பு குழவியுள்ளி என்பது குழவி உள்ளி பால்வார்பு என்று மாற்றப்பட்டது. துவலை- துளி. புலம்- மேய்ச்சல் நிலம். தூங்கு- அசைந்து தடவுகின்ற. அணல்- அலைதாடி பசுவின் கழுத்திலே நீளமாகத் தொங்குகின்ற சதை. செருத்தல்- பசு. தலைவியின் அன்பு பாட்டு 345 ஒரு தலைவனும் தலைவியும் பகற் பொழுதிலே தோட்டந் துறவுகளிலே கண்டு மகிழ்ந்தனர். இனி அவ்வாறு அடிக்கடி சந்திக்க முடியாத நிலைமை உண்டாயிற்று. இரவில் இருவரும் சந்தித்தால்தான் நீண்ட நேரம் சேர்ந்து அளவளாவ முடியும் என்று தலைவி நினைத்தாள். தன் நினைப்பை அவள் குறிப்பாகத் தோழிக்குத் தெரிவித்தாள். தோழி பகலிலே வந்து போகும் தலைவனைப் பார்த்து இனி நீ இரவிலே இங்கு வந்து தங்கிப் போகலாம் என்று கூறினாள். தலைவனே! பெரிய நீரே வேலியாகச் சூழ்ந்த எமது சிறிய ஊர் தங்குவதற்கு ஏற்ற நல்ல ஊராகும். தாழைகள் நிறைந்த, அலை வீசிக்கொண்டிருக்கின்ற வளைந்த நீரோடை இழும் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்ற அந்த இடத்திலே உள்ள ஊராகும். ஆதலால், இரவிலே அலங்காரம் பூண்டு ஓடி வருகின்ற சிகரத்தையுடைய பெரிய தேரிலே ஊர்ந்து வருக. மலையைப் போல் காணப்படும் பெரிய மணல் மேட்டிலே தேரை நிறுத்துக; அங்கே இளைப்பாறுவீராக; தழையுடையைப் பூண்ட இத்தலைவியின் தனிமைத் துயர் நீங்கும்படி இரவிலே தங்கிச் செல்வீராக இவ்வாறு செய்வது தவறோ? அன்று பாட்டு இழை அணிந்து இயல் வரும் கொடுஞ்சி நெடும்தேர், வரைமருள் நெடுமணல் தவிர்த்து, நின்று அசைஇத், தங்கினிர் ஆயின் தவறோ? தெய்ய தாழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகலத் தாழை தை இய தயங்குதிரைக், கொடும் கழி இழும் என ஒலிக்கும் ஆங்கண், பெருநீர் வேலி எம் சிறுநல் ஊரே. பதவுரை:- தாழை தைஇய- தாழைகள் பொருந்திய. தயங்கு திரைக் கொடும் கழி- விளங்குகின்ற அலைகளையுடைய வளைந்த நீர்க்கழி. இழும் என ஒலிக்கும்- இழும் என்று ஓசையிட்டுக் கொண்டிருக்கின்ற. ஆங்கண் - அவ்விடத்திலே. பெருநீர்வேலி - பெரிய கடலைக் காவலாக உடைய. எம்சிறு நல் ஊர் ஏ- எமது சிறிய நல்ல ஊரிலே. இழை அணிந்து - அலங்காரப் பொருள்களைத்தாங்கி. இயல் வரும்- ஓடி வரும். கொடுஞ்சி நெடும் தேர்- உச்சியையுடைய பெரிய தேரிலேறி இரவிலே வந்து. வரை மருள்- மலைபோல் காணப்படும். நெடுமணல் தவிர்த்து- உயர்ந்த மணல் மேட்டிலே தங்கி. நின்று அசை இ- இருந்து இளைப்பாறி. தாழை தாழ் அல்குல்- தழையுடையை அணிந்த இடையையுடைய. இவள் புலம்பு அகல - இவளுடைய தனிமைத் துயரம் ஒழியும்படி. தங்கினர் ஆயின்- தங்கிச் செல்லுவீராயின். தவறோ- அது தவறாகுமோ. (ஆகாது) கருத்து:- இனி நீர் இரவிலே வந்து தலைவியைக் கண்டு மகிழ்ந்து செல்ல வேண்டும். விளக்கம்:- அண்டர் மகன் குறுவழுதி என்னும் புலவர் பாட்டு. பகலிலே வந்து தலைவியைச் சந்தித்துச் செல்லும் தலைவனைப் பார்த்து இனி இரவிலே வந்து தங்கிச் செல்லுக என்று தோழி கூறியது. தோழி கூற்று. நெய்தல் திணை. தாழை தைஇய தயங்கு திரைக்கொடும் கழி இழும் என ஒலிக்கும் ஆங்கண். பெருநீர் வேலி. எம் சிறுநல் ஊரே, இலை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந்தேர், வரை மருள் நெடு மணல் தவிர்த்து, நின்று அசைஇ, தழைதாழ் அல்குல் இவள் புலம்பு அகல தங்கினிர் ஆயின், தவறோ என்று பதங்கள் மாற்றப்பட்டன. அசை இ; தைஇய; உயிர் அளபெடை. தெய்ய- அசைச் சொல். இழை- அலங்காரப் பொருள்கள். கொடுஞ்சி- சிகரம். தவிர்த்து- நிறுத்தி. நின்று அசைஇ - இளைப்பாறி. இழும்-ஒலிக்குறிப்பு. சொல்ல முடியாத சோர்வு பாட்டு 346 ஒரு தலைவன் பகற் பொழுதிலே அடிக்கடி தன் காதலியைச் சந்திக்கின்றான். பகற் பொழுதில் அவளுடன் நீண்ட நேரம் வாழ முடிவதில்லை. விரைவில் அவளை விட்டுப்பிரிய வேண்டியிருந்தது. இரவு நேரத்திலே தலைவியைச் சந்தித்தால் நீண்ட நேரம் அச்ச மின்றி அவளுடன் அளவளாவியிருக்கலாம் என்று எண்ணினான். இவ்வெண்ணத்தை அவன், தோழியிடம் கூற நினைத்தான். ஆனால் வாய்விட்டுச் சொல்லமுடியாமல் தயங்கித் தயங்கி மாலைநேரத்திலே பிரிந்து சென்றான். அவன் உள்ளக் குறிப்பை உணர்ந்தாள் தோழி. அவள் தன் தலைவியிடம், தலைவன் இரவு நேரத்திலே சந்திக்க விரும்புகின்றான் என்ற கருத்தை உரைத்தாள். தோழியே! நமது தலைவரின் சிறந்த மலைநாட்டின் இயல்பைக் கேட்பாயாக. ஆண்யானை, இளமையான, தனது பெண் யானையினிடம் மிகுந்த அன்பு காட்டுகின்றது. அது தன் வெண்மை யான தந்தங்களுடன் மலையில் உள்ள தினைப் புனத்தை அடைகின்றது. குறவர்கள் அதை விரட்டுகின்றனர். அதனால் அந்த இளங்களிறு ஊரிலே உள்ள மன்றத்தின் இடையிலே பிளந்து கொண்டு ஓடுகின்றது. இத்தகைய மலை நாட்டையுடையவன் அவன்,அத்தலைவன் காலை நேரத்திலேயே, நாம் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகின்றான். சுனையிலே பூத்த குவளை மலர்மாலையை நமக்குத் தருகின்றான்; நம்முடன் சேர்ந்து தினைப்புனத்தை மேயவரும் கிளிகளை ஓட்டுகின்றான். அவன் மாலைப் பொழுதில் திரும்பிப் போகும்போது, தன்னுடைய நல்ல உள்ளத்திலே ஏதோ ஒன்றை எண்ணுகின்றான்; அதை வெளியிட முடியாமல் வருந்துகின்றான்; இவ்வாறு நெஞ்சில் நினைத்ததைக் கூற முடியாமல் நாளுக்கு நாள் உடல் இளைப்புற்றான். பாட்டு நாகுபிடி நயந்த முளைக் கோட்டு இளம் களிறு, குன்றம் நண்ணிக், குறவர் ஆர்ப்ப, மன்றம் போழும் நாடன், தோழி சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், தினைப்புன மருங்கில் படுகிளி ஓப்பியும் காலை வந்து மாலைப் பொழுதில் நல் அகம் நயந்துதான் உயங்கிச் சொல்லவும் ஆகாது அஃகியோனே. பதவுரை:- தோழி- தோழியே. நாகுபிடிநயந்த- இளமையான பெண்யானையை விரும்பிய. முளைக் கோட்டு இளம் களிறு- முளைத்த தந்தங்களையுடைய இளம் ஆண் யானை. குன்றம் நண்ணி- மலையை அடைந்து. குறவர் ஆர்ப்ப- அதைக் கண்டு குறவர்கள் ஆரவாரம் செய்ய. மன்றம் போழும்- உடனே அந்த யானை ஊரிலேயுள்ள பொதுவிடத்தின் வழியே, பிளந்து கொண்டு ஓடும். நாடன் - சிறந்த நாட்டையுடைய நமது தலைவன். காலை வந்து- காலைப் பொழுதிலேயே வந்து. சுனைப்பூம் குவளைத் தொடையல் - சுனையிலே மலர்ந்த குவளைப் பூக்களால் ஆகிய மாலையை. தந்தும்- கொடுத்தும். தினைப்புனமருங்கில்- தினைப் புனத்திலே. படுகிளி ஓப்பியும்- வந்து வீழ்கின்ற கிளிகளை நம்மோடு சேர்ந்து ஓட்டியும். மாலைப் பொழுதில்- மாலை நேரத்திலே செல்வோன். நல்அகம் நயந்து- தன் நல்ல உள்ளத்திலே ஏதோ ஒன்றை விரும்பி. தான் உயங்கி- தான் அதனால் வருந்தி. சொல்லவும் ஆகாது - அதை வாய்விட்டுச் சொல்லவும் முடியாமல். அஃகியோன் ஏ- சோர்வடைகின்றவன் ஆகின்றான். ஏ; அசை. கருத்து:- தலைவன் இரவிலே வந்து நம்மிடம் சேர்ந்திருக்க விரும்புகின்றான். விளக்கம்:- இது வாயில் இளம் கண்ணன் என்னும் புலவர் பாட்டு. தலைவன், இரவுக்காலத்திலே தலைவியைச் சந்திக்க விரும்பினான். அவன் கருத்தைத் தோழி தலைவிக்கு உரைத்தாள். தோழி கூற்று. குறிஞ்சித்திணை. தோழி என்னும் சொல்லை முதலிலும், காலை வந்து என்னும் தொடரைச் சுனைப்பூம்குவளை என்னும் தொடருக்கு முன்னும் வைத்து பொருள் சொல்லப்பட்டது. நாகு- இளமை. பிடி- பெண். மன்றம்- பொதுவிடம். போழும் - பிளக்கும். தொடலை- மாலை. படுகிளி- வீழ்கின்ற கிளி. உயங்கி- வருந்தி. அஃகியோன்- குறைந்தோன் ஆயினான். குறைதல்- சோர்வடைதல். அவளும் வந்தால் அல்லல் இல்லை பாட்டு 347 தலைவன் பொருள் தேட எண்ணினான்; அவன் உள்ளம் செல்வத்தைத் தேட வேண்டும் என்று விரும்பிற்று. செல்வத்தைத் தேடிவரச் செல்ல வேண்டுமானால் தலைவியைப் பிரிந்து போக வேண்டும். தலைவியைப் பிரிந்து சென்றால் தலைவி தனித்திருந்து துன்புறுவாள், தானும் துன்புற வேண்டும். ஆதலால் அவன் தனது நெஞ்சுக்குத்தானே ஒரு செய்தியைச் சொன்னான். தலைவியும் நம்முடன் கூட வந்தால் நாம் பொருள் ஈட்டப் போகலாம் என்று கூறினான். இவ்வாறு கூறி அச்சமயம் அவன் பொருள் தேடச் செல்லாமல் தங்கினான். தலைவியைச் சமாதானமாக இருக்கும் படிச் செய்து அவள் சம்மதத்தைப் பெற்றபின் பிரிந்து செல்லக் கருதியே இச்சமயம் பிரியாமல் தங்கினான். இச்செய்தியைக் கூறுவதே இச்செய்யுள். நெஞ்சே! பாலைவனத்திலே முன்பு நீர் நிரம்பியிருந்த சுனைகள் இப்பொழுது வறண்டு விட்டன. அந்தப் பாலை வனத்திலே வளர்ந்திருக்கும் இளம் வாகை மரங்களின் கிளைகளிலே நல்ல மலர்கள் பூத்திருக்கின்றன. அம்மலர்கள் அழகான கருமை நிறம் உள்ள மயில்களின் தலை உச்சியில் காட்சியளிக்கின்றன. இந்த நீண்ட பாலைவன வழியிலே நாம் பொருள் கருதிப் பிரிந்து செல்ல வேண்டும். தலைவியும் நம்மோடு ஒன்று சேர்ந்து வருவாளாயின் நலம். நீ பொருளை யீட்டுவதற்கு விரும்பிய துணிவு நன்மையாக முடியும். பாட்டு மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல் குமரி வாகைக் கோல் உடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியில் தோன்றும் கானம், நீள் இடைத் தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் நன்றே, நெஞ்சம்! நயந்த நின்துணிவே. பதவுரை:- நெஞ்சம்- நெஞ்சமே. மல்குசுனை- முன்பு நீர் நிரம்பியிருந்த சுனைகள். புலர்ந்த - வறண்டு போன. நல்கூர் சுரம் முதல் - வறுமையுற்ற பாலை நிலத்திலே. குமரிவாகை- இளமையான வாகை மரத்தின். கோல் உடை நறுவீ- கிளையிலே உள்ள நல்ல மலர்கள். மடமாத் தோகை- அழகுள்ள கருமையான மயிலின். குடுமியில் தோன்றும். உச்சிக் கொண்டையைப் போலக் காணப்படும். கானம் நீள் இடை- பாலைவனமாகிய நீண்ட வழியிலே, தானும் - என் காதலியாகிய அவள் தானும். ஒன்று மணம் செய்தனள். இவள் எனின்- சேர்ந்து இணைந்து வருவாள் ஆயின். நெஞ்சே- நெஞ்சமே. நயந்த நின்துணிவு - பொருளை விரும்பிப் பிரியத்துணிந்த உனது முடிவு. நன்றே- சிறந்ததாகும். கருத்து:- தலைவியைப் பிரிந்து போவது தகுந்த செயலாகாது. விளக்கம்:- இச்செய்யுள் காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணன் என்னும் புலவர் பாடியது. தலைவன் உள்ளம் பொருள் தேடச் செல்ல விரும்பியது. அப்போது அவ்வுள்ளத்துக்கு அவன் கூறியது. பாலைத்திணை. தலைவன் கூற்று. குமரி- இளமை. கோல்- கிளை. மடம்- அழகு. மா- கருமை ஒன்று - பொருந்திய. மணம் செய்தல் இணைதல்; சேர்தல் நெஞ்சம் நயந்தநின் துணிவு நன்றே என்று இறுதி அடியில் பதம் மாற்றப் பட்டது. வாகையின் பூவுக்கு மயிலின் கொண்டை உவமானம் உன்னை வருந்தவிட்டுப் போகார் பாட்டு 348 தலைவன் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்ல எண்ணியிருந்தான். அவனுடைய உள்ளத்தைத் தலைவி எப்படியோ உணர்ந்து விட்டாள். தலைவன் பிரிவான் என்ற எண்ணத்தால் அவள் உள்ளத்தில் பிறந்த துக்கத்தை அவளால் தாங்க முடிய வில்லை. அத்துக்கம் கண்ணீராக ஒழுகியது. அதைக்கண்ட தோழி தலைவிக்குச் சமாதானம் கூறினாள். சிறந்த ஆபரணங்களைப் பூண்ட தலைவியே! நீ வருந்தாதே. நம் தலைவர் நம்மைத் தனியாகப் பிரிந்து செல்ல மாட்டார். அப்படிச் செல்லத் துணிவாராயின் உன்னிலையைக் காணாமல் இருக்கமாட்டார். முல்லைக் கொடிகளை முறித்து அழித்துத் தின்ற யானையின் தந்தத்திலே ஒட்டியிருக்கும் மலரோடு கூடிய முல்லைக் கொடியின் நிலையும் உனது நிலையும் ஒன்றேயாகும். அந்த முல்லைக்கொடி எப்பொழுது யானையின் வாயில் புகும் என்பதைச் சொல்ல முடியாது. அது போல் உன் உயிர் எப்பொழுது போகும் என்றும் கூற முடியாது. உன் கண்களின் இமையைக் கடந்து மிகுதியாக ஊறும் கண்ணீர்த் துளிகள் மிகுந்த அழகான பூண்களை அணிந்த மார்பிலே உள்ள முலைகளை நனைக்கின்றன. இந்த உன் துக்கத்தை அவர் காணாமல் பிரிந்து போவாரா? ஒரு காலும் பிரிந்து போகார். நீ வருந்தாதே! பாட்டு தாமே செல்ப ஆயின் கானத்துப் புலம்தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த, சிறுவீ முல்லைக் கொம்பின் தாஅய் இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர்எழில் பூண் அகம் வனமுலை நனைத்தலும் காணார் கொல்லோ? மாண் இழை நமரே. பதவுரை:- மாண் இழை- சிறந்த நகைகளை அணிந்த தலைவியே. நமரே- நம் தலைவர். தாமே செல்ப ஆயின்- தாம் மட்டும் பிரிந்து செல்ல நினைப்பாராயின், கானத்து- காட்டிலே. புலம் தேர் யானை- மேயும் இடத்தைத் தேடிச் செல்லும் யானையின். கோட்டு ஒழிந்த- கொம்பின் கண் முறிந்து ஒட்டிக் கொண்டிருக் கின்ற. சிறுவீ முல்லைக் கொம்பின்- சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடியின் ஒடிந்த கிளையைப் போல. தாஅய்- உனது நிலைமை அமைந்து. இதழ் அழிந்து ஊறும்- இமையைக் கடந்து ஊறுகின்ற. கண்பனி- கண்ணீர்த் துளிகள். மதர் எழில்- விளங்குகின்ற அழகையுடைய. பூண் அகம்- பூண்கள் பொருந்திய மார்பிலே உள்ள. வனமுலை நனைத்தலும்- அழகிய முலைகளை நனைப்பதையும். காணார் கொல்- பார்க்க மாட்டாரோ. ஓ; அசை. கருத்து:- தலைவர் உன் துயரத்தை உணர்ந்து பிரிந்து போக மாட்டார். விளக்கம்:- இச்செய்யுள் மாவளத்தன் என்னும் புலவரால் பாடப்பட்டது. தலைவன் பிரிந்து செல்வான் என்பதை அறிந்து வருந்திய தலைவிக்குத் தோழி உரைத்தது. பாலைத்திணை, மான் இழை நமரே என்ற இறுதித் தொடரை முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. புலம்-மேயும் இடம். ஒழிந்த- தங்கியிருக்கின்ற. வீ- மலர். அழிந்து- கடந்து. பனி- துளி. தலைவியின் நிலைமைக்கு யானைத் தந்தத்தில் உள்ள முல்லைக் கொம்பு உவமை. தாஅய்- உயிர் அளபெடை. கொடுத்ததை வாங்குதல் கொடுமை பாட்டு 349 ஒருவருக்கு இனாமாக உதவி செய்த பொருளை மீண்டும் பெற விரும்புதல் பெருந்தன்மை அன்று. இரந்தவர்க்குக் கொடுத்ததை மீண்டும் கேட்பதைவிட உயிர் விடுவதே சிறந்தது. இக்கருத்தை இச்செய்யுள் வலியுறுத்துகின்றது. தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்தான்; பரத்தையர் இல்லத்தை அடைந்திருக்கின்றான். அப்பொழுது தலைவி, தலைவன் செயலை நினைத்துச் சிந்தனையிலே துயர் கொண்டிருந்தாள். தலைவனும் பரத்தையரிடமிருந்து நீங்கித் தலைவியிடம் வந்தான். அப்பொழுது தோழி தலைவியைப் பார்த்துத் தலைவன் காதிலே விழும்படி கூறுகின்றாள். தலைவன் வந்ததும், அவனிடம் நீ கவர்ந்து சென்ற எமது பெண்மை நலத்தைக் கொடுத்து விடு என்று கேட்போம் என்றாள். அதற்குத் தலைவி கூறிய மறுமொழியே இப்பாடல். அடும்புக் கொடியிலே மலர்ந்த பூக்களைச் சிதைத்து, மீனைப் பார்த்துக் கொத்தி எடுத்துத் தின்னுகின்ற நீண்ட கால்களையுடை நாரைகள் வீற்றிருக்கின்ற மணல் மேடுகளை யுடைய குளிர்ந்த நீர்த்துறையை உடையவன் நம் தலைவன்! அவனை வளைத்துக் கொள்ளுவோம். நாம் இழந்த பெண்மை நலத்தை மீண்டும் அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளுவோம் என்று சொல்லுகின்றாய்; தோழியே! நீ சொல்லுகின்றபடி மீண்டும் இழந்த பெண்ணலத்தைப் பெற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்ளுவோம். அப்படிப் பெறுவது கொடுமையாகும். தமது வறுமைத் துன்பத்திற்கு அஞ்சி வந்து ஒரு பொருளை வேண்டினார்க்குக் கொடுத்ததைத் திரும்பக் கேட்பது முறை அன்று. அப்படிக் கேட்பதை விட உயிரை விடுதல் துன்பமில்லாத செயல். கொடுத்ததைத் திரும்பக் கேட்பதுதான், துன்பத்துள் எல்லாம் பெரிய துன்பமாகும் பாட்டு அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇ மீன் அருந்தும் தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண் அம்துறைவன் தொடுத்துநம் நலம் கொள்வாம் என்றி தோழி! கொள்வாம்; இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவைதா என் சொல்லினும் இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே. பதவுரை:- அடும்பு அவிழ்- அடும்புக் கொடியிலே மலர்ந்த. அணி மலர் சிதைஇ - அழகிய மலர்களைச் சிதைத்து. மீன் அருந்தும்- மீனைக் கொத்தித்தின்னும். தடம் தாள் நாரை- நீண்ட கால்களையுடைய நாரை. இருக்கும்- தங்கியிருக்கின்ற. எக்கர்- மணல் மேடுகளையுடைய. தண் அம் துறைவன்- குளிர்ந்த நீர்த் துறையையுடைய தலைவனை. தொடுத்து- வளைத்துக் கொண்டு. நம் நலம் கொள்வாம்- இழந்த நமது பெண்மை நலத்தைக் கொடு என்று கேட்டு வாங்கிக் கொள்வோம். என்றி தோழி- என்று கூறுகின்றாய் தோழியே கொள்வோம். என்றிதோழி- என்று கூறுகின்றாய் தோழியே. கொள்வாம்- நீ கூறுகின்றபடியே ஏற்றுக் கொள்வோம். (ஆயினும்) இடுக்கண் அஞ்சி- வறுமைத் துன்பத்துக்குப் பயந்து வந்து. இரந்தோர் வேண்டிய- இரந்தவர் வேண்டிய பொருளை. கொடுத்து. அவை- கொடுத்து விட்டு மீண்டும் அவற்றை. தா என் சொல்லினும்- திரும்பக் கொடு என்று சொல்வதைக் காட்டினும். நம்இன் உயிர் இழப்பு- நமது இனிய உயிரை விடுதல், இன்னாதோ- துன்ப முடையதாகுமோ (ஆகாது). கருத்து:- இழந்த நலத்தைத் தாவென்று தலைவனிடம் கேட்டல் தகுதியன்று. விளக்கம்:- இச் செய்யுள் சாத்தன் என்னும் புலவரால் பாடப்பட்டது. பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்த தலைவன் காதில் விழும்படி, தலைவி தோழியிடம் கூறியது. தலைவி கூற்று. நெய்தல் திணை. ‘e« ï‹ cÆ® ïH¥ò« ï‹dhnjh? என்று இறுதி யடியில் மட்டும் பதங்கள் மாற்றப்பட்டன. அடும்பு- கடற்கரையில் உள்ள ஒரு வகைக் கொடி; அது நீர்க்கழிகளிலே படர்ந்திருக்கும். தடம்- பெரியது. இங்கு நீளத்தைக் குறித்தது. தொடுத்தது- வளைத்து ஏ அசை. சிதைஇ; உயிர் அளபெடை. இனாமாகக் கொடுத்த ஒன்றைத் திருப்பிக் கேட்பதைவிட உயிர் விடுதலே நலம் என்ற நீதியை இச்செய்யுள் எடுத்துக் காட்டிற்று. தடுக்கவில்லை - சென்றார் பாட்டு 350 பின்னால் வருவதைப் பற்றி முன் கூட்டியே எண்ணிப் பார்க்க வேண்டும்; அதன் பிறகுதான் செயலில் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் துன்பம் நம்மை அணுகாது முன்னால் தவறு செய்து விட்டுப் பின்னால் வருந்துவதால் பயன் இல்லை, இவ் வுண்மையை இச் செய்யுளில் காணலாம். தலைவன் பிரிந்து செல்லும் போது தலைவி தடுக்கவில்லை அவள் சம்மதம் பெற்றே அவன் பிரிந்து போனான். அவன் போன பின் தலைவி வருந்தியிருந்தாள். அதைக் கண்டாள் தோழி. தலைவர் பிரிந்து சென்ற போது நாம் வாளாவிருந்தோம்; உமது பிரிவால் நாம் வருந்துவோம்; ஆதலால் பிரிந்து போக வேண்டாம் என்று சொல்லியிருப்போமாயின் அவர் போயிருக்க மாட்டார்; நம்முடனேயே தங்கியிருப்பார். நாம் சம்மதித்த தனால்தான் அவர் போனார். ஆதலால் அவரிடம் ஒரு குற்றமும் இல்லை. நாம், அன்று, அவர் பிரிவுக்கு இணங்கி விட்டு இன்று வருந்துவது ஒழுங்கன்று; ஆதலால் நீ, துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினாள். வாழ்க தோழியே! நான் ஒன்று சொல்லுகின்றேன் கேள்! தலைவர், நிலைத்து நில்லாத செல்வத்தின் மேல் ஆசையுற்று அதைத் தேடுவதற்குப் பிரிந்து போனார்; அவர் செல்லும் பாலை நிலத்திலே கணந்துட் பறவைகள் உண்டு. அவை வழிநடையின் அருகிலே கூட்டமாக இருக்கும்; அவை அழகிய சிறகுகளை யுடையவை, நீண்ட கால்களை உடையவை அவை வேடர்களின் வருகையை, வழி நடப்போர் கூட்டத்திற்கு அறிவித்து, அவர்களை வேடர்களின் கொள்ளைக்கு ஆளாகாமல் காக்கும். அவர்களை வேடர்கள் இல்லாத வேறு வழியில் நடந்து போகும்படி செய்யும். இத்தகைய பாலைவனத்தைக் கடந்து சென்ற அவரை நாம் தடை செய்யவில்லை! நீர் பிரிந்து சென்றால் நாங்கள் மிகவும் வருந்துவோம்; ஆதலால் பிரிந்து போக வேண்டாம் என்று சொல்லியிருப்போமானால் அவர் பிரிந்து போயிருக்க மாட்டார். அப்பொழுது நாம் தடுக்காமல் ஒருப்பட்டோம். இப்பொழுது வருந்துவதால் பயன் இல்லை பாட்டு அம்ம வாழி! தோழி! முன்னின்று; பனிக்கடும் குரையம் செல்லா தீம் எனச் சொல்லினம் ஆயின் செல்வர் கொல்லோ! ஆற்று அயல் இருந்த இரும் தோட்டு அம்சிறை நெடுங்கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ ஆறுசெல் வம்பலர் படை தலை பெயர்க்கும் மலைஉடைக் கானம் நீந்தி நிலையாப் பொருள் பிணிப் பிரிந்திசினோரே. பதவுரை:- வாழி தோழி அம்ம- ஒன்று சொல்லுகின்றேன் கேள். ஆற்று அயல் இருந்த- வழியின் பக்கத்திலேயிருந்த. இரும் தோட்டு- கூட்டமாகிய. அம்சிறை- அழகிய சிறகுகளையும் நெடும்கால்- நீண்ட கால்களையும் உடைய. கணந்துள்- கணந்துள் என்னும் பறவைகள். ஆள் அறிவுறீஇ - தமக்குத் துன்பம் செய்யும் வேடர்கள் இருப்பதை அறிவித்து. ஆறுசெல்- வழியிலே நடந்து செல்லுகின்ற. வம்பலர் படை- புதியவர்களின் கூட்டத்தை. தலை பெயர்க்கும் - வேறு வழியாக நடந்து போகும்படி செய்கின்ற. மலை உடை கானம் நீந்தி- மலையமைந்த காட்டைக் கடந்து. நிலையாப் பொருள் - நிலையற்ற செல்வத்தின். பிணி- ஆசையினால். பிரிந்திசினோர் ஏ- பிரிந்து சென்றவரை. முன்நின்று- அவர் பிரியும் போது அவர் எதிரிலே நின்று. பனிகடும் குரையம்- இனிவரும் பனிக்காலத்தின் கொடுமை தாங்க மாட்டோம். செல்லாதீம் - ஆதலால் பிரிந்து செல்லாதீர். எனச் சொல்லினம் ஆயின்- என்று சொல்லியிருப்போம் ஆனால் செல்வர் கொல் ஒ- அவர் பிரிந்து போயிருப்பாரோ? கருத்து:- தலைவர் பிரியும் போது போக வேண்டாம் என்று தடுத்திருந்தால் அவர் போயிருக்க மாட்டார். விளக்கம்:- தலைவன் பிரிவால் வருந்தியிருந்த தலைவியைப் பார்த்துத் தோழி கூறியது. பாலைத்திணை. இது ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. வாழி தோழி அம்ம என்று முதலடி மாற்றப்பட்டது. முன்னின்று பனிக்கடும் குரையம் செல்லாதீம் எனச் சொல்லின மாயின் செல்வர் கொல்லோ என்ற அடிகளைப் பிரிந்திசினோரே என்னும் தொடருக்குப்பின் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. கடும் குரையம்- கடுமையை உடையோம். செல்லாதீம்- செல்லாதீர். இரும்தோடு- பெரிய தொகுதி. கணந்துள்- கூட்டமாக வசிக்கும் ஒரு வகைப் பறவை. மலை உடை கானம்- மலை அருகில் உள்ள பாலைவனம். உறீஇ- உயிர் அளபெடை ஏ, ஓ அசைகள். இனி பழிக்க இடமில்லை பாட்டு 351 தலைவனுடைய உறவினர் தலைவியினுடைய பெற்றோரை அணுகினர். தலைவனுக்குப் பெண் கேட்டனர். அவர்களும் ஒருப்பட்டனர். இச்சமயத்தில் தலைவி தன் பெற்றோர் தன் காதலனுக்குத் தன்னை மணம் புரிந்து கொடுக்க இசைந்தனரோ இல்லையோ என ஐயுற்றிருந்தாள்; அச்சமும் கொண்டாள். இந்நிலையில் உள்ள தலைவியைப் பார்த்துத் தோழி கூறுவதாக அமைந்தது இச்செய்யுள். வளையலை அணிந்த தலைவியே நீ சிறிதும் அஞ்ச வேண்டாம் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். விரைந்து செல்லும் தன்மையையும் வளைந்த கால்களையும் உடைய நண்டுகள், வளையிலே வாழும் தன்மையுள்ளவை. அவை கடற்கரையிலே தம்முடைய கூர்மையான நகங்களால் ஈர மணலிலே கோடுகள் போட்டிருக்கின்றன. அக் கோடுகளின் ஒழுங்கு அழியும்படி இழும் என்னும் ஓலியுடன் இடி முழக்கம் போல முழங்கும் அலைகளையுடைய கடல்துறையின் தலைவனே நமது காதலன். அவருக்குப் பெண் கேட்டு வந்தவரிடம், நீ அவருக்கே உரிமையானவள் என்று உரைத்துச் சம்மதம் தெரிவித்தனர் நமது பெற்றோர். மலர்ந்த பூக்களையுடைய புன்னை மரங்கள் நிறைந்து, புலால் நாற்றம் வீசுகின்ற இச் சேரியில் உள்ள சிரித்து விளையாடும் பெண்களும் இவ்வூரினரும் இன்னும் முன்போல் நம்மைப்பற்றி பழித்துப் பேச முடியுமா? முடியாது. பாட்டு வளையோய்! உவந்திசின்; விரைவுறு கொடுந்தாள் அளைவாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர்மணல் மலிர்நெறி சிதைய, இழும் என, உரும் இசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு, உரிமை செப்பினர் நமரே, விரி அலர்ப் புன்னை ஓங்கிய புலால் அம் சேரி இன்னகை ஆயத்தாரோடு இன்னும் அற்றோ இவ் அழுங்கல் ஊரே. பதவுரை:- வளையோய்- வளையலை அணிந்த தலைவியே. உவந்திசின்- நான் மகிழ்ச்சியடைந்தேன். விரைவுறு கொடும்தாள் - விரைந்து செல்லும் வளைந்த கால்களையுடைய. அளை வாழ் அலவன்- வளையிலே வாழ்கின்ற நண்டுகளின். கூர் உகிர் விரித்த- கூர்மையான நகங்களால் கிழித்த. ஈர்மணல்- ஈரமான மணலிலே. மலிர்நெறி - விளங்குகின்ற கோட்டொழுங்கு. சிதைய- அழையும் படி. இழும்என- இழும் என்ற தன்மையுடன். உரும் இசை- இடியோசை பொருந்திய. புணரி உடைதரும்- அலைகள் மறிந்து வீழ்கின்ற. துறைவர்க்கு - நீர்த்துறையை உடைய தலைவருக்கு. உரிமை செப்பினர் - நீ உரிமையாவாய் என்று கூறினர். நமர்ஏ- நமது பெற்றோர். விரி அலர் புன்னை ஓங்கிய- ஆதலால் மலர்கள் விரிந்த புன்னை மரங்கள் வளர்ந்த. புலால் அம்சேரி- புலால் நாற்றம் வீசும் சேரியில் உள்ள. இன்நகை ஆயத்தாரோடு- இனிய நகைப்பையுடைய பெண்கள் கூட்டத்தோடு. இவ்அழுங்கல் ஊர் ஏ- இந்த ஆரவாரத்தை யுடைய ஊரில் உள்ளவர்களும். இன்னும் அற்று ஏ- இன்னும் முன் போல் பழி கூறுவரோ. கருத்து:- தலைவருக்கு உன்னை அளிக்கப் பெற்றோர் உடன் பட்டனர். நீ அஞ்சற்க. விளக்கம்:- இச்செய்யுள் அம்மூவன் என்னும் புலவரால் பாடப்பட்டது. தலைவனுடைய உறவினர் பெண் கேட்க வந்தனர். அப்பொழுது