சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 18 சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் இலக்கியம் என்றால் என்ன? முதல் பகுதி இலக்கியம் என்றால் என்ன? இரண்டாம் பகுதி சிறுகதைச் சோலை ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 18 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 496 = 504 படிகள் : 1000 விலை : உரு. 315/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல்களைக் காலவரிசையில் பொருள்வழிப் பிரித்துச் சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலைப் பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன் முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத் தனத்தைக் கண்டித்தும், பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலைக் கொடுத்தவர், பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும் பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் ஆசிரியர் முன்னுரை 3 1. சித்தர்களின் சிறப்பு 9 2. சித்தர்களின் விஞ்ஞான ஆராய்ச்சி 16 3. சித்தர்களின் கொள்கை 27 4. பாம்பாட்டிச் சித்தர் பாடல் 34 5. இடைக்காட்டுச் சித்தர் பாடல் 49 6. அகப்பேய்ச் சித்தர் 56 7. குதம்பைச் சித்தர் 60 8. கடுவெளிச் சித்தர் 63 9. அகத்தியர் ஞானம் 66 10. அழுகணிச் சித்தர் 72 11. கொங்கணச் சித்தர் 75 12. வால்மீகர் ஞானம் 82 13. காகபுசுண்டர் பாடல்கள் 86 14. சிவவாக்கியர் 93 15. ஞானவெட்டியான் 121 16. ஔவையார் ஞானக்குறள் 127 இலக்கியம் என்றால் என்ன? முதல் பகுதி முன்னுரை 143 1. இலக்கியம் என்றால் என்ன? 147 2. இலக்கியம் பற்றிய கருத்துக்கள் 152 3. இலக்கியமும் கொள்கையும் 157 4. இலக்கியம் அன்றும் இன்றும் 163 5. இலக்கியப் பெருக்கம் 168 6. திருக்குறள் இலக்கியமே 179 7. மக்கள் இலக்கியம் 190 8. வசன இலக்கிய வளர்ச்சி 199 9. வசன இலக்கியம் வளர்த்த விதம் 207 10. பழய இலக்கியங்கள் கூறும் உண்மைகள் 218 11. ஒன்றெனக் காண்பதே தமிழன் உள்ளம் 234 12. கன்னித் தமிழ் 243 13. சிந்தையை அள்ளும் செந்தமிழ் 256 இலக்கியம் என்றால் என்ன? இரண்டாம் பகுதி அணிந்துரை 263 1. இலக்கியங்களால் என்ன பயன்? 267 2. இலக்கியங்கள் ஏன்? 278 3. இலக்கியம் அன்றும் இன்றும் (2) 285 4. உரைநடையும் கவிதையும் 290 5. பாட்டும் கூத்தும் 301 6. சிறுகதைகள் 307 7. கொள்கைக் கட்டுப்பாடு 312 8. தமிழும் வடமொழியும் 318 9. பழமையிலே புதுமை 327 10. புலவர்கள் யார்? 334 11. உண்மைப் புலவன் 346 12. உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள் 357 13. இலக்கியம் வளரவேண்டுமானால்...? 367 14. தீர்ப்புக் கூறுங்கள் 371 சிறுகதைச் சோலை அணிந்துரை 379 பாராட்டுரை 383 1. ஆற்றில் குதித்த அலமு 385 2. பாழுந் தெய்வமே 394 3. புது உலகக் காட்சி 399 4. முதல் மரியாதை 405 5. கேட்டேனா பாவி! 411 6. மரண யோகம் 417 7. பொடி நன்றாயில்லையா? 424 8. ஆ. கமலாவா! 428 9. காணாமல் போன கலைமகள் 433 10. தணிகாசலம் யார்? 441 11. ஐயோ! நீங்களா? 450 12. நல்ல ஜாதகம் 457 13. வண்டிக்காரக் குப்பன் 466 14. செட்டியார் செல்வம் 474 15. முதல் அனுபவம் 481 16. ஸ்ரீமதி நண்பர் 483 17. சிரித்தால் என்ன? 486 சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் (1960) ஆசிரியர் முன்னுரை தமிழிலே எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய இலக்கியம் - கலை - ஒன்று இருக்கிறதென்றால் அது வைத்தியக் கலையே யாகும். தமிழில் உள்ள வைத்தியக் கலைக்கும் சித்த வைத்தியம் என்று பெயர். சித்தர்களால் கண்டறிந்து கையாண்ட வைத்திய முறைக்குச் சித்த வைத்தியம் என்று பெயர். சித்தர் வைத்தியம், சித்த வைத்தியம் என்று வழங்குகின்றது. இச்சிறந்த கலை- மக்களைப் பாதுகாக்கும் கலை- எந்தக் காலத்தில் பிறந்தது என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. இந்நாட்டிலே பண்டைக் காலத்திலே வாழ்ந்த அறிவாளிகள் - சித்தர்கள்- பொதுமக்கள் நோயின்றி வாழ்வதற்காக- நீண்ட காலம் உறுதியான உடம்புடன் வாழ்வதற்காக- நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றுச் சிறந்து வாழ் வதற்காக வைத்தியக் கலையை வளர்த்தனர். வைத்தியக் கலைக்கு நிகராக வேறு எந்தக் கலையையும் ஒப்பிட முடியாது. சாதி, மத, மொழி, இனவேற்றுமைகள் இல்லாமல், எல்லா மக்களுக்கும் உதவுவது இக்கலை ஒன்றுதான். இன்றும் இக்கலையின் பயனை ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரையில் அனுபவித்து வருகின்றனர். நமது நாட்டிலே வைத்தியக் கலையை வளர்த்த சித்தர்கள் வைத்தியக் கலை வளர்ச்சியில் ஈடுபட்டதோடு நிற்கவில்லை; வைத்தியக் கலையில் வளம் பெற்று- உடல் நலம் பெற்று- வாழும் மக்களின் அறிவை வளர்க்கும் ஞானக் கலையையும், அறிவுக் கலையையும் வளர்த்திருக்கின்றனர்; மனித சமுதாயம் ஒன்று என்ற அடிப்படைக் கருத்துடன் பல அறிவுரைகளைக் கூறியிருக் கின்றனர். சித்தர்கள் தம் ஞானப் பாடல்களிலே, மருந்துண்ணாமலே உடம்பை நோயின்றி வைத்திருக்கும் வழியையும் கூறியிருக் கின்றனர். யோக சாதனத்தால் உடம்பைப் பாதுகாக்கும் வழிதான் அது. யோகப் பயிற்சியின் சிறப்பை ஞானப் பாடல்களிலே காணலாம். பண்டைக் காலத்தில் இருந்த சித்தர்கள் பதினெண்மர் என்று சொல்லுகின்றனர். அப் பதினெண்மர் யார் யார் என்பதில் கருத்து வேற்றுமையுண்டு. இதனைச் சித்தர்களின் சிறப்பு என்ற இந்நூலின் பகுதியிலே காணலாம். சித்தர்களின் பெயர்களால் சிறந்த வைத்திய நூல்கள் வழங்குகின்றன; ஞானப் பாடல்கள் வழங்குகின்றன. சித்தர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்று கருதுகின்றனர். சரித்திராசிரியர்கள் சிலர், சித்தர்கள் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர். சித்தர்களில் திருமூலர் ஒருவர்; அவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பது சைவர்களில் பலர் கொள்கை. திருவள்ளு வரும் ஒரு சித்தர்; அவர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்பது உண்மை. அகத்தியர் ஒருசித்தர்; அவர் காலம் இன்னதென்று கூறமுடியாது. வான்மீகர் ஒரு சித்தர்; அவர் காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்பாகும். பதஞ்சலி, தன் வந்திரி முதலியோர் காலங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டனவே யாகும். வழங்கும் பெயர்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கணக்கிட்டுப் புகுத்தல், இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன் என்றுதான் கூற வேண்டும். ஆனால் இன்று வழங்கும் சித்த வைத்திய நூல்களும், சித்தர்கள் பாடல்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்த அவர்களா லேயே பாடப்பட்டனவா? அவைகள் எல்லாம் அவர்களுடைய வாய் மொழிகள்தாமா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இன்றுள்ள வைத்திய நூல்களும், ஞானப் பாடல்களும் அகதியர், வான்மீகர், திருவள்ளுவர் முதலியோரால், அவர்கள் வாயாலேயே பாடப்பட்டவை அல்ல என்பது உண்மை. அச்சித்தர்களின் வைத்திய முறைகளை, கொள்கைகளைப் பரம்பரையாக அறிந்தவர்கள் பாடி வைத்தவை; அல்லது அவர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பாடி வைத்தவை. ஏறக்குறைய நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அவைகள் பாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சித்த வைத்திய முறைகளும், ஞானப் பாடல்களின் கருத்துக்களும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டவை; காலங் கணக்கிட முடியாத சித்தர்கள் கண்டறிந்த உண்மைகள் என்பதில் ஐயம் இல்லை. திருவள்ளுவர் பெயரால் வழங்கும் ஞான வெட்டியான் என்னும் நூல் சமீப காலத்தில்- அதிவீரராம பாண்டியன் காலத் திற்குப் பின்- பாடப்பட்டது என்பதை ஞான வெட்டியான் என்னும் பகுதியிலே காணலாம். போகர் என்பவர் சீன தேசத்தவர். அவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்தார் என்று கருதுகின்றனர். அவருடன் வந்த புலிப்பாணி என்பவரும் சீனர். இவ்விருவர் பெயராலும் வைத்திய நூல்கள் வழங்குகின்றன. இவர்கள் கருத்தை அமைத்துத் தமிழறிந்தோர் பாடியனவே அந்நூல்கள். சீனர்களாகிய அவர்கள் தமிழைக் கற்றனர்; தமது வைத்திய முறைகளைப் பாடல்களாகப் பாடிவைத்தனர் என்று சொல்ல முடியாது. போகர் இந்நாட்டில் சிறிது காலம் சுற்றுப் பிரயாணம் செய்து தங்கிவிட்டு மீண்டும் சீனாவுக்கே சென்று விட்டார் என்று கூறுகின்றனர். ஆகலால், போகர் பெயரால் உள்ள வைத்திய நூல்கள், அவருடைய கருத்துக்களே அன்றி அவருடைய வாய்மொழி அன்று என்பது உறுதி. நமக்குக் கிடைக்கும் சித்தர் வைத்திய நூல்களின் பாடல்கள் இன்றைய மக்கள் பேசும் தமிழ்மொழியிலேயே காணப்படுகின்றன. அவைகளை ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன் வழங்கிய தமிழ்நடையென்று கூறமுடியாது. சித்தர்களின் நூல்களிலே பரிபாஷைகள் பல காணப்படு கின்றன. அவைகளைப் படிக்கும் புலவர்களோ, பொதுமக்களோ அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியாது. பரம்பரையான் சித்தர் நூல் பயிற்சியுள்ளவர்கள்தாம் அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியும். அவைகளின்- அப் பரிபாஷைகளின்- உண்மைப் பொருளைக் கூறவல்லோர் பலர் தமிழகத்தில் இன்றும் இருக்கின்றனர். அவர்களைக் கொண்டு சித்தர் நூல்களுக்கு உண்மைப் பொருள் காணத் தமிழ் மக்கள் முயலவேண்டும். சித்தர்நூல்களின் சரியான, பிழையற்ற பதிப்புக்கள் கூட இன்னும் வெளிவரவில்லை தனிப்பட்ட சிலர் முயற்சியால் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. பிழையற்ற நல்ல பதிப்புக்கள் வெளிவரவேண்டும். உண்மையாக, மக்களுக்குப் பயன்படும் ஒப்பற்ற கலை களான சித்தர் நூல்கள் நமது நாட்டிலே இவ்வாறு சீரழிந்து கிடப்பது வருந்துவதற்கு உரியது. இன்றைய விஞ்ஞான முறைக்கு ஒத்துள்ள சித்தர்களின் வைத்தியத்தையும், தத்துவத்தையும், கற்றறிந்தவர்கள் போற்றாமல் கைவிட்டனர்; புலவர்கள் அலட்சியம் செய்தனர்; மதவாதிகள் மறந்தனர்; மூடநம்பிக்கையிலே மூழ்கிக் கிடப்போர், சித்தர் தத்துவங்கள் பரவ ஒட்டாமலே தடுத்து வந்தனர். போதும் போதாமைக்கு அந்நிய ஆட்சியும், அந்நியக் கலையும் நமது நாட்டுக் கலையிலே நமக்கு அவமதிப்பை உண்டாக்கின. ஆயினும் இப்பொழுது சித்தர் கலைகளின் சிறப்பை மக்கள் உணர்ந்து வருவது, இனி அக்கலை வளர்ச்சி யடையும் என்ற நம்பிக்கைக்கு இடம் தருகின்றது. சித்தர்களின் வைத்திய நூல்கள், அவர்களின் தத்துவங்கள், நமது முன்னோர்கள் நமக்குச் சேமித்து வைத்திருக்கும் ஒப்பற்ற உயர்ந்த செல்வங்களாகும். அவற்றைப் பாதுகாத்து வளர்த்து, அவற்றின் பயனை அனுபவிக்கக்கூட நமக்குத் திறமையில்லை யென்றால், உலக அரங்கிலே நாம் எப்படித் தலைநிமிர்ந்து நிற்க முடியும்? சித்தர் வைத்தியச் சிறப்பையும், சித்தர்களின் தத்துவத் தையும் தமிழ் மக்கள் உணரவேண்டும், அவற்றை வளர்க்க வேண்டும் என்ற கருத்துடனேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் சித்தர் வைத்தியச் சிறப்பு எடுத்துக்காட்டப் பட்டுள்ளது; சித்தர்களின் தத்துவம், அவர்கள் பாடல் களிலிருந்து விளக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் தத்துவத்தைப் பற்றிய உண்மையான நூல் ஒன்று வெளிவரவேண்டும் என்னும் ஆசையுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சித்தர் நூல்களிலே தேர்ந்தவர்கள் இந்நூலிலே பல குறைகளைக் காணலாம். சித்தர் நூல்களிலே நமக்கு ஆராய்ச்சியோ அனுபவமோ இல்லை. ஆயினும், தெரிந்ததை வெளியிட்டால், இதில் தவறுகள் இருக்கின்றன என்பதை விளக்கவாவது உண்மையான சித்தர் தத்துவ விளக்க நூல் ஒன்று தோன்றாதா? சித்தர்களின் தத்துவம் அறிந்தவர்கள் எழுத முன்வர மாட்டார்களா? என்ற ஆசைதான் இந்நூல் எழுத வதற்கு முதன்மையான தூண்டுதலாகும். சித்தர்கள் ஞானக்கோவை என்ற ஒரு தொகுப்பு நூல் தமிழிலே உண்டு. இதைப் பதினெண் சித்தர் ஞானக்கோவை என்றும் கூறுவர். இந்நூலிலே சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், திருவள்ளுவர், பாம்பாட்டிச் சித்தர், இடைக் காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், குதம்பைச் சித்தர், அகதியர், திருமூலர், நந்தீவரர், கருவூரர், இராமதேவர், கொங்கணச் சித்தர், உரோமரிஷி, சுப்பிரமணியர், வான்மீகர், சட்டை முனி, காகபு சுண்டர், சூரியானந்தர், இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் பாடல்கள் காணப்படுகின்றன. சித்தர்களின் கருத்துக்கள் நிறைந்த பாடல்களைப் பாடிய பட்டினத்தார், பத்திரகிரியார், இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் பாடல்களையெல்லாம் பிற்காலத்தினர் சித்தர்கள் பாடல் வரிசையிலே சேர்த்துவிட்டனர். தன்வந்திரி, கமல்நாதர், போகநாதர், மச்சமுனி, பதஞ்சலி, போதகுரு, சுந்தரானந்த தேவர், கோரக்கர்- இவர்களுடைய ஞானப் பாடல்கள் சித்தர் ஞானக் கோவையிலே காணப் படவில்லை. சிவன் பார்வதிக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் ஞான சாதிரம், யோகப் பயிற்சியைப் பற்றிக் கூறும் சிவானந்த போதம், நிஜானந்த போதம், சிவயோக சாரம்- இவைகளும் சித்தர் நூல்களாகக் கருதப்படுகின்றன. நெஞ்சறி விளக்கம் என்பது ஒரு நூல்; யோக ஞானங் களைப் பற்றிச் சொல்வது. ஞான ரத்தினக் குறவஞ்சி என்பதும் யோக ஞானங்களைப் பற்றிக் கூறுவது; இது யாரோ முலிம் புலவரால் பாடப்பட்டது. ஞானக் கும்மி, சிவயோக சாரம், சொக்கநாத வெண்பா முதலிய ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களும் ஞானக்கோவையில் சேர்ந்திருக்கின்றன. ஞானக்கோவையில் உள்ள சித்தர் பாடல்களையும், ஞான வெட்டியான், ஔவை ஞானக் குறள் இவைகளையும் வைத்துக் கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அப்பாடல்களைக் கொண்டே சித்தர்கள் தத்துவம் விளக்கப்பட்டிருக்கிறது. சித்தர்களின் தத்துவத்தைத் தமிழகம் தெரிந்து கொள்ள ஓரள வாவது இந்நூல் துணை செய்யும் என்பது நமது நம்பிக்கை. சித்தர்களின் கொள்கை- தத்துவம்- நாட்டிலே பரவினால் மக்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் வளரும் என்பதில் ஐயம் இல்லை. மக்கள் சமுதாயம்- இனம்- ஒன்றே; மக்களிடையே பிரிவினை பேசுதல் உண்மைக்கு- இயற்கைக்கு- மாறானது என்ற சித்தர்களின் தத்துவம் பரவினால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையென்பதை மறுப்பவரும் உண்டோ? இலக்கிய நிலையம் சென்னை-24 சாமி. சிதம்பரன் 10-1-61 சித்தர்களின் சிறப்பு விஞ்ஞான முறையும், விஞ்ஞான ஆராய்ச்சியும் தமிழ கத்துக்குப் புதியன அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் விஞ்ஞானிகள் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் மனித சமுதாயத்திற்குச் செய்திருக்கும் நன்மை அளவற்றது. அவர்கள், மக்கள் அனைவரும் நோய்நொடி யில்லாமல் வாழ்வதற்கான - இன்பத்துடன் வாழ்வதற்கான- துன்பங்களிலிருந்து கரையேறுவதற்கான- வழிகள் பலவற்றைக் கண்டறிந்தனர்; உண்மைகள் பலவற்றை ஆராய்ந்து தெளிந்தனர். அவர்கள் கண்டறிந்த உண்மைகளை மனித சமுதாயம் அனுபவிக்கும்படி செய்தனர். அவர்கள் கண்டறிந்த விஞ்ஞான ஆராய்ச்சியையும் பலனையும் மனித சமுதாயம் இன்றும் அனுபவித்துக் கொண்டு வருகிறது. இன்றைய விஞ்ஞானிகளும் மனித சமூகம்- உலகம்- முன்னேறுவதற்கான பல உண்மைகளைக் கண்டுபிடித்துத்தான் இருக்கின்றனர். ஆயினும் மனிதப் பூண்டே இல்லாமல் நாசம் ஆக்கி அழித்துவிடக்கூடிய- உலக நாகரிகத்தையே பாழாக்கி விடக்கூடிய- உலகத்தையே சுட்டுச் சாம்பலாக்கி விடக்கூடிய-கொடுமையான அழிவுச் சக்திகளையும் கண்டு பிடித்திருக் கின்றனர். இத்தகைய சக்தியுள்ள எறிகுண்டுகள், வெடிகுண்டுகள் முதலியன செய்யப்பட்டுள்ளன. இன்றைய விஞ்ஞானிகளின் இத்தகைய கண்டுபிடிப்புகளால் இன்றைய உலகம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் உலக மக்களிடையே அச்சம், நடுக்கம், ஒருவரை ஒருவர் நம்பாமை, வாழ்விலே அவநம்பிக்கை, எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பீதி- இவை பிறந்து பேயாட்டம் ஆடுகின்றன. பண்டைத் தமிழகத்து விஞ்ஞானிகள் மனித குலத்தின் வாழ்வுக்காகவே உழைத்தார்கள். ஆதலால் அவர்கள் மக்களையோ, உலகத்தையோ, இயற்கைப் பொருள்களையோ நாசமாக்கக்கூடிய தீய சக்திகளைக் கண்டுபிடிக்கவில்லை; இவைகளைக் கண்டுபிடிப்பதில் தங்கள் அறிவையும் காலத்தை யும் செலவிட்டு வீணாக்கவில்லை. மனித சமூகம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான துறையிலேயே அவர்கள் உழைத்தார்கள்; காலங் கடத்தினார்கள்; கருத்தைச் செலுத்தினார்கள். அவர்கள் தாங்கள் உழைத்த- முயன்ற- துறையில் வெற்றியும் கண்டனர். இத்தகைய விஞ்ஞானிகள் யார்? தியாகிகள் யார்? அவர்கள் தாம் நமது நாட்டிலே வாழ்ந்த சித்தர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்குவதற்கான பல உண்மைகளைக் கண்டறிந்த அந்தச் சித்தர்கள் யார்? அவர்களின் பெருமை என்ன என்பதைக் காண்போம். சித்தர்கள் யார்? சித்தர்களின் பெருமை பல புராணங்களில் கூறப்பட்டுள் ளது. சித்தர்கள் பல அற்புதங்களைச் செய்யக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே புராணம் படித்தவர்கள், பல அற்புதங்களைச் செய்கின்றவர்கள் சித்தர்கள்; மட்டமான உலோகங்களை உயர்ந்த பொன்னாக்கும் திறமை படைத்தவர்கள் சித்தர்கள் என்றுதான் அறிவார்கள். அவர்கள் உண்மையாக நாட்டு மக்களுக்குச் செய்திருக்கும் பணியைப் பலர் அறிய மாட்டார்கள். தமிழ்நாட்டிலே சிலர்தான் சித்தர்களின் விஞ்ஞான ஆராய்ச்சியைப் பற்றி அறிவார்கள், அவர்கள் மனித சமூகத்துக்குச் செய்திருக்கும் நன்மையை உணர்வார்கள். அச்சிலர் தாம் சித்தர்களின் சிறப்பைப் பற்றிப்- பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். சித்த வைத்தியம் தமிழ்நாட்டு வைத்தியம்; சிறந்த வைத்தியம். சித்தர்கள் கண்டறிந்த வைத்திய முறையே சித்த வைத்தியமாகும். தமிழ்நாட்டு வைத்தியர்களிலே பலர் சித்த வைத்திய முறையைப் பின்பற்றுவோர் ஆவர். இத்துறையில் உள்ளவர்கள்தாம் சித்தர்களின் சிறப்பை ஓரளவு அறிவார்கள். இவர்களே சித்தர்களின் பெருமையை- அவர்களுடைய ஆற்றலை- அறிவைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் அளவற்ற பக்தியும் கொண்டிருக்கின்றனர். சித்த வைத்தியர்கள் எல்லோரும் சித்தர்களின் நூல்களைப் படித்தவர்கள், சித்தர்களின் கொள்கைகளைத் தெளிவாக அறிந்திருப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இவர் களிலே பலர் பரம்பரை வைத்தியர்கள். இவர்களுக்கு, இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பது தெரியும்; அம் மருந்துகளைச் செய்யவும் தெரியும்; நோயாளியின் குணம் குறிகளைக் கொண்டு நோய் இன்னதென்று கண்டுபிடிக்கவும் தெரியும். பரம்பரைப் பழக்கத்தால் வைத்தியம் செய்யும் இவர்களுக்குச் சித்தர்கள் செய்திருக்கும் நூல்களின் அருமை பெருமைகளைப் பாராட்டத் தான்தெரியும். அவைகள் அனைத்தையும் படித்தறிந்து உண்மை தெரிந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டுப் புலவர்களிலே பலருக்குச் சித்தர் நூல்களைப் பற்றித் தெரியாது; பெரும்பாலான புலவர்கள் சொல்நயம் பொருந்திய பாடல்களைத்தான் இலக்கியம் என்று பாராட்டுவார்கள்; இலக்கணத்தைப் பற்றிக் கவலைப்படாமல்- பொதுமக்களுக்குப் புரியவேண்டும் என்னும் கருத்துடன்- வழக்குச் சொற்களையும் இணைத்துப் பாடப்பட்டிருக்கும் பாடல்களைப் படிக்கும் வழக்கமோ, சொல்லப்படும் பெரும் பாலான தமிழ்ப் புலவர்களிடம் இல்லை. சித்தர்களின் நூல்கள்- பாடல்கள்- புலவர்கள் போற்றும் நடைநயம் பொருந்தியவை அல்ல. உவமை, உருவகம் போன்ற கற்பனைகள் பொருந்திய இலக்கியச் சுவையுடன் விளங்குவன அல்ல. இக்காரணத்தால் சித்தர் நூல்கள் தமிழ்ப் புலவர்களின் கையிலும் கருத்திலும் அதிகமாக இடம் பெறவில்லை. மேல்நாட்டு வைத்தியங் கற்றவர்களிலே பலர், நாட்டு வைத்தியம் என்றாலே மிகவும் பரிகசிப்பவர்களாயிருந்தனர். நாட்டு வைத்தியர்களுக்கு ஒன்றுந் தெரியாது; நாட்டு மருந்துகள் பயனற்றவை; நாட்டு வைத்திய நூல்கள் எல்லாம் விஞ்ஞான முறையை அறியாதவர்களால் எழுதப்பட்டவை; இன்றைய நவீன விஞ்ஞான முறையைப் பற்றிப் பண்டையோர்க்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். இதனால் சித்தர்களின் நூல்களைப் பற்றிப் பலர் ஆராய முற்படவில்லை. தமிழ்நாட்டில் சித்தர்களின் வைத்திய நூல்களைப் பற்றி யும், சித்தர்களின் பாடல்களைப் பற்றியும் படித்தறிந்தவர்கள் ஒருசிலர்தான் உண்டு. அவர்களால்தான் சித்தவைத்தியம் மறை யாமல் உயிருடன் உலவி வருகின்றது. சித்தர்களின் சிறப்பையும், அவர்களின் அரும்பெரும் ஆராய்ச்சிகளைப் பற்றியும் சிலர் அறிந்து வருகின்றனர். சித்தர்கள் சாகாநிலையைப் பெற்றவர்கள்; அழியாத உடம்பைப் பெற்றவர்கள்; உடம்பை அழிந்துபோகாமல் பாதுகாக்கும் வழியை அறிந்தவர்கள்; தம்முடைய உடம்பை அப்படியே வைத்துவிட்டு மற்றொரு உடம்பிலே புகுந்து நடமாடும் சக்தி படைத்தவர்கள்; இதற்குக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று பெயர். சித்தர்களுக்கு வானமார்க்கமாகச் செல்லும் சக்தியும் உண்டு; முக்காலங்களைப் பற்றியும் அறியும் ஞானமும் உண்டு; பலவிதமான அற்புதங்களைச் செய்யும் ஆற்றலும் உண்டு என்று சித்தர்கள் என்பதற்குப் பொருள் கூறுகின்றனர். யோக மார்க்கத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் சித்தி பெற்றவர்கள்- சித்தர்கள் என்று பெயர் பெற்றனர் என்பர். சித்தர்கள் எட்டு வகை. அவை, அணிமா, மகிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா என்பன. 1. அணுவைக்காட்டிலும் மிகவும் சிறிய உருவிலே உலவும் ஆற்றலுக்கு அணிமா என்று பெயர். 2. மலையினும் பெரிய உருப்பெற்று நிற்கும் ஆற்றலுக்கு மகிமா என்று பெயர். 3. உடம்பைக் கனமாக இல்லாமல் இலேசாகச் செய்து கொள்ளுதலும், நீரிலும், சேற்றிலும் அழுந்தாமல் காற்றுபோல் விரைந்து செல்லும் வல்லமையைப் பெறுவதும் லகிமா ஆகும். 4. தான் எதை விரும்பினாலும், எதை நினைத்தாலும் நினைத்தவைகளை அடையும் வல்லமைக்குப் பிராத்தி என்று பெயர். 5. தன் நினைப்பின் வல்லமையால் - ஆற்றலால்- எல்லா வற்றையும் படைக்கும் சக்திக்கும் பிராகாமியம் என்று பெயர். 6. எல்லாரும் தன்னை வணங்கும்படியான தெய்வத் தன்மையை அடைவது ஈசத்துவம் என்று சொல்லப்படும். 7. உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தும் ஆற்றலை அடைந்திருப்பதற்கு வசித்துவம் என்று பெயர். 8. ஐம்புலன்கள் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல்- அவைகளுடன் சம்பந்தப்படாமல்- இருப்பது கரிமா என்று சொல்லப்படும். இவைகளே எண்வகைச் சித்திகளாகும். இவைகளை அட்டமா சித்தி என்பர். இவ் வெண்வகைச் சித்திகளையும் பெற்றவர்களையே சித்தர்கள் என்பர். இவ்எட்டு வகை வல்லமை களையும் பெற்றவர்கள் பல அற்புதங்களையும் செய்வதில் அதிசயம் ஒன்றும் இல்லை. சித்தர்கள் என்பவர்கள் இவ் எட்டுவகை வல்லமைகளையும் பெற்றவர்கள் என்றே புராணங் களில் வழங்கும் வரலாறுகளில் காணப்படுகின்றன. சித்தர்களின் நூல்களையும், அவர்கள் செய்திருக்கும் ஆராய்ச்சிகளையும் காண்போர், சித்தர் என்பதற்குக் கூறும் பொருளே சிறந்ததாகும்; உண்மையான பொருளாகவும் காணப் படுகின்றது. சித்- அறிவு. சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்பதற்கு அறிவு என்னும் பொருள் உண்டு. ஆகவே, சித்தர்கள் என்றால் அறிவு படைத்த வர்கள்: அறிஞர்கள், மேதைகள், பேரறிவு படைத்தவர்கள், நுண்ணறிவு படைத்தவர்கள், விஞ்ஞானிகள், மெய்ஞ்ஞானிகள் என்று பொருள் சொல்லுவதே பொருத்தமாகும். பேரறிவு படைத்தவர்கள் பொதுமக்களால் செய்ய முடியாத பல அரிய செயல்களைச் செய்வார்கள் என்பதில் ஐயம் இல்லை. பல அரிய செயல்களை அற்புதங்கள் என்று பொது மக்கள் போற்றுவார்கள் என்பது உண்மை, பொது மக்கள் எந்தெந்தக் காரியங்களை அற்புதங்கள் என்று நினைக்கின்றார் களோ, அவைகளையெல்லாம் செய்யும் சக்தி அறிஞர்களுக்கு உண்டு என்று நம்புவார்கள். சித்தர்களிடம், பொதுமக்கள் இத்தகைய நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆதலால் சித்தர்கள் இயற்கைக்கு மாறான பல அற்புதங்களையெல்லாம் செய்ததாகக் கதைகள் தோன்றி வழங்குகின்றன. சித்தர்கள் கூட்டம் நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள்- பண்டைக் காலத்தில் வாழ்ந்த சித்தர்கள்- பதினெட்டுப் பேர் என்று சொல்லுகின்றனர். 1. திருமூலர்: 2. இராமதேவர்: 3. கும்பமுனி: 4. இடைக்காடர்; 5. தன்வந்திரி; 6. வான்மீகி; 7. கமலமுனி: 8. போகநாதர்; 9. மச்ச முனி; 10. கொங்கணர்; 11. பதஞ்சலி; 12. நந்தி தேவர்; 13. போதகுரு; 14. பாம்பாட்டிச் சித்தர்; 15. சட்டை முனி; 16. சுந்தரானந்த தேவர்; 17 குதம்பைச் சித்தர்; 18. கோரக்கர். இவர்களே பதினெண் சித்தர்கள். இவர்களிலே பலர் பெயரால் மருத்துவ நூல்களும், அறிவுரைப் பாடல்களும் வழங்கி வருகின்றன. சித்த வைத்திய நூல்களை ஆராய்ந்தவர்களும் சித்தர்கள் பதினெண்மர் என்றே கூறுகின்றனர். ஆனால் அவர்கள் குறிப்பிடும் பெயர் வரிசை வேறு. 1. கோதமர்; 2. அகத்தியர்; 3. சங்கரர்; 4. வைரவர்; 5. மார்க்கண்டர்; 6. வன்மீகர்; 7. உரோமர்; 8. புசுண்டர்; 9. சட்டை முனி; 10. நந்தீசர்; 11. திருமூலர்; 12. காலாங்கி; 13. மச்ச முனி; 14. புலத்தியர்; 15. கருவூரார்; 16. கொங்கணர்; 17. போகர்; 18. புலிப்பாணி. இப்பதினெண்மரே சித்தர்கள் என்பர். சித்த வைத்திய நூல் ஆராய்ச்சியாளர்கள் சித்த வைத்திய நூல்களில் ஆசிரியர்களின் நூல்களைக் கொண்டு சித்தர்கள் பதினெண்மர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். சித்தர் களின் ஞானப் பாடல்களின் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு சித்தர்களின் ஞானக் கொள்கைகளை ஆதரிப்போர் பதினெண் சித்தர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையான பதினெண் சித்தர்கள் யார்? யார்? என்பது ஆராய்ந்து முடிவு கட்டவேண்டியதாகும். சித்தர்கள் பதினெண்மரும் தமிழ்நாட்டிலே வாழ்ந்த சித்தர்கள் என்று கூறுகின்றனர். இவர்களில், வான்மீகி, பதஞ்சலி, தன்வந்திரி போன்றவர்கள் வடமொழியில் வல்லுநர்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. திருமூலர், வான்மீகி, கும்பமுனி (அகதியர்). இடைக்காடர் முதலியோர் தமிழ்ப் பெரும் புலவர்கள் என்பதும் பலர் அறிந்த உண்மை. ஆகவே, சிறந்த அறிஞர்களை, வடவர் - தென்னவர் என்ற வேற்றுமை பாராட்டாமல் தமிழர்கள் போற்றி வந்தனர்; அவர்களின் சிறந்த கொள்கைகளை ஏற்று வந்தனர்; என்ற உண்மையைச் சித்தர்களின் பெயர் வரிசையிலிருந்தே காணலாம். பதினெட்டுச் சித்தர்கள்தாம் தமிழ்நாட்டில் வழங்கும் சித்த வைத்திய முறையை முதலில் கண்டுபிடித்தவர்கள் என்று சொல்லமுடியாது. இவர்களுக்கு முன்பே வைத்தியமுறை வளர்ந்திருக்கவேண்டும். அதை வளர்த்த பேரறிஞர்கள்- சித்தர்கள்- பலர் வாழ்ந்திருக்கவேண்டும். அவர்கள் பெயர் நமக்குத் தெரியவில்லை. சித்த வைத்தியத்தின் விரிவை, உன்னத நிலையைப் பார்க்கும்போது, இப்படித்தான் எண்ணவேண்டி யிருக்கின்றது. சித்தர்கள் பதினெண்மர் என்று கருதினாலும், இவர் களுக்குப் பிற்காலத்திலும் பல சித்தர்கள்- இவர்கள் வழியைப் பின்பற்றிய அறிஞர்கள்- தமிழகத்திலே தோன்றியிருக்கின்றனர். அவர்களிலே பலருடைய பெயர் மறைந்துவிட்டனவென்றே சொல்லவேண்டும். ஆயினும், யோக- ஞான மார்க்கங்களைப் பின்பற்றியவர்களை- இவைகளைப் பாடியவர்களை- சித்தர்கள் கூட்டத்திலே சேர்த்து வைத்திருக்கின்றனர். இதனால் சித்தர் களின் எண்ணிக்கையும், சித்தர் நூல்களும், பாடல்களும் பெருகி விட்டன. இவ் வுண்மையை, பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர்களின் பாடல் தொகுப்பு நூலால் அறியலாம். பெரிய ஞானக்கோவை என்னும் நூல் மிகப் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டதொரு நூல் என்பதில் ஐயம் இல்லை. அந்த நூலிலே, பட்டினத்தார் பாடல்களும், பத்திரகிரியார் பாடல்களும், இராமலிங்க சுவாமிகள் பாடல்களும் சேர்க்கப் பட்டிருப்பதே இவ்வுண்மையைக் காட்டும். இன்னும் பெயர் தெரியாத ஆசிரியர்களின் பாடல்களும், முலிம் அறிஞர் களால் எழுதப்பட்டிருக்கும் பாடல்களும் இந்நூலில் சேர்க்கப் பட்டிருக்கின்றன; இதுவும், சித்தர் பாடல்களின் தொகுப்பு பிற்காலத்தில் தோன்றியது என்பதை வலியுறுத்தும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் சித்தர் களின் சிறப்பும், அவர்களின் வைத்திய முறைகளும், அவர்கள் கொள்கைகளும் தமிழகத்திலே அவ்வளவாகப் பாராட்டப்பட வில்லை. ஆதலால் சித்த வைத்தியமும், சித்தர் கொள்கைகளும் வளர்ச்சியடையவில்லை. இதற்குக் காரணம், தமிழ்ப் புலவர் களின் போக்கு- மேல்நாட்டு வைத்தியங் கற்றவர்களின் அலட்சியம்- என்பதை முன்பே கண்டோம். இந்த நிலைமை தோன்றியதற்குப் பெரிதும் அடிப்படைக் காரணம் அந்நியர் ஆட்சியும், அந்நிய மொழிக் கல்வியுமே ஆகும். இந்த நிலை இப்பொழுது மாறி வருகின்றது. இது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சித்தர்களின் விஞ்ஞான ஆராய்ச்சி சித்த வைத்தியம் சித்த வைத்தியத்தைப் பற்றி ஆராய்ந்தால் சித்தர்களின் சிறந்த விஞ்ஞான அறிவைக் காணலாம். சித்த வைத்தியம் தமிழகத்து அறிஞர்களால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட தனி வைத்தியம் என்பதே அறிஞர்கள் கொள்கை. வேதத்தின் அங்கங்களிலே, ஆயுள்வேதமும் ஒன்று. இதைக் கற்பம் என்றும் கூறுவர். ஆயுள்வேத வைத்தியம் வேதத்தின் அங்கமாக இருப்பதால், சித்தவைத்தியம் ஆயுள்வேதத்திலிருந்து பிறந்ததென்று கூறுவோர் உண்டு. பதினெண் சித்தர்களின் பெயர் வரிசையிலே, வான்மீகி, பதஞ்சலி, அகத்தியர் முதலியோர் பெயர்கள் காணப்படுவதால்- பல சித்தர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராக இல்லாமையால்- அச்சித்தர்கள் எல்லாம் ஆயுள் வேதங்கற்றவர்கள், அதிலிருந்தே தமிழில் வைத்திய நூல்களை எழுதினார்கள் என்று காரணங் காட்டுவர். சித்த வைத்தியர்கள் இதற்கு மாறாகக் கூறுவர். ஆயுள் வேதமே சித்த வைத்தியத்திலிருந்துதான் பிறந்தது என்று சொல்லுவார்கள். தமிழ்நாடே பழமையானது. இமயமலை ஒருகாலத்தில் கடலுள் இருந்தது. இமயமலை வெளியில் தோன்றாத காலத்தில் தென் பொதியம் தலை நிமிர்ந்து நின்றது. தென் பொதியத்தில் வாழ்ந்தவர் அகத்தியர். அவரால் செய்யப் பட்டிருக்கும் வைத்திய நூல்கள் பல. வடமொழி தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழி வளம் பெற்றிருந்தது. அகத்தியராலும், மற்றைய சித்தர்களாலும் கண்டறியப்பட்ட வைத்திய முறையி லிருந்தே வடமொழியாளர் வைத்திய நூல்கள் எழுதினர். அவைகளுக்கு ஆயுள்வேதம் என்று பெயரிட்டனர். இது சித்த வைத்தியர்கள் கூற்று. ஆயுள்வேதத்தையும், சித்த வைத்தியத்தையும் அறிந்தவர்கள், சித்த வைத்தியம் வேறு; அது ஆயுள்வேத வைத்தியத்திலிருந்து பிறந்தது அன்று; சித்த வைத்திய முறையிலே, ஆயுள்வேத வைத்திய முறையில் இல்லாத தனித் தன்மைகள் உண்டு என்று கூறுகின்றனர். இந்திய மருந்து ஆராய்ச்சிக் கமிட்டியின் முன் சாட்சியம் கூறியவர்களிலே சீகாழி- வைத்தியர்- சி.எ. நாராயணசாமி அய்யர் என்பவரும் ஒருவர். அவர், பல சித்தர்களால் ஏற்பட்ட ரசாயன சாதிரங்களே ஆயுள்வேதமாகும். இவைகள் குகை களில் வைக்கப்பட்டிருந்தன. தவிர, சரக்குகளைக் கட்டும் வகை ஆயுர்வேதத்தில் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். தென் இந்தியாவில் மூலிகைகள், ரச வர்க்கங்களைக் கையாளும் அகத்திய வைத்தியம் காணப்படுகிறது. உலோக வகைகள், ரச வகைகளால் செய்யும் மருந்து முறைகள் தமிழ்நாட்டாருடைய தனி முறைகளாகவே காணப்படுகின்றன. உலோகங்களையும், தாது வகைகளையும் கொண்டு செய்யப்படும் பபம், செந்தூரம், திராவகம் முதலிய பலவகை முறைகள் வடமொழியில் உள்ள இரச சாதிரங் களுக்கு வேறுபட்டவைகளாகவே இருக்கின்றன. தமிழ் முறைகளின்படி உலோகங்கள், இரசவர்க்கங்கள் முதலியவற்றை நீற்று பபம், சிந்தூரங்களாக எளிதில் செய்து விடலாம். செயநீரால் பாஷாண முதலியவைகளைக் கட்டி, தேன் முதலிய அனுபானங்களில் வாதரோகம், சன்னி வாதம் முதலிய மிகக் கடுமையான நோய்களுக்குக் கொடுத் தலினால் குணம் அடைகின்றது. வடமொழியில் உள்ள ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டபடி அப்பிரேகத்தை நூற்றுக்கணக்கான புடங்களில் எரித்தால் அன்றி அதில் உள்ள மினுமினுப்பு போகிறதில்லை. ஆனால் தமிழ் முறைப்படி பத்துப்புடத்தில் மினுமினுப்பு மறைந்து பபமாய்விடுகிறது. தவிர, அப் பபத்துக்கு வீரியமும் மிகுதியாகும். கட்டு மருந்துகளை மிகக்கொடுமையான நோய் களுக்கு மிகவும் சிறிய அளவில் இரண்டு வேளைக்கு மேல் உபயோகிப்பதில்லை. இவ்வகை மிகச் சிறந்த நூற்றுக் கணக்கான முறைகள் தமிழ் வைத்தியத்தில் உண்டு. ஆயுர்வேத முறைகளைப் பார்க்கிலும், அகத்திய வைத்திய முறை (சித்த வைத்தியம்) அநேக விதத்தில் வேறுபட்டதாகவே தோன்றுகிறது. அகத்திய வைத்திய சம்பந்தமான நூல்களில் உள்ள பரிபாஷைச் சொற்கள் வடமொழி நூல்களில் காணப்படாமல் இருப்பதே இதற்குப் போதுமான பிரமாணமாகும்.”* இது, காலஞ்சென்ற, பிரபல ஆயுர்வேத வைத்தியரான பண்டிட்- டி. கோபாலாச்சார்லு அவர்களின் பேச்சு. ஒரு ஆயுர்வேத வைத்திய மாநாட்டிலே இவ்வாறு பேசியிருக்கின்றார். மேலேகாட்டிய சி.எ. நாராயணசாமி அய்யர் கூற்றும், பண்டிட் கோபாலாச்சார்லுவின் பேச்சும் சித்த வைத்தியம் தனித்தன்மை படைத்தது என்பதைக் குறிக்கும். நாடிகளைப் பிடித்துப் பார்த்து நோய் இன்னது என்று அறியும் முறை சித்த வைத்தியத்துக்கே தனி உரிமை. ஆயுர்வேத முறையில் நோயாளியைத் தொடுதல், பார்த்தல், விசாரித்தல் இவைகளின் மூலந்தான் நோயைத் தெரிந்து கொள்ள முடியும். புல், பூண்டு, மூலிகை வகைகளை மருந்தாகப் பயன்படுத்தும் முறையே ஆயுர்வேத முறையாகும். ருக்வேதத்தில் நீரைப் பற்றியும், மூலிகைகளைப் பற்றியுமே பேசப்படுகின்றது: ரச, பாஷாண வர்க்கங்களைப் பற்றிக் கூறப்படவில்லை. உலோக வகைகளை மருந்தாக மாற்றும் இரசாயன முறை தமிழ்ச் சித்த வைத்தியத்திற்கே உரிய உயர்ந்த முறையாகும். இவைகள், பண்டிட் கோபாலாச்சார்லு, டாக்டர் லட்சுமிபதி முதலிய பிரபல ஆயுர்வேத வைத்திய நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள். ஆயுர்வேத வைத்தியம் பற்றி முதலில் எழுதப்பட்ட நூல் ஐத்ரேய சம்ஹிதை என்பது. இதை எழுதியவர் ஐத்ரேயர் என்பவர். இந்நூலில் உப்பு, உலோக வகை, ரச, பாஷாணாதி களைப் பற்றிச் சொல்லப்படவே இல்லை. ஆதலால் உப்பு, உலோகம், இரசம், பாஷாணங்களை மருந்தாக்கும் முறைகளைக் கூறும் சித்த வைத்தியம் தனித்தன்மை படைத்தது என்பதில் ஐயம் இல்லை. இதை ஆயுர்வேத வைத்தியர்கள் ஒப்புக் கொள்ளு கின்றனர். ஔஷதம் என்பது வடமொழிப் பெயர். ஓஷதம் என்ற சொல்லே ஔஷதம் ஆயிற்று. ஓஷதம் என்றால் ஒருமுறை பூத்துக் காய்த்து அழியும் பூண்டுகளையே- செடிகளையே- குறிக்கும். ஔஷதத்தை அவுடதம் என்றும், ஓஷதத்தை ஓடதம் என்றும் தமிழில் மாற்றி வழங்குவர். ஆகவே ஔஷதம் என்ற பெயரே பெரும்பாலும் மூலிகை வகைகளால் செய்யப்படும் வைத்தியமே ஆயுர்வேத வைத்தியம் என்பதைக் குறிப்பதாகும். தமிழ்ச் சித்த வைத்தியத்துக்கும், ஆயுர்வேத வைத்தியத்துக் கும் மற்றொரு பெரிய வேற்றுமை உண்டு. ஆயுர் வேத வைத்தியம், மக்களுக்குச் சாவு உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுகின்றது; சாகாமல் வாழ மருந்துண்டு என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. சித்தர்களின் கொள்கை, மக்கள் சாகாமல் வாழலாம் என்பதே; நீண்டநாள் வாழலாம் என்பதே. இதற்கான பயிற்சியும், காயகல்பம் என்னும் மருந்து வகைகளும் சித்தர் நூல்களிலே சொல்லப்படுகின்றன. மணியும் மந்திரமும் மணி, மந்திரம், மருந்து(ஔடதம்) மூன்றும் சித்த வைத்தியத்தில் கூறப்படுகின்றன. மணி என்பது சோதிடம். வானத்தைப் பார்த்துக் காலத்தை அறிவது; பருவ நிலையை அறிவது. இவைகள் சோதிடம். மருந்துகளைக் கண்டறிந்த சித்தர்களுக்கு, பருவநிலையை அறியும் சோதிடம் என்னும் வான சாதிர அறிவும், மந்திர சக்தியும் தேவையாக இருந்தன. பச்சிலைகளும், வேர்களும், கிழங்குகளும், காய்களும், விதைகளும் எல்லாம் எல்லாக் காலங்களிலும் கிடைப்பன அல்ல. ஒவ்வொன்று ஒவ்வொரு காலத்தில்தான் கிடைக்கும். அவ்வக்கால நிலைகளை அறியச் சோதிடம் அவசியமாக இருந்தது. மருந்துகளைப் புடமிடுவதற்கும் பருவகாலங்கள் உண்டு. நோயாளிகளுக்கும், நோய்களுக்கு மருந்து கொடுக்கும் போது, நோய்க்குத் தகுந்தவாறு பருவகாலம் அறிந்து மருந்து கொடுத்து வந்தனர். இதனால் சித்தர்கள்- சித்த வைத்தியர்கள்- சோதிடமும் அறிந்திருந்தனர். மந்திரங்களைப் பற்றியும், அவைகளை உச்சரிக்கும் உரு வேற்றும் முறைகளைப் பற்றியும் சித்தர் நூல்களிலே காணலாம். மந்திர எழுத்துக்களை அடைக்கும் சக்கரங்களும் கூறப்படு கின்றன. நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்பது தொல்காப்பியம், செய்யுள் இயலில் காணப்படும் சூத்திரம். முனிவர்கள் கட்டளையிடும் முறையிலே கூறி வைத் திருக்கும் பொருள் மறைந்திருக்கும் மொழியே மந்திரமாகும் என்பதே இதன்பொருள். இதனால், மந்திரம் என்பது அதிகாரம் செய்வதுபோல் உச்சரிக்கப்படுவது, அர்த்தம் புரியாத சொல் என்பதை அறியலாம். மந்திர ஒலிகள் இன்றும் பயங்கர ஓசையுடன் அமைந் திருப்பதைக் காணலாம்; உரத்த சப்தமும், புதிய சப்தமும். நாம் சாதாரணமாகக் கேட்டும் பழகியும் அறியாத அதட்டல் உருட்டல் ஒலிகளும் மந்திரங்களில் அமைந்திருக்கக் காண் கிறோம். இத்தகைய மந்திரங்களைப் பற்றிச் சித்தர் நூல்களிலே தேர்ந்தவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. மந்திர தந்திரம் என்ற இரட்டைத் தொடர் வழக்கத்தில் இருக்கிறது. மந்திரமும் தந்திரமும் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இவை காடுகளிலும், மலைகளிலும் மருந்துகளுக்கான மூலப் பொருள்களைத் தேடித்திரிவோர்க்கு அவசியமாயிருந்தன என்று கூறுகின்றனர். மந்- திரம். மந்- மனசு; திரம்- உறுதி. மனத்தை உறுதி யாக்கிக்கொள்ளும் முறையே மந்திரமாகும். தன்- திரம்; தன்னை உறுதியிலே நிறுத்திக்கொள்ளுதல், தந்திரமாகும். சித்தர்கள், உள்ளத்திலே உறுதி பூண்டவர்கள்; அஞ்சாமல், கலங்காமல் ஒரு நிலையிலே நின்றவர்கள். அஞ்சாமல் ஒருநிலையிலே நிற்பதற்கு மந்திரங்களை உச்சரிக்கும் முறைகளைப் பழகியிருந்தனர். ஒலிக்கும் உருவம் உண்டு என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. ஒலி வடிவைப் பலமுறை உச்சரித்து உள்ளத்தை வலுப் படுத்திக் கொள்ளுவதற்கே மந்திர எழுத்துக்கள் ஏற்பட்டிருக் கின்றன. அவ்வெழுத்துக்களைப் பலமுறை உருப்போடுவதற்கு உருவேற்றுதல் என்று பெயர். மந்திர எழுத்துக்களை, ஆயிரம், இரண்டாயிரம், லட்சம், கோடி என்ற கணக்கிலே உருவேற்றிக் கொள்ளுவதால் உள்ளம் உறுதி பெறுகின்றது; தான் சொல்வது பலிக்கும், செய்வது கைகூடும் என்ற திடநம்பிக்கையும் உண்டா கின்றது. இந்த நம்பிக்கை, அவர்கள் ஒருநிலையில் கலங்காமல் நிற்கவும் நடக்கவும் உதவுகிறது. மந்திர சக்தியால் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் எதைக் கண்டும் அஞ்சமாட்டார்கள். மூலிகைகளுக்காகவும், உலோகப் பொருள்களுக்காகவும் அவர்கள் காடு மலைகளில் அலையும்போது பல ஆபத்துக்கள் ஏற்படுவது உண்டு. விஷப் பிராணிகள், கொடிய விலங்குகள் இவைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவர்களுக்கு மந்திரங்கள் உதவி செய்தன. அவர்கள் நம்பிக்கையுடன், மன உறுதியுடன் கூச்சலிடும் பயங்கரமான ஒலிகளைக் கேட்டு விஷப் பிராணிகளும், விலங்குகளும் விலகியோடும். இவர்களின் உச்சரிப்பின் உருவம் அவைகளைத் தாக்கும் வல்லமை பெற்றிருந்தன. இதுவே மந்திரங்களைப் பற்றிச் சித்தர் நூல் ஆராய்ச்சி யாளர்களின் கொள்கை. இது பொருத்தமாகவே காணப்படு கின்றது. ரசவாத வித்தை ரசவாதம் என்றால் இரும்பு முதலிய உலோகங்களைத் தங்கமாக்குவது என்று நம்புகின்றனர். சித்தர்கள் என்பவர்கள் இவ் வித்தையிலே தேர்ந்தவர்கள் என்று சொல்லுகின்றனர். இவ்வித்தையிலே வல்லவர்கள் சித்தர்கள் என்பதற்கான கதை களும் வழங்குகின்றன. புராணங்களில் இத்தகைய கதைகளைக் காணலாம். சித்தர் நூல்களிலும் உலோகங்களைத் தங்கமாக்கும் முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன; செம்பு, இரும்பு முதலி யவைகளை மூலிகைச்சாறுகளுடன்- வேறு உப்புகளுடன் - சரக்குகளுடன்- கலந்து புடம் வைத்துத் தங்கமாக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை நம்பி அத் துறையிலே பொருளைச் செலவழித்தவர்கள் உண்டு; செலவழிப்போரும் உண்டு. இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, தங்கம் முதலியவை தனித் தனி உலோகங்கள். அவை ஒவ்வொன்றும் இயற்கையானவை. ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்ற முடியாது. ஆனால் ஒரு உலோகத்துடன் மற்றொரு உலோகத்தையோ, பல உலோகங்களையோ கலந்து வெவ்வேறு உலோகங்கள் போல காட்டலாம். இவ்வுண்மையை உணராதவர்களே, செம்பைப் பொன்னாக்குவது, இரும்பைப் பொன்னாக்குவது, ஈயத்தைத் தங்கமாக்குவது ரசவாதவித்தை என்று நம்பினர்; நம்புகின்றனர். சித்தர் நூல்களிலே தேர்ந்தவர்கள் ரசவாதம், வாதம் என்பதற்கு வேறு பொருள் கூறுகின்றனர். வேதித்தல் என்ற சொல்லே வாதம் என்று திரிந்தது. வேதித்தல் என்பதற்கு மாறுபடுத்துவது என்று பொருள். வாதம் என்பதன் பொருள் மாறுபடுதல் என்பது. நம்மைச் சுற்றிலும் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் மாறிக் கொண்டே யிருக்கின்றன. இந்த மாற்றம் மெதுவாகவோ, விரைவாகவோ நடந்துகொண்டே யிருக்கின்றது. இந்த மாற்றங்கள் எப்படி உண்டாகின்றன என்பதைக் கண்டறிவதே வாதமாகும். இயற்கையான இந்த மாற்றங்களைச் செயற்கை முறைகளாலும் கண்டறியலாம். ஆதலால், இயற்கை யான உலோக வகைகளின் மாறுதல்களை- மாறுதலால் ஏற்படும் குணங்களைச் செயற்கை முறைகளால் ஆராய்ந்து காண்பதையே வாதம் என்று கூறினர். இது, வாத வித்தையின் உண்மையறிந்தோர் கருத்து. வாத வித்தையைப் பற்றி வழங்கும் பழமொழிகளும் இவ் வுண்மையைக் காட்டுகின்றன. வாத வைத்தியம், வாதம் சுட்டு வைத்தியன் ஆனான், வாதங் கெட்டால் வைத்தியம் என்பன அப் பழமொழிகள். தங்கத்தில் ஆசை வைத்து வாதம் சுடுவதிலே பழகிய பலர் சிறந்த வைத்தியர்களாகியிருக்கின்றனர். வைத்தியர்களுக்கு மருந்துகளின் குணங்களும், மருந்துக்குப் பயன்படும் மூலப் பொருள்களின் குணங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஆதலால் தான் வாத முறையைப் பற்றிச் சித்தர் நூல்கள் கூறுகின்றன. ரச வாதம் என்பது, ரசம் என்னும் இயற்கைப் பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிதல். மருந்து வகைகளிலே ரசம் ஒரு முதன்மையான மருந்து என்பதை வைத்தியந் தெரிந்தவர்கள் அறிவார்கள். ரச பபம், ரச செந்தூரம், ரசக் கட்டு முதலியன ஒப்புயர்வற்ற மருந்துகள். பல நோய்களுக்கு- தீராத பல கொடிய நோய்களுக்கு- ரசம் சம்பந்தமான மருந்துகள் கொடுக்கப்படு கின்றன. ஆகவே, ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்றே பொருள். வாதம்- பண்டங்களின் மாறுதல் களைக் காண்பது. விஞ்ஞான ஆராய்ச்சி சித்தர்கள் கண்டறிந்த இந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். இந்த வாத வித்தைதான் சிறந்த ரசாயன ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், இலை வகைகள், விதை வகைகள், பட்டை வகைகள், பூ வகைகள், முத்து, பவளம் முதலிய கடல்படு திரவிய வகைகள், பிராணிகளின் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை, கதூரி, மூத்திரம், மலம் முதலிய வகைகள்- இவைகளின் குணங்களையெல்லாம் அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பது அற்புதமான செயல். பண்டங்களின் பண்புகளை ஆராய்ந்ததனால் இன்னின்ன சரக்குகளைச் சேர்த்து இன்னின்ன மருந்துகளைச் செய்யலாம் என்று அறிந்தனர்; இன்னின்ன மருந்துகள் இன்னின்ன நோய் களைத் தீர்க்கும் என்றும் கண்டனர். ஒரு நோய்க்குப் பல மருந்துகள், பல நோய்களுக்கு ஒரே மருந்து; உள்ளுக்குள் சாப்பிடும் மருந்து; உடம்பில் பூசிக் கொள்ளும் மருந்து; மூக்கினால் முகரும் மருந்து; நோய்க்கு மருந்து; பலவீனத்துக்கு மருந்து; நீண்டநாள் உயிர்வாழ்வதற்கு மருந்து- இவ்வாறு பலவகையான மருந்துகளைக் கண்டறியத் துணை செய்தது. ரசவாதம் என்னும் ரசாயன ஆராய்ச்சியே யாகும். இன்று இருப்பது போன்ற பரிசோதனை சாலைகள் அக்காலத்தில் இல்லை; கருவிகள் அக்காலத்தில் இல்லை; வசதிகள் அக்காலத்தில் இல்லை. அந்த நிலையில் காட்டிலும், மலையிலும், குகையிலும் வாழ்ந்த அறிஞர்கள் - சித்தர்கள்- தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் செய்திருக்கும் இரசாயன ஆராய்ச்சி இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஒத்திருப்பதைக் காணும் போது வியப்புண்டா கின்றது. இத்தகைய ஆராய்ச்சிகளைச் செய்த அவர்களை அறிஞர்கள், சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், தியாகிகள் என்று போற்றுவதிலே தவறில்லை. சித்தர்களும் சீனர்களும் நமது நாட்டுச் சித்தர்களுக்கும், சீன நாட்டு மருத்துவர் களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு உண்டு என்று தெரிகின்றது. இது உண்மையென்று கொள் கின்றனர் பலர். போகர் என்பவர் தமிழ்நாட்டுச் சித்தர்களிலே ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் சீனர். சீனத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர். தமிழ்நாட்டில் பல இடங்களிலும் சுற்றுப்பிரயாணம் செய்தவர்; பழனி மலையிலே தங்கியிருந்தார். இவர் சீன மருத்துவ முறைகளையும் தமிழர்களுக்குக் கூறியிருக்கலாம். இவர் பழனியிலே சமாதியானார் என்றும், சீனத்திற்குத் திரும்பிப் போய்விட்டார் என்றும் சொல்லுவோர் உண்டு. இவர் சீனத்திற்குத் திரும்பிச் சென்றிருந்தால் அங்கும் சித்த வைத்திய முறை பரவியிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவருடைய வைத்திய முறைகளைத் தமிழில் பாடல்களாக எழுதி வைத்திருக்கின்றனர். போகர் எழுநூறு. போகர் இரத்தின வைப்பு முதலிய நூல்கள் இவர் பெயரால் வழங்குகின்றன. புலிப்பாணி என்பவரும் சீனர். இவரையே வியாக்ரபாதர் என்று குறிப்பிடுகின்றனர். இவர் போகருடன் தமிழகத்திற்கு வந்தவர் என்றும், போகரின் மாணவர் என்றும் சொல்லு கின்றனர். இவர் பெயராலும் வைத்திய நூல்களும், ஜால வித்தை நூல்களும் வழங்குகின்றன. சீன நாட்டு வைத்தியம் நமது நாட்டுச் சித்த வைத்தியம் போலவே சிறந்து விளங்குகின்றது. சித்த வைத்தியத்தால் தீராத நோயே இல்லை. கர்ம வியாதி, தீர்க்க முடியாத நோய், அனுபவிக்கவேண்டும் என்பது தலைவிதி என்று சொல்லப்படும் குட்டம் போன்ற பெருநோய்களுக் கெல்லாம் சித்த வைத்தியத்தில் மருந்துகள் உண்டு. பெருநோய்கள் தீர்க்கப்படுகின்றன. சீன நாட்டு வைத்தியத்திற்கும் இத்தகைய பெருமை உண்டு. சித்த வைத்தியத்தில் சிறந்த கண் வைத்திய முறைகளும் உண்டு. ஒடிந்த எலும்பை ஒட்டவைக்கும் பச்சிலைகள் சித்த வைத்தியத்தில் உண்டு; முறிந்த எலும்பை வளரவைக்கும் பச்சிலைகளும் உண்டு. இந்த முறையைத் தமிழ் வைத்தியர்களும் கையாளுகின்றனர்; சீன நாட்டு வைத்தியர்களும் கையாளு கின்றனர். இவைகள் சீன நாட்டு வைத்தியத்துக்கும், தமிழ்நாட்டு வைத்தியத்துக்கும் தொடர்புண்டு என்பதைக் காட்டும். ஆயுர்வேத வைத்தியம் நமது நாட்டிலே- பாரத நாட்டிலே- பரவியிருக்கும் வைத்தியம். பண்டைச் சித்தர்கள் பலர் ஆயுர்வேத வைத்திய முறையையும் அறிந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆதலால் இன்று வழங்கும் சித்த வைத்திய நூல் களிலே ஆயுர்வேத மருந்து முறைகளும் கலந்திருந்தால் அதில் வியப்பில்லை. சித்தர் நூல்கள் சித்த வைத்திய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றுள் அச்சில் வெளிவந்தவை பல; அச்சாகாமல் இன்னும் ஏட்டுச் சுவடிகளாகவே கிடப்பன பல; காப்பாற்றப்படாமல் அழிந்துபோனவை பல. திருமூலர், அகதியர், தேரையர் முதலியோர் நோய் களின் குணங்களைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கின்றனர். குணவாகடத் திரட்டு என்னும் நூலிலே அவற்றைக் காணலாம். சட்டைமுனி வாத காவியம் ஆயிரம் என்னும் நூல், வாத வித்தையைப் பற்றிக் கூறுவது. அகதியர் பெயரால் வழங்கும் பல நூல்கள் இருக்கின்றன. வைத்திய காண்டம், அகதியர் பரிபூரணம் நானூறு, அகதியர் வைத்திய ரத்தினச் சுருக்கம், அகதியர் அருளிய செந்தூரம் முன்னூறு, அகதியர் வைத்திய பூரணம் முதலிய பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தேரையர் அருளிய தைல வர்க்கச் சுருக்கம், தேரையர் வைத்திய காவியம், தேரையர் வைத்தியம் ஆயிரத்தொன்று நீர்நிறக் குறி சாத்திரம் முதலிய நூல்கள் தேரையர் பெயரால் வழங்குகின்றன. நீர்நிறக் குறி சாத்திரத்திலே, சிறுநீரின் நிறத்தைக் கொண்டு நோய்களைக் கண்டறியும் வழி சொல்லப்படுகின்றது. போகர் பெயரால் போகர் எழுநூறு, போகர் இரத்தின வைப்பு முதலிய நூல்களும், கோரக்கர் பெயரால் மலைவாகடம் என்னும் நூலும், மச்சமுனி பெயரால் மச்சமுனி நாயனார் எண்ணூறு என்னும் நூலும், உரோம ரிஷி பெயரால் உரோமரிஷி நாயனார் வைத்தியம் ஐந்நூறு என்னும் நூலும், திருமூலர் பெயரால் திருமூலர் எண்ணாயிரம் என்னும் நூலும் சிறந்த வைத்திய நூல்களாக விளங்குகின்றன. இராமதேவருக்கு யாகோபு என்று மற்றொரு பெயர். இவர் பெயரால் வைத்தியக் கல்லாடம் முதலிய 17 நூல்கள் வழங்குகின்றன. தன்வந்திரி முனிவர் பெயரால் வைத்தியக் கும்மி, வைத்திய காவியம், கருக்கடை நிகண்டு முதலிய நூல்கள் வழங்குகின்றன. திருவள்ளுவர் பெயரால் ஏணி ஏற்றம் இருநூறு, ஞான வெட்டியான் முதலிய நூல்கள் வழங்குகின்றன. லாட சித்தர் என்பவரும் வைத்திய நூல் எழுதியுள்ளார். சித்தர்களின் வைத்திய நூல்களை ஆராய்ந்தால் பல உண்மைகளைக் காண முடியும். சித்தர்களின் வைத்திய முறையை இதுவரையில் அலட்சியம் செய்துவந்தனர். மேல் நாட்டு வைத்தியங் கற்றவர்கள் இப்பொழுதுதான் அதன் பெருமையை அறியத் தொடங்கியிருக்கின்றனர். சித்தர்களின் கொள்கை சித்தர்களின் ஞானப் பாடல்கள் சித்தர்கள் பெயரால் வழங்கும் வைத்திய நூல்களைத் தவிர, அறிவைப் புகட்டும் வேறு பல பாடல்களும் வழங்கு கின்றன. சிவவாக்கியர் பாடல், பாம்பாட்டிச் சித்தர் பாடல், குதம்பைச் சித்தர் பாடல், திருவள்ளுவர் ஞானம், இடைக்காட்டுச் சித்தர் பாடல், அகப்பேய்ச் சித்தர் பாடல், அகதியர் ஞானம், அழுகணிச் சித்தர் பாடல், கொங்கணர் பாடிய வாலைக் கும்மி, சட்டைமுனிநாயனார் ஞானம், காகபுசுண்டர் ஞானம் முதலிய பல பாடல்கள் இருக்கின்றன. திருமூலர் திருமந்திரம், ஔவையார் ஞானக் குறள், ஞான வெட்டியான் முதலிய நூல்களையும், சித்தர்களின் கருத்தடங்கிய நூல்களாகவே கொள்ளவேண்டும், மதம், சமுதாயம்- இவைகள் பற்றிய சித்தர்களின் கொள்கைகளைச் சித்தர்பாடல்களிலே காணலாம். சித்தர்களின் பாடல்களிலே சிவபெருமான், சக்தியின் பல கூறுகளான தெய்வப் பெயர்கள், முருகன், விநாயகர் முதலிய தெய்வப் பெயர்கள் எல்லாம் வருகின்றன. பஞ்சாட்சரம் முதலிய மந்திரங்கள் கூறப்படுகின்றன. சித்தர்களின் பாடல்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள் பக்திமான்களைப் போலவே- வைதீக மதவாதிகள் போலவே- பல தெய்வங்களை உபாசிப்பவர்கள் போலவே- காணப்படுகின்றனர். ஆனால் சித்தர் பாடல்களை ஆழ்ந்து படித்தால், அவர்கள் வைதீக மதத்திற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். வைதீக மதக் கொள்கைகள் பலவற்றைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை நாத்திகர்கள் என்றோ, உலகாயதர்கள் என்றோ வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை; வெளிப்படையாகப் பாடவில்லை. கடவுள் அன்பர்கள்போலவே காட்சியளிக்கின்றனர். ஆயினும், சித்தர்களின் பாடல்களிலே உலகாயதத்தை - நாத்திகத்தைப் பற்றிய கண்டனங்களும் காணப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதவாதிகள், கடவுள் பக்தர்கள், அவனன்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையுள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர்வாழ முடியும் என்று நம்புகின்றனர். சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை; மக்கள் சாவாமல் வாழவும் முடியும் என்றும் கூறுகின்றனர். இவ்வுலகிலே பிறந்த மக்கள், முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தக்கபடி இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்கின்றனர். அவர்கள் முன் செய்த பாபம் காரணமாகப் பல நோய்களையும் அடைகின்றனர். இத்தகைய நோய்களுக்குக் கர்ம வியாதிகள் என்று பெயர். கர்ம வியாதிகளைத், தீர்க்க முடியாது. அவற்றை அடைந்தோர் அவற்றின் கொடுமையை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும் என்பது வைதீர்களின் கொள்கை. சித்தர்கள் இக்கொள்கையை நம்பவில்லை. மக்கள் இவ்வுலகில் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்துடன் வாழ முடியும். துக்கம் இல்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழி உண்டு; கர்மவியாதிகள் என ஒன்றுமேயில்லை; தீராத நோய்கள் என எதுவும் இல்லை; எல்லா நோய்களையும் தீர்த்துவிட முடியும்; என்றும் மாறாத இளமையுடன் வாழ முடியும் என்று சித்தர்கள் நம்புகின்றனர். மக்கள் நோயின்றி நல்வாழ்வு வாழ்வதற்காகவே- கவலை யின்றி ஆனந்தத்துடன் வாழ்வதற்காகவே- நரை, திரை, மூப்பு, பிணியின்றி வாழ்வதற்காகவே- யோகப் பயிற்சியை வலியுறுத்தி யிருக்கின்றனர். மூச்சை நமது விருப்பப்படி விடவும், இழுக்கவும், நிறுத்தவும் பழகுவதே யோகப் பயிற்சி. இப் பயிற்சிக்காகவே யோகாசனங்களைப் பற்றிக் கூறியிருக்கின்றனர். இதற்குமேலும் நோய் வந்தால் அதை விரட்டுவதற்கு மருந்துகள் கண்டுபிடித் திருக்கின்றனர்; நீண்டநாள் வாழ்வுக்காகக் காயகல்பங்கள் என்னும் மருந்து வகைகள் கூறுகின்றனர். யோகப் பயிற்சி யாலும், மருந்துகள், கற்பங்களாலும் நீண்டநாள் வாழலாம்; மகிழ்ச்சியுடன் வாழலாம்; என்றும் இளமையுடன் வாழலாம் என்னும் இக் கொள்கை வைதீக மதத்திற்கு மாறானது என்பதில் ஐயம் இல்லை. வைதீக மதமும், சித்தர்களும் உடம்பு வேறு; உயிர் வேறு; உடம்பு பெரியது; கண்ணால் காணக்கூடியது; அதாவது தூலமாக இருப்பது. உயிர் நுண்ணியது; கண்ணால் காணமுடியாதது; சூட்சுமமானது. உடம்பு நிலையற்றது; அழிந்துவிடும் இயல்புள்ளது. உயிர் நிலையுள்ளது; என்றும் அழியாமல் இருப்பது; ஆதலால் உடம்பின் சுகம் கருதிப் பாடுபடுவது அறியாமை. உடம்பைப் பாதுகாப்பதற்காகக் காலங்கழிப்பவர்கள் உண்மை அறியா தவர்கள். இறந்தபின் உயிர் துன்புறாமல், இன்பம் அடைய நினைப்பவரே- இதன் பொருட்டு முயல்கின்றவரே அறிவுள்ள வர்கள்; ஞானிகள் என்பது மதவாதிகளின் கொள்கை. இக் கொள்கையைச் சித்தர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. உயிரும் உடம்பும் ஒன்றே. உடம்பில்லாமல் உயிர் வாழ முடியாது. இரண்டும் தனித்தனியாக இயங்க முடியாது உடம்பிலே தோன்றி உடம்புடன் வாழ்வதே உயிராகும். உடம்பு அழிந்தால் உயிரும் அழிந்துபோகும். ஆதலால் உடம்பைப் பாதுகாப்பதே உயிரைப் பாதுகாப்பதாகும். உடம்பை அப்பழுக் கின்றி- மாசுமறுவின்றி- வலுவுடையதாக வைத்துக் காப்பதே உயிரைக் காப்பதாகும். இதுவே சித்தர்களின் கொள்கை; நம்பிக்கை. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்; உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த்தேனே என்பது திருமூலர் திருமந்திரப் பாட்டு. உடம்பு அழிந்தால் உயிரும் அழியும்; உடம்பை அழியவிடுகின்றவர் உறுதியான உண்மை அறிவைப் பெறமாட்டார். ஆதலால் உடம்பை அழியாமல் வளர்க்கும் வழியை அறிந்தேன்; உடம்பைப் பழுது படாமல் வளர்த்தேன்; அதனால் உடம்போடு கூடிய- ஒன்று பட்ட உயிரையும் வளர்த்தேன் என்பதே மேலேகாட்டிய திருமந்திரத்தின் பொருள். இன்றைய விஞ்ஞானிகளும், ஆன்மா தனித்த ஒரு பொருள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆன்மா என ஒன்று தனியாக- மதவாதிகள் சொல்லுகின்றபடி அழியாத- தனிப் பொருளாக இல்லையென்பதே பல விஞ்ஞானிகளின் கருத்து. சித்தர்களின் கொள்கை இதற்கு ஒத்திருப்பதைக் காண்கின்றோம். உடம்பு மாயம், பொய்யானது என்பதைச் சித்தர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. காயமே இது பொய்யடா என்று பாடப்படும் சித்தர் பாடல்கள் பிற்காலத்தார் கொள்கை என்றே கூறுகின்றனர். உடம்பு மெய், அழியாமல் வைத்துக் காப்பாற்றக் கூடியது என்பதுதான் சித்தர்களின் கொள்கை. உடம்புக்கு மெய் என்று ஒரு பெயர். உண்மையானது உடம்பு என்ற பொருளையே மெய் என்ற இச்சொல் குறிக்கும். நாம் காணும் பஞ்ச பூதங்கள் உண்மையானவை; நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் இவை களைக் கண்முன் காண்கிறோம். இவற்றைப் பொய்யென்று சொல்ல முடியாது. இப் பஞ்சபூதங்களின் சேர்க்கையாலான உடம்பைப் பொய் என்று சொல்லுவது பொருந்தாது. இதுவே சித்தர் வழியினர் கூறும் வாதம். இது வைதீக மதத்துக்கு முரண்பட்டது என்பதில் ஐயம் இல்லை. படைத்தல், காத்தல், அழித்தல் வினைகளைச் செய்யும் கடவுளர்கள் தனித்தனியே இருக்கின்றனர் என்பது புராணக் காரர்கள் கொள்கை. தெய்வம் ஒன்றே என்று நம்பும் மத நம்பிக்கையுள்ளவர்கள் ஒரே கடவுள்தான் இம்மூன்று தொழில் களையும் செய்துவருவதாகக் கூறுகின்றனர். சித்தர்களின் கொள்கை இதற்கு மாறானது. தனித்த ஒரு படைப்புக் கடவுளைச் சித்தர் மரபினர்- அவர்கள் வழியைப் பின்பற்றுவோர்-பலர் ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வுலகில் உள்ள ஆண் பெண்கள்தான் உலகைப் படைப்பவர்கள்; காப்பவர்கள்; அழிப்பவர்கள். ஆண் பெண் கூட்டுறவால்தான் - சேர்க்கையால்தான்- முத்தொழில்களும் நடைபெறுகின்றன. உலகத்துக்கு மூலகாரணம் சிவசக்தி. சிவம் என்பது ஆண்; சக்தி என்பது பெண். இவ்வுண்மையைக் காட்டவே சிவலிங்கங்கள் தோன்றின. இலிங்கத்தின் அடிப்பாகம்- வட்டமும் தட்டையுமான பாகம் சக்தியைக் குறிப்பது; மேலேயுள்ள குழவி போன்ற பகுதி சிவத்தைக் குறிப்பது. சிவமாகிய ஆணும், சக்தி யாகிய பெண்ணும் சேர்ந்ததே சிவலிங்கம். உலக உற்பத்தியை உணர்த்தவே இலிங்க உருவம் தோன்றியது. இதுவே சித்தர் களின் கொள்கை. பரமாத்மா வேறு; ஜீவாத்மா வேறு. பரமாத்மா பேரறிவு படைத்தது; எல்லாம் வல்லது. ஜீவாத்மா சிற்றறிவும் சிறு தொழிலும் உள்ளது. பரமாத்மாவுக்கு எல்லாவற்றையும் தாமே உணரும் ஆற்றல் உண்டு. ஜீவாத்மா உணர்த்தினால்தான் உணரமுடியும் இயல்புள்ளது. பரமாத்மாவைக் காண வொட்டாமல் தடுத்து நிற்பது மாயை; அறியாமை. அது ஒழிந்தால்தான் ஜீவாத்மா பரமாத்மாவைக் காண முடியும். பரமாத்மாவுடன் சேர்ந்தோ, அல்லது அதன் அருகிலே தனித்திருந்தோ நிலையான இன்பத்தை அடைய முடியும். இவ்வாறே பல மதங்கள் கூறுகின்றன. சித்தர் வழியினர் இக்கொள்கையை ஒப்புக்கொள்ள வில்லை. பரமாத்மா எங்கும் தனியாக இல்லை; நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம்; ஆதலால் கடவுளைத் தேடி எங்கும் அலையவேண்டாம்; உடம்பைப் பேணுவதே கடவுட்பணி; உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர்களின் கொள்கை. உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண் என்பது ஔவையின் ஞானக் குறள். இக்குறள், உடம்பைப் பெற்ற பயன், உடம்பிலேயே உத்தமனை- பரமாத்மாவைக் காண்பதுதான் என்று கூறிற்று. உடம்பு தான் கடவுள் என்ற கருத்து இக்குறளில் அமைந்திருப்பதை அறியலாம். சித்தர்கள் சமரச ஞானிகள் வைதீக மதம் வருணாசிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளு கிறது. வருணாசிரம தர்மங் காரணமாக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற கொள்கைகள் ஏற்பட்டன. பாரத நாட்டிலே சாதி வேற்றுமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றது. மனித சமுதாய ஒற்றுமையைச் சிதைக்கும் புல்லுருவி, சாதி வேற்றுமை. சாதி வேற்றுமையும், வருணாசிரம தர்மமும் சரிதான் என்று வாதிப்போர் இன்றும் உள்ளனர். சித்தர்கள் இக் கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை. மனித குலம் அனைத்தும் ஒரே இனம்; ஒரே சாதி என்பதுதான் சித்தர்களின் கொள்கை. சித்தர்களின் பாடல்களிலே சாதி வேற்றுமையைப் பலவாகத் தாக்கிப் பாடியிருக்கின்றனர். சாதி வேற்றுமை பாராட்டுவோரை மூடர்கள் என்றும், கொடியவர்கள் என்றும் கடிந்து கூறியிருக்கின்றனர். சித்தர்களின் பாடல்களிலே மத வெறுப்பைக் காண முடியாது. எந்த மதத்தையும் அவர்கள் நேரடியாகத் தாக்கிப் பாடவில்லை. மொழி வெறியோ இன வெறியோ அவர்களிடம் காணப்படவில்லை. சித்தர்களின் பாடல்களிலே வடசொற்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. சீனர்களும் சித்தர் களாகப் போற்றப்பட்டிருக்கின்றனர். போகர், புலிப்பாணி ஆகிய சித்தர்கள் சீனர்கள்; சீன தேசத்திலிருந்து வந்தவர்கள்; மொழியாலும் இனத்தாலும் வேறுபட்டவர்கள். ஆயினும் இவர்களும் தமிழ்நாட்டுச் சித்தர்களால் போற்றப்படுகின்றனர். சித்தர்களிடம் வடநாடு, தென்னாடு என்ற வேற்றுமையும் இல்லை. வான்மீகர், தன்வந்திரி, பதஞ்சலி, அகத்தியர், திருமூலர் முதலியவர்கள், கோரக்கர் போன்ற சித்தர்கள் வடநாட்டின ராலும் போற்றப்படுகின்றனர்; தென்னாட்டாராலும் போற்றப் படுகின்றனர். இவர்கள் பாரத நாட்டுக்கே பொதுவானவர்கள். இவர்கள் வடநாட்டினர் என்று கூறுவோர் உண்டு. எந்நாட்டின ராயினும் சரி; தமிழ்நாட்டுச் சித்தர்கணத்துள் சிறந்து விளங்கு கின்றனர். கடவுள் பெயரால் நடத்தும் தேர் திருவிழாக்களையும், உருவ வணக்கத்தையும் சித்தர்கள் கண்டித்துப் பாடியிருக் கின்றனர். இவைகள் அறிவற்ற செயல்கள் என்பதே அவர்கள் நம்பிக்கை. சித்தர் நெறியைப் பின்பற்றுவோர்- பாராட்டுவோர்- சிலர், சித்த மார்க்கந்தான் தமிழகத்து மதம் என்று கூறுகின்றனர். இன்றுள்ள மதங்கள் தோன்றுவதற்கு முன்னே, மத நூல்கள் தோன்றுவதற்கு முன்னே தமிழகத்தில் சித்தர் மதந்தான் பரவியிருந்தது என்று கூறுகின்றனர். இது உண்மையென்று கொள்வதற்கில்லை. புறநானூற்றின் 214- வது பாடல் கோப்பெருஞ்சோழனால் பாடப்பட்டதாக வழங்குகின்றது. அப் பாடலின் மூலம், மறு பிறப்பு இல்லையென்று வாதிப்போர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று தெரிகின்றது. பரிபாடலின் ஐந்தாவது பாடலில், மறுபிறப்பு இல்லையென்போர் கண்டிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே இவர்கள்- மறு பிறப்பு இல்லையென்போர்- சித்தர் கொள்கையினராக இருந்திருக்கலாம். பழந்தமிழகத்தில் இத்தகையோர் இருந்தனர் என்பதற்கு இவை சான்றாகும். சித்தர்களின் வைத்திய முறைகள், காலங் குறிப்பிட முடியாத பழமையானவையாக இருக்கலாம்; தமிழ்நாட்டுக்கு உரிய தனிச் செல்வமாக இருக்கலாம். பண்டைத் தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்தர் வைத்தியம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், சித்தர் பாடல்களிலே காணப்படும் மத- சமுதாயக் கொள்கைகள் வைதீக மதம் பரவிய பின்பே தோன்றியிருக்க வேண்டும்; மதக் கொள்கைகளிலே சில, மக்களை அடிமை களாகவும், அறிவற்றவர்களாகவும் ஆக்குவதைக் கண்ட பின்னரே ஏற்பட்டிருக்கவேண்டும்; மக்களிடம் மூட நம்பிக்கைகள் வளர்ந்த பின்னரே தோன்றியிருக்கவேண்டும். வைதீக மதங்களில் கொள் கைகளுக்கு முரணான கொள்கைகள்- அவைகளை எதிர்ப்பது போன்ற கவிகள்- சித்தர் பாடல்களிலே காணப்படுகின்றன. ஆகவே, வைதீக மதக் கொள்கைகள்- புராணக் கொள்கைகள்- பரவிய பின்பே, பகுத்தறிவுக் கொள்கை என்று பலரால் பாராட்டப்படும் சித்தர்களின் கொள்கைகளும், பாடல்களும் பிறந்தன என்பதே உண்மையாகும். வேத மதம் எப்பொழுது உண்டாயிற்றோ- கடவுள்தான் உலகப் படைப்பு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் காரணம் என்ற கொள்கை எப்பொழுது தோன்றியதோ- அப்பொழுதே கடவுள் கொள்கையை மறுக்கும் மதமும் பிறந்துவிட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் இயற்கையே என்று வலியுறுத்தும் சார்வாக மதம்- நாத்திக மதம்- உலகாயத மதம்- பழமையானது என்பதை மறுப்பார் இல்லை. சித்தர்கள் கொள்கையும், சார்வாக மதக்கொள்கையும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சித்தர்கள், மக்கள் அனைவரும் ஒழுக்கந் தவறாமல் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திப் பாடியிருக்கின்றனர். பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம் முதலியவற்றை வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர். கூடா ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும்; நல்வாழ்வுக்கு உலைவைப்பது. கூடா ஒழுக்கத்தைப் பின்பற்றாதவர்களே யோகப் பயிற்சியிலே வெற்றி பெற முடியும்; உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழமுடியும். இதன்பொருட்டே நல்லொழுக்கத்தைப் போற்றியும், தீயொழுக் கத்தைக் கடிந்தும் பாடியிருக்கின்றனர். மனித சமுதாயத்தை நேசிக்கும்படி சித்தர்களின் பாடல்கள் வலியுறுத்துகின்றன. சித்தர்களின் பாடல்களிலே இவைகளைக் காணலாம். இத்தகைய சித்தர்கள் மதவாதிகள் அல்லர்; வைதீகர்கள் அல்லர்; சுயநலம் கொண்டவர்களும் அல்லர். மனிதாபிமானிகள்; பகுத் தறிவுவாதிகள்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்கள் என்றே இவர்களைக் குறிப்பிடலாம். சித்தர்களை உலகாயதர்கள் என்று கூறினால், இதை இல்லையென்று எளிதில் மறுக்க முடியாது. பாம்பாட்டிச் சித்தர் பாடல் சித்தரின் சிறப்பு சித்தர்கள் பாடல்களிலே பாம்பாட்டிச் சித்தர் பாடல் களைப் பலரும் பாடுகின்றனர்; பாடி இன்புறுகின்றனர். எளிய சந்தமுள்ள இனிய பாடல்; படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் சுவைக்கும் அரிய பாடல். பாம்பு படம் எடுத்து ஆடுவதுபோலவே அப்பாடல்களும் ஆடுகின்றன. தெளிந்து தெளிந்துதெளிந்து ஆடுபாம்பே! சிவன் சீர்பாதம் கண்டு தெளிந்து ஆடுபாம்பே! ஆடுபாம்பே! தெளிந்து ஆடுபாம்பே! - சிவன் அடியினைக் கண்டோம் என்று ஆடுபாம்பே! என்ற பாடல்தான் பாம்பாட்டிச் சித்தர் பாடலிலே முதல்பாட்டு. இந்தப் பாடலைப் பிச்சைக்காரர் முதல் பெரிய சங்கீத வித்வான் கள் வரையில் அனைவரும் தம்மை மறந்து பாடி இன்புறுவதைக் காண்கிறோம். கேட்போரும் பரவசம் அடைகின்றனர். பாம்பாட்டிச் சித்தர் பாடல் மாதிரியிலே- மெட்டிலே- பல பாடல்கள் தோன்றியிருக்கின்றன. இதுவே அப்பாடலின் சந்தச் சிறப்பை விளக்கப் போதுமானதாகும். பாம்பாட்டிச் சித்தர் பாடலைப் படிக்கும்போது, அவர் பாம்பைப் பிடித்து ஆட்டும் தொழிலிலே பழகினவர்போலவே காணப்படுகிறார். அவர் ஒரு பாம்பாட்டியாக இருந்திருக்க வேண்டும்; அல்லது ஒரு பாம்பாட்டியின் குடும்பத்திலே பிறந்த வராக இருந்திருக்கவேண்டும்; அல்லது பாம்பாட்டியுடன் பழகியவராகவாவது இருந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது. பாம்பு என்பதற்குத் தத்துவார்த்தம் சொல்லுவோரும் உண்டு. ஆத்மாவைப் பாம்பாக உருவகித்துப் பாடுகிறார் என்று சொல்லுகிறார்கள். பாம்பின் இயல்பைப்பற்றி அவர் பாடியிருக்கும் பாடல் களிலே புராணக் கதைகளைக் காணலாம்; அவைகளோடு பாம்பின் உண்மையான தன்மையையும் பார்க்க முடிகின்றது. நல்ல பாம்பைப் பற்றித்தான் அவர் பாடியிருக்கிறார். நல்லபாம்பு, பரமசிவன் முடியின்மேல் இருக்கிறது; சிவன் காதிலே குண்டலமாகத் தொங்குகின்றது; திருமாலுக்குக் குடையாக நிற்கின்றது; பார்வதிக்குக் கையிலே கங்கணமாக இருக்கின்றது; இவ்வுலகத்தையே தாங்கும் வல்லமையுடையது; திருமாலின் படுக்கையாகவும் விளங்குகின்றது; சந்திர சூரியர் களை விழுங்குகின்றது; சங்கரனுக்கு ஆபரணம் ஆயிற்று என்று புராண வரலாறுகளை எடுத்துக்காட்டிப் பாடியிருக்கிறார். நல்ல பாம்பினிடம் நச்சுப்பை உண்டு; அது வளைக்குள் குடியிருக்கும்; வளைக்குள் நுழையும்போது தலையை முன் வைத்துக் கொண்டு உடலை உள்ளே இழுத்துக்கொள்ளும்; தன் உடலை வட்டமாகச் சுற்றிக்கொள்ளும். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்; கண்ணின் பக்கத்தில் செவியைக் கொண்டது; மந்திரத்துக்குக் கட்டுப்படும் இயல்புள்ளது என்று இவ்வாறு பாம்பின் இயல்பை எடுத்துக் காட்டியிருக்கிறார். இதனால் இச்சித்தர் பாம்பின் இயல்பை நன்றாக அறிந்தவர் என்பதைக் காணலாம். சித்தர்கள், எல்லாம் வல்லவர்கள்; அவர்களால் எதையும் செய்யமுடியும் என்று தலைநிமிர்ந்து பேசுகிறார் பாம்பாட்டிச் சித்தர். இவரைப்போல வேறு எந்தச் சித்தரும் பாடவில்லை. ஆதிசேடன் ஆகிலுமே அங்கையி னாலே ஆட்டிவிடு வோம் எங்கள் ஆக்கினைக் குள்ளே! நீதியோடு அடங்கியே நின்றிடச் செய்வோம்; நின்றநிலை தவறாமல் ஆடுபாம்பே; செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம்! செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்; இப்பெரிய உலகத்தை இல்லாமல் செய்வோம்; எங்கள்வல் லபம்கண்டு ஆடுபாம்பே! என்று பாடியிருக்கும் பாடல்களிலே சித்தர்களின் சிறப்பைக் காண்கிறோம். அறிவாளிகளால் எதைத்தான் செய்ய முடியாது? எவ்வளவு பெரிய கொடுமையையும் எங்களால் அடக்கி விட முடியும். இவ்வுலகிலே நீதியை நிலைநாட்ட முடியும் என்பது முதற் செய்யுளின் உட்பொருள். மூன்றுலகத்தையும் இன்பமடையச் செய்வோம்; இப் பெரிய உலகிலே எக்கொடு மையும் இல்லாமல் செய்வோம் என்பது இரண்டாவது செய்யுளின் உட்பொருள். இத்தகைய சிறந்த கருத்துள்ள பாடல்களை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர். அவருடைய வரலாற்றை அறிவதற்கான சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் அவர் பாடல்கள் சிறந்த சுவையுடையன; வாழ்வுக்கு வழிகாட்டுவன என்பதில் ஐயமில்லை. பொய்யரை நம்பாதீர்! பொய்யைப் போதனை செய்வோர் எந்தக் காலத்திலும் உண்டு. பொய்யைப் போதனை செய்வோர் சுயநலவாதிகள்; அவர்கள் உலக மக்களை ஒன்றுபடாமல் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பைச் சுரண்டி வாழும் உயர்தர வர்க்கத்தாரின் கையாட்கள். பொன்னைப், பெண்ணை, மண்ணைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்போர் பலர் உண்டு. இப்படிச் சேர்த்து வைத்திருப் பவர்களிலே அனுபவிப்பவர்கள் சிலர்தான். சேர்த்து வைப்பது ஒன்றையே எண்ணித் திரிவோர்களுக்கு அனுபவிக்க நேரம் இராது. சருகரிக்கத்தான் நேரம் இருக்கின்றது; குளிர்காய நேரம் இல்லை என்று வழங்கும் பழமொழி ஒன்று உண்டு. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை படைத்தவர்களிலே பலர் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களுக்காக, இவர்களை ஆதரித்தும் பேசித் திரிவோர் சிலர் உண்டு. இச் சிலரிலே மதகுருமார்களும் சேர்ந்தவர்கள். பணம் படைத்தவர்கள் ஆண்டவன் அருள் பெற்றவர்கள்; அவர்களுக்குக் கிடைத்திருக்கும் செல்வமும் செல்வாக்கும் ஆண்டவனால் அருளப்பட்டவை. ஆதலால் அவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளுவது பாவம்; அவர்களுக்குக் கீழ்ப்படியாமலிருப்பது நரகத்துக்கே வழிகாட்டும்; அவர்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்று மத குருமார்கள் உபதேசம் பண்ணுவார்கள். மத குருமார்கள்- பெரும்பாலான மத குருமார்கள் மக்களின் அறிவுக்குச் சுதந்திரம் அளிக்கமாட்டார்கள்; மக்களுடைய சுயசிந்தனையை மட்டந்தட்டுவதே அவர்களுடைய உபதேசமாக இருக்கும்; அதற்காகவே பல சடங்குகள் செய்வார்கள்; ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டுவார்கள். மக்கள் ஒன்றுபட்டு முன்னேறுவதற்கு, மூட நம்பிக்கையற்று வாழ்வதற்குக் குருமார்கள் வழி காட்டுவதில்லை. ஒன்றும் அறியாத- தாமே சிந்திக்கும் திறமையற்ற- மக்களை மயக்குவதற்காகக் குருமார்கள் செய்துகொள்ளும் ஆடம் பரத்திற்கு அளவில்லை. எல்லா மக்களும் அணிவது போன்ற சாதாரண உடைகளை அவர்கள் அணிய மாட்டார்கள்; நீண்ட அங்கிகளை அணிவார்கள்; அல்லது காவி தோய்ந்த உடைகளை அணிவார்கள்; கையிலே செபமாலையுடன் காட்சியளிப்பார்கள்; கழுத்திலே கண்டிகைகள் பூண்டிருப்பார்கள்; வாயினால் முணு முணுத்துக் கொண்டேயிருப்பார்கள்; மொட்டை போட்டிருப் பார்கள்; அல்லது தாடிமீசையுடன் காட்சியளிப்பார்கள்; நாங்களே கடவுளின் பிரதிநிதி; நாங்கள் அவருடன் தினந்தோறும் பேசுகிறோம்; எங்கள் மூலந்தான் நீங்கள் கடவுள் கிருபையைப் பெற முடியும் என்று பெருமையடித்துக் கொள்ளுவார்கள். இத்தகைய குருமார்களை- குருக்கள்மார்களை- நம்பிப் பகுத்தறிவிழந்து நிற்கும் மக்கள், உலகில் இன்றும் நிரம்பிக் கிடக்கின்றனர். இவர்கள் உண்மையான குருமார்கள். அல்லர்; பொய்க் குருமார்கள். இவர்களை நம்பவேண்டாம்; நம்பி ஏமாறவேண்டாம். இவர்களை நம்புவதனால் எந்த நன்மையும் பெறமுடியாது; துன்பத்திலிருந்து கரையேற முடியாது என்று தெளிவாகக் கூறுகிறார் பாம்பாட்டிச் சித்தர். உண்மைக்கு வழிகாட்டும் ஆசானைத் தேடிப்பிடியுங்கள். பொய்யான மதங்களைப் போதனை செய்து வாழும் குருக்களுக்கும் புத்தி புகட்டும் திறமை படைத்த நல்ல உண்மைக் குருவைத் தேடுங்கள். பொய்ப் போதனையிலே ஈடுபட்டிருக்கும் வஞ்சகரையும் திருத்தி நல்ல நெறியிலே நடக்கச் செய்யும் ஆற்றலைப் படைத்தவரே உண்மையான போதகர். உண்மை யான மார்க்கம்- துன்பத்திலிருந்து கவலையிலிருந்து விடுதலை யளிக்கும் உண்மையான மதம்- இன்னதென்று நம் உள்ளத்தில் பதியும்படி சொல்லுகின்றவரே உண்மையான குரு ஆவார். அத்தகைய உண்மையான குருவின் பாதத்தைப் போற்றி- அல்லது சொல்லைப் பாராட்டி ஆடு பாம்பே என்று பாடுகிறார். பொய்மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப் புத்திசொல்லி நல்நெறியில் போக விடுக்கும் மெய்ம்மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும் மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய் பாம்பே! என்ற பாடலால் மேலே காட்டிய பொருளைக் காணலாம். உண்மைக் குரு இத்தகையவர் என்பதை மேலும் விளக்கிக் கூறுகிறார் பாம்பாட்டிச் சித்தர். வேதத்தின் உண்மையான பொருள் இன்னதுதான் என்று தெளிவாக அறிந்தவர்; வேதத்தையும் கடந்து நிற்கும் மெய்ப்பொருளைக் கண்டறிந்தவர்; அந்த உண்மையை நமது உள்ளத்திலே படியும்படி தெளிவாக அறிவிக்கக்கூடியவர்; அறிதற்கு உரிய பொருள் இன்னதுதான் என்பதை ஐயத்திற்கு இடம் இல்லாமல் தெளிவாகப் போதனை செய்யக் கூடியவர் யாரோ, அவர்தான் பூரணமான- உண்மை யுணர்ந்த குருநாதன் ஆவார். இத்தகைய உண்மையான குரு நாதனை அடைந்து, உண்மையை அறிந்து ஆனந்தங் கொண்டு ஆடுக பாம்பே என்று பாடியிருக்கின்றார். வேதப்பொருள் இன்னதென்று வேதம் கடந்த மெய்ப்பொருளைக் கண்டுமனம் மேவ விளம்பிப் போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும் பூரணசற் குருநாதன் கண்டு ஆடாய் பாம்பே! என்ற பாடலால் மேலே காட்டிய- கூறிய- பொருளைக் காணலாம். மேலே காட்டிய இரண்டு பாடல்களாலும் மக்களுக்கு ஒரு உண்மையைப் போதனை புரிகிறார் பாம்பாட்டிச் சித்தர். பொய்ம்மத போதனை செய்யும் குருமார்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்; உண்மையான விடுதலைக்கு வழிகாட்டும் ஞானிகளை நம்புங்கள்; நலம் பெறுங்கள் என்பதே அவருடைய அருள்மொழி. வீண்மயக்கம் வேண்டாம் பிறந்தவர் இறப்பது உறுதி. அவர் யாராயிருந்தாலும் சரி; ஒருநாள் உலகைவிட்டு மறைவது உறுதி; செத்துப்போவது நிச்சயம். இந்த உண்மையை அறியாதவர்கள் ஒருவரும் இல்லை. ஆயினும், மக்கள் பலரும் செய்துவரும் காரியங்களைப் பார்த்தால் அவர்கள் இவ்வுலகிலே என்றும் சாகாமல் வாழப்போகின்றவர் களைப் போல நினைத்தே காரியங்களைச் செய்து வருகின்றனர். யாராவது ஒரு பெரிய மனிதர் செத்துவிட்டால்- பெரிய மனிதர் என்றால் அறிவிலே அல்ல; பணம் படைத்த பெரிய மனிதர் செத்துவிட்டால், அப்பொழுது யாரும் வேதாந்தம் பேசாமல் இருப்பதில்லை. பாவம்! அவர் ஓடிஓடித்தான் சம்பாதித்தார்; வீடு வாசல்களைக் கட்டினார்; பெரியபெரிய மாடமாளிகைகளைக் கட்டினார்; பாங்கியிலே பணம் வேறே குவிந்து கிடக்கிறது. இருந்து என்ன பயன்? திடீரென்று வாயைப் பிளந்துவிட்டார்! பாடுபட்டுத் தேடிய பொருளை அமைதியாக உட்கார்ந்து அனுபவிக்கக்கூடக் கொடுத்துவைக்கவில்லை; நம்முடைய கதியும் ஒருநாள் இப்படித்தான் முடியப் போகிறது. வீணாக ஓய்ச்சல் ஒழிவின்றி ஓடிஓடி உழைத்து என்ன பலனைக் காணப்போகின்றோம்? என்னவோ, நாலு பேர் நல்லவர் என்று சொல்லும்படி வாழ்ந்தால் போதும், நாம் செத்துப்போனாலும் அந்தப் பெயர்தான் நிலைத்து நிற்கும் என்று கூடிக்கூடி வேதாந்தம் பேசுவார்கள். செத்தவரைச் சுடுகாட்டிலே வைத்துக் கொளுத்திவிட்டு, அல்லது புதைத்து விட்டு வீட்டுக்கு வந்து சேரும் வரையிலும் இப்படிப் பேசிக்கொண்டிருப்பார்கள். மறுநாள் இந்தப் பேச்சை மறந்து விட்டுத் தங்கள் தங்கள் காரியங்களை வழக்கம்போல் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இது உலக இயல்பாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். உண்மையில், நாம் நம்பும்- ஆசைப்படும்- இன்பந்தருவன என்று நினைக்கும் செல்வங்கள் நிலைத்தவை அல்ல என்று நம்புவோ மானால் நாம் யாருடைய பழிக்கும் ஆளாகாமல் வாழ்வோம்; நாம் யாருக்கும் தீமை செய்ய துணியமாட்டோம்; நாம் பிறர் மனம் வருந்தும்படியான செயல்கள் எதையும் செய்யத் துணிய மாட்டோம்; பிறருக்கு உதவிகரமானவராக வாழ்வதற்கே முயலு வோம்; பிறரிடம் அன்புள்ளவராகவே நடந்துகொள்ளுவோம்; எல்லோரையும் நம்முடைய உறவினர்களாகவே நினைப்போம்; சாதி வேற்றுமை, மத வேற்றுமை, இன வேற்றுமை பாராட்டும் தன்மைகூட நம்மை விட்டு ஒழியும். வருந்துவோர் யாராயிருந் தாலும் அவர்களையெல்லாம் ஆதரித்து, அன்புகாட்டி, நன்மொழி கூறி, உதவி செய்யவே நம் உள்ளம் விரைந்து செல்லும். மக்களிடம் இத்தகைய அன்புணர்ச்சி- சகோதரத்தன்மை- வளரவேண்டும் என்பதற்காகவே ஆன்றோர்கள் பலரும் நம் உள்ளத்தை மயக்கும் பொருள்களின் இயல்புகளை விளக்கி உரைத்திருக்கின்றனர். மரணம் உண்டு; நிச்சயமாக உண்டு. செத்துப்போனால் நம்முடன் வருவது ஒன்றுமில்லை. எவ்வளவு அருமையாகப் பாதுகாத்து வைத்தாலும் அப்பொருள்கள் சாகும்போது உடன் வரப்போவதில்லை என்ற உண்மையை வலியுறுத்திப் பாடிவைத்திருக்கின்றனர். இப்பாடல்களை மக்கள் படிக்கட்டும் ; நினைவில் வைத்திருக்கட்டும்; பேராசைக்கு ஆளாகாமல் வாழட்டும் என்பதற்காகவே, படிப்போர் உள்ளத்திலே பதியும்படி பாடி வைத்திருக்கின்றனர். இப்படிப் பாடியிருப்பவர்களிலே பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். செல்வ நிலையாமை யைப்பற்றி அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களைக் காண்போம். மலையைப் போன்ற மிகுந்த பொன்னைக் குவித்து வைத் திருப்போர் உண்டு. அவரைக் காலன் உயிர்கவர வரும்போது, அந்தப் பொன்னைக் கொண்டு அவனை விலக்கிவிட முடியாது. அவர் உயிர் போய்த்தான் தீரும். அப்படி உயிர் போகும்போது, அவர் சேர்த்துவைத்திருக்கும்- குவித்து வைத்திருக்கும்- பொன்னை வாரிக்கொண்டு போவதில்லை; இவ்வுலகிலே விட்டுத்தான் செல்வார்கள். ஆதலால், இவ்வுலகிலே வீணாக அலையாமல், வருந்தாமல், தமது உள்ளத்தை, அழியாத இன்பத்தைத் தரும் இறைவன்பால் வைத்தவர்களே இன்பத்தை அடைவார்கள்; அவர்கள்தான் என்றும் அழியாமல் வாழ்வார்கள். இவ்வாறு சொல்லித் துணிந்து ஆடுக பாம்பே! என்று பாடுகிறார். மலைபோன்ற செம்பொன்குவை வைத்திருப்பவர் மறலி வருகையில் வாரிச் செல்வாரோ! அலையாமல் அகத்தினை அத்தன்பால் வைத்தோர் அழியார் என் றேதுணிந்து ஆடாய் பாம்பே! என்பதே மேலேகாட்டிய பொருளமைந்த பாட்டு. மேலும் பாடும்போது. அறிவுள்ளவர்கள் உலக வாழ்விலே மயங்க மாட்டார்கள்; அறிவற்றவர்கள் தாம் உலக வாழ்விலே மயங்கு வார்கள் என்று பாடியுள்ளார். வெட்டவெளியிலே, கோடைகாலத்திலே கானல் ஒளியைத் தண்ணீர் என்று கருதி, மான் அந்த நீரை உண்பதற்காக அதன்பின் ஓடி இளைக்கும்; நீர் பெறாமல் வருந்தும். அதுபோல், இவ்வுலக வாழ்வை இன்பந் தருவது என மூடர்கள்தாம் கண்டு மயங்கிக் களிப்பார்கள். உயர்ந்த நிலையை அறிந்தவர்கள்- அழியாத இன்பந் தரும் இறைவன் நிலைமையை உணர்ந்தவர்கள்- வீண்பேச்சுப் பேசிக் கொண்டிருக்கமாட்டார்கள்; பயனற்ற வம்பு பேசிக் காலம் போக்கிக்கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் உண்மையான இறைவன் பதத்தை நாடிநிற்பார்கள், காண்பார்கள், இன்புறுவார்கள் என்ற உண்மை விளங்கும்படி, பாம்பே! நீ படம் விரித்து ஆடுக! என்று பாடியுள்ளார். கானலைமான் நீர்எனவே கண்டுசெல்லல் போல் காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்; மேல்நிலைகண் டார்கள்வீணாய் வம்பு பேசிடார்; மெய்யன்பதம் நாடுவார்என்று ஆடாய் பாம்பே! இதுவே மேலேகூறிய பொருளமைந்த பாட்டு. இவை இரண்டு பாடல்களும், உலகப் பொருள்களிலே உள்ளத்தை ஈடுபடுத்தி உழலக் கூடாது: உலகப் பொருள்கள் நிலையற்றவை; அழிந்துவிடக்கூடியன என்ற உண்மையை எடுத்துரைத்தன. என்றும் அழியாதிருக்கும் உண்மை ஞானத்தைப் பெறவேண்டும்; அந்த உண்மை ஞானத்தைப் பின்பற்றிப் பலர்க்கும் உதவிகர முள்ளவராக வாழவேண்டும்; தந்நலமற்றவர்களாக வாழவேண்டும். இவ்வாறு வாழ்வதே மனிதப் பண்பாகும் என்ற கருத்தையும் அறிவித்தன. ஓடித் திரிவதால் ஒருபயனும் இல்லை தல யாத்திரை செய்வோர், தீர்த்த யாத்திரை செய்வோர் பலரைக் காண்கின்றோம். காடுகளின் மத்தியிலே உள்ள தலங்களுக்குக் கால்நடையாகச் செல்வோர் உண்டு; மலைகளின் உச்சியிலே உள்ள கோயில்களுக்கு ஏறிச் சொல்வோர் உண்டு; தமது நாடுவிட்டுப் பிறநாட்டில் உள்ள தலங்களுக்கு யாத்திரை போவோர் உண்டு. இவ் வழக்கம் நமது நாட்டிலே தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. இன்று கடல் கடந்து இலங்கை சென்று, காட்டிலேயுள்ள கதிர்காமத்தை நாடிச் செல்லுகின்றனர். இமயமலை உச்சியிலே உள்ள தலங்களுக்கு ஏறிச் செல்லுகின்றனர். இந்துக்கள் மட்டும் அல்ல; கிறிதுவர்கள், முலிம்களும் தல யாத்திரை செய்கின்றனர். இந்துக்களைப் போலவே அவர்களுக்கும் பல புண்ணியத் திருப்பதிகளுண்டு. புத்தர்களுக்கும், சைனர்களுக்கும் யாத்திரை சென்று வரும் பல திருப்பதிகள் உண்டு. புண்ணிய நகரங்களுக்குப் போய் வருவதனால்- அங்குள்ள கோயில்களில் உள்ள தெய்வங்களைத் தெரிசித்து வருவதனால் பாவங்கள் தொலையும், புண்ணியம் பெருகும், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்றெல்லாம் நம்புகின்றனர். தென்னாட்டில் உள்ளவர்கள் வடநாட்டில் உள்ள காசியைப் புனிதமாகக் கருதுகின்றனர்; வடநாட்டில் உள்ளவர்கள் இராமேசுவரத்தைப் புனிதமாக நினைக்கின்றனர். இதனால் தென்னாட்டினர் பலர் காசிக்குச் செல்கின்றனர்; கங்கையில் நீராடுகின்றனர்; அங்குள்ள விசுவநாதர் என்னும் பெயருள்ள சிவபெருமானைத் தெரிசித்துத் திரும்புகின்றனர். வடநாட்டினர் இராமேசுவரம் செல்கின்றனர்; சேதுவில் நீராடுகின்றனர்; கன்னியாகுமரிக்குச் செல்கின்றனர்; கடலில் நீராடுகின்றனர்; புண்ணியம் பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர். இவ்வாறே சிதம்பரம், சீரங்கம், மதுரை, காஞ்சி, திருப்பதி, திருவாரூர், திருவண்ணாமலை, திருவொற்றியூர் போன்ற பல தலங்கள் நமது நாட்டிலே யாத்திரை நகரங்களாக விளங்கு கின்றன. கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்ற பல நதிகள் புண்ணிய நதிகளாகப் போற்றப்படுகின்றன. ஒவ்வோராண்டும் நமது நாட்டிலே புண்ணிய தலங் களுக்கு யாத்திரை செய்வோர் கணக்கற்றவர்கள்; புண்ணிய தீர்த்தங்களாடப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணற்றவர்கள். இவர்களால் கோயில்களுக்கும், ரயில், ப முதலியவைகளுக்கும் நல்ல வருமானமும் கிடைத்து வருகின்றது. பண்டைக்காலத்தில் இவ்வாறு யாத்திரை செய்தவர்கள் கால்நடையாகத்தான் சென்று வந்தனர். இக்காலத்தில் நடந்து திரியவேண்டிய தொல்லை யில்லை. போக்குவரவுக்கான வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆதலால் பண்டைக்காலத்தைவிட இக்காலத்தில் யாத்திரை செய்வோரின் எண்ணிக்கை மிகுந்துவிட்டது என்றே சொல்லலாம். இவ்வகையான யாத்திரையினால், யாத்திரை செய்யும் மக்கள் பல அனுபவங்களைப் பெறலாம்; பல பாகங்களிலும் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களைக் காணலாம்; பல மக்களுடனும் தொடர்பு கொள்ளலாம். யாத்திரையின்மூலம் ஒரு நாட்டு மக்களுக்குள் ஒற்றுமையுணர்ச்சியும், கலாசாரப் பரிமாற்றமும், பழக்க வழக்கக் கலப்பும் ஏற்பட வழியுண்டு. கால்நடை யாத்திரையினால்தான் இப்பலன் கிடைக்கும்; கைகூடும். அதனால், பண்டைக் காலத்தினர் தல யாத்திரை, தீர்த்த யாத்திரை முதலியவற்றைப் புனிதமான செயல்களாக வைத்தனர் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் தல யாத்திரை, தீர்த்த யாத்திரை முதலியவை களால் கடவுளைக் காண முடியும், வீடு பெறும் வழியை அறிய முடியும், வீடுபேற்றை அடைய முடியும் என்பது இல்லை. வீடுபேற்றை அடையவேண்டுமானால் உண்மையான வேதாந் தத்தை அறிந்தால்தான் முடியும் என்பதே சித்தர்களின் கருத்து. இக்கருத்தைப் பாம்பாட்டிச் சித்தர் வலியுறுத்திக் கூறியிருக் கிறார்; மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். காடு, மலை, ஆறு, புண்ணியத் தலம், காசி முதலாகச் சொல்லப்பட்ட இடங்களுக்குப் போவதனால் ஒன்றும் இல்லை; கால் கடுக்க இவ்விடங்களுக்கு ஓடிச் செல்வதால் பலன் ஒன்றையும் காணமுடியாது. இதனால் வீடு பெறும் மார்க்கத்தைக் கண்டறிய முடியாது. வீடு பெறும் சிறந்த வழியை அடைய வேண்டு மானால், வேதாந்தத் துறையை அறிந்தால்தான் முடியும். ஆதலால், பாம்பே! வேதாந்தத் துறையை அறிந்துநின்று ஆனந்தமாக ஆடுவாயாக என்று பாடுகிறார். காடுமலை நதிபதி காசி முதலாய்க் கால்கடுக்க ஓடிப்பலன் காணல் ஆகுமோ? வீடுபெறும் வழிநிலை மேவிக் கொள்ளவே வேதாந்தத் துறையினின்று ஆடாய் பாம்பே! என்ற பாடலிலே மேலேகாட்டிய பொருளைக் காணலாம். இதற்கு அடுத்த செய்யுளிலே வீடு பெறுவதற்குரிய அந்த வேதாந்தத் துறை யாது என்பதை விளக்கியிருக்கிறார் சித்தர். எல்லாவுயிர்கள்பாலும் இரக்கம் கொள்ளுவது, ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி ஆளுதல், அதாவது ஐம்புல ஆசைகளை அறுத்தல் - இதுவே வேதாந்தத் துணிவாகும். இக்காரியத்தைச் செய்தவர்கள் என்றும் ஆனந்தமுடன் வாழலாம்; சிவத்துடன் ஒன்றுபட்டு வாழலாம் என்று பாடியிருக்கிறார். உள்ளத்திலே எள்ளளவாவது அன்பில்லாதார் முத்தி அடைய முடியாது. அன்பற்றவர்கள் நல்ல செயல்களைச் செய்யமாட்டார்கள்; கொடுமைகளைத்தான் செய்வார்கள். ஆதலால் அவர்கள் முத்திநிலையை எட்டிப்பார்க்கவே முடியாது. அன்பில்லாதவர்கள் முத்தியடைவது என்பது பண்டைக்காலத் திலும் இல்லை; இக்காலத்திலும் இல்லை; எக்காலத்திலும் இல்லை. ஆதலால் முத்தி அடையவேண்டுமானால்- உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவேண்டுமானால்- வஞ்சகப் புலன்களின் ஆசையை அறுக்கவேண்டும்; அப்புலன்களுக்குக் கட்டுப்படாமல் எமனுக்கு எமனாயிருந்த சிவபெருமானைக் காண்பாயாக! பாம்பே! அவனைக் கண்டு தொழுதுக் களித்து ஆடுவாயாக! என்று பாடியிருக்கின்றார். எள்அளவும் அன்பகத்தில் இல்லாதார் முத்தி எய்துவது தொல்உலகில் இல்லை எனவே கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக் கண்டுதொழு தேகளித்து ஆடாய் பாம்பே! என்பதுதான் மேலேகூறிய பொருளமைந்த பாட்டு. அன்புடை மையும், ஐம்புல ஆசையை விட்டொழித்தலுமே வேதாந்தம் போதிக்கும் உண்மை. அன்புள்ளவர்களும் ஆசையை விட்டவர் களுமே முத்திநெறியை அடைவார்கள். இதுவே வேதாந்த முடிவாகும். மேலே காட்டிய இரண்டு பாடல்களும், மக்களிடம் உள்ள மூடநம்பிக்கையை எடுத்துக்காட்டின. இறைவனைக் காணும் உண்மைநெறியை எடுத்துரைத்தன. தல யாத்திரை, தீர்த்த யாத்திரையினால் கடவுளைக் காண முடியாது; வேதாந்த உண்மையின் மூலந்தான் இறை வனைக் காணமுடியும். எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருத்தல், ஐம்புல ஆசைகளை- மெய், வாய், கண், மூக்கு, செவிகளைத் தம்வசமாக்கி ஆளுதல் ஆகிய செயல்களாலேயே இறைவனைக் காணமுடியும்; முத்தி பெறமுடியும். இதுவே வேதாந்த முடிபு. இச் செய்திகளையே மேலே காட்டிய இரண்டு பாடல்களின் வாயிலாக எடுத்துக் காட்டினார் பாம்பாட்டிச் சித்தர். பகுத்தறிவுப் போதனை பாம்பாட்டிச் சித்தர், தாம் உண்மையென்று நினைப் பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். உண்மையென்று நம்புவதை அஞ்சாமல் வெளியிடுகின்றவர்கள் வீரர்கள். உண்மை யென்று தெரிந்தும், உண்மையென்று நம்பியும் வெளியிலே சொல்ல அஞ்சுவோர்- பின் வாங்குவோர்- கோழைகள். அவர்கள் எவ்வளவுதான் அறிவுள்ளவர்களானாலும், படித்தவர் களானாலும் அவர்கள் அறிவும் படிப்பும் சமூகத்திற்குப் பயன் படமாட்டா. சித்தர் கணத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் கண்ட உண்மை களை வீரத்துடன் வெளியிட்டிருக்கின்றனர். பெரும்பாலான மக்களின் கருத்துக்கு- பெரும்பாலான சமயவாதிகளின் கருத்துக்குச் சித்தர்களின் கருத்துக்கள் சில விஷயங்களில் மாறு பட்டதாகவே இருக்கின்றன. ஆதலால்தான் சித்தர் நூல்கள் படித்தவர்களாலும், புலவர்களாலும் அவ்வளவாகப் பாராட்டப் படாமல் கிடக்கின்றன. இன்றும் சித்தர் நூல்களை அலட்சிய மாகக் கருதும் பண்டிதர்கள் உண்டு. அவை இலக்கியச் சுவை அமைந்த பாடல்கள் அல்ல; இலக்கண வழுவற்ற பாடல்கள் அல்ல என்று சொல்வோர் உண்டு. இதற்குக் காரணம், சித்தர்களின் தீவிரமான- புரட்சிக்கரமான- கருத்துக்கள்தாம். பாம்பாட்டிச் சித்தரிடமும் புரட்சிகரமான பல கருத்துக்களை நாம் காணலாம். உருவச்சிலையை வணங்குவதில் பயன் இல்லை. கற்சிலை யிலும், செம்புச் சிலையிலும் உயிரில்லை; உணர்ச்சியில்லை என்று பாடியிருக்கிறார். உளியிட்டுச் செய்த கருங்கற் சிலையிலே உயிரும் உணர்ச்சியும் உண்டோ? இவ்வுலகத்தில் அச் சிலைகளை வணங்கும் மூடர்களுக்கு அறிவுண்டோ? செம்பைப் புளியிட்டு விளக்குவதனால்- செம்புச் சிலையைப் புளியினால் விளக்கி வைப்பதனால்- அதில் உள்ள களிம்பு போய் விடுமா? ஒருகாலும் போய்விடாது. அதுபோல, அறிவற்றோரின்- சிலைகளை வணங்கும் அறிவற்றோரின்- அறியாமை போய்விடாது. அவர்கள், என்றும் மூடராகவேதான் இருப்பார்கள். இவ்வுண்மையை உணர்ந்து ஆடுவாயாக! பாம்பே! நீ பலரும் இவ்வுண்மையை அறியும்படி ஆடுவாயாக! என்று சிலை வணக்கம் செய்வோரை மூடர்கள் என்று வன்மையாகக் கண்டிக்கிறார் சித்தர். உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி? உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி? புளியிட்ட செம்பில்குற்றம் போமோ; அஞ்ஞானம் போகாது மூடர்க்கென்று ஆடாய் பாம்பே! இதுவே மேலே சொல்லிய பொருளமைந்த பாடல். இவ்வாறு சிலைவணக்கத்தைக் கண்டித்த சித்தர் வேத புராணங்களையும் கண்டிக்கிறார். பலரால் புனிதமானவை என்று போற்றப்படும் அவைகளை வீண் உரைகள் என்று விளம்புகின்றார்; நன்கு வகை வேதங்கள், ஆறுவகையான சாத்திரங்கள், வேதத்தின் பகுதியான தந்திர நூல்கள், புராணங்கள், சரியை கிரியைகளைப்பற்றிக் கூறும் ஆகம நூல்கள், வகை வகையான வேறு பல நூல்கள்- இவைகள் கூறுவன வெல்லாம் உண்மை யல்ல; நூல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல செய்தி களைச் சொல்வன; தெளிவாக எதையும் சொல்வதில்லை; அவைகள் மூடநம்பிக்கைகள் பலவற்றைக் கூறுவன; ஆதலால் அவற்றைப் படிப்பதிலே வீண்பொழுது போக்கவேண்டாம். பகுத்தறிவைப் பயன்படுத்து; உண்மையை உணர்ந்துகொள்- என்று சொல்லி, பாம்பே! நீ படம் விரித்து ஆடுக! என்று பாடுகிறார். சதுர்வேதம், ஆறுவகை சாத்திரம், பல தந்திரம், புராணங்களைச், சாற்றும் ஆகமம் விதம்விதம் ஆனதான வேறு நூல்களும் வீணான நூல்கள்என்று ஆடாய் பாம்பே! இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வேதாகமங்களை யெல்லாம் பயனற்ற நூல்கள், உண்மை நெறியை உணர்த்தாத நூல்கள் என்று பாடியிருக்கின்றார். இன்று நாம் எவ்வளவோ தூரம் முன்னேறியிருக் கின்றோம். பண்டைக்காலத்தில் தெய்வச் செயல்கள் என்று எண்ணியிருந்த பல செயல்களை இன்று மனிதனால் செய்ய முடியும் என்று கண்டுபிடித்துவிட்டோம். இந்த அளவுக்கு விஞ்ஞானம் நமக்கு உதவியிருக்கிறது. விஞ்ஞானத்தின் மூலம் இன்னும் என்னென்ன அதிசயங்களைச் சாதிப்போம் என்று நம்மால் முடிவுகட்ட இயலாது. எதிர்காலத்தில் எத்தனையோ பல அற்புதங்களையெல்லாம் செய்யத்தான் போகின்றோம். இவ்வாறு மனித சமூகத்திலே உலக சம்பந்தமான அறிவு வளர்ந்துங்கூட மனிதப் பண்பு வளர்ந்துவிட்டது என்று சொல்ல முடியவில்லை. நிறவெறி, மதவெறி, இன வெறி, சாதிவெறி, மொழிவெறி போன்ற வெறிகள் வளர்ந்து வருகின்றன. இவ்வெறிகள் காரணமாக மனிதத் தன்மையையே பலர் இழந்து விடுகின்றனர். தங்கள் கருத்துக்கு முரண்பட்ட மனிதர்கள்மேல் வெறுப்பும், கடுப்பும் கொள்ளுகின்றனர். இத்தகைய வேறு பாடுகள் எப்பொழுது ஒழிகின்றனவோ, மக்கள் எப்பொழுது ஒன்றுபட்டு வாழ்கின்றனரோ அன்றுதான் உண்மையான மனிதப் பண்பு நிலைக்க முடியும். பண்டைக்காலத்திலிருந்து இன்றுவரையிலும் மக்களை ஒன்றுசேரவொட்டாமல் பிரித்து வைப்பதில் முதன்மையாக இருப்பவை சமய பேதங்களும், சாதி பேதங்களுமேயாகும். சமயங்கள் போதிப்பது அன்புநெறியாக இருக்கலாம். ஆனால் அவைகளின் பழங்கணக்கைப் பார்த்தால் மனித ரத்தத்தை உறிஞ்சாமல் வளர்ந்த சமயங்களைக் காணமுடியாது. சாதி வேற்றுமை காரணமாக இன்றும் மக்களிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகளைக் காண்கிறோம். ஆகையால் சமய வேற்றுமைகளும், சாதி வேற்றுமைகளும் மனித சமுதாயத்தை விட்டு ஒழியவேண்டும் என்று பகுத்தறிவுவாதிகள் கருதினர். பகுத்தறிவுவாதம் பேசும் சித்தர்களும் இதையே சொன்னார்கள். இன்றும் அறிவாளிகள் இதையே விரும்புகின்றனர். சமயபேதம், பலவான சாதிபேதங்கள் சமயத்தோர்க்கே யல்லாது சற்சாது களுக்கோ? என்று கேட்கிறார் பாம்பாட்டிச் சித்தர். சமயவேற்றுமைகளும், பலவகையான சாதிவேற்றுமைகளும் பகுத்தறிவாளர்கள் பின் பற்றக்கூடியவையல்ல; அறிவாளர்கள் ஒப்புக் கொள்ளக் கூடியவை அல்ல. சமய வேற்றுமையும், சாதி வேற்றுமையும் பாராட்டுவோர், சமயவெறி கொண்டவர்களே ஆவார்கள்; உண்மைநெறியை உணராத அவர்களுக்கே அத்தன்மை பொருந்துவதாகும். உண்மைநெறி உணர்ந்த ஞானிகளுக்குச் சமயபேதமோ, சாதிபேதமோ இல்லை. அவர்கள் இப்பேதங்களை ஒப்புக் கொள்ளமட்டார்கள்; நம்பமாட்டார்கள்; பின்பற்ற மாட்டார்கள். இப் பேதங்களை விட்டவர்களே சிறந்த மனிதத் தன்மை படைத்தவர்கள் என்று மேலேகண்ட அடிகளால் முழங்கினார். பின்னும் சொல்லுகிறார் சிவவாக்கியர்; சாதிப்பிரிவை எண்ணும்போதே சாதுவான அவருக்குக் கோபம் மூளுகிறது. சாதிப் பிரிவு என்ற சுவடே இல்லாமல் அதை அடியோடு ஒழித்துவிடவேண்டும் என்று ஆத்திரத்துடன் சொல்லுகிறார்: சாதிப் பிரிவினிலே தீமூட்டு வோம்! சந்தை வெளியினில் கோல்நாட்டு வோம்! சாதிப் பிரிவு என்று குப்பைமேட்டைத் தீமூட்டி எரித்துச் சாம்பலாக்கிவிடுவோம்! பலரும் கூடும் சந்தைவெளியில் அதாவது பொதுமக்கள் கூடும் இடத்தில் சாதிப் பிரிவால் நடைபெற்ற கொடுங்கோன்மை ஒழிந்தது என்று சொல்லிச் சமரசம் என்னும் செங்கோலை நிலைநாட்டுவோம்! என்று பாடுகிறார். இதனால் சாதிவேற்றுமையைச் சிவவாக்கியர் எவ்வளவு மிகுதியாக வெறுக்கிறார் என்பதைக் காணலாம்; மனித சமூக ஒற்றுமையிலே அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறியலாம். மேலே காட்டிய சிவவாக்கியர் பாடல்களைக் கொண்டு அவருடைய முற்போக்கான கருத்துக்களைக் காண்கிறோம். உருவச்சிலையிலே தெய்வம் இருப்பதாக நினைப்பது, வணங்குவது அறிவீனம்; உருவ வணக்கம் அறிவை வளர்க்காது; மூடத்தனத்தையே வளர்க்கும். மூடர்களே உருவங்களை வைத்து வணங்குவார்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வேத புராணங்களை நம்புவோர் பயன்பெறமாட்டார்கள்; உண்மை நெறியை உணர மாட்டார்கள். அவைகள் எல்லாம் வீணான கற்பனைகள். மக்களிடையே வேற்றுமையை வளர்ப்பன சமயபேதமும், சாதிபேதமும் ஆகும். ஆகையால் உண்மை நெறியை அறிந்த ஞானிகள் சமயபேதத்தை விட்டொழிப்பர்; சாதிபேதத்தைக் கைவிடுவர். சாதி, சமயபேதங்கள் உலகைவிட்டு மறைந்தால்தான் மக்கள் முழு மனிதத்தன்மையுடன் வாழ முடியும். இக்கருத்துக்களையெல்லாம் மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்னும் ஆவலுடன்- அருளுடன்- பாடி வைத்திருக் கிறார் பாம்பாட்டிச் சித்தர். இடைக்காட்டுச் சித்தர் பாடல் இடைக்காடர் வரலாறு இடைக்காடு என்ற ஊரிலே இவர் வாழ்ந்தவர்- அல்லது பிறந்தவராதல் வேண்டும். அதனாலேயே இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று பெயர்பெற்றார். காடு என்பது முல்லைநிலம்; முல்லைநில மக்கள் இடையர்கள். ஆதலால் இவர் இடையர் குடியிலே பிறந்தவராக இருக்கலாம். சங்கப் புலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இடையர் வாழ்ந்த முல்லைநிலத்திலே பிறந்தவராதலால் அவர் அப்பெயர் பெற்றார். இடைக்காடனார் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க நூல்களிலே காணப்படுகின்றன. கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று குறளைப் போற்றும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவரால் பாடப்பட்டதாகும். விரிந்த பொருளைச் சுருக்கமாகப் பாடுவதிலே இடைக் காடர் சிறந்தவர். