சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 21 குறுந்தொகைப் பெருஞ்செல்வம் (பாகம் - 1) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 21 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 12 + 592 = 604 படிகள் : 1000 விலை : உரு. 375/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களைக் காலவரிசையில் பொருள்வழிப் பிரித்துச் சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலைப் பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர். சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதைப் படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவுபடுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கிவிடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும் பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை குறுந்தொகைப் பெருஞ்செல்வம் முன்னுரை 3 பதிப்புரை 11 அணிந்துரை டாக்டர் மா.நன்னன் 15 அணிந்துரை டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் 18 அணிந்துரை டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் 21 அணிந்துரை சிலம்பொலி சு.செல்லப்பன் 25 கடவுள் வாழ்த்து 57 இது கிட்டாதா எங்களுக்கு? 61 வண்டே உண்மையைச் சொல் 64 காதல் பெரிது 70 அவர் இல்லையே 73 துக்கத்தால் தூக்கம் இல்லை 75 உலகமே உறங்குகின்றது 77 இவர்கள் யாரோ? 80 பெண்ணுக்கு ஆண் அடக்கம் 84 கற்புள்ள காதலி 87 கற்புள்ள காதலி 90 கூடிவாழ்வதே குதூகலம் 92 உண்மையறியாத ஊர் 95 தன்னியல்பு மறந்த தலைவன் 98 மடலேறி மணப்பேன் 101 உறுதியுள்ள நட்பு 105 பிரிந்தவர் கூடுவார் 109 காதல் மிகுந்தால் 112 இன்னும் எத்தனை நாள்? 115 இனி எப்படியோ! 118 அவர் அறிவுள்ளவர் ஆகுக 121 பொய்யா மொழி புகல மாட்டார் 124 அழாதே! அவன் பிரியான் 127 இன்னும் பாடுக! இனிதே பாடுக! 129 இன்னும் காணேன் 132 நாரைதான் சாட்சி 135 ஆண் குரங்குக்கு அவளைத் தெரியும் 138 என் அழகு பயனில்லை 142 என் துயரை எவர் அறிந்தார்? 144 நெஞ்சே யார் உனக்குத் துணை? 146 கனாக் கண்டேன் தோழி 149 அவனே என் காதலன் 152 காதலின் பண்பு 156 பேச்சுக்குப் பரிசு 160 துன்பம் தொலைந்தது 163 வெட்கங் கெட்ட கண்கள் 167 நீ ஏன் வருந்துகின்றாய்? 170 வருவார்! வருந்தாதே! 173 அந்த வலிமை எனக்கில்லை 176 நெஞ்சம் பொறுக்கவில்லை 179 என்றும் இணைபிரியோம் 183 இன்பமும் துன்பமும் 187 நட்பு ஒழியாது 189 ஆண்மை தந்த அல்லல் 191 இன்னும் காணேன் 194 கற்பின் பெருமை 197 அங்கும் உண்டு 201 முன்னிலைப் புறமொழி 204 தலைவன் இரங்கானோ! 207 என்றும் பிரியோம்! 210 இதுதான் ஒழுங்கோ! 212 அவனே மணப்பான் 215 நான் செய்த முயற்சி 218 உறுதிமொழி எங்கே 221 யான் இங்கே; என் நலன் அங்கே 224 இன்னும் சில நாட்களே இருப்பாள் 226 மிகவும் இரங்கத் தக்கவை 228 செத்தாலும் இன்பம் உண்டு 231 எனது நோயை நீக்க முடியுமா? 235 உன்னை மறப்பரோ? 239 காணுதலும் இன்பமே 242 அன்பால் இன்புற்றோம் 245 மலர்மணக்கும் மேனியாள் 248 எப்படிப் பிரிவேன் 250 ஆவைப் பிரிந்த கன்றானோம் 253 கார் வந்தும் காணேன் 255 மதியற்ற கொன்றை மரம் 258 நம்மை மறந்தாரோ 260 வேறு மருந்தில்லை 263 இரவில் வராதே 266 எப்படிக் கூறுவேன் 269 மருந்தும் செல்வமும் 272 கண்களே துன்புறுத்தின 274 ஆற்றலும் அறிவும் வேண்டும் 275 நம்மால் வருந்துதல் நன்றோ! 278 காதலுக்குக் கண்ணில்லை 281 தம்மூரிலேயே தங்கினரோ! 284 தடுக்கட்டும் பார்ப்போம் 287 எமது ஊரை மறவாதே 290 இப்பொழுது அவர் எப்படியோ 293 அன்னை வாழ்க 296 இப்பொழுதுதான் அறிந்தேன் 299 அவர் செயலால் அறிந்திலேம் 302 என்னைப் போல் எவர் உண்டு? 305 அவர் கொடியவர் அல்லர் 308 இரவிலே வந்தாலும் வருவான் 311 ஊரார் பழிக்கு வருந்துவது ஏன்? 314 உன் நட்பு வியத்தற்குரியது 317 இணங்கினால் இன்னல்தான் 320 பறவைகளைப் பார் 323 தாய் தந்தை முறையில் அவர் உறவு இருக்கட்டும் 326 இது கார்காலமா? 329 நீரால் தீ யடங்கிற்று 332 விளையாட்டென்று சும்மா விட்டேன் 335 குட்டு வெளிப்பட்டது 338 அவரிடம் ஆர் சொல்வார் 341 மறந்தறியேன் 344 இனி அவனைக் காண்பேனோ? 347 எவ்வுலகும் இணையன்று 350 அவர் நல்லவர் அல்லர் 353 நான் உயிர் வாழ்வேன் 356 எப்படிப் பொறுப்பேன்? 359 அன்பே துன்பமாயிற்று 362 மாசற்ற மனத்தான் 365 சேவலே நீ செத்துப் போ 368 கார்காலம் - தலைவியின் சான்றுகள் 372 நயமுடன் நவிலுதல் 375 இனி அவர் வந்துதான் என்ன? 378 இதைத் தலைவன் காணவேண்டும் 381 ஊரார் பழிக்கு அஞ்சினேன் 385 தழைத்த சோலையிலே தலைவியைக் காணலாம் 388 குறிப்பால் அறிவித்தல் 391 என்றும் கைவிடாதே! 394 என்கருத்தில் உறையும் காதலி 397 அருமையை அறியவில்லை 400 தவறு என்னுடையது அன்று 402 அல்லிகள் குவிந்தன 405 அவர்கள் வந்தால் ஆபத்து 407 தலைவன் இன்றேல் இன்பம் ஏது? 410 இனி நான் உயிர்வாழேன் 413 முல்லை சிரிக்கின்றது 416 உன் தூதன் பொய்யன் 419 உனக்குத் துன்பந்தான் 422 நுதலால் கட்டுண்டேன் 425 தேடித் தருவேன் திகைக்காதே! 428 அடங்காத துயரம் 431 அன்பு சொட்டும் கண்ணாள் 434 நம்பிக்கையால் உயிர் வாழ்கின்றேன் 437 இருந்தால் இன்பம், பிரிந்தால் துன்பம் 439 அவர் சொல்லிய நீதி 441 காமத்தைக் குறை கூறாதே 444 என்றும் பிரியேன் 446 இரவெல்லாம் கண்விழித்தோம் 449 இங்கே வரவேண்டாம் 451 என் துயரை யார் அறிவார்? 454 தினைப்புனத்திற் சந்திக்கலாம் 456 நெஞ்சம் இழந்தேன் 459 அவர் மிகவும் இரக்கமுள்ளவர் 461 எப்படிச் சென்றனளோ 464 இது நாம் உறைவதற்குத் தகுதியற்ற ஊர் 467 பிரிந்தோரைச் சேர்ப்போர் உண்டு 470 நினைத்தால் துன்பம், சேர்ந்தால் இன்பம் 473 இன்பத்திற்கு முடிவுதான் 476 இடித்துரைப்போருக்கு என்ன தெரியும் 479 அச்சமே காரணம் 482 எப்படிப் பெற்றாரோ? 484 முல்லை மலர்ந்தது 487 சொல்லால் மட்டும் பயனில்லை 489 விடியற்காலம் வந்து விட்டதே 492 மழையே! உனக்கு இரக்கம் இல்லையா? 494 இரக்கமற்ற ஊரார் 497 இதுதான் மணக்கும் விதமோ 500 அன்னை விழித்து இருந்தாள் 503 நகைப்பது தகுமா? 506 உனக்கும் துன்பமா? 509 கடலே! என்னைத் துன்புறுத்துக 512 நாணமற்ற நெஞ்சே! 515 தனிமையால் துன்பந்தான் 518 கணவனைக் காக்கும் காரிகை 520 செல்வந்தான் சிறந்ததோ! 523 ஊரைப்பற்றிக் கவலையில்லை 526 ஒரு நாளா? இரண்டு நாளா? 529 வேலை முடிந்தால் கடிதில் வருவார் 532 நமது கடமையை நாம் செய்வோம் 535 துயர் துடைக்கும் தூது மடலேற்றமே 538 வருந்தேல்! வருவது உறுதி! 541 பொய் புகலார் அறிஞர் 544 என் துன்பத்தை தலைவியிடம் சொல்க 547 நான் கண்ணுறங்கேன் 549 அறியாமையால் அவதி 551 என் அழகைக் கெடுக்கும் மாலைக்காலம் 553 நாளையே திரும்புவேன் 555 பசுக்களும் இன்புறுகின்றன 557 அவர் வரட்டும் சொல்கிறேன் 560 நான் வருந்தாமல் இருக்க முடியுமா? 563 பொறுமைக்குக் காரணம் அவர்தான் 566 நெஞ்சம் கலங்குகின்றது 569 இப்பொழுது அவர் எங்குளரோ 572 வேப்பங்காயும் வெல்லக்கட்டி 575 குளிர் அன்று; கூற்றமே 578 தினைப்புனத்திற்கு வருக 580 காதல் மறு பிறப்பிலும் தொடரும் 583 அவர் மறந்தாலும் நாம் மறவோம் 586 குறுந்தொகைப் பெருஞ்செல்வம் (பாகம் - 1) (1955) முன்னுரை சங்க நூல்கள் மதுரையிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சங்கம் இருந்தது. அதை ஆதரித்து வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள். இந்தச் சங்கத்திற்குக் கடைச்சங்கம் என்று பெயர். இதற்கு முன்னே இரண்டு சங்கங்கள் இருந்தன. அவற்றிற்கு முதற்சங்கம், இடைச்சங்கம் என்று பெயர். முதலில் தோன்றிய சங்கம் முதற் சங்கம். அது மறைந்து இரண்டாவதாகத் தோன்றிய சங்கம் இடைச்சங்கம், அதுவும் மறைந்து மூன்றாவதாகத் தோன்றிய சங்கம் கடைச்சங்கம். முதற் சங்கமும், இடைச்சங்கமும் இருந்த இடம் கபாட புரம். இவ்வூர் கடல் கொண்ட தமிழகத்திலே இருந்ததாகக் கூறப் படுகின்றது. இந்த முச்சங்க வரலாற்றை இறையனார் அகப் பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றை அடிப் படையாக வைத்துக் கொண்டே முச்சங்க வரலாறுகள் கூறப் படுகின்றன. பண்டைக் காலத்தில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது. என்பது கட்டுக்கதை; புனைந்துரை; வரலாற்று முறைக்கு ஒத்து வராதது என்று உரைப்போர் உண்டு. முச்சங்கத்தைப் பற்றி எழுதி யிருக்கும் முறை, அது கட்டுக்கதையாக இருக்குமோ என்று எண்ணவும் இடந்தருகின்றது. முச்சங்கம் இருந்தனவா? இல்லையா? அவைகள் பற்றிய செய்திகள் கற்பனையா? வரலாறுதானா? என்ற ஆராய்ச்சிகள் இப்பொழுது நமக்கு வேண்டாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த நூல்களையே சங்க நூல்கள் என்று சாற்றுகின்றனர். இப்பொது சங்க நூல்கள் என்று சான்றோர்களால் சொல்லப்படுவன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்பவை. பத்து நூல்களின் தொகுப்பு பத்துப்பாட்டு, எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகை, பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினெண் கீழ்க்கணக்கு. சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, என்னும் ஐம்பெரும் காப்பியங்களையும் சங்க நூல்களின் வரிசையிலே வைத்து எண்ணுவோரும் உண்டு. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து பதினெட்டு நூல்கள். இவற்றை மேற்கணக்கு என்பர். கணக்கு என்றால் நூல் என்று பொருள். பதினெட்டு நூல்கள் கீழ்க்கணக்கு என்று பெயர் பெற்றிருப்பதால் பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும் கூட்டி மேற்கணக்கு என்றனர். ஐம்பெருங்காப்பியங்கள் கடைச்சங்க காலத்தவை அல்ல; பின்னால் உண்டானவை; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் சங்க காலத்திற்குப் பின் எழுந்தவைகளே என்று பல அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இப்பொழுதுள்ள பழந்தமிழ் நூல்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், தொல்காப்பியமுமே சங்க காலத்து நூல்கள் என்று முடிவாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் சங்க கால இலக்கண நூல் என்பதில் ஐயமில்லை. பத்துப்பாட்டும் சங்க கால நூல் அன்று; எட்டுத்தொகை நூல்கள் மட்டுமே சங்ககால இலக்கியங்கள் என்று சொல் வோரும் உண்டு. சங்க வரலாற்றைச் சாற்றும் இறையனார் அகப் பொருள் உரையே இதற்கு இடந்தருகின்றது என்பர். ‘கடைச்சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தார்................ நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு: நானூற்று நாற்பத்தொன் பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும் வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடக்கத்தன’. இது இறையனார் அகப் பொருளுரை. இதில் பத்துப்பாட்டு காணப்படவில்லை. ஆதலால் அது சங்கநூல் அல்ல என்று சொல்லுகின்றனர். இத்தொடக்கத்தன என்ற சொல்லில் மற்ற நூல்களும் அடங்கியிருக்கலாம். இத்தொடக்கத்தன என்பதில் ஏன் பத்துப் பாட்டும் அடங்கியிருக்கக்கூடாது? பத்துப்பாட்டுப் புலவர்களின் பாடல்கள் எட்டுத்தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. ஆதலால் பத்துப்பாட்டும் சங்க நூல்தான். கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்பன கடைச் சங்ககால நூல்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அவைகள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைப்பன நெடுந்தொகை என்பது அகநானூறு. இந்த எட்டு நூல்களையுமே எட்டுத்தொகை என்று கூறினர். குறுந்தொகை நானூறு என்று இறையனார் அகப்பொருள் உரையிலே குறிப்பிடப் பட்டுள்ளது. ஆதலால் இது சங்ககால நூல் என்பதில் எத்தகைய ஐயமும் இல்லை. நூலின் அமைப்பு குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. நான்கடி முதல் எட்டடி வரையில் உள்ள செய்யுட்களைத் தொகுத்துக் குறுந்தொகையென்று பெயர் வைத்தனர். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, புறநூனூறு என்பன எட்டுத்தொகை நூல்கள். இவைகளிலே ஆறு நூல்கள் அகப் பொருள் பற்றிக் கூறும் அழகிய நூல்கள். ஏனைய இரண்டு புறப் பொருள் பற்றிப் புகல்கின்றன. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, பரி பாடல், கலித்தொகை என்னும் ஆறுமே அகப்பொருளைப் பற்றிக் கூறுவன; ஒரே பொருளைப் பற்றி உரைப்பன. இவற்றுள் பரிபாடலும் கலித்தொகையும் பாடல் வகையில் வேறுபட்டவை; அவைகள் தனித்தனி நூல்களாக அமைந்திருப்பது பொருந்தும். ஐங்குறுநூறு ஐந்து புலவர்களால் பாடப்பட்டவை. ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு நூறு பாடல்களைத் தனித்தனியே பாடியிருக்கின்றனர். அந்த ஐந்து நூல் பாடல்களின் தொகுப்பே ஐங்குறுநூறு. ஆதலால் அதுவும் தனி நூலாக அமைந்திருப்பதும் பொருந்தும். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு மூன்றும் ஒரே வகையான பாடல்களால் ஆனவை. எல்லாம் ஆசிரியப் பாக்கள்; ஒரு பொருளைப் பற்றியே உரைப்பவை. இவற்றைத் தனித்தனி நூல்களாக அமைக்க வேண்டியது ஏன்? ஒரே நூலாக அமைத்தால் என்ன? இந்த ஐயம் தோன்றுவது இயல்பு. பாடல்களின் சுருக்கம், பெருக்கம் குறித்தே மூன்று தனித் தனி நூல்களாகத் தொகுத்தனர். இந்த மூன்று நூல்களையும் ஒன்று சேர்த்து அமைத்தால் ஆயிரத்து இருநூறு பாடல்கள் ஆகும். படிப்போர்க்குச் சலிப்புத் தட்டும். அன்றியும் நாலடிப் பாடல்களும், முப்பத்தொரு அடிப்பாடல்களும் கலந்து மேடு பள்ளங்களாகக் காணப்படும். இந்த நிலையைத் தவிர்க்கவே தனித்தனி நூல்களாக்கினர். ஒரே செய்தியைப் பற்றிக் கூறும் ஒரே வகையான பாடல்களை மூன்று தனித்தனி நூல்களாகத் தொகுத்தனர். பதின்மூன்று அடி முதல் முப்பத்தொரு அடிகள் வரையில் உள்ள நானூறு பாடல்களை நெடுந்தொகையாக்கினர். இதுவே அகநானூறு, ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரையில் உள்ள பாடல்களை நற்றிணையாகத் தொகுத்தனர். நாலடி முதல் எட்டடி வரையிலுள்ள பாடல்களைக் கொண்டது குறுந்தொகை என்று முன்பே குறிப்பிட்டுள்ளோம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணை நிகழ்ச்சிகளைப் பற்றிய பாடல்களே குறுந்தொகைப் பாடல்கள். இப்பாடல்கள் எல்லாம் தனித்தனித் திணையாக இல்லாமல் கலந்து கிடக்கின்றன. குறிஞ்சித்திணைப் பாடல்கள் தனியாகவும், பாலைத்திணைப் பாடல்கள் தனியாகவும், முல்லைத் திணைப் பாடல்கள் தனியாகவும், மருதத்திணைப்பாடல்கள் தனியாகவும், நெய்தல் திணைப் பாடல்கள் தனியாகவும் பிரித்து, ஐந்து பிரிவாக அமைக்கப் பட்டிருந்தால் நன்றாக இருக்கும். இப்பொழுதுள்ள குறுந்தொகையிலே கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 402 பாடல்கள் இருக்கின்றன. கடவுள் வாழ்த்துப் பாடல் பின்னால் சேர்க்கப்பட்டது. குறுந்தொகை நானூறு என்பதுதான் இந்நூலின் பெயர். கடவுள் வாழ்த்தைக் கழித்து நானூறுதான் இருக்கவேண்டும். ஒரு பாடல் இப்பொழுது மிகுதியாகக் காணப்படுகின்றது. இந்நூலின் 307வது பாட்டு ஒன்பது அடிகளைக் கொண்டது. குறுந்தொகைப் பாடலின் பேரெல்லை எட்டு அடிகள் தாம். இப்பாடலை நீக்கி விட்டால் நானூறு பாடல்களே எஞ்சி நிற்கும். இவ்வுண்மையை மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் குறித்திருப்பது பாராட்டத் தக்கதாகும். ஆசிரியர்கள் குறுந்தொகையிலே உள்ள பாடல்களைப் பாடியவர்கள் இருநூற்றைந்து புலவர்கள் என்று இந்நூலின் இறுதியிலே காணப்படுகின்றது. ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் அச் செய்யுளைப் பாடியவர் பெயர் காணப்படுகின்றது. பத்துப் பாடல்கள் ஆசிரியர் பெயர் குறிக்கப்படாமல் இருக்கின்றன. இவற்றைப் பாடியவர் யார் என்று தெரியவில்லை. குறுந்தொகைப் புலவர்களின் பெயர்களிலே பல புலவர் களின் பெயர்கள் உண்மைப் பெயர்கள் அல்ல. அவர்களுடைய உண்மைப் பெயர்கள் தெரியவில்லை. அவர்கள் பாடிய பாட்டுக் களிலுள்ள சொற்றொடர்களையே அப்புலவர்களுக்குப் பெயர்களாக அமைத்திருக்கின்றனர். அணிலாடு முன்றிலார் என்பது ஒரு புலவர் பெயர். ஓரேர் உழவன் என்பது ஒரு புலவர் பெயர். கால்அறி கடிகையார் என்பது ஒரு புலவர் பெயர். அணிலாடு முன்றில், ஓரேர் உழவன், கால் அறிகடி என்னும் தொடர்கள் அவர்கள் பாடல்களிலே காணப்படுகின்றன. அவர்களின் உண்மைப் பெயர்கள் தெரியாமையால் அவர்கள் சொல்லைக் கொண்டே அவர்களுக்குப் பெயர் வைத்து விட்டனர். கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிய பெருந்தேவனார் பெயரை நீக்கிவிட்டால் 205 புலவர்கள் பெயரே காணப்படு கின்றன. குறுந்தொகைப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள், நற்றிணை, நெடுந்தொகை, புறநானூறு முதலிய தொகை நூல் களிலும் காணப்படுகின்றன. குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும் போது அவைகளைப் பாடிய புலவர்களின் ஆழ்ந்த பேரறிவைக் கண்டு அகமகிழலாம். குறுந்தொகையைத் தொகுத்தவன் பூரிக்கோ என்று காணப்படுகின்றது. இவர் வரலாற்றைப் பற்றி ஒன்றும் உணர முடியவில்லை. கோ என்று காணப்படுவதனால் இவர் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. பொருள் குறுந்தொகைச் செய்யுட்கள் அனைத்தும் அகப் பொருளைப் பற்றி அறைகின்றன. ஒருவனும்- ஒருத்தியும் கூடி அன்புற்று மகிழும் இன்பமே அகப்பொருள். அவ்வின்பம் வாயினால் சொல்ல முடியாதது, உள்ளத்தால் சுவைத்து உவப்பது. ஆதலால் இதனை அகப்பொருள் என்றனர். இந்த அகப்பொருள் நிகழ்ச்சியை ஐந்துதிணையாகப் பகுத்துக் கூறினர். அவை குறிஞ்சித் திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை என்பன. திணை என்பது ஒழுக்கம். மலையிலும் மலைச்சாரலிலும் நடக்கும் நிகழ்ச்சி குறிஞ்சித் திணை. பாலை நிலத்தில் நிகழும் ஒழுக்கம் பாலைத் திணை. காடும் காடுசார்ந்த நிலத்திலும் நடைபெறும் நிகழ்ச்சி முல்லைத்திணை. வயலும் வயலைச் சார்ந்த ஊர்களிலும் நடைபெறும் நிகழ்ச்சி மருதத் திணை. கடலும் கடல் சார்ந்த இடத்திலும் நடக்கும் நிகழ்ச்சி நெய்தல்திணை. ஒவ்வொரு திணையின் பொருளையும் முதல் பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்று மூவகையாகப் பிரித்துள்ளனர். நிலத்தையும் காலத்தையும் குறிப்பிடுவது முதல் பொருள். தெய்வம், உணவு, தொழில், பறவை, விலங்கு முதலியவை களைக் குறிப்பிடு வது கருப்பொருள். காதலர்கள் ஒன்று கூடுதல், பிரிதல்; பிரிந்த துக்கத்தைப் பொறுத்திருத்தல், அவர்களுக்குள் நேரும் பிணக்கு, பிரிவால் வருந்துதல் இவைகளே உரிப்பொருள். இவற்றைப் புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். காதலர் சந்தித்துக் கூடுதலாகிய புணர்தல் குறிஞ்சித் திணைக்குரியது; பிரிதல் பாலைத் திணைக்குரியது; பிரிவைப் பொறுத்திருத்தல் முல்லைத்திணைக்குரியது; ஊடல் மருதத் திணைக்குரியது; இரங்கல் நெய்தல் திணைக்குரியது. இத்தகைய முப்பொருள் அமைந்த ஐந்திணையைப் பற்றிக் கூறும் அகப் பொருள்திணைப் பாடல்களே குறுந்தொகைப் பாடல்கள். இப்பாடல்களில் பல நீதிகளைக் காணலாம்; பல ஊர்களைக் காணலாம்; பல நல்லுரை களைக் காணலாம்; பல சிறந்த உவமை களைக் காணலாம்; தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை உணரலாம்; அவர்களுடைய பல பழக்க வழக்கங்களை அறியலாம். இக் குறுந் தொகையிலே பழந்தமிழர்களின் சிறப்பை விளக்கும் வரலாறுகளையும் அறியலாம். அகப்பொருள் நிகழ்ச்சிகளோடு, இத்தகைய புறப்பொருட் செய்திகளையும் இணைத்துக் கூறும் பாடல்கள் பல குறுந்தொகையிலே குவிந்து கிடக்கின்றன. குறுந்தொகையின் சிறப்பு எட்டுத் தொகை நூல்களிலே குறுந்தொகையை மிகச் சிறந்த நூலாகப் புலவர்கள் எண்ணுகின்றனர். உரையாசிரியர்களால், குறுந்தொகைப் பாடல்களை மேற்கோள் காட்டியிருக்கும் அளவுக்கு வேறு எந்த நூல்களும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஏறக்குறைய 235 குறுந்தொகைப் பாடல்கள் உரையாசிரியர்களால் எடுத்தாளப் பட்டிருக்கின்றன. எட்டுத்தொகை நூல்களிலே குறுந்தொகையே முதலில் தொகுத்த நூலாக இருக்க வேண்டும். என்பது மகா மகோபாத்தியாய உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் கருத்து. “நல்ல குறுந்தொகை” என்று முன்னோர் இதைப் பாராட்டி இருக்கின்றனர். இந்நூலுக்குப் பேராசிரியர் உரை எழுதியிருந்தார்; இருபது செய்யுளுக்கு அவர் உரை கூறாமல் விட்டு விட்டார்; அந்த இருபது செய்யுளுக்கும் நச்சினார்க்கினியர் உரை வகுத்துக் குறுந்தொகை உரையை முடித்தார் என்று ஒரு செய்தி காணப் படுகின்றது இப்பொழுது அப்பழைய உரை கிடைக்கவில்லை. இந்நூலுக்கு முதல்முதல் உரை எழுதி வெளியிட்டவர் சௌரிப் பெருமாள் அரங்கன் என்பவர். இவ்வுரை பொழிப்புரை. ஆங்காங்கே பாட பேதங்களையும் காட்டியிருக்கின்றார். இந்நூலிற் கூறும் செய்திகளையும் ஆராய்ந்து ஒரு குறிப்பும் எழுதியிருக் கின்றார். இதன் பிறகு காலஞ் சென்ற பெருந்தமிழ்ப் புலவர் சாமி நாதய்யர் அவர்கள் இந்நூலைச் சிறந்த முறையில் வெளியிட் டிருக்கின்றார். ஒவ்வொரு பாடல்களுக்கும் பதவுரை எழுதியிருக் கின்றார். பாடல்களின் சிறந்த பொருள்களையும், விளக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக் கின்றார். அய்யர் அவர்களின் பதிப்பால் குறுந்தொகை முன்னிருந்ததைவிடப் பன்மடங்கு மதிப்பைப் பெற்றுவிட்டது. அவர் எழுதியுள்ள ஆராய்ச்சி முன்னுரை அருமையானது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஒரு சிறு நாடகக் காட்சி போல் இருக்கும். ஒவ்வொரு பாடலைக் கொண்டும் ஒரு காட்சி நடத்திக்காட்டலாம். பெயர் சொல்லப்படாத தலைவன், தலைவி, தோழி ஆகியவர்களே அந்தக் காட்சிகளில் தோன்றும் முதல் நடிகர்கள் தலைவனும் தலைவியுமே கதாநாயகர்கள். நற்றாய், செவிலித் தாய், பாணன், பாங்கன், வழிப்போக்கர் போன்ற ஏனைய நடிகர்களை யும் அக்காட்சிகளிலே காணலாம். இப்பாடல்களில் வரும் காட்சிகள் எல்லாம் காதற் காட்சிகள் தாம். இக்காட்சிகளிலே எல்லாச் சுவைகளையும் கண்டு களிக்கலாம். “இலக்கிய நிலையம்” சென்னை-94 சாமி.சிதம்பரனார் பதிப்புரை திருமதி. சாமி சிதம்பரனார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் சங்கத்தமிழ் இலக்கிய உலகத்துள் நுழைந்து சங்ககாலத் தமிழ் மக்களின் சிறந்த வாழ்க்கை நெறிகளை ஆராய்ந்து, அறிந்து, தேர்ந்து எடுத்துத் தமக்கே உரிய இனிய, எளிய நடையில் நம் தமிழ்ப் பெருமக்களுக்கு அழகுடன், அன்புடன் அளித்துள்ள பெருஞ்செல்வமாகும்; குறுந்தொகைப் பெருஞ்செல்வம். இருநூற்று ஐந்து (205) புலவர் பெருமக்களால் ஆக்கப் பட்ட 400 பாடல்களும், கடவுள் வாழ்த்துப்பாடலுடன் 401 பாடல்கள் கொண்டது குறுந்தொகை என்பர்-குறுந்தொகைப் பெருஞ்செல்வம். சாமி. சிதம்பரனார் அவர்கள் சங்க இலக்கியப் பாடல்களின் ஒவ்வொன்றின் உள்ளும் நுழைந்து தேடித் தேடி எடுத்துச் சுவைத்துப் படித்துத் தாம் பெற்ற இன்பம் இவ்வையக மக்கள் பெறவேண்டும் என்ற ஆசையுடன், பாடல்களிற் காணும் சங்ககால மக்களின் வாழ்க்கை நீதிநெறி முறைகளை; இயற்கைக் காட்சிகளை வருணிக்கும் சிறப்புகளை; வாழ்க்கை நலன்கள், நட்பின் சிறப்பு முதலிய பல சிறப்புகளைக் கண்டு எடுத்து முதலில் தம் சொந்தக் கருத்தை; மக்கள் பாடலில் தாம் கண்ட கருத்தை, மக்கள் அனைவருக்கும் புரியும்நடையில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பிறகு பாட்டும் பாட்டை எழுதிய நல்லிசைப் புலவர் பெயரும்கூறி; சங்கச்செய்யுளிற்கு எளிமையான பதவுரையும், கருத்தும், விளக்கமும் கொடுத்து எழுதியுள்ளார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றை நாம் சங்ககாலத் தமிழ் இலக்கியத்தில் காண்கிறோம். “குறுந்தொகைப் பெருஞ்செல்வம்” சாமி. சிதம்பரனார் அவர்கள் எழுதி வந்த தொடர் கட்டுரைகள். சிங்கப்பூர் “தமிழ் முரசு” நாளேட்டில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று திரு. கோ. சாரங்கபாணி அவர்கள் “தமிழ் முரசு” தினமலர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அந்த நாளேட்டில் சாமி. சிதம்பரனார் அவர்கள் 1949 ஆம் ஆண்டு முதல்; வாரத்தில் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும், திங்கள் கிழமையும் சங்ககாலப் பல பழம்பெரும் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து விரிவுரையாக - ஆராய்ச்சிக் கட்டுரைகளாக அமைத்துத் தம் இறுதிக் காலம் 1961ஆம் ஆண்டு வரையில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். “தமிழ் முரசு” பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த ஆராய்ச்சி அருந்தமிழ்க் கட்டுரைகள் ‘புகழேந்தியின் புலமை’ பழமொழி நானூறு, நாலடியார், தமிழ் இலக்கியத்தில் காதல் காட்சிகள், குறுந்தொகைப் பெருஞ் செல்வம், நற்றிணைக் காட்சிகள், என்றும் “அருள் நெறித் தொடர்” என்ற வரிசையில் மெய் கண்டான் என்ற தம் புனைப் பெயரில் ஆழ்வார்கள் அருள்மொழி. தேவாரத் திருமொழிகள், சங்கப்புலவர் சன்மார்க் கம், மணிவாசகர்-மூவர் மணிமொழிகள், அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள், பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை என்ற தலைப்புகளில் தமிழகத்தின் சமயக் குரவர்களின் கவிதைகளில் காணக்கிடைக்கும் சிறந்த கருத்துகளாகிய மக்களிடம் அன்பு, உயிர்களிடம் கருணை, சாதி, மத, வேற்றுமைகள் அற்ற நீதிமுறைகள், எல்லோர்க்கும் நல்வாழ்வு என்ற உயர்ந்த கருத்துகளை ஆராய்ந்து; சாமி.சிதம்பரனார் அவர்களின் உழைப்பால் உருவான ஆராய்ச்சிக் கட்டுரைகள் “சிங்கப்பூர் தமிழ்முரசு” இதழில் வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருந்தன. அதில், “குறுந்தொகைப் பெருஞ்செல்வம்’, தொடர் கட்டுரைகள் 10-4-1955 முதல் 20-7-1958 வரையில் “சிங்கப்பூர் தமிழ் முரசு” நாளேட்டில் வெளிவந்த கட்டுரைகள். 33 திங்கள் கடுமையாக உழைத்துத் தேர்ந்தெடுத்து - தெளிந்த தேனினும் இனிய பெருஞ்செல்வமாகத் தமிழ் மக்களுக்கு இலக்கிய விருந்து அளித்துள்ளார்கள் சாமி.சிதம்பரனார் அவர்கள். அந்தச் செல்வத்தை நூல் வடிவில் அமைத்து மக்கள் அனைவருக்கும் மகிழ்ந்து அளிக்க முன்வந்துள்ளேன். வேண்டுவது வாசக அன்பர்களின் ஆதரவு, 10-4-1955 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளேட்டின் பாராட்டு......... “பழந்தமிழ்ப் பாவலர்களின் கற்பனைஊற்றுகள் தேங்கித் தேங்கிக் கிடக்கும் சங்க இலக்கியங்களை எளியவும் இனியவுமான வகையில் தொடர்ந்து வாசகர்களுக்கு அளித்துக் கொண்டு வந்த திரு. சாமிசிதம்பரனாரின் சான்றாண்மைச் சொற்கள் குறுந்தொகைப் பெருஞ்செல்வம்” என்ற தொடரில் இவ்வாரம் தொட்டு ஞாயிறு தோறும் வாசகர்களின் கையும் கருத்தும் நிறையவரும். இப்படிக்கு ஆசிரியர் “தமிழ் முரசு” அருள் நெறித்தொடர் வரிசையில் வெளிவந்த கட்டுரை களில் பல கட்டுரைகள் தமிழ் ஆர்வமிக்க அன்பர்களின் வேண்டு கோளுக்கிணங்கி என் துணைவர் காலத்தில் அவர்கள் மேற்பார்வையில் புத்தகமாக வெளிவந்துள்ளன. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் என்ற தலைப்பில் 401 பாடல்களைக் கொண்ட கட்டுரைகளும் நூல்வடிவம் அமைக்க வேண்டும் என்று தமிழன்பர்களின் ஆர்வம் காரணமாகப் பதிப்பிக்க முனைந்தேன். ஆனால் நிதி நிலைமை இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழக அரசு- தமிழ் வளர்ச்சி இயக்கம் சிறந்த நூலுக்குப் பதிப்பிக்க நிதி உதவி அளித்து வருவது அறிந்து குறுந்தொகைப் பெருஞ்செல்வம் கைஎழுத்துபடிகளைத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பினேன். தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களும், சாமி.சிதம்பரனார் எழுதிய குறுந்தொகைப் பெருஞ்செல்வம் சிறந்த ஆராய்ச்சி நூல்என்று முடிவெடுத்துப் பதிப்பிப்பதற்கு நிதிஉதவியாக ரூ.5000 அளித்து உதவியது. மகிழ்வுடன் முதல் தவணை பெற்று நூல் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினேன். தவிர்க்க முடியாத பல இடையூறுகளினால் எதிர்பார்த்ததைவிட அதிகக் கால தாமதம் இப்பதிப்புக்கு ஏற்பட்டுவிட்டது. தமிழக அரசுக்கும்; தமிழ் வளர்ச்சி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் திரு.மா.நன்னன் அவர்களுக்கும் இயக்கத்தின் அலுவலர் களுக்கும் தமிழ் ஆராய்ச்சிக் குழு வல்லுநர் களுக்கும் என் நன்றி; வணக்கங்கள். பேரன்புமிக்க பேராசிரியர் திரு.‘சிலம்பொலி’ சி.செல்லப்பன் எம், ஏ.பி, டி; பி, எல். தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள்; சங்க இலக்கியங்களில் பேரார்வம் உள்ளவர்கள். அவர்கள் கருத்துக் கருவூலம் மிக்க ஆய்வுரையாகத் திகழும் நீண்ட “அணிந்துரை” தந்து “குறுந்தொகைப் பெருஞ்செல்வம்” மேலும் சிறப்புச் சேர்த்துள்ளது, கண்டு மகிழ்சியோடு என் நன்றி வணக்கங்கள். குறுந்தொகைப் பெருஞ்செல்வம் மிகச் சிறந்த நூலாகச் சிறந்த முறையில் பதிப்பிக்கத் துணைபுரிந்த பேரறிஞர், பெருந்தகை பேராசிரியர் டாக்டர் திரு.சி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மேற்பார்வையில் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலுக்குத் தனிப் பெருஞ்சிறப்பாக அமைந்துள்ளது என்பதைப் பெரும் மகிழ்வுடன் அவருக்கு என் அன்பான நன்றி வணக்கங்கள் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந் நூலுக்கு “அணிந்துரைகள்” பாராட்டுரைகள் வழங்கிய தமிழ்ப் பேரறிஞர்கள்; சாமி. சிதம்பரனார் அவர்களின் சங்க காலத்துத் தமிழ்நூல்கள் ஆராய்ச்சி முறைகளைப் பாராட்டிப் புகழ்ந்துள்ள சிறப்பு கண்டு நான் பெரிதும் மகிழ்கின்றேன். என் நன்றியும் வணக்கங்களும் என்றும் உரியன. இந்நூலில் அச்சிட்ட முதல் 5 படிகளில் கண்ட அச்சுப் பிழைகளை எமக்குச் சுட்டிக்காட்டி; நூலில் பிழைத்திருத்தம் செய்ய அன்புடன் அளித்த பேராசிரியர் டாக்டர் திரு மா.நன்னன் அவர்களைப் பாராட்டி மகிழ்ந்து நன்றியுடன் வணங்குகின்றேன். என் கணவர் காலத்தில் இந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருந்தால் பல முழுத் திருத்தங்கள் பெற்றுச் சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டிருக்கும். தமிழ்ப் பேரறிஞர்களின் அருமையான பாராட்டுகளையும், புகழ்ச்சிகளையும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். குறுந்தொகைப் பெருஞ்செல்வம் ஆய்வுக் கட்டுரை “தமிழ் முரசு” மலருக்கு எழுதி அனுப்பும் போது பாட்டின் தலைப்புக்குத் தக்க கருத்துள்ள படமும் உடன் வரைந்து அனுப்புவார்கள். தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்த படங்களுடன் நூல் பதிப் பிக்கப்பட முடியவில்லை. மேலும் சில பாடல்கள் விடுபட்டுள்ளன. காரணம் கட்டுரை வெளிவந்த “தமிழ் முரசு” பத்திரிகை கிடைக்கவில்லை. பதிப்பிக்க அதிக காலம் ஆனாலும் “நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ்” அதிபர் திரு.கவிஞர் நாராநாச்சியப்பன் அவர்கள் மிகவும் சிறந்த முறையில் பொறுப்புடன் பதிப்பித்துச் சிறப்புச் செய்தார்கள். அவர்களுக்கும் அச்சக அலுவலர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி; வணக்கங்கள் என்றும் உரியன. இலக்கிய நிலையம் அன்புடன் சென்னை-94 சிவகாமி.சிதம்பரனார் 19-7-1983 அணிந்துரை (பேராசிரியர் டாக்டர் மா.நன்னன், எம்.ஏ., பிஎச்.டி.) தமிழறிஞர் சாமி சிதம்பரனார், “தமிழர் தலைவர்” எனும் பெயரில், பகுத்தறிவுப் பகலவன். தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியதன் மூலம் சிறந்த நூலாசிரியராகத் திகழ்கிறார். அந்நூலை எழுதியதன் மூலம் சாமி சிதம்பரனார் தமிழகத்தில் தம் புகழை என்றும் நிலைக்கும் வண்ணம் நிறுவி இருக்கிறார். அது தவிர அவர் செய்துள்ள பிற பணிகளும் சிறப்புடையனவே. சிறப்பான அப்பணிகளுள் அவர் முயற்சியால் உருவாகி அவர்தம் அருமைத் துணைவியார் திருமதி சிவகாமி சிதம்பரனார் அவர்களின் தொடர்ந்த முயற்சியால் வெளிவரும் “குறுந்தொகைச் செல்வம்” என்னும் நூற் பணியும் ஒன்றாகும். தலைவனுக்கு ஏற்ற தலைவியாகத் தம் தலைவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து முடிக்கும் அம்மையாரின் செயல் மெய்யாகவே பாராட்டுக் குரியதாகும். அக இலக்கியங்களைப் பயில்வோர் பெரும்பாலும் காதல் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காகவோ, அவற்றைச் சுவைப் பதற்காகவோ மட்டுமே அவற்றைப் பயன் படுத்திக்கொள்வது வழக்கம். “மலரினும் மெல்லிது காமம்; சிலரதன் செவ்வி தலைப்படு வார்” (குறள் 1289) என்னும் வள்ளுவர் வாக்கால் காதல் உணர்வின் மென்மையையும்; அதனைப் பெறுவோர் (வள்ளுவர் காலத்திலேயே) சிலர் என்பதையும் அறிகிறோம். இக்காலத்தில் அவ்வுணர்வைத் தலைப்படுவோர் அரியரினும் அரியராகவே இருக்கக் கூடும். ஏனெனில் இன்றைய கதை, நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் காதல் பெரும்பாலும் ஒரு புறப்பொருள் போலவே கையாளப் படுகிறது. இன்றைய பாவலர் பலரும் அதன் நுட்பத்தை முழுமையாக அறிந்து பாடுவதாகவும் கூற முடியவில்லை. ஆகவே இவற்றின் துணைகொண்டு காதல் உணர்வை விளங்கிக் கொள்கிற வர்கள் உண்மையில் வள்ளுவர் சுட்டும் இலக்கை அடையவே முடியாது. ஆகவே அவ்வுணர்வைச் செவ்விதின் உணர்த்த வல்ல சங்க இலக்கியக் கல்வி இக்காலத்திற்கு இன்றியமையாத் தேவையா கிறது. அத்தேவையை அவற்றைப் பதிப்பித்து வெளியிடுவதன்மூலம் மட்டுமே எட்டிவிட முடியாது. மக்கள் அவ்விலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் உணர்வுகளை முழுமையாகவும், சரியாகவும் பெற வேண்டும். அதற்குச் சாமி சிதம்பரனாரின் இப்பதிப்பு நல்ல துணையாகும் என்று கருதுகிறேன். சங்க இலக்கியங்களில் உள்ள அகப்பாடல் களைச் சரியாகப் பயில்வதால் மக்களின் உணர்வுகள் பதப்படும். உள்ளத்தைப் பக்குவப் படுத்துவதில் அகப்பாடல் களுக்குத் தனிப் பங்குண்டு. ஆதலின் அகப்பாடல்களைப் பயில்வதால் ஏற்படும் பயன்களில் மாந்தர்தம் உள்ளமும், உணர்வுகளும் பதப்படுதலும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இப்பயன்களையெல்லாம் இந்நூலைப் பயில்வோர் அனைவரும் பெறும்வண்ணம் இப்பதிப்பு அமைந்திருக்கிறது. பாடல்களை அறிமுகப்படுத்தும் பான்மையும், பாடலாசிரியர், பாடற் பொருள், சூழ்நிலை ஆகியவற்றை முறையாகச் சுட்டிப் பாடலைச் சந்திபிரித்து எளிமையாக்கித் தந்து பதவுரை, கருத்துரை, விளக்கம் போன்றவற்றை அமைத்திருக்கும் சீர்மையும் இப்பதிப்பைப் பாராட்டுக்குரியதாக்குகின்றன. இதன் அமைப்பு, எளிமை, நயம், முழுமை, நடுவுநிலை ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. நடுவு நிலைமைக்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சுட்டலாம். அது “கொங்குதோர் வாழ்க்கை” என்னும் பாடலில் அதன் புராணக் கருத்தையும் எடுத்துக்காட்டித் தம் பகுத்தறிவுக் கொள்கைக்கேற்ற விளக்கத்தையும் தந்திருப்பதைக் குறிப்பிடலாம். இந்நூலின் கடவுள் வாழ்த்துக்கு இவர்தரும் விளக்கமும் 7,8,10, 11, 12 ஆகிய பக்கங்களில் காணப்படும் விளக்கங்களும் இப்பதிப்பின் சிறப்புக்குரிய வேறு சில எடுத்துக்காட்டுகளாம். இந்நூலைப் பதிப்பிக்கும் போது அரிய இப் பதிப்புக்கு ஏற்ற எல்லா முயற்சிகளையும் பதிப்பாசிரியர் மேற்கொண்டிருந்தும், அவருடைய ஆக்கதிறன் வாய்ந்த ஊக்கத்தையும் மீறிப் பல குறைகள் காணப்படுவதை இங்குச் சுட்டாமல் இருக்க முடிய வில்லை. நிறுத்தக்குறிப் பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றன வேயன்றி வேறு சில பிழைகளும் இப்பதிப்பில் காணப்படுகின்றன. பல இடங்களில் எழுவாய் இல்லாத தொடர்கள் காணப்படுகின்றன. மற்றும் ஒருமை, பன்மை போன்ற பிழைகளுக்கும் குறைவில்லை. “பாட்டின் பொருள்” என்றுள்ள தலைப்பு (ஒரே பாடலுக்கு 5,6 ஆகிய இரண்டு பக்கங்களிலும் இருமுறை காணப்படுகிறது. ‘பாடிய புலவர்’ போன்ற விளக்கங் கள் சில பாடல்களில் தொடக்கத்திலும் வேறு சில பாடல்களில் வேறு இடங்களிலும் இடம் பெறுகின்றன; இவை ஒரே சீராக அமைக்கப்பட்டு இருப்பின் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். மூன்றாம் பாட்டில் ‘கருங்கோல் குறிஞ்சி’ என்று இருக்கிறது. ஆனால் பதவுரையில் ‘கருங்கோட் குறிஞ்சி’ என்று காணப்படுகிறது. ஆறாவது பாட்டில் ‘துஞ்சாதேனே’ என்று இருக்க வேண்டும். ஆனால் அது துஞ்சாதானே’ என்று இருக்கிறது. அதேபோல் 7-ஆம் பாட்டில் ‘வில்லோன்’ என்பது ‘வில்லேன்’ என்றும், ‘யார்கொல்’ என்பது ‘யார்சொல்’ என்றும் அமைந்து இருக்கின்றன. இப்படி மூல பாடத்திலேயே பல பிழைகள் காணப்படுவதோடு உரைப் பகுதியிலும் பல பெயர்கள் பிழைபடக் குறிக்கப்பட்டுள்ளன. சான்றாகப் பக்கம் 54இல் ‘எவ்வி’ என்பவன் பெயர் ‘எல்லி’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். இவை தவிர மற்றொரு பிழையையும் வருத்தத்தோடு சுட்டிக்காட்டுவது என் கடமையா கிறது. பக்கம் 58இல் காணப்படும் 21 ஆம் பாட்டின் தலைப்பு “பொய்யா மொழி புகலமாட்டார்” என்று இருக்கிறது உண்மையில் அது “பொய் மொழி புகலமாட்டார்” என்று இருக்க வேண்டும். இப்படி நேர்மாறான பொருளைத் தரும் தலைப்பு அமைந்து இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இவைகளையெல்லாம் பிழைதிருத்தம் ஒன்றை இணைப்பாகச் சேர்த்துக் களையலாம். அது கூடாதாயின் அடுத்த பதிப்பிலேனும் களைந்து அவ்வரிய முயற்சியைக் குறையற்றதாக ஆக்குவது பதிப்பாசிரியரின் கடமையென்று கருதுகிறேன். 27-5-83 மா.நன்னன் அணிந்துரை டாக்டர். ச. வே. சுப்பிரமணியன் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உயர்திரு தமிழறிஞர் சாமி சிதம்பரனார் பல நல்ல தமிழ் நூல்களைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சிலப்பதிகாரத் தமிழகம், மணி மேகலை காட்டும் மனித வாழ்வு, கம்பன் கண்ட தமிழகம் போன்ற பல நல்ல நூல்களின் வழித் தமிழ் இலக்கிய உலகை யாவரும் எளிதில் உணரும் வண்ணம் காட்டியவர். அன்னாரின் தமிழ்த்தொண்டு பாராட்டத் தக்கது. பழங்காலத் தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகிற்கு உணர்த்துவது மிகத் தேவையானதொன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் எவ்வாறு வாழ்ந்தனர். அவர்களுடைய பண்பு, ஒழுக்கம், கடமையுணர்வு போன்றவை எவ்வாறு இருந்தன என்பதை யெல்லாம் தெரிந்துகொள்வதற்குப் பழங்கால இலக்கியங்கள் நமக்குத் துணைபுரிகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் ‘நல்ல குறுந்தொகை’ என்ப தொன்று. குறுந்தொகைப் பாடல்கள் இன்புறத்தக்கன; மீண்டும் மீண்டும் படித்துப் பயன்பெறத்தக்கன. அவற்றுள் ஒரு இனிய பாடல்:- ஒரு காதலி தன்னுடைய காதலன் பெருமையைத் தன் தோழியிடம் பேசுவதாக அமைகிறது. அவன் காதல் எத்தகையது என்பதைப் பெருமிதத்துடன் கூறுவது அப்பாடல். அந்தக் காதலன் காதலிக்குரிய அன்பு நிலத்தினும் பெரிது, வானைக்காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. இந்த மூன்று செய்திகளையும் அன்றே கூறியுள்ளான் கவிஞன். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது அப்பாடல். இதைக் காட்டிலும் சிறப்பாகக் காதலின் பெருமையை உணர்த்த இயலும் என்று தோன்றவில்லை. இது போன்ற பல சுவை மிக்க பாடல்களுண்டு. பல பதிப்புகளில் குறுந்தொகை வந்திருந்தாலும் ஓரளவு படித்தவர்கள் மிகுதியாகத் தெரிந்துகொள்வதற்கும், மற்றவர்களும் அதைப்படித்து அறிந்து அனுபவித்து மகிழ்வதற்கும் தமிழறிஞர் சாமி சிதம்பரனார் அவர்களின் ‘குறுந்தொகைப் பெருஞ் செல்வம்’ என்ற நூல் ஏற்புடைத்தாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் பாடலின் முக்கியப் பகுதியாகிய கருத்தை அந்தப் பாடல் தலைப்பாகத் தந்துள்ளமை பாராட்டத் தக்கது. அதற்குப் பின்பு அந்தப் பாடலைப் பொதுநிலையில் யார் பாடியது? எந்தத் திணையைச் சார்ந்தது? என்பவற்றை விளக்கி, பாடலை அறிமுகப்படுத்துவதற்கு முன்னோடியாகப் பாடலுக்கு முன்னுரை ஒன்றைத் தருகின்றார். பின்பு பாட்டின் பொருளைத் தெளிவாகச் சொல்லி அதற்கு அடுத்தாற்போன்று பாட்டினையும் தருகின்றார். அடுத்து ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைத் தெளிவுபடுத்தும் நிலையில் பதவுரை என்ற பகுதி அமைகிறது. பாடலின் பொதுக் கருத்தையும் கருத்து என்ற தலைப்பில் தருகிறார். பின்பு விளக்கம் என்பதில் இன்னும் தெளிவுபடாதவைகளுக்கு விளக்கம் தருகின்றார். இலக்கணக் குறிப்புகளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சில வாக்கிய அமைப்புகளின் அடிப் படைகளையும் அவர் எடுத்துக்காட்டுகின்றார். குறுந்தொகைக் குரிய விளக்க உரையாகவும் தெளிவுரையாகவும் அமைகின்ற இந்த நூலில், ஆற்றொழுக்கு நடையில் எளிய இனிய சொற்களில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. சிறு சிறு வாக்கியங்களாக, திரு.வி.க நடையைப் போன்று அழகும் அமைதியும் கலந்த தமிழ் நடையாகக் ‘குறுந்தொகைப் பெருஞ் செல்வம்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது. பழந்தமிழர், வாழ்வை நன்கு உணர்ந்து அனுபவித்து வாழ்ந்தனர். தற்காலத்தில் அந்த நிலை இல்லாமையால்தான் சமுதாயம் தாழ்வாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. தமிழர் இயற்கையை மட்டும் தெளிவாகத் தெரிந்தவர்கள் என்பதோடல்லா மல் அதனுடன் இணைந்து வாழ்ந்தனர் என்பதை இந்தக் ‘குறுந்தொகைப் பெருஞ் செல்வத்தின்’ வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். தமிழறிஞர் சாமி சிதம்பரனார் அவர்களின் பல்லாண்டு முயற்சியால் விளைந்த இந்த நூல் போற்றிப் பாராட்டத்தக்க நிலையில் அமைந்துள்ளது. தமிழர் அனைவரும் இந்த நூலை விலைக்கு வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அவருடைய தமிழ்த்தொண்டு தமிழ் இருக்கும்வரை இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. பிற சங்க நூல்களுக்கும் இத்தகையதோர் நூல் வெளிவரின் தமிழுலகம் பெரிதும் பயனடையும். அன்புள்ள ச.வே. சுப்பிரமணியன் அணிந்துரை டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் ஏம்.ஏ. எம்.லிட். பிஎச். டி. பேராசிரியர்-தலைவர்: தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக இணைவகம் சென்னை-600 005 எட்டுத்தொகை நூல்களில் ‘நல்ல குறுந்தொகை’ என நலமுறப் பாராட்டப் பெறுவது குறுந்தொகையாகும். சங்கத் தமிழ் நூல்களிலேயே எளிமையும், இனிமையும் வாய்ந்த சிறந்த பாடல்களைக் கொண்டது குறுந்தொகையே எனலாம். சங்க காலம் பொற்காலம் எனப் போற்றப்பெற்றால் அப்பொற்காலத்தை நன்முறையிற் பிரதிபலிக்கும் நூலாகக் குறுந்தொகையைக் கொள்ளலாம். குறுந்தொகையே பிற்காலப் புலவர்கள் மிகப் பலரால் பெரிதும் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் முதன் முதலாகத் தொகுக்கப்பெற்றுள்ள நூல் குறுந்தொகையேயாகும். இத்தகைய சிறந்த சங்க நூலிற்குத் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் உரையெழுதிக் குறுந்தொகையினைச் சிறந்த முறையிற் பதிப்பித்துள்ளார். அந்நூல் கற்றோர்க்கு விருந்தாக அமைவதாகும். எளிய கல்வி கற்றோரும், சங்க இலக்கியத்தைச் சுவைக்கும் போக்கில் எழுந்த நூல் மதிப்பிற்குரிய தமிழ்ச் சான்றோர் சாமி சிதம்பரனார் அவர்களின் குறுந்தொகை விளக்கம் ஆகும். மலாயா நாட்டுப் பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வெளிவந்த இந்நூல் அரிய கருத்துகளையெல்லாம் எளிதில் விளக்கும் போக்கில் அமைந்துள்ளது. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைவது ‘தாமரை புரையும் காமர் சேவடி’ எனத் தொடங்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடலாகும். இதற்கு முன்னுரையாகச் சாமி சிதம்பரனார் எழுதும் கருத்தே அவர் நடுவுநிலை சான்ற நன்னெஞ்சினைப் புலப்படுத்தும். சான்றாக, “பண்டைப் புலவர்கள் கடவுள் வாழ்த்துடன் கவிதை புனையத் தொடங்கவில்லை; ஆதலால் அவர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் செய்திருக்கும் பாடல்களிலே கடவுள் பற்றிய செய்திகள், குறிப்புகள் காணப்படு கின்றன. அவர்கள் தமது முயற்சியிலே - தமது புலமையிலே - தமது திறமையிலே - நம்பிக்கை யுள்ளவர்கள். ஆதலால் கடவுளைப் பற்றிக் கவலைப் படாமலே தமது வினைகளை விரைந்து செய்தனர் என்றுதான் எண்ண வேண்டும்.” என்னும் பகுதியைக் குறிப்பிடலாம். இதேபோல் முதற்பாட்டின் கருத்தாக- திரண்ட பிழிவாக அவர் உணர்த்தும் கருத்து வருமாறு: “காந்தள் மலர் எனக்குக் கிடைக்காத அரும்பொருள் அன்று. கிடைத்தற்கரிய பொருளைக் கொடுப்பதே ஒருவரை மகிழ்வூட்டும் வழி” ஒவ்வொரு பாட்டிற்கும் அவர் அமைக்கும் தொடர்கள் பாட்டை இனங்கண்டு கொள்ளக் கூடிய முறையில் சிறப்பாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஆண்மை தந்த அல்லல் (பாட்டு:43 ) யான் இங்கே; என் நலன் அங்கே (,, 54 ) காதலுக்குக் கண்ணில்லை (,, 78 ) நயமுடன் நவிலுதல் (,, 109 ) தேடித்தருவேன் திகைக்காதே (,, 130 ) மற்றொருவர் மணக்க வந்தால் (,, 208 ) மலைக்காட்சியால் மனத்துயர் நீங்கினேன் (,, 249 ) மழைக்கால மாலைப் பொழுது (,, 319 ) பொய்யென்று நினைத்தேன், போ என்றேன் (,, 325 ) அவளும் வந்தால் அல்லல் இல்லை (,, 347 ) உன் அன்பால்தான் உயிர்வாழ்கின்றாள் (,, 397 ) பாடல்களுக்கு எவ்வளவு அருமையாக விளக்கம் எழுதி யுள்ளார் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒரு பாட்டின் விளக்கம் வருமாறு; பாட்டும் அதன் கீழ் விளக்கமும் தரப்படு கிறது: பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலையே; நீர்பரந்து ஒழுகலின் நிலம் காணலையே; எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று; பல்போர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ! ஓங்கல் வெற்ப வேங்கை கமழும் எம் சிறுகுடி யாங்கு அறிந்தனையோ; நோகோ யானே. உரைவருமாறு: “உயர்ந்த மலையையுடைய தலைவனே! விடாத மழை; வானத்தையே மறைத்துக் கொண்டது. அதனால் வானத்தையும் வானத்தின் கண் மின்னும் மீன்களையும் உன்னால் பார்க்க முடியவில்லை. மழை நீர் எங்கும் வெள்ளமாகிப் பெருகிப் பரந்தோடுகின்றது. ஆதலால் நிலத்தைக் காணமுடியாமையால் நடக்கும் வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. கதிரவன் மறைந்ததால் இருள் மிகுந்தது. எம் அன்னையர் மட்டும் அன்று; ஊரினர் பலரும் படுத்துறங்குகின்றனர். இந்த நள்ளிரவிலே நீ எப்படித்தான் வந்தனையோ? வேங்கைமரங்கள் பூத்து மணம் கமழும் எங்கள் சிற்றூரை இந்த நிலையில் எப்படித்தான் கண்டறிந் தனையோ? உனக்கு நேர்ந்த துன்பத்திற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்.” சிலவிடங்களில் ஆசிரியர் எழுதும் ஆய்வு நோக்கும் இந் நூலின் சிறப்பினை மேலும் மிகுவிக்கின்றது. “பாலை நிலத்திலே மக்கள் வழி நடைப் பாதையிலே வழிச் செல்வோர்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு நெல்லி மரங்கள் வைத்து வளர்ப்பர். இது ஒரு அறமாகும். இவ்வறத்தைப் பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்தனர் என்று இச் செய்யுளால் (பாட்டு: 209) தெரிகின்றது.” சொற்களுக்குப் பொருள் காண்பதிலும் இவர் நுண்மாண் நுழை புலம் விளங்குகின்றது. சான்று வருமாறு. “குற்று- பறித்து; தொடலை- மாலை; தைஇ- தொடுத்து இ-உயிர் அளபெடை; பால்நாள்-பகுதிநாள்; நடுநாள்; நள்ளிரவு. உழை-இடம்; வருந்தித் தொடுத்த மலர் மாலையால் கிளிகளை ஓட்டுவது பேதைத்தன்மையைக் காட்டும். பேதை- அறியாதவள் (பக்கம்: 346) இவ்விளக்கவுரை ஆசிரியர் அமரர் சாமி சிதம்பரனார், இக்குறுந்தொகைப் பெருஞ் செல்வத்தின் ‘மூலம் தமிழர் கூறு நல்லுலகிற்கு நிலைத்ததொரு தமிழ்த்தொண்டினை ஆற்றி யுள்ளார் எனலாம். அவர்தம் நினைவைப் போற்றும் வகையில் இந் நூலினை வெளிக்கொணரும் திருமதி சிவகாமி சிதம்பரனார் அவர்களை நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். சென்னை-5 8-8-83 சி. பாலசுப்பிரமணியன் அணிந்துரை சிலம்பொலி சு. செல்லப்பன் எம்.ஏ., பி.டி. பி. எல்., இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம் எட்டுத்தொகை பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்கநூல்கள், பலரால் பாடப்பட்ட பாடல்களைத் தொகுத்தமைத்தது தொகை நூல். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரி பாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்கள். பின்வரும் வெண்பா இதனை உணர்த்தும். நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை. இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியவை. இவ்வைந்தனுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய மூன்றும் அடிவரையறை கொண்டு தொகுக்கப்பட்டவை. நான்கு முதல் எட்டு அடிப் பாடல்கள் கொண்டது குறுந்தொகை. (307, 391 இவ்விரண்டு பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டுள்ளன). ஒன்பது முதல் பன்னிரெண்டு அடிகள் கொண்ட தொகுப்பு நற்றிணை. அகநானூற்றில் பதின்மூன்று முதல் முப்பத்தொரு அடிகள் கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறுந்தொகை நாவலர்களால் ‘நல்ல’ எனும் அடைமொழியோடு அழைக்கப்படும் சிறப்பைப் பெற்றது குறுந்தொகை. இதில் 205 புலவர்கள் பாடியுள்ள 401 பாடல்கள் உள்ளன. (ஆசிரியர் எண்ணிக்கையில் வேறுபாடுகள் சொல்வதுண்டு). சில பாடல் களை இயற்றிய புலவர்கள் பெயர்கள் தெரியவில்லை.1 வேறு சில பாடல்களை எழுதிய புலவர்களின் இயற்பெயர் தெரியவில்லை; அப் பாடல்களில் உள்ள சிறந்த தொடராலேயே அவர்கள் அழைக் கப்படுகின்றனர். காட்டு யானை ஒன்று வளர்ந்துள்ள இளம் மூங்கிலைத் தன் கையால் வளைத்து அதன் குருத்தைத் தின்ன முயல்கிறது. அது வேளை அங்குத் தினைப்புனம் காவல் செய்வோர் கவண் கல்லை வீசுகின்றனர். புதிய அவ்வொலி கேட்ட யானை பயந்து தான் வளைத்திருந்த மூங்கிலை விட்டுவிடுகின்றது. வளைந்த மூங்கில் ‘விசுக்’ கென மேலேறிய காட்சி மீன் பிடிப் பவன் மீன் சிக்கியவுடன் தூண்டிலை விரைந்து மேலே தூக்கியது போன்றிருந்தது என்பதைப் புலவர் ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீன்எறி தூண்டிலின் நிவக்கும்... (குறுந். 54) எனப் பாடியுள்ளார். இவர் பெயர் தெரியவில்லை. மீனெறி தூண்டிலை உவமையாக்கிக் கூறியமையால் இவர் மீனெறி தூண்டிலார் என்றே அழைக்கப்படுகிறார். இவ்வாறு தொடராட் சியால் இத்தொகுப்பில் பெயர் பெற்றுள்ள புலவர்கள் வருமாறு: 1.அணிலாடு முன்றிலார்( பா.எ:41). 2.ஓரிற் பிச்சையார் (277). 3.கங்குல் வெள்ளத்தார் (387). 4.கல்பொரு சிறு நுரையார் (290). 5.கயமனார் (9) 6.கவை மகன் (324). 7.கள்ளிலாத் திரையன் (293). 8.காலறி கடிகையார் (267). 9.குப்பைக் கோழியார் (305). 10.குறியிறையார் (394). 11.செம்புலப்பெயர்நீரார் (40). 12.தும்பிசேர் கீரனார் (61). 13.நெடுவெண்ணிலவினார் (47). 14.பதடி வைகலார் (323). 15.மீனெறி தூண்டிலார் (54). 16.விட்ட குதிரையார் (74). 17.வில்லக விரலினார் (370). குறுந்தொகை உரைகள் தொகை நூல்களுள் முதலாகத் தொகுக்கப்பட்டது குறுந் தொகையே என்பர். நூலின், இறுதியில் இத்தொகை முடித்தான் பூரிக்கோ’ என்னும் குறிப்புக் காணப்படுகிறது. பிற நூல்களில் நூலைத் தொகுத்தவரும், தொகுப்பதற்குத் துணை செய்தவரும் தொகுத்தோர், தொகுப்பித்தோர் எனக் குறிக்கப்படுகின்றனர். ‘தொகை முடித்தான்’ எனும் குறிப்பினால் பூரிக்கோ தொகுத் தவரா தொகுப்பித்தவரா என்பது அறியக் கூடவில்லை. இந்நூலில் 20 பாடல்கள் நீங்கலாக ஏனையவற்றிற்குப் பேராசிரியர் உரை யெழுதியுள்ளார். அவரெழுதாத 20 பாடல்களுக்கும் நச்சினார்க் கினியர் உரை வரைந்துள்ளார். இதனை, நல்லறி வுடைய தொல்பேர் ஆசான் கல்வியும் காட்சியுங் காசினி யறியப் பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்(கு) இதுபொருள் என்றவன் எழுதாது ஒழிய இதுபொருள் என்றதற்கு ஏற்ப உரைத்துந் தண்டமிழ் தெரித்த வண்புகழ் மறையோன் எனும் நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம். இவ்விரு உரைகளும் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை. குறுந்தொகையை 1915இல் முதன் முதலில் திரு. சௌரிப் பெருமாள் அரங்கன் என்பார் உரையுடன் அச்சேற்றினார். 1920இல் கா.நமச்சி வாயர் பதிப்பித்தார். திரு. சேஷாசலம் அவர்கள் நடத்தி வந்த `கலா நிலையம்’ இதழில் திரு.இராமரத்னம் குறுந்தொகை உரை எழுதி வந்தார் (1930). டாக்டர் உ.வே.சா. அவர்கள் 1937இல் குறுந்தொகையைப் பதிப்பித்தார்கள். அதே ஆண்டில் திரு. சோ.அருணாசல தேசிகருடைய உரையும் வெளிவந்தது. பெருமழைப் புலவர் சோம சுந்தரனாரின் உரையுடன் சைவ சித்தாந்தக் கழகப் பதிப்பு 1955 இல் வெளியானது. 1957இல் மர்ரே திரு. எஸ். ராஜம் தக்க பதிப்பாசிரியர் குழுவைக் கொண்டு பல ஏடுகளை ஒத்திட்டுக் குறுந்தொகை மூலத்தை மட்டும் வெளியிட்டார். 1958 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ரா.ராகவையங்கார் அவர்கள் குறுந்தொகையின் சில பாடல்களுக்கு எழுதிய உரையைக் ‘குறுந்தொகை விளக்கம்’ என்னும் தலைப்பில் வெளியிட்டது. அதே ஆண்டில் சக்திதாசன் சுப்பிரமணியத்தின் குறுந்தொகை விளக்கமும் வெளி வந்தது. 1965 இல் திரு. புலியூர்க் கேசிகனின் குறுந்தொகைத் தெளிவுரை மலிவுப் பதிப்பாக வெளிவந்தது. டாக்டர் மு.வ., புலவர் கோவிந்தன் போன்ற அறிஞர் பெருமக்கள் பலர் குறுந்தொகைப் பாடல் விளக்கக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்கள். இவ்வரிசையில் இப்போது தமிழறிஞர் சாமி சிதம்பரனார் ‘குறுந்தொகைப் பெருஞ்செல்வம்’ எனும் தலைப்பில் குறுந்தொகைப் பாடல்களுக்கு எழுதியுள்ள தெளிவுரை வெளிவருகிறது. சாமி. சிதம்பரனார் 1961 சனவரி 17இல் இயற்கை எய்தினார். அவர் முன்னரே எழுதி வைத்திருந்த இவ்வுரையை அவரது துணைவியார் திருமதி சிவகாமி சிதம்பரனார் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நிதி உதவியுடன் வெளியிடுகிறார்கள்! உவமைகள் குறுந்தொகையில் உள்ளம்கொள்ளை கொள்ளும் உவமைகள் பல உள்ளன. “பொருத்த மான உவமைகளை எடுத்துக் காட்டுவதில் தமிழ்ப் புலவர்கள் தலைசிறந்தவர்கள். உவமைகளின் மூலம் உண்மைகளை விளக்குதற்கு ஆற்றல் வேண்டும்; அனுபவமும் வேண்டும்; ஆராய்ச்சியும் வேண்டும். இத்தகைய திறமைசாலிகள் உதாரணங்களைத் தேடுவதற்கு அங்குமிங்கும் அலைய மாட்டார்கள். உவமைகள் தாமாகவே அவர்கள் கண் முன்னே வந்து நடமாடும்” எனச் சாமி சிதம்பரனார் குறிப்பிடுகிறார்.1 இயற்கையைத் துருவி ஆராய்ந்து புலவர்கள் தந்துள்ள உவமைகள் தரும் இன்பம் உவமையிலா இன்ப மாகும். இயற்கையை எந்த அளவுக்குக் கூர்ந்து நோக்கியுள்ளனர் என்பதற்குக் கீழ்வரும் உவமைகள் சான்றாம்: 1. காஞ்சி மரத்தின் பூங்கொத்து பயறு போன்றிருக்கும் (பாடல் 10) 2. கரும்பின் அரும்பு கருக்கொண்ட பச்சைப்பாம்பு போன்றிருக்கும் (53) 3. தாழையின் முள் அணிற்பல் போன்றிருக்கும் (49) 4. ஞாழல் மலர் வெண்சிறு கடுகை ஒக்கும் (50) 5. புன்கு மலர் பொறி போன்றிருக்கும் (53) 6. கூம்பிய ஆம்பல் மலர்கள் கொக்கின் முதுகு போல் தோன்றும் (122) 7. கற்களின்மேல் வேங்கை மலர் உதிர்ந்து கிடக்கும் தோற்றம் புலிக்குட்டிகள் படுத்திருப்பன போல் இருக்கும், (47) 8. கற்களின்மேல் காந்தள் மலர் பூத்துக்கிடப்பது செம்புள்ளிகள் நிறைந்த யானையின் முகத்தை ஒக்கும் (284) 9. வாகை மலர்க்கொத்து மயிலின் கொண்டையை ஒத்திருக்கும் (347) 10. பூத்த காயா மரக்கிளை மயிலின் கொண்டையை ஒத் திருக்கும்; (காயாம் பூ நிறம் மயிலின் கழுத்து நிறத்தது) (183) 11. சேம்பின் இலை யானைக் காதை ஒத்திருக்கும் (76) 12. நொச்சி இலை மயிலின் காலடியைப் போன்றிருக்கும் (138) 13. அடும்பின் இலை மானின் அடியைப் போன்றது (243) 14. தாமரை இலை களிற்றின் காதை ஒக்கும் (246) 15. வெளவால் இறகு ஆம்பல் இலையின் அடிப்புறத்தை ஒத்திருக்கும் (352) மகளிர் மாமைக்குப் பாதிரி மலரும் (247), பசப்பிற்குப் பீர்க்கின் மலரும் (98), தேமலுக்குத் தாமரைத் தாதும் (300) உவமைகள் ஆக்கப்பட்டுள்ளன. வீழும் அருவிக்குப் பாம்பின் சட்டையும் (235), அருவி ஒலித்தலுக்கு முரசொலியும் (365), அருவி நீர் கற்களிடையே வளைந்து வளைந்து ஓடுவதற்குப் பாம்பு நிலத்தில் ஊர்தலும் (134). மலையில் படர்ந்துள்ள இற்றியின் வெள்ளை வேர்கட்கு மலையினின்றும் வீழ்கின்ற அருவிநீர் ஒழுக்கும் (106) உவமை களாகத் தரப்பட்டுள்ளன. மகிழ்ச்சிக்குத் திருவிழாக் காலத்து மக்களின் நிலைமையும், துன்பத்திற்குப் பாழடைந்த வீடும் உவமைகளாக வந்துள்ளன (41). குயில் மாம்பூக்களின் நறுமணமுள்ள மகரந்தங்களைக் கோதுகின்ற பொழுது அதன் கரிய இறகிலே மஞ்சள் நிறமுள்ள தாது படிந்திருப்பது பொன்னுறைத்த கல்லைப் போலத் தோன்றுகிறது (192). குறவர்கள் கவலைக் கிழங்கைக் கல்லியெடுத்த குழியில் கொன்றை மலர்கள் பரவிக் கிடப்பது பொன் பொதிந்த பெட்டி திறந்து கிடப்பதுபோல் காணப்படுகிறது (233). வேப்பம் பழங்களைக் கிளிகள் தங்கள் அலகுகளில் கௌவிக் கொண்டு உட்கார்ந்திருப்பது பொற்கொல்லர்கள் தங்கள் கூரிய நகங்களில் பொற்காசைப் பிடித்துக் கொண்டு இருப்பது போலக் காணப்படும் (67). நெருஞ்சியின் மலர் அழகாக இருக்கும். அதுவே முள்ளாக மாறி நாம் அடி வைக்கும்போது சுருக்கென்று தைக்கும். ‘இதைப் போலவே முன்பு நம்மோடு கூடி மகிழ்வு தந்த காதலர் இப்போது பிரிந்து சென்று துன்பம் தருகிறார்’ என்கிறாள் தலைவி. முன்பு இன்பமும் பின்பு துன்பமும் தந்த தலைவனுக்கு முறையே நெருஞ்சியின் மலரும், முள்ளும் உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன (202). இவ்வாறு இன்னும் நூற்றுக்கணக்கான உவமைகளைக் கொண்டு குறுந்தொகை ஓர் உவமைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. வரலாற்றுக் குறிப்புகள் குறுந்தொகைப் பாடல்களில் சில வரலாற்றுக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. சங்க காலத் தமிழ்நாட்டு வரலாற்றை ஆய்பவர்க்கு இது பெரிதும் துணை செய்யும். உரையாசிரியர் இக் குறிப்புகட்குத் தக்க விளக்கங்கள் தந்துள்ளார். அதியமான், ஓரி, ஆய்அண்டிரன், பாரி, மலையன் ஆகிய வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. அதியமான்அஞ்சி தகடூரை ஆண்டவன்; ஓயாது ஈய்பவன்; அவன் பகைவர் நாட்டில் உள்ளார் அச்சத்தால் எப்போதும் துயில் பெறாது வருந்துவர்; அத்தகு போர்வலிமை பெற்றவன் என்பதை ஓவாது ஈயும் மாரி வண்கைக் கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி கொல்முனை இரவூர் போல சிலஆஈ குகநீ துஞ்சும் நாளே! (குறுந். 91) எனும் பாடலால் அறியலாம். ஓரி கடையெழு வள்ளல்களில் ஒருவன்; சிறந்த வில் வீரன்; கொல்லி மலைக்கு உரிமையானவன். அம் மலையின் மேற்புறம் அழகிய கொல்லிப் பாவை இருந்தது என்பதை, வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவை...... (குறுந், 100) என்னும் அடிகளாலும், அவன் வலிய தேரையுடையவன்; அவன் மலையில் உள்ள பூக்களை அளைந்துவரும் காற்று நறுமணம் மிக்கது என்பதை ................திண்தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறிவளி கமழும்........... (குறுந். 199) என்னும் அடிகளாலும் நாம் அறிய முடிகிறது. கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளம் நாறி... (குறுந்.84) என்பதால் ஆய், பொதியமலையின் தலைவன் என்பதையும் அம்மலையில் வேங்கையும் காந்தளும் மலர்ந்து மணம்வீசும் என்பதையும் அறிகிறோம். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவனை ஆய் அண்டிரன் என்றும் குறிப்பிடுவர். வள்ளல் பாரி வாழ்ந்த மலை பறம்பு. அந்த மலையில் இருந்த சுனைநீர் மிகுந்த இனிமையும், குளிர்ச்சியும் உடையது, இதனை, பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர் (குறுந். 196) என்னும் பாடலடி தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் மலையன் என்பானும் ஒருவன். இவனுடைய முழுப்பெயர் மலையமான் திருமுடிக்காரி என்பதாம்! முள்ளூர்க் கானம் இவனுக்குரிய காடு. அங்கு விளைந்த சந்தனம் மணத்திலே சிறந்தது; இதனை; ... ... ... .... அடுபோர் எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து ஆரம் நாறும்................(குறுந். 198) எனும் அடிகளால் அறியலாம். இதே கருத்தை, முரண்கொள் துப்பின் செவ்வேள் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து (குறுந். 312) எனும் பாடலடிகளும் தெரிவிக்கின்றன. சேர சோழ பாண்டியர் களில் காரி எவர் பக்கத்தில் இருக்கிறானோ அவர்களுக்கே போரில் வெற்றி கிடைக்கும். ஆதலால் இவன் ‘முரண்கொள் துப்பின் மலையன்’ எனப் பாராட்டப்பட்டான் என இவ் வுரையாசிரியர் விளக்கம் தருகிறார்.1 கட்டி என்பவன் சேரனுடைய படைத் தலைவர்களில் ஒருவன்; சிறந்த வீரன்; கொடையாளி; இவன் கங்கை நாட்டுத் தலைவன் என்று கூறப்படுகிறான். குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர்.... (குறுந். 11) மொழிபெயர் தேயம்- வேறுமொழி வழங்கும் நாடு என்பது பொருள். இது வேங்கடத்துக்கு அப்பால் இருந்த தெலுங்கு நாட்டைக் குறித்தது. வடுகர் எனும் சொல் தெலுங்கரைக் குறிக்கும். தமிழர் பொருள் தேடத் தெலுங்கு நாடு சென்று வந்தனர் என்பதை இது குறிக்கிறது என உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.2 கோசர்கள் என்பார் நான்கு பிரிவு உள்ளவர்கள். அவர்கள் பழமையான ஆலமரத்தின் அடியில் பொதுச் சபைகளில் கூடுவார்கள். நேர்மை தவறாமல் நீதி மொழிவார்கள். அவர்கள் உறுதிமொழி என்றும் நிலைத்து நிற்கும். தொல்முது ஆலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நல்மொழி போல வாய்ஆ கின்றே.............. (குறுந்.15) எனும் பாடல் மேலுள்ள செய்தியைச் சொல்கிறது. கோசர்கள் சிறந்த போர் வீரர்கள்; தாம் கூறிய வஞ்சினத்தை நிறைவேற்றுவர். இவர்கள் ஒரு காலத்தில் நன்னன் நாட்டின்மீது படையெடுத்து அவனுடைய காவல் மரமாகிய மாமரத்தை வெட்டி வீழ்த்தினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. ................நன்னன் நறுமா கொன்று நாட்டில் போக்கிய ஒன்றுமொழிக் கோசர் போல..... (குறுந்.73) வேளிர் என்பார் வடநாட்டுத் துவாரபதியிலிருந்து இந் நாட்டில் குடியேறியவர் என்று கூறுவர்; இது பொருந்தாது. தொன்று முதிர் வேளிர் குன்றூர் (குறுந். 164) எனும் அடி, வேளிர் தமிழ்நாட்டுப் பழங்குடியினர் என்பதை உணர்த்துகிறது. வேளாளர் இந்நாட்டுப் பழங்குடியினர். வேளாளரே வேளிர் எனப் பெயர் பெற்றனர், என உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.1 கொல்லிமலை சேரர்கட்குச் சொந்தமானது. கொல்லிப் பாவை அம்மலையில் அமைந் திருந்தது. பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கடுங்கண் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை........... (குறுந். 89) தொண்டி மேற்குக் கரையில் உள்ள நகரம். இதுவும் சேரருக்குச் சொந்தமானது. (குறுந். 128) மரந்தை என்னும் நகர் சேரர்களுக்குரியது அவ்வூரை அடைந்தவர்கள் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுவார்கள். .......................முனா அது யானைஅம் குருகின் கானல்ஆம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் குட்டுவன் மரந்தை அன்ன.... (குறுந்.34) மாந்தை மேற்குக் கடற்கரையில் உள்ள ஊர். அவ்வூர்க் கடற்கரைச் சோலையில் பறவைக் கூட்டங்கள் நிறைந்திருக்கும். போரிலே வெற்றிபெற்று வந்த வீரர்கள் கடற்கரையிடத்தே களிப்பினால் ஆரவாரிப்பார்கள். அதுகேட்டுப் பறவைகள் அஞ்சி நடுங்கும். தகடூரை ஆண்ட அதியமான்அஞ்சி, எழினி எனப்பட்டான். சிறந்த போர் வீரன்; போர்க்களத்தில் உறுதியாக நின்று பகைவரை வெற்றி கொள்வான். தன் நாட்டுப் பசுமந்தையை எதிரிகள் கவர்ந்தபோது அவர்களை எதிர்த்து வென்று பசு மந்தையை மீட்ட செய்தியை ....................வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனைஆன் பெருநிரை போலக் கிளையொடும் காக்க ............. (குறுந். 80) எனும் பாடல் விவரிக்கிறது. இவன் அஞ்சியின் மகனான பொகுட்டெழினி என்பவரும் உளர். வேள் எவ்வி என்பான் சிறந்த கொடையாளி; உழுவித் துண்ணும் வேளாளர் தலைவன்; மிழலைக் கூற்றம் எனும் நாட்டின் தலைவன். கடற்கரையிலிருந்த ‘நீழல்’ என்னும் ஊரிலே உறைந்தவன். எவ்வி இழந்த வறுமை யாழ்ப்பாணர் பூஇல் வறுந்தலை போலப் புல்என்று இனைமதி.............. (குறுந்.19) என்பதால் அவன் பாணர்களின் பசியைப் போக்கி அவர்களை வாழ்வித்து வந்த தலைவன் என்பது புலனாகிறது. திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு (குறுந், 210) என்பதால் கண்டீரக் கோப்பெரு நள்ளியின் காட்டிலே பசுவும், தொண்டியில் நெல் விளைவும் மிகுதி என்பதோடு அவை சுவை வாய்ந்தவை என்பதும் தெரிகிறது. பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்புஅணைத் துயிற்றி ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி அன்னஎன் நலம்.......... (குறுந். 238) என்பதால் தொண்டி நெல் வயல்கள் நிறைந்த நகரம் என்பது தெரிகிறது. அவலை இடித்த உலக்கையை, நெல் வயலின் வரப்பு களில் வைத்துவிட்டு, அந்நகரப் பெண்கள் விளையாடி மகிழ்வர். வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை (குறுந், 116). உறையூர் என்பது உறந்தை என அழைக்கப்படுகிறது. இது சோழர்களின் தலைநகர். இதற்குப் பக்கத்தே காவிரியாறு ஓடுகிறது. விச்சிக்கோ ஒரு குறுநில மன்னன். விச்சி மலையைச் சூழந்துள்ள நாட்டை ஆண்டவன். பாரி இறந்த பின்னர் அவன் மகளிரைக் கபிலர் விச்சிக்கோவிடம் அழைத்துச் சென்று அம் மகளிரை மணந்து கொள்ளும்படி வேண்டினர் எனும் செய்தி புற நானூறு 200ஆம் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது. இவன் விற்படையுடைய சேனைகளின் தலைவன். குறும்பூர் என்னு மிடத்தில் எதிரிகளை எதிர்த்துப் போர் செய்தான். வில்கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றை... கலிகெழு குறும்பூர் ஆர்ப்பு.... (குறுந். 328) நன்னன் ஒரு குறுநில மன்னன். இவன் தன் பூம்பொழிலில் ஒரு சிறந்த மாமரம் வளர்த்து வந்தான். இம்மரத்தின் கனியை வேறு எவரும் உண்ணக் கூடாது என்பது ஆணை. அம்மரத்தில் பழுத்த கனி ஒன்று அருகிலிருந்த ஆற்றில் விழுந்து மிதந்து வந்தது. ஆற்றில் நீராடிய ஒரு பெண் அக்கனியை அரசன் மரத்துக் கனி என அறியாது உண்டுவிட்டாள். செய்தி கேட்ட நன்னன் அப்பெண்ணைக் கொலை செய்ய ஆணையிட்டான். பெண்ணின் உறவினர் அவளை மீட்கும் பொருட்டு எண்பத்தொரு களிற்று யானைகளுடன் பொன்னால் செய்த பாவையைத் தண்டமாகத் தருவதாக வேண்டியும் ஏற்றுக் கொள்ளாதவனாய் நன்னன் அப்பெண்ணைக் கொலை செய்தான். மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன்.............. (குறுந். 292) தொண்டை நாட்டரசர்கள் சிறந்த போர்வீரர்கள் அவர்கள் சிறந்த தேர்களையுடையவர்கள். அவ்வரசர்களுடன் போர்செய்து தோற்றுப்போனவர்களின் நாட்டிலே விளைந்த பொருள்களை அவர்கள் யானைகள் உண்டு வாழும். தொண்டை மன்னர்களின் மலைச் சாரல்களில் சுரபுன்னை மரங்கள் நிறைந்திருந்தன. ... ... ...பொருவார் மண்எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண்தேர்த் தொண்டையர் வழைஅமல் அடுக்கம்... (குறுந். 260) அகுதை என்பான் ஆடு மகளிர்க்குப் பெண் யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான் (குறுந். 298). அழிசி என்பவன் ஆர்க் காட்டிலிருந்து ஆட்சிபுரிந்தவன். சேந்தன் என்பவனின் தந்தை. இச்சேந்தன் என்பான் காவிரிக்கரையின் மருதமரத்தோடு யானையைப் பிணித்து, நீராடுவோரின் துயரத்தைப் போக்கினான் (குறுந். 258). பூழி நாட்டினர்க்கு வெள்ளாடே சிறந்த செல்வமாக விளங்கியது (குறுந். 163). அருமன் என்பானின் ஊர் குறுந்தொகை 293 ஆம் பாடலில் பேசப்படுகிறது. கொங்கர் என்பவர் கொங்கு நாட்டினர். பசும்பூண் பாண்டியனைப் பகைத்துப் போரிட்டனர். பாண்டியன் கொங்கரை அடக்க அதியன் என்னும் தளபதியை அனுப்பினான். அதியன் கொங்கரோடு போரிட்டு வாகைப் பறந்தலைக் களத்திலே பட்டு வீழ்ந்தனன். கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறிவாட் கொங்கர் ஆர்ப்பு.......... (குறுந். 393) வடபுலத்தில் பாடலி நகர் பண்டு சிறந்திருந்தது. இது சோணையாற்றின் கரையிலிருந்த தலைநகரம். இவ்வாற்றில் யானைகள் நீராடும், பாடலி நகரத்தே பொன் மிக்கிருந்தது என்பதை வெண்கோட்டு யானை சோணை படியும் பொன்மலி பாடலி....... (குறுந்.75) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன. குறுந்தொகையில் ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் பாடியது 184 ஆவது பாடலாக உள்ளது. இவன் வடபுலத்தி லிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவனாக இருக்கலாம். இவன் தமிழ்ப் புலவன்; யாழ் இசைப்பதில் வல்லவன் என்பதை இவனுடைய பெயர் சுட்டுகிறது. இவ்வாறு குறுந்தொகையில் இருபத்தொன்பது பாடல்கள் வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியனவாய் உள்ளன. ஆதலின் குறுந்தொகை ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகவும் விளங்குகிறது எனலாம். இயற்கை எழில் சங்க காலப் புலவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தை இயற்கை எழிலில் ஊடுருவச் செய்து, அதன்கண் கண்டதை உன்னி உன்னி ஆராவின்பத்தை அடைந்தனர். தாம் பெற்ற பெரு மகிழ்வை வையகமும் பெற வேண்டுமெனும் நன்னோக்கினால் இயற்கையின் இயல்புகளை உயர்வு நவிற்சியின்றி உள்ளது உள்ளவாறே சுவைபட எடுத்து இயம்பியுள்ளனர். சங்கப் புலவர்களின் இச்சிறப்பை உணரக் குறுந்தொகை பெருமளவில் துணை செய்கின்றது குறிஞ்சி குறிஞ்சியில் காந்தள் மலர்கள் பாறைகள் மீது பூத்துக் கிடக்கின்றன. குறிஞ்சி, கூதளம் முதலிய மலர்கள் மலர்கின்றன. உருளைக் கற்களின் மீது மானைக் கொடிகள் படர்ந்திருக்கின்றன. மலைச்சாரலில் மிளகுக் கொடிகள் நிறைந்திருக்கின்றன. பழத் தோட்டங்கட்கு மூங்கிலே வாழ்வேலியாக அமைந்திருக்கிறது. பலா மரத்தின் சிறிய கொம்புகளில் பெரிய பழங்கள் தொங்கு கின்றன. வேங்கை மரங்கள் பொன்னிறப் பூக்களால் பொலிவு பெற்றுள்ளன. அருவிகள் வீழ்ந்து அழகு செய்கின்றன. மரங்களில் ஏறி ஆண் குரங்குகள் இனிய கனிகளை உதிர்க்க, அவற்றைப் பெண் குரங்குகள் தம் குட்டிகளோடு பொறுக்கி உண்ணுகின்றன. வெயிலை விரும்பிப் பாறைக்கு வந்த குரங்குக் குட்டிகள், அப்பாறையிடுக்குகளில் மயில்கள் இட்டிருக்கும் முட்டைகளைப் பந்துகளாக உருட்டி விளையாடுகின்றன. கானவன் பலாப் பழங்களைக் காவல் செய்கிறான். அவன் அயர்ந்த வேளை ஒரு குரங்கு பக்கத்திலிருந்த மரத்திலிருந்து பலாவின் மீது குதித்துக் கனிகளை உண்டு செல்கிறது. குரங்கு ஏமாற்றியதையறிந்த கானவன் ஒவ்வொரு மரத்திலேயும் வலையைக் கட்டிவிடுகிறான். மீண்டும் கனியுண்ண வந்த குரங்கு ஏமாந்து நிற்கிறது. குறவர்கள் யா மரங்களை வெட்டிச் சுட்ட இடங்களில் தினையை விதைக் கின்றனர். தினை முதிர்ந்த காலத்தில் அதனை உண்ணவரும் பறவையினங்களைக் குறமகளிர் கவணெறிந்து ஓட்டுகின்றனர். விரட்டப்பட்ட கிளிகள் மேல் மலையை நோக்கிப் பறக்கின்றன. தினையின் மறுகாலில் பனிக் காலத்தில் அவரைக் கொடிகள் படர்ந்துபூக்கின்றன. அருவி பாய்கின்ற இடங்களில் மலைவாழ்நர் மலைநெல்லை விதைக்கின்றனர். அந்நெல்லிடையே களைகளாக முளைக்கும் மலை மல்லிகையையும், மரலையும் களைந்தெறி கின்றனர். மலைவாழ்நர் வீடுகள் புல்லால் வேயப்பட்டிருக்கின்றன. அவ்வீடுகளின் முன் பெண்யானைகள் தம் கன்றுகட்குப் பால் கொடுத்துக் கொண்டே அருகிலுள்ள தினைப் பயிரை மேய்ந்து கொண்டிருக்கின்றன. குறவர்கள் ஈன்ற குழந்தைகள் யானைக் குட்டிகளோடு விளையாடி மகிழ்கின்றனர். மலைகளில் யானைகள் புலிகளோடு போரிட்டு அவற்றை வீழ்த்துகின்றன. மரையா என்னும் மான் மூங்கில் இலைகளை உண்டு மரநிழலில் தூங்கு கின்றது. நெல்லிக் காயை உண்ட மான்கள் சுனைகளில் சென்று நீரருந்துகின்றன. வெளவால்கள் இரவு நேரங்களில் பலாப் பழங்களை நாடிப் பறக்கின்றன; பகலில் மூங்கிலில் தொங்கித் தூங்குகின்றன. முல்லை முல்லையில் கார் காலத்தில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கொன்றை மலர்கள் குண்டு குண்டாகச் சதங்கைகள் போலக் காட்சியளிக்கின்றன. குறவர்கள் கவலைக் கிழங்கு தோண்டுவதால் ஏற்படும் குழிகளில் கொன்றை மலர்கள் குவிந்து கிடக்கின்றன. மாலையில் முல்லைப் பூக்கள் எங்கும் நிறைந்து மணக்கின்றன. யானைகள் மேய் புலத்தை நாடிச் செல்கின்றன. முல்லைக்கொடி படர்ந்த பகுதியில் அவை செல்லும் போது கொடிகள் அவற்றின் கொம்புகளில் சிக்கி அறுபடுகின்றன. அறுபடுகின்ற அக்கொடிகள் யானைகளின் கொம்புகளில் கிடந்து அவற்றுக்கு அழகு சேர்க்கின்றன. மழையில்லாத காலத்தில் காயா மரங்கள் பொலிவிழந்து நிற்கின்றன. மழை பெய்ததும் தளிர்த்துக் கிளைகள் தோறும் மயிற்கழுத்தின் நிறமொத்த பூக்கள் நிறைகின்றன. ஆடுகளை மேய்ப்பவர்கள் பட்டிகளில் ஆட்டின் திரளோடு தங்கி விடுகின்றனர். ஆடுகளிடம் கறந்த பாலை இடையர்கள் வீடு சேர்த்து, மேய்ச்சல் நிலத்தில் ஆடுகளோடு இருப்பவர்க்குச் சோறு கொண்டு மீளுகின்றனர். மழை பெய்யும்போது இடையர்கள் பனையோலைகளால் செய்யப்பட்ட பறியோலையால் தம்மை மறைத்துக் கொள்கின்றனர். உளுந்தின் காய்களையும் அறுகம் புல்லையும் உண்ணுகின்ற மான் கூட்டங்கள் பரல் கற்களிடையே தேங்கி நிற்கும் நீரைக் குடித்துப் பூக்கள்மணம் வீசும் புதர்களின் நிழலில் படுத்துத் தூங்குகின்றன. முல்லை நிலச் செம்மண் நிலங்களில் வரகு செழித்து வளர்கிறது. பெருமழை பெய்யும் போது காட்டாறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அவற்றின் கரையிடத்தே அசைந்து செல்லும் தோகை மயில்கள் கார்மேகக் கூட்டங்களைக் கண்டு அகவுகின்ன. ‘கொக் கொக்’ எனக் குரல் கொடுத்த வண்ணம் காட்டுக் கோழிகள் புதலருகே இரை தேடுகின்றன. காலையில் மேய்புலம் சென்ற மாடுகள் கழுத்து மணியசைய, மாலையில் வீடு திரும்புகின்றன. வயிறு நிறைய மேய்ந்த அவை மெதுவாக அசைந்து நடப்பதால் அதற்கேற்பக் கழுத்து மணிகளும் மெதுவாக அசைந்து இனிய ஒலியை எங்கும் நிறைக்கின்றன. மருதம் நீர் நிறைந்த வயல்களில் நீர்ப்பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. கயல் மீன்களும், வாளை மீன்களும் அங்கே துள்ளி விளையாடு கின்றன. கரைகளிலுள்ள மாமரங்களிலிருந்து வயல்களில் வீழ்கின்ற கனிகளை வாளை மீன்கள் துள்ளிக் கவ்வுகின்றன. மீன்களைக் கொத்தியுண்ணக் கொக்குகள் வயல்களிலே காத்து நிற்கின்றன. உழவர்கள் வயலை உழும்போது பூக்கொடிகள் கொழுக்கம்பியில் சிக்கி அறுபடுகின்றன. அவற்றை வரப்பின் மேல் எடுத்தெறிதலால் அவை வாடிப் பொலிவிழந்து கிடக்கின்றன. வயற்புறங்களில் கரும்புகள் செழித்து வளர்கின்றன. வாடைக் காற்று வீசும் கூதிர் காலத்தில் கரும்பின் அரும்புகள் மலர்கின்றன. வயற்கரைகளில் உள்ள காஞ்சி மரங்களின் நிழலில் உழவர்கள் ஓய்வுக்காகத் தங்கும்போது அவர்கள் மீது மலர்த்தாது கொட்டுகிறது. நீர் நிலைகளில் பகன்றை மலர்கிறது. நீர் நாய்கள் நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்களை உண்ணுகின்றன. மழைக்காலத்தில் புதல்களின் மீது பீர்க்கங் கொடிகள் படர்ந்து மலர்கின்றன. பசிய புதலிடையே பீர்க்கின் மஞ்சள் நிறப் பூக்கள் அழகிய காட்சியைத் தருகின்றன. வீடுகளின் முன்புறம் உலர்த்தப் பட்டுள்ள தானியங்களைக் குருவிகள் உண்ணுகின்றன; எருவின் நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடுகின்றன; வீடுகளின் இறப்புகளில் கூடுகளைக் கட்டுகின்றன. ஆண் குருவி கருவுற்றிருக்கும் தன் பேடைக்கு, கரும்பின் பூவைக் கொழுதிக் கொணர்ந்து மெத்தென்ற கூடு கட்டுகிறது. வீட்டுக் கோழி வேலியோரம் தன் குஞ்சுகளுடன் இரை தேடுகிறது. அங்கே காட்டுப் பூனை ஒன்றைக் காணுகின்ற தாய்க்கோழி எல்லாக் குஞ்சுகளையும் தப்பியோடி வர ஒருவகைக் குரல் கொடுத்து அழைக்கிறது. மின்னுகின்ற கரிய இறகுகளையுடைய குயில்கள் மாமரங்களின் பூக்களைக் கொழுது கின்றன. காலையில் மேய்புலம் சென்ற பசுக்கள் மாலையில் வீடு திரும்புகின்றன. அவை தம் கன்றுகளை நினைந்தமையால் வழி நெடுக மடியிலிருந்து பால் தானே ஒழுகிட விரைந்து வருகின்றன. எருமை ஒன்று அணிமையில் ஈன்ற கன்றினை உழவன் கயிற்றில் கட்டியிருக்கிறான். கன்றைப் பிரிய மனமில்லாத எருமை அதனினின்றும் அகலாது அதைப் பார்த்த வண்ணமே பக்கத்தி லுள்ள பயிர்களை மேய்கிறது. காலையில் விதைக்கும் பொருட்டுச் செல்லும் உழவன் மாலையில் வீடு திரும்புகையில் விதையைக் கொண்டு சென்ற வட்டிகளில் வழியில் பூத்திருந்த பூக்களைப் பறித்து நிறைத்து வருகின்றான். நெய்தல் கடலையடுத்துள்ள உப்பங்கழிகளில் நெய்தற் கொடிகள் படர்ந்துள்ளன. அவற்றின் அகன்ற இலைகள் நீர்ப்பரப்பை மூடியுள்ளன; பூக்கள் பசிய இலைகட்கு மேலே உயர்ந்து தோன்றுகின்றன. கடற்கரைப் பரப்பில் முள்ளி எனும் ஒரு வகைச் செடி வளர்கிறது. இதனுடைய கரிய மலர்கள் காற்றால் சிதறி நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல நீர்த்துறையெங்கும் பரவிக் கிடக்கின்றன. வாடைக் காற்று கழியிலுள்ள நீல மலரை மலரச் செய்து, புதலில் உள்ள கருவிளை மலர்களை அலைத்து, ஈங்கையின் மலர்களை உதிர்த்து வீசுகிறது. கடற் கழியில் படர்ந்துள்ள அடும்பின் மலர்கள் குதிரைகளின் கழுத்திலிடும் சதங்கை மணிகள் போன்று தோற்றமளிக்கின்றன. மணல் மேடுகளில் உள்ள புன்க மரங்களிலிருந்தும் ஞாழல் மரங்களிலிருந்தும் உதிர்கின்ற மலர்கள் கலந்து கிடந்து கடற்கரையை அழகு செய்கின்றன. காற்று வீசும்போது ஞாழல் மலர்கள் கழியில் மலர்ந்துள்ள நெய்தல் மலர்களில் சென்று படிந்து அவற்றை நிறைக்கின்றன. மணற் பரப்புகளில் புன்க மரங்கள் நிறைந்துள்ளன. கடலலைகள் வீசும்போது எழும் சிறுநீர்த் திவலைகள் பட்டு அவை மலர்கின்றன. கடற்கரையை அடுத்த மணல் மேடுகளில் பனைமரங்கள் வளர்ந்துள்ளன. சுழல் காற்று அடுப்பங்கொடி யோடு கூடிய மணலைக் கொண்டு வந்து அப்பனைகளின் அடி மரங்கள் மறையும்படிக் குவிக்கின்றது. கடற்கரையில் வளர்ந்துள்ள தாழை மரங்கள் வேலி போல் அமைந்துள்ளன. உப்பங்கழிகளில் மீனை எதிர்பார்த்துக் கொக்குகள் நிற்கின்றன. நீரால் நனைந்த கொக்கு வாடையால் வருந்துகிறது. நாரைகள் ஆரல் எனும் ஒருவகை மீனை ஆசையோடு அருந்துகின்றன. சிறகுகளின் வலிமை போய்விட்டதால் முதிர்ந்த நாரை ஒன்றால் பறந்து சென்று இரைதேட முடியவில்லை. ஆதலால் தண்ணீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு புன்னையின் கிளையில் தங்கி மீன் அங்கே வாராதா என ஏக்கத்தோடு காத்திருக்கிறது. அடும்பின் மலர்கள் சிதைய, மீன்களைக் கொத்தியுண்ணும் நாரைகள் இரவு நேரங்களில் தாழையில் தங்கிக் கடல் அலைகளின் ஓசையைச் செவி மடுத்த வண்ணம் தூங்குகின்றன. கடற்கரையில் சாம்பல் நிறம் கொண்ட காக்கைகள் இருக்கின்றன. கழிகளில் பசிய இலைகளைக் கலக்கி இரை தேர்ந்துண்ணும் இக்காக்கைகள் பின்னர் பூ மணம் வீசும் கடற்கரைச் சோலைகளில் சென்று தங்குகின்றன. புன்னைமரங் களில் கொக்குகள் தங்குகின்றன. பனை மரங்களில் கொழுவிய மடல்களினிடையே அன்றில்கள் சுள்ளிகளால் கூடுகள் கட்டி வாழுகின்றன. நெய்தல் நிலக் குளங்களில் பிரப்பங்கொடிகள் தூறு தூறாக வளர்ந்திருக்கின்றன. கெண்டை மீன்கள் துள்ளியெழும் போது பிரப்பங்கொடிகளில் உள்ள முதிர்ந்த கனிகளைக் கவ்வு கின்றன. அலைகள் வீசும்போது இறால் மீன்களைக் கரையில் எறிந்து விட்டுச் செல்கின்றன. ஞாழல் மரத்தின் வேர்களில் நண்டுகள் வளை செய்துள்ளன. அலைகள் அந்நண்டு வளைகளை அழித்துச் செல்கின்றன. கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகள் கொக்குகளைக் கண்டதும் விரைந்தோடி மறைகின்றன. கழிகளில் உள்ள முதலைகள் நீர் வழிச் செல்வோரைத் தடுத்துத் துன்புறுத்துகின்றன. மகளிர் கழியிடத்து மலர்ந்துள்ள மலர்களைப் பறித்தும் அலைநீரில் விளையாடியும் மகிழ்கின்றனர். கடற்கரை நண்டுகளை அங்குமிங்கும் அலைத்து மகிழ்கின்றனர். நண்டு ஒன்று மகளிர் அலைக்கப் படாதபாடுபடுகிறது; நல்ல வேளை! அலையொன்று வந்து அதனைக் கடலுள் இழுத்துச் சென்று விடுகிறது. கடல்நீரில் ஆடி மகிழ்ந்த பின்னர் மகளிர் கடற்கரைச் சோலையிடத்தே சிற்றில் கட்டி விளையாடிக் களிக்கின்றனர். பரதவர்கள் கடலுள் சென்று மீன் பிடிக்கின்றனர். எறிவளி என்னும் ஒரு எறிகருவியைச் சுறாமீன் மீது எறிந்து கொல்லு கின்றனர். சில வேளைகளில் சுறா மீன் தாக்கிப் பரதவர்கள் புண்படுவதும் உண்டு. செம்படவப் பெண்கள் உப்பை விற்றுக் கிடைக்கும் பொருளைக் கொண்டு தங்கள் உணவுக்கு வேண்டிய பொருள்களை வாங்குகின்றனர். கடலையடுத்துக் கடற்கரைச் சோலை; அதனையடுத்து நெய்தல் நில ஊர்கள்; ஊரைச் சுற்றிலும் பனைமரங்கள் நெருங்கியுள்ளன. நெய்தல் நில ஊர்களில் உள்ள வீடுகளின் முன்றில்களில் அலைகள் வந்து வந்து மீளுகின்றன. பரதவர்கள் கடலில் பிடித்த மீன்களையும் கழியில் பிடித்த இறால்களையும் மணல்மீது கிடத்தி உலர்த்துகின்றனர். அதனால் மணல் புலால் நாற்றம் பெறுகிறது. பாலை பாலையில் வாகை, இலுப்பை, உகாய், ஓமை, மரா மரங்கள் உள்ளன. முற்றிக் காய்ந்த வாகையின் காய்கள் மீது காற்றப்படும் போது பறை போல ஒலி எழுகிறது. வேனிலால் வெம்பியிருக்கும் மாமரத்தின் உலர்ந்த பூங்கொத்து ஒன்றில் தேன் நாடிச் செல்லும் வண்டு தேனின்மையால் ஏமாந்து திரும்புகிறது. பாலை நிலத்தில் நீர் கிடைக்காமையால் யானைகள் நீர் வேட்கை தணிக்க ஓமை மரத்தின் பட்டைகளை உரித்து அதிற் கிடைக்கும் சிறிது ஈரப் பசைக்காக மெல்லுகின்றன. ஆண் யானை ஒன்று பெண் யானையின் நீர் வேட்கையைத் தணிக்க யா மரத்தின் பட்டையை உரித்துப் பார்க்கிறது. அதிலும் நீர்ப் பசையில்லாமையால், பிடியின் வருத்தத்தைத் தீர்க்க முடியவில்லையே என்னும் ஏக்கத்தால் தன் துதிக்கையை விண்ணை நோக்கி உயர்த்திப் பிளிறுகிறது. நீர் வேட்கையால் யானைகள் வலிமையிழந்து மரக்கிளைகளை முறிக்கக்கூட முடியாமல் வருந்துகின்றன. பாலை நில மான் இரைக்காக மரப்பட்டைகளைக் காலால் உதைத்துப் பெயர்த் தெடுக்கிறது. அதை முதலில் குட்டிக்குத் தந்து எஞ்சியதைத் தான் உண்ணுகிறது. நிழலற்ற பாலையில் தன் துள்ளு நடைக் குட்டிக்கு மான் தானே நிழலாகி நிற்கிறது. கானலை நீர் என எண்ணி ஓடும் மான்கள் ஏமாந்து நிற்கின்றன. கள்ளிகளில் புறாக்கள் தங்கியிருக் கின்றன. கள்ளி ஒன்றில் ஆணும் பெண்ணுமாகிய இணைப் புறாக்கள் வீற்றிருக்கின்றன. ஆண்புறா பேடையின் மென்மையான தூவியினைக் கோதிவிட அவை இரண்டும் இன்பத்தில் திளைத்திருக்கின்ற அவ்வேளையில் கள்ளியில் ஒரு காய் வெடிக்கிறது. அவ்வொலி கேட்டு அஞ்சிய இணைப் புறாக்கள் பறந்தோடி மறைகின்றன. பாலை நிலப் பறவைகளுள் வங்காவும் ஒன்று. ஓர் ஆண் வங்கா தன் பேடையைக் கூட்டிலிருத்திவிட்டு இரை தேடிச் செல்கிறது. தனித்திருக்கும் பெண் வங்கா மீது எழால் எனும் பறவை பாய்கிறது. அஞ்சிய பெண் வங்கா, தன் ஆண் துணையை குழல்போலும் இனிய குரலால் கூவி அழைக்கிறது. பருந்து ஒன்று ஊன் உணவு கிட்டாதா என ஞெமை மரத்தின் மீது ஏக்கத்தோடு காத்திருக்கிறது. கணந்துள் பறவைகள் கூட்டங்கூட்டமாகப் பாலையில் வாழ்கின்றன. தமக்கு ஊறு செய்யும் வேடுவர்களைக் கண்டதும் இவை அச்ச ஒலி எழுப்பும் இயல்புடையவை. இவ்வொலியைக் கேட்போர் அங்கு வழிப்பறி செய்யும் வேடுவர்கள் உள்ளதை அறியலாம். பாலையில் சிற்சில இடங்களில் நீர் குறைவாக உள்ள சுனைகள் இருக்கும். காட்டு மல்லிகை மலர்களும் இலைகளும் அழுகிப் போயிருப்பதால் அந்நீர் அழுகல் நாற்றம் உடையதாக இருக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லையாதலின் வழிப்போக்கர் அதை வேகமாக உண்கின்றனர். நீண்ட நேரம் நீரின்றி உலர்ந்துள்ள தொண்டை வழியே நீர் செல்லும் போது ‘தவக் தவக்’ எனும் ஒரு வகை ஒலியெழுகிறது. பாலையில் கொல்லன் உலைக்களம் போன்று வெப்பம் மிக்க பாறைகள் எங்கும் உள்ளன. ஆறலைக் கள்வர் மறைந்திருந்து, அவ்வழிச் செல்வோரைக் கொன்று அவர்களிட முள்ள பொருள்களைப் பறிக்கின்றனர். அவர்கள் கொல்வதால் தமக்குக் கிடைக்கப்போகும் புலாலை எதிர்நோக்கிப் பருந்துகள் மரக்கிளைகளில் காத்திருக்கின்றன. காட்சி வருணனைகளில் குறுந்தொகைப் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன. சான்றுக்கு ஒன்று: கதிரவன் மேற்கில் மறைகிறான். இருள் மெல்ல மெல்லக் கவிகிறது. அகன்ற வானத்தே வளைந்த சிறகுடைய பறவைகள் கூட்டை நோக்கிப் பறக்கின்றன. தங்கள் குஞ்சுகளுக்குக் கொடுப்பதற்கான இரையை அவை வாயிலே கவ்விக் கொண்டு, குஞ்சை நினைந்தனவாய் விரைந்து பறக்கின்றன. ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை; சிறைஉற ஓங்கிய நெறியயல் மராஅத்த பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரைகொண் டமையின் விரையுமால் செலவே! (குறுந். 92) மாலைக் காலத்தை இப்பாட்டு நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறதல்லவா? குறுந்தொகை வருணனை நிறைந்த இயற்கைக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. செறிவுரைகள் குறுந்தொகையில் பொருள் செறிந்த மொழிகள் பல உள்ளன. வாழ்வில் மக்கள் பொன்போல் போற்றத்தக்க உறுதிச் செய்திகள் பல உரைக்கப்பட்டுள்ளன. 1. இரப்போர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை நுகர்தலும் செல்வமில்லாத வறியவர்கட்கு இல்லை. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல். (குறுந். 63) 2. நல்குரவுடையோர் இன்பத்தை நுகர விரும்பினாலும் அது அவருக்குக் கிடைக்கமாட்டா. ஆதலின் அவருக்குத் துன்பமே மிஞ்சும்; பொருள் இல்லார்க்குப் போகம் இல்லை! இல்லோன் இன்பம் காமுற் றாங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே! (குறுந். 120) 3. ஒவ்வொரு நாளும் இரப்போர்க்கு ஈதல் வேண்டும். இரப் போரைக் காணாமலும் அவர்க்கு உதவி செய்யாமலும் கழியும் நாள் வீண் நாளேயாம்! ‘ஈதல் இசைபட வாழ்தலே’ வாழ்க்கையின் ஊதியம்! (குறுந். 137) 4. செல்வம் நிலையாதது. புகழ் ஒன்றே நிலையானது, நீதி நிறைந்த நெஞ்சையுடையவன் பிறர்க்கு உதவி புரியப் பின்வாங்க மாட்டான். அவன் செல்வத்தைச் சேர்த்து வைக்காமல் பிறர்க்கு உதவுவதிலேயே செலவு செய்வான். (குறுந்.143) 5. கற்றறிந்து அடக்கமுடன் வாழ்பவர்கள் பொய்க்கரி கூற மாட்டார்கள். உயிரே போவதாயினும் உண்மையையே உரைப்பர். அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை. (குறுந். 184) 6. சான்றோர் தம்மைப் பற்றிப் புகழும்பொழுதே நாணுவர். அவ்வாறிருக்க அவர்களை இகழ்ந்தால் அதை அவர்கள் எவ்வாறு பொறுப்பர்? ............. சான்றோர் புகழும் முன்னர் நாணுப! பழியாங்கு ஒல்பவோ காணுங் காலே! (குறுந். 252) 7. பொய்யை உண்மையைப் போலச் சொல்வதால் ஒரு பயனும் இல்லை. வாய்போற், பொய்ம்மொழி கூறல்அஃது எவனோ? (குறுந். 259) 8. பெரியோர்களைக் கண்டால் எதிர்கொண்டு அழைத்தல், இன்சொற் கூறி வரவேற்றல், இருக்கை அளித்தல், களைப்புத் தீரப் பேணுதல் முதலியவை கடமையாகும். “சான்றோர் கண்ட கடனறி மாக்கள் போல” எனும் குறுந்தொகைத் தொடரால் இதனை அறியலாம். (குறுந். 265) 9. நாம் வாழ்வது உறுதியில்லை. கூற்றுவன் எப்பொழுது கொண்டு செல்வான் என்று கூற முடியாது. ஆதலால் இளமை யிருக்கும்போதே இன்பத்தை நுகர்ந்து கழிப்பதுதான் நலம். (குறுந். 267) 10. எண்ணியதை நிறைவேற்றியவர்கள் இன்பம் அடைவார்கள். ‘செய்வினை முடித்த செம்மல் உள்ளம்’ என இது சிறப்பிக்கப் படுகிறது. (குறுந். 270) 11. தம் முன்னோர் தேடி வைத்துள்ள செல்வத்தைச் செலவழித்து வாழ்க்கை நடத்துவது வாழ்க்கையாகாது. முயற்சி யில்லாமல் முன்னோர் பொருளைச் செலவழித்து வாழ்பவர்களின் வாழ்வு பிச்சையெடுத்து வாழ்வதைவிட இழிவானதாகும். உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு. (குறுந். 283) 12. இரக்கம் காட்டினால்தான் வாழ முடியும் என்னும் நிலையில் உள்ள வறியவர்கள்பால் இரக்கம் காட்டாமல் இருப்பது மிகவும் கொடுமையானது. (குறுந். 327) 13. மக்கள் வாழ்விலே துணையாக நிற்பவற்றில் முதன்மை யானது நம்பிக்கை. முயற்சிக்கும் உழைப்புக்கும் முதற்காரணம் நம்பிக்கைதான். நம்பிக்கையற்றவர்களின் வாழ்க்கை சிறக்காது. உயிர் வாழ்வதற்கு அடிப்படை நம்பிக்கைதான். வலியா நெஞ்சம் வலிப்ப வாழ்வேன் தோழி! (குறுந். 341) 14. தம்மை விரும்பியிருப்பவர்களின் துன்பத்தைத் தீர்க்கும் பயனுள்ள செயலில் ஈடுபடாதிருப்பது பண்புடைமையாகாது. (குறுந். 342) 15. இரந்தவர்க்குக் கொடுத்த ஒரு பொருளை மீண்டும் திருப்பிக் கேட்பதை விட உயிர்விடுவதே மேல்! இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய ‘கொடுத்தவை தா’ என் சொல்லினும் இன்னாதோ? நம் இன்னுயிர் இழப்பே! (குறுந். 349) 16. நீரிடத்தே நீண்டபொழுது விளையாடிக் கண்கள் சிவந்து விடும். இனிப்புடைய தேனாயினும் நெடுநாள் பருகியோர்க்குப் புளித்து விடும். இஃது உலக இயற்கை. நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும். (குறுந். 354) 17. இந் நிலவுலகம் இடம் மாறினாலும், நீரினுள்ளே தீத் தோன்றினாலும், கடலே வற்றிப் போனாலும் மாறாததே உண்மையான நட்பாம். (குறுந். 373) 18. தீய சொற்களைக் கூறுவதற்குத்தான் அஞ்ச வேண்டும் நல்ல சொற்களைக் கூறுவதற்கு அஞ்ச வேண்டியதில்லை. நல்ல சொற்களை எப்போதும் யாரிடத்தும் சொல்லலாம். நன்மொழிக்கு அச்சம் இல்லை. (குறுந். 392) 19. தாய் சினந்து அடிக்கும்போதும் குழந்தை ‘அம்மா’ என்று அலறி அத்தாயையே புகலடையும். தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னா என்னும் குழவி.......... (குறுந். 397) 20. தமது வீட்டிலிருந்து தமது முயற்சியால் சேர்த்த உணவை உண்ணுதல் இனிமையாகும் அது கூழேயாயினும் அமிழ்தத்தினும் மேலாம். தம்இல்தமது உண்டு அன்ன சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவு. (குறுந். 83) பலாப் பழத்தின் இனிமைக்குத் தமது முயற்சியால் பெற்றுண்ணும் உணவு உவமையாக்கப்பட்டுள்ளது. 21. உயிருள்ளவரை உழைப்பது ஆண்கள் கடமை. அவர்கள் உழைப்புக்குத் துணை செய்து அவர்களுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டியது பெண்கள் கடமை. வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (குறுந். 135) கடமை கணவனுக்கு உயிர்; மனைவிக்கோ அக்கணவனே உயிர்! அரிய செய்திகள் குறுந்தொகை வாயிலாகப் பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றிய பல அரிய செய்திகளை அறிகிறோம். 1. பண்டைக் காலத்தின் மணமாகாத பெண்கள் தம் காலில் ஒரு வகைச் சிலம்பு அணிந்திருந்தனர். மணமான பின்பு அதைக் கழற்றி விடுவார்கள். இதற்கெனத் திருமணத்தில் ‘சிலம்பு கழித்தல்’ எனும் சடங்கு உண்டு. பெண்ணின் காலை நோக்கிய அளவிலேயே அவள் திருமணமானவளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். (குறுந். 7) 2. காதலி விளையாடப் பதுமைகள் செய்து கொடுப்பது அக்காலக் காதலனின் வழக்கம். பதுமைகள் பசுமையான கோரைப் புல்லால் செய்யப்படும் (குறுந். 228) 3. மலர்களையும் தழைகளையும் தொகுத்து ஆடையாகத் தரித்துக் கொள்வது பெண்களின் வழக்கம். (குறுந். 342) 4. சுவரில் கோடுகள் இட்டு வைத்து அவற்றை எண்ணிப் பெண்கள் நாட்கணக்குப் பார்ப்பார்கள். (குறுந். 358) 5. விழாக் காலங்களில் பெண்கள் கைகோத்துத் துணங்கைக் கூத்து ஆடுவார்கள் (குறுந். 31) 6. கூந்தலில் உள்ள எண்ணெய், சிக்கல் ஆகியவற்றைப் போக்குவதற்காக மகளிர் களிமண்ணைத் தேய்த்துக் குளிப்பது வழக்கம். “கூழைக்கு எருமண் கொணர்கம்” (குறுந். 113) 7. கருவுற்ற மகளிர் புளிப்பை விரும்பி உண்பர். “பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்” (குறுந். 287) 8. பெண்கள் பத்துத் திங்களே கருக்கொண்டிருப்பது இயல்பு. சிலர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருப்பதும் உண்டு. “முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசைஇ’ (குறுந். 287) 9. குறப்பெண்கள் தினைப்புனங்களில் விழும் கிளிகளைக் குளிர் என்னும் கருவியை இசைத்து ஒட்டுவர். “படுகிளி படியும் கொடிச்சி கைக்குளிரே இசையின் இசையா இன்பா ணித்தே! ” (குறுந். 291) மூங்கிலை வளைத்து அதிலே நரம்பைக் கட்டி விரலால் தெரித்து ஓசை யெழுப்பும் கருவிக்குக் குளிர் என்பது பெயர். 10. குறி கூறும் பெண்கள் வெண்மையானதும் கூர்மை யுடையதுமான சிறு கோலைக் கையிலே கொண்டிருப்பார்கள். அவர்களை “வெண்கடைச் சிறுகோல் அகவல் மகளிர்” எனக் குறுந்தொகை குறிப்பிடுகிறது (குறுந். 298) 11. வண்ணாத்தி துணிகட்குக் கஞ்சிப் பசையூட்டித் துவைத்து அழுக்கைப் போக்குவாள். (குறுந். 330) 12. விளையாடுதற்கெனத் தச்சர்களால் செய்யப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட சிறிய மரத்தேர்களை இளஞ்சிறார்கள் இழுத்து விளையாடி மகிழ்வர். தச்சன் செய்த சிறுமா வையம் ஈர்த்து இன்புறூஉம் இளையோன். (குறுந்.61) 13. புலிப்பல் கோத்துச் செய்யப்பட்ட ஒருவகை அணியைக் குழந்தைகளின் மார்பில் அணிவிப்பர். இது புலிப்பல் தாலி எனப்படும். இவ்வணிகலனை அணிந்த குழந்தைகள் ‘புலிப்பல் தாலிப் புதல்வர்’ எனக் குறிக்கப் பெறுகின்றனர் (குறுந். 161). 14. வீடுகளில் வெளியில் யாரும் விருந்தினர் தங்கியிருப்பரோ என ஆராய்ந்து வினவிய பின்னரே கதவடைப்பது வழக்கம். (குறுந். 118). 15. நாழிகைக் கணக்கர் இரவில் உறங்காது நாழிகையை அறிந்து அதனை மணியோசையின் மூலம் ஊரார்க்கு அறிவிப்பர். (குறுந். 261). 16. தண்ணீரில் வாழ்கின்ற மகன்றில் பறவைகள் ஆணும் பெண்ணும் எப்போதும் பிரியாமல் இணைந்து வாழும் இயல்புள்ளவை. மலர் தங்களிடையே நின்று சிறிது நேரமே தடுத்தாலும் அதனால் பல ஆண்டுகள் கழிந்தது போன்ற துன்பத்தை அவை அடையுமாம். பூஇடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீர்உறை மகன்றில் புணர்ச்சி (குறுந். 57) 17. யானைகள் கூட்டமாகப் போகும் போது வலிமையுள்ள ஆண்யானை ஒன்று அக்கூட்டத்தை முன் நின்று நடத்திச் செல்லும் (குறுந் 180) 18. மதங்கொண்ட யானையின் மத்தகத்திலே வாழைக் குருத்தினால் தடவினால் மதம் தணியும். சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய அணங்குடை அருந்தலை நீவலின் மதன்அழிந்து மயங்கு துயர்உற்ற மையல் வேழம் (குறுந். 308) 19. இரண்டு கோழிகள் சண்டையிடத் தொடங்கினால் ஆத்திரத்துடன் ஏதாவதொன்று மடியும்வரை தாக்கிக் கொள்ளுமே தவிர இடையில் அவை சண்டையை நிறுத்தா. யாராவது விலக்கினால் மட்டுமே கோழிப்போர் நிற்கும். உய்த்தனர் விடாஅர் பிரித்துஇடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர்போல (குறுந். 305) எனக் கோழிப் போரைப் பாடிய புலவர் குப்பைக் கோழியார் என்றே பெயர் பெற்றார். 20. பாலை நிலத்திலே, வழிச் செல்வோரின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு நெல்லி மரங்களை வளர்ப்பார்கள். இஃது ஒர் அறச் செயலாகக் கருதப்பட்டது. (குறுந். 209). 21. தாகம் தணிய நெல்லிக் காயை உண்பர். நெல்லிக்காயை உண்டதும் நீர் அருந் தினால் இனிக்கும். “நெல்லிதின்ற முள்ளெயிறு இலங்கஉணல்” என்பது இப்பழக்கத்தை உணர்த்துகிறது. (குறுந். 262) 22. உகாய் மரத்தின் பட்டையை மென்றுதின்ன நீர்வேட்கை தணியும். (குறுந். 274) 23. அணங்கு தாக்கிய மகளிர்க்கு அந்நோய் நீங்க முருகனுக்குப் பூசை செய்வர். ஆட்டின் கழுத்தை அறுத்து, அவ்விரத்தம் கலந்த தினைப்பலியை வைத்து, நீரோடும் ஆற்றின் நடுத்திட்டிலே பல்வகை இசைக் கருவிகள் ஒலிக்க இப்பூசை நடக்கும். மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச் செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் கறங்க... வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப் பேஎய்க் கொளீஇயல் இவள்எனப் படுதல்.... (குறுந் 263) 23. பண்டைத் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் இருந்தனர். அவர்கள் வேதம் கற்றவர்கள்; தவக்கோலம் பூண்டவர்கள். நார் உரிக்கப்பட்டு வெண்மையாக விளங்கும் முருக்க மரத் தண்டைத் தோளில் தாங்கி அதில் கமண்டலத்தைத் தொங்கவிட்டிருப்பர் விரத உணவை உண்பர். பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே (குறுந். 156) 24. பழந்தமிழ் நாட்டில் துறவிகள் இருந்தனர். அவர்களை அறிஞர்களென அனை வரும் மதித்தனர். அவர்கள் புலால் உண்ண மாட்டார்கள். குற்றமற்ற தெருவிடத்தே நாய் இல்லாத வீட்டில் சென்று ஒரே வீட்டில் கிடைக்கும் பிச்சைச் சோற்றை உண்பர். ஆசில் தெருவில் நாய்இல் வியன்கடைச் செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது ஓர்இல் பிச்சை ஆர மாந்தி.... (குறுந். 277) பண்டைக் காலத்தில் புலால் உண்ணாதவர் வீட்டில் நாயும் கோழியும் காணப்படு வதில்லை. அவர்கள் இவற்றை வளர்க்க மாட்டார்கள். பிச்சை ஏற்போர்க்கு ஓரில் லிலையே வயிறு நிரம்பக் கிடைக்கும். ஆதலின் ‘ஓரிற் பிச்சை’ எனப்பட்டது. இவ்வழகிய தொடரை யாத்த அருமை நோக்கி இப்பாடலை இயற்றிய புலவர் ‘ஓரிற் பிச்சையார்’ என அழைக்கப்பட்டனர். நம்பிக்கைகள் பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த சில நம்பிக்கை களையும் கொள்கைகளையும் அறிவதற்கும் குறுந்தொகை துணை செய்கிறது. 1. மறுபிறப்பு ‘உண்டென்பது பழந்தமிழர் நம்பிக்கை’ தலைவி தலைவனிடம் “இப்பிறப்பு ஒழிந்து மறுபிறப்பு நேர்ந்தாலும் நீதான் என் காதலனாய்ப் பிறப்பாய். நான் தான் உன் உள்ளத்திலே என்றும் குடி கொண்டிருக்கும் காதலியாகப் பிறப்பேன்” என்கிறாள். இம்மை மாறி மறுமை ஆயினும் நீயா கியர்என் கணவனை; யான்ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே! (குறுந். 49) 2. “தலைமகளிடம் கொண்டுள்ள என் காதல் அழியக் கூடிய ஒன்றன்று. மறுபிறப்பிலும் தொடர்ந்து நிலைத்துப் பயன்தரும்.” எனத் தலைவன் ஒருவன் குறிப்பிடுகிறான். மைஈர் ஓதி மாஅ யோள்வயின் இன்றை யன்ன நட்பின் இந்நோய் இறுமுறை எனஒன்று இன்றி மறுமை உலகத்தும் மன்னுதல் பெறுமே! (குறுந். 199) 3. மறுபிறப்பைப் போலவே ஊழ்வினையினும் தமிழர் நம்பிக்கை கொண்டிருந்தனர். காதல் மணத்திற்குக்கூட விதி தான் காரணம் என்று எண்ணினர். ஊழ்வினையே அவர்களைச் சந்திக்கச் செய்தது; காதலை வளர்த்தது என்பதே காதலர் துணிபு. (குறுந்.229) 4. சொர்க்கம், நரகம் எண்ணமும் தமிழ் மக்களிடம் இருந்து வந்தது. நன்மை செய்தவர் சொர்க்கம் சென்று நலம்பெறுவர் என்றும் தீமை செய்தவர் நரகத்தில் கிடந்து உழல்வர் என்றும் நம்பினர். (குறுந். 202) 5. ‘இனிது எனப்படூஉம் புத்தேள்’ நாடே என்பதால் தேவருலகம் இன்பம் நிறைந்த உலகம் என நம்பி வந்தனர் எனவும் தெரிகிறது. (குறுந். 288) 6. செங்கடம்பு மரத்திலே அச்சம் தரும் தெய்வம் குடி கொண்டிருக்கும்; அது கொடியவர்களைத் தண்டிக்கும் எனும் கருத்தும் இருந்து வந்தது. மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப! (குறுந் 87) 7. சகுனம் பார்க்கும் பழக்கமும் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. பச்சோந்தியைக் கண்டால் அது நல்ல சகுனம் என்று கருதினர். (குறுந்.140) 8. அகவல் மகளிர் ஆவேசம் கொண்டு, பாடிக் குறி சொல்வதுண்டு. (குறுந். 23) 9. வீட்டுக் கூரையின்மேல் காக்கை உட்கார்ந்து கரைந்தால் விருந்தினர் வருவர் எனும் நம்பிக்கை இருந்து வந்தது. புலவர் நச்செள்ளையார் ‘விருந்து வரக் கரைந்த காக்கையைப்’ பாடியதால் ‘காக்கை பாடினியார்’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டுச் சிறப்பாக அழைக்கப்படுகிறார்!(குறுந். 210) 10. தினை, நெல் முதலியவற்றை விளைவிப்போர் ஓர் ஆண்டின் விளைவினை முதலில் தெய்வத்திற்குப் படைத்த பின்னரே உண்பர். தெய்வத்திற்குப் படைப்பதற்கென வைக்கப்பட்டிருக்கும் பண்டத் தினைப் படைக்குமுன் யாரும் உண்ணக் கூடாது. உண்டால் அஃது எச்சிலாகி விடும் என்றும் அதனால் தெய்வக் குற்றம் நேரும் என்றும் கருதினர். ............கடவுட் கிட்ட செழுங்குரல் அறியாதுண்ட மஞ்ஞை....... ................வெய்துற்று நடுங்கும்! (குறுந். 105) 11. ‘அரவு நுங்கும் மதி’ என்பதால் நிலவைப் பாம்பு விழுங்கு வதாலேயே நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) உண்டாகிறது எனக் கருதினர் எனத் தெரிகிறது. (குறுந். 395) காதல் உள்ளம் பண்பு நலஞ் சான்ற காதலர் உள்ளங்களைக் குறுந்தொகை சிறப்புற எடுத்தோதுகிறது. பெண்கள் தம் மனத்தால் வரித்த காதலனையே என்றும் கணவராகக் கொள்வர்; வேறொருவரை மணக்க மனம் கொள்ள மாட்டார்கள்.(குறுந். 31) காதலித்த பின்னர் உலகமே பரிசாகக் கிடைப்பதாயினும் அதைக் காட்டிலும் காதலையே பெரிதெனக் கருதுவர். கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூ ழலன்யான் நின்னுடை நட்பே! (குறுந். 300) என்பது ஒரு காதலனின் உறுதியுரை! அதே போல் காதலி, காதலனுடன் தான் கொண்ட நட்பு உறுதியாகக் கட்டப்பட்ட தாகும்; வேறு எவராலும் பிரிக்க முடியாதது என்பதை. ...............துறைவனொடு யாத்தேம்; யாத்தன்று நட்பே அவிழ்த்தற்கு அரிதுஅது முடிந்து அமைந்தன்றே (குறுந். 313) எனக் குறிப்பிடுகின்றாள்! காதலர் உடல் அளவாலே ஒருவரையொருவர் பிரிவரன்றி உள்ளத்தாலே எப்பொழுதும் பிரிதல் இலர். தலைவி “நம் தலைவர் நம்மைப் பிரிந்து மிகவும் சேய்மையில் உள்ள நாட்டிடத்தே உறைபவராயிருந்தாலும் நம் நெஞ்சிற்கு மிகவும் அண்மையராகவே உள்ளார்” “நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்” (குறுந். 288) எனத் தோழியுடன் தலைவி குறிப்பிடுவதைக் காண்கிறோம். காதலர் பிரிந்திருந்தாலும் ஒருவரையொருவர் மறக்க மாட்டார். ஒருவர் நலத்தை மற்றவர் நாடிய வண்ணமே இருப்பர். பொருள்தேடிச் சென்று மீளும் காதலன் வழியில் வீசும் வாடைக் காற்றிடம். “வாடையே என் தலைவி வீட்டிலே இருக்கிறாள். அவளை வருத்தாமல் காப்பாயாக” என வேண்டிக் கொள்கிறான் (குறுந். 235). தான் வருந்தினும் தன் துணை வருந்தக் கூடாதெனும் தண்ணளியை உணர்கிறோம். நெருஞ்சி மலர் ஞாயிற்றையே நோக்கி நிற்கும் தன்மை யுடையது; ஞாயிற்றின் ஒளியில் ஈடுபட்டு அதன் இயக்கத்தோ டொத்துத் திரும்பும். அது போன்றே தலைவியும் தலைவன் அன்பில் ஈடுபட்டு அவன் செயலோடே எப்போதும் ஒத்து இயங்குவள்! ..............ஓங்குமலை நாடன் ஞாயிறு அனையன் தோழி! நெருஞ்சி அனையஎன் பெரும்பணைத் தோளே! (குறுந்.315) என்பது தலைவி கூற்று. தலைவன் போக்கே தலைவி போக்காம் மனைவி சமைத்துள்ள உணவை, சுவையுள்ளது; இனிமை யானது என்று கணவன் சொன்னால் அதைவிட மனைவிக்கு இனிமை தரக்தக்கது வேறெதுவும் இல்லை. கணவன் மகிழ்ந் துண்பதைக் காண்பதைத் தவிரப் பெண்ணுக்கு வேறு சிறந்த மகிழ்வும் இருக்க முடியுமா? தான் சூழ்ந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிது எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே! (குறுந். 167) கணவனின் நலமே தன் நலமாகக் கருதும் அன்புள்ளம் மனைவியுள்ளம். உரைப்போக்கு தமிழறிந்தார் அனைவருமே கற்றுணர்தற்கேற்ற வகையில் சாமி.சிதம்பரனாரின் உரை எளிமையானதாகவும் தெளிவான தாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் பாடல் எழுந்த சூழ்நிலை, அதற்கான விளக்கம், பாடலின் பொருள் ஆகியவற்றை முதலில் தந்துள்ளார். அதையடுத்துப் பாடல் தரப்பட்டுள்ளது. முன்னர் உள்ள விளக்கக் கட்டுரையைப் படித்த பின்னர்ப் பாடலைப் படிக்க நேர்வதால், பாடலின் முழுப் பொருளும் படிப்போர்க்குத் தெற்றென விளங்கும். பாடலின் கீழே பதவுரை தரப்பட்டுள்ளது. அதையடுத்துச் சுருக்கமாக ஒன்றிரண்டு அடிகளில் பாடலின் கருத்துத் தரப்பட்டுள்ளது. இறுதியில் பாடலில் உள்ள முக்கியத் தொடர்கள், சொற்கள், கருத்துகளுக்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அத்தலைப்பே பாடலின் உட்கருத்தை விளக்குவதாய் அமைகிறது. சான்றுக்குச் சில: துக்கத்தால் தூக்கம் இல்லை! கனாக் கண்டேன் தோழி! ஆண்மை தந்த அல்லல் யான் இங்கே என் நலன் அங்கே தழைத்த சோலையில் தலைவியைக் காணலாம்! இருந்தால் இன்பம் பிரிந்தால் துன்பம்! வேப்பங்காயும் வெல்லக் கட்டி! தலைப்புகள் கவிதை அடிகள் போல விளங்கிக் களிப் பூட்டுகின்றன. இந்நூலில் 41 பாடல்களுக்கு (75, 76, 77, 117, 118, 119, 147, 148, 149, 168, 169, 170, 171, 172, 173, 177, 178, 179, 211, 212, 213, 225, 226, 227, 228, 244, 245, 246, 272, 280, 281, 282. 292, 293, 294, 295, 296, 297, 352, 353, 354) உரை இல்லை. பேராசிரியர் எழுதாத இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை கண்டார். அதே போல் சாமி. சிதம்பரனார் உரையில் விடுபட்ட 41 பாடல்களுக்கும் தக்காரைக் கொண்டு அவர் போக்கிலேயே உரை கண்டு அடுத்த பதிப்பில் சேர்க்க வேண்டுமென்பது என் விழைவு. உரையிடையே அவர் சில நிகழ்ச்சிகட்கு விளக்கம் தந்து செல்வது மிகவும் சிறப்பாக உள்ளது. சான்றுக்கு ஒரு சில. திருமணம் பண்டைத் தமிழர் திருமணத்தில் வாத்தியங்கள் முழங்கின. உற்றார் உறவினர்கள் கூடி மணமக்களை ஊரார்க்கு அறிவிக்கும் வகையில் சில சடங்குகளையும் செய்தனர். இதைப் ‘பறைபடப் பணிலம் ஆர்ப்ப’ எனும் தொடர் உணர்த்துகிறது. (பக். 46) வயது முதிர்ந்தோரைப் பெண் கேட்க அனுப்புவார்கள். அம் முதியோர் கையில் தடியுடன் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பர். பெண் கேட்க வரும்போது எல்லாம் நன்மையாக முடியட்டும் என்னும் கருத்தில் ‘நன்று நன்று’ எனச் சொல்லிக் கொண்டே வருவார்கள். அவர்களை வரவேற்போரும் ‘நீங்கள் வந்த நாள் நன்னாள்’ எனச் சொல்லி வரவேற்பார்கள். இத்தகைய வாழ்த்தும் வரவேற்பும் காரியம் நிறைவேறும் என்பதற்கான அறிகுறிகள் (பக். 55) தான் காதலித்த பெண்ணை உறவினர் மணம் செய்து கொடுக்க மறுத்தால் நீதி மன்றத்திலே வழக்கிட்டு அப்பெண்ணைப் பெறும் உரிமை காதலனுக்கு இருந்தது. (பக். 585). உடன்போக்கு பெற்றோர்கள் தமது மணத்துக்கு இடையூறாக இருந்தாலும் தமது காதல் ஒழுக்கம் ஊராருக்குத் தெரிந்து, அவர்களால் பழி கூறப்பட்டாலும் காதலர் இருவரும் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விடுவார்கள். இவர்கள் செய்தியை யறிந்து ஊராரும் உற்றார் உறவினரும் அவர்கள் செய்தது சரியென ஒப்புக் கொள்வர். தலைவியை இப்படி அழைத்துச் சென்ற தலைவன் சடங்குகளுடன் மணம் புரிந்து கொள்வதும் உண்டு; இல்லாமல் அப்படியே இணைந்து இல்லறம் நடத்துவதும் உண்டு. இதுவும் கற்பு மணமேயாம் (பக். 24, 25). பொருள் தேடல் மணம் புரிந்து கொண்டபின் தனிக் குடித்தனம் செய்வது பண்டைத் தமிழர்கள் வழக்கம். கூட்டுக் குடும்ப முறையைத் தமிழர் பின்பற்றவில்லை. குடும்பம் நடத்தப் பொருள் வேண்டு மல்லவா? ஆதலின் மணம் புரிந்து கொள்வதற்கு முன்போ- மணம் புரிந்து கொண்ட பின்போ பொருள் தேடப் போவது வழக்கம் (பக். 19,20). உழைக்காமல் பிறர் செல்வத்தைக்கொண்டு வாழும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை. இக்காலத்தைப் போலப் பெற்றோர்கள் பிள்ளைகட்குப் பொருளீட்டி வைப்பது என்ற முறைகூட அக்காலத்தில் இருந்ததில்லை. வயது வந்த ஒவ்வொரு வனும் தான் வருந்திச் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டே வாழ்வு நடத்தி வந்தான் (பக். 168) செல்வம் எளிதில் கிடைப்பதன்று; முயற்சியினால்தான் கிடைக்கும். அருஞ்சுரம் பலவற்றைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டிக் கொண்டு வந்த பிறகுதான் தாம் காதலித்த கன்னியரைக் கடிமணம் புரிவர்; மணம் புரிந்து கொண்ட பின்பும் மனைவியைத் தனியே விட்டுப் பொருள் தேடப் புறப்படுவர் (பக். 247) பொருள் தேடப் புறப்படுவோர் பெரும்பாலும் வேனிற் காலத்தில்தான் புறப்படுவார்கள். கார் காலம் வருவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் வேனிற் காலம். ஆவணி, புரட்டாசி கார் காலம். இல்லறம் நடத்துவோர் நான்கு மாதங்கள் பொருள்தேடப் பிரிந்து எட்டு மாதங்கள் இல்லாளுடன் பிரியாமலிருந்து இன்புறுவர் (பக். 260) தன் முடிவுகள் தமக்குச் சரியெனத் தோன்றிய சில கருத்துக்களைச் சாமி சிதம்பரனார் தம் உரையில் ஆங்காங்கே கூறிச் செல்கிறார். சில இடங்களில் இன்றைய நோக்கிற்கேற்பவும் பொருள் கண்டுள்ளார். “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என நக்கீரர் வாதிட்ட கதைக்கு அடிப்படையாகச் சொல்வர். கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? எனும் பாண்டிய மன்னனின் ஐயமே இப்பாடல் எழுந்ததற்குக் காரணம் எனக் கூறுவர். நக்கீரர் கதையோடு குறுந்தொகைப் பாடலை இணைப்பது பொருத்தமற்றது, எனச் சிதம்பரனார் சிறப்பாகச் சுட்டிக் காட்டுகிறார் (பக். 10-12) துணங்கைக் கூத்துக்கு இன்றைய முறையில் விளக்கம் கூறுகிறார் உரையாசிரியர். “துணங்கைக் கூத்து பெண்கள் கைகோத்தாடும் ஒரு வகைக் கூத்து. இத் துணங்கைக் கூத்தில் வீரர்களும் கலந்துகொள்வார்கள். அவர்கள் தமக்கு விருப்பமான பெண்களைத் தழுவிக் கொண்டு கூத்தாடுவார்கள். இன்று ஆண்களும், பெண்களும் கலந்து ஆடுகின்ற நடனம் மேல் நாட்டினரிடம் காணப்படுகின்றது. இதுபோன்ற ஒருவகை நடனம் பண்டைத் தமிழகத்திலும் இருந்தது என்பது தெரிகிறது” - இஃது உரையாசிரியர் விளக்கம் (பக். 730) இவ் விளக்கம் சரியா என்பது ஆய்தற்குரியது; தம் கூற்றை மெய்ப்பிப்பதற்கான சான்றுகளின்றி யூகத்தின் அடிப்படையில் இது சொல்லப்பட்டுள்ளது. பாலையில் ஆறலைக் கள்வர் உறைதற்குப் பொருளாதார நோக்கில் காரணம் காட்டுவது சிறப்பாக உள்ளது. பாலையில் உணவுப் பண்டங்கள் போதுமான அளவு கிடைக்காது. ஆதலால், அங்குள்ள மக்கள் வழிப்பறி செய்வதை வாழ்க்கையாகக் கொண்டனர். இது பாலை நிலத்தார் இயல்பு. இதனால் “வறுமை யுள்ள இடத்தில் - பஞ்சமுள்ள இடத்தில் - திருட்டு, கொலை முதலிய குற்றங்கள் நிலைத்து வளரும் என்ற உண்மையை உணரலாம்” என்பது, ஏற்புடைய கூற்றேயாம்’ (பக். 46) சிறுவர்கள் ஐம்படைத் தாலியை அணிந்திருந்த செய்தியைக் கூறவருமிடத்தில், ஆசிரியர், தமிழகத்தில் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை எனக் குறிப்பிடுகிறார். தமிழ் நாட்டில் “பண்டைத் திருமணத்தில் தாலி உண்டா” என்பது வாதத்திற்குரிய ஒரு பொருளாக இருந்து வருகிறது. சாமி சிதம்பரனார், “தாலி என்பது குழந்தைகள் அணியும் நகை. பின்னாளில்தான் தாலி என்பது மனைவிக்குக் கணவன் கட்டும் ஒரு அணிகலனுக்குப் பெயராக வழங்கிற்று. பண்டைக் காலத்தில் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லையென்பதற்கு இப்பாடலும் ஒரு ஆதரவு. ஐம்படைத்தாலி என்பது குழந்தைகள் அணியும் கலனையே குறிக்கும்” என்கிறார் (பக். 382) பரத்தை வீடு சென்று வரும் தலைவன் பற்றிய பாடலுக்கு விளக்கம் கூறுமிடத்தில் அவர் கூறுகிறார். “பண்டைத் தமிழன் ஒரு வகையில் பெண்களை அடக்கித்தான் ஆண்டான். தன் விருப்பம் போல் பல பெண்களை மணந்து கொண்டான். இதைத் தவிரப் பரத்தையர்- விலைமாதர்- பொது மகளிர் என்று சொல்லப்படும் பெண்களையும் நேசித்து வந்தான். இது பண்டைத் தமிழனுடைய வழக்கமாக இருந்தது. ஆனால் அக் காலத்திலேயே பெண்கள் இவ்வழக்கத்தை வெறுத்தனர். ஒருவனைப் பற்றி யிருத்தலே பெண்களின் கடமை- கற்பு - அறம் என்று கருதப்பட்டது. ஆண்கள் மட்டும் இந்த அறத்திற்கு விரோதமாக நடந்துவந்தனர். ஆயினும் எந்தப் பெண்ணும் தன் கணவன் பரத்தையர்பால் நேசம் கொண்டதை விரும்பவில்லை. தன் காதலன் பரத்தையர் வீட்டுக்குப் போய் வந்தான் என்று தெரிந்தால் போதும்; அவன் மீது சினந்து கொள்வாள்; அவனிடம் முகம் கொடுத்தும் பேச மாட்டாள்; அவனுடைய நடத்தையைக் கண்டிப்பாள். இது வழக்கமாக ஒவ்வொரு வீட்டிலும் நடந்து வந்தது” (பக். 450) கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆண் பெண் இருவர்க்கும் பொதுவாக வைக்க வேண்டு மெனும் கருத்தை ஆசிரியர் இங்கே வலியுறுத்துகிறார். நலம் பெறுவோமாக புலவர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் குறுந் தொகையை அனைவரும் படித்துச் சுவைத்துப் பயன் கொள்ளும் வகையில் எழுந்துள்ள இவ்வுரை நூலைத் தமிழுலகு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரு. சாமி சிதம்பரனார் தொடர் கட்டுரைகளாக எழுதிச் சென்றிருந்த இதனை அவர்தம் துணைவியார் திருமதி சிவகாமி சிதம்பரனார் அச்சில் கொண்டு வருகிறார்கள். தம் கணவரின் சமுதாய, இலக்கியப் பணிகளை அவர்வழியிலேயே நின்று தொடர்ந்து ஆற்றி வருகின்ற அன்னை சிவகாமி சிதம்பரனார் பெரிதும் பாராட்டுக்குரியவர் சிதம்பரனாரின் ‘குறுந்தொகைப் பெருஞ் செல்வத்தை’ நன்கு துய்த்து நலம் பல பெறுவோமாக சென்னை, அன்பன், 9-11-83 சு. செல்லப்பன் கடவுள் வாழ்த்து குறுந்தொகையின் முதற் பாட்டு கடவுள் வாழ்த்து. இது செவ்வேள் பெருமையைச் சிறப்பித்துக் கூறுகின்றது. முருகன் வரலாற்றைச் சுருக்கமாக மொழிகின்றது. பண்டைத் தமிழாசிரியர்கள் தமது அறிவில் நம்பிக்கை வைத்தே நல்ல நூல்களைச் செய்தனர். எனது நூல் இனிது முடிய இறைவனே துணை செய்ய வேண்டும் என்று முதலில் கடவுளை வாழ்த்தும் வழக்கம் அவர்களிடம் இல்லை. எடுத்த எடுப்பிலேயே நூலைப் பாடத் தொடங்கிவிடுவார்கள். தமிழில் இன்றுள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டு நிற்பது தொல்காப்பியம். அது கடவுள் வாழ்த்துடன் தொடங்கப் படவில்லை. சிலப்பதிகாரத்திலே கடவுள் வாழ்த்தில்லை. சந்திரனுக்கு ஒரு வாழ்த்துரை; சூரியனுக்கு ஒரு வாழ்த்துரை; மழைக்கு ஒரு வாழ்த்துரை; காவிரிப்பூம்பட்டினத்துக்கு ஒரு வாழ்த்துரை இப்படித் தொடங்குகிறது சிலப்பதிகாரம். மணி மேகலையிலும் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து காணப்படவில்லை. சமணர்கள்தான் முதன் முதலில் கடவுள் வாழ்த்துப் பாட்டுடன் நூல் எழுதத் தொடங்கினர். பிற்காலத்தில் இவ் வழக் கத்தையே தமிழ் நூலாசிரியர்கள் அனைவரும் பின்பற்றினர். எட்டுத் தொகை நூல்கள் எல்லாம் சமணர்கள் தமிழிலே நூல்கள் எழுதத் தொடங்குவதற்கு முன்பே தொகுக்கப்பட்டவை. ஆதலால் அவை தொகுக்கப்பட்ட காலத்தில் கடவுள் வாழ்த்துக்கள் இருந்திருக்க முடியாது. பிற்காலத்தில்தான் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவரால் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, போன்ற நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பாடிச் சேர்க்கப்பட்டன. களவழி நாற்பது, திணைமாலை நூற்றைம்பது போன்ற பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல்களுக்குக் கூட கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லை. பண்டைப் புலவர்கள் கடவுள் வாழ்த்துடன் கவிதை புனையத் தொடங்கவில்லை; ஆதலால் அவர்கள் கடவுள் நம்பிக்கையில்லா தவர்கள் என்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் செய்திருக்கும் பாடல்களிலே கடவுள் பற்றிய செய்திகள்- குறிப்புகள் காணப்படு கின்றன. அவர்கள் தமது முயற்சியிலே- தமது புலமையிலே- தமது திறமையிலே- நம்பிக்கையுள்ளவர்கள். ஆதலால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமலே தமது வினைகளை விரைந்து செய்தனர் என்றுதான் எண்ண வேண்டும். குறுந்தொகைப் பாடல்கள் நானூறு. இவற்றுள் 146 பாடல்கள் குறிஞ்சித்திணை பற்றியவை; 93 பாடல்கள் பாலைத்திணை பற்றியவை; 43 பாடலகள் முல்லைத்திணை பற்றியவை; 70 பாடல்கள் நெய்தல் திணை பற்றியவை. 48 பாடல்கள் மருதத்திணை பற்றியவை. முதற்பாட்டே குறிஞ்சித்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவதுதான். குறிஞ்சி நிலத்துத் தெய்வம் செவ்வேள். முருகனே குறிஞ்சி நிலத்துக் கருப்பொருள். இந்நூலில் குறிஞ்சித்திணைப் பாடல்களே குவிந்திருக்கின்றன. முதற்பாடலும் குறிஞ்சித் திணை. ஆதலால் அத்திணைக்குரிய தெய்வமாகிய முருகனை வாழ்த்தும் பாடலை முதலிலே அமைத்தார் பெருந்தேவனார். நூல் தொடங்கு முன் கடவுள் வாழ்த்துப் புனையும் புலவர்கள் இருவகையிலே கடவுள் வாழ்த்துகள் கூறுவர். இவை ஏற்புடைக் கடவுள் வாழ்த்து, வழிபடு கடவுள் வாழ்த்து என இருவகைப்படும். நூலின் பொருளுக்கு ஏற்ற கடவுளை வாழ்த்துதல் ஏற்புடைக் கடவுள் வாழ்த்து; நூலின் பொருள் எப்படியிருந்தாலும் தான் வணங்கும் கடவுளை வாழ்த்தி நூலைத் தொடங்குதல் வழிபடு கடவுள் வாழ்த்து. இக்குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து ஏற்புடைக் கடவுள் வாழ்த்தாகும். பாட்டின் பொருள் ‘தாமரை மலரைப் போன்ற அழகான சிவந்த பாதங்களை உடையவன்; பவழம் போன்ற செந்நிறமுள்ள உடம்பைக் கொண்டவன்; கண்ணைப் பறிக்கும்படி ஒளியுடன் காணப்படு கின்றவன்; குன்றிமணி போன்ற என்றும் மாறாத சிவந்த ஆடையை அழகுற அணிந்திருப்பவன். அவன் கையிலே நீண்ட வேற்படையை வைத்திருக்கிறான். அந்த வேலும் அழகாக ஒளி வீசிக்கொண்டிருக் கின்றது. அந்த வேல் அழகும் நிறமும் மட்டும் அமைந்த வெற்று வேலன்று. அது வெற்றிவேல்; வீரவேல்; நல்லவர்களைத் துன்புறுத்திய கொடியவன் சூரபதுமன் என்னும் அசுரன். அவனுக்குப் பாதுகாவலாக நின்றது கிரவுஞ்சம் என்னும் மலை. சூரபதுமன் மார்பிலே வேல் பாயாமல் அவனுக்கு முன்னே நின்று தடுத்துக்கொண்டிருந்தது அந்த மலை. அந்த மலையின் நடுப் பாகத்தைப் பிளந்து கொண்டு, சூரபதுமன் மார்பிலே சென்று அழுந்தும்படி எறியப்பட்ட வலிமை வாய்ந்த வேற்படையாகும் அது. தனது வெற்றிக்கு அறிகுறியாக அழகான சேவற் கொடியை உயர்த்தியிருக்கின்றான். இக்கோலத்துடன் காட்சி தரும் முருகனே இவ்வுலகத்துயிர் களைக் காக்கின்றான். அவன் காப்பதனால்தான் இவ்வுலகில் உள்ள உயிர்கள் ஒவ்வொரு நாளையும் இன்புள்ள நாளாகக் கொண்டிருக்கின்றன; இவ்வுலகும் இடையூறு களுக்குள்ளாகாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவே கடவுள் வாழ்த்தில் அடங்கியிருக்கும் பொருள். பாட்டு தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத்து அன்ன மேனி திகழ்ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல் சேவல்அம் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே. பதவுரை: தாமரைபுரையும்- தாமரை மலரை ஒத்திருக்கும். காமர் சே அடி - அழகிய செம்மை நிறமுள்ள பாதங்களையும், பவழத்து அன்ன - பவழத்தைப் போன்ற. மேனி - நிறமுள்ள உடம்பையும், திகழ்ஒளி- விளங்குகின்ற ஒளியையும். குன்றி ஏய்க்கும் - குன்றி மணியின் நிறத்தை ஒக்கும். உடுக்கை - உடையையும் குன்றின் - கிரவுஞ்சம் என்னும் மலையின், நெஞ்சு பக எறிந்த- நடுப்பாகம் பிளக்கும்படி வீசிய, அம்சுடர் நெடுவேல்- அழகிய ஒளியுள்ள நீண்ட வேலையும். சேவல் அம்கொடியோன் - சேவல் உரு எழுதிய அழகிய கொடியையும் உடைய முருகக் கடவுள், காப்ப - பாதுகாப்பதனால். உலகு- இவ்வுலகில் வாழும் உயிர்கள், ஏமவைகல் - இன்பமான நாள்களை, எய்தின்று - அடைந்தது. கருத்து: முருகன் அருளைப் பெறுவோர் இவ்வுலகில் இன்புற்று வாழலாம். எல்லா இடையூறுகளையும் நீக்கி இன்பத்தைத் தரும் ஆற்றல் முருகனுக்கு உண்டு. விளக்கம்: புரைதல் -ஒத்தல், காமர் -அழகு, சே-சிவப்பு; செம்மை, திகழ்தல் - விளங்குதல். நெஞ்சு - நடுப்பாகம், பக - பிளக்க, ஏமம் - இன்பம், எய்தின்று, ஒரு சொல், அடைந்தது. ஏ, ஆல். அசைச் சொற்கள். மேனி-நிறம். ‘புரையும், ஏய்க்கும், அன்ன’ என்னும் மூன்று மொழிகளும் ‘ஒத்த’ என்னும் பொருளன. ‘காமர், அம்’ என்னும் சொற்கள் ‘அழகு’ என்னும் பொருளில் வந்தன. ‘ஒளி, சுடர்’ என்பவை ஒளியைக் குறிக்கும் சொற்கள். இது கிட்டாதா எங்களுக்கு? பாட்டு 1 இப்பாட்டைப் பாடியவர் திப்புத்தோளார் என்பவர். இது தோழி தலைவனைப் பார்த்துச் சொல்லும் முறையில் அமைந் திருக்கின்றது குறிஞ்சித் திணை. பாட்டின் பொருள்: தலைவன் தன் காதலியைத் தனியாகக் காண இயவில்லை. அவளைச் சுற்றி எப்பொழுதும் தோழிமார் சூழ்ந்திருக்கின்றனர். வெளியில் வந்தால் இந்த நிலை; வீட்டில் இருந்தால், பெற்றோர் அவளைக் கண்காணித்து வருகின்றனர். ஆதலால், தன் காதலியைக் காணமுடியாமல் தவிக்கிறான் தலைவன். ‘நாமே அவளைக் காணமுடியாது; பிறர் உதவியைக் கொண்டு தான் அவளைக் பார்க்கவேண்டும். அவளுடைய உயிர்த்தோழியின் உதவி கிடைத்தால்தான் அவளைக் கண்டு கூடி இன்புறலாம். ஆதலால், அவளைக் காண்போம்’ என்று புறப் பட்டான் தலைவன். ஒருவரைக் காணப்போகும்போது அவரை மகிழச் செய்வதற்காக ஏதேனும் ஒருபொருளைக் கொண்டுபோவது பண்டைக்கால வழக்கம். அவ்வழக்கம் இன்றும் நம்மை விட்டுப் பிரிந்துவிடவில்லை. சிறியவர்களுக்குத் தின்பண்டம் வாங்கிக் கொண்டு போகின்றோம். பெரியவர்களானால் அவர்களிடம் ஏதேனும் காரியத்தை நாடிச்சென்றால், பழங்களோ, வேறு பண்டங்களோ வாங்கிக்கொண்டு செல்கின்றோம். அவற்றைக் கொடுத்து மாலையிட்டு மதிப்புச் செய்து நாம் நாடி வந்த காரியத்தை நவில்கின்றோம். தலைமகளின் கூட்டத்தைப் பெற- தோழியின் தயவை நாடிச் சென்ற தலைவனும் வெறுங்கையுடன் செல்லவில்லை. பெண்டிர்க்கு மலர்மீது விருப்பம். மலரால் அவர்களை மகிழ்வித்துவிடலாம். ஆதலால், தலைவன் அழகான செங்காந்தள் மலரைக் கையிலே கொண்டு போனான்; தோழியைக் கண்டான்; அவள் கையிலே அந்த மலரைக் கொடுத்தான். ‘தோழியே! நான் என் உயிர் அனைய தலைவியைக் காண இயலாமல் தவிக்கின்றேன்! நீதான் அவளை நான் சந்திக்கும்படி செய்யவேண்டும். இது உன்னைத் தவிர வேறு யாராலும் இயலாத செயல்’ என்று கூறிக் கெஞ்சினான். அதற்குத் தோழி கூறிய விடையே இப்பாடல். பாட்டின் பொருள்: ‘தலைவனே நீ கொடுத்த இம்மலர் எங்களுக்குப் பொருள் அன்று. போர்க்களம் ஒரே இரத்த வெள்ள மாகும்படி அசுரர்களைக் கொன்று அழித்தவன், இரத்தக்கறை படிந்த சிவந்த நீளமான அம்பையுடையவன், சிவந்த கொம்புள்ள யானையை உடையவன், கழலும்படி அணிந்திருக்கின்ற வீர வளையல் என்னும் போர் வளையலைப் புயத்திலே அணிந்தவன், இத்தகைய கோலத்தையுடைய முருகன் வாழ்கின்ற எங்கள் மலையிலே காந்தள் மலருக்குப் பஞ்சமேயில்லை. இரத்தம் போலச் சிவந்த நிறமுள்ள இந்தக் காந்தள் மலர் கொத்துக் கொத்தாய் மலர்ந்துள்ளன. ஆதலால் எங்களுக்கு எளிதில் கிடைக்கும் இந்தச் சிறிய காந்தள் மலரைக் கொடுத்து, பெரிய காரியத்தை முடித்துக் கொள்ளவா நினைக்கின்றாய். நீ மிகவும் கெட்டிக்காரன்! இந்த மலர் எமக்கு வேண்டா. நீயே இந்த மலரை எடுத்துக் கொண்டு வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போ. பாட்டு செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. பதவுரை: மலை நாட்டவனே செம்களம்பட - போர்க்களம் செந்நிறம் பொருந்தும்படி, அவுணர்க்கொன்று தேய்த்த - அசுரர் களை எல்லாம் கொன்று அழித்த, செங்கோல் அம்பின் - இரத்தக் கறைபடிந்த சிவந்த நீளமான அம்பையும். செங்கோட்டு யானை - சிவந்த தந்தங்களையுடைய யானையையும். கழல்தொடி- கழலு கின்ற தோள்வளையையும் அணிந்த. சேஎய்- முருகன் வாழ்கின்ற குன்றம் எங்கள் மலை. குருதிப் பூவின்- இரத்த நிறமுள்ள பூவின். குலை - கொத்துகளையுடைய காந்தட்டு ஏ - காந்தளை மிகுதியாகக் கொண்டிருக்கின்றது. கருத்து: காந்தள் மலர் எனக்குக் கிடைக்காத அரும் பொருள் அன்று. கிடைத்தற்கரிய பொருளைக் கொடுப்பதே ஒருவரை மகிழ்வூட்டும் வழி, விளக்கம்: ஒருவர் அன்பைப் பெறுவதற்காக அவர்க்குக் கொண்டுபோய்க் கொடுக்கும் பொருளுக்குக் கையுறை என்பது பெயர். தலைவன் தந்த கையுறையைத் தோழி மறுத்த செய்தியைக் கூறிற்று இப்பாட்டு. பட- தோன்ற, உண்டாக. தேய்த்தல்- அடியோடு அழித்தல். யானையின் தந்தம் வெண்ணிறமுள்ளது. இங்குச் செங்கோடு என்று குறிப்பிட்டுள்ளது. போர்க்களத்திலே பகைவர்களைக் குத்திச் செந்நிறம் பொருந்தியிருப்பதனால் வெண் கோட்டைச் செங்கோடு என்றார். பண்டைக் காலத்திலே போர் வீரர்கள் புயத்திலே வளை அணிந்திருப்பர். அதற்கே வாகு வளையம் அல்லது தோள் வளை என்பது பெயர். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன் என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது. வண்டே உண்மையைச் சொல் பாட்டு 2 பலராலும் பாராட்டப்படும் பாட்டு குறுந்தொகையின் இரண்டாவது பாட்டு. இந்நூலின் தனிப்பெருமைக்கு இப் பாடல் ஒரு காரணம். இது இறையனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. ஒருத்தியும் ஒருவனும் ஒரு மலைச்சாரலிலே இயற்கையாகச் சந்தித்தனர். அவர்களை யாரும் சேர்த்து வைக்கவில்லை. இருவர் கண்களும் இணையாக நோக்கின. இருவர் உள்ளமும் ஒன்று பட்டது. காதலனும் காதலியுமாகக் கூடிக் களிப்புற்றனர். அவர்கள் கூட்டம் முடிந்தபின் தலைவி - அதாவது காதலி நாணத்தால் தலைகவிழ்ந்து நிற்கின்றாள். சிறிது நேரத்திற்கு முன்னே நுகர்ந்த இன்பத்தை எண்ணி மனதுக்குள்ளே மகிழ்ச்சி யடைந்து நிற்கின்றாள். அவள் நிலையைக் கண்டான் தலைவன். அவள் தலை மயிரைத் தன் கையால் தடவினாள். அதற்குமுன் அவன் எங்கும் கண்டறியாத நறுமணம் தவழ்ந்து வந்தது. அந்த நறுமணம் அவன் உள்ளத்தை உவகைக் கடலிலே மிதக்கச் செய்தது. அந்த நறுமணத்தைப் பாராட்டுவதன் மூலம் அவள் மனத்திலே மகிழ்ச்சித் தேனைப் பாய்ச்ச எண்ணினான். நேரடியாக நங்கையே உன் கூந்தலின் நறுமணம் சிறந்தது. இதற்கு முன் நான் எங்குமே கண்டறியாதது. உனது கூந்தலின் நறுமணமும் ஒப்பற்றது என்று கூற நினைத்தான். இப்படி நேரடியாகப் புகழ்ந்துரைத்தல் இங்கிதம் அன்று என்ற எண்ணம் ஒன்று குறுக்கே முளைத்தது; அவன் கூற நினைத்ததைத் தடுத்தது. வேறு எம்முறையில் அவளைப் பாராட்டுவது என்று எண்ணி நின்றான். இப்படி எண்ணமிட்டுச் சுற்றும் முற்றும் கண்களை ஓட விட்டான். அங்கே வளர்ந்து அழகாக மலர்ந்திருந்த மலர்களிலே வண்டுகள் பறந்து கொண்டிருந்தன. அவை களிப்பால் கானம் இசைத்துக் கொண்டிருந்தன. இதைக் கண்டவுடனே அவன் உள்ளத்தில் ஒரு தெளிவு உண்டாயிற்று. இந்த வண்டுகளைக் கேட்பதன் வாயிலாக, இவற்றினிடம் ஒரு கேள்வியைப் போடுவதன் மூலமாக நமது காதலியின் சிறப்பைச் சொல்லி விடலாம் என்று துணிவு கொண்டான். அந்த வண்டுகளின் தலைமையான வண்டைப் பார்த்து ‘இவளுடைய கூந்தலைவிட நறுமணமுள்ள மலர்களை நீ எங்கேனும் இது வரையிலும் கண்டிருக்கிறாயா?’ என்று கேட்டான். இப்பொருள் அமைந்ததே இந்த இரண்டாவது பாட்டு. பாட்டின் பொருள் “ஏ வண்டே! எப்பொழுதும் எந்த மலரில் நல்ல தேன் உண்டு என்று தேடித் திரிந்து கொண்டிருக்கிறாய். இதுவே உனது வாழ்க்கையிலே செய்யுந் தொழில். அழகான சிறகுகளைப் பெற்றிருக்கின்றாய்? நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். நீ என்னுடைய நாட்டில் எனது நிலத்திலே வாழ்கின்றாய் ஆதலால் என் கேள்விக்கு எனக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி விடை சொல்ல வேண்டும் என்று நினைக்காதே! என் விருப்பத்திற்கு ஏற்றபடி விடை கூற எண்ணாதே நடுநிலையிலேயே நின்று நல்ல பதிலைச் சொல். நீ காதால் கேட்டதைச் சொல்லாதே! கண்ணால் கண்டறிந்த உண்மையை மட்டும் உரை. நான் கேட்கும்கேள்வி இதுதான். இந்தப் பெண் என்னோடு மிகவும் நெருங்கிப் பழகிய நட்புள்ளவள். மயில் போன்ற மெல்லிய தன்மையுள்ளவள். நெருங்கிய அழகான பற்களை யுடையவள். இத்தகைய உயர்ந்த பண்பும், சிறந்த வனப்பும் உள்ளவள் இவள். இவளுடைய கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் உண்டா? நீ இது வரையிலும் கண்டறிந்த பூக்களிலே ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்!” பாட்டு கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல் செறிஎயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே. பதவுரை: கொங்கு - தேனையே. தேர்வாழ்க்கை- ஆராய்ந்து தேடி உண்ணுகின்ற வாழ்க்கையையும். அம்சிறை- அழகான சிறகுகளையும் உடைய. வண்டே - ஏ வண்டே. காமம் செப்பாது- என் மீது வைத்த அன்பினால் நடுநிலை தவறிச் சொல்லாமல். கண்டது மொழிமோ - நீ நேரடியாகக் கண்டறிந்த உண்மையைச் சொல். பயிலியது கெழீஇய - பழக்கம் மிகுந்த. நட்பின்- நட்பினையும். மயில் இயல் - மயில் போன்ற மெல்லிய தன்மையையும். செறி எயிற்று - நெருங்கிய பற்களையும் உடைய. அரிவை கூந்தலின்- இவ்வரிவையின் தலைமயிரைப் போல. நறியவும்- மிகுந்த மணம் வீசுகின்ற மலர்களும். நீ அறியும் பூவே- நீ கண்டறிந்த மலர்களிலே. உளவோ- இருக்கின்றனவா? கருத்து: தலைவியின் கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் ஒன்றும் இல்லை. விளக்கம்- “நறியவும் நீ அறியும் பூவே உளவோ” என்று இறுதி அடிமட்டும் பதமாற்றம் செய்யப்பட்டது. பயிலுதல்- பழகுதல். கெழுவுதல்- நெருங்குதல். இயல் மென்மைத் தன்மை. “பயிலியது கெழீஇய நட்பின்” என்பது தலைவியின் உயர்ந்த பண்பை விளக்குவது. என்றும் பிரியாத அன்பும் தொடர்பும் உள்ளவள் என்பதே இதன் பொருள். “மயிலியல் செறிஎயிற்று அரிவை” என்பது அழகை விளக்குவது. உள்ளத்திலும் அழகுள்ளவள்; உடலிலும் அழகுள்ளவள் அத்தலைவி என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று வழங்கும் பழமொழிக்கு இப்பாட்டு அடிப்படை.. இப்பாட்டை இணைத்து வழங்கும் கதை குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் செண்பக மாறன் என்னும் பாண்டியன் தனது அரண்மனைப் பூங்காவில் தன் ஆருயிர்க் காதலியுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒப்பற்ற நறுமணம் ஒன்று புகுந்து அவன் உள்ளத்தை மகிழ்வித்தது. தன் காதலியின் கூந்தலிலிருந்தே அந்த நறுமணம் வருவதை அறிந்தான். அந்த மணம் அவள் கூந்தலுக்கு இயற்கையா? செயற்கையா? என்ற ஐயம் அவன் உள்ளத்தில் எழுந்தது. மறுநாள் ஒரு பொன் முடிப்பை தமிழ்ச் சங்க மண்டபத்திலே கட்டித் தொங்கவிட்டான். பாண்டியன் உள்ளக் கருத்தை அமைத்துப் பாடுவோர்க்கு இப்பொற்கிழி பரிசாகும் எனப் பறைசாற்றினான். சொக்கநாதர் கோயிலிலே பணியாற்றும் தருமியென்பவன் இதை அறிந்தான். அவன் மணமாகாதவன். தனக்கு மணம் முடிய இப்பொற்கிழியைப் பெற்றுத் தரவேண்டும் என்று சொக்க நாதரை வேண்டிக் கொண்டான். அடுத்த நாள் அவன் பூசைக்குப் போகும் போது சொக்கநாதர் அடியிலே ஒரு ஓலை கிடந்தது. அதை எடுத்தான் தருமி. படித்தான். ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் இப்பாடலைக் கண்டான். அப்பாடலைக் கொண்டு போய்ச் சங்க மண்டபத்திலே- பாண்டியன் முன்னிலையிலே- புலவர்கள் முன்னிலையிலே- படித்தான். கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்ற அப்பாடலின் கருத்தே தன் கருத்தென்று தலையசைத்து மகிழ்ந்தான் பாண்டியன். மற்ற புலவர்களும் அரசன் கருத்தை ஆதரித்தனர். தருமிக்குப் பொற்கிழி பரிசளிக்கப்பட்டது. தருமி அப்பொற்கிழியை எடுக்கச் சென்ற போது நக்கீரர் அதைத் தடுத்தார். எல்லோரும் வியப்புற்றனர். ‘செய்யுளில் சொற்குற்றம் இல்லை பொருட்குற்றம் உண்டு. கூந்தலுக்கு இயற்கை மணம் ஏது? செயற்கை மணந்தான் உண்டு’ என்றார். தருமியால் பதில் சொல்ல முடியவில்லை. தலைகுனிந்து திரும்பிவிட்டான் உடனே சென்று சொக்கநாதரிடம் நடந்த நிகழ்ச்சியைக் கூறி முறையிட்டான். அடுத்த நாள் தமிழ்ச்சங்கம் கூடியபோது சொக்கநாதரே இறையனார் என்ற பெயருடன் புலவர் உருவில் சங்கத்தை அடைந்தார். தருமியும் உடன் வந்தான். தன் பாட்டிலே குற்றம் உண்டென்று கூறியவர் யார் என்று கேட்டார். நக்கீரர் முன் வந்தார். ‘நாமே குறை கூறினோம். கூந்தலுக்கு இயற்கை மணம் எப்படி வரும்; தைலமிட்டு, நறுமலர் புனைந்தால் தான் யாருடைய கூந்தலும் மணம் வீசும். சும்மா விட்டு விட்டால் ஈரும் பேனும் குடியிருக்கும். சிக்கல் நாற்றம் வீசும்’ என்றார் நக்கீரர். ‘கற்புடைப் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை நறுமணம் இல்லையா?” ‘இல்லை; இல்லவே இல்லை.’ ‘நீ வழிபடும் பார்வதி தேவியின் கூந்தலுக்குக் கூட இயற்கை மணம் இல்லையா?’ ‘இல்லை.’ உடனே இறையனார் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காட்டினார். ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்று வீரத்துடன் விளம்பினார் நக்கீரர். இதைக் கேட்டவுடன் இறையனாருக்குக் கோபம் வந்தது. அவரைப் பொற்றாமரைக் குளத்தில் விழும்படி செய்தார். பிறகு தான் நக்கீரர் உண்மையுணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இக்கதை திருவிளையாடற் புராணத்திலே சிறப்பாகக் கூறப்படுகின்றது. இன்னும் பல நூல்களிலும் இக்கதைக் குறிப்பைக் காணலாம். இத்தகைய பெருமைக்குரிய பாட்டு இந்த இரண்டாவது பாடல். இயற்கை மணம் உண்டா? இப்பாடலை அடிப்படையாக வைத்துக் கொண்டு கற்புடைய பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று வழக்காடுவோர் உண்டு. இப்பாடலில் கூந்தலுக்கு இயற்கையான நறுமணம் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? இதை நாம் நன்றாகத் துருவிக் காண வேண்டும். ‘அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே’ என்பதில் தான் இயற்கை மணமா? செயற்கை மணமா? என்ற வழக்கு அடங்கியிருக்கின்றது. ‘நீ கண்டறிந்த மலர்களிலே இவளுடைய கூந்தலைப் போல் மணம் வீசும் மலர்கள் உண்டா?’ என்பது தான் இதன் பொருள். இதில் இவள் கூந்தலின் இயற்கை மணத்தைப் போல’ என்று பொருள் கொள்வதற்கான சொல் ஒன்றும் இல்லை. ஆதலால் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று இப்பாடல் கூறுவதாக மொழிவதே தவறான பொருளாகும். மலர்களின் மணத்தைவிட ஒரு பெண்ணின் கூந்தலின் நறுமணம் சிறந்ததாக இருக்க முடியும். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தனித்தனி நறுமணந்தான் உண்டு. கூந்தலுக்கு நறுமணத் தைலங்கள் தடவுவதால் - பல மணங்கள் கலந்து வீசும் படி- பல மலர்களையும் வைத்து முடிப்பதால் கூந்தலின் நறுமணம் உயர்ந்து நிற்கும். எம்மலருக்கும் இல்லாத உயர்ந்த மணமாகத் திகழும். இது உண்மை. எண்ணெயிட்டுச் சீவிப் பூ முடிக்காத கூந்தலுக்கு என்றும் மணம் இல்லை. தீ நாற்றந்தான் வீசும், இதுவே இயற்கை. ஒருவன் காதல் மிகுதியால், தன் காதலியின் கூந்தலைப் புகழ்ந்து கூறியது இப்பாடல். இதில் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா? என்ற வழக்கிற்கே இடமில்லை. இப்பாடலைப் பற்றி வழங்கும் கதை பிற்கால நூல்களிலேயே காணப்படுகின்றது. கல்லாடம், திருவாலவாயுடையார் திருவிளை யாடற்புராணம், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணம் சீகாளத்தி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற நூல்களிலே தான் இத்தகைய கதைகள் காணப்படுகின்றன. சங்க காலத்திலே இக்கதை வழங்கியதாகத் தெரியவில்லை. ஆதலால் இப்பாட்டின் சிறப்புக் கருதியே இதில் அமைந்திருக்கும் சொற்சுவை பொருட்சுவை கருதியே நக்கீரர் வரலாற்றோடு இப்பாடலை இணைந்திருக்க வேண்டும். ஐவகைத் திணைகளிலே இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்ததாகும். தலைவியின் பண்பு அழகு ஆகிய நலங்களைப் பாராட்டிக் கூறுவதாகிய நலம் பாராட்டல் என்னும் துறையைச் சேர்ந்தது இப்பாடல். காதல் பெரிது பாட்டு 3 இது தேவ குலத்தார் என்னும் புலவர் பாட்டு. குறிஞ்சித் திணை, தலைமகளின் பெருந்தன்மையை- உயர்ந்த தன்மையை- உரைக்கின்றது. தலைவனும் தலைவியும் களவு மணவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக அவர்கள் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர். தலைவியின் தோழிக்கு மட்டுமே இவ் வுண்மை தெரியும். அவள் தலைவனைப் பார்க்கும் போதெல்லாம் ஊரார் அறியத் தலைவியை மணந்து கொண்டு கற்பு மண வாழ்க்கையில் ஈடுபடும்படி கூறுகின்றாள். தலைவியும் கற்பு மணத்தில் வாழவே விரும்புகிறாள். தலைவனோ விரைவில் கற்பு மணம் புரிந்து கொள்கின்றேன் என்று சொல்லிச் சொல்லிக் காலம் கடத்திக் கொண்டே வருகின்றான். ஆயினும் அடிக்கடி தலைவனும் தலைவியும் இரவிலும், பகலிலும் கொல்லைப்புறத்திலும், வேறிடங்களிலும் சந்தித்துக் கூடி மகிழ்ந்து இன்புறுகின்றனர். ஒரு நாள் தலைவன், தன் காதலியாகிய - தலைவியைக் காணும் பொருட்டு வந்தான். அவள் இருக்கும் இல்லத்தின் கொல்லைப் புறத்திற்கு வந்தான். வேலிக்குப் புறத்திலே அவள் வரவை எதிர்பார்த்து நின்றான். வேலிக்கு வெளியிலே தலைவன் வந்து நிற்பதைத் தோழி அறிந்தாள். அவன் அவளை இன்னும் மணந்து கொள்ளாமல் இவ்வாறு காலம் கடத்துவது ஒழுங்கன்று என்பது தோழியின் உள்ளக்கருத்து. இதனைத் தலைவன் அறிய வேண்டும் என்பது தோழியின் விருப்பம். தோழி தன் கருத்தைத் தலைவன் அறியும்படி- அவன் காதிலே கேட்கும்படி- தலைவியிடம் கூறினாள். “தலைவியே நமது தலைவன் மானங் கெட்டவன்; வெட்க மில்லாதவன்; சொல்லிய சொல்லை நிறைவேற்றாதவன். உன்னை மணந்து மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவேன் என்று உறுதிமொழி கூறி உன்னைக் கைப்பிடித்தான். அவன் சொல்லிய சூளுரையை இன்னும் நிறைவேற்றவில்லை. காலம் கடத்திக் கொண்டே வருகின்றான். அவனுடைய நட்பு நீடிக்குமென்று நாம் எப்படி நம்புவது?” என்று தலைவனைப் பழித்துரைத்தாள் தோழி. சிறைப்புறத்திலே- வேலிக்கு வெளியிலே நின்று கொண்டிருந்த தலைவன் செவியிலே இச்சொற்கள் நுழைந்தன. தலைவிக்குத் தோழியின் சொற்கள் வேப்பங்காயாக இருந்தன. காதலனைப் பழிப்பதை அவளால் பொறுக்க முடியவில்லை. “தலைவனுடைய நட்பு மிகவும் சிறப்புடையது. அவனை வீணாகப் பழிக்காதே” என்று சொல்லித் தோழியின் சொற்களைத் தடுத்தாள் இதுவும் சிறைப்புறத்திலே நின்ற தலைவன் காதிலே விழுந்தது அப்பொழுதே இனிக் காலம் தாழ்த்தக் கூடாது; விரைவில் மணந்து கொள்ள வேண்டும் எல்லாருங் காண இல்லறம் நடத்த வேண்டும்; என்று உறுதி செய்து கொண்டான் தலைவன் இந்த நிகழ்ச்சியை விளக்குவதே இப்பாடல். பாட்டின் பொருள் ‘எனது காதலன் மலை நாட்டுத் தலைவன் அவனுடைய மலைச் சாரலிலே குறிஞ்சி மரங்கள் நன்றாகக் கிளைவிட்டு வளர்ந்திருக்கின்றன. அவை பூத்துக் குலுங்கியிருக்கின்றன; வண்டுகள் அம்மலர்களிலிருந்து தேனை மிகுதியாக ஈட்டுகின்றன. இத்தகைய இனிய தேன் வழியும் மலை நாட்டுக்குத் தலைவன். இனிய பண்புகளை உடையவனாகத்தான் இருப்பான்; அவனிடத்திலே வெறுக்கும் குணங்களைக் காண முடியாது. இதை உணராமல் நீ என்னென்னவோ உளறுகின்றாய். அவனுடன் நான் கொண்டிருக்கும் நட்பின் சிறப்பை நீ அறியவில்லை. என் ஆருயிர்த் தோழியாயிருந்தும் இதை அறியா மலிப்பதற்காக வருந்துகின்றேன், அந்த நட்பின் பெருமையைச் சொல்கிறேன் கேள். அவனிடம் நான் கொண்டிருக்கும் நட்பு இந்த நிலத்தைக் காட்டிலும் பெரிய பரப்புள்ளது. வானத்தைக் காட்டிலும் உயர மானது; கடலைக் காட்டிலும் அளக்க முடியாத அருமையான ஆழமுள்ளது. ஆதலால் அவனைப் பழித்துரைக்காதே. பாட்டு நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆர் அளவு இன்றே; சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெரும்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. பதவுரை: சாரல்- மலைப்பக்கத்திலே உள்ள. கருங்கோட் குறிஞ்சி- கருமையான கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின். பூ கொண்டு - மலர்களைக் கொண்டு. பெரு தேன் இழைக்கும்- மிகுந்த தேனை வண்டுகள் சேர்க்கின்ற. நாடனொடு நட்பு - மலை நாட்டையுடைய தலைவனுடன் நான் கொண்டிருக்கும் நட்பானது. நிலத்தினும் பெரிதே- இந்த உலகைக் காட்டிலும் அகலம் உள்ளது. வானினும் உயர்ந்தன்று- வானத்தைவிட உயரமானது. நீரினும் ஆர் அளவின்று- கடல் நீரைக் காட்டிலும் சிறந்த ஆழமுள்ளது. கருத்து: தலைவி தலைவனுடன் கொண்டிருக்கும் நட்பு- அன்பு - இணை சொல்ல முடியாத பெருமை உள்ளது. விளக்கம்: “சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு; பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆர் அளவின்றே’ என்று வரிகள் மாற்றப்பட்டுப் பொருள் கூறப்பட்டது உயர்ந்தன்று- உயர்ந்தது, அளவின்று- அளவுடையது; ஆழ முள்ளது. கோல்- கிளை. இழைக்கும்- செய்யும்: ஈட்டும்; சேர்க்கும். அகலமுள்ளது நிலம். உயரமுள்ளது வானம்; ஆழமுள்ளது கடல்; இவற்றைவிட அகலத்திலும், உயரத்திலும், ஆழத்திலும் மிகுந்தது ஒன்றும் இல்லை. ஆதலால் அன்பின் பரப்பு, உயரம் ஆழங்களுக்கு இவை எடுத்துக் காட்டப்பட்டன. அன்பின் பெருமையை விளக்க இப்பாடலே போதுமானது. இதைவிட அழகான உதாரணங்களுடன் வேறு பாடல் ஒன்றும் இல்லை. அவர் இல்லையே பாட்டு 4 இப்பாட்டின் ஆசிரியர் காமஞ்சேர் குளத்தார். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துக்கத்தை எடுத்துக் காட்டுவது; நெய்தல் திணையைச் சேர்ந்தது. தலைவன் பிரிந்து போய் விட்டான். தலைவி அவனுடைய வருகையை எதிர்பார்த்துத் தனது துயரத்தை அடக்கிப் பார்க்கின்றாள். அது அடங்கவில்லை. கண்ணீர் வடிவாகப் பீறிட்டுக் கொண்டு வெளியிலே வருகின்றது இவள் நிலையைக் கண்டு தோழி கவலைப்பட்டாள். பிரிவாற்றாமல் இவ்வாறு வருந்துகின்றார்கள் என்று எண்ணி ஏக்கமுற்றாள். தோழி தன்னிடம் இரக்கம் காட்டுவதைக் கண்ட தலைவி தன் உள்ளத்துயரை அவளிடம் உரைத்தாள். அன்பும் இரக்கமும் காட்டுகின்றவரிடம் தன் அகத்துயரை வெளியிடும் தன்மை அனைவர்க்கும் உண்டு. இது இயற்கையின் படியே தலைவி தனது துன்பத்தைத் தோழியிடம் கூறினாள். இந்த இயற்கை நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது இப்பாடல். பாட்டின் பொருள் ‘எனது நெஞ்சம் வருந்துகின்றது! எனது காதலர் பிரிவை எண்ணியெண்ணி எனது நெஞ்சம் வருந்துகின்றது. என் நெஞ்சத் திலே துக்கம் எழுவதற்கே அவர் இடம் கொடுக்க மாட்டார். இமையைத் தீய்ப்பது போன்ற வெப்பமுள்ள கண்ணீரை என் கண்ணிலே கண்டுவிட்டால் போதும். ஒரு நொடிப் பொழுது கூடப் பொறுக்க மாட்டார். என் கண்ணீரைத் துடைத்து மகிழ்ச்சி யூட்டுவார். அளவளாவிக் கலந்து உரையாடி நெஞ்சில் தோன்றிய கவலையைப் போக்குவார். இத்தகைய அன்புள்ள காதலர் இன்று என் அண்டையில் இல்லை. என்னிடம் அன்பில்லாதவர் போலப் பிரிந்து சென்றார். அவருடைய பழைய அன்பையும் இன்றைய அன்பின்மை யையும் நினைத்து நினைத்து என் உள்ளம் வருந்துகின்றது. அவர் வந்தால்தான் என் வருத்தம் தணியும்; என் செய்வேன்?” பாட்டு நோம்என் நெஞ்சே, நோம்என் நெஞ்சே, இமைதீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி அமைதற்கு அமைந்தநம் காதலர். அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. பதவுரை: என் நெஞ்சுநோம்- என்நெஞ்சம் துன்புறுகின்றது; என் நெஞ்சுநோம்- என் நெஞ்சம் துன்புறுகின்றது. இமைதீய்ப்பு அன்ன- இமையைச் சுட்டுக் கருக்குவது போன்ற, கண்ணீர்- கண்ணீரை என் கண்களிலே கண்டால், தாங்கி- உடனே அதனைத் துடைத்து, அமைதற்கு- அன்புடன் பேசி மகிழ்வதற்கு, அமைந்த - ஏற்ற, சிறந்து அன்பமைந்த. நம் காதலர்- நமது தலைவர். அமைவு இலர் ஆகுதல் - இப்பொழுது இங்கு அமைந்திராமல் பிரிந்திருத்தலை எண்ணியெண்ணி, என் நெஞ்சுநோம் - என் நெஞ்சு வருந்துகின்றது. கருத்து: தலைவர் பிரிந்து சென்றார்; என்னண்டையில் இல்லை. ஆதலால் என் உள்ளம் வருந்துகின்றது. விளக்கம்: நோகும் என்ற சொல் நோம் என நின்றது. நோம் என்று மூன்றுமுறை மொழிகின்றாள். இது துன்பத்தின் மிகுதியைக் காட்டும். கண்ணீரை ‘இமை தீய்ப்பன்ன கண்ணீர்’ என்றார். இமையைச் சுட்டுக்கருக்குவது போன்ற கண்ணீர். நெஞ்சு துக்கத்தால் துடிப்பதால் - உள்ளம் குமுறுவதால்- கண்ணீர் வெந்நீராக மாறி வருகின்றது. அது இமையைத் தீய்க்கின்றது. ‘முன்பு கண்ணீரைத் துடைத்து ஆறுதல் அளித்தவர்’ என்று தலைவி மொழிவதிலே ஒரு கருத்துண்டு. முன்பு ஆறுதல் அளித்தவர். பின்பும் ஆறுதல் அளிப்பார்; விரைவில் திரும்பி வருவார்; நமது துக்கத்தைத் துடைப்பார் என்ற நம்பிக்கையும் தலைவியின் உள்ளத்தில் குடி கொண்டிருப்பதைக் காணலாம். பிரிந்து சென்ற தலைவனை எண்ணித் தலைவி வருந்துகின்றாளே அன்றி அவனை வெறுக்கவில்லை; அவனிடம் அன்பு குன்ற வில்லை. இது ஒரு உண்மையான காதலியின் தன்மை. துக்கத்தால் தூக்கம் இல்லை பாட்டு 5 நரிவெரூஉத்தலையார் பாடியது. தலைவனைப் பிரிந்துறையும் தலைவியின் துன்பத்தைப் பிரிவாற்றாமையைக் கூறுவது. நெய்தல் திணை. பிரிவாற்றாமையால் தலைவி வருந்துகின்றாள். அவள் உள்ளக் கவலையால் உறக்கமின்றி வருந்துகின்றாள். இந் நிலையைக்கண்டு அவள் தோழியும் அவளிடம் இரக்கம் காட்டு கின்றாள். தோழியின் இரக்கத்தைக் கண்ட தலைவி, அவளிடம் தன் துன்ப நோயை- காதலால் தனக்கு நேர்ந்த துயரத்தை- பிரி வாற்றாமையால் தான் அடையும் கவலையைத் தெரிவிக்கின்றாள். பாட்டின் பொருள் ‘தோழியே! காமநோயின் தன்மை முழுவதையும் இது வரையிலும் நான் கண்டறிந்ததில்லை. அப்படிப்பட்டதா இக் காமநோய்! நான் வியப்படைகின்றேன். கடற்கரையிலே தழைத்து வளர்ந்திருக்கும் புன்னை மரங்களைப் பார். இனிய நிழலைத் தருகின்றது. அதிலே நிலையாகத் தங்கியிருக்கின்ற நாரைகள் கவலையின்றி உறங்குகின்றன. கரையை மோதிமோதிச் சிதறுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் அந்தப் புன்னை மரத்தின் மேல் படுகின்றன. அதனால் அம்மரங்களில் மலர்கள் அரும்பிப் பூத்திருக்கின்றன. இப்படிப்பட்ட இனிமையான நீரையுடையது கடல். இந்த மெல்லிய கடற்கரையையுடையவன் நமது தலைவன். அவன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டான். அவன் பிரிந்ததனால் என் உள்ளத்தில் வளர்ந்திருக்கும் துக்கத்திற்கு அளவேயில்லை. துக்கம் உள்ளவர்கள் தூங்கமாட்டார்கள். மனத்தில் அமைதியாய் இருந்தால்தான் நன்றாக உறங்க முடியும். எதையாவது எண்ணி யெண்ணி வருந்துகிறவர்கள் எப்படித் தூங்க முடியும்? நானும் உறங்குவதற்குத்தான் முயல்கின்றேன். எவ்வளவு முயன்றும் என்ன பயன்? நான் உறங்க நினைத்தாலும் என் கண்கள் உறங்க மறுக்கின்றன. பல இதழ்களுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமையோடு இமை பொருந்த மாட்டோம் என்று வம்பு செய்கின்றன. நான் என்ன செய்வேன். இது காதல் நோயால் வந்த தொல்லை! பாட்டு அதுகொல் தோழி காம நோயே! வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்; மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே பதவுரை: தோழி - தோழியே. வதிகுருகு- தன்னிடம் தங்கியிருக்கும் நாரைகள். உறங்கும் - உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற. இன் நிழல் புன்னை - இனிய நிழலையுடைய புன்னை மரம். உடைதிரைத்திவலை- கரையில் மோதி உடைகின்ற அலைகளின் துளிகள் தெறிப்பதால். அரும்பும்- மலர்கள் அரும்புகின்ற. தீநீர் - பார்வைக்கு இனிமையாகக் காணப்படும் நீர்ப்பரப்புள்ள. மெல்லம் புலம்பன்- மெல்லிய கடற்கரையை யுடைய தலைவன். பிரிந்தென- நம்மை விட்டுப் பிரிந்து போய் விட்டான். ஆதலால் பல் இதழ் - பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற. உண் கண் - என்னுடைய மையுண்ட கண்கள். பாடு - இமையோடு இமை பொருந்துவதற்கு. ஒல்லாஏ- சம்மதிக்க வில்லை. கருத்து: தலைவன் பிரிந்த துக்கத்தால் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நான் தூங்க நினைத்தும் என் கண்கள் உறங்க மறுக்கின்றன. விளக்கம்: வதி, வதிதல் - தங்குதல். குருகு - நாரை. திவலை- துளி. தீநீர்- இனியநீர். நீரில் இனிய சுவையில்லை. கடல்நீர்ப் பரப்பு கண்ணுக்கு இனிமையான காட்சி. மெல்லம் - மெல்லிய. புலம்பன் - நெய்தல் நிலத்தலைவன். கொல் - ஐயத்தை காட்டும் அசைச் சொல். ஏ - அசைச்சொல். பாடு - படுதல்; ஒன்றோடு ஒன்று பொருந்துதல். ‘கடற்கரையில் உள்ள குளிர்ந்த புன்னை மரத்தில் நாரை உறங்குகின்றது. இதுபோல் நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் அவர்போனவிடத்திலே நன்றாக உறங்குவார். நான் மட்டும் இங்கே தூங்காமல் தொல்லைப்படுகின்றேன்’ என்ற கருத்தை ‘வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை’ என்ற அடியால் காணலாம். உலகமே உறங்குகின்றது பாட்டு 6 பதுமனார் பாடியது. தலைவன் பிரிவால் தூங்கா மலிருக்கும் தலைவி, தன் துக்கத்தைத் தோழியிடம் கூறியது. நெய்தல் திணை. ஒரு காதலனும் காதலியும் நீண்ட நாட்களாகக் களவு மண வாழ்க்கை நடத்திக்கொண்டு வந்தனர். தலைவன் தலைவியை வெளிப்படையாக மணந்து கொள்ள வேண்டும். யாவரும் காண கற்பு மண வாழ்விலே நிற்க வேண்டும். இனிமையாக இல்லறம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தாள். மணம் புரிந்து கொண்டபின் தனிக்குடித்தனம் செய்வது பண்டைத்தமிழர் வழக்கம். கூட்டுக் குடும்ப முறையை நாகரிகம் பெற்ற தமிழர் பின்பற்றவில்லை. தனிக்குடும்பம் நடத்த வேண்டு மானால் பொருள் வேண்டும். பொருளின்றேல் எப்படிக் குடித் தனம்- இல்லறம்- நடத்த முடியும்? ஆதலால் மணம் புரிந்து கொள்வதற்கு முன்போ- மணம் புரிந்து கொண்ட பின்போ பொருள் தேடப் போவது காதலன் வழக்கம். இவ்வழக்கத்தைப் பின்பற்றியே கள்ள மணம் புரிந்த காதலன் பொருள் தேடப் புறப்பட்டான். ‘‘நான் பொருளீட்டிக் கொண்டு வந்தபின் உன் பெற்றோரைக் கேட்டு உன்னை மணம் புரிந்துகொள்ளுகிறேன்” என்று தலைவியினிடம் சொல்லிப் பிரிந்து சென்றான். ஆதலால் தலைவி தனித்திருக்கிறாள். இரவில் அவளுக்கு உறக்கம் கூட வருவதில்லை. இப்படியிருக்கும் போது ஒரு நாள் தலைவி காதலன் இன்னும் வரவில்லையே, எப்பொழுது வருவானோ என்னும் எண்ணத்துடன் குறுகுறு என்று தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் தோழி மட்டும் நன்றாகக் கவலை யின்றித் தூங்குகின்றாள். இதைக் கண்ட தலைவி அத்தோழியை எழுப்பினாள். உறங்காமல் விழிந்திருப்பவர்களுக்குப் பிறர் உறங்குவதைக் கண்டால் பொறாமை கொழுந்து விட்டு எரியும். ஆதலால் உறங்கும் தோழியை எழுப்பி ‘இந்த நள்ளிரவில் நான் மட்டும் தூங்கவில்லை இந்த உலகம் முழுவதும் உறங்குகின்றது’ என்று கூறினாள். இது நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைப் பாடல் எடுத்துரைக்கும் விதம் மிகவும் இனிமையானது. நமது நெஞ்சைக் கவருந் தன்மையுள்ளது. பாட்டின் பொருள் ‘தோழியே! இந்த நடுயாமம் எந்தப் பொருள்களையும் கண்ணாற் காண முடியாமல் நிறைந்த இருட்டை உடையதாக இருக்கின்றது. இந்த நடுச் சாமத்திலே ஒரு ஓசையும் இல்லை. அலையற்ற கடலைப்போல அமைதி நிலவுகின்றது. என்னுடைய துன்பத்தை எந்த மனிதரும் பார்க்கவில்லை; சிறிதும் இரக்கம் காட்டவில்லை. ஆறுதல் மொழி ஒன்றேனும் சொல்லவில்லை. இத்தகைய மக்கள்- மனிதத் தன்மையற்ற மக்கள்- சொல்லடங்கிச் சுகமாகத் தூங்குகின்றனர். என்னை இகழ்வது போல் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குகின்றனர். மக்கள் தாம் இப்படி யென்றால், இந்த உலகில் உள்ள ஏனைய உயிர்களாவது என்னிடம் இரக்கங் காட்டுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. இப்பெரிய உலகில் உள்ள பல வகைப் பட்ட எல்லா உயிர்களும் வெறுப்பில்லாமல் தூங்குகின்றன. ஆனால் ஒருத்தியாக இருக்கின்ற துணையின்றித் தனித்திருக்கின்ற யான் மட்டும் தூங்காமல் இருக்கின்றேன். இது மிகவும் இரங்கத் தக்கதல்லவா? பாட்டு நள்என்றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள், முனிவுஇன்று நனம் தலை உலகமும் துஞ்சும், ஓர் யான் மன்ற துஞ்சாதானே. பதவுரை: தோழியே நள்என்றன்று - நிறைந்த இருட்டை யுடையதாயிற்று. யாமம்- இந்த நடு இரவு. மாக்கள் - அனைவரும். சொல் அவிந்து - சொல் அடங்கி. இனிது அடங்கினர் ஏ- சுகமாகத் தூங்கி விட்டனர். முனிவு இன்று- சிறிதும் வெறுப்பில்லாமல். நனம் தலை உலகமும் விரிந்த - இடமுள்ள இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும். துஞ்சும்- தூங்குகின்றன. ஓர்யான்- ஒருத்தியாகிய நான் மட்டும். மன்ற துஞ்சாதேன் ஏ- உறுதியாகத் தூங்காமல் இருக்கின்றேன். கருத்து: எல்லோரும் உறங்கும் நடுச் சாமத்திலும் என்னால் உறங்க முடியவில்லை. விழித்துக் கொண்டிருக்கின்றேன். விளக்கம்: நள்- செறிவு; நிறைவு. யாமம்- சாமம், நடு இருட்டு. அவிந்து- அடங்கி. அடங்கினர்- தூங்கினர். முனிவு- வெறுப்பு நனம் தலை- அகன்ற இடம். துஞ்சும்- தூங்கும். மாக்கள் என்பது சொல்லவிந்து, என்பதற்கு முன் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஏ, அசைச் சொற்கள். நள்ளிரவு அமைதியாக இருக்கின்றது. அதற்குக் காரணம் மக்களும் பேச்சு மூச்சற்று உறங்குகின்றனர். ஏனைய உயிர்களனைத்தும் அயர்ந்து உறங்குகின்றன. இதுவே இரவின் அமைதிக்குக் காரணம். இக் கருத்தை இப் பாட்டில் காணலாம். இவர்கள் யாரோ? பாட்டு 7 இது பெரும்பதுமனார் பாட்டு. களவு மணத்தில் நின்ற தலைவனும் தலைவியும், உறவினர்களுக்குத் தெரியாமல் ஊரை விட்டுப் போகின்றனர். இவர்களைக் கண்டவர்கள் இவர்களைப் பற்றிப் பேசுகின்றனர். இது பாலைத் திணை. தலைவனும் தலைவியும் ஊரார் அறியாமல் -உற்றார் அறியாமல் -பெற்றோர் அறியாமல் நடத்திக் கொண்டிருந்த காதல் வாழ்வு வெளிப்பட்டு விட்டது. ஊரார் அவர்களைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டனர். இதை யறிந்தனர் அக் காதலர்கள். இனியும் மறைந்து வாழ்வதால் -மதிப்பில்லை. வேறுபட்டு வாழவேண்டும்; நாம் இணைபிரியாத உறுதியுள்ள காதலர்கள் என்பதை ஊரார் உணர வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் குறிப்பிட்ட இடத்திலே சந்தித்து ஊரை விட்டுப் புறப்பட்டனர். இருவரும் இளைஞர்கள். நல்ல பருவ வயதுள்ளவர்கள். கண்டோர் கண்ணைக் கவரும் கட்டழ கன் தலைவன். பார்ப்பவர் இரக்கங் கொள்ளும் இணையற்ற வனப்பமைந்த மங்கைப் பருவமுள்ளவள் தலைவி. இவ்விருவரும் பாலைவனத்தின் வழியே நடந்து போகின்றனர். தலைவி தன் கால்களிலே சிலம்புகள் அணிந்திருக்கின்றாள். பண்டைக் காலத்தில் மணமாகாத பெண்கள் தான் காலிலே சிலம்பு பூண்டிருப்பார்கள். மணமானபின் சிலம்பைக் கழற்றி விடுவார்கள். அவர்களுடைய திருமணச் சடங்கிலே சிலம்பு கழித்தல் என்று ஒரு சடங்குண்டு. இதற்குச் சிலம்பு கழி நோன்பு என்று பெயர். தலைவியின் காலிலே சிலம்பைக் கண்டவர்கள் அவள் இன்னும் மணமாகாத மங்கை என்று அறிந்தனர். அவள் அழகிய ஆடவனுடன் கூடிச் செல்வதைக் கண்டு இருவரும் காதலர்கள்; களவு மணம் பூண்டவர்கள்; கற்பு மணத்தை மேற்கொள்ள இணைந்து செல்கின்றனர் என்று உணர்ந்து கொண்டனர். ஆனால் அவர்கள் யார்? எவ்வூரினர்? எங்குப் போகின்றனர்? என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அன்பையும், அவதியையும் பார்த்துப் பரிதாபத்துடன் பேசிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது இப்பாட்டு. இக்காதலர் களைக் கண்டவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை இப் பாடலில் காணலாம். பாட்டின் பொருள் “இந்த ஆடவன் அழகுள்ள இளைஞன்; வில்லைத் தோளிலே மாட்டியிருக்கிறான். இவன் கால்களிலே வீரகண்டா மணிகள் அழகு செய்கின்றன. இவன் உறுதியுள்ளமும், உடல் உரமும் பெற்ற வீரன் என்பதிலே ஐயம் இல்லை. இவனுடன் செல்லும் இந்நங்கை தன் கைகளிலே வளையல்களை அணிந் திருக்கின்றாள். இவளுடைய மெல்லிய அடிகளின் மேல் சிலம்புகள் கிடக்கின்றன. ஆதலால் இவள் இன்னும் மணம் புரிந்து கொள்ளாதவள். இவ்வாடவனும் மணம் புரிந்து கொள்ளாதவள். மணம் புரிந்து கொள்ளாத இவ்விருவரும் யார்? தெரியவில்லை. இந்தப் பாலை நிலத்திலே வளர்ந்திருக்கும் வாகை மரங்களில் உள்ள காய்ந்த நெற்றுக்கள் காற்றினால் கலகலவென்று ஒலிக்கின்றன. ஆரியர்கள் இரண்டு மூங்கில்களை நீண்ட இடை வெளியிருக்கும்படி நட்டு அதன் உச்சியிலே இழுத்துக் கட்டின கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்றபோது அடிக்கின்ற பறையொலி போல் இருக்கின்றது இவ்வோசை. இவ்வாறு வழி நடப்போர் அஞ்சும்படி ஒலிக்கும் வாகை மரங்களும், மூங்கில் களும் நிறைந்த இந்தப் பாலைவனத்திலே தனித்து நடந்து செல்கின்றனர் இவர்கள். மிகவும் இரங்கத்தக்கவர்கள்; இரக்கம் காட்டுவதற்கு உரியவர்கள். பாட்டு வில்லேன் காலன கழலே, தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர் யார்சொல்? அளியர் தாமே; ஆரியர் கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி வாகை வெண்நெற்று ஒலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னியோரே. பதவுரை: வில்லோன்- வில்லையுடையவனாகிய இவனுடைய. காலனகழல் ஏ- கால்களிலே இருக்கின்ற வீர கண்டா மணிகள். தொடியோள்- வளையல்களையணிந்த இவளுடைய மெல் அடி மேலவும் - மெல்லிய பாதங்களுக்கு மேல் அணிந்திருப்பனவும். சிலம்பே- சிலம்புகளாகும். ஆரியர்- ஆரியக் கூத்தாடிகள். கயிறு ஆடு பறையின்- கயிற்றின் மேல் ஏறி நின்று ஆடும்போது அடிக்கின்ற பறை யொலியைப் போல. கால் பொரக்கலங்கி - காற்று மோதுவதனால் அசைந்து. வாகை வெள் நெற்று ஒலிக்கும் -வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கின்றன. வேய்பயில் அழுவம்- மூங்கில்கள் நிறைந்திருக்கின்ற இப்பாலைவனத்தை. முன்னியோர் - அடைந்தவர். நல்லோர்- நல்லவர்களாகிய இவர் கள். யார் கொல்? - யாவரோ? அளியர்கள்தாம் ஏ- இவர்கள் மிகவும் இரக்கப்படுவதற்கு உரியவர்கள்தாம். கருத்து: மணம் புரிந்து கொள்ளாமல் தனித்துச் செல்லும் இவர்களுடைய நிலைமை மிகவும் இரங்கத்தக்கதாகும். விளக்கம்: கழல் ஆடவர் காலில் அணியும் வீரகண்டா மணி - தொடி - வளையல். அளியர்- இரங்கத்தக்கவர். அளி- இரக்கம். கால் - காற்று. வேய்- மூங்கில். அழுவம் - பாலை நிலம். ஏ - அசைச்சொற்கள். கழைக் கூத்தர்கள் வடநாட்டினர். வடநாட்டினரே தென்னாட்டில் வந்து கழைக் கூத்தாடினார்கள். இவர்களை ஆரியக் கூத்தாடிகள் என்று அழைத்து வந்தனர். ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண் என்பது நமது நாட்டில் வழங்கும் பழ மொழி. இரண்டு மூங்கில்களுக்கிடையில் கட்டப்பட்டுள்ள நீண்ட கயிற்றின் மேல் ஏறி நின்று கூத்தாடும்போதும், தங்கள் காரியத்தில் கவனமாக இருப்பர். வடநாட்டினரை ஆரியர் என்று பெயரிட்டு அழைப்பது தமிழர் வழக்கம். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் எல்லாம் வடவரையே ஆரியர் என்னும் பெயரால் அழைத்திருக் கின்றனர். பழந்தமிழர்களின் காதற்சிறப்பைக் குறிக்கும் பாடல்களில் இது ஒன்று. பெற்றோர்கள் தமது மணத்திற்கு இடையூறாக நின்றாலும், தமது காதல் ஒழுக்கம் ஊரார்க் குத் தெரிந்து அவர் களால் பழி கூறப்பட்டாலும், காதலர்கள் இருவரும் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் போய் விடுவார்கள். இவர்கள் செய்தியை அறிந்து ஊராரும், உற்றார் உறவினர்களும், காதல் நிறைந்த அவர்கள் செய்த செயல் சரி என்று ஒப்புக் கொள்வார்கள்; அவர்களுடைய உறுதியான அன்பைப் பாராட்டுவார்கள். இதன்பின் பெண்ணின் பெற்றோர் இவர்களை அழைத்து விருந் திடுவதும் உண்டு. தலைவியை இவ்வாறு அழைத்துச் சென்ற தலைவன் தன் இல்லத்திற்குச் சென்று வாழ்வான். இதை அனைவரும் கற்பு மண மென்று ஒப்புக் கொள்ளுவார்கள். தலைவியை இப்படி அழைத்துப் போன தலைவன் சடங்குகளுடன் மணம் புரிந்து கொள்ளுவதும் உண்டு; ஒன்றும் இல்லாமல் அப்படியே இணைந்து இல்லறம் நடத்துவதும் உண்டு இதுவும் கற்பு மணமேயாகும். இதுவே பண்டைத் தமிழர் இல்வாழ்க்கை முறை. பெண்ணுக்கு ஆண் அடக்கம் பாட்டு 8 இப்பாட்டின் ஆசிரியர் ஆலங்குடி வங்கனார். தலைவனால் காதலிக்கப்பட்ட பரத்தை ஒருத்தி சொல்வது போலப் பாடப்பட்டது. மருதத் திணை. ஒரு தலைவன் தான் காதலித்த பரத்தை ஒருத்தியின் வீட்டிலே தங்கியிருந்தான். அவன் மனைவி பிள்ளை பெற்றிருந்தாள். அக்காலத்தில்தான் தலைவன் பரத்தையைக் காதலித்து இன்பம் நுகர்ந்திருந்தான். அந்தப் பரத்தையும் அந்தத் தலைவன் தன்னை விட்டு நீங்கமாட்டான், தன் இல்லத்திலேயே நிலைத்திருப்பான் என்று நினைத்திருந்தாள். தலைவனோ தக்க பருவ காலம் வந்தவுடன் தன் இல்லத்திற்குத் திரும்பினான். தான் பெற் றடுத்த குழந்தையுடன் கொஞ்சிக் குலவினான். தன் மனைவியின் சொல்லுக்கு அடங்கி நடந்தான். அவள் சொல்லிய படியெல்லாம் கூத்தாடிக் கொண்டிருந்தான். அக்காதலி தன் காதலனுடைய அன்பைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாள். அவன் தன்னிடம் வைத்திருக்கும் அடங்காத காதலைக் கண்டு அகமகிழ்ந்தாள். `இத்தகைய இணையற்ற அன்புள்ள என் காதலனை அந்த வேசி- பரத்தை - விலைமாது மயக்கினாள். வஞ்சக விளையாட்டுக் களால் தன் வசப்படுத்திவைத்துக் கொண்டிருந்தாள் வஞ்சகம் எத்தனை நாளைக்கு வாழமுடியும்? என் காதலன் எப்படியோ அவளுடைய வஞ்சக வலையிலிருந்து விடுபட்டு மீண்டும் என் னண்டை வந்துவிட்டான்’ என்று அந்தப் பரத்தையே இகழ்ந்து பேசினாள். இச்செய்தி எப்படியோ அந்தப் பரத்தையின் காதுக்கு எட்டிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்தாள் அப்பரத்தை; உடனே புறப்பட்டாள். தலைவன் இல்லத்தின் பக்கம் வந்தாள். தலைவியின் தோழிமார்கள் இருக்கும் இடம் நாடினாள். அந்தத் தோழிமார்கள் கேட்கும்படி தன் ஆத்திரம் அடங்க அவள் தலைவனை இகழ்ந் துரைத்தாள். அவள் சொல்வதே இப்பாடலில் அமைந்திருக்கும் பொருள். பாட்டின் பொருள் ‘மருத நிலத்தலைவன் சிறந்தவன்தான்; அவன் வறுமை அறியாதவன்; விரும்பியவற்றையெல்லாம் எளிதிலே அடையக் கூடியவன்; வயற்கரைகளிலே உள்ள மாமரங்களில் பழங்கள் நன்றாக முற்றிப் பழுத்திருக்கின்றன; அவை கனிந்து வயல்களிலே விழுகின்றன; மிகவும் இனிமையான அப்பழங்களை, வயல்களிலே உள்ள வாளைமீன்கள் கவ்விச் சுவைக்கின்றன. அவனுடைய ஊரில் உள்ள வாளை மீன்களுக்கே, அவை தேடாமலே இவ்வாறு இனிய மாம்பழங்கள் கிடைக்கும்போது அவன் விரும்பும் எந்த இன்பம்தான் அவனுக்குக் கிடைக்காது. இத்தகைய தலைவன் எமது வீட்டில் இருக்கும்போது எமக்கு இனிய மொழிகளைக் கூறினான். எம்மை வசமாக்கக் கூடிய பெரிய பெரிய வாக்குறுதிகளையெல்லாம் அளித்தான். இப்படி யெல்லாம் இனிமையாகப் பேசியவன் தன் இல்லத்தை அடைந்த பின் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். தன் இல்லத்திலே தன் புதல்வன் தாயைக் கண்டு நடு நடுங்குகின்றான். நானோ பிள்ளை பெறாத கட்டழகி. அவன் மனைவியோ பிள்ளை பெற்று உடல் தளர்ந்தவள். அவளுடைய சொல்லுக்கு அவன் இப்படிக் கூத்தாடுவதுதான் வியப்பைத் தருகின்றது. கண்ணாடிக்குள் தெரியும் பாவை நாம் என்ன செய்கின்றோமோ அதையே அதுவும் செய்யும். நாம் கையைத் தூக்கினால் அதுவும் கையைத் தூக்கும்; நாம் காலைத் தூக்கினால் அதுவும் காலைத் தூக்கும்; இது போல் தன் புதல்வன் தாய்- தன் மனைவி - எதனை விரும்புகின்றாளோ அதையே இவனும் செய்கின்றான், ‘எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி நடக்கின்ற இவனை யார்தான் நம்ப முடியும்’. பாட்டு கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன், எம்மில் பெருமொழி கூறித் தம்இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே. பதவுரை:- கழனி- வயல் பக்கத்தில் உள்ள. மாத்து- மாமரத்திலிருந்து. விளைந்து உகு- நன்றாகக் கனிந்து விழுகின்ற. தீம்பழம்- இனிமையான பழங்களை. பழனம்- வயல்களில் உள்ள. வாளை- வாளை மீன்கள். கதூஉம் ஊரன்- கவ்வி உண்ணும் ஊரையுடைய தலைவன். எம்இல்- எம்முடைய இல்லத்தில் இருந்தபோது. பெரு மொழி கூறி- எம்மைத் தம்வசமாக்கக்கூடிய பெரிய மொழிகளை யெல்லாம் சொல்லிச் சென்றவன். தம்இல்- இப்பொழுது தம்முடைய வீட்டிலே. கையும் காலும் தூக்க- எதிரில் நிற்பவர் தம் கையயும், காலையும் தூக்க. தூக்கும்- தானும் அது போலவே தூக்கும் ஆடிப் பாவை போல- கண்ணாடியில் காணப்படும் நிழற்பாவையைப் போல. தன் புதல்வன் தாய்க்கு- தன் மனைவிக்கு மேவன செய்யும்- அவள் விரும்பியவற்றை யெல்லாம் செய்வான். கருத்து:- தலைவன் தன் மனைவிக்குப் பயந்து அவள் சொல்லுகிற படி யெல்லாம் ஆடுகின்றான். விளக்கம்: இறுதி அடி மட்டும் ‘தன் புதல்வன் தாய்க்கு மேவனசெய்யும்’ என்று மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. மகா- மாமரம், உகு- சிந்துகிற. தீம்- இனிமை. கதுவுதல்- கவ்வுதல். பெருமொழி- பெரிய சொல்; உறுதி மொழி. ஆடி- கண்ணாடி. தலைவி தன்னை இகழ்ந்து பேசினாள் என்பதற்காகப் பரத்தையும், தலைவியை இகழ்ந்தாள். இவள் பிள்ளை பெற்ற கிழவி. இவளிடம் தலைவன் சொல்லும் உறுதி மொழிகள் உண்மையானவை என்று எப்படி நம்ப முடியும் என்று பரிகசித்தாள் கற்புள்ள காதலி பாட்டு 9 இது கயமனார் என்னும் புலவர் பாட்டு. தோழி சொல்வது போலப் பாடப்பட்டது நெய்தல் திணை. நெய்தல் நிலத்துத் தலைவன் ஒருவன். தன் மனைவியை விட்டுப் பிரிந்து பரத்தையின் வீட்டிலே தங்கியிருந்தான். தன் மனைவி பூப்படைந்திருக்கும் போதும் பிள்ளை பெற்றிருக்கும் போதும் பரத்தையர் வீட்டிற்குச் செல்வது பண்டைக்கால ஆண்கள் வழக்கம். செல்வமுள்ள குடியினரிடம் இவ்வழக்கம் இருந்தது. இவ்வழக்கத்தை ஒட்டியே இந்தத் தலைவன் பரத்தையர் வீட்டில் தங்கியிருந்து திரும்பினான். தன் செய்கைக்குத் தன் மனைவி வருந்துவாள், சினப்பாள், தன்னை அன்புடன் வரவேற்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் அவன் தோழியின் தயவால், தலைவியின் ஊடலைத் தணித்துத் தனக்கும் அவளுக்கும் இணைப்பை உண்டாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இவ்வாறு தனக்குத் தூதாக- வாயிலாக- நிற்கும்படி தோழியை வேண்டிக் கொண்டான். இப்படி வேண்டிக் கொண்ட தலைவனுக்கு அத்தோழி கூறும் மொழியே இப்பாடல். பாட்டின் பொருள் ‘தலைவனே, நம் தலைவி இயல்பாகவே மாந்தளிர் போன்ற நிறமுள்ளவள். நீ பரத்தையரை நாடிச் சென்றதனால், அவள் தாங்க முடியாத துன்பமுற்றாள். அவள் அடைந்த சோர்வே இதற்குச் சான்று. நன்றாக- காற்றுப் போக இடமின்றி அடைக்கப்பட்ட குடத்துள்ளே ஒருவராலும் சூடப்படாமல் தனித்துக் கிடக்கும் மலர்கள் வாடி வதங்கிப் போய்விடும். அது போலத் தலைவியும் தன் உடல் மெலிந்தாள்; அவள் மேனியின் அழகு குன்றினாள். “திரண்ட காம்புகளையுடைய நெய்தல் மலர்கள் பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகின்றன. மிகுந்த மீன்களும் வாழ்கின்றன. இந்தப் பெரிய நீர்ச் சுழியிலே வெள்ளம் பெருகும் போதெல்லாம் நெய்தல் மலர்கள் வெள்ளத்திலே மூழ்கி மூழ்கி எழுந்திருக்கின்றன. இத்தோற்றம் குளங்களிலே முழுகி விளையாடும் பெண்களின் கண்களைப்போல் காட்சியளிக் கின்றது. இத்தகைய குளிர்ந்த நீர்த் துறையையுடைய தலைவன் செய்த கொடுமையைத் தன்னுள்ளேயே மறைத்துக் கொண்டிருக் கின்றாள். வெளியிற் சொல்ல மாட்டாள். பரத்தை வீட்டுக்குப் பிரிந்து சென்றதனால் நீ அவளுக்குச் செய்த கொடுமையை நம் முன்னே சொல்வதற்கு நாணம் அடைகின்றாள். அக் கொடுமையை உணர்த்தும் மொழிகளைச் சொல்லாமல் மறைத்து வேறு சொற்களைச் சொல்லுகின்றாள். ஆதலால் அவள் எம் அன்னைபோல் சிறந்து நிற்கின்றாள்: கற்பையே தனது கடமையாகக் கொண்டு நிற்கின்றாள். நீ அஞ்ச வேண்டாம். அவள் உன் குற்றத்தை மறந்து உன்னை அன்புடன் ஏற்றுக்கொள்வாள்.” பாட்டு யாய் ஆகியளே! மாஅ யோளே! மடைமாண் செப்பில் தமிய வைஇய பெய்யாப் பூவின் மெய் சாயினளே! பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இரும்கழி ஓதம் மல்குதொறும் கயம்மூழ்கும் மகளிர் கண்ணின் மானும் தண் அம் துறைவன் கொடுமை நம்முன் நாணிக் காப்பு ஆடும்மே. பதவுரை:- யாய் ஆகியளே -எம் தலைவி அன்னைபோற் கற்பிலே சிறந்து நிற்கின்றாள். மாயோள் ஏ - மாந்தளிர் போன்ற நிறத்தை யுடையவள் - மாண் மடை - சிறந்த மூடியுள்ள. செப்பினுள் - குடத்தின் உள்ளே. தமியவை இய - தனியாக இருக்கின்ற. பெய்யாப் பூவின் - சூட்டிக் கொள்ளப்படாத மலர்களைப் போல. மெய் சாயினள் - உடல் மெலிந்தாள். பாசடை நிவந்த - பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து காணப்படும். கணைகால் நெய்தல் - திரண்ட காம்புகளையுடைய நெய்தல் மலர்கள். இனம் மீன் இரும்கழி - கூட்டமான மீன்கள் நிறைந்த பெரிய நீர்ச்சுழியிலே. ஓதம் மல்குதொறும் - வெள்ளம் பெருகும் போதெல்லாம் அவ்வெள்ளத்திலே முழுகி எழுவது. கயம் மூழ்கும் - குளத்திலே முழுகி எழுந்திருக்கும். மகளிர் கண்ணின் மானும் - பெண்களின் கண்களைப் போலக் காணப்படும். தண் அம் துறைவன் - குளிர்ந்த அழகிய நீர்த்துறையுடைய தலைவனது. கொடுமை - பிரிவின் கொடுமையை. நம்முன் நாணி- நமது எதிரில் சொல்லுவதற்கு வெட்கம் அடைந்து. காப்பு ஆடும் ஏ-தம் உள்ளத்திலே மறைத்துக்கொண்டு வேறு மொழிகளைப் பேசிக் கொண்டிருப்பாள். கருத்து: தலைவன் கொடுமையைத் தலைவி மறந்து அவனை ஏற்றுக் கொள்வாள். இத்தகைய சிறந்த கற்புடையவள் தலைவி. விளக்கம்: யாய் - அன்னை. கற்பிலே சிறந்தவளை அன்னையாக அனைவரும் கொள்வர். மடை - மூடி. செப்பு - குடம். சாயினள்- மெலிந்தாள். நிவந்த - மேலே காணப் பட்ட. கணை - திரட்சி. கால் - காம்பு, ஓதம் - வெள்ளம். காப்பு - மறைப்பு. இப்பாடலில் இரண்டு உவமைகள் வந்தன. தலைவியின் உடம்பு மெலிந்ததற்கு மூடப்பட்ட குடத்துள் தனியே வாடி யிருக்கும் மலர் உவமை. நீரிலே முழுகியெழும் பெண்களின் கண்களுக்கு வெள்ளத்தில் மூழ்கி எழும் நெய்தல் மலர்கள் உவமை. இவ்விரண்டு உவமை களும் அருமையானவை. கற்புள்ள காதலி பாட்டு 10 இப்பாடலின் ஆசிரியர் ஓரம்போகியார். இதுவும் முன்பாடலின் கருத்தைக் கொண்டது. பரத்தை வீட்டிலிருந்து வந்த தலைமகனுக்குத் தோழி தூது செல்ல இணங் கினாள். இது மருதத்திணை. பரத்தை வீட்டிற்குச் சென்ற தலைவன் திரும்பி வந்தான். தன் காதலியின் தோழியைக் கண்டான். என்மீது தலைவி கொண்டி ருக்கும் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். ‘நீ தலைவிக்கு மிகவும் கொடுமை செய்து விட்டாய்! அவள் உயர்ந்த கற்பொழுக்கமுள்ளவள். ஆதலால் உன் கொடுமையை அவள் பொருட் படுத்தவில்லை. அவளே உன்னை வரவேற்க வருகின்றாள் பார்’ என்று கூறினாள். இவ்வாறு தோழி உரைப்பதைச் சொல்வதே இப்பாடலாகும். பாட்டின் பொருள் ‘தலைவனுடைய சிறப்புக்கு என் தலைவிதான் காரணம். என் தலைவியைக் கைப்பிடித்த பின்பே அவன் எல்லாச் செல்வங் களையும் பெற்றான். காஞ்சி மரத்தின் மெல்லிய கிளைகளிலே நறுமணம் வீசும் மலர்கள் பூத்திருக்கின்றன. உழவர்கள் அந்தக் காஞ்சி மரத்தின் கிளையை வளைத்து மலர்களைப் பறிக்கின்றனர். அவர்கள் பறிக்கும் பயறுபோன்ற மலர்க் கொத்துக்களிலே பசுமையான மகரந்தங்கள் இருக்கின்றன. அம்மகரந்தங்கள் அவ்வுழவர்களின் மேல் படிந்து கிடக்கின்றன. இத்தகைய உழவர்கள் வாழும் ஊரையுடையவன் தலைவன். இவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் வீட்டிற்குச் சென்றான். இப்பொழுது திரும்பி வருகின்றான். இவன் உடம்பிலே பரத்தையர் தெளித்த சந்தனம் முதலியவை காணப்படுகின்றன. தலைவன் இப்படிக் கொடுமை செய்தவன் ஆயினும் கற்பிற் சிறந்த தலைவி அவன் கொடுமையைத் தன் உள்ளத்திலேயே மறைத்துக் கொண்டாள். தலைவன் வெட்கமடையும்படி அவனை வரவேற்க அவளே முன்வருகின்றாள். துன்பம் செய்தவர்க்கும் அவர் நாணம் அடையும்படி நன்மை செய்வதே தமிழர்களின் சிறந்த பண்பு. இப்பண்புக்கு இத்தலைவி ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றாள். இதுவன்றோ கற்புடைய மகளிரின் உயர்ந்த குணம். பாட்டு யாய் ஆகியளே விழவு முதலாட்டி பயிறுபோல் இணர பைம்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி ஊரன் கொடுமை கரந்தனள் ஆகலின் நாணிய வருமே. பதவுரை: யாய் ஆகியவள் - தலைவியே. விழவு முதல் ஆட்டி - தலைவனுடைய சிறப்புக்குக் காரணமாயிருப்பவள். பயிறுபோல் இணர் - பயறுபோன்ற பூங்கொத்துக் களில் உள்ள. பைம்தாது படீஇயர் - பசுமையான மகரந்தங்கள் உடம்பிலே படியும்படி. உழவர் வாங்கிய - உழவர்கள் வளைத்த. கமழ்பூ மெல்சினை - வாசனை கமழும் மலர்கள் நிறைந்த மெல்லிய கிளைகளையுடைய. காஞ்சி ஊரன் - காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரை யுடைய தலைவன். கொடுமை - பிரிந்து செய்த கொடுமையை. கரந்தனன் ஆகலின் - வெளியில் சொல்லாமல் மறைத்தாள் ஆதலால். நாணியவரும் ஏ - தலைவன் நாணும்படி அவனை வரவேற்கத் தானே முன் வருகின்றாள். கருத்து: தலைவி தலைவன் செய்த கொடுமையை மறந்து அவனை வரவேற் கின்றாள். விளக்கம்: விழவு- சிறப்பு. முதல் ஆட்டி- காரணமான தலைவி. தலைவியுடன் சேர்ந்த பிறகே தலைவன் செல்வந் தேடினான்; சிறப்பாக இல்லறம் நடத்துகின்றான் என்ற உண்மையை உணர்த்துகின்றது. இப்பாட்டு, பெண்ணின் பெருந்தன்மையைக் காட்டிற்று. தலைவன் தவறு செய்தாலும், அதைப் பொறுத்துக் கொள்ளுதல் கற்புள்ள மனைவியின் கடமையென்ற பண்டை வழக்கத்தை வலியுறுத்துகின்றது. கூடிவாழ்வதே குதூகலம் பாட்டு 11 தலைமகன் பிரிந்து போய்விட்டான். பொருள் தேட வேற்று நாட்டிற்குப் போயிருக்கின்றான். தலைவிமட்டும் தனித்து நிற்கின்றாள். தலைவன் வரவை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கி நின்றாள். தலைவன் வந்தபாடில்லை. தலைவனைப் பிரிந்திருக்கும் உள்ளத் துயரத்தால் அவள் உடல் மெலிந்துவிட்டது. உள்ளத்திலும் வேதனை; உடலிலும் இளைப்பு. இந்நிலையடைந்தோர்க்குத் தூக்கம் பிடிக்காதல்லவா? அவள் தூங்கவும் இல்லை. நெஞ்சத்தின் துக்கம் வளர்ந்தது. அத்துக்கம் நெஞ்சில் அடங்கி நிற்கவில்லை; அவள் போட்ட அணைகளை உடைத்துக்கொண்டு அழுகையாக வெளிவந்தது. அவள் தன் துன்பத்தை வாய்விட்டுச் சொல்லவும் தொடங்கி விட்டாள். ‘இங்கே தனித்திருப்பது இப்படி வருந்துவதைவிட அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவது நலம்’ என்று சொல்லிக் கொண்டாள். தனக்குத் தானே இவ்வாறு சொல்லிக் கொண்டாள். இவள் பக்கத்திலிருந்த தோழியின் காதில் விழும்படி இந்த மொழிகளைச் சொன்னாள். கணவனைப் பிரிந்திருக்கும் துக்கம் தாளாமல் சொல்லிய மொழிகள் இவை. இப்படி ஒரு தலைவி தன் நெஞ்சத்தை நோக்கித் தன் பெருந்துக்கத்தை வெளியிட்ட செய்தியைக் கூறுகிறது இப்பாடல். இது மாமூலனார் என்னும் புலவர் பாட்டு. பாலைத் திணை. பாட்டின்பொருள் “என் நெஞ்சமே வாழ்க உனக்கோர் உண்மையைக் கூறுகின்றேன். கேள்! பிரிந்து சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. நானும் எத்தனையோ நாட்களாகக் காதலன் வரவை நோக்கிக் காத்துக் கிடக்கின்றேன். என் துக்கத்தை என்னால் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் பிரிவை எண்ணி என் நெஞ்சம் ஏக்கமுறுவதால் என் உடம்பும் இளைத்து விட்டது. என் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் கழன்று கழன்று விழுகின்றன. இந்த அளவுக்கு என் உடம்பு மெலிந்துவிட்டது. இது மட்டுமா? அவர் பிரிந்த நாள் முதல் இன்று வரையிலும் நான் உறங்கவேயில்லை, உள்ளத்திலே துயரம் ஓங்கி நிற்கும்போது உறக்கம் எப்படி வரும்; ஒரு நாளாவது என் கண்கள் இமையோடு இமை பொருந்துவதில்லை. கலக்கமடைந்து கண்ணீர் சிந்தி அழுகின்றன. இப்படித் தனித்திருந்து வருந்தும் நிலையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளவேண்டும். அவர் சென்றிருக்கும் இடத்திற்கு நாமும் போனால்தான் இத்துன்பத்திலிருந்து தப்பிக்க முடியும். ஆதலால் இப்பொழுதே எழுந்திரு அவர் இருக்கும் இடத்திற்குப் போவோம்; புறப்படு. தம் கண்முன்னே காணப்படும் கஞ்சங்குல்லை மலரால் தொடுத்த மாலையை அணிந்த வடுகர் நாட்டின் பக்கத்தே கட்டி என்பவனுடைய நல்ல நாடு இருக்கின்றது. சிறந்த வீரனாகிய அந்தக் கட்டியின் நாட்டுக்கு அப்பாலுள்ள வேறு மொழி வழங்கும் நாட்டிலே என் தலைவர் போய்த் தங்கியிருக்கின்றார். அவர் தங்கியிருப்பது அந்நிய நாடாயினும் அந்த நாட்டிற்குச் செல்ல நினைத்தேன். ஆகையால் என் உள்ளமே உடனே புறப்படு. பாட்டு கோடுஈர் இலங்குவளை நெகிழ, நாள்தொறும் பாடு இலகலிழும் கண்ணொடு, புலம்பி ஈங்குஇவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே எழு இனி; வாழி என் நெஞ்சே? முனது குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர். மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. பதவுரை: என் நெஞ்சே வாழி- என் மனமே நீ வாழ்க. கோடு ஈர் - சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட. இலங்குவளை - ஒளி விளங்கும் வளையல்கள். ஞெகிழ- உடல் மெலிவினால். என் கைகளை விட்டுக் கழல. நாள்தொறும்- ஒவ்வொரு நாளும். பாடுசில - இமையோடு இமை பொருந்தாமல் கவிழும் கண்ணோடு கலங்கிக் கண்ணீர் சிந்தி அழும் கண்களுடன். புலம்பி - தனித் திருந்து வருந்தி. ஈங்கு இவண் உறைதலும் - இப்படி இங்கே தங்கியிருப்பதிலிருந்து. உய்கும் - தப்பித்துக் கொள்ளுவோம். ஆங்கு - ஆதலால் தலைவர் இருக்கும் இடத்திற்கு. இனி எழு- போவதற்கு இப்பொழுதே புறப்படு. முனாது- முன்னே காணப்படும். குல்லைக் கண்ணி- கஞ்சங் குல்லை மலர்களைப் பறித்துத் தொடுத்த மாலையைத் தரித்த. ‘வடுகர் முனையது- வடுகர் நாட்டின் பக்கத்தில் உள்ளது. பல் வேல் கட்டி- பல வேல்களை யுடைய கட்டி என்னும் வீரனது, நல்ல நாட்டு உம்பர்- வளமுள்ள நாட்டிற்கு அப்பால். மொழி பெயர்தேஎத்தர் ஆயினும்- வேறு மொழி வழங்கும் தேசத்திலே இருப்பார் ஆயினும், அவர் உடைநாட்டு ஏ- அவர் இருக்கும் நாட்டுக்கு, வழிபடல் சூழ்ந்திசின்- போவதற்கு எண்ணினேன். கருத்து: தலைவரைப் பிரிந்து தனித்திருக்கும் துன்பத்தை இன்னும் என்னால் பொறுத்திருக்க முடியாது. அவர் இருக்கும் இடத்திற்குப் போனால்தான் என் துன்பம் தணியும். விளக்கம்: “வாழி என் நெஞ்சே” என்னும் தொடர் “என் நெஞ்சே வாழி’ என்று மாற்றப்பட்டது. முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. “வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே” என்னும் இறுதி அடி அவருடை நாட்டே வழிபடல் சூழ்ந்திசின் என்று மாற்றப்பட்டது. கோடு - சங்கு. ஈர்தல்- பிளத்தல். சங்கை அறுத்து வளையல் செய்து அணிவது பண்டைய கால வழக்கம். கவிழ்தல் - அழுதல். கஞ்சங்குல்லை - ஒருவகைமலர். வடுகர்- தெலுங்கர். சூழ்ந்திசின் - நினைத்தேன். மொழி பெயர் தேம் - வேற்று மொழி வழங்கும் நாடு. இது தமிழ்நாட்டையடுத்துள்ள தெலுங்குநாட்டைக் குறித்தது. வேங்கடமலைக்கு அப்பால் உள்ள தெலுங்கு நாடு. தமிழர்கள் பொருள் தேடத் தெலுங்கு நாட்டுக்குச் சென்று வந்தனர் என்பதை இதனால் அறியலாம். சங்க காலத்திலேயே தெலுங்கர்களுக்கும் தமிழர்களுக்கும் உறவு இருந்தது என்பதற்கும் இது ஒருசான்று. கட்டி என்பவன் சேரனுடைய படைத்தலைவர்களிலே ஒருவன்; சிறந்த வீரன்; கொடையாளி; இவனுடைய நாடு செழிப்புடையது. இவன் கங்க நாட்டுக்குத் தலைவன் என்று கூறப்படுகின்றான். இந்நாடு தெலுங்கு நாட்டை அடுத்திருந்தது. கட்டியினது நாடும் வேற்றுமொழி வழங்கும் நாடு என்று கூறுவோரும் உண்டு. உண்மையறியாத ஊர் பாட்டு 12 ஓதலாந்தையார் என்னும் புலவர் பாட்டு இது. தலைவியின் துயர் கண்டு வருந்திய தோழிக்குத் தலைவி கூறியது. பாலைத் திணை. தலைவனைப் பிரிந்ததால் வருந்தியிருக்கும் தலைவியின் நிலையைக் கண்டாள் தோழி. ‘தலைவி உண்மை அறியாதவள் அல்லள்; பிரிதலும் கூடுதலும் இயற்கையென்பது அவள் அறிந்தது தான். ஆயினும் அவள் உள்ளத்திலே உறுதியில்லை. துக்கத்தைப் பொறுத்திருக்கும் துணிவில்லை. நெஞ்சிலே வலிமை யில்லாமல் நிலை கலங்குகின்றாள்’ என்று கவலையடைந்தாள் தோழி. தோழியின் இக்கவலையை அறிந்த தலைவி அவள் கேட்கும்படி கீழ்வருமாறு கூறினாள். ‘நான் தனித்திருப்பதற்காக வருந்தவில்லை. தலைவன் சென்றிருக்கும் வழி மிகவும் கொடுமையானது; இடையூறுகள் நிறைந்தது; அதை நினைத்தே நான் வருந்தியிருக்கின்றேன். தலைவனுக்கு வழியிலே எந்த ஆபத்தும் வரக்கூடாதே என்று நினைத்துத் தான் நெஞ்சங் கலங்குகின்றேன். இந்த உண்மையை அறியாமல் அவர் பிரிவால் வருந்துகின்றேன் என்று இவ்வூர் வேறொன்றைச் சொல்லுகின்றது என்று கூறினாள் தலைவி. இச் செய்தியைச் சொல்வதே இப்பாடல். பாட்டின் பொருள் “தலைவர் புறப்பட்டுப் போயிருக்கும் வழி கொடுமை யானது; எண்ணற்ற இடையூறுகள் நிரம்பியிருப்பது துணை யில்லாமல் அவ்வழியிலே யாரும் செல்லமாட்டார்கள். அவர்போன வழியிலே பல சுனைகள் உண்டு. அவை எறும்பு வளைகளைப் போலக் குறுகிய தோற்றத்தையுடையன. அதனால் அவ்வழி வழுக்கல் உடையது. நீர் நிறைந்த மேடு பள்ளங்களை உடையது மலையில் உள்ள பாறைகள் கொல்லன் உலைக் களத்தில் உள்ள பட்டடைக் கல்லைப் போல் சூடேறிக் கிடக்கின்றன. அங்கே உள்ள எயினக் குடியினர் அந்தப் பாறைகளிலே ஏறித் தமது அம்புகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டிருப் பார்கள். வழிப்போக்கர்களின் மேல் அவ்வம்புகளை விட்டாலும் விடுவார்கள். அவர் சென்ற வழி நேர் வழியுமன்று. பல கிளை வழிகளைக் கொண்டது. குறித்த இடத்திற்கு எந்த வழியிலே போவது என்று கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைக்கும். அவர் போன வழி இப்படிப்பட்ட துன்பமுள்ள வழியென்பதை அதைக் கண்டவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். அதைப் பற்றித்தான் நான் நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்தத் துயரத்தை இவ்வூர் அறிய வில்லை. நீயும் உணரவில்லை. காதலன் பிரிவால் வருந்துகின்றேன் என்று என்னைப் பற்றி இவ்வூர் ஏதேதோ சொல்லுகின்றது. என் உண்மையான துன்பத்தை உணராமல் வேறு மொழிகளைச் சொல்லி என்னைப் பழிக்கின்றது. இது அறியாமை.” பாட்டு எறும்பி அளையின் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கலைத்து என்பஅவர் சென்ற ஆறே அதுமற்று அவலம் கொள்ளாது நொதுமல் கழறும்இவ் வழுங்கல் ஊரே. பதவுரை: அவர் சென்ற ஆறு - தலைவர் போன வழி. எறும்பி அளையின் - எறும்பு வளைகளைப் போல. குறும்பல் சுனைய - குறுகலான பல சுனைகளையுடையது. உலைக்கல் அன்ன - கொல்லன் உலைக்களத்தில் உள்ள பட்டடையைப் போன்ற சூடேறிய. பாறை ஏறி - கற்பாறைகளின் மேல் ஏறி. கொடுவில் எயினர் - வளைந்த வில்லையுடைய எயினர்கள். பகழி மாய்க்கும் - தமது அம்புகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டிருக்கின்ற. கவலைத்து - பல கிளை வழிகளையுடையது. என்ப - என்று அவ்வழியை இதற்கு முன் கண்டவர்கள் கூறினர். அது அவலம் - அந்த வழியின் கொடுமையைப் பற்றிய துன்பத்தை எண்ணி நான் வருந்துகின்றேன். கொள்ளாது - இத்துன்பத்தை உள்ளத்திலே கொள்ளாமல். இவ் அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரம் பொருந்திய ஊரானது. நொதுமல் - வேறு சொற்களைச் சொல்லி. கழறும்- என்னை இடித்துரைக்கும்; இது பேதமை அன்றோ. கருத்து: தலைவன் சென்ற வழி கொடுமையானது. இதை என் தோழியும் நினைக்க வில்லை: இவ்வூராரும் எண்ணவில்லை. விளக்கம்: ‘அவர் சென்ற ஆறே’ என்பதை முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது ‘நொதுமல் கழறும் இவ் வழுக்கல் ஊர்’ என்னும் அடி இவ்வழுங்கல் ஊர் நொதுமல் கழறும் என்று மாற்றி யுரைக்கப்பட்டது. எறும்பி - எறும்பு. அளை - வளை. உலைக்கல்- கொல்லுலையில் உள்ள பட்டடை., எயினர் - வேடர் போன்ற ஒரு வகுப்பினர் - வேட்டையாடுதலே இவர்களின் முதன்மை யான தொழில், பகழி - அம்பு, மாய்க்கும்- தீட்டும், மாய்த்தல்- தீட்டுதல். கவலை - கிளை. அவலம்- கொடுமை. நொதுமல் - வேறு தன்மை, கழறும் - இடித்துச் சொல்லும். அழுங்கல் - ஆரவாரம். கொடுமையான வழி இன்னது என்பதை இப்பாடல் விளக்கிக் கூறுகின்றது. ‘சிறு சிறு சுனைகள் நிறைந்தது மலைப்பாதை. பாறைகளிலே ஏறி நிற்கும் எயினர்கள் அம்புகளைத் தீட்டி வைத்துக் கொண்டு அவற்றை வில்லிலே தொடுத்து எய்வதற்குக் குறிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பல கிளை வழிகளையும் உடையது. இது கல்லும் முள்ளும், மேடு பள்ளங்களும் உள்ள காட்டுப் பாதை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு வழியின் அருமையையும் உணர்த்து கின்றது இப்பாட்டு. தன்னியல்பு மறந்த தலைவன் பாட்டு 13 இது கபிலர் பாடியது. தலைவன் பிரிந்தபின், தலைவியிடம் உள்ள வேறுபாடுகளைக் கண்டு தோழி வருந்தினாள். அத் தோழிக்குத் தலைவி, தன் துன்பத்திற்கான காரணத்தைக் கூறுகின்றாள். குறிஞ்சித் திணை. தலைவியைக் கண்டு அவளுடன் கூடிக் களிப்பதற்கு நெடுநாள் காத்திருந்தான் தலைவன். ஒருநாள் தலைவியின் உயிர்த்தோழி வாயிலாக அவளைச் சந்தித்தான். அவளுடன் கூடிக் குதூகலமாக இருந்தான். நீண்ட நேரம் கழிந்தபின் தலைவன் அவளைப் பிரிய எண்ணினான். தன்னைப் பிரிந்தால் அத்துயரம் தாங்காமல் அவள் துடிதுடிப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். அவள் ஒப்புக் கொள்ளும் முறையிலே- தான் பிரிந்து போவதற்கு அவள் சம்மதிக்கும் முறையிலே- ஆறுதல் மொழிகள் பலவற்றைக் கூறினான். அவளிடம் தான் கொண்டிருக்கும் அன்பை- காதலை- புலப்படுத்தும் அன்புரைகள் பலவற்றைக் கூறினான். ‘என்றும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்று உறுதி மொழிகள் பல உரைத்தான். ‘என்னுடைய உறைவிடம் சேய்மையில் இல்லை; நீ யிருக்கும் இடத்திற்கு மிகவும் அணிமையில் தான் இருக்கின்றது; ஆதலால் நான் சென்று திரும்புவதற்கு நெடுநேரம் பிடிக்காது’ என்று இனிய மொழிகள் கூறிப் பிரிந்தான். அவன் பிரிந்தபின், அவள் நெஞ்சம் வருந்தினாள். அவள் கண்கள் கலங்கினாள். தலைவன் கூடுவதற்கு முன்னே அவளுடைய கண்கள் குவளை மலர்களைப் போல வனப்புடன் இருந்தன. அவன் கூடிப் பிரிந்த பின் அவைகள் முன்னிருந்த அழகை இழந்தன. பசலை நிறமடைந்தன. கண்களிலே முன்னிருந்த, அழகிய நிறம் இப்பொழுது இல்லை. இந்த வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள். அவள் வருத்தங் கண்ட தலைவி. தன் துன்பத்திற்கும், வேறுபாட்டுக்கும் காரணம் இன்னதென்று கூறினாள். இவ்வாறு தலைவி சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல். பாட்டின் பொருள் “நமது தலைவன் மலைக்காட்டை யுடையவன், அவனுடைய மலையிலே உள்ள உருண்டையான கற்கள் சுரசுரப்பாக உள்ளவை. அக் கற்களின் மேல் தூசி படிந்திருந்தன. பெரிய மழையினால் அத்தூசிகள் கழுவப்பட்டு அக்கற்கள் கன்னங் கரேல் என்று பளிச்சிடுகின்றன. இக்கற்கள் பசுமையான இடங்களிலே கிடக்கின்றன. அவைகள் பார்வைக்கு அழுக்குப் போகும்படி குளிப்பாட்டப் பட்ட யானைகளைப் போலக் காணப்படுகின்றன. இப்படித் தன் அழுக்குகள் நீங்கித் தம் இயற்கை ஓளியுடன் விளங்குகின்ற குண்டுக் கற்கள் நிறைந்த மலை நாடன், தன் இயல்பின்படி நடந்து கொள்ளவில்லை. என்னை விட்டுப்பிரிந்த தன் மூலம் என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலை நோயை எனக்குத் தந்தான். என் கண்களின் அழகை மறைக்கும் பசலை நோயை நீக்கி அவைகளை இயற்கை யழகுடன் விளங்கச் செய்வதே அவன் கடமை. இதுவே அவனுக்கு ஏற்ற தன்மையுமாகும். ஆனால் அவன் என்னைக் கூடிப் பிரிந்ததனால் குவளை மலர்களைப் போலிருந்த என் கண்கள் அழகிழந்தன. பசலை நோயால் அழகு மறைந்தன. என் மாறுபாட்டிற்குக் காரணம் இதுதான். இந்த மாறுபாட்டை நானாகத் தேடிக் கொள்ள வில்லை. பிரிந்த தலைவனே எனக்கு உள்ளத் துயரையும்- இத்தகைய உடல் மாறுபாட்டையும் அளித்தான்.” பாட்டு மாசுஅறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல்உழந்த இரும்பிணர்த் துறுகல் பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன் நோய் தந்தனனே தோழி! பசலை ஆர்ந்தன குவளை அம்கண்ணே. பதவுரை: தோழி - என் அருமைத் தோழியே. மாசு அறக்கழீஇய - உடம்பில் படிந்த புழுதி முழுதும் போகும்படி குளிப்பாட்டப்பட்ட, யானை போல - யானையைப் போல. பெரும் செயல் - பெரிய மழையினால், உழந்த - மேலேபடிந்த தூசி முழுவதும் அடித்துக் கழுவப்பட்ட, இரும்பிணர் துறுகல் - மிகுந்த சுர சுரப்புள்ள உருண்டையான கல். பைதல் ஒரு தலை சேக்கும் - பசுமையான ஓரிடத்திலே கிடக்கின்றன. நாடன் - மலை நாட்டையுடைய தலைவனே. நோய் தந்தனன்- எனக்குக் காதல் நோயைத் தந்தான். குவளை அம்கண் - அதனால் அவனைக் கூடுவதற்கு முன்னே குவளை மலர்களைப் போலிருந்த அழகான என்னுடைய கண்கள். பசலை ஆர்ந்தன - இன்று பசலை நிறத்தால் மூடப்பட்டு அழகிழந்து காணப்படுகின்றன. கருத்து: என்னிடம் காணப்படும் வேறுபாடுகள் நானாக வரவழைத்துக் கொண்டவையல்ல. தலைவனால் தரப்பட்டவை. விளக்கம்: “தோழி” என்னும் சொல் முதலில் கொள்ளப் பட்டது. “பசலை ஆர்ந்தன குவளையம் கண்ணே” என்ற இறுதியடி குவளையங் கண்ணே பசலை ஆர்ந்தன என்று மாற்றப்பட்டது. மாசு- புழுதி. பெயல் -மழை. பிணர்- சுரசுரப்பு: சருச்சரை என்றும் கூறுவர். துறுகல் - உருண்டையான கல்; சிறு மலை என்றும் கூறலாம். பைதல் - பசுமையான இடம். ஆர்ந்தன- நிறைந்தன, மறைத்தன. கண்களுக்குக் குவளை மலரை உவமானமாகக் கூறுவர். நாடன்- மலை நாடன், குறிஞ்சி நிலத்தலைவன். அவன் தன் நாட்டின் இயல்புக்கு மாறாக நடந்து கொண்டான் என்பதை இப்பாடலில் குறிப்பிட்டுள்ள இயற்கைக் காட்சியால் அறிகின்றோம். உருண்டைக் கற்களின் தோற்றம் இவ்வுண்மையை விளக்கி நிற்கின்றது. மடலேறி மணப்பேன் பாட்டு 14 இது தொல்கபிலர் என்னும் புலவர் பாட்டு. தலைவியைச் சந்திக்க வந்த தலைவனுக்குத் தோழி உதவி செய்ய மறுத்து விட்டாள். அவன் காரியத்திற்குத் தான் துணை செய்ய முடியாது. என்று கண்டிப்பாகத் தெரிவித்து விட்டாள். அப்பொழுது தலைவன் ‘எப்படியாவது உன் தலைவியை நான் அடைந்தே தீர்வேன் என்று உறுதி கூறுகின்றான்; சூள் உரைக்கின்றான். குறிஞ்சித் திணை. மலை நாட்டுத் தலைவன் தான் காதலித்த மங்கையைக் காண வந்தான். எப்பொழுதும் தலைவியின் பக்கத்திலே இருந்து அவளுக்கு ஆவன செய்யும் பாங்கியைக் கண்டான். எப்படியாவது தலைவியைக் காணுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அவளிடம் கெஞ்சினான். தலைவியின் மனப்பான்மையை அறிந்திருந்த பாங்கி தலைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க வில்லை. உன் எண்ணத்தை நிறைவேற்ற முடியாது என்று மறுத்து விட்டாள். உடனே தலைவன் தான் கொண்டிருக்கும் காதல் மிகுதியை அத்தோழியிடம் குறிப்பினால் வெளியிட்டான். காதலால் என்னைத் துன்புறும்படி செய்தவள் இன்னாள் என்பதை இவ்வூரார் உணரும்படி செய்வேன். அவளுடைய படத்தையும், என்னுடைய படத்தையும் எழுதிப் பிடித்துக் கொண்டு பனை மடலால் செய்யப்பட்ட குதிரைமேலேறி இவ்வூர்த் தெருவிலே எல்லாரும் காணும்படி செல்வேன். இப்படிச் செய்தாவது என் குறையை முடித்துக் கொள்ளாமல் விட மாட்டேன்’ என்றான். இவ்வாறு தலைவன் பாங்கியிடம் கூறுவதாக அமைந்திருக்கின்றது. இப்பாட்டு. பாட்டின் பொருள் ‘நான் விரும்பும் தலைவி செம்மையான நாவையுடையவள். அவளுடைய நாவிலே அமிழ்தம் போன்ற உமிழ் நீர் நிறைந்திருக்கும். அந்த நாக்கு அஞ்சும்படி வரிசையாக விளங்குகின்ற கூர்மையான பற்கள் இருக்கின்றன. பற்கள் கூர்மையாக இருந்தாலும் அவைகளின் வரிசை அமைப்பும், வெண்மையான தோற்றமும் என் உள்ளத்தைக் கவர்வன. அவள் சளசளவென்று உளறிக் கொண்டேயிருக்க மாட்டாள் சில மொழிகளைத் தான் வேண்டிய போது சொல்லுவாள். அது இனிமையும் பொருட்செறிவும் பொருந்தியிருக்கும். இந்த அரிவையை நான் மடலேறியாவது என் காதலியாகப் பெறுவேன். நான் அவளை மனைவியாகப் பெற்றபின் இந்த ஊரில் உள்ளவர்கள் அவளையும் என்னையும் பற்றித் தெரிந்து கொள்ளட்டும். நான் தெருவிலே நடந்து போகும்போது இவ்வூரார் என்னை உற்று நோக்காமல் இருக்க மாட்டார்கள். என் காதலியைப் பெறுவதற்கு நான் செய்த முயற்சியை எண்ணிப்பார்ப்பார்கள். மடலேறுதலாகிய துணிகரமான காரியத்தைச் செய்த என்னை எப்படி மறப்பார்கள்? அவர்கள் என்னைப் பார்த்தவுடன் ‘அந்த நல்ல அரிவையின் கணவன் இவன் தான்’ என்று பலரும் சொல்லுவார்கள். அவர்கள் இச்சொற்களைச் சொல்லும் போது நானும் மடலேறிய செயலை எண்ணிச் சிறிது நாணமடைவேன்.’ பாட்டு அமிழ்துபொதி செந்நா அஞ்சவந்த வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச், சின்மொழி அரிவையை பெறுகதில் அம்ம! யானே, பெற்றாங்கு அறிகதில் அம்ம! இவ்வூரே! மறுகில் நல்லோர் கணவன் இவன் எனப் பல்லோர் கூற யாம் நாணுகம் சிறிதே. பதவுரை: அமிழ்து பொதி - அமுதம் போன்ற உமிழ் நீர் நிரம்பிய. செந்நா அஞ்ச - செம்மையுள்ள நாக்கு அஞ்சும்படி. வந்த - முளைத்து வந்திருக்கும். வார்ந்து இலங்கு - வரிசையாக விளங்குகின்ற, வைஎயிறு- கூர்மையான பற்களையும். சின்மொழி சில - சொற்களையும் உடைய. அரிவையை - என் தலைவியை. யான் பெறுகதில்- மடலேறுவதன் மூலமாகவாவது உறுதியாக என் இல்லாளாகப் பெறுவேன். பெற்றாங்கு- பெற்றபின்பு. இவ்வூர் அறிகதில் - இவ்வூர் என்னுடைய சாதனையை அறிவார்களாக. மறுகில் - அதன் பிறகு நான் வீதியிலே செல்லும்போதும். நல்லோள் கணவன்- அந்த நல்ல அரிவையின் கணவன். இவன் என- இவன்தான் என்று என்னைக் குறித்து. பல்லோர் கூற - பலரும் கூறுவதைக் கேட்டு. யாம் சிறிது நாணுகம்- நான் சிறிது வெட்கமுற்றுத் தலை குனிந்து நடப்பேன். கருத்து: யான் மடலேறியாவது இவ்வரிவையை என் இல்லாளாகப் பெறுவேன். விளக்கம்: ‘பெறுகதில் அம்ம யானே’ என்பது ‘யான் பெறுகதில்’ என்று மாற்றப்பட்டது ஏ, அம்ம. இடைச்சொற்கள். “அறிகதில் அம்ம இவ்வூரே” என்பதும் ‘இவ்வூர் அறிகதில்’ என்று மாற்றப்பட்டது. ஏ, அம்ம. அசைச்சொற்கள். வை - கூர்மை. மறுகு - தெரு. நல்லோள் - நல்லவள்; அழகிலும் குணங்கிலும் நல்லவள். மடல்மா ஊர்தல்: இது நாடக வழக்கம். இது இயல்பாக நடப்பதில்லை. காதலின் உறுதியை வெளிப்படுத்த இப்படி ஒரு வழக்கம் உண்டென்று அகப்பொருள் நூலார் புனைந்து கூறினர். தான் காதலித்த பெண்ணை ஒருவன் மனைவியாகப் பெற முடியாவிட்டால் அவன் மடல்மா ஊர்வான். பனை மட்டைகளால் குதிரைபோல் செய்யப்படும். மட்டையின் வாள் போன்ற கங்குகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். தலைவன் தான் காதலித்த பெண்ணின் உருவத்தையும், தன்னுடைய உருவத்தையும் எழுதுவான். அந்த உருவப் படத்தை எல்லோரும் பார்க்கும்படி உயர்த்திப் பிடித்துக் கொள்வான். அந்தப் பனை மட்டைக் குதிரையின் மேல் உட்கார்ந்து கொண்டு அக்குதிரையை இழுத்துக் கொண்டு போகும்படி செய்வான். இவ்வாறு ஊர்த் தெருவிலே ஊர்வலம் வருவான். அதைக் கண்டு ஊரார் ஒன்று கூடிப் படத்தில் உள்ள அவ்விருவர்க்கும் மணம் செய்து வைப்பார்கள். இதுவே “மடல் மாவூர்தல்” என்பது. “தலைவன் மடல்மாவின் மேல் ஏறிவரும் போது, பனை மடல்கள் அவன் உடம்பிலே உரசும், - வாள் போன்ற கங்குகளால் உடம்பில் காயங்கள் உண்டாகும். அந்த காயங்களின் வழியாகச் செந்நீர் கசியாது: அதற்கு மாறாக வெண்ணீர் கசியும். இதைக் கண்டு ஊரார் அவன் விரும்பிய பெண்ணை, மணம் செய்து வைப்பார்கள். இப்படியும் தான் காதலித்த பெண்ணை அவன் பெற முடியாவிட்டால் அவன் ஒரு மலை உச்சியில் ஏறுவான். தன் காதலியின் உருவந் தீட்டிய கொடியுடன் கீழே குதித்து உயிர் விடுவான்” என்றும் கூறுவர். மடல் மா வேறும் வழக்கத்தைப் பெரும்பாலும் ஆண்கள் செயலாகவே கூறுவர். பெண்களுக்கும் உண்டென்று உரைப்பது மிகவும் சிறுபான்மையாகும். உறுதியுள்ள நட்பு பாட்டு 15 இது ஒளவையார் பாட்டு. களவு மணத்திலே வாழ்ந்து ஒரு தலைவி தன் உறவினர் அறியாமல் தலைவனுடன் புறப்பட்டுப் போய் விட்டாள். இச்செய்தியைத் தோழியின் மூலம் செவிலித் தாய் அறிந்தாள். அச் செவிலித்தாய் இச் செய்தியை அவளை ஈன்றெடுத்த நற்றாய்க்கு நவின்றாள். இது பாலைத்திணை, ஒரு தலைவி; அவள் தன் காதலனுடன் களவு மணத்திலே வாழ்ந்தாள். அவர்கள் இருவரும் இணையற்ற அன்புள்ளவர்கள்; உறுதியான உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் தங்கள் உறுதியான காதலை உலகினர்க்கு அறிவிக்க எண்ணினர். பெற்றோர்கள் அவர்கள் மனப் போக்கறிந்து மணம் செய்து வைக்க முன் வரவில்லை. ஆதலால் அக்கால வழக்கப்படி தலைவி -தன் உறவினர்க்குத் தெரியாமல் தலைவனுடன் புறப்பட்டுப் போய் விட்டாள். இரவோடு இரவாக அவர்கள் புறப்பட்டு விட்டனர் தலைவன் அவளைத் தன் ஊர்க்கு அழைத்துக் கொண்டு போய் மணந்து கொண்டான். மணப்பறை ஒலிக்க, சங்கு முழங்க. முறைப்படி ஊர் அறிய மணம் புரிந்து கொண்டான். தலைவியின் இல்லத்திலே பொழுது விடிந்தபின் தலைவியைக் காணவில்லை. அவளைக் குழந்தைப் பருவம் முதல் வளர்த்த செவிலித்தாய் ‘எங்கே என்னருமைப் புதல்வி’ என்று வருந்தினாள். தலைவியின் செய்தி தோழிக்குத்தான் தெரியும். உடனே தோழி செவிலித்தாயிடம் உண்மையை உரைத்தாள். செவிலித்தாய் அப்பொழுதே அச்செய்தியை நற்றாய்க்கு அறிவித்தாள். ‘நம் மகளும், அவள் காதலனும் இதற்குள் பாலை நில வழியைக் கடந்திருப்பார்கள். காதலனுடைய ஊரை அடைந்திருப்பார்கள். ஊராரும் உறவினரும் கூடியிருக்க முறைப்படி மணம் புரிந்து கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் கொண்டிருந்த அன்பு உலக மறிய உறுதிபெற்று விட்டது. தலைவியின் செயலுக்காக நாம் வருந்தவேண்டியதில்லை. தான் கைப்பிடித்த காதலனையே அவள் மணந்து கொண்டாள். இதன் மூலம் அவளுடைய உறுதியான கற்பையும் உலகோர் உணர்ந்து கொண்டனர். நமது செல்வப் புதல்வியின் இச்சிறந்த குணத்திற்காக நாம் பெருமையடைய வேண்டியதுதான் இதனால் நமக்கு எத்தகைய இழிவும் இல்லைஎன்று செவிலித்தாய் நற்றாயிடம் எடுத்துக் கூறினாள். இப்பாட்டு இவ்வாறு செவிலித்தாய் கூற்றாகப் பாடப்பட்டுள்ளது. பாட்டின் பொருள் “தோழியே தலைவியின் பிரிவுக்காக நாம் வருந்த வேண்டிய தில்லை. அவள் ஒருவரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறியதனால் நமக்கு எவ்வித இழிவும் இல்லை. அவள் துணைவன் சிறந்த வீரன், சிறந்த வீரகண்டா மணிகளைக் கால்களிலே அணிந்தவன். நல்ல இலை வடிவமான வெள்ளொளி வீசும் வேலாயுதத்தையுடையவன். கட்டிளமையுள்ள சிறந்த தலைவன். இத்தகைய உயர்ந்த உத்தமனுடன்தான் அவள் உடன் போனாள். நிறைந்த வளையல்களை அணிந்த முன்கையையுடைய உன் மகள் அவனுடன் கொண்ட ஒருமனப்பட்ட நட்பு மிகவும் உயர்ந்த தாகும். கோசர்கள் என்பவர்கள் நான்கு பிரிவுள்ளவர்கள். அவர்கள் பழமையான ஆலமரத்தின் அடியிலே கூடும் பொதுச் சபையிலே தங்குவார்கள். நேர்மை தவறாமல் நீதி மொழிகளைக் கூறுவார்கள். அவர்களுடைய உறுதியான நல்ல மொழி என்றும் உண்மையாக நிலைத்து நிற்கும். அதுபோல உன் மகள் அவனுடன் கொண்ட நட்பு உறுதி பெற்று விட்டது. இதற்குள் நமது மகளுக்கும், அந்தக் காளைக்கும் திருமணம் முடிந்திருக்கலாம். மணப்பறை முழங்க, சங்குகள் ஒலிக்க, முறைப்படி அவர்கள் திருமணச் சடங்கு முற்றுப் பெற்றிருக்கும். ஊராரும் உறவினரும் கூடி அவர்களை வாழ்த்தி யிருப்பார்கள். நமது அருமை மகளின் அன்பின் உறுதியை அனைவரும் பாராட்டி யிருப்பார்கள். நமது மகள் அவனிடம் கொண்ட அன்பு உண்மையானது என்பதும் உறுதியாகி விட்டது. பாட்டு பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு தொல்மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நலமொழி போல வாய் ஆகின்றே தோழி! ஆய்கழல் சேயிலை வெள்வேல் விடலை யொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. பதவுரை: தோழி - தலைவியைக் காணாமல் வருந்தும் தோழியே! ஆய்கழல் - சிறந்த வீரகண்டா மணியையும், சேயிலை - நல்ல இலை வடிவமுள்ள. வெள்வேல்- வெண்ணிற முள்ள வேலையும் உடைய. விடலையொடு- தலைவனுடன், தொகுவளை முன் கை - கூட்டமான வளையல்களைத் தரித்த முன் கையை யுடைய. மடந்தை நட்பே- நமது மகள் கொண்ட நட்பு. தொல்மூது ஆலத்து- பழமையான ஆலமரத்தின் அடியிலே உள்ள. பொதியில்- பொதுச் சபையிலே. இறை கொள்பு தோன்றிய - தங்கியிருந்து காணப்படுகின்ற. நாலூர்க் கோசர்- நான்கு பிரிவுகளைக் கொண்ட கோசர்களின். நன்மொழிபோல- நல்ல மொழிகளின் உண்மையைப் போல. பறைபட- பறை ஒலிக்க. பணிலம் ஆர்ப்ப - சங்குகள் ஆரவாரிக்க மணம் நடந்திருக்குமா தலால். வாய் ஆகின்று இவள் இவனுடன் கொண்ட நட்பு உலகறிய உண்மையாயிற்று. கருத்து: தலைவி. தன் தலைவனுடன் சென்று மணம் புரிந்து கொண்டு தன் கற்பை நிலைநாட்டினாள். விளக்கம்: ‘தோழி’ ஆய்கழல் சேயிலை வெள் வேல் விடலையொடு, தொகுவளை முன்கை மடந்தை நட்பே, தொன் மூதாலத்துப் பொதியில் இறை கொள்பு தோன்றிய, நாலூர்க் கோசர் நன்மொழி போல, பறைபடப் பணிலம் ஆர்ப்ப, வாய் ஆகின்றே என்று பத மாற்றம் செய்து பொருள் சொல்லப்பட்டது. பறை - மணப்பறை. பணிலம் - சங்கு. ஆலம் - ஆலமரம் பொதியில் - சபையில். நாலூர்க் கோசர் என்பதற்கு நான்கு வகையான ஊர்களைச் சேர்ந்த கோசர் என்றும், நாலூர் என்னும் ஊரைச் சேர்ந்த கோசர் என்றும் பொருள் சொல்லலாம். இவர்கள் சிறந்த வீரர்களாகவும் - வாக்குறுதி தவறாதவர்களாகவும் வாழ்ந்தார்கள். பண்டைத் தமிழர் திருமணத்தில் வாத்தியங்கள் முழங்கின: உற்றார் உறவினர் கூடி மணமக்களை ஊரார்க்கு அறிவிக்கும் வகையில் சில சடங்குகளையும் செய்தனர்; இதனை “பறைபடப் பணிலம் ஆர்ப்ப” என்ற தொடர் உணர்த்துகின்றது. முதிர்ந்த ஆலமரத்தின் அடியிலே பொதுச் சபை கூடுவது பண்டை வழக்கம். இதனால்தான் சபைக்கு மன்றம் என்ற பெயர் வந்தது. மன்றம்- மரத்தடி. தலைவி, தான் விரும்பிய கணவனுடன் தானே சென்று மணம் புரிந்து கொள்ளும் பழந்தமிழ் வழக்கத்தை இப்பாடல் காட்டுகின்றது. பிரிந்தவர் கூடுவார் பாட்டு 16 இது பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடச் சென்ற தலைவனை எண்ணி வருந்தி யிருக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்திருக்கும் பாடல் இது. பாலைத்திணை. தலைவன் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து போயிருக் கின்றான். “நம் காதலன் பொருளைத் தேடிப் போகும் வழியிலே நம்மை நினைப்பாரோ; பொருள் மேல் பேராசை வைத்தவர்கள் வேறு எதையும் எண்ண மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். நமது காதலரும் இவர்களைப் போல் இருப்பாரோ” என்று தலைவி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். தலைவியின் இக்கவலையைக் கண்டறிந்த தோழி அவளுக்கு ஆறுதல் உரைகள் சொல்லத் தொடங்கினாள். “கள்ளி மரங்கள் அடர்ந்திருக்கும் காட்டின் வழியே சென்ற நம் தலைவர் நம்மை மறந்துவிட மாட்டார். அவரால் மறக்கவும் முடியாது. அங்குள்ள கள்ளி மரங்களிலே பல்லிகள் பல உயிர் வாழும். அவற்றிலே ஆண் பல்லிகள்- தம் பெண் பல்லிகளை அழைக்கும். அந்தப் பாலை நிலத்திலே உள்ள வழிப்பறித் திருடர்கள். தமது அம்புகளைச் சரிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அவற்றைத் தம் கூர்மையான நகங்களால் புரட்டுவார்கள். அப்போது, அவ்வம்புகளிலிருந்து உண்டாகும் ஓசை போல அப் பல்லிகளின் குரலைக் கேட்டு - அவை தம் துணைப் பல்லிகளை அழைக்கும் குரலைக் கேட்டு -நம் காதலர் நம்மை நினைக்காமல் இருப்பாரா? உன்னைப் பற்றி அவர் நினைப்பது உறுதி; அந்த நினைப்பின் காரணமாக விரைவில் திரும்புவதும் உறுதி. ஆதலால் நீ சிறிதும் வருந்தாதே, என்று ஆறுதல் கூறினாள். இத் தோழியின் கூற்றாக அமைந்தது இப்பாடல். பாட்டின் பொருள் “தோழியே! அவர் நம்மை நினைப்பாரோ, நினைக்க மாட்டாரோ, விரைவில் வருவாரோ, வரமாட்டாரோ என்று எண்ணிக் கவலைப்படாதே. அவர் செல்லும் வழியிலே கட்டாயம் அவர் உன்னைப் பற்றி நினைப்பார். அந் நினைப்பின் காரணமாக, அவர் விரும்பிச் சென்ற காரியத்தை விரைவில் முடித்துக் கொண்டு திரும்புவார். அவர் போகும் பாலைவன வழியிலே பல கள்வர்கள் உண்டு; அவர்கள் தொழில் வழிச் செல்வோர் வைத்திருப்பதைப் பறித்து உண்பதுதான். வழிப்போக்காளரைப் பயமுறுத்துவதற்காக அவர்கள் அம்பும் வில்லும் வைத்திருப்பார்கள். அவர்களுடைய அம்புகள் இரும்பினால் செய்யப்பட்டவை. மழுங்கிப் போன அம்புகளைத் திருத்துவதற்காக, அவற்றை அவர்கள் தங்கள் கை விரலின் நகங்களால் புரட்டிப் பார்ப்பார்கள். அப்பொழுது அவ் வம்புகள் ஒன்றோடொன்று உரசுவதனால் ஒரு வகையான ஓசையுண்டாகும். அந்தப் பாலை நிலத்திலே வளர்ந்திருக்கும் கள்ளி மரங்களிலே பல்லிகள் பல வாழும். ஆண் பல்லிகள் தம் பெண் பல்லிகளைத் தம்மிடம் அழைக்கும். அக்குரல் அம்புகளைப் புரட்டுவதனால் எழும் ஓசையைப் போலக் கேட்கும். ஆண் பல்லிகள் இவ்விதம் தம் பெண் பல்லிகளை அழைக்கும் ஒலியைக் கேட்ட நம் தலைவர் எப்படி நம்மை நினைக்காமலிருக்க முடியும்? கட்டாயம் உன்னை நினைத்தே தீர்வார். உன்னிடம் திரும்பி வருவதற்கு முனைவார்.” பாட்டு உள்ளார் கொல்லோ! தோழி! கள்வர்தம் பொன்புனை பகழி செப்பம் கொண்மார் உசிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்கால் பல்லி தன்துணை பயிரும் அம்கால் கள்ளிஅம் காடு இறந்தோரே. பதவுரை: தோழி- தோழியே! கள்வர்- அவர் சென்ற பாலைவனத்திலேயுள்ள வழிப்பறி செய்யும் கள்வர்கள். தம் பொன் புனை பகழி- தமது இரும்பால் செய்யப்பட்ட அம்புகளை. செப்பம் கொண்மார் -கூர்மையாகச் செம்மை செய்து கொள்ளும் பொருட்டு. உகிர்நுதி - தமது கைவிரல் நகத்தினால். புரட்டும்- புரட்டுகின்றதனால் எழும். ஓசை போல- ஒலியைப் போல. செம்கால் பல்லி - சிவந்த கால்களையுடைய பல்லி. தன் துணை பயிரும் - தன் துணைப் பல்லியை அழைக்கின்ற. அம்கால்- அழகான அடியையுடைய. கள்ளி அம்காடு இறந்தோர் -கள்ளிகள் முளைத்திருக்கும் அழகிய காட்டு நிலத்தைக் கடந்தவர். உள்ளார் கொல் - நம்மை நினைக்காமல் இருப்பாரா? கருத்து: தலைவர் விரைவில் வருவார், பல்லியின் குரலைக் கேட்டால் அவர் தாமதிக்க மாட்டார். விளக்கம்: ‘உள்ளார் கொல்லோ’ என்ற தொடரை இறுதியிலே வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். பொன்- இரும்பு. இரும்பைக் ‘கரும்பொன்’ என்பர். செம்பொன்- தங்கம். வெண்பொன்- வெள்ளி. செப்பம்- செம்மை, திருத்தம்; உகிர்- நகம். நுதி - முனை, பயிர்தல்- அழைத்தல். உணவுப் பண்டங்கள் போதுமான அளவு கிடைக்காது பாலைவனத்தில், ஆதலால் அங்குள்ள மக்கள் வழிப்பறி செய்வதை வாழ்க்கையாகக் கொண்டனர். இது பாலை நிலத்தார் இயல்பு. இதனால் வறுமையுள்ள இடத்தில் - பஞ்சமுள்ள இடத்தில் - திருட்டு, கொலை முதலிய குற்றங்கள் நிலைத்து வளரும் என்ற உண்மையை உணரலாம். பல்லி சொல்வதைப் பற்றிய ஒரு உண்மையை இப்பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. பல்லியின் ஓசையைக் கேட்டு அது எதையோ தமக்குக் கூறுவதாக நினைப்போர் இன்னும் இருக்கின்றனர், பண்டும் இருந்தனர். பல்லி சொல்லுக்குப் பலன் பார்க்கும் இவ்வழக்கம் ஒரு மூட நம்பிக்கை. சிறிய பல்லி தீர்க்க தரிசனம். காதல் மிகுந்தால் பாட்டு 17 இது பேரெயின் முறுவலார் என்னும் புலவர் பாட்டு. காதலித்த தலைவியின் கூட்டுறவைப் பெறமுடியாவிட்டால், காமம் மிகுந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றிக் கூறுகிறது இப்பாட்டு. குறிஞ்சித் திணை. தலைவியைக் கண்டு கூடி மகிழ வேண்டும் என்னும் காதல் தள்ளிக் கொண்டுவர விரைந்து வந்தான் தலைமகன். தலைவியைக் காண வழி செய்யும்படி தோழியிடம் இரந்து இரந்து வேண்டினான். அவள் தலைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. அவளுக்கு, காதல் மிகுந்தவர்கள் தங்கள் காதலை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டுச் செய்யும் உலக வழக்கம் இன்னது என்பதைத் தலைவன் எடுத்துக் கூறினான். “காமம் மிகுந்தவர்கள் தங்கள் காமத்திலே வெற்றி பெற எதையும் செய்வார்கள்; காதல் நிறைவேறாமல் தோற்றால் அதன் முடிவு சாதல்தான்; அவர்கள் மடலேறவும் துணிவார்கள்; மடலேறுவதன் மூலம் காரியங் கைகூடாவிட்டால் உயிர் துறக்கவும் துணிவார்கள். இது உலக இயல்பு; ஆதலால் என்னை அந்த நிலைக்கு ஆளாகும்படி ஆக்கி விடாதே, என்று தோழியை வேண்டிக் கொண்டான் தலைவன். இவ்வாறு தலைவன் கூறுவதை எடுத்துக் காட்டுவதே இப்பாடல். பாட்டின் பொருள் தோழியே காமம் மிகுந்தவர்கள், தம் நோக்கம் நிறைவேறா விட்டால் என்ன செய்வார்கள் என்பது உனக்குத் தெரியாது. ஆதலால்தான் நீ தலைவியின் தயவைத்தேடித்தர மறுக்கின்றாய். காதல் உறுதி பெற்றுவிட்டால், அக்காதலுக்குக் காரணமான காரிகையுடன் சேராமல் அவர்களால் வாழ முடியாது. அவர்கள் தாம் காதலித்த பெண்ணைப் பெறக் குதிரை போலச் செய்து கொண்ட பனை மடலில் ஏறி ஆரும் காணத் தெருவிலே ஊர்ந்து செல்வர். தாம் காதலித்த மங்கை இன்னாள் என்பதை ஊரார் உணர்வதற்காகத் தம் படத்தையும், அவள்படத்தையும் எழுதிக் கையிலே பிடித்துக் கொள்வார்கள். இக்கோலத்துடன் இவர்கள் போவதைக் கண்டு வீதியில் வருவோர் போவோர் எவ்வளவுதான் ஆரவாரம் பண்ணினாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். எள்ளிக் கைகொட்டி நகைத்தாலும் சிறிதும் நாணமடைய மாட்டார்கள். இதனாலும் அவர்கள் காதலித்த பெண்ணை மணக்க முடியாவிட்டால் உயிரையும் விடுவார்கள். காமம் முதிர்ந்தால் இத்தகைய செயலையும் செய்யத் தூண்டும். இது உலக இயல்பு. இந்த இயல்பை நீ உணரவில்லை. ஆதலால்தான் எனக்கு உதவி செய்ய மறுக்கின்றாய். என்னை மடலேறும்படி விட்டு விடாதே. எப்படியாவது என் காதல் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும். பாட்டு மாஎன மடலும் ஊர்ப; பூஎனக் குவிமுகிழ் எருக்கும் கண்ணியும் சூடுப; மறுகின் ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப; காமம்காழ் கொளினே. பதவுரை: காமம் காழ்க் கொளின்- காமநோய் முதிர்ந்தால், மா என -குதிரை என்று சொல்லும்படி செய்து. மடலும் ஊர்ப- பனை மடலின் மேலும் ஏறி ஊர்வார்கள். பூ என - பூமாலை என்று சொல்லி. குவி முகிழ்- குவிந்த அரும்புகளையுடைய. எருக்கம் கண்ணியும் சூடுப- எருக்கம் பூமாலையையும் சூட்டிக் கொள்வார்கள். மறுகின்- வீதியிலே. ஆர்க்கமும் படுப- தம்மைக் கண்டவர்கள் ஆரவாரம் செய்வதையும் காணப் பெறுவார்கள். பிறிதும் ஆகுப- தம் எண்ணம் வெற்றி பெறாவிட்டால், உயிர் விடுதல் போன்ற வேறு செயல்களிலும் இறங்கி விடுவார்கள். கருத்து: நீ எனக்கு உதவி செய்யாவிட்டால் நான் மடலூர் வேன். விளக்கம்: “காமம் காழ் கொளினே” என்ற இறுதியில் உள்ள தொடர் முதலிலே எடுத்துக் கொள்ளப்பட்டது. முகிழ்- மலரும் பருவத்தில் உள்ள அரும்பு. கண்ணி- மாலை. காழ்ப்பு- உறுதி. மா- குதிரை. மடலேறியும் எண்ணம் நிறைவேறாவிட்டால் மலையிலேறி உயிர் விடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவர் என்பதைக் குறிக்கவே “பிறிதும் ஆகுப” என்ற சொற்றொடர் அமைந்திருக் கின்றது. மடலூர்தலைப் பற்றிய விரிவை இதற்குமுன் 14வது பாட்டின் விளக்கத்திலே படித்திருக்கலாம். அதையே இங்கும் நினைவு கூரவேண்டும். இன்னும் எத்தனை நாள்? பாட்டு 18 இது கபிலர் பாட்டு. காதலனும், காதலியும் களவு மணத்திலே கருத்தொருமித்து வாழ்கின்றனர். அடிக்கடி இரவு நேரத்திலே அவனும், அவளும் ஒன்று சேர்ந்து உவகை யடைகின்றனர். ஒரு நாள் இரவில் தலைவன் காதலியைச் சந்தித்து விட்டுத் திரும்பும் போது தோழி அவனைப் பார்த்து “நீ விரைவில் தலைவியை மணந்து கொள்ள வேண்டும்” என்று தன் கருத்தையும், தலைவியின் நிலையையும் வெளியிட்டாள். இது குறிஞ்சித்திணை. காதல் கொண்ட ஒரு தலைவனும், தலைவியும் களவு மணம் புரிந்து கொண்டனர். அவர்கள் இரவிலே குறித்த இடத்திலே அடிக்கடி சந்திக்கின்றனர். இவ்வாறு இன்பத்தேன் அருந்தி இன்புற்று வாழ்கின்றனர். இந்தக் களவு மணம் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதைத் தோழி ஒருத்தி தான் அறிவாள். அவளும் தன் தலைவியின் நடத்தைக்கு உடந்தையாகவே இருந்தாள். இந்தக் களவு மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; தன் தலைவியும், அவள் காதலனும் பலருங் காணக் கற்பு மணவாழ்வை மேற்கொள்ள வேண்டும்; அவர்கள் அன்புடன் இணைந்து நின்று நடத்தும் இல்லற வாழ்வைக் கண்டு மகிழ வேண்டும்; என்பது தோழியின் உள்ளத்திலே கிடந்த ஆசை. அவள் தன் உள்ளக் கருத்தைத் தலைவனிடம் உரைக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் இரவிலே, தலைவன் குறித்த இடத்திற்கு வந்து தலைவியைச் சந்தித்து விட்டுத் திரும்பினான். அப்பொழுது தோழி அவனை நிறுத்தி, அவனிடம் தன் மனக்கருத்தைத் தெரிவித்தாள். தோழி தலைவனிடம் சொல்லியது இன்னது என்பதை எடுத்துக்காட்டுவதே இப்பாடல். பாட்டின் பொருள் “மலை நாட்டின் தலைவனே! நான் உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். இன்றுதான் அதற்குத் தகுந்த வாய்ப்பு நேர்ந்தது. நான் சொல்லுவதை நீ நன்றாகச் சிந்தித்துப் பார்த்து விரைவில் நல்ல முடிவுக்கு வரவேண்டும். காலந்தாழ்த்தினால் உனக்கும், என் தலைவிக்கும் பெரிய ஏமாற்றம் உண்டானாலும் உண்டாகலாம். மூங்கில் வேலி சூழ்ந்த உன்னுடைய மலைச்சாரலிலே வேரிலே பலாப் பழங்கள் பழுத்துக் கிடக்கும். வேரிலே இருப்பதனால் அப்பழங்கள் மரத்திற்குப் பாரமாகவும் இருக்க மாட்டா. எட்டியிருப்போர் கண்களுக்கும் அப்பழங்கள் காணப்படுவதில்லை. வழிநடப்போரும் அவற்றை எளிதிலே பார்க்க முடிவதில்லை. ஆகையால் அப்பழங்களைப் பிறர் கவர்ந்து கொள்ள வழியில்லை. அவை உனக்கும் உன் சுற்றத்தார்க்குமே பயன்படும். எம்முடைய மலைச் சாரலிலே பலாமரத்தின் சிறிய கிளைகளிலே பெரிய பழங்கள் கனிந்து தொங்குகின்றன. அவற்றைப் பலரும் பார்க்கின்றனர். அப்பழங்களின் சுமையைத் தாங்க முடியாமல் கிளைகள் முறிந்தாலும் முறிந்து விடும். அல்லது அப்பழங்கள் எல்லோர் கண்ணுக்கும் தெரிவதால் அவற்றை யாரேனும் கவர்ந்து கொண்டு போனாலும் போய் விடுவார்கள். இந்த இயற்கை நிகழ்ச்சியை நீ நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். என் தலைவியின் உயிர் அந்தப் பலாமரத்தின் கிளையைப் போல மிகவும் சிறியது. அவள் கொண்டிருக்கும் காமம்- காதல் மிகவும் பெரியது. அவளுடைய உயிரால் தாங்க முடியாத அளவுக்குப் பெரியது. ஆதலால் அவள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் வரலாம்; அல்லது அவளை வேறு யாருக்கேனும் அவளுடைய பெற்றோர் மணம் செய்து கொடுத்தாலும் கொடுக்கலாம். பலாப்பழத்தைப் பிறர் கவர்வது போல அவளையும் பிறர் மணந்து கவர்ந்து செல்லலாம். ஆதலால் இன்னும் காலந் தாழ்த்துவது கூடாது. அவளை மணந்து கொள்ளத்தக்க காலத்தைக் கைக்கொள்ள வேண்டும்.” பாட்டு வேரல் வேலி வேர்கோள் பலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! யார் அஃது அறிந்திசினோரே. சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள் உயிர் தவச் சிறிது! காமமோ பெரிதே! பதவுரை: வேரல் வேலி- மூங்கில் வேலிக்கு இடையிலே. வேர் கோள் பலவின்- வேரிலே பழங்களைக் கொண்டிருக்கும் பலா மரங்கள் நிறைந்த. சாரல் நாட- மலைச் சாரலை உடைய நாட்டின் தலைவனே. செவ்வியை ஆகு-மணம் புரிந்து கொள்ளும் காலத்தைத் தெரிந்து கொள், யார் அஃது அறிந்திசினோர்- யார் தான் பின்னால் நடக்கப்போகும் அதனை அறிந்தவர்கள். சாரல்- எங்களுடைய மலைச் சாரலிலே. சிறுகோட்டு- பலாமரங்களின் சிறிய கிளைகளிலே. பெரும்பழம்- பெரிய பழங்கள். பழுத்து. தூங்கி ஆங்கு- தொங்குகின்றதைப் போல. இவள் உயிர்தவச் சிறிது. இவளுடைய உயிர் மிகவும் சிறியது. காமமோ பெரிது- இவள் கொண்டிருக்கும் காமமோ பெரியதாகும். கருத்து: தலைவியைக் காலந்தாழ்த்தாமல் மணம் புரிந்து கொள். இன்றேல் பெரிய ஏமாற்றம் நேர்ந்தாலும் நேரலாம். விளக்கம்: வேரல்- மூங்கில்; சிறு மூங்கிலுக்கு வேரல் என்று பெயர். செவ்வி- காலம். மதி- முன்னிலையைக் குறிக்கும் அசைச் சொல். தவ -மிகவும். இனி எப்படியோ! பாட்டு 19 இது பாணர் பாட்டு; ஊடல் நீங்காத தலைவியைப் பற்றி, அவள் காதலன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது போல் அமைந்திருப்பது இப்பாடல். இது மருதத்திணை. தன்னுடன் பிணங்கியிருந்த தலைவியின் ஊடலை நீக்க அவன் எவ்வளவோ இனிமையாகப் பேசிப் பார்த்தான். அவள் அகத்திலே மகிழ்ச்சியை உண்டாக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தும் பார்த்தான். அவள் பிணக்கு- ஊடல்- கோபம் தணியலில்லை. பின்னும் பின்னும் பிணங்கிக் கொண்டேயிருந்தாள். அதைக் கண்ட தலைவன் திண்டாடினான். துக்கம் தாங்காமல் தவித்தான். இவள் ஊடலை எப்படித் தீர்ப்பது என்று கவலைப்பட்டான். “இவள் தன் பழைய தன்மையிலிருந்து மாறிவிட்டாள்; நம்மிடம் அன்பற்றவள் போல இருக்கின்றாள். இனி, இவள் எத்தகைய உறவு கொண்டிருப்பாளோ? ஒன்றும் விளங்க வில்லையே! நெஞ்சமே யான் என்ன செய்வேன். என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வருந்துகின்றான். இவ்வாறு தலைவன் தன் உள்ளத்தோடு தானே பேசிக் கொள்ளுவதைக் கூறுவதே இப்பாடல். பாட்டின் பொருள் “நெஞ்சே! நான் இன்னும் என்னதான் செய்ய முடியும்? இவள் மனம் கனியும்படி எவ்வளவோ இனிய மொழிகளைக் கூறினேன்; இவளுக்கு என்னென்ன விருப்பமோ அவற்றையும் செய்து பார்த்து விட்டேன். இவள் உள்ளத்திலே எழுந்த ஊடல் சிறிதும் நீங்கவில்லை. மேலும் ஊடிக் கொண்டிருக்கிறாள் என் உள்ளத்தைக் கலங்கச் செய்கிறாள். வேள் எல்லி என்பவன் சிறந்த கொடையாளி; உழுவித் துண்ணும் வேளாளர் தலைவன். மிழலைக் கூற்றம் என்று பெயர் பெற்ற நாட்டின் தலைவன். கடற்கரையிலே உள்ள நீழல் என்னும் ஊரிலே உறைந்தவன். யாழ் வாசிக்கும் தொழிலையுடைய பாணர்களின் வறுமையைப் போக்கி அவர்களை வாழ்வித்த தலைவன். இவனை யிழந்தபின் பாணர்கள் தங்கள் தலையிலே சூட்டிக் கொள்ளும் பொன் மலரை இழந்தனர். அவர்கள் தலையிலே இப்பொழுது பொலிவில்லை. இதைப் போல உள்ளத்திலே மகிழ்ச்சியும் ஊக்கமும் இல்லாமல் என் நெஞ்சமே நீ வாழ்க! என் காதலி நமது வீட்டுத் தோட்டத்து மரத்திலே படர்ந்து மலர்ந்திருக்கும் முல்லை மலர்களைக் கூந்தலிலே அணிந்திருக் கின்றாள். அந்த மலர்கள் ஒளி வீசுகின்றன. மணமும் வீசுகின்றன. கற்புக் கடையாளமான முல்லை மலரை யணிந்த இவள் அடர்ந்த நீண்ட கூந்தலையுடையவள். முன்பு போல் நம்மிடம் அன்பும் ஆதரவும் காட்டாமல் பிணங்குகின்றாள். மேலும்மேலும் பிணங்கிக் கொண்டேயிருக்கிறாள். இனி இவள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வாளோ! அறியேன்.” பாட்டு எவ்வி, இழந்த வறுமை யாழ்ப்பாணர் பூஇல் வறும்தலை போலப், புல் என்று இனைமதி! வாழிய நெஞ்சே! மனைமரத்து எல்உறு மௌவல் நாறும் பல்இருங் கூந்தல் யாரளோ நமக்கே. பதவுரை: எவ்வி இழந்த- தங்களுக்கு உதவிய எவ்வி என்னும் வள்ளலை இழந்து. வறுமை யாழ்ப்பாணர் - வறுமை யுற்ற யாழ்வாசிக்கும் பாணர்களின். பூஇல் - பொன்மலரை இழந்த. வறும் தலைபோல - வெறுந்தலையைப் போல. புல்லென்று - ஒன்றுமில்லாமல் ஒளியிழந்து. இனைமதி - வருந்துவாயாக. வாழிய நெஞ்சே - வாழ்க மனமே. மனைமரத்து - வீட்டுத் தோட்ட மரத்திலே. எல்உறுமௌவல் - ஒளியுடன் மலர்ந்திருக்கும் முல்லை மலர்களை அணிந்து. நாறும் - மணம் வீசுகின்ற. பல் இரும் கூந்தல் - அடர்ந்த நீண்ட கூந்தலை யுடையவள். நமக்கு யாரளோ - ஊடல் தணியாமையால் இனி நமக்கு எப்படிப்பட்டவளா இருப்பாளோ அறியேன். கருத்து: இவள் இன்னும் ஊடல் தணியவில்லை. இனி எப்படி இருப்பாளோ. விளக்கம்: பூ - பொன்னாற் செய்த பூ. வள்ளல்கள் பொன்னாற் செய்த மலர்களைப் பாணர்களுக்கு அளிப்பது பண்டைக் கால வழக்கம். மௌவல் - முல்லை. கற்புள்ள பெண்கள் முல்லைக் கொடியை வைத்து வளர்ப்பதும், அதன் மலர்களைச் சூட்டிக் கொள்வதும் முன் கால வழக்கம். தலைவன் தலைவியிடங் கொண்டிருக்கும் நீங்காத காதலை - அன்பை நினைவூட்டும் பாடல் இது. இச்சிறிய பாடலில் எவ்வி என்னும் ஒரு வள்ளலின் வரலாறு உவமையாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. அவர் அறிவுள்ளவர் ஆகுக பாட்டு 20 தலைவன் பொருள் தேடிச் செல்வதற்குத் துணிந்தான்; பொருளீட்டாமல் இல்லறத்தை இனிது நடத்த முடியாது; எப்படி யாவது செல்வத்தைத் தேடிக் கொணர்ந்தால்தான் சிறப்புடன் வாழ முடியும்; காதலியுடன் கருத்து ஒருமித்து வாழ்ந்து இல்லறத் தார்க்குரிய கடமைகளைச் செய்ய முடியும். இந்த நிலைமை ஏற்பட்ட பிறகுதான் அவன் தன் அருமைத் துணைவியை விட்டுச் சில நாள் பிரிந்து செல்லத் துணிந்தான். தன் பிரிவைத் தன் காதலி பொறுக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் அவளிடம் தன் பிரிவை நேரே சொல்லுதற்கு அவனுக்கு ஆண்மையில்லை. தன் பிரிவைக் கேட்டால் அவள் படும் துக்கத்தை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் தான் பிரிந்து போக எண்ணியிருப்பதை அவனுடைய தோழிக்குக் குறிப்பாகக் கூறினான். தோழி தலைவியிடம் சென்று காதலன் கருத்தை அறிவித்தாள். தலைவனுடைய பிரிவுச் செய்தி அவள் உள்ளத்தைக் கலக்கி விட்டது. அவளால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை; தலைவனுடைய துணிவைக் குறித்து அவள் தன் கருத்தை வெளியிட்டாள். “என்னைக் காட்டிலும் செல்வத்தைச் சிறந்தது என்று அவர் நினைத்து விட்டார். என்னுடன் இருந்து அடையும் இன்பத்தை விட பொருளால் பேரின்பம் பெறலாம் என்று துணிந்து விட்டார். ஆதலால் தான் அவர் பொருள் தேடப் பிரிந்து போக நினைத்து விட்டார். பொருள் மக்களுடைய மனத்தையும், குணத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது. இதற்கு என் காதலரே எடுத்துக் காட்டாவார். நான் ஒரு பெண். காதலர் அன்பையும், அருளையும் நம்பி வாழும் ஒரு பெண். தனித்து வாழ்ந்து உயிர் வாழ முடியாத ஒரு பெண். இத்தகைய ஒரு பெண் என்பதற்காகவாவது அவர் என்னிடம் இரக்கம் காட்ட வேண்டும். இந்த இரக்கத்தையும் கைவிட்டு அவர் பிரிய நினைத்தார். அன்றியும் நான் அவருடைய அன்புக்கு- காதலுக்கு- உரிமையுள்ள துணைவி. என்னிடம் உண்மையான அன்போ, காதலோ அவருக்கு இருக்குமானால் பிரிவைப் பற்றி எண்ணி யிருக்கமாட்டார். இயற்கையாக என்னிடம் காட்ட வேண்டிய இரக்கத்தையும் கைவிட்டு, அன்பையும் கை விட்டு அவர் பிரியத் துணிந்தால் அது அவருடைய அறியாமையையே காட்டும். அறிவுள்ள அவர் இப்படிப்பட்ட நெஞ்சாண்மை யுள்ளவராயின் அவர் அறிவுள்ள வராகவே இருக்கட்டும். தோழியே! அவர் இக்குணமுள்ளவர் என்பதை இதற்குமுன் நாம் அறியாமலிருந்தோம் ஆதலால் நாம் அறிவற்றவர்களாகவே இருப்போம். இவ்வாறு தலைவி கூறினாள். அறிவுள்ளவர் பொருளுக்காகப் பிரிவது அழகன்று; அருளையும் அன்பையும் கைவிட்டுத் தன் அருமைக் காதலியை விட்டுப் பிரியத் துணிவது அறிவுடமையும் அன்று; என்ற கருத்தை வெளியிட்டாள். தோழி தலைவனிடம் போய்த் தன் கருத்தைத் தெரிவித்து அவன் பிரிவைத் தடுக்க வேண்டும் என்பதே அவள் கருத்து. இப்பொருளை உட்கொண்டதே இப்பாடல். பாட்டு அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக; மடவம் ஆக மடந்தை நாமே. பதவுரை: மடந்தை - தோழியே. அருளும் அன்பும் நீக்கி- அருளையும் அன்பையும் கைவிட்டு, துணைதுறந்து - தம் துணைவியையும் கைவிட்டு. பொருள் தேடும் முயற்சியின் மேல். பிரிவோர் - பிரிந்து போகத் துணிந்த தலைவர். உரவோர் ஆயின் - அறிவுள்ளராக இருந்தால். உரவோர் உரவோர் ஆக - இத்தகைய துணிவுள்ள அவர் அறிவுள்ளவராகவே இருக்கட்டும். நாம்- அவர் பிரிவைப் பொறுத்துக் கொண்டிருக்கும் வல்லமையற்ற நாம். மடவம் ஆக - அறிவற்றவராக இருப்போமாக. கருத்து: என்னைப் பிரிந்து போகுதல் அறிவுள்ள தலைவர்க்கு அழகன்று. விளக்கம்: இப்பாடல் கோப்பெருஞ் சோழன் என்பவரால் பாடப்பட்டது. தலைவனுடைய பிரிவைப் பற்றிச் சொல்லிய தோழிக்குத் தலைவி கூறியது. பாலைத்திணை அருள்- இரக்கம். துன்பம் அடைகின்றவர் மக்களாயினும் மற்றைய உயிர்களாயினும் அவர்களிடம் காட்டும் கருணை- இரக்கம் - அருளாகும். அன்பு - தமக்குத் தொடர்புள்ளவர்களிடம் காட்டும் பாசம் - காதல் - அன்பு என்று சொல்லப்படும். துணை - துணைவி; காதலி; உரவோர் - அறிவுள்ளவர். உரன் - அறிவு; வலிமை; மடம் - அறியாமை. மடவர் - அறிவில்லாதவர். மடமை என்பதும் அறியாமை. மடந்தையர் -அறிவில்லாதவர். பொய்யா மொழி புகல மாட்டார் பாட்டு 21 பொருள் தேடச் சென்றான் ஒரு தலைவன்; அவன் தன் தலைவிக்குப் பல ஆறுதல் மொழிகளைக் கூறிச் சொன்றான்; தான் திரும்பி வரும் வரையிலும் தலைவியைத் தவிக்காமல் பாதுகாத்துக் கொள்ளும்படி தோழியிடம் கூறி விட்டுப் போனான். “செல்லும் காரியத்தை விரைவில் வெற்றியுடன் முடிப்பேன். சென்ற விடத்திலும் ஒரு பொழுதும் உன்னை மறவேன்; மழைக்காலம் வருவதற்கு முன் உன்னை மகிழ்விக்கத் திரும்பி வருவேன்” என்ற உறுதி மொழிகளையும் தலைவியிடம் உரைத்துப் போனான். தலைவியும், தலைவன் வரவை எதிர்பார்த்துப் பொறுத் திருந்தாள். அவள் தோழியும் அவளுக்குத் துக்கம் தோன்றாமல், ஆடியும், பாடியும் பேசியும் அவளுக்கு மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருந்தாள். தலைவன் திரும்பி வருவதாக உரைத்த கார் காலம் வந்து விட்டது. ஆயினும் அவன் மட்டும் இன்னும் திரும்பவில்லை. இதைக் கண்டு தோழி உள்ளத்திலே துக்கம் படர்ந்தது. “கார் காலத்தில் கணவன் வந்து சேர்வான் என்று கருதி, தலைவி துக்கத்தை அடக்கிக் கொண்டிருந்தாள். கார் காலம் வந்ததும் தலைவனைக் காணவில்லை. ஆதலால் இவள் வருந்துவாள். இவள் வருத்தத்தை நான் எப்படித் தணிப்பேன்” என்று எண்ணினாள். தோழியின் நெஞ்சத்தை அவள் முகக் குறிப்பால் அறிந்தாள் தலைவி. “தன் கணவன் பொய் சொல்ல மாட்டான்; அவன் வருவதாகக் குறித்த காலத்திலே வந்து விடுவான்” என்பதைத் தோழிக்குக் கூறினாள். ‘தோழியே! இப்பொழுது காட்டில் உள்ள கொன்றை மரங்கள் எல்லாம் புதிய மலர்களைப் பூத்திருக்கின்றன. தேனையும். மணத்தையும் வண்டுகள் விரும்பி வந்து மொய்க்கும்படி கொத்துக் கொத்துக்களாகப் பூக்கள் பூத்திருக்கின்றன, நீளமான அப் பூங்கொத்துக்களைப் பறித்து அவற்றுடன் இடையிடையே தழைகளையும் சேர்த்துத் தலையிலே மகளிர் அணிகின்றனர். இந்த மலர்களோடும் தழைகளோடும் பொன்னால் அழகாகச் செய்யப் பட்ட தலை அணிகளையும் தரித்திருக்கின்றனர். இந்த மலர்க் கொத்துக்களும், தழைகளும், பொற்கலன்களும் பொருந்தியிருக்கும் பெண்களின் கூந்தலைப் போலப் புதுமலர் பூத்த கொன்றை மரங்கள் காட்சியளிக்கின்றன. இத்தகைய காட்சியுடன் காணப்படுகிறது காடு. மழைக் காலத்தில்தான் இக்காட்சி காணப்படும். ஆதலால் கார் காலம் வந்து விட்டது என்று கூறுகின்றனர். ஆனால் நான் இதை நம்ப மாட்டேன். ஏன் என்றால் என் காதலர் பொய் சொல்ல மாட்டார்: வாக்குறுதி தவறமாட்டார்; கார் காலம் வரும்போது கட்டாயம் வந்து விடுவேன் என்று உறுதி மொழி சொல்லிய அவர் தவறமாட்டார்; பொய் சொல்லும் வழக்கம் அவருக்கில்லை; ஆதலால் இதை நான் கார் காலம் என்று நம்பவே மாட்டேன்; இது ஏதோ மாயமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினாள். தலைவி இப்படிச் சொல்லித் தன் காதலனின் பெருமையைப் புலப்படுத்தினாள். ‘அவன் கட்டாயம் விரைவில் திரும்பி வருவான்; அது வரையிலும் நானும் துன்பத்தைப் பொறுத்திருப்பேன்’ என்று சொல்லித் தோழியின் மனத்திலே தோன்றிய கவலையைத் தணித்தாள். இச்செய்தியைக் கூறுகிறது இப்பாட்டு. பாட்டு வண்டுபடத் ததைந்த கொடிஇணர், இடைஇடுபு பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர், கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் கானம், கார்எனக் கூறினும் யானோ தேறேன், அவர்பொய் வழங்கலரே, பதவுரை: வண்டுபட - வண்டுகள் தேனை உண்ணுவதற்காக வந்து மொய்க்கும் படி, ததைந்த- அடர்ந்து மலர்ந்திருக்கின்ற. கொடி இணர்- நீண்ட பூங்கொத்துக்களை. இடை இடுபு- இடையிடையே தழைகளையும் சேர்த்து, பொன் செய் - பொன்னால் செய்யப்பட்ட. புனை இழை- அழகான தலை அணிகளையும், கட்டிய - தலையிலே கட்டியிருக்கின்ற. மகளிர் கதுப்பின் - பெண்களின் கூந்தலைப் போல. தோன்றும்- காணப்படுகின்ற. புதுப்பூகொன்றை - புதியதாக மலர்ந்த பூக்களையுடைய கொன்றை மரங்களைக் கொண்டிருக்கிறது. கானம்- காடு. கார் எனக் கூறினும் - ஆதலால் கார் காலம் வந்துவிட்டது என்று கூறினாலும். யானோ தேறேன் - நான் இதை நம்ப மாட்டேன். ஏனென்றால் அவர் பொய் வழங்கலர் - அவர். ஒரு பொழுதும் பொய்யுரை புகல மாட்டார். கருத்து: இது கார் காலம் என்று கூறினாலும் இதை நான் நம்ப மாட்டேன். விளக்கம்: இப்பாடலின் ஆசிரியர் ஓதலாந்தையார் என்பவர். கார் காலம் வந்தது; பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை; தலைவி வருந்துவாள்; என்று எண்ணிய தோழிக்குத் தலைவி கூறுவது போல் அமைந்துள்ள பாட்டு இது. தலைவி கூறுவது. பாலைத்திணை. மலரையும், தழையையும், பொன் அணியையும் கூந்தலிலே அணிந்த மகளிர், பூத்த கொன்றைக்கு உவமையாகக் கூறப்பட்டன. ததைதல் - நெருங்குதல். கொடி - நீளம். இணர்- கொத்து. தழை என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது. கதுப்பு - தலைமயிர், கானம் - காடு. கார் - கார் காலம், தேறுதல் - தெளிதல்; நம்புதல். அழாதே! அவன் பிரியான் பாட்டு 22 தலைவன் என்றுமில்லாதபடி ஒரு நாள் குழைந்து குழைந்து பேசினான்; தலைவியிடம் அளவற்ற அன்பு மொழிகளை அள்ளிச் சொரிந்தான். அவன் நடத்தையும் சொல்லும் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. அதைப் பற்றித் தலைவியின் உள்ளத்திலே ஐயம் பிறந்தது. நம்மை விட்டுப் பிரிந்து போவதற்காகத்தான் இவன் இவ்வளவு நாடகங்கள் நடிக்கின்றான் என்று தெரிந்து கொண்டாள். இதையெண்ணித் தலைவி தனித்திருந்து வருந்தினாள். அவன் பிரிந்து சென்ற பின் தனியாக எப்படியிருப்பேன் என்று எண்ணித் தவித்தாள். கண்ணீர் விட்டுக் கலங்கினாள். வாயினால் ஒன்றும் உரைக்காமல் இவ்வாறு வருந்தியிருந்தாள். இதைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் மொழிகள் உரைத்தாள். “அழகிய மலைச் சாரலிலே, வெண்கடப்ப மரங்களிலே, வேனிற்காலத்திலே, அழகிய கிளைகளிலே, மணம் வீசிக் கொண்டிருக்கின்ற- வண்டுகள் மொய்க்கின்ற மலர்களைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே! நீ சிறிதும் கண் கலங்க வேண்டாம். நீ கண்ணீர் சிந்திக் கலங்கிக் கொண்டிருக்கும் படி உன்னை விட்டுப் பிரிகின்றவர் யார்? ஒரு நாளும் உன் துணைவன் உன்னைத் தனியாக விட்டுப் பிரிய மாட்டார். அவர் பொருள் தேடப் போகும்படியான நிலைமை நேர்ந்தால் உன்னையும் உடன் கொண்டே போவார். ஆதலால் வருந்தாதே” என்று தோழி கூறினாள். இவ்வாறு தலைவியின் கருத்தறிந்து அவளுக்குத் தோழி கூறிய ஆறுதல் உரையை வெளியிடுவதே இப்பாடல். பாட்டு நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய யாரோ பிரிகிற் பவரே, சாரல் சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து வேனில் அம்சினை கமழும் தேம் ஊர் ஒன்றுதல் நின்னொடும் செலவே. பதவுரை: சிலம்பு சாரல் அணி கொண்ட - மலைப்பக்க மானது தனக்கு அழகாகக் கொண்டிருக்கின்ற; வலம்சுரி - வலப் பக்கமாக வளைந்து மலரும், மராத்து - மலர்களையுடைய வெண் கடம்ப மரத்திலே. வேனில் - இளவேனிற் காலத்திலே. அம்சினை - அதன் அழகிய கிளைகளிலே. கமழும் - மணம் வீசிக் கொண்டு மலர் மலர்ந்திருக்கும். தேம்ஊர் - வண்டுகள் தேடி வருகின்ற மலர்களைப் போன்ற. ஒள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றியுடைய வளே. நீர்வார் கண்ணை- நீரொழுகும் கண்களையுடையவளாய். நீ இவண் ஒழிய- நீ இங்கே தனித்திருக்கும் படி. யாரோ பிரிகிற்பவர் - யார் தான் பிரிந்து போவார். நின்னொடும் செலவே- அப்படி அவர் பொருள் தேடப் போக நேர்ந்தால் உன்னையும் அழைத்து கொண்டு தான் போவார். ஆதலால் வருந்தாதே. கருத்து: தலைவர் உன்னைத் தனியாக விட்டுப் பிரிந்து போக மாட்டார். விளக்கம்: ‘சிலம்புசாரல் அணிகொண்ட வலம் சுரிமரா அத்து வேனில் அம்சினை கமழும் தேம் ஊர் ஒன்றுதல், நீர்வார் கண்ணை, நீ இவண் ஒழிய யாரோ பிரிகிற்பவரே நின்னொடும் செலவே, இவ்வாறு பதங்களும், அடிகளும் மாற்றிப் பொருள் உரைக்கப் பட்டது. சிலம்பு- மலை. மராம்- மரப்பொதுப் பெயர். இங்கு வெண் கடப்ப மரத்தைக் குறித்தது. இது இளவேனிற் காலத்திலே மலரும். சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற்காலம். தேம்- மணம்- மணத்தை நாடிச் செல்வது வண்டுகளின் இயற்கை. இது சேரமான் எந்தை என்ற புலவர் பாட்டு. தோழி கூற்று. தலைவிக்குத் தோழி சொல்லும் ஆறுதல் மொழி. பிரிவைக் குறிப்பதால் பாலைத்திணை. தலைவன் தலைவியிடம் தளராத காதலுள்ளவன் என்பதைத் தோழி அவளுக்கு விளக்கம் கூறினாள். தலைவனுடைய நேர்மையையும், காதலையும், இப்பாட்டினால் காணலாம். இன்னும் பாடுக! இனிதே பாடுக! பாட்டு 23 செவிலித்தாய்- நற்றாய் முதலியவர்கள் தலைவியைச் சில நாட்களாக உற்று நோக்கி வந்தனர். அவள் நடவடிக்கைகளிலே மாறுதல்களைக் கண்டனர்; மனத்துக்குள்ளே ஐயம் கொண்டனர். அவள் பேச்சு, நடை, பார்வை, செயல் எல்லாம் வேறுபட்டிருந்தன. இவ்வேறுபாடு கண்டால் யார்தான் ஐயமுற மாட்டார்கள்? தலைவியும் எப்போழுதும் போல் கலகலப்பாக இல்லை. முல்லைப் பல் ஒளி வீசும் முழு மகிழ்ச்சியை அவளிடம் காண வில்லை. தோழிகளுடன் அவ்வளவாக விளையாடுவதும் இல்லை. சில சமயங்களில் என்னமோ ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்து கொண்டிருப்பாள்; தனக்குத் தானே ஏதாவது முனகிக் கொண்டிருப்பாள். அவள் கண்களிலே கலக்கம் இருந்தது. பார்வையிலே பதைபதைப்பிருந்தது. தம் அருமைப் புதல்வியின் உடம்புக்கு ஏதோ நோய் வந்து விட்டது. ஆதலால் தான் அவள் உள்ளக் கிளர்ச்சியில்லாமல் உறக்கம் பிடித்தவள் போல் விழிக்கின்றாள். என்ன உடம்புக்கு? ஏன் இப்படியிருக்கின்றாய்? என்று எவ்வளவுதான் வருந்தி வருந்திக் கேட்டாலும் அவள் வாயிலிருந்து பதில் வரவில்லை. பேந்தப் பேந்த விழிக்கின்றாளே தவிர சரியான விடையொன்றும் விளம்பவில்லை. இதைக் கண்டு தாய்மார்கள் தவித்தனர். மகளுக்கு வந்திருக்கும் நோயை மாற்ற மனங் கொண்டனர். தலைவியை - தம் மகளைப் பிடித்திருக்கும் நோய் காம நோய் என்பதை அவர்கள் அறியவில்லை. தாய்மார்கள் அவள் நோயை அறிய விரும்பினர். அக்கால வழக்கப்படி கட்டுவிச்சியை அழைத்தனர். கட்டுவிச்சிக்கு அகவல் மகளிர் என்றுபெயர். பிற்காலத்தினர் குறத்தி என்று கூறினர். முறத்திலே நெல்லை வைத்துக் கொண்டு அதை எண்ணிக் குறி சொல்வது அவர்கள் வழக்கம். அவர்கள் தெய்வங்களைக் கூவி அழைத்து அவற்றின் பெயரால் குறி சொல்லுவார்கள். தெய்வங்களைக் கூவி அழைப்பதனால்தான் அவர்களுக்கு அகவல் மகளிர் என்ற பெயர் வைத்தனர். அவர்கள் முறத்தில் உள்ள நெல்லை எண்ணிப் பார்த்துச் சில காரணங்களையும் சொல்லி ‘இவளை முருகன் பிடித்து வருத்துகின்றான்’ என்று குறி சொல்லுவார்கள். இதன்பின் தாயர் முருகனுக்குப் பூசனை புரியும் வேலனை அழைப்பார்கள். வெறியாட்டு எடுத்தல் என்னும் பெயரால் அவனைப் போற்று வார்கள். அவன் ஆவேசங் கொண்டு ஆடுவான்; முருகனால்தான் - தெய்வத்தால் தான் - இவள் பிடிக்கப்பட்டாள் என்று கூறுவாள். இதை நம்பித் தாய்மார்கள் தம் செல்வியின் துன்பந் தணியத் தெய்வத்திற்குப் பலியிட்டுப் படைப்பார்கள். இது அக்கால வழக்கம். இவ் வழக்கத்தை ஒட்டியே இத் தலைவியின் தாய்மார்கள் கட்டுவிச்சியிடம் குறி கேட்க முனைந்தனர். ஆனால் தலைவியின் மாறுதலுக்குக் காரணம் என்ன என்பது அவளுடைய தோழிக்குத் தெரியும். அவள் இச் சமயத்திலே உண்மையைச் சொல்ல முன்வந்தாள். ஆயினும் வெளிப்படையாகச் சொல்ல அவள் துணியவில்லை. குறிப்பாகக் கூறவே முன்வந்தாள். தலைவிக்கு வேறு எந்த நோயும் இல்லை; முருகனோ அல்லது வேறு எந்தத் தெய்வமோ இவளைப் பிடிக்கவும் இல்லை., இவளுடைய மாறுதலுக்குக் காரணம் மனிதன்தான்; முருகனைப் போன்ற ஒரு ஆடவனால்தான் இவள் இந்த நிலையடைந்தாள் என்பதை வெளியிட்டாள். தோழி இந்த உண்மையை எப்படி வெளியிட்டாள் என்பதைப் பார்ப்போம். அந்தக் கட்டுவிச்சியை - அகவன் மகளை - குறி சொல்ல வந்தவளைப் பார்த்துத் தோழி கூறும் சொற்களே இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன. ‘தெய்வங்களை அழைத்துப் பாடும் அகவல் மகளே! தெய்வங்களின் பெயரால் குறி சொல்லும் அகவல் மகளே! குறி சொல்லுவதில் நல்ல தேர்ச்சியடைந்த அகவல் மகளே! சங்கு மணிகளைக் கோத்து மாலையாக அணிந்திருக்கின்றாய். அச்சங்கு மணிகளைப் போலவே உன் கூந்தலும் நரைத்து முதிர்த்து வெண்ணிறவொளி வீசிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நரைத்த வெண்மையான நீண்ட கூந்தலையுடைய வயது முதிர்ந்த அகவல் மகளே! நீ நன்றாகப் பாடுவாயாக! நீ பாடிய பாட்டுக்களிலே அவருடைய- என் தோழிக்கு இந்தக் காம நோயைத் தந்த அவருடைய மலையைப் புகழ்ந்து பாடிய பாட்டுக்களை இன்னும் நன்றாகப் பாடுக! மீண்டும் மீண்டும் பாடுவாயாக!” என்று கூறினாள். இதன் வாயிலாகத் தலைவியின் நோய் காம நோய்; தெய்வந் தந்த நோயன்று; அத்தலைவனைத் தேடி இவளுக்கு மணம் செய்து வைத்தால்தான் இவள் நோய் தீரும் என்ற கருத்தை வெளியிட்டாள். இக் கருத்துள்ள பாடல்தான் கீழ் வருவது. அகவன் மகளே? அகவன் மகளே? மனவுக் கோப்புஅன்ன நல்நெடும் கூந்தல் அகவன் மகளே? பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே? அவர் நல்நெடும் குன்றம் பாடிய பாட்டே.? பதவுரை: அகவல் மகளே, அகவல் மகளே- தெய்வங்களைக் கூவிப் பாடும் கட்டுவிச்சியே. மனவுக் கோப்பு அன்ன - சங்குமணி களைக் கோத்த மாலை போன்ற. நல்நெடும் கூந்தல்- வெண்மையான நல்ல நீண்ட கூந்தலையுடைய. அகவல் மகளே- கட்டுவிச்சியே. பாடுக பாட்டு - பாட்டுக்களைப் பாடுவாயாக. இன்னும் பாடுக பாட்டு- இன்னும் பாடுவாயாகப் பாட்டுக்களை. அவர் நல்நெடும் குன்றம் பாடிய பாட்டு- அவனுடைய நல்ல உயர்ந்த மலையைப் புகழ்ந்து பாடிய பாட்டுக்களை இன்னும் பாடுவாயாக. கருத்து: இவளைக் காதலித்த தலைவனுடைய மலையைப் பாடுக. அப்பொழுதுதான் இவள் நோய் நீங்கும் விளக்கம்: இப்பாட்டு ஒளவையார் பாடியது. தாயார் தம் மகளின் மாறுதலைப் பற்றிக் கட்டுவிச்சியிடம் குறி கேட்கின்ற போது உண்மை விளங்க உரைத்தது. தோழி கூற்று. குறிஞ்சித் திணை. மனவு - சங்கு. கோப்பு - கோத்தது. மாலை. அகவல் மகளிர்கள் தாமே ஆவேசம் கொண்டு ஆடிக் குறி சொல்வதும் உண்டு. மலை நிலத்து மக்களிடம் இவ்வாறு குறி கேட்கும் வழக்கமும் பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றது. இந்த மூட நம்பிக்கை இன்றும் அறியாதாரிடம் அமைந்திருக்கின்றது. இன்னும் காணேன் பாட்டு 24 இரு காதலர்கள். அவர்கள் இணைபிரியாத அன்புள்ளவர்கள். ஆயினும் தலைவன் அவளை விட்டு வேறு வினையின் பொருட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது - அவளுக்குப் பல ஆறுதல் மொழிகள் கூறிப் பிரிந்து போனான். இளவேனிற் காலத்தில் உறுதியாகத் திரும்பி வந்து விடுவேன்; உள்ளம் வருந்தாதே; அதுவரையிலும் ஆற்றியிரு என்று கூறிப் போனான். தலைவன் சொல்லிச் சென்ற இளவேனிற் பருவம் வந்து விட்டது. ஆனால் அவன் மட்டும் வரவில்லை. அதனால் தலைவிக்குத் தாங்கொணாத் துக்கம் பிடித்தது. அவள் உடல் இளைத்தது; உள்ளம் உருகியது; கன்னங்கள் வாடின; கரங்கள் சோர்ந்தன; கண்களிலே ஒளியில்லை; கவலையே உருவெடுத்தாற் போல் உட்கார்ந்திருந்தாள். அடையாளம் காணாதபடி அழகிழந்து உருமாறினாள். இவள் நிலையைக் கண்டு ஊரார் பலவாறு பேசிக் கொண்டனர். இவள் கணவன் இரக்கமற்றவன்; இவளை இப்படி வாடி வதங்கும் படி விட்டுப் போய்விட்டான்; பெண்ணுளத்தைக் காணாத பேதை அவன்; வாக்குறுதி தவறியவன்; ‘கல்’ என்று அவனைப் பற்றி அவதூறு பேசினர். இவளாவது தன் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டாமா? இப்படி ஊரார் அறிய உடல் சோரும்படி உருமாறும்படி தன் உள்ளத்தை விட்டு விடலாமா? இவளுடைய கோழைத்தனம், இவளுடைய கணவனுக்குப் பழி சூட்டுகின்றதன்றோ, ஆதலால் இவள் நாணமற்றவள் என்று இவளையும் இகழ்ந்துரைத்தனர். இப்படி ஊர் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. இதைக் கேட்ட தலைவி தன் காதலனை எண்ணியும், அவன் கெடு வைத்த வேனிற் பருவத்தைப் பார்த்தும் வருந்திக் கூறினாள். “என் காதலர் என்னிடம் தவணை சொல்லிய இளவேனிற் காலம் இதோ வந்துவிட்டது. வலிமையான அடிப்பாகத்தை யுடைய வேப்பமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன; ஒளி பொருந்திய அம்மலர்களிலே புது மணம் கமழ்கின்றது. என் தலைவர் என்னுடன் இருந்தால் இந்தக் காட்சியைக் கண்டு மகிழலாம். அவர் இல்லாமலே இந்த இளவேனிற் காலம் என்னை விட்டுக் கழிந்து விடுமோ என்று கருதுகின்றேன். நான் வருந்தும் இவ்வருத்தம் போதாது என்று ஊராரும் என் பாவத்தைக் கொட்டிக் கொள்ளுகின்றனர். ஆற்றங்கரையின் அருகே, பழுத்து முதிர்ந்து கிடக்கும் ஒரு அத்திப் பழத்தின் மேல் பல நண்டுகள் ஏறி நசுக்குவது போல் என் உள்ளத்தை உடையச் செய்கின்றனர். இவ்வூரார் மிகவும் கொடியவர்கள்; அவர்கள் நாக்குகள் அடக்கமற்றவை; என் காதலர் என்னைவிட்டுப் பிரிந்திருப்பதைக் கண்டு ஒரே சத்தமாக உளறிக் கொட்டுகிறார்கள். நான் எப்படியிருந்தால் இவர்களுக் கென்ன?” என்று கூறினாள் அத்தலைவி. “இவர்கள் வாய்ப் பேச்சு அடங்கும்படி அவரும் இன்னும் வந்தபாடில்லை.” என்று வருந்தினாள். இவ்வாறு தலைவி கூறுவதாக அமைந்த பாட்டுத்தான் கீழ்வருவது:- பாட்டு கரும்கால் வேம்பின் ஒண்பூ யாணர் என்னை இன்றியும் கழிவது கொல்லோ? ஆற்றுபுயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழையக் கொடியோர் நாவே காதலர் அகலக் கல் என்றவ்வே. பதவுரை: கரும்கால் வேம்பின்- வலிமையான அடிப் பாகத்தைக் கொண்ட வேப்ப மரத்தின் ஒண்பூ- ஒளியுள்ள பூக்கள் மணம் வீசுகின்ற யாணர்- இப்புதிய இளவேனிற்காலம். என்ஐ இன்றியும் - என் தலைவன் என்னுடன் இல்லாமலே. கழிவது கொல் ஓ -போய் விடுமோ. ஆற்று அயல் எழுந்த - ஆற்றங்கரையிலே முளைத்து வளர்ந்திருக்கின்ற. வெண் கோட்டு அதவத்து- வெண்மையான கிளைகளையுடைய அத்தி மரத்தின், எழுகுளிறு மிதித்த-எழுந்த நண்டுகளால் மிதித்துத் துவைக்கப்பட்ட, ஒரு பழம் போல- ஒரு கனிந்த அத்திப் பழத்தைப் போல. குழைய - என் மனம் வருந்தும்படி. கொடியோர் நா- இவ்வூரில் உள்ள கொடி போன்ற பெண்களின் கொடியநாக்குகள். காதலர் அகல - என்காதலர் பிரிந்ததனால், கல் என்றவே-கல்லென்று ஒரேயடியாக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். கருத்து: தலைவர் குறித்துச் சென்ற காலத்தில் வரவில்லை. ஆதலால் ஊரார் பழியுரைக்கின்றனர். விளக்கம்: இது பரணர் பாட்டு ‘இளவேனில் பருவம் வந்தும் தலைவன் வரவில்லை. அதனால் தலைவியின் நிலை மாற்றமடைந்தது. அது கண்டு ஊரார் பழியுரைப்பது தீரும்படி அவர் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்திக் கூறினாள்’ தலைவி கூற்று. பாலைத்திணை கரும்கால்- வலிமையான அடிப்பாகம்; கருமையான அடிப் பாகம் என்றும் கூறலாம். யாணர்-புதுமை. என்னை; என் ஐ என் தலைவன். ஐ- தலைவன். அதவம்- அத்திமரம். குளிறு- நண்டு கொடியோர்- கொடுமையானவர்கள்; கொடிபோன்ற- பெண்கள். பிறர்பழியே சூழல் பெரும்பாலும் பெண்கள் குணம்; அதிலும் பெண்களைப் பற்றிப் பெண்கள் பேசாமலிருக்க மாட்டார்கள். கல் - ஒலிக்குறிப்பு. வருந்தும் மனத்துக்குக் கனிந்த அத்திப் பழம் உவமானம். நண்டுகள் ஏறி மிதிப்பதனால் அத்திப்பழம் கொளகொளத்துப் போகின்றது. அது போல் ஊர்ப்பெண்கள் உரைக்கும் பழிமொழிகள் உள்ளத்தைத் தாக்குவதனால் அது வருந்துகின்றது. இது ஒரு அழகான உவமை. நாரைதான் சாட்சி பாட்டு 25 ஒரு தலைவனும், ஒரு தலைவியும் நீண்ட நாட்களாகக் காதல் வாழ்விலே காலம் போக்கினர். அவர்கள் வாழ்க்கை கள்ளத் தனமான வாழ்க்கையாகவே இருந்து வந்தது. பிறர் அறியாமல் அவர்கள் இரவிலோ, பகலிலோ வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சந்திப்பார்கள். மலைச்சாரலிலோ, வீட்டின் புறத்திலோ சந்திப்பார்கள். காதலன், அவளை ஊரார் அறிய மணந்து கொண்டு கற்பு நெறியிலே வாழவே விரும்பினான். ஆயினும் அப்படிச் செய்வதற் கேற்ற காலம் நெருங்கவில்லை. ஏதோ காரணத்தால் காலம் வளர்ந்துகொண்டே போயிற்று. தலைவியும் இந்தக் கள்ள மணத்திலிருந்து மாறிக் கற்பு மணவாழ்வு நடத்தவே விரும்பினாள். அவள் அடிக்கடி தன் காதலனை “விரைவில் மணந்து கொள், மணப்பதற்கான ஏற்பாடு களைச் செய், நமது கள்ளக் காதல் வெளிப்பட்டால் ஊரார் நகைப்பர்; என் பெற்றோரும் என்னைக் கடிந்து கொள்வர்; ஆதலால் காலம் தாழ்த்தாதே” என்று எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டாள். இவ்வளவுக்கும் காதலன் அசையவில்லை. ஆகட்டும் ஆகட்டும் என்று காலத்தை ஓட்டிக்கொண்டே வந்தான். இந் நிலையிலே காதலிக்கு ஓர் எண்ணம் உண்டாயிற்று. ‘நாம் மட்டும் காதலனை மணந்து கொள்ளத் தூண்டுவதால் பயன் இல்லை. விரைவிலே காரியம் கைகூடாது; மற்றொருவரும் சேர்ந்து வலியுறுத்தினால் விரைவில் காரியம் ஆகலாம்;’ என்பதே அவள் உள்ளத்திலே தோன்றிய எண்ணம். ‘தோழியே நானும் என் காதலனும் முதன் முதலிலே ஒரு தண்ணீர்த் துறையிலே சந்தித்தோம். எங்கள் இருவர் கண்களும் இணைந்தன; உள்ளங்கள் ஒன்றுபட்டன. இருவரும் கூடி இன்பம் எய்தினோம். அந்தச் சமயத்திலே அங்கே எங்கள் நடப்பைக் கண்டவர் யாரும் இல்லை. அறிவுள்ளவர் யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் இன்று எங்களை ஒன்று கூட்டி வைக்க முடியும். என் காதலனுக்கு இடித்துரைத்து இப்பொழுதே மணம் புரிந்து கொள் என்று வற்புறுத்தக் கூடும். அங்கே நீர்த்துறையிலே ஒரு நாரைதான் உட்கார்ந்திருந்தது. அதுவும் தனக்கு நல்ல மீன் கிடைக்கிறதா என்பதிலே கருத்தூன்றி யிருந்தது. எங்கள் செய்கையை அதுவும் பார்க்கவில்லை. பார்த்தால் தான் என்ன? அதனால் எப்படிச் சாட்சி சொல்ல முடியும்? உன்னை நான் பிரிய மாட்டேன்; பிரிந்தால் உயிர் வாழமாட்டேன்; எல்லோருங் காண இனிதாக இல்லறம் நடத்துவேன்’ என்று அப்பொழுது அவன் உரைத்த உறுதிமொழியைக் கேட்டவர்கள் யாரும் இல்லை. மணந்து கொள்ளாமல் காலம் போக்கி வரும் அக்கள்வன் இப்பொழுது பொய்யனாகி விட்டால் நான் என்ன செய்ய முடியும்? ‘உன்னை நான் காதலிக்கவில்லை; உன்னை மணந்து கொள்வதாக எந்த உறுதி மொழியும் கூறவில்லை’ என்று புரண்டு பேசுவனாயின் நான் என் செய்வேன்? எந்தச் சாட்சியைக் கொண்டு அவன் கொடுத்த உறுதி மொழியை மெய்ப்பிப்பேன். இவ்வாறு தலைவி தன் தோழியினிடம் உரைத்தாள். தோழி தலைவனை வற்புறுத்தி விரைவில் மணந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்பதே தலைவியின் கருத்து. ஆதலால் தனக்கும் தலைவனுக்கும் உள்ள தொடர்பை அவள் இவ்வாறு விளக்கியுரைத்தாள். இந் நிகழ்ச்சியை உரைப்பதே இந்தப் பாடல். பாட்டு யாரும் இல்லைத் தானே கள்வன் தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ தினைத்தாள் அன்ன சிறுபசும் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. பதவுரை: மணந்த ஞான்று - தோழியே அவன் என்னைக் களவு மணம் புரிந்து கொண்ட நாளிலே. யாரும் இல்லை - சாட்சி சொல்லக் கூடியவர் எவரும் இல்லை. தானே கள்வன் - தலைவனாகிய கள்வன் மட்டுந்தான் இருந்தான். தான் அது பொய்ப்பின் - அவன் அப்பொழுது உரைத்த உறுதி மொழியை இப்பொழுது மறுத்துப் பொய் புகல்வானாயின். யான் எவன் செய்கோ - யான் என்னதான் செய்வேன். ஒழுகுநீர்- நீரோடையின் கரையிலே உட்கார்ந்து. ஆரல் பார்க்கும் - தன் உணவுக்காக ஆராமீனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். தினைதாள் அன்ன - தினையின் அடியைப் போன்ற. சிறு கால - சிறிய பசுமையான கால்களையுடைய - குருகும் உண்டு- நாரைதான் இருந்தது. கருத்து: தலைவன் தான் உறுதிமொழி கூறியபடி இன்னும் மணந்து கொள்ளவில்லை. நீதான் இதற்கு வழி செய்ய வேண்டும். விளக்கம்: இது கபிலர் பாட்டு. தலைவி தன்னை மணந்து கொள்ளாமல் காலம் கடத்தும் தலைவன் போக்கைக் கண்டு வருந்தினாள். அவனே இரக்கங் கொண்டு என்னை மணந்து கொண்டால்தான் உண்டு; இன்றேல் எனக்கு உதவி செய்வதாகச் சாட்சி கூறுவார் எவரும் இல்லை என்று வருந்திக் கூறியது இப்பாடல். தலைவியின் கூற்று. குறிஞ்சித்திணை. அது - அவன், உரைத்த சூள் - உறுதி மொழி. எவன் - என்ன நாரையின் கால்களுக்குத் தினையின் அடிப்பாகம் உவமை. குருகு - நாரை. ‘ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு என்றதனால் தலைவனும் தலைவியும் முதலில் சந்தித்த இடம் ஒரு நீர்த்துறை என்று கொள்ளப் பட்டது. ‘தான் மணந்த ஞான்றே’ என்ற இறுதியில் உள்ள தொடர் முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஆண் குரங்குக்கு அவளைத் தெரியும் பாட்டு 26 தலைவி களவு மணம் புரிந்து கொண்டாள். அது அவளுடைய பெற்றோர்களுக்குத் தெரியாது. ஆயினும் அவளுடைய தோழிக்கு மட்டும் தலைவியின் செய்கை தெரியும். தலைவியின் களவு மணத்திற்குத் தோழியின் உடன்பாடும் உண்டு. ஒரு நாள் தலைவியைப் பெற்றெடுத்த அன்னையும், அவளை வளர்த்த செவிலித் தாயும் அவளுடைய போக்கை உற்று நோக்கினர்; நடையிலும், பார்வையிலும்; தோற்றத்திலும் மாறுதலைக் கண்டனர். இந்த மாறுதலுக்கு என்ன காரணம் என்று தலைவியைக் கேட்டனர். அவள் ஒரு பதிலும் உரைக்கவில்லை; தோழியைக் கேட்டனர்: அவளும் தகுந்தபடி விடை தரவில்லை. நற்றாய்க்கும், செவிலித்தாய்க்கும் உள்ளத்திலே பயந்தோன்றி விட்டது. தலைவியின் உடம்புக்கு ஏதோ பிணி வந்து விட்டது என்று எண்ணிப் பெரிதும் வருந்தினர். உடனே அக்கால வழக்கப் படி கட்டுவிச்சியை (குறத்தியை) அழைத்தனர். அவளிடம் தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் என்ன வென்பதைக் கண்டறிந்து சொல்லும்படி குறி கேட்டனர். கட்டுவிச்சி முறத்திலே நெல்லை வைத்தாள். வழக்கம் போல் ஆடிப்பாடினாள். தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் தெய்வக் கோளாறுதான் என்று கூறினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தோழி. இன்னும் உண்மையை ஒளித்து வைக்கக் கூடாது. உண்மையை உரைத்து விடுவதுதான் அறமாகும். இல்லாவிட்டால் இத்தாய்மார்கள் கட்டுவிச்சியின் பொய்யுரையை நம்பிப் பூசையும் ‘பலியும்’ போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். இவர்களுடைய ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே உண்மையை உரைத்து விடுவோம் என்று துணிந்தாள். ‘அன்னைமார்களே கட்டுவிச்சியின் சொல்லை நம்ப வேண்டாம். தலைவியின் மாற்றத்திற்குக் காரணம் தெய்வக் கோளாறல்ல. அவள் காதலித்த ஒரு தலைவன்தான் இதற்குக் காரணம். கருமையான அடிப்பாகத்தையுடைய வேங்கை மரங்கள் அரும்புகள் முழுவதும் மலர்ந்து அழகாகக் காணப்பட்டன. மேலே வானத்தை நோக்கி வளர்ந்தெழுந்த அவற்றின் பெரிய கிளைகளிலே மயில்கள் உட்கார்ந்திருந்தன. அந்த மயில்களின் தோற்றம் வேங்கை மலரைப் பறிக்கும் பெண்களைப் போலக் காணப்படுகின்றது. இத்தகைய சிறந்த நாட்டையுடையவன் அத்தலைவன். அவனை நம் தலைவிக்குத் தகுதியில்லாத தலைவன் என்று இக் கட்டுவிச்சி கருதினாள். இவளுக்கு நேர்ந்த மாறுதல் தெய்வத் தால் வந்தது என்று தீங்குரைத்தாள். நம் தலைவிக்கு இத்தகைய மாறுதலைத் தந்த அந்தக் கொடிய வனாகிய தலைவனை ஆண் குரங்கும் அறியும். இனிய மாங்கனியை அருந்துகின்ற கூர்மையான பற்களையுடைய, சிவந்த வாயையுடைய - மலையிலே ஓடி விளையாடுகின்ற வலிமையுள்ள குட்டியின் தந்தையாகிய அந்த ஆண் குரங்கு நன்றாக அறியும். அந்தக் குரங்கு கள்ளங் கபடமற்றது. நடுநிலை தவறாமல் நடந்து கொள்ளும் தன்மையுள்ளது. தன் கண்ணாற் கண்டதை மறைக்காமல் சொல்லும் குணமுள்ளது. தன் கண்ணாலே கண்டதை எந்தக் காரணத்தாலும் இல்லையென்று மறுத்துப் பொய்யுரைக்காது’ என்று தோழி உண்மையை உரைத்தாள். கட்டுவிச்சியின் சொல்லை நம்பி ஏமாற வேண்டாம். இவளுடைய மாறுதல் போக வேண்டுமாயின் அத்தலைவனைத் தேடி இவளுக்கு மணம் புரிந்து வைப்பதுதான் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சி என்பதைக் குறிப்பாகக் கூறினாள். தோழியின் இக்கூற்றை விளக்குவதே இப்பாடல்; பாட்டு அரும் அற மலர்ந்த கரும்கால் வேங்கை மேக்குஎழு பெருஞ்சினை இருந்த தோகை பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன், தகாஅன் போலத் தான்தீது மொழியினும் தன்கண் கண்டது பொய்க்குவது அன்றே தேக் கொக்கு அருந்தும் முள்எயிற்றுத் துவர்வாய் வரைஆடு வன்பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும் அக்கொடியோனையே. பதவுரை: அரும்பு அறமலர்ந்த- அரும்புகள் எல்லாம் மலர்ந்திருக்கின்ற. கரும்கால் வேங்கை - கருமையான வேங்கை மரத்தின். மேக்கு எழுபெரும் சினை - மேலே வளர்ந்து எழுந்த பெரிய கிளையிலே. இருந்த தோகை - உட்கார்ந்திருந்த மயில். பூக்கொய்மகளிரின் - மலர் கொய்கின்ற பெண்களைப் போல. தோன்றும் நாடன்- காணப்படும் சிறந்த மலை நாட்டை யுடையவனை. தகான் போல - இவளுக்குத் தகுதியில்லாதவன் போலக் கருதி. தான் தீது மொழியினும்- இக் கட்டுவிச்சி தீங்கான மொழியைக் கூறினாள் ஆயினும். தேன் கொக்கு அருந்தும்- இனிய மாங்கனியைப் பறித்துத் தின்னும். முள் எயிற்று- கூர்மையான பற்களையும். துவர்வாய்- சிவந்த வாயையும் உடைய. வரை ஆடுவன் பறழ் தந்தை - மலையிலே விளையாடுகின்ற வலிமையுள்ள குட்டியின் தந்தையாகிய, கடுவனும் - ஆண் குரங்கும். அக்கொடியோனை அறியும்- நம் தலைவிக்குத் தீங்கு செய்த அக்கொடியவனை அறியும். தன் கண் கண்டது- அக்குரங்குகள் கண்ணாற் கண்டதை. பொய்க்குவது அன்று - நான் காணேன் என்று மறுத்துப் பொய்யுரை புகலும் தன்மையுள்ளது அன்று. கருத்து: இத்தலைவியின் மாறுதலுக்குக் காரணம் தெய்வம் அன்று ஒரு ஆண் மகனோடு இவள் கொண்ட நட்புத்தான் காரணம். விளக்கம்: இது வெள்ளிவீதியார் பாட்டு. நற்றாயும், செவிலித் தாயும் “தலைவியின் நோய்க்குக் காரணம் தெய்வமே” என்று கட்டுவிச்சி கூறியதை நம்பியபோது தோழி உண்மையைக் கூறி அறநெறியிலே நின்றாள் குறிஞ்சித்திணை. “தன் கண்கண்டது பொய்க்குவது அன்றே” என்ற ஐந்தாவது அடி இறுதி அடியாக வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஏ- அசைச் சொற்கள். அற-முழுவதும்; எல்லாம். மேக்கு- மேலே. சினை- கிளை. தகாஅன்- அ என்னும் எழுத்து அளபெடை, தேன் கொக்கு- தேக் கொக்கு. கொக்கு- மாங்கனி. தேன்- இனிமை, பறழ்- குட்டி, கடுவன் ஆண்குரங்கு. தோகை- ஆண் மயில். மாமரச் சோலையிலே குரங்குகளும், அவற்றின் குட்டிகளும் மாங்கனிகளை அருந்தி விளையாடிக் கொண்டிருந்தன; அச்சமயத்தில் தான் நம் தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு களவு மணம் புரிந்து கொண்டனர் என்ற செய்தியைக் குறிப்பால் உணர்த்தினாள் தோழி. வேங்கை மரத்தின் மேலிருந்த ஆண் மயிலுக்குப் பூக் கொய்யும் பெண்களை உவமையாகக் கூறப்பட்டது. இந்த உவமையிலே ஒரு சிறந்த கருத்துண்டு. வேங்கை மரத்திலே உள்ள மயில் அந்த மரத்திற்கு அழகைத் தருகின்றது. அது போல அவனும் இவளுடன் இணைந்திருப்பானாயின் இவளுக்கு அழகைத் தருவான்; அமைதியைத் தருவான்; இவள் நோயைத் தணிப்பான்; இன்பத்தைத் தருவான் என்ற கருத்து இந்த உவமையில் மறைந்து கிடக்கின்றது. என் அழகு பயனில்லை பாட்டு 27 தலைவன் பிரிந்து போய்விட்டான். தலைவி மட்டும் தனித் திருக்கின்றாள். அவள் உள்ளம் பிரிவின் துன்பத்தைத் தாங்க மாட்டாமல் தவித்தது. இந்த நிலையைத் தோழி கண்டாள் தலைவியின் துன்பத்திற்காகக் கவலைப்பட்டாள். தோழி தனக்காகக் கவலைப்படுவதைக் கண்டாள் தலைவி. உடனே, தன் நெஞ்சில் இருந்து நெருப்பாகத் தன்னைத் தீய்க்கும் குறையை அவளிடம் உரைத்தாள். “தோழியே நல்ல கறவைப் பசுவின் பாலை அதன் கன்றாவது உண்ண வேண்டும் அல்லது நல்ல கலத்திலாவது கறந்து வைத்திருக்கவேண்டும் இவைஇரண்டும் இன்றி அந்த இனிய பால் நிலத்திலே சிந்தி வீணாகி விடுவதால் யாருக்கு என்ன பயன்? இதைப் போலவே என்னுடைய அழகும் ஆகி விட்டது. புள்ளிகள் பொருந்திய அல்குலையுடைய எனது மாமை நிறத்தின் அழகால் ஒரு பயனுமில்லை. என் தலைவனுக்கும் பயன்படவில்லை. எப்படி நல்ல பசுவின் இனிமையான பால் கன்றுக்கும் பயன்படாமல்- மக்களுக்குப் பயன்படும் வகையிலே பாத்திரத்திலும் சேராமல் நிலத்திலே சிந்தி வீணாகி விட்டதோ, அது போல எனது அழகிய நிறத்தைப் பசலை நோய் உண்ணுவதற்கு விரும்புகின்றது. பசலை நிறம் என்மேற் படர்ந்த காரணத்தால் என் அழகு வீணாயிற்று. தலைவன் என்னுடன் கூடியிருந்தால் என்னுடைய மாந்தளிர் போன்ற, அழகிய நிறம் வீணாகாது. பசுவின் பால் கன்றுக்கும் பயன்பட்டுக் கலத்திலும் நிரம்புவது போல் என் அழகு எனக்கும் பயன்படும்; என் தலைவனுக்கும் இன்பம் தரும்.” இவ்வாறு தலைவி தன் நிலைமையை எடுத்துரைத்தாள். பாட்டு கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்ஆன் தீம்பால் நிலத்து உக்குஆங்கு. எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும், திதலை அல்குல் என்மாமைக் கவினே. பதவுரை: கன்றும் உண்ணாது - கன்றுக் குட்டியும் குடிக்காமல், கலத்தினும் படாது - பாத்திரத்திலும் கறந்து வைக்கப்படாமல், நல்ஆன் தீம்பால் - நல்ல பசுவின் இனிய பால். நிலத்து உக்கு ஆங்கு - வீணாக நிலத்திலே சிந்தினாற் போல. திதலை அல்குல் என் - புள்ளிகள் பொருந்திய அல்குலையுடைய எனது. மாமை கவின் - மாந்தளிர் போன்ற அழகிய நிறம். எனக்கும் ஆகாது - எனக்கும் பயன்படாமல். என் ஐக்கும் உதவாது - என் தலைவனுக்கும் பயன்படாமல். பசலை உணீஇயர் - வீணாகப் பசலை நோய் உண்ணுவதற்கு. வேண்டும் - விரும்புகின்றது. கருத்து: தலைவன் பிரிந்தான்; என் மாந்தளிர் போன்ற அழகு பயன் இல்லை; அதைப் பசலை நிறம் உண்டுவிட்டது. விளக்கம்: ‘கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கு ஆங்கு, திதலை அல்குல் என் மாமைக்கவின், எனக்கும் ஆகாது, என்ஐக்கும் உதவாது, பசலை உணீஇயர் வேண்டும்’ என்று மாற்றிப் பதவுரை கூறப்பட்டது. இது கொல்லன் அழிசி என்பவர் பாட்டு. தலைவியின் தனிமையைக் கண்டு வருந்தினாள் தோழி. அவளுக்கு நான் என் துக்கத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் ஆயினும் பசலை நோய் என் அழகை உண்டது என்று கூறினாள்; தலைவியின் கூற்று பிரிவின் துயரத்தைச் சொல்லுவதால் பாலைத்திணை. கலம் - பால்கறக்கும் பாத்திரம். ஆ படி. ஆ, ஆன் என்று வந்தது. உகுதல் - சிந்துதல், உணீஇயர் - உயிர் அளபெடை. திதலை - தேமல். தலைவியின் அழகுக்கு நல்ல பசுவின் பால் உவமானம். என் துயரை எவர் அறிந்தார்? பாட்டு 28 பொருள் தேடப் பிரிந்த தலைவன் இன்னும் திரும்பி வர வில்லை. ‘விரைவில் வருவேன்’ என்றுதான் அவன் வாக்குறுதி யளித்துச் சென்றான். ஆனால் அவன் சொல்லியபடி விரைவில் வரவில்லை. இதை எண்ணித் தலைவியும் வருந்தினாள். தோழியும் வருந்திக் கவலை கொண்டாள். தோழியின் இரக்கத்தைக் கண்ட தலைவி அவளிடம் கூறுகின்றாள். “நீயாவது என்னிடம் இரக்கம் காட்டுகின்றாய். நான் படும் துன்பத்திற்காகக் கவலைப்படுகின்றாய். நான் துக்கத்தால் உறங் காதிருப்பது போலவே நீயும் உறங்காமல் இருக்கின்றாய். இந்த ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் என்னைத் தெரியும். தெரிந்தும் யாராவது என்னிடம் இரக்கம் காட்டுகிறார்களா? பார்! எல்லோரும் கவலையின்றிக் கண்மூடித் தூங்குகின்றனர். இவ்வூராரின் இக்கவலையற்ற தன்மைக்கு நான் என்ன செய்வேன்!” என்று நன்றாக உறங்கும் ஊரார் மேல் சினந்து கூறினாள் தலைவி. “தோழியே! சுழன்று சுழன்று மெதுவாகத் தென்றற் காற்று வீசுகின்றது. இத் தென்றற் காற்று இனிமையானது என்றாலும் எனக்கு நன்மை செய்யவில்லை. எனது உறக்கத்தைக் கெடுக்கின்றது. இவ்வூரார்க்குத் தென்றல் நல்ல இன்பத்தை அளிக்கின்றது. அதனால் அனைவரும் என்னைத் தொல்லைப்படுத்தும் என் காம நோயைப் பற்றிக் கவலைப்படாமல் உறங்குகின்றனர். தென்றற் காற்றின் உதவியால் நன்றாக மெய்ம் மறந்து தூங்குகின்றனர். ஆகையால் இவ்வூரில் உள்ளார்மேல் பாய்ந்து அவர்களை முட்டித் தள்ளுவேனா? அல்லது கையிலே கோல் கொண்டு அவர்களைத் தாக்குவேனா? அல்லது ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, ‘ஆ! திருடன்! திருடன்!’ ஏன்றோ, ‘ஆ! பாம்பு! பாம்பு!’ என்றோ விரைந்து கூவுவேனோ? இன்னதுதான் செய்வ தென்று அறியாமல் நான் திண்டாடுகின்றேன்”- என்று கூறினாள். பாட்டு முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு ஆசு ஒல்லெனக் கூவுவேன் கொல்! அலமரல் அசைவளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே. பதவுரை: அலமரல் - சுழலுந் தன்மையுள்ள. அசைவளி - மெதுவாக அசையும் தென்றற் காற்று. அலைப்ப - என்னை வருத்து வதனால் நான் தூங்காது நிற்கின்றேன். என் உயவு நோய் அறியாது - என்னைத் துன்புறுத்தும் காம நோயை அறியாமல், துஞ்சும் ஊர்க்கு- நன்றாக உறங்கும் இவ்வூராரை. முட்டுவேன் கொல் - முட்டித்தள்ளுவேனோ; தாக்குவேன் கொல் - அடிப்பேனோ. ஓர் பெற்றி மேலிட்டு-ஒரு காரணத்தை முன்னிட்டுக் கொண்டு, ஆ ஓல் என-ஆ எனத் திடீரென்று. கூவுவேன் கொல் - கூச்சல் போடுவேனோ! யானும் ஓரேன் - யானும் என்ன செய்வதென்று அறியேன். கருத்து: என் துன்பத்தை இவ்வூரில் உள்ள என் தாய் முதலிய உறவினர்களும் அறியாமல் உறங்குகின்றனர். இதற்கு நான் என்ன செய்வேன். விளக்கம்: ‘அலமரல் அசைவளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கு, முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல், ஓர் பெற்றி மேலிட்டு ஆசு ஒல் எனக் கூவுவேன் கொல், யானும் ஓரேன்’ என்று மாற்றிப் பதவுரை கூறப்பட்டது. இது ஒளவையார் பாட்டு. மணம் புரிந்து கொள்வதற்காகப் பொருள் தேடப் போயிருக்கின்ற தலைவன் விரைவில் வரவில்லை. அது கண்டு வருந்திய தோழிக்குத் தலைவி கூறியது இப்பாடல். பிரிவின் நிகழ்ச்சியாதலால் இது பாலைத்திணை. இந்த நிகழ்ச்சி இரவிலே நடைபெற்றது. ஓரேன்- அறியேன். பெற்றி- காரணம்; தன்மை; மேலிட்டு- முன்னிட்டு. உயவுநோய்- வருத்தும் நோய். அது காம நோய். தலைவியின் துயரத்தை உணராமல், அவளுடைய செவிலித் தாய், நற்றாய், முதலியவர்களும் நன்றாய் உறங்குகின்றனர். அவள் தந்தை, தமயன், முதலியவர்களும் உறங்குகின்றனர். இவர்களையும் எண்ணித்தான் தலைவி இவ்வாறு பொதுப்படையாக ஊராரைச் சினந்துரைப்பது போல் கூறினாள். நெஞ்சே யார் உனக்குத் துணை? பாட்டு 29 களவு மணம் புரிந்து கொண்ட இரு காதலர்கள், அவர்கள் அடிக்கடி இரவிலே குறித்த இடத்திலே கூடுவர். இன்னுரை பேசி இணைந்திருந்து மகிழ்வர். இவ்வாறு நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்றனர். தலைவியின் தோழிக்கு அவர்கள் இருவரும் விரைவில் மணம்புரிந்து கொண்டு கற்பு நெறியிலேயே வாழ வேண்டும் என்ற கவலையுண்டு. அவளும் தலைவனிடம் தன் கருத்தைப் பல தடவை கூறினாள். காரியம் நடைபெறவில்லை. இரவிலே அக்காதலர்கள் இருவரும் சந்திக்க இடமில்லாவிட்டால் அவர்கள் மணம் விரைவில் நடைபெறும் என்று தோழி கருதினாள்; தலைவியைத் தலைவன் குறித்தவிடத்திற்குச் செல்லாமல் தடுத்து விட்டாள். வழக்கம்போல் தலைவன் தலைவியைச் சந்திக்கும் பொருட்டு இரவிலே வந்தான். குறித்த இடத்திலே வந்து நின்றான். தலைவியைக் காணவில்லை. தோழிதான் காணப்பட்டாள். தோழியும் அவனிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். ‘இனி இரவிலே தலைவி உன்னைச் சந்திக்க மாட்டாள். கட்டுக்காவல் மிகுந்து விட்டது; நீ அவளை வரைந்துகொண்டு; வாழ்க்கை நடத்துவது தான் முறை’ என்று கூறிவிட்டாள். உடனே தோழியும் அவ் விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தனது வீட்டிற்கு வந்து விட்டாள். தலைவன் தன் காதலியின் கூட்டுறவைப் பெறாமல் ஏமாந்தான், அவன் உள்ளம் தலைவியைச் சந்திப்பதற்குத் துடித்தது. அப்போது அவன் தன் உள்ளத்தைப் பார்த்துத் தானே சொல்லுகின்றான். ‘நெஞ்சே! தலைவி வருவாள்; சந்திப்பாள் என்ற நல்லுரை உனக்குக் கிடைக்கவில்லை. இனி இரவிலே அவளை நீ சந்திக்க முடியாது; அவளை மணந்து கொள்ள முயற்சிசெய் என்ற பயனற்ற உரைகளைத்தான் கேட்டனை. மழை பெய்யும் நீரைச் சுடப்படாத பச்சை மண் பானை ஏற்றுக் கொண்டால் அதன் நிலைமை என்ன ஆகும்? மிகுந்த மழைத் தண்ணீரைத் தாங்கிய பச்சை மண்பாண்டத்தைப் போல, உள்ளம் தாங்க முடியாத ஆசை வெள்ளத்திலே நீந்தினாய்! எளிதிலே கிட்டாத எட்டாக்கனிக்கு ஆசைப்பட்டனை. உயர்ந்த மரக் கிளையிலே தன் குழந்தையை அன்போடு தழுவிக் கொண்டிருக்கும் தாய்க் குரங்கைப் போல உன்னை அன்போடு ஆதரிப்பவர் ஒருவரும் இல்லை; உன் குறையை- ஆசையைக் கேட்பவரும் ஆரும் இல்லை. அப்படி யாராவது உன் குறையைக் கேட்பவர்கள் இருந்தால் உனது போராட்டம் மிகவும் நன்றாக இருக்கும். உன் குறையைக் கேட்டு அதை நீக்குவார் இல்லாத போது ஏன் வீணாக இரவுக் குறியிலே என் காதலியைக் காண வேண்டும்! காண வேண்டும்! என்று அடித்துக் கொள்ளு கின்றாய்! என்று கேட்டான். இவ்வாறு தலைவன் தன் நெஞ்சுடன் தானே பேசிக் கொண்ட நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு நல்லுரை இகந்து புல்உரை தாஅய்ப் பெயல் நீர்க்குஏற்ற பசும்கலம் போல, உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதுஅவா உற்றனை நெஞ்சே! நன்றும் பெரிதால் அம்ம! நின்பூசல்! உயர் கோட்டு மகவு உடை மந்தி போல அகன்உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. பதவுரை: நெஞ்சே - மனமே. நல்உரை இகந்து - நல்ல மொழியைப் பெறாமல் நீ. புல் உரைதாய்- பலனற்ற சொல்லைப் பொருந்தி. பெயல் நீர்க்கு - மழை நீரை. ஏற்ற பசும் கலம் போல - நிறையத் தாங்கிய பச்சை மண்பாண்டத்தைப் போல. உள்ளம் தாங்கா - உள்ளம் பொறுக்க முடியாத, வெள்ளம் நீந்தி - ஆசை வெள்ளத்திலே முழுகி நீந்தி. அரிது அவா உற்றனை - முடியாத காரியத்திற்கு ஆசைப்பட்டாய். உயர் கோட்டு - உயர்ந்த கிளையிலே வாழும். மகவு உடை மந்தி போல - தன் குழந்தையை மார்போடு தழுவிக் கொண்டிருக்கும் பெண் குரங்கைப் போல. அகன் உறத்தழீஇ - உள்ளன்போடு உன்னை ஆதரித்து. கேட்கு நர்ப்பெறின் - உன் குறையைக் கேட்டு அதை நீக்குவாரை நீ துணையாகப் பெறுவாயானால். நின் பூசல் - உனது போராட்டம். நன்றும் பெரிது - மிகவும் பெருமையுள்ளதாகும். ஆல், அம்ம, ஏ, மூன்றும் அசைச் சொற்கள். கருத்து: இனி தலைவியை இரவில் காண முடியாது. அவளை வரைந்து கொண்டால்தான் சந்திக்க முடியும். விளக்கம்; நெஞ்சே! நல்உரை இகந்து புல் உரைதாய் பெயல் நீர்க்கு ஏற்ற பசும்கலம் போல, உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவா உற்றனை, உயர் கோட்டு மகவு உடை மந்தி போல, அகன் உறத் தழீஇ கேட்குநர்ப்பெறினே நின் பூசல் நன்றும் பெரிது ஆல் அம்ம என்று பதம் மாற்றிப் பொருள் கூறப்பட்டது. இது ஒளவையார் பாட்டு. இரவுக் குறியில் ஏமாந்த தலைவன் தலைவியை மணந்து கொள்ள எண்ணாமல், மீண்டும் இரவுக் குறியை நாடிய, தன் நெஞ்சை நோக்கிக் கூறியது. கனாக் கண்டேன் தோழி பாட்டு 30 கருத்தொருமித்த காதலர்கள் பன்னாட்கள் ஆரும் காணாத படி காதல் வாழ்க்கை நடத்தினர். இன்னும் களவு மணத்திலே காலம் போக்குதல் நன்றன்று என்று நாயகனும் நினைத்தான். நாயகியும் நினைத்தாள். இருவரும் வெளிப்படையாக மணந்து கொண்டு இல்லறம் நடத்த முடிவு செய்தனர். தலைவியின் தோழிக்கும் இச்செய்தி தெரியும். தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கும், தனிக் குடும்பம் நடத்துவதற்கும் பொருள் தேடப் பிரிந்து போனான். தலைவிக்குத் தலைவன் பிரிவு தாங்கமுடியாத துக்கந் தருவதுதான். ஆயினும் எல்லாரும் காண இல்லறம் நடத்தும் காலம் வாய்க்கப் போவதை எண்ணித் துக்கத்தை அடக்கிக் கொண்டிருந்தாள். துக்கமற்றவள் போலவே நடந்து கொண்டிருந்தாள். இப்படியிருக்கும் போது ஒருநாள் தலைவியினிடம் என்று மில்லாத ஒரு மாறுதல் உண்டாயிற்று. அவள் அகத்திலே முளைத் தெழுந்த துக்கம் முகத்திலே விளையாடிக் கொண்டிருந்தது. வழக்கம் போலச் சிரித்துப்பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு தொங்கப்போட்டுக் கொண்டிருந்தாள். நடைப்பிணமாக உலவிக் கொண்டிருந்தாள். தலைவியிடம் ஏற்பட்ட இந்தத் திடீர் மாறுதலைக் கண்டாள் தோழி! ‘தலைவியே! ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றாய்! என்றும் போல் இன்றில்லையே! உன் உள்ளத்திலே ஏதோ கலக்கம் இருப்பது போல் தெரிகின்றதே! திடீர் என்று இந்த மாறுதல் உன்னிடம் தோன்றியதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டாள். ‘தோழியே! என் மாறுதலுக்குக் காரணத்தைக் கேள்! நேற்று வரையிலும் என் துக்கத்தை வெளியில் காட்டாமல் இருந்தேன்; தலைவன் வரவை எதிர்பார்த்து மகிழ்ந்திருந்தேன். ஆனால் நேற்று இரவு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி வெறும் கனவுதான். கனவிலும் அது பொய்க் கனவு; அந்தப் பொய்க் கனவு என்னைக் கலங்க வைத்து விட்டது. பொய் புகல்வதிலே வல்லவனான என் காதலன் இரவிலே வந்தான். என் உடம்பை அன்போடு அணைத்துக் கொண்டான். உண்மையில் நிகழ்வது போன்ற இத்தகைய பொய்க்கனா ஒன்றைக் கண்டேன். இக்கனா என் அறிவைத் தடுமாறும்படி செய்து விட்டது. உடனே தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். என்னைத் தழுவிக் கொண்ட தலைவன் என் படுக்கையில் இருக்கின்றானா என்று தடவிப் பார்த்தேன். அவனைக் காண வில்லை. வண்டுகள் வீழ்ந்து கலங்கிய குவளை மலரைப் போல நான் கலங்கினேன். உடல் தளர்ந்தேன். தலைவனைக் காணாமல் நான் தனியாகத்தான் இருந்தேன். இத்தகைய என்னுடைய நிலைமை இரங்கத்தக்கதுதான். இந்தப் பொய்க் கனவுதான் என் உள்ளக் கவலைக்கும், உடல் மாறுதலுக்கும் காரணம் என்று தலைவி கூறினாள். இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதே இப்பாடல். பாட்டு கேட்டிசின் வாழி தோழி! அல்கல் பொய்வல் ஆளன் மெய்உறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட, ஏற்றுஎழுந்து அமளி தைவந் தன்னே; குவளை வண்டுபடு மலரின் சாஅய்த் தமியேன் மன்ற அளியேன் யானே. பதவுரை: தோழி வாழி கேட்டிசின் - தோழியே வாழ்க, என் மாறுதலுக்குக் காரணத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக. அல்கல் - இரவிலே. பொய்வல் ஆளன் - பொய் புகல்வதிலே வல்லவனாகிய என் காதலன். மெய்உறல் மரீஇய - என் உடம்பை அணைப்பது பொருந்திய. வாய்தகை- உண்மை போன்ற. பொய்க்கனா- பொய்க் கனவு ஒன்று எழுந்து. மருட்ட- என் உள்ளத்தை மயக்க, ஏற்று எழுந்து- உடனே தூக்கத்தை விட்டு எழுந்து. அமளி- என் படுக்கையை. தைவந்தன்னே- அவன் இருக்கின்றானா என்று தடவிப் பார்த்தேன். வண்டு படுமலரின் - (அவனைக் காணாமை யால்) வண்டுகள் பறந்து அசைக்கின்ற குவளை மலரைப் போல சாய்- மெலிந்து. தமியேன் - தனித்திருப்பவளே யானேன். யான் மன்ற அளியேன்- நான் நிச்சயமாக இரங்கத்தக்கவள்தான். கருத்து: இரவிலே என்னைத் தலைவன் தழுவிக் கொண்ட தாகக் கனவு கண்டேன். அது தான் என் மாறுதலுக்குக் காரணம். விளக்கம்: ‘தோழி வாழி கேட்டிசின் ’ என்று முதலடியும் ‘யான் மன்ற அளியேன்’ என்று இறுதி அடியும் பதங்கள் மாற்றப் பட்டன. இது கச்சிப்பேட்டு நன்னாகையார் என்னும் புலவர் பாடியது. தலைவியின் கூற்று. தலைவன் மன்றத்திற்காகப் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்திருந்தான். அப்பொழுது தலைவியிடம் தோன்றிய துக்கத்தைக் கண்டு அதற்குக் காரணம் கேட்டாள் தோழி. அத் தோழிக்குத் தலைவி தன் துக்கத்திற்குக் காரணம் கூறுவதாக அமைந்திருப்பது இப்பாடல். பிரிவின் நிகழ்ச்சியைக் கூறுவதால் இது பாலைத்திணை. சின், ஏ அசைச் சொற்கள். அல்கல் - இராப்பொழுது. மரீய தழுவிய; பொருந்திய; வாய் - உண்மை. மருட்ட - மயக்க. அமளி - படுக்கை. தைவருதல் - தடவுதல். சாய் - மெலிந்து - சாயல் - மெல்லிய தன்மை. அளி - இரக்கம். அவனே என் காதலன் பாட்டு 31 பெண்ணுக்கு வயது வந்துவிட்டது. மணப்பருவம் பெற்று ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இன்னும் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் வைத்திருப்பது தவறு; யாராவது நல்ல வரன் வந்தால் அவளை மணம் புரிந்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் பெண், தங்களுக்குத் தெரியாமலே நல்ல வரன் ஒருவனுடன் களவுமணம் புரிந்து கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது. இந்த உண்மை. அப்பெண்ணின் தோழிக்குக்கூடத் தெரியாது. இந்நிலையில் அயலார் அப்பெண்ணைத் தங்கள் பிள்ளைக்குக் கேட்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். இச் செய்தியை அறிந்தாள் அப்பெண். அயலார், தம் பெற்றோரைப் பெண்கேட்டு அவர்களும் அயலான் ஒருவனுக்கு மணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டால் தனது நிலை மிகவும் தொல்லைக்கு உள்ளாகிவிடும்; தன் கற்புக்குப் பழுது நேர்ந்து விடும்; தானும் தன் காதலனும் செய்து கொண்ட வாக்குறுதி பொய்த்து விடும்; ஆதலால் இன்னும் தன் செய்கையை மறைத்து வைப்பது முறையாகாது என்று முடிவு செய்தாள். “தோழியே! யாரோ அயலார் தங்கள் பிள்ளைக்கு என்னை மனைவியாக்க முயன்று கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்த முயற்சியைத் தடுக்க வேண்டியது எனது ஆருயிர்த் தோழியாகிய உன் கடமை. நான் கன்னிப் பெண்ணல்லள். ஏற்கனவே எனக்கு மணமாகிவிட்டது. நான் செய்து கொண்டிருக்கும் மணம் காதற்களவு மணம். ஆதலால் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட என்னை என் பெற்றோர்கள் மற்றொருவனுக்குக் கொடுக்க முடிவு செய்வது முறையாகாது. என் காதலன் எனது தகுதிக்கேற்ற பெருமையும், புகழும் உள்ளவன். அவன் என்னுடன் நட்புச் செய்து இப்பொழுது பிரிந்து நிற்கின்றான். நானும் அவனைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். திருவிழாக் காலங்களிலே போர்வீரர்கள் தங்கள் சேரிகளிலே விளையாட்டுப் போர் நடத்து கின்ற இடங்களிலும் அவனைக் காணவில்லை; பெண்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் துணங்கைக் கூத்தாடும் இடங்களிலும் அவனைக் காணவில்லை. அந்தச் சிறந்த வீரனை வேறு எந்த இடத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நானும் பெண்கள் விளையாடும் களத்திலே அவர்களுடன் சேர்ந்து விளையாடும் ஒருத்திதான். அவனும் நான் விளையாடும் களத்திற்கு அடிக்கடி வந்து என்னுடன் சேர்ந்து விளையாடும் ஒருவன்தான். நாங்கள் விளையாடும் போது அவன் என் கையைப் பிடிப்பான். அதனால் என் கையில் உள்ள சங்கு வளையல்கள் கழன்று விழும் இவ்வாறு எனக்குக் காதல் நோயைத் தந்தவன் அவன். ஆயினும் அவன் பெருமையுள்ளவன்; சிறந்த வீரன்; எனது குணங்களுக்கேற்ற தலைவன். என் உள்ளத்தைக் கவர்ந்த இத்தலைவனை எப்படியாவது தேடிப்பிடித்து அவனுக்கே என்னை மணம் செய்து கொடுக்க வேண்டும். இதுவே என் கற்பையும், காதலையும் காப்பாற்றும் வழி; நமது குடிப் பண்பும் ஆகும். இவ்வுண்மையை நமது பெற்றோர்க்குக் கூறி அயலார் முயற்சிக்கு இணங்காமலிருக்கச் செய்ய வேண்டியது உனது பொறுப்பு. இதற்காகவே இந்த உண்மையை இன்று உன்னிடம் உரைக்கிறேன்’ என்றாள் தலைவி. தோழியும் தலைவியின் கற்பு நிலையை அறிந்து மகிழ்ந்தாள். தலைவியின் காதலை நிறைவேற்றுவதாக உறுதி மொழி புகன்றாள். பாட்டு மள்ளர் குழீஇய விழ வினானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்டக் கோனை யானும்ஓர் ஆடுகள மகளே! என்கைக் கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே. பதவுரை: மள்ளர் குழீய - வீரர்கள் கூடியிருக்கின்ற. விழவின் ஆனும் - திருவிழா விளையாட்டில் ஆயினும், மகளிர் தழீஇய - பெண்கள் தாங்கள் கூடித் தழுவிக் கொண்டு விளையாடுகின்ற, துணங்கை ஆனும் - துணங்கைக் கூத்தாடும் இடங்களாயினும், யாண்டும் - வேறு எந்த இடங்களிலும். மாண்தக் கோனைக் காணேன் - என்னை மணப்பதற்கேற்ற சிறந்த குணமும் தகுதியும் உள்ள அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே- நானும் ஒரு விளையாடுகின்ற களத்திற்குரிய பெண்தான். என்கை- என்கையிலே தணிந்த, கோடுஈர் இலங்கு வளை - சங்கை அறுத்துச் செய்த வேலைப்பாட்டுடன் விளங்கும் வளையலை, நெகிழ்த்த- சுழலும் படி செய்த. பீடு கெழு குரிசிலும் - அந்தப் பெருமை நிறைந்த தலைவனும், ஓர் ஆடுகள மகனே- ஒரு சிறந்த ஆடுகள மகன்தான். கருத்து: என்னோடு சேர்ந்து துணங்கைக் கூத்தாடிய தலைவன் ஒருவன் உண்டு அவன்தான் என் உள்ளம் கவர்ந்த காதலன். விளக்கம்: இப்பாட்டு ஆதிமந்தியார் என்னும் புலவர் பாட்டு. தன் காதலன் அல்லாத அயலார் தன்னை மணக்க விரும்பி வந்தனர். அதைக் கண்டாள் தலைவி. உடனே தன் தோழியினிடம் தான் முன்பே ஒருவனிடம் காதல் கொண்டிருக்கும் செய்தியை உரைத்தாள். தலைவி கூற்று மருதத்திணை. “காணேன் மாண்டக்கோனை’/ என்ற தொடர் “மாண் தக்கோனைக் காணேன்” என்று மாற்றப்பட்டது. மள்ளர்-வீரர். துணங்கைக் கூத்து; இதற்குச் சிங்கிக்கூத்து என்று மற்றொரு பெயரும் உண்டு. இது முழங்கையை மடக்கிக் கொண்டு பெண்கள் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து. பண்டைக் காலத்திலே திருவிழாக் காலங்களிலே வீரர்களும் விளையாட்டுப் போர்கள் நடத்திக் களிப்பார்கள், பெண்களும் துணங்கைக் கூத்தாடி மகிழ்வார்கள். பெண்கள் துணங்கைக் கூத்தாடும்போது அவர்களுக்கு ஆண்கள் கை கொடுத்தல் வழக்கம். துணங்கையாடும் பெண்கள் தங்களுக்கு விருப்பமுள்ள ஆண்களின் முன்கையைப் பற்றிக் கொள்ளுவார்கள். வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவோனுக்கு ஆடுகள மகன் என்று பெயர். பெண்களுடன் சேர்ந்து விளையாடும் பெண்ணுக்கு ஆடுகள மகள் என்று பெயர். தலைவி, தன் காதலனை வீரர்கள் விளையாடுமிடங்களில் காணமுடியும் என்பதைக் குறிப்பாக அறிவித்தாள். பண்டைத் தமிழ்ப் பெண்கள், ஒரு முறை தாம் கைபிடித்த காதலனையே என்றும் கணவனாகக் கொள்வர்; வேறொருவனை மணக்க மனங் கொள்ள மாட்டார்கள்; இத்தகைய சிறந்த காதலும், கற்பும் உள்ளவர்கள். இவ்வுயர்ந்த நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றது இப்பாடல். காதலின் பண்பு பாட்டு 32 தலைவன் அளவற்ற காதல் கொண்டவன்; காதலின் உண்மைப் பண்பு இன்னது என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்குப் பிடிவாத குணமும் உண்டு; தான் எண்ணிய செயலை எப்படியாவது செய்து முடித்தே தீர்ப்பான். என்ன வந்தாலும் மானத்தையும் விடாதவன்; தனக்கானாலும் சரிதான் காதலித்தவர்களுக்கானாலும் சரி பழிவருவதை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிறர் பழிக்காத வகையிலே காரியங்களை முடிக்க வேண்டும் என்பதிலே கருத்துள்ளவன். இத்தலைவன் இளமை - அழகு - இனிய பண்புகள் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தான். அவளை எப்படியாவது மணந்து வாழ்வதென்று துணிந்தான். அவளுடைய காதலைப் பெற்று- அன்பைப் பெற்று - மணந்து வாழ்ந்தால் வாழ்வது; இன்றேல் சாவது என்று உறுதிக் கொண்டான். அத்தலைவியின் சம்மதத்தைப் பெறுவதற்கு முதலிலே அவளுடைய உண்மையான உயிர்த் தோழியைக் கண்டான். அவளிடம் தன் குறையைக் கூறினான். எப்படியாவது உன் தலைவியை என்னை மணம் புரிந்து கொள்ளச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று மன்றாடினான். அவள் இல்லாமல் நான் உயிர் வாழ முடியாது. என்னுயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் அது உன் தலைவியினால் தான் முடியும். உன் தலைவியின் அன்பையும் ஆதரவையும் அடைய வேண்டுமானால் உன்னுடைய உதவி யில்லாமல் ஒன்றும் முடியாது. ஆகையால் நீ தான் உதவி புரிய வேண்டும் என்று கெஞ்சினான். தோழி அவன் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. என் தலைவி உன்னை விரும்பமாட்டாள்; ஆதலால் நீ அவளைப் பார்க்க முடியாது; பார்ப்பதற்கான வழிவகுத்துக் கொடுக்கவும் என்னால் முடியாது. நீ வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போகலாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். தலைவன் திகைத்துப் போனான்; தோழியினால் தான் காரியம் நடக்க வேண்டும்; ஆதலால் அவளிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தான். உடனே தன் உண்மைக் காதலை அவளிடம் உரைத்தான். தன்னுடைய உண்மை நிலையை உணர்ந்த பின்னாவது தோழி மனமிரங்க மாட்டாளா? என்பது அவனுடைய நினைப்பு. “உண்மையான காதலின் இயல்பை நான் உணர்வேன்; காதல் காலம் அறியாது; நேரம் அறியாது; பொழுதறியாது. இது காலைப் பொழுதா? பிரிந்திருக்கும் காதலர்க்குத் துன்பம் தருகின்ற மாலைப் பொழுதா? ஊரார் உறங்கிக் கொண்டிருக்கின்ற நள்ளிரவுப் பொழுதா? அல்லது விடியற் கால நேரமா? என்றெல்லாம் காதலுக்குத் தெரியாது. எப்பொழுதும் ஓரே பொழுதாக காதலியுடன் இணைந்திருக்கச் செய்வதுதான் உண்மையான காதலாகும். இது இன்ன காலம் என்று எண்ணும் தன்மை காதலுக்கு இருக்குமாயின் அது உண்மையான காதல் அன்று; பொய்க் காதலாகும். பனை மடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறியாவது என் எண்ணத்தை முடித்துக் கொள்ளலாமா என்று நினைக்கின்றேன். ஆனால் இப்படிச் செய்ய என் காதல் இடந் தரவில்லை. நான் காதலித்த தலைவி எனக்கு ஆதரவு காட்டவில்லை; என்னைத் துன்புறுத்தினாள். அவள் என் குறையை உணர்ந்து என் விருப்பத்தை நிறைவேற்றவில்லை! ஆதலால் நான் இந்தப் பனை மடற்குதிரையில் ஏறி வருகின்றேன்; நீங்கள் தான் இதோ இப்படத்தில் உள்ள தலைவியை எனக்கு மனைவியாக்க ஏற்பாடு செய்து என் துன்பத்தைத் தவிர்க்க வேண்டும்; என்னையும் உயிருடன் வாழும்படி பாதுகாக்க வேண்டும் என்று ஊராரை அழைத்துச் சொல்வேனாயின், அதனால் தலைவியைத் தூற்றின வனாவேன். தலைவி இவ்வளவு இரக்கமற்றவளா? என்று ஊரார் பழி கூறும்படி செய்ய என் மனம் இடம் தரவில்லை. தலைவியைப் பிரிந்து வாழலாம்; அவள் சம்மதிக்காத போது நாம் ஏன் வலுக்கட்டாயமாக அவள் உள்ளத்தைக் கசக்கிப் பிழிய வேண்டும். அவள் உள்ளத்திலே கருணை பிறக்கும் வரையில் காத்திருப்போம்; பிரிந்திருப்போம் என்று நினைத்தாலும் அதுவும் பழியாகவே முடிந்துவிடும் போல் தெரிகின்றது. என் உயிர் அக்காதலியைப் பிரிந்திருக்க ஒருப்படவில்லை. நான் என்ன செய்வேன் என்று கூறி வருந்தி நின்றான் தலைவன். பாட்டு காலையும் பகலும் கையது மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப் பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்! மாஎன மடலொடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே, வாழ்த்தலும் பழியே பிரிவுதலை வரினே. பதவுரை: காலையும் - காலைப் பொழுதும். பகலும் - உச்சிக் காலமும். கைஅறுமாலையும் - பிரிந்தாதலர்கள் செயலற்று வருந்துவதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும். ஊர் துஞ்சு யாமமும் - ஊரார் நன்றாக மெய்ம்மறந்து உறங்குகின்ற நள்ளிரவும். விடியலும் - விடியற்காலமும். என்று இப்பொழுது- என்னும் இந்தப் பொழுதுகளின். இடைதெரியின் - இடையிலே உள்ள வேற்றுமைகள் தோன்றுமாயின். காமம் பொய்யே- இவ் வேறுபாடுகளை அறிவோர்களின் காதல் பொய்யாகும். பிரிவு தலைவரின் - தலைவியைப் பிரிந்திருக்கும் நிலைமை ஏற்படு மானால். மாஎன (தலைவியின் கூட்டுறவைப் பெறுவதற்காக) குதிரை என்று சொல்லும்படி. மடல் ஓடு - (செய்யப்பட்ட) பனை மடலின்மீது ஏறி. மறுஇல் தோன்றி - ஊர் வீதியே வெளிப்பட்டு. தெற்றென - (இவள்தான் என்னை வருந்தச் செய்யும் காதலி என்று) தெளிவாக. தூற்றலும் பழியே - அவளைத் தூற்றும்படிச் செய்வதும் பழிக்கத் தகுந்ததாகும். வாழ்தலும் பழியே - அவனைப் பிரிந்து வாழ்வதும் என் உயிர்க்குப் பழி விளைவிப்பதாகும். கருத்து: தலைவியைப் பெற்றால்தான் நான் உயிர் வாழ் வேன்; இன்றேல் இறப்பேன். விளக்கம்: இது அன்னூர் நன்முல்லையார் பாட்டு. தலைவன் தோழியிடம் தன் குறையைக் கூறினான். அவள் தலை வன் வேண்டுகோளை மறுத்தாள். ‘நான் தலைவியைப் பிரிந் திருக்க மாட்டேன். அவள் பொருட்டு மடலூர்தல் அவளுக்குப் பழியுண்டாக்கும்; நான் சும்மா இருந்தால் என்னால் உயிர் வாழவும் முடியாது’ என்று கூறினான். இது தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை ‘பிரிவு தலைவரினே’ என்று இறுதியில் உள்ள தொடரை ‘பிரிவு தலைவரினே, மாவென மடலொடு’ என்று நான்காவது அடியுடன் இணைத்துக் கொண்டு பொருள் கூறப்பட்டது. பகல்- நடுப்பகல்; மதியம்; உச்சி வேளை. கையறுதல்- செயலறுதல்; இன்னதுதான் செய்வது என்று தோன்றாமலிருப்பது. காமம்- காதல். மா-குதிரை. மடலேறுவதால் தலைவிக்குப் பழியுண்டாகும்; ஊரார் தலைவியைப் பழிப்பர். இவ்வளவு காதலுள்ள இளைஞனை அவள் ஏன் விரும்பவில்லை. அவள் மனம் கல்லோ, இரும்போ, என்று எள்ளுவர். ஆதலால் இச்செயலை நான் செய்ய மாட்டேன் என்றான். இது தலைவியின் மேல் அவன் வைத்திருந்த - இணை பிரியாத காதலை உணர்த்துவது. பேச்சுக்குப் பரிசு பாட்டு 33 பிரிந்து போயிருந்த தலைவன் தன் காரியத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புகிறான். அவன் தலைவியிடம் வருவ தாகச் சொல்லிய காலம் கடந்து விட்டது. ஆதலால் தான் சென்ற வுடன், குறித்த காலத்தில் வராமையால் அவள் கோபம் காட்டு வாளோ என்று நினைத்தான். அத்தகைய கோபம் தோன்றுவதற்கு இடமில்லாதிருக்கும்படி தலைவன் ஒரு இளம் பாணனைத் தூதாக அனுப்பினான். இளம்பாணன் நயமாக உரையாடுவதிலே வல்லவன். அவன் தலைவியைக் கண்டு தலைவன் வருகையைக் கூறினான். காலந் தாழ்த்தமைக்காகத் தலைவனது வருத்தத்தையும் சொன்னான். தலைவன் பிரிந்திருந்தாலும் ஒருபொழுதும் தலைவியை மறந்தவன் அல்லன்; விரைவில் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு தலைவியிடம் செல்ல வேண்டும்; அவளை மகிழ்ச்சியிலே மிதக்கும்படி செய்ய வேண்டும்; என்ற எண்ணத்துடனேயே அவன் செயலாற்றிக் கொண்டிருந்தான். அவன் விரைந்து வந்து கொண்டிருக்கின்றான் என்று இனிமையாகப் புகன்றான் அவன். பாணன் நயவுரைகளைக் கேட்ட தலைவி அவனிடமும் அன்பு பாராட்டினாள்; தன் தலைவனுடைய மாறாத காதலைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்தாள். அக்கால வழக்கப்படி பிரிந்திருந்த தலைவன் வந்தவுடன் அவனுக்கு விருந்து செய்ய விரும்பினாள்; தலைவனுடைய வருகையைக் கூறிய பாணனுக்கும் விருந்து செய்ய எண்ணினாள். அயலூர்க்கு வந்து நம்மிடத்திலேயே இவ்வளவு சொல் வன்மையைக் காட்டுகின்ற இவன் தன்னூரிலே இன்னும் சிறந்த சொல்வன்மை யுள்ளவனாகவே யிருக்க வேண்டும். ஊர்ப் பொது மன்றத்திலே வாழும் இவனுடைய சொல் வன்மையை என் தலைவனைப் பற்றிப் புகழ்ந்து பேசிய மொழிகளைக் கொண்டே தெரிந்து கொண்டேன். இளமாணாக்கனாக இருக்கின்ற இவன் இன்னும் போகப் போகப் புகழ்பெற்ற பேச்சாளனாவான்; இதில் ஐயமில்லை என்று அவனைப் பாராட்டிப் பேசினாள் தலைவி. தன் தோழியிடம் அவள் கூறிய பாராட்டு மொழிகள் இவை. ‘தோழியே! இவன் இப்பொழுதுதான் கல்வி கற்றுவரும் இளமாணாக்கன். ஆயினும் நல்ல சொல்வன்மையுள்ளவன். நம்மிடமே இப்படிப் பேசுகின்றவன் தன்னுடைய ஊர்ப் பொது மன்றத்திலே எப்படிப் பேசிக் கொண்டிருப்பானோ? இரந் துண்ணுதலால் இவன் உடம்பு நன்றாகப் பெருக்கவில்லை. இளைத்த உடம்புள்ளவனாக இருக்கின்றான். உடம்பிலே நல்ல தோற்றமும் இல்லை. ஆதலால் விருந்து கிடைக்கும் இடங்களுக் கெல்லாம் செல்லும் பெருந்தலைவனாகவும் இருக்கின்றான்’ என்று பாராட்டிக் கூறினாள் பாட்டு அன்னாய்! இவன்ஓர் இளம் மாணாக்கன் தன்ஊர் மன்றத்து என்னன் கொல்லோ இரந்த ஊண்நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே. பதவுரை: அன்னாய்- தோழியே. இவன் ஒர் இளம் மாணாக்கன் - இந்தப் பாணன் ஓர் இளைய மாணாக்கன். தன் ஊர் மன்றத்து- (நம்மிடமே இவ்வளவு நன்றாய்ப் பேசும் இவன்) தன்னுடைய ஊர்ப் பொது மன்றத்திலே என்னன் கொல்லோ- எத்தகைய சொல்வன்மையுள்ளவனாக விளங்குவானோ. இரந்து ஊண்- இரந்து பெறுகின்ற உணவினால். நிரம்பா மேனியொடு- நன்றாக வளர்ச்சியடையாத உடம்புடன். விருந்தின்- புதிதாகக் கிடைக்கக் கூடிய நல்ல விருந்தினை நாடி. ஊரும்- செல்லுகின்ற, பெரும் செம்மலன்- பெரிய தலைமையை யுடையவன் இவன். கருத்து: சொல்வன்மையுள்ள இவன் நம்மிடம் நல்ல விருந்துண்ணுதற்கு ஏற்றவன்; ஆதலால் நல்ல விருந்தைப் பெறுவானாக. விளக்கம்: அன்னாய்- தோழியே. தோழியை அன்னை யென்று அழைப்பது வழக்கம்; அன்னை போல் அன்புடன் அருகிலிருந்து ஆவன செய்பவள் தோழி. இளம் மாணாக்கன்- கல்வி கற்றுக்கொண்டிருப்பவன். மன்றம்- ஊர்ப் பொது இடம். நிரம்பா மேனி- வளராத உடம்பு. ஊரும்- செல்லும். ஊர்தல்- செல்லுதல். செம்மல்- தலைவன். பாணர்கள் என்பவர்கள் கலைகளில் வல்லவர்கள்; அரசர்கள், வள்ளல்கள் போன்ற செல்வர்களின் ஆதரவிலே வாழ்ந்து வந்த வர்கள், அவர்கள் ஊருக்கு நடுவில் உள்ள பொதுமன்றத்திலே தங்கியிருப்பார்கள். பண்டைக் காலத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தம்மூரிலே கற்பிக்கும் ஆசிரியர்கள் கிடைக்காதபோது வெளியூர்களுக்குப் போய்க் கல்வி கற்பார்கள். ஆசிரியர்கள் எங்கே கிடைப்பார்களோ அங்கே போய்த் தங்கியிருந்து கற்பார்கள். அவர்கள் தங்கள் உணவை இரந்துண்பார்கள். இவ்வாறு வெளியூரிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஊராரும் மனமுவந்து உணவிடுவார்கள். ‘இளமாணாக்கன்’ ‘இரந்தூண் நிரம்பா மேனி’ என்ற தொடர்கள் பண்டைக் கால மாணவர்கள் நிலையை உணர்த்தின. கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாயிருந்த காரணத்தால், கற்பவர்களுக்குப்போதுமான ஆசிரியர்கள் கிடைப்ப தில்லை. கல்வியிலே ஆசையுள்ள வறியவர்கள் இவ்வாறு வெளியூர் சென்று இரந்துண்டு கல்வி கற்று வந்தனர். வெளியூருக்குப் போய் மாதக் கணக்கில் தங்கியிருந்து திரும்பும் தலைவனுக்கு விருந்தளிப்பது வழக்கம் தலைவனுக்கு விருந்தளிக்கும் போது, அவனுடைய நண்பர்களுக்கும், அவன் வருகையைப் பற்றி முன்கூட்டியே அறிவித்து மகிழ்ச்சியளித்த தூதர்களுக்கும் விருந்தளிப்பர். ‘விருந்தின் ஊரும்’ என்ற தொடர் இவ்வுண்மையை விளக்குகிறது. துன்பம் தொலைந்தது பாட்டு 34 இரு காதலர்கள் நீண்ட நாட்களாகக் களவு மணத்திலே காலங்கடத்தி வந்தனர். இடையிலே அவர்களுடைய நட்புக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது. அவர்களால் தாராளமாகச் சந்தித்துப் பேசிப் பழக முடியவில்லை. பெண்வீட்டார் செய்த கட்டுப்பாட்டால் அவர்கள் காதல் தேங்கி நின்றுவிட்டது. தலைவனைச் சந்திக்க முடியாத காரணத்தால் தலைவி யிடமும் பலமாறுதல்கள் காணப்பட்டன. அதைக்கண்டு அவளுடைய தாயார் நீ ஏன் இப்படி மாறிப் போனாய்? உனக்கு என்ன நேர்ந்தது? உடம்புக்கு என்ன? என்றெல்லாம் கேள்வி களுக்கு மேல் கேள்விகளைப் போட்டாள். இக்கேள்விகளோடு அவர்கள் நின்றுவிடவில்லை. “இனி நீ வெளியே போகக் கூடாது.” என்று தடையுத்தரவு போட்டனர். தலைவியின் வேற்றுமைக்குக் காரணத்தை உணர்ந்த அவளுடைய தோழிகள் அவளுக்கு ஆறுதல் மொழிகள் உரைத்தனர். “தலைவன் இனி வரமாட்டானோ? அவனைச் சந்திக்க முடியாதோ என்று கவலைப்படாதே! அவன் வருவான்; உன்னை மணந்து கொள்வான்,” என்று இடைவிடாமல் இனிமையாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். தலைவியின் உள்ளத்திலே அமைதி நிலைபெறவில்லை; அவளுக்கு உறக்கம் வரவில்லை. உறங்காமல் இருந்தாலும் ஊரார் பழிப்பார்கள் என்று அஞ்சினாள்; ஆதலால் உறங்குவது போலப் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தாள். இவளுடைய நிலையைப் கண்டு ஊரார் சும்மா இருக்கவில்லை. ‘அவன் எவனிடமோ கள்ள நட்புக் கொண்டிருக்கிறான்; அவன் பொருட்டுத்தான் இவள் இப்படிக் கவலை கொண்டிருக் கின்றாள்; அவன் பிரிவால்தான் இவள் வருந்துகின்றாள்; அவனுடன் சேர்ந்து வாழும் சிறப்பைப் பெறுவாளாயின் இவளுடைய கவலையும், வேறுபாடும் காணாமற் போய்விடும்’ என்று வம்பு பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையிலே ஒருவன், அவளுடைய பெற்றோரிடம் பெண் கேட்க வந்தான் அவன் தன் சுற்றம் சூழ வந்து, தலைவியைத் தனக்கு மணம் புரிந்து கொடுக்கும்படி கேட்டான், தலைவியின் பெற்றோர்களும் அவன் தம் செல்விக்கு ஏற்ற சிறந்த காதலனே என்று கருதி மணம் முடிப்பதற்கு இசைந்தனர். இந்த நிகழ்ச்சியைத் தோழி அறிந்தாள். தன் தலைவியை மணமுடிக்க விரும்பி வந்தவன் புதியவன் அல்லன்; தன் தலைவி யால் காதலிக்கப்பட்ட பழைய தலைவனே என்பதை அறிந்தாள். தலைவியைச் சந்திக்க முடியாமல் போன காரணத்தால் தான் இப்பொழுது விரைந்து மணம் முடித்துக் கொள்ளுவதற்கு முனைந்தான். இனி ஊரார் நமது தலைவியைப் பழித்துரைக்க முடியாது; இவ்வூரும் நம் தலைவியின் திருமணத்தைக் கேட்டு இன்ப மடையும்; மகிழ்ச்சியடையும்; என்று எண்ணி மகிழ்ந்தாள். தன் மகிழ்ச்சியைத் தலைவியிடமும் அறிவித்தாள். “சேர மன்னர்களுக்கு உரியது மரந்தையென்னும் ஊர்; அவ்வூரில் உள்ளவர்களுக்கு ஒரு குறையும் இல்லை; அவ்வூரை அடைந்தவர்களும் எல்லா நலன்களையும் பெற்று இன்புறு வார்கள்; இத்தகைய பல வளங்களும் நிரம்பிய செல்வமும் சிறப்பும் அமைந்த அழகான ஊர் அது. அவ்வூர்க் கடற்கரைச் சோலையிலே யானை போன்ற குரலையுடைய பறவைக் கூட்டங்கள் நிறைந்திருக்கும். போரிலே வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்கள் கடற்கரைக்கு வந்து களித்து ஆரவாரிப்பார்கள். அவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்டு அப் பறவைகள் அஞ்சி நடுங்கும். இத்தகைய சிறந்த வீரர்களையும் கொண்டது அந்த ஊர். அந்த மரந்தையைப் போன்ற நற்பண்புச் செல்வங்களும் அழகும் உள்ளவள் எம் தலைவி. இப்பொழுது பெண் கேட்டு வந்தவன் கூந்தலைக் குழல் வடிவாக முடித்திருக்கின்ற அழகிய நெற்றியுடைய என் தலைவிக்கு உரியவன்தான். ஆதலால் இனிக் கவலையில்லை நீ வெளியிலே போகக் கூடாது என்று தண்டனை கொடுப்பது; தலைவன் இனி வரமாட்டான் என்று நினைக்கும் தலைவியின் எண்ணத்தைத் தோழியர் இடைவிடாமல் மறுத்துக் கூறுவது; தோழியர் சொல்வதில் நம்பிக்கையில்லாமல் தனியாக இருந்து உறங்குவது; ஆகிய இப்படிப்பட்ட பழிப்புக்கு இடமில்லாமல், இவ்வூரில் உள்ளவர்கள் நல்ல செய்தியைக் கேட்பார்கள்; நன்றாக உறங்குவார்கள்” என்று கூறினாள் தோழி. பாட்டு ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர் தமியர் உறங்கும் கௌவை யின்றாய் இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே முனாஅது யானை அம்குருகின் கானல்அம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பு இசைவெரூஉம் குட்டுவன் மரந்தை அன்னஎம் குழல்விளங்கு ஆய்நுதல் கிழவனும் அவனே. பதவுரை: முனாஅது- முன்னிடத்திலேயிருக்கின்ற. அம் கானல்- அழகிய கடற்கரைச் சோலையிலே உள்ள. யானை குருகின் அம் பெருந்தோடு- யானைக் குரலையுடைய பறவைகளின் அழகிய பெருங் கும்பல். அட்டமள்ளர்- போர் செய்துவெற்றி பெற்ற வீரர்களின். ஆர்ப்பு வெரூம் - ஆரவாரமான ஓசையைக் கேட்டு அஞ்சுகின்ற. குட்டுவன்- சேரனுடைய. மரந்தை அன்ன- மரந்தையைப் போன்ற, எம் விளங்குகுழல்- எமது விளங்குகின்ற, குழல் வடிவிலே முடித்த கூந்தலையும்; ஆய்நுதல்- அழகிய நெற்றியையும் உடைய இவளுக்கு. கிழவனும் அவனே- உரியவனும், இவளை மணக்க முடிவு செய்திருக்கும் அவனேதான். ஒறுப்ப- ஆதலால் நீ வெளியே செல்லாதே என்று மறுப்பதும், ஓவலர் மறுப்ப- ஓய்வில்லாமல் நீ வருந்தாதே என்று மறுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதும்; தேறலர்-உள்ளத்திலே. அமைதி இல்லாதவராய்; தமியர் உறங்கும்- தனித்திருந்து உறங்குவது போல் பாசாங்கு பண்ணுவதும் ஆகிய. கௌவை இன்றுஆய்- பழிப்புக்கு இடமில்லாமல்; இனியது கேட்டு- தலைவியின் மண நிகழ்ச்சியாகிய நன்மையைக் கேட்டு; இவ்வூர் இன்புறுக- இவ்வூர் மகிழ்ந்து இன்பம் அடைவதாக. கருத்து: தலைவன் விரைவில் இவளை மணம் புரிந்து கொள்ளுவான்; இனி ஊரார் பழிப்புக்கு ஆளாக மாட்டாள். விளக்கம்: கொல்லிக் கண்ணன் என்னும் புலவரால் பாடப்பட்டது இப்பாட்டு. தலைவியை இப்பொழுது மணம் புரிந்து கொள்ள வந்திருப்பவனே அவளால் விரும்பப்பட்ட தலைவன். இனி இவ்வூரார் துன்பமடைய வேண்டியதில்லை. தலைவியும் பழிச் சொல்லுக்கு ஆளாக மாட்டாள் என்று தோழி கூறியது. மருதத்திணை. ‘முனா அது அம் கானல் யானை குருகின் அம்பெருந்தோடு, அட்டமள்ளர், ஆர்ப்பு இசை வெரூஉம் குட்டுவன் மரந்தை அன்ன எம் விளங்குழல் ஆய்நுதல் கிழவனும் அவனே. ஒறுப்ப, ஓவலர் மறுப்ப, தேறலர், தமியர் உறங்கும் கௌவையின்று ஆய், இனியது கேட்டு இவ்வூர் இன்புறுக” என்று பதங்கள் மாற்றப்பட்டன. ஒறுத்தல்- தண்டித்தல். ஓவலர்- ஒழியாதவராய். கௌவை- பழிச்சொல். யானையம் குருகு- யானை போன்ற குரல் உள்ள ஒருவகைப் பறவை. இதற்குக் குஞ்சரம் குரலகுருகு, வண்டாழ்ங் குருகு. ஆனைச் சாத்தன் என்ற பெயர்களும் உண்டு. மரந்தை- மேற்குக் கடற்கரையிலே இருந்த ஒரு நகரம். வெட்கங் கெட்ட கண்கள் பாட்டு 35 தலைவன் பொருள் தேடச் செல்வதற்கு எண்ணினான். தலைவியின் உடன்பாட்டைப் பெற்ற பின்புதான் போக வேண்டும் என்பது அவன் முடிவு. அவள் சம்மதமில்லாமல் போனால் தன் எண்ணமும் வெற்றியடையாது; தலைவியும் தவித்துக் கொண்டி ருப்பாள்; ஊராரும் தன் இரக்கமற்ற தன்மையைக் கண்டு பழி கூறுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். தான் பொருள் தேடப் போவதற்கு எண்ணியிருப்பதை அவன் தன் தலைவியிடம் மிகவும் நயமாக வெளியிட்டான். செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகிலே இன்பம் இல்லை; செல்வம் இருந்தால்தான் இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்தலாம்; செல்வமிருந்தால் நமது இளமைப் பருவமும் நமக்கு இன்பம் தரும்; வறுமை நமது வாழ்வைக் கெடுத்துவிடும்; ஆதலால் செல்வம் சேர்த்துக் கொண்டு விரைவில் வந்து விடுகிறேன்; குளிர்காலம் வருவதற்கு முன் திரும்பி விடுவேன். அறிவுள்ள நீ அது வரையிலும் தனிமையைத் தாங்கியிருக்கத் துணிவு கொள்ளுவாய் என்று நம்புகிறேன் என்று மிகவும் நயமாகப் பேசினான். தலைவியும் தலைவன் கூற்றிலே உண்மையிருப்பதைக் கண்டு உள்ளம் இரங்கினாள். தலைவன் பிரிந்து செல்வதைத் தடுக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியோடு அவன் பிரிந்து போவதற்கு விடையளித்தாள். அச் சமயத்தில் தலைவி அவன் பிரிவைத் தடுக்க நினைத்திருந்தால் நிச்சயம் தடுத்திருக்கலாம். வாயினால் கூட அவள் எதுவும் வழங்க வேண்டியதில்லை. தன் உள்ளக் குறிப்பைக் கண்ணாற் காட்டினால் போதும். கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதன் மூலம் அவன் பிரிவைத் தடுத்திருக்க முடியும். இது தான் பெண்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள துக்கத்தை வெளியிடும் வழி. இப்படி ஒன்றும் செய்யாமலே தலைவி தன் தலைவன் பிரிந்து போவதற்கு மகிழ்ச்சியோடு சம்மதித்து விட்டாள். தலைவனும் பொருள் தேடப் போய்விட்டான். அவன் குறித்த குளிர்காலம் வந்துவிட்டது; நல்ல மழையும் கொட்டுக் கொட்டென்று கொட்டுகின்றது; வாடைக் காற்றும் வீசுகின்றது. இச்சமயத்தில்தான் தலைவிக்குத் தன் காதலன் இல்லாமல் தான் தனித்திருப்பதில் உள்ள துன்பம் மிகுதிப்பட்டது. தன்னால் ஆனவரையிலும் துன்பத்தை அடக்கிப் பார்த்தாள்; அது அடங்க வில்லை; அவள் உள்ளத்தை உடைத்துக் கொண்டு திடீர் என்று வெளியிலே வந்துவிட்டது. இதற்கு அறிகுறியாக அவளுடைய கண்களிலிருந்து கலகலவென்று நீர்த் துளிகள் சிந்தத் தொடங்கி விட்டன. இந்த நிலையைக் கண்ட தோழியும் வருந்தினாள். இத்தனை நாள் எங்களோடு விளையாடி மகிழ்ந்திருந்த உனக்கு இன்று ஏன். இத் துக்கம் நேரிட்டது? இருந்தாற் போலிருந்து இப்படி ஏன் கண்ணீர் சிந்துகிறாய்? என்று கேட்டாள். தலைவி தன் துக்கத்திற்குக் காரணத்தைக் கூறுகின்றாள். தோழியே நான் என்ன செய்வேன். என் கண்களுக்குக் கொஞ்சங் கூட நாணமில்லை. அந்தக் காலத்தில்- என் காதலர் பொருள் தேடப் போகின்றேன்- என்று சொல்லிய காலத்தில் அவரைத் தடுக்கவில்லை. அவர் சொல்லிய மாய மொழிகளிலே மயங்கிச் சும்மா இருந்துவிட்டன. திரண்ட கரும்புகள் வயல்களிலே செழிப்பாக வளர்ந்திருக் கின்றன. கருக் கொண்ட பச்சைப் பாம்புகளைப் போல அவற்றிலே அரும்புகள் காணப்படுகின்றன. அந்த அரும்புகளின் குவியல் மலரும்படி கனத்த மழை பெய்கின்றது. இம் மழையின் காரணமாகக் குளிர்ந்த வாடைக் காற்றும் வீசுகின்றது. இந்த வாடைக் காலத்திலே பிரிந்தவர் பொருட்டு அழுகின்றன என் கண்கள். இவற்றிற்குச் சிறிதும் வெட்கமேயில்லை. நான் என்ன செய்வேன் என்றாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு நாண்இல மன்றஎம் கண்ணே, நாள்நேர்பு சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப்பு அன்ன கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ நுண்உரை அழிதுளி தலைஇய தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே. பதவுரை: நாள் நேர்பு- தோழியே! தலைவர் பிரிந்து போனபோது அதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டு, சினை பசும் பாம்பின் - கருக் கொண்ட பச்சைப் பாம்பின். சூல் முதிர்ப்பு அன்ன - கர்ப்பத்தின் நிறைவைப் போல. கனைத்த கரும்பின்- திரண்ட கரும்பினது. கூம்பு பொதி அவிழ- குவிந்திருக்கின்ற அரும்புகள் மலரும்படி. நுண் உரை- சிறந்த மழை பொழிந்து. அழி துளி- அழிகின்ற துளிகளும். தண்வரல் வாடையும்- குளிர்ச்சி தருகின்ற வாடைக் காற்றும். தலைஇய- கலந்திருக்கும் இச் சமயத்தில். பிரிந்திசினோர்க்கு - நம்மை விட்டுப் பிரிந்திருக்கும். தலைவரை நினைத்து. அழல்- அழுவதைச் செய்வதால். எம் கண்- எம் கண்கள். மன்ற நாண் இல- நிச்சயமாக வெட்கங் கெட்டவை. கருத்து: அவர் பிரியும்போது தடுக்காத கண்கள் இப்பொழுது அழுவது நாணமற்ற செயல். விளக்கம்: இப்பாடல் கழார்க்கீரன் எயிற்றி என்பவரால் பாடப்பட்டது. தலைவன் பிரிவை நினைத்து அழுத தலைவி தன் தோழியினிடம், தான் அழுவதற்கான காரணத்தைக் கூறியது. மருதத்திணை. ‘நான் நேர்பு, சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன, கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ, நுண் உறை அழி துளி தண்வரல் வாடையும் தலைஇய, பிரிந்தி சினோர்க்கு அழல் (ஏ) எம் கண் (ஏ) மன்ற நாண் இல, என்று மாற்றுப் பொருள் கொள்ளப்பட்டது. சினை; சூல் - கர்ப்பம். கூம்பு- குவிப்பு. உறை -மழைத்துளி. தலைஇய- உயிர் அளபெடை. ஏ- அசைச்சொற்கள். கரும்பின் அரும்புக்குக் கருக்கொண்ட பச்சைப் பாம்பு உவமானம். நீளத்திலும் நிறத்திலும் கருக் கொண்ட பச்சைப் பாம்பும், கரும்பின் மொக்கும் ஒத்திருக்கும். நீ ஏன் வருந்துகின்றாய்? பாட்டு 36 ஒரு தலைவனும் தலைவியும் காதல் மணம் புரிந்து கொண்டனர். அவர்களுடைய காதல் மணச் செய்தியை ஆரும் அறிய மாட்டார்கள். தலைவியின் தோழிக்கு மட்டுந்தான் தெரியும், இவர்களுடைய காதல் மணவாழ்வு பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் என்று வளர்ந்து கொண்டே போயிற்று. மேலும் களவுக் காதல் மண வாழ்விலேயே காலங் கடத்தத் தோழிக்கு விருப்பம் இல்லை; தலைவிக்கும் எண்ணம் இல்லை, தலைவனும் விரைவில் கற்பு மணம் புரிந்து கொள்ளவே விரும்பினான். மணம் புரிந்து கொண்டு தனிக் குடும்பம் நடத்த வேண்டுமாயின் அதற்கேற்ற செல்வம் வேண்டும். அச் செல்வத்தைக் தேடும் பொறுப்பு தலைவனைச் சேர்ந்தது. இக்காலத்தைப் போலப் பெற்றோர் தேடி வைத்த செல்வத்தைக் கொண்டு பிள்ளைகள் இல்லறம் நடத்தும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. ஒவ்வொரு குடும்பத் தலைவனும் கையை ஊன்றித்தான் கரணம் போட்டாக வேண்டும். ஆதலால் தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு முன் பொருள் தேடப் புறப்பட்டான். தலைவிக்குப் பல ஆறுதல் உரைகளைக் கூறினான். செல்வத்தைத் தேடிக் கொண்டு வந்த பின் சிறப்பாக மணம் புரிந்து கொள்ளுவோம். இருவரும் இணைந்து அன்று இல்லறம் நடத்துவோம். பின்னால் இன்பம் அடைய வேண்டுமானால் முன்னால் சிறிது துன்பப்பட்டுத்தான் ஆகவேண்டும்; துன்பத்தின் முடிவு இன்பம். இது உலக இயற்கை. நான் பொருள் தேடப் பிரிந்து சென்றிருக்கும்போது நீ துணை இன்றித் துன்பம் அடைவாய் ஆயினும் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்; என்று பல இனிய மொழிகளைக் கூறினான். ‘நான் பொருள் தேடப் பிரிந்து சென்றாலும் உன் உள்ளத்தை விட்டு நீங்க மாட்டேன். நீ என்னை உன் நெஞ்சிலே நிலையாகப் பிணித்து வைத்திருப்பாய். நானும் எங்கு போனாலும் பொருள் திரட்ட எத்தனை நாளானாலும், திரும்பி வந்து விடுவேன். உன்னை மணந்து கொள்வேன். நீயில்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன்; நான் சென்றிருக்கும் இடங்களிலும் உன்னுடன்தான் இருப்பேன். உன்னை முதல் முதல் கைப்பிடித்த போது-உனது தோளைத் தழுவிய போது- நான் உரைத்த உறுதி மொழிகளை ஒரு நாளும் மறக்க மாட்டேன்’ என்று மேலும் அவளுக்கு உறுதிமொழிகளைக் கூறினான் தலைவன். தலைவியின் சம்மதம் பெற்றே தலைவனும் பொருள் தேடப் பிரிந்து சென்றான். பொருள் தேடிக் கொண்டுவந்தபின் மணந்து கொள்ளுகிறேன் என்று தலைவி நம்புமாறு உறுதி மொழி சொல்லிப் பிரிந்து போனான். தலைவன் பிரிந்து போய்ப் பல மாதங்கள் ஆகிவிட்டன. தலைவியும் நம்பிக்கை யிழக்கவில்லை; காதலனுடைய கனிந்த சூளுரைகளை எண்ணி அவன் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயினும் அவள் உள்ளத்தில் உறைந்து கிடந்த ஏக்கம் மட்டும் குறையவில்லை. தலைவன் இன்னும் வரவில்லையே என்று எண்ணும் போதெல்லாம் அவள் உள்ளத்திலே ஒருவித நடுக்கம் தோன்றி அவளை உலுக்கிக் கொண்டிருந்தது. வெளிப்படையாக அவள் தன் துன்பத்தை வாயினாற் சொல்லா விட்டாலும் அவளுடைய தோள்கள் துக்கத்தை வெளிப்படுத்தி விட்டன. அவற்றின் மழமழப்பும், பருமனும் சிதைந்து இளைத்துச் சோர்ந்தன. தலைவியின் இந்த நிலையைக் கண்ட தோழி வருந்தினாள். தலைவன் பிரிவினால்தான் இவள் இத்துக்கத்துக்கு ஆளானா ளென்று கவலையுற்றாள், தன் பொருட்டுத் தோழியின் மனம் துடிப்பதைக் கண்டாள் தலைவி. ‘உருண்டைக் கற்களின் பக்கத்தில் படர்ந்திருக்கும் நீண்ட மாணைக் கொடி, அவற்றின் பக்கத்திலே படுத்துறங்கும் யானை களின்மேலும் படரும். யானைகளும், உருண்டைக் கற்களும் இவ்வாறு ஒத்துக் காணப்படுகின்றன. இந்த மலை நாட்டை யுடைய நமது காதலன் இன்று பிரிந்து போயிருக்கின்றான். அவன் எனது அழகிய தோளைத் தழுவிய காலத்தில் என்னிடம் உறுதி மொழி கூறினான். ‘நான் எப்பொழுதும் உன் நெஞ்சையே இடமாகக் கொண்டிருப்பேன்; நீயில்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன்’ என்பது அவன் உரைத்த மாறாத சூளுரை. அந்தச் சூளுரையை நம்பிய நான் இப்பொழுது வருந்துகின்றேன். ஆயினும் தைரியத்துடன் வாழ்கின்றேன். உன்னிடத்தில் இப்பொழுது வருத்தம் தோன்றியதற்குக் காரணம் என்ன? என்று கேட்டாள் தலைவி. இவ்வாறு தலைவி கூறியதை எடுத்துக்காட்டுவதே இப்பாடல். பாட்டு துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சுகளிறு இவரும், குன்ற நாடன்; நெஞ்சு களன்ஆக நீ அலன் யான்என நற்றோள் மணந்த ஞான்றை, மற்றவன் தாவா வஞ்சினம் உரைத்தது, நோயோ தோழி நின் வயினானே. பதவுரை: தோழி- தோழியே. துறுகல் அயல்அது- உருண்டைக் கற்களின் பக்கத்திலே உள்ளதாகிய. மாணை மாக்கொடி- மாணை என்னும் பெரிய கொடி, துஞ்சு களிறு இவரும்- அதன் பக்கத்திலே படுத்துறங்கும் யானைமீது படரும். குன்ற நாடன் குன்றுகளை யுடைய நாட்டின் தலைவன். நெஞ்சுகளன் ஆக- உன் நெஞ்சையே இடமாகக் கொண்டிருந்து. நீ அகலன் யான்என -உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பேன் நான் என்று. நல் தோள் மணந்த ஞான்றை- என்னுடைய அழகிய தோளைத் தழுவியகாலத்தில், மற்று அவன்- அத்தலைவன். தாவா வஞ்சினம் உரைத்தது- கெடாத சூளுரைத்த செய்தி எனக்குத்தான் இன்று துன்பம் தரும். நின் வயினான் நோயோ உனக்கும் அது துன்பம் தருகின்றதோ. கருத்து: தலைவனுடைய உறுதிமொழியை நினைத்து நான் அவள் பிரிவால் வருந்திக் கொண்டிருக்கும் போது நீயும் ஏன் வருந்துகின்றாய். விளக்கம்: இது பரணர் பாட்டு. தலைவியை மணந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் தேடப் பிரிந்து சென்றான் தலைவன். அப்பிரிவால் தலைவி வருந்துகின்றாள். அதனால் கவலைப்பட்டாள் தோழி; அத்தோழிக்குத் தலைவி கூறியது இப்பாடல்; குறிஞ்சித்திணை. துறுகல்- குண்டுக்கல். மாணை- ஒருவகைக் கொடி. களன்- இடம். ஞான்று- நாள். வஞ்சினம் -சூளுரை; உறுதிமொழி. நோய்- துன்பம். மற்று; ஏ; அசைச்சொற்கள். குண்டுக்கற்கள் படுத்துக் கிடக்கும் யானைகளைப் போல் காணப்படுவது இயற்கைத் தோற்றம். வருவார்! வருந்தாதே! பாட்டு 37 . . . பிரிந்து சென்ற தலைவனை நினைத்துத் தலைவி தளர்ச்சி யடைகின்றாள். அவள் மனம் ஒருநிலையில் இல்லை. அலையிலே அகப்பட்ட துரும்பு போல் அங்கும் இங்கும் அலைகின்றது. பிரிந்து போன தலைவன் எப்பொழுது வருவான். விரைந்து வந்து என் துயரத்தைத் தூரத்தில் எடுத்து வீசுவானா? அல்லது நான் கண்ணீர் சிந்திக் கலங்கி நிற்கும்படி காலந்தாழ்த்தி வருவானோ? அவன் அன்று உரைத்த உறுதிமொழிகளை யெல்லாம் மறந்து மற்றொரு மங்கையின் அழகிலே மயங்கிப் போனவிடத்திலேயே தங்கி விடுவானோ? என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினாள். இவளுடைய ஏக்கத்தைக் கண்ட தோழி அவள் மனம் ஆறுதல் அடையும்படி அன்புரைகள் பலவற்றை எடுத்துக் கூறினாள். ‘தலைவியே நீ சிறிதும் வருந்தாதே நம் தலைவர் வாக்குத் தவறமாட்டார்; அவர் சொன்னபடியே நடப்பார். அன்றியும் அவர் சென்ற வழியில் உள்ள காட்சிகள். அவரை விரைவில் நம்மிடம் திரும்பச் செய்யும். அக்காட்சிகளிலே ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். பாலை நிலத்தின் வழியாகத்தான் அவர் செல்வார். அங்கே அருந்துவதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது. அங்கு வாழும் உயிர்களுக்கு உணவும் கிடைக்காது. இந்தப் பாலைவனத்திலே பசியால் வருந்தும் பெண் யானையின் துன்பத்தைக் கண்டு ஆண் யானை துடித்துப் போகும். தண்ணீரைக் கொடுத்தாவது அதன் பசியைக் கொஞ்சம் தணிக்க வேண்டும் என்று தவியாய்த் தவிக்கும். தண்ணீரைத் தேடி அலையும். நிலத்திலே தண்ணீர் கிடைக்காது. அங்கு வளர்ந்து நிற்கும் யாம் என்னும் அந்த மரத்தின் பட்டையை உரிக்கும். அப்பட்டையிலிருந்து தண்ணீர் வடியும். அத்தண்ணீரைத் தன் துணையான பெண் யானையை அருந்தச் செய்யும். இது அங்கு நடக்கும் காட்சிகளில் ஒன்று. நம் காதலர் செல்லும் போது இக்காட்சியைக் காணாமல் இருக்க மாட்டார். கண்டவுடன் அவர் உள்ளத்தில் உறைந் திருக்கும். அன்பு அவரை இளகச் செய்யும். விலங்கினத்தைச் சேர்ந்த யானை தன் காதலியின் துன்பத்தைத் தீர்க்க இவ்வளவு முயற்சி செய்யும் போது மனிதன் கடமை என்ன? தன்னையே நம்பியிருக்கும் அன்புள்ள துணைவியை அல்லற்பட விடுவது மனிதனுக்கு அழகாகுமா? என்ற எண்ணம் அவரை ஆட் கொள்ளும். நீ இங்கே தனித்திருப்பதைப் பற்றி அவர் எண்ணாமல் இருக்க மாட்டார் உன்மேல் உள்ள காதல் அவரைக் கட்டிப் பிடித்து இங்கேயிழுக்கும். ஆகையால் அவர் போன இடத்தில் தங்கி விடமாட்டார். விரைவில் சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு திரும்புவார். உன்னை வருந்தாமல் வாழச் செய்வார் ஆகையால் உன் உள்ளத்தில் கவலைப்படவேண்டாம்; அன்பு மிகுந்த அவர், அந்த இயற்கைக் காட்சியால் விரைவில் திரும்புவார் என்று தோழி சமாதானம் கூறினாள். ‘தோழியே அவர் உன்னிடம் மிகுந்த காதல் கொண்டவர்; மாறாத காதல் அவர் கொண்ட காதல். அவர் விரைவிலே வந்து உனது துன்பத்தை மாற்றி மகிழ்ச்சியைத் தருவார். அவர் சென்ற வழியிலே உள்ள இயற்கைக் காட்சியைக் கேள். தனது பெண் யானையின் பசியைக் களையும் பொருட்டு ஆண்யானை யாம் என்னும் மரத்தின் பட்டையை உரித்து, அதன் தண்ணீரை அன்போடு அருந்தச் செய்யும். இவ்வாறு ஆண்யானை, தன் துணையிடம் காட்டும் அன்பை அவர் கண்டும் தாமதிப்பாரோ? ஒருக்காலும் தாமதிக்க மாட்டார்’ என்று கூறினாள். இவ்வாறு தோழி கூறுவதை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு நசைபெரிது உடையர், நல்கலும் நல்குவர்; பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின்; தோழி அவர் சென்ற ஆறே. பதவுரை: தோழி நசை பெரிது உடையர்- தலைவர் உன்னிடம் காதல் மிகுதியும் கொண்டவர். நல்கலும் நல்குவர்- ஆதலால் விரைவில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கொடுப்பர். பிடிபசி களைஇய- பெண் யானையின் பசியைப் போக்கும் பொருட்டு. பெரும்கை வேழம், நீண்டகையையுடைய ஆண் யானையானது. மெல்சினையாம்- மெல்லிய கிளையுடைய யாம் என்னும் மரத்தின் பட்டையை. பொளிக்கும்- உரித்து அதில் உள்ள நீரை அருந்தச் செய்யும். அன்பின்- அன்பை வெளியிடுவதற்கு இடமாக உள்ளது. அவர் சென்ற ஆறு- அவர் போன பாலைவன வழி. கருத்து: அவர் சென்ற வழியில் உள்ள காட்சியைக் கண்டு உன்னிடம் விரைவில் திரும்புவார். ஆதலால் கவலைப்படாதே. விளக்கம்: இப்பாட்டு பாலை பாடிய பெருங் கடுங்கோ என்னும் புலவரால் பாடப்பட்டது; தலைவன் பிரிவால் வருந்திய தலைவிக்குத் தோழி ஆறுதல் உரைத்தது. பாலைத்திணை. நசை- அன்பு; காதல். நல்கல்- கொடுத்தல்; மகிழ்ச்சியைக் கொடுத்தல்; இன்பத்தைக் கொடுத்தல்; பிடி-பெண்யானை. வேழம்-ஆண்யானை. பொளிக்கும்-உரிக்கும். யாஅம்-உயிர் அளபெடை யாம். ஒருவகை மரம்; இம் மரத்தின் பட்டையிலே நீர் நிரம்பி யிருக்கும் என்று தெரிகின்றது. ‘மென்சினை’ மெல்லிய கிளைகளை யுடைய மரம் என்றதனால் இம் மரம் நீரை இழுத்து வைத்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதைக் காணலாம். இயல்பாகவே உன்னிடம் காதல் கொண்டிருக்கும் தலைவர், ஆண் யானை, தன் பெண் யானையிடம் காட்டும் அன்பைக் கண்டால் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டார். உன்னிடம் விரைவில் திரும்பாமல் இருக்க மாட்டார். விலங்கின் உள்ளத்தை விட மக்கள் உள்ளம் மிகவும் கனியும் தன்மை யுள்ளது. ஆதலால் கண்டிப்பாய் அவர் உள்ளங்கனிந்து விரைவில் திரும்புவார் என்ற குறிப்பை இப்பாடலில் காணலாம். அந்த வலிமை எனக்கில்லை பாட்டு 38 வரைந்து கொள்ளப் பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் திரும்பி வரவில்லை. இன்று வருவான்; நாளை வருவான்; மறுநாள் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாள் தலைவி. வழி மேல் விழி வைத்துப் பார்த்த கண்ணும் பூத்துப் போயிற்று. கலகலப்பாகப் பேசும் பெண்களாயிருந்தால் தங்கள் கலக் கத்தை வெளியிட்டுச் சொல்லுவார்கள். கலகலப்போடு கூட நாணத்திலும் கொஞ்சம் ஓட்டை விழுந்திருக்க வேண்டும்; இவர்கள்தாம் எதையும் தாராளமாக வெளியிட்டுச் சொல்லு வார்கள். நாணமுள்ளவர்கள் தம்மைச் சேர்ந்தவர்களின் தவறுகளை வெளியிட மாட்டார்கள். தம் காதலரால் தமக்கு எவ்வளவு இன்னல் நேர்ந்தாலும் அதை வெளியிலே பரவாமல் அழுத்தியே வைப்பார்கள். இதுவே மானமும், மதியும், பண்பும் நிரம்பிய மங்கையர்க்கரசிகளின் மாண்பு. தலைவி உயர்ந்த பண்புகள் நிறைந்தவள். ஆதலால் அவள் தன் காதலன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தை வாய் மொழியால் வெளியிடத் துணியவில்லை. தன் உள்ளத்தில் வளர்ந்து வதைக்கும் துன்பத்தை ஒருவரும் உணரக்கூடாது என்பதுதான் அவள் எண்ணம். அவளுடைய கண்கள் அவள் உள்ளத்தோடு ஒத்துழைக்க மறுத்து விட்டன. கண்களுடைய தன்மையே இதுதான். அவை தனிக்காட்டு அரசர்கள். நெஞ்சுக்கும் அவற்றுக்கும் நெடுங்காலப் பகைமை; மனத்திலே மகிழ்ச்சி நிகழ்ந்தாலும் சரி, அல்லது துக்கம் நிகழ்ந்தாலும் சரி அவற்றை அப்படியே கண்கள் வெளியிலே கக்கிவிடும்; வாயை அடக்கிவிட முடியும்; கண்களை அடக்க முடியாது. காதலனை எண்ணிக் கவலைப்பட்டிருந்த தலைவியின் மனத்தைக் கண்கள் வெளியிட்டு விட்டன. அவள் கண்களிலிருந்து அவள் எவ்வளவுதான் அடக்கினாலும் அடங்காமல் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் கண்டாள் தோழி. வருந்தும் தலைவியைப் பார்த்துக் கீழ் வருமாறு கேட்டாள். ‘அவர்- நம் தலைவர் உனது ஒருப்பாட்டைப் பெறாமல் போகவில்லையே. அவர் போயிருப்பதும் உனது நன்மைக்காகத் தானே. உன்னை மணந்து கொள்ளும் பொருட்டுப் பொருள் ஈட்டத்தானே போயிருக்கிறார்! அவர் நல்ல காரியத்தை நாடிச் சென்றிருப்பதற்காகச் சிந்தையிலே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். இதுதான் அறிவுள்ள பெண்ணுக்கு அழகு. நீ ஏன் இதற்கு மாறாக வருந்துகின்றாய்? வருந்துவதற்குக் காரணந்தான் என்ன?” என்ற கேள்வியைப் போட்டாள் தோழி. ‘தோழியே, நீ கேட்பது சரிதான். தலைவன் உண்மையும், உறுதியும் உள்ளவன்தான். அவனுடைய நாட்டிலே உள்ள மலைச் சோலைகளிலே வாழும் மயில் கற்பாறைகளிலே முட்டை யிட்டிருக்கும். அந்த முட்டைகளை வெயிலிலே விளையாடிக் கொண்டிருக்கும் குரங்குக் குட்டிகள் பந்து போல் உருட்டி விளையாடும். இத்தகைய குன்றுகள் அமைந்த நாட்டை யுடையவன். அவன் என்னைவிட்டுப் பிரிந்ததைப் பற்றிய துன்பத்தை நானும் பல நாட்கள் பொறுத்துப் பார்த்தேன். ஆனால் இப்பொழுது பொறுக்க முடியவில்லை. தங்கள் காதலர் பிரிவைப் பொறுத்திருக்கும் பெண்கள் சிலர் இருக்கலாம். அவர்கள் மிகவும் மனோ வலிமை படைத்தவர்கள்; எளிதிலே இளகாத மனமுள்ளவர்கள். பெண் மனம் என்று பேசுவதற்குத் தகுதியில்லாதவர்கள். இவர்கள்தாம் தம் கணவர் பிரிவைப் பொறுத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் படைத்தவர் களாயிருப்பர். அத்தகைய ஆற்றல் என்னிடம் இல்லை. இதற்கு நான் என்ன செய்வேன்’ என்று தோழியிடம் கூறினாள் தலைவி, இதைக் கூறுவதே இப்பாடல். பாட்டு கான மஞ்ஞை அறையீன் முட்டை வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும், குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன்! வாழி தோழி! உண்கண் நீரொடு ஒராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே. பதவுரை: வாழிதோழி- வாழ்க தோழியே. கானமஞ்ஞை - காட்டில் உள்ள மயில். அறையின் முட்டை - கற்பாறைகளிலே ஈன்ற முட்டைகளை. வெயில் ஆடும் - வெய்யிலிலே விளையாடிக் கொண்டிருக்கும். முசுவின் குருளை - குரங்கின் குட்டிகள். உருட்டும்- உருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்ற. குன்ற நாடன் - மலை நாட்டையுடைய தலைவனது. கேண்மை- நட் பானது. தணப்ப - அவன் பிரிந்ததனால் உண்டான துன்பத்தை. உண் கண் நீரோடு - மையுண்ட கண்களிலிருந்து ஒழுகும் நீருடன். ஓராங்கு உள்ளாது - ஒரேயடியாக நினைக்காமல். ஆற்றல் வல்லு வோர்க்கு - பொறுத்துக் கொண்டிருக்கும் வல்லமையுள்ளவர் களுக்கு. என்றும் நன்றுமன் - என்றும் நன்மையாக இருக்கக் கூடும். கருத்து: தலைவன் பிரிவைப் பொறுத்திருக்கும் தன்மை சிலர்க்குத்தான் உண்டு. என்னால் அவன் பிரிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. விளக்கம்: இது கபிலர் பாட்டு. பொருள் தேடப் போயிருக் கின்றான் தலைவன். தலைவி அவன் பிரிவுக்காக வருந்துகின்றாள். தோழி அவள் வருத்தத்திற்குக் காரணம் என்னவென்று கேட்டாள். அவளுக்குத் தலைவி தன் துயரத்திற்குக் காரணம் இன்னது என்று உரைத்தாள். இது குறிஞ்சித் திணை. ‘வாழிதோழி’ கானமஞ்ஞை அறையீன் முட்டை, வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும், குன்ற நாடன் கேண்மை தணப்ப, உண்கண் நீரொடு ஓராங்கு உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே, என்றும் நன்றுமன்’ என்று மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது. அறை - மலைப்பாறை. முசு என்பது குரங்குகளில் ஒரு வகை. இதன் முகம் கருமையானது. குருளை- குட்டி. உள்ளுதல் - நினைத்தல். வல்லுவோர் - வல்லவர். மயிலின் முட்டையைக் குரங்கின் குட்டி உருட்டி விளை யாடும் என்பதிலே உள்ள கருத்து பாராட்டத்தகுந்தது. அடை காப்பதற்குரிய மயிலின் முட்டைகள் அடை காக்கப்படவில்லை. குரங்கின் கையில் சிக்கி விளையாட்டுப் பொருளாகக் கிடக்கின்றன. இது போல் தலைவனால் ஆதரித்து இன்பம் அடையத் தகுந்த தலைவி, பிரிந்து தனித்திருக்கின்றாள். ஊரார் அவள் துன்பத்தைக் கண்டு இரங்காமல் பழித்து நகைக்கின்றனர். இக்குறிப்பை வெளியிடுகின்றது இந்த இயற்கை நிகழ்ச்சி. நெஞ்சம் பொறுக்கவில்லை பாட்டு 39 உண்மை அன்புள்ளவர்கள், உண்மைக் காதல் உள்ளவர்கள் தங்கள் இன்ப துன்பங்களைத் தனித்தனியாகத் கருதமாட்டார்கள். தனக்கு அன்புள்ளவர் வருந்தினால் தாமும் வருந்துவர். அவர் இன்பம் உற்றால் தாமும் இன்புறுவர்; அவர் பெருமையுற்றால் தாமும் பெருமை பெறுவர்; அவர் மானம் அழிந்தால் தாமும் அழிவர்; இவை ஒத்த அன்புள்ளவர்களிடம் காணும் நிகழ்ச்சி தாய்க்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்புக்கும் காதல் என்று பெயர். தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள தொடர்புக்கும் காதல் என்று பெயர். காதல் என்பது பிரிக்க முடியாத அன்புக்கே ஆன்றோர் அமைத்த பெயர். காதலன் என்பது கணவனையும் குறிக்கும்; மகனையும் குறிக்கும்; காதலி என்பது மனைவியையும் குறிக்கும்; மகளையும் குறிக்கும். மகள் என்று மனைவிக்கும் பெயர்; மகளுக்கும் பெயர்; மகன் என்பது கணவனுக்கும் பெயர்; மகனுக்கும் பெயர். ஆயினும் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள காதல்தான்- அன்புதான் - தொடர்புதான் - எல்லாவற்றினும் சிறந்த அன்பென்று கருதப்படுகிறது. கணவன் அன்பைக் காட்டிலும் காதலியின் - மனைவியின் - அன்புதான் உயர்ந்தது; மாசுமருவற்றது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. அன்பிலே தலைசிறந்த காதலி கணவனை இழந்தால் உயிர் வாழமாட்டாள் என்று நூல்கள் உரைக்கின்றன. கணவன் இறந்தான் என்று உணர்ந்தாலே போதும்; அல்லது மாண்டான் என்ற சொல்லைக் கேட்டாலே போதும்; கற்பும், காதலும் உள்ள மாதர்கள் அப்படியே திகைத்து விடுவார்கள்; தேங்கிப் பெருமூச்சு விடுவார்கள்; அந்தப் பெருமூச்சிலேயே அவர்கள் உயிர் போய் விடும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. உண்மைக்காதல் நிலைத்திருந்த காலத்தில்தான் உடன் கட்டை ஏறும் வழக்கம் இந்நாட்டில் இருந்தது. தமிழர்கள் இடையிலும் இவ்வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் தொல்காப்பியத் திலும் கூறப்பட்டுள்ளது. உண்மைக் காதல் உளுத்துப் போன காலத்தில்தான் உடன் கட்டை ஏறும் வழக்கம்... உருமாறிற்று. அதனால்தான் அவ்வழக்கத்தைக் கொடுமையான தென்று தடை செய்ய வேண்டியதாயிற்று. காதலனுக்கும், காதலிக்கும் உள்ள உண்மைக் காதலை விளக்கும் பாடல்களிலே இந்த முப்பத்தொன்பதாவது பாட்டும் ஒன்று. தலைவன் பொருள் தேடப் பிரிந்து போயிருக்கின்றான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் தலைவி வருந்துகின்றாள். நீந்தத் தெரியாத ஒருத்தி ஆழமான நீரில் அகப்பட்டுக் கொண்டால் எப்படித் திக்குமுக்காடுவாளோ அப்படித் தவிக்கின்றாள் தலைவி. இதைக் கண்ட தோழி கேட்கின்றாள்; ‘நீ வருந்துவது ஒழுங்கன்று. அவன் வரும் வரையிலும் பொறுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். உன் துன்பம் ஊரார்க்கு நகைப்பைத் தரும். உன் காதலனுக்கும் பழிப்பை உண்டாக்கும். ஊரார் நகைக்கும் படியும் நடந்து கொள்ளுவது கற்புடைய பெண்களுக்குப் பொருந்தாது. காதல் உள்ள பெண்களுக்கும் ஏற்றதாகாது என்று அறிவுரை கூறினாள். ‘தோழியோ நான் என் பொருட்டு வருந்தவில்லை; என்னுடைய இன்பத்தை இழந்து விட்டேனே என்று நினைத்து வருந்தவில்லை; நான் வருந்துவதெல்லாம் தலைவர் பொருட்டே தான். அவர் போன வழி மிகவும் துன்பம் தரக் கூடிய வழியென்று கூறக்கேட்டேன். அவர் சென்ற வழியிலே நீரற்று வறண்ட மலைப் பாறைகள் உண்டு; அது மேடு பள்ளம் நிறைந்த வழி; கல்லும் முள்ளும் நிறைந்த வழி. வழிப்பறி செய்யும் கள்வர்களும், கொல்லும் விலங்கு களும் நிறைந்த கொடுமையான பாதை என்றும் கூறுகின்றனர். அந்த வழியிலே குளிர்ந்த காற்றைக் காண முடியாது; அனலை அப்படியே அள்ளி வீசும்; காற்றுத்தான் வீசும். அந்தக் காற்றும் கடும் காற்று; ஆளையே தூக்கிக் கொண்டு போகும் படியான காற்று; மேட்டு வழியிலே நடந்துபோகும் போது அப்படியே பள்ளத்திலே தள்ளிவிடும் படியான காற்று என்று சொல்லவும் கேட்டிருக்கின்றேன். அந்த வழியிலே வாகை மரங்கள் வளர்ந்துநிற்கும்; அம் மரங்களின் கிளைகளிலே காய்கள் முதிர்ந்து காய்ந்து நெற்றுக் களாகத் தொங்கும்? கடுங்காற்று அம்மரங்களின் கிளைகளிலே தாக்கியவுடன் அவை கலகலவென்ற ஓசை யெழுப்பும்; தனித்துச் செல்வோர் உள்ளத்திலே அந்த ஓசை, பயங்கரத்தை உண்டாக்கும் என்றும் அந்த வழியின் ஆபத்தை அறிந்தவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அவர் சென்ற இந்தப் பயங்கரமான வழியை நினைத்துத் தான் என் உள்ளம் வருந்துகின்றது. எனது மார்பிலே உறங்கி இன்பந் துய்ந்தவர்- அச்சத்தையும்; துன்பத்தையும் அறியாதவர்- இந்தக் கடுமையான நெறியிலே சென்றாரே என்று எண்ணித் தான் நான் வருந்துகின்றேன். இந்த வழியை நினைக்கும் போது; இந்த வழியிலே காதலன் சென்றான் என்று எண்ணும் போது; உண்மைக் காதலியின் உள்ளம் துடிக்காமல் இருக்குமா? துக்கம் அடையாமல் இருக்குமா? என்று தலைவி அவளுக்குத் தக்க விடையளித்தாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதே இப்பாடல். பாட்டு வெம்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலைஉடை அரும்சுரம் என்ப, நம் முலையிடை முனிநர் சென்ற ஆறே, பதவுரை: நம் முலை இடை முனிநர்- நமது மார்பின் இடையிலே உறங்கி இன்பம் நுகர்தலை வெறுத்தவர். சென்ற ஆறு- பிரிந்து போயிருக்கும் வழியானது. வெம் திறல் கடுவளி- வெப்பமுள்ள வலிமையான விரைந்து வீசும் காற்று. பொங்கர்- மரக் கிளையிலே. போந்து என- வந்து தாக்குவதனால். உழிஞ்சில்- வாகை மரத்திலே. நெற்று விளை வற்றல்- நெற்றாக முற்றியிருக்கின்ற காய்ந்த வற்றல்கள். ஆர்க்கும்- ஒன்றோடு ஒன்று உரசி ஒலிக்கின்ற மலை உடை அரும்சுரம் என்ப- மலைகளுடைய நடப்பதற்கு அரிய வழி என்று கூறுவர். கருத்து: நான் எனக்காக வருந்தவில்லை. தலைவர் சென்ற வழியின் கொடுமையை எண்ணியே வருந்துகின்றேன். விளக்கம்: இது ஒளவையார் பாட்டு. தலைவன் பிரிவினால் வருந்தினாள் தலைவி. அவளை “நீ வருந்தாதே” என்று வற்புறுத் தினாள் தோழி. அதற்குத் தலைவி உரைத்த மொழியைக் கூறுகின்றது இப்பாட்டு. இது பாலைத்திணை. “நம் முலையிடை முனிநர் சென்ற ஆறு வெம்திறல் கடுவளி பொங்கர்ப் போந்து என உழிஞ்சில் நெற்று விளை வற்றல் ஆர்க்கும் மலைஉடை அரும்சுரம் என்ப’ என்று மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. வெம் - வெப்பம். திறல்- வலிமை. கடுவை - விரைவு. வளி காற்று. உழிஞ்சில் - வாகை மரம் முற்றின காய்க்கு நெற்று என்று பெயர். சுரம் - வழி. பாலை நிலத்தில் வீசும் காற்று வெம்மை யுள்ளது என்பதும் காற்று வீசுவதற்கு இடையிலே பெருந்தடைகள் இல்லாமையால் விரைந்து வீசும் என்பதும் இதில் குறிக்கப் பட்டன. என்றும் இணைபிரியோம் பாட்டு 40 அழகிய மலைச்சாரல்; அதன் பக்கத்திலே நீரோடை; உள்ளத்தை மகிழ்விக்கும் மெல்லிய பூங்காற்று; முல்லைக்கொடி படர்ந்திருக்கும் ஒரு புதர்; அதன் அண்டையிலே ஒரு பருவ மங்கை சித்திரப் பதுமைபோல் நின்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்கின்றாள். மயில்கள் அழகாக ஆடிக் கொண்டிருக்கின்றன; குயில்கள் யாரையோ அன்புடன் அவசரமாக அழைப்பது போலக் கூவிக் கொண்டிருக்கின்றன; ஏனைய பறவையினங்களும் இன்பமாகப் பேசிக் களிக்கும் நண்பர்களைப் போல் இரைந்து கொண்டிருக் கின்றன. இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்ட மான்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இடத்திலே, பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற பசும் புல் தரையிலே நிற்கின்றாள் தலைவி. அவளுடன் வந்த தோழியர்கள் விளையாட்டின் மகிழ்ச்சியால் அவளை மறந்து பிரிந்து விட்டனர். அவர்கள் தொலை தூரத்திலே போய் விடவில்லை. பக்கத்திலே தான் அவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டு ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தோழிகள் விளையாட்டின் ஆரவரந்தான் தலைவியின் காதைத் தொளைக்கின்றது. ஆனால் இடையிடையே பூத்துக் குலுங்கியிருக்கும் புதர்களும், செடிகளும், மரங்களும், திரையிட்டு மறைத்தது போலிருந்தன. ஆதலால் தலைவிக்கும் தோழிகளுக்கும் கண்ணாற் காணும் தொடர்பு இல்லை. இந்த இடத்தில் இயற்கைக் காட்சியிலே ஈடுபட்டிருக்கும் தலைவிக்குச் சிறிது தொலைவிலே ஒரு இளைஞன் காணப் பட்டான். காட்டிற்கு வேட்டைமேல் வந்த அவன் தன் தோழர் களைப் பிரிந்து தனித்து வந்தான். அவனும் வரும் போதே தன் கண்களை நாலா பக்கங்களிலும் ஓட்டி அவ்விடத்தில் உள்ள அழகுகளைச் சுவைத்துக் கொண்டுதான் வந்தான். இப்படி வந்த அந்த இளைஞன் கண்களிலே முல்லைப் புதரண்டையிலே நின்ற நங்கை தென்பட்டாள்; அப்படியே திகைத்து நின்று விட்டான்; சித்திரமோ, சிலையோ, தெய்வமோ என்று மலைத்துப்போனான். சிறிது பொறுமையுடன் நின்று உற்று நோக்கினான். மக்கள் குலத்திலே பூத்த மலர்தான் என்று உணர்ந்தான். இதற்குள் தன் கண்களை நாலா பக்கத்திலும் ஓட்டிக் கொண்டிருந்த அவளும் அந்த இளைஞனைப் பார்த்து விட்டாள். அவனும் பார்த்தான்; இவளும் பார்த்தாள். இருவர் பார்வைகளும் இணைந்து விட்டன. திடீர் என்று இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்ப்பதை நிறுத்தினர். அவன் மட்டும் மீண்டும் அவளை நோக்கினான். அவளும் அவனைப் பார்க்கத் தன் கண்களை ஏவியபோது அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்டுவிட்டாள். உடனே தன் பார்வையை இழுத்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள். ஆனால் கடைக் கண்களால் அவனைக் காண முயன்றாள். இதற்குள் அவன் அவளிடம் நெருங்கி வந்துவிட்டான். ஏதேதோ அவர்களுக்குள் பேச்சு நடந்தது. இருவர் உள்ளமும் ஒன்றுபட்டது போலவே அவர்கள் உடலும் ஒன்றுபட்டன. அவன் தலைவனானான்; அவள் தலைவியானாள்; காதல் களவு மணம் புரிந்து கொண்டனர். யாருடைய தூண்டுதலும் இல்லை; யாருடைய சாட்சியும் இல்லை; அவர்களைச் சேர்த்து வைக்க யாருடைய தூதும் இல்லை. அவன் யாரோ, அவள் யாரோ; இது அவனுக்கும் தெரியாது; அவளுக்கும் தெரியாது. இவர்களுடைய நெடுநேர இன்ப வாழ்வுக்குப் பின்னர், தலைவியின் உள்ளத்திலே ஒரு ஐயம் பிறந்தது. “இவனுடைய அழகிலே சொக்கினேன்; காதலில் மூழ்கினேன்; கற்பை இவனிடம் ஒப்படைத்தேன். இவன் யார்? எந்த ஊர்? எக்குலம்? இவனை ஈன்றோர் யார்? இவற்றைப் பற்றி ஒன்றுமே எனக்குத் தெரியாது. இவன் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டால் என் செய்வது? நம்மைக் கைவிட்டு விட்டால் நம் வாழ்க்கைச் சகடம் எங்கே ஓடும்? இவ் வெண்ணங்கள் அவள் நெஞ்சைப் பற்றிக் கொண்டன. அவளைப் பிடித்து உலுக்கின. தலைவியாகிய அவளுடைய கண் பார்வையால்- முக மாறுதலால்- அவள் உள்ளக் குறிப்பைக் கண்டு கொண்டான் தலைவன், அவளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினான். ‘என் அன்பே? ஆருயிரே! நீ ஏன் என்னென்னவோ நினைக்கின்றாய் நெஞ்சங் கலங்குகின்றாய்! உன் உள்ளத்திலே ஒரு கலக்கமும் வேண்டாம். நான் சொல்வதை உற்றுக் கேள் நன்றாகச் சிந்தித்துப் பார்! அதன்பின் உன் நெஞ்சக் குழப்பம் தெளிந்துவிடும். என்னை யீன்ற தாயும் உன்னைப் பெற்றெடுத்த தாயும் யார் யார்? அவர்களுக்குள்ளே ஏதேனும் உறவுண்டா? என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் யார் யார்? தாய் வழியிலே தான் உறவில்லா விட்டாலும் தந்தை வழியிலாவது உறவுண்டா? இருந்தால் அவர்கள் எந்த முறையிலே உறவினர்கள்? நமது தாய் தந்தையர்களுக்குள் உறவில்லாமற் போனாலும் போகட்டும். உனக்கும் எனக்குமாவது இதற்கு முன் ஏதாவது உறவு உண்டா? நீதான் என்னை எவ்விடத்திலாவது பார்த்தது உண்டா? உன்னைத் தான் நான் எந்த இடத்திலாவது கண்டது உண்டா? இல்லை இன்று நாம் புதிதாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது என் உள்ளத்திலும் காதல் வளர்ந்தது. உன் உள்ளத்திலும் காதல் வளர்ந்தது. செம்மண் நிலத்திலே மழை பெய்தால் அந்தமழை நீர் செம்மண்ணோடு கலந்து விடுகின்றது. அந்த நீரின் நிறமும், சுவையும் அந்த நிலத்தின் நிறத்தையும் சுவையையும் பெற்று விடுகின்றது. இவ்வாறு அந்த நீரும் நிலமும் நிறத்திலும், தன்மையிலும் ஒன்றுபடுவது போலவே அன்புள்ள நமது இருவர் மனமும் ஒன்றுகலந்து விட்டன. ஒன்றை விட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டன. இது இயற்கையாக நிகழ்ந்தது. இதைத் தான் தெய்வீக நிகழ்ச்சி யென்பர்; பூர்வ புண்ணியத்தால் - பூர்வ வினையால் நேர்ந்த நிகழ்ச்சி என்பர் இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது நான் உன்னை ஒருநாளும் மறவேன்; பிரியேன்; மணப்பேன்- எல்லோரும் காண இனிது இல்லறம் நடத்துவேன். ஆதலால் நீ நெஞ்சங் கலங்காதே. என்று ஆறுதல் மொழிகள் உரைத்தான் தலைவன். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதே இப்பாடல். பாட்டு யாயும் ஞாயும் யார் ஆகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்! யானும் நீயும் எவ்வழி அறிதும்! செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. பதவுரை: யாயும் - என்னுடைய தாயும். ஞாயும் -உன்னுடைய தாயும். யார் ஆகியர் - எந்த வகையிலே உறவினர் ஆவார். எந்தையும் - என்னுடைய தந்தையும். நுந்தையும்- உன்னுடைய தந்தையும். எம் முறைக் கேளீர்- எந்த முறையிலே உறவினர். யானும் நீயும் - இப்பொழுது ஒன்று சேர்ந்திருக்கும் நானும் நீயும், எவ்வழி அறிதும் - இதற்கு முன் எந்த இடத்திலே பார்த்துப் பழகி அறிந்திருக்கின்றோம்? செம்புலம்- செந்நிலத்திலே. பெயல் நீர்போல - பெய்த மழைத் தண்ணீரைப் போல. அன்பு உடை - அன்புள்ள நமது உள்ளம். தாம் கலந்தன - தாமாகவே ஒன்றாகக் கலந்துவிட்டன. கருத்து: நமது அன்பு - இயற்கை - தெய்வீக - காதல்; ஆதலால் இனி நாம் பிரிய மாட்டோம். விளக்கம்: இப்பாடலைப் பாடிய புலவர் பெயர் செம்புலப் பெயல் நீரார். இப்பாட்டில் உள்ள ‘செம்புலப் பெயனீர்’ என்ற தொடரே இவருக்குப் பெயராக வந்தது. இது காரணப் பெயர். இவருடைய இயற்கைப் பெயர் தெரியவில்லை. தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடிய பின்னர், இவன் நம்மைப் பிரிவானோ என்று எண்ணினாள் தலைவி. அவள் உள்ளக் குறிப்பை அறிந்த தலைவன் அவனுக்கு உரைத்த உண்மை உரைகள் இது குறிஞ்சித்திணை. பண்டைத் தமிழர் நாகரிகத்தைப் படம் பிடித்துக்காட்டும் ஒரு சிறந்த பாடல் இது. சாதி - மத - இன வேறுபாடின்றிப் பழந்தமிழ் மக்கள் காதல் வாழ்விலே ஈடுபட்டிருந்தனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காதல் கொண்டு கலந்து விட்டால் பிறகு அவர்கள் பிரியமாட்டார்கள்; ஒருவரை ஒருவர் கைவிட மாட்டார்கள். அவர்களுடைய சந்திப்பைத் தெய்வீகத்தால் நேர்ந்ததாகவே எண்ணுவார்கள். இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறது இப் பாடல். குறுந்தொகைப் பாடல்களிலே இது ஒரு தூண்டாச் சுடர் விளக்கு. யாய் - என் தாய். ஞாய் - உன்தாய். (தாய் -அவர்கள் தாய்) எவ்வழி - எந்த இடத்தில். செம்புலம் - செம்மண் பூமி. பெயல்- மழை. இன்பமும் துன்பமும் பாட்டு 41 தலைவி தனித்திருக்கின்றாள். தலைவன் பிரிந்து போயிருக் கின்றான். பிரிந்த தலைவனை எண்ணித் தலைவி நெஞ்சம் கலங்கினாள். அவள் உள்ளத்தில் நிகழ்ந்த துக்கம் உடலிலும் வந்து மூடிவிட்டது; அதனால் அழகு சிதைந்து வாடினாள். இதைக் கண்ட தோழி கவலைப்பட்டாள். தன் துன்பத்தைக் கண்டு தோழியும் கவலைப்படுகின்றாள் என்பதை உணர்ந்த தலைவி அவளுக்குத் தன் நிலைமையை எடுத்துக் கூறினாள். “தோழியே நான் என்ன தான் செய்வேன்! என் காதலர் என் பக்கத்திலிருந்தால் எனக்குத் துக்கமே தோன்றுவதில்லை. திருவிழா நடக்கும் ஊரில் உள்ள மக்கள் எவ்வாறு எல்லாக் கவலையையும் மறந்து மகிழ்ந்திருப்பார்களோ அவ்வாறு மகிழ்ந்திருப்பேன்; களிப்புடன் காலம் போக்குவேன். ‘அவர் என்று என்னைப் பிரிந்தாரோ, அன்றைக்கே என்னைத் துக்கம் சுற்றிக் கொள்ளுகின்றது. பாலைவனத்திலே- சிறிய ஊரிலே - சிறிய குடிசைகளிலே வாழும் மக்கள், பஞ்சத்திற்குப் பயந்து அந்தக் குடிசைகளை விட்டு வேறிடங்களுக்குப் போய் விடுவர். அப்பொழுது அவ்வூர்க் குடிசைகள் பாழாகக் கிடக்கும்; அவைகளின் முற்றங் களிலே அணில்கள்தாம் விளையாடிக் கொண்டிருக்கும். இவ்வாறு மனித சஞ்சாரம் இல்லாமல் அணில் விளையாடும் வீடு எவ்வாறு அழகிழந்து கிடக்குமோ அவ்வாறே நானும் அழகிழந்து வருந்துவேன். இதற்கு நான் என் செய்வேன் என்றாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை எடுத்துக்கூறுகிறது இப்பாடல். பாட்டு காதலர் உழையர்ஆகப் பெரிது உவந்து சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற; அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் மக்கள் போகிய அணில்ஆடு முன்றில் புலப்பில் போலப் புல்என்று அலப்பென் தோழிஅவர் அகன்ற ஞான்றே. பதவுரை: தோழி! காதலர் உழையர்ஆக- தோழியே தலைவர் பக்கத்தவராக இருக்கும் போது. பெரிது உவந்து- மிகவும் மகிழ்ச்சி யடைந்து. சாறுகொள் ஊரின் - விழா நடந்து கொண்டிருக்கும் ஊரில் உள்ள மக்கள் மகிழ்வது போல. மன்ற புகல்வேன் - நிச்சயமாக மகிழ்ச்சியை விரும்பி வாழ்வேன். அவர் அகன்ற ஞான்று - அவர் என்னை விட்டுப் பிரிந்து போன காலத்தில். அத்தம் நண்ணிய- பாலைவனத்திலே அமைந்த. அம் குடி சீறூர் - அழகிய குடிசைகள் அமைந்த சிறிய ஊர்களை விட்டு. மக்கள் போகிய - மக்கள் விட்டுப் போன. அணில் ஆடு முன்றில் - அணில் விளையாடிக் கொண்டிருக் கின்ற வாசலையுடைய. புலப்பு இல் போல - தனிமையான - வீட்டைப் போல. புல்என்று - என் அழகிழந்து. அலப்பென் - வருந்துவேன். கருத்து: தலைவர் இருந்தால் மகிழ்வேன்; பிரிந்தால் வருந்துவேன். உழை- பக்கம். சாறு - திருவிழா. புகல் - விருப்பம் அத்தம்- பாலைவனநெறி. புலம்பு; ஆயிற்று புலம்பு - தனிமை. அலப்பென் - வருந்துவேன். மகிழ்ச்சிக்குத் திருவிழாக்காலத்து மக்களின் நிலைமையும், துன்பத்திற்குப் பாழடைந்த வீடும் உவமைகளாக வந்தன. பண்டைக்காலத்திலும் பலவிதமான திருவிழாக்கள் நடத்தி மக்கள் மகிழ்ந்துவந்தனர். மக்கள் மகிழ்ந்து பொழுது போக்குவதற்காகவே விழாக்கள் நடைபெற்றன என்பதை இப்பாடலால் காணலாம். பஞ்சகாலத்தில் மக்கள் குடிபெயர்ந்து செல்லும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது. இதையும் இப்பாட்டில் காணலாம். விளக்கம்: இப்பாட்டு அணிலாடு முன்றிலார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இப்பெயரும் காரணப் பெயர். ‘அணிலாடு முன்றில்’ என்னும் தொடர்ச்சி செய்யுளில் அமைந்திருக்கின்றது அத்தொடரே இவருக்குப் பெயராயிற்று. தலைவன் பிரிந்ததனால் தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள். அத்தோழிக்குத் தலைவி கூறியதாக அமைந்தது இப்பாட்டு. பாலைத்திணை. ‘மன்ற’ என்னும் செல் புகல்வேன்’ என்பதற்கு முன்னும் அகன்ற ஞான்று’ என்ற தொடர், ‘அத்தம் நண்ணிய’ என்ற தொடருக்கு முன்னும், ‘தோழி’ யென்பது முதலிலும் வைத்துப் பொருள் கூறப்பட்டது. நட்பு ஒழியாது பாட்டு 42 இரு காதலர்கள் அவர்கள் பகலில் மட்டும் சந்திப்பார்கள். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சந்தித்து வந்தனர். அன்பினால் அவர்கள் ஒன்றுபட்ட உள்ளத்தினர். அவர்களை இனி எவரும் பிரிக்கமுடியாது. விரைவில் அவர்கள் கற்புமணம் புரிந்து வாழ்க்கை நடத்தப் போகின்றவர்கள். பகலில் மட்டும் இவர்கள் சந்திப்பதனால் அவர்கள் அன்பு முற்றுப் பெறவில்லை. குறிப்பாகக் காதலன், இரவிலும் அவளைச் சந்திக்க விரும்பினான். இரவிலே இவர்கள் சந்திப்பதென்றால் அதற்குத் தோழியின் உதவி வேண்டும். மலர்கள் தனித்தனியே இருப்பதை ஒன்றாக இணைத்து மாலையாக்குவதற்கு உதவி செய்வது நார் அல்லவா? அதுபோல இரு காதலர்களின் வாழ்க்கையை இணைத்து வைப்பதற்குத் தலைவியின் உண்மையான உயிர்த் தோழியின் உதவியில்லாமல் முடியாது. தலைவன் தன் காதலியின் தோழியை நெருங்கினான்; தன் உள்ளத்திலிருந்த ஆசையை ஒளிக்காமல் வெளியிட்டான். தோழியும் அவன் கருத்தை அறிந்தபின் அவனுக்கு விடை கூறினாள். அவள் அளித்த விடை தலைவியை இரவில் சந்திக்க முடியாது என்பது தான். ஆனால் ‘நீ இரவிலே தலைவியைச் சந்திக்க முடியாது; அதற்கு நான் உதவிபுரிய மாட்டேன்’ என்று அப்படியே வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுமாக விடையளித்து விடவில்லை. மிகவும் நயமாக- வாழைப் பழத்தில் ஊசியை நுழைப்பது போல் பதில் கூறினாள். ‘தலைவனே! நடுச்சாமத்திலே காது செவிடுபடும்படி இடி இடித்துக் கண்ணைப் பறிக்கும்படி மின்னல் மின்னி மழை பெய்வதனால் உனது மலையிலே அருவிகள் தடதடவென்று விழும். மழை நின்று விட்ட பின்னும், மறுநாளும் அருவி நீர் வீழ்ந்து கொண்டேயிருக்கும். மழை நின்று விட்டதனால் அருவி வற்றி விடுவதில்லை, இத்தகைய வளமுள்ள சிறந்த மலை பொருந்திய நாட்டின் தலைவன் நீ உன் எண்ணப்படி இரவில் தலைவி உன்னைச் சந்திக்க முடியாவிட்டாலும் தலைவிக்கும் உனக்கும் இடையிலே பிணைத்து நிற்கும் அன்பு அறுத்துவிடாது. அது வளர்ந்து கொண்டுதான் இருக்கும். தலைவி உன்னிடம் வைத்திருக்கும் நட்பை என்றும் மறந்துவிட மாட்டாள்’ என்று கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவதே இப்பாடல். பாட்டு காமம் ஒழிவது ஆயினும், யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடர் அகத்து இயம்பும் நாட! எம் தொடர்பும் தேயுமோ நின்வயினானே. பதவுரை: யாமத்து - நள்ளிரவிலே, கருவி மாமழை- தொகுதியான பெரிய மழை. வீழ்ந்தென- பெய்வதால். அருவிவிடர் அகத்து இயம்பும்- அருவியாக வீழ்கின்ற நீர் மறுநாளும் மலைப் பிளவுகளிலே வீழ்ந்து முழங்கிக் கொண்டிருக்கின்ற. நாட -மலை நாட்டையுடையவனே. காமம் ஒழிவது ஆயினும் - இரவிலே கூடும் காமக் கூட்டம் இல்லையானாலும். நின் வயினான்- உன்னிடத்திலே. எம் தொடர்பு தேயுமோ- எமக்குள்ள அன்பின் பிணைப்பு அறுந்து விடுமோ? அறுந்து விடாது, அழியாது. கருத்து: தலைவியும் நீயும் இரவில் சந்திக்காவிட்டாலும் அவளுக்கும் உனக்கும். உள்ள அன்பு குறையாது; விளக்கம்: இது கபிலர் பாட்டு. இரவிலே தலைவியும் தானும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினான் தலைவன். அவனிடம் நீ இரவிலே சந்திக்காவிட்டாலும்; தலைவியின் அன்பு குறையாது என்று தோழி கூறினாள். இதன் மூலம் இரவிலே சந்திக்க இயலாது என்பதைக் குறிப்பாக அறிவித்தாள். தோழி கூற்று. குறிஞ்சித்திணை. ‘யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவிவிடர் அகத்து இயம்பும் நாட, காமம் ஒழிவது ஆயினும், நின் வயினானே எம் தொடர்பு தேயுமோ’ என்று மாற்றிப் பொருள் கொள்ளப்பட்டது. காமம்- காதலன் காதலி சந்திப்பும் சேர்க்கையும். கருவி- தொகுதி. மழையின் தொகுதியாவன; இடி, மின்னல் முதலியன. விடர்- பிளப்பு; பாறை. ஆண்மை தந்த அல்லல் பாட்டு 43 அவர்களிடம் இருந்த அன்புக்கு அளவேயில்லை. ஒரு கொத்தில் மலர்ந்த இரு மலர்களைப் போல அவர்கள் வாழ்ந்து வந்தனர். இத்தகைய காதலர்கள் இவ்வுலகில் எவருமே யில்லை யென்று சொல்லும்படி மாடப் புறாக்களாக மகிழ்ந்து இன்புற்றனர். தலைவியின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. ‘என் காதலன் என்றும் என்னை விட்டுப் பிரிய மாட்டான்’ என்று இறுமாந்திருந்தாள். தன் காதலன் பிரிவைப் பற்றிய எண்ணமே அவள் உள்ளத்தில் பிறக்கவில்லை. அவன் அவளிடத்தில் காட்டிய அன்பு- நடந்து கொண்டமுறை- இந்த எண்ணத்தை அவள் உள்ளத்திலே எழுப்பியிருந்தது. ஆதலால் ‘அவன் பொருள் தேடும் பொருட்டுப் போவானோ’ என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் அவ்வெண்ணத்தைப் பொருட் படுத்தாமல் இகழ்ந்தாள். தலைவனுக்கும் தலைவியை விட்டுப் பிரியும் எண்ணம் இல்லை. தான் பிரிந்தால் அவள் தனிமையைத் தாங்காமல் வெய்யிலில் வதங்கும் கீரைத் தண்டு போல் வாடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆயினும் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இப்பிரிவைப் பற்றித் தலைவியிடம் சொல்லுவதற்கு அவன் துணியவில்லை. தன் பிரிவுக்குத் தலைவி சம்மதிக்க மாட்டாள் என்பது அவன் அறிந்த உண்மை. தலைவன், தலைவியிடம் சொல்லாமலே தன் பிரயாணத் துக்கு வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்தான்; ஆயுதங் களைப் புதுக்கினான். மூட்டை முடிச்சுக்களைக் கட்டினான்; இவைகளைத் தலைவி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். தன்னை விட்டுப் பிரிந்து போவதாகிய பிரயாணத்தின் பொருட்டுத் தான் இந்த ஏற்பாடுகளைச் செய்கின்றான் என்று அவள் எண்ணவே இல்லை. தலைவன் தன்னை விட்டுப் பிரிய மாட்டான் என்பதிலே அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையிருந்தது. ஆதலால் அவள் இவற்றைச் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தலைவனும் தன் பிரிவைப் பற்றிச் சொன்னால் அவள் பொறுக்க மாட்டாள் என்ற துணிவுடன் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே பிரிந்து போய்விட்டான். தலைவன் நம்மைப் பிரிய மாட்டான் என்று தலைவி கொண்டிருந்த துணிவு, சொல்லாமலே தலைவன் பிரிந்து சென்ற துணிவு ஆகிய இவ்விரண்டாலும் தலைவியின் நெஞ்சத்திலே உண்டான துன்பத்திற்கு அளவேயில்லை. நல்ல பாம்பு கடித்தவரைப் போல அவள் உள்ளம் நடுநடுங்கிற்று; குழம்பிச் சோர்வடைந்து சுழன்றது. இந்த நிகழ்ச்சியை ஒரு தலைவி தன் தோழியிடம் சொல்லிக் கொள்வது போல அமைந்திருப்பது இப்பாடல். தோழியே அவர் நம்மைப் பிரிந்து போக மாட்டார் என்று எண்ணினேன்; ஆதலால் அவர் பிரிவைத் தடுக்காமல் அலட்சிய மாயிருந்தேன். நம் பிரிவை இவளிடம் சொன்னால், இவள் சம்மதிக்கமாட்டாள் என்று எண்ணி அவர் நம்மிடம் சொல்லாமற் போனார். இவ்வாறு எங்கள் இருவரிடமும் உண்டான துணிவினால் தோன்றிய போரின் காரணமாக என் நெஞ்சு பெருந்துன்பத்திற்கு ஆளாயிற்று; நல்ல பாம்பால் கடியுண்டதைப் போலக் கலக்கம் அடைந்தது, என்று தன் துன்பத்தைத் தலைவி கூறினாள். பாட்டு செல்வார் அல்லர் என்றுயான் இகழ்ந்தனனே; ஒல்வாள் அல்லள், என்று அவர் இகழ்ந்தனரே; ஆயிடை, இருபேர் ஆண்மை செய்தபூசல் நல்லராக் கதுவி ஆங்குஎன் அல்லல் நெஞ்சம் அலமலக்கு உறுமே. பதவுரை: செல்வார் அல்லர் என்று- தலைவர் நம்மைப் பிரிந்து போகமாட்டார் என்று நம்பி. யான் இகழ்ந்தனன் ஏ- நான் அலட்சியமாயிருந்தேன். ஒல்வாள் அல்லள் என்று - நம் பிரிவுக்குச் சம்மதிக்கமாட்டாள் என்று துணிந்து. அவர் இகழ்ந்தனர் ஏ-அவர் நம்மிடம் சொல்லாமல் விட்டுச் சென்றார். ஆ இடை- அக்காலத்தில், இரு பேர் ஆண்மை செய்த பூசல்- இருவரிடமும் உண்டான பெரிய துணிவினால் நேர்ந்த சண்டை. நல்அராக் கதுவியாங்கு- நல்ல பாம்பு கடித்ததைப் போல. என் அல்லல் நெஞ்சம்- என்னுடைய துன்பம் நிறைந்த உள்ளம். அலமலக்கு உறும்- நிலைகுலைந்து தடுமாறுகின்றது. கருத்து: நானும் அவரைத் தடுக்கவில்லை; அவரும் என்னிடம் சொல்லாமல் போய்விட்டார். அதனால் நான் நெஞ்சம் குழம்புகின்றேன். விளக்கம்: இப்பாட்டு ஒளவையார் பாடியது. தலைவன் பிரிவால் என் நெஞ்சம் நல்ல பாம்பால் கடிக்கப்பட்டவரைப் போலத் துன்புறுகின்றது என்று தலைவி கூறியது. பாலைத்திணை. இகழ்தல்- அலட்சியப்படுத்தல். செய்ய வேண்டிய செயலைச் செய்யாமல் சோர்ந்திருத்தல். நல்ல பாம்பால் கடியுண்டவர் பிழைக்க மாட்டார். தாங்க முடியாத துன்பம் அடைவர். கணவனைப் பிரிந்தார் நெஞ்சத் துயருக்குப் பாம்பு கடித்தார் அடையும் துயரை உவமையாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. இன்னும் காணேன் பாட்டு 44 தலைவியின் தளர்ந்த முகத்தைக் கண்டான் தலைவன். அவன் உள்ளம் உடைந்து விட்டது. இத்தனை நாளும் இல்லாத இக்கலக்கம் உன் உள்ளத்தில் இன்று தோன்றியது ஏன்? உன் நெஞ்சம் கலங்கினால் என் நெஞ்சமும் கலங்கும்; உன் முகம் வாடினால் என் முகமும் வாடும்; உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி; உன் இன்பமே என் இன்பமும்; ஆதலால் உண்மையை ஒளிக்காமல் உரைத்து விடு. உன் சோர்வுக்கான காரணம் எதுவாயினும் அதனை இப்பொழுதே இல்லாமல் விரட்டி விடுகிறேன் என்று கூறினான் தலைவன். இதற்கு அவள் யாதொரு விடையும் சொல்லவில்லை. வாய் பேசாது நின்றாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது இக் காட்சியைக் கண்டு கலங்கிப் போனான் அவன். தலைவியும் ஒன்றும் பேசாமலே அவனை விட்டுப் பிரிந்தாள். இச் சமயத்தில் அவளுடைய தோழி அங்கு வந்தாள். அவளிடம் தலைவியின் துன்பத்திற்கான காரணத்தைக் கேட்டான் அவன். ‘தலைவனே நம்முடைய களவொழுக்கம் வெளிப்பட்டு விட்டது. ஊரார் நம்மைப் பற்றி ஏதேதோ பேசுகின்றனர். தலைவியின் பெற்றோரும் அவளைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனர். ஆதலால் தலைவி வாட்டமுற்றிருக்கின்றாள். கற்பு மணத்தின் மூலம் உன்னுடைய உறுதியை வெளிப்படுத்தினால் தான் அவள் உள்ளம் அமைதியடையும்’ என்றாள் தோழி. தலைவனும் சிறிது ஆலோசித்தான். ‘சரி இனித்துயரம் வேண்டாம். விடியற் காலையில் தலைவியை நான் என்னுடன் அழைத்துக் கொண்டு போகத் துணிந்து விட்டேன். நாங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து சென்று விடுவதன் மூலம் எங்கள் அன்பையும், காதலையும், உறுதியையும் வெளிப்படுத்த உறுதி கொண்டு விட்டேன்’ என்று கூறிப்போய் விட்டான். அன்று விடியற் காலத்திலேயே அத்தலைவனும், அத் தலைவியும் புறப்பட்டு விட்டனர். தலைவன் அவளை எங்கோ அழைத்துக் கொண்டு போய்விட்டான். தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் விடிந்ததும் பெண்ணைக் காணாமல் பெரிதும் வருந்தினர். தோழியும் ஒன்றும் உணராதவள் போல அங்கு மிங்கும் ஓடினாள். நற்றாய் நெஞ்சங் கலங்கினாள். செவிலித்தாய் ‘நான் வளர்த்த மகளை நானே தேடிக்கொண்டு வருகிறேன்’ என்று புறப்பட்டாள். பாலைவனத்தின் வழியே நடந்து போகின்றாள். தன் எதிரில் ஆணும் பெண்ணுமாக யார் வந்தாலும் அவர்களை யெல்லாம் உற்று நோக்கிக்கொண்டே போனாள். ஆணும் பெண்ணுமாக எத்தனையோ தம்பதிகளை அவள் கண்டாள். வானத்து விண்மீன் களின் தொகையைக் காட்டிலும் அதிகமான தம்பதிகளை அவள் இடை வழியிலே பார்த்தாள். ஆனால் தன் மகளையும்; மருமகனையும் மட்டும் அவள் காணவேயில்லை. இவ்வாறு அந்தச் செவிலித்தாய் அவ்வழியிலே நீண்ட தூரம் நடந்தாள். நடந்து நடந்து அவள் கால்கள் சோர்ந்து விட்டன; அடி எடுத்து வைக்க முடியாமல் தளர்ந்து விட்டன. வருவோர் போவோரையெல்லாம் பார்த்துப் பார்த்து அவளுடைய கண்கள் பூத்துப் போய் விட்டன. இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டேயிருந்தால் கண்கள் ஒளியை இழக்கும் என்பர். ஆதலால் அவள் கண்ணொளியும் மங்கிவிட்டது. ஆதலால் அவள் சோர் வடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். ஆயினும் ஓடிப்போன தம்பதிகளைப் பற்றி ஒருவரும் குறை கூறவில்லை. அவர்களே உண்மையான கற்புடைய தம்பதிகள் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டனர். ஊரார் பழித்துரைப் பதையும் நிறுத்திவிட்டனர். உத்தமத் தம்பதிகள் என்று புகழ்ந் துரைத்தனர். இதைக் கேட்டு அப்பெண்ணின் பெற்றோரும் மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை விளக்குவதே இப்பாடல். பாட்டு காலே பரிதப் பினவே; கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே அகல் இருவிசும்பின் மீனினும் பலரே மன்றஇவ்வுலகத்துப் பிறரே பதவுரை: காலே - என்கால்கள். பரிதப்பினவே- விரைந்து நடக்க முடியாமல் சோர்வடைந்தன. கண்ணே - என் கண்கள். நோக்கி நோக்கி - வருவோர் போவோரையெல்லாம் பார்த்துப் பார்த்து. வாள் இழந்தனவே- ஒளியிழந்தன. இவ்வுலகத்துப் பிறரே- இவ்வுலகத்திலே நான் கண்ட பிற தம்பதிகள். மன்ற- நிச்சயமாக. அகல் இரு விசும்பின்- அகலமான பெரிய வானத்தில் காணப்படும். மீனினும் பலரே- நட்சத்திரங்களைக் காட்டிலும் பலராவர். கருத்து: என் கால்கள் சோர்ந்ததும், கண்கள் பூத்ததும் தான் கண்ட பலன். என் மகளைக் காணேன். விளக்கம்: இப்பாடல் வெள்ளி வீதியார் பாடியது. மகளைத் தேடிச்சென்ற செவிலித்தாய் பாலைவனத்திலே சோர்வடைந்து சொல்லியது. பாலைத்திணை. ‘இவ்வுலகத்துப் பிறர் மன்ற அகல் இரு விசும்பின் மீனினும் பலர்’ என்று இறுதி இரண்டடிகள் மட்டும் மாற்றப்பட்டன. பரி - விரைவு. தப்புதல் - தவறுதல் பரிதப்பின்- சோர்வடைந்தன. வாள்- ஒளி. மீன்- நட்சத்திரம். களவு மண ஒழுக்கம் வெளிப்படுவதற்கு முன்பே, அத் தம்பதிகள் இணைந்து எங்கேனும் சென்று விடுதல் கற்பு மணமாகும். பெண் வீட்டாராலோ, பிள்ளை வீட்டாராலோ களவு மணத் தம்பதிகளின் கற்பு மணத்திற்குத் தடையேற்படும்போது அத்தம்பதிகள் இவ்வாறு செய்வர். பிறகு பெற்றோர்கள் அவர்கள் செய்கையை ஆதரிப்பர். இது பழங்காலத்து வழக்கம். இது உண்மைக் காதல் மணம். கற்பின் பெருமை பாட்டு 45 காதலி கருக்கொண்டிருந்தாள். காதலனுக்கு அவள் மேல் அன்பில்லாமல் இல்லை. ஆயினும் அவனால் தன் புலன்களை அடக்கியாள முடியவில்லை. அதனால் அவன் பரத்தையர்பால் நேசங் கொண்டிருந்தான். அவர்களுடன் கூடிக் குலாவி வந்தான். தான்விரும்பி வாழ்ந்த பரத்தையர்களுக்கு அவன் ஏராளமான செல்வங்களையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவர்களுக்கு நல்ல ஒளி பொருந்திய நகைகளையும் செய்து போட்டிருந்தான். கிடைத்த வரையிலும் கறக்கும் தன்மை யுள்ளவர்கள் தானே விலைமாதர்கள்? அவர்களிடம் தொடர்பு கொண்டவர்கள் செல்வத்தைத் தொலைக்காமலிருக்க முடியுமா? பரத்தையர்பால் தொடர்பு கொண்டிருந்த இத்தலைவன் அடிக்கடி தன் இல்லத்திற்கும் வருவான். வந்தால் ஓரிரவு தங்குவது கூடப் பெரிய காரியம். ஓரிரவு தங்கி விடுவானாயின் எப்பொழுது விடிகிறது என்று பார்த்துக் கொண்டேயிருப்பான். பொழுது விடிந்ததோ இல்லையா உடனே புறப்பட்டு விடுவான். விடியற் காலத்திலேயே எழுந்து தேரில் ஏறிக்கொண்டு விலை மாதர் வீட்டிற்கு விரைந்து போய்விடுவான். இது அத்தலைவன் வழக்கம். ஒரு சமயத்தில் பல நாட்கள் பரத்தையர் வீட்டிலேயே தங்கிவிட்டான். இல்லத்தை எட்டிப் பார்க்கவேயில்லை. இச் சமயத்தில் அவன் மனைவி கருவுயிர்த்து விட்டாள்; சிறந்த ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். கணிகையர் வீட்டிலிருக்கும் காதலன் இச்செய்தியை அறிந் தான். உடனே இல்லத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் அவனைத் தட்டி எழுப்பிற்று. இல்லாளையும் இளங் குழந்தையையும் காணவேண்டும் என்று துடிதுடித்தான். “அவன் நெஞ்சத்தில் ஒரு சந்தேகம் தோன்றிற்று; அது அவனை உடனே புறப்பட வொட்டாமல் வேலி போட்டது. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா? நான் பல நாட்களாக வீட்டுக்குப் போகவில்லை; விலைமாதர் இன்பத்தை விரும்பி இங்கேயே மயங்கிக்கிடந்து விட்டேன். ஆதலால் என் இல்லாள் என்மீது கடுஞ்சினம் கொண்டிருப்பாள்; திடீரென்று நாம் போனாள் அவள் காய்ந்துவிழுவாள்; உள்ளே வராதே என்று கதவைத் தாழிட்டாலும் தாழிடுவாள். அவள் உள்ளப் பாங்கை உணர்ந்து கொண்ட பிறகுதான் போகவேண்டும்” என்று நினைத்தான். உடனே தனக்கு வேண்டிய பாணன் ஒருவனை அழைத்துத் தலைவியிடம் தூதாக அனுப்பினான். தூதன் வருகையைப் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பாணன் தன் நண்பர்களுடன் தலைவியின் இல்லத்தை நெருங்கினான். அவள் தோழியைக் கண்டான். “தலைவியையும் தனையனையும் காணத் தலைவன் தவித்துக் கொண்டிருக்கிறான். தான் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும்படி தலைவி யிடம் வேண்டிக் கொள்கின்றான் என்றான். இனிக் கணிகையர் வீட்டுப் பக்கமே காலடி எடுத்து வைப்பதில்லை என்று உறுதி மொழி உரைத்தான் என்றான். தன் குற்றத்தை உணர்ந்து அவன் வரும் போது அவனிடம் சுடுசொற் கூறாமல், கடுமுகங் காட்டா மல் வரவேற்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்” என்று கூறினான் பாணன். உடனே தோழி தலைவியிடம் சென்று திரும்பினாள். அந்தப் பாணனுக்கு விடையளித்தாள். தலைவியின் உள்ளம் அவளுக்குத் தெரியும். “தலைவன் வருவதற்குத் தடையில்லை; வந்தால் வரவேற் போம்; வழக்கம் போல் உபசரிப்போம்” என்று உரைத்தாள். இவ்வாறு வெளிப்படையாக அவள் அறிவிக்க வில்லை. இக் கருத்தை வேறுமொழிகளால் உரைத்தாள், அவ்வுரையிலே ‘தலைவன் வருகையைத் தலைவி தடுக்க மாட்டாள்’ என்ற குறிப்பு அடங்கி இருக்கிறது. ‘காலையில் எழுந்தவுடனேயே கணிகையர் வீட்டிற்கே கருத்தை ஓட விடுவான். விரைந்து செல்லும் தேரை ஏறிச் செல்வதற்கு ஏற்றபடி அமைப்பான். ஒளி பொருந்திய அணிகலன் களைத் தரித்த விலை மகளிரினைத் தழுவும் பொருட்டு விரைந்து செல்வான். செழிப்புள்ள ஊர்களை உடைய அவன் விலை மாதர்கள் வீடு தேடிப் போகின்றவன் என்ற பெரும் பெயர் பெற்று விட்டான். இத்தகைய தலைவனை ஏற்றுக் கொள்வதில் சிறுவனைப் பெற்ற தாய்க்குச் சம்மதந்தான். ஆயினும் அவன் செயலை நினைந்து மனம் குழம்புவாள். என்ன செய்வது? இச் சிறந்த கற்பொழுக்கமுள்ள குடியிலே பிறத்தல் துன்பத்திற்கு இடந்தான். துன்பத்தை அனுபவித்துத்தான் தீர வேண்டும்”. இதுவே தோழியின் சொல்; தலைவனிடமிருந்து தலைவியின் கருத்தைத் தெரிந்து கொள்ளத் தூதாக வந்த பாணன் முதலியவர் களிடம் உரைத்த மொழி. தூதர்கள் தலைவனிடம் போய்த் தலைவியின் கருத்தைத் தோழியின் மூலம் தெரிந்து கொண்டதைக் கூறினர். அதன்பின் தலைவன் இல்லத்தை அடைந்தான். காதலியைக் கண்டு களித்தான். இந்த நிகழ்ச்சியைக் காட்டுகின்றது கீழ் வரும் பாடல். பாட்டு காலை எழுந்து கடும்தேர் பண்ணி, வால்இழை மகளிர்த் தழீஇய சென்ற மல்லல் ஊரன் எல்லினன் பெரிதுஎன, மறுவரும் சிறுவன் தாயே; தெறுவது அம்ம! இத் திணைப் பிறத்தல்லே. பதவுரை: காலை எழுந்து- காலையிலே விழித்தெழுந்து. கடும்தேர் பண்ணி- விரைந்து செல்லும் தேரை ஏறிச் செல்வதற்கு ஏற்ப அமைத்து. வால் இழை மகளிர்- ஒளி பொருந்திய அணிகலன் களுடைய பரத்தையரை. தழீஇய சென்ற- தழுவிக் கொள்ளும் பொருட்டுப் போன. மல்லல் ஊரன்- செழிப்புள்ள ஊரையுடைய தலைவன். பெரிது எல்லினன் என- (பரத்தையர் நண்பன் என்பதிலே) பெரிதும் விளக்கம் உள்ளவன் என்று எண்ணி. சிறுவன் தாய்- ஆண்மகனைப் பெற்றெடுத்த தலைவி அவனை ஏற்றுக் கொள்வாள் ஆயினும். மறுவரும்- மனம் குழம்புவாள். இத்திணைப் பிறத்தல்- இச் சிறந்த குடியிலே பிறத்தல். தெறுவது துன்புறுத்துவதாகும். கருத்து: கற்புள்ள குடியிலே பிறந்தவள் தலைவி; ஆதலால் கணவன் தவறு செய்தாலும் அவனை ஏற்றுக் கொள்வாள். விளக்கம்: இப்பாடல் ஆலங்குடி வங்கனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. தோழி கூற்று பரத்தையர் பாற் சென்றிருந்த தலைவன். விடுத்த தூதர்களிடம் தோழி, தலைவியின் உடன்பாட்டைக் குறிப்பாற் கூறியது மருதத்திணை, வால்-ஒளி: வெண்மை; தூய்மை. மல்லல்- செல்வம். செழிப்பு; வளப்பம். ஊரன்- மருதநிலத் தலைவன். மறுவரும்- சுழலும்; குழம்பும் தெறுவது- துன்புறுத்துவது. மல்லன் ஊரன்- தலைவன். இவன் செல்வம் உள்ளவன். செல்வம் உள்ளவர்களிடமே பரத்தையர்கள் வீட்டுக்குப் போதல் போன்ற கெட்ட வழக்கங்கள் பண்டும் இருந்தன. பெண்களை இன்னான் தாய் என்று குறிப்பிடுவது பண்டை வழக்கம், ‘புதல்வன் தாய்’ என்பதனால் இதனை அறியலாம். ‘காலை எழுந்து கடும்தேர் பண்ணி, வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற மல்லல் ஊரன் பெரிது எல்லினன் எனச் சிறுவன் தாய் மறுவரும், இத்திணைப் பிறத்தல் தெறுவது அம்ம’ என்று மாற்றிப் பொருள் கூறப்பட்டது. அங்கும் உண்டு பாட்டு 46 தலைவன் பொருள் தேடப் பிரிந்தான். தலைவி தனித் திருந்தாள். தலைவன் சென்று விட்டானே என்பதனால் அவள் உள்ளத்திலே எழுந்த துக்கத்தை அவள் வெளியிடவில்லை. அடக்கிக் கொண்டிருந்தாள். அனலை மூடி வைத்தால் அதன் வெப்பம் மறைந்து விடுவதில்லை. மூடியிருக்கும் பொருளைத் தாக்கி மேலே தோன்றிச் சுட்டுக் கொண்டேதான் இருக்கும். அதைப் போலவே தலைவியின் உள்ளத்திலே இருந்த துயரம் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட தோழி மிகவும் கவலை யடைந்தாள்; தலைவி இத்துக்கத்தை இன்னும் எத்தனை நாளைக்குத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமோ என்று ஏங்கினாள். தோழியின் துன்பத்தைக் கண்ட தலைவி, அவளுக்கு ஆறுதல் கூறினாள். தோழியே நான் வருந்தவில்லை. நான் மிகவும் தைரியமாகத்தான் இருக்கிறேன். தலைவர் விரைவில் திரும்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையே என் உள்ளத்தில் ஆறுதல் தென்றலை வீசுகின்றது. தனிமைத் துயரமாகிய வெப்பத்தைத் தணிக்கின்றது. அவர் விரைவில் திரும்புவார் என்பதற்கான காரணத்தையும் கூறுகிறேன் கேள்’ என்று மேலும் சொல்லத் தொடங்கினான். ‘தோழியே இதோ பார்! நமது வீட்டின் இறப்பிலே தங்கியிருக்கும் இக்குருவிகளைப் பார்; அவை பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. அல்லியின் இதழ்கள் குவிந்திருப்பது போன்ற சிறகுகளுடன் காணப்படுகின்றன. இக்குருவிகள் நம்வீட்டு முற்றத்திலே காயும் தானியங்களை உரிமையோடு தின்னுகின்றன. பின்னர் வெளியிலே சென்று பொதுவிடத்தில் உள்ள எருவின் பொடியைக் குடைந்து விளையாடுகின்றன. மீண்டும் வீட்டுக்கு வந்து இறப்பிலே தம் பிள்ளைகளுடன் தங்குகின்றன. இது மாலைக் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி. இத்தகைய மாலைக் காலமும், தனித்திருப்பதால் உண்டாகும் துன்பமும் அவர் சென்றிருக்கும் நாட்டில் இல்லாமலா இருக்கும்? அங்கும் இந்த நிகழ்ச்சி உண்டு. பகற் காலத்திலே குருவிகள் எப்படித் திரிந்தாலும். இராக் காலம் வருவதற்குமுன் மாலைக் காலத்திலே தம் இருப்பிடத்தை யடையும்; தம் பிள்ளைகளுடன் மகிழ்ந்து வாழும். இந்த நிகழ்ச்சியைக் காணும் அவர் எப்படிக் காலங் கடத்துவார்? நாமும் விரைந்து போய், நமது பெண்டு பிள்ளைகளுடன் இல்லத்திலே இருந்து இன்புற வேண்டுமென்று நினைப்பார். என்னைப் பிரிந்து தனித்திருப்பது அவருக்குத் துன்பமாகத்தான் இருக்கும். ஆதலால் அவர் விரைந்து வருவார் என்ற நம்பிக்கைக்குக் காரணம் இதுதான்” என்று கூறினாள் தலைவி. இவ்வாறு தலைவி கூறும் நிகழ்ச்சியை விளக்குவதே இப்பாடல். பாட்டு ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து எருவின் நுண்தாது குடைவன ஆடி, இல்இறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்! புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழி! அவர்சென்ற நாட்டே பதவுரை: தோழி! ஆம்பல்பூவின்- அல்லிமலரின். சாம்பல் அன்ன- வாடிய இதழ்களைப் போன்ற. கூம்பிய சிறகர்- குவிந்த சிறகுகளையுடைய. மனைஉறை குரீஇ - வீட்டிலே வாழ்கின்ற குருவி. முன்றில்- முற்றத்திலே உணங்கல்- காய்ந்து கொண்டிருக் கின்ற தானியங்களை. மாந்தி- தின்று. மன்றத்து- பொது விடத்திலே உள்ள. எருவின் நுண்தாது- எருவின் நுண்மையான பொடிகளை. குடைவன ஆடி- குடைந்து விளையாடி. இல்இறை பள்ளி- மீண்டும் வீட்டின் இறப்பிலே உள்ள தமது இடத்திலே. தம்பிள்ளையொடு வதியும்- தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும். புன்கண் மாலையும்- பிரிந்தவர்க்குத் துன்பம் தரும் இத்தகைய காட்சியுள்ள மாலைக் காலமும். புலம்பும்- தனித்துறையும் வருத்தமும். அவர் சென்ற நாட்டு- அவர் போயிருக்கும் நாட்டின் கண். இன்று கொல்- இல்லையோ (உண்டு) கருத்து: தலைவரும் என்னைப்போலவே பிரிவினால் துன்புறுவர்; ஆதலால் அவர் விரைந்து வருவார். விளக்கம்: இது மாமலாடன் என்னும் புலவர் பாடல். தலைவி கூற்று. தலைவன் பிரிவினால் தலைவி வருந்துவாளே என்று தோழி கவலைப்பட்டாள். அப்பொழுது தலைவி ‘நான் வருந்தவில்லை; தலைவர் விரைவில் திரும்பி விடுவார் என்று விடையளித்தாள். மருதத்திணை ‘இன்று கொல் தோழி அவர் சென்ற நாட்டே’ என்ற இறுதியடி மட்டும் மாற்றப்பட்டது. தோழி முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ‘அவர் சென்ற நாட்டு இன்று கொல்’ என்று மாற்றப்பட்டது. ஆம்பல்- அல்லி. சாம்பல்- வாடுதல். கூம்பிய- குவிந்த. மனை உறை குரீஇ -சிட்டுக் குருவி. உணங்குதல்- காய்தல். தாது- பொடி. இறை - இறப்பு. வீட்டில் வாழும் பறவையின் இயல்பை இப்பாடல் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னிலைப் புறமொழி பாட்டு 47 நம்முன்னே இருப்பவரிடம் ஒரு செய்தி கூறவேண்டும் ஆனால் அவரிடம் நேரடியாக அச்செய்தியைக் கூற நமக்கு விருப்பம் இல்லை. ஆயினும் எப்படியாவது செய்தியைச் சொல்லியே ஆகவேண்டும். அப்பொழுது என்ன பேசுகின்றோம். அல்லது வேறொரு பொருளைப் பார்த்துச் சொல்லுவது போலப் பேசு கின்றோம். இதற்குச் ‘சாடை பேசுதல்’ என்று உலக வழக்கிலே இன்று சொல்லுகின்றனர். இதற்குத் தான் முன்னிலைப் புறமொழி என்று பெயர். எதிரிலே இருப்பவரிடம் செய்தியைச் சொல்லாமல் மற்றொருவரிடம் மேலும் மற்றொரு பொருளிடமேனும் சொல்லுதல் முன்னிலைப் புறமொழி என்பது. இந்தப் பாட்டு இவ்வாறு ‘சாடை பேசும்’ பாட்டாகும். ஒரு தலைவனும், ஒரு தலைவியும் அடிக்கடி இரவிலே சந்தித்துப் பழகுகின்றனர். இதற்குத் தோழியும் உடன்பாடுதான். இந்த இரவுச் சந்திப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தோழியின் ஆவல். இது முடிவு பெறவேண்டுமானால் அந்தக் காதலர்கள் வெளிப்படையாக மணம் புரிந்துகொண்டு வாழவேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் சந்திப்பை யாராலும் நிறுத்த முடியாது. இதுவும் தோழிக்குத் தெரியும். தலைவனைப் பார்த்து ‘நீ இவ்வாறு இரவிலே அடிக்கடி வந்து போவது தவறு; தலைவியை விரைவிலே மணம் புரிந்து கொள்’ என்று வற்புறுத்திக் கூறவும் தோழிக்கு மனம் இல்லை. ஆதலால் அவள் தன் கருத்தைக் குறிப்பாக- சாடையாகக் கூறினாள். ஒரு நாள் இரவு வழக்கம் போல் தலைவியைக் காண வந்திருக்கின்றான் தலைவன். அப்பொழுது நல்ல நிலவொளி பட்டப்பகல் போல் வீசுகின்றது. தோழி தலைவனிடம் சென்றாள். அவனைக் கீழும் மேலும் பார்த்தாள். வானத்தையும் அண்ணாந்து பார்த்தாள். நட்சத்திரங்களின் நடுவிலே நன்றாகத் தண்ணிலவு வீசித் தவழ்ந்து கொண்டிருக்கும் சந்திரனைப் பார்த்தாள். அதனிடம் தன் உள்ளத்தில் வெளியே புறப்படுவதற்குத் துடித்துக் கொண்டிருந்த எண்ணத்தை வீசியெறிந்தாள். ‘கணக்கு வழக்கின்றி நீண்ட நேரமாக வானத்திலே விளையாடுகின்ற நிலவே! நீ உலகில் உள்ளவர்களுக் கெல்லாம் குளிர்ச்சியைத்தான் தருகின்றாய். பால் போன்ற உன் அமுத தாரகையால் பாரில் உள்ளவர் அனைவரும் இன்பந்தான் அடைகின்றனர். ஆயினும் இரவுதோறும் வந்து அலையும் களவு மணத்தை மேற்கொண்டிருக்கும் தலைவருக்கு மட்டும் நீ நன்மை செய்யவில்லை. இதற்குக் காரணம் கூறுகின்றேன்; கருத்துடன் கேள். ‘இரவிலே அவர்வரும் வழியிலே வலிமையான அடிப் பாகத்தை யுடைய வேங்கை மரங்கள் தழைத்து மலர்ந்திருக் கின்றன. அந்த மலர்கள் குண்டுக் கற்களின் மேல் உதிர்ந்து கிடக்கின்றன. வேங்கை மலர்கள் படிந்து கிடக்கும் அந்தக் குண்டுக் கற்கள் பெரிய புலிக் குட்டிகளைப் போலக் காணப்படுகின்றன. ஆதலால் இத் தோற்றம் இரவிலே வரும் தலைவருக்கு அச்சத்தை யுண்டாக்கினாலும் உண்டாக்கும். அன்றியும் காண்போர் கண்ணுக்கு எல்லாப் பொருளும் விளங்கும்படி நீ வெண்ணிலாவைப் பொழிவதனால் அவர் வருவதை ஊரில் உள்ளவர் பார்த்து விடவும் முடியும். ஊரில் உள்ளார் பார்த்துவிட்டால் என் தலைவியின் களவொழுக்கம் வெளிப்படும்; ஊரார் அவளைப் பழி கூறுவர். ஆதலால் ஏ வெண்ணிலாவே? நீ என் தலைவர்பால் நன்மையுடன் நடந்து கொள்ளவில்லை யென்று கூறினாள் தோழி. ‘தலைவனே நீ இனி இரவிலே வருதல் முறையாகாது. தலைவியை மணந்து கொள்வது தான் தகுந்தது;’ என்பதை உணர்த்த இவ்வாறு சாடை பேசினாள் தோழி. பாட்டு கருங்கால் வேங்கை வீஉகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும்: காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை நெடுவெண் நிலவே! பதவுரை: நெடுவெண் நிலவே - நீண்ட நேரம் காணப்படும் வெண்ணிலாவே. கரும்கால் வேங்கை- வலிமையான அடிப் பாகத்தையுடைய வேங்கை மரத்தின். வீ உகுதுறுகல் - மலர்கள் சிந்திக் கிடக்கின்ற உருண்டை வடிவான கற்கள். இரும்புலிக் குருளையின்- பெரிய புலிக்குட்டியைப் போல. தோன்றும்- காணப்படும். காட்டு இடை- காட்டின் வழியாக. எல்லி வருநர்- இரவிலே வருகின்றவராகிய. களவிற்கு- தலைவருடைய கள வொழுக்கத்திற்கு. நல்லை அல்லை- நீ நன்மை செய்யவில்லை. கேடு தான் செய்கின்றாய். கருத்து: இன்னும் களவு மணத்தில் நீடிப்பது நன்றன்று; தலைவியை மணந்து கொண்டு கற்பொழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும். விளக்கம்: இப்பாடல் நெடு வெண்ணிலவினார் என்பவரால் பாடப்பட்டது. இது இப்புலவர் இயற்பெயர் அன்று. காரணப் பெயர். நெடு வெண்ணிலவு என்ற தொடர் இப்பாடலில் அமைந்திருப்பதே இவருக்கும் பெயராக வந்தது. இரவுக் குறியிலே ஒழுகும் தலைவனுக்குத் தோழி மணம் புரிந்து கொள்ளும்படி சாடையாகக் கூறியது. தோழி கூற்று. குறிஞ்சித் திணை. கருமை- வலிமை. கால்- அடி. வீ - மலர். குருளை - குட்டி எல்லி - இரவு ‘நெடு வெண்ணிலவே’ என்னும் இறுதித் தொடர் முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. குண்டுக் கற்களின் மேல் வேங்கை மலர் உதிர்ந்து கிடக்கும் தோற்றம் புலிக் குட்டிகள் போல் இருக்கின்றன. குண்டுக் கற்களுக்குப் புலிக் குட்டிகள் உவமை. தலைவன் இரங்கானோ! பாட்டு 48 பகல் காலத்தில் மட்டும் தலைவனும் தலைவியும் சந்திக் கின்றனர். தோட்டங்களிலோ, ஆற்றோரங்களிலோ, குளத்தோரங் களிலோ அவர்கள் சந்திப்பார்கள். யாரும் பார்க்காதபடி மறை விடத்திலே அவர்கள் ஒருவரை ஒருவர் காண முடிந்தால்தான் அவர்களுடைய காதலுக்குப் பலன் உண்டு. ஆதலால் அவர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்க்க முடிவதில்லை. அவர்கள் பகல் பொழுதிலே ஒருவரை ஒருவர் கண்டு களிக்கும் நேரத்தைவிடக் காணாமல் வருந்தி நிற்கும் நேரமே மிகுந்திருந்தது. தலைவி, தலைவனைக் காணாத போது தனிமையால் தவித்துக் கொண்டிருப்பாள். அவள் தவிப்பை தன் வாயினால் சொல்லாவிட்டாலும் அவள் தோற்றம் தெரிவித்து விடும். மாந்தளிர் மேனியிலே மாசு படர்ந்து விடும். பசலை நிறமுடைய வளாய்க் காணப்படுவாள். இளமை தொட்டு இணைந்து மகிழ்ந்து விளையாடிய தோழியர் கூட்டத்துடன் சேர்ந்து விளையாட மாட்டாள். சிரிக்கவும் மாட்டாள். ஏக்கம் பிடித்த உள்ளத்துடன் சிறகற்ற பறவைபோல் உட்கார்ந்து கொண்டிருப்பாள். அவள் கவலையின்றி இருக்கும் போது பதுமையை வைத்துக் கொண்டு விளையாடுவது வழக்கம். அவள் விளையாடும் பாவை நறுமணப் பொடிகளால் செய்யப்பட்டது. நல்ல மணமும் குளிர்ச்சியும் உள்ளது. காதல் விளையாட்டிலே புகுந்தவுடன் அவள் அந்தப் பாவையுடன் விளையாடுவதைக்கூட மறந்து விடுவாள். காதலனை எண்ணிக் கொண்டே கலங்கிய மனமுடன் உட்கார்ந்திருப்பாள். இவள் நிலையைக் கண்ட அவளுடைய தோழிமார்கள் -அவளுடன் ஒன்று கூடி விளையாடும் கூட்டுத் தோழிகள்- அவளைப் பரிகசிக்கவும் தொடங்குவர். “உன்னுடைய பாவை காலைப் பொழுதிலே வருந்துகின்றது. அதன் துன்பத்தைக் களைந்து அதனைக் காப்பாற்று” என்று கூறி அவர்கள் நகைக்கவும் தொடங்குவர். தோழிகள் இவ்வாறு சொல்லியும் கூட அவள் வருந்திக் கொண்டுதான் இருப்பாள். வாய்விட்டுப் பேசி அவர்களுடன் விளையாடத் தொடங்கமாட்டாள். பசலை நிறம் அவளைக் கவ்விக் கொண்டுதான் இருக்கும் தனிமையை நினைந்து- தலைவனை எப்போது காண்போம் என்ற துக்கத்துடனேயே இருப்பாள். இது தலைவியின் இயல்பாக இருந்தது. இதைக் கண்ட அவளுடைய ஆருயிர்த் தோழி அகமுருகினாள். “தலைவியின் துன்பம் - கவலை - தலைவனுடன் கூடியிருந்தால்தான் தலை காட்டாமல் நீங்கும். அவன் இவளை ஊரார் அறிய மணம் புரிந்து கொண்டால்தான் இருவரும் பகலிலும் இரவிலும் ஒன்றாக உறைந்து உவப்படைய முடியும். ஆதலால் இவளுக்கு விருப்பமான ஒரு சொல்லை அத்தலைவன் சொல்லமாட்டானா? ‘நான் மணந்து கொள்ளுகின்றேன்’ என்ற சொல்லை அவன் எப்பொழுது சொல்லுவானோ? இந்த உறுதிமொழியை- தலைவிக்கு விருப்பமான மொழியை- அவள் பசலை நோயைப் போக்கும் மொழியை. தலைவனாற் சொல்ல முடியாதா? என்று வருந்தினாள் தோழி இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு ‘தாதில் செய்த தண்பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு’ என ஓரை ஆயம் கூறக் கேட்டும் இன்ன பண்பின் இனைபெரிது உழக்கும்; நன்னுதல் பசலை நீங்க, அன்ன. நசையாகு பண்பின் ஒருசொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே. பதவுரை: தாதின் செய்த - நறுமணமுள்ள பொடிகளால் செய்யப்பட்ட. தண் பனிப்பாவை - மிகுந்த குளிர்ச்சியுள்ள விளையாட்டுப் பதுமை. காலை வருந்தும் - காலைப் பொழுதிலே வருந்துகின்ற. கையாறு- துன்பத்தை. ஓம்புஎன - நீக்கிக் காப்பாற்று என்று. ஓரை ஆயம்- விளையாடுகின்ற கூட்டமான பெண்கள். கூறக் கேட்டும் - சொல்வதைக் கேட்டும் கூட. இன்ன பண்பின்- இவள் இத்தகைய தன்மையுடனே இருந்து. இனை பெரிது உழக்கும்- துன்பத்தால் பெரிதும் வருந்துவாள். நன்னுதல் பசலை நீங்க- ஆதலால் இந்த நல்ல நெற்றியை யுடையவளது பசலை நிறம் நீங்கும்படி. அன்ன- அதற்கேற்ற. நசைஆகுபண்பின்- இவளுக்கு விருப்பமான தன்மையுள்ள. ஒரு சொல்லைக் கூற. காதலர் தமக்கு- காதலருக்கு - இசையாது கொல்- முடியாதோ. கருத்து: இவளைத் தலைவன் ‘மணக்கின்றேன்’ என்ற உறுதியும், கெடுவும், உரைத்தால்தான் இவள் துன்பந் தொலையும். விளக்கம்: இப்பாடல் பூங்கணுத்திரையார் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி ‘தலைவன் இவனுக்கு இசைவான ‘மணந்து கொள்வேன்’ என்னும் உறுதி மொழியை உரைக்க மாட்டானா?’ என்று கூறி வருந்தினாள். தோழி கூற்று. பாலைத்திணை. தாது- மகரந்தம் முதலியன கலந்தபொடி. தண்மை- குளிர்ச்சி. பனி- குளிர்ச்சி. தண்பனி- மிகுந்த குளிர்ச்சி. கையாறு- துன்பம். ஓரை- விளையாட்டு. ஆயம்- கூட்டம் இனை- துன்பம். ‘காதலர் தமக்கு ஏ இசையாது சொல்லு என்று இறுதியடி மட்டும் மாற்றப்பட்டது. ஏ, ஓ, அசைச்சொற்கள். வாசனைப் பொடிகளால் பதுமை செய்து விளையாடுவது பண்டைப் பெண்கள் வழக்கம். என்றும் பிரியோம்! பாட்டு 49 அவன் வரட்டும்! உள்ளே நுழைய விடுகிறேனா பார்; வெளியிலே நின்று கொண்டு வேதனைப்படும்படி செய்து விடுகிறேன்! அந்த வேசிகள் வீட்டிற்குச் சென்றவன் வெட்க மில்லாமல் எப்படி என் முகத்தில் விழிப்பான்! பார்க்கிறேன் ஒருகை என்று ஆத்திரம் கொண்டிருந்தாள். வேசையர் வீட்டுக்குச் சென்றிருந்த தலைவன் மேல் இவ்வளவு ஆத்திரமிருந்தது அவளுக்கு. ஆயினும் தலைவனில்லாமல் தனக்கு நேர்ந்த வருத்தத்தை அவள் எண்ணாமல் இல்லை. இந்நிலையில் ஒரு நாள் பரத்தையர் சேரிக்குப் போயிருந்த தலைவன் திடீரென்று தன் இல்லத்தை அடைந்தான். சினங் கொண்டிருந்த தலைவியின் எதிரே சிரித்துக் கொண்டு வந்து நின்றான். அவனைக் கண்டாளோ இல்லையோ அவளுடைய ஆத்திரம் எங்கோ போய்விட்டது. எதிரோடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்டாள். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்ற சொற்றொடர்க்கு எடுத்துக் காட்டாக ஆனாள். தலைவி கற்பையே அணிகலமாகப் பூண்டவள்; உத்தமக் குடியிலே பிறந்தவள்; உயர்ந்த பண்புகளை யுடையவள். ஆதலால் காதலனைக் கண்டவுடன் அவன் பிழைகளைக் கருதாமல் அன்புடன் அணைத்துக் கொண்டாள். இதுவே பண்டைத் தமிழ்ப் பெண்களின் பாராட்டத்தக்க பண்பென்று கூறப்படுகின்றது. இப்படிக் காதலனைத் தழுவிக்கொண்ட காதலி- தலைவி- தன் உள்ளத்திலே தேங்கிக் கிடந்த அன்பை அடக்கி வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதனைத் தன் கிள்ளை மொழி களால் உரைத்தாள்; உவகைக் கடலிலே மூழ்கினாள். தலைவனும் அவளுடைய உண்மைக் காதலைக் கண்டு உள்ளம் உருகினான். பணம் பிடுங்கும் பரத்தையருடன், தான் பழகியதை எண்ணி வருந்தினான். இவ்வாறு தனது இனிய அன்பு மொழிகளால் காதலனைக் கனிந்துருகச் செய்த இக் காரிகையின் கற்பே தலை சிறந்த கற்பாகும். “கடற்கரைக்குத் தலைவனே; நம் இணைப்பு என்றும் அறுபடாதது. இப்பிறப்பு ஒழிந்து மறுபிறப்பு நேர்ந்தாலும் நீதான் என் காதலனாகப் பிறப்பாய்! நான்தான் உன் உள்ளத்திலே என்றும் குடிகொண்டிருக்கும் காதலியாகப் பிறப்பேன். அந்தப் பரத்தையர் களாகட்டும், வேறு யார்தானாகட்டும் இனி நம்மைப் பிரிக்க முடியாது” என்பது காதலனைத் தழுவிக் கொண்ட காதலி கனிந் துரைத்த சொற்கள். இச்சொற்களைக் கேட்டதும் அக்காதலன் மனம் கல்லாயிருந்தாலும் கரைந்து நீர் மயமாகா மலிருக்குமா? இந்த நிகழ்ச்சியை உணர்த்துவதே இப்பாடல். பாட்டு அணில்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து, மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை ஆயினும், நீஆகியர் என்கணவனை! யான் ஆகியர் நின்நெஞ்சு நேர்பவளே. பதவுரை: அணில் பல் அன்ன- அணிலின் பல்போன்ற முள்ளையுடைய; கொங்குமுதிர் முண்டகத்து- மகரந்தம் நிறைந்த முல்லைக் கொடியையும்; மணிக்கேழ் அன்ன- நீலமணியின் நிறத்தைப்போன்ற; மாநீர் - நிறைந்த நீரையும் உடைய; சேர்ப்ப- கடற்கரையை யுடைய தலைவனே; இம்மை மாறி- இப்பிறவி நீங்கி; மறுமை ஆயினும்- மறுபிறப்பு உண்டாயினும்; என் கணவன் நீயாகியர்- என் கணவன் நீயே ஆகுக; நின் நெஞ்சு நேர்பவள்- உன் மனதுக்கிசைந்த மனைவி; யான் ஆகியர்- யானே ஆகுக. கருத்து: நம்முடைய அன்பு எப்பிறவியிலும் தப்பாது தொடர வேண்டும். விளக்கம்: இப்பாடல அம்மூவனார் என்னும் புலவர் பாட்டு. பரத்தையரை நாடிச் சென்ற தலைவன் மீது சினங் கொண்டிருந்தாள் தலைவி; அவனைக் கண்டதும் சினம் மாறித் தழுவிக் கொண்டு தன் அன்பையும், பண்பையும் வெளியிட்டாள். தலைவி கூற்று. நெய்தல்திணை: என் கணவன் நீ ஆகியர்; நின் நெஞ்சு நேர்பவள் யான் ஆகியர்’ என்று இறுதி அடிகள் மட்டும் மாற்றப் பட்டன. ஐ ஏ, அசைச்சொற்கள். முள்ளிச் செடியின் முள்ளுக்கு அணிலின் பல் உவமை. முண்டகம் - முள்ளிச் செடி. கேழ் - நிறம்; ஒளி. மறுபிறப்பு உண்டென்பது பழந் தமிழர் நம்பிக்கை. இந் நம்பிக்கையை இப்பாடல் காட்டுகின்றது. இதுதான் ஒழுங்கோ! பாட்டு 50 கணிகையரை நாடிப் பிரிந்து போன காதலன் மீண்டும் தன் இல்லக் கிழத்தியை அடைந்து இன்புற நினைத்தான். காதல் மனையாளைக் கைவிட்டுப் பரத்தையர் இன்பத்தைத் தேடித் திரிந்தது குற்றம் என்பது அவனுக்குத் தெரியும். தன் செய்கையால் தன் மனைவி உள்ளஞ் சோர்ந்து வாழ்வாள்; உடல் மெலிந்து துன்புறுவாள். தனிமையின் துன்பம் தாங்க மாட்டாமல் தவித் திருப்பாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவன் விரும்பியவுடன் திடீரென்று வீட்டிற்குப் புறப்பட முடியவில்லை. தன் காதலியின் நிலை என்ன? அவள் கருத்தென்ன? சென்றால் தன் குற்றத்தை மன்னித்து மகிழ்ச்சியுடன் வரவேற்பாளா? என்பவற்றைத் தூதர்களின் வழியாகத் தெரிந்து கொண்ட பின் போகலாம் என்று எண்ணினான். உடனே தன் தோழர்களைத் தன் காதலியிடம் தூதாக அனுப்பினான். தலைவனிடமிருந்து தூதர்கள் வந்திருப்பதை அறிந்தாள் தலைவி. அவர்களைத் தானே நேராக வரவேற்றாள். அவர்கள் தலைவன் வருகையைப் உரைப்பதற்கு முன்பே அவள் தலைவன் செய்கையை எடுத்துரைத்தாள். தன் நிலைமையையும் எடுத்துக் கூறினாள். ‘தலைவர் என்னைப் பிரிந்து சென்றார். பணம் பறிக்கும் பரத்தையர் இன்பத்தை நாடிச் சென்றார். அவருடைய ஊர் அழகு பெற்றது. அவருடைய ஊரில் உள்ள நீர்த்துறையை ஞாழல் மரத்தின் வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய மலர்களும், மருத மரத்தின் சிவந்த பழம் பூக்களும் அழகு செய்து கொண்டிருந்தன. இத்தகைய அழகிய நீர்த்துறையிலே அவர் தான் விரும்பிய பரத்தையர்களுடன் பாடி ஆடி இன்புற்றார். அவர் சென்றவுடன், அவரால் தழுவப்பட்ட எனது தோள்கள் மெலிந்தன. தோள் வளையல்கள் மூட்டுவாயை விட்டு நழுவின. அவை தம்முடைய அழகையிழந்தன. தனித்திருப்பதையே அழகாகக் கொண்டன. இதுதான் தலைவனிடமிருந்து வந்த தூதர்களிடம் தலைவி கூறிய மொழி. பரத்தையரை நாடிச் சென்ற தலைவன் மகிழ்ந்தான்; தனித்திருந்த நான் மெலிந்தேன்; ஆதலால் மீண்டும் அவன் வருவானாயின் என் தோள்கள் இழந்த அழகைப் பெறும்; தனிமைத் துன்பத்தையும் துறந்து, துணைபெற்றுத் தழைக்கும் என்ற கருத்தை தலைவி தன் மொழியிலே- குறிப்பாகக் கூறினாள். தூதர்களும் திரும்பிச் சென்று தலைவனிடம், தலைவியின் நிலைமையை அறிவித்தனர். அவன் விரைந்து வந்தான். தலைவியின் தனிமைத் துன்பத்தை ஓட்டினான். இருவரும் கூடி இன்புற்றனர். இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதே இப்பாடல். பாட்டு ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த் துறை அணிந்தன்று அவர்ஊரே: இறைஇறந்து இலங்குவளை நெகிழச் சாஅய்ப் புலம்பு அணிந்தன்று அவர்மணந்த தோளே! பதவுரை: ஐயவி அன்ன- வெண்சிறு கடுகு போன்ற. சிறுவீ ஞாழல் - சிறிய மலர்களாகிய ஞாழற்பூக்கள். செவ்வீ மருதின்- சிவந்த மலர்களாகிய மருத மரத்தின். செம்மலொடுதாய்- பழம் பூக்களோடு கலந்து. அவர் ஊர் - அவர் ஊரில் உள்ள. துறை அணிந்தன்று- நீர்த்துறையை அழகு செய்தது. அவர் மணந்த தோள் - முன்பு அவரால் தழுவப்பட்ட எனது தோள். இலங்குவளை - சுடர்விடும் வளையல்கள். இறைஇறந்து நெகிழ- மூட்டு வாய்ச் சந்தைக் கடந்து கழலும்படி. சாய்- மெலிந்து, புலம்பு அணிந்தன்று- தனிமையைத் தாங்கியிருந்தது. கருத்து: அவர் என்னைப் பிரிந்தமையால் நான் உடலும் உள்ளமும் மெலிந்தேன். விளக்கம்: இது குன்றியனார் பாட்டு. தலைவனிடமிருந்து வந்த தூதர்களிடம் தலைவி கூறியது. மருதத் திணை. ‘ஐயவி அன்ன சிறுவீ ஞாழல், செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய் அவர் ஊர்துறை அணிந்தன்று’ என்று பதப்பிரிவு செய்து பொருள் சொல்லப்பட்டது. ஐயவி- சிறிய வெள்ளைக்கடுகு. வீ- மலர், ஞாழல் - ஒருவகை மரம், மருதம்- ஒருவகை மரம். செம்மல்- பழம்பூ. இறை- தோளின் மூட்டு, தாஅய்; சாஅய்; அளபெடை, அணிந்தன்று- அணிந்தது. அவனே மணப்பான் பாட்டு 51 தலைவனால், தன் காதலியைப் பகலிலும் காண முடிய வில்லை; இரவிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவன் வாளா நின்று விடவில்லை. தலைவியை மணந்து கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். தலைவனுடைய சுற்றத்தாரும், தலைவியின் சுற்றத்தாரும் அடிக்கடி சந்தித்தனர். தம் பிள்ளைகளின் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். என்றைக்குத் திருமணத்தை நடத்தி வைப்பது என்பதைப் பற்றி அவர்களுக்குள் எத்தகைய முடிவும் இன்னும் ஏற்படவில்லை. ஆகவே திருமண நாள் நீண்டு கொண்டே போயிற்று. தலைவியோ இம்மாதிரிக் காலம் நீளுவதைப் பற்றிக் கவலை கொண்டாள்; தலைவன் தன்னை விரைந்து வந்து வரைந்து கொள்ளவில்லையே என்று வாட்டங் கொண்டாள். தலைவியின் இந்தத் துயரத்தைக் கண்டாள் தோழி. அவள் மனங்குளிர- அவளுக்கு நம்பிக்கை பிறக்க ஆறுதல் மொழிகள் பலவற்றைக் கூறினாள். தலைவியே ஏன் வீணாக விசனப்படுகின்றாய் நீ காதலித்த தலைவன் உனக்குத் தகுதியுள்ளவன்தான். அவன் நல்ல குணங்கள் அமைந்தவன்; உனக்கேற்ற வனப்பும் வாய்ந்தவன். அவன் சிறந்த கடற்கரையையுடையவன் என்பதையும் நாங்கள் அறிவோம். அவனுடைய கடற்கரை மிகவும் அழகு பொருந்தியது. வளைந்த முட்களையுடைய முள்ளிச் செடியின் குளிர்ச்சியான மலர்கள் காற்றிலே பறந்து கடற்கரையிலே பரவிக் கிடக்கும். அவை மாலையிலிருந்த முத்துக்கள் அவற்றைக் கோத்திருந்த நூல் அறுந்து எங்கும் சிந்தியிருப்பது போல் காணப்படும். அவனுடைய கடற்கரையில் உள்ள எல்லாத் துறைகளிலும் இக்காட்சியைக் காணலாம். இத்தகைய சிறந்த கடற்கரையை யுடைய தலைவனையே உனக்கு மணவாளனாக்க வேண்டும் என்று நானும் விரும்பு கின்றேன். நம் தாயும் அவனையே உன் காதலன் ஆக்க விரும்பு கின்றாள். நம் தந்தையும் இதையே விரும்புகின்றார்; எப்படியாவது உன்னை அந்தக் காளைக்கே காதலியாக மணம் புரிந்து கொடுக்க முயல்கின்றார். யானும் நம் தாயும், நம் தந்தையும் உன் விருப்பத்தை நிறைவேற்றவே இடைவிடாமல் முயன்று கொண்டிருக் கின்றோம். ஊரார் பேசும் மறைவான முணுமுணுப்பும் இதற்குத் துணை செய்வனவாகவே இருக்கின்றன; அவர்கள் கண்டும் காணாமலும், நீயும், அந்தத் தலைவனும் களவு மணம் புரிந்து கொண்டவர்கள், காதல் வாழ்க்கையிலே புகுந்து விட்டவர்கள்; என்று ஒருவரோடு ஒருவர் உரையாடுகின்றனர். இதுவும் எங்களைத் தூண்டுகின்றது; உனக்கும் அவனுக்கும் விரைவிலே இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் துரிதப்படுத்துகின்றது. ஆதலால் நீ வருந்தாதே. விரைவில் மணம் பெறுவாய்; உன் மனத்திற்கேற்ற காதலனுடன் மகிழ்ந்து இன்புறுவாய். இவ்வாறு தலைவிக்கு ஆறுதல் மொழிகள் கூறினாள் தோழி. அந்த நிகழ்ச்சியை விளக்குவதே இப்பாடல். பாட்டு: கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர், நூலறு முத்தின் காலொடு பாறித் துறைதொறும் பரக்கும், தூமணல் சேர்பனை யானும் காதலென்; யாயும் நனிவெய்யள்; எந்தையும் கொடீஇயர் வேண்டும்; அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. பதவுரை: கூன்முள்- வளைந்த முள்ளையுடைய. முண்டகம் - முள்ளிச்செடியின். கூர்பனி மாமலர்- மிகுந்த குளிர்ச்சியுள்ள கரிய மலர்கள். நூல் அறுமுத்தின்- தொடுத்த நூல் அறுந்து சிந்தின முத்துக்களைப் போல. காலொடு பாறி- காற்றால் சிதறி. துறை தொறும் பரக்கும்- நீர்த்துறைகளில் எல்லாம் பரந்து கிடக்கின்ற. தூமணல் சேர்ப்பனை- வெண்மையான மணல் பரந்த கடற்கரைத் தலைவனை. யானும் காதலென்- உன் கணவனாக்க நானும் விரும்புகின்றேன். யாயும் நனி வெய்யள்- நம் தாயும் அவனை மிகவும் விரும்புகின்றாள். எந்தையும் கொடீஇயர் வேண்டும்- நம் தந்தையும் அவனுக்கே உன்னை மணம் புரிந்து கொடுக்கவே விரும்புகின்றார். அம்பல் ஊரும்- பழி தூற்றும் இவ்வூரில் உள்ளவர்களும். அவனொடு மொழிமே- உன்னை அவனொடு இணைத்து உனக்கும் அவனுக்கும் காதல் உண்டென்று மொழி கின்றனர். கருத்து: நீ விரும்பிய கணவனுக்கே உன்னை மணம் செய்து வைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆதலால் நீ வருந்தாதே. விளக்கம்: இதுவும் குன்றியனார் என்னும் புலவர் பாட்டு. தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்குத் தோழி கூறிய ஆறுதல் மொழி. தோழி கூற்று. நெய்தல்திணை. கூன்- வளைவு. முண்டகம்- கடற்கரையில் உள்ள முள்ளிச் செடி; இதனைக் கழிமுள்ளி என்பர். பாறுதல்- சிதறுதல். தூ- தூய்மை; வெண்மை. அம்பல்-சிலர் கூடி நின்று அக்கப்போர் பேசுதல். நான் செய்த முயற்சி பாட்டு 52 காதலன் தன் காதலிக்குத் தந்த உறுதிமொழியை மறக்க வில்லை. ‘உன்னை விரைவில் ஊரார் அறிய மணப்பேன்; உடன் உறைந்து இல்லத்திலே இன்பந்துய்ப்பேன்; இருவரும் இணை பிரியாக் காதலர்களாய் மகிழ்ந்து வாழ்வோம்’ என்று அவன் அன்று சொல்லியபடி முயன்றான். அவனுடைய பெற்றோர்களிடம் பெண்கேட்டு முடித்துவிட்டான். விரைவில் அவர்கள் மண மக்களாகப் போகின்றனர். காதலன் செய்த முயற்சி எளிதிலே நிறைவேறத் துணை செய்தவள் தோழி. அவள் தலைவியின் பெற்றோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உண்மையைக் கூறி வைத்திருந்தாள். தலைவியின் தாயார் அவள் காதலை நினைந்து கவலை கொண்டிருந்தபோது அதைத் தெய்வத்தின் கோளாறு என்று எண்ணி அதை நீக்கத் தெய்வத்திற்குப் பூசை போட முயன்றனர். அப்பொழுது தோழி அவர்கள் நினைப்பது தவறு என்று எடுத்துக் காட்டினாள். தலைவியின் துன்பத்திற்குத் தெய்வம் காரணம் அன்று; அவள் கருத்தைக் கவர்ந்த மலைநாட்டுத் தலைவன் ஒருவனே காரணம் என்ற உண்மையை எடுத்துரைத்தாள். அவர்களும் உண்மையறிந்து தலைவியை விரும்பிய அத்தலைவனுக்கு அவளை மணம் நேர்ந்தனர். தோழி செய்த இவ்வுதவி தலைவிக்குத் தெரியாது. தான் விரும்பிய காதலன் தன்னை மணக்க முயல்கிறான்; அவனுக்குத் தன்னைக் கொடுக்க தமர்களும் உடன்பட்டு விட்டனர் என்ற செய்தி அறிந்து தலைவி மகிழ்ச்சியடைந்திருந்தாள். அப்பொழுது தோழி தலைவியைப் பார்த்து, ‘நான் செய்த முயற்சியே உனக்கு இத்தகைய மகிழ்ச்சியை அளிப்பதற்குக் காரணம் என்று கூறினாள். ‘தலைவியே! உனது மகிழ்ச்சிக்குக் காரணம் நான் தான் என்பதை மறந்து விடாதே! அன்று நீ அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தாய்; எங்கே எனது களவு மணம் வெளியாகி விடப் போகிறதோ என்று கலங்கிக் கிடந்தாய். உன் தாயாரும், நீ மலையுறை தெய்வத்தால் பீடிக்கப்பட்டவள் போல நடுங்கு வதைக் கண்டு அத்தெய்வத்திற்குப் பூசை போட விரும்பினர். அப்பொழுது நான் தான் உன்னிடம் உள்ள அன்பின் காரணமாகப் பலமுறை உண்மையை வெளியிட்டேன். அதன் பலன்தான் இப்பொழுது மகிழ்ந்திருப்பது.’ என்று தோழி தான் செய்த முயற்சியை எடுத்துக் காட்டினாள். தலைவியை மேலும் மகிழ்ச்சியடையும்படி செய்தாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல் பாட்டு ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில் சூர், நசைந்து அனையையாய், நடுங்கல் கண்டே நரந்தம் நாறும் குவையிரும் கூந்தல்! நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை! பரிந்தனென் அல்லனோ இறைஇறை யானே. பதவுரை: நரந்தம் நாறும்- நரந்தம் பூவின் மணம் வீசும். குவைஇரும் கூந்தல்- அடர்ந்த நீண்ட கூந்தலையும், நிரந்து இலங்கு வெண்பல்- வரிசையாக விளங்குகின்ற வெண்மையான பற்களையும் உடைய. மடந்தை- பெண்ணே. ஆர்களிறு- தன்னிடம் பொருந்திய ஆண்யானை. மிதித்த- மிதித்த பள்ளத்திலே. நீர்திகழ்- தண்ணீர் நிறைந்து காணப்படும். சிலம்பில் சூர்- மலையில் உள்ள தெய்வத்தால். நசைந்து அனையையாய்- விரும்பப்பட்டதைப் போன்றவளாய். நடுங்கல்கண்டு -நீ நடுங்குவதைக் கண்டு. யான் இறைஇறை- நான் பல தடவைகளில். பரிந்தனன் அல்லனோ- உன் துயரத்தைக் கண்டு வருந்தி உன் தாயாரிடம் உண்மையை உரைத்தேன் அல்லவா? கருத்து: உன் துன்பத்தைக் கண்டு பொறுக்காமல் நான் உன் தாயாரிடம் உண்மையை உரைத்தேன். விளக்கம்: இப்பாடல் பனம்பரனார் என்னும் புலவர் பாட்டு. மணம் கேட்டு மகிழ்ந்த தலைவியைப் பார்த்து, “இந்த மகிழ்ச்சி என்னால் நேர்ந்தது” என்று தோழி கூறியது. குறிஞ்சித் திணை. “நரந்தம் நாறும் குவையிரும் கூந்தல், நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை. ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் சூர், நசைந்து அனையையாய் நடுங்கல் கண்டே யான் இறைஇறை பரிந்தனென் அல்லனோ” என்று பதங்கள் மாற்றப்பட்டன. சூர்- தெய்வம். நரந்தம்- ஒருவகை மலர்; நாரத்தம் பூ வென்றும் கூறுவர். பரிதல்- இரங்குதல். தலைவியின் மகிழ்ச்சியிலே தனக்கும் பங்குண்டு என்று தோழி கூறினாள்; தலைவியுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்தாள். உறுதிமொழி எங்கே பாட்டு 53 ஊரின் புறத்திலே என்றும் வற்றாத நீர்ப் பெருக்குள்ள பெரியதோர் நீர்நிலை. அதன் தோற்றம் பார்வைக்கும் அழகுள்ளது. அங்கு தங்கியிருந்தாலும் இன்பந்தரும். தண்ணென்று காற்று வீசித் தளர்ச்சியை நீக்கும். அந்த நீர்நிலையிலே இறங்கும் துறையும் இனிய காட்சி யுள்ளது. அத்துறையிலே வெண்மணல் பரந்து கிடந்தது. கரையிலே புன்கமரங்கள் பூத்துக் குலுங்கியிருந்தன; அந்தப் புன்க மரங்களி லிருந்து உதிர்ந்த மலர்கள் மணலின் மேல் பரந்து கிடந்தன முருகனுக்குப் பூசை செய்யும் வேலன், ஆடுவெட்டி குறவை யாடிவெறியாட்டு எடுக்கும் இடங்களில் எல்லாம் செந்நெல்லாற் பொறிக்கப்பட்ட வெண்மையான பொரியைச் சிதறியிருப்பான். புன்கமலர் உதிர்ந்து கிடந்த மணல்மேடுகள் வேலன் வெறியாட்டு எடுக்கும் களத்தைப் போலக் காணப்பட்டன. அந்த நீர்நிலையின் துறைகளிலே இக்காட்சியுள்ள மணல் மேடுகள் பல உண்டு. ஊருக்குப் புறத்தேயுள்ள இந்த நீர் நிலையின் துறையிலே ஒரு நாள் ஓர் இளம் பெண்ணும், ஒரு இளங்காளையும் சந்தித்தனர். அவர்களுக்குள் காதல் பிறந்தது. அவர்களுடைய கண்கள் அவர்களை ஒன்றாக இணைத்துவிட்டன. ஒருவர் உள்ளத்திலே ஒருவர் குடி புகுந்துவிட்டனர். அண்டை அயலிலே யாரும் இல்லை. நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவன் தலைவனானான்; அவள் தலைவியானாள்; இருவரும் என்றும் பிரிவதில்லையென்று சூளுரைத்துக் கொண்டனர். தலைவன் அவளுடைய முன் கையைப் பற்றினான். ‘நம் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கும் தேவ மகளிர் அறியும்படி நான் உறுதிமொழி உரைக்கின்றேன். உன்னை விரைவில் மணந்து கொள்ளுவேன். நல்லறமாகிய இல்லறம் நடத்துவேன். இருவரும் இன்புறுவோம். இந்த உறுதிமொழியிலே நான் தவறு வேனேயானால் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் தெய்வங்கள் எனக்குத் துன்பந்தரும். நான் அஞ்சி நடுங்கும்படியான அவ்வளவு துன்பத்தைத் தரும் ஆதலால் நீ என்னைப்பற்றி ஐயங்கொள்ளேல்! அஞ்சேல்! அமைதியுடன் இரு என்று சூளுரை பகன்றான். இவ்வாறு அத்தலைவன், அத்தலைவியிடம் ஒரு முறையன்று, பலமுறை கூறியிருக்கின்றான். அந்த நீர்த்துறையிலே இத்தலைவனும் தலைவியும் பல தடவை சந்தித்திருக்கின்றனர். அவர்கள் சந்தித்த போதெல்லாம் தலைவன் அவளுடைய முன் கையைப் பற்றி இவ்வாறு உறுதிமொழி உரைத்துக் கொண்டே யிருந்தான். ஆனால், தலைவன் தன் உறுதிமொழியை நிறைவேற்ற ஊக்கம் எடுத்துக்கொள்ளவில்லை; மும்முரமாக முயற்சி செய்யவில்லை. காலம் நீண்டு கொண்டே போயிற்று தலைவன் இம்மாதிரி உறுதிமொழியும், தவணையும் சொல்லி மணம் புரிவதைத் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான். இதனால் தலைவி மிகவும் வருத்தம் அடைந்தாள். தலைவன் எப்பொழுதுதான் அவன் சொல்லை நிறைவேற்றுவானோ என்று நினைத்து ஏங்கியிருந்தாள். தலைவியின் எண்ணத்தையும் ஏக்கத்தையும் கண்ட தோழி ஒரு நாள் தலைவனைக் கண்டபோது அவனிடம் நீ ஏன் இப்படிக் காலங் கடத்துகின்றாய் என்று கேட்டுவிட்டாள். ‘தலைவனே! நீ எத்தனை தடவை அந்த நீர்த் துறையிலே தெய்வங்கள் அறியச் சூள் உரைத்தாய்! வாய்மொழியை மீறுவோரைத் தெய்வங்கள் வருத்தும் என்பர்; ஆனால் அத் தெய்வங்கள் உனக்கு ஒரு துன்பமும் செய்யவில்லை. தேவமகளிர் சாட்சியாக நீ கூறிய உறுதி மொழிகள் எம்மைத்தான் துன்புறுத்தின. ஆதலால் இன்னும் நீ காலங் கடத்துவது நீதியோ, நேர்மையோ அன்று’ என்று தலைவனிடம் எடுத்துக் கூறினாள். இவ்வாறு தோழி தலைவனிடம் கூறிய செய்தியைச் சொல்வதே இப்பாடல். பாட்டு எம் அணங்கினவே மகிழ்ந! முன்றில் நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம்ஊர் வியன்துறை நேர்இறை முன்கை பற்றிச் சூர் அரமகளிரொடு உற்ற சூளே. பதவுரை: மகிழ்ந- தலைவனே. முன்றில்- முன்னேயுள்ள. நனை முதிர் புன்கின்பூ- அரும்பு முற்றி மலர்ந்த புன்கமரத்தின் பூக்கள். தாழ் வெண்மணல்- சிதறிக்கிடக்கின்ற வெண்மையான மணலின் காட்சி. வேலன் புனைந்த- வேலனால் அமைக்கப்பட்ட. வெறி அயர்களம் தொறும்- முருகனுக்கு வெறியாட்டு எடுக்கும் இடங்களில் எல்லாம். செம்நெல்- செந்நெல்லால் ஆகிய. வான் பொரி- வெண்மையான பொரிகளை. சிதறி அன்ன- சிந்தியிருப் பதைப் போலக் காணப்படும். எக்கர் நண்ணிய- இத்தகைய மணல்மேடுகள் பொருந்திய. எம் ஊர் வியன் துறை- எமது ஊரில் உள்ள பெரிய நீர்த்துறையிலே. நேர் இறை முன்கை பற்றி-எம் தலைவியின் சிறிய மூட்டுள்ள முன் கையைப்பற்றி, சூர் அர மகளிரொடு- நேர்மை தவறினவர்க்கு அச்சத்தைத்தரும் தெய்வ மகளிரைச் சாட்சியாகவைத்து, உற்ற சூள்- நீ கூறிய உறுதிமொழி. எம் அணங்கின- இப்பொழுது எம்மைத் துன்புறுத்தின. கருத்து: நீ சொல்லிய உறுதிமொழிப்படி விரைவில் மணம் புரிந்து கொள்; அப்பொழுதுதான் எம் துன்பம் தொலையும். விளக்கம்; இது கோப் பெருஞ்சோழன் பாட்டு. மணம் புரியாமல் காலங் கடத்திக் கொண்டு வந்த தலைவனைப் பார்த்துத் தோழி கூறியது. மருதத்திணை ‘மகிழ்ந’ என்ற சொல்லை முதலிலும், எம் அணங்கினவே என்ற தொடரை இறுதியிலும் வைத்துப் பொருள் கூறப்பட்டது. அணங்குதல்- துன்புறுத்துதல். வேலன்- முருகனுக்குப் பூசை செய்பவன்; அவன் கையில் வேல் வைத்திருப்பான். ஆதலால் அவனுக்கு வேலன் என்று பெயர். வேலன் முருகனுக்குப் பூசை போடும் இடத்திலே வெண்மையான நெற்பொரிகளைச் சிந்தியிருப்பான். மணலிலே புன்க மரத்தின் வெண்மையான மலர்கள் சிதறிக் கிடப்பது வேலன் பூசைபோடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் இடத்தைப் போல் காணப்படுகின்றது. வெறி அயர்களம்- பூசைபோடும் இடம். எக்கர்-மணல் மேடு. சூள்- உறுதிமொழி; உண்மையுரை: சத்தியம். ஏ- அசைச் சொற்கள் யான் இங்கே; என் நலன் அங்கே பாட்டு 54 தலைமகன் விரைந்து வருவான்; தன்னை மணந்து கொள்வான்; தன் தனிமைத் துன்பம் தணியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் தலைவி. தலைமகன் தான் வாக்களித்தபடி விரைந்து வந்து மணக்கவில்லை; காலம் கழிந்து கொண்டே போயிற்று. இந்நிலையில் ஏங்கியிருந்த தலைவி தன் துன்பத்தைத் தோழியிடம் கூறி வருந்தினாள். ‘காட்டு யானையானது, வளர்ந்துள்ள இளம் மூங்கிலைத் தன் கையால் வளைக்கின்றது. அதன் குருத்தைத் தின்ன முயல் கின்றது. இச்சமயத்திலே பக்கத்திலுள்ள தினைப் புனத்திலே மேயும் பறவைகளை ஓட்டுவதற்காகக் காவலர்கள் கவண் கல்லை வீசுகின்றனர். அந்தக் கவண் கற்கள் விர் என்று பறந்து செல்கின்றன. அந்த ஓசையைக் கேட்ட யானை பயந்துதான் வளைத்திருந்த மூங்கிலை விட்டுவிடுகின்றது. அந்த மூங்கில், தூண்டில் போட்டு மீன் பிடிப்பவன் தூண்டிலிலே மீன் சிக்கியவுடன் அத் தூண்டிலை விரைந்து மேலே தூக்கினாற் போலச் சட்டென்று மேலே போகின்றது. இத்தகைய காட்சியையுடைய மலைநாட னொடு நான் நட்புக் கொண்டதனால் இன்று நலிவடைகின்றேன். நான் மட்டுந்தான் இங்கேயிருக்கின்றேன்; என்னுடைய எலும்பு, நரம்பு, தோல் பொருந்திய உருவம் மட்டும் தான் இங்கே இருக்கின்றது. என்னுடைய அழகு சீர்குலைந்து விட்டது. அவனும் நானும் சந்தித்த இடத்திலேயே சிந்திச் சிதைந்து விட்டது. அவன் என்னை மணந்து கொள்ளாத காரணத்தால் நான் இங்கும், என்னுடைய அழகு அங்குமாக இருக்கும் நிலைமை நேர்ந்து விட்டது’ என்று கூறினாள் தலைவி. பாட்டு யானே ஈண்டையேனே, என் நலனே ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக், கான யானை கைவிடு பசும்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே. பதவுரை: யான் ஈண்டையேன்- தோழி, யான் மட்டும் இங்கேயிருக்கின்றேன். என் நலன்- என்னோடு சேர்ந்திருந்த எனது அழகு. ஏனல் காவலர்-தினைப் புனத்தைக் காப்போர். கவண் ஒலி வெரீ - விடுகின்ற கவண் கல்லோசைக்கு அஞ்சி, கான யானை - காட்டு யானை. கைவிடு பசும் கழை - கைவிட்ட பசுமையான மூங்கில். மீன் எறி தூண்டிலின் - மீன் விழுந்த தூண்டிலைப் போல. நிவக்கும் - விர்ரென்று மேலே கிளம்புகின்ற. கானக நாடனொடு- காட்டையுடைய அத்தலைவனோடு. ஆண்டு - நாங்கள் ஒன்று கூடியிருந்த அவ்விடத்திலேயே. ஒழிந்தன்று - போய் விட்டது. கருத்து: யான் மட்டுமே இங்குள்ளேன். என் அழகெல்லாம் அங்கேயே போய்விட்டது. விளக்கம்: இப்பாடல் மீனெறி தூண்டிலார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இது காரணப் பெயர். ‘மீனெறி தூண்டில்’ என்னும் தொடர் இப்பாடலில் காணப்படுகின்றது. தலைவன் மணம் புரியாமல் காலத்தைக் கடத்தியபோது, தலைவி, தன் துன்பத்தைத் தோழியிடம் உரைத்தது தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. ஏனல்-தினை; இங்குத் தினைப் புனத்தைக் குறித்தது, நலன் - அழகு, பெண் தன்மை, வெரீஇ - உயிர் அளபெடை வெரீ - அஞ்சி கழை - மூங்கில். நிவக்கும் - உயரும். இன்னும் சில நாட்களே இருப்பாள் பாட்டு 55 தலைமகள் இரவு நேரத்திலே, கொல்லைப் புறத்திலே வேலியோரத்திலே வந்து நிற்கின்றாள். அவன் ஒவ்வொரு நாளும் இரவில் தலைவியைக் காணும் போதெல்லாம் விரைவில் மணந்து கொள்ளுகின்றேன் என்று ஆறுதல் கூறிப் போவான். இவ்வாறு நீண்ட நாட்களாகக் காதல் நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது. மழைக் காலம் தொடங்கிவிட்டது; வடக்கிலிருந்து வாடைக் காற்றும் மெதுவாக வீசத்தொடங்கி விட்டது. இன்னும் தலைவன் தன் வாக்குறுதிப்படி தலைவியை மணந்து கொள்ள ஏற்பாடு செய்யவில்லை. இது தலைவியின் உள்ளத்தையும், தோழியின் நெஞ்சத்தையும் உறுத்திக் கொண்டேயிருந்தது. இன்று அவன் வழக்கம்போல், குறித்த நேரத்தில் கொல்லைப் பக்க வேலியின் புறத்தே வந்து நின்ற போது தலைவி அவனிடம் போகவில்லை தோழி மட்டும் கொல்லைப்பக்கம் போனாள். தலைவன் வந்து காத்திருப்பதைக் கண்டாள். அவன் உள்ளத்திலே தைக்கும்படி சில உண்மையான மொழிகளை உரைத்தாள். இந்தச் சிறிய நல்ல ஊரிலே இப்பொழுது மழையும் குளிரும் தொடங்கிவிட்டது. இங்குள்ள பெரிய நீர்க்கழிகளிலே யுள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி, அலைகள், நிறைந்த நீர்த்திவலைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன. மேகத்தில் படிந்து வந்த ஊதைக்காற்று எல்லாப் பொருள் களிலும் படிந்து அவற்றைக் குளிரச் செய்கின்றது; இவ்வூதைக் காற்றால் பிரிந்திருக்கும் தம்பதிகள் செயலற்றுக் கிடக்கின்றனர். இதனால் துன்பம் தரும் இடமாகி விட்டது; இத்தகைய சில நாட்களை யுடையதாகி விட்டது இவ்வூர்; என்று கூறினாள் தோழி. இவ்வூரிலே தலைவி நீண்ட நாள் உயிர் வாழமாட்டாள். இன்னும் சில நாட்கள்தான் உயிர் வாழ்வாள்; அவள் நிலையாக உயிர் வாழவேண்டுமானால் தலைவன் அவளை இவ்வூதைக் காலம் கழிவதற்கு முன்பே மணந்து கொள்ள வேண்டும் என்று கூறவேண்டிய செய்தியை மேலே குறித்தவாறு சுற்றி வளைத்துச் சொன்னாள். இவ்வாறு தோழி தன் தலைவிக்காகப் பரிந்து பேசிய நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவதே இப்பாடல். பாட்டு மாக்கழி மணிப்பூக் கூம்பத், தூத்திரைப் பொங்கு பிதிர்த் துவலை யொடுமங்குல் தைஇக், கையற வந்த தைவரல் ஊதையொடு, இன்னா உறையுட் டாகும் சின்னாட்டு, அம்மஇச் சிறுநல் ஊரே. பதவுரை: மாக்கழி மணிப்பூக் கூம்ப- பெரிய நீர்க்கழிகளில் உள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி. தூ திரை-வெண்மை யான அலைகளிலிருந்து, பொங்கு பிதிர்த்துவலையொடு- மிகுதியாகச் சிந்துகின்ற நீர்த்துளிகளுடன். மங்குல்தை- மேகத்தைத் தடவிக் கொண்டு. கைஅறவந்த-பிரிந்தோர் செயலறும்படி வந்த. தைவரல்- எல்லாவற்றையும் தடவுகின்ற, ஊதையொடு-ஊதைக் காற்றோடும் கூடி. சிறுநல் ஊர்- இந்தச் சிறிய நல்லஊர். இன்னா உறையுட்டு ஆகும்- துன்பம் தரும் உறைவிடமாக இருக்கின்ற. சின்னாட்டு-சில நாட்களையுடையதாகும். கருத்து: தலைவன் விரைந்து வந்து மணக்கா விட்டால் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாள். விளக்கம்: இப்பாடல் நெய்தற் காற்கியர் என்னும் புலவரால் பாடப்பட்டது. ‘தலைமகன் வேலிக்கு வெளியிலே நிற்கும் போது; ‘அவன் மணந்து கொள்ளாவிட்டால் தலைவி இன்னும் சில நாட்கள்தான் உயிர் வாழ்வாள்’ என்று தோழி கூறியது. நெய்தல்திணை. ‘இச் சிறு நல்லூர் இன்னா உறையுட்டு ஆகும் சின்னாட்டு அம்ம’ என்று இறுதி இரண்டடிகள் மட்டும் மாற்றப்பட்டன. மா கழி- பெரிய நீர்க்கழி, பிதிர்-துளிகள்; சிந்துதல். துவலை- துளி. மங்குல்-மேகம். ஊதை-குளிர் காற்று. உறையுட்டு- உறையுளை யுடையது, தங்கும் இடத்தையுடையது, சின்னாட்டு; சில நாட்களை யுடையது. அம்ம; ஏ; அசைச் சொற்கள். தைஇ; அளபெடை. மிகவும் இரங்கத் தக்கவை பாட்டு 56 பொருள் தேடப் புறப்பட்டான் தலைவன். தலைவன் வரும் வரையிலும் தலைவி துன்புறுவாள்; தனிமையைப் பொறுத்திருக்க முடியாமல் தவிப்பாள் என்பது தோழிக்குத்தான் நன்றாகத் தெரியும்; தலைவனிடம் தலைவி எவ்வளவு அன்பு கொண்டிருக் கிறாள் என்பதைத் தோழியைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. தலைவன் புறப்படப் போகிறான் என்ற செய்தியை அறிந்த வுடனேயே தலைவியின் உள்ளம் தளர்ந்துவிட்டது. வழக்கம் போல் சிரித்து விளையாட வில்லை; தலைவன் போனபின் என்ன செய்வோம் என்று எண்ணி எண்ணி ஏங்கிப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். ஆதலால் தோழி தலைவனைப் பார்த்துத் தலைவியையும் உடன் அழைத்துக் கொண்டு போகும்படி வேண்டிக் கொண்டாள். ‘உள்ளம், உடல், உயிர் அனைத்தையும் உன்னிடமே பறிகொடுத்த தலைவி, நீ இல்லா விட்டால் எப்படி உயிர் வாழ்வாள்? உயிர் வாழ்ந்தாலும் அவள் ஒரு நடைப் பிணமாகத் தான் காட்சி யளிப்பாள். நீ செல்லும் இடத்துக்கு அவளையும் அழைத்துப் போனால்தான் அல்லற்படாமல் அக மகிழ்ந்திருப்பாள்’ என்று வேண்டிக் கொண்டாள், அவள். ‘தோழியே! தலைவியின் தன்மையை நான் அறிவேன். நான் இல்லாவிட்டால் அவள் நலன் இழந்து வருந்துவாள் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் நான் அவளை அழைத்துச் செல்வதால் ஆபத்துக்கள் தாம் அதிகமாகும். நான் செல்லும் வழி கரடு முரடான பாலைநிலம், நிழலும் நீருமற்ற நீண்டவழி. ஆண்களே நடந்து செல்வதற்கு அஞ்சக் கூடிய பாட்டை. பசித்தால் உணவு கிடைக்காது; தாகம் எடுத்தால் தண்ணீர் கிடைக்காது; களைத்தால் தங்குவதற்குத் தகுந்த நிழல் கிடைக்காது. இவை மட்டுமா? வழிப்பறி செய்யும் கள்வர்கள் அவ் வழியிலே உண்டு; கொலை செய்யும் கொடிய விலங்குகளும் அவ்வழியிலே உண்டு; இவ்வழியிலே நான் அவளை எப்படி அழைத்துச் செல்ல முடியும்? அவளிடம் ஆராத அன்பு கொண்டி ருக்கும் என்நெஞ்சம், அவளை இக்கொடிய பாட்டையிலே கூட்டிச் செல்லத் துணியவில்லை. நான் வரும் வரையிலும் அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லிக் கொண்டு அவள் துன்பத்தை அகற்றி யிருப்பதுதான் நீ எனக்குச் செய்யும் நன்மை என்று பதில் கூறினான் தலைவன். இவ்வாறு தோழியினிடம் தான் செல்லும் வழியின் அருமையை எடுத்துரைத்தான். தோழியும், தலைவிக்கு ஆறுதல் கூறினாள். தலைவனும் தன் முடிவின்படி தலைவியைப் பிரிந்து புறப்பட்டுப் போனான். தலைவன் போன பாலை நிலத்திலே தண்ணீர் இல்லை. அவனுக்குத் தாகம் எடுத்தது எங்கேனும் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கின்றதா என்று சுற்றிச் சுற்றித் தவித்தான். இறுதியிலே ஒரு சிறிய நாற்றமெடுத்த நீர்க்குழியைக் கண்டான். அந்த நீர்க்குழி வேட்டையாடும் செந்நாய்களால் தோண்டப் பட்டது. அதிலே தங்கியிருந்த சிறிதளவு தண்ணீரும் அந்த நாய்கள் உண்ட மீதந்தான். அந்தத் தண்ணீரும் சூரிய வெப்பம் தாக்கக் கூடிய வெட்ட வெளியில் இல்லை. ஒரு காட்டு மல்லிகை படர்ந்த புதரின் பக்கத்திலே யிருந்தது. அந்த நீரில் காட்டு மல்லிகைப் பூக்கள் விழுந்து அழுகிக் கிடந்தன. அதனால் அந்த நீரிலிருந்து அழுகல் நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. இதைத் தவிர வேறு எந்த நீரும் அவனுக்கு அகப்பட வில்லை. தாகத்தைத் தாங்க முடியாமல் நாக்கு வறண்டு விட்ட நிலைமையில், அவனால் வேறு என்னதான் செய்ய முடியும். அந்த நீரின் மேல் மிதந்து கொண்டிருந்த அழுகற் பூக்களை ஒதுக்கி விட்டு இரு கைகளாலும் அதனை அள்ளிப் பருகினான். அப்பொழுது அவன் தன் காதலியை நினைத்துக் கொண்டான். ‘வளையல்களை அணிந்த என் காதலி எம் பக்கத் திலிருந்தாள்- அவளையும் இந்தத் தண்ணீரைப் பருகும்படி அழைத்தால்- அவள் உள்ளம் எவ்வளவு வேதனையடையும்? இதை அறியாமல் தானே அவள் என்னுடன் வரவிரும்பினாள்? என் உள்ளத்தில் என்றும் பிரியாமல் அமர்ந்திருக்கும் அவள் மிகவும் பரிதாபத்திற்குரியவள் என்று எண்ணினான். அவளைத் தன்னுடன் அழைத்து வராமலிருந்ததே தான் செய்த நல்ல காரியம் என்று நினைத்துக் கொண்டான் இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு வேட்டச் செந்நாய் கிளைத்து ஊண்மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சின்னீர், வளையுடைக் கையள் எம்மாடு உணீஇயர் வருகதில் அம்ம தானே, அளியளோ! அளியல் என்நெஞ்சு அமர்ந்தோளே. பதவுரை: வேட்டச் செந்நாய்- வேட்டையாட வந்த செந்நாய்கள். கிளைத்து ஊண்மிச்சில்- தோண்டி உண்ட மீதமாகிய. குளவி மொய்த்த- காட்டு மல்லிகை பூக்கள் விழுந்து மூடிய. அழுகல் சில்நீர்- அழுகல் நாற்றம் வீசும் இச் சிறிய நீரை. வளை உடைக்கையள் -வளையல் அணிந்த கையையுடைய. தான்- தலைவியை. எம்மாடு உணீயர்-எம்மோடு கூடவிருந்து உண்ணுவதற்கு. வருகதில்- வருக என்று அழைத்தால். என் நெஞ்சு அமர்ந்தோள்- என் உள்ளத்தில் உறைந்திருக்கும் அவள். அளியளோ அளியல்- மிகவும் இரங்கத் தக்கவளாயிருப்பாள். கருத்து: தீமை நிறைந்த இவ்வழியிலே தலைவி வருவதற்குத் தகுந்தவள் அல்லள். விளக்கம்: இப்பாடல் சிறைக் குடியாந்தையார் என்பவர் பாட்டு. தலைவியை உடன் அழைத்துச் செல்ல மறுத்த தலைவன் தான் சென்ற வழியில் உள்ள கொடுமையைக் கண்டு கூறியது; தலைவன் கூற்று. பாலைத்திணை. வேட்டம்- வேட்டையாடுதல். செந்நாய்கள் இரைதேடி வேட்டையாடும். கிளைத்தல்- தோண்டுதல். குளவி- காட்டு மல்லிகை. அளியல்- இரங்கத்தக்கவள். உணீஇயர்- உயிர் அளபெடை; தில்- அம்ம; ஏ; ஆ; அசைச்சொற்கள். “வளையுடைக் கையள் தானே எம்மோடு உணீயர் வருகதில் அம்ம எம் நெஞ்சு அமர்ந்தோளே அளியளோ அளியல்” என்று மாற்றிப் பொருள் கூறப்பட்டது. செத்தாலும் இன்பம் உண்டு பாட்டு 57 தலைவியின் நடத்தையிலே தாய் தந்தையர்க்கு ஐயம் பிறந்து விட்டது. பருவமடைந்த பெண்களைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள் என்பது சமூக நீதியாக வழங்கியிருந்த காலம் அது. தாம் பெற்ற பெண்ணைப் பற்றிப் பிறர் ஏதேனும் பழி கூறினால் அதைப் பெற்றோர்களால் தாங்க முடியாது. ஆதலால் அவர்கள் அருமையாகப் பெற்று வளர்த்த பெண்ணின் மேல் ஐயம் பிறந்த வுடன் அவளை அல்லும் பகலும் கண்காணிக்கத் தொடங்கினர். வெளியிலே போகவிடாமல் வீட்டிலே மடக்கி வைத்தனர். அவளை வீட்டைவிட்டு வெளியிலே போகவிடுவதில்லை, அதற்குமுன் தோட்டந் துறவுகளுக்குத் தோழிப் பெண்களுடன் சேர்ந்து சென்று விளையாடுவதற்கும் பெற்றோர்கள் தடை போட்டு விட்டனர். பகற் காலத்தில் தான் இத்தகைய தடை இரவுக் காலத்திலாவது எல்லோரும் உறங்கும் சமயம் பார்த்து வெளியில் சென்று வரலாம் என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. தலைவியின் தாய் தூங்குவதில்லை; விழித்துக் கொண்டே அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். தாய் கொஞ்சம் கண்ணயர்ந்த போது வெளியிற் புறப்படலாம் என்று நினைத்தால், தெருவில் கிடக்கும் நாய்கள் உறங்காமல் குரைத்துக் கொண்டிருக்கின்றன. ஊரில் உள்ளவர்களில் பலரும் உறங்காமல் வம்பு பேசிக் கொண்டிருக்கின்றனர். ஊர்க்காவலர்கள் ஆ ஊ என்று முழங்கிக் கொண்டு தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்; கோட்டான்கள் பயங்கரமாகக் கூவுகின்றன. பகல் போல் நிலவொளி வீசுகின்றது. இதைக்கண்டு பொழுது புலர்ந்ததென்று கருதிக் கோழிகள் கூவுகின்றன; இந்த நிலையிலே அவள் எப்படி இரவிலே வெளியில் வரமுடியும்! இவ்வாறு இரவிலும் பகலிலும் தலைவி வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்றாள். அவள் காதலித்துக் கைப்பிடித்த காதலனைக் கண்டு மகிழ முடியவில்லை. அதனால் அவள் உள்ளம் நொந்தாள்; தாங்க முடியாத துக்கத்தால் ஆவி துடித்தாள். தன் துக்கத்தைத் தன் தோழியிடம் சொல்லி வருந்தினாள். ‘தோழியே’ யானும் என் தலைவனும் பல பிறப்புக்களிலும் கணவனும் மனைவியுமாகவே வாழ்ந்தவர்கள் இல்லறம் நடத்தும் முறைகளை அறிந்து இல்லறம் நடத்தி வந்தவர்கள். எங்கள் உடல் வெவ்வேறாக இருந்தாலும், உள்ளமும் உயிரும் ஒன்றுபட்டவை. எங்கள் நட்பு இன்று நேற்று ஏற்பட்ட புதிய நட்பன்று தொன்று தொட்டுத் தொடர்ந்து வந்த நட்பாகும். ஆதலால் எங்களை யாரும் பிரிக்க முடியாது. நீரிலே வாழும் மகன்றில் பறவைகளை உனக்குத் தெரியும். அவற்றின் காதல் வாழ்க்கையைப் பற்றியும் நீ அறிவாய். அவை எப்பொழுதும் ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை; இணைந்திருந்தே உயிர் வாழும், அவற்றின் இணைப்புக்கிடையே ஒரு சிறு மலரிதழ் தடுத்தாலும், அத்தடுப்பை அவை தாங்குவதில்லை. அத்தடுப்பு ஒரு வினாடியாக இருந்தாலும், பல ஆண்டுகள் தம்மைப் பிரித்து வைத்ததைப் போன்ற துன்பத்தையடையும். யானும் என் காதலனும் இப்பறவை போன்ற காதலை யுடையோம். எங்கள் காதல் உணர்ச்சியைப் பிரிக்க முடியாது. ஆதலால் இப்பொழுது நான் தனித்திருந்து வருந்துவதைவிட, நானும் அவரும் ஒன்றாக இணைந்திருக்கும் போது என் உயிர் போய் விட வேண்டும்; இதைத்தான் நான் விரும்புகிறேன். இப்படி, அவனைக் காண முடியாமல் கட்டுக் காவலால் அடக்கப்பட்டு வருந்தியிருப்பதைவிட உயிர் விடுவதே சிறந்தது அவனோடு ஒன்றுபட்டிருக்கும் போதே என்னுயிரும், அவனுயிரும் நீங்குமாயின் அதுவே என் எண்ணம் ஈடேறுவதற்கு வழி. மீண்டும் இருவரும் காதலன் காதலிகளாகப் பிறந்து இடையறாத இன்பத்தை நுகர்வோம். ஆகையால் வீட்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை, வெறுக்கின்றேன்’, என்று கூறினாள். தலைவி இவ்வாறு சொல்லித் தன் கற்பின் உறுதியை வெளியிட்டாள். களவு மணம் புரிந்து கொண்ட அக்காதலனே தனக்கு முன் பிறவிகளிலும் கணவனாயிருந்தவன்; வரும் பிறவி களிலும் கணவனாக இருக்கப் போகின்றவன். ஆதலால் எங்களுடைய நட்பு பிரிக்க முடியாத தெய்வீக நட்பு. இந்த நட்புக்கு ஏன் என் பெற்றோர் இவ்வாறு தடை விதிக்கின்றனர்? என்ற கருத்தையும் தலைவி வெளியிட்டாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவது இப்பாடல். பழந்தமிழ்ப் பெண்களின் சிறந்த கற்பு நெறியை உணர்த்தும் பாடல்களிலே இதுவும் ஒன்றாகும். பாட்டு பூஇடைப் படினும் யாண்டு கழிந்து அன்ன நீர்உறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவு அரிதுஆகிய தண்டாக் காமமொடு உடன்உயிர் போகுக! தில்ல, கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே பதவுரை: கடன் அறிந்து-தோழியே செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து ஒழுகி, இருவேம் ஆகிய-கணவன் மனைவி யென்னும் இருவராகவே. உலகத்து-பல பிறவிகளிலும் பிறந்து வாழ்ந்த இவ்வுலகிலே. ஒருவேம் ஆகிய- இப்பொழுது தனித்தனி பிரிந்து வாழ்வதாகிய இத்துன்பத்திலிருந்து. உயற்கு-விடுபடு வதற்கு, பூ இடைப்படினும்-மலர் தங்களிடையே நின்று சிறிது நேரம் தடுத்தாலும், யாண்டு கழிந்தன்ன-அதனால் பல ஆண்டுகள் கழிந்தது போன்ற துன்பத்தையடைகின்ற. நீர் உறைமகன்றில்- நீரிலே வாழ்கின்ற மகன்றிற் பறவையின். புணர்ச்சி போல-ஒன்று பட்ட வாழ்க்கையைப் போல. பிரிவு அரிதாகிய-பிரிவதற்கு முடியாத, தண்டாக் காமமொடு-நீங்காத அன்புடன் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போதே. உடன் உயிர் போகுக-ஒன்றாகவே எங்கள் உயிர் போக வேண்டும். கருத்து: தலைவனைப் பிரிந்து தனித்திருப்பதைவிட உயிர் விடுதலே சிறந்ததாகும். விளக்கம்: இதுவும் சிறைக் குடியாந்தை யார் என்னும் புலவர் பாடல். வெளியில் போக முடியாமல் காவலுக்கு உள்ளாக்கப்பட்ட தலைவி, ‘தலைவனும், நானும் தனித்திருப்பதைவிட, ஒன்றாக இருந்து உயிர் விடுவதே சிறந்தது’ என்று தன் தோழியிடம் உரைத்தது தலைவி கூற்று. மருதத்திணை. ‘கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கு’ என்பதை முதலில் வைத்துத் தொடர்ந்து பொருள் கூறப்பட்டது. தண்டா - கெடாத. கடன்-கடமை. புன்மை- துன்பம். உயல் உய்தல்; தப்பித்துக் கொள்ளுதல்; விடுபடுதல். தில்ல; ஏ-அசைச் சொற்கள். மகன்றில்-தண்ணீரிலே வாழ்கின்ற ஒருவகைப் பறவை. இப்பறவைகள் ஆணும் பெண்ணும் எப்பொழுதும் பிரியாமல் இணைந்து வாழும் இயல்புள்ளவை. பழந்தமிழ் மக்களிடம் மறுபிறப்பிலே நம்பிக்கையிருந்தது என்பதை இப்பாடல் குறிக்கின்றது. தலைவி தன் துயரத்தைத் தோழியினிடம் உரைப்பதற்குக் காரணம், அவளால் தன் துன்பம் ஒழியும் என்பதுதான். தலைவியின் உறுதியான காதலை அறிந்த தோழி சும்மாவிருக்க மாட்டாள். தாய்மார்களிடம் தலைவியின் மன நிலையை அறிவிப்பாள்; அவள் காதலித்திருக்கும் கணவன் இன்னான் என்பதையும் அறிவிப்பாள்; தலைவியின் பெற்றோர்களும் உண்மையறிந்து தங்கள் பெண்ணுக்கு அவள் காதலித்த கணவனை மணம்புரிந்து வைப்பர். இச்சிறந்த தமிழர் வழக்கத்தை உணர்த்தும் பாடல்களிலே இதுவும் ஒன்று. எனது நோயை நீக்க முடியுமா? பாட்டு 58 தன் தோழனுடன் வேட்டைக்குக் சென்றான் ஒரு தலைவன். அவன் கண்ணிலே ஒரு மான் காணப்பட்டது. அது ஓட்டத்திலே ஒப்பற்றது; பொல்லாத புள்ளிமான்; அதைக் குறிவைத்து அம்பு தொடுத்தான் அவன் குறிக்கு அது அகப்படவில்லை; வளைந்து வளைந்து, துள்ளித்துள்ளி ஓடிற்று. தலைவனும் அதனை விடாமல் விரட்டிச் சென்றான். தோழனால் தலைவனைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அவன் பின்தங்கி விட்டான்; தலைவன் வருகைக்காகக் காத்திருந்தான். மானை விரட்டிக் கொண்டு சென்ற தலைவன் அதன் மீது அம்பெய்ய முடியவில்லை; அவன் குறி வைத்து எய்த அம்புகள் எல்லாம் வீணாயின. மான் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு மறைந்துவிட்டது. மானைத் தப்பவிட்ட அவன், அந்த மாலை நேரத்திலே ஒரு சோலையின் நீர் நிலையண்டை வந்து நின்றான். பசித்துக் களைத்தவன், மரத்திலே பழுத்துத் தொங்கும் மாங்கனியைக் கண்டவன் போல அங்கே வேறொரு மானைக் கண்டான். அது அவன் அம்பெய்ய விரட்டிச் சென்றதைப் போன்ற விலங்கினத்தைச் சேர்ந்த புள்ளிமான் அன்று, அது மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண் மான். கண்ணம்பை வீசி அவன் கருத்தைக் கலக்கும் அழகான மங்கை மான். அவளை அணுகினான். இருவர் பார்வைகளும் இணைந்தன. அன்பால் இருவரும் ஒருவராயினர். பல நாழிகை அவளுடன் இருந்து, வேட்டைக்கு வந்த பலனைவிட எண்ணற்கரிய இன்பத்தை நுகர்ந்தான். பின்னர்; அவளிடம், என்றும் பிரியேன்; இந்த மலை நிலத் தெய்வமாகிய முருகன் முன்னிலையில் உறுதியாகக் கூறுகிறேன்; விரைவில் உன்னை மணப்பேன்’ என்று உறுதி மொழி உரைத்தான். பின்னர் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு தன் பாங்கனைத் தேடி வந்தான். பாங்கன் தன் தோழன் வரும் வழியை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தான். காலம் கழிவது கண்டு கவலை யடைந்தான். அவன் வழிதவறி எங்குச் சென்று இன்னல் அடைகின்றானோ என்று ஏங்கினான். தோழன் கதிரவன் தன் செங்கதிர்களை ஒடுக்கிக் கொண்டு மேலைத் திசையிலே மறைந்து கொண்டு இருக்கின்றான். இவ்வளவு நேரம் ஆகி விட்டதே, இன்னும் காணவில்லையே, என்ற ஏக்கத்துடன் அவன் சென்ற வழியை உற்று நோக்கினான். இச்சமயத்திலே தலைவன் விரைந்து வந்து கொண்டிருந்தான். அவன் வரும் போதே மிகவும் மகிழ்ச்சி யுடனும் உற்சாகமுடனும் காணப்பட்டான். அவனிடத்திலே என்றுமில்லாத ஒரு புதிய மாறுதல் காணப்பட்டது. அவன் உள்ளத்திலே உவகை துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. அவன் பார்வையிலும் முகத்திலும் பலவகையான மாறுபாடுகள் காணப்பட்டன. தலைவனிடம் இத்தகைய மாறுபாட்டைக் கண்ட பாங்கன் ஐயமுற்றான். தலைவன் போன விடத்திலே ஏதோ அதிசயம் நடந்திருக்க வேண்டும்; அதனால்தான் இவன் இப்படிக் குதூகல மாகக் காணப்படுகின்றான் என்று எண்ணினான். ‘நண்பனே’ நீ துரத்திச் சென்ற மானைத் தொலைத்து விட்டாயா? சென்ற காரியத்திலே சிறந்த வெற்றி கிட்டியிருக்கும் என்று நம்புகின்றேன். வெற்றிக் களிப்பை உன் முகத்தில் காண்கின்றேன். என்ன! நான் நினைப்பது சரிதானா? என்று கேட்டான் தோழன். ‘தோழனே, நீ நினைப்பது போல் நான் அந்த மானுக்கு ஒரு அல்லலும் விளைக்கவில்லை. அது என்னைவிட்டுத் தப்பிப் போய்விட்டது. அந்தப் புள்ளி மானைத் தொடர்ந்து போன விடத்திலே மற்றொரு பொன்மான் கிடைத்தது. அதன் கண்ணடிப்பிலே ஈடுபட்டேன். அது அழகிய பெண் மான். என் கண்ணையும் கருத்தையும் அப்படியே தன்னிடம் கவர்ந்து கொண்ட உயிரோவியம்; நான் செய்த நற்செய்கையின் பலனே அந்தப் பெண்மானை நான் காணச் செய்தது என்றான் தலைவன். ‘நண்பனே! இப்பொழுது தெரிந்து கொண்டேன் உன் மகிழ்ச்சிக்குக் காரணம் இன்னதென்று. உன் செய்கையால் உன் உள்ளம் களிப்படையலாம். ஆனால் முன்பின் எண்ணிப் பாராமல் திடீரென்று ஒரு பெண்ணிடம் கருத்தை இழப்பது கண்டிக்கத் தக்கது. அழகிய பெண் ஆராயிருந்தாலும் அவளிடம் நெஞ்சத்தை அடகு வைத்து விடலாமா? இது ஆண்மைக்கும் அறிவுக்கும் ஏற்ற தாகுமா? கல்வியும், அறிவும் ஆண்மையும் உள்ள நீ உன் கருத்தை இப்படிக் கலங்க விடலாமா? இப்பொழுதே உன் உள்ளத்தைக் கவர்ந்த அந்த மங்கையை மறந்துவிடு என்று சிறிது சினத்துடன் கூறினான் தோழன். 1இடித்துரைக்கும் உரிமையுள்ள நண்பரே! குற்றம் கண்டால் அதைக் கண்டித்து அறிவுரை கூறும் உரிமை உமக்குண்டு நீர் எது சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். என் நெஞ்சம் பொறுக்கவில்லை என்பதற்காக உமது நேர்மையான அறிவுரை களுக்கு உள்ளம் வருந்த மாட்டேன். நீர் எனது உயிர்த் தோழர்; என்னுடைய இன்பதுன்பங்களிலே உமக்கும் பங்குண்டு. இப்பொழுது என்னைக் கவ்விக் கொண்டிருக்கும் காம நோய் பெரிது. அது உள்ளத்தையும் உடம்பையும் தன் வசமாக்கிக் கொண்டு வளர்ந்து வருகின்றது. இதனை வளரவொட்டாமற் செய்வது உமது வேலையாக இருக்குமானால் நன்று. எனக்குப் பேருதவி புரிந்தவராவீர். என்னைப் பிடித்த இந்த நோயை என்னால் அடக்கிப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அதன் இயல்புக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளும். நல்ல உச்சிவெய்யில் தாக்கும் ஒரு மலைப் பாறை; அப்பாறையின் மேல் ஒரு வெண்ணெய் உருண்டை; அது உருகி வீணாக ஓடிவிடாதபடி ஒரு ஊமை காவல் காக்கின்றான்; அவனுக்குக் கைகளும் இல்லை. கண்ணாலாயே காவல் காக்கின்றான். இவனால் அந்த வெண்ணெயை வீணாகாதபடி எப்படிப் பாதுகாக்க முடியும்? வெண்ணெய் வெய்யிலிலே உருகி வீணாகின்றது, ஓடிவாருங்கள் என்று பிறரைக் கூவியழைக்க வாயும் இல்லை; வெய்யிலில் உருகும் அந்த வெண்ணெய் உருண்டையை நிழலிலே எடுத்து வைக்க அவனுக்குக் கையும் இல்லை. இந்த நிலையிலே அந்த வெண்ணெய் உருகிக் கற்பாறை முழுவதும் பரவி வீணாகாமல் என்னதான் செய்யும்? அந்த ஊமையாகிய முடவனைப் போலத்தான் நான் இருக் கின்றேன். என் உள்ளத்திலே குடியேறிய காதல் நோயை என்னால் அடக்கிப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை; அதைப் பற்றிப் பிறரிடம் கூறி ஆறுதல் அடையும் ஆற்றலையும் இழந்தேன்; ஆதலால் அந்நோய் என் உள்ளமெல்லாம் உருகிப் பரவுகின்றது. நான் என்ன செய்வேன்’ என்று கூறினான். தலைவன். இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவதே இப்பாடல். பாட்டு இடிக்கும் கேளிர்! நும்குறையாக நிறுக்கல் ஆற்றினோ நன்று; மன்தில்லை; ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே. பதவுரை: இடிக்கும் கேளிர்-இடித்துரை கூறும் உற்ற நண்பரே! நும் குறையாக -உமது காரியமாக, நிறுக்கல் ஆற்றின் ஓ-என் காம நோயைத் தடுத்து நிறுத்த முடியுமானால். நன்று- அது சிறந்த நன்மையாகும். ஞாயிறு காயும்-சூரியன் வெய்யிலில் காய்கின்ற, வெவ்அறை மருங்கில்- வெப்பமான கற்பாறையிலே கைஇல் ஊமன் - கையில்லாத ஊமை ஒருவன். கண்ணின் காக்கும் தன் கண்ணால் மட்டும் பாதுகாக்க முயல்கின்ற. வெண்ணெய் உணங்கல்போல - வெண்ணெய் உருகுவதைப் போல இந்நோய் கொளற்கு அரிது - என்னால் பொறுத்துக் கொள்வதற்கு முடியாதது. கருத்து: காதல் என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டது. என்னால் இனி அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. விளக்கம்: இப்பாடல் வெள்ளி வீதியார் பாட்டு. தனக்குப் புத்தி புகட்டிய பாங்கனிடம் எனது காதல் நோய் பொறுக்க முடியாதது; இதனை நீங்கச் செய்தால் நன்று’ என்று தலைவன் கூறினான். குறிஞ்சித்திணை. ‘இந்நோய் பரந்தன்று; நோன்று கொளற்கு அரிது’ என்று இறுதியடி மட்டும் மாற்றப்பட்டது. மன்; தில்ல; ஓ; ஏ; அசைச் சொற்கள். இடித்தல்-குற்றங் கண்டபோது நெருங்கிக் கண்டித்தல். குறை-காரியம். அறை-கற்பாறை. உணங்கல் - உருகுதல். நோன்றல். பொறுத்துக் கொள்ளுதல். உன்னை மறப்பரோ? பாட்டு 59 பொருள் தேடப் போய் விட்டான் தலைவன். அவன் போகும் போது மலர்ந்த முகத்துடன் விடை கொடுத்தனுப்பினாள் தலைவி போனபின் அவள் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. வெய்யிலிலே பிடுங்கியெறிந்த அல்லித்தண்டு போல் வதங்கிப் போனாள். கொடி படர்வதற்குக் கொம்பு வேண்டுமல்லவா? படர்வதற்கு ஊன்றிய கொம்பைப் பறித்து விட்டால் அந்தக் கொடி கீழே கிடந்து துவளத்தானே செய்யும்? அது போல ஆயிற்று அவள் நிலை. தலைவியின் இந்தத் தளர்ச்சியைக் கண்டு தோழியும் வருந்தினாள். தலைவியின் துக்கத்தை மாற்றப் பல ஆறுதல் மொழி களை உரைக்கத் தொடங்கினாள். ‘தலைவியே நீ வருந்த வேண்டாம்; உன் தனிமை விரைவிலே ஒழிந்து விடும்; காதலர் உன் உள்ளத்தை உணராதவர் அல்லர். அவர் மனம் கரையாத கருங்கல் அன்று; பிறர் துயரைக் கண்டால் உருகும் தன்மையுள்ளது அவர் உள்ளம். மாக்கிணை யென்னும் வாத்தியத்தைத் தாளத்தோடு இயக்கிக் கொண்டு இசைபாடி வரும் பரிசிலரைக் கண்டாலே அவர் நெஞ்சம் இளகி விடும்; அவர்கள் வறுமை தீரச் செல்வங்களை வாரி வழங்குவார். இத்தகைய இளகிய நெஞ்சு படைத்த அவர் உன்னை மறக்கவே மாட்டார். அரலை யென்னும் மலையிலே, அகலமும், ஆழமும் பொருந்திய சுனையிலே குவளை மலர்கள் பூத்துக் கிடக்கும். அதன் பக்கங்களிலே காட்டு மல்லிகைகள் பூத்து மணங் கமழ்ந்து கொண்டிருக்கும். இந்தக் குவளை மலர்களைக் காட்டு மல்லிகைப் பூக்களுடன் இணைத்துக் கட்டி நின் கூந்தலிலே அணிந்திருக் கின்றாய். இம் மலர்களின் நறுமணம் உனது நெற்றியிலும் வீசிக் கொண்டிருக்கிறது. உனது இந்தக் காட்சியை அவர் உள்ளம் என்றும் மறவாது. அவர் பாலை நில வழிகள் பலவற்றைக் கடந்து சென்றாலும் நாடிய பொருள் முழுவதையும் பெற்றுவிட முடியாது. பொருள் தேடச் சென்றவர்கள் தமக்கு வேண்டிய செல்வத்தை முயன்று தேடினால்தான் பெற முடியும். போன இடத்தில் உடனே அள்ளிக் கொண்டு வருமாறு அவ்வளவு எளிதிலே செல்வம் கிடைப்ப தில்லை. ஆயினும் அவர் பொருளுக்காகக் காலங் கடத்தமாட்டார். விரைவில் காரியத்திலே வெற்றி பெற்றுத் திரும்பிவிடுவார். உனது நினைப்பே அவரைத் திரும்பும்படி செய்யும். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவர் பிரியும் போது உன் நெற்றியைத் தடவிக் கொடுத்தார்; அன்புரைகள் புகன்றார்; தன் வருகை நீடித்தால் உன் அழகு சிதையும் என்பதையும் அறிவார். சுனைகளிலே பூத்திருக்கும் மலர்களைக் காணும்போதெல்லாம் உன் முகத் தோற்றமே அவர் உள்ளத்திலே உலவும். ஆதலால் நீ வருந்த வேண்டாம்; பொறுத் திரு; விரைவில் வந்து உன்னை இன்புறச் செய்வார் என்று ஆறுதல் மொழிகள் உரைத்தாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகின்றது இப்பாடல். பாட்டு பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்; அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டுசுனைக், குவளையொடு பொதிந்த குளவிநாறும், நின் நறுநுதல் மறப்பரோ; மற்றே, முயலவும் சுரம்பல விலங்கிய அரும்பொருள் நிரம்பா, ஆகலின் நீடலோ இன்றே. பதவுரை: பதலை பாணி- ஒரு கண் உள்ள மாக்கிணை யென்னும் வாத்தியத்தைத் தாளத்துடன் இயக்கும். பரிசிலர்- பாணர் முதலிய இரவலர்களைப் பாதுகாக்கும். கோமான்- தலைவனுடைய. அரலை குன்றத்து- அரலை என்னும் மலையிலே-அகல்வாய்க்குண்டுசுனை- அகலமான வாயையும் ஆழத்தையும் உடைய சுனையிலே. குவளையொடு -பூத்த குவளை மலர்களோடு, பொதிந்த குளவி- சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகைப் பூவின் மணம். நாறும் நின்நறு நுதல்-வீசிக் கொண்டிருக்கின்ற உன்னுடைய நல்ல நெற்றியை. மறப்பரோ- மறந்து விடுவரோ (மறக்கமாட்டார்). முயலவும்-பல நாட்கள் வருந்தி முயன்றாலும். சுரம் பல விளங்கிய- பாலை நில வழி பலவற்றைக் குறுக்கிட்டுச் சென்று தேடும். அரும் பொருள்- கிடைப்பதற்கு அரிய செல்வம். நிரம்பா- எளிதிலே போதுமளவு கிடைத்து விடாது. ஆதலின் - இவ்வுண்மை அவருக்குத் தெரியும் ஆதலால். நீடல் இன்று - அவர் பொருள் தேடப் போயிருக்கும் காலம் நீளாது; விரைவில் வருவர். கருத்து: தலைவர் எப்பொழுதுமும் உன்னையே நினைத் திருப்பவர்; ஆதலால் தாமதிக்க மாட்டார்; விரைவில் திரும்புவார். விளக்கம்: இது மோசி கீரனார் என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடச் சென்ற தலைவனை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள் தலைவி. ‘தலைவர் உன்னை மறவார்; விரைவில் வருவார்’ என்று ஆறுதல் மொழிகள் உரைத்தாள் தோழி. பாலைத் திணை. பதலை-ஒரு புறத்தில் மட்டும் வாசிக்கக் கூடிய ஒரு வாத்தியம். பாணி-தாளம். அரலைக் குன்றம்-அரலை என்னும் பெயருள்ள தலை. அரலை; ஒரு குன்றின் பெயர். குண்டு-ஆழம். ஓ; மற்று; ஏ: ஓ; ஏ; அசைச்சொற்கள். இச்செய்யுளில் செல்வத்தின் அருமையும் சிறப்பும் கூறப்பட்டது. அருஞ்சுரங்கள் பலவற்றைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டுதல் பண்டைத் தமிழர்கள் வழக்கம். செல்வம் எளிதிலே கிடைப்பதன்று; முயற்சியினால்தான் கிடைக்கும். இக் கருத்துக்களை இப்பாடலிலே காணலாம். காணுதலும் இன்பமே பாட்டு 60 தன்னால் ஆனவரையிலும் துன்பத்தை அடக்கிப் பார்த்தாள் அவள்; பல நாழிகைகள், பல நாட்கள், பலவாரங்கள், பல மாதங்கள் கழிந்து விட்டன. எவ்வளவு மாதங்கள்-தான் உள்ளத்திலே கொதித்துக் கொண்டிருக்கும் கொடுந் துன்பத்தை தடுத்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு நாள் அவள்- தலைவனைப் பிரிந்திருக்கும் அத்தலைவி தன் துயரத்தை வாய்விட்டுச் சொல்லி விட்டாள். தனக்காக வருந்தியிருக்கும் தன் தோழியிடம் தன் தனிமையைச் சொல்லி வருந்தினாள். “தோழியே! பிரிந்து போன தலைவர் இன்னும் வரவில்லை அவரை எண்ணி எண்ணி என் உள்ளம் ஏங்கித் தவிக்கின்றது. என்னுடைய நிலைமை எப்படி யிருக்கின்றது என்பதை நானே சொல்லுகிறேன் கேள். பெரிய மலை; நல்ல ஆற்றல் உள்ளவர்களும் ஏறிச் செல்ல முடியாத அவ்வளவு உயர்ந்த மலை. அந்த மலையிலே எங்குப் பார்த்தாலும் குறுகலான அடிப்பாகத்தையுடைய கூதாளிச் செடிகள் முளைத்துப் பரந்து கிடக்கின்றன. அவை காற்றினால் அசைந்து கொண்டிருக்கின்றன. இந்த மலையின் மீது ஒரு உயர்ந்த சிகரத்திலே நிரம்பிய தேன் உள்ள தேனடை காணப்படுகின்றது அந்த அடையைப் பார்த்தவர்கள் எல்லாம் நாக்கிலிருந்து தண்ணீரைச் சொட்ட விடுகின்றனர். இந்தத் தேன் அடையை இரண்டு கால்களும் இல்லாத ஒரு முடவன் கண்டான். அவனால் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது; நகர்ந்துதான் போக வேண்டும்; இவன் அந்த நீண்ட மலைச் சிகரத்தில் உள்ள தேனை எடுத்து அருந்த ஆசைப்பட்டான். மலையின் அடியிலேயே உட்கார்ந்து கொண்டான். தன் உள்ளங்கையைச் சிறிய பாண்டம்போல் குவித்துக் கொண்டான். அந்தத் தேனடையைக் குறித்து அதற்கு நேராக எந்திக் கொண்டான். அந்தத் தேன் தன் கையிலே சிந்துவதாக மனத்திலே மதித்துக் கொண்டான். கைநிறைந்த தேனைப் பருகுவதாகவும் பாவனை செய்து கொண்டான். குவிந்த தன் கையை நாவினால் நக்கிச் சுவைத்துக் கொண்டிருந்தான். தன்னால் அந்தத் தேனை எடுக்க முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆயினும் அந்தத் தேனடையைப் பார்ப்பதிலும், அத்தேன் தன் கையில் நிரம்பியதாக நினைத்துக் கொண்டு அந்தக் கையை நக்கிச் சுவைப்பதிலும் அவனுக்கோர் இன்பம். நானும் அந்த முடவனைப் போலவாவது என் காதலருடைய இன்பத்தைப் பெற எண்ணித் தவிக்கின்றேன். அவர் என்னிடம் இரக்கம் காட்டாமல் போனாலும் போகட்டும் என்னுடன். ஒன்றாக இணைந்திருந்து இன்பத்தை நல்கா விட்டால் விடட்டும். என்னை விட்டு அவர் தனியே விலகி நின்றாலும் நிற்கட்டும். நான் அவரைப் பலமுறை என் கண்களால் காணுவதனாலேயே இன்பமடைவேன். அவர் உருவத்தைப் பல முறை பார்ப்பதே என் உள்ளத்திற்கு ஒப்பற்ற பேரின்பமாகும். இந்த வாய்ப்பைக் கூடப் பெறமுடியாமல் நான் வருந்துகின்றேன்.” இதுவே அத்தலைவி தன் தோழியிடம் உரைத்தது. இதனைக் கூறுவதே இப்பாடல். பாட்டு குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி ஆங்குக் காதலர் நல்கார் நயவார் ஆயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே பதவுரை: குறும்தாள்- தோழியே! குறுகிய அடியை யுடைய. கூதளி ஆடிய-கூதாளஞ் செடிகள் காற்றினால் அசைந்து கொண்டிருக்கின்ற. நெடுவரை-உயர்ந்த மலை உச்சியில்உள்ள. பெருந்தேன் கண்ட-பெரிய தேன் அடையைப் பார்த்த. இருக்கை முடவன்- நடக்க முடியாமல் இருந்த இடத்திலேயே இருக்குந் தன்மையுள்ள ஒரு முடவன். உள்கை சிறுகுடை கோலி-உள்ளங் கையைச் சிறிய பாத்திரத்தைப் போலக் குவித்துக் கொண்டு. கீழ்இருந்து-அந்த மலையின் அடியிலேயே இருந்து கொண்டு. சுட்டுபு-அந்தத் தேனடையைக் குறித்து. நக்கியாங்கு -தன்கையை நக்கிக் கொண்டிருப்பதைப்போல. காதலர் நல்கார் நயவார் ஆயினும்-காதலர் எனக்கு நன்மை செய்யாவிடினும், என்னை விரும்பாவிடினும், பல்கால் காண்டலும்-அவரை நான் பலமுறை என் கண்களால் பார்த்துக் கொண்டிருப்பதனாலேயே உள்ளத்துக்கு இனிதே-என் உள்ளத்துக்கு இன்பமாகும். கருத்து: தலைவரைக் காணாமலிருத்தல் எனக்குத் துன்பம். அவரைக் கண்டால் கூட நான் இன்பம் அடைவேன். விளக்கம்: இது பரணர் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவால் வருந்தியிருந்த ஒரு தலைவி, தன் தோழியைப் பார்த்து அவரைக் கண்டாலே என் துன்பம் தொலையும்; இன்பம் அடைவேன் என்று கூறினாள். தலைவி கூற்று. பாலைத்திணை. கூதளி- கூதளி என்னும் செடி. உள்கை- உள்ளங்கை. கோலுதல்- குவித்தல்; குவித்துக் கொள்ளுதல். ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல’ என்பது ஒரு பழமொழி. இப்பாடலில் முடவன் மலைத்தேனுக்கு ஆசைபட்டுக் கிடைக்காவிட்டாலும், அவன் தன் ஆவலை நிறை வேற்றிக் கொள்ளும் வகை இதுவென்பது எடுத்துக்காட்டப்பட்ட தலைவனைக் கண்டு இன்புறும் தலைவிக்கு மலைத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் உவமானம். அன்பால் இன்புற்றோம் பாட்டு 61 தலைவன் கணிகையர் இன்பத்தை நாடிப் பிரிந்து போனான்; அவன் பரத்தையர்களுடன் கூடிக் குலாவியிருந்தான். அவர்களுடன் சேர்ந்து பொய்கைகளிலே நீராடிக் களித்தான். இப்படிச் சில நாட்கள் காலங்கழித்தான். பிறகு அவர்களுடன் கூடிக் காலங்கழிக்க அவன் விரும்பவில்லை. அவர்கள் காசுக்குத் தகுந்த இன்பந் தருகிறார்களே அன்றி உண்மையான காதலுடையவர்கள் அல்லர் என்ற உண்மை அவனுக்குத் தெரியும். ஆயினும் அவன் தன் புலன்களை அடக்கும் ஆற்றல் அற்றவனாய் அவர்களுடன் கூடித்திரிந்தான். பரத்தையர் இன்பம் சலித்துப் போயிற்று. வேப்பங்காயில் சர்க்கரைப்பாகு மூடியிருந்தால் அதனை எவ்வளவு நேரம் சுவைக்க முடியும். பாகு கரைந்தவுடன் காயின் கசப்பு நாக்குக்கும், மனத்திற்கும், வெறுப்பைத் தரும் அல்லவா? இது போலவே பரத்தையரின் மேலன்பு வெளிப்பட்டவுடன் அவர்கள் உள்ளத்தின் உண்மை நோக்கத்தை உணர்ந்து வெறுப்புக் கொண்டான் தலைவன். தன்னிடம் உண்மைக் காதல் கொண்ட இல்லாளின் நினைப்பு அவன் உள்ளத்திலே எழுந்தது. அவளிடம் சென்று தான் செய்த பிழையைக் கூறி, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவள் அன்புக் குரியவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவன் பிடரியைப் பிடித்துத் தள்ளியது. ஆதலால் அத்தலைவன், தனது தோழர்களையும், பாணர் களையும் தலைவியிடம் தூதாக அனுப்பி வைத்தான். தான் வீட்டிற்கு வந்தால் தலைவி தடையில்லாமல் வரவேற்பாளா? தன் பிழையை மன்னித்து, தன்னிடம் பழமை போல் அன்புகாட்டு வாளா? நகைமுகம் காட்டி, இன்சொற் பேசி நன்றாக வரவேற்பாளா? என்று தெரிந்துகொண்டு வருவதற்கே அவன் தூதனுப்பினான். தூதுபோன பாணர் முதலியவர்கள் தலைவியிடம் நேரே சென்று பேச முடியவில்லை. அவள் இவர்களிடம் முகங்கொடுத்துப் பேச முற்றிலும் சம்மதிக்கவில்லை. அவ்வளவு கடுஞ்சினத்துடன் இருந்தாள். ஆதலால் தூதர்கள் அவளுடைய தோழியிடம் தலைவன் கருத்தை அறிவித்தனர். தோழிக்குத் தன் தலைவியின் உள்ளம் நன்றாகத் தெரியும். ஆதலால் அவளே தலைவனிடமிருந்து வந்த தூதர்களுக்குத் தகுந்த விடைகொடுத்தாள். அவள் அளித்த விடை தலைவனுக்கு நல்ல சூடு போட்டது போல் இருந்தது. ‘தலைவனுக்காகப் பரிந்து பேசும் தூதர்களே; தலைவன் பரத்தையரை நாடிச் சென்றதைக் கண்டு என் தலைவி ஆத்திரம் அடைந்தாள். ஆனால் ஆவி சோர்ந்துவிடவில்லை. தலைவன் என்றைக்கிருந்தாலும் ஒரு நாள் தன் காதலை நாடித் தானாகவே வருவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆதலால் அவள் தலைவனை வெறுத்து விடவும் இல்லை. கசந்த சொற்களைக் கூறிக் கடிந்து விடவும் இல்லை. பெரியோர்கள் பெரிய தேரிலே-குதிரைகள் கட்டிய பெரிய தேரிலே-ஏறி ஊர்ந்து இன்பம் அடைவார்கள். விளையாடும் பருவம் உள்ள குழந்தைகளால் தேரின் மேல் ஏறி ஊர்ந்து இன்பமுற முடியாது. ஆயினும் தச்சனால் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டிய சிறு தேரைத் தம் கைகளால் இழுத்து இன்புறுவார்கள். இதை நாம் கண் கூடாகப் பார்க்கின்றோம். நாங்கள் அத்தலைவனுடன் சேர்ந்திருந்து இன்புறும் நிலையை இழந்து விட்டோம். அவன் நல்லதேரில் ஏறிக் கொண்டு பரத்தையர்களுடன் சென்று பெரிய நீர் நிலைகளில் விளையாடிக் களித்துக் கொண்டிருக்கின்றான் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆதலால் நாங்கள் தேரைக் கைகளால் இழுத்து இன்பம் அடையும் குழந்தைகளைப் போல அவனிடம் உள்ள அன்பை மறக்காமல் எண்ணி எண்ணி இன்பம் அடைகின்றோம். இதனால் என் தலைவியின் உடலும் சோரவில்லை; உள்ளமும் சோரவில்லை; அவள் முன் கையில் உள்ள வளையல்களும் கழலவில்லை. எப்பொழுதும் போல நன்றாக இறுகியிருக்கின்றன. இவ்வாறு தலைவியின் கருத்தை அவர்களிடம் கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்து இன்புறாஅர், ஆயினும், கையின் ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல உற்று இன்புறேஎம் ஆயினும், நல்தேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றெனம்; செறிந்தன வளையே. பதவுரை: தச்சன் செய்த-தச்சனால் விளையாடும் பொருட்டுச் செய்யப்பட்ட. சிறுமாவையம்-சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறியவண்டியை. ஊர்ந்து இன்புறார் ஆயினும்- பெரியோரைப் போல ஏறிச் செலுத்தி இன்பம் அடையா விட்டாலும். கையின் ஈர்த்து - கையினால் அவ்வண்டியை இழுத்து. இன்பு உறும் இளையோர் போல- இன்பம் அடைகின்ற சிறுவர்களைப் போல. உற்று இன்பு உறோம் ஆயினும்-அவரைத் தழுவி இன்பம் அடைய வில்லை ஆனாலும், நல்தேர்-நல்ல தேரையும். பொய்கை-குளங்களையுடைய. ஊரன் கேண்மை-ஊர்க்குத் தலைவனாக இருக்கும் அவனுடைய நட்பை. செய்து இன்பு உற்றெனம்-எங்கள் உள்ளத்திலே மேலும் மேலும் அன்பை வளர்த்துக் கொண்டு இன்பம் அடைந்தோம்; (ஆதலால்) வளை செறிந்த என் தலைவியின் முன்கையில் உள்ள வளையல்கள் கழலாமல் இறுகியிருக்கின்றன. கருத்து: தலைவர் எம்மை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை. விளக்கம்: இது தும்பி சேர் கீரன் என்னும் புலவர் பாட்டு. பரத்தையர்பால் பிரிந்து போயிருந்த தலைவன், தன் இல்லாளைச் சமாதானம் செய்யத் தூதர்களை அனுப்பினான். அத்தூதர்களிடம் தோழி கூறியது இது; ‘தலைவன் இங்கு வராவிட்டாலும் அவன் வந்திருப்பது போன்ற இன்பத்துடன் தான் இருக்கின்றோம். ஆதலால் அவன் வந்து எங்களுக்குச் செய்ய வேண்டியது ஒன்றுமில்லையே’ என்று கூறினாள் தோழி. மருதத்திணை. இன்புறாஅர்; இன்புறூஉம்; இன்புறேஎம்; இவற்றில் உள்ள அ.உ.எ. மூன்றும் அளபெடை. ‘வளை செறிந்தன’ என்று இறுதிச் சொற்றொடர் மட்டும் பதம் மாற்றப்பட்டது. ஏ, அசைச்சொல். தச்சனால் செய்யப்பட்ட சிறிய விளையாட்டு வண்டிகளைச் சிறுவர்கள் இழுத்து விளையாடும் வழக்கம் பண்டைக் காலத்திலும் இருந்தது. மலர்மணக்கும் மேனியாள் பாட்டு 62 ஒரு நாள் அந்திநேரம். அழகிய மலைச் சாரல்; தென்றல் காற்று உடம்பை மெதுவாகத் தடவிக் கொடுக்கின்றது; வெய்யிலால் அடைந்த வேதனையை வெளியேற்றுகின்றது. அந்த மலைச்சாரலில் உள்ள மலர்களும், செடி கொடிகளும் தலை நிமிர்ந்து நின்று தென்றலின் குளிர்ச்சியை நுகர்ந்து ஆ, ஆ, எவ்வளவு இன்பம்! இன்பம்! என்று தலைகளை அசைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்திலே இருவர் சந்திக்கின்றனர். ஒருவர் ஆண் மகன்; இளைஞன். மற்றொருவர் பருவ மங்கை, இருவரும் தற்செயலாகச் சந்தித்துக் காதல் கொண்டு கலந்து இன்புறு கின்றனர். இருவரும் இனி எப்பிறப்பிலும் பிரிவதில்லை யென்று உறுதி செய்து கொள்கின்றனர். பிறகு பிரிகின்றனர். அடுத்த நாள் அந்தத் தலைவன் முதல் நாள் அத் தலைவியை சந்தித்த இடத்திலே சென்று அவளைக் காண நினைக்கிறான். இதை எண்ணும்போதே அவன் உள்ளத்திலே ஒரு வகை இன்ப சக்தி பாய்ந்து பரவுகிறது. அப்பொழுது அவன் தன் உள்ளத்திற்குத் தானே தன் தலைவியின் சிறப்பை- அழகை- இயல்பை எடுத் துரைக்கின்றான். ‘நெஞ்சே! காந்தள் மலர்களையும், நல்ல முல்லை மலர் களையும் நறுமணம் வீசும் குவளை மலர்களுடன் சேர்த்துத் தொடுத்த மாலை போன்ற மேனியை யுடையவள். இந்தச் செந்நிறம், வெண்ணிறம், நீலநிறம், கலந்த மாலை போல அவள் பல நிற ஆடைகளையும், ஆபரணங்களையும், பூண்டு அழகாக விளங்கு கின்றாள். இம்மாலையிலிருந்து வரும் மணம் போல அவள் மேனியிலும் நறுமணம் பிறந்து பரவுகின்றது. அவள் உடம்பின் இயல்போ தளிரைக் காட்டிலும் மென்மையும், தண்மையும், ஒளியும், வாய்ந்தது. ஆதலால் அவள் உடம்பு நாம் தழுவி இன்புறுவதற்கு ஏற்றதாக இருக்கின்றது. இவ்வாறு அவள் இயல்பைத் தன் உள்ளத்திற்கு எடுத்துரைத்த செய்தியைக் கூறுவது இப்பாடல். பாட்டு கோடல், எதிர்முகைப் பசுவீ முல்லை நாறுஇதழ்க் குவளையொடு இடைப்பட விரைஇ. ஐதுதொடை மாண்ட கோதை போல. நறிய நல்லோள் மேனி; முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. பதவுரை: கோடல்-மனமே! காந்தள் மலரையும், எதிர் முகை- காணப்படும் அரும்பிலிருந்து உண்டாகிய. பசுவீ முல்லை- பசுமையான மலர்களாகிய முல்லை மலர்களையும். நாறு இதழ் குவளையொடு- மணம் வீசும் இதழ்களையுடைய குவளை மலர்களுடன். இடைப்பட விரைஇ-இடையிடையே கலந்து. ஐது தொடை மாண்ட-அழகாகத் தொடுக்கப்பட்டுச் சிறப்பாகக் காணப்படும். கோதை போல- மாலையைப் போல. நறிய நல்லோள் மேனி- நல்லமணம் பொருந்தியது தலைவியின் உடம்பு. முறியினும் வாய்வது- அன்றியும் தளிரைக் காட்டினும் மென்மையும், நிறமும் உடையது. முயங்கற்கும் இனிது-தழுவிக் கொள்ளுவதற்கும் இனிமையானது. கருத்து: தலைவியை முன்பு தழுவி இன்பமுற்றேன்; மீண்டும் தழுவி இன்பம் அடைவேன். விளக்கம்: இது சிறைக்குடி ஆந்தையர் என்னும் புலவர் பாட்டு, முதல் நாள் தலைவியுடன் கலந்து மகிழ்ந்த தலைவன், மறுநாளும் அவளைக் கண்டு தழுவ எண்ணித் தன் மனத்தை நோக்கிக் கூறியது. தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. விரைஇ,-உயிர் அளபெடை. கோடல்-குவளை. வீ-மலர். ஐ-அழகு மாண்ட-சிறந்த. முறி-துளிர். முயங்கல்- தழுவுதல். எப்படிப் பிரிவேன் பாட்டு 63 உழைக்காமல் பிறர் செல்வத்தைக் கொண்டு வாழ்வது என்ற வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை. உழைத்துப் பொருள் சேர்ப்பவனே உயர்ந்த வாழ்க்கை வாழமுடியும். இக்காலத்தைப் போல் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பொருளீட்டி வைப்பது என்ற முறைகூட அக்காலத்தில் இருந்ததில்லை. வயது வந்த ஒவ்வொருவனும் தான் வருந்திச் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டே சிறந்த வாழ்வு நடத்தி வந்தான். மணம் புரிந்து கொள்வதற்கு முன் ஒவ்வொரு ஆண்மகனும் பொருள் தேடப் போவது உண்டு. மணம் புரிந்து கொண்ட பின்னும் பொருள் தேடப் போவதுண்டு. மணம் புரிந்து கொள்வதற்கு முன்னோ, மணம் புரிந்து கொண்ட பின்னோ இவ்வழக்கம் இருந்தது. இதனைப் பழந்தமிழ் நூல்கள் எல்லாம் கூறுகின்றன. புது மணம் புரிந்து கொண்ட இளங்காளை ஒருவன், அவன் இல்லற வாழ்க்கையை இனிது நடத்த வேண்டும் என்று எண்ணு கின்றான். இல்வாழ்வான் இன்புறுதற்கு வழி, இல்லார்க்கு ஈதல்; தானும் விரும்பியவற்றை நுகர்தல். இவ்வுண்மை அவனுக்குத் தெரியும். இந்த இல்லறக் கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின் செல்வம் வேண்டும். நிறைந்த செல்வமிருந்தால்தான் இல்லாதார் துன்பத்தை ஓட்ட முடியும். அவர்களுக்கு வேண்டுவனவற்றைக் கொடுக்க முடியும். தானும் இன்பம் நுகர முடியும். இதுவும் அவன் அறிந்த உண்மை. செல்வம் இல்லாதவர்களுக்கு இவ்விரண்டும் இல்லை; அவர்களால் ஈயவும் முடியாது. இன்பத்தை நுகரவும் முடியாது. ஆதலால் அவன் பொருள் தேடப்பிரிவதற்கு நினைத்தான். உடனே மற்றோர் எண்ணம் அவன் மனத்திலே குறுக்கிட்டது. “நான் பொருள்தேடப் புறப்பட்டால் எனது காதலியும் உடன் வருவாளா? அவள் வராமல் நான் மட்டும் தனித்துச் சென்றால் எனக்கும் இன்பம் இல்லை; அவளுக்கும் இன்பம் இல்லை; இருவரும் தனிமையால் வருந்தித் தவிப்போம். ஆதலால் பொருள் தேட நினைக்கும் என் மனமே, என்னை மட்டும் தனியாகப் பொருள் தேடப் போகும்படி செலுத்துவாயோ” என்று தன் உள்ளத்துடன் தானே பேசிக் கொண்டான். இவ்வாறு தன் உள்ளத்துடன் தானே உரையாடிய அவன் அச்சமயம் பிரிந்து போவதை நிறுத்திக் கொண்டான். பின்னர் தன் காதலியைச் சமாதானப்படுத்தி அவள் சம்மதத்துடன் செல்வது என்ற முடிவுடன் இச்சமயம் தனது பிரயாணத்தைத் தள்ளி வைத்தான். இக்கருத்தை அறிவிப்பதே இப்பாடலாகும். பாட்டு ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச், செய்வினை கைம்மிக எண்ணுதி!அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ!உரைத்திசின் நெஞ்சே! பதவுரை: நெஞ்சே-மனமே. ஈதலும்-இரப்போர்க்குக் கொடுத்தலும். துய்த்தலும் - இன்பங்களை நுகர்வதும், இல்லோர்க்கு- செல்வமில்லாத வறியவர்களுக்கு. இல்என- இல்லையென்று நினைத்து. செய்வினை- பொருள் சேர்ப்பதற்கான காரியத்தைப் பற்றி. கைம்மிக எண்ணுதி-மிகவும் மும்முரமாக நினைக்கின்றாய். அவ்வினைக்கு- பொருளீட்டும் அக்காரியத்திற்கு, அம்மா அரிவையும்- அந்த அழகிய தலைவியும். வருமோ- ஒத்து வருவாளோ? எம்மை உய்த்தியோ-எம்மை மட்டும் செலுத்துவயோ? உரைத்திசின்- உரைப்பாயாக. கருத்து: செல்வம் வேண்டுமாயினும் இப்பொழுதும் இவளை விட்டுப் பிரிந்து போவது முடியாத காரியம். விளக்கம்: இது ‘உகாய்க்குடி கிழார்’ என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடப் போக வேண்டும் என்று நினைத்த தன் உள்ளத்திற்கு உரைத்தது. தலைவன் கூற்று. பாலைத்திணை. நெஞ்சே! என்ற இறுதிச் சொல் முதலில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. துய்த்தல்- அனுபவித்தல். இல்லோர்- வறியவர். கைம்மிகல்-மிகுதி. உய்த்தல்- செலுத்துதல். பண்டைத் தமிழர்கள் பொருள் தேடும் பொருட்டு வெளி நாடுகளுக்குப் போவார்கள். தம் நாடல்லாத வேற்று நாடுகளில் புகுந்து பொருள் தேடுவதே அவர்கள் வழக்கம். கால்நடையாக உள் நாட்டில் உள்ள வேற்று நாடுகளுக்கும் போவார்கள்; கலத்தின் வழியாகக் கடல் கடந்து வெளி நாடுகளுக்கும் போவார்கள். இவ்வாறு போனவர்கள் திரும்புவதற்குப் பல மாதங்கள் ஆகும். ஆதலால் தான் பிரிவினால் தலைவியும் வருந்தியிருப்பாள்; தலைவனும் வருந்துவான். ஆவைப் பிரிந்த கன்றானோம் பாட்டு 64 தலைவன் பொருள் தேடப் போய்விட்டான். அவன் வருவதாகக் குறித்த நாள் கடந்து விட்டது. வழி மேல் விழி வைத்துப் பார்ந்திருந்த தலைவி ஏமாற்றம் அடைந்தாள்; தலைவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கினாள். பெருமூச்சு விட்டுப் பித்தேறியவள்போல் வாடியிருந்தாள். தலைவியின் இத்துயரத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் மொழி புகன்றாள். தலைவன் சொன்ன சொல் தவற மாட்டார். போன காரியம் முடிந்தவுடன் விரைவில் புறப்பட்டு வந்து விடுவார். வீணாக ஏன் வேதனைப் படுகின்றாய். நெஞ்சத்தை நெகிழவிடாமல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிரு என்று கூறினாள். அப்பொழுது தலைவி அத்தோழியிடம் தன் உள்ளத் துயரை அப்படியே எடுத்துரைத்தாள். “தோழியே! தலைவர் பிரிவால் நாம் பொறுக்க முடியாத துக்கம் அடைந்திருக்கின்றோம். கொட்டகையில் இருந்த பல பசுக்களும் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் சென்று விட்டால் அந்தக் கொட்டகை பார்ப்பதற்கு வெறிச்சென்றிருக்கும். கன்றுகள் மட்டும் அக்கொட்டகையில் இருந்தாலும் பயன்இல்லை. தாய்ப் பசுக்களைப் பிரிந்த அக்கன்றுகள் சோர்ந்து கிடக்கும். துள்ளி விளையாடாமல் தாயை எண்ணிக் கொண்டு தயங்கி நிற்கும். மாலை நேரம் நெருங்க நெருங்க அக்கன்றுகளின் வருத்தமும் வளரும். இன்னும் அன்னைப் பசுக்கள் வரவில்லையே என்று அண்ணாந்து அண்ணாந்து பார்த்து வருந்தும். இதைப் போலவே நாமும் தலைவர் பிரிவை எண்ணி வருந்துகின்றோம். அவர் வரவை எதிர்ப்பார்த்து ஏங்கி நிற்கின்றோம். நாம் இவ்வாறு- தாயைப் பிரிந்த கன்றுபோல் வருந்திக் கிடப்போம் என்பது அவருக்குத் தெரியாதது அன்று. தெரிந்தும் அவர் இன்னும் தொலைவில் உள்ள நாட்டில் வாழ்கின்றார். ஆதலால் நாம் வருந்தாமல் என்னதான் செய்ய முடியும்? என்று தலைவி கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதே இப்பாடல். பாட்டு பல்ஆ, நெடுநெறிக்கு அகன்று வந்தெனப் புன்தலை மன்றம் நோக்கி, மாலை மடக்கண் குழவி அணவந்து அன்ன. நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர், தோழி! சேய்நாட் டோரே. பதவுரை தோழி- தோழியே. பல்ஆ - கொட்டிலில் இருந்த பல பசுக்களும். நெடு நெறிக்கு அகன்று வந்தன- மேய்ச்சலுக்காக நீண்ட நெறியைக் கடந்து சென்று விட்டன. புன்தலை மன்றம்- அவை போய் விட்டதால் வெறிச்சென்று கிடக்கும் கொட்டகையை. நோக்கி - பார்த்து. மாலை-மாலைப் பொழுதிலே. மடம் கண் குழவி- அழகிய கண்களையுடைய இளங்கன்றுகள். அணவந்து அன்ன -அண்ணாந்து பார்த்து வருந்துவதைப் போன்ற. நோயேம் ஆகுதல்- துன்பத்தைக் கொண்டிருக்கின்றோம் என்பதை. அறிந்தும் -நம் தலைவர் உணர்ந்தும் கூட. சேயர்- பிரிந்திருக் கின்றார். சேய்நாட்டோர் -தூர நாட்டில் வாழ்கின்றார். நாம் என் செய்வோம். கருத்து பிரிவால் நாம் துன்புறுவோம் என்பது தலைவருக்குத் தெரியும்; தெரிந்தும் அவர் வரவில்லை. விளக்கம்: இது கருவூர்க்கதப்பிள்ளை என்னும் புலவர் பாட்டு. தனக்கு ஆறுதல் கூறிய தோழிக்குத் தலைவி உரைத்த விடை. தலைவி கூற்று. முல்லைத்திணை. புன்தலை- புல்லிய இடம், வெறிச்சென்ற இடம். மடம்- அழகு. குழவி-இளங்கன்று. அணவருதல்- அண்ணாந்து நோக்குதல். தலைவனைப் பிரிந்துவருந்தும் தலைவிக்கு தாயைப் பிரிந்து தவிக்கும் கன்று உவமானம். கார் வந்தும் காணேன் பாட்டு 65 மழைக்காலம் வந்துவிட்டது; பட்ட மரங்கள் தளிர்க்கின்றன; வாடிய செடிகொடிகள் அழகாகத் தளிர்த்துத் தலைநிமிர்ந்து நிற்கின்றன. எங்கும் மலர்கள் பூத்து மகிழ்ச்சி தருகின்றன. வாடைக் காற்றும் வீசுகின்றது. இந்தக் கார் காலத்தில் ஒரு தலைவி தன் காதலன் வருகையை எதிர்நோக்கியிருக்கின்றாள். பொருள் தேடப் பிரிந்து போகும் போது கட்டாயம் கார் காலத் தொடக்கத்தில் வந்து விடுவேன் என்று உறுதிமொழி உரைத்துச் சென்றான். கார் காலம் வந்தும் அவன் உரைத்த உறுதிமொழிப்படி வந்து சேரவில்லை. தலைவியும் தன் துன்பத்தைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பொறுக்க முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. உள்ளத்தின் வேதனையை யாரிடமாவது உரைக்கா விட்டால் நெஞ்சம் வெடித்து விடும் போல் ஆய்விட்டது. ஆதலால் அவள் தோழியிடம் தன் ஆத்திரத்தை வெளியிட்டுச் சிறிது ஆறுதல் அடைந்தாள். ‘தோழியே இதோ பார்! கார் காலம் வந்துவிட்டது. மழை நீர் பருக்கைக் கற்களிடையே வழிந்தோடுகின்றது. பருக்கைக் கற்களிடையே ஓடும் தெளிந்த நீரை ஆண்மான் தன் அன்புள்ள பெண்மானுடன் சேர்ந்து பருகி இன்புறுகின்றது. நீரையும், நிமிர்ந்து செழித்து நிற்கும் செடி கொடி புற்பூண்டுகளையும் கண்டு அவை அளவற்ற மகிழ்ச்சியடைகின்றன; துள்ளித் திரிந்து விளையாடுகின்றன. இத்தகைய குளிர்ந்த கார்காலம் வந்து விட்டது. வராமல் பிரிந்து சென்று சேய் நாட்டில் வாழ்கின்றவரின் வரவை எதிர்பார்த்து நிற்கின்றீரோ? அவர் பிரிவால் அளவற்ற துன்பத்தை அடைந்தாலும் அவர் வரவை விரும்பி உயிரை விடாமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றீரோ? என்று எம்மைப் பார்த்துக் கேட்பதுபோல் இக் கார்காலம் வந்து விட்டது இன்னும் அவர் வரவில்லை; யாம் என்ன தாம் செய்வோம் என்று தன் உள்ளத் துயரை வெளியிட்டான் தலைவி. இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதே இப்பாடல். பாட்டு வன்பரல் தெள்அறல் பருகிய இரலை, தன் இன்புறு துணையொடு மறுவந்து உகளத், தான் வந்தன்றே தளிதரு தண்கார்; வாராது உறையுநர் வரல் நசைஇ, வருந்தி நொந்துறைய இருந்திரோ எனவே. பதவுரை: வன்பரல் தெள்அறல் பருகிய - தோழியே வலிமையுள்ள பருக்கைக் கற்களிடத்தேயுள்ள தெளிவான நீரைக் குடித்து, இரலை-ஆண்மான். தன் இன்புறு துணையொடு - இன்பத்தை அநுபவிக்கும் தன்னுடைய துணையான பெண் மானுடன். மறு வந்து உகள - மகிழ்ச்சியால் சுழன்று துள்ளி விளையாடும் படியும். வாராது உறையுநர்-பிரிந்து சென்று வாராமல் தங்கியிருக்கும் தலைவருடைய. வரல் நசைஇ- வருகையை விரும்பி. வருந்தி- நொந்து -மிகவும் துன்புற்று. உறைய இருந்திரே- உயிரோடு தங்கியிருக்கின்றீரோ. எனவே- என்று கேட்பது போலவும். தளிதரு தண்கார்- மழைத்துள்ளியைச் சிந்தும் குளிர்ந்த கார்காலம் தான் வந்தன்று- தான் வந்தது. கருத்து: கார்காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவர் இன்னும் வரவில்லை. விளக்கம்: இது “கோவூர் கிழார்” என்னும் புலவர் பாட்டு. கார்காலம் வந்தும் தலைவன் வராமையைக் கண்டு வருந்திய தலைவி, தன் துன்பத்தைத் தோழியிடம் உரைத்தது. தலைவி கூற்று. முல்லைத்திணை ‘தான் வந்தன்றே தளி தரு தண்கார்’ என்னும் மூன்றாவது அடி ‘தனி தரு தண்கார் தான்வந்தன்றே’ என்று மாற்றப்பட்டது. இறுதி அடியாக வைத்துப் பொருள் கூறப்பட்டது. அறல்-தெளிந்த நீர். இரலை- ஆண்மான். மறுவந்து சுழன்று. தளி-மழைத்துளி. நசைஇ -உயிர் அளபெடை. இக்கார்ப் பருவத்தில் மான் தன் துணையுடன் கூடித் தள்ளி விளையாடுகின்றது. இக்காட்சி அவர் சென்றிருக்கும் இடத்திலும் காணப்படும். இது இந்த மானைப் போலத் தானும் தன் காதலியுடன் கூடி மகிழ்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை அவர் உள்ளத்திலே எழுப்பாமலிருக்குமா? என்ற கருத்தையும் இப்பாடலில் காணலாம். மதியற்ற கொன்றை மரம் பாட்டு 66 பொருள் தேடப் புறப்பட்டான் தலைவன். தலைவிக்கு அவன் பிரிவைத் தாங்க முடியவில்லை. ‘நானும் உடன் வருவேன் என்று புறப்பட்டாள். நான் நடந்து போகும் வழி மிகவும் துன்பந் தரக்கூடியது; உன்னால் அந்நெறியில் உள்ள அல்லல்களைத் தாங்க முடியாது. நீ வரவேண்டாம் நான் விரைவில் காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி விடுவேன்; கார் காலம் வருவதற்கு முன்பே வந்து விடுவேன்; நீ கலங்காமலிரு’ என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான் தலைவன். தலைவன் தவணை கூறிய கார்காலம் வந்துவிட்டது. காடு களிலே கொன்றை மலர்கள் பொன் போலப் பூத்துக் காட்சி யளித்தன. மேகங்களும் வானத்திலே வந்து திரண்டன. மழைத் துளி களைச் சிந்தின. தண் என்று வாடைக்காற்றும் வீசிற்று. இந் நிலையைக் கண்டு தலைவி வருந்தினாள்; தலைவர் வாக்களித்த தவணை வந்தும் அவர் இன்னும் வரவில்லையே என்று ஏங்கினாள். இதைக் கண்ட தோழி தலைவியின் துன்பத்தைத் தணிக்கப் பல ஆறுதல் மொழிகள் புகன்றாள். தலைவியே நீ வருந்தாதே! தலைவர் சொன்ன சொல் தவறமாட்டார். அவர் குறித்த கார்காலம் இன்னும் வரவில்லை. பருக்கைக்கற்கள் நிறைந்த பாலை நிலத்து வழியே போனவர் திரும்புவதற்காகப் புகன்ற மாரிக்காலம் இன்னும் தொடங்கவே யில்லை. இப்பொழுது பெய்த மழையும் மாரிக்கால மழையன்று. இது ஒரு புதிய மழை: கோடை மழை. இதைக்கண்டு கொன்றை மரங்கள் ஏமாந்துவிட்டன; அவை அறிவற்ற அஃறிணைகள் தானே! காலமல்லாக் காலத்தில் பெய்த இந்த மழையைக் கண்டு கார் காலம்வந்து விட்டதாகக் கருதிக் கொண்டன. ஆதலால் தம்கிளைகளிலே நிறைய மலர்களைக் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கின்றன. இக்காட்சி கார்காலத்தைக் காட்டவில்லை. கொன்றை மரங்களின் அறியாமையைத்தான் காட்டுகின்றது. ஆதலால் நீ மனக்கவலையடையாதே’ என்று கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவதே இப்பாடல். பாட்டு மடவ! மன்ற தடவுநிலைக் கொன்றை; கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை, நெரிதரக் கொம்பு சேர் கொடிஇணர் ஊழ்த்த; வம்ப மாரியைக் கார்என மதித்தே. பதவுரை: கல்பிறங்கு - பருக்கைக் கற்கள் நிறைந்து கிடைக்கின்ற. அத்தம் - பாலை நிலவழியிலே. சென்றோர் கூறிய - சென்றவர் திரும்பி வருவதாகச் சொல்லிய. பருவம் வாரா அளவை- கார் காலம் வருவதற்கு முன்பே. வம்பமாரியை-இந்தப் புதிய மழையைக் கண்டு. கார் என மதித்தே-கார்காலம் வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு. கொம்பு நெரிதர-தன் கிளைகள் நிறையை. சேர் கொடி இணர்- சேர்ந்த ஒழுங்கான மலர்களை. ஊழ்த்த - பூத்திருக் கின்றன. தடவு நிலைக் கொன்றை- இந்தப் பரந்த அடிப்பாகத்தை யுடைய கொன்றை மரங்கள். மன்ற மடவ- இவை மிகவும் அறி வற்றவை. கருத்து: இன்னும் கார்காலம் வரவில்லை. ஆதலால் நீ வருந்தாதே. விளக்கம்: இது கோவத்தன் என்னும் புலவர் பாட்டு. கார் காலங் கண்டு வருந்திய தலைவிக்குத் தோழி கூறியது. முல்லைத்திணை. கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா. அளவை வம்பமாரியைக் கார் என மதித்தே, கொம்பு நெரிதர சேர்கொடி இணர்ஊழ்த்த, தடவு நிலைக்கொன்றை மன்றமடவ என்று வரிகளும், பதங்களும் மாற்றப்பட்டன. மடமை-அறியாமை. அத்தம் - வழி. இணர்-பூங்கொத்து. ஊழ்த்த-பூத்தன. வம்பு-புதுமை. வம்பமாரி-புதிய மழை. நம்மை மறந்தாரோ பாட்டு 67 தலைவன் பிரிந்து சென்றபின் அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் தவித்தாள் தலைவி. அவள் தன் தவிப்பை உள்ளத்தில் அடக்கிக் கொள்ள முடியவில்லை. வாய்விட்டுக் கூறி ஆறுதலடைய விரும்பினாள். நெஞ்சால் தானே நினைத்து நினைத்து வெதும்பு வதைவிட வெளியிற் சொல்வதால் சிறிது வேதனை தணியும். துன்பத்தைத் தலைகாட்டாமல் உள்ளத்திலே அடக்கி வைத்தல் என்பது ஆராலும் ஆகாத செயல். எவ்வளவு, அடக்கினாலும் அடங்காது. கண்ணீராகவோ, அழுகையாகவோ வாய்விட்டுப் புலம்பலாகவோ வெளிவந்துதான் தீரும். இது இயற்கை. இப்படி வெளிவராவிட்டால் அத்துக்கம் உடம்புக்கும், உயிருக்கும், சோர்வை யுண்டாக்கும். உடம்பை விட்டு உயிரைப் பிரியும்படி செய்தாலும் செய்துவிடும். இந்த இயற்கையை ஒட்டியே தலைவியும் தன் துன்பத்தைத் தாங்கமாட்டாமல் வாய்விட்டுக் கூறத் தொடங்கினாள். “நிலம் கரிந்து கிடக்கின்ற பாலை நில வழியிலே அவர் பிரிந்து போனார். அவர் சென்ற வழியிலே கள்ளிகள் மண்டிக் கிடக்கும். கால் வைத்து நடந்து போவதற்கு முடியாமல் எங்கும் காடாக முளைத்துக் கிடக்கும். அவையும் வெயிலால் கரிந்து செழிப்பற்றுக் காணப்படும். சில இடங்களிலே வேப்பமரங்கள் வளர்ந்திருக்கும். அந்த மரங்களிலே உள்ள வேப்பம் பழங்களைக் கிளிகள் தங்கள் மூக்கினாலே கொத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும். இக்காட்சி பொற்கொல்லர்கள் புதிய பொற்கம்பியைப் புகுத்துவதற்காக, கூர்மையான நகமுள்ள விரல்களால் பொற்காசைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படும். இத்தகைய காட்சியையுடைய பாலை நிலத்தின் வழியிலே சென்றவர் என்னை மறந்துவிட்டாரோ! மறக்காமலிருந்தால் என் துன்பம் இப்படி வளர்ந்து கொண்டிருக்குமா? அவர் திரும்பி வந்திருக்கமாட்டாரா?” என்று கூறி வருந்தினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு உள்ளார் கொல்லோ தோழி! கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்பஒண் பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப் பொலங்கல் ஒருகாசு ஏய்க்கும்; நிலம்கரி கள்ளிஅம் காடு சிறந்தோரே. பதவுரை: தோழி- தோழியே. கிள்ளை-கிளியானது. வளை வாய்க்கொண்ட - வளைந்த தனது அலகிலே கொத்திக் கொண்டி ருக்கின்ற. வேப்ப ஒண்பழம் - வேப்ப மரத்தின் ஒளியுள்ள பழம். புதுநாண் நுழைப்பான்-புதிய பொன் கம்பியை நுழைக்கும் பொருட்டுப் பொற்கொல்லன். நுதிமாண்-முனை அழகாக இருக்கின்ற. வள்உகிர்-கூர்மையான நகமுள்ள விரலால் பிடித்திருக்கின்ற. பொலம்கலம் ஒரு காசு ஏய்க்கும்- பொன்னாபரணத்திற்குரிய ஒரு பொற்காசைப்போல் காணப்படும். நிலம்கரி- நிலம் வெப்பத்தால் கரிந்து கிடக்கின்ற. கள்ளி அம்காடு- கள்ளிகள் முளைத்துக் கிடக்கின்ற அழகிய பாலை நிலவழியிலே. இறந்தோர் சென்றோர். உள்ளார் கொல்லோ-என்னை நினைக்காமல் மறந்து விட்டாரோ. கருத்து: பாலை நிலத்து வழியிலே பிரிந்து சென்ற தலைவர். அந்தக் காட்சிகளைக் கண்டு என்னை மறந்தார் போலும். விளக்கம்: இது அள்ளூர் நன்முல்லை என்பவர் பாட்டு. பிரிந்து சென்ற தலைவனைப்பற்றித் தலைவி வருந்திக் கூறியது. பாலைத்திணை. ‘உள்ளார் கொல்லோ தோழி’ என்பதில் உள்ள தோழி என்னும் சொல்லை முதலிலும் உள்ளார் கொல்லோ என்பதை இறுதியிலும் வைத்துப் பொருள் கூறப்பட்டது. ஓ, ஏ அசைச் சொற்கள். கிளியின் மூக்குக்குப் பொற்கொல்லனுடைய கைவிரல் நகங்களும், பொற்காசுக்கு வேப்பம் பழமும் உவமையாகக் கூறப்பட்டன. பொற்காசுகளைப் பொற்கம்பியிலே வரிசையாகக் கோத்த நகைக்குக் காசு மாலையென்று பெயர். காசு மாலை என்னும் நகை இக்காலத்திலும் உண்டு. வளைவாய்- வளைந்த அலகு; நாண் -கம்பி; சரடு என்றும் கூறலாம். நுதி-முளை; நுனி;. வள்-கூர்மை: உகிர்-நகம். காசு- பொற்காசு. கிளி பொற் கொல்லனைப் போல் காணப்படுகின்றது என்று கூறப்பட்டிருக்கும் உவமை அழகானது. கள்ளியும், வேம்பும் பாலைவனத்தில் காணப்படும் பொருள்கள். வேறு மருந்தில்லை பாட்டு 68 தலைவன் பொருள் தேடப்பிரியும்போது மிகவும் உறுதியாகத் தான் உரைத்தான். கட்டாயம் கார் காலத்திலே வந்துவிடுவேன்; கார் காலம் வருவதற்கு முன்பே வந்து கவலையைப் போக்குவேன்; கார்காலம் வரும் வரையிலும் கலக்கமடையாமல் பொறுத்துக் கொண்டிரு. நான் இல்லாத தனிமை உன்னைத் துன்புறுத்துவது போலவே, நீயில்லாத தனிமை என்னையும் இன்னலுக்கு ஆளாக்கும்; ஆதலால் நான் காலங்கடத்தமாட்டேன்; விரைவில் வந்து விடுவேன்”என்று சொல்லித்தான் பிரிந்து போனான். தலைவியும் காதலனுடைய உறுதிமொழியிலே நம்பிக்கை வைத்தாள். கார்காலம் வரும் வரையிலும் தன் துன்பத்தை வெளியிலே காட்டாமல் பொறுத்துக் கொண்டிருந்தாள். கார் காலமும் வந்துவிட்டது. இன்று வருவான்; நாளை வருவான் தவறினால் நாளை மறுநாள் வருவான் என்று எண்ணி எண்ணிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். இப்படி எண்ணியே கார்காலம் முழுவதும் கழிந்துவிட்டது. கார்காலத்தை அடுத்துக் குளிர்காலமும் வந்துவிட்டது. தலைவன் எண்ணிச் சென்ற செயல் இன்னும் முடியவில்லை யாக்கும், முடிந்தால் நொடிப் பொழுதுகூட நிற்கமாட்டான். தான் வாக்களித்தபடி வந்துசேருவான். ஆதலால் இன்னும் பொறுப்போம்’ என்று எண்ணிக் கூதிர் காலத்திலும் பொறுத்துக் கொண்டிருந்தாள். கூதிர் காலமும் கழிந்துவிட்டது. இன்னும் தலைவன் வரவில்லை. அடுத்து முன்பனிக்காலம் வந்துவிட்டது. அப்பொழுதும் பிரிந்த தலைவனைக் காணவில்லை. அவன் வருவதாகக் குறித்த கார்காலமும் கடந்துவிட்டது; அடுத்து வந்த குளிர் காலமும் போய்விட்டது. முன்பனிக் காலமும் பிறந்து விட்டது. கார்காலம் இரண்டு மாதங்கள், குளிர்காலம் இரண்டு மாதங்கள் ஆக நான்கு மாதங்கள் தலைவன் கெடு வைத்த காலத்திற்கு மேல் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. ஐந்தாவது மாதமும் பிறந்து விட்டது. இதற்கு மேலும் பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பதென்றால் அது யாரால் முடியும். இது வரையிலும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு உயிர் வைத்துக் கொண்டிருந்ததே பெரிய காரியமல்லவா? இவ்வளவு பொறுமையை வேறு எந்தப் பெண்ணிடத்திலும் காண முடியாது. தலைவி பொறுமையிழந்தாள்; துக்கமடைந்தாள்; காதலனைக் காணவில்லையே என்று கலக்க மடைந்தாள்; வருவதாகக் கூறிய வாக்குறுதியைக் காற்றுவாக்கில் விட்டு விட்டானோ என்று எண்ணி ஏங்கினாள். அவளுடைய தோழி எவ்வளவோ ஆறுதல் மொழிகள் புகன்றாள். என்றாலும் தலைவியின் துன்பம் தணிய வில்லை. கடைசியாகத் தலைவியே தன் துன்பத்தை வாய்விட்டுக் கூறினாள். தன் துன்பம் தணிவதற்கு மருத்து இன்னதுதான் என்பதையும் எடுத்துரைத்தாள். ‘தோழியே! நான் என்ன செய்ய முடியும். என்னால் ஆன வரையிலும் பொறுத்துப் பார்த்து விட்டேன். கார்காலம் கழிந்து குளிர்காலமும் மறைந்து முன்பனிக் காலமும் வந்துவிட்டது. காடைப் பறவையின் கால்களைப் போன்ற நல்ல கால்களையுடைய உழுந்துப் பயிர்கள் வளர்ந்து விட்டன. அவற்றிலே காய்களும் காய்த்து விட்டன; மயிரடர்ந்த அந்த முற்றிய உழுத்தங்காய்களை மான் கூட்டங்கள் கவர்ந்து தின்று மகிழ்கின்றன. இப்படிப்பட்ட முன்பனிக் காலமும் வந்து விட்டது. இந்த முன் பனிக் காலத்திலும் அவர் வரவில்லை. இனி என்னுடைய மனத்துயரை எந்த மருந்தாலும் தணிக்க முடியாது அதற்கேற்ற மருந்து வேறு ஒன்றுமேயில்லை. எந்த இனிய மொழிகளாலும் என் வேதனையை ஓட்ட முடியாது. என் துன்பத்தை ஓட்டும் இனிய மொழிகள் ஒன்றுமேயில்லை. என் துன்பத்தைத் தொலைப்பதற்கான மருந்து ஒன்றே ஒன்றுதான் உண்டு. என்னைத் தழுவிக்கொண்ட அவருடைய மார்புதான் அந்த மருந்து. அதைத் தவிர வேறு மருந்து எதுவுமே இல்லை’ என்று கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய், உழையினம் கவரும் அரும்பணி அச்சிரம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே பதவுரை: பூழ்க்கால் அன்ன -குறும்பூழ் என்னும் காடைப் பறவையின் காலைப்போன்றே. செம்கால் உழுந்தின்- நல்ல அடிப்பாகத்தை யுடைய உழுத்தஞ் செடியில் உள்ள. ஊழ்படு முதுகாய்- மிகவும் முற்றிய காய்களை, உழை இனம் கவரும்-மான் கூட்டங்கள் கவர்ந்து தின்னுகின்ற. அரும்பனி- பொறுக்க முடியாத பனிபெய்யும், அச்சிரம்- முன்பனிக்காலத்தால் நான் அடையும் துன்பத்தை. தீர்க்கும் மருந்து- நீக்கக்கூடிய ஒரு மருந்து. அவர் மணந்த மார்பு ஏ -அவர் முன் என்னைத் தழுவிக் கொண்ட மார்பு ஒன்றுதான் உண்டு. பிறிது இல்லை. வேறு ஒரு மருந்தும் இல்லை. கருத்து: எனது முன்பனிக் காலத்துன்பத்தைத் தீர்க்கும் மருந்து என் காதருடைய மார்பைத் தவிர மற்றொன்றும் இல்லை. விளக்கம்: இப்பாடலும் அள்ளூர் நள்முல்லை என்னும் புலவர் பாட்டு. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி. முன் பனிப் பருவகாலம் வந்தும் அவன் வராமை கண்டு வருந்தித் தன் தோழியிடம் கூறியது. தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. “மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே” என்ற இறுதியடி “மருந்து அவர் மணந்த மார்பு பிறிது இல்லை” என்று மாற்றப்பட்டது. பூம்-குறும்பூழ் என்னும் ஒரு பறவை. இக்காலத்தார் இதைக் காடை என்பர். இப்பறவையின் கால் உழுத்தஞ் செடியின் வேருள்ள அடிப்பாகத்திற்கு உவமை. ஊழ்த்தல்- முற்றுதல். முதுகால்- முற்றினகாய், உழை- மான், அச்சிரம்- முன்பனிக்காலம். அற்சிரம் என்றும் கூறுவர். அல்+சிரம்-அற்சிரம். அல்-இரவு: சிரம்-தலை இரவின் முன்பகுதி இது முன்பனிக் காலத்தைக் குறித்தது. உழுந்து, பயிறு முதலிய தானியங்கள் பனியினால் வளர்ந்து பயன் தருகின்றவை. உழுந்தை உளுந்து என்று இக்காலத்தில் கூறுகின்றனர். இரவில் வராதே பாட்டு 69 “இரவில் வந்து என் காதலியுடன் களித்திருக்க விரும்பு கின்றேன். இதற்கு நீ தான் வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். எந்த நேரத்தில்- எந்த இடத்தில் என் இதயச் செல்வியைச் சந்திக்க முடியும் என்று தெரிவிக்க வேண்டும். பகலிலே வருவதற்கு வாய்ப்பில்லை என்பது உனக்குத் தெரியும். ஆதலால் இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்” என்று தோழியிடம் வேண்டிக் கொண்டான் தலைவன். காதல் களவு மணத்திலே வாழும் தலைவன் இவ்வாறு கூறினான். பகலிலே தலைவியைத் தேடி வரும்போது சில சமயம் அவளைச் சந்திக்க முடிந்தது. சில சமயம் சந்திக்க முடிவதில்லை. தலைவியின் பெற்றோர்கள் அவளைச் சூழ்ந்திருப்பர். அல்லது அவளுடைய உற்றார் உறவினர்கள் இருப்பர். அல்லது தலைவி தன் தோழிமார்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அவர்களைப் பிரிந்து தனித்து வந்து தலைவனைக் காணமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். இச்சமயங்களில் அவளைத் தனியே கண்டு அளவளாவி மகிழ வந்த தலைவன் ஏமாந்து திரும்புவான். இரவிலே ஒரு குறித்த இடத்திலே ஒரு குறித்த நேரத்திலே சந்திப்புக்கு வழி செய்து கொண்டால் இந்த ஏமாற்றம் தீர்ந்து விடும் என்பது தலைவன் எண்ணம். ஆதலால் தோழியினிடம் தன் கருத்தை வெளியிட்டான். இதைக் கேட்டவுடன் தோழியின் உள்ளத்திலே வேறோர் எண்ணம் பிறந்தது. இவன் என் தலைவியைச் சந்திக்க வேண்டுமானால் ஏன் இப்படித் தின்டாடவேண்டும். விரைவில் அவளை மணந்துகொள்ளட்டும். இவனுடைய களவு மணம் கற்பு மணமாக முடியட்டும். வெளிப்படையாக இருவரும் மணந்தவுடன் எப்பொழுதும் இணைபிரியாமல் வாழலாம். இரவுக்குறிக்கு இடம் தந்தால் மணநாள் இன்னும் வளர்ந்து கொண்டே போகும். ஆதலால் இவன்ஒப்புக் கொள்ளும்படியான காரணம் காட்டி இரவுக்குறியை மறுப்பதுதான் நன்று. என் தலைவியும் இவனும் காதலன் காதலிகளாக இணைந்து வாழ்வதற்கு வழி என்று முடிவு செய்தாள். உடனே அவனைப் பார்த்து அவன் வேண்டுகோளுக்கு ஏற்ற விடையளித்தாள். “தலைவனே! மலைச்சாரலையுடைய தலைவனே. கருமையான கண்களுடைய தாவுதலிலே சிறந்த - ஆண்குரங்கு இறந்து போனால் அதைக் கண்ட பெண்குரங்கு உள்ளம் வருந்தும். தன் அன்புக்குரிய காதலனாகிய ஆண்குரங்கைப் பிரிந்த பெண்குரங்கு கைம் பெண்ணாக வாழ விரும்புவதில்லை. அந்தக் கைம்மைத்துன்பத் திலிருந்து தப்பித்துக் கொள்ளவே விரும்பும். இன்னும் தனித்து வாழ்வதற்கு அறியாத தன் குட்டிக்காகக் கூட உயிர் வாழவிரும்பாது. கிளைக்குக்கிளை தாவக் கற்றுக் கொள்ளாத தன் குட்டியைத் தனது உறவினரிடம் சேர்த்துவிடும். தான் உயர்ந்த மலைச் சிகரத்தில் ஏறிக் கீழே குதித்து உயிர்விடும். உன்னுடைய மலையில் நிகழும் இந்தக் காட்சியை நீ அறிந்திருக்கின்றாய். இதைக் கண்டிருந்தும் இரவிலே-அதுவும் நள்ளிரவிலே நாங்கள் இருக்கும் இடங்குறித்து நீ வர எண்ணுவது தவறு. நீ நீடூழி வாழவேண்டும். இரவில் வராதே! வந்தால் நாங்கள் வருந்துவோம்” என்று விடைகூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை அறிவிப்பதே இப்பாடல். பாட்டு கருங்கண் தாகலை பெரும் பிறிது உற்றுஎனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி, கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி, ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்; சாரல்நாட! நடுநாள் வாரல்! வாழியோ வருந்துதும் யாமே. பதவுரை: கருங்கண் தாகலை- கரிய கண்களையுடைய தாவுகின்ற ஆண்குரங்கு, பெரும்பிறிது உற்று என- இறந்து போய் விட்டது என்று, கைம்மை உய்யா- அதனால் வந்த கைம்மையின் துன்பத்தைப் போக்கிக் கெர்ளள முடியாத. காமர் மந்தி- அழகிய பெண் குரங்கு. கல்லாவன் பறழ்-இன்னும் மரமேறிப் பாய்வதற்குக் கற்றுக் கொள்ளாத தன்னுடைய வலிமையுள்ள குட்டியைக் கிளை முதல் சேர்த்தி தன் உறவினரிடம் சேர்த்துவிட்டு. ஓங்குவரை- உயர்த்த மலையிலேறி. அடுக்கத்துப் பாய்ந்து-கீழ் உள்ள மலைச் சாரலிலே வீழ்ந்து. உயிர் செகுக்கும்-தன் உயிரைப் போக்கிக் கொள்ளும், சாரல் நாட-மலைச்சாரல் அமைந்த நாட்டை யுடையவனே. நடுநாள் வாரல்- நீ நள்ளிரவிலே வரவேண்டாம். வாழியோ- நீ நீடுழி வாழ்க. யாம் வருந்துதும்- நள்ளிரவிலே நீ வந்தால் நாங்கள் வருந்துவோம். கருத்து: இரவிலே வருவதால் இடையூறு நேரலாம். அவ் விடையூறு எங்கள் உயிருக்கு ஆபத்தாகவும் முடியும்; ஆதலால் இரவில் வரவேண்டாம். விளக்கம்: இது கடுந்தோட் கரவீரன் என்னும் புலவர் பாட்டு. இரவிலே வந்து தலைவியைச் சந்திக்க விரும்பிய தலைவனைப் பார்த்து, இரவிலே வரவேண்டாம் என்று தோழி கூறியது. குறிஞ்சித்திணை. தாகலை- தாவுகின்ற கலை. கலை-ஆண் குரங்கு. பெரும் பிறிது- பெரிய வேறுபாடு; அது இறந்து படுவதைக் குறிக்கும். காமர்-அழகு. பறழ்- குட்டி மந்தி- பெண் குரங்கு. ‘உன் மலையில் உள்ள பெண் குரங்குகூட தன் காதலன் இறந்தால் தானும் இறக்கும் அவ்வளவு அன்புடையது. ஆதலால் உனக்கு ஓர் ஆபத்தானால் உன்னிடம் உயிரை வைத்திருக்கின்ற உன் காதலி எப்படி உயிர் வாழ்வாள். வாழ மாட்டாள். உன் காதலி உயிர் வாழ வேண்டியாவது நீ இரவிலே வருவதை விரும்பாதே’ என்ற கருத்தையே தோழி இவ்வளவு நயமாகக் கூறினாள். எப்படிக் கூறுவேன் பாட்டு 70 தலைவன் தன் அருமைக் காதலியுடன் நீண்ட நாழிகை அளவளாவி யிருந்தான்; அவனுடன் கூடிக் குலவிக் குதூகலமாக இருந்தான். இன்னதென்று வாய்விட்டுச் சொல்ல முடியாத இன்ப சாகரத்திலே நீந்தி விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவளிடம் விடை பெற்றுப் பிரிந்தான். அவன் பிரிந்து செல்லும் போது தன் தலைவியின் உருவையும், பண்பையும் எண்ணி எண்ணி இன்பமடைந்தான். தன் உள்ளத்தினிடம் அவளுடைய அழகையும் எடுத்துரைத்துத் தானே இன்புறுகிறான். ‘என் தலைவி- என் காதலி எனது ஐந்து புலன்களுக்கும் இன்பத்தை அளிக்கின்றாள். அவள் கூந்தல் எண்ணெய் தடவிச் சீவப்பட்டு அழகாகப் படிந்திருக்கின்றது; நெற்றி, ஒளியும் அழகும் அமைந்து விளங்குகின்றது. தலைவியின் இத்தோற்றத்தைக் காணக் காண என் கண்ணுக்கு இன்பமாக இருக்கின்றது. அவளிடமிருந்து நறுமணம் கமழ்கின்றது. குளிர்ந்த தன்மை யுடையவளாக இருக்கிறாள். இந்தக் குளிர்ந்த தன்மையுள்ள நறுமணத்தால் நான் மகிழ்ச்சி யடைகிறேன். என் உயிர்ப்புக்கும் இதனால் இன்பம் ஏற்படுகின்றது. என் மூக்கு முகர்ந்து மகிழ்கின்றது. அவள் சளசள வென்று அதிகமாகப் பேசுவதில்லை; மிகவும் அளந்து சில சொற்களையே கூறுகின்றாள். அச்சொற்கள் மிகவும் மென்மையானவை; இனிமை யானவை; நெஞ்சத்தைக் குளிர வைப்பவை. இத்தகைய சொற்களால் நான் இன்பமடை கின்றேன். என் காதுகள் இன்புறுகின்றன. அவளை அணைத்துக் கொள்ளும் போது மல்லிகை போல மெல்லியளாக இருக்கின்றாள்; அப்பொழுது என் உடல் அடையும் இன்பத்தை என்னால் எடுத்துக்கூற முடியாது. அவளைத் தொடுவதன் மூலம் இப்படிப்பட்ட உடலின்பத்தை அடைகின்றேன். அவளைத் தழுவிக் கொள்ளும் போது என் வாயும் இன்பம் அடைகின்றது. அவளை முத்தமிடுகின்றேன். அதரபானத்தைப் பருகுகின்றேன்; இவற்றால் என் வாய்க்குக் கிடைக்கும் இன்பத்தை என்னவென்று சொல்வேன்? இவளுடன் இணைந்திருக்கும் போது என் ஐந்து புலன்களும் இவ்வாறு இன்பம் அடைகின்றன. பிரிந்தால் அவள் என்னைத் துன்புறுத்துகின்றாள். அவளை நினைத்து நினைத்து நெஞ்சம் வருந்துகின்றேன். ஆதலால் அவள் இப்படிப்பட்டவள் என்று என்னால் அளவிட்டுக் கூற முடியாதவளாயிருக்கின்றாள். இவ்வாறு தன் தலைவியின் தன்மையைத் தானே சொல்லிக் கொண்டான். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு ஒடுங்கு ஈர்ஓதி ஒண்நுதல் குறுமகள்; நறும் தண்ணீரள்; ஆரணங் கினளே; இனையள் என்று அவள் புனைஅளவு அறியேன் சில மெல்லியவே கிளவி, அணை மெல்லியள், யான்முயங்குங் காலே. பதவுரை: ஒடுங்கு ஈர்ஓதி- படிந்த எண்ணெய்ப் பசையுள்ள கூந்தலையும். ஒண்நுதல்- ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய. குறுமகள் -தலைவி. நறும் தண் நீரள்- நறுமணத்தையும் குளிர்ந்த தன்மையையும் உடையவள். கிளவி சில- அவள் உரைக்கும் சொற்கள் சில சொற்கள் தாம். மெல்லியவே- ஆயினும் அவை இனிமையான மெல்லிய சொற்கள். யான் முயங்குங்கால்- யான் அவளைக் கூடியிருக்கும் போது, அணைமெல்லியள்- அணைத்துக் கொள்வதற்கு மிகவும் மென்மையுடையவளாக இருக்கின்றாள். ஆர் அணங்கினளே- ஆனால் பிரிந்தால் வருத்தத்தைச் செய்கின்றாள். அவள் இனையள் என்று- ஆதலால் அவளை இப்படிப்பட்டவள் என்று. புனை அளவு அறியேன்- புனைந்து கூறும் அளவை அறியாமல் திகைக்கின்றேன். கருத்து: என் காதலி எனது ஐம்புலன்களுக்கும் இன்பத்தை அளிக்கின்றான். விளக்கம்: ஓரம்போகியார் பாட்டு. தலைவியின் அழகையும் அவள் தரும் இன்பத்தையும் பாராட்டிக் கூறியது; தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. ஒடுங்கு ஈர்ஓதி, ஒண்நுதல் குறுமகள் நறும் தண்நீரள்; கிளவி சின் மெல்லியவே; யான் முயங்குங்காலே, அணை மெல்லியள்; ஆரணங்கினளே; அவள் இனையள் என்று புனை அளவு அறியேன். இவ்வாறு பதங்கள் மாற்றப்பட்டன. ஈர்-ஈரம். எண்ணெய்ப் பசை. ஓதி-கூந்தல், புனைதல்- ஒன்று சேர்த்தல். ஏ- அசைச்சொற்கள். ஐம்புலன்கள்; மெய், வாய், கண், மூக்கு, காது, என்பன தொடுவதால் உடல் இன்பமும்; முயங்குவதால்- சேர்ந்திருப்பதால் வாயின்பமும், பார்ப்பதால் கண்ணின்பமும், முகர்வதால் மூக்கின்பமும், கேட்பதால் காதின்பமும் ஒரு நற்குணமுள்ள அழகிய பெண்ணிடத்தில் அனுபவிக்க முடியும் என்ற உண்மையை உணர்த்துகிறது இப்பாடல் மருந்தும் செல்வமும் பாட்டு 71 ஒரு தலைவன் பொருளீட்டும் பொருட்டுப் புறப்பட நினைத்தான். அவன் பொருளீட்டப் புறப்பட்டால் அவன் காதலி தனித்திருப்பாள்; அவனும் அவளை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும். பொருளீட்டும் எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தவுடன் முதலில் அவன் காதலியைப் பற்றிய இந்த எண்ணமே குறிக்கிட்டது. அவன் செல்வந்தேடப் புறப்படலாம் என்று எண்ணிய நேரத்தில் அவன் மட்டுந்தான் தனித்திருந்தான். அவன் காதலி பக்கத்தில் இல்லை. ஆயினும் அவளுடைய உருவம் அவன் உள்ளத்திரையிலே அப்படியே காட்சியளித்தது. பொன்போல் அழகான தேமல் படர்ந்து அழகும் பெருமையும், இளமையும், அமைந்து கண்களைக் கவரும் மார்புகள், கண்ணையும் கருத்தையும் கவரும் அகன்ற தோள்கள்; சிறிய இடை; இது தான் அத்தலைவியின் அழகிய தோற்றம். அவளுடைய தோற்றம் அவன் உள்ளத்தைப் பிடித்துக் குலுக்கி, நீ எங்கே போக நினைக்கின்றாய் என்று கேட்பது போல் இருந்தது உடனே அவன் உள்ளமும் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. இவளைப் பிரிந்து சென்றால் காமநோய் என்னைப் பிடித்துக் கொள்ளும்; துன்பத்தைக் கொடுக்கும்; அந்த நோய்க்கு வேறு மருந்து இல்லவேயில்லை. இவளே தான் மருந்தாவாள். அன்றியும் நான் எந்தச் செல்வத்தைத் தேடுவதற்குப் போக எண்ணு கின்றேனோ அந்தச் செல்வமும் இவளேதான்; ஆதலால் எனக்கு அமுதமும் இவள்தான்; செல்வமும் இவள்தான்; இவளை விட்டு நான் வேறு, எந்தச் செல்வத்தைத்தான் தேடிச் செல்வது? இவ் வெண்ணமும் அவனைக் கவ்விக் கொண்டது. ஆதலால் இப்பொழுது பிரிந்து போக வேண்டாம் என்று முடிவு செய்தான். இவ்வாறு ஒரு தலைவன் பொருள் தேடப் பிரிவதற்கு எண்ணிய தன் எண்ணத்தைத் தானாகவே மாற்றிக் கொண்ட நிகழ்ச்சியைக் கூறுவது இப்பாடல். பாடல் மருந்துஎனின் மருந்தே! வைப்புஎனின் வைப்பே! அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப் பெரும்தோள் நுணுகிய நுசுப்பின் கல்கெழு கானவர் நல்குறு மகளே. பதவுரை: அரும்பிய- நெஞ்சே, வெளியிலே காணப்படு கின்ற. சுணங்கின்- தேமலையும்; அம்பகடு -அழகையும், பெருமை யையும், இளம்- இளமையையும் உடைய. முலை- மார்பினையும் உடையவள்; பெரும் தோள்- பெரிய திரண்ட தோள்களை யுடையவள்; நுணுகிய நுசுப்பின்-சிறிய இடையை உடையவள்; கல்கெழு கானவர்- கற்கள் நிறைந்த காட்டை யுடையவர். நல்குறு மகள்- பெற்றெடுத்த என் தலைவி. மருந்து எனின்- என்னை வருத்தும் காம நோய்க்கு மருந்து வேண்டும் என்று நினைத்தால் மருந்தே- அதைத் தணிக்கும் மருந்தாகவே இருப்பாள். வைப்பு எனின்- இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதற்கான செல்வம் வேண்டும் என்று எண்ணினால். வைப்பே- அந்தச் சொல்வமாகவே இருக்கின்றாள். கருத்து: இவளைப் பிரிந்து போய்ப் பெறக்கூடிய இன்பமும் செல்வமும் வேறு ஒன்றும் இல்லை. விளக்கம்: இப்பாடல் கருவூர் ஓத ஞானி என்பவர் பாட்டு. பொருள் தேடப் பிரிந்து போக நினைத்த தலைவன் ‘தனக்கு இன்பந்தரும் செல்வம் தன் காதலியைத் தவிர வேறில்லை’ யென்று எண்ணினான். அதனால் பிரிவைத் தவிர்த்திருந்தான். தலைவன் கூற்று. பாலைத்திணை. ‘மருந்து, எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே’ என்ற முதல் அடியை இறுதியாக வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. மருந்து-அமுதம். வைப்பு- செல்வம். சேமித்து வைக்கக் கூடியது ஆதலின் செல்வத்திற்கு வைப்பு என்ற பெயர் வந்தது. பகடு- பெருமை. ஓர் அழகிய பெண்ணின் தோற்றத்தை இப்பாட்டு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. ‘தேமல் படர்ந்த அழகிய இளைய தனங்கள். அகன்ற தோள்கள். சிறிய இடை’. இவை அழகுள்ள பெண்ணின் அமைப்பாகும். கண்களே துன்புறுத்தின பாட்டு 72 ஒரு தலைவனும் அவனுடைய தோழனும் வேட்டை மேற்சென்றனர். தலைவன் ஒரு மானையோ, ஒரு புலியையோ விரட்டிச் சென்றான். அதன்மேல் குறிபார்த்து அம்பெய்ய முயன்றான். அது அவன் குறிக்கு அகப்படவில்லை. அவனும் அதைவிடாமற் பின்பற்றிச் சென்றான். இதனால் அவன் தன் தோழனைப் பிரிய நேர்ந்தது. தலைவன் விரட்டிச் சென்ற விலங்கு எப்படியோ தப்பிப் போய் விட்டது. அவன் நினைத்தது ஒன்று; ஆனால் நடந்தது வேறு ஒன்று; சென்ற இடத்தில் பருவ மங்கையொருத்தியைக் கண்டான். தோற்றத்திலே அவனும் அவளும் ஒத்திருந்தனர். இருவர் கண்களும் சந்தித்தன; கண்களின் வழியே உள்ளங்கள் ஒன்றுபட்டன; பிறகு கேட்க வேண்டுமா? காதலன் காதலிகளா யினர். இருவரும் இணைபிரியாத கணவன் மனைவிகளாவதென்று உறுதி செய்து கொண்டனர். பின்னர்த் தலைவன் தான் வந்த வழியை அடையாளம் பார்த்துக் கொண்டு தோழனையடைந்தான். தலைவனிடம் ஏதோ மாறுதல் காணப்பட்டது. அதைத் தோழன் தெரிந்து கொண்டான். ‘உன்னிடம் இந்த மாறுதல் எப்படி வந்தது?’ என்று கேட்டான் தோழன். தலைவன் தன் செய்கையை ஒளிக்கவில்லை. நடந்த நிகழ்ச்சியை தோழனிடம் கூறினான். வெளிப்படையாக இன்னது நடந்தது என்று கூறவில்லை; இன்னதுதான் நடந்திருக்கும் என்று தோழன் தெரிந்து கொள்ளும்படி மிகவும் நயமாகக் கூறினான். ‘தோழனே நான் விரட்டிச் சென்ற அந்த நல்ல விலங்கு எனக்கு ஒரு துன்பமும் செய்யவில்லை. எனக்கு நன்மையைத் தான் செய்தது. அது என்னை ஒரு தினைப்புனத்தின் அருகே கொண்டு போய் விட்டுவிட்டு மறைந்துவிட்டது. அங்கு நின்று அவ்விலங்கு போன பக்கத்தை உற்று உற்றுப் பார்த்தேன். அது சென்ற வழியை என்னால் காண முடியவில்லை. நான் உற்று நோக்கியதன் காரணமாக எனக்குக் கிடைத்த காட்சி வேறு. தேன் போன்ற இனிமையான சொற்கள்; திரண்ட மெல்லிய தோள்கள்; இவற்றையுடைய ஒருத்தி. இவள் பெரிய மலைச் சாரலிலே பருத்தியுடன் சேர்த்து விதைத்த தினைப்புனத்திலே நின்று கொண்டிருந்தாள். சும்மா நிற்கவில்லை; பரண்மேல் நின்றுகொண்டு தினையைக் கவரவரும் குருவிகளைக் கூச்சலிட்டு ஓட்டிக் கொண்டிருந்தாள். அவனுடைய பெரிய குளிர்ச்சியான கண்களை நான் கண்டேன். அவனுடைய கண்களும் என்னைக் கண்டன. அக்கண்கள் மலர்களைப் போன்ற அழகுள்ளவை சுற்றிலும் சுழன்று நோக்குவன. ஆயினும் அம்பைப்போல அவை எனக்குத் துன்பத்தைச் செய்துவிட்டன; எல்லோரும் காணும்படி துன்பத்தைச் செய்துவிட்டன. என்னுடைய வேறுபாட்டிற்குக் காரணம் இதுதான். வேறொன்றும் இல்லை என்று கூறினான் தலைவன். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு பூஒத்து அலமரும் தகைய, ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே; தேமொழித் திரண்ட மென்றோள், மாமலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே பதவுரை: தேமொழிதேன்போன்ற இனிய சொற்களையும். திரண்ட மெல்தோள் - திரட்சியான மெல்லிய தோள்களையும் உடையவள். மாமமலை - பெரிய மலைச் சாரலிலே பரீஇ வித்திய - பருத்தியுடன் சேர்த்து விதைத்த. ஏனல் - தினைப் புனத்திலே நின்று. குரீஇஓப்புவாள் - குருவிகளை ஓட்டிக் கொண்டிருப்ப வளுடைய. பெருமழைக் கண் - பெரிய குளிர்ச்சியுள்ள கண்கள். பூ ஒத்து - மலரைப்போல. அலமரும் தகைய - சுழலும் அழகை யுடையன. ஏஒத்து - அக்கண்கள் அம்பைப் போல. எல்லாரும அறிய - எல்லாரும் என்னைக் கண்டு நகைக்கும்படி. நோய் செய்தனவே - எனக்குக் காதல் நோயை உண்டாக்கிவிட்டன. கருத்து: - நான் ஒரு குன்றவர் மகள்பால் நட்புக் கொண்டு காதல் நோய் அடைந்தேன். விளக்கம்: - இது மள்ளனார் என்னும் புலவர் பாட்டு தலைவன் தன் மாறுபட்டுக்குக் காரணம் காதல் நோய் என்று தன் தோழனிடம் கூறினான். தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. `தேம்மொழி திரண்ட மேல்தோள் மாமலை பரீஇ வித்திய எனல் குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண் பூஒத்து அலரும் தகைய; ஏஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தன’ என்று மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது. தலைவி பரண்மேல் நின்று சுற்றிலும் நோக்கிக் குருவிகளை ஓட்டிக் கொண்டிருந்தாள். ஆதலால் தலைவன் அவள் இனிய குரலைக் கேட்டான்; அவள் கண்களைக் கண்டான்; திரண்ட தோள்களையும் நோக்கினான். அவளும் நோக்கினாள். தினையுடன் பருத்தியையும் சேர்த்து விதைப்பது அக்கால வழக்கம். பழீஇ, குரீஇ - அளபெடை. பரீஇ - பருத்தி. ஏனல் - தினை ஒப்புதல் - விரட்டுதல். அலமரும் - சுழலும். ஏ - அம்பு, நோய் - காம நோய். அவளுடைய கண்கள் தோற்றத்திலே மலர் போன்ற அழகுள்ளவைதான்; ஆனால் எனக்கு மட்டும் அம்பைப் போல் துன்பம் புரிந்தன என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ஆற்றலும் அறிவும் வேண்டும் பாட்டு 73 காதலனும் காதலியும் கனிந்த அன்புள்ளவர்கள். இவர்கள் அன்பு- காதல்- எத்தகையது என்பது தோழிக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் நீண்ட காலமாகக் களவு மணத்திலே காலங் கடத்தி வந்தனர். இவர்கள் விரைவிலே கற்பு மணம் புரிந்து கொள்ள வேண்டும். யாவரும் காண வெளிப்படையாக இல்லறத்திலே வாழ்ந்து இன்புற வேண்டும் என்பதே தோழியின் எண்ணம். காதலனும். காதலியும் பல நாட்கள் பகற்காலத்திலே குறித்த இடத்திலே ஒன்று கூடி மகிழ்ந்தனர். இந்தப் பகற் காலக் கூட்டத்தை ஊரார் அறிந்து விட்டால் அது நகைப்பற்கிட மாகும் என்று தோழி கருதினாள். ஆதலால் பகற்காலக் கூட்டத்தைத் தடுத்து விட்டாள். இரவிலே தலைவனைக் குறித்த இடத்திலே வரச் செய்தாள்: தலைவியும் அவனும் சந்திக்க வாய்ப்பளித்தாள். பின்னர் இரவிலே சந்திக்கவும் தலைவனுக்கு இடந்தரவில்லை: அவனை இரவிலே வரவேண்டாம் என்று தடுத்து விட்டாள். தலைவி தன் காதலனைச் சந்திக்க முடியாத காரணத்தால் மெலிந்திருந்தாள். தோழியின் செய்கையால் அவளுக்குக் கொஞ்சம் வருத்தந்தான். தோழியின் இச்செய்கைக்குக் காரணம் என்னவென்று தலைவியால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிச் செய்தால் தலைவன் விரைவிலே, தன் தலைவியை மணந்து கொள்வான் என்று முடிவு செய்தாள். அதனாலேயே பகற்குறியையும் மறுத்தாள். இரவுக்குறியையும் மறுத்தாள் இவ்வுண்மையை உணராமல் உள்ளம் மெலிந்த தலைவிக்குத் தோழி ஆறுதல் உரைக்கின்றாள். ‘தலைவியே! நீ தலைவனுடைய மார்பையே விரும்புகிறாய்! மற்றொன்றிலும் உனக்கு விருப்பமில்லை. அவன் மார்பை நினைத்து நினைத்து நெஞ்சம் வருந்தாதே! நல்ல தைரியமும் வேண்டும்; நல்ல ஆழ்ந்த அறிவும்வேண்டும்; அப்படியானால் தான் எந்தத் துன்பத்தையும் தாங்க முடியும். நன்னனுடைய நாட்டிலே இருந்த காவல் மரமாகிய மாமரத்தை அழித்து. அவனுடைய நாட்டிலே புகுந்த, சொல்லியதை நிறை வேற்றும் கோசர்போல் அஞ்சாமையும் வேண்டும்; ஆராய்ந்து உண்மைகாணும் அறிவும் வேண்டும்; சிறிதாவது இவை இருந்தால் தான் உண்மையுணர்ந்து உள்ளங் கலங்காமல் வாழலாம். தலைவன் விரும்புகிறபடியெல்லாம் நாமும் நடந்து கொண்டால் நமது மணம் விரைவில் நடைபெறாது! அவன் எண்ணம் நிறைவேறிக் கொண்டிருந்தால் விரைவிலே மணக்க முயற்சி செய்ய மாட்டான். ஆதலால்தான் முதலில் பகல் சந்திப்பை மறுத்தேன்; அதன் பிறகு இரவிலே சந்திப்பதையும் தடுத்தேன். இதனால் நமக்கு நன்மையே உண்டாகும். நீ மட்டும் அஞ்சாமல் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ! அழியல் வாழி! தோழி! நன்னன் நறுமா கொன்று நாட்டில் போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. பதவுரை: மகிழ்நன் மார்பே- காதலனுடைய மார்பையே வெய்யை ஆல் நீ -விரும்பி வருந்துகின்றாய்! நீ. அழியல்- வருந் தாதே. வாழி தோழி- வாழ்க தோழியே. நன்னன் நறுமா கொன்று- நன்னனுடைய காவல் மரமாகிய நல்ல மாமரத்தை வெட்டி வீழ்த்தி. நாட்டில் போகிய- அவனுடைய நாட்டுக்குள்ளே வெற்றியுடன் நுழைந்த. ஒன்றுமொழி- வஞ்சின முள்ள. கோசர் போல- கோசரைப் போல. வன்கண்- அஞ்சாமையும் சூழ்ச்சியும்- ஆய்ந்த உண்மை காணும் அறிவும். சிறிது வேண்டும் -சிறிது வேண்டுவதாகும். கருத்து: விரைவிலே தலைவன் மணந்து கொள்ளுவான்; நீ மனம் மெலியாமல் தைரியத்துடன் இருக்க வேண்டும். விளக்கம்: இது பரணர் பாட்டு. பகற்குறியையும், இரவுக் குறியையும் மறுத்த தோழி, தன் தலைவிக்கு ஆறுதல் கூறியது. தோழிகூற்று. குறிஞ்சித்திணை. ‘வேண்டுமால் சிறிதே என்னும் இறுதித் தொடர் மட்டும் “சிறிது வேண்டும்” என்று மாற்றப் பட்டது. ஆல்; எ; அசைச்சொற்கள். வெய்யை- விருப்பம் உடையவள். ஒன்று மொழி- வஞ் சின மொழி; சொல்லியதை நிறைவேற்றுவது; ஒன்று சொன்னால் அதை நிறைவேற்றுவது; முன் சொன்னதை எக்காரணத்தாலும் மாற்றாமல் செய்து முடிப்பது. இதுவே வஞ்சினமாகும். கோசர் என்பவர்கள் சிறந்த வீரர்கள்; போரிலே சிறந்த வர்கள்; தாம் கூறிய வஞ்சினத்தை நிறைவேற்றக் கூடியவர்கள். இவர்கள் ஒரு காலத்தில் நன்னன் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றனர். நன்னனுடைய நாட்டின் காவல் மரம் மாமரமாகும். இந்த நன்னன் கொங்கு நாட்டிற்கு அருகேயுள்ள ஒரு மலைநாட்டின் தலைவன் என்று கருதப்படுகின்றான். அஞ்சாமைக்கும்- அறிவுக்கும் கோசருடைய வீரமும் அறிவும் உதாரணமாகக் காட்டப்பட்டது. இவ்வாறு சரித்திர நிகழ்ச்சியை உதாரணமாக எடுத்துக்காட்டப்படும் பாடல்கள் இன்னும் சில உள்ளன. நம்மால் வருந்துதல் நன்றோ! பாட்டு 74 புதிதாக மணந்த இரு காதலர்கள். அவர்கள் இன்னும் ஊரார் அறிய மணம் புரிந்து கொள்ளவில்லை. களவு மணந்தான் புரிந்து கொண்டனர். அவர்கள் களவு மணம் புரிந்து கொண்டபின் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. எப்படி? எங்கே சந்திப்பது? என்று அவர்களுக்குள் ஓர் ஏற்பாடு செய்துகொள்ளவில்லை. தலைவிக்கும் தலைவனைக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளூர நிரம்பிக் கிடந்தது; தலைவனும் அவளைக் காண இடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். தலைவன் ஒரு நாள் தோழியைச் சந்தித்தான்; ‘தலைவியைச் சந்திக்க ஓர் இடத்தைக் குறிக்க வேண்டும்; அந்த இடத்திலே குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும்; அவளைச் சந்திக்காமல் என்னால் வாழ முடியாது; இதற்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தோழிக்குத் தன் தலைவியின் நிலைமை தெரியும்; அவளும் தலைவனைக் காணாமல் மெலிகின்றாள் என்பதை அறிவாள். ஆதலால் தலைவன் வேண்டுகோளைக் கேட்டவுடன் தோழி மகிழ்ச்சியடைந்தாள். தேடிய செல்வம் தானே கையிலே வந்து பாய்ந்ததைப் போலக் களிப்படைந்தாள். உடனே அவள் தன் தலைவியிடம் போனாள்; தலைவன் விரும்பும் செய்தியைக் கூறினாள். ‘தலைவியே, ஒரு நல்ல செய்தி! உன் கவலையும் துன்பமும் ஒழிந்தன; அந்த மலைநாடன் அதோ மறைவிடத்திலே நிற்கின்றான். அவிழ்த்துவிட்ட குதிரை விரைந்து பாய்வதுபோல் யானை யால் வளைக்கப்பட்ட மூங்கில் அதன் கையிலிருந்து விடுபட்ட வுடன் விரைந்து மேலெழுகின்ற காட்சியமைந்த மலைநாடன் இப்பொழுது நம்மைத் தேடி வந்திருக்கின்றான். நாம் அவனை எண்ணி ஏங்கிக்கிடக்கும் செய்தி அவனுக்குத் தெரியாது. அவனைக் காண வேண்டும் என்னும் ஆவல் காரணமாக நாம் மெலிந்து கிடக்கும் செய்தியும் அவனுக்குத் தெரியாது. நம்மைப் போலவே அவனும் நம்முடைய சிறந்த நலத்தை விரும்பி வருந்துகின்றான்; கோடைக் காலத்து வெப்பத்தைத் தாங்கமுடியாமல் தவிர்க்கின்ற காளையைப் போல அவன் காமத்தின் வெம்மையைத் தாங்க மாட்டாமல் தவிக்கின்றான். இச்சமயத்தை நாம் நழுவவிடக் கூடாது. அவனைச் சந்திப்பதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒரு குறித்த இடத்திலே, ஒரு குறித்த நேரத்திலே இருவரும் சந்திப்பதென்று ஏற்பாடு செய்து கொண்டால் இருவர் துன்பமும் ஒழியும்; இருவரும் இன்புறலாம்; என்று தோழி தலைவியினிடம் உரைத்தாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதே இப்பாடல். பாட்டு விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்புதோய்ப் பசும்கழைக் குன்ற நாடன் யாம் தன் படர்ந்தமை அறியான்; தானும் வேனில் ஆனேறு போலச் சாயினள்; என்ப நம் மாண் நலம் நயந்தே. பதவுரை: விட்டகுதிரை- அவிழ்த்து விட்ட குதிரை. விசைப் பின் அன்ன- துள்ளிப் பாய்ந்து செல்வதைப் போல. விசும்பு தோய்- பிடித்து விட்ட மூங்கில் வானத்திலே பாய்கின்ற. பசும் கழை- பசுமையான மூங்கில்கள் நிறைந்த. குன்ற நாடன்- மலை நாட்டை யுடைய தலைவன். யாம் தன் படர்ந்தமை அறியான்- நாம் அவனை நினைத்து வருந்துகின்றதை அறிய மாட்டான். நம் மாண் நலம்- நம்முடைய சிறந்த இன்பத்தை. நயந்து-விரும்பி. தானும்-நம்மைப் போலவே அவனும். வேனில்- கோடையின் வெப்பம் தாங்க முடியாமல் வருந்தும். ஆன் ஏறு போல- காளையைப் போலச் சாயினன்- வருந்தினான். கருத்து: நீயும் வருந்தினை; தலைவனும் வருந்துகின்றான்; ஆதலால் அவன் கருத்துக்கு இசைய வேண்டும். விளக்கம்: இப்பாடல் ‘விட்ட குதிரையார்’ என்னும் புலவரால் பாடப்பட்டது. இது காரணப் பெயர். இப்பாடலில் உள்ள விட்ட குதிரை என்னும் தொடரே இவருக்குப் பெயராயிற்று. தலைமகனுடைய வேண்டுகோளை மறுக்காமல் நிறை வேற்ற வேண்டும் என்று தோழி தலைவியிடம் கூறியது. தோழி கூற்று. குறிஞ்சித்திணை. ‘விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசுங் கழை குன்ற நாடன் யாம் தன் படர்ந்தமை அறியான். நம் மாண் நலம் நயந்து, தானம் வேனில் ஆனேறு போலச் சாயினன்’ என்று மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. என்ப; ஓ; அசைச்சொற்கள். விசைத்தல்- துள்ளி எழுதல்; விரைதல், கழை - மூங்கில் படர்தல்- நினைத்தல். வேனில்- கோடை. சாய்தல்- வருந்துதல் மாண்நலம்- சிறந்த இன்பம். இப்பாடலில் இரண்டு உவமைகள் வந்தன. பிடித்துவிட்ட மூங்கில் விரைந்து மேலே பாய்வதற்கு அவிழ்த்து விட்ட குதிரை உவமை. தலைவன் காமநோயால் வருந்துவதற்கு, வேனிற் காலத்து வெப்பம் தாங்க முடியாமல் வருந்தும் காளை உவமானம். இந்த இரண்டு உவமானங்களும் மிகவும் பொருத்தமானவை. இப்பாட்டிலே தோழி தலைவிக்குக் கூறும் அறிவுரை பாராட்டக் கூடியது. நாம் விரும்பிய தலைவன்; காணவில்லையே என்று கவலைப்படுவதற்குக் காரணமாயிருந்த தலைவன்; இப்பொழுது தானே வந்து விட்டான்; வலிய வந்தவனை விட்டு விடக் கூடாது; ஆதரவு காட்டி அணைத்துக் கொள்ளுவதே நமது கடமை என்று தோழி வலியுறுத்திக் கூறிய கருத்தை இப்பாடலில் காணலாம். இப்பாடல் மிகுந்த சொல் நயமும், பொருட்செறிவும் நிறைந்த பாடல்களிலே ஒன்றாகும். காதலுக்குக் கண்ணில்லை பாட்டு 78 தோழன் தன் தலைவனை உற்று நோக்கினான்; அவனிடத் திலே பல மாறுதல்களைக் கண்டான்; அந்த மாற்றங்கள் எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று எண்ணிப் பார்த்தான். அந்தத் தோழன் மிகவும் அறிவுள்ளவன். அகத்தில் உள்ளதை முகத்தால் அறியும் ஆற்றல் உள்ளவன். ஆதலால் தலைவனுடைய மாறுதலுக்குக் காரணம் இன்னதுதான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டான். அவன் உண்மையான தோழன். எப்பொழுதும் தலைவன் பக்கத்திலேயே இருந்து பழகுகின்றவன். தனது நண்பர் தவறு செய்யும்போது அதைத் தடுப்பது உண்மையான நண்பர்கள் கடமை. இக்கடமையை அறிந்தவன் அத்தோழன். தலைவன் காமநோய்க்கு ஆளாகிவிட்டான். யாரோ ஒருத்தி பால் காதல் கொண்டு விட்டான். அந்தக் காதல்தான் இவனை வாட்டி வதை செய்கின்றது. காதல் நோய்க்கு ஆளானவர்கள் தப்பிப்பிழைப்பது அரிது. காதலுக்குக் கண்ணில்லை. அது யாரிடத்தும் பாய்ந்து பற்றிக் கொள்ளும் தன்மையுள்ளது. ஆதலால் இவன் கண்மூடித்தனமாகத் தன் தகுதிக்குப் பொருத்தமான ஒருத்தியிடம் காமங் கொண்டிருப்பானாயின் அது இவனுக்கு இடையூறாக முடியும்; இவன் வாழ்க்கையையே சிதைத்துவிடும்; ஆதலால் இவனுக்கு நல்லுரை கூற வேண்டும் என்று முடிவு செய்தான். உடனே தன் தலைவனைப் பார்த்துச் சிறிதும் தயங்காமல் அறிவுரை புகன்றான். ‘அளக்க முடியாத உயரமும் பரப்பும் உள்ளது; வானம் வறண்டாலும் வற்றாத வளமும் நீர்ப்பெருக்கும் உடையது; இத்தகைய பெரிய மலையின் மேலிருந்து, பெரிய அருவி நீர் வெண்மையாக வீழ்கின்றது. அந்த நீர் வீழ்ச்சியின் ஒலி அறிவுள்ள கூத்தர்கள் வாசிக்கும் முழவு என்னும் வாத்தியத்தைப் போல் கேட்கின்றது. இச்சிறந்த மலையையுடைய தலைவனே! காமத்தின் தன்மை இன்னது என்பதை நீ நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். காமத்திற்குப் பகுத்தறியும் குணம் இல்லை; அது யாரிடத்தும் படருந் தன்மையுள்ளது; நன்மை யின்னது என்று உணராதவர்களிடத்தும் சென்று தங்கிவிடும்; இத்தகைய பெரிய பேதமையுள்ளது அது. ஆதலால் காமத்தை வரவேற்பதோ, போற்றுவதோ தவறு; அது வெறுக்கத்தக்கதாகும். நீ கொண்டிருக்கும் காமம் சரியானதென்று என்னால் நம்ப முடியவில்லை நன்மையின்னது, தீமையின்னது என்று பகுத்தறியாத ஒருத்தியிடம் நீ காமங் கொண்டிருக்கின்றாய்: அது நன்றன்று. உன் காமம் அறிவோடு கூடியது என்று நான் நினைக்கவில்லை உன்னுடைய பெருமைக்கும் வலிமைக்கும் ஏற்ப நீ நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினான் தோழன். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு பெருவரை மிசையது நெடுவெள் அருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் சிலம்பின் இழிதரும் இலங்கு மலைவெற்ப நோதக் கன்றே, காமம் யாவதும் நன்றென உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதை மைத்தே. பதவுரை: பெருவரை- பெரிய மலையின். மிசையது- மேலே யுள்ளதாகிய. நெடு வெள் அருவி - நீண்ட வெண்மை யான அருவி யானது. முதுவாய்க் கோடியர் - அறிவு பொருந்திய கூத்தர்களின், முழவின் ததும்பி - முழவைப் போல ஒலித்து. சிலம்பின் - பக்க மலையிலே. இழி தரும்- விழுகின்ற. இலங்குமலை வெற்ப - விளங்குகின்ற மலையையுடைய தலைவனே. காமம்- காமமானது. யாவதும் - சிறிதும். நன்று என - நன்மை யின்னது என்று. உணரார் மாட்டும் - அறியாதவர்களிடத்திலும். சென்று ஏ நிற்கும் - சென்று தங்கியிருக்கின்ற. பெரும் பேதைமைத்து ஏ- மிகுந்த மூடத்தனம் உள்ளது. ஆதலால். நோதக்கன்று- அக்காமம் வெறுக்கத்தக்க தாகும். கருத்து: நீ முன்பின் அறியாத ஒருத்தியிடம் காமங் கொண்டாய்; அது வெறுக்கத்தக்கது. விளக்கம்: இது நக்கீரனார் பாட்டு. தலைவன் முன்பின் அறியாத ஒருத்தியிடம் காமங் கொண்டான். அதனால் அவனிடம் வேறுபாடு காணப்பட்டது; அதைக் கண்டு அவன் பாங்கன் அவனுக்குக் காமத்தின் தன்மையை எடுத்துக் கூறிப்புத்தி புகட்டினான். பாங்கன் கூற்று. குறிஞ்சித்திணை. ‘நோதக்கன்றே’ என்ற தொடரை மட்டும் இறுதியில் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. கோடியர்- கூத்தர். முது- அறிவு. முழவு - மத்தளம் என்றும் கூறலாம். ததும்பி- ஒலித்து. பெருவரை- உயர்ந்த மலை. சிலம்பு- அதன் பக்கத்தில் உள்ள தாழ்ந்த மலை. ‘உயர்ந்த மலையில் உள்ள அருவி தாழ்ந்த மலையில் வீழ்ந்தது போல், உயர்ந்த தன்மையை உடைய நீ தாழ்ந்த ஒருத்தியின் காமத்தில் வீழ்ந்து விட்டாய்’ என்ற குறிப்பையும் பாங்கன் கூறினான். அருவியின் ஒலிக்கு கூத்தர்களின் மத்தள ஓசை உவமானம் தம்மூரிலேயே தங்கினரோ! பாட்டு 79 பொருள் தேடச் சென்ற தலைமகன் இன்னும் திரும்பி வரவில்லை. தலைவி அவன் வருவான் வருவான் என்று எதிர் பார்த்து ஏமாந்தாள். அவள் உள்ளத்திலே காதலன் இன்னும் வரவில்லையே என்ற கவலையும் குடி கொண்டிருந்தது. பல நாட்கள் கடந்து விட்டன. தலைவி ஏன் இன்னும் அவன் வர வில்லை என்பதைப் பற்றி எண்ணிப் பார்த்தாள். அப்பொழுது அவளுடைய உள்ளத்திலே ஓர் ஐயம் பிறந்தது. தலைவன் பொருள் தேடப்புறப்பட்டபோது தலைவியிடம் சொல்லிக் கொள்ளவில்லை. அவன் தலைவியின் தோழியினிடம் மட்டும் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டுப் போய் விட்டான். இதற்குக் காரணம் உண்டு. தன் பிரிவைப் பற்றித் தலைவியிடம் நேரே சொன்னால் அவள் வருந்துவாள்; பிரிந்து போக இணங்க மாட்டாள்; அவள் படும் அல்லலைக் கண்டால் தனது புறப்பாடு தடைப்பட்டாலும் படும். ஆதலால் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் புறப்படுவதுதான் சரி என்று துணிந்தான், அவன் சென்றான்; தலைவியிடம் சொல்லிக் கொள்ளாமைக்குக் காரணம் அன்பைத்தவிர- காதலைத் தவிர- வேறொன்றும் இல்லை. ஆனால் தலைவன் விரைவில் வந்து சேராத காரணத்தால் தலைவிக்கு அவன்பால் சந்தேகம் உண்டாயிற்று. அந்த ஐயத்தை அவள் தன் தோழியிடம் கூறுகின்றாள். தோழியே நாம் அவருடைய தகுதிக்கு ஏற்றவர் அல்லோம் என்று எண்ணியிருக்க வேண்டும். அப்படி நினைத்திருந்தாரானால் அது தவறு? இந்தத் தவறு காரணமாகத்தான் அவர் நம்மிடம் சொல்லிக் கொள்ளாமல் பொருள் தேடச் சென்றார். இப்படிச் சென்ற நெஞ்சுரம் படைத்த அவர் திரும்பி வராமலிருப்பதிலே வியப்பில்லை. அவர் தம்முடைய சிற்றூர்க்குப் போய்ச் சேர்ந்திருப்பா ரென்று நான் நினைக்கின்றேன். அவர் தம்முடைய சிற்றூர்க்குச் சென்றிருந்தாலும், நம்மிடம் உண்மையன்புள்ளவராயிருந்தால் விரைவில் திரும்புவார் என்று உறுதியாக நினைக்கின்றேன். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சொல்லுகின்றேன். அவருடைய சிற்றூர் பாலைவனத்திலே அமைந்திருப்பது. காட்டு யானைகள் தோலை உரித்துத் தின்றமையால் பொரிந்து போன அடிப்பாகத்தையுடைய ஓமை மரங்கள் அப்பாலை வனத்திலே காணப்படுகின்றன. அம்மரங்களின் கிளைகள் காற்றிலே அசைகின்றன. அக்கிளைகளின் காய்ந்த கொம்புகளிலே ஆண் புறாக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும். அவை ஒய்யென்று தமது பெண் புறாக்களை அழைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய காட்சியை யுடையது அவருடைய சிற்றூர் அமைந்த பாலை நிலம். இக்காட்சியைக் காணும் போதாவது அவருக்கு நமது நினைவு வராமல் போகாது. நாம் அவருக்கு ஏற்றவர் அல்லர் என்றாலும் அவர் நம்மை நினைத்து வருவார் என்று தான் நம்புகிறேன்” என்று கூறினாள் தலைவி. இவ்வாறு அவன் தன் சிற்றூர்க்குச் சென்று விட்டானோ என்ற ஐயத்தையும், சென்றாலும் திரும்புவதற்குக் காரணம் உண்டு என்ற நம்பிக்கையையும் வெளியிட்டாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஓமை வளிபொரு நெடும் சினை அலங்கல் உலவை ஏறி ஒய்யெனப் புலம்பு தரு குரல புறவுப் பெடைபயிரும் அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே, யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பல் சொல்லாது அகறல் வல்லுவோரே. பதவுரை: யாம் தமக்கு ஒல்லேம் - நாம் தம்முடைய தகுதிக்கு ஏற்றவர் அல்லர். என்ற தப்பல் - என்ற தவறான எண்ணத்தினால். சொல்லாது- நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே. அகறல் வல்லுவோர் ஏ- பிரிந்து செல்லுதற்குரிய நெஞ்சுரம் உள்ளவர். கான யானை- காட்டு யானையால். தோல் நயந்து உண்ட- தோலை விரும்பி உரித்து உண்ணப்பட்ட. பொரிதாள் ஓமை- பொரிந்த அடிப்பாகத்தையுடைய ஓமை மரத்தின். வளிபொரு நெடும் சினை- காற்றால் மோதப்படுகின்ற நீண்ட கிளையிலேயே. அலங்கல் உலவை- அசைந்து கொண்டிருக்கின்ற காய்ந்த கொம்பிலே. புறவு ஏறி-ஆண் புறா ஏறி உட்கார்ந்து கொண்டு. ஒய் என - ஒய்யென்ற. புலம்பு தருகுரல் -தனித்து வருந்துகின்ற குரலுடன். பெடை பயிரும் - தன் பெண்புறாவை அழைக்கின்ற. அத்தம் நண்ணிய- பாலை வனத்திலே அமைந்த. அம்குடி- அழகிய குடிகள் வாழ்கின்ற. சீறூர் சேர்ந்தனர் கொல்- சிறிய ஊரை அடைந்து விட்டாரோ! கருத்து: சொல்லாமற் சென்ற தலைவர் திரும்பி வருவாரோ? மாட்டாரோ? அறியேன். விளக்கம்: இது குடவாயிற் கீரனக்கன் என்னும் புலவர் பாட்டு. பொருள்தேடும் பொருட்டுச் சொல்லாமற் பிரிந்து போன தலைவனைப் பற்றித் தலைவி கூறியது. பாலைத்திணை ‘யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பல்; சொல்லாது அகறல் வல்லுவோர் ஏ. கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை, புறவு ஏறி ஒய்யெனப் புலம்பு தரு குரல், பெடை பயிரும் அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் சேர்ந்தனர் கொல் ஓ தாம் ஏ என்று மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. ஏ, ஓம், தாம்- ஏ என்பன அசைச் சொற்கள். ஓமை- ஒரு வகை மரம். உலவை- காய்ந்த கிளை. பயிரும்- அழைக்கும். தப்பல்- தவறு. அத்தம்-வழி. இது பாலை நிலத்தைக் குறித்தது. தடுக்கட்டும் பார்ப்போம் பாட்டு 80 பரத்தை ஒருத்தி. அவளிடம் ஒரு தலைமகன் கட்டுப்பட்டுக் கிடந்தான். அவனுடைய மனைவி அப்பரத்தையின் நடத்தையைப் பழித்துப் பேசினாள். இச்செய்தி எப்படியோ அப்பரத்தையின் காதில் விழுந்து விட்டது. தன்னிடம் கட்டுண்டு கிடக்கும் தலைவன் தன் சொற்படி யெல்லாம் ஆடுவான் என்று நம்பினாள் அவள். ஆதலால் தலைவிக்குத் தெரியும்படி தானும் சில மொழிகளைச் சொன்னாள். தலைமகளிடம் அன்பு கொண்டவர்களின் காதிலே விழும்படி அச்செய்தியைக் கூறினாள். தலைவிக்குத் திறமையிருந்தால் அவள் தன் கணவனைக் காப்பாற்றட்டும். அவனை எல்லாரும் காணும்படி என் விருப்பப்படி ஆட்டி வைக்க என்னால் முடியும். ஆற்றிலே புதுநீர் வந்து விட்டது. வெள்ளம் கரை புரண்டோடுகின்றது. நான் என்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வேன். என் கூந்தலிலே நல்ல தாமரைப் பூவைச் செருகிக் கொண்டு நீராடப் போகின்றேன். நான் மட்டுமா? என்னை விரும்பித் திரியும் அவள் காதலனுடன் பெரிய நீர்த்துறையில் இறங்கி நீராடப் போகின்றோம். இருவரும் ஒன்று கலந்த உள்ளமுடன் மகிழ்ச்சியுடன் நீராடப்போகின்றோம். இப்படி அவள் காதலன், அவளை விட்டுப் பிரிந்து என்னுடன் சேர்ந்து நீராடுவதைக் கண்டு அவள் அஞ்சுவாளானால் அவனைத் தடுத்து நிறுத்தி விடட்டும். அவள் படிந்த அவனுடைய மார்பிலே என்போன்ற பரத்தையர்கள் படியாமல் பாதுகாக்கும் திறமை யிருந்தால் பாதுகாக்கட்டும். எழினி என்பவன் சிறந்த போர்வீரன். போர்க்களத்திலே நடுநிலை பாராட்டமாட்டான். எதிரிகளுடன் அஞ்சாமல் போரிட்டு வெற்றி பெறும் இயல்புள்ளவன். சிறந்த வேற் படையை யுடையவன். அவனுடைய பசு மந்தையை எதிரிகள் கவர்ந்த போது அவன் வாளாவில்லை போர்க்களத்திலே புகுந்து எதிரிகளை விரட்டியடித்தான். தன் பசு மந்தைகளைக் காப்பாற்றினான். அதைப்போல அவளும் தன் சுற்றத்தாருடன் புகுந்து தன்காதலனை என் வசமாகாமல் காப்பாற்றட்டும். ஆற்றலுடையவளானால் இதைத்தான் அவள் செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் என்னைப் பழித்துரைப்பதிலே பயன் ஒன்றும் இல்லை’ என்று கூறினாள். இவ்வாறு ஒரு பரத்தை கூறிய நிகழ்ச்சியை எடுத்துரைப்பது இப்பாடல். பாட்டு கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது அஞ்சுவது உடையள் ஆயின், வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனை ஆன் பெருநிரை போலக் கிளையொடும் காக்கதன் கொழுநன் மார்பே. பதவுரை: கூந்தல்- எமது கூந்தலிலே. முழுநெறி ஆம்பல்- புறவிதழ் களைந்த ஆம்பல் மலரை. அடைச்சி- செருகிக் கொண்டு பெரும்புனல்- வெள்ளம், வந்த. இரும் துறை விரும்பி- பெரிய நீர்த்துறையிலே ஆட விரும்பி. யாம் அஃது அயர்கம்- யாம் அந்த நீராடுவதைச் செய்வதற்காக,. சேறும்- நீர்த்துறைக்குச் செல்வோம். தான் அஃது- அவள் தான் அவ்வாறு நாங்கள் நீராடுவதற்கு, அஞ்சுவது உடையள் ஆயின்- அஞ்சுவாளானால். வெம்போர்- கொடிய போரிலே. நுகம் படக் கடக்கும்- நடுநிலை யன்றி உறுதியாக நின்று பகைவரை வெற்றி கொள்ளும். பல்வேல் எழினி- பல வேற்படைகளையுடைய எழினி என்பவன். முனை- போர் முனையிலே. ஆன்பெரு நிரை போல்- ஆவின் பெரிய மந்தையை பகைவர் கொள்ளாமல் காப்பாற்றியதைப் போல. தன் கொழுநன் மார்பு ஏ- தன் கணவனுடைய மார்பை. கிளை யொடும் காக்க-எம் போன்ற பரத்தையர் கவராமல் தன் சுற்றத்தாருடன் வந்து காப்பாளாக. கருத்து: நாம் அவனுடன் சேர்ந்து நீராடப் போகின்றோம். இதற்கு அஞ்சினால், அவள் தன் கணவனை எம்முடன் சேராமல் காப்பாற்றட்டும். விளக்கம்: இப்பாடல் ஒளவையார் பாடியது. தலை மகளுடன் நட்புள்ளவர்கள் காதிலே விழும்படி ஒரு பரத்தை, தலைமகனுடன் தான் கொண்டிருக்கும் உரிமையை எடுத்துக் கூறியது. மருதத்திணை. ‘கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே’ என்பது ‘தன் கொழுநன் மார்பு ஏ கிளையொடும் காக்க’ என்று மாற்றப் பட்டது. ஏ அசைச் சொல். ஆம்பல்- அல்லி மலர்; தாமரை என்று கூறுவாரும் உண்டு. முழுநெறி - காம்பு களைந்த முழுப்பூ. நுகம்- நடு நிலைமை. முனை-போர் முனை. அடைச்சுதல்- செருகுதல். எழினி- தகடூரை ஆண்ட அதியமான் அஞ்சி என்னும் சிற்றரசன். இவன் ஒளவையாரின் நண்பன். தனது நாட்டுப் பசுமந்தையை எதிரிகள் கவர்ந்தபோது அவர்களுடன் எதிர்த்து நின்று போர் செய்தான்; பசு மந்தையை மீட்டான். இந்த வரலாற்றைச் சுட்டுகின்றது இப்பாடல். எமது ஊரை மறவாதே பாட்டு 81 அவன் அவளை அடிக்கடி பார்த்திருக்கின்றான்; அவளுடைய அழகு, அவனை மயக்கி விட்டது; அவளையே எப்படியாவது காதலியாக அடையவேண்டும் என்பது அவனுடைய ஆவல். அவளைத் தனியே சந்திக்க முயன்றான்; முடியவில்லை. அவன் எப்பொழுதும் தன் தோழியர் கூட்டத்துடனேயே இருந்து வந்தாள். ஆதலால் அவளுடைய உண்மையான உயிர்த்தோழியின் மூலந்தான் அவளுடைய நட்பைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தான் அத்தலைவன். ஒரு நாள் தான் விரும்பிய தலைவியின் தோழியைச் சந்தித்தான். தன் காதலைத் தெரிவித்தான். ‘தலைவியின் அன்பைப் பெற்றால் என்றும் அவளைக் கைவிடமாட்டேன்; அவளையே மணம் புரிந்து கொள்வேன்’ என்று உறுதிமொழியும் உரைத்தான். தோழியும் அவனுடைய தோற்றத்தால்- உரையால்- அவன் தன் தலைவிக்குத் தகுந்த காதலன் தான் என்பதை அறிந்தாள். அதன் பின் அவள் தன் தலைவியின்பால் அவனைப்பற்றிக் கூறினாள். அவனுடைய அன்பின் மிகுதியை எடுத்துரைத்தாள். தலைவியும் அவனைச் சில தடவைகள் பார்த்திருக்கின்றாள். அவளுடைய உள்ளத்திலும் அவனைப்பற்றி நினைப்புண்டு. ஆதலால் தன் தோழியின் சொல்லுக்கு இணங்கினாள். தலைவியைத் தனியேவிட்டுத் தோழி மெதுவாக நழுவிவிட்டாள். தலைவியைச் சந்திக்கக் காத்திருந்த தலைவனிடம் குறிப்புக் காட்டிவிட்டு ஓர் ஒதுக்கமாகப் போய்விட்டாள். பிறகு தலைவனும் தலைவியும், கடற்கரையிலே ஒரு புன்னை மரத்தின் அடியிலே சந்தித்தனர். அவர்களுக்குள் காதல் மணம் நடந்துவிட்டது. தலைவனும் புதுமணம் புரிந்த தலைவிக்கு உறுதி மொழிகள் உரைத்துவிட்டுப் புறப்பட்டான். தனக்குத் துணை செய்த தோழியினிடமும் விடைபெற்றுக் கொண்டான். அப்பொழுது தோழி தலைவனைப் பார்த்துப் பின்வருமாறு கூறினாள். ‘தலைவனே இவள், உன்னுடைய சொற்களை ஏற்றுக் கொண்ட என்னுடைய சொற்களை நம்பினாள் நான் உன்னைப் பற்றிக் கூறிய உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டாள். என் சொல்லை நம்பியதன் காரணமாகவே பசுமையான அரும்புகள் நிறைந்த அந்தப் புன்னை மரத்தின் அடியிலே நெருங்கிய கிளை களின் நிழலிலே உன்னைச் சந்தித்தாள். அவள் இதுவரையிலும் தன் பெண்மையை இழக்காதவள். இன்று உன்னால் அவளுடைய நலனை இழந்தாள். இதுவரையிலும் தனிமையின் துன்பம் இன்ன தென்றே அவளுக்குத் தெரியாது. இப்பொழுது அவள் தனிமையின் துன்பத்தை அறிந்தவளாகிவிட்டாள். இதை நீ மறுத்தல் கூடாது. இனி நீ எம்மூர்க்குத் தாராளமாக வரலாம்; நாங்கள் குறிக்கும் இடத்திற்கு வந்து எங்களைக் கண்டு மகிழலாம்; எம் தலைவியின் தனிமைத் துயரத்தைத் தவிர்க்கலாம். அதோ பார். நிலவையும் இருட்டையும் போல அலை வீசும் கடலும், அதன் கரையில் உள்ள சோலையும் காணப்படுகின்றன. அங்கே பனை மரங்கள் காணப்படும் இடத்தில்தான் எம்முடைய சிறிய ஊர் இருக்கின்றது அதனை நீ மறந்துவிடாதே எம்மையும் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்வாயாக.’ என்று தோழி கூறினாள். அவனை அடிக்கடி வந்துபோகும்படி இவ்வாறு வேண்டிக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல் பாட்டு இவளே நின் சொல் கொண்ட என் சொல் தேறிப் புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; உதுக் காண்தெய்ய உள்ளல் வேண்டும்; நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. பதவுரை: இவள் ஏ- இத்தலைவியானவள். நின்சொல் கொண்ட- உன்னுடைய சொல்லை ஏற்றுக் கொண்ட. என்சொல் தேறி- என்னுடைய சொல்லை உண்மையென்று தெளிந்து. பசு நனை ஞாழல்- பசுமையான அரும்புகள் நிறைந்த புன்னை மரத்தினது, பல் சினை ஒரு சிறை- பல கிளைகளின் நிழல் அமைந்த ஒரு புறத்திலே. புதுநலன் இழந்த- இதுவரையிலும் புதுமையாக இருந்த தன் பெண்மை நலனை இழந்ததனால். புலம்புமார் உடையள்- இப்பொழுது தனிமை உடையவள் ஆனாள். நிலவும் இருளும் போல -நிலவையும் இருட்டையும் போல. புலவு திரை கடலும் கானலும் தோன்றும்- புலால் நாற்றம் வீசும் அலைகளை யுடைய கடலும் கடற்கரைச் சோலையும் காணப்படுகின்ற அவ்விடத்திலே. மடல்தாழ் பெண்ணை - மட்டைகள் சரிந்திருக்கின்ற பனை மரங்களையுடைய. எம் சிறு நல் ஊர் ஏ -எமது சிறிய நல்ல ஊர். உதுக்காண் - அதோ பார். உள்ளல் வேண்டும் - இனி மறவாமல் எம்மையும் எம்மூரையும் நினைக்க வேண்டும். கருத்து: எம்மை மறவாமல் எமது ஊர்க்கும் வந்து என் தலைவியின் தனிமைத் துயரைப் போக்கவேண்டும். விளக்கம்: இது வடமவண்ணக்கன் என்னும் புலவரால் பாடப்பட்டது தலைவியுடன் அளவளாவியிருந்து பிரியும் தலைவனைப் பார்த்துத் தோழி கூறியது. “உன்னுடைய சொல்லை நான் ஏற்றுக் கொண்டேன்; என் சொல்லைத் தலைவி நம்பினாள். ஆதலால் அவள் பெண்மையிழந்தாள். அவளை மறவாதே. எமது ஊர்க்கும் வந்து பழகு”என்று கூறினாள். நெய்தல் திணை. “உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்” என்ற நான்காவது அடியை இறுதியில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. மார், தெய்ய, ஏ. அசைச்சொற்கள். நனை- அரும்பு. ஞாழல்-புன்னை மரம்; சுரபுன்னை என்றும் கூறுவர். வெண்டிரை வீசும் கடலுக்கு நிலவும், கருமையான சோலைக்கு இருளும் உவமைகளாகக் கூறப்பட்டன. இப்பொழுது அவர் எப்படியோ பாட்டு 82 முன் பனிக்காலம் வந்து விட்டது. காதலர்கள் பலரும் களிப்புடன் வாழ்கின்றனர். ஒவ்வொரு இல்லத்திலும் இன்பந் தவழ்கின்றது. இந்நிலையிலே ஒருத்தி மட்டும் தனித்திருந்தாள். வழி மேல் விழிவைத்துத் தன் கணவன் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் அவன் வந்து சேரவில்லை. “அவர் போகும் போது உறுதியாகச் சொன்னார்; போன விடத்திலே சிறிதும் காலங் கடத்த மாட்டேன்; எண்ணிச் சென்ற செயலை எளிதிலே வெற்றியுடன் முடிப்பேன். முன்பனிக்காலம் தொடங்குவதற்கு முன்னே திரும்பி வந்து விடுவேன்; ஆதலால் நீ சிறிதும் கலங்காதே. அமைதியுடன் இரு” என்று சொல்லிவிட்டுத் தான் பிரிந்தார். ஆனால் இன்னும் வரவில்லையே என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள் அவள். அவளுடைய தோழி ஆறுதல் மொழிகள் புகன்றாள். “தலைவர் நம்மிடம் அளவற்ற அன்புள்ளவர்; போகும் போது அவர் சொல்லிச் சென்ற அன்பு மொழிகளை மறந்துவிடமாட்டார். பிரிவதற்கு மனமில்லாமல் எவ்வளவோ அன்புள்ள செயல்களை யெல்லாம் செய்து விடைபெற்றுச் சென்றவர் மறந்தா போய் விடுவார்? ஆதலால் வருந்தாதே” என்று கூறித்தேற்றினாள். அப்பொழுது தோழியை நோக்கித் தலைவி கீழ்வருமாறு கூறினாள்; “தோழியே அதோ மலைச்சாரலைப் பார்! குறவனுடைய தினைப்புனத்தைப் பார்! அந்தப் பெரிய தினைப்புனத்தில் விளைந்திருந்த சிறிய தினைக்கதிர்களை அறுத்து விட்டான். மீண்டும் அந்தத் தினைச்செடிகள் மறுகால் கண்டிருக்கின்றன. அந்த மறுகாலிலே கொழுமையான மொச்சைக் கொடிகள் படர்ந்து பூத்திருக்கின்றன. பனியினால் விளையும் பயிர் மொச்சையென்பது உனக்குத் தெரியும். முன்பனிக்காலம் வந்து விட்டது என்பதை அந்த மொச்சை மலர்கள் கூறுகின்றன. இது தான் அவர் திரும்பி வருவதாகச் சொல்லிய காலம். அவர் அந்தக் காலத்தில் நம்மிடம் அளவு கடந்த அன்புள்ள வராகத்தான் இருந்தார். நான் சிறிது வருந்தினால்கூடப் பொறுக்க மாட்டார். என் கண்ணிலே கண்ணீரைக் கண்டாரானால் அவர் உள்ளந் துடிப்பார். என்னுடைய நீண்ட தலைமயிரைத் தன் கையினால் வகிர்ந்து கொடுப்பார் என் முதுகைத் தன் மார்பிலே அணைத்துக் கொள்வார்; அழாதே என்று அருமையாகச் சொல்லுவார்; தமது கையால் என் கண்ணீரைத் துடைப்பார். இவ்வளவு அன்புடன் இருந்தவர் தான் அவர். ஆனால் இன்று அவர் எப்படி இருக்கிறாரோ? மாறுந்தன்மை யாருக்கும் உண்டல்லவா? அவர் குணம் மாறிப்போயிருந்தால் நாம் என்ன செய்வது? அவர் குறித்த காலத்தில் வராமையால் இம்மாதிரி எண்ணத்தான் தோன்றுகின்றது” என்று தலைவி கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். இப்பாடல் தலைவியிடம் தலைவன் கொண்டிருந்த அன்பை விளக்குவதாகும். பாட்டு வார் உறு வணர்கதுப்புஉளரிப் புறம் சேர்வு அழாஅல் என்று நம்அழுதகண் துடைப்பார்; யார் ஆகுவர் கொல்? தோழி! சாரல் பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்குடி அவரை பூக்கும் அரும்பனி அச்சிரம் வாரா தோரே. பதவுரை: தோழி; சாரல்- மலைப்பக்கத்திலே உள்ள. குறவன் பெரும் புனம்- குறவனுடைய பெரிய தினைப்புனத்திலே. சிறுதினை மறுகால்- சிறுதினையை அறுத்துப் பின் கிளைத்த மறுகாலிலே. அவரை- மொச்சையின். கொழும் கொடி பூக்கும்- செழிப்பான கொடிகள் பூத்திருக்கின்ற. கரும்பனி அச்சிரம்- அரிய பனி பெய்கின்ற முன்பனிக்காலம் வந்தும். வாராதோர் ஏ- தான் குறிப்பிட்டபடி திரும்பி வராதவர். வார் உறு- முன்பெல்லாம் நீளமான. வணர்கதுப்பு- வளைந்த தலைமயிரை. உளரி- வகிர்ந்து கொடுத்து. புறம் சேர்ந்து -முதுகுப்புறத்தை அணைத்துக் கொண்டு, அழால் என்று- அழாதே என்று சொல்லி. நம் அழுத கண் துடைப்பார்- நம்முடைய அழுத கண்ணைக் கையால் துடைப்பார். யார் ஆகு வல்கொல்- இப்பொழுது எப்படி இருப்பாரோ!? கருத்து: தலைவர் முன்பு அன்புள்ளவராகத்தான் இருந்தார். ஆனால் இப்பொழுது எப்படியிருக்கின்றாரோ!? விளக்கம்: இது கடுவன் மள்ளன் என்னும் புலவர் பாட்டு. காதலன் வருவதாகக் கூறிய பருவகாலம் வந்தும் அவன் வரவில்லை. அதுகண்டு வருந்திய தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறினாள். அத்தோழிக்குத் தலைவி கூறிய விடையே இப்பாட்டு, குறிஞ்சித்திணை. ‘தோழி சாரல் குறவன் பெரும்புனம் சிறுதினை மறுகால் அவரை கொழுங்குடி பூக்கும் அரும்பனி அச்சிரம் வாராதோர் ஏ, வார் உறுவணர் கதுப்பு உளரி புறம் சேர்பு அழால் என்று நம் அழுத கண் துடைப்பார்; யார் ஆகுவர் கொல்’ என்று பதம் மாற்றப்பட்டது. ஏ, கொல் அசைகள். அழாஅல்- உயிர் அளபெடை. வார் - நீளம். வளர்- வளைந்து. உளரி-வகிர்ந்து. மறுகால் என்பது அறுத்த பின் அந்த அடிக்கட்டை இராண்டாந் தடவை வளர்வது. அவரை, மொச்சை, மொச்சை வளர்வதும், தினை இரண்டாந் தடவை வளர்வதும் பனிக்காலத்தில்- முன்பனிக் காலத்தில் என்பது இப்பாடலால் குறிக்கப்பட்டது. அன்னை வாழ்க பாட்டு 83 தோழி செய்த தந்திரம் பலித்து விட்டது. தலைவனை இரவிலும் வராமல் தடுத்து விட்டாள். பகலிலும் வராமல் தடுத்து விட்டாள். இதனால் பல நாட்களாகத் தலைவனுடைய கூட்டுறவைப் பெற முடியாமல் தவித்தாள் தலைவி. தன் தோழியின் செய்கையால் அவளுக்குச் சிறிது வருத்தந்தான். ஆயினும் தோழி, தலைவியின் நன்மைக்காகவே அவ்வாறு செய்தாள். களவு மணத்தைத் தடுத்தால் தான் தலைவன் விரைவில் கற்பு மணம் புரிந்து கொள்வான் என்பதற்காகவே இவ்வாறு செய்தாள். தலைவனும், தலைவியின் பெற்றோரை அணுகிப் பெண் கேட்டான். அவர்களும் அவனுக்குப் பெண் கொடுக்க இசைந்து விட்டனர். அத்தலைவனுக்குத் தன் தலைவியைத் தர இசைந்ததற்குச் செவிலித்தாய் தான் காரணமாக இருந்தாள். இந்த உண்மை தோழிக்குத் தெரியும். தலைவியைக் காதலித்து வந்த தலைவனுக்கே அவளைக் கொடுக்க முடிவு செய்ததைப் பற்றித் தோழிக்கு அடங்காத மகிழ்ச்சி உண்டாயிற்று. அச்செய்தியைத் தலைவிக்கும் தெரிவித்தாள். தலைவியும் தன் காதலனை விரைவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததைப் பற்றி மகிழ்ந்தாள். இப்படித் தனக்கும் தன் தலைவிக்கும் மகிழ்ச்சியுண்டாகும்படி நடந்து கொண்ட செவிலித்தாயை மனமார வாயார வாழ்த்துகின்றாள் தோழி. ‘அந்த மலைநாடன் சிறந்தவன்; என் தலைவியின்பால் காதல் கொண்டவன்; அவள் தன்மைக்கேற்ற தலைவன், அவனுடைய மலைநாடும் சிறந்தது. தாம் சம்பாதித்த உணவைத் தமக்குச் சொந்தமான வீட்டில் இருந்து உண்பதே இன்பந்தரும். இந்த இன்பத்திற்கு இணையான இன்பம் வேறு எதையும் கூறஇயலாது. இதைப் போலவே அவனுடைய மலையிலே பலாமரங்களின் கிளைகளிலே இனிய பழங்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய உயர்ந்த மலை அவனுடைய நாட்டிலே உண்டு. இந்த மலைநாடனை எம் அன்னை வருக என்று வரவேற்றாள்; அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினாள். இந்தச் சிறந்த குணமுள்ள அன்னைக்கு நான் என்ன தான் கைம்மாறு செய்யப் போகின்றேன். அவள் அருமையான சுவர்க்க இன்பத்தை அடைக; இவ்வுலகை விட்டு நீங்கிய பின் யாருக்கும் கிடைக்காத அமுதத்தையே உணவாகக் கொள்ளும் புகழ்பெற்ற அந்த வானுலகம் அவளுக்குக் கிடைக்க வேண்டும்; அவள் அவ்வுலகிலே நீண்டகாலம் வாழ்ந்து அழியாத இன்பத்தை அடைய வேண்டும். இப்படித்தான் என்னால் வாழ்த்த முடியும் என்று வாழ்த்தினாள் தோழி. இவ்வாறு செவிலித்தாயை வாழ்த்துவதன் மூலம், தலைவி விரும்பிய காதலனுக்கே அவளை மணம் புரிந்து கொடுக்க அவளுடைய பெற்றோர்கள் இசைந்தனர் என்ற உண்மையைத் தெரிவித்தாள். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதமாகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம்இல்தமது உண்டு அன்ன சினைதோறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை வரும் என்றாளே. பதவுரை: தம்இல்- தமது வீட்டிலே இருந்து. தமது உண்டு அன்ன- தமது முயற்சியால் சேர்த்த உணவை உண்டு இன்புறு வதைப் போல, சினைதோறும்-கிளைகள் தோறும், தீம்பழம் தூங்கும் -இனிமையான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்ற, பலவின்- பலாமரங்களையுடைய, ஓங்கு மலை நாடனை- உயர்ந்த மலை நாட்டையுடைய தலைவனை, வரும் என்றோள் ஏ- மணப் பதற்குரிய பொருள்களுடன் வருவான் என்று கூறியவளாகிய, அன்னை- நமது செவிலித் தாய். அரும்பெறல் அமிழ்தம்- பெறுவதற்கு அரிய அமுதத்தையே. ஆர்பதமாக- உண்ணும் உணவாகக்கொண்ட., பெரும் பெயர் உலகம்- பெரும் புகழுடைய சுவர்க்கலோகத்தையே, பெறீஇயர்ஓ- அவள் ஆற்றிய நன்மைக்குப் பரிசாகப் பெறுவாளாக, ஏ, ஓ.அசைச்சொற்கள். கருத்து: காதலித்து ஒழுகிய தலைவனே கணவனாக வருவான் என்று கூறிய செவிலித்தாய் வாழ்வாளாக. விளக்கம்: இது வெண்பூதன் என்னும் புலவர் பாட்டு. தலைவியைக் காதலித்து வந்த தலைவனையே செவிலித்தாய் ஏற்றுக் கொண்டாள். அவளை மணந்து கொள்வதற்கு வருமாறு ஒப்புக் கொண்டாள். இச்செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறினாள்; செவிலித்தாயை வாழ்த்தினாள். குறிஞ்சித்திணை. ‘தம்இல் தமது உண்டு அன்ன சினை தொறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஓங்கு மலை நாடனை வரும் என்றோள் அன்னை. அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதமாகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயர் என்று மாற்றிப் பொருள் கூறப்பட்டது. பெறீஇ- உயிர் அளபெடை. ஓ,ஏ அசைச்சொற்கள். அமிழ்தம்- தேவர்கள் உணவு. பதம்-உணவு. தமது வீட்டி லிருந்து தமது முயற்சியால் சேர்த்த உணவை உண்ணுதல் இனிமையாகும். அது எவ்வளவு சிறிய உணவாயினும், கூழாயினும், கஞ்சியாயினும், அதற்கு நிகர் வேறொன்றும் இல்லை. பிறரைச் சேவித்து அடிமைப்பட்டு இரந்துண்ணும் உணவைவிட இதுவே இனியது; உயர்ந்தது என்பது தமிழர் கொள்கை. பலாப்பழத்தின் இனிமைக்கு தமது முயற்சியால் பெற்றுண்ணும் உணவு உவமானம். இப்பொழுதுதான் அறிந்தேன் பாட்டு 84 தலைவியை மணக்கத் தலைவன் முயன்று பார்த்தான். எளிதில் முடிவதாக இல்லை. தலைவியின் பெற்றோர்கள் அவனுக்குப் பெண் கொடுக்க ஏறத்தாழப் பார்த்தனர். ஆகட்டும் போகட்டும் என்று ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டிருந்தனர். தலைவனால் அவளை எளிதில் காணவும் முடியவில்லை. அடிக்கடி சந்தித்துப் பழகவும் முடியவில்லை. தலைவிக்குக் கட்டுக் காவல்களை ஏற்படுத்தினர். இதனால் தலைவன் மட்டும் தொல்லைப் படவில்லை. தலைவியும் துன்பப்பட்டாள்; தலைவனுடன் கூடியிருந்து குதூகலம் அடையவே ஆசைப்பட்டாள். ஆகையால் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். தலைவியின் உறவினர் அறியாமல் அவள் தலைவனுடன் சேர்ந்து புறபட்டுவிடுவது; தலைவனுடைய ஊரிலே சென்று மணம் புரிந்து கொள்வது; இதன் மூலம் இருவரும் கொண்டிருந்த இணையற்ற காதலை வெளிப்படுத்துவது என்பதுதான் அந்த முடிவு. இந்த முடிவுக்குத் தலைவியின் தோழியும் துணை செய்தாள். ஒரு நாள் விடியற்காலையிலே குறித்த நேரத்திலே தலைவன் கொல்லைப்புறமாக வந்து நின்றான். தலைவியும் அவன் வந்த அடையாளம் கண்டு எழுந்து சென்றாள். தன்னுடன் படுத்திருந்த செவிலித்தாய் அறியாமல் எழுந்திருந்து போய் விட்டாள். காதலனுடன் சேர்ந்து போய்விட்டாள். பொழுது விடிந்தது; செவிலித்தாய் விழித்துக் கொண்டதும் பக்கத்தில் படுத்திருந்த மகளைப் பார்த்தாள்; காணவில்லை. வீட்டிலும் இல்லை; வெளியிலும் இல்லை. அங்குமிங்கும் தேடினாள்; ஓரிடத்திலும் காணமுடியவில்லை. அன்று இரவில் நடந்த ஒரு நிகழ்ச்சி அப்பொழுது தான் அவளுடைய நினைவுக்கு வந்தது. அந்நிகழ்ச்சியினால் உண்மையை உணர்ந்தாள். தன் மகள் தன் காதலனுடன் சேர்ந்து போய்விட்டாள் என்ற எண்ணம் அப் பொழுதுதான் அவள் உள்ளத்திலே எழுந்தது. இரவில் நடந்த அந்த நிகழ்ச்சியை அவளே வாய்விட்டுக் கூறினாள். ‘என் மகள் மீது எப்பொழுதும் நறுமணம் வீசிக் கொண்டேயிருக்கும். ஆய் என்னும் வள்ளலுக்கு உரிமையான பொதிகை மலையிலே உள்ள வேங்கை- மலரும், காந்தள் மலரும் மிகவும் நறுமணம் கமழ்கின்றவை. அவற்றின் நறுமணத்தை என் மகளிடத்திலே காணலாம். அன்றியும், ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியான மேனியை உடையவள். அவள் இன்றிரவு என் அண்மையிலே படுத்திருந்தபோது அன்புடன் அவளை அணைத்து முத்தமிட்டேன். என் ஆசை தணியாமல் மற்றொரு முறையும் அவளைத் தழுவிக் கொண்டேன். அப்பொழுது அவள் என் தழுவுதலை விரும்பவில்லை. எனக்கு வியர்வை எடுக்கின்றது’ என்று கூறி ஒதுங்கினாள்; புரண்டு படுத்துக் கொண்டாள். ஏன் அப்படிக் கூறினாள் என்பதை அப்பொழுது நான் அறியவில்லை. என் தழுவுதல் அவளுக்கு வெறுப்பாயிருந்ததற்கான காரணத்தை இப்பொழுதான் அறிந்தேன். என் தழுவுதலைவிட அவளுடைய காதலனைத் தழுவிக்கொள்ளுதலே அவளுக்கு இன்பமானது என்ற உண்மை இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது என்று செவிலித்தாய் கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாட்டு. பாட்டு பெயர்த்தனென் முயங்க, யான் வியர்த்தனென் என்றனள்; இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே; கழல் தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான் தண் ணியளே. பதவுரை: கழல் தொடி ஆய்- காலிலே வீரக்கழலையும், தோளிலே வீர வளையலையும் அணிந்த ஆய் என்னும் வள்ளலுடைய. மழை தவழ் பொதியில் - எப்பொழுதும் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கின்ற பொதிகை மலையிலே தோன்றியுள்ள. வேங்கையும் காந்தளும் நாறி- வேங்கை மலரைப்போலவும் காந்தள் மலரைப்போலவும் மணம்வீசி. ஆம்பல் மலரினும்- அல்லி மலரைக் காட்டினும், தான் தண்ணியள்- தான் குளிர்ச்சியாய் இருப்பவளை. பெயர்த்தனன் முயங்க- ஒரு முறை தழுவிக் கொண்டதோடு அமையாமல் மீண்டும் தழுவிக்கொள்ள. யான் வியர்த்தனென் என்றனள். அத்தழுவலை அவள் விரும்பாமல் யான் வியர்வையால் வாடுகின்றேன் என்றாள். அது துனியாகுதல்- அந்தத் தழுவுதல் அவளுக்கு வெறுப்பாயிருந்ததன் காரணத்தை. இனி அறிந்தேன்- இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். கருத்து: என் மகள் தன் தலைவனைத் தழுவி இன்புறவே விரும்பினள்; என் தழுவுதலை விரும்பவில்லை; இதனை இப்பொழுதுதான் அறிந்தேன். விளக்கம்: இது மோசிகீரன் என்னும் புலவர் பாட்டு. தலைவி தன் காதலனுடன் சேர்ந்து உறவினரை விட்டுப் பிரிந்து போய் விட்டாள். அதன்பின் அவள் பிரிந்து செல்வதற்குமுன் அன்றிரவு நடந்த ஒரு நிகழ்ச்சியைச் செவிலித்தாய் எடுத்துக் கூறிவருந்தினாள். செவிலி கூற்று. பாலைத்திணை. ‘கழல் தொடி ஆய் மழை தவழ் பொதியில்’, வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும்; தான் தண்ணியள் ஏ பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்; அது துனி யாகுதல் ஏ; இனி அறிந்தேன்’ என்று பதங்கள் மாற்றப்பட்டன. ஆஅய்; அளபெடை. ஏ; அசை; முயங்குதல்- தழுவுதல்; அணைத்துக் கொள்ளுதல். துனி- வெறுப்பு. மழை- மேகம். இனி- இப்பொழுது. ஆய் என்பவன் கடை எழுவள்ளல்களிலே ஒருவன்; ஆய் அண்டிரன் என்றும் கூறுவர். இவன் பொதிகை மலையின் தலைவன். பொதிகை மலையிலே பூத்த வேங்கை மலரின் மணமும், காந்தள் மலரின் மணமும் தலைவியின்பால் வீசும் நறுமணத்திற்கு உவமை. செவிலித்தாய் தன் அருகிலே தலைவியைப் படுத்துறங்கும் படி செய்வது வழக்கம். பிரிந்தவரின் செயலைப் பற்றி எண்ணிப் பார்ப்பது எவருக்கும் இயற்கை. இந்த இயற்கையின்படியே செவிலித்தாய் தலைவியின் செய்கையை எண்ணி வருந்தினாள். அவர் செயலால் அறிந்திலேம் பாட்டு 85 பரத்தையர் இன்பத்தை நாடிச் சென்ற தலைவன் பல நாட்கள் அங்கே தங்கிவிட்டான். வீடு திரும்பவில்லை; இல்லக் கிழத்திக்கு இது பற்றிய ஆத்திரம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவன் மீண்டும் வரும்போது அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள். தலைவியின் உள்ளக் கருத்து இன்னதென்பதைத் தோழியும் உணர்ந்திருந்தாள். ஒரு நாள் தலைவன் பரத்தையர் இன்பத்திலே வெறுப்படைந்து, தன் இல்லத்திற்குத் திரும்ப விரும்பினான். தலைவி தன் செய்கையால் சினங்கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் தலைவியின் கருத்தைக் கண்டுணர்ந்து வருமாறு அவனுக்கு வேண்டிய பாணன் ஒருவனைத் தூதாக அனுப்பி வைத்தான். தூதாக வந்த அந்தப் பாணன் தலைவியின் இல்லத்தை அடைந்தான். தோழியைக் கண்டான். தலைவன் தான் செய்த தவறுக்காக வருந்துகின்றான்; வீட்டுக்கு வர விரும்புகின்றான்; தலைவியைக் காணவேண்டும் என்று தவிக்கின்றான்; அவன் தலைவியின்பால் மிகவும் அன்புள்ளவன்; அவன் தன் அன்பை மறந்துவிட்டான் என்று நினைக்காதீர்கள். அவனைப் போன்ற அன்புள்ளவர்கள் வேறுயாருமேயில்லை. ஆதலால் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். பாணன் உரைத்த இச்சொற்களைக் கேட்ட தோழி அவனுக்குச் சரியான மறுமொழி கூறுகின்றாள். “பாணனே நீ சொல்லியது போதும் நிறுத்து. உன்னைவிட அவனைப்பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும், அவனுடைய ஊரைப்பற்றித் தெரிந்து கொண்டால் போதும்; அவனுடைய தன்மையையும் தெரிந்து கொள்ளலாம். அவனுடைய ஊரிலே பறவை இனங்கள் பலவுண்டு. அவைகளிலே துள்ளுநடை போடும் சேவற்கோழி என்ன செய்யும் தெரியுமா? கருவடைந்திருக்கும் தன் பெட்டைக்கோழி முட்டையிடுவதற்காக இடம் அமைக்கும். அந்த இடத்தை மெத்தென்று செய்வதற்காக மணமற்ற கரும்பின் வெண்மையான மலர்களைக் கோதிக்கொண்டு வந்து குவிக்கும். மணமுள்ள மற்ற மலர்களைச் சேகரிக்காது; மணமற்ற இந்தக் கரும்பு மலரைத்தான் சேகரிக்கும். அவனுடைய ஊர் நல்ல செழிப்புள்ள ஊர்தான்; புதிய செல்வங்களைத் திரட்டித் தரும் ஊர்தான். ஆயினும் அவன் செயல் அந்தச் சேவலின் செய்கையை ஒத்தது’. உள்ளன்பு நிறைந்த மனைவியை விட்டு, உள்ளன்பற்ற பரத்தையரை நாடுவது அவன் பண்பு. துள்ளுநடைச் சேவல் மணமுள்ள மலரை விட்டு, மணமற்ற மலர்களை நாடுவது போன்றதுதான் அவன் நடத்தை அவனை உன்னுடைய வாய்தான் நல்ல குணமுள்ளவன்; பேரன்புள்ளவன் என்று சொல்லுகின்றது. உண்மையில் அவன் அப்படிப்பட்டவன் அல்லன்.’ இவ்வாறு தோழி பாணனுக்கு மறுமொழி கூறினாள். தூதன் சொல்லிய சொல்லை மறுத்துக் கூறினாள். தூதனுடைய வேண்டு கோளையும் ஒப்புக்கொள்ள மறுத்தாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பது இப்பாட்டு. பாட்டு யாரினும் இனியன் பேர் அன்பினனே உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர் தேம் பொதிக் கொண்ட தீம்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணர் வாயே. பதவுரை: உள் ஊர்க்குரீஇ.- ஊரிலே வாழும் குருவியாகிய, துள்ளுநடைச் சேவல்- துள்ளுநடை போடும் சேவற்கோழி, சூல் முதிர் பேடைக்கு- கரு முற்றிய தன் பெட்டைக் கோழிக்காக. ஈன்இல் இழையர்- முட்டை இடுவதற்கான இடத்தை அமைக்கும் பொருட்டு. தேம் பொதி கொண்ட- தேனை உள்ளே கொண்டிருக் கின்ற. தீம் கழைக் கரும்பின்- இனிய கோல் வடிவான கரும்பினது. நாறா வெண்பூ-மணமற்ற வெண்மையான மலரை, கொழுதும்-மூக்கினால் கோதிக் கொண்டுவரும். யாணர் ஊரன்- புதிய வருமானங்களையுடைய ஊரின் தலைவனை. யாரினும் இனியன்- எல்லோரையும்விட நல்லவன். பேர் அன்பினன் -மிகுந்த அன்புள்ளவன் என்று கூறுவது. பாணன் வாய்- பாணனது வாயளவில்தான்; உண்மையில் அப்படிப்பட்டவன் அல்லன் அவன். கருத்து:- பாணன் தான் தலைவனை நல்லவன்; அன்புள்ள வன் என்று சொல்கிறான். உண்மையில் அத்தகையவன் அல்லன். விளக்கம்:- இப்பாடல் வடமன் என்னும் புலவரால் பாடப் பட்டது. தலைவனிடமிருந்து தூது வந்த பாணன், தலைவனை நல்லவன்; அன்புள்ளவன் என்று புகழ்ந்தான். அதனைத் தோழி மறுத்துரைத்தாள். தோழி கூற்று. மருதத்திணை. இறுதி அடியில் உள்ள ‘யாணர் ஊரன்’ என்பதற்குப் பின் ‘யாரினும் இனியன் பேரன்பினனே’ என்பதை இணைத்து, அதன் பின் ‘பாணன் வாயே’ என்பதை வைத்துப் பொருள் கூறப்பட்டது. குரீஇ; இழைஇயர் என்பவற்றில் “இ” இரண்டும் அளபெடைகள். துள்ளு நடை- துள்ளித் துள்ளித் தலை நிமிர்ந்து நடக்கும் நடை., சூல்-கர்ப்பம். ஈன்இல் - கருவுயிர்க்கும் இடம். பாணன் தலைவனைப் பற்றிப் புகழ்ந்து கூறியதைத் தோழி ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் பொய்யுரைப்பதாக எண்ணிச் சினந்தாள். ஆதலால் தலைவனுடைய நடத்தையைச் சேவற் கோழிக்கு ஒப்பிட்டு உரைத்தாள். என்னைப் போல் எவர் உண்டு? பாட்டு 86 உடல் நடுங்கும் நல்ல குளிர்காலம்; இரவுப் பொழுது; இரவிலும் நடுச் சாமம்; அதாவது நள்ளிரவு. கணவனைப் பிரிந்த ஒரு காதலி தனித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றாள். ஊரெல்லாம் உறங்கிக் கிடக்கின்றது. ஒருவித ஒலியும் இல்லை. மாடுகளின் கழுத்திலே கட்டியிருக்கும் சிறிய மணிகளின் ஓசை மட்டும் மெதுவாகக் கேட்கின்றது. இந்த ஓசையைக் கேட்டுக் கொண்டு தூக்கமின்றித் துக்கத்துடன் உட்கார்ந்திருக்கின்றாள் தலைவி. அவளுடைய தோழி தலைவியின் துக்கத்தைக் கண்டு தானும் வருந்தினாள். தலைவன் பிரிந்ததனால்தான் இவளுக்கு இத்துக்கம் உண்டாயிற்று. அவன் வரும் வரையிலும் இவள் இத்தனிமைத் துயரை எப்படித்தான் பொறுத்துக் கொண்டிருக்கப் போகின்றாளோ? இம்மாதிரி இரவிலும் உறக்கமில்லாமல் உட்கார்ந்திருந்தால் இவள் உடம்புதான் எதற்காகும் என்று வருந்தினாள். இப்படி வருந்துகின்ற தோழியைப் பார்த்துத் தலைவி கூறுகின்றாள். ‘தோழியே நான் என்னதான் செய்வேன் மழையோ சோவென்று விடாமற் பெய்கின்றது. குளிர் காற்றோ சீறிச் சீறி வீசுகின்றது; குளிரோ என்னால் தாங்க முடியவில்லை; என்னை ஆட்டி வைக்கின்றது. நேரமோ நள்ளிரவு; இந்நிலையில் தனித்து இருக்கும் பெண்கள் யார்தான் துன்பத்தால் வாட மாட்டார்கள்? கொட்டிலிலே கட்டியிருக்கும் எருதின்மேல் ஈ மொய்க்கின்றது. அந்த ‘ஈயின் ஒலியைப் பொறுக்க முடியாமல் எருது தன் தலையை ஆட்டுகின்றது. அதனால் அதன் கழுத்திலே கட்டியுள்ள மணியின் நடுநாக்கு அசைந்து ஒலியை எழுப்புகின்றது. இந்த மெல்லிய கொடுமையான மணியோசையைக் காதிலே கேட்டுக் கொண்டு என்னைப் போல் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்னைப் போலக் கண்களிலிருந்து நீர்த்துளிகள் சிந்துகின்றவர்; பொறுக்க முடியாத காமநோயுடன் தவிக்கின்றவர்; தனிமை வருத்துவதால் உள்ளம் கலங்கி நிற்பவர்; கொடுமையான மணியோசையைக் கேட்டுக் கொண்டிருப்பவர்; வேறு யாரேனும் இருக்கின்றார் களா? இந்த நள்ளிரவிலே வேறு எவரும் இருக்க மாட்டார்கள், என்று தன் துன்பத்தைக் கூறினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். பாட்டு சிறைபனி உடைந்த சேய் அரி மழைக்கண் பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிப் பிறரும் கேட்குநர் உளர் கொல்? உறை சிறந்து ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆன் நுளம்பு உலம்பு தொறும் உளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. பதவுரை:- உறை சிறந்து -மழைத்துளி மிகுந்து. ஊதை தூற்றும் - வாடைக்காற்று மிகுதியாக வீசுகின்ற. கூதிர் யாமத்து- இந்தக் குளிர்காலத்து நள்ளிரவிலே. ஆன் - கொட்டகையில் கட்டியிருக்கும் எருது. நுளம்பு உலம்பு தொறும்- அதன் மேல் மொய்க்கும் ஈ ஒலிக்கும் போதெல்லாம். உளம்பும்- தன் தலையை ஆட்டுவதனால் அசையும். நாநவில் கொடுமணி- நாவினால் கூறும் கொடிய மணியின். நல்கூர் குரல் ஏ- மெல்லிய ஓசையை. சிறைபனி உடைந்த- தடுக்கப்பட்ட கண்ணீர் உடைந்து சிந்துகின்ற. சேஅரி மழைக்கண்- சிவந்த இரேகையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களுடனும். பொறை அருநோயொடு- பொறுக்க முடியாத காம நோயுடனும். புலம்பு அலை கலங்கி- தனிமைத் துன்பமும் சேர்ந்து வருத்துவதனால் கலக்கம் அடைந்து. கேட்குநர்- கேட்டுக் கொண்டு உறங்காமல் இருப்பவர். பிறரும் உளர் கொல்- வேறு ஒருவரும் உண்டோ? கருத்து: - தலைவரோடு கூடியிருந்து மகிழத்தக்க இச் சமயத்தில் நான் தனித்திருந்து வருந்துகிறேன். விளக்கம்:- இப்பாடல் வெண்கொற்றன் என்னும் புலவர் பாட்டு. தோழியைப் பார்த்துத் தலைவி உரைத்தது. தலைவரோடு இணைந்திருந்து இன்பம் உற வேண்டிய இந்தக் கூதிர்கால நள்ளிரவிலே நான் தனித்துறைகின்றேன். எருதின் மணியோ சையைக் கேட்டுக் கொண்டு இம்மாதிரி யிருப்பவர் என்போல் எவரேனும் இருப்பரோ என்று சொல்லி வருந்தினாள். மருதத்திணை ‘உறை சிறந்து’, ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆன் நுளம்பு உலம்பு தொறும் உளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரல் ஏ சிறைபனி உடைந்த சே அரி மழைக்கண் பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிக் கேட்குநர் பிறரும் உளர்கொல்’ என்று மாற்றிப் பொருள் கூறப்பட்டது. ஏ, கொல். அசைச் சொற்கள். சே- சிவப்பு. உறை- மழைத்துளி. நுளம்பு- மாட்டின் மேல் மொய்க்கும் ஈ. உலம்பு- ஒலி. உளம்பும்- அசையும். நா- மணியின் நடுவிலே தொங்கும் கருவி; அடித்து ஓசையை எழுப்புவது. நல் கூர்தல்- வறுமை; இங்கு மென்மை என்ற பொருளில் வந்தது. குளிர்காலத்து நள்ளிரவின் நிலைமையை இப்பாட்டில் காணலாம். அவர் கொடியவர் அல்லர் பாட்டு 87 அவனும் அவளும் ஒரு மலைச்சாரலிலே சந்தித்தனர்; மனத்தால் ஒன்றுபட்டனர்! உயிரும் ஒன்றாயினர்! உடலாலும் ஒன்றுபட்டனர். அவர்களுக்குள் நேர்ந்த நட்பு பிரிக்க முடியாதது; அவர்களுக்குள் உண்டான அன்பின் பிணைப்பை ஆராலும் அறுத்துவிட முடியாது. அவனும் உத்தம குணம் உள்ளவன்; அவளும் உயர்ந்த பண்புள்ளவள்; இத்தகையவர்கள் ஒன்று கூடினால் அவர்களை யார் தனித்தனியே துண்டிக்க முடியும்? அன்று அவளுடன் நீண்ட நேரம் அளவளாவியிருந்த தலைவன் பிறகு பிரிந்து சென்றான்! பிரிய மனமில்லாமல் பிரிந்து போனான். பிரியும் போது ‘நான் என்றும் உன்னைக் கைவிட மாட்டேன்; தெய்வத்தின் சாட்சியாகக் கூறுகிறேன்; விரைவில் திரும்பி வந்து உன் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்குவேன்’ என்று ஆணையிட்டுச் சென்றான். இப்படி ஆணையிட்டுப் பிரிந்தவன் திரும்பி வருவதற்கு வெகுநாட்கள் ஆயின. காதலன் உரைத்த உறுதிமொழிப்படி அவன் வராமல் காலங்கடத்திய காரணத்தால் அவள் நெஞ்சத்திலே கவலை சூழ்ந்தது. அவள் நெற்றியிலே பசலை நிறம் படர்ந்தது; தோள்கள் இளைத்து மெலிந்தன. உள்ளத்தின் கவலை இவ்வாறு உடம்பிலே படர்ந்தது. இச்சமயத்தில் திடீரென்று அவள் நெஞ்சத்தில் ஒரு நினைப்பு எழுந்தது. அவன் எந்தத் தெய்வத்தின்முன் உறுதிமொழி உரைத் தானோ அந்தத் தெய்வம் அவன்மீது கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? அவன் சொல்லிய மொழியைச் சோரவிட்டான் என்பதற்காக அத்தெய்வத்திற்கு வெகுளி பிறந்தாலும் பிறக்கலாம். அவ்வெகுளியால் என் காதலன் கொடுமைக்கு உள்ளாகக் கூடும் என்று ஐயுற்றாள். உடனே அத்தெய்வத்தை வணங்கினாள். ‘என் இளைப்புக்குக் காரணம் நானேதான்; என் காதலன் அல்லன்; அவர்மீது தவறில்லை, அவர் நல்லவர்; கொடியவர் அல்லர்; ஆதலால் அவருக்கு எந்த இடையூறும் செய்யாதே’ என்று வேண்டிக் கொண்டாள். ‘பலர் கூடும் இடத்திலே, செங்கடம்ப மரத்திலே உறையும் தெய்வம் பழமையான தெய்வம்; யாரும் அஞ்சத்தகுந்த தெய்வம்; கொடியவர்களையெல்லாம் சும்மா விட்டுவிடாது; அவர்களைத் துன்புறுத்தும் என்று கூறுவர். குன்றுகள் நிறைந்த நாட்டையுடைய எமது தலைவர் சிறிதும் கொடியவர் அல்லர்; ‘விரைவில் சந்தித்து மணப்பேன்’ என்று தெய்வத்தைச் சாட்சியிட்டுக் கூறிய அவர் உறுதிமொழியை ஒருநாளும் மறக்க மாட்டார் ஏதோ காரியத்தின் காரணமாகக் காலந்தாழ்ந்திருக்கிறார்; அவ்வளவுதான். ஆதலால் அவரைச் சொன்ன சொல்லை மீறிய சூதர் என்று கருதித் துன்புறுத்தாதே. என் நெற்றியிலே பசலை நிறம் படர்ந்ததற்குக் காரணம் அவரன்று; நான் அவரை எண்ணியதனால்தான் இது நேர்ந்தது. எனது தோள்கள் மெலிந்ததற்குக் காரணம் அவர் அன்று; என் நெஞ்சம் அவரை நினைத்து நினைத்து உருகுவதனால்தான் இந்த நிலைமை ஆதலால் அவர்மேல் குற்றமில்லை’ என்று இவ்வாறு தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்; இவ்வேண்டுகோளின் வழியாகத் தனது கற்புடைமையை வெளியிட்டாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப; யாவதும் கொடியர் அல்லர், எம்குன்று கெழுநாடர்; பசைஇப் பசந்தன்று நுதலே; ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடம்மென் தோளே. பதவுரை: மன்றம்- பலர் கூடும் இடத்திலே. மராத்த- செங் கடம்பு மரத்திலே உள்ள. பேமுதிர் கடவுள் - அச்சந்தரும் பழமையான தெய்வம். கொடியோர்- உறுதிமொழியை மீறுவது போன்ற கொடுமையைச் செய்பவர்களையெல்லாம், தெறும் என்ப- வருத்தும் என்று கூறுவர். எம்குன்று கெழுநாடர்- எமது காதலராகிய மலைகள் நிறைந்த நாட்டின் தலைவர். யாவதும் கொடியர் அல்லர்- சிறிதும் குற்றம் புரிந்த கெட்டவர் அல்லர். நுதல் ஏ- என்னுடைய நெற்றி. பசை- நான் அவரை எண்ணி வருந்தியதனால். பசந்தன்று- பசலை நிறம் பெற்றது. தடம் மெல்தோள் ஏ- எனது பெரிய மெல்லிய தோள்கள். ஞெகிழ- என் உள்ளம் அவரை நினைத்துத் தளர்ந்ததனால். ஞெகிழ்ந்தன்று- மெலிந்தன. கருத்து: என்னுடைய மெலிவுக்குக் காரணம் நானேதான்; என் காதலர் அல்லர்; ஆதலால் தெய்வமே அவரை ஒன்றும் செய்யாதே. விளக்கம்: இது கபிலர் பாட்டு. தெய்வத்தின் முன்னிலையிலே உறுதி கூறிப் பிரிந்த தலைவன் விரைவில் திரும்பவில்லை. காலங் கடத்தினான். அப்பொழுது தலைவி அவனுக்குத் தெய்வத்தால் எவ்வித துன்பமும் நேரக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள். தலைவி கூற்று. குறிஞ்சித்திணை. ‘மன்றமராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த்தெறூ உம் என்ப: எம்குன்று கெழுநாடர் யாவதும் கொடியர் அல்லர்; நுதல் ஏ பசை இப் பசந்தன்று; தடம் மெல்தோள் ஏ ஞெகிழ ஞெகிழ்ந்தன்று’ என்று பதங்கள் மாற்றப்பட்டன. மராஅ; பேஎ; தெறூஉம்; பசைஇ; என்பவை உயிர் அள பெடைகள். ஏ அசைகள் மன்றம் -பலர் கூடும் மரத்தின் நிழல். பே-அச்சம். பேய் என்னும் சொல் இதிலிருந்து பிறந்ததே. பசைதல்- விரும்புதல். ஞெகிழ்தல்- தளர்தல்; மெலிதல்; உருகுதல். கடம்ப மரத்திலே தெய்வம் வாழும் என்பது பழங்கால மக்கள் நம்பிக்கை கற்புள்ள ஒரு பெண்ணின் மனப்பாங்கை விளக்கும் பாடல்களில் இது ஒன்று. காதலன் குற்றமுள்ளவனாயினும், அவன் குற்றத்தை மறைக்க முயல்வதே உண்மையன்புள்ள ஒரு காதலியின் பண்பாகும். இரவிலே வந்தாலும் வருவான் பாட்டு. 88 அவனும் அவளும் காதற்களவு மணம் புரிந்து கொண்டு சில நாட்கள்தாம் ஆயின. இருவரும் பகற் பொழுதில் நாள்தோறும் சந்திக்க முடிவதில்லை. பல இடையூறுகளால் அவர்கள் சந்திப்புக்குப் பங்கம் நேர்ந்தது. இதனால் தலைவனும் வருந்தினான்; தலைவியும் வருந்தினாள். இறுதியாகத் தலைவன் ஒரு முடிவுக்கு வந்தான் இரவிலே தலைவியை ஒரு குறித்த இடத்திலே சந்திப்பது என்பது தான் அவனுடைய முடிவு. இரவிலே தலைவன் அவனூரிலிருந்து தலைவியின் உறை விடத்திற்கு வருவதென்றால் அது எளிதன்று. அருவிநீர் புரண்டோடும் மலைச் சாரலைக் கடக்க வேண்டும்; ஆண் யானைகளும் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற காட்டு வழியைக் கடந்து வர வேண்டும். இடை வழியிலே இன்னும் எவ்வளவோ இன்னல்கள் உண்டு. தலைவியின்மீது கொண்ட காதலால் இந்த இடையூறுகளை யெல்லாம் அவன் எள்ளளவும் பொருட்படுத்தவில்லை. இவைகளையெல்லாம் கடந்து வந்து இரவிலே அவளைச் சந்திப்பதென்று முடிவு செய்து விட்டான். தலைவன் தன் முடிவைத் தோழிக்குத் தெரிவித்தான். தோழி தலைவன் வரும் வழியில் உள்ள ஆபத்துக்களை அறிவாள். அந்த ஆபத்துக்களை யெல்லாம் தவிர்த்துக் கொள்ளும் ஆண்மை தலைவனுக்கு உண்டு என்பதிலே அவளுக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. ஆதலால் அவள் தலைவனுடைய எண்ணத்திற்கு இசைந்தாள். தலைவன் இரவுக்குறி வேண்டியதையும், அதற்குத் தான் இணங்கியதையும் அவள் தன் தலைவியினிடம் கூறினாள். ‘தோழியே இனி நீ துன்புற வேண்டியதில்லை; உன் காதலன் ஒவ்வொரு நாளும் உன்னைச் சந்திப்பதற்கான ஒரு வழியைக் கண்டு பிடித்துவிட்டான். அதற்கு நானும் இணங்கிவிட்டேன். ஆதலால் நீயும் அதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். உன் காதலன் ஓவென்று இரைந்து வெண்மை நிறத்துடன் வீழ்கின்ற அருவியை உடைய உயர்ந்த மலை நாட்டின் தலைவன். அவனுடைய மலைப்பக்கத்துக் காடுகளிலே சிறிய கண்களை யுடைய பெரிய ஆண்யானை பலம் பொருந்திய புலியை எதிர்த்துத் தாக்கும்; தன் பலங் குன்றிச் சோர்வடையும். மக்கள் துணிந்து நுழைய முடியாத இத்தகைய பயங்கரம் நிறைந்த காடு அது. இத்தகைய மலைச்சாரலின் வழியே இரவிலே வந்து சந்திப்பதாக அவன் கூறினான். அவன் கூறியதை நான் மறுக்கவில்லை. அப்படியே ஒப்புக்கொண்டு விட்டேன். அவன் சிறந்த ஆண்மை யுள்ளவன்; ஆதலால் அவனை வெள்ளமோ, விலங்குகளோ ஒன்றும் செய்துவிட முடியாது. அவன் என்னிடம் உரைத்தபடி வருவான். இதனால் நமக்குக் கெட்ட பெயர் வந்தாலும் சரி; ஊரார் அவன் இரவில் வருவதை யறிந்து நம்மைப் பழித்தாலும் சரி; நாம் அதற்காக நாணம் அடையக்கூடாது. ஊரார் பழி கூறுவார்களே என்பதற்காக அவன் வரவை மறுக்கக்கூடாது; அவனை வரவேற்க வேண்டும், ’ என்று கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு ஒலிவெள் அருவி ஓங்குமலை நாடன் சிறுகண் பெரும்களிறு வயப்புலி தாக்கித் தொல் முரண் சோரும் துன்அரும் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம்; வடு நாணலமே தோழி நாமே. பதவுரை: ஒலிவெள் அருவி- ஓசையிட்டுக் கொண்டு விழும் வெண்மையான அருவியை உடைய. ஓங்குமலை நாடன்- உயர்ந்த மலை நாட்டின் தலைவன். சிறுகண் பெரும் களிறு- சிறிய கண்களையுடைய பெரிய ஆண் யானை. வயம் புலி தாக்கி- பலமுள்ள புலியுடன் எதிர்த்துப் போர் செய்து. தொல் முரண்சோரும்- தனது பழமையான வலிமை குன்றும். துன் அரும் சாரல்- மக்கள் செல்ல முடியாத மலைச்சாரலின் வழியே. நடு நாள்- நள்ளிரவிலே. வருதலும் வரும்- வருவான். தோழி நாம் வடு நாணலம் - தோழியே நாம் நமக்கு வரும் பழிக்கு நாணாமல் அவனை வரவேற்போம். கருத்து: தலைவர் இனி இரவில் வருவார்; ஊரார் பழித்தாலும் அவரை நாம் வரவேற்க வேண்டும். விளக்கம்: இது மதுரைக் கதக்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் இரவுக் குறியிலே வருவான் என்ற செய்தியைத் தோழி தலைவியினிடம் சொல்லியது. தோழி கூற்று. குறிஞ்சித்திணை. “தோழி நாமே வடுநாணலமே” என்று இறுதி அடிமட்டும் மாற்றப்பட்டது. வரூஉம் உயிர் அளபெடை. ஏ- அசைகள். “ஒலிவெள் அருவி ஓங்கு மலை நாடன்” என்பது தலை வனுடைய தன்மையை விளக்கி நின்றது. மலையருவி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மக்களுக்குப் பயன்படுகின்றது. அதுபோல் தலைவன் சேய்மையிலிருந்து வந்து நமக்கு இன்பந்தருவான் என்ற குறிப்பைக் காட்டியது. அந்த மலை நாடனைத்தான் நீ மணக்கப் போகின்றாய். காலங்கடந்தாலும் அவனும் நீயும் ஊரார் அறிய மணந்து இல்லறம் நடத்தப் போகின்றீர்கள். ஆதலால் இன்று இ8ச்செயலைப் பழித்தாலும்கூட அதற்காக நாம் நாணமடைய வேண்டியதில்லை யென்று உரைத்தாள் தோழி. ‘வடு நாணலம்’ என்ற தொடரில் இக்கருத்துப் பொதிந்திருப்பதைக் காணலாம். ஊரார் பழிக்கு வருந்துவது ஏன்? பாட்டு 89 ஒரு தலைவனும் தலைவியும் பல நாட்களாகக் களவு மணத்திலேயே காலங்கடத்திக் கொண்டிருந்தனர். தலைவிக்கு விரைவில் கற்பு மணம் புரிந்து கொண்டு வெளிப்படையாக இல்லறம் நடத்த வேண்டும் என்பது ஆசை. அவள் தன் காதலனிடம் பல முறை சொல்லிப் பார்த்தாள்; அவனும் ‘ஆகட்டும் விரைவில் உன் பெற்றோர் சம்மதம் கேட்டு உன்னை மணந்து கொள்ளுகிறேன்” என்று சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டே வந்தான். தோழியும் எத்தனையோ தடவை சொல்லி விட்டாள் இன்னும் அவன் கற்பு மணம் புரிந்து கொள்ளுவதற்கு எந்த ஏற்பாடும் செய்ததாகத் தெரியவில்லை. இப்படியிருக்கும் போது, ஒரு நாள் தலைவன் தலைவியை சந்திப்பதற்காக வீட்டின் மதிற்புறத்திலே வந்து நின்றான். அப் பொழுது தோழி தலைவன் காதிலே விழும்படி ஒரு செய்தியைக் கூறினாள். தலைவியைப் பற்றி ஊரார் பழித்த ஒரு செய்தியை எடுத்துரைத்தாள். அச்செய்தியை அறிந்த பின்னாவது தலைவன் மணந்து கொள்ள முயலமாட்டானா என்ற எண்ணத்துடனேயே அச்செய்தியைக் கூறினாள். ‘என் தலைவி கொல்லிப் பாவையைப் போன்ற இயல் புள்ளவள்; கொல்லி மலை என்பது சிறந்த அணிகலன்களை யுடைய சேரனுக்கு உரிமையுள்ளது அந்த மலையிலே வாழ்கின்ற தெய்வம் பிறருக்கு அச்சத்தைத் தரும் தன்மையுள்ளது; கரிய கண்களையுடையது அது. அந்த மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதியிருக்கின்ற நல்ல தன்மையுள்ள கொல்லிப் பாவையைப் போன்றவள் என் தலைவி; மெல்லிய தன்மையையுடையவள்; இத் தன்மையுள்ள என் தலைவி வள்ளைப் பாட்டைப் பாடிக்கொண்டு உரலிலே நெல்லைக் குற்றினாள். அவள் பாடிக் கொண்டு தானியத்தை இடிக்கும்போது அவள் பக்கத்திலே இருந்த பெண்கள் சும்மாயிருந்தார்களா? அவளுடைய பாட்டைப் பற்றிக் குறை கூறினார்கள். இவளுடைய பாட்டைப் பற்றி அவர்கள் ஏன் குறை கூற வேண்டும். இவள் தன் காதலனை நினைத்துப் பாடிக் குற்றினால் அவர்களுக்கென்ன வந்தது? இப்படிப்பட்ட அறிவில்லாதவர்களாகிய இவ்வூர் கூறும் பழிக்காக நாம் ஏன் வருந்த வேண்டும்? வருந்தினால் தான் என்ன பயன்?’ என்று தோழி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். தலைவன் களவு ஒழுக்கத்தைக் கைவிட்டு விரைவில் மணந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறினாள் தோழி. இச்செய்தியை உரைப்பதே இப்பாடல். பாட்டு பாவடி உரல பகுவாய் வள்ளை ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப; அழிவது எவன்கொல்? இப்பேதை ஊர்க்கே; பெரும்பூண் பொறையன் பேஎமுதிர்கொல்லிக் கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய நல்இயல் பாவை அன்னஇம் மெல்லியள் குறுமகள் பாடினள் குறினே. பதவுரை:- பெரும்பூண் பொறையன்- சிறந்த ஆபரணத்தை அணிந்த சேரனுடைய. பேஎமுதிர் -அச்சம் நிறைந்த. கொல்லி- கொல்லி மலையில் உள்ள. கரும்கண் தெய்வம்- கருகிய கண்களை யுடைய தெய்வத்தின் உருவை. குடவரை எழுதிய- மேற்கு மலையிலே எழுதியிருக்கின்ற. நல் இயல் பாவை அன்ன - நல்ல தன்மையுள்ள பெண் தெய்வத்தை ஒத்த. இம்மெல் இயல் குறுமகள்- இந்த மெல்லிய தன்மையுள்ள தலைவி. பாடினள் குறின் - தன் காதலனைக் குறித்த வள்ளைப் பாட்டைப் பாடிக் கொண்டு நெல்லைக் குற்றினால். பாஅடி உரல -பரந்த அடியை உடைய உரலிலே. பகுவாய் வெள்ளை - பெரிய வாயிலே தான்யத்தைப் பாடிக் கொண்டு இடிக்கும் போது. ஏதின் மாக்கள்- அயலார்கள். நுவறலும் நுவல்ப- அவள் பாட்டைப் பற்றிக் குறை கூறுதலைச் செய்வார்கள். இப்பேதை ஊர்க்கு- இத்தகைய அறிவற்றவர்களை யுடைய இவ்வூரார் கூறும் குறைகளுக்காக. அழிவது எவன் கொல்- வருந்துவதனால் என்ன பயன்? கருத்து:- தலைவி ஒருவனிடம் காதல் கொண்டிருப்பதை ஊரார் அறிந்து கொண்டனர். அவர்கள் பழி சொல்கின்றனர். விளக்கம்:- இது பரணர் பாட்டு. மறைவிலே நின்ற தலைவன் காதிலே விழும்படி தோழி கூறியது; தலைவியைப் பற்றி ஊரார் பழிப்பதை எடுத்துச் சொல்லி விரைவில் மணந்து கொள்ளும்படி மறைமுகமாக உரைத்தது. தோழி கூற்று. மருதத்திணை. முதல் மூன்று அடிகளையும் ‘பாடினள் குறினே’ என்ற இறுதித் தொடர்க்குப் பின் வைத்துப் பொருள் கூறப்பட்டது. இப்பேதை ஊர்க்கு அழிவது எவன் கொல்’ என்று மூன்றாவது அடி முன்பின்னாக மாற்றப்பட்டது. கொல், ஏ, ஏ, அசைச் சொற்கள். பா அடி- பெரிய அடிப்பாகம். வள்ளை- உரலில் குற்றும் போது பாடும் பாட்டு. பெண்கள் உரலில் குற்றும் போது சோர்வு தோன்றாதிருக்கப் பாட்டுப் பாடிக்கொண்டு குற்றுவது வழக்கம். கொல்லிமலை சேரனுக்குச் சொந்தமானது. கொல்லிப் பாவையின் உருவம் பயங்கரமானது. ஆயினும் அதன் உருவம் அம்மலையின் மேற்குப் புறத்திலே அழகாக அமைக்கப்பட்டிருந்தது என்று தெரிகின்றது. அந்த அழகிய பாவை போன்றவள் தலைவி என்று கூறினாள் தோழி. உன் நட்பு வியத்தற்குரியது பாட்டு 90 அவன் நெடுங்காலமாக அவளுடன் பழகி வந்தான்; அவனும் அவளும் காதலன் காதலிகளாக வாழ்ந்து வந்தனர்; ஆனால் வெளிப்படையாக அவர்கள் இன்னும் இல்லறத்திலே நுழைய வில்லை. களவு மணவாழ்வு தான் அவர்கள் வாழ்வு. இந்த வாழ்விலிருந்து விரைவிலே மீளவேண்டுமென்பதுதான் இருவருடைய எண்ணமும். அவர்களுடைய களவுக் கூட்டத்திற்கு எவ்விதத் தடையும் உண்டாகவில்லை. ஆதலால் அவன் வரைந்து கொள்ளும் காலத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே வந்தான். அவர்கள் இன்னும் இப்படி யிருப்பது தோழிக்குப் பிடிக்கவில்லை. விரைவில் அவர்களை வெளிப்படையாகக் குடும்பம் நடத்துவோராகச் செய்துவைக்க வேண்டும் என்பதே அவள் சிந்தனை. ஒரு நாள் அக்காதலன் தலைவியைக் காணுவதற்காக வேலிப் புறத்திலே வந்து நின்றான். அப்பொழுது அவன் காதிலே விழும் படி தலைவியிடம் சில ஆழ்ந்த கருத்தமைந்த சொற்களைக் கூறினாள் தோழி. “தோழியே! மிளகுக் கொடிகள் வளர்ந்து படர்ந்திருக்கின்ற மலைப்பக்கம்; கருக்கொண்டு இராக் காலத்திலே இடி முழக்கம் செய்த மேகங்கள் பெரிய மழையைப் பெய்தன. இந்த மழையினால் மலையிலிருந்து அருவி நீர் ஆரவாரத்துடன் விழத் தொடங்கிற்று. அந்த அருவியின் பக்கத்திலே பழுத்து நறுமணம் வீசிக் கொண்டிருந்தது ஒரு பலாக்கனி. உடம்பெல்லாம் மயிரடர்ந்த ஒரு ஆண் குரங்கு அந்தப் பழத்தின்மேல் ஆசை கொண்டது. அதைப் பறிப்பதற்காகக் கையை நீட்டியது. அந்தப் பழம் அக்குரங்கின் கையிலே சிக்காமல் நழுவிவிட்டது; வீழும் அருவியிலே விழுந்து விட்டது. அருவிநீர் அந்தக் கனிந்த பழத்தை ஏந்தி வந்து பலரும் நீருண்ணுகின்ற அருவித் துறையிலே போட்டது. இதன் மூலம் அந்த அருவி, அப்பழத்தை ஊரில் உள்ளார் பலருக்கும் பயன்படச் செய்தது. இப்படிப்பட்ட சிறந்த மலையையுடைய நாட்டின் தலைவன் உன் காதலன். அவனிடம் நீ கொண்டிருக்கும் நட்பு உனது மெல்லிய தோள்களை இளைக்கும்படி செய்து விட்டது. அவன் இன்னும் வெளிப்படையாக மணந்து கொள்ளாமல் களவொழுக்கத்திலேயே வாழ்கின்றானே என்ற ஏக்கம் உன் தோள்களை மெலிய வைத்தது என்பதில் ஐயம் இல்லை. ஆயினும் அவனை அடிக்கடி நீ சந்திப்பதனால் உன் உள்ளத்திலே அமைதி நிலவுகின்றது. இது எப்படிப்பட்ட நட்பு என்றுதான் நான் வியப்படைகின்றேன்”, என்று கூறினாள் தோழி. வேலிக்குப் புறத்திலே நின்றவன் காதிலே இது விழ வேண்டும்; விரைவிலே தலைவியை மணந்து கொள்ள வேண்டும்; அவளுடைய தோள் மெலிவைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவன்; உள்ளத்திலே உதிக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு எற்றோ! வாழி தோழி! முற்றுபு கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்கு மயிர்க் கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி அருவி உண்துறைத் தரூஉம் குன்றநாடன், கேண்மை, மென்றோள் சாய்த்தும், சால்பு ஈன்று அன்றே. பதவுரை:- கறிவளர் அடுக்கத்து- மிளகுக் கொடிகள் வளர்ந்திருக்கின்ற மலைப் பக்கத்திலே. முற்றுபு- கருமுதிர்ந்து. இரவின் முழங்கிய மங்குல்- இரவிலே இடியிடித்த மேகங்கள். மாமழை வீழ்ந்தென - பெரிய மழையைப் பெய்தன. பொங்கு மயிர்க்கலை- உடம்பெல்லாம் நிறைந்த மயிரையுடைய ஆண் குரங்கு. தொட இழுக்கிய - தொட்ட தனால் நழுவி விழுந்த, பூநாறு பலவுக்கனி- பூவைப் போல் மணம் வீசுகின்ற பலாக்கனியை. வரை இழி அருவி -மலையிலிருந்து விழுகின்ற அருவியானது ஏந்திக் கொண்டு வந்து. உண்துறை தரூம் -ஊரார் நீர் உண்ணும் துறையிலே கொடுக்கும் குன்றநாடன்- மலைநாட்டுத் தலைவனுடன். கேண்மை- நீ கொண்ட நட்பு. மெல் தோள் சாய்த்தும் -உனது மென்மையான தோள்களை இளைக்கும்படி செய்துங்கூட. சால்பு ஈன்றன்று- அமைதியையே தந்தது. எற்றோ - இது எப்படியோ அறியேன். வாழி தோழி - வாழ்க தோழியே. கருத்து:- மலைநாட்டுத் தலைவனுடன் கொண்ட நட்பால் நீ மெலிந்தாய்! ஆயினும் உன் இயல்புகெடவில்லை விளக்கம்:- இப்பாடல் மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் என்பவர் பாட்டு. ‘தலைவனுடன் கொண்ட நட்புக் காரணமாக உன் உடம்பு இளைத்தது; ஆயினும் நீ அவனிடம் கொண்ட அன்பிலே குறையவில்லை”, என்று தோழி தலைவியைப் பார்த்து உரைத்தது. குறிஞ்சித்திணை. “எற்றோ வாழி தோழி” என்பதை இறுதியில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. கறி- மிளகு. மங்குல்- மேகம். கலை- ஆண் குரங்கு. சாய்த்தல்- மெலியச் செய்தல். சால்பு- பெருமை. அமைதி: அன்பின் காரண மாக அவளிடம் இவ்வமைதி காணப்பட்டது. பலாக்கனியைக் குரங்கின் கையிலே அகப்படாமல். அருவி கொண்டு வந்து ஊரார்க்குப் பயன்படச் செய்தது. அதுபோல மற்றவர்கள் கையிலே படாமல் உன்வசப்படுத்திக் கொண்ட இவளை விரைவிலே மணந்து கொள்ள வேண்டும். பலர்க்கும் உதவி செய்யும் இல்லறத்தை மேற்கொள்ள வேண்டும் என்னும் குறிப்பு இப்பாட்டில் அடங்கியிருக்கின்றது. இணங்கினால் இன்னல்தான் பாட்டு 91 காதலன் பரத்தையர் வீடுகளிலே திரிந்து கொண்டிருந்தான். பல நாட்கள் இவ்வாறு திரிந்தான். தன் வீட்டை எட்டிப் பார்க்கவேயில்லை. தன் காதல் மனைவியைப் பற்றிக் கருத்தில் நினைத்தானோ இல்லையோ. இப்படிப் பல நாட்கள் கடந்தபின் ஒரு நாள் தன் இல்லத்தை யடைந்தான். தன் காதலியின் சினத்தைத் தணிக்கத் தூதுவிட்டான். காதலன் பரத்தையரை விட்டுப் பிரிந்து வீட்டுக்கு வந்ததையும், தூது விடுப்பதையும் கண்ட தலைவி மனம் இளகினாள். தலைவனை வரவேற்கலாம் என்று எண்ணினாள். அவ்வாறு செய்வதுதான் குலமகளின் கடமை; மனைவியின் பொறுப்பு என்று நினைத்தாள். தலைவியின் எண்ணத்தை அறிந்த தோழி உடனே அவளுக்குப் புத்திமதி கூறினாள். தவறு செய்த தலைவனை உடனே வரவேற்று வணங்குவது சரியன்று; அவனைத் தன் குற்றத்தை உணர்ந்து வருந்தும்படி செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் மீண்டும் தவறு செய்யமாட்டான் ஆதலால் அவனுக்கு இப்பொழுது இடந்தரக் கூடாது என்பதற்காகவே தோழி தலைவிக்குக் கீழ்வரும் அறிவுரைகளைக் கூறினாள். “தலைவியே உன் தலைவன் மருத நிலத்திற்கு உரியவன். கரையிலே படர்ந்து பின்னிக்கிடக்கும் பிரப்பங் கொடியிலே கனிகள் பழுத்துக் குலுங்கும். அக்கனிகள் தாமே கீழே உதிரும். அவற்றை ஆழமான நீருள்ள குளத்திலே உள்ள கெண்டை மீன் கள் எளிதாகக் கவ்விக் கொள்ளும். இத்தகைய நீர்த்துறைகளை யுடைய ஊரின் தலைவன் அவன். நீ இப்பொழுது அவனுடைய மனைவியாக நடந்து கொள்வாயானால் உனக்குப் பல துன்பங்கள் உண்டாகும். பிரப்பம் பழத்தைக் கெண்டை மீன் எப்படி எளிதிலே கவ்வு கின்றதோ, அதுபோல் மீண்டும் உன் கணவனைப் பரத்தையர் கவர்ந்து செல்வார்கள். அப்பொழுது உன் உள்ளத்திலே அளவற்ற துன்பம் உண்டாகும். நீ இரவிலே உறக்கம் வராமல் உள்ளம் வருந்துவாய். இச்சமயத்தில் கொடுப்பது; இன்னாருக்குத்தான் கொடுப்பது என்ற கட்டுப்பாடு இல்லாதவன். எச்சமயத்தில் யார் வந்தாலும் இல்லை என்னாமல் உதவி செய்கிறவன் அதியமான் அஞ்சி யென்னும் வள்ளல். அவன் போரிலே புறங்கொடுக்காத யானைப் படைகளை உடையவன்; பெரிய தோளையும் உடையவன்; அவனுடைய போர்க்களத்தின் பக்கத்திலே உள்ள ஊரிலே வாழ்கின்றவர்கள் இராக்காலத்திலே தூக்கமில்லாமல் விழித்திருப் பார்கள்; அச்சமே அவர்களுடைய உறக்கத்தைக் கெடுக்கும். அவர்களைப் போல நீ தூங்கும் நாட்களும் சில நாட்களாகத்தான் இருக்கும். ஆதலால் இப்பொழுது உன் காதலனுக்கு இடங் கொடுத்து மீண்டும் துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே.’ இவ்வாறு அறிவுரை கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி, குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் தண்துறை ஊரன் பெண்டினை ஆயின் பல ஆகுகநின் நெஞ்சில் படரே; ஓவாது ஈயும் மாரி வண்கைக், கடும் பகட்டுயானை, நெடுந்தேர் அஞ்சி கொல்முனையிரவூர் போலச் சில ஆகுகநீ துஞ்சும் நாளே. பதவுரை:- அரில் பவர் பிரம்பின் - பின்னிக் கொண்டு கிடக் கின்ற கொடியாகிய பிரப்பங்கொடியிலே. வரிப்புறம் - கோடு களைப் புறத்தில் கொண்டு. விளைகனி- விளைந்து முதிர்ந்த கனியை. குண்டு நீர் இலஞ்சி - ஆழமான நீர்நிறைந்த குளத்திலே உள்ள. கெண்டை கதூஉம்- கெண்டை மீன் எளிதிலே கவ்விக் கொள்ளுகின்ற, தண்துறை ஊரன்- குளிர்ந்த நீர்த்துறையை யுடைய ஊரின் தலைவனிடம். பெண்டினையாயின் - இப்பொழுது உண்மையான மனைவியாக நடந்து கொள்வாயானால். நின் நெஞ்சில் படர் -பின்னர் உன் நெஞ்சத்திலே தோன்றும் துன்பம். பலஆகுக- மிகுதியாக ஆகக்கடவது. ஓவாது ஈயும்- எப்பொழுதும் எல்லோருக்கும் கொடுக்கும். வாரி வண்கை- மழையைப் போன்ற எதிர் உதவியை எண்ணாத கொடையையும். கடும் பகட்டு யானை- அஞ்சாத ஆண் யானைகளையும். நெடுந்தேர்- பெரிய தேர்களையும் உடைய. அஞ்சி - அதியமான் அஞ்சியென்ப வனுடைய. கொல்முனை- போர்க்களத்தின் பக்கத்திலே உள்ள. ஊர் இரவு போல -ஊரிலே உள்ளவர்கள் இரவிலே- தூங்காமல் இருப்பது போல. நீ துஞ்சும் நாள் - நீ தூங்குகின்ற நாட்கள். சில ஆகுக- சில நாட்களாக ஆகுக. பல நாட்கள் உறங்க முடியாமல் துன்புறுவாய். கருத்து: - இப்பொழுது நீ தலைவனிடம் இரக்கங் கொண்டு வரவேற்றால், பின்னும் அவன் பரத்தையர்பால் போவதற்குத் துணிவான். விளக்கம்: - இது ‘ஒளவையார்’ பாடல். பரத்தையரிட மிருந்து திரும்பி வந்த தலைவனிடம் தலைவி இரக்கங் காட்டினாள். அப்பொழுது தோழி அவளைத் தடுத்து அறிவுரை புகன்றாள். தோழி கூற்று மருதத்திணை. ‘இரவூர்’ என்ற தொடர் மட்டும் ‘ஊர் இரவு’ என்று மாற்றப் பட்டது. கதூஉம் உயிர் அளபெடை. ஏ- அசைகள். அரில்- பின்னுதல். பவர்- கொடி. குண்டு- ஆழம். இலஞ்சி - குளம். படர்- துன்பம். ஓவாது- ஓய்வு ஒழிவு இல்லாமல். துஞ்சுதல்- தூங்குதல். கதூம் - கவ்வும். இப்பாடலில் தகடூரை ஆண்ட அதியமான் அஞ்சி யென்னும் வள்ளலின் கொடைச் சிறப்பு, போர்வலிமை இவை கூறப்பட்டன. பறவைகளைப் பார் பாட்டு 92 புதுமணம் புரிந்து கொண்டவர்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு ஒரு நாழிகைகூடப் பிரிந்திருக்க விரும்ப மாட்டார்கள்! பிரிந்திருக்கும் ஒவ்வொரு நாழிகையும் ஒவ்வொரு யுகம் போலத் தான் கழியும். எப்பொழுதும் இணைந்திருக்கவே எண்ணுவார்கள். அவளும் அவனும் காதல் மணம் புரிந்து கொண்டு இன்னும் பல நாட்கள் கழிந்து விடவில்லை. இன்பத்திலே சலிப்புத் தட்டும் காலம் இன்னும் அவர்களிடம் உண்டாகவில்லை. ஆயினும் பகற் காலத்திலே அவன் தன் கடமையைச் செய்ய வெளியிலே போய்வர வேண்டியவன். ஒவ்வொரு நாளும் அவன் வெளியிலே புறப்பட்டுப் போவான்; தன் வேலைகளை முடித்துக் கொண்டு மாலைப் பொழுது வருவதற்கு முன் வீட்டுக்கு வந்து விடுவான். அவளும் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பாள். ஒரு நாள் அவன் குறித்த நேரத்தில் திரும்பி வரவில்லை. மாலைக் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. நாள் முழுவதும் காதலனை எண்ணி ஏங்கிக் கிடந்த அவள் தெரு வாசலுக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தாள். காதலன் வருகின்றானா என்று தெருவை எட்டி எட்டிப் பார்ப்பாள்; பிறகு உள்ளே போய் விடுவாள்; ஒரு விநாடி கூட உள்ளே தறி கொள்ள மாட்டாள். இப்படியே நேரம் போய்க் கொண்டிருந்தது. மாலைக் காலமும் வந்து விட்டது. இரை தேடப் போயிருந்த பறவைகள் எல்லாம் தம் இருப்பிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. அவள் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது இந்தக் காட்சியைக் கண்டாள். அந்த நிகழ்ச்சியை அவளே வாயினாற் சொல்லிக் கொண்டு வருந்தினாள். “கதிரவன் மேற்குத் திசையிலே மறைந்து விட்டான். மாலையும் மறைந்து கொண்டிருக்கின்றது; கருவிருள் வரப் போகின்றது. அகன்ற வானத்திலே வளைந்த சிறகையுடைய பறவைகள் விரைந்து பறந்து கொண்டிருக்கின்றன; வழியின் பக்கத்திலே வளராதிருக்கின்ற தங்கள் வசிப்பிடமான கடம்ப மரத்தை நோக்கிப் பறக்கின்றன; அவை பசியோடு தம்மை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் தங்கள் பிள்ளைகளின் வாயிலே திணிக்கும் பொருட்டு இரையை வாயிலே கவ்விக் கொண்டு விரைந்து பறந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காட்சியை நான் காண்பது போல, வெளியிலே போயிருக்கும் அவரும் காணத்தான் செய்வார். இப்பறவைகள் தங்கள் பிள்ளைகளிடத்திலே கொண்ட அன்பால் விரைந்து பறப்பது அவர் உள்ளத்திலே பரபரப்பை உண்டாக்காமலா இருக்கும்? உண்டாக்கினால் அவரும் இப் பறவைகளைப் போல என்னிடம் விரைந்து ஓடி வரமாட்டாரா?’ - என்று சொல்லி வருந்தினாள். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து அளிய தாமே கொடும்சிறைப் பறவை: சிறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரை கொண்டமையின் விரையுமால் செலவே. பதவுரை:- ஞாயிறு பட்ட- சூரியன் மறைந்த. அகல்வாய் வானத்து- பரந்த இடமான வானத்திலே. கொடும் சிறைப் பறவை - வளைந்த சிறகுகளையுடைய பறவைகள். தாம் இறைஉற ஓங்கிய- தாம் தங்கியிருக்கும் படி வளர்ந்திருக்கின்ற. நெறி அயல் மராத்த- வழியின் பக்கத்திலே உள்ள. கடம்ப மரத்தில் வாழும். பிள்ளை- தம் பிள்ளைகளின். வாய் உள் செரீஇய - வாய்க்குள் செருகும் பொருட்டு. இரை கொண்டமையின்- இரையைத் தம் அலகிலே எடுத்துக் கொண்டிருப்பதால். செலவும் விரையும் ஆல்- தாங்கள் பறந்து செல்வதிலே மிகுந்த விரைவைக் காட்டும். அளிய- இது மிகவும் இரங்கத்தக்கது. கருத்து: மாலைக் காலம் வந்ததும் அவர் வரவில்லை; என் காம நோயை எவ்வாறு பொறுத்துக் கொண்டிருப்பேன். விளக்கம்:- இது ‘தாமோதரன்’ என்னும் புலவர் பாட்டு “மாலைக் காலம் வந்ததும் இன்னும் அவர் வரவில்லையே என்று கூறித் தலைவி வருந்தியது” இதைப் பொழுது கண்டிரங்கல் என்பர். நெய்தல்திணை ‘அளிய’ என்பதை இறுதியிலும், தாமே என்பதை இறையுற ஓங்கிய என்பதோடும் வைத்துப் பொருள் கூறப்பட்டது. மராஅத்த- உயிர் அளபெடை; செரீஇய என்பதும் அது. ஏ, ஆல் அசைச்சொற்கள். பிள்ளை- பறவைக் குஞ்சு. இறை- தங்குதல். மாலைக் காலத்தின் ஓர் இயற்கைக் காட்சியை இப் பாட்டிலே காணலாம். தாய் தந்தை முறையில் அவர் உறவு இருக்கட்டும் பாட்டு 93 அவன் தன் காதலியை விட்டுப் பிரிந்து பல நாட்களாயின; பரத்தையர் வீடுகளிலே திரிந்து கொண்டிருந்தான்; அவர்களுடன் கூடிக் களித்திருந்தான். இப்பொழுது அவன் பரத்தையர்களை விட்டுப் பிரிந்து தன் இல்லத்தை யடைந்தான். கதவு தாழ் போடப் பட்டிருந்தது. கதவை மெதுவாகத் தன் கைகளால் தட்டினான். தன் காதலியின் பெயரைச் சொல்லி அழைக்க அவனுக்கு நெஞ்சிலே உரமில்லை. தோழியின் பெயர் சொல்லி அழைத்தான். தட்டுவது காதலன்; அழைப்பதும் அவன் குரல்தான் என்பதைத் தலைவி அறிந்தாள். அவன் மீது கொண்டிருந்த பிணக்கு அவளிடம் தலைதூக்கிற்று; ஆயினும் பேசாமல் என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று வாய்மூடியிருந்தாள். தோழி சென்று கதவைத் திறந்தாள். அவன் ‘நான் இத்தனை நாள் பரத்தையர் சேரியிலே தங்கிவிட்டது தவறு தான்; அதற்காக உள்ளம் வருந்துகின்றேன். என் காதலியின் அன்பைப் பெறாத வரையில் என் உள்ளத்திலே உவகை பிறக்காது. அவளுடைய அன்பும் அணைப்புந்தான் என் துன்பத்தைத் துரத்தும் மருந்தாகும். அவள் சினத்தை ஆற்றி என்னை வரவேற்கச் செய்யும்படி உன்னை வேண்டிக் கொள்ளுகிறேன்’ என்றான் அவன். தலைவனுடைய இச்சொல்லைக் கேட்டு இரக்கங் கொண்டாள் தோழி. அவள் தலைவியிடம் அணுகி ‘அவர் என்றும் நம்மிடம் அன்புள்ளவர்; ஏதோ தவறு செய்து விட்டார்; அதற்காக இப்படி நீ ஒரேயடியாக வெருளக் கூடாது; சினந் தணிந்து அவரைச் சிறப்புடன் வரவேற்க வேண்டியது உன் கடமை என்றாள். இதைச் சொல்லியவுடன் தலைவியின் சினம் இன்னும் வளர்ந்தது. தோழியே! எனது பெண்மை நலம் அடியோடு அழிந்து போனாலும் போகட்டும்; என் மேனியின் அழகு அவ்வளவும் மெலிந்து தேய்ந்து போனாலும் போகட்டும்; அல்லது எனது அருமையான உயிரே போனாலும் போகட்டும்; இதைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை. அவருடைய குற்றத்தை மறக்க வேண்டும்; அவரிடம் மீண்டும் அன்பு காட்ட வேண்டும்; அவரை வரவேற்க வேண்டும் என்ற சொற்களை மட்டும் என்னிடம் சொல்ல வேண்டாம். நம்மிடம் அன்புள்ளவர் என்பது வெறும் நடிப்பு; அதை நம்ப வேண்டாம். அன்பில்லாதவரிடத்தில் ஊடல் எதற்காக? அன்புள்ளவர்களுக்குள்தான் இன்பத்தை இன்னும் மிகுதியாக வளர்ப்பதற்கு ஊடல் ஒரு காரணமாக நிற்கும் இது உனக்குத் தெரியாதது அன்று. ஆயினும் அவர் நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் இருக்கட்டும். இனி நாம் அவரை விட்டுப் பிரிந்துவிட முடியாது; என்றும் பிரிய முடியாத தொடர்பு அவருக்கும் நமக்கும் ஏற்பட்டு விட்டது. ஆதலால் அவர் அன்னை. நாம் அவருடைய உத்தரவை மீறி நடக்க முடியாது; அவர் கட்டளைக்கு அடங்கி நடக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆதலால் அன்னை- அத்தன் என்ற முறையிலேயே அவர் இருந்துவிட்டுப் போகட்டும்; காதலன் காதலி என்ற நினைப்பை மறந்து விடுவோம், என்று வெகுண்டுரைத் தாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாட்டு. பாட்டு நன்னலம் தொலைய நலம்மிகச் சாஅய், இன்உயிர் கழியினும் உரையல்; அவர்நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ; தோழி! புலவி அஃது எவனோ? அன்பிலங் கடையே. பதவுரை: - தோழி- தோழியே. நல்நலம் தொலைய. சிறந்த பெண்மை நலந்தொலைந்து. நலம் மிகச்சாஅய் -உடம்பின் அழகு அவ்வளவும் தேய்ந்து. இன் உயிர் கழியினும்- அருமையான உயிரே போவதாயிருந்தாலும். உரையல்- அவரிடம் அன்புகாட்ட வேண்டும் என்னும் சொல்லை மட்டும் கூறாதே. அன்பு இலங்கடை- காதலன் காதலி என்ற அன்பு இல்லாத போது. புலவி அஃது எவனோ- பிணங்குவதாகிய அதனால் என்ன பயன்? அவர் நமக்கு- இனி அவர் நமக்கு. அன்னையும் அத்தனும் அல்லரோ- அன்னையும், தந்தையுமாக இருந்து வாழட்டும். கருத்து:- தலைவன் என்னிடம் மனைவி என்ற கருத்துடன் அன்பு காட்டவில்லை. ஆதலால் அவனை நாமும் அன்னையைப் போலவும், தந்தையைப் போலவும் போற்றுவோம். விளக்கம்:- இது அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் பாட்டு. பரத்தையரிடமிருந்து திரும்பிய தலைவனுக்காகப் பரிந்து பேசிய தோழிக்குத் தலைவி கூறியது. மருதத்திணை. ‘தோழி நல்ல நலம் தொலைய நலம் மிகச் சாஅய்’ இன் உயிர் கழியினும் உரையல்; அன்பு இலங்கடை புலவி அஃது எவனோ? அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ, என்று பதங்கள் மாற்றப்பட்டன. சாஅய்- உயிர் அளபெடை. ஓ, ஏ, அசைச் சொற்கள். நல்நலம்- சிறந்த பெண்மைத் தன்மை. நலம்- உடம்பின் அழகு. அத்தன்- தந்தை. புலவி-ஊடல். எவன்- என்ன பயன். இப்பாடல் கற்புள்ள ஒரு மனைவியின் சிறப்பை விளக்குவது. காதலன் அன்பற்றவனாகி விட்டாலும் அவனிடம் காதலி தன் கடமையைச் செய்யவேண்டும். அன்பற்ற கணவனைத் தாயாகவும், தந்தையாகவும் கொண்டு அவனுக்கு அடங்கி வாழ வேண்டும்; இக்கருத்தைக் கொண்டது இப்பாடல். இது கற்புள்ள மகளிர் தன்மை. இது கார்காலமா? பாட்டு 94 கார்காலம் வந்துவிட்டது; வானத்திலே கருமேகங்கள் திரண்டு விட்டன. அவை கடகடவென்று சிரிப்பது போல இடி இடித்து மின்னி மழை பெய்கின்ற மாரிக் காலத்திலே மலரும் மலர்களெல்லாம் மலர்ந்து அக்காலத்தை வரவேற்றன. இந்தப் பருவத்தில் அந்த மங்கை மட்டும் தனித்திருக்கிறாள். அவள் உள்ளத்தில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அவள் அதை வெளியிட்டுக் கூறவில்லை. மிகவும் அமைதியுடன் அடக்கிக் கொண்டிருந்தாள். எவ்வளவுதான் அடக்கிக் கொண்டிருந்தாலும் அகத்தில் உள்ளதை முகம் காட்டும் அல்லவா? கார் காலத்தில் வந்து விடுவேன் என்று உறுதிமொழி உரைத்துச் சென்ற காதலன் இன்னும் வரவில்லை. இதுதான் அவள் நெஞ்சிலே நிலவிக் கொண்டிருந்த கவலை. தலைவியின் இந்நிலையைக் கண்ட தோழி வருந்தினாள். கார்காலத்தைக் கண்டு தலைவி எப்படிப் பொறுத்திருப்பாள்? காதலன் பிரிவை எண்ணி வருந்தாமல் இருக்க இவளால் எப்படி முடியும் என்று எண்ணி ஏங்கினாள். தோழி தனக்காகப் பரிவு காட்டுவதை உணர்ந்தாள் தலைவி. அவளுக்குக் கீழ்வரும் ஆறுதல் மொழிகளை யுரைத்தாள். ‘தோழியே! நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். தலைவர் வரவில்லை யென்பதற்காக நான் வருந்தவில்லை. இன்னும் கார்காலம் வரவில்லை, இந்தப் பிச்சிப்பூக்கள் அறிவற்றவை. தான் மலரவேண்டிய பருவம் பெரிய மழைக் காலம் என்பது அவற்றிற்குத் தெரியும். தெரிந்தும் இது மழைக்காலமா? அல்லவா? என்று அறிவதற்கேற்ற நுண்ணறிவு அவற்றிற்கு இல்லை. ஆதலால் கார்காலம் வருவதற்கு முன்பே மலர்ந்துவிட்டன. ஆகையால் கார்காலம் வந்துவிட்டதே; இன்னும் அவர் வரவில்லையே என்று கருதி நான் கலக்கமடைய மாட்டேன். உண்மையான கார்காலம் வரும் வரையிலும் பொறுத்திருப்பேன். ஆனால் என்னைப் பிரிந்திருக்கும் தலைவர் இரவிலே மலையருவி தத்தி விழும்படி மழையைப் பெய்து மேகங்கள் முழங்குங் குரலைக் கேட்டால் என்ன ஆவாரோ? கார்காலம் வந்துவிட்டது. நாம் வருவதாகத் தவணை சொல்லி வந்த கார்காலம் வந்துவிட்டது என்று நினைக்கக்கூடும். இந்த நினைப்பு காரணமாக அவர் கருதிச் சென்ற காரியத்தை முடிக்காமல் திரும்பினாலும் திரும்பலாம். ஏற்கனவே என் பிரிவினால் வருந்தியிருக்கும் அவர் இந்தக் கார்காலத்தைக் கண்டு இன்னும் அதிகமாக அகம் உருகுவார். இதை நினைத்துத்தான் நான் கவலைப்படுகின்றேன். வேறு கவலை எனக்கில்லை. ஆதலால் நீ எனக்காக அகங் குழைய வேண்டாம்’ என்று கூறினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது இப்பாடல். பாட்டு பெரும் தண்மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; யானே மருள்வேன்; தோழி! பானாள் இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் என் ஆகுவர் கொல்? பிரிந்திசினோரே; அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலை தரும் குரலே. பதவுரை: தோழி- தோழியே கேள். பெரும் தண்மாரி- பெரிய குளிர்ந்த மழைக்காலத்திலே மலரக் கூடிய. பேதைப் பித்திகத்து அரும்பே- அறிவற்ற பிச்சியின் மொட்டுக்கள். முன்னும் மிகச் சிவந்தன- தாம் சிவக்க வேண்டிய காலத்துக்கு முன்பே சிவந்து மலர்ந்தன. யானே மருள்வேன்- இதைக் கண்டு நானா கார்காலம் என்று மயங்குவேன்? மயங்க மாட்டேன். பிரிந்திசினோர் - ஆயினும் என்னைப் பிரிந்திருப்பவர்; இன்னும் தமியர்- இன்னும் தனித்திருப்பவர். அருவி மாமலை தத்த -அருவி நீர் பெரிய மலையிலே பாய்ந்து விழும்படி, கருவி மாமழை- கூட்டமான மேகங்கள் கூடி. சிலை தரும் குரல்- மழை பெய்து முழங்குகின்ற ஓசையை; பால் நாள்- நள்ளிரவிலே. கேட்பின் - அவர் கேட்பா ராயின். பெயர்த்தும் என் ஆகுவர்- முன்னமே என் பிரிவால் வருந்தி யிருப்பவர் மீண்டும் எவ்வாறு வருந்துவாரோ அறியேன். கருத்து:- தலைவர் இந்த மழையொலியைக் கேட்டுத் தான் கருதிச் சென்ற காரியத்தை முடிக்காமல் கைவிட்டுத் திரும்புவாரோ என்று வருந்துகின்றேன். விளக்கம்: - இப்பாடல் கதக்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. கார்காலம் வந்தது; அதைக் கண்ட தோழி தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி எப்படித் துன்பத்தைத் தாங்கியிருப்பாள் என்று வருந்தினாள். அத்தோழிக்குத் தலைவி பதில் உரைத்தாள். முல்லைத்திணை. ‘பெரும் தண்மாரி பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தன; யானே மருள்வேன்? பிரிந்திசினோர், இன்னும் தமியர் அருவி. தாமலை தத்த கருவி மாமழை சிலை தரும் குரல் பானாள் கேட்பின் பெயர்த்தும் என் ஆகுவர் கொல்?’ என்று பதங்கள் மாற்றிப் பொருள் கூறப்பட்டது. கொல், ஏ, அசைச் சொற்கள். பித்திகம்- இது மழைக்காலத்திலே பூக்கும் ஒரு வகைப்பூ; பிச்சி என்றும் உரைப்பர். தத்த -பாய. தத்துதல்- பாய்தல்; தவழ்தல். கருவி- தொகுதி; கூட்டம். சிலை தரும் குரல்- முழங்குகின்ற ஓசை. தலைவன் பிரிவினால் வருந்துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருப்பதே முல்லைத்திணை. இப்பாடலைக் கூறிய தலைவி தலைவன் பிரிவுக்காக நான் வருந்தவில்லை. இந்தக் கார் காலத்தைக் கண்டு அவன் தன் காரியத்தை நிறைவேற்றாமல் திரும்பி விடுவானோ என்று தான் எண்ணுகின்றேன் என்று தன் பெருந்தன்மை புலப்படக் கூறினாள். நீரால் தீ யடங்கிற்று பாட்டு 95 தன் காதலியுடன் கூடியிருந்து பிரிந்த தலைவன் பிரிந்த பின்னும் அவளை மறக்கவில்லை; எப்பொழுதும் அவளையே நினைத்துக் கொண்டிருந்தான்; அவன் நெஞ்சம் முழுவதையும் அந்த நேரிழையே கவர்ந்து விட்டாள்; அதனால் அவனால் வேறு எதையும் நினைக்க முடியவில்லை எங்கு பார்த்தாலும் அவளுடைய உருவெளித் தோற்றமே காணப்படுகின்றது. எந்தப் பொருளைப் பார்த்தாலும் அவளாகவே காணப்படுகின்றாள். மீண்டும் அவளை எப்பொழுது சந்திப்பது? எங்கே சந்திப்பது? அவளுடன் எப்பொழுதும் பிரியாமல் இணைந்திருக்க வழி தேடுவது எப்படி? என்ற எண்ணங்களே அவன் உள்ளத்திலே சுழன்று கொண்டிருந்தன. எப்பொழுதும் இத்தகைய எண்ணச் சுழலிலேயே சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்தான். இவனுடைய ஆழ்ந்த சிந்தனையையும், அடிக்கடி பெருமூச்சு விடுவதையும் பாங்கன் கண்டான். நீ ஏன் இப்படி வேறுபட்டிருக்கின்றாய்; உன் வேறுபாட்டுக்குக் காரணம்தான் என்ன என்று கேட்டான். எதற்கும் அஞ்சாத வலிமை படைத்த நீ இப்படி வாடியிருப்பதற்கு ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டும்; அதை ஒளிக்காமல் என்னிடம் உரைத்தால் உன் குழப்பத்தை மாற்றுவதற்கு என்னால் இயன்றதைச் செய்வேன் என்றான். உடனே தலைவன் தன் வேறுபாட்டுக்கான காரணத்தைக் கூறினான். தோழனே! நான் இப்படிச் சோர்ந்து வருவதற்குக் காரணத்தைக் கூறுகின்றேன் கேள். அதோ அந்த மலைச்சாரலில் உள்ள சிற்றூரை உனக்குத் தெரியும். அது சிற்றூர்; ஆனாலும் நல்ல வளம் பொருந்திய சிற்றூர். பெரிய மலையிலிருந்து விழுகின்ற தூய்மையான வெண்மை நிறமுள்ள அருவிநீர் மலைப் பிளவிலே வீழ்ந்து நிறைந்து வழிந்தோடுகின்றது; பல மலர்கள் கண்ணுக்கு அழகாகப் பூத்து நறுமணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சிறந்த மலைச்சாரலின் பக்கத்திலே அந்தச் சிற்றூர் அமைந்திருப்பதனால் சிறந்து விளங்குகின்றது. அந்தச் சிற்றூரைச் சேர்ந்த ஒரு குறவனுடைய மகள். அவள் பெரிய தோள்களை யுடையவள். அவள் தோள்கள் காண்போர் கண்களைக் கவரும் தன்மையுள்ளது. அவளும் மங்கைப் பருவமுடைய இளம் பெண். அவளைக் கண்டேன். காதல் கொண்டேன். உருவத்தால் என் உள்ளத்தைக் கவர்ந்தது போலவே பண்பாலும் அவள் என் நெஞ்சத்தைப் பற்றிக் கொண்டாள். அவளுடைய நீர்போன்ற தன்மை என்னுடைய வலிமையை அடக்கி விட்டது. நெருப்பைப் போன்ற என் உரம் நீரைப் போன்ற அவள் தன்மைக்கு எதிர்நிற்க முடியாமல் அவிந்து விட்டது. இது தான் என் மாறுதலுக்குக் காரணம் என்றான் தலைவன். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு மால்வரை இழிதரும் தூவெள் அருவி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன், பெரும்தோள் குறுமகள் நீர் ஓரன்ன சாயல் தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே. பதவுரை: மால்வரை இழி தரும்- தோழனே பெரிய மலையிலிருந்து விழுகின்ற. தூவெள் அருவி- தூய்மையான வெண்மை நிறமுள்ள அருவி. கல்முகை ததும்பும்- கற்பாறையின் வெடிப்புக்களிலே விழுந்து வழிந்தோடுகின்ற. பல் மலர்- பல மலர்கள் பூத்திருக்கின்ற; சால்- மலைப் பக்கத்திலேயுள்ள; சிறுகுடி- சிற்றூரிலே வாழும்; குறவன்- குறவனுடைய. பெருந்தோள் குறுமகள்- பெரிய தோள்களையுடைய சிறிய பெண்ணின். நீர் ஓர் அன்ன சாயல்- தண்ணீரைப் போன்ற மெல்லிய தன்மை; தீ ஓரன்ன- தீயைப் போன்ற; என் உரன் அவித்தன்று- என்னுடைய வலிமையை அழித்துவிட்டது. கருத்து:- நான் ஒரு மலைவாணன் மங்கையைக் காதலித்தேன். அதுவே எனது மாறுதலுக்குக் காரணம். விளக்கம்: - இது கபிலர் பாட்டு. தலைவனிடம் என்றும் இல்லாத ஒரு புதிய மாற்றத்தைக் கண்டான் பாங்கன். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன வென்று கேட்டான். நான் ஒரு குறமகள்பால் காதலுற்றேன். அதுவே என் வேறுபாட்டுக்குக் காரணம் என்று தலைவன் கூறினான். குறிஞ்சித்திணை. மால்வரை- பெரியமலை. தூ- தூய்மை, பரிசுத்தம். முகை - வெடிப்பு. ததும்பு- வழியும். சிறுகுடி -சிற்றூர். ஓரன்ன- போன்ற. உரன்-வலிமை. அவித்தல்- அழித்தல். ஏ- அசைச் சொல். மெல்லிய தன்மைக்கு நீர் உவமை. வலிய தன்மைக்குத் தீ உவமை. நீருக்குத் தீ அடங்குதல் இயற்கை. ‘நீர் போன்ற அவள் தன்மை, தீ போன்ற என் வலிமையை அழித்தது’ என்று கூறியது பொருத்தமானது. விளையாட்டென்று சும்மா விட்டேன் பாட்டு 96 அவள் அருங்குணங்கள் அனைத்தும் பெற்றவள்; கணவன் மீது மிகுந்த காதலுள்ளவள்; அவனைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட இழிவாகப் பேசிவிடக் கூடாது. இன்னும் அவனும் அவளும் கற்பு மணம் புரிந்து கொள்ளவில்லை. களவு மணத்தில்தான் வாழ்கின்றனர். அவள் அவனை எத்தனையோ தடவை கேட்டு விட்டாள். நேராகவும் மறைமுகமாகவும் விரைவில் மணம் புரிந்து கொள்ளும் படி வேண்டிக்கொண்டாள். அவன் இதோ அதோ வென்று காலங்கடத்திக்கொண்டே வந்தான். தலைவியின் தோழியும் அவனிடம் பலமுறை மணம் புரிந்து கொள்ளும்படி சொல்லிப் பார்த்தாள்; நேராகவும் சொல்லிப் பார்த்தாள்; குறிப்பு மொழிகளாலும் கூறிப் பார்த்தாள்; என்ன சொல்லியும் அவன் மணம் புரிந்து கொள்ளுவதற்கான முயற்சியில் இறங்கவேயில்லை. தோழி எத்தனையோ தடவை அவனிடம் சொல்லிச் சொல்லிச் சலித்துப் போனாள். இதனால் தோழியின் மனத்திலே ஒரு எண்ணம் உண்டாயிற்று. தலைவனை நாம் வற்புறுத்துவதைவிட, தலைவியே வற்புறுத்தினால் காரியம் கைகூடினாலும் கைகூடும். நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ, எந்தெந்த வகையாகச் சொல்ல வேண்டுமோ அவ்வளவும் சொல்லியாயிற்று; அவன் உள்ளத்திலே என்னுடைய உரைகள் கொஞ்சங்கூடப் புகுந்த தாகவே தெரியவில்லை. ஆதலால், தலைவியைக் கொண்டே அவனை மணக்கும்படி வற்புறுத்தச் செய்வோம்’ என்ற முடிவுக்கு வந்தாள். தலைவி தனித்திருக்கும் சமயம் பார்த்து அவளிடம் தோழி தன் எண்ணத்தை எடுத்துரைத்தாள். ‘தலைவனிடம் நான் எத்தனையோ முறை நம்மை வரைந்து கொள்ளுவதற்கு ஏற்பாடு செய். ஊரார் நமது களவுச் செயலைக் கண்டு பழி தூற்றுவதற்கு முன்பே கடிமணம் புரிந்து கொள் என்று சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன்; அவன் நமது நிலைமையைச் சிறிதுகூடத் தெரிந்து கொள்ளவில்லை. அவனிடம் நான் என்ன தான் செய்வேன். நீதான் இதற்கு வழி காண வேண்டும்’ என்று உள்ளன்போடு உரைத்தாள். தோழியின் இச் செயலைக் கேட்டதும் தலைவிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. உடனே தோழியைப் பார்த்து அவள் சினந்து சில மொழிகளைக் கூறினாள். ‘நல்ல நெற்றியை யுடையவளே; உன்னிடம் உள்ள அழகுக் கேற்ற அறிவில்லை: இதை இப்பொழுதுதான் நான் அறிந்தேன். என் காதலன் பெரிய மலை நாட்டின் தலைவன். அப்பெரிய மலை தனது அருவி நீரால் வேங்கை மரங்களை ஓங்கி வளரச் செய்யும். அந்த அருவியைப் போல் அவனும் தன்னை அடுத்தவர்களை நன்றாகக் காப்பாற்றும் தன்மையுள்ளவன். அவன் பண்பை அறியாமல் ‘அவன் நமது நிலைமையைத் தெரிந்து கொள்ள வில்லை; நான் என்ன தான் செய்வேன்’ என்று அவனைப் பழித்துரைத்தாய். உண்மையிலேயே நீ அவனைப் பழிக்கின்றாய் என்று நான் நினைக்கவில்லை. விளையாட்டுக்காக இப்படிக் கூறுகின்றாய் என்றுதான் நினைக்கிறேன். நீ சொல்லியது விளையாட்டுக்காக வென்று நான் நினைக்காமல், உண்மையென்று எண்ணியிருப்பேனாயின், உன்னை என்ன பாடுபடுத்தியிருப்பேன் தெரியுமா? சும்மா விட்டிருக்க மாட்டேன். உன்னைக் கடுந் தண்டனைக்கு ஆளாக்கியிருப்பேன். இப்பொழுதாவது உணர்ந்து கொள். உயர்ந்த பண்புகள் உள்ள அவரைப் பழித்துப் பேசுவதை இனி விட்டு விடு’ என்று தோழியைக் கடிந்து கொண்டாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யான் எவன் செய்கோ என்றி; யான் அது நகை என உணரேன்ஆயின் என்ஆகுவை கொல்? நன்னுதல் நீயே. பதவுரை:- நல்நுதல் நீயே- நல்ல நெற்றியையுடைய நீ. அருவி- அருவி நீரால் வளர்கின்ற. வேங்கை- வேங்கை மரங்களை யுடைய. பெருமலை நாடற்கு- பெரிய மலையமைந்த நாட்டையுடைய தலைவனிடம். யான் எவன் செய்கோ- நான் இன்னும் என்னதான் செய்யட்டும். என்றி- என்று அவனைப் பழித்துக் கூறினாய். யான் அது- நான் உன்னுடைய அச்சொல்லை. நகை என -விளையாட்டுக்காக உரைத்த சொல் என்று. உணரேன் ஆயின்- எண்ணாமல் இருந்திருப்பேன் ஆயின். என் ஆகுவை கொல்- இவ்வளவு நேரம் நீ என்ன பாடுபட்டிருப்பாய்த் தெரியுமா? மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருப்பாய். கருத்து:- நீ தலைவனுடைய தன்மையைப் பழித்துக் கூறுதல் தகுதியற்றது; இனிப் பழிக்காதே. விளக்கம்:- இது அள்ளூர் நன்முல்லை என்பவர் பாட்டு. வரைந்து கொள்ளாமல் காலங் கடத்திய தலைவன் தன்மையைத் தோழி பழித்துரைத்தாள். அதைக் கேட்ட தலைவி தோழியைச் சினந்து கொண்டாள். குறிஞ்சித்திணை. ‘நல்நுதல் நீயே’ என்னும் தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஏ, கொல் அசைச் சொற்கள். நகை- விளையாட்டு. ‘அருவி வேங்கைப் பெருமலை நாடன்’ என்று தலைவன் சிறந்த இயல்பைத் தலைவி எடுத்துரைத்தாள். அருவியானது வேங்கை மரத்தைப் பாதுகாப்பது போல், அவன் என்னைப் பாதுகாப்பான் என்னும் குறிப்புத் தோன்ற இவ்வாறு கூறினாள். இப்பாடல் காதலன்பால் உண்மையான அன்புள்ள ஒரு காதலியின் உயர்ந்த பண்பை விளக்கிற்று. தன் காதலனை யார் பழித்தாலும் சரி அதைப் பொறுக்காத குணமே, ஒர் உண்மைக் காதலியின் உயர்ந்த பண்பாகும். குட்டு வெளிப்பட்டது பாட்டு 97 அவனும் அவளும் எவ்வளவோ மறைவாகத்தான் பழகி வந்தனர். அவர்கள் இருவரும் காதல்- களவு- மணவாழ்க்கை நடத்துகிறவர்கள் என்பது வேறு ஒருவருக்கும் தெரியாது; அந்தத் தலைவியின் தோழிக்கு மட்டுந்தான் அதைப் பற்றித் தெரியும். எந்த மறைபொருளும் நீண்ட நாளைக்கு நிற்பதில்லை; ஒரு மாதம் இரண்டு மாதம் மறைத்து வைத்திருக்கலாம்; பல மாதங் களானால் எப்படியும் வெளிப்பட்டுத்தான் விடும். அவர்களும் பிறர் அறியக் கூடாது என்பதற்காக மிகவும் கருத்துடன் மறைந்துதான் வாழ்க்கை நடத்தினர். தோழியும் அவர்களுடைய நடத்தை வெளிப்படாமலிருக்க எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆயினும் எப்படியோ அவர்களுடைய காதற் களவு மணத்தைப் பற்றி ஊரார் உணர்ந்துகொண்டனர். இந்தக் காதலன் காதலிகளைப் பற்றிப் பெண்கள் ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசத் தொடங்கிவிட்டனர். இது போன்ற செய்திகளைப் பெண்கள் அறிந்து விட்டால் போதும். அவர்கள் ஆற்றங்கரைகளிலோ, குளத்தங்கரைகளிலோ, வேறு இடங் களிலோ இதைப் பற்றித்தான் குசுகுசு வென்று பேசிக்கொள்ளு வார்கள். தாங்கள் அறிந்த இரகசியத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதிலே பெண்களுக்கான ஆசை- பரபரப்பு- வேறு எவருக்கும் இருப்பதில்லை. அந்த வீட்டுப் பெண் இப்படி; இந்த வீட்டுப் பெண் இப்படி என்றெல்லாம் மறைமுகமாகப் பேசுவதிலே அவர்களுக்கொரு தனி உற்சாகம். ஆதலால் பெண்கள் இவர்களைப் பற்றிக் கண்ட இடங்களில் எல்லாம் உரையாடத் தொடங்கி விட்டனர். இந்தச் செய்தி அந்தத் தலைவிக்குத் தெரிந்துவிட்டது; தன்னுடைய களவுத் தன்மை ஊராருக்குத் தெரிந்துவிட்டதே என்று அவள் கவலைப்பட்டாள். அவளுடைய கருத்தைக் கவர்ந்த காதலன் கடற்கரையில் உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவன். இவளுக்கும் அவனுக்கும் இப்பொழுது முன்போல அடிக்கடி சந்திப்பு ஏற்படுவதில்லை. இதனால் இருவரும் காமநோயால் வருந்தியிருந்தனர். ஆயினும் இவர்களுடைய காதல் பிரிக்க முடியாதது. இருவரும் என்றேனும் ஒருநாள் பலரும் காணக் கற்பு மணம் புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இல்லறத்திலே இனிது வாழத்தான் போகின்றார்கள். ஏதோ காரணத்தால் காலம் சிறிது நீண்ட கொண்டே வந்தது. அந்த நெய்தல் நிலத்தலைவன் இன்னும் அவளுடைய பெற்றோரை அணுகிப் பெண் கேட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையிலே அத்தலைவி தன் உள்ளத்தில் உலவும் துன்பத்தைத் தன் தோழியிடம் உரைத்தாள். தன் காதலனைக் கண்டு விரைவில் மணம் புரிந்து கொண்டு வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கருத்துடனேயே தன் துன்பத்தைக் கூறினாள். ‘தோழியே’ நான் இங்கே தனித்திருந்து தவிக்கின்றேன். இங்கே எனது வெற்றுடம்புதான் வீணாக நடமாடிக் கொண்டிருக் கின்றது என்னுடைய பெண்மைத் தன்மை இங்கேயில்லை. தணியாத பெருந்துன்பத்துடன் அந்தக் கடற்கரைச் சோலையிலே போய்த் தங்கியிருக்கின்றது. என்னிடமிருந்தால் வேதனை தாங்க முடியாது என்பதற்காகவே குளிர்ந்த காற்று வீசும் அந்தக் கடற்கரைச் சோலைக்குப் போய்விட்டது. இதற்குக் காரணமான அந்தக் கடல் துறையின் தலைவன் சிறிதும் கவலையின்றித் தன்னூரிலே வாழ்கிறான். என்னுடைய இந்த நிலையை அவன் அறிந்தால் இப்படிச் சும்மா அவனூரில் வாழ்ந்திருப்பானா; எங்களுடைய களவு மணம் வெளிப்பட்டுவிட்டது; அது பலர் தூற்றும் பழிமொழிகளின் உருவிலே வெளிப்பட்டுவிட்டது; இவ்வூர் மன்றத்திலே பலரும் கூடிக் கூடிப் பேசும்படி வெளிப்பட்டு விட்டது. இதற்கு நான் என்னசெய்வேன். நீதான் ஏதேனும் வழி செய்ய வேண்டும்’ என்று தலைவி தன்னுடைய நிலையை எடுத்துரைத்தாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். பாட்டு யானே ஈண்டை யேனே; என் நலனே ஆனா நோயொடு கானல் அஃதே; துறைவன் தம் மூரானே; மறை அலராகி மன்றத் தஃதே. பதவுரை:- யான் ஈண்டையேன்- தோழியே நான் இங்கேயே தனித்திருக்கின்றேன். என் நலன்- எனது பெண் தன்மை. ஆனா நோயொடு - தணியாத துன்பத்துடன். கானல் அஃது - கடற்கரைச் சோலையாகிய அவ்விடத்திலே சென்று தங்கியிருக்கின்றது. துறைவன்- இதற்குக் காரணமான தலைவனோ, தம் ஊரான்- தன்னுடைய ஊரிலே இருக்கிறான். மறை- எங்களுடைய களவு நட்போ. அலர் ஆகி- பலர் அறியும் பழிக்கு ஆளாகி. மன்றத்து அஃது- பொதுவிடத்திலே பரவி விட்டது. கருத்து:- என் பெண்மை நலனைக் கவர்ந்த தலைவர், இன்னும் மணம் புரிந்து கொள்வதற்கான முயற்சியைச் செய்யவில்லை. விளக்கம்:- இது வெண்பூதி என்பவர் பாட்டு. தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் காலங் கடத்துவதைக் கண்டு தலைவி வருந்திக் கூறியது. நெய்தல் திணை. நலன்- பெண் தன்மை. ஆனா- தணியாத. நோ- துன்பம்; காதல் துன்பம். கானல்- கடற்கரைச் சோலை. துறைவன்- நெய்தல் நிலத் தலைவன். அலர்- பழிச்சொல். மன்றம்- பொது இடம். ஏ; அசைச்சொல். ‘யானே ஈண்டையேன்” என்பது அவனுடன் மணம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நான் இப்பொழுது இங்கே தனித்திருக்கின்றேன்’ என்ற சிறந்த பொருளைத் தந்தது. அவரிடம் ஆர் சொல்வார் பாட்டு 98 அவன் அவளை எப்படியாவது மணம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று முடிவு செய்துவிட்டான். பல நாட்கள் அவனும் அவளும் காதல் களவு மணத்திலே கருத் தொருமித்து காலங்கடத்தினர். எத்தனை நாளைக்குத்தான் ஒருவரும் அறியாமல் மறைந்த வாழ்விலே மகிழ்ச்சியடைய முடியும்? அவர்களுடைய கள்ளநட்பு கொஞ்சம் வெளியிலே பரவி விட்டது. அந்தத் தலைமகளுடைய செவிலித்தாய் நெஞ்சிலே ஏதோ ஐயம் தோன்றிவிட்டது. அதனால் அவன் தலைமகளைக் கண்டிப்புடன் பாதுகாக்கத் தொடங்கினாள். பகலிலும் அவளை எங்கும் போகவிடுவதில்லை. இரவிலும் அவளைத் தன் பக்கத் திலேயே படுக்க வைத்துக்கொண்டாள். ஆதலால் அத்தலைவி தன் விருப்பப்படி தான் காதலனைப் பகலிலும் சந்திக்க முடியவில்லை. பல தடவை முயன்றால் எப்போதாவது ஒரு தடவை தான் அவர்களால் சந்திக்க முடியும். இந்த நிலைமை உண்டான பிறகுதான் அவன் அவளை மணம் புரிந்து கொண்டே தீர்வது என்ற முடிவுக்கு வந்தான். மண வினைக்கும், மணம் புரிந்து கொண்டபின் இல்லறம் நடத்து வதற்கும் பொருள் வேண்டும் அல்லவா? அவன் பொருள் தேடப் புறப்பட்டான். எப்படியும் மாரிக்காலம் வருவதற்குள் பொருள் தேடிக் கொண்டு திரும்பி விடுவேன்; அதன் பிறகு மணம் புரிந்து கொள்கிறேன் என்று தலைவியிடம் உறுதிமொழி கூறிவிட்டுப் போனான். இப்போது கார்காலம் வந்து விட்டது; வானத்திலே கரு மேகங்கள் திரண்டு இடித்து முழங்கி மழை பொழிகின்றன. பட்ட மரங்கள் எல்லாம் தளிர்த்துத் தலைநிமிர்ந்து நிற்கின்றன. மணமும் மலரும் இல்லாமல் வாடிக்கிடந்த காடுகள் எல்லாம் வளம் பெற்றன. நாற்றிசைகளும் நறுமணங்கள் பூத்துக் குலுங்கின. குறிப்பாக மாரிக் காலத்திலே மலரும் இயல்புள்ள மலர்கள் அத்தனையும் அழகாக மலர்ந்து அசைந்து கொண்டிருந்தன. இதைக் கண்ட தலைவி காதலன் கூறிய காலம் வந்தும் அவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கினாள். தன் ஏக்கத்தைத் தன் தோழியிடம் எடுத்துக் கூறினாள். தோழியே அவர் வருவதாக உரைத்த காலம் வந்து விட்டது. அவர் சொன்ன சொல்லைத் தவற மாட்டார். அவர் சென்றிருக்கும் இடத்திலே கார்காலம் போயிற்றோ, போகவில்லையோ தெரிய வில்லை. கார்காலம் வந்து விட்டது என்பதை அறிந்தால் கண்டிப்பாக அவர் வராமல் தங்க மாட்டார். நமது தோட்டத்திலே நீர் வழிந்தோடுகின்ற பசுமையான புதரிலே பீர்க்கங் கொடிகள் செழித்துப் படர்ந்திருக்கின்றன. மாரிக் காலத்தைக் கண்ட மகிழ்ச்சியால் அக்கொடிகளிலே மலர்கள் பூத்திருக்கின்றன. இந்த மலர்களிலே சிலவற்றைப் பறித்துக் கொண்டு அவர் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். `உமது காதலி கார் காலத்தைக் கண்டு கவின் அழிந்தாள். அவள் இந்த மலரைப்போல் பசலை நிறம் ஏற்றாள்; நீர் காணும் போது நல்ல அழகுள்ளவளாயிருந்த அவள் இன்று அழகிழந்து வாடுகின்றாள்’ என்ற செய்தியை அவரிடம் நெருங்கி நின்று பிறர் காதில் படாமல் சொல்ல வேண்டும், இப்படிச் சொல்லக் கூடிய வரைப் பெற்றால்தான் என் காம நோய் தணியும். இதைக் கேட்டவுடன் அவர் திரும்பி வராமல் இருக்க மாட்டார். ஆதலால் இதைச் செய்யக் கூடியவர்கள் இச்சமயத்தில் யார் இருக்கின்றார்கள்?’ என்றாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது இப்பாட்டு. பாட்டு இன்னள் ஆயினள் நன்னுதல்; என்று அவர்த் துன்னச் சென்று செப்புநர்ப்பெறினே நன்றுமன்; வாழி தோழி; நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே. பதவுரை:- வாழி தோழி- வாழ்க தோழியே. நம் படப்பை நமது தோட்டத்திலேயுள்ள. நீர்வார் பைம்புதல்- நீர் ஒழுகுகின்ற பசுமையான புதரிலே. கலித்த- தழைத்துப் படர்ந்திருக்கின்ற. மாரிப்பீரத்து அலர்- மாரிக்காலத்திலே மலருந்தன்மையுள்ள பீர்க்கம் பூக்கள். சில கொண்டு -சிலவற்றைப் பறித்துக் கொண்டு போய். நல்நுதல்- நல்ல நெற்றியையுடைய உன் காதலி. இன்னள் ஆயினள்- இந்தப் பீர்க்க மலரைப் போன்ற பசலை நிறத்தைப் பெற்றனள். என்று அவர் துன்னச் சென்று- என்று அவரை நெருங்கிச் சென்று, செப்புநர்ப்பெறின்- வேறொருவர் காதிலும் படாமல் கூறுகின்றவரின் உதவியைப்பெற்றால். நன்று-மிகவும் நன்மையாக முடியும். கருத்து: - தோழியே என் துன்பத்தைத் தலைவர் அறியார்; அறிந்தால் விரைந்து வருவார். விளக்கம்:- இது கோக்குளமுற்றன் என்னும் புலவர் பாட்டு. ‘தலைவன் தான் வருவதாகச் சொல்லிய பருவக் காலத்தில் வரவில்லை. அதனால் வருந்திய தலைவி என் துன்ப நிலையையும் கார்காலம் வந்ததையும் யாரேனும் தலைவரிடம் போய்ச் சொன்னால் நலம்’ என்று கூறி வருந்தினாள். வாழி தோழி! நம்படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அவர் சில கொண்டு நல்நுதல் இன்னள் ஆயினள் என்று அவர் துன்னச் சென்று செப்புநர் பெறின் நன்று’ என்று பதங்கள் மாற்றப்பட்டன. ஏ, மன் அசைச் சொற்கள். துன்னச் சென்று- நெருங்கிச் சென்று. செப்புதல்- சொல்லுதல். படப்பை- தோட்டம். புதல்- புதர். கலித்தல்- தழைத்தல். பீர- பீர்க்கு. புதல் என்னும் சொல் இப்பொழுது புதர் என்று வழங்கப்படுகின்றது. ‘எங்கள் வாழ்க்கை பிறர் அறியாத களவு மண வாழ்க்கை ஆதலால் அவர் காரணமாக நான் பசலை நிறம் பெற்றேன் என்பதைப் பிறர் அறியக் கூடாது. ஆகையால் தான் இச் செய்தியை அவரிடம் நெருங்கி நின்று சொல்ல வேண்டும்’ என்பது தலைவியின் கருத்து. இதை விளக்குவதே ‘துன்னச் சென்று செப்புநர்ப் பெறின்’ என்னும் தொடர். மறந்தறியேன் பாட்டு 99 பொருள் இல்லாவிட்டால் இல்லறம் சிறப்பாக நடை பெறாது. இல்லறம் நல்லறமாக வேண்டுமாயின் செல்வம் வேண்டும். பண்டைத் தமிழர் இவ்வுண்மையை உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு முன்பே பொருள் தேடச் செல்வார்கள். பொருளீட்டிக் கொண்டு வந்த பிறகுதான் தாம் காதலித்த கன்னிகையரைக் கடிமணம் புரிந்து கொள்வர்; அல்லது மணம் புரிந்து கொண்ட பின் மனைவியரைத் தனியே வைத்து விட்டுப் பொருள் தேடப்போவார்கள். செல்வத்தைச் சேர்த்துக் கொண்டுவந்த பிறகே இனிது இல்லறத்தை நடத்துவார்கள். இது பண்டைத் தமிழர் வழக்கம். இவ்வழக்கப்படி மணம் புரிந்து கொண்ட ஒரு தலைவன் செல்வந் தேடச் சென்றிருந்தான். அவன் சென்ற செயலிலே வெற்றி பெற்றான். ஈட்டிய பொருளுடன் தன் மனத்துக்கினிய காதலியின் இல்லத்திற்குத் திரும்பினான். அப்பொழுது தோழி அவனைப் பார்த்து ஒரு கேள்வியைப் போட்டாள். நீர் எம்மை விட்டுப் பொருள்தேடப் பிரிந்து போனீர்; பல திங்கள் பொருளீட்டுவதிலேயே காலங்கடத்தினீர்; கருதிச் சென்ற காரியத்திலே வெற்றியும் பெற்றுத் திரும்பினீர்; நீர் எம்மை விட்டுப் பிரிந்தபின்- பொருளீட்டுவதிலேயே கருத்தைச் செலுத்தியிருந்த போது எங்களைப் பற்றி நினைத்தது உண்டா? அல்லது அடியோடு மறந்து விட்டீரா? என்பதுதான் அவளுடைய கேள்வி. இக் கேள்விக்குத் தலைவன் தக்க விடையளித்தான். பெருவெள்ளம் வந்தது. அவ்வெள்ளம் பெருகியபோது அது உயர்ந்துள்ள மரக்கிளைகளையும் தொட்டுக் கொண்டு சென்றது. பிறகு அவ்வெள்ளம் வற்றியபோது தண்ணீர் அருந்த வேண்டியவர்கள் தங்கள் கையினால் தண்ணீரை இறைத்து உண்ணும் அளவுக்குச் சுருங்கிவிட்டது; இந்தக் காட்சியை நீயும் பார்த்திருக்கின்றாய்; நானும் பார்த்திருக்கின்றேன். என்னுடைய காதலும் அவ்வெள்ளத்தைப் போல அவ்வளவு பெரிதாக இருந்தது. எனது `அப்பெருகிய காதல் சுருங்க வேண்டுமானால் இங்கே வந்தால்தான் முடியும் என்பதை அறிந்தேன். ஆதலால் உங்களைப் பற்றியே நினைத்தேன்; ஒரு பொழுதும் மறந்தறியேன். உங்களைப் பற்றியே மீண்டும் மீண்டும் நினைத்தேன். அப்படி நினைக்கும் போது உலக இயல்பையும் நினைத்தேன்’ ‘இல்லறம் நடத்துகின்றவன், அதற்கு வேண்டிய பொருளைத் தேடப் பிரிந்தால் வெறுங்கையோடு திரும்பக் கூடாது; கருதிச் சென்ற பொருள் கைகூடிய பின்புதான் திரும்ப வேண்டும், என்ற உலக வழக்கத்தையும் எண்ணினேன். இந்த நினைப்பும், உங்களை மறவாத காதலும் என்னைத் திகைக்கச் செய்துவிட்டன’ என்று கூறினான் தலைவன். இவ்வாறு தலைவன் கூறிய நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது இப்பாடல். பாட்டு உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, நினைத்தனென் அல்லெனோ பெரிதே? நினைந்து மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே; நீடிய மராஅத்த கோடுதோய், மலிர்நிறை இறைத்து உணச்சென்று அற்று ஆங்கு அனைப் பெரும் காமம் ஈண்டு கடைக் கொளவே. பதவுரை:- நீடிய மரத்த- உயர்ந்த மரத்தினுடைய. தோடு தோய்- கிளையிலே தொட்டுக் கொண்டு போகும். மலிர்நிறை- பெரிய வெள்ளப் பெருக்கானது. இறைத்து உண- நீர் வேண்டுவோர் கையினால் இறைத்து உண்ணும் அளவுக்கு. சென்று அற்று ஆங்கு -குறைந்து சென்று வற்றியது போல. அனைப் பெரும் காமம்- அவ்வெள்ளம் போன்ற அவ்வளவு பெரிய எனது காதல் துன்பம். ஈண்டு- இங்கே நான் வருதவன் மூலம். கடைக் கொள. முடிவடையும்படி. யான் உள்ளினென் அல்லெனோ- நான் போன இடத்திலே உங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காமலா இருந்தேன்? உள்ளி பெரிதே- நினைத்தனென் அல்லெனோ- அவ்வாறு சிந்தித்து உங்களைப் பற்றியே அடிக்கடி எண்ணினேன்; எண்ணாமலா இருந்தேன். நினைத்து- இவ்வாறு உங்களைப் பற்றியும் எண்ணி- உலகத்துப் பண்பு- உலகத்து இயல்பையும் எண்ணி. மருண்டனென் அல்லெனோ- திகைப்படைந்தேன் அல்லனோ? திகைத்தேன். கருத்து:- யான் ஒரு சிறிதும் உங்களை மறந்தறியேன் சென்ற விடமெல்லாம் உங்களைப் பற்றியே சிந்தித்தேன். விளக்கம்:- இது ஒளவையார் பாட்டு. பொருள்தேடச் சென்று திரும்பிய தலைவனைப் பார்த்து, நீர் போன விடத்திலே எங்களைப் பற்றி நினைத்திரோ! என்று தோழி கேட்டாள். அதற்குத் தலைவன் தந்த விடையே இப்பாடல். முல்லைத்திணை. “நீடிய மரத்த கோடுதோய் மலிர் நிறை. இறைத்து உணச் சென்று அற்று ஆங்கு அனைப் பெரும் காமம் ஈண்டு கடைக் கொள ஏ யானே உள்ளினென் அல்லெனோ? உள்ளி பெரிதே நினைத்தனென் அல்லெனோ?” நினைத்து, உலகத்துப் பண்பு மருண்டனென் அல்லெனோ என்று பதங்கள் மாற்றப்பட்டன. உள்ளுதல்- ஆழ்ந்து சிந்தித்தல், மருளுதல்- மயங்குதல்; திகைத்தல், பண்பு- இயல்பு. பிரிந்திருப்பார் காதல் பெருக்கால் வருந்துவர். சேர்ந்தபோது அவர்கள் துன்பம் தணியும். காதல் பெருக்குக்கு வெள்ளம் உவமையாகக் கூறப் பட்டது. இனி அவனைக் காண்பேனோ? பாட்டு 100 ஒரு தலைவி; அவளுக்கேற்ற ஒரு தலைவன்; இவர்கள் இரு வரும் அடிக்கடி இரவிலே சந்திப்பார்கள்; அவர்கள் சந்திப்பதற்குக் குறித்த இடம் ஒன்று உண்டு. பெரும்பாலும் தலைவியின் உறை விடத்திற்குப் பின்புறமுள்ள இடத்திலே தான் அவர்கள் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் தலைவன் குறித்த நேரத்திலே இரவுப் பொழுதிலே, குறித்த இடத்திலே வந்து நின்றான்; வெகுநேரம் காத்திருந்தான்; தலைவியைக் காணவில்லை. தான் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்க அவன் பல அடையாளங்களைச் செய்து பார்த்தான்; மரக்கிளைகளை அசைத்தான்; அக்கிளைகளில் உள்ள பறவைகளை எழுப்பி ஓசையிடச் செய்தான்; பக்கத்திலிருந்த நீர் நிலையிலே கல்லையெறிந்து ஓசையெழுப்பினான்; தலைவி வரவில்லை. அவன் வருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் தலைவி அவ்விடம் வந்து போனாள். ஏதோ ஓசையைக் கேட்டுத் தலைவன் தான் வந்திருக்கின்றான் என்று எண்ணி அங்கு வந்தாள். அவனைக் காணாமையால் திரும்பி வந்து படுத்துவிட்டாள். ஆகையால் தலைவன் எழுப்பிய ஓசைகளையும், முன்பு நிகழ்ந்தது போன்ற இயற்கை நிகழ்ச்சி என்று எண்ணிச் சும்மா படுத்திருந்தாள். தலைவனைச் சந்திக்கவில்லை. இதனால் தலைவனால் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவன் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானான். இப்படி ஏமாந்தவன் தனக்குத்தானே தன் ஏமாற்றத்தைச் சொல்லிக் கொண்டான். “நான் விரும்பும் காதலி வாழும் சிற்றூரிலே உள்ளவர்கள் மலையருவி பாயும் நிலத்திலே மலைநெல்லை விதைத்துப் பயிர் செய்வார்கள். அந்த நெற்பயிருக்கு இடையிலே களையாக முளைக்கும் மலை மல்லிகைக் கொடிகளையும், கற்றாழைச் செடிகளையும் களைந்தெறிவார்கள்; விதைத்த பயிர் நன்றாக விளையும்படி பண்படுத்துவார்கள். அவர்கள் விதைத்த பயிருக்கும், அவர்கள் வாழும் ஊருக்கும் காந்தள் செடிகளே இயற்கை வேலியாக அமைந்திருக்கும். இத்தகைய சிறு குடியினர் தங்களுக்கு உணவு கிடைக்காமல் பசியால் வாடும்போது தங்களிடம் உள்ள யானைத் தந்தத்தை விலைக்கு விற்பார்கள். அத்தந்தத்தின் அருமையை அறியாமல் வந்த விலைக்கு மலிவாக விற்றுவிடுவார்கள். அத் தந்தம் விற்றுக் கிடைத்த விலையைக் கொண்டு உணவுப் பொருளை வாங்கி உண்பார்கள். இத்தகையர்கள் வாழ்கின்ற கொல்லிமலை, வலிமை யான வில்லையுடைய ஓரி என்னும் வீரனுக்கு உரிமையுள்ளது. அந்த மலையின் மேற்குப் பக்கத்திலே உள்ள கொல்லிப் பாவையைப் போன்ற அழகுடையவள் என் காதலி. அவளுடைய நல்ல தோள்களை இனித் தழுவ முடியாதென்றே நினைக்கின்றேன். இன்னும் நான் இங்கே காத்திருப்பதில் பயனில்லை. நமது இடத்துக்குத் திரும்ப வேண்டியதுதான்.” இவ்வாறு தலைவன் தன் உள்ளத்தோடு தான் பேசிக் கொண்ட நிகழ்ச்சியை இப்பாடல் எடுத்துரைக்கின்றது. பாட்டு அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருஇலைக் குளவியொடு பசுமரல்கட்கும் காந்தள் வேலிச் சிறு குடிப் பசிப்பின் கடும்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே; மணத்தற்கு அரிய பணைப்பெருந்தோளே. பதவுரை:- அருவிப் பரப்பின்- மலையருவியின் நீர்பாயும் பெரிய நிலப்பரப்பிலே, ஐவனம்வித்தி- மலைநெல்லை விதைத்து. பருஇலை குளவியொடு- அவற்றின் இடையிலே முளைத்த பெரிய இலையையுடைய காட்டு மல்லிகையுடன். பசுமரல்- பசுமையான கற்றாழையையும். கட்கும்- களைந்து எறியும். காந்தள் வேலி- காந்தள் செடிகளையே இயற்கையான வேலியாகவுடைய. சிறு குடி -சிறு குடிசையிலே வாழ்கின்றவர்கள். பசிப்பின்- தங்களுக்கு உணவு கிடைக்காமல் பசி யெடுத்தால், அச்சமயத்தில். கடும்கண் வேழத்து- அஞ்சாமையுள்ள யானையின். கோடு- தந்தத்தை. நொடுத்து- மலிந்த விலைக்கு விற்று உண்ணும்- அதனால் வரும் பொருளைப் பெற்று உண்ணுகின்றவர்கள் வாழும். வல்வில் ஓரி- வலிமையுள்ள வில்லைக் கொண்ட வீரனாகிய. ஓரி- ஓரி என்பவனது. கொல்லிக் குடவரை- கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் உள்ள. பாவையின்- தெய்வத்தின் உருவத்தைப் போல. மட வந்தனள்- அழகு பொருந்தியவளின். பணை பெருந்தோள்- மூங்கில் போன்ற பெரிய தோள்கள். மணத்தற்கு அரிய- இனி தழுவிக் கொள்ளுவதற்கு அருமையானவைதாம். கருத்து:- என் நெஞ்சைக் கவர்ந்த அழகுள்ள தலைவியை இனிக் காணுவது அரிது. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. இரவிலே, குறித்த இடத்திலே தலைவியைச் சந்திக்க முடியாமல் ஏமாந்த தலைவன் தன் உள்ளத்திற்கு உரைத்தது. குறிஞ்சித்திணை. ஐவனம்-மலைநெல். குளவி- காட்டு மல்லிகை. மரல்- ஒருவகைக் கற்றாழை. கட்டுதல்-களையெடுத்தல். கடுங்கண்- அஞ்சாமை, நொடுத்தல்- விலைக்கு விற்றல். கொல்லிப்பாவை தலைவிக்கு உவமை. கொல்லிப்பாவை அழகுள்ளது; கண்ணால் காணப்படுவது; ஆனால் அதை அடைய முடியாது. தலைவியும் அழகுள்ளவள்; ஆனால் அவளைப் பெறுதல் அரிது. ஓரி என்பவன் கடையெழு வள்ளல்களிலே ஒருவன். இவன் சிறந்த வில் வீரன். கொல்லிமலை இவனுக்கு உரிமையுள்ளது. மலை நிலத்து மக்கள் யானைத் தந்தத்தை அவ்வளவு சிறந்த பொருளாக மதிப்பதில்லை. அது அவர்களுக்குக் கிடைக்காத பொருள் அன்று. ஆதலால் அதனைக் குறைந்த விலைக்கு விற்கின்றனர் என்று குறிக்கின்றது இப்பாடல். எவ்வுலகும் இணையன்று பாட்டு 101 அவனும் அவளும் அன்புடன் எவரும் கண்டு மகிழ்ச்சி யடையும்படி இல்லறத்தில் வாழ்ந்துவந்தனர் அவர்கள் வாழ்க்கையிலே ஒரு குறையும் இல்லை. ‘காதலன் காதலி என்றால் இப்படி அல்லவா வாழ வேண்டும். இல்லறம் என்றால் இவர்கள் கருத்தொருமித்துக் காரியங்களைச் செய்வதேபோல் ஒன்றுபட்டு வாழ்வதல்லவா உயர்ந்த அறம்’ என்று அனைவரும் பேசிக் கொள்ளும்படி அன்புடன் வாழ்ந்தனர். இப்படி வாழும் போது ஒருநாள் அத்தலைவன் உள்ளத்திலே ஓர் எண்ணம் உதித்தது. இல்லறத்தில் இன்னும் பேரின்பம் துய்ப்பதற்காகப் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்ற எண்ணந்தான் அது. பொருளால்தான் இம்மையிலே வேண்டும் இன்பங்களையெல்லாம் பெற முடியும்; பொருளால் மறுமையிலே இன்பம் பெறுவதற்கு இடமான நல்லறங்களையும் நடத்த முடியும். பொருள் நிலையற்றதானாலும், அழிந்துவிடக் கூடியதானாலும், அதனால் இம்மைப் பயனும் உண்டு. மறுமைப் பயனும் உண்டு; ஆதலால் பொருள் தேடப் போகவேண்டும் என்ற எண்ணம் அவனைப் பிடித்து உலுக்கியது. ஆனால் அவனுக்கோ, தன் காதலியை விட்டுப் பிரிந்தால் தானும் துன்புற நேரிடும்; அவளும் பிரிவைப் பொறுக்க மாட்டாமல் வருந்துவாள். ஆதலால் பொருள் தேடும் பொருட்டுப் பிரியாமல் இருப்பதே நன்று என்று நினைத்தான். இப்படி எண்ணியவன் செல்வத்தின் பொருட்டுப் பிரிய நினைத்த தன் உள்ளத்திற்குத் தானே அறிவுரை கூறினான். என் காதலி தாமரை மலரைப் போன்ற கண்களை யுடையவள். அவள் கண்கள் மைபூசி அழகாக விளங்குவன. அவள் மேனியோ பொன் போன்ற நிறமுள்ளது. வழவழப்பும், கண்களைக் கவரும் தன்மையும் உள்ளது; அவளுடைய இடுப்பின் கீழ்ப்பாகம் உள்ளத்தைக் கவரும்படி அமைந்தது; அழகான இரேகைகள் படர்ந்தது. இவ்வளவோடு அவள் இளமைத் தன்மையுள்ளவள்; மங்கைப்பருவம் மாறாதவள்; மகளிர்களிலே சிறந்த அழகுடையவள். இத்தகைய என் காதலியின் தோள்களைத் தழுவிக் கொள்ளும் நாளே எனக்கு இன்பந்தரும் நாள். இந்த இன்பத்திற்கு வேறு எந்த இன்பத்தையும் இணையென்று சொல்லவே முடியாது. பெரிய கடலாற் சூழப்பட்ட இவ்வுலகிலே எத்துணையோ இன்பங்கள் நிறைந்து கிடக்கின்றன. தேவர் உலகத்தை எளிதிலே அடைய முடியாது; இவ்வுலகிலே அரிய செயல்களைச் செய்தவர்கள் தாம் அவ்வுலகை அடைய முடியும்; அத்தகைய தேவருலகமும் இன்பத்தை அளிக்கக் கூடியதே. இந்த மண்ணுலக இன்பம், தேவர் உலக இன்பம் இரண்டையும் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்தாலும் அவை என் காதலியின் தோளைத் தழுவியிருக்கும் நாளிலே கிடைக்கும் இன்பத்திற்குச் சமமாகாது. இந்த இரண்டுலக இன்பங்களைவிட என் காதலியுடன் இணைந்திருக்கும் இன்பமே சிறந்ததாகும். என் காதலியை விட்டுப் பிரியாமல் அவளோடு ஒன்று பட்டிருப்பதிலேயே இம்மையின்பங்களையும், மறுமையின் பத்தையும் எளிதிலே பெறமுடியும். எளிதிலே பெறும் இந்த இன்பத்தை விட்டுவிட்டு, இம்மை, மறுமை இன்பங்களைத் தரும் செல்வப் பொருளை வருந்தித் தேடும் முயற்சியிலே ஏன் ஈடுபட வேண்டும்? வேண்டாம். இவளை விட்டு நீங்காமல் இவளுடனேயே சேர்ந்திருப்போம் என்று தன் உள்ளத்தை நோக்கிக் கூறினான். இந்த நிகழ்ச்சியையே இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. பாட்டு விரிதிரைப் பெரும்கடல் வளைஇய உலகமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர்சா லாவே; பூப்போல் உண்கண் பொன்போல் மேனி, மாண்வரி அல்குல் குறுமகள், தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே. பதவுரை:- பூப்போல் உண்கண்- தாமரை மலரைப் போன்ற மையுண்ட கண்களையும். பொன்போல் மேனி- பொன்னிறம் போன்ற மேனியையும். மாண்வரி அல்குல்- சிறந்த இரேகைகள் பொருந்திய இடையின் அடிப்பாகத்தையும் உடைய. குறுமகள்- தலைமகளுடன். தோள் மாறுபடும்- தோளோடு தோள் மாறி மாறித் தழுவிக் கொள்ளும். வைகலொடு எமக்கு- நாளிலே எனக்குண்டாகும் இன்பத்துடன். விரிதிரை- விரிந்த அலைகளை யுடைய. பெரும்கடல், வளைஇய- பெரிய கடலாற் சூழப்பட்ட,. உலகமும்- இவ்வுலக இன்பத்தையும். அரிது பெறு சிறப்பின்- வருந்திப் பெறக் கூடிய பெருமையுள்ள. புத்தேள் நாடும்- தேவர் உலகில் பெறக் கூடிய இன்பத்தையும், இரண்டும் தூக்கின் -இரண்டையும் நான் பெறும் இன்பத்தோடு வைத்து நிறுத்தால் சீர் சாலா ஏ- நான் பெறும் இன்பத்தின் சிறப்போடு ஒத்து நிற்காது. கருத்து:- தலைவியின்பால் நான் அடையும் இன்பத்திற்கு நிகரான இன்பம் வேறு எதுவுமே இல்லை. விளக்கம்:- இப்பாடலை இயற்றிய ஆசிரியர் பரூஉ மோவாய்ப் பதுமன் என்பவர். பொருள் தேடத் தூண்டிய தன் மனத்தைப் பார்த்துத் தானே சொல்லிக் கொண்டது; தலைவன் கூற்று. குறிஞ்சித் திணை. “பூப்போல உண்கண், பொன் போல் மேனி மாண்வரி அல்குல் குறுமகள் தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கு (ஏ) விரிதிரைப் பெரும் கடல் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கின் சீர்சாலா (ஏ) என்று பதங்கள் மாற்றப்பட்டன. வளைஇய; படூஉம்; உயிர் அளபெடைகள் ஏ அசைகள். புத்தேள்- தேவர். தூக்கின்- நிறுத்தால்; ஆராய்ந்தால். வைகல் -நாள். அவர் நல்லவர் அல்லர் பாட்டு 102 பிரிந்து போன தலைவன் நீண்ட நாள் திரும்பவில்லை. வருவதாகச் சொல்லிய காலம் கடந்துவிட்டது. அவனிடமிருந்து ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவன் எப்பொழுது வருவான் என்பதும் தெரியவில்லை. அவன் போய்ப் பன்னாட்களாயினும் தலைவி பொறுமையுடன் காத்திருந்தாள். “அவன் அளித்த வாக்குறுதியை மீற மாட்டான். அன்பும் அறிவும் நேர்மையும் உள்ளவன்; சென்ற விடத்தில் நம்மைப் பற்றி நினைக்காமலும் இருக்கமாட்டான் அவன் எண்ணிச் சென்ற காரியம் இன்னும் நிறைவேறியிருக்காது; அக்காரியம் கைகூடியவுடன் கண்டிப்பாகத் திரும்பி வந்துவிடுவான். ஆதலால் நாம் இன்னும் பொறுத்திருப் போம்” என்று எண்ணி அவள் தன் உள்ளத் துயரை வாயால் சொல்லாமல் ஒளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோழி தலைவியின் நிலையைப் பார்த்து நெஞ்சம் வருந்தினாள். காதலன் இவ்வளவு நாள் பிரிந்திருப்பதை இக்காரிகை எவ்வாறு பொறுத்திருப்பாள் என்று ஏங்கினாள். தோழியின் இந்த இரக்கத்தைக் கண்டவுடன் தலைவியினால் தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவளை மீறி அத்துக்கம் வெளிப்பட்டு விட்டது. உடனே தன் வாயினால் தான் படுந்துன்பத்தை அவள் வெளியிட்டாள். தோழியே அவர் புறப்பட்டுப் போய்ப் பல திங்கள் ஆகி விட்டன. இன்னும் திரும்பவில்லை. அவரைப் பற்றிய எச்செய்தியும் எட்டவும் இல்லை. நான் அவரைப் பற்றி நினைத்தால் என் நெஞ்சம் துன்பத்தீயினால் வேகின்றது; நினைக்காமலே இருக்கலாம் என்று முயன்றால் என்னால் முடியவில்லை. அவரை எண்ணா மலிருக்கக் கூடிய வல்லமை என்னிடம் சிறிதும் இல்லை. அவர் என்னிடம் விட்டுச் சென்ற காம நோய் என்னை வாட்டி வதைக்கின்றது அது உயர்ந்து வளர்கின்றது. வானத்தை முட்டும் படி பெருகி வளர்கின்றது. நான்படும் துன்பத்தை அவர் அறியாமலிருப்பதால் அவர் அன்பற்றவர் என்று நினைக்கின்றேன்; என்னிடம் உள்ள வேறு பாடுகளைக் கண்டு ஊரார் பழி சொல்லுவதை அவர் உணராம லிருக்கின்றார்; ஆதலால் அவர் நாணமற்றவர் என்றே எண்ணு கின்றேன். இல்லறத்தில் வாழ்வோர் நல்ல பருவகாலத்தில் இல்லாளுடன் இணைந்து வாழ வேண்டும் என்னும் உலகியலையும் அவர் மறந்து விட்டார்; ஆதலால் அவரை ஒப்புரவற்றவர் என்றே கருதுகின்றேன். என் துன்பத்தை நீக்க அவர் வரவில்லை; ஆதலால் அவரை இரக்கம் இல்லாதவர் என்றே எண்ணுகின்றேன். தான் வந்து சேர்வதாக வாக்களித்த காலமும் கடந்துவிட்டது; ஆதலால் அவரை வாய்மையற்றவர் என்றே நினைக்கிறேன். எம்மால் தழுவிக் கொள்ளப்பட்ட அவர் இத்தகைய நற்குணங்கள் அற்றவராயிருப் பதைக் கண்டு மிகவும் வேதனைப்படுகின்றேன். இவ்வாறு தன் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த துயரத்தை அத் தலைவி வாய்விட்டுரைத்தாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவதே இப்பாடல். பாட்டு உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்றே; வருத்தி வான் தோய்வு அற்றே காமம்; சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. பதவுரை:- உள்ளின்- பிரிந்து சென்று திரும்பாத தலைவரை நினைத்தால். உள்ளம் வேம் ஏ- என் நெஞ்சம் வேகின்றது. உள்ளாது இருப்பின்- நினைக்காமலிருக்க முயன்றால். எம் அளவைத்து அன்று- அது என்னுடைய ஆற்றலுக்கு அடங்கியதாக இல்லை. காமம் வருத்தி- அவர் என்னிடம் விட்டுச் சென்ற காம நோய் என்னைத் துன்புறுத்தி. வான் தோய்வு அற்றே- வானத்தை முட்டும் அளவு உயர்ந்து விடுகின்றது. யாம் மரீஇ யோர்- ஆதலால் எம்மால் தழுவிக் கொள்ளப்பட்டவர். சான்றோர் அல்லர்- அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம். வாய்மை ஆகிய நற்குணங் களையுடையவர் அல்லர்; மிகவும் கெட்டவர். கருத்து:- தலைவர் வாக்களித்தபடி மீளாமையால் வருந்து கின்றேன். விளக்கம்:- இது ஒளைவையார் பாட்டு. பிரிந்த தலைவன் நீண்ட நாளாகியும் வரவில்லை. ஆதலால் தலைவி வருந்துவாள் என்று இரக்கப்பட்டாள் தோழி. அத்தோழியிடம் தலைவி தன் காதல் துன்பத்தைப் பற்றிக் கூறினாள். தலைவி கூற்று. தலைவி தன் துன்பத்தை வாய் விட்டுக் கூறுவதால் நெய்தல்திணை. உள்ளின் உள்ளம் வேம் (ஏ) உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று (ஏ) காமம் வருத்தி வான் தோய்வு அற்று (ஏ) யாம் மரீஇயோர் (ஏ) சான்றோர் அல்லர் என்று மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. மரீஇ: உயிர் அளபெடை. ஏ, அசைச் சொற்கள். வேம்- வேகும். நான் உயிர் வாழ்வேன் பாட்டு 103 பொருள் தேடப் புறப்பட்டான் காதலன். அப்பொழுதே அவள் தடுத்தாள். ‘என்னைவிடச் சிறந்த பொருள் உண்டா? என்னை விட்டுப் பொருளைப் பெரிதென்று கருதிப் புறப்படுவ தென்றால் அதைவிட நான் மட்டம் என்பது தானே உமது நினைப்பு? என்னையே சிறந்த பொருள் என்று எண்ணுவீரானால் நீர் பிரிந்து போகக் கூடாது’ என்று சொல்லித் தடுத்தாள் அவள். அவன் அவளுக்குத் தக்க ஆறுதல் மொழிகளைச் சொன்னான். ‘கார்காலம் வருவதற்கு முன் எப்படியும் திரும்பி வந்துவிடுவேன். நீ சிறிதும் கலங்க வேண்டாம்; உன்னைப் பிரிந்திருந்து என்னால் ஒரு நாளும் உயிர் வாழ முடியாது; என் சொல்லை நம்பு; நான் வரும் வரையிலும் உன்னுடைய உணர்ச்சியை- துன்பத்தை- வெளிக்காட்டாமல் பொறுத்திருக்க வேண்டும். செல்வப் பொருள் இன்றேல் சிறந்த வழியில் இல்லறத்தை நடத்த முடியாது என்பது உனக்குத் தெரியாத செய்தியா? நம் இருவர் இன்பத் திற்கும் ஊன்று கோலாக நிற்கும் உடைமையைத் தேடவே நான் போகின்றேன். ஆதலால் அன்புடன் எனக்கு விடை கொடு. மகிழ்ச்சியுடன் என்னை வழியனுப்பு’ என்று இதமாகப் பேசினான். அவளிடம் விடைபெற்றுப் பொருள்தேடப் போனான்; ‘கார் காலம் வருவதற்குமுன் விரைந்து வருவேன்’ என்று உறுதிமொழி அளித்து விட்டுப் போனான். கார் காலம் வந்து விட்டது; ஆனால் அவன் இன்னும் வரவில்லை. தலைவியால் தன் துன்பத்தைத் தாங்க முடியவில்லை. ஆத்திரம் அவளுடைய அகத்தை உடைத்துக் கொண்டு வெளிக்கிளம்பி விட்டது. அவள் தன் ஆத்திரத்தையும் துக்கத்தையும் தன் தோழியிடம் உரைத்தாள். உள்ளத்தில் எழுந்த துயரை உடனுறையும் அன்புள்ளவர்களிடந் தானே அறிவிப்பார்கள்? ‘மிகுந்த தண்ணீர் நிரம்பிய இடத்திலே சேறு குவிந்து படிந்து கிடக்கின்றது. அச்சேற்றில் இறங்கினால் உள்ளே அமிழ்ந்து போக வேண்டியது தான்; ஆதலால் அதில் இறங்குவதற்கு யாரும் அஞ்சுவார்கள். முள் முருங்கைப் பூவின் இதழைப் போன்ற சிறகு- சிவந்த அலகு- இவற்றையுடைய நாரை இந்தச் சேற்றிலே இறங்கி நின்று இரை தேடுவது வழக்கம். இப்பொழுது மழை பெய்கின்றது; எங்கும் நீர்த்துளிகள் தெறித்து வீழ்கின்றன. இந்த நீர்த்துளிகளுக்கு அஞ்சி அந்த நாரையும் இரைதேடாமல் ஓய்ந்திருக்கின்றது. வாடைக் காற்றும் சுற்றிச் சுற்றிவீசுகின்றது; காதலரைப் பிரிந்திருப்பவர்களைத் துன்புறுத்தும் வாடைக்காற்றால் நான் வாடுகின்றேன். இவ்வாறு மழைத்தாரையும், வாடைக்காற்றும் சேர்ந்து என்னைத் துன்புறுத்துகின்றன. அது அவருக்குத் தெரியாததா? கார் காலத்தில் கட்டாயம் வந்து விடுகிறேன் என்று உறுதிமொழி உரைத்த காதலர் இன்னும் வரவில்லை. தோழியே, இனி என்னால் பொறுத்திருக்க முடியாது; பிரிவுத் துன்பத்தை என்னால் தாங்க முடியாது. இத் துன்பத்தை ஒழிக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று அவர் வரவேண்டும்; அல்லது நான் இறந்து மடிய வேண்டும். அவரோ இன்னும் வரவில்லை. ஆகையால் நான் இறந்துபடுவதன் மூலம் என் துன்பத்தைத் தவிர்த்துக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. இனி நான் உயிர் வாழ மாட்டேன். இவ்வாறு தலைவி தன் துக்கத்தை எடுத்துரைத்தாள். இந்நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். பாட்டு கடும்புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், கவிர் இதழ் அன்ன தூவிச் செவ்வாய் இரைதேர் நாரைக்கு எவ்வமாகத் தூஉம் துவலைத் துயர்கூர் வாடையும்; வாரார் போல்வர் நம் காதலர்; வாழேன் போல்வல் தோழி யானே. பதவுரை: தோழி. கடும்புனல் தொடுத்த- மிகுந்த கண்ணீரால் சேர்க்கப்பட்ட. நடுங்கு அஞர் அள்ளல்- அஞ்சுவதற்குக் காரணமான துன்பந் தரும் சேற்றிலே. கவிர் இதழ் அன்ன தூவி- முள்முருங்கைப் பூவின் இதழ் போன்ற சிறகையும். செவ்வாய்- சிவந்த அலகையும் உடைய. நாரைக்கு- நாரைக்கு. இரைதேர்- இரை தேடுவதும். எவ்வம்ஆக- துன்பந்தருவதாக இருக்கும்படி. துவலை தூஉம்- மழைத் துளிகளைச் சிந்துகின்றது. துயர்கூர் - காதலரைப் பிரிந்திருப்போர், துன்புறுவதற்குக் காரணமான. வாடையும்- குளிர் காற்றும் வீசுகின்றது. நம் காதலர் வாரார்- இந்தக் கார் காலத்திலும் நமது காதலர் திரும்பி வரவில்லை. யானே வாழேன்- ஆதலால் யான் இனி உயிர்வாழ மாட்டேன். கருத்து:-- இந்தக் கார் காலத்தில் நான் எப்படி அவரைப் பிரிந்து உயிர் வாழ்வேன்? வாழ்வது அரிது. விளக்கம்:- இது வாயிலான் தேவன் என்னும் புலவர் பாட்டு- “கார் காலம் வந்தும் நம் காதலர் வரவில்லை என்றால் இத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர்வாழ முடியாது”, என்று தலைவி தன் தோழியிடம் உரைத்தாள். தலைவி தன் துன்பத்தை வாய்விட்டுரைத்தலால் இதுவும் நெய்தல் திணை. ‘தோழி, கடும்புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், கவிர் இதழ் அன்ன தூவி செவ்வாய் நாரைக்கு இரைதேர் எவ்வம் ஆக துவலை தூஉம்; துயர் கூர் வாடையும்; நம் காதலர் வாரார்; யான் ஏ வாழேன்’ என்று பதங்கள் மாற்றப் பட்டன. தூஉம்; உயிர் அளபெடை, போல்வர்; போல்வல்; அசைச் சொற்கள். கடுமை -மிகுதி- புனல்-நீர். அஞர்- துன்பம். அள்ளல்- சேறு. கவிர்-முள் முருங்கைப்பூ; இதைக் கல்யாண முருங்கை யென்றும் கூறுவர். தூவி- சிறகு. எவ்வம்- துன்பம். துவலை- மழைத்துளி; திவிலை என்பதும் மழைத்துளி. எப்படிப் பொறுப்பேன்? பாட்டு 104 பொருள் தேடப் புறப்படுவோர் பெரும்பாலும் வேனிற் காலத்திலேதான் புறப்படுவார்கள். கார் காலம் வருவதற்கு முன்பே திரும்புவார்கள். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள்தாம் வேனிற்காலம். இவற்றுள் சித்திரையும், வைகாசியும் இளவேனில். ஆனியும் ஆடியும் முதுவேனில். ஆவணி, புரட்டாசி கார்காலம். ஐப்பசி, கார்த்திகை கூதிர்க் காலம். மார்கழி, தை, முன்பனிக்காலம் மாசி, பங்குனி பின்பனிக்காலம். இல்லறம் நடத்துவோர் எட்டு மாதங்கள் இல்லாளுடன் பிரியாமலிருந்து இன்புறுவார். பின்பனிக் காலத்தில் தலைவன் பிரிந்து போக மாட்டான். ஆனால் அவன் பின்பனிக்காலத்தில் பிரிந்து செல்லும்படி நேர்ந்தது. அரசன் அழைத்தால்- நாடு கூப்பிட்டால் எந்தக்காலமானாலும் வீரர்கள் தட்டிக் கழிக்கமுடியாது. அவன் போர்வீரன்; அரசன் அழைப்பு திடீர் என்று வந்தது. ஆதலால் அவன் பின்பனிப் பருவத்திலே- பிரிந்து செல்லத்தகாத காலத்திலே பிரிந்து போனான். போனவன் இன்னும் திரும்பவில்லை; மாதங்கள் பல கடந்து விட்டன. அடுத்த கார் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தலைவன் வருவான், வருவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாள் தலைவி. அவள் உள்ளத்திலே துக்கம் துளிர்விட்டுக் கொண்டு புறப்பட்டது. அவள் தன் துன்பத்தை நெஞ்சிலே நிறுத்தி வைத்துக் கொள்ள முடியாமல் தன் தோழியிடம் சொல்லிப் புலம்பினாள். தோழியே! என் துக்கத்தைச் சொல்லுகிறேன் கேள்; காதலர் பிரிந்து போகத் தகாத காலத்திலே என்னை விட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற காலம் பின்பனிக்காலம்; குளிர்ந்த அருகம் புல்லின் கொடியிலே பணைத்த அடிப்பாகத்தையுடைய அருகம் புல்லின் கொடியிலே பனித்துளிகள் படிந்திருக்கும். அத்துளிகள் நூல் அறுந்து சிதறிக் கிடக்கின்ற முத்துக்களைப் போற் காணப்படும். விடியற் காலத்திலே அந்தப் புற்களைப் பசுக்கள் மேயும். இத்தகைய பின்பனிப் பருவத்திலே அவர் பிரிந்து போனார். என்னோடு சேர்ந்து வாழ்வதற்குரிய பனிக்காலத்திலே அவர் பிரிந்து சென்றதனால் எனக்குத் துன்பம் பெருகிவிட்டது. இப்படிப் பிரிந்தவர் சில நாட்களில் திரும்பி வந்திருந்தாலும் என் துன்பந் தொலைந்திருக்கும். பல நாட்களாகியும் இன்னும் வரவில்லை. நான் எவ்வாறு என் துன்பத்தைத் தாங்கியிருப்பேன்? என்று தன் துக்கத்தை எடுத்துரைத்தாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை இப்பாட்டுக் கூறுகின்றது. பாட்டு அம்ம!வாழி! தோழி! காதலர் நூல் அறு முத்தின் தண்சிதர் உறைப்பத் தாளித் தண்பவர் நாள் ஆ மேயும் பனிபடு நாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுபவே. பதவுரை:- வாழி தோழி அம்ம- தோழியே ஒன்று கூறு கின்றேன் கேட்பாயாக. நூல் அறுமுத்தின்- முத்து மாலையின் நூல் அறுந்து போனால் தனித்தனியே விழுந்து சிதறிக் கிடக்கும் முத்துக்களைப் போல. தண்சிதர் உறைப்ப-குளிர்ந்த பனித்துளிகள் உறைந்து கிடக்கின்றன. தாளி-பணைத்த அடிப்பாகத்தையும் தண்பவர்- குளிர்ந்த கொடியையும் உடைய அருகம்புல்லை. நாள் ஆ மேயும்- விடியற்காலத்திலே பசுக்கள் மேய்கின்ற. பனி படுநாளே பனி விழுகின்ற பின்பனிக்காலத்திலே. பிரிந்தனர்- அவர் நம்மை விட்டுப் பிரிந்து போனார். பிரியும் நாளும்- அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற நாளும் பல ஆகுபஏ- பலநாட்களாகிவிட்டன. கருத்து:- தலைவர் காலமில்லாத காலத்திலே பிரிந்தார். பல நாட்களாகியும் திரும்பவில்லை. ஆதலால் வருந்து கிறேன். விளக்கம்:- இது காவன் முல்லைப் பூதனார் என்பவர் பாட்டு. தலைவன் பின்பனிக் காலத்திலே பிரிந்து போனான். பிரிந்து பல நாட்கள் கடந்துவிட்டன. அவன் இன்னும் வரவில்லை. அதை எண்ணித் தலைவி தன் உள்ளம் வருந்தித் தன் தோழியிடம் உரைத்தாள். இது தலைவன் பிரிவை உணர்த்துவதால் பாலைத்திணை. சிதர்- பனித்துளி. தாளி- அடிப்பாகம். பவர்- கொடி. நாள்-விடியற்காலம். ஆ- பசு. பனிபடு- பனி வீழ்கின்ற. ஏ- அசைச் சொல். பனித்துளிகளுக்கு முத்து உவமை. முத்துக்கள் தனித் தனியே சிதறிக்கிடப்பது போல, பனித்துளிகளும் அருகம் புல்லின் இதழ்களிலே தனித்தனியே காணப்படுகின்றன. இது இயற்கை உவமை நாம் கண்ணாரக் காணும் காட்சி. அன்பே துன்பமாயிற்று பாட்டு 105 ஒரு முறை பழகினால் போதும். அவர்கள் பழக்கம் என்றும் நிலைத்து நிற்கும். அதிலும் ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்ட தொடர்பு பிரிக்க முடியாதது. முதலில் ஒருவனைக் காதலித்த ஒருத்தி தன் உயிர் போகும் வரையிலும் வேறொருவனைக் காதலிக்க மாட்டாள். இதுவே பழந் தமிழ்ப் பெண்களின் பண்பாடு. இதைப் போலவே ஆண்களும் நடந்து வந்தனர். அவளுக்கும் அவனுக்கும் காதல் பிறந்தது; களவு மணம் புரிந்து கொண்டனர். களவு மணவாழ்விலிருந்து கற்பு மண வாழ்விற்குத் தாண்ட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். அவன்- அதாவது அவளுடைய காதலன் விரைவில் வந்து மணந்து கொள்ளுகின்றேன்; அது வரையிலும் துன்பப்படாமல் அமைதி யுடன் இரு என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிப் பிரிந்து போனான். போனவன் போனவன்தான்; பல நாட்களாகி விட்டன. அவன் தன் காதலியைக் காண வரவும் இல்லை; அவளுடைய பெற்றோர்களிடம் பெண் கேட்க வந்ததாகவும் தெரியவில்லை. அவனைப் பற்றிய தகவல் ஒன்றுமே தெரியவில்லை. கிணற்றிலே கல் போட்டது போல் அப்படியே அடங்கியிருந்தது. தன் திருமணத்தை எதிர்பார்த்திருந்த அவள் ஏமாந்து போனாள். அவன் வருவான்; மணந்து கொள்வான்; மகிழ்ச்சியுடன் கலந்து வாழ்வோம் என்று எண்ணியிருந்த அவள் ஏமாறுவது இயல்பு தானே; அவள் தன் ஏமாற்றத்தைத் தோழியிடம் வெளியிட்டாள். ‘தலைவனுடன் நான் கொண்ட நட்பு எனக்கு இன்பத்தைத் தரவில்லை. அவன் வாக்களித்தபடி வந்து வரைந்து கொள்ள வில்லை. அவனுடைய நட்பை நினைத்து நினைத்துக் கண்ணீர் விட்டுக் கலங்குகின்றேன். இதுதான் அவனுடைய நட்பால் எனக்குக் கிடைத்த பலன். இதற்குக் காரணம் அவன் அல்லன்; நானேதான் காரணம். நானே வலிந்து தேடிக் கொண்ட துன்பத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்? தினைப் புனத்தையுடைய குறவன் தன் தினைப்புனத்திலே பொன்னைப் போல் முற்றியிருக்கின்ற தினைக்கதிரைப் பறிப்பான். அப்புதிய கதிரை, புதியதை உண்ணவிரும்பும் தெய்வத்திற்குப் படைப்பான். அதன் பிறகுதான் தானும் சுற்றத்துடன் தினையை உண்பான். அது அவனுடைய வழக்கம். இப்படி அவன் தினைக்கதிரைத் தெய்வத்திற்கு முன்னே படைக்க வைத்திருந்த போது ஒரு மயில் அங்கே வந்தது. அத்தினைக் கதிரைக் கண்டது. அது தெய்வத்திற்குப் படைக்க வைத்திருக்கும் கதிர் என்று அறியாமல் அதைத் தின்றுவிட்டது. அதனால் அந்த மயிலுக்கு மயக்கம் பிடித்துவிட்டது. அது தெய்வத்தால் பிடிக்கப் பட்டு ஆடுகின்ற தேவராட்டியைப் போல நடுங்கிற்று; அவளைப் போல அழகாக ஆடத் தொடங்கிவிட்டது. தெய்வத்திற்காக வைத்திருந்த தினைக் கதிரைத் தின்றதனால்- தான் செய்யத்தகாத செய்கையை அறியாமையால் செய்து விட்டதனால் அந்த மயிலின் நிலைமை இப்படியாகி விட்டது. இத்தகைய தெய்வங்கள் உறையும் மலைநாடன் அவன். தகுதியற்ற காரியங்களைச் செய்தால் அவர்களுக்குத் தண்டனை யளித்து அச்சுறுத்தும் தெய்வங்கள் வாழும் மலை நாடன் அவன்; நான் அவனுடன் நட்புக் கொள்ளுவதற்குத் தகுந்தவள் அல்லள். அவனுடைய தகுதிக்கும் என்னுடைய தகுதிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது; ஆதலால்தான் நான் துன்புறுகின்றேன்; எனக்கு இத்தண்டனை வேண்டியதுதான் என்ன செய்வது. துன்புற்றுத்தான் ஆகவேண்டும் போலும்! இவ்வாறு தன் துயர் கூறினாள் தலைவி. இதைக் கூறுவதே இப்பாடல். பாடல் புனவன் துடவைப் பொன்போல் சிறுதினைக் கடிஉண் கடவுட்கு இட்ட செழுங்குரல் அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும். சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே. பதவுரை:- புனவன் துடவை- குறவனுடைய தோட்டத்திலே விளைந்த பொன்போல. சிறுதினை- பொன்னைப் போன்ற சிறிய தினையின். கடிஉண் கடவுட்கு- புதியதை உண்ணவிரும்பும் தெய்வத்திற்கு. இட்ட செழுங் குரல்- படைப்பதற்காக வைத்த நல்ல கதிரை. அறியாது உண்ட மஞ்ஞை- தெரியாமல் தின்று விட்ட மயில். ஆடுமகள்- தெய்வம் பிடித்து ஆடுகின்ற தேவராட்டி. வெறி உறு வனப்பின்- ஆவேசம் கொண்டு ஆடுகின்ற அழகைப் போல. வெய்து உற்று- துன்பமடைந்து. நடுங்கும்- நடுங்கிக் கொண்டிருக்கும். சூர்மலை நாடன்- இத்தகைய அச்சந்தரும் தெய்வமுறையும் மலை நாட்டானுடன். கேண்மை- நாம் கொண்ட நட்பு. நீர்மலி கண்ணொடு- நீர் நிறைந்த கண்ணுடன். நினைப்பு ஆகின்று- நான் நினைத்துத் துன்புறுவதற்குத்தான் இடமாயிற்று. கருத்து:- தலைவன் தான் வாக்களித்தபடி இன்னும் வந்து வரைந்து கொள்ளவில்லை; ஆதலால் நான் வருந்துகின்றேன். விளக்கம்:- இப்பாடல் நக்கீரர் பாட்டு. நெடுங்காலம் மணந்து கொள்ளாமல் பிரிந்திருந்த தலைவனுடைய நட்பைப் பற்றித் தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. புனவன்- புனத்தையுடையவன். இவன் தினைப் புனத்தை யுடைய குறவன். புனம்- தினைக் கொல்லை. துடவை- தோட்டம், கடி-புதுமை. குரல்- கதிர். மஞ்ஞை -மயில். வெறி -ஆவேசம். சூர் - அச்சம். தெய்வ ஆவேசம் பிடித்து ஆடும் பெண்ணுக்குத் தேவராட்டி என்று பெயர். தேவர் ஆட்டி- தேவரால் ஆட்டப்படுகின்றவள். குறவர்கள் முதலிலே விளைந்த தினைக்கதிரைத் தெய்வத் திற்குப் படைப்பார்கள். புதிய தானியத்தைத் தெய்வத்திற்கு படைத்த பிறகுதான் உண்பது என்ற வழக்கம் இன்றும் உழவர் களிடம் உண்டு. தெய்வத்திற்குப் படைக்க வைத்திருக்கும் பண்டத்தைப் படைக்குமுன் யாரும் உண்ணக் கூடாது; உண்டால் அது எச்சலாகி விடும்; அதனால் தெய்வத்துக்குக் கோபம் உண்டாகும் என்ற நம்பிக்கை இன்றும் தமிழர்களிடம் உண்டு. மாசற்ற மனத்தான் பாட்டு 106 குற்றவாளிகள் தம் குற்றத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் கோபம் வரும். குற்றவாளிகள் தாம் செய்தது குற்றம் என்பதை உணர்வார்களாயின்- தாம் செய்தது குற்றந்தான் என்று ஒப்புக் கொள்ளுவார்களாயின் மீண்டும் அவர்கள் குற்றம் புரிய மாட்டார்கள். நல்ல வழியிலே நடந்து கொள்ளுவர். இதனால் தான் குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிறவர்களின் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்று இயம்புகின்றனர். இவ்வாறு இரக்கம் காட்டுவதுதான் குற்றவாளிகளைத் திருத்துவதற்கும் ஒரு வழியாகும். ஒரு தலைவன்; அவன் தன் காதலியின்மேல் கணக்கற்ற அன்புள்ளவன்; அவளை எந்நாளும் அவன் வெறுத்தோ, இகழ்ந்தோ நடந்து கொண்டதில்லை. இவன் ஒரு சமயம் ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பரத்தையருடன் கூடிக் குலாவ நேர்ந்து விட்டது. அவர்களுடைய வீடுகளுக்கே போய்விட்டான். வெயிலில் நடந்தால்தானே நிழலின் அருமை தெரியும்? கசப்பைத் தின்றவன் தானே இனிமையின் சுவையைப் போற்ற முடியும்? காசு பறிக்கும் வேசையர்களின் இயல்பை அறிந்தவர்கள் தான் மாசற்ற மனைவியின் அருமையை அறிய முடியும். அவனும் பரத்தையர் சேர்க்கையால் தன் காதலியின் உயர்ந்த பண்பை அறிந்தான். தன் இல்லத்திற்குத் திரும்ப எண்ணினான். திடீரென்று போனால் காதலியின் கடுங்கோபத்திற்கு ஆளானால் என்ன செய்வதென்று கலங்கினான். அவள் உள்ளத்தை அறிந்து கொள்ள ஒரு தூதனை அனுப்பினான். ‘நான் உள்ளத்தால் குற்றமற்றவன்; அன்பிலே அணுவளவும் குறையாதவன்; என் தவறை மன்னிக்க வேண்டும்” என்று தூதனிடம் சொல்லி அனுப்பினான். இவ்வாறு வந்த தூதனைக் கண்டு தலைவி உள்ளூர மன மகிழ்ந்தாள். தன் மகிழ்ச்சியைத் தன் தோழியிடம் உரைக்கின்றாள். ‘இற்றி மரம் சிறிய விழுதுகளுடன் வளர்ந்திருக்கின்றது. அதன் வேர் வெண்மை நிறமுள்ளது. அந்த வேர்கள் கற்பாறையிலே படர்ந்திருக்கின்றன. எட்டி நின்று பார்க்கிறவர்களுக்கு மலையின் பக்கத்திலே அருவி நீர் வீழ்வது போலக் காணப்படுகிறது. இப்படிப் பட்ட மலை நாட்டையுடைய நமது தலைவன் நெஞ்சத்தால் குற்றமற்றவன். காலக் கோளாறு காரணமாகக் கால் சறுக்கி வீழ்ந்துவிட்டான். இப்பொழுது அவன் தன் குற்றத்தை உணர்ந்து விட்டான். அவன் மாசற்ற மனத்துடன் சொல்லிய நல்லுரைகளைத் தாங்கிய தூதுவன் நம்மிடம் வந்திருக்கின்றான். இத் தூதுவன் சொற்களைக் கொண்டு அவன் அன்று நம்மிடங் கொண்ட அன்பிலே அணுவளவும் குறையவில்லை என்றே தெரிகின்றது. ஆதலால் அவன் செய்த குற்றத்தை நாமும் மறக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும்; இதுதான் நமது பெருந்தன்மைக்கு அழகு; நமது கற்புடைமைக்கும் ஏற்றது. நாமும் பெய்யும் நெய்யை ஏற்றுக் கொள்ளும் தீயைப் போல அவன் அன்புடன் அனுப்பிய தூதை ஏற்றுக் கொள்வோம். நம்முடைய அன்பை அறிவிக்கும் தூதையும் அவனிடம் அனுப்புவோம். ‘நீ எம்மை மணந்த காலத்தில், நாம் உன்னிடம் எத்தகைய அன்பு கொண்டிருந்தோமோ அத்தகைய அன்பு இன்றும் எம்மிடம் உண்டு; அந்த அன்பிலே எள்ளளவும் குறைந்து விடவில்லை ’, என்ற சொற்களை நாம் தூதாக அனுப்புவோம். அன்புடன் தூதனுப்பியவனுக்கு நாம் காட்டும் மதிப்பும் அன்பும் இதுதான்’. இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறினாள். தலைவி தன் காதலனிடம் கொண்டுள்ள மாறாத அன்பை இவ்வாறு சொல்லின் மூலம் தெரிவித்தாள். இந்த நிகழ்ச்சியை அறிவிப்பதே இப்பாடல். பாட்டு புல் வீழ் இற்றிக் கல்இவர் வெள்வேர் வரை இழி அருவியின் தோன்றும் நாடன்; தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று; வாழி! தோழி! நாமும் நெய்பெய் தீயின் எதிர்கொண்டு, தான்மணந் தனையம், என விடுகம் தூதே. பதவுரை:- வாழி தோழி. புல் வீழ் இற்றி- சிறிய விழுது களையுடைய இற்றி மரத்தின். கல் இவர்- மலைப் பாறைகளில் படர்ந்திருக்கின்ற. வெள்வேர்- வெண்மையான வேர். வரை இழி அருவியின் - மலையிலிருந்து பக்கத்திலே வழிந்து விழுகின்ற அருவி நீரைப் போல். தோன்றும்- எட்டியிருப்பவர்களுக்குக் காணப்படுகின்ற. நாடன்- நாட்டையுடைய தலைவன், தீது இல்- தனது குற்றமற்ற. நெஞ்சத்துக் கிளவி- நெஞ்சிலே உள்ள உண்மையன்பைத் தெரிவிக்கும் சொற்களைத் தாங்கிய தூது. நம்வயின் வந்தன்று- நம்மிடம் வந்தது. நாமும்- ஆதலால் நாமும். நெய்பெய்தீயின்- நெய்யை ஊற்றிய நெருப்பைப் போல, எதிர் கொண்டு- அத்தூதை ஏற்றுக் கொண்டு. தான் மணந்த அனையம்- அவன் எம்மை மணந்த காலத்தில் எவ்வளவு அன்புடன் இருந்தோமோ அத்தகைய அன்புடன் இன்றும் இருக்கின்றோம். என- என்று நம் நிலையை விளக்கி. விடுகம் தூது- தூது அனுப்புவோம். ஏ- அசை. கருத்து:- தலைவன் குற்றத்தை மன்னிப்போம்; அவன் வரவை ஏற்றுக் கொள்வோம். விளக்கம்:- இது கபிலர் பாடியது. பரத்தையர்பால் பிரிந்து சென்ற தலைவன், ‘என் அன்பு குறையவில்லை’, என்று தூதனுப்பினான். தலைவியும் அத்தூதை ஏற்றுக் கொண்டு தன் அன்பையும் அவனுக்கு அறிவிக்க வேண்டும் என்று தோழியிடம் உரைத்தாள். குறிஞ்சித்திணை. வீழ்- விழுது. இற்றி - ஒரு வகை மரம். கிளவி- சொல். நெய்யை ஏற்றுக் கொள்ளும் தீயைப் போல தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறப்பட்டிருக்கும் உவமை சிறந்த கருத்துள்ளது. நெய்யும் தீயும் இரண்டறக் கலக்கும். நெய்யால் தீ நன்றாகச் செழித்துக் கொழுந்து விட்டு எரியும்; தலைவனும் நாமும் இரண்டறக் கலப்போம்; அவனைத் தழுவிக் கொள்வதால் நம் இளைப்பு நீங்கி வளர்ச்சியடைவோம் என்ற கருத்தைக் கொண்டது இவ்வுவமை. காதலன்- காதலி இருவரும் தங்கள் அன்பிலே குறைய வில்லை என்ற கருத்தைக் கொண்டது இச்செய்யுள். சேவலே நீ செத்துப் போ பாட்டு 107 நமது நன்மைக்கு- இன்பத்திற்கு- இடையூறாய் இருப்பவர் களின்மேல் நமக்குக் கோபம் வருவது இயல்பு. அவர்கள் யாரா யிருந்தாலும் சரி, நமது நல்வாழ்வை நாசமாக்கத் துணிவார் களானால் அவர்களை வாயார வைதாவது நமது ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளுவோம். சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நமக்கு மட்டுமா? எல்லா உயிர்களிடமும் இந்த இயற்கைக் குணம் உண்டு. விலங்கு, பறவை முதலிய பிராணிகளும் தமக்கு இடையூறு செய்கின்றவர்களைத் தம்மால் முடிந்தவரையிலும் எதிர்க்கும். வாழ நினைக்கும் எவரும் இவ்வாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வது இயற்கை. இந்த இயற்கையை அடிப் படையாகக் கொண்டு எழுந்த பாடல்களில் இதுவும் ஒன்று. பொருள் தேடப் போயிருந்த கணவன் திரும்பி வந்தான். நீண்டநாள் பிரிந்திருந்த அவன் இன்றுதான் வந்தான். தான் சென்ற காரியத்திலும் சிறந்த வெற்றி பெற்றுத் திரும்பினான். அவனும் தன் மனைவியைக் கண்டு களிக்கவேண்டும் என்னும் காதல் அவனைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வர வந்து சேர்ந்தான். அவன் காதலியும் என்று காண்பேன் என் காதலனை என்று காத்துக் கிடந்தவள் இன்று அவனைக் கண்டவுடன் காதலால் தன்னை மறந்தாள். நீண்ட நாட்கள் பிரிந்து கிடந்த இரு காதலர்கள் மீண்டும் ஒன்று சேரும் போது அவர்கள் அடையும் ஆனந்தத்தைப் பற்றிப் பேசுவதற்குச் சொற்கள் இல்லை; ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்று தான் சொல்ல முடியும். அவர்கள் இருவரும் ஒன்று கூடியிருந்தனர்; இரவுப் பொழுது போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தனித்தனியே பிரிந்திருக்கும் போது இரவுப் பொழுது மிகவும் நீளமாக இருந்தது. அவர்கள் கூடியிருக்கும் இன்றோ இரவுப் பொழுது மிகவும் சுருங்கி விட்டது போல இருந்தது; இரவு போயிற்று. பகல் வந்தது என்பதை அறிவிக்கச் சேவல் கூவிவிட்டது. இந்தச் சேவலின் முழக்கத்தைக் கேட்டவுடன் தலைவிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. அன்பனும் தானும் அனுபவிக்கும் இன்பத்திற்குத் தடையாயிருப்பது அந்த அறிவற்ற சேவல் காரணம் என்று கருதினாள். ஆதலால் தன்னை எழுப்பிய சேவலை அவள் சபிக்கத் தொடங்கினாள். தன் இன்பத்திற்கு இடையூறாகக் குறுக்கே வந்த அச்சேவலை ‘நீ செத்துப் போ’ என்று ஆத்திரத்தோடு சபித்தாள். ‘ஏ சேவலே! உன் உச்சியிலே கொண்டையைப் பார்த்தால் அழகாகத்தான் இருக்கின்றது; செங்காந்தள் பூங்கொத்தைப் போலச் சிவப்பாகத்தான் காணப்படுகின்றது. பார்வைக்கு மட்டும் இத்தகைய அழகைக் கொண்டிருக்கின்ற நீ, செய்யும் காரியம் சிறிதும் நன்றாக இல்லை. மிகவும் கொடூரமானது உன் செயல். என்னுடைய காதலன் - நீண்ட நாட்களாக என்னைப் பிரிந்திருந்த காதலன் -புதிய வருவாய்களையுடைய நீண்ட நீர்வள முள்ள ஊரின் தலைவன்- இன்றுதான் வந்து சேர்ந்தான். அவனுடன் சேர்ந்து இன்பத்துடன் தூங்கிய என்னை உன் கொடுங்குரலால் கூவிஎழுப்பிவிட்டாய்! நான் நுகர்ந்த இன்பத்தை நாசமாக்கி விட்டாய் என்னுடைய இன்பத்திற்கு உலைவைத்த நீ நாசமாய்ப் போ! இந்த உலகை விட்டே ஒழிந்து போ! நள்ளிருளிலே இல்லத்திலே எலி பிடிக்கத் திரிந்து கொண்டிருக்கும் அந்தப் பூனைக் குட்டிக்கு இரையாகிச் செத்துப் போ. இவ்வாறு தன் இன்பத்திற்கு இடையூறாயிருந்த சேவலைச் சபித்தாள் அவள். அந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு குவிஇணர்த் தோன்றி ஓண்பூ அன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்! நள் இருள்யாமத்து இல்எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்கு இரையாகிக் கடுநவைப் படீஇயரோ நீயே! நெடுநீர் யாணர் ஊரனொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பி யோயே! பதவுரை:- குவியிணர்த்தோன்றி- குவிந்த கொத்துக்களை யுடைய செங்காந்தளின். ஒண்பூ அன்ன- ஒளிபொருந்திய மலரைப் போன்ற. தொகு செந்நெற்றி- குவிந்திருக்கின்ற சிவந்த கொண்டையையுடைய. கணம் கொள் சேவல்- கூட்டம் கொண்ட சேவலே. நெடுநீர்- ஆழமான நீரின் உதவியால் கிடைக்கும். யாணர் ஊரன்- புதிய செல்வங்களையுடைய ஊரின் தலைவனாகிய. தன்னொடு வதிந்த- என் காதலனுடன் சேர்ந்து அனுபவித்த. ஏம இன்துயில்- இன்பத்தைத் தரும் இனிய தூக்கத்திலிருந்து. எடுப்பியோயே- என்னை எழுப்பிவிட்ட சேவலே. நள் இருள் யாமத்து- நடுராத்திரிப் பொழுதிலே. இல் எலி பார்க்கும்- வீட்டினுள் எலி பிடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும். வெருகு பிள்ளைக்கு- பூனைக் குட்டிக்கு. அல்கு இரையாகி- சில நாள் வைத்துண்ணும் இரையாகி. நீ கடு நவைப் படீயர்- நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக. கருத்து:- என் இன்பத்துயிலைக் கெடுத்த அந்தச் சேவல் அழிக. விளக்கம்:- இது மதுரைக் கண்ணனார் என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்பி வந்தான். அவனுடன் மனைவி படுத்து இன்பத்துடன் தூங்கினாள். பொழுது விடிந்தது. சேவல் கூவிற்று. அது அவள் இன்பத்திற்கு இடையூறா யிருந்ததால் அச்சேவலை வைதாள். தலைவி கூற்று. மருதத்திணை. ‘குவியிணர்த் தோன்றி ஒண்பூ அன்னதொகு செந்நெற்றி கணங்கொள் சேவல்! நெடுநீர் யாணர் ஊரன் தன்னோடு வதிந்த ஏம இன்றுயில் எடுப்பியோயே! நள் இருள் யாமத்து இல் எலி பார்க்கும் வெருகு பிள்ளைக்கு அல்கு இரையாகி நீ கடுநவைப் படீஇயர்’ என்று பதங்கள் மாற்றப்பட்டன. அரோ, ஏ அசைச் சொற்கள். தோன்றி- செங்காந்தள். வெருகு- பூனை. அல்கு இரை- சிலநாள் தங்கியிருக்கும் இரை. கடுநவை- கடுந்துன்பம், சாவு. ஏமம்- இன்பம். கோழியின் கொண்டைக்குவ் செங்காந்தள் மலர்க் கொத்து உவமை, பொழுது இயற்கையாக விடிந்தது. அது கண்டு கோழி கூவிற்று. கோழியினால் தான் பொழுது விடிந்தது என்று எண்ணித் தலைவி இவ்வாறு சேவலைக் கடிந்தாள். ஆசையும், ஆத்திரமும் அறிவை மறைத்ததால் சேவலின் மேல் சினங் கொண்டு சபித்தாள். ஆசையும் ஆத்திரமும் அறிவுக்கு முட்டுக்கட்டை என்பதை இதனால் காணலாம். கார்காலம்- தலைவியின் சான்றுகள் பாட்டு 108 ஒவ்வொரு பருவ காலத்திலும் பல இயற்கை நிகழ்ச்சிகள் உண்டு; அந்த இயற்கை நிகழ்ச்சிகளைக் கொண்டுதான் அது என்ன காலம் என்பதை எடுத்துச் சொல்ல முடியும். கார் காலம் என்றால் வானத்திலே மேகங்கள் கூடி இடி முழக்கம் செய்து மாரியைப் பெய்யும் காலம் என்று மட்டும் தீர்மானித்துவிட முடியாது. இவ்வாறு தீர்மானிப்பது சில சமயங்களில் தவறாக முடியும். வேனிற் காலத்திலும் சில சமயங்களில் மழை பெய்வதுண்டு. வேனிற் காலத்தில் மழை பெய்யும் போதும் வானத்திலே மேகங்கள் வட்டமிடும்; இடியிடிக்கும்; மழை பெய்யும்; இக்காரணங் கொண்டு அக்காலத்தைக் கார்காலம் என்று முடிவு செய்யலாமா? கூடாது அன்றோ. உண்மையான கார்காலம் இன்னதென்பதை அக்காலத்திற் குரிய இயற்கை நிகழ்ச்சிகளால் தான் அறிய முடியும்; அந்த இயற்கை நிகழ்ச்சிகளில் சிறப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. ஒரு தலைமகள்; அவளுடைய கணவன் வேறு வேலையாக வெளியிலே போயிருக்கின்றான். மாலைக் காலத்திலே வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனான். தலைவியும் அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றாள். காதலன் வருகின்றானா, வருகின்றானா என்று தெருவாசலை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைக் காணவில்லை. அது மாலைக்காலம்; கார்காலமுங்கூட காதலனைக் காணாமல் அவள் துன்புற்றாள். துன்பம் அடைகின்றவர் தன் துன்பத்தைத் தன்பால் அன்புள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டால் சிறிது ஆறுதல் அடைவர். இது இயற்கை. ஆதலால் அத்தலைவி அந்தக் கார்காலத்து மாலையிலே நடக்கும் இயற்கை நிகழ்ச்சியை எடுத்துத் தன் தோழியிடம் கூறினாள். அதன்மூலம் தன் மனத்தில்உள்ள வேதனையைச் சிறிது மாற்றிக் கொண்டாள். தோழியே! நாம் வாழ்வது சிற்றூர்; இதனை அடுத்துள்ள மலையைப் பார்; அதன்மேல் மேகங்கள் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது வெளியிலே மேயச் சென்றிருந்த பசுக்கள் எல்லாம் திரும்பி வருகின்றன. மாலைக் காலத்திலே தம்மை எண்ணிக் கத்தும் கன்றுகளின் துன்பத்தையும் ஆவலையும் தணிக்கும் அன்புடன் திரும்பி வருகின்றன. இந்தக் காட்டைப் பார்; இந்தக் காட்டின் நிலம் செவ்வல் நிலம்; அதாவது செம்மண் பூமியிலே இந்தக் காடு வளர்ந் திருக்கின்றது. இந்தக் காட்டிலே பசுமையான இலைகள் அடர்ந்த முல்லைக் கொடியிலே வெண்மையான மலர்கள் பூத்திருக்கின்றன. செந்நிலத்தோடு வெண்மையான மலர்கள் காணப்படும் காட்சி செவ்வானத்திலே வெண்மையான நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல் காணப்படுகின்றது. இத்தகைய அழகுடன் முல்லை மலர்கள் சிரிக்கின்றன. பசுக்கள் கன்றை நினைத்துத் திரும்புவது, இது மாலைக் காலம் என்பதைக் காட்டுகின்றது. முல்லைக் கொடிகள் பூத்து இருப்பது இது கார்காலம் என்பதைக் காட்டுகிறது. அவருள்ள இடத்திலும் இந்த நிகழ்ச்சிகளை அவர் காணாமல் இருக்க முடியாது; கண்டும் அவர் இன்னும் திரும்பவில்லை. தன் கன்றை நினைத்துக் காதலுடன் திரும்பும் இந்தப் பசுக்களுக்குள்ள இரக்கங்கூடவா அவரிடம் இல்லாமற் போய் விட்டது. அவர் இல்லாமல் என்னால் தனித்திருக்க முடியாது; என்னால் உயிர் வாழ்வும் முடியாது. இவ்வாறு அத்தலைவி தன் துக்கத்தைத் தோழியிடம் கூறினாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாட்டு. பாட்டு மழை விளையாடும் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயின் படரப்; புறவில் பாசிலை முல்லை ஆசில் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று; உய்யேன் போல்வல் தோழி யானே. பதவுரை:- தோழி மழை விளையாடும்- மேகங்கள் கூடி விளையாடிக் கொண்டிருக்கின்ற. குன்று சேர் சிறுகுடி- குன்றின் பக்கத்திலே உள்ள இந்தச் சிற்றூரிலிருந்து. கறவை- வெளியே மேய்வதற்குப் போயிருந்த பசுக்கள் கன்று வயின் படர- தம் கன்றுகள் இருக்கும் இடத்தை நோக்கித் திரும்பவும். புறவில்- காட்டில். பசு இலை முல்லை- பசுமையான இலைகளை யுடைய முல்லைக் கொடிகளின். ஆசு இல் வான்பூ- குற்றமில்லாத வெண்மையான மலர்கள். செவ்வான்- செவ்வானத்திலே உள்ள நட்சத்திரங்களின். செவ்வி கொண்டன்று- அழகையும் கொண்டிருக் கின்றன. யான் உய்யேன்- இக்காலத்திலும் அவர் திரும்பவில்லை ஆதலால் நான் இனி உயிர் வாழ மாட்டேன். கருத்து:- கார் காலம் வந்துவிட்டது; இனி நான் தலை வரைப் பிரிந்து உயிர் வாழ முடியாது. விளக்கம்:- இது வாயிலான் தேவன் என்னும் புலவர் பாட்டு. கார் காலத்தைக் கண்ட தலைவி, “தலைவன் இன்னும் வரவில்லை; இனி என்னால் உயிர் வாழமுடியாது” என்று தன் தோழியிடம் கூறியது. முல்லைத்திணை. இறுதியடியில் உள்ள தோழி என்பதை முதலிலும், ‘யான் உய்யேன்’ என்று மாற்றியும் பொருள் சொல்லப்பட் டது. கறவை- கறக்கும் பசு; பாற் பசு என்றும் கூறுவர். புறவு- முல்லை நிலம்; காடு. ஆசு- குற்றம். வான்பூ - வெண்மையான மலர்; சிறந்த மலர் என்றும் கூறலாம். போல்வல்; ஏ; அசைச் சொற்கள். செந்நிலத்திலே முல்லைமலர் பூத்திருப்பதற்கு நட்சத் திரங்கள் தெரியும் செவ்வானம் உவமை. நயமுடன் நவிலுதல் பாட்டு. 109 தன்னைக் காட்டிலும் உயர்ந்தவரிடத்திலே ‘நீங்கள் இதைச் செய்யுங்கள்’ என்று சொல்லுவது ஏற்காது. ‘நாம் இன்னது செய்ய வேண்டும்’ என்று அவர்கள் அறியும்படி அன்புடன் கூறுவதே ஏற்றது. இதுவே அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கும் முறையாகும். ஒரு செய்தியை நேரடியாகச் செய்யாமல் குறிப்பாகக் கூற வேண்டுமானால் அதற்குத் திறமை வேண்டும்; நுட்பமான அறிவும் வேண்டும். ஆழ்ந்த சிந்தனையும் அறிவும் உள்ளவர்களால் தான் இப்படி நயமாகப் பேச முடியும். இப்படிப் பேசும் திறமை- அதாவது ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சாடை பேசும் திறமை ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகமாக உண்டு. இதை மெய்ப்பிக்கும் பாடல்களிலே இதுவும் ஒன்றாகும். ஒரு தலைவன்; அவன் தன் தலைவியை நாள்தோறும் சந்திக்கின்றான். ஆனால் அவர்களுடைய சந்திப்பு மறைவில் தான் நடக்கின்றது. இன்னும் வெளிப்படையாக அவர்களுக்குத் திருமணம் நடக்கவில்லை. களவுக் காதல் மணந்தான் நடந்து கொண்டிருக் கின்றது. தலைவியின் தோழி மிகவும் கருத்துள்ளவள்; தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள கள்ள நட்பு வெளிப்படுவதற்கு முன்பு அவர்களுக்குத் திருமணம் நடந்துவிட வேண்டும் என்பது அவள் எண்ணம். தலைவன் தான் தலைவியை மணப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். தலைவனைப் பார்த்து, ‘நீ இவளை விரைவிலே மணந்து கொள்’ என்று சொல்லத் தோழிக்கு விருப்பம் இல்லை. குறிப்பு மொழியாலேயே அவனுக்கு இதைக் கூற வேண்டும் என்று முடிவு செய்தாள். ஒரு நாள் தலைவன், தலைவியைச் சந்திப்பதற்காக வந்திருக் கின்றான். அவன் வழக்கம் போல் தான் வந்து நிற்கும் வேலிக்குப் புறத்திலே வந்து நின்றான். அதைக் கண்டாள் தோழி. அவனைச் சந்திக்கச் செல்லும் தலைவியைப் பார்த்துச் சில மொழிகளைக் கூறுகின்றாள். தான் உரைக்கும் சொற்கள் மறைவில் நிற்கும் தலைவன் காதுகளில் விழும்படி கூறுகின்றாள். ‘தலைவியே! உன்னைக் காதலித்திருக்கும் தலைவன் இயற்கைச் செல்வத்தை யுடையவன். ஏராளமான இறால்மீன்கள் அவனுக்குக் கிடைக்கின்றன; கடலில் கட்டு மரத்திலே சென்று அவற்றைப் பிடிக்க வேண்டும் என்ற தொல்லை கிடையாது. கடலில் உள்ள பெரிய அலைகளே அந்த இறால் மீன்களைக் கரையிலே கொண்டு வந்து குவிக்கின்றன இத்தகைய இயற்கைச் செல்வத்தையுடைய கடல் துறையை உடையவன் அவன். அவன் உன்னிடத்திலே தன் உயிரையே வைத்திருக்கின்றான்; ஒரு பொழுதும் உன்னை மறந்தறியான்! எப்பொழுதும் உன்னோடு இணைந்திருக்கவே விரும்புகின்றான் ஒரு நாளாவது உன்னை வந்து பார்க்க அவன் தவறுவதே இல்லை. இடியோ, மழையோ, பனியோ, புயலோ அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் நாள்தோறும் உன்னிடம் வருகின்றான். உன்னை மகிழ்ச்சிக் கடலிலே விளையாடச் செய்துவிட்டுப் போகின்றான். அந்த நெய்தல் நிலத் தலைவன், இவ்வாறு நாள்தோறும் உன்னுடன் கூடி அளவளாவினாலும் கூட, உன்னிடம் மாறுபாடு காணப்படுகின்றது. உனது நெற்றியின் அழகு மாறி விட்டது. பசலை படர்ந்துவிட்டது இந்த மாறுதலை ஊரார் கண்டால் பழி சொல்லாமல் இருக்க மாட்டார்கள். உன்னுடைய கள்ள நட்பை இந்த மாறுபாடு வெளிப்படுத்தாமல் இராது. உன்னிடம் தோன்றியிருக்கும் இந்த மாறுதல் மிகவும் இரங்கத்தக்கது; இவ்வாறு சாடை பேசினாள் தோழி. இச்சொல் தலைவன் காதிலே விழ வேண்டும் என்பதற்காகவே பேசினாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப் பாடல். பாட்டு முடக்கால் இறவின் முடங்குபுறப் பெரும்கிளை புணரி இகுதிரை தரூஉம் துறைவன், புணரிய இருந்த ஞான்றும், இன்னது மன்னோ! நன்னுதற் கவினே. பதவுரை:- முடக்கால் இறவின்- வளைந்த காலையுடைய இறால்மீனின், முடங்குபுறம் பெரும் கிளை- வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டத்தை. புணரி இகுதிரை- கடலிலே வீசுகின்ற அலைகள். தரூஉம் துறைவன்- தாமே கரையில் கொண்டு வந்து கொடுக்கின்ற கடற்றுறையையுடைய தலைவன். புணரிய- நாள்தோறும் உன்னுடன் அளவளாவும்படி. இருந்த ஞான்றும்- இருந்த காலத்திலும் கூட, நல்நுதல் கவின்- உன்னுடைய நல்ல நெற்றியின் அழகு. இன்னது- பிறர் பழி கூறும்படி இவ்வாறு மாறுபட்டு விட்டது. மன்- இது மிகவும் இரங்கத்தக்கதுதான். கருத்து:- தலைவன் உன்னை மணந்து கொண்டால் தான் உன்னிடம் காணப்படும் வேறுபாடு நீங்கும். விளக்கம்:- இது நம்பிகுட்டுவன் என்னும் புலவர் பாட்டு. தலைவியை மணந்து கொள்ளாமல் அவளுடன் கள்ள நட்புக் கொண்டு வாழும் தலைவனுக்குத் தோழி கூறிய குறிப்புரை; அவனை மணந்து கொள்ளும்படி அறிவித்தது, தோழி கூற்று. நெய்தல்திணை. தரூஉம்; உயிர் அளபெடைஏ; ஓ; அசைச் சொற்கள். இறவு- இறால் மீன். புறம்- முதுகு, கிளை- கூட்டம். தொகை, இனம். மன் - இரக்கத்தைத் தரும் அசைச்சொல். இனி அவர் வந்துதான் என்ன? பாட்டு. 110 ஒருவருக்கு எப்பொழுது உதவி வேண்டுமோ அப்பொழுது செய்யும் உதவிதான் அருமையானது. அளவிட முடியாத பெருமையும் சிறப்பும் அமைந்தது. ‘காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது; தக்க காலத்திலே செய்த உதவியின் அளவைச் சீர் தூக்கினால் அது இவ்வுலகைக் காட்டிலும் மிகப் பெரியது.’ வேண்டியபோது- தேவைப்பட்டபோது- உதவி செய்வ தில்லை. வேண்டாதபோது உதவி செய்யத் தொடங்குவது இது பசித்தவனுக்குச் சோறு போடாமல், பசியாதவனுக்குப் பால் பாயாசத்துடன் விருந்திடுவதற்குச் சமமாகும். கார் காலத்திலே வந்து விடுகிறேன் என்று ஒரு காதலன் தன் காதலியிடம் வாக்களித்து விட்டுப் போனான். அவன் அளித்த வாக்குறுதியின்படி வந்து சேரவில்லை. நல்ல கார் காலம். மழையும் சோவென்று பெய்கின்றது; வாடைக் காற்றும் சீறு சீறென்று சீறுகின்றது. இதனால் தலைவி பெருந்துன்பம் அடைந்தாள். தன்னை விட்டுப் பிரியும்போது அவன் அளித்த அந்த வாக்குறுதியை நினைத்து நினைத்து ஏங்கினாள். அவளுடைய துன்பமும் ஏக்கமும் அவளுடைய உள்ளத்திலே ஒரு வெறுப்பை உண்டாக்கி விட்டன. இந்தச் சமயத்திலே வந்து காப்பாற்றாத அவர் இனி வந்தால்தான் என்ன? வராவிட்டால்தான் என்ன? என்பதுதான் அவள் நெஞ்சிலே எழுந்த வெறுப்பு. இந்த வெறுப்பை அவள் தன் தோழியிடம் உரைக்கின்றாள். ‘தோழியே இந்தக் கார்காலத்தைப் பார்! இந்தக் கார் காலத்திலே இந்த வாடைக் காற்று அடிக்கும் கூத்தைப் பார்! நீரிலே உள்ள நீலத்தின் மொட்டுகளை மலரச் செய்கின்றது. புதரிலே, மயிற்பீலியின் கண்களைப் போலக் கருவிளை மலர்கள் தாமாகவே மலர்ந்திருக்கின்றன. அந்த மலர்களை ஒரு நிலையில் நிற்காமல் ஆட்டி அசைக்கின்றது. நுண்ணிய முட்களையுடைய ஈங்கை மரத்திலே மலர்கள் பூத்திருக்கின்றன; அந்த மலர்கள் நல்ல நிறமும், நடுவே துய்யும் உடையன; அந்த மலர்களை உதிரும்படி செய்கின்றது. இப்படிக் குளிர்ந்து வீசும் வாடைக்காற்றால் என் பற்கள் தாளம் போடுகின்றன; நானும் உடல் நடுங்குகின்றேன்; துன்பம் தாங்க முடியாமல் தவிக்கின்றேன். அவருள்ள இடத்திலும் இந்த வாடைக்காற்று வீசாமல் இருக்காது. நீரிலே நீலோற்பலத்தை மலரச்செய்து, புதரிலே கருவிளை மலரை ஆட்டி அசைத்து, மரத்திலே உள்ள ஈங்கை மலர்களை உதிர்க்கின்ற இவ்வாடைக்காற்று என்னைப் பெரும் பாட்டுக்கு ஆளாக்கும் என்பதை அவர் அறியவில்லை; அறிந்தால் அவர் இந்நாள் இங்கே வந்திருப்பார். இத்தகைய அன்புணர்ச்சியில்லாத அவர் இனி வரா விட்டால் தான் என்ன? அல்லது வந்தால்தான் என்ன? அவருக்கும் எனக்கும் இனி என்ன உறவு வேண்டியிருக்கின்றது? அவர் வருவதற்கு முன் நான் இறந்து படுவது உறுதி. இவ்வாறு தன் துன்பத்தை எடுத்துக் கூறினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாட்டு. பாட்டு வாரார் ஆயினும், வரினும் அவர் நமக்கு யாரா கியரோ தோழி! நீர நீலப்பைம் போது உளரிப், புதல பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி நுண்முள் ஈங்கைச் செல்அரும்பு ஊழ்த்த வண்ணத்தூய்ம் மலர் உதிரத் தண்ணென்று இன்னாது எறிதரும் வாடையொடு என் ஆயினள் கொல்? என்னா தோரே பதவுரை:- தோழி! நீர்- தண்ணீரிலே உள்ள. நீலப்பைம் போது- நீலோற்பலத்தின் பசுமையான மொட்டுகளை. உளரி- மலரச் செய்து. புதல - புதர்களிலே உள்ள. பீலி ஒண்பொறி- மயிற்பீலியின் ஒளி பொருந்திய கண்களைப் போன்ற. கருவிளை ஆட்டி- கருவிளை மலர்களை அசைத்து. நுண் முள் ஈங்கை- சிறிய முட்களையுடைய ஈங்கையின். செவ் அரும்பு ஊழ்த்த - நல்ல அரும்புகள் மலர்ந்த. வண்ணம் துய்மலர்- நல்ல நிறத்தையும். தூய்யையும் உடைய மலர்களை. உதிர- கீழே உதிரும்படி. தண் என்று -மிகுந்த குளிர்ச்சியுடன். இன்னாது எறி தரும்- துன்பத்தையும் தந்து வீசுகின்ற. வாடையொடு- இந்த வாடைக்காற்றினால். என்னாயினள் கொல்- அவள் என்ன ஆயினளோ; என்னாதோர்- என்று எண்ணாத அவர். வாரார் ஆயினும்- இனி வராமல் இருந்து விட்டாலும். வரினும்- அல்லது வந்தாலும் அவர் நமக்கு யார் ஆகியர்- அவர் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார்? நாம் உயிரோடு இருந்தால்தானே அவர் நம்மோடு உறவு கொண்டாடுவார்? கருத்து:- தலைவர் இந்தக் கடுமையான கார் காலத்திலும் வரவில்லை; ஆதலால் நான் இறப்பேன். விளக்கம்:- இது கிளிமங்கலங்கிழார் என்னும் புலவர் பாட்டு. பிரிந்த தலைவன் கார் காலத்திலும் வரவில்லை. அது கண்டு வருந்தினாள் தலைவி. அவள் தன் துன்பத்தைத் தோழியிடம் உரைத்தாள். முல்லைத்திணை. ‘வாரார்’ ஆயினும், வரினும், அவர் நமக்கு யார் ஆகியர் என்னும் முதற்பகுதியை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப் பட்டது. ஓ, ஏ; அசைச் சொற்கள். பொறி- புள்ளி. மயில்தோகையின் நடுவில் உள்ள புள்ளிகளைக் கண்கள் என்பர். துய்- மலரின் இடையிலே பஞ்சுபோல் இருக்கும் ஒரு பொருள். ‘நான் உயிரோடிருந்தால் அவர் வந்தால் இன்புறுவேன்; தக்க பருவத்தில் அவர் வராமையால் நான் இறப்பேன். நான் இறந்த பின் அவர் வந்தால் என்ன? வராவிட்டால் தான் என்ன’ என்று மனமொடிந்து கூறினாள் தலைவி. தலைவியின் துக்கமிகுதியை உணர்த்தும் பாடல் இது. இதில் வாடைக் காற்றின் செயல்படிப்படியாக வர்ணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மலராத மொட்டை மலர்த்துகின்றது; மலர்ந்தபூவை ஆட்டி அழைக்கின்றது; முதிர்ந்த பூவை உதிர்க்கின்றது; இவை வாடைக்காற்றின் செயல் இதைத் தலைவன் காணவேண்டும் பாட்டு 111 பெண்ணைப் பெற்றவர்களுக்குக் கவலை அதிகம். இளமைப் பருவத்திலே இன்ப விளையாட்டுக்களால் பெற்றோர்க்குப் பெரு மகிழ்ச்சியளிப்பது குழந்தைகளின் இயல்பு. ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளுக்கு வயதேறிவிட்டால் அவர்களைப் பற்றிப் பெற்றோர்களின் உள்ளத்திலே கவலை உண்டாவது இயல்பு. அதிலும் பெண்கள் பருவம் அடைந்துவிட்டால், அவர்களைப் பற்றிய கவலை இன்னும் அதிகரிக்கும். பெண்ணுக் கொரு நீதி ஆணுக்கொருநீதி என்ற வழக்கம் உள்ள சமுதாயத்தில் இது இயற்கை. இந்த இயற்கையைப் பழந்தமிழ்ப் பாடல்களிலே பரக்கக் காணலாம். அவள் தக்க பருவமடைந்தவள்; அவளாகவே அன்புள்ள காதலனையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாள். அவளுக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தோழிக்கு மட்டுந்தான் தெரியும். ஒரு நாள் பெண்ணின் நற்றாய், செவிலித்தாய், கைத்தாய் முதலியவர்கள் தங்கள் உள்ளங் கவர்ந்த மகளை உற்று நோக்கினர். அவளுடைய நடையிலே மாற்றம்; பார்வையிலே மாற்றம்; பேச்சிலே மாற்றம்; முகத்திலே மாற்றம்; உடம்பிலே மாற்றம் அவற்றைக் கண்டு திகைத்தனர். இம்மாற்றத்திற்குக் காரணம் காணமுடியாமல் மனம் நொந்தனர். அவளையே கேட்டுப் பார்த்தனர். அவள் ஒன்றும் சொல்லாமல் பேந்தப் பேந்த விழித்தாள். அவளுடைய செவிலித்தாய் தன் மகளின் உடம்புக்கு ஏதோ நோய்வந்து விட்டதென்று நினைத்தாள். உடனே வேலனை அழைத்து அவளைப் பற்றிய செய்தியைக் கேட்டறிந்து அவள் நோய்க்குப் பரிகாரம் தேட எண்ணினாள். அவ்வாறு செய்வதென்று அவள் முடிவும் செய்து விட்டாள். இதை அறிந்தாள் தோழி. அவளுக்குத் தெரியும் உண்மை. தலைவியின் உடலுக்கு ஒரு கோளாறும் இல்லை; அவள் உள்ளத்தில் நிறைந்துள்ள காதல் உணர்ச்சிதான் மாறுதலுக்குக் காரணம் என்பது தோழிக்குத் தெரியும். அவளை அவள் தலைவன் மணம் பேசி வரைந்து கொண்டால் எல்லாம் சரிப்பட்டுப் போய்விடும். வேலன் வருவது, வெறி கொண்டு ஆடுவது, பலியிட்டுப் பூசை போடுவது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் இடமில்லாமற் போகும். ஆதலால் அவளை மணம் புரிந்து கொள்ளும்படி தலைவனை வற்புறுத்த வேண்டும் என்று நினைத்தாள் தோழி. தோழி தன் கருத்தைத் தலைவனிடம் தெரிவிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தாள். அவன் தலைவியைச் சந்திக்க வந்தான். கொல்லையின் புறத்திலே வந்து நின்றான். அப்பொழுது அவன் காதிலே நன்றாக ஏறும்படி தோழி பேசுகின்றாள். தலைவியைப் பார்த்துப் பேசுகின்றாள். ‘தோழியே உன்னுடைய தோற்றத்திலே மாற்றத்தைக் கண்ட அன்னை வேலனை விளித்துக் குறிகேட்பதென்று முடிவு செய்து விட்டாள். வேலனிடம் அவள் என் மகளின் மெலிவுக்குக் காரணம் என்னவென்று கேட்பாள். அவன் “இவளுடைய மெல்லிய தோள்கள் இளைக்கும் படியான துன்பத்திற்குக் காரணம் வெற்றி பொருந்திய நீண்ட வேலையுடைய முருகக் கடவுள்தான்” என்பான். அன்னையும், வேலன் கூறிய காரணந்தான் உண்மையென்று உணர்வாளாயின் நம் இல்லத்திலே பல வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறும்; அவை உண்மையறிந்த நமக்கும் பிறர்க்கும் நகைப்புக்கிடமான நிகழ்ச்சிகளாக இருக்கும். பெண் யானைகள் தங்கள் கைகளை மறைத்துக் கொண்டு படுத்துக்கிடப்பது போன்ற குண்டுக்கற்கள் எங்கும் பரந்து கிடக்கின்ற மலை நாட்டையுடைய தலைவன் அச்சமயம் வரவேண்டும். நம் இல்லத்தில் உள்ளோர் நடத்தும் நகைப்புக் கிடமான செயல்களைச் சிறிது காணும் பொருட்டு அவன் விரைந்து வரவேண்டும்” என்று உரையாடினாள், தோழி. தலைவன், தலைவியை விரைவில் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்ள வேண்டும்; மணம் புரிந்து கொள்ளுகிறேன் என்று சொல்லிக் கொண்டே இன்னும் காலங்கடத்தக்கூடாது, என்ற எண்ணத் துடனேயே இவற்றைச் சொன்னாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். பாட்டு மென்றோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும்; அன்னையும் அதுவென உணரும் ஆயின், ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந்து அன்ன கேழ் இரும் துறுகல் கெழுமலை நாடன், வல்லே வருக! தோழி நம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே. பதவுரை:- தோழி! மெல்தோள் நெகிழ்ந்த- உன்னுடைய மெல்லிய தோள்களை இளைக்கும்படி செய்த. செல்லல்- துன்பத்திற்குக் காரணம். வென்றி நெடுவேள்- வெற்றி பொருந்திய தீண்ட வேலையுடைய முருகன்தான். என்னும் வேலன்- என்று கூறுவன் வெறியாடும் வேலன். அன்னையும்- தாயும். அதுவென உணரும் ஆயின்- அது தான் உண்மை யென்று அறிவாளாயின். ஆயிடை- அப்பொழுது. நம் இல்லோர்- நமது வீட்டில் இருப்பவர்கள். பெருநகை- பெரிய நகைப்பிற்கிடமான செயல்களைச் செய்வார்கள். சிறிது காணிய- அவற்றைச் சிறிது பார்ப்பதற்காக. கூழை இரும்பிடி - சிறிய பெண்யானையினது. கைகரந்து அன்ன- கைமறைந்து படுத்திருப்பதைப் போன்ற. கேழ் இரும்துறுகல்- கருநிறமுள்ள பெரிய குண்டுக் கற்கள். கெழு மலை நாடன்- நிறைந்து கிடக்கின்ற மலை நாட்டின் தலைவன். வல்லே வருக- விரைந்து வருவானாக. கருத்து:- தாய் உன்னுடைய வேறுபாட்டை அறிந்தாள் வேலன் மூலம் வெறி எடுக்க முடிவு செய்தாள். இதைத் தலைவன் தெரிந்து கொள்ளட்டும். விளக்கம்:- இது தீன்மதி நாகன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் தலைவியை மணந்து கொள்ளாமல் காலங் கடத்தி வந்தான். அவன் காதிலே விழும்படி, தோழி தலைவியிடம் அவளுடைய மாற்றத்தைத் தாய் அறிந்து கொண்டாள் என்னும் செய்தியைக் கூறினாள். இதைக் கொல்லைப்புறத்திலே வந்து நின்ற தலைவன் உணரவேண்டும் என்னும் கருத்துடன் உரைத்தாள். குறிஞ்சித்திணை. ‘மெல் தோள் நெகிழ்த்த செல்லல், வென்றி நெடுவேள் என்னும் வேலன்; அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடை நம் இல்லோர் பெருநகை சிறிது காணிய கூழை இரும்பிடி கைகரந்து அன்ன கேழ் இரும்துறுகல் கெழுமலை நாடன் வல்லே வருக’ என்று பதங்கள் மாற்றப்பட்டன. செல்லல் - துன்பம். கூழை- சிறிய. கேழ் -நிறம். துறுகல்- குண்டுக்கல். கெழுதல்- நெருங்குதல்; நிறைதல். வல்-விரைவு. வேலன்- முருகனுக்குரிய வேற்படையை ஏந்தியிருப்பவன்; இவன் ஆவேசம் கொண்டு ஆடுவான். இவனை முருகன் பிடித்து ஆட்டுவதாக எண்ணுவர். இவனை வேலன் வெறியாட்டாளன் என்றும் படிமத்தான் என்றும் உரைப்பர். ஊரார் பழிக்கு அஞ்சினேன் பாட்டு 112 அறிவுள்ளவர்கள் தங்கள் குறைகளைக் கண்டவர்களிட மெல்லாம் சொல்ல மாட்டார்கள். தங்கள் நன்மை தீமைகளைத் தமது நன்மை தீமைகளாக எண்ணும் இனிய நண்பர்களிடம் நவில்வார்கள் கண்டவர்களிடம் குறைகளைக் கூறிக் கொள்வதினால் ஒரு பயனையும் காண முடியாது. அன்புள்ளவர்களிடம் உரைப்பதால் மட்டுந்தான் அக்குறைகள் நீங்குவதற்கு வழியேற் படும். இந்த உண்மையை உணர்ந்திருந்தாள் அந்தத் தலைவி. தன்னைக் களவு மணம் புரிந்து கொண்டு காதல் வாழ்வு நடத்தி வரும் தலைவன் இன்னும் அவளை மணந்து கொள்ள ஏற்பாடு செய்யவில்லை. மணந்து கொள்ளுகிறேன், மணந்து கொள்ளுகிறேன் என்று சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டே வருகின்றான். தலைவி, மிகவும் நாணமுள்ளவள்; தனது கள்ளக் காதல் ஊரார்க்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதிலே மிகவும் கவலை யுள்ளவள். தனது கள்ளக் காதலை ஊரார் உணர்ந்தால் பழித்து நகைப்பார்கள். அதனால் தனக்கும் இழிவு, தன் பெற்றோர்க்கும் மனவருத்தம் என்று கவலைப்பட்டாள். அவள் உள்ளத்தில் உள்ள துன்பத்தைத் தன் உயிரனைய தோழியிடம் உரைத்தாள்; தன் கவலையைத் தணிப்பதற்கு அவள் வழி செய்யக் கூடும் என்ற நம்பிக்கையுடனேயே அவளிடம் உரைத்தாள், தலைவியின் வேறுபாட்டை ஊரார் அறிந்து பழி கூறத் தொடங்கிய பிறகே அவள் தன் தோழியிடம் இதைக் கூறினாள். ‘என்னிடம் காமம் காரணமாக வேறுபாடுகள் தோன்றி விட்டன. இதை ஊரில் உள்ளவர்கள் பார்த்துவிட்டனர். என்னைப் பழிக்கவும் தொடங்கிவிட்டனர். அவர்கள் கூறும் பழிமொழி களுக்கு அஞ்சி என் உள்ளத்தை அடக்கிக் கொள்ளுவேனாயின் என்னுடைய காமம் குறைந்து விடும். என்னை ஊரார் பழிக்காமல் இருக்கும் பொருட்டு என் காமத்தை அடியோடு அகற்றி விடுவேனாயின் என்பால் நாணம் ஒன்றுதான் மிஞ்சியிருக்கும். என்னுடைய பெண்மை நலன், ‘கற்பு, அழகு அனைத்தும் அழிந்து போய்விடும். என்னுடைய பெண்மை நலனையும்- அதாவது என்னுடைய அழகையும், இன்பத்தையும்; கற்பையும் முன்பே தலைவர் கவர்ந்து உண்டு விட்டார்; ஒரு சிறிதுதான் நான் உயிர் வாழ்வதால் மிஞ்சியிருக்கிறது. ஓர் ஆண் யானை ஒரு மரக்கிளையை வளைத்து அதில் உள்ள தழைகளைத் தின்று விடுகின்றது. அதன்பின் அந்தக் கிளை முன்பிருந்தது போல் நிமிர்ந்து நிற்கவில்லை. ஆனால் முற்றும் முறிந்து கீழே விழுத்து விடவும் இல்லை. நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கக் கூடிய நிலையில் பட்டுப்போகாமல் இருக்கின்றது. அதைப் போல என்னுடைய பெண் தன்மை தலைவனால் கவரப்பட்டதனால், நான் கன்னிப் பருவத்திலே இருந்த நிலையை அடைய முடியவில்லை. என் பெண் தன்மை அடியோடு அழிந்துவிடாத காரணத்தால் தலைவர் வந்து மணந்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றேன்! மீண்டும் சிறந்து இன்புறலாம் என்ற எண்ணத்துடன் வாழ்கின்றேன்; என்று தன் நிலைமையை எடுத்துரைத்தாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைச் சொல்லுவதே இப்பாடல். பாட்டு கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் எள் அறவிடினே உள்ளது நாணே; பெரும் களிறு வாங்க முரிந்து நிலம்படாஅ நாருடை ஒசியல் அற்றே; கண்டிசின் தோழி! அவர் உண்ட என் நலனே பதவுரை:- தோழி! கௌவை அஞ்சின்- பிறர் உரைக்கும் பழிமொழிகளுக்குப் பயந்தால். காமம் எய்க்கும்- காமம் மெலிந்து விடும். எள் அறவிடின்- பிறர் பழிப்பது ஒழியும்படி அக்காமத்தை விட்டுவிட்டால். உள்ளது நாணே- என்பால் மிஞ்சியிருப்பது நாணம் ஒன்றேதான். அவர்உண்ட என் நலன்- அவர் அனுபவித்த என் பெண்மை நலன். பெரும் களிறு வாங்க- பெரிய யானை தழையைத் தின்னும் பொருட்டு வளைக்க. முறிந்து நிலம் படாது- அதனால் வளைந்து நிலத்தில் படாமல். நார் உடை- பட்டையை உடைய. ஒசியல் அற்று- ஒடிந்த கிளையைப் போன்றதாக இருக்கின்றது. கண்டிசின்- இதைக் கண்பாயாக. கருத்து:- ஊரார் பழிப்புக்குப் பயந்து என் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன். விளக்கம்:- இது ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. ‘என்னை இன்னும் தலைவன் மணந்து கொள்ளவில்லை. ஊரார் பழி தூற்றுகின்றனர். நானும் என் காமத்தை மறைத்து வாழ்கின்றேன். அவன் விரைவில் மணப்பான் என்னும் நம்பிக்கையுடன் வாழ்கின்றேன் என்று தலைவி தன் தோழியிடம் உரைத்தாள். குறிஞ்சித்திணை. ‘தோழி! கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்; எள் அறவிடின் ஏ உள்ளது நாணே; அவர் உண்ட என் நலன் ஏ, பெரும்களிறு வாங்க முரிந்து நிலம்படாஅ நாருடை ஒசியல் அற்றே; கண்டிசின் என்று பதங்கள் மாற்றப்பட்டன. கௌவை- பிறர் கூறும் பழிச்சொல். எள்- எள்ளல்; இகழ்ந்து பேசுதல். ஒசியல்- ஒடிந்த கிளை. படாஅ; உயிர் அளபெடை; ஏ; அசைச்சொற்கள். பெண்மை நலனிழந்து சோர்ந்த தலைவிக்கு ஒடிந்து தொங்கும் மரக்கிளை உவமை. மரக்கிளையை யானை வளைத்து அதன் தழையைத் தின்றது. தலைவியைத் தலைவன் கவர்ந்து அவளுடைய கன்னித் தன்மையை நுகர்ந்தான். ஒடிந்த மரக்கிளை மீண்டும் தழைக்கும். பெண், தன்மையிழந்து வாடியவள் அவனை மணந்தபின் மீண்டும் நலம் பெறுவாள். தழைத்த சோலையிலே தலைவியைக் காணலாம் பாட்டு 113 அவனும் அவளும் புதிய காதலர்கள். அவர்கள் பகற் காலத்தில் கொல்லை, கொடிக் காடுகளில் ஒருவரை ஒருவர் சந்திப்பது வழக்கம். இவர்கள் சந்திப்பதைப் பக்கத்தார் யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் அவர்களிடம் இருந்தது. யாரும் காணாத ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை. அத்தகைய பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத் தலைவியிடமே விட்டுவிட்டான் தலைவன். அவளும் தன் தோழியோடு சேர்ந்து ஆலோசித்தாள். தோழியும் அவளும் சேர்ந்து நன்றாக எண்ணிப் பார்த்து நல்லதோர் இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். தலைவன் தன் காதலியைத் தேடிவரும் நேரத்திலே தோழி தலைவியை அழைத்துக் கொண்டுபோய் அப்புதிய பொழிலிலே நிறுத்தினாள்; தலைவன் வழக்கமாக வரும் இடத்திற்கு வந்து அவனைக் கண்டாள். தலைவியைச் சந்திப்பதற்குத் தேர்ந்தெடுத் திருக்கும் புதிய இடத்தைக் குறித்துக் கூறினாள். ‘இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடம் நல்ல இடம்; காதல் உணர்ச்சியை ஊட்டும் இடம். யாரும் வராத தனியிடம், என்று அந்த இடத்தின் சிறப்பையும், அந்த இடம் எங்கேயிருக்கின்றது என்பதையும் தலைவனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தாள் தோழி. ‘தலைவனே’, ஊருக்குப் பக்கத்தில் உள்ளதுதான் அந்தத் தடாகம்; அந்தப் பொய்கையிலிருந்து கொஞ்சதூரம் போனால் அங்கே ஒரு சிறிய காட்டாறு உண்டு. அந்தக் காட்டாறு பொய்கைக்கு வெகுதொலைவில் இருப்பதாக நினைக்க வேண்டாம்; அந்தக் காட்டாற்றங்கரையிலே ஒரு நல்ல சோலையிருக்கின்றது. அது மரஞ்செடி கொடிகள் செழித்து வளர்ந்திருக்கும் சோலை; அடர்ந்து தழைத்து நிழல் தரும் அழகிய சோலை. அந்தப் பொழிலுக்கு வேறு யாரும் வரமாட்டார்கள். காட்டாற்று நீரிலே இரைதேடும் நாரை ஒன்றுதான் அந்தப் பொழிலிலே வந்து தங்கிக் களைப்பாற்றிக் கொள்ளும். நாங்கள் எங்கள் தலைமயிரைச் சுத்தம் செய்துகொள்ளுவதற்குக் களிமண் எடுப்பதற்காக அங்கே வருவோம். அந்தக் காட்டாற்றில் களிமண் எடுத்துக்கொண்டு திரும்புவோம். சோலைக்குள் வரமாட்டோம். பெரிய பேதையாகிய என் தலைவி அங்கும் வருவாள். ஆதலால் நீ காட்டாற்றங்கரையில் உள்ள அப்பொழிலிலே உன் காதலியை இனிக்காணலாம்’ என்று இவ்வாறு புதிய இடத்தைப் பற்றிக் கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாட்டு பாட்டு ஊர்க்கும் அணித்தே பொய்கை; பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே; இரைதேர் வெண்குருகு அல்லது யாவது துன்னல் போகின்றால் பொழிலே; யாம்எம் கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்; ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே. பதவுரை:- ஊர்க்கும் அணித்தே பொய்கை- ஊருக்கு அண்மையிலேயே இருக்கிறது அந்தக் குளம். பொய்கைக்கு - அந்தக் குளத்திலிருந்து. சேய்த்தும் அன்றே- தூரத்திலே இல்லை. சிறுகான்யாறே.- அந்தச் சிறிய காட்டாறு (அண்மையிலேயே இருக்கின்றது.) பொழிலே- அந்தக் காட்டாற்றங்கரையில் உள்ள சோலை. இரைதேர் வெண்குருகு அல்லது- இரைதேடும் வெண்மையான நாரையைத் தவிர வேறொன்றும். துன்னல் போகின்றது ஆல்- நெருங்கக் கூடியது அன்று. யாம் எம் கூழைக்கு- நாங்கள் எமது தலைமயிருக்குத் தேய்க்கும் பொருட்டு. எருமண் கொணர்கம் - களிமண்ணை எடுத்துக் கொண்டு வருவதற்காக. சேறும்- அங்கே செல்லுவோம். பெரும் பேதை- பெரிய பேதமையுள்ள தலைவி. ஆண்டும் வருகுவள்- அந்த இடத்திற்கும் வருவாள். ஆதலால் அவளை நீ அங்கே காணலாம். கருத்து:- இனிமேல் குளத்திற்கு அருகே காட்டாற்றங் கரையில் உள்ள சோலையிலே, நீ, தலைவியைச் சந்திக்கலாம். விளக்கம்:- இது மார்தீத்தன் என்னும் புலவர் பாட்டு. பகலிலே சந்திக்கும் தலைவனுக்குப் புதிய இடத்திலே சந்திக்கும் படி கூறினாள் தோழி. அந்தப் புதிய இடம் எங்குள்ளது என்பதையும் அதன் இயல்பையும் இன்னதென்று விளக்கிச் சொன்னாள். தோழி கூற்று. மருதத்திணை. ‘பொழிலே’ என்னும் சொல் ‘இரைதேர்’ என்னும் சொல்லுக்கு முன்வைக்கப்பட்டது. ‘பெரும் பேதையே ஆண்டும் வருகுவள்’. என்று இறுதி அடிமாற்றப்பட்டது. ஏ, ஆல், அசை சொற்கள். குருகு- நாரை. துன்னல்- நெருங்குதல். கூழை - பெண்களின் தலைமயிர். எருமண்- கூந்தலை வளர்ப்பதற்கு எருப்போல் பயன்படும் களிமண். இது வண்டல் மண். தலைமயிரில் உள்ள எண்ணெய், சிக்கல் இவை போவதற்காகக் களிமண்ணைத் தேய்த்துக் கொள்ளுவார்கள். இன்றும் கிராமாந் தரங்களில் ஏழை மக்களிடம் இவ்வழக்கம் இருந்து வருகின்றது. களிமண்ணைத் தேய்த்துக்கொண்டு தலை முழுகுவதால், மயிர் வளரும்; நல்ல குளிர்ச்சியுண்டு என்று கூறுகின்றனர். குறிப்பால் அறிவித்தல் பாட்டு. 114 நெய்தல் நிலத்திலே வாழ்கின்றவள் தலைவி. அவள் இருக்கும் இடத்திற்கு வந்து அவளைச் சந்திக்க முடியவில்லை தலைவனுக்கு. ஆதலால், அவன் தோழியின் உதவியால் தான் குறிப்பிட்ட இடத்திலே தலைவியைக் காண விரும்பினான். தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் பிணைப்பைத் தோழி நன்றாக அறிவாள். தலைவனைச் சந்திக்க முடியாமல் தலைவி வருந்திக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியும். ஆதலால் தலைவன் எண்ணத்திற்கு இணங்கினாள். தலைவன் தன்னுடைய தேரிலேறி வந்தான். தோழியைச் சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டு நின்றான். தோழியும் தலைவியைத் தலைவன் குறித்த இடத்திலே கொண்டுவந்து விட்டாள். தலைவி வந்திருக்கும் செய்தியை அறிவிப்பதற்காகத் தலைவன் காத்திருக்கும் இடத்திற்குக் கடுகி வந்தாள். அவனிடம் குறித்த இடத்திலே தலைவி வந்திருக்கும் செய்தியைக் கூறுகின்றாள். ‘தலைவனே நீ குறிப்பிட்ட இடத்திலே உன் காதலியைக் கொண்டு வந்து விட்டிருக்கின்றேன்’ என்று வெளிப்படையாகக் கூறவில்லை. இப்படி வெளிப்படையாகச் சொன்னால் இச்சொல் அக்கம் பக்கத்திலே உள்ளவர்களின் காதிலே கேட்டுவிடும்; தலைவனும் தலைவியும் நடத்தி வரும் களவு மணம் வெளியாகி விடும்; அதனால் பழிச்சொல் ஏற்படும், என்பவற்றையெல்லாம் எண்ணினாள் தோழி. ஆதலால் மிகவும் நயமாகப்- பிறருக்குப் புரியாதபடி- ஆனால் தலைவனுக்கு மட்டும் நன்றாக விளங்கும்படி சொன்னாள். நெய்தல் நிலத்தின் ஒரு பகுதியிலே எனது பதுமையைக் கிடத்தி வைத்து விட்டு நீ இருக்கும் இடத்திற்கு வந்தேன். நல்ல வேலைப்பாடமைந்த தேரையுடைய தலைவனே! எனது அந்தப் பாவை தனியாகக் கிடப்பதனால், ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றை யுடையனவாகிய நாரைகள் குனிய முடியாமல் அண்ணாந்து நடந்து திரியும். அவை என் மகளாகிய அப்பா வையின் நெற்றியை மிதித்துவிடும். அதனால் என் பாவையின் அழகு சிதையும். ஆகையால் யாம் போகின்றோம். அவளை அவள் இடத்திற்குப் போகும்படி நீயே ஏவுவாயாக, என்று கூறினாள். ‘என் தலைவியை அங்கே நிற்க வைத்துவிட்டு வந்தேன்’ என்று சொல்லாமல் ‘என் பாவையை அங்கே கிடத்திவிட்டு வந்தேன்’ என்று கூறியிருக்கும் குறிப்புதான் சிறந்த கவி நயமாகும். பாட்டு நெய்தல் பரப்பின் பாவை கிடப்பி நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க! செல்கம்; செலவியம் கொண்மோ அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என்மகள் நுதலே. பதவுரை:- இயல் தேர் கொண்க!- வேலைப்பாடமைந்த தேரையுடைய தலைவனே. நெய்தல் பரப்பின்- நெய்தல் நிலத்திலே. பாவை கிடப்பி- எனது பாவையைக் கிடத்தி வைத்து விட்டு. நின்குறி வந்தனென் - நீ இருக்கும் இடத்தை அடைந்தேன். அல்கலும்- இரவு வந்தவுடன். ஆரல் அருந்த வயிற்ற- ஆரல் மீனை உண்டு நிறைந்த வயிற்றையுடைய. நாரை- நாரைகள். குனியாமல் நிமிர்ந்து நடப்பதனால். என் மகள் நுதல் ஏ மிதிக்கும்- என் மகளாகிய பாவையின் நெற்றியை மிதித்து அழகைச் சிதைத்து விடும். செல்கம்- ஆதலால் நாம் போகின்றோம். செலவியம் கொண்மோ- நீ அவளைச் சந்தித்த பின் அவளை அவளுடைய இல்லத்திற்குச் செல்லும்படி ஏவுவாயாக. கருத்து:- தலைவியைக் கண்டு கலந்து மகிழ்ந்து விரைவில் அவள் இடத்திற்கு அனுப்புக. விளக்கம்:- இது பொன்னாகன் என்னும் புலவர் பாட்டு தலைவன் குறித்த இடத்திலே தலைவியை நிறுத்திவிட்டு வந்த தோழி தலைவனிடம் கூறியது. குறிஞ்சித்திணை. பெண்கள் தாம் வைத்துப் பாராட்டும் பதுமைகளைப் பழுதுபடாமல் பாதுகாப்பதிலே கருத்துள்ளவர்கள். ஆதலால் தோழி தன் தலைவியை அருமையாகப் பாதுகாப்பவள் என்பதைத் தெரிவிக்கத் தலைவிக்குப் பாவையை ஒப்புக் கூறப்பட்டது. பரப்பு- இடம். கிடப்பி- படுக்க வைத்து. கொண்கன்- தலைவன். வியங்கொள்ளுதல்- ஏவுதல். ‘இயல் தேர் கொண்க! நெய்தல் பரப்பின் பாவை கிடப்பி நின்குறி வந்தெனென். அல்கலும், ஆரல் அருந்த வயிற்ற நாரை, என் மகள் நுதல் மிதிக்கும்; செல்கம். செலவியங் கொண்மோ’ என்று பதங்கள் மாற்றப்பட்டன. ஏ, அசைச் சொல். என்றும் கைவிடாதே! பாட்டு. 115 இயற்கையைத் துருவி ஆராய்ந்து உண்மையை எடுத்துக் காட்டுவதிலேயே தமிழ்ப் புலவர்கள் தலை சிறந்தவர்கள். இதற்கு இப்பாடல் ஒரு கண்ணாடியாக நிற்கின்றது என்று சொல்லி விடலாம். ஒருவனும் ஒருத்தியும் நீண்ட நாட்களாகக் களவு மண வாழ்வு நடத்தி வருகின்றனர். அவர்கள் வெளிப்படையாக மணந்து கொள்ளுவதற்குச் சில இடையூறுகள் குறுக்கே நின்றன. தலைவியின் பெற்றோர் அவளை அவள் விரும்பிய காதலனுக்குக் கட்டிக் கொடுக்கப் பின்வாங்கினர். வேறு வரன் பார்த்துக் கொண்டு மிருந்தனர். இதைத் தலைவியும் விரும்பவில்லை. அவளுடைய தோழியும் விரும்பவில்லை. முதலில் கைப்பிடித்த காதலனைக் கைவிடுவது கற்புக்கு உலை வைப்பதாகும் என்பதை இருவரும் உணர்ந்தனர். தமது பெற்றோர்க்கும், ஊரார்க்கும் தமது உயர்ந்த கற்பை வெளிப்படுத்த வேண்டும் என்று துணிவு கொண்டனர். ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு அவள் பெற்றோர் இணங்கா விட்டால் ஒருவருக்கும் சொல்லாமல் தன் காதலனுடன், அவன் விரும்பிய இடத்திற்குப் புறப்பட்டுப் போய் விடுவது தான் அக்கால வழக்கம். இம் முறையில்தான் தமிழ்ப் பெண்கள் தங்கள் கற்பையும் காதலையும் காப்பாற்றி வந்தனர். இந்தத் தலைவிக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை. தலைவனும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லச் சம்மதித்து விட்டான். இதற்குத் தோழியும் உதவி செய்யத் துணிந்து விட்டாள். குறித்த ஒருநாள் இரவிலே தலைவனும் குறிப்பிட்ட இடத்திலே வந்து நின்றான். தோழியும் தலைவியைக் கூட்டிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள். தன் உயிர் அனைய தலைவியை அத்தலைவனிடம் ஒப்படைத்தாள். தலைவன் கையிலே தலைவியை ஒப்படைத்த தோழி சும்மா போகவில்லை. தலைவியை என்றும் கைவிடாமல் காப்பாற்றும் படி அவனை வேண்டிக் கொண்டாள். அவளுடைய வேண்டுகோள் வெறும் வேண்டுகோள் மட்டும் அன்று. உண்மையை எடுத்துக் காட்டி அறிவுறுத்தும் புத்திமதியாகவும் இருக்கின்றது. ‘அசைந்து கொண்டிருக்கின்ற மூங்கில்கள் உயர்ந்து ஒழுங்காக வளர்ந்திருக்கின்ற- குளிர்ந்த- நறுமணமுள்ள - மலைப் பக்கத்திலே, மான்கள் இலைகளைக் கவர்ந்து உண்டு உறங்குகின்ற நல்ல மலை நாட்டையுடையவனே! இப்பொழுது இவளை நீ கைவிடமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். பெரிய நன்மை செய்கின்றவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை யாரும் ஆதரிக்காமல் இருக்க மாட்டார்கள். இளமைப் பருவமுள்ள இவள் உனக்கு அளவற்றை இன்பத்தை அளிப்பாள். ஆதலால் நீயும் இவளை உயிர் போலப் பாதுகாப்பாய். இவள் முதுமைப் பருவம் அடைந்து விட்டால் இவளிடம் நீ பெறும் இன்பம் குறைவாகத் தான் இருக்கும். இப்பொழுதுள்ள அளவுக்கு இராது. அக்காலத்திலும் இன்று போல் இவளை ஆதரிக்க வேண்டும்; இவளுக்கு வருத்தம் உண்டாகாமல் அன்பு கொண்டு காப்பாற்ற வேண்டும் இது தான் நீ செய்ய வேண்டிய கடமை. உன்னைத் தவிர இவளுக்கு வேறு யார்தான் கதி? நான் கூறியதை -என் வேண்டுகோளை மறவாதே’ என்று வேண்டிக் கொண்டாள் தோழி. கணவனும் மனைவியும் என்றும் இணை பிரியாமல் வாழ வேண்டும்; இளம் பருவத்தில் அவர்களிடம் இருந்த நேசமும் அன்பும் முதிர்ந்த பருவத்திலும் இருக்க வேண்டும். இதுவே உண்மைக் காதல்; உண்மை மணம் என்பதை இப்பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. பாட்டு பெருநன்று ஆற்றின் பேணாரும் உளரே? ஒருநன்று உடையள் ஆயினும், புரிமாண்டு புலவிதீர அளிமதி! இலை கவர்பு ஆடமை ஒழுகிய தண்நறும் சாரல் மெல்நடை மரைஆ துஞ்சும் நன்மலை நாட! நின்அலது இலளே. பதவுரை:- ஆடு அமை ஒழுகிய - காற்றால் அசையும் மூங்கில்கள் ஒழுங்காக நீண்டு வளர்ந்திருக்கின்ற, தண் -குளிர்ந்த. நறும் - மணம் பொருந்திய. சாரல்- மலைப் பக்கத்திலே. இலை கவர்பு- உள்ள செடிகளின் இலைகளை மேய்ந்து. மெல் நடை- மெல்லிய நடையையுடைய, மரைஆ- மான்கள். துஞ்சும் நல் மலை நாட -தூங்குகின்ற சிறந்த மலை நாட்டின் தலைவனே. பெரு நன்று ஆற்றின்- பெரிய நன்மையை ஒருவர் செய்தால். பேணாரும் உளரே- அவரை ஆதரிக்காதவர்களும் உண்டா?, ஒரு நன்று- இத் தலைவி சிறிதளவு நன்மையை. உடையள் ஆயினும்- செய்யக் கூடிய பருவமுடையவளான காலத்திலும். புரிமாண்டு - இவளிடம் அன்பு நிறைந்து. புலவி தீர- இவள் மனக்குறை தீரும்படி, அளிமதி - இவளை ஆதரிப்பாயாக. நின் அலது இவள்ஏ - உன்னைத் தவிர இவளுக்கு வேறு யாரும் ஆதரவில்லை. கருத்து:- இவளை இன்றுபோல் என்றும் ஆதரவும் அன்பும் கொண்டு பாதுகாப்பாயாக. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தலைவனுடன் தலைவியைக் கூட்டி அனுப்பும் தோழி, தலைவனுடன் இவ்வாறு தலைவி சேர்ந்து செல்வதற்கு உடன்போக்கு என்று கூறுவர். குறிஞ்சித்திணை. “ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல், இலை கவர்பு, மெல் நடைமரை ஆ துஞ்சும், நல்மலை நாட! பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே? ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு, புலவி தீர அளிமதி!” என்று பதங்கள் மாற்றப்பட்டன! புரி- அன்பு. மாண்டு -நிறைந்து. அமை - மூங்கில். மரைஆ- மான். மான் தன் பக்கத்தில் உள்ள மூங்கில் இலையைத் தின்ன முடியவில்லை. அது உயர்ந்து வளர்ந்து விட்டது ஆதலால் வேறு இலைகளைத் தேடித்தின்றாலும் அந்த மலைச் சாரலில் அன்புடன் துயிலும். இது உனது மலையின் இயல்பு. நீயும் இவளிடம் இன்பந்துய்க்க முடியாமல் வேறிடங்களில் இன்பந் துய்க்கும் காலம் வந்தாலும் இவளை மறவாதே என்ற கருத்தை மரையாவின் செயலால் எடுத்துக்காட்டியது இப்பாடல். “நின்னலது இலன்” என்பது “இவள் தன்னை யீன்று வளர்த்த தாய் தந்தையரையும் கைவிட்டு உன்னை யடைந்தாள். இவளுக்கு இனி நீதான் தாய் தந்தை, உற்றார் உறவினர் எல்லாரும்” என்ற கருத்தை அறிவித்து நின்றது. என்கருத்தில் உறையும் காதலி பாட்டு. 116 அளவற்ற இன்பத்தை அனுபவிப்பவர்கள் அதைப் பிறருக்குச் சொல்ல முடியாமல் திண்டாடுவார்கள். நாம் அனுபவிக்கும் இன்பங்களிலே நம் நண்பர்களிடம் சொல்லக் கூடிய இன்பங்களும் உண்டு; சொல்லாமல் நாமே நினைத்து நினைத்து மகிழ்ச்சியடையக் கூடிய இன்பங்களும் உண்டு. ஒரு காதலனும் காதலியும் சேர்ந்து அடையும் இன்பம் பிறருக்குச் சொல்லக் கூடியது அன்று; சொல்ல நினைத்தாலும் அவ்வின்பத்தை அப்படியே எடுத்துக்காட்டுவதற்கான சொற்கள் கிடைக்க மாட்டா. அவ்வின்பம் உள்ளத்திலே அனுபவிக்க வேண்டிய இன்பமேதான். ஆதலால் இவ்வின்பத்தை அகப்பொருள் என்று கூறினர். அகத்திலே அனுபவிக்கும் பொருள் அகப்பொருள். அகம்- மனம்; உள்ளம். இந்த அகவின்பத்தை எடுத்துக் கூறுவதே இப்பாடல். ஒரு தலைவன், ஒரு பருவமங்கையை ஒரு மலைச் சாரவிலே சந்தித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஊழ்வினை காரணமாக இருவர் உள்ளங்களும் ஒன்றுபட்டுவிட்டன. காதலன் காதலியாக ஆய்விட்டனர். அவர்களுக்குள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதில்லை என்று வாக்குறுதிகளையும் பரிமாறிக் கொண்டனர். இருவரும் நீண்ட நேரம் கூடிக் குலவியிருந்த பின் தலைவன் தன் இடத்திற்குப் போக விரும்பினான். தலைவியும் விளையாடு மிடத்திலே விட்டுப் பிரிந்து வந்த தன் தோழிகளுடன் சேர விரும்பினாள். இருவரும் ஒருவரிடம் ஒருவர் பிரியா விடைபெற்றுப் பிரிந்தனர். அப்பொழுது தலைவன் தலைவியின் கூந்தலின் சிறப்பை- அழகை- நறுமணத்தை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தான். எட்டத்திலிருந்து பார்த்தாலே அவளுடைய கூந்தலின் தோற்றம் அவனுக்கு இன்பத்தை அளித்தது. கிட்டத்தில் நெருங்கிய போது, அவள் கூந்தலின் நறுமணம் அவனை மயக்கி விட்டது. அவளை நெருங்கித் தொட்டுப் பழகியபோது அக்கூந்தலின் சேர்க்கை அவனுக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது இவற்றையெல்லாம் அவன் எண்ணி மன மகிழ்ந்தான். அவள் கூந்தலின் சிறப்பைத் தன் மனத்திலேயே சொல்லிக் கொண்டு மகிழ்ச்சி யடைந்தான். ‘நெஞ்சே! என்னால் என்னுயிரினும் இனிதாக விரும்பப் படுகின்ற இத் தலைவியின் கூந்தலிலே வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. இவள் கூந்தலின் தோற்றம் செல்வம் நிறைந்த சோழருடைய உறந்தையிலே உள்ள காவிரித்துறையிலே நுண்மையான கருமணல் நீண்டு படிந்திருப்பதைப் போலக் காணப்படுகின்றது அக்கருமணலைப் போல இவள் கூந்தலும் நெருங்கியிருக்கின்றது. அன்றியும் மணமும் குளிர்ச் சியும் நிறைந்து என் மனத்தைக் கவர்கின்றது!’ என்று இவ்வாறு நினைத்து மகிழ்ந்தான் அத்தலைவன். அந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவதே இப்பாடல். பாட்டு யான்நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல் வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல் வார்ந்தன்ன நன்னெறி யவ்வே நறும் தண்ணியவே. பதவுரை:- நெஞ்சே! யான் நயந்து உறைவோள்- என்னால்- காதலிக்கப்பட்டு வாழ்கின்ற தலைவியின். தேம் பாய் கூந்தல்- வண்டுகள் மொய்க்கின்ற தலை மயிர். வளம் கெழு- செல்வங்கள் நிறைந்த. சோழர் உறந்தை- சோழ மன்னரின் உறையூரை ஒட்டிச் செல்லும். பெரும்துறை- காவிரியின் பெரிய நீர்த்துறையின். நுண்மணல் அறல்- நுண்மையான மணலாகிய கருமணல். வார்ந்து அன்ன- நீண்டு படிந்திருப்பது போல. நன்நெறி யவ்வே- -நன்றாக நெறிந்திருக்கின்றன. நறும் தண்ணியவே மணமும் குளிர்ச்சியும் அமைந்திருக்கின்றன. கருத்து:- தலைவியின் கூந்தல் கருமையும், நீளமும் அடர்த்தியும், மணமும், குளிர்ச்சியும் உடையது. விளக்கம்:- இது இளங்கீரன் என்னும் புலவர் பாட்டு. தலைவியை இயற்கையாகச் சந்தித்து, அவளுடன் சேர்ந்திருந்து பிரியும் தலைவன் தன் மனத்திற்குச் சொல்லியது. குறிஞ்சித் திணை. நெஞ்சே என்னும் சொல் வருவித்துக் கொண்டது. கூந்தலின் அழகும், இயற்கையும், இப்பாடலில் எடுத்துக் கூறப்பட்டது. உறந்தை- உறையூர். இது சோழ நாட்டின் தலைநகரம். செல்வம் நிறைந்த நகரம். இதன் பக்கத்தில் காவிரியாறு ஓடு கின்றது. இது இப்பாடலில் உள்ள சரித்திரக்குறிப்பு. நுண்மணல்- பொடி மணல். அறல்- கருமணல். நெறி - நெறிப்பு; அடர்த்தி. அருமையை அறியவில்லை பாட்டு. 120 பொருத்தமான உவமைகளை எடுத்துக்காட்டுவதிலே தமிழ்ப் புலவர்கள் தலைசிறந்தவர்கள். உவமைகளின் மூலம் உண்மைகளை விளக்குவதற்கு ஆற்றல் வேண்டும்; அனுபவமும் வேண்டும்; ஆராய்ச்சியும் வேண்டும். இத்தகைய திறமைசாலிகள் உதாரணங்களைத் தேடுவதற்கு அங்குமிங்கும் அலைய மாட்டார்கள். உவமைகள் தாமாகவே அவர்கள் கண்முன்னே வந்து நடமாடும். ஒரு தலைவன். அவன் இரவிலே தன் காதலியை ஒரு குறிப்பிட்ட இடத்திலே சந்திப்பது வழக்கம். ஒரு நாள் அத்தலைவன் வருவதற்கு முன்பே, அவன் வந்திருப்பது போன்ற ஒரு அடையாளத்தைக் கண்டு தலைவி அந்த இடத்திற்கு வந்தாள். ஆனால் அவன் வரவில்லை. தலைவி தன் இடத்திற்குத் திரும்பி விட்டாள். பின்னர் உண்மையாகவே அவன் அந்த இடத்திற்கு வந்தான். தான் வந்திருக்கிறேன் என்று குறிகளின் மூலம் தெரிவித்தான். தலைவிக்கு அக்குறிகள் தெரிந்தன. ஆயினும் அவள் இதுவும் முன்போன்ற தவறான குறிகள்தாம் என்று நினைத்து அவ்விடம் போகாமல் இருந்துவிட்டாள். சிறிது நேரம் காத்திருந்த தலைவன் தலைவியைக் காணாமல் வருத்தத்துடன் திரும்பினான். அப்பொழுது அவன் தன் நெஞ்சுக்குச் சமாதானம் கூறினான். தலைவியைக் காணாமல் வருந்திய மனத்துக்கு ஆறுதல் கூற வேண்டிய நிலைமை அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. ‘நெஞ்சே!’ நீ கிடைத்தற்கரிய தொன்றை அடைந்து ஆனந்த மடைய விரும்பினாய். பொருள் இல்லாதவனுக்கு இவ்வுலகிலே இன்பம் இல்லை. பொருள் இல்லாத வறியன் இந்த உண்மையை உணராமல் இன்பத்தை நாடித்திரிந்தால் அவன் அதனை எப்படிப் பெற முடியும்? முடியாது. அதுபோல நம் காதலி நமக்கு நன்மை தருகின்றவள் என்பதை மட்டுந்தான் உணர்ந்தாய். அதே சமயத்தில் அவள் மிகவும் அருமையானவள், நினைத்த போதெல்லாம் அவளை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பதை அறியாமற் போனாய். ஆதலால்தான் இப்பொழுது நீ வருந்தும்படி ஆயிற்று’ என்று தன் உள்ளத்திற்கு ஆறுதல் மொழிகள் புகன்றான். ‘செல்வம் இன்பந்தரக் கூடியது தான். ஆனால் அதைப் பெறுவது எளிதன்று; பெற்றால்தான் இன்புற முடியும் அதைப் போல் நாம் முன்பு கூடி மகிழ்ந்த காதலி இன்பந்தரக் கூடியவள் தான்; ஆனால், அவளைக் காண முடியாவிட்டால் எப்படி இன்பத்தை அனுபவிக்க முடியும்? இந்த உண்மையை நீ ஏன் அறியவில்லை நெஞ்சே! என்ற குறிப்பை ‘இல்லோன் இன்பம் காமுற்றாங்கு’ என்னும் தொடர் எடுத்துக் காட்டுகின்றது. இச் சிறிய பாடலைப் படித்து இன்புறுவோம். பாட்டு இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு அரிது வேட்டனையால் நெஞ்சே! காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியா தோயே? பதவுரை:- நெஞ்சே! இல்லோன் - செல்வமற்ற ஏழை ஒருவன், இன்பம் காமுற்ற ஆங்கு - உலக இன்பங்களை யெல்லாம் அடைய விரும்பியதைப் போல. அரிது - பெறுவதற்கு முடியாத ஒன்றை. வேட்டனை ஆல்- விரும்பினை. காதலி- நம்காதலி நல்லள் ஆகுதல்- நமக்கு நன்மை தருகின்றவளா யிருப்பதை. அறிந்த ஆங்கு- அறிந்து கொண்டிருப்பதைப் போல. அரியள் ஆகுதல்- நாம் நினைக்கும் போதெல்லாம் நம்மால் அடைய முடியாதவள் என்பதை. அறியாதோய் ஏ- அறியாமல் போய் விட்டாய். கருத்து:- தலைவி நாம் நினைத்த போதெல்லாம் சந்திக்க முடியாதவள்; இதை நீ முன்பே அறிந்திருக்க வேண்டும். விளக்கம்:- இது பரணர் பாட்டு. குறித்த இடத்திலே தலைவியைச் சந்திக்க முடியாமல் திரும்பும் தலைவன் தன் மனத்திற்குக் கூறியது. குறிஞ்சித்திணை. ஆ அங்கு- உயிர் அளபெடை. ஆல், ஏ-அசைச்சொற்கள். வேட்டளை- விரும்பினை. தவறு என்னுடையது அன்று பாட்டு. 121 இரவிலே தலைவியைச் சந்திப்பதற்காக வரும் தலைவன் தான் வந்தவுடன் சில அடையாளங்களால் அறிவிப்பான். மரத்தில் உறங்கும் பறவைகளை எழுப்பி விடுவான். அவை கீச்சிடும்; அல்லது சிறகடித்துப் பறக்கும். இல்லாவிட்டால் மரக்கிளையை உலுக்குவான். அது காற்றால் அசைவது போல ஓசை காட்டும். அல்லது தண்ணீரில் கல்லெறிந்து ஓசையெழுப்புவான்; இவை தலைவன் செய்யும் அடையாளங்கள், ஒரு நாள் இரவு இத்தகைய அடையாளத்தில் ஏதோ ஒன்றால் தலைவி, தலைவன் குறித்த இடத்திற்குப் போனாள். அவனைக் காணவில்லை. திரும்பி விட்டாள். பின்னர் உண்மையாகவே தலைவன் அந்த இடத்திற்கு வந்தான். வழக்கம் போல் தான் வந்திருப்பதற்கான குறிகளைச் செய்தான். அதைக் கண்ட தோழி தலைவியிடம் போய், அவன் வந்திருப்பதை அறிவித்தாள். தலைவியோ முன்பு ஒருமுறை தேடிச் சென்று ஏமாந்து போனவள் ஆதலால், இப்பொழுதுள்ள குறியையும் அவள் நம்பவில்லை. ‘நீ காண்பது பொய்க் குறியாக இருக்கலாம். அதை நம்பி நாம் அங்கே போய் ஏமாறுவதில் என்ன பயன்? போய் ஏமாந்து வருவதைவிடப் போகாமலிருப்பதே நல்லது’ என்று பதிலுரைத் தாள் தலைவி. இக்கருத்தை அழகிய உதாரணத்தால் உரைக்கின்றது இப்பாட்டு. இந்த உண்மை நிகழ்ச்சியை அப்பட்டமாகச் சொன்னால் கேட்போருக்கு அதிலே சுவையிருக்காது. ஆதலால் கேட்போர் உள்ளம் மகிழும்படி அழகான உதாரணத்தால் சொல்லப் பட்டிருக்கும் இச்செய்யுளின் அருமை பாராட்டக்கூடியதாகும். ‘தோழியே! தலைவன் வந்திருக்கின்றான் என்று நீ சொல்வது உண்மைதானா? மலைச்சாரலிலே உள்ள கருங்குரங்கு ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குப் பாய்ந்தது. தான் பாயும் கிளை தன்னைத் தாங்கக் கூடியது தானா என்பதைப் பற்றி அது ஆலோசிக்கவில்லை. அது பாய்ந்த கிளை வலுவற்ற இளங்கிளை. ஆதலால் அக்கிளை முறிந்துவிட்டது. அந்தக் குரங்கின் தவறுதலால் அந்தக் கிளைக்கு ஆபத்தேற்பட்டது. அது போல அவன் குறியைத் தவறியதனால் என்னுடைய மெல்லிய தோள்கள் மெலிந்தன. அவன் சரியான குறியை எனக்கு அறிவிக்காத காரணத்தால், தவறான குறியைக் கேட்டு நான் சென்றேன். அவனைக் காணவில்லை. அதனால் என் தோள்கள் வாட்ட மடைந்தன. குரங்கின் தவறால் கிளை முறிந்தது போல, அவன் தவறால் என் தோள்கள் வாடின. ஆகையால் மீண்டும் நாம் போய் ஏமாற வேண்டாம் என்று கூறினாள் தலைவி. தலைவியின் பேச்சை எவ்வளவு நயமாக இவ்வாசிரியர் அமைத்திருக்கிறார் என்பதைச் சிந்திக்கும் போது நம் உள்ளம் உவகை யடைகின்றது. தலைவன் வந்தபின் அவன் வருகையை உணர்த்தும் குறி சரியான குறியாக இருக்க வேண்டும்; அக்குறி இயற்கையில் நிகழாத குறியாக இருக்க வேண்டும்; இத்தகைய குறியை ஏற்படுத்திக் கொள்ளாதது தலைவனுடைய தவறு என்பதைச் சிறந்த உதாரணத்துடன் எடுத்துரைத்தாள் தலைவி. பாட்டு மெய்யோ! வாழி தோழி! சாரல் மை பட்டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல், ஏற்ற கோட்டொடு போகி யாங்கு, நாடன் தான்குறி வாயாத் தப்பற்குத் தாம் பசந்தன என் தடம் மெல் தோளே! பதவுரை: வாழிதோழி- வாழ்க தோழியே! மெய்யோ- இப்பொழுது தலைவன் வந்திருக்கிறான் என்று நீ சொல்லியது உண்மைதானா? சாரல்- மலைப் பக்கத்திலே. மை பட்டன்ன மா முகம்- மைபூசியது போன்ற கருமையான முகத்தையுடைய. முசுக் கலை- ஆண்குரங்கு ஒன்று. ஆற்றப்பாயா- கொம்பு தாங்கும் படி பாயாத. தப்பல்- குற்றத்தின் பயன். கோட்டொடு போகியாங்கு- அக்கிளை யோடு சேர்ந்து அது முறிந்து போனாற் போல. நாடன்- அத்தலைவன். தான் குறிவாயா- தன் குறியைச் சரியாகச் செய்யாத. தப்பற்கு- தவறுக்காக. என் தடம் மெல்தோள் - எனது அகன்ற மெல்லிய தோள்கள். தாம்ப சந்தன- தாம் பசலை நிறத்தை அடைந்தன. கருத்து: தகுந்த அடையாளத்தைச் செய்யாமல் முன் தவறு செய்த தலைவன் இப்பொழுது வந்தான் என்று சொல்வது உண்மைதானா? விளக்கம்: இது கபிலர் பாட்டு. தலைவன் செய்த குறியென்று எண்ணி முதலில் சென்று ஏமாந்த தலைவியிடம் தோழி சென்று தலைவன் வந்திருக்கின்றான் என்று சொல்லிய போது அவள் கூறிய விடை. குறிஞ்சித்திணை. ‘வாழி தோழி மெய்யோ’ என்று முதல் அடியும் ‘என் தட மெல்தோள் தாம் பசந்தன’ என்று இறுதி யடியும் பதங்கள் மாற்றப்பட்டன. சாரல்- மலைப்பக்கம். மை- கருநிறம். முசு- குரங்கு. கலை- ஆண் குரங்கு. மா- கருமை. ஆற்ற- தாங்கும்படி. தப்பல்- தவறுதல்; ஏ- அசைச்சொல், தப்பல் என்னும் சொல் இன்னும் உலக வழக்கில் உள்ள எளிய சொல். தப்பிவிட்டது. தப்பு செய்து விட்டான் என்பன போன்ற வழக்குகளைக் காணலாம். அல்லிகள் குவிந்தன பாட்டு. 122 தலைவனைப் பிரிந்து தனித்திருக்கின்றாள் ஒருத்தி. அவள் இளம் பெண். புது மணம் புரிந்து கொண்டவள். மாலைக் காலத்தில் காதலனைக் காணாவிட்டால் அவள் கண்கள் உறங்க மறுத்து விடும்; கண்ணீரையும் கலகலவென்று சிந்தும். ஒரு இரவு ஒரு யுகமாகத்தான் கழியும். மாலைப் பொழுது நெருங்க நெருங்க அவள் உள்ளமும் கண்களும் காதலன் வருகைக்காகவே காத்திருக்கும். அவன் வந்தவுடன்தான் அவள் அமைதியடைவாள்; ஆனந்த மடைவாள். அவள் காதலனும் மாலைப் பொழுதிலே வீடு வந்து சேர்ந்து அவளை மகிழ்ச்சியடையச் செய்வான். ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் காதலன் வந்து சேரவில்லை. வருவான் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்தாள். மாலைக் காலமும் வந்து விட்டது; அவள் நம்பிக்கையிழந்தாள். அந்த மாலைக் காலத்தையும், அதன் பின் தொடர்ந்து வரப்போகும் இராப்பொழுதையும் நினைத்து அவள் மனம் வெதும்பினாள். அவள் தன் துக்கத்தைத் தானே வாயினாற் சொல்லிக் கொண்டு வருந்தினாள். அவளுடைய துக்கத்தை எடுத்துரைப்பதே இப்பாடல். ‘பசுமையான கால்களையுடைய கொக்கின் மெல்லிய முதுகுப் புறத்தைப் போன்ற ஆம்பல்கள்- ஆழமான நீரிலே மலர்ந்திருந்த குமுதங்கள் இப்பொழுது குவிந்து மொட்டுகளாகி விட்டன. இப்பொழுது மாலைக் காலமும் வந்துவிட்டது. இந்த மாலைக் காலம் வாழ்க! இப்படி வந்த மாலைக்காலம் தான் மட்டும் தனியாக வரவில்லை. அதன்பின் வரக்கூடிய இரவோடும் தொடர்புகொண்டது. ஆதலால் இனி நான் என்ன செய்வேன் என்று கூறிக் கொண்டாள் தலைவி. தலைவி மாலைக் காலத்தின் தோற்றத்தை உரைத்தாள். அதன்பின் வரப்போகும் இரவைப் பற்றியும் கூறினாள். ஆயினும் தன் காதலன் பிரிந்து சென்றிருப்பதைப் பற்றியோ ‘அவன் இன்னும் வரவில்லை என்பதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது தான் தமிழ்க்கவியின் சிறப்பு. அறிவை ஊட்டுவது செய்யுள்; அறிவை வளர்ப்பது செய்யுள்; சிந்தனைக்கு இடங்கொடுப்பது செய்யுள். படிப்பவர் சிந்தனைக்குச் சிறிதும் இடங்கொடுக்காமல், கண்டதை அப்படியே எழுதி வைப்பது சிறந்த செய்யுள் தொகுதியிலே சேரமுடியாது. இந்த உண்மையைத் தமிழ்ப் புலவர்கள் கண்டறிந்தவர்கள். ஆதலால் தான் தமிழ்ச் சான்றோர்களின் செய்யுட்களிலே, அவர்கள் கூறியிருப்பவற்றைக் கொண்டு பல உண்மைகளை உய்த்துணர வைத்திருக்கின்றனர். இத்தகைய சிறந்த செய்யுள் வரிசையிலே இதுவும் ஒன்று. தலைவி மாலைக் காலத்தின் காட்சியைக் கூறினாள்; அதன் பின் வரப்போகும் இரவைப் பற்றியும் எண்ணினாள் என்று மட்டும் கூறிற்று இச்செய்யுள். இதன் மூலம், இப்படிக் கூறியவள் காதலன் இன்றித் தனித்திருப்பவள் என்பதை நாம் உணரும்படி வைத்தது. இதுதான் இச்செய்யுளின் சிறப்பு. பாட்டு பைம்கால் கொக்கின் புன்புறத்து அன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே வந்தன்று வாழியோ மாலை; ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. பதவுரை:- பைம்கால் கொக்கின்- பசுமையான கால்களை யுடைய கொக்கினது. புன்புறத்து அன்ன- மெல்லிய முதுகைப் போல் காணப்படும்படி. குண்டுநீர்- ஆழமான நீரிலே மலர்ந்திருந்த. ஆம்பலும் கூம்பின - குமுதமலர்களும் குவிந்து மொட்டாயின. இனிஏ - இப்பொழுதே. மாலை வந்தன்று- மாலைக் காலமும் வந்தது. அவர்கள் வந்தால் ஆபத்து பாட்டு. 123 அவனும் அவளும் அடிக்கடி கடற்கரையிலே பகற் பொழுதிலே சந்திப்பார்கள். கடற்கரையிலேயுள்ள புன்னை மரச்சோலை மிகவும் அடர்த்தியானது. இருண்டு காணப்படும். குளிர்ச்சியாகவும் இருக்கும். சூரியனைக் கண்டு ஓடிய இருள் அந்தப் புன்னை மரச் சோலையிலேதான் குடிபுகுந்திருக்கும். வெளியில் இருப்போர் அந்தச் சோலைக்குள் இருப்பவரைக் காணமுடியாது. அந்தச் சோலைக்குள் புகுந்துவிட்டால் ஆனந்தம் அனுபவிக்கலாம். மேலே இருட்டெல்லாம் ஒன்று சேர்ந்தாற் போன்ற குளிர்ச்சியான நிழல்! கீழே வெண்மையான மணல்! நிலவெல்லாம் வந்து குவிந்திருப்பது போலக் காட்சியளிக்கும் அம்மணல். அந்த மணலின் மேல் மெத்தையை விரித்தது போல மெல்லிய புன்னைப் பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்கும். இந்த இடம் பகற்பொழுதிலே காதலர்கள் கூடியிருந்து களிப்பதற்கேற்ற இடம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இந்த இடத்திலேதான் அந்தக் காதலர்கள் பகற்பொழுதிலே கண்டு அளவளாவி ஆனந்தம் அடைவார்கள். ஒரு நாள் அவன்- தன் காதலி வருவதற்கு முன்பே அந்த இடத்திற்கு வந்து விட்டான். வந்தவுடன் அவனுக்கு ஒரு எண்ணம் உண்டாயிற்று. நாம் இல்லா விட்டால் நமது காதலியும், அவள் தோழியும் என்ன செய்வார்கள்? என்ன பேசுவார்கள்? என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் தோன்றியது. ஆதலால் அவன் அங்கேயே ஒரு புறத்தில் மறைந்து நின்றான். காதலியும் அவள் தோழியும் அந்த இடத்திற்கு வந்தனர் தலைவனைக் காணவில்லை. அவன் இன்னும் வரவில்லையே என்று நினைத்தாள் தோழி. பின்பு கொஞ்சம் நிதானித்துப் பார்த்தாள். தலைவன் வந்து விட்டான்; அவன் மறைந்திருக் கின்றான் என்பதைச் சில அடையாளங்களால் அறிந்து கொண்டாள். உடனே தலைவன் காதிலே கேட்கும்படி சில சொற்களைக் கூறினாள். ‘தலைவர் இங்கே வந்திருக்கத்தான் வேண்டும். வீணாக மறைந்து கொண்டிருந்து விளையாட்டுக் காட்டுவதால் பயனில்லை; காலந்தான் நீளும். காலங்கழிந்தால் மீன் வேட்டைக்குக் கடலின் மீது போயிருக்கும் நமது தமையன்மார்கள் வந்து விடுவார்கள். அவர்கள் வந்துவிட்டால் நாம் இங்கே தாமதிக்க முடியாது. வீட்டுக்குப் போய்விடத்தான் வேண்டும்’ என்ற கருத்தை வெளியிட்டாள் தோழி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதுதான் இப்பாடல். இப்பாடல் கடற்கரையில் உள்ள புன்னை மரச்சோலையின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்தது போல எடுத்துக்காட்டுகின்றது. புன்னை மரத்தின் நிழலைப் பற்றியும், அதன் அடியில் உள்ள மணல் பரப்பைப் பற்றியும் கூறியிருப்பது அப்படியே கண்முன்னே காணப்படும் காட்சியாகும். பாட்டு இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழுநிழல், நிலவுக் குவித்தன்ன வெண்மணல், ஒரு சிறைக் கரும் கோட்டுப் புன்னைப் பூம்பொழில், புலம்ப இன்னும் வாரார்; வரூஉம் பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே. பதவுரை: தோழியே நிலவுக் குவித்து அன்ன- நிலவு ஒன்றாகக் குவித்திருப்பது போன்ற காட்சியையுடைய. வெண் மணல் ஒரு சிறை- வெண்மையான மணல்பரந்த ஒரு பக்கத்திலே. இருள் திணிந்து அன்ன- இருள் ஒன்றாகத் திரண்டிருப்பது போன்ற. ஈர்ந்தண் கொழுநிழல்- ஈரமும் குளிர்ச்சியும் உள்ள நல்ல நிழலையுடைய. கரும்கோட்டுப் புன்னை- கருமையான கிளைகளை யுடைய புன்னை மரம் அடர்ந்த. பூம்பொழில்- பூஞ்சோலையிலே. புலம்ப- நாம் தனித்து நிற்கும் படிசெய்து விட்டு, இன்னும் வாரார்- அவர் இன்னும் வரவில்லை. (அவர் இவ்வளவு தாமதிப்பாராயின்) பன்மீன் வேட்டத்து- பலமீன்களை வேட்டையாடிப் பிடிப்பதற் காகப் போயிருக்கும். என் ஐயர் திமில்- எனது தமையன்மார்களின் மீன் படகுகள். வரும் - திரும்பி வந்துவிடும் கருத்து:- தலைவர் காலங் கடத்தாமல் இப்பொழுதே வருவது நலம். காலந்தாழ்த்தால் ஆபத்தாகும். விளக்கம்:- இது ஐயூர் முடவன் என்பவர் பாட்டு: பகற் குறியிலே மறைந்திருந்த தலைவன் காதில் விழும்படி ‘காலம் போக்காமல் இப்பொழுதே வருவது தான் நலம்’ என்று தோழி கூறியது. நெய்தல்திணை. ‘நிலவுக்கு வித்தன்ன வெண்மணல் ஒரு சிறை. இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல் கருங்கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப இன்னும் வாரார்; பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமில் வரூஉம்’ என்று அடிகள் மாற்றப்பட்டன. திணிவு- செறிவு; அடர்த்தி. ஈர்ம்- ஈரம். கொழுநிழல்- செழித்த நிழல், சிறை - பக்கம். புலம்ப- தனித்திருக்க. திமில்- மீன் பிடிக்க ஏறிச் செல்லும் படகு. ஐயர்- தமையன்மார். வரூஉம்- உயிர் அளபெடை. ஏ- அசைச்சொல். காலையில் மீன் பிடிக்கச் செல்லும் செம்படவர்கள், மாலையிலே மீண்டு வருவார்கள். தலைவன் இன்றேல் இன்பம் ஏது? பாட்டு. 124 ‘கற்புடைய பெண்ணுக்குக் கணவனே தெய்வம்’ என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. காதலனும், காதலியும் கருத்திலே ஒன்றுபட்டு வாழ்வதே கற்புடைமை. இத்தகைய கருத்தொருமித்த காதலர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தனித்து வாழ விரும்ப மாட்டார்கள். தனித்திருப்பதனால் இருவருக்கும் துன்பமேதான். காதலனும் காதலியும் தங்கள் கடமைகளை- வேலைகளைச் செய்த நேரம் போக மீதி நேரத்தில் அவர்கள் ஒன்றாக இருந்து பேசி மகிழ்ந்து பேரின்பம் அடைவார்கள். இது இயற்கை. இரு காதலர்கள். அவர்கள் பல நாட்களாகக் கள்ள நட்பிலே காலங்கழிக்கின்றனர். அவர்களுடைய நட்பு நீண்ட நாள் ஆனதால் ஊரார்க்கு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் காதலிக்கும் உண்டாயிற்று: அவள் தோழியிடமும் தோன்றி விட்டது. ஊரார் பழிப்பதற்கு முன் தங்கள் கற்பை வெளிப் படுத்திக் கொள்ள வேண்டுமென்று காதலியும் அவள் தோழியும் விரும்பினர். ஒரு நாள், காதலன், காதலியைச் சந்தித்துப் பேசி மகிழ்ந் திருக்கும் போது தோழி தன் கருத்தை அவனிடம் வெளியிட்டாள். ‘தலைவனே! இனியும் காலங்கடத்துதல் நன்றன்று. தலைவியின் பெற்றோரிடம் பெண் கேட்டு முறைப்படி மணந்து கொள்ளுவதற்குப் போதிய காலம் இல்லை. உங்கள் நட்பு ஊரார்க்குத் தெரிந்து விட்டது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அவர்கள் வெளிப்படையாக நம்மைப் பழித்துப் பேசுவதற்கு முன் நமது பெருமையை- கற்பைக் - காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தலைவியை உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு. இதைத் தவிர வேறு வழியில்லை” என்றாள் தோழி. ‘தோழியே! நீ சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ளு கின்றேன். தலைவியை என்னுடன் அழைத்துச் செல்ல எனக்கும் சம்மதமே தான்; தடையொன்றும் இல்லை, ஆனால் ஒன்றைப் பற்றித்தான் நான் எண்ணித் தயங்குகிறேன். நான் செல்லும் வழி பாலை நிலம். உப்பு வாணிகர் பலர் கடந்து சென்ற பரந்த நிலப்பகுதி அது. பார்வைக்கு அந்நிலம் குடியிருந்த ஊர் பாழாய்ப் போனதைப் போலக் காணப்படும். வற்றி உலர்ந்து போன ஓமை மரங்களைத் தான் அந்த நிலத்திலே காணமுடியும். தங்குவதற்கு நிழலும், குடிப்பதற்கு நீரும் கிடைக்காத வறண்ட அந்தப் பாலை வனத்திலே நம் அருமைத் தலைவி எப்படி நடந்து வருவாள்? இதைப்பற்றித் தான் நான் நினைக்கின்றேன்; என்றான் தலைவன். ‘தலைவரே! நீர் செல்லும் வழியிலே உம்முடன் சேர்ந்து நடந்து வருவது தலைவிக்குத் துன்பந்தரும் என்று சொல்லுகின்றீர். அப்படியானால், உம்மைப் பிரிந்து தனித்துறையும் வீடு தலைவிக்கு இன்பம் தரும் என்று நினைக்கின்றீரா? இப்படி நினைப்பீராயின் உமது நினைப்புத் தவறாகும். உம்முடன் இருப்பதே அவளுக்கு இன்பமாகும்’ என்றாள் தோழி. தோழி இவ்வாறு தலைவியின் தன்மையை எடுத்துக்காட்டிய தன் மூலம் அவளுடைய கற்புடைமையைக் கூறினாள். பண்டைத் தமிழ்ப் பெண்களின் உயர்ந்த தன்மையை எடுத்துக்காட்டும் இனிய செய்யுள் இது. இப்பாடலிலே ஒரு சிறந்த கற்பும்- காதலும்- உள்ள பெண்ணின் தன்மை இதுவென்று சொல்லப்பட்டிருக்கின்றது. பாலைவனத்தின் இயற்கைக் காட்சியும் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. பாட்டு உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, ஊர்பாழ்த்து அன்ன, ஓமையம் பெருங்காடு இன்னா என்றீர் ஆயின் இனியவோ பெரும! தமியோர்க்கு மனையே. பதவுரை:- பெரும - தலைவனே. உமணர்- உப்பு வாணிகர்கள். சேர்ந்து கழிந்த- பலர் சேர்ந்து கடந்து சென்ற. மருங்கின்- இடத்தையும். அகன்தலை- பெரிய இடத்தையும், ஊர்பாழ்த்து அன்ன- குடியிருந்து ஊர்பாழாகப் போய் விட்டது போன்ற தோற்றத்தையும். ஓமை அம்பெரும் காடு- ஓமை மரங்களையும் உடைய பெரிய பாலைநிலம். இன்னா- தலைவிக்குத் துன்பம் தரும். என்றீர் ஆயின்- என்று நீர் சொல்லுவீராயின். தமியோர்க்கு - காதலரைப் பிரிந்து தனித்திருக்கும் பெண்களுக்கு. மனை இனியவோ- வீடு இன்பம் தருவதாக இருக்குமோ? கருத்து:- தலைவியை விட்டுச் செல்லற்க. அவளையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போகவேண்டும். விளக்கம்:- இப்பாடல் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. மணந்து கொள்ளாமல் காலங் கடத்திய தலைவனிடம், தோழி, தலைவியை உடன் அழைத்துக் கொண்டு போகும்படி வலியுறுத்திக் கூறியது. பாலைத் திணை. பொருள் தேடப்பிரியும் தலைவனிடம் இவ்வாறு கூறியதாகவும் கொள்ளலாம். ‘இனியவோ பெரும தமியோர்க்கு மனையே’ என்ற இறுதியடியில் உள்ள ‘பெரும’ என்னும் சொல் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ‘தமியோர்க்கு மனை இனியவே,’ என்றும் மாற்றப்பட்டது. ஏ, அம். அசைச் சொற்கள். உமணர்- உப்பு வாணிகர். ஓமை- பாலைவனத்தில் வளர்ந்திருக்கும் ஒருவகை மரம். இனி நான் உயிர்வாழேன் பாட்டு 125 நாகரிகம் தெரிந்த பெண்கள் மிகவும் நயமாக நடந்து கொள்ளுவார்கள். தமக்குத் தேவையானவற்றை வெளிப் படையாகக்கூடக் கேட்கமாட்டார்கள். தம் விருப்பத்தைக் குறிப்பாகத் தங்கள் காதலரிடம் தெரிவிப்பார்கள். இது அறிவுள்ள பெண்களின் தன்மை. பண்டைத் தமிழ்ப் பெண்கள் நல்லறிவும் நாகரிகமும் உள்ளவர்கள் என்பதைப் பழந் தமிழ்ச் செய்யுட்கள் பலவற்றிலே பார்க்கலாம். அத்தகைய அருமையான செய்யுட் களிலே இதுவும் ஒன்று. ஒருவனும் ஒருத்தியும் ஒத்த மனத்துடன் காதல் வாழ்விலே வாழ்கின்றனர். அவர்கள் என்றும் பிரியப் போவதில்லை. மனமொத்த தம்பதிகளாய் மணம் புரிந்துகொண்டு மக்களைப் பெற்றெடுத்து வாழத்தான் போகின்றனர். அவர்களுடைய காதலை இனி யாரும் பிரித்துவிட முடியாது. ஆயினும் இன்னும் அவர்கள் பலர்அறிய வெளிப்படையாக மணம் புரிந்து கொள்ளவில்லை. கள்ளக் காதலிலேதான் காலங் கடத்திக்கொண்டு வருகின்றனர். காதலன் விரைவில் மணம் புரிந்து கொள்ளுகிறேன் என்று சொல்லிக் கொண்டே காலங் கடத்திக் கொண்டு வருகின்றான். தலைவிக்கோ தன்னுடைய கள்ளக்காதல் வெளிப்படுவதற்கு முன் காதலன் தன்னை மணந்து கொள்ளவேண்டுமென்ற துடி துடிப்பு. தன் உள்ளத்தைத் தலைவனிடம் சொல்லியாக வேண்டும். நேரடியாகச் சொல்லுவதற்கு வெட்கம். ஆதலால் அவள், தன் காதலன் காதிலே விழும்படி ஒரு நாள் தன் எண்ணத்தைத் தன் தோழியிடம் கூறுகின்றாள். தலைவன் அவளைச் சந்திப்பதற்காக வந்தான். கொல்லைப் புறத்திலே நின்று கொண்டிருந்தான். தலைவியோ அவனைப் பார்க்காதவளைப் போலத் தன் நிலைமையைப்பற்றித் தோழியிடம் கூறுகின்றாள். தலைவியின் சொற்கள் தலைவனுடைய மனத்திலே சுருக்கென்று தைக்கும்படியான சொற்கள். உடனே அவன் உள்ளத்தில் நாம் தலைவியை வெளிப்படையாக மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பும் சொற்கள். இத்தகைய சொற்கள் அமைந்த இப்பாடலின் ஆசிரியர் திறமையே திறமை. ‘தோழியே! மலைச்சாரலிலே தோன்றிய பூவினாலும் தழையினாலும் தொடுக்கப்பட்ட அழகிய உடையை அணிந்த மகளிர் பலர் உள்ளனர். அவர்களிலே யான் திருவிழாவைப் போலச் சிறந்து விளங்கினேன். என்னுடைய பெண் தன்மை மிகவும் உயர்ந்ததாக இருந்தது. குளிர்ந்த கடல் துறையையுடைய அந்தத் தலைவனால் என் பெண்மை நலனை இழந்தேன். அது என்னைவிட்டுப் போய் விட்டது. அதனால் நான் சிறகிழந்த நாரையைப்போல இருக்கின்றேன். பழமையான வலிமையுள்ள சிறகையிழந்த நாரை துன்பத்தையடையும். தானே தனக்கு வேண்டிய இரையைத் தேடிக்கொள்ளும் வலிமையிழந்துவிடும். கடல் அலைகள் வந்து மோதும்படி வளைந்திருக்கும் மரக்கிளையின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கும். அந்த அலைகளின் மூலம் தானே கிடைக்கும் மீன்கள் தான் அதற்கு இரையாகும். இல்லாவிட்டால் பட்டினி கிடந்து சாவதைத் தவிர அதற்கு வழியில்லை. என்னுடைய நிலைமையும் அந்த நாரையின் நிலைமை போல் ஆகிவிட்டது. என் பெண் தன்மையை என் காதலன் கவர்ந்து சென்றான். அவன்தானாகவே மனமிரங்கி, அந்த நலனை எனக்களித்தால்தான் நான் உயிர் வாழமுடியும். அவனுடைய தயவையே எதிர்பார்த்து என் கை வளைகள் கழன்று விழும்படி சோர்ந்து கிடக்கின்றேன். அவன் இரங்காவிட்டால் நான் உயிர் விடுவதைத் தவிர எனக்கு வேறு ஒரு வழியும் இல்லை,” என்று கூறினாள் தலைவி. “என் காதலன் என்னை விரைவிலே மணந்து கொள்ளாவிட்டால் நான் உயிர்விடுவேன்’, என்று உறுதியாகக் கூறினாள். இதன் பிறகு அவன் மணக்காமல் காலங்கடத்துவானோ? பாட்டு இலங்குவளை நெகிழச் சாஅய் யானே உளெனே, வாழி தோழி! சாரல் தழையணி அல்குல் மகளிர் உள்ளும் விழவு மேம்பட்ட என் நலனே, பழவிறல் பறைவலம் தப்பிய பைதல் நாரை திரைதோய் வாங்குசினை யிருக்கும் தண் அம் துறைவனோடு கண்மா றின்றே. பதவுரை:- வாழி தோழி- வாழ்க தோழியே! சாரல்- மலைச்சாரலிலே உண்டான. தழை அணி- தழையினால் ஆகிய உடையை அணிந்த. அல்குல் மகளிர் உள்ளும்- இடையையுடைய பெண்கள் பலரிலும், விழவு மேப்பட்ட - திருவிழாவைப் போல உயர்ந்த, என் நலன் - என்னுடைய பெண் தன்மை, தண் அம் துறைவனோடு - குளிர்ந்த அழகிய கடல் துறையையுடைய தலைவனோடு கொண்ட நட்பின் காரணமாக. கண் மாறின்று- இடம் மாறிவிட்டது; என்னை விட்டு அவனிடம் போய்விட்டது. இலங்கு வளைநெகிழ- ஆதலால் நான் என் கையில் விளங்கும் வளையல்கள் கழன்று விழும்படி - சாஅய் உளன் யான்- சோர்ந்து இருக்கின்றேன் யான். பழவிறல்பறை- பழமையான வலிமையுள்ள- சிறகின். வலம்தப்பிய - வலிமை குறைந்ததினால். பைதல்நாரை- வருந்திய நாரையானது. திரைதோய்- கடல் அலைகள் வந்து மோதும். வாங்கு சினையிருக்கும்- வளைந்த மரக்கிளையிலே அடர்ந்திருக்கும் (அதுபோல் நானும் இருக்கின்றேன்.) கருத்து:- தலைவன் என்னை விரைவில் மணந்து கொள்ளா விட்டால் நான் உயிர் வாழ மாட்டேன். விளக்கம்:- இது அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. மணந்து கொள்ளாமல் காலங்கடத்தும் தலைவன் காதிலே விழும்படி தலைவி, தன் தோழியிடம் உரைத்தது. நெய்தல் திணை. ‘வாழி தோழி! சாரல் தழைஅணி அல்குல் மகளிர் உள்ளும் விழவு மேம்பட்ட என் நலன், தண் அம் துறைவனோடு கண் மாறினின்று இலங்குவளை நெகிழ யான் சாய் உளென். பழவிறல் பறைவலம் தப்பிய பைதல் நாரை திரை தோய் வாங்குசினை இருக்கும்’ என்று அடிகள் மாற்றப்பட்டன. பெண்மையைப் பறிகொடுத்து வருந்தும் பெண்ணுக்குச் சிறகை இழந்த நாரை உவமை. சாஅய்- உயிர் அளபெடை. ஏ- அசைகள். சாய்- சோர்ந்து விழவு- விழ, விறல்- வலிமை. பறை- சிறகு. பைதல்- துன்பம். வாங்கு- வளைந்த. கண் மாறுதல்- இடம் பெயர்தல். முல்லை சிரிக்கின்றது பாட்டு 126 இன்பம் அனுபவிக்கக் கூடிய பருவம் இளம் பருவம். இளமைப் பருவம் உள்ளவர்கள் எல்லா இன்பங்களையும் துய்க்க ஆசைப்படுவார்கள். கண்ணுக்கினிய காட்சிகளைக் காண வேண்டும்; காதுக்கினிய செய்திகளைக் கேட்க வேண்டும்; வாய்க்கு இனிய சுவைகளை நுகர வேண்டும். மூக்குக்கு உகந்த நறுமணங்களை அனுபவிக்க வேண்டும்; உடலாலும் இன்பம் அடையவேண்டும். இதுவே அவர்கள் ஆவல். இதுவே ஐம்புல இன்பமாகும். வயதேறிய பின் இத்தகைய இன்பங்களிலே வெறுப்புத் தான் தோன்றும். ஆதலால் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை யெல்லாம் தகுந்த பருவ காலத்திலேயே அனுபவித்துவிட வேண்டும் என்பதே தமிழர் கொள்கை. இளமைப் பருவம் நிலைத்து நிற்காது; மறைந்துவிடும் தன்மையுள்ளது; அது மறைவதற்கு முன்பே மனமகிழ்ந்து இன்புற வேண்டும். இதனை அகப்பொருள் நூல்களிலே விரிவாகக் காணலாம். இக்கருத்தை வலியுறுத்தும் பாட்டுகளிலே இதுவும் ஒன்றாகும். இளங் காதலர்கள் இருவர், அவர்களிடம் செல்வம் இல்லை. செல்வம் இருந்தால்தான் இல்லறத்தை நன்றாக நடத்த முடியும். ஆதலால், காதலன் பொருள் தேடச் சென்றான். அவன் போகும் போது தன்னைப் பிரிந்திருக்கத் துணியாத தன் காதலியிடம் கார் காலம் வருவதற்குள் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றான். காதலன் கெடுவைத்த கார்காலம் வந்துவிட்டது. வானத்திலே கருமேகங்கள் தவழ்கின்றன; இடி இடிக்கிறது; சோவென்று மழையும் கொட்டுகிறது; வாடிக் கிடந்த செடி கொடிகள் எல்லாம் வளம் பெற்றுப் பூத்துக் குலுங்குகின்றன. இந்தச் சமயத்திலும் காதலன் வரவில்லை. காதலியால் பொறுக்க முடியவில்லை. மனம் வருந்திய காதலி தன் தோழியிடம் தன் துன்பத்தை வாய்விட்டுக் கூறினாள். ‘தோழியே! அவர் இளமைப் பருவத்தின் அருமை பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்கவேயில்லை. இளமைப் பருவம் வீணாகக் கழிந்து விட்டால் அதைத் திரும்பவும் பெறமுடியாது என்பதை அவர் நினைத்துப் பார்க்கவே யில்லை. செல்வந்தான் பெரிதென்று எண்ணி அதைத் தேடுவதிலே ஆசை கொண்டு போய் விட்டார். பொருளாசையால் என்னை விட்டுப் பிரிந்து போன அவர் இவ்விடத்திற்கு இன்னும் திரும்பி வரவில்லை. அவர் இப்பொழுது எவ்விடத்தில் இருக்கின்றனரோ என்று நினைத்து நான் வருந்தியிருக்கிறேன். ‘இச்சமயத்திலே நல்ல குளிர்ச்சியான கார்காலமும் வந்து விட்டது, இந்தக் கார் காலத்திலே பெய்யும் மழையால் காப்பாற்றப்பட்ட முல்லைக் கொடிகள் செழித்து வளர்ந் திருக்கின்றன. அவற்றிலே மொட்டுகள் கும்பலாகக் காணப் படுகின்றன. இம் முல்லைக் கொடிகள் இம்மொட்டுகளையே பற்களாகக் கொண்டு நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன. எங்கள் காதலராகிய கார் காலத்தார் வந்துவிட்டார். உன் காதலர் இன்னும் வரவில்லையே என்று சொல்லிச் சிரிப்பது போல இருக்கின்றது இது என்று கூறி வருந்தினாள் காதலி. இப்பாடலிலே இளமைப் பருவத்தின் நிலையாமை, கார்காலத்தின் இயற்கை இவை இரண்டையும் காணலாம். பாட்டு இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர், இவணும் வாரார், எவணரோ? எனப் பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறாக நகுமே தோழி! நறும் தண் காரே. பதவுரை: தோழி, இளமை பாரார்- இளமைப் பருவத்தின் சிறப்பையும் நிலையாமையையும் எண்ணாமல், வளம் நசைஇ- செல்வத்தைத் தேட விரும்பி, சென்றோர் - என்னை விட்டுப் பிரிந்து சென்றவர். இவணும் வாரார்- இவ்விடத்திற்கு இன்னும் திரும்பி வரவில்லை. எவணர் ஓ- அவர் எவ்விடத்தில் இருக் கின்றாரோ. என - என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் போது. நறும் தண்கார்- நல்ல குளிர்ந்த கார்காலத்தின். பெயல் புறம் தந்த - மழையினால் பாதுகாக்கப்பட்ட. பூங்கொடி முல்லை- பூவையுடைய முல்லைக் கொடியானது. தொகுமுகை- தனது கூட்டமான மொட்டுகளை. இலங்கு எயிறாக- விளங்குகின்ற பற்களாகக் கொண்டு. நகும்ஏ - நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றது. கருத்து:- கார்காலம் வந்துவிட்டது. நம்மைப் பிரிந்து சென்ற காதலர் இன்னும் வரவில்லை முல்லை நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றது. விளக்கம்:- இது ஒக்கூர் மாசாத்தியார் என்னும் புலவர் பாட்டு கார்காலத்தில் மீள்வேன் என்று சொல்லிப் பொருள் தேடச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்பவில்லை. அது கண்ட தலைமகள் வருந்திக் கூறியது. முல்லைத்திணை. இப்பாட்டின் இறுதித் தொடர் ‘தோழி நறும் தண் காரே, என்பது. இதில் உள்ள தோழி என்னும் சொல் முதலிலும், நறுந்தண் கார் என்னும் தொடர் மூன்றாவது அடியின் முதலிலும் சேர்த்துப் பொருள் சொல்லப்பட்டது. வளம்- செல்வம். நசை- விரும்பி. நசைஇ- உயிர் அளபெடை. பெயல்- மழை. ஏ- அசைச்சொல். முல்லை அரும்பு பல்லுக்கு உவமை. உன் தூதன் பொய்யன் பாட்டு 127 சிலர், தாம் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் நம்பலாம். ஏனென்றால் மீண்டும் அவர்கள் குற்றஞ் செய்யத் துணிய மாட்டார்கள். திருந்தி விடுவார்கள். தாம் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிறவர்கள் வேண்டுமென்றே குற்றம் புரிந்தவர்கள் அல்லர்; அறியாமையால் தவறு செய்தவர்கள். ஆகையால் அவர்களைக் கெட்டவர்கள் என்று தள்ளிவிடுவது முறையாகாது. நல்லவர்கள் கூட்டத்திலே தான் அவர்களைச் சேர்க்க வேண்டும். வேண்டும் என்றே குற்றம் புரிகின்றவர்கள் யோக்கியர்கள் அல்லர். அவர்கள் தாம் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். அதை மறைக்கவே வழி தேடுவார்கள். இவர் களைத்தான் நம்பக் கூடாது; நம்பினால் ஆபத்துத்தான். சமயம் பார்த்துக் கழுத்திலே கத்தி வைத்து விடுவார்கள். இந்த உண்மை இந்தப் பாட்டிலே மறைந்து கிடக்கின்றது. ஒரு தலைவன். அவன் மருத நிலத்திலே வாழ்பவன். செல்வச் செருக்குடையவன். தன் காதலியைப் பிரிந்து பரத்தையர்களுடன் கூடிக் குலாவியிருந்தான். சில நாட்கள் சென்றதும், பரத்தையர் கூட்டுறவு புளித்துப் போய்விட்டது. தன்னிடம் உண்மையான அன்புள்ள இல்லக்கிழத்தியின் நினைவு வந்துவிட்டது. ஆதலால் தன் இல்லத்திற்குத் திரும்ப நினைத்தான். தான் வருவதை அறிவிப்பதற்காகத் தனது பாணனை முன்னே தூதாக அனுப்பினான்; அவன் பின்னே தலைவனும் போனான். பாணன் தலைவியைக் கண்டான். அவளிடம் உன், தலைவன் ஒரு பொழுதும் உன்னை மறந்தவன் அல்லன்; அவன் ஒழுக்கங் கெட்டவனும் அல்லன்; பரிசுத்தமானவன் என்றும் கூறினான். இது உண்மையை மறைக்கும் பொய்யுரை. பரத்தையர்களிடம் போய் வந்த தலைவனைப் பற்றிப் பாணன் கூறிய இச் சொற்களைக் கேட்டுத் தலைவி ஒன்றும் பேசவில்லை. ஆனால் தோழிக்கு இச்சொற்கள் பொறுக்க வில்லை. அவள் பாணனுக்குப் பின்னே நின்ற தலைவனைப் பார்த்து அவனுடைய திருட்டுத்தனத்தை உடைத்து விட்டாள். ‘காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரையுடைய தலைவனே! உன் ஊரில் உள்ள வயல்களில் எல்லாம் தாமரைகள் முளைத்துப் பூத்திருக்கும். அந்த வயல்களிலே நாரைகள் மீன்களைப் பிடித்துத் தின்னும். நாரைகளின் வாயிலிருந்து நழுவித் தண்ணீரில் விழுந்த மீன்கள் நீருக்குள் அழுந்தி மேலே வந்தபோது, உயர்ந்து வளர்ந்திருக்கின்ற தாமரை மொட்டுக்களைக் கண்டு அஞ்சும். அவை நாரைகளைப் போலக் காணப்படுவதால் மீண்டும் தம்மைப் பிடிப்பதற்காக நாரைகள் வந்துவிட்டனவோ என்று எண்ணிப் பயமடையும். இத்தகைய சிறந்த ஊரின் தலைவனான உன்னுடைய பாணன் ஒருவன் பொய் சொல்வதைக் கேட்கின்றோம். இதனால் உன்னுடைய பாணர்களைப் பற்றி நாங்கள் சந்தேகப்படுகின்றோம். நீ பிரிந்ததனால் தனித்திருக்கும் மகளிரிடம் உன் பாணர்கள் அனைவரும் பொய் பேசுவார்கள்; உண்மை பேச மாட்டார்கள் என்றே நாங்கள் நினைக்கின்றோம். ஆகையால் உன் தூதன் கூறும் பொய்யை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்’ என்று கூறினாள். இவ்வாறு தலைவன் பொய்யுரைத்ததை உடனே புட்டுக் காட்டினாள் தோழி. தீயொழுக்கத்திலே புகுந்தவன், மேலும் தீமை செய்வதற்கே துணிவான் என்னும் குறிப்பு இப்பாட்டில் இருப்பதைக் காணலாம். பரத்தையரிடம் நேசங் கொண்ட தலைவன் பொய் சொல்லவும் துணிந்தான் என்பது இவ்வுண்மையை விளக்குகின்றது. நீர் வளமுள்ள மருத நிலத்தின் இயற்கை வளத்தையும் எடுத்துக் காட்டுகிறது இப்பாடல். பாட்டு குருகு கொளக் குளித்த கெண்டை அயலது உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம், கழனி அம் படப்பைக் காஞ்சி யூர! ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர் நீ அகன்றிசி னோர்க்கே. பதவுரை:- குருகு கொள- நாரை தன் மூக்கினால் கவர்ந்து கொள்ள. குளித்த- அதன் மூக்கிலிருந்து தப்பித்துத் தண்ணீருள் மூழ்கி எழுந்த, கெண்டை- கெண்டை மீனானது. அயலது- தன் பக்கத்திலே காணப்பட்ட, உரு கெழு தாமரை- நிறம் பொருந்திய தாமரையின். வான் முகை- வெண்மையான மொட்டைக் கண்டு. வெரூம்- நாரைதானோ என்று அஞ்சும். கழனி அம்படப்பை- வயல்களாகிய அழகான பக்கங்களை யுடைய. காஞ்சி ஊர- காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரையுடைய தலைவனே. ஒரு நின்பாணன்- உன் பாணன் ஒருவன். பொய்யன் ஆக- பொய் பேசுவான் ஆனதால். உள்ள பாணர் எல்லாம்- உன்னிடம் உள்ள பாணர்கள் எல்லோரும். நீ அகன்றிசினோர்க்கு- உன்னை விட்டுத் தனித்திருக்கும் பெண்களிடம். கள்வர் போல்வர்- பொய்யுரைக்கும் கள்வர்களைப் போலவே காணப்படுவார்கள். கருத்து:- தலைவனே! உன் பாணன் உண்மையுரைக்க வில்லை. பொய் பேசுகின்றான். விளக்கம்:- இது ஓரம்போகியார் என்னும் புலவர் பாட்டு. பரத்தையரிடம் சென்ற தலைவன், ஒரு பாணனைத் தலைவியிடம் தூதாக அனுப்பினான். அவன் பின்னே தானும் வந்து நின்றான். தூதாக வந்த பாணன் தலைவன் குற்றவாளி யல்லன் என்று தலைவியிடம் கூறினான். அதைக் கேட்டிருந்த தோழி தலைவனைப் பார்த்துச் சொல்லியது. மருதத்திணை. ‘கள்வர் போல்வர் நீ அகன்றி சினோர்க்கே’ என்ற இறுதியடி மட்டும், ‘நீ அகன்றிசினோர்க்கு கள்வர் போல்வர்’ என்று மாற்றப்பட்டது. வெரூஉம்- உயிர் அளபெடை. ஏ- அசைச்சொல். குருகு- நாரை. குளித்தல்- முழுகுதல். வான் முகை- வால்முகை. வால்- வெண்மை. படப்பை- பக்கம்; சோலை என்ற பொருளும் உண்டு. ‘அகன்றிசினோர்’ என்னும் சொல் தலைவன் பல பெண்களிடம் நட்புள்ளவன் என்பதை அறிவித்தது. உனக்குத் துன்பந்தான் பாட்டு 128 ஆசையோடு ஒரு பொருளைத் தேடிச் சென்றவர் அதைப் பெறாவிட்டால் ஆயாசப்படுவார். தேடிச் செல்லும் பொருள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று ஐயத்துடன் சென்றவர்க்கு அவ்வளவு ஆயாசம் உண்டாகாது. நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்று நம்பிச் சென்றவர்தான் அதுகிட்டாத போது அதிக துன்பத்திற்கு ஆளாவார். இந்த இயற்கையை இச்சிறிய பாட்டிலே காணலாம். அடிக்கடி தன் காதலியைக் கண்டு அளவளாவி ஆனந்த மடையும் தலைவன் ஒருவன். அவன் வழக்கம் போலத் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறித்த இடத்திற்குப் போனான். நீண்ட நேரம் அவன் வருகைக்காகக் காத்திருந்தான். அவளைக் காணவில்லை. ஒரு நாளாவது அவன் அவ்வளவுநேரம் காத்துக் கிடந்ததேயில்லை. சில சமயங்களில் அவன் வருவதற்கு முன்பே அவள் வந்துகாத்திருப்பாள். அல்லது அவன் வந்த நேரத்திலேயே அவளும் வந்து விடுவாள். ஆதலால், அன்று அவன் ஏமாந்து போனான். தலைவியைக் காணாமல் ஏமாந்த தலைவன் உள்ளம் சோர்ந்தான். இனி அவளைக் காண முடியுமோ முடியாதோ என்ற ஐயம் அவன் உள்ளத்தைப் பிடித்து உலுக்கியது. ‘இந்த இடத்துக்கும் தலைவியின் ஊருக்கும் தொலை தூரம். அவளைக் கண்காணிக்கும் சுற்றத்தார் பலர் உண்டு; அவள் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்; அவளை வெளியிலே போக வொட்டாமல் கட்டுக் காவலுடன் வைத்திருக்கக் கூடும்; இனி அவளை இந்த இடத்திலே சந்திப்பது அரிது தான்,’ என்று நினைத்தான். அவனுடைய நினைப்பு- கவலை- சொற்களாக வெளிவந்தன. தன் நெஞ்சத்திற்குத் தன் துன்பத்தைத் தானே தெரிவிக்கின்றான். சும்மா தெரிவிக்கவில்லை. ஓர் உதாரணத்துடன் தெரிவிக்கின்றான். ‘நெஞ்சே! இனி நீ துன்பத்தால் வாடவேண்டியதுதான். சிறகையிழந்த ஒரு நாரை, அது கிழக்குக் கடலின் கரையிலே அலையோரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் வாயிலே ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை. இச்சமயத்தில் அதற்கோர் ஆசை உண்டாயிற்று. மேற்குக் கடற்கரையிலே உள்ள, சேர மன்னனுடைய தொண்டியென்னும் பட்டினத்தின் கடல் துறையில் உள்ள அயிரை மீன் மேல் அதற்கு ஆசை உண்டாயிற்று. முன்பு அம்மீனைத் தின்ற ருசி இப்பொழுது அதன் உள்ளத்தை இழுத்தது. இந்த ஆசையுடன் அந்த நாரை தன் தலையை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்ததாம். இந்த நாரையைப் போல் தான் ஆனாய் நீயும். நெடுந்தூரத்தில் உள்ளவள்; எளிதிலே சந்திக்க முடியாதவள்; இத்தகைய தலைவியை அடைவதற்கு எண்ணினாய். அவளைப் பெற முடியாமையால் துன்பத்தை அடைந்தாய். நான் என் செய்வது? நீ துன்பத்திற்குக் காரணமாகிய ஊழ்வினையைக் கொண்டிருக்கின்றாய்; என்று சொன்னான். இதில் உள்ள உவமையின் மூலம் சேரனது, தொண்டி நகரத்தின் சிறப்பைக் காண்கிறோம். இதில் உள்ள உவமையும் அழகான உவமை. பாட்டு குணகடல் திரையது பறைதபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை சூர் இரைக்கு அணவந் தாஅங்குச், சேயள், அரியோள், படர்தி, நோயை, நெஞ்சே! நோய்ப் பா லோயே. பதவுரை:- நெஞ்சே! குணகடல் - கிழக்குக் கடலின். திரையது- அலையோரத்திலே அமர்ந்திருக்கும். பறைதபு நாரை- சிறகையிழந்த கிழ நாரை ஒன்று. தின்தேர்ப் பொறையின்- வலிமையுள்ள தேரையுடைய சேரனது. தொண்டி முன் துறை- தொண்டிப்பட்டினத்தின் கடல் துறையில் உள்ள. அயிரை ஆர் இரைக்கு- அயிரை மீனாகிய அருமையான உணவுக்காக. அணவந்தாங்கு- தலையை மேலே தூக்கிப் பார்த்தது போல. சேயன்- இந்த இடத்திலிருந்து தொலைவில் உள்ளவளும். அரியள் - எளிதில் அடைய முடியாதவளுமாகிய தலைவியை. படர்தி- பெறுவதற்கு நினைக்கின்றாய். நோயை- இதனால் நீ வருந்து கின்றாய். நோய்ப் பாலோயே- நீ துன்பம் அடையும்படியான ஊழ்வினையைக் கொண்டிருக்கின்றாய்; அதனால்தான்- இத் துன்பம் உனக்கு நேர்ந்தது. கருத்து:- இனித் தலைவியை நாம் பெற முடியாது. நீ ஊழ்வினையால் வருந்த வேண்டியது தான். விளக்கம்:- இது பரணர் பாட்டு. வழக்கம் போல் சந்திக்கும் இடத்திலே தலைவியைக் காணமுடியாமல் திரும்பும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது. குறிஞ்சித் திணை. குணகடல்- குணக்குக்கடல். குணக்கு - கிழக்கு. பொறையன்- சேரன். பொறை- மலை; மலைநாட்டையுடையவன். தொண்டி- மேற்குக் கடற்கரையிலே உள்ள நகரம்; சேரனுக்குச் சொந்தமானது. பால்- வினை. ஊழ்வினையைப் பால் என்று கூறுகின்றன; சங்கநூல்கள். பண்டைத் தமிழர்களுக்கு ஊழ்வினையிலே நம்பிக்கையுண்டு. பழந்தமிழ் நூல்களிலே ஊழ்வினை சொல்லப் பட்டிருக்கின்றது. நுதலால் கட்டுண்டேன் பாட்டு 129 தன் நண்பனுடைய உடல், உயிர், உடைமை எல்லா வற்றிலும் கருத்தைச் செலுத்துகிறவனே உண்மையான நண்பன். நண்பனுடைய உடல் நிலையிலே மாறுதல் உண்டா என்பதை உற்று நோக்குவான்; மாறுதல் கண்டால் அதற்கான காரணத்தைக் காண விரும்புவான். நண்பனுடைய உள்ளத்திலே ஏதேனும் துன்பம் இருந்தாலும் அதையும் அறிந்து கொள்ளுவான். அத் துன்பத்தைத் தொலைக்க முன் வருவான். நண்பனுடைய உடைமைகளுக்குச் சேதம் ஏற்படாமலும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பான் இவை உண்மையான நண்பர்களின் இயல்பு. ஒருவர் நலத்தை மற்றொருவர் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதில் முனைந்து நிற்பவர்களே உண்மையான நண்பர் களாய் நிலைத்து வாழமுடியும். இந்த உண்மையை இப்பாடல் குறித்துக் காட்டுகின்றது. ஒரு தலைவன். அவன் தான் புதிதாகக் காதலித்த தலைவியுடன் கூடியிருந்து திரும்பினான். அருமைத் தலைவியை விட்டுப் பிரிந்து போகிறோமே, இனி எப்பொழுது காண்போம் என்ற கவலையுடன் திரும்பி வருகின்றான். அவனுடைய உள்ளக் கவலை அவன் முகத்திலே துள்ளிக் கொண்டிருக்கின்றது. இத்தலைவன் தன் தோழனிடம் நெருங்கினான். தோழன் தன் தலைவனுடைய முகத்தை உற்று நோக்கினான். உள்ளக் கவலை முகத்திலே திரையிட்டிருந்ததைக் கண்டான். ‘கலங்காத உள்ளம் படைத்த உன் நெஞ்சிலே கவலை தோன்றிய காரணம் என்ன?’ என்று கேட்டான். ‘எனது உள்ளங் கலந்த உத்தம நண்பனே! உன்னுடன் பழகும் இளைஞர்களையெல்லாம் எப்பொழுதும் இன்பம் அடையச் செய்வாய். இத்தகைய சொல்லும், அரியசெயலும். உயர்ந்த குணமும் அமைந்தவன் நீ. இது மட்டுமா? நீ சிறந்த அறிவுள்ளவன், ஒவ்வொவருடைய உள்ளத்தையும் அவர்களின் முகக்குறிப்பால் கண்டு கொள்ளும் ஆற்றல் உள்ளவன். ஆதலால் உன்னை அறிஞர்கள் எல்லாம் நண்பனாகக் கொண்டிருக்கின்றனர். உன்னிடத்தில் நான் உண்மையை மறைக்க முடியாது. என் முகத்திலே மாறுதல் ஏற்பட்டதற்கான காரணத்தைச் சொல்கிறேன் கேள்! நான் சென்ற இடத்திலே ஒரு காட்சியைக் கண்டேன். அக்காட்சி என்னை அடிமைப்படுத்திவிட்டது. பெரிய கடலின் நடுவிலே எட்டாம் நாள் சந்திரன் தோன்றும் காட்சியை நீ பார்த்திருப்பாய். அதைப் போலக் கருமையான கூந்தலின் பக்கத்திலே சிறிய நெற்றியைக் கண்டேன். கடல் போன்ற கரிய கூந்தலையும் எட்டாம் நாள் அரைமதியைப் போன்ற சிறிய நெற்றியையும் உடையவள்; சிறந்த பண்பும், அழகும் அமைந்தவள். அவளுடைய அழகிய நுதல் என்னைப் பிணித்து விட்டது புதிதாகப் பிடிபட்ட யானை போல நான் அவளுடைய நுதலால் கட்டுண்டேன். இது தான் என் மாறுதலுக்குக் காரணம்; என்று கூறினான் தலைவன். தலைவன் தான் சந்தித்த தலைவியின் அழகைக் கூறியது இப்பாடல். பாட்டு எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! புலவர் தோழ! கேளாய்! அத்தை மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப் பகவெண் திங்கள் தோன்றி ஆங்குக் கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் புதுக் கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே. பதவுரை:- எலுவ-எம் நண்பனே! சிறார்-உன்னுடன் பழகும் இளைஞர்கள். ஏமுறு நண்ப- இன்புறுதற்குரிய சிறந்த பண்புள்ள நண்பனே! புலவர் தோழ- அறிஞர்களின் தோழனே. கேளாய்- கேட்பாயாக. மாகடல் நடுவண்- பெரிய கடலின் நடுவிலே. எண்நாள் பக்கத்து- எட்டாம் நாளின் பகுதிக்குரிய. பசும் வெண் திங்கள்- இளமையான வெண்மை நிறமுள்ள சந்திரன். தோன்றி ஆங்கு- காணப்படுவதைப்போல. கதுப்பு அயல்- ஒரு பெண்ணின் கூந்தலுக்குப் பக்கத்திலே விளங்கும். சிறு நுதல்- கண்ணையும் மனத்தையும் கவரும்படி விளங்குகின்ற சிறிய நெற்றியானது, புது கோள் யானையின்- புதிதாகப் பிடித்துக் கொள்ளப்பட்ட யானையைப் போல. பிணித்தற்றால் எம் ஏ- கட்டிவிட்டது எம்மை. கருத்து:- ஓர் அழகிய மங்கை என் மனத்தைக் கொள்ளை கொண்டாள். விளக்கம்:- இது கோப்பெருஞ் சோழன் பாட்டு. தலைவி யுடன் கூடியிருந்து மீண்ட தலைவனைக் கண்ட தோழன் ‘உன் கவலைக்குக் காரணம் என்ன’ என்று கேட்ட போது தலைவன் கூறிய செய்தியைக் கூறுவது இப்பாடல். குறிஞ்சித்திணை. விளக்கம்:- சிறாஅர் அளபெடை. எலுவன்- நண்பன். பசுமை- இளமை. கதுப்பு- கூந்தல். அத்தை: எ; அசைச்சொற்கள். கூந்தலுக்குக் கடலும், நெற்றிக்குத் திங்களும் உவமானங்கள். ‘புதுக் கோள் யானை’ தலைவனுக்கு உவமானம். தலைவன் இதற்கு முன் எந்தப் பெண்ணிடமும் தன் நெஞ்சைப் பறி கொடுக்காதவன்; எந்தப் பெண்ணின் அழகிலும் மயங்காதவன்; இப்பொழுது தான்’ புதிதாக ஒரு பெண்ணைக் காதலித்தான்: அவன் காதலிலே கட்டுண்டான். இந்த உண்மையைப் ‘புதுக் கோள் யானை’ என்ற உவமை விளக்குகின்றது. தேடித் தருவேன் திகைக்காதே! பாட்டு 130 உள்ளம் வருந்துவோர் உறுதியான ஆறுதல் மொழி கிடைத்தால் அமைதியடைவார்கள். அந்த ஆறுதல் மொழி நம் கவலை தீரும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்க வேண்டும். வருந்துவோர்க்கு நாம் சொல்லும் ஆறுதல் மொழிகள்- சமாதான வார்த்தைகள்- வழ வழ கொழு கொழு வென்றிருந்தால் பலனில்லை. உறுதியற்ற சொற்களால் அவர்கள் உள்ளக் கவலை ஒழிந்து விடாது. ஆதலால் கவலையால் வருந்தும் ஒருவர்க்குச் சமாதானம் கூறுவோர் ஆணித்தரமான ஆறுதல் மொழிகளைச் சொல்ல வேண்டும். இந்தக் குறிப்பை இச்செய்யுளிலே நாம் காணலாம். தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி வருந்திக் கொண்டி ருக்கிறாள். தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற நாட்கள் எல்லாம் நகர்ந்துவிட்டன. அவன் எப்பொழுது வருவானோ என்ற ஏக்கம் அவளைப் பிடித்து ஆட்டி அலைக்கழித்தது. அவள் தன் துன்பத்தை வாய் விட்டுக் கூறமுடியாத வாட்டத்துடன் இருந்தாள். தலைவியின் இந்த நிலையைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகின்றாள்; தலைவியின் உள்ளத்திலே நம்பிக்கை பிறக்கும்படி உறுதியாகச் சொல்லுகிறாள்; ‘தலைவியே! நீ சிறிதும் கவலைப்படாதே. நமது தலைவர் எங்கே இருந்தாலும் சரி! அவர் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விடுவேன்; தூதனுப்பி அவரைக் கொண்டு வந்து உன்முன்னே நிறுத்துகின்றேன். அவர் எங்கும் போய் விடவில்லை; இந்த உலகில்தான் இருக்கின்றார். நம் காதலருக்கு நிலத்தைத் தொளைத்துக் கொண்டு பூமிக்கு அடியிலே செல்லும் வித்தை தெரியாது. வானத்திலே பறந்து செல்லும் வித்தையும் தெரியாது. கடலின்மேல் காலால் நடந்து செல்லும் வித்தையும் தெரியாது. ஆதலால் அவர் பாதாள உலகுக்கோ, வானுலகுக்கோ வேற்று நாட்டுக்கோ போயிருக்க முடியாது. இந்தத் தேசத்தில் உள்ள பல நாடுகளிலும், பல ஊர்களிலும், பல குடும்பங்களிலும் தேடினால் அவரைக் கண்டுபிடித்து விடலாம். இது உறுதி. இந்த நாட்டில், எவ்வூரில், எக்குடியிலிருந்தாலும் அவரைத் தேடிக் கொண்டு வருவேன். நீ சிறிதும் கவலைப்படாதே, என்று ஆறுதல் மொழிகள் கூறினாள் தோழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது இப்பாடல். உள்ளத்திலே நம்பிக்கை பிறக்கும்படியான உறுதியான சொற்றொடர்களால் ஆக்கப் பட்டிருக்கும் அரிய செய்யுள் இது. பாட்டு நிலம் தொட்டுப்புகாஅர்; வானம் ஏறார்; விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரும் உளரோ நம் காத லோரே. பதவுரை:- நம் காதலோர் ஏ- தலைவியே! நமது காதலர். பிரிந்து விட்டார் என்று கலங்காதே. நிலம் தொட்டு- நிலத்தைத் தோண்டிக் கொண்டு. புகார்-பூமிக்கும் அடியில் நுழைய மாட்டார். வானம் ஏறார்- வானுலகுக்கும் பறந்து போய்விட மாட்டார். விலங்கு - குறுக்கிடுகின்ற. இருமுந்நீர்- பெரிய கடலின் மேலும். காலின் செல்லார்- காலால் - நடந்து கடந்திருக்க மாட்டார். நாட்டின் - நாட்டின் - இத் தேசத்தில் உள்ள ஏதோ ஒரு நாட்டில். ஊரின் ஊரின்- ஊர்களிலே ஏதோ ஒரு ஊரில். குடிமுறை குடிமுறை- குடும்பங்களிலே முறையாக. தேரின்- ஆராய்ந்து பார்த்தால். கெடுநரும் உளரோ- அகப்படாமல் காணாமல் போய் விடுவாரோ? (காணாமல் போய்விட மாட்டார். நிச்சயம் அகப்பட்டுக் கொள்ளுவார்). கருத்து:- இந்த நாட்டில் அவர் எங்கிருந்தாலும் தேடிக் கொண்டு வருவேன். விளக்கம்:- இதைப் பாடிய புலவர் வெள்ளி வீதியார். இவர் பெண் புலவர். தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துவதைப் பார்த்துத் தோழி கூறியது. ‘தலைவர் இந்த நாட்டில், எந்த ஊரில், எந்தக் குடியில் இருந்தாலும் தேடிக் கொண்டு வருகின்றேன்; வருந்தாதே’ என்று கூறினாள். பாலைத்திணை. ‘காதலோரே’ என்ற தொடர் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டது. புகாஅர்; உயிர் அளபெடை ஏ, அசைச்சொல். தொட்டு- தோண்டி; அகழ்ந்து. விலங்குதல்- மறித்தல். முந்நீர்- கடல், மூன்று வகையான நீரையுடையது. அவை, ஆற்று நீர், ஊற்றுநீர், மழைநீர். மூன்று தன்மைகளையுடைய நீர் என்றும் கூறுவர். அவை- படைத்தல், காத்தல், அழித்தல் என்பவை. பூமிக்கடியில் புகுந்து வாழ்தல், வானத்தில் செல்லுதல், நீர் மேல் நடத்தல் ஆகிய வித்தைகளைப் பற்றிப் பண்டைத் தமிழர்கள் பேசிக்கொண்டிருந்தனர் என்ற செய்தியை இப்பாடலால் அறியலாம். இவற்றைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. இந்நம்பிக்கையை இப்பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது. அடங்காத துயரம் பாட்டு 131 செல்வத்தைத் தேடச் சென்ற தலைவன் நீண்ட தூரம் போய் விட்டான். அவன் இருந்த ஊருக்கும், அவன் காதலி யிருக்கும் ஊருக்கும் தொலை தூரம், பல நாட்கள் கடந்துதான் அவன் தன் காதலியைக் காண முடியும். தலைவன் தன் முயற்சியிலே வெற்றி பெற்றுவிட்டான். அவன் நாடிச் சென்ற காரியம் கைகூடிவிட்டது. காரியம் முடிந்த வுடன் காதலியைப் பற்றிய நினைப்பு எழுந்தது. அவளுடைய பண்பையும், அழகையும் எண்ணி யெண்ணி அவன் உள்ளம் அவளைக் காண விரைந்தது. ஆனால் அவள் நெடுந் தூரத்தில் இருப்பதால் உடனே அவளைக் காண முடியாதென்று எண்ணி ஏங்கினான். ஆயினும் எப்படியாவது தலைவியிருக்கும் ஊரை யடைய வேண்டும் என்று துடிதுடித்தான். அவன் உள்ளத்தின் விரைவை- துடிப்பை- அவசரத்தை அவனால் அடக்க முடிய வில்லை. ‘அவனுடைய உள்ளத் துடிப்பை அழகான உவமையால் அவனே சொல்லிக் கொள்ளுகின்றான். அந்த உவமை இயற்கையான உவமை. எளிய உழவர்களின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் உவமையாகும். ‘என் காதலியின் தோள்கள் அசைகின்ற மூங்கிலைப் போன்றவை; கண்ணையும் கருத்தையும் கவரும் வனப்புடையவை; நன்றாகப் பருத்துத் திரண்டிருப்பவை. அவளுடைய கண்களோ காண்பவருடன் போர்புரிகின்ற கண்கள். அவளுடைய தோள் களையும் கண்களையும் நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் இன்புறுகின்றது; ஆனால் அவள் அருகில் இல்லையே என்று கவலையும் அடைகின்றது. நாம் இருக்கும் இடத்திற்கும், அவள் இருக்கும் ஊருக்கும் நெடுந்தொலை. விரைவில் அவ்விடத்திற்குப் போய்ச் சேர முடியாது. ஆனால் எனது நெஞ்சமோ அவள் இருக்கும் இடத்திற்குப் போகத் துடியாய்த் துடிக்கின்றது. வானம் பார்த்த சீமையில் வாழும் உழவர்கள் மழை எப்பொழுது பெய்யும் என்று எதிர்பார்த்து ஏங்கியிருப்பார்கள். மழை பெய்தால் மகிழ்ச்சியடை வார்கள். தங்கள் நிலத்தை உழத் தொடங்குவார்கள். சிறு நிலத்தையும் ஒரே ஏரையும் உடைய ஏழை உழவன் மழை பெய்துவிட்டால் ஈரம் காய்வதற்குமுன் நிலத்தை உழுவதற்கு விரைவான். இவனுடைய விரைவுக்கு வேறு உவமானம் சொல்ல முடியாது. அந்த ஒரே ஏரையுடைய உழவனைப் போல என் உள்ளம் என் காதலியைக் காண விரைந்து ஓடுகின்றது. நானோ இதனால் பெரிதும் வருந்துகின்றேன்.” இவ்வாறு தலைவன் தானே சொல்லிக் கொள்வதாக அமைந்திருக்கின்ற அருந் தமிழ்ச் செய்யுள் இது. பாட்டு ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோள், பேர் அமர்க்கண்ணி, இருந்த ஊரே நெடும் சேண் ஆர்இடை அதுவே; நெஞ்சே ஈரம்பட்ட செவ்விப் பைம் புனத்து ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்பு உற்று அன்றால்; நோகோ யானே. பதவுரை:- ஆடு அமை புரையும்- அசைகின்ற மூங்கிலைப் போன்ற. வனப்பின்- அழகையுடைய. பணைத்தோள்- பருத்த தோள்களையுடைய. பேர் அமர் கண்ணி- பெரிய போர் செய்யும் கண்ணையுடைய என் காதலி. இருந்த ஊர் ஏ- இருந்த ஊர். நெடும்சேண் - நீண்டதூரத்தில். ஆர் இடை அதுவே- விரைவில் போய்ச் சேர முடியாத, அரிய இடத்தில் இருக்கின்றது. நெஞ்சு ஏ- எனது மனமோ. ஈரம்பட்ட- மழை பெய்து ஈரம் உண்டான. செவ்வி பைம் புனத்து - பக்குவமான பசுமையுள்ள நிலத்தையுடைய. ஓர் ஏர் உழவன் போல- ஒரே ஏரையுடைய ஒரு ஏழை உழவனைப் போல். பெருவிதுப்பு உற்றன்று ஆல்-மிகவும் விரைவை யுடையது. நோகு ஓ யான் ஓ- வருந்துகின்றேன் நான். கருத்து:- என் உள்ளம் தலைவியை அடைய விரைகின்றது; அவளோ தொலை தூரத்தில் இருக்கின்றாள். விளக்கம்:- இப்பாட்டைப் பாடிய புலவர் பெயர் ஓரேர் உழவனார். இப்பெயர் இயற்பெயர் அன்று. காரணப் பெயர். இச்செய்யுளில் உள்ள ‘ஓரேருழவன்’ என்ற தொடரே இவருக்குப் பெயராயிற்று. தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் தன் காரியத்தில் வெற்றி பெற்றான். உடனே அவன் தலைவியிடம், தான் திரும்பி வருவதாகச் சொல்லிவந்த பருவ காலமும் வந்துவிட்டது. அதைக் கண்டு தலைவியிடம் விரைவில் சென்று தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்று கவலைப்பட்டான் அவன். தன் நிலையைத் தானே சொல்லிக் கொள்ளுகின்றான் தலைவன். பாலைத் திணை. ஏ, ஆல், ஓ, ஏ, - அசைச் சொற்கள். அமை- மூங்கில். அமர்- போர். சேண்-தூரம். ஆர்இடை- அரிய வழி; அரிய இடம் என்றும் கூறலாம். செவ்வி -பக்குவம்; பதம். விதுப்பு- விரைவு. கண்ணி- கண்ணையுடையவள். ஏழை உழவன் விரைவு, விரையும் உள்ளத்திற்கு உவமை அன்பு சொட்டும் கண்ணாள் பாட்டு. 