தலைவி, தம் பெற்றோர் என்ன சொல்லினரோ என்று அஞ்சினாள். அதைக்கண்ட தோழி, தலைவிக்கு உண்மையை எடுத்துரைத்தாள். தோழி கூற்று. நெய்தல் திணை. இவ் அழுங்கல் ஊரே, இன்னும் அற்றோ என்று இறுதி அடி மட்டும் மாற்றிப் பொருள் கூறப்பட்டது. கொடும்தாள்- வளைந்த கால். அளை- புற்று. மலிர்- விளங்குகின்ற. இழும்என- இழும் என்பது தொடர்ச்சியாகக் கேட்கும் ஓசை. அழுங்கல்- ஆரவாரம். ஏ- அசை. இரவிலே எப்படி அறிந்தாய்? பாட்டு 355 இரவிலே தலைவியைச் சந்தித்துக் கலந்து மகிழ்ந்து செல்வான் காதலன். ஒருநாள் இரவு நல்ல மழை; பெருமழை; எங்குப் பார்த்தாலும் வெள்ளக்காடு. ஒரே இருட்டு. அந்த இருட்டிலும் நற்றிரவிலே அக்காதலன் தலைவியைக் காண வந்துவிட்டான். அதைக் கண்டாள் தோழி; அவன் அவ்வாறு இரவிலே வருவதை அவள் விரும்பவில்லை. தலைவியின் களவு மண வாழ்வையும் விரும்பவில்லை. அவனும் தன் தலைவியும், கற்புமணம் புரிந்து கொண்டு வெளிப்படையாக வாழவே விரும்பினாள். ஆதலால், தலைவன் வருகையைக் கண்டு வருந்துவது போல அவனிடம் நீ இரவில் எப்படி வந்தனை என்று கேட்டாள். உயர்ந்த மலையையுடைய தலைவனே; விடாத மழை; வானத்தையே மறைத்துக் கொண்டது. அதனால் வானத்தையும் வானத்தின்கண் மின்னும் மீன்களையும் உன்னால் பார்க்க முடிய வில்லை மழைநீர் எங்கும் வெள்ளமாகப் பெருகிப் பரந்தோடு கின்றது; ஆதலால் நிலத்தைக் காண முடியாமையால், நடக்கும் வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கதிரவன் மறைந்ததால் இருள் மிகுந்தது. எம் அன்னையர் மட்டும் அன்று; ஊரினர் பலரும் படுத்துறங்குகின்றனர். இந்த நள்ளிரவிலே நீ எப்படித்தான் வந்தனையோ? வேங்கை மரங்கள் பூத்து மணம் கமழும் எங்கள் சிற்றூரை இந்த நிலையில் எப்படித்தான் கண்டறிந்தனையோ? உனக்கு நேர்ந்த துன்பத்திற்காக நான் மிகவும் வருந்துகின்றேன். பாட்டு பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலையே; நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலையே; எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று; பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ! ஓங்கல் வெற்ப; வேங்கை கமழும் எம்சிறுகுடி. யாங்கு அறிந்தனையோ; நோகோ யானே. பதவுரை: ஓங்கல் வெற்ப- உயர்ந்த மலையின் தலைவனே. பெயல்- மழை. கண் மறைத்தலின்- வானிடத்தை மறைத்ததனால். விசும்பு காணலையே - வானத்தையும் காண முடியாதவன் ஆயினை. நீர் பரந்து ஒழுகலின் - மழைநீர் எங்கும் பரந்து ஓடுவதனால். நிலம் காணலையே - நிலத்தையும் காண முடியாதவன் ஆயினை. எல்லை சேறலின்- சூரியன் மறைந்ததனால். இருள் பெரிது பட்டன்று- இருட்டு மிகுந்து விட்டது. பல்லோர் துஞ்சும்- ஊரினர் பலரும் உறங்குகின்ற. பால்நாள் கங்குல்- பாதி இரவிலே. யாங்கு வந்தனையோ - எப்படித்தான் இவ்விடத்தைச் சேர்ந்தாயோ? வேங்கை கமழும்- வேங்கை மரங்கள் பூத்து மணம் கமழும். எம்சிறுகுடி- எமது சிற்றூரை. யாங்கு அறிந்தனையோ- எப்படித் தான் கண்டறிந்தாயோ. யான் நோகு- உன் செயலுக்காக நான் வருந்துகின்றேன். கருத்து: நீ நள்ளிரவிலே இவ்வாறு வருவதற்காக நான் வருந்துகின்றேன். விளக்கம்: இது கபிலர் பாட்டு. இரவுக் குறியிலே வந்த தலைமகனிடம் தோழி வருந்திக் கூறியது. குறிஞ்சித்திணை. ஓங்கல் வெற்ப என்ற தொடரை வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. நோகோ என்பதில் உள்ள ஓ, இரக்கத்தைக் காட்டும் இடைச்சொல். ஏ- அசை. பெயல்- மழை கண்- இடம்; இங்கு வானிடத்தைக் குறித்தது. எல்லை- கதிரவன். யாங்கு- எப்படி- மழைபெய்யும் நள்ளிரவின் தோற்றத்தை இச் செய்யுள் காட்டுகின்றது. இந்த ஆற்றலை எப்படிப் பெற்றாள்? பாட்டு 356 தலைவி, தான் காதலித்த கணவனை வெளிப்படையாக மணந்து கொள்ள முடியவில்லை. அதற்கு ஏதோ தடையிருந்தது. ஆதலால் அவள் கற்பை வெளிப்படுத்தத் துணிந்தாள். தன் காதலனுடன் புறப்பட்டுப் போய்விட்டாள். வீட்டார் அறியாமல் புறப்பட்டுப் போன மகளைக் குறித்து- தலைவியைக் குறித்து- செவிலித்தாய் வருந்துகின்றாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். கோல் வடிவான சிறிய வளையல்களை அணிந்தவள்; தளிர் போன்ற மெல்லிய உடம்பையுடையவள் செம்பொன்னால் செய்த பாண்டத்திலே பொரியோடு கலந்த பாலைக் கொடுக்கும் போதெல்லாம், சரியாக அருந்த மாட்டாள்; அது அதிகம் என்று சொல்லி உண்ண மறுப்பாள்; அத்தகையவள் இப்பொழுது சொல்லாமல் புறப்பட்டுப் போய்விட்டாள். நிழலேயில்லாத வழி; நீரும் அற்றுப்போன வறண்ட நெறி; இந்த வழியிலே வீரக்கழலை அணிந்த காதலன் காவலாக வரவிரைந்து சென்றாள், நீர் வறண்ட சுனையிலே காய்ந்து சூடேறிப் போன கலங்கல் சேற்று நீரை, தல்லென்னும் ஓசைபடக்குடிப்பதற்கு எவ்வாறுதான் துணிவு கொண்டனளோ? அறியேன். வீட்டிலே பாலைக் குடிப்பதற்கு மறுப்பவள் பாலை நிலத்துச் சேற்றுத் தண்ணீரை எப்படித்தான் குடிப்பாளோ? பாட்டு நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி, அறுசுனை மருங்கின், மறுகுபு வெந்த வெவ்வெம் கலுழி, தல் எனக் குடிக்கிய யாங்கு வல்லுநள் கொல்? தானே, ஏந்திய செம்பொன் புனைகலத்து அம் பொரிக்கலந்த பாலும், பல என உண்ணாள்; கோல் அமை குறும் தொடித்தளிர் அன்னோளே. பதவுரை:- கோல் அமை- கோல் வடிவாக அமைந்த. குறுந் தொடி -சிறிய வளையலை அணிந்த. தளிர் அன்னோள்- தளிர் போன்ற தன்மையுள்ளவள். ஏந்திய- கையில் தாங்கிய. செம்பொன் புனைகலத்து- சிவந்த பொன்னால் செய்த பாத்திரத்திலே. அம் பொரிக் கலந்த- நல்ல பொரியுடன் கலந்த. பாலும் பல என- பாலையும் மிகுதி என்று சொல்லி. உண்ணாள்- உண்ணமாட்டாள். நிழல் ஆன்று அவிந்த - இத்தகைய என்மகள் நிழல் அடங்கி மறைந்த. நீர் இல்- தண்ணீர் இல்லாத. ஆர் இடை- அரிய பாலைநில வழியிலே. கழலோன் காப்ப- வீரகண்டா மணியை அணிந்த காதலன் துணையாக வர. கடுகுபு போகி- விரைந்து சென்று. அருசுனை மருங்கின்- நீர் வறண்ட சுனையிலே. மறுகுபு வெந்த- காய்ந்த சூடேறிய. வெம்வெம் கலுழி- மிகுந்த வெம்மையான சேற்றுநீரை. தல்என- தல்என்னும் ஒலியுடன். குடிக்கிய- குடிப்பதற்கு. யாங்கு வல்லுநள் கொல்- எவ்வாறு துணிவு கொண்டனளோ? கருத்து:- என் மகள் பாலைநிலத்தில் நடக்கவும், சேற்று நீரைக் குடிக்கவும் எப்படித்தான் துணிந்தனளோ? விளக்கம்:- இது கயமள் அல்லது கயமனார் என்னும் புலவர் செய்யுள். தலைமகள் காதலனுடன் பாலை நெறியைக் கடந்ததை எண்ணிச் செவிலித்தாய் கூறியது. பாலைத்திணை. கோல் அமைகுறும் தொடி தளிர் அன்னோளே. ஏந்திய செம்பொன் புனை கலத்து அம் பொரிக்கலந்த பாலும் பல என உண்ணாள். இவ்வாறு இறுதி அடிகள் மாற்றப்பட்டு முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. தான்; ஏ; ஏ; அசைச் சொற்கள். ஆன்று அவிந்த- அடங்கி மறைந்த. மறுகுபு- உலர்ந்து; காய்ந்து. வெம் வெம்- மிகுந்த சூடுள்ள. கலுழி- சேற்றுநீர். பல- மிகுதி. கோல்- குச்சி. திரட்சி. அந்நாளில் அழகாக இருந்தன பாட்டு 357 தலைவியை மணந்து கொள்ளாமல் தலைவன் காலங் கடத்திக் கொண்டே வந்தான். அவன் விரைவில் தலைவியை வெளிப்படையாக மணம்புரிந்து கொண்டு வாழ வேண்டும்; தலைவியின் களவு ஒழுக்கத்தை ஏனையோர் அறியுமுன்பே கற்பு மணம் புரிந்து கொள்ள வேண்டும். இது தோழியின் ஆசை. ஆனால் அவள் தன் கருத்தைத் தலைவனிடம் நேரடியாகச் சொல்லவில்லை. ஒரு நாள், தலைவன் தலைவியைக் காண்பதற்காக, மறைவிடத்திலே வந்துநின்றான். அப்பொழுது அவன் காதினிலே விழும்படி தோழி, தலைவியைப் பார்த்துப் பேசிய செய்தியை உரைப்பது இச்செய்யுள். தலைவியே! நீ உன் காதலனை அடிக்கடி காண முடியாமையால் மிகுந்த துன்பத்தை அடைகின்றாய்; இரவில் கூட உன் கண்கள் உறங்குவதில்லை. உன் கண்கள் சிந்தும் நீர், மூங்கில் போன்ற உன் அழகிய தோள்களிலே குறுக்காக விழுகின்றது. அதனால் உன் தோள்கள் இளைத்து இப்பொழுது மெல்லியதாகி விட்டன. தினைப்புனத்தைப் பரண் மேலிருந்து காப்போன் கையில் உள்ள கொள்ளிக்கட்டையைக் கண்டு பெரிய யானை அஞ்சி ஓடுகின்றது. அவ்வாறு கொள்ளிக் கட்டைக்குப் பயந்த அந்த யானை வானத் திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரத்தைக் கண்டு, கொள்ளிக்கட்டை யென்று நினைத்து அஞ்சுகின்றது. இத்தகைய யானைகளையுடைய. வானத்தை அளாவிய மலையின் தலைவன் உன்னை மணப்பதற்கு முன்பு உன் தோள்கள் நன்றாக இருந்தன. கண்டோர் ஆசைப் படும்படி திரண்டு இருந்தன; இவை அழகாக இருக்கின்றன என்று அனைவரும் பாராட்டும்படி இருந்தன. பாட்டு முனிபடர் உழந்த பாடு இல் உண்கண் பனிகால் போழ்ந்து, பணை எழில் நெகிழ்தோள் மெல்லிய ஆகலின்; மேவரத் திரண்டு நல்ல என்னும் சொல்லை மன்னிய; ஏனல் அம் சிறு தினை காக்கும் சேனோன் ஞெகிழியில் பெயர்ந்த நெடுநல் யானை மீன்படு சுடர் ஒளி வெரூஉம் வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே. பதவுரை:- முனிபடர் உழந்த- வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்திய, பாடு இல்- தூக்கம் இல்லாத. உண்கண்பனி- மையுண்ட கண்களிலிருந்து விழும் நீர்த்துளிகள்; கால் போழ்ந்து- குறுக்கே வீழ்ந்து அதனால். பணைஎழில்- மூங்கில் போன்ற அழகிய. நெகிழ் தோள்- தளர்ச்சியடைந்த தோள்கள். மெல்லிய ஆகலின். இப்போது இளைத்து விட்டன ஆதலால். ஏனல் அம் சிறு தினை- தினையுள் அழகிய சிறிய தினைப்பயிர் செய்த புனத்தை. காக்கும்- காவல் புரிகின்ற. சேனோன்- பரண்மேல் உள்ளவன் கையில் உள்ள. ஞெகிழியின் பெயர்ந்த- கொள்ளிக் கட்டையினால் அஞ்சி ஓடிய. நெடுநல் யானை- பெரிய நல்ல யானையானது. மீன்படு- நட்சத்திரம் விழுகின்ற. சுடர் ஒளி- மிகுந்த ஓளியைக் கண்டு. வெரூஉம்- அஞ்சுகின்ற. வான் தோய் வெற்பன்- வானளாவிய மலையையுடைய தலைவன். மணவா ஊங்கு - உன்னை மணந்து கொள்ளாத அந்நாளில். மேவரத் திரண்டு- பிறர் விரும்பும்படி பருத்து. நல்ல- அழகாக இருக்கின்றன. என்னும் சொல்லை மன்னிய- பொருந்தியிருந்தன. கருத்து:- தலைவனை நீ அடிக்கடி பிரிந்திருக்க நேர்வதனால் உன் தோள்கள் இளைத்து மெலிந்து விட்டன. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தலைவியை மணந்து கொண்டு, ஒன்றாக இணைந்து வாழ்வதுதான் சிறந்தது என்ற கருத்தைத் தோழி கூறியது. தலைவன் காதிலே விழும்படி, தலைவியிடம் உரைத்தாள் தோழி. குறிஞ்சித்திணை. மேவரத்திரண்டு நல்ல என்னும் சொல்லை மன்னிய என்ற தொடர்களை இறுதியில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. வெரூஉம்; உயிர் அளபெடை. ஏ. அசை முனிபடர் - வெறுக்கத்தக்க துன்பம். பாடுஇல்- இமையோடு இமை பொருந்தாத. ஞெகிழ்தல்- துவளுதல். மேவர- விரும்பும்படி. சேனோன்-உயரத்தில் இருப்பவன். ஞெகிழி- கொள்ளிக்கட்டை. மீன்படு- நட்சத்திரம் எரிந்து விழுகின்ற. எரிந்து விழும் நட்சத்திரத்தைக் கொள்ளிக் கட்டை என்று நினைத்து அஞ்சுகின்றது யானை. கொள்ளிக் கட்டைக்கு அஞ்சும் யானை எரிநட்சத்திரத்தைக் கண்டால் அஞ்சுவது இயல்பு. வருந்தேல்! முல்லைகள் மலர்ந்தன பார்! பாட்டு 358 கார் காலம் வந்து விட்டது. காதலனைப் பிரிந்த காதலி தனித்திருக்கின்றாள். துணைவன் இல்லாமல் துன்பத்தில் உழலு கின்றாள் அவள் நிலையைக் கண்டாள் தோழி இதோபார். கார் காலம் வந்து விட்டது. அதற்கு அறிகுறியாக முல்லைக் கொடிகள் பூத்துப் பொலிகின்றன. காதலர் வருவதாகக் குறித்த காலம் இதுதான். ஆதலால் அவர் வந்து விடுவார் வருந்தாதே என்று ஆறுதல் உரைத்தாள் தோழி. நீ அணிந்திருக்கும் இறுகிய அணிகலன்கள் எல்லாம் கழன்று விழும்படி விம்மி விம்மி அழாதே இவ்வாறு நீர்த் துளிகளை வீசும் கண்ணோடு நின்றும் மயங்காதே. அவர் வருவாரா, மாட்டாரா என்று ஆராய்கின்ற கோடுகளைச் சுவரிலே கிழித்து அவற்றை எண்ணிப் பார்த்துக் கொண்டு நின்று வருந்தாதே. உன்னுடைய மிகுந்த துன்பம் நீங்கும்படி வந்து சேர்வோம் என்று அவர் குறித்த காலம்வந்துவிட்டது. அதோபார் காதலனைப்பிரிந்து தனித் திருப்போர் வருந்துகின்ற இந்த மாலைக்காலத்திலே பல பசுக்களைச் செல்லமாகக் கொண்ட கோவலர்கள் அணிந்திருக்கும் மாலையைப் பார். அவை முல்லை மொக்குகளால் தொடுக்கப் பட்டவை. அம் மொக்குகள் மலர்ந்து காதலர் வருவார் என்பதைச் சொல்லுகின்றன. பாட்டு வீங்கு இழை நெகிழ விம்மி, ஈங்கே எறிகண் பேது உறல் ஆய்கோடு இட்டுச் சுவர் வாய்ப் பற்றும், நின் படர், சேண் நீங்க, வருவோம், என்ற பருவம், உதுக்காண்! தனியோர் இறங்கும் பனிகூர் மாலைப் பல் ஆன் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன முல்லை மென் முகையே. பதவுரை:- வீங்கு இழை நெகிழ- இறுகிய அணிகள் எல்லாம் தளரும்படி. விம்மி- அழுது. ஈங்கே - இப்பொழுது, எறிகண்- நீர் வீசுகின்ற கண்ணுடன் நின்று. போது உறல்- மயங்காதே. ஆய் கோடு இட்டு- அவர் வருவாரா மாட்டாரா என்று ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்துக் கொண்டு. சுவர்வாய் பற்றும்- சுவரைப் பிடித்து நிற்கின்ற. நின்படர்- உன்னுடைய துன்பம். சேண் நீங்க- விலகும்படி. வருவேம் என்ற- வந்து விடுவோம் என்று அவர் சொல்லிய. பருவம் உதுக்காண்- காலத்தை அதோபார். தனியோர் இரங்கும்- தனித்திருக்கும் காதலர் வருந்தக்கூடிய. பனிகூர் மாலை- மிகுந்த குளிர் உள்ள இந்த மாலைக் காலத்திலே. பல் ஆன் கோவலர்- பல பசுக்களை யுடைய இடையர்கள். கண்ணி- அணிந்திருக்கின்ற மாலையில் உள்ள. முல்லை மெல் முகை- முல்லையின் மெல்லிய மொட்டுகள், சொல்லுப அன்ன - இச்செய்தியைச் சொல்லுகின்றவை போலக் காணப்படுகின்றன. கருத்து:- கார் காலம் வந்து விட்டது; அவர் வந்து விடுவார்; வருந்தாதே. விளக்கம்;- இது கொற்றன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்குத் தோழி உரைத்த ஆறுதல் மொழி. முல்லைத்திணை. முல்லை மென்முகை சொல்லுப அன்ன என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. ஏ; அசை. வீங்கு இழை- இறுகிப் பிடித்துள்ள அணிகள். படர்- துன்பம். சேண்- தூரம். ஆய்கோடு- நாளை எண்ணிப் பார்க்கின்ற கோடுகள். பெண்கள் நாட்கணக்குப் பார்ப்பதற்குச் சுவரிலே கோடு இட்டுப் பார்ப்பார்கள். இன்றும் படிக்காத பெண்களிடம் இவ்வழக்கம் உண்டு இதுவன்றோ கற்புடைமை பாட்டு 359 பரத்தையரை நாடிப் போய்விட்டான் தலைவன்; மீண்டும் திரும்பி வந்தான். தலைவியைச் சமாதானப்படுத்தத் தூது மூலம் முயன்றான்! ஆனால் தலைவியின் மன்னிப்பைப் பெறமுடிய வில்லை. இறுதியில் தானாகவே துணிவு கொண்டு இல்லத்தில் புகுந்தான். தன் புதல்வனைத் தழுவிக் கொண்டான். தலைவியும் ஊடல் நீங்கினாள். இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தோழி இதைப் பாணனிடம் உரைத்தாள். இதுவே இப்பாடலில் கூறப்படும் பொருள். மாலைக் காலம்; வெண்மையான நிலவு; எங்கும் அந்நிலவு வெண்மையாகப் பரவி நிற்கின்றது. அந்நிலவில் முற்றத்திலே குறுகிய கால்களையுடைய கட்டில் ஒன்று. அதன் மேல் மணம் வீசும் மலர் பரப்பிய படுக்கை. அப்படுக்கையிலே தன் காதல் புதல்வன் படுத்திருக்கிறான். தூதுவர்கள் வாயிலாகத் தலைவியின் வரவேற்பைப் பெற முடியாத தலைவன் தானும் அந்தச் சிறு கட்டிலின் மேல் ஏறினான். படுத்திருக்கும் யானையைப் போல் மூச்சு விட்டுக் கொண்டு வெற்றியையுடைய தலைவன் அப்புதல்வனை அன்புடன் தழுவிக் கொண்டான். இவ்வாறு தழுவிக் கொண்டு படுத்திருந்தான். இதைக் கண்ட தலைவி பிணக்கம் தவிர்த்தாள். தானும் அக்கட்டிலிலே ஏறினாள், காதலன் முதுகுப் புறத்தைத் தழுவிக் கொண்டாள். பாணனே இந்நிகழ்ச்சியை எண்ணிப்பார், இது அன்றோ சிறந்த கற்பின் தன்மையாகும். பாட்டு கண்டிசின் பாண! பண்பு உடைத்து அம்ம! மாலை விரிந்த பசு வெண்ணிலவில், குறும்கால் கட்டில் நறும்பூல் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன், நசையின் புதல்வன் தழீஇயினன் விறலவன்; புதல்வன் தாய். அவன் புறம் கவைஇயினளே. பதவுரை:- மாலை விரிந்த- மாலைக்காலத்திலே பரந்த. பசு வெண்நிலவில்- இளைய வெண்மையான நிலவிலே, குறும்கால் கட்டில்- குறுகிய கால்களையுடைய கட்டிலின்மேல். நாறும் பூம் சேக்கை- நறுமணம் கமழும் மலர்ப் படுக்கையிலே. பள்ளி யானையின்- படுத்திருக்கும் யானையைப் போல. உயிர்த்தனன்- மூச்சு விட்டுக் கொண்டு. நசையின்- அன்பினால். புதல்வன் தழீஇனன் - தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு படுத்தான். விறலவன்- வெற்றி பொருந்திய தலைவன். புதல்வன் தாய்- இதைக் கண்ட புதல்வன் தாயாகிய தலைவி. அவன் புறம் கவைஇயினள்- பிணக்கு நீங்கி அத்தலைவன் முதுகுப் புறத்தைத் தழுவிக்கொண்டு தானும் படுத்தாள். கண்டிசின் பாண - இந் நிகழ்ச்சியை எண்ணிப் பார் பாணனே. பண்புடைத்து- இதுவே கற்புடைச் செயலாகும். கருத்து:- தலைவன் செயலைக் கண்டு தலைவி பிணக்கு நீங்கினாள். விளக்கம்:- இது பேயன் என்னும் புலவர் பாட்டு. தலைவனுடன் தலைவி தானாகவே சமாதானமடைந்த நிகழ்ச்சியைத் தோழி பாணனிடம் கூறியது. தோழி கூற்று மருதத்திணை. கண்டிசின் பாண, பண்புடைத்து அம்ம என்ற முதல் அடியை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அம்ம வியப்பைக் காட்டும் இடைச்சொல். ஏ; அசை. தழீஇயினன் கவைஇயினள் உயிர் அளபெடைகள். விறல்- வெற்றி. புறம்- பின்புறம். அவன் வராமல் இருப்பதே நன்று பாட்டு 360 தலைவனும் தலைவியும் இரவு நேரத்திலே கண்டு களிக் கின்றனர். இவ்வாறு வழக்கமாகக் களவு மணவாழ்வு நடந்து கொண்டிருக்கின்றது. இச்சமயத்திலே துக்கம் பிறந்தது. தனக்குள்ள காவலைக் கருதியும் தலைவன் துன்பம் தரும் அருநெறியிலே இரவு நேரத்தில் வருவதை எண்ணியும் வருந்தினாள். இதனால் அவள் உருவம் வேறுப்பட்டாள். இதைக் கண்ட தாய் முருகனுக்குப் பூசையிட்டுத் தலைவியின் இவ்வேறுபாட்டுக்கான காரணத்தை அறிய முடிவு செய்தாள். இம்முடிவைக் கண்டு தோழி அஞ்சினாள். இப்படி அச்சமுற்ற தோழியைப் பார்த்துத் தலைவி கூறியதை உரைப்பது இச்செய்யுள். தோழியே? இப்பொழுது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நமக்கு எத்தகைய பெருந்துன்பம் வந்தாலும் வரட்டும்: அத்துன்பத்தை நாம் பொருட்படுத்தாமல் அனுபவிப்போம். எனது நோயைப் போக்கும் வழி முருகனுக்கு வெறியாட்டு எடுத்தல் ஒன்றுதான் என்று எண்ணும் அந்த வேலன், எனக்கு ஏற்ற மருந்து இன்னது என்பதை அறியாதவனாவான். இவ்வுண்மையை நமது அன்னை கண்டறிய வேண்டும். ஆதலால் அத்தலைவன் இரவிலே வரவேண்டாம். மலைச் சாரலிலே பெண்யானையின் கையைப் போலப் படுத்திருக்கும் பெரிய தினைக் கதிரைக் கிளிகள் உண்ண வருகின்றன. கிளிகளை ஓட்டுவதற்குக் காவலிருக்கும் குறமகள் தன் கையில் உள்ள கிளியோட்டும் கருவியாகிய குளிரைக் கலகலவென்று குலுக்குகின்றாள்; அது சிலம்போசை போல முழங்குகின்றது. இத்தகைய தினைப்புனங்களும், சோலைகளும் நிறைந்து விளங்கும் மலைநாட்டுத் தலைவன் இரவில் வராமல் இருக்கட்டும். அப்பொழுதுதான் வேலன் எனது நோய்க்கான மருந்தை அறியாதவன் என்பதை அன்னை உணர்வாள். தலைவன் வராமையால் எனது துன்பம் இன்னும் வளரும்; வெறியாட்டு எடுத்தாலும் என் துக்கம் தணியாது. இது கண்டு, வெறியாட்டு இந்நோய்க்கு மருந்து அன்று என்ற உண்மையை அன்னை உணர்வாள். பாட்டு வெறிஎன உணர்ந்த வேலன், நோய் மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய; அரும்படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் வாரற்கதில்ல, தோழி! சாரல் பிடிக்கை அன்ன பெரும்குரல் ஏனல். உண்கிளி கடியும், கொடிச்சிகைக்குளிரே சிலம்பின் சிலம்பும், சோலை இலங்குமலை நாடன், இரவினானே. பதவுரை:- தோழி! அரும்படர் எவ்வம்- பொறுக்க முடியாத நினைவுத் துன்பத்தால். இன்று நாம் உழப்பினும்- இன்று நாம் வருந்தினாலும் குற்றம் இல்லை. வெறி- எனது நோய்க்குப் பரிகாரம் முருகனுக்குப் பூசையிடுவதுதான். என உணர்ந்த வேலன்- என்று எண்ணிய வேலன். நோய் மருந்து- எனது துன்பத்துக்கான மருந்தை. அறியான் ஆகுதல்- அறியாதவனா யிருப்பதை. அன்னை காணிய - நமது அன்னை காணும் பொருட்டு. சாரல்- மலைச்சாரலிலே, பிடிக்கை அன்ன- பெண் யானையின் தும்பிக்கையைப் போல. பெரும் குரல் ஏனல்- பருத்த கதிரையுடைய தினையை. உண்கிளி கடியும்- உண்ணவருகின்ற கிளிகளை விரட்டும். கொடிச்சி- குறத்தியின். கைக்குளிர் - கையில் உள்ள குளிர் என்னும் கருவி. சிலம்பின் சிலம்பும்- சிலம்பைப் போல ஓசையிடும். சோலை யிலங்கும்- சோலைகள் விளங்குகின்ற. மலைநாடன்- மலை நாட்டையுடைய நமது தலைவன். இரவுனான்- இரவிலே. வாரற்க- வராமலிருப்பாராக. தில்அ- இது எனது விருப்பமாகும். கருத்து:- இரவுக் குறியிலே தலைவன் வராதிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அன்னை என் துன்பத்தின் உண்மைக் காரணத்தை உணர்வாள். விளக்கம்:- இது மதுரை ஈழத்துப் பூதன் தேவன் என்னும் புலவர் பாட்டு. அன்னை வெறியாட்டு எடுக்கத் துணிந்தது கண்டு தோழி அஞ்சினாள். அத்தோழிக்குத் தலைவி கூறியது. தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. தோழி அரும்படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், வெறியென உணர்ந்த வேலன், நோய் மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய என்று வரிகள் மாற்றப்பட்டன. வாரற்கதில்ல என்ற தொடரை இறுதியில் வைக்கப்பட்டது. இவ்வாறு மாற்றிப் பொருள் கூறப்பட்டது. வெறியாட்டு- முருகனுக்குப் பலியிட்டுப் பூசை போடுதல். வேலன்- வேற்கம்பைக் கையில் வைத்திருப்பவன்; முருகனுக்குப் பூசை செய்வோன்; ஆவேசம் வந்து ஆடுவோன். படர் - நினைப்பு. தில்- ஆசை. ஏ, அசை. குளிர்- சிலம்பு கோல்- ஒலிக்கும் ஒருவகைக் கருவி. கிளியை ஓட்ட இதனால் ஒலி எழுப்புவர் மகளிர். தினைக்கதிரின் பருமனுக்கு யானைத் துதிக்கை உவமை. தலைவன் இரவுக் குறியிலே வந்து மறைவிடத்தே நிற்கும் போது அவள் காதில் கேட்கும்படி இவ்வாறு கூறினாள் தலைவி. காந்தள் செடியே என்னைக் காத்தது பாட்டு 361 தலைமகளுக்கு மணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டி ருந்தனர்; அவள் எவனைக் காதலித்துக் களவு மணம் புரிந்து கொண்டாளோ அவனுக்கே திருமணம் செய்வதாகத் தீர்மான மாயிற்று. இச்சமயத்திலே தோழி, தலைவியை நோக்கி நீ இதுவரையிலும் தலைவன் பிரிவினால் தோன்றிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருந்தாய் என்று கூறினாள். நான் துக்கத்தைத் தாங்கியிருந்ததற்குக் காரணம், அவர் மலையிலிருந்து வந்த காந்தள் மலர்ச் செடிதான் என்று தலைவி விடையிறுத்தாள். இந் நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தோழியே ஒரு உண்மையை உரைக்கின்றேன் கேட்பாயாக. அவருடைய மலையிலே மாலைக் காலத்திலே நல்ல மழை பெய்தது. அதனால் வந்த வெள்ளத்திலே பல மலர்களும் மலர்ச் செடிகளும் மிதந்து வந்தன. அந்த வெள்ளமும் இதனால், மணம் வீசிக் கொண்டு ஓடி வந்தது. காலையிலே இந்த வெள்ளத்திலே மிதந்து வந்த காந்தள் செடியின் மெல்லிய இலைகள் கசங்கிப் போகும்படி அதனை என் மார்போடு தழுவிக் கொண்டேன். அதன்பின் அச்செடியின் கிழங்கைக் கொண்டு போய் என் வீட்டு முற்றத்திலே நட்டு வளர்த்தேன். இதனால்தான் நான் ஆறுதல் அடைந்தேன். இவ்வாறு நான் செய்ததை என் அன்னை தடை செய்யவில்லை. என் விருப்பப்படி நடக்க விட்டுவிட்டாள். இத்தகைய உதவியைச் செய்த என் அன்னைக்குத் தேவருலகத்தைக் கைம்மாறாகக் கொடுத்தாலும் போதாது. அது மிகச் சிறிய உதவியாகத்தான் இருக்கும். பாட்டு அம்ம! வாழி! தோழி, அன்னைக்கு உயர்நிலை உலகமும் சிறிது ஆல்; அவர்மலை மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு காலை வந்த காந்தள் முழுமுதல் மெல்இலை குழைய முயங்கலும், இல் உய்த்து நடுதலும் கடியா தோளே. பதவுரை:- அம்ம -ஒன்று சொல்லுவேன் கேட்பாயாக. வாழி தோழி- வாழ்க தோழியே. அவர்மலை - அவருடைய மலையிலே. மாலைப் பெய்த - மாலையிலே பெய்த மழையால் பெருகி வந்த. மணம் கமழ் உந்தியொடு- மணம் வீசுகின்ற வெள்ளத்துடனே. காலை வந்த- காலையிலே வந்த. காந்தள் முழு முதல்- காந்தள் செடியை. மெல்இலை குழைய- அதன் மெல்லிய இலைகள் கசங்கும்படி. முயங்கலும்- தழுவிக் கொள்ளுவதையும் இல் உய்த்து- பின்னர் அதன் கிழங்கை வீட்டிற்குக் கொண்டு வந்து. நடுதலும்- அதனை நட்டுப் பயிர் செய்வதையும். கடியா தோள்- விலக்காத வளாகிய. அன்னைக்கு - நமது அன்னைக்கு. உயர்நிலை உலகமும்- கைம்மாறாகக் கொடுப்பதனால் வானுலகும். சிறிது ஆல்- சிறியதாகவே இருக்கும். கருத்து:- தலைவன் பிரிவால் உண்டான துன்பத்தை அவன் மலையிலிருந்து வந்த காந்தளால் பொறுத்துக் கொண்டிருந்தேன். விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தலைவிக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. அப்பொழுது தோழி தலைவியை நோக்கி, நீ உன் ஆற்றலால் தலைவனின் பிரிவைப் பொறுத்திருந்தாய் என்றாள், அவளுக்குத் தலைவி கூறிய மறுமொழி. தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. அன்னைக்கு உயர்நிலை உலகமும் சிறிது ஆல் என்ற தொடரை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஆல்; ஏ; அசைச் சொற்கள். உந்தி- வெள்ளம்; விரைவுடன் தள்ளிக் கொண்டு ஓடுவதால் உந்தி எனப்பட்டது. முழுமுதல் - முழுச் செடி. சினம் உறேல்! வினவுகின்றேன் பாட்டு 362 தலைவனைக் காணாமல் வருந்தினாள் தலைவி. அவளுக்கு ஏதோ நோய் வந்துவிட்டது என்று தாய் நினைத்தாள். உடனே வேலனை அழைத்து வெறியாட்டு எடுத்தாள். அப்பொழுது, தோழி தலைவியின் நோய்க்குக் காரணமான உண்மையை உரைக்கத் துணிந்தாள். இவ்வாறு உண்மை உணர்த்தல் அறத்துடன் நடப்பதாகும். அத்தோழி, வேலனைப் பார்த்து, வேலனே நீ கொடுக்கும் பலியைத் தலைவனுடைய மார்பும் ஏற்றுக் கொள்ளுமோ என்று கேட்டாள். இக்கேள்வியின் மூலம் தலைவிக்கு வந்திருப்பது காதல்நோயைத் தவிர வேறொன்றும் இல்லை யென்பதை வெளியிட்டாள். இந் நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். முருகனை வணங்கி வழிபாடு செய்து வந்த அறிவுள்ள வேலனே! நான் ஒன்று கேட்கின்றேன். அதற்காக நீ கோபித்துக் கொள்ளவேண்டாம். பொறுமையுடன் கேட்டபின் தக்க விடைதர வேண்டும். பல நிறங்கள் அமைந்த சிறு சோறுகளாகிய பலியை வைத்தாய்; சிறிய ஆட்டுக்குட்டியையும் கொன்றாய். அந்த ஆட்டு குட்டியின் இரத்தங்கலந்த மண்ணால் இப்பெண்ணின் நெற்றியையும் தடவினாய்; பின்னர் முருகனை வணங்கிப் பலி கொடுக்கிறாய். நீ கொடுக்கும் இந்தப் பலியை, இவளை வருந்தும்படி, செய்த மலைநிலத் தலைவனுடைய மார்பும் ஏற்றுக் கொள்ளுமோ? பாட்டு முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவல் ஓம்பு மதி! வினவுவது உடையேன், பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, சிறுமறி கொன்று, இவள் நறு நுதல்நீவி, வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒள்தார் அகலமும் உண்ணுமோ பலியே. பதவுரை:- முருகு அயர்ந்து வந்த- முருகனை வணங்கி வந்த. முதுவாய் வேல- அறிவுள்ள வேலனே. சினவல்- கோபங் கொள்ளுவதை. ஓம்புமதி- அடக்கிக் கொள்ளுவாயாக. வினவுவது உடையேன்- உன்னிடம் கேட்கும் ஒரு கேள்வியை உடையேன். பல்வேறு உருவின்- பல வகையான நிறத்தினையுடைய. சில் அவிழ் மடையொடு -சில சோற்றுப்பலியுடன். சிறுமறி கொன்று - சிறிய ஆட்டுக்குட்டியையும் கொன்று. இவள் நறுநுதல் நீவி- இவளுடைய நல்ல நெற்றியைத் தடவிய பின். வணங்கினை- வணக்கம் புரிந்து. கொடுத்தி ஆயின்- முருகனுக்குப் பலி கொடுப்பாயானால். பலியே- அப்பலியை. அணங்கிய- இவளைத் துன்புறும்படி செய்த. விண் தோய்- வானாளாவிய. மாமலைச் சிலம்பன்- பெரிய மலையையுடைய தலைவனது. ஒள்தார் அகலமும்- ஒளிபொருந்திய மாலையை அணிந்த மார்பும். உண்ணுமோ- ஏற்றுக் கொள்ளுமோ? கருத்து:- இவளுக்கு வந்த நோய் காமநோய். அதைத் தந்தவன் மலைநாட்டுத் தலைவன் ஒருவன். விளக்கம்:- இது, வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் என்னும் புலவர் பாட்டு. வெறியாட்டுச் செய்ய வந்த வேலனிடம், தோழி உண்மையைக் கூறி அறத்தொடு நின்றது. தோழிகூற்று. குறிஞ்சித் திணை. பலி என்னும் சொல்லை கொடுத்தியாயின் என்ற தொடருக்குப் பின்னால் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அயர்ந்து- வணங்கி. உரு- நிறம். அவிழ்-சோறு. மடை- பலி. மறி - ஆட்டுக்குட்டி. நீவி- தடவி. அணங்குதல்- துன்புறுத்துதல். சிலம்பன்- குறிஞ்சி நிலத்தலைவன். அன்புடையாளைப் பிரிதல் அறமோ? பாட்டு 363 தலைவன் பொருள் தேடச் செல்லத் தீர்மானித்தான். அவன் தனது எண்ணத்தைத் தோழியிடம் தெரிவித்தான். தலைவியிடம் சொன்னால் அவள் பிரிந்து செல்ல ஒருப்பட மாட்டாள்; பிரிவு என்ற சொல்லைக் கேட்டாலே உள்ளம் வருந்துவாள். ஆகையால் தான் தோழியிடம் அறிவித்தான். தோழியும் தலைவன் பிரிந்து போவதை விரும்பவில்லை. பிரிந்து செல்லுதல் பொருளுக்காகப் பாலை நிலவழியைக் கடந்து செல்லுதல் துன்பத்திற்கே இடமாகும் என்று கூறித் தலைவனைத் தடுத்தாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். தலைவனே! நீ துன்பத்தைத் தரும் பாலைநிலத்தைக் கடந்து செல்லத் துணிந்தது நல்லதன்று. அந்தப் பாலை நில வழியிலே வளைந்த கொம்புகளை உடைய நல்ல மலைக்காளை உண்டு. அது புன்மையான அடிப்பாகத்தையுடைய உகாய் மரத்தின் நிழலிலே படுத்துக்கிடக்கும். அக்காளை மலைப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டு படுத்திருக்கும். இத்தகைய கடத்தற்கரிய வழியைக் கடந்து பொருள் தேடுவதற்குப் போக வேண்டும் என்று நீ நினைப்பது நன்றன்று; உனது புறப்பாட்டைத் தள்ளி வைப்பதுதான் நலமாகும். பாட்டு கண்ணி மருப்பின் அண்ணல் நல்ஏறு செங்கோல் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்கண் வரை ஆ நோக்கி. வெய்து உற்றுப் புல் அரை உகாஅய் வரிநிழல் வதியும், இன்னா அரும் சுரம் இறத்தல், இனிதோ? பெரும! இன் துணைப் பிரிந்தே. பதவுரை:- பெரும - தலைவனே. கன்னி மருப்பின்- வளைந்த கொம்புகளுடைய. அண்ணல் - சிறந்த. நல்ஏறு- நல்ல காளையானது. செம்கோல்- நீளமான. பதவின் - அறுகம் புல்லின். வார்குரல் கறிக்கும்- நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னுகின்ற. மடக்கண்- அழகான கண்களையுடைய. வரை ஆ நோக்கி- காட்டுப் பசுவைப் பார்த்து. வெய்து உற்று- பெருமூச்சு விட்டுக் கொண்டு. புல் அரை- மென்மையான அடிப் பாகத்தையுடைய. உகாஅய் - உகாய் மரத்தின். வரி நிழல் வதியும்- கோடுகள் பொருந்திய நிழலிலே படுத்திருக்கின்ற. இன்னா அரும்சுரம்- துன்பத்திற்கு இடமான அரிய காலை நிலவழியை. இன்துணை பிரிந்து - இனிய துணையான காதலியைப் பிரிந்து - இறத்தல் - கடந்து போவது. இனிதோ- நல்லதாகுமோ? கருத்து:- தலைவியைத் தனியாக விட்டுப் பிரிந்து போதல் நன்றன்று. விளக்கம்:- இது செல்லூர்க் கொற்றன் என்னும் புலவர் பாட்டு. பிரிதற்கு எண்ணியிருந்த தலைவனுக்குத் தோழிகூறியது. அவன் பிரிவைத் தடுத்தது. தோழி கூற்று. பாலைத்திணை. பெரும என்னும் சொல் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டது இன்துணைப் பிரிந்து இறத்தல் இனிதோ என இறுதி யடிகளின் பதங்கள் மாற்றி வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கண்ணி- வளைவு. பதவு- அறுகம்புல். வார்குரல்- நீண்ட கொத்து. கறித்தல்- கடித்தல். வரை ஆ - காட்டுப்பசு. உகா அய்- ஒருவகை மரம். அவரேதான் என்னைத் தேடி வந்தார் பாட்டு 364 பரத்தையிலே இருவகையினர்; இல் பரத்தை, சேரிப்பரத்தை என்பவர்கள் அவர்கள். இல் பரத்தை என்பவள் ஒருவனோடு இணங்கி வாழ்பவள்; சேரிப்பரத்தை என்பவள் பலருடன் கூடி வாழும் பொதுமகள். சேரிப்பரத்தை ஒருத்தி, ஒரு இல் பரத்தையைக் குறை கூறினாள். தலைவனைத் தன்னிடம் வலிய அழைத்துக் கொண்டாள். வேறுஇடம் போகாமல் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டாள். என்பதுதான் அவள் கூறிய குறை இதைக் கேட்ட அந்த இல்பரத்தை தலைவன் தான் என்னை விரும்பி வந்தான்; இப்பொழுது விழா வரப்போகின்றது. அவ்விழாவில், வீரர்கள் தாம் விரும்பும் மாதர்களுடன் ஒன்றுபட்டு விளையாடுவார்கள். அச்சமயத்தில், என்னை விரும்பி வந்த அக்காதலன் தானே வலிய வந்து என்னுடன் சேர்ந்து விளையாடுவதை எல்லோரும் காணத்தான் போகிறார்கள் என்று கூறினாள். இந்நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். எமது தலைவன் செழிப்பான மருத நிலத்தில் வாழ்பவன். அந்நிலத்திலே நீர் நாய்கள் உண்டு. அவை பின்னிக் கொண்டிருக் கின்ற கொடிப் பிரம்பு போன்ற கோடுகள் அமைந்த முதுகை யுடையன. அந்நாய்கள் நாள்தோறும் வாளை மீன்களையே இரையாகப் பெறுகின்றன. இத்தகைய நீர்வளமுள்ள அத் தலைவனுடைய சேரிப் பரத்தையானவள் பொன்னால் செய்த திரண்ட விளக்கமுள்ள வளையலை அணிந்தவள், தனக்கேற்ற பண்பமைந்த பரத்தை; இவள் என்னைப் பற்றிப் புறங்கூறினாள் என்று சொல்லக் கேட்டேன். அவள் நானேதான் என் காதலனைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லியது உண்மையா, பொய்யா என்று காணக் கூடிய காலம் இதோ வந்து விட்டது. வளைந்த சிறந்த மூங்கிலைப் போன்ற தோள்களையும், ஒளி பொருந்திய வளையல்களையும் அணிந்த மகளிர் துணங்கைக் கூத்தாடும் விழா நாட்களும் வந்து விட்டன. அவ் விழாவிலே, ஆடவர் கண்களும், பெண்டிர் கண்களும் ஒன்றோடு ஒன்று போர் செய்யும். அத்துணங்கைக் கூத்திலே அப் பெண்களுடன் கூடி விளையாடுவதற்கு விரும்பி வருகின்ற வீரர்களின் போரும் உண்டு. அச்சமயத்திலே நானே அவரை விரும்பினேனா? அல்லது அவரே என்னை விரும்பி வந்தாரா? என்ற உண்மையைப் பலரும் தெரிந்து கொள்ளலாம்! பாட்டு அரில் பவர் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாள் இரை பெறூஉம், ஊரன் பொற்கோல் அவிர் தொடித் தற்கெழு தகுதி, என்புறங் கூறும் என்ப; தெற்றென வணங்கு இறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன; அவ்வரை கண்பொர, மற்று அதன்கண், அவர் மணம் கொளற்கு, இவரும் மள்ளர் போரே. பதவுரை:- அரில் பவர் பிரம்பின்- பின்னிக் கொண்டிருக் கின்ற கொடிப் பிரம்பு போன்ற. வரிப்புறம் நீர் நாய்- கோடுகள் பொருந்திய முதுகையுடைய நீர் நாய்கள். வாளை- வாளை, மீனை, நாள் இரை பெறும் - நாள் தோறும் உணவாகப் பெறுகின்ற, ஊரன்- மருத நிலத் தலைவனுடைய. பொன் கோல்- பொன்னாற் செய்த உருண்டையான. அவிர் தொடி - ஒளிவிடும் வளையலை அணிந்த. தன்கெழு தகுவி- தனக்கேற்ற தன்மையுள்ள சேரிப்பரத்தை ஒருத்தி. என் புறம் கூறும் என்ப- என்னைப்புறம் பழித்துப் பேசினாள் என்று கூறினர்; தெற்றென- அவள் சொல்வது உண்மையா பொய்யா என்பது விளங்கும்படி வணங்கு. இறை- வளைந்த சிறந்த. பணைத்தோள்- மூங்கில் போன்ற தோள்களையும். எல்வளை- ஒலி பொருந்திய வளையல்களையும் உடைய. மகளிர் துணங்கை நாளும்- மகளிர் துணங்கைக் கூத்தாடும் நாளும். வந்தன - இதோ வந்து விட்டன. அவ்வரை- அச்சமயத்தில். கண்பொர- ஒருவர் கண்ணுடன் மற்றவர் கண்போர் செய்ய, மற்று அதன்கண்- அக் கூத்திலே. அவர் மணம் கொளற்கு- அப் பெண்களோடு இணைந்து விளையாடுவதற்கு. இவரும்- விரும்பி வருகின்ற. மள்ளர் போர்- வீரர்களின் விளையாட்டுப் போரும் நடைபெறும். கருத்து:- சேரிப்பரத்தை கூறுவது பொய்: தலைவன் தானாகவே என்னை விரும்பி வந்தான். விளக்கம்:- இச் செய்யுள் ஔவையார் பாட்டு. சேரிப் பரத்தை புறங் கூறினாள் என்பதைக் கேட்ட இற்பரத்தை கூறியது. மருதத்திணை. பெறூஉம்; உயிர் அளபெடை. ஏ; அசை தகுவி - சேரிப் பரத்தை. அரில்- சிக்கல். பவர்- கொடி. ஊரன்- மருத நிலத்தலைவன். இறை- சிறந்த. பணை - மூங்கில். இவர்தல் - விரும்புதல். துணங்கைக் கூத்து- பெண்கள் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து. இத் துணங்கைக் கூத்தில் வீரர்களும் கலந்து கொள்வார்கள். அவர்கள் தமக்கு விருப்பமான பெண்களைத் தழுவிக் கொண்டு கூத்தாடுவர். இன்று ஆண்களும் பெண்களும் கலந்து ஆடுகின்ற நடனம் மேல் நாட்டினரிடம் காணப்படுகின்றது. இது போன்ற ஒரு வகை நடனம் பண்டைத் தமிழகத்திலும் இருந்தது என்று தெரிகின்றது. அவள் உறங்க மாட்டாள்; கண்ணீர் சிந்துவாள் பாட்டு 365 தலைவன் தலைவியைக் கற்பு மணம் செய்து கொள்ளத் துணிந்தான். அதன் பொருட்டுப் பொருள் தேடப் போவதற்கு எண்ணினான். தான் பொருள் தேடிக் கொண்டு வரும் வரையிலும் தலைவி துன்புறாமல் துணிவுடன் இருப்பாளோ என்ற ஐயம் பிறந்தது அவன் உள்ளத்திலே. ஆதலால் அவன் தோழியைப் பார்த்து நான் வரும் வரையிலும் தலைவி பொறுத்திருப்பாளோ என்று கேட்டான். அதற்குத் தோழி உரைத்த மறுமொழியே இச் செய்யுள். நெருங்குதற்கு அரிய பெரிய மலையின் பக்கத்திலே அருவி நீர் வழிந்து விழும். அது தண்ணென்ற ஓசை பொருந்திய முரசு வாத்தியத்திலிருந்து புறப்படும் ஒலியைக் காட்டும். அவ் வருவியின் பக்கத்திலே பலா மரமும் உண்டு. இத்தகைய பெரிய மலையை யுடைய நாட்டின் தலைவனே! நீ பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்வாயானால், தலைவி துன்பத்தால் வாடுவாள். கவலையால் அவள் உடம்பு இளைத்துப் போவாள். சங்குகளால் செய்யப்பட்டு விளங்குகின்ற வளையல்கள் தாமே கழன்று விழுந்து விடும். நீ விரும்பிய அவளுடைய கண்கள் நாள்தோறும் தூக்க மில்லாமல் கலங்கி நிற்கும்; இடையறாமல் கண்ணீர்த் துளிகளையும் சிந்திக் கொண்டேயிருப்பாள். பாட்டு கோடு ஈர் இலங்குவளை நெகிழ, நாளும் பாடு இல, கலிழ்ந்து பனி ஆனாவே; துன் அரு நெடு வரைத் ததும்பிய அருவி, தண் என் முரசின் இமிழ் இசை காட்டும். மருங்கில் கொண்ட பலவின் பெரும் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே. பதவுரை:- துன்அறு நெடுவரை - ஏறிச் செல்ல முடியாத பெரிய மலையிலிருந்து, ததும்பிய அருவி- வழிந்து வீழும் அருவியானது. தண்என் முரசின்- தண் என்ற ஒலியையுடைய முரச வாத்தியத்திலிருந்து. இமிழ்- வருகின்ற. இசை - காட்டும் இனிய ஓசையைக் காட்டுகின்றதும், மருங்கில்- பக்கத்திலே. கொண்ட பலவின்- வளர்த்து வைத்துக் கொண்டிருக்கின்ற பலா மரங்களை உடையதுமான. பெரும்கல் நாட- பெரிய மலை நாட்டையுடைவனே. நீ நயந்தோள்கண் - நீ பிரிந்தால் நீ விரும்பிய தலைவியின் கண்கள். கோடுஈர்- சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட. இலங்குவளை- விளங்கு கின்ற வளையல்கள். நெகிழ- தளர்ச்சியடைய. நாளும் பாடுஇல- தினந்தோறும் உறக்கம் இல்லாமல். கவிழ்ந்து- கலக்க மடைந்து. பனி ஆனாவே- நீர்த்துளி நீங்காமலிருக்கும். கருத்து:- நீ பிரிந்து சென்றால், தலைவி அத்துன்பத்தைத் தாங்கமாட்டாள். விளக்கம்:- இச்செய்யுள் மதுரை நல் வெள்ளி என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நான் மீண்டு வந்து மணக்கும் வரையிலும் தலைவி பொறுத்துக் கொண்டிருப்பாளா? என்று கேட்ட தலைவனுக்குத் தோழி உரைத்தது. குறிஞ்சித்திணை. கோடீர் இலங்குவளை நெகிழ, நாளும் பாடு இல கவிழ்ந்த பனி ஆனாவே என்ற அடிகளை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கோடு- சங்கு. பாடு- தூக்கம். கவிழ்த்தல்- கலங்குதல். பனி நீர்த்துளி. ததும்புதல்- வழிதல். அருவியின் ஓசைக்கு முரசின் ஒலி உவமை. முன் செய்த வினையினால் முடிந்தது பாட்டு 367 தலைவி தன் காதலனைப் பகலிலும் பார்க்க முடியவில்லை; இரவிலும் காணமுடியவில்லை. அவள் நடத்தையிலே ஐயுற்ற பெற்றோர் அவளை வீட்டிலேயே கட்டுக் காவலுடன் வைத்து விட்டனர். இதனால் தலைவியின் இயற்கை நிலை வேறுபட்டது. அது கண்ட செவிலித்தாய் தலைவிக்கு இந்நிலை எப்படி ஏற்பட்டது. என்று தோழியிடம் கேட்டாள். அதற்குத் தோழி உரைத்த மறுமொழியே இச்செய்யுள். இவள் செயல் பலவினையால் நேர்ந்தது. இருவரையும் ஒன்று சேர்த்தது முன் செய்த வினைதான். பூர்வ வினையால் இவளுக்குக் கிடைத்த அவருடைய பண்புகளை அளந்தறிய எம்மால் இயலாது. வெறியாடும் குறமகள் இவளுக்கு இந்நோய் முருகனால் ஏற்பட்டது என்று கூறியும் இவள் அமைதி பெறவில்லை. வெறியாடுவோள் இப்படிக் கூறிய பின்னும் இவள் நீல மலரை நோக்குவாள். அன்றொருநாள் அவன் நீலோற்பல மலர் மாலையைத் தந்து இவளைக் கலந்து களித்ததை இவள் அறிவாள். பசுமைக்கு இடமான கரிய சுனையிலே பல இதழ்களும் விரிந்து மலர்ந்திருக்கின்ற சிறந்த இதழ்களையுடைய நீலோற்பல மலர்களை அடிக்கடி பார்க்கின்றாள். கண்ணீர் விடுகின்றாள் ஆயினும் இவள் அவனைக் காதலிக்கத் துணிந்தது குற்றமுள்ள செயல் அன்று. முன்வினை காரணமாகச் சிறந்த குணங்கள் நிறைந்தவனையே காதலித்தாள். பாட்டு பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின் சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ! வெறியாள் கூறவும் அமையாள்! அதன்தலைப் பைம்கண் மாச்சுனைப் பல்பிணி அவிழ்ந்த வள் இதழ் நீலம் நோக்கு, உள் அகைபு, அழுத கண்ணள் ஆகிப், பழுது அன்று அம்மஇவ் ஆயிழை துணிவே. பதவுரை:- பால் வரைந்து- பழவினையின் கட்டளை யினால். அமைத்தல் அல்லது- சேர்க்கப்பட்டதே அல்லாமல். அவர் வயின்- அவரிடம் உள்ள. சால்பு நிறைந்த குணங்களை. அளந்து அறிதற்கு - அளந்து காண்பதற்கு. யாம் யாரோ- நாம் யார்? வெறியாள் கூறவும்- வெறியாடுவோள் இந்நோய் முருகனால் வந்தது என்று சொல்லவும். அமையாள்- இவள் நோய் தணிந்திலள். அதன் தலை- அப்பொழுது. பைம்கண்- பசுமைக்கு இடமான. மாச்சுனை- கரிய சுனையிலே. பல்பிணி அவிழ்ந்த- பல இதழ்களின் முறுக்குகளும் தளர்ந்தன. வள் இதழ் - செழித்த இதழ்களை யுடைய. நீலம் நோக்கி- நீலோற்பல மலர்களைப் பார்த்து. உள்அகைபு- மனம் வருந்தி. அழுத கண்ணள் ஆகி- அழுத கண்களையுடையவளாய். இவ் ஆயிழை- சிறந்த அணிகலன் களையுடைய இவள். துணிவு- துணிந்து நிற்றல். பழுது அன்று- குற்றமுள்ள செயல் அன்று. கருத்து:- தலைவிக்கு நீலமலரைத் தந்து காதலித்த தலைவன் ஒருவன் உளன். விளக்கம்:- இது பேரி சாத்தான் என்னும் புலவர் பாட்டு. வேறுபாடுற்ற தலைவியின் நிலையைக் கண்ட செவிலித்தாய் இவளுக்கு இந்நிலை எப்படி ஏற்பட்டது? என்று கேட்டாள். அதற்குத் தோழி கூறிய மறுமொழி. குறிஞ்சித்திணை. இவ் ஆயிழை துணிவு பழுதன்று அம்ம என்று இறுதி அடியில் மட்டும் பதமாற்றம். யாஅம்- உயிர் அளபெடை. உள்- உள்ளம். அகைபு- வருந்தி. அம்ம; இடைச்சொல். அதோ பார் அவருடைய மலை பாட்டு 367 தலைவன் தலைவியை மணம் புரிந்து கொள்ள முடிவு செய்தான். இச் செய்தியைத் தோழி தலைவிக்கு அறிவித்தாள். இதனால் தலைவிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டு அதனால் ஏதாவது தீங்கு விளையுமோ என்று எண்ணினாள் தோழி. அவ்வாறு அளவு கடந்த மகிழ்ச்சி தோன்றாமலிருக்கும் பொருட்டு தோழி மற்றொரு செய்தியையும் கூறினாள்; தலைவர் இரக்கங் காட்டாமல் காலந்தாழ்த்தினாலும் நீ வருந்தாதே. அதோ தெரிகின்ற அவருடைய மலையைக் கண்டு மன அமைதியுடன் இரு என்றாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தலைவியே! தலைவர் விரைவில் அன்பு காட்டாவிடினும் நீ வருந்தாமலிருக்க வேண்டும். பெரிய மழை பெய்ததனால், அவருடைய மலையிலிருந்து அருவி நீர் மிகுதியாகப் பெருகி வருகின்றது. அவர் நாட்டிலுள்ள பெண்கள் அவ்வருவியிலே ஆரவாரத்துடன், ஆசையுடன் நீராடுகின்றனர். அந்த அருவி நீரால் கழுவப்பட்ட குண்டுக் கற்கள் நீலமணி போலக் காட்சி அளிக்கின்றன. இத்தகைய உயர்ந்த மலை அதோ காணப்படு கின்றது; அங்கே வந்து அந்த மலையைப் பார். வளையல்களை அணிந்த உனது சிறந்த தோள்கள் இழந்த அழகை மீண்டும் பெற்று விளங்கும்! பாட்டு கொடியோர் நல்கார் ஆயினும், யாழநின் தொடி விளங்கு இறையதோள் கவின் பெறீஇயர் உவக் காண் தோழி! அவ்வந்திசினே; தொய்யல் மாமழை தொடங்கலின், அவர்நாட்டுப் பூசல் ஆயம் புகன்று இழி அருவியின் மண்உறு மணியின் தோன்றும் தண்நறும் துறுகல் ஓங்கிய மலையே. பதவுரை:- கொடியோர்- கொடுமையை உடைய அவர். நல்கார் ஆயினும்- அன்பு காட்டாமல் காலந்தாழ்ப்பாராயினும். நின் தொடி விளங்கு இறைய- உனது வளையல் அணிந்த சிறந்த. தோள். கவின் பெறீஇயர்- தோள்கள் தாம் இழந்த அழகை மீண்டும் பெறும் பொருட்டு. தொய்யல் மாமழை தொடங்கலின் - நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை பெய்யத் தொடங்கியதனால். அவர்நாட்டு- அவர் நாட்டில் உள்ள. பூசல் ஆயம்- ஆரவாரம் புரியும் பெண்கள் கூட்டம், புகன்று இழி- விரும்பி நீராடுதற்குப் புகுகின்ற. அருவியின்- அருவியினால். மண் உறு மணியின் தோன்றும்- கழுவப்பட்ட நீல மணியைப் போல் காணப்படும். தண் நறும் துறுகல்- குளிர்ந்த நல்ல குண்டுக் கற்கள் பொருந்திய. ஓங்கிய மலையே- உயர்ந்த மலையானது அதோ தெரிகின்றது. தோழி அவ்வந்திசின்ஏ- தோழியே அங்கே வந்து. உவக்காண் - அந்த மலையைப் பார். கருத்து:- நீ தலைவரது மலையைப் பார்த்துத் துன்புறாமல் இருப்பாயாக. விளக்கம்:- இது, மதுரை மருதன் இளநாகன், என்னும் புலவர் செய்யுள். திருமணச் செய்தியால். தலைவி மிகுந்த மகிழ்ச்சியிலே வீழாமல் இருக்கும்பொருட்டுத் தோழி கூறியது. குறிஞ்சித்திணை. தோழி அவ்வந்திசினே, உவக்காண் என்று மூன்றாவது அடி மட்டும் மாற்றப்பட்டு இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. பெறீஇயர்- உயிர் அளபெடை. யாழ, ஏ அசைகள். இறைய- சிறந்த, தொய்யல்- நிலம் ஊறும்படியான விடாமழை. ஆயம்- விளையாட்டு மகளிர். புகன்று - விரும்பி. துறுகல்- குண்டுக்கல். இனித் தலைவனோடு இருந்து இன்புறுவேன் பாட்டு 368 தலைவியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடக்கின்றன. இதைத் தோழியின் மூலம் அறிந்தாள் தலைவி. அதனால் அவள் மகிழ்ச்சி அடைந்தாள். இதுவரையிலும் அழகை இழந்து அல்லல் உற்றேன்; இனித் தலைவனோடு இடை விடாமல் கூடியிருந்து இன்புறுவேன், என்று கூறினாள். தலைவியின் இக்கூற்றை உரைப்பதே இச்செய்யுள். தோழியே! அந்த நாட்களிலே நம்மைவிட்டுக் குற்றமற்ற அழகு நீங்கியிருந்தது. அக் கொடுமைத் துன்பத்தை வலிமை யினால் பொறுத்துக் கொண்டிருந்தோம். அல்லாமல் அதைப் பற்றிச் சொற்களால் சொல்ல முடியாது. அவ்வளவு துன்பத்தை அடைந்தோம். சிறியவர்களும் பெரியவர்களும் வாழும் ஊரிலே என்றும் வற்றாமல் நீரோடுகின்ற ஒரு ஓடையின் கரையிலே உள்ள பெரிய மரம் என்றும் செழுமை குறைவதில்லை. நன்றாகத் தழைத்து நிற்கும். அம் மரத்தைப் போல நாமும் தீமையற்ற நிலையை அடைவோம். பல முறையும் தலைவரைத் தழுவிக் கொண்டு இன்புறுவோம்! பாட்டு மெல் இயலோயே! மெல் இயலோயே! நல்நாள் நீத்த பழிதீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பில் சொல்லகிற்றாம்; மெல் இய லோயே! சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே. நாள் இடைப்படாஅ நளிநீர் நீத்தத் திண்கரைப் பெருமரம் போலத் தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. பதவுரை:- மெல்இயலோயே மெல்இயலோயே- மெல்லிய தன்மையுள்ளவளே. நல்நாள் நீத்த- நல்ல நாளிலே இழந்த. பழீதீர் மாமை- குற்றமற்ற அழகை எண்ணி. வன்பின் ஆற்றுதல் அல்லது- மனவலிமையால் பொறுத்துக் கொண்டிருந்தோமே அல்லாமல். செப்பில் சொல்ல கிற்றாம்- வார்த்தைகளால் சொல்ல முடியாத வரானோம். மெல் இயலோயே- மெல்லிய தன்மையுள்ளவளே. சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே- சிறியரும், பெரியோர் களும் வசிக்கின்ற ஊரிலே. நாள் இடைப்படா - நாள் தோறும் குறையாமல். நளிநீர்- மிகுந்த நீரையுடைய. நீத்தத்தின் கரை- வெள்ளத்தின் வலிய கரையிலே உள்ள. பெருமரம் போல- பெரிய மரத்தைப்போல. தீது இல்நிலைமை- இனிமேல் குற்றமற்ற நிலைமையை அடைந்து. பலவே முயங்குகம்- பலதடவை தழுவி இன்புறுவோம். கருத்து:- இனி எத்தகைய துன்பமும் இல்லாமல் தலைவனோடு சேர்ந்திருப்பேன். விளக்கம்:- இது நக்கீரர் பாடிய செய்யுள். திருமணத்தைப் பற்றி உரைத்த தோழிக்கு மகிழ்ச்சியுடன் தலைவி உரைத்தது. மருதத்திணை. பலவே முயங்குகம் என்று இறுதித் தொடர் மட்டும் மாற்றப்பட்டது. படாஅ; உயிர் அளபெடை. மாமை- அழகு. வன்பு- மனவலிமை. செப்பு- சொல். நனிநீர்- மிகுந்தநீர். நீத்தம்- வெள்ளம். தலைவி அடையப்போகும் மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கும் வெள்ளம் பெருகியோடும் நீர்க் கரையிலே உள்ள பெரியமரம் உவமானம். புறப்பட்டுப் போவோம் பாட்டு 369 தலைவியை அவளுடைய பெற்றோர் சம்மதத்துடன் மணக்க முடியவில்லை; அதனால் தலைவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்துச் சென்று மணக்க முடிவு செய்தான். இதற்குத் தோழியும் உடந்தை. தோழி இச் செய்தியைத் தலைவியிடம் உரைத்து அவளை உடன்போக்குக்கு இணங்கும்படி செய்தாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே! நம் தலைவர் நம்மிடம் அன்பு காட்டி அருளினார்; அவர் நம்மைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்று மணம் புரிந்து கொள்ள முடிவு செய்தார். நாமும் அவருடைய முடிவுக்கு இசைய வேண்டியதுதான். நாம் செல்லப்போகும் வழியிலே வாகை மரங்கள் உண்டு. அவற்றின் வெண்மையான நெற்றுக்களின் மேல் காற்று வீசி அலைப்பதனால் கலகலவென்று ஒலிக்கும். அந்நெற்றுக்களில் உள்ள விதைகள், சிலம்பினுள் இருக்கும் பரல்கள் ஒலியை எழுப்புவதைப் போல ஓசையுண்டாக்கும். இத்தகைய பாலை நிலத்தை நாம் கடந்து போவோம். பாட்டு அத்தம் வாகை அ மலை வால் நெற்று, அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக், கோடை தூக்கும் கானம் செல்வாம்; தோழி; நல்கினர் நமரே பதவுரை:- தோழி நமர் நல்கினர்- தோழியே நம் தலைவர் நம்பால் அன்பளித்தார் ஆதலால். அத்தம் வாகை- வழியிலே உள்ள வாகை மரங்களின், வால் நெற்று- வெண்மையான