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் முல்லைநிலத்தைப்பற்றியே, அதாவது இடையர்கள் வாழும் நிலத்தைப்பற்றியே கூறுகின்றன. திருவிளையாடற் புராணத்திலே இவரைப் பற்றிய வரலாறு ஒன்று காணப்படுகின்றது. திருவள்ளுவரைப் பற்றி வழங்கும் கதையிலும் இவருடைய தொடர்பு காணப்படுகின்றது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடப்பட்டதாகப் பழைய உரைகளின்மூலம் தெரிகின்றது. சில பாடல்கள் ஊசி முறியின் பாடல்கள் என்று பழைய உரைகளில் குறிக்கப் பட்டிருக்கின்றன. சங்க காலத்துப் புலவரான இடைக்காடருக்கும், இடைக் காட்டுச் சித்தருக்கும் முடிச்சுப் போடுவோர் உண்டு. இடைக் காட்டுச் சித்தர் பாடல்களையும், சங்க காலப் புலவரான இடைக்காடர் பாடல்களையும் படித்தால் இருவரையும் ஒருவர் எனக் கொள்ளமாட்டார்கள். இருவர் பாடல்களின் நடைக்கும் வேற்றுமை உண்டு. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்று மையைக் காணலாம். நடையில் மட்டும் அல்ல; கருத்திலும் இத்தகைய வேற்றுமையைக் காணலாம். இடைக்காட்டுச் சித்தர் என்பவர் பிற்காலத்தில் இருந்த ஒரு புலவர்; சித்தர்கள் காலம் என்று கருதப்படும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய ஒரு புலவர். ஞான மார்க் கத்திலேயே பற்றுடையவர்; மக்களிடையே ஞானமார்க்கத்தைப் பரவச் செய்யவேண்டும் என்னும் ஆர்வம் உள்ளவர். இவர் தம் உள்ளத்தால் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்குப் புரியும்படி எளிய நடையிலே பாடினார். பாமர மக்கள் பாடி மகிழும்படியான சந்தங்களிலே பாடினார். இவரும் இடைக்காடு என்னும் ஊரிலே பிறந்தவராதலின்- ஞானமார்க் கத்தில் நின்றவராதலின்- மக்கள் இவரை இடைக்காட்டுச் சித்தர் என்று அழைத்தனர். இவ்வளவுதான் இடைக்காட்டுச் சித்தரைப் பற்றி நாம் அறியும் உண்மை. சங்ககால இடைக்காடனார் வேறு, இந்த இடைக்காட்டுச் சித்தர் வேறு என்பது உறுதி; உண்மையு மாகும். அடக்கமே இன்பம் எதைப் பார்த்தாலும் அதன்மேல் ஆசைப்படுதல் உள்ளத்தின் இயல்பு. இது எல்லா மனிதர்களிடமும் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வந்த குணம். வானத்திலே விளங்கும் சந்திரனைக் காணும் குழந்தை, அதைப் பிடித்துத் தா என்று அடம் பிடிப்பதைக் காண்கின்றோம். ஆனால் அதை நம்மால் பிடித்துக் கொடுக்க முடிவதில்லை. ஆதலால் ஏதேதோ சமாதானம் சொல்லிக் குழந்தையின் அழுகையை அடக்கிவிடு கின்றோம். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை வாங்கித் தா என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் உண்டு. பயன்படும் பொருளானால்- குழந்தைக்குப் படிப்பினையூட்டும் பொருளா யிருந்தால்- வாங்கித் தரவேண்டியதுதான். பயனற்ற பொருளை யும் குழந்தைகளின் சண்டித்தனத்துக்கு இணங்கி வாங்கிக் கொடுப்போமானால் அச் செயல் குழந்தைகளின் கெட்ட குணத்தை வளர்ப்பதேயாகும். இச் சமயங்களில் அக் குழந்தை களை எப்படியாவது சமாதானப்படுத்தி அவைகளின் பிடிவாத குணத்தைக் குறைக்கவேண்டும். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள்தாம் பிற்காலத்தில் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆளும் தன்மை படைத்தன வாக இருக்கும். உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பண்பிலே இளமை முதலே பயிற்சி பெற வேண்டும்; பயிற்சி அளிக்கப்படவேண்டும். மனம் என்னும் சொல்லை மன என்ற வடமொழிச் சொல் என்று கூறுவோர் பலர். மனம் என்ற சொல்லை மன்னுதல் என்ற சொல்லிலிருந்து பிறந்த தமிழ்ச் சொல்லாகக் கொள்வோர் உண்டு. மன்னுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள். அதாவது, எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் மேல் சென்று படிதல் மனத்தின் இயல்பு. மனத்தின் இயல்பை நாம் எண்ணும்போது, மன்னுதல் என்ற சொல்லிலிருந்துதான் மனம் என்ற சொல் பிறந்தது என்பது பொருத்தமாகவே காணப்படுகிறது. பார்த்த பொருள்களில் எல்லாம் போய்ப் படியும் பண்பு வாய்ந்த மனத்தை அடக்கி ஆளுகின்றவன் அறிவுள்ளவன்; உரம் படைத்தவன்; சிறந்த ஞானி. இவனே இவ்வுலகில் உள்ள துன்பங்களில் இருந்து விடுபடுவான்; சுதந்தரபுருஷனாக வாழ்வான்; இன்பநிலையை அடைவான். இந்த உண்மையை இடைக்காட்டுச் சித்தர் எடுத்துக் காட்டுகின்றார். மனம் என்னும் மாடு அடங்கின் தாண்டவக் கோனே! - முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக் கோனே! மனம் என்பது கட்டுக்கடங்காத ஒரு முரட்டு மாடு. அது நமது கட்டுக்குள் அடங்குமானால் விடுதலை கிடைத்துவிட்டது என்று நிச்சயமாக எண்ணிக்கொள். இவ்வாறு தாண்டவக்கோன் என்பவனைப் பார்த்துப் பாடியிருக்கின்றார். இதற்குப்பின் அவர் கூறும் அறிவுரை மிகச் சிறந்ததாகும். தாண்டவக்கோனே! மனத்தை அடக்கி ஆள்வது மட்டும் போதாது. நமது மனத்திலே வசிக்கும் ஒரு பாம்பு உண்டு. அது கொடிய விஷப் பாம்பு. அது நமக்கும் கெடுதியைத் தரும்; பிறருக்கும் தீமையைத் தரும். அந்தப் பாம்பு நம் உள்ளத்திலே குடிகொண்டிருக்கும் வரையிலும் நாம் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியாது. நாம் தொடங்கும்- செய்யும்- காரியங்கள் எல்லாம் வீணாகத்தாம் போய்விடும். அந்தப் பாம்பு எது தெரியுமா? அதுதான் சினம்- கோபம்- வெகுளி- ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சுப்பாம்பு. அதை நம் உள்ளத்திலே வாழவிடக்கூடாது; அதை மாண்டு மடியச் செய்துவிடவேண்டும். அந்தப் பாம்பு மடிந்தால்தான்- செத்துப் போனால்தான்- நாம் நினைப்பனவெல்லாம் நிறைவேறும்; கைகூடும்; சித்தியாகும். ஆகையால் அந்தச் சினமென்னும் பாம்பை அடித்துக்கொன்றுத் தூக்கி எறிந்துவிடு என்று பாடுகிறார். இதனை, சினம் என்னும் பாம்பிறந்தால் தாண்டவக்கோனே! - யாவும் சித்தி என்றே நினையடா தாண்டவக்கோனே! என்று பாடினார்; ஐயத்திற்கு இடமில்லாமல் சினத்தைப் பற்றித் தெளிவாக அறிவித்தார். இதற்குமேலும் அறிவுரை புகட்டு கின்றார் சித்தர். ஆசை என்பது அடங்காத பசு. அந்தப் பசுவின் அடங்காத்தன்மை அழியவேண்டும்; ஆசையைக் கட்டுக்குள்- அளவுக்குள்- எல்லைக்குள்- அடக்கிவிடவேண்டும். இதைச் செய்துவிட்டால் இந்த உலகில் உள்ள உண்மைகள் முழு வதையும் கண்டறிய முடியும். தாண்டவக் கோனே! உனக்கு உலகம் முழுவதையும் கண்டறியவேண்டும் என்ற கருத்திருந்தால் ஆசையை அறுத்துவிடு என்று பாடினார். இதனை, ஆசை யென்னும் பசுமாளின் தாண்டவக்கோனே! அண்டம் எல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே! என்ற பாட்டால் காணலாம். இதற்குமேலும் தாண்டவக் கோனை நோக்கி அறிவுரைகள் பல புகட்டுகின்றார் சித்தர். இவ்வாறு இடைக்காட்டுச் சித்தர் பாடியிருப்பவை அறிஞர் களின் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. முதலில் மனத்தை அடக்கி ஆளவேண்டும்; இரண்டாவது சினத்தைச் சிதைத்து அழிக்கவேண்டும்; மூன்றாவது பேராசைக்கு இடங்கொடாமல் வாழவேண்டும் என்று இடைக்காடர் கூறும் ஞானத்தைப் பின்பற்றுவோர் கவலையற்று வாழ்வார்கள் என்பது நிச்சயம். அறிவுக்குத் தூண்டுகோல் அறிவு அனைவரிடமும் உண்டு; அறிவில்லாதவர் ஒருவரும் இல்லை. படித்தவர்களுக்கும் அறிவுண்டு; படிக்காதவர்களுக்கும் அறிவுண்டு. படித்தவர்களிலே பலர், படித்த விஷயங்களைத் தவிர வேறு ஒன்றைப்பற்றியும் உணராதிருப்பதைக் காண் கிறோம். படிக்காதவர்களிலே எத்தனையோ பேர் நுண்ணறிவுடன் பல தொழில்கள் செய்வதைக் காண்கிறோம். ஆதலால் படித்த வர்கள்தாம் அறிவாளிகள், படிக்காதவர்கள் அறிவில்லாதவர்கள் என்று முடிவு செய்வது தவறாகும். ஒவ்வொருவரிடமும் சிந்திக்கும்- ஆராய்ந்து பார்க்கும்- எண்ணிப்பார்க்கும்- இயற்கை அறிவு உண்டு. படித்தவர்களா கட்டும், படிக்காதவர்களாகட்டும்- இந்த இயற்கை அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்; இதை வளர்த்துக்கொண்டவர்கள் அறிவாளிகள் எனப் பெயர் பெற்று விளங்குவர்; தொட்ட காரியங்களைத் திறம்படச் செய்வார்கள். இத்தகைய சிந்தனா சக்தி உலக விவகாரத்தில் ஈடுபட்டிருப் பவர்களுக்கும் வேண்டும்; அரசியல், சமுதாயத் துறையில் உழைப்போர்க்கு இவ்வறிவு இன்றியமையாததாகும். ஆன்மீகத் துறையில் ஈடுபடுவோர்க்கும் சிந்தனா சக்தி- ஆராய்ச்சி அறிவு- அவசியமானதாகும். இன்றேல் அவர்கள் பல மூடநம்பிக்கைச் சேற்றிலே வீழ்ந்து தடுமாறுவார்கள்; உண்மைநெறியை உணர முடியாமல் திண்டாடுவார்கள். சித்தர் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகத்துறையில் நுழைவோர்க்கு நல்ல எச்சரிக்கைகளை விடுத்திருக்கின்றனர்; உலக வாழ்விலே தொல்லைப்படாமல் வாழ விரும்பும் அவர் களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறியிருக்கின்றனர். அவர்கள் கூறும் அறிவுரைகளில் முதன்மையானது, உங்கள் சிந்தனா சக்தியைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். உங்கள் அறிவைப் பயன்படுத்தினால் எல்லா உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்; தொல்லையில்லாமல் மனஅமைதி பெற்று வாழ முடியும் என்பதுதான். ஆன்மீகத்துறையை நாடுவோரின் அழிவைத் தூண்டும் வகையிலே இடைக்காட்டுச் சித்தர் கூறும் சில உண்மைகள் போற்றத்தக்கவை. கடவுள் இவ்வுலகைப் படைத்தான் என்பது உண்மை. ஆனால் அவன் எந்தச் சாதனங்களையும் வைத்துக்கொண்டு இவ்வுலகைப் படைக்கவில்லை; தன் நினைப்பினாலேயே எல்லா வற்றையும் படைத்தான். இத்தகைய நினைப்பு வல்லமை படைத்தவன் கடவுள். அற்ப அறிவே! நீ விரிவடைந்து அவனை நன்றாக உணர்வாயாக! என்று பாடுகிறார். இதனை, எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே! என்ற பாட்டால் காணலாம். இதனால் நினைப்பின் வலிமையை விளக்கினார். இதற்கு அடுத்தபடி, அந்தக் கடவுள் எப்படி யிருக்கிறார்? எங்கே யிருக்கிறார்? என்பதைப் பாடுகிறார். அக்கடவுள் எவ்வகையாலும் கண்ணுக்குக் காணா மலிருப்பவர்; கண்ணுக்குக் காணப்படுகின்றவை எவையானாலும் அவற்றைக் கடவுளாக எண்ணுவது அறியாமை; எல்லா விடங் களிலும், எல்லாப் பொருள்களிலும் மறைந்தே நிற்கின்றார். இத்தகைய பரந்த ஒன்றை, ஏ, அற்ப அறிவே! நீ விரிவடைந்து ஆராய்ந்து அறிக என்று பாடுகிறார். இதனை, கட்புலனக்கு எவ்வளவும் காணா திருந்துஎங்கும் உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்துஅறிநீ புல்அறவே! என்ற பாடலால் காணலாம். இதற்குமேலும், அந்தக் கடவுள் வேறெங்கும் இல்லை; உள்ளத்திலேயே இருக்கிறார் என்ற உண்மையை வெளியிடுகிறார். உன்னுடைய அறிவின் வல்லமையை நீ தெரிந்து கொள்ள வேண்டும்; இருட்டறைக்கு நல்ல விளக்காக இருப்பது உனது அறிவு, உனது அறிவால் அஞ்ஞானத்தைக் காணமுடியும்; விரட்டியடிக்க முடியும். ஆதலால் உன் உள்ளத்தை அருள் நெறியிலே நிறுத்து; எல்லோரையும் ஒன்றென நினைத்து உதவி செய்யும் இரக்கநெறியிலே நிறுத்து. இப்படி நிறுத்தினால், ஏ, புல்லறிவே! உனது தன்மை அழியும் உண்மை காணும் ஞான விளக்காக நீ நிற்பாய் என்று பாடுகிறார். இதனை, இருட்டறைக்கும் நல்விளக்காய் இருக்கும்உன் தன் வல்லமையை அருள்துறையில் நிறுத்திவிளக்கு ஆகுநீ புல்லறிவே! என்ற பாடலால் காணலாம். இவ்வாறு இடைக்காடர் மக்களின் அறிவைத் தட்டி எழுப்புகின்றார்; தூண்டுகின்றார். இறைவன் தன் நினைப்புவல்லமையால் உலகைப் படைக் கின்றான்; ஆகையால் உறுதியான உள்ளம் பெற்றோர் எதையும் சாதிக்க முடியும். கடவுள் கண்ணால் காணமுடியாதவர்; எப்பொருளிலும் இருப்பவர்; இவ்வுண்மையை ஆராய்ந்து அறிய வேண்டும். அறிவால் அஞ்ஞானத்தை ஒழிக்கவேண்டும். அருள் நெறியில் நிற்பதே சிறந்த அறிவு; அதுவே ஞானவிளக்கு. இவ்வுண்மைகளையே இடைக்காட்டுச் சித்தர் மேலே காட்டிய பாடல்களின் மூலம் தெளிவாகத் தெரிவித்தார். அகப்பேய்ச் சித்தர் இவர் மனத்தைப் பேயாக உருவகம் செய்து பாடியிருக் கிறார்; ஆதலால் அகப்பேய்ச் சித்தர் என்று பெயர் பெற்றார். இவருடைய பாடல்கள் முழுவதும் உள்ளத்துக்கு உபதேசம் செய்வதாகவே அமைந்திருக்கின்றன. மனத்தைப் பார்த்து இவர் செய்யும் உபதேசம் மக்களுக்குச் செய்யும்- கூறும் - அறிவுரை யாகவே அமைந்திருக்கின்றது. சைவத்தின் சிறப்பு சைவம் என்பதற்கு அன்பு என்பது பொருள். ஆதலால் சைவர் என்பவர்கள் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்; அகங்காரம் அற்று வாழவேண்டும். அகங்காரம்- அகந்தை- அழிந்த இடத்திலேதான் அன்பு வளர முடியும். ஆதலால் சைவர்கள் முதலில் ஊன் உணவைக் கைவிட வேண்டும். இதைக் கைவிட்டு அனைவரிடமும் அன்பு காட்டுவோரே குற்றமற்ற சைவராவார் என்று பாடுகிறார். இதனை, தான்அற நின்றஇடம்- அகப்பேய்! சைவம் கண்டாயே! ஊன்அற நின்றவர்க்கு- அகப்பேய்! ஊனம் ஒன்று இல்லையடி! என்ற பாடலால் காணலாம். மற்றொரு பாடலிலே பிறவித் துயர் நீங்குவதற்கு வழி கூறுகிறார். இனிப் பிறந்து இறந்து துன்பப்படாமல் இன்பம் அடைய வேண்டும் என்றால் யாருக்கும் தீமைகளைச் செய்யாதே; உண்மையான துறவு பூண்டவர்கள்- பேராசையைக் கைவிட்ட வர்கள்- தீய காரியங்களைச் செய்யமாட்டார்கள், செயலற்றுச் சும்மாதான் இருப்பார்கள் என்று பாடுகிறார். இதுவும் அன்பு நெறியைப் பின்பற்றுவோர் கைக்கொள்ள வேண்டிய ஒழுக்க மாகும். இதனை, பிறவி தீரவென்றால்- அகப்பேய்! பேதகம் பண்ணாதே! துறவி யானவர்கள்- அகப்பேய்! சும்மா யிருப்பார்கள் என்பதே அப்பாடல். சாதிவேற்றுமை தீமை செய்யாமல் அறநெறியில் நின்று வாழ்வோர் மக்களுள் வேற்றுமை பாராட்டமாட்டார்கள். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பிரிவினையை மதிக்கமாட்டார்கள்; மக்கள் அனைவரையும் ஒரே சாதி யென்றுதான் நினைப்பார்கள்; எல்லா மக்களிடமும் சமத்துவ மாகத்தான் நடந்துகொள்ளு வார்கள். இது, தன்னை அறிந்தவர்களின் செயலாகும். இதனை, சாதிபேதம் இல்லை- அகப்பேய்! தானாக நின்றவர்க்கு ஓதி உணர்ந்தாலும்- அகப்பேய்! ஒன்றுதான் இல்லையடி! என்ற பாடலால் காணலாம். அகப்பேயே! தாமே எல்லா சக்தியும் படைத்தவர்கள் என்பதை உணர்ந்துநின்றவர்க்குச் சாதிபேதம் இல்லை. அவர்கள் எவ்வளவு மிகுதியாக வேத வேதாந்தங்களை ஓதி உணர்ந்திருந்தாலும் தான் என்ற கர்வம் ஒன்றுஅவர்கள் உள்ளத்தில் இல்லை என்பதே இதன் பொருள். சாத்திரமும் கடவுளும் சாத்திரங்களின் மூலம் கடவுளைக் கண்டுவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம், கடவுளைக் காட்டும் சாத்திரங்கள் ஒன்றுமேயில்லை. இவ்வுலகில் நம் கண்முன் நடமாடும் எவையும் இறைவன் அல்ல; இவைகளையெல்லாம் கடந்ததே கடவுள். கடவுளைக் கண்ணால் காணவும் முடியாது; உள்ளத்தால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது என்று பாடுகிறார். இதனை, சாத்திரம் இல்லையடி; - அகப்பேய்! சலனம் கடந்ததடி பார்த்திடல் ஆகாதே; - அகப்பேய்! பாவனைக்கு எட்டாதே! என்ற பாடலால் காணலாம். கடவுளைச் சாத்திரங்களில் காண முடியாது; சஞ்சரிக்கும் பொருள்களில் காண முடியாது; கண்ணால் பார்க்க முடியாது; உள்ளத்தால் கற்பனை பண்ணவும் முடியாது- என்றால் கடவுளைக் காணுவதுதான் எப்படி? அதற்கு வழியேயில்லையா? இக் கேள்விகளுக்கு அகப்பேய்ச் சித்தரே பதில் சொல்லி விடுகிறார். கடவுளைக் காணமுடியும்; அதற்கான வழி உண்டு என்று தெளிவாகச் சொல்லுகிறார். தன்னை அறியவேண்டும்; தன்னுடைய இயல்பை- ஆற்றலை- உணரவேண்டும்; தன்னை அறிந்து தீயநெறியிலே பிளவை- பிரிவை உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேரவேண்டும். இந்த உண்மையை அறியாமல் இதற்கு மாறானவைகளை அறிவது மனிதத்தன்மையுள்ள அறிவாகாது, பேய்த்தன்மையுள்ள அழிவாகும் என்று பாடுகிறார். இதனை, தன்னை அறியவேண்டும்- அகப்பேய்! சாராமல் சாரவேண்டும்; பின்னை அறிவதெல்லாம்- அகப்பேய்! பேய்அறிவு ஆகும் அடி! என்ற பாடலால் காணலாம். இவ்வாறு தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறியவர், மற்றொரு பாடலில் இன்னும் தெளிவாகக் கூறியுள்ளார். நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை; உன் மேல் ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல உன்னுடனேயே இறைவன் இருக்கின்றான்; தெய்வத்தன்மை இருக்கின்றது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக! என்று பாடுகிறார். இதனை, ஒப்பனை அல்லவடி; - அகப்பேய்! உன் ஆணை சொன்னேனே! அப்புடன் உப்பெனவே- அகப்பேய்! ஆராய்ந் திருப்பாயே! என்ற பாடலால் காணலாம். அன்பு நெறியே உண்மையான சைவமாகும்; பிறவித் துன்பம் தீர்வதற்கு வழி, தீமைகள் செய்யாமல் இருப்பது; சாதிபேதம் பாராட்டாமையே செருக்கின்மைக்கு அடையாளம்; சாத்திரங்களின் மூலம் கடவுளைக் காணமுடியாது; கடவுள் நம்முடன் கலந்தே இருக்கின்றான்; அவனை நமக்குள்ளேயே காணவேண்டும். இவ்வுண்மைகளை மேலே காட்டிய அகப்பேய்ச் சித்தர் பாடல்களிலிருந்து அறியலாம். குதம்பைச் சித்தர் குதம்பை என்பது பெண்கள் காதிலே அணியும் ஒரு நகை; ஆபரணம். குதம்பை அணிந்த பெண்ணைக் குதம்பாய்! என அழைக்கிறார் குதம்பைச் சித்தர். இவருடைய பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை, குதம்பாய் என்று முன்னிலைப் படுத்திப் பாடியிருப்பதனால் இச் சித்தருடைய பெயரையே குதம்பைச் சித்தர் என்று வைத்துவிட்டனர். குதம்பைச் சித்தருடைய பாடல்களிலே யோகத்தையும் ஞானத்தையும் புகழ்ந்து பேசுவதைக் காணலாம். இவருடைய பாடல்களும் எளிதிலே பாடத்தக்க இனிமையான இசைப் பாடல்கள். இவ்வுலகிலே மதவாதிகளாகவும், மதத்தலைவர்களாகவும் விளங்கும் பலர் ஆடம்பரமாகப் பெயர்சூட்டிக் கொள்வதைப் பார்க்கிறோம்; விருதுகளுடன் திகழ்வதைக் காண்கிறோம்; சிஷ்யகோடிகளுடன், எடுபிடி ஆட்களுடன், யானை குதிரைப் பரிவாரங்களுடன் பல்லக்கிலே பவனி வருவதைக் காண் கிறோம். இவைகள் வீண் ஆடம்பரங்கள்; இவர்கள் கடவுளை அறிந்தவர்கள் அல்லர் என்பதே குதம்பைச் சித்தர் கருத்து. கடவுளுக்கு உருவமில்லை; அருவமானவர். வெட்ட வெளியே கடவுள் என்ற உண்மையை அறிந்தவர்களுக்கு ஆடம் பரமான பட்டயங்கள்- விருதுகள் - எல்லாம் எதற்காக? என்று கேட்கிறார். இதனை, bt£l btËj‹id bkŒba‹W ïU¥ngh®¡F¥ g£la« VJ¡fo!- குதம்பாய்! பட்டயம் ஏதுக்கடி! என்ற பாடலால் காணலாம். இதுவே குதம்பைச் சித்தர் பாடலில் முதல் பாட்டு; மதவாதிகளின் ஆடம்பரத்தை வெறுக்கும் பாட்டு. உண்மைப் பொருளை அறிந்து விளங்குகின்ற மெய் ஞானிக்கு உடலை வலுப்படுத்தக்கூடிய காயகற்பம் என்னும். மருந்துகூட வேண்டாம்; கவலையற்ற அவர்கள் உள்ளமே அவர்களுக்கு நோயற்ற வாழ்வை அளிக்கும். நீண்ட வாழ்நாளை அளிக்கும் உண்மைப் பொருளை அறியாத அஞ்ஞானிகள் தாம் காயகற்பந் தேடி அலைவார்கள் என்ற கருத்தை வெளியிட்டி ருக்கிறார் குதம்பைச் சித்தர். இதனை, மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி- குதம்பாய்! கற்பங்கள் ஏதுக்கடி! என்ற பாடலால் காணலாம். உண்மை ஞானிகள் காயகற்பந் தேடமாட்டார்கள்; தேடவேண்டிய அவசியம் இல்லை என்பதை இதன்மூலம் வலியுறுத்தினார். தன்னுடைய நாட்டத்தைப் புருவமத்தியிலே செலுத்தும் யோகப் பயிற்சியிலே தேர்ந்தவர்கள், என்றும் குறையின்றி வாழ்வார்கள்; எல்லா வல்லமையும் பெற்று வாழ்வார்கள் என்று யோகத்தைச் சிறப்பித்துப் பாராட்டிப் பாடுகிறார். இதனை, நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்கள் ஏதுக்கடி- குதம்பாய் வாட்டங்கள் ஏதுக்கடி! என்ற பாடலால் காணலாம். யோகசக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவர். அவர்களிடம் காலன் நெருங்கமாட்டான். அவர்கள் திடகாத்திர முடன் நீண்டநாள் உயிர்வாழ்வார்கள். காலனை வென்ற கருத்தறிவாளர்கள் ஆடம்பரமான வேடங்கள் பூணமாட்டார்கள்; அடக்கமாகவே வாழ்வார்கள் என்று பாடுகிறார். இதனை, காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி- குதம்பாய்! கோலங்கள் ஏதுக்கடி! என்ற பாடலால் காணலாம். இவ்வாறு பல சிறந்த கருத்துக்கள் குதம்பைச் சித்தர் பாடலிலே காணப்படுகின்றன. கடவுளின் உண்மையை அறிந்தவர்கள் வீண் ஆடம் பரமான விருதுகளை ஏந்திக்கொண்டு திரியமாட்டார்கள். உண்மையுணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் வேண்டுவதில்லை. யோகப் பயிற்சியிலே தேர்ந்தவர்கள் எத்தகைய சோர்வும் இன்றி வாழ்வார்கள். யோகப் பயிற்சியிலே தேர்ந்தவர்கள் காலனையும் வெல்வர்; அவர்கள் வீண் வேடங்கள் இல்லாமல் அடக்கமுடன் வாழ்வார்கள். இவ்வுண்மைகளை மேலே எடுத்துக்காட்டிய குதம்பைச் சித்தர் பாடல்களால் அறியலாம். கடுவெளிச் சித்தர் கடுவெளிச் சித்தர் பாடல் முழுவதும் ஆனந்தக் களிப்பு என்னும் இசைப் பாடலாகும்; சிறந்த நீதிகளையும், உயர்ந்த ஞானத்தையும் அறிவிப்பது. சொல்லுதற்கு அரிய சூது, பொய், மோசம் இவைகளை விட்டொழிக்க வேண்டும். சூதாடினால், பொய் பேசினால், பிறரை மோசம் பண்ணினால் நம் சுற்றத்தார் அனைவரும் நம்மை வெறுப்பார்கள்; நம்மை விரும்புவோர் ஒருவரும் இருக்க மாட்டார்கள்; நாம் அழிந்துபோவோம்; நமக்கு நாசந்தான் உண்டாகும். ஆகையால் நல்ல பக்தியும் அன்புமே ஒவ்வொரு நாளும் மனிதர்க்கு நன்மை தரும் ஆதலால் பக்தியையும் அன்பையுமே நேசிக்க வேண்டும்; விரும்ப வேண்டும்; பின்பற்ற வேண்டும் என்று பாடுகிறார் கடுவெளிச் சித்தர். இதனை, சொல்அரும் சூது, பொய், மோசம்- செய்தால் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும்; நாசம்; நல்ல பக்தி, விசுவாசம் - எந்த நாளும் மனிதர்க்கும் நன்மையாம் நேசம் என்ற பாடலால் காணலாம். தீமைகள் செய்வது கூடாது; பக்தி விசுவாசத்துடன் வாழவேண்டும் என்று உபதேசித்த சித்தர் மேலும் அறிவுரை புகட்டுகின்றார். நன்மையடையும்படி நல்ல வழியைத் தேடு; எந்நாளும், உயர்ந்த உண்மையான இறைவனையே தேடு; அன்புடன் தேடு. அறிவற்றவர்கள், கோழைகள் கூட்டத்தில் சேராதே; கல்வி யிலும், அறிவிலும், ஒழுக்கத்திலும், உறுதியிலும் சிறந்தவர்கள் கூட்டத்துடனேயே கூடி வாழ்க; நினைத்தவற்றை யெல்லாம் கொடுக்கும் அந்த ஞானவள்ளலாகிய இறைவனை உள்ளத்திலே கண்டு வாழ்த்திக் கொண்டாடுவாயாக! என்று உபதேசம் பண்ணுகிறார். இதனை, நல்ல வழிதனை நாடு; - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு; வல்லவர் கூட்டத்தில் கூடு;- அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண்டாடு என்ற பாடலால் காணலாம். ஞானமார்க்கத்திலே செல்வோர் தாம் மட்டும் சாந்தி பெற்று வாழ நினைப்பது உண்மைஞானம் ஆகாது. தம்மைப் போல் ஏனைய மக்களும் சாந்தி மார்க்கத்திலே வாழ வழி காட்டவேண்டும்; இதுவே உண்மைஞானமாகும். இவ்வாறு போதனை செய்கிறார் கடுவெளிச் சித்தர். பொய்ந்நெறிகளிலே போய்த் தடுமாறவேண்டாம்; தவிக்க வேண்டாம்; அமைதியின்றித் தத்தளிக்க வேண்டாம். உண்மையான அறிவுப் பாதையைக் கண்டு தெளிவடைவாயாக. அந்த அறிவுப் பாதையிலே முன்னேறு. பரிசுத்தமான, வேதாந்த முடிவான வெட்டவெளியினைப் பார்; தெளிவுகொள். அஞ்ஞான மார்க்கத்தை அழித்துவிடு; இகழ்ந்து தள்ளிவிடு, அதன் அடையாளமே தெரியாமல் மறைத்துவிடு; ஒழித்துவிடு; போக்கிவிடு. இப்படிச் செய்தால் நீ இன்பத்தைக் காண்பாய்; மனத்திலே அமைதி பெறுவாய். நமக்குச் சாந்தியும் அமைதியும் கிடைத்தால் போதும் என்று நின்றுவிடாதே. உன்னை அடுத்தவர்களுக்கு- அடைந்தவர்களுக்கு- அவர்களும் ஆனந்தம் அடையும் வழியைக் கூறுவாயாக. நீ பெற்ற இன்பத்தை அவர் களும் அடையும்படி செய்க. இதுவே உன் கடமையாகும் என்று பாடுகிறார். இதனை, மெய்ஞானப் பாதையில் ஏறு;- சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு; அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு; - உன்னை அண்டினோர்க்கு ஆனந்த மாம்வழி கூறு என்ற பாடலால் காணலாம். யோகமார்க்கத்திலே நடக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறவர்களிலே சிலர், மயக்கப் பொருள்களை உட்கொள்ளு வதைக் காணுகின்றோம். கஞ்சா, அபின் முதலியவற்றை உட்கொண்டு, யோகம் செய்வதாகக் காட்சியளிப்போர் உண்டு. இவர்கள் எல்லாம் உண்மையான யோகிகள் அல்லர்; சோம் பேறிகள்; வயிற்றுப் பிழைப்புக்காக வேஷம் போடுகின்றவர்கள். உண்மையான யோகமார்க்கத்தைப் பின்பற்றுவோர் புகைபிடிக்க மாட்டார்கள்; நல்லொழுக்கத்தில் தலைசிறந்து நிற்பார்கள். இதனைக் கடுவெளிச் சித்தர் பாடலால் காணலாம். கஞ்சா புகைகுடி யாதே! - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே; அஞ்ச உயிர்மடி யாதே; - புத்தி அற்றவர் அஞ்ஞானத்தின் நூல்படி யாதே கஞ்சாப்புகை குடிக்காதே! வெறி வேண்டும் என்று சொல்லிக் கள்ளைக் குடிக்காதே! பிறர் அஞ்சும்படி உயிர்க் கொலை செய்யாதே! அறிவற்றவர்கள் எழுதிய அஞ்ஞானத்தைப் போதிக்கும் நூல்களைப் படிக்காதே! என்று இவ்வாறு பாடி யிருக்கிறார். கடுவெளிச் சித்தர் பாடலில் இத்தகைய சிறந்த நீதிகளையும், ஒழுக்க முறையையும், அறிவுரையையும் காணலாம். கடுவெளிச் சித்தர் பாடல் தன் மனத்துக்கு உரைப்பதுபோலப் பாடியதாகும். அகத்தியர் ஞானம் அகத்தியரைப் பற்றி அகத்தியர் சித்தர்களிலே தலைசிறந்தவராகக் கருதப் படுகிறார். தமிழுக்கு முதலில் இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்பது புலவர்கள் கொள்கை. அந்த இலக்கணத்துக்கு அகத்தியம் என்று பெயர். அது முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல் என்பர். ஆனால் அந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. அகத்தியர்க்குச் சிவபெருமான் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தார். முருகன் அகத்தியர்க்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தார். இவ்வாறு புராணங்கள் கூறும். அகத்தியர் பொதிய மலையிலிருந்து தமிழைப் போதித்து வருகிறார் என்றும் உரைப்பர். அகத்தியர் பெயரிலே ஏராளமான வைத்திய நூல்கள் வழங்குகின்றன. அகத்தியர் பெயரால் சில மருந்துகளின் பெயர்களும் உண்டு. இன்று அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களிலே வைத்திய நூல்கள்தாம் மிகுதியாக இருக்கின்றன. இன்று அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள் எல்லாம், சரித்திரத்துக்கு எட்டாத நாளில் வாழ்ந்த காலத்தவராகக் கருதப்படும் அகத்திய முனிவரே பாடியனவா? நேரே அவர் வாயால் சொல்லப்பட்டனவா? அவைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூல்கள் தாமா? என்று ஆராயவேண்டும். இப்படி ஆராய்ந்தால் அவைகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டவைகள் அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். அகத்தியர் பெயரால் வழங்கும் மருத்துவ நூல்பாடல்கள், இன்று வழங்கும்- பொதுமக்கள் பேசும்- எளிய நடையிலேதான் அமைந்திருக்கின்றன. நடையின் போக்கு பழமையானதாக- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய மொழியாக- காணப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் வளர்ந்து வந்திருக்கும் கலப்புத்தமிழ் நடையிலேயே அமைந்திருக்கின்றன. ஆயினும் அந்நூல்களில் சொல்லப்படும் விஷயங்கள் பழங் காலத்தவை. அகத்திய முனிவரால் ஆராய்ந்து சொல்லப் பட்டவை என்று ஒப்புக்கொள்வதில் தவறில்லை. ஆகவே அகத்தியரின் கொள்கைகளை- அவர் கண்டறிந்த உண்மை களைச் செவி வழியாக- கர்ணபரம்பரையாக- அறிந்தவர்கள் இருந்தனர்; பிற்காலத்தினரான அவர்கள் அவ்வுண்மைகளை அகத்தியர் பெயராலேயே பாடி, நூல்களாக வைத்தனர். இவ்வாறு கொள்ளுவதுதான் பொருத்தமாகும். அகத்தியர் ஞானம் அகத்தியர் ஞானம் என்ற பெயரிலே பதினெண் சித்தர் ஞானக்கோவையில் இருபத்தாறு பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்கள் மக்களுக்கு அறிவு புகட்டும் பாடல்கள்; சித்தர் களின் மத- சமுதாயக் கொள்கைகளை விளக்கும் பாடல்கள். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டும் கருத்துள்ள பாடல்கள் அகத்தியர் ஞானத்தில் காணப்படுகின்றன. வேத சாத்திரங்கள் மக்களை ஏமாற்றுவதற்கு ஏற்பட்டவை. புராணங்களால் மக்களுக்கு நன்மையில்லை. உடலைமட்டும் நம்பி வாழ்ந்த அறிவற்றோர்க்கே அவைகள் ஏற்பட்டவை. புராணங்களில் பரிபாஷைகள் உண்டு; மூடர்கள் அவைகளை அறியமாட்டார்கள். கல்லையும் செம்பையும் தெய்வம் என்று நம்பி அலைவார்கள். இதனால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு திரிவார்கள். புராணங்களிலும், புரட்டுக்களிலும் நம்பிக்கை வைத்தவர் கள் சாதிவேற்றுமை பாராட்டித் திரிவார்கள்; உடல்வேறு, ஆன்மா வேறு, கடவுள் வேறு என்று நம்புவார்கள். மூன்றும் ஒன்று என்பதை உணர்ந்து உடலைப் பாதுகாப்பவன், ஏனைய மக்களின் நல்வாழ்வுக்காகவும் உழைப்பவன். தந்நலங் கருதாதவன் ஆகிய பண்புள்ளவனே ஞானி; அவனே அறிவுடையவன்; உண்மையை உணர்ந்தவன். இக் கருத்துக்களை அகத்தியர் ஞானத்திலே காணலாம். தான் என்ற பெரியோர்கள் உலகத் துள்ளே தாயான பூரணத்தை அறிந்த பின்பு ஊண்என்றே உடலைநம்பி இருந்த பேர்க்கு ஒருநான்கு வேதம்என்றும், நூலாம் என்றும் தேனென்ற பதினெட்டுப் புராணம் என்றும் தேவர்என்றும், தேவியென்றும் ரவிதான் என்றும் நான்என்றும் நீயென்றும் சாதிபல வென்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே என்பது அகதியர் ஞானப் பாடல். இதன் பொருளைக் கண்டால் உண்மைகள் விளங்கும். எல்லாவற்றிற்கும் அடிப்படையான முழு உண்மை அறிந் தவர்களிலும் அகங்காரம் பிடித்தவர்கள் உண்டு. அவர்கள்தாம் தான் என்ற ஆணவம் படைத்த பெரிய மனிதர்கள். இந்த உடல் வெறும் மாமிசப் பிண்டம்; இதனால் ஒன்றும் ஆகாது என்று நம்பியவர்களுக்காக அவர்கள் பல கற்பனைகளைச் செய்து வைத்தார்கள். அவைகள் நான்கு வேதங்கள் என்பன; அவை களைப் பின்பற்றியன ஆகம நூல்கள் என்பன; தேன்போல் இனிக்கும் பதினெட்டுப் புராணங்கள் என்பன. அவைகளில் தேவர்கள், தேவிமார்கள், சூரியர்கள் என்றெல்லாம் எழுதி வைத்தனர்; அவர்களைப் பற்றிய கதைகள் புனைந்துவைத்தனர்; மக்கள், நான் வேறு சாதி; நீ வேறு சாதி என்று பிரிந்து சண்டை போடும்படி கூறிவைத்தனர். இவைகளையெல்லாம் உலகில் உள்ள சுயநலக்காரர்களின் பிழைப்புக்காகச் செய்து வைத்தார்கள். இதுவே மேலே கண்ட பாடலில் அடங்கியுள்ள பொருள். இப்பாடல், வேதங்கள், ஆகமங்கள், ஏனைய நூல்கள், புராணங்கள் எல்லாம், தந்நலங்கொண்ட அறிஞர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யப்பட்டவை. இந்த மாமிச உடல் நிலையற்றது என்று நினைப்பவர்களே அவற்றை நம்பி அறிவிழப்பார்கள். உடலின் உண்மையறிவோர் உடம்பைக் காப்பாற்ற முடியும், உடம்பால் இன்பந் துய்க்க முடியும் என்ற உண்மையை அறிந்தோர் அந்நூல்களால் மயங்கமாட்டார்கள்; என்ற கருத்துடன் விளங்குவதைக் காணலாம். கடவுளர்களைப் பற்றி வழங்கும் புராணங்கள் எல்லாம் பொய்யுரைகள், மக்கள் குலத்தைப் பிரித்துவைக்கும் கருத்துள்ளவை என்று தெளிவாக உரைத்தது இப்பாட்டு. பாடினார் இக்கதைதாம்; சொல்லப் போனால் பரிபாஷை அறியார்கள் உலக மூடர்; சாடுவார் பலபலநூல் பார்த்துப் பார்த்து தமைமறந்து படுகுழியில் வீழ்வார்; சாவார்; வாடுவார் நாமமென்றும், ரூபம் என்றும் வையகத்தில் கல், செம்பைத் தெய்வம் என்றும் நாடுவோர்; பூரணத்தை அறியா மூடர். நாய்போலே குரைத்தலைவார்; வழிகா ணாரே. இதுவும் அகதியர் ஞானத்தில் உள்ளது. புராணங்களை நம்புவோர் அடையும் நிலைமையை விரித்துரைக்கின்றது இச்செய்யுள். மக்களை மூடர்களாக்கவே இப் புராணக்கதைகளைப் பாடினார். அப் புராணங்களிலும் பரிபாஷைகள் உண்டு. ஆனால் உலகில் மூடர்கள் பலர் அப் பரிபாஷைகளை அறிய மாட்டார்கள். அவைபோன்ற இன்னும் பல நூல்களையும் படித்துப் படித்துச் சண்டையிடுவார்கள்; தன்மை அறியாமல் மறந்து கரையேறமுடியாத ஆழமான குழியிலே வீழ்ந்து தவிப்பார்கள்; மீள முடியாமல்- அறிவுக் கரையிலே தாவிப் பிடித்து ஏற முடியாமல்- அந்த மூடப்படுகுழியிலேயே மடிவார்கள். கடவுளுக்கு- நம் உடம்பில் உள்ள மெய்ம்மைக்கு- பூரணத்துக்குப் பெயரும் உருவமும் கற்பிப்பார்கள்; இவ்வுலகில், கல்லிலும், செம்பிலும் உருவம் செய்து வைத்திருப்பதைப் பார்த்து அவற்றில் தெய்வம் இருப்பதாகத் தேடுவார்கள்; பரிபூரணப் பொருள் இருக்கும் இடம் அறியாத ஏழையர் செயல் இது. இவர்கள், நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவது போல, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ளுவார்கள்; உண்மைவழி இன்ன தென்று அறியமாட்டார்கள். இவ்வாறு புராணங்களால் உண்டாகும் கலகத்தை- ஒற்றுமையின்மையை- எடுத்துரைத்தது இப் பாடல். உடலே முதன்மையானது புராணங்களால் விளையும் தீமையை மேலேகாட்டியவாறு எடுத்துக்கூறியது அகத்தியர் ஞானம். இதோடு நிற்கவில்லை; மக்கள் உணரவேண்டிய உண்மை இன்னது என்பதையும் தெளிவாகச் சொல்லுகின்றது. வாழாமல் உலகம்விட்டு, வேடங்கள் பலவும் பூண்டு வயிற்றுக்காய் வாய்ஞானம் பேசிப் பேசி, தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை; தனைஅறியாச் சண்டாளன் முழுமாடு அப்பா; பாழாகப் பாவிகள்தன் சொல்கே ளாதே! பதறாதே! வயிற்றுக்கே மயங்கி டாதே! கேளாதே! பேச்செல்லாம் கேட்டுக் கேட்டுக் கலங்காதே! உடல்உயிர் என்று உணர்ந்தி டாயே. புராண வேதாந்தங்களை நம்பி, துறவி வேடம் பூண்டு, பிச்சையேந்தித் திரிவோர்க்கு அறிவுரை கூறுவதுபோல அமைந் திருக்கின்றது இப்பாடல். இப்பாடல் கூறும் உண்மையைக் காண்போர் சித்தர்களின் தத்துவத்தையும் காண்பார்கள். புராண வேதாந்த போதத்தை நம்பி உலக வாழ்வைத் துறக்கவேண்டாம்; உலக வாழ்வில் இன்பம் இல்லை; நிலையற்ற உடலை நம்பி வாழ்வது துன்பத்திற்கே இடம் என்று கருத வேண்டாம்; பலப்பல வேஷங்களைப்பூண்டு திரியவேண்டாம்; வயிற்றுப் பிழைப்பின்பொருட்டு வாய் ஞானம் பேசி அலையவேண்டாம். உடல் நிலையற்றது; உலகம் பொய்; சாவு மெய், வாழ்வு பொய் என்று சொல்லிக் கொண்டு வறியவர்களின் வீடுகளிலே சென்று பிச்சையேற்பவன் மூடன்; அவன் தன்னை யார் என்று ஆராய்ந்து பார்க்காத சண்டாளன்; அவன், உருவில் மனிதனாயிருந்தாலும் செய்கையில் அறிவற்ற மாடு. ஆகையால் வீணாகப் பாவியர்கள், வஞ்சகர்கள், வேஷக்காரர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காதே! நம்பாதே! அவசரப்படாமல் ஆராய்ந்து எதனையும் செய்; வயிற்றுப் பிழைப்புக்காகப் பொய்களை மெய்கள் என்று நம்பி அறிவழியாதே! பிறர் பேச்சைக் கேட்கவேண்டாம்; பிறர் பேச்சுக்களைக் கேட்டு அறிவு கலங்காதே; குழப்பம் அடையாமல் உறுதியுடன் நடந்து கொள். உடலேதான் உயிர்; உடல்வேறல்ல, உயிர் வேறல்ல; இரண்டும் ஒன்றேதான். இந்த உண்மையை உணர்ந்துகொள் வாயாக. இவ்வாறு, உடலும் உயிரும் ஒன்றேதான் என்ற சித்தர் கொள்கையை வலியுறுத்தியது இப்பாடல். மேலும், உடல்உயிரும், பூரணமும் மூன்றும் ஒன்று; உலகத்தில் சிலபேர்கள் வெவ்வே றென்பார் என்று சொல்லுகிறது அகத்தியர் ஞானம். கடவுள் வேறு, ஆன்மா வேறு, உடலாகிய மாயை வேறு என்பதை மறுக்கிறது இவ்வடி. இதனால் சித்தர்கள் பதி, பசு, பாசம் என்று கூறுவதை ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. மாயையின் கூறு என்று சொல்லப்படும் உடம்பும், தனியானது என்று சொல்லப் படும் உயிரும், பூரணம் என்று சொல்லப்படும் பதியும் ஒன்றேதான். இவ்வுலகில் இந்த உண்மையறியாத சிலர்தான் வேறுவேறு என்பார்கள் என்பது மேலே காட்டிய தொடரின் தெளிவான பொருளாகும். மேலே காட்டியவை உடம்பின் உண்மையை எடுத்துக் காட்டின. உடல் உண்மையென்பதை மறக்காதே; யோக மார்க்கத்தில் நின்று உடம்பைப் பாதுகாத்துக்கொள் என்பதே அகத்தியர் ஞானம் காட்டும் வழியாகும். சித்தர்களின் உண்மை யான கொள்கையைக் காண்பதற்கு இந்த அகத்தியர் ஞானமும் சிறந்த கருவியாக விளங்குகின்றது. மேலேகாட்டிய பாடல்களே இதற்குப் போதுமான சான்றாகும். அழுகணிச் சித்தர் அழுகணிச் சித்தர் பாடல் ஒப்பாரி போலவே அமைந் திருக்கின்றது. அழுகின்ற ஓசையே அப்பாடலின் இசையமைப்பு. அழுகின்ற இசையில்- மாதிரியில்- பாடியிருப்பராதலின் இவர் அழுகணிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இதுவே இவர் பெயருக்குக் காரணமாக இருக்கலாம். அழுகணிச் சித்தர் பாடல்களுக்கு யோகிகளும் தத்துவ ஞானிகளுந்தான் தெளிவாகப் பொருள் காணமுடியும். பாடல் களில் அமைந்திருக்கும் சொற்கள் புரியக்கூடிய சொற்கள் தாம். ஆனால் பாடல்களின் கருத்துக்களை வெறும் இலக்கண இலக்கியப் புலவர்களால் கண்டறியமுடியாது; அனுபவ ஞானிகள்தாம் அறிய முடியும். யோகத்தையும் ஞானத்தையுமே அழுகணிச் சித்தர் பாடல்கள் பாராட்டிப் பாடுகின்றன. அவற்றுள் ஓரளவு பொருள் விளங்கும் சில பாடல்களை மட்டும் காண்போம். கொல்லன் உலைபோல் கொதிக்குதடி என்வயிறு நில்என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை; நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல்என்று வந்தநமன்- என் கண்ணம்மா! குடியோடிப் போகானோ? யோக சித்தியைப் பெற என்னால் முடியவில்லை; அத்தோல்வி யால் என் வயிறு கொதிக்கின்றது. என்னுடைய மூச்சைச் சுழிமுனையிலே நில் என்று சொன்னால், அந்தச் சுழிமுனை யிலே நிலைநிறுத்த முடியவில்லை. சுழிமுனையிலே நில் என்று சொல்லி மூச்சை நிலைநிறுத்தி யோகம் செய்ய வல்லவரிடம் எமன் அணுகமாட்டான். அவரைக் கொல்வதற்காக வந்த நமன் அவரைக் கண்டு அஞ்சிக் குடிபெயர்ந்து ஓடிப்போய்விடுவான். என்று யோகத்தின் சிறப்பைப் பாராட்டிப் பேசினார். யோகத்திலே வெற்றிபெற்றோர்க்குச் சாவில்லை என்று கூறினார். சக்தியைக் கண்ணம்மா என்று அழைக்கிறார். இந்த உடம்பு நாற்றம் பிடித்த உடம்பு; உப்பிருந்த மண்பாண்டம்போல் அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி, அழியாத உடம்புடன் பிறப்பதற்கு உதவும் மருந்து எனக்குக் கிடைக்க வில்லை; எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை; இவ்வுடம்பை மாற்றிப் பிறக்கக்கூடிய மருந்து எனக்குக் கிடைக்குமானால், இந்த ஊத்தைச் சடலத்தை விட்டொழிப்பேன்; உன் பாதத்தை அடைவேன் என்று கண்ணம்மாவை முன்னிலைப்படுத்திப் பாடுகிறார். இதனை, ஊத்தைச் சடலமடி: என்கண்ணே! உப்பிருந்த பாண்டம் அடி! மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை; மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊத்தைச் சடலம் விட்டு- என் கண்ணம்மா! உன்பாதம் சேரேனோ? என்ற பாடலால் காணலாம். இதுவும், யோகத்தால் உடலை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்ற கருத்துள்ள பாடல்தான். யோகிகளுக்கு நல்லொழுக்கமே முதன்மையாகும்; நல்லொழுக்கமற்றவர்கள் யோகிகள் அல்லர்; அவர்கள் யோகத்தில் பழக முயன்றாலும் வெற்றிபெற முடியாது. இது அழுகணிச் சித்தர் கருத்து. நான் தீமைகள் செய்வதற்கு அஞ்சாத வஞ்சகன்; என்னைக் கண்டித்துப் புத்தி புகட்டி நல்வழியிலே திருப்பும் துணைவர் யாரும் இல்லாத பாவி நான்! மனமாரப் பொய் சொல்லும் தன்மையுள்ளவன்! அன்பு சிறிதும் இல்லாத கொடியவன்! கஞ்சாப் புகை குடித்து மயங்கிக் கிடக்கும் வெறியன்! என்னுடைய ஒழுக்கம் அனைத்தும் இவ்வாறு அழிந்து நானும் கெடுவதற்கு முன்பே, அஞ்சாதே என்று சொல்லி, என்னை ஆட்கொண்டால் ஆகாதோ என்று பாடுகிறார். இதனை, அஞ்சாத கள்ளனடி! ஆரும்அற்ற பாவிஅடி! நெஞ்சாரப் பொய்சொல்லும் நேயம்இல்லா நிட்டூரன்! கஞ்சா வெறியனடி! கைசேதம் ஆகுமுன்னே, அஞ்சாதே என்று சொல்லி- என் கண்ணம்மா! ஆண்டிருந்தால் ஆகாதோ! என்ற பாடலால் காணலாம். நல்வழியைக் கைவிட்டுத் தீநெறியிலே நடப்போர் துறவி வேடம் பூண்டிருந்தாலும் உணவுக்கும் உடைக்கும் திண்டாடு வார்கள்; மானந் துறந்து, நல்லவர் கெட்டவர் என்று பாராமல் அற்பர்களிடமும் சென்று யாசிப்பார்கள்; பொருள் வேண்டிக் கையேந்தி நிற்பார்கள்; பல்லைக்காட்டிப் பரக்கப் பரக்க விழிப்பார்கள். இந்த நிலையை அழுகணிச் சித்தர் தன் மேல் ஏற்றிப் பாடுகிறார். நான் இந்த நிலையில் இருக்கிறேன். என்னுடைய இந்த நிலையைப் போக்க வேண்டும். எனக்கு அருளாகிய பொருளைத் தரவேண்டும் என்று சக்தியை வேண்டுகிறார். இதனை, புல்லர் இடத்தில்போய்ப் பொருள்தனக்குக் கையேந்தி பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி! பல்லைமிகக் காட்டாமல், பரக்க விழிக்காமல் புல்லரிடம் போகாமல்- என் கண்ணம்மா! பொருள் எனக்குத் தாராயோ? என்ற பாடலால் காணலாம். இவ்வாறு அழுகணிச் சித்தர் பாடல்கள் படிப்பதற்கும் பாடுவதற்கும் இனிமையாக அமைந் திருக்கின்றன; ஆழ்ந்த பொருளமைந்தும் காணப்படுகின்றன. கொங்கணச் சித்தர் கொங்கணர் வரலாறு சித்தர்களிலே கொங்கணர் என்பவர் ஒருவர். இவருக்குக் கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார் என்ற பெயர்களும் வழங்குகின்றன. இவர் பெயரால் வயித்திய நூல் களும், பாடல்களும் உண்டு. கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்று சித்தர் கொள்கையினர் சொல்லுகின்றனர். இதுபற்றி வழங்கும் கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ்யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு ஒன்று அவர்மீது எச்சம் இட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கைப் பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன்பின், அவர் ஊருக்குள் புகுந்து, திருவள்ளுவர் மனைவா யிலில் நின்று பிச்சை கேட்டார். திருவள்ளுவர் மனைவி வாசுகியார், வள்ளுவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவரச் சிறிதுநேரமா யிற்று. நேரங்கழித்துப் பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் கோபத்துடன் விழித்துப்பார்த்தார். உடனே வாசுகியார், கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று கேட்டார். உடனே கொங்கணர் அஞ்சி, அம்மையாரைப் பணிந்தார். அதன்பின் வள்ளுவருக்குச் சீடர் ஆனார். இதுதான் அக்கதை. கொங்கணச் சித்தர் பாடல்களில் வாலைக் கும்மி என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர்; கன்னி யென்பது பொருள். இந்த வாலைக் கும்மி, கொங்கணர் பெயரால் வழங்கினாலும், அவரால் பாடப்பட்டது அல்ல என்பது உண்மை. யாரோ ஒருவர், கொங்கணரின் கருத்துக்களை அமைத்துப் பாடியதுதான். இதுதான் உண்மையென்பதை வாலைக் கும்மிப் பாடலே கூறுகின்றது. தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ் செய்ய எனக்குப தேசம் செய்தான் நேசவான் வீரப் பெருமாள் குருசாமி நீள்பதம் போற்றிக் கொண் டாடுங்கடி என்பது வாலைக் கும்மிப் பாட்டு. இப்பாடலில், வாலைக் கும்மியின் ஆசிரியர் தமது ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். தமது ஆசிரியர் வீரப்பெருமாள் என்று சொல்லுகிறார். ஆதலால் இது திருவள்ளுவர் சீடர் என வழங்கும் கொங்கணரால் பாடப் பட்டது அன்று என்பது உறுதி. கொங்கணர் கொள்கையை அறிந்த ஒருவர் பாடியது என்பதுதான் உண்மை. வாலைக் கும்மியும் சித்தர்களின் கொள்கைகளை அறிவதற்குத் துணை செய்கின்றது. உடம்பு உண்மையானது சித்தர்கள் உடம்பை மாயம்- பொய் - என்று கருதி அதைப் பேணாமல் விடவேண்டும் என்று சொல்லுகிறவர்கள் அல்லர். உடம்பு உண்மை; ஆதலால் அதைப் பாதுகாத்து நீண்டநாள் வைத்திருக்கவேண்டும் என்று சொல்லுகிறவர்கள். இந்த உண்மையை வாலைக் கும்மியில் காணலாம். ஊத்தைச் சடலம் என்று எண்ணாதே; இது உப்பிட்ட பாண்டம் எண்ணாதே! பார்த்த பேருக்கு ஊத்தைஇல்லை; இதைப் பார்த்துக்கொள் உன்தன் உடலுக்குள்ளே இது துர்நாற்றம் வீசும் உடம்பு என்று நினைக்காதே; உப்பிட்ட பாத்திரம்போல் உளுத்துக் கொட்டிவிடும் என்றும் நினைக்காதே. இவ்வுடம்பை நன்றாகப் பாதுகாத்தபேருக்கு இது ஊத்தைச் சடலம் அன்று; உப்பிட்ட பாத்திரமும் அன்று. உன் உடம்புக் குள்ளேயே இதை நீ நன்றாகப் பார்த்துக்கொள். என்று உடம்பின் உண்மையைக் கூறிற்று; உடம்பு பொய் யென்போருக்கு மறுப்புரை கூறிற்று. இவ்வுடம்பைப் பாதுகாப்பது எப்படி என்பதையும் வாலைக்கும்மி சொல்லாமல் விடவில்லை. உடம்பைப் பாதுகாக்கும் வழி நமது முதுகந் தண்டுக்கு மேலே உச்சியிலே, உள் நாக்குக்கு மேலே அறிவு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. யோகப் பயிற்சியால்தான் அதைக் காண முடியும். அதைக் கண்டால் கவலையின்றி ஆனந்தமாக வாழலாம்; உடலுக்கும் அழிவில்லை. இதைக் காண்பதற்குப் பல முறைகள் கூறுகின்றனர். இவ்வாறு நமது சிரசில் இருப்பதைத்தான் மேல்வீடு என்றும் சொல்லு கின்றனர். இதனை, உச்சிக்கு நேரே உள்நாவுக்கு மேல்நிதம் வச்ச விளக்கு எரியுதடி என்றும், இந்த விளக்கைக் காணவேண்டுமானால், வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாரு; நாம் மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே! என்றும் வாலைக் கும்மி பாடுகிறது. மூச்சை - உயிர்ப்பை- வாசியை- நமது விருப்பப்படி அடக்கி நடத்தக்கூடிய யோகப் பயிற்சியைத் தாமதமில்லாமல் செய்ய வேண்டும். செய்தால்தான், நிலையற்றது என்று நினைக்கும் உடம்பை நிலையுள்ளதாகச் செய்யலாம். என்று கூறுகிறது வாலைக் கும்மி. இதனை, கட்டாத காளையைக் கட்ட வேண்டும்; ஆசை வெட்டவேண்டும்; வாசி எட்டவேண்டும்; எட்டாத கொம்பை வளைக்க வேண்டும்; காயம் என்றைக் கிறக்குமோ வாலைப் பெண்ணே! என்ற பாட்டால் காணலாம். உடம்பு என்று மறையுமோ என்று சந்தேகப்படுகின்ற வாலைப் பெண்ணே! விரைவிலே உடம்பைப் பாதுகாத்துக்கொள். கட்டுப்படாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற காளையாகிய மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்; வேறுள்ள பேராசைகளை அறுத்துவிட வேண்டும்; வாசியென்னும் யோகத்தால் மேல்வீட்டை அடைய வேண்டும்; எட்டிப்பிடிக்க முடியாத அந்தக் கொம்பைப் பிடித்து நமது வசமாகும்படி வளைத்து விட வேண்டும். இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். யோகத்தால் நோய் நீக்கம் யோகப் பயிற்சியால் இம்மை இன்பத்தைப் பெறலாம் என்பதே சித்தர்களின் கொள்கை. இவ்வுலகத்தில் நீண்டநாள் உடல்நோயின்றி வாழ்வதற்கே யோகப் பயிற்சியைச் சித்தர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இந்த உண்மையை வாலைக் கும்மி தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதனை, ஆயுள் கொடுப்பாள் நீரிழிவு முதல் கண்டன மற்ற வியாதிகள் எல்லாம் பிசாசு, பறந்திடும் பில்லிபோல், அடி பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால் என்ற பாட்டால் அறியலாம். சக்தியின் பேரைச்சொல்லிக் கொண்டு யோகப் பயிற்சி செய்தால், அதனால் வரும் நன்மை பல. ஆயுள் வளரும்; நீண்டநாள் உயிர்வாழலாம்; நீரிழிவு வியாதி முதலான, காணப்பட்ட ஏனைய கொடிய நோய்கள் எல்லாம் பறந்துபோய்விடும். வாலையின் சக்தியினால், தியானத்தால், பிசாசுகள், பில்லிகள் பறந்து ஓடுவது போல நோய்கள் யோகப் பயிற்சியால் ஒழியும். இக் கருத்தை வலியுறுத்தியது இப்பாடல். நீரிழிவு நோய்க்கு யோகப் பயிற்சி மருந்தாக உதவும் என்று இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளு கின்றனர். இந்த முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது. ஆகவே, நோய்களுக்கு யோகப் பயிற்சி ஒரு சிறந்த மருந்தென்பதே சித்தர்களின் கருத்து. பெண்ணின் பெருமை உற்பத்திக்கு உறைவிடம் பெண் என்பதே சித்தர்களின் கொள்கை. நீண்ட ஆயுளுடன் வாழப் பெண்ணின்பத்தை அவர்கள் வெறுத்துப் பாடியிருக்கின்றனர். ஆயினும் பெண்களை அவர்கள் பழிக்கவில்லை. சக்தியென்று அவர்கள் குறிப்பிடுவது பெண்களைத்தான். பண்டைக்காலத்தில் பெண்ணுக்குத்தான் எல்லா உரிமையும் இருந்தது. ஆண்கள் பெண்களுக்கு அடங்கித் தான் நடந்து வந்தனர். அக்காலத்தில் பிறந்ததுதான் சித்த மார்க்கம். இதைத்தான் சக்திமார்க்கம் என்றும், சாகேத்ய மார்க்கம் என்றும் கூறுகின்றனர். இக்கருத்தை வாலைக் கும்மியிலும் காணலாம். மாதவ ராய்வந்து அமுதம்தந் தாள், மனை யாட்டி யாய்வந்து சுகம்கொடுத் தாள்; ஆதர வாகிய தங்கையானாள்; நமக்கு ஆகக் கொழுந்தியும் மாமி யானாள். பெண்கள் அனைவரும் நமக்கு இன்பந் தரும் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் சக்தியின் வடிவமே என்று கூறிற்று இப்பாடல். பெண்கள்தான் படைப்புச் சக்தி; பெண்கள் இல்லா விட்டால் ஆணும் இல்லை; உலகப் படைப்பும் இல்லை என்று மற்றொரு பாட்டில் சொல்லப்படுகிறது. மண்ணும்இல் லாமலே விண்ணும்இல்லை; கொஞ்சம் வாசம்இல் லாமலே பூவும் இல்லை; பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை; அது பேணிப் பாரடி வாலைப் பெண்ணே! என்பதே அப்பாடல். ஐம்பூதங்களுக்கும் ஆதரவாய் நிற்பது நிலம்தான். நிலம் இன்றேல் வானம் முதலிய பூதங்கள் இல்லை; வாசனையில்லாத பூவும் இல்லை. பூவும் வாசனையும் ஒன்று தான். பெண் இல்லாமல் ஆண் இல்லை; பெண்ணும் ஆணும் இல்லாமல் உலக உற்பத்தி இல்லை. இதை நீ நன்றாக ஆராய்ந்து பார், வாலைப் பெண்ணே என்று உலகம் பெண்ணால்தான் என்று உரைத்தது. மக்கள் கடமை நோயற்ற உடம்பைப் பெற்று வாழும் மக்கள் இவ்வுல கத்தில் பலர்க்கும் உதவவேண்டும்; துன்பப்படுகின்ற மக்களின் துயரங்களைப் போக்கவேண்டும்; ஏழை எளியவர்களிடம் இரக்கங் காட்டவேண்டும்; அவர்களுக்கு எத்தகைய துன்பங் களும் இழைக்காமல் வாழவேண்டும்; தந்நலம் ஒன்றைமட்டும் குறியாகக் கொண்டு வாழ்வது மனிதத் தன்மையாகாது. இந்த அறவுரைகளையும் வாலைக் கும்மி பாடுகிறது. ஏழை அனாதிகள் இல்லைஎன்றால், அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும்; நாளை என்று சொல்லல் ஆகாதே; என்று நான்மறை வேதம் முழங்குதடி ஏழைகளும், ஆதரவற்றவர்களும், வயிற்றுக்கு ஒன்றும் இல்லை என்று கூறினால், அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். நாளைக்கு வாருங்கள் என்று சொன்னால் அவர்கள் பசி அடங்காது. இவ்வாறு அறங்கூறும் வேதங்கள் முழங்குகின்றன. பஞ்சைப் பனாதியை அடிக்காதே, அந்தப் பாவம் தொலைய முடியாதே; தஞ்சம் என்றோரைக் கெடுக்காதே; யார்க்கும் வஞ்சனை செய்ய நினைக்காதே. எளியாரை அடித்துத் துன்புறுத்தாதே; அடித்துத் துன்புறுத்து வதனால் வரும் பாவம், என்ன பரிகாரம் செய்தாலும் போகாது, உன்னைத் தஞ்சமாக அடைந்தவர்க்குத் தீங்கு செய்யாதே; யாருக்கும் வஞ்சனை செய்யவேண்டும் என்று மனத்திலும் நினைக்காதே. வழக் கழிவுகள் சொல்லாதே; கற்பு மங்கையர் மேல்மனம் வையாதே; பழக்க வாசியைப் பார்த்துக்கொண்டு வாலை பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே! பொய் வழக்குகள்- அநியாய வழக்குகள்- பேசாதே; கற்புள்ள பெண்களின் கற்பை அழிக்க விரும்பாதே; பழக்கமாக மூச்சுப் பயிற்சியை- யோகப் பயிற்சியை- விடாமல் பார்த்துக்கொள். வாலையின் பாதத்தை மறவாதிருப்பாயாக. இவ்வாறு மக்கள் கடமையை வலியுறுத்துகிறது வாலைக் கும்மி. சாதி மத பேதம் இல்லை சாதிபேதம், மதபேதம் பாராட்டுவது அர்த்தம் அற்றது; மனித சாதி என்பது ஒன்றுதான். ஒரு சாதிதான்- ஒரு இனந்தான்- பல்வேறு பிரிவுபோலக் காட்சியளிக்கின்றது. இவ்வுண்மையை உணராதவர்களே சாதிபேதம் பாராட்டுவர். தெய்வம் பல என்பது பொய்; ஒரே தெய்வந்தான் உண்டு. ஆதலால் தெய்வங் களின் பெயரால் சண்டைகள் வேண்டாம், மதப் பிரிவினைகள் வேண்டாம் என்று பாடுகிறது வாலைக் கும்மி. இதனை, சாதி பேதம் சொல்லுகிறீர், தெய்வம் தான்என்பது ஒன்றுடன் பேதம் உண்டோ! ஓதிய பால்அதில் ஒன்றாகி அதில் உற்பத்தி நெய்தயிர் மோராச்சு என்ற பாடலால் காணலாம். சாதிபேதம் சொல்லுகின்றீர்கள். சாதிபேதம் சொல்வது கூடாது. தெய்வம் ஒன்று தான். சாதியில் பேதம் இல்லாததுபோலவே தெய்வத்திலும் பேதம் இல்லை. இதற்கோர் உதாரணம் பாருங்கள்; பால்ஒன்றுதான். அதிலிருந்து நெய், தயிர், மோர் உற்பத்தியாகின்றன. நெய் பிறப்பது ஒரு பால், தயிர் உண்டாவது ஒரு பால், மோர் தோன்றுவது ஒரு பால் என்று பாலில் வேறுபாடில்லை. இதுபோல் ஒரே மனித சாதிதான் பல்வேறு உருவில் காணப்படுகின்றது. ஒரே தெய்வம்தான் பல்வேறு தெய்வங்களாகக் காணப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்து ஒன்றுபட்டு வாழுங்கள் என்ற பொருளைக் கொண்டதுதான் மேலே காட்டிய பாடல். இவ்வாறு மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்கான உண்மைகளை- சித்தர் கொள்கைகளை- வாலைக் கும்மியிலே காணலாம். உடம்பு உண்மை; அதைக் காப்பாற்ற வேண்டும். பாதுகாக்கும் வழி, பெண்ணின் பெருமை, மக்கள் கடமை, மக்கள் அனைவரும் ஒரே இனம் என்ற சித்தர் கொள்கைகளைச் சுருக்கமாக வாலைக் கும்மியின் ஆசிரியர் பாடியிருக்கின்றார். கொங்கணச் சித்தர் கொள்கைகளை அறிய வாலைக் கும்மி நமக்குத் துணை செய்கின்றது. வால்மீகர் ஞானம் வால்மீகரும் ஒரு சித்தராகக் கருதப்படுகிறார். பழங் காலத்துப் பதினெட்டுச் சித்தர்களிலே இவரும் ஒருவர். ஆதி காவியமாகிய ராமாயணம் பாடிய வான்மீகரும், தமிழகத்தில் சித்தராகப் போற்றப்படும் வான்மீகரும் ஒருவரா? வெவ்வேறு முனிவர்களா? என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தமிழிலே வான்மீகர் பெயரால் வழங்கும் வைத்திய நூல்கள் பல உண்டு. தமிழ்ப் புலவர்களிலே வான்மீகியார் என இருவர் இருந்தனர். முதற் சங்கப் புலவர்களிலே வான்மீகியார் என்பவர் ஒருவர். முதற் சங்கத்திலிருந்த புலவரை வான்மீகனார் என்றும் குறிப்பிடுவர். புறநானூற்றிலே உள்ள 358-வது பாடல் வான்மீகியார் என்பவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இப் பெயர் வான்மீகையார் எனவும் வழங்கும். புறநானூற்றுப் பாட்டு துறவறத்தையே சிறப்பித்துக் கூறுகிறது. துறவறத்தையும் இல்லறத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் துறவறம் உலகளவு பெரியது, இல்லறம் கடுகளவு சிறிது என்ற கருத்து இப்பாடலில் காணப்படுகின்றது. ஆகவே புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் வான்மீகியார் ஒரு முனிவராகவே- துறவியாகவே- இருக்க வேண்டும் என்று கருத இடம் உண்டு. இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர், முதற் சங்கப் புலவராயிருந்த வான்மீகியார், புறநானூற்றுப் பாடல் ஆசிரிய ராகிய வான்மீகியார், சித்தர்களில் ஒருவராகக் கொள்ளப்படும் வான்மீகியார்- இவர்கள் ஒரே பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆகவே, ராமாயணம் பாடிய வான்மீகியார் பரம்பரையில் தோன்றிய ஒரு அறிஞர் தான் வான்மீகியார் என்னும் சித்தர் என்று கொள்வதில் தவறில்லை. வான்மீகியார் பரம்பரையினர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்திருக்கவேண்டும். சித்தர் கூட்டத்தைச் சேர்ந்த இந்த வான்மீகியார் வாழ்ந்த காலம் எது என்று கூறமுடியாது. அறிவுரைகள் வான்மீகர் ஞானம் என்ற நூலில் பதினாறு பாடல்கள் தாம் இருக்கின்றன. அவைகள் மக்களுக்கு அறிவுரை கூறும் பாடல்கள். இவ்வுலகத்திலே பொய்யாக நடிப்போர் பலர் உண்டு. அவர்கள் தம்மைத்தாமே புகழ்ந்துகொள்ளுவார்கள்; தெய்வத் தைக் கண்டோம் என்று செல்லுவார்கள். இவர்கள் மக்கள் படிக்கும் பாஷையிலே, நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெட்டுப் புராணங்கள் பாடி வைத்தனர். இவர்களால்தான் மக்களிடையிலே சாதிபேதங்கள் தலைவிரித்தாடுகின்றன. ஆதலால் அவைகளை நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தி யிருக்கின்றார். நில்லென்ற பெரியோர்கள் பாஷையாலே நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம், வல்லமையாய்ச் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறுபிழை புராணங்கள் பதினெட்டாக, கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந்தங்கள் காட்டினார் அவரவர்கள் பாஷையாலே; தொல்லுலகில் நால்சாதி, அநேகம்சாதி தொடுத்தார்கள், அவரவர்கள் பிழைக்கத்தானே. இப்பாட்டு வேத சாத்திர புராணங்களையும், உலகம் நிலையற்றது என்று பேசும் வேதாந்தங்களையும், மனிதர்க்குள் சாதி வேற்றுமை பாராட்டுவதையும் கண்டிக்கின்றது. நல்வழியிலே நில் என்று உபதேசிக்கும் பெரியோர்கள் தாமறிந்த மொழியிலே, நான்கு வேதங்கள் என்றும், ஆறு சாத்திரங்கள் என்றும், பதினெட்டுப் புராணங்கள் என்றும் எழுதி வைத்தார்கள். இவைகள், அவர்களும், அவர்கள் பரம்பரையினரும் வயிறு பிழைக்க- வயிறு வளர்க்க- செய்த வேலையாகும். கல்விக் கரைப்பது போல், மக்களின் உறுதியான மனத்தைக் கரைப்பதற்காகப் பல வேதாந்தங்களையும் சொல்லி வைத்தார்கள். இவைகளால், பழமையான இவ்வுலகிலே மனிதர்களிடையே நால்வகைச் சாதிகளையும், இன்னும் பல சாதிப் பிரிவுகளையும் ஏற்படுத்தி விட்டார்கள். இவைகள் தந்நலக்காரர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்த வேலைகள். இவ்வாறு கூறியது மேலே காட்டிய பாடல். இந்த வேத புராணங்களை நம்பினவர்களிலே சிலர் உண்மையறியாமல் வீண்வேடம் பூண்பர்; பொய் பேசுவர்; உண்மை காணாமல் அலைந்து திரிவார்கள். இவ்வுண்மையை எடுத்துக் கூறுகிறது மற்றொரு பாட்டு. தான்என்ற உலகத்தில் சிறிதுபேர்கள் சடைபுலித்தோல் காஷாயம் வடங்கள்பூண்டு ஊன்என்ற உடம்பெல்லாம் சாம்பல்பூசி உலகத்தில் யோகிஎன்பார்; ஞானிஎன்பார்; தேன்என்ற சிவபூசை, தீட்சைஎன்பார்; திருமாலைக் கண்ணாலே கண்டோம்என்பார்; கான்என்ற காட்டுக்குள் அலைவார்தேடி, காரணத்தை அறியாமல் கதறுவாரே. ஆணவம் பிடித்த இவ்வுலகிலே சிலபேர்கள் சடை வளர்த்து, புலித்தோல் சுமந்து, காவித் துணி தரித்து, உருத்திராக்க மாலைகள் தாங்கித் திரிவார்கள். மாமிசப் பிண்டம் என்று வெறுத்த தமது உடம்பில் சாம்பலைப் பூசியிருப்பார்கள்; இவ்வுலகில் நாங்கள் தாம் சிவயோகிகள், சிவஞானிகள் என்று சொல்லிக்கொள்ளுவார்கள்; சிவபூசை செய்கின்றோம். சிவதீட்சை செய்துவைப்போம் என்பார்கள்; திருமாலாகிய கடவுளைக் கண்ணால் கண்டோம் என்பார்கள். உண்மைக் காரணத்தை அறியாமல் இவர்கள் இப்படிக் கதறித் திரிவார்கள். இதற்குக் காரணம், பொய்ந்நூல்களால் இவர்கள் அறிவு மழுங்கியதே யாகும். இவ்வாறு புராணங்களால் ஏற்படும் மாயங்களை எடுத்து ரைத்தது இப்பாடல். இவ்வாறு வேடதாரிகள் தோன்றுவதற்கும், அவர்கள் மக்களை மூடநெறியிலே செலுத்துவதற்கும் துணை செய்வன வேத சாத்திர புராணங்கள்தாம் என்பதே சித்தர்களின் கருத்து. இத்தகைய வேடதாரிகளின் பேச்சிலும் ஏமாறவேண்டாம்; பொய்ந்நூல்களையும் நம்பவேண்டாம் என்று கூறிய வான்மீகர், உண்மைநெறி காணும் வழியையும் காட்டியிருக்கின்றார். மூச்சைத் தன்வசப்படுத்தி யோகநிலையில் வாழத் தெரியா தவர்கள் வெறும் சண்டிகள். வீண் வார்த்தைகளால் பிறரை மயங்கச் செய்வார்கள். சுழுமுனையில் நின்று- நடுநாடியிலே உயிர்ப்பை நிலைத்துநிற்கச் செய்து- மூக்கின் நுனியை நோக்கி யிருந்து, புருவ மத்தியிலே சிவ ஒளியைக் காண்பவர்களே தெய்வத் தன்மை பெறுவார்கள்; அழியாமல் வாழ்வார்கள். அவர்களே, நான்முகன், திருமால், சிவன் என்னும் மும்மூர்த்தியும் சேர்ந்த ஒரு மூர்த்தியாக நிற்பர்; படைத்துக் காத்து அழிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர். ஆதலால் யோக மார்க்கத்தில் நின்று சித்தி பெறுங்கள் நரை திரை மூப்பற்ற நல்வாழ்வைப் பெறுங்கள் என்று பாடியிருக்கிறார். இதனை, வாசிதனை அறியாத சண்டி மாக்கள் வார்த்தையினால் மருட்டி வைப்பார்; நாசிநுனி தனிநடுவில் சிவத்தைக் கண்டோர், நான்முகனும், திருமாலும் சிவனும்தாமே என்ற பாடலால் காணலாம். இதனை மேலும் வலியுறுத்துகின்ற பாடலும் உண்டு. காணரிது எவராலும் இரு சுவாசம்; காண்பவனே சிவசித்தன்; அவனே யாகும் என்பதே அப்பாடல். உள்ளும் புறமும் ஓடிக்கொண்டிருக்கும் சுவாச நிலையை- அதைக் கட்டுப்படுத்துவதனால் வரும் இன்ப நிலையை- எவராலும் கண்டறியமுடியாது; அந்த உண்மையைக் கண்டறிந்து அனுபவிப்பவனே சிவசித்தன் ஆவான் என்று உரைத்தது இப்பாடல். வான்மீகர் ஞானம் என்னும் நூல் பதினாறு பாடல்களைக் கொண்ட சிறுநூல்தான். அதிலே புராணப் புனைந்துரைகளால் மக்களுக்குள் பிரிவினைகளும் பிளவுகளும் தோன்றின என்னும் உண்மை எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.வேடதாரிகள் பலர் அவைகளை ஆதரவாக வைத்துக் கொண்டு மக்கள் சமுதாயத்தை ஏமாற்றுகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. யோக மார்க்கத்தால் மக்கள் உண்மையுணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று வாழ்வுக்கு வழியும் காட்டப்பட்டிருக்கின்றது. சித்த மார்க்கத்தைக் கூறும் நூல்களிலே இந்த வான்மீகர் ஞானமும் சிறந்த ஒன்றாகும் என்பதில் ஐயம் இல்லை. காகபுசுண்டர் பாடல்கள் காகபுசுண்டர் வரலாறு புசுண்டர் என்பவர் ஒரு முனிவர்; சித்தர்களுள் ஒருவர். இவர் காக்கை உருவில் பல இடங்களிலும் சுற்றியலைந்தார்; பல உண்மைகளைக் கண்டறிந்தார் என்பது இவரைப் பற்றிய வரலாறு. இவர் தமிழ்நாட்டில் பிறந்த தமிழராக இருக்கலாம்; இவர் உருவம் கருமையாக இருக்கலாம்; எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராயிருக்கலாம்; உண்மை களைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருக் கலாம். இக்காரணங்கொண்டு இவரைக் காகபுசுண்டர் என்று அழைத்தனர் என்று ஊகிக்க இடம் உண்டு. இவருடைய பாடல்களில், நான் காக்கை உருவில் இருந்தேன் என்று பாடுகின்றார். காணாத காட்சிஎலாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் என்றும், காகம்என்றரூ பமாய் இருந்து கொண்டு காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன் என்றும் காக புசுண்டர் ஞானத்தில் காணப்படுகின்றன. இவை களைக்கொண்டு இவர் காக்கை உருவினர் என்பது உண்மை தான் என்று உரைப்போர் உண்டு. இப்பாடல்களும், இவர் உருவிலும், தன்மையிலும் காக்கை போன்றவர்; ஆதலால் காகபுசுண்டர் என்று பெயர்பெற்றார் என்று பொருள் கொள்ளக் கூடியனவே என்பதில் ஐயம் இல்லை. காகபுசுண்டர் பெயரால் வைத்திய நூல்கள் பல வழங்கு கின்றன. புசுண்டர் நாடி என்ற சோதிட நூல் ஒன்று உண்டு. காகபுசுண்டர் ஞானம் எண்பது; காகபுசுண்டர் உபநிடதம் முப்பத்தொன்று; காகபுசுண்டர் காவியம் முப்பத்து மூன்று; காகபுசுண்டர் குறள் பதினாறு- என்னும் நூல்கள் இவருடைய வேதாந்தக் கருத்தை விளக்குகின்றன. சங்கரர் கொள்கையாகிய வேதாந்தத் தத்துவமே காகபுசுண்டரின் ஞானப்பாடல்களில் கூறப்படுகின்றது. ஆதலால், காகபுசுண்டர் பெயரால் வழங்கும் ஞானநூல்கள் சங்கரருக்குப்பின் எழுதப்பட்டவைகளாகவே யிருக்கவேண்டும். இப்படி ஊகிக்க இடம் உண்டு. புராணப் பொய்கள் இவ்வுலகில் உள்ள மக்களிலே பலர் உண்மை உணராமல் அலைகின்றனர். அவர்கள் தம்மை யறியமாட்டார்கள்; மவுன சமாதியிலிருப்பதே இன்பம் என்பதைக் காணமாட்டார்கள்; மிகுந்த அறிவு படைத்தவர்களைப்போல்- அறிவிலே வல்லவர் களைப்போல- நடிப்பார்கள்; தங்களுடைய புராணங்கள், காவியங்கள், மந்திரங்கள் எண்ணற்றவை- கோடானு கோடியாக இருக்கின்றன என்று சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளு வார்கள்; கோயில் என்றும், தீர்த்தம் என்றும் சொல்லிக் கொண்டு தலயாத்திரை போவார்கள்; தீர்த்த யாத்திரை போவார்கள். இவைகளால் பயன் இல்லை என்று தெரிந்தும் இக்காரியங்களைச் செய்வார்களாயின், இவர்கள் திருடர்களாக இருக்க வேண்டும்; அறியாமல் அலைவார்களானால் இவர்கள் மட்டைகளாய்- அதாவது மூடர்களாகத்தான் இருக்கவேண்டும். உலகத் துன்பத்தை வென்று இன்புறக்கூடிய பிரம நிலையை அறியாமல், இவர்கள் வேர்அற்ற மரம்போல் விழுந்து அழிவார்கள். இதனை நீ பார்த்துத் தெரிந்துகொள். இவ்வாறு, புராண நம்பிக்கையாளர்களின் தன்மைகளைக் காகபுசுண்டர் ஞானப்பாடல் ஒன்று விளக்கியிருக்கின்றது. நில்என்றால் உலகத்தில் மனிதர் தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல் தான் வல்லவர் போல்தங்கள் புராண காவியங்கள் மந்திரங்கள் கோடானும் கோடி என்றும், சொல்லுவார்; கோவில்என்றும், தீர்த்தம் என்றும் திருடர்கள்தாம் அலைந்து அலைந்து திரிவார்; மட்டை; வெல்வதொரு பிரமநிலை அறியாமல் தான் வேர்அற்ற மரம்போலே விழுவார் பாரே. இதுவே மேலேகூறிய பொருள் அமைந்த பாடலாகும், பொய்ந் நூல்களை நம்புகின்றவன் உண்மைநெறி காணமாட்டான்; தீயவழிகளிலே சென்று துன்புறுவான் என்று மேலும் எடுத்துக்காட்டுகிறது காகபுசுண்டர் ஞானம். தானே பிரமம் என்ற உண்மையை உணர மாட்டான்; இவ்வுலகிலே பற்பல தெய்வங்கள் - எண்ணற்ற தெய்வங்கள்- உண்டென்பான்; உடம்பு நலம்பெற வழி காட்டும் குருவென்றும், சீடனென்றும் அலைவான். இவன் அறிவு தோன்றும் இடத்தை அறியாத, கெட்டமாடு போன்றவன். அறத்தை மீறியவை என்று சொல்லப்படும் பொய், கொலை, களவு போன்ற தீய செயல் களைச் செய்வான்; வேசையர்கள் மேல் ஆசை கொண்டு அவர்கள் பின்னே அலைவான்; வாழ்நாளை வீணாக்குவான்; தலைவன் என்னும் அறிவான குருவின் பாதத்தை அடைய மாட்டான்; தீமைகளுடன் சேர்ந்திருப்பான், நரகம் என்னும் துன்பத்திலேயே விழுந்து தவித்துக் கொண்டிருப்பான். இவ் வுண்மையையும் நீ ஆராய்ந்து தெரிந்துகொள். இதுவே காகபு சுண்டர் ஞானத்தில் உள்ள மற்றொரு பாட்டில் அமைந்திருக்கும் பொருள். அப்பாடல் கீழ்வருவது; தான் என்ற பிரமத்தை அடுத்திடாமல் தாரணியில் அனந்தமடா தெய்வம் என்றும் ஊன்என்ற குருவென்றும் சீடன் என்றும் உதயகிரி பாராத உலுத்த மாடி; வேன்என்ற பொய்களவு கொலைகள் செய்து வேசையர்மேல் ஆசைவைத்து வீணன் ஆகிக் கோன்என்ற குருபாதம் அடைய மாட்டான்; கூடுவான்; நரகம் அதில் வீழ்வான் பாரே! இப்பாட்டு, உண்மைநெறியை உணராதவன் அடையும் நிலையை எடுத்துரைத்தது. பொய்க் குருமார்கள் குருமார்கள்- புரோகிதர்கள்- என்பவர்கள் வெறும் வேஷதாரிகள்; அவர்கள் உண்மையான பிரமத்தை அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் இரகசியங்களை அறிவிக்கும் வேதங்களை யெல்லாம் படித்திருக்கலாம்; ஆனால் ஊன்றிப் பார்த்து உண்மை யைக் கண்டறிந்தவர்கள் அல்லர். அவர்கள் தமக்கு எதிராக- தம் கொள்கைகளுக்கு மாறாகப் பேசுகின்ற பெரியோர்களைப் பழித்துப் பேசுவார்கள்; நமக்குத் தான் உண்மை தெரியும் என்ற ஆணவத்துடன் அறிஞர்களைப்பற்றி வசைபாடுவார்கள்; பெரிய வேடம் பூண்பார்கள்; பிறர் கண்டு அஞ்சத்தக்க, மயங்கத்தக்கபடி விரிவான வேடம் பூண்பர்; காவியுடை அணிவார்கள். வீண் ஆடம்பரத்துடன் நாயைப் போல் குரைத்துத் திரிவார்கள்; உண்மையாக இல்லாமல்- உண்மையான தவத்துக்கு உதவுவதாக இல்லாமல்- வீணாக யோகதண்டம் என்னும் முக்கோலை ஏந்தித் திரிவார்கள்; காலிலே பாதக் குறட்டையும் மாட்டிக் கொண்டு நடந்து அலைவார்கள். என்று குருமார்களைப்பற்றிக் கூறுகின்றது காகபுசுண்டர் ஞானப்பாடல் ஒன்று. குறியென்ற உலகத்தில் குருக்கள் வானும் கொடியமறை வேதம்எலாம் கூர்ந்து பார்த்து அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான் அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி விரிவான வேடம்இட்டுக் காவி பூண்டு வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே பரியாச மாகவுதான் தண்டும் ஏந்திப் பார்தனிலே குறடுஇட்டு நடப்பான் பாரே. இப்பாடல், குருமார் வேடம் பூண்ட ஒருவன் செயலை எடுத்துக்காட்டிற்று. மேலும், பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் என்று குருமார்களின் வஞ்சத்தை எடுத்துக் கூறிற்று. சாதிவேற்றுமை யில்லை சாதிமத வேற்றுமையை வளர்ப்பவர்கள் குருமார்கள். உண்மையான அறிவாளிகள் சாதிமத வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். அறிஞர் குழுவைச் சேர்ந்த சித்தர்கள் யாரும் சாதிமத வேற்றுமைகளைப் பாராட்டவில்லை. சாதிமத வேற்று மைகளைச் சித்தர்களின் பாடல்கள் பலமாகத் தாக்குகின்றன. இக் கண்டனத்தைக் காகபுசுண்டர் பாடலிலும் காணலாம். காண் அப்பா சாதி, குலம் எங்கட் கில்லை: கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமல் சாதி பேதம் சொல்லுவான் சுருக்காகச் சுருண்டு போறான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே நன்றாக உதிப்த இடம் நாடினேனே என்பதே அப்பாடல். ஆராய்ந்து காண்பாயாக. சாதி வேற்றுமை, குல வேற்றுமை சித்தர்களாகிய எங்களுக்கு இல்லை; எல்லாம் ஒன்றென்பதே எங்கள் கொள்கை. ஆராய்ந்து பார்த்தால், என் குலம் அதாவது பிறப்பிடம் சுக்கிலந்தான்; விந்துதான். விந்து- சுக்கிலம்- என்பதில்லாவிட்டால் நான் எப்படிப் பிறந்திருக்க முடியும்? அறிவுள்ளவனே, கேட்பாயாக! அறிவில்லாமல் சாதி பேதம் உண்டென்று சொல்லுகின்றவன் விரைவில் அழிந்து போய்விடுவான். வீணாக அறியாமலிருக்கின்ற பிரமத்திலிருந்து தான் ஆதிகாலத்தில் எல்லாவுயிர்களும் பிறந்தன. நானும் அப்படித்தான்- முதலில் பிரமத்திலிருந்துதான் பிறந்தேன். இப்பொழுது நன்றாக நான் பிறந்த இடத்தை அறிந்தேன். அந்த விடத்தைத் தேடிக் கண்டறிந்துகொண்டேன். இச்செய்தியையே மேலே காட்டிய பாடல் எடுத்துரைத்தது. ஜீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றே ஜீவான்மா வேறன்று, பரமான்மா வேறன்று; அதாவது உயிர் வேறன்று; இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் உண்மை ஞானம். தன்னையும் பிரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பதுதான் ஜீவன்முக்தநிலை என்று வேதாந்திகள் கூறுவர். இந்த நிலையைத்தான் சிதோகம் பாவனை என்பர். இக்கொள்கையைக் காகபுசுண்டர் ஞானப் பாடல்களிலே காணலாம். கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் உடம்புடன் சேர்ந்திருக்கின்ற ஆன்மா என்பதுதான் பரமாத்மா என்பது. இந்த ஆன்மாவைத் தவிர பரமாத்மா என்பது வேறு தனியாக இல்லை என்ற உண்மையை எடுத்துக் காட்டிற்று இந்த அடி. கண்டுபார மூடம்எனும் அஞ்ஞானிக்குக் காணாது ஜீவன்மா பரமான்மாவும். அறியாமையே உருவாகக் கொண்ட அஞ்ஞானிக்கு ஜீவான்மாவும், பரமான்மாவும் ஒன்றுதான் என்ற உண்மை தெரியாது. இவை இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையை நீ உணர்ந்து பார் என்று மேலும் ஏகான்மவாதக் கொள்கையை வலியுறுத்திற்று. அந்தப் பரமான்மா இருக்கும் இடம் எது என்பதையும் தெளிவாகக் கூறுகிறார் புகண்டர். பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணால் காண முடியாத பொருள். அதைத் தூலப் பொருளில்தான்- அதாவது கண்ணுக்குத் தெரியும் பொருளில்தான் காண முடியும். ஆதலால் பரமான்மாவைக் காணவேண்டுமானால் உன் உடம்பிலேயே நீ கண்டுகொள் என்று கூறுகிறார். இவ்வுண்மையை உதாரணங்களுடன் விளக்கு கிறார். இதனை, வேணும்என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடம் அடங்கிநின்ற விருட்சம் போலும் காணுகின்ற பூவில்உறை வாசம் போலும் கன்றுஆவின் பாலிலே நெய்யைப் போலும் தோணுமயில் முட்டையின்மேல் வர்ணம் போலும் தூலம்அதில் சூட்சுமம்தான் துலங்கிநிற்கும் ஆணுவத்தால் சாதனத்தை மறந்தா யானால் அபரோட்ச ஞானம், முத்தி அரிதுதானே என்ற பாடலால் காணலாம், உண்மையைக் காண வேண்டும் என்றால் நான் கூறுவதை ஆராய்ந்து பார். எள்ளுக்குள் எண்ணெய் அடங்கியிருக்கின்றது; வித்தினுள், முளைத்துப் பெரிய மரமாகும் விருட்சம் அடங்கியிருக்கின்றது; நாம் கண்ணால் காணும் பூவில் வாசனை கலந்திருக்கின்றது; கன்றுள்ள பசுவின் பாலிலே நெய் கலந்திருக்கின்றது; காணப்படும் மயில் முட்டை யின்மேல் பல நிறம் ஒன்றிநிற்கின்றது. இவைகளைப் போலவே தான் உன்னுடைய உடம்பிலேயேதான்- தூலம் என்று சொல்லப் படும் தேகத்தில் தான் - சூட்சுமம் என்று சொல்லப்படும் பரமான்மாவும் அடங்கியிருக்கின்றது. அகங்காரம் காரணமாக இதை மறந்து- இதைக் கண்டறிவதற்கான சாதனத்தையும் மறந்து விடுவாயானால், அபரோட்ச ஞானம் உனக்குக் கிட்டாது; அதாவது பரமாத்மாவுடன் ஒன்றுபடும் அறிவு உனக்கு இல்லை. உனக்கு முத்தி என்று சொல்லப்படும் விடுதலையும் இல்லை. இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். மேலே காட்டிய பாடல்கள் காகபுசுண்டர் உபநிடதம் முப்பத்தொன்றில் உள்ளவை. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றேதான். அந்த ஒன்றாகிய பிரமம் உடலுள்தான் அமைந் திருக்கின்றது. ஆதலால், உடம்பைக் காப்பது தான்- பாதுகாப்பது தான்- உய்யும் வழி. இந்த உண்மையை- சித்தர்களின் தத்துவமான இந்த உண்மையைக் காகபுசுண்டர் ஞானப்பாடல்களும் கூறின. சிவவாக்கியர் சிவவாக்கியர் வரலாறு சித்தர்கள் கூட்டத்திலே சிவவாக்கியர் என்பவர் ஒருவர். இவருடைய பாடல்கள் சிவவாக்கியர் பாடல் என்ற பெயரிலே வழங்குகின்றன. சிவவாக்கியர் பாடல்கள் ஞானக்கோவை என்ற தொகுப்பிலே முதலில் அமைந்திருக்கின்றன. இன்றுள்ள பாடல்கள் ஐந்நூறுதான். சிவவாக்கியர் பாடல்கள் முழுவதும் சந்தப் பாடல்களாக அமைந்திருக்கின்றன. அப்பாடல்களின் நடை தட்டுத் தடங்கல்கள் இல்லாமல் துள்ளித் துள்ளி ஓடுகின்றது. சொற்கள் தாராளமாக வந்து விழுந்திருக்கின்றன. படிக்கப் படிக்கச் சுவைதரும் பாடல்கள். சிவவாக்கியரைப் பற்றி ஒரு கதை வழங்குகின்றது. இவர் முதலில் நாத்திகராக இருந்தார்; பிறகு சைவராக மாறிச் சிவவாக்கியராக ஆனார். அதன் பிறகு வீர வைணவராக மாறித் திருமழிசை ஆழ்வாரானார். இதுதான் இவரைப் பற்றி வழங்கும் கதை. சிவவாக்கியர் பாடல்களும், திருமழிசை ஆழ்வார் பாடல் களும் சந்தத்தில் ஓரளவு ஒத்துவருகின்றன. இதை வைத்துக் கொண்டுதான் இக்கதை பிறந்திருக்கும் என்று கருதலாம். இக்கதை உண்மை என்பதற்கான சரித்திர ஆதரவு வேறு எதுவும் கிடைக்கவில்லை. சிவவாக்கியர் காலத்தை கி.பி. பத்தாம் நூற்றாண்டு என்று கருதுகின்றனர். ஆனால் அவருடைய பாடல் போக்கைப் பார்க்கும்போது இக்காலம் சரிதானா என்ற ஐயம் தோன்றாமல் போகாது. தோஷம், தூரம், ஞானம், அண்டம், அகண்டம், சோதி, விருத்தர், பாலர், நாதர், தினம், செபம், சதா, நாமம், சாத்திரம், சத்தம், வித்து, சம்ப்ரதாயம், சீவன், ஏகபோகம், ஆதி, அநாதி போன்ற எண்ணற்ற வடசொற்கள் சிவவாக்கியர் பாடல்களிலே கலந்து காணப்படுகின்றன. அவர் உள்ளத்தில்தான் எண்ணிய விஷயத்தை விளங்கச் சொல்லவேண்டும் என்ற ஒரே கருத்துத் தான் காணப்படுகின்றது. தன் கருத்தை விளக்குவதற்கான சொற்கள் தமிழோ வடமொழியோ, எதுவானாலும் சரி- அவற்றைத் தாராளமாக அமைத்துப் பாடுகின்றார். சிவவாக்கியர் பாடல்களைப் படிப்போர், விஷயம் பெரிதே யன்றி- முதன்மை யானதே அல்லாமல்- மொழி முதன்மையானது அல்ல என்ற உண்மையை உணர்வார்கள். சிவவாக்கியர் பாடலிலே விக்கிரக ஆராதனத்தை மிக வன்மையாகக் கண்டிக்கிறார். சாதி வேற்றுமையை மிகவும் ஆணித்தரமாகக் கண்டிக்கிறார். இறைவன், மக்கள் மனத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை என்ற உண்மையை எடுத்துக்காட்டு கிறார். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்பது அவர் கொள்கை. சாதி ஆவது ஏதடா சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மை என்று கேட்கிறார், சாதிவேற்றுமை பாராட்டுகின்றவனைப் பார்த்து. பறைச்சி யாவது ஏதடா? பனத்தி யாவது ஏதடா? மணம் செய்துகொள்ளுவதற்குச் சாதிவேற்றுமை பார்க் கின்றவரைப் பார்த்து இப்படிக் கேட்கின்றார். பிடித்த பெண்ணை- இல்லறத்திற்கேற்ற பெண்ணை- மணம் செய்து கொள்ளாமல், பெண்ணின் சாதியை விசாரித்துக் கொண்டிருப் பதில் பொருள் இல்லை என்று கூறுகிறார். இத்தகைய புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் சிவ வாக்கியர் பாடல்களிலே காணலாம். பெயர் சிவவாக்கியர் என்று இருந்தாலும் அவரிடம் மதவெறுப்பற்ற சமரசத் தன்மை யையும் காண முடிகிறது. சிவவாக்கியர், சிவ என்னும் சொல்லை வாக்கிலே உடையவர் ஆதலால் சிவவாக்கியர் என்று பெயர்பெற்றார். இவருடைய பாடல்களிலே சிவ என்னும் சொல்லை மிகுதியாகக் காணலாம். பல பாடல்களிலே இச்சொல்லை அமைத்துப் பாடியிருக்கிறார். இதனாலேயே இவருக்குப் பிற்காலத்தார்- இவருடைய பாடல்களைப் படித்தவர்கள்- சிவவாக்கியர் என்று பெயர் வைத்து அழைத்திருக்க வேண்டும். சமரச ஞானம் சிவவாக்கியர், பெயரால் சிவபக்தர்போலக் காணப்பட் டாலும் அவருடைய பாடல்கள், அவர் ஒரு சமரசஞானி என்பதையே காட்டுகின்றன. ஒருகாலத்தில் தமிழகத்தில் மதச் சண்டை தலைதூக்கி நின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சைவ வைணவ மதங்களுக்கும், சைன புத்த மதங்களுக்கும் போராட்டம். சுருங்கச் சொன்னால் வைதீக மதங்களுக்கும், வேதக் கொள்கை களை எதிர்த்த மதங்களுக்கும் போராட்டம். இப் போராட்டம் தீர்ந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவமும் வைணவமும் நிலைத்து விட்டன; தழைத்தோங்கின. இதன்பின் சைவமும் வைணவமுமே ஒன்றோடு ஒன்று சண்டை போடத் தொடங்கின. சைவர்கள், எங்கள் சிவ பெருமானே முழுமுதற் கடவுள் என்று கூறினர்; பாடினர்; புராணங்கள் எழுதினர். வைணவர்களும், எங்கள் திருமாலே முதற்கடவுள் என்று சொல்லினர்; பாடினர்; புராணங்கள் எழுதினர். இந்தச் சைவ வைணவச் சொற்போர் வளரத் தொடங்கிய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னர் என்று கூறலாம். இக்காலத்திற்குப்பின் தோன்றிய தமிழ்நாட்டு அறிஞர் களிலே பலர் சைவ வைணவ சமரசத்திற்குப் பாடுபட்டனர். இரு கடவுளரும் ஒருவர்தாம் என்றெல்லாம் பாடினர்; சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலினர். இத்தகைய சமரசஞானிகளுக்குள் சிவவாக்கியரும் ஒருவர் ஆவார். இவர் சைவ- வைணவ வெறுப் பற்றவர்; எல்லாத் தெய்வங்களும் ஒன்றே என்ற கருத்துள்ளவர். இவ்வுண்மையை இவருடைய பாடல்களிலே பார்க்கலாம். சிவவாக்கியர் பாடலில் இராமநாமத்தின் பெருமை சொல்லப்படுகின்றது. ராம! ராம! என்று செபித்துக் கொண்டி ருந்தால் போதும்; வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெபதபங்களோ செய்யவேண்டியதில்லை. எல்லா நன்மைகளும்- கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களும்- இராமநாம உச்சரிப்பால் கிடைத்துவிடும் என்று உரைக்கின்றது ஒரு பாட்டு. அந்தி, காலம், உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும், சந்திதர்ப் பணங்களும், தபங்களும், செபங்களும், சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கும் மந்திரம் சிந்தை ராம! ராம! ராம! ராம! என்னும் நாமமே. இது இராமநாமத்தின் பெருமையைச் சொல்லும் சிவ வாக்கியர் பாட்டு. அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளிலும் புண்ணிய தீர்த்தங்களிலே புகுந்து ஆடுகின்ற பலன் இராமநாம உச்சரிப்பால் கிடைக்கும். சந்தியாவந்தனம், முனனோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும் இராமநாம உச்சரிப்பால் கிடைக்கும். உள்ளத்திலே வளரும் அறிவும் இராமநாமத்தால் மிகுந்த வளர்ச்சியடையும். ஆதலால் தினந்தோறும் உள்ளத்திலே அன்போடு உருப் போடும் மந்திரம் ராம! ராம! ராம! என்னும் திருப்பெயர்தான். இவ்வாறு இராமநாமத்தின் பெருமையை எடுத்துரைத்தார் சிவவாக்கியர். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே! தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே! சென்மமும் மரணமும் இன்றித் தீருமே! இம்மையே ராமவென்று இரண் டெழுத்தினால்! என்ற தனிச் செய்யுளின் கருத்தும், இச் சிவவாக்கியர் பாடலின் கருத்தும் ஒத்திருப்பதைக் காணலாம். இத் தனிப்பாடல் கம்ப ராமாயணத்தில் கம்பர் பாடியதாக அமைந்து கிடக்கின்றது. இது சிவவாக்கியர் பாடலின் வடித்தெடுத்த சாரமாகத் திகழ்வதை இதைப் படிப்போர் உணர்வர். இவ்வாறு ராமநாமத்தைப் புகழ்ந்து பாடிய- அதன் பெருமையைச் சொல்லிய- சிவவாக்கியர் சிவநாமத்தின் பெருமையைப் பற்றி உரைப்பதையும் காணுங்கள். சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்; உபாயம் என்று நம்புவோர்க்கு உண்மையான அட்சரம்; கபாடம்அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை உபாயம்இட்டு அழைக்குமே சிவாயம்அஞ்சு எழுத்துமே. இது சிவநாமத்தின் பெருமையைச் சொல்லும் பாடல். நமசிவாய என்று சொல்லப்படும் எழுத்துக்களுக்குப் பஞ்சாட்சரம் என்று பெயர். இவைகள் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் எழுத்துக்கள். உண்மையில் நன்மை பெறுவதற்கான வழி, இவ்வெழுத்துக்களைச் செபிப்பதுதான் என்று நம்புவோர்க்கு உண்மையாகவே நன்மைகள் அனைத்தையும் அளிக்கும் எழுத்துக்கள். மூடியில்லாத- கதவு இல்லாத- வாசலாகிய மூக்குக்கு வெளியே சென்றுநின்ற காற்றை, முறைப்படி மீண்டும் உள்ளே இழுத்து நிறுத்தும் வல்லமை படைத்தது சிவாயநம என்ற ஐந்தெழுத்துமே ஆகும். இவ்வாறு யோகம் செய்வோர்க்குத் துணைசெய்வது- அதைக் கைகூடச் செய்வது- சிவாயநம என்னும் மந்திரமே என்று பாடியிருக்கின்றார். மேலேகாட்டிய சிவவாக்கியர் பாடல்கள் இரண்டையும் கொண்டு அவருடைய உள்ளக் கருத்தை உணரலாம். சிவவாக்கியர், சைவம், வைணவம் என்ற பேதம் பாராட்டாதவர்; பெயர்கள் வெவ்வேறாயிருந்தாலும் அப்பெயர்களைக்கொண்ட பொருள் ஒன்றுதான் என்ற கருத்துள்ளவர் என்பதையும் உணரலாம். சிவவாக்கியர் மட்டும் அல்ல; பொதுவாகச் சித்தர்கள் அனைவரும் மத சமரசத்தையே வலியுறுத்தியிருக்கிக்றனர். மூடநம்பிக்கைகளைப் பலமாகச் சாடும் அவர்களிடம் மத வெறுப்போ, அளவுகடந்த மத வெறியோ இருக்கவும் முடியாது. ஆதலால் சித்தர் அதாவது அறிஞர் என்ற பெயருக்கு ஏற்றாற் போலவே அவர்களுடைய பாடல்களும் அமைந்திருப்பதில் வியப்பில்லை. மாண்டார் மீள்வரோ? மக்களிடம் எத்தனையோ மூடநம்பிக்கைகள் உண்டு. அவற்றை ஒழிக்க அறிஞர்கள் என்றும் முயன்று வந்திருக் கின்றனர். முன்னோர்களிலும் பகுத்தறிவுவாதிகள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் மக்களிடம் வளர்ந்துவரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பாடுபட்டுத்தான் வந்தனர். செத்தவரைப் பிழைக்கவைக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை மக்களிடம் குடிகொண்டிருந்தது. இது மூடநம்பிக்கை என்பதைப் புத்தர்கள் அறிவுறுத்தி வந்தனர். பௌத்த நூல்களிலே, இறந்தார் பிழைப்பதில்லை என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. மாண்டவர் மீண்டும் வருவதில்லை என்பதை மறுக்கும் மதவாதிகள் ஒருவரும் இல்லை. எல்லா மதத்தினரும் இறந்தார் திரும்புவதில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்று பாடியும் வைத்திருக்கின்றனர். இருந்தும் மக்களிடம் இந்த நம்பிக்கை, அதாவது செத்தாரை உயிரோடு- அவருடைய பழைய உடலோடு மீண்டும் எழுப்பலாம்- என்ற நம்பிக்கை அடியோடு மறைந்துவிடவில்லை. தமிழகத்திலே இராமலிங்க சுவாமிகளின் பக்தர்கள் சிலரிடம் இந்த நம்பிக்கை இன்னும் இருந்து வருகின்றது. அவர் சில செய்யுட்களிலே செத்தார் பிழைப்பர் என்று பாடியிருப் பதைக் கொண்டு இவ்வாறு நம்புகின்றனர். மனிதத் தன்மையற்று - சுதந்தரமற்று - அடிமையாகப் பிணம்போல் நடமாடுவோர் விழித்துக்கொள்ளுவார்கள். தங்கள் உரிமைக்காகப் போராடு வார்கள் என்பது இராமலிங்க சுவாமிகள் கருத்து; செத்தார் எழுவர் என்பதற்கு இவ்வாறுதான் பொருள்கொள்ள வேண்டும். இவ்வுண்மையை உணராதவர்களே, செத்தாரை எழுப்பும் வித்தையை இராமலிங்க சுவாமிகள் அறிந்திருந்தார்; அவரே பழைய பூதஉடம்புடன் திரும்பிவரப் போகின்றார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விதமான நம்பிக்கை யுள்ளவர்கள்தான், நேதாஜி எங்கோ ஒரு நாட்டில் மறைந்திருக் கின்றார். மீண்டும் நெருக்கடி நேரும்போது இந்தியாவுக்குத் திரும்பி வரப் போகின்றார் என்று சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். இராமலிங்க அடிகள் திரும்பி வரப்போகின்றார் என்பதற்கும், நேதாஜி திரும்பி வரப்போகிறார் என்பதற்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை; இரண்டு கருத்தும் ஒன்றே தான். செத்தார் திரும்புவர், மாண்டார் மீண்டும் வருவர் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கை என்பதிலே ஐயம் இல்லை; செத்தாரைப் பிழைக்கவைக்க மந்திரம் உண்டு என்று சொல்வதிலும் பொருள் இல்லை. விஞ்ஞானத்தின் மூலம் செத்தவரை எழுப்ப முடியும்; செத்தவர் உடல் சிதையாமலிருந்தால்- சேதப்படாமல் இருந்தால் - எழுப்ப முடியும்; விஞ்ஞான வளர்ச்சியிலே இந்த முறையைக் கண்டுபிடித்து விடலாம் என்று சொன்னாலாவது நம்புவதற்கு இடம் உண்டு. இப்படி இல்லாமல், இறந்தவர்களை மந்திரம் போட்டு எழுப்பிவிடலாம் என்று சொன்னால் அதை நம்புவதற்கில்லை. இவ்வாறு இதுவரையிலும் யாரும் எவ்விடத்திலும் செய்ததாகத் தெரியவில்லை. நம் முன்னோர்கள் இது ஒரு மூடநம்பிக்கை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றனர். செத்தார் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வேரோடியிருக்குமானால் அதனால் பல தீமைகளும் ஏற்பட்டு விடும். நமது உடல் நிலையானதன்று. ‘காயமே இது பொய்யடா; சீவன் காற்றடைத்த பையடா! என்பது தான் உண்மை என்ற நம்பிக்கையுள்ளவர்கள்தாம் நல்லறங்கள் செய்வார்கள்; உடம்பு மறைவதற்குள் உத்தமமான செயல்களைச் செய்யவேண்டும் என்று எண்ணுவார்கள்; இருக்கும் வரையிலும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். இயன்றவரையிலும் மற்றவர்களுக்கும் நன்மை புரியவேண்டும் என்ற எண்ணமும் பிறக்கும். செத்தாலும் மீண்டும் திரும்பிப் பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தால் இம்மியளவுகூடப் பிறருக்கு உதவி செய்ய மாட்டார்கள்; எல்லாவற்றையும் தமக்கென்றே சேர்த்து வைத்துக் கொள்வார்கள்; தாம் செத்த பின் எழுப்பி விடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்ளுவார்கள். உலகில் இன்றுள்ள ஒழுங்கு முறைகள் எல்லாம் தலைகீழாக மாற்றம் அடைந்துபோகும். ஆதலால், செத்தார் மீண்டும் பழைய உடம்புடன் எழுவர்; செத்தாரை இவ்வாறு எழுப்புவதற்கான மந்திரம் உண்டு என்ற நம்பிக்கையை விரட்டி அடித்தாகவேண்டும். மக்கள் மூட நம்பிக்கை இருளைவிட்டு நீங்கிப் பகுத்தறிவுப் பாதையிலே நடப்பதற்கு இதைச் செய்வதும் ஒரு சிறந்த பணியாகும். இவ்வாறு எண்ணித்தான் முன்னோர்கள் பலரும், மாண்டார் மீள்வதில்லை என்று பாடிவைத்திருக்கின்றனர் போலும். இவ்வுண்மையைக் கூறியிருப்பவர்களிலே சித்தர் கூட்டத்தில் ஒருவரான சிவவாக்கியர் என்பவரும் ஒருவர். அவர், செத்தார் பிழைப்பதில்லை என்பதைச் சிறந்த உதாரணங் களுடன் அமைத்துப் பாடியிருக்கின்றார். அவர் பாடல்தான் கீழ்வருவது: கறந்தபால் முலைபுகா; கடைந்தவெண்ணெய் மோர்புகா! உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடல்புகா! விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா; இறந்தவர் பிழைப்பதில்லை, இல்லை; இல்லை; இல்லையே இறந்தவர் பிழைப்பதில்லை என்பதை இப்பாடல் தெளி வாகக் காட்டுகின்றது. மடியிலிருந்து கறந்த பாலை மீண்டும் முலைக்காம்பின் வழியே ஏற்றிவிட முடியாது; ஏற்றினாலும் ஏறுவதில்லை; கடைந்தெடுத்த வெண்ணெயை மீண்டும் மோருடன் ஒன்றாகக் கலந்துவிடும்படி செய்துவிட முடியாது; உடைந்த சங்கிலே உடைவதற்கு முன் எழும்பிய ஓசையைப் புகுத்திவிட முடியாது. வெளிப்பட்ட உயிர்களும் மீண்டும் உடம்பிலே புகுவதில்லை; மலர்ந்து உதிர்ந்த பூவும், வெம்பி விழுந்த காயும் மீண்டும் மரத்திலே போய் ஒட்டிக்கொள்ளுவ தில்லை. இவற்றைப் போலவே, இறந்தவர் பிழைப்பதில்லை. இறந்தார் பிழைப்பர் என்று சொல்லுவதெல்லாம் வெறும் பொய்; பயனற்ற கற்பனை. யாரேனும், செத்தார் பிழைப்பர் என்று சொல்லுவார்களேயானால் அது உண்மை அன்று. மாண்டார் மீண்டும் வருவது என்பது ஒருபொழுதும் இல்லை; நிச்சயமாக இல்லை; உண்மையாகவே இல்லை. இதுதான் உறுதி என்று தெளிவாகக் கூறுகின்றார். ஒரு உண்மையை விளக்க எத்தனை அருமையான உதாரணங்கள்! அனைவர்க்கும் புரியும்படியான தெளிவான உதாரணங்கள்! இவ்வளவு உறுதியாகச் சிவவாக்கியர் கூறுவதற்குக் காரணம், மக்கள் மூடநம்பிக்கையைப் போக்கவேண்டும்; மக்களுக்குச் சாகாமலிருக்க வழிதேட வேண்டும் என்பதை உணர்த்தி அவர்களை நன்னெறியில் நடக்கும்படி செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? மக்களிடம் கொண்ட அருள்மனம் காரணமாகத்தான் இவ்வாறு பாடியிருக்கின்றார். உள்ளமே கோவில் சித்தர்கள் போக்கே ஒரு தனிப் போக்காகும். அவர்கள் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள்; மக்கள் வாழ்வைச் செம்மைப் படுத்த நினைத்தவர்கள்; மனித சமூகத்தில் நிலவும் மூடநம்பிக் கைகளைப் போக்க நினைத்தவர்கள்; எல்லா மனிதர்களையும் உயர்ந்த அறிவாளிகளாக்க எண்ணியவர்கள். சித்தர் நூல்களைப் படிக்கும்போது இந்த எண்ணந்தான் நமக்குப் பிறக்கின்றது. ஆடம்பரமான பெரிய கோவில்களைக் கட்டுவது; அதற் குள்ளே கடவுள் அடங்கியிருக்கின்றான் என்று சொல்லுவது; கடவுளுக்கு உருவம் செய்துவைத்து வணங்குவது; அவற்றிற்குத் தேர்- திருவிழாக்கள் செய்வது; கடவுள் அருளைப் பெறுவதற்கு மந்திரங்கள் செபிப்பது- இவற்றால் எல்லாம் பயன் இல்லை என்பதே சித்தர்களின் கருத்து. சித்தர் பாடல்களிலே இக் கருத்துக்களைக் காணலாம். கோவில்பள்ளி ஏதடா; குறித்துநின்றது ஏதடா? வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியில் காணலாம் இறையையே! என்பது சிவவாக்கியம். இதில் காணப்படும் கருத்து முற்போக்கான கருத்தாகும். கோயில்கள், பள்ளிகள்- இவை எல்லாம் என்ன பயனைத் தரும்? அவற்றில் குறித்துக் காட்டும்படி நிற்பது தான் ஏது? கோவில்களும் இல்லை; பள்ளிகளும் இல்லை; அவற்றில் குறிப்பிடத்தக்கது ஒன்றுமில்லை. வாயினால் சொல்லி, கையால் தலையால் வணங்கிக் கொண்டு நின்ற மந்திரங்கள்தான் எவை? அவையும் பொய். கோயில்களிலே- அருகர், புத்தர்கள் உறையும் பள்ளிகளிலே- ஒரு உண்மையும் இல்லை; மந்திரங்களிலும் ஒரு உண்மையும் இல்லை; அறிவு என்னும் பள்ளியில்தான் இறைவனைக் காணமுடியும். அறிவுப் பள்ளியிலே புகுந்து வணங்கினால்- அதாவது அறிவால் நன்றாக அலசிப் பார்த்தால் தான் இறைவனைக் காணலாம். அந்த இறைவனையும் வேறு எங்கும் தேடித் திரிந்து சென்று காணவேண்டியதில்லை; நமது உடம்பு என்ற பள்ளி யிலேயே அவனைக் காணலாம் என்று கூறுகின்றது இப்பாடல். இப்பாட்டின் கருத்து, அறிவே கடவுள் என்பதுதான். நம்மிடத்திலேயே அறிவு இருக்கின்றது; அதைத் தேடிக் கொண்டு வேறு எங்கும் ஓடி அலையவேண்டியதில்லை. அறிவைத் துணைகொண்டு வாழ்ந்தால். அறிவுக்கு விரோதமில்லாமல் ஒழுகினால்- அதுவே கடவுள் பணியாகும்; கடவுள் தன்மை யாகும். இந்த உண்மையையே இப் பாடல் உணர்த்திற்று. அந்த அறிவுதான் எப்படி இருக்கவேண்டும்? அறிவைப் பெற்றவர்கள் உள்ளம் எப்படி இருக்கவேண்டும்? என்பதை மற்றொரு பாட்டிலே விளக்கிக் கூறியிருக்கின்றார். உள்ளம் இருண்டிருப்பவன் அறிவாளி அல்லன்; அறிவுள்ளவனாயினும் மனத்திலே குப்பைகூளங்களைச் சுமந்து கொண்டு திரிகின்றவன் அறிவைப் பெற்றவன் அல்லன். உள்ளம் சுத்தமாக இருக்கவேண்டும்; மாசற்றதாக இருக்க வேண்டும்; இதுவே அறிவின் பயன். இத்தகைய உள்ளத்தைத்தான் அறிவென்னும் இறைவன் கோயிலாகக் கொண்டிருப்பான். மனத்துஅகத்து அழுக்குஅறாத மவுனஞான யோகிகள் வனத்துஅகத்து இருக்கினும் மனத்துஅகத்து அழுக்குஅறார்; மனத்துஅகத்து அழுக்குஅறுத்த மவுனஞான யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்புஅறுத்து இருப்பரே இப்பாட்டு, உள்ளத் தூய்மையின் உயர்வை வலியுறுத்தும் பாட்டு. ஒருவர் யாரிடமும் பேசாமல் மவுனமாக இருக்கலாம்; ஞானத்தை அறிந்த யோகிபோல இருக்கலாம்; யோகம் செய்து கொண்டும் இருக்கலாம்; நாட்டைத் துறந்து காட்டிலே போய் வாழலாம். ஆயினும் உள்ளத்திலே தூய்மை இல்லாதவர் களாயிருந்தால் பயன் இல்லை. உள்ளத்திலேயே குற்றங்களுக்கு ஊற்றுக்குழியான ஆசையை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் நாட்டிலிருந்தாலும் ஒன்றுதான் காட்டிலிருந்தாலும் ஒன்று தான். அவர்களுடைய மனப்பாசி- அழுக்கு- குற்றம் - நீங்காது; அவர்கள் அன்பையோ அறிவையோ பெற மாட்டார்கள்; உண்மையான அறிவான இறைவனைக் காணவும் மாட்டார்கள். உள்ளத்தில் தூய்மை உள்ளவர்கள் மனமாசற்றவர்கள், மவுனமாக இருந்து ஞானநெறியிலே நடப்பவர்கள், உண்மை யாளர்கள் ஆவார்கள்; யோகிகள், ஞானிகள் என்று போற்றப் படுவதற்கு உரியவர்கள் ஆவார்கள். உள்ளத்திலே பரிசுத்தம் இருந்தால், அவர்கள் வெளி வாழ்க்கை எப்படியிருந்தாலும் பாதகம் இல்லை. அவர்கள் சிற்றின்ப வாழ்வில் ஈடுபட்டிருந் தாலும் கெட்டுப்போய்விட மாட்டார்கள்; உள்ளத் தூய்மை காரணமாக அவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து நீங்குவார்கள். இக்கருத்தையே இப்பாடல் தெரிவித்தது. மேலேகாட்டிய சிவவாக்கியர் பாடல்கள் இரண்டும் இரண்டு உயர்ந்த கருத்துக் களை உரைத்தன. அவை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரிய கருத்துக்கள். கோயில் இறைவன் அல்ல; அருகர், புத்தர்கள் வாழும் பள்ளிகள் இறைவன் அல்ல; வாயினால் முணுமுணுத்துக் கொண்டு வணங்கும் மந்திரம் இறைவனல்ல. அறிவுதான் இறைவன்; அறிவுடன் வாழ்வதுதான் இறைவணக்கம். இந்த அறிவு நம்மிடமே இருக்கின்றது. இதற்காக ஊரெங்கும் நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம். இதுவே முதல் பாட்டில் கூறிய கருத்து. உள்ளத்தில் அறிவு இருந்தால்மட்டும் போதாது; உள்ளம் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; உள்ளத்திலே கெட்ட எண்ணங்கள் குடியிருக்கக்கூடாது; உள்ளத்தில் பேராசை குடியிருக்கக்கூடாது; நன்மையே நிறைந்திருக்கவேண்டும். மனப் பரிசுத்தமுள்ளவர்கள் சிற்றின்ப வாழ்விலே மூழ்கியிருந்தாலும் தீமையடையமாட்டார்கள்; மீண்டும் மீண்டும் பிறந்து துன்புறு வதற்கான பாவச்செயல்களிலே புகுந்து விடமாட்டார்கள். பிறவிக்குக் காரணமான தீமைகள் அவரிடம் அணுகமாட்டா. ஆதலால் அவர்கள் பிறப்பறுத்துப் பேரின்ப வாழ்வைப் பெறுவார்கள் என்று இரண்டாவது பாட்டுக் கூறிற்று. இப்படிப்பட்ட சிறந்த பாடல்கள் பலவற்றைச் சித்தர் நூல்களிலே காணலாம். சித்தர்கள், மக்கள் சமுதாயத்தின்பால் அன்பு கொண் டவர்கள்; மக்களுடைய நல்வாழ்விலே கருத்துள்ளவர்கள். ஆதலால்தான் அவர்கள் இத்தகைய கருத்துக்களைப் பாடல் வடிவிலே பாடிவைத்திருக்கின்றனர். நாடெங்கும் தேடி நலிவதேன்? உண்மையுணந்தவர்கள் கடவுள் இருக்கும் இடத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அங்கேயிருக்கிறான், இங்கே இருக்கிறான் என்று தேடி அலைய மாட்டார்கள்; அதுதான் கடவுள், இதுதான் இறைவன் என்று சொல்லிக் கொண்டும் திரியமாட்டார்கள். கடவுளுக்கும் நமக்கும் வெகுதூரம்; அவன் மனத்திற்கு எட்டாதவன்; சொல்லுக்கு அடங்காதவன்; கண்ணுக்குத் தெரியாதவன்; மனம், மொழி, மெய்களைக் கடந்தவன்; எதைக் கடவுள் என்று எண்ணுகிறோமோ அது கடவுள் அன்று, இது கடவுள் அன்று என்றுதான் சொல்ல முடியுமே தவிர, இதுதான் கடவுள் என்று சொல்ல முடியாது. இதுதான் கடவுளின் உண்மைத் தத்துவம் என்று கூறுவோரும் உண்டு. கடவுள் நம்மால் காணமுடியாதவன்; அவன் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவன்; அவனை நெருங்கவே முடியாது என்று சொல்லுகின்றவர்களைச் சோம்பேறிகள் என்று வசை பாடுகிறார் சிவவாக்கியர். உண்மையைத் துருவிக் காணமுடியாத சோம்பேறிகள்தான் இப்படிச்சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பது அவர் கருத்து. கடவுள் நிலத்திலும் இருக்கின்றான்; நிலமிசை வாழும் எல்லாப் பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் இருக்கின்றான். நிலத்தில் மட்டும் அன்று; விண்ணிலும் இருக்கின்றான். வானில் உள்ள எல்லாப் பொருள்களிலும் இருக்கின்றான். எல்லா உலகங்களிலும் இருக்கின்றான். அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருப்பவனே இறைவன் என்பதே ஆன்றோர்- அறிவுள்ளோர் - உண்மையுணர்ந்தோர் உரை. இதை அறிந்தவர்கள் கடவுளுக்கும் நமக்கும் எட்டாத தூரம் என்று இயம்புவது சோம்பேறித்தனம் என்று சிவவாக்கியர் கூறுவதில் தவறு இல்லை. எங்கும் இருக்கின்ற இறைவனை அந்த ஊரில் இருக்கிறான், இந்த ஊரில் இருக்கின்றான்; அந்த நாட்டில் இருக்கிறான். இந்த நாட்டில் இருக்கிறான்; அந்தக் காட்டில் இருக்கின்றான், இந்தக் காட்டில் இருக்கின்றான் என்று சொல்வது அறியாமை; இப்படி எண்ணுவது மூடத்தனமாகும். இப்படி நினைத்துக்கொண்டு ஊரும் நாடும் காடும் தேடி உழல்வது பைத்தியக்காரத்தனம். இவர்கள் ஒன்றும் உணராத ஊமையர்கள். இவ்வாறு பேசு கிறார் சிவவாக்கியர். இப்பேச்சிலே உண்மை இல்லாமலில்லை. எங்கும் உள்ளான் இறைவன் என்றால் அவன் நம்மிடத்திலும் தான் இருக்கின்றான். நமது அண்டையிலும் இருப்பான்! நமது எதிரிலும் நிற்பான்; நமது உடம்புக்குள்ளும் நடனம் ஆடுவான். நமது சிந்தனை, பேச்சு, செய்கை எல்லாவற்றிலும் இருப்பான். இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பதன் பொருள் இதுதான். இதை உணர்ந்தவர்கள் தமக்குள்ளேயே இறைவனைக் காண்பார்கள்; இறைவன் தன்மையைப் பெறுவார்கள். இதை உணராதவர்கள் இறைவன் இயல்பைப் பெறமாட்டார்கள். எல்லாவுயிர்களிடமும் இரக்கங் காட்டுதல்; எல்லா மக்களையும் ஒத்தவராக உளங்கொள்ளுதல்; எல்லா மக்களின் நல்வாழ்வுக்கும் பணி செய்தல், இத்தகைய தன்மை இறைவனை உணர்ந்தோர் தன்மையாகும்; இறைவன் தம்முள்ளே இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்தவர்கள்தாம் இந்த இயல்பைப் பெறுவார்கள். தூரம்தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் பாரும் விண்ணும் எங்கும் ஆய்ப் பரந்த இப் பராபரம்; ஊரும்நாடும் காடும்தேடி உழன்றுவாடும் ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே! என்பது சிவவாக்கியர் பாட்டு. இச்செய்யுளிலே இறைவனைத் தம்முள்ளேயே காணலாம்; வேறு எங்கும் தேடித் திரிந்து வாடி வதங்கவேண்டாம் என்று கூறியிருப்பதைக் காணலாம். இறைவன் இருக்கும் இடம் தொலைவு! தொலைவு! என்று சொல்லுவார்கள் சோம்பேறிகள். இந்த உயர்ந்த பொருள் மண், விண் எங்கும் பரந்திருப்பதாகும்; அதை ஊரிலும் நாட்டிலும் காட்டிலும் இருப்பதாக எண்ணிக்கொண்டு, வருந்தித் தேடுகின்ற ஊமைகளே! நேரடியாக உமக்குள் அவன் இருப்பதைக் கண்டு தெரிந்துகொள்ளுங்கள் என்பதுதான் இதன் பொருள். இந்தச் சிறிய நாலடிப்பாட்டில் பெரிய உண்மை அடங்கியிருப்பதைக் காண்கின்றோம். இறைவன் எங்கும் இருப்பது போலவே நமது உள்ளத் திலும் உறைகின்றான் என்று சொல்வதைப் பலர் அவ்வளவு எளிதில் நம்புவதில்லை. வாயளவில் இந்த உண்மையை ஒப்புக் கொண்டாலும், அனுபவத்தில் இவ்வுண்மையைப் பின்பற்றுவ தில்லை. இதற்குக் காரணம் அறியாமையைத் தவிர வேறில்லை. சாதாரண மக்களுக்கு- கல்வியறிவற்ற மக்களுக்கு- சிந்தனாசக்தி அற்ற மக்களுக்குக் கடவுள் உங்கள் உள்ளத்தில் இருக்கின்றான் என்றால் புரியாமலிருக்கலாம். ஓர் உருவத்தைக் காட்டி- ஒரு படத்தைக் காட்டி- ஒரு கோயிலைக் காட்டி- இடம் ஒன்றைக் காட்டி, அதில்தான் கடவுள் இருக்கின்றான் என்றால் தான் புரியும். ஆனால் கற்றறிந்தவர்கள்கூட- வேத வேதாந்தங்களை யெல்லாம் ஓதுகின்றவர்கள் கூட- இந்த உண்மையை உணராம லிருப்பதுதான் வியப்புக்குரியது. நான்கு வேதங்களையும் மனப்பாடம் பண்ணுகின்றனர்; உருப்போடுகின்றனர்; அவற்றுக்கு வியாக்கியானங்களும் விளம்புகின்றனர். ஆனால் ஞானத்தின் மூலத்தை அறியாமல் தவிக்கின்றனர். இறைவன் இருக்கும் இடம் இன்னதென்று உணராமல் ஏதேதோ சொல்லிக் குழப்புகின்றனர். பாலும் நெய்யும் ஒன்றாகக் கலந்திருக்கின்றன. பாலிலிருந்து நெய்யைப் பிரித்தெடுக்கிறோம். பால் வேறு, நெய் வேறு என்று சொல்ல முடியாது. இதைப் போலவே இறைவன் இவ்வுலகி லுள்ள எல்லாப் பொருள்களோடும் கலந்து நிற்கின்றான். ஞானக்கண் கொண்டுதான் அதைக்காண வேண்டும். இந்த உண்மையை உணராதவர்கள் பாவிகள்; புண்ணியம் செய்யா தவர்கள். பாலிலே நெய் கலந்திருப்பது போல் இறைவன் எங்கும் எல்லாவற்றிலும் இருக்கின்றான் என்ற உண்மையை அறிகின்ற வர்களே உத்தமர்கள், ஞானிகள் ஆவார்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள், இறைவன் நமது உள்ளத்தில் உறைகின்றான் என்று உறுதியாக நம்புவார்கள். இந்த உறுதி உள்ளம் படைத்தவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். நாம் செத்து மடிவோமோ, காலன் நம்மைக் கவர்ந்து செல்வானோ என்று பயப்படமாட்டார்கள்; நாம் ஆர்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்ற திடசித்தத்துடன் வாழ்வார்கள். இறைவன் நமது உள்ளத்திலே எப்பொழுதும் நீங்காமல் உறைகின்றான் என்ற உண்மையைக் காண்பவர்க்குத் தான் இத்தகைய உறுதி படைத்த உள்ளம் உருவாகும். ஆனால் இத்தகைய நம்பிக்கையும் உறுதி உள்ளமும் அவ்வளவு எளிதில் ஏற்பட்டுவிடுவதில்லை. வேத வேதாந்தங் களைப் படித்தவர்கள் கூடத் தடுமாறும்போது, சாதாரண மக்கள் இத்தகைய ஞானநிலையை எளிதில் அடைய முடியுமா? அரிதுதான்; ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. நாலுவேதம் ஓதுவீர்! ஞானபாதம் அறிகிலீர்! பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர் கனாவிலும்அது இல்லையே என்ற பாட்டு மேலேகாட்டிய உண்மைகளைக் கூறுவதுதான். இதுவும் சிவவாக்கியர் பாடல்தான். இப்பாடலும் இறைவனை ஒவ்வொருவரும் தமக்குள் கண்டறியலாம் என்ற உண்மையைத் தான் எடுத்துரைத்தது. நான்கு வேதங்களையும் ஓதுகின்றீர்கள். ஞானத்தின் நிலையை அறியமாட்டீர்கள். பாலுள் நெய் கலந்திருப்பது போலவே இறைவன் இருக்கிறான் என்பதைப் பாவிகளே, நீங்கள் அறியவில்லை; நஞ்சுண்ட கண்டனாராகிய சிவபெருமான் நம் உள்ளத்திலேயே இருக்கின்றான் அப்படி இருக்க, காலன் என்று சொல்லி ஏன் பயப்படுகின்றீர்கள்? கடவுள் உள்ளத்தில் உறை கின்றான் என்ற உண்மையை உணர்ந்துவிட்டால் கனவில்கூடக் காலனுக்கு அஞ்சவேண்டிய தில்லை என்பதுதான் அச் செய்யுளின் பொருள். உயிரும், கடவுளும் ஒன்றே என்ற கருத்து இப்பாடல்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். புத்தகங்களின் போதனை அறிவே தெய்வம் என்பது ஆன்றோர்கள் கொள்கை. அறிவு எல்லா நன்மைகளுக்கும் அடிப்படை; எல்லா இன் பத்திற்கும் அடிப்படை. அறிவினால்தான் இவ்வுலக நாகரிகம் வளர்ந்திருக்கின்றது; அறிவினால்தான் மக்கள் இயற்கைகளை யெல்லாம் அடக்கி ஆளும் ஆற்றலை அடைந்திருக்கின்றனர். இன்றும் அறிவுள்ள சமூகம் உயர்ந்தநிலையில் வாழக் காண்கின்றோம். அறிஞர்கள் நிறைந்த நாடு உயர்ந்த நிலையில் இருப்பதைக் காண்கின்றோம்; அறிவுபடைத்த தனிப்பட்ட மனிதர்களும் சிறந்த நிலையில் இருப்பதைப் பார்க்கின்றோம்; அறிவுள்ளவர்கள் பாராட்டப்படுகின்றனர்; அறிவுள்ளவர்கள் எத்தேயத்தினராயினும் சரி; எம்மொழியினராயினும் சரி; எம்மதத்தினராயினும் சரி; எவ்வினத்தினராயினும் சரி; அவர்கள் உலக மக்களின் பாராட்டுதலைப் பெறுகின்றனர். அறிவுக்கும் தெய்வத்துக்கும் வேற்றுமையில்லை. தெய் வத்தைப் பற்றிப் புராணங்களிலே புகழ்ந்து கூறப்படுகின்றது. எல்லா ஆற்றலும் படைத்தது தெய்வம்; மக்களால் செய்து முடிக்க இயலாத செயல்களை எல்லாம் செய்யுந் திறமை வாய்ந்தது தெய்வம்; தெய்வ பலம் இருந்தால்- தெய்வத்தின் துணை இருந்தால்- தெய்வத்தின் அருள் இருந்தால்- எக்காரி யத்தையும் எளிதிலே வெற்றிகரமாகச் செய்து முடிக்க இயலும். இது முன்னோர்கள் நம்பிக்கை. இதுபோலவே, அறிவிருந்தாலும் எதையும் செய்து முடிக்கலாம்; செய்யத் தொடங்கும் காரியத்திற்கு நேரும் இடையூறுகளையெல்லாம் அறிவு என்னும் வாள்கொண்டு அறுத்தெறிய முடியும்; அறிவென்னும் கூர்மையான கருவியைக் கொண்டவனிடம் வேறு எப்படையின் வலிமையும் செல்லாது; எதிர்க்கும் படைகள் அனைத்தும் செயலின்றி முனை மழுங்கி ஓடிந்து விழுந்துவிடும். அறிவு என்பது பெருநெருப்பு; அதைச் சிறுநீர்த்துளிகள் ஒன்றும் செய்துவிட முடியாது. அறிவென்பது எந்தத் திரையினாலும் மறைக்க முடியாத பெரிய விளக்கு; அறியாமை என்னும் இருள் அதை எதிர்த்து நிற்க முடியாது. இவ்வாறெல்லாம் அறிவைப் பற்றிக் கூறுகின்றனர். ஆகவே அறிவும் தெய்வமும் ஒன்று; ஒரு தன்மையுடை யவை. அறிவுதான் தெய்வம், தெய்வந்தான் அறிவு என்று கூறுவதிலும் தவறு இல்லை. இதனை அறிவும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் என்று திருமூலர் குறித்திருக்கின்றார். அறிவுவேறு, சிவம் என்னும் தெய்வம் வேறு என்பவர்கள் அறிவற்றவர்கள் என்பதே திருமூலர் கொள்கை. அறிவு என்பது தமிழ்ச்சொல்; ஞானம் என்பது வடமொழிச்சொல். அறிவுள்ளவரை அறிஞர், புலவர் என்று அழைப்பர் தமிழர்; ஞானம் உள்ளவரை ஞானிகள் என்று அழைப்பர் வடமொழியாளர். ஆகவே, ஞானி என்றாலும் அறிஞர் என்றாலும் கருத்துவேறுபாடு இல்லை; சொல் வேறுபாடு ஒன்றுதான் உண்டு. இத்தகைய அறிவை அல்லது ஞானத்தை எப்படிப் பெறுவது என்பதைப்பற்றியும் அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். புறத்திலே உள்ள பொருள்களின் இயல்புகளைக் கண்டறிவதும் அறிவுதான்; அப்பொருள்களின் பயனைப் பெற்று அனுபவிப் பதற்கு முயல்வதும் அறிவுதான்; அப்பொருள்களின் தோற்றம், வளர்ச்சி, ஒடுக்கம் முதலியவற்றால் பல படிப்பினைகளை உணர்ந்து கொள்ளுவதும் அறிவுதான். ஆனால் இத்தகைய அறிவு உண்மையில் எங்கே இருக்கின்றது? நமது உள்ளத்தை விரிவுபடுத்தி உண்மைகளைக் கண்டறிய முயல்வதுதான் உண்மை அறிவு; முயன்று உண்மை காண்பது தான் உண்மையறிவு; மெய்யறிவு; உண்மை ஞானம்; மெய்ஞ்ஞானம். இந்த உண்மை அறிவை நமக்குள்தான் காணமுடியும்; புத்தகங்களிலே காண முடியாது; ஞான நூல்கள் என்று பட்டை தீட்டிக்கொண்டிருக்கும் புத்தகங்களிலே காணமுடியாது. அந்த ஞானம் என்னும் பெரிய ஒளி விளக்கு நமக்குள்தான் இருக்கின்றது. அதை அறிந்துவிட்டால் அமைதியாக வாழமுடியும். அல்லல் இன்றி அலைச்சல் இன்றி இன்பமாக வாழ முடியும். இந்த உண்மையைச் சிவவாக்கியர் என்னும் அறிஞர்- ஞானி- சித்தர்- தெளிவாகக் கூறுகிறார். ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள்! ஞானமான சோதியை நாடி உள் அறிகிலீர்! ஞானம் ஆகி நின்றது ஓர் நாதனை அறிந்த பின் ஞானம் அல்லது இல்லை வேறு; நாம் உரைத்தது உண்மையே. என்பது சிவவாக்கியர் பாட்டு. இதிலே ஞானமே- அறிவே- கடவுள் என்ற உண்மை காணப்படுகின்றது. இந்த ஞானத்தை நமது உள்ளத்தில்தான் காணவேண்டும் என்றும் கூறப்படுகின்றது. ஞானநூல்களைத் தேடிக்கொண்டு, அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றவர்களே! உண்மை ஞானத்தை அறியாமல் ஞானயோகிகள் என்று ஆடம்பரமாகப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கின்றவர்களே! ஞானம் ஆகிய சோதியை- பெருஞ்சுடரை-ஒப்பற்ற ஒளியை- உமது உள்ளத்திலே இருப்பதைத் தேடிக் காணாமல் இருக்கின்றீர்கள்! ஞானமாக - அறிவாக- நிற்கின்ற அந்த ஒப்பற்ற தலைவனை நீங்கள் அறிந்து கொண்டபின் உண்மை உணர்வீர்கள்; ஞானத்தைத் தவிர ஒப்பற்ற உயர்ந்த ஆற்றல்- பொருள்- தெய்வம் - வேறு இல்லை என்பதை அறிவீர்கள். நாம் உரைத்தது உண்மை; மறுக்க முடியாத உண்மை என்பதே மேற்காட்டிய பாடலின் பொருளாகும். ஞானத்தை அறிய நாமே முயலவேண்டுமே யன்றி, புத்தகங்களைச் சுமந்து திரிவதால் பயன்இல்லை என்பதை மற்றொரு செய்யுளிலும் வலியுறுத்துகின்றார் சிவவாக்கியர். புத்தகங்கள் எல்லாம் மெய்யுரைகளைக் கூறுவதில்லை; அவை பொய்யுரைகள் பலவற்றைப் புகல்கின்றன. ஆதலால் நாம் உண்மை காண முடியாது. புத்தக வழியிலே செல்வோமானால் இவ்வுலகிலே இன்புற்று அமைதியுடன் வாழவும் முடியாது என்பதை வலியுறுத்துகின்றது அப்பாட்டு. புத்தகங் களைச் சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்! செத்திடம் பிறந்திடம் எங்ஙன் என்று அறிகிலீர்; அத்தனை அசித்தனை அறிந்து நோக்க வல்லிரேல் உத்தமத்துள் ஆய சோதி உணரும்போகம் ஆகுமே. என்பது அப்பாடல். இப்பாடலிலும் உண்மையான சிறந்த பொருள் பொதிந்து கிடப்பதைக் காணலாம். புத்தக மூட்டை களைச் சுமந்து கொண்டு திரிகின்றீர்கள்; அவற்றில் கூறப்படு கின்ற பொய்களை உண்மையென்று உளறுகின்றீர்கள்; நாம் செத்த இடம் எது? பிறந்த இடம் எது? என்ற உண்மைகளை அறியமாட்டீர்கள். உண்மையான தலைவன் யார்? நம்மை ஆட்டிவைக்கும் - நடத்திவைக்கும் - இயங்கச் செய்யும் தலைவன் யார்? அறிவற்றது எது? பயன்படாதது எது? ஞானத்திற்குத் துணை செய்யாதது எது? என்ற உண்மைகளை ஆராய்ந்து பார்க்கவல்லவராகுங்கள். இத்தகைய வல்லமையைப் பெறு வீராயின் உத்தமமான சோதியை - அறிவை - உணரலாம்; காணலாம். அதுவே இவ்வுலகில் இன்பமுடன் வாழும் செல்வமாகும் என்பதே இப்பாடலில் பொதிந்துள்ள பொருள். இச் செய்யுளில் அத்தன் என்று குறித்திருப்பது ஞானம்; அறிவு என்பதாகும். அசித்தனை என்பது அறிவற்ற பொருளைக் குறிப்பதாகும்; பொய்மையை உணர்த்துவதாகும். நிலையாமல் மறைந்துவிடும் பொருளைக் குறிப்பதாகும். சோதி உணரும் போகம் ஆகுமே என்ற தொடர் குறிப்பிடத்தக்கது. சோதி என்பது ஞானத்தைக் குறித்தது; அறிவைக் குறித்தது. சோதிதான் நாம் அறியக்கூடிய இன்பமாகும். சோதியை- அறிவை உணர்ந்தால்தான், நம்முள்ளே கண்டால் தான் நாம் அமைதியுடன்- இன்பத்துடன் வாழ முடியும்; வாழலாம்; என்பதில் ஐயமில்லை. இவ்வுண்மையையே இத்தொடர் உணர்த்தியது. ஆகவே, அறிவே நாதன்; அதை நூல்களிலே- புத்தகங் களிலே காணமுடியாது. நம்முள்ளேதான் கண்டு தெளியமுடியும்; அப்படித் தெளிந்தால்தான் இவ்வுலகிலே சாந்தியுடன் வாழலாம். இவ்வுண்மையை மேலே காட்டிய சிவவாக்கியர் பாடல்கள் இரண்டும் உணர்த்தின. மாசற்ற மனம் உள்ளம், பேச்சு, செயல் எல்லாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். இதுதான் நல்ல மனிதரின் இயல்பு; குற்றமற்ற மக்களின் குணம். இத்தகைய தன்மையை ஏழை மக்கள் பலரிடம் காணலாம். கல்வியறிவில்லாத மக்களிடம் நாகரிகமற்றவர்கள் என்று தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களிடம் காணலாம். ஆனால், படித்தவர்கள், அறிவுடையவர்கள், நாகரிகம் உள்ளவர்கள், உயர்ந்தவர்கள் என்று தம்மை நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம், எண்ணமும் பேச்சும் செயலும் ஒன்றாக இருப்பதைக் காணுதல் அரிது. அவர்கள் பெரும்பாலும் ஒன்றை நினைப்பார்கள். அந்நினைப்பை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நினைத்திருப்பதற்கு நேர்மாறாகப் பேசுவார்கள். செயலிலே இறங்கும்போது சொல்லுக்கு மாறாகச் செயல் செய்வார்கள். உயர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் இத்தன்மையுள்ளர் வர்களாயிருக்கின்றனர். இத்தன்மை உள்ளவர்களைத்தான் அறிவாளி, திறமைசாலி, கெட்டிக்காரன், காரியவாதி, சாமர்த்திய சாலி என்ற புகழ்ந்து பேசுகின்றனர். நினைப்பும் சொல்லும் செயலும் ஒன்றாக உள்ளவர்களைப் பற்றியோ ஒன்றும் தெரியா தவர்கள், அறிவில்லாதவர்கள்; வெகுளிகள்; ஏமாந்தவர்கள்; காரியம் செய்யும் திறமையற்றவர்கள் என்றெல்லாம் இழிவாகப் பேசுகின்றோம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதில் ஐயம் இல்லை. வஞ்சகர்கள், கபடர்கள், சூழ்ச்சிக் காரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. கள்ள உள்ளம் படைத்தவர்கள் எவ்வளவுதான் சிறந்த ஞான நூல்களைப் படித்தாலும் பயன்இல்லை. அல்லது சிறந்த அறிவுரைகளைப் பிறருக்கு எடுத்துரைத்தாலும் பயனில்லை. அவர்கள் தம் உள்ளத்தில் உள்ள கள்ளத் தன்மையை அடியோடு அறுத்தால்தான் சிறந்த நிலையை அறிவார்கள். தமது சக்தி, தமது திறமை, தமது ஒழுக்கம் எல்லாம் தமது உள்ளமே என்ற உண்மையையும் உணருவார்கள். இத்தகையவர்கள்தாம், தமது உள்ளத்தின் இயல்பை விளக்கும் தன்மையுள்ள அறிவைக் காண்பார்கள். இந்த அறிவு என்னும் ஒளியைக் காண்பவர்கள்தான் தெளிந்த ஞானம் உள்ளவர்களாய் விளங்குவார்கள். இத்தகைய ஞானத்தை நமக்குள் சிறந்து நிற்கும்படி செய்வது சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும். உள்ளம் தூய்மையாவதற்கும் எல்லாம் வல்ல அறிவு என்னும் ஒளியைப் பெறுவதற்கும் சிவாயநம எனும் ஐந்தெழுத்தை நினைக்க வேண்டும். வேறு தீய நினைப்புகள் ஒன்றுமின்றி ஒழுக்கத்துடன் வாழவேண்டும். இவ்வுண்மையைக் கீழ்வரும் சிவவாக்கியர் பாடல் எடுத்துக்காட்டுகின்றது. கள்ள உள்ளமே யிருந்து கடந்த ஞானம் ஓதுவீர்! கள்ளம் உள் அறுத்தபோது கதி இதுஅன்றிக்காண்கிலீர் உள்ளமே விளக்கி நித்தம் ஒளி அணுக வல்லிரேல் தெள்ளி ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே. கள்ள உள்ளத்துடன் கூடி இருந்து சிறந்த ஞான நூல்களை ஓதுகின்றீர்கள். வஞ்சகத்தை உள்ளத்தில் இல்லாமல் அடியோடு அறுத்தபோதுதான் நல்லகதியைத் தவிர தீய கதியைக் காணமாட்டீர்கள். உங்கள் உள்ளத்தை மாசற்றதாக வைத்துக்கொண்டு நாள்தோறும் அறிவொளியைக் கண்டு வாழ வல்லவராகுங்கள். அத்தகைய வல்லமை பெற்றீர்களானால்தான் தெளிந்த அறிவானது உம்மிடம் சிறந்து நிற்கும். இதற்குச் சிவாய நம என்னும் மந்திரமும் துணை செய்யும். இதுவே மேலேகண்ட பாடலின் பொருள். அறிவொளி யாகிய இறைவனை உள்ளத்திலேயே கண்டறியமுடியும் என்ற கருத்துள்ளதே இச் செய்யுள். இதற்கு அடுத்த செய்யுள் சிவன் வேறன்று; சீவன் வேறு அன்று; இரண்டும் ஒன்றே என்ற வேதாந்தத்தத்துவத்தை உணர்த்துகின்றது. தன்னையே சிவமாக எண்ணுகின்றவன்தான் சீவன் முக்தன் ஆவான். அவன் தன்னம்பிக்கை உள்ளவனும் ஆவான். எதையும் நம்பிக்கையுடன் செய்து வெற்றி பெறுவான். இந்த உண்மையை உணர்த்துவதே வேதாந்தத்தத்துவம். நமக்குள்ளேயே சிவன் இருக்கின்றான்; சிவன் வேறு அன்று; சீவன் வேறு அன்று. சிவனும் சீவனும் ஒன்றேதான் என்று அறிகின்றவன், நான் என்ற அகங்காரத்தைக் களைந்தெறிவான். நான் என்ற அகங்காரத்தைக் கைவிட்டவன் எல்லோருக்கும் இனியவனாக இருப்பான். அவனை வெறுப்பவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இவன்தான் சீவனைச் சிவன் என்று அறிந்துகொள்ளும் ஆற்றலும் உடையவன் ஆவான். காணவேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் ஆணவம் அது அல்லவோ அறிவில்லாத மாந்தரே! வேணும் என்று அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பரேல் தாணுவாக நின்ற சீவன் தான் சிவம் அதுஆகுமே. என்ற பாடல் மேலேகாட்டிய கருத்தைக் கொண்டதாகும். நீங்கள் சிவனைக் காணவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கடல் தாண்டிச் செல்கிறீர்கள்! மலைகளின்மேல் ஏறுகிறீர்கள்! அறிவில்லாத மக்களே இச்செய்கை உங்கள் அகங்காரத் தைத் தான் காட்டும். வேண்டும் என்று அந்த ஈசனுடைய பாதத்தை உண்மையாகவே உள்ளத்தில் கொள்ளுவீர்களானால் ஒரு காலத்தில் மூங்கிலாக நின்ற சிவமாகிய அந்தச் சீவனே உமக்குள் சிவமாக நிற்பான் இதில் ஐயம் இல்லை. இதுவே மேலே கூறிய பாடலின் பொருள். மேலே காட்டிய சிவவாக்கிய பாடல்கள் இரண்டும், இரண்டு உண்மைகளை உணர்த்தின. உள்ளத்திலே பரிசுத்தம் இருந்தால் அறிவான ஒளியைக் காணமுடியும் என்பது ஒன்று. சிவனும் சீவனும் ஒன்று என்ற உண்மையை உணரவேண்டும்; தான் என்ற ஆணவத்தை விட்டொழிக்க வேண்டும். அன்பில் ஈடுபட வேண்டும். இவையே இரண்டு உண்மைகள். தேரும் திருவிழாவும் சித்தர்கள் என்றால் அறிவுள்ளவர்கள், ஆராய்ச்சி அறிவுள்ளவர்கள் என்றே பொருள். அவர்களுடைய பாடல் களிலே பல சிறந்த உண்மைகளைக் காணலாம். தாங்கள் கண்டறிந்த உண்மைகளை அவர்கள் அஞ்சாமல் பாடி வைத்திருக்கின்றார்கள். பழைய கொள்கைகள் பலவற்றை அஞ்சாமல் கண்டித்திருக்கின்றனர். கடவுளர்க்குக் கல்லுருவம் செய்துவைத்து வணங்குதல் பண்டைத் தமிழர்கள் வழக்கம். இதைப் பற்றிப் பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. இன்றும் உருவ வணக்கம் தமிழரிடையிலே நிலைத்திருக்கின்றது. அறிஞர்கள் பலர், உருவ வணக்கம் உண்மை ஞானம் உள்ளவர்க்குத் தேவையில்லை என்றே கூறுகின்றனர். ஆழ்ந்த அறிவில்லாத மக்களை நல்வழிப்படுத்த உருவ வணக்கம் பயன் படுகின்றது. ஆராயும் அறிவாற்றல் இல்லாதவர்களுக்கு, ஓர் உருவத்தைக் காட்டி இதுதான் கடவுள் என்றால், அவர்கள் அதை நம்புகின்றார்கள்; பணிகின்றார்கள். உள்ளத்தில் கடவுள் கட்டளையை மீறி நடக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள் கடவுள் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஆதலால், உருவ வணக்கம் ஒருவகையில் பயன்படுகின்றது. பலரை நல்வழிப்படுத்த உதவுகின்றது. இதனால் உருவ வணக்கம் தவறல்ல என்று கூறுகின்றவர்கள் உண்டு. ஆனால் பகுத்தறிவுள்ளவர்கள் உருவ வணக்கத்தை ஒப்புக் கொள்ளவில்லை. உருவ வணக்கம் ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களின் அறிவு வளர்ச்சி தடைப்படுகின்றது. எல்லாம் வல்ல இறைவனைக் கல்லில் இருப்பதாகவும் செம்பில் இருப்பதாகவும் மண்ணில் இருப்பதாகவும் மரத்தில் இருப்ப தாகவும் உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்ப தாகும் என்று கூறுகின்றவர்கள் உண்டு. தமிழ்நாட்டுச் சித்தர்களிலே பலர், உருவ வணக்கத்தை ஒத்துக்கொள்ளவில்லை. அதை மூட நம்பிக்கை என்றே மொழிகின்றனர். பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருளது என்று நீர் எண்ணம் உற்றும் என்ன பேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அழிக்கவும் ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே. என்பது சிவவாக்கியர் பாடல். இதில் கல்லில் கடவுள் உருச் செய்து, அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவில்லாதவர்கள் தாம் இவ்வாறு செய்வார்கள். உலகைப் படைத்து, காத்து, அழிக்கவும் வல்லதாகிய ஒரு பொருள் கல்லில் இல்லை. நம் உள்ளத்தில்தான் இருக்கின்றது; அதை மனத்தில் தான் நினைக்கவேண்டும் என்று கூறுகின்றது இப் பாடல். கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான பொருள், அழியாத கடவுள் என்று எண்ணு கிறீர்கள். அதற்கு என்னென்னமோ பேர் சொல்லுகிறீர்கள்; உங்கள் மனத்தில் தோன்றும் பெயர்களையெல்லாம் வைத்து அழைக்கின்றீர்கள். அறிவின்மை காரணமாகத்தான் இப்படிக் கல்லுக்குக் கடவுளின் பெயரை வைத்து அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது; படைத்த பொருள்களை அழியாமல் வைத்திருக்கவும், காப்பாற்றவும் வல்லது; அவற்றை அழிக்கவும் வல்லது. இத்தகைய பொருளை நீங்கள் கல்லிலே காணமுடியாது. உங்கள் நெஞ்சிலே காணுங்கள்; உள்ளத்தால் உணருங்கள். இதுதான் இச்செய்யுளின் பொருள். இச்செய்யுள், உருவத்தை வணங்குவது அறிவின்மை என்று உறுதியுடன் கூறுவதே. உருவத்தைக் கடவுள் பெயரிட்டு அழைப்போர் ஏழைகள். அதாவது அறிவற்றவர்கள் என்று உரைக்கின்றது. தாம் அறிந்த- நம்பிய- கருத்தை அஞ்சாமல் எடுத்துரைப்பது சித்தர்களின் போக்கு- கொள்கை என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மற்றொரு செய்யுளில் உருவத்திற்கு விழாக் கொண்டாடும் வழக்கம் கண்டிக்கப்படுகின்றது. அச் செய்யுள் கீழ்வருவதாகும். ஊரில் உள்ள மனிதர்காள் ஒரு மனதாய்க் கூடியே தேரிலே வடத்தை யின்று செம்பைவைத்து இழுக்கிறீர்! ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை பேதை யான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே! இதுவும் சிவவாக்கியர் பாடல்தான். உருவத்தை வைத்து விழாக் கொண்டாடி வீண் செலவு செய்யும் வழக்கத்தைக் கண்டிக்கிறது இச்செய்யுள். ஊரிலே வாழும் மனிதர்களே! நீங்கள் உங்களுக்குள் கருத்துவேற்றுமையில்லாமல் ஒரே மனதாக ஒன்று சேருகின்றீர் கள். பெரிய தேரை அலங்காரம் செய்து, அதில் செம்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தைப் பிடித்து இழுக்கின்றீர்கள். ஒரு சிறிய உருவத்துக்குப் பெரிய தேர்; ஆயிரக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்த உள்ளம் வருந்தி இழுப்பது அறிவுடைமை யாகுமா? அதனால் ஏற்படும் பொருள் இழப்பு எவ்வளவு? காலக்கழிவு எவ்வளவு? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? கடவுள் ஆராலும் கண்ணால் காணமுடியாதவர்; அவர் தான் உலக முதல்வர். ஆனால் அறிவின் வடிவமாக இருப்பவர். ஆதிசித்தநாதர் என்பதன் பொருள் இதுதான்; அத்தகையவரை அறிவற்ற மனிதர்கள் என்னென்னவோ பண்ணுகிறார்கள். தேராம்! திருவிழாவாம்! உருவமாம்! கொட்டாம்! முழக்காம்! இவை எல்லாம் வெறும் புரளி! அறிவற்றவர் செய்யும் புரளி! இதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாகத் தெரிந்து கொள்ளுங்கள். இப்பொருளையே இப்பாடல் கூறுகின்றது. மேற்கூறிய இரண்டு பாடல்களும், உருவத்தைக் கடவுள் என்று நினைப்பதை மறுத்தன; உருவத்தை வைத்துத் தேர் திருவிழா நடத்துவதையும் மறுத்தன. இறைவனை உள்ளத்தில்தான் காணமுடியும்; அறிவினால் தான் அறியமுடியும் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். எல்லாப் பேரறிஞர்களும் இந்த உண்மையை எடுத்துக் கூறியிருக் கின்றனர். இப்பொழுது மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இத்தகைய உண்மையை அறிஞர்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். ஆயினும் நாட்டுமக்கள் அனைவரும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. இறை வனை எந்த உருவத்திலும் வைத்துக் காண முடியாது என்று நம்புகிற மக்கள்கூட வேறு வகைகளில் எதையாவது வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதனால் மக்கள் அனைவரும் இன்னும் முழுப் பகுத்தறிவாளர்களாக ஆகிவிடவில்லை என்றுதான் நாம் நினைக்க வேண்டும். ஒருபுறத்தில் அறிவும் வளர்ந்து வருகின்றது. மற்றொரு புறத்தில் பழைய மூடநம்பிக்கை அப்படியே நின்று கொண்டு தான் இருக்கின்றது. இதைத்தான் நாம் இவ்வுலகில் கண்கூடாகக் காண்கிறோம். மக்கள் அனைவரும் உண்மை அறிவு பெறவேண்டு மானால், சித்தர்களின் கருத்துக்கள்- சித்தர்களைப் போன்ற ஏனையோரின் எண்ணங்கள் மக்களிடையே பரவவேண்டும். அப்பொழுதுதான் பகுத்தறிவுச் சுடர் பழைய மூடநம்பிக்கை என்னும் மேகங்களால் மறைக்கப்படாமல் ஒளி விட்டுப் பிரகாசிக்க முடியும். தமிழர்க்குப் பகுத்தறிவுக் கொள்கை புதிதன்று. பழமை யானதுதான். அது பரவாமல் மறைந்துகிடக்கின்றது. மறைக்கப் பட்டுக் கிடக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இனி மறைக்கும் முயற்சி பயன் அளிக்காது. உண்மை ஒளிவிட்டுச் சுடரத்தான் செய்யும். இது உண்மை; உறுதியும் ஆகும். அஞ்சாத பேச்சு உள்ளத்தில் எத்தனையோ ஆசை; முதலில் உணவுச் சுவையை விட்டவர் அல்லர். நாக்குக்கு ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார்கள்; சுவையற்ற உணவை வெறுப்பார்கள். காதிலே குண்டலம்; கழுத்திலே அக்கமணி; அல்லது துளசிமாலை, கையிலே செபமாலை; வாயிலே முண முணப்பு, வேடம் சிவவேடம்; அல்லது வைணவ பக்தவேடம், இவையெல்லாம் இருந்தும் ஒரு பயனும் இல்லை. உள்ளத்திலே கொள்ளை ஆசையை வைத்துக்கொண்டி ருப்பார்கள்; துறவி வேடம் பூண்டு ஊரெல்லாம் சுற்றுவார்கள்; கோயில்கள் குளங்கள் என்றெல்லாம் அலைவார்கள். இவர்கள் இப்படிச் சுற்றி என்ன பயன்? மனச்சாந்தி அடைய மாட்டார்கள். இவர்கள் வீட்டைத் துறந்து, வாசலைத் துறந்து, பெண்டு பிள்ளைகளைத் துறந்து உற்றார் உறவினர்களைத் துறந்து, சொத்து சுதந்தரங்களைத் துறந்து துறவி வேடம் பூண்டது எதற்காக? மனச்சாந்திக்காக; குடும்பத்தில் வாழ்ந்தபோது ஏற்பட்ட சமாதானமற்ற தொல்லையைத் தீர்த்துக் கொள்வதற் காக; அல்லது குடும்ப வாழ்வால் தொல்லைதான் வரும் என்பதை அறிந்ததன் காரணமாக இவைகளுக்காகவே தான் துறவு பூண்டனர். இப்படித் துறவு பூண்டும் மனச்சாந்தி ஏற்படவில்லை யென்றால் அதற்குக் காரணம் என்ன? உண்மையான துறவை இவர்கள் அறியாததுதான் காரணமாகும்; மனச்சாந்திக்குக் காரணத்தை அறிந்து அதனைப் பின்பற்றாத குற்றந்தான் காரணமாகும். எது துறவு என்பதை அறிந்து அதைப் பின்பற்றியிருப் பார்களாயின்- பின்பற்றுவார்களாயின்- இவர்கள் ஊர்சுற்ற வேண்டாம்; கோயில் எங்கே குளங்கள் எங்கே- என்று திரிய வேண்டாம்; இருந்த இடத்திலேயே இன்பத்தைக் காண முடியும்; சாந்தியைக் காண முடியும்; சமாதானத்துடன் வாழமுடியும். மனம் மாசற்று வாழ்வதுதான் உண்மையான துறவு, சமாதான இன்ப வாழ்வுக்கு வழி; அகங்காரம்; கோபம், ஆசை ஆகிய தன்மைகள் உள்ளத்தை விட்டு ஓட வேண்டும்; இந்த அழுக்குகளை நன்றாகத் துடைத்தெறிய வேண்டும். இந்த மனமாசுகளைத் துடைத்து விட்டால் அந்த இடத்திலே தான் அன்பு வடிவான ஆண்டவன் குடிபுகுவான். ஆண்டவன் குடி புகுந்த உள்ளத்திலே துன்ப மேது? கலவரம் ஏது? கொந்தளிப்பு ஏது? அமைதியும் சாந்தியுமே நிலைத்து நிரம்பி நிற்கும். இவ்வாறு மனமாசின்றி வாழும் உத்தமரே அனைவராலும் உயர்வாகப் போற்றப்படுவார்கள். நான்முகன், திருமால் முதலிய தெய்வங்களாலும் சிவபிரானாகப் போற்றப்படுவார்கள். குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள் தோறும் சூழ்கிறீர்! மண்டுகங்கள் போல; நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர்! மண்டையேந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல் பண்டைமால் அயன் தொழப் பணிந்து வாழல் ஆகுமே என்று பாடுகிறார் சிவவாக்கியர். நீங்கள் காதிலே குண்டலங் களைத் தரித்துக்கொண்டு குளங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்; தவளைகளைப் போல இப்படிக் குளங்களைச் சுற்றுகிறீர்கள். உங்கள் மனத்தில் உள்ள குற்றங்களைப் போக்கமாட்டீர்கள். பிரம கபாலத்தை ஏந்தும் சிவபிரானை உள்ளத்திலேயே இருத்தும் வல்லமை பெறுவீராயின் பண்டைய திருமால், பிரமன், முதலியோர் வணங்கும்படி ஆண்டவனைப் பணிந்து வாழலாம் என்பதே இப்பாடலின் பொருள். இதனால், சிவபெருமான் வேறு எங்கும் இல்லை; மாசற்றார் உள்ளத்திலேயே இருக்கிறான்; என்று கூறினார். மற்றொரு பாட்டு, வெளிப்படையாக விக்கிரக வணக்கத்தைக் கண்டிக் கிறது. விக்கிரகத்தில் கடவுள் இல்லை. அதைப் பூசிப்பதும், அதற்காக மந்திரம் ஓதுவதும் பயனில்லை என்று சொல்லுகிறது. நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றிவந்து மொண மொணென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்? சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? இவ்வாறு விக்கிரகத்துக்குப் பூசைசெய்வோரைப் பார்த்து அதட்டிக் கேட்கிறார் சிவவாக்கியர். நட்டு வைத்த கல்லைத் தெய்வம் என்று நினைக்கிறாய். அக்கல்லின்மேல் நாலுமலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறாய்! மொண மொண என்று ஏதோ மந்திரத்தைச் சொல்லுகிறாய். அந்த மந்திரத்தால் என்ன பயன் கண்டாய்; தலைவன் தனியாக வெளியில் இல்லை. உள்ளத்திலே இருக்கிறான். அப்படியிருக்கும்போது நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமா? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும், அகப்பையும், அதில் ஆக்கப்படும் கறியின் சுவையை அறியுமா? அறியாது. நமது உள்ளத்தால்தான் நாதனைக் காணவேண்டுமே யன்றி நட்ட கல்லில் காண முடியாது; கல் எப்படி இறைவனைக் காணும்? நமக்குச் சொல்லும்? காணவும் காணாது; சொல்லவும் சொல்லாது. இப்பாடல் விக்கிரக வணக்கத்தை வெளிப்படையாகக் கண்டித்தது. கல்லை நட்டு வைப்பது; அதிலே தெய்வம் இருப்பதாக நம்புவது; அக்கல்லுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது; இவைகள் எல்லாம், அறியாதார் செயல் என்பதே சிவவாக்கியர் கருத்து. கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினப்பூசைகள் செய்வதும் திருவிழாக்கள் செய்வதும் நமது நாட்டிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. மக்கள் இவற்றில் நம்பிக்கை கொண்டும் இருக்கின்றனர். இன்றும் இவ்வகையிலே ஏராளமான செல்வப்பொருள் செலவழிந்து கொண்டுதான் வருகின்றது. இவ்வாறு மக்களிடையிலே- அவர்களுடைய நம்பிக்கை யுடன்- ஆதரவுடன்- நடைபெற்றுவரும் காரியத்தை எதிர்த்துப் பேசுவதென்றால் அது எல்லோராலும் இயலாத காரியம். நெஞ்சுரமும், தம் கொள்கையிலே அசையாத நம்பிக்கையும் உள்ளவர்களால்தான் முடியும். அதிலும் புனிதமான செயலாக- மதக்கொள்கையாக- கருதப்படும் ஒரு காரியத்தை வெளிப்படை யாகக் கண்டிப்பதென்றால் அதற்கேற்ற அறிவும் ஆண்மையும் வேண்டும். சிவவாக்கியர், சாதி வேற்றுமை, கோயில், திருவிழா, வேடம் விக்கிரக வணக்கம் முதலியவைகளை வெளிப்படை யாகக் கண்டிக்கிறார். ஆதலால் அவர் தம் கொள்கையிலே உறுதியுள்ளவர்; உண்மையுள்ளவர்; மனித சமுதாயத்தில் குடி கொண்டுள்ள மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிய வேண்டும் என்பதிலே ஆர்வம் உள்ளவர் என்பதைக் காணலாம். ஞானவெட்டியான் நூலாசிரியர் ஞானவெட்டியான் என்னும் நூல் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாக வழங்குகின்றது. சித்தர்களின் நூலா ராய்ச்சியிலே சிறந்தவர்கள் பலர் இந்நூலைத் திருவள்ளுவர் பாடியதாகவே நம்புகின்றனர். இந்நூல் திருவள்ளுவரால் பாடப்பட்டதாகவே இருக் கலாம். ஆனால் திருக்குறளைப் பாடிய திருவள்ளுவர் வேறு, ஞானவெட்டியானைப் பாடிய திருவள்ளுவர் வேறு என்று தான் கொள்ளவேண்டும். திருக்குறளின் கருத்துக்கள் பல ஞானவெட்டியானிலே காணப்படுகின்றன. இது உண்மை. இது ஒன்றைக் கொண்டு குறளாசிரியரும், ஞானவெட்டியான் ஆசிரியரும் ஒருவரே என்று முடிவுகட்டுவது தவறாகும். ஞான வெட்டியானில் அதிவீரராம பாண்டியன் பெயரும், அவர் இயற்றிய நைடதத்தின் பெயரும் காணப்படுகின்றன. சாயாமல் அதிவீரபாண்டியன் சொல்லும் தமயந்தி சரித்திர- நைடதமும். என்பது ஞானவெட்டியான். அதிவீரராம பாண்டியன் காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. ஆதலால் ஞானவெட்டியான் கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் பின் பிறந்ததாகவே யிருக்க வேண்டும். ஞானவெட்டியான், காலத்தில் பிற்பட்டதாயினும் அதில் உள்ள கருத்துக்கள் பழமையானவை; பதினெண் சித்தர்களின் கருத்துக்களை எடுத்துரைப்பவை என்பதில் ஐயம் இல்லை. திருத்திய பாடம் உள்ள நல்ல பதிப்பாக ஞானவெட்டி யான் இன்னும் வெளிவரவில்லை. இந்நூல் நல்ல பதிப்பாகவும், விளக்க உரையுடனும் வெளிவருமாயின் அது நமது சமுதாய முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இதில் ஐயம் இல்லை. நூலின் சிறப்பு ஞானவெட்டியான் என்பதற்கு அறிவு நெறியைக் காட்டுகின்றவன் என்று பொருள். ஞானம்- அறிவு, வெட்டி- வழி. ஞானவெட்டியான் என்பதும் சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல்களிலே ஒன்று. வெட்டியான் என்றால், இன்று கிராமங்களிலே பிணஞ் சுடுவோனைக் குறித்து வழங்குகின்றது. சுடுகாட்டிலே பிணஞ் சுடும் தொழிலைச் சிலர் பரம்பரையாகச் செய்துவருகின்றனர். இவர்கள் தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குப் பிணம் சுடும் தொழிலுடன் கிராமக் காவல் தொழிலும் உண்டு. இத்தகைய தொழிலைச் செய்யும்- தீண்டாதான் ஒருவன்- உயர் வகுப்பினரை நோக்கிக் கூறுவதுபோலப் பாடப்பட்டிருக் கின்றது இந்நூல். வெட்டியான் ஒருவன்- பிணம் சுடும் தொழில் செய்யும் தீண்டாதான் ஒருவன்- உயர் வகுப்பினரை நோக்கி அறிவுரை கூறுவதால் இந்நூலுக்கு ஞான வெட்டியான் என்று பெயர் வைத்தனர். இந்நூலிலே கூறப்படும் செய்திகள் சித்தர்களின் கருத்தை விளக்கும் செய்திகளேயாகும். மக்கள் தாயின் வயிற்றில் கருக் கொள்ளுவது; கருவிலே வளர்வது. கருவில் வளரும் குழந்தை களுக்கு அங்கக் குறைகள் ஏற்படுவதற்குக் காரணம், அங்கக் குறைகள் ஏற்படாமல் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கு வழி, குழந்தை பிறந்த பின் வளரும் விதம், நோயணுகாமல் உடம்பைப் பாதுகாக்கும் வழி, உடம்பை வலுப்படுத்துவதற்கான யோக நெறி, பிணிகளைத் தடுப்பதற்கான மருந்துகள், உடல் அழியாமல் இருப்பதற்கான காயகல்பம், வாதமுறை, இவைகள் எல்லாம் இந்நூலிலே கூறப்படுகின்றன. பொதுவாக மக்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல். சாதி, மத, இனபேதம் பாராட்டு வோர் அறிவற்றவர்கள், மனித சமுதாய ஒற்றுமையை விரும்பாத வர்கள் என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மதம், சாத்திரம், தெய்வம், மதவேடம் முதலியவைகளால், மக்களை அறிவீனராக்கும் குருமார்களை அம்பலப்படுத்துகிறது ஞானவெட்டியான். இவைகளைச் சில உதாரணங்களால் காண்போம். குருமார்கள் நடிப்பு குருமார்கள் பலரும், துறவிகள் போல் நடிப்பார்கள்; ஆனால் அவர்கள் உண்மையான துறவிகள் அல்லர்; அவர்கள் ஒன்றையும் துறந்தவர்கள் அல்லர்; பேராசைக்காரர்கள்; என்று எச்சரிக்கிறது ஒரு பாட்டு. நீரில்மூழ் கும்போது பொருள்மேல் ஆசை; நிலையான கரையில் வந்தால் நிலமேல் ஆசை கூறில்நெற் றிதனில்வெண்ணீ றணியும்போது குறிப்பான மக்கள் பெண்டிர் சுற்றத்தாசை; ஊர்தனி லும்மந்திரங்கள் ஓதும்போது உற்றபசி யாகும் மனதின்மேல் ஆசை; பார்தனிலே தேவாரம் ஓதும்போது பலவிதமாய் மனம் ஓடிப் பார்க்கும் ஆண்டே. இச்செய்யுளில், அமைந்திருக்கும் பொருள் குறிப்பிடத் தக்கது. நீரில் மூழ்கும்போது வாய் தான் சிவசிவா, என்று முண முணக்கும், உள்ளத்திலே பொருளாசை மிகுந்து நிற்கும். கரையேறி நின்று, சாமி கும்பிட்டாலும், தோத்திரங்கள் பாடினாலும், நிலத்தைச் சேர்ப்பதிலேயே அவர்கள் மனம் அலையும். நெற்றி யிலே நீறணியும்போது சிவ சிவா என்று சொன்னாலும், உள்ளம், தமது மக்கள் மனைவி, சுற்றத்தினரையே நாடி நிற்கும், ஊருள் புகுந்து மந்திரம் ஓதினாலும், மனது பசிக்கான உணவிலேயே படிந்திருக்கும். தேவாரம் பாடினாலும், மனம் தேவாரத்தில் நில்லாது; பல வழிகளிலே அலைந்துகொண்டிருக்கும். இதுவே இச்செய்யுளிலே அமைந்திருக்கும் பொருள். மேலும் அந்த நடிப்புக் குருமார்களின் வேடத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு பாடல் கீழ்வருவது: சித்தமுடன் செபதபங்கள் செய்தோம் என்பார்; செப்புகிறேன் அவர்களுடைய செய்திஎல்லாம்; கர்த்தனுடைப் பாதமலர் நினைக்க மாட்டார்; காடுசுற்றி ஓடியபின் கலங்குவார்கள்; நித்தமுடன் நிட்டையிலும் நிற்கமாட்டார்; நிலத்தில்உள ஆசையெல்லாம் நினைத்துக் கொள்வார்; சத்தமுடன் தேவாரம் கூகைபோலும் சதாநித்தம் ஓதிகுடி கெடுப்பார் ஆண்டே. இச்செய்யுளும் யார் வீண் வேடதாரிகள் என்பதை எடுத்துக் காட்டிற்று. மனம் ஒன்றுபட்டுச் செபதபங்கள் செய்கின்றோம் என்று சொல்லுவார்கள். உண்மையான தலைவனுடைய அடி களை நினைக்கவே மாட்டார்கள். பயனற்ற காட்டிலே அலைந்து திரிந்த பின் வருந்துவார்கள். ஒரே நிலையான நிட்டையிலும் நிற்கமாட்டார்கள். இவ்வுலகில் உள்ள ஆசைப்படக்கூடிய அவ்வளவு பொருள்களின் மேலும் ஆசை கொள்வார்கள்; கோட்டான் அலறுவது போல உரத்த குரலில் தேவாரம் பாடுவர்; ஆனால் எப்பொழுதும் பிறர் குடியைக் கெடுப்பதிலேயே காலங் கழிப்பர். என்பதே இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். மேலே காட்டிய இரண்டு பாடல்களும், வெளி வேடத் தைக் கண்டு யாரையும் நம்பவேண்டாம்; ஏமாற வேண்டாம்; வேடாதாரிகள் அனைவரையும் ஒழுக்கமுடையவர்கள் என்று நம்புவது தவறு; என்று மக்களுக்கு அறிவுரை கூறின. மக்கள் இனம் ஒன்றே மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்கு வோர், பாதகர்கள் என்று ஒரு பாடலில் கூறப்படுகின்றது. உங்கள் தெய்வம் எங்கள் தெய்வம் உண்டென வேறு செய்து அங்கங்கே வேறுடதாய் ஆகமங்கள் ஆக்கிவைத்தார்; பங்கமதாய் வேறுசெய்யும் பாதகரே; அங்குமிங்கும் எங்கெங்கும் ஆய்நிறைந்தான் ஈசன்என்று அறிகிலீரே இதுவே அச்செய்யுள். உங்கள் தெய்வங்கள் வேறு. எங்கள் தெய்வம் வேறு; என்று ஒருவரோடு ஒருவர் சண்டை போடும் படி செய்தனர். இதைக் குறிக்க அங்கங்கே வெவ்வேறு விதமாகத் தெய்வங்களைக் கும்பிடும்படி ஆகமங்களும் செய்து வைத்தார்கள்; இவர்கள் மக்கள் அவமானம் அடையும்படி அவர்களை வெவ்வேறு பிரித்துவைக்கும் பாதகர்கள் ஆவார்கள். ஆதலால் அங்கும், இங்கும், எங்கெங்கும் நிறைந்தவன் ஈசன் ஒருவனே என்பதை அறியாமல் தடுமாறுகின்றீர்கள். இதுவே மேலே காட்டிய செய்யுளின் பொருள். இப்பாடல், பல வேறு தெய்வங்கள் உண்டென்பதையும், அவைகளுக்கு வெவ்வேறு முறைகளில் திருவிழாக்கள் நடத்து வதையும், இதற்காக ஏற்பட்டிருக்கும் ஆகம புராணங்களையும் கண்டித்திருப்பதைக் காணலாம். மத பேதம் பாராட்டுவதில் பொருள் இல்லை என்ற கருத்தும் இச்செய்யுளில் அடங்கிக் கிடக்கின்றது. மனிதருள் இனம் பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம்; இயற்கைக்கு மாறானது; என்று வலியுறுத்துகின்றது ஞான வெட்டியான். சத்தியுடைப் பூசைசெயும் சுந்தரரே என்மனையில் சத்தியைநீர் சேர்ந்ததனால் தரியாதோ கர்ப்பமதே? சக்தி பூசை செய்கின்ற உயர்குலத்தில் பிறந்த சுந்தரரே: என் வீட்டில் உள்ள பெண்ணுடன் நீர் சேர்ந்தால் அவளிடம் கருத்தரிக்காதா? என்று வெட்டியான், உயர் குலத்தானைப் பார்த்துக் கேட்டான். கேள்வியில் தவறு என்ன? இஞ்சியிட மஞ்சள் உண்டோ? ஏலம் இடச்சுக்காமோ? நஞ்சுகந்த எட்டியிலும் நல்லஎலு மிச்சையுண்டோ? துஞ்சுபுகழ் பூசைசெய்யும் சுந்தரரே என்குலத்தில் வஞ்சியை நீர் சேர்ந்தனால் மைந்தன் தரியாதோ. இஞ்சியைப் பயிரிட்டால் மஞ்சள் விளையுமா? ஏலம் பயிர் செய்தால் சுக்கு விளையுமா? விஷத்தன்மை பொருந்திய எட்டி மரத்திலே நல்ல எலுமிச்சம்பழம் தோன்றுமா? இஞ்சியிட்டால் இஞ்சியும், ஏலம் பயிரிட்டால் ஏலமும், எட்டிமரத்திலே எட்டிக்காயுந்தான் விளையும். மிகுந்த புகழுடைய பூசை செய்யும் சுந்தரரே, என் குலத்துப் பெண்ணை நீர் சேர்ந்தால் மைந்தன் பிறக்கமாட்டானா? நிச்சயமாகப் பிறப்பான், ஆதலால் எனக்கும் உமக்கும் வேற்றுமை ஏது? ஒரு சிறிதும் இல்லை. இச்செய்யுளும், மனிதகுலம்- மனித இனம் ஒன்றே என்பதை வலியுறுத்திற்று. மேலும், மனித இனம் ஒன்றென்பதைக் காரணங்காட்டி, வலியுறுத்தும், மற்றொரு பாடலைப் பாருங்கள். அம்புவியின் மான்அதனை அரியவராகம் புணர கும்பில் உருவாகியதும் குட்டி அளிக்குமோதான்? நம்பிறவி அந்தணரே! நேயம்உள சூத்திரரே! வம்புரைத்தீர் என்குலத்தை மருவஉரு வாகாதோ? இவ்வுலகிலே மான் என்னும் விலங்குடன், பன்றி சேர்ந்தால்- மான்வயிற்றிலே கருவுண்டாகுமா? குட்டிபோடுமா? இல்லை. நமது பிறப்பு உயர்ந்தது என்று நினைக்கும் அந்தணரே! அன்புள்ள சூத்திரரே! எனது குலத்தை இழிவானது என்று வேறுபடுத்திக் கூறுகின்றீர்கள். என்குலப் பெண்களை நீங்கள் மணந்தால் அப்பெண்கள் வயிற்றில் கருத்தரிக்காதோ? மேலே காட்டிய பாடல்கள், மக்களுக்குள் பேதம் இல்லை; அவர்களுக்குள், சாதி, மத, இன வேற்றுமை உண்டென்று கூறுவது தவறு என்ற உண்மையை உணர்த்தின. மனிதர்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் எந்த மொழியைப் பேசினாலும், எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே இனந்தான் என்ற உண்மையைச் சித்தர் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. மக்கள் ஒரே இனம் என்பதே பழந்தமிழர் கொள்கை என்பதைச் சித்தர் நூல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஔவையார் ஞானக்குறள் குறள் தந்த ஓளவை எல்லா நாட்டிலும் புகழ்பெற்ற புலவர்கள் ஒரு சிலரைத் தான் காணமுடியும்; கற்றவர்களாலும் மற்றவர்களாலும் பாராட்டப்படும் வாய்ப்பு சில புலவர்களுக்குத்தான் உண்டு. எத்தனையோ புலவர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் எவ்வளவோ நூல்களைச் செய்திருக்கின்றனர். அவர்களிலே விரல்விட்டு எண்ணக்கூடிய சில புலவர்களின் பெயர்கள்தான் பொதுமக்களின் உள்ளங்களிலே அணையாத விளக்குகளாகச் சுடர் விட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுப் புலவர்களிலே பொதுமக்கள் நெஞ்சிலே இன்றும் நிலையாக வாழ்கின்றவர்கள் எத்தனை பேர்? இவர்களை எளிதிலே கணக்கிட்டுவிடலாம். ஔவையார், திருவள்ளுவர், கம்பர், புகழேந்தியார், நக்கீரர், ஒட்டக்கூத்தர் போன்ற சில புலவர்களைப் பற்றித் தமிழ்நாட்டிலே பலருக்குத் தெரியும். படிக்காத பலருக்கும் இவர்களைப் பற்றித் தெரியும். இவர்களிலே சிறப்பாக, ஆண் பெண் அனைவருக்கும் அறிமுகமான புலவர் ஔவையார் ஆவார். நகர்ப்புறங்களிலே யாவது படிக்காத பலர் ஔவையாரை மறந்திருக்கலாம். படித்தவர்கள் மட்டும் அவரை அறிந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிலே எந்தச் சிறு கிராமத்திற்குச் சென்றாலும் ஔவையாரைப் பற்றிக் கேள்விப்படலாம். அந்த மக்கள் படித்தவர்களோ, படிக்காதவர்களோ அவர்கள் இன்னும் ஔவையாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவரைப்பற்றி இன்னும் எழுத்தில் வராத பல கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றனர். சங்க காலத்தில் அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஔவைப் பிராட்டியார் இருந்தார் என்பதற்கு இலக்கிய ஆதரவு உண்டு. சங்க இலக்கியங்களிலே ஔவையார் பாடல்கள் காணப்படுகின்றன. புறநானூற்றிலே உள்ள ஔவையார் பாடல்கள், அதியமான் என்னும் சிற்றரசனுக்கும் ஔவை யாருக்கும் இருந்த நட்பை எடுத்துக் காட்டுகின்றன. ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி, விநாயகர் அகவல் போன்ற நூல்கள் ஔவையார் இயற்றினார் என்று வழங்கப் படுகின்றன. இந்த நீதி நூல்களை இயற்றிய ஔவையார் வேறு, சங்க காலத்திருந்த ஔவையார் வேறு என்பதே பலர் கருத்து. ஔவையார் பெயரால், ஔவைக் குறள் என்ற ஒரு நூல் உண்டு. இந்நூலைச் செய்த ஔவையார், சங்க காலத்து ஔவை யாரா, அல்லது பிற்காலத்திலே நீதி நூல்கள் செய்திருக்கும் ஔவையாரா? என்று கேட்பதில் தவறில்லை. அவ்வைக் குறள் செய்தவர் சங்க காலத்து ஔவையாரும் அல்லர். நீதிநூல்கள் செய்த ஔவையாரும் அல்லர். வேறொரு ஔவையாராகத்தான் இருக்கவேண்டும்; இப்படி ஊகிப்பவர்கள் பலர் உண்டு. யாரோ ஒருவர்- யோக ஞானங்களிலே நம்பிக்கையுள்ள ஒருவர்- சித்தர்களின் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்க முள்ள ஒருவர் இந்தக் குறளை இயற்றியிருக்கலாம். இதை ஔவையார் இயற்றியதாக வெளியிட்டிருக்கலாம். இவ்வாறு கூறுவோர் பலர். இந்த ஔவையார் குறளிலே யோகத்தைப் பற்றியும் ஞானத்தைப் பற்றியும் தான் கூறப்படுகின்றன. சித்தர் நூல்களின் கருத்துக்களை இந்நூலில் காணலாம். இவ்வுடம்பு பஞ்சபூதங் களால் ஆகியது. இறைவன், நம்மிடமே தான் இருக்கின்றான். அவனைக் கண்டறிவதே ஞானம். யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்துக்களைத் தான் ஔவைக் குறளிலே காணலாம். இது தமிழ் அறிஞர்கள்- சித்தர்கள்- கண்டறிந்த உண்மையாகும். ஔவைக் குறள் முப்பத்தொரு அதிகாரங்களைக் கொண்டது. திருக்குறள் முப்பாலாக இருப்பதுபோல இதுவும் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. 1. வீட்டு நெறிப்பால். இதில்10 அதிகாரங்கள் அடங்கியிருக் கின்றன. 2. திருவருட்பால், இதிலும் 10 அதிகாரங்கள் அடங்கி யிருக்கின்றன. 3. தன்பால். இதில் 11 அதிகாரங்கள் அடங்கியிருக் கின்றன. அதிகாரம் ஒன்றுக்குப் பத்துப்பாட்டுக்கள். எல்லாம் குறள் வெண்பாக்கள் தாம். மொத்தம் 310 குறள் வெண்பாக் களையுடையது ஔவைக் குறள். ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறள். இந்த உடம்புக்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும். வேதம் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் தன்மையுள்ளது. அந்த வேதத்தைக் கற்றதனாலேயே அறிவு உண்டாயிற்று. அந்த அறிவுதான் இந்த உடம்பின் பயனாகும். அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல. உடம்பைப் பெற்றவர்- மனிதப் பிறவி எடுத்தவர்- அறிவைப் பெறவேண்டும் என்பதுதான் இக்குறளின் விளக்கம். ஓம் என்பது பிரணவம். இந்த முதற் குறளைக் கொண்டே இந்நூலின் போக்கு எப்படி என்பதை அறிந்துகொள்ளலாம். உத்தம குணமே உயர்ந்த கடவுள் ஔவைக் குறளிலே முதல் அதிகாரத்தில் உடம்பு பஞ்ச பூதங்களின் சேர்க்கைதான் என்று கூறப்பட்டுள்ளது. பரம் பொருளிடத்திலே பராசக்தி அடங்கியிருக்கின்றது. பரம்பொருள் இயங்கும் சக்தி யற்றது; பராசக்தி அந்தப் பரம்பொருளிலே உள்ள இயங்கும் சக்தி. இந்தப் பராசக்தியினிடம் பஞ்சமா பூதங்களும் அடங்கியிருக்கின்றன. பஞ்சமகா பூதங்கள் மண், நீர், தீ, காற்று, வானம் என்பவை. இந்த ஐந்து பூதங்களும் ஒன்றுடன் ஒன்றுமாறிக் கலந்து சரீரம் உண்டாகின்றது. இதுதான் சித்தர்கள் கண்டறிந்து கூறிய உண்மை. பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம் தாம் மாறில் தோன்றும் பிறப்பு என்பது இரண்டாங் குறள். பரம்பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐந்து பெரும் பூதங்களுள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டுச் சேர்ந்தால் பிறப்புத்தோன்றும் என்பதே இக்குறளின் பொருள். நான்முகன் படைப்புக் கடவுள். அவர்தான் உலகைப் படைத்தார்; உயிர்களைப் படைத்தார்; மக்களைப் படைத்தார்; என்று புராணக் கொள்கைக்கு, இது முரண்பட்டிருப்பதைக் காணலாம். படைப்புக் கடவுள் ஒருவர் தனியாக உண்டு என்ற கொள்கைக்கு மேலே காட்டிய குறள் மாறுபட்டிருப்பதைக் காணலாம். பஞ்சபூதங்களின் கூறாகிய பிறப்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதைப்பற்றி ஔவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணப்படுகின்றது. உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண் என்றது அக்குறள். உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான்; ஆகையால் உடம்பைப் பெற்ற மக்களே! உங்கள் உடம்புக்குள்ளேயே உறையும் உத்தமனை- இறைவனைக் கண்டறியுங்கள் என்ற கருத்தை வலியுறுத்து கின்றது இக்குறள். கடவுள் என்பவர், கல்லில் இருக்கிறார்; செம்பில் இருக்கின்றார்; நீரில் இருக்கின்றார்; நிலத்தில் இருக்கின்றார்; கோயிலில் இருக்கின்றார்; குளக்கரையில் இருக்கின்றார்; ஆற்றில் இருக்கின்றார்; மலையில் இருக்கின்றார், என்று எண்ணி அலைய வேண்டாம்; ஊர் ஊராக ஓடித் திரிய வேண்டாம். உடம்புக்குள்ளேயே கடவுள் இருக்கின்றார். அதைக் கண்டறிய வேண்டும். இவ்வாறு கடவுள் இருக்கும் இடத்தைக் கூறுகின்றது இக்குறள். கடவுள் இருக்கும் இடத்தைச் சொல்லியதோடு நிற்க வில்லை. அந்தக் கடவுள் யார்? எப்படிப்பட்டவர்? என்பதையும் கூறுகிறது. உத்தமன் என்று கடவுள் பெயரைக் குறிப்பிடுகின்றது. இந்தப் பெயரைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்; ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். உத்தமன் என்றால் நல்லவன்; உயர்ந்தவன்; குணக்குன்று; பிறருக்குத் தீங்கு செய்யாதவன்; பிறருக்கு நன்மை செய்பவன்; பிறர் துன்பத்தைத் தீர்க்கும் அருளாளன்; இரக்கமே வடிவானவன்; நல்ல குணங்கள்- பண்புகள்- தன்மைகள் என்பன யாவையோ அவை எல்லாம் நிறைந்தவன். உத்தமன் என்ற சொல்லுக்கு இவ்வளவு விரிவான பொருள் உண்டு. ஆகவே கடவுளைக் கண்டறிந்தவன் என்பதற்கு அடை யாளம், உத்தமனாய் வாழ்வதுதான். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணி அதைத் தவிர்க்க முயல்வதுதான் உத்தமன் குணம். எவ்வுயிர்க்கும்- யாருக்கும் தீமை செய்யாமல்- தீமை செய்ய வேண்டும் என்று கனவிலும் நினைக்காமல் இயன்றவரை யிலும் நன்மை செய்து வாழ்வதுதான் உத்தம குணமாகும். இவ்வாறு உத்தமனாய் வாழச் சொல்லுகிறது மேலே காட்டிய குறள். மற்றொரு குறள் பிறப்பின் பயனை வலியுறுத்துகின்றது. அக்குறளும் சிந்திக்கத்தக்க சிறந்த குறளாகும். பிறப்பினால் பெற்ற பயன் ஆவது எல்லாம் துறப்பதாம் தூநெறிக்கண் சென்று. என்பதும் மனிதப்பிறப்பின் பயனை உரைக்கின்றது. இக்குறளுக் குப் பொருள் காணும்போது, இதன் பதங்களைச் சிறிது மாற்றிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் தெளிவாகப் பொருள் விளங்கும். ‘பிறப்பினால் பெற்ற பயன் ஆவது, தூநெறிக்கண் சென்று எல்லாம் துறப்பது ஆம்! என்று மாற்றிக் கொண்டால் போதும். மனிதப் பிறவி எடுத்ததனால் பெற்ற பயன், குற்ற மற்ற தூயநெறியிலே நடந்து, தீமைகளை யெல்லாம்- தீமைகள் நிகழ்வதற்குக் காரணமான உலக ஆசைகளை யெல்லாம் துறப்பதாகும்; அடியோடு விட்டுவிடுவதாகும். என்பதுதான் இக் குறளில் அமைந்திருக்கும் பொருள். நல்லவழியிலே நடக்கவேண்டும். உள்ளமும் உடம்பும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். கள்ளம் கபடமற்ற தூய வாழ்விலே தலைநிற்க வேண்டும். தான் செய்யும் செயல்கள் தனக்கும் பிறருக்கும் நல்ல பயனைத் தரவேண்டும்; மனத்திற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு இன்பமும் தரும் உயர்ந்த காரியங்களையே செய்ய வேண்டும். இதுவே தூய நெறி- பரிசுத்தமான வழி- நல்ல வழியாகும். இவற்றுக்கு மாறான தீமைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும். இப்படி வாழ்வது தான் மனிதப்பிறவி பெற்றதன் பயன் ஆகும். இந்த உண்மையை எடுத்துரைத்தது இக்குறள். இவ்வாறு தூயநெறியிலே நின்று வாழ்வதுதான், உடம்பிலே உத்தமனைக் கண்டதன் பயனும் ஆகும். மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பது எப்படி? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது. அழுக்கும் குப்பை கூளங்களும் நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது. அந்த இடத்தில் எந்த நல்ல பண்டமும் கெட்டுத்தான் போகும். அழுக்குப்பட்டு விடும். இது நாம் கண்கூடாகக் காணும் உண்மை. இருளில் நாம் எந்தப்பொருளையும் பார்க்க முடியாது. பண்டங்கள் நிறைந்திருக்கும் இடத்திலே வெளிச்சம் இல்லா விட்டால், நமக்கு வேண்டிய தொன்றைத் தேடிஎடுத்துக்கொள்ள முடியாது. வெளிச்சம் இருந்தால் தான்- விளக்கு இருந்தால் தான்- ஒளி இருந்தால்தான் நமக்குத் தேவையானவற்றைத் தேடிப் பெற முடியும். நமது உடம்புக்குள் இறைவனைக் காணவேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருக்கவேண்டும். மனம் தூயதாக இருக்க வேண்டும். மனத்திலே பரிசுத்தம்- குற்றமற்ற குணம் சிறந்த தன்மை குடிகொண்டிருந்தால்தான் உடம்பிலேயே ஓட்டிக் கொண்டிருக்கும் ஈசனைக் காணமுடியும். இந்த உண்மையை, மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால் ஈசனைக் காட்டும் உடம்பு. என்ற குறளால் காணலாம். குற்றமற்ற தன்மை உள்ளத்திலே உண்டாகுமானால், உடம்பு ஈசனைக் காட்டும் என்பதே இதன் பொருள். இதனால், உள்ளத்தில் குற்ற மின்றி உயர்ந்த செயல்களைச் செய்து வாழ்வதே மக்கள் கடமை என்பதைக் காணலாம். மேலே காட்டிய ஔவைக் குறள்கள், நமக்கு உணர்த்தும் உண்மை சிறந்ததாகும். உடம்பு பஞ்ச பூதங்களின் சேர்க்கை யாகும். பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான இவ்வுடம்பைப் பெற்ற பயன் கடவுளை அறிவதாகும். அந்தக் கடவுளை வேறெங்கும் சென்று தேடித்திரியவேண்டாம். உடம்பின் உள்ளேயே அக் கடவுள் குடிகொண்டிருக்கின்றான். அக்கடவுளின் பெயர் உத்தமன். ஆதலால் உத்தம குணங்களைப் பின்பற்றி வாழ்வது தான் கடவுளைக் கண்டறிந்ததற்கு அடையாளம். உத்தம நெறி யென்பது நல்லவழியிலே ஒழுகுவது. தீயவற்றைத் துறப்பதாகும். உள்ளம் தூயதாக இருக்கவேண்டும். தூய உள்ளத்தைப் பெற்ற உடம்பிலே கடவுளைக் காணலாம். ஆதலால் மாசற்ற மனத்துடன் வாழ்வதே மனிதப்பிறப் பெடுத்ததன் பெரும் பயனாகும். இவ் வுண்மைகளை மேற் காட்டிய ஔவைக் குறள்கள் அறிவித்தன. அருளின் ஆற்றல் அருள் என்பதற்கு இரக்கம், அன்பு, கருணை என்று பொருள் கூறலாம். பொதுவாக உயர்ந்தவர் தாழ்ந்தவரிடம் காட்டும் அன்பை அருள் என்று வழங்குகின்றனர். தெய்வம் மனிதரிடம் காட்டும் அன்பை அருள் என்று சொல்லுகின்றனர். கடவுள் அன்பைப் பெறுவதை அருள் பெறுவது என்று வழங்கு கின்றனர். அருள், கிருபை, கருணை என்ற சொற்கள் இவ்வாறு தெய்வத்தன்மை பொருந்திய பொருளில் வழங்குகின்றன. ஔவைக் குறளிலே அருள் பெறுதல் என்பது ஓர் அதிகாரம். அதில் கடவுள் அருள் பெற்றால்தான் எல்லா நன்மைகளையும் பெறலாம் என்று கூறப்படுகின்றது. அருளினால்தான் அறிவு பிறக்கும்; அருளினால்தான் அறியாமையை ஒழிக்க முடியும்; அருளினால்தான் உண்மை வழியில் ஒழுக முடியும்; மாசற்ற மனம் உண்டாகும். பொய்யா நெறியில் ஒழுகமுடியும். அருளினால்தான் துன்பமின்றி ஆனந்த மாக வாழமுடியும். அருளினால்தான் துன்பமின்றி ஆனந்தமாக வாழமுடியும். அருளினால்தான் நினைத்த காரியங்களையெல்லாம் வெற்றியுடன் முடிக்க இயலும். அருளினால்தான் உலகில் உள்ள பந்தபாசங்களை யெல்லாம் அறுக்க முடியும். அருளே இன்பங்களுக்கெல்லாம் நாற்றங்காலாகும்; என்று இவ்வாறு அருளின் மாண்பைப் பற்றிக் கூறப்படுகின்றது. இக்கருத்துக்கள் ஔவைக் குறளிலே காணப்படுகின்றவை. இந்த அருளை இறைவன் அருள் என்று வைத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவோம். நம் உள்ளத்தில் பிறக்கும் அன்பு, இரக்கம், கருணை என்று வைத்துப் பார்ப்போம்- இப்படிப் பார்த்தாலும், அருளால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளனவோ, அவை கிடைக்காமல் போக மாட்டா. தெய்வத்தின் அருள் என்று வைத்துக் கொண்டாலும் அன்பு, இரக்கம், கருணை என்று வைத்துக் கொண்டாலும், இரண்டிற்கும் பலன் ஒன்றுதான். இது மறுக்கமுடியாததொரு உண்மையாகும். இனி அவ்வையாரின் குறள்கள் சிலவற்றைக் காண்போம். அருளால் உள்ளத்திலே அறிவுபிறக்கும், அருளல்லாத வேறு எதனாலும் அறிவு பிறக்காது. அருளின் காரணமாக- அன்பின் காரணமாக- கருணையின் காரணமாகப் பிறக்கும் அறிவினால் குற்றங்களையெல்லாம் போக்கிவிடலாம்; இவ்வுலக மாயையால் உள்ளத்தில் தோன்றும் ஆசாபாசங்களையெல்லாம் அறுத்தெறியலாம். அருளினால் அன்றி அகத்து அறிவு இல்லை அருளில் மலம் அறுக்கலாம். இக்குறள், அறிவு வளர்ச்சிக்குக் காரணம் அருள்தான்- அன்புதான். அந்த அருளினால் எக்குற்றத்திற்கும் ஆளாகாமல் வாழ முடியும் என்ற கருத்தை வலியுறுத்தியது. வாய்மையால், பொய்யா மனத்தினால், மாசற்ற தூய்மையால் ஈசன் அருள். உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும் ஈசன் அருள் உண்டாகும். இக்குறள் இறைவன் அருளை- அன்பை- கருணையை அடைவது எப்படி என்பதை எடுத்துரைத்தது. பொய் பேசுவோர் அன்புள்ளவராக வாழ முடியாது. ஈசன் அருளுக்கு இலக்காக முடியாது. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோர் இரக்கமுள்ளவராக இருக்கமுடியாது; இறைவன் கருணையை அடையமுடியாது. நல்லொழுக்கம் இல்லாதவர்களாலும் அன்புடன் நடக்கமுடியாது. ஆண்டவன் அருளைப் பெற முடியாது. உண்மையான அன்பு- அருள் பெறவேண்டுமானால், உண்மை, உள்ளத்தில் பொய்யாமை, நல்ல நடத்தை இம் மூன்றும் வேண்டியனவாகும். இப்பொருளையே இக்குறள் வலியுறுத்திற்று. உன்னும் கருமம் முடிக்கலாம் ஒள்ளிதாய் மன்னும் அருள் பெற்றக்கால். அருள்- அன்பு என்பது எப்பொழுதும் அழிவில்லாதது. புகழுடன் இவ்வுலகிலேயே நிலைத்திருப்பது இத்தகைய அருளை- அன்பைப் பெற்றுவிட்டால் நினைக்கும் காரியங்களை யெல்லாம் நிறைவேற்றலாம். எண்ணும் எக்காரியங்களும் பழுது படாமல் வெற்றியுடன் முடியும். இக்குறளும் அன்பின் சிறப்பை, அருளின் பெருமையை எடுத்துரைத்தது. அன்புள்ளவர்க்குப் பகைவர்கள் யாரும் இல்லை. அவர்களிடம் அன்பு காட்டும்- நட்புடன் இருக்கும்- உறவு கொண்டாடும் அன்பர்கள் தாம் மிகுதியாக இருப்பார்கள். ஆதலால் அவர்கள் நினைக்கும் எச்செயலும் கைகூடும்படி அன்பர்கள் உதவி செய்வார்கள். இக்கருத்தை வலியுறுத்தியது இக் குறள். எல்லாப் பொருளும் முடிக்கலாம் ஈசன்தன் தொல்லை அருள் பெற்றக்கால். ஈசனுடைய பழமையான அருளைப் பெற்றுவிட்டால் எல்லாக் காரியங்களையும் செய்துமுடிக்கலாம். ஈசன் அருள் பெற்றவர்களால் செய்துமுடிக்க இயலாத செயல்கள் எவையும் இல்லை. ஒவ்வொருவர்க்கும் உற்றதுணை அருள்- அன்பு என்பதே யாகும். நிலையான அன்பை- அருளைப் பெற்றவர்களால் எதையும் செய்து வெற்றிபெற முடியும். அவர்களால் ஆகாத செயல் ஒன்றும் இல்லை. எல்லாத் துணைகளையும்விட, அன்பின் துணையே- அருளின் துணையே சிறந்தது. எல்லா வலிமையையும்விட அன்பு வலிமையே- அருள் வலிமையே அழிக்க முடியாத வலிமையாகும். ஆதலால் அந்த அருள் வலிமையை அடைவதற்கே மக்கள் முயலவேண்டும். இக் கருத்தையே மேலே காட்டிய குறள் வலியுறுத்தியது. சிந்தையுள் நின்று சிவன் அருள் பெற்றக்கால் பந்தமாம் பாசம் அரும். மனத்துள்ளே நிற்கின்ற சிவபெருமானுடைய அருளைப் பெற்றுவிட்டால் இவ்வுலகிலே நம்மைப் பிணித்திருக்கும் ஆசைகளையெல்லாம் அறுத்தெறியலாம். அவ்வாசைகள் அனைத்தும் தாமே ஒழிந்து போகும். நிலை அற்ற இவ்வுலகப் பொருள்களின் மேல் மனிதர்கள் கொண்டிருக்கும் ஆசைக்கு அளவில்லை. எந்தப் பொருளைக் கண்டாலும், அது தனக்குச் சொந்தமா யிருக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் எண்ணுகிறான். அவன் அடைய நினைத்த பொருளைப் பெறுவதற்காக முயல்கின்றான் அந்தப் பொருளின்மேல் அவன் வைத்திருக்கும் ஆசை காரண மாகத் தவறான வழிகளிலே சென்றுகூட அப் பொருளைப் பெற முயல்கின்றான். ஆசை அவனுடைய கண்ணை மறைக்கின்றது; அறிவை அடக்குகின்றது. தான் கருதிய பொருளை அடைவதற் காகப் பிறரைத் துன்புறுத்தப் பின் வாங்க மாட்டான். பொய் சொல்லப் பின்வாங்க மாட்டான். யார் எக்கேடு கெட்டாலும் சரி, தான் இச்சித்த- விரும்பிய பொருள் தன்கையில் கிடைத்தே யாகவேண்டும் என்ற எண்ணத்துடன் விடாப்பிடியாக முயல் கின்றவரைக் காண்கின்றோம். ஆகையால், இத்தகைய ஆசையை அறுக்கவேண்டு மானால், அதற்கு அருள் வேண்டும். அருள் அறிவை வளர்க்கும், அறிவு உண்மை நெறியைக்காட்டும். அதனால் அளவு கடந்த ஆசையை அறுக்கலாம். ஆசையை அடக்கி ஆளமுடியுமானால், நீதி நெறி தவறாமல் நேர்மையான வழியிலே வாழ முடியும். இத்தகைய உண்மைகளை எல்லாம் அடக்கிக்கொண்டி ருப்பது மேலே காட்டிய குறள். மேலே எடுத்துக் காட்டிய ஐந்து குறள்களும் அன்பினால்- அருளினால் எல்லா நன்மைகளையும் அடையமுடியும் என்பதை உணர்த்தின. அன்புடன் வாழும் மக்களே அருள் உடையவர்கள்; அவர்களே சிறந்த காரியங்களைச் செய்து முடிக்க வல்லவர்கள்; இவ்வுலகிலே இன்புற்று வாழும் இயல்புள்ளவர்கள் என்ற உண்மைகளையும் அறிவித்தன. ஈசன் இருக்கும்இடம் கடவுளைப் பல உருவிலே வைத்து வணங்குவோர் உண்டு. ஒரு காலத்திலே- மிகப்பழங் காலத்திலே வாழ்ந்த மக்கள், தமது ஆற்றலுக்கு அடங்காதவற்றை யெல்லாம் தெய்வங்கள் என்று நம்பினர்; தம்மை அடக்கி ஆண்ட மக்களைக் கூடத் தெய்வங் களாக எண்ணினர். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் தெய்வங்களுக்கும், பெண்டுபிள்ளைகள், உற்றார் உறவினர், மைத்துனர், மாமன்மார்கள் கற்பிக்கப்பட்டனர். பல தெய்வங்கள், மக்களைப் போலவே குடும்பத்தினராகக் காட்சியளிப்பதைக் காண்கிறோம். அவை மக்களைப் போலவே இன்ப துன்பங்களுக்கு ஆளாயின என்றும் கதைகளிலே புராணங் களிலே படிக்கின்றோம். உண்மையான அறிவுள்ளவர்கள் இப்புராணக்கதைகளை நம்புவதில்லை. அவை யாவும் சில கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு தோன்றிய கற்பனை என்றுதான் கூறுகின்றனர். ஆராய்ச்சியும் அறிவும் நிறைந்த பலர், கடவுள் என்ற ஒரு பொருள் தனித்து நிற்க முடியாது; சிலர் நினைப்பது போல, இல்லறத்திலோ துறவறத்திலோ வாழ்ந்து இன்பதுன்பங்களை நுகர்ந்து கொண்டிருப்பவை கடவுள்கள் அல்ல; கடவுளுக்குத் தனித்த உருவமோ- நம்மை போன்ற அங்க அமைப்போ- நம்மைப்போல இன்ப துன்ப உணர்ச்சிகளோ இருக்க முடியாது; இருந்தால் அது கடவுள் அன்று என்று கூறுகின்றனர். கடவுள் என்பது எங்கும் நிறைந்தது; அது இல்லாத இடம் இல்லை; உயிர் உள்ளவை, உயிர் இல்லாதவை ஆகிய எல்லா வற்றிலும் கலந்து நிற்பதே கடவுள். அது நமது உடம்போடும் ஒன்றி நிற்கின்றது; உள்ளத்தோடும் கலந்து நிற்கின்றது. அறிவோடும் பினைந்து நிற்கின்றது. நம்மை விட்டுத் தனியாக இல்லை. இதுவே அறிஞர்கள் கொள்கை. இந்த உண்மையை ஔவையார் தம் குறளிலே பல உதாரணங்களால் விளக்கிக் கூறியிருக்கின்றார். கடவுள் நம்மோடு கலந்துதான் இருக்கின்றார் என்பதற்கு அவர் காட்டியிருக்கும் உதாரணங்கள் அனைவருக்கும் புரியக் கூடியவை. அவற்றைக் காண்போம். எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஓக்குமே உள் அகத்து ஈசன் ஒளி. மனத்துக்குள்ளேயே ஈசன் இருக்கின்றான். அவனுடைய ஒளியானது நம் உள்ளம் முழுவதும் பரவி நிற்கின்றது. எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய், அந்த எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது; இன்ன பகுதியில் இல்லை யென்று சொல்ல முடியாது; எள் முழுவதும்- எள்ளில் எல்லாவிடத்திலும் பரவி நிற்கின்றது. அதுபோலத்தான் இறைவன், நம் உள்ளத்தில் எங்கும் பரவி நிற்கிறான். இச்செய்யுள் எள்ளை உள்ளமாகவும் எண்ணெயை ஈசனாகவும் உருவகித்துக் கூறியது. பாலின் கண் நெய்போல் பரந்து நிற்குமே நூலின் கண் ஈசன் நுழைந்து என்பது மற்றொரு குறள். இதுவும் ஈசன் எப்படி எங்கும் நிறைந்துள்ளான் என்பதை எடுத்துரைக்கின்றது. பாலிலே இன்ன பகுதியில்தான் நெய் இருக்கிறது; இன்ன பகுதியில் நெய் இல்லை என்று சொல்ல முடியாது. நெய் இல்லாத பால் இது; நெய்யுள்ள பால் இது என்று பிரிக்கவும் முடியாது. பால் முழுவதிலும் நெய் பரவியிருக்கும். அது போலவே இறைவன் இல்லாத இடம் இன்னதுயென்று குறித்துக் காட்ட முடியாது. இந்த ஆன்மாவிலே ஈசன் இருக்கிறான்; இந்த ஆன்மாவிலே ஈசன் இல்லை என்று குறிப்பிட்டுக் கூறமுடியாது. எல்லா ஆன்மாக்களிலும் ஈசன் புகுந்து ஒன்றுபட்டிருக்கிறான். இச் செய்யுளில் நூல் என்பது ஆன்மாவைக் குறித்தது. பாலை ஆன்மாவாகவும், நெய்யை ஈசனாகவும் உருவகம் செய்கிறது இச்செய்யுள், பழத்தின் இரதம்போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால் ஈசன் நிலை. ஈசன் நிலையை எடுத்துக்காட்டுவதற்கு இக்குறளில் காணப்படும் உதாரணமும் யாருக்கும் புரியக்கூடிய எளிய உதாரணம். துதி செய்து கூறினால், ஈசன் நிற்கும் நிலையானது. பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போன்றதாகும். பழத்தினுள் அதன் ரசம் எங்கும் பரந்து நிற்பதே இயற்கை அது போலவே ஈசன் எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான். இவ்வாறு எங்கும் கலந்திருக்கும் ஈசனை, மக்கள் உள்ளத்திலும் ஒன்றியிருக்கும் ஈசனை எல்லாரும் எளிதிலே காணமுடியாது. சிலரால்தான் காணமுடியும். அஞ்சுகின்றவர் களாலும் காணமுடியாது; அலங்காரம் பிடித்தவர்களாலும் காணமுடியாது. அஞ்சுகின்றவர்கள் கோழைகள்; அவர்கள் இவ்வுலகிலே உள்ள மாயைகளிலே ஈடுபட்டுத் துன்புறுவார் கள்; தம்மை நல்ல வழியிலே செல்லவொட்டாமல் தடுக்கும் ஆசையை அவர்களால் ஒழிக்க முடியாது; தம்மைப் பலவழி களிலும் இழுத்துச் சென்று அலங்கோலம் பண்ணும் ஐம்புலன் களை அவர்களால் அடக்கி ஆளமுடியாது. ஆதலால் அஞ்சுந் தன்மை உள்ளவர்கள் எந்த நல்ல செயல்களையும் செய்யத் தகுதியற்றவர்களாய் விடுவார்கள். அகங்காரமும் மனிதர்களைச் சும்மாவிருக்கவிடாது; நல்லவை இவை; தீயவை இவை என்று எண்ணிப் பார்ப்பதற்குக் கூட இடந்தராது. அறிவை அடக்கி விடும்; ஆத்திரத்தைக் கிளப்பிவிடும்; இது அகங்காரத்தின் தன்மை. நாமே பெரியவர்: நமக்கு நிகர் யாருமே இல்லை; நம்மை யார் என்ன செய்ய முடியும்? என்ற எண்ணத்தை உண்டாக்கி வளர்ப்பது அகங்காரம்தான். அகங்காரம் படைத்தவர்கள் பிறர் சொல்வதைப் பொருட் படுத்த மாட்டார்கள். பிறர் சொல்வதற்கு இவர் என்ன சொல்வது? நாம் என்ன கேட்பது? என்று தலைநிமிர்ந்து நிற்பார்கள். ஆதலால் தாம் நினைத்தபடி எதையும் செய்வார்கள். ஆகையால், மக்களைக் கெடுப்பது, நல்வழியில் செல்லாமல் தடுப்பது அச்சமும் அகங்காரமும்உள்ள மனிதர்கள் உண்மையில், பொய்மையிது என்று காணும் திறமற்றவர்களாகத் தான் இருப்பார்கள். இந்த இரண்டையும் அடக்கினவர்களே உண்மையைக் காண்பார்கள். அச்சத்தையும் அகங்காரத்தையும் வெளிவிடாமல்- அவை இரண்டுக்கும் செயல் இல்லாமல்- அடக்கியவர்கள்தாம் ஈசன் நிலையையும் உண்மையாகக் காண முடியும். ஈசன் எங்கும் நிறைந்திருப்பது உண்மையானாலும் அவனை அச்சம் உள்ளவர்களாலும் காணமுடியாது; அகங்காரம் உள்ளவர்களாலும் காணமுடியாது. அச்சம் ஆங்காரம் அகத்து அடக்கினால் பின்னை நிச்சயம் ஆம் ஈசன் நிலை. அச்சத்தையும் அகங்காரத்தையும் வெளிவிடாமல் உள்ளே அடக்கிக் கொண்டால், அதன் பிறகுதான் ஈசன் இருக்கும் நிலையைக் காண்பது நிச்சயமாகும்; உறுதியாகும் என்று மேற்கூறிய குறளால் உண்மையைக் காணுகின்றோம். எங்கும் நிறைந்திருக்கும் ஈசனை யாரால் காணமுடியும்? யாரால் காண முடியாது? என்ற உண்மையை உணர்த்திற்று இக்குறள். இதற்கு அடுத்த குறள், ஈசனைக் காண்பதற்கான மற்றொரு வழியையும் எடுத்துக் கூறுகின்றது. நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும் அனைத்துயிர்க்கும் தானாம் அவன். இக்குறள் அச்சத்தையும் அகங்காரத்தையும் அடக்கினால் மட்டும் போதாது; ஈசன் வெளிப்பட்டுவிட மாட்டான்; அவனைக் கண்டுவிட முடியாது; அவனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காணமுடியும்; நினைக்காவிட்டால் காண முடியாது என்ற கருத்தை வெளியிடுகின்றது. இறைவன் எல்லாவுயிர்க்கும் ஒருவனாயிருப்பவன்; அதாவது எல்லாவுயிர்களிலும் பதுங்கி மறைந்திருப்பவன்; அவன் குற்றமற்றவனாயிருப்பான் என்பதே இக் குறளின் பொருள். இறைவனை நினைப்பவர்கள் குற்ற மற்ற- மாசு மறுவற்ற மனமுள்ளவர்களாயிருப்பர். மறுவற்ற மனமுள்ளவர்கள்தாம் ஈசனை மறவாமலிருப்பார்கள்; என்ற கருத்தும் இக் குறளில் அடங்கியிருப்பதைக் காணலாம். மேலே காட்டிய ஔவைக்குறள்கள் ஈசன் எங்கும் இருப்பவன்; அச்சத்தையும் அகங்காரத்தையும் விட்டவர்களால் தான் அவனைக் காணமுடியும்;என்றும் நினைப்பவர்கள் நெஞ்சிலேதான் இருப்பான். தம்மை அறிந்தவர்களே ஈசனை அறிய முடியும்; தம்மை மறந்தவர்கள் ஈசனைக் காணமுடியாது; என்ற உண்மைகளை உணர்த்தின. இலக்கியம் என்றால் என்ன? முதல் பகுதி (1963) முன்னுரை சாமி. சிதம்பரனார் அவர்களுடைய நூலுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆயினும் அவர்களுடைய துணைவியாரின் கட்டளைக்கிணங்க இதனை எழுதும் பேறு எனக்குக் கிட்டிற்று. சாமி. சிதம்பரனார் தமிழ்நூல் புலமை மிக்கவர்கள். ஆனால் பழமை விரும்பியல்ல. காலப் போக்கில் மாறிவரும் சமுதாயத்தின் வளர்ச்சியையும் அதற்கேற்ப மாறும் இலக்கிய வளர்ச்சியையும் அறிந்தவர்கள். எனவே பழம்பெருமை யென்னும் சுமையின் அழுத்தத்தை நாம் அவர்களுடைய பண்டைய இலக்கியங்களின் விமரிசனத்தில் காண்பதில்லை. இலக்கியம், சமுதாயத்தை அடித்தளமாகக் கொண்டது. ஒவ்வொரு சமுதாயமும் தமக்கென்றே சிறப்பியல்புகளைப் படைக்கின்றது. அவை தாங்கள் தோன்றிய காலத்தின் முத்திரை யைத் தாங்கி நிற்கின்றன. அவற்றுள் பொதிந்து கிடக்கும் கருத்துக்களில் சில காலமாறுதலால் காலாவதி யாகிவிடும்; சில செழுமை பெற்று வளரும். வளரும் இலக்கிய மரபுகளை மேற் கொண்டு தேய்ந்துவிட்டவற்றை ஒதுக்கி விட்டு தற்கால இலக்கியத்தை நாம் வளர்த்துச் செல்ல வேண்டும். இந்த அடிப்படைக் கண்ணோட்டத்தில் சாமி. சிதம்பரனார், பழங்கால இலக்கியங்களையும், தற்கால இலக்கியங்களையும் விமர்ச்சிக்கிறார்கள். இலக்கியம் என்றால் என்ன என்ற கட்டுரையில் இலக்கி யத்தின் பொருளை, முன்னோர் கண்ணோட்டத்திலும் ஆராய்ந்து, `அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுமே உள்ளடக்கம் என்று முடிவாகக் கூறுகிறார்கள். வேறு வகையாகக் கூறினால், வையத்து வாழ்வாங்கு வாழ்தல் எதுவெனச் சித்தரித்தலே இலக்கியம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இலக்கியத்தில் கொள்கை கூடாது என்று சிலர் இன்று பேசியும், எழுதியும் வருகிறார்கள். சாமி. சிதம்பரனார், இலக் கியமும் - கொள்கையும் பாரதியார் கவிதைகள் ஆகிய இரண்டு கட்டுரைகளில் கொள்கையும், அரசியலும் தமிழ் இலக்கிய மரபில் வளர்ச்சியுற்று வந்துள்ளவிதத்தைப் பல சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்கள். புறநானூற்றுக் காலம் முதல் பாரதி காலம்- வரை மக்களுக்கு அரசியலையும், உயர்ந்த கொள்கைகளையும் விளக்கிக் காட்ட எழுந்த இலக்கியங்களை யெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். சமுதாய முன்னேற்றத்திற்கு, அந்தந்தக் காலத்தில் தேவையான கருத்துக்களை இலக்கியங்கள் எவ்வாறு கலைமெருகோடு எடுத்துக் கூறுகின்றன என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களோடு சாமி. சிதம்பரனார் விளக்கு கிறார்கள். கவிதை மட்டுமே இலக்கியம் என்று கருதும் பண்டிதர் கள், சிறுகதை, நாவல் முதலியவற்றை இலக்கியமெனக் கொள்வ தில்லை. சாமி. சிதம்பரனார் தற்காலச் சிறுகதைகளை வரவேற்பதோடு வாழ்க்கையின் பல அம்சங்களைச் சாளரத்தின் வழியே காண்பதுபோலப் பலகோண நோக்கில் வாழ்க்கையைக் காணத் துணை செய்பவை சிறுகதைகள் என்று கூறுகிறார். சிறு கதை வாழ்க்கையின் ஒரு பகுதியை மற்றவற்றின் கலப்பை மறந்து, ஏன் விட்டுவிட்டுக் கவனிக்கிறது என்ற புதுமைப்பித்தன் சொற் களைச் சிறுகதையின் இலக்கணமாகக் காட்டுகிறார். சிறுகதை, நாவல் ஆகிய இரண்டு இலக்கியப் படைப்புத் துறைகளிலும் எத்தன்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்ற விமர்சனத்தில் சாமி. சிதம்பரனார் இறங்கவில்லை. ஆயி னும் அவற்றின் இலக்கியத் தரத்திற்கு உரைகல்லாக ஒருதர அள வீட்டை நமக்கு அறிவுறுத்துகிறார். குறிக்கோளை உடையவை, கருத்துக்களைக் கொண் டவை - அவைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்ற கருத்துடன் எழுதப்பட்டவை- பல நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டி, அவற்றால் பல உண்மைகளை உணர்த்துகின்றவை எல் லாம் இலக்கியம். தற்போது தமிழ்நாட்டில் தனித் தமிழ் கிளர்ச்சி யொன்று தோன்றியுள்ளது. பாடப் புத்தகங்களில், வேதநாயகம் பிள்ளை, பாரதியார் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் உரைநடையில் காணப்படும் வடமொழிச் சொற்களை நீக்கி விட்டு தமிழ் சொற்களைச் சேர்த்துத் திருத்தம் செய்யும் அளவுக்கு இவ்வெறி ஓங்கியுள்ளது. பொதுமக்களிடையே பரவி, வழக்கிலுள்ள சொற்களைக்கூடக் களைந்தெறிந்து விட்டுப் புதிதாகப் படைத்த பொருத்தமற்ற தமிழ்ச் சொற்களை அவற்றிற்குப் பதிலாகப் புகுத்தும் போக்கு வளர்ந்து வருகின்றது. இதைக் குறித்துச் சாமி. சிதம்பரனார் அவர்களின் கருத்து வருமாறு: தனித்தமிழ் நடையில்தான் எழுதவேண்டும். அல்லது கலப்புத் தமிழில் தான் எழுதவேண்டும் என்று முடிவுகட்டிக் கொண்டு எழுதுவதால் தமிழ் வளராது; இலக்கியங்களும் பெருகமாட்டா. பெரிய தேக்கம்தான் ஏற்படும். காப்பியடிக்கும் புத்தகங்கள் தான் பிறக்கும். அவரவர்கள் திறமைக்கும், அறிவுக்கும் ஏற்ற இயற்கையான நடையில்- தாரளமாக- தட்டுத்தடங்கல் இல்லாமல் எழுதுவது தான் சிறந்த நடையாகும்; மக்கள் மனதைக் கவரும் நடையாகும்; மொழியும் இலக்கியமும் வளர்வதற்கான நடையாகும். இந்நூலில் முற்போக்கான இலக்கியக் கருத்துக்களுக்காக சாமி. சிதம்பரனார் வாதாடியுள்ளார்கள். முக்கியமாக பழமையான இலக்கியங்களைக் காணவேண்டிய படைக்கப் படவேண்டிய அடிப்படையைப் பற்றியும் தமது தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். ஆழ்ந்து கற்று, மிக எளிய நடையில் தமது கருத்துக்களைச் சாமி. சிதம்பரனார் விளக்கி யுள்ளார்கள். பண்டைய இலக்கியங்களைப் பற்றி எழுத பழைய உரை யாசிரியர்களின் நடையை இன்றும் சில தமிழாசிரியர்கள் பயன் படுத்துகின்றனர். அவ்வாறுதான் எழுத முடியும் என்று வேறு சாதிக்கிறார்கள். எந்தக் கருத்தையும் பாமர மக்கள் பேசும் தமிழை இலக்கண வரம்புக்குட்படுத்தி எழுத முடியும் என்பதை சாமி. சிதம்பரனார் தமது தமிழ்நடையில் நிரூபித்துள்ளார்கள். அவர்களுடைய நூல்கள் பலவற்றை நான்படித்திருக்கிறேன். மிக எளிதில் எக்கருத்தையும் விளக்கத்தக்க எளிய, இனிய தமிழ் நடையை அவர்கள் படைத்திருக்கிறார்கள். சாமி. சிதம்பரனாரின் பிற நூல்களுக்கு அளித்த வரவேற் பைத் தமிழகம் இந்நூலுக்கும் அளிக்கும் என நான் நம்புகிறேன். அவர்களுடைய வெளிவராத எழுத்துக்களை வெளியிட முயன்று பணியாற்றி வரும் அவரது துணைவியாருக்கு தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது. பாளையங்கோட்டை 9-6-63 நா. வானமாமலை இலக்கியம் என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன என்ற விவாதம், தமிழிலே இதுவரையிலும் தோன்றியதில்லை. இப்பொழுது இந்த விவா தம் கிளம்பியிருக்கின்றது. இந்த விவாதம், எது இலக்கியம்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இதுவரையிலும் இலக்கியம் என்று நம்பி வந்த - நினைத்து வந்த - சில நூல்களைப் பற்றி, அவை இலக்கியம் தானா என்ற சந்தேகத்தையும் கேள்வி யையும் உண்டாக்கியிருக்கின்றது. கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றிச் செல்லும் போது சிந்தனைக்கு வழியில்லை. எந்த இடத்தில் சந்தேகமும், கேள்வி யும் பிறக்கின்றனவோ அந்த இடத்தில்தான் அறிவும் ஆராய்ச்சி யும் வளரும். இந்த உண்மையை வைத்து எண்ணும்போது, இலக் கியம் பற்றிய விவாதம் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் துணை செய்யும் என்பது உறுதி. ஒவ்வொருவருக்கும் தாம் எண்ணு வதைப்பற்றி வெளியிடும் கருத்துரிமையுண்டு. இத்தகைய கருத் துரிமைக்கு மதிப்புக் கொடுத்து, அக் கருத்தை ஆராயவேண்டும். இந்த முறையைப் பின்பற்றியே இலக்கியம் என்றால் என்ன என்பதைப் பற்றி எழுதுகின்றோம். இலக்கியத்தின் அமைப்பு பிழையில்லாமல்- இலக்கண வழுவில்லாமல்- எழுதப்பட் டிருப்பது இலக்கியம் என்பது இலக்கண நூலார் கொள்கை. எழுத்துருவிலே உள்ளவைகள் அனைத்தும் இலக்கியம் என்பது ஒரு பொதுவான கருத்து. கணக்கு இலக்கியம், சரித்திர இலக்கியம், வைத்திய இலக்கியம், சோதிட இலக்கியம், விஞ்ஞான இலக்கியம், அரசியல் இலக்கியம், மத இலக்கியம் என்று சொல்வது வழக்கம். இப்படிச் சொல்வது தொன்று தொட்ட வழக்கமாகும். ஆங்கிலத்திலும் இப்படித்தான் சொல்லுகின்றனர். ஆனால் இன்று இத்தகைய பொருள் நூல்களை இலக்கியம் என்று கொள்ளுவதில்லை. உள்ளத்திற்கு இன்பம் ஊட்டும் கற்பனை நிறைந்த நூல்களைப் பொதுவாக இலக்கியம் என்று நினைக்கின்றோம். படிக்கப் படிக்க நமது நெஞ்சத்தைக் கவரும் நடை, உள்ளத்திற்கு மகிழ்ச்சியை- துன்பத்தை உண்டாக் கும் கருத்து, நம்மைச் சிந்திக்கத்தூண்டும் சிறந்த மொழிகள், ஒரு முறை படித்தபின் வீசி எறிந்துவிடாமல் மீண்டும் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை எழுப்பும் தன்மை, அப்படியே திரும்பவும் படிக்கச் செய்யும் செயல், படித்தவைகளில் உள்ள பல செய்திகள் அப்படியே நம் உள்ளத்தில் தங்கிவிடும் இயல்பு, நமது வாழ்க்கையிலே தவறு நேராமல் நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கும் சக்தி; பல திறப்பட்ட அரிய பொருள்களை நாம் அறிந்து இன்புறச் செய்யும் பண்பு - இவைகளெல்லாம் அமைந்த நூல்களையே இலக்கியம் என்று எண்ணுகின்றோம். அந்த இயல்புகளுடன் அமைந்திருக்கும் நூல்கள் எவையா யினும் அவைகள் இலக்கியங்கள் தாம். அவைகள் செய்யுள் வடிவிலும் இருக்கலாம்; உரைநடையிலும்- அதாவது வசன நடையிலும் இருக்கலாம். செய்யுள் வடிவில் அமைந்திருக்கும் இலக்கியங்கள் எல் லாம் நம் உள்ளத்தைக் கவர்வதில்லை. சில கவிஞர்களுடைய செய்யுட்கள் தாம், படிப்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளு கின்றன. பலருடைய செய்யுட்களைப் படிக்க வேண்டிய நூல்கள் என்பதற்காகவே படிக்கின்றோம். இதைப்பற்றிப் பின்பு விளக்கமாகக் கூறுவோம். செய்யுளைப் போலவே நம் உள்ளத் தைக் கவரும் உரைநடையும் உண்டு; விஷயம் நன்றாக இருக்கின் றது, எப்படியாவது படித்து முடிப்போம் என்று நினைத்துக் கொண்டு படிக்கும் உரைநடையும் உண்டு. செய்யுளானாலும் சரி, வசனமானாலும் சரி, படிப்பவர்கள் சிந்தனையை அங்கே இங்கே அலையவிடாமல் தன் வசப்படுத் திக்கொண்டு செல்லும் அழகிய எளிய நடையில் இலக்கியங்கள் அமைந்திருக்க வேண்டும். ஒரு நல்ல இலக்கியத்திற்கு மக்களைப் படிப்பதற்குத் தூண்டும் இலக்கியத்திற்கு- இத்தகைய எழுத்து நடையே முதற்படி என்பது நமது கருத்து. முன்னோர்கள் செய்யுள் வடிவிலே இலக்கியங்களை எழுதி வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். செய்யுளிலே இனிய ஓசையுண்டு; பண்ணொடு பாடலாம்; செம்பகமான செய் யுட்கள், படிக்கும்போதே நம் மனத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளும்; முன்னோர்களின் உரைநடைகளிற்கூட செய் யுளின் வாடை வீசுவதைக் காணலாம். ஆதலால், இலக்கியத் திற்கு அதன் எழுத்தமைப்பு, இனிய நடை இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. இலக்கியம் பற்றி முன்னோர்கள் முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்ற பெயரால் அழைத்திருக்கின்றனர். நூல் என்றால் பல இனிய கருத்துக்களும், கற்பனைகளும் நிறைந்த செய்யுட்களின் தொகுப்பு என்று கூறிவிடலாம். இக்காலத்தில் இவ்வாறு பொருள் கூறுவது பொருந்தும். இதில் தவறு இல்லை. உரைநடை நூல்களுக்கும் இது பொருந்தும். முன்னோர்கள் அறம், பொருள் இன்பங்களைக் கூறுவதே செய்யுள்; அச்செய்யுள்கள் அமைந்ததே நூல் என்று கூறினார். செய்யுட்கள் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருட்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியன என்று தொல்காப்பியர் கூறியிருக்கின்றார். அவரும் தான் சொல்லு வதாகக் கூறவில்லை; தனக்கு முன்னிருந்த அறிஞர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கின்றார். இதனை, அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப என்ற தொல்காப்பியச் செய்யுள் இயல் சூத்திரத்தால் காணலாம். ஆகவே, நூல் என்றால் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் உரைப்பதே என்று அறியலாம். அறம் என்பது, மக்களின் கடமைகளைப் பற்றிக் கூறுவது: அவர்கள் பண்பைப் பற்றி விளக்குவது; அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிவிப்பது; அவர்கள் இன்புற்று வாழ் வதற்கு வழிகாட்டுவது. இவை போன்றவைகள் எல்லாம் அறத்தில் அடங்கும். பொருள், என்பது, செல்வத்தின் அவசியத்தைப் பற்றி உரைப்பது; அதைத் தேடும் வழிகளைப் பற்றிக்கூறுவது; எவை எவை நன்மை தரக்கூடிய பொருள்கள் என்பதை விளக்குவது; அறத்திற்கும் இன்பத்திற்கும் அடிப்படையானது பொருளாகும். ஆதலால் அதை ஈட்டவேண்டியதை வலியுறுத்துவது. இவைகளைப் பற்றி உரைப்பதே பொருளாகும். இன்பம் என்பது, உலக வாழ்வில் நாம் அடையும் இன்பம்; இன்பத்திற்கு அடிப்படை அன்பு; அன்பு வளரும் இடம் இல் லறம்; மனைவி மக்கள் இவர்களே அன்பைத் தழைக்கச் செய்யும் பருவமழை. இவர்களோடு கூடி இன்புறுவதைப் பற்றியும், இதே சமயத்தில், மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்வ தற்கான முறைகளைப் பற்றியும் கூறுவதே இன்பமாகும். பிறருக்கு உதவுதல், விருந்தோம்பல், வறியோர்க்கு உதவுதல் போன்ற அறங்கள் இல்லறத்தார்க்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்வதற்குக் காட்டும் வழிகளாகும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்று தலைப்பின்கீழ் மனித வாழ்வைப் பற்றிய எல்லா விபரங்களையும் மனித வாழ்வுக்குத் தேவையான எல்லாவற்றையும்- விரிவாகச் சொல்லிவிட முடியும். ஆதலால் தான், இந்த மூன்றுபொருள்களையும் கூறுவதே செய்யுட்கள்; அச் செய்யுட்களின் தொகுப்பே நூல் என்று கூறினர்; முடிவு கட்டினர். பிற்காலத்தில் இம்மூன்றுடன் வீட்டைப்பற்றியும் நூலில் கூறவேண்டும் என்று எண்ணினர் இவர்கள். அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூல் பயனே என்று சொல்லினர். தொல்காப்பியருக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் வீட் டைப்பற்றிக் கவலைப்படவில்லை. இவ்வுலகில் மக்கள் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் போதும்; அதுவே வீட்டு வாழ்க்கை- மோட்சம்- என்று எண்ணினர்; இறந்த பின் உள்ள வாழ்வைப்பற்றி அவர்கள் சிந்தித்தார்களா என்பது கூடச் சந்தேகந்தான். இவ்வுலகத்தில் துன்பம் இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியுடன், விரும்பும் தேவைகளையெல்லாம் பெற்று வாழ வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். ஆதலால், அவர்கள் நூல்களிலோ, செய்யுட்களிலோ வீட்டைப் பற்றி- மோட்சத் தைப் பற்றிப் பேசவேண்டும் என்று சொல்லவில்லை. திருவள்ளுவரும் இதைத்தான் சொன்னார். முன்னோரைப் போலவே அவர் வீட்டைப்பற்றிக் கூறாமல், அறம், பொருள், இன்பங்களைப்பற்றியே திருக்குறளில் சொல்லி வைத்தார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்னும் குறளே இதற்குச் சாட்சியாகும். இவ்வுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்கின்றவன், தேவருலகில் இன்புற்று வாழும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான் என்பதே இதன் பொருள். இன்பங்களைப் பற்றிக் கூறுவதே அவர் கொள்கை. பிற்காலத்தினர்தான்- மதப் பிரசாரம் தமிழகத்தில் வலுப் பட்ட பிறகுதான்- நான்கு பயனும் அமைய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அமைத்து நூல்களை இயற்ற வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்; இந்த நான்கையும் பெறுவதே மனிதப் பிறப்பின் பயன் என்றும் சொல்லினர். முன்னோர்கள் அறம், பொருள், இன்பங்களை விபரமாகக் கொண்டு எழுதப்படுவனவெல்லாம் நூல்கள் என்று கூறினர். அதன்பின் வீட்டைப்பற்றியும் நூல்களில் சொல்லவேண்டும் என்று உரைத்தனர். இத்தகைய நூல்களைப் பற்றியும், இன்று இலக்கியத்தைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களைப் பற்றியும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். முன்னோர் கருத்தையும் பின்னோர் கருத்துக்களையும் ஒன்றாக வைத்து எண்ணிப் பார்த்தால், இருவர் கருத்தும் ஏறக் குறைய ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம். முன்னோர்கள் நூல் என்று கூறுவதும், பின்னோர்கள் இலக்கியம் என்பதைப் பொதுப் பெயராகக் கொள்ளாமல், ஒருவகை நூலுக்கு மட்டும் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும் ஒத்த கருத்துடையன என்பதை அறியலாம். இலக்கியம் பற்றிய கருத்துக்கள் இலக்கியம் என்பதற்குக் குறிக்கோள் என ஒரு பொருள் உண்டு. இலட்சியம், நோக்கம், குறிக்கோள் இவைகளைக் கொண்டதே இலக்கியம். வாழ்க்கைக்கு வழிகாட்டுவது இலக்கியம். பழைய வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டிப் புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டுவது இலக்கியம். ஒரு சமுதாயத்தின் - தேசத்தின் - பழமையான பண்பாட்டைக் காண்பதற்குத் துணை செய்வது இலக்கியம். இப்படி எழுதப்படும் இலக்கியங்களில் உள்ள சொற்களும் சொற்றொடர்களும் உள்ளத்தைக் கவருவ தாக அமைந்திருக்க வேண்டும். இப்படி இருப்பதை இலக்கியம் அன்று என யாராலும் கூற முடியாது- இலக்கியத்தைப் பற்றி நமது கருத்து இது. இலக்கியம் என்பது மனித வாழ்வில் கண்ட உண்மை களை - அநுபவங்களை- வெளியிடுவது; இனிய சொற்களால் இவைகளை எடுத்துரைப்பது என்று கூறுவோர் உண்டு. மக் கள் நல்வழியிலே நடக்கச் செய்யும் தன்மையும், பெருமையும் உள்ள நூல்களே இலக்கியம் ஆகும் என்பர் சில அறிஞர்கள். படித்த பின், படித்துவிட்டோம்; இனி இந்தப் புத்தகத் தைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி மூடி வைத்துவிடாமல் - அல்லது குப்பைக் கூடையில் போட்டுவிடா மல்- மீண்டும் அடிக்கடி படிக்கத் தூண்டுவதே இலக்கியம் என்று கூறுவர் சிலர். புலவன் தான் கண்டறிந்த உண்மைகளை அப்படியே சொல்லோவியமாக்குவது; அந்தச் சொல்லோவியத்தில் அற நெறிகளை அமைத்துக் காட்டுவது; அவைகளின் மூலம் மக்களுக்கு அறிவுறுத்துவது; மக்களை நல்ல வழியிலே நடக்கும் படி தூண்டுவது-இதுவே இலக்கியமாகும் என்பது சிலர் கருத்து. இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்களின் தொகுப் பாகும் என்றார் மற்றொரு அறிஞர். படிப்போர் மனத்தை விரிவாக்கி, குறைகளைப் போக்கி நல்வழிப்படுத்தும் இயல்புள்ளதே இலக்கியமாகும் என்பது ஒரு அறிஞர் கருத்து. இவ்வாறு இலக்கியத்தைப் பற்றி அறிஞர்கள் கூறும் பல திறக் கருத்துக்களையும் எண்ணிப் பார்ப்போம். முன்னோர்கள் நூல் என்றால் என்ன என்பது பற்றிக் கூறியிருக்கும் இலக்கணத் தையும் எண்ணிப் பார்ப்போம். இலக்கியத்தைப் பற்றி இக்கால அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் அடங்குவதைக் காணலாம். ஆதலால்; முன்னோர் நூல் என்று சொல்லியிருப்பதும், இன்று நாம் இலக்கியம் என்று வழங்குவதும் பெரும்பாலும் ஒரே கருத்துள்ள சொற்கள்தாம். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்த முடிவுக்குத் தான் வரக்கூடும். இலக்கியமும் மொழிபெயர்ப்பும் மொழிபெயர்க்கப்பட்டவைகள் இலக்கியங்கள் அல்ல. பிற நாட்டுக் கதைகளையோ, கருத்துக்களையோ மற்றொரு மொழியில் அமைத்து எழுதுவதும் இலக்கியம் அல்ல என்று சிலர் கூறுகின்றனர். இது புதிய கருத்து, பண்டைத் தமிழர் கருத்துக்கு மாறுபட்ட கருத்துமாகும். மதவெறுப்பு, மொழி வெறுப்பு, இன வெறுப்புப் போன்ற வெறுப்புத் துறையிலே மூழ்கிக் கிடப்பவர்கள் தாம் இவ்வாறு கூறுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மை தானா என்பதை ஆராயவேண்டும். இவர்கள் கூறுவது சரிதான் என்று ஏற்றுக்கொண்டால் தமிழிலேயே எட்டுத்தொகை நூல்களும், பத்துப்பாட்டுந்தான் இலக்கியமாக மிஞ்சி நிற்கும். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை, பெருங்கதை, கம்பராமாயணம் போன்ற காவியங்க ளெல்லாம் இலக்கிய அட்டவணையிலிருந்து அடிபட்டுவிடும். சிந்தாமணிக் கதைக்கு மூலம் தாய்மொழி அன்று. சிலப் பதிகாரத்திலே வடநாட்டுக் கதைகள் நிரம்பியிருக்கின்றன. மணி மேகலையிலும் வடநாட்டுக் கதைகள் உண்டு; வடமொழியி லிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகள் உண்டு. பெருங்கதை முழுக்க முழுக்க வடநாட்டுக் கதை தான். கம்பராமாயணக் கதை யும் முதலில் வடமொழியில் எழுதப்பட்ட வான்மீக ராமாயணத் தைத் திருத்தியும், மாற்றியும், புதுக்கியும் எழுதப்பட்டதுதான். வடமொழியில் உள்ள வெறுப்பு, வடவர்மீதுள்ள கோபம், நம் நாட்டில் உள்ள தமிழர்களாகிய பிராமணர்களிடம் துவேஷம், வைதீக மதத்தில் உள்ள வெறுப்பு- இவைகளை அடிப்படையாகக் கொண்டே சிறந்த இலக்கியங்களையெல்லாம் ஒதுக்கக்கூடிய இத்தகைய ஒரு கொள்கையை வெளியிடுகின்றனர். பாரதியார்மேல் பழி வடமொழி வெறுப்பாளர்களிலே சிலர், இன்று பாரதி பாடல்களில் கூடத் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கி யிருக்கின்றனர். பாரதி கம்பனைப் புகழவில்லை; தொல்காப்பிய ரைத் தான் புகழ்ந்தார். பாரதியார். காப்பியர் என்று சொல்லிய விடங்களிலே கம்பர் என்ற சொல்லைப் பிற்காலத்தினர் வைத்துவிட்டனர். கம்பன் பிறந்த தமிழ் நாடு என்று பாட வில்லை; காப்பியன் பிறந்த தமிழ்நாடு என்றுதான் பாடினார். கம்பனைப் போலே என்று அவர் பாடவில்லை; காப்பியனைப் போல் என்றுதான் பாடினார் என்று சிலர் துணிந்து சொல்லத் தொடங்கிவிட்டனர். பாரதி பாடும் போது பக்கத்திலிருந்து கேட்டவர்போல், எழுதியவர்போல் இப்படிக் கூறுகின்றனர். இப்படிக் கூறுவது போன்ற துணிச்சலான பொய்வேறு எதுவும் இல்லை. பாரதி கம்பனைத்தான் புகழ்ந்தார் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. கம்பராமாயணத்தில் தாம் கொண்டி ருக்கும் வெறுப்புக்குப் பாரதியாரைத் துணை சேர்ப்பதற்குச் செய்யும் வீண் முயற்சிதான் இது. மொழி வெறி இத்தகைய பெரியதொரு துணிகரமான பொய்யைச் சொல்லத் தூண்டுகிறது. நமது காலத்துக் கவிஞர் பாரதியாரின் கவிதையையே மாற்ற முயற்சிக்கும் இதுபோன்ற ஒழுங்கீனம்- கொடுமை- நேர்மையற்ற தன்மை- வேறு எதுவுமே இல்லை. இத்தைகயவர்கள் மொழிபெயர்ப்புக்களையோ- அவை கள் எவ்வளவு சிறந்த நூல்களாயிருந்தாலும் அவைகளையோ இலக்கியம் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால் இவர்கள் கூற்று- கொள்கை- தமிழர் பண் பாட்டுக்கு ஒத்ததுதானா? தமிழ் முன்னோர்களின் கருத்தை ஒட்டியது தானா? என்பதை நாம் ஆராயவேண்டும். இவர்கள் கொள்கை இவர்களால் போற்றிக் கொண்டாடப்படும் தமிழர் நாகரிகத்திற்கே முரண்பட்டதாகும். நிச்சயமாக இவர்கள் தமிழர்களின் நல்ல வழியை மறந்து- அல்லது மறுத்து - உருப்படாத வழியில் செல்லுகின்றனர். இப்படிச் சொல்லுவதில் தவறில்லை. மொழிபெயர்ப்பு நூல்களும் இலக்கியமே மொழியினால் மக்கள் பெரும்பயன் பெறவேண்டுமானால் மக்கள் பேசும் மொழிகளிலே இலக்கியங்கள் ஏராளமாக இருக்க வேண்டும். இலக்கியம் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டுவது ஆதலின் பலதிறப்பட்ட நூல்கள் இலக்கியங்கள் வளர வேண்டும். இது அறிஞர்களின் கருத்து. இக்கருத்தைப் பண்டைத் தமிழ் அறிஞர்களும் பின்பற்றி வந்தனர்; சொல்லியும் எழுதியும் வைத்திருக்கின்றனர். தமிழ் நூல்களை முதல்நூல், வழிநூல் என இரண்டாக வகுத்தனர் முன்னோர். தொல்காப்பிய காலத்தில் இந்த முறை வழக்கத்தில் இருந்தது. முதல்நூல் என்பது அறிவுள்ளவர்கள், தாமாகவே சிந் தித்து, ஆராய்ந்து எழுதும் கதைகளும் கவிதைகளுமாகும்; வேறு மொழியிலிருந்து பெயர்க்கப்பட்டவை அல்ல. வழிநூல் என்பது நான்கு வகைப்படும்; அவை முதல் நூலைச் சுருக்கிக் கூறுதல்; முதல்நூலை விரிவாகக் கூறுதல்; முதல்நூலில் விரிவாக உள்ளதைச் சுருக்கியும், சுருக்கமாக உள்ளதை விரித்தும் கூறுதல்; வேறு மொழியில் உள்ள சிறந்த நூல்களை மொழிபெயர்த்துத் தருதல். இவ்வாறு வழிநூல்கள் நான்கு வகைப்படும். முதல் நூலைப் பற்றியும், வழிநூல்களைப் பற்றியும் இவ்வாறு தொல்காப்பிய மரபியலில் கூறப்பட்டிருக் கின்றது. இதில் மொழிபெயர்ப்பு நூல்களும் இலக்கியமாகும் என்ற கருத்துக் காணப்படுகின்றது. ஆகவே தொல்காப்பியர் காலத் திற்கு முன்னிருந்தே பிறமொழி இலக்கியங்களைத் தமிழிலே பெயர்க்கும் வழக்கம் இருந்தது; இலக்கியம் பெருகுவதற்கு இதை யும் ஒரு முறையாகக் கொண்டிருந்தனர் என்பதைக் காணலாம். ஆகவே, மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் இலக்கியங்கள் அல்ல என்பது தமிழர் கொள்கைக்கு முரண்பட்ட தாகும். சிறந்த நூல்கள்- நூல்கள்- இலக்கியங்கள் என்று மதிப்பிடத்தக்க நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அவைகளும் இலக் கியங்களேதாம். கம்பனையும், சிந்தாமணியையும் படித்துச் சுவைத்தவர்கள் அவைகள் மொழிபெயர்ப்பு நூல்கள், ஆகை யால் இலக்கியங்கள் அல்ல என்று சொல்லுவார்களானால் நாம் என்ன செய்வது? அவர்கள் அறிவுக்காக இரக்கப்பட வேண்டியதுதான். ஆகவே, இலக்கியங்கள் என்பதைப்பற்றி அறிஞர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப எழுதப்பட்டிருப்பவை அனைத்தும் இலக்கியங்கள்தாம். அவை ஒருவர் சொந்தக் கற் பனையில்- ஆராய்ச்சியில் திறமையில்- பிறந்தனவாயினும் சரி; அல்லது வேறு மொழியிலிருந்து பெயர்க்கப்பட்டிருப்பினும் சரிதான்; அவைகள் இலக்கிய அட்டவணையில் இருக்கத் தக்கவை என்பதில் தடையில்லை. இலக்கியமும் கொள்கையும் இலக்கியத்தைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது; கொள்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு இலக்கியங் கள் எழுதப்படுதல் கூடாது, மக்கள் படித்துச் சுவைக்கும் வகை யிலே பல பொருள்களைப் பற்றியும் எழுதப்படவேண்டும் என்று கூறுகின்றனர் சிலர். இக்கருத்து எப்பொழுது பிறந்தது? எதற்காகப் பிறந்தது? என்பதே நமக்குப் புரியவில்லை. இக்கருத்து வலுவுடையது தானா? இலக்கியம் வளர்வதற்கு ஏற்ற கருத்துத்தானா? இன்று இலக்கியம் என்று நம்மால் கருதப்படும் நூல்களிலே இக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்கள் எத்தனை இருக்கின்றன? என்பவைகளைப் பற்றி நாம் ஆராயத்தான் வேண்டும். நாம் கூறுவது தமிழைப் பற்றி மட்டுந்தான் தமிழ்; இலக்கி யத்தைப் பற்றி மட்டுந்தான் என்பதை நினைவூட்டுகிறோம். ஏனைய மொழி இலக்கியங்களைப் பற்றி ஏனைய மொழிகளிலே தேர்ந்தவர்கள்தான் சொல்லவேண்டும் ஆதலால் வேறு மொழி கள் பற்றி நாம் இங்கு ஒன்றும் குறிப்பிடவில்லை. தமிழ்மொழியைப் பொறுத்தவரையிலும் இலக்கியம், கொள்கையை- குறிக்கோளை- நோக்கத்தை- பிரசாரத்தைப் பொருளாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற வாதத்திற்கு இடம் இல்லை. தமிழிலே நாம் இலக்கியம் என்று கருதும் எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அவைகள் பிரசாரத்தையும் அடிப் படையாகக் கொண்டவைகள்தாம் என்பதில் ஐயம் இல்லை. திருக்குறள் அன்றுமுதல் இன்று வரையிலும் மத, இன, மொழி வெறுப்பின்றி எல்லோராலும் போற்றப்படும் திருக்குறளை எடுத்துக்கொள்ளுவோம் திருக்குறளை இலக்கியம் என்று வைத்துக்கொண்டு பார்ப்போம். அதில் கூறப்படும் அறங்கள் அனைத்தும் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டுவதற்குத்தான் என்பதை மறுப்பவர் யார்? ஆகவே, குறள் நூல் கொள்கையை வலியுறுத்துவதற்காகத்தான் தோன்றியது என்பதில் ஐயம் இல்லை. அனைவரும் போற்றத்தக்க அரிய கருத்துக்களை அள்ளி அள்ளித் தருவதானால்தான் குறள் உலகம் போற்றும் நூலாக விளங்குகின்றது. வள்ளுவர் உலகத்திற்குப் பொதுவான வர் என்பது பாரதியார் கருத்து என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளும் செந்தமிழ்ச் சிலப்பதிகாரத்தை எடுத் துக் கொள்ளுவோம். சில கொள்கைகளை வலியுறுத்துவதற் காகவே சிலப்பதிகாரம் தோன்றியது, மக்கள் மனதிலே சில கொள்கைகளைப் புகுத்துவதற்காகவே சிலப்பதிகாரம் எழுதப் பட்டது, அது நடந்த வரலாறா? கற்பனைக் கதையா? என்ற ஆராய்ச்சியைத் தள்ளி வைத்துவிட்டு, அந்நூல் எழுதியதன் நோக்கத்தை மட்டும் பார்ப்போம். சிலப்பதிகாரத்தில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன; பல அறவுரைகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் முதன்மையாக மூன்று கருத்துக்களை உணர்த்தவே அந்நூல் எழுதியதாகக் கூறப்படுகின்றது. அரசியலில் தவறு செய்த ஆட்சியாளர் தப்பித்துக் கொள்ள முடியாது; அறமே எமனாகத் தோன்றி அவரை அழிக்கும் என்பது ஒன்று. புகழ் பெற்ற பத்தினிப் பெண்டிரின் பெருமையை வானவர்களும் போற்றிக் கொண்டாடுவார்கள்; உயர்ந்தவர்கள் அனைவரும் போற்றுவார்கள் என்பது இரண்டு. பழவினையை மீற முடியாது; அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. பழவினையென்னும் ஊழ்வினையானது முன் வந்து அதன் பயனை ஊட்டியே தீரும் என்பது மூன்று. இந்த மூன்று கருத்துக்களையும் வலியுறுத்தவே சிலம்பு காரணமாக விளைந்த கதையைச் சிலப்பதிகாரம் என்ற பெயருடன் எழுதப்பட்டது. இந்த உண்மையைச் சிலப்பதிகாரப் பதிகத்திலே காணலாம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்பது சிலப்பதிகாரப் பதிகத்தில் காணும் அடிகள். சிலப் பதிகார ஆசிரியரான இளங்கோவடிகளே இம்மாதிரிப் பாடிய தாக இவ்வரிகள் அமைந்திருக்கின்றன. ஆகவே சிலப்பதிகாரம், சில கொள்கைகளை; கருத்துக் களை மக்களிடம் பரப்பவே தோன்றிய நூல் என்பதை மறுப் பதற்கில்லை. மணிமேகலை சிலப்பதிகாரத்தோடு கதைத் தொடர்புள்ளது. சிலப்பதி காரம் தோன்றிய காலத்தில் தோன்றியது மணிமேகலை என்னும் நூல். அதைப் படிப்போர் அது வலியுறுத்தும் கொள்கைகளைக் காணாமல் இருக்கமாட்டார். புத்த தர்மத்தைப் போதிப்பதே மணிமேகலையின் நோக்கம். எல்லா மதங்களையும்விட புத்த தர்மமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்டுவதே மணி மேகலையின் கொள்கை. இதை மணிமேகலையில் ஆதி முதல் அந்தம் வரையிலும் காணலாம். உலகில் உள்ள மக்கள் யாரும் பட்டினி கிடத்தல் கூடாது; எல்லா மக்களும் உணவுண்டு இன்புற்று வாழ வேண்டும்; எந்த மக்களும் பட்டினி கிடந்து சாவாமல் பாதுகாக்கப்பட வேண்டும்; அறங்களிலே சிறந்தது பசிப் பிணியால் வாடுவோர்க்கு உணவளித்துக் காப்பதுதான் என்ற கொள்கையை மணிமேகலை வலியுறுத்துகின்றது. அன்னதானம் என்னும் தர்மத்தின் சிறப்பை - பயனை- விளக்கப் பல கதைகள் மணிமேகலையில் காணப்படுகின்றன. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே என்று புறநானூற்றில் கூறப்படும் அடிகளை அப்படியே- மணிமேகலை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். இதன் மூலம் மக்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்றுவதே உலகை நிலைத் திருக்கச் செய்யும் பணி; வாழவைக்கும் வழி என்று வலியுறுத்து கிறது மணிமேகலை. ஆகவே மணிமேகலையும் சிலப்பதிகாரமும் பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கியந்தான்; கொள்கையை கருத்துக்களை- அடிப்படையாகக் கொண்ட இலக்கியந்தான் என்பதில் ஐயம் இல்லை. கம்பராமாயணம் இராமயணத்தை எடுத்துக் கொள்வோம். அறம் வெல்லும் பாவந் தோற்கும் என்பது இராமாயணத்தின் மூலக் கொள்கை. இவ்வுண்மையை வலியுறுத்தவே இராமாயணம் எழுந்தது. கம்பன் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது கருத்துக்களை வலியுறுத்திச் செல்லுகின்றான்; கம்பன் சிறந்த கவிஞன் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமையில்லை, கம்பராமாயணத்தைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள்கூட அவன் ஒப்பற்ற கவிஞன் என்பதை மறுப் பதில்லை. கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை யாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை திருடர்களே இல்லை; ஆகையால் யாரும் தங்கள் செல்வங்களைப் பூட்டி வைத்துப் பாதுகாப்பதும் இல்லை; பிச்சை ஏற்பவர்கள் யாரும் இல்லை; ஆதலால் இரப்போர்க்கு ஈவாரும் இல்லை. எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை. எல்லா மக்களும் எல்லாப் பெரிய செல்வங்களையும் பெற்றிருக் கின்றனர். ஆதலால் இல்லாத ஏழைகளும் இல்லை. பெரும் செல்வம் படைத்த பணக்காரர்களும் இல்லை. என்பவை நகரப் படலத்தில் கம்பன் கூறியிருப்பவை. அயோத்தியைக் கம்பன் கண்ணாற் கண்டதில்லை. அவன் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டின் எந்தப் பகுதியிலும் பொரு ளாதார சமத்துவம் இருந்தது என்று கூற முடியாது. வர்க்க பேத மற்ற சமுதாயத்தில்தான் கம்பன் கூறும் நிலைமை இருக்க முடியும். ஆதலால் கம்பன் தான் கொண்ட கருத்தை வலி யுறுத்தவே இவ்வாறு கூறினான். பொருளாதார உயர்வு தாழ்வற்ற சமுதாயம் தோன்றவேண்டும் என்பதே கம்பன் கருத்தாகும். கம்பனைப் படிப்போர், அவன் பல இடங்களில் அழுத்த மாகத் தன் கருத்தை வலியுறுத்திச் சொல்வதைக் காண்பார்கள். ஒரு சிறந்த கவிஞன் தன்மையும் இதுதான். பக்திப் பாடல்கள் தேவாரப் பாடல்களை எடுத்துக்கொண்டால் பக்தி மார்க் கத்தைப் பரப்புவதே அவைகளின் நோக்கம். அறம் ஒன்றையே போதித்த புத்த, சமணர்களின் போக்கை வெறுக்கும் பாடல் களையும்; சிவபெருமானைப் போற்றுவதாலேயே எல்லா இன்பங்களையும் பெற முடியும் என்று வலியுறுத்தும் பாடல் களையும் தேவாரங்களிலே காணுகின்றோம். சிவ பக்தியைப் பரப்புவதையே அடிப்படையாகக் கொண்டதே தேவாரம். இலக்கியங்கள் என்று எண்ணப்படும் சைவ சமய நூல்கள் எல்லாம் சைவ சமயத்தைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டவை என்பதில் ஐயம் இல்லை. இதைப் போலவே பிரபந்தப் பாடல்களை எடுத்துக் கொண்டாலும் அவைகளும், வைணவ சமயத்தையே மக்களிடம் பரப்புகின்றன. மக்களைத் திருமாலிடம் ஈடுபடும்படியே கூறுகின்றன. வைணவ சமயத்தை வளர்ப்பதும், திருமாலிடம் பக்தி செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்துவதுமே பிரபந்தங் களின் அடிப்படைக் கருத்து. உதாரணமாகப் பெரியாழ்வார் பாடல் ஒன்றைக் காண்போம். மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப்பேர் இட்டு அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்! கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின்! நாரணன்தம் அன்னை நரகம் புகாள் என்பது பெரியாழ்வார் திருமொழி. குழந்தைகளுக்குக் கல்லு, மண்ணு, மரம், பூ, செடி, கொடிகளின் பெயர்களை வைக்க வேண்டாம்; அழிந்து போகும் மனிதர்களின் பெயர்களையும், வைக்கவேண்டாம்; திருமாலின் பெயரை வைத்து அழையுங்கள்; தெய்வத்தின் பெயரை இட்டு அழையுங்கள்; இவ்வாறு தெய்வப் பெயர் வைத்த குழந்தைகளின் பெயர் சொல்லி அழைக்கும் அன்னை நரகம் புகமாட்டாள், என்று கூறுகிறது இச் செய்யுள். தெய்வப் பெயர்களைச் சொல்லி அழைப்பதிலேயே நன்மை உண்டு; ஆதலால் குழந்தைகளுக்குத் தெய்வங்களின் பெயரை வைத்து அழையுங்கள் என்று கூறும் இப்பாடல் பிரசாரம் அல்லவா? ஆகவே தமிழைப் பொறுத்த வரையிலும் இலக்கியங்கள் என்று சொல்லத்தக்க எந்நூல்களை எடுத்துக்கொண்டாலும் அவைகள் நோக்கத்தை- குறிக்கோளை- அடிப்படையாகக் கொண்டு தான் விளங்குகின்றன, பழைய இலக்கியங்கள் மட்டும் அல்ல, புதிய இலக்கியங்கள்- அதாவது நம் காலத்தில் தோன்றிய சிறந்த இலக்கியங்களும் கொள்கைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் பிறந்திருக்கின்றன. கொள்கைகளை வலியுறுத்துவதை- நோக்கங்களை- அடிப் படையாகக் கொண்ட நம் காலத்து இலக்கியங்களைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இலக்கியம் அன்றும் இன்றும் இலக்கியம் என்றால் என்ன? எது இலக்கியம்? இலக்கியம் என்பது எப்படி இருக்கவேண்டும்? இலக்கிய வகையில் எந்தெந்த நூல்களைச் சேர்க்கலாம்? இலக்கிய வகையில் சேரத்தகாதவை என்று எந்தெந்த நூல்களை ஒதுக்க வேண்டும்? கருத்தும் கொள் கையும் உடையவைதாம் இலக்கியமா? கருத்தோ கொள்கையோ இல்லாமல் வெறும் பொழுதுபோக்குக்காகப் பயன்படுவது தான் இலக்கியமா? இப்படிப் பல கேள்விகள் இலக்கியத்தைப் பற்றிப் புறப் பட்டிருக்கின்றன. இத்தகைய விவாதமும் கேள்விகளும் பழைய காலத்தில் இல்லை. இப்பொழுது சில ஆண்டுகளுக்கு முன் புதியனவாகத் தோன்றிய கேள்விகள்தாம் இவை. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களை மட்டும் படித்தவர்கள் இத்தகைய கேள் விகளை எழுப்பவில்லை. பல மொழிகளைப் பயின்றவர் களிடமிருந்து இத்தகைய கேள்விகள் பிறந்தன. இக்கேள்வி களையெல்லாம் எது இலக்கியம்? என்ற ஒரே கேள்வியுள் அடக்கிவிடலாம். எது இலக்கியம் என்ற கேள்விகளுக்கு விடையளிக்க முன்வருவோரில் சிலர் சில புதிய கருத்துக்களை வெளியிடு கின்றனர். நாம் இதுவரையிலும் இலக்கியம் என்று பாராட்டிப் படித்து வந்த சில நூல்கள் இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். என்று எண்ணி வந்த ஒரு பொதுவான கருத்துக்கு மாறான கருத்துக்களையும் வெளியிடுகின்றன. இலக்கியத்தைப் பற்றி இத்தகைய ஐயங்களும் கேள்விகளும் பிறந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இது இலக்கியம் வளருவதற்கு வழி காட்டுவதாகும். தமிழ் இலக்கியம் இனித் தேங்கித் தடைப்பட்டு நின்றுவிடாது. வளர்ந்து செல்லும். பிற நாட்டார் வணக்கம் செய்யும் வகையிலே, போற்றும் வகையிலே வளர்ச்சியடையும் என்பதில் ஐயம் இல்லை. கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றிச் செல்லும் போது சிந்தனைக்கு வழியில்லை; உண்மையை நினைத்துப் பார்க்க இட மில்லை. எந்த இடத்தில் சந்தேகமும் கேள்விகளும் பிறக்கின்ற னவோ அந்த இடத்தில் தான் அறிவும் ஆராய்ச்சியும் வளரும். இந்த உண்மையை வைத்து எண்ணும்போது, இலக்கியம் பற்றி இன்று புறப்பட்டிருக்கும் விவாதம் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் என்பது உறுதி. ஒவ்வொருவருக்கும் தாம் எண்ணுவதைப் பற்றி வெளியிடும் கருத்துரிமை உண்டு. இத்தகைய கருத்துரிமைக்கு மதிப்புக் கொடுத்து அக்கருத்தை ஆராயவேண்டும். பிறருடைய கருத்தை மதிக்காதவர்கள், அலட்சியம் பண்ணுகின்றவர்கள், அறிவிலே வளர்ச்சியடைய முடியாது; இவர் என்ன சொல்வது? நாம் என்ன கேட்பது என்று நினைப்பது அகங்காரத்தின் உச்ச நிலை யாகும். இப்படி நினைப்பது தமிழர் பண்பாட்டுக்கே முரண் பட்ட தாகும். எந்தப் பொருளைப் பற்றி யார் யார் என்ன சொன்னாலும் அவற்றைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும்; சொல்லுவோர் யார் என்பதைப் பற்றி நினைக்கவே கூடாது. சொல்லும் பொருளைப் பற்றியே நினைக்கவேண்டும்; அச் சொல்லில் உண்மையிருக்கிறதா என்று ஆராயவேண்டும்; உண்மையிருந்தால் கொள்ள வேண்டும்; உண்மையின்றேல் தள்ளி விடவேண்டும்; இதுவே அறிவுடைமையின் செயலாகும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கின்றார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதே அக்குறள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் இப்பண்பாடு குடிகொண்டிருந்தது. ஆதலால் இலக்கியம் பற்றிய கருத்துக்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம். தமிழ் இலக்கியம் வளர்வதற்கு நம்மால் இயன்ற பணியைச் செய்வோம் என்று எழுத்தாளர்கள் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் இலக்கியம் என்ற சொல் பண்டைக் காலத்தில் ஒரு பொதுச் சொல்லாக வழங்கிற்று. பிழையில்லாமல் இலக்கண வழுவில்லாமல் எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்பது இலக்கண நூலார் கொள்கை. பொதுவாக, எழுதப்பட்டிருப்பன அனைத்தும் இலக்கியங் கள்தாம் லிக் என்ற வடமொழியடியாகப் பிறந்த சொல்லே இலக்கியம் என்பது. எழுதப்பட்டிருப்பது என்பதே இதன் பொருள். எழுத்துருவிலே உள்ள அனைத்தும் இலக்கியம் என்பதே ஒரு பொதுவான கருத்து. அரசியல் இலக்கியம், சரித்திர இலக்கியம், விஞ்ஞான இலக்கியம், மதஇலக்கியம், சமுதாய இலக்கியம், கணக்கு இலக்கியம், நாடக இலக்கியம், சங்கீத இலக்கியம், வைத்திய இலக்கியம் என்றுதான் பலவகையான நூல்களையும் இலக்கியம் என்ற பொதுச் சொல்லால் வழங்கி வந்தனர்; வழங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலும் லிட்டரேச்சர், என்ற சொல்லுக்கு இப்படித்தான் பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் இன்று இலக்கியம் என்ற சொல்லை எல்லா நூல்களுக்கும் பொதுவாக வழங்குவதைச் சிலர் ஒப்புக் கொள்ள வில்லை. இலக்கியம் என்ற சொல்லுக்கு எழுதப்பட்டது என்ற பழம் பொருளைக் கொள்ளுவதில்லை. இலக்கு என்ற சொல்லி லிருந்தோ, அல்லது லட்சியம் என்ற சொல்லிலிருந்தோ தான் இலக்கியம் என்ற சொல் பிறந்ததாகக் கொள்கின்றனர். இலக்கியம் என்ற பொதுச் சொல், இன்று இவ்வாறு சிறப்புச் சொல்லாக வழங்குகின்றது. இவ்வாறு பழம் சொற்கள் புதுச் சொற்களாகப் பொருள் மாறி வழங்குவது இயல்புதான். ஒரு காலத்திலே நாற்றம் என்ற சொல் நறுமணம் என்ற பொருளிலே வழங்கிற்று. இன்று அச்சொல் துர்நாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்திலே நாகரிகம் என்ற சொல் கண்ணோட்டம், இரக்கம் என்ற பொரு ளில் வழங்கிற்று. இன்று நகர ரீதியாகப் பிறந்த பழக்க வழக்கம் என்ற பொருளில் நாகரிகம் என்ற சொல் வழங்குகின்றது. ஒரு காலத்தில் மன்றம் என்ற சொல் ஊருக்குப் பொதுவான மரத்தின் நிழலைக் குறித்தது. இன்று இச்சொல் சபை என்ற பொருளில் வழங்குகின்றது. ஒரு காலத்தில் கழகம் என்ற சொல் சூதாடும் இடத்தைக் குறித்தது. இன்று இச்சொல் சரிதம், சபை, இயக்கம் என்ற பொருள்களில் வழங்குகின்றது. இவ்வாறு சொற் கள் காலத்திற் கேற்ப, பொருள் வேறுபட்டு வழங்குவது இயல்பு. இந்த இயல்பை ஒட்டியே இன்று இலக்கியம் என்ற சொல்லும் புதுப் பொருளில் வழங்குகின்றது. இன்று எல்லா நூல்களையும் இலக்கியம் என்று கொள்ளு வதில்லை. உள்ளத்துக்கு இன்பம் பாய்ச்சும் கற்பனை நிறைந்த நூல்களை இலக்கியம் என்று கொள்ளுகின்றோம். படிக்கப் படிக்க நமது நெஞ்சத்தைக் கவரும் நடை- உள்ளத்திலே துன்பத்தையோ, மகிழ்ச்சியையோ உண்டாக்கும் கருத்து- நம்மை உணர்ச்சிவசமாக்கும் தன்மை- நம்மை சிந்திக்கத் தூண்டும் சிறந்த மொழிகள்- ஒரு முறை படித்தபின் வீசி எறிந்துவிடாமல் மீண்டும் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை எழுப்பும் இயல்பு- அவ்வாறே திரும்பவும் படிக்கச் செய்யும் செயல் - படித்தவைகளில் உள்ள பல செய்திகள் அப்படியே நம் உள்ளத் தில் ஒட்டிக் கொள்ளும் இயல்பு- நமது வாழ்க்கையில் தவறு நேராமல் நல்ல முறையிலே நடந்து கொள்ளவேண்டும் என்னும் உறுதியை உண்டாக்கும் சக்தி- பல திறப்பட்ட அரிய செய்தி களை நாம் அறிந்து இன்புறச் செய்யும் பண்பு- இவைகள் எல்லாம் அமைந்த நூல்களையே சிறந்த இலக்கியம் என்று எண்ணுகின்றோம். சிறப்பாக இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படுவதாகும். மக்களுடைய உள்ளத்தையும் பண்படுத்தப் பயன்படுவதாகும். இலக்கியங்களைப் பயின்றவர்கள் ரசிகர் களாக வாழலாம்; பிறருக்கு நல்ல அறங்களை எடுத்துரைப்பவர் களாக இருக்கலாம்; இயற்கையின் இன்பங்களைச் சுவைப் பவர்களாகவும், சுவைக்கச் செய்பவர்களாகவும் இருக்கலாம். மொழியைப் போதனை செய்யும் ஆசிரியராகவும் இருக்கலாம். அவர்கள் வேறு தொழில் நிபுணர்களாக ஆக முடியாது. இது வும் இலக்கியத்தின் இயல்பாகும். தொழில் நிபுணர்கள் இலக் கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தை மட்டும் பயின்றவர்கள் தொழில நிபுணர்களாக முடியாது. இந்த இயல்புகளுடன் அமைந்திருக்கும் நூல்கள் எவை யாயினும் அவைகள் இலக்கியங்கள் தாம். அவைகள் செய்யுள் வடிவிலும் இருக்கலாம்; உரைநடை அதாவது வசன நடை வடி விலும் இருக்கலாம். செய்யுள் வடிவில் அமைந்திருப்பதால் மட்டும் எல்லா நூல்களும் நம் உள்ளத்தைக் கவர்வதில்லை. சில கவிஞர்களுடைய செய்யுட்கள் தாம் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. பலருடைய செய்யுட்களைப் படிக்க வேண்டிய நூல் என்பதற்காகவே படிக்கின்றோம். தமிழிலே உள்ள வைத்திய நூல்களும், சோதிட நூல்களும், செய்யுள் வடிவில்தாம் எழுதப்பட்டிருக்கின்றன. அப்பாடல் களில் இலக்கியச் சுவை இருப்பதாக யாரும் நினைப்பதில்லை; சொல்லுவதும் இல்லை உண்மையில் அவைகளில் இலக்கியத் துக்குரிய பண்புகள் இல்லவே இல்லை. இதைப் பற்றிப் பின்னர் விளக்கமாகக் காண்போம். செய்யுளைப் போலவே நம் உள்ளத்தை இழுத்துக் கொண்டு செல்லும் உரைநடையும் உண்டு. சொல்லப்படும் செய் திகள் அருமையானவை; ஆராய்ந்து எடுக்கப்பட்டவை; படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை; ஆதலால் எப்படியாவது படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு படிக்கும் உரைநடையும் உண்டு. செய்யுளானாலும் சரி, வசனமானாலும் சரி, படிப்பவர் களைத் தன்னோடு அணைத்துக் கொள்ளவேண்டும்; அவர் களுடைய சிந்தையை அங்கே இங்கே அலையவிடாமல் தன்னு டன் இழுத்துக் கொண்டு போக வேண்டும். இத்தகைய அழகு- எளிய- தெளிவான நடையில் இலக்கியங்கள் அமைந்திருக்க வேண்டும். ஒரு நல்ல இலக்கியத்துக்கு- மக்களைப் படிக்கத் தூண்டும் இலக்கியத்துக்கு- இத்தகைய எழுத்து நடை முதற்படி யென்பது நமது கருத்து. இலக்கியப் பெருக்கம் ஒரு பேராற்றிலிருந்து பல சிற்றாறுகள் பிரிகின்றன. ஒரு ஏரியில் உள்ள தண்ணீர் பல கால்வாய்களின் வழியே பாய்ந்து செல்லுகின்றது. பேராற்றில் பிரிந்த சிற்றாறுகளிலிருந்தும் பல கால்வாய்கள் பிரிந்து செல்லுவதையும் பார்க்கின்றோம். இந்தத் தன்மை இலக்கியத்திற்கும் பொருந்தும். ஒரு சிறந்த இலக்கியத்தில் உள்ள உயர்ந்த கருத்துக்கள் விரிந்தும், சுருங்கியும் வேறு பல நூல்களாக வெளிவருவது இயற்கை. இப்படி வெளிவரும் நூல்கள் கதைகளாகவும் இருக் கலாம்; கருத்துக்களாகவும், பண்பாடுகளை விளக்குவனவாகவும் இருக்கலாம்; மதிப்புரைகள் அல்லது விமர்சனங்களாகவும், முதல் நூலின் சிறப்பை விளக்கும் ஆராய்ச்சிகளாகவும் இருக்க லாம். இவற்றையே முன்னோர்கள் வழி நூல்கள் என்று கூறினர். வழிநூல்களிலிருந்து பிறக்கும் நூல்களைச் சார்பு நூல்கள் என்று பிற்காலத்து இலக்கணங்களிலே கூறப்பட்டுள்ளது. ஒரு சிறந்த நூலிலிருந்து இவ்வாறு பல நூல்கள் பிறப் பதைத் தடுக்க முடியாது. பெரிய இலக்கியங்களில் அடங்கி யுள்ள சிறப்பு- பெருமை- இப்படித்தான் பீறிட்டுக் கொண்டு வெளியே பாயும். இப்படி வெளிவரும் வழி நூல்கள் எல்லாம் இலக்கியத் தன்மை பொருந்தியதாக இருக்கும்; அல்லது இலக்கியமாக விளங்கும் என்று சொல்லிவிட முடியாது. சில இலக்கியமாக விளங்கலாம்; சில சுவையற்றுக் காணப்படலாம்; வெறும் பஞ்சாங்கமாகக்கூட இருக்கலாம். ஆயினும் இவைகள் முதல் நூல்களின் மாண்பைக் காட்டுவன என்பதில் ஐயம் இல்லை. உதாரணமாக மகாபாரதத்தை எடுத்துக்கொள்ளுவோம். பாரதம், இதிகாசம் என்ற சொல்லப்படுகின்றது; அது ஒரு சிறந்த இலக்கியமாகவும் போற்றப்படுகின்றது. அதிலிருந்து பிறந்த நூல் களைப் பாருங்கள். சாகுந்தலத்திற்கு மூலம் பாரதந்தான்; நள வெண்பாவிற்கு மூலம் பாரதந்தான்; பகவத் கீதைக்கு மூலம் பார தந்தான்; இன்னும் எத்தனை எத்தனையோ நூல்கள். திருக்குறளைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்ட நீதிவெறி விளக்கம் நூறுபாடல்கள் கொண்டது. அவ்வளவும் திருக்குறளின் கருத்துக் களைச் சுருக்கிக் கூறுவதேயாகும், நீதிநெறி விளக்கத்திற்கு முன் தோன்றிய பல நீதி நூல்களிலும் திருக்குறளின் விளக்கத்தைக் காணலாம். நாலடியாரிலே பல குறட்பாடல்களின் கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளை அப்படியே எடுத்து வைத்துப் பாடிய பாடல் களும் உண்டு. இரண்டடி திருக்குறள் இரண்டடி அதற்கு உதார ணமான கதை. இப்படிப் பாடிய நூல்கள், சோமேசர் முது மொழி வெண்பா, இரங்கேசர் வெண்பா முதலிய நூல்கள், மயிலை சீனி. கோவிந்தராசன் என்பவர், திருக்குறள் காமத்துப் பாலை அப்படியே நாடகமாக எழுதியிருக்கின்றார். இன்று திருக்குறளைப் பற்றி வெளிவரும் ஆராய்ச்சி நூல் கள் பல. அவற்றுள் பல இலக்கிய வரிசையிலே நிற்பதற்குத் தகுதி யுடையவை. பெரிய புராணம் என்னும் நூலை எடுத்துக்கொண்டால், அது சுந்தரமூர்த்தி நாயனால் பாடிய திருத்தொண்டத் தொகை யின் விரிவாகும். பெரிய புராணத்துக்கு மூலநூல் திருத் தொண்டத் தொகையும், திருத்தொண்டர் திருவந்தாதியும் என்ப தில் ஐயம் இல்லை. இலக்கியமும் வரலாறும் சங்க இலக்கியங்களைப் பற்றித் தமிழில் இன்னும் போது மான வழிநூல்கள் வெளிவரவில்லை, சங்க இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சம் வரத் தொடங்கியிருக்கின்றன. நற்றிணை, குறுந்தொகை, அக நானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற அகப்பொருள் நூல்களிலே மனோதத்துவ உண்மைகள் பல அடங்கிக் கிடக் கின்றன; சரித்திரக் குறிப்புக்கள் பல காணப்படுகின்றன; பழந் தமிழர் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புக்கள் அமைந்திருக் கின்றன; அவர்கள் பண்பாட்டைக் காண இந்நூல்கள் பெரும் உதவி செய்கின்றன. இவைகளைப்பற்றி யெல்லாம் ஆராய்ந்து எழுதப்படுமானால் அவைகள் வழி நூல்களாகத் திகழும் என்பதில் ஐயம் இல்லை. புறநானூறு, பதிற்றுப்பத்து என்னும் இரண்டு நூல்களும் வரலாற்றுக் குறிப்புக்கள் நிறைந்த நூல்கள். சங்க காலத்தைப் பற்றியும், அதற்கு முன்னும் தமிழ்நாட்டிலிருந்த தமிழர்களைப் பற்றியும் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. பல்லவர் காலந் தொடங்கிய தமிழக வரலாறுதான் நமக்குக் கிடைக்கின்றது. பல்லவர்களுக்கு முன் நமது நாட்டை யாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் வரலாறுகளைக் காண முடியவில்லை. அவற்றைக் கண்டறிய, புறநானூற்றையும், பதிற்றுப்பத்தையும் தவிரப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வேறு எதுவும் கிடைக்கவில்லை. ஆதலால், இந்நூல்களிலே கிடைக்கும் குறிப்புக்களைக் கொண்டுதான் பழந்தமிழ்க் குடிகள் என்று பாராட்டப்படும் சேர, சோழ, பாண்டியர்களின் பண்டை வரலாற்றைக் காண முடியும். ஆங்கிலத்திலே சிறந்த இலக்கியமாகப் போற்றப்படும் ஷேக்பியரின் நூல்களைப் பற்றி எவ்வளவோ ஆராய்ச்சி நூல்கள் பிறந்திருக்கின்றன. இதைப்போலவே ஒவ்வொரு மொழியிலும் உள்ள உயர்ந்த இலக்கியங்களைப் பற்றிய வழி நூல்கள் பிறந்திருக்கின்றன. இது தவிர்க்க முடியாத இலக்கிய வளர்ச்சியாகும். கம்பராமாயணத்தை எடுத்துக்கொண்டால் அதன் பெருமையைப் பற்றிக்கூறும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. கம்பராமாயணச் சுருக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. கம்பனைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் கம்பனைப் பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் கம்பனைப்பற்றி எழுதியிருப்பவற்றில் இலக்கியமாகக் கொள்ளத்தக்கவைகள் பல உண்டு. செல்வ கேச வராய முதலியாரால் எழுதப்பட்ட கம்பர் என்ற கட்டுரை இலக்கிய அமைப்புடன் விளங்குகின்றது. வ.வெ.சு.அய்யர் எழுதி யிருக்கும் கம்பராமாயண ரசனையை இலக்கியம் அன்றென்று சொல்ல முடியுமா? திரு. சோமசுந்தர பாரதியாரால் எழுதப் பட்டுள்ள தசரதன் குறையும், கைகேயி நிறையும் என்ற நூல் இலக்கிய வரிசையில் சேரத்தக்கதாகும். என்னாம் எழுதப் பட்டுள்ள கம்பன் கண்ட தமிழகம் என்பதும் இலக்கிய வரிசையில் சேரத்தக்கதே. திருவாளர்கள் பிஸ்ரீ. ஆச்சாரியார். ரா.பி. சேதுப்பிள்ளை, பால்நாடார், சீனிவாச ராகவன் முதலிய வர்கள் கம்பனைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகளிலே பல இலக்கிய வரிசையிலே சேரத்தக்கவை என்பதில் ஐயம் இல்லை. திரு. ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் கம்பனும் மில்டனும், சிறியன சிந்தியாதான், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டிருக்கும் கம்பன் காவியம் என்ற நூலில் உள்ள கட்டுரைகள்- இவைகள் எல்லாம் இலக்கிய வரிசைகளில் சேரத்தக்கவை என்பதில் ஐயம் இல்லை. இன்னும் பல நூல்கள் கம்பனைப்பற்றி எழுதப்பட்டு வெளி வந்திருக்கின்றன. ஒரு இலக்கியத்தைப் பற்றிப் பாராட்டித்தான் எழுத வேண்டும் என்பதில்லை; அந்நூலில் உள்ள குறைகளையும் எடுத்துக்காட்டலாம். அப்படி எடுத்துக் காட்டப்படும் நூலும் சிறந்ததாக இருக்குமானால் இலக்கிய வரிசையிலே சேரக் கூடியதுதான். இவ்வாறு ஒரு நூலைப்பற்றி எழுதப்படுவதற்கு வழிநூல் என்றோ, சார்பு நூல் என்றோ சொல்லலாம் என்று குறிப் பிட்டோம். இவ்வாறு குறிப்பிடுவதுதான் முன்னோர், முறையும் வழக்கமுமாகும். இவைகளைப் பற்றி, `பற்றிநூல் என்று க.நா.சு. அவர்கள் குறிப்பிடுகின்றார். இது புதுப்பெயராகவும் அழகாகவும் அமைந்திருக்கின்றது. வழிநூல், சார்பு நூல் என்பதைக் குறிக்க பற்றி நூல் என்ற பெயரையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே நமது கருத்து. வழி நூல்களால் வளர்ச்சி பற்றி நூல்கள் அதாவது வழிநூல், சார்பு நூல்கள் தோன்றுவதால், மூல நூல்களைப்படிக்கும் வழக்கம் குறை கின்றது. மூல நூல்களை வெறுக்கும்படி செய்வதற்குக்கூட பற்றி நூல்கள் தோன்றுகின்றன; பற்றி நூல்கள் தோன்றுவதனால் சிறந்த தனி நூல்கள் பிறப்பதில்லை; தனி நூல் தோன்றுவதற்கு இவைகள் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்ற கருத்துக் களை க. நா. சு. வெளியிட்டிருக்கின்றார். இக்கருத்துள்ளவர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். இக்கருத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை. குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குன்றாது என்பது தமிழ்ப் பழ மொழி. உண்மையையும், சிறப்பையும் மூடி மறைத்து விட முடியாது. இந்த உண்மையை நாம் கண்ணெதிரே காண முடி கின்றது. சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கண்டன நூல்கள், கட்டுரை கள் சில வெளிவந்திருக்கின்றன; பாராட்டும் நூல்களும் வெளி வந்திருக்கின்றன; ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இந்த நூல்கள் சிலப்பதிகாரத்தின் சிறப்பைக் குறைத்து விடவில்லை; அதைப் படிப்போரைத் தடுத்துவிடவில்லை. சிலப்பதிகாரத்தைப் படித்துதான் வருகின்றனர்; படிக்கத்தான் ஆசைப்படுகின்றனர். சிலப்பதிகாரம் மலிவுப் பதிப்பாகக்கூட வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதுவே பற்றி நூல்களைக் குறித்து எண்ணும் நினைப்பு அவ்வளவு சரியானதன்றென்பதை மெய்ப்பிக்கும். கம்பனைப் பற்றிக் குறைகூறி எழுதப்பட்ட நூல்கள் சில; எழுதப்பட்ட கட்டுரைகள் பல; பேசப்பட்ட பேச்சுக்களுக்குக் கணக்கு வழக்கில்லை. ஆயினும் அந்நூல் அலட்சியம் செய்யப் படவில்லை, அதற்கு மாறாகப் பலரால் பாராட்டப்படுகின்றது; படிக்கப்படுகின்றது, கம்பனைப் படிக்க வேண்டிய ஆவல் தமிழர் களிடையில் மிகுதியாக வளர்ந்து தழைத்துப் பரவிக் கொண்டு வருகின்றது. திருக்குறளைப் பற்றியும் இப்படித்தான் சொல்லவேண்டும். திருக்குறளைப் பற்றிய கட்டுரைகளைப் படிப்பவர்கள் அந்த நூலைப் படிக்கத்தான் ஆசைப்படுகின்றனர். திருக்குறள் பல பதிப்புகள் வெளி வந்து விற்பனையாகியிருக்கின்றது; இன்னும் விற்பனையாகிக் கொண்டேயிருக்கின்றது. திருக்குறள் மூல பாடம் மட்டும் பல ஆயிரக்கணக்கான பதிப்புக்கள் வெளி வந்திருக்கின்றன. விரிவுரைகள், சுருக்க உரைகள், பதவுரைகள், பொழிப்புரைகள் பல வெளி வந்திருக்கின்றன. ஆகவே, பற்றி இலக்கியங்களால், பழி நூல், சார்பு நூல்களால் மூல நூல்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிட முடியாது என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். வழி நூல், சார்பு நூல்களால்- அதாவது பற்றி நூல்களால், ஒரு மூல நூல் மறைந்து விடும் என்றால், அந்த மூல நூல் இருந்து தான் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன? எந்தக் கண்டனங் களுக்கும் அஞ்சாமல் தலைநிமிர்ந்து நிற்கும் சிறந்த இலக்கியந் தான் உண்மை இலக்கியமாகும். சிறந்த இலக்கியமாகும். கண்டனங் களால், அவதூறுகளால் ஒரு நூல் மறைந்துவிடக் கூடுமானால் அந்நூல் சிறந்த இலக்கியம் அல்ல: சிறந்த பொருள் உடையது அல்ல; மக்கள் உள்ளத்தைக் கவரும் தன்மை அந் நூலில் இல்லை மக்கள் மனத்திற்கு இன்பமும் உறுதியும் ஊட்டும் சிறந்த உண்மையான கொள்கைகள் அந்த நூலில் இல்லை என்றுதான் முடிவுகட்ட வேண்டும். ஆகையால் பற்றி நூல்களும், இலக்கிய வளர்ச்சிக்குத் துணை செய்வன; இலக்கியங்களைப் படிக்கத் தூண்டுவன; புதிய இலக்கியங்களை எழுதுவதற்கு ஊக்கம் ஊட்டுவன என்றுதான் கொள்ள வேண்டும். பற்றி நூல்களும், சிறந்த முறையில் எழுதப்பட்டிருக்கு மானால் அவைகளும் இலக்கிய வரிசையில் சேரத் தகுதி பெற்ற வைகள் தாம். ஆதலால் பற்றி இலக்கியங்கள் வளர வேண்டும்; பெருக வேண்டும். இலக்கியம் வளர்வதற்குப் பற்றி நூல்கள் என்று சொல்லப்படும், வழி நூல்களும், சார்பு நூல்களும் பெருந் துணை செய்வன என்பதே நமது கருத்தாகும். பாரதியின் சுதந்திரப்பள்ளு பிற்காலத்திலே தமிழிலே புதிய புதிய இலக்கியங்கள் பல தோன்றின. இவ்விலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகை யென்று பிற்கால இலக்கணங்கள் பிரித்துக் கூறியிருக்கின்றன. இவற்றைத்தான் தொண்ணூற்றாறு வகையான பிரபந்தங்கள் என்பர். இந்தத் தொண்ணூற்றாறு வகையான நூல்களைப் பற்றியும் சதுரகராதியில் விளக்கங் காணலாம். தொல்காப்பியத்திலே பொதுவாக, விருந்து என்ற பெயரில் புதிய இலக்கியங்களுக்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. விருந்து என்னும் சொல், பரந்த- விரிந்த- பொருளுடையது. புதிய புதிய அமைப்பிலே தோன்றும் இலக்கியங்களை யெல்லாம் இச்சொல் குறிக்கும். புதிய, புதிய பாடல்களும், புதிய புதிய அமைப்புள்ள இலக்கியங்களும் காலத்தை ஒட்டிப் பிறந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் தொல் காப்பியர் கருத்து. ஆதலால் புத்திலக்கியங்களுக்கு விருந்தென்று பெயரிட்டார். இதை ஒட்டியே பிற்காலத்தில் அந்தாதி, கோவை, உலா, மடல், குறம், பள்ளு, போன்ற பல இலக்கியங்கள் பிறந்தன. இத்தகைய புதிய இலக்கியங்களிலே பள்ளு என்பதும் ஒன்று. பள்ளு என்பது உழவன், ஒருவன் நிலையை எடுத்துக் கூறுவது. பள்ளன், என்ற சொல்லிலிருந்து பிறந்ததே பள்ளு என்பதாகும். பள்ளன் மனைவியைப் பள்ளி என்று அழைப்பர். பள்ளு என்னும் பிரபந்தம் முதலில் தோன்றிய காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றே கருதுகின்றனர். பள்ளுகளிலே முதலில் தோன்றியது முக்கூடல் பள்ளு என்னும் நூலாகும். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் பிறகு நூற்றுக்கணக்கான பள்ளு நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயினும், பள்ளுகளிலே சிறந்து விளங்குவது இது ஒன்றுதான். பள்ளன் - உழவன் ஒருவன். அவனுக்கு மனைவிகள் இருவர். இளையாள்மேல் அவனுக்குக் காதல் மிகுதி. அவள் வீட்டில் தான் அதிகமாகத் தங்குகிறான். அவளுக்குத்தான் வேண்டிய வற்றைக் கொடுக்கிறான். இதனால் மூத்தாளுக்கு அவன் மேல் கோபம். அந்தப் பள்ளன் நிலப் பிரபுவின் அடிமைதான்; சுதந்திர உழவன் அல்லன். அதனால் மூத்தாள், நிலப்பிரபுவிடம் சென்று- அதாவது பண்ணையாரிடம் போய்ப் பள்ளன் சரியாக வேலைக்குப் போவதில்லை என்று கூறுகிறாள்; இளையாள் வீட்டில் படுத்து உறங்குகிறான் என்று கூறுகிறாள். உடனே பண்ணையார் போய்ப் பள்ளனைப் பார்க்கிறார். அவன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையென்று நம்புகிறார். பின்பு பண்ணையார் அவனை அதட்டி உருட்டி வேலைக்கு அனுப்புகிறார். அதன் பின்பும், அவன் மேல் மூத்த மனைவி சுமத்திய குற்றத்தை நம்பி அவனைத் தொழுவில் மாட்டித் தண்டனை அளிக்கிறார். பிறகு மூத்த மனைவியின் வேண்டுகோளின்படியே அவனை விடுதலை செய்கிறார். அதன் பின், மனைவிமார்கள் இருவரும் சமாதானமாகிவிடுகின்றனர். பள்ளன் பண்ணையாரிடம் சரியான அடிமையாக இருந்து உழைத்து வாழ்கின்றான். இதுதான் பள்ளு என்னும் பிரபந்தத்தில் வரும் கதை. எல்லாப் பள்ளுகளும் இவ்வாறே கதையை அமைத்துக் கொண்டு, நாடகம்போல் பாடப்பட்டிருக்கின்றன. பள்ளு நூல்களின் மூலம் நமது நாட்டு விவசாயத்தை அறியலாம். எத்தனை விதமான தானியங்கள் இருந்தன? மாடுகள் இருந்தன? என்பவற்றைக் காணலாம். நல்லநாள் பார்த்து ஏர் உழத் தொடங்கினர். விளைந்த நெல்லை, நிலப் பிரபுவுக்கும், தருமங்களுக்கும் பிரித்துவைத்தனர். இத்தகைய பழக்க வழக்கங்களைப் பள்ளு நூல்களின் மூலம் காண முடி கின்றது. ஆனால், பள்ளன் அடிமைப்பட்டவன்; பண்ணையார் சுக வாசி. பள்ளன் உழைக்கப் பிறந்தவன்; பண்ணையார் அதிகாரம் பண்ணப் பிறந்தவர். பள்ளனைப் பண்ணையார் மனிதனைப் போல நடத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. மாட்டைக் கவணையிலே கட்டி வைப்பதுபோல், அவனைத் தொழுவத் திலே கட்டித் துன்புறுத்தவும் பண்ணையாருக்கு அதிகாரம் உண்டு; இருந்தது. இச்செய்திகளையும் பள்ளு நூல்களிலே காணலாம். பள்ளு நூல்கள் நமது நாட்டின் பழைய நிலையை அறிவ தற்கான இலக்கியம்; இசையோடு பாடக்கூடிய இனிய பாடல்கள் அமைந்தவை; கற்பனைகளும் உவமைகளும் நிறைந்தவை. இந்த உண்மையை நாம் மறுக்கவில்லை. ஆனால் மக்களுக்கு முன்னேற்ற உணர்ச்சியை - சுதந்திர உணர்ச்சியை - பகுத்தறிவு உணர்ச்சியை - ஊட்டக்கூடிய இலக்கியங்களிலே பழைய பள்ளுகளைச் சேர்க்கமுடியாது. இந்த எண்ணம் நமது பாரதியாரின் கருத்திலே உதித் திருக்க வேண்டும். பழைய பள்ளுகள் எல்லாம் அடிமைப் பள்ளுகள்; அடிமை வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியங்கள்- பாட்டுக்கள் என்றே அவர் எண்ணியிருக்க வேண்டும். இப்படி எண்ணிய அவர் சும்மா இருக்கவில்லை. சுதந்திரப் பள்ளு என்ற தலைப்பிலே ஒரு பாடலைப் பாடி வைத்துவிட்டார். பழைய பள்ளு நூல் ஒன்றைப் படித்தபின் அவர் இப்பாடலைப் பாடியிருக்கவேண்டும். பண்ணையார்- நிலப்பிரபுவுக்கு உழவன் ஒருவன் அடிமை வேலை செய்வதை இலக்கியமாகப் பாடும் பழைய பள்ளுக் கதையை மறவாதீர்கள் அதை உள்ளத்திலே வைத்துக்கொண்டு சுதந்திரப் பள்ளுப் பாடலைப் படித்துப் பாருங்கள். ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்! என்று என்ற பல்லவியைப் பாடும்போதே, இனி நாம் எந்த நிலப் பிரபுவுக்கும் அடிமையல்ல; அடிமை விலங்கிலிருந்து விடுதலை பெற்று விட்டோம்!என்ற உணர்ச்சி உழவனுக்குத் தோன்றாமல் போகாது. இதற்குமேல் உள்ள பகுதிகளைப் பாடுங்கள். அடிமை இந்தியாவிலே நாம் இரண்டு ஏகாதிபத்தியங் களின் கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தோம். ஒன்று வைதீக ஏகாதிபத்தியம்; மற்றொன்று வெள்ளைக்கார ஏகாதிபத்தியம். இவ்விரண்டிலிருந்தும் விடுதலை பெறவேண்டும்; பெற்றே விட்டோம். நம்மிடம் பிச்சை வாங்கும் வைதீகரைப் பணிந்து வாழமாட்டோம். நம்மை ஏய்த்துப் பிழைப்போர் யாராயினும் சரி, அவர்களுக்குக் குற்றேவல் செய்யமாட்டோம் என்ற உணர்ச்சி கொள்ளும்படி மக்களைத் தட்டி எழுப்புகின்றார். இதனை, பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே;- வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே;- பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே;- நம்மை ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே என்ற முதல் பாட்டில் காணலாம். இனி அடிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்குப் பார்த்தாலும் சுதந்திரம் என்பதுதான் பேச்சு. மக்களுக்குள் எவ்வித வேற்றுமையும் இல்லை. இந்த நாட்டில் பிறந்த நாம் அனைவரும் ஒன்று என்பது உறுதியாகிவிட்டது. இவ்வுண்மை யைச் சங்கு கொண்டு வெற்றி முழக்கம் செய்வோம். இதை உலக மெல்லாம் அறியும்படி எடுத்து ஓதுவோம் என்று இரண்டா வது பாடலில் பாடுகிறார். வெற்றி முழக்கம் செய்கிறார்; வெற்றி முழக்கம் செய்யும் படி தூண்டுகிறார். இதனை, எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு;- நாம் எல்லோரும் சமம் என்பது உறுதி ஆச்சு; சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே;- இதைத் தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே என்ற பாடலால் காணலாம். இதற்கு அடுத்தபடியாகச் சுதந்திர நாட்டில் சமுதாய வாழ்வு எப்படியிருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறார் சுதந்திர நாட்டிலே ஏழைகள், அடிமைகள் இருக்கமாட்டார்கள்; எல்லா மக்களும் ஒன்றுதான். பொய் சொல்லி, ஏமாற்றி வாழும் கூட்டத்திற்கு இடமில்லை. அக் கூட்டம் ஒழிந்து போய்விட்டது, பணக்காரர்கள் பெரியோர், அதிகாரிகள் பெரியோர், நிலப்பிரபுக்கள் பெரியோர்- என்று மதிப்பிடும் காலம் போய்விட்டது; நல்லவர்கள் தாம் பெரியோர் கள் என்று மதிப்பிடும்- போற்றப்படும் காலம் வந்துவிட்டது. நய வஞ்சகம் பேசி மக்களை ஏமாற்றி வாழும் குள்ளநரிக் கும்பல் களுக்கு இனி நாச காலந்தான் என்று மூன்றாவது பாட்டில் பாடுகிறார். இதனை, எல்லோரும் ஒன்றெனும் காலம் வந்ததே;- பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே;- இனி நல்லோர் பெரியர்; என்னும் காலம் வந்ததே;- கெட்ட நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே! என்ற பாடலால் காணலாம். இதற்கு அடுத்தபடி வெளிப்படையாகவே நிலப்பிரபுத் துவத்தைக் கண்டித்துப் பாடியிருக்கிறார். அடிமை நாட்டில் உழவரை, தொழிலாளர்களை அடிமைகளாக நினைத்தோம்; இனி அப்படி நினைக்க மாட்டோம். உழவைப் போற்றுவோம்; தொழிலைப் போற்றுவோம்; உழவரைப் போற்றுவோம்; தொழி லாளரைப் போற்றுவோம். வீணாக உண்டுகளிக்கும் பண்ணை யர்களை- நிலப்பிரபுக்களை- ஏனைய- ஏமாற்றுக்காரர்களை ஏளனம் செய்வோம். அவர்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்போம்; நிந்திப்போம்; ஒழிப்போம். பயனற்ற வேலை களைச் செய்யமாட்டோம்; வெறும் வீணர்களுக்காக உழைத்து உடல் சோரமாட்டோம்; எந்த வகையிலும் எங்கள் உரிமையை விட்டுக்கொடோம் என்று பாடியிருக்கிறார். இதனை, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்;- வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்; விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்;- வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்! என்ற பாடலால் காணலாம். இப்பாடலின் ஐந்தாவது பாடலிலே, இந்த நாடு இனி நமக்கே உரிமை என்று பாடுகின்றார். சுதந்திரப்பள்ளு என்னும் பாடலில் மேலே காட்டிய நான்கு பகுதிகளையும் நன்றாகத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தால் பாரதியாரின் உள்ளக் கருத்துத் தெளிவாக விளங்கும். இப்பாடலுக்குச் சுதந்திரப் பள்ளு என்று பெயர் வைத்த காரணத்தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். பழைய பள்ளு நூல்கள் சுதந்திர உணர்ச்சியை ஊட்ட மாட்டா. அவை அடிமை வழக்கத்தைத்தான் காட்டி நிற்கின்றன. ஆகையால் அவைகள் எல்லாம் அடிமைப் பள்ளுகள்தாம். சுதந்திர உணர்ச்சியை ஊட்டக்கூடிய- எழுப்பக் கூடிய - பள்ளு நூல்கள் தோன்றவேண்டும்; எழுதப்பட வேண்டும் என்பதே பாரதியார் கருத்து. புதிய காவியங்களும், புதிய கவிதைகளும் தோன்றுவதற்கு வழிகாட்டினார் பாரதியார். அவர் வழியை இன்று தமிழகம் சரியாகப் பின்பற்றுகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கதை பழசாக இருந்தாலும் புதிய கருத்தமைத்துப் பாடு வதே காலத்திற்கேற்ற காவியமாகும் என்பதைப் பாஞ்சாலி சபதத்தின் மூலம் காட்டினார் பாரதி. சுதந்திர நாட்டிலே பாடப்படும் பிரபந்தங்கள் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு வழிகாட்டுவதுதான் சுதந்திரப் பள்ளு என்னும் பாடலாகும். நமது நாட்டு இளைஞர்களின் அப்பழுக்கற்ற நெஞ்சத் திலே வகுப்புவாத நஞ்சுநீர் பாய்ச்சும் புலவர்கள்- மொழி வெறி நஞ்சூட்டும் புலவர்கள்- பாரதி காட்டிய வழியிலே சென்றால் மக்களின் வாழ்வு எவ்வளவோ மேன்மை பெறும் என்பதில் ஐயம் இல்லை. எல்லா மக்களும் உண்மையான சுதந்திரம் உள்ளவர் களாய், ஒரு துயரும் இன்றி ஒன்றுபட்டு இன்புற்று வாழ்வார்கள் என்பது உறுதி. திருக்குறள் இலக்கியமே இலக்கியம், என்பது, சொல்லப்படும் விஷயங்களைப் பொறுத்தது மட்டும் அன்று; எழுதப்படும் முறையைப் பொறுத்தது; அமைந்திருக்கும் அமைப்பைப் பொறுத்தது. விஞ்ஞானமாக இருக்கலாம்; சரித்திரமாக இருக்கலாம்; மனோதத்துவமாக இருக்கலாம்; வேதாந்த சித்தாந்த தத்து வங்களாக இருக்கலாம்; நீதிகளாக இருக்கலாம்; வேறு எதுவாக இருந்தாலும் சரி, அவைகளையெல்லாம் இலக்கியச்சுவை பொருந்த எழுதிக்காட்ட முடியும். எழுதுவோரின் திறமையை யும், அறிவையும், நுண்ணறிவையும், ஆற்றலையும் பொறுத்தது இவ்விஷயம். இதைப்பற்றிப் புதுமைப்பித்தன், இலக்கியத்தின் உட் பிரிவுகள் என்ற கட்டுரையிலே தெளிவாகக் கூறியிருக்கின்றார். ஒரு நூல் இலக்கியமா? அல்லவா? என்பது அதன் அமைப்பைப் பொறுத்துத்தான் இருக்கிறது. தட்சிணத்துச் சரித்திர வீரர் என்று மகாதேவையா ஒரு சரித்திரம் எழுதியிருக் கிறார்; ஸ்ரீனிவாசய்யங்காரும் பல்லவ சரித்திரம் ஒன்றை எழுதி யிருக்கிறார். இரண்டும் சரித்திரந்தான். முன்னது இலக்கியம்; பின்னது சரித்திரம்- அல்ல, வெறும் பஞ்சாங்கம். சரித்திரத்தை இலக்கியத்தின் வாயிலாகத்தான் அறிய முடியும். இது புதுமைப்பித்தன் கருத்து. இது சிறந்த கருத்து என்ப தில் ஐயம் இல்லை. இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தால், ஒருவாறு எந்தப் புத்தகத்தையும், இது இலக்கியமா? அல்லவா என்று சொல்லிவிட முடியும். பண்டைத் தமிழ்ப் புலவர்களுக்கு, திருக்குறள் இலக் கியமா? அல்லவா? என்ற சந்தேகமே தோன்றியதில்லை; அவர் கள் அந்நூலை ஒப்பற்ற இலக்கியமாகவே முடிவுகட்டி விட்டார் கள். முன்னோர் கருத்தைக் காண ஒரே ஒரு உதாரணம் மட்டும் போதும். திருவள்ளுவ மாலை என்று ஒரு நூல் உண்டு. அது திருக் குறளின் அமைப்பை, சிறப்பைக் கூறும் வெண்பாக்கள் அடங்கிய நூல். சங்கப் புலவர்கள் திருக்குறளைப் புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் பாடிய பாடல்கள் என்று அந்நூலை பற்றிக் கூறப்படு கின்றது. இது ஆராய்ச்சிக்கு நிற்காத கூற்று. திருக்குறள் தோன்றிய காலத்தில் அப் பாடல்கள் பாடப்பட்டனவா? அவைகள் அனைத்தும் அதில் காணப்படுவதுபோலச் சங்கப் புலவர்கள் பாட்டுக்கள் தாமா? என்பவை இன்னும் முடிவு கட்டப்படாதவைகள். ஆனால் ஒன்று; அப் பாடல்கள்- திருவள்ளுமாலைப் பாடல்கள்- நமக்கு முன், பல நூற்றாண்டுகளுக்கு முன் பாடப் பட்டவை என்பதில் ஐயம் இல்லை. அந்நூல் திருக்குறளை இலக் கிய வரிசையிலே முதலில் நிற்கக் கூடிய நூல் என்றே பேசுகிறது. என்றும் புலராது யாணர்நாள் சொல்லுகினும் நின்று அலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல் என்பது அப்பாடல். இப்பாடல், இலக்கியம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட எடுத்துக்காட்டுகிறது. இலக்கியத்தின் பண்பு திருக்குறளில் அமைந்து கிடக்கிறது என்ப தையும் சொல்லுகிறது. நிலைத்த புகழுடன் வாழும் வள்ளுவன் வாய்ச்சொல் லாகிய திருக்குறளானது என்றும் அழியாமல் நிற்கக்கூடியது. எவ்வளவு நாட்கள் சென்றாலும் மாறுதல் இல்லாமல் நிலைத்து நின்று, அரிய பொருள்களாகிய மலர்களைப் பூத்து, இன்ப மாகிய தேனைச் சிந்துகின்ற தன்மையையுடையது. வாடிவதங் காத அழகிய தளிர்களையுடைய கற்பக விருட்சத்தின் வாடாத தெய்வத் தன்மை பொருந்திய மலர் போன்றதாகும். என்பதுமேலே காட்டிய வெண்பாவின் பொருள். இது இறையனார் என்பவரால் பாடப்பட்டதாக எழுதப்பட்டிருக்கும் வெண்பா. படிப்போர்க்குச் சுவை பயக்கும் பண்புள்ளது திருக் குறள் என்பதே இதன் கருத்து. சுவை பயக்கும் முறையிலே - படிப்போர் சலிப்படையாமல் திரும்பத் திரும்பப் படிக்கும் வகையிலே- எழுதப்பட்டிருப்பது என்பதையே இவ்வெண்பா எடுத்துக்காட்டிற்று. இலக்கியம் என்பதற்கான சான்றுகள் திருக்குறள் இலக்கிய வரிசையிலே நிற்கக்கூடியது என்ப தற்கான வேறு சில சான்றுகளையும் காண்போம். 1. திருக்குறள், முன்னோர்களின் கொள்கைப்படி அறம், பொருள், இன்பங்களைப் பொருளாக வைத்து எழுதப்பட்ட நூல். பின்னோர், நூல்களுக்குக் கூறிய, இலக்கணப்படி வீட்டு நெறியைப் பற்றியும் அதில் காண முடியும். 2. திருக்குறளில் காமத்துப்பால் என்று ஒரு பகுதி அமைந் திருப்பது ஒன்றே அது இலக்கியம் என்பதை விளக்கப் போதுமானதாகும். அது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலையை எடுத்துரைப்பது; அதே சமயத்தில், எப்படி வாழ்வது இன்ப வாழ்வு என்பதையும் அறியும்படி செய்வது. இதைவிட இலக்கியத்தின் பண்பை விளக்க வேறு என்ன வேண்டும்? 3. மூன்று பால்களாகப் பகுத்திருப்பது; தனித்தனி அதி காரங்களாகப் பிரித்திருப்பது; ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலைப்பெயர் கொடுத்திருப்பது; ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துப் பத்துக் குறள்கள்தாம் என்று எல்லை ஏற்படுத்திக் கொண்டிருப்பது- இவைகள் திறக்குறள் அழகு பொருந்த அமைக்கப்பட்ட இலக்கியம் என்பதையே எடுத்துக்காட்டும். 4. திருக்குறள், பண்ணோடு இசைத்துப் பாடும்படி அமைந் திருப்பதும் இலக்கியம் என்பதை விளக்கும். 5. திருக்குறள் எந்த விஷயங்களையும் தெளிவாகச் சொல் லுகிறது; உவமானங்களுடன் கூறுகிறது. பல குறள்கள் நம் சிந்தனையைத் தூண்டும்படி அமைந்திருக்கின்றன. 6. திருக்குறளைப் படித்தவர்கள் சில நூறு குறள்களை யாவது மனத்தில் பதியவைத்துக் கொள்ளுகின்றனர்; நாம் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அக்குறள்கள் நம்மை விட்டு விலகி விடுவதில்லை; இலக்கியச் சிறப்புக்கு இது ஒரு சான்று. 7. திருக்குறளைப் படித்தவர்கள் அதைத் திரும்பத் திரும்பப் படிக்காமல் இருப்பதில்லை. படிப்பதற்கு நேரம் இல்லா விட்டாலும் கூட மீண்டும் படிக்கவேண்டும் என்னும் எண்ணங் கொள்ளுகின்றனர். இவ்வெண்ணத்தைத் தூண்டுகின்றது திருக்குறள். இது இலக்கியத்தின் சிறந்த தன்மையாகும். 8. திருக்குறளைப் பற்றி எத்தனையோ ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு நூலைப்பற்றி எழுதப் படும் நூல்களை வழிநூல்கள் என்று முன்னோர்கள் குறிப்பிட்டி ருக்கின்றனர். சிறந்த இலக்கியமாக இருந்தால் தான் அதைப் பற்றிப் பல நூல்கள் சுருக்கமாகவும், விரிவாகவும் வெளிவரும், இந்த முறையில் வைத்துப் பார்க்கும்போது திருக்குறள் இலக்கிய வரிசையில் ஏறி நிற்பதைக் காணலாம். 9. பகவத் கீதை போன்ற நூல்களைத் திருக்குறளுக்கு ஒப்பிட்டுப் பேசுவது தவறு. பகவத்கீதை, மனிதனுடைய கடமையை வலியுறுத்த வந்த உயர்ந்த தத்துவ நூல். அது பல துறைகளைப் பற்றிக் கூறுவதற்காகவும் தோன்றியதன்று. திருக்குறள் அப்படி யன்று; மக்கள் வாழ்வுக்குத் தேவையான பல விஷயங்களைப் பற்றியும் கூறவந்ததாகும். எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளைப் பற்றி நாம் சொல்ல வில்லை. பல விஷயங்களைப் பற்றிக் கூறும் நூல் திருக்குறள் என்று கூறுகிறோம். இதை யாரும் மறுக்க முடியாது. இல்லறத்தை எப்படி நடத்தவேண்டும்? மனைவிக்கு என் னென்ன குணங்கள் இருக்கவேண்டும்? பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும்? பிள்ளைகள் பெற்றோர்க்குச் செய்யும் கடமை என்ன? துறவிகள் எப்படி வாழவேண்டும்? உண்மைத் துறவிகள் யாவர்? அரசன் எப்படியிருக்க வேண்டும்? அரசர்கள் கடமை என்ன? எப்படி அரசாள வேண்டும்? அமைச்சர்கள் எப்படியிருக்க வேண்டும்? அவர்கள் கடமை என்ன? ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாடு பசி, பட்டினியின்றி வாழ்வது எப்படி? அதற்காக என்ன செய்ய வேண்டும்? உழவுத் தொழில் எப்படி நடைபெற வேண்டும்? வியாபாரம் எப்படி நடக்கவேண்டும்? வைத்தியம் செய்வது எப்படி? மக்கள் நோயின்றி வாழ்வது எப்படி? காதலனும் காதலி யும் எவ்வாறு குடும்பம் நடத்தவேண்டும்? அவர்களுக்குள் எத்த கைய அன்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும்?- என்பவை களைப் பற்றி யெல்லாம் திருக்குறள் கூறுகின்றது. இவைகள் எல்லாம் வாழ்க்கையை எடுத்துக்காட்டுவன, வாழ்வதற்கு வழிகாட்டுவன, இலக்கியத்தின் அடிப்படைக் கொள்கை இவைகள் அல்லவா? மேலே கூறியவைகளை வைத்து எண்ணிப் பார்க்கும் போது திருக்குறளை இலக்கியம் அன்று என்று கூறுதல் தவறா கத்தான் முடியும். நீதிகளை எடுத்துக் கூறுகிறது என்பதற்காக அதை இலக்கிய வரிசையிலிருந்து விலக்கிவிட முடியாது. இலக்கிய வரிசையில் நீதிநூல்கள் மக்கள் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற கருத்துடன், மக்கள் உள்ளத்திலே பதியும் வரிசையில் எழுதப் பட்டிருக்கும் நூல்கள் எல்லாம் இலக்கிய வரிசையில் சேர்க்கத் தக்கவை என்பதே நமது கருத்து. இந்த வகையில் பார்க்கும் போது, தமிழில் உள்ள அத்தனை நீதிநூல்களும் இலக்கியந் தான். நாலடி, பழமொழி முதலிய பதினெண் கீழ்க்கணக்கு வரிசையில் உள்ள நீதிநூல்கள் எல்லாம் இலக்கிய வரிசையில் நிற்கத் தகுந்தவை என்பதே நமது கருத்து. பிற்காலத்து நூல்களாகிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதி விளக்கம் போன்ற நூல்கள் எல்லாம் இலக்கிய வரிசையில் சேர்ந்து நிற்கக் கூடியன என்பதில் ஐயம் இல்லை. இருப்பவைகளிலே மிகச் சிறு நூலாகிய ஆத்திசூடியை எடுத்துக்கொள்ளுவோம். அது சிறுவர்களுக்காக எழுதப் பட்டது; இளமைப் பருவத்திலேயே மக்கள் மனத்தில் நீதியை, நல்லொழுக்கத்தைப் பதியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதாகும். சிறிய வாக்கியத்தில் அரியபொருளை அமைத்து எழுதப்பட்டது. சிறிய தொடர்கள்தான் குழந்தை களின் உள்ளத்தில் எளிதில் ஒட்டும் என்னும் மனோதத்துவ உண்மையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது ஆத்திசூடி; நன்றாக எண்ணி, ஆராய்ந்து பொறுமையுடன் எழுதப்பட்டது ஆத்திசூடி. அறம் செய விரும்பு இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் ஊக்கமது கைவிடேல் நாடு ஒப்பன செய் கீழ்மை அகற்று என்பன போன்ற ஆத்திசூடி வாக்கியங்களின் ஆழ்ந்த பொருள் களை எண்ணிப் பாருங்கள். இளம்பிள்ளைகள் உள்ளத்திலே இக்கருத்துக்கள் வளர்ந்து வருமாயின், அவைகள் முதுமையிலே - பருவ காலத்திலே- பயன் தரும் என்பதை மறுக்க முடியுமா? ஆத்திசூடியின் அரிய பண்பை உணர்ந்துதான் பாரதியார் புதிய ஆத்திசூடி என்ற நூலைப் பாடினார் என்பதில் ஐயம் இல்லை. ஆத்திசூடி கூட இலக்கிய வரிசையில் சேரத் தகுந்தது என்று எண்ணும்போது, ஏனைய நீதி நூல்களை இலக்கிய வரிசை யில் சேர்க்காமல் எப்படி நீக்க முடியும்? தமிழுக்குரிய சிறப்பு இது தான்: பழந்தமிழ்ப் புலவர்கள் தாம் சொல்ல எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் இலக்கியச் சுவை பொருந்தக் கூற வேண்டும் என்ற கருத்துடனேயே பல நூல்களையும் எழுதியிருக் கின்றனர்; நீதிகளை அப்பட்டமாக எடுத்துச் சொன்னால் படிப் போர்க்கு இன்பந் தட்டாது; படிக்க மாட்டார்கள். பிடிக்காத சுவையுள்ள மருந்தைச் சர்க்கரை யோடோ, தேனோடோ கலந்து குழைத்துக் கொடுப்பது போலவே நீதி நூல்களில் நீதிகளைச் சுவை பொருந்திய தமிழுடன் கலந்து கூறியிருக்கின்றனர். ஆதலால் தான் நீதி நூல்கள் இலக்கியமாக விளங்குகின்றன. இனி, திருக்குறள்களிலும் ஏனைய நீதி நூல்களிலும் உள்ள இலக் கியச் சுவைக்குச் சில உதாரணங்களைக் காண்போம். திருக்குறள் முதலில் திருக்குறளில் உள்ள இலக்கியச் சுவையைக் காண்போம். இனிமையான சொற் பேசுவதுதான் நல்லது; கடு கடு என்று பேசுவதால் ஒரு பயனும் இல்லை உள்ளத்திலே எவ் வளவு ஆத்திரமிருந்தால்கூட, இனிமையாகப் பேசுவது ஒரு கலை. கலை மட்டும் அல்ல; பிறவிக் குணம் என்று கூறுவார்கள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்கள் இல்லை. ஆயினும் சிலர் எப்பொழுதும் எரிந்து விழுந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம் இவர்களுக்குச் சொல்லுவது போல அமைந் திருக்கின்றது ஒரு குறள். இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று என்பதே அக்குறள். இக்குறளில் இலக்கியச் சுவை இல்லை யென்று யார் கூறமுடியும்? இனிமையான சொற்களைப் பேசுவது தான் நன்மையாகும் என்று சொல்லும் இக்குறளும் இனிமையாகவே அமைந்திருக்கின்றது. இனிமையான சொற்கள் எவ்வளவோ இருக்கின்றன; அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுதல் தவறா கும். அப்படிப் பேசுதல், உண்டு சுவைப்பதற்குரிய இனிய பழங்கள் கண்முன்னே இருப்பதை எடுத்துத் தின்னாமல், சுவை யற்ற காயைத் தின்பதற்காக எடுத்துக் கொண்டதுபோல ஆகும் என்பதே பொருளாகும். இனிய சொல்லுக்குப் பழத்தை உவமை கூறியிருப்பது தான் இதில் உள்ள சிறப்பு. ஏதோ வாய்க்கு வந்த ஒரு சொல்லை உவமானமாகக் காட்டியதன்று இது; ஆழ்ந்து சிந்தித்துக் கூறிய அரிய உவமானம். பழம் பார்ப்பதற்கும் அழகாகக் காணப்படும்; தின்றாலும் சுவையைத் தரும். பெரும்பாலான பழங்கள், காயைவிடக் கண்ணுக்கு அழகு தருவதைக் காணுகின்றோம். வாழைக் காயைவிட வாழைப்பழம் பார்வைக்கும் அழகு; தின்பதற்கும் இனிமை, மாங்காயைவிட மாம்பழம் பார்வைக்கும் அழகு; தின்பதற்கும் சுவையானது. கொய்யாக்காயைவிடக் கொய்யாப் பழம் அழகு இவ்வாறே பலவகைப் பழங்கள் அமைந்திருக் கின்றன. இவைகளைப் போலச் சொற்கள் காதுக்கு மட்டும் இனிமையாக இருந்தால் போதாது; அவைகளின் பயனும் நன்மையாக இருக்கவேண்டும். சொல்லின் ஓசையும், அச் சொல்லின் பயனும் இனிமையாக அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்கவே கனியை உவமையாகக் கூறினார். இப்படிக் கூறுவதுதான் ஒப்பற்ற உவமை யாகும். நட்பின் சிறப்பைப்பற்றிக் கூறும் மற்றொரு குறளைக் காண்போம். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு. சிறந்த நூலானது அதைப் படிக்கப் படிக்க இன்பந் தந்து கொண்டேயிருக்கும். இதுபோலவே பழகப் பழக, நல்ல குண முடையவரின் நட்பும் இன்பந்தரும். நல்லவர்களின் நட்புக்குக் கூறியிருக்கும் உவமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்தக் குறளிலே இலக்கியம் என்றால் என்ன? என்ற கேள்விக்குத் தக்க விடையும் இருக்கிறது. ஒரு நல்ல நூல்- இலக்கியம்- படிக்கப் படிக்க இன்பம் தரும்; எத்தனை தரம் படித்தாலும் அலுப்புச் சலிப்புத் தோன்றாது. படிக்கத்தான் தோன்றும் இத்தகைய நூலே சிறந்த நூல்; சிறந்த இலக்கியம். இத்தகைய நூலைப் போன்றவர்களாக நண்பர்கள் இருக்கவேண்டும். உயர்ந்த கருத்துள்ள நூல்கள்தாம் படிக்கப் படிக்க இனிமை தரும். அதைப்போல், உயர்ந்த பண்புள்ள வர்கள் பழகப் பழக அன்பை வளர்ப்பவர்களாக இருப்பார்கள். நல்லவர்களின் நட்புக்குச் சிறந்த இலக்கியத்தை உவமை யாகக் காட்டியிருப்பது ஆழ்ந்து சிந்தித்துக் கூறிய உவமை யென்பதில் ஐயம் இல்லை. மற்றொரு குறளின் சிறப்பைக் காண்போம். ஒருவன் தன் காதலியைத் தழுவி இன்புறும்போது, தானே எண்ணிக் கொள் வதாக அமைந்தது அக் குறள்: தம்இல் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. அழகிய மாமை நிறம் படைத்த- மாந்தளிர் போன்ற நிறமுள்ள இவளைத் தழுவிக் கொண்டிருக்கும் இன்பமே இன்பம். இதற்கு நிகரான இன்பம் ஒன்றுதான் உண்டு. தமது வீட்டில் இருந்து கொண்டு, தம்மால் தேடப்பட்ட செல்வத்தைப் பிறர்க்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு மகிழ்வது போல இருக்கின்றது. இந்த ஒன்றைத்தான், இவளுடன் கூடியிருக்கும் இன்பத்திற்கு உவமையாகக் கூறலாம். இதில் உள்ள உவமையின் அருமையும் எண்ண எண்ண இன்பத்தைத் தருகின்றது. ஒருவன் தானே தேடிய செல்வத்தைப் பகுத்துக் கொடுப்பதால் அவனும் இன்பம் அடைகிறான். இது இந்த உவமையில் உள்ள உண்மை. தன் காதலி, தன் பெற்றோரால் தேடி மணம் செய்து வைக்கப்பட்டவள் அல்லள். தானாகவே காதல் உற்றுத் தேடிக் கொண்ட காதல் மனைவி. அவனை அவன் தழுவி இன்புறும் போது, அவன் மட்டும் இன்பத்தைச் சுவைக்க வில்லை; அவளும் இன்பத்தில் மூழ்கிக் கிடக்கின்றாள், இதை விளக்க வேறு எந்த உதாரணத்தைத்தான் சொல்லமுடியும்? தானே தேடிய செல்வத் தைப் பிறர்க்கும் கொடுத்து மகிழ்வித்துத் தானும் உண்டு மகிழ் வடையும் ஒன்றைத்தான் சொல்லமுடியும். திருக்குறளின் இலக்கியச் சிறப்பைக் காண இந்த மூன்று குறள்களே போதுமானவை. மூன்றும் முறையே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் இவைகளிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டவை. ஒரு பானைச் சோற்றுக்குப் பல சோற்றையா பதம் பார்க்கவேண்டும்? ஒரு சோற்றைப் பதம் பார்த்தால் போதாதா? நாலடியார் நாலடியாரும் ஒரு நீதி நூல்தான். தரத்திலே அதைத் திருக் குறளுடன் வைத்துப் பேச முடியாது. இரண்டாந்தரமாகத் தான் சொல்லவேண்டும். ஆனால் அதுவும் இலக்கியம் என்பதில் ஐயம் இல்லை. நாலடியார் பாட்டுக்கள் பலவும் இலக்கிய இன்பத்துடன் அமைந்திருக்கின்றன. இதோ ஒரு செய்யுளைப் படிப்போம். எனதுஎனது என்று இருக்கும் ஏழை பொருளை; எனதுஎனது என்று இருப்பன் யானும்;- தனது ஆயின் தானும் அதனை வழங்கான்; பயன்துவ்வான்; யானும் அதனை அது இதைப் பொருளுணர்ந்து படிப்பவர்கள் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். உண்மைப் பொருளும், நகைச்சுவையும் பொருந்திய பாடல்களில் இது ஒன்று; ஈயாமை என்ற அதிகாரத்தில் உள்ள செய்யுள். அறிவில்லாதவன் பொருளைச் சேர்த்துவைப்பான்; செலவு செய்யமாட்டான்; அதைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பான்; என்னுடையது என்னுடையது என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். அவன் தன்னு டையது என்று சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கின்ற அதே பொருளை நானும் பார்ப்பேன்; என்னுடையது என்னுடையது என்று சொல்லிக்கொண்டேயிருப்பேன். பொருள் படைத்த அவனுக்கும், பொருள் தேடாத எனக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. உண்மையில் அப்பொருள் அவனுடையதாக இருக்கு மானால், அவன் அதைப் பிறருக்கும் உதவ வேண்டும்; தானும் அனுபவிக்கவேண்டும். இவ்விரண்டையும் அவன் செய்ய வில்லை; சும்மாதான் பார்த்துக் கொண்டிருக்கின்றான். நானும் அனுபவிக்காமல் பார்த்துக் கொண்டே யிருக்கின்றேன் என்னும் பொருளை இச் செய்யுளில் காணுகின்றோம். செலவு செய்கின்றவனைத்தான் செல்வத்தின் சொந்தக் காரனாகக் கூறலாம்; செல்வத்திற்கு உரிமை படைத்தவனாகச் சொல்லலாம். பொருளைச் சும்மா வைத்திருப்பவனும், அப் பொருளையே தன்னுடையது என்று சொல்லிக்கொண்டிருப் பவனும் ஒன்றுதான். இவர்களிலே யார் செல்வர்? யார் ஏழை? இக் கருத்துடைய பாடல் எவ்வளவு அழகாக அமைந் திருக்கின்றது! செலவு செய்யாத கருமிகளை- பொருளைச் சேர்த்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் அற்பர்களைப் பரி கசிக்க இப்பாடல் ஒன்றே போதுமானது. நாலடியாரில் ஈயாமை என்ற அதிகாரத்தில் உள்ள பத்து வெண்பாக்களும் இத்தகைய இனிய சுவையுள்ள வெண்பாக்களாகவே அமைந்திருக்கின்றன. காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனில் பலராவர். நமது கால் ஆடிக்கொண்டிருக்கும்போது, அதாவது நாம் செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழும்போது, நமக்கு உறவினர் அளவு கடந்திருப்பார்கள்; தெருவோடு போவோர் வருவோர்கள் எல்லாம் நம்முடன் சொந்தங் கொண்டாடிக் கொண்டு வருவார்கள். இப்படிச் சொந்தங் கொண்டாடிக் கொண்டு வருவோர் வானத்தில் அசைகின்ற நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாயிருப்பார்கள். இந்த உண்மையை அழகாகக் கூறியிருக்கின்றது. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும் ஈக்கால் துணையும் ஈயாதார் நட்பு என்னாம்? நாயின் காலில் உள்ள சிறு விரல்கள் நெருக்கமாக இருக்கின்றன; ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அது போல் நம்மோடு நெருங்கிய நட்பினராயிருக்கலாம். ஈயின் கால்கள் மிகச் சிறியவை. அந்தச் சிறிய அளவுகூடச் சமயம் வந்த போது உதவி செய்யாதவர்கள் நட்பினராயிருப்பதனால் என்ன பயன்? நட்பின் நெருக்கத்திற்கு நாய்க்கால் சிறுவிரலையும், சிறு உதவிக்கு ஈயின் காலையும் ஒப்பிட்டுக் கூறியதில் உள்ள அழகே அழகு! இவை இரண்டும் நாலடியாரில் காணப்பட்டவைகளே யாம். இவை போன்ற, அழகும் சுவையும் பொருந்திய பகுதிகள் நிறைந்த நீதிநூல் நாலடியார். அதை இலக்கிய வரிசையிலிருந்து விலக்கிவிட முடியாது. பழமொழி பழமொழி என்பதும் நீதிநூல்களில் ஒன்று. நாலடியார் போலவே நானூறு பாடல்களைக் கொண்டது. நானூறும் வெண் பாக்கள்தாம். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துப் பாடப்பட்டது. நீர்தகவு இல்லார் நிரம்பாமைத் தம்நலியின் கூர்த்து அவரைத் தாம் நலிதல்கோள் அன்றால் - சான்றவர்க்கு பார்த்துஓடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின் பேர்த்துநாய் கவ்வினார் இல். இது அப் பழமொழியில் உள்ள ஒரு வெண்பா. இதன் பொருளைக் காண்போம். நல்ல குணமும் பெருமையும் அற்றவர்கள் அறிவில்லாதவர்கள். அவர்கள் அறிவில்லாமை காரணமாகப் பிறரைத் துன்புறுத்தலாம். அறிவும் நற்குணங்கள் நிரம்பியவர்களும் அவர்களால் துன்புறுத்தப்படலாம். அப் பொழுது அந்தச் சான்றோர், அவர்கள் மேல் கோபித்து, எதிர்த்துத் துன்புறுத்தமாட்டார்கள். அது அவர்களுடைய கொள்கை அன்று. நாய் கடித்துவிட்டால், அதற்காகக் கோபப் பட்டு அந்த நாயைத் துரத்திக்கொண்டு போய், அதைத் திருப்பிக் கடிப்பவர்கள் யாரும் இல்லை என்பதே இவ் வெண்பாவின் பொருள். இச்செய்யுள், அறிவற்றவரை- காரணமில்லாமல் பிறரைத் துன்புறுத்துகின்றவரை- நாய்க்கு ஒப்பிட்டுக் கூறியது. அறிவும் பண்பும் உள்ளவர்கள் தீயோரை எதிர்த்து நிற்க மாட்டார்கள்; ஒதுங்கிப் போய்விடுவார்கள் என்ற கருத்தை ஒரு நல்ல உவமானத்துடன் கூறிய செய்யுள் இது. இந்தப் பாடலில் இலக்கியச் சுவை இல்லாமல் இல்லை. இது போன்ற பல செய்யுட்களைப் பழமொழியிலே காணலாம். இக்கருத்துச் சரியா? தவறா? என்பது வேறு விஷயம். திருக்குறள், நாலடியார், பழமொழி போன்ற நூல்களில் காணப்படுவது போலவே, பல இனிய பாடல்களை ஏனைய நீதி நூல்களிலே காணலாம். ஆகையால் தமிழில் உள்ள நீதி நூல் களை எல்லாம், நீதி நூல்கள் என்று சொல்லி இலக்கிய வரிசையிலிருந்து அடித்துவிட முடியாது. தீயோர்களின் கொடுமையை எடுத்துக் காட்டுகின்றன; தீமையால் அழிந்து போனவர்களின் வரலாறுகளைச் சுட்டிக் காட்டுகின்றன; நன்றாக வாழ்வதற்கான வழிகள் இவைகள் என்று எடுத்துரைக்கின்றன; எதிர்கால வாழ்க்கைக்கு வழி காட்டு வதையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன; சொல்லும் பொருள், படிப்போர் உள்ளத்திலே பதியும் படி உவ மானங்களுடன் விளக்கப்படுகின்றன- இப்படிப்பட்ட இயல் புடன் காணப்படும் நீதிநூல்களையெல்லாம் இலக்கியங்கள் என்று ஏற்றுக் கொள்ளுவதுதான் பொருத்தமானதாகும். மக்கள் இலக்கியம் இன்றுள்ள நமது சமுதாயம் இரண்டு வர்க்கங்களைக் கொண்டது. அவை, பொருள் படைத்தவர்கள் சமுதாயம், பொருள் இல்லாதவர்கள் சமுதாயம். இந்தச் சமுதாயப் பிரிவு நீண்டு நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றது. பொருள் படைத்த வர்க்கத்தாரிடம், எல்லா வசதிகளும் இருக்கின்றன; ஆகையால் அவர்கள், கல்வி, அறிவு, கலைகள் முதலியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். பொருள் வசதி யில்லாவிட்டாலும், கல்வி, அறிவு, கலை முதலியவற்றிலே சிறந்த வர்கள் பொருள் படைத்த வர்க்கத்தாரை ஒட்டியே வாழ்ந்து வந்தனர்; வாழ்ந்தும் வருகின்றனர். பொருளற்ற வர்க்கத்தினர் பெரும்பாலும் உழைப்பாளி களாகவும், உழவர்களாகவுமே பல்லாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் ஜீவனத்தை நடத்துவதற்கே பெரும்பொழுதைச் செலவிடவேண்டிய நிலையில் இருந்தனர்; இருக்கின்றனர். ஆகையால் அவர்கள் கல்வியிலோ, அறிவிலோ, கலையிலோ தேர்ச்சிபெற நேரம் இல்லை, வசதியும் இல்லை. கலைகளில் பிரிவினை இந்தக் காரணத்தால், நமது நாட்டில் இன்று வளர்ந் திருக்கும் கலைகள், காவியங்கள், கவிதைகள், இலக்கியங்கள், எல்லாம் வசதி படைத்த வர்க்கத்தினர் சுவைத்துப் பொழுது போக்குவதற்காகவே பயன்படுகின்றன. வளர்ந்திருக்கும் கலை களும், கவிதைகளும், கதைகளும் உயர்ந்த வர்க்கத்தினரின் வாழ்க்கைகளைச் சித்திரிப்பனவாகவே அமைந்திருக்கின்றன; அவர்களுடைய கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிப்பனவாகவே காணப்படுகின்றன. கலைகள், கதைகள், கவிதைகள், காவியங்கள் வளர்வதற்கு வசதி படைத்த வர்க்கத்தினரே உதவிசெய்து வந்தனர். இவைகள் தங்கள் பொழுதுபோக்குக்கு உதவின காரணத்தால்தான் இவை கள் வளர்வதற்கு உதவி செய்து வந்தனர். இவர்கள் உதவியால் வளர்ந்த கலைகளும், கவிதைகளும், காவியங்களும் இவர்கள் பெருமையைப் பற்றிப் பேசுவதிலே வியப்பில்லை. வசதி படைத்த வர்க்கத்தாரால் கலைகள் வளர்ந்தன என்பதைக் கொண்டு, வசதி படைத்த வர்க்கத்தினர் மட்டுந்தாம் கலையுணர்ச்சி படைத்தவர்கள், என்று சொல்லிவிட முடியாது. உழைப்பாளர்களுக்கும், வறியவர்களுக்கும், கலையுணர்ச்சி உண்டு. அவர்களும், கவிதைகளையும், காவியங்களையும், கலைகளையும் படித்து, கேட்டு, பார்த்து, சுவைக்கும் உணர்ச்சி படைத்திருந்தனர். இத்தகைய மக்களுக்கான கலைகளும், நாட்டில் ஒருபுறத்திலே வளர்ந்துகொண்டுதான் இருந்தன. இவர்கள் சுவைக்கும் வகையிலே கலைகளை வளர்த்த அறிஞர்களும் நாட்டில் இருந்தனர். கூத்திலே அரசர்களுக்காக ஆடும் கூத்து, பொதுமக்களுக் காக ஆடும் கூத்து என்று இரண்டு வகை இருந்தன; இது இலக்கியங்களில் காணப்படும் செய்தி. இதுபோலவே இலக்கி யங்களிலும் பொதுமக்களுக்கான இலக்கியங்கள், உயர்ந்த வர்க்கத்தினருக்கான இலக்கியங்கள் என்று இரு பிரிவுகள் இருந்தன என்பதில் ஐயம் இல்லை. நுண் கலையும் எளிய கலையும் உதாரணமாகக் கலையை எடுத்துக்கொள்வோம். பரத நாட்டியம் என்பது அரியதொரு கலை. இதை நுண்ணறிவு படைத்தவர்கள்தான் பார்த்துச் சுவைக்க முடியும். மற்றவர்கள், நடனமாடும் மங்கையின் அழகைத்தான் சுவைக்க முடியும்; கலை யைச் சுவைக்க முடியாது. ஆகவே கல்வி அறிவு படைத்த - ஓய்வு நேரத்தை மிகுதியாகப் பெற்ற வசதி படைத்த- மக்களின் பொழுதுபோக்காக வளர்ந்த கலைதான் இது. இக்கலையை உணர்ந்த வர்க்கத்தாரின் கலையென்றே சொல்லி விடலாம். கரகம் எடுத்து ஆடுதல், காவடி தூக்கி ஆடுதல், கும்மி-கோலாட்டம் முதலியவைகளும் கலைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இக் கலைகளை உழைப்பாளர்களும் உழவர்களும், வறியவர்களும் பார்த்துப் பரவசம் அடை கின்றனர். பரதநாட்டியத்தைவிட இக் கலைப்பயிற்சி எளிது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இக் கலைகளை மக்கள் கலையென்றே சொல்லிவிடலாம். பாடல்களை எடுத்துக்கொள்வோம். சரிகமபதநிச போட்டுப் பாடும் சங்கீதம் - வேறு அர்த்தம் எதுவும் இல்லாமல் தரநந போட்டுக்கொண்டு மணிக்கணக்கில் ஆரோகணம் அவ ரோகணம் செய்யும் சங்கீதம் - நுண்கலையாகக் கருதப்படுகின் றது. சங்கீதக் கலைஞர்கள் இராகம், தாளம், பல்லவிகளிலே சொக்கிப் போகின்றனர். ஆனால் ஏழைப் பொதுமக்களுக்கு இத்தகைய உயர்ந்த சங்கீதத்தைச் சுவைக்க முடியவில்லை. பாடல்களிலும், தியாக ராசர் கீர்த்தனம், முத்துத்தாண்டவர் பதம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை முதலியவைகளைப் பொதுமக்கள் அவ்வளவாகச் சுவைப்பதில்லை. எளிதிலே பாடக்கூடியன- பொருள் நன்றாக விளங்கக் கூடியன- தெம்மாங்கு, தில்லானா, டப்பா, சிந்து முதலிய பாடல் கள். இவ்வகையான எளிய பாடல்களைப் பொதுமக்கள் சுவைக் கின்றனர். இதை நாம் இன்றும் கண்கூடாகக் காணுகின்றோம். ஆகவே, கலை, சங்கீதம், பாட்டு இவைகளிலே இரு பிரிவுகள் இருப்பதைக் காண்கின்றோம். காவியங்கள் வளர்ச்சி காவியங்களை எடுத்துக்கொள்ளுவோம், காவியங்களும் இருவகையாக- அதாவது, பொதுமக்கள் காவியம், உயர்ந்த வர்க்கத்தினர் காவியம் என்று இருவகையாகவே வளர்ந்து வந்தி ருக்கின்றன. சிலப்பதிகாரம், கம்பன் கவிதை, பாரத வெண்பா, நள வெண்பா போன்ற காவியங்கள் பொதுமக்களால் படித்துச் சுவைக்கக்கூடியன அல்ல. பாரதக் கதைகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக் குப் புரியும் வகையிலே எழுதப்பட்ட நூல்கள் பல உண்டு. பஞ்ச பாண்டவர் வனவாசம், தருமர் அவமேதயாகம், அபிமன்னன் சுந்தரிமாலை, அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, கர்ண மகாராசன் சண்டை போன்ற பல புத்தகங்கள் உண்டு. இவைகள் செய்யுள் வடிவில் அமைந்திருக்கின்றன. இச் செய்யுள் நடை மக்களுக்குப் புரியும்படியான நடை. தேசிங்குராஜன் கதை, கான்சாயபு சண்டை, காத்தவ ராயன்கதை போன்ற சரித்திர சம்பந்தமான கதைகளையும் எளிய நடையிலே எழுதியிருக்கின்றனர். இன்றும் இவை போன்ற கதைகளை நாட்டுப்புற மக்கள் பாடிப் பரவசமடைகின்றனர்; கேட்டுப் பொழுது போக்குகின்றனர். நல்லதங்காள் கதையை அறியாதவர்கள் இல்லை போராளாம் நல்ல தங்காள் பொல்லாத வேலையிலே என்ற முழக்கத்தைக் கேட்காதவர்கள் இல்லை. இதைப்போலவே கட்ட பொம்மன் கதையும் பாடல் வடிவில் வழங்கி வருகின்றது. இத்தகைய பொதுமக்கள் இலக்கியங்களைப் புலவர்கள் எட்டிப் பார்ப்பதில்லை, ஆயினும் அவைகள் மக்கள் மனத்தைக் கவர்ந்து கொண்டுதான் வாழ்ந்து வருகின்றன. நாட்டு மக்கள் இலக்கியங்களாகிய இவைகள் எல்லாம் ஏழை மக்களின்- உழைப்பாளிகளின்- உழவர்களின்- வாழ்க்கையைச் சித்திரிப்பன என்று சொல்லிவிட முடியாது. பழைய இலக்கியங்களின் புதிய பிறப்புத்தான் அவைகள். மக்களுக்குப் புரியும்படியான, பாஷையிலே எழுதப்பட்டிருக் கின்றன. சமுதாயத்தில் சாதாரணமாக நடைபெறும் பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் வகையிலே எழுதப்பட்டிருக் கின்றன. இக்காரணத்தால்தான் அவைகள் பொதுமக்களின் பொழுதுபோக்குக்குப் பயன்படுகின்றன; அவர்களால் கேட்டுச் சுவைக்கப்படுகின்றன. கோவிலன் கதை பொதுமக்கள் இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற வைகளிலே கோவிலன் கதை என்பது ஒன்று இக்கோவிலன் மனைவி கர்ணகி. அவனால் காதலிக்கப்பட்ட விலைமகள் மாதகி என்பவள். கோவலன் கதை என்ற பெயரைக் கண்ட வுடன் இது சிலப்பதிகாரக் கதையோ என்று சிலர் நினைத்துக் கொள்ளுகின்றனர். சிலப்பதிகாரத்திற்கும் இதற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை. அது வேறு; இது வேறு. பாண்டிய மன்னர்க்குப் பிள்ளை இல்லை. ஆதலால் அவர் கள் காளிகோயிலை மூடிவிட்டனர். அங்கே யாரும் விளக்கேற்றக் கூடாது என்று உத்தரவிட்டனர். உத்தரவை மீறி விளக்கேற்றின வர்கள் கொலைத் தண்டனைக்கு ஆளாவர் என்று அறிவித் திருந்தனர். ஒருநாள் எண்ணெய் விற்கும் வாணியன் ஒருவன் என் எண்ணெய் இன்று நன்றாக விலை போனால், உனக்கு விளக்கேற்றி வைப்பேன் என்று காளியை வேண்டிக் கொண்டு போனான். அன்று அவனுக்கு எண்ணெயில் நல்ல லாபம் கிடைத்தது. ஆதலால் அவன் மாலையில் காளிகோயிலைத் திறந்து ஆயிரம் விளக்கேற்றி வைத்து வணங்கினான். பாண்டியர் கள் தமது அரண்மனை மாடியிலிருந்தபடி, காளி கோவிலில் விளக்கெரிவதைக் கண்டனர். உடனே விளக்கேற்றிய வாணி யனைப் பிடித்து வரச்செய்து கொலை செய்துவிட்டனர். அவ் வாணியன் மனைவியும் கதறியழுது கணவனுடன் மாண்டாள். இதனால் கோபங்கொண்ட காளிதேவி, பாண்டியர் மனைவிக்கே- காதின் வழியாக- மகளாகப் பிறந்தாள். அவளே காவிரிப் பூம் பட்டினத்தில் மாநாய்கன் மகளாக வளர்ந்தாள். கொலை யுண்ட வாணியன் கோவிலனாகப் பிறந்தான். அவன் மனைவி திருக்கடையூரில் தாசிமகளாக மாதகியாகப் பிறந்தாள். இதுவே கோவிலன் கதையின் ஆரம்பம். இறுதியில் கர்ணகி, காளியாகவே உருக்கொண்டு, பாண்டியர்களைப் பழி வாங்குகின்றாள் என்று கதை முடிகின்றது. இக் கோவிலன் கதையைப் படிப்போர் இன்புறுவர்; பாமர மக்கள் ரசிக்கும் வகையிலே கதை அமைந்திருக்கிறது. இக்கதை எழுதப்பட்ட காலத்தில் மக்களிடமிருந்து பழக்க வழக்கங்கள் இக்கதையில் காணப்படுவது குறிப்பிடத்தக்க தாகும். இது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக இருக்கலாம். கோவிலன் கதை எழுதப்பட்ட காலத்தில் நமது நாட்டில் பால்ய விவாகம் நடைபெற்று வந்தது; ஆதலால், கோவிலனுக்கும் கர்ணகிக்கும் நடந்த விவாகம் பால்ய விவாகந்தான் என்று கூறுகிறது. கர்ணகியின் ஐந்தாவது வயதில் அவளுக்குத் திருமணம் செய்யப்பட்டதாகச் சொல்லுகிறது கதை. கவிதைச் சுதை பந்தம் அலங்கரித்தார் பாங்காக அப்போது முத்தாலே கால்நிறுத்தி முக்காதம் பந்தல்இட்டார் பவளத்தால் கால்நிறுத்தி பதின்காதம் பந்தலிட்டார் எங்கும் அலங்கரித்தார் எத்திசையும் நீர்தெளித்தார் கண்ணாடிச் சல்லிகட்டி கவரிமான் குச்சுவிட்டார் என்று கல்யாணப் பந்தலின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறது கோவிலன் கதை. அடுத்தாற்போல் கல்யாணச் சடங்கைப் பற்றிச் சொல்லுவதைப் பாருங்கள். மணப்பந்தல் முன்பாக வதூவரரைக் கொண்டுவந்தார், சீக்குக் கழித்தார்கள் சீராக இருவருக்கும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் பிரியரது அலங்கரித்து மணவறையின் மேலாக வைத்தார் இருவரையும் தாலி தரித்தானே தனஞ்சயன் கோவிலனும் அம்மி மிதித்தார்கள் அருந்ததி கண்டார்கள் சாலும் கரகமும் சந்திரனைத் தான்தொழுதார் மாலை தரிக்கையிலே வாய்விட்டுத் தானழுதாள் மாங்கனியைக் கைகொடுத்து மாலையிட்டார் கோவிலனார் இவ்வாறு கல்யாணம் நடந்த விதத்தைப் பாடுகிறது கோவிலன் கதை. இதனால், அறியாத பருவமுள்ள பெண்ணை மணம் செய்யும் வழக்கம் நமது நாட்டில் பிற்காலத்தில் பரவி விட்டது என்பதை அறிகின்றோம். பழந் தமிழ்நாட்டில் இப் பழக்கம் இருந்ததில்லை. மணப்பெண் அழுதால் அதன் கையில் பழமோ, அல்லது ஏதாவது தின்பண்டமோ கொடுத்து மாலை யிடும் வழக்கம் இருந்ததை அறிகின்றோம். தாசிகளின் மோசம் கோவிலன் மாதகியுடன் வந்தவுடன், அவளைப் பார்த்து உனக்கு என்னென்ன வேண்டுமென்று கேட்கின்றான். அவள் தனக்கு இன்னின்னவை வேண்டும் என்று கோவிலனைக் கேட்கின்றாள். இந்தப் பகுதியைப் பாமர மக்கள் சுவைக்கும்படி மிகவும் ரசமாகக் கூறுவது கோவிலன் கதை. காலைக்கடைச்செலவுகொள்ள கால்மரக்கால் பொன்வேணும் உச்சிக்கடைச்செலவுகொள்ள ஒருமரக்கால் பொன்வேணும் அந்திக்கடைச்செலவு கொள்ள அரைமரக்கால்பொன்வேணும் பாக்குகொள்ள எந்தனுக்குப் பத்துலட்சம் பொன்வேணும் வெற்றிலை வாங்குதற்கு வேணலட்சம் பொன்வேணும் புகையிலை வாங்குதற்குப் பொன்கப்பல் பணம் வேணும் சுண்ணாம்பு வாங்குதற்குச் சொர்ணம்கப்பல் பணம் வேணும் நித்தம் ஒரு ஆயிரம் பொன் சத்தியமாய்த் தரவேணும் பொழுதைக்கு ஆயிரம்பொன் பக்குவமாய்த் தரவேணும் இப்படிக்குத் தரவேணும் இன்பமுள்ள நாயகரே என்று கேட்டாள் மாதகி. இவ்வளவும் தருகிறேன் என்று ஒப்புக்கொண்டான் கோவிலன். இன்னும் என்ன வேண்டும் கேள் என்றான். நட்டுவர்க்கு ஆயிரம்பொன் நலமாகத் தரவேணும் மத்தளக் காரனுக்கு வளமாகத் தரவேணும் சுதிகாரப் பையனுக்குச் சொர்ணம் கொடுக்கவேணும் எந்தனுட மாதாவுக்கு ஏழுலட்சம் தரவேணும் இப்படிக்குச் சத்தியமாய் எனக்குமே நீர்தாரும் என்று கேட்டாள் மாதகி. இவற்றில் தாசி வீட்டில் வாழ்வோர் யார்யார் என்பதைக் காணலாம். இதற்கு மேலும் மாதகி கேட்டாள். குத்துணி ரவிக்கைகளும் குசும்பாவின் சேலைகளும் பட்டு ரவிக்கைகளும் பசும்பொன்னால் சேலைகளும், இரத்தின சடைப்பில்லையும் இப்போது வேணும் என்றாள். அப்படியே தான் கொடுத்தான் ஆண் அழகன் கோவிலனும். இதற்கு மேலும், கோவிலன் அவளுக்குச் செய்து போட்ட நகைகள் இவை இவை என்பதைக் குறிப்பிடுவது நல்ல சுவை யுள்ள பகுதியாகும்; கல்இழைத்த கம்மல்அது கட்டழகன் செய்தான்காண் கொப்புடனே வாளிகளும் கோர்வைமணித் தாழ்வடமும் முத்திழைத்த மூக்குத்தி மோகன மாலைகளும் எட்டு விரலுக்கும் இசைந்த கணையாழி சுண்டு விரலுக்குச் சுற்றக் கணையாழி வங்கியும் செய்தார்காண் மயில் அனையாள் மாதகிக்கு காலாழி, பீலாழி கண்டசரம், மார்பதக்கம் சவுளிப் பதக்கங்களும் ஏந்திழைக்குச் செய்தார்காண் மேலே காட்டியவைகளால், பொதுமக்கள் ஒரு உண் மையை அறிவர். தாசிகள் தொழில், பொருள் பறிப்பதுதான், எவ்வளவு பெரிய பணக்காரனாயிருந்தாலும், அவர்கள் அவனை மொட்டையாண்டியாக்கிவிடுவார்கள். தாசி வலையிலே வீழ்ந் தவன் மீளமாட்டான். இவ்வுண்மையை இந்த நிகழ்ச்சி உணர்த்து கின்றது. காமத்தினால் அறிவு குலையும் காமத்திலே ஈடுபட்ட தாசிலோலன், எவ்வாறு அறி விழந்து தடுமாறுவான் என்பதையும் இக்கதையிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மாதகியின் மையலில் மூழ்கிய கோவிலன் நிலையை அழகாகச் சொல்லுகிறது இக் காவியம்: பன்னிரண்டு வருஷம் பைங்கிளியாள் வீடுதனில் பட்டணத்தான் கோவிலனும் பாங்குடனே வீற்றிருந்தான்; ஆட்டம்ஆடி வீடுவந்தால் அவள் அடியைத்தான் பிடிப்பான் பாட்டுப்பாடி வீடுவந்தால் பக்கம் எல்லாம் தான் பிடிப்பான் வைத்தசாதம் உண்ணுவான் வழிநடந்தால் கால்பிடிப்பான் தலைமாட்டில் வந்துநின்று தாழம்பூச் சூட்டிடுவான் அவளுக்குத்- தம்பலக் காளாஞ்சி தலைமேல் சுமந்திருப்பான் எச்சில் படிக்கம் அதைஎந்தி யிருப்பானே அமரர்கள் கோவிலுக்கு ஆடஇவள் போனாக்கால் அவள்பின் இவன்போவான் ஆண்அழகள் கோவிலனும். இவ்வடிகள், பெண் மோகத்தில் சிக்கியவனுடைய சீர் கேட்டை விளக்குகின்றன. இவ்வாறு, நாட்டு நடப்பை எடுத்துக்காட்டும் முறையிலே அமைந்திருக்கின்றது இக்கதை. மனங்கவரும் கவிதை கோவிலன் கதை போன்ற இலக்கியங்களிலே அமைந் திருக்கும் பாடல்களுக்குப் பழைய இலக்கணம், இல்லை. புதிய மாதிரியில் அமைந்த பாடல். இப்பாடல்களை வசன கவிதை என்று கூடச் சொல்லலாம். இத்தகைய பொதுமக்கள் இலக்கியங்களிலே அமைந் திருக்கும் தொடர்கள் பல அப்படியே படிப்போர் உள்ளத்திலே பதியும்படி அமைந்திருக்கின்றன. கையிலே காசும் இல்லை கடன்கொடுப்பார் ஆரும் இல்லை. இவ்வடி நமது மனத்தை அள்ளுகிறதன்றோ? பெண்சாதி கால்விலங்கு பிள்ளையொரு சுள்ளாணி. மறக்க முடியாத தொடர் அல்லவா? வாழ்வுக்கு உதவாவிட்டால் சாவுக்கு உதவவேண்டும். நாட்டு மக்களின் பண்பாட்டை அறிவுறுத்தும் தொடர். பட்டணமாம்! பட்டணமாம்! காவிரிப்பூம் பட்டணமாம்! கஞ்சிகொண்டு மதவடைக்கும் காவிரிப்பூம் பட்டணமாம்! காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வப்பெருக்கை - சோற்றுக் குப் பஞ்சமில்லாத தன்மையை- இதைவிடச் சுருக்கமாக, ஆழமாக ஆராலும் சொல்லமுடியாது. மேலே கூறியவைகளைக்கொண்டு, மக்கள் இலக்கியம் என்ற வரிசையிலே பஞ்சபாண்டவர் வனவாசம், அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, நல்லதங்காள் கதை, தேசிங்குராஜன் கதை, கான் சாயபு சண்டை., கோவிலன் கதை, காத்தவராயன் கதை, ஆரவல்லி சூரவல்லி கதை போன்ற பல நூல்களைச் சேர்க்கலாம். இவைகளைப் போன்ற செய்யுள் அமைப்பும், புதிய கருத்தும் கொண்ட நூல்கள் பிறக்கவேண்டும். மக்கள் இலக்கியம் வளர இதுவே வழியாகும். மக்கள் இலக்கிய வளர்ச்சியை மறந்து விடுவது பொது மக்களை அலட்சியம் செய்வதாகவே முடியும். வசன இலக்கிய வளர்ச்சி இப்பொழுது தமிழ்வளர்ச்சி என்னும் பெயரால் நடை பெற்று வரும் கிளர்ச்சி பலர் உள்ளத்தில் ஒருவிதமான குழப் பத்தை உண்டாக்கி வருகின்றது. இந்தக் கிளர்ச்சி இப்போது புதிதாகத் தோன்றியது என்று கூற முடியாது. ஏறக்குறைய நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் இக்கிளர்ச்சி பிறந்தது. அது இன்று ஒரளவு வளர்ந்து விட்டது. தனித்த தமிழிலே எழுதவேண்டும் என்பதுதான் இக்கிளர்ச்சி. இலக்கிய வளர்ச்சிக்கு இக்கிளர்ச்சி துணை செய்யுமா? துணை செய்திருக் கிறதா? என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மூன்று கருத்துக்கள் தமிழை எப்படி எழுதவேண்டும் என்பதிலே மூன்று விதமான கருத்துள்ளவர்கள் இருக்கின்றனர். தமிழோடு பிறமொழிகள் கலக்கக்கூடாது. குறிப்பாக வடமொழிச் சொற்களைச் சேர்க்கவே கூடாது. தனித் தமிழாகத் தான் எழுதவேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும்; தமிழ் இலக்கியம் வளரும் என்று கூறுகின்றனர். இவர்களுக்குக் கருத்துக்களைப் பற்றிக் கவலையில்லை. தனித்தமிழ்ச் சொற்களை அடுக்கி எழுதிவிட்டால் போதும்; அதுவே தமிழை வளர்ப்ப தாகும் என்கின்றனர். வடமொழியின் சேர்க்கையால் தமிழ் மொழி கெட்டுப் போயிற்று; தமிழின் சீர்குலைவுக்கு வடமொழி தான் காரணம்; வட மொழி கற்றவர்கள் தமிழுக்குத் துரோகம் செய்துவிட்டனர்; தமிழைக் கெடுத்துவிட்டனர் என்றும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். தனித்தமிழ் அன்பர்களின் கூற்று இது. மற்றொரு சார்பினர், வேண்டுமென்றே தமிழுடன் வட மொழியைக் கலந்து எழுதுகின்றனர். பெரும்பாலான மக்கள் வழங்கும் தமிழ்ச் சொற்களைக் கூடக் கைவிட்டு விடுகின்றனர். அவைகளுக்குப் பதிலாக வடமொழிச் சொற்களை வைத்து எழுதுகின்றனர். தாகத்திற்குத் தண்ணீர் கேட்பார் என்பது சாதாரணமாக- பொதுவாக- பலருக்கும் புரியும் தொடர்கள். இவைகளை, தாகத்திற்கு சுத்த ஜலம் கேட்டாள் என்று எழுதுவது அவ்வளவு சிறந்ததல்ல. பெரும்பான்மையோர்- பொதுமக்கள் தமிழ் அல்ல; சிறுபான்மையோர் தமிழ். மற்றொரு சார்பார், பொதுமக்களுக்குப் புரியும் பாஷை யிலே எழுதவேண்டும்; வழக்கத்திலிருக்கும் தமிழ்ச் சொற்களை மாற்றிவிடக் கூடாது. தமிழைப் போலவே பொதுமக்களிடம் வழங்கிவிட்ட பிற சொற்களைப் பயன்படுத்திக் கொள்வது தவறாகாது என்று கூறுகின்றனர். மக்களோடு சேர்ந்துதான் பாஷை வளரவேண்டும். மக்களோடு சேராமல் பாஷையைத் தனியாக வளர்க்கமுடியாது. மக்களுக்காகத்தான் மொழியே தவிர, மொழிக்காக மக்கள் அல்லர் என்பதே இவர்கள் கூற்று. எழுத்தில் ஜனநாயகம் இந்த மூன்று கட்சிக்காரர்களில் மூன்றாவது கட்சியினர் தான் இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும்- தமிழ் வளர்ச்சி யைப் பொறுத்தவரையிலும் ஜனநாயகக் கட்சியினர் ஆவார். இந்த மூன்றாவது கட்சியினரைப் பின்பற்றி எழுதப்படும் நூல்கள்தான் மக்களிடையிலே மிகுதியாகப் பரவும். இவர்களின் கொள்கையைப் பின்பற்றி எழுதப்படும் எழுத்துக்களின் மூலம் தான் மக்கள் பயனடைவார்கள்; பொதுமக்கள் அனைவரையும் படிக்கும்படி செய்யவேண்டும்; அறிவுடையவர்களாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்களுக்குப் புரியும் படியான - தெளிவான- முறையில் தான் எழுதவேண்டும். மொழியும், இலக்கியங்களும் வளரவேண்டும் என்று நினைக்கின்றவர்கள், இப்படித்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்தமாட்டார்கள்; மக்களைத் தழுவியே மொழி வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பிறமொழி கலக்காமல் எழுதவேண்டும் என்பவர்கள் மொழி வளர்ச்சியிலும் இலக்கிய வளர்ச்சியிலும், பற்றுள்ள வர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் சிறுபான்மையோர் செல்லும் வழியிலே பெரும்பான்மையோர் வரவேண்டும் என்று விரும்புகின்றனர். இதுபோலவேதான், வடமொழியைக் கலந்து எழுதுவதுதான் தமிழுக்கு அழகு என்று நினைப்பவர்களும் ஆவார்கள். சிறுபான்மையோர் வழியில் பெரும்பான்மையோர் நடப்பது என்பது பழங்காலக் கொள்கை. பெரும்பான்மையோர் கருத்தை ஒட்டித்தான் சிறுபான்மையோர் நடக்க வேண்டும் என்பதுதான் இன்றையக் கொள்கை. இலக்கியம் வளர்ந்த விதம் மொழி என்பது, ஒருவர் கருத்தை மற்றொருவர்க்கு அறி விப்பதற்கான ஒரு கருவி என்ற தத்துவத்தை உணர்ந்தவர்கள், அப்படித்தான் எழுதவேண்டும். இப்படித்தான் எழுதவேண்டும் என்று தடையுத்தரவு போடமாட்டார்கள்; கட்டளையிட மாட்டார்கள்; பொதுமக்களுக்குப் புரியும்படி எழுதவேண்டும் என்ற பொதுக்கருத்தைத்தான் ஒப்புக் கொள்வார்கள். பழைய இலக்கியங்கள்கூட இப்படித்தான் வளர்ந்து வந்திருக்கின்றன. சங்க இலக்கியங்களின் தமிழ் நடைக்கும், சிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களின் நடைக்கும் வேற்றுமையுண்டு; தேவாரப்பாடல்களின் நடைக்கும் பிரபந்தப் பாடல்களின் நடைக்கும் வேற்றுமையுண்டு; கம்பன் கவிதை நடைக்கும் அவற்றின் பின் தோன்றிய புராணங்களின் நடைக்கும் வேற்றுமை உண்டு; வில்லி பாரதம், திருப்புகழ், தாயுமானவர் பாடல் போன்ற நூல்களின் நடைக்கும் இவை களுக்கு முன் தோன்றிய நூல்களின் நடைக்கும் வேற்றுமை யுண்டு. சங்க நூல்களைவிட, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய காவியங்களிலே திசைச் சொற்களும், வட சொற்களும் அதிகமாகக் கலந்திருக்கின்றன; இவைகளைவிடத் தேவார- பிரபந்தப் பாடல்களில் வடமொழியும், திசைச் சொற் களும் இன்னும் அதிகம். இவைகளைவிடக் கம்பன் கவிதையில் இன்னும் கொஞ்சம் வடமொழியும், திசைச் சொற்களும் அதிகம். பாரதம், திருப்புகழ், தாயுமானவர் போன்ற நூல்களில் வட மொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்து காணப்படுகின்றன. தமிழர்களிடம் வடமொழிப் பயிற்சி வளர்ந்ததும், ஏனைய மொழியினருடன் கூட்டுறவு ஏற்பட்டதுமே இவ்வாறு தமிழுடன் வடமொழியும் பிறமொழிச் சொற்களும் கலந்தமைக்குக் காரண மாகும். இது இயற்கை; யாராலும் வலிந்து புகுத்தப்பட்டதன்று. இன்று உலகத்திலே, வளர்ச்சியடைந்த மொழி என்று கொண்டாடப்படும் ஆங்கிலம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். தனித்த ஆங்கிலத்தால் எழுதவேண்டும் என்று ஆங்கில மொழி அபிமானிகள் கட்டுப் பாடு ஏற்படுத்தியிருந்தால் இன்று அந்த மொழி உலகம் மதிக்கும் படி வளர்ந்திருக்க முடியுமா? ஆங்கிலேயர் எந்தெந்த நாட்டை ஆண்டார்களோ, ஆளுகின்றார்களோ அந்தந்த நாட்டு மொழிச் சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் கலந்திருக்கின்றன என்பதை ஆங்கிலம் படித்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். மொழி வளர்ச்சிக்கு வழிகாட்டுவதில் ஆங்கிலம் ஒரு முன்னோடி என்பதை எவர்தான் மறுக்க முடியும்? தனித்த தமிழில்தான் எழுதவேண்டும் என்ற கிளர்ச்சி ஏற்பட்டபின், எத்தனை இலக்கியங்கள் தமிழில்-தனித் தமிழில் - பிறந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தடையுத்தரவிருந்தால் காலஞ்சென்ற பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழைத் தெய்வமாகப் போற்றியவர். தமிழ்த் தெய்வ வாழ்த்துக் கூறி மனோன்மணீயம் என்னும் கவிதை நாடகத்தை எழுதி யிருக்கிறார். அது சிறந்ததொரு இலக்கியமாக விளங்குகிறது. அது தனித்த தமிழில் எழுதப்படவில்லை. இன்றுள்ள கவிஞர் பாரதிதாசன் அளவுகடந்த தமிழ்ப் பற்றுள்ளவர்; வடமொழிச் சொற்களையெல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று காட்டுவதிலே முனைந்து வேலை செய்து கொண்டு இருக்கின்றார். இவருடைய பாடல்கள் எல்லாம் தனித்த தமிழ்ப் பாடல்களா என்று நினைத்துப் பார்க்க வேண்டு கிறோம். கம்பனைப் பார்த்து, நீ தனித்த தமிழிலேதான் பாட வேண்டும் என்று யாராவது சொல்லியிருந்தால்- அவர் வாக்கில் சரளமாக வந்து குதிக்கும் சொற்களை ஒதுக்கிவிட்டுத் தனித் தமிழ்ச் சொற்களைத் தேடி வைத்துப் பாடத் தொடங்கி யிருந்தால்- கம்பராமாயணம் இவ்வளவு சுவையுடன் அமைந் திருக்குமா? தேவார ஆசிரியர்களும், பிரபந்த ஆசிரியர்களும் இந்த இயக்கத்திலே ஈடுபட்டிருந்தார்களானால்- தனித் தமிழ் இயக்கத்திலே ஈடுபட்டிருந்தார்களானால்- படிப்போர் உள்ளத் தைப் பரவசமாக்கும் அவர்களுடைய அருந்தமிழ்ப் பாடல்கள் பிறந்திருக்க முடியுமா? அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார், தாயுமானவர்- இவர் களைப் பார்த்து, வடமொழிச் சொற்களைக் கலந்து பாடா தீர்கள் என்று யாராவது பயமுறுத்தியிருந்தால் அவர்கள் மறைந்துதான் போயிருப்பார்கள். அவர்களுடைய சந்தப் பாடல்களையும், சிறந்த கருத்துக்களையும் நாம் பெற்றிருக்க முடியாது. நமது காலத்து இராமலிங்க அடிகள் பாடல்கள் தனித் தமிழ்ப் பாடல்களா? அவர் தனித் தமிழ் எல்லையிலே அடங்கி நின்றிருந்தால், உள்ளம் உருக்கும் உயர்ந்த செந்தமிழ்ப் பாடல்கள் பிறந்திருக்க முடியுமா? இந்த உண்மைகளை நாம் எடுத்துக்காட்டுவதால் வட மொழிச் சொற்களையும், திசைச் சொற்களையும் சேர்த்து எழுதத்தான் வேண்டும் என்று நாம் கருதுவதாக எண்ணி விட வேண்டாம்; மொழியும் இலக்கியமும் எப்படி வளர்ந்திருக் கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறோம். தனித் தன்மையின் சிறப்பு ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு தனி நடை உண்டு; ஒவ் வொரு எழுத்தாளருக்கும் ஒரு தனி நடை உண்டு; அவர்களுக் குரிய தனித்த நடையிலே கவிதைகளையோ, வசனங்களையோ எழுதினால்தான் அவைகளில் உயிரோட்டம் இருக்கும்; தனித் தமிழ் அல்லது கலப்புத் தமிழ் என்பதை உள்ளத்திலே நினைத்துக் கொண்டு எழுதத் தலைப்பட்டால் அந்த நடையிலே உயிர் இருக்காது. அவர்கள் எழுதும் போது சொல்லிலே கவனம் செலுத்துவார்களே அன்றிக் கருத்தை மறந்துவிடுவார்கள்; இந்த உண்மையை எழுத்தாளர்கள் மறந்து விடக்கூடாது. நமது காலத்து வசன கர்த்தாக்களை எடுத்துக்கொள்ளு வோம்; அதாவது உரைநடை ஆசிரியர்களை எடுத்துக் கொள்ளு வோம். உரைநடை ஆசிரியர்களுள் முதன்மையிடம் பெறக் கூடியவர் ஆறுமுக நாவலர் அவர்கள். தமிழுக்கு அவர் செய் திருக்கும் பணி அளவற்றவை. அவருடைய தமிழ் நடையிலே வடமொழிக் கலப்பு அதிகம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த நடையிலே சுவையில்லை; இனிமையில்லை; படிப்பவர்க்குப் புரியவில்லை என்று கூறுவோர் இல்லை. வேதநாயகம்பிள்ளை வேதநாயகம் பிள்ளை அவர்கள் நடையை எடுத்துக் கொள்ளுங்கள்: எண்ணிறந்த தேவாலயங்களும், பிரமாலயங்களும், அன்ன சத்திரங்களும், நீர்வளமும், நிலவளமும், நாகரிகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு. மற்றைய நாடு களிலும் விசேஷம் என்றும், அப்படியே தமிழ்ப் பாஷையும், சர்வோத்கிருஷ்டமான பாஷையென்றும், சகலரும் அங்கீகரிக் கிறார்கள். அகதியர் நாவிலே பிறந்து, ஆரியத்தின் மடியிலே வளர்ந்து, ஆந்திரம் முதலிய பாஷைகளின் தோழமை பெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து, வித்துவான் களுடைய நாக்கிலே விளையாடி, திராவிட தேசம் முழுதும் ஏகச் சக்கராதிபத்தியம் செலுத்திவந்த தமிழரசியை இப்போது இகழலாமா? நம்மை பெற்றதும் தமிழ்; நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்; நம்முடைய மழலைச் சொல்லால் நம்முடைய தாய்தந்தையரைச் சந்தோஷிப்பித்ததும் தமிழ். நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது முந்தி உச்சரித்ததும் தமிழ். நம்முடைய அன்னையும் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டி னதும் தமிழ். தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததும் தமிழ். ஆதிகாலம் முதல் நம் முன்னோர்கள் எல்லோரும் பேசின பாஷையும் தமிழ். இப்போது நம்முடைய மாதா பிதாக்களும், பந்து ஜனங்களும், இஷ்ட மித்திரர்களும், இதரர்களும் பேசுகிற பாஷையும் தமிழ்; நம்முடைய வீட்டு பாஷையும், தமிழ்நாட்டுப் பாஷையும் தமிழ். இப்படிப்பட்ட அருமையான பாஷையை விட்டுவிட்டுச் சமகிருதம், லத்தீன் முதலிய அந்நிய பாஷைகளைப் படிக்கிற வர்கள் சுற்றத்தார்களை விட்டுவிட்டு, அந்நியர்களிடத்தில் நேசஞ் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். என்று தாய்மொழியாகிய தமிழ் படிக்காதவர்களைப் பற்றி எழுதுகிறார், இது பிரதாப முதலியார் சரித்திரத்தில் கண்டது. வேதநாயகம் பிள்ளையைத் தமிழ்ப் பற்றில்லாதவர், தமிழைக் கெடுத்தவர் என்று யாரேனும் துணிந்து சொல்ல முடியுமா? இந்தத் தமிழ்நடையிலே இனிமையில்லையா? இலக்கிய அமைப்பு இல்லையா? அவருக்குத் தனியாக அமைந்த சரளமான நடையில் எழுதியதால்தான், அவருடைய எழுத்துக்கள் உயிருடன் வாழ்கின்றன. ராஜம் அய்யர் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜம் அய்யர் அவர் களின் எழுத்து வேறுவிதமானது; வேதநாயகம் பிள்ளை அவர் களின் நடையின் அமைப்பு வேறு ஆயினும் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமிழ்நடையில் ஒரு தனிச்சுவை இருப்பது போல, ராஜம் அய்யர் நடையிலும் ஒரு தனிச்சுவை உண்டு: ஸ்ரீநிவாசனுக்குச் சாந்தி முகூர்த்தமான சமாச்சாரத்தை நாம் முன்னமே சொல்ல அவகாசப்படவில்லை. அவனும் இலட் சுமியும் நளனும் தமயந்தியும் போல அந்நியொந்தியமாய் இருந்து வந்தார்கள். காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று சொல்லப்பட்ட இன்பத்தை அவர் களைப்போல் இவ்வுலகத்தில் அடைந்தவர்கள் கிடையாது. இகத்துள சுகத்திற்கு அளவு கோலாய் பாத்துள சுகத்தை வரித்த சித்திரமாய் என்று வர்ணிக் கப்பட்டிருக்கிற உண்மையான அன்பின் மதுரமான அதிரகசியங் களை அவர்களைப் போல் அறிந்து அநுபவித்தவர்கள் இல்லை. இது ராஜம் அய்யர் அவர்களின் நடைக்கு ஒரு எடுத்துக் காட்டு. இந்த நடையில் இனிமையில்லையா? சுவையில்லையா? விளக்கம் இல்லையா? புதிய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன் நடையிலே ஒரு தனிச் சிறப்பு உண்டு. அவருடைய நடையில் பல விஷயங்கள் எண்ணிப் பார்க்கும்படி செய்கின்ற சிறு வாக்கியங்கள் உண்டு. அவ்வாக்கியங்களை உரை நடை என்று கூறுவதைவிடச் செய்யுள் நடை என்றுகூடச் சொல்லிவிடலாம். இத்தகைய ஆற்றலை உரைநடையாசிரியர் களிடம் காணுவது அரிது. இத்தகைய நடை அவருக்கே தனியாக அமைந்த ஒரு நடையாகும். இவ்வாறே, மறைமலை அடிகள், திரு. வி. க, வ.வே. சு அய்யர், பாரதியார், கல்கி போன்றவர்களின் தமிழ் நடைகள் தனித்தனிப் பண்புடன் அமைந்திருப்பதைக் காணலாம். தனித் தமிழ் நடையில்தான் எழுதவேண்டும். அல்லது கலப்புத் தமிழில்தான் எழுதவேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு எழுதுவதனால் மொழி வளராது; இலக்கியங்களும் பெருக மாட்டா; பெரிய தேக்கம்தான் ஏற்படும். காப்பியடிக்கும் புத்தகங்கள் தாம் பிறக்கும். அவரவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் ஏற்ற இயற்கை யான நடையில்- தாராளமாகத் - தட்டுத் தடங்கல் இல்லாமல் எழுதுவதுதான் சிறந்த நடையாகும்; உயிருடன் இயங்கும் நடையாகும்; மக்கள் மனதைக் கவரும் நடையாகும்; மொழியும், இலக்கியமும் வளர்வதற்கான நடையாகும், இவ்வுண்மையைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறோம். வசன இலக்கியம் வளர்த்த விதம் உரையாசிரியர்களின் தமிழ் நடை உயர்ந்தது; சுருக்கமும் தெளிவும் அமைந்தது; ஆனால் இக்காலப் பொதுமக்களுக்குப் பயன்படாது. நாவலர் காலத்து உரைநடை- சிறப்பாகக் கி. பி. 19- ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடை பொது மக்களை மனத்தில் வைத்துக் கொண்டே எழுதப்பட்ட உரை நடை. அது இன்றும் மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றது. இருபதாம் நூற்றாண்டிலே நல்ல உரைநடை நூல்கள் வசன நூல்கள் தோன்றியிருக்கின்றன. இவைகளில் பண்டை உரையாசிரியர்களைப் பின்பற்றி எழுதிய நூல்களால் பொது மக்களுக்குப் பயன் இல்லை. பொது ஜனங்களை நினைத்து எழுதும் நூல்களே பயன்பட்டு வருகின்றன. தமிழ் நடை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தினால் தமிழ் வளராது. ஒவ்வொரு எழுத்தாளனுக் கும் ஒவ்வொரு தனித் தன்மையுண்டு. இவைகளை - இக்கருத்துக்களை - இக்கட்டுரையிலே காணலாம். சுதந்திரத்தின் பயன் நமது நாடு சுதந்திரம் பெற்றபின் நமது பண்பாடு, கலை, இலக்கியம், மொழி முதலியவைகளை வளர்க்கவேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கி நிற்கின்றது. இத்தகைய ஆர்வம் பாரத நாட்டில் உள்ள எல்லா மொழியினரிடமும் காணப்படுகின்றது. சுதந்திரம் உள்ள எந்த நாட்டிலும் இத்தகைய உணர்ச்சி மக்களிடம் தோன்றுவது இயற்கையாகும். இந்த இயற்கையை ஒட்டி, நமது தமிழகத்தில் இன்று வளர்ந்துவரும் மொழி வளர்ச்சி பற்றிய கிளர்ச்சியை மட்டும் சிறிது ஆராய்வோம். தமிழிலே உள்ள பண்டைக்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிலே எழுதப்பட்டவைகள்தாம். அவைகளும், நீதியையும், தர்மத்தையும் போதிக்கும் நூல்கள்தாம். பண்டை மக்கள் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் எடுத்துக் காட்டும் நூல்களும் இருக்கின்றன. பொழுதுபோக்குக்காகப் படித்துச் சுவைக்கக் கூடிய கதைகளும், காவியங்களும் கற்பனை களும் நிரம்பிய நூல்களும் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங் கள் பெரும்பாலும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன. தொழில்முறை, விஞ்ஞானம், மருத்துவம், கட்டிடக் கலை, விவசாயம், நிலநூல், வானநூல் போன்ற நவீன நூல்கள் பண்டைக் காலத்தில் மிகுதியாக எழுதப்பட வில்லை. இவை களைப் பற்றிய குறிப்புக்கள் பண்டைத் தமிழ் நூல்களிலே காணப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இத்தகைய நூல்கள் தமிழிலே இருந்தன; அவைகள் எல்லாம் நீருக்கும், நெருப்புக்கும் செல்லுக்கும் இறையாகி விட்டன என்று கூறுவோர் உண்டு; இவர்கள் கூற்றையும் நாம் மறக்கவில்லை. ஆனால் இன்று இத்தகைய நூல்கள் தமிழிலே போதுமான அளவு பிறக்கவில்லை; வளரவில்லை; இதற்கான முயற்சிகூடக் குறைவுதான். இந்த உண்மையைப் பொய் என்று சொல்லிவிட முடியாது. நவீன நூல்களைத் தமிழிலே எழுதும்போது, அவைகளை எப்படி எழுதவேண்டும் என்பதிலே கருத்து வேற்றுமை தாண்ட வமாடுகின்றது. மூன்றுவித கருத்துக்கள் தமிழை எப்படி எழுதவேண்டும் என்பதிலே மூன்று விதமான கருத்துக்கள் உலவுகின்றன. தமிழிலே பிறமொழிகள் கலக்கவே கூடாது; குறிப்பாக வடமொழிச் சொற்களைச் சேர்க்கவே கூடாது. தனித்தமிழ்ச் சொற்களாகப் பொறுக்கி எடுத்துத்தான் எழுதவேண்டும்; இதனால்தான் தமிழ் வளரும்; தமிழ் இலக்கியம் வளரும் என்று சொல்லுகின்றனர் சிலர். மற்றொரு சார்பினர் பிறமொழி கலப்புத்தான் தமிழை வளர்க்கும்; தனித்தமிழ்க் கிளர்ச்சி தமிழை வளர்க்காது; வடமொழிக்கும் தமிழுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. சாப்பாடு என்று சொல்வதைவிட போஜனம் என்று சொல் வதுதான் அழகு. வணக்கம் என்று சொல்வதைவிட நமகாரம் என்று சொல்வதுதான் நாகரிகம்; தண்ணீர் என்று சொல்வதை விட ஜலம் என்று சொல்வதுதான் சிறந்தது. முயற்சி என்று மொழிவதைவிட பிரயத்தனம் என்று பேசுவதுதான் வளர்ச்சி என்று வாதாடுகின்றனர். மற்றொரு சார்பினர் வடமொழியோ, திசைச் சொற்களோ தமிழில் சேரவேண்டுமா? சேரக்கூடாதா என்ற ஆராய்ச்சியோ, விவாதமோ தேவையில்லை. இந்த ஆராய் ச்சியால் தமிழ் வளர்ந்துவிடாது. மொழியென்பது மக்கள் நன்மைக்காகத்தான் தோன்றியது. ஆதலால் மக்களுக்குப் புரியும் முறையிலே விஷயங்களை எழுதுவதுதான் நல்லது. இப்படி எழுதுவதுதான் நல்லது. இப்படி எழுதுவதனால் மொழி வள ருமேயன்றி மறைந்துவிடாது. வழக்கத்திலிருக்கும் தமிழ்ச் சொற் களை மாற்றிவிடாமல், தமிழ்ச் சொற்களைப் போலவே மக்களி டையிலே வழங்கும் பிற மொழிச் சொற்களின் மேல் போர் தொடுக்கும் வெறுப்புணர்ச்சியில்லாமல் எழுதுவதே தமிழ் வளர்ச்சியாகும் என்று கருதுகின்றனர். எது நல்ல கருத்து? மேலே காட்டிய மூன்று வகையினருள் யாருடைய கருத்து சிறந்தது? எது மக்களுக்குப் பயன்படக் கூடியது? தமிழ் மொழி வளர்ச்சிக்குத் துணை செய்யக் கூடியது? என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். முதலிலே மொழி என்பது என்ன? அது எதற்காக? என்பதைச் சிந்திக்க வேண்டும். மொழி என்பது, மக்கள் தம் உள்ளத்திலே உருவாகும் எண்ணத்தை மற்றவர்களுக்கு அறிவி க்க உபயோகப்படும் ஒரு கருவியாகும். மக்களுடைய வாழ்வுக்கு- வளர்ச்சிக்கு- முன்னேற்றத்துக்கு உதவுவது மொழியாகும். உணவு, உடை, நிலம், நீர் முதலிவைகள் நமது வாழ்வுக்கு உதவும் கருவியாக இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள், மக்களின் வாழ்வை ஒட்டி- அவர்களது வளர்ச்சியைப் பின்பற்றி- அவர்கள் பேசும் மொழியிலும் மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும் என்பதை மறுக்க மாட்டார்கள். மொழியானது அப்படியே பிறந்த மேனியாகவே இருக்க வேண்டும், பிறமொழி கலக்காத தூயதாகத் துலங்க வேண்டும்; பிறமொழிக் கலப்பால் மொழியின் தூயதன்மை கெட்டு விடுகின்றது என்போர் மொழிப் பற்றுள்ளவர்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இவர்கள் மொழியின் தத்துவத்தையும் , உலகத்தோடு ஒட்ட. ஒழுகுதல் தான் சிறந்தது என்ற உண்மை யையும் மறந்தவர்கள் என்றுதான் நாம் கொள்ளவேண்டும். பிற மொழிச் சொற்களைத் தமிழிலே புகுத்தித்தான் எழுத வேண்டும் என்போர், தூய தமிழ் வேண்டும் என்போர் மீது கொண்ட ஆத்திரத்தால்தான் அப்படிச் சொல்லுகின்றனர். இப்படி முடிவு கட்டுவதில் தவறு இல்லை. மூன்றாவது கொள்கையினர்தான் - அதாவது தமிழைப் பொது மக்களுக்குப் புரியும்படி எழுதுவதுதான் மொழியால் மக்கள் பெறும் பயனாகும்- என்பவர்கள் மொழியின் உண்மை யை அறிந்தவர்கள். நமது முன்னோர்களும், தமிழ் மொழியை இந்த முறையிலேதான் வளர்த்து வந்திருக்கின்றனர். நமது முன்னோர்கள் பிறமொழி வெறுப்பின்றியே தமிழை வளர்த்து வந்திருக்கின்றனர். இன்று தமிழ் கற்ற சிலர் உள்ளத்தைப் பிடித்து உலுக்கும் பிறமொழி வெறுப்பு பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்களிடம் இருந்ததல்லை. இந்த உண்மையைத் தமிழ் கற்றவர்கள் அனைவரும் அறிவார்கள். கி.பி. 9- ஆம் நூற்றாண்டின் உரைநடை தமிழ் உரைநடை, காலத்துக்குக் காலம் மாறி வந்திருக் கின்றது. மக்கள் வளர்ச்சியோடு இணைந்து வளர்ந்து வந்திருக் கின்றது. உரைநடை வடிவில் எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்கள் எதுவும் இல்லை. உரையும், பாட்டும் கலந்த தமிழ் நூல்கள் சில இருக்கின்றன. அவை, சிலப்பதிகாரமும், பெருந்தேவனார் பாரத முந்தான். தகடூர் யாத்திரை என்ற நூல் மறைந்து போய்விட்டது. நமது காலத்துப் புலவர்கள் பெரும்பாலும் உரையாசிரி யர்களின் உரைநடையைத்தான் வசன நடைக்கு எடுத்துக்காட் டாகக் கொள்ளுகின்றனர். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உரையாசிரியர்கள் உரைநடையை இன்று அப்படியே காப்பி அடித்து எழுதுவதனால் தமிழ் வளரும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அதனால் பொதுமக்களுக்குப் போதுமான பயன் கிட்டுமா? என்பதுதான் கேள்வி. இனிக் காமம் நன்றா மாறு உண்டு. சுவர்க்கத்தின் கண் சென்று போகம் துய்ப்பல் என்றும், உத்தர குருவின் கண் சென்று போகம் துய்ப்பல் என்றும், நன் ஞானம் கற்று வீடு பெறுவல் என்றும், தெய்வத்தை வழிபடுவல் என்றும் எழுந்த காமம் கண்டாயன்றோ? மேன் மக்களானும் புகழப்பட்டு, மறுமைக்கும் உறுதி பயக்கும் ஆதலின் இக்காமம் பெரிதும் உறுதி உடைத் தென்பது. இது இறையனார் அகப்பொருள் உரையில் உள்ள தமிழ் நடை, ஏறக்குறைய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் நடை இது. காமம், சுவர்க்கம், போகம், உத்தருகுரு- ஞானம், தெய்வம் ஆகிய வடமொழிச் சொற்களும் இவ்வுரை நடையில் கலந்து காணப்படுகின்றன. ஆயினும் இந்த நடை சிறந்த தமிழ் நடை யென்றுதான் தமிழ்ப் பற்றுள்ளவர்களால் மதிக்கப்படுகின்றது. கி. பி. 13- ஆம் நூற்றாண்டின் பின் அடிசில் என்பது உண்பன, தின்பன, பருகுவன, நக்குவன என்னும் நால்வகைக்கும்; அணியென்பது கவிப்பன, கட்டுவன, செறிப்பன, பூண்பன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும்; இயம் என்பது கொட்டுவன, ஊதுவன, எழுப்புவன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், பொதுவாதலின் அடிசில் அயின்றார்; மிசைந்தார் எனவும்; அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும், இயல் இயம்பினார், படுத்தார் எனவும்; படை வழங்கினார், தொட்டார் எனவும், பொது வினையான் சொல்லுக இது சேனாவரையர் எழுதும் உரைநடை; தொல் காப்பியம் சொல்லதிகார உரையில் காண்பது. தனித்தமிழ் நடைக்கு இதை உதாரணமாகக் காட்டலாம். இனி மங்கல மரபில் காரியம் செய்வார், வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வா ராதலின் மங்கலமாகிய வடதிசையை முற் கூறினார் இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி, தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கியும் கருமங்கள் செய்வாராதலின் தென்றிசையைப் பிற்கூறினார். இது நச்சினார்க்கினியரின் உரைநடை. தொல்காப்பிய எழுத்ததிகார உரையால் கண்டது. காரியம், கருமம், மங்கலம், திசை முதலிய வடசொற்கள் அமைந்த உரைநடை. இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல், இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்து வதற்கு உரிய மாந்தர்க்கு, உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலின் துறவறமாகிய காரண வகையான் கூறப்படுவது அல்லது, இலக்கண வகையான் கூறப்படாமையின் நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம். இது திருக்குறளின் சிறந்த, உரையாசிரியர் பரிமேலழகரின் உரைநடை. பதம், காரணம், இலக்கணம் ஆகிய வட சொற்கள் இந்நடையில் காணப்படுகின்றன. சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உரை நடைகள் ஏறக்குறைய ஒரு தன்மையில் இருப்பதைக் காணலாம். பேராசிரியர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர் களின் நடைகளும் இவை போன்றனவே. உரையாசிரியர்களில் பெரும்பாலோர் கி.பி. 13- ஆம் நூற்றாண்டிற்கும், 16- ஆம் நூற்றாண்டிற்கும் இடையிலே வாழ்ந்தவர்கள். ஆகவே அக்காலத்திலே உரைநடை எப்படி எழுதப்பட்டு வந்தது என்பதற்கு உரையாசிரியர்களின் தமிழ் நடையே சான்றாகும். உரையாசிரியர்களின் உரைநடைகள் சொற் சுருக்கமும் பொருளாழமும் பொருந்தியவை. வடமொழிச் சொற்களையும் கொண்டவை. படித்துச் சுவைக்கத்தக்க அழகிய உரைநடை. உரையாசிரியர்கள் யாரும் இலக்கணச் சூத்திரங்களுக்கும், செய்யுள்களுக்கும் உரைதான் எழுதினார்கள். மூல பாடத்தின் கருத்தை விளக்கிக் காட்டினார்கள். நூலாசிரியரின் நுண்ணறிவை விளக்கியுரைத்தார்கள். இதுவே அவர்கள் குறிக்கோள். உரை நடையிலே நூல்கள் எழுத வேண்டும் என்பதோ, உரைநடை நூல்கள் இன்ன வகையில் எழுதப்படவேண்டும் என்பதோ அவர்கள் குறிக்கோள் அன்று. ஆகையால் உரையாசிரியர்களின் உரைநடையைப் பின்பற்றித்தான் வசன நடை அமையவேண் டும் என்று கருதுவது சரியன்று. உரையாசிரியர்கள் எந்த உரை நடை நூல்களையும் எழுதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் வசனம் மக்களுக்குப் புரியும்படி- பயன்படும்படி- முதல் முதலில் உரைநடை எழுதத் தொடங்கியவர்கள் பலர் உண்டு. இவர்களிலே பெயர் தெரிந்தவர்கள் சிலர்; பெயர் தெரியாதவர்கள் பலர். சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு, அவ்விறை பணியின் வழுவாது நிற்கும் திண்ணனார், பகற்காலத் திலே மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக் காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அருகே நின்றும் இப்படித் தொண்டு செய்து வந்தார். இது ஆறுமுக நாவலர் அவர்களின் உரைநடை. சில சொற்களைத் தவிர பெரும்பாலான சொற்கள் இன்னும் வழக் கத்தில் இருப்பன. பூர்வம் சோழ ராஜாவின் மேல் கவிபாடிப் பரிசு பெறும் புலவர்களை, ஒரு விறகுத் தலையன் பெண் சாதிபார்த்து, இவர்களெல்லாம் ஒரு வேலையும் செய்து கஷ்டப்படாமல், பாட்டுப் பாடி எளிதில் பணம் சம்பாதித்து சுகமாக ஜீவனம் செய்துவர, நம்முடைய புருஷன் மாத்திரம் காட்டுக்குப் போய்க் காலில் கடுமுள் தைக்க, கட்டை வெட்டிக் கைகாய்க்க நாள்தோறும் மாடு போல உழைத்து விறகு விற்று அரைவயிற்றுக் கஞ்சிக்கும் இல்லாமல் அவதிப்பட வேண்டியது என்ன? இது அஷ்டாவதானம் வீராசாமி செட்டியாரின் உரை நடை. வாக்கியம் நீளமாக இருந்தாலும் தெளிவாகப் பொருள் விளங்குகிறது. அந்தக்ஷணமே ஒருவன் என்னிடத்திற்கு வந்து நீ யார் என்று கேட்டான். அவனுக்கு என் விருத்தர்த்தத்தைக் குறித்துச் சொன்னேன். அதன் பின்பு, அவன் என் கையைப் பிடித்துக் கடுக இழுத்து ஒரு குகைக்குள் இட்டுக்கொண்டு போனான். அவ்விடத்தில் அனேக மனிதர்கள் இருந்தார்கள்; அவர்களை நான் பார்த்துப் பிரமித்து ஆச்சரியப்பட்டதைப் பார்க்கிலும், என்னை அவர்கள் பார்த்து மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். இது அரபிக் கதையில் காணும் உரைநடை. 1927-ம் ஆண்டுப் பதிப்பு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாவலர், வீராசாமி செட்டியார், அரபிக்கதை ஆசிரியர் போன்றவர்களின் உரை நடைகளையெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வசனநடை என்று சொல்லிவிடலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே, அச்சுத் தொழில் பரவியபின், தமிழில் உரைநடை நூல்களும் எழுந்தன; மகா பாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற பெரிய பெரிய உரை நடை நூல்கள் பிறந்தன. அரபிக்கதை, பார்சிக்கதை, விக்கிர மாதித்தன் கதை போன்ற கதைகள் தமிழில் எழுதப்பட்டன. விநோதரச மஞ்சரி போன்ற கட்டுரை நூல்களும் தோன்றின. இந்த நூல்களின் வசன நடை இன்றும் பொது மக்களால் படித்துச் சுவைக்கப்படுகின்றன. மக்களுக்குப் புரியும்படியான மொழியிலே எழுதப்பட்ட நூல்கள் இவை. ஆனால் இவை களைப் பண்டிதர்கள்- தமிழைக் காப்பாற்றும் புலவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை ஆசிரியர்களில் வேதநாயகம் பிள்ளையும்; ராஜம் அய்யரும் குறிப்பிடத்தக்கவர் கள். எண்ணிறந்த தேவாலயங்களும், அன்ன சத்திரங் களும், நீர்வளமும், நிலவளமும், நாகரிகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ் நாடு, மற்றைய நாடு களிலும் விசேஷம் என்றும், அப்படியே தமிழ் பாஷையும் சர்வோத் கிருஷ்டமான பாஷையென்றும் சகலரும் அங்கீகரிக்கிறார்கள். இது வேதநாயகம் பிள்ளையின் உரைநடை. வடமொழிச் சொற்கள் மிகுதியானாலும் தமிழ் நடைதான். ஸ்ரீனிவாசனுக்குச் சாந்தி முகூர்த்தமான சமாச் சாரத்தை நாம் முன்னமே சொல்ல அவகாசப்படவில்லை. அவனும் லெட்சுமியும் நளனும் தமயந்தியும் போல் வெகு அந்நியோந்நியமாய் இருந்தார்கள் இது இராஜம் அய்யரின் தமிழ்நடை. ஆறுமுக நாவலர் வீராசாமி செட்டியார். அரபிக் கதை போன்ற நூல்களின் ஆசிரியர்கள், வேதநாயகம்பிள்ளை, ராஜம் அய்யர் போன்றவர்களின் தமிழ் நடைகள் வடமொழிச் சொற் களும், திசைச் சொற்களும் கலந்தவைகள்தாம். ஆயினும் அவை கள் பொது ஜனங்களால் போற்றப்படும்- படிக்கப்படும் வசனங் களாகவே விளங்குகின்றன. இத்தகைய வசனங்களை எழுதியவர் களையெல்லாம், தமிழ்ப் பணிசெய்தவர்கள் என்று சொல்லு வதா? அல்லது தமிழ்த் துரோகிகள் என்று கூறுவதா? எந்தத் தமிழனும் இவர்களைத் தமிழ்த் துரோகிகள் என்று துணிந்து சொல்ல முன்வர மாட்டான் என்பது நிச்சயம். இக்கால உரைநடை இந்த இருபதாம் நூற்றாண்டிலே தமிழ் நடை பல வகை யில் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதில் ஐயமில்லை. இந்த நூற்றாண்டிலே புலவர்களிலே பலர், பண்டைய உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றி எழுதவும் தொடங் கினர். அவர்கள் எழுதியவைகள் பள்ளிக்கூடப் பிள்ளைகள் தலையிலே சுமத்தப்பட்டனவேயன்றிப் பொது மக்களுக்குப் பயன் படவில்லை. உரையாசிரியர்களின் நடையை உதாரணமாக வைத்துக் கொண்டு எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்கள் புத்தக சாலையில் உள்ள அலமாரிகளில் தான் நின்று தவம்புரிகின்றன. இதிலிருந்து 9ஆம் நூற்றாண்டு உரைநடையும், 13முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையில் எழுந்த உரைநடையும் பொது ஜனங்களுக்குப் பயன் தருவன அல்ல என்பதை அறியலாம். பண்டைக் கால உரையாசிரியர்களின் நடையைப் பின் பற்றியவர்களிலே வெற்றி கண்டவர் திரு. வி. க. ஒருவர் தான். அவர் நீண்ட வாக்கியங்களாக எழுதாமல் சிறு சிறு வாக்கியங் களாக எழுதினார். பொது மக்களுக்குப் புரியாத சில சொற் களையும் அவர் கையாண்டாலும் அவர் நடை தெளிவானது. அவர் நடையின் வெற்றிக்குக் காரணம் வாக்கிய அமைப்புதான். ஆரியர் திராவிடர் பிணக்கையொட்டி நமது தென்னாட்டில், வடமொழி தென்மொழிப் போரும் புகைந்தெழுகிறது. வடமொழி நமது பரத கண்டத்துக்கு உரிய மொழியென்றும், தென்மொழி இத் தென்னாட்டுக் குரிய மொழியென்றும், மேலே கூறியிருக்கின்றேன். வடமொழி பிராமணர் மொழியென்றும்; தமிழ் மற்றவர் மொழியென்றும் சொல்லப்படுவதை நான் மிக உரமாக மறுக்கின்றேன். இது திரு.வி.க. அவர்களின் உரைநடை. புதுமையும் பழமை யும் கலந்து விளங்கும் உரைநடை. தமிழ் மக்களில் ஒரு பகுதியாருக்குத் திருக்குறள், சிலப்பதிகாரம் இவற்றின் காலம், சமயக் கொள்கை களைப் போல் ஆகிவிட்டது. இதன் பொருட்டுத் தங்கள் உயிரையும் கூட இழந்து விடுவார்கள்போல் தோன்று கிறது. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டனவாக இந்நூல்களைக் குறித்தால், அதற்கு அவர்களுடைய மனம் ஒப்புவதில்லை. பிற்காலத்தனவா யிருக்கக் கூடும் என்று யாரேனும் கூறினால் அவரைத் தமிழ்த் துரோகி எனறு பட்டங்கட்டி விடுகிறார்கள். இது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் தமிழ் நடை. தெளிவும் சுவையும் அமைந்த நடை. சோழனைக் கண்டு மோகித்து வசம் அழிந்திருக் கிறாள் ஒரு பெண்; வீட்டில் பல இடங்களில் போய் உட்கார்ந்து பார்க்கிறாள். ஆங்காங்குள்ள படுக்கைகளில் படுத்துப் பார்க்கிறாள்- மனசுக்கு அமைதி வராதா என்று. உணர்ச்சி தன் வசத்தில் இல்லாததால் கையில் உள்ள வளையல்கள் தாமாகக் கழன்று படுக்கைக்குக் கீழேயோ அல்லது உருண்டுபோய்ப் பெட்டிகளுக்கு அடியிலேயோ கிடக்கின்றன. இது அவளுக்குத் தெரிவதில்லை. அங்குமிங்கும் போய்த் தேட ஆரம்பிக்கிறாள். இது டி. கே. சி. அவர்களின் உரைநடை. படிப்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. இல்லையென்று சொல்ல முடியுமா? மேலே காட்டிய உரைநடை உதாரணங்களைப் படித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு விதமாக உரைநடை வளர்ந்திருப்பதைக் காணலாம். வட சொற்களோ, திசைச் சொற்களோ கலந்தமையால் உரைநடையின் தரம் குறைந்துவிடவில்லை என்பதைக் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் உரைநடை நூல்கள்- அதாவது வசன நூல்கள் மிகுதியாகத் தமிழிலே தோன்றத் தொடங்கின. அப்பொழுது தமிழ் நூல்களை எழுதினவர்கள் பழந்தமிழ் உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றவில்லை. மக்களுக்குப் புரியவேண்டும் என்ற எண்ணத்துடன், வழக்கு மொழிகளையெல்லாம் சேர்த்து எழுதினர். ஆகையால் அவ்வுரை நடை நூல்கள் பொது மக்களுக்குப் பயன்பட்டன. அவைகள் இன்றும் பயன்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் எழுந்த உரைநடை நூல்கள் பெரும்பாலும் மக்களுக்குப் புரியவேண்டும் என்ற கருத்துடன் பிறந்தவைகள் தாம். இக் கருத்துடன் பிறந்த நூல்களே பொது மக்களால் போற்றிப் படிக்கப்பட்டு வருகின்றன. மக்களை மறந்துவிட்டுத் தமிழுக்குப் பணி செய்கிறோம் என்ற கருத்துடன் எழுதப்பட்ட நூல்கள் மூலையிலே முடங்கித் தான் கிடக்கின்றன. பொது மக்களுக்குப் பயன்படவில்லை. சிறு பான்மையோர்க்குத்தான் பயன்படுகின்றன. ஆகவே மக்களை மனத்தில் வைத்துக் கொண்டு எழுதப் படும் இலக்கியங்கள்தான் நிலைத்து நிற்கும், பயன்தரும், மக்களுக்கு உதவி செய்யும் என்பது உண்மை. மேலே கூறியவை களைக் கொண்டு இதை அறியலாம். அன்றியும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை யுண்டு; ஒவ்வொருவர் தமிழ்நடையிலும் ஒவ்வொரு தனிச் சுவை களைக் காணலாம். இது இயற்கை. இந்த இயற்கைக்கு மாறாக இப்படித்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்தினால் மொழி வளரமுடியாது. மேலே காட்டிய உரைநடை உதாரணங்களைப் படித்துப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக அமைந் திருப்பதைக் காணலாம். பலவகையிலே உரைநடைகள் எழுந் தால்தான் படிப்பதற்குச் சுவைதரும். உரைநடைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் வசனம் வளர்ச்சியடையாது. வசன இலக்கியங்கள் பெருக வேண்டும் என்று நினைப்போர் இதை மனத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். பலருக்கும் புரியும் நடைதான் உண்மையான வசன நடையாகும். பழய இலக்கியங்கள் கூறும் உண்மைகள் தொல்காப்பியத் தமிழன் மக்கள் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் தாவரங்கள் அல்லர்; அல்லது பள்ளத்திலே தேங்கி நிற்கும் சாக்கடை நீரல்லர்; நடமாடும் தன்மை வாய்ந்தவர்கள்; கண்ணால் கண்டு, காதால் கேட்டு, உள்ளத்தால் உணர்ந்து பல உண்மைகளைக் கண்டறியும் உயர்ந்த இயல்புள்ளவர்கள்; ஓரிடத்திலே தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரை ஒத்தவர்கள். ஆகையால், மக்கள் நாகரிகம் காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டுதான் வரும். ஆரம்பத்தில் குரங்கினங்கள்போல் வாழ்ந்த மக்கள், இன்றுள்ள நிலையை அடைவதற்கு எத் தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆயின. இத்தகைய மக்களின் பழைய வரலாற்றைக் காண்பதற்குப் பண்டை இலக்கியங்கள் துணை செய்கின்றன. பழைய இலக்கியங் களில் கூறும் உண்மைகளை எடுத்துக்காட்டுவது பழைய காலத்தின் நிலைமையை அறிவதற்குத்தான்; அந்தக் காலத்திற்குத் திரும்பிச் செல்வதற்காக அன்று. இவ்வுண்மையை இலக்கிய விற்பன்னர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் காலத்திற்கு ஏற்றதன்று, ஒப்புக் கொள்ளத்தக்க தன்று என்பதற்காகப் பண்டை இலக்கியங்களில் உள்ள வரலாற்று உண்மைகளை மறைப்பது தவறு; மாற்றிக் கூறுவதும் தவறு. இது சரித்திர ஆராய்ச்சிக்கு முரண்பட்டதாகும். இக் கருத்துடன்தான் தொல்காப்பியத்தில் உள்ள பல உண்மைகளை இக் கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறோம். நிலக்கிழவர்களின் ஆட்சி தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தமிழகத்தில் நிலக்கிழவர்கள் ஆட்சி நிலைத்திருந்தது. பெருநிலக்கிழவர்களே குறுநில வேந்தர்கள் என்ற பெயருடன் விளங்கினர். இக் குறுநில வேந்தர்களும், இவர்களை அடக்கியாண்ட முடி மன்னர்களும் கலைகளையும், தொழில்களையும், அறிஞர்களையும் காப்பாற்றி வந்தனர். கலைஞர்கள், கவிஞர்கள் அனைவரும் இந்த நிலக் கிழவர்களை நம்பியே வாழ்க்கை நடத்தி வந்தனர்; தங்கள் கலைகளையும் வளர்த்து வந்தனர். கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீ இச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயல், 30-வது சூத்திரம். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்பவர்கள், வழியிலே தம் போன்ற இரவலரைக் கண்டு, தாம் பெற்ற செல்வத்தைப் பற்றி, அச்செல்வம் பெறாதவர்களுக்கு எடுத்துக் கூறி, தாம் செல்வம் பெற்ற வள்ளல்களிடம் அவர்களும் சென்று செல்வம் பெறும்படி கூறும் பகுதியும் என்பதே இதன் பொருள். கூத்தர்- கூத்தாடுவோர்; பாணர்- இசை பாடுவோர்; யாழ் வாசிப்போர்; பொருநர்- புகழ்ந்து பாடுவோர்; விறலி-இக் கலை களிலே தேர்ந்த பெண்கள். கலையிலே வல்ல பெண்களுக்கு, பாடினி, பாணினி என்ற பெயர்களும் உண்டு. இவர்கள் பெரும் பாலும் ஒரே வகுப்பினர். கலையே இவர்கள் தொழில்; நிலக் கிழவர்களைப் புகழ்ந்து போற்றி அவர்கள் அளிக்கும் பொருள் களைக் கொண்டு உயிர் வாழ்வதே இவர்களுடைய வாழ்க்கை. இவர்கள் தமிழ்நாடெங்கும் சுற்றுவார்கள்; கொடைத்தன்மை யுடைய வள்ளல்களிடமெல்லாம் போவார்கள்; தங்கள் கலைத் திறமையைக் காட்டுவார்கள். கலை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி கலை வளர்ச்சி உச்சநிலையிலேயிருந்தது; யாழ், மத்தளம், குழல் போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தமிழ்நாட்டிலே செய்யப்பட்டு வந்தன. நாடகங்கள்கூட நடிக்கப்பட்டன. கூத்தர்கள் இருந்தனர் என்பதனால் இவ்வுண்மையைக் காணலாம். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 56- வது சூத்திரம். நாடக வழக்கம், உலக வழக்கம் என்று இரண்டு வழக்கம் உண்டு என்பதை இச் சூத்திரத்தால் உணரலாம். நாடகம் என்பது ஒரு புனைந்துரைக் கதையை நாடகமாக நடத்துவது. இல்லாதவனைத் தலைவனாக, அதாவது கதாநாய கனாக வைத்து எழுதப்படுவது; மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக் கும் பல நிகழ்ச்சிகளை அமைத்து எழுதி நடிக்கப்படுவது. இதுவே நாடக வழக்கம். உலகிலே நடைபெறும் பல உண்மைகளை எடுத்துக் கூறுவது உலகியல் வழக்கம். சிற்பத்தொழிலிலே அக்கால மக்கள் சிறந்திருந்தனர். சிறந்த பாதுகாப்புள்ள கோட்டைகளைக் கட்டியிருந்தனர். அக் கோட்டைகளைப் பகைவர் நெருங்க முடியாதபடி பல வகை யான பாதுகாப்புக்களை அமைத்திருந்தனர். இவ் வுண்மையைத் தொல்காப்பியத்தில் உள்ள பல சூத்திரங்களிலே காணலாம். முழுமுதல் அரணம் முற்றலும் கேட்டலும். இது தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயல், 8-வது சூத்திரம். எல்லாப் பாதுகாப்பும் அமைந்த கோட்டைச் சுவரை முற்றுகையிடுவதும் கைப்பற்றுவதும் என்பது இதன் பொருள். முழுமுதல் அரணம்- எல்லா வகையான பாதுகாப்பும் பொருந்திய கோட்டைச் சுவர். ஆறுகளுக்குக் கல்லணை கட்டி நீரைத் தேக்கி நிலங்களுக் குப் பாய்ச்சினர். இவ் வழக்கம் அக்காலத்திலிருந்தது. வருவிசைப் புனலைக் கற்சிறை போல. இது தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், ஏழாவது சூத்திரத்தின் பகுதி. வருகின்ற வேகமுள்ள வெள்ளத் தைக் கல்லணை தேக்கி நிற்பதுபோல என்பது இதன் பொருள். தொல்காப்பிய காலத்தில் இரும்பு, பொன் முதலிய உலோகங்கள் தமிழ்நாட்டிலே வழங்கியிருந்தன; அவைகளால் கலன்களும் அணிகளும் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந் திருந்தனர். வாள் மலைந்து எழுந்தோன் (தொ.பொ. புறம்,5) வாளால் போர் செய்து எழுந்தவன். இதனால் வாள் இருந்ததைக் காணலாம். கணையும் வேலும் துணையுற மொய்த்தலின். (தொ.பொ. புறம்.13) அம்பும் வேலும் ஏராளமாகக் கூடியிருத்தலால். இது அம்பும், வேலாயுதமும் இருந்தன வென்பதைக் குறித்தது. பொன்னிலிருந்து பிறந்த பொற்பு என்ற சொல், தொல் காப்பியத்தில் காணப்படுகிறது. அணிகலன்களைக் குறிக்கும் இழை என்ற சொல்லும் காணப்படுகின்றது. இரும்புக் கருவிகளும், பொற்கலன்களும் இருந்தன என்பதை விளக்க இவைகளே போதும். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை முதலிய படைகள் தொல்காப்பிய காலத்தில் இருந்தன. இவைகளும் அக்காலத் தமிழர்களின் உயர்வை விளக்குதற்கு உரிய சான்று களாம்; உழவுத் தொழிலின் உயர்வு தமிழ்நாடு நீர்வளம் நிறைந்த நாடு; வற்றாத நீர்ப் பெருக் குள்ள நதிகள் பாயும் நாடு. மலைகள் நிறைந்து மழைவளம் குறை யாத நாடு. இத்தகைய நீர்வளமுள்ள நாடுதான் நிலத்திலும் சிறந் திருக்கும். நீர்வளமும் நிலவளமும் சிறந்த நாட்டில்தான் உழவுத் தொழில் பெருகும்; உணவுப்பொருள் குவியும். தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழர்கள் சிறந்த விவசாயிகளாக இருந்தனர். விவசாயம் வளர்ச்சியடைந்திருக்கும் பகுதியில்தான் நாகரிகம் வளர்ச்சியடையும். நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நிலப் பகுதிக்கு மருத நிலம் என்று பெயர் வைத்தனர் தமிழர். இந்த மருத நிலத்திற்கு வேந்தன் என்பவன் தெய்வம் என்று கூறினர். வேந்தன் என்றால் இந்திரன் என்று பொருள் கூறுவோர் உண்டு. நால்வகை வகுப்புப் பிரிவுகள் தொல்காப்பிய காலத்திலே நிலைத்திருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன அப்பிரிவுகள். இப் பிரிவுகள் பிறப்பினால் ஏற்பட்டவையல்ல; தொழில் காரணமாகத் தோன்றியவை. உழவுத் தொழிலில் உயர்ந்து நின்ற மருத நிலத்திலேதான் இப்பிரிவுகள் முதல் முதல் தோன்றின. இந்த நால்வகைப் பிரிவினருக்கும் உரிய தொழில்கள் இவையிவையென்பதைத் தொல்காப்பியம் விளக்கமாகக் கூறு கின்றது. நால்வகை வகுப்பினர் நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய (தொ. பொ.மர.66) பூணூல், தண்ணீர்க் குண்டான், முக்கோல் ஆசனம் இவை அந்தணர்க்குரியவைகள் இவ்வாறு தவ முயற்சியிலே ஈடுபட்டி ருப்போர் அந்தணர். அரசன் இல்லாத சமயத்தில் அரசாளும் உரிமையும் அந் தணருக்கு உண்டு. இதனை, அந்த ணாளர்க்கு அரசுவளாவு இன்றே என்பதனாற் காணலாம். அந்தணர்கள் அரசு செய்வதற்கும் உரியவர்கள் என்பதே இதன் பொருள். மக்கள் நன்மைக்காக உழைக்கும் இரக்கமுடையவர்கள்- அறிவுடையவர்கள்- கற்றவர்கள்- தவம் புரிகின்றவர்கள் - அந்த ணர்கள் என்று எண்ணப்பட்டனர். படையும், கொடியும், குடையும், முரசும், நடைநவில் புரவியும், களிறும், தேரும், தாரும் முடியும், நேர்வன பிறவும், தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய. ஆயுதம், கொடி, குடை, முரசவாத்தியம், சிறந்த நடையை யுடைய குதிரை, யானை, தேர், மலர்மாலை, முடி பொருத்தமான வேறு பல பண்டங்கள் தெரிந்தெடுக்கப்பட்ட செங்கோலை யுடைய அரசுக்கு உரியனவாகும். இவை அரசர்க்குரிய அங்கங் களாகும். அந்த ணாளர்க்கு உரியவும், அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளனே. (தொ.பொ.மர68) அந்தணாளர்க்கு உரியவைகளும் அரசர்களுக்கு உரியனவாக வருதலும் உண்டு. இதனால் அரசர்களாகும் உரிமை அந்தணர்களுக்கும் இருப்பதுபோல, அந்தணர்களாகும் உரிமை அரசர்களுக்கும் உண்டு என்பதைக் காணலாம்! வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொ.பொ.மர73) வைசிகன் வாணிகம் செய்யும் வாழ்க்கையைப் பெறுவான். மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான (தொ.பொ.மர 74) உண்மை தெரிந்த வகையினால் எட்டு வகையான உணவுத் தானியங்களை உண்டாக்கும் செய்தியும் வைசிகனுக்கு உண்டு. கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே (தொ.பொ.மர75) வைசிகர்க்கும் அரசரைப் போல மலரும் மாலையும் உண் டென்று கருதினார். இந்த மூன்று சூத்திரங்களால் வைசிகர்க்கு- அதாவது வணிகர்க்கு, வியாபாரம் உண்டு, விவசாயம் உண்டு அரசுரிமை உண்டு என்பதைக் காணலாம். வாணிகர் நேரடியாக நிலத்தில் உழும் விவசாயிகளாக இருக்கவில்லை; நிலத்திற்குரியவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொ.பொ.மர76) வேளாளர்க்கு உழுதுண்பதைத் தவிர வேறுதொழில்கள் இல்லையென்று மொழிவார்கள். வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே. (தொ.பொ.மர77) அரசர்கள் கொடுத்தால் படைக்கலமும் மாலையும் வேளாளர்கள் பெறக்கூடிய பொருள்கள் என்று கூறுவார்கள். இவைகளால் வேளாளர்க்கு உழுதொழில் உண்டு; அரசு புரியும் தொழிலும் உண்டு என்பதைக் காணலாம். மேலே காட்டியவைகளைக்கொண்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தன என்பதில் ஐயம் இல்லை. தொழில் காரணமாகவே இப்பிரிவுகள் ஏற்பட்டன; பிறவி காரணமாக அன்று. இந் நால்வகையினருக்குள் கொள்வினை கொடுப்பினை இருந்தன. எத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் இருந்த தாகத் தெரியவில்லை. நால்வகைப் பிரிவுகள் தமிழர்களிடம் இருந்ததில்லை; ஆரியர் வந்த பின்னரே ஏற்பட்டவை; அவர்களாலே புகுத்தப் பட்டவை என்று கூறுகின்றனர் சில சரித்திர ஆசிரியர்கள். தமிழ் நாட்டின் பழைய பண்பாட்டை அறிந்த சரித்திர ஆசிரியர்கள் இதை ஒப்புக்கொள்ளுவதில்லை. தமிழ் நாட்டின் தலை சிறந்த அறிஞர், காலஞ்சென்ற மறைமலை அடிகள் இதுபற்றிக் கூறியிருப்பதைப் பாருங்கள். இந்திய நாட்டுக்குப் புறம்பே உறைந்த காலத்தில் ஆரியர் ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டு, அவற்றைக் கொண்டு பிழைப்பவர்களாய் அவற்றின் மேய்ச்சலுக்குப் புல் நிலங்களைத் தேடித் திரிபவர்களாயிருந்தமையின், அவர்களுக்கு அந் நாளில் உழவுத்தொழில் இன்னதென்றே தெரியாது. மற்றும் அவர்கட்கு முன் இந்திய நாட்டில் இமயமலைச் சாரல் வரை பரவியிருந்த தமிழர்களோ, ஆரியர்களைப் போல் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அலைந்து திரியும் வாழ்க்கையில் இல்லாமல் நாகரிகத் தில் சிறந்து, தாம் தாம் சென்ற இடங்களில் ஆறுகளும் ஏரிகளும் உள்ள பக்கங்களில் நிலையாகக் குடியேறி உழவுத்தொழிலைச் செய்து, அதனால் செல்வம் பெருக்கி, நாடு நகரங்களை அமைத்துத் தமக்குள் அரசர்களை ஏற்படுத்தி, வறுமையின்றி உயிர்வாழ்ந்தவர்கள் ஆவர். இங்ஙனம் செல்வத்தாற் சிறந்த நாகரிக வாழ்க்கையுடையவர்களுக்குள்ளேதான் பலவகைத் தொழிற்பிரிவுகளும், அத்தொழில்களைச் செய்யும் மக்கட் பிரிவுகளும் உண்டாகுமே யல்லாமல் நிலையான இருப்பிடம் ஏதும் இன்றி இன்றைக்கு ஓரிடத்தும், நாளைக்கு ஓரிடத்தும் அலைந்து திரியும் மக்கள் பால் அத்தகைய தொழில்களும் பிரிவுகளும் உண்டாக மாட்டா. ஜாதி வேற்றுமையும் போலிச் சைவமும் என்ற தமது நூலிலே இவ்வாறு கூறியுள்ளார். இதனால் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்பே இங்கு நால்வகை வகுப்புப் பிரிவுகளும், மற்றும் பல பிரிவுகளும் நிலைத்திருந்த உண்மையை உணரலாம். வட ஐரோப்பாவிலும், மத்திய ஐரோப்பாவிலும் தங்கி யிருந்த மக்களே ஆரியர் என்ற பெயருடன் பல நாடுகளுக்கும் சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர்தான் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கும் வந்தனர். அவர்கள் சென்ற மற்ற நாடு களில் இந்தியாவில் இருப்பதுபோன்ற நால்வகை உறுப்புக்கள் தோன்றவில்லை; நடைமுறையிலும் இல்லை; இலக்கியங்களிலும் இல்லை. இந்தியாவில் மட்டும் இந்த நால்வகைப் பிரிவுகள் நடைமுறையிலும் எல்லா மொழி இலக்கியங்களிலும் காணப் படுகின்றன. இதனை நாம் நன்றாகச் சிந்திக்கவேண்டும். இந்தியாவில் தமிழகத்தில்- ஆரியர்கள் வருவதற்கு முன்பே நால்வகைப் பிரிவுகள் இருந்தன. ஆகையால்தான் ஆரியர் இப் பிரிவுகளை ஆதரித்தனர்; தங்கள் இலக்கியங்களிலும் சேர்த்துக் கொண்டனர் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆரியர்கள் நால்வகைச் சாதி வகுத்தனர் என்றால் அவர்கள் புகுந்த மற்ற நாடுகளிலும் அப்பிரிவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? மேற்கூறியவைகளைக்கொண்டு நால்வகைப் பிரிவு தமிழ கத்திலே தாமே தோன்றியவை; விவசாய வளர்ச்சி காரணமாகத் தோன்றியவை- என்று எண்ண இடமுண்டு. மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த காலத்தில் இப்பாகுபாடு பொருத்தமான தாகும். இன்னார் இன்ன தொழிலைச் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதிலே தவறுமில்லை. அக் கட்டுப்பாடு தொழில் வளர்ச்சிக்குத் துணை செய்வதாகவே இருந்தது. இன்னும் பல பிரிவுகள் அடியோர் பாங்கினும் என்று தொடங்குகின்ற அகத் திணை இயல் சூத்திரம், ஏவன் மரபின் ஏனோர் என்று கூறும் அகத்திணை இயல் சூத்திரம் இவைகளால் அடிமைத் தொழில் செய்வோர் இருந்தனர்; பிறரை வேலை வாங்கும் தலைவர்கள் இருந்தனர் என்பதைக் காணலாம். தொல்காப்பியம் அகத்திணையியல், புறத்திணை இயல், மரபியல் ஆகியவைகளிலே, தொழிற்பிரிவுகள், தொழில் செய்யும் மக்கட்பிரிவுகள் இருந்தன என்பதற்கு ஆதரவாகப் பல சூத்திரங்கள் இருக்கின்றன. தெய்வ வணக்கம் தொல்காப்பிய காலத்திலே பல தெய்வங்களைத் தமிழர்கள் வணங்கி வந்தனர். ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் தனித் தெய்வங்கள் இருந்தன. இதனை, மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் என்ற அகத்திணை இயலின் ஐந்தாவது சூத்திரத்தால் அறியலாம், மாயோன், சேயோன், வேந்தன், வருணன் இவைகள் தமிழ் மக்களால் வணங்கப்பட்டு வந்த தெய்வங்கள். தெய்வம், கடவுள், தேவர் முதலிய சொற்கள் பல சூத்திரங் களில் காணப்படுகின்றன. இறந்த வீரர்களுக்குக் கல் நட்டு, அக் கல்லிலே அவ் வீரர் களின் பெயரை எழுதி வைத்து வணங்குவது தமிழர் வழக்கம். இக்கல்லை முழுக்காட்டுவதும், அக்கல்லிலே அவ் வீரன் குடிகொண்டிருப்பதாக எண்ணுவதும் தமிழர் வழக்கம். இதைத் தொல்காப்பியம் புறத்திணை இயல், 63-வது சூத்திரத்திலேயே காணலாம். மக்கள்மீது தெய்வ ஆவேசம் வந்து ஆடுவதும் உண்டு. இதுவும் அச்சூத்திரத்தில் காணப்படும் உண்மை. சூரியன், நெருப்பு, சந்திரன் முதலியவைகளையும் தெய்வங் களாகத் தமிழர்கள் வணங்கி வந்தனர். கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இது புறத்திணையியலின் 27வது சூத்திரம். கொடி நிலை- சூரியன்; கந்தழி- அக்கினி; வள்ளி- சந்திரன். இம் மூன்றும் கடவுள் வாழ்த்தோடு சேர்த்து எண்ணப்பட்டு வரும். இவைகள் பண்டைத் தமிழர்களிடம், தெய்வ வணக்கம்- அதுவும் உருவம் வைத்து வணங்கும் தெய்வ வணக்கம் இருந்ததை அறியலாம். தொல்காப்பிய கால மதம் தொல்காப்பியத்தில் பல தெய்வங்கள் காணப்படுகின்றன. ஆனால் அக்காலத்தில் தமிழ் நாட்டில் மதம் இருந்ததா? இருந்தால், என்ன மதம் இருந்தது? அம் மதத்தின் பெயர் என்ன? என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவது இயற்கை. தொல்காப்பியத்தைக் கொண்டு பார்த்தால் இப்பொழுது இருப்பது போன்ற மதங்கள் அப்பொழுது இருந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் மதத்திற்கு அடிப்படையான ஊழ்வினையிலி ருந்தது, ஆன்மா வேறு, உடல்வேறு என்ற நம்பிக்கையிருந்தது. எழுத்துக்களை உயிர் எழுத்து, மெய்யெழுத்து என்று பிரித்திருப்பதே, உயிர் வேறு, உடம்பு வேறு என்ற நம்பிக்கையைக் காட்டும். உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் என்பது பொருளியற் சூத்திரம். இவ்வாறே உடம்பு வேறு, உயிர்வேறு என்பதை உணர்த்தும் சூத்திரங்கள் பலவுண்டு. ஊழ்வினையைப் பால் என்று உரைக்கின்றது தொல் காப்பியம். களவியல், இரண்டாவது சூத்திரத்தில் இதனைக் காணலாம். ஆண் பெண் இருவர் தனியே சந்தித்துக் காதல் கொள்வதற்குக் காரணம் ஊழ்வினை என்று சொல்லுகின்றது அச்சூத்திரம். மதத்திற்கு அடிப்படையான, உடல், உயிர், ஊழ்வினை தெய்வங்கள், தெய்வ வணக்கங்கள் என்பவைகளைத் தவிர வேறு மதங்கள் காணப்படவில்லை. வடமொழியும் தமிழும் தொல்காப்பிய காலத்திலேயே வடமொழிக்கும் தமிழுக் கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அந்தணர் மறை என்று வேதத்தைக் குறிப்பிடுவது தொல்காப்பியம். தமிழில் உள்ள சொற்களை- தமிழ்ச் செய்யுளில் வழங்கும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நான்கு வகையாகக் கூறுகின்றது. தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியலின் முதற் சூத்திரத்திலே இதனைக் காணலாம். இயற்கையாகப் பொருள் விளங்கும் சொல், திரிந்து வழங்கும் சொல், வேற்று நாட்டுச் சொல், வடமொழிச் சொல்- இவைகள் எல்லாம் செய்யுளில் சேர்ந்து வரலாம் என்று கூறு கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியத்திலேயே வடசொற்கள் பல கலந்திருப் பது குறிப்பிடத்தக்கதாகும். திசை, பூதம், தெய்வம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், பதி, மாத்திரை, அதிகாரம், வைசிகன் போன்ற பல வடமொழிச் சொற்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியக் காலத்தில் தமிழர்களிடம் மொழி வெறுப்பில்லை என்பதையே இது காட்டும். இலக்கிய வளர்ச்சி பண்டைத் தமிழர்கள் இலக்கியங்களை எவ்வாறு வளர்த்து வந்தனர் என்பதைத் தொல்காப்பியம் தெளிவாக விளக்கிக் கூறுகின்றது. சிறந்த பல நூல்கள் தோன்றுவது இலக்கியம் வளர்வதற்கு வழி. எந்த மொழியில் சிறந்த பல இலக்கியங்கள் இருக்கின்றன வோ அந்த மொழியே இலக்கியச் செறிவுடைய மொழியாகப் பாராட்டப்படும். நூல்களை- அதாவது இலக்கியங்களை முதல்நூல், வழி நூல் என்று இரண்டு வகையாகப் பிரிக்கின்றது தொல்காப்பியம். முதல்நூல் என்பது ஒரு ஆசிரியன் தானாகவே இயற்றுவது. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்பது தொல்காப்பிய மரபியல், 91வது சூத்திரம். அறிவிலே சிறந்தவரால் ஆராய்ந்து எழுதப்பட்டது முதல்நூல் என்பதுதான் இதன் கருத்து, முதல் நூலைப் பின்பற்றி எழுதப்படுவது வழி நூலாகும். இதனை, வழியெனப் படுவது அதன்வழித் தாகும் என்று அடுத்த சூத்திரம் கூறுகின்றது. இந்த வழிநூல் நான்கு வகைப்படும் என்று அதற்கு அடுத்த சூத்திரம் கூறுகின்றது. 1. முதல்நூலில் விரிவாக உள்ளதைச் சுருக்கி எழுதுதல். 2. முதல்நூலில் சுருக்கமாக உள்ளதை விரிவாக எழுதுதல். 3. விரிவாக உள்ளதைச் சுருக்கியும், சுருக்கமாக உள்ளதை விரித்தும் மக்களுக்கு விளங்கும்படி தொகுத்து எழுதுதல். 4. வேறு மொழிகளிலே உள்ள நூல்களை மொழி பெயர்த்தல். தொகுத்தல், விரித்தல் தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்பட யாத்தலொடு, அனைமர பினவே என்ற 94-வது சூத்திரத்தால் அறியலாம். இலக்கியம் வளரவேண்டுமானால் மொழிபெயர்ப்பும் இன்றியமையாதது என்பதைத் தொல்காப்பிய காலத்தவர் உணர்ந்திருந்தனர் என்ற உண்மையைக் காணலாம். சங்க காலத்திலே பூத புராணம், மாபுராணம் போன்ற நூல்கள் இருந்தனவென்று கூறப்படுகின்றன. பெயரைக் கொண்டு பார்த்தால் இவைகள் மொழிபெயர்ப்பு நூல்கள் என்றே எண்ணலாம். கடைச் சங்க காலத்திற்குப் பின்னே தோன்றிய ஐம்பெருங் காப்பியங்களில் மூன்று காப்பியங்கள் மொழி பெயர்ப்பு நூல்கள்; இரண்டுதான் முதல்நூல்கள். சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி மூன்றும் மொழி பெயர்ப்புக் காவியங்கள்; சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டுமே தமிழில் உள்ள முதல் நூல் காவியங்கள். தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்தே இலக்கிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு முறை பின்பற்றப்பட்டு வந்திருப் பதைக் காணலாம். புதிய பாடல்கள் செய்யுள் இலக்கணத்தை ஒட்டி எழுந்த பாடல்களையே தமிழ் மரபைச் சேர்ந்த பாடல்கள் என்று எண்ணுவோர் இருந்தனர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா- இவற்றின் இனப் பாக்கள் இவைகளையே இலக்கணத்திற்கேற்ற பாடல்கள் என்று எண்ணி வந்த காலம் ஒன்றுண்டு. கடைச் சங்க காலத்திற்குப் பின்னே சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னேயுள்ள இடைக்காலத்தில் பெரும்பாலான புலவர்கள் இப்படித்தான் எண்ணி வந்தனர். சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே தோன்றி வந்தன. இதனால் புதிய பாடல்கள் வளர்ச்சியடையவில்லை. ஆனால், புலவர்கள் தங்கள் அறிவுத் திறமைக் கேற்றவாறு புதிய முறையிலே பாடல் இயற்றுவதைத் தொல்காப்பியர் ஆதரித்துள்ளார். புதிய செய்யுட்களைக் கலந்து நூலியற்றுவதை விருந்து என்னும் பெயரால் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்பது செய்யுளியலின் 231-வது சூத்திரம். விருந்து என்று சொல்லப்படுவது புதிதாகப் புனைந்து கூறப்பட்ட பாட்டினைப் பொருந்தியதாகும் என்பதே இதன் பொருள். தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னும் இத்தகைய பாடல்கள் இருந்திருக்க வேண்டும். பழைய நூல்களிலே எட்டுத் தொகையைச் சேர்ந்த பரிபாடலில் உள்ள பாடல்கள் இந்த விருந்து என்னும் இலக்கணத்திற்குப் பொருத்தமான இலக்கிய மாகும். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால் வகைப் பாடல்களின் உறுப்புகளும் கலந்தவை பரிபாடல்கள், இசையுடன், தாளத்துடன் பாடப்பட்டு வந்தவை. காலத்திற்கேற்றவாறு புதிய மாதிரிகளிலே பாடல்களை எழுதுவது தவறல்லவென்பதே தொல்காப்பியர் கருத்து. தமிழிலே உள்ள சித்தர் நூல்களில் உள்ள பாடல்களிலே பல வற்றை இந்த விருந்தின் வகையிலே சேர்க்கலாம். பாரதியார் இந்த விருந்து பாடல்கள் பலவற்றை நாம் உண்டு மகிழும்படி அளித்திருக்கின்றார். இக் காலத்தில் இத்தகைய விருந்து பாடல் கள் பெருகி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி, சமுதாய நிலைமை எப்படி இருக்கிறது? தொல்காப்பியர் காலத்திலே தமிழர்கள் அரசியல் துறை யிலே சிறந்து நின்றனர்; போர்முறையிலே உயர்ந்து நின்றனர்; கலைத் துறையிலே நிகரற்று விளங்கினர்; நாடகங்கள், காவியங் கள், கவிதைகள் இயற்றுவதிலே கவலை செலுத்தினர். வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து கொள்ளுவதிலே வல்லவர்களாயிருந்தனர். நேர்த்தியான உடைகள் நெய்தனர்; அழகான அணிகள் செய்தனர்; ஊர்ந்து செல்வதற்கான ஊர்திகள் அமைத்தனர்; பத்திரமாக வாழ்வதற் கான பாதுகாப்புக்களையும் அமைத்துக் கொண்டனர்; காதல் வாழ்க்கையிலே சிறந்து வாழ்ந்தனர்; அவர்களுடைய காதல் வாழ்க்கையைச் சிறப்பாக நடத்துவதற்காகவே அரசியலிலும், போரிலும் ஈடுபட்டனர். ஆயினும் அக்காலத்திலே தமிழர் சமுதாயத்திலே பல மூடப் பழக்கவழக்கங்களும் குடி கொண்டிருந்தன என்பதை மறுக்க முடியாது. பெண்களுக்குச் சமஉரிமையில்லை; ஆண்மகன் பல மனைவிகளை மணந்துகொள்ளலாம்; விலைமகளிருடன் கூடிக் குலாவலாம். பெண் ஒருத்தி ஒருவனைத்தான் மணக்க முடியும். ஆண்மகன் மனைவியை இழந்துவிட்டால் மறுமணம் புரிந்துகொள்ளலாம். மனைவியையிழந்தவனுக்குத் தபுதாரன் என்று பெயர். அதாவது தாரத்தை இழந்தவன் என்று பெயர். கணவனையிழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமையில்லை. கணவனுடன் உடன்கட்டை யேறுவர்; அல்லது கைம்மை நோன்பு என்னும் தவத்தை மேற்கொள்ளுவார்கள். ஆதலால் கணவனை இழந்த பெண்ணுக்குத் தாபதி என்று பெயர் வைத்தனர். தவஞ் செய்பவள் என்பது இதன் பொருள். இவ்வாறு சமுதாயத்திலே பெண்ணடிமை நிலைத் திருந்தது. கடல் கடந்து செல்லும் உரிமைகூடப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டது. பெண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளிருந்தும் அவர் களிலே பல புலவர்கள் இருந்தனர், வீரப் பெண்மணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறி கேட்கும் வழக்கம், சகுனம் பார்க்கும் வழக்கம் போன்ற மூட நம்பிக்கைகள் இருந்தன. தமிழர் நாகரிகம் தொல்காப்பியர் காலத்தில் இதுதான் தமிழர் நாகரிகம், இது ஆரியர் நாகரிகம் என்று கூறுவதற்கு இடமில்லை. மண வாழ்வு ஒன்றிலேதான் வேற்றுமை காணப்படுகின்றது. தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை இருந்தது; பல தெய்வங்களை வணங்கி வந்தனர்; உருவ வணக்கம் இருந்தது; தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் செய்தனர். வினையிலே நம்பிக்கையுண்டு; சுவர்க்க நரகங்களிலே நம்பிக்கையுண்டு; பாவ புண்ணியங்களிலே நம்பிக்கையுண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகை வகுப்புக்கள் இருந்தன. தொழில் காரணமாக இன்னும் பல பிரிவுகளும் இருந்தன. முல்லை, நெய்தல், குறிஞ்சி போன்ற நிலங்களிலே நால்வகைப் பிரிவிலே அடங்காத மக்கள் பலர் வாழ்ந்தனர். இக்காலத்திலே சிலர் தமக்குப் பிடிக்காதவைகளை யெல்லாம் தமிழர் நாகரிகம் அல்ல; ஆரியர்களால் புகுத்தப் பட்டவை என்று கூறுகின்றனர். தொல்காப்பியத்தை ஒரு முழு முதல் நூலாக வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் இவ்வாறு சொல்வதற்கு இடமில்லை. ஆரியர் நாகரிகம் என்று கூறி எந்தெந்தக் கொள்கைகளை வெறுக்கிறார்களோ அவைகளிலே பல பண்டைத் தமிழர்களிட மும் இருந்த நாகரிகமாகவே காணப்படுகின்றன. இதற்குத் தொல் காப்பியமே சான்றாகும். திருக்குறளிலே தமக்குப் பிடிக்காத கருத்துக்களை இடை யிலே புகுத்தப்பட்டது என்று சிலர் சொல்லுவதைக் கேட்கி றோம். இதுபோலவே தொல்காப்பியத்திலும் தமக்குப் பிடிக்காத சூத்திரங்களையெல்லாம் இடையிலே புகுத்தப்பட்டவை என்று கூறுவோர் உண்டு. இவர்கள் சொல்கிறபடி பார்த்தால்- இவர்கள் கருத்துக்கு மாறான சூத்திரங்களை யெல்லாம் எடுத்துவிட்டால்- தொல்காப்பியமே இருக்க முடியாது; புதிய தொல்காப்பியம் எழுத வேண்டியதுதான். முடிவுரை தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம் என்று மூன்று பகுதி யையுடையது அந்நூல். பொருளிலக்கணமே தமிழ்நாட்டின் நாகரிகத்தையும், தமிழர்களின் பழைய வரலாற்றையும் அறிவதற்குப் பெரிதும் துணை செய்யும் பகுதியாகும். தொல்காப்பியத்தை நடுநிலைமையில் நின்று ஆராய்ந் தால் பண்டைத் தமிழரின் உண்மை வரலாற்றை உணர முடியும். இன்றுள்ள தமிழ் நூல்களில் அதுவே காலத்தால் முற்பட்ட நூல் என்பதை மறுப்போர் எவருமில்லை. பொதுவாக நோக்கினால், தமிழர்கள் எக்காலத்திலும் எவரையும் வெறுத்ததில்லை. இனவெறி, மொழிவெறி, நாகரிக வெறியில்லாமலும் பலருடன் கலந்து வாழும் சிறந்த தன்மை யுடையவர்கள் தமிழர் என்பதைத் தொல்காப்பியத்தால் காணலாம். தமிழர் பண்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்பு போர்க்குத் தொல்காப்பியம் ஒரு சிறந்த வழிகாட்டி; ஆதலால் தமிழர்கள் அதில் உள்ள உண்மைகளை உணர வேண்டும். உணர்ந்தால், இன்று நம்மிடையே நிலவும் பல தவறான கருத்து கள் மாண்டு மடியும் என்பது உறுதி. இக் கட்டுரையிலே குறிப்பிட்டுள்ள ஒரு சில செய்திகளே தொல்காப்பியத்தின் போக்கு எப்படியென்பதை ஊகித்தறிய ஓரளவு இடந்தருமென்று நம்புகின்றோம். ஒன்றெனக் காண்பதே தமிழன் உள்ளம் தமிழகத்தில்தான் முதல்மனிதன் பிறந்தான்; தமிழகத்தில் பிறந்த மனிதன்தான் உலகம் எங்கும் பரவினான். உலகத்திற்கு மனித குலத்தை அளித்தது தமிழகந்தான். ஆனால் அந்தத் தமிழகம் இன்று இல்லை; கடலிலே மறைந்துவிட்டது. அத் தமிழகத்தின் துண்டுதுணுக்குகள் மட்டும் இந்துமகா சமுத்திரத் தில் காணப்படுகின்றன என்று கூறுகின்ற ஆராய்ச்சியாளர்கள் உண்டு. முதலில் பிறந்த மனிதன் தமிழன்; தமிழகத்தில் பிறந்த மனிதன் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். அவன் பேசிய மொழி தமிழ்மொழி. அந்தத் தமிழ்மொழிதான் உலகம் எங்கும் பரவிற்று. ஆகவே உலகிலே முதலில் பிறந்த மொழி தமிழ் மொழி தான்; ஏனைய மொழிகள் எல்லாம் தமிழ்பெற்றெடுத்த குழந்தைகள்தான் என்றும் இவ்வாராய்ச்சியாளர்கள் கூறு கின்றனர். முதலில் மனிதன் தோன்றிய இடம் தமிழகம், முதலில் உலகில் பிறந்த மொழி தமிழ்மொழி என்று கூறுவதிலே தமிழ கத்துக்குப் பெருமைதான். தமிழனுக்குப் பெருமைதான். இதை நாம் மறுக்கவில்லை. இந்த ஆராய்ச்சி உண்மையென்று உறுதிப் படுமானால் தமிழர்கள் அனைவரும் அளவு கடந்த ஆனந்த மடைய வேண்டும். இன்றைய தமிழன் இப்படிச் சொல்லுகின்ற தமிழர்கள் முதல் மனிதன் தமிழகத்தில் தோன்றினான்- முதல் மொழி தமிழ் மொழி- என்று சொல்லுகின்ற மக்கள் இன்று எப்படி நடந்து கொள்ளுகிறார் கள், என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். தமிழனிடமிருந்து தான் மனிதவர்க்கம் பிறந்தது என்றால், தமிழன் எல்லா மக்களி டமும் அன்பு பாராட்டவேண்டும்; தமிழிலிருந்துதான் எல்லா மொழிகளும் பிறந்தனவென்றால் மொழி வெறுப்புக் கொள்கை யை ஒதுக்கி வைத்துவிடவேண்டும். இன்றைய தமிழன் இதைச் செய்கின்றானா? அதுதான் இல்லை. தமிழகத்திலேதான் முதல் மனிதன் பிறந்தான்; இத்தகைய பழமை படைத்தது நமது நாடு. ஆதலால் நாம் வடவரோடு சேர்ந்து வாழமுடியாது, தமிழ் இனம் தனியினம் தமிழன் தனி அரசு பெற்று வாழவேண்டும் தமிழ் இனந்தான் திராவிடநாடு இனம்; திராவிடர்க்குத் திராவிட நாடு வேண்டும்; திராவிட நாடு பெற்றே தீருவோம்; யாரோடும் இணைந்து வாழ மாட்டோம் என்று முழங்குகின்றான் இவனிடம் தமிழ்ப் பண்பு உண்டா? உண்மையில் மனிதர்கள் ஒரு குலம், தமிழனே உலக மனிதர்களின் தந்தை என்று நம்புகின்ற எவனும் இப்படிப் பேச மாட்டான். முரண்பாடு தமிழே முதல்மொழி; அதிலிருந்துதான் ஏனைய மொழி கள் எல்லாம் பிறந்தன. இத்தகைய நமது புராதன மொழியைப் போற்றவேண்டும்; அதன் தூய தன்மையைக் காக்க வேண்டும். ஆரிய மொழியால் தமிழ் கெட்டது; தமிழ்த் தாயின் தளிர் போன்ற மேனியிலே ஆரிய மொழிகளாகிய அம்மை வடுக்கள் பதிந்து விட்டன. ஆகையால் இந்தி மொழியை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது; ஆங்கிலத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்; வாழ்க தமிழ் மொழி என்று வாய் வலிக்கப் பேசு வோரைக் காண்கின்றோம். எவ்வளவு தமிழ்ப்பற்று! இத்தகைய முரண்பட்ட பேச்சைத் தமிழகத்தில்தான் கேட்க முடிகிறது. தமிழகம் தமிழ்மொழி என்று சொல்லிக் கொள்கிறான். அதே சமயத்தில் தன்னைத் திராவிடன் என்று அழைத்துக் கொள்கின்றான். தமிழ்நாடு, தமிழகம் என்று சொல்லிக்கொள்ளாமல் திராவிட நாடு என்று சொல்லிக் கொள்கிறான். பேச்சுக்கும் செய்கைக்கும் எவ்வளவு வேற்றுமை! தமிழகத் தைப் பற்றியும், தமிழைப் பற்றியும் சொல்வது உண்மையாக இருந்தால் தமிழர்கள் எந்த நாட்டினரையும் வெறுக்கக் கூடாது; எம்மொழியையும் இழித்துப்பேசக்கூடாது. இப்படி நடப்பது தான் சிறந்த பண்பாகும். தமிழகத்தில்தான் மனிதன் முதலில் பிறந்தான் என்பதும் தமிழ்மொழிதான் உலகில் முதலிற் பிறந்த மொழி என்பதும் இன்னும் தீர்மானிக்கப்படாத செய்தி; முடிவுகட்டப்படாத விஷயம். ஆதலால் அதை நாம் விட்டுவிடுவோம். தமிழன் பண்பாடு தமிழன் பண்பாடு எது? பண்டைத் தமிழன் எத்தகைய பண்பாட்டைப் பின்பற்றி வந்தான்? பண்டைப் பேரறிஞர்கள் எத்தகைய பண்பாடு உயர்ந்தது என்று கூறிவந்தனர்? என்ற உண்மையைக் காண்போம். இவ்வுண்மையைக் கண்டறிந்தால், இன்று பிரிவினை பேசுவோர் தமிழர் பண்பைப் பின்பற்று கின்றனரா? மொழி வெறுப்பை விதைப்போர் தமிழர் பண்பாட்டை வளர்க்கின்றனரா? அல்லது சிதைக்கின்றனரா? என்ற உண்மையை உணரலாம். தமிழர்கள் எந்தக் காலத்திலும் மற்ற மனிதர்களை வெறுத்ததில்லை; நாட்டினால்- மொழியினால்- மதத்தினால் இனத்தினால்- வேற்றுமை பாராட்டும் தன்மை தமிழன் தன்மை அன்று; தமிழின் தன்மையும் அன்று, இவ்வுண்மையை நமது இலக்கியங்களிலே கண்டறியலாம். தமிழன் உலகை ஒன்றாகத்தான் பார்த்தான். உலக மக்களை ஒருகுலமாகத்தான் எண்ணினான். உலகம் நன்றாக வாழ வேண்டும். உலக மக்கள் ஒன்றுபட்டு, அன்புடன் இன்புற்று வாழ வேண்டும்- இதுவே தமிழர் கொள்கை. யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன என்பது புறநூனூற்றுப் பாட்டு எல்லா ஊரும் நமது ஊர் தான்; எல்லா மக்களும் நமது மக்கள் தான் ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்கையால்தான் தீமையோ நன்மையோ அடை கின்றனர், துன்புறுவதும், இன்புறுவதும் இதுபோலத் தான் என்ற இப்பாடலைப் பாராட்டாத மக்கள் யாருமே இல்லை. தமிழனுடைய குறிக்கோளுக்கு- பண்பாட்டுக்கு- இப்பாடலையே உதாரணமாகச் சொல்லிப் பெருமைப்படுகின்றனர். சான்றுகள் இதோ சும்மா பெருமைக்காகத் தமிழன் இப்படிப் பாடினானா? அல்லது உண்மையிலேயே தமிழன் இந்த முறையைப் பின்பற்றி நடந்தானா? என்பதைப் பார்க்கவேண்டும். பண்டைத் தமிழர்கள் உண்மையிலேயே இப்படித்தான் வாழ்ந்தார்கள்; பல நாட்டின ருடனும், பல மொழியினருடனும் கூடித்தான் வாழ்ந்தார்கள்; சொல்லியபடி நடந்துகாட்டினார்கள்: வீண் பெருமைக்காகச் சகோதரத்துவம் பேசவில்லை. இதற்கும் இலக்கியச் சான்றுகள் உண்டு. பத்துப்பாட்டிலே பட்டினப்பாலை என்பது ஒரு பாட்டு. அது கரிகால சோழனைப் பாராட்டிக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் காவிரிப்பூம்பட்டினம் எப்படியிருந்தது என்பதைப் பட்டினப்பாலையால் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்தில் வீதியிலே செல்வங்கள் நிரம்பி யிருந்தன; அச்செல்வங்கள் பலவகைப்பட்டவை; பல நாடுகளி லிருந்து வந்தவை என்று கூறுகிறது பட்டினப்பாலை. அதைப் பார்த்தால் பழந்தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதைக் காணலாம். கடல் வழியே வந்து இறங்கிய சிறந்த குதிரைகள்; தரை வழியாக வந்த கருமையான மிளகு மூட்டைகள், இமயமலை யிலே பிறந்த இரத்தினங்கள்; பொன்; மேற்கு, மலையிலே பிறந்த சந்தனம். அகில்; தெற்குக் கடலிலே பிறந்த முத்து; கிழக்குக் கடலிலே பிறந்த பவளம்: கங்கை நதி பாயும் நாடுகளில் பிறந்த செல்வங்கள்; காவிரிபாயும் பகுதிகளில் தோன்றிய செல்வங்கள்; இலங்கையிலே பிறந்த உணவுப் பண்டங்கள்; பர்மாவிலே தோன்றிய செல்வங்கள்- இவைகள் எல்லாம் நிறைந்து கிடந்தன; இவைகள் அரிய செல்வங்கள்; பெரிய செல்வங்கள்; இவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து வீதியிலே காட்சியளித்தன என்று கூறுகிறது பட்டினப் பாலை. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கரும்கரி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும்; அகிலும், தென்கடல் முத்தும், குணகடல் துகிரும், கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழகத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி, வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின். (பட்டினப்பாலை, 185-193) கடலுக்கு அப்பால் உள்ள பிற நாடுகளுடன் தமிழர்கள் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தனர்; வட நாட்டினருடன் தமிழர் வியாபாரம் புரிந்தனர்; இலங்கையுடன் வியாபாரம் நடத் தினர்; பர்மாவுடன் வியாபாரம் செய்தனர்- என்ற உண்மையை இவ்வடிகள் குறித்தன. சிந்தனைக்கு பிரிவினைக் கூச்சல்போடும் தமிழர்கள் இதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்; பழந்தமிழர் பண்பாட்டைக் காண வேண்டும்; பாரத நாட்டை ஒரே நாடாகத்தான் பழந்தமிழர்கள் போற்றி வந்தார்கள் என்ற உண்மையும் இந்தப் பட்டினப்பாலை அடிகளிலே பொதிந்து கிடக்கின்றது. அதே பட்டினப்பாலையில் சொல்லப்படும் மற்றொரு செய்தியும் குறிப்பிடத்தக்கது. பலமொழி பேசும் மக்கள் காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்கின்றனர்; நேச நாட்டு மக்கள்- வாணிகத்தின் பொருட்டு வந்து குடியேறிய மக்கள்- பட்டினத்திலே வாழ்கின்றனர். அவர் களும் தமிழர்களும் எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒன்றாகக் கலந்து வாழ்கின்றனர்- என்று கூறுகிறது பட்டினப்பாலை; மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம். (214-216) பல மொழிகளைப் பேசும் மக்கள்- குற்றமற்ற தேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்கள்- தமிழ் மக்களோடு ஒன்றாகக் கலந்து இன்பமுடன் வாழ்கின்ற அளவற்ற பெருமையை யுடைய பட்டினம். பல மொழியினருடன்- பல நாட்டினருடன் ஒன்றுபட்டு வாழ்வதைத் தமிழர்கள் ஒரு பெருமையாகக் கருதினர்; இந்த நிலை காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததை அந்நகரத்துக்கு ஒரு பெருமையாக எண்ணினர். இதுதான் பண்டைத் தமிழர் பண்பா டாகும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கொள் கையை இவ்வாறு நடைமுறையில் பின்பற்றி வந்தனர் தமிழர். வள்ளுவர் வாக்கு உலக மக்களோடு ஒன்றுபட்டு வாழ்வதே சிறந்தது என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார். எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என்ற ஒரு குறளே இதற்குப் போதும். உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, அவ்வாறு உலகத்தோடு இணைந்து நடப் பதே அறிவாகும் என்பதே இதன் பொருள். உலக மக்களோடு இணையாமல் பிரிந்து வாழ்வதை வள்ளுவர் விரும்பவில்லை; பண்டைத் தமிழர் எவரும் விரும்பவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மணிமேகலையிலே ஒரு சிறுகதை உண்டு. அது ஆபுத்திரன் என்பவனைப் பற்றிய கதை. அவன் ஏழைகளுக்கு உணவிடு வதைத் தொழிலாகக் கொண்டிருந்தான். மதுரையிலிருந்து இப் பணியைச் செய்துகொண்டிருந்தான். அப்பொழுது மதுரை யிலும் சுற்றுப்புறங்களிலும் நல்ல மழை பெய்தது. நாடு செழித்து விட்டது; ஆபுத்திரனிடம் உணவு கேட்டு வருவோர் எவரும் இல்லை. ஆபுத்திரன், என் தொழிலைச் செய்ய முடிய வில்லையே, என்ன செய்வது! என்று வருந்திக் கொண்டிருந்தான். இச்சமயத்திலே அந்நிய நாட்டிலிருந்து கப்பல் வழியாக வந்து இறங்கியவர்கள் ஆபுத்திரனைக் கண்டனர். சாவக நாட்டிலே பஞ்சம்; மழைவளம் குறைந்துவிட்டது மக்கள் பட்டினியால் மடிகின்றனர்; பலர் மடிந்தனர் என்றனர். மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி சாவக நல்நாட்டு, தண்பெயல் மறுத்தலின் ஊன்உயிர் மடிந்தது உரவோய்! என்றலும். ஆபுத்திரன் அந்நாட்டுக்குப் புறப்பட்டான். கப்பலிலே அவன் செல்லும்போது, கப்பல் மணிபல்லவத் தீவிலே ஒரு நாள் தங்கிற்று. மறுநாள் கப்பல் புறப்படும் போது ஆபுத்திரன் உறங்கி விட்டான். கப்பல்காரன் ஆபுத்திரனும் கப்பலில் ஏறிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு கப்பலை ஒட்டிக்கொண்டு போய் விட்டான். ஆபுத்திரன் விழித்து எழுந்தபின் கப்பலைக் காணாமல் கலங்கினான். அந்தத் தீவிலே வாழ்வோர் யாரும் இன்மையால் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டான். மணிமேகலையிலே பாத்திர மரபு கூறிய காதையிலே இக் கதையைக் காணலாம். தமிழன் நாடு, இன, மொழி, மத வேறு பாடு கருதாதவன்; எந்த நாட்டு மக்கள் துன்புற்றாலும் அந்த நாட்டு மக்களுக்கு உதவவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுள் ளவவன் என்பதையே காட்டுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவம் இக் கதையிலும் அடங்கியிருப்பதைக் காணலாம். உலகம் வாழ திருஞான சம்பந்தர் சைவ சமயத்தைப் பரவச் செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்; சமண மதத்தினரை வெறுத்தவர். அவரிடமும் பண்டைத் தமிழர் பண்பாடு பரிமளிப்பதைக் காணலாம். வாழ்க அந்தணர், வானவர், ஆனினம்; வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக: ஆழ்க தீயஎல் லாம் அரன் நாமமே சூழ்க வையக மும்துயர் தீர்கவே என்பது சம்பந்தர் பாட்டு. எல்லா உயிர்களிடமும் இரக்கங் காட்டி அவைகளின் துன்பம் போக்கப் பணி புரிவோரை அந்தணர் என்று அழைத்தனர். இத்தகைய அந்தணர்கள் வாழ வேண்டும்; வானவர் என்னும் உயர்ந்தவர்கள் வாழவேண்டும்; மக்களுக்கு நலம் தரும் பசுவினம் வாழ வேண்டும்; தவறாமல் மழை பெய்யவேண்டும்; அரசாட்சி நல்லரசாக வாழவேண்டும்; தீமைகள் எல்லாம் ஒழிந்து போக வேண்டும்; அரசன் பெயர் எங்கும் விளங்க வேண்டும்: உலகம் முழுவதும் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று வேண்டுகிறார் சம்பந்தர். இப்படி உலகமெல்லாம் வாழ நினைக்கும் உள்ளமே தமிழ் உள்ளமாகும். யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் என்பது தாயுமானவர் வாக்கு. இதுதான் தமிழன் உள்ளம் உலகம் எல்லாம் இன்பம் பெறுக என்று மிகுந்த உள்ளன்போடு உரைத்திருக்கும் இத்தொடர் நமது உள்ளத்திலும் அப்படியே ஒட்டிக்கொள்ளுகிறது. எது சன்மார்க்கம்? இராமலிங்கர், மனித குலத்தை வெறுப்பவர்களை- மற்ற மனிதர்களை இழிவாகப் பேசுகின்றவர்களை- கடுமையாகத் தாக்குகிறார். உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் நேசிப்பது தான் சன்மார்க்கம்; மற்ற மனிதர்களைக் கண்டால் எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, வெறுத்துப் பேசுவது சன்மார்க்கத்துக்கு விரோதம். அப்படி வெறுப்பது துன்மார்க்கமாகும் என்று அடித்துப் பேசுகிறார். அந்தப் பாடல் இதோ: சேய்போல் உலகத்து உயிரையெல்லாம் எண்ணிச் சேர்ந்து பெற்ற தாய்போல் உரைப்பர், சன்மார்க்க சங்கத்தவர்; சாற்றும்எட்டிக் காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்துஉள் கடுகடுத்தே நாய்போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே. சன்மார்க்கத்தைப் பின்பற்றும் கூட்டத்தார் உலக மக்கள் யாரையும், இன, மொழி, மத, நிற, நாடு காரணமாக வெறுக்க மாட்டார்கள்; தங்கள் பிள்ளைகளைப்போல எண்ணுவர்; பெற்ற தாயைப்போல அன்புடன் அவர்களிடம் பேசுவர்; துன் மார்க்கக் கூட்டத்தினர் இதற்கு மாறாக நடந்து கொள்வர். பிறரைக் கண்டால் எட்டிக்காய் போல் நினைப்பர்; அவர்களை வெறுப்பார்கள்; மனத்தில் கடுகடுப்புடன் நாயைப்போல் குரைப் பார்கள். இந்தப் பாடலிலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் பண்பாட்டின் தத்துவம் அடங்கியிருப்பதைக் காணலாம். சங்க காலம் முதல் இராமலிங்கர் காலம் வரையிலும் தமிழர் பண்பாடு இலக்கியங்களில் இடம்பெற்று வந்தது; தமிழர் களின் நடவடிக்கைகளிலும் மாறாமல் இருந்து வந்தது. பாரதியின் வாக்கு உலகத்தை ஒன்றாகக் காணும் தமிழர் பண்பாட்டிலே வளர்ந்தவர்தான் நமது பாரதியார். அந்தப் பண்பாடுதான் அவரைச் சோவியத் புரட்சியைப் பாராட்டிப் பாடத்தூண்டிற்று. ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி என்று குதித்துப் பாடியது தமிழன் பண்பாடுதான். பெல்ஜியம் வீழ்ந்தபோது அதைப் பாராட்டிப் பாடியது இத்தாலியின் சுதந்தரத்துக்காகப் போராடிய மாஜினியின் சபதத்தைப் போற்றியது. இவைகள் எல்லாம் தமிழன் பண்பாடு தான். உண்மைத் தமிழன் உலகத்தைப் பிரிவுக் கண்கொண்டு பார்க்கமாட்டான்; ஒன்றாகத்தான் காண்பான். உண்மைத் தமிழன், தான் மட்டும் வாழ்ந்தால் போதும்; மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? என்று எண்ணவே மாட்டான்; உலகம் எல்லாம் வாழவேண்டும் என்றுதான் நினைப்பான், உண்மைத் தமிழன் எந்த மொழியையும் வெறுக்கமாட்டான். எந்த மொழியாக இருந்தாலும் அதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கொள்ளுவான். தமிழன் வாழ- தமிழன் வளர- தமிழ் மொழி வளம்பெற தமிழர்கள் பரம்பரையாகப் போற்றி வந்த பண்பாடு இதுதான். பிரிவினைக் கூச்சல் வேண்டாம் இந்தப் பண்பாட்டை அறியாதவர்களே பிரிவினைக் கூச்சல் போடுகின்றனர். மனிதர்களிடமும், மொழிகளிடமும் வெறுப்புக் காட்டுகின்றனர். பிரிவினை எண்ணமும் வெறுப்புக் குணமும் வளர்வதற்கு இடம் கொடுப்பவர்கள் யாரானாலும் அவர்கள் தமிழ் மனம் படைத்தவர்கள் அல்லர்; தமிழர் மனம் படைத்தவர்கள் அல்லர். தமிழகம்தான் முதல் மனிதனைப் பெற்றெடுத்தது, தமிழ் தான் எல்லா மொழிகளையும் ஈன்றெடுத்தது என்று பேசும் தமிழன், பிரிவினைக்கும், பிளவுக்கும், வெறுப்புக்கும் அடி கோலுவானாயின் அவனைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்? சிந்தியுங்கள்; எண்ணிப் பாருங்கள்; நன்றாகச் சிந்தியுங்கள்! கன்னித் தமிழ் பழமையிலே சிலருக்குப் பற்று; புதுமையிலே சிலருக்குக் காதல். சிலருக்குப் பழமையிலே வெறுப்பு; சிலருக்குப் புதுமை யிலே வெறுப்பு. இரண்டும் தவறு. பழமையென்பதால் மட்டும் ஒன்றுக்குப் பெருமையில்லை, புதுமையென்பதால் மட்டும் ஒன்றுக்குச் சிறுமையில்லை. பழமையோ புதுமையோ- அதிலே பெருமைக்குரிய தகுதிகள் - தன்மைகள்- கவர்ச்சிகரமான அமைப்புகள்- பொருந்தியிருக்க வேண்டும். இவை பழமையாயி னும், புதுமையாயினும் போற்றப்படும்; ஏற்றுக் கொள்ளப்படும்; பாராட்டப்படும். காலங் கடந்தது, பழமையானது என்பதற்காக மட்டும் ஒரு பொருளுக்கு மதிப்புக் கொடுப்போர் சிலர் உண்டு. ஒரு குட்டிச் சுவர்; அது நீண்ட காலமாக ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கிறது. ஊரின் பக்கத்திலே, ஒரு கற்பாறைக் குன்று. அது, புல்பூண்டற்ற கற்பாறை; கரடுமுரடான கற்பாறை. இந்தக் குட்டிச்சுவரும், கற்பாறையும் நீண்ட காலத்தவை. இதற்காக அவற்றை எவரும் ஏற்றிப் போற்றமாட்டார்கள். அவற்றால் பயனில்லை, ஆதலால் அவற்றை மக்கள் பாராட்டுவதில்லை. ஊரின் நடுவிலே ஒரு பூங்கா. அது பிஞ்சுப் பூங்கா. இளம் வயது. அது பிறந்து ஐந்து ஆண்டுகள் இருக்கலாம்; அல்லது பத் தாண்டுகள் ஆகலாம். அந்தப் பூங்காவைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள்; இடையிடையே எத்தனையோ விதமான அழகுள்ள செடி கொடிகள்; குளிர்ந்த நிழல் தரும் கொடிகள் படர்ந்த கூண்டுகள்; வளைவுகள்; சிந்தையைக் கவரும் சிறந்து மலர்கள் எங்கும் பூத்துக் குலுங்கியிருக்கின்றன; ஆங்காங்கே அழகிய செயற்கை நீர் ஊற்றுக்கள்! எந்த மூலையிலிருந்து நோக்கினாலும் பச்சைப் பசேர் என்று கண்ணைக் கவரும்படி காட்சியளிக் கின்றது. இந்தப் பூங்காவை இளமையானது என்பதற்காக வெறுப்போர் எவரும் இல்லை. வயதிலே முதிர்ந்த குட்டிச்சுவரைவிட, கரட்டுக் கருங் கற் பாறையைவிட- ஆண்டிலே இளைய இந்த அழகிய பூங்காவைத் தான் அனைவரும் விரும்புவார்கள். பயன் தரும் பழமை பழமையானது, பயன் தருவது, என்றும் குன்றாத தன்மை யுள்ளது, வாடாத வனப்பும் வாய்ந்தது- இத்தகைய பொருள்கள் எதுவாயினும் மக்களால் மகிழ்ச்சியுடன் போற்றப்படும்; எந் நாளும் பாராட்டப்படும். காலங்குறிப்பிட முடியாதது குற்றாலத்து நீர்வீழ்ச்சியும், பொதியமலையும். பொதியத் தென்றலை இன்றும் இலக்கியங்கள் போற்றுகின்றன; அருவியும் அப்படியே. குடமலையைச் சேர்ந்த நீலகிரியின் ஆயுளை அளவிட்டுச் சொல்ல முடியாது. வடநாட்டின் மேல் படையெடுத்துச் சென்ற சேரன் செங்குட்டுவன் நீலமலையிலே தங்கினான்; இளைப் பாறிச் சென்றான். இதைச் சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே நீலமலை சுகவாசத்திற்கான இடமாக இருந்தது. பொதியத்தைப் போலவே இமயத்தையும் தமிழிலக்கியங் கள் பாராட்டியிருக்கின்றன. அதுவும் காலங் கடந்தது. காவிரி, தாமிரபரணி, கங்கை போன்ற ஆறுகளும் காலங் கடந்தவை. அவற்றை இலக்கியங்கள் போற்றுகின்றன; கவிஞர் கள் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். குற்றாலத்து அருவி, அதன் பிறப்பிடமான பொதிய மலை, அந்த மலையிலே பிறந்தோடும் தாமிரபரணி, குடமலையின் பகுதியான நீலமலை, குடமலையிலே பிறந்துவரும் பொன் கொழிக்கும் காவிரி, வடவிமயம், அதன் செல்வியான வளம் பெற்ற கங்கை- இவை எல்லாம் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை; பழமைக்கும் பழமையானவை. அவை இன்றும் புதுமையாகக் காட்சியளிக்கின்றன. மாநிலத்து மக்களால் கொண்டாடப்படுகின்றன. இவ்வாறு பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமை யாய்ப் பொலிவுறும் பொருள்கள் என்றும் போற்றப்படும். இவை எந்நாளும் அழியாமல் நிற்பவை; நடப்பவை; இருப்பவை. இத்தகைய பழமையும் புதுமையும் பொருந்தியது, பல்லாண்டு களாகப் பலராலும் பாராட்டப்படுவது, பயன் தருவது - நமது பண்டைக் கன்னிச் செந்தமிழ். தமிழின் பெருமை செந்தமிழ் பழமைக்கும் பழமையானது; புதுமைக்கும் புதுமையானது; வடமொழி ஒரு காலத்தில் திருத்தமற்ற மொழி யாக வழங்கிற்று; பின்னால்தான் திருத்தியமைக்கப்பட்டது. இப்பொழுதுள்ள வடமொழி திருத்தியமைக்கப்பட்ட மொழி. சமகிருதம் என்றால் திருத்தியமைக்கப்பட்டது என்று பொருள். தமிழ், செந்தமிழாகவே பிறந்தது; செந்தமிழாகவே வளர்ந்து வருகின்றது. உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதை யாமல் ஒங்கி வளர்வது. இந்தச் சிறப்பை எண்ணித்தான் இதற்குக் கன்னித் தமிழ் என்ற பெயரையும் வைத்தனர் ஆன்றோர்கள். தமிழர்கள் தமிழ் என்று குறிப்பிடும்போது அதனோடு மற்றொரு சொல்லையும் சேர்த்து வழங்குவார்கள். பேசும் போது தமிழ் என்று தனியாகக் குறிப்பிட்டாலும் எழுதும்போது அதனுடன் ஒரு சிறப்புச் சொல்லை இணைத்தே எழுதுவார்கள். இது பழந்தமிழர் பண்பு. தமிழோடு இணைத்து எழுதுகின்ற அச்சொல் தமிழின் சிறப்பை- தன்மையை- விளக்குவதாகவே அமைந்திருக்கும். செந்தமிழ், பைந்தமிழ், தண்டமிழ், நற்றமிழ், இன்றமிழ், வண்டமிழ், தன்றமிழ், முத்தமிழ், தெய்வத் தமிழ், அன்னைத் தமிழ், கன்னித் தமிழ், அருந்தமிழ். செந்தமிழை இத்தகைய அடைமொழிகளோடு இணைத்தே சொல்லுவார்கள். இதைக் கொண்டே, தமிழர்கள் தங்கள் தாய்த் தமிழை எவ்வளவு அருமையாக, இன்னுயிரைப் போல் போற்றி வந்தனர் என்பதைக் காணலாம். இவற்றிலே கன்னித் தமிழ் என்னும் தொடர் மிகவும் அருமையானது; அழகானது; தமிழின் அழியாத தன்மையை அறிவிப்பது. உலகந் தோன்றிய காலத்திலே தோன்றியது; உலகம் உள்ள வரையிலும் உயிருடன் வாழ்வது தமிழ் என்னும் உண்மைப் பொருள் பொதிந்த தொடர். இத்தொடர் பொருட் செறிவுள்ள பொன்மொழியாகும். மணமாகாத பெண் கன்னிப் பெண் கன்னிகையின் வனப்பு என்றும் வாடாத மலர். அவள் அழகு, காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும். அது பெண் தன்மை குன்றாத பேரழகு. இவை மட்டும் அன்று; கன்னிகைக்கு மற்றொரு தனிச் சிறப்பும் உண்டு. அவள் யாருக்கும் அடிமைப்படாதவள்; வேண்டு மானால்-விரும்பினால்- அவள் பிறரைத் தனக்கு அடிமை யாக்கிக் கொள்ளலாம். அவள் யாருக்கும் அடிமையாக மாட்டாள்; தன்மையும், தூய்மையும் குன்றாமல் தலைநிமிர்ந்து அவளால் வாழ முடியும். இது கன்னிகைக்குள்ள ஒரு தனிச் சிறப்பும் பண்புமாகும். நலம் எல்லாம் நிறைந்தது தமிழ்மொழியும் கன்னிப் பெண்ணைப்போல் விளங்குவது; கன்னிப்பெண்ணுக்குள்ள நலமெல்லாம் கனிந்து நிரம்பித் ததும்புவது. அழகிலே - இனிமையிலே - பயனிலே - எம் மொழிக்கும் அடிமையாகாத தன்மையிலே - தமிழுக்கு நிகரான மொழி தரணியில் வேறு ஒன்றுமேயில்லை. தமிழுக்கு நிகர்- சமம்-ஒப்பு தமிழேதான்! என்றும் புலராது, யாணர்நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல் நிற்பது திருவள்ளுவர் மொழி என்று கூறினார் ஒரு புலவர். என்றும் வாடாது; எவ்வளவு நாட்களானாலும் அன்ற லர்ந்தது போலவே காட்சியளிக்கும்; தேனைச் சிந்தும். குறையாத, செழுமையான தளிர்களையுடைய கற்பக மரத்தின் மலர் இத்தகைய தெய்வத் தன்மையும் அழகும் நிறைந்தது. இது போன்றது வள்ளுவர் வாய்மொழி என்று திருக்குறளுக்குக் கூறிய இப் பாராட்டு, கன்னித் தமிழுக்கும் பொருந்துவதாம். உன்- சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. உன்னுடைய சிறந்த கன்னித் தன்மையைப் புகழ்ந்து எங்கள் செயலை மறந்து, உன்வசமாகி, உன்னை,கன்னித் தமிழே என்று வாழ்த்துகின்றோம். இது மனோன்மணீயம் என்னும் நாடகத் தமிழ்நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாட்டு. இப்படி மனமார, வாயாரப் புகழ்ந்து தமிழ்த்தாயை வாழ்த்து கின்றார். அவர் தான்மட்டும் வாழ்த்துவதாகச் சொல்லவில்லை; தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து இறைஞ்சு கின்றோம், என்று பாடுகின்றார். கன்னித் தமிழே முத்தமிழ் செந்தமிழை முத்தமிழ் என்று பாராட்டுகின்றோம். செந் தமிழ் எப்பொழுது முத்தமிழ் ஆயிற்றோ! அதை அறிவார் யார்? அதன் காலத்தைக் கணக்கிட முடியாது. தொல்காப்பியத் திலேயே முத்தமிழ் முழங்குகின்றது. தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்; இன்றுள்ள தமிழ் நூல்களிலே காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் ஒன்றேதான். தொல்காப்பிய காலத்திலே தண்டமிழ்மொழி முத்தமிழாக வழங்கிய தென்றால் முத்தமிழ் பிறந்த காலத்தைக் கணக்கிடுவது எப்படி? முத்தமிழ்- மூன்று வகையான தமிழ், மூன்று பிரிவான தமிழ், மூன்று இனமான தமிழ் என்று மட்டும் பொருள் சொல்லுவது பொருந்தாது. செந்தமிழின் சிறந்த தன்மையை அதன் ஒப்பற்ற பண்பை- மாசுமறுவற்ற கன்னித் தன்மையைக் கண்டறியாதவர் சிலர் உண்டு. அவர்கள்தாம் செந்தமிழ், கருந் தமிழ், கொடுந்தமிழ் என்று குருட்டாம்போக்கிலே கூறுவர். முத்தமிழுக்குப் பொருள் இதுதான் என்று மொழிவர் இவர்கள் செந்தமிழின் கன்னித் தன்மையைக் கண்டுணராதவர்கள். முத்தமிழ்- மூன்று துறையில் பயன்படும் தமிழ் மூன்று வகையில் உதவி புரியும் தமிழ்; மூன்று வகைப்பட்ட மக்களுக்கும் அறிவும் இன்பமும் சுரக்கும் தமிழ். இதுதான் முத்தமிழின் பொருள். இந்த முத்தமிழ் இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று துறைகளில் பயன்படும் தமிழாகும். படிக்கும் தமிழ் இயற்றமிழ் என்பது கற்றவர்கள் மட்டும் எளிதிலே பொருள் தெரிந்துகொள்ளும்படி நிற்பது, இயற்றமிழிலே பேச்சு வழக்கில் இல்லாத சொற்களும் கலந்து வழங்கும். நினைத்தான் என்பது நாம் எப்பொழுதும் பேசுந் தமிழ். இதற்கு மாறாக உள்ளினான், சிந்தித்தான், எண்ணினான், கருதினான் என்பன போன்ற சொற்களைச் சேர்த்தெழுதுவது இயற்றமிழ். இயற்றமி ழைப் படிக்கும் தமிழ் என்று சொல்லிவிடலாம். கேட்கும் தமிழ் இசைத் தமிழ் என்பது பண்ணோடு கூடியது. இசை- பண்; சங்கீதம், இசைக் கருவிகளின் துணைகொண்டோ, துணையில் லாமலோ பாடும்படி அமைந்திருப்பது இசைத்தமிழ் படித்தவர் களின் உள்ளத்தையும் இசைத் தமிழ் கவரும், படிக்காதவர்கள் நெஞ்சையும் இசைத் தமிழ் இழுத்துக் கொள்ளும். சிறந்த செய்தி களைச் செந்தமிழிலே இசையோடு இணைத்துப் பாடுவதன் வழியாக மக்கள் பலருக்கு அறநெறிகளைப் போதிக்கலாம், உயர்ந்த படிப்பில்லாத அரைகுறைப் படிப்பாளிகளும் இசைத் தமிழால் இன்பந் துய்ப்பார்கள்; இனிய பல அரும்பொருள் களை அறிந்து அறிஞர்களாவார்கள். இசையோடு சேர்ந்த தமிழ், இசைத் தமிழ். இசைத் தமிழைக் கேட்கும் தமிழ் என்று இயம்பலாம். பார்க்கும் தமிழ் நாடகத் தமிழ் என்பது ஒரு நிகழ்ச்சியைக் கண்ணாற் காணும்படி நடத்திக் காட்டுவதற்கு உதவுவது. பிறர் பேசியதை அப்படியே- அவரைப்போலவே- சொல்லிக் காட்டுவது. நடந்த ஒரு வரலாற்றை அல்லது புதிதாகப் புனைந்த ஒரு கதையை மற்றவர்கள் கண்டு சுவைக்கும் படி நடித்துக் காட்டுவதற்கு உதவு வது நாடகத் தமிழ், ஒருவரைப் பார்த்துப் பேசுவது, ஒருவரோடு ஒருவர் உரையாடுவது நாடகத் தமிழில் அடங்கும்; பாடிக் கொண்டு- பாட்டுக்குத் தக்கபடி தாளம் போட்டுக்கொண்டு- பாட்டின் பொருளை உறுப்புக்களின் சைகையால் ஊமைபோல் தெரிவித்துக்கொண்டு- ஆடுவதும் குதிப்பதும் நாடகமேதான். இதை நடனம் என்பர்; கூத்து என்பர். இந்த நாடகமும் கூத்தும் கல்வி கற்காதவர்களின் உள்ளத்தையும் கவரும்; அவர்களுக்கும் அறிவுரைகளையும் படிப்பினைகளையும் அளிக்கும், நடத்திக் காட்டும் இந்த நாடகத் தமிழைப் பார்க்கும் தமிழ் என்று உரைக்கலாம். இவ்வாறு உயர்ந்த படிப்பாளிகள் சிறிது கற்றவர்கள், கற்கா தவர்கள் ஆகிய இம் முத்திறத்தாரையும் நல்வழிப்படுத்தவே செந்தமிழ் அன்னை முத்தமிழ் உருவாகி நிற்கின்றாள். இயற்மிழிலே இசையும் உண்டு; நாடகமும் உண்டு. இசைத் தமிழிலே இயலும் உண்டு; நாடகமும் உண்டு. நாடகத் தமிழிலே இயலும் உண்டு; இசையும் உண்டு. இந்த மூன்று தமிழும் ஒரு மரத்தின் கிளைகள், ஆனால் இவற்றைப் பிரித்து வெட்டித் தள்ள முடியாது. கன்னிப் பெண் எல்லோர் நெஞ்சையும் கவர்வது போலவே இந்த முத்தமிழும் அனைவர் உள்ளத்தையும் அள்ளிக் கொள்ளு வது. எல்லோர்க்கும் இன்பமும், மகிழ்ச்சியும் அறிவும் ஊட்டுவது; கன்னித்தமிழின் இயல்புக்கு இந்த முத்தமிழ் அமைப்பும் ஒரு எடுத்துக்காட்டு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழ் என்று பெயர் பெற்று நிற்கின்றது. இது போன்ற பெயர்- சிறப்பு- வேறு எம்மொழிக்கும் இல்லை. காவியத்தில் கன்னித் தமிழ் கவிதைகளால் இயற்றப்படுவன காவியங்கள். தமிழ்க் கவிதைகளிலும், கவிதைகளின் பொருள்களிலும் கன்னித் தன்மையுண்டு; கவிதைகளால் செய்யப்பட்ட காவியங்களிலும் கன்னித் தன்மையுண்டு. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியே நால் இயற்று என்ப பாவகை விரியே. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்று நான்கு பகுதியுடையது என்பர். இவையே பாடல் வகையின் விரிவாகும். தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்னும் இந்த நால்வகைப் பாடல்களையும் இவற்றின் பகுதிகளையுமே காவியங்கள் செய்வதற்குக் கருவியாகக் கொண்டனர். இந்த நான்கு வகைப் பாடல்களிலே மூன்று வகைப்பொருள்களை அமைத்துப் பாடிவந்தனர். அந்த மூன்று பொருள்கள் அறம், பொருள், இன்பம் என்பன. காவியங்களிலும், கவிதைகளிலும் இந்த முப்பொருள்களையே அமைத்துப் பாடி வந்தனர். இவ்வுலகிலே மக்கள் இந்த முப்பொருள்களைத்தான் முயற்சியால் அடைய முடியும். பொருள் தேடி, அறம் புரிந்து, இன்பம் துய்த்து வாழ்வதே மக்கள் கடமை. இதுவே மக்கள் வாழ்வின் குறிக்கோள் என்பதே தமிழர் கொள்கை. இலக்கியங் கள் இவற்றைப் பற்றித்தான் இயம்ப முடியும். அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப என்று தொல்காப்பியம் எடுத்துக்கூறுகின்றது. அந்த மேலைச் சூத்திரத்தில் சொல்லப்பட்ட செய்யுட்கள், அறம் முதலாகிய மூன்று சிறந்த பொருளையும் எடுத்துக் கூறுவதற்கு உரியன என்று கூறுவர் பெரியோர். இதுவே இச் சூத்திரப் பொருள். தொல்காப்பியரால் கூறப்பட்ட அந்த நால்வகைச் செய்யுட்களிலிருந்து பிறந்தவைதாம் இன்று வழங்கும் தமிழ்ச் செய்யுட்கள் எல்லாம் தொல்காப்பியர் குறித்த முப்பொருளைப் பற்றியே எல்லாத் தமிழ்நூல்களும் இயம்புகின்றன. அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறும் இலக்கியங்கள்தாம் சிறந்த இலக்கியங்களாக எண்ணப்படுகின்றன. இப் பொருள் களைக் கொண்ட பாடல்கள் உயர்ந்த பாடல்களாகப் பாராட் டப்படுகின்றன. இத்தகைய கவிதையும் பொருளும் கொண்ட காவியங் களிலே தமிழ்க் காவிய அமைப்பு மிகவும் சிறந்தது. தமிழ்க் காவிய அமைப்பு ஒரு தனித் தன்மையுள்ளது; வடமொழிக் காவிய அமைப்புக்கு மாறானது. காவியங்கள் எந்த முறையில் இயற்றப்படவேண்டும் என்பதைத் தமிழ்ப் புலவர்கள் செயலால் விளக்கியிருக்கின்றனர். காவியம் செய்வதற்குத் தமிழ்ப் புலவர்கள் காட்டியிருக்கும் முறை இன்று எல்லோராலும் போற்றப்படுகின்றது. ஆனால் எந்தக் காரணத்தினாலோ காவியம் பாடிய தமிழ்ப் புலவர்களிலே பலர் தமிழர் முறையைக் கைவிட்டனர்; வடமொழிக் காவிய அமைப்பைப் பின்பற்றிக் காவியங்களை அமைத்து விட்டனர். காவியங்களுக்கு இலக்கணமாகத் தமிழிலே தோன்றிய காவியங்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழிலே முளைத்தெழுந்த முதற் காவியங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, கற்போர் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் மற்றது, படிப்பவரைப் பரவசமாக்கும் மணிமேகலை இவை இரண்டும் தமிழிலே பிறந்த முதல் நூல்கள். கதை நிகழ்ச்சி தமிழ் நாட்டில் நடந்தது; கருத்து தமிழர்களுடையது; நாகரிகம் தமிழர் பண்பாடு; பாடியவர்கள் தமிழ் நாட்டிலே பிறந்த தமிழ்ப் பெரும்புலவர்கள். இக் காவியங்களிலே அரசர்கள் காணப்படுகின்றனர்; அமைச்சர்கள் காணப்படுகின்றனர். ஆனால் அரச குடும்பக் கதைகள் அல்ல. இக் காவியங்கள் பொதுமக்களின் வாழ்க்கை யைச் சித்திரிப்பன. பணக்காரக் குடும்பங்கள், ஏழைப் பொது மக்கள், துறவிகள், பெண்கள், பாட்டாளிகள் - இவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றன. பண்டைத் தமிழகத்தின் பொது நிலையை எடுத்துக்காட்டும் காவியங்கள் இவை. பொது மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையிலே- சிறப்பிலே- சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் நிகரான காவியங்கள் வேறு எவையும் இல்லை. சீவக சிந்தாமணி, இராமாயணம், பாரதம், நைடதம், நளவெண்பா போன்றவையும் காவியங்கள்தாம். ஆனால் அவை அனைத்தும் அரச குடும்பக் கதைகள். அவற்றின் மூலக் கதைகள் எல்லாம் வடமொழியிலிருந்து எடுத்தவை; கதை நிகழ்ச்சிகளும் வடநாட்டில் நடந்தவை. இன்றைய யுகம் இன்று நடப்பது பொதுமக்கள் யுகம். அரச குடும்பங்களின் தனி அதிகார ஆட்சிக் காலம் மறைந்து வருகின்றது. கதைகளும், காவியங்களும் காலத்தின் சூழ்நிலையை ஒட்டியே பிறக்கும். அரச குடும்பக் கதைகளுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை. அரச குடும்பங்களின் வாழ்க்கையை- அரசர்களின் சர்வாதிகாரப் பெருமையை- அளவுகோலாகக் கொண்டு எழுதப்படும் கதை களை இக்காலத்தினர் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டார்கள். அரசர்களைப் பாராட்டும் பழைய காவியங்கள் அவற்றின் கவிச் சிறப்புக்காகக் கவிதை இன்பத்தைக் கருதி மட்டுமே இன்று படிக்கப்படுகின்றன. அவற்றின் கதைகளுக்காகவோ கருத்துக் களுக்காகவோ படிக்கப்படுவதில்லை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும், மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும் எதிர்காலத்தை எண்ணி அறிந்தவர்கள்; பேரறிஞர்கள்; பெரும்புலவர்கள். இப்படிப் பட்ட அறிஞர்களைத்தான் தீர்க்கதரிசிகள் என்று சொல்லு வார்கள். பொதுமக்களைப் பற்றிப் பேசும் கவிதைகள், காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும். அரசர்கள் அழியலாம்; அரச குடும்பங்கள் மறையலாம்; அரசர் ஆட்சி மறைந்துவிடலாம். ஆனால் பொதுமக்கள் என்றும் நிலைத்திருப்பவர்கள். இந்த உண்மையை உள்ளத்தில் கொண்டுதான் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் எழுதினார்களோவென்று எண்ண வேண்டியிருக்கிறது. காவிய அமைப்பில்கூட நமது செந்தமிழ்க் காவியங்கள் தலைசிறந்து விளங்குகின்றன. வடமொழி மூலக் கதையைத் தழுவிய காவியங்கள் எல்லாம் எடுத்தவுடன் கதையைத் தொடங்கு வதில்லை. கடவுள் வாழ்த்து, நாட்டுப் படலம் என்று பல படலங்களைப் பாடி முடித்த பிறகுதான் கதையைத் தொடங்கும். இது வடமொழிக் காவிய முறை. இந்த முறையைப் பின்பற்றியே சிலம்பையும், மணிமேகலையையும் தவிர ஏனைய காவியங்க ளெல்லாம் ஓடுகின்றன. புராணங்கள் யாவும் இந்த முறையைத் தழுவியே செல்கின்றன. இந்த முறையைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பின் பற்றவில்லை. தெய்வங்களைப் பற்றி- நாட்டைப் பற்றி- நகரத்தைப் பற்றி- ஆற்றைப்பற்றி- அரசியலைப்பற்றித் தனியாக எழுதுவது சுவை தராது. அவற்றைப் படித்துக் கதையுலகை எட்டிப் பிடிப் பதற்குமுன், படிப்போர்க்குச் சலிப்புத் தட்டிவிடும். இப்படியில்லாமல் எடுத்த எடுப்பிலே கதையைத் தொடங் குவதுதான் சிறந்த முறை; படிப்போர்க்கு அலுப்புத் தட்டாத அழகான முறை. கதைப் போக்கின் இடையிடையே தகுந்த இடங்களில் கடவுள் இயல்பைக் கூறலாம்; நாட்டின் நிலைமை யை நவிலலாம்; நகரத் தன்மையைச் சொல்லலாம்; ஆற்றின் வளத்தை அறிவிக்கலாம்; அரசியற் சிறப்பை உரைக்கலாம். இந்த முறையில் காவியத்தை அமைப்பவர்களே சிறந்த புலவர்கள். இதுவே, உயிருள்ள காவியங்களின் உயர்ந்த தன்மை. இத்தகைய உயர்ந்த அமைப்புடையதே சிலப்பதிகாரம், மணிமேகலை. சிலப்பதிகாரத்தின் முதற்பகுதி மங்கல வாழ்த்துப் பாடல். மங்கல வாழ்த்துப் பாடலிலேயே கதை தொடங்கி விடுகின்றது. கதாநாயகனும் கதாநாயகியும் அவர்களுடைய பெற்றோர்களும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். கோவ லன்- கண்ணகி திருமணம் முடிந்து விடுகின்றது. இதுபோலவே மணிமேகலையும் எடுத்தவுடன் கதையைத் தான் சொல்லத் தொடங்குகின்றது. மணிமேகலையின் முதற் காதை விழாவறை காதை என்பது. இது இந்திர விழா நடை பெறப் போகும் செய்தியைத் தெரிவிப்பது. வள்ளுவன் யானை மேல் ஏறிக்கொண்டு முரசறைந்து இந்திரவிழா தொடங்கப் போகும் செய்தியை நகர மக்களுக்கு அறிவிக்கின்றான். இவ்வாறு காவிய அமைப்பில்- கருத்தில்- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்து விளங்குகின்றன. பொதுமக்கள் போற்றும்படி வீறு பெற்று நிற்கின்றன. எவரும் எந்தக் காலத் திலும் இவ்விரு காவியங்களையும் போற்றித் தான் ஆகவேண்டும். இதுதான் கன்னித் தமிழின் சிறப்பு. காவிய நிலையிலும் கன்னித் தமிழ் உயர்ந்து நிற்கின்றது. வடமொழிக் காவியங்களின் அமைப்பையும், தனித் தமிழ்க் காவியங்களின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்ப்போர் தாம் இந்த உண்மையை உணர்வார்கள்; செந்தமிழ்க் கன்னியின் சிறப்பைக் காண்பார்கள். கருத்தைக் கவரும் கன்னித் தமிழ் தமிழ் நாட்டிலே பன்னூறாண்டுகளுக்கு முன்னே பல மொழியினர் குடியேறினர். அவர்களிலே பலர் தமிழர்களாகவே உருமாறிவிட்டனர்; தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டுவிட்டனர். தமிழகத்திலே குடிபுகுந்த எந்த மொழியினராலும் தமிழின் கன்னித் தன்மையைக் கலைக்க முடியவில்லை; தமிழின் தனிச் சிறப்பைத் தகர்க்க முடியவில்லை. இதற்கு மாறாக எல்லோரும் செந்தமிழ்க் கன்னியின் சிறந்த புன்முறுவலிலே சிந்தையைப் பறிகொடுத்தனர்; அருந்தமிழ்க் கன்னியின் அழகு சிந்தும் நடையிலே அன்பு கொண்டனர்; அவளுடைய வனப்பையும் பண்பையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தும் அடியார்களாகத் திரும்பிவிட்டனர். இது வரலாறு கண்ட உண்மை. தமிழகத்திலே புகுந்த சமணத் துறவிகளும், பவுத்தத் துறவி களும் தமிழின் இனிமையைச் சுவைத்தனர். அவர்கள் செந்தமிழைப் பயின்று சிறந்த புலவர்களாயினர். தமிழுக்குத் தொண்டு புரிவதே தலைசிறந்த பணியென்று எண்ணினர்; பணி யும் புரிந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி வளையாபதி என்னும் ஐம்பெருங் காப்பியங்களும் சமண- பவுத்த மதங்களைப் பின்பற்றியவர்களால் செய்யப்பட்டவை. சீவகசிந்தாமணி வடமொழியின் மூலக் கதையை அடிப்படை யாகக் கொண்டிருந்தாலும் அது ஒரு சிறந்த தமிழ்க் காவியம். கம்பன் பாடல்களுக்கு இதுவே வழிகாட்டி. பெரிய புராணம் தோன்றுவதற்கு இதுவே தூண்டுகோல். அருந் தமிழ்ச் சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர். இவர் சமண முனிவர். நன்னூல் போன்ற சிறந்த இலக்கணங்கள் சமணர் களால் செய்யப்பட்டவை. நாலடியார் போன்ற சிறந்த நீதி நூல் கள் சமண முனிவர்களால் பாடப்பட்டவை. வடமொழித் தொடர்புள்ள பாலி மொழியிலே பற்றுள்ள சமணர்கள் சிறந்த தமிழன்பர்கள் ஆனார்கள். இதற்குக் காரணம் செந்தமிழ்க் கன்னியின் அழகும் தூய்மையுந்தான். அரபு மொழியைப் புனிதமாகப் போற்றும் முலிம்கள் - தமிழ் நாட்டு இலாமியர்கள்- தமிழ்தான் தங்கள் தாய் மொழி யென்பதை மறந்துவிடவில்லை. உமறுப் புலவர் பாடி இருக்கும் சீறாப்புராணம் இதற்குச் சான்று. இராஜநாயகம் போன்ற வேறு பல இலக்கியங்களையும் முலிம் புலவர்கள் இயற்றியிருக்கின் றனர். உயர்ந்த தத்துவங்களைப் போதிக்கும் மதான்சாகிபு பாடல் மிகவும் பிரசித்தமானது. இன்று முலிம்களிலே பல பெரும்புலவர்கள் இருக்கின்றனர். இப் புலவர்களிலே தனித் தமிழ் உணர்ச்சியுள்ளவர்கள் பலர். இன்று தமிழ் நாட்டு முலிம்கள் பெரும்பாலோர் தம்மைத் தமிழர் என்றே எண்ணு கின்றனர்; தமிழைப் போற்றுகின்றனர். தமிழகத்திலே கிறிதுவ மதத்தைப் பரப்ப வந்த மேல் நாட்டுப் பாதிரிமார்களும் கன்னித் தமிழின் கடைக்கண் பார்வை யிலே மயங்கினர்; தமிழைக் கற்றுத் தமிழ்ப் பணியிலே புகுந்தனர். இத்தாலி தேசத்தவரான வீரமாமுனிவர் தமிழிலே தேர்ந்த புலவர். தேம்பாவணி என்னும் சிறந்த காவியத்தைப் பாடியிருக்கின்றார். இது சிந்தாமணி போன்ற சிறப்புள்ளது. சதுரகராதி என்னும் பெயரில் முதன்முதல் தமிழில் அகராதி எழுத வழிகாட்டியவர் இவர்தான். இவரால் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள் பல. போப்பையர் என்று வழங்கப்படும் ரெவரண்ட் ஜி.யு. போப் என்பவர் ஆங்கிலேயர். உயர்ந்த தமிழ்ப் புலவர். இவர் தன்னைத் தமிழ் மாணவன் என்று அழைத்துக் கொள்வதிலே பெருமைப் பட்டார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற சிறந்த இலக்கியங்களை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்தார்; தமிழன் சிறப்பை உலகெல்லாம் பரவச் செய்தார்; தமிழுக்கு இலக்கண மும் இயற்றியிருக்கின்றார். ரைட் ரெவரண்ட் ராபர்ட் கால்டுவல் என்பவர் அயர் லாந்து தேசத்தவர். இவரைக் கால்டுவல் ஐயர் என்று அழைப்பர். தமிழின் தனித்தன்மையை உலகறியச் செய்தவர்களிலே இவர் தலைசிறந்தவர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை ஆங்கிலத்திலே எழுதினார். தமிழ் உயர்தனிச் செம் மொழி. கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் இவை தமிழிலிருந்து பிறந்தவை தமிழ் உள்ளிட்ட இவை ஐந்தும் திராவிட மொழிகள் என்ற உண்மையை மெய்ப்பித்தார். இவ்வாறு செந்தமிழின் சுவையிலே சிந்தையைப் பறி கொடுத்த வேற்று மொழியினர் பலர். அன்று முதல் இன்று வரையிலும் கன்னித் தமிழ் யாருக்கும் அடிமைப்படவில்லை. தன் முன்னிலையிலே வந்த பல மொழியினரையும் தனக்குப் பணி செய்கின்றவர்களாக ஆக்கிக்கொண்டாள் தமிழ்த் தாய். சமணர் களை, புத்தர்களை, இலாமியர்களை, கிறிதவர்களை யெல்லாம் தன் புகழ் பாடும்படி செய்தாள் தமிழ் அன்னை. தமிழ்க் கன்னிகையின் முன்னே மத வேறுபாடுகள் கலகம் செய்யமாட்டா; மொழி வேறுபாடுகள் மோதிக் கொள்ள மாட்டா; இன வேறுபாடுகள் எட்டி நிற்கும். அருந்தமிழ்க் கன்னி யின் புகழ் பாடுவதிலே அவளுக்கு அணிகலன்களைப் போட்டு அழகு செய்வதிலே- அனைவரும் வேற்றுமையின்றி ஒன்றுபட்டு நின்றனர் என்பதே செந்தமிழ்க் கன்னியின் சிறந்த வரலாறு. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல்வேண்டும் என்று பாடினான் பாரதி. இந்த முழக்கம் இன்று தமிழர் ஒவ்வொருவர் குரலாகவும் பரந்து வருகின்றது. தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டும் அல்ல; வெளிநாட்டுத் தமிழர்களும் இதை முழங்கத் தொடங்கி விட்டனர். சிறப்பாக, மலாய் நாட்டிலிருக் கும் தமிழர்கள் தமிழ் எங்கள் உயிர் என்று ஊக்கமுடன் உரைக் கின்றனர். மலாயா நாட்டிலே கன்னித்தமிழ் ஒரு சிறந்த இடத் தைப் பெறும், அங்குள்ள தமிழர்களை ஊக்கும், உயர்த்தும், ஒன்றுபடுத்தும் என்பது உறுதி. தமிழைப் போற்றுவதால்- படிப்பதால்- வளர்ப்பதால்தான் தமிழர் வாழ்வு உயரும் என்பதைத் தமிழர்கள் மறக்கக் கூடாது. வாழ்க கன்னித்தமிழ். சிந்தையை அள்ளும் செந்தமிழ் செந்தமிழ்- செவ்வையான தமிழ்; நல்ல தமிழ்; அழகான தமிழ்; என்றும் கன்னிப் பருவத்துடன் அழகு கனியும் தமிழ். செந் தமிழ் என்பதற்கு இவ்வளவு பொருள் உண்டு, இன்னும் பல சிறந்த பொருள்களும் உண்டு; இன்னும் பல சிறந்த பொருள் களும் சொல்லலாம். அழகு என்றால் பார்ப்பவர்கள் உள்ளத்தைக் கவரும் தன்மையென்று ஆன்றோர்கள் பொருள் கூறினர். தமிழுக்கு உள்ள அழகு படிப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதுதான். இந்தத் தன்மை தமிழின் இயற்கைப் பண்பு. தமிழின் இயல்பை அறிந்தவர்கள்- அதன் ஆழத்தை அறிந் தவர்கள்- அதன் இனிமையைத் தெரிந்தவர்கள்- படிப்பவர்கள் சிந்தையைக் கவரும்படி எழுதுவார்கள். தமிழிலே இயற்கையிலே யே அழகு வளர்ந்து கிடந்தாலும், அதற்கு இனிமையூட்டி எழுது வதற்கு ஒரு ஆற்றல் வேண்டும்; அறிவும் பயிற்சியும் வேண்டும். இக்காலத்திலே உள்ளங்கவரும் உரைநடை யெழுது வதிலே வல்லவர்கள் சிலர் உண்டு. எழுதத் தெரிந்தவர்கள் எல் லோரும் உரைநடையிலே கட்டுரைகள் எழுதுகின்றனர். இவை களிலே நம் கவனத்தைக் கவர்கின்றவை சிலவேதான். சிறந்த கருத்துக்களைச் செந்தமிழிலே நம் சிந்தையில் பதியும்படி எழுதுகின்ற கட்டுரைகளையும், கதைகளையும் யாரும் படிக்கத் தவறுவதில்லை. அறிவுப் பசியைத் தணிக்க அவைகள் அமுதமாகப் பயன்படுகின்றன. நல்ல தமிழாக இல்லாவிட்டாலும், பேச்சு வழக்கிலே உள்ள கொச்சைத் தமிழாக இருந்தாலும் சரி; அல்லது கதம்பத் தமிழாக இருந்தாலும் சரி- கருத்துக்களும் கற்பனைகளும் நிறைந்த எழுத்துக்களாயிருந்தால் அவற்றையும் மக்கள் படிக்கின் றனர்; அவ்வெழுத்துக்களில் உள்ள கருத்தும் கற்பனையும் கற்போர் உள்ளத்தைக் கவர்கின்றன. கருத்துக்கள் இல்லை; கற்பனைகளும் இல்லை; சொல்லப் படும் செய்திகளும் நமக்கு உடன்பாடில்லை; ஆனால் செந் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றது. பள்ளத்தில் பாயும் நீர் போல் பண்பட்ட உரைநடையாக இருக்கின்றது; நம் உள்ளத்தைக் கவ்விப் பிடிக்கும் இனிய சொற்றொடர்த் தொகுப்பாக மட்டும் இருக்கின்றது. பொருளின்பம் இல்லாவிட்டாலும் சொல்லின் பங்கருதி இத்தகைய எழுத்துக்களையும் ஆவலோடு படிக்க முனைகின்றோம். இது செந்தமிழுக்கு உள்ள ஒரு சிறப்பு. கருத்தும் உயர்ந்தது; கற்பனையும் புதுமை; நடையும் ஆற்றுநீர்; அத்தனையும் இனிய செந்தமிழ் வாக்கியங்கள். இவ்வாறு அமைந்தவை, கதையாயினும் கட்டுரையாயினும், அவைகளை அனைவரும் விரும்பிப் போற்றுகின்றனர். ஒரு தடவை மட்டும் அன்று ; பல தடவை மட்டும் அன்று; பல தடவை அவைகளைப் படித்துச் சுவைக்கின்றனர். உரைநடை இலக்கியங்களுக்கு இக்காலத்தில் இத்தகைய மதிப்பு வளர்ந்திருக்கின்றது. இதே முறையில்- அமைப்பில்- செய்யுள்கள் இருந்தால் அவைகள் இன்னும் அதிக மதிப்பைப் பெறும் என்பதிலே ஐயம் இல்லை. உரைநடைக்கும் செய்யுளுக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. உரைநடை எவ்வளவுதான் ஏற்றமுள்ளதாயிருந்தாலும், எழில் உடையதாயிருந்தாலும், அதை அப்படியே மறவாமல் மனதில் வைத்துக் கொள்ள முடியாது. செய்யுள் அப்படியன்று. நல்ல செய்யுள்- செந்தமிழிலே அமைந்த செய்யுள்- அப்படியே நமது உள்ளத்தில் குடியேறிவிடும்; ஒரு எழுத்துக் கூடக் குறை வில்லாமல், உள்ளது உள்ளபடியே நமது உள்ளத்தில் குடியேறி விடும்; என்ன பாடுபட்டாலும் அதை அசைத்துப் பிடுங்கி அப்புறப்படுத்தவே முடியாது. இதுதான் பாட்டுக்கும் உரைக்கும் உள்ள பெரிய வேறுபாடு. இந்த உண்மையை உள்ளத்தில் கொண்டுதான் பண்டைத் தமிழர்கள் தம் கருத்துக்களையும், கற்பனைகளையும் கண்ட காட்சிகளையும் செய்யுள் உருவிலே செய்து வைத்தனர்- அவைகள் அப் புலவர்களின் செல்வப் புதல்வர்களாக நின்று- வழித் தோன்றல்களாக நின்று- நம்முடன் கொஞ்சிக் குலாவுகின்றன. பழந்தமிழ்ப் புலவர்கள் உரைநடை எழுதும் வழக்கத்தைப் பின் பற்றவில்லை; செய்யுள் செய்யும் வழக்கத்தை மட்டும் வளர்த்து வந்தனர். இதற்குக் காரணம், தங்கள் கருத்துக்கள் மக்கள் மனதிலே அப்படியே பதிந்து நிற்கவேண்டும் என்பதுதான். செய்யுள் என்றால் மக்கள் வாழ்க்கையோடு இணைந்த தாக இருக்கவேண்டும்; மக்கள் வாழ்க்கை நிலையை எடுத்துக் காட்டுவதாக இருக்கவேண்டும், உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கவேண்டும். உண்மைப் பொருளும், உயர்ந்த கற்பனைகளும், இனிய சொல்லடுக்கும் பொருந்திய பாடல்கள் எந்தக் காலத்திலும் அழியமாட்டா; சிந்தையைக் கவ்வும் செந் தமிழாகவே சிறந்து நிற்கும். சிறந்த தனிப்பாடல்கள் பல, தமிழிலே உண்டு. பல புலவர் கள் தங்கள் வறுமையால் வருந்தும்போது பாடியவைகளும் உண்டு; தாங்கள் உள்ளங் களித்திருக்கும்போது உற்சாகத்துடன் பாடிய பாடல்களும் உண்டு; தங்களுக்கு உதவி செய்த உத்தமர் களைப் புகழ்ந்து பாடிய பாடல்களும் உண்டு. இவைகள் எல்லாம் தனிப்பாடல்கள் என்னும் பெயரிலே வழங்குகின்றன. இப்பாடல் களிலே நம் சிந்தையைக் கவ்வும் செந்தமிழ்ப் பாடல்கள் பல உண்டு. அப்பாடல்களை அறிந்து மகிழ்வது தமிழர் கடமை. வறுமையால் வாடும் ஒருவன்; அவனால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கையிலே பொருளும் இல்லை; பண்டமும் இல்லை; பணமும் இல்லை. இருந்தனவெல்லாம் தீர்ந்து போய்விட்டன. தாமே வந்து உதவி செய்வோரும் இல்லை. வேலை செய்து கூலிபெற்று வாழலாம் என்று நினைத் தால் வேலையும்; கிடைக்கவில்லை. வேலை! வேலை! என்று எங்கும் அலைந்து திரிந்து முடிந்துவிட்டது. உயிர் வாழ்வதற்கு இனி மீதமாக உள்ள வழி ஒன்றே ஒன்று. அந்த வழி மிகவும் இழிவானது. மானத்தைத் துறந்தால் தான் அந்தக் காரியத்திலே நுழைய முடியும், மானத்தைத் துறப் பதற்கோ மனமில்லை; ஆனால் சாவதற்கும் துணிவில்லை. தரும சங்கடம் என்பது இதுதான். தான் மட்டும் அல்ல; தன்னை நம்பியிருக்கும் குடும்பமும் வாழவேண்டும்; அதற்கு மானத்தை விட்டாவது வாழ வழி தேட வேண்டும். பிறரிடம்- செல்வம் உள்ளவர்களிடம்- ஏழைகளுக்கு உதவும் இளகிய மனம் படைத்தவர்களிடம்- சென்று பல்லைக் காட்டிக் கையேந்தி நிற்பதுதான் அந்த மானங்கெட்டவழி; வேறு வழியேயில்லை. அந்த வழியைப் பின்பற்றத் துணிவு கொண்ட அவன் உள் ளத்திலே, உடனே ஒரு சமாதானம் பிறக்கின்றது. அவன் நெஞ் சத்திலே கிடந்த தெய்வ நம்பிக்கை அந்தச் சமாதானத்தை அவனுக்குத் தந்து அவனைத் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்கின்றது. பிறரிடம் பல்லைக் காட்டி நின்று வயிறு வளர் க்கும் என்னைப் பிரமன் படைத்து விட்டான். ஆகையால், எனது மானங்கெட்ட செயலுக்கு நான் காரணம் அன்று; என்னைப் படைத்த பிரமன்தான் காரணம் என்பதுதான் அவன் மனதில் எழுந்த ஆறுதல். கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா? அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான்; ஐயோ; எங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே வறுமையால் வாடி வதங்கும் ஒருவன் உள்ளத்தை அப் படியே படம்பிடித்துக் காட்டுகின்றது இப்பாட்டு. வறுமையிலே எழுந்த இச்செந்தமிழ்ப் பாட்டு நமது நெஞ்சத்தை அப்படியே அள்ளிக் கொள்ளுகின்றது. இப்பாட்டின் பொருளைப் பார்ப் போம். என்னைப் படைத்த நான்முகன் நான் மானத்துடன் வாழ் வதற்கு வழி செய்திருக்க வேண்டும். பசி வந்த போது கல்லையோ; மண்ணையோ கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்க வாவது ஏற்பாடு செய்தானா? அப்படி இல்லையென்றால், பொன்னையாவது எனக்குக் கொடுத்து, இதைக் கொண்டு வேண்டியவற்றை வாங்கிக் கொள்க என்றாவது காப்பாற்றினானா? அதுவும் இல்லை. என்னுடைய துன்பத்தைத்தான் யாரிடம் சொல்லி, யாரைத்தான் நொந்து கொள்ளுவேன்? ஐயோ எங்குச் சென்று யாரிடமும் பல்லைத் திறந்து கொண்டு நிற்கும்படி அந்தப் பிரம தேவன், என்னை இவ்வுலகிலே படைத்து விட்டானே இதுதான் இப்பாடலிலே அமைந்துள்ள பொருள். இப் பாட்டு ஒரு ஏழையின் எண்ணத்தை அப்படியே எடுத்துக்காட்டு கின்றது. நமது உள்ளத்தைத் தொட்டு அசைக்கின்றது. இந்தப் பாட்டைப் படிப்பவர் இதை என்றும் மறக்க முடியாது. இச்செய்யுளில் அமைந்திருக்கும் சொற்கள் எளிய இனிய சொற்கள், ஒரு சில சொற்களுக்கு மட்டும் பொருள் தெரிந்தால் போதும்; பாட்டின் பொருள் முழுவதையும் அறிந்து அனுப விக்கலாம். அல்லைத்தான்- துன்பத்தை, நோவத்தான்- நொந்து கொள்ளுவேன். பதுமத்தான்- தாமரை மலரில் இருக்கும் பிரமன். புவியில்- உலகில். தான் என்பவை அசைச் சொற்கள். இவைகளே இப்பாடலில் உள்ள சில அருஞ்சொற்கள். இப்பாடலைப் பாடியவர் இராமச்சந்திர கவிராயர் என்பவர். இவர் சென்னையிலே வாழ்ந்தவர். இவர்காலம் நூறு ஆண்டுகள் இருக்கலாம். இவர் பாடிய சுவையுள்ள பாடல்கள் இன்னும் பல. இவர் பல நாடக நூல்களை எழுதியிருக்கின்றார். இலக்கியம் என்றால் என்ன? இரண்டாம் பகுதி (1963) அணிந்துரை பேராசிரியர் கு. átk v«.V.,ã டி. பற்பல நூல்களுக்கு அணிந்துரை எழுதியபோது இல்லாத புத்துணர்வு, இந்நூலுக்கு எழுதும்போது என்னுள் எழுகின்றது. பெரிய தந்தையின் நூலுக்குப் பிள்ளை அணிந்துரை எழுதுவது ஒரு பெரும்பேறு; புத்துணர்வுக்குக் காரணம் அதுவாகவும் இருக் கலாம். என் பெரியன்னையார் திருமதி சாமி. சிதம்பரனார் அவர் கள் இந் நூலுக்கு அணிந்துரை எழுது என்று என்னைப் பணித் தமை எனக்குப் பெரு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்தது. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் என்பது திருக்குறள். புகழே உலகத்தில் அழியாது நிலைத்து நிற்பது என்பது இதன் கருத்தாகும். புகழ் நிலைக்கும் வழிகள் பல உண்டு. ஈகை முதலிய கொடைகளினாலும் புகழ் நிலைக்கும்; இலக்கியத்தாலும் புகழ் நிலைக்கும். ஆனால் இலக்கியப் புகழே எல்லாவற்றுள்ளும் தலைமையானது; போற்றுதற் குரியது; ஆக்கம் தரவல்லது; நிலைத்த பேறுடையது. காரணம், இலக்கியம் மனித இதயத்துடன் உறவாடுகின்றது; உயிர்ப்புத் தருகின்றது; ஊக்கம் அளிக்கின்றது: உந்து விசையாக வாழ்க்கை யில் அமைகின்றது. ஆகவே, இலக்கிய ஆசிரியர்கள் இலக்கியம் படைப்பவர்களாயினும் சரி அல்லது இலக்கியம்பற்றி எழுது வோராயினும் சரி- மனித இதயத்தோடு உறவாடுகின்றார்கள்; உரையாடுகின்றார்கள்; மக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றார்கள். அவ்வகையில், இலக்கியம் என்றால் என்ன? என்னும் இந் நூல், மக்களோடு தொடர்பு கொள்ளுகின்றது; சமூக வளர்ச்சிக்கு- மேம்பாட்டிற்கு - உயர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. சிக்கல் நிறைந்த இயந்திரமயமான - இன்றைய பொருளியல் சமூகத்திலே, இலக் கியத்தின் இடத்தையும், இன்றியமையாமையையும் இந்நூல் வலியுறுத்துகின்றது. நல்ல இலக்கியம் என்றும் அழிவதில்லை என்னும் கொள்கையைச் சான்றுடன் நிறுவுகின்றது. காலந்தோறும், தமிழிலக்கியங்களைப் பல்வேறு அறிஞர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவந்துள்ளனர். அவர்கள் செய்த இலக்கிய அறிமுகம் நன்கு படித்தவர்களுக்கே புரியும் வகையில் அமைந்த ஒன்று. தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் பண்டிதர்களிடம் முடங்கிக் கிடந்த பழந்தமிழிலக்கியச் செல்வங்களைப் பாமர மக்களுக்கும் ஆக்கித் தந்த வகையில் தனிச் சிறப்புடையவர்கள். அவர்கள் நூல்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நிரம்பிய தமிழறிவு வேண்டும் என்னும் தேவை இல்லை. எளிய படிப்பினரும் இயல்பாகப் படித்துப் புரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு அரும் பெரும் இலக்கியக் கருத்துக்களை எளிய இனிய எல்லார்க்கும் புரியும் நடையில் எழுதிப் புலவர் இலக்கியங்களைப் பொது மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில், பெருவெற்றி கண்டவர்கள் அவர்கள். அவர்கள் நடையைப் படிக்கும்போது அருகிலிருந்து உரையாடுவதைப் போன்றதோர் உணர்வு ஏற்படுதல் இயற்கை. புரியாத- கடினமான - அகராதிச் சொற்களை அவர்கள் நூலுள் காண்பது அரிது. அத்தகைய, ஆற்றொழுக்கான எளிய நடையையும் நடைச் சிறப்பையும் கொண்டு இந் நூலும் விளங்குகின்றது. சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதி- பாரதிதாசன் வரை யில் உள்ள தமிழ் இலக்கியப் பரப்பினுள் தோய்ந்த தழிழறிஞரின் உள்ளத்தை இந்நூல் பறை சாற்றுகின்றது; இலக்கியத்தைப் பல கோணங்களிலிருந்து ஆய்கின்றது; பழமையின்; சிறப்பைப் புலப்படுகின்றது. புதுமையின் தேவையை வரவேற்கின்றது. இலக்கியம் பற்றிய கட்டுரைகள், முன்னேறுவதற்கான உண்மைக் கருத்துக்களை உணர்வதே இலக்கியங்களால் நாம் பெறும் பயன் என்றும்- கொள்கையைக் கொண்டிருப்பதே இலக்கியம் என்றும்- அக்கொள்கையும் அறம் பொருள் இன்பம் வீடடைதல் ஆகும் என்றும், பொது வகையில் சுட்டுகின்றன. புதிய இலக்கிய வடிவங்கள் என்று கருதப்பெறும் உரை நடை, பெருங்கதை, சிறுகதை, பற்றிய தழிழறிஞரின் கருத்துக்கள் கருதத்தக்கவை. இராமலிங்க அடிகளுடைய அருட்பாவின் எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றியும் அடிகள் நாட்டு விடுதலை பற்றிப் பாடாமல் சமுதாய விடுதலை பற்றிப் பாடியமைக்கும் அவர்கள் கூறும் காரணங்கள் எண்ணுதற்குரியவை. நுண்கலை வளர வளரச் சோம்பேறிக் கூட்டந்தான் நாட்டிலே வளர முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம், நுண்கலை பொதுமக்களுக்குப் புரியாது. (பக்கம் 62-63) பாரத நாட்டு மக்களுக்கு வேண்டிய அரசியல் சமூக மத தர்மங்கள் அனைத்தும் வடமொழியில் அமைந்திருப்பதற்குக் காரணம். அது இந் நாட்டின் பொது மொழியாக இருந்தது தான் என்பதில் ஐயமில்லை. (பக்கம் 83) போன்ற கருத்துக்கள் அறிஞர்களின் சிந்தனைக்குரியவை; ஆய்தற்குரியவை. உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள், தமிழ் இலக்கியங்களில் தமிழ் நாட்டை உலகைவிட்டுப் பிரிக்க வில்லை. (பக்கம் 140) என்னும் கருத்துத் தமிழிலக்கியத்தின் கொள்கையை யும் தனிப் பண்பையும் உணர்த்துவதுடன், உலக ஒருமைப் பாட்டுக்கு அடிகோலியவர்கள் தமிழர்கள் என்பதையும் நுட்பமாகத் தெரிவிக்கின்றது. இன்றைய எழுத்தாளர்களும் எழுத்தாளர் சங்கங்களும் செய்யவேண்டிய பணி குறித்து இலக்கியம் வளர வேண்டு மானால்...? என்னும் கட்டுரை விளக்குகின்றது. இறந்த காலத்தில் எழுந்த இறவாத நூல்களை, நிகழ்கால நோக்கிலே நின்று, எதிர்காலச் சிந்தனையுடன் ஆராயும் இந் நூல், இலக்கியச் சுவைஞர்க்கும், இலக்கிய ஆராய்ச்சியாளர்க்கும், இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்றவர்க்கும் பயன்தருவது; சிந்தனையைத் தூண்டுவது; செயலாக்க முனைப்பை ஏற்படுத்துவது. தமிழறிஞரின் இந்நூலைத் தமிழகம் போற்றிப் பயன் கொள்ளுமாக! சென்னை-94 14-6-1976 கு.சிவமணி இலக்கியங்களால் என்ன பயன்? இலக்கியங்களால் எப்பயனும் இல்லை. அவைகளைப் படிப்பது சோம்பேறிகளின் வேலை; பொழுதுபோக்கிற்காகத் தான் அவைகள் பயன்படும். இலக்கியம் படித்தவன் ஒன்றுக்கும் உதவமாட்டான். இனிமையாகப் பேசிப் பொழுது போக்குவான். ஆகையால் இலக்கியங்களைப் படிப்பதிலே எல்லோரும் கருத்தைச் செலுத்துவது வீண் வேலை என்று சொல்லுவோர் உண்டு. இலக்கியம் என்பது என்ன? அவைகள் எதற்காக ஏற்பட்டன? என்பனவற்றைச் சிந்திக்காதவர்களே இப்படிச் சொல்லுவார்கள். இலக்கியங்கள் என்பவை மக்கள் நன்மைக்காகவே செய்யப் பட்டவை. கலை கலைக்காகவே என்று கண்மூடிக் கதறுவதைப் போல இலக்கியம் இலக்கியத்திற்காக அன்று, மக்கள் வாழ்க் கையைச் செம்மைப்படுத்துவதற்காகவே எழுந்தவை. இலக்கியம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும். இலக்கைக் காட்டுவது இலக்கியம். இலக்கு- திசை; மக்கள் எத் திசையில் போகவேண்டும் என்பதைக் காட்டுவதே இலக்கியம் ஆகும். இலட்சியம் - அதாவது நோக்கம்- குறிக்கோள்- இவற்றி லிருந்து இலக்கியம் பிறந்தது என்றாலும் பொருந்தும். குறிக்கோளைக் கொண்டிராத புத்தகங்கள் இலக்கியங்கள் ஆகா. குறிக்கோளும் நல்ல குறிக்கோளாக இருக்க வேண்டும்; மக்களுடைய வாழ்க்கைக்குத் துணை செய்யக்கூடிய குறிக் கோளாக இருக்க வேண்டும் இவைகளே இலக்கியங்களாகப் போற்றப்படும். இத்தகைய இலக்கியங்கள்- நூல்கள்- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியனவாயினும் புதுமையாகப் போற்றப்படும்; புதியனவாகத் தோன்றியனவாயினும் பழயன போல் பாராட்டப்படும். எவ்வளவு இனிய சொற்றொடர்களைக் கொண்டிருந் தாலும், கண்ணைக் கவரும்படி அழகாக அச்சிடப்பட்டிருந் தாலும் நல்ல குறிக்கோள்களைக் கொண்டிராவிட்டால் இலக்கிய வரிசையிலே சேர்க்கப்படுவதில்லை. அவைகளை இலக்கியச் சுவடிகள் உள்ள அலமாரியிலே அடுக்கி வைக்க மாட்டார்கள். ஒருமுறை படித்தவுடன் பழங்காகிதக் கூடையிலே போட்டு விடுகின்றனர்; பழங்காகிதம் வாங்கும் தெரு வியாபாரி யிடம் நிறுத்து விற்றுவிடுகின்றனர். ஒருமுறை படித்தவுடன் கீழே போட்டுவிடும் புத்தகங்கள் இக்காலத்தில் புற்றீசல்போல் பெருகி வருகின்றன. இவைகளை யாரும் இலக்கியங்கள் என்று சொல்லமாட்டார்கள். உண்மை யான இலக்கியங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னே பிறந்தன வாயிருப்பினும் அவைகள் அழியமாட்டா. படிக்காவிட்டால் கூடப் பலர் அத்தகைய புத்தகங்களை அழகுக்காகவாது கையில் வைத்துக்கொண்டிருப்பார்கள்; அலமாரிகளிலே அடுக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள். ஆகவே, இலக்கியங்கள் என்பவை, நீண்ட நெடுங்காலம் நிலைத்து நிற்பவை; மக்களால் படிக்கப்படுகின்றவை; பாராட் டப்படுகின்றவை. போலி இலக்கியங்கள் நிலைத்து நிற்கமாட்டா. ஒருமுறை படித்தபின் மறுமுறை திரும்பிப் பார்க்கப்படாதவை; கையால் தொடப்படாதவை. இவைகளே உண்மை இலக்கியத் திற்கும் போலி இலக்கியத்திற்கும் உள்ள வேற்றுமை. மக்கள் வாழ்வும் இலக்கியமும் இலக்கிய வளர்ச்சியிலே கருத்துள்ளவர்களில் சிலர் ஒரு உண்மையை மறந்துவிடுகின்றனர். இலக்கிய வழக்கு அப்படியே மாறாமல் இருக்கவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்கள் எந்த முறையில் இருந்தனவோ அந்த முறை யிலேயே இன்றும் இலக்கியங்கள் தோன்றவேண்டும்; புதிய கருத்துக்கள் அவைகளில் புகக் கூடாது என்று கூறுவோர் உண்டு. இவர்கள் பிற்போக்காளர்கள்; இலக்கியத்தின் இயல்பை அறியாதவர்கள். மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தபடி இல்லை. உருவத்தில் அப்படியே இருக்கலாம்; ஆனால் குணத்தில்- செய்கையில்- பழக்க வழக்கங்களில்- பல வகையான மாறு தல்களை அடைகின்றனர். அரசியலில், சமுதாய அமைப்பில் மாற்றமடைந்து வருகின்றனர். இவைகள் மனித சமுதாய வளர்ச்சியாகும். மக்கள் சமுதாயம் எப்படி வளர்ச்சியடைந்து வருகின்றதோ அதுபோல இலக்கியங்களும் வளர்ச்சியடைந்து வர வேண்டும். மக்கள் முன்னேற்றத்திற்குத் தகுந்தவாறு- அவர்களோடு இணைந்து வருவதே இலக்கியமாகும்; இலக்கிய வளர்ச்சியாகும். நாகரிகமடைந்த ஒவ்வொரு நாடுகளிலும் இந்த முறையில்தான் இலக்கியங்கள் முன்னேறி வருகின்றன. தமிழ்நாட்டுப் பண்டை இலக்கியங்களைப் பார்த்தாலும் இவ்வுண்மையைக் கண்டு கொள்ளலாம். அறிவுள்ளோர் கடமை தன்னுடைய இன்பத்தை மட்டும் நாடுகின்றவன் அறிவுள் ளவன் அல்லன்; தான் சுகமாக வாழ்வதற்காக மட்டும் உழைக் கின்றவன். பண்டங்களைச் சேர்க்கின்றவன் மக்களால் அறிவுள் ளவனாக மதிக்கப்படமாட்டான். எல்லா மக்களும் இன்புற்று வாழவேண்டும் என்று எண்ணுகின்றவன்- உழைப்பவன் -உயர்ந் தவனாக, சிறந்த அறிவுள்ளவனாக மக்களால் மதிக்கப்படுவான். தீமை செய்வோரைக் கண்டால் திருத்த முயல்கின்றவனே அறிவுள்ளவன்.அரசாட்சி மக்களை மதிக்காமல் நடந்து கொண்டாலும் சரி, அரசாங்கத் தலைவர்கள் அடாத நெறியிலே ஆணை செலுத்தினாலும் சரி, அதை அஞ்சாமற் கண்டிக்க அறிவுள்ளவர்கள்; பின்வாங்க மாட்டார்கள்; பின்வாங்கவும் கூடாது. இந்த உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்களிலே நாம் காணலாம். இதோ ஒரு உதாரணம். மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஒரு வள்ளல், சிறந்த வீரன்; அவன் சிற்றரசன்தான். ஆனாலும் மூவேந்தர்களும் அவனுடைய ஆதரவை. அடிக்கடி நாடியிருக்கின்றனர். அவன் எந்த அரசனை ஆதரிக்கின்றானோ அவனே வெற்றி பெறுவான். இவன் நடுநாட்டுக் குறுநில வேந்தன். இந்த நடுநாடு தென்னாற் காடு ஜில்லாவைச் சேர்ந்த திருக்கோவிலூரைத் தலைமையாகக் கொண்டது. இந்த மலையமான் திருமுடிக்காரியின் காலத்தில் இருந்த சோழ மன்னர்களில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்பவன் ஒருவன். இவனுடைய தலைநகரம் உறையூர். இந்தக் கிள்ளிவளவனும், திருமுடிக்காரியும் பகைவர்கள் திரு முடிக்காரி உயிரோடு இருக்கும்வரையிலும் அவனைக் கிள்ளி வளவனால் போரில் தோற்கடிக்க முடியவில்லை. ஆதலால் கிள்ளி வளவனுக்கு மலையமான் திருமுடிக்காரியின் மேல் நீங்காத பகை நிலைத்திருந்தது. திருமுடிக்காரி இறந்த பின்னும் அவன்மேல் உள்ள ஆத்திரம் கிள்ளிவளவன் உள்ளத்தைவிட்டு ஓடாமல் உறைந்திருந்தது. மலையமான் திருமுடிக்காரிக்கு இரண்டு ஆண் குழந்தை கள் இருந்தனர். அவர்கள் சிறுவர்கள்; உலக அறிவு பெறாதவர் கள்; பச்சிளங் குழந்தைகள். கிள்ளிவளவன் மலையமான் திருமுடிக்காரியின் மீதுள்ள ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள அவன் குழந்தைகளைக் கொலைசெய்ய எண்ணினான். உடனே அவர்களைக் கொண்டு வந்தான். பலரும் காணத்தக்க வெட்ட வெளியிலே அவர்கள் தலைகள் மட்டும் வெளியில் தெரியும்படி நிலத்தில் புதைத்தான். யானையின் காலால் அவர்கள் தலையை இடறும்படி ஏற்பாடு செய்தான். இப்படிச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டை உறையூர் மக்கள் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். அரசன் செய்வது அநீதி, கொடுங்கோன்மை கோழைத்தனம் என்பது அவர் களுக்கு விளங்காமல் இல்லை. விளங்கியும், அவர்களில் யாரும் அரசனுக்குப் புத்தி சொல்ல முன்வரவில்லை. அரசன் செயலுக்குத் தடை சொன்னால் தங்களுக்கு என்ன ஆபத்து வருமோ என்ற அச்சம் அவர்கள் வாயைப் பூட்டி விட்டது. அரசன் செய்வது அக்கிரமம் என்று எடுத்துக்காட்டும் அறிஞர், அஞ்சா நெஞ்சுள்ளவர் ஒருவரும் அக்கூட்டத்தில் இல்லை. மக்கள் மனம் வருந்தி நிற்கின்றனர், அரசன் தன் கொடுங் கோன்மையைச் செய்ய முனைந்து நிற்கின்றான். இச்சமயத்தில் கோவூர் கிழார் என்னும் புலவர் விரைந்து வந்தார். அஞ்சாமல் அரசன் செயலைத் தடுத்தார். அவனுக்கு அறிவுரை கூறினார். மக்களும் புலவரை ஆதரித்து நின்றனர். அரசனும் தனது செயலைக் கைவிட்டான். இந்த நிகழ்ச்சியைப் புறநானூறு என்னும் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு பாட்டு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நீயோ, ஒரு புறாவின் துன்பத்தையும், மற்றவர்களின் துன்பங்கள் பலவற்றையும் தீர்த்த சிபிச் சோழன் மரபிலே பிறந் தவன். நீ கொல்லப்போகும் இவர்களோ, அறிவால் உழுதுண் ணும் புலவர்களின் வறுமையைக் கண்டு அஞ்சி, தமது செல்வத் தை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணும், குளிர்ந்த நிழலிலே வாழ்கின்றவர்களின் மரபிலே பிறந்தவர்கள். தம்முடைய இயற்கையான அழுகையை மறந்து, இந்த யானையைக் கண்டு அழுகின்ற சிறுவர்கள், சிறிய தலையையுடைய குழந்தைகள். இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பயந்து பார்க்கின்றனர். புதிய துன்பத்தை யடைகின்றனர். இவர்களைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? நான் சொல்வதைக் கேட்ட பின் நீ விரும்பியதைச் செய்! என்று கூறினார். இப் பொருளமைந்த பாட்டு கீழ் வருவது: நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை! இவரே, புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர் களிறுகண்டு அழூஉம், அழால் மறந்த புன்தலைச் சிறார்; மன்றுமருண்டு நோக்கி விருந்தின் புன்கண் நோ உடையர் கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே, (புறநானூறு, 46) இப்பாடல், அரசன் அக்கிரமத்தை அறிஞர்கள் கண்டித் தனர்; அப்படிக் கண்டிக்கும் உரிமை எந்தக் காலத்திலும் அவர் களுக்கு உண்டு என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகின்றது. பொதுமக்கள் வலிமை பொதுமக்கள் நலனைக் கருதும் ஆட்சியே நல்லாட்சி யாகும். பெரும்பான்மையான பொதுமக்கள் நன்மையைக் கருதாமல்- பொதுமக்களை அடக்கியாளும் அரசாங்கம்- சிறுபான்மையினரின் நன்மைக்காக மட்டும் பாதுகாப்பளிக்கும் அரசாங்கம் - பொதுமக்கள் அரசாங்கமாக இருக்க முடியாது. பொது மக்கள் நன்மையைப் புறக்கணிக்கும் அரசு எவ்வளவு தான் படை பலம் பொருந்தியதாயினும் அது மக்களால் கவிழ்க்கப் பட்டு விடும்: உடனடியாக இல்லாவிட்டாலும் பல நாட்கள் கழிந்த பின்னாவது கட்டாயம் கவிழ்க்கப்படும். பெரும்பான்மை மக்களின் கருத்தை எந்த ஆயுதமும் எதிர்த்து அழித்துவிட முடியாது. இது முற்போக்கு அரசியல்வாதிகளின் கருத்து. இக் கருத்தைப் பழய இலக்கியங்களிலும் காணலாம். மதுரை நகரத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களிலே பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்பவன் ஒருவன். இவன் மிகவும் படைபலம் பெற்றவன். தன் படைபலம் ஒன்றினாலேயே நாட்டை ஆண்டுவிடலாம். எதிரி களை அடக்கி விடலாம் என்று எண்ணியிருந்தான். மருதன் இளநாகனார் என்ற புலவர் இவன் எண்ணம் தவறு என்று எடுத்துக் காட்டினார். பொதுமக்கள் ஆதர வில்லாவிட்டால் எவ்வளவு படைப்பலம் இருந்தாலும் பயனில்லை. பொதுமக்கள் ஆதரவு பெறவேண்டுமானால் அற நெறியை அடிப்படையாகக் கொண்டு அரசாள வேண்டும் என்ற உண்மையை உரைத்தார். கடுமையான கோபமுள்ள கொல்லும் யானையும், விரைந்து செல்லும் செருக்குள்ள குதிரையும், நீண்ட கொடியுள்ள உயர்ந்த தேரும், அஞ்சாத நெஞ்சுள்ள போர் விருப்பமுள்ள வீரர்களும் ஆகிய நால்வகைப் படைகளும் நிறைந்திருந்தாலும் பயன் இல்லை. அரசு வெற்றியுடன் வாழ முடியாது. சிறந்த அற நெறியை அடிப்படையாகக் கொண்டு அரசாளவேண்டும் என்ற உண்மையை உரைத்தார். கடுமையான கோபமுள்ள கொல்லும் யானையும், விரைந்து செல்லும் செருக்குள்ள குதிரையும், நீண்ட கொடி யுள்ள உயர்ந்த தேரும், அஞ்சாத நெஞ்சுள்ள போர்விருப்ப முள்ள வீரர்களும் ஆகிய நால்வகைப் படைகளும் நிறைந்திருந் தாலும் பயன் இல்லை. அரசு வெற்றியுடன் வாழ முடியாது. சிறந்த அறநெறியை அடிப்படையாகக் கொண்டிருப்பதே அரசாட்சியின் வெற்றியாகும். அறநெறியை அடிப்படையாகக் கொண்ட அரசியலே பொதுமக்களின் ஆதரவு பெற்ற அரசாங்க மாகும். இதனை, கடும்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும் நெடும்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும், நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புறநானூறு, பாட்டு-55; வரி-10) இவ்வரிகளால், ஒரு அரசாங்கத்திற்குப் படைபலத்தை விடப் பொதுமக்கள் ஆதரவே சிறந்தது என்பதை அறியலாம். பொதுமக்கள் உரிமையை ஆதிகார வெறிபிடித்தவர்க்கு எடுத்துக்காட்டுவது இப்பாட்டு. உயர்வு தாழ்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சாதி வேற்றுமை நிலைத்திருந்தது. சாதி வேற்றுமையால் சமுதாய ஒற்றுமை கெட்டுவந்தது. மக்களுக்குள் பகைமை வளர்வதற்கு அதுவும் ஒரு காரணமாயிருந்தது. ஆயினும் அறிவுடையவர் எக் குலத்தவராயினும் மதிக்கப்பட்டனர். அறிவுள்ளவர்களை அரசர்களும், பொதுமக்களும் போற்றி வந்தனர். இந்நிலையைக் கண்ட பல அறிஞர்கள், கல்வி கற்றவன் உயர்ந்தவன்; அவன் எக் குலத்திற் பிறந்தாலும் எல்லோராலும் போற்றப்படுவான். ஆதலால் எல்லோரும் கல்வி கற்கவேண்டும். கல்வி வளர்ந்தால் சாதி வேற்றுமை ஒழிந்துவிடும் என்று கூறிவந்தனர். ஒரு குடியிலே பிறந்த பல சகோதரர்கள் இருக்கின்றனர். அவர்களிலே மூத்தவனை அழைத்து அரசன் ஆலோசனை கேட்கமாட்டான். இளையவனாயிருந்தாலும் படித்திருப் பானாயின்- அறிவுள்ளவனா யிருப்பானாயின்- அவன் கூறும் வழியையே அரசனும் பின்பற்றி நடப்பான். வேறுபாடு காணப் படும் நான்கு குலத்திலும், கீழ்க்குலத்திலே பிறந்த ஒருவன் படித் திருப்பானாயின், மேற்குலத்திலே பிறந்த ஒருவன் அவனிடம் அடங்கி நடப்பான். ஒரு குடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறநானூறு: 183, வரி, 5-10) இது, சாதி வேற்றுமை ஒழிந்து மக்கள் ஒன்றுபடுவதற்கு வழிகாட்டும் இலக்கியம். மேலே காட்டியவைகள் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்னைய நூல்களில் உள்ளவை. இவைபோன்ற சிறந்த குறிக்கோள்களைக் கொண்டி ருப்பதனால் அவ்விலக்கியங்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. கம்பன் கவி ஏறக்குறைப ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சிறந்த இலக்கியத்தை இயற்றியவன் கம்பன். இன்று சிலர் தூற்றினாலும் பலர் அவன் இலக்கியத்தைப் போற்றுகின்றனர். கம்பனுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த புலவர்கள் கல்வியினால் சாதி பேதத்தை ஒழிக்கலாம் என்று நம்பினர். கம்பன், அதுமட்டும் போதாது; அதனால் மட்டும் சாதி வித்தியாசம் ஒழியாது; மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்; அப்பொழுதுதான் மக்கட் சமுதாயம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்தான். இந்த உண்மையைத் தன் பாடலிலே எழுதிவைத்து விட்டான். அயோத்தி நகரத்திலே கல்வி கற்காதவர்களே யாரும் இல்லை. ஆகையால் கல்வியிலே வல்லவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது; கல்வியிலே சிறந்தவர் அல்லர் என்றும் யாரையும் குறிப்பிட முடியாது. எல்லா மக்களும் தங்கள் வாழ்க் கைக்கு வேண்டிய எல்லாப் பெரிய செல்வங்களையும் பெற்றிருக் கின்றனர். எனவே அந்த நகரத்தில் செல்வம் இல்லாதவர்களும் இல்லை, செல்வம் உள்ளவர்களும் இல்லை. இதனை, கல்லாது நிற்பார்பிறர் இன்மையின் கல்விமுற்று வல்லாரும் இல்லை; அவை வல்லர்அல் லாரும் இல்லை: எல்லாரும் எல்லாப்பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடை யார்களும் இல்லை மாதோ என்ற பாட்டில் காணலாம். நீண்ட நெடுங்கால அனுபவத்திற்குப் பின் சமுதாயத்திலே அமைதியும், இன்பமும் நிலவக் கம்பன் கண்டறிந்த உண்மையிது. அந்தக் காலத்தில் அயோத்தி நகரத்தில் இந்த நிலைமை இருந்திருக்க முடியாது. மனித சமுதாயம் இன்பமடைய, கம்பன், தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை இவ்வாறு வெளி யிட்டான். இதுபோன்ற பல உயர்ந்த கருத்துக்களைக் கம்பன் காவியத்திலே காணலாம். நமது நூற்றாண்டில் தோன்றிய பெரும்புலவர் பாரதியின் கருத்தைப் பாருங்கள். ஏழையென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே; வாழிகல்வி செல்வம் எய்தி மனம்மகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே. இது, பாரதியின் விடுதலைப் பாட்டு. கல்வியும் செல்வமும் பெற்று மனமகிழ்ந்து ஒன்று சேர்ந்து சமமாக வாழ்வோம் என்று வீரமுழக்கம் செய்கின்றான். கல்வியால் சமுதாய ஒற்றுமை உண்டாகும், உயர்வு தாழ்வு ஒழியும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னெழுந்த புறநானூற்றுப் பாட்டுக் கூறுகிறது. கல்வியும், செல்வமும் எல்லோருக்கும் வேண்டும். அவை எல்லோருக்கும் சமமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மனித சமுதாயத்திலே இன்பம் நிலைத்திருக்கும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறினான் கம்பன். எல்லோரும் கல்வியும் செல்வமும் பெற்றால்தான், ஏழை, அடிமை என்ற நிலைமை மாறும் என்று நமது காலப் புலவன் பாரதி முழங்குகின்றான். அமைச்சர்கள் எந்தக் காலத்திலும் அமைச்சர்கள் பொது மக்களின் கருத்துணர்ந்து நடப்பவர்கள். சர்வாதிகாரமுள்ள அரசு நடந்த காலங்களில் கூட அவர்கள் அரசர்களுக்கு அறிவுரைகள்- சொல்லிவந்தனர். அரசர்களைப் பொதுமக்கள் கருத்தின்வழி நடக்கச் செய்துவந்தனர். பொதுமக்களின் எண்ணங்களை- குறைகளை- அவர்களுக்கு வேண்டியவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்காகவே நிகர் அற்ற ஆணைபெற்ற அரசர்களும் அமைச்சர்களைத் துணைவர்களாகக் கொண்டிருந்தனர். இத்தகைய பொறுப்புள்ள அமைச்சர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் மிகத் தெளிவாகச் சொல் லுகின்றார்: தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாய்ச் சொல்லலும் வல்லது அமைச்சு. உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்; ஒரு வினையைத் தொடங்கும்போது அதன் குற்றம் குறைகளை- இலாப நஷ்டங் களை- ஆராய்ந்து செய்யத் தொடங்கவேண்டும். அரசனுக்கு ஆலோசனை கூறும்போது வழவழ கொழகொழ வென்று துணிவில்லாமற் சொல்லக்கூடாது. இன்னது செய்யலாம், செய்யக்கூடாது என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும். இப்படி நடப்பவனே அமைச்சன் ஆவதற்குத் தகுதியுள்ளவன் ஆவான். இதுவே அமைச்சரைப் பற்றித் திருவள்ளுவர் சொல்லி யிருப்பது. அவருக்குப் பன்னூறாண்டுகளுக்குப் பின்னிருந்த கம்பன் அமைச்சரைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள். தன்னலம் கருதாதவர்கள், தமது உயிருக்கு மட்டும் நன்மை வேண்டும் என்று எண்ணாதவர்கள், அரசன் தம் அறிவு ரையைக் கேட்காமல் சினந்தாலும் அஞ்சமாட்டார்கள்; அரசன் கொடுமை செய்தாலும் தாங்கிக்கொள்வார்கள். உறுதியாக நின்றுவிடாமல் நீதியை எடுத்துக்காட்டும் வீரர்கள்; நன்னெறியில் தவறாமல் நடக்கின்ற தெளிந்த அறிவுள்ளவர்கன்; கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம்- இவற்றின் நிகழ்ச்சிகளை ஆராய்ந்தறியும் வல்லமை வாய்ந்தவர்கள்; என்றும் உண்மையான ஒன்றையே சொல்லும் தன்மையுள்ளவர்கள். இதனை, தம்உயிர்க்கு உறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்; செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார்; தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். வள்ளுவர் குறளையும், கம்பனுடைய இந்தக் கவியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசனைத் தலைவனாகக் கொண்ட ஆட்சிக் காலத்தில் அமைச்சர் தகுதி இப்படி இருக்கவேண்டும் என்றால், மக்கள் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் எப்படியிருக்கவேண்டும் என்பதை நாமே ஊகித்துணர்ந்து கொள்ளலாம். சுரண்டும் கூட்டத்தாரின் சலசலப்புக்கு அஞ்சாமல் பொதுமக்கள் சார்பிலே நின்று உழைக்கும் உறுதிபூண்டவர் களேஅமைச்சர்களாய் அமர்வதற்குத் தகுதியுள்ளவர்கள். தன்னலம் கருதாதவர்கள்- குடிமக்கள் அனைவரையும் ஒன்றாகக் கருதும் உள்ளமுடையவர்கள்- எந்தக் காரியத்தையும் நன்றாகத் துணிந்து செய்யும் இயல்புள்ளவர்கள் தாம் அமைச்சர் நிலை யிலே இருப்பதற்கு ஏற்றவர்கள். இக்காலத்தில் தனிமனிதர் ஆட்சியும் தகர்ந்து வருகின்றது; அரசர் ஆட்சியும் அழிந்துவிட்டது. இந்நிலையிலே, ஆளும் பீடத்திலே அமரும் அமைச்சர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை மேலே காட்டிய திருக்குறளும், கம்பன் கவியும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. மக்கள் கருத்தறிந்து நடக்கும் மதியுள்ளவர்கள்; நாடு முன்னேற நாம் செய்யும் வேலைகள் இவை என்பதை முன்னமே திட்டமிடும் திறமையுள்ளவர்கள்தாம் அமைச்சர் பதவியில் இருப்பதற்குத் தகுந்தவர்கள். இவ்வுண்மையை வாக்காளர்கள் அனைவரும் அறியவேண்டும்; அறிந்திருந்தால் தான் நாட்டு மக்கள் நலம்பெற முடியும். இச்செய்தியை இந்த இலக்கியங்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. மேலே சொல்லியவைகளைச் சிந்தித்துப் பார்த்தால் இலக் கியங்களின் சிறப்பு நமக்கு விளங்கும். இலக்கியங்கள் எப்படி வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன? உண்மையான இலக்கியங் கள் என்றால் என்ன? என்ற உண்மைகளையும் உணரலாம், பல அறிவுரைகளைத் தெரிவிப்பன; நமது சமூக, அரசியல் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவன; என்றும் அழியாமல் நின்று உண்மைகளை எடுத்துக்கூறுவன; நாம் பின்பற்றக் கூடிய வகையிலே இவைகளை இயம்புவன; இத்தகைய கருத்துள்ளவை எம்மொழியிலேயிருந்தாலும்; யாரால் இயற்றப்பட்டவையா னாலும் சரி; அவைகள் அழியாத இலக்கியங்கள். இவைபோன்ற உண்மைகளை அறிந்து நாமும் நமது வாழ்விலே முன்னேறிச் செல்லுவதே இலக்கியங்களால் நாம் அடையும் பயன். வெறும் சொற்சுவைகளை மட்டும் நுகர்வது, கற்பனைகளைக் கண்டு களிப்பது, கதையைப் படித்து மகிழ்வது மட்டும் இலக்கியங் களால் உண்டாகும் பயன் ஆகாது. முன்னேறுவதற்கான உண்மைக் கருத்துக்களை உணர்வதே இலக்கியங்களால் நாம் அடையும் பயன் ஆகும். இலக்கியங்கள் ஏன்? கொள்கைகளை வலியுறுத்துவதற்காக எழுதப்படுவது இலக்கியம் அன்று: இலக்கியம் பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது; பொழுது போக்குக்காகப் பயன் பெறும் வகையிலே மக்கள் படித்துச் சுவைப்பதற்காக மட்டுமே இலக்கியங்கள் எழுதப்படவேண்டும்; இம்மாதிரி எக்கருத்தையும், எக்கொள்கையையும் பின்பற்றாமல், வெறும் சொல்லலங்காரங் களைக் கொண்டிருப்பதே இலக்கியங்கள் என்போர் உண்டு. இக்கருத்து எப்பொழுது பிறந்தது? எதற்காகப் பிறந்தது? என்பதே நமக்குப் புரியவில்லை. இக்கருத்துப் பொருத்த முள்ளது தானா? இலக்கியம் தோன்றுவதற்கு, வளர்வதற்கு இக்கருத்து ஏற்றதுதானா? இன்று இலக்கியம் என்று போற்றப்படும் நூல் களிலே இக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்கள் எத்தனை இருக்கின்றன? கருத்தோ, கொள்கையோ இல்லாத நூல்கள் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றனவா? என்பவை களைப் பற்றி எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும். தமிழைப் பொறுத்த வரையிலும் கருத்தோ கொள் கையோ இல்லாத நூல்கள் ஒன்றும் இல்லை புதிய நூல்களும் இல்லை; பழைய நூல்களும் இல்லை. கருத்தும் கொள்கைகளும் அடங்கிய பழந்தமிழ் நூல்கள் தாம் இன்னும் மக்களால் போற் றப்படுகின்றன. சிறந்த இலக்கியங்கள் என்று பாராட்டப் படுகின்றன. புறநானூறு சங்க இலக்கியங்களிலே சிறந்து விளங்கும் புறநானூற்றை எடுத்துக் கொள்வோம். அது ஒரு தனிப் பாடல்களின் திரட்டுத் தான். பழந்தமிழ்ப் புலவர்களின் தொகுதி அது. அப்பாடல் களிலே அரசியல் முறைகளைக் காணலாம், அரசியல் நீதிகளைக் காணலாம்; மக்கள் வாழ வழி காட்டும் அறிவுரைகளைக் காண லாம்; உலக நிலையை எடுத்துக்காட்டி உண்மை வழி இதுதான் என்று கூறும் வேதாந்தக் கருத்துக்களைக் காணலாம்; மக்கள் சமுதாயம் ஒன்றுபட்டு இன்பமாக வாழ்வதற்கு வழி கூறும் பாடல்களைக் காணலாம். புறநானூற்றுப் பாடல்கள் பெரும் பாலும், கருத்தையும், கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டவைகளாக இருப்பதை அவற்றைப் படிப்போர் காண் பார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பாடலைப் பார்ப்போம். ஒரு சமயம், சேரன், பாண்டியன், சோழன் மூவேந்தர்களும் சமாதானமாக ஒன்றாகக் கூடியிருந்தனர். சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப் போர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பவர்களே அம்மூவேந்தர்கள். அவர்கள் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவ்வையார் அவர்களுக்கு அறிவுரை கூறும் வகையிலே ஒரு பாடலைக் கூறினார். அப்பாடல் புறநானூற்கு 367-வது பாட லாக அமைந்திருக்கின்றது. அப்பாடலின் பொருளைக் காண்போம். தேவலோகம் போன்ற இன்பப் பகுதிகள் அமைந்த இந்த நாடு, தமது அரச பரம்பரைக்கு உரியதாக இருக்கலாம், ஆயினும், நல்லறங்களைச் செய்யாத அரசர்களுடன் கூடியிராது; அவர்களை விட்டு நீங்கிவிடும். அரச பரம்பரையில் பிறவாதவ ராயினும், தவம் புரிந்தவர்க்கு உரிமையாகி விடும். ஆதலால் அரச செல்வம் நிலையானது என்று மகிழ்ச்சி யடையாதீர்கள். உங்களிடத்தில் செல்வம் இருக்கும் போதே, யாசிக்கின்ற- பல நூல்களையும் கற்றறிந்த அந்தணர்களுக்கு, குளிர்ந்த கை நிறையும் படி மலரும், பொன்னும் நீருடன் தாரை வார்த்துக் கொடுங்கள்; பசுமையான பொன்னாபரணங்களை அணிந்த மகளிர் பொற்கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கின்ற பன்னாடை யால் வடிக்கட்டப்பட்ட மதுவை அருந்திக் களிப்படையுங்கள்; வறுமையால் வாடி வந்து இரப்போர்க்கு இல்லை யென்னாமல் சிறந்த பண்டங்களை வழங்குங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு நீங்கள் வாழ வேண்டும். இது அப்பாடலில் அடங்கியிருக்கும் அறிவுரை. நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா; வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்பார்க்கு ஈர்ங்கை. நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாநதி மகிழ்சிறந்து, இரவலர்க்கு அருட்கலம் அருகாது வீசி. வாழ்தல் வேண்டும் இவன் வரைந்த வைகல். இதுவே மேலே காட்டிய பொருளை விளக்கும் பாடல் பகுதி. இப்பாடல் வாயிலாக அவ்வையார், மூன்று விஷயங்களை மூவேந்தர்களுக்கும் அறிவுறுத்தினார் அவை:- நல்ல நூல்களையெல்லாம் கற்றறிந்து, உண்மையறிந்து, உலகினர்க்கு வாழ வழிகாட்டும் அறிஞர்களாகிய பார்ப்பார் களை ஆதரியுங்கள். நீங்கள் வீணாகப் போர் புரிந்து காலங் கழிக் காமல், சமாதானத்துடன் இருந்து உண்டுத் தின்றுக் குடித்து மகி ழுங்கள். வறுமையுள்ளோர் வாடாமல் அவர்களுக்கு உதவுங்கள். இவைகளே அவ்வையார் அரசர்களுக்கு எடுத்துக் கூறிய மூன்று செய்திகள். இப்பாடல் சிறந்த கருத்தும், கொள்கையும் கொண்டிருப்பதைக் காணலாம். இவை போலவே புறநானூற்றுப் பாடல்கள் பலவும் அமைந்திருக்கின்றன. திருக்குறள் அன்று முதல் இன்றுவரை, மத, இன, மொழி வெறுப் பின்றி எல்லோராலும் போற்றப்படும் திருக்குறளை எடுத்துக் கொள்ளுவோம், திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம் என்பதே பெரும்பாலார் கொள்கை, ஆதலால் அதை இலக்கியம் என்று வைத்துக் கொண்டே பார்ப்போம். அதில் கூறப்படும் அறங்கள் அனைத்தும். மக்கள் வாழ்வுக்கு வழி காட்டுவதற்காகத்தான் என்பதை மறுப்பவர் யார்? திருக்குறளிலே சிறந்த கருத்துக்களும் கொள்கைகளும் அடங்கிக் கிடக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. அரிய கருத்துக்கள் பலவற்றை அள்ளி அள்ளித் தருவ தனால் தான் திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற இலக்கிய மாக விளங்குகின்றது. திருக்குறளைப் பலரும் அறிவர், ஆதலால் அதிலிருந்து ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். ஆகு ஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகுஆறு அகலாக் கடை. பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும் பொருள் போகும் வழி அகலமாக இல்லாவிட்டால் அதனால் கெடுதி யில்லை இக்குறளிலே உள்ள கருத்து என்றும் அழியாமல் நிற்கும் உண்மையாகும். வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு மிகுதி யாக இல்லாவிட்டால்- அதாவது வருவாய்க்கு மேல் செலவாகா விட்டால் தீமை ஒன்றும் வந்து விடாது என்பது தான் இக் குறளின் கருத்து. வரவுக்கு மேல் செலவு செய்யக் கூடாது என்று கூறும் இக்குறள் அறிவுரை கூறும் குறள் என்பதை யார் மறுக்க முடியும்? இவ்வாறே திருக்குறள் சிறந்த கருத்துக்களையும், கொள்கைகளையும் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளு வோம். செந்தமிழ்ச் சிலப்பதிகாரம் சில கொள்கைகளை வலியுத் துவதற்காகவே தோன்றியது. அது நடந்த வரலாறா? கற்பனைக் கதையா? என்ற ஆராய்ச்சியைத் தள்ளி வைப்போம். அந்நூல் எழுதியதன் நோக்கத்தை மட்டும் காண்போம். சிலப்பதிகாரத்தில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன; பல அறிவுரைகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் முதன்மையாக. மூன்று கருத்துக்களை வலியுறுத்தவே அந்நூலை எழுதியதாகக் கூறப்படுகிறது. அரசியலில் தவறு செய்த ஆட்சியாளர் தப்பித்துக் கொள்ள முடியாது; அறமே எமனாகத் தோன்றி அவரை அழிக் கும்; என்பது ஒன்று. புகழ் பெற்ற பத்தினிப் பெண்டிரின் பெருமையை வான மக்களும் போற்றிக் கொண்டாடுவார்கள் என்பது இரண்டு. பழவினையை மீறமுடியாது; இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. பழவினை யென்னும் ஊழ்வினையானது முன்வந்து அதன்பயனை ஊட்டியே தீரும்; என்பது மூன்று. இந்த மூன்று கருத்துக்களையும் வலியுறுத்தவே, சிலம்பு காரணமாக விளைந்த கதையைச் சிலப்பதிகாரம் என்ற பெயரு டன் எழுதப்பட்டது. இந்த உண்மையைச் சிலப்பதிகாரப் பதிகத் திலேயே காணலாம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளே பாடியதாக அமைந்திருக்கும் பதிகத்தில் உள்ள அடிகள் இவை. ஆகவே, சிலப்பதிகாரம் சில கொள்கைகளை கருத்துக் களை மக்களிடம் பரப்பத் தோன்றிய நூல்- இலக்கியம் என்பதை மறுக்க முடியாது. மணிமேகலை மணிமேகலை என்னும் இலக்கியம் சிலப்பதிகாரத்தோடு கதைத் தொடர்புள்ளது; சிலம்பு பிறந்த காலத்திலேயே பிறந்தது. அதைப் படிப்போர் அது வலியுறுத்தும் கொள்கைகளைக் காண் பார்கள். புத்த தர்மத்தைப் போதிப்பதே மணிமேகலையின் நோக்கம்; எல்லா மதங்களையும் விட புத்த தர்மமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்டுவதே அதன் கொள்கை. இதை மணி மேகலையில் ஆதிமுதல் அந்தம் வரையிலும் காணலாம். உலகில் உள்ள மக்கள் யாவரும் பட்டினி கிடத்தல் கூடாது; எல்லா மக்களும் உணவுண்டு இன்புற்று வாழ வேண்டும்; மக்கள் யாரும் பட்டினிச் சாவுக்குப் பலியாகாமல் பாதுகாக்கப் படவேண்டும். அறங்களிலே சிறந்தது பசியால் வாடுவோர்க்கு உணவளித்துப் பாதுகாப்பது தான் இக்கொள் கையை வலியுறுத்துகின்றது மணிமேகலை. அன்னதானம் என்னும் தர்மத்தின் பெருமையை விளக்கும் பல சிறுகதைகளும் மணிமேகலையில் காணப்படுகின்றன. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூற்றில் கூறப்படும் அடிகளை அப்படியே மணிமேகலை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதன் மூலம், மக்களுக்கு உணவளித்துக் காத்தலே உலகைச் சமாதானத்துடன் வாழவைக்கும் வழி என்று வலியுறுத்துகிறது மணிமேகலை. ஆகவே மணிமேகலையும், சிலப்பதிகாரத்தைப் போலக் கருத்துக் களையும், கொள்கைகளையும் அறிவுறுத்த எழுந்த இலக்கியந் தான் என்பதில் ஐயம் இல்லை. கம்ப ராமாயணம் இராமாயணத்தை எடுத்துக் கொள்ளுவோம், கம்பன் காவியத்தைக் காண்போம். அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது இராமயணத்தின் மூலக் கொள்கை. இவ்வுண்மையை வலியுறுத்தவே இராமாயணம் எழுந்தது. கம்பன் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது கருத்துக்களை வலியுறுத்திச் சொல்லுகின்றான்; கம்பன் கவிச் சக்கரவர்த்தி யென்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இல்லை, கம்ப ராமயணத்தைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் கூட கம்பன் ஒப்பற்ற கவிஞன் என்பதை மறுப்பதில்லை. கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லையாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை. திருடர்களே இல்லை; ஆகையால் யாரும் தங்கள் செல்வங் களைப் பூட்டிவைத்துப் பாதுகாப்பதும் இல்லை. பிச்சை ஏற்பவர் கள் யாரும் இல்லை; ஆதலால் இரப்போர்க்கு ஈவாறாம் இல்லை எல்லாரும் எல்லாம்பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை எல்லா மக்களும் எல்லாப் பெரிய செல்வங்களையும் பெற்றிருக் கின்றனர். ஆதலால் இல்லாத ஏழைகளும் இல்லை; செல்வம் படைத்த பணக்காரர்களும் இல்லை. இவை நகரப்படலத்தில் கம்பன் சொல்லியிருப்பவை. அயோத்தியைக் கம்பன் கண்ணால் கண்டதில்லை, கம்பன் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டின் எந்தப் பகுதியிலும் பொருளாதார சமத்துவம் இருந்ததில்லை. வர்க்க பேதமற்ற சமுதாயத்தில் தான் கொண்ட கருத்தை வலியுறுத்தவே இவ்வாறு கூறினான் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வற்ற சமுதாயம் தோன்றவேண்டும் என்பதே கம்பன் கருத்தாகும். கம்பனைப் படிப்போர், இவ்வாறே அவன் பல இடங்களில் தான் கருத்தை வலியுறுத்திக் செல்வதைக் காண்பார்கள். ஒரு சிறந்த கவிஞன் தன்மையும் இதுதான். பக்திப்பாடல்கள் தேவாரப் பாடல்களை எடுத்துக் கொண்டால் பக்தி மார்க் கத்தைப் பரப்புவதே அவற்றின் நோக்கம் என்பதைக் காணலாம். அறம் ஒன்றையே போதித்த புத்த சமணர்களின் போக்கை வெறுக்கும் பாடல்களையும், சிவ பெருமானைப் போற்றுவ தாலேயே எல்லா இன்பங்களையும் பெற முடியும் என்று வலியு றுத்தும் பாடல்களையும் தேவாரங்களிலே காணுகின்றோம். இலக்கியங்கள் என்று எண்ணப்படும் சைவ சமய நூல்கள் எல்லாம் சைவ சமயத்தைப் பரப்புவதையே குறிக்கோள்களாகக் கொண்டவை. தேவாரம், பெரிய புராணம் முதலியவைகளைப் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர். இலக்கியம் அன்றும் இன்றும் (2) நமது முன்னோர்கள் பெரும்பாலும் இலக்கியங்களைப் பாட்டுக்களாக எழுதி வந்ததற்கு மக்கள் மனத்தைக் கவரும் வாச கங்களிலே இலக்கியங்கள் அமையவேண்டும் என்பதும் ஒரு காரணமாகும். செய்யுளிலே இனிய ஓசைஉண்டு: பண்ணொடு பாடலாம். செம்பாகமாய செய்யுட்கள் படிக்கும்போதே- அல்லது பாடும்போதே- அல்லது பிறர் பாடுவதைக் கேட்கும் போதே நம் உள்ளத்தில் ஒட்டிக் கொள்ளும். முன்னோர்களின் உரைநடையில் கூடச் செய்யுள் வாடை வீசுவதைக் காணலாம். ஆதலால் இலக்கியத்திற்கு அதன் எழுத்து அமைப்பு- வசன அமைப்பு- இனிய நடை இன்றியமையாதது என்பதில் ஐயம் இல்லை. இலக்கியமும் நூலும் நூல் என்றால் இப்பொழுது புத்தகம் என்ற பொருளில் வழங்குகின்றோம். நிலநூல், வானநூல், உடல்நூல், உளநூல், மருத்துவ நூல், கணக்கு நூல், விஞ்ஞான நூல், அரசியல் நூல் என்று பொதுப் பொருளிலேயே இச்சொல் வழங்கி வருகின்றது. ஆயினும் இன்று இலக்கியம் என்ற சொல் எப்படிச் சிறப்புப் பொருள் கொண்டு வழங்குகின்றதோ அது போலவே நூல் என்ற சொல் பண்டைக் காலத்தில் சிறப்புப் பொருள் கொண்டு வழங்கி வந்திருக்கின்றது. இலக்கியம் என்ற சொல் முன்பு பொதுச் சொல்லாக வழங்கி வந்தது. இன்று சிறப்புச் சொல்லாக வழங்கி வருகின்றது. நூல் என்ற சொல்லோ முன்பு சிறப்புச் சொல்லாக - அதாவது இன்று இலக்கியம் என்ற சொல் எப் பொருளைக் குறிக்கின்றதோ அப்பொருளைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வந்தது; இன்று பொதுச் சொல்லாக- புத்தகம் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்கி வருகின்றது. இவை தான் இவ்விரண்டு சொற்களுக்கும் உள்ள வேற்றுமை. முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்ற பெயரால் அழைத்திருக்கின்றனர். நூல் என்றால் பல சிறந்த கருத்துக்கள் நிறைந்தவை; சுவையுள்ள கற்பனைகள் நிரம்பியவை; உள்ளத்தைக் கவரும் இனிய செய்யுட்களின் தொகுப்பு என்று கூறிவிடலாம். பண்டைக் காலத்தில் நூல் என்பது இந்தப் பொருளில் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தும்; இதில் தவறில்லை. உரைநடை இலக்கியங்களுக்கும் இக்கருத்துப் பொருத்தமானது தான். அறம் பொருள் இன்பங்களைக் கூறுவதே செய்யுள். இச் செய்யுட்களின் தொகுதியே நூல் என்று முன்னோர்கள் கூறினர்; கருதினர். செய்யுட்கள் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருள்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியவை. என்று தொல்காப்பிய ஆசிரியர் கூறியிருக்கின்றார். அவரும் தாமே இக் கருத்தைப் புதிதாக எடுத்துக்காட்டுவதாகச் சொல்லவில்லை, தமக்கு முன்னிருந்த அறிஞர்கள் கருத்து இது, அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்; என்றுதான் கூறியிருக்கின்றார். இதனை; அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப என்ற தொல்காப்பியச் செய்யுள் இயல் சூத்திரத்தால் காணலாம். இன்றுள்ள தமிழ் நூல்களிலே- அதாவது தமிழ் இலக்கண நூல்களிலே- பழம் பெரும் நூல் தொல்காப்பியம். அது முழு முதல் நூலும் ஆகும். ஆதலால் தொல்காப்பி யக் கருத்தை ஒரு வரலாற்று உண்மையாக வைத்துக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆகவே, நூல் என்றால் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் உரைப்பதே என்று அறியலாம். அறம் என்பது மக்களின் கடமைகளைப் பற்றிக்கூறுவது அவர்களுக்கு எத்தகைய பண்பு வேண்டும் என்பதைப் பற்றி வலியுறுத்துவது; அவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுவது; அவர்கள் இன்புற்று வாழ்வதற்கு வழி காட்டுவது இவை போன்றவைகள் எல்லாம் அறத்தில் அடங்கும். பொருள் என்பது செல்வத்தின் அவசியத்தைப் பற்றி உரைப்பது; அதைத் தேடும் வழி வகைகளைப் பற்றிக் கூறுவது; எந்த வழியிலே பொருள் ஈட்டவேண்டும்; எந்தெந்த வழியிலே வரும் பொருள் நன்மை அளிக்கும் என்பதை விளக்குவது. அறத்திற்கும் இன்பத்திற்கும் அடிப்படையானது பொருளாகும். ஆதலால் அதை ஈட்ட வேண்டிய முயற்சி மக்களுக்கு வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துவது, இவை போன்ற செய்தி களைப் பற்றிக் கூறுவதே பொருளாகும். இன்பம் என்பது உலக வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் தனித்த முறையில் அனுபவிக்கும் இன்பமாகும். இன்பத்திற்கு அடிப்படை அன்பு. அன்பு வளரும் இடம் இல்லறம். மனைவி, மக்கள் இவர்களே அன்பைத் தழைக்கச் செய்யும் பருவ மழைகள். இவர்களோடு கூடி இன்புறுவதைப் பற்றியும், இதே சமயத்தில் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டு இணைந்து வாழ வேண்டிய அவசியத்தைப் பற்றியும் கூறுவதே இன்பமாகும். மனித வாழ்க்கையைக் கூட்டுறவு வாழ்க்கையாக மாற்றியது இன்ப உணர்ச்சியும் அதன் அடிப்படையான அன்புந்தான். இல்லறத்திலே வாழ்கின்றவர்கள் தங்கள் சொந்த வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதால் பயன் இல்லை; அது மனிதப் பண்புள்ள வாழ்க்கையும் அன்று; அவர்கள் விருந்தோம்பல், வறியோரைக் காத்தல், பிறருக்கு உதவுதல், நாட்டின் நன்மைக்கான பொதுக் காரியங்களுக்கு உதவுதல் போன்ற அறங்கள் இல்லறத்தார்க்குக் கடமைகளாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இக் கடமைகள் எல்லாம், மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்வதற்குக் காட்டும் வழிகளாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்று தலைப்பின் கீழ் மனித வாழ்வைப் பற்றிய எல்லா விஷயங்களையும், மனித வாழ்வுக்குத் தேவை யான எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூறிவிட முடியும். ஆதலால் தான் அறம், பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறுவதே செய்யுள் என்று கூறினர், அச் செய்யுட்களின் தொகுப்பே இலக்கியம்- நூல் என்று கொண்டனர். இதுதான் இன்று நாம் விரும்பும் இலக்கியம் பற்றி முன்னோர்கள் கொண்டிருந்த முடிவாகும், பிற்காலத்தில் மனிதன் மறுவுலக வாழ்வைப் பற்றி அதிக மாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில்தான் வீடு என்ற பொருளும் அந்த மூன்றுடன் சேர்ந்தது. தெய்வ பக்தியும் மத நம்பிக்கையும் மத ஒழுக்கங்களும் வளர்ந்த காலத்தில் தான் அறம் பொருள் இன்பங்களுடன் வீட்டையும் சேர்த்தனர். அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூல் பயனே என்று கூறினர். நூல்களிலே- இலக்கியங்களிலே இந்த நான்கு பொருள்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று கூறினார்கள். தொல்காப்பியருக்கு முன்னே வாழ்ந்த நமது முன்னோர் கள் வீட்டைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் இவ்வுலக வாழ்வைப் பற்றித்தான் கவலைப்பட்டார் கள். இவ்வுலகம் இன்புற்று வாழ்வதற்கான காரியங்களைத் தான் முதன்மையானவை என்று எண்ணினார்கள். இறந்தபின் அடையும் உலகம் ஒன்று உண்டு என்று நம்பிய காலத்தில் கூட- இதைப்பற்றி மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்ட காலத்தில்கூட - அவர்கள் வீட்டுலகைப் பெறுவதில் அவ்வளவு அதிகமாகக் கவலை காட்டவில்லை. இவ்வுலகிலே மக்கள் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் போதும், அதுவே வீட்டு வாழ்க்கை; மோட்சம்; இன்பவாழ்வு; என்று நினைத்தார்கள். செத்தபின் அடையக் கூடும் என்று எண்ணுகின்ற சிவலோக- வைகுந்த வாழ்வைப் பற்றி அவர்கள் சிந்தித்தார்களா? என்பது ஆராய்ச்சிக் குரிய செய்தியாகும். இவ்வுலகத்தில் துன்பம் இல்லாமல் நன்றாக- மகிழ்ச்சியுடன்- கவலையில்லாமல் விரும்பும் தேவை களையெல்லாம் பெற்று வாழ வேண்டும் என்பதே பழந்தமிழர் குறிக்கோள்; எண்ணம். ஆதலால் அவர்கள் பாடல்களிலோ, நூல்களிலோ வீட்டைப் பற்றி- மோட்சத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. திருவள்ளுவரும் இதைத்தான் சொன்னார். முன்னோர் களைப் பின்பற்றி, அவர் வீட்டைப்பற்றிக் கூறவில்லை அறம், பொருள், இன்பங்களைப் பற்றியே திருக்குறளில் கூறிவைத்தார். பண்டைத் தமிழர் கருத்தைப் பெரும்பாலும் திரட்டித் தொகுத்துத்தரும் நூலே திருக்குறள், இவ்வுலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் தேவருலகில், இன்புற்று வாழும் தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுவான் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதே அவர் கருத்தைக் காட்டுவதாகும்; முன்னோர் கொள்கையையும் உணர்த்துவதாகும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறள், மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். இதனால் பிற்காலத்தினர்தான்- மதப்பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றிய பிறகுதான், நான்கு பயனும் அமைய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் அமைத்து நூல் களை இயற்ற வேண்டும்; இலக்கியங்களை ஆக்க வேண்டும் என்று பிற்காலத்தினர் இலக்கணம் வகுத்தனர். இந்த நான்கையும் பெறுவதே மனிதப் பிறப்பின் பயன் என்றும் கூறினர். முன்னோர்கள் அறம், பொருள், இன்பங்களைப் பற்றி எழுதப்படுவனவே நூல்கள்- இலக்கியங்கள் என்று கூறினர். இவ்வாறு எழுதப்படுகின்றவைகளை யெல்லாம் நூல்கள்- இலக்கியங்கள்- என்று கொண்டனர். பின்னாளில்தான் வீட்டைப் பற்றியும் நூல்களில் பேச வேண்டும் என்று உரைத்தனர். முன்னோர் கருத்தையும் பின்னோர் கருத்துக்களையும், ஒன்றாக வைத்து எண்ணிப் பார்த்தால் இருவர் கருத்தும் ஏறக் குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். முன்னோர்கள், நூல் என்று கூறுவதும், பின்னோர்கள் இலக்கியம் என்பதைப் பொதுப் பெயராகக் கொள்ளாமல் ஒருவகை நூலுக்கு மட்டும் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும் ஒத்த கருத்துடையன என்பதை அறியலாம். உரைநடையும் கவிதையும் இலக்கியங்கள் உரைநடையில் எழுதப்படவேண்டுமா? கவிதைகளில் எழுதப்பட வேண்டுமா? என்று கேட்போரும் உண்டு. கவிதை வடிவில் எழுதப்பட்டிருப்பதைத்தான் இலக்கியம் என்று நினைத்திருந்தவர்கள் உண்டு; இப்படி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கின்றனர். கவிதைகளாகக் காட்சியளிப்பவைகள் தாம் இலக்கியங் கள், ஏனையவைகள் இலக்கியங்கள் அல்ல என்று எண்ணுகின் றவர்கள் பழமை விரும்பிகள்; உலகப்போக்கை அறியாதவர்கள்; இலக்கியம், மக்கள் வாழ்வுக்குத் துணை செய்ய வேண்டும் என்ற கருத்தில்லாதவர்கள் அவர்கள். கவிதையில் எழுதிய காரணம் பழைய இலக்கியங்கள் எல்லாம் கவிதை வடிவில் எழுதப் பட்டிருக்கின்றன; ஆதலால் நாமும் இலக்கியங்களைக் கவிதை வடிவில்தான் எழுதவேண்டும் என்று சொல்லுவது நிலைத்து நிற்க முடியாத வறட்டுவாதம். பண்டைக்காலத்தில் கவிதை வடிவில் இலக்கியங்களை எழுதியதற்குக் காரணம் இருந்தது. ஒருவர் முதலில் சொல்ல, மற்றவர்கள் அதையே திருப்பிச் சொல்லி, நூல்களை மனத்தில் ஏற்றிக் கொண்டனர். இவ்வாறு நூல்களை மனப்பாடம் செய்யும் முறைதான் பண்டைக்காலத் தில் இருந்தது; இதற்காகவே செய்யுள் வடிவிலேயே, எல்லா நூல்களையும் எழுதினர். வைத்தியம், சோதிடம், கணிதம் போன்ற செய்திகளையும் மனப்பாடம் பண்ணிக்கொள்வதற்காகத்தான் பாடல்களாக எழுதிவைத்தனர். அன்றியும் இப்பொழுது இருப்பதுபோல் குறைந்த காலத்தில் ஏராளமாகப் புத்தகங்களை வெளியிடும் வசதி அக்காலத்தில் இல்லை. பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதி வந்த காலம் பண்டைக்காலம். ஆதலால், விரிவான பொருளைச் சுருக்கமாகச் சொல்லுவதற்காகச் செய்யுளில் நூல்கள் எழுதும் வழக்கத்தைக் கையாண்டனர். உரைநடையில் எழுதுவதைவிடச் செய்யுள் நடையில், சுருக்கமாக, விரிந்த பொருளைத் தெரிவிக்க முடியும். எவ்வளவு விரிவாக எழுதினாலும், வெளியிடுவதற்கான வசதியுள்ள இக்காலத்திலும் செய்யுளில்தான் எழுதவேண்டும் என்று பிடிவாதம் செய்வது பொருந்தாது. உரைநடையும் உண்டு பண்டைக்காலத்தினர் உரைநடையை ஒதுக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. செய்யுளும் உரை நடையும் கலந்து நூல்கள் எழுதிவந்தனர். தகடூர் யாத்திரை என்னும் நூலும், பெருந்தேவனார் பாரதமும், சிலப்பதிகாரமும் இவ்வாறு எழுதப்பட்டவை. இவற்றுள் தகடூர் யாத்திரை நமக்குக் கிடைக்கவில்லை. பாரதத்தில் ஒரு பகுதி கிடைத்திருக் கின்றது; சிலப்பதிகாரம் முழுவதும் கிடைத்திருப்பது நமது பாக்கியமாகும். அன்றியும் செய்யுளுக்கு உரையெழுதும் வழக்கத்தையும் முன்னோர்கள் பின்பற்றினர். எப்படி எப்படி உரை எழுத வேண் டும் என்பதைப் பற்றித் தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றது. வசனத்தில்தான் உரை எழுதிவந்தனர். ஆதலால் உரைநடை எழுதும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்தது என்பதில் ஐயம் இல்லை. செய்யுளுக்கு உரை எழுதுவதும், வசனமும் செய்யுளும் கலந்து நூல் எழுதுவதும், பொதுமக்கள் நன்மைக்காகத்தான்; படிப்போர்க்கு விஷயத்தை விளங்க வைப்பதற்காகத்தான். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வசன வடிவில் இலக்கியங்கள் செய்வதை மறுக்கமாட்டார்கள். பாட்டைப் படித்து, அதற்கு உரையைப் படித்துப் பொரு ளைத் தெரிந்துகொள்ளுவதை விட, எளிய இனிய உரைநடை யின்மூலம் விஷயங்களைத் தெரிந்துகொள்ளுவதனால் படிக்கும் காலம் எவ்வளவோ மீதமாகும். நமது நாட்டு மக்கள் எல்லோரும், அரிய பெரிய விஷயங் களை எளிதிலே தெரிந்துகொள்ள வேண்டுமானால் உரைநடை நூல்கள் தாம் மிகுதியாக வெளிவரவேண்டும்; உரைநடையில் வெளிவரும் நூல்களைத் தான் ஏராளமான மக்கள் படிக்க முடியும். மக்களின் நன்மைக்காக நூல்கள் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள் உரைநடையிலே நூல்கள் எழுதும் பணியை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை நிலையைச் சித்திரிப்பதும், வாழ்வதற்கு வழி காட்டுவதுமாகிய நூல்கள் உரைநடையில் ஏராளமாகத் தேவை யாகும். இந்த நூல்கள் மக்கள் கருத்தைக் கவரும் வகையிலே, சலிப்படையாமல் படிக்கும் வகையிலே, இலக்கியங்களாக நிலைத்துநிற்கும் வகையிலே எழுதப்படவேண்டும். இவைகள் நவீனங்களாக-அதாவது பெருங்கதைகளாக இருக்கலாம்; சிறுகதைகளாக இருக்கலாம்; நாடகங்களாக இருக்கலாம்; கட்டுரைகளாக இருக்கலாம். எழுத்தாளர்கள் இந்த முறையிலே தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும். கவிதை இலக்கியங்கள் இச்சமயத்தில் மற்றொரு உண்மையையும் நாம் மறந்து விடக்கூடாது. கவிதையில் இலக்கியங்களை எழுதுவது பழைய பாணிதான்; ஆனாலும் கவிதை இலக்கியங்களைக் கைவிட்டு விட முடியாது; புதிய கவிதை இலக்கியங்கள் தோன்றுவதற்குத் தடை போடக்கூடாது; தடைபோட்டாலும் பயன்படாது. உரைநடையை விட, உள்ளத்தைத் தொட்டுப் பழகும் தன்மை கவிதையிடம் அதிகமாக உண்டு. உரைநடையை அப்படியே யாரும் உள்ளத்தில் வைத்துக்கொள்ளுவதில்லை. படித்த உரைநடையின் கருத்தைத்தான் பெரும்பாலானவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுவார்கள். உரைநடையை மனப் பாடம் பண்ணும் பழக்கமும் இல்லை; செய்யுள் தன்மை பொருந் திய சிறந்த உரைநடைகள்தாம், படிப்போர் மனத்தில் அப்படியே பதியும். ஆதலால் எப்பொழுதும் மறக்காமல் மனத்திலே படிந் திருக்கவேண்டிய சிலவற்றை- அதாவது தேசப்பற்று, அறநெறி, கடவுள் வணக்கம் போன்றவைகள்- கவிதை வடிவிலே எழுதப் படவேண்டியது அவசியமானதாகும். கவிதைகள் என்றால் பழைய சங்க நூல் கவிதைகளைப் போல எழுதிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. மக்கள் விரும் பும்படியான கவிதைகளை எழுதவேண்டும்; பழைய ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், கலித்துறைகளிலே காவியம் செய்வதை நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதான்; இப்பாடல்களில் இருக்கும் இலக்கியங்களே போதுமானவை. புதுமுறைப் பாடல்கள் தாம் மக்கள் மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை. நமது முன்னோர்கள் நமக்குப் புது முறை யிலே கவிகள் எழுதக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். சித்தர் பாடல்களிலே புதிய பாணியான கவிதைகளைக் காணலாம்; குற வஞ்சி நூல்கள், பள்ளு என்னும் கவிதைகள் புதிய பாடல்களுக்கு வழிகாட்டின. பாரதியார் புதிய கவிதைகளை இன்பத்தேன் சொட்டும்படி எழுதிக் காட்டியிருக்கின்றார். காவியங்களைக் கூடப் புதிய கவிதைகளில் எழுதவேண்டும் என்பதற்கு அவருடைய பாஞ்சாலி சபதமே உதாரணமாகும். தேசிங்கு ராஜன் கதை, கட்டபொம்மன் பாடல், காத்தவ ராயன்கதை, அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணி ஏற்றம், பஞ்சபாண்டவர் வனவாசம், நல்ல தங்காள் கதை போன்ற பல கதைகள் பாமர மக்களுக்கும் புரியும்படியான எளிய கவிதை வடிவில் எழுதப்பட்டவைகள். செய்யுள் இலக்கணச் சிறையிலிருந்து விடுதலை பெற்று விளங்கும் பாட்டுக்கள் இவை. இந்தப் பாடல்களை இன்றும் கூடப் பொதுமக்கள் விரும்பிப் படிப்பதையும், ஒருவர் படிக்கப் பலர் கேட்பதையும் காண்கிறோம். இப்பாடல்களைப் புலவர்கள் அவ்வளவாகப் போற்றுவ தில்லை; பாராட்டுவதில்லை; இலக்கியங்கள் என்று ஒப்புக் கொள்ளுவதில்லை; புகழேந்திப் புலவரால் எழுதப்பட்டவை என்று வழங்கப்படும் இந்த நூல்கள் படிப்பற்றவர்களையும், உட் கார்ந்து கேட்கும்படி செய்யும் சக்தி பெற்றிருக்கின்றன; இதை மறுப்போர் இல்லை. ஆதலால் கவிதை இலக்கியங்கள், என்றும் பிறந்து கொண்டுதான் இருக்கும்; பழைய செய்யுள் இலக்கணச் சிறைக் குள்ளே கவிதைகளை அடைத்துவிட எண்ணுவது தவறாகும்; எண்ணினாலும் நடக்காத காரியம். செய்யுள் இலக்கணங்களை நன்றாக அறிந்த பழம் புலவர்களே புதிய கவிதைகளை எழுதி யிருக்கின்றார்கள்; எந்தப் பாணியில் எழுதினால் மக்கள் சுவைத்துப் படிப்பார்கள் என்று எண்ணிப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதிய முறையில் கவிதைகளை எழுதிவிட்டார்கள். ஆதலால் இனிப் புதிய கவிதைகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதான் போகும். இன்று எவ்வளவோ பேர் கவிஞர் பட்டம் சூட்டிக் கொண் டிருப்பதைப் பார்க்கின்றோம். கவிஞர்கள் கூட்டம் பெருகுவதை வரவேற்க வேண்டியதுதான்; சில நல்ல கவிஞர்கள் இல்லாமல் இல்லை; அவர்களுடைய பாடல்கள் மக்களுக்குப் பயன்பட்டுத் தான் வருகின்றன. பத்திரிகைகளிலோ, புத்தக உருவிலோ வெளிவரும் நல்ல கவிதைகளை மக்கள் பாராட்டத்தான் செய்கி றார்கள். இத்தகைய கவிதைகள் வளர்ந்து வருவது இலக்கிய வளர்ச்சி என்பதில் ஐயம் இல்லை. பயனற்ற கவிதைகள் பலருக்குக் கவி எழுதவேண்டும் என்ற ஆசையுண்டு. சிறு கதை எழுதுவதிலே ஆசையுள்ள பலர், யாரோ ஒரு மங்கை ஒய்யாரமாக நடந்து போனாள். வாலிபன் ஒருவன் அவள் பக்கத் தில் செல்லும்போது, வாழைப்பழத்தோல் வழுக்கிவிட்டது; அதனால் அவன் அவளுடைய காலடியிலே தொப்பென்று விழுந்துவிட்டான்; அவளும் கால் தடுமாறி அவன்மேல் வீழ்ந்து விட்டாள்; அதைப் பார்த்த பலர் கைகொட்டிச் சிரித்து விட்டார்கள்; இந்த நிகழ்ச்சியின் மத்தியிலே அவர்களுக்குள் காதல் முளைத்துவிட்டது என்று கதை எழுதிப் பத்திரிகை களுக்கு அனுப்பிவிடுகின்றனர். இக்கதையை வெளியிடாத பத்திரிகாசிரியர்களைப் பற்றிக் குறை சொல்லித் திரிகின்றனர். இப்பொழுது கவிஞர்களிலும் இந்த ரகத்தினர் பெருகி வருகின்றனர். எதையோ நினைத்துக்கொண்டு, எப்படி எப்படியோ சொற்களைக் கோத்துக் கவிதைகள் என்று எழுதிவிடுகின்றனர். இத்தகைய எழுத்து அலங்கோலங்கள் கவிதை என்ற பெயரில் பத்திரிகைகளில் கூட வெளிவந்துவிடுகின்றன. இவர்களை நாம் குறைகூறவில்லை. கவிகளில் இவர்களுக்குள்ள ஆசையைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தாம் எழுதுகின்றவைகள் பொதுமக்களுக்குப் பயன்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்; கவனித்து எழுதுவார்களானால் இவர்களிலேயும் உண்மைக் கவிஞர்கள் உருவாகக் கூடும் என்பதில் ஐயமில்லை. கவிதை வளர்ச்சி ஆகவே, வசன இலக்கியங்கள் வளரவேண்டிய அவசி யத்தைப் போலவே கவிதை இலக்கியங்களும் வளரத்தான் வேண்டும் என்பதுதான் நமது கருத்து. வசன இலக்கியங்களை விட, சிறந்த கவிதை இலக்கியங்களுக்குச் சிரஞ்சீவித் தன்மை யுண்டு. ஆதலால், பலதிறப்பட்ட கவிதை இலக்கியங்கள் வளர வேண்டும்; கவிதை இலக்கியங்களை வளர்க்க வேண்டும். சிறுவர்களுக்கான கவிதைகள், தொழிலாளர்களுக்கான கவிதைகள், நீதியையும், நேர்மையும் வலியுறுத்தும் கவிதைகள், பொதுப்பணி செய்வதற்கு ஊக்கமளிக்கும் கவிதைகள்- இவை கள் எல்லாம் எளிய நடையில் புதிய பாணியில் பிறக்க வேண்டும். சிறந்த இலக்கிய வரிசையிலே வைத்து எண்ணப்படத்தக்க முறையில் எழுதப்பட்டால் அவற்றால் நாட்டுக்குப் பெரும்பயன் உண்டு. பாரதியாரின் இலக்கியங்களிலே, வசன இலக்கியங்களை விடக் கவிதை இலக்கியங்கள் தான் தலைசிறந்து நிற்கின்றன. வசன இலக்கியங்களைவிடக் கவிதைகளைத்தான் பொதுமக்கள் விரும்பிப் படிக்கின்றார்கள்; மனப்பாடம் பண்ணுகிறார்கள்; பாடுகிறார்கள். இந்த உண்மையை நாம் கண்கூடாகக் காணுகின் றோம். வசன இலக்கியங்களைவிடக் கவிதை இலக்கியங்களுக்கு மக்கள் உள்ளத்தைப் பிணிக்கும் ஆற்றல் அதிகம் என்பதற்கே இதைக் கூறுகின்றோம். பழங்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, இலக்கியத்தில் கவிதைக்குத் தலைமையிடம் உண்டு என்பதை எவரும் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும். ஆதலால் காலத்தை ஒட்டிக் கவிதை இலக்கியங்களும் தோன்றத்தான் வேண்டும். ஆனால் இன்றைய நிலையில், கவிதைகளை விட வசன இலக்கியங்கள் தாம் பொதுமக்களுக்கு மிகுதியான பயனைத் தருவன என்பதை மறந்துவிட முடியாது. கவிதை இலக்கியங்களில் காலம் போக்கு கின்றவர்களைவிட, வசன இலக்கியங்களை நல்ல முறையிலே எழுதிக் கொடுப்பவர்களே, தமிழுக்கும், தமிழர்க்கும் பெரும் பணிபுரிகின்றவர்கள் ஆவார்கள். பாரதி கவிதைகள் நமது காலத்துக் கவிஞர்களிலே தலைசிறந்தவர் பாரதி யார். இவர் போன்ற ஒரு கவிஞர் இனிப் பிறக்க முடியுமா? என்பதுகூடச் சந்தேகம்தான். பொதுமக்களின் நல்வாழ்வையும், நாட்டின் சுதந்திரத்தையும் உயிராகக் கொண்ட கவிஞர்களிலே, மக்களுக்காகப் பாடிய- மக்களுக்காகப் போராடிய- கவிஞர் களிலே பாரதியாருக்கு இணை பாரதியார்தான். இவர் கதைகள் கட்டுரைகள், பாடல்கள் எல்லாம் எழுதி யிருக்கின்றார். இவருடைய எழுத்துக்களிலே தலைசிறந்து நிற்பன கவிதைகள்தான். பாரதியாரின் கவிதைகளை இலக்கிய வரிசைகளில் சேர்க்கலாமா? கூடாதா? என்ற விவாதம் இனிப் புறப்பட முடியாது. பாரதியார் பாடலை அலட்சியமாக எண்ணி வந்த பழம்புலவர்கள் சிலருண்டு. அவர்கள் கூட இன்று பாரதி யாரின் பாடலை பாராட்டாமல் விட முடியவில்லை. எல் லோருமே பாரதியார் பாடல்களை இலக்கியந்தான் என்று ஒப்புக் கொள்ளுகின்றனர். பாரதியார் பாடலைப்பற்றிய ஒட்டு மொத்தமான கருத்து இது. பாரதியார் பாடல்களை இலக்கியம் அல்ல என்று ஒருவரும் சொல்லிவிட முடியாது. பாரதியார் பாடல்களிலே கருத்துக்கள் நிறைந்திருக் கின்றன; அறவுரைகள் நிறைந்திருக்கின்றன. மண்பயன் உற வேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது பாரதியின் நோக்கம். இந் நோக்கத்தை அவர் இறுதி வரையிலும் மறந்துவிடவில்லை. இந்த உலகத்தை புராணங்களில் கூறப்படும் வானுலகத்தைப் போல ஆக்க வேண்டும்; எல்லா மக்களும் இன்புறச் செய்யவேண்டும் என்பதே பாரதியாரின் கருத்து. எல்லோரும் இவ்வுலகில் இன்புற்றிருக்கவேண்டுமானால் மக்களின் வறுமைப்பிணி ஒழியவேண்டும்; முதலில் நாடு விடு தலை பெறவேண்டும்; மக்கள் அரசு வேண்டும்; அதற்காக மக்கள் அனைவரும் தங்கள் சாதி மத பேதங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றுபட்டுப் போராட வேண்டும். போராடிச் சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டிலே கல்வி, கைத்தொழில் எல்லாவற்றையும் வளர்க்கவேண்டும். இழிந்த மனிதர், தாழ்ந்த மனிதர் என்ற நிலையில்லாமல் எல்லா மக்களும் ஒன்றே என்ற நிலைமை ஏற்படவேண்டும். இவை போன்ற கருத்துக்களை அவர் தமது பாடல்களிலே வலியுறுத்திப் பாடுகின்றார். வயிற்றுக்குச் சோறிட வேண்டும்- இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்தே- இந்தப் பாரை உயர்த்திடவேண்டும் என்று பாடுகின்றார். இவ்வாறு பொதுமக்களைப் நோக்கிப் பாட்டிலே பிரசங்கம் பண்ணுகிறார் என்று சொல்லுவதே பொருந்தும். தெய்வப் பாடல்களில் எல்லாம் அவர் உலக இன்பத்தை வேண்டித்தான் பாடுகின்றார். துன்பம் இயற்கை எனும் சொல்லை மறந்திடு வோம்; இன்பமே வேண்டிநிற் போம் யாவும் அவள்தரு வாள் என்று முத்துமாரியைக் குறித்துப் பாடுகிறார். இவ்வுலகம் துன்பமயம் என்று சொல்லும் வேதாந்திகள் உண்டு. அவர்கள் கூறும் சோம்பேறிப் பேச்சை மறந்துவிடுவோம்; உலகத்தில் இன்பம் உண்டு என்பதில் ஐயம் இல்லை; முயன்றால் இன்புறு வது உறுதி; ஆதலால் அதை வேண்டுவோம். இன்பங்கள் எல்லாவற்றையும் அவள் கொடுப்பாள் என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறார். பாரதியாரின் தெய்வங்களைக் குறித்த பாடல்கள் எல்லாம் உலக இன்பத்தை வேண்டுவதாகவே அமைந்திருக்கின்றன. பாரதியாருடைய பாப்பா பாட்டு பலருக்குத் தெரியும். அப் பாடல் முழுக்கமுழுக்க பிரசாரமாகவே அமைந் திருக்கின்றது. குழந்தைகளைப் பார்த்து நீங்கள் இன்னின்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று சொல்லுகிறது. அப்பாடல். இன்னின்ன காரியங்களைச் செய்யக் கூடாது என்றும் சொல்லுகிறது. பாதகம் செய்பவரைக் கண்டால்- நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற- எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே- அதைத் தொழுது படித்திடடி பாப்பா! செல்வம் நிறைந்த இந்துதானம்- அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா! இவை போன்றவை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடல்; செய்யவேண்டியவை இவை என்பதை வலியுறுத்தும் உரைகள். நீ ஓய்ந்திருக்கலாகாது பொய் சொல்லக் கூடாது புறஞ்சொல்லல் ஆகாது துன்பம் நெருங்கிவந்த போதும்- நாம் சோர்ந்துவிட லாகாது. என்பவை போன்றவைகள், தீமைகள் இவையென்பதைக் கூறுவன. பாலர்கள் இச்செயல்களைக் கைவிடவேண்டும் என்று சொல்வன. ஆகவே பாரதியார் பாடல்கள் எல்லாம் ஒரு பிரசாரக் களஞ்சியமாக அமைந்திருப்பதைக் காணலாம். சுதந்திரப் போராட்ட காலத்திலே பாரதியாரின் வந்தேமாதரம் என்ற பாடலும், அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலும் போராட்ட வீரர்களுக்கு ஆவேசத்தை ஊட்டி வந்ததைத் தமிழ்நாடு இன்னும் மறந்திருக்க முடியாது. இப் பாடல்களைப் பாடிக் கொண்டு தேசீயத் தொண்டர்கள் அணிவகுத்து ஏறு நடை போட்டுச் சென்ற காட்சியை மறவாத பல மக்கள் இன்னும் இருக்கின்றனர். பாஞ்சாலி சபதம், பள்ளுப் பாட்டு இவைகளையெல்லாம் எண்ணும்போது பாரதியார் பாடல்கள் குறிக்கோளை அடிப் படையாகக் கொண்டவை; பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை; சிறந்த இலட்சியங்களைக் கொண்டவை. இவ்வுண்மையை எவரும் மறுக்க முடியாது. இத்தகைய இலக்கிய மாகிய பாரதியார் கவிதைகள் என்றும் நிலைத்து நின்று சுவை யூட்டும் என்பதில் ஐயம் இல்லை. உரைநடை நூல்கள் உரைநடை நூல்களாகட்டும் -அதாவது வசன நூல்களா கட்டும் அவைகளும் குறிக்கோளைக் கொண்டிருந்தால் தான் சிறந்த இலக்கியங்களாகப் போற்றப்படும். அந்த உரைநடை நூல், கட்டுரைகளாக இருக்கலாம், பெருங்கதைகளாக இருக்கலாம், சிறு கதைகளாக இருக்கலாம். கருத்துச் செறிவுடன், கொள்கை அடிப்படையுடன், சுவையுடன் எழுதப்பட்டிருக்குமாயின் அவை களும் இலக்கிய வரிசையிலே நிற்கும்; என்றும் அழியாமல் இடம்பெற்று நிற்கும். வேதநாயகம்பிள்ளை அவர்களுடைய பிரதாப முதலியார் சரித்திரத்தை எடுத்துக்கொள்வோம். இதைப் பெருங்கதை என்றும் கூறலாம்; சிறுகதைத் தொகுதி என்றும் கூறலாம். இதில் உள்ள கதைகள் எல்லாம் கருத்துக்களை வலியுறுத்தவேதான் என்பதை அவைகளைப் படித்தவர்கள் அறிவார்கள். படித்த பெண்களால்தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும்; படித்த பெண்கள்தான் நற்பண்புள்ளவர்களாயிருப் பார்கள்; படித்த பெண்களாக இருந்தால் மாமியார் மருமகள் போராட்டம் இருக்காது- என்பதை ஞானாம்பாள் என்ற பாத்திரத்தின் மூலம் வலியுறுத்தப்படுகின்றது. பெண்கல்வி இன்றியமையாதது என்பதைப் பிரதாப முதலியார் சரித்திரம் பிரசாரம் செய்கின்றது. சமுதாயத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும்; மக்கள் பஞ்சம், பட்டினி, பசி, பிணி இல்லாமல் வாழ வகை செய்யவேண்டும்; குடிகள் நன்றாக வாழக்கூடிய முறையிலே நேர்மையான அரசியல் நடைபெறவேண்டும்; தாய் மொழியைப் புறக்கணிக்கக்கூடாது; தாய்மொழிக் கல்வி வேண்டும்; தமிழர் கள் தமிழ் இலக்கியங்களைப் போற்றிப் படிக்கவேண்டும்; நீதி மன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழில் நடைபெற வேண்டும்- இவைபோன்ற கருத்துக்களை எல்லாம் பிரதாப முதலியார் சரித்திரம் வெளியிடுகிறது. லஞ்சக் குற்றம் ஒழிக்கப்படவேண்டுமானால், லஞ்சம் வாங்குகிறவர்களுக்கு மட்டுந்தான் தண்டனை விதிக்கவேண்டும் என்பது வேதநாயகம் பிள்ளை அவர்களின் கருத்தாகும். லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை உண்டு என்ற சட்டம் இருக்கும் வரையிலும் லஞ்சக் குற்றத்தை ஒழிக்கவே முடியாது என்று கூறுகிறார். இங்கிலீஷ் துரைத்தனத்தாருடைய சட்டத்தில் லஞ்சம் வாங்குகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது போலவே, லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குகிறவர்களுக்குச் சர்வாநுகூலமான சட்டம் இதைவிட வேறு ஒன்று இருக்கக்கூடுமோ? திருடனு டைய இம்சைக்குப் பயந்து, அவர்களுக்குப் பொக்கிஷத்தின் திறவுகோலைக் கொடுப்பவர்கள்போல உத்தியோகதர்களு டைய நிர்ப்பந்தத்தினால் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார் களே தவிர, அவர்களுக்கு மனப்பூர்வமாய் லஞ்சம் கொடுக்கிற வர்கள் ஒருவரும் இல்லை. ( பிரதாப மு சரி. அத்தியாயம்-38.) வேதநாயகம் பிள்ளையின் இக் கருத்து சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியைத் தள்ளி வைத்துவிடுவோம். இது பிரசாரமா, அல்லவா என்பதுதான் நமது கேள்வி. பிரசாரந்தான் என்பதை எவரும் ஒத்துக்கொள்ளுவார்கள். இம் மாதிரி வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரத்தில் பலவிடங்களில் பல கருத்துக்களை - கொள்கைகளை - வெளியிட்டிருப்பதைக் காணலாம். கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எடுத்துக் கொண் டால் அதுவும் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே எழுதப்பட்டது என்பதில் ஐயம் இல்லை. இன்னும் ராஜம் அய்யர் அவர்கள் வேதநாயகம் பிள்ளை போல் பல கருத்துக்களை வலியுறுத்தவில்லை. சிறப்பாக இரண்டு அடிப்படையின்மீதே அவருடைய கமலாம்பாள் சரித்திரத்தை உருவாக்கியிருக்கின்றார். தெய்வ நம்பிக்கையால் எல்லாத் துன்பங்களும் விலகும். அதாவது, கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது ஒன்று; படிக்காத அகங்காரம்பிடித்த பெண்களால் குடும்பக் கலகமும் குடும்ப நாசமும் உண்டாகும் என்பது இரண்டு. இந்த இரண்டு அடிப்படையின் மீது அமைந்ததே கமலாம்பாள் சரித் திரம் என்பதை அதைப் படித்தவர்கள் அறிவார்கள். பொன்னம்மாள் என்ற பொறாமையும், முரட்டுத்தனமும் மூடத்தனமும் கொண்ட பெண்தான் கமலாம்பாள் சரித்திரத்தை நடத்துகின்றவளாக அமைந்திருக்கின்றாள். இதைக் கமலாம் பாள் சரித்திரம் என்று கூறுவதைவிடப் பொன்னம்மாள் பொறாமை- என்று சொன்னால்கூடப் பொருத்தமாக இருக்கும். ஆகவே இலக்கிய வரிசையில் சேர்த்து எண்ணப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் என்ற இரண்டு நவீனங்களும், கொள்கைகளையும், பிரசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட நூல்களாக அமைந்திருப்பதைக் காணுகின்றோம். மேலே கூறியவைகளைக் கொண்டு இக்காலத்து நூல் களும்- கவிதைகளாகட்டும், உரைநடைகளாகட்டும், கருத்துக் களையும் இலட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்ட நூல்களே சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன என்பதைக் கண்டறிந்தோம். பாட்டும் கூத்தும் பாட்டும் கூத்தும் உலகம் எங்கும் உண்டு. நாகரிகம் பெற்ற மக்களும் பாட்டாலும் கூத்தாலும் பரவசம் அடைகின்றனர். நாகரிகம் அடையாத மக்களும் இவற்றால் இன்பம் அடைகின் றனர். ஆகவே இவை இரண்டும் மக்கள் வாழ்விலே இயற்கையா கவே எழுந்து வளர்ந்தன என்பதில் ஐயம் இல்லை. பாட்டு, காதுக்கும், உள்ளத்திற்கும் மட்டும் இன்பந் தருவது; கூத்து- நடனம்- நாடகம்- கண்ணுக்கும், மனத்துக்கும் மகிழ்ச்சி தருவதாகும். பண்டைக் காலத்திலிருந்தே பாட்டும் கூத்தும் தமிழகத் திலே வளர்ந்து வந்திருக்கின்றன. பாட்டு இல்லாத இடம் இல்லையென்றே சொல்லி விடலாம். உழவுத் தொழிலுக்குப் பாட்டு உண்டு. ஏர்ப் பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப் பாட்டு, களவடிப் பாட்டு எனப் பலவகை யான பாட்டுக்களை உழவாளர்கள் உணர்வார்கள். வண்டியோட்டுவோர் பாட்டுப் பாடிக்கொண்டு வண்டி யோட்டுவார்கள். உலக்கை பிடித்துச் சுண்ணம் இடிக்கும் பெண்கள் பாட்டுப் பாடுவார்கள். உலக்கைப் பாட்டுக்கு வள்ளைப் பாட்டு என்பது பழந்தமிழ்ப் பெயர். போர்வீரர்கள் பாட்டுப் பாடுவார்கள். சமாதானக் கொண்டாட்டத்தில் பாட்டு உண்டு; கல்யாணத்தில் பாட்டு உண்டு; பலவித விளையாட்டுக்களுக்கும் பலவிதமான பாட்டுக் கள் உண்டு ஓடக்காரன், ஓடம்விடும்போது பாட்டுப் பாடுவான். செத்துப்போனால்கூட ஓப்பாரி என்னும் சங்கீதம் உண்டு. ஆகவே தமிழர்கள் வாழ்க்கைத் துறையில் பாட்டு என்பது நுழை யாத இடம் இல்லை. சுருங்கக் கூறினால் உழைப்பாளர்களும் பாட்டைத் துணை யாகக் கொண்டு உழைத்தனர்; உழைப்பின் வருத்தத்தை மறக்கப் பாட்டைப் பானமாக அருந்தினர். உழைப்பற்ற சோம்பேறி மக்க ளும், பொழுதுபோக்கப் பாட்டைத் துணையாகக் கொண்டனர். பாட்டைப் போலவே கூத்துக்களும் நடைபெற்றன. கூத்துக் களிலே கதை தழுவிய கூத்தும் உண்டு; கதை தழுவாத கூத்துக் களும் உண்டு. ஆனால் பண்டைக் காலத்துப் பாட்டும் கூத்தும், எல்லா மக்களுக்கும் எளிதாகக் கிடைத்துவந்தன. இந்தக் காலத்தில் இவைகளைப் பாமரமக்கள் அவ்வளவு எளிதில் பெற முடிவ தில்லை; இனாமாகவும் பெற முடிவதில்லை. காசு கொடுத்துத் தான் இவைகளை அனுபவிக்கவேண்டிய நிலையில் இருக் கின்றனர். பண்டைக் காலத்திலே பாட்டும் கூத்தும் பொது மக்களுக்கு இனாமாகக் கிடைத்தன என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு. அவைகளைச் சிறிது காண்போம். ஒரு மடமங்கை அவள் தனக்குப் பிடித்த ஆண்மகன் ஒரு வனுடன் கள்ளக் காதல் வாழ்வு நடத்திக் கொண்டிருக்கின்றாள். இச்செய்தி அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரியாது. அவளுடைய தோழிக்குக்கூட அரைகுறையாகத் தான் தெரியும். இச்சமயத்தில் ஒரு நாள், அவனை மணமகளாக வேண்டி அயலார் பரிசத்துடன் வந்தனர். அதை அறிந்தாள் அந்த மட மங்கை. உடனே தனது உண்மை நிலையைத் தன் தோழியிடம் சொல்லிவிட்டாள். தன்னுடைய காதலன் வேறொருவன்; ஆதலால் இப்பொழுது பரிசத்துடன் வந்திருப்பவர்க்குத் தான் உரியவள் அல்லள் என்ற உண்மையை வெளியிட்டாள். பெருமையும், என்னை மணக்கும் தகுதியும் உடையவன் என் காதலன்; அவனை, வீரர்கள் கூடி நடத்துகின்ற விழாவிலும் காணவில்லை; மகளிர் ஒருவரோடு ஒருவர் தழுவிக் கொண்டு ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறுகின்ற இடங்களிலும் காணவில்லை. நானும் துணங்கைக் கூத்தாடுகின்ற இடத்திலே சென்று துணங்கையாடுவதற்குரிய ஒருத்திதான். என் கையில் உள்ள சங்க வளையல்களைக் கழன்று விழும்படி செய்த அந்தப் பெருமையுள்ள தலைவனும் கூத்தாடும் இடத்திலே சுற்றித் திரி கின்ற ஒரு தான்! என்று கூறினாள் அந்த மடமங்கை. மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை; யானும் ஒர் ஆடுகள மகளே; என்கைக் கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே என்பதுதான் அப்பாடல். இது குறுந்தொகையின் 31-வது பாட்டு, இந்தப் பாடலிலிருந்து நாம் தெரிந்து கொள்வது கீழ் வருபவை; வீரர்கள் தங்கள் வெற்றியைத் தாம் வாழும் இடங்களில் கூடிக் கொண்டாடுவார்கள்; அக் கொண்டாட்டத்தில் பாட்டும் கூத்தும் நடைபெறும்; அதைப் பொதுமக்கள் பலரும் கண்டு களிப்பார்கள். மள்ளர் குழீ இய விழவினானும் என்ற வரி இவ் வுண்மையை உணர்த்துகின்றது. பெண்கள் பலர் கூடி ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு துணங்கைக் கூத்து என்னும் ஒருவகைக் கூத்தாடுவார்கள். இதனை மகளிர் தழீ இய துணங்கையானும் என்ற வரியால் காணலாம். பெண்ணைத் துணங்கைக் கூத்தாடும் இடத்திலே ஆடவர்களும் இருப்பார்கள். அவர்கள் தமக்கு விருப்பமான பெண்களுக்குக் கைகொடுப்பார்கள். இதனை யானும் ஓர் ஆடுகள மகளே, குரிசிலும் ஓர் ஆடுகள மகனே என்பவை களால் அறியலாம். பொதுவாக இப்பாடல், கூத்தும் பாட்டும் கண்டு கேட்டுப் பொழுதுபோக்கும் ஆடவர்கள் இருந்தனர் என்பதைக் குறித்தது. பலரும் கண்டு மகிழக்கூடிய கூத்துக்கள் பண்டைக் காலத் திலே நடைபெற்றன என்பதைத் திருக்குறளாலும் அறியலாம். கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்; போக்கும் அதுவிளிந்து அற்று. பெரிய செல்வம் வந்து சேர்தல் கூத்தாடும் இடத்தில் கூட்டம் கூடுவது போன்றதாகும். அச்செல்வம் அழிந்து போவதும் அக்கூட்டம் கலைவது போன்றதாகும். இத் திருக்குறளின் மூலம், பண்டைக் காலத்தில் பொது மக்கள் வந்து காணக்கூடிய கூத்து மேடைகள் இருந்தன; அம் மேடைகளில் நடைபெறும் கூத்தைக் காணப்பொது மக்கள் கூடுவார்கள்; கூத்து முடிந்ததும் கலைந்து போவார்கள் என்ற உண்மையை அறிகின்றோம். மேலே காட்டிய குறுந்தொகைப் பாட்டும், திருக்குறளும், பண்டைக் காலத்தில் கூத்து மேடைகள் இருந்தன; அவைகளைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர் என்ற உண்மையை உணர்த்தின. கூத்து மேடைகள் இருந்ததால், சங்கீதமும் அம் மேடைகளில் முழங்கின என்று சொல்லவேண்டியதில்லை. சமுதாயத்திலே உயர்வு தாழ்வு ஏற்பட்ட பிறகுதான்- அதாவது நிலப்பிரபுத்துவம் வலுப்பெற்ற பிறகுதான் பாட்டிலும் கூத்திலும் கூட உயர்வு தாழ்வு ஏற்பட்டன வென்று கூறலாம்; நிலப்பிரபுக்கள் பாமர மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றவர்களுடன் தாராளமாகப் பழகாமல் தனித்து வாழ்ந்தனர்; தங்களைப் போன்ற பெரிய மனிதர்களுடன் மட்டும் பழகத் தொடங்கினர். அக்காலத்தில்தான், உழைப்பாளர்களால் சுவைக்க முடியாத உயர்ந்த சங்கீதம் வளர்ச்சி யடைந்திருக்க வேண்டும். கூத்திலும் கூட அரசர்களுக்காடும் கூத்து, பொது மக்களுக்கு ஆடும் கூத்து என்ற இருவகைக் கூத்துக்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தோன்றிய காலத்தில் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வலுப்பெற்றிருந்தது. அக்காலத் தில்தான்- அல்லது அக்காலத்திற்குச் சற்று முன்பு தான்- இப் பிரிவுகள் தோன்றின, சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலுந் தான் வேத்தியல், பொதுவியல் என்று இரு வகைக் கூத்துக்கள் ஆடப்பட்டனவென்று கூறப்படுகின்றது. வேத்தியல் என்பது அரசர்க்கு ஆடும் கூத்து; பொதுவியல் என்பது எல்லார்க்கும் ஒப்ப ஆடும் கூத்தாகும். இப்பொழுது யார் வேண்டுமானாலும் பாட்டுப் பாட லாம்; இசைப்புலவராகலாம்; கூத்தராகலாம்; நடிகராகலாம். இசையும் கூத்தும் இன்னாருக்குத்தான் சொந்தம் என்பது இல்லை. இன்று பாட்டும், கூத்தும் தொழில்களைப் போல் வளர்ந்து வருகின்றன; இவைகளுக்காகப் பள்ளிக் கூடங்கள் ஏற்பட்டும் பெருகி வருகின்றன. ஆனால் பண்டைக் காலத்தில் பாட்டும் கூத்தும் ஒரு கூட்டத்திற்கே உரியதாக இருந்தன. இவைகளுக்கென்றே சமுதாயத்தில் ஒரு பிரிவினர் இருந்தனர். எப்படி, ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு குலத்தொழிலாக இருந்தனவோ அது போலவே பாட்டும் கூத்துங்கூட ஒரு குலத் தொழிலாக இருந்து வந்தன. பாட்டையும், கூத்தையும் தொழிலாகக் கொண்டவர் களுக்குப் பாணர், கூத்தர் என்று பெயர். இவர்களுக்கு இவை தாம் தொழில். இவர்கள் வீட்டுப் பெண்களும், இசையிலும் கூத்திலும் வல்லவர்களாயிருந்தனர். இவர்கள் வாய்ப்பாட்டி லும் வல்லவர்கள்; யாழ் முதலிய கருவிகளை இசைப்பதிலும் வல்லவர்கள். இவர்கள் நிலப்பிரபுக்களாலும், பெரிய மனிதர் களாலும் பாதுகாக்கப்பட்டு வந்தனர். பேரரசர்களும், சிற்றரசர் களாகிய நிலப்பிரபுக்களும் இவர்களுக்குப் பரிசளித்துப் பாது காத்து வந்தனர். இந்த உண்மையைப் பழந்தமிழ் நூல்களிலிருந்து அறிந்து கொள்ளலாம், பத்துப்பாட்டிலே பெரும்பாணாற்றுப்படை, சிறு பாணாற்றுப் படை என்று இரண்டு பாட்டுக்கள் உண்டு. அவை இரண்டும், பாணர்க்கு, வள்ளல் இருக்கும் இடத்திற்குப் போக வழி சொல்லுவதாகும். அப் பாடல்களால் பாணர்களின் வாழ்க்கை நிலையைக் காணலாம். இந்தப் பாணர் குலத்திலே முத்தமிழ்ப் புலவர்கள் பலர் உண்டு, பாட்டும் கூத்துமே இவர்களுடைய குலத்தொழில். இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். இத்தகையவர்களில் இயற்றமிழில் வல்லவர்களும் உண்டு என்பதில் வியப்பில்லை. பாட்டும், கூத்தும் ஒரு குலத்துக்குரிய தொழிலாக இருந்த காலத்தில் அக் கலைகளுக்கு மதிப்பிருந்தது உண்மை தான். ஆனால் அக் கலைஞர்கள் மனித சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்படவில்லை அவர்கள் தாழ்ந்த குலத்தினராகவே மதிக்கப்பட்டனர் அவர்கள் வாழ்விடமும் பாணர் சேரி என்ற தனியிடமாகவே இருந்தது என்று தான் தெரிகின்றது. சோம்பேறிகள்- சமுதாயத்தைச் சுரண்டுவோர்- உயர்வாக மதிக்கப்படுகின்றனர். சமுதாயம் வாழ்வதற்கான பணிகளைப் புரிவோர் தாழ்வாக மதிக்கப்படுகின்றனர். இதை இன்றும் காண் கின்றோம். இதுபோலவேதான், அக்காலத்தில் கலைஞர்கள் தாழ்வாகவும், அக் கலைகளை அனுபவிக்கும் பெரிய மனிதர்கள் உயர்வாகவும் மதிக்கப்பட்டனர் போலும்! கூத்தும் பாட்டும் குலத்தொழிலாக இல்லாமல் மாறிய பின் தான் நடிகர்க்கும் படகர்க்கும் மக்களிடையே மதிப்பேற் பட்டது என்பதில் ஐயம் இல்லை. பண்டைக் காலத்தைவிட இக்காலத்தில் கூத்தும் பாட்டும் பெருகியிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பண்டைக் காலத்தைப்போல் அவைகளை எல்லோரும் இலவசமாக அனுபவிக்க முடிகிறதா என்பது தான் கேள்வி. எங்கு பார்த்தாலும் ரேடியோ ஓலமிடுகிறது. அதை மக்கள் இலவசமாக அனுபவிக்கவில்லையா? என்று கேட்கலாம். ரேடியோவிலிருந்து அலறி வரும் பாட்டை, எத்தனை விவசாயி கள், எத்தனை தொழிலாளர்கள் கேட்டு அனுபவிக்கின்றார்கள்? என்ற கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியாது. ரேடியோ நிகழ்ச்சிகள் பெரும்பாலும் உயர்ந்த வர்க்கத்தினருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் தான் பொழுதுபோக்க உதவுகின்றன; மூன்றாந்தரத்தினர்க்கு அவ்வளவாகப் பயன்படவில்லை. இப்பொழுது கூத்து மேடைகள் குறைந்துவிட்டன; சினிமாக்கள்தான் பெருகியிருக்கின்றன. இதுவும் நகரங்களில் தான் மிகுதி. பாமர மக்களுக்குக் கூத்தால் ஏற்படும் அவ்வளவு பயன் சினிமாவினால் ஏற்பட்டுவிட முடியாது. கூத்து அருமையாகிவிட்டது; பாட்டு நுண்கலையாகி விட்டது. ஆகவே, பாட்டாளி மக்கள் இரண்டையும் இழந்து வருகின்றனர். நுண்கலை வளர வளரச் சோம்பேறிக் கூட்டந்தான் நாட்டிலே வளர முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். நுண்கலை பொதுமக்களுக்குப் புரியாது. பாட்டு வளரவேண்டும்; உழைக்கும் மக்களை உற்சாகப் படித்தக்கூடிய பாட்டுக்கள் எங்கும் முழங்க வேண்டும். கூத்துக்கள் வளர வேண்டும்; உழைப்பாளர்க்கு உணர்வும், அறிவும் ஊட்டக்கூடிய கூத்துக்கள் வளர வேண்டும். அப் பொழுதுதான் எல்லா மக்களும் இன்புற்று வாழ முடியும். பண்டைக் காலத்தைப்போல் எல்லோரும் கேட்டும், கண்டும் இன்புறும் பாட்டும் கூத்தும் பரவும் நாள் எந்நாள்? சிறுகதைகள் சிறுகதைகளை அலட்சியம் செய்துவந்த காலம் மலையேறி விட்டது. அவைகளும் இலக்கியச்சோலையிலே வளர்ந்து நிலை பெற்றுவருகின்றன.இலக்கியத் தன்மைகள் அமைந்த சிறு கதைகளை இலக்கியப் பட்டியலிலே சேர்த்துத்தான் ஆக வேண்டும். நாம் இருக்கும் இந்தக் காலத்தைச் சிறுகதைக் காலம் என்று கூறினால் பொருந்தாது என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். சிறுகதைகளைப் படிப்பதிலே மக்களுக்கு ஆர்வம் இருக் கிறது; எழுத்தாளர்களும் சிறுகதை எழுதுவதிலே ஆர்வம் காட்டுகின்றனர். இப்பொழுது பத்திரிகைகளில் வீசி அடித்துக் கொண்டிருக்கும் சிறுகதைத் தென்றல்தான் புதிய எழுத்தாளர் களை எழுதத் தூண்டுகின்றது என்று நிச்சயமாகச் சொல்லலாம். படிப்பதற்கும், எழுதுவதற்கும் சிறுகதைகள் உற்சாகம் ஊட்கின் றன என்பதில் ஐயம் இல்லை. சிறுகதை எழுதும் முறை முற்றிலும் நமக்குப் புதிது. மேல் நாட்டிலிருந்து- மேல்நாட்டு இலக்கியங்களிலிருந்து- இறக்குமதி செய்துகொள்ளப்பட்ட சரக்கு; மேல் நாட்டு மொழிப் பயிற்சிக் குப் பின்தான் சிறுகதைகள் எழுதக் கற்றுக் கொண்டோம் என்று கூறுகின்றனர். பன்மொழிப் புலவர்கள் பலரும் ஒருமன தாகக் கூறும் இந்த உண்மையை நாம் மறுக்க வில்லை. தனித் தனிச் சிறுகதைகள் எழுதும் முறை மேல்நாட்டு மொழிகளில் தான் முதலில் தோன்றியது என்பதில் தடையில்லை. ஒரு நிகழ்ச்சியை மட்டும் படிப்போர் உள்ளத்திலே பதியும் படி கூறுவதுதான் சிறுகதை என்று பொதுவாகக் கூறுகின்றனர், இம்மாதிரி எழுதப்படும் கதை ஒரே பக்கத்திலும் அமையலாம்; ஐம்பது பக்கங்களிலும் அமையலாம்; அவைகள் சிறுகதைகள் தாம். ஆனால் சிறுகதைகளுக்கும் லட்சியம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. பெருங்கதைக்கும் (நாவலுக்கும்) சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டைப் புதுமைப்பித்தன் தெளிவாக எடுத்துக் கூறி யிருக்கிறார், சிறுகதை வாழ்க்கையின் சாளரம் என்றால், நாவல் வாழ்க் கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. வாழ்க்கையின் சிக்கல்களை, அதன் உயர்வை, அதன் சிறுமைகளை உலாவும் பாத்திரங்களான மனிதக் கூட்டத்தின் சலனத்தில், அவற்றின் குணவிதாரத்துடன் சிருஷ்டிப்பதுதான் நாவல். நாவலுக்குக் கால எல்லை கிடையாது; சென்ற காலம் நிகழ் காலம் வருங் காலம் இவற்றின் நிகழ்ச்சியை மனோதர்மத்தால் சிருஷ்டியின் மேதை குன்றாமல் கற்பனை செய்வதுதான் நாவல். என்று நாவலைப்பற்றிக் கூறுகிறார். சிறுகதையைப் பற்றிக் கூறும்போது சிறுகதை வாழ்க்கையின் ஒரு பகுதியை, மற்ற வற்றின் கலப்பை மறந்து ஏன், விட்டு விட்டுக் கவனிக்கிறது என்று கூறுகின்றார். மேலும் கூறும்போது சிறுகதையின் லட்சி யத்தையும் எடுத்துக்காட்டுகின்றார். கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும்பொழுது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும்; ஆனால் அது தான் உண்மை. இவை புதுமைப்பித்தன் மொழிகள், இதிலிருந்து லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டதும், படித்தபின் அந்த லட்சியத்தைப் பற்றிச் சிந்திக்கச் செய்வதுமே சிறந்த சிறுகதைகள் என்பதை அறியலாம். புதுமைப்பித்தன் கதைகளிலே பல இத்தகைய லட்சி யத்தை அடிப்படையாகக்கொண்ட கதைகளாக இருப்பதைக் காண்கிறோம். துன்பக் கேணி, பொன்னகரம், மனித யந்திரம், மகா மசானம், மனக்குகை ஓவியங்கள் போன்ற கதைகள் படிக்கும் போதும் மனதைக் கவர்கின்றன; படித்தபின்னும் சிந்திக்கச் செய் கின்றன. இத்தகைய கதைகள் இலக்கிய உலகில் என்றும் நின்று நிலவக்கூடியனவே. லட்சியமும், இலக்கியச் சுவையும் பொருந்திய சிறுகதை கள் பல தமிழில் வெளிவந்திருக்கின்றன; வெளிவந்துகொண்டும் இருக்கின்றன. இன்னும் வெளிவரும், இவைகள் இலக்கிய வளர்ச் சியில் ஒரு பகுதியாக நின்று வளரும் என்பதில் ஐயம் இல்லை. முன்னோரும் சிறுகதைகளும் சிறுகதை கேட்கும் ஆர்வம், சிறுகதை எழுதும் ஆசை இவைகள் நமது நாட்டிலும் உண்டு என்பதே நமது கருத்து. மேல் நாட்டு முறை பற்றிய சிறுகதை அமைப்பும். நமது நாட்டுப் பண்டைச் சிறுகதை அமைப்பும் வெவ்வேறு என்பதில் ஐயம் இல்லை. மேல்நாட்டினர் சிறுகதையை ஒரு தனி இலக்கியத் துறை யாகவே வகுத்திருக்கின்றனர். நமது நாட்டில் அப்படியில்லை; பெருங்கதைளோடு சிறுகதைகளை இணைத்துக் கூறினர். கருத்தை விளக்குவதற்குச் சிறுகதைகளைக் கையாண்டனர். பாரதத்திலே பல சிறுகதைகள் உண்டு; இராமாயணத் திலே பல சிறுகதைகள் உண்டு; சிலப்பதிகாரம், மணிமேகலை களில் பல சிறுகதைகள் உள்ளன; பெரிய புராணம் பல சிறு கதைகளின் தொகுதிதான். எழுத்துருவில் இல்லாமல் வாய் மூலம் வழங்கும் சிறுகதைகள் தமிழ் நாட்டில் பல உண்டு. பஞ்ச தந்திரக் கதை, விக்கிரமாதித்தின் கதை போன்றவைகள் எல்லாம் சிறுகதைகளின் தொகுதிதான். ஆகவே சிறுகதை சொல்லுவதில், கேட்பதில் படிப்பதில் வெகுகாலமாகவே நமது நாட்டு மக்களிடம் ஆர்வம் உண்டு என்பதைக் காணலாம். ஆனால், இன்று சிறுகதை என்பது ஒரு இலக்கியமாக வளர்ந்து வருவதைப் போலப் பண்டைக்காலத்தில் அமைந் திருக்கவில்லை. வளரவில்லை என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்; சிறுகதை உணர்ச்சி- அதில் ஆசை நமக்கும் உண்டு என்ற உண்மையை மட்டும் மறுக்க முடியாது. இன்று தமிழகத்திலே எண்ணற்ற சிறுகதைகள் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றன. சிறுகதையைத் தாங்கி வராத பத்திரிக்கைகளே இல்லை. இதுவரையிலும் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளைக் கணக்கெடுப்பதே முடியாத வேலை, எத் தனையோ கதைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கலாம். இக்கதைகளிலே இலக்கியமாக நிலைத்து நிற்கக்கூடியவை எத்தனை என்பதை இனித்தான் கணக்கெடுக்க வேண்டும். தமிழ கத்தில் வெளிவந்திருக்கும் பெருங்கதைகளைக் கணக்கெடுத்து விட முடியும். ஆனால் அவைகளிலும் இலக்கிய வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவை எத்தனை என்பது முடிவு கட்டப் படவில்லை. இலக்கியத் தொகுப்பு வேண்டும் நமது நாட்டில் அதாவது தமிழகத்தில் இதுவரையில் புத்தக உருவில் வெளிவந்திருக்கும் சிறுகதைகள், பெருங்கதை கள் இவைகளை ஆராய வேண்டும். அவைகளில் இலக்கிய வரிசையில் இடம்பெறத்தக்கவை எவை என்பதை எழுத்தாளர்கள் முடிவு செய்யவேண்டும். இவ்வேலையைச் செய்வது எளிதல்ல தான். ஆயினும், துணிவுடன் இதைச் செய்வது தான், இலக்கியம் வளர்வதற்குத் துணைசெய்யும் என்பது நமது கருத்து, இலக்கியம் என்றால் கவிதை வடிவில் இருப்பதுதான் என்ற எண்ணம் இன்னும் பலர் உள்ளத்தில் இருக்கின்றது. பழமை யிலே ஊறிய சிலர், புதிய இலக்கியங்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை. உரைநடையில் எழுதப்பட்டிருப்பதில் என்ன இருக்கிறது? என்ன இருக்க முடியும்? என்று கூட நினைக் கின்றனர். இப்படி நினைப்போர் இப்பொழுது சிறுபான்மை யினர்தான். இப்படி நினைப்பவர்களிலும் தங்கள் நினைப்பை வெளிப்படையாகக் கூறுவோர் இன்னும் சிறுபான்மையினர் தான். இவை இவை இலக்கியமாக- நூல்களாக மதிக்கத் தகுந்த நவீனங்கள்; இவை இவை சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறுகதைகள்; இலட்சியத்தை அடிப்படையாக கொண்டவை; இலக்கியமாக எண்ணத் தகுதியுடையவை- என்று குறிப்பிடுவ தனால் நன்மை பல உண்டு. நான் சினிமாவே பார்ப்பதில்லை என்று சிலர் பெருமை யாகச் சொல்லிக் கொள்ளுவதுபோல், நான் நாவல்களைப் படிப்பதேயில்லை; கதைகளைப் படிப்பதேயில்லை என்று சொல்லிக்கொள்ளுகின்றவர்களும் இருக்கின்றனர். இலக்கியம் என்று சொல்லுகிறார்களே, அவற்றில் என்னதான் இருக்கிறது பார்ப்போம்! என்று இவர்களையும், அவைகள் படிக்கத் தூண்டும். அன்றியும், எழுத்தாளர்களும், நாம் எழுதுவனவும் இலக்கியப் பட்டியலில் சேரவேண்டும் என்னும் ஆசையுடன் சிறந்த கதைகளை எழுதுவார்கள். கருத்தில்லாமல் லட்சிய மில்லாமல் கன்னாபின்னாவென்று கதை எழுதும் பழக்கம் ஒழியும்; அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் கிள்ளி எடுத்து ஒட்ட வைத்துக் கதை கோக்கும் வழக்கமும் ஒழியும், கதைகளைக் காப்பியடிக்கும் வழக்கமும் ஒழியும், எழுத்தாளர்களின் சிந்தனா சக்தியையும். எழுதும் வன்மையையும் வளர்ப்பதற்கு, இலக்கிய வரிசையில் சேரக் கூடியவை இன்னின்னவை என்று மதிப் பிடுவது மிகவும் நன்மையாகும் என்பது உறுதி. மேலே கூறியவைகளைக் கொண்டு, இதுவரையிலும் எழுதிய கட்டுரைகளைக் கொண்டு, எவை எவை இலக்கியம் என்பதைக் கண்டோம். குறிக்கோளை உடையவை- கருத்துக் களைக் கொண்டவை - அவைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்ற கருத்துடன் எழுதப்பட்டவை- பல நிகழ்ச்சி களை எடுத்துக்காட்டி, அவற்றால் பல உண்மைகளை உணர்த்து கின்றவை இவைகள் எல்லாம் இலக்கியம். இவைகள் கவிதை உருவில் இருக்கலாம்; உரை நடையில் இருக்கலாம்; நாவல்களாக இருக்கலாம்; சிறுகதைகளாக இருக்கலாம். அவைகள் நல்ல முறையில் எழுதப்பட்டிருக்குமாயின் இலக்கியமாகும். இவைகளே இதுவரையிலும் எழுதிய கட்டுரைகளில் உள்ளவைகளாகும். கொள்கைக் கட்டுப்பாடு இலக்கியத்தின் நடை- மொழி- இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற தன்று; இக்கட்டுப்பாட்டினால் இலக்கியம் வளர முடியாது என்பதை முன்பு விளக்கிச் சொல்லியிருக்கின்றோம். இவைகளைப்பற்றித்தான் இலக்கியங்களிலே எழுத வேண்டும். இவைகளைப் பற்றி எழுதக்கூடாது என்று கட்டுப் பாடு விதிப்பதும் இலக்கியத்தை வளரவிடாது. இலக்கியம் இந்தக் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதன்று. எந்தச் செய்தியைப் பற்றியும் இலக்கியமாக எழுத முடியும்; எந்தக் கொள்கைகளைப் பற்றியும் இலக்கியங்களிலே எழுதி வைக்க முடியும். இலக்கியங்களின் மூலம் அரசியல் கொள்கைகளை வலி யுறுத்தலாம்; சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை வலியுறுத் தலாம்; இலக்கியங்களின் மூலம் மதக் கொள்கைகளைப் பரப் பலாம்; இலக்கியங்களின் மூலம் மத எதிர்ப்பையும் பரவச் செய்யலாம்; எந்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் இலக்கியத் தைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் படிப்போர் இந்த உண்மையை உணர் வார்கள். சிந்தாமணி என்னும் செந்தமிழ்நூல், சமண மதக் கொள்கையைப் பரப்ப எழுந்த நூல்; மணிமேகலை புத்தமதக் கொள்கைகளை வலியுறுத்தத் தோன்றிய கவிதை; பெரிய புராணம் சைவ மதத்தைப் பரப்ப எழுதப்பட்டநூல்; தேவார, திருவாசங்களும் சைவ சமயக் கொள்கையை வலியுறுத்துவன; நாலாயிர திவ்யப் பிரபந்தம் வைணவ மதக் கொள்கையைப் பரப்புவது. சைவ, வைணவ மதக்கொள்கைகளைப் பரப்புவதற் காக எழுதப்பட்ட புராணங்கள் எவ்வளவோ உண்டு. தேம்பாவணியும், இரட்சண்ய யாத்திரிகமும் கிறிதுவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் எழுதப்பட்ட காவியங்கள். சீறாப்புராணம் இலாம் மதத்தைப் போதிக்கும் நூல். இவ்வாறு மதக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கமுடன். தமிழிலே பல நூல்கள் இருக்கின்றன. இவற்றுள் இலக்கியச் சிறப் புடன் விளங்கும் நூல்கள் பல சிறந்த இலக்கியங்கள் கொள்கைகள் எப்படியிருந்தாலும், கருத்துக்கள் நமக்குப் பிடிக்காமலிருந்தாலும் உள்ளத்தைக் கவரும் கற்பனையும் கருத் தோட்டமும் அமைந்த நூல்களைப் படிக்காமல் விடமாட் டோம். அறிஞர்களின் தன்மை இதுவாகும். உதாரணமாகச் சிந்தாமணியை எடுத்துக் கொள்ளு வோம். அது சமண மத தத்துவங்களை வலியுறுத்தும் நூல் தான். ஆயினும், அதை வைணவர்கள், சைவர்கள், ஏனைய மதத்தினர் கள் அனைவரும் படித்துச் சுவைக்கின்றனர்; அதில் அமைந்திருக் கும் கற்பனைகளையும், உவமைகளையும், நீதி மொழிகளையும் பாராட்டுகின்றனர். பெரியபுராணத்தைப் பாடிய சேக்கிழார் சிந்தாமணி படிப்பதை விரும்பவில்லை; சோழனுடைய சபையிலே சீவக சிந்தாமணி படிக்கப்பட்டு, அதன் அருமை பெருமைகள் பாராட்டப்பட்டு வந்தன. சோழ மன்னன் அந்த நூலின் தமிழ்ச் சுவையை நுகர்ந்து வந்தான். சமண மத நூலான அதை விரும்பாத சேக்கிழார், பெரிய புராணத்தைப் பாடினார்; சோழன் சபையிலே அதைப் படிக்கும்படி செய்தார். இவ்வாறு பெரிய புராணத்தைப் பற்றிக் கதை வழங்குகிறது. இவ்வாறு சைவர்களில் ஒரு பகுதியார், சிந்தாமணியை சமணநூல் என்று வெறுத்தாலும் இலக்கிய உலகிலே அதன் பெருமையைக் குறைக்க முடியவில்லை. இன்று வரையிலும் புலவர்களால் பாராட்டிப் படிக்கப்படும் சிறந்த இலக்கியமாகத் தான் அது விளங்குகின்றது. கம்பராமாயணம் சிறந்ததொரு இலக்கியம் என்பதில் ஐயம் இல்லை. அது காவியமானாலும், வைணவத்திற்குச் சிறப் பளிப்பது; திருமாலின் பெருமையைப் பற்றிப் பேசுவது; சைவத்தை வெறுத்துப் பேசவில்லை; சிவனைப் பழித்துக் கூற வில்லை. ஆயினும் திருமாலின் பெருமையைக் கூறுவதால் சைவ மதப் பற்றுள்ளவர்கள் சிலர் அதை வைணவ மதநூல் என்று எண்ணினர். ஆதலால் கம்பராமாயணம் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகக் கந்தபுராணம் பாடப்பட்டது என்று கூறுகின்றனர். சிறந்த இலக்கியங்களை அடக்கிவிட முடியாது; மறைத்து விட முடியாது; அழித்துவிட முடியாது; இந்த இரண்டு கதைகள் இந்த உண்மையை விளக்கப்போதுமானவை. இக்காலத்தில்கூட, கம்பராமாயணத்தின்மேல் கண்டனக் கணை தொடுப்போர் உண்டு. அவர்கள் கணைகள் எல்லாம் பயனற்றுப் போய்விட்டன. கம்பனைத் தமிழரோடு, தமிழுக்கு, தமிழர்க்குத் தீமை செய்தவன் என்று கூட வெறிகொண்டு பேசு கின்றனர்; எழுதுகின்றனர். இவைகளால் கம்பன் கவிதைக்கு எந்த மாசும் ஏற்படவில்லை; அதன் பெருமை வரவர வளர்ந்துதான் வருகின்றது. தமிழிலே பதினாயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட பெரிய நூல்கள்- இலக்கியங்கள்- மூன்று உண்டு. அவை கம்ப ராமாயணம், கந்தபுராணம், நல்லாபிள்ளை பாரதம் என்பவை. கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்த மூன்றும் இலக்கியங்கள் என்பதில் ஐயம் இல்லை. மூன்றிலும் இலக்கியச் சுவை உண்டு; தமிழின் இனிமை யுண்டு; கற்பனைகளும், இயற்கை வர்ணனைகளும், உவமைகளும் உண்டு; வாழ்க்கை லட்சியங்களைப் பற்றிக் கூறும் கருத்தும் உண்டு, ஆயினும் இவற்றுள் கம்பராமாயணமே தலை சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது. சிலப்பதிகாரத்தின் கருத்திலே முரண்படுவோர் உண்டு; பொற்கொல்லனை ஒரு கொடியவனாகச் சித்திரித்திருப்பதைக் கண்டு சிலப்பதிகாரத்தையே வெறுப்போர் உண்டு. சிலப்பதி காரத்தில் பகுத்தறிவுக் கருத்துக்கள் இல்லை; எல்லாம் பழைய கருத்துக்கள்தாம். கண்ணகி ஒரு அடிமைப் பெண்ணாகத் தான் காட்சியளிக்கின்றான்; கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பெண்ணடிமைக் கொள்கைதான் சிலப்பதிகாரத் தில் காணப்படுகின்றது. ஆதலால் சிலப்பதிகாரம் பயனற்ற நூல் என்று சொல்லுகின்றவர்கள் கூட உண்டு. இவர்கள் என்ன தான் கரடியாய்க் கத்தினாலும் சிலப்பதிகாரம், படிப்போர் நெஞ்சை அள்ளும் இலக்கியமாகத்தான் திகழ்கின்றது. இலக்கியம் அழியாது எல்லாநூல்களும் கம்பன் கவிதையைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லாப் புலவர்களும் கம்பனைப்போல் ஒரே அச்சில் உருக்கி வார்த்தவர்களாயிருக்க முடியாது. பலதிறப்பட்ட இலக்கியங்களும், பலதிறப்பட்ட புலவர்களுந்தான் காணப்படுகின்றனர். குறைவாகவோ; அதிக மாகவோ இலக்கியத் தன்மையுள்ள நூல்கள் அனைத்தும் நிலைத்துத்தான் நிற்கும் இலக்கியத்திறமை வாய்ந்த கவிஞர் களும், எழுத்தாளர்களும் மக்களால் போற்றத்தான் படுவார்கள். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் முதலியவைகள் படித்துப் பாராட்டப்படுவதுபோலவே பலர் பெரிய புராணத்தைப் படித்துச் சுவைக்கின்றனர். அதன் எளிய இனிய கவிதைகளால் மனம் மகிழ்வோர் பலர். கந்தபுராணத்தைப் படித்துக் கவிதை இன்பத்தை நுகர்வோர் பலர். நல்லாப்பிள்ளை பாரதம், இன்றும் துரோபதை அம்மன் கோயில்களில் விழாக் காலங் களில் படித்துப் பொருள் சொல்லப்படுகின்றது; ஆயிரக்கணக் கான மக்கள் கூடி ஆவலோடு கேட்கின்றனர். அதிவீரராம பாண்டியனால் மொழிபெயர்க்கப்பட்ட நைடதம், புலவர்க்கு அவுடதம் என்று போற்றப்படுகின்றது. தமிழ்ப் பயிற்சிக்கு இந்நூல் பெருந்துணைசெய்து வருகின்றது. நளவெண்பாவின் இனிமையைப் போற்றாத புலவர்கள் இல்லை. குசேலோபாக்கியானம், அரிச்சந்திர புராணம் போன்ற சிறிய கவிதைகள் எல்லாம் இலக்கியமாகப் போற்றப்படுகின்றன. வேண்டுமானால், முதல்தர இலக்கியம், இரண்டாந்தர இலக்கியம், மூன்றாந்தர இலக்கியம் என்று பிரிக்கலாம், இலக்கியத் தன்மை வாய்ந்த நூல்கள் மூன்றாந்தரமானவை களாக இருந்தாலும், அவைகள் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. பரணிகள், கோவைகள், அந்தாதிகள், உலாக்கள், பிள்ளைத் தமிழ்கள், மாலைகள், பதிகங்கள், சதகங்கள் போன்ற உருவில் சிறிய நூல்கள் தமிழிலே குவிந்து கிடக்கின்றன. இவை களிலே இலக்கியச் சுவை பொருந்திய நூல்கள் பலவுண்டு. படிப் பவர்கள்தாம் அவைகளின் அருமைகளைக் காணமுடியும். தேவாரம், திருவாசகம், பிரபந்தம் முதலிய பாடல்களில் உள்ள இலக்கியச் சுவைகளை அறியாதார் இல்லை. சைவ மதப் பற்றில்லாதவர்களும், தேவார திருவாசகப் பாடல்களைப் படிக் கும்போது இன்பம் காண்பார்கள், வைணவமதப் பற்றில்லா தவர்களும், பிரபந்தப் பாடல்களைப் படிக்கும் போது தமிழ் இன்பத்தை நுகர்வார்கள். இதுதான் இலக்கியத் தன்மையாகும். நமக்கு முன் தலைமுறையைச் சேர்ந்தவர் இராமலிங்க சுவாமிகள்; அவருடைய பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் வெளிவந்திருக்கின்றன. அந்தப் பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் வெளிவந்தபோது, அதை எதிர்த்த சைவர்கள் பலர் உண்டு. அவர்கள், நாயன்மார்கள் தேவாரத்தையும் அருட்பா என்று கூறுவது; சாதாரண இராமலிங்கம் பிள்ளையின் பாடல் களையும் அருட்பா என்று சொல்லுவதா? என்று கோபங் கொண்டார்கள். இராமலிங்க சுவாமிகளையும் அவருடைய பாடல்களையும் இழித்துப் பேசினார்கள்; குறைத்துப் பேசினார்கள். தேவார திருவாசகங்களின் மேல் அவர்கள் வைத்திருந்த பக்தியே இப்படிப் பேசச் செய்தது. தேவார திருவாசகங்களை விட எளிய நடையிலே அருட்பாடல்கள்- இராமலிங்க சுவாமி கள் பாடல்கள்- விளங்குகின்றன. படிக்காதவர்களின் மனத்தை யும் கனியச் செய்யும் விதத்திலே பல பாடல்கள் அமைந்திருக் கின்றன. இதனால் சைவ மத அன்பர்கள் சிலர் பயந்தனர்; பயங் கொண்டனர்; தேவார திருவாசகங்களைப் படிப்பதைக் கை விட்டு, பாடுவதைக் கைவிட்டு, அருட்பாவையே அதிகமாகப் படிப்பார்களோ, பாடுவார்களோ என்று பயந்தனர்; இந்தப் பயத்தினால்தான் இராமலிங்க சுவாமிகளை எதிர்த்திருக்க வேண்டும். அவர் பாடல்களைப் பழித்திருக்க வேண்டும். இது வீண் பயமும், அவநம்பிக்கையும் என்பதில் ஐயம் இல்லை, இராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்குப் பின்னும், தேவார, திருவாசகங்கள் பாராட்டத்தான் படுகின்றன; படிக்கத் தான் படுகின்றன; பாடத்தான் படுகின்றன. அப்பாடல்களிலே மக்களுக்குத் தகுந்த அன்பும், மதிப்பும் குறைந்து போய்விட வில்லை. இது அவைகளின் இலக்கியத் தன்மையாகும். சில புலவர்கள்- அவர் காலத்திலிருந்த சில சைவ மதப் புலவர்கள்- இராமலிங்க சுவாமிகளையும், அவர் பாடல்களை யும் எவ்வளவுதான் பழித்துப் பேசினாலும், அப்பாடல்களை அழித்துவிட முடியவில்லை; அவற்றின் இனிமையைக் குறைத்து விட முடியவில்லை, இன்று அருட்பாவைப் போற்றிக் கொண் டாடுவோர் பலர்; அருட்பாச் செய்யுள்களை உள்ள முருகப் பாடிப் பரவசம் ஆவோர் பலர், நாளுக்கு நாள் இராமலிங்க சுவாமி பாடல்களின் உருக்கமும், இனிமையும், சுவையும் மக்கள் மனதைக் கவர்ந்து வளர்ந்து வருகின்றன. உயர்ந்த இலக்கியச் சுவை பொருந்திய கவிதைகளையோ நூல்களையோ அழித்துவிட முடியாது என்பதற்கே இந்த உண்மையை எடுத்துக் காட்டினோம். கவிஞர்கள், கருத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தாங்கள் எண்ணியதை வைத்துப் பாடலாம்; எழுத்தாளர்கள் இன்னதைப் பற்றி எழுதலாம், இன்னதைப் பற்றி எழுதக்கூடாது என்ற விலங்கைக் கண்டு பயப்படாமல் தங்களுக்குத் தோன்றியவை களை எழுதலாம். ஆனால், அவைகள் மக்கள் மனதைக் கவரும் வகையில், இலக்கியச் சுவையுடன் எழுதப்பட்டிருந்தால் போதும் - அவைகள் இலக்கியங்களாகப் பாராட்டப்படும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை; தாராளமாக எதைப் பற்றியும் இலக்கியமாக எழுதலாம். புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர் கள், தங்கள் மனம் விரும்புவதைச் சுவையுடன் எழுதினால்தான், அவைகள் இலக்கிய வரிசையிலே இடம் பெறும் என்பது உறுதி; உண்மையுமாகும். தமிழும் வடமொழியும் மொழி வளர்ச்சி தனிமரம் தோப்பாகாது என்பது பலருக்குத் தெரிந்த பழமொழி. பல மரங்கள் சேர்ந்து நின்றால்தான் அதற்குத் தோப்பு- தோட்டம்- சோலை- என்று பெயர். இது மனித சமூகத் துக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதன் சமூகம் ஆக மாட்டான்; பல மக்கள் சேர்ந்த கூட்டமே சமூகமாகும். தனி மனிதன் வாழ்ந்துவிடவும் முடியாது. பல மனிதர் களின் உழைப்பால்தான்- உழைப்பின் பலனால்தான்- ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றான். மனித சமூகமே முன்னேறுகின்றது. மனித சமூகத்தில் நாகரிகம் வளர்ந்து வருகின்றது. மக்கள் ஒருவ ரோடு ஒருவர் இணையாமல் தனித்தனியாக வாழ்ந்தால், இன்றுள்ள நாகரிகமான மனித சமூகத்தை நாம் காண முடியாது மனிதர்களும் விலங்குகளாகத்தான் அன்று கண்டமேனிக்கு அழிவில்லாமல் வாழ்வார்கள். இந்த நிலைமை மொழியின் வளர்ச்சிக்குப் பொருந்தும். இன்றைய உலகிலே வளர்ச்சி பெற்றுவரும் மொழிகள் எல்லாம் பல மொழிகளின் கூட்டுறவினாலேயே வளர்ந்திருக்கின்றன. மற்ற மொழியின் துணையில்லாமல் ஒரு மொழியை வளர்த்து விடலாம் என்று நினைப்பது சரியல்ல. ஒரு மொழியை, பிற மொழிச் சொற்கள் கலக்காமல்- பிறமொழிகளில் உள்ள கருத்துக்கள் நுழையாமல்- தூய்மையாக வளர்த்துவிடலாம் என்று நினைப்பது பகற்கனவு. இது மொழி வளர்ச்சியின் வரலாற்றுக்கே முரணானது. தமிழ்மொழியின் வளர்ச்சியை எடுத்துக்கொள்வோம். பல மொழிகளின் துணை கொண்டே தமிழ்மொழி வளர்ந்து வந்திருக்கின்றது. இவ்வுண்மையைத் தமிழ் இலக்கணம் கூறுகின்றது; தமிழ் இலக்கியங்களும் காட்டுகின்றன. இன்றுள்ள தமிழ் இலக்கணங்களிலே பழமையானது தொல்காப்பியம். மொழி வளர்ச்சிக்கு அது காட்டும் வழியைத் தமிழ் மக்கள் கருத்தூன்றிக் காணவேண்டும். அப்பொழுதுதான் முன்னோர்கள் நமது மொழியை எப்படி வளர்த்தனர் என்ற உண்மை விளங்கும். இலக்கியத்தை வளர்க்கும் வழி இலக்கியங்கள் முதல்நூல், வழிநூல் என இருவகைப்படும் என்பது தொல்காப்பியர் கருத்து. முதல்நூல் என்பது ஒரு ஆசிரியர் தாமே பலஉண்மைகளைக் கண்டறிந்து எழுதுவ தாகும்; தாமே ஒரு கதையைக் கற்பனை செய்து, கருத்துக்களை அமைத்து எழுதுவதும் முதல்நூல் வகையில் சேரும். வழிநூல் என்பது மற்றொரு நூலைப் பின்பற்றி எழுதுவது; ஒரு நூலைச் சுருக்கியோ, அல்லது பெருக்கியோ எழுதுவது. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் தீவினைகள் செய்யாதவனாய், சிறந்த அறிவுடையவனாய் உள்ள முதல்வனால் எழுதப்படுவது முதல் நூல் ஆகும். வழிஎனப் படுவது அதன்வழித் தாகும் வழிநூல்கள் எனப்படுவது அந்த முதல்நூலைப் பின்பற்றி எழுதப்படுவதாகும். தொல்காப்பிய மரபியலில் காணப்படும் இச் சூத்திரங்கள், முதல்நூல் என்பது என்ன? வழிநூல் என்பது என்ன? என்பதை விளக்கின. வழிநூல்கள் நான்கு வகைப்படும் என்று மேலும் கூறு கிறது. 1. முதல்நூலில் விரிவாகக் கூறப்பட்டிருப்பதைச் சுருக்க மாகச் சுவைபட எழுதுவது. 2. முதல்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருப்பதை நன்றாக ஆராய்ந்து விரிவாக எழுதுவது; தெளிவுபட எழுதுவது. 3. முதல்நூலில் விரிவாகக் கூறப்பட்டிருப்பதைச் சுருக்கி யும், சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதை விளக்கி விரிவாகவும் எழுதுவது. 4. வேறு மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் பெயர்த்துத் தமிழ்மொழியிலே எழுதுவது. இந்நான்கும் வழி நூல்களின் வகையாகும். இதை, தொகுத்தல் விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே என்ற மரபியல் சூத்திரத்தால் அறியலாம். மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. மொழி பெயர்த்து அவ்வழியிலே நூலைச் செய்தல் என்பதே இதன் பொருள். மொழி பெயர்க்கும் முறை கையாளப்படாவிட்டால் எந்த மொழியும் வளராது என்ற உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்கள் அறிந்திருந்தனர். அறிந்திருந்ததோடு மட்டும் இல்லை; இந்த முறையைப் பின்பற்றித் தமிழ்மொழி இலக்கியத் தைப் பெருக்கியும் வந்தனர். பண்டைப் பொது மொழி பண்டைக் காலத்தில் நமது நாட்டில் இலக்கியங்கள் நிரம்பியிருந்த மொழி வடமொழி ஒன்றுதான். அதில் இலக்கியங் கள் நிரம்பியிருந்தமைக்கும் காரணம் உண்டு. அது பண்டைக் காலத்தில் பாரத நாட்டின் பொதுமொழியாக இருந்தது. எல்லா அரசாங்கங்களாலும் ஆதரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அம்மொழி பயிலப் பட்டு வந்தது. இதனால்தான் பெரிய காவியங்கள் வடமொழியிலே எழுதப்பட்டன. அரசியல் தர்மங்களையும், சமூக தர்மங்களை யும் கூறும் மிருதிகள்- அறநூல்கள்- வடமொழியிலே இயற்றப் பட்டன; மக்கள் அன்றாடம் பின்பற்றி நடக்க வேண்டிய ஒழுங்கு கள் வடமொழியிலே எழுதப்பட்டன; பாரத நாடு எங்கும் குடி கொண்டுள்ள தெய்வங்களின் வரலாறுகள், அவைகளைப் பூசிப் பதற்குரிய மந்திரங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் வட மொழியில் எழுதப்பட்டன; சோதிடம், வைத்தியம், சிற்ப சாத் திரம் முதலிய கலைகள் எல்லாம் வடமொழியில் தோன்றின; மத நூல்கள் மத தத்துவங்கள் எல்லாம் வடமொழியிலே எழுதப் பட்டன. பாரத நாட்டு மக்களுக்கு வேண்டிய அரசியல், சமூக, மத தர்மங்கள் அனைத்தும் வடமொழியில் அமைந்திருப்பதற்குக் காரணம் அது இந்நாட்டின் பொதுமொழியாக இருந்தது தான் என்பதில் ஐயமில்லை. சிலர் நினைப்பதுபோல வடமொழி ஒரு கூட்டத்தாரால் பேசப்பட்டு வந்தமொழி; அக்கூட்டத்தார் தங்கள் மொழியை மற்றவர்கள்மேல் சுமத்திவிட்டார்கள்; மற்ற மொழிகளின் வளர்ச்சியை அமுக்கிவிட்டார்கள் என்பது உண்மையல்ல. வடமொழி - குறிப்பாகச் சமகிருத மொழி பேச்சு மொழியன்று; ஒரு சார்பினர்க்கு உரிய மொழியும் அன்று. அதன் பெயர் தேவ பாஷை என்று வழங்குவதை நாம்எண்ணிப் பார்க்கவேண்டும். மக்களால் பேசப்பட்ட மொழி அன்று என்ற பொருள் தேவ பாஷை என்பதில் அடங்கியிருப்பதைக் காணலாம். அது மக்களால் படிக்கப்பட்ட பாஷையே அன்றி, பேசப்பட்ட பாஷை அன்று என்பதே பல அறிஞர்களின் கொள்கையுமாகும். பண்டைக் காலத்தில் இலக்கியக் கடலாக விளங்கிய வட மொழியிலிருந்துதான், பாரத நாட்டுப் பல மொழிகளும் இலக் கியச் செல்வத்தை எடுத்துக்கொண்டன. தமிழ் மொழியும் இதைச் செய்யத் தவறவில்லை. பண்டைத்தமிழ் இலக்கியங் களில் பல, வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்டிருப்பதே இவ் வுண்மையை விளக்கும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைத் தவிர, ஏனைய காவியங்கள், புராணங்கள் எல்லாம் வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்டவைதான். தொல்காப்பிய உண்மை செய்யுளில் சேர்க்கப்படும் சொற்கள் யாவை என்பதைத் தொல்காப்பியர் கூறுகிறார். இயல்பாக யாவருக்கும் பொருள் விளங்கும் சொல், திரிந்து வழங்கும் சொல், தமிழ்நாடு அல்லாத பிற நாடுகளில் வழங்கும் மொழிகளில் உள்ள சொல், வட மொழிச் சொல்- இவைகள் எல்லாம் செய்யுளில் சேர்க்கப்படும் சொல் என்பது தொல்காப்பியர் கூற்று. இதனை, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே என்ற தொல்காப்பியச்சொல்லதிகார எச்சவியல் சூத்திரத்தால் காணலாம். தமிழ் அல்லாத வேறு மொழிகளிலிருந்தும், வடமொழி யிலிருந்தும் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன என்ற உண்மையை இச்சூத்திரம் உணர்த்திற்று. தமிழும் வடமொழியும் அல்லாத சொற்களையெல்லாம் திசைச்சொல் என்றும், வடமொழிச் சொல்லைத் தனியாக வட சொல் என்றும் குறித்திருப்பதில் ஒரு உண்மையுண்டு. வேற்று மொழி நூல்கள் சிறுபான்மையும், வடமொழி நூல்கள் மிகுதி யாகவும் தமிழில் பெயர்க்கப்பட்டன என்பதே அவ்வுண்மை யாகும். வேற்றுமொழி நூல்களில் வடமொழியில் உள்ள அவ்வளவு இலக்கியங்கள் அக்காலத்தில் இல்லை. ஆகையால் ஏதோ இரண்டொரு நூல்கள்தாம் சில சமயங்களில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம். இதனால், திசைச் சொற்கள் அவ்வளவு அதிகமாகத் தமிழில் கலக்கவில்லை. வடமொழியில் ஏராளமான இலக்கியங்கள் இருந்தமையால், அதிலிருந்து பெரு வாரியான நூல்கள் தமிழில் பெயர்த்து எழுதப்பட்டன. ஆதலால் வடமொழிச் சொற்கள் தமிழிலே மிகுதியாகக் கலந்தன. இவ் வுண்மையையும் மேலே காட்டிய சூத்திரத்தால் அறியலாம். தொல்காப்பியத்தில் அந்தணர் மறை என்ற பெயரால் வடமொழிவேதம் குறிக்கப் படுகின்றது. வள்ளுவர், நூலோர் தொகுத்தவற்றுள் என்று அறநூல்களைக் குறிப்பிடுகின்றார். நூலாருள் நீதிநூல்களை அறிந்தவர்களுள் என்று கூறு கின்றார். வள்ளுவர் குறிப்பிடும் அறநூல்கள் வடமொழி நூல்கள் என்றுதான் கொள்ளவேண்டும். தமிழிலே உள்ள நீதிநூல்களில் பழமையானவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தாம். அவற் றின் பின்னர்தான் பல நீதிநூல்கள் தமிழில் தோன்றின. இந்த உண்மை அனைவரும் அறிந்தது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே காலத்தால் முற்பட்டது திருக்குறள். ஆதலால் திருக்குறளுக்கு முன் தமிழில் அறநூல்கள் இல்லை என்று கூறிவிடலாம். இதனால் திருவள்ளு வர் குறிப்பிடும் அறநூல்கள் வடமொழி நூல்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் ஐயம் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கும் வடமொழிக்கும் தொடர்பு உண்டு என்பதை மேலே கூறியவை களைக் கொண்டு அறியலாம். தமிழ் பெற்ற செல்வம் வடமொழியால் தமிழின் வளர்ச்சி குன்றியது; அதன் சுவை குறைந்தது; வடமொழியாளர் தமிழைக் கெடுத்து விட்டனர் என்று கூறுவோரைக் காண்கின்றோம். வடமொழி யின் மேல் வசைமொழிகளை வாரியிறைத்துக்கொண்டிருப்பதே தமிழுக்குச் செய்யும் பணி என்று நினைப்போர் உண்டு. இந்த வெறுப்பு, சாதி வெறுப்பின் வேரிலிருந்து கிளைத்தது. வட மொழி ஒரு சாதியினர்க்கு உரிமையான மொழி என்று தவறான எண்ணத்தின் காரணமாகப் பிறந்ததாகும். தமிழகத்தில்தான் எண்ணத்தில்தான் இந்தத் தவறான நினைப்பும், வெறுப்பும் மிகுதியாகத் தலைவிரித்து ஆடுகின்றன. வடமொழியால் தமிழ்கெட்டுப்போய்விட்டது என்பவர் கள் உண்மையை உணர்ந்துகொள்ளும்படி செய்யவேண்டியது அறிஞர் கடமை. தனித் தமிழ்க் காவியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் தமிழ் மட்டும் படித்தவர் அல்லர், வடமொழியும் கற்றவர். இளங்கோ வடிகள் சமண முனிவர் என்பதை ஒப்புக்கொண்டால் அவர் வட மொழியும், பாலியும் படித்தவர் என்பதையும் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். சிலப்பதிகாரத்தில் புகுந்திருக்கும் வடசொற் களே, அதன் ஆசிரியர் வடநூல் தேர்ச்சியுள்ளவர் என்பதைக் காட்டும். மணிமேகலை ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார் வட மொழியிலே தேர்ந்த புலவர். இதை விளக்க மணிமேகலையில் உள்ள தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை ஒன்றே போதுமானதாகும். சிந்தாமணி, வடமொழிக் கதைதான், திருத்தக்கதேவர் சிறந்த வடமொழிப்புலவர். அவருடைய தமிழ்ப் புலமை; வட மொழிப் புலமையினால் மேலும் சிறப்படைந்தது என்பதில் ஐயம் இல்லை. அவருக்கு வடமொழிப் புலமை இல்லாவிட்டால் சிந்தாமணியைப் பாடி இருக்க முடியாது. பெருங்கதை என்று வழங்கும் உதயணன் கதையும் வட மொழிக் கதைதான். பெருங்கதையைப் பாடிய புலவர் வட மொழிப் புலமையும் உள்ளவர் என்பதில் ஐயம் இல்லை. உலகக் காவியங்களில் ஒன்றாகிய இராமாயணம் வட மொழியிலிருந்துதான் தமிழில் புகுந்தது. கம்பன் தமிழ்ப் புலமை யோடு வடமொழிப் புலமையும் உள்ளவன் என்பதை அவன் பாடல்களே காட்டும். கந்தபுராணம், பெரியபுராணம் முதலிய நூல்களைச் செய்த ஆசிரியர்கள் எல்லாம் வடமொழிப் புலமையுள்ளவர்கள். பாரதத்தைத் தமிழிலே பாடிய அத்தனை பேரும் வடநூற் புலமையுள்ளவர்கள் . தேவார ஆசிரியர்கள், பிரபந்த ஆசிரியர் கள் அனைவருக்கும் வடமொழியிலே தேர்ச்சியுண்டு. வடமொழியறிந்த புலவர் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்த னார், திருத்தக்க தேவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பர், கச்சியப்ப சிவாச்சாரியார், சேக்கிழார், பாரதம் பாடிய வில்லி புத்தூர் ஆழ்வார், பெருந்தேவனார், அருணகிரி நாதர், தாயு மானார், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், குமரகுருபர சுவாமிகள், ஆறுமுக நாவலர் போன்ற புலவர்கள் எல்லாம் தமிழுக்குச் செய்திருக்கும் பணி அளவற்றது. இவர்களால் தமிழிலே இலக்கியச் செல்வம் வளர்ந்தது. இவர்கள் வட மொழிப் புலமை படைத்திருந்ததனால் தமிழ் வளர்ந்ததா? குறைந்ததா? என்று எண்ணிப் பார்க்கும் படி வடமொழி வெறுப் பாளரைக் கேட்டுக்கொள்ளவேண்டும். ஒட்டக்கூத்தர் சிறந்த வடமொழிப் புலமையும் பெற்றவர். தமிழிலே உள்ள சதக நூல்களைப் பாடிய புலவர்கள் பெரும் பாலும் வடநூல் புலமையும் பெற்றவர்கள். சைவ மதத்தைப் போற்றுவோரில் சிலர் வடமொழி வெறுப்பாளராயிருப்பது வியப்புக்குரியது. சைவ சித்தாந்தம் என்பதே வடமொழித் தொடர். சைவ சித்தாந்த முதல் நூலாகிய சிவஞானபோதத்தின் மூலநூல் வடமொழியில் உள்ளது. சிவஞான போதத்திற்கு மாபாடியம் எழுதியவர் சிவஞான முனிவர். அந்த பாஷியத்தைப் படிப்போர் வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைக் காண்பார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வடமொழியும் தமிழும் உறவு கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த உறவினால் தமிழ்மொழி வளர்ந்தது, இலக்கியச் செல்வம் பெற்றது என்பதையும் எவரும் மறுக்க முடியாது. வடமொழிக்கும், தமிழுக்கும் இருக்கும் தொடர்பு நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றது: எந்த மொழி யில் இலக்கியச் செல்வங்கள் இருந்தாலும், அவற்றை எடுத்துக்கொள்ளலாம்; கடன் வாங்கிக் கொள்ளலாம்; நம்முடையனவாக ஆக்கிக் கொள்ளலாம்- என்பதே அவ்வுண்மையாகும். பண்டைக் காலத்தில் நமது நாட்டில் இலக்கியப் பயிர் செழித்து நின்றது, வடமொழி ஒன்றில்தான். ஆதலால் அதிலிருந்து பல இலக்கியங்களை எடுத்துக்கொண்டோம்; சேர்த்துக் கொண்டோம்; கடன் வாங்கினோம். வடமொழியும் தமிழ் மொழியிலிருந்து எவ்வளவோ எடுத்துக் கொண்டிருக் கின்றது. இன்று இலக்கியக் கடலாக விளங்கும் மொழி ஆங்கிலந் தான். ஆதலால் அதிலிருந்து சிறந்து இலக்கியங்களைத் தமிழ் மொழி பெறவேண்டும். ஆங்கில மொழி மட்டும் அன்று; வேறு எந்த மொழியில் சிறந்த இலக்கியங்கள் இருந்தாலும் அவை களைத் தமிழ்மொழியில் ஆக்கவேண்டும். பாரதி காட்டும் வழி இந்த உண்மையைத்தான் நமக்குப் பாரதியார் எடுத்துரைத் தார்: சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! எந்த நாட்டிலே எந்த மொழியிலே கலைச் செல்வம் இருந் தாலும் அவைகளைக் கொண்டுவந்து தமிழிலே குவித்து விடுங்கள் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்; பிறநாட்டு அறிஞர்களால் எழுதப்படும் அறிவுநூல்களையெல்லாம் தமிழிலே மொழிபெயர்த்து வெளி யிடுங்கள். பாரதி கூறும் இவ்வழியையே நமது முன்னோர் பின் பற்றினர். அக்காலத்தில் சிறந்த மொழியாக இருந்த வடமொழி நூல்களை மொழிபெயர்த்தனர். நாம் இன்று பின்பற்ற வேண்டியது பாரதி காட்டிய வழியைத்தான் என்பதில் ஐயம் இல்லை. செய்யவேண்டிய செயலைச் செய்வதில்லை; முன்னோர் களின் கருத்தையும் அறிவதில்லை. யாரையேனும் எதைப் பற்றி யேனும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் போதும் என்று நினைப்பவர்களால் தமிழ்மொழி வளர்ந்துவிடாது. தமிழுக்கும், வடமொழிக்கும் இருந்துவந்த- இருந்து வரும் தொடர்பு தமிழுக்குத் தீமை விளைத்துவிடவில்லை; நன்மை தான் தந்தது; பல துறையில் தமிழ் இலக்கியத்தை வளம்பெறச் செய்தது. ஆதலால், எந்த மொழியும் பிற மொழிகளின் உதவியால் நன்மையடையுமே அன்றித் தீமை அடையாது; வளருமேயன்றிக் குறையாது. இந்த உண்மையைத் தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள வெறுப்பைக் கைவிட வேண்டும்; மொழி பெயர்த்தும், இறவாத புது நூல்கள் இயற்றியும் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். தமிழைக் கலைச் செல்வம் கொழிக்கும் மொழியாகச் செய்வதற்கு எழுத்தாளர் இவ்வழியிலே நின்று பணிபுரிய வேண்டும். வெறுப்பினாலும், வெறியினாலும் எந்த நல்ல காரியத்தை யும் செய்துவிட முடியாது; அன்பினாலும், அணைப்பினாலுந் தான் ஆக்க வேலைகள் நடைபெறும், இந்த உண்மை என்றும் நிலைத்திருக்கும் உண்மையன்றோ? பழமையிலே புதுமை காலம் புதுமையைத் தோற்றுவித்துக்கொண்டுதான் இருக்கும். புதுமை பூக்கும்; பொலிவு பெறும். அதைத் தடுக்க முடியாது. இத்துறையில் தான் புதுமை மலரும்; இத்துறையில் புதுமை பிறக்காது; என்று சொல்ல முடியாது. வாழ்க்கையிலே, நடையுடை