132 எதற்கும் கலங்காத நெஞ்சினராயிருக்கலாம்; எதற்கும் இணங்காத உள்ளமுடையவராயிருக்கலாம்; என்றும் இணங்காத கடுஞ் சித்தமுடையவராயிருக்கலாம்; யாருக்கும் ஏமாறாத சதுரர்களாயிருக்கலாம்; அத்தகையவர்கள் கலங்கும் காலம் வராமலிராது; இவர்களிடம் இணங்கும் உள்ளம் ஏற்படாம லிருக்காது; இரக்கந் தோன்றாமலிராது; ஏமாறும் சந்தர்ப்பம் ஏற்படாமலிருக்காது. எத்தகைய ஆண்மையுள்ளவர்களும் சில சமயங்களில் கோழைகளாகித்தான் தீர்வார்கள். இது இயற்கை; மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை இந்தப் பாடல் நமக்கு நினைப்பூட்டுகிறது. ஒரு தலைவன் அவன் மிகவும் திறமைசாலி எளிதில் ஏமாந்து விடமாட்டான். தன் நெஞ்சை எக்காலத்திலும் நெகிழ விட்டு விடமாட்டான். ஆய்ந்து ஆய்ந்து பார்த்துத்தான் எதையும் ஒப்புக் கொள்ளுவான். இவன் தான் வேட்டை மேற்குறிவைத்துச் சென்ற ஒரு மலைச்சாரலிலே ஒரு மங்கையைக் கண்டான். அவன் உள்ளம் அவனை மீறி அம்மங்கையினிடம் போய்விட்டது. அவளும் அவனை விரும்பினாள். அவனும் அவளை விரும்பினான். அப்புறம் என்ன தடை? பேச்சுக்கே இடமில்லாமற் போயிற்று. இருவரும் காதலர்களாகி விட்டனர். என்றும் இணை பிரியாக் காதலர்களாக வாழ்வதென்றும் உறுதி செய்து கொண்டனர். பின்னர் அவன் தன் பாங்கனிடம் திரும்பிவந்தான். ‘இவ்வளவு நேரமா வேட்டை?உன் வேட்டையில் ஏதோ புதுமையிருப்பதாக நினைக்கின்றேன். உன்னிடம் காணும் மாறுதல் அந்தப் புதுமையைச் சொல்லுகிறது. வேட்டைக்குப் போன இடத்தில் நிகழ்ந்த அந்த வேடிக்கைதான் என்ன?’ என்றான் பாங்கன். ‘தோழனே! நீ நினைப்பது உண்மைதான். எனக்குக் கிடைத்த வேட்டை அருமையானது. என் வாழ்விலே எந்நாளும் இன்பம் சுரக்கக் கூடியது. என் மனத்திற்கிசைந்த ஒரு வாழ்க்கைத் துணைவியைப் பெற்றேன். அது என் செயல் அன்று இயற்கை எனக்களித்த உதவி’ என்றான் தலைவன். ‘தலைவனே! உன் செய்கை எனக்குத் திகைப்பைத்தான் தருகிறது. நீதானா இப்படிப் பேசுகிறவன்? எங்கோ வேட்டைக்குச் சென்றவிடத்தில், எவளோ ஒருத்தியிடம் உன் உள்ளத்தைப் பறி கொடுத்துவிட்டாய்; எல்லாம் அறிந்த நீ- எளிதில் ஏமாறாத நீ - கலங்காத கருத்துள்ள நீ- இப்படி ஏமாறலாமா?’ என்றான் பாங்கன். பாங்கனே! என் உள்ளத்திலே குடியேறிய அவளைப் பற்றி நீ அறிய மாட்டாய்; அவள் சிறப்பையும், இயல்பையும் அறிந்தால் இப்படி என்னைப் பற்றிக் குறைவாக எண்ண மாட்டாய்! பேசவு மாட்டாய்! அவள் தன்மையைச் சொல்லுகிறேன் கேள்’ என்று கூறத் தொடங்கினான் தலைவன். ‘மிகவும் விரைந்து அன்புடன் தழுவிக் கொள்ளுகிறவள்; காணக் காண உள்ளத்திலே இன்ப மூட்டும் அழகையுடையவள். குவிந்த மெல்லிய மார்பை யுடையவள்; கொடிபோல் நீண்டு கறுத்து அடர்ந்த கூந்தலை யுடையவள்; இப்படிக் காட்சியளிக்கும் அவளையான் எப்படி மறந்து வாழ முடியும்? அவள் இளம் பசுங்கன்றைப் போன்றவள். பக்கத்திலே மேயச் சென்ற தாய்ப் பசுவையே எண்ணி. அது எப்பொழுது திரும்பி வருமோ என்று கவலை கொண்டு அதன் வருகைக்காக ஏங்கியிருப்பது இளங்கன்றின் தன்மை. அதைப் போல அவளும் என்னை எதிர்பார்க்கும்- தன் விருப்பத்தை வெளியிடும்- பரிதாபமான பார்வையை உடையவள். மாமை நிறங் கொண்டவள். இவளை நான் எப்படி மறக்க முடியும்? நீயே சொல்’! இவ்வாறு கூறினான் தலைவன். இந்த நிகழ்ச்சியை அழகு பொருந்த எடுத்துக்காட்டுகின்றது இச்செய்யுள். பாட்டு கவவுக் கடுங்குரையள், காமர் வனப்பினள், குவவு மென்முலையள், கொடிக் கூந்தலளே, யாங்கு மறந்து அமைகோ யானே, ஞாங்கர்க் கடும் சுரை நல் ஆன் ‘நடுங்குதலைக் குழவி தாய்காண் விருப்பின் அன்ன, சாஅய் நோக்கினளே! மா அ யோளே. பதவுரை: - கவவு- தோழ! அவள் என்னைத் தழுவிக் கொள்வதிலே , கடும் குரையள்- மிகவும் விரைவுள்ளவள். காமர்- விரும்பத்தகுந்த; வனப்பினள்- அழகுள்ளவள், குவவு மெல் முலையள்- குவிந்த மெல்லிய முலைகளையுடையவள். கொடி கூந்தலள்ஏ- கொடிபோல் நீண்ட கூந்தலையுடையவள். யாங்கு- இத்தகையவளை எப்படித்தான்; மறந்து அமைகோயான் ஏ- மறந்து இருப்பேன் நான். ஞாங்கர் - பக்கத்திலே மேயச்சென்ற: கடும் சுரை- விரைவில் பாலைச் சுரக்கும் தன்மையுள்ள- நல் ஆன்- நல்ல பசுவினது, நடுங்குதலைக் குழவி- நடுங்குகின்ற தலையை யுடைய இளங்கன்று. தாய் காண் விருப்பின் அன்ன- மீண்டும் தாயைக் காணும் ஆசையோடு இருப்பதைப் போன்ற. சாய் நோக்கினள் ஏ- சோர்ந்த பார்வையையுடையவள். மாயோள் ஏ- மாமை நிறமுள்ளவள் அவள். கருத்து:- என் நெஞ்சங் கவர்ந்த தலைவி மறக்க முடியாத அழகும் அன்பும் உள்ளவள். விளக்கம்:- இது சிறைக்குடியாந்தையார் என்னும் புலவர் பாட்டு. ஒரு பெண்பால் உன் உள்ளத்தைப் பறி கொடுப்பது உனக்குத் தகுந்ததா’ என்று பாங்கன் கேட்டான். அவனுக்குத் தலைவன் தன் உள்ளத்தைப் பறிகொடுத்ததற்கான காரணத்தை எடுத்துரைத்தான். இது குறிஞ்சித் திணை. சாஅய். மா அயோள்; உயிர் அளபெடைகள். ஏ- அசைச் சொற்கள். கவவுதல்- தழுவுதல். காமர்-விருப்பம். கடும்குரை- விரைவு. கடும் சுரை- விரைவில் பாலைச் சுரத்தல். நல்ல பசு விரைவிலே தன் கன்றுமடியிலே வாயை வைத்தவுடன் பாலைச் சுரக்கும். சிறந்த அன்புக்கும் பசுவுக்கும் அதன் கன்றுக்கும் உள்ள தொடர்பை உதாரணமாகக் காட்டுவது இலக்கிய மரபு; உலக வழக்குமாகும். ‘நடுங்கு தலைக்குழவி’ என்பது இளங்கன்று என்பதை விளக்குகின்றது. சாய் நோக்கு- சோர்ந்த பார்வை. நம்பிக்கையால் உயிர் வாழ்கின்றேன் பாட்டு. 133 எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையிழந்தவர்கள் வாழ முடியாது. வாழவும் மாட்டார்கள். ‘இன்று நாம் படுந்துன்பம் என்றோ ஒரு நாள் ஒழிந்துதான் ஆக வேண்டும். நல்ல காலம் கட்டாயம் வந்தே தீரும். அதுவரையிலும் எப்படியாவது பல்லை கடித்துக் கொண்டு கடமையைச் செய்து கொண்டிருப்போம்! என்று உறுதி படைத்தவர்கள் தாம் உயிர் வாழ்வார்கள். உலக வாழ்வில் இன்புற்று வாழ எண்ணுவோர்க்கு இத்தகைய உறுதியும் நம்பிக்கையும் வேண்டும். இக்குறிப்பை இச்செய்யுள் வெளியிடுகிறது. ஒரு தலைவி, அவளைக் காதலித்துக் கைப்பிடித்த தலைவன் இன்னும் அவளைக் வெளிப்படையாக மணந்து கொள்ளவில்லை. இதோ, அதோ என்று காலங்குறித்துக் கொண்டே வாழ்ந்தான். மணந்து கொள்வதாக அவன் சொல்லிய தவணைகள் எல்லாம் கடந்து விட்டன. இதைத் தன் நெஞ்சிலே நினைந்த தலைவி, தன் துன்பத்தைத் தோழியிடம் கூறுகின்றாள். ‘தோழியே என்னுடைய பெண் தன்மையைப் பறி கொடுத்து விட்டேன். என் காதலன் அதை உண்டு விட்டான். என் நலனை யிழந்து நான் தனித்து வருந்து கின்றேன். என் வலிமையும் அழிந்து விட்டது. ஆயினும் நான் இன்னும் உயிரோடு உலவிக் கொண்டிருக் கின்றேன். இதற்கு ஒரே காரணம்தான் உண்டு. குறவனுடைய தினைப்புனத்திலே விளைந்த சிறிய தினைக் கதிர்களைக் கிளிகள் ஓடித்துத் தின்றுவிட்டன. ஆயினும் அத் தினைகளின் மொட்டையான அடிப்பாகம் மழை பெய்ததனால் மீண்டும் துளிர்ந்தது. துளிர்விட்டதனால் மீண்டும் தினைக்கதிர் தோன்றும். இதைப்போல் என் காதலர் என்னை மணந்தால் நான் மீண்டும் பலம் பெறுவேன், இழந்த நலனைப் பெறுவேன். இந்த நம்பிக்கையே என்னை உயிர் வாழச் செய்கின்றது என்று கூறினாள் தலைவி. பாட்டு புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை, கிளிகுறைத் துண்ட கூழை இருவி பெரும் பெயல் உண்மையின், இலைஒலித்தாங்கு, என் உரம் செத்தும் உளெனே தோழி! என் நலம் புதிது உண்ட புலம்பினானே. பதவுரை:- புனவன் -குறவனுக்குரிமையான. துடவை- தோட்டத்திலே விளைந்த. பொன் போல் சிறுதினை- பொன்னைப் போன்ற சிறிய தினைக்கதிர்களை. கிளி குறைத்து உண்ட- கிளிகள் ஒடித்து உண்டபின், கூழை இருவி- மொட்டையாகக் காணப்படு கின்ற தினையின் தாளில், பெரும் பெயல் உண்மையின்- பெரிய மழை உண்டானதால். இவை ஒலித்து ஆங்கு- மீண்டும் இலைகள் தழைத்தது போல். என் நலம் புதிது உண்ட- எனது பெண்மை நலத்தை என் காதலன் புதிதாக உண்ட காரணத்தால். புலம்பினாள் ஏ- அதனால் எனக்கேற்பட்ட தனிமையினால். என் உரம் செத்தும்- என் வலிமை குறைந்தும். உளென் ஏ- இன்னும் உயிரோடிருக் கின்றேன் தோழி! கருத்து:- தலைவர் என்னை எப்படியும் மணந்து கொள்வார் என்ற நம்பிக்கைதான் என்னை உயிர் வாழச் செய்து கொண்டிருக் கின்றது. விளக்கம்:- இது உறையூர் முது கண்ணன் சாத்தன் என்பவர் பாட்டு. காதலன் தன்னை மணந்து கொள்ளாமல் காலங்கடத்து வதைக் கண்ட தலைவி மனம் வருந்திக் கூறியது. குறிஞ்சித் திணை. ‘என் நலம் புதிது உண்ட புலம்பினானே, என் உரம் செத்தும் உளெனே தோழி’ எனப் பின் இரண்டடிகள் கொண்டு கூட்டப் பட்டன. புனவன்- புனத்தையுடையவன்; குறவன், புனம்- தினைப் புனம். துடவை- தோட்டம். கூழை- மொட்டை. இருவிதாள்; அடிப்பாகம்; ஒலித்தல் - தழைத்தல்; செத்து -குறைந்து; அழிந்து. அழிந்த நலன் மீண்டும் கைகூடும் என்பதற்கு, மொட்டையான தினைத்தாள் மழையால் தளிர்த்தல் உவமானம். குறிஞ்சி நிலத்தில் வாழும் தலைவி, தான் கண்ணாற் கண்ட இயற்கைக் காட்சியையே தனது நம்பிக்கைக்கு உவமானமாகக் கூறினாள். இத்தகைய இயற்கையான உவமையை எடுத்துக்காட்டியது இப்புலவரின் சிறப்பையும் அறிவையும் விளக்கும். இருந்தால் இன்பம், பிரிந்தால் துன்பம் பாட்டு 134 தலைவன் அன்பிலே குறைந்தவனல்லன். தன் காதலியை விரைவிலே மணந்து கொள்ள வேண்டும் என்பதே அவன் ஆசை. அதற்காகவே அவன் பொருள் தேடப் போயிருக்கின்றான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் தலைவி புலம்பினாள். அதைக் கண்ட தோழி. ‘தலைவியே ஏன் வருந்துகின்றாய்? உன்னை மணப்பதற்காகத் தானே அவர் பொருள் தேடப்போயிருக் கின்றார்! அவருடைய கூட்டுறவால் உனக்கு நன்மைதான் கிடைத்திருக்கிறது இருந்தும் நீ இப்படி வருந்துவது தகாது’ என்றாள் தோழி. அவளுக்குத் தலைவி உடனே விடையளிக் கின்றாள் தலைவி அளிக்கும் விடைதான் இச்செய்யுள். ‘தோழியே நான் சொல்லுகிறேன் கேள்! அருவிக்குப் பக்கத்திலே, குறுகிய கற்களுக்கு இடையிலே, வேங்கை மரம் ஒன்று வளர்ந்திருக்கின்றது. அந்த அருவி நீரின் காரணமாக அது நன்றாகப் பருத்து உயர்ந்து வளர்ந்திருக்கின்றது. அதன் கிளைகள் பூத்துக் குலுங்கி அசைந்து கொண்டிருக்கின்றன. வேங்கை மரத்திற்கு இத்தகைய செழிப்பைக் கொடுத்தது அந்த அருவி தான். ஆனால் அந்த அருவி நிலத்திலே விரைவாக விழும் போது அந்த வேங்கை மரத்தின் கிளைகளை ஆட்டி அசைத்து அவற்றில் உள்ள மலர்களை உதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கற்களோடு மோதிக் கொண்டு, தாவிக் குதிக்கின்றது. எட்டியிருந்து அவ்வருவியைக் காண்போர் நிலத்திலே குதிக்கும் மலைப் பாம்போ என்று மருள்கின்றனர். இத்தகைய மலைநாட்டுத் தலைவனோடு நான் கொண்ட நட்பு. அவனைவிட்டுப் பிரியா மலிருந்தால் தான் எனக்கு இன்பந்தரும். பிரிந்து நின்றால் துன்பத்தைத்தான் தரும். வேங்கை மரம் தழைப்பதற்கு அருவிநீர் ஆதரவாயிருந்தது உண்மைதான். ஆனால் அவ்வருவி நிலத்தில் விழும்போது அவ்வேங்கையைத் துன்புறுத்துகிறதன்றோ அதைப் போன்றதுதான் எனது நிலமை. இவ்வாறு தலைவி தன் துன்பத்தை விளக்கிக்கூறிய செய்தியே இப்பாடல். பாட்டு அம்ம! வாழி! தோழி! நம்மொடு பிரிவு இன்று ஆயின் நன்றுமன்தில்ல! குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் பூஉடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி நிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்கு மலைநாடனொடு கலந்த நட்பே. பதவுரை:- வாழி தோழி அம்ம- வாழ்க தோழியே! நான் ஒன்று சொல்லுகிறேன் கேள். குறும்பொறை- குறுகிய கற்களின் இடையிலே. தடைஇய- பருத்து வளர்ந்த. நெடு நாள் வேங்கை- நீண்ட அடிப்பாகத்தை உடைய மரத்தின். பூஉடை- மலர்கள் நிறைந்த. அலங்கு சினை- அசைந்து கொண்டிருக்கின்ற கிளைகள். புலம்ப- மலர்களையிழந்து தனித்திருக்கும்படி. தாக்கி-மோதி. கல்பொருது- கற்களையும் தாக்கி. இரங்கும்- ஒலிக்கின்ற. கதழ்வீழ் அருவி- விரைந்து விழுகின்ற அருவிநீர். நிலங்கொள் பாம்பின்- நிலத்தை இடமாகக் கொண்டு வாழ்வதற்குக் குதிக்கின்ற பாம்பைப் போல. இழிதரும்- கீழே விழும். விலங்கு மலை நாடனொடு- இத்தகைய அருவிகளோடு குறுக்கிடுகின்ற மலைகளையுடைய நாட்டின் தலைவனோடு. கலந்த நட்பு- ஒன்றுபட்ட தொடர்பு. நம்மொடு பிரிவு இன்று ஆயின் - நம்முடன் பிரியாமல் இருக்கு மாயின். நன்று மன்- இனிமையாகும், தில்ல- இதுவே என் எண்ணம். கருத்து:- தலைவனுடைய நட்பு, பிரியாமலிருந்தால் தான் இன்பந்தரும். பிரிந்தால் துன்பந்தான் உண்டாகும். விளக்கம்:- இது, கோவேங்கைப் பெருங்கதவன் என்னும் புலவர் பாட்டு. தலைவனுடைய பிரிவால் வருந்தியிருந்த தலைவி தன் தோழியிடம் கூறியது. குறிஞ்சித்திணை. ‘நம்மொடு பிரிவின்று ஆயின் நன்று மன்தில்ல’ என்ற முதற் பகுதி இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. பொறை- கல்; உருண்டையான கற்கள். தடை- பருமை; அருவிநீர் கற்களிடையே வளைந்து வளைந்து ஓடுகின்றது. ஆதலால் அது பாம்பு போல் காணப்படுகின்றது. தலைவனுக்கு அருவி நீரும் தலைவிக்கு வேங்கை மரமும் உவமானங்கள். அவர் சொல்லிய நீதி பாட்டு 135 நமது நண்பர் மிகவும் நல்லவர்; சொன்ன சொல்லை மீறாதவர்; உறுதியுடன் நடப்பவர்; அன்புள்ளவர்; ஆயினும் ஏதோ ஒரு காரணத்தால் அவருடைய நடத்தையில் நமக்குச் சிறிது ஐயம் ஏற்படுகின்றது. அச்சமயத்தில் நம்முடன் பிரியாமலிருக்கும் மற்றொரு நண்பர் நமக்குச் சமாதானம் கூறுவார். அந்த நண்பரைப் பற்றி ஐயங் கொள்வது தவறு என்று எடுத்துக்காட்டுவார். அந்த நண்பரின் சொல்லையும் நடத்தையையும் எடுத்துக்காட்டி நம்மைத் தேற்றுவார். இது இயல்பு. இப்படித் தக்க காரணத்துடன் கூறினால்தான் நமக்கும் நம்பிக்கையுண்டாகும். இந்த இயற்கை உண்மையை அடிப்படையாகக் கொண்டது இச்செய்யுள். தலைவன் பொருள் தேடுவதற்கு வெளியூருக்குப் போக ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து கொண்டிருக்கின்றான். அவன் வெளியூருக்குச் செல்லும் செய்தியை இன்னும் தலைவி யினிடம் சொல்லவில்லை. ஆயினும் அவனுடைய பரபரப்பினால் செய்து கொண்டிருக்கும் காரியங்களால்- எங்கேயோ புறப்படப் போகின்றான் என்பதைத் தெரிந்து கொண்டாள். உடனே அவள் உள்ளத்திலே கவலை பிறந்து விட்டது. அவன் போய்விட்டால் தனித்திருக்க வேண்டுமே என்று தவித்தாள். தலைவன் பிரிவை நினைத்துத் தவிக்கும் தலைவியின் உள்ளத்தைத் தோழி தெரிந்து கொண்டாள். உடனே தலைவியின் உள்ளத்திலே ஆறுதல் பிறக்கும்படி சமாதானம் கூறினாள். தலைவனால் சொல்லப்பட்ட உண்மை மொழியை எடுத்துக் காட்டினாள். ‘தலைவன் பிரிந்து போக மாட்டான்; வருந்தாதே’ என்று கூறினாள். ‘ஆண்களுக்கு உயிர், ஏதேனும் தொழில் செய்து கொண்டி ருப்பதுதான். அறிவுள்ள ஆண்கள் சோம்பேறித்தனத்தை மேற்கொள்ளமாட்டார்கள்; சோம்பேறிகள் இவ்வுலகிலே சுகமடைய மாட்டார்கள்; தேம்பித்தான் திரிவார்கள். ஆதலால் தங்கள் உடல் உள்ள வரையிலும், உடலிலே உரம் உள்ள வரையிலும் உழைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த உழைப்பே ஆடவர்க்கு உயிராகும் இல்லத்தில் வாழும் பெண் களுக்குக் கணவனைத் தவிர வேறு உயிர் இல்லை. ஆகையால் அவர்கள் என்றும் கணவனுடன் பிரியாமலிருந்து வாழவே விரும்புவார்கள். இதுவே உத்தமப் பெண்களின் உயர்ந்த தன்மை. இந்த உண்மையை நமது காதலர்தான் நமக்குரைத்தார். இப்படிச் சொல்லிய அவரே நம்மைத் தனியாக விட்டுவிட்டுப் பிரிவார் என்று எண்ணுவது தவறு. அவர் பிரிந்து போக மாட்டார். நீ வீணாக வருந்தி அழாதே’ இவ்வாறு தலைவன் சொல்லிய சொற்களையே எடுத்துக் காட்டி தலைவிக்கு ஆறுதல் உரைத்தாள் தோழி. பாட்டு வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்; என நமக்கு உரைத்தோரும் தாமே; அழாஅல் தோழி அழுங்குவர் செலவே. பதவுரை: வினையே- உழைப்பே. ஆடவர்க்கு உயிரே - ஆண் மக்களுக்கு உயிராகும். மனை உறை- இல்லத்திலே வாழ்கின்ற. வாள்நுதல் மகளிர்க்கு- ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களுக்கு. ஆடவர் உயிர்- கணவன்மார்களே உயிர் ஆவர். என நமக்கு உரைத்தோரும்- என்று நமக்குச் சொல்லியவரும். தாமே- அவரேதாம். அழால் தோழி- ஆதலால் தோழியே நீ அழாதே. செலவு அழுங்குவர்- அவர் பிரிந்து செல்வதை விட்டு விடுவார். கருத்து: தலைவர் தானே சொல்லிய நீதிக்கு மாறாக உன்னை விட்டுப் பிரியமாட்டார்; நீ வருந்தாதே. விளக்கம்:- இது பாலைபாடிய பெருங் கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவை நினைத்து வருந்திய தலைவிக்குத் தோழி சொல்லிய ஆறுதல், பாலைத்திணை. ‘வாணுதல் மனையுறை மகளிர்க்கு’ என்பது மனை உறை வாள் நுதல் மகளிர்க்கு என்றும், ‘அழுங்குவர் செலவே’ என்பது, செலவு ‘அழுங்குவர்’ என்றும் கொண்டு கூட்டப்பட்டன. ஏ- அசை, அழாஅல்; அ உயிர் அளபெடை. ‘உயிருள்ள வரையிலும் உழைப்பது ஆண்கள் கடமை; அவர்கள் உழைப்புக்குத் துணை செய்து கொண்டு, அவர்களுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டியது பெண்கள் கடமை,’ என்பது பழந்தமிழர் கொள்கை. அதனை இச்செய்யுள் எடுத்துக் காட்டிற்று. காமத்தைக் குறை கூறாதே பாட்டு 136 தனக்குரியவளாக நினைத்த ஒரு தலைவியின் மேல் காதல் கொண்டிருந்தான் தலைவன்; அளவற்ற விருப்பம் கொண்டிருந்தான். அவளே தன் உயிர்த்துணைவி, வாழ்க்கைத்துணைவி என்று உறுதி கொண்டிருந்தான். இதைக் கண்ட அவனுடைய தோழன் ‘நீ இவ்வாறு காமநோயால் வருந்துவது தகாது’ என்று கூறினான். அதற்குத் தலைவன் கீழ்வருமாறு சொல்லிக் காமத்தின் இயல்பு இன்னதென்பதை விளக்கினான். இது, ‘காமம் பிறரால் உண்டாக்கப் படுவதன்று. ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே இருக்கின்றது அது, சமயம் நேரும்போது வெளிப்படும்: என்ற உண்மையை உரைக்கும் பாடல். ‘காமத்தின் இயல்பை அறியாதவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான், ‘காமம் காமம்’ என்று சொல்லி அதை இகழ்ந்து பேசுவார்கள். குறை சொல்லுவார்கள். காமம் என்பது எங்கிருந்தோ திடீரென்று புதிதாகத் தோன்றித் துன்புறுத்தும் ஒரு நோயன்று; அது மிகவும் நுண்ணியதாகி மெலிந்து போகக் கூடியதும் அன்று; அது மிகுதிப்பட்டு வெம்மையைத் தரக்கூடியதும் அன்று; மிகவும் தண்மையைத் தரக்கூடியதும் அன்று; அது நம் உள்ளத்தில் என்றும் அடங்கிக் கிடக்கின்றது. யானையிடம் அடங்கிக்கிடக்கும் மதம், அது நல்ல கொழுத்த தழையைத் தின்றவுடன் வெளிப்படுகின்றது. அது போல நமது உள்ளத்தில் உறைந்து கிடக்கும் காமம், நம்மோடு என்றும் இணைந்து ஒருயிராய் வாழக் கூடியவரைக் கண்ட போது வெளிப்படுகின்றது. இதுவே காமத்தின் இயல்பாகும். இவ்வுண்மைகளை உணராதவர்கள் தான் காமத்தைத் தூற்றுகின்றனர்.” இவ்வாறு தலைவன் தன் தோழனிடம் காமத்தின் இயல்பை எடுத்துரைத்தான். பாட்டு காமம், காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை குளகுமென்று ஆள்மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே. பதவுரை:- காமம் காமம் என்ப- காமம் காமம் என்று அதைப் பழித்துப் பேசுவார்கள் பலர். காமம்- காமமானது. அணங்கும் பிணியும் அன்று- திடீரென்று புதிதாகப் பிறந்து துன்புறுத்தும் நோயும் அன்று. நுணங்கி- நுண்ணிதாகி அழிவதும் அன்று. கடுத்தலும்- மிகுந்து வெம்மையைத் தருவதும் அன்று. தணிதலும் இன்றே- குளிர்ச்சியைத் தருவதும் அன்று. யானை குளகுமென்று - யானை நல்ல தழையைத் தின்று. ஆள்மதம் போல- அதனால் அதன் மதம் வெளிப்பட்டு அதை ஆட்கொள்வது போல. காணுநர்ப் பெறின்- கண்டு மகிழ்வதற்கு உரியவரை பெறும் போது, அது உள்ளே அடங்கியிருக்கும். அக்காமம். பாணியும் உடைத்து - வெளிப்படும் வாய்ப்பை உடையது. கருத்து:- காமம் ஒவ்வொருவரிடமும் அடங்கிக் கிடப்பது. வாய்ப்புக் கிடைக்கும் போது வெளிப்படும். விளக்கம்:- மிளைப் பெருங்கந்தன் என்பவர் பாட்டு இது. தலைவன், ஒரு தலைவியின் மேல் காமங்கொண்டான் என்பதை அறிந்தான் பாங்கன், ‘நீ இவ்வாறு காமம் கொள்ளுதல் தகுமோ’ என்று கண்டித்தான். அப்பாங்கனுக்குத் தலைவன் காமத்தின் தன்மையை விளக்கினான். குறிஞ்சித்திணை. ‘பாணியும் உடைத்து அது, காணுநர்ப்பெறினே’ என்ற அடி, ‘அது காணுநர்ப்பெறின் ஏ, பாணியும் உடைத்து’ என்று மாற்றப்பட்டது. ஏ- அசை. அணங்குதல்- வருத்துதல், நுணங்கு- நுட்பம்; சிறுமை, குளகு - தழை. பாணி- சமயம்; காலம்; சந்தர்ப்பம்; வாய்ப்பு, காமம்; ஒவ்வொருவரிடமும் உண்டு. அது இயற்கையானது. பழிக்கத்தக்க இழிவுள்ளது அன்று என்ற உண்மையை உவமானத்தால் விளக்கியது இப்பாடல். யானையிடம் உள்ள மதம் தழையைத் தின்றவுடன் வெளிப்படுவது போல, ஒருவரிடம் உள்ள காமம் அவருக்குரியவரைக் காணும்போது வெளிப்படும், இவ்வுவமை மிகவும் பொருத்தமானது. என்றும் பிரியேன் பாட்டு 137 தன் சொல்லிலே மற்றவர்க்கு நம்பிக்கையில்லாதபோது நம்பிக்கையுண்டாகும்படி உறுதிமொழி கூறுவது இயல்பு. இப்படி உறுதிமொழி சொல்லுகின்றவன். தான் எப்பொருளை உயிரைப் போல் போற்றுகின்றானோ அப்பொருளின் பெயரைச் சொல்லி உறுதிமொழி கூறுவான். இதைத்தான் சத்தியம் செய்தல்- ஆணையிட்டுச் சொல்லுதல்- பிரமாணம் செய்தல் என்பர். இவ்வாறு ஒரு பொருளின்மேல் ஆணையிட்டுச் சொல்லும் வழக்கம் நீண்டகால வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது. இந்த வழக்கத்தை இந்த நான்கு வரிப்பாட்டு நமக்கு நினைவூட்டுகின்றது. இது மட்டும் அன்று. இல்லறத்திலே வாழுந்தமிழன் எதைச் சிறந்த செயலாகக் கருதி வந்தான்;தன் கடமையாக எண்ணி வந்தான்; தன்னுடைய இல்லற தர்மமாக நினைத்து வந்தான்; என்ற உண்மையையும் இப்பாடல் சுட்டிக் காட்டுகின்றது. புதிய காதலர்கள், இன்றுதான் முதலில் சந்தித்துக் காதல் மணம் புரிந்துகொண்டனர். அவர்கள் தங்களுக்குள் உறுதி மொழிகளும் பரிமாறிக் கொண்டனர். நீண்ட நேரம் கூடியிருந்த பின் தலைவன் பிரிந்து செல்ல எண்ணினான். தன் எண்ணத்தைத் தலைவியிடம் நேரே சொல்லத்துணியவில்லை. நான் பிரிந்து சென்று மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லவில்லை. ‘உன்னை விட்டு நான் பிரியமாட்டேன்’ என்று கூறினான். இதன் மூலம் பிரிவு என்பது ஒன்று உண்டு என்பதை நினைவூட்டினான். ஆயினும் என்றும் நாம் பிரியாமல் ஒன்று சேர்ந்திருப்பதற்கான வழியை விரைவில் தேடுவேன் என்ற உறுதிமொழியையும் அளித்தான். தன்னுடைய உறுதிமொழியிலே தவறினால்தான் அடையும் துன்பம் இன்னது என்பதையும் குறித்துரைத்தான். ‘மெல்லிய தன்மையுள்ள காதலியே! உன்னை விட்டு நான் ஒரு பொழுதும் பிரியமாட்டேன். என் வாழ்விலே நான் இனி யாரையும் துணையாகக் கொள்ளமாட்டேன். என் உள்ளத்திலே இனி எந்தப் பெண்ணுக்கும் இடமில்லை. நான் சொல்லுவது உண்மை’ உறுதியானது. உன்னுடைய நல்ல உள்ளம் வருந்தும்படி உன்னை விட்டுப் பிரிந்து, நான் போனவிடத்திலே தங்கிவிட மாட்டேன்; அப்படித் தங்கி விடுவேனாயின் இரவலர்கள் என்னைத் துறப்பார்களாக. அவர்கள் எந்நாளும் என்னை நெருங்காமலிருப்பார்களாக; இரவலர் என்னை அணுகாமையால் நான் செய்ய வேண்டிய அறத்தைச் செய்ய முடியாமல் பழிக்கு ஆளாவேன். அப்பழி காரணமாக நான் மிகுந்த துன்பத்தை அடைவேனாக; என்று தலைவியினிடம் கூறினான். இப்படிச் சொல்லித் தலைவிக்குத் தன் சொல்லில் நம்பிக்கை பிறக்கும்படி செய்தான். பாட்டு மெல்லியல்! அரிவை நின்நல் அகம்புலம்ப நின்துறந்து அமைகு வென்ஆயின், என்துறந்து இரவலர் வாரா வைகல் பலஆகுக, யான் செலவு உறுதகவே. பதவுரை:- மெல் இயல் அரிவை- மென்மையும், அழகு முள்ள பெண்ணே. நின் நல் அகம் புலம்ப- உன்னுடைய நல்ல மனம் தனித்து வருந்தும்படி. நின் துறந்து- உன்னை விட்டுப் பிரிந்து போய்- அமைகுவென் ஆயின்- சென்ற இடத்திலே தங்கி விடுவேனாயின். இரவலர்- இரவலர்கள். என் துறந்து- என்னை விட்டு நீங்கி. வாராவைகல்- அவர்கள் என்னிடம் அணுகாத நாட்கள். பல ஆகுக- பல நாட்களாகப் பெருகட்டும். யான்- நானும். செலவு- என் கடமையைச் செய்ய முடியாமையால் துன்பத்தை. உறுதகவே- அடைவேனாக. கருத்து: காதலியே உன்னைவிட்டுப் பிரியமாட்டேன்; பிரிந்தால் அறத்தின் பயனை அடையமாட்டேன். விளக்கம்: பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாட்டு. தலைவிக்குத் தலைவன் கூறிய உறுதிமொழி பாலைத்திணை. ‘என் துறந்து இரவலர்’ என்பது, ‘இரவலர் என் துறந்து’ என்று மாற்றப்பட்டது. மெல்- மென்மை, இயல்- அழகு. மெல்இயல்-மென்மையான தன்மை என்றும் கூறலாம். செலவு- துன்பம். உறுதக- அடைக; ஏ- அசை. ‘ஒவ்வொரு நாளும் இரப்போர்க்கு ஈதல் வேண்டும். இரப்போரைக் காணாமலும், அவர்களுக்கு உதவி செய்யாமலும், கழியும் நாள் வீணாகக் கழியும் நாளாகும்’ என்பது முன்னோர் கருத்து. இரவெல்லாம் கண்விழித்தோம் பாட்டு 138 தலைவியைச் சந்திப்பதற்காக இரவிலே வருவது தலைவனுடைய வழக்கம். ஒரு நாள் அவன் தலைவியைச் சந்திக்க முடியாமல் திரும்பி விட்டான். தலைவன் வருவதற்கு முன்பே தலைவி அவ்விடத்திற்குப் போனாள். தலைவனைக் காணவில்லை என்று திரும்பிவிட்டாள். இது சந்திக்க முடியாமற் போனதற்குக் காரணம். அடுத்த நாள் அதே இடத்தில் தலைவன் வந்து நின்றான். தலைவியின் வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு ஏழிலைப் பாலை மரம். அதற்கு அப்பால் நொச்சிச் செடிகள்; அடர்ந்த வேலி; அந்த வேலியின் பக்கந்தான் தலைவனும் தலைவியும் இரவிலே சந்திக்கும் இடம். அவ்விடத்திலே தலைவன் வந்து நிற்பதைத் தோழி பார்த்து விட்டாள். அவள், ‘நேற்றுச் சந்திக்க முடியாமற் போனதற்குக் காரணம் எங்கள் குற்றம் அன்று; நாங்கள் இரவு முழுவதும் தலைவனை எதிர்பார்த்துக் கண்ணுறங்காமல் இருந்தோம். தலைவனால் உண்டான தவறுதான் தலைவியைச் சந்திக்க முடியாமற் போனதற்குக் காரணம்’ என்று தலைவனுடைய காதிலே விழும்படி கூறினாள். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். ‘ஏழிலைப் பாலை மரம் ஒன்று எமது இல்லத்தின் அருகிலே நிற்கின்றது. அதற்கு அப்பால் நொச்சிச் செடிகள், அடர்ந்த வேலி இருக்கின்றது. அந்த நொச்சியின் இலைகள் மயிலின் அடியைப் போன்றவை. அச்செடிகளிலே கருமையான பூங்கொத்துகள் நிறைந்திருக்கின்றன. இத்தகைய பூங்கொத்துகளையுடைய அழகிய கிளைகள், நீலமாணிக்கம் போன்ற மலர்களைச் சிந்திக் கொண்டே யிருக்கின்றன. அம்மலர்கள் விழும் ஓசை எங்கள் காதிலே நன்றாக விழுந்தன. அதனால் பெருமையுள்ள இவ்வூரில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கினாலும் நாங்கள் மட்டும் தூங்கவில்லை. தலைவர் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம்.’ இதுதான் தோழியின் கூற்றாக இச்செய்யுளிலே அமைந் திருக்கும் பொருள். பாட்டு கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே; எம்இல் அயலது ஏழில், உம்பர் மயில் அடிஇலைய மாக்குரல் நொச்சி; அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே. பதவுரை: எம் இல் அயலது- எமது இல்லத்திற்குப் பக்கத்தில் உள்ளதாகிய; எழில் உம்பர்- ஏழிலைப் பாலை மரத்திற்கு அப்பால்; மயில் அடி இலைய- மயிலின் அடியைப் போன்ற இலைகளை யுடைய; மாக்குரல் நொச்சி - கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்; அணிமிகு- அழகு நிறைந்த. மெல் கொம்பு ஊழ்த்த- மெல்லிய கிளைகளிலிருந்து சிந்திய. மணிமருள் பூவின்- நீல மணியைப் போன்ற மலர்களின். பாடு நனி கேட்டு ஏ- ஓசையை மிகவும் நன்றாகக் கேட்டுக்கொண்டு. கொன்ஊர்- பெருமையுள்ள இவ்வூரில் உள்ளவர்கள். துஞ்சினும்- உறங்கினாலும். யாம் துஞ்சலம் ஏ- நாங்கள் உறங்கவேயில்லை. கருத்து: நேற்றிரவு நாங்கள் உறங்கவேயில்லை. தலைவரை எதிர்பார்த்து விழித்திருந்தோம். விளக்கம்; இது கொல்லன் அழிசி என்பவர் பாடிய செய்யுள், தோழி கூற்று. ‘நேற்றிரவு நாங்கள் தலைவனை எதிர் நோக்கித் தூங்காமல் இருந்தோம். நொச்சிமலர் உதிரும் ஓசைகூட எங்கள் காதில் விழுந்தது. தலைவன் வந்திருந்தால் நாங்கள் அதை உணராமல் இருந்திருக்க மாட்டோம்’ என்று கூறினாள். குறிஞ்சித்திணை. ‘கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலம் ஏ’ என்ற முதல் அடியை இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. கொன் -பெருமை, ஏழிலைப் பாலைமரம் என்பது ஒரு வகை மரம். ஊழ்த்த- உதிர்த்த. மணி- நீலமணி. மருள்- போன்ற. பாடு- ஒலி, நொச்சியிலைக்கு மயிலின் பாதம் உவமை. நொச்சிப் பூவுக்கு நீலமணி உவமை. இங்கே வரவேண்டாம் பாட்டு 139 தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தான். பரத்தையர் வீட்டிலே போய் வாழ்ந்தான். அவர்களுடைய கூட்டுறவு சலித்து விட்டது. தலைவியோடு சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு; உயர்ந்த இன்பம் என்பதை உணர்ந்தான். தலைவியைக் காணவந்த தலைவன் முதலில் தோழியைக் கண்டான். தன் குற்றத்தை மன்னிக்க வேண்டும்; தலைவியுடன் தன்னைச் சேர்த்து வைக்கவேண்டும்; அவளைக் காண அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோளைக் கேட்ட தோழி அவனுக்குச் சரியான சூடு கொடுத்தாள். அவன் வேண்டுகோளை மறுத்தாள். தலைவனுடைய வேண்டுகோளைத் தோழி மறுத்துரைப்பதுதான் இப்பாடல். ‘மனையிலே வளரும் பெட்டைக் கோழி வேலியோரத்திலே மேய்ந்து கொண்டிருக்கின்றது. அதன் குஞ்சுகள் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றன. பொழுது போய் மாலைக் காலம் வந்துவிட்டது. அப்பொழுது காட்டுப் பூனையின் கூட்டங்கள் அங்கே வந்தன. அவற்றைக் கண்டவுடன் பெட்டைக்கோழி நடுக்கமடைந்து விட்டது. எங்கே போவதென்று அதற்குப் புரியவில்லை. தன்னுடன் வந்து ஒன்று சேரும் பொருட்டுத் தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது. நீர் இங்கே வந்திருப்பதைப் பார்த்தவுடன் இந்தக் காட்சி என் நினைவுக்கு வருகின்றது. நீர் இந்தத் தெருவிலே நிற்பதை உம்முடன் கூடியிருந்த பரத்தையர்கள் பார்த்தால் அந்தப் பெட்டைக் கோழியைப் போல ஓலமிடுவார்கள். ‘எம்மிடமிருந்து பிரிந்து போன தலைவனை அவனுடைய தலைவி ஏற்றுக்கொண்டு தன்னிடமே வைத்துக் கொள்ளு வாளோ’ என்று அந்தப் பரத்தையர்கள் அஞ்சுவார்கள்; அவ்வச்சம் காரணமாகப் பழிச்சொற்களையும் பரப்புவார்கள். ஆதலால் நீர் நாங்கள் இருக்கும் இந்தத் தெருப்பக்கமே வரவேண்டாம். நீர் உம்முடைய விருப்பப்படி இன்பமாக வாழ்வீராக. இதுவே தோழி தலைவனிடம் உரைத்த மொழி. இவ்வாறு நயமான மொழிகளால் தலைவனுடைய குற்றத்தை எடுத்துக் காட்டும் செய்யுள் இது: பாட்டு மனைஉறை கோழிக் குறுங்கால் பேடை, வேலி வெருகினம் மாலை உற்றெனப் புகும் இடன் அறியாது, தொகுபுஉடன் குழீஇய பைதல் பிள்ளைக் கிளைபயிர்ந்தாஅங்கு இன்னாது இசைக்கும் அம்பலொடு வாரல்!வாழியர்! ஐய எம் தெருவே. பதவுரை: மனை உறை கோழி- வீட்டிலே வாழ்கின்ற கோழி யாகிய; குறும்கால்பேடை- குறுகிய கால்களை யுடைய பெட்டை யானது. வேலி- வேலியின் பக்கத்திலே யுள்ள. வெருகு இனம்- காட்டுப்பூனைக் கூட்டம். மாலை உற்று என - மாலைக்காலத்தில் வந்துவிட்டதைக் கண்டு. புகும் இடன் அறியாது- அவற்றினிட மிருந்து தப்பித்துக் கொண்டு, ஓடி நுழைந்து கொள்வதற்கான இடத்தை அறியாமல். தொகுபு உடன்குழீஇய- சேர்ந்து ஒன்றாகக் கூடும் பொருட்டு. பைதல்- துன்பத்தையுடைய. பிள்ளைக்கிளை- தன் குஞ்சுக் கூட்டங்களை. பயிர்ந்து ஆங்கு- கூவி அழைத்தாற் போல. இன்னாது- துன்பத்துடன். இசைக்கும்- பரத்தையர்கள் சொல்லுகின்ற. அம்பலொடு- பழமொழிகளுடன். எம் தெரு ஏ வாரல் ஐய- எம் தெருப்பக்கம் வராதே ஐயனே. வாழியர்- நீ வாழ்க. கருத்து: எங்கள் தெருப்பக்கம் வராதே. பரத்தையர்கள் பழித்துரைப்பார்கள். விளக்கம்: ஒக்கூர் மாசாத்தியார் என்னும் புலவர் பாட்டு. இவர் புலமையிற் சிறந்த பெண்மணி. பரத்தையர் வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியைத் தேடி வந்தான். அப் பொழுது தோழி அவனைப் பரிகசித்து, அவனது உறுதியற்ற நிலையை எடுத்துரைத்தாள். தோழி கூற்று. மருதத்திணை. “வாரல் வாழியர் ஐய எந்தெரு ஏ” என்பது ‘எம் தெரு ஏ வாரல் ஐய வாழியர்” என்று மாற்றப்பட்டது. வெருகு- காட்டுப்பூனை, பைதல்- துன்பம். பிள்ளை- குஞ்சு. பயிர்தல்- அழைத்தல். அம்பல்-பழிச்சொல். இச்செய்யுளில் பெட்டைக்கோழியின் இயல்பு. அது தன் குஞ்சுகளை ஆபத்தின்றிக் காப்பாற்றுவதற்காகச் செய்யும் முயற்சி; அப்படியே இயற்கையாகக் காட்டப்பட்டிருக்கின்றது. பெட்டைக்கோழி பரத்தையர்க்கு உவமை. தன்னால் காப்பாற்றப்பட்ட குஞ்சுகளைப் பூனைகள் கவருமோ என்று பெட்டைக்கோழி அலறுவது போல் தம்மால் மயக்கி வைத்துக் கொள்ளப்பட்ட தலைவனை, மீண்டும் தலைவி கவர்ந்து கொள்வாளோ என்று பரத்தையர்கள் அலறுவார்கள். இதுவே உவமையின் பொருள். என் துயரை யார் அறிவார்? பாட்டு 140 துன்பப்படும் ஒருவர், தன்னிடம் யாரேனும் இரங்கங்காட்டு வாராயின் சிறிது ஆறுதல் அடைவார். ஒருவரும் இரக்கங் காட்டா விட்டால், ‘என்பால் இரக்கங் கொள்வார் எவரும் இல்லையே’ என்று ஏங்குவார். இது மக்களின் இயற்கைத் தன்மை. இந்த மனித இயற்கையை இப்பாடலிலே காணலாம். காதலன் பொருள் தேடப் போய்விட்டான். காதலி தனியாக வருந்தியிருக்கின்றாள். தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் மொழிகள் உரைக்கவில்லை. நீ தாங்க முடியாத துன்பத்தால் தவிப்பதைக் கண்டு நான் வருந்துகின்றேன் என்று தோழி சொல்லவு மில்லை. இதற்கு மாறாக ‘நீ ஏன் இப்படி வருந்துகின்றாய்’, என்று கேட்டாள். இக்கேள்வி தலைவியின் உள்ளத்திலே ஊடுருவிப் பாய்ந்தது. ‘என் துன்பத்தைக் கண்டு மனமிரங்காமல் இப்படிக் கேள்வி கேட்கின்றாளே’ என்று எண்ணினாள். உடனே என் துன்பத்தை நீ எப்படி அறிய முடியும்? என்று கேட்பதற்குப் பதிலாக ‘இவ்வூர் என் துன்பத்தை எப்படி அறிய முடியும்’ என்று குறிப்பாகக் கூறினாள். இவ்வாறு தலைவி சொல்லியதை எடுத்துரைப்பதே இச்செய்யுள். என் காதலர், பாலை நிலத்தின் வழியே பொருள் தேடப் போய் விட்டார். அவர் சென்ற பாலைவனத்திலே கருக்கரி வாளைப் போன்ற முதுகையுடைய வயது முதிர்ந்த ஓணான்கள் உண்டு. அவ்வோணான்களைக் கண்டால் நல்ல சகுனம் என்று கூறுவர். என் காதலரும் அந்த நல்ல சகுனத்தைப் பார்த்துக் கொண்டு பொருள் தேடப் போய்விட்டார். அவர் பிரிந்தவுடன் நான் என் வலிமையையிழந்தேன். தாங்கமுடியாத துன்பத்தால் வாடுகின்றேன். ஆயினும் எப்படியோ துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நான் இங்கே தனித்திருக்கின்றேன். இரங்குதற்குரிய இவ்வூர் என் துன்பத்தை எவ்வாறு அறிய முடியும்? எப்படி அறிந்து கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை; என்று தோழியை நோக்கிக் கூறினாள் தலைவி. தலைவியின் மேல் போடவேண்டிய பழியை ஊரின்மேல் போட்டாள். பாட்டு வேதினம் வெரிநின் ஓதி முது போத்து ஆறு செல்மாக்கள் புள்கொளப் பொருந்தும் சுரனே சென்றனர் காதலர்; உரன் அழிந்து ஈங்கு யான் தாங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே. பதவுரை:- வேதினம்- கருக்கரிவாளைப் போன்ற. வெரி நின்- முதுகையுடைய. முது போத்து ஓதி- வயது முதிர்ந்த ஆண் ஓந்தி. ஆறு செல் மாக்கள்- வழிப்போக்கர்கள். புள் கொள- நல்ல சகுனம் என்று நினைத்துக் கொள்ளும்படி. பொருந்தும்- தங்கியிருக்கின்ற. சுரன் சென்றனர்- பாலை நிலத்தைக் கடந்து சென்றனர். காதலர்- என் கணவர். உரன் அழிந்து- அதனால் எனது வலிமை குறைந்து. ஈங்கு யான் தாங்கிய- இங்கே நான் பொறுத்துக் கொண்டிருக்கின்ற. எவ்வம் - துன்பத்தை. இவ் அழுங்கல் ஊர்- இந்த இரங்கத்தக்க ஊர். யாங்கு அறிந்தன்று - எப்படி அறிந்து கொண்டதோ அறியேன். கருத்து:- என் துன்பத்தை அறிந்தார் ஒருவரும் இல்லை. விளக்கம்:- இது, அள்ளுர் நன் முல்லை என்பவர் பாட்டு தலைவி கூற்று. ‘நீ ஏன் வருந்துகின்றாய்” என்று தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது. பாலைத்திணை. ‘இல் அழுங்கல் ஊர் யாங்கறிந்தன்று’ என்று இறுதியடி மட்டும் மாற்றப்பட்டது. வேதினம்- கருக்கரிவாள். வெரிந்- முதுகு. போத்து- ஆணைக் குறிக்கும் மரபுச் சொல். ஓதி- ஓந்தி; ஓணான். புள் -நிமித்தம்; சகுனம், பெரும்பாலும் பறவைகளையே சகுனத்திற்கு அடையாளமாகக் கொள்ளுவது வழக்கம். ஆதலால் பறவை யென்னும் பொருளுடைய புள் என்னும் சொல்லே சகுனம் என்ற பொருளில் வழங்கப்பட்டது. ஓணானுடைய முதுகிற்குக் கருக்கரிவாளை ஒப்பிட்டி ருப்பது பொருத்தமானது. பண்டைத் தமிழரிடம் சகுனம் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதை இப்பாடல் காட்டுகின்றது. தினைப்புனத்திற் சந்திக்கலாம் பாட்டு 141 இரு காதலர்கள், அவர்களுக்கு இன்னும் வெளிப்படையான கற்பு மணம் நடக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் இரவிலே சந்திப்பார்கள். காதலன் காதலி இருக்கும் இடத்திற்கு வருவான்; கூடி மகிழ்ந்து செல்வான். அவன் ஒவ்வொரு நாளும் இரவிலே வந்து போவதைப் பற்றிக் காதலி கவலைப்பட்டாள். வரும் வழியிலே தலைவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது என்பதுதான் அவள் கவலை. இந்த நிலையில் தலைவிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவளை அவளுடைய அன்னை தினைப்புனக் காவலுக்கு அனுப்ப முடிவு செய்தாள். இதனால் இனித் தனது காதலனைப் பகலிலேயே சந்திக்கலாம் என்று நினைத்தாள் தலைவி, தலைவனிடம் ‘நீ இனி இரவில் வரவேண்டாம்; பகலில் தினைப் புனத்தில் சந்திக்கலாம்’ என்று சொல்லி விடவேண்டும் என்று முடிவு செய்தாள். அன்று இரவு வழக்கம்போல் தலைவன் தலைவியைக் காண வந்தான். எப்பொழுதும் சந்திக்கும் இடத்திலே வந்து நின்றான். அப்பொழுது தலைவி, அவனுடைய காதிலே கேட்கும்படி, தன் தோழியிடம் கீழ்வரும் செய்தியைச் சொன்னாள்; ‘மலை நாட்டையுடைய தலைவனே! நீ இனிமேல் நள்ளிரவிலே வரவேண்டாம்! காட்டு யானையின் கடுமையான பகையினால் வருந்துகின்ற புலி-குறுகிய கையையுடைய புலி- கொல்லும் வல்லமையையுடைய ஆண் புலி- பசுமையான கண்களையுடைய செந்நாயைப் பிடிப்பதற்காகச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் நடுஇரவிலே நீ வந்து கொண்டிருக்கின்றாய்! இனி நீ இந்த ஆபத்தான நள்ளிரவில் வர வேண்டாம், என்று சொல்லவில்லையா? வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள் நமது தோட்டத்திலே வளைந்திருக்கும் தினைக் கதிர்களைத் தின்னுகின்றன. அவற்றை ஓட்டுவதற்காகத் தினைப்புனத்திற்குப் போ’ என்று என் தாய் எனக்குக் கூறியதை நீ இன்னும் தலைவனிடம் சொல்லவில்லையா? இதைச் சொன்னால் என்ன குற்றம்? என்று தோழியைக் கேட்டாள். இனி நாம் இரவில் சந்திக்க வேண்டாம். பகற் பொழுதிலே தினைப்புனத்திலே சந்திப்போம் என்ற பொருள்படும்படி இப்படிக் கூறினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதே இச்செய்யுள். பாட்டு வளைவாய்ச் சிறு கிளி விளை தினைக்கடீஇயர் செல் கென்றோளே அன்னை, என நீ சொல்லின் எவனோ? தோழி; கொல்லை நெடும் கைவன்மான் கடும்பகை உழந்த குறும்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை, பைங்கண் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆர் இருள் நடு நாள் வருதி சாரல் நாட வாரலோ எனவே. பதவுரை:- கொல்லை- காட்டிலேயுள்ள. நெடும்கை - நீண்ட கையையுடைய. வல்மான்- வலிய யானையின். கடும் பகை உழந்த- கடுமையான பகையால் வருந்திய. குரும்கை- குட்டையான கையையுடைய. இரும்புலி- பெரிய புலியாகிய. கோள்வல் ஏற்றை- கொல்லும் வலிமையுள்ள ஆண்புலி. பைம் கண் செந்நாய் - பசுமையான கண்களையுடைய செந்நாயை. படுபதம் பார்க்கும்- பிடிப்பதற்கு அது அகப்படும் சமயத்தை எதிர்பார்த்திருக்கும். ஆர் இருள் நடுநாள்- நிறைந்த இருளாகிய நள்ளிரவிலே. வருதி- எம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கின்றாய். சாரல் நாட- மலைச்சாரல் பொருந்திய நாட்டை யுடைய தலைவனே. வாரல் ஓ என ஏ- இனி நள்ளிரவில் வரவேண்டாம் என்றும். வளைவாய்ச் சிறுகிளி- வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள். விளைதினை- விளைந்த தினைக்கதிரை தின்னாமல், கடீஇயர் - ஓட்டும் பொருட்டு. செல்க என்றோள் ஏ அன்னை- எம்மைப் போக என்று சொன்னாள் எம் தாய். எனநீ - என்று நீ. சொல்லின் எவனோ தோழி! - சொன்னால் என்னதான் குற்றம்? தோழியே. கருத்து:- தோழியே! இனிப் பகற்பொழுதிலே தினைப் புனத்திலே வந்து சந்திக்கும்படி தலைவரிடம் நீ சொல்ல வேண்டும். விளக்கம்:- இது மதுரைப் பெருங்கொல்லன் என்னும் புலவர் பாட்டு. ‘தலைவனை இரவில் வரவேண்டாமென்று தடுத்துப் பகலில் வரும்படி நீ ஏன் சொல்லவில்லை?’ என்று தோழியிடம் தலைவி கூறியது. குறிஞ்சித்திணை. முதல் மூன்று வரிகளும் இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கடீ இயர்- ஓட்டும் பொருட்டு. இ, உயிர் அளபெடை. நெடுங்கை- தும்பிக்கை. வன்மான்- வன்மான் சாரியை. காலால் அறைவதால் புலியின் காலைக் கையென்று கூறப்பட்டது. ஏற்றை- ஆண். நெஞ்சம் இழந்தேன் பாட்டு 142 தலைவியைப் புதிதாகச் சந்தித்த தலைவன் அவளுடன் கூடியிருந்து பிரிந்தான். அவன் பிரிந்தாலும் அவன் உள்ளம் தலைவியிடமே தங்கிவிட்டது. அவளை அவனால் மறக்க முடிய வில்லை. அவளை நினைத்து நினைத்துப் பெருமூச்சு விடுகின்றான். அவளைப் பிரிந்ததனால் தான் இழந்த இன்பத்தை எண்ணி யெண்ணி ஏக்கமடைந்தான். அந்தத் துக்கம் தாங்க முடியாமல் தலைவியின் தன்மையையும், தனது நிலைமையையும், தானாகவே வாய்விட்டுக் கூறினான். “நான் என் காதலியை விட்டுப்பிரிந்து வந்தபின்னும் என் உள்ளம் என்னிடம் இல்லை; நள்ளிரவிலே படுத்துறங்கும் யானையைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, மீண்டும் அவளிடமே போய்த் தங்கிவிட்டது; என்னால் அதைப் பிடித்து நிறுத்தவே முடியவில்லை. ஆனால் இந்த உண்மையை அவள் அறிவாளோ, அறிய மாட்டளோ தெரியவில்லை. அவள் ஒரு பேதைப் பெண். தினைக் கதிரைத் தின்னும் கிளிகளைக் கவண் கல்லால் விரட்டுவது தான் சரியான வழி. சுனைகளிலே பூத்த மலர்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொண்டிருக்கும் போது, கிளிகள் தினைக்கதிர்களைக் கவர்வதைக் கண்டால் அந்த மாலையை வீசியெறிந்து அக்கிளிகளை ஓட்டுவாள். இத்தகைய பேதைப் பெண். என் உள்ளம் அவளிடம் மீண்டு வந்து குடியேறி யிருப்பதை எப்படி அறிவாள்?” என்று கூறி வருந்தினான் தலைவன். இந்தக் கூற்றை எடுத்துரைப்பதே இப்பாடல். பாட்டு சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூம்கண் பேதை தான் அறிந்தனளோ இலளோ! பால்நாள் பள்ளி யானையின் உயிர்த்து, என் உள்ளம் பின்னும் தன் உழையதுவே. பதவுரை:- சுனைப்பூ- சுனையிலே மலர்ந்திருக்கும் மலர்களை, குற்று -பறித்து. தொடலை தைஇ - மாலை கட்டி. புனம் கிளி - தினைப்புனத்தை மேயும் கிளிகளை. கடியும்-அம்மாலையை வீசி ஒட்டும். பூம் கண்பேதை- மலர் போன்ற கண்களையுடைய அந்தப் பேதைப் பெண். தான் அறிந்தனளோ இலளோ- தான் தெரிந்து கொண்டாளோ இல்லையோ, பால் நாள்- நள்ளிரவிலே. பள்ளியானையின்- படுத்துறங்கும் யானையைப் போல. உயிர்த்து- பெரு மூச்சுவிட்டு. என் உள்ளம்- எனது நெஞ்சம். பின்னும்- மீண்டும். தன் உழையதுவே- தன்னிடம் வந்திருப்பதாகும். (இதனை அவள் அறிவாளோ, மாட்டாளோ) கருத்து:- என் உள்ளம் என்னிடம் இல்லை. தலைவியினிடமே போய்விட்டது. விளக்கம்:- இது கபிலர் பாட்டு. தலைவியுடன் கூடி யிருந்து பிரிந்து வரும் தலைவன் கூறியது. ‘என் உள்ளம் என்னிடம் இல்லை. மீண்டும் தலைவியிடமே போய்விட்டது; இது அவளுக்குத் தெரியுமோ, தெரியாதோ’ என்று கூறினான். தலைவன் கூற்று. குறிஞ்சித்திணை. குற்று - பறித்து. தொடலை- மாலை. தைஇ- தொடுத்து. இ- உயிர் அளபெடை பால்நாள்- பகுதிநாள்; நடுநாள்; நள்ளிரவு. உழை- இடம். வருந்தித் தொடுத்த மலர் மாலையால் கிளிகளை ஓட்டுவது, பேதைத் தன்மையைக் காட்டும். பேதை- அறியாதவள். அவர் மிகவும் இரக்கமுள்ளவர் பாட்டு 143 தலைவன் பிரிவால் வருந்துகின்றாள் தலைவி. அவளுக்குத் தோழி ஆறுதல் கூறுகின்றாள். தலைவனுடைய உயர்ந்த குணத்தை எடுத்துக் காட்டுகின்றாள். அவனுடைய சிறந்த அறிவையும், தூய உள்ளத்தையும் பாராட்டிப் பேசினாள். ‘உத்தம குணம் பொருந்திய தலைவன்- இளகிய நெஞ்சு படைத்த தலைவன்- விரைவில் வந்து விடுவான்; வருந்தாதே’ என்று கூறினாள் தோழி. இச் சிறந்த செய்யுளிலே மக்கள் கடமையையும், உலகிலே நிலைத்து நிற்பது எது என்பதையும் காணலாம். ‘தலைவியே நீ வருந்த வேண்டாம்; நமது தலைவன் நல்ல பயனைத் தரும் மலைநாட்டின் தலைவன். மிகவும் இளகிய மனம் படைத்தவன்; பிறர் துன்பப்பட விடமாட் டான். தன்னைப் பிறர் பழிக்கக் கூடாது என்பதிலே கவலையுள்ளவன்; பிறர் பழிக்கத் தக்க சொற்களைச் செய்வதற்குத் துணியவே மாட்டான்; பயப்படுவான். செல்வம் நிலைக்காது; இதுதான் அழியாத உண்மை; இந்த உண்மையை உணர்ந்தவன் ‘ எப்பொழுதும் நிலைத்திருப்பது புகழ் ஒன்று தான்,’ என்பதை உணர்வான். ஆதலால் நீதி நிறைந்த நெஞ்சுள்ளவன், தான் செய்யவேண்டிய கடமையை மறக்க மாட்டான். தன் செல்வம் முழுவதையும் அறநெறியிலே அழிப்பான். அறத்திலே செலவிடுகின்றவனுடைய செல்வம் அழிவதுபோல உனது மேனியிலே படர்ந்திருக்கும் பசலை மறைந்து போகும். உன் அழகு மட்டும் புகழ் போல் மறையாமல் நிற்கும். இத்தகைய மகிழ்ச்சியுண்டாகும்படி நம் தலைவர் விரைவில் மீண்டு வருவார். ஆதலால் நீ வருந்த வேண்டாம்! இவ்வாறு தோழி தலைவியிடம் உரைத்தாள். பாட்டு அழியல்; ஆயிழை; அழிவு பெரிது உடையன், பழியும் அஞ்சும், பயம் மலை நாடன்; நில்லாமையே நிலையிற்று ஆதலின் நல் இசைவேட்ட நயன் உடை நெஞ்சின் கடப்பாட்டாளன் உடைப் பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று, நின் அம்கலுழ் மேனிப் பாஅய பசப்பே. பதவுரை:- அழியல் ஆய் இழை -வருந்தாதே சிறந்த அணி கலன்களைத் தரித்தவளே. அழிவு பெரிது உடையன்- நம் தலைவன் இரக்கம் மிகவும் உள்ளவன். பழியும் அஞ்சும் - பழிப்புக்கும் அஞ்சுவான். பயம் மலை நாடன்- பயன் தரும் மலை நாட்டை யுடையவன். நில்லாமையே- நிலையில்லாமை என்பது ஒன்று தான். நிலையிற்று- நிலைத்திருப்பதாகும். ஆதலின்- ஆதலால். நல் இசை- எப்பொழுதும் நிலைத்திருக்கக்கூடிய நல்ல புகழை விரும்பிய. நயன் உடை நெஞ்சின்- நீதியுள்ள நெஞ்சுள்ளவனாகிய. கடப்பாட்டாளன்- உதவி செய்யும் குணமுடையவனது. உடை. பொருள் போல- சொந்தமான செல்வம் அறத்திலே செலவழிவது போல. நின் அம்கலுழ்மேனி- உனது அழகு திகழும் உடம்பிலே. பாயபசப்பு ஏ- பரவிய மாமை நிறம். தங்குதற்கு உரியது அன்றி- நிலைத்திருப்பதற்குரியது அன்று. மறைந்து விடும். கருத்து:- தலைவன் விரைவில் வந்து விடுவான்; உன் பசலை நோய் மறையும். ஆதலால் வருந்தாதே. விளக்கம்:- இது மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன் என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடப் பிரிந்த தலைவனை நினைத்து வருந்திய தலைவிக்குத் தோழியுரைத்த ஆறுதல் மொழி. தோழி கூற்று. குறிஞ்சித்திணை. ‘நின் அம்கலுழ்மேனி பாய பசப்பு தங்குதற்கு உரியது அன்று’ என இறுதி இரண்டடிகளின் பதங்கள் மாற்றப்பட்டன. ஆய் இழை- சிறந்த அணிகலன்; ஆராய்ந்தெடுத்த ஆபரணங்கள். அழிவு- அழிதல்; இரங்குதல். நயன்-நீதி. இசை- புகழ். கடப் பாட்டாளன்- ஒப்புரவு அறிவோன். ஒப்புரவு- உதவி செய்தல். தலைவியின் மேனி அழகுக்குப் புகழ் உவமை. அவளுடைய பசலை நோய்க்கு அழியும் பொருள் உவமை. தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த இச் செய்யுளிலே அமைந்திருக்கும் ஆழ்ந்த கருத்து அருமையானது. ‘செல்வம் நிலையற்றது; புகழ் ஒன்றே நிலையுள்ளது. நீதி நிறைந்த நெஞ்சுள்ளவன் பிறருக்கு உதவி புரியப் பின்வாங்க மாட்டான். அவன் தன் செல்வத்தைச் சேர்த்து வைக்கமாட்டான்; பிறருக்கு உதவி செய்வதிலேயே செலவு செய்வான்? இந்த அரிய நீதியை இந்த அருந்தமிழ்ச் செய்யுள் உணர்த்துகின்றது. உலக நிலையாமையைக் காட்டி நிலையுள்ள செயல்களைச் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பாகக் கூறுகின்றது. எப்படிச் சென்றனளோ பாட்டு 144 ஒரு தலைவி, அவள் தான் காதலித்த கணவனுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். அவளும், அவள் காதலனும் களவு மணம் நடத்திவந்தனர். அச்செய்தி கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு விட்டது. ஊர்ப் பெண்கள் அவர்கள் நட்பைப் பற்றிக் குசு குசு வென்று முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர். இதை அறிந்த பிறகுதான் அக்காதலர்கள் வெளியேறி விட்டார்கள். இப்படி வெளியேறியதன் மூலம் தாங்கள் உண்மைக் காதலர்கள்; மனையறம் நடத்துவதற்கேற்ற கற்பு மணத்தை மேற்கொண்டவர்கள் என்பதைக் காட்டிக் கொண்டனர். இது பண்டைத் தமிழர் வழக்கம். இரவோடு இரவாகத் தலைவன், தலைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான். விடிந்தபின், செவிலித் தாய் தலைவி படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். அவளைக் காணவில்லை. தேடிப் பார்த்தாள்; வீட்டில் எங்கும் இல்லை. தோட்டத்திலும் இல்லை. தலைவி தன் காதலனுடன் போய்விட்டாள் என்ற உண்மையைச் செவிலித் தாய் உணர்ந்து கொண்டாள். அப்பொழுது அச்செவிலித் தாயின் உள்ளத்திலே ஒரு வேதனை உண்டாயிற்று. தலைவி தன் காதலனுடன் போய் விட்டாளே என்பதற்காக அவ்வேதனை தோன்றவில்லை. பரற் கற்கள்- காலை உறுத்தும் சிறிய கூழாங்கல்- நிறைந்த பாலை நிலத்தின் வழியே அவள் நடந்து சென்றபோது எவ்வளவு பதை பதைத்தாளோ என்ற வேதனைதான் அது. இந்த வேதனையுடன் செவிலித்தாய் சொல்லிய உரைகளை எடுத்துக் கூறுவதுதான் இப்பாடல். ‘கழிகளிலே பூத்திருக்கும் நீலோற்பல மலர்களைப் பறித்து மாலை தொடுப்பார்கள்; கடலிலே எழுந்து வரும் வெண்மையான தலையையுடைய அலைகளுடன் கூடி விளையாடுவார்கள்; தன்னை விட்டுப் பிரியாத விளையாட்டுப் பெண்கள் இவ்வாறு அவள் விரும்பும் விளையாட்டுக்களையெல்லாம் விளையாடு வார்கள். தன் மனமொத்த விளையாட்டுப் பெண்களுடன் சேர்ந்து விளையாடும் இன்பத்தை இவ்விடத்தில் அனுபவித்துக் கொண்டிருந்த அவள் இப்பொழுது அதைக் கைவிட்டாள். தோழிப் பெண்களுடன் கூடித் தனக்கு விருப்பமான விளையாட்டுக்களிலே பொழுதுபோக்குவதைவிடத் தன் காதலனுடன் கூடி வாழ்வதே குதுகலமெனக் கருதிவிட்டாள். ஆதலால்தான், விரைந்து ஓடுகின்ற மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கின்ற உச்சி- வானத்தை யளாவிய மலை-குறுக்காகக் கிடக்கின்ற மலை நாட்டிலே, அந்த வழியிலே பரற் கற்கள் தன் காலைத் துன்புறுத்தி அதன் அழகைச் சிதைக்கும் படித் தன் காதலனுடன் சேர்ந்து போனாள்’ இவ்வாறு சொல்லி வருந்தினாள் செவிலித்தாய் பாட்டு கழிய காவி குற்றும், கடல வெண்தலைப் புணரி ஆடியும், நன்றே பிரிவில் ஆயம் உரியது ஒன்று அயர, இவ்வழிப் படுதலும் ஒல்லாள்; அவ்வழிப் பரல்பாழ் படுப்பச் சென்றனள்; மாதோ; செல்மழை தவழும் சென்னி, விண் உயர் பிறங்கல், விலங்குமலை நாட்டே. பதவுரை:- கழிய - நீர்க்கழிகளிலே பூத்திருக்கின்ற. காவி குற்றும்- நீலோற்ப மலர்களைப் பறித்தும். கடல்- கடலிலே காற்றால் எழுந்து வரும்; வெண்தலைப் புணரி- வெண்மையான அலைகளிலே. ஆடியும்- விளையாடியும். நன்று ஏ- நன்றாக, பிரிவு இல் ஆயம்- தன்னோடு எப்பொழுதும் பிரியாமல் இருக்கின்ற விளையாட்டுப் பெண்கள். உரியது ஒன்று அயர- தம் விருப்பத்திற்குரிய விளையாட்டு ஒன்றை விளையாட. இவ்வழி- இவ்விடத்திலே. படுதலும் ஒல்லாள்- அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் சம்மதிக்காதவளாய். செல்மழை தவழும்- விரைந்து ஓடுகின்ற மேகங்கள் தவழ்கின்ற. சென்னி- உச்சியை யுடைய. விண் உயர் பிறங்கல்- வானத்தை முட்ட உயர்ந்து விளங்குகின்ற, விலங்கு மலை நாட்டு ஏ- குறுக்கிடும் மலைகளை யுடைய நாட்டிலே. அவ்வழி- அந்தப் பாலை நிலத்தின் வழியிலே. பரல் பாழ்படுப்ப- பருக்கைக் கற்கள் தன் பாதங்களைத் துன்புறுத்தி அவற்றின் அழகைப் பாழாக்கும்படி. சென்றனள் மாதோ- சென்று விட்டனள். கருத்து:- தலைவனுடன் சேர்ந்து வாழ்வதே சிறந்த இன்பமும், புகழும் என்று கருதித் தலைவி நம்மைப் பிரிந்து போய் விட்டாள். விளக்கம்:- இப்பாடல் மதுரை ஆசிரியன் கோடன் கொற்றன் என்னும் புலவரால் பாடப்பட்டது. தலைவி தன் காதலனுடன் இரவிலே ஒருவரும் உணராமல் புறப்பட்டுப் போனதை அறிந்த செவிலித்தாய் கூறியது. செவிலித்தாய் கூற்று. பாலைத்திணை. ‘அவ்வழிப் பரல் பாழ்படுப்பச் சென்றனள் மாதோ’ என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பொருள் கூறப்பட்டது. ஏ, மாது, ஓ, அசைச் சொற்கள். குற்றும்- பறித்தும். புணரி- அலை. ஆயம்- ஆய மகளிர்: விளையாட்டுப் பெண்கள். படுதல்- தங்கியிருத்தல், பரல்- பருக்கைக் கற்கள். பிறங்கல்- பலரும் காணும்படி விளங்குதல். விளையாட்டு, யாருக்கும் இன்பம் அளிக்கும். கற்புடைய மகளிர்க்குப் பிறருடன் விளையாடியிருப்பதைவிடக் கணவனுடன் சேர்ந்திருப்பதே இன்பம் அளிக்கும். இக்கருத்து இப்பாடலில் அமைந்திருக்கின்றது. இது நாம் உறைவதற்குத் தகுதியற்ற ஊர் பாட்டு 145 தமக்கு உதவி செய்யாத மக்கள் வாழ்கின்ற ஊரிலே யாரும் வாழ விரும்ப மாட்டார்கள். தமக்குத் துன்பம் உண்டானபோது போதுமான உதவி செய்யா விட்டாலும்; உதட்டளவில் அனுதாப மாவது காட்டுகின்ற மக்கள் வாழ்கின்ற ஊரைத்தான் ஒவ்வொரு வரும் விரும்புவார்கள். நாம் துன்பப்படும் போது நம்மிடம் பிறர் காட்டும் இரக்கமே நமக்குப் பெரிய ஆறுதல்; அதுவே நமது துன்பத்தை வளர ஒட்டாமல் தடுக்கும் ஒரு மருந்து. இரக்கங் காட்டுகின்றவர்கள் கட்டாயம் தம்மால் முடிந்த உதவிகளையும் செய்வார்கள். இது உண்மை. நாம் துன்பத்தால் துடிக்கும்போது ஏனென்று கேட்பதற்குக் கூட ஆளில்லாத ஊரிலே வாழ்வதைவிட; மக்கள் நடமாடாத காட்டிலே வாழலாம். எங்கே வாழ்ந்தாலும், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்க வேண்டும்; அதுவே மன அமைதியுடன் வாழ்வதற்கான வழி. இந்த உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இச்செய்யுள். தலைவன் தலைவியை மணம் புரிந்து கொள்வதற்காகப் பொருள் தேடப் போய்விட்டான். அவன் திரும்பி வருவதற்குக் காலம் நீண்டது. அவன் இவ்வாறு நீண்டநாள் பிரிந்திருக்கும் துன்பத்தைத் தலைவியால் தாங்க முடியவில்லை. அப்போது அவள், தோழியிடம், தன் துன்பத்தை வாய் விட்டுரைக்கின்றாள் இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப் பாடல்: ‘கடற்கரைச் சோலையையுடைய தலைவன் பொருள் தேடப் பிரிந்து போய் விட்டான். அவன் பிரிந்து போனது அவனே உயிர் என்று வாழ்ந்த மகளிர்க்குப் பெருங்கொடுமை யிழைத்ததாகும். அக்கொடுமையை நினைத்து ஆறாத் துயரத்துடன் அவர்கள் நள்ளிரவிலும் கண்ணுறக்கமின்றிக் கவலைப்பட்டுக் கிடக்கின்றனர். உள்ளத்திலே கவலையுள்ளவர்களுக்கு உறக்கம் வருமா? இவ்வாறு தூங்காமல் ஏங்கிக்கிடப்போரைப் பார்த்து “நீங்கள் ஏன் உறங்காமல் வருந்துகின்றீர்கள்?” என்று கேட்பதற்குக்கூட இவ்வூரில் ஒருவரும் இல்லை. எல்லோரும் நன்றாகக் கவலையின்றித் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இரவு நேரமோ விரைவில் கழிவதாகக் காணோம். அதன் நேரம் நீண்டு கொண்டே போகிறது. ஆதலால் கடற்கரையில் உள்ள இந்தச் சிறிய ஊர், நாம் வாழ்வதற்குத் தகுதியுள்ள இடமன்று இவ்வாறு தலைவி தன் துன்பத்தை எடுத்துரைத்தாள். பாட்டு உறைபதி அன்று இத்துறை கெழு சிறுகுடி: கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, ஆனாத் துயரமொடு வருந்திப், பானாள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில் கண்மாக்களொடு நெட்டு இராவுடைத்தே. பதவுரை:- கானல்- கடற்கரைச் சோலை நிறைந்த. அம் சேர்ப்பன்- அழகிய கடல் துறையையுடைய தலைவனது. கொடுமை எற்றி- கொடுமையை நினைத்து. ஆனாத் துயரமொடு- முடிவில்லாத துன்பத்தோடு. வருந்தி- மிகவும் துன்புற்று. பால் நாள் - நள்ளிரவிலும். துஞ்சாது- தூங்காமல். உறைநரொடு - வருந்தி வாழ்கின்றவருடன். உசாவா - ஏன் தூங்காமல் வருந்துகிறீர் என்று கேட்காத, துயில்கண்- தூங்குகின்ற கண்களையுடைய. மாக்களொடு - அறிவற்ற மக்களுடன், நெட்டு இரா- நீண்ட இரவையும். உடைத்து- உடையது. ஆதலால் இத்துறை கெழு சிறுகுடி - இந்தக் கடற்கரையிலே பொருந்திய இச் சிற்றூர். உறைபதி அன்று - நாம் வசிப்பதற்குத் தகுந்த இடம் அன்று. கருத்து:- நம்மிடம் அனுதாபம் காட்டாத இவ்வூர் நாம்வாழ் வதற்கு ஏற்றதன்று. விளக்கம்:- இது கொல்லனழிசி என்னும் புலவர் பாட்டு. தலைவனுடைய பிரிவைப் பொறுக்க முடியாத தலைவி, தன் துன்பத்தைத் தோழியிடம் உரைத்தது. தலைவி கூற்று. நெய்தல் திணை. ‘உறைபதி அன்று இத்துறை கெழுசிறு குடி’ என்னும் முதலடியை ‘இத்துறை கெழு சிறுகுடி உறைபதி அன்று’ என்று மாற்றி இறுதியில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. ஏ- அசை. துறை- கடல்துறை. கானல்- கடற்கரைச்சோலை. சேர்ப்பன் - நெய்தல் நிலத்தலைவன். ஏற்றி - நினைத்து. ஆனா- முடிவில்லாத. பானாள்- பால்நாள், நள்ளிரவு. உசாவுதல்- கேட்டல். பிறரிடம் அனுதாபம் காட்டாத மக்களை மாக்கள் என்றார். மாக்கள்- மிருகங்கள். மிருகங்களைப் போல் தந்நலத்தைத் தவிர வேறு குறிக்கோளல்லாதவர்கள் மாக்கள். பிரிந்தோரைச் சேர்ப்போர் உண்டு பாட்டு 146 நீண்ட நாள் களவு மணவாழ்க்கை நடத்திய தலைவன், கற்பு மண வாழ்வு நடத்தத் துணிந்து விட்டான். முறைப்படி தலைவியின் பெற்றோரிடம் பெண் கேட்கத் தன் உறவினரை அனுப்பினான். அந்த உறவினர்கள் வயதுமுதிர்ந்தவர்கள். கையிலே நீண்ட தண்டுகளைப் பிடித்தவர்கள்: தலைமயிர் வெள்ளிக்கம்பிபோல் நரைத்துப் போனவர்கள். நீளமாகக் கிழித்த துணியைத் தலையிலே முண்டாசு கட்டியிருக்கின்றனர். இந்தக் கிழவர்கள் பெண் வீட்டாரிடம் பெண் கேட்க வந்தனர். இவர்கள் வரப்போகும் செய்தி முன்னமே பெண் வீட்டாருக்குத் தெரியும் ஆதலால் பெண்ணின்தாய், தந்தை, செவிலித்தாய், அண்ணன் மற்றுமுள்ள உறவினர் ஒரு சபை போலக் கூடினர். பெண் கேட்க வந்தவர்களை வரவேற்றனர். வந்தவர்களும் நன்மையுண்டாகுக; நன்மையுண்டாகுக; என்று வாழ்த்திக் கொண்டே வந்தனர். பெண் வீட்டில் உள்ளாரும் ‘நீங்கள் வரப்பெற்றமையால் இந்த நாள் எங்களுக்குச் சிறந்த நாளாகும்’ பெருமை தரும் நாளாகும் என்று சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியை மறைவிலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தலைவி. அப்பொழுது அவள் நெஞ்சிலே ஒரு ஐயம் பிறந்தது. தன்னை அத்தலைவனுக்கு மணம் புரிந்து கொடுக்கத் தன் பெற்றோர்கள் மறுத்து விடுவார்களோ என்பதுதான் அந்த ஐயம். இந்த ஐயத்தால் அவள் அஞ்சினாள். அதைக்கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் உரைத்தாள். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இச்செய்யுள். “தோழியே! சொல்லுகிறேன் கேள். பெண் கேட்க வந்தவர்கள் நல்ல அனுபவசாலிகள்: கையிலே தண்டு பிடித்தவர்கள்; வயதேறித் தலை நரைத்தவர்கள்; தலையிலே தலைப்பாகை அணிந்தவர்கள். வரும் போதே நன்மையுண்டாகட்டும்! நன்மையுண்டாகட்டும்! என்று நன்மொழிகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அவர்களை நம் வீட்டில் கூடியிருந்த சபையினர் ‘நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்த நாளாகிய இந்நாள் சிறந்த நாள்’ என்று சொல்லி வரவேற்றனர். இந்நன்மொழிகளும், வரவேற்பும் நன்மைக்கே அறிகுறிகள். நம்மூரிலே பிரிந்தோரைச் சேர்த்து வைக்கும் நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதற்கு இது அடையாளமாகும். ஆதலால் நீ ஐயமடையாதே! அஞ்சவும் வேண்டாம். நீ விரும்பிய காதலனையே மணப்பாய் என்று கூறினாள் தோழி. பாட்டு அம்ம வாழி தோழி! நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ; தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர், ‘நன்று நன்று’ என்னும் மாக்களோடு, ‘இன்று பெரிது’ என்னும் ஆங்கணது அவையே. பதவுரை:- அம்மவாழி- தோழி- சொல்லுகிறேன் கேள் வாழ்க தோழியே. நம்மூர் - நமது ஊரிலே. பிரிந்தோர்- பிரிந்த வர்களை. புணர்ப்போர்- சேர்த்துவைப்போர். இருந்தனர் - முன்னும் இருந்தனர்; இப்பொழுதும் இருக்கின்றனர். தண்டு உடைக்கையர்- தண்டைப்பிடித்த கையை உடையவர்களாய். வெண்தலை- நரைமயிருள்ள தலையிலே. சிதவலர்- முண்டாசு கட்டியவராய். நன்று நன்று என்னும்- நன்று நன்று என்று சொல்லிக் கொண்டு பெண் கேட்கவந்த. மாக்களோடு- மக்களுடன். இன்று பெரிது- நீங்கள் இங்கு வந்த இந்த நாள் சிறந்தது. என்னும்- என்று உரைக்கும். ஆங்கண்- அது. அவை- நமது இல்லத்திலே கூடியிருந்த நமது உறவினராகிய அந்தச் சபை இவ்வாறு கூறும். கருத்து:- தலைவியே நீ அஞ்சாதே! தலைவனுக்கு உன்னை மணம் புரிந்து கொடுக்கச் சம்மதம் தெரிவித்து விட்டனர். விளக்கம்: இது வெள்ளி வீதியார் என்னும் புலவர் பாட்டு. தலைவனுக்குத் தன்னை மணம் புரிந்து கொடுக்கத் தன் பெற்றோர் மறுப்பார்களோ என்று அஞ்சிய தலைவிக்குத் தோழி கூறியது. தோழி கூற்று. குறிஞ்சித்திணை. கொல். ஓ, ஏ- அசைச்சொற்கள். தண்டு- தடி. கழி- சிதவல். துணி. அவை- சபை; இங்குச் சுற்றத்தார் குழுவைக் குறித்தது. வயது முதிர்ந்தோரைப் பெண் கேட்க அனுப்புவார்கள். தமிழ் மக்கள் கையில் தடியும், தலையில் தலைப்பாகையும் அணிந்திருப்பர். இன்னும் கிராமாந்தரங்களில் பழங்குடி மக்கள் இத்தகைய கோலத்துடன்தான் உலவுகின்றனர். பெரியோர்கள் பெண் கேட்க வரும் போது எல்லாம் நன்மையாக முடியட்டும் என்ற கருத்திலே ‘நன்று நன்று’ என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். அவர்களை வரவேற்போரும் ‘நீங்கள் வந்த நாள் நன்னாள்’ என்று சொல்லி வரவேற்பார்கள். இத்தகைய வாழ்த்தும் வரவேற்பும் காரியம் நிறைவேறும் என்பதற்கான அறிகுறிகள். இவை எல்லாம் பழந்தமிழ் நாட்டிலிருந்த பழக்க வழக்கங்கள். இவ்வுண்மையை இப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. தமிழர் ஒரு நல்ல காரியத்திற்காகச் சந்திக்கும்போது, இரு சார்பாரும் எவ்வளவு நாகரிகமுடன் சந்திப்பார்கள் என்பதை இதனால் அறியலாம். நினைத்தால் துன்பம், சேர்ந்தால் இன்பம் பாட்டு 150 தான் அடையும் இன்ப துன்பங்களை நண்பர்களிடம் சொல்லாமலிருக்க மாட்டார்கள். துன்பத்தை நண்பர்களிடம் சொல்லுவதனால் உள்ளத்திற்கு ஒரு ஆறுதல்; அத் துன்பம் ஒழிவதற்கு அந்நண்பர்களின் உதவியும் கிடைக்கும். இது போலவே தான் அடைந்த இன்பத்தை நண்பர்களிடம் எடுத்துரைப்பதனால் தன் மனத்துக்கும் மகிழ்ச்சியுண்டாகும்; நண்பர்களும் உள்ளம் களிப்பார்கள். மனமொத்த நண்பர்கள் இவ்வாறு தங்கள் இன்ப துன்பங்களைப் பரிமாறிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். இப்படி பரிமாறிக் கொள்ளுவதுதான் உண்மை நண்பர்களின் தன்மை. இந்த இயல்பை இந்தப் பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. இரு காதலர்கள் ஒன்றுபட்ட உள்ளமுடையவர்களாகி விட்டனர். களவு மணத்தில் காலங்கடத்தினர். அவர்கள் பகற் பொழுதிலே, தோட்டந் துறவுகளிலே சந்தித்தனர். இன்ப விளையாட்டிலே பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். இப்பொழுது பகற் பொழுதிலே சந்திக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. தலைவியின் உயிர்த்தோழி இரவிலே சந்திப்பதற்குத் தலைவனுடன் கலந்து பேசி ஏற்பாடு செய்து விட்டாள். தலைவனை எப்படிச் சந்திப்போம் என்று ஏங்கியிருந்த தலைவிக்கு இந்த ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள் தோழி. இதைக் கேட்டவுடன் தலைவிக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. தன் கருத்தறிந்து உதவி செய்த தோழிக்குத் தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை அப்படியே ஒளிக்காமல் வெளியிட்டாள். தன் உள்ளக்கருத்தை உரைத்ததன் மூலம், தோழியின் ஏற்பாட்டிற்குத் தன் முழுச் சம்மதத்தையும் தெரிவித்தாள். ‘தோழியே! என் நிலைமையை அப்படியே ஒளிக்காமல் உரைக்கின்றேன் கேள்! இராக்காலத்திலே தினைப்புனங் காக்கின்ற குறவர்கள் தங்கள் பரண்களிலே கொள்ளிக் கட்டைகளை மாட்டி வைத்திருக்கின்றனர். அவை வானத்திலே மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் போல ஆங்காங்கே ஒளி வீசிக் கொண்டிருக் கின்றன. இத்தகைய உயர்ந்த மலை நாட்டையுடையவன் நம் தலைவன். இத்தலைவனுடைய மார்பு என் உள்ளத்தை இழுத்துக் கொள்ளும் இயல்பு வாய்ந்தது. இயற்கை அழகோடு செயற்கை அழகும் உள்ளது. சந்தனம் பூசிக் காய்ந்து மணம் வீசிக் கொண்டி ருப்பது. என் காதலனுடைய இந்த மார்பை நான் நினைத்தாலே போதும். என் உள்ளத்திலே கிடக்கும் காமநோய் பெருகிவளர்ந்து என்னைத் துன்புறுத்துகின்றது. அந்த மார்பை நான் தழுவிக் கொள்வேனாயின் என்னைத் துன்புறுத்தும் காம நோய் செத்தே போய்விடுகின்றது. இதற்குக் காரணம் என்னவோ தெரியவில்லை.’ இது தலைவி தோழிக்குக் கூறிய மறுமொழி. தன் மன நிலையை அப்படியே ஆருயிர்த் தோழியிடம் இவ்வாறு அறிவித்தாள். பாட்டு சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி, வானமீனின் வயின் வயின் இமைக்கும், ஓங்கு மலைநாடன், சாந்து புலர் அகலம் உள்ளின், உள்நோய் மல்கும்; புல்லின் மாய்வது எவன் கொல்? அன்னாய். பதவுரை:- அன்னாய்- என் அன்னை போன்ற தோழியே. சேணோன்- உயரமாகிய பரணில் இருக்கின்ற குறவன். மாட்டிய- இரவிலே வெளிச்சத்திற்காகப் பரணிலே மாட்டியிருக்கின்ற. நறும்புகை- மணமுள்ள புகையைத் தரும். ஞெகிழி - கொள்ளிக் கட்டைகள். வானமீனின்- வானத்தில் மின்னுகின்ற நட்சத்திரங் களைப் போல. வயின் வயின் இமைக்கும்- இடங்கள் தோறும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்ற. ஓங்குமலை நாடன்- உயர்ந்த மலை நாட்டுத் தலைவனுடைய. சாந்து புலர்- சந்தனம் பூசிக் காய்ந்திருக்கின்ற. அகலம் உள்ளின்- மார்பை நினைத்தால். உள் நோய் மல்கும்- உள்ளத்திலே ஒடுங்கியிருக்கின்ற காமநோய் வளரும். புல்லின்- அவன் மார்பைத் தழுவிக் கொண்டவுடனே. மாய்வது- அந்தக் காமநோய் அழிந்து போவது. எவன் கொல்- என்ன காரணம்? கருத்து:- தலைவனைக் கண்டு தழுவிக் கொள்ளும் போது தான் என் துன்பம் ஒழிகின்றது. விளக்கம்:- இது மாடலூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. இரவிலே சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டேன், என்று கூறிய தோழிக்குத் தலைவி உரைத்தது. குறிஞ்சித் திணை. இறுதியில் உள்ள ‘அன்னாய்’ என்ற சொல்லை முதலில் வைத்துப் பொருள் உரைக்கப்பட்டது. சேணோன்- உயரத்தில் இருப்பவன். சேண்- உயரம். உயரமாகக் கட்டியிருக்கும் பரணில் இருப்பவனைச் சேணோன் என்று குறிக்கப்பட்டது. ஞெகிழி- கொள்ளிக் கட்டை. இமைத்தல்- விட்டு விட்டு ஒளி வீசுதல். அகலம்-மார்பு. விரிந்திருக்கும் மார்பை அழகுள்ளதாகக் கருதுவர். இன்பத்திற்கு முடிவுதான் பாட்டு 151 ஒன்றைச் செய்ய நினைத்தால் உடனே அச்செயலில் குதிப்பது அறிவுடமையன்று. நினைத்த செயலைப் பற்றி நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். அதைச் செய்வதனால் வரும் இன்பதுன்பங்கள்; வரவு செலவுகள்; பெருமை சிறுமை இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதன் பிறகுதான் செயலில் தலையிட வேண்டும். அறிவுள்ளவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இந்த உண்மையை அடக்கிக் கொண்டிருக்கின்றது இப்பாடல். ஒரு தலைவன் தன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச்செல்வதற்கு நினைத்தான். உடனே அவன் உள்ளத்திலே அதைப் பற்றிய ஆராய்ச்சி பிறந்தது. ‘நாம் பிரிந்து போனால் அவளும் துன்புறுவாள். நாமும் துன்புறுவோம். இளமைக் காலத்தில் தான் இன்பம் அனுபவிக்க வேண்டும். இன்பம் நுகர்வதற்குரிய இளமைப் பருவத்தை வீணாக இழந்துவிடுவதா? இழந்த இளமை இன்பத்தை மீண்டும் பெற முடியவே முடியாது. நாம் இப்பொழுது பிரிய நினைப்பது நமது இளமையின்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத்தான் முடியும்’ என்று. இவ்வாறு, அவன் தானாகவே ஒரு முடிவுக்கு வந்தான். இம்முடிவின் காரணமாக, அவன் தன் புறப்பாட்டை நிறுத்திவிட்டான். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். “நெஞ்சே! நாம் செல்ல நினைத்த வழியிலே குன்றுகள் நிறைந்திருக்கும். அந்தக் குன்றுகளிடையே பல சிறிய வழிகளைக் கடந்து செல்ல வேண்டும். அங்கே வங்கா என்னும் பறவை யினங்கள் உண்டு. ஆண் வங்காப் பறவையைப் பிரிந்ததனால் பெண் வங்காப்பறவை தனித்து மேய்ந்து கொண்டிருக்கும். அப்பொழுது புல்லூறு என்னும் பறவை அந்தப் பேடையைக் கண்டு அதன்மேல் பாயும். அதைப் பிடித்து இரையாகக் கொள்ளவே அந்தப் புல்லூறு பாயும். அதைக் கண்டு அந்தப் பெண்வங்கா நடுநடுங்கும். புல்லாங் குழலோசை போன்ற தன்னுடைய குரலால் குறுகிய ஓசையுடன் தன் துணையான ஆண் வங்காவைக் கூவி அழைக்கும். இந்தக் காட்சி நாம் போகும் வழியிலே காணப்படும். இந்த வழி, நடந்து போவதற்கு முடியாத தடைகளை யுடைய வழியாகும். இந்த வழியைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இவ் வழியிலேயே போக நினைப்பது நன்றன்று. மறக்க முடியாத நம் காதலியை இங்கே தனியே தவிக்க வைத்துவிட்டுப் பிரிந்து போக நினைப்பது, நமது இளமை இன்பத்திற்கே முடிவு கட்டுவதாகும். இதுவே தலைவன் உள்ளத்திலே நிகழ்ந்த நினைப்பு. பாட்டு வங்காக் கடந்த செங்கால் பேடை, எழால் உற வீழ்ந்தெனக் கணவன் காணாது குழல் இசைக் குரல குறும்பல அகவும்; குன்று கெழு சிறுநெறி அரிய என்னாது. மறப்பரும் காதலி ஒழிய இறப்பல், என்பது ஈண்டு இளமைக்கு முடிவே. பதவுரை:- வங்கா கடந்த- ஆண் வங்காப் பறவையைப் பிரிந்ததனால் தனித்திருக்கின்ற. செங்கால் பேடை- சிவந்த கால்களையுடைய பெட்டை. எழால்- புல்லூறு என்னும் பறவை. உற வீழ்ந்தென- தன்னை இரையாகக் கொள்ள நெருங்கிப் பாய்ந்தவுடன். கணவன் காணாது- தன் கணவனைக் காணாமல். குழல் இசை குரல- புல்லாங்குழலின் இசை போன்ற குரலை யுடைய. அந்தக் குறும்பல அகவும்- குறுகிய பல குரல்களால் தன் கணவனை அழைக்கின்ற. குன்று கெழு- குன்றுகள் பொருந்திய. சிறு நெறி - சிறிய வழிகள். அரிய என்னாது- நடந்து செல்வதற்கு அரியன என்று கருதாமல். மறப்பு அரும் காதலி- நம்மால் மறப்பதற்கு முடியாத நமது காதலி. ஒழிய- இங்கே தனித்திருக்கும் படி. இறப்பல் என்பது- நாம் பொருள் தேடப் பிரிந்து போவோம் என்று எண்ணுவது. ஈண்டு- இங்கே இப்பொழுதே. இளமைக்கு- இளமைப் பருவத்திலே எய்தும் இன்பத்திற்கு. முடிவே- முடிவு கட்டுவதாகத்தான் ஆகும். கருத்து:- என் தலைவியைப் பிரிந்தால் இளமை யின்பத்தை இழப்பேன். ஆதலால் பிரியமாட்டேன். விளக்கம்:- இது தூங்கலோரி, என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடப் போக நினைத்த தலைவன், தன் உள்ளத்தைப் பார்த்துத் தானே சொல்லிக் கொண்டது. பாலைத்திணை. வங்கா என்பது பறவைகளில் ஒரு வகை. எழால் என்பது புல்லூறு என்னும் ஒரு வகைப் பறவையினம். இது உயரத்தில் பறக்கும் தன்மை உள்ளது. இது உயரத்தில் பறக்கும் போதே கீழ் உள்ள இரையைக் கண்டுபிடிக்கும் இயல்புள்ளது. ஆதலால்தான் எழால் என்னும் பெயர் பெற்றது. ஆண் வங்கா தலைவனுக்கு உவமானம். செங்காற் பேடை தலைவிக்கு உவமானம். எழால் காமநோய்க்கு உவமானம். தனித் திருக்கும் பெண் வங்கா, தன்னைப் பிடிக்க வரும் புல்லூறைக் கண்டு கணவனைக் காணாது தவிப்பது போலத், தனித்திருக்கும் என் தலைவி, தன்னைப் பற்றிக் கொள்ளும் காம நோயைக் கண்டு என்னைக் காணாமல் தவிப்பாள் என்பது உவமையின் விளக்கம். இடித்துரைப்போருக்கு என்ன தெரியும் பாட்டு 152 ஒரு சிறந்த கற்புள்ள பெண், தன் காதலனைப் பிரிந்திருக்கும் போது எப்படி நடந்து கொள்வாள் என்பதை இச்செய்யுள் விளக்குகிறது. கற்புள்ள பெண்கள் கணவனைப் பிரிந்திருக்கும் போது எப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் கொள்ளலாம். இச் சிறிய பாட்டிலே பெரிய கருத்துப் புதைந்து கிடக்கின்றது. தலைவனும் தலைவியும் ஒத்த மனமுள்ளவர்கள்தாம். ஆனால் இன்னும் வெளிப்படையாக அறநெறிப்படி இல்லறம் நடத்தும் வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. இதற்குத் தலைவன் தான் காரணம். அவன் இன்னும் கற்பு மணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்யாமல் காலத்தை ஓட்டிக்கொண்டே யிருந்தான். தலைவியின் உள்ளத்தில் மட்டும் தலைவன் இன்னும் நம்மை மணம் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. இதைக் கண்ட தோழி தலைவியை இடித்துரைத்தாள். ‘உன்னுடைய வழவழப்பால்தான் தலைவன் மணம் புரிந்து கொள்ளாமல் சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டே யிருக்கின்றான். நீ கண்டிப்பாகப் பேசினால்- உன் உள்ளத்தை உறுதியுடன் வெளியிட்டால் அவன் இவ்வாறு தட்டிக்கழிக்க மாட்டான். ஆதலால் நீ வருந்துவதற்கு உன் குற்றந்தான் காரணம்’ என்று இடித்துரைத்தாள். இதைக் கேட்ட தலைவி அத்தோழிக்கு மறுமொழி உரைத்தாள். அந்த மறுமொழியே இச் செய்யுளாகும். ஆமையின் குட்டிகள், தம் தாயின் முகத்தைப் பார்த்து வளரும். தாயின் முகத்தைப் பார்க்காவிட்டால் அவை வளர்ச்சி யடைவதில்லை. காமமும் அதே போன்றதுதான். தான் தன் காதலனைப் பலமுறையும் பார்க்கும் போதுதான் அது பலன் பெறும். காமத்தின் பயனை அதையுடையவர் அனுபவிக்க முடியும். காதலால் கைவிடப்பெற்ற மகளிர், காமத்தின் இன்பத்தைப் பெறமாட்டார்கள். காதலரைப் பிரிந்த மகளிர் தாய்ப்பறவையால் கைவிடப்பட்ட முட்டை போன்றவர்கள். தாய்ப்பறவையால் அடைகாக்கப்படாத முட்டையின் உள்ளிருக்கும் உயிர் வெளி வரமுடியாது. அந்த முட்டையின் உள்ளேயே கிடந்து வாட வேண்டியதுதான். அந்த உயிர் வேறு என்னதான் செய்ய முடியும்? என்னை இடித்துரைப்பவர் இந்த உண்மையை அறியவில்லை. வீணாக என் மீது பாய்ந்து விழுகின்றார்கள்.’ ‘இவ்வாறு தன்னைக் கடிந்த தோழியிடம், தலைவி உரைத்தாள். ‘நீ உண்மை யுணராமல் என்னை இடித்துரைக் கின்றாய், என்று கூறவில்லை. உண்மை யறியாதவர்கள் தாம் இடித்துரைப்பார்கள்’ என்று அயலாரைக் கூறுவது போல் உரைத்தாள். இப்படிப் பேசுவதற்கு முன்னிலைப் புறமொழி யென்று பெயர். பாட்டு யாவதும் அறிகிலர் கழறு வோரே; தாயின் முட்டை போல உள்கிடந்து சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே. பதவுரை:- யாமைப் பார்ப்பின் அன்ன - தாய்முகம் பார்த்து வளருகின்ற ஆமைப்பார்ப்பைப் போல. காமம்- தலைவனைக் காணுவதால் வளருகின்ற காமமானது. காதலர் கையறவிடின் - தலைவர் நாம் செயலற்றுக் கிடக்கும்படி நம்மை விட்டுப் பிரிந்து விடுவாரானால். தாய் இல் முட்டை போல- அந்தக் காமம் தாயை விட்டுப் பிரிந்த முட்டையைப் போல. உள்கிடந்து- அம்முட்டையில் உள்ள உயிர் அதன் உள்ளேயே கிடந்து வருந்துவது போலக் காமமும் நம் உள்ளத்துள்ளேயே கிடந்து. சாயின் அல்லது- வருந்தக் கூடுமே அல்லாமல். பிறிது எவன் உடைத்து- வேறு என்ன நன்மையை உடையது? கழறுவோர் ஏ- என்னை இடித் துரைப்போர். யாவதும் அறிகிலர்- இதைச் சிறிதும் அறியாதவர் களாயிருக்கின்றனர். கருத்து:- தலைவர் என்னை விரைவில் மணந்து கொள்ளா விட்டால் என் காமம் எனக்குப் பயன் தராது விளக்கம்:- இது, கிளிமங்கலங்கிழார் என்னும் புலவர் பாட்டு. ‘தலைவன் மணந்து கொள்ளாமைக்கு நீதான் காரணம்’ என்று இடித்துரைத்த தோழிக்குத் தலைவி உரைத்த மறுமொழி. குறிஞ்சித்திணை. ‘யாமைப் பார்ப்பின் அன்ன காமம் காதலர் கையறவிடின் ஏ, தாயின் முட்டைபோல உள் கிடந்து சாயின் அல்லது பிறிது எவன் உடைத்து ஓ, கழறுவோர் ஏ, யாவதும் அறிகிலர்’ இவ்வாறு கொண்டு கூட்டப்பட்டது. யாமை- ஆமை பார்ப்பு- ஆமையின் குஞ்சு, சாய்தல்- வாடுதல்; மொழிதல். கழறுதல்- இடித்துரைத்தல்; கடிந் துரைத்தல்; சினந்துரைத்தல். கணவனோடு சேர்ந்திருப்போர் காமத்திற்குத் தாயின் முகம் நோக்கியிருக்கும் ஆமைப் பார்ப்பு உவமை. கணவனைப் பிரிந்திருக்கும் மகளிர் காமத்திற்குக் தாயில்லாத முட்டை உவமை. இவை மிகவும் அழகான இயற்கை உவமைகள். அச்சமே காரணம் பாட்டு 153 ‘தோழியே! நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன் என்னால் பொறுக்க முடியவில்லை, ஆதலால் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அவரை இனி இரவில் வராமல் தடுத்துவிட வேண்டும், என்பது தான் இந்த முடிவு. நீர் இனி இரவில் வர வேண்டாம் என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிடு; என்றாள் தலைவி. திடீரென்று தலைவி இப்படிச் சொல்லியவுடன் தோழி திகைத்து விட்டாள். தலைவியின் இந்தச் சொல்லுக்குக் காரணம் என்னவென்று புரியவில்லை, தலைவியையே காரணத்தைக் கேட்டு விடுவோம் என்று தீர்மானித்தாள். ‘தலைவியே! நீ திடீரென்று இப்படிச் சொல்லுவதற்குக் காரணம் என்ன? அக்காரணத்தை நான் தெரிந்து கொள்ளக் கூடாதா? என்றாள். ‘தோழியே! அவர் நம் அன்புக்குரியவர்; அவர் வாழ்வுதான் நமது வாழ்வு; அவருக்கு உண்டாகும் இன்ப துன்பங்களெல்லாம் நமக்கும் உண்டு. அவரோ வெளியிலே நடந்து செல்ல முடியாத இருட்டிலே இரவு நேரத்தில் வருகின்றார். அவர் வருகின்ற வழியோ மலைச் சாரல். மலைச் சாரலிலே புலி, சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் உண்டு; பாம்பு முதலிய நச்சுப் பிராணிகளும் உண்டு. இந்தப் பயங்கரமான வழியிலே அவர் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கிறார். இதை நினைத்தால் என் நெஞ்சம் நடுங்குகின்றது. மலையிலேயுள்ள பேராந்தை இரவிலே குளறுவதைக் கேட்டாலே என்மனம் பதைக்கின்றது. பலா மரத்தின் கிளை யிலிருந்து ஆண் குரங்கு, மற்றொரு கிளைக்குத் தாவித் துள்ளும் ஓசையைக் கேட்டாலும் என் உள்ளம் நடுங்குகின்றது. இத்தகைய என் மனம் அவர் வந்து திரும்பும் போதும் அவருடனேயே பிரியாமல் சென்று விடுகின்றது. இது மிகவும் இரங்கத் தக்கதல்லவா? எத்தனை நாளைக்கு இப்படி அஞ்சி அஞ்சிச் சாகமுடியும்? ஆகையால் தான் அவரை இரவில் வரவேண்டாம் என்று தடுத்துவிடு என்று சொன்னேன்’ என்றாள் தலைவி. இதைக் கேட்டவுடன் உண்மையை உணர்ந்து கொண்டாள் தோழி. இனிக் களவு மண வாழ்வு வேண்டாம்; காதலன் தன்னை மணந்து கொண்டு கற்பு மண வாழ்வு நடத்த வேண்டும் என்பதே தலைவியின் உள்ளம் என்பதை அறிந்து கொண்டாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். பாட்டு குன்றக் கூகை குழறினும், முன்றில் பலவின் இரும் சினைக் கலைபாய்ந்து உகளினும், அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம்; இனியே ஆர் இருள் கங்குல் அவர் வயின் சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. பதவுரை:- குன்றம் கூகை- இரவு நேரத்திலே மலையிலே உள்ள பேராந்தை. குழறினும்- அலறினாலும். முன்றில்- முற்றத் திலேயுள்ள. பலவின் இரும்சினை- பலாமரத்தின் பெரிய கிளை யிலிருந்து. கலை பாய்ந்து உகளினும்- ஆண் குரங்கு மற்றொரு கிளைக்குத் தாவிக் குதித்தாலும். அஞ்சும் அளித்து என் நெஞ்சம்- அவ்வோசைகளைக் கேட்டு அஞ்சக் கூடிய அவ்வளவு இரக்க முடையது என் உள்ளம். இனியே- இப்பொழுது. ஆர் இருள் கங்குல்- இருட்டு நிறைந்த இரவிலே. சாரல் நீள் இடை- மலைச் சாரலிலே உள்ள நீண்ட வழியிலே. அவர் வயின்- வந்து திரும்பும் அவரிடம். செலவு ஆனாதே- சேர்ந்து செல்லுவதை விடாது. கருத்து:- தலைவர் இரவிலே ஆபத்துள்ள வழியிலே நடந்து வருகின்றார்; அதனால் அஞ்சுகின்றேன். விளக்கம்:- இது, கபிலர் பாட்டு. தலைவன் தன்னை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், தலைவி தோழியிடம் கூறியது. குறிஞ்சித்திணை. ‘அவர்வயின்’ என்ற நான்காவது அடியில் உள்ள தொடர் ‘சாரல் நீள் இடை’ என்ற தொடருக்குப் பின் வைத்துப் பொருள் கூறப்பட்டது. கூகை- பேராந்தை; கோட்டான் என்றும் கூறுவர். முன்றில்- இல்முன்; முற்றம். பலவு- பலா. கலை- ஆண் குரங்கு. உகளுதல்- துள்ளுதல். ஆனாது- விடாமல் தொடர்கின்றது. மன். ஏ,- அசைச் சொற்கள். தலைவி தலைவனிடம் கொண்டிருக்கும் ஆறாக் காதலையும் வெளிப்படுத்துகிறது இச்செய்யுள் எப்படிப் பெற்றாரோ? பாட்டு 154 பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. துக்கத்தை ஓரளவுதான் மூடி மறைத்துக்கொண்டிருக்க முடியும். அதை அடியோடு மறந்து விட்டால் ஒன்றும் ஆபத்தில்லை. மறக்காமல் உள்ளத்திலேயே அடக்கிக் கொண்டிருப்பதென்றால் அது ஆகாத காரியம். எப்பொழுதோ ஒரு சமயம் அது நம்மை அறியாமலே வாய் மூலமாகவோ, கண் மூலமாகவோ, அழுகை மூலமாகவோ, முணு முணுப்பு மூலமாகவோ, அலறல் மூலமாகவோ வெளிவந்துதான் தீரும். இது இயற்கை இப்படி நிகழாவிட்டால் உள்ளம் உடைந்து உயிர்விட வேண்டியதுதான். பொருள் தேடப் பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை. தலைவியும் பொறுமையிழந்தாள். அவளால் துக்கத்தை அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. இன்னும் அடக்கிக் கொண்டிருந்தால் நெஞ்சு வெடித்துப் போகும்போல் தோன்றியது. ஆதலால் தன் அருமைத் தோழியிடம், தன் துக்கத்தை வெளியிட்டாள். இதை யுரைப்பதே இப்பாடல். தலைவி தன் வேதனையை வெளியிடும் முறை மிகவும் அழகாக அமைந்திருக்கின்றது. அவள் கூறுவதைக் காணுங்கள். ‘தோழியே! அவர் கடந்து சென்றவழி பாலை நிலத்தின் வழியாகும். அந்த வழி யாராலும் கடத்தற்கரியது. என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவ்வழியில் பல காட்சிகள் உண்டு. அதிலே ஒரு காட்சி காதலியைப் பிரிந்து செல்லுவோர் உள்ளத்தை உருக்காமற் போகாது. அந்தக் காட்சியைச் சொல்லுகிறேன் கேள். நடுப்பகலில் வெய்யிலிலே அந்தப் பாலைவனத்திலே கானல் நீர் காணப்படும். அக்கானல், பாம்பின் உரித்ததோல் மேலெழுந்து காணப்படுவது போல் காட்சியளிக்கும். இந்த நடுப்பகலிலே ஆண் புறா இரைதேடுவதற்காக எங்கோ பறந்து போய்விட்டது. கழுத்திலே புள்ளிகள் பொருந்திய மயிர்- குறுகக் குறுக அடியெடுத்து வைத்து நடக்கும்நடை இவை அமைந்த பெண் புறா தன் கணவன் பிரிவை நினைந்து வருந்து கின்றது. வெயில் தாங்க முடியாமல், பொரிந்த அடியையுடைய கள்ளியின், வெடித்த காயையுடைய கிளையிலே ஏறி உட்கார்ந்து கொள்ளும். வழியிலே செல்வோர்க்கு நன்றாகத் தெரியும்படி அக்கிளையிலே உட்கார்ந்து கொண்டிருக்கும். சேவலைப் பிரிந்து தனித்திருக்கும் தனது துன்பத்தைத் தாங்க முடியாமல் கூவிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட நடந்து போவதற்கு முடியாத பாலை நிலம் அது. இந்தக் காட்சியை என்னைப் பிரிந்து சென்ற என் காதலர் கண்டுதான் இருப்பர். அந்தப் பெண் புறாவைப் போல, நானும் இங்கே வருந்திக் கொண்டிருப்பேன் என்ற நினைவு அவருக்கு வராமல் இருக்காது அந்தப் புறாவின் புலம்பல் அவர் உள்ளத்தை உருக்கித்தான் இருக்கும். இருந்தும் அவர் இவ்வளவு நாள் பிரிந்து வாழ்கின்றார். இத்தகைய ஆற்றலை அவர் எவ்வாறு பெற்றாரோ என்று நான் திகைக்கின்றேன்! இப்பொருள் அமைந்ததே இப்பாடல். தலைவியின் கூற்றாக அமைந்த அரிய செய்யுள். பாட்டு யாங்கு அறிந்தனர் கொல் தோழி! பாம்பின் உரி நிமிர்ந்த அன்ன உருப்பவிர் அமையத்து இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, பொறிமயிர் எருத்தின், குறுநடைப் பேடை, பொரிகால் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் தயங்க இருந்து, புலம்பக் கூஉம்; அரும்சுர வைப்பின் கானம் பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே. பதவுரை:- தோழி- தோழியே. பாம்பின் உரி நிமிர்ந்த அன்ன- பாம்பினது உரித்ததோல் மேலே எழுந்து காணப்படுவது போல. உருப்பு அவிர் அமையத்து- கானல் தோன்றுகின்ற நடுப்பகலிலே. இரைவேட்டு- இரை தேட விரும்பி. எழுந்த- பறந்து பிரிந்து போன. சேவல் உள்ளி- ஆண் புறாவை நினைத்து. பொறி மயிர் எருத்தின் - புள்ளிகள் பொருந்திய மயிரையுடைய கழுத்தையும். குறுநடை- குறுகிய நடையையும் உடைய. பேடை- பெண்புறாவானது. பொரிதாள் கள்ளி- வெயிலால் பொரிந்து அடியையுடைய கள்ளியின். விரிகாய் கவட்டு- வெடித்த காயையுடைய கிளையிலே. தயங்க இருந்து- வழிச் செல்வோர்க்கு விளங்கும்படி உட்கார்ந்து கொண்டு. புலம்பக் கூஉம்- தன் தனிமை தோன்றும்படி கூவிக் கொண்டிருக்கின்ற. அரும் சுர வைப்பின்- நடக்க முடியாத வழியமைந்த இடமாகிய. கானம்- பாலைவனத்தை. பிரிந்து- கடந்து சென்று. சேண் உறைதல்- தூரத்தில் தங்குவதிலே. வல்லுவோர் ஏ- வல்லமையையுடைய காதலர். யாங்கு அறிந்தனர் கொல்- அந்த வல்லமையை எங்கே கற்றுக் கொண்டாரோ. கருத்து:- தலைவர் என்னைப் பிரிந்து வருந்தாமல் வாழும் வல்லமையை எங்கே கற்றுக் கொண்டாரோ. விளக்கம்:- இது, மதுரைச் சீத்தலைச் சாத்தன் என்னும் புலவர் பாட்டு, பொருள் தேடச் சென்ற தலைவன் வராமலிருப்பது கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது. தலைவி கூற்று. பாலைத்திணை. ‘யாங்கறிந்தனர் கொல்’ என்னும் முதலடியின் பகுதியை இறுதியிலே வைத்துப் பொருளுரைக்கப்பட்டது. பாம்பின் உரி- பாம்பின் தோல். உருப்பு- கானல், நடுப் பகலில் மணல் வெளியில் காணப்படும் நீர் போன்ற தோற்றம். எருத்து- கழுத்து அம். ஏ. அசைச் சொற்கள். கூஉம்- உயிர் அளபெடை. கானலுக்குப் பாம்பின் சட்டை உவமை. முல்லை மலர்ந்தது பாட்டு 155 ‘மழை பெய்யத் தொடங்கி விட்டது. காய்ந்து கிடந்த நிலம் ஈரமாயிற்று. வானத்தைப் பார்த்திருந்த உழவர்கள் மகிழ்ச்சியுடன் நிலத்தை உழுதார்கள். காலையிலே பனையோலை முதலிய வற்றால் முடைந்த கூடைகளிலே விதையைக் கொண்டு போனார்கள். உழுத நிலத்திலே விதைத்தார்கள். அந்த உழவர்கள் மாலையிலே வீட்டுக்கு வரும் போது வெற்றுக் கூடையுடன் வரவில்லை. கார் காலம் அல்லவா? முல்லைக் கொடிகள் அவர்கள் வழிகளில் பல்லைக்காட்டி மகிழ்வது போல் பூத்துக்கிடந்தன. அம்மலர்களை விதை கொண்டு போன கூடைகளிலே பறித்து நிரப்பிக்கொண்டு வந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டாள் தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவி. உடனே அவளுக்குத் தலைவன் தந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. கார் காலத்திற்குள் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்ற காதலன் இன்னம் வரவில்லையே என்று கருதினாள். அவள் உள்ளத்திலே தோன்றிய நினைப்பை- துயரத்தை- அவளாகவே வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள். ‘முல்லைக் கொடிகள் மலர்ந்து விட்டன. கார்காலம் வந்து விட்டது. மெழுகாற் செய்த கருவிலே வைத்து, ஊதுகின்ற உலையிலேயிட்டுச் செய்த மணிகள் அவை. பிளந்த வாயையுடையன. தெளிவான ஓசையையும் உடையன. இம்மணிகள் அவருடைய தேரிலும், குதிரையின் கழுத்திலும் கட்டப்பட்டிருக்கும். மரங்கள் நிறைந்த சிறிய காட்டின் வழியாக வரும் போது இம்மணிகளின் ஓசை கேட்கும். இந்த ஓசை இன்னும் கேட்கவில்லை. மாலைக்காலத்திலே சிறந்த விருந்துண்பதற்காக வருகின்ற தலைவருடைய தேர் வருகின்றது என்ற சொல்லைக்கூட நாம் கேட்க முடியவில்லை. என் செய்வேன்!’ என்று வருந்திக் கூறினாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதே இச்செய்யுள். பாட்டு முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோதான் வந்தன்றே; மெழுகான்று ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயில் இறும்பின் ஆர்ப்பச், சுரன்இழிபு மாலை நனிவிருந்து அயர்மார் தேர் வரும் என்னும் உரை வாராதே. பதவுரை:- முதைப்புனம் கொன்ற- பழமையான கொல்லையை உழுத. ஆர்கலி உழவர்- ஆரவாரத்தையுடைய உழவர்கள். விதைக் குறுவட்டி- காலையிலே விதை கொண்டு போன சிறிய கூடை. போதொடு பொதுள- மாலையிலே அவர்கள் திரும்பும் போது முல்லை மலர்கள் நிறையும்படி. பொழுது (ஓ) தான் வந்தன்று- மாலைப் பொழுது வந்தது. மெழுகு ஆன்று- மெழுகாற் செய்யப் பட்ட கருவில் வைத்து. ஊது உலை பெய்த- ஊதுகின்ற உலையிலே இட்டுச் செய்த. பகுவாய்- பிளந்த வாயையுடைய. தெள்மணி- தெளிவான ஓசையையுடைய மணிகளின் ஒலி. மரம் பயில்- மரங்கள் நெருங்கிய. இறும்பின்- குறுங் காட்டின் இடையிலே. ஆர்ப்ப- ஒலிக்கும்படி. சுரன் இழிவு- வழியைக் கடந்து. மாலை- மாலைக் காலத்திலே. நனி விருந்து அயர்மார்- பெரியவிருந்தை நுகரும் பொருட்டு. தேர் வரும்- தலைவருடைய தேர் வரப் போகின்றது என்னும், உரை வாராது ஏ- என்ற சொல் கூட இன்னும் வரவில்லையே. கருத்து:- கார்காலமும் மாலைப் பொழுதும் வந்துங் கூட என் காதலர் இன்னும் வரவில்லையே. விளக்கம்:- இச்செய்யுள், உரோடகத்துக்கந்தரத்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, கார் காலத்தைக் கண்டு வருந்திக் கூறியது. முல்லைத்திணை. ஓ, தான், ஏ அசைச் சொற்கள். முதை- பழமை. புனம்- கொல்லை; புன்செய் நிலம். வட்டி- பெட்டி; கூடை. இறும்பு- சிறிய காடு. சுரன்- வழி. கார் காலத்திலே உழவர்கள் விதைப்பார்கள். முல்லைக் கொடி மலரும் தனித்திருக்கும் மகளிர் வருந்துவர். இந்த இயற்கை நிகழ்ச்சியை இப்பாடலிலே காணலாம். சொல்லால் மட்டும் பயனில்லை பாட்டு 156 நண்பர் என்றால் இடித்துரைப்பதோடு மட்டும் நிற்பவர் நண்பர் அல்லர்; அல்லது துக்கம் உண்டானபோது ஆறுதல் சொல்வதாடு மட்டும் நிற்பவர் நண்பர் அல்லர். தோழருக்கு நேர்ந்த துக்கத்தைத் துடைக்க வழி தேட வேண்டும். இதைச் செய்பவரே உண்மையான உத்தம நண்பராவார். இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறது இச்செய்யுள். தன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காதலியை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் தலைவன். அவளுடன் இணைபிரியாமல் வாழ்வதற்கு என்ன வழி? அவளை அடிக்கடி சந்திப்பதற்கு என்ன வழி? என்னையும் அவளையும் காதலர்களைப் பிணைத்து வைப்பதற்கு யார் உதவி செய்யப் போகின்றார்கள்? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் தலைவன். தலைவன் கவலையைத் தெரிந்து கொண்டான் அவனுடைய தோழன். அத்தோழன் பார்ப்பனன், தமிழ் நாட்டுப் பார்ப்பனன் தமிழ்ப் பழங்குடியிலே பிறந்து ஒழுக்கத்தால் உயர்ந்து வாழ்கின்றவன். தவக்கோலம் பூண்டவன். தந்நலமின்றித் தன் நண்பனுக்கு உதவி செய்யும் தன்மையுள்ளவன். இத்தகைய பார்ப்பனத் தோழன் தன் பாங்கனைப் பார்த்துப் புத்திமதி புகன்றான். ‘உறுதியுள்ளம் படைத்த நீ, இப்படி ஒரு பெண்ணின் பொருட்டு ஏங்கலாமா? கவலை யடையலாமா? உன்மனத்தை அந்த மங்கையிடம் பறிகொடுக்கலாமா? இது உன்னுடைய அறிவுக்கும் ஆண்மைக்கும் பொருந்தாது. அந்த ஆசையையும், மயக்கத்தையும் விட்டு விடு; ஆண்மகனாகவே இரு’ என்று கூறினான். இதைக் கேட்ட தலைமகன் அந்தப் பார்ப்பனத் தோழனுக்கு நல்ல மறுமொழி யுரைத்தான், அந்த மறுமொழியே இந்தச் செய்யுள். ‘எனது உண்மைத் தோழனாகிய பார்ப்பன மகனே; நீ உள்ளத்திலே அழுக்கற்றவன்; உத்தம குணங்கள், உள்ளவன்; உன் கையிலே துறவிக்குரிய தண்டத்தையும் பிடித்திருக்கின்றாய். சிவந்த மலர்களையுடைய முருக்க மரத்தின் தண்டு அது. நார் உரிக்கப் பட்டு வெண்மையாக விளங்கும் தண்டு அது. உறியிலே தொங்கு கின்ற கமண்டலத்தையும் வைத்திருக்கின்றாய். பல விரதங்களை மேற்கொண்டவன் விரதத்திற்கேற்ற உணவை யுடையவன். கண்டபடி கண்டவற்றையெல்லாம்; உண்டு உடலைக் கொழுக்க வைப்பதை வெறுப்பவன். இந்தத் துறவி வேடத்தோடு மட்டும் நிற்பவன் அல்லன் நீ, எழுதாக் கிளவி என்று சொல்லப்படும் வேதங்களையும் நன்றாகக் கற்றறிந்தவன். இவ்வாறு கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கும் நீ, எனக்குப் புத்தி சொல்வதால் மட்டும் பயனில்லை; உன்னுடைய பேச்சிலே, பிரிந்து வருந்தும் காதலர்களை ஒன்று சேர்த்து வைக்கக் கூடிய மருந்து ஏதேனும் உண்டோ? என்னையும் என் உள்ளத்தையும் விட்டுப் பிரியாத காதலியையும், ஒன்று சேர்க்க வழி தேடினால்தான் உன் சொல்லால் பயன் உண்டு. வீணாக நீ என்னைக் கடிந்து கொள்வது அறியாமையின் விளைவே யாகும். இதுவே தலைவன் தன் பார்ப்பனத் தோழனுக்குரைத்த மறுமொழி. பாட்டு பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே! செம்பூ முருக்கின் நன்னார் களைந்து தண்டொடு, பிடித்த தாழ் கமண்டலத்துப், படிம உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும், பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? மயலோ? இதுவே. பதவுரை:- பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே - பார்ப்பன மகனே. செம்பூ முருக்கின்- சிவந்த பூவுள்ள முருக்க மரத்தின். நல்நார் களைந்த - நல்ல மேற்பட்டையாகி நாரைக் களைந்து விட்ட. தண்டொடு- தண்டுடன். பிடித்த- கையில் ஏந்திய தாழ்கமண்டலத்து- உறியில் தொங்குகின்ற கமண்டலத்தையும். படிம உண்டி- விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே; எழுதாக்கற்பின்- எழுதாத வேதங்களைக் கற்றிருக்கின்ற. நின் சொல் உள்ளும்- உன்னுடைய சொல்லிலே. பிரிந்தோர் புணர்க்கும்- பிரிந்து வருந்தும் காதலரை ஒன்று சேர்த்து வைக்கும். பண்பின்- தன்மையுள்ள. மருந்தும் உண்டோ - மருந்து ஏதேனும் உண்டோ? இது ஏ மயல் ஓ- அப்படியில்லாமல் இவ்வாறு நீ என்னைக் கடிந் துரைத்தல் உன் அறியாமைதான். கருத்து:- நீ என்னை இடித்துரைப்பதால் பயன் ஒன்று மில்லை. என் ஆவலை நிறைவேற்ற முயல வேண்டும். விளக்கம்:- இது பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் புலவர் பாட்டு. தன்னை இடித்துரைத்த பார்ப்பனத் தோழனுக்குத் தலைவன் கூறிய விடை. குறிஞ்சித்திணை. ‘மயலோ இதுவே’ என்ற இறுதித் தொடர். இது மயலோ என்று மாற்றப்பட்டது. ஏ- அசை. செம்பூமுருக்கு என்பது ஒரு வகை முருங்கை மரம். இதைக் கல்யாண முருங்கை யென்றும் முள் முருங்கையென்றும், புரச மர மென்றும், பலாச மரம் என்றும் உரைப்பர். கமண்டலம் தண்ணீர்ப் பாண்டம். படிமம்- விரதம். எழுதாக்கற்பு- எழுத்தில் இல்லாத வேதத்தைக் கற்றல். மயல்- அறியாமை. பண்டைத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வேதங்கற்றவர்கள்; தவக் கோலம் பூண்டவர்கள்; மக்களுக்கு நன்மை தேடுபவர்கள்; என்பதை இப்பாடலால் அறியலாம். விடியற்காலம் வந்து விட்டதே பாட்டு 157 சபையிலே சொல்லத்தகாத சொற்களுக்கு அவையல் கிளவி என்பர். அவையிலே சொல்லுதற்குத் தகுதியற்ற சொல் அவையல் கிளவி. இதைத்தான் பிற்காலத்தினர் ‘இடக்கர் அடக்கல்’ என்று கூறினர். அதாவது இடக்கான சொல்லை மறைத்து வேறு சொல்லாற் கூறுதல். இதற்கு இச் செய்யுள் ஒரு உதாரணமாகும். தலைவி விடியற்காலத்திலே பூப்படைந்தாள். பூப்படை தலைத் தீட்டு என்று வழங்குகின்றனர். பெண்கள் பூப்பெய்தினால் மூன்று தினங்கள் தனித்திருப்பர். கணவனோடு சேர்ந்திருக்க மாட்டார்கள். பூப்பெய்த முதல் நாள் கணவனோடு சேர்ந்து உண்டாகும் கரு, வயிற்றிலேயே உருப்பெறாமல் அழித்து விடும்’. இரண்டாம் நாள் சேர்வதனால் உண்டாகும் கரு உருப்பெற்றாலும் வளராமல் வயிற்றிலேயே செத்துப் போகும். மூன்றாம் நாள் சேர்வதால் உண்டாகும் கருவிற்கு நீண்ட ஆயுள் இல்லை; பிறந்தாலும் அற்பாயுளில் இறந்து விடும்; வாழ்ந்தாலும் நன்றாக வாழாது. இது பண்டைக் காலத் தமிழர்கள் கொண்ட நம்பிக்கை. ஆதலால் பெண்கள் பூப்படைந்திருக்கும் மூன்று நாளும் தனித்திருப்பார்கள். விடியற் காலத்திலே பூப்படைந்த தலைவியின் உள்ளத்திலே இன்னும் மூன்று நாட்களுக்குக் கணவனைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலை உண்டாயிற்று. அன்றியும் தான் பூப்படைந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கவும் எண்ணினாள். ‘நான் பூப்படைந்து விட்டேன்’ என்று வெளிப்படையாகச் சொல்வது ‘அவையல் கிளவி’ என்று கருதினாள். ஆதலால் அவள் அச் செய்தியை வேறுவிதமாக உரைத்தாள். தலைவியின் இச் செய்தியை உரைப்பதே இச்செய்யுள். ‘கோழி, குக் கூ என்று கூவிற்று. அந்த ஓசையைக் கேட்டு, கண்விழித்துப் பார்த்தேன், எனது தோளைத் தழுவிக் கொண்டு; ‘தானும் இன்புற்று, எனக்கும் இன்பத்தைத் தந்த’ என் காதலரை என்னைவிட்டுப் பிரிக்கக் கூடிய பொழுது வந்ததைக் கண்டேன். அது வாளை போல நின்று எங்கள் இருவரையும் பிரித்து வைக்கக் கூடிய விடியற்காலம் என்னும் வைகறைப் பொழுதாகும். அதைக் கண்டவுடன் என்னுடைய நெஞ்சம் துடித்துவிட்டது. என் தூய நெஞ்சத்திலே என் காதலர் பிரிவை எண்ணி அச்சந் தோன்றி விட்டது.’ விடியற் காலத்திலே, தான் பூப்படைந்த செய்தியை, இவ்வாறு வேறு சொற்களால் உரைத்தாள் தலைவி. பாட்டு குக்கூ வென்றது கோழி; அதன் எதிர் துட்கென்றன்று என் தூய நெஞ்சம்; தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே. பதவுரை:- குக்கூ என்றது கோழி- குக் கூ என்று கூவிற்றுக் கோழி. அதன் எதிர்- அக்கோழி கூவிய உடனேயே. தோள்தோய் -என் தோளைத் தழுவிய. காதலர்ப் பிரிக்கும் - காதலரை என்னை விட்டுப் பிரிக்கின்ற. வாள்போல்- வாளைப் போல வைகறை வந்தன்றால்- விடியற்காலமும் வந்துவிட்டது. எனவே - ஆதலால். என்தூய நெஞ்சம்- என்னுடைய மாசற்ற மனம். துட்கென்று அன்று - திடீரென்று அச்சமடைந்தது. கருத்து:- தலைவனை இனிப் பிரிந்திருக்க வேண்டும் என்று என் மனம் அஞ்சுகின்றது. விளக்கம்:- இது அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் பாட்டு. இவர் பெண்புலவர் என்று பெயரால் விளங்குகின்றார். தலைவி விடியற்காலத்திலே பூப்படைந்தாள். அச் செய்தியை அவள் இவ்வாறு வேறு மொழிகளால் விளம்பினாள். மருதத்திணை. “குக்கூ என்றது கோழி; அதன் எதிர் தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்று; ஆல்; எனவே என் தூய நெஞ்சம் துட்கென்றன்று” என்று கொண்டு கூட்டப்பட்டது. துட்குறுதல்- அஞ்சுதல். வாளின் இயல்பு ஒரு பொருளை இரண்டாகத் துண்டித்தல். வைகறைப் பொழுதிலே வந்த பூப்பு காதலர் இருவரையும் தனித்தனியே பிரித்து விடுவதால், அதற்கு வாளை உவமையாகக் கூறப்பட்டது. ஆல் - அசைச்சொல். மழையே! உனக்கு இரக்கம் இல்லையா? பாட்டு 158 மழை விடாமற் பெய்கின்றது; காது செவிடுபடும்படியான இடி; கண்ணைப் பறிக்கும்படியான மின்னல்; காற்றும் சீறிச் சீறி வீசுகின்றது; இந்த நிலையிலே தன் காதலன் வருகையை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றாள் தலைவி. நேரமோ இரவு நேரம். இத்தகைய பேய் மழை பெய்யும் இரவு நேரம் மிகவும் பயங்கரமானது. இந்த நேரத்திலே தலைவி உடலையும், உள்ளத்தையும் குலுக்கும் அச்சத்துடன் காத்திருக்கின்றாள். தலைவனும் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டான். அவன் வந்தவுடன், அவள் அந்த மழையைப் பெய்யும் மேகத்தைப் பார்த்துக் கூறுகின்றாள்; அதன் இரக்கமற்ற தன்மையை இழித்துரைப்பது போலப் பேசினாள். அவள் பேச்சிலே மற்றொரு பொருளும் மறைந்து கிடக்கின்றது. ‘காதலனே! நீ என்னை மணந்து கொண்டால், இவ்வாறு இரவிலே, எனக்குக் கவலையும் பயமும் உண்டாகும்படி வரவேண்டியதில்லை. ஆதலால் விரைவில் மணம் புரிந்து கொள்ளுவதற்கு ஏற்பாடு செய்’ என்று காதலனிடம் உரைப்பது போன்ற கருத்தும் மறைந்து கிடக்கின்றது. தலைவி கூறுவதை உற்றுநோக்கினால் இவ்வுண்மை விளங்கும். ‘உயர்ந்த மலையின் பக்கத்திலே உள்ள பாம்புகள் பயந்து உயிர்விடும்படி மிகவும் கடுமையாக இடிக்கின்றாய். இந்தக் கடுமையான இடிக்குரலுடன் கூடிக் காற்றோடும் கலந்து பலமான மழையைப் பெய்கின்றாய். நிறைந்த நீராகிய கருவைக் கொண்ட பெரிய மேகமே! உன்னை எல்லோரும் இரக்கமே உருவானாய் என்று கூறுவார்கள். நீ இப்பொழுது அந்த இரக்கத்தை விட்டு விட்டாயா? உன்னிடம் அந்த இரக்கம் இல்லையா? உன்னுடைய ஆற்றல் மிகவும் பெரிது. உன் ஆற்றலுக்கு எதிரே எவரும் நிற்கமுடியாது. பெரிய புகழையுடைய இமய மலையைக்கூட ஆட்டி அசைத்து விடுவாய், இந்த இயல்பு உனக்குண்டு. இத்தகைய பெரும் பலம் படைத்த நீ, உனக்குச் சமமான வர்களிடம் உன் பலத்தைக் காட்டுவதுதான் நேர்மையாகும். அதை விட்டுத் துணையில்லாதவர்கள், இரங்கத்தக்கவர்கள், பெண்கள் ஆகிய எங்களிடம் உன் ஆற்றலைக் காட்டுகின்ற இச்செயல் எதற்காக? இதனால் உனக்கு என்ன பயன்?” இதுவே தலைவியின் பேச்சில் உள்ள பொருள். இப்பொருள் கொண்ட பாட்டு கீழ்வருவது: பாட்டு நெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமின் கழறு குரல் அளைஇக், காலொடு வந்த கமம் சூல் மாமழை! ஆரளி யிலையோ, நீயே! பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை; துணையிலர், அளியர், பெண்டிர், இஃது எவனே? பதவுரை:- நெடுவரை மருங்கின்- உயர்ந்த மலையின் பக்கத் திலேயுள்ள. பாம்புபட- பாம்புகள் இறந்து போகும் படி. இடிக்கும்- இடிக்கின்ற. கடுவிசை உருமின்- மிகுந்த வேகமான இடியின். கழறு குரல் அளைஇ- இடிக்கும் குரலோடு கலந்து. காலோடு வந்த- காற்றோடும் சேர்ந்து வந்த. கமம் சூல் மாமழை- நிறைந்த நீராகிய கருவையுடைய பெரிய மேகமே. ஆர்- உன்னிடம் இயற்கையாக அமைந்த. அளி இலையோ- இரக்கத்தை இப்பொழுது விட்டு விட்டாயோ? நீயே - நீதான். பேர் இசை இமயமும்- பெரிய புகழையுடைய இமயமலையையும். துளக்கும் பண்பினை- அசைக்கும் இயல்புடையாய். துணையிலர்- துணையில்லாமல் தனித்திருப்பவர்கள். அளியர்- ஆதலால் இரக்கப்படுவதற்குத் தகுந்தவர்கள். பெண்டிர்- இத்தகைய பெண்களாகிய எங்களைத் துன்புறுத்துகின்ற. இஃது- இந்தக் கொடுஞ் செயலைச் செய்வது எவன் ஏ- எதற்காக. கருத்து:- தலைவர் இதுவரையிலும் வராமையால், இப்பெரு மழையால் அவர் வரவுக்குத் தடையேற்படுமோ என்று அஞ்சினேன். விளக்கம்:- இது ஒளவையார் என்னும் புலவர் பாட்டு. பெருமழை பெய்கின்றது. தலைவன் வருவானோ, மாட்டானோ என்று அஞ்சினாள் தலைவி. அவன் வந்தபின் தன் அச்சத்தை அவனுக்கு அறிவித்தாள்; குறிஞ்சித்திணை. அளைஇ- உயிர் அளபெடை. ஏ-அசை. விசை- வேகம்; விரைவு. சூல்- கரு; கற்பம். கழறு குரல்- பயமுறுத்தும் குரல். கால்- காற்று. கமம்- தண்ணீர். மழை- மேகம். துளக்கும்- அசைக்கும். அமைதியாகப் பெய்யும் மழை அச்சம் விளைவிப்பதில்லை. இடி, மின்னல், காற்றுடன் பெய்யும் மழையே அனைவர்க்கும் அச்சம் தரும். இரவில் இவ்வாறு மழை பெய்தால் அஞ்சாதார் எவரும் இல்லை. பேரிடியால் பாம்புகள் இறக்கும் என்பது நூல் மரபு. பண்டைத் தமிழர் இமயமலையைப் புகழ்ந்து பேசிவந்தனர், என்பதைப் ‘பேரிசை இமயம்’ என்னுந்தொடர் காட்டுகின்றது. இச்செய்யுள் பயங்கரமான மழையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இரக்கமற்ற ஊரார் பாட்டு 159 ஒரு பொருளைப் பற்றி ஒருவர்க்குத் தெரிவிக்க வேண்டு மானால் இரண்டு வகையில் அதைத் தெரிவிக்கலாம். ஒன்று, அப்படியே அப்பட்டமாகச் செய்தியைச் சொல்லுவது; மற்றொன்று சுற்றிவளைத்து மறைமுகமாகச் சொல்லுவது. அறிவற்றவர்களுக்கு எதையும் அப்பட்டமாகத்தான் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு உண்மை விளங்கும். அறிவுள்ளவர்களுக்கு நேரடியாகச் சொல்ல வேண்டியதில்லை. கொஞ்சம் குறிப்புக் காட்டினால் போதும். உண்மையை உணர்ந்து கொள்வார்கள். அறிவுள்ளவரிடம் நேரடியாக உரைப்பதைவிட இவ்வாறு உரைப்பது தான் இங்கிதமாகும்; நாகரிகமாகும். இந்த நாகரிகத்தை அறிவிப்பது இச்செய்யுள். தலைவியின் நடத்தையிலே பெற்றோர்க்குச் சிறிது சந்தேகம் பிறந்தது. அவர்கள், இனி அவளைத் தனியாக வெளியில் செல்ல விடக்கூடாது; எப்பொழுதும் வீட்டிலேயே இருக்கும்படி செய்து விடவேண்டும்; இதுதான் தங்களுக்கும் தங்கள் பெண்ணுக்கும் பழிச்சொல் உண்டாகாமல் பாதுகாக்கும் வழி என்று முடிவு செய்து விட்டனர். இந்த முடிவைத் தலைவனுக்கு அறிவித்து விடவேண்டும். ‘இனி நீ தலைவியை முறைப்படி மணந்து, கொண்டால் அன்றி அவளைச் சந்திக்க முடியாது என்று அவனிடம் தெரிவித்து விடவேண்டும். இது தோழியின் ஆவல் இதைத் தெரிவிக்க அவள் சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாள், தலைவன் வந்தான். வழக்கமாகத் தலைவியைச் சந்திக்கும் இடத்திலே வந்து நின்றான். அவனைக் கண்ட தோழி அவன் காதிலே விழும்படி குறிப்பாகக் கூறினாள். தோழி தலைவனை நேரடியாகப் பார்த்துப் பேசவில்லை. அவன் காது கேட்கும் படி மறைந்து நின்று பேசிய பேச்சு இதுவாகும். தலைவி தழையுடையை அணிந்திருக்கின்றாள். தழையுடையை அணிந்த அந்தப் பாரத்தையே அவளுடைய சிறிய இடையினால் தாங்கமுடியவில்லை. இந்த இடைக்கு இன்னும் அதிகத் துன்பத்தைக் கொடுக்கும் வகையிலே அவளுடைய மார்புகள் பருத்திருக்கின்றன. அவை பருத்து உயர்ந்து அழகாக விளங்கு கின்றன. இன்னும் மெல்லிய காதணிகளையும் பூண்டிருக்கின்றாள். இந்த நிலையில் உள்ள அவளைப் பார்த்தவர்கள் யாரும் இரக்கப்படாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் இவ்வூரில் உள்ளவர்களோ, இவள் எப்படியாவாளோ, என்று கவலைப் படவும் இல்லை; ஏன் இப்படி வருந்துகின்றாய் என்று கேட்கவும் இல்லை. இத்தகைய கவலையுள்ள மக்களைக் கொண்டது இந்த ஊர்; இது அறிவற்றவர்களைக் கொண்ட ஊராகும்.’ ‘தலைவியைக் கட்டுக் காவலுக்குள் வைத்துவிட்டார்கள்; இனி நீ அவளைச் சந்திக்க முடியாது; மணந்து கொண்டால்தான் சந்திக்க முடியும்; என்ற கருத்தை இவ்வாறு தெரிவித்தாள் தோழி. இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதே இச் செய்யுள். பாட்டு தழை அணி அல்குல் தாங்கல் செல்லா நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின; யாங்காகுவள் கொல் பூங்குழை, என்னும் அவல நெஞ்சமொடு உசாவாக் கவலை மாக்கட்டு இப்பேதை ஊரே. பதவுரை தழை அணி அல்குல்- தழையைத் தரித்த அல்குலையே. தாங்கல் செல்லா- தாங்க முடியாத. நுழை சிறுநுசுப்பிற்கு- நுண்மையான சிறிய இடைக்கு. எவ்வம் ஆக - துன்பம் உண்டாகும் படி. அ மெல் - அந்த மெல்லிய. ஆகம் நிறைய வீங்கி- மார்பை அடைத்துக் கொண்டு பருத்து. கொம்மை- அழகுடன் விளங்குகின்ற. வரிமுலை- சந்தனக் கோலம் எழுதிய முலைகள். செப்புடன் எதிரின- செப்புக்குச் சமமாக விளங்கின. யாங்கு ஆகுவள் கொல்- இதனால் என்ன துன்பத்தை அடைவாளோ. இப்பூங்குழை- இந்த மெல்லிய காதணியை உடையவள். என்னும்- என்று நினைக்கும். அவல நெஞ்சமொடு- கவலை பொருந்திய நெஞ்சத்துடன். உசாவா -ஒன்றும் கேட்காத. கவலை மாக்கட்டு- கவலையையுடைய மக்களையுடையது. இ பேதை ஊர்- இந்த அறிவற்றார் வாழும் ஊர். கருத்து:- தலைவியின் நிலைமையை அறியாமல் அவளை வீட்டிற்குள் சிறைசெய்து விட்டனர். விளக்கம்:- இது, வடம வண்ணக்கன் பேரி சாத்தன் என்னும் புலவர் பாட்டு. தலைவியை வெளியில் செல்லாமல் கட்டுப் படுத்தியதைப் பற்றித் தோழி, தலைவனுக்குக் குறிப்பாற் கூறியது. குறிஞ்சித்திணை. தழை- தழையால் ஆகிய உடை. நுழை- நுட்பம். நுசுப்பு- இடை. எவ்வம்- துன்பம். ஆகம்- மார்பு. கொம்மை- அழகு; இளமை, செப்பு- செம்பு; சொம்பு என்று வழங்குவர் இக்காலத்தார். மாக்கட்டு- மாக்களையுடையது. இரக்கங் காட்டாமையின் மக்களை மாக்கள் என்று குறிப்பிட்டது. இதுதான் மணக்கும் விதமோ பாட்டு 160 மணம் புரிந்து கொள்வதற்குப் பொருள் தேடப் பிரிந்தான் தலைவன். அவன் கூறிய தவணை முடிந்து விட்டது. அவன் மட்டும் வரவில்லை. அதனால் தலைவி துக்கத்தோடிருந்தாள். அதைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் உரைத்தாள். நமது தலைவர் வாக்குறுதியை மீற மாட்டார். பொருள் தேடச் சென்றவிடத்திலே ஏதோ தடையேற்பட்டிருக்க வேண்டும். போனவுடன் பொருள் கிடைத்து விடுமா? முயற்சி செய்துதானே செல்வத்தைப் பெறமுடியும்? ஒரு காரியத்தைக் கருதிச் சென்றால், அது கை கூடிய பிறகுதானே திரும்ப வேண்டும். காரியம் கை கூடுவதற்குமுன் திரும்புவது ஆண்மையும் அன்று; அறிவும் அன்று. ஆதலால் நீ வருந்தாதே! விரைவில் வந்து மணந்து கொள்ளுவார் என்று கூறினாள் தோழி. தோழியின் இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்டவுடன், தலைவி, மறுமொழியை உணர்த்துவதே இச்செய்யுள். ‘தோழியே நீ சொல்லும் ஆறுதல் மொழிகளால் என் மனம் அமைதியடையவில்லை. நீ சொல்லுவது உண்மை யென்று நினைக்கவும் என் உள்ளம் மறுக்கின்றது. இப்படி நான் கருதுவதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை அக் காரணத்தைச் சொல்லுகின்றேன் கேள். அன்றில் பறவையின் ஆண், நெருப்பைப் போன்ற கொண்டையை உடையது. பெண் அன்றிற் பறவை இறால் மீனைப் போன்ற வளைந்த மூக்கையுடையது. இந்த அன்றில் இரண்டும் தடாமரத்தின் கிளை உச்சியிலே கூடுகட்டியிருக் கின்றன. அவையிரண்டும் மிகுந்த குளிர் காலத்திலே நள்ளிருட்டிலே, தங்கள் கூட்டிலே இணைந்திருக்கின்றன. தங்கள் இணைப்பால் தோன்றும் இன்பத்தினால் மெதுவாக ஒலிக்கின்றன. இந்த ஒலியைக் கேட்டுக் காதலனைப் பிரிந்திருக்கும் பெண்கள் செயலற்று வருந்துகின்றனர். இந்த அன்றிற் பறவைகள் பெறும் இன்பத்தை நாம் பெறவில்லையே என்று ஏங்குகின்றனர். இத்தகைய வாடைக்காலத்திலும் அவர் திரும்பி வரவில்லை. வாடையால், பிரிவைப் பொறுக்கமாட்டேன் என்பது அவருக்குத் தெரியாதது அன்று. கவலையும், கருத்து மிருந்தால் வராமலிப்பாரா? இந்த வாடைக்காலத்தில் அவர் இப்படிக் கைவிட்டிருப்பதுதான் என்னை மணந்து கொள்வதற்கு அடையாளமோ? இப்படிக் கேட்ட தலைவிக்குத் தோழியால் விடை கூற முடியவில்லை. அப்படியே வாயடைத்துப் போனாள். பாட்டு நெருப்பின் அன்ன செந்தலை அன்றில், இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் கையற நரலும், நள்என் யாமத்துப் பெரும்தண் வாடையும் வாரார்; இஃதோ தோழி! நம் காதலர் வரவே. பதவுரை:- நெருப்பின் அன்ன- நெருப்பைப் போன்ற. செம்தலை அன்றில்- சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் பறவை. இறவின் அன்ன- இறால் மீனைப் போன்ற. கொடுவாய்- வளைந்த வாயையுடைய. பெடையொடு- பெண் அன்றிலுடன். தடவின் - தடாமரத்தின். ஓங்கு சினை -உயர்ந்த கிளையிலே கட்டியிருக்கின்ற. கட்சியில்- கூட்டிலே இணைந்திருந்து. பிரிந்தோர்- காதலனைப் பிரிந்து தனித்திருக்கும் மகளிர். கையற - செயலற்று வருந்தும்படி. நரலும்- ஒலிக்கின்ற. நள் என்யாமத்து- நிறைந்த இருட்டையுடைய இரவிலே. பெரும் தண்வாடையும்- மிகுந்த குளிர்வீசும் இந்த நேரத்திலும். தோழி இஃதோ- தோழியே இதுதானோ. நம் காதலர் வரைவு எ- நம் காதலர் நம்மை மணந்து கொள்ளும் விதம்? கருத்து:- இந்த வாடைக்காலத்திலும் தலைவர் வரவில்லை. அவர் நம்மை மணந்து கொள்ளுவார் என்று நினைப்பது எப்படி? விளக்கம்:- இது, மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் பாடிய செய்யுள். தலைவன் வராமை கண்டு வருந்தினாள் தலைவி. அவளுக்குத் தோழி ஆறுதல் உரைத்தாள். தோழி கூறிய ஆறுதல் மொழிக்குத் தலைவி மறுமொழி யுரைத்தாள். குறிஞ்சித்திணை. அன்றில்; ஒருவகைப் பறவை. இப்பறவைகள் ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழும். ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தால் உயிர் வாழாது. இது நூல் வழக்கு. செந்தலை- சிவந்த தலை. தலையிலே சிவந்த கொண்டையை உடையது. இறைவு- இறால் மீன். தடவு- ஒருவகை மரம். கட்சி பறவைக் கூடு. நரலுதல்- ஒலித்தல். கையறுதல்- செயலறுதல்; ஒன்றுந் தெரியாமல் திகைப்பது. அன்பர் என்பால் துன்புறும் காலத்தில் உதவவேண்டும் இப்படி உதவாதவர் அன்பராவது எப்படி? இக்கருத்தும் இச் செய்யுளில் அடங்கியிருக்கின்றது. அன்னை விழித்து இருந்தாள் பாட்டு 161 இரவு நேரத்திலே வழக்கம் போல் சந்திக்கும் இடத்திற்குத் தலைவன் வந்தான். அவன் வந்தது தலைவிக்குத் தெரியும். தெரிந்தும் அவள் போய் அவனைச் சந்திக்க முடியவில்லை. தலைவியின் அன்னை தூங்கவில்லை. குழந்தை அழுதமையால் அவள் தூங்கவில்லை. இதுதான் தலைவியால் சந்திக்க முடியாமற் போனதற்குக் காரணம். மறுநாள், தலைவன் வழக்கம் போல் இரவிலே வந்தான், அவன் மறைவிலே நின்றான். அதை அறிந்தாள் தலைவி. உடனே அவள், தன் தோழியினிடம், முதல் நாள் சந்திக்க முடியாமல் போனதற்கான காரணத்தைக் கூறினாள் இந்த நிகழ்ச்சியை உரைப்பதுதான் இச்செய்யுள். ‘தோழியே நேற்று நம் தலைவர் எந்தத் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், நம்மை நாடி வந்தார். நம்மைக் காண முடியாமல் ஏமாந்தார் அவர் ஏமாந்ததற்கான காரணத்தைச் சொல்லுகிறேன் கேள். பொழுதும் ஒளியின்றி அடங்கிப் போய் விட்டது. அதன்பின் மழை பிடித்துக் கொண்டது. பேய்களும் அடிக்கடி கண்ணிமைத்து அஞ்சும்படி விடாத பெருமழை வீசிற்று. அந்தச் சமயத்திலே, என் அன்னையின் பக்கத்திலே படுத்திருந்த புதல்வனுக்கு உறக்கம் வரவில்லை. மழையினால் பயந்து அழுதான். என் அன்னை புலிப்பல்லால் ஆகிய தாலி என்னும் ஆபரணத்தை அணிந்த அப்புதல்வனைத் தழுவிக் கொண்டாள். அம்மா அழாதே என்னும் ஆறுதல் சொல்லி அவளைத் தூங்கவைத்துக் கொண்டிருந்தாள். இந்த நிலையிலேயே நம்மைத் தேடிவந்த தலைவன், ஐயோ வழியிலே எப்படித் திகைத்தானோ? தன் மலையிலே விளைந்த சந்தனத்தைப் பூசி மணம் வீசும் மார்பினையுடையவன். அந்தப் பெருமழையிலே, மழையிலே நனைந்த யானைபோல வந்து நின்றான். இது எனக்குத் தெரியும். தெரிந்து என்ன செய்வது? அன்னை உறங்காமையால் நான் வந்து அவனைக் காண முடியவில்லை. இதுவே தோழியிடம் தலைவி கூறிய மொழி. தான் முதல் நாள் சந்திக்காததற்காகத் தலைவன் வருந்துவானே என்ற ஐயம் தலைவியின் உள்ளத்திலே பிறந்தது. தலைவன் மனத்திலே வருத்தம் தோன்றியிருந்தால் அதைத் தணிக்கவே தலைவி இப்படிப் பேசினான். பாட்டு பொழுதும் எல் இன்று, பெயலும் ஒவாது, கழுது கண்பனிப்ப வீசும், அதன் தலைப் புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி அன்னா வென்னும் அன்னையும், அன்னோ என்மலைந்தனன் கொல் தானே, தன்மலை ஆரம்நாறும் மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே. பதவுரை:- பொழுதும் எல் இன்று- பொழுதும் ஒளியற்ற இரவுப் பொழுதாயிற்று. பெயலும்- மழையும். ஓவாது- இடை விடாமல். கழுது கண்பனிப்ப- பேய்களும் கண்ணிமைத்து நடுங்கும் படி. வீசும்- ஓங்கிப் பெய்கின்றது. அதன் தலை- அதற்குமேல் புலிப்பல் தாலி- புலிப்பல்லால் செய்யப்பட்ட தாலியென்னும் அணியைத் தரித்த. புதல்வன் புல்லி- புதல்வனைத் தழுவிக் கொண்டு. அன்னையும்- தாயும். அன்னா என்னும்- அம்மா தூங்கு என்று சொல்லிக் கொண்டிருப்பாள். அன்னோ- அய்யோ. என் மலைத்தனன் கொல்தான்ஏ- எவ்வாறு திகைத்தனனோ அவன் தான், தன்மலை ஆரம்- தன் மலையிலே பிறந்த சந்தனம் பூசி. நாறும்- மணக்கும். மார்பினன்- மார்பையுடைய தலைவன். மாரியானையின்- மழையால் நனைந்த யானையைப் போல. வந்து நின்றனன்ஏ- நேற்று வந்து நின்று சும்மா திரும்பினான். கருத்து:- நேற்றிரவு அன்னை உறங்காமல் விழித்திருந்தாள் ஆதலால் தலைவனைச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. விளக்கம்:- இது, நக்கீரர் என்னும் புலவர் பாட்டு. முதல்நாள் இரவு சந்திக்க முடியாத தலைவி, அடுத்த நாள் அவன் வந்த போது, தான் சந்திக்க முடியாமற் போன காரணத்தைக் கூறியது. குறிஞ்சித்திணை. பொழுது- காலம். சூரியன் என்றும் பொருள் கூறலாம். எல்- விளக்கம். பெயல்- மழை, கழுது -பேய். பனிப்ப- நடுங்கும்படி. என்- எவ்வாறு. மலைத்தல்- திகைத்தல். ஏ,அசைகள். தாலி என்பது குழந்தைகள் அணியும் நகை. பின்னாளில் தான் தாலியென்பது மனைவிக்குக் கணவன் கட்டும் ஒரு அணிகலனுக்குப் பெயராக வழங்கிற்று. பண்டைக் காலத்தில் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லையென்பதற்கு இப்பாடலும் ஒரு ஆதரவு. ஐம்படைத்தாலி என்பதும் குழந்தைகள் அணியும் கலனையே குறிக்கும். நகைப்பது தகுமா? பாட்டு 162 ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது ஒரு பழமொழி. பயங்காளிகள் யாரைக் கண்டாலும் சந்தேகப்படுவான். அவனை யாரேனும் உற்றுப் பார்த்தால் போதும். தன்னைத் திருடன் என்று கண்டுபிடித்து விட் டாரோ என்று நினைத்து மறைந்து கொள்ள முயலுவான். பழிக்கத் தகுந்த செயல்களைச் செய்தான் ஒருவன். அவன் தன் பழிச் செயல் வெளியில் தெரியக்கூடாதென நினைக்கின்றான். அச்சமயத்திலே அவனை யாரேனும் பார்த்து நகைத்தால் போதும். தன் செயலைத் தெரிந்து கொண்டுதான் ஏளனம் செய்கின்றார்கள் என்று எண்ணுவான். இந்த நிகழ்ச்சிகள் இயற்கை யாகும், இந்த இயற்கையை எடுத்துக்காட்டுகின்றது இச்செய்யுள். ‘தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன். கருதிச் சென்ற காரியத்திலே வெற்றி பெற்றான். அதற்குள் மாரிக்காலமும் வந்து விட்டது. தலைவியின் தனிமைத்துன்பத்தைத் தணிக்க வேண்டும் என்னும் காதல் அன்புடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் வழியிலே கண்ட காட்சி அவன் உள்ளத்திலே நாணத்தை உண்டாக்கிவிட்டது. அந்த நாணத்தை அவனால் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. வாய்விட்டுச் சொல்லி விட்டான். அவன் வந்த வழியிலே மழை பெய்து நீர் நிரம்பியிருந்தது. அது மிகவும் பரந்த காட்டு வெளி. அவன் வந்த நேரம் மாலைக் காலம். அவனைப் போலவே பலர் அந்த வழியே தங்கள் இல்லத்தை அடைய வேண்டும் என்னும் ஆவலுடன் நடந்து கொண்டிருக் கின்றனர். இச்சமயத்தில் அவன் கண்ட காட்சி தான் அவன் உள்ளத்திலே ‘சுரீர்’ என்று தைத்தது. அங்கே முல்லைக் கொடிகள் படர்ந்து கிடந்தன. அவற்றிலே அரும்புகள் தலைநீட்டிக் கொண்டிருந்தன. காற்றினால் அவை அசைந்து கொண்டிருந்தன. அதைக் கண்டவுடன் அந்த முல்லைகள் தன்னைப் பார்த்து நகைப்பதாக நினைத்துக் கொண்டான், உன் தலைவியைத் தனிமையிலே தவிக்கவிட்டு விட்டு இவ்வளவு நாள் பிரிந்து போய் விட்டாயே, நீ ஆண் மகன் தானா?’ என்று கேட்டு எள்ளி நகையாடுவதைப் போலிருந்தது. உடனே அந்த முல்லைக் கொடியைப் பார்த்துக் கேட்கிறான்; ‘ஏ முல்லைக் கொடியே; நீ உன்னுடைய சிறிய வெண்மையான அரும்புகளால் புன்சிரிப்புக் காட்டுகின்றாய்! காதலியைப் பிரிந்து வருந்தும் என் போன்றவர்களைப் பார்த்து இப்படிச் சிரிப்பது போலத் தோற்றமளித்தல் உனக்குத் தகுந்ததா? என்று கேட்டே விட்டான். பாட்டு கார்புறம் தந்த நீருடை வியன்புலத்துப் பலர் புகுதரூஉம் புல் என் மாலை முல்லை வாழியோ! முல்லை, நீ, நின் சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை, போலக் காட்டல் தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. பதவுரை:- கார்புறம் தந்த - மழையினால் பாதுகாக்கப்பட்ட. நீர் உடை வியன் புலத்து- நீர் நிறைந்த பரந்த முல்லை வனத்திலே. பலர் புகுதரும்- பலரும் தமது இல்லத்திலே நுழைந்து கொண்டிருக்கின்ற, புல் என் மாலை- ஒளி குன்றிய இந்த மாலை நேரத்திலே. முல்லை வாழியோ- மலர்வதற்குத் தகுந்ததாக இருக்கின்ற முல்லையே நீ வாழ்க. முல்லை- முல்லையே. நீ நின்- நீ உன்னுடைய. சிறு வெண் முகையின் - சிறிய வெண்மையான அரும்புகளால். முறுவல் கொண்டனை- புன்சிரிப்புக் கொண்டிருக்கிறாய். நகுவை போல- இதனால் சிரிப்பது போல. காட்டல்- தோற்றம் அளித்துக் கொண்டிருப்பது. தமியோர் மாட்டு ஏ- காதலியைப் பிரிந்து தனித்திருக்கும் எங்களைப் பார்த்து இவ்வாறு செய்தல். இது தகுமோ- இது உனக்குத் தகுமா? கருத்து:- நான் என் காதலியைப் பிரிந்ததைக் கண்டு, என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் போல் இம்முல்லைகள் அரும்பின. விளக்கம்:- இது, கருவூர் பவுத்திரன் என்னும் புலவர் பாட்டு. பொருள் தேடிக் கொண்டு திரும்பி வரும் தலைவன், வழியிலே முல்லைகள் அரும்பியிருப்பதைப் பார்த்துக் கூறியது. முல்லைத் திணை. முல்லை அரும்புகளைப் பெண்களின் பற்களுக்கு உவமை யாகக் கூறுவது மரபு. கொடியிலே தோன்றி அசைந்து கொண்டிருந்த அரும்புகள் புன்சிரிப்புக் காட்டுவது போல் காணப்பட்டன. தரூஉம் -உ, உயிர் அளபெடை. ஏ- அசைச்சொல். கார்- மழை; மேகம். முறுவல்- புன்சிரிப்பு. நகுதல்- சிரித்தல், துன்புறு கின்றவர்களைப் பார்த்துச் சிரித்தல், அவர்களுடைய துன்பம் இன்னும் அதிகரிக்கும், இது இயல்பு. மற்று - அசைச்சொல். உனக்கும் துன்பமா? பாட்டு 163 துன்பத்தால் வருந்துகின்றவர், தம்மைப்போல் வருந்துகின்ற மற்றொருவரைக் கண்டால் மனம் இளகுவர். ‘நான்தான் இப்படி வருந்துகின்றேன்; உனக்கும் இத்துன்பம் வரக் காரணம் என்ன? எனக்குத்தான் இன்னார் இத்துன்பத்தைச் செய்தார்; உனக்கு இத்துன்பத்தைச் செய்தவர் யார்?’ என்று கேட்பார்கள். இப்படிக் கேட்கத்தான் தோன்றும். துன்பப்படுகின்றவர்கள் நல்லவர்களாயிருந்தால் அவர்களிடம் இத்தகைய இரக்க சிந்தை இல்லாமற் போகாது. கெட்டவர்கள் தாம் மற்றவர்கள் துன்புறுவதைப் பார்த்துச் சிறிதும் இளக மாட்டார்கள். நம்மைப்போல் அவர்களும் அவதிப்படட்டும் என்று சும்மாயிருப்பார்கள்; மகிழ்ச்சி கூட அடைவார்கள். இவை மக்கள் இயல்பு. இந்த இயல்பை இச்செய்யுள் எடுத்துக்காட்டு கின்றது. ‘காதலனைப் பிரிந்த காதலி கவலையுடன் இருக்கின்றாள். இன்னும் காதலன் வரவில்லையே என்ற ஒரே நினைப்புத்தான் அவள் உள்ளத்தைத் தொளைத்துக் கொண்டிருக்கின்றது. அவள் உண்ணவில்லை; உடுக்க வில்லை; உறங்கவும் இல்லை. எல்லோரும் உறங்கும் இரவு நேரத்தில் கூட அவள் தூங்கவில்லை. ஏக்கம் உள்ளவர்களுக்கு உறக்கம் எப்படி வரும்? நடு இரவு. ஊரெல்லாம் உறங்குகின்றது. பேச்சு மூச்சற்ற அமைதி. இந்த நேரத்திலே அவள் குறுகுறு என்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கடலோசை ஒன்றுதான் அவள் காதிலே விழுந்தது; வேறு எந்த ஓசையும் இல்லை. உடனே அந்தக் கடலின் மேல் அவளுக்கொரு இரக்கம் பிறந்தது. இந்தக்கடல் எப்பொழுது பார்த்தாலும் ஓவென்று இரைந்து கொண்டேயிருக்கின்றது. அமைதியாக அடங்கியிருக்கும் நேரம் இதற்குக் கிடைக்கவேயில்லை. நமக்கு நமது காதலர் தனிமைத் துன்பத்தைத் தந்ததுபோல், இக்கடலுக்கும் யாரோ தீங்கிழைத் திருக்க வேண்டும். ஆதலால்தான் இது அல்லும் பகலும் அலறிக் கொண்டேயிருக்கின்றது’ என்று நினைத்தாள். இதை அந்தக் கடலினிடமே கேட்டுவிடுவோம் என்று தீர்மானித்தாள். கடலைப் பார்த்துக் கீழ் வருமாறு கேட்டாள்: ‘கடலே நீ ஏன் எப்பொழுதும் இரைந்து கொண்டேயிருக் கின்றாய். நான்தான் என் காதலன் பிரிவால் வருந்திக் கொண்டிருக் கிறேன். நீ யாரால் துன்பமடைந்தாய்! சோலை நிறைந்த உன்னுடைய பெரிய நீர்த்துறையிலே கொக்குகள் மீனைப் பிடித்துத் தின்று கொண்டிருக்கின்றன. அந்தக் கொக்குகள் பூழி நாட்டாரின் சிறிய தலையையுடைய வெள்ளாட்டுக் கூட்டங்களைப் போல் காணப் படுகின்றன. உன் அருகிலே வெண்மையான மலர்களைப் பூத்திருக் கின்ற தாழைகளை உனது அலைகளால் அசைத்துக் கொண்டிருக் கின்றாய். இத்தகைய நீ நடு இரவில் கூட அமைதியில்லாமல் இருக்கின்றாய். அப்பொழுதும் உனது இரங்கும் குரல் கேட்கின்றது. ஆதலால் உனக்குத் துன்பம் செய்தவர் யார்? என்னிடம் சொல்ல மாட்டாயா?” என்று கேட்டாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச் செய்யுள். பாட்டு யார் அணங்குற்றனை கடலே! பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன, மீனார் குருகின், கானல் அம் பெருந்துறை வெள்வீத் தாழை திரையலை, நள்என் கங்குலும் கேட்கும் நின்குரலே. பதவுரை: கடலே யார் அணங்கு உற்றனை- கடலே நீ யாரால் துன்பம் அடைந்தாய்; பூழியர் - பூழி நாட்டாருடைய; சிறுதலை வெள்ளை- சிறிய தலையையுடைய வெள்ளாட் டின்; தோடு பரந்து அன்ன- கூட்டம் பரவியிருப்பதைப் போல. மீன் ஆர்- மீனைத் தின்பதற்குக் கூடியிருக்கின்ற. குருகின்- கொக்கின் கூட்டம் நிறைந்த. கானல் அம்- சோலை பொருந்திய; அழகிய பெரும்துறை- பெரிய நீர்த்துறையிலே; வெள்வீதாழை- முளைத்திருக்கின்ற வெண்மையான மலரையுடைய தாழையை; திரை அலைக்கும்- அலையால் அசைக்கின்ற கடலே; நள்என் கங்குலும்- நடு இரவிலும் நீ உறங்கவில்லை. நின் குரல் கேட்கும்- உன்னுடைய இரங்குங்குரல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. கருத்து: கடலே உன்னைத் துன்புறுத்தியவர் யார்? நீ ஏன் இரவிலும் தூங்காமல் வருந்துகின்றாய்? விளக்கம்: இது, அம்மூவன் என்னும் புலவர் பாட்டு. காதலன் பிரிவால் உறக்கமின்றி வருந்துகின்ற தலைவி. நள்ளிரவிலே கடலோசையைக் கேட்டாள். உடனே கடலை நோக்கி, நான் தான் கணவனைப் பிரிந்து வருந்துகின்றேன். நீ ஏன் இப்படி வருந்து கின்றாய்? உனக்குத் துன்பம் செய்தவர் யார் என்று கேட்டாள். இது நெய்தல் திணை அணங்கு- துன்பம்; பூழியர்- பூழி நாட்டினர். இவர்களுக்கு வெள்ளாடுகளே சிறந்த செல்வமாகும். தோடு- தொகுதி; கூட்டம். குருகு- கொக்கு. வி-மலர். ஏ- அசை. கடற்கரையிலே மீன்தின்னக் கொக்குகள் இருப்பதும், தாழை மலர்கள் பூத்திருப்பதும் இயற்கைக் காட்சிகள். கடலே! என்னைத் துன்புறுத்துக பாட்டு 164 பழியற்றவர் மேல் பழியைச் சுமத்தினால் அவர் உள்ளம் வருந்தும். நம்மீது இத்தகைய வீண் பழி ஏற்பட்டதே என்று கவலையடைவார்கள். தாம் குற்றமற்றவர்கள் என்பதை மெய்ப் பித்துக் கொள்ளவே அவர்கள் முயல்வார்கள். இது பழிக்கஞ்சும் பண்புள்ளவர்கள் தன்மை. இந்தப் பண்பை விளக்கும் செய்யுள் இது. தலைவன், தன் காதல் பரத்தையின் வீட்டிலே வந்து தங்கி யிருக்கின்றான். இச்செய்தியை அவனுடைய மனைவி அறிந்தாள். அந்தக் காதற் பரத்தை மீது பழி சுமத்தினாள். ‘எனது கணவனை அவள் ஏமாற்றி விட்டாள். தனது வஞ்சகச் சூழ்ச்சிகளால் அவன் உள்ளத்தைக் கவர்ந்து விட்டாள். தனது ஆடை, அணி, நடிப்புக் களால் அவன் மனத்தை மாற்றிவிட்டாள். பெண்களின் மாய நடிப்பிலே மனத்தைப் பறி கொடுக்காதவர்கள் யார்? என் மனைவாழ்வைக் கெடுத்த அப்பரத்தை மிகவும் கொடியவள். எனக்கும் என் காதலனுக்கும் பிளவுண்டாக்கும் அவளும் ஒரு பெண் தானா?” என்று குறை கூறினாள் தலைவி. தலைவி தன்மேல் பழி சுமத்திய செய்தி, எப்படியோ அந்தக் காதற் பரத்தையின் காதிலே விழுந்துவிட்டது. உண்மையில் அவள் தலைவனை ஏமாற்றவில்லை. தலைவன் தானாகவே அவளிடம் போனான். இதுதான் நடந்த உண்மை. ஆதலால், தலைவன் பழியை அவளால் தாங்க முடியவில்லை. அவள் உள்ளம் வேதனை யடைந்தது. அவ்வேதனையைப் பொறுக்க முடியாமல் அவள் தன் தோழியிடம் கீழ்வருமாறு கூறினாள். “தோழியே, நமது காதலருடைய மனைவி நம் மீது கோபங் கொண்டிருக்கின்றாள். ஏதேதோ பழி கூறுகின்றாள். இதற்குக் காரணம் அவளுடைய அறியாமைதான். அவள் சொல்லுகிறபடி நாம் நம் காதலனிடம் அப்படித் தவறாக நடந்து கொண்டிருப் போமானால் நாம் வாழ மாட்டோம். நம்முடைய வாழ்வு சிதைந்து போய்விடும். திரண்ட கொம்புள்ள வாளை மீன் இனத்தைச் சேர்ந்த கருக்கொண்ட பெண் மீன்கள் மாமரத்தின் இனிய பழங்களைக் கவ்விச் சுவைக்கும் வளமுள்ள ஊர். மிகவும் பழங்குடியினரான வேளிர் வாழும் குன்று. இவ்வூருக்குக் கிழக்கில் கடல் உண்டு. நாம் உண்மையில் குற்றமுடையவரானால் இந்தக் கடல் பொங்கி வந்து நம்மைத் துன்புறுத்தட்டும்.” என்று கூறினாள். இவ்வாறு காதற் பரத்தை தன் மீது குற்றம் இல்லை என்பதை உரைக்கும்போது, தக்க உதாரணம் ஒன்றையும் உரைத்தாள். “வாளைமீன் மாங்கனியைத் தேடிப் போக வில்லை. மாங்கொத்து வாளைமீன் கவ்வும்படி தண்ணீர் மட்டத்திலே தாழ்ந்திருக்கின்றது. அதுபோல நான் அவரை நாடிச் செல்லவில்லை. அவரே என்னிடம் வந்தார்” என்று கூறினாள். தன்னைக் கருவுற்ற வாளைமீனாகவும், தன்னிடம் வந்த காதலனை மாம்பழமாகவும் உவமித்தாள். சிறந்த பொருள் நயமுள்ள பாடலிலே இதுவும் ஒன்றாகும். “கமம்சூல் மடநாகு கொக்கின் தீம்பழம் கதூஉம் குன்றூர்” என்பது சிறந்த உவமையாகும். பாட்டு கணைக்கோட்டு வாளைக் கமம் சூல் மடநாகு துணர்த் தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்று முதிர்வேளிர் குன்றூர்க்; குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக; தோழி! மனையோள் மடமையின் புலக்கும் அனையேம் மகிழ்நற்குயாம் ஆயினம் எனினே. பதவுரை:- தோழி, மனையோள்- மனைக்கிழத்தி. மடமை யின்- அறியாமை காரணத்தினால். புலக்கும்- நம்மீது சினந்து பழிசொல்லுகின்றாள். மகிழ்நற்கு- தலைவனிடத்து. அனையேம்- அத்தகைய குற்றம் செய்தவராக. யாம் ஆயினம் எனின்- நாம் ஆகியிருப்போமாயின். கணை கோட்டு வாளை- திரண்ட கொம்பை யுடைய வாளைமீனின். கமம் சூல் மட நாகு- நிறைந்த கருவைக் கொண்ட அழகிய பெண்மீன். துணர்- கொத்தாக இருக்கின்ற. தே கொக்கின்- இனிய மாவின். தீம்பழம்-சுவையுள்ள பழத்தை. கதூஉம்- கவ்வுகின்ற. தொன்று முதிர் வேளிர்- மிகவும் பழங் குடியினரான வேளிர்கள் வாழும். குன்றூர் குணாது- குன்றூருக்குக் கிழக்கேயுள்ள. தண் பெரும் பவ்வம்-குளிர்ந்த பெரிய கடல் பொங்கி வந்து. அணங்குக- எம்மைத் துன்புறுத்துவதாக. கருத்து: நாம் ஒரு குற்றமும் அறியோம். தலைவி தனது அறியாமையால் நம்மீது பழிசுமத்துகின்றாள். விளக்கம்: இது மாங்குடி மருதன் என்னும் புலவர் பாட்டு. தன்னைத் தலைவி பழித்தாள் என்பதைக் கேட்ட காதற் பரத்தை கூறியது. தலைவனை நான் அழைக்கவில்லை. அவனாகவே என்னிடம் வந்தான். இதை அறியாமல் தலைவி என் மீது பழி சுமத்துகின்றாள்! என்று விளக்கித் தன் தோழியிடம் உரைத்தாள். மருதத்திணை. ‘தோழி! மனையோள் மடமையின் புலக்கும்; மகிழ் நற்குயாம்- அனையேம் ஆயினும் எனின்’ என இறுதியடிகள் முதலில் வைத்து பொருள் சொல்லப்பட்டது. கோடு- கொம்பு; பக்கம். களை - திரட்சி. கமம்- நிறைவு. துணர்- கொத்து; குலையென்றும் கூறலாம். தேம்- இனிமை கொக்கு- மாமரம். கதுவுதல்- கதுவுதல். தீம்- இனிமை; சுவை. கதூஉம் - உயிர் அளவெடை. பவ்வம்- கடல். ஏ- அசை. வேளிர் தமிழ்நாட்டுப் பழங்குடியினர் என்பதை உணர்த்து கின்றது இச்செய்யுள். வேளிர் என்பவர் வடநாட்டுத் துவார பதியிலிருந்து இந்நாட்டில் குடியேறியவர்கள் என்று கதை கூறுவர் சிலர். இது பொருந்தாது. வேளாளர் இந்நாட்டுப் பழங்குடியினர். வேளாளரே வேளிர் என்று பெயர் பெற்றனர்; இதற்கு இப்பாட்டு ஒரு சான்றாகும். நாணமற்ற நெஞ்சே! பாட்டு 165 அவன் நாணம் உள்ளவன். தன் கருத்தை நேரடியாகக் கூற அவனுக்கு வெட்கம். தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நேர்மையுள்ளவர்கள் எப்பொழுதும் வெட்கப்படுவார்கள். பிறர்க்கு உதவி செய்வதற்குப் பின்வாங்கமாட்டார்கள்; யாரிடமும் நாணாமல் செல்லுவார்கள்; பிறர் படும் துன்பத்தை எடுத்துரைத்து உதவி செய்யும்படி வேண்டுவர்; ஆனால் தன் காரியமானால் மற்றொருவர் மூலம் அக்காரியம் முடிய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இது உத்தம குணம் நிறைந்த உயர்ந்தவர்கள் தன்மை. இத் தன்மையுள்ள தலைவன் அவன். அவன் ஒரு நாள் ஒரு பூஞ்சோலையின் வழியே போய்க் கொண்டிருந்தான். அங்கே ஒரு மல்லிகைக்கொடி படர்ந்த பந்தரின் கீழ், பருவ மங்கை யொருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் எட்டி எட்டி மணம் வீசும் மல்லிகை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் நின்ற தோழியும் அதையே செய்து கொண்டிருந்தாள். அந்தத் தலைவியின் தோற்றம் அவன் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது. அப்படியே திகைத்து நின்றுவிட்டான். அந்த மங்கையை மணந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவன் உள்ளத்தைப் பிடித்து உலுக்குகிறது. நேராகச் சென்று அவர்களிடம் பேசலாம் என்று நினைத்தான். ஆனால் வெட்கம் அவனுக்குக் கால்விலங்கு போட்டு விட்டது. அவன் தனக்குள் வேறு முடிவு செய்து கொண்டு பக்கத்திலே சென்று ஒரு செடி மறைவில் நின்று கொண்டிருந்தான். இச்சமயத்தில் தோழி ஏதோ காரியமாக அந்தப்பக்கம் வந்தாள். இதுதான் சமயமென்று தலைவன் அவளிடம் அணுகினான். தன் உள்ளத்தை வெளியிட்டான். நான் உன் தலைவியைக் காதலிக்கின்றேன். அவளை என் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ள விரும்புகிறேன். நீ தான் இதற்குத் துணை செய்ய வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான். எவ்வளவு வேண்டியும் தோழி உடன்படவில்லை. உன்னை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் என் தலைவியிடம் அறிமுகம் செய்துவைக்க முடியாது. நான் இதற்கு உடன்பட மாட்டேன்’ என்று மறுத்துக் கூறிவிட்டாள். தலைவன் எவ்வளவு சொல்லியும் தோழி அவனுடைய எண்ணத்திற்கு இணங்கவில்லை. தலைவனும், ‘சரி, இனி அவளை நாம் மறந்துவிட வேண்டியது தான்’ என்று முடிவு செய்தான். அந்த முடிவுக்கு அவன் உள்ளம் உடன்படவில்லை. மீண்டும் மீண்டும் அவளைப் பற்றியே நினைத்தது. அவளுடைய உருவமே அவன் நெஞ்சில் வேறொரு நினைப்பும் எழுவதற்கு இடமில்லாமல் அப்படியே அடைத்துக் கொண்டு நின்றுவிட்டது. இத்தகைய நெஞ்சைப் பார்த்து, அவனே சொல்லிக் கொள்ளுவதாக அமைந்தது இச்செய்யுள். நெஞ்சே! நீ நாணத்தையும் இழந்தாய்! வலிமையையும் இழந்தாய். உப்பு மூட்டையை ஏற்றி இழுத்துக்கொண்டு போகின்ற வண்டியொன்று ஏற முடியாத உயர்ந்த கரையிலே நிற்கின்றது. அப்பொழுது பெய்த பெரும் மழையால் அந்த உப்பு முழுவதும் கரைந்து போய் விடுகின்றது. இதைப் போல நீ இவளைப் பார்த்த உடன் உன் நாணத்தையும், வலிமையையும் பறி கொடுத்தாய் இவளைப் பெற முடியாது என்று தெரிந்த பிறகும் இவளைப் பற்றியே மீண்டும் நினைக்கின்றாய்! அன்றியும் கள்ளுண்டு மகிழ்ந்தவர்கள், மேலும் மேலும் கள்ளை அருந்திக் களிப்படைவார்கள். அதைப் போல, அவளை விரும்பி அடைய முடியாமல் போன பிறகும் அவளையே விரும்புகின்றாய். இது உனக்குத் தகுமா? என்று கேட்டான். இந்த நிகழ்ச்சியைக் கூறுவதே இப்பாடல். பாட்டு மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்கு விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை; அரும் சுரை நின்ற உப்பு ஒய் சகடம் பெரும் பெயல் தலைய இந்தாங்கு, இவள் இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டே. பதவுரை:- அரும் கரை நின்ற- ஏற முடியாத உயரமுள்ள கரையிலே நின்ற. உப்பு ஒய் சகடம் - உப்பை ஏற்றிச் செலுத்திக் கொண்டிருக்கின்ற வண்டி. பெரும் பெயல் தலைய- பெரிய மழையிலே மாட்டிக்கொண்டு. வீந்த ஆங்கு- அந்த உப்பு முழுவதும் அழிந்து போனது போல. இவள் இரும்பல் கூந்தல் - இவளுடைய கருமையான அடர்ந்த கூந்தலையும். இயல் அணி- இயற்கையான அழகையும். கண்டு ஏ- கண்டு நாணத்தையும் வலிமையையும் இழந்தாய். மகிழ்ந்த அதன் தலையும் - கள்ளுண்டு மகிழ்ந்த அப்பொழுது, நறவு உண்டாங்கு - மேலும் மேலும் கள்ளை அருந்தினாற்போல். விழைந்து அதன் தலையும்- அவளை விரும்பி அடைய முடியாமற்போன அப்பொழுதும். நீ வெய்துற்றனை- நெஞ்சே நீ அவளையே விரும்புகின்றாய். கருத்து:- நெஞ்சே! நீ அத்தலைவியை மீண்டும் விரும்புதல் உன்னுடைய அறியாமையேதான். விளக்கம்:- இது, பரணர் என்னும் புலவர் பாட்டு. தான் காதலித்த தலைவியைப் பெற முடியாமற்போன தலைவன், அவளையே நினைத்து வருந்தும் தன் நெஞ்சைப் பார்த்து உரைத்தது. குறிஞ்சித்திணை. முதல் இரண்டடிகளைப் பின்னால் வைத்துப் பொருள் கூறப்பட்டது. ஏ- அசை. ஒய்- செலுத்துதல். சகடம்- வண்டி. தலைய- அகப்பட்டதனால். இரும்- கருமையான. அதன் தலையும்- அப்பொழுதும். தலை- இடம்; பொழுது. வெய்துறல்- விரும்புதல். தனிமையால் துன்பந்தான் பாட்டு 166 தலைவியை அவளுடைய பெற்றோர்கள் பாதுகாப்பிலே வைத்துவிட்டனர். முன்போல் இப்பொழுது அவளும், அவள் காதலனும் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. இரவிலும் காவல்; பகலிலும் காவல். அவள்தான் அவனை எப்படிச் சந்திப்பது? அல்லது அவன்தான் அவளை எப்படிச் சந்திப்பது? எப்போதாவது ஒரு சமயத்தில்தான் பெற்றோர்கள் வீட்டைவிட்டுப் போயிருக்கும் சமயத்தில்தான் அவனும் அவளும் சந்திப்பார்கள். இதனால் தலைவி மிகுதியும் வருந்தினாள். இவ்வருத்தத்தைத் தோழி உணர்ந்தாள். அவள் தலைவிக்கு ஆறுதல் கூறும் வகையிலே சில சொற்களைக் கூறினாள். தோழி கூறிய அந்த ஆறுதல் மொழிகளை உணர்த்துவதுதான் இச்செய்யுள். ‘தலைவியே! நாம் வாழும் இந்த மரந்தையூர் மிகவும் அழகு பொருந்தியதுதான். கண்ணுக்கினிமையான இயற்கைக் காட்சிகள் அமைந்த இனிய ஊர்தான். குளிர்ச்சியான கடற்கரையிலே இவ்வூர் அமைந்திருக்கின்றது. கடலில் வீசும் அலைகள் நல்ல அயிரை மீன்களைக் கரையிலே, கொண்டு வந்து குவிக்கின்றன. அதைக் கண்ட நாரைக் கூட்டங்கள், தாங்கள் இருந்த விடத்தை விட்டுப் பறந்து வந்து அந்த அயிரை மீன்களை மேய்கின்றன. வெண்மையான சிறகுகளையுடைய அந்த நாரைகளின் செய்கை நம் உள்ளத்தைக் கவர்கின்றது. இந்த ஊர் நல்ல ஊர்தான். ஆயினும் நாம் காதலரைப் பிரிந்து தனித்திருக்கும்போது இந்த ஊரின் இயற்கையழகு நமக்கு எந்த உதவியையும் செய்வதில்லை. துன்பத்தைத்தான் தருகின்றது. ஆதலால், இனி நாம் நம் காதலரைப் பிரியாது உடனுறைவதற்கான வழியைத் தேட வேண்டியதுதான். அப்பொழுதுதான் நம் துன்பந் தொலையும்.” இதுவே தோழியுரைத்த ஆறுதல் மொழி. பாட்டு தண்கடல் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை நாரைநிரை பெயர்ந்து அயிரை ஆரும் ஊரோ நன்றுமன் மரந்தை; ஒருதனி வைகின் புலம்பு ஆகின்றே. பதவுரை:- தண்கடல்- குளிர்ந்த கடலிலே. படுதிரை- தோன்றிய அலைகள். பெயர்த்தலின்- மீன்களைக் கரையிலே கொண்டு வந்து குவிப்பதனால். வெண்பறை- வெண்மையான சிறகுகளையுடைய. நாரை நிரை- நாரைக் கூட்டங்கள். பெயர்ந்து- தமது இடத்தை விட்டுப் பறந்து வந்து. அயிரை ஆரும்- குவிந்திருக்கின்ற அந்த அயிரை மீன்களைத் தின்னும். மரந்தை- மரந்தை யென்னும். ஊரோ நன்று- இந்த ஊரோ மிகவும் நல்ல ஊர்தான். ஒரு தனி வைகின்- ஆனால் காதலனைப் பிரிந்து ஒன்றியாய்த் தனித்திருந்தால். புலம்பு ஆகின்று ஏ- துன்பமாகத்தான் இருக்கின்றது. கருத்து:- தலைவனைப் பிரிந்திருப்பதனால் துன்பம் உண்டாகின்றது. விளக்கம்:- இது, கூடலூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. தலைவனைச் சந்திக்க முடியாமலிருந்த தலைவியின் துன்பத்தைக் கண்டு தோழி உரைத்தது. நெய்தல்திணை. வெண்பறை- வெண்மையான சிறகு. நாரை நிரை- நாரை வரிசை; கூட்டம். அயிரை- ஒருவகை மீன். மன், ஏ அசைகள். நாரைகள் அயிரை மீன் உள்ள இடத்தை அடைந்து அதை உண்ணுகின்றன; அதுபோல், நம் காதலன், நாமிருக்கும் இடத்தை அடைந்து நம்முடன் கூடி இன்புற வேண்டும்; இக்கருத்தை ‘நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்” என்ற இயற்கை நிகழ்ச்சி உணர்த்துகின்றது. தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கியிருக்கின்றது. கணவனைக் காக்கும் காரிகை பாட்டு 167 தன் மகளுடைய நல் வாழ்விலே அன்னைக்கு எப்பொழுதும் கவலையுண்டு. தன்மகள் நன்றாகக் குடித்தனம் நடத்தவேண்டும்; கணவனுடன் ஒத்து வாழவேண்டும்; உற்றார் உறவினர்கள் அவளை நல்ல பெண் என்று சொல்ல வேண்டும் என்பதே தாயின் ஆசை. இந்தத் தாயுள்ளத்தை உணர்த்துவதே இச்செய்யுள். தன் மகளும் மருமகனும் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். அவர்கள் எப்படிக் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தாயின் விருப்பம். அவள் தன் மகளின் செவிலித்தாயை மகள் வீட்டுக்கு அனுப்பினாள். அவள் தன் கணவனுடன் எப்படி வாழ்கின்றாள் என்பதைத் தெரிந்துகொண்டு வா என்று சொல்லியனுப்பினாள். செவிலித்தாயும் மகள் வீட்டை யடைந்தாள். சில நாட்கள் தங்கியிருந்தாள். ஒரு நாள் அங்கு நடந்த நிகழ்ச்சியைக் கண்டாள். அதனால் தன் மகளுடைய சிறந்த குணத்தையும், அவள் கணவனிடம் கொண்டிருக்கும் அன்பையும், கணவன் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும் கண்டு காட்சியை நற்றாயிடம் கூறி மகிழ்ந்தாள். நற்றாயும், தன் மகளும் மருமகனும் கருத்தொருமித்து வாழ்வது கேட்டுக் களிப்புற்றாள். செவிலித்தாய் கண்ட காட்சியாவது. ‘தன் கணவனுக்கு மோர்க்குழம்பிலே ஆவல் மிகுதி. மோர்க் குழம்பென்றால் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு நன்றாகச் சாப்பிடுவான். இது அவளுக்குத் தெரியும். ஒருநாள் மோர்க்குழம்பு வைக்கத் தொடங்கினாள். காந்தள் மலர் போன்ற தனது மெல்லிய விரல்களால் கெட்டித் தயிரைப் பிசைந்தாள்; இளகும்படி செய்தாள். தயிரைப் பிசைந்த விரலை உடனே கழுவவில்லை. கழுவிக் கொள்ளுவதற்கு நேரமில்லை தான் உடுத்திருந்த புடவையிலேயே துடைத்துக் கொண்டாள். தயிரைத் துடைத்த அந்த ஆடையை மாற்றிக்கொள்ளவுமில்லை; துவைக்கவுமில்லை. அந்தக் குழம்பைத் தாளிக்கத் தொடங்கினாள். தாளிக்கும் போது குய் என்ற ஓசையுடன் மேலெழுந்த புகை அவளுடைய குவளை மலர் போன்ற கண்களைக் கலக்கிற்று. அதனால் அவள் சிறிதும் மனம் சலிக்கவில்லை. தாளித்துக் கொட்டும்போது எழுந்த நறுமணத்தைக் கண்டு மகிழ்ந்தாள். குழம்பை நன்றாகக் கலக்கிக் கொதிக்க வைத்தாள். தன் கணவன் வந்ததும், மகிழ்ச்சியுடன் அவனுக்குச் சோறிட்டாள். அன்போடு முயன்று செய்த இனிய புளிச்சுவை நிறைந்த அந்தக் குழம்பையும் பரிமாறினாள். அந்தக் குழம்பின் நறுமணமே அவன் நாக்கில் நீரைச் சுரக்கச் செய்தது. அதைச் சோற்றுடன் கலந்து அவன் சாப்பிட்டான். மிகவும் நன்றாயிருக் கின்றது; நிரம்பச் சுவையுள்ளது.’ என்று சொல்லிக் கொண்டு அவளைப் பார்த்தபடியே ஆவலுடன் சாப்பிட்டான். இதைப் பார்த்ததும், அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். தன் சமையலுக்குத் தன் காதலனிடமிருந்து கிடைத்த பாராட்டு தலுக்காக அவள் உள்ளம் மகிழ்ந்தது. அந்த உள்ள மகிழ்ச்சியை அவளுடைய முகமும் காட்டிற்று. அவள் முகம் புன்சிரிப்பால் பொலிவு பெற்று விளங்கிற்று இது செவிலித் தாய் கண்ட காட்சி. தான் கண்ட இந்தக் காட்சியையே அவள் நற்றாயிடம் வந்து நவின்றாள். பாட்டு முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக், குவளை உண்கண் குய்ப்புகை கமழத், தான் துழந்து அட்ட தீம்புளிப்பாகர், இனிது எனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே. பதவுரை:- முளிதயிர் பிசைந்த- கெட்டியான தயிரைப் பிசைந்த. காந்தள் மெல்விரல்- காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களை. கழுவுறு- துடைத்துக் கொண்ட. கலிங்கம்- ஆடையை. கழாது உடீ- துவைக்காமல் அப்படியே உடுத்திக் கொண்டு. குவளை உண்கண்- குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களிலே. குய் புகை கமழ- தாளிக்கும் போது குய் என்ற ஓசையுடன் எழுந்த புகை சூழ. தான் துழந்து அட்ட- தானே கலக்கிச் சமைத்த. தீம்புளிப்பாகர்- இனிய புளிச்சுவை நிறைந்த குழம்பை, இனிது என- மிகவும் சுவையுடையது என்று சொல்லிக் கொண்டு. கணவன் உண்டலின்- கணவன் விருப்பத்துடன் உண்டதனால். ஒள் நுதல் முகன் எ- தலைவியின் ஒளி பொருந்திய நெற்றியையுடைய முகம். நுண்ணிதின் மகிழ்ந்தன்று- மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டது. கருத்து:- தலைவி, தன் கணவன் மனம்போல் நடந்து வருகின்றாள். விளக்கம்:- இதுவும் கூடலூர் கிழார் என்னும் புலவர் பாட்டு. மகளும், மருமகனும் அன்புடன் இல்லறம் நடத்து வதைக்கண்ட செவிலித்தாய், அதை நற்றாய்க்கு உரைத்தது. முல்லைத்திணை. கழா அது; உடீஇ; உயிர் அளபெடைகள். ஏ- அசை. முளி தயிர்- முற்றிய தயிர். கெட்டித்தயிர். கழுவுறுதல் - துடைத்தல். குய்- தாளித்துக் கொட்டும்போது எழும் ஓசை. நுண்ணிது- நுட்பமானது; உயர்ந்தது. இச்செய்யுள் பெண்களின் இயற்கைத் தன்மை ஒன்றை உணர்த்துகின்றது. பெண்கள் மிகவும் வருந்திச் சமைத்த உணவை நன்றாக இல்லை என்று குறை சொன்னால் அவர்கள் உள்ளம் வாடும்; அவர்கள் முகமும் சுருங்கிவிடும். சமைத்த உணவு சுவை யுள்ளது; இனிமையானது என்று சொன்னால்தான் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். தம் முயற்சி வீண்போகவில்லையென்று ஆறுதல் அடைவார்கள். இது இயற்கை. இந்த இயற்கையை அறியாதவர்கள், அவர்கள் சமைத்த உணவிலே, அது போதவில்லை, இது போதவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். மனைவியின் சமையலைப் பாராட்டாத கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கையிலே ஒற்றுமை இராது. செல்வந்தான் சிறந்ததோ! பாட்டு 174 செல்வம் இரண்டாகும். ஒன்று பொருட்செல்வம்; மற்றொன்று அருட்செல்வம். இவ்வுலகிலே இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் பொருட் செல்வமாகும். தனது இன்பத்தைப் பொருட்படுத்தாமல் மற்றவர்கள் நன்மைக்காக உழைப்பது அருட்செல்வமாகும்; மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதே அருட்செல்வம். இறைவன் அருளைப் பெறுவதற்காகத் தவம் கிடக்க வேண்டும்; இதன் மூலமாகத் தான் அருட்செல்வத்தை அடைய முடியும்; இப்படித் தவம் கிடப்பதுதான் அருட்செல்வம் என்று பிறரிடம் இரக்கம் காட்டாமல்- வருந்துவோர்க்கு உதவி செய்யாமல்- தவம் கிடப்பதோ, நோன்பு நோற்பதோ, சாமி கும்பிடுவதோ, அருட்செல்வமாகா. இதுவே பழந்தமிழர் பண்பாடாகும். இந்த உண்மையை இச் செய்யுளிலே காணலாம். தலைவன் பொருள் தேடப் போக எண்ணியிருந்தான். புறப் படுவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தான். இதை அறிந்தாள் தோழி. அவள் இச்செய்தி யைத் தலைவிக்கு அறிவித்தாள். “தலைவன் செய்து கொண்டிருக்கும் செயல்களைப் பார்த்தால் பொருள் தேடச் செல்வான் போலத் தோன்றுகின்றது. அவன் பிரிந்து போனால், அத்தனிமையை நீ எப்படித் தாங்கப் போகின்றாயோ?’ என்றாள் தோழி. இதைக் கேட்ட தலைவி அவளுக்குக் கூறிய மறுமொழிதான் இச்செய்யுள். ‘தோழியே! அவர் பொருள் தேடுவதற்குப் போக வேண்டு மானால் கடத்தற்கரிய வழியைக் கடந்து செல்ல வேண்டும். அவர் கடந்து செல்ல வேண்டிய வழி பாலை நிலம். அது மழையைக் கண்டறியாத மாபெரும் வறண்ட நிலம். அந்த வழியிலே அவர் தனியாகத்தான் நடந்து போக வேண்டும். நீரும் நிழலுமற்ற பாலைவன வழியே யார்தான் நடப்பார்கள்? அந்தப் பாலைவனத்திலே கள்ளிக்காடுகள் இருக்கும். அக் கள்ளிகளில் முட்கள் நெருங்கியிருக்கும். அவற்றில் உள்ள காய்கள் வெய்யில் தாங்காமல் படார், படார் என்று வெடிக்கும். அந்த வெடியோசையைக் கேட்டவுடன் அங்கே தங்கியிருந்த புறாக்களின் கும்பல்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டுப் பறந்தோடும். அந்தப் பாலைவனம் கடத்தற்கரியது. இது அவருக்குத் தெரியும். தெரிந்தும் அதைக் கடந்து சென்று பொருளீட்ட நினைக்கின்றார். நம்மைத் தனியே விட்டுச் செல்வது இரக்கமற்ற செய்கை. அருளுக்கு மாறானது. இதுவும் அவருக்குத் தெரியும். தெரிந்தாலும் நம்மைப் பிரிந்து செல்ல நினைக்கின்றார். அவருடைய இந்த நினைப்பு உண்மையானால் இந்த உலகத்தைப் பற்றி நாம் என்ன நினைப்பது! செல்வம் ஒன்று தான் உறுதியான பொருள்; எல்லா நன்மைகளையும் தரும் பொருள். ஆதலால் அதனையே பெரிதாக மதிக்கின்றனர். அருளை யாரும் சிறந்ததாக ஏற்றுக் கொள்வதில்லை. பொருளைக் காட்டிலும் அருளை இழிவானதாகவே எண்ணுகின்றனர். இதுதான் இவ்வுலகப் போக்கு’ என்றுதான் முடிவு கட்டவேண்டும்.’ பாட்டு பெயல்மழை துறந்த புலம்புறு கடத்துக், கவைமுள் கள்ளிக் காய் விடு கடு நொடி, துதை மென் தூவித் துணைப்புறவு இரிக்கும்; அத்தம் அரிய என்னார், நத்துறந்த பொருள்வயின் பிரிவார்; ஆயின், இவ்வுலகத்துப் பொருளே மன்ற பொருளே; அருளே மன்ற ஆரும் இல்லதுவே. பதவுரை:- பெயல் மழை- பெய்கின்ற மழை. துறந்த - பெய்யாமல் ஒதுங்கிப் போன. புலம்பு உறு கடத்து- தனிமை பொருந்திய பாலை நிலத்திலே. கவை முள் கள்ளி- கிளைத்த முட்களையுடைய கள்ளியின். காய்விடு கடு நொடி - காய்கள் வெடிக்கும் போது விடுகின்ற பயங்கரமான ஓசையானது. துதை மெல் தூவி- நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய. துணைப்புறவு இரிக்கும்- ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைப் பயந்து ஓடச் செய்யும். அத்தம்- பாலை நிலவழியை. அரிய என்னார்- கடந்து போவது துன்பமாகும் என்று நினைக்காமல். நம் துறந்த - இரக்கம் இன்றி நம்மையும் பிரிந்து. பொருள்வயின்- பொருள் மேல் ஆசை வைத்து. பிரிவார் ஆயின்- அவர் பிரிந்து போவாராயின். இவ்வுலகத்து- இவ்வுலகிலே. பொருளே- செல்வப் பொருள் ஒன்றுதான். மன்ற பொருளே- நிச்சயமாக சிறந்த பொருளாகக் கருதப்படுகின்றது. அருளே- அருளானது. மன்ற - நிச்சயமாக. ஆரும் இல்லது ஏ- யாராலும் ஏற்றுக் கொள்ளப்படாத தாகும். ஏ- அசைச்சொல். கருத்து:- அவர் இரக்கமுள்ளவரானால் என்னைப் பிரிந்து செல்லமாட்டார். விளக்கம்:- இது, வெண்பூதி என்னும் புலவர் பாட்டு. ‘தலைவன் பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கிறான்; என்று தோழி கூறினாள். அதற்குத் தலைவி யுரைத்த மறு மொழியே இச்செய்யுள். பிரிவைக் குறிப்பதால் பாலைத்திணை. கடம்- பாலை நிலம். கவை- கிளை. நொடி - ஓசை. துதை- நெருக்கம். தூவி- சிறகு. இரிக்கும்- நீக்கும்; ஓட்டும்; விலக்கும். அத்தம்- வழி. நம் துறந்து- நத்துறந்து. மன்ற - உறுதியாக; நிச்சயமாக. அருட்செல்வத்தை மதிக்காமல், பொருட்செல்வத்தைப் போற்றும் உலகமக்களின் அறியாமையை எடுத்துக்காட்டியது இச்செய்யுள். ஊரைப்பற்றிக் கவலையில்லை பாட்டு 175 தம் மனமறியக் குற்றம் புரியாதவர்கள், பிறர் கூறுவதைக் கண்டு கவலைப்பட மாட்டார்கள். உண்மையாகவும் ஒழுங்காகவும் நடப்பவர்களுக்கு உள்ளத்திலே தெளி வுண்டு. மகிழ்ச்சியுண்டு. ஒரு கர்வங்கூட உண்டு. ‘நாம் நேர்மையுடன் நடக்கின்றோம். நம்மைப் பற்றி யார் என்ன சொன்னால்தான் என்ன? நம்முடைய மனச்சான்று நம்மைத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும். மற்றவர்கள் நம்மைப் பற்றி எது சொன்னாலும் சொல்லட்டும்; என்ன நினைத் தாலும் நினைக்கட்டும். அவற்றை நாம் பொருட்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் உண்டு. இது பொது மக்கள் இயல்பு. இந்த இயல்பை இச்செய்யுளிலே காணலாம். தலைவன் பிரிந்திருக்கின்றான். தலைவி தனித்திருக்கின்றாள். தலைவனுடைய பிரிவைப் பொறுக்க முடியாமல் உள்ளத்திலே கவலையடைந்திருந்தாள். இதைக் கண்டாள் தோழி. ‘தலைவியே உன்னுடைய துயரம் ஊரார்க்குத் தெரிந்து விட்டது. அவர்கள் உன்னைக் குறை கூறுகின்றனர். நீ உன் காதலனை நினைத்துத் தான் கவலையால் வாடுகின்றாய் என்று பழிக்கின்றனர். ஆதலால் நீ பொறுமை காட்ட வேண்டும். உன் உள்ளக் கவலையை ஒருவரும் அறியாமல் அடக்கிக் கொண்டிருக்க வேண்டும்,’ என்று வலியுறுத்திக் கூறினாள் தோழி. இதைக் கேட்ட தலைவி ‘தலைவன் என்னை விட்டுப் பிரிந்தான் என்பதற்காக நான் வருந்தவில்லை. ஆயினும் என் உடம்பிலே, நான் உள்ளத்திலே கவலைப்படுவது போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. இதைக்கண்டுதான் ஊரார் என்னென்னவோ பேசுகின்றனர். அவர்கள் தங்கள் விருப்பப்படி பேசட்டும். அதனால் எனக்கு ஒரு குற்றமும் இல்லை. என் காதல் இன்னும் உறுதியாகுமேயன்றிச் சுருங்கி விடாது; என்று கூறினாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பது தான் இச்செய்யுள். கடற்கரையிலே, அலை நீரால் நனைந்த புன்னை மரக்கிளை களிலே மலர்கள் பூத்திருக்கின்றன. அம்மலர்களிலே இனிய தேன் நிரம்பி வழிகின்றது. அத்தேனை உண்ணுவதற்காக வண்டுக் கூட்டங்கள் பல அந்தக் கடற்கரைக்கு குடியேறி வந்துவிட்டன. அவை புன்னைப் பூக்களிலே உள்ள தேனை உண்ணுவதற்காக அம் மரக்கிளைகளிலே கூடியிருக்கின்றன. இத்தகைய செழித்த கடற்கரையை உடைய தலைவன் நம்மை விட்டுப் பிரிந்தான் என்பதற்காக நான் வருந்தவில்லை. இருந்தும், ‘இங்கு ஏன் இப்படி இவள் வருந்துகிறாள்’ என்று இவ்வூரில் உள்ள பிறர், மற்றவர்கள் அறியும்படி பழி கூறுகின்றனர். அவர்கள் மனம் போனபடி பேசுவதைப் பேசிக் கொண்டிருக்கட்டும். அந்தப் பழிச்சொற்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்?’ இதுவே தலைவி கூறியதாக அமைந்த செய்யுளில் உள்ள பொருள், ‘உள்ளத்தில் எனக்குக் கவலையில்லை; ஆயினும் ஊரார் நான் கவலைப்படுவதாகப் பழி சொல்லுகின்றனர். அவர்கள் சொல்வதைச் சொல்லிக்கொண்டு போகட்டும் என்ற கருத்தையே இவ்வாறு உரைத்தாள். பாட்டு பருவத்தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி, உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூ உம்; மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன் தோழி! இங்கு என் கொல் என்று, பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே. பதவுரை:- பருவத்தேன்- பருவ காலத்திலே உள்ள தேனை. நசை- விரும்பி. பல் பறைத்தொழுதி- பல வண்டுக் கூட்டங்கள். உரவுத்திரை பொருத - வலிமையுள்ள அலைகளால் மோதப் பட்ட. திணிமணல் அடைகரை- நெருங்கிய மணல் நிறைந்த கடற்கரையிலே. நனைந்த புன்னை- அலை நீரால் நனைந்த புன்னை மரத்தின். மாசினை தொகும்- பெரிய கிளையிலே கூடியிருக்கும். மலர்ந்த பூவின்- இவ்வாறு பூத்த மலர்களையும். மாநீர் - கருமையான நீரையும் உடைய. சேர்ப்பற்கு- கடற் கரையையுடைய தலைவன் பிரிந்தான் என்பதற்காக. இரங்கேன் தோழி- வருந்த மாட்டேன் தோழியே. இங்கு என் கொல்- இப்படியிருந்தும், இங்கு ஏன் இவள் வருந்துகின்றாள். என்று பிறர்- என்று மற்றவர்கள் பிறர் அறியக் கூறல்- பிறர் கேட்கும்படி சொல்லுவது. அமைந்து. ஆங்கு அமைக- அவர்கள் மனம் அமைந்தபடி அமையட்டும். அம்பல்- அவர்கள் இவ்வாறு சொல்லும் பழிச்சொல்லாகிய. அஃது எவன் ஏ- அதனால் நமக்கென்ன துன்பமுண்டாகும்? (ஒன்றும் இல்லை.) கருத்து:- ஊரார், உண்மை உணராமல் சொல்லும் பழிச் சொற்களுக்காக நான் அஞ்சமாட்டேன். விளக்கம்:- இது, உலோச்சன் என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவால், நீ வருந்துகின்றதைக் கண்டு ஊரார் பழிக்கின்றனர்.’ என்றாள் தோழி. அவளுக்குத் தலைவி மறுமொழி உரைத்தாள். அதுவே இச்செய்யுள். நெய்தல் திணை. நசை - விரும்பி. நசைஇ- உயிர்அளபெடை. பறை- சிறகு. தொழுதி- கூட்டம். தொகும்- கூடும். தொகூஉம்- உ, உயிர் அளபெடை அம்பல்- பழிச்சொல். ஏ- அசைச்சொல். தேன் வண்டுகள் தலைவனுக்கு உவமை பருவகாலத்திலே தேன் வண்டுகள் மலரை அடைவது போல, தக்க சமயத்திலே தலைவனும் தலைவியை வந்து அடைவான் என்பது பொருள். ஒரு நாளா? இரண்டு நாளா? பாட்டு 176 ஒரு தலைவன் தான் காதலித்த பெண்ணை அடைய விரும்பினான். அவன் நல்ல குணமும், ஒழுக்கமும் நிரம்பியவன். உறுதியும் படைத்தவன். சிறந்த குடியிலே பிறந்தவன். அவன் காதலித்த தலைவியும் சிறந்த பண்புள்ளவள். தலைவியின் தோழியின் வாயிலாக அவளுடைய அன்பைப் பெற விரும்பினான் அவன். பல நாட்கள் தோழியிடம் வந்து வந்து போனான். தலைவியின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து தெரிவிக்கும்படி வேண்டிக் கொண்டான். தோழிக்கு அத் தலைவனிடம் இரக்கம் உண்டாயிற்று. அவன் காதலிலே நம்பிக்கை பிறந்தது. ‘இவன் எமது தலைவிக்கேற்ற துணைவன் தான்; இவனை அவள் காதலனாகப் பெற்றால் என்றும் இன்புற்று வாழ்வாள்,” என்று உறுதியாக எண்ணினாள் ஆதலால் தலைவனைப்பற்றி அவளிடம் எடுத்துச் சொல்லுவதற்குக் காலம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் வேறு யாருமில்லாத சமயம், தானும் தலைவியுமே தனித்திருந்தனர். இதுதான் தலைவனைப் பற்றிச் சொல்லுவதற்குத் தகுந்த சமயம் என்று கருதினாள் தோழி தலைவியின் உள்ளத்திலே இரக்கமும் காதலும் பிறக்கும்படி தலைவன் செய்தியை உரைத்தாள். ‘தலைவியே! ஒரு நல்ல செய்தி! சொல்லவேண்டும் என்று பல நாட்கள் முயன்றேன். இன்றுதான் வாய்ப்புக் கிடைத்தது. சொல்லுகிறேன் பொறுமையுடன் கேள். ‘அவன் உன்னையே காதலிக்கின்றான். அவன் என்னிடம் வந்தது ஒருநாள் மட்டும் அன்று; இரண்டு நாட்கள் மட்டும் அன்று. பல நாட்கள் வந்து வந்து போனான். அவன் வந்த போதெல்லாம் என்னிடம் உரைத்த சொற்கள் மிகவும் பணிவான சொற்கள்; இனிமையான சொற்கள்; அன்பு நிறைந்த சொற்கள்; நன்மை நிறைந்த சொற்கள், உன்னுடைய நன்மையையே நாடுகின்ற என்னுடைய நல்ல நெஞ்சத்தை அவனுடைய சொற்கள் இரங்கும்படி செய்துவிட்டன. அவனுடைய சொற்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் போய்விட்டான். மலையிலே முதிர்ந்திருக்கும் தேனடையில் உள்ள தேனை யாரும் எடுக்காவிட்டால் அத்தேன் பாழாகும், அதைப்போல அவன் சொல்லை ஏற்றுக் கொள்ளாமையால் அவன் போய்விட்டான். நமக்குத் துணைவனாகிய, எம் தந்தை போன்றவன். இப் பொழுது எங்கே இருக்கின்றானோ. என் நெஞ்சம் கலங்குகின்றது. வேற்று நிலத்திலே பெய்த மழை நீர், பெருக்கெடுத்துக் கலங்கி ஓடி வருவதைப்போல என் உள்ளம் கலங்குகின்றது.’ இதுவே தோழியின் கூற்றாகிய இச்செய்யுளில் அடங்கி யிருக்கும் பொருள். பாட்டு ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன், பன்னாள்வந்து பணிமொழி பயிற்றி என் நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை வரை முதிர்தேனில் போகி யோனே. ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ! வேறு புலன் நன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையின், கலிழும் என்நெஞ்சே. பதவுரை:- ஒரு நாள் வாரலன்- ஒரு நாள் மட்டும் வந்தான் இல்லை. இரு நாள் வாரலன்- இரண்டு நாள் மட்டும் வந்தான் இல்லை. பல்நாள் வந்து - பல நாட்கள் வந்து. பணிமொழி பயிற்றி- பணிவுள்ள மொழிகளைப் பலமுறை சொல்லி. என் நன்னர் நெஞ்சம் - என்னுடைய நல்ல மனத்தை. நெகிழ்த்த பின்றை- இரங்கும்படி செய்த பிறகு. வரை முதிர் தேனில்- வரையிலே முதிர்ந்த தேனைப்போல. போகியோன் ஏ- போன அவன். ஆசு ஆகு எந்தை- நமக்குத் துணைவனும் தந்தையுமாகிய அவன். யாண்டு உளன் கொல் ஓ- இப்பொழுது எங்கேயிருக்கின்றானோ. வேறு புலன்- வேற்று நிலம் உள்ள. நல் நாட்டு- நல்ல நாட்டிலே. பெய்த ஏறு உடைமழையின்- பெய்த இடியை உடைய மழையின் வெள்ளத்தைப் போல. கலிழும் என் நெஞ்சு ஏ- கலங்கும் என் உள்ளம். கருத்து:- உன்னை விரும்பும் தலைவன் மிகவும் வருந்து கின்றான். அவனிடம் என் நெஞ்சம் இளகி விட்டது. விளக்கம்:- இது, வருமுலை யாரித்தி என்னும் புலவர் பாட்டு. இவர் பெண்புலவர். தலைவன்மேல் தலைவிக்கு இரக்கம் உண்டாகும்படி தோழி கூறியது குறிஞ்சித்திணை. பயிற்றி- பல தடவைகள் கூறி. வரை- மலை. ஏறு- இடி. கலிழும்- வருந்தும். பணிமொழி- பணிவான சொற்கள். ஆசு- பற்றுக்கோடு; ஆதரவு. ஏ, ஓ அசைச்சொற்கள். தலைவன் மொழிக்குத் தேன் உவமானம். பணிமொழி; ஆசாகு எந்தை; இரண்டு தொடர்களும் தலைவனுடைய தன்மையை விளக்கின. உள்ளக்கலக்கத்திற்கு மழையால் பெருக்கெடுக்கும் வெள்ளம் உவமானம். ஒரு நிலத்தில் பெய்த மழையால் பெருகிய வெள்ளம் அந்த நிலத்தையும் நாட்டையும் கடந்து இன்னொரு நாட்டிலே புகும்போது தெளிவின்றிக் கலங்கிப் பாயும். அதுபோல் உள்ளமும் தெளிவின்றிக் கலங்கி வருந்துகின்றது. இதுவே உவமையின் பொருள். வேலை முடிந்தால் கடிதில் வருவார் பாட்டு 180 வாடியிருப்போருக்கு நண்பர்கள் ஆறுதல் உரைப்பார்கள். உள்ளத் துயரைத் தணிப்பதற்கு ஆறுதல் மொழிகள் உதவி செய்யும்; திக்குத் தெரியாமல் அலைபவர்க்குத் திசை தெரிந்தால் மகிழ்ச்சியுண்டாகும். எல்லையற்ற துன்பத்தால் வருந்துவோர்க்கு ஆறுதல் மொழிகள் அமைதியளிக்கும். இந்த இயல்பை எடுத்துக் காட்டுவது இச்செய்யுள். பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தலைவி அவன் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். அவள் வருத்தத்தைத் தணிக்க நினைத்தாள் தோழி. உடனே ஆறுதல் மொழிகள் சொல்லமுன் வந்தாள். தான் கூறும் சமாதானம் தலைவியின் உள்ளத்திலே பதியக் கூடியதாக இருக்கவேண்டும்; நாம் சொல்வது நீதியானதுதான் என்று நம்பக்கூடியதாகவும் இருக்கவேண்டும்; இத்தகைய இனிய மொழிகளைச் சொன்னால்தான் தலைவியின் துன்பத்தைத் தணிக்க முடியும் என்று கருதினாள் தோழி. தலைவன் நாடிச் சென்ற காரியத்திலே வெற்றி பெற வேண்டும் என்ற கவலை தலைவிக்கு உண்டு; தலைவனுடைய புகழிலும் இகழிலும் அவளுக்கும் உரிமையுண்டு; இது தோழிக்குத் தெரியும். ஆதலால் தலைவி ஒப்புக்கொள்ளும் வகையிலே- ஆறுதல் அடையும் வகையிலே- சமாதானங் கூறினாள் தோழி. ‘தலைவன் கருதிச் சென்ற காரியம் இன்னும் கைகூடி யிருக்காது. அதனால்தன் அவன் இப்பொழுது வரவில்லை. அவன் விரும்பிச் சென்ற காரியத்திலே வெற்றி பெற்றானாயின் உடனே திரும்பி விடுவான்’ என்பது தோழி உரைத்த சமாதானம். இது தலைவியின் உள்ளத்திற்கு ஆறுதல் தந்தது. இதைச் சொல்லுவது தான் இச்செய்யுள். ‘தலைவியே, அவர் பாலை நிலத்தின் வழியே பொருள் தேடப் பிரிந்து சென்றார். அவர் சென்ற பாலை நிலத்தில் ஒரே ஒரு குட்டை மூங்கில்தான் தலை நீட்டிக் கொண்டிருக்கும். பேய்ப் பல்லைப் போன்ற பெரிய நகங்களையும், அகலமான கால்களையும் உடைய யானைக்கும் பல் கரும்புத் தோட்டத்தின் வழியே செல்லும். அந்த யானைகளின் தலைவனாகிய ஏந்தல் முன்னே போகும். அப்பொழுது கரும்புகள் பாத்திகளிலே நசுங்கும்படி மிதிபடும் மிதிபட்ட கரும்பின் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு நீளமோ அவ்வளவு நீளந்தான் அந்தப் பாலைவனத்தின் மூங்கில் வளர்ந்திருக்கும். நம்முடைய அழகு சிதையும்படி- நாம் வருந்தும்படி- இந்த வழியைக் கடந்துதான் அவர் பொருள் தேடச் சென்றார். அவர் சென்ற நாட்டிலே அவர் கருதிய பொருள் கிடைத்ததோ இல்லையோ, இன்னும் தெரியவில்லை. பொருள் கிடைத்திருந்தால் அவர் இந்நாள் தாமதிக்க மாட்டார், கட்டாயம் திரும்பி வந்திருப்பார். ஆதலால் இன்னும் பொருள் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ வருந்தாதே’ என்றாள் தோழி. பாட்டு பழூஉப்பல் அன்ன பரு உகிர்ப் பா அடி இருங்களிற்று இன நிரை ஏந்தல்வரின், மாய்ந்து அறைமடி கரும்பின் கண்இடை அன்ன, பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, எய்தினர் கொல்லோ, பொருளே, அல்குல் அவ்வரி வாடத் துறந்தோர், வன்பராகத் தாம் சென்ற நாட்டே. பதவுரை:- பழூஉப்பல் அன்ன- பேயின் பற்களைப் போன்ற. பருஉகிர்- பருத்த நகங்களைக் கொண்ட. பா அடி- பெரிய பாதங்களைப் பெற்ற. இரும் களிறு இனம் நிரை- பெரிய யானைக் கூட்டங்களின் வரிசையோடு. ஏந்தல் வரின்- அவற்றின் தலைவனும் வருமாயின். மாய்ந்து- அழிந்து . அறைமடி கரும்பின்- பாத்தியிலே சாய்ந்து விழுகின்ற கரும்புகளின். கண் இடை அன்ன- ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையிலே உள்ள அளவு போல. பைதல் ஒரு கழை- வற்றிப்போன ஒரு மூங்கில். நீடிய சுரன் இறந்து- நிற்கின்ற பாலை நிலத்தைக் கடந்து. அல்குல்- உனது அல்குலிலே உள்ள. அவ்வரிவாட- அழகிய தேமல் கெடும்படி. துறந்தோர் - விட்டுச் சென்றவர். வன்பராக- மிகவும் வலிமை யுள்ள நெஞ்சத்துடன். தாம் சென்ற நாட்டு ஏ- தாம் புகுந்த நாட்டிலே. பொருள் ஏ - தான் தேடிச் சென்ற செல்வத்தை. எய்தினர் கொல் ஓ - இன்னும் பெற்றாரோ இல்லையோ தெரியவில்லை. (ஆதலால் தான் வந்திலர்) கருத்து:- தலைவர் விரும்பிச் சென்ற பொருளை இன்னும் பெற்றிருக்க மாட்டார். அதனால்தான் வரவில்லை. விளக்கம்:- இது, கச்சிப்பேட்டு நன்னாகையார், என்னும் புலவர் பாட்டு. தலைவன் பிரிவை எண்ணி வருந்தியிருந்த தலைவிக்குத் தோழி சொல்லியது. பாலைத்திணை. “எய்தினர் கொல்லோ பொருளே” என்னும் வரி “பொருளெய் தினர் கொல்லோ” என்று மாற்றப்பட்டு, இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. பழூஉப்பல்- உயிர் அளபெடை- ஏ-ஓ- அசைச்சொற்கள். பழூவு-பேய். யானைகளின் தலைவனுக்கு ஏந்தல் என்று பெயர். பாலை நிலத்து மூங்கில் கரும்பின் ஒரு கரணையளவாகவே வளர்ந்திருக்கின்றது. பைதல்- துன்பம். இங்குக் கரும்பின் மெலிவைக் குறித்தது. யானைகள் கூட்டமாகப் போகும்போது, வலிமையுள்ள யானையொன்று அக்கூட்டத்தை முன் நின்று அழைத்துச் செல்லும். கரும்புத் தோட்ட த்திலே யானைகள் புகுவது இயல்பு. கரும்பு யானைக்கு விருப்பமான உணவு, கரும்புத் தோட்டத்தில் யானைகள் புகுந்தால் தோட்டம் அழியும். நமது கடமையை நாம் செய்வோம் பாட்டு 181 தலைவன் தவறு செய்தால் செய்யட்டும். அதன் பலனை அவன் அடையாமல் போகமாட்டான். நாம் நமது கடமையைச் செய்யவேண்டும். தலைவனைப் பற்றிப் பழிப்பதோ குறை சொல்லுவதோ நமக்குத் தகாது, இதுவே கற்புள்ள மனைவி மார்களின் கடமை என்று பழந்தமிழ்ப் பெண்கள் நினைத்தனர். இம்முறையைப் பின்பற்றியே வாழ்ந்தனர். இவ்வுண்மையை இப்பாடலால் அறியலாம். தலைவன் பரத்தையரை நாடிச் சென்றிருந்தான். தலைவி அதை அறிந்து தானாகவே வருந்திக் கொண்டிருந்தாள். அப்பொழுது தோழி தலைவிக்குச் சமாதானம் சொல்ல முன் வந்தாள். தலைவனுடைய தீயொழுக்கத்தை எடுத்துக் காட்டினாள். இதனால் தலைவிக்கு ஆறுதல் ஏற்படும் என்று எண்ணித்தான் இவ்வாறு சொன்னாள். தலைவியோ சிறந்த கற்பு நெறியிலே நிற்பவள். தலைவன் செயலுக்காக வருந்தினாலும், பிறர் அவனைப் பழிப்பதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள். ஆதலால் அவள் தலைவனைப் பழித்த தோழியைக் கடிந்து கொண்டாள். ‘அவரோடு ஊடி வாழும் இப்பொழுது அவரைக் குறை சொல்லுவதால் ஒரு பயனும் இல்லை. இல்லறத்திலே வாழும் நமக்கு எத்தனையோ கடமைகளும் உண்டு. நாமோ இன்பத்திற்குரிய இளமைப் பருவத்தைக் கடந்தவர்கள், தலைவர் எப்படியிருந்தாலும் நாம் நமது கடமைகளைச் செய்யவேண்டும். இதுவே நாம் செய்யும் அறமாகும்; கற்புள்ள பெண்களின் கடமையாகும்; என்று கூறினாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். பெரிய கொம்புகளையுடைய எருமை; அது அண்மையில் கன்று போட்டது; அந்த எருமையின் கன்று அதன் அருகிலேயே கட்டப்பட்டிருக்கின்றது; அந்த எருமையும் தன் கன்றை விட்டுப் பிரியாமலே பக்கத்தில் உள்ள பசுமையான பயிரை மேய்ந்து கொண்டிருக்கும்; இத்தகைய செழிப்பான ஊரையுடையவன் நம் தலைவன். அவனுடைய செல்வம் நிறைந்த மனையிலே வாழ்கின்றோம் நாம். நாம் வயதேறிய இல்லக் கிழத்தியர். இல்லறத்திலே செய்ய வேண்டிய கடமைகள் எத்தனையோ உண்டு. அவற்றைச் செய்வதே நம் கடமை. ஊடியிருக்கும் இச் சமயத்தில் அவரைப் பற்றி இப்படிப்பட்டவர் என்று பழித்துரைக்கும் வேலை நமக்கு வேண்டாம். இதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு இதுமற்று எவனோ தோழி! துளியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி; இருமருப்பு எருமை ஈன்றணிக் கார் ஆன் உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅல் பைம்பயிர் ஆரும்; ஊரன் திருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. பதவுரை:- இரு மருப்பு எருமை- பெரிய கொம்புகளை யுடைய எருமையினத்தைச் சேர்ந்த. ஈன்ற அணிகார் ஆன்- சமீபத்தில் கன்று போட்ட கரிய எருமை. உழவன் யாத்த- உழவனால் கட்டப்பட்ட. குழவியின் அகலாது- கன்றைவிட்டுப் பிரியாமல். பால்- பக்கத்திலே உள்ள. பைம் பயிர் ஆரும்- பசுமையான பயிரை மேயும். ஊரன்- வளமுள்ள ஊரின் தலைவன். திருமனை- செல்வம் நிறைந்த வீட்டிலே. பல கடம் பூண்ட- பல கடமைகளை மேற் கொண்ட. பெருமுது பெண்டிரேம் ஆகிய- பெரிய வயது முதிர்ந்த பெண்களாகிய. நமக்கே- நமக்கு. துனி இடை- ஊடி யிருக்கும் இக்காலத்தில். இன்னர் என்னும்- அவரைப்பற்றி இப்படிப் பட்டவர் என்று சொல்லுகின்ற. இன்னாக்கிளவி- பழிச் சொல்லைக் கூறுவதாகிய. இது- இச்செயல். எவனோ தோழி- என்ன பயனைத் தரும் தோழியே! கருத்து:- தலைவனைப் பழிக்க வேண்டாம். அது கற்பு நெறியன்று. நம் கடமைகளை நாம் செய்வோம். விளக்கம்:- இது, கிள்ளிமங்கலங்கிழார் என்னும் புலவர் பாட்டு. தலைவனைப் பழித்த தோழியைப் பார்த்த தலைவி சொல்லியது. மருதத்திணை. முதல் இரண்டடிகள் ‘துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி, இது மற்று எவனோ தோழி’ என்று மாற்றப்பட்டது. இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஓ, ஏ, மற்று, அசைச்சொற்கள். துனி- ஊடல். கார்ஆன்- கரிய எருமை. கடம்- கடமை; அறம். இன்னாக்கிளவி- பழிச்சொல். பாஅல்- உயிர் அளபெடை. தலைவனுக்கு எருமை உவமை. எருமை தன் கன்றின்மேல் வைத்த அன்பு குறையாமல் பக்கத்தில் உள்ள பயிரை மேய்கின்றது. அதுபோல் தலைவன் தன் இல்லக் கிழத்தியின் மேல் வைத்த அன்புகுறையாமல் பரத்தையர் இன்பத்தை நுகர்கிறான். இக்குறிப்புள்ளதே இவ்வுவமை. துயர் துடைக்கும் தூது மடலேற்றமே பாட்டு 182 தலைவன் பலமுறை சென்று தோழியிடம் குறையிரந்தான். தலைவியுடன் தன்னைப் பிணைத்து வைக்கும்படி வேண்டிக் கொண்டான். எத்தனையோ விதமாகத் தன் உள்ளக் காதலை வெளியிட்டான். ஒரு பயனும் இல்லை. தோழியும் இடந்தர வில்லை. தலைவியும் இரக்கங்காட்டவில்லை. இதன்பின் மடலேறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை மடலேறுதல் ஒன்று தான் நாம் தலைவி பால் அனுப்பும் இறுதியான தூது’ என்று முடிவு செய்து கொண்டான். இந்த முடிவை அவனே வாய்விட்டுச் சொல்லுவதாக அமைந்த பாடல்தான் இது. ஒரு வினையிலே வெற்றி பெறத் துணிவு கொண்டவர்கள் எதையும் செய்வார்கள். வினையின் வெற்றியே அவர்கள் நோக்கம் உயிரையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைப்பார்கள். இதுதான் உறுதியும், ஊக்கமும் உள்ள மக்களின் தன்மை. இத் தன்மைக்கு இப்பாடலை ஒரு எடுத்துக்காட்டாக இயம்பலாம். ‘தோழியும் நம்மிடம் இரக்கம் காட்டவில்லை. அழகிலே சிறந்து விளங்கும் மெல்லிய நடையை உடையவள் தலைவி. ஆயினும், அவள் அழகுக்கும்., மெல்லிய நடைக்கும் ஏற்ற இரக்கம், அவளிடம் இல்லை. ஆதலால் அவள் என்பால் கனிந்த சிந்தையைக் காட்டவில்லை. இனி நமக்குத் துணை செய்யக்கூடிய தூது மடலேறுதல் ஒன்றேதான் உண்டு. செழித்து உயர்ந்து வளர்ந்த பனை மரத்திலே விளைந்த மடல்களைக் குதிரையாகச் செய்வேன். முறைப்படி அதன் கழுத்திலே மணிகளோடு சேர்ந்த பெரிய மாலையைப் பூட்டுவேன். நானும் என் கழுத்திலே வெண்மையான எலும்பு மாலையை போட்டுக் கொள்வேன். பிறர் என்னைப் பார்த்துச் சிரிக்கும்படி அக்குதிரையின் மேல் காட்சியளிப்பேன். ஒரு நாள் என்னுடைய பெரிய நாணத்தையும் விட்டு, தெருவின் வழியே செல்வேன். இதுதான் என் காமம்; எனக்குகந்த இறுதியான தூது.’ இதுவே இச்செய்யுளில் அமைந்த பொருளாகும். பாட்டு விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல், மணிஅணி பெருந்தார் மரபின் பூட்டி வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, ஒருநாள் மருங்கில், பெருநாண் நீக்கித் தெருவின் இயலவும் தருவது கொல்லோ; கலிழ்ந்து அவிர் அசை நடைப்பேதை மெலிந்திலள், நாம்விடற்கு அமைந்த தூதே. பதவுரை:- கலிழ்ந்து அவிர்- அழகிலே சிறந்து விளங்குகின்ற. அசை நடை பேதை- மெலிந்த நடையுள்ள பேதையாகிய அவள்; மெலிந்திலள்- சிறிதும் மனம் இரங்கவில்லை. நாம்விடற்கு அமைந்த தூது ஏ- இனி நாம் விடுவதற்குத் துணிந்த தூது. விழுதலை- சிறந்த உச்சியையுடைய. பெண்ணை- பனை மரத்திலே. விளையல் மாமடல்- விளைந்து முற்றிய பெரிய மடலால் செய்த குதிரையின் கழுத்திலே. மணி அணி பெரும்தார்- மணிகள் பொருந்திய பெரிய மாலையை. மரபின் பூட்டி- முறைப்படி அணிவித்து. வெள்என்பு அணிந்து -நானும் வெண்மையான எலும்பு மாலையைத் தரித்துக் கொண்டு. பிறர் எள்ளத்தோன்றி- பிறர் கண்டு நகைக்கும்படி அக்குதிரையின் மேல் காணப்பட்டு. ஒரு நாள் மருங்கில் - ஒரு நாளில். பெரு நாண் நீக்கி- பெரிய நாணத்தையும் விட்டு. தெருவின் இயலவும்- தெருவின் வழியே செல்லவும் அமைந்த இத்தூது. தருவது கொல் ஓ- நமக்கு வெற்றியைத் தருமோ? கருத்து:- அவள் அன்பைப்பெற, இனி எனக்கு மடல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை. விளக்கம்:- இது, மடல் பாடிய மாதங்கீரன் என்னும் புலவர் பாட்டு. இவர் மடல் பாடுவதில் வல்லவர் என்பது, மடல் பாடிய என்ற அடைமொழியால் விளங்குகின்றது. தலைவன் விருப்பத்திற்குத் தோழி இணங்கவில்லை. தலைவியும் இரங்கவில்லை. அப்பொழுது தலைவன் மடலேறத் துணிந்தான். அவன் தன் துணிவைச் சொல்லியது இச்செய்யுள். குறிஞ்சித்திணை. ‘கலிழ்ந்து அவிர் அசை நடைப்பேதை மெலிந்திலள். நாம் விடற்கு அமைந்த தூது’ என்னும் இறுதியடிகள் முதலில் வைத்துப் பொருளுரைக்கப்பட்டது. விளையல்- முற்றியது. மாமடல்- பெரிய மடல். கலிழ்ந்து- சிறந்து, எள்ளுதல்- இகழுதல்; நகைத்தல். இயலுதல்- செல்லுதல். மடலேறுவோன் தன் கழுத்திலே எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்து கொள்ளுவான். வருந்தேல்! வருவது உறுதி! பாட்டு 183 ‘கார் காலத்திலே திரும்பி வந்து விடுவேன்; அது வரையிலும் தனிமைத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டிரு’ என்று சொல்லி விட்டுப் பொருள் தேடச் சென்றான் தலைவன். அவன் தவணை சொல்லிய கார் காலம் வந்து விட்டது. ஆனால் அவன்மட்டும் வரவில்லை. இதைக்கண்ட தோழி, தலைவன் வராமையால், தலைவி வருந்துவாள் என்று நினைத்தாள். தலைவியின் துன்பத்திற்காகத் தானும் வருந்தினாள். தோழியின் துக்கத்தைக் கண்ட தலைவி அவளுக்குத் தனது நம்பிக்கையை எடுத்துரைத்தாள். ‘கார் காலத்தில் ஆண் மானும், பெண்மானும் ஒன்று கூடித் திரிந்து கொண்டிருக்கும். இது தான் இயல்பு. அவர் சென்றிருக்கும் இடத்திலே தனியாகத் திரியும் ஆண் மானைக் காணமாட்டார். ஆணும், பெண்ணும் இணைந்து திரியும் காட்சியையே காண்பார். அதைக் கண்டவுடன் தாமும் தமது காதலியுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்னும் ஆவல் தான் அவர் உள்ளத்திலே தோன்றும். அன்றியும் அங்கு மலர்ந்திருக்கும் கொன்றை மலர்களைக் காண்பார். அம்மலர்களின் நிறம் அவர் பிரிவினால் என்னிடம் உண்டாகிய பசலை நிறத்தை நினைப்பூட்டும். இவற்றால் அவர் விரைவில் திரும்பி வருவார். நானும் இதை நினைத்தே பொறுத்திருக்கின்றேன்; என்று சொன்னாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். ‘மழை பெய்வதற்கு முன்னே காயாவின் கிளைகள் வெறிச் சென்றிருக்கும். மழை பெய்தபின் அவற்றிலே பூக்கள் நிறைந்து மலர்ந்திருக்கும். அவை மயிலின் கழுத்தைப் போல் காணப்படும். இத்தகைய புன்செய் நிலமுள்ள அவர் சென்றிருக்கும் நாட்டிலே, முல்லை நிலத்திலே கொன்றை மரங்களும் பூத்துக் குலுங்கி யிருக்கும். அம் மலர்கள், அவர் பிரிந்தபின் நம்மைக் கவ்விய பசலை நிறத்தை அவருக்கு நினைப்பூட்டும். அன்றியும் அவரைப் போல் தனியாகத் திரிந்து கொண்டிருக்கும் ஆண் மானைக் காணமாட்டார். தன் பிணையுடன் இணைந்து திரியும் இரட்டை மான்களையே காண்பார். ஆதலால், இக்காட்சிகள், அவரை நம்மிடம் திரும்பி வரச் செய்துவிடும்.’ இது இச்செய்யுளில் அடங்கியிருக்கும் பொருள். பாட்டு சென்ற நாட்ட கொன்றை அம்பசுவீ நம்போல் பசக்கும் காலைத் தம்போல் சிறுதலைப் பிணியின் தீர்ந்த நெறி கோட்டு இரலை மானையும் காண்பர் கொல் நமரே; புல் என் காயாப் பூக்கெழு பெரும் சினை மெல் மயில் எருத்தின் தோன்றும் கான வைப்பின் புன் புலத்தானே. பதவுரை:- புல் என் காயா- மழை பெய்வதற்கு முன்பு ஒளியில்லாமலிருந்த காயாவின். பூ கெழு பெரும் சினை- மழை பெய்த பின் மலர்கள் நிறைந்து காணப்படும்; பெரிய கிளை. மெல் மயில் எருத்தில்- மெல்லிய மயிலின் கழுத்தைப் போல். தோன்றும்- காணப்படுகின்ற. கான வைப்பின்- காட்டகத்தில் உள்ள. புன்புலத்தான்- புன்செய் நிலத்தை யுடையதாகிய. சென்ற நாட்ட- அவர் பொருள் தேடச்சென்ற நாட்டில் உள்ள. கொன்றை அம்பசுவீ- கொன்றை மரத்தின் அழகிய புதிய மலர்கள். நம்போல்- அவர் பிரிந்ததனால் நம்மிடம் படர்ந்தது போன்ற, பசக்கும் காலை -பசலை நிறத்தைக் காட்டும் போதும் நினைப்பார். தம்போல்- தம்மைப்போல. சிறுதலைப்பிணியின்- சிறிய தலையையுடைய பெண்மானை விட்டு, தீர்ந்த- பிரிந்த. நெறி கோட்டு- நெருங்கிக் கிளைத்திருக்கும் கொம்புகளையுடைய, இரலை மானையும்- ஆண் மானையும், நமர் காண்பர் கொல்- நமது தலைவர் காண்பாரோ? காணமாட்டார். கருத்து:- கார்காலம் அவர் சென்ற நாட்டிலும் உண்டு. ஆதலால் அவர் விரைவில் வந்து விடுவார். விளக்கம்:- இது ஒளவையார் பாட்டு. தலைவன் வராமையால் வருந்துவாளே என்று கவலைப்பட்ட தோழிக்குத் தலைவி யுரைத்தது. முல்லைத்திணை. ‘புல்லென்காயா’ என்று தொடங்கும் இறுதி மூன்றடி களையும் முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ஏ, கொல், அசைச்சொற்கள். மலரையுடைய காயாவின் கிளைக்கு மயிலின் கழுத்து உவமை. பசலை நிறத்திற்குக் கொன்றை மலரின் நிறம் உவமை. தேமலைப் பசலை நிறம் என்பர். தேமலின் நிறம் பொன்னிறம். காமத்தின் அடையாளம் தேமல் என்பர். வீ-மலர். பிணை-பெண்மான். நெறிகோடு- நெருங்கியிருக்கும் கொம்புகள். கலைமான் கொம்பிலே பல கிளைகள் உண்டு. சிரலை- ஆண்மான். எருத்து- கழுத்து. கான வைப்பு- முல்லை நிலம். புன்புலம்- புன் செய் நிலம். பொய் புகலார் அறிஞர் பாட்டு 184 ஒரு பெண்ணின் அழகையும், காதற் சிறப்பையும் உணர்த்தும் இச்செய்யுளில் சிறந்த நீதி ஒன்றும் அமைந்து கிடக்கின்றது. அறிவுள்ளவர்கள்- கற்றறிந்து அடக்கமுடன் வாழ்பவர்கள்- பொய்க்கரி புகலவே மாட்டார்கள். தம் தலை போவதாக இருந்தாலும் சரி, கண்ணாற் கண்டதையே கூறுவார்கள். இதுதான் இச்செய்யுளில் அமைந்திருக்கும் அறவுரை. வேட்டைக்குச் சென்ற தலைவன், விலங்குகளை வேட்டையாட வில்லை. காதல் வேட்டையாடிவிட்டான். ஒரு அழகிய மங்கையின் காதலிலே ஈடுபட்டுத் திரும்பினான். தன் காதலைப் பற்றித் தோழனிடம் கூறினான். தோழன் உடனே அவனைக் கண்டித்தான். ‘மன உறுதியும், உடல் வலிமையும் உள்ளவன் நீ. எங்கேயோ போனவிடத்தில், யாரோ ஒரு பெண்ணிடம் உள்ளத்தைப் பறி கொடுத்தேன் என்று உரைத்தாய்; உன் ஆண்மைக்கு அழகாகுமா? அறிவுடைமைக்கு ஏற்றதாகுமா?’ என்று கடிந்துரைத்தான். தோழனுடைய கடிந்துரையைக் கேட்ட தலைவன் ‘நான் கண்ட காரிகை பரதவர் பெண்; அவள் அழகு நிறைந்தவள்; என் நெஞ்சம் அவளுடைய கண் வலையிலே சிக்கிக் கொண்டது. அவளிடமே தங்கிவிட்டது, நான் என்ன? யாராயிருந்தாலும் அவளைக் கண்டால் அவள் கண் வலையிலே விழ்ந்துதான் தீர்வார்கள். இது நான் நேரில் கண்ட உண்மை. ஆதலால் அவள் நடமாடும் இடத்திற்கு யாரும் போக வேண்டாம். போனால் கட்டாயம் துன்பப்படுவார்கள்; என்று உரைத்தான் தலைவன். இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவதே இச்செய்யுள். ‘தான் நேரில் பார்த்ததை மறைத்துப் பொய் பேசுந் தன்மை அறிவில் சிறந்தவர்களிடம் இல்லை. ஆதலால் நான் கண்ட உண்மையை உரைக்கின்றேன், கேட்பாயாக, என்னுடைய சிறந்த மாசற்ற மனம் ஒன்றையும் நினைக்கவேயில்லை. இதற்கு இது தகுந்ததா? தகாதா? என்று சிந்தித்துப் பார்க்கவேயில்லை அந்தக் கண் வலையிலே அகப்பட்டுக் கொண்டது. அங்கேயே தங்கி விட்டது. அவள் மயிலிறகின் கண்களைப் போன்ற சிறந்த தலை மயிரையுடையவள்; அழகிய பதுமை போன்றவள்; வலை வீசி மீன்பிடிக்கும் தொழிலையுடைய பரதவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவள்; இளமையும் அழகும் நிறைந்தவள்; யாராயிருந்தாலும் அவளுடைய கண் வலையிலே மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டு போய்விட மாட்டார்கள். ஆதலால் கடற்கரைச் சோலையின் பக்கத்திலே உள்ள, சிற்றூர்க்குச் சென்று சேர்வதற்கு யாரும் விரும்ப வேண்டாம். சென்றால் எனக்கு நேர்ந்த துன்பந்தான் அவர்களுக்கும் உண்டாகும்.’ இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே; இதற்கு இது மாண்டது என்னாது, அதன்பட்டு ஆண்டு ஒழிந்தன்றே மாண்தகை நெஞ்சம்; மயில்கண் அன்ன மாண் முடிப்பாவை நுண்வலைப் பரதவர் மடமகள்; கண்வலைப் படூஉம்; கான லானே. பதவுரை:- அறிகரி பொய்த்தல் - அறிந்த ஒன்றை மறைத்துப் பொய்ச்சாட்சி யுரைத்தல். ஆன்றோர்க்கு இல்லை- பெரியோர் களிடம் இல்லை. மாண்தகை நெஞ்சம்- எனது சிறந்த மாசற்ற மனம். இதற்கு இது மாண்டது- இதற்கு இது ஏற்ற சிறப்புடையது. என்னாது - என்று நினைக்காமல். அதன்பட்டு- அந்தக் கண் வலையிலே விழுந்து. ஆண்டு ஒழிந்தன்று ஏ- அங்கேயே தங்கி விட்டது. மயில் கண் அன்ன- மயிற் பீலியின் கண்களைப் போன்ற மாண் முடிப்பாவை - சிறந்த தலைமுடியையுடைய அவள். நுண் வலை- நுண்ணிய கண்களையுடைய வலையால் மீன் பிடிக்கும். பரதவர் மடமகள்- பரதவர் இனத்தைச் சேர்ந்த அழகும் இளமையும் உடையவள். கண் வலைப்படும்- ஆயினும் யாராயிருந்தாலும் அவள் கண் வலையிலே அகப்படாமல் போக மாட்டார்கள். கானலான்- ஆதலால் கடற்கரைச் சோலையருகில் உள்ள. சிறு குடிச் செலவு ஏ- சிற்றூர்க்குச் சென்று. குறுகல்- சேர்வதை. ஓம்புமின்- தடுத்துக்கொள்ளுங்கள். கருத்து:- அவள் மீன் பிடிப்போர் மகள்தான். ஆயினும் அவளைக் காண்போர் அவள் கண்வலையிலே அகப்படாமல் இருக்க முடியாது. விளக்கம்:- இது- ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் என்னும் புலவர் பாட்டு. இவன் தமிழ் நாட்டிலே குடியேறிய ஒரு சிற்றரசனாக இருக்க வேண்டும். இந்த வடநாட்டு மன்னன் தமிழ்ப் புலவன்; யாழ் வாசிப்பதிலே வல்லவன்; இசைக் கலையிலே தேர்ந்தவன். இவனுடைய பெயர் இவ்வுண்மையை விளக்குகின்றது. இவனுடைய இயற்பெயர் பிரமதத்தன். தன்னைக் கண்டித்துரைத்த பாங்கனைப் பார்த்துத் தலைவன் கூறியது. இச்செய்யுள். நெய்தல் திணை. ‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை; மாண்தகை நெஞ்சம், இதற்கு இது மாண்டது என்னாது, அதன் பட்டு, ஆண்டு ஒழிந்தன்று ஏ, மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப்படூஉம்; கானலான் சிறு குடிச் செலவு ஏ குறுகல் ஓம்புமின்’ என்று கொண்டு கூட்டிப் பொருள் கூறப்பட்டது. ஆன்றோர்- பெரியோர். கரி- சாட்சி. ஓம்புதல் காத்தல்- தடுத்துக் கொள்ளுதல். ஒழிந்தன்று - ஒழிந்தது; தங்கிவிட்டது. வலைவீசும்- பரதவர் பெண், தானும் கண் வலை வீசுவதிலே வல்லவள். இக்கருத்தை ‘நுண் வலை பரதவர் மடமகள்’ என்னும் தொடர் வெளியிடுகின்றது. என் துன்பத்தை தலைவியிடம் சொல்க பாட்டு 185 தலைவன் இரவிலே வருவான்; தலைவியுடன் மகிழ்ந்து கூடியிருந்து செல்வான். ஒரு நாள் தலைவியின் நெஞ்சிலே ஒரு நினைப்பு எழுந்தது; ‘தலைவன் இரவுக் காலத்தில் வந்து போகின்றான். அவன் வந்து போகும் வழியிலே எத்தனையோ ஆபத்துக்கள் உள்ளன. அவற்றால் தலைவனுக்கு இடையூறு நேர்ந்தால் என்ன செய்வது?’ என்பது தான் அந்த நினைப்பு’ அவள் முகம் வேறுபட்டது. தலைவியின் இந்த வேறுபாட்டைக் கண்டாள் தோழி. ‘இரவிலே தலைவன் தவறாமல் வருகின்றான்; உன்னுடன் அளவளாவுகின்றான். இதனால் மகிழ்ச்சி யடைந்திருக்க வேண்டிய நீ ஏன் துக்கத்துடன் தோன்றுகின்றாய்’ என்றாள். தோழியே! நீ என்னிடம் இப்படிக் கேட்பதைவிட தலைவனிடம் எனது நிலையை எடுத்துக் கூறினால் நன்மையுண்டு. எனது துக்க நிலையைத் தலைவனிடம் சொன்னால் அவன் துன்பத்தின் காரணத்தை ஆராய்ந்து பார்ப்பான். தான் இரவிலே வருவதனால் வரும் வழியிலே ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ என்று எண்ணித்தான் தலைவி வருந்துகின்றாள் என்ற உண்மையை உணர்வான். என் துன்பத்தைப் போக்க உடனே என்னைக் கற்பு மணம் புரிந்து கொள்வான். நாங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழ்வோம். ஆதலால் என் துன்பத்தைத் தலைவனிடம் கூறுக’ என்றாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச் செய்யுள். ‘கீழ்க்காற்றால் சிவந்த காந்தள் மலர்கள் உதிர்ந்து குவிந்து கற்பாறையின் மேல் கவிழ்ந்து கிடக்கும். அம்மலர்கள் பல கோடுகளையுடைய பாம்புப்படம் ஒடுங்கிக் கிடப்பது போலக் காணப்படும். இத்தகைய மலை நாட்டையுடைய தலைவனுக்கு என் துன்ப நிலையை நீ எடுத்துரைத்தால் நலமாகும். ‘அவள் நெற்றியிலே பசலை நிறம் படர்ந்துவிட்டது; தேமல் தனது ஒளியை இழந்து விட்டது; நீண்ட மெல்லிய பருத்த தோள்கள் இளைத்துவிட்டன; உடம்பு இளைத்ததனால் கையில் உள்ள வளையல்கள் தாமே கழன்று விழுகின்றன. உம்மால்தான் அவள் இந்த நிலைமைக்கு ஆளானாள்’ என்று நீ அவனிடம் சொன்னால் என்ன?’ இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, நெடுமென் பணைத்தோள் சாஅய்த், தொடி நெகிழ்ந்து, இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்; எனச் சொல்லின் எவன் ஆம்? தோழி! பல்வரிப் பாம்பு பையவிந்தது போலக் கூம்பிக் கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள் கன்மிசைக் கவியும்; நாடற்கு, என் நன்மா மேனி அழிபடர் நிலையே. பதவுரை:- தோழி, பல்வரிப் பாம்பு- பல வரிகளையுடைய பாம்பினது, பை அவிந்தது போலக் கூம்பி - படம் ஒடுங்கியது போலக் குவிந்து. கொண்டலின் தொலைந்த- கீழ்க்காற்றால் சிவந்த காந்தள் மலர்கள். கல்மிசைக் கவியும்- பாறையின் மேல் கவிழ்ந்து கிடக்கும். நாடற்கு- நாட்டையுடைய. நான் கண்ணுறங்கேன் பாட்டு 186 காது செவிடுபடும்படி இடி இடிக்கின்றது. மழை விடாமல் சோவென்று பெய்துகொண்டே இருக்கின்றது. காடுகளில் எங்குப் பார்த்தாலும் செடி, கொடிகள் தலை நிமிர்ந்து தழைத்திருக்கின்றன. இந்நிலையிலே முல்லைக் கொடிகளிலே அரும்புகள் நிறைந்திருக் கின்றன. அவை குளிரால் நடுங்குவோரை- தனித்திருந்து வருந்தும் மகளிரைப்- பார்த்துச் சிரிப்பது போலக் காணப்படுகின்றன. இந்த நிலையிலே தலைவி தனித்திருக்கிறாள். கார் காலத்திலே வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற காதலன் இன்னும் வரவில்லையே என்று கவலை கொண்டிருந்தாள். அவள் கவலையைக் கண்டு அவளுடைய தோழியும் துக்கமடைந்தாள். இவ்வளவு கடுமழையிலும் காதலன் வராததைக் கண்டு அவளுக்கு அடக்க முடியாத துன்பம். அவளால் தலைவிக்கு ஆறுதல் மொழி சொல்லவும் தோன்றவில்லை. இதைக் கண்ட தலைவி, தன் துக்கத்தைத்தானே தோழியிடம் சொல்லுகின்றாள். ‘தோழியே! பேரிடி; அதன் ஓசையால் காது செவிடு படுகின்றது. இடியிடிக்கும் போதெல்லாம் உள்ளமும், உடலும் வெடவெட வென்று நடுங்குகின்றது. மழையும் விடாமல் அடித்துக் கொண்டேயிருக்கின்றது. இந்த முல்லை நிலத்திலே உள்ள மெல்லிய முல்லைக் கொடிகளிலே மாதர்களின் பற்களைப் போல மொட்டுக்கள் அரும்பியிருக்கின்றன. இத்தகைய முல்லை நிலத்தையுடைய தலைவனுடைய பிரிவால் நான் வருந்துகிறேன். என் கண்களும் உறங்க மாட்டேன் என்கின்றன. நள்ளிரவிலும் தூங்க மறுக்கின்றன. இவ்வாறு தன் துக்கத்தை உரைத்தாள் தலைவி. இந்த நிகழ்ச்சியைக் காட்டுவதே இச்செய்யுள். பாட்டு ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த கொல்லைப் புனத்த, முல்லை மென் கொடி, எயிறு என முகைக்கும், நாடற்குத், துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே. பதவுரை:- தோழி, ஆர்கலி ஏற்றொடு- மிகுந்த ஓசையுள்ள இடியோடு. கார்தலை மணந்த- மேகத்தின் மழையையும் தன்னிடம் கொண்ட. கொல்லைப் புனத்த- முல்லை நிலத்திலே உள்ள. முல்லை மெல் கொடி. மெல்லிய முல்லைக் கொடிகள். எயிறு என - மாதர்களின் பற்களைப் போல. முகைக்கும்- அரும்பி நிற்கும், நாடற்கு- நாட்டின் தலைவனுடைய பிரிவின் பொருட்டு. என்கண் ஏ- என்னுடைய கண்கள். துயில் துறந்தன ஆல்- தூக்கத்தை விட்டு விட்டன. கருத்து:- தலைவன் இன்னும் வராமையால் நான் தூங்காமல் வருந்துகின்றேன். விளக்கம்:- இது, ஒக்கூர் மாசாத்தி என்னும் புலவர் பாடியது. இவர் புலமை நிறைந்த பெண்மணி. தலைவன் வராமை கண்டு வருந்திய தலைவி தோழியிடம் தன் துயரத்தைச் சொல்லியது. முல்லைத்திணை. ‘துயில் துறந்தன ஆல் தோழி என் கண்ணே’ என்னும் வரி என் கண் துயில் துறந்தன’ என்று மாற்றப்பட்டது. தோழி என்னும் சொல் முதலில் வைக்கப்பட்டது. தலை, ஆல், ஏ அசைச்சொற்கள். ஆர்கலி- மிகுந்த ஓசை. ஏறு- இடி. முகைக்கும்- அரும்பும். முகை- மொட்டு. அறியாமையால் அவதி பாட்டு 187 தலைவியை மணக்கும் பொருட்டுப் பொருள் தேடச் சென்றிருக்கின்றான் தலைவன். அவன் குறித்துச் சென்ற நாளிலே வரவில்லை. தலைவி, அவன் வராமை கண்டு வருந்தினாள். அதைக் கண்ட தோழி தலைவியின் துயரத்தைத் தணிக்க நினைத்தாள். ‘பொருள் தேடப்போன தலைவன், தன் காரியத்திலே வெற்றி பெறவில்லை என்று கருதுகின்றேன். அதனால்தான் அவன் குறித்த காலத்தில் வரவில்லை. கருதிய காரியத்தை எளிதில் முடிக்கும் திறமை அவனிடம் இல்லை யென்று நினைக்கின்றேன்’ என்றாள் தோழி. இது தலைவனுடைய திறமையைப் பழிப்பது போல இருந்தது. தோழி இப்படிக் கூறுவதைத் தலைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தோழியின் வாயை அடக்க வேண்டு மென்று நினைத்தாள். தலைவன் சிறந்த ஆற்றலுடையவன். எண்ணியதை முடிக்கும் திண்ணியன். அவன் கருதிச் சென்ற காரியத்திலே வெற்றி பெற்றுத் திரும்புவான். என் நெஞ்சம் அவன் ஆற்றலை அறியவில்லை. ஆதலால்தான் அவதிப்படுகின்றது. என் துன்பத்திற்குக் காரணம் தலைவன் அல்லன். என் உள்ளத்தின் அறியாமை தான் என் அல்லலுக்குக் காரணம்! என்றாள். இதன் மூலம். தோழி தலைவனைக் குறை கூற இடந்தராமல், தன் கற்புடைமையைக் காத்துக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இப்பாடல். ‘தோழியே என் துன்பத்திற்குக் காரணம் சொல்லுகின்றேன் கேள். உயர்ந்த மலைப்பக்கத்திலே வருடை மான்கள் என்னும் விலங்குகள் வாழும். அந்த வருடை மான்களின் குட்டிகள், தானே சுரப்பெடுத்து ஊற்றுகின்ற தாய்ப்பாலை வயிறார அருந்தும். மலை நிழலிலே விளையாடிக் கொண்டிருக்கும். இத்தகைய மலை நாட்டையுடைய தலைவன் கல்லைவிட உறுதியான நெஞ்ச முள்ளவன். அவன், தான் எண்ணியதை முடிக்கும் திண்மை யுடையவன். அவன் வலிமையை அறியாமையால்தான் என் உள்ளம் வருந்துகின்றது.’ இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப், பெருவரை நீழல் உகளும், நாடன் கல்லினும் வலியன்; தோழி! வலியன் என்னாது மெலியும் என்நெஞ்சே. பதவுரை:- தோழி! செவ்வரை சேக்கை- உயர்ந்த மலைப் பக்கத்திலே தங்கியிருக்கின்ற. வருடை மான்மறி- வருடை மான்களின் குட்டிகள். சுரை பொழி- தம் தாய் மடிகளிலிருந்து தாமே சுரந்து பொழிகின்ற. தீம்பால் ஆரமாந்தி- இனிய பாலை வயிறு நிறையக் குடித்து. பெருவரை நீழல் உகளும்- பெரிய மலைப் பக்கத்து நிழலிலே துள்ளித் திரியும். நாடன்- மலை நாட்டையுடைய தலைவன். கல்லினும் வலியன்- கல்லை விட வலிமையுள்ளவன். வலியன் என்னாது- அவன் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலுள்ளவன் என்று அறியாமல். என் நெஞ்சு மெலியும்- என் நெஞ்சம் வருந்தும். கருத்து:- தலைவன் கருதியதை நிறைவேற்றும் வலிமை யுள்ளவன். இதை நினைக்காமல் என்நெஞ்சம் வருந்துகின்றது. விளக்கம்:- இது, கபிலர் என்னும் புலவர் பாட்டு. தலைவன் திறமையைப் பழித்துப் பேசிய தோழியிடம் தலைவி சொல்லியது. குறிஞ்சித்திணை. செவ்வரை- உயர்ந்தமலை; செங்குத்தான மலை, சேக்கை- தங்கும் இடம்; படுக்கை. வருடைமான்- எட்டுக் கால்களையுடைய ஒரு விலங்கு. இதன் முதுகில் நான்கு கால்கள் இருக்கும் என்பர். என் அழகைக் கெடுக்கும் மாலைக்காலம் பாட்டு 188 அன்பர்கள் துணை செய்யாவிட்டால், பகைவர் துன்புறுத் துவர். அன்பர்கள் அருகில் இருக்கின்றனர் என்று அறிந்தால், விரோதிகள் நெருங்கமாட்டார்கள்; எட்டி நிற்பார்கள். இது இயல்பு. இக்கருத்தை இச்செய்யுளிலே காணலாம். கார் காலத்தைக் கண்ட தலைவி வருந்தியிருக்கிறாள். பொருள் தேடச் சென்ற தலைவன் வாக்களித்தபடி வந்து சேரவில்லை. அதுதான் அவள் நெஞ்சிலே துயருக்குக் காரணம். மனத்துயரை அடக்கிக் கொண்டு அல்லற்படுவதைவிட, அதை அன்புள்ளவர் களிடம் வெளியிட்டுக் கொள்ளுவதால் கொஞ்சம் ஆறுதல் உண்டாவது இயற்கை. ஆதலால் தலைவி, தன் துக்கத்தைத் தோழியிடம் வாய்விட்டுச் சொல்லிச் சிறிது மனச்சாந்தி பெறுகின்றாள். இந்த நிகழ்ச்சியைப் பேசுவதே இப்பாடல். ‘தோழியே! அதோ பார், முல்லைக் கொடிகளிலே மொட்டுக்கள் முற்றி விட்டன; மலரும் பருவத்தை எட்டிவிட்டன. குளிர்ந்த மழையைப் பெற்ற இப்பெரிய முல்லை நிலங்கள், அழகாகச் செழித்திருக்கின்றன. முல்லைக் கொடியின் தோற்றத்தோடு சேர்ந்து அவற்றின் அழகு இன்னும் மிகுந்துவிட்டது. இந்த நிலையிலும் என்னுடைய ஒளி பொருந்திய ஆபரணங்களை யெல்லாம் கழன்று விடும்படி செய்த அவர் மட்டும் இன்னும் வரவில்லை. என் உடம்பு மெலிந்துவிட்டது. ஆதலால் வளையல் போன்ற நகைகள் தாமே கழன்று விடுகின்றன. என் அன்பராகிய அவர் வராமையைக் கண்டு, என் விரோதியாகிய மாலைக்காலம் மட்டும் தவறாமல் வந்துவிட்டது. அது என் அழகைச் சிதைப் பதற்காகவே வந்திருக்கின்றது’ என்றாள் தலைவி. பாட்டு முகைமுற்றினவே முல்லை; முல்லையொடு தகைமுற்றினவே தண்கார் வியன்புலம்; வால் இழை நெகிழ்த்தோர் வாரார்; மாலை வந்தன்று மாண்நலம் குறித்தே. பதவுரை:- முல்லை முகை முற்றின ஏ- முல்லை மொட்டுக்கள் முற்றிவிட்டன. தண்கார்- குளிர்ந்த மழையை யுடைய. வியன் புலம்- பரந்த முல்லை நிலம். முல்லையொடு தகைமுற்றின- முல்லையோடு சேர்ந்து அழகு நிறைந்து விளங்கு கின்றன. வால் இழை- எனது ஒளி பொருந்திய ஆபரணங்களை. நெகிழ்த்தோர்- கழன்று விடும்படி செய்த அவர் மட்டும். வாரார்- இன்னும் வந்திலர். என் மாண் நலம் குறித்து- எனது சிறந்த அழகைச் சிதைக்க நினைத்து. மாலை வந்தன்று- மாலைக்காலம் வந்துவிட்டது. கருத்து:- கார்காலம் வந்து விட்டது; ஆனால் தலைவர் மட்டும் இன்னும் வரவில்லை. விளக்கம்:- இது மதுரை அளக்கர் ஞாழார் மகன் மள்ளன் என்னும் புலவர் பாட்டு. காதலனைப் பிரிந்திருக்கும் தலைவி, கார்காலத்தைக் கண்டு வருந்தித் தன் தோழியிடம் உரைத்தது. முல்லைத்திணை. தசை- அழகு. நலம்-அழகு. வியன் புலம்- பரந்த நிலம். வால்- ஒளி; தூய்மை; வெண்மை. இழை- நகைகள். நண்பனாகிய தலைவன் இல்லாத போது, பகையாகிய மாலை அழகைச் சிதைக்கின்றது. நாளையே திரும்புவேன் பாட்டு 189 தலைவியோடு மகிழ்ந்திருந்த தலைவனுக்குத் திடீர் என ஓர் அழைப்பு வந்தது. அரசன் விட்ட அழைப்பு அது. அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. அந்த அழைப்பைத் தட்டிக் கழித்து விட்டால் அரசனுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்ததாக முடியும். ஆதலால் தலைவன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு புறப்படுகின்றான். அவன் உள்ளத்திலே அரசன் ஆணையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்னும் எண்ணமும் துள்ளுகின்றது. தலைவியை விட்டுப் பிரியக் கூடாது என்ற காதலும் குமுறிக் கொண்டிருக்கின்றது. ‘இன்று செல்வேன்; நாளையே திரும்புவேன்; தலைவியுடன் கூடிக்களிப்பேன்’ என்று உறுதி செய்து கொண்டான். தன் உறுதியைத் தேர்ப்பாகனிடம் உரைத்தான். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். ‘தேர்ப்பாகனே விரைவில் தேரைப்பூட்டு. இன்றே அரசன் ஆணையை நிறைவேற்றப் புறப்பட்டுப் போவோம். காரியத்தை முடித்துவிட்டு நாளையே திரும்பி விடுவோம். மலையிலிருந்து விழும் அருவியைப்போல், நமது வெண்மையான தேர் விரைந்து திரும்பட்டும். தேர்ச்சக்கரங்கள், ஓடும் விரைவால் பாதியளவு மண்ணிலே புதைந்து, இளம் பிறையைப் போல் காணப்படுவதாக, வானத்திலிருந்து வீழ்ந்த கொள்ளி, பயிரை அழிப்பதுபோல, நமது தேர்ச்சக்கரங்களால் பசுமையான பயிர்கள் சிதைந்து துண்டானாலும் பாதகமில்லை. சென்ற காரியம் முடிந்தவுடன், காற்றைப் போல விரைந்து திரும்புவோம். மாலைக்காலத்தில் வந்து சேர்வோம். வரிசையாக வெண்மையான வளையல்களை அணிந்திருக்கும் நமது காதலியை மகிழ்விப்போம். பார்க்கவும், சேரவும், ஆவலை மூட்டும் அவளுடைய மார்பை மணந்து மகிழ்ச்சியடைவோம்’ என்றான் தலைவன். இதுவே இச்செய்யுளில் பொருந்தியிருக்கும் பொருள். பாட்டு இன்றே சென்று வருவது நாளைக் குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக, இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி விசும்பு வீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக், கால் இயல் செலவின், மாலை எய்திச், சில் நிரை வால்வளைக் குறுமகள் பன்மாண் ஆகம் மணந்து உவக்குமே. பதவுரை:- இன்றே சென்று- இன்றேக்கே புறப்பட்டுப்போய். நாளை வருவது - நாளைக்கே திரும்பி வருவோமாக. குன்று இழி அருவியின்- மலையிலிருந்து ஓடி வரும் அருவி நீரைப் போல. வெண்தேர் முடுக- வெண்மையான தேர் விரைந்து வர. இளம் பிறை அன்ன- பாதி மதியைப் போல. விளங்கு சுடர் நேமி- விளங்குகின்ற ஒளியையுடைய சக்கரங்கள். விசும்பு வீழ் கொள்ளியின்- வானத்தி லிருந்து விழுகின்ற கொள்ளி பயிரை அழிப்பது போல. பைம்பயிர் துமிப்ப- பசுமையான பயிர்களை அழிக்கும்படி. கால் இயல் செலவின்- காற்றின் தன்மை போன்ற விரைவுடன். மாலை எய்தி- மாலைக் காலத்திலே வந்து. சில் நிரை- சில வரிசைகளையுடைய. வால்வளை- வெண்மையான வளையல்களை அணிந்த. குறுமகள்- மங்கைப் பருவத்தையுடைய காதலியின். பன்மாண் ஆகம்- பல மாட்சிமையுடைய மார்பை. மணந்து உவக்கும் ஏ- மணந்து மகிழ்ச்சியடைவோம். கருத்து:- இன்று போய் வினையை முடித்துவிட்டு நாளை மாலையே தலைவியைக் கண்டு மகிழத் திரும்புவேன். விளக்கம்:- இது மதுரை ஈழத்துப்பூதன்றேவன் என்னும் புலவர் பாட்டு. அரசன் ஆணையை நிறைவேற்றுவதற்காகத், தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவன் கூறியது. பாலைத்திணை. யானைத் தந்தங்களால் தேர் செய்வது பண்டைய வழக்கம். ஆதலால் தலைவனுடைய தேர் வெண்தேர் ஆயிற்று. முடுகுதல் - விரைந்து செல்லுதல். நேமி- சக்கரம். குறுமகள்- இளம்பெண். மங்கைப் பருவமுள்ளவள். வால் வளை- வெண்மையான வளையல். சங்கினால் வளையல் செய்து போட்டுக் கொள்ளுவது அக்கால வழக்கம். மார்பின் பலவகையான பெருமையைக் குறிக்கப் ‘பன்மாண் ஆகம்’ என்று சொல்லப்பட்டது. காண்பதில் மகிழ்ச்சி; அணைவதால் இன்பம்; நறுமணம்; இவை மங்கையர்களின் மார்பின் மாட்சிகள். பசுக்களும் இன்புறுகின்றன பாட்டு 190 தலைவி தனித்திருக்கின்றாள்; நள்ளிரவு நேரம். அப்பொழுதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. இடியிடிக்கின்றது; மழையும் பெய்கின்றது. இந்த நிலையில் காதலனைப் பிரிந்திருக்கும் அவள் எப்படித்தான் தூங்குவாள்? தூங்காத போது பல எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. அவள் உள்ளத்திலே, தன் காதலன், பொருள் தேடப் பிரிந்த போது செய்த செயல்கள் தோன்றின. அவன் அப்பொழுது நடந்து கொண்ட முறையை நினைத்துப் பார்த்தாள். இப்படிப் பலப்பல எண்ணிக்கொண்டே வருந்தியிருந்தாள் அவள். தலைவியின் துக்கம் அளவு கடந்தது. தன் துக்கத்தை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதை யாரிடம் சொல்வது? தன்னிடம் அன்பு காட்டி ஆதரவளிப்பவரிடந்தானே சொல்ல முடியும்? அவளிடம் ஆறாத அன்பு கொண்ட தோழி தான் அண்டையிலிருந்தாள். அவளிடம் தன் துக்கத்தை வெளி யிட்டாள் தலைவி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதுதான் இச்செய்யுள். ‘தோழியே! அன்று அவர் பொருள் தேடப் புறப்படும் போது என்னிடம் அன்புரைகள் கூறினார். எனது அடர்ந்த தலை மயிரைத் தடவிக் கொடுத்தார். எனது பெரிய தோள்களையும் தடவிக்கொடுத்தார். ஆயினும் அவர் பிரிவை எண்ணி என் உடம்பு இளைக்கத்தான் செய்தது. அதனால் என் கை வளையல்கள் தாமே கழன்று விழுந்தன. இப்படி எனக்குச் சமாதானங் கூறிவிட்டுப் பொருள் தேடச் சென்றார் அவர். இப்பொழுது கொடிய பாம்புகளின் பசுமையான தலைகள் துண்டிக்கும்படி இடி இடிக்கின்றது; மழையும் பெய்கின்றது. இந்த நடுஇரவிலே, பல பசுக்கள் நிறைந்த கொட்டிலிலே நல்ல காளை அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்கிறது. இது அசையுந்தோறும், அதன் கழுத்திலே கட்டியிருக்கும் மணியின் ஓசை மட்டுமே கேட்கின்றது. இந்த மணியோசை என்னை உறங்கவிட வில்லை. அங்குள்ள பசுக்கள் அந்த நல்ல காளையுடன் இன்ப மடைந்திருப்பதையே அந்த மணியோசை காட்டுகின்றது. இதைத் தலைவர் அறிவாரோ? இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். தலைவி துன்பத்தைச் சொல்லுவதாக அமைந்தது. பாட்டு நெறியிரும் கதுப்பொடு பெருந்தோள் நீவிச் செறிவளை நெகிழச் செய் பொருட்கு அகன்றோர் அறிவர் கொல்? வாழி தோழி பொறிவரி வெம்சின அரவின் பைம்தலை துமிய, உரமுரும் உரறும் அரையிருள் நடுநாள். நல்லேறு இயங்குதோறு இயம்பும், பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக்குரலே. பதவுரை:- வாழி தோழி- வாழ்க தோழியே. நெறி இரும் கதுப்பொடு- அடர்ந்த கரிய கூந்தலுடன். பெரும் தோள் நீவி- பெரிய தோள்களையும் தடவி எனக்குத் தேறுதல் சொல்லி. செறிவளை நெகிழ- இறுகிய எனது கை வளையல்கள் கழன்று விழும்படி. செய்பொருட்டு- தேடும் பொருளுக்காக. அகன்றோர்- என்னை விட்டுப் பிரிந்தவர். பொறி வரி வெம் சினம்- புள்ளி களையும் வரிகளையும் கொடிய கோபத்தையும், உடைய. அரவின்- பாம்பின். பைம் தலை துமிய- பசுமையான தலை துண்டிக்கும்படி. உரம் உரும் உரறும் -வலிமையான இடிகள் முழங்குகின்ற. அரை இருள் நடுநாள்- நள்ளிரவிலே. பல் ஆன் தொழுவத்து- பல பசுக்கள் நிறைந்த மாட்டுக் கொட்டகையிலே. நல் ஏறு- நல்ல காளை. இயங்குதோறு இயம்பும்- செல்லும் போதெல்லாம் ஒலிக்கும். ஒரு மணிக்குரல் ஏ- ஒரு மணியின் ஓசையை அறிவர் கொல்- அறிவாரோ. கருத்து:- இங்கு நான் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ? விளக்கம்:- இது, பூதம் புல்லன் என்னும் புலவர் செய்யுள். கார்காலம் வந்தும், பொருள் தேடச் சென்ற தலைவர் திரும்பி வராதது கண்டு, தலைவி, தோழியிடம் உரைத்தது. முல்லைத்திணை. ‘வாழி தோழி’ என்னும் தொடர் முதலிலும், ‘அறிவர் கொல்’ என்னும் தொடர் இறுதியிலும் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது ‘பல் ஆன் தொழுவத்து நல் ஏறு இயங்கு தோறு இயம்பும் ஒரு மணிக்குரல்’ என்று பின் இரண்டடிகள் மாற்றி வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. கதுப்பு- தலைமயிர். நீவி- தடவி. செறிவளை- இறுகியிருந்த வளையல். உரும்- இடி. அரை இருள் நடு நாள்- பாதி இரவு என்னும் நடு இரவிலே. நல் ஏறு -நல்ல காளை; சிறந்த காளை. ‘பசுக்கள் காளையோடு கூடி இன்புறுகின்றன நானோ துன்புறுகின்றேன்’ என்று தலைவி வருந்தினாள். அவர் வரட்டும் சொல்கிறேன் பாட்டு 191 நமக்கொரு துன்பம் வந்து விட்டால் நமது நண்பர்களை நினைப்போம். நமக்குத் துணை செய்யக் கூடிய அன்புள்ளவர் களைக் கட்டாயம் நினைப்போம். ஆபத்துக் காலத்தில் அவர்கள் நமது அருகில் இல்லையே என்று வருந்துவோம். அந்த வருத்தத்தில் அவர்கள் மேல் நமக்குக் கோபங்கூட வரலாம். இப்பொழுது உதவி செய்யாத அவர்கள் நம்மிடம் வரும்போது அவர்களிடம் பேசக் கூடாது; அவர்களைப் பார்க்கவுங் கூடாது என்றுகூட எண்ணு வோம். இது மனித இயற்கை. இந்த இயல்பை இப் பாடலிலே காணலாம். தலைவன் பிரிந்து போய்விட்டான். தலைவி தனித்திருக் கின்றாள். அவன் வரக்கூடிய பருவம் வந்து விட்டது. ஆனால் அவன் மட்டும் வரவில்லை. இதைக் கண்டு தலைவி வருந்து கின்றாள். வருத்தத்தோடு அவளுக்குக் கோபமும் வருகின்றது. தன் துன்பத்தையும், சினத்தையும் தன் தோழியிடம் உரைக்கின்றாள். ‘தலைவன் காலமல்லாக் காலத்திலே பிரிந்து சென்றான். அவன் வரட்டும்; என்ன செய்கிறேன் பார்! அவனோடு முகங் கொடுத்துப் பேசமாட்டேன். அவன் என் கூந்தலைத் தொட்டுத் தடவ வந்தால் தொடாதே எட்டி நில் என்று சொல்லுவேன்’ என்று கூறினாள் தலைவி. தலைவியின் இந்த உள்ளக்கிடக்கையை எடுத்துரைப்பதுதான் இச்செய்யுள். ‘தோழியே! அதோ பார்! இதனால் எனக்கு உண்டாகும் துன்பத்தை நான் எப்படித்தான் சொல்லுவேன். பெரிய மரக் கிளைகள். அவற்றிலே பறவைக் கூட்டங்கள் அவை அன்புடன் ஒன்றோடு ஒன்று சேர்ந்து சிந்தை களிக்கின்றன; சிறகுகளை அடித்துக் கொண்டு சிரித்து விளையாடுகின்றன. அவை கூடி மகிழும் களிப்பால் காதலனைப் பிரிந்து தனித்திருக்கும் மகளிரின் துன்பத்தைப்பற்றிச் சிறிதும் கருதவே யில்லை. தம் இனிய குரலால் அவை தம் துணைவர்களைக் கூவி அழைத்துக் கொள்கின்றன. இந்தக் குரலைக் கேட்டுங்கூட அவர் பிரிந்து போனார். என்னிடத்தில் அன்பில்லாத அயலாரைப் போலப் பிரிந்து போனார். அவர் திரும்பி வரும் போது என்ன செய்கிறேன் பார். அவர் வந்தவுடன் என்னை மகிழ்வூட்டுவதற்காக என்னிடம் நெருங்குவார்; இனிய மொழிகள் சொல்லுவார்; மலர்கள் நிறைந்த என் கூந்தலைச் சீவி அழகு படுத்த வருவார். அப்பொழுது ‘என் கூந்தலை மலர்களால் அழகுபடுத்த வேண்டாம்; என்னையும் தொட வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் நான்.” இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு உதுக்காண் அதுவே! இது என் மொழிகோ! நோன் சினையிருந்த இரும் தோட்டுப்புள்இனம் தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளாத் தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய. ஏதிலாளர் இவண் வரின், போதின் பொம்மல் ஓதியும் புனையல்! எம்முந் தொடாஅல்! என்கு வெம் மன்னே. பதவுரை:- உது காண் அது- அதோ பார் அதனை. இது என் மொழிகோ- இதனால் எனக்குண்டான துன்பத்தை எப்படி எடுத்துரைப்பேன். நோன் சினையிருந்த- வலிய கிளைகளிலே உட்கார்ந்து கொண்டிருந்த. இரும் தோட்டுப் புள் இனம்- பெரிய கூட்டமாகிய பறவை இனங்கள். தாம் புணர்ந்தமையின்- தாம் ஒன்றோடு ஒன்று கூடிக் களித்த காரணத்தால். பிரிந்தோர் உள்ளா- காதலனைப் பிரிந்து வருந்துவோரைப் பற்றிச் சிறிதும் நினைக்காமல். தீம்குரல் அகவ- தமது இனிய குரலால் ஒன்றையொன்று அழைத்துக் கொள்வதை. கேட்கும் நீங்கிய- கேட்டும் நம்மை விட்டுப் பிரிந்த. ஏதிலாளர்- நம்மிடம் அன்பற்ற அயலாரைப் போன்றவர். இவண் வரின்- இங்கு மீண்டும் வரும் போது, போதின்- மலர்களால், பொம்மல் ஓதியும்- நிறைந்த கூந்தலையும். புனையல்- அலங்கரிக்க வேண்டாம். எம்மும் தொடால்- எம்மையும் தொட வேண்டாம். என்குவெம்- என்று கூறுவோம். கருத்து:- தலைவர் வந்தால் அவரை என் அருகில் நெருங்க விடமாட்டேன். விளக்கம்:- இப்பாடலின் ஆசிரியர் பெயர் காணப் படவில்லை. ‘என் துன்பத்தைப் பற்றி எண்ணாமல் தலைவர் பிரிந்து போனார். அவர் வந்தால் என்னைத் தொடவிட மாட்டேன் என்று தோழியிடம் தலைவி சொல்லியது. ஏ, மன், ஏ, அசைச்சொற்கள். தொடாஅல்- உயிர் அளபெடை நோன்- வலிமை. தோடு- கூட்டம். இன்பத்திலே மூழ்கியிருப்பவர், பிறர் துன்பத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். துன்பத்தை அனுபவிப்பவர்தாம் பிறர் துன்பத்தைப் பற்றியும் உணர்வார்கள்; இக்கருத்தை ‘தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளா’ என்ற அடியால் அறியலாம். நான் வருந்தாமல் இருக்க முடியுமா? பாட்டு 192 இளவேனிற் காலத்தைக் காதலர்கள் சேர்ந்து களித்திருக்கும் காலம் என்பர். இக்காலத்தில் பறவைகளும் பறந்து மகிழ்ந்து விளையாடும்; அவை மரக்கிளைகளிலே கிளைத்திருக்கும் கொழுந்துகளைக் கோதி மகிழும்; மலர்ந்து மணம் வீசும் மலர்களிலே உள்ள மகரந்தங்களை உடம்பெல்லாம் பூசிக் கொள்ளும்; அவற்றில் உள்ள தேனையும் அருந்தி மகிழும். இத்தகைய இளவேனிற் பருவத்திலே தலைவனின்றித் தனித்திருக்கின்றாள் ஒரு தலைவி. அவள் பறவைகளின் இன்ப வாழ்வைப் பார்த்து ஏக்கமடைகின்றாள். இப்பறவைகள் தங்கள் காதலர்களுடன் இணைந்து இன்புறுகின்றன; இத்தகைய பேறு எனக்குக் கிடைக்கவில்லையே; என்பதுதான் அவள் ஏக்கம். தலைவியின் ஏக்கத்தைக் கண்ட தோழி அவளுக்கு எத்தனையோ ஆறுதல் மொழிகள் சொன்னாள். ‘தலைவர் வந்து விடுவார்; நீ உள்ளங் கலங்க வேண்டாம்; தலைவர் நம்மிடம் அன்புள்ளவர்; அவர் வராமலிருக்க மாட்டார்; என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். அப்படியும் தலைவியின் துக்கம் தணிய வில்லை. அவள் நெஞ்சத்தால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. வாய்விட்டு அழவும் தொடங்கிவிட்டாள்; கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்படி அழுதாள். அப்பொழுதும் தோழி ஏதெதோ ஆறுதல் மொழிகளைச் சொல்லிக்கொண்டே இருந்தாள். அது கேட்ட தலைவி அவளுக்கு மறுமொழியுரைத்தாள். அந்த மறுமொழிதான் இச்செய்யுள். ‘தலைவன் இல்லாமையால் நான் மிகவும் துன்புறுகின்றேன். எவ்வளவுதான் பொறுத்துப் பார்த்தாலும் என் துன்பத்தை என்னால் தாங்க முடியவேயில்லை. இந்த நிலையில் இனி நீ அழவேண்டாம்; தலைவர் இங்கே வந்து விடுவார்; அவர் வராமல் தங்கிவிட மாட்டார். நீ அவரில்லாமல் வருந்துவது போல, அவரும் நீ இல்லாமல் வருந்துவார். உனக்குள்ள துக்கம் அவருக்கும் உண்டு அவர் உன்னிடம் அன்புள்ளவர்! நீ அவரிடம் எவ்வளவு காதல் கொண்டிருக்கிறாயோ, அவ்வளவு காதல் அவரும் உன்னிடம் கொண்டிருக்கின்றார்; ஆதலால் வந்து விடுவார்; நீ வருந்தாதே’ என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றாய். உன் சொற்கள் என் உள்ளத்தில் எழவில்லை. இதுவோ இளவேனிற் காலம். மின்னுகின்ற ஒளியுள்ள சிறகுகளையுடைய குயில்களைப் பார். அவை மாமரத்தின் கிளைகளிலே அமர்ந்து, மாம்பூக்களில் உள்ள மகரந்தங்களைக் கோதுகின்றன. அந்த மகரந்தப் பொடிகள் அக்குயில்களின் சிறகுகளிலே அப்பிக் கொள்ளுகின்றன. இதனால் அச்சிறகுகள் பொன்னை உரைத்த உரை கல்லைப் போல் காணப்படுகின்றன. இத்தகைய இளவேனிற் காலத்திலும் அவர் வரவில்லை. நானும் என் துக்கம் தாங்க முடியாமல், எனது கூந்தலைத் தடவிக் கொண்டிருக்கின்றேன். என் கூந்தலும் எண்ணெய் தடவாமலும், சீவாமலும், மலர் அணியாமலும் வெறுமையாகக் கிடக்கின்றது. இக்கூந்தலைத்தான் தடவிக் கொண்டு துன்பத்தால் வாடுகின்றேன்! இதுவே இச் செய்யுளில் அமைந்த பொருள். இது தலைவி சொல்வது போலப் பாடப்பட்டது. பாட்டு ஈங்கே வருவர், இனையல், அவர் என, அழா அற்கோ வினியே நோய் நொந்துறைவி மின்னின் தூவி கருங்குயில், பொன்னின், உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந்தாது கொழுதும் பொழுதும், வறும் குரல் கூந்தல் தைவரு வேனே. பதவுரை:- நோய் நொந்து- துன்பத்தால் வருந்தி. உறைவி- இருக்கின்றவளே. அழாஅற்கோ இனியே- அழாமலிரு இனிமேல். அவர் ஈங்கே வருவர்- அவர் இப்பொழுது வந்து விடுவார். இனையல்- துன்புறாதே. என- என்று கூறுகின்றாய். மின்னின் தூவி- பளபளப்பான இனிய சிறகுகளையுடைய. கருங்குயில்- கருமையான குயில். பொன்னின் உரை திகழ்- தன் உடம்பு பொன்னை உரைத்த பொடியோடு காணப்படுகின்ற. கட்டளை கடுப்ப- உரை கல்லைப் போல் தோன்றும்படி. மாசினை- மா மரத்தின் கிளையிலே உள்ள. நறும் தாது- மலர்களின் நறுமண முள்ள மகரந்தங்களை. கொழுதும் பொழுதும்- கோதுகின்ற இந்த இளவேனிற் காலத்திலும். வறும் குரல் கூந்தல்- அவர் இல்லாமையால் வற்றிக்கிடக்கின்ற கொத்தான கூந்தலை. தை வருவேன் ஏ- தடவிக் கொண்டிருக்கிறேன். கருத்து:- தலைவருடைய பிரிவை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வருந்துகின்றேன். விளக்கம்:- இது கச்சிப்பேட்டு நன்னாகையார் என்னும் புலவர் பாட்டு. இளவேனிற் பருவத்திலே, தலைவனைப் பிரிந் திருக்கும் தலைவி, தன் துக்கத்தை வெளியிட்டது. பாலைத் திணை. “நோய் நொந்துறைவி, அழாற்கோ இனியே, அவர் ஈங்கே வருவர் இனையல் என” முதல் இரண்டடிகள் கொண்டு கூட்டப் பட்டன. அழாற்கோ- அழாதே. உறைவி- உறைகின்றவளே. இனையல்- வருந்தாதே. தூவி- சிறகு. கடுப்ப- போல. கட்டளை- உரைகல். குரல்- தொத்து. இது சிக்கல் பிடித்த தலை மயிரைக் குறித்தது. குயிலின் இறகிலே மாம்பூக்களின் மஞ்சள் நிறமுள்ள மகரந்தம் படிந்திருக்கின்றது. அத்தோற்றம் பொன்னுறைத்த கல்லைப் போல் காணப்படுகின்றது. கொழுதுதல்- மூக்கால் கோதுதல். பொறுமைக்குக் காரணம் அவர்தான் பாட்டு 193 அறிவுள்ளவர்கள் அடக்கமுடையவராயிருப்பர். அவர் களைப் புகழ்ந்தால் நாணம் அடைவார்கள். புகழ்வதற்குரிய தன்மை அவர்களிடம் இருந்தாலும் அதனால் செருக்கடைய மாட்டார்கள். தன் பெருமைக்குக் காரணம் தன் நண்பர்கள் தாம் என்று சொல்லிக் கொள்ளுவார்கள். இது தான் உயர்ந்த பண் புள்ளவர்களின் தன்மை. இப்பண்பு ஆண்களுக்கும் பெண்க ளுக்கும் பொதுவாகும். இச்சிறந்த பண்பை எடுத்துரைக்கின்றது இச் செய்யுள். காதலித்துக் களவு மணம் செய்து கொண்ட மணமக்கள் இருவர்; அவர்கள் இப்பொழுது கற்பு மண வாழ்விலே வாழ்கின்றனர். பலரும் பாராட்டும்படி இல்லறம் நடத்துகின்றனர். அவர்களுடைய மனைவாழ்க்கையைக் கண்டு மகிழ்வதற்காக, தோழி அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தாள். தலைவியின் சிறந்த நடத்தையைக் கண்டு மகிழ்வடைந்தாள். ‘நீ மணந்து கொள்ளும் நாள் வரையிலும் பொறுமையுடன் இருந்தாய்; உன் கற்பையும், அழகையும் காப்பாற்றிக் கொண்டி ருந்தாய்; என்று பாராட்டிப் பேசினாள். உடனே தலைவி ‘நான் பொறுத்திருந்ததற்குக் காரணம் என்னுடைய வலிமையன்று. தலைவன் என்னிடம் அன்புள்ளவன்; இரக்கமுள்ளவன்; அவன் என்னிடம் காட்டிய நீங்காத கருணை தான் என் பொறுமைக்குக் காரணம்; எனது பெண்மை நலம் அழியாமலிருந்ததற்குக் காரணம் என்று மறுமொழியுரைத்தாள். இதன் மூலம் தனது அடக்கத்தையும், சிறந்த பண்பையும் காட்டிக் கொண்டாள். ‘தோழியே, மலைநாட்டையுடைய என் தலைவன் சிறந்த பண்புள்ளவன். அவனுடைய நாட்டு மலையிலே பல சிறிய சுனைகள் உண்டு. அச்சுனைகளின் வாய்கள் மிகவும் குறுகி யிருக்கும். அவை கள்ளை ஊற்றி வைத்திருக்கும் நீலக் குப்பியைப் போலக் காணப்படும். அச்சுனையின் உள்ளே பிளந்த வாயையுடைய தவளைகள் இருக்கும். அவை, தினைப்புனத்திலே, கிளிகளை ஓட்டுகின்ற மகளிர் அடிக்கும் தட்டைப் பறையின் ஓசையைப் போல் கத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மலை நாட்டையுடைய தலைவன் அவன். முன்பு- களவு மணக் காலத்தில்- ஒரு திங்களில்- முழுநிலாப் போதிலே என் தோளைத் தழுவிக் கொண்டான் தலைவன். அப்பொழுது அவன் தோளிலே வீசிய முல்லை மொக்கின் மணம், இன்றும் வீசிக் கொண்டிருக்கின்றது. இக்காரணத்தால்தான் என் நலம் சிதையாமலிருந்தேன்.’ இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன, இட்டு வாய்ச்சுனைய, பகுவாய்த் தேரை, தட்டைப் பறையின் கறங்கும்; நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னெடுந் தோளே; இன்றும் முல்லைமுகை நாறும்மே. பதவுரை:- மட்டம் பெய்த- கள்ளை ஊற்றி வைத்த. மணிக்கலத்து அன்ன - நீல நிறமுள்ள குப்பியைப் போன்ற. இட்டுவாய்- சிறிய வாயையுடைய. சுனைய - சுனைகளிலேயுள்ள. பகுவாய்த் தேரை- பிளந்த வாயையுடைய தவளைகள். தட்டைப் பறையின்- கிளிகளை ஓட்டும் தட்டைப் பறையைப் போல. கறங்கும் நாடன்- ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன். தொல்லைத் திங்கள்- முன்பு ஒரு திங்களில். நெடுவெண் நிலவின்- நெடு நேரமிருக்கும் வெண்மையான நிலாக்காலத்திலே. மன் நெடுந்தோள்- எனது பொருந்திய பெரிய தோளை. மணந்தனன்- தழுவிக் கொண்டான். இன்றும்- அதனால் இப்பொழுதும். முல்லைமுகை- முல்லை மொட்டின் மணம். நாறும் ஏ- வீசிக் கொண்டிருக்கின்றது. கருத்து:- காதலன் களவுக் காலத்தில் காட்டிய அன்பு இன்றளவும் என்னைப் பாதுகாத்தது. விளக்கம்:- இது அரிசில் கிழார் என்னும் புலவர் பாட்டு. தலைவியின் இல்லற வாழ்வைக் காணச் சென்ற தோழியிடம் தலைவி தலைவனுடைய அன்பைப் பற்றி அறிவித்தது. ஏ- அசைச்சொற்கள். மட்டம்- கள்; தேன். மட்டு என்பது மட்டம் என்று வந்தது. மணிக்கலம்- கண்ணாடிக்குப்பி. தட்டைப்பறை- தட்டுகின்ற பறை தினைத்தட்டையை ஒடித்து ஒன்றோடு ஒன்று ஓசை உண்டாகும் படி தட்டுதல். இட்டுவாய்- சிறிய வாய்கள் வைத்த குப்பி சிறிய வாயையுடைய சுனைக்கு உவமை. நெஞ்சம் கலங்குகின்றது பாட்டு 194 சொன்னபடி செய்ய வேண்டும். சொல்லைக் காப்பாற்றுவது தான் சிறந்த முறை. வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் செல்வாக்குக் குறையும். குறித்த கெடுப்படி செயலைச் செய்து முடிக்காவிட்டால், அவநம்பிக்கைக்கு ஆளாவோம். நாம் ஒருவருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் அவர் நம்மேல் சினமுறுவார். நமது வாக்குறுதியை நம்பியவர், நம்மைக் காட்டிலும் வலியவராயிருந்தால், நமக்குத் தீங்கு செய்யவும் முயல்வர்; நம்மை வலியுறுத்திக் கட்டாயப் படுத்தி- வேலை வாங்கிக் கொள்ளப் பின்வாங்கமாட்டார். நமது வாக்குறுதியை நம்பியவர் நம்மைவிட எளியவராயிருந்தால் மனம் வருந்துவர்; வேதனைப்பட்டு வெம்புவார். நம் உதவியால் தான் வாழ வேண்டும்- வாழ முடியும் என்று நினைப்பவர் வேறு என்ன தான் செய்ய முடியும். இந்தப் பண்பை எடுத்துக்காட்டுவதுதான் இச்செய்யுள். தலைவன், கார் காலத்திலே வந்துவிடுகின்றேன் என்று சொல்லிவிட்டுப் பொருள் தேடப் போனான். கார்காலம் வந்து விட்டது. கார்காலம் வந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதைக்கண்ட தலைவி, தலைவனை இன்னும் காணவில்லையே என்று வருந்தியிருந்தாள். அவள் வருந்துவதைத் தோழி உற்று நோக்கினாள். உடனே அவளிடம், தான் வருந்துவதற்கான காரணத்தைத் தலைவி எடுத்துரைத்தாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதுதான் இச்செய்யுள். ‘தோழியே! என் நெஞ்சத்தின் நிலைமையை என்னென்று சொல்லுவது? அதன் வேதனையை அளவிட்டுச் சொல்ல முடியாது. மேகங்கள் பளிச்சுப் பளிச்சென்று மின்னுகின்றன. வானத்திலே எழுந்து கூடி நின்று முழங்குகின்றன. இதுவே எனக்குப் பெருந்துன்பத்தைத் தருகின்றது. இது ஒன்று தானா? வானம் இப்படி மின்னுவதை மயில்கள் பார்க்கின்றன; முழங்குவதையும் அவை கேட்கின்றன. உடனே அந்த இடி முழக்கத்திற்கு எதிராகக் காட்டில் உள்ள மயில்கள் எல்லாம் விரைந்து ஆரவாரம் செய்கின்றன. இவ்வாறு எனக்கு வேறாக- எதிராக- பகையாக இந்த இரண்டும் கலந்து வந்தன. இந்த இடியோசை- மயிலோசை இரண்டையும் கேட்டு எனது பேதை மனம் பெரிய துன்பத்தை அடைந்து கலங்குகின்றது.’ இதுவே தலைவி சொல்லியதாக இச்செய்யுளில் அமைந் திருக்கும் பொருள். பாட்டு என் எனப் படுங்கொல் தோழி! மின்னுவர வான் ஏர்பு இரங்கும்; ஒன்றோ? அதன் எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும்; ஏதில கலந்த இரண்டற்கு என் பேதை நெஞ்சம் பெரு மலக்கு உறுமே? பதவுரை:- தோழி என் எனப்படும் கொல்- என் நெஞ்சின் நிலைமையை என்னென்று சொல்லப்படும்? மின்னுபு- மின்னிக் கொண்டு. வான் ஏர்பு- மேகம் வானத்தில் எழுந்து. இரங்கும்- முழங்கும். ஒன்றோ - இது ஒன்று மட்டுமா என்னை வருத்துவது? அதன் எதிர்- அந்த இடி முழக்கத்திற்கு எதிராக. கான மஞ்ஞை - காட்டில் உள்ள மயில்கள் எல்லாம். கடிய ஏங்கும்- விரைந்து கூடி ஆரவாரிக்கின்றன. ஏதில கலந்த- எனக்கு வேறாக எதிர்த்துச் சேர்ந்து வந்த இரண்டற்கு - இந்த இரண்டுக்கும் எதிர் நிற்க முடியாமல். என் பேதை நெஞ்சம்- எனது பேதை மனம். பெருமலக்கு உறும்- பெரிய கலக்கத்தை அடையும். கருத்து:- கார்காலம் வந்து விட்டது; அவர் வரவில்லை. ஆதலால் என் நெஞ்சம் கலங்குகின்றது. விளக்கம்:- இது கோவர்த்தன் என்னும் புலவர் பாட்டு. கார்ப்பருவத்தைக் கண்ட தலைவி. தன் துக்கத்தைத் தோழியிடம் உரைத்தது. முல்லைத்திணை. கொல், ஏ- அசைச்சொற்கள். வான்- மேகம். ஏர்பு- எழுந்து கடிய- விரைவாக! கடுங்குரலால் என்றும் கூறலாம்; மயிலின் குரல் காதுக்கு இனிமை தராது. ஏதில - வேறானவை; எனக்குத் துணை செய்யாதவை. மலக்கு- கலக்கம். என்னைத் துன்புறுத்தும் பகை ஒன்றாயிருந்தாலும் ஒருவாறு பொறுத்துக் கொள்ளலாம் பகை இரண்டாயிருக்கும் போது, பேதையாகிய நான் அவற்றை எப்படி எதிர்த்து நிற்க முடியும்? அதனால்தான் என் நெஞ்சம் கலக்கமடைகின்றது என்றாள் தலைவி. இரண்டற்கு என் பேதை நெஞ்சம் பெருமலக்குறும் என்ற தொடர் இதை விளக்குகின்றது. இப்பொழுது அவர் எங்குளரோ பாட்டு 195 மாலை நேரம்; கதிரவன் வெப்பம் தணிந்தது. அவனும் அத்த கிரியை அடைந்து மறைந்துவிட்டான். பறவையினங்கள் தமது உறைவிடத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கின்றன. மெல்லிய தென்றற்காற்று வீசுகின்றது. இந்த நேரத்திலே தலைவி தனித்து நிற்கின்றாள். தலைவன் பிரியும் போது மாலைக் காலத்திலே வந்து விடுகிறேன் என்று வாக்களித்து விட்டுத்தான் போனான். ஆனால் வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் தலைவி. மாலைக் காலமும் மறைந்து கொண்டிருக்கிறது. இருட்டு நேரமும் வரப்போகின்றது. காதலன், தான் சொல்லிய சொல்லை நிறைவேற்றவில்லையே என்ற கவலை ஒருபுறம். அவனோடு சேர்ந்திருக்கும் இன்பத்தைப் பெறாமல், தனித்திருக்கின்றோமே என்ற துக்கம் ஒரு புறம். இவ்விரண்டிலும் நெருக்கப்பட்ட தலைவி, தன் மன வேதனையைத் தோழியிடம் உரைத்தாள் இந்த நிகழ்ச்சியைச் சொல்லுவது தான் இச்செய்யுள். ‘தோழியே! நம்மைத் தடவிக்கொண்டு வீசுகின்ற இந்தக் காற்றைப் பார். இந்தக் காற்று என் உடம்பின் மேல் உரசிக் கொண்டு அடிக்கின்றது. இதனால் என் அழகு குலைந்தது. நான் இதற்கு முன் அழகாகச் செய்யப்பட்ட பதுமையைப் போலிருந்தேன். இப்பொழுது இக்காற்றுப் பட்டதனால் என் உடலின் தோற்றம் வேறுபட்டு விட்டது. எனது முன்னைய அழகு மறைந்து விட்டது. என்னுடைய இந்த நிலையை அவர் அறிந்து கொள்ள வில்லை. தான் விரும்பிய செயலை முடிப்பதற்காக என்னை விட்டுப் பிரிந்து போனார். கதிரவனும் தன் வெப்பந் தணிந்தான். அத்தமன கிரியை அடைந்து விட்டான். துன்பத்தைத் தரும் மாலைப் பொழுது, வந்துவிட்டது. இது பிரிந்தவர்கள் தங்கள் காதலரை நினைக்கும் நினைப்பைச் சுமந்து கொண்டு வந்திருக் கின்றது. இந்த மாலைக் காலத்திலே திரும்பி வந்து விடுவதாக வாக்களித்துச் சென்ற என் காதலர் எங்கிருக்கின்றாரோ? இந்த மாலைக்காலம் துன்பத்தைத் தருவதாகும்; இதனால் என் காதலி வருந்துவாள் என்று நினைக்காமல் இருக்கின்றாரோ அவர்; அய்யோ; இதற்கு நான் என் செய்வேன்.’ இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். தலைவியின் கூற்று. பாட்டு சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் படர் சுமந்து எழுதரு பையுள் மாலை, யாண்டுளர் கொல்லோ, வேண்டுவினை முடிநர்; ‘இன்னாது, இரங்கும்’ என்னார் அன்னோ; தைவரல் அசை வளி மெய்பாய்ந்து ஊர்தரச், செய்வுறு பாவை அன்ன, என் மெய்பிறிது ஆகுதல் அறியாதோரே! பதவுரை:- சுடர்சினம் தணிந்து- கதிரவன் வெம்மை தணிந்து, குன்றம் சேர- அத்தமன கிரியை அடையவும். படர் சுமந்து- காதலரைப் பிரிந்தவரிடம் சேர்ப்பதற்காக நினைப்பு மூட்டையைச் சுமந்து கொண்டு வருகின்ற. பையுள்மாலை- துன்பத்தைத் தரும் இந்த மாலைக் காலத்திலே, வேண்டு வினை- தாம் விரும்பிய செயலை. முடிநர்- முடிக்கச் சென்ற அவர். யாண்டு உளர் கொல்லோ- எங்கேயிருக்கின்றாரோ. இன்னாது- இந்த மாலைப் பருவம் மிகவும் துன்பமுடையது. இரங்கும்- இதைக்கண்டு காதலி வருந்துவாள். என்னார் - என்று நினைக்க மாட்டார். அன்னோ - அய்யோ தைவரல் தடவிக்கொண்டு வரும். அசைவளி- அசைக்கின்ற காற்று. மெய்பாய்ந்து ஊர்தர - உடம்பிலே பாய்ந்து தீண்டு வதனால். செய்வுறு பாவை அன்ன- அழகாகச் செய்யப்பட்ட பதுமையைப் போன்ற. என் மெய்- எனது உடம்பு. பிறிது ஆகுதல் அழகு சிதைந்து வேறுபடுவதை. அறியாதோர் ஏ- அறியாத வராகி விட்டார் அவர். கருத்து:- மாலைக் காலத்தால் மெலிகின்றேன். இதைத் தலைவர் அறியவில்லை. விளக்கம்:- இது தேரதரன் என்னும் புலவர் செய்யுள் மாலைப் பருவத்தில், தன் காதலன் வராமலிப்பதைக் கண்ட தலைவி, தன் துயரத்தை எடுத்துரைத்தது. நெய்தல்திணை. யாண்டுளர் கொல்லோ வேண்டு வினை முடிநர் என்ற அடி ‘வேண்டு வினை முடிநர் யாண்டுளர் கொல்லோ’ என்று மாற்றப்பட்டது. ஓ, ஏ- அசைச்சொற்கள். சுடர்- சூரியன். சினம்- வெப்பம். வெயில். குன்றம்- சூரியன் மாலையிலே அத்தகிரி யென்னும் மலையிலே மறைவான் என்பது புராணக்கதை. படர்- நினைவு. மாலைக் காலத்திலே காதலர்கள். தனித்திருக்கும் போது, பிரிந்தோரை நினைத்து வருந்துவர். இந்த நினைப்பை மூட்டுவது மாலைக்காலம். பையுள்- துன்பம். வேப்பங்காயும் வெல்லக்கட்டி பாட்டு 196 அன்புக்குரியவர்கள் செய்யும் அனைத்தும் இன்பந் தரும்; அவர்கள் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அது அழகுள்ளதாகக் காணப்படும்; அரும்பொருளாகப் போற்றப்படும். அவர்கள் எப்படிப் பேசினாலும் அப்பேச்சிலே இனிமை நிரம்பியிருப் பதாகவே தோன்றும். அவர்கள் சுவையற்ற பண்டத்தை உண்ணக் கொடுத்தாலும் அது மிகுந்த சுவையுள்ளதாகவே சுவைக்கப்படும். வேப்பங்காயைக் கொடுத்தாலும் அது வெல்லக்கட்டி போல் இனிக்கும். நமது அன்பையிழந்தவர்கள் செய்கை இதற்கு மாறாகக் காணப்படும். அவர்கள் செய்கை, பேச்சு, பண்டம் எல்லாம் கசப்பாகவே தோன்றும். இது நாம் அனுபவத்தில் அறியும் உண்மை. நம்மால் நேசிக்கப்படாதவர்கள் உள்ளன்புடன் செய்யும் வினைகளும் நமக்கு வெறுப்பையே தரும். இந்த உண்மையை அடக்கிக் கொண்டிருக்கும் செய்யுள் இது. தலைவி ஊடியிருந்தாள். அவளை மகிழச் செய்வதற்கு எண்ணினான் தலைவன். தலைவியின் பிணக்கைத் தவிர்த்துத் தன்னுடன் கூடி மகிழச் செய்ய வேண்டும் என்று தோழியை வேண்டிக் கொண்டான் அவன். அப்பொழுது தோழி அவனுக்கு மறுமொழியுரைத்தாள். ‘நீர் இப்பொழுது மாறிவிட்டீர்! முன்பிருந்த அன்பும் ஆதரவும் இப்பொழுது உம்மிடம் இல்லை. முன்பு என் தலைவியிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தீர். இப்பொழுது அந்த அன்பைத் துறந்துவிட்டீர். ஆகையால் உம்மைத் தலைவி எப்படி ஏற்றுக் கொள்ளுவாள்? என்பது தான் தோழியுரைத்த மறுமொழி. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பதுதான் இச்செய்யுள். ‘நீர் என் தலைவியிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த அந்தக் காலம் வேறு. அப்பொழுது என் தலைவி ஒரு வேப்பங் காயைக் கொடுத்தாலும் அதை ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்வீர்! ‘இது வேப்பங்காய் அன்று; இனிமை நிறைந்த வெல்லக் கட்டி; ஆ! ஆ! எவ்வளவு இனிமை!’ என்று சொல்லி அதைச் சுவைத்துச் சுவைத்துத் தின்பீர். ‘இப்பொழுதோ பாரிவள்ளலின் பறம்பு மலையிலே, குளிர்ந்த சுனையிலே உள்ள தெளிந்த நீரைத் தந்தாலும், அதுவும் தை மாதத்துக் குளிர்ச்சியான நீரைக் கொடுத்தாலும் அது உமக்குப் பிடிக்கவில்லை. குளிர்ச்சியில்லை; சூடாயிருக்கின்றது; இனிமை யில்லை; உப்புக்கரிக்கின்றது என்று சொல்லுகின்றீர். தலைவரே! உமது அன்பின் தன்மை இப்படியிருக்கின்றது’ என்றாள் தோழி. இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, ‘தேம் பூங்கட்டி’ என்றனிர்; இனியே, பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர். தைஇத் திங்கள் தண்ணிய தரினும், ‘வெய்ய உவர்க்கும்’ என்றனிர்; ஐய! அற்றால் அன்பின் பாலே. பதவுரை:- வேம்பின் பைம்காய்- வேம்பின் பசுமையான காயை. என் தோழி தரினே- என் தோழி கொடுத்தாலும். தேம்பூம் கட்டி- அதைச் சுவைத்து இனிய வெல்லக்கட்டி. என்றனிர்- என்று மெச்சிக் கொண்டீர். இனியே- இப்பொழுதோ வென்றால். பாரி பறம்பின்- பாரியின் பறம்பு மலையிலே உள்ள. பனிச்சுனை- குளிர்ந்த சுனையிலே ஊறிய. தெள்நீர்- தெளிந்த நீரை. தைத்திங்கள்- தைமாதத்திலே. தண்ணிய தரினும்- குளிர்ந்துள்ள நீரைக் கொடுத்தாலும். வெய்ய- இது சூடானது; உவர்க்கும்- உப்புக் கரிக்கும். என்றனிர்- என்று சொல்லுகின்றீர். ஐய- தலைவனே. அன்பின் பால் ஏ- அன்பின் தன்மை. அற்று ஆல்- அத்தகையது. கருத்து:- முன்பு நீர் என் தலைவியிடம் அன்பு கொண்டிருந்தீர்; இப்பொழுது அதை மறந்தீர். விளக்கம்:- இது, மிளைக்கந்தன் என்னும் புலவர் பாட்டு ஊடியிருந்த தலைவியின் பால் தூதாக இருந்து, சமாதானம் செய்து வைக்கும்படி தலைவன் தோழியை வேண்டிக் கொண்டான். அப்பொழுது தோழி அவனிடம் உரைத்தது. மருதத்திணை. ‘ஐய அன்பின் பால் ஏ. அற்று ஆல்’ என்று இறுதி அடியில் பதமாற்றம் செய்யப்பட்டது. ஏ, ஆல்- அசைச் சொற்கள்; தை இ- உயிரளபெடை,. பைம்காய்- பசுங்காய். பழுக்காதது. இதன் கசப்பு பழத்தைவிட மிகுதி, பூங்கட்டி- வெல்லக்கட்டி; கற் கண்டென்றும் சொல்லலாம். பாரி: கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவன் வாழ்ந்த மலை பறம்பு. அந்த மலையைச் சூழ்ந்த நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர். அந்த மலையில் உள்ள சுனைநீர் மிகுந்த இனிமையும் குளிர்ச்சியும் உள்ளதாகப் பாராட்டப்பட்டிருக்கின்றது. தலைவன் தலைவியின்பால் அன்புள்ளவனாயிருந்த காலத்தில், அவள் கைப்பட்ட வேப்பங்காயை வெல்லக்கட்டி என்று புகழ்ந்தான். அவளிடம் அன்பு குறைந்த காலத்தில் இயல்பாகவே குளிர்ச்சியும், இனிமையுமுள்ள சுனைநீரை வெறுத்தான். அவள் கைப்பட்ட காரணத்தால் வெப்பமானது, உவர்ப்பது என்று தள்ளினான். இச்செயல்கள் அவனது அன்புடைமையையும்’ அன்பின்மையையும் காட்டின. குளிர் அன்று; கூற்றமே பாட்டு 197 குளிர்காலம் வந்து விட்டது. வாடைக்காற்று சில்சில் லென்று வீசுகின்றது. அதனோடு மழையும் பெய்து கொண்டிருக்கின்றது. அந்த மழையையும் குளிரையும் தாங்க முடியாமல் மக்கள் அனைவரும் இல்லத்திலே மறைந்து கொண்டிருக்கின்றனர். விலங்குகளும், பாதுகாப்பான இடங்களிலே பதுங்கிக் கிடக்கின்றன. பறவைகளும் தங்கள் கூடுகளிலே அடங்கிக் கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் காதலனைப் பிரிந்த காரிகை ஒருத்தி கலங்கியிருக்கின்றாள். குளிரையும், மழையையும் தாங்க முடியாமல் தவிக்கின்றாள். இச்சமயத்தில் நம் துயரைத் தணிக்கும் காதலன் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றாள். அவள் கவலையைக் கண்ட தோழி ‘தலைவர் வந்து விடுவார்; கார்ப்பருவம் வந்ததை அவரும் பார்ப்பார். இதனால் பிரிந்தவர் வருந்துவார் என்பதும் அவருக்குத் தெரியும். ஆதலால் நீ வருந்த வேண்டாம். பொறுத்திரு’ என்றாள். தலைவி ‘நான் என்ன செய்வேன்! நானும் எவ்வளவோ பொறுத்துத்தான் பார்க்கின்றேன். என்னால் துன்பம் தாங்க முடியவில்லை. மிகவும் மெலிகின்றேன். என்னுடைய மெலிவைக் கண்டு இக்கூதையும், மழையும், இடியும் என்னைப் பயமுறுத்து கின்றன. என்னுடைய உடலையும், உயிரையும், வேறு பிரிக்கும் கூற்றுவனைப் போல் வந்து அச்சுறுத்துகின்றன. இந்த அச்சத் திலிருந்து நான் எப்படித் தப்ப முடியும் என்று தெரியவில்லை, என்றாள். இந்த நிகழ்ச்சியை உரைப்பதுதான் இச்செய்யுள். ‘தோழியே நான் என்னதான் செய்வேன்! தலைவர் வருவார் என்று சொல்லுகின்றாய். ஆனால் அவர் இன்னும் வரவில்லை. நீர் நிரம்பிய மேகம்; கரிய மேகம்; மின்னல் மின்னும் மேகம்; இடியிடிக்கும் மேகம்; மழையைப் பொழிகின்ற மேகம்; வாடைக் காற்றோடு சேர்ந்து கொண்டது. இப்படிக் கூதிரோடு கலந்து ஒன்றுபட்ட மேகம் உண்மையில் மேகம் அன்று; இது கூதிர் காலமும் அன்று. இது குளிர்காலம் என்னும் உருவத்திலே வந்திருக்கும் கூற்றமேயாகும். காதலரைப் பிரிந்து, உள்ளமும், உடலும், மெலிந்து வருந்தும். என்னை துன்புறுத்தவே இந்தக் கூற்றுவன் வந்திருக்கின்றான். ஆதலால் நான் இப்பொழுது துன்புறாமல்- அஞ்சாமல் எப்படியிருப்பேன்? என்றாள் தலைவி. இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு யாது செய்வாம் கொல் தோழி! நோதக, நீர் எதிர் கருவிய கார் எதிர்கிளை மழை, ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய, கூதிர் உருவின் கூற்றம், காதலர்ப் பிரிந்த என் குறித்து வருமே? பதவுரை:- யாது செய்வோம் கொல் தோழி- தோழியே என்னதான் செய்வோம். நீர் எதிர்- நீரை ஏற்றுக்கொண்ட. கருவிய- மின்னல், இடி முதலிய தொகுதியையுடைய, கார் கதிர்- கார் காலத்தைப் பொருந்திய. கிளைமழை- தோன்றிய மழையானது. ஊதையம் குளிரொடு- ஊதைக் காற்றின் குளிர்ச்சியோடும். பேதுற்று மயங்கிய- ஒன்றுபட்டுக் கலந்த. கூதிர் உருவின்- குளிர் காலம் என்னும் உருவத்தையுடைய. கூற்றம்- கூற்றுவன். காதலர் பிரிந்த -காதலரைப் பிரிந்து வருந்திருக்கின்ற. என் குறித்து வரும் -என்னைக் குறிபார்த்துத் துன்புறுத்துவதற்கு வருகின்றது. கருத்து:- குளிர்காலத்திலும் தலைவர் வந்திலர். ஆதலால் நான் இனி உயிர் வாழமாட்டேன். விளக்கம்:- இது, கச்சிப்பேட்டு நன்னாகையார் என்னும் புலவர் செய்யுள். கார் காலத்தில் தலைவனைப் பிரிந்திருந்த தலைவி தன் தோழியிடம் உரைத்தது. நெய்தல் திணை. ‘யாது செய்வாம் கொல்’ என்பதற்கு, இத்துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு என்ன செய்யலாம், என்றும் பொருள் சொல்லலாம், கொல் ஏ-அசைச்சொற்கள். கருவி- தொகுதி; கூட்டம். இடி, மின்னல், மழை இவை மேகத்தின் தொகுதியாகும். ஊதை- வாடைக்காற்று. இது வடக்கிலிருந்து வீசுவது. இது, கார்காலத்தைக் கூற்றுவனாக உருவகம் செய்த பாட்டு. கூற்றுவன்- கூறு செய்பவன்; உடலையும் உயிரையும் வேறுபடுப்பவன். தினைப்புனத்திற்கு வருக பாட்டு 198 ஒருவனும் ஒருத்தியும் களவு மணம் புரிந்து கொண்டனர். அவர்கள் அடிக்கடி சந்திப்பது அரிதாயிருந்தது. தலைவி தன் வீட்டிலிருந்தாள். ஆதலால் அவளைச் சந்திப்பது தலைவனுக்குக் கடினமாயிருந்தது. தலைவியும் அவ்வாறே தலைவனைக் காண முடியாமல் வருந்தினாள். இச்சமயத்திலே தலைவிக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. தலைவியைத் தினைப்புனக் காவலுக்கு அனுப்ப அவளுடைய பெற்றோர்கள் முடிவு செய்தனர். இம்முடிவு அவளுக்கு அடக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்தது. இந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியைத் தலைவனிடம் தெரிவிக்கும்படி தன் தோழியிடம் சொல்லி யிருந்தாள் அவள். ஒருநாள், தலைவன், தலைவியைக் காண்பதற்காக, வீட்டின் கொல்லைப்புறத்திலே வந்து நின்றான். அவன் செய்த அடையாளத்தால், தோழி அவன் வந்திருப்பதை அறிந்தாள். அவனிடம் சென்றாள். ‘தலைவனே நீ இங்கே நிற்க வேண்டாம். இனித்தினைப் புனத்திலே வந்து சந்திக்கலாம். நீ வந்து நிற்பதை எமது தாய் பார்த்துவிட்டால் ஆபத்து. அவன் கொல்லைப் பக்கம் வரும் நேரம் ஆயிற்று. நீ இன்னும் காலம் தாழ்த்த வேண்டாம்; என்று கூறித் தலைவனை அனுப்பிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைப்பது தான் இப்பாட்டு. யா என்னும் மரத்தை வெட்டி வீழ்த்திய இடம்; அவ் விடத்திலே மரத்தைச் சுட்டகரிகள் காணப்படும். அவ்விடத்தில் வளர்ந்துள்ளது தினைப்புனம். அங்குள்ள செந்தினைகளின் பசுமையான அடிகள் கரும்பைப் போலக் காணப்படும். தினைக்கதிர்கள் அழகாகப் பெண் யானையின் துதிக்கைகளைப் போலத் தோற்றமளிக்கும். பால் நிறைந்த தினைக்கதிர்கள் கரியைப் பிடிக்கும் குறட்டைப் போலத் தலைகவிழ்ந்திருக்கும். இவ்வாறு விளைந்து நிறைந்திருக்கின்ற பசுமையான தினைக் கதிர்களைத் தின்பதற்காகக் கிளிகள் வந்து விழும். அக்கிளிகளை ஓட்டும் வேலைக்காக நாங்கள் அத்தினைப் புனத்திற்கு வருகின்றோம். பகைவரைக் கொல்லும் வேற்படையையுடையவன் மலையமான் திருமுடிக்காரி என்பவன். அவனுடைய முள்ளூர்க் கானம் சிறந்த செல்வங்களையுடையது; செழிப்புள்ளது அக் கானத்திலே வளர்ந்த சந்தன மரங்கள் மிகுந்த நறுமணம் தருவன. அந்தச் சந்தனத்தைப் பூசிய மார்பையுடைய தலைவனே! இனி நீ இங்கு வரவேண்டாம் இப்பொழுது இங்கே நிற்கவும் வேண்டாம். எம் தாய் இப்பக்கம் வருவாள். ஆதலால் நீ இப்பொழுதே போய்விடு’ என்றாள் தோழி இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு யாஅம் கொன்றை மரம் சுட்ட இயவின், கரும்பு மருள் முதல பைம்தாள் செந்தினை, மடப்பிடித் தடக்கையன்ன, பால்வார்பு, கரிக்குறட்டு இறைஞ்சிய, செறிகோள் பைங்குரல் படுகிளி, கடிகம்சேறும்; அடுபோர் எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து, ஆரம் நாறும் மார்பினை; வாரற்க; தில்ல; வருகுவள் யாயே பதவுரை:- யாம் கொன்றை- யாமரத்தை வெட்டிய. மரம் சுட்ட- மரத்தைச் சுட்ட கரி நிரம்பிய. இயவின்- இடத்திலே. கரும்பு மருள் முதல்- கரும்பைப் போன்ற அடியையுடைய. பைம் தாள் செம்தினை- பசுமையான தாளையுடைய சிவந்த தினைக் கதிர்கள். மடம்பிடி- அழகிய பெண்யானையின். தடம்கை அன்ன- நீண்ட பருத்த கைகளைப் போலக் காணப்பட்டு. பால் வார்பு- கதிர்களில் பால் நிரம்பிய பின். கரிக்குறட்டு- கரியைப் பிடித்த குறட்டைப் போல. இறைஞ்சிய- வளைந்த. செறி கோள் பைங்குரல்- நிறைந்து முற்றிய பசுமையான கதிர்களில். படுகிளி- தின்னுவதற்காக வந்து விழுகின்ற கிளிகளை. கடிகம் சேறும்- ஓட்டுவதற்காகத் தினைப் புனத்தை அடைவோம். அடுபோர்- கொல்லுகின்ற போரிலே வல்ல. எஃகு விளங்கு- வேற்படை விளங்குகின்ற. தடம்கை- பெரிய கைகளையுடைய. மலையன்- மலையமான் திருமுடிக்காரி என்பவனது. கானத்து- முள்ளூர்க் கானத்திலே வளர்ந்த. ஆரம் நாறும்- சந்தனத்தின் மணம் வீசுகின்ற. மார்பினை- மார்பை யுடையவனே. வாரற்க- இனி இங்கே வரவேண்டாம். தில்ல- இதுவே எங்கள் விருப்பம். வருகுவள் யாய் ஏ- இன்னும் நீ இங்கே நின்றால், எம் தாய் வருவாள், உன்னைப் பார்த்து விடுவாள். கருத்து:- இனி நீ இங்கே வரவேண்டாம். தினைப் புனத்திற்கு வந்து தலைவியைச் சந்திக்கலாம். விளக்கம்:- இது கபிலர் பாட்டு. பகற்காலத்திலே கொல்லைப்புறத்திலே வந்து நின்ற தலைவனிடம் தோழி கூறியது. இனி நீ இங்கே வரவேண்டாம் தினைப்புனத்திலே வந்து சந்திக்கலாம். என்று உரைத்தாள். குறிஞ்சித்திணை. இயவு- இடம். மருள்- போன்ற. செறிகோள்- நிறைந்து முற்றிய. குரல்- கதிர். படுகிளி- படுகின்ற கிளிகள்; வீழ்கின்ற கிளிகள். தில்ல- விருப்பம். ஆரம்-சந்தனம். யாஅம்- ஒருவகை மரம். யா அம்- உயிர் அளபெடை. ஏ- அசை. யாமரத்தை அழித்து, சுட்டுப்பொசுக்கி, அவ்விடத்திலே தினை விதைப்பது வழக்கம். செழிப்புள்ள நிலத்திலே வளர்ந்த தினையின் கதிர், யானைத் துதிக்கை போலக் காணப்படும். வளைந்த கதிர் குறடுபோலக் காணப்படும். நீண்ட கதிருக்குத் துதிக்கை உவமானம். பால் முற்றி வளைந்த கதிருக்குக் குறடு உவமானம். மலையன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன். மலைய மான் திருமுடிக்காரி என்பது இவனுடைய முழுப்பெயர். முள்ளூர்க் கானம் என்பது இவனுக்குரிய காடு. அது வளம் நிறைந்தது. முள்ளூர்க்கானத்திலே விளைந்த சந்தனம் மணத்திலே சிறந்தது. காதல் மறு பிறப்பிலும் தொடரும் பாட்டு 199 பண்டைத் தமிழர்களுக்கு மறு பிறப்பிலே நம்பிக்கை யுண்டு. இவ்வுலகுக்கு மேல் இன்ப உலகம் ஒன்றுண்டு; இங்குப் பெறமுடியாத இன்பத்தை அவ்வுலகிலே பெறலாம் என்றும் நம்பி வந்தனர். இவ்வுலகிலே துன்புறும் மக்களுக்கு இந்த மறுபிறப்பு நம்பிக்கை ஒரு சமாதானத்தை அளித்து வந்தது; மறுவுலக நம்பிக்கை ஆறுதலை அளித்து வந்தது. இந்தச் சமாதானத்திற்கும், ஆறுதலுக்கும் இடமில்லாவிட்டால் உழைத்து வருந்தும் மக்களிலே பலர் உயிர் வாழ முடியாது. ஓயாமல் உழைக்கும் மக்களிலே பலர் வறுமையால் வாடுகின்றனர்; உடையோ, உண்டியோ, உறையுளோ கிடைக்காமல் ஓடாக வற்றிச் சாகின்றனர். இவர்களும் உழைத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இவர்கள் சாகத்துணியாமல் உழைப்பதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இம்மையில் எத்தகைய தொல்லைகளுக்கு ஆளானாலும், மறுமையிலாவது இன்பம் அடைவோம் என்ற நம்பிக்கைதான் அக்காரணமாகும். மறுபிறப்பு உண்டோ இல்லையோ; மறு உலகம் உண்டோ இல்லையோ அவை பற்றிய நம்பிக்கையால் பல மக்கள் சாகாமல் உயிர் வாழ்கின்றனர், என்பது மட்டும் உண்மை. இந்த உண்மையை இச்செய்யுள் எடுத்துக் காட்டுகின்றது. தலைவி, தினைப்புனங் காவலுக்காக வருவாள். அப்போது தலைவன் அவளைச் சந்திப்பான். இவ்வாறு அவர்களுக்குள் அடிக்கடி சந்திப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. தலைவியின் தோற்றத்தைக் கண்டு பெற்றோர்கள் உள்ளத்திலே ஏதோ ஐயம் பிறந்துவிட்டது. ஆதலால் அவர்கள் தலைவியை இனி வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதில்லை என்று முடிவு செய்தனர். இந்த முடிவைத் தோழி தலைவனுக்கு அறிவித்தாள். இதைக் கேட்டதும் தலைவன் நெஞ்சிலே கலக்கம் பிறந்தது. இனி அவளை எப்படிச் சந்திக்க முடியும் என்ற திகைப்பு உண்டா யிற்று. உடனே அவன் தன் நெஞ்சைப் பார்த்துச் சொல்லிக் கொண்டான். ‘இனி இவளைக் காண்பது அரிது என்று நினைக் கிறேன். அவளைக் காண முடியாவிட்டாலும் என் காமநோய் அறுந்து விடாது. அது மிகவும் வலிமையுள்ளது. ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வருவது. ஆதலால் எப்படியும் பல நாட்கள் கடந்த பின்பாவது, அவளை என் காதலியாக அடைந்தே தீர்வேன்; என்று சொல்லிக் கொண்டான். இந்த நிகழ்ச்சியை உரைப்பதே இச்செய்யுள். வாழ்க நெஞ்சே! வருந்தாதே! இனி இவளை எளிதிலே காண முடியாதுதான். ஆயினும் அழியாத நன்மை ஒன்றுண்டு. இவளுடைய கூந்தல் மணம் கமழுவது. ஓரி என்னும் வள்ளல் வலிமையான தேரையுடையவன். வறியோர்க்கு வரையாது வழங்கும் வள்ளல். அவனுடைய காட்டிலே படிந்து வீசுகின்ற காற்றால் இவளுடைய அடர்ந்த கூந்தல் என்றும் நறுமணம் கமழும். இத்தகைய கரிய குளிர்ச்சியான கூந்தலையுடையவள் என் தலைவி. அழகிய மாமை நிறமும் உடையவள். அவளிடம் இன்று நான் கொண்டிருக்கும் அன்பு- நட்பு - காதல் என்றும் அழியாது. இக்காம நோய் எந்தக் காரணத்தாலும் அறுந்து போகாது. தொடர்ந்து மறுவுலகத்திலும் நமக்குப் பயன் தரும். இப்பொழுது இவளை அடைய முடியாவிட்டாலும், மறுபிறவியிலே இவளை எய்தி இணைபிரியாதிருந்து இன்புறுவோம்; இதுவே இச் செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். பாட்டு பெறுவது இயையாது ஆயினும், உறுவது ஒன்று உண்டு மன்; வாழிய நெஞ்சே; திண்தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறிவளி, கமழும் நெறிபடு கூந்தல் மையீர் ஓதி, மாஅயோள் வயின், இன்றை யன்ன நட்பின், இந்நோய் இறுமுறை எனஒன்று இன்றி, மறுமை உலகத்தும் மன்னுதல் பெறுமே. பதவுரை:- பெறுவது- இனி இவளைக் காணப்பெறுவது. இயையாது ஆயினும்- முடியாதாயினும். உறுவது ஒன்று உண்டு- வருகின்ற நன்மை ஒன்று உண்டு. வாழிய நெஞ்சே- கலங்காதே வாழ்க மனமே. திண் தேர்- வலிய தேரையுடைய. கைவள் ஓரி- வள்ளலாகிய ஓரியன். கானம் தீண்டி- காட்டிலே படிந்து. எறி வளி- நறுமணத்துடன் வீசுகின்ற காற்றால். கமழும்- வாசனை வீசும். நெறி படு கூந்தல்- அடர்ந்த கூந்தலாகிய. மை ஈர் ஓதி- கரிய குளிர்ந்த தலைமயிரையுடைய. மாயோள் வயின்- மாமை நிறமுள்ள அவளிடம், இன்றை நட்பின் அன்ன- இன்றைய நட்பினைப் போன்ற இந்நோய்- இக்காம நோய். இறு முறை என் ஒன்று இன்றி- அழிந்து விடுதல் என்பது ஒன்று இல்லாமல். மறுமை உலகத்தும் -மறு பிறப்பிலும். மன்னுதல் பெறும்- தொடர்ந்து நிலைத்துப் பயன் தரும். கருத்து:- இப்பிறப்பிலே தலைவியைக் காணப் பெறேனா யினும் மறுபிறப்பில் அவளை அடைந்து இன்புறுவேன். விளக்கம்:- இது, பரணர் என்னும் புலவர் செய்யுள். தலைவியைப் பெற்றோர்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டனர். என்று தோழி உரைத்ததைக் கேட்ட தலைவன் தன் மனத்திற்குச் சொல்லியது குறிஞ்சித்திணை. ‘இன்றையன்ன நட்பின்’ என்பது ‘இன்றை நட்பின் அன்ன’ என்று மாற்றப்பட்டது. மா, அ, யோள்- அ உயிர் அளபெடை. ஏ- அசை. மன்- அசை. ஓரி- கடையேழு வள்ளல்களிலே ஒருவன். மறுமை - மறுபிறவி. இறுதல்- அறுதல், அழிதல். அவர் மறந்தாலும் நாம் மறவோம் பாட்டு 200 கார்ப்பருவம் வந்துவிட்டது. தலைவி இன்னும் தலைவன் வரவில்லையே என்று வருந்தினாள். அவன் கார்காலத்தில் திரும்பி விடுவதாக உறுதிமொழி கூறிப் போனான். அவன் உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையே என்றுதான் தலைவி பெருங்கவலை கொண்டாள். தலைவியின் கவலையைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் சொன்னாள். ‘நீ காண்பது உண்மையான மழைக் காலம் அன்று. மழைக்காலம் போல் பொய்யாகக் காணப்படுகின்றது. உண்மையான கார்காலம் இனிமேல் தான் வரப்போகிறது. அதற்குள் தலைவர் வந்து விடுவார். நீ வீணாகத் துக்கமடைய வேண்டாம்’ என்று உரைத்தாள். அதற்குத் தலைவி, இது உண்மையான கார்காலந்தான் என்று சொல்லிக் கார்காலத்தின் நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினாள். இதை உரைப்பதுதான் இச்செய்யுள். ‘தோழியே இதோ பார்! இந்தப் பருவத்தையா கார்ப்பருவம் அன்றென்று சொல்லுகின்றாய். மழை பெய்த குன்றுகளிலிருந்து வெள்ளம் பெருகி ஓடி வருகின்றது. அவ் வெள்ளம் பூமணத்துடன் கலங்கிய நீராக வருகின்றது. அந்தக் கலங்கல் நீரின் மேல் பல மலர்கள் உதிர்ந்திருக்கின்றன. அம்மலர்களையும் அவ் வெள்ளம் சுமந்து கொண்டு வருகின்றது. கார் காலத்து மழையை மாலையிலும் மேகங்கள் பெய்து கொண்டேயிருக்கின்றன. மழையோடு இனிய ஓசையையுடைய இடியும் ஒலிக்கின்றது. இந்தக் கார்காலம் வருவதற்கு முன் வருவேன்; நீ அஞ்சாதே; வருந்தாதே என்று எனக்குப் பாதுகாப்பான சொற்களைச் சொல்லிவிட்டுப் போனார். அவர் இப்பொழுது வரவில்லை. நம்மை அவர் மறந்துவிட்டாரோ அறியோம். ஆனால் நாம் மட்டும் அவரை மறக்காமலிருக் கின்றோம். இது இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். தலைவியின் கூற்று. பாட்டு பெய்த குன்றத்து பூநாறு தண்கலுழ், மீமிசைத் தாஅய வீஇ சுமந்து வந்து இழி தரும் புனலும்; வாரார் தோழி; மறந்தோர் மன்ற; மறவாம் நாமே; காலமாரி மாலை மாமழை இன்னிசை உருமினம் முரலும் முன், வரல், ஏமம் செய்து அகன்றோரே. பதவுரை: பெய்த குன்றத்து- மழை பெய்த குன்றிலேயுள்ள. பூ நாறு- பூக்களின் மணம் பொருந்திய. தண்கலுழ்- குளிர்ந்த கலங்கல் நீர். மீமிசை தாய- மேலே பரந்த. வீ சுமந்து வந்து- மலர்களையும் சுமந்து கொண்டு வந்து. புனலும் இழி தரும். வெள்ளமும் ஓடி வருகின்றது. காலமாரி- கார்காலத்து மழையை யுடைய, மாலை மாமழை- மாலைக் காலத்துப் பெரிய மேகங்கள். இன்இசை உரும் இனம் முரலும்- இனிய இசை போல இடியை உடையதாகி முழங்கும். முன்வரல் - கார்காலத்திற்கு முன்பே வருவேன் என்று. ஏமம் செய்து- என்னைப் பாதுகாக்கும் மொழிகளைக் கூறி. அகன்றோர் ஏ- சென்றவர். வாரார் தோழி- இன்னும் வரவில்லை. தோழியே. மன்ற மறந்தோர்- நிச்சயமாக அவர் நம்மை மறந்துவிட்டார். நாம் ஏ மறவாம்- நாம் மட்டும் அவரை மறக்காமலிருக்கின்றோம். கருத்து:- கார்ப்பருவத்திலும் தலைவர் வரவில்லை. அவர் சொல்லிய சொல்லை மறந்து விட்டார். நாம் மட்டும் அவரை மறக்கவில்லை. விளக்கம்:- ஒளவையார் பாட்டு. கார்காலம் வந்து விட்டது. தலைவன் உறுதிமொழி சொல்லியபடி திரும்பி வரவில்லை. அது கண்ட தலைவி, தன் தோழியிடம் உரைத்தது. முல்லைத்திணை. ‘வாரார் தோழி; மறந்தோர் மன்ற, மறவாம் நாமே’ என்ற அடிகள் இறுதியில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. ‘இழிதரும் புனலும்’ என்பது ‘புனலும் இழி தரும்’ என்றும், ‘மறந்தோர் மன்ற’ என்பது ‘மன்ற மறந்தோர்’ என்றும், ‘மறவாம் நாமே, என்பது ‘நாம் மறவாம்’ என்றும் மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. தா அய; வீஇ; உயிர் அளபெடைகள். ஏ- அசை. கலுழ்- கலங்கல். மீ மிசை- மேல். தாய் பரந்த. மன்ற- உறுதியாக, நிச்சயமாக. இடியோசை இனிமையற்றதுதான். ஆயினும்; மழையை எதிர்பார்த்திருக்கும் உழவர்களுக்கு இடியோசை இன்பத்தை அளிக்கும். மழை பெய்யும்; நிலத்தை உழலாம்; விதைக்கலாம் என்ற ஆவலுடன் இன்பமடைவார்கள். ஆதலால், ‘இன்னிசை உருமினம்’ என்று கூறப்பட்டது. அவர் மறந்தார்; ஆனால் நாம் மறவோம்’ என்று தலைவி கூறியது. அவளுடைய கற்புடைமையை விளக்குவதாகும்.