நெற்றுக்கள். அரி ஆல்சிலம்பின்- பரல்கள் நிறைந்த சிலம்போசையைப் போல். அரிசி ஆர்ப்ப- அவற்றின் விதைகள் ஒலியை எழுப்பும் படி. கோடை தூக்கும் - மேல் காற்று வீசுகின்றன. கானம்- பாலை நில வழியிலே. செல்வாம்- அவருடன் சேர்ந்து போவோம். கருத்து:- தலைவனுடன் கூடி அவன் ஊரை அடைவோம். விளக்கம்:- இச்செய்யுள் ஆசிரியர் பெயர் குடவாயில் கீரத்தனார் என்பது. தலைவனுடன் சேர்ந்து அவனூர்க்குப் போக வேண்டும் என்னும் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறியது. பாலைத்திணை. தோழி நல்கினர் நமரே என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அத்தம்- வழி. அமலை- ஓசை. வால்- வெண்மை. அரி- பரல். சிலம்பினுள் ஓசைக்காகப் போடப் பட்டிருக்கும் கற்கள். அரிசி- விதை. கோடை- மேல் காற்று. தூக்கும்- அடிக்கும்; அலைக்கும். வாகை நெற்றின் கலகலத்த ஒலிக்குச் சிலம்போசை உவமை. எல்லாம் அவன் விருப்பமே பாட்டு 370 பரத்தையர் வீட்டுக்குச் சென்ற தலைவனைப் பற்றித் தலைவி குறை கூறவில்லை. ஆனால் அவனால் விரும்பப்பட்ட பரத்தையைப் பற்றித் தலைவி குறை சொன்னாள். தலைவனை வெளியே செல்லாதவாறு வீட்டிலேயே இருத்திக் கொண்டாள் என்று தலைவி குற்றச்சாட்டுரைத்தாள். இதைக் கேள்வியுற்ற பரத்தை தலைவன் தன் விருப்பப்படியே இங்கு வருவான் போவான். அது என் விருப்பத்தைப் பொறுத்தது அன்று: தலைவன் விருப்பத்தை பொறுத்ததாகும் என்று தலைவியின் தோழியர்களுக்குக் கேட்கும்படி கூறினாள். பொய்கைகளிலேயுள்ள நல்ல நிறமுள்ள, அல்லியின் கொழுத்த மொட்டுகளை வண்டுகள் மொய்த்துத் திறக்கும்படி செய்யும் இத்தகைய குளிர்ந்த துறையை உடைய தலைவனோடு, அவன் இருக்கும் போது தனித்தனியே இரண்டு உடம்புகளை உடையவர்களாய் இருப்போம். அவன் படுத்திருந்தால் எங்கள் ஈருடலும் ஒர் உடல்போல் ஒன்றுபட்டுக் கிடப்போம். அவன்தன் இல்லத்துக்குப் போய் விடுவானாயின், எனது உடலாகிய ஒரு உடலை மட்டும் தாங்கிக் கொண்டு இருப்போம். இவை எல்லாம் அவனுடைய நடத்தையைப் பொறுத்ததே யன்றி ஒன்றும் ஆவதில்லை. பாட்டு பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை வண்டுவாய் திறக்கும், தண்துறை ஊரனொடு, இருப்பின் இரு மருங்கினமே; கிடப்பின் வில்லக விரலின் பொருந்தி; அவன் நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே. பதவுரை:- பொய்கை ஆம்பல்- தடாகத்திலே உள்ள அல்லியின். அணிநிறக் கொழுமுகை- அழகிய நிறமுள்ள செழிப்பான மொட்டில். வண்டுவாய் திறக்கும்- வண்டுகள் மொய்த்து அதன் இதழ்களை விரியச் செய்யும். தண் துறை ஊரனோடு- குளிர்ந்த நீர்த்துறையை உடைய மருத நிலத் தலைவனோடு. இருப்பின்- உட்கார்ந்திருந்தால். இரு மருங்கினம்- இரண்டு உடம்புகளை உடையோம். கிடப்பின்- படுத்திருந்தால். வில் அகம் விரைவில் பொருந்தி- வில்லின் இடத்தைப் பிடித்த விரலைப் போல ஒன்றுபட்டு இருப்போம். அவன் நல் அகம் சேரின்- அவன் தனது நல்ல இல்லத்திற்குப் போய்விடுவானாயின். ஒரு மருங்கினமே- ஒரே உடலையுடையவரா யிருப்போம். கருத்து:- தலைவன் விருப்பப்படியே யாம் நடக்கின்றோம். விளக்கம்:- இது வில்லக்கவிரலினார் என்னும் புலவர் பாட்டு. தலைவி தன்னைப் புறம் பேசினாள் என்பதைக் கேட்ட பரத்தை, தலைவியின் நட்பினர் கேட்கும்படி உரைத்தது. மருதத்திணை. ஆம்பல்- அல்லி. மருங்கு- உடம்பு. வில் அகவிரல் - வில்லை அகப்பட இறுக்கிப்பிடித்த விரல். வில்லும் விரலும் இணைந் திருப்பது ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருப்பதற்கு உவமை. ஏ; அசை. அன்பு அடங்கவில்லை பாட்டு 371 தலைவன் பிரிந்து சென்றுவிட்டான்; அதனால் தலைவி மெலிந்தாள். அவள் இளைப்பினால் அவள் அணிந்திருந்த வளையல்கள் கழன்றன; உடம்பிலே பசலைநிறம் படர்ந்தது, இதைக் கண்டாள் தோழி. நீ இப்படி வருந்துவது முறையன்று; அவர் உனக்காகத்தானே பொருள் தேடப் போனார் என்றாள். உடனே தலைவி, என்னிடம் காணப்படும் இந்த மாறுதல் தலைவனாலும் உண்டாக்கப்படவில்லை; நானாகவும் வருவித்துக் கொள்ளவில்லை. காமம் பொது; அதை என்னால் அடக்கிப் பிடிக்க முடியவில்லை; அதுதான் இந்த வேறுபாட்டை உண்டாக்கி விட்டது என்று கூறினாள். தோழியே என் மெலிவினால் எனது கைவளைகள் கழன்று விழுகின்றன. உடம்பிலே பசலை நிறம் படர்கின்றது. மேகங்கள் படிந்த மலையிலே மலை நெல்லை விதைக்கின்றனர்; அருவி நீரைப் பாய்ச்சிப் பயிர் செய்கின்றனர்; இத்தகைய மலைநாட்டையுடைய தலைவனாலும் நான் இந்த நிலையை அடையவில்லை. அந்தக் காமநோய் இருக்கிறதே அது மிகவும் பெரிய வல்லமையுள்ளது. அது என்னை இக்கோலத்தில் வைத்து விட்டது இதற்கு நான் என்ன செய்வேன். பாட்டு கைவளை நெகிழ்தலும், மெய்பசப்பு ஊர்தலும், மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி அருவியின் விளைக்கும் நாடனொடு மருவேன்; தோழி அது, காமமோ பெரிதே. பதவுரை:- தோழி! கைவளை நெகிழ்தலும்- கையில் அணிந்திருக்கின்ற வளையல்கள் தாமே கழன்று விழுவதையும். மெய்பசப்பு ஊர்தலும்- உடம்பிலே பசலைநிறம் படர்வதையும். மைபடு சிலம்பின்- மேகம் பொருந்திய மலையிலே. ஐவனம் வித்தி- மலைநெல்லை விதைத்து. அருவியின் விளைக்கும்- அதனை அருவி நீரால் பயிர் செய்து விளைவிக்கின்ற. நாடனொடு- மலைநாட்டுத் தலைவனால். மருவேன்- பெறவில்லை. அது- அந்தக் காமமோ- காமநோயோ. பெரிது ஏ- எல்லாவற்றையும் மீறும் பெரிய வல்லமை படைத்தது. கருத்து:- நான் கொண்ட காமத்தை என்னால் அடக்க முடியவில்லை. விளக்கம்:- இது உறையூர் முதுகூற்றன் என்னும் புலவர் செய்யுள்; தலைவன் மணத்தின் பொருட்டுப் பொருள்தேடப் பிரிந்து போனான்; அப்பொழுது தலைவி வருந்தியிருந்தாள். நீ வருந்தக்கூடாது என்று தோழி கூறினாள். அதற்குத் தலைவி உரைத்தது. குறிஞ்சித்திணை. மெய்- உடம்பு. பசப்ப- பசலைநிறம். மை- மேகம். ஐவனம்- மலைநெல். ஏ- அசை. ஊரார் பழிக்கின்றனர் பாட்டு 372 இரவுக் குறியிலே தலைவன் தலைவியைச் சந்திக்க வந்தான். இவன் வேலிக்கு வெளியே நின்றான், இச்சமயத்திலே தோழி தலைவியைப் பார்த்து இவ்வூரில் நம்மைப் பற்றிப் பலரும் பழிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று கூறினாள். தலைவன், விரைவிலே தலைவியை வெளிப்படையாக மணம் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகவே இச்செய்தியை உரைத்தாள். இந்நிகழ்ச்சியைச் சொல்லுவதே இச்செய்யுள். கடற்கரையிலே கடுங்காற்று வீசும். அந்தக் காற்று வீச்சால் மணம் மேடுகள் உண்டாகும். பனைமரத்தின் உச்சியில் உள்ள இருபுறங்களிலும் கருக்குகள் அமைந்த நீண்ட மட்டைகளும், குருத்துக்களும் மறையும்படி அவ்வளவு உயரமாக அந்த மணல் மேடு காணப்படும். அந்தக் கடற்கரைச் சோலையிலே தனியே செல்லுவோர் வருத்தத்துக்கு ஆளாவர்; கடலின் அலைகள் கரு மணல் பொருந்திய சேற்றை அருவிபோல் கரையிலே சேர்க்கும். தலைமயிரிலே எடுத்து ஊற்றித் தேய்த்துக் கொள்ளக் கூடிய அந்தக் கருமணல் சேற்றுக் குவியல் விரைவிலே காய்ந்து போகும் தன்மையுள்ளது. அந்தச் சேற்றுக் குவியல் காய்வதற்குள் இவ்வூரிலே நம்மைப் பற்றிப் பழிச் சொற்கள் கிளம்பிவிட்டன. தலைவன் வந்து திரும்புவதற்குள் ஊரார் எப்படியோ நமது களவு மணத்தைப் புரிந்து கொண்டனர். பாட்டு பனைத்தலைக் கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணம் கொள் சிமையம், அணங்கும் கானல், ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவி, கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை, புலர் பதம் கொள்ளா அளவை, அலர் எழுந்தன்று இவ் அழுங்கல் ஊரே. பதவுரை:- பனைத்தலை- பனைமரத்தின் உச்சியிலே உள்ள. கருக்கு இடைநெடுமடல்- இரு புறங்களிலும் கருக்கை யுடைய நீண்ட மட்டையானது. குருத்தொடு மாய- குருத்துடன் மறைந்து போகும்படி. கடுவளி- கடுமையான காற்றால், தொகுத்த- சேர்க்கப் பட்ட. நெடுவெண் குப்பை- உயர்ந்த வெண்மையான மணல் குப்பையாகிய. கணம் கொள் சிமையம்- கூட்டமான சிகரங்களையும். அணங்கும் கானல்- வருத்தும் தன்மையையும் உடைய கடற்கரைச் சோலையிலே. ஆழிதலை வீசிய - கடலிலிருந்து வீசப்பட்ட. அயிர் சேற்று அருவி- கருமணல் சேறாகிய அருவியினால். கூழை பெய்- கூந்தலிலே அள்ளி ஊற்றித் தேய்க்கத் தகுந்ததாக. எக்கர்க் குழீஇய பதுக்கை- உயரமாகக் குவிக்கப்பட்ட குவியல். புலர்பதம் கொள்ளா அளவை- காயும் பக்குவத்தை அடைவதற்கு முன்பே. இவ் அழுங்கல் ஊர்ஏ- இந்த ஆரவாரம் உள்ள ஊரிலே. அலர் எழுந்தன்று- நம்மைப் பற்றிய பழிச் சொற்கள் பிறந்துவிட்டன. கருத்து:- இவ்வூரார் நமது களவொழுக்கத்தை அறிந்தனர். விளக்கம்:- இச் செய்யுள் விற்றூற்று மூதெயினனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. தலைவியை விரைவிலே தலைவன் மணந்து கொள்ள வேண்டும் என்று கருதினாள் தோழி. ஆதலால் அவன் இரவிலே, வேலிக்கு வெளியிலே வந்து நிற்கும் போது, அவன் காதில் விழும்படி தலைவியிடம் தோழி கூறிய செய்தி. தோழி கூற்று. நெய்தல் திணை. இல் அழுங்கல் ஊர் அலர் எழுந்தன்று என்று இறுதி அடியில் மட்டும் பதமாற்றம். கடுவளி- பெருங்காற்று. சிமையம் - சிகரம்; இங்கே மணல் சிகரத்தைக் குறித்தது. குப்பையைக் கிளப்புவது காற்றின் இயல்பு. ஆதலால் இங்கே மணலை நெடுவெண்குப்பை என்று குறித்தார் ஆசிரியர். அயிர்- கரு மணல். கூழை- தலைமயிர். தலையிலே சேற்றைப் பூசிக்கொண்டு குளிக்கும் வழக்கம் இன்றும் நாட்டுப் புறங்களில் உண்டு. கடற்கரையிலே உள்ளவர்கள் கடல் அலையால் குவிக்கப்பட்ட கருமணல் சேற்றைத் தலை மயிரிலே தேய்த்துக் கொண்டு குளிப்பார்கள். புலர்பதம்- காய்கின்ற பக்குவம். கருமணல் சேறு காய்வதற்கு முன் பழி யெழுந்தது என்றது. தலைவன் வந்து போவதற்குள் பழி எழுந்தது என்னும் கருத்தைக் காட்டுவதாகும். குழீஇ. உயிர் அளபெடை ஏ.அசை. அவன் தொடர்பு என்றும் அறாது பாட்டு 373 தலைவனும் தலைவியும் கள்ளக் காதல் வாழ்வு நடத்து கின்றனர். இவர்கள் வாழ்வை ஊரார் உணர்ந்துவிட்டனர்; இவர்கள் வாழ்க்கையைப் பற்றி மூலை முடுக்குகளில் எல்லாம் குசு குசு வென்று உரையாடத் தொடங்கிவிட்டனர். இதை அறிந்த தலைவி மனம் வருந்தினாள். அவளுக்குத் தோழி நாம் மலை நாட்டுத் தலைவனுடன் கொண்ட நட்பு என்றும் அழியாதது; பிரிக்க முடியாதது; அலர் எழுந்ததே என்பதற்காக அகமுடைய வேண்டாம் என்று ஆறுதல் மொழிகள் உரைத்தாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். நீண்ட மயிர்களையும், கூர்மையான பற்களையும் உடைய ஆண் கருங்குரங்கு, தனது கரிய விரல்களால் பக்கத்தில் இருந்த பலாப் பழத்தைத் தொட்டது. அதனால், எங்குப் பார்த்தாலும் அந்தப் பலாப்பழத்தின் மணம், பூ மணம் போல் கமழ்கின்றது. அந்த மணம் காந்தள் மலர்ந்திருக்கின்ற சிறிய ஊரிலும் பரவிப் பரிமளிக்கின்றது. இத்தகைய சிறந்த மலைநாட்டுத் தலைவனுடன் நாம் கொண்ட நட்புக்கு என்றும் அழிவில்லை. இந்த உலகமே இடமாறிப் போனாலும், தண்ணீரின் தன்மையும், தீயின் தன்மையும் மாறுபட்டாலும் அலை வீசுகின்ற பெரிய கடலுக்குக் கரை காணப்பட்டாலும் அந்த நட்புக்கு அழிவில்லை. கொடிய வாயையுடைய பெண்களின் பழிச் சொற்களுக்குப் பயந்தா அவனுடைய நட்பு கெடப் போகிறது; ஒரு நாளும் கெடாது. நீ அஞ்சாதே; கவலைப்படாதே; பாட்டு நிலம்புடை பெயரினும் நீர், தீப் பிறழினும், இலங்குதிரைப் பெரும் கடற்கு எல்லை தோன்றினும், செவ்வாய்ப் பென்டிர் கெளவை அஞ்சிக் கேடு எவன் உடைத்தோ? தோழி! நீடுமயிர்க் கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை புடைத் தொடுபு, உடைஇப் பூநாறு பலவுக்கனி காந்தள் அம்சிறு குடிக்கமழும் ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே. பதவுரை:- தோழி; நீடுமயிர்- நீண்ட மயிரையும். கடும்பல்- கூர்மையான பற்களையும் உடைய. ஊகம்- கருங் குரங்காகிய. கறைவிரல்- கறுப்பான விரல்களையுடைய. ஏற்றை- ஆண் குரங்கானது. புடைதொடுபு- பக்கத்தில் தொங்கும் பலாப் பழத்தைத் தொட்டவுடன். உடைஇ- அப்பழம் உடைந்து. பூநாறு - பூமணம் போல் வீசுகின்ற. பலவுக்கனி- பலாப்பழத்தின் மணம். காந்தள்- காந்தள் செடிகள் பூத்திருக்கின்ற. அம் சிறு குடி- அழகிய சிற்றூரிலே. கமழும் - வீசுகின்ற. ஓங்கு மலை நாடனொடு - உயர்ந்த மலை நாட்டுத் தலைவனுடன். அமைந்த- பொருந்திய. நம் தொடர்பு- நமது தொடர்பானது, நிலம்புடை பெயரினும்- நிலவுலகம் இடம் மாறினாலும். நீர் தீ பிறழினும்- நீரின் தன்மையும், தீயின் தன்மையும் மாறுபட்டாலும். இலங்கு திரை- விளங்குகின்ற அலைகளையுடைய. பெரும் கடற்கு எல்லை தோன்றினும்- பெரிய கடலுக்குக் கரை காணப்பட்டாலும். செவ்வாய்ப் பெண்டிர்- இவ்வூரில் உள்ள கொடிய வாயையுடைய பெண்களின். கெளவை அஞ்சி- பழிச் சொற்களுக்குப் பயந்து. கேடு எவன் உடைத்து- கெடும் தன்மையை எப்படி அடையக் கூடும்? ஒரு பொழுதும் கெடாது. கருத்து:- தலைவனோடு நாம் கொண்ட தொடர்பு எக்காலத்திலும் அழியாத் தன்மையுள்ளது. விளக்கம்:- இது மதுரைக் கொல்லன் புல்லன் என்னும் புலவர் பாட்டு. ஊரார் சொல்லும் பழிமொழி கேட்டு அஞ்சிய தலைவிக்குத் தோழி கூறிய உறுதி மொழி. குறிஞ்சித்திணை. தோழி என்பது முதல் தொடர்பே என்பது வரையில் உள்ள பின் அடிகளை முன் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. உடைஇ- உயிர் அளபெடை. ஏ- அசை. கெளவை- பழிச் சொல் - கடும்பல்- கூர்மையானபல். கடுமை- கூர்மை. ஊகம்- கருங்குரங்கு. ஏற்றை- ஆண்குரங்கு. பலாப்பழத்தின் மணத்திற்குப் பூமணம் உவமை. கறை- கறுப்பு. உண்மையுரைத்தேன்; நன்மை விளைந்தது பாட்டு 374 காதலுற்றுக் களவு மண வாழ்க்கை நடத்திவந்த தலைவன் ஒருவன் அவன் தலைவியைக் கற்பு மணம் புரியத் துணிந்தான். அவன் தன் உறவினருடன் தலைவியின் பெற்றோரிடம் வந்தான்; தலைவியைத் தனக்கு மணம் புரிந்து கொடுக்கும்படி வேண்டினான்; பெற்றோரும் ஒப்புக்கொண்டனர். இச் செய்தியைத் தோழி தலைவியிடம் அறிவித்தாள். பெற்றோர்கள் பெண் கேட்டு வந்த அத்தலைவனுக்கு உன்னைக் கொடுக்க நேர்ந்த காரணம் அவனுக்கும் உனக்கும் உள்ள காதல்தான். இருவருக்கும் தொடர்பு உண்டு என்பதை நான் கூறியதின் மூலம் அறிந்தனர். ஆதலால் தான் மறுக்காமல் மனமுவந்து பெண்கொடுக்க நேர்ந்தனர் என்று தான் அறநெறியில் நின்று உண்மையுரைத்ததை அறிவித்தாள் தோழி. தலைவியே நமது களவு மணத்தைப் பற்றி நம் தந்தையும் தாயும் அறியும்படி சொல்லிவிட்டேன். ஆகையால்தான் மலைகள் நிறைந்த நாட்டையுடைய தலைவன் நம் பெற்றோரிடம் வந்து உன்னை மணம் புரிந்து கொடுக்க வேண்டிய போது, மறுக்காமல் உடன்பட்டனர். இந்த ஊரினர் உண்மையறியாமல் மயங்கிக் கிடந்தனர்; வளைந்த சிறகுகளையுடையது தூக்கணம் குருவி. அது உயர்ந்த பனைமரத்தின் மேல் நாரால் கூடு கட்டியிருக்கும். அக் கூடு எப்படிப் பின்னப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியாது. பலவகையாக நார்கள் நேர்ந்திருக்கும். எப்படி இழைகள் ஓடியிருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் இவ்வூரினர் நமது செயலை அறியாமல் மயங்கியிருந்தனர். இப்பொழுது நமது பெற்றோர், நமது விருப்பம் போல் நன்மை செய்யத் துணிந்தமையால், ஊரும் நம்முடன் இணைந்து விட்டது. பாட்டு எந்தையும் யாயும் உணரக் காட்டி, ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே; முடங்கல் இறைய தூக்கணம் குரீஇ நீடுஇரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய மையல் ஊரே. பதவுரை:- எந்தையும் யாயும்- நம்தந்தையும் தாயும். உணரக் காட்டி- தெரிந்து கொள்ளும்படி சொல்லிக்காட்டி. ஒளித்த செய்தி- நாம் இதுவரையிலும் மறைவாக நடத்தி வந்த களவு மணச் செய்தியை. வெளிப்படக்கிளந்த பின்- விளங்கும்படி கூறிய பிறகு. மலைகெழு வெற்பன்- மலைகள் நிறைந்த நாட்டை யுடைய தலைவன். தலைவந்து இரப்ப- நம் பெற்றோரிடம் வந்து பெண் கேட்க. நன்றுபுரி கொள்கையின்- நம் பெற்றோர் நமக்கு நன்மை செய்யும் கருத்துடன் இணங்கியதனால். முடங்கல் இறை- வளைந்த சிறகுகளையுடைய. தூக்கணம் குரீஇ- தூக்கணங் குருவியானது. நீடு இரும் பெண்ணைத் தொடுத்த- உயர்ந்த பெரிய பனை மரத்திலே கட்டிய. கூடினும்- கூட்டின் இழையைக் காட்டினும். மயங்கிய- ஒன்றும் புரியாமல் திகைத்திருந்த. மையல் ஊர்ஏ- மயக்கத்தை யுடைய இவ்வூர். ஒன்று ஆகின்று ஏ- இப்பொழுது நம்முடன் ஒன்றுபட்டு மகிழ்ச்சியடைகின்றது. கருத்து:- நான் அறநெறிநின்று உண்மையை உரைத்ததினால் தான், பெற்றோர், தலைவன் வேண்டுகோளுக்கு இணங்கினர். விளக்கம்:- இச்செய்யுள் உறையூர்ப்பல்காயனார் என்னும் புலவர் பாடியது. தலைவனுக்கு நம்மை மணம் செய்து கொடுக்க நமது பெற்றோர் ஒருப்பட்டதற்குக் காரணம், உண்மையை அவர்களிடம் நான் கூறியதுதான் என்று தோழி, தலைவியிடம் உரைத்தாள். குறிஞ்சித்திணை. மையல் ஊரே ஒன்றாகின்றே என்று கூட்டிப் பொருள் கூறப்பட்டது ஒளித்த செய்தி - கள்ளக்காதல். முடங்கல்- வளைவு. இறை- சிறகு. குரீஇ- குருவி; அளபெடை ஏ- அசைகள். ஊரார் ஒன்றும் அறியாமல் மயங்கினர் என்பதற்குத் தூக்கணங் குருவியின் கூடு உபமானம். தூக்கணங் குருவிக்கூட்டை அது எந்த முறையில் பின்னி யிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியாது. பலவகையாக நாரைக்கோத்து வாங்கிப் பின்னியிருப்பது வியப்பைத் தரும், காவலர் கண்ணுறங்கார் பாட்டு 375 இரவிலே தலைவியைக் கண்டு மகிழ்ந்து செல்லும் தலைவன் வழக்கம் போல் தலைவியைக் காண வந்தான். வேலியின் மறைவிலே வந்து நின்றான். தோழிக்கு இந்தக் களவு நிகழ்ச்சி பிடிக்கவில்லை. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அவள் ஆவல். இதைத் தலைவனுக்கு அறிவிக்க எண்ணினாள். அவள் தலைவியிடம் சொல்லுவதன் மூலம் தலைவனுக்கு விரைவில் மணம் புரிந்து கொள்ளுவது தான் நன்று என்ற கருத்தைத் தெரிவித்தாள். இரவில் காவலர்கள் தூங்குவதில்லை; காவல் மிகவும் கடுமையாக இருக்கின்றது என்று கூறித் தன் கருத்தை அறிவித்தாள் தோழி. வாழ்க தோழியே! நான் ஒன்று சொல்லுகின்றேன் கேட்பாயாக. மலைச்சாரலிலே சிறிய தினைப்பயிர் நன்றாக விளைந்திருந்தால் அப்பெரிய தினைப்புனத்தை இரவு பகலாக அறுவடை செய்வார்கள். இரவிலே அறுவடை செய்யும் போது காட்டுக் கொடு விலங்குகள் வந்து தொல்லை கொடுக்காமல் இருக்கும் பொருட்டுப் பறையடிப்பார்கள். அவர்கள் குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகப் பறையை முழங்குவார்கள். அது போல நமது ஊரில் உள்ள இராக் காவல்காரர்கள் கண்ணுறங்க வில்லை. நடுச்சாமத்திலும் தொண்டகச் சிறுபறையை அடித்துக் கொண்டு திரிகின்றனர். ஆதலால் நமது காதலர் இரவிலே வராமலிருப்பது தான் அவருக்கும் நமக்கும் நலமாகும். பாட்டு அம்ம! வாழி! தோழி! இன்று அவர் வாரார் ஆயினோ நன்றே; சாரல் சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து, இரவு அரிவாரின், தொண்டகச் சிறுபறை பால்நாள் யாமத்தும் கறங்கும், யாமம் காவலர் அவியா மாறே. பதவுரை:- வாழி தோழி அம்ம- வாழ்க தோழியே. ஒன்று சொல்வேன் கேட்பாயாக. இன்று அவர் வாரார் ஆயினோ- இன்று அத்தலைவர் வராமல் இருப்பாராயின். நன்றே -மிகவும் நலமாகும். ஏனென்றால். சாரல்- மலைச்சாரலிலே. சிறுதினை விளைந்த- சிறிய தினைப்பயிர் விளைந்திருக்கின்ற. வியன்கண்- அகன்ற இடமான. இரும்புனத்து - பெரிய தினைப் புனத்திலே. இரவு அரிவாரின்- இரவிலே தினையரிகின்றவர்கள் தொண்டகப் பறவையை முழக்குவது போல. யாமம் காவலர்- நமது ஊரில் உள்ள இரவுக் காவலாளிகள். அவியாமாறு ஏ- தூங்காமையால். தொண்டகச் சிறுபறை- குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகம் என்னும் பெயருள்ள சிறிய பறையானது. பால்நாள் யாமத்தும்- பாதி இரவிலும. கறங்கும்- ஒலித்துக் கொண்டிருக்கும். கருத்து:- தலைவர் இரவில் நம்மைச் சந்திக்க வருவது, இனி நன்றன்று. விளக்கம்:- இச்செய்யுளின் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. தலைவன் வேலிப்புறத்தை இரவில் வந்து நின்றபோது, தோழி, காவலர்களின் காவல் கடுமையாக இருக்கின்றது எனக் கூறுவதன் மூலம் தலைவியை மணந்து கொள்வதே நலம் என்பதை அறிவித்தாள். குறிஞ்சித்திணை. யாமம் காவலர் அறியாமாறு ஏ தொண்டகச் சிறு பறை பானாள் யாமத்தும் கறங்கும் என்று இறுதி அடிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது, ஓ; ஏ- அசைகள். இரவிலே காவலர் முழக்கும் பறைக்கு, தினை அரிவார் முழக்கும் பறை உவமை. குறிஞ்சி நிலத்தின் பறையின் பெயர், தொண்டகப் பறை. வியன்கண்- அகன்ற இடம். இரும்புனம்- பெரியதினைப் புனம். யாமம்- இரவு. தண்மையும் தருவாள்; வெம்மையும் தருவாள் பாட்டு 376 தலைவனிடத்திலே பொருள் தேடப் போக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. உடனே, நான் சென்றால், தலைவி வருந்துவாள்; என்னாலும் தலைவியைப் பிரிந்திருக்க முடியாது என்ற எண்ணமும் பிறந்தது. நானும் தலைவியும் இன்புற வேண்டுமானால், இப்பொழுது பொருள் தேடப் போவதை நானும் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான். தலைவியின் சிறந்த தன்மையைப் பற்றித் தன் உள்ளத்திற்கு உரைத்தான். செலவு தவிர்த்தான். என் காதலி எனக்கு இப்பொழுதும் இன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் கோடை காலத்திலே, நிலைபெற்ற உயிர்களால் முற்றும் காண முடியாத- நெருங்குதற்கு முடியாத- தெய்வங்களையுடைய மலைப் பக்கத்திலே வளர்ந்த பொதிய மலைச் சந்தனத்தைப் போலக் குளிர்ச்சியைத் தருவாள். தான் பெற்ற சூரியனுடைய கதிர் தனக்குள் மறையும்படி குவிந்து, அழகாக, அசைகின்ற வெயிலை, உள்ளே கொண்டிருக்கின்ற தாமரையின் உட்புறம் வெதுவெதுப்பாக இருக்கும். அதுபோல் இவள் பனிக் காலத்தில் மனதுக்கினிய சிறிய வெம்மையைத் தருகின்றவளாக இருக்கின்றாள். இவ்வாறு கோடையிலும் குளிரிலும் இன்பந்தரும் இவளை விட்டுப் பிரிவது எவ்வாறு? இவளைப் பிரியாமல் கூடி இன்புறுவதே சிறந்த செயல். பாட்டு மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில் சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப வேனிலானே தண்ணியள்; பனியே, வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென அலங்கு வெயில் பொதிந்த தாமரை, உள் அகத்து அன்ன, சிறு வெம்மையளே. பதவுரை:- மன் உயிர் அறியா- நிலை பெற்ற உயிர்களால் முழுதும் கண்டறிய முடியாத. துன் அரும் பொதியில்-அணுக முடியாத பொதிய மலையிலே. சூர் உடை- தெய்வங்களை உடைய. அடுக்கத்து- பக்கங்களிலே வளர்ந்த. ஆரம் கடுப்ப -சந்தனத்தைப் போல, வேனிலானே- கோடை காலத்திலே. தண்ணியள் - குளிர்ச்சியைத் தருகின்றவள். பனியே- குளிர் காலத்திலே. வாங்கு கதிர் தொகுப்ப- தான் பெற்ற சூரியனுடைய கதிர்கள் மறையும்படி. கூம்பி- குவிந்த. ஐஎன - அழகாக. அலங்கு வெயில்- அசைகின்ற வெயிலை. பொதிந்த தாமரை- உள்ளே வைத்துக் கொண்டிருக் கின்ற தாமரையின். உள் அகத்து அன்ன- உள்ளிடம் வெது வெதுப்பைத் தருவது போல. சிறுவெம்மையளே- சிறு வெம்மையைத் தந்து கொண்டிருப்பாள். கருத்து:- கோடையில் குளிர்ச்சியையும், குளிரில் வெப்பத்தையும் தருவாள் என் காதலி. விளக்கம்:- இது படுமரத்து மோசிக் கொற்றன் என்னும் புலவர் செய்யுள். தலைவன் பொருள்தேடப் போக நினைத்த தன் நெஞ்சைப் பார்த்துத் தலைவியின் தன்மையைக் கூறிப் புறப் பாட்டைக் கைவிட்டது. சூர்- தெய்வங்கள்; அவை முருகன். ஆராலும் முழுவதும் அளந்தறிய முடியாதது பொதியமலை. பொதியமலைச் சந்தனம் உயர்ந்த மணமும் குளிர்ச்சியும் உள்ளது. தலைவியின் உடம்பு தரும் குளிர்ச்சிக்குப் பொதியமலைச் சந்தனமும் வெம்மைக்குக் குவிந்த தாமரையின் உட்புற வெதுவெதுப்பும் உவமைகள். பெண்களின் உடல் கோடையில் குளிர்ச்சியையும், குளிரில் வெப்பத்தையும் தருவது இயல்பு. ஆண்களுக்கும் இத்தன்மை யுண்டு. வெப்பம் மிகுதியாக இருந்தால் கிட்டே நெருங்க முடியாது. வெது வெதுவென்று இருந்தால்தான் நெருங்கி இன்புற முடியும். ஆதலால் சிறு வெம்மையான என்று சொல்லப்பட்டது. தொகுப்ப- மறைய. கூம்பி- குவிந்து. ஐ- அழகு. அலங்கு- அசைகின்ற. பகலில் மலர்ந்து இரவில் குவிந்திருக்கும் தாமரையின் உட்புறம் சிறு வெம்மையுடையதாக இருக்கும். நான் பொறுத்தேன்; நீ வருந்துவது ஏன்? பாட்டு 377 தலைவன் தலைவியை மணந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடப் போய்விட்டான். தலைவி தலைவனைப் பிரிந்த துன்பம் தாங்காமல் மனம் புழுங்கினாள். அவளது உள்ளப் புழுக்கம் உடம்பிலும் காணப்பட்டது. அதைப் பார்த்தாள் தோழி. உன் கண்களின் இயல்பு அழிந்தது. உன்தோள்கள் இளைத்து விட்டன. இனி என்ன செய்வோம் என்று கவலைப்பட்டாள் தோழி. அதைக்கண்ட தலைவி என் உடம்பு மெலிந்தாலும் தலைவன் தன்மையை எண்ணித் துக்கத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றேன். நீ துக்கத்தைத் தாங்க முடியாமல் வருந்துவது ஏன்? என்று கேட்டாள். மலர் போன்ற அழகிய கண்களின் சிறந்த தன்மை அழிந்தது; வளையலை அணிந்த அழகிய மெல்லிய தோள்கள் இளைத்து விட்டன. ஆயினும் தோழியே குணங்கள் முழுவதையும் கண்டறிய முடியாத தலைவனுடன் யாம் செய்து கொண்ட சிறிய நல்ல துன்பத்துக்குப் பரிகாரமாக இருக்கின்றது. நான் இந்நிலை யிலிருக்க நீ துன்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துவது ஏன்? பாட்டு மலர் ஏர் உண் கண் மாண் நலம் தொலைய வளை ஏர் மென்தோள் நெகிழ்ந்ததன் தலையும் மாற்று ஆகின்றே; தோழி ஆற்றலையே! அறிதற்கு அமையா நாடனொடு செய்து கொண்டது ஓர் சிறுநல் நட்பே. பதவுரை:- தோழியே! அறிதற்கு அமையா- அவன் தன்மை முழுவதையும் அறிந்து கொள்ளுவதற்கு முடியாத. நாடனொடு- தலைவனோடு செய்து கொண்டது. ஓர் சிறு நல் நட்பு - செய்து கொண்ட ஒரு சிறிய நல்ல நட்பின் காரணமாக. மலர் ஏர் உண்கண்- மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களின். மாண் நலம் தொலைய- சிறந்த தன்மை அழியவும். வளை ஏர் மெல் தோள்- வளையலைக் கொண்ட அழகிய மென்மையான தோள்கள். நெகிழ்ந்ததன் தலையும்- களைத்துப் போன போதிலும். மாற்று ஆகின்று ஏ- இந்நிகழ்ச்சிகள் என் துக்கத்திற்குப் பரிகாரமாக இருக்கின்றன. ஆற்றலையே- நீ மட்டும் ஏன் துன்பத்தைப் பொறுக்க முடியாதவள் ஆயினை. கருத்து:- தலைவன் தன்மையை நினைந்து நான் துன்பத்தைத் தாங்கியிருக்கின்றேன். விளக்கம்:- இது மோசி கொற்றன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவைத் தலைவி தாங்க மாட்டாள் என்று வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது. குறிஞ்சித்திணை. தோழி அறிதற்கு அமையா நாடனொடு செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே. மலர் ஏர் உண் கண் மாண்நலம் தொலைய வளை ஏர் மெல்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும், மாற்று ஆகின்று ஏ; ஆற்றலையே என்று பதங்கள் மாற்றப்பட்டன. ஏ அசை. ஏர்- அழகு. நலம்- தன்மை. மாற்று- பரிகாரம். அமையா - முடியாத. அவள் சென்ற வழி இன்பந் தருக பாட்டு 378 தலைவனுடன் தலைவி போய்விட்டாள். பெற்றோர், உற்றார் அறியாமல் தன் கற்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டுத் தான் காதலித்த கணவனுடன் போய் விட்டாள். இதை உணர்ந்த செவிலித்தாய் என் மகள் சென்ற பாலை நில வழி அவளுக்கு இன்பம்தரும் நல்ல நெறியாக மாறுக என்று வேண்டிக் கொண்டாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். அழகையும் மாமை நிறத்தையும் உடைய என் மகள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விட்டாள் ஒளி பொருந்திய நீண்ட வேற்படையை உடைய காளைப் பருவமுள்ள காதலனுடன் கலந்து போய் விட்டாள். அவள் செல்லும் வழி நடப்போர்க்கு நலிவைத்தரும் பாலைநில வழி. என் மகள் அவ்வழியிலே வருந்தாமல் செல்ல வேண்டும். ஆதலால் கதிரவன் வெப்பத்தை வீசாமல் இருக்க வேண்டும்; பட்டுப் போய் நிற்கும் மரங்கள் தழைத்து நிழல் தர வேண்டும்; பருக்கைக் கற்கள் நிறைந்த குறுகிய மலைப்பாலையிலே மணல் பரவியிருக்க வேண்டும்; குளிர்ந்த மழையும் பெய்ய வேண்டும். பாட்டு ஞாயிறு காயாது மரம் நிழல்பட்டு, மலை முதல் சிறு நெறி மணல் மிகத்தாஅய்த், தண் மழை தழையின்று ஆக! நம் நீத்துச் சுடர் வாய் நெடு வேல் காளை யொடு, மடமா அரிவை போகிய சுரனே. பதவுரை:- நம்நீத்து- நம்மை விட்டுப் பிரிந்து, சுடர் வாய்- ஒளி பொருந்திய. நெடுவேல் காளையொடு- நீண்ட வேற்படையை யுடைய காளைப் பருவத்தோனுடன். மடமா அரிவை- அழகையும் மாமை நிறத்தையும் உடைய என் மகள். போகிய சுரன் ஏ- சென்ற வழியிலே. ஞாயிறு காயாது- கதிரவன் கொளுத்தாமல். மரம் நிழல்பட்டு- மரத்தின் நிழல் படிந்து. மலைமுதல் சிறுநெறி- மலையிடத்திலே செல்லும் சிறுவழியிலே. மணல் மிகதாய்- மணல் மிகவும் பரவி. தண்மழை- குளிர்ந்த மழையும். தலையின்று ஆக- பெய்வதாக. கருத்து:- தலைவி சென்ற பாலை நில வழி நல்வழி ஆக வேண்டும். விளக்கம்:- இச்செய்யுளின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தலைவனுடன் தலைவி உடன் போனதை அறிந்த செவிலித்தாய், அவள் செல்லும் வழியிலே அவளுக்குத்துன்பம் இல்லாமலிருக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டாள். செவிலித்தாய் கூற்று. பாலைத்திணை. நம் நீத்து என்பது முதல் பின்னடிகளை முன் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. தாஅய்- உயிர் அளபெடை. உன்னைக் காதலித்த தலைவன் எங்கே? பாட்டு 379 தலைவியால் காதலிக்கப்பட்ட தலைவன் ஒருவன். ஆனால் மற்றொரு புதியவன் தலைவியை மணந்து கொள்ள விரும்பி வந்தான். அவன் தலைவியின் பெற்றோரிடம் பெண் கேட்க வந்தான். அப்பொழுது தோழி, தலைவியால் விரும்பப்படும் காதலன் வேறொருவன் என்பதைத் தலைவியின் தாய் முதலியோருக்கு அறிவிக்கும் பொருட்டுத் தலைவியைப் பார்த்து முன்பு உன்பால் அன்பு கொண்ட தலைவன் இப்பொழுது எங்குள்ளானோ என்று கேட்டாள். இதன்மூலம் உண்மையை வெளியிட்டாள் தோழி. இச்செய்தியைக் கூறுவதே இப்பாடல். தோழியே! மலையிலே தூர்ந்து போன பழங்குழியைத் தோண்டுகின்ற வேடன், கிழங்கைப் பெறுகின்றான்; அதனுடன் பெரிய தூய மாணிக்கத்தையும் பெறுகின்றான். இத்தகைய சிறந்த மலைநாட்டை உடையவன் அன்று கூறியது ஒன்று உண்டு. நெருக்கமாக வளையல்களை அணிந்தவளே! உனது அறிவு வளர்ந்த பருவத்தில் எம்முடைய இல்லத்திற்கு வந்து இல்லறம் நடத்துவாய் என்று கூறினான். இவ்வாறு அன்புடன் உரைத்த உனது அடர்ந்த கூந்தலையும் தடவிக் கொடுத்தான். அவன் இப்பொழுது எங்கேயிருக்கின்றானோ; அறியோம். பாட்டு இன்று யாண்டையனோ தோழி, குன்றத்துப் பழம்குழி அகழ்ந்த கானவன், கிழங்கினொடு கண்ணகல் தூமணி பெறூஉம் நாடன், அறிவு காழ்க் கொள்ளும் அளவைச், செறிதொடி எம் இல் வருகுவை நீ எனப் பொம்மல் ஓதி நீவி யோனே. பதவுரை:- தோழி: குன்றத்து- மலையிலே. பழம்குழி அகழ்ந்த கானவன்- பழங்குழியைத் தோண்டிய வேடன். கிழங்கினொடு- கிழங்குடன் கூட. கண் அகல்- இடமகன்ற பெரிய. தூமணி பெறூஉம் - தூய மாணிக்கத்தையும் பெறுகின்ற, நாடன்- சிறந்த நாட்டையுடைய தலைவன் முன்பு. அறிவு காழ்க் கொள்ளும் அளவை- அறிவு முதிர்ந்த பருவத்தில். செறி தொடி- நெருங்கிய வளையலை அணிந்தவளே. எம் இல் வருகுவை நீ- எமது இல்லத்திற்குத் தலைவியாக வருவாய் நீ. என- என்று சொல்லி, பொம்மல் ஓதி- உனது அடர்ந்த தலைமயிரை. நீவியோன் ஏ- தடவியவன். இன்று யாண்டையனோ- இன்று எவ்விடத்தில் இருக்கின்றானோ! கருத்து:- உன்பால் காதல் கொண்ட தலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றான்? விளக்கம்:- இச் செய்யுளை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வேற்றார் தலைவியை மணக்க விரும்பி வந்த போது, தோழி உண்மையுரைத்து அறநெறியில் நின்றாள். தோழி கூற்று. குறிஞ்சித்திணை. இன்றி யாண்டையனோ என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கிழங்கை நாடிக் குழி தோண்டிய வேட்டுவன் விலைமதிப்பறியா மாணிக்கத்தையும் பெற்றான் என்பது வேட்டைக்கு வந்த தலைவன், ஒப்பற்ற தலைவியைப் பெற்றான் என்ற கருத்தைக் கொண்டதாகும். பெறூஉம்; உயிர் அளபெடை. ஏ; அசை. காழ்- முதிர்ச்சி; அளவை- காலம். பொம்மல்- அடர்ச்சி. நீவுதல்- தடவுதல். பனிப்பருவத்தில் என் செய்வோம் பாட்டு 380 முன்பனிக் காலத்தில் வந்து விடுகின்றேன் என்று கூறித்தலைவன் பிரிந்து போனான். கார் காலம் வந்தது; குளிர் காலமும் கழிந்து கொண்டு இருக்கின்றது; தலைவன் கெடு வைத்த முன் பனிக்காலம் வரப் போகிறது. இச்சமயத்தில் தோழி தலைவியைப் பார்த்து, இனி வரப்போவது முன்பனிக் காலம்; தலைவர் நம்மை மறந்தனர்; நாம் என்ன செய்வோம் என்று கூறினாள். இப்பொருள் அமைந்ததே இச்செய்யுள். தோழியே! மேகம் வானத்தை மூடிவிட்டது; எங்கும் பரந்து நிற்கின்றது. மன்னர்கள் பகை அரசர்களை வென்றபின் அடிக்கும் வெற்றிமுரசைப் போல நன்றாகப் பலமுறை முழங்குகின்றது. விடாமல் மழையைச் சொரிகின்றது; குளிர் காலத்திலே பூக்கும் இயல்புள்ள ஈங்கை மலர்களும் பூத்து உதிரத் தொடங்கிவிட்டன. ஆதலால் கார்காலமும் கழிந்து, குளிர்காலமும் வந்து மறையப் போகின்றது. மிகவும் தொலைவில் உள்ள நாட்டிற்குப் போன நம் தலைவர் நம்மை மறந்தனர். இனி முன் பனிக்காலம் வந்தால் நாம் என் செய்வோம். பாட்டு விசும்புகண் புதையப் பாஅய். வேந்தர் வென்று எறி முரசின் நன்பல முழங்கிப் பெயல் ஆனாதே வானம்; காதலர் நனிசேய் நாட்டர்; நம் உன்னலரே; யாங்குச் செய்வாம் கொல் தோழி! ஈங்கைய. வண்ணத் துய்ம் மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. பதவுரை:- தோழி, விசும்புகண் புதைய- வானிடம் முழுவதும் மறையும்படி. பாஅய்- பரவி. வேந்தர்- அரசர்கள். வென்று எறிமுரசின் - பகைவர்களை வென்றபின் அடிக்கும் வெற்றி முரசைப் போல. நன்பல முழங்கி - நன்றாகப் பல தடவை. இடித்து- முழங்கி. வானம்- மேகம். பெயல் ஆனாது ஏ- மழை பெய்வதை நிறுத்தாது. காதலர்- நமது காதலரோ. நனிசேய் நாட்டர்- மிகவும் தொலை நாட்டில் இருக்கின்றார். நம் உன்னலர் ஏ- நம்மைப் பற்றி நினையாமல் இருக்கின்றார். ஈங்கைய- ஈங்கை மரத்தின். வண்ணம் துய்மலர்- அழகிய கொழுந்துகளையுடைய மலர். உதிர- உதிரும் படி. முன்னர்த் தோன்றும்- இனிமேல் வரப்போகும். பனிக்கடு நாள் ஏ- குளிர் நிறைந்த கொடுமையான காலத்தில். யாங்கு செய்வாம் கொல்- என்னதான் செய்வோம். கருத்து:- தலைவர் வருவதாகக் கூறிய காலத்தில் வரா விட்டால் நாம் என்ன செய்வோம். விளக்கம்:- இச்செய்யுள் கருவூர்க் கதப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. முன்பனிக் காலத்தில் வருவதாகச் சொல்லிச், சென்ற காதலனைப் பற்றி, குளிர்கால இறுதியில், தோழி தலைவியிடம் கூறியது. பாலைத்திணை. தோழி, என்னும் சொல் முதலில் வைக்கப்பட்டது. யாங்குச் செய்வாம் கொல் என்னும் சொல் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. பாஅய்: உயிர் அளபெடை கொல்; ஏ; அசைகள். பெயல்- மழை. வானம்- மேகம். ஆனாது- குறையாது. துய்- மலரில் உள்ள ஒரு வகைக் கொழுந்து. ஈங்கை; - குளிர் காலத்தில் பூக்கும் ஒருவகை மலர். பனிக்கடு நாள்- முன்பனியாகிய கொடிய நாள். இன்பத்தின் பயன் துன்பமா? பாட்டு 381 தலைவன் தலைவியை மணந்து கொள்ளத்தான் போகிறான், இன்னும் சில நாட்களில் மணந்து கொள்ளுவது உறுதி; இதற்கிடையில் உள்ள நாளில் தலைவி தலைவனைக் காணாமல் வருந்தியிருந்தாள். அதைக் கண்ட தோழி முன்பு தலைவனோடு கூடி மகிழ்ந்து விளையாடியதின் பயன் இப்பொழுது இவ்வாறு துன்புறுதல்தானா? என்று கூறினாள். இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். குளிர்ந்த நறுமணம் கமழும் கடற்கரைச் சோலையிலே வெண்மையான நாரைகள் ஒலித்துக் கொண்டிருக்கும், மலர் நிறைந்த அச்சோலையில் உள்ள புதிய மலர்கள் கலங்கும்படி அலைகள் வந்து வந்து மோதிக் கொண்டிருக்கும். இத்தகைய வளம் பொருந்திய கடல்துறைத் தலைவனுடன் அன்று அன்புடன் கூடிப் பற்கள் தோன்றச் சிரித்து நகைத்து விளையாடினும், அதன் பயன் இன்று பழமையான அழகு தொலைந்தது; தோள்களின் பூரிப்பு அழிந்து மெலிந்தது; நெஞ்சத்திலே இன்பத்திற்கு மாறாகத் துன்பம் நிறைந்தது; இரவுபகலாகத் தூக்கம் பிடிப்பதேயில்லை. உடம்பு முழுதும் பசலை நிறம் படர்கின்றது; இப்படி நாம் அழிவதுதான் கண்ட பயனா? பாட்டு தொல்கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய், அல்லல் நெஞ்சமோடு, அல்கலும் துஞ்சாது, பசலை யாகி விளிவது கொல்லோ? வெண் குருகு நரலும் தண்கமழ் கானல் பூமலி பொதும்பர் நாள் மலர் மயக்கி, விலங்குதிரை உடைதரும் துறைவனொடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே. பதவுரை:- வெண்குருகு- வெண்மை நிறமுள்ள நாரைகள். நரலும்- ஒலித்துக் கொண்டிருக்கின்ற. தண்கமழ் கானல்- குளிர்ந்த மணம் வீசுகின்ற கடற்கரைச் சோலையிலே. பூமலி பொதும்பர்- பூக்கள் நிறைந்த சோலைகளில் உள்ள. நாள் மலர் மயங்கி- புதிய மலர்களைக் கலங்கும்படிச் செய்து. விலங்குதிரை உடைதரும்- குறுக்காக வீழ்கின்ற அலைகள் சிதறுகின்ற. துறைவனொடு - கடல் துறைத் தலைவனுடன். இலங்கு எயிறு தோன்ற - விளங்குகின்ற பற்கள் தோன்றும்படி. நக்கதன் பயன்ஏ- சிரித்து விளையாடியதன் பயன். தொல்கவின் தொலைந்து- பழமையான அழகு தொலைந்து. தோள் நலம் சாய்- தோளின் நன்மை மெலிந்து. அல்லல் நெஞ்சமோடு - துன்பம் நிரம்பிய நெஞ்சத்துடன். அல்கலும் துஞ்சாது - இரவிலும் உறங்காமல். பசலைஆக- பசலை நிறமுடை யோமாகி. விளிவது கொல் ஓ- அழிவது தானா பயன்? கருத்து:- தலைவனுடன் நாம் நட்புச் செய்ததன் பயன் துன்புற்று அழிவதுதானா? விளக்கம்:- இச்செய்யுளின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறுவதற்கு இடையில் சில நாட்கள் இருந்தன; அப்பொழுது வருந்தியிருந்த தலைவியை நோக்கித் தோழி கூறியது இச்செய்யுள். நெய்தல் திணை. தொல்கவின்- கொல்லோ என்ற அடிகளை நக்கதன் பயனே என்ற இறுதித் தொடருக்குப் பின் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. சாஅய், உயிர் அளபெடை. ஓ, ஏ- அசைகள். துஞ்சுதல்- உறங்குதல்- நரலுதல்- ஒலித்தல். பொதும்பர்- புதர்; சோலை; நகுதல்- சிரித்தல்; தலைவனுடன் நக்கதாவது; அவனுடன் வந்து விளையாடி மகிழ்ந்திருத்தல். இது புது மழை, பருவ மழை அன்று பாட்டு 382 கார் காலத்தில் வந்து விடுவதாக உறுதிமொழி உரைத்துச் சென்றான் தலைவன். கார் காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவனைக் காணவில்லை; அதனால் தலைவி வருந்தியிருந்தாள். இது கார்காலம் அன்று; இப்பொழுது பெய்வது பருவம் அல்லாத காலத்தில் பெய்யும் புது மழை. தலைவர் தாம் கொடுத்த வாக்கை மீறாதவர். இது உண்மையான கார் காலமாயிருந்தால் அவர் வராமலிருக்க மாட்டார். அவர் வராமல் இருப்பதுதான், இன்னும் கார் காலம் வரவில்லை என்பதற்கு அடையாளமே அன்றி முல்லை, மல்லிகை முதலியன மலர்ந்திருப்பது கார்காலத்திற்கு அடையாளம் அன்று என்று கூறித் தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள். பசுமையான கொடிகளிலே உள்ள முல்லை மொக்குகள் குளிர்ந்த மழைத் துளிகளை எதிர் கொண்டன. அவை மலர்ந்து நறுமணம் வீசுகின்றன; இந்த முல்லை அரும்பு பூத்த மணம் புதர்களிலே நிறைய பூத்திருக்கும் செம்முல்லை மலர்களின் மணத்துடன் கலந்து தேன் மணம் வீசி விளங்குகின்றன. இக்காட்சி உண்டாகும்படி, மழை, புதிதாகப் பருவமல்லாக் காலத்தில் பெய்கின்றது. இது புதிய மழையேயன்றிப் பருவ மழை அன்று. உண்மையில் இது கார் காலமானால் நம் காதலர், தான்கொடுத்த வாக்குறுதியின்படி வராமலிருக்க மாட்டார் பாட்டு தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை முகை தலை திறந்த நாற்றம், புதன் மிசைப் பூமலி தளவமொடு தேம் கமழ்பு கஞல, வம்புப் பெய்யும் ஆல் மழையே; வம்பு அன்று கார் இது பருவம் ஆயின், வாராரோ நம் காதலோரே. பதவுரை:- தண்துளிக்கு ஏற்ற- குளிர்ந்த மழைத்துளியை எதிர்கொண்ட. பைம் கொடி முல்லை- பசுமையான கொடியை யுடைய முல்லையின். முகை தலை திறந்த- மொக்குகள் மலர்ந்த. நாற்றம்- நறுமணமானது. புதன் மிசை- புதரின்மேல். பூமலிதளவ மொடு- பூக்கள் நிறைந்த செம்முல்லை மலர்களோடு. தேம்கமழ்பு கஞல - தேன் மணம் வீசிக் கொண்டு விளங்க. வம்பு- புதிதாக. பெய்யும் ஆல்மழை ஏ - பெய்கின்றது இந்த மழை. வம்பு அன்று- இது புது மழையல்லாமல். கார் இது பருவமாயின்- கார்காலந்தான் இந்தக் காலமானால். நம் காதலோர் ஏ- நம்முடைய காதலர்முன் உறுதிமொழி புகன்றபடி. வாராரோ- வந்திருக்க மாட்டாரோ? கருத்து:- இது உண்மையான கார் காலம் அன்று; பெய்யும் மழை வம்ப மழை. விளக்கம்:- இது குறுங்கீரன் என்னும் புலவர் செய்யுள். தலைவன் தவணை சொல்லிப் போன கார்காலம் வந்தது; ஆனால் அவன் வரவில்லை. அதனால் வருந்தின தலைவியைப் பார்த்துத் தோழி கூறியது. முல்லைத்திணை. வாராரோ நம் காதலோரே என்று இறுதி அடியில் மட்டும் மாற்றம் ஏ; ஆல்- அசை. நாற்றம்- நறுமணம். தளவம்- செம்முல்லை. மல்லிகை யென்றும் கூறலாம். தேம் கமழ்பு- தேன் மணம் வீசி. கஞலுதல்- விளங்குதல். வம்பு - புதிது. வாக்குறுதியை மீறலாமா? பாட்டு 383 தலைவனுடன் தனியாகப் புறப்பட்டுப் போகத் தலைவி உடன்பட்டாள். தலைவியின் உடன்பாட்டைத் தோழி தலைவனுக்கு அறிவித்தாள். தலைவனும், தோழி குறித்த இரவிலே தலைவியைக் கூட்டிக் கொண்டு போக வந்தான். தலைவன் வந்திருக்கும் செய்தியைத் தோழி, தலைவியிடம் அறிவித்தாள். அவனுடன் புறப்படும்படி கூறினாள். தலைவி தன் நாணத்தைத் துறந்து அவனுடன் போவதற்கு அஞ்சினாள். அதனால், இன்றைக்கு வேண்டாம்; நாளைக்குப் போகலாம் என்றாள். உடனே தோழி உன் உடன்பாட்டைப் பெற்ற பின்னே தலைவனை வரச் செய்தேன். இப்பொழுது நீ புறப்பட மறுத்தால் நான் என்ன செய்வேன் என்றாள். இச்செய்தியை உரைப்பதே இச்செய்யுள். தலைவியே உன் சம்மதம் இல்லாமல் நான் ஒன்றும் செய்து விடவில்லை. நீ தலைவனுடன் புறப்பட்டுப் போக உடன்பட்ட தனால் தான், யான், அவனை அழைத்தேன், அவனும் வந்து குறித்த இடத்திலே காத்திருக்கிறான். மலை நாட்டையுடைய தலைவன் தான் தந்த வாக்கை மீறாமல் வந்து விட்டான். நீயோ முதலில் கூறியதை மறந்து இன்று கழியட்டும், நாளைக்குப் புறப்படலாம் என்று கூறுகின்றனை. கைகளும், கால்களும் சோர்ந்து வருந்து கின்றன; தீயிலே பட்ட தளிர் போல நடுங்கி நிற்கின்றன. இந் நிலையிலே நான் செயல் யாதொன்றும் இல்லை. என் செய்வேன். பாட்டு நீ உடம்படுதலின், யான்தர, வந்து குறிநின் றனனே குன்ற நாடன்; இன்றை அளவை சென்றைக்க என்றி, கையும் காலும் ஓய்வன அழுங்கத் தீ உறு தளிரின் நடுங்கி யாவதும் இல்லை, யான்செயற்கு உரியதுவே. பதவுரை:- நீ உடம்படுதலின்- தலைவியே நீ தலைவனுடன் போக உடம்பட்டதனால். யான்தர- நான் அழைக்க. குன்ற நாடன்- மலைநாட்டையுடைய நமது தலைவன். வந்து குறிநின்றனனே- வந்து குறியிடத்தே நின்றான். இன்றை அளவை- நீயோ முன் உடம்பட்டதை மறந்து இன்று மட்டும். சென்றைக்க என்றி- செல்லட்டும் நாளை புறப்படலாம் என்கின்றாய். கையும், காலும் ஓய்வன அழுங்க- கையும், காலும் சோர்வனவாகி வருந்த. தீஉறு தளிரின் நடுங்கி- தீயில் பட்ட தளிர்போல வாடி நின்றனை. யான் செயற்கு உரியதுஏ- இனி யான் செயவற்குரிய செயல், யாதும் இலை- ஒன்றும் இல்லை. கருத்து:- இப்பொழுதே தலைவனுடன் புறப்பட்டுப் போவதுதான் நலம். விளக்கம்:- இச்செய்யுள் படுமரத்து மோசிகீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. தலைவனுடன் செல்ல உடன் பட்டிருந்தாள் தலைவி; அவன் அழைத்துச் செல்லக் குறித்த நேரத்தில் வந்தான். அப்பொழுது தலைவி, இன்று கழித்து நாளைக்குப் போகலாம் என்றாள், அப்பொழுது தோழி உரைத்தது இச்செய்யுள் பாலைத்திணை. யான் செயற்கு உரியது யாவதும் இலை என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. ஏஅசை. சென்றைக் கடமைசெல்க. ஓய்வன - சோர்ந்தன வாய். வாக்குறுதியைக் காக்க வேண்டும்; சொல்லியதை மீறி நடத்தல் முறையன்று; என்ற நீதியையும் இச்செய்யுள் உணர்த்து கின்றது. உன் உறுதியை எப்படி நம்புவது? பாட்டு 384 பரத்தையர் இல்லத்தை நாடிச் சென்ற தலைமகன் திரும்பி வந்தான். தோழியிடம், தலைவியின் ஊடலைத் தணித்துக் கூடச் செய்ய வேண்டும் என்று வேண்டினான். இனிப் பரத்தையர்கள் இருக்கும் பக்கத்தையே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று உறுதி கூறினான். அதுகேட்ட தோழி, உனது உறுதிமொழி சூளுரை பொய்- நம்பத்தகாதது என்று கூறி, தான் தலையிடம் தூது போக முடியாது என்று உரைத்தாள். உழுந்தை உடைக்கும் தடியின் முனையைப் போல வழ வழப்பான தோள்கள்; கரும்பின் உருவம் வரைந்த பருத்த தோள்கள்; நீண்ட அடர்ந்த கூந்தல், குறுகிய வளையலை அணிந்தவர்கள்; இத்தகைய பரத்தையர்களின் இன்பத்தை அனுபவித்தாய்; இப்பொழுது அவர்களையும் கைவிட்டாய். இனி உம்மைவிட்டுப் பிரியேன் என்று இப்பொழுது எம்மிடம் சொல்லுவது போலவே அவர்களிடமும் சொல்லியிருப்பாய். இப்பொழுது அவர்களைப் பிரிந்தனை. ஆதலால் நீ கூறும் உறுதிமொழி உண்மையன்று பொய்யுரையே ஆகும்! பாட்டு உழுந்து உடைக் கழுந்தில், கரும்பு உடைப்பணைத்தோள் நெடும்பல் கூந்தல், குறும்தொடி மகளிர் நலன் உண்டு துறத்தி ஆயின், மிகநன்று! அம்ம! மகிழ்ந நின் சூளே. பதவுரை:- உழுந்து உடை கழுந்தின்- உழுத்தங்காயை உடைக்கும் முனை வழுவழுப்பான தடியைப் போன்ற. கரும்பு உடை- மன்மதனுடைய கரும்புவில் எழுதப்பட்ட. பணைத்தோள்- பெரிய தோளையும். நெடும்பல் கூந்தல்- நீண்ட நிறைந்த கூந்தலையும். குறுந்தொடி- குறுகிய வளையலையும் உடை. மகளிர் நலன் உண்டு- பரத்தையரின் இன்பத்தை நுகர்ந்து. துறத்தி ஆயின்- இப்பொழுது அவர்களையும் விட்டு நீங்குவாயானால். மகிழ்ந- தலைவனே. நின்சூள்ஏ- உன் உறுதிமொழி. மிகநன்று அம்ம- மிகவும் சிறந்ததுதான். கருத்து:- உன் சொல்லை உண்மை என்று எப்படி நம்ப முடியும்? விளக்கம்:- இது ஓரம்போகியார் என்னும் புலவர் பாட்டு. பரத்தையிடமிருந்து வந்த தலைவன், இனி விட்டுப் பிரியமாட்டேன் என்று உறுதி சொல்லிய போது, அவனுக்குத் தோழி உரைத்த மறுமொழி. மருதத்திணை. மகிழ்ந நின் சூள் மிக நன்று என இறுதி அடியில் மட்டும் மாற்றம். உழுந்தடிக்கும் தடியின் முனை பருத்து வழுவழுப்பாகத் தேய்ந்திருக்கும். அது பரத்தையர் தோளுக்கு உவமை. குங்குமக் குழம்பால், காமன் வில்லுருவத்தைத் தோளில் எழுதிக் கொள்வது மகளிர் வழக்கம். ஏ; அம்ம; அசைகள். மகிழ்நன் மருதநிலத் தலைவன். அன்றுபோல் இன்றும் அன்பினர் பாட்டு 385 புதியவர் சிலர் தலைவியைப் பெண் கேட்க அவள் பெற்றோரிடம் வந்தனர். இதை அறிந்த தலைவி, தன் தோழியிடம் அறத்தோடு நிற்கும்படி வேண்டினாள். நம் தலைவன், அன்று கொண்ட அன்பிலே சிறிதும் குன்றிலன். விரைவில் கற்பு மணம் கொள்ளப் போகின்றான். இவ்வுண்மையை இவ்வூரார் அறியவில்லை. வந்திருக்கும் புதியவர்களும் உணரவில்லை. நாம் காதலிக்கும் வேறொரு தலைவன் உளன் என்ற உண்மையை நீ தான் எடுத்துக்கூறிப் புதியோர் வருகையைத் தடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். பலா மரத்திலே பழுத்த பழங்களைக் கூட்டமான ஆண் குரங்குகள் உண்டு மகிழ்ந்திருக்கும். அச்சமயத்திலே காவல் காக்கும் வேடன் வில் அம்புடன் அங்கு வருவான். அவன் குறி தவறாமல் அம்பெய்வதிலே வல்லவன். அவனைக் கண்டதும், அவன் அம்புக்கு அவ்வாண் குரங்குகள் அஞ்சும். அவை போர்க் களத்திலே சினம் பொங்கிப் பாயும் குதிரைகளைப் போல, நீண்ட மூங்கில்கள் அசையும்படி அவற்றின் மேல் பாய்ந்து ஓடும். இத்தகைய காட்சியுள்ள பெரிய மலைப்பக்கத்துடையவன் நமது தலைவன். அவன் நம் மீது வைத்த அன்பிலே சிறிதும் குறைந்தவன் அல்லன். அன்று நம்முடன் நட்புச் செய்த காலத்தில் எத்தகைய அன்புடன் இருந்தானோ, அதைப் போலவே இன்றும் நட்புக் கொண்டிருக்கின்றான். இந்த உண்மையை உணராமல் என் மணங்குறித்து வந்த புதியவர்களைக் கொண்டிருக்கின்றது இந்த ஆரவாரத்தைக் கொண்ட ஊர். பாட்டு பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை சிலைவில் கானவன் செம்தொடை வெரீஇச் செருவுறு குதிரையில் பொங்கிச் சாரல் இருவெதிர் நீடு அமை தயங்கப் பாயும்; பெருவரை அடுக்கத்துக் கிழவன், என்றும் அன்றை அன்ன நட்பினன்; புதுவோர்த்து அம்ம இவ் அழுங்கல் ஊரே. பதவுரை:- பலவில் சேர்ந்த - பலா மரத்திலே உள்ள. பழம் ஆர்- பழத்தைப் பிளந்து உண்ணுகின்ற. இனம்கலை- கூட்டமான ஆண்குரங்குகள். சிலையில் கானவன்- சிலைமரத்தால் செய்யப் பட்ட வில்லையுடைய வேடனைக் கண்டு. செம்தொடை வெரீஇ- அவனுடைய குறிதவறாத நல்ல அம்புத் தொடுப்புக்குப் பயந்து. செருஉறு குதிரையில் - போர்க்களத்தை அடைந்த குதிரைகள் போல். பொங்கி- மேலெழுந்து தாவி. சாரல் இரு வெதிர்- மலைச்சாரலிலே வளர்ந்த பெரிய மூங்கிலின். நீடு அமை தயங்க- நீண்ட கோல் அசையும்படி. பாயும்- பயந்து ஓடுகின்ற. பெருவரை அடுக்கத்துக் கிழவன்- பெரிய மலைப் பக்கத்தையுடைய நமது தலைவன். என்றும்- எப்பொழுதும். அன்றை அன்ன நட்பினன்- புதிதாக நட்புச் செய்த அன்று போன்றே மாறாத நட்புடையவன். புதுவோர்த்து - இதை அறியாமல் என்னை மணக்க விரும்பி வந்த புதியவர்களைக் கொண்டிருக்கின்றது. இவ் அழுங்கல் ஊர்ஏ- இந்த ஆரவாரத்தையுடைய ஊர். கருத்து:- புதியவர் என்னை மணம் பேசி வந்தனர். நம் பெற்றோர்க்கு உண்மை தெரிவிப்பது நம் கடமை. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. புதியோர் மணம் பேசி வந்ததைக் கண்ட தலைவி அவர்கள் வரவைத் தடுக்கும்படி தோழியிடம் கூறியது. குறிஞ்சித்திணை. பலா மரத்திலிருந்து குரங்குகள் மூங்கிலின் மேல் பாய்வதற்கு போர்க்களக் குதிரைகளின் பாய்ச்சல் உவமை. வெரீஇ; உயிர் அளபெடை; ஏ; அசை. பலவு- பலா மரம், செம்தொடை- குறி தவறாமல் அம்புவிடுதல். வெதிர்- மூங்கில். அமை- கோல். தயங்க - அசைய. அம்ம- அசை. சிலை- வில் செய்வதற்குப் பயன்படும் ஒரு வகை மரம். மாலையை இப்பொழுதுதான் காண்கின்றேன் பாட்டு 386 தலைவன் பிரிந்து போயிருக்கின்றான்; தலைவி தனித்து வருந்தியிருக்கின்றாள். மாலைப் பொழுது அவளை மிகுந்த துன்பத்தில் ஆழ்த்திவிட்டது. தலைவியே, முன்பெல்லாம் நீ மாலைப் பொழுதைக் கண்டால் வருந்தாமல் இருந்தனை. அது போலவே இப்பொழுதும் வருந்தாமல் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டினாள். இதைக் கேட்ட தலைவி அவளுக்கு மறுமொழி தந்தாள். அந்த மறுமொழியைக் கூறுவதே இச் செய்யுள். தோழியே! வெண்மையான மணல் பரந்தது; மலர்கள் நிறைந்த சோலையை உடையது; இத்தகைய குளிர்ந்த கடல் துறையையுடைய தலைவனோடு பிரியாமல் கூடி மகிழ்ந்த காலத்தில் துன்பந்தரும் மாலைக் காலத்தையே நான் கண்ட தில்லை. ஒளி பொருந்திய அணிகலன்களைப் பூண்ட மகளிர் விளையாட்டு விழாவுக்காக அலங்காரங்களைச் செய்வார்கள். அப்பொழுது யானும் காதலருடன் விழாவுக்கான அலங்காரங் களைச் செய்து கொண்டு மகிழ்ந்திருப்பேன். இத்தகைய மகிழ்ச்சி தரும் மாலையைத்தான் அவருடன் சேர்ந்திருந்த போது அறிவேன். இப்பொழுதோ அந்த நிலைமையில்லை. நிலப்பரப்பைப் போன்ற பெரிய துன்பத்துடன் தனித்திருந்து வருந்துவதாகிய மாலைக் காலத்தைத்தான் காண்கின்றேன். அவரைப் பிரிந்ததனால் இந்நிலைமை ஏற்பட்டது, பாட்டு வெண் மணல் விரிந்த வீததை காணல் தண் அம் துறைவன், தணவா ஊங்கே, வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் மாலையோ அறிவேன்; மன்னே, மாலை நிலம்பரந்த அன்ன புன்கண் ஒடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே. பதவுரை:- வெண்மணல் விரிந்த- வெண்மையான மணல் பரவிய. வீததை கானல்- மலர்கள் நெருங்கி மலர்ந்திருக்கின்ற கடற்கரைச் சோலை அமைந்த- தண் அம் துறைவன் - குளிர்ந்த அழகிய நீர்த்துறையையுடைய தலைவன்- தணவா ஊங்கு ஏ- என்னை விட்டு நீங்காத அந்நாளில்- வால் இழை மகளிர்- நல்ல அணிகலன்களையணிந்த பெண்கள்- விழவு அணி கூட்டும் - விழாவுக்கான அலங்காரங்களைச் சேர்க்கின்ற- மாலையோ அறிவேன். மாலைப் பொழுதைத்தான் நான் அறிவேன். மன்ஏ- இப்பொழுது அம்மாலையைக் காணேன். மாலை- அந்த மாலைக்காலம். நிலம் பரந்த அன்ன நிலம் பரவியிருப்பது போன்ற. புன்கணொடு- பெரிய துன்பத்துடன், புலம்பு உடைத்து. ஆதல்- தனிமையைக் கொண்டிருப்பதை. அறியேன்யான்ஏ- அறிய மாட்டேன் நான். கருத்து:- இன்று தலைவர் பிரிந்திருப்பதால் மாலைக் காலத்தால் உண்டாகும் துன்பத்தைக் காண்கின்றேன். விளக்கம்:- இது வெள்ளிவீதியார் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவால் மனத்தில் எழும் துன்பத்தைத் தாங்கியிருக்க வேண்டும் என்று தோழி கூறிய போது, அவளுக்குத் தலைவி உரைத்தது. நெய்தல்திணை. வீ - மலர்கள். ததை- நெருங்கிய. தணத்தல்- பிரிதல்; தணவா- பிரியாத. வால் இழை- ஒளி பொருந்திய அணி; தூய்மையான அணிகள். மன்- கழிந்தது. துன்பத்தின் மிகுதிக்கு நிலப் பரப்பு உவமை. இரவை நீந்துவது எப்படி? பாட்டு 387 தலைவன் பிரிந்ததனால் வருந்தியிருந்தாள் தலைவி. தோழி அவளைப் பார்த்து ஆறுதல் உரைத்தாள். தலைவன் பிரிவால் உள்ளத்தில் எழும் துன்பத்தை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொறுமையுடன் இருப்பதுதான் கற்புக்கு அழகாகும் என்று வற்புறுத்திக் கூறினாள் தோழி. mJ nf£l jiyÉ ‘khiy¡fhy« á¿J neuªjh‹ ïU¡F«; mij¤ jh§» bfh©lhY« Ú©l neu« ïU¡F« ïuh¡fhy¤âš v¥go¤ J‹òwhkš ïU¡fKoí«? என்று கேட்டாள். தலைவியின் இக் கூற்றை வெளியிடுவதே இச்செய்யுள். பகல் பொழுது நீங்கினவுடன், முல்லைகள் மலரும்படி மாலைக்காலம் வருகின்றது. சூரியனுடைய சினமான வெம்மை தணிந்த மாலைக்காலம் துன்பத்தைத் தரக்கூடியது. ஆயினும் அது தங்கியிருக்கும் காலம் குறைவுதான். அந்த மாலை என்னும் கால்வாயை நீந்தி இரவின் எல்லையை- கரையை அடைவதாகவே வைத்துக் கொள்ளுவோம். அந்த இரவோ பெரிய வெள்ளம்; அது கடலைக் காட்டினும் பரப்புள்ளது. ஆதலால் அந்த இரவாகிய வெள்ளத்தை எப்படித் தாண்டமுடியும்? மாலைக் காலத் துன்பத்தைக் கடப்பதால் என்ன பயன்? இரவு வெள்ளத்திலே மூழ்கித் தவிக்கத்தானே வேண்டும்; ஆதலால் நான் எப்படித் துன்புறாமல் இருக்கமுடியும்? பாட்டு எல்லை கழிய முல்லை மலரக், கதிர்சினம் தணிந்த கையறு மாலையும், இரவு வரம்பாக நீந்தினம் ஆயின், எவன் கொல்? வாழி! தோழி! கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே பதவுரை:- வாழி தோழி - வாழ்க தோழியே. எல்லை கழிய- பகல்பொழுது நீங்க. முல்லைமலர- முல்லைகள் மலர்ந்து மணம் வீச. கதிர்சினம் தணிந்த- சூரியனுடைய சினமான வெப்பம் நீங்கிய கையறு மாலையும்- துன்பத்தைத்தரும் மாலைக் காலத்தையும். இரவு வரம்பு ஆக- இரவைக் கரையாக வைத்துக் கொண்டு. நீந்தினம் ஆயின்- நீந்திக்கிடந்தோமானால். கங்குல் வெள்ளம்- மாலையை அடுத்துள்ள இரவாகிய வெள்ளம். கடலினும் பெரிது ஏ- கடலைக் காட்டிலும் பரப்பிலும் ஆழத்திலும் பெரிதாகும். எவன்கொல்- ஆதலால் நாம் மாலைப் பருவத்தை நீந்திக் கடப்பதால் என்ன பயன்? கருத்து:- மாலையும் இரவும் தனித்திருக்கும் காதலர்க்குத் துன்பம் செய்வன. விளக்கம்:- இப்பாடல் கங்குல் வெள்ளத்தார் என்னும் புலவர் பாட்டு. கங்குல் வெள்ளம் என்ற தொடர் இச்செய்யுளில் அமைந்திருப்பதால், இது இப்புலவருக்குப் பெயராயிற்று. காரணப் பெயர். தலைவன் பிரிந்திருக்கும் போது தோழி தலைவியைப் பார்த்து நீ துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினாள். அதற்குத் தலைவி உரைத்தது இச்செய்யுள் முல்லைத்திணை. வாழிதோழி என்ற தொடரை முதலிலும், எவன் கொல், என்ற தொடரை இறுதியிலும் வைத்துப் பொருள் கூறப்பட்டது. எல்லை- பகல். கதிர் சினம்- சூரிய வெப்பம். வெயிலைச் சினமாக உருவகம் செய்யப்பட்டது. கையறுதல்- செயலின்றி இருத்தல். வரம்பு - எல்லை; கரை. மாலையைச் சிறு வெள்ளமாகவும் இரவைக் கடலினும் பெரிய வெள்ளமாகவும் உருவகம் செய்யப்பட்டது. பாலையும் சோலையாம் பாட்டு 388 தலைமகள் தலைவனுடன் அவனூருக்குப் போக உடன் பட்டாள். இதை அறிந்த தலைவன் மெல்லிய தன்மையுள்ள தலைவி பாலைநிலத்தில் எப்படி நடப்பாள் என்று எண்ணினான். நீரற்ற பாலைவனம் நெருப்புப் போலச்சுடும் பாலைவனம்; கல்லும் முள்ளும் நிரம்பிய குறுநெறி பொருந்திய பாலைவனம்; இத்தகைய அருநெறியிலே அவள் நடக்கமாட்டாள். ஆதலின் தலைவியை அழைத்துச் செல்லாதிருப்பதே நலம் என்று எண்ணினான். இதை அறிந்த தோழி உம்முடன் சேர்ந்து வந்தால் தலைவிக்குப் பாலைவனம் துன்பந்தராது; இன்பத்தையே தரும் என்று உரைத்தாள். தலைவியை அழைத்துச் செல்வதற்குத் தலைவனை உடன்படும்படிச் செய்தாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். அடியிலே தண்ணீர் தேக்கப் பட்டிருக்கும். குவளை மலர்கள் மேல் காற்று வீசினாலும் வாடிப்போகமாட்டா. தலைவிக்காகத் தலைநிமிர்ந்து நிற்கும். உப்பு விற்கும் வணிகர்கள் வண்டியிலே எருது பூட்டிப் பாலைநில வழியிலே ஓட்டிச் செல்வார்கள். கவணைப் போன்ற நுகத்தடி பூட்டப்பட்ட எருதுகள் மிகவும் துன்பத்துடன் வண்டியை இழுத்துச் செல்லும். அந்த வண்டிகளை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பது போலப் பட்ட மரங்களின் கிளைகள் காணப்படும். நீரின்றி வருந்திய யானை அக்கிளைகளைப் பிளக்க முடியாமல் பிளப்பதற்கு ஏற்ற வலிமையில்லாமல் துதிக்கையை மடித்துக் கொண்டு வருந்தும். இத்தகைய பாலை வனமும் உம்முடன் இணைந்து வந்தால் தலைவிக்குத் துன்பந்தராது. இன்பத்தையே தருவதாகவிருக்கும். ஆதலால் நீர் தலைவியை அழைத்துப்போவதே நலமாகும். பாட்டு நீர் கால் யாத்த நிரை இதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடாது ஆகும்; கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருத்து ஒழுகைத்தோடு நிரைத்து அன்ன, முளிசினை பிளக்கும் முன்பு இன்மையின், யானை கை மடித்து உயவும் பதவுரை:- நீர் கால் யாத்த- தண்ணீரை அடியிலே கட்டப்பெற்ற. நிரை இதழ்க்குவளை - வரிசையான இதழ்களை யுடைய குவளைமலர்கள். கோடை ஒற்றினும்- மேல் காற்று வீசினாலும். வாடாது ஆகும்- வாடிப் போகாமல் நிற்கும். கவணை அன்ன- கவணைப் போன்ற. பூட்டுப் பொருது- நுகத்தடி பூட்டப்பட்டு. அசா-வருந்தி. உமண் எருத்து- உப்பு வாணிகர்களின் எருதுகள். ஒழுகை - இழுத்துச் செல்லும் வண்டிகளின். தோடு நிரைத்து அன்ன- கூட்டத்தை வரிசையாக வைத்தாற் போன்ற. முளிசினை- மரங்களின் காய்ந்த கிளைகளை. பிளக்கும்முன்பு இன்மையின்- பிளப்பதற்கு ஏற்ற வலிமை இல்லாமையால். யானைகை மடித்து- யானை தம் துதிக்கையை மடித்துக்கொண்டு. உயவும்- வருந்துகின்ற. கானமும்- பாலைநிலவழியும். நும்மொடு வரின்- உம்முடன் சேர்ந்து நடந்தால். இனிய ஆம்- தலைவிக்கு இன்பமாகவே இருக்கும். கருத்து:- தலைவி உம்முடன் சேர்ந்து வரும்போது பாலைநிலம், அவளுக்குச் சோலைநிலம் போலவே இன்பந்தரும். விளக்கம்:- இது அவ்வையார் பாட்டு. தலைமகள் பாலை நிலத்தில் எப்படி நடந்து வர முடியும் என்று எண்ணிய தலைவனுக்குத் தோழி உரைத்தது, பாலைத்திணை. நும் மொடுவரின் ஏ கானமும் இனிய ஆம் என்று இறுதி அடியில் மட்டும் மாற்றம். அசாஅ: உயிர் அளபெடை; ஏ: அசை. கால்- அடி; யாத்தல் - கட்டுதல். அசா- துன்பம். உமண்- உப்புவாணிகர். ஒழுகை- வண்டி. தோடு-தொகுதி. முளிசினை- காய்ந்தகிளை. முன்பு - வலிமை. உயவும்- வருந்தும். பாலை நிலத்தில் உள்ள மரக்கிளைக்கு உமணர்களின் வண்டி உவமை. விருந்திட்டு வாழ்த்துவோம் பாட்டு 389 தலைவன் தலைவியை வெளிப்படையாக மணந்து கொள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். மணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். இச் செய்தியைத் தலைவனிடமிருந்து வந்த அவனுடைய பணியாளின் வாயிலாக அறிந்தாள் தோழி. இந்த நல்ல செய்தியைக் கூறிய அப்பணிமகனுக்கு விருந்திட்டு வாழ்த்த விரும்பினாள். அவள் தன் விருப்பத்தைத் தலைமகனிடம் உரைத்தாள். இச் செய்தியை உரைப்பதே இச் செய்யுள். தோழியே! பெரிய மலை நாட்டையுடைய நமது தலை மகளின் பணிமகன் வந்தான். அவனிடம் தலைவன் திருமணத் திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்று கேள்வியுற்றேன் என்று கூறி. m¥gÂkfid neh¡» ‘F‰nwtš òÇ»‹wtnd, jiytDila Ka‰áfŸ bt‰¿íl‹ e‹whf eilbgW »‹wdth? என்று கேட்டேன். அவனும் வரைவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் யாவும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறினான். ஆதலால் இந்த நல்ல செய்தியைக் கூறிய அவன் சிறந்த விருந்தைப் பெறுவானாக; நெய்யிலே நன்றாக ஊறி வெந்த குறும்பூழ் என்னும் பறவையைச் சமைத்த கறியாகக்கொண்ட உண்ணும் உணவைப் பெறுவானாக, இத்தகைய விருந்தை அளித்து அக்குற்றேவல் புரிபவனை வாழ்த்துவோம். பாட்டு நெய் கனி குறும்பூழ் காயம் ஆக, ஆர்பதம் பெறுக: தோழி! அத்தை. பெரும் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் நன்றோ! மகனே, என்றனென்; நன்றே போலும்; என்று உரைத்தோனே. பதவுரை:- தோழி, பெருங்கல் நாடன்- பெரிய மலை நாட்டையுடைய நமது தலைவன். வரைந்தென- நம்மை மணந்து கொள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்று கேள்வியுற்றேன். அவன் எதிர்- இதை அத்தலைவனுடைய பணி மகன் முன். நன்றோ மகனே- மகனே தலைவன் வரைவுக்காகச் செய்யும் முயற்சிகள் நன்றாக நடைபெறுகின்றனவா. என்றனென்- என்று கேட்டேன். நன்றே போலும் -அவனும் நன்றாகவே அம்முயற்சிகள் நடைபெறுகின்றன. என்று உரைத்தோன் ஏ- என்று செய்தியை உரைத்தான் ஆதலால். நெய்கனி- நெய்யிலே நன்றாக ஊறி வெந்த. குறும்பூழ்- குறும்பூழ் என்னும் பறவையை. காயம் ஆக- சமைத்த கறியாகக் கொண்ட. ஆர்பதம் பெறுக- உண்ணுகின்ற உணவை அப்பணிமகன் பெறுவானாக. கருத்து:- தலைவனுடைய முயற்சியைக் கூறிய பணிமகனுக்கு விருந்திட்டு வாழ்த்துவோம். விளக்கம்:- இது, வேட்ட கண்ணன் என்னும் புலவர் இயற்றிய பாட்டு. தலைமகனுடைய திருமண முயற்சியைப் பணி மகனால் அறிந்த தோழி, தலைவியிடம் சொல்லியது. குறிஞ்சித்திணை. தோழி என்னும் சொல்லை முதலில் வைக்கப்பட்டது. நெய் கனி குறும்பூழ் காயமாக ஆர்பதம் பெறுக என்ற அடிகளை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அத்தை, ஏ-அசைகள். குறும்பூழ்- ஒருவகைப் பறவை. கௌதாரிப் பறவை என்றும் உரைப்பர். காயம்- சமைத்தகறி. ஆர்பதம்- உண்ணும் உணவு. நன்றி செய்தோனுக்குத் திருப்பி நன்மை புரிவதே நமது கடமை என்ற நீதியையும் உட்கொண்டது இச்செய்யுள். இரவில் இவ்வழியில் போகாதீர் பாட்டு 390 பாலைநில வழியிலே தலைவனும் தலைவியும் இணைந்து நடந்து சென்றனர். இடை வழியிலே கதிரவன் மறைந்து விட்டான்; மாலை வந்து விட்டது. அப்பொழுது வழியில் நடந்து வந்தோர் அவர்களைக் கண்டனர். இரவிலே அவ்வழியில் நடப்போர் ஆறலை கள்வர்களின் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆதலால் அவர்கள், இந்த இளத்தம்பதி களுக்கு அவ்வழியில் செல்வதால் உண்டாகும் ஆபத்தைக் கூறினர். இனி வழிநடை வேண்டாம். எங்கேயாவது தங்கி விடிந்தபின் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். வழி நடப்பதைத் தடுத்தனர். இச்செய்தியைக் கூறுவதே இப்பாடல். சிறிய பெண்யானையுடன் துணையாகச் செல்லும் ஆண்யானை போன்றவனே! இனிமேல் நீ இந்த வழியிலே நடந்து போக வேண்டாம். இரவில் இங்கேயே தங்கிவிட்டு, விடிந்த பின் போகலாம். ஏனென்றால் சூரியனும் ஒளி மறைந்து போனான். அதோ வரும் ஓசையையும் கேட்பாயாக, போர்க் களத்தே ஏற்றுக் கொள்ளும் பகையைப் போல, வணிகர்கள் கூட்டம் வந்துவிட்டது என்று வேடர்கள் நினைத்தனர். அந்த வணிகர்கள் கூட்டத்தை வளைத்துக் கொள்ளையடிப்பதற்காக வேடர்கள் தங்களுக்குப் பாதுகாவலாகக் காட்டிலே கூடினர். பூண் அணிந்த நீண்ட வேலை ஏந்தினவர்களாய்த் தண்ணுமை என்னும் வாத்தியத்தையும் முழக்கு கின்றனர். அத்தண்ணுமை இந்த ஆபத்து நிறைந்த நெறியிலே நீங்கள் இப்பொழுது செல்லவேண்டாம். பாட்டு எல்லும் எல் இன்று பாடும் கேளாய்! செல்லா தீமோ! சிறுபிடி துணையே! வேற்றுமுனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து, என வளை அணி நெடுவேல் ஏந்தி, மிளை வந்து, பெயரும் தண்ணுமைக் குரலே. பதவுரை:- எல்லும் எல் இன்று- சூரியனும் ஒளி மழுங்கி மறைந்தான். பாடும் கேளாய்- அதோ வருகின்ற ஓசையையும் கேட்பாயாக. சிறுபிடி துணையே - சிறிய பெண் யானைக்குத் துணையாகச் செல்லும் ஆண் யானையே. செல்லாதீமோ- இனிமேல் வழி நடந்து போக வேண்டாம். வேற்றுமுனை வெம்மையின்- போர்க்களத்துப் பகையைப் போல. சாத்து வந்து இறுத்து என - வணிகர் கூட்டம் வந்து தங்கியது என்று கருதிய வேடர்கள். வளை அணி- பூத்தரித்த- நெடுவேல் ஏந்தி- நீண்ட வேலை ஏந்திக் கொண்டு. மிளை வந்து- காவற் காட்டிலே வந்து கூடி. பெயரும்- முழக்குவதனால் வருகின்ற. தண்ணுமைக் குரல் ஏ- தண்ணுமை என்னும் வாத்திய ஓசைதான் இது. கருத்து:- இரவிலே இல்வழியிலே நடந்து சென்றால் ஆபத்து, ஆதலால் போக வேண்டாம். விளக்கம்:- இது உறையூர் முதுகொற்றன் என்னும் புலவர் பாட்டு. பாலைவனத்தின் வழியே, மாலைக் காலத்திலேயே நடந்து சென்ற காதலர்களைக் கண்டோர். இரவில் வழி நடக்க வேண்டாம் என்று சொல்லித் தடுத்தது பாலைத்திணை. எல்- சூரியன்; ஒளி. பாடு- ஓசை, வேற்று முனை- பகைவர் போர்க்களம். வெம்மை- பகைமை. சாத்து - வணிகர் கூட்டம். வளை - பூண். பாலைநில வழியிலே செல்லும் வணிகர்களை எதிர்த்து அந்நில மக்கள் கொள்ளையடிப்பார்கள். வணிகர்களும், ஆயுதங் களுடன் தான் அக்காலத்தில் பிரயாணம் செய்வார்கள். கார் காலந்தான் கவலையளித்தது பாட்டு 391 கணவன் வரவில்லை; கார்காலம் மட்டும் வந்துவிட்து. தோழி தலைவியின் நிலையைக் கண்டு வருந்தினாள். கார் காலத்திலே இவள் எப்படித்தான் தனிமைத் துன்பத்தைத் தாங்கியிருப்பாளோ என்று கவலையுற்றாள். அத்தோழியை நோக்கி மழை பெய்கின்றது; இதைக் கண்டு மயில்கள் மகிழ்ச்சி யடைந்து கூவுகின்றன; இந்நிகழ்ச்சிகள் கார் காலம் வந்து விட்டது என்பதைத் தெரிவிக்கின்றன; கார் காலத்திலே வருவதாகச் சொல்லிய தலைவர் வரவில்லை. ஆதலால் யான் எப்படித் துன்பத்தை ஆற்றியிருப்பேன் என்று தலைவி உரைத்தாள். தோழியே இதற்கு முன் முல்லை நிலத்திலே மழை இல்லை. எருதானது உழாமல் சோம்பிக் கிடந்தது; மான் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வருந்தியிருந்தது. இப்பொழுதோ பாம்புகளின் படம் அழியும்படி அடிக்கடி இடி இடிக்கின்றது. இடியுடன் மழையும் நன்றாகப் பெய்கின்றது. இச்சமயத்திலே, மழையுடன் கூடக் காதலரைப் பிரிந்தோர் செயலற்றுக் கிடக்கும்படி துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் வந்தது. இந்த மாலைக் காலத்திலே, பிளந்தது போன்ற கண்களையுடைய மயில் மரங்களிலே இருந்தன. அவை மழை நீர் பாய்ந்தோடும் அகன்ற இடம். தனித்திருக்கும்படி கூவுகின்றன. அவை அறியாமையை உடையன போலும்; ஆதலால் தான் இப்படிக் கூவுகின்றன. பாட்டு உவரி ஒருத்தல் உழாது மடியப் புகரி புழுங்கிய, புயல் நீங்கு புறவினை கடிது இடி உருமின் பாம்புபை அவிய, இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; வீழ்ந்த மாமழை தழீஇப், பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலைப் பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை, தாம் நீர் நனந்தலை புலம்பக் கூஉம்;தோழியே! பெரும் பேதையவே. பதவுரை:- தோழீ. ஒருத்தல் உவரி- எருது வெறுப்படைந்து, உழாது மடிய- உழமுடியாமல் சோம்பிக்கிடக்கவும். புரிக புழுங்கிய- மான் வெப்பத்தைத் தாங்காமல் வருந்தவும். புயல் நீங்கு- மழை இல்லாமலிருந்த. புறவில்- முல்லை நிலத்திலே. கடிது இடி உருமின்- விரைவாக இடிக்கின்ற இடியோசையினால், பாம்புபை அவிய- பாம்பின் படம் அழியும்படி. இடியொடு மயங்கி- இடியும் கலந்து. இனிது வீழ்ந்தன்று- மழை இனிதாகப் பெய்தது. வீழ்ந்த மாமழை தழீஇ - இவ்வாறு பெய்த மழையைத் தொடர்ந்து. பிரிந்தோர் கையற- காதலரைப் பிரிந்தோர் செயலறும்படி. வந்த பையுள் மாலை- வந்த துன்பத்தைத்தரும் மாலைக் காலத்திலே. பூம்சினை இருந்த- பூத்த கிளையிலே அமர்ந்திருந்த, போழ்கண் மஞ்ஞை- பிளந்த கண்களையுடைய மயில்கள். தாம்நீர்நனந்தலை- பாயும் நீரையுடைய பெரிய இடத்திலே தனித்து வருந்தும்படி. கூவும் -கூவுகின்றன. பெரும் பேதையவே- அவை மிகவும் அறியாமையை உடையவை போலும். கருத்து:- கார் காலம் வந்தது; நான் வருந்தாமல் என்ன தான் செய்வேன்? விளக்கம்:- இது பொன்மணியார் என்னும் புலவர் பாட்டு. கார் காலத்திலே தலைவி துன்புறுவாளே என்று வருந்திய தோழியை நோக்கித் தலைவி கூறியது. முல்லைத்திணை. தழீஇ; உயிர் அளபெடை. ஒருத்தல்- எருது. உவரி- வெறுத்து. புறவு- முல்லை நிலம். புகரி- மான். பையுள்- துன்பம். போழ் கண்- பிறந்த கண்; திறந்த கண்கள். மழையற்ற கடுங் கோடையால் எருதுகள் சோம்பிக் கிடந்தன; மான்கள் வெப்பத்தால் புழுங்கின. அத்தகைய நிலத்திலே இப்பொழுது மழை பெய்தது. அறம் கூற அஞ்ச வேண்டாம் பாட்டு 392 தலைவன் களவு மணத்திலே இன்னும் பலநாட்களைக் கடத்த எண்ணினான். மணம் புரிந்து கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் செய்யாமல் காலங் கடத்தினான். அவனுக்கு அறிவுரை புகல நினைத்தாள் தோழி. ஒரு நாள் அவன் தலைவியைக் காண வந்து, வேலிக்கு வெளியிலேயே மறைந்து நின்றான். அப்பொழுது தோழி ஒரு வண்டைப் பார்த்துப் பேசுவது போல உரைத்தாள். ஏ வண்டே தலைவி இன்னும் வீட்டில்தான் இருக்கின்றாள் என்று அந்த மலைநாட்டுத் தலைவனிடம் சொல்லுக என்று கூறினாள். இந்நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். அழகான சிறகுகளை உடைய வண்டே! ஒன்று சொல்லு கிறேன், கேட்டருள்க. நல்ல சொற்களைச் சொல்லுதற்குச் சிறிதும் அச்சமடைய வேண்டியதில்லை; கெட்டசொல்லைக் கூறுவதற்குத் தான் பயப்பட வேண்டும் ஆதலால் நீ அந்தத் தலைவர் வாழும் நாட்டிற்குப் போய், அவர் உறையும் சிறந்த பெரிய மலையை அடைவாயானால் ஒரு உண்மையைச் சொல். வரிசையாகச் செல்லும் அரசர்களையுடைய கேடகங்களைப் போலத், தேன் அடைகள் வரிசையாகத் தொங்குகின்ற மலையையுடைய தலைவர் பால் சிறிதும் அச்சமில்லாமல் இச்செய்தியைக் கூறுக. மான்கள் நிறைந்திருக்கின்ற தோட்டத்திலே பயிர் செய்யப்பட்ட சிறிய தினைப்பயிருக்குக் களையெடுக்கின்றனர் மகளிர். அவர்கள் களை யெடுப்பதனால் நுண்மையான தூசிகள் பறந்து அவர்கள் மேல் படிகின்றன. இந்த மகளிர் தங்கையான தலைவி தன் சுற்றத்தாரை விட்டு நீங்காமல் வீட்டிலேயே இருக்கின்றாள். இந்தச் செய்தியைத் தான் நீங்கள் தலைவனிடம் அஞ்சாமல் அறிவிக்க வேண்டும். பாட்டு அம்ம! வாழியோ! அணிச்சிறைத் தும்பி! நன் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின், கடமை மிடைந்த துடவை அம்சிறுதினைத் துளர்ஏறி நுண்துகள் களைஞர் தங்கை, தமரின் தீராள்; என்மோ! அரசர் நிரை செலல் நுண் தோல் போலப்; பிரசம் தூங்கும் மலை கிழவோர்க்கே. பதவுரை:- அணிசிறைத்தும்பி- அழகிய சிறகுகளையுடைய வண்டே. வாழியோ- வாழ்க. அம்ம-ஒன்று சொல்லுகின்றேன் கேளுங்கள். நல் மொழிக்கு- நல்ல சொற்களைக் கூறுவதற்கு. அச்சம் இல்லை- எப்பொழுதும் அஞ்ச வேண்டியதில்லை. அவர் நாட்டு- அத்தலைவர் நாட்டில் உள்ள. அண்ணல் நெடுவரை- சிறந்த பெரிய மலையை. சேறி ஆயின்- அடைவாயானால். நிரை செலல்- வரிசையாகச் செல்லுதலையுடைய. நுண் தோல் போல- கேடகங்களைப் போல. பிரசம் தூங்கும்- தேன் அடைகள் தொங்குகின்ற. மலைகிழவோர்க்குஏ- மலையின் தலைவருக்கு. கடமை மிடைந்த- மான்கள் நிறைந்த. துடவை- தோட்டத்திலே பயிர் செய்த- அம் சிறுதினை- அழகிய சிறிய தினைப்பயிருக்கு- துளர் எறி -களைக்கொட்டை வீசி. நுண்துகள்- நுண்ணிய புழுதி எழும்படி. களைஞர்- களை எடுக்கும் மகளிரின். தங்கை- தங்கையான தலைவி. தமரின் தீராள் - தம் உறவினரை விட்டுப் பிரியாமலே இருக்கின்றாள். என்மோ- என்று கூறுங்கள். கருத்து:- வண்டே நீ சென்று தலைவியின் நிலையை அஞ்சாமல் தலைவனிடம் சொல்லுக. விளக்கம்:- இச்செய்யுள் தும்பிசேர்கீரனார் என்னும் புலவர் பாடியது. தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்காக உறுதி கூறியும் காலத்தை நீட்டிக் கொண்டே வந்தான். அதனால் தோழி ஒரு வண்டைப் பார்த்துக் கூறியது போலத் தலைவன் சிறைப்புறத்திலே நிற்கும்போது கூறியது. குறிஞ்சித்திணை. அணிச்சிறைத்தும்பி வாழியோ அம்ம என்று முதல் அடியிர் பதங்கள் மாற்றப்பட்டன. அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின் என்பதன் பின், அரசல் நிரை செலல் நுண்தோல் போலப் பிரசம் - தூங்கு மலை கிழவோர்க்கே என்ற அடிகளை இணைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கடமை - கடமை என்னும் ஒருவகை மான். துடவை - தோட்டம். துளர் - களைகொட்டும் கருவி. பிரசம் - தேன்; இங்கு அடையைக் குறித்தது. நுண் தோல்- கேடகம்; தோலால் செய்யப்பட்டவை. தேன் அடைகளுக்குக் கேடக வரிசை உவமை. தீய சொற்களைக் கூறுவதற்குத்தான் அஞ்ச வேண்டும். நல்ல சொற்களைக் கூறுவதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டிய தில்லை. நல்ல சொற்களை எப்பொழுதும் யாரிடத்திலும் சொல்லலாம், என்ற நீதியையும் இப்பாடலிலே காணலாம் பழிதான் வளர்ந்தது பாட்டு 393 இரவிலே தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும் தலைவன் வழக்கம் போல் குறித்த நேரத்தில் வந்தான்: குறித்த இடத்தில் வேலிக்குப் புறத்தே வந்து நின்றான். தோழி இந்தக் களவு மணத்தைத் தடுத்துக் கற்பு மணம் புரிந்து கொள்ளும் படி தலைவனைத் தூண்ட எண்ணினாள்; தலைவியைத், தலைவன் ஊரார் அறிய மணந்து கொண்டு வாழ்வது தான் நலம் என்பதை வலியுறுத்தவும் நினைத்தாள். ஆதலால் அவள், தலைவியிடம் தலைவன் உன்னுடன் பழகிய காலம் கொஞ்சந்தான். ஆயினும் ஊரார் உன்னைப்பற்றிப் பேசும் பழிச்சொற்கள் மட்டும் மிகுந்து விட்டன என்று கூறினாள். தலைவன் காதிலே விழும்படி இவ்வாறு சொல்லி மணம் புரிந்து கொள்ள வேண்டிய இன்றியமை யாமையைத் தோழி வலியுறுத்தினாள். தோழியே நமது தலைவன், பல மலர்களும் கலந்த உன்னுடைய மாலை கசங்கும்படி தழுவிக் கொண்டான். அப்படி அவன் தழுவி இன்பத்தை அளித்த நாட்கள் மிகச் சில தான். ஆனால் இன்று ஊரிலே எழுந்து பரவி நிற்கும் பழியோ அளவு கடந்து விட்டது. கோட்டான் என்னும் கோழி கூவிக் கொண்டி ருக்கின்ற வாகையென்னும் ஊரிலே யுள்ள போர்க்களத்திலே பாண்டியனுடைய அதிகாரிகளுள் ஒருவனான அதிகன் என்பவனுக்கும் கொங்கர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்போரிலே அதிகன் தன் யானையுடன் கொங்கர்களால் கொல்லப்பட்டான். அவ்வெற்றியால் கொங்கர்கள் பேரார வாரம் புரிந்தனர், கொங்கர்களின் அந்த வெற்றி ஆரவாரத்தைக் காட்டினும் இப்பொழுது இவ்வூரிலே உன்னைப் பற்றிப் பேசப்படும் பழி பெரிதாக இருக்கின்றது! பாட்டு மயங்கு மலர்க் கோதை குழைய, மகிழ்நன் முயங்கிய நாள் தவச் சிலவே: அவரே, கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன், களிறொடு பட்ட ஞான்றை, ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. பதவுரை:- மயங்கும் மலர்க்கோதை- பல மலர்களும் கலந்த பூமாலை. குழைய- கசங்கிப் போகும்படி. மகிழ்நன் -தலைவன். முயங்கிய நாள்- உன்னைத் தழுவிக் கொண்ட நாள். தவச்சிலவே- மிகவும் சில நாட்கள் தான். அலரே- அதனால் இப்பொழுது இவ்வூரில் எழுந்த பழியோ. கூகைக் கோழி- கோட்டானாகிய கோழி கூவிக் கொண்டிருக்கின்ற. வாகைப் பறந்தலை - வாகை என்னும் ஊரிலுள்ள போர்க்களத்திலே. பசும்பூண் பாண்டியன்- பசும்பூண் பாண்டியன் என்பவனுடைய. வினைவல் அதிகன்- அதிகாரிகளுள் சிறந்தவனான அதிகன் என்பவன். களிறொடு- தன் யானையுடன். பட்டஞான்றை- இறந்து மடிந்த போது. ஒளிறுவாள் கொங்கர்- ஒளிவீசுகின்ற வாளாயுதங்களையுடைய - கொங்க வீரர்கள் அவ்வெற்றியால். ஆர்ப்பினும் பெரிதுஏ- ஆராவாரித்ததைக் காட்டினும் பெரிதாகும். கருத்து:- இன்று இவ்வூரிலே உன்னைப்பற்றிப் பழிச்சொல் மிகுந்து விட்டது. விளக்கம்:- இது பரணர் இயற்றிய செய்யுள். தலைவியை மணந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது என்பதைத் தலைவன் அறியும்படி, தோழி தலைவியிடம் கூறியது. மருதத்திணை. ஏ: அசைகள். கோதை- மாலை. தவ மிகவும். கூகை- கோட்டான். வாகை- ஓர் ஊரின் பெயர். பறந்தலை- போர்க்களம் அதிகன் என்பவன் பசும்பூண் பாண்டியனுடைய படைத் தலைவர் களுள் ஒருவன். இவன் பாண்டியனுக்காகப் பரிந்து கொங்கர் களுடன் போர் செய்த போது அவர்களால் கொல்லப்பட்டான். இவ்வரலாற்றை இப்பாடல் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஊரார் பழிச் சொல்லின் மிகுதிக்குக் கொங்கர்களின் போர்க்கள வெற்றி ஆர்ப்பாட்டம் உவமானம். அன்று இன்பம்; இன்று துன்பம் பாட்டு 394 தலைவன், விரைவிலே வந்து, ஊரார் அறிய, மணம் புரிந்து கொள்ளுகின்றேன் என்று சொல்லிவிட்டுப் பொருள் தேடப் போனான். அவன் பிரிந்திருந்த இந்த இடைக்காலத்திலே தலைவி வருந்தியிருந்தாள். பிரிந்து சென்ற தலைவன் என்று வருவானோ என்று ஏங்கியிருந்தாள். அப்பொழுது தோழி தலைவியின் துன்பத்தைக் கண்டு தானும் வருந்தினாள். தலைவன் முன்பு - நம்முடன் கூடியிருந்த காலத்தில் இன்பத்தைத் தருபவனாக இருந்தான். பிரிந்திருக்கும் இப்பொழுது நாம் துன்புறுவதற்குக் காரணமாக ஆகி விட்டான் என்று சொல்லி வருந்தினாள். இவ்வாறு தோழி வருந்தியதை எடுத்துரைப்பதே இச்செய்யுள். தோழியே முன்பு முழந்தாளையுடைய பெரிய பெண் யானையின் கன்று குழந்தைகளுடன் விளையாடிற்று. மெல்லிய தலையை உடைய அந்த யானைக்கன்று அப்பொழுது ஒரு துன்பமும் செய்யவில்லை; கள்ளுணவு நிறைந்த மலைப்பக்கத்து ஊரிலே குறமகள் பெற்றெடுத்த சிறியமுன் கைகளையுடைய பிள்ளைகளுடன் கூடிச் சுற்றிச்சுற்றி ஓடிவிளையாடிற்று. இவ்வாறு நல்லதாக இருந்த அந்த யானைக்கன்று பின்னாளில் தந்த தொந்தரவுக்கு அளவில்லை. அவர்கள் பயிர் செய்த தினைப்பயிரை மேய்ந்து அவர்களுக்கு இழப்பைத் தந்தது. அதைப்போல அவர் முன்பு உன்னுடன் நகைத்து விளையாடிய விளையாட்டு இப்பொழுது பகையாக முடிந்து விட்டது. பாட்டு முழந்தாள் இரும்பிடிக் கயம்தலைக் குழவி, நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறி இறைப் புதல்வரொடு, மறுவந்து ஓடி, முன்னாள் இனியது ஆகிப் பின்னாள், அவர்தினை மேய்தந்த ஆங்குப் பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே. பதவுரை:- முழந்தாள் இரும்பிடி- முழந்தாளையுடைய பெரிய பெண்யானையின். கயம்தலை குழவி- மெல்லிய தலையை யுடைய கன்று. நறவுமலி- கள்ளுணவு மிகுந்த. பாக்கத்து- மலைப் பக்கத்து ஊரிலே. குறமகள் ஈன்ற - குறமகள் பெற்றெடுத்த. குறிஇறைப் புதல்வரொடு - குறுகிய முன் கைகளையுடைய பிள்ளைகளுடன் கூடி. மறுவந்து ஓடி - சுற்றி ஓடி வந்து விளையாடியதனால். முன்னாள்- அக்காலத்தில். இனியது ஆகி- நன்மை உடையதாக இருந்து. பின்னாள்- அக்கன்று பெரிய யானையாக வளர்ந்த பிற்காலத்தில். அவர்தினை- அப் புதல்வர்கள் பயிரிட்ட தினையை. மேய்தந்த ஆங்கு- மேய்ந்து இழப்பைத் தந்தது போல. அவர் நகை விளையாட்டு ஏ- முன்னாளில் அவர் நம்முடன் சிரித்து விளையாடிய விளையாட்டானது. பகையா கின்று- இந்நாளில் நமக்குப் பெரும் பகையான துன்பமாக முடிந்தது. கருத்து:- அன்று அவர் தந்த இன்பம், இன்று பிரிந்திருப் பதனால் துன்பமாக முடிந்தது. விளக்கம்:- இது குறியிறையார் என்னும் புலவர் பாட்டு. குறியிறை என்னும் தொடர் இச்செய்யுளில் அமைந்திருப்பதனால் இப்புலவர் இப்பெயர் பெற்றார் போலும். தலைவன் பிரிந்த காலத்து வருந்தியிருந்த தலைவியைப் பார்த்துத் தோழி சொல்லியது. குறிஞ்சித்திணை. அவர் நகை விளையாட்டே பகை ஆகின்று என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. ஏ.அசை. கயம்- மெல்லிய தன்மை. நறவு-கள். பாக்கம்- குறிஞ்சி நிலத்து ஊர். இறை- முன்கை. மறுவந்து- சுற்றிவந்து. தலைவன் தந்த இன்பத்துக்கும் துன்பத்துக்கும் யானைக்கன்று உவமை. தலைவனும் யானை போன்றவன். நாணம் அழிந்தால் அழியட்டும் பாட்டு 395 தலைவன் பிரிவைத் தலைவியால் தாங்க முடியவில்லை; அப் பிரிவுத் துன்பம் நீங்குவதற்கு வழி என்னவென்று எண்ணி எண்ணிப் பார்த்தாள். ஒரு வழியும் பிடிபடவில்லை. தலைவனுடன் சேர்ந்திருந்தால் தான்- தலைவனைக் கண்டால் தான்- தன்னைப் பிடித்து உலுக்கும் துன்பத்தை ஓட்டமுடியும் என்று உறுதி கொண்டாள். ஆகையால் அவள் தோழியை நோக்கி நம் நாணம் அழிந்தாலும் அழியட்டும்; தலைவன் இருக்கும் இடத்தை அடைவோம் என்றுரைத்தாள். இச்செய்தியைச் சொல்லுவதே இப்பாடல். எனது நெஞ்சத்தை ஒரு நிலையிலே நிறுத்த முடியவில்லை. பல திசைகளிலும் ஓடிச் சுழன்று கலக்கமடைகின்றது. அவரோ நம்மிடம் அன்பற்றவரானார். ஆதலால் மெலிந்தோர்க்கு இரங்கும் அருள்தான் சிறந்த பொருள் என்று எண்ணாமல் போனார். இரக்கமற்ற தன்மையுள்ளவரானார்; என்னைத் துன்புறுத்தி வல்லமையைப் பெற்றார். பாம்பால் விழுங்கப்படும் சந்திரனைக் கண்டு இங்கு உள்ளவர்கள் பரிதாபங் காட்டுகின்றனர். அச்சந்திரன் தப்பிப் பிழைக்க வேண்டுமென்பதற்காகப் பிரார்த்தனைகள் செய்கின்றனர். அதைப் போல நான் படும் துன்பத்தைக் களைவதற்கு வழிதேடார்களாயினும் என்பால் சிறிதும் இரக்கத்தைக் கூடக் காட்டவில்லை நன்றாகக் கவலையற்று உறங்குகின்றனர். என்னைப் பார்த்து அஞ்ச வேண்டாம் என்று ஆறுதல் மொழி கூறுகின்ற வர்கள் கூட யாரும் இல்லை. ஆதலால் அத்தலைவர் இருக்கும் இடத்திற்கு நாமே வலிந்து போவோமாயின், நமது நாணந்தான் இரக்கத்திற்கு உரியதாக முடியும்; நாணம் போய்விடும். போனாலும் குற்றமில்லை. ekJ J‹g« xÊíkšyth? பாட்டு நெஞ்சே, நிறை ஒல்லாதே; அவரே அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்; வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக், களையார் ஆயினும், கண் இனிது படீ இயர்; அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்; அளிதோதானே நாணே; ஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே. பதவுரை:- நெஞ்சு ஏ நிறை ஒல்லாது ஏ- நெஞ்சு ஒரு நிலையிலே நிறுத்த முடியாத நிலையை அடைந்து விட்டது. அவரே - அவரோ. அன்பு இன்மையின் காரணமாக. அருள் பொருள் என்னார்- அருளே சிறந்த பொருள் என்று கருதமாட்டார். வன்கண் கொண்டு - இரக்கம் இல்லாமையை மேற்கொண்டு. வலித்து- என்னைத் துன்புறுத்தி. வல்லுநர் ஏ- வல்லுநராகி விட்டார். அரவுநுங்கு மதியினுக்கு - பாம்பால் விழுங்கப்படும் சந்திரனுக்காக. இலணோர் போல- இங்குள்ளவர்கள் பரிதாபம் காட்டிப் பாம்பிடமிருந்து மீட்க முயல்வது போல. களையார் ஆயினும்- என் துன்பத்தைப் போக்க முயலார்கள். ஆனாலும் கண் இனிதுபடீஇயர்- கவலையில்லாமல் நன்றாக உறங்குகின்றனர். அஞ்சல் என்மரும் இல்லை- என்னைப் பார்த்து அஞ்ச வேண்டாம் என்று சொல்வோர் யாரும் இல்லை. ஆங்கவர் வதிவயின்- ஆதலால் அவர் இருக்கின்ற இடத்திற்கு. நீங்கப் படின் ஏ- நாம் நீங்கிப் போனால். நாண் அளிது- அதனால் நமது நாணம் பரிதாபத்திற் குரியதாகும். கருத்து:- நாம் தலைவர் உள்ள இடத்திற்குப் போனால்தான் நமது துயர் ஒழியும். விளக்கம்:- இச் செய்யுளின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தலைவன் பிரிவைத் தாங்க மாட்டாத தலைவி, தோழியைப் பார்த்துச் சொல்லியது. பாலைத்திணை. ‘M§ft® tâtÆ‹ Ú§f¥gond eh© mËnjhjhnd! என்று இறுதி அடிகளில் மட்டும் மாற்றம் ஏ. ஓ. தான், அந்தில், முதலியவை அசைகள். படீஇயர்; உயிர் அளபெடை. நிறை- ஒரு நிலையில் நிற்றல். வன்கண்- இரக்கமற்ற தன்மை, வலித்து- துன்புறுத்தி. நுங்குதல்- விழுங்குதல். அன்புதான் இரக்கத்திற்கும்; அருளுக்கும் அடிப்படை என்பதை அன்பின்மையின் அருள் பொருள் என்னார் என்ற அடியால் அறியலாம். சந்திரகிரணம் என்பது, சந்திரனை இராகு என்னும் பாம்பு விழுங்குவது என்ற நம்பிக்கையும், அதற்காகச் செபதபங்கள் செய்யும் வழக்கமும் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. பிறர் துயர்களைய முயல்வோர்க்குச் சந்திரனுடைய மீட்சிக்காகச் செபதபம் செய்வோர் உவமானம். காளையுடன் கடுநெறி சென்றாள் பாட்டு 396 தலைவனுடன் சேர்ந்து தலைவி அவள் ஊருக்குப் போய் விட்டாள். இதை அறிந்த செவிலித்தாய் தலைவியின் சிறு பிள்ளைத் தன்மையையும், அவள் சென்ற பாலை நிலவழியையும் நினைத்து வருந்தினாள். ‘ghY« c©z kh£lhŸ, jd¡F ÉU¥gkhd gªijí« bjhlkh£lhŸ; Éisah£L¥ bg©fSl‹ To v¥bghGJ« ÉisahL« j‹ik íiltŸ mtŸ; mtŸ v¥go¤jh‹ j‹ njhÊkh®fis É£L¥ ãÇa¤ Jªjhnsh? என்று சொல்லி வருந்தினாள் செவிலித்தாய். தலைவி விளையாட்டிலே உள்ள ஆவல் காரணமாகப் பாலையும் அருந்த மாட்டாள்; பந்தையும் விரும்ப மாட்டாள்; எப்பொழுதும் விளையாட்டுப் பெண்களுடனேயே கூடி விளையாடிக் கொண்டிருப்பாள். அவள் இப்பொழுது அவ் விளையாட்டை மறந்தாள். காய்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தின் பட்டைகளைப் பெயர்ப்பதற்காக ஆண்யானை தன் தந்தத்தால் குத்தும். கோடை காலத்திலே வெம்மை நிறைந்த மலையின் அடிவாரத்திலே தண்ணீர் வேண்டி இவ்வாறு செய்யும் யானை, மேகம் முழங்குகின்ற கடுமையான ஓசையை உற்றுக் கேட்டுக் கொண்டும் நிற்கும். அந்த மலைப் பாதையிலே மூங்கில்கள் கரிந்து நிற்கும். நடத்தற்கு முடியாத வழியாகவும் இருக்கும். இத்தகைய வழியிலே அக்காதலனுடன் சேர்ந்து செல்வது எளிது என்று நினைத்துச் சென்றாள். இது என்ன? வியப்புக்குரியது அன்றோ! பாட்டு பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்; விளையாடு ஆயமொடு அயர்வோள்; இனியே, எளிது என உணர்ந்தனள் கொல்ஓ; முளிசினை ஓமை குத்திய உயர்கோட்டு ஒருத்தல்; வேனில் குன்றத்து வெவ்வரைக் கவா அன், மழை முழங்குகடும் குரல் ஓர்க்கும்; கழை திரங்கு ஆர் இடை அவனொடு செலவே. பதவுரை:- பாலும் உண்ணாள்- பாலையும் அருந்த மாட்டாள். பந்துடன் மேவாள்- பந்துடன் பொருந்தி விளையாடவும் மாட்டாள். விளையாடு ஆயமொடு - விளையாடும் மகளிர் கூட்டத்தோடு, அயர்வோள்- எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பாள். இனியே- அவள் இப்பொழுது. முளிசினை- காய்ந்த கிளைகளையுடைய. ஓமைகுத்திய - நீர் வேண்டி அந்த ஓமை மரத்தின் பட்டைகளைக் குத்திய. உயர் கோட்டு ஒருத்தல்- மேல் நோக்கி வளர்ந்த கொம்புகளையுடைய ஆண் யானை. வேனில் குன்றத்து- கோடை மிகுந்த மலையின். வெவ் அரை கவாஅன்- வெப்பம் மிகுந்த அடிவாரத்திலே நின்றுகொண்டு. மழை முழங்கு - மேகம் முழங்குகின்ற. கடும் குரல் ஓர்க்கும்- கடுமையான ஓசையை உற்றுக் கேட்கின்ற. கழைதிரங்கு ஆர் இடை- மூங்கில்கள் காய்ந்து நிற்கின்ற அரிய பாலை நில வழியிலே, அவனோடு செலவு ஏர- அக்காதலனுடன் சேர்ந்து நடந்து போவதை. எளிது என - எளிதானது என்று உணர்ந்தனள் கொல்ஓ- நினைத்தாளோ. கருத்து:- தலைவி, அரிய வழியிலே தலைவனுடன் போவது எளிதானது என்று நினைத்தாள் போலும். விளக்கம்:- இச்செய்யுள் கயமன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. தலைவனுடன் சேர்ந்து போய்விட்ட தலைவியைக் குறித்துச் செவிலித்தாய் வருந்தியது. பாலைத்திணை. எளிது என உணர்ந்தனள் கொல்லோ என்ற அடியை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கவாஅன்; உயிர் அளபெடை. ஏ,ஓ, அசைகள். அயர்வு- விளையாட்டு. முளிசினை- காய்ந்தகிளை. ஓமை- ஒருவகை மரம். கோடு - தந்தம். ஒருத்தல்- ஆண்யானை. வெவ்வரை - வெப்பம் நிறைந்த மலை. கவான் - அடிவாரம். ஓர்க்கும்- கேட்கும். கழை- மூங்கில். திரங்கு- காய்ந்திருக்கின்ற. யானையின் செய்கை; ஓமை மரத்தின் நிலை; மூங்கிலின் தன்மை; இவை கோடையின் கொடுமையைக் காட்டின. உன் அன்பால் தான் உயிர் வாழ்கின்றாள் பாட்டு 397 தலைவன், தலைவியை மணம் புரிந்து கொள்ள முடிவு செய்தான். மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்துவதற்குப் பொருள் வேண்டும். செல்வம் இன்றேல் இல்லறத்தை இனிது நடத்த இயலாது. ஆதலால் திருமணம் புரிந்து கொள்ளுவதற்கே பொருள் தேடப் புறப்பட்டான். அப்பொழுது தோழி அவனைப் பார்த்து உனது அன்பால் தலைவி உயிர் வாழ்கின்றாள்; அதைத்தவிர அவளுக்கு வேறு ஆதரவில்லை. ஆதலால் விரைவில் பொருளீட்டித் திரும்பி வருக என்று கூறினாள். இச்செய்தியைக் கூறுவதே இப்பாடல். ஞாழல் மரத்திலே அரும்புகள் நிறைந்திருக்கின்றன. அவை மீன் முட்டைகளைப் போல உருண்டையாக மலர்ந்திருக்கின்றன. அந்த மலர்கள் நெய்தல் மலர்களிலே உதிர்கின்றன. அதைப் போல ஊதைக் காற்றால் நீர்த்துளிகள் சிதறுகின்றன. இத்தகைய கடற் கரையை உடைய தலைவனே. நான் ஓர் உண்மையை உரைக்கின்றேன். அதை மறந்து விடாதே. என் தோழியாகிய உன் காதலிக்கு வேறு புகலிடம் இல்லை. எப்பொழுதும் உன்னுடைய பாதுகாப்பின் எல்லைக்குள் அடங்கியவள். தாய் சினந்து அடித்தாலும் குழந்தை அன்னையே என்றுதான் வாய்விட்டு அலறும். அக்குழந்தையைத் தாய்தான் காப்பாற்றக் கடமைப் பட்டவள். அதைப்போல, நீ துன்பம் செய்தாலும் சரி, இன்பம் செய்தாலும் சரி. நீதான் அவளுக்குப் பாதுகாப்பு. அவளுடைய துன்பத்தை நீக்குவோர் உன்னைத்தவிர வேறு எவருமில்லை. ஆதலால் பொருள் தேடச் செல்லும் நீ இதை மறவாமல் விரைவிலே திரும்பி வந்து மணந்து கொள்ள வேண்டுகின்றேன். பாட்டு நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல, ஊதை தூற்றும்; உரவுநீர்ச் சேர்ப்ப தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு அன்னாய்! என்னும் குழவி போல, இன்னா செயினும், இனிது தலை அளிப்பினும், நின்வரைப்பினள் என்தோழி; துன் உறு விழுமம் களைஞரோ இலளே. பதவுரை:- நனைமுதிர் ஞாழல்- அரும்புகள் நிறைந்த ஞாழல் மரத்தில். சினை மருள் திரள்வீ- மீன் முட்டைகளைப் போன்ற உருண்டையான மலர்கள். நெய்தல் மாமலர்- நெய்தலின் கரிய மலர்களிலே. பெய்தல் போல- வீழ்வது போல. ஊதை தூற்றும்- ஊதைக் காற்று நீர்த்துளிகளைச் சிந்தும். உரவுநீர்ச் சேர்ப்ப- வலிமை பொருந்திய கடற்றலைவனே. தாய் உடன்று அலைக்கும் காலையும் - தாயானவள் கோபித்து அடிக்கும் போதும். வாய்விட்டு- வாய்விட்டு அழுது. அன்னாய் என்னும் குழவிபோல - அன்னையே என்று அலறும் குழந்தையைப் போல. இன்னா செயினும்- துன்பத்தைச் செய்தாலும். இனிது தலை அளிப்பினும் - இனிய சிறந்த அன்பைக்காட்டினாலும், என் தோழி- என் தோழியாகிய உனது காதலி. நின் வரைப்பினள்- உன் பாதுகாவலாகிய எல்லைக்குள் அடங்கியவள். தன் உறு விழுமம்- அவள் அடையும் துன்பத்தை. களைஞர் ஓ- நீக்கக் கூடியவர்கள். இலள்ஏ- உன்னைத்தவிர வேறு யாரையும் பெற்றவள் அல்லள். கருத்து:- தலைவியின் துன்பத்தை நீக்குவோர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆதலால் விரைவில் மீண்டும் வருக. விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. திருமணத்தின் பொருட்டுப் பொருள் தேடச்செல்லும் தலைவனை நோக்கித் தோழி கூறியது. நெய்தல்திணை. ஓ; ஏ, அசைகள் ஞாழல் பூ, மீன் முட்டை போன்றது; மீன் முட்டை உவமானம். ஊதைக் காற்றால் தூற்றப்படும் நீர்த்துளிக்கு ஞாழற்பூ உவமானம். சினை- முட்டை. மருள்- போன்ற. ஊதை- குளிர்க்காற்று. உடன்று- கோபித்து. அலைத்தல்- அடித்தல். தலை அளி- சிறந்த அன்பு. வரைப்பு- எல்லை. விழுமம்- துன்பம். தலைவிக்குக் குழந்தையும், தலைவனுக்குத் தாயும் உவமைகள். இதனால் தலைவியின் கற்பின் சிறப்பும் கூறப்பட்டது. கண் துடைப்போரைக் காணேன் பாட்டு 398 தலைவன் பொருள் தேடப் போகிறான் என்பதைத் தோழி தலைவிக்குக் கூறினாள். உலகில் உள்ள பெண்கள், தம் காதலர் கருதிச் சென்ற காரியத்தை முடித்துக்கொண்டு வரும் வரையிலும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள். இதுவே அவர்களின் இயல்பு ஆதலால் நீயும் அவர் வரும் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும் என்றாள். தோழியின் இவ்வுரையைக் கேட்ட தலைவி துன்பத்தைத் தாங்கியிருக்கும் படி நமக்குப் புத்தி கூறுகின்ற வரைத்தான் காணுகின்றேன். தலைவர் வந்தார் என்று சொல்லி, அழுத எனது கண்களைத் துடைப்பவர்களைக் காணப்பெற்றிலேன் என்று சொல்லி வருந்தினாள். இச் செய்தியை உரைப்பதே இப்பாடல். தோழியே குளிர்ந்த மழைத்துளிகளைச் சிந்தித் துயரத்தைத் தரும் மழைக்காலம் இந்த மழைபொழியும் மாலைக் காலத்திலே கயல்மீன் போன்ற அழகிய கண்களையுடைய பெண்கள்- கனமான காதணிகளையுடைய பெண்கள்- தங்கள் கையையே தெப்பமாகக் கொண்டு எண்ணெயை ஊற்றி விளக்கைக் கொளுத்தி மாட்டியிருக்கின்றனர். அவ்விளக்கொளி தனிமைத் துன்பத்தைக் கிளப்புகின்றது. இந்தத் துயரம் மிகுந்த மாலைக்காலத்திலே என் துக்கத்தை ஓட்டுவோரைக் காணேன். அரிய காதலர் வந்து விட்டார் என்று கூறி, விருந்திட்டு உடம்பு பூரிக்கின்ற மகிழ்ச்சி யினால் உண்டாகின்ற கண்ணீரைத் துடைத்து, மகிழ்ச்சி தருவோர் யாரையும் அறியோம். பாட்டு தேற்றாம் அன்றே! தோழி! தண் எனத் தூற்றும் துவலைத் துயர்கூர் காலைக், கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர், கை புணையாக நெய் பெய்து மாட்டிய சுடர் துயர் எடுப்பும். புண் கண் மாலை, அரும்பெறல் காதலர் வந்து என, விருந்து அயர்பு, மெய்ம்மலி உவகையின் எழுதரு கண்கவிழ் உகுபனி அரக்குவோரே. பதவுரை:- தோழியே. தண்எனத் தூற்றும்- குளிர்ச்சி யுண்டாகும்படி தூற்றுகின்ற. துவலைத் துயர் கூர் காலை- மழைத் துளியால் துன்பம் அடையும் கார் காலத்திலே. கயல் ஏர் உண்கண்- சேல்மீன் போன்ற அழகிய கண்களையும். கனம் குழை- கனமான காதணிகளையும் உடைய. மகளிர்- பெண்கள். கை புணையாக- கைகளையே தெப்பமாகக் கொண்டு; நெய் பெய்து மாட்டிய- எண்ணெய் ஊற்றிக் கொளுத்தி மாட்டியிருக்கின்ற. சுடர்- விளக்குகள். துயர் எடுப்பும் - துன்பத்தை மிகுவிக்கின்ற. புன்கண் மாலை- துயர் மிகுந்த மாலைக்காலத்திலே. அரும் பெறல் காதலர்- பெறுதற்கரிய தலைவர். வந்து என -வந்தார் என்று சொல்லி. விருந்து அயர்பு- விருந்து பெய்து. மெய்ம்மலி உவகையின்- அதனால் உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியுடன். எழுதரு- உண்டாகின்ற, கண்கவிழ்- கண்கள் கலங்கி. உகுபனி- சிந்துகின்ற குளிர்ந்த நீரை. அரக்குவோர் ஏ- துடைப்பவரை. தேற்றாம்- காணேம். கருத்து:- என் துன்பத்தை அறிந்து அதை நீக்குவோர் யாரையும் காணேன். விளக்கம்:- இது, பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர்பாட்டு. தலைவன் பொருளீட்டிக் கொண்டுவரும் வரையிலும், மற்ற பெண்களைப்போல் நீயும் துன்பத்தைத் தாங்கியிருக்க வேண்டும் என்று கூறிய தோழிக்குத் தலைவி உரைத்தது. பாலைத்திணை. தேற்றாம் அன்றே என்ற முதல் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அன்று; ஏ; அசைகள். துவலை- மழைத்துளி. குழை- காதணி. சுடர்- விளக்கு. அரக்குதல்- துடைத்தல். கார் கால இயல்பு. மாலைக்கால இயல்பு இரண்டும் இச் செய்யுளில் கூறப்பட்டன. பசலையின் பாங்கைப் பார் பாட்டு 399 மணந்து கொள்ளுகின்றேன் என்ற தலைவன் காலங் கடத்திக் கொண்டே போனான். அதனால் தலைவியின் உள்ளத்திலே துக்கம் மிகுந்தது. அவள் தன் தோழியிடம், தன் துக்கத்தை நேரடியாகச் சொல்லாமல், வேறுவிதமாகக் கூறினாள். தோழியே இந்தப் பசலை நிறம் தலைவன் என்னுடன் இருந்தால் விலகி நிற்கின்றது. அவன் பிரிந்து போனால் மீண்டும் வந்து விடுகின்றது என்று கூறித் தன் துயரை வெளியிட்டாள். தோழியே ஊராரால் தண்ணீர் எடுத்து உண்ணப்படும் கேணியிலே மக்கள் இறங்கித் தண்ணீர்முகந்து உண்ணும் துறையிலே சூழ்ந்திருக்கும் பாசியைப் போன்றது இந்தப் பசலை நிறம். தண்ணீர் முகக்கும் போது அந்தப் பாசி விலகிச் செல்லும். முகப்போர் கரையேறிய பின் அந்தப் பாசி மீண்டும் பரவிவிடும் அது போல என் காதலர் என்னைத் தழுவும் போதெல்லாம் இப்பசலை நிறம் ஒதுங்கி விடுகின்றது. அவன் என்னைப் பிரிந்த போது இந்தப் பசலை என் உடம்பிலே பரவிவிடுகின்றது. ஆதலால் பாசியும் பசலையும் ஒரு தன்மையன. பாட்டு ஊர் உண்கேணி உண்துறைத் தொக்க பாசி அற்றே பசலை; காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. பதவுரை:- பசலை- தோழியே இந்தப் பசலை நிறமானது. காதலர் தொடுஉழி தொடுஉழி- தலைவர் நம்மைத் தொடும் போதெல்லாம். நீங்கி- நம்மை விட்டுநீங்கி. விடுஉழி விடுஉழி- பிரியும் போதெல்லாம். பரத்தலான்ஏ- நம். உடம்பிலே பரவுதலால். ஊர் உண் கேணி- ஊராரால் உண்ணப்படும் கேணியிலே. உண்துறை- உண்ணுநீர் எடுக்கின்ற துறையிலே. தொக்க- திரண்டிருக்கின்ற. பாசி அற்றே- பாசியைப் போன்றதாகும். கருத்து:- பசலை நோய் மிகுந்ததனால் நான் வருந்துகின்றேன். விளக்கம்:- இது பரணர் என்னும் புலவர் பாட்டு. காதலன் வரையாமல் காலம் கடத்தியபோது, தலைவி, தோழியிடம் கூறியது. மருதத்திணை. ஊர் உண்கேணி உண்துறை தொக்க பாசி அற்றே என்ற தொடரை இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. தொக்க- கூடிய. தொடுஉழி தொடுஉழி- தழுவுந்தோறும். ஏ; அசைகள். பசலைக்குப் பாசி உவமை. பசலை நோய்க்குப் பாசியை உவமித்திருப்பது மிகவும் இயற்கையாகும். மக்கள் நீர் கொள்ளும் போது பாசியை விலக்கி நீர் கொள்ளுவார்கள். பாசியும் அவர்கள் நீர்முகக்கும் இடத்தை விட்டு ஒதுங்கி நிற்கும். அவர்கள் நீர்முகந்துகொண்டு கரையேறு வதற்குள் விலகிய பாசி, மீண்டும் நீரிலே பரந்துவிடும் அதுபோல் தலைவன் என்னைத் தழுவிக் கொண்டிருப்பானாயின் பசலை நிறம் என்மேல் படராது; விலகிப் போவானாயின் ஒதுங்கிய பசலை நிறம் மீண்டும் என் உடலிலே படர்ந்து விடும். ஆதலால் தலைவன் என்னைத் தழுவிக் கொண்டே இருந்தால் பசலை நிறமும் என்னிடம் நெருங்காது; இவ்வாறு தலைவி, பசலைக்குப் பாசியை உவமித்தாள். தலைவியின் உயிரையே தந்தாய் பாட்டு 400 பிரிந்து சென்ற தலைவன் திரும்பினான். சென்ற காரியத்திலே வெற்றி பெற்று மீண்டான். அவனுக்குத் தேரோட்டி வந்த பாகன், தலைவன் இல்லாமல் தலைவி வருந்தியிருப்பாள் என்பதை அறிந்தவன், நீண்ட வழியைக் கடந்து செல்வதால், தலைவியை அடையக் காலந் தாழ்க்கும், ஆதலால் குறுக்கு வழியிலே சென்றால் விரைவில் இல்லத்திலே தலைவனைக் கொண்டு போய்ச் சேர்க்கலாம். அப்பொழுதுதான் தலைவிக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்ற முடியும் என்று கருதினான் தேர்ப்பாகன். அவ்வாறே அவன் குறுக்கு வழியிலே தேரை ஓட்டி விரைவிலே தலைவனைத் தலைவியிருக்கும் இடத்திற்குக் கொண்டுவந்து விட்டான். அப் பொழுது தலைவன், பாகனைப் பாராட்டி மகிழ்ந்தான். இச் செய்தியைக் கூறுவதே இப்பாடல். தலைவியிருக்கும் இடம் தொலை தூரம். நெடுத்தூரமான வழியைக் கடந்தால்தான் அவளை அடைய முடியும். இந்த நீண்ட வழியை விரைவிலே கடந்து செல்லாவிட்டால் தலைவியின் காம நோய்களை நீக்க முடியாதென்று நினைத்தாய். இவ்வாறு நன்மையை விரும்பிய மனமுள்ளவனாய்ப் பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டு நிலத்திலே அந்நிலம் பிளக்கும்படி தேரை ஓட்டினை. வழியில்லாத கரம்புநிலத்திலே தேரைச் செலுத்திப் புது வழியை உண்டாக்கினை. இவ்வாறு நீண்டநெறியை விரைவிலே கடந்து வந்த சிறந்த அறிவுள்ள தேர்ப்பாகனே! உன் செய்கையால் காம நோயால் வருந்திக்கிடந்த என் தலைவியை எனக்கு உயிருடன் தந்தனை. ஆதலால் இன்று தேரை மட்டுமா நான் குறித்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தாய்; என் தலைவியின் உயிரையும் எனக்குத் தந்தாய். பாட்டு சேய் ஆறு செல்வாம் ஆயின், இடர் இன்று, களைகலம் காமம் பெருந்தோட்கு; என்று, நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, முரம்புகண் உடைய ஏகிக், கரம்பைப், புதுவழிப் படுத்த மதியுடை வலவோய், இன்று தந்தனை தேரோ? நோய் உழந்து உறைவியை நல்கலானே. பதவுரை:- சேய் ஆறு செல்வாம் ஆயின்- நீண்ட வழியை விரைவிலே கடந்து செல்வோம் ஆயின். இடர் அன்று- துன்பம் இல்லாமல். பெருந்தோட்குக் காமம் களைகலம்- பெரிய தோளையுடைய தலைவியின் காமத் துன்பத்தைக் களைந்தவராக மாட்டோம். என்று நன்று புரிந்து - என்று நன்மையை விரும்பி. எண்ணிய மனத்தை ஆகி- நினைத்த மனமுடையவனாகி. முரம்பு கண் உடைய ஏகி- பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலம் பிளக்கும் படி சென்று. கரம்பை- கரம்பை நிலத்திலே. புது வழிப்படுத்த- புதிய வழியை உண்டாக்கிய. மதி உடை வலவோய்- கூர்மையான அறிவுள்ள தேர்ப்பாகனே. நோய் உழந்து - காம நோயால் வருந்தி. உறவியை நல்கலான்- உறைகின்ற தலைவியை உயிருடன் தந்ததனால். இன்று தேரோ தந்தனை- இன்று தேரை மட்டுமா தந்தாய்? என் தலைவியையும் எனக்களித்தாய். கருத்து:- விரைவில் தேரைச் செலுத்தி நீண்ட வழியைக் கடந்த உனது அறிவு பாராட்டக்கூடியது. விளக்கம்:- இது பேயனார் என்னும் புலவர் பாட்டு. வினை முடித்துத் தலைவியிடம் திரும்பி வந்த தலைவன் தன்னை விரைவிலே தலைவியைக் காணும்படி தேரோட்டி வந்த பாகனைப் பாராட்டியது. தலைவன் கூற்று. முல்லைத்திணை. பெருந்தோட்குக் காமம் களைகலம் என்ற இரண்டாவது அடியில் பதமாற்றம். ஆறாவது அடி இன்று தேரோ தந்தனை என்று மாற்றப்பட்டு இறுதியிலே வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. சேய் ஆறு- நீண்ட வழி. பெருந்தோள்- பெரிய தோளை யுடைய தலைவி. புரிந்து- விரும்பிய. முரம்பு- பரல் கற்கள்; கூழாங்கற்கள். கண்- இடம்; மேட்டைக் குறித்தது. உடைய- பிளக்கும்படி. வலவன்- தேர்ப்பாகன். ஏ- அசை. கரம்பைப் புது வழிப்படுத்த என்னும் தொடர் இதற்குமுன் தேர் செல்லாத நிலத்திலே தேரை ஓட்டினான்; அதனால் புது வழி உண்டாயிற்று என்ற பொருளைக் காட்டிற்று. நாம் செய்த தவறுதான் காரணம் பாட்டு 401 தலைவி தான் விரும்பிய காதலனுடன் கலந்து மகிழ்ந்திருந்தாள். இது களவு மணம். இவ்வாறு தலைவி ஒரு காதலனுடன் பகல் நேரத்திலே கலந்து களித்ததனால் அவள் உடம்பிலே மாறுதல் காணப்பட்டது. இந்த மாறுதலைக் கண்டு ஐயுற்ற பெற்றோர் அவளை வெளியில் செல்லாமல் வீட்டிலே அடைத்து வைத்து விட்டனர். அப்பொழுது அத்தலைவி தானாகவே நாம் பகற்பொழுதில் தலைவனுடன் கூடி விளையாடியது தான், இவ்வாறு வீட்டிலேயே அடைபட்டதற்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டாள். விளையாட்டுப் பெண்கள் அடும்பின் அழகிய மலரைக் கொள்வார்கள். அவற்றை நெய்தல் மலர்களுடன் கலந்து தொடுப்பார்கள். அந்த நீண்ட நெய்தல் மாலையை அணிந் திருப்பார்கள். அவர்கள் கூந்தலிலே நீர் ஒழுகிக்கொண்டிருக்கும். இந்த விளையாட்டுப் பெண்களைக் கண்டு பயந்து ஈரமுள்ள நண்டுகள் கடலுக்குள்ளே விரைந்து ஓடிவிடும். இத்தகைய காட்சியமைந்த கடற்கரைத் தலைவனுடன் ஒருநாள் அவன் உடம்பைத்தழுவிக் கொண்டு விளையாடினோம். அவ் விளையாட்டு இப்பொழுது அவனுடன் சிரித்து விளையாடும் செயலும் நிகழாமல் நீக்கி விட்டது. இது மிகவும் வியப்புக்குரிய செய்திதான். பாட்டு அடும்பின் ஆய்மலர் விரைஇ, நெய்தல் நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள் நக்கு விளையாடலும் கடிந்தன்று; ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே. பதவுரை:- அடும்பின் ஆய்மலர் விரைஇ- அடும்பின் அழகிய மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட. நெய்தல் நெடும் தொடை- நெய்தற் பூவாலாகிய நீண்ட மாலையை. வேய்ந்த- தரித்த. நீர் வார் கூந்தல் - நீர் ஒழுகுகின்ற கூந்தலையுடைய. ஓரை மகளிர் அஞ்சி - விளையாட்டுப் பெண்களைக் கண்டு பயந்து. ஈர் ஞெண்டு- ஈரமான நண்டுகள். கடலில் பரிக்கும்- கடலில் விரைந்து ஓடி ஒளிக்கின்ற. துறைவனொடு- கடற்கரையையுடைய தலைவனோடு. ஒருநாள்- அன்று ஒருநாள். மெய்தோய் நட்பு - உடம்பைத் தழுவிக் கொண்ட நட்பானது. நக்கு விளையாடலும்- அவனுடன் சும்மா சிரித்து விளையாடுவதையும். கடிந்தன்று- நீக்கிவிட்டது. ஐது (ஏகு அம்ம) - இது வியப்புக்குரியது. கருத்து:- தலைவனோடு அன்று அளவளாவியதன் பயன் இன்று அவனைக் காண முடியாமலே செய்துவிட்டது. விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் உடல்வேறுபாட்டைக் கண்டு, பெற்றோரால் வீட்டுக்குள் வைக்கப்பட்ட தலைவி, தானே சொல்லிக் கொண்டது. நெய்தல்திணை. மெய்தோய் நட்பே நக்கு விளையாடலும் கடிந்தன்று ஐது என்று இறுதி அடிகள் மாற்றப்பட்டன. விரைஇ; உயிர் அளபெடை. ஏ; ஏகு; அம்ம; அசைகள். ஓரை மகளிர்- விளையாட்டுப் பெண்கள். அவர்கள் கடல் நீராடினர்; நெய்தல் மலர் மாலை அணிந்தனர்; அதனால் அவர்கள் கூந்தலிலே நீர் ஒழுகிக் கொண்டிருக்கின்றது. அடும்பு- கடற்கரையிலே வளரும் ஒரு வகைக் கொடி. முடிவுரை இவ்வளவோடு குறுந்தொகைப் பெருஞ்செல்வம் முடிந்தது. குறுந்தொகை என்னும் இந்நூல் 401 பாடல்களைக் கொண்டது. கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்தால் 402 பாடல்களாகும். இருநூற்றைந்து புலவர்கள் பாடிய கவிதைகள் இந்நூலிலே அடங்கியிருக்கின்றன. எட்டுத் தொகை நூல்களிலே குறுந்தொகைதான் பழமை யான நூல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குறுந்தொகைப் பாடல்கள் அனைத்தும் ஆண்பெண் அன்பை வலியுறுத்துவன; காதல் கொண்ட இருவர் எவ்வாறு இணைபிரியாமல் வாழ்ந்தனர் என்பதை எடுத்துக்காட்டுவன. பழந்தமிழர்களின் காதல் வாழ்க்கையின் சிறப்பைக் குறுந்தொகை வாயிலாகத் தெளிவாகக் காணலாம். பழந்தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் இந்நூலிலே பல இயற்கைக்காட்சிகளைக் காணலாம். மரஞ்செடி கொடிகளின் தன்மைகள் இயற்கையாக எடுத்துக்காட்டப் பட்டிருக்கின்றன. விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர் வாழ்வன ஆகிய பிராணிகளின் இயல்புகள் கூறப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே பழந்தமிழ் நாட்டிலிருந்த கொடையாளிகள் பலரைப் பற்றிக் காணலாம். வரலாற்றுண்மைகள் சிலவும் காணப்படுகின்றன. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கைநிலை, நாகரிகம், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிப் பல பாடல்களிலே காணலாம். அரசியல், நீதிகள், அரசர்களின் தன்மைகள், அவர்களுடைய செங்கோல்முறை ஆகியவற்றைப் பற்றியும் சில பாடல்களிற் செய்திகள் காணப்படுகின்றன. குடிமக்கள் கூறும் குறைகளைக் கேட்டு முறைசெய்வது அரசர்களின் வழக்கம். அரசர்களுக்குத் துணைபுரிய அறங்கூறு அவையம் என்னும் நீதிமன்றம் இருந்தது. அம்மன்றத்திலே அறிஞர்கள் பலர் நீதிபதிகளாயினர். தன்பால் காதல் கொண்ட தலைவியைப் பெற்றோர் மணம்புரிந்து கொடுக்க இணங்கா விட்டால் நீதிமன்றத்திலே காதலன் வழக்கிடுவான். இவ் வழக்கமும் பண்டைத்தமிழகத்தில் இருந்தது. இதனைக் குறுந்தொகைப் பாடலிலே காணலாம். தமிழகத்திலே அக்காலத்தில் வளர்ந்து தழைத்திருந்த கலைகள் பலவற்றைப் பற்றி இந்நூலில் படிக்கலாம். தமிழர் சிறந்த அணிகலன்கள் செய்யக்கற்றிருந்தனர்; நல்ல உடை நெய்யத் தெரிந்திருந்தனர்; நல்ல பாண்டங்கள் செய்ய அறிந்திருந்தனர்; சிறந்த சங்கீதக் கருவிகள் ஆக்கத் தெரிந்து கொண்டிருந்தனர். கருவி இசையிலும், குரல் இசையிலும், கூத்து, நடனம், முதலியவற்றிலும் தமிழர் தேர்ச்சிபெற்றிருந்தனர். இவைபோன்ற இன்னும் பல சிறந்த செய்திகளையெல்லாம் கூறும் உயர்ந்த கருவூலம் குறுந்தொகை. இத்தகைய குறுந்தொகையிலே கலைப் பெருஞ்செல்வம் பலவற்றைக் காண்கின்றோம். தழிழறிஞர் சாமி. சிதம்பரனார் 1900- 1961 அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்பதாண்டு காலத்தைத் தமிழனுக்கும், தமிழுக்கும் அர்ப் பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணிகளிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர். பிற்காலத்தில் பொது உடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர். தமிழ் மக்கள் மேலைநாட்டு மக்களைப் போன்றும், கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர் சாமி. சிதம்பரனார். 1920முதல் 1961 வரையுள்ள இடைப்பட்ட நாற்பது ஆண்டு களுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட புனைப்பெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொண்டாற்றியவர். இவர் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை, வெற்றி முரசு, லோகோபகாரி, தினமணி, சரவதி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு கால கட்டங்களில் பணியாற்றியவர்; பத்திரிகைத் துறையில் நாட்டம் கொண்டு அறிவுக் கொடி என்னும் பத்திரிகையை 1936ல் -கும்பகோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தி மகிழ்ந்தவர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த கடகம் என்னும் அழகிய சிற்றூரில், வீரபத்திரமலையமான் என்னும் சைவப் பெரியாரின் பேரனாகவும் திரு. சாமிநாத மலையமான்- கமலாம்பாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின் செல்வ மகனாகவும் விவசாய குடும்பத்தில் சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16 ஆம் நாளில் (1-12-1900) சாமி. சிதம்பரனார் தோன்றினார்; கிராமப் பள்ளியிலும் மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். பள்ளி மாணவனாக இருக்கும் பொழுது, 12 வயதிலேயே, தன் பாடப் புத்தகங்களில் செந்தமிழ்ச் செல்வி துணை என்று எழுதி வைத்துள்ள சாமி. சிதம்பரனாருக்குத் தமிழ் கற்று வித்துவானாக ஆக வேண்டும் என்பதிலே விருப்பமிருந்தது; தந்தையார் ஊக்கப்படுத்தினார். தஞ்சையில் தமிழில் பெரும் புலவராக விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் மாணவராக இருந்து கல்வி கற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு; மதுரைத் தமிழ்ச் சங்கப்பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். எளிதில் கற்றுணரும் இவரது ஆற்றலும், துறுதுறுவென இருக்கும் தன்மையும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமலை ஐயங்காரைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை அப்படியே கேட்டுக்கொள்ளும் சுபாவம் இவருக்கில்லை; குறுக்குக் கேள்விகள் கேட்பார். மாற்று விளக்கங்கள் தந்து பேசுவார். இது சில ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை. எனினும் தலைமை ஆசிரியரின் அன்பும் ஆதரவும் நிரம்பிய தலையீட்டினால் தடையேதுமின்றி முன்னேற்றம் பெற்றார். முறையாகப் பயின்று 1923 ஆம் ஆண்டில் பண்டிதர் வித்வான் பட்டம் பெற்றார். உடனேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டு காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப் பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உட்படப் பல பகுதிகளிலும் பணியாற்றினார். நீதிக்கட்சி (ஜடி கட்சியில்) ஆர்வம் காட்டிய சாமி சிதம்பரனார் அதிதீவிர சுயமாரியாதைக்காரராகவும், பகுத்தறி வாளராகவும் விளங்கினார். பெரியார் ஈ. வெ. ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டார். குடியரசு எழுத்தாளரானார். பெரியார் முதன்முதலாக மலாயா சென்றபோது சாமி சிதம்பரனாரும் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப் பட்ட அக்காலத்தில் - சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமி. சிதம்பரனார் - கும்பகோணத்தில் பிரபல நீதிக் கட்சிக்காரராக விளங்கிய திரு ஏ. குப்புசாமிப்பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை, சமூகத்தையும் சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சீர்திருத்தத் திருமணமாகவும் கலப்புத் திருமணமாகவும் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் இதுவே. இத்திருமணம் அன்னை நாகம்மையாரின் தலைமையில் பெரியாரின் முன்னிலையில் ஈரோட்டில் 5-5-1930ல் நடைபெற்றது. நாகம்மையாரும், பெரியாரும் இத்தம்பதிகளைத் தம் செல்வ மக்களாகவே கருதி இத்தம்பதிகள் 5-6-1930-ல் திருவாரூரில் புதுக்குடித்தனம் வைத்த போது உடன் சென்று சில நாட்கள் தங்கியதோடல்லாமல் ஈரோட்டில் தம்மில்லத்தில் பள்ளி விடுமுறைக் காலங்களில் எல்லாம் உடன் வைத்திருந்து மகிழ்ந்தனர். சாமி. சிதம்பரனார் இளமையிலேயே -பள்ளி மாணவராக விளங்கிய காலத்திலேயே - எதையும் புரிந்துகொண்டு எளிமையாக விளக்கி எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார். 1921 - ஆம் ஆண்டிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல் வடிவத்தில் வெளிவராமல், எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிநயம் வாய்ந்தவை. 1923 முதல் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். அவரது படைப்புகள் சமுதாயச் சீர்திருத்தம், முற்போக்கு எண்ணங்களை உருவாக்குதல், பகுத்தறிவைப் பரப்புதல், மூட நம்பிக்கைகளை நீக்குதல், சாதியை ஒழித்தல், விதவா விவாகத்தை வலியுறுத்துதல், கலப்பு மணத்தை ஆதரித்தல், கடவுள் மறுப்புப் பற்றியே அமைந்திருந்தன. அவைகள் அனைத்தும் கட்டுரைகளாகவும், கவிதை களாகவும் சிறுகதைகளாகவும், சொற்பொழிவுகளாகவும் அமைந்துள்ளன. பொதுமக்கள் நன்மைக்காக எழுதுகின்றோம். நம்முடைய எழுத்துக்களைப் படிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சமுதாயத் துறையிலே, அரசியல் துறையிலே நம்முடன் சேர்ந்து வருகின்றார்கள். மக்களை இவ்வாறு முன்னேற்றம் அடையச் செய்வது நமது கடமை என்று எண்ணியே எழுதினார். 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சேரும். பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாட புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை 1928, 29இல் தமிழகத்துப் பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக் கழகம் 1934, 35, 36 ஆகிய ஆண்டுகளில் பாடப்புத்தமாக வைத்தது. பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக- மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும் இவர் 1941இல் வேலையை விட்டுவிட்டார், முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால். பொதுத் தொண்டில் ஆர்வம் காட்டிய சாமிசிதம்பரனார் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் நேர்முக அரசியல்வாதியாக விளம்பரத்துடன் விளங்கியதில்லை. இளமை முதலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் நாட்டம் உடையவராக விளங்கிய சிதம்பரனார் அக்கட்சித் தலைவர்களின் முதலாளித்துவப் போக்கில் அதிருப்தி கொண்டு சுயமரியாதை இயக்கம் உருவான போது அதில் தம்மையும் இணைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கட்சியின் நிறுவகர்கள் பத்து பேர்களில் தானும் இணைந்து ஒருவராய்த் திகழ்ந்தார். சாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, கலப்புமணம், சீர்திருத்தத் திருமணம் முதலியவற்றில் ஆர்வம் உடையவராகி அக்கருத்துக் களை மக்களிடம் வலியுறுத்தி எண்ணற்ற கூட்டங்களில் இவர் பேசித் தொண்டாற்றினார். 1940 இல் விடுதலை தினசரி இதழ் சென்னையில் பால கிருட்டிண பிள்ளைத் தெரு, 2 சிந்தாதிரிப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. சாமி சிதம்பரனார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் ஆசிரியர்களாகப் பணி புரிந்தார்கள். இக்காலத்தில் சிதம்பரனார் குடும்பமும் அறிஞர் அண்ணா குடும்பமும் சிந்தாதிரிப்பேட்டை சாமிப் பண்டாரத் தெருவில் ஒரே இல்லத்தில் குடி இருந்தார்கள். சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சியை ஆதரித்த காலத்தில் அவ்விதம் ஆதரிக்கக் கூடாது என்று பெரியாருடன் வாதாடி வந்தவர்களுக்கு,தக்க முறையில் சாமி. சிதம்பரனார் மறுப்புக் கூறி பெரியாருக்கு உறுதுணையாக இருந்தார். இக்காலத்தில் பகுத்தறிவுக் கிளர்ச்சிகளையும், சுயமரியாதை ஏடுகளையும் எழுதி எழுதிச் செழுமை செய்தார். முற்போக்கு எழுத்தாளர்களில் பெருமைக்குரிய இடம் பெற்றார். தமது அரசியல் ஈடுபாட்டைப் பற்றிச் சிதம்பரனார் தாமே எழுதியுள்ளார். அரசியல் துறையில் ஈடுபடவேண்டும் என்பதில் எனக்கு ஆசை அதிகம். ஆனால் என்னிடம் உள்ள சில குணங்கள்- அவை நல்ல குணங்களோ கெட்ட குணங்களோ நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்- என்னை எந்த அரசியல் கட்சியிலும் நிலைக்க விடவில்லை. ஆரம்பத்தில் ஐடி கட்சிக்காரன்; அதன்பின் தீவிர சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டவுடன் நான் காங்கிரகாரனானேன். 1942ல் இயக்கத்தை ஆதரித்தேன். அதன்பின் காங்கிர பதவிக்கு வந்த பின் அதிலும் எனக்கு அதிருப்தி. நேர்மையாக நடக்க வேண்டும். தப்புத்தண்டா செய்யக்கூடாது; சொன்னபடி செய்ய வேண்டும். மக்களிடையே சாதிவேற்றுமை, இனவேற்றுமை, மொழி வேற்றுமை பாராட்டக் கூடாது; மக்களனைவரும், கல்வி பொருளாதாரம் இவைகளில் சமநிலை அடைய வேண்டும்; வர்க்கப் பேதமற்ற சமுதாயம் அடைய வேண்டும்- இவை போன்ற முற்போக்குக் கொள்கைகளே என்னுடைய அரசியல் கருத்துக்கள். ஆகையால் நான் எந்த இயக்கத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை. கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கும் குணமும் என்னிடம் இல்லை. என்னை எந்த அரசியல் கட்சிக்காரர்தான் ஏற்றுக்கொள்வார்? சாமி சிதம்பரனார் தொடக்க காலத்தில் பல கட்சிகளில் பணியாற்றியவராக இருப்பினும் பிற்காலத்தில் எந்தக் கட்சியிலும் அவர் சேர மறுத்துவிட்டார். இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் சாமி. சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச் சிறப்புண்டு. தம் இறுதிக்காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம் சமாதான இயக்கம், சீன- இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஓய். எம். சி. ஏ. பட்டிமன்றம் ஆகியவற்றில் இடம்பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் தொடக்ககால முதலே குறிப்பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். சென்னை மாகாணசபை சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலைவராக விளங்கினார். திரு. சாமி சிதம்பரனார் அவர்கள் 20 வயதிலிருந்தே நாட் குறிப்பு எழுதும் வழக்க முடையவர்; ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்ச்சிகளையும் முறையாகக் குறித்து வைத்துள்ளார். அவ்வப் போது தோன்றும் கவிதைகளைக் குறித்து வைத்துள்ளார். 1936-ல் சொந்தத்தில் அச்சகம் நிறுவி, தம்முடைய துணைவியார் சிவகாமி அம்மையாரை ஆசிரியராக அமர்த்தி அறிவுக்கொடி என்னும் இதழைக் கும்பகோணத்திலிருந்து நடத்தினார். பிற்காலத்தில், 1948ல் ஈராண்டு காலம் பரலி சு. நெல்லையப்பரிடமிருந்து லோகோபகாரி இதழின் உரிமையை வாங்கித் திரு. வேணுகோபால நாயகர் நடத்தியபோது ஓராண்டு காலம் ஆசிரியராக அமர்ந்து திறம்பட நடத்தினார். இவையன்றி, தமிழரசி, தாருல் இலாம், சாந்தி, தொழிலரசு, தமிழ்ப் பொழில் (கரந்தை), செந்தாமரை, சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு, (சிங்கப்பூர்) பொன்னி (புதுக் கோட்டை) செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி, தினமணிசுடர், புது உலகம் (பட்டுக் கோட்டை), கவிதா மண்டலம் (புதுவை வார இதழ்), புதுவை முரசு, நகரதூதன் (திருச்சி) சண்டமாருதம் (புதுவை வார இதழ்), பார்க்க வகுல மித்திரன் சுயமரியாதை, போர்வாள், நவமணி, சிவசக்தி, தமிழ் நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். இவ்விதழ்களில், மெய்கண்டான், கதைக்காதலன் குரூலூ, S.C. பரன், மிடர் திங்கர், சாமி, இடிமுழக்கம், காலக்கவி வாமிஜீ, வம்பன், அரட்டை சிகாமணி, நாதிகன், பொறுப்புள்ளவன் என்னும் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட புனைப் பெயர்களில் எழுதியுள்ளார். இலக்கிய சம்பந்தமான கட்டுரைகள் அனேகமாக இவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகும். பத்திரிகைத் தொழிலில் ஈடுபடுவதில் அவருக்கு மட்டற்ற ஆசை இருந்தது. பத்திரிகையில் எழுத வேண்டும் என்னும் வெறி மிகுந்த போதெல்லாம்) தமிழாசிரியர் பணியிலிருந்து விடுமுறை பெற்றுப் பத்திரிகை நிலையங்களில் எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் இருந்து பணியாற்றிய பத்திரிகைகளில் குறிப்பிடத் தக்கவை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, திராவிடன், விடுதலை, லோகோபகாரி ஆகியவைகள். இந்தக் காலத்திலேதான் 1939-ல் பிற்காலத்தில் இலக்கிய, வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டு வருகினற ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலாகிய தமிழர் தலைவர் என்னும் நூலை எழுதினார். இதனை வெல்லக்கூடிய- தந்தை பெரியாரின் வாழ்க்கையைச் சித்திரிக்கக் கூடிய வேறு ஒரு நூல் இன்னும் வெளிவரவில்லை. என்பதே இந்நூலின் பெருமைக்குத் தக்கதோர் சான்றாகும். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களே வெளிவந்துள்ளன. சாமி சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள், ஆய்வுக் கண்ணோட்டம் உடையனவாய் விளங்குகின்றன. இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும் உணர்ந்து கற்றுப் பயன் பெறத்தக்க வகையில்- தமக்கே உரிய எளிய இனிய நடையில்- அவற்றின் அடிப்படையை ஆய்ந்து அறிவித்துள்ளார். சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தழிழறிஞர்கள் பலர் சிறப்பித்துள்ளனர். பேராசிரியர் சாமி. சிதம்பரனார் வாழையடி வாழையென வந்துள்ள தமிழ்ப் புலவர் மரபின் வழித்தோன்றல். தமிழ்ச்சங்க நூல்களை முறையாகக் கற்றுப் புலமை பெற்றவர்களின் தொகை அருகி வரும் இந்நாளில் அந்தச் சிலரில் ஒருவராகச் சிறந்து விளங்கிய மூதறிஞர். சமுதாய மாறுதலுக்காக இயக்கங்களுடன் இணைந்து நின்று பழையன கழித்துப் புதியன புகுத்திப் பண்பாட்டினைச் செம்மை செய்யத் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார். சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர் களே சிறந்த நூல்களை ஆக்க முடியும். அத்தகைய நேரமும், வசதியும் சிதம்பரனார் தன் வாழ்நாளில் பெற்றிருந்தார். 1924 முதல் 1940 வரை, பதினாறு ஆண்டுகள். தமிழாசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும், 1942 முதல் 1956 வரை இருபத்து நான்காண்டுகள் அரசியல் சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றியும் வந்த சாமி. சிதம்பரனார் 1948க்குப் பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர் தமிழ் முரசு இதழின் மூன்று பகுதிகளுக்கு இக்கால முழுவதும் வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடையறாமல் எழுதி அனுப்பினார். பாராட்டுதல்கள் குவிந்தன. இவரது புகழும் பெருமையும் பரவின. இதனால் இன்பமும் மனநிறைவும் பெற்று மெய்மறந்து உழைத்தார். இப்பணிதான் தனக்குப் பிற்காலத்தில் நிலையான புகழைத் தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். 1961 சனவரி 17ல் இயற்கை எய்தினார். சீர்திருத்தச் செம்மல் சாமி, சிதம்பரனாருக்குக் கால்வழிச் சேய்கள் இல்லை. ஆனால் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்வழிச் சேய்கள் உள்ளன. அவை அவரது புகழ்மிக்க பெருமையைத் தமிழுலகில் நிலைக்கச் செய்யும் என்பது உறுதி. தமிழ்ப் பேராசிரியர்- தமிழ்ப் பெரும்புலவர்- தமிழ் ஆராய்ச்சியாளர். தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்- தமிழ்ப்பாட நூலாசிரியர்- தமிழ்ப் பாவலர்- சாமி சிதம்பரனாரின் திருப்புகழ் வாழ்க!