பாவனைகளிலே, சிந்தனையிலே, அரசியலிலே, சமுதாயத்திலே, கலையிலே, இலக்கியத்திலே புதுமை மலர்ந்து கொண்டுதான் இருக்கும். இது கண் கூடாகக் காணும் உவமை. புதுமை மலர்வதால் பழமை அடியோடு மறைந்து விடாது புதுமைக்குள் பழமையின் மணம் வீசிக் கொண்டு தான் இருக்கும். திடீர் என்று ஒரு பொருள் தோன்றிவிடுவதில்லை. ஒன்றிலிருந்துதான் மற்றொன்று தோன்றும். ஒன்று தோன்றுவ தற்கு மூலமாக எது இருக்கின்றதோ அதன் தன்மை அதிலிருந்து தோன்றிய பொருளுக்கும் இருப்பது இயற்கை; முழுவதும் இல்லாவிட்டாலும் ஒரு பகுதியாவது இருக்கும். இது போல் புதுமைக்குள் பழமையும் புகுந்து உலவிக்கொண்டிருக்கும். இலக்கியத் துறையை எடுத்துக் கொள்ளுவோம். பழைய இலக்கியங்கள் எல்லாம் கருத்தையும், கொள்கைகளையும் கொண்டவை. ஆகையால்தான் அவை தோன்றி நெடுங்காலமா னாலும் இறக்காமல் உயிர் வாழ்கின்றன. புதிய இலக்கியங் களிலும், கருத்தும் கொள்கைகளும் இருந்தால்தான் மக்களால் போற்றப்படுகின்றன. பழைய இலக்கிய வரிசையிலே அமர்ந்து விடுகின்றன. அற்பாயுசில் போய் விடுவதில்லை. சிரஞ்சீவித் தன்மை பெற்று விடுகின்றன. புதுமை பொலியும் செய்யுள் இலக்கியத்திற்கு வடலூர் இராமலிங்க அடிகளையும் பாரதியார் அவர்களையும் எடுத்துக் கொள்ளலாம். உரைநடை இலக்கியங்களுக்கு, முன்சீப் வேதநாய கம் பிள்ளை அவர்களையும், ராஜம் அய்யர் அவர்களையும் எடுத்துக் கொள்ளலாம். இராமலிங்க அடிகள் காலத்திலே இந்நாட்டிலே அரசியல் கிளர்ச்சி இல்லை. வெள்ளைக்காரன் ஆள்வான் என்று முன்னமே பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆகை யால் வெள்ளைக்காரன் நமது நாட்டை ஆளுகின்றான். இது ஆண்டவன் கட்டளை என்று நம் நாட்டு மக்கள் சொல்லிக் கொண்டிருந்த காலம் அது. ஆதலால் இராமலிங்க அடிகள் தேச விடுதலையைப் பற்றி பாடவில்லை. ஆனால், சமுதாய விடுதலை யைப் பற்றிய பாடல்களை அவருடைய அருட்பாவிலே ஏராள மாகக் காணலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழன் கொள்கை அவர் உள்ளத்தை விட்டு அகலவில்லை இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களைப் பாடியிருக்கின்றார். எல்லா மக்களும் உணவுண்டு வாழ வேண்டும் உலக மக்கள் அனைவரும் உடன் பிறந்தாராக வாழவேண்டும் இக் கருத்தை விளக்கும் பாடல்களை இராமலிங்க அடிகள் பாடி யிருக்கின்றார். உள்ளளேன் உடையார் உண்ணவும், வறியர் உறுபசி உழந்து வெம்துயரால் வள்ளலே நெஞ்சம் வருந்தவும்படுமோ மற்றுஇதை நினைந்திடுந் தோறும் எள்ளலேன் உள்ளம் எரிகின்றது - உடம்பும் எரிகின்றது என்செய்வேன், அந்தோ! கொள்ளலேன் உணவும், தரிக்கிலேன்; இந்தக் குறையெலாம் தவிர்த்தருள் என்தாய்! என்பது இராமலிங்கர் பாடல்களுள் ஒன்று. இது அவருடைய கொள்கையை விளக்குகின்றது. பணக்காரர்கள் அளவுக்கு மேல் உண்டு கொழுக்கின்றனர்! வறியவர்கள் உணவின்றி உள்ளம் வருந்திப் பட்டினி கிடக்கின்றனர்; இந்த நிலையை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்ன செய்வேன்; கடவுளேதான் இந்த வேற்றுமையைப் போக்க வேண்டும் என்று பாடுகிறார். எல்லோரும் உணவுண்டு வாழவேண்டும் என்பதே இராம லிங்கர் கருத்து. கடவுள் நம்பிக்கையுள்ள அவரால் இப்படித் தான்தம் கருத்தை வெளியிடமுடியும்; மக்களிடம் சொல்ல முடியும். அது புதிய கருத்தன்று பழைய கருத்துத்தான் பழைய இலக்கியங்களில், வறியோர்கள் வாழ உதவிசெய்யவேண்டும் என்ற கருத்துள்ள இலக்கியங்கள் உண்டு. ஐம்பெரும் காவியங் களில் ஒன்றாகிய மணிமேகலை மக்களைப் பட்டினிக்கு ஆளா காமல் பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே எழுதப்பட்ட காவியம். இராமலிங்கரின், மேலே குறித்த பாடலும் அந்தப் பழமையை நினைவூட்டும் புதிய பாடல் என்பதை மறந்துவிடமுடியாது. அடுத்து, பாரதியாரைப் பார்ப்போம். நமது காலத்துக் கவிஞர்களிலே தலைசிறந்தவர் பாரதியார். இவரைப் போன்ற ஒரு கவிஞர் இனிப் பிறக்கமுடியுமா என்பதுகூடச் சந்தேகந்தான். பொதுமக்களின் நல்வாழ்வையும், நாட்டின் சுதந்திரத்தையும் உயிராகக் கொண்ட கவிஞர் பாரதியார்; மக்களுக்காகப் பாடிய கவிஞர்களிலே மக்கள் நன்மைக்காகப் போராடிய கவிஞர் களிலே, பாரதியாருக்கு இணைபாரதியார்தான். பாரதியார், கதைகள், கட்டுரைகள், பாடல்கள் எல்லாம் எழுதியிருக்கின்றார். இவருடைய எழுத்துக்களிலே தலைமை வகிப்பது கவிதைதான். பாரதியார் கவிதைகளை இலக்கியம் அல்ல என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்த காலம் இருந்தது. இப்படிச் சொல்பவர்கள் இன்று யாரும் இல்லை. எல்லோரும் பாரதி பாடல் சிறந்த இலக்கியம் என்று ஒப்புக்கொள்ளுகின்ற னர். பாரதியார் பாடல்களிலே சிறந்த கருத்துக்கள் நிறைந்திருக் கின்றன; அறிவுரைகள் அமைந்திருக்கின்றன. ஆதலால்தான் இலக்கியமாகப் போற்றப்படுகின்றது. மண்பயன் உறவேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது பாரதியார் நோக்கம்; இந்நோக்கத்தை அவர் ஒரு பொழுதும் மறந்துவிடவில்லை இந்த உலகத்துக்கு மேலேயிருப்பது வான் உலகம்! அங்கே மக்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள். இளமை குன்றாமல் வாழ்வார்கள். விரும்பியவைகளையெல்லாம் பெற்று வாழ்வார் கள். வேண்டியவைகளையெல்லாம் கொடுக்கக்கூடிய கற்பகத் தரு, காமதேனு, சங்கநிதி, பதுமநிதி போன்ற செல்வக் சுரங்கங்கள் உண்டு. என்று வானுலகத்தைப் பற்றிப் பற்றிப் புராணங்கள் கூறு கின்றன. இந்தப் புராணக் கூற்றைப் பாரதியார் மறுக்கவில்லை; இருக் கட்டும்; இல்லாமற் போகட்டும் அந்த விதமான உலகத்தை இங்கே அமைப்போம் என்பது தான் பாரதியாரின் கருத்து. இது தான் புதுமையிலே பழமை பளிச்சிடுவதாகும். வானகத்தை இங்கே தென்படச் செய்வது எப்படி என்ப தையும் பாரதியார் சொல்லாமல் விடவில்லை. இவ்வுலகம் வானுலகாக விளங்க வேண்டுமானால் மக்களின் வறுமைப்பிணி ஒழியவேண்டும். முதலில் நாடு விடுதலை பெற வேண்டும். மக்கள் அரசுவேண்டும். இதன் பொருட்டு மக்கள் அனைவரும், தங்கள் சாதிமத பேதங்களை யெல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஒன்று பட்டுப் போராடவேண்டும். சுதந்திரம் பெற்ற பின்னர், நாட்டிலே கல்வி, கைத்தொழில் எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். இழிந்த மனிதர், தாழ்ந்த மனிதர் என்ற நிலை மாற வேண்டும். எல்லோரும் ஒரு குலமாக அமையவேண்டும். இக் கருத்துக்களை அவர் வலியுறுத்திப் பாடுகின்றார். வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்தே - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் இதுவே வானுலகை இங்கே காணும்படி செய்யும் வழி யென்பது அவர் கருத்து. பண்டைக்கால நூல்கள்- இலக்கியங்கள், தானத்திலே சிறந்தது அன்னதானம் என்று கூறுகின்றன. பெரும்பான்மையான மக்கள் பட்டினியால் பரிதவித்தால் சிறுபான்மையான மக்களின் வாழ்வும் சீர்குலையும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆதலால் அவர்கள், நாட்டிலே பசிப்பிணி பரவாமல் பாதுகாப்புச் செய்யுங்கள் என்று பறை அறைந்து கொண்டேயிருந்தனர். தனி யுடைமை நாடாயினும் சரி, பொதுவுடைமை நாடாயினும் சரி, மக்கள் பசிப்பேயின் பிடியில் சிக்குவார்களானால் அந்த நாட்டின் சமுதாய அமைப்பே சீர்குலைந்து விடும். இந்த உண்மை அன்னதானம் என்ற அறத்தில் அடங்கியிருக்கிறது பாரதியின் கருத்தில் இந்தப் பழமை குடிகொண்டிருப்பதைக் காணலாம். பாரதியார் புதுமைக் கவிஞர் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். பாட்டிலே புதுமை; கருத்திலே புதுமை, சொல் லும் முறையிலே புதுமை; பாரதியார் கவிதைகளிலே காணப்படு கின்றன. ஆனால் அவர் சமைத்திருக்கும் புதுமைகள் அவ் வளவிலும் பழமையும் புகுந்து கொண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டு தான் இருக்கிறது. பாரதியார் கவிதைகள், தமிழ கத்திலே ஈடு இணையற்ற கவிதைகளாக ஏறு நடை போடுவதற்கு இதுதான் காரணம். உரைநடை நூல்களும் இலக்கியத் தன்மை அமைந்திருந் தால்தான் போற்றப்படுகின்றன. உரைநடை நூல்கள் கட்டுரை களாக இருக்கலாம்; பெரும்கதைகளாக இருக்கலாம்; சிறுகதை களாக இருக்கலாம்; ஆனால் கருத்தமைதியுடன் காணப்பட வேண்டும்; கொள்கைப் பிடிப்புடன் எழுதப்பட்டிருக்கவேண் டும். படிப்பதற்குச் சுவையுடன் எழுதப்பட்டிருக்கவேண்டும். இத் தகைய நூல்கள் இலக்கிய வரிசையிலே இடம் பெற்று நிற்கும். அவைகள் மக்களால் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட பிரதாப முதலியார், சரித்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம். அது ஒரு கட்டுக்கதைதான், நவீனம் என்பதற்கு இலக்கணம் கூறுகின்றவர்கள் அது ஒரு சரியான நவீனம் என்று கூட ஒப்புக்கொள்ளுவதில்லை. அது ஒரு சிறு கதைத் தொகுதி போலத்தான் அமைந்திருக்கின்றது. இதில் உள்ள கதைகள் எல்லாம் கருத்துக்களை வலியுறுத்தவே எழுதப் பட்டிருக்கின்றன. பிரதாபமுதலியார் சரித்திரத்தைப் படித்தவர் கள் இவ்வுண்மையை உணர்வார்கள். படித்த பெண்கள்தாம் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும். படித்த பெண்களிடந்தான் நல்ல பண்புகள் குடி கொண் டிருக்கும். படித்த பெண்களாக இருந்தால் மாமியார் மருமகள் சண்டை தோன்றாது; இக்கருத்து ஞானம்பாள் என்ற பாத்திரத் தின் மூலம் வலியுறுத்தப்படுகின்றது. சமுதாயத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும்; மக்கள் அனைவரும், பஞ்சம், பட்டினி, நோயில்லாமல் வாழ வழி செய்யவேண்டும்; குடிகள் குறையின்றி வாழக் கூடிய முறையிலே நேர்மையான அரசியல் நடைபெற வேண்டும். தாய்மொழியைப் புறக்கணித்தல் கூடாது, தாய்மொழியிலே கல்வி போதிக்க வேண்டும்; தமிழர்கள் தமிழ் இலக்கியங்களைப் போற்றிப் படிக்கவேண்டும்; நீதிமன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழிலே நடைபெறவேண்டும். இவை போன்ற கருத்துக்களையெல்லாம் பிரதாப முதலியார் சரித்திரம் வெளியிடுகின்றது. லஞ்சக் குற்றம் ஒழிக்கப்படவேண்டுமானால் லஞ்சம் வாங்குகிறவர்களுக்கு மட்டும்தான் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது வேதநாயகம் பிள்ளை கருத்து. லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை உண்டு என்ற சட்டம் இருக் கும் வரையிலும் லஞ்சக் குற்றத்தை ஒழிக்கவே முடியாது, என்று கூறுகிறது பிரதாப முதலியார் சரித்திரம். இங்கிலீஷ் துரைத்தனத்தாருடைய சட்டத்தில் லஞ்சம் வாங்குகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது போலவே, லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குகிறவர்களுக்குச் சர்வானுகூல மான சட்டம் இதைவிடவேறு ஒன்று இருக்கக் கூடுமோ? திருட னுடைய இம்சைக்குப் பயந்து அவர்களுக்குப் பொக்கிஷத்தின் திறவுகோலைக் கொடுப்பவர்களைப்போல, உத்தியோகதர் களுடைய நிர்ப்பந்தத்தினால் அவர்களுக்கு லஞ்சம் கொடுக் கிறார்களே தவிர, அவர்களுக்கு மனப்பூர்வமாய் லஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவரும் இல்லை (பிரதாப முதலியார் சரித் திரம், அத்தியாயம் 38) வேத நாயகம்பிள்ளை அவர்களின் இக்கருத்து சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியைத் தள்ளி வைத்து விடுவோம். இது பிரசாரமா, அல்லவா? என்று எண்ணிப் பாருங்கள். பிரசாரம் தான் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இம்மாதிரி, வேத நாயகம் பிள்ளை, தமது பிரதாபமுதலியார் சரித்திரத்தில் பல விடங்களில் பல கருத்துக்களை கொள்கைகளை வெளியிட்டிருப் பதைக் காணலாம். மற்றொரு நாவல் ஆகிய கமலாம்பாள் சரித்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம். அதுவும் கருத்துக்களை அடிப்படை யாக வைத்துக்கொண்டு எழுதப்பட்ட கதைதான். இராஜம் ஐயர் அவர்கள், வேதநாயகம் பிள்ளை போல் பல கருத்துக்களை அள்ளிக் கொட்டிப் படிப்போரைத் திக்கு முக்காடச் செய்யவில்லை. சிறப்பாக இரண்டு அடிப்படைக் கருத்தின்மீதே, அவர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைக் காட்டியிருக்கின்றார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். தெய்வ நம்பிக்கை யால் எல்லாத் துன்பங்களும் ஒழியும் என்பது ஒரு கருத்து. படிக்காத அகங்காரம் பிடித்த பெண்களால்தான் குடும்பக் கலகமும், குடும்ப நாசமும் உண்டாகும். படிக்காத பெண்கள் வீண்வம்பு பண்ணுவதில்தான் பொழுதுபோக்கு வார்கள். நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பெண்களின் இயல்பு இது என்ற கருத்து இரண்டாவது. கமலாம்பாள் சரித்திரத்தைப் படித்தவர்கள் இவ்வுண் மையைக் காண்பார்கள். பொன்னம்மாள் என்ற பொறாமையும், முரட்டுத்தனமும், மூடத்தனமும் உள்ள ஒருபெண்தான், கமலாம்பாள் சரித்திரத்தை நடத்துகின்ற முதன்மையான பாத்திரமாக அமைக்கப்பட்டிருக் கிறாள். இந்த நூலை கமலாம்பாள் சரித்திரம் என்று சொல் வதைவிடப் பொன்னம்மாள் பொறாமை என்று சொல் வதுகூடப் பொருத்தமானதாகும். பிரதாப முதலியார் சரித்திரத்துக்குப் பின்னர், கமலாம் பாள் சரித்திரத்திற்குப் பிறகு எத்தனையோ நவீனங்கள் பிறந்து விட்டன. அவைகளில் இந்த இரண்டையும் போல், இலக்கியச் சுவையாளர்களின் பலபடியான விமர்சனத்தைப் பெற்ற நூல்கள் வேறு இல்லை என்று கூறிவிடலாம். இந்த இரண்டு நூல்களும் என்றும் இலக்கியப் படியில் அமர்ந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த இரண்டு நூல்களுக்கும் இவ்வளவு சிறப்பு இருப்பதற் கான காரணம் ஒன்றேஒன்றுதான். அவை பழைய இலக்கிய மரபைத் தழுவியிருக்கின்றன. கருத்துக்களைப் படிப்போர் உள்ளத்தில் பரப்புகின்றன. இவை இரண்டும் புதுமையைப் பின்பற்றி எழுந்த நூல்கள். ஆயினும் அவற்றுள் பழமைப் பண்பு புத்துயிர் பெற்று வாழ்கின்றது. இக்காரணத்தால்தான் இவைகள் சிறந்து விளங்குகின்றன. இலக்கிய வல்லுநர்களால்- இலக்கிய அன்பர்களால் இலக்கியச் சுவையை அறிந்தவர்களால் எழுதப்படும் எந்த நூலிலும் பழமைப் பண்பும் கலந்துதான் காணப்படும். இதை அவர்களால் விலக்கமுடியாது. உண்மையில் இத்தகைய நூல்கள் தாம் இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டும் நூல்களாகும். புலவர்கள் யார்? புலவர் என்ற சொல் புலவர் என்றால் அறிவுள்ளவர் என்று பொருள். புலமை: அறிவுடைமை. இது தனித்தமிழ்ச் சொல். அறிவு உள்ளோர் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல். உலகப்போக்கை அறிந்து அதனோடு இணைந்து நடப்பதே அறிவுள்ளோர் அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல். உலகப்போக்கை அறிந்து அதேனாடு இணைந்து நடப்பதே அறிவுள்ளோர் கடமை. நாட்டு மக்களுக்கு நல்லறி வூட்டி, அவர்களை முன்னேற்ற வழியிலே செலுத்துவதே அறிவு டைமை. மக்கள் அனைவரையும் ஒன்றென மதித்து அவர்கள் ஒன்றுபட்டு வாழ வழிகாட்டுவதே அறிவுடைமை. மக்களுடைய அன்றாட வாழ்விலே அல்லல் ஏற்படாமல் அவர்கள் இன்பத் துடன் வாழ்வதற்கு வழிகோலுவதே அறிவுடைமை. இன்றும் அறிவு படைத்தவர்கள்- மக்களிடம் அன்பு கொண்ட அறிவுள்ளவர்கள்- இப்படித்தான் நடந்து கொள்ளு கின்றனர். ஆகவே தந்நலத்திற்காக மட்டும் பாடுபடாமல், நாட்டு மக்கள் நன்மைக்காகவே பணிபுரியும் அனைவரையும் புலவர்கள் என்ற பெயரால் அழைக்கலாம். ஆயினும், புலவர் என்ற இச்சொல், நெடுங்காலத்திற்கு முன்பே தமிழ்க் கவிஞர்களுக்குச் சிறப்புப் பெயராக வழங்கி வந்தது. இன்றும், இலக்கியம் படித்தவர்கள் பண்டை இலக்கியம் படித்தவர்கள் தங்களைப் புலவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகின்றனர். சங்கம் பற்றிய கதை தமிழகத்திலே, பல்லாண்டுகளுக்குமுன், முறையே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக ஒரு கதை வழங்குகின்றது. முதலில் இருந்த சங்கம் முதற் சங்கம். அது மறைந்தபின் தோன்றிய சங்கம் இடைச் சங்கம், அதுவும் மறைந்தபின் தோன்றிய சங்கம் கடைச் சங்கம். கடைச் சங்கம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்று நம்புகின்றனர். இச் சங்க காலங்களில் இருந்த தமிழ்ப் பண்டிதர்கள் சங்கப் புலவர்கள் என்று அழைக்கப் பட்டனர். இச் சங்கங்கள் இருந்தனவா என்பதைப் பற்றியே கருத்து வேற்றுமையுண்டு. இச் சங்கங்களைப் பற்றிச் சொல்லப்படும் கதை, சரித்திரம் போலக்காணப்படவில்லை ஒரு கட்டுக் கதை போலத்தான் காணப்படுகின்றது. இச்சங்கங்களின் கதையை இறையனார் அகப்பொருள் என்ற நூலின் உரையிலே காணலாம். சிலப்பதிகார உரையிலும் காணலாம். சங்கங்கள் இருந்தது உண்மையாகவே இருக்கட்டும்; அல்லது ஒரு கட்டுகதையாகவே இருக்கட்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்களைச் சங்கநூல்கள் என்று அழைக்கின்றோம்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ப்புலவர்களைச் சங்கப் புலவர்கள் என்று சொல்லு கின்றோம். இது இன்று நடைமுறையில் உள்ள செய்தி. சங்கப் புலவர்கள் சங்கப் புலவர்கள் என்போர் பாடியதாக வழங்கும் பல பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவர்களுடைய பாடல் களிலே பெரும்பாலானவை அகப்பொருள் தழுவிய பாடல்கள். அகப் பொருள் தழுவிய பாடல்கள் என்றால், ஆண் பெண் ஒன்று சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையைச் சித்திரித்துக் காட் டும் பாடல்கள் காதலை விளக்கும் பாடல்கள் என்றும் கூறலாம். ஆனால் இன்று காதல் என்பதன் பெயரால் பலரால் எழுதப்படும் வறட்டுப் பாடல்களைப் போன்றவை அல்ல அவை. மனிதப் பண்பு, வாழவேண்டிய முறை, ஆண் பெண் ஒழுக்கம், பின்பற்றவேண்டிய வாழ்க்கை முறை இவை போன்றவைகளைப் போதிக்கும் காதற்பாடல்கள் அவை. சங்கப் புலவர்கள் பாடல்களிலே புறப்பொருள் பற்றிய பாடல்கள் குறைவுதான். புறநானூறும், பதிற்றுப்பத்தும் தான் புறப்பொருள் பற்றிய பாடல்களைக் கொண்டிருக்கின்றன. புறப் பொருள் என்பது, அரசியல், நீதி, போர், சமாதானம், ஆட்சி முறை, உழவு, தொழில் போன்ற இவைகளைப் பற்றியெல்லாம் சொல்வது. சங்கப் புலவர்களின் புறப்பொருள் பற்றிய பாடல்களை ஆராயும் போது, அப்புலவர்களின் மனப்பாங்கை அறியலாம். அப்புலவர்கள், உண்மையாகவே மக்கள் நலத்தை நாடும் அறிவுள்ளவர்களாக நடந்து கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு யாரால் தீங்கிழைக்கப்பட்டாலும் புலவர்கள் அவர்களை அணுகுவார்கள்; அஞ்சாமல் அறிவுரை கூறித்திருத்துவார்கள். இப்பணியிலே அவர்கள் ஈடுபட்டிருந்தனர். பண்டைக் காலத்திலே இந்நாட்டிலே மன்னர்களின் ஆட்சி தான் நிலைத்திருந்தது. மன்னனே மக்களை அடக்கி ஆளும் சர்வாதிகாரம் படைத்திருந்தான். ஆனால் மன்னன் மக் களின் நலம் கருதாத சர்வாதிகாரியாக நடந்துகொள்ள முடியாது. அக்காலத்திலிருந்த புலவர்கள் இதற்கு இடந் தரவில்லை, தவறு செய்யும் ஆற்றல் மன்னனைத் தடுத்து நல்வழியிலே நடக்கச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தனர். இதற்குக் காரணம், புலவர் களிடமிருந்த நேர்மையும், உறுதியும், தந்நலம் பேணாத தன்மையும், அஞ்சாமையுந்தான்,. இதற்குச் சில சான்றுகளைக் காண்போம். ஆண்மையுள்ள புலவர்கள் நரி வெரூஉத்தலையார் என்பது ஒரு புலவர் பெயர். இவர் ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என்ற மன்னனுக் குக் கூறியிருக்கும் அறிவுரை குறிப்பிடத்தக்கது. நீஒர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரியம் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி! அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே நீ வீரத்திலும், செல்வத்திலும் ஒப்பற்றவன்: ஆதலால், நீ ஒருக்கடைந்து தவறு செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற் காக உனக்கு ஒன்றைச் சொல்லுகின்றேன். அருளும் அன்பும் அல்லாமல், நீங்காத நரகத்திற்குச் செல்லத்தக்க பாவச் செயல் களை செய்வோர் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களுடன் நீ சேராதே; இவர்களுடன் சேர்ந்தால் நீயும் கெடுவாய்; உனது ஆட்சியும் கெடும். ஆதலால், குழந்தையைப் பாதுகாப்பவரைப் போல மிகவும் கருத்துடன் உனது நாட்டைப் பாதுகாப்பாயாக. இதுதான் நீ மனமிரங்கிச் செய்யவேண்டிய ஆட்சிமுறை. இது செய்வதற்கரிய செயலாகும் இதுதான், புலவர் அரசனுக்குக் கூறிய அறிவுரையாகும்; ஆட்சியாளர் அநீதி செய்யாமல் தடுக்கும் இத்தகைய ஆண்மை யுள்ள புலவர்கள் இக்காலத்தில் எத்தனை பேர்? உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் ஒரு புலவர். இவர் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறிய பாட்டு ஒன்று உண்டு. கொடியோர்த் தெறலும் செவ்வியோர்க்கு அளித்தலும் ஒடியா முறையின் மடிவிலை யாகி நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் உனது கடமை கொடியோரைத் தண்டிப்பதும், நல்லவர் களைக் காப்பதும் ஆகும்; இந்த நீதியிலே தவறு ஏற்படாமல் சோம்பல் இன்றி நடந்து கொள். இக்கடமையை நீ நிறைவேற்ற வேண்டுமானால் கெட்டவர்களுடன் நட்புக் கொள்ளாதே. நல் வினையால் நன்மையில்லை; தீவினையால் தீமையில்லை என்று விதண்டாவாதம் பேசுவோர் உண்டு; இவர்கள் கூட்டத்தில் தொடர்பு கொள்ளாமல் வாழ்க! இப்படி அரசனுக்கு அறி வுரை சொல்லிய புலவரின் பண்பும் பணியும் பாராட்டத்தக்கவை யன்றோ? மருதன் இளநாகனார் என்ற மற்றொரு புலவர். அவர் படைகளின் மிகுதியால் களித்து நின்ற பாண்டியன் கர்வத்தை மட்டந்தட்டப் பின்வாங்கவில்லை. அப் பாண்டியன் பெயர், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன். என்பது. கடுஞ்சினத்த சொல்களிலும், கதழ்பரிய கலிமாவும் நெடும் கொடிய நிமிர்தேரும் நெஞ்சு உடைய புகன் மறவரும் என நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் கடுமையான கோபத்துடன் பகைவரைக் கொல்லும் யானைப்படை, விரைந்து செல்லும் குதிரைப்படை, நீண்ட கொடியையுடைய பெரிய தேர்ப்படை, அஞ்சாமையும், போ ரென்றால் மகிழ்ச்சியடையும் தன்மையும் உள்ள காலாட்படை, ஆகிய நான்கு படைகளும் சிறந்திருக்கலாம். இப்படை பலத்தால் மட்டும் அரசாட்சி வெற்றிகரமாக நடக்க முடியாது. சிறந்த அற நெறியை அடிப்படையாகக் கொண்டால்தான் அரசாட்சி வெற்றிகரமாக நடைபெறும். இது படைச் செருக்கால் இறுமாந்து நின்ற மன்னனுக்குப் புலவர் கூறிய அறிவுரை. மேலே காட்டிய மூன்று புலவர்கள் பாடல்களையும் பார்க் கும்போது பண்டைக்காலப் புலவர்களின் தன்மையும் சிறப்பும் விளங்கும். அரசாட்சி அறநெறியிலே நடந்தால்தான், மக்கள் மனங் கலங்காமல் வாழமுடியும். இந்த நம்பிக்கை பண்டைக் காலப் புலவர்களிடம் இருந்தது. தங்கள் கல்வியையும் புலமைத் திறத்தையும் அவர்கள் மக்கள் நன்மைக்காகவே பயன்படுத்தினர். நாடும், மக்களும் சீர்குலைந்தால், நாமும் வாழ முடியாது. நமது புலமைக்கும் வேலையில்லை என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தனர். போலிப் புலவர்கள் பண்டைக் காலப் புலவர் பரம்பரையினர் நாங்கள்; என்று சொல்லிக் கொள்ளும் இந்தக் காலப்புலவர்கள் சிலர் போக்கு நமக்கு வியப்பைத் தருகின்றது. மக்களின் அன்றாட வாழ்க்கைத் துன்பத்தைப் பற்றிக் கவலை கொள்ளுவதில்லை. தங்கள் சொந்தக் குடும்பத்தைப் பற்றி மட்டுந்தான் கவலை கொள்ளு கின்றனர். இன்றைய ஆட்சி, பொதுமக்களின் வாழ்வைப்பற்றிக் கவலைப்படாத, சுரண்டல்காரர்களைத் துணை கொண்டிருக் கின்றது. மக்களை மதிக்காத மமதை பிடித்த அதிகாரவர்க்கத் தையே ஆதரவாக நம்பி நிற்கின்றது. உணவுப் பண்டங்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்றது. மக்கள் வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வு வறுமையையும் பிணியையும் துன்பத்தையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையைப் பற்றிப் புலவர் களிலே பலர் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. நாட்டுக்குத் தொண்டு செய்யும் இளைஞர்களின் தூய உள்ளத்திலே நஞ்சூட்டுவதையே பல புலவர்கள் தங்கள் தொழி லாகக் கொண்டிருக்கின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாய்பாடு படிக்கும் புலவர்களில் பலர், இவ்வாக்கியத் திற்கும் விரோதமாகவே நடந்து வருகின்றனர். மொழிவெறுப்பு, இனவெறி, நாட்டுப் பகைமை ஆகிய சேற்றைப் பூசிக்கொண்டு திரியும் புலவர்களிலே பலர், இச் சேற்றை இளைஞர்களின் உள்ளங்களிலும் அள்ளி அப்புகின்றனர். இன்றைய புலவர்களிலே பலருடைய செயல்கள், வறுமைப் பிணிப்பிலிருந்து மக்களை விடுதலை செய்யும் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாகவே அமைந்திருக்கின்றது. இவர்கள் புலவர்களா? இவர்களுக்குப் பழந்தமிழ்ப் புலவர்களைப் பற்றி பேசத் தகுதியுண்டா? படித்த- படிக்கின்ற இளைஞர்கள் இதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நேர்மையும், நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்ட புலவர்கள் இதைப்பற்றி நினைத்துப்பார்க்கவேண்டும். சிந்தித்துப் பார்தால், நினைத்துப்பார்த்தால். உண்மை உதயமாகாமல் போகாது. கிணற்றுத் தவளைப் புலவர்கள் இத்தகைய புலவர்கள் உண்டா? இவர்கள் யார்? எங்கே யிருக்கின்றனர்? இவர்களை நாங்கள் பார்த்ததில்லையே! என்று சிலர் கேட்கலாம். இத்தகைய புலவர்கள் உண்டு. இத்தகைய புலவர்கள் யார் என்பதைப் பற்றிப் பண்டைப்புலவர் ஒருவர் செல்லியிருக்றார்; இவர்களைப்பற்றி ஒரு செய்யுளைச் செய்து வைத்திருக்கிறார். அச்செய்யுள் இன்றும் அழியாமல் நின்று நிலவுகின்றது. யார் கிணற்றுத் தவளைப் புலவர்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு முன் சில விஷயங்களைச் சிந்திப்போம். கண்டது கற்க கண்டது கற்கப் பண்டிதர் ஆவர் என்பது ஒரு பழமொழி. இது தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக வழங்கி வரும் முது மொழி. இப் பழமொழி விரிவான பொருளைக் கொண்டது. எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் குணாகுணங் களை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஆராய்ச்சியினால், பார்த்துப் படிக்கும் கல்வியினால் பல உண் மைகளைத் தெரிந்துகொள்ளலாம். எந்த நூலாயினும் சரி, எதைப்பற்றிச் சொல்லும் நூலா யினும் சரி, அதை வெறுக்காமல் படிக்கவேண்டும்; படித்து அதன் உண்மைப் பொருளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பலதிறப்பட்ட நூல்களையும் படித்தால்தான் பல வகையான கருத்துக்களைக் காண முடியும். பலவிதமான கருத்துக் களையும் சீர்தூக்கிப் பார்த்து- ஒப்பிட்டு ஆராய்ந்து- உண்மை யான கொள்கைகள் எவை, போலிப் புரட்டுப் பொய்மொழிகள் எவை என்பதை உணர முடியும். இப்படி உண்மையைக் கண்டுணரும் அறிவு படைத்தவர் களே பண்டிதர் ஆவார்; பாண்டித்தியம் உள்ளவர் ஆவார்; உண்மை காணுவதில் தேர்ச்சிபெற்றவர் ஆவார். இவ்வாறு பரந்த பொருளைக் கொண்டதே மேற்கூறிய பழமொழி. இதே கருத்தமைந்த மற்றொரு நீதியுரையும் உண்டு. களவும் கற்று மற என்பதுதான் அந்த நீதி. இது ஔவை யார் மொழி. சிறுவர்களும் இந்த நீதியைப் படிக்கின்றனர். ஆனால் இத்தொடரின் பொருளைச் சரியாக யாரும் சொல்வ தில்லை; பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. இதற்கு ஏதேதோ பொருள் சொல்லிவருகின்றனர். களவும் கற்று மற என்ற தொடரின் உண்மைப் பொருளைக் காண்போம். களவுநூல் களவு நூல் என்ற பெயருடன் தமிழில் ஒரு நூல்வழங்கி வந்தது. இந்நூலைப் பற்றிச் சிலப்பதிகார உரையிலே கூறப்படு கின்றது. இந்தக் களவுநூலிலே திருடர்களின் திறமைகள், திருடு வதற்கு அவர்கள் செய்யும் தந்திரங்கள், திருடும்போது, ஒருவர் கையிலும் அகப்படாமல் இருப்பதற்கு அவர்கள் கையாளும் முறைகள். தம்மைத் திருடர்கள் என்று சந்தேகிக்காமலிருக்கும் படி அவர்கள் நடந்துகொள்ளும் விதம், மிகவும் பாதுகாப்புள்ள இடத்தில் வைத்துள்ள பண்டங்களையும் எப்படிக் களவாடு வார்கள் என்பன போன்ற விஷயங்களை யெல்லாம் அந் நூலிலே காணலாம். இந்தக் களவுநூலைத் திருடர்களைப் பிடிக்கும் காவலர் கள் கற்றிருந்தனர். திருடர்களைக் கண்டுபிடிப்போருக்கு, அவர் களைக் கண்டறிந்து பிடிப்பதற்காக இந்த நூல் பயிற்சி அவசிய மாகவும் இருந்திருக்கின்றது. இந்த நூலைப் பயின்றவர்களால் திருடர்களை எளிதிலே கண்டுவிட முடியும். ஆனால் திருட்டுக் கும்பலைக் கண்டுபிடிப்பதற்காக இந் நூலைக் கற்றவர்கள், விரும்பினால் திருடவும் கற்றுக்கொள்ள லாம். களவுநூலைக் கற்காதவர்களைவிடத் திறமையாக- ஒரு வரும் தமது திருட்டைக் கண்டுபிடிக்க முடியாதபடி, சாமர்த்திய மாகத் திருடவும் செய்யலாம். ஆயினும், காவலர்களுக்கு- - ஊர்க் காவலர்களுக்கு- மக்களுடைய பண்டம் திருட்டுப் போகாமல் பாதுகாக்கும் துறையில் வேலை செய்யும் அரசாங்க அலுவலர் களுக்கு- அக்காலத்தில் களவுநூற் கல்வி அவசியமாக இருந்தது. இந்த நூல் பயிற்சியைக் குறிப்பிடுவதுதான் களவும் கற்று மற என்ற தொடர். களவுநூலையும் விலக்காதே; படித்துக் கொள்; ஆனால் திருடுவதை மறந்துவிடு; திருட்டுத் தொழில் செய்யாதே என்பதுதான் இத்தொடரின் பொருள். பல நூல் களையும் கற்கவேண்டும் என்னும் கருத்துள்ளது, களவும் கற்று மற என்பது. கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்ற பழமொழி யின் கருத்தோடு இணைந்துதான், கனவும் கற்று மற என்பதும். பலநூல் பயிற்சி வாழ்க்கைத் துறையிலே முன்னேற விரும்புவோர் பல நூல் களையும் கற்கவேண்டும் தமது தாய்மொழியிலே உள்ள நூல் களை மட்டும் படித்தால் போதாது; வேறு மொழிகளில் உள்ள நூல்களையும் படித்தறிய வேண்டும். இதன் பொருட்டு வேறு பல மொழிகளையும் தமது சக்திக்கு இயன்றவரையில் கற்றுக் கொள்ள வேண்டும். பல நூல்களையும் கற்றவர்கள்தாம் தமது தாய்மொழி வளர்ச்சிக்குப் பணி செய்ய முடியும்; தாய்மொழியிலே சிறந்த கருத்துள்ள நூல்களை எழுதித் தாய்நாட்டு மக்கள் அறிவை வளர்க்கத் துணை செய்ய முடியும். பல மொழிகளையும், பல நூல்களையும் கற்றவர்கள் தான் பரந்த நோக்கம் உள்ளவர்களாக வாழ முடியும்; யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று நினைக்கும் உயர்ந்த தமிழ் உள்ளம் இவர்களிடந்தான் நிலைத்திருக்கும். இதற்காகவே தான் பல நூற் படிப்பு வேண்டும். பல மொழிப் பயிற்சி வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினர். குறுகிய புத்தி படைத்தவர்கள் யாருக்கும் பயன்பட மாட்டார்கள்; அவர்களால் நாட்டுக்கோ, சமூகத்துக்கோ எப்பயனும் உண்டாகாது. சின்ன புத்தி படைத்தவர்கள் சமுதாய ஒற்றுமைக்கு உலைவைப்பவர்களாகத்தான் இருப்பார்கள். சாதி, மத, மொழி, இன வெறிகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டு தேசத்தின் ஒற்றுமையைச் சீர்குலைப்பார்கள். பல மொழி, பலநூல் பயின்றவர்களிலும் சிலர் இப்படி இருப்பார் களானால் அவர்களைத் தன்னல வெறியர்கள் என்று தான் சொல்லவேண்டும். தமிழகத்துப் பழம்பெரும் புலவர்கள் எல்லோரும், பல நூற் பயிற்சி உள்ளவர்கள்; பல மொழி பயின்றவர்கள். ஆகை யால் தான் அவர்களால் இன்னும் நாம் போற்றக் கூடிய பல அரிய நூல்களைச் செய்து வைக்க முடிந்தது; சிறந்த கவிதை களைப் பாடிவைக்க முடிந்தது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடியிருக்கும் பக்திப் பாடல்களைப் படித்தவர்கள் அவர்களுடைய பரந்த அறிவைக் காணலாம்; அவர்கள் வடநூல்களையும், தமிழ் நூல்களையும் கற்றவர்கள் என்பதைக் காணலாம். கம்பர் தமிழைப் போலவே வடமொழியிலும் வல்லமை யுள்ளவர். அதனால்தான் அவரால் அழியாத பெருமையுள்ள இராமகாதையைப் பாட முடிந்தது. வள்ளுவர் பல நூல்களைப் பயின்றவர்; பல மொழிப் பயிற்சியும் அவருக்குண்டு. அதனால் தான் உலகம் போற்றும் உயர்ந்த குறளைப் பாட முடிந்தது. சிலப் பதிகார, மணிமேகலை ஆசிரியர்கள் சிறந்த பல நூல்களைப் படித்தவர்கள். தமிழிலே வேதாந்த, சித்தாந்த தத்துவ நூல்களை எழுதி யவர்கள் அனைவரும் பரந்த நூல் பயிற்சியுள்ளவர்கள்; தமிழ் மொழியோடு வேறு மொழிகளையும் படித்தவர்கள். ஆகவே, சிறந்த பல நூலாசிரியர்கள் எல்லோரும் பலநூற் பயிற்சி உள்ளவர்கள், பல மொழி பயின்றவர்கள் என்பதைக் காணலாம். படிப்புக்குத் தடை பல நூற்களையும் கற்பதே அறிவு வளர்ச்சிக்கு வழி என்ற உண்மையைச் சிலர் மறந்தனர். இவர்கள் அறிவு வளரவேண்டும் என்பதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள். நூலைப் பயில்வதால்- பாட்டைப் படிப்பதால்- செத்தபின் சிவலோகம் கிடைக்க வேண்டும். அல்லது வைகுந்தம் சேர வேண்டும் என்று எண்ணு கின்றவர்கள். இவர்கள், படித்தால் புண்ணியம் உண்டு என்ற நம்பிக்கை யுடன் ஒரே நூலைப் பாராயணம் செய்யத் தொடங்கினர். இன் னும் நாள்தோறும் வேறு நூல்களைத் தொடாமல்- படிக்காமல்- திருவாசகத்தை மட்டும் பாராயணம் செய்வோர் உண்டு; திரு முருகாற்றுப்படை மட்டும் படிப்போர் உண்டு; திருவாய்மொழி ஓதுவோர் உண்டு; திருப்பல்லாண்டு பாடுவோர் உண்டு இவர் கள் கல்விப் பயிற்சியைப் பற்றிக் கவலைப் படாதவர்கள். தங்கள் மறுமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆனால் மக்களிடையிலே கல்வி பரவவேண்டும் என்று பேசுகின்றவர்களிலே சிலரும் குறுகிய நோக்கம் படைத்திருப் பது தான் வியப்புக்குரியது; பரந்த நூற்பயிற்சி பரவுவதற்குத் தடையாயிருப்பதுதான் ஆச்சரியம். சிலர், திருக்குறள் ஒன்றுதான் வாழ்க்கைக்கு வழி காட்டுவது; அது ஒன்றைப் பயின்றாலே போதும்; அதில் எப் பொருளும் உண்டு என்று சொல்லி வருகின்றனர். மற்றுஞ் சிலர், சிலப்பதிகாரமே சிறந்த காவியம்; அதற்கு நிகரான காவி யமே இல்லை; அது ஒன்றைப் படித்தாலே போதும் என்று சொல்லி வருகின்றனர், இவர்களிலே சிலர் மறந்தும்கூடக் கம்பரைப்பற்றிக் குறிப் பிடுவதே இல்லை; காவியச் சோலையாகிய கம்பராமாயணத் தைப் படியுங்கள் என்று சொல்லுவதேயில்லை. இதற்கு மாறாகக் கம்பனைத் தமிழ்த் துரோகி என்றுகூடப் பேசுகின்றனர். இப்படி எண்ணுகின்றவர்கள், பேசுகின்றவர்கள் தமிழுக்கோ, தமிழர் களுக்கோ, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கோ உதவி செய்பவர்கள் அல்லர்; தமிழர்களின் அறிவை அகலமான அறிவுச் சாலையிலே ஓடவிடாமல் தடுத்து, குறுகிய முட்டுச் சந்திலே திருப்பிவிடுகின் றவர்களே ஆவார்கள். இத்தகைய மக்கள் பண்டைக் காலத்திலும், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னும் தமிழகத்தில் இருந்திருக்கின்றனர். அவர்களைக் குறித்துத்தான் பழமொழியென்னும் நூலிலே ஒரு பாடல் காணப்படுகின்றது. ஒரே நூலில் எல்லாம் இருக்கின்றது என்று சொல்லி, அதையே நாள் முழுவதும் படித்துக் கொண்டி ருப்பவர்களைத் தான் அவ்வாசிரியர் கிணற்றுத் தவளைகள் என்று குறிப்பிட்டுள்ளார். அத்தகையவர்களைத் தான் நாமும் கிணற்றுத் தவளைப் புலவர்கள் என்று தலைப்பிலே குறிப்பிட் டோம் அந்தப் பழமொழிப் பாட்டையும் அதன் பொருளையும் கீழே காண்போம்; உணற்கினிய இந்நீர் பிறிதுழி இல் என்னும் கிணற்றகத்துத் தவளைபோல் ஆகார்- கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிதுஓதிக் கற்றலின் கேட்டலே நன்று என்பதுதான் அப்பாடல். கிணற்றுக்குள்ளேயே வாழும் தவளைக்கு, வேறு தண்ணீ ரைப்பற்றியே தெரியாது. தான் வாழும் கிணற்றுநீர் உப்புக் கலந் ததாயினும் அதையே உண்ணுதற்குச் சுவையுள்ள நீர் என்று சொல்லும்; இதைப் போன்ற இனிய நீர்வேறு எங்குமே இல்லை என்று சொல்லும். நூல் கற்பவர்கள் கிணற்றுத் தவளைபோல் ஆகக் கூடாது. ஒரு நூலையே நாள் முழுவதும்- ஆயுள் முழுவதும்- வெறுக்காமல், தான் படிக்கும் நூலைப்போல உயர்ந்த நூல் உலகத்திலேயே இல்லையென்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதனால் புலமை பெற்றுவிட முடியாது; அறிவு வளர்ந்து விடாது. இப்படி ஒரு நூலையே நாள் முழுவதும் எழுத்தெண்ணி உருப்போட்டுக் கொண்டிருப்பதை விட, பல நூல்களையும் படித்தறிவதுதான் சிறந்தது; அறிவு- புலமை ஊறுவதற்குத் துணை செய்வதாகும். பல நூல்களைப் படிக்க முடியாவிட்டாலும், பல மொழிகளில் உள்ள நூல்களைப் படித்தறியக்கூடிய மொழிப் பயிற்சி இல்லாவிட்டாலும், பல நூல்களைப் படித்தவர் சொல்லக் கேட்டாலே போதுமானது. பல மொழி இலக்கியங்களையும் அவற்றைக் கற்றோரிடமிருந்து கேட்டறிந்தாலே போதும். இது, பல நூல் பயிற்சியாகும். சிறந்த நூலையே படித்துப் பாராட்டிக் கொண்டிருப்பதைவிட இதனால் புலமை பெருகும்; பரந்த மனம் உண்டாகும். பலருடன் ஒத்துப் பழகும்- வாழுந்தன்மை யுண்டாகும்! இதுவே மேலே காட்டிய உணற்கினிய இந்நீர் என்று தொடங்கும் பழமொழிப் பாட்டின் பொருளாகும். கணக்காயர் கணக்கு என்பது நூல்; இலக்கியம்; நூல்களைப் படித்த றிந்தோர்- படித்தறிவோர்- கணக்காயர். கணக்கை ஆராய்வோர் கணக்காயர். இதனால்தான் படிப்புச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்குக் கணக்காயர் என்று பெயரிட்டு அழைத்தனர் முன்னோர். பலதுறைப்பட்ட கலைகள், சாத்திரங்கள் நமது தமிழகத் தில் தோன்றவேண்டுமானால் படிப்போர் அனைவரும் பல நூல்களையும் படிக்கவேண்டும்; பல மொழிகளையும் படிக்க வேண்டும்; கிணற்றுத் தவளைபோல் வாழக்கூடாது. மேலே காட்டிய பழமொழிச் செய்யுளைத் தமிழர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் போதும். குறுகிய நோக்கம் உள்ளவர்களும் இச்செய்யுளைப் படிப்பார்களானால், இதன் பொருளைச் சிந்திப்பார்களானால் பரந்த உள்ளத்தைப் பெறு வார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆதலால் கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலில் கேட்டலே நன்று என்பதை மறக்கவேண்டாம். உண்மைப் புலவன் பாரதியைப்போல் மற்றொரு புலவரை நாம் பார்க்க முடியாது. பாட்டுக்கொரு புலவன் பாரதியடா என்ற கவி மணியின் வாக்கு என்றும் அழியாதது. பாட்டுக்கு மட்டும் என்ன? கருத்துக்கும் கவி பாரதியே எடுத்துக்காட்டு. தன்னுடைய புகழுக்கு மட்டும் - தன்னுடைய பிழைப்புக்கு மட்டும்- தன்னுடைய இன்பவாழ்வுக்கு மட்டும்- பாடுபடுகின்ற வன் புலவன் அல்லன்; கவிஞன் அல்லன். எனது நாடு, மொழி. எனது நாட்டுமக்கள் எல்லாம், எல்லோரும் துன்பச் சிறையி லிருந்து விடுபடவேண்டும் என்று நினைக்கிறவனே புலவன்; கவிஞன். இப்படி நினைக்காதவன் அறிவுள்ளவனாகக் கருதப்பட மாட்டான். புலமை- அறிவு; புலவன்- அறிவுள்ளவன். தமிழ்நாட்டிலே கம்பனுக்குப் பின்னால் தோன்றிய புலவர் களிலே நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் தமிழுக்காகத் தமிழைப் படித்தவர்கள் அல்லர்; வயிற்றுப் பிழைப்புக்காகவே தமிழைக் கற்றவர்கள். இவர்கள் பெரும்பாலும் நிலச்சுவான்தார்கள்மேல், சிற்றரசர்கள் மேல் பாட்டுப்பாடி வயிறு வளர்த்து வந்தார்கள். இவ்வாறு இவர்கள் பாடிய பாடல்கள் தனிப்பாடல்களாகவும், கோவை, உலா, அந்தாதி, தூது, மடல், கலம்பகம் போன்ற பல நூல்களாகவும் காணக் கிடைக்கின்றன. இவைகள் கோபுரம் போல் குவிந்து கிடக்கின்றன. இந்தப் புலவர்களிலே பலர் இவை போன்ற நூல்களைத் தெய்வங்களின் மேலும் பாடியிருக்கின்றனர். போற்றினும் போற்றுவர், பொருள் கொடாவிடின் தூற்றினும் தூற்றுவர், சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் வண்க ணாளர்கள் கூற்றினும் பாவலர் கொடியர் ஆவரே என்ற வசைமொழிக்கு ஆளான புலவர்கள்தாம், கம்பர் காலத் திற்குப் பின்னே, பாரதியார் காலத்திற்கு முன்னே தமிழகத்தில் நிறைந்து கிடந்தனர். புலவர்கள் என்றால் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பிறந்தவர் பாரதியார். அவர் தம் காலத்து மக்களுடைய குறைகள் எல்லாவற்றிலும் கவலை காட்டினார். சமுதாயத்திலே அழுத்தப்பட்டிருக்கும் அத்தனை மக்களும் விடுதலை பெற வேண்டும் என்றே அவர் ஆத்திரப் பட்டார். மக்களுடைய துன்ப துயரங்கள் அவரை ஆட்டி அலைக்கழித்தன. பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், உழவர்கள், தொழி லாளர்கள். மூடநம்பிக்கையில்- அறியாமையில்- மூழ்கியிருப் போர் அத்தனை பேரும் சுதந்தரத்திலே மிதக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அத்தனை பேரைப் பற்றியும் ஆவேசமாகப் பாடினார்; உள்ளத்திலே பதியும் படி உணர்ச்சி யுண்டாகும் படி பாடினார்; அவர்களையெல்லாம் தட்டி யெழுப்பினார். பாரதியார் காலத்திலே நமது நாட்டு மக்களை இரண்டு ஏகாதிபத்தியங்கள் நசுக்கிக்கொண்டிருந்தன. ஒன்று வெள்ளைக் கார ஏகாதிபத்தியம்; மற்றொன்று மக்களுடைய அறிவுக்கு விலங்கிட்டிருந்த புரோகித ஏகாதிபத்தியம். இந்த இரண்டு ஏகாதிபத்தியங்களையும் ஒரேமூச்சில் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதே அவர்எண்ணம். இதை உள்ளத்தில் கொண்டு தான், பார்ப்பானை ஐயர்என்ற காலமும் போச்சே- வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே! என்று பள்ளும் பாடினார். புரோகித ஏகாதிபத்தியத்தின் தலைவனாகப் பார்ப்பானைக் குறித்தார். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தலைவனாக வெள்ளைக் காரனைக் குறித்தார். பாரதியாருக்குத் தமிழிலும், தமிழ் நாட்டி லும் அளவு கடந்தபற்று. தமிழ்மொழியைப் பற்றி அவர் பாடி யிருக்கும் பாடல்களும் தமிழ்நாட்டைப் பற்றி அவர் பாடியிருக் கும் பாடல்களுமே இவ்வுண்மையை வெளிப்படுத்தும். தமிழுக் காகவே அவர் தமிழைப் படித்தார். பாரதியின் பாப்பா பாட்டு ஒன்றே அவருடைய தமிழ்ப் பற்றுக்குப் போதுமானதாகும். பாப்பா பாட்டு எளிய இனிய பாட்டு; குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டிய பாட்டு. ஓடி விளையாடு பாப்பா! - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! கூடி விளையாடு பாப்பா! - ஒரு குழந்தையை வையாதே பாப்பா! நெஞ்சை அள்ளும் நிகர் அற்ற பாட்டு. எல்லோருக்கும் புரியும் எளிய சொற்கள். அகராதியைப் புரட்டிப் பார்த்து அர்த் தம் கண்டுபிடிக்கவேண்டிய சொற்கள் ஒன்று மேயில்லை. இப்படிப்பட்ட எளிய இனிய பாட்டிலே பொதிந்து கிடக்கும் பொருளைப் பாருங்கள். குழந்தைகளுக்குச் சோம்பல் கூடாது; சுறுசுறுப்பு வேண்டும்; துறுதுறுவென்று எதையாவது செய்துகொண்டிருக்கும் குழந் தைகள்தான் பிற்காலத்தில் பெரிய காரியங்களைச் சாதிக்கும் பெரியவர்களாக முடியும். இது இயற்கையுண்மை. இவ் வுண்மையை உள்ளத்தில் கொண்டுதான், சும்மா சோம்பிக் கிடக்காமல் ஓடி விளையாடு பாப்பா என்று உரைக்கின்றார். நீ ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்று மேலும் குழந்தையின் முதுகிலே தட்டியெழுப்புகின்றார்; ஓடி ஆட விடுகின்றார். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒற்றுமை உணர்ச்சி வளர வேண்டும். பச்சைக் குழந்தைகளின் உள்ளத்திலே நம்மைப் பாழாக்கிய சாதி மத பேத வேற்றுமைகள் பதியக் கூடாது. எல்லா மக்களும் ஒன்றே என்ற எண்ணம் குடிகொள்ளவேண்டும். அப் பொழுதுதான் எதிர்கால மனித சமுதாயத்தில் ஒற்றுமை தழைத் தோங்கும்; இன்ப வாழ்வு நிலவும்- என்பது பாரதியார் எண்ணம். ஆகையால்தான், நீ எல்லாக் குழந்தைகளுடனும் கூடி விளையாடு என்று கூறினார். அப்படிக்கூடி விளையாடும் போது ஒரு குழந்தையுடனும் சண்டை போடாதே; தப்பித் தவறிக் குற்றஞ் செய்யும் குழந்தைகளையும் வையாதே; எல்லாக் குழந்தைகளோடும் அன்பாகப் பேசு என்பதற்காகவே, நீ ஒரு குழந்தையையும் வையாதே என்று அன்பாக கூறினார். மேலும் பாருங்கள், எவ்வளவு சிறந்த நீதிமொழிகள்: சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா! என்று தமிழ்மொழியின் உயர்வைக் குழந்தைகளுக்குக் கூறினார்; இளமைப் பருவத்திலே இன்பத் தமிழின் சிறப்பை இசையுடன் புகட்டுகின்றார். தமிழ்த் திருநாடு தன்னைப் - பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா! என்று நாட்டுப் பற்றையும் குழந்தைகளின் உள்ளத்திலே தீட்டு கின்றார். இவ்வாறு, ஒற்றுமையுள்ளம், தாய்மொழிப் பற்று, தாய் நாட்டுப் பற்று இவைகளைப் போதிப்பதோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை; வாழ்க்கையிலே சிறந்து வாழ்வதற்குத் தோழனாக நின்று துணைசெய்யும் வீர உணர்ச்சியையும் ஊட்டு கின்றார்; பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! இதுவும் குழந்தைகளுக்குக் கூறும் வீரவுரை. பாரதியாரின் பாப்பா பாட்டுக்கு நிகராக வேறு ஒன்றுமேயில்லை. படிப்பவர் களின் உள்ளத்தைத் தொடும் பாட்டுக்களிலே பாப்பா பாட்டும் ஒன்று. பாரதி பாட்டிலே எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் இப்படித்தான் சொல்லத் தோன்றும். இதுதான் உயர்ந்த பாட்டுக்கு அடையாளம்; உயிருள்ள பாட்டின் இலக்கணம்; என்றும் மறையாமல் இவ்வுலகில் இயங்கும் பாட்டின் தன்மை. சுவர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப்பற்றியும் எத்தனையோ புராணங்கள் கூறுகின்றன பண்டைப் பெரும் புலவர்கள் எல்லாம், சுவர்க்கம் தனிப்பெரும் இன்பவுலகம், அது இவ்வுலகத்திற்கு வெகுதூரத்தில் எங்கோ வானத்தில் இருக்கின்றது; நரகம் ஒரு துன்ப உலகம். அதுவும் இவ்வுலகத்தில் இல்லை. வேறு எங்கோ இருக்கின்றது என்றுதான் எண்ணி வந்தனர்; எழுதியும் வைத்தனர்; சுவர்க்கமும் நரகமும் இவ்வுலகத்திலே உண்டு என்பது தான் பாரதியார் கருத்து. இக்கருத்தை அவர் ஒளிவு மறைவாக உரைக்கவில்லை; வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார். கவலை துறந்திங்கு வாழ்வதுவீ டென்று காட்டும் மறைகள் எல்லாம் இவ்வுலகத்தில் கவலையில்லாமல் வாழ்வதே மோட்சம்; அதுவே விடுதலை, அதுவே சுவர்க்கம். கவலைப் படுதலே கருநரகு அம்மா! வறுமையால், அடிமையால் கவலைப்பட்டு வாழ்வதே கொடிய நரகமாகும். இவ்வாறு மோட்சத்தைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினார். இவ்வளவு மட்டுமா? செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று எண்ணியிருப்போர் பித்த மனிதர்; அவர்சொல்லும் சாத்திரம் பேயுரை யாம்; என்று இங்கு ஊதேடா சங்கம் என்று அடித்துப் பேசுகிறார். செத்த பிற்பாடு சிவலோகம் கிடைக்கும், வைகுந்தம் கிடைக்கும் என்று நினைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்; அவர்கள் தங்கள் சொல்லுக்கு மேற் கோளாகக் காட்டும் சாத்திரங்கள் எல்லாம் அறிஞர்களின் வாய் மொழிகள் அல்ல; தந்நலம் கொண்ட பேயுரைகள். இச் செய்தியை உலகத்தார் எல்லாருக்கும் தெரியும்படி சங்கு முழக்கம் செய்து சொல்லுவாய்; சற்றும் அச்சமில்லாமல் அறி விப்பாய் என்று வீர முழக்கம் செய்கின்றார் பாரதியார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற எண்ணம் மக்கள் எல்லோர் மனத்திலும் படிந்துவிட்டால் போதும். பாரதியாரின் விடுதலைப்பாட்டை ஒவ்வொருவரும் மனப்பாடம் பண்ணிக்கொண்டால் இவ்வுலகத்தைச் சுவர்க்க மாகச் செய்துவிடமுடியும். பறையருக்கு விடுதலை, புலையருக்கு விடுதலை பரவருக்கு விடுதலை, குறவருக்கு விடுதலை, மறவருக்கு விடுதலை வேண்டும் என்று துள்ளிக் குதித்துப் பாடுகின்றார். ஏழை, அடிமை என்ற பேதம் இந்நாட்டிலே காலூன்றி யிருக்கக்கூடாது. இழிந்த மனிதர்கள் என்று சொல்லக்கூடியவர் கள் யாரும் இந்தியாவில் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமமான கல்வி வேண்டும் என்று வீராவேசத்துடன் பாடு கின்றார். மாதரை இழிவாக நடத்துவது மடத்தனம்; ஆண்களுக் குப் பெண்கள் அடிமையென்ற நிலை அழியவேண்டும் ஆணும் பெண்ணும் சமமாக வாழவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். இவைகளே அவர் விடுதலைப் பாட்டில் குறித்திருக்கும் செய்திகள். அவருடைய இக்கோரிக்கைகள் இன்னும் நிறைவேற வில்லை. சுதந்திர இந்தியாவில் செய்யவேண்டிய முதல் வேலைத் திட்டமாக இதை நமக்குக் கொடுத்திருக்கின்றார் பாரதியார் பாரதியாரை இன்று பல கோணத்திலிருந்து பார்க்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் கொள்கைக்கு உற்றதோழராக அவரைச் சித்திரித்துக் காட்டுகின்றனர். எந்தக் கோணத்தில் இருப்பவர்க்கும் பாரதி தன்கையைத் தூக்கி அபயங் கொடுக்கின்றார். இதுதான் உயர்ந்த- உத்தமமான - மக்களோடு இணைந்து அவர்களுடைய இன்ப துன்பங்களிலே பங்கெடுத்துக் கொண்ட- ஒரு புலவனின் தன்மை. அரசியல்வாதிக்கும் பாரதி துணை; இலக்கியக் காதலர் களுக்கும் பாரதி வழிகாட்டி; சமுதாயச் சீர்திருத்தக்காரர்களுக் கும் பாரதிதான் ஆசிரியர்; வேதாந்திகளுக்குப் பாரதி ஒரு எடுத்துக்காட்டு. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் திருவள்ளுவருக்குப் பின்னால் எல்லோராலும் போற்றக்கூடிய ஒரு புலவர் உண் டென்றால் அவர் பாரதியார் ஒருவர்தான். இதை விருப்பு வெறுப்பற்ற எவரும் மறுக்க முடியாது. நமது தானத்திலிருந்து பாரதியாரைப் பார்ப்பதை விட, பாரதியார் எந்த தானத்தில் அமர்ந்திருக்கின்றார் அவர் உட் கார்ந்திருக்கும் உறுதியான உயர்ந்த இடம் எது? என்று தெரிந்து கொள்ளுவது இன்னும் பெரும்பயனைத் தரும். இனிஒருவிதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் இதுதான் பாரதியாரின் முடிவான கருத்து. உலகத்தில் இந் நிலை ஏற்பட்டுவிட்டால் இவ்வுலகமே இன்பவுலகம். மோட்ச லோகம்; சுவர்க்கலோகம். அவர் தெய்வங்களை வேண்டிப் பாடும் பாடல்களிலும் இதைத்தான் கேட்கிறார்; இவ்வுலகின் இன்பத்தைத்தான் விரும்புகின்றார். இவ்வுலகத்தில் உள்ள அடிமைநெறிகள் அத் தனையும் மறையவேண்டும்; மக்கள் அனைவரும் மன மகிழ்ந்து ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே அவர் தெய்வங்களிடம் முறையிடும் வேண்டுகோள். பலவாறாகச் சொல்வானேன்? அவர் பாடல்களைப் படியுங்கள், அவைகளின் கருத்துக்களைச் சிந்தியுங்கள்- பாரதி எந்தக் கோணத்தில் அமர்ந்திருந்தார் என்ற உண்மை விளங்கும். இன்று தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சாதி வெறி, மொழி வெறி, இன வெறிகளை விரட்டுவதற்குப் பாரதியே நமக்குத் தலைமை தாங்கி நிற்பார் என்பதையும் நாம் உணர முடியும். ஜீவகவி; இயற்றிய கவியரசர் பத்தாண்டுகளுக்கு முன்னே கம்பன் பண்டிதர்களின் கைப் பாவையாக இருந்தான்; படித்த மக்களிலேகூட ஒருசிலர்தான் கம்பனுடைய கவித்தேனைப் பருகினார்கள்; ஒரு சில புலவர்கள் தான் கம்பராமாயணப் பிரசங்கம் செய்து வந்தார்கள்; படிப் பாளிகளிலும் சிலர்தான் அந்தப் பிரசங்களைச் சுவைத்து வந்தார்கள். ஆனால், கம்பன் ஒரு தமிழ்ப் புலவன் என்பது தமிழ் மக்கள் எல்லோருக்கும் தெரியும். நாட்டுப்புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் வாழும் மக்கள் கம்பனைப் பற்றிக் கதைகள் பல பேசுவார்கள். சிறுகுழந்தைகள் விளையாடும்போதுகூடக் கம்பனை இழுப்பார்கள். ஏதாவது ஒரு வேலையைச் செய்வதிலே இருவர்க் குள் போட்டி ஏற்பட்டால், ஒருவன், இது என்ன, கம்பச் சித்திர மோ? என்னால் செய்ய முடியாதோ என்று சொல்வான் இதே பழமொழியைக் கம்ப சூத்திரமோ என்று மாற்றிக் கூறுவதும் உண்டு. எப்படிக் கூறினாலும் சரி; இரண்டிலும் கம்பனுக்குச் சிறப்பு உண்டு. கம்பச் சித்திரமோ என்றால், கம்பன் சித்திரித்த கவியோ என்று பொருள். கம்ப சூத்திரமோ என்றால், ஆழ்ந்த பொருள் அடங்கிய கம்பனுடைய கவியோ என்றுதான் பொருள். கம்பனுடைய சித்திரம், அல்லது கம்பனுடைய சூத்திரந் தான் பிறரால் செய்ய முடியாதது. அதைப்போல் அல்ல இது; இதை என்னால் செய்துவிட முடியும் என்ற பொருளிலேதான் இந்தப் பழமொழிகள் வழங்குகின்றன. கம்பன் தோன்றிய நாள் முதலே அவனைப்பற்றி அறிந்தி ருந்தார்கள் தமிழ்மக்கள்; அவனைப் புகழ்ந்து கதைகள் பல பேசினார்கள். ஆனால் அவன் பாடல்களைஅதிகமான பேர் படித்ததில்லை; அதிகமான பேர் கேட்டதில்லை. இன்று கம்பன் தமிழ்ப் பொதுமக்கள் கூட்டத்திலே புகுந்து விட்டான். தமிழ் படித்தவர்கள்; ஆங்கிலம் படித்தவர்கள் அனைவரும் இன்று கம்பனைப் பற்றிப் பேசுகின்றனர்; அவன் பாடல்களைப் படிக்கின்றனர்; கம்பன் விழாக்கள் நடத்து கின்றனர். இன்று கம்பன் பொதுவுடைமையாகிக் கொண்டு வருகிறான். கம்பனுக்கு இந்த யோகம் அடித்ததற்கு முதற் காரணம் சுயமரியாதைக்காரர்கள்; கறுப்புச்சட்டை திராவிடக் கழகத்தார். இவர்களுக்குக் கம்பதாசர்கள் முதலிலே நன்றி செலுத்த வேண்டும். இதன் பிறகுதான், வ. வெ. சு. அய்யர், டி. கே. சி. போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். முதலிலே இராமாயண ஆராய்ச்சி என்ற புத்தகத்தைச் சுய மரியாதைக்காரர்கள் வெளியிட்டுக் கம்பனைத் தூற்றினார்கள். இப் புத்தகம் ஒரு பழுத்த சைவப் புலவரால் புனைபெயருடன் எழுதப்பட்டது. இதன் பிறகு கறுப்புச் சட்டைக்காரர்கள் கம்பனைக் கொளுத்தப் புறப்பட்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த கம்பனை இன்று கொளுத்த முனைந்த இந்த மகானு பாவர்களாலேயே அவன், தமிழ் கற்ற ஒவ்வொரு தமிழ்மகன் உள்ளத்திலும் குடியேறினான், கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டின் பெருமைக்குக் கம்பன் பிறப்பு காரணம் என்றார் பாரதியார். யாம் அறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மைவெறும் புகழ்ச்சியில்லை என்று புலவர் வரிசையிலே முதலிலே கம்பனைக் கூறினார் பாரதியார். கம்பன் தமிழ்நாட்டில், தமிழ்ப் புலவர்களில் மாத்தி ரம் அல்ல, உலகிலேயே முதற் புலவன் என்றார். தமிழுக்குக் கதி இருவர். க- கம்பரைக் குறிக்கும்; தி - திருவள்ளுவரைக் குறிக்கும். இருவரும் இல்லையேல் தமிழ் இல்லை. என்ற கருத்தை எழுதினார் காலஞ்சென்ற செல்வக் கேச வராய முதலியார். இத்தகைய கம்பனைக் கொளுத்த- கம்பராமயணத்தை எரிக்க- முன்வந்தனர் கறுப்புச் சட்டையினர். தமிழ்மக்கள் துள்ளியெழுந்து கம்பனைப் போற்றுகின்றனர்; கம்பராமாயணத்தைப் படிக்கின்றனர். இன்று கம்பனுடைய கருத்தைக் கலக்காத பிரசங்கங்களுக்கு மதிப்பில்லை. அரசியல் வாதிகளுக்குங்கூட இன்று கம்பன் துணை செய்கின்றான். கம்பன் மனித சமூகம் ஒன்றாக வாழவேண்டும் என்னும் கருத்துடையவன். அதை அவனுடைய பாடல்களிலே ஆங்காங்கே அமைத்துச் செல்கின்றான். கம்பன் காட்டிச் செல்லும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியல் கொள்கைகள், தனிப்பட்ட மக்களுக்குக் கூறும் அறிவுரைகள் எல்லாம் சிறந்தவை. அவை களிலே பல இந்தக் காலத்திற்கு ஏற்றவை. எந்தக் காலத்து மக்களும் ஏற்கும் படியான கருத்துக்களை அமைத்துக் கவிபாடுகின்ற புலவனே ஜீவகவி; சிரஞ்சீவி; கவியரசன். இத்தன்மை கம்பனுக்கு உண்டு. அதனாலேயே அவன் பெருமையைச் சிதைக்க முடியவில்லை எவராலும். இங்கே கம்பன் அமைத்திருக்கும் ஒரு கருத்தை மாத்திரம் கவனிப்போம். இராமன் காட்டிற்குச் சென்றவுடனே முதலிலே குகனைச் சந்திக்கின்றான்.அவன் வேடன்; வேட்டையாடி உயிர்களைக் கொன்று உடம்பை வளர்ப்பவன், நன்மை தின்மை அறியாதவன். இராமன் அவனுடைய அன்பைக் கண்டு அவனைச் சகோதரனாகக் கொள்கின்றான். என்னுடைய ஐந்தாவது சகோதரன் நீ என்று குகனிடம் கூறுகிறான். இராமன் குகனிடத்திலே சகோதரத் தன்மை பூண்டவுடன், உள்ளத்திலே குற்றம் செய்தறியாத அவன், உடம்பினாலும் குற்றம் செய்யாத உத்தமன் ஆகிவிடுகின்றான். இரண்டாவதாக, சுக்கிரீவனிடம் இராமன் சகோதரத் தன்மை காட்டுகிறான். அவனையும் தன்னுடைய ஆறாவது சகோதரனாக ஏற்றுக்கொள்கிறான். இதனால் மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்த சுக்கிரீவன் திருந்துகிறான்; மனிதத்தன்மையுடையவனாக நடந்துகொள்கின் றான்; மதுபானத்தைக் கூட விட்டுத் திருந்துகிறான். மூன்றாவதாக, அறிந்தும் அக்கிரமம் செய்யும் அரக்கர் குலத்திலே பிறந்த விபீஷணனை இராமன் சகோதரனாக ஏற்றுக் கொள்ளுகிறான். இதனால் அவனும் அரக்கர் குணங்களை யெல்லாம் பழித்துவிட்டு அறிவுடைய மனிதர் இயல்பை மேற் கொள்ளுகிறான். முதலிலே, கல்வி அறிவற்றவனாய் நன்மையின்னது தீமை யின்னது என்று அறியாதவனாய் வாழ்ந்த குகனைச் சகோதர னாக ஏற்றுக் கொண்டு அவனைச் சீர்திருத்தியது; இரண்டாவது, மிருகங்களோடு, மிருகத்தன்மையுடன் வாழ்ந்திருந்த சுக்கிரீவனிடம் சகோதரத்துவம் பாராட்டி அவனைச் சீர்திருத்தியது; மூன்றாவது; வேண்டும் என்றே அக்கிரமம் செய்யும் அரக்கர் குலத்தில் பிறந்தவனிடம் சகோதரத்துவம் பூண்டு அவனைச் சீர்திருத்தியது. -இந்த மூன்று கருத்துக்களையும் சமூக ஊழியர்கள் சிந்தை யிலே கொள்ளவேண்டும்; அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் உள் ளத்திலே பதிக்கவேண்டும். மனிதர்களிலே மூன்றுவிதப் பண்பினர் உண்டு. குகனைப் போல் உள்ளத்திலே குற்றமில்லாமல் கண்டபடி அலைபவர்கள்; சுக்கிரீவனைப் போல் அசல் மிருகத்தன்மை யுடனேயே வாழ்பவர்கள்; அரக்கர்களைப்போல், அறிந்தும் அக்கிரமம் செய்பவர்கள். - இவ்வாறு மூவகையினர் உண்டு. இந்த மூவகை யினரையும், அன்பினால் சீர்திருத்தலாம்; சகோதரத்துவத்தி னால் சீர்திருத்தலாம். அன்பும் சகோதரத்துவமும் மலரும் இடத்திலே சாதிபேதம், சமயபேதம் நிற்க இடமில்லை. ஒற்று மையே வளரும். இந்தக் கருத்தை இராமனுடைய சகோதரத்துவத்தைக் கூறுவதன் மூலம் கம்பன் நமக்குக் காட்டுகிறான். குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்; எம்உழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம். புகல்அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை. இப்பாடல் இராமன் விபீஷணனைப் பார்த்துக் கூறிய தாகக் கம்பன் பாடியது. இதில் உள்ள ஆழ்ந்த கருத்தைக் கவனி யுங்கள். நான்கு பேராயிருந்த நாங்கள் குகனோடு சேர்ந்து ஐந்து சகோதரர்கள் ஆனோம். சூரிய குமாரனாகிய சுக்கிரீவனோடு சேர்ந்து ஆறு சகோதரர்கள் ஆனோம். இதன்பின் நீ எங்களிடம் அன்போடு வந்து சேர்ந்தாய். நீ எங்களிடம் உள்ளன்புடையவன்; ஆதலால் உன்னோடு சேர்ந்து இப்பொழுது நாங்கள் ஏழு சகோதரர்கள் ஆனோம். உன்னுடைய தந்தையான தசரதன் எனக்குக் காட்டைக் கொடுத்ததனால் நல்லலாபம் பெற்றான். நான்கு பிள்ளைகளைப் பெற்ற அவன் இப்பொழுது ஏழு பிள்ளைகளின் தந்தையென்ற பெருமை அடைந்துவிட்டான். இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். இராமாயணத்தின் போக்கே, இத்தகைய அன்பையும், சகோதரத்துவத்தையும், இவற்றின் மூலம் மக்களுக்குள் பேதமற்ற தன்மையையும் உண்டாக்க வழிகாட்டுகிறது. இக் காரணத்தினா லேயே கவிதா சக்தி படைத்த கம்பன் தன் உணர்ச்சிகளை வெளி யிட - கருத்துக்களை நிலைநாட்ட- இராமாயணத்தை ஆதர வாகக் கொண்டான். இத்தகைய சிறந்த காவியத்தை- கவிக்கடலை- தமிழ் உள்ள காலம் வரையிலும் அழிக்க முடியாது; குறைக்க முடியாது. ஆகையால் கம்பனை எதிர்ப்பவர்களை- தூற்றுகிறவர்களை- நாம் போற்றுவோம். ஏன், அவர்கள்தான் இன்று கம்பன் பெருமைக்குக் காரணகர்த்தர்கள். உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள் உலகப் போக்கு நாம் தனித்து வாழ்கின்றோம் நமக்குப் பிறர் உதவி வேண்டியதேயில்லை. நம்முடைய அறிவு, நம்முடைய திறமை, நம்முடைய உடல் வன்மை நமக்குத் துணை செய்கின்றன என்று சிலர் - ஏன்- பலர் நினைக்கலாம்; பேசலாம். ஆனால் எந்த மனிதரும் தனித்து வாழ்தல் இயலாது. மக்களுடைய வாழ்வு கூட்டுறவுடையது. நூலும் ஆடையும் போல் மக்கட் சமூகம் ஒன்றுபட்டுக் கிடக்கின்றது. அவர்களை அறியாமலே அது பின்னிக் கொண்டிருக்கின்றது. நூல்களின் இணைப்பு- நெசவு- இல்லாவிட்டால் ஆடையில்லை. மக்களின் தொழில்களினால் ஒருவர்க்கொருவர் உதவியில்லாவிட்டால் சமூக வாழ்க்கையில்லை. இந்த உண்மையை அறிந்தவர்கள் சிலர்; அறியாதவர்கள் பலர். நாம் தனி மனிதர் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதரையும் விட்டு ஒழியவேண்டும். மக்கட் சமுதாயத்திலே நாம் ஒரு உறுப்பு என்ற எண்ணம் எல்லா மக்களிடமும் தோன்ற வேண்டும். இது போலவே ஒவ்வொரு நாட்டினரும் தம்மைத் தனி நாட்டினராக நினைக்கும் மனப்பான்மை மாறவேண்டும். மக்கள் வாழும் இவ் வுலகம் ஒன்று; இவ்வுலகில் நாம் ஒரு பகுதியிலே வாழ்கின்றோம்; உலகத்தில் எந்தப் பாகத்தில் நன்மைகள் தோன்றினாலும் அவை களின் பலனை நாமும் அடைவோம்; உலகில் எந்தப் பகுதியில் நிகழும் தீமைகளும் நம்மைத் தீண்டாமல் விடமாட்டா. இவ்வுண் மையை மக்கட் சமூகம் மறந்து விடுதல் கூடாது. இன்றைய மக்கட் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் எந்தச் சமூகமும் கலப்பற்ற பழைய நாகரிகத்துடன் வாழ்வதாகக் கூற முடியவில்லை. எந்தச் சமூகமாவது, எமது பழைய நாகரிகத்தை - பண்பை - கலையை- கலப்படமின்றிக் காப்பாற்றி வருகின்றோம் என்று கூறினால் அது பொருளற்ற பேச்சு. நாங்கள் தனித்த நாகரிகத்துடன்தான் வாழப்போகிறோம்; இடைக் காலத்தில் புகுந்த புதிய நாகரிகங்களை விரட்டியடிப்போம் என்று சொன்னால் அது காலத்தின் போக்கறியாத கண் கெட்டோர் வார்த்தை. பழைய காலத்திலே, பகைவர்களுக்குப் பயந்தவர்கள், கோட் டைச் சுவர் எழுப்பிக் கொண்டு, கோட்டையைச் சுற்றிலும் அகழ் வெட்டிக்கொண்டு, பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அது ஆகாய விமானம் இல்லாத காலம்; அப்பொழுது அகழும் கோட்டை யும் அரண் செய்தன. இன்று அவைகள் அரண் செய்ய முடியா. வானத்திலிருந்து குண்டுமாரி பொழிந்து வதைத்துவிடுவான் எதிரி. இந்த உதாரணம், நாகரிகப் பாதுகாப்புக்கும் பொருந்தும். தெய்வத்தின் பெயரால், மதத்தின் பெயரால், சாத்திரங்களின் பெயரால் நம்முடைய நாகரிகம் பழமையானது; தெய்வத்தன்மை பொருந்தியது; மாற்றமுடியாதது; ஆதலால் அதைப் அப்படியே காப்பாற்றவேண்டும் என்று கூறினால் அதை நம்புவாரில்லை. காரணம், இது பகுத்தறிவுக்காலம். தங்கள் வாழ்க்கை நலத்தைக் கருதிப் பழமையை மாற்றிக்கொள்ளவும், புதியதைப் போற்றவும் பெரும்பாலான மக்கள் பின் வாங்குவதில்லை. பழயன கழிதலும் புதியன புகுதலும் அணைபோட முடியாத ஆற்று வெள்ளம். இன்று எந்த நாட்டு மக்களை எடுத்துக்கொண்டாலும் அவர்களுடைய மொழியிலே பிறமொழிச் சொற்கள் கலந்து விட்டன; அவர்களுடைய பழக்க வழக்கங்களிலே பிறநாட்டுப் பழக்க வழக்கங்கள் கலந்துவிட்டன; அவர்களுடைய கலை களிலே பிறநாட்டுக் கலைகள் கலந்துவிட்டன; அவர்களுடைய சமூகத்திலே மற்றச் சமூகங்களின் இரத்தமும் கலந்துவிட்டது. இந்தக் கலப்பு எந்தத் தனி மனிதன் முயற்சியினாலும் ஏற் பட்டதன்று; வலிந்து புகுத்தப்பட்டதன்று. தானே இயற்கையாக, நாளடைவில் உண்டான கலப்பு. இக் கலப்பை இனிப்பிரிக்க நினைப்பது பேர்அறிவின் செயலாகாது. இன்று பல நாட்டினர் ஒன்று கூடிப் பழகுகின்றனர்; பல சமூகத்தினர் ஒன்றாக ஓரிடத்தில் வாழ்கின்றனர்; பல மொழி யினர் ஒன்றுசேர்ந்து பேசுகின்றனர்; ஓரிடத்தில் உறைகின்றனர். அடிக்கடி ஒன்றுகூடுகின்றனர்; பல மதத்தினர் ஒரு நாட்டில், ஒரு நகரத்தில், ஓர் ஊரில், ஓர் இடத்தில் வசிக்கின்றனர்; பலதிறப் பட்ட நாகரிகமுடையவர்கள் ஒன்று சேர்ந்து பிரயாணம் செய் கின்றனர்; ஒன்றுசேர்ந்து கல்வி கற்கின்றனர்; ஓரிடத்தில் வேலை செய்கின்றனர். ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் பிணைப்பு வளர்ந்துகொண்டு வருகிறது. வாணிகத் துறையிலே, கல்வித் துறையிலே, கைத்தொழிற் கலையிலே, அரசியல் துறையிலே. பல நாடுகளுக்குள் வளர்ந்து வரும் கூட்டுறவைத் துண்டித்துவிட முடியாது. இவ்வாறு ஒன்றுபட்டுக் கலந்து வரும் உலகத்தை- மனித சமுதாயத்தை- இனித் துண்டுதுண்டாக்கிக் தனித் தனியே வைக்க முடியாது. இன்று அரசியல் காரணத்தை முன்னிட்டு மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் இனத்தின் பெயரால், நாகரித் தின் பெயரால் நாடுகளைத் துண்டுதுண்டாக்கலாம். ஆனால் அரசியல் வேற்றுமைகள் மறைந்தபின்- எல்லாமக்களும் இன்புறத் தகுந்த ஒரே விதமான அரசியல் கொள்கை தோன்றிய பின் - உலக அரசாங்கங்களுக்குள் வேற்றுமையற்ற கூட்டுறவு ஏற்பட்டபின்- இத்துண்டுகள் இணைந்துவிடும்; ஒன்றாகிவிடும்; உலகம் ஒரே சமுதாயமாகிவிடும். மதம், மொழி, இனம், நாகரிகம்- இவற்றை அடிப்படை யாகக்கொண்ட பிரிவுகள் நிலைத்திருக்கவேண்டுமானால் இன்றைய உலகப்போக்கையே மாற்றியமைக்கவேண்டும். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உள்ள போக்குவரவைத் துண்டித்துவிடவேண்டும்; ஒரு நாகரிகமுடைய மக்களை அதற்கு மாறுபட்ட நாகரிகமுடைய மக்கள் சந்திக்கக் கூடாது; ஒரு மொழி பேசுவோர், மற்றொரு மொழியின் ஓசையைக் காதாலும் கேட்கக்கூடாது; ஒரு நாட்டின் வரலாற்றை, சமூக அமைப்பை, மாறுதலை அரசியல் முறையை மற்றொரு நாட்டினர் தெரிந்து கொள்ளக்கூடாது; இன்று கலந்து கிடக்கின்ற சமூகத்தினரைத் தனித்தனியே சலித்து எடுத்துத் தனித்தனி இடங்களிலே சிறை வைத்துவிட வேண்டும். சுருங்கக் கூறினால் இமயமலைச் சார லிலே வாழும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், பொதிய மலைச் சாரலிலே வாழும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எத் தகைய போக்குவரவு சம்பந்தமும் இல்லாதிருப்பதுபோல் மனித சமுதாயத்தையும் செய்துவிட வேண்டும். இதைச் செய்தால் மனித சமுதாயம், உலகம், நாகரிகம் தனித்தனியாக வாழக்கூடும். இவ்வாறு செய்ய முடியுமா? செய்ய வேண்டும் என்று எவரேனும் கூறினால் அவரைப்பற்றி உலகம் என்ன சொல்லும்? உலகம் எப்பொழுதும் ஒரே போக்கிலேயே போய்க் கொண்டிருக்கின்றது; சிறிது முன்பின்னாக உலகின் பல பாகங் களில் உள்ள மக்கட் சமுதாயங்களும் ஓரிடத்தை நோக்கியே மூட்டை முடிச்சுகளுடன் பிரயாணஞ் செய்து கொண்டிருக் கின்றன. இறுதியில் எல்லாச் சமுதாயங்களும் ஒரே இடத்தை அடைந்து ஒன்றுகூடி இன்ப வெள்ளத்திலே மிதக்கும் என்பது உறுதி. மக்களுக்குள் வேற்றுமையில்லை; எல்லா மக்களும் பிறப்பில் ஒன்றே; எல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும்; மக்களாகப் பிறந்த எல்லோரும், உழைத்து, உண்டு, உடுத்து, உயர்வு தாழ் வின்றி வாழவேண்டும்- என்ற கொள்கையைப் பற்றிப் பேசாத சமூகம் இல்லை; விரும்பாத நாடில்லை. உலகில் உள்ள எல்லாச் சமூகத்தினரும் மதத்திலே மாறுதல் வேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டிருக்கின்றனர். பழைய மதங்கள் எல்லாம் பெயரளவிலேதான் உயிர் வாழ்கின்றன; அவைகளின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவோர் உலகில் ஒருவரும் இல்லை. சுருங்கக் கூறினால் மதங்கள் உயிரற்ற பதுமைகளாகவே விளங்குகின்றன. பழக்க வழக்கங்களும் உலகின் எப்பாகங்களிலும் மாறி வருகின்றன. துருக்கி தேசத்தினரின் உடைகள் ஆங்கிலேயரின் உடைகளாக மாறிவிட்டன. ஆங்கிலப் பாங்கான உடை அகில உலகிலும் பரவி நிற்கின்றது. உலகில் எல்லாச் சமூகங்களில் உள்ள பெண்களும், ஆண்களுடன் சரிசமமாகப் போட்டியிட முன் வந்துகொண்டிருக்கின்றனர். இன்று எல்லா நாடுகளிலும் பொருளாதாரப் போராட்டம் தலைதூக்கி நிற்கின்றது. வாழ்க்கைச் சாதனங்கள் பொதுவுடமை யாக இருக்கவேண்டுமா? வாழ்க்கைச் சாதனங்களைச் சமமாகப் பங்கிட வேண்டுமா? என்பதே இன்றைய பொருளாதார நிபுணர்களின் போராட்டம். வாழ்க்கைச் சாதனங்களில் உழைப் பாளர்களுக்கு உரிமையில்லாத நிலைமை ஒழியவேண்டும் என்பதை மறுப்போர் ஒரு சிலர்தான். மக்களின் விருப்பப்படி அரசியல் நடைபெறவேண்டும் என்பதில் உலக மக்களுக்குள்ளே வேறுபட்ட எண்ணங்களே இல்லை உலகமெங்கும் மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்ட ஒரே வகையான சிறந்த அரசியல் நடைபெறவேண்டும் என்று கிளர்ச்சி செய்வோர் எல்லா நாட்டிலும் பெருகிவரு கின்றனர். ஆண்டான், அடிமை முறை அழிக்கப்படவேண்டும்; உழைக்காத கூட்டத்தார் உழைப்பாளரின் உழைப்பின் பயனைக் கொள்ளைகொள்ளும் கொடுமை ஒழிக்கப்படவேண்டும்; எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை என்ற கம்பன் கனவு நனவாக வேண்டும் என்ற கொள்கை இன்று உலகில் எங்கும் பரவி வருகின்றது. இவைகளையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது, இன் றைய உலகம் ஒரே இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப் பதைக் காணலாம். மதம், சமூகம், அரசியல், பொருளாதாரம், நாகரிகம் எல்லாம் ஓரிடத்தையே குறிவைத்து விரைந்தோடு கின்றன. இதன் முடிவு உலக நாகரிகம் ஒன்றுபடும்; உலக சமூகம் ஒன்றுபடும்; உலக மதங்கள் ஒன்றுபடும்; உலகப் பொருளா தாரம் ஒன்றுபடும்; உலக அரசியல் ஒன்றுபடும்; உலக மொழிகள்கூட ஒன்றுபடும் காலமும் வந்துதான் தீரும். உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்; தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டை உலகை விட்டுப் பிரிக்கவில்லை. தமிழர் சமுதாயத்தை உலக சமுதாயத்திலிருந்து பிரித்து வைக்க விரும்பவில்லை, உலக மெல்லாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று பண்டைத்தமிழர் விரும்பினர், உலக மெல்லாம் இன்புற்று வாழவேண்டும். என்பதே பழந்தமிழர் களின் விருப்பம். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். (குறள்) பல வித்தைகளையும் கற்றிருந்தாலும் உலக நாகரிகத்தோடு, முற்போக்கோடு சேர்ந்து வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளாதவர்கள் அறிவில்லாதவர்கள். தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (குறள்) கல்வியும் அறிவும் உடையவர்கள் தாம் இன்பம் அடைவது போல் உலகம் முழுவதும் இன்பம் அடைவதற்கு வழிகண்டு, அவ் வழியையே பின்பற்ற விரும்புவார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர். (புறநானூறு) எதுவும் நம்முடைய ஊர்; உலக மக்கள் எல்லோரும் நமது உறவினர், பித்தெல்லாம் உடைய உலகர்தம் கலகப் பிதற்றெலாம் என்று ஒழிந்திடுமோ. (இராமலிங்கர்) பலவகையாக வேற்றுமைப் பைத்தியங்கொண்ட உலக மக்களின், கலகத்திற்குக் காரணமான வேறுபட்ட உளறல்கள் எப்பொழுது தொலைந்து உலகம் ஒன்றுபடுமோ! ஒருமையின் உலகெலாம் ஓங்குக! எனவே ஊதின சின்னங்கள்! ஊதின சங்கம்! (இராமலிங்கர்) ஒன்றுபட்ட வழியிலே உலகில் உள்ள மக்கட் சமுதாய மெல்லாம் முன்னேறிச் செல்லுக என்று ஊதுகுழல்களெல்லாம் ஒரேயடியாக முழங்கின; சங்குகள் எல்லாம் காதுகள் செவிடுபட முழங்கின இவைகள் எல்லாம் தமிழிரின் பண்பாட்டைக் காட்டும் திரைப்படங்கள். உலகப் போக்கை உணர்ந்து, உலகம் ஒன்றுபட வேண்டும் என்று விரும்பினவர்கள், விரும்புகிறவர்கள் தமிழர் கள். தமிழர்களின் இந்த உயர்ந்த உள்ளக்கிடக்கை உலகெலாம் பரவும் வகை உழைப்பது தமிழர் கடன். தமிழர் கண்ட தலைமை அறம் நாம் மட்டும் வாழவேண்டும்; நமது வாழ்வுக்காக மற்றவர் களை எதுவும் செய்யலாம் என்று எண்ணுவது மனிதத் தன்மை யன்று. எல்லோரும் வாழவேண்டும், எல்லோர் வாழ்வுக்காகவும் உழைக்கவேண்டும் என்பதே மனிதத் தன்மை. இந்த மனிதப் பண்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழன் பின்பற்றி வருகின்றான். தமிழ்க் குடியிலே தோன்றி யவர்கள் எந்த நாட்டிலே குடியேறினாலும் இந்தப் பிறவிக் குணத்தை விட்டுவிடுவதில்லை. இச் சிறந்த குணமே தமிழர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் அவர்களைச் சிறப்புடன் வாழச் செய்கின்றது. தமிழர்களின் பண்டைப் பண்பாட்டைப் பழந்தமிழ் நூல் கள் நமக்குக் கண்ணாடி போல் விளக்கிக் காட்டுகின்றன. உலகம் முழுவதும் இன்புற்று வாழவேண்டும் என்பதே தமிழர் பண்பாடு. சாதி, மத, இன, நிறம் காரணமாகத் தமிழர் கள் யாரையும் வெறுப்பதில்லை. தமிழர்களை அடக்கியாள- அடிமைப்படுத்த- தமிழர் பண்பாட்டைச் சிதைக்க- நினைப்பவர் களைத்தான் அவர்கள் பகைவர்களாக நினைப்பார்கள், ஒத்து வாழ முன்வருகின்றவர்களையெல்லாம் உடன் பிறந்தவர் களாகத்தான் கருதுவார்கள். மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வறுமையே தடைச்சுவர் என்பது பழந்தமிர் கண்டறிந்த உண்மை. ஆதலால் பழந்தமிழர் கள் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குவதையே தலைசிறந்த அறமாக- கடமையாகக் கொண்டிருந்தனர். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் வறுமையின்றி வாழ்வார்களாயின் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பிணக்கே ஏற்பட முடியாதே! ஒரு நாட்டின் பற்றாக்குறையே அவர்களுக்கு மற்றவர்களிடம் பகைமை உணர்ச்சியைத் தூண்டு வதாகும். போர்வெறி பிடித்தவர்கள். இந்தப் பற்றாக்குறையை எடுத்துக்காட்டிப் போர்க்களத்திலே மக்களை இழுத்துவிட்டுப் பலி கொடுப்பார்கள். மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வப் பொருள் களைப் பெற்றுக் கலையுணர்ச்சியுடன் வாழ்வார்களானால், அவர்கள் யார்மீதும் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள். அவர் களிடம் போர்வெறியையும் ஊட்ட முடியாது; அவர்களுக்குள் கலகத்தையோ, குழப்பங்களையோ உண்டாக்க முடியாது. இந்த உண்மையைப் பழந்தமிழ்ப் புலவர்களும், மன்னர்களும் வள்ளல் களும் தெளிவாகத் தெரிந்துகொண்டிருந்தனர்; நாட்டிலே வறுமைப் பிணி தலைக்காட்டாமல் பாதுகாத்தும் வந்தனர். இவ்வுண்மையைப் பண்டைச் செந்தமிழ் நூலாகிய புற நானூற்றில் உள்ள ஒரு பாட்டு நமக்கு விளக்கிக் காட்டுகிறது. அம்ம! இவ்வுலகிலே எல்லையில்லாத இன்பம் உண்டு. இன்பம் குடிகொண்டிருப்பதற்குக் காரணம் கூறுகின்றேன் கேளுங்கள், இவ்வுலக மக்கள் தந்நலமுடையவர்கள் அல்லர்; எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்கள். இந்திரலோகத்தவர்களின் உணவான அமிர்தம் கிடைத்தாலும், கிடைத்தற்கு அரிய இனிய உணவு என்று நினைத்துத் தனியாக உண்ண மாட்டார்கள், யாரையும் வெறுக்க மாட்டார்கள்.எப்பொழுதும் சோம்பியும் இருக்க மாட்டரார்கள் பிறர் அஞ்சும் பழிச்செயல்களைச் செய்ய அஞ்சுவார்கள்; புகழ் வரக்கூடிய அரிய செயல்களைச் செய் வதிலே உயிரையும் பொருட்படுத்தமாட்டார்கள்; இந்த உலக அரசாட்சியே கிடைப்பதாக இருந்தாலும் பழிக்கத்தக்க செயல் களைச் செய்யமாட்டார்கள்;எப்பொழுதும் சோர்வடைய மாட்டார்கள். இத்தகைய சிறந்த குணங்களை யுடையவர்கள், தந்நலம் ஒன்றையே குறியாகக் கொண்டு உழைக்காதவர்கள், எப்பொழுதும் மக்கள் நலத்திற்கே உழைப்பவர்கள்- இத்தகைய மக்கள் வாழ்வதால் இவ்வுலகில் இன்பம் உண்டு. என்று பாடினார் ஒரு புலவர். இப்பாடல் தமிழ் மக்களின் இயல்பை எடுத்துக் காட்டுவது. அதே சமயத்தில், உலக மக்கள் இக்குணத்தைப் பின்பற்றவேண்டும்; இவ்வாறு உலக மக்கள் அனைவரும் வாழ்வார்களானால் இவ்வுலகிலே அமைதி என்றும் அழியாமல் வளர்ந்தோங்கும் என்றும் அறிவிக்கின்றது. உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே முனிவுஇலர்; துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்; அன்னமாட்சி அனையராகித் தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே. (புறம், 182) தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டை உரைக்கும் பாடல் இது. இப்பண்பாட்டையே வள்ளுவர் தலை சிறந்த அறம் என்று கூறுகின்றார். உலகிலே ஒப்பற்ற அறம், உள்ள உணவை எல்லோ ருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல்தான் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார். உலகில் உள்ள அறிஞர்கள் எல்லாம் இதையே சிறந்த அறம் என்று கூறுகின்றனர். உயர்ந்த அறநூல்கள் எல்லாம் இதையே ஒப்பற்ற அறம் என்று உரைக் கின்றன என்பதை எடுத்துரைக்கின்றார். இதனை, பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. என்ற குறளால் காணலாம். கிடைத்த உணவை எல்லோருக்கும் சமமாகப் பகுத்துக் கொடுத்து உண்டு, பல உயிர்களையும் துன்புறாமல் காப்பாற்ற வேண்டும். இதுவே அறநூல்களை வகுத்த அறிஞர்கள் தொகுத்துக் காட்டிய அறங்களில் எல்லாம் தலைமையான அறமாகும் என்பதே அக்குறள் கூறும் பொருள். உலகிலே அமைதி நிலவவேண்டுமானால் தமிழர் கண்ட இத் தலைசிறந்த அறம் உலகம் முழுவதும் பரவவேண்டும். உலகிலே அமைதி நிலவவேண்டும் என்று விரும்பாதவர்கள் ஒரு வரும் இல்லை. எல்லோரும் அமைதியைத்தான் நாடுகின்றனர். ஆனால் அமைதி குடி கொள்ளுவதற்கு அடிப்படை எது என்று காண்பதிலேதான் வேற்றுமை. இம்மாதிரி வேற்றுமை தோன்று வதற்கு இடமில்லாமல் எல்லோராலும் ஒரே மனதாக ஒப்புக் கொள்ளும் வழியைத் திருவள்ளுவர் காட்டியிருக்கின்றார். பண்டைத் தமிழர் காட்டிய வழிதான் அது. எல்லா மக்களும் இன்புற்று வாழவேண்டும் என்னும் எண்ணம் தமிழன் உள்ளத்தைப் பரந்த உள்ளமாக்கியது. யாதும் ஊரே யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்று பாடச் செய்தது. இதுவும் புறநானூற்றுப் பாடல் தான். தமிழர்கள் எந்த ஊருக்கு- எந்த நாட்டுக்குப் போனாலும், அந்த ஊரைத் தம்முடைய ஊரைப்போலவே நேசிப்பார்கள்; அந்த நாட்டைத் தம்முடைய தாய்நாட்டைப் போலவே போற்றுவார்கள். தங்களுடைய நடத்தைகளாலும் செய்கை களாலுமே தீமையோ, நன்மையோ தமக்கு உண்டாகும் என்ற உண்மையையும் அறிவார்கள். இத்தகைய உயர்ந்த நோக்கமுடைய தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மறவாமலிருக்கவேண்டுமானால்; தங்கள் தாய் மொழியைப் போற்றவேண்டும்; கற்கவேண்டும், அதில் உள்ள அரிய இலக்கியங்களின் உயர்ந்த கருத்துக்களை உள்ளத்திலே கொள்ளவேண்டும். எல்லோரோடும் இணங்கி ஒத்துவாழும் உயர்ந்த பண்பை அவர்களுக்கு ஊட்டி வருவது தமிழ்மொழி என்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிடுதல் கூடாது. தமிழர் நலத்தை- தமிழர் ஒற்றுமையை- தமிழர் நல் வாழ்வை- சாதிமத பேதமின்றி வளர்ப்பதற்குத் தமிழே தங்களை ஒன்றாகப் பிணைக்கும் கருவி என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழர் பண்பு உலகத்தை ஒன்றுபடுத்தும் உயர்ந்த பண் பாகும். இந்தப் பண்பை ஏனைய மொழியினரும், இனத்தினரும் அறியச் செய்வது தமிழர் கடமை. இக்கடமையைச் செய்வதற்கு ஊக்கமளிப்பவள் தமிழ் அன்னை. வாழ்க தமிழ் அன்னை! வாழ்க தமிழர்! வாழ்க எல்லோரும்! இலக்கியம் வளர வேண்டுமானால்...? தமிழிலே இலக்கியங்கள் வளரவேண்டும். வளர்க்க வேண்டும். இதில் யாருக்கும் முரண்பட்ட கருத்தில்லை. இதில் நமக்கு எவ்வளவு ஆவல் இருக்கிறதோ அவ்வளவுக்குத் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கின்றதா? என்பதுதான் கேள்வி, வளர வில்லை. வளர்க்கப்படவில்லை. என்று சொல்ல முடியாது. வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நமது ஆசை அளவுக்கு வளர்ந்து விட்டது. அல்லது வளர்ந்துகொண்டு வருகிறது என்று கூற முடியாது. இலக்கியம் என்று நான் இங்கே குறிப்பிடுவது நமது பழைய இலக்கியங்களை அல்ல, புதிய இலக்கியங்களைத்தான் குறிப்பிடு கின்றேன். பழைய இலக்கியங்களைப் பற்றிய புத்தகங்கள் ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் எழுதப்பட்டு வருகின்றன. பண்டிதர்கள் பெரும்பாலும் பழைய இலக்கியங்களைப் பற்றித் தான் எழுதிக்கொண்டிருக்கின்றனர். பேசிக்கொண்டிருக் கின்றனர். கம்பராமாயணத்தின் திருத்தமான பதிப்பு இன்னும் பூரணமாக வெளிவரவில்லை. ஆயினும் அதுபற்றிய ஆராய்ச்சி நூல்கள் கட்டுரைகள் எத்தனையோ வந்து விட்டன. வந்து கொண்டிருக்கின்றன. இதைப்போலவே திருக்குறளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் எத்தனையோ வந்துவிட்டன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன, இதைப் போலவே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களும் வந்து விட்டன; வந்து கொண்டும் இருக்கின்றன. பழைய நூல்களைப் பற்றிய ஆராய்ச்சிகள்- ஆராய்ச்சி என்று பெயர் கொண்டவைகள் எத்தனை வெளிவந்திருக்கின்றன என்பதை எளிதிலே கணக்கெடுத்து விடலாம். பாடமாக வைப்பதற்கு ஏற்றவை என்று பாட புத்தகக் கழகத்தாரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் பட்டியல்களைப் புரட்டிப் பார்த் தால் போதும், கணக்கு அகப்பட்டுவிடும். பள்ளிக் கூடத்தில் பாடமாக வைப்பதற்கு என்று எழுதப்பட்டிருக்கும் பழைய இலக்கியக் குஞ்சுகள் ஏராளமாக இருக்கின்றன. பொதுமக்கள் படிப்பதற்கு என்று எழுதப்பட்டிருக்கும் பழைய இலக்கியம் பற்றிய புத்தகம் அவ்வளவு அதிகம் இல்லை. இதிலிருந்து ஒரு உண்மை விளங்குகின்றது. பழந்தமிழ் இலக்கிய மேதைகளில் கூடப் பெரும்பாலோர் பணத்தைக் குறி யாகக் கொண்டுதான் இலக்கியங்கள் எழுதுகின்றனர் என்று தான் எண்ண வேண்டியிருக்கின்றது. பழைய இலக்கியங்களை அறிமுகம் செய்வதற்குப் பல தா பனங்கள் இருக்கின்றன, பத்திரிகைகளிலே பழைய இலக்கிய அறிமுகம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்றவை பழைய இலக்கியங்களைப் பற்றியே மக்கள் அறியும்படி செய்து வருகின்றன. சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா மலைப் பல்கலைக் கழகங்களும் பழைய இலக்கியங்கள் பரவ ஆதரவளித்து வருகின்றன. சென்னை, திருச்சி ரேடியோக்களிலும் அடிக்கடி பழைய இலக்கியங்களைப் பற்றி ஒலிப்பரப்பப்படுவதைக் கேட் கின்றோம். பழைய இலக்கியம் இவ்வாறு வளர்ந்து வருகின்றது, வளர்க் கப்பட்டு வருகிறது. நன்றாக வளரட்டும், பழைய இலக்கியங் களைப் பற்றித் தெரிந்து கொள்வதின் மூலம் மக்கள் பண்பாடு வளரட்டும்; இதை வரவேற்போம். இம் முயற்சியை வாழ்த்து வோம். ஆனால் பழைய இலக்கியப் பிரசாரம் மட்டும் வளர்ந்தால் போதுமா? தமிழ் இலக்கியம் வளர்ந்துவிடுமா? தமிழ்நாட்டு மக்கள் மற்ற நாட்டு மக்களுக்குச் சமமாகத் தலை நிமிர்ந்து நிற்க முடியுமா? தமிழர் பண்பாடு வளர்ந்துவிடுமா? இவை போன்ற சில கேள்விகளைக் கேட்டுத் தான் ஆக வேண்டும், ஏன், இப்படிக் கேட்பதில் என்ன தப்பு? நவீன இலக்கியங்கள் தமிழிலே போதுமான அளவு வளர வில்லை என்பது நிச்சயம். வளர்க்க வேண்டும் என்னும் முயற்சி கூடப் போதுமான அளவுக்கு இல்லை. சாகித்திய அக்கடமியின் போக்கு நாம் அறிந்ததுதான். அது பழங்கதைகளுக்குப் பரிசு கொடுப்பதையே தமிழ் இலக்கிய வளர்ச்சியாகக் கருதியிருக் கிறது என்று தான் எண்ண வேண்டியிருக்கின்றது. சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களும் இந்த முயற்சியில் போதுமான முயற்சி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்க இடமில்லை. சிறுகதைகள். நாவல்கள் கட்டுரைகள் போன்ற புதிய இலக் கியங்கள் இன்று வரையிலும் எந்த தாபனங்களாலும் வளர்க்கப் படவில்லை என்று துணிந்து கூறலாம். தனிப்பட்ட பல எழுத்தாளர்கள், தனிப்பட்ட பல பத்திரிகைகள் இவர்களால் தான் புதிய இலக்கியங்கள் தோன்றி வருகின்றன. இத்தகைய புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் ஊட்டத் தமிழகத்தில் ஒரு நல்ல உறுதியான தாபனம் வேண்டும். இந்தக் காரியத்தைச் சென்னை எழுத்தாளர் சங்கம் செய்யலாம், எழுத்தாளர் சங்கத் தினர் ஆண்டுக்கொரு விழாநடத்தி விட்டுப் போவதில் மட்டும் பயன் இல்லை. அல்லது சில பொதுக் கூட்டங்களை நடத்தி விட்டுப் போவதில் மட்டும் பயன் இல்லை. நவீன இலக்கியங் களைப் பெருக்குவதற்கு உருவமான வேலை செய்வதற்கான ஒரு திட்டத்தை வகுத்தாக வேண்டும். தமிழ் இலக்கியம் வளர முதலில் எழுத்தாளர்கள் செய்ய வேண்டிய வேலை நவீனங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நவீன இலக்கியங்கள் என்ற பெயரில் வெளி வந்திருப்பவைகளை நன்றாகச் சலித்துப் புடைத்து எடுக்க வேண்டும். குப்பைக் கூளங்களைக் கழித்து விட்டுப் படிக்கத் தகுந்தவை; பாராட்டத் தகுந்தவை இன்னின்னவை என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இது வரையில் வெளிவந்திருக்கும் சிறு கதைகளிலே இலக்கிய வரிசையில் வைக்கத்தக்கவை இவை என்பதை ஆராய்ந் தெடுக்க வேண்டும். இவைகளில் முதல்தரமானவை இரண்டாந் தரமானவை, மூன்றாம் தரமானவை இவைகள் என்று குறிப்பிட வேண்டும். இது போலவே நவீனங்கள் கட்டுரைகள் ஆகியவை களையும் தொகுத்து ஆராயவேண்டும் இப்படிச் செய்வது எழுத்தாளர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஊட்டும் என்பதில் ஐயம் இல்லை. இக் காரியத்தைச் செய்வது அவ்வளவு எளிதன்று என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம், விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ந்து உண்மையான இலக்கியத் தன்மை பொருந்திய நூல்களை எடுத்துக் காட்டவேண்டும். இலக்கியத் தன்மை யில்லாதவைகளை அவைகள் யாரால் எழுதப்பட்டிருந்தாலும் சரி. ஒதுக்கித் தள்ளவேண்டும். இச் செயல் தமிழ் இலக்கியம் வளரப் பெருந்துணைசெய்யும் என்பதில் ஐயம் இல்லை. இதுவரையிலும் தமிழிலே வெளிவந்திருக்கும் நாவல்கள் எத்தனை? சிறுகதைகள் எத்தனை? அவற்றின் தொகுதிகள் எத்தனை? நாடகங்கள் எத்தனை? புதிய செய்திகளைப் பற்றிய கட்டுரைகள் எத்தனை? இக்கணக்கு யாருக்காவது பூரணமாகத் தெரியுமா? தெரிந்தால் அவர்கள் அக்கணக்கை விவரமாக வெளியிடுவார்களானால் அதுவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலே நான் குறிப்பிட்டிருக்கும் வேலை, புத்தகப் பட்டியல் (கேட்லாக்) தொகுக்கும் வேலைதான். ஆனால் இலக்கிய வளர்ச்சிக்காகத் தொகுக்கும் புத்தகப்பட்டியலில் எல்லாப் புத்தகங்களும் இடம் பெற மாட்டா; படிக்கத் தகுதியுள்ளவை; என்று எண்ணப்படும் புத்தகங்கள் தாம் இடம் பெறும். இக் காரியத்தைச் செய்யத் தகுதியுள்ளவர்கள் எழுத் தாளர் சங்க உறுப்பினர்களிலே பலர் உண்டு. அவர்கள் தாம் செய்தாக வேண்டும். இலக்கிய மேதைகள் என்று பிரபலம் பெற்றிருப்பவர்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் களிலே பலர் புதிய இலக்கியங்களைப் படிப்பவர்கள் அல்லர். கம்பன் சொல்லாதவை, வள்ளுவர் வழங்காதவை; இளங்கோ இயம்பாதவை; இப் புதிய இலக்கியங்களிலே என்ன இருக்க முடியுமா? என்ற நினைப்பு அவர்களிலே பலருக்கு உண்டு. ஆதலால் அவர்களை நம்பிப் பயன் இல்லை. இவர்களிலே நவீன இலக்கிய வளர்ச்சியில் கருத்துள்ளவர்கள் ஒரு சிலர் உண்டு. அவர்கள் இந்த முயற்சிக்குத் துணை செய்வார்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் விரும்பும் இத்தகைய முயற்சி நல்லது தான் என்றால் எழுத்தாளர்கள் இத்துறையில் இறங்கவேண்டும். எழுத்தாளர்கள் பின் வாங்கினால் எழுத்தாளர் சங்கம் துணிந்து இதில் தலையிட வேண்டும். எண்ணியதைச் சொல்லிவிட்டேன்; பிறகு உங்கள் இஷ்டம்; தமிழ் இலக்கியத்தின் தலைவிதி எப்படியோ? அதை யார் அறிவார்? தீர்ப்புக் கூறுங்கள் தலைப்பைப் பார்த்தவுடன்; நான் ஏதோ உங்களிடம் முறையிட்டுக் கொள்ளப் போகிறேன், அந்த முறையீட்டைக் கேட்டுத் தீர்ப்புக் கூறும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்; என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கு- கிழக்கு ஒன்றுமில்லை. என் மனத்தில் தோன்றிய ஓர் எண்ணத்தை வெளியிடுகின்றேன். அதுவும் சும்மா வெளியிடவில்லை. காரணங்களோடு வெளியிடு கின்றேன். அந்த எண்ணம் சரியா? அல்லது தவறா? என்று மட்டும் தீர்ப்புக் கூறுவதை உங்களுக்கு விட்டு விடுகிறேன். காலஞ் சென்ற பாரதியார் நமது தமிழ் இலக்கியங்களைப் பற்றி- தமிழ்ப் புலவர்களைப் பற்றிக் கூறும் போது, மூன்று இலக் கியங்களைக் குறிப்பிட்டார்; அந்த மூன்று இலக்கியங்களை இயற்றிய புலவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட மூன்று இலக்கியங்கள் கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன, மூன்று புலவர்கள். இவ் விலக்கியங்களை இயற்றிய கம்பர், வள்ளுவர், இளங்கோ ஆகியவர்கள். கம்பர், வள்ளுவர், இளங்கோ மூவருந்தானா புலவர்கள்? இவர்கள் செய்த மூன்று நூல்கள்தானா இலக்கியங்கள்? வேறு இலக்கியங்கள் தமிழில் இல்லையா? வேறு சிறந்த தமிழ்ப் புலவர் கள் இல்லையா? இக்கேள்விகள் என் மனத்தில் எப்பொழுதும் தோன்றும். உங்கள் மனத்திலும் இக் கேள்விகள் தோன்றுதல் இயற்கை. இதற்கு விடை கூறவேண்டியது கடமை அல்லவா? மேற்கூறிய மூன்று புலவர்களைத் தவிர வேறு சிறந்த புல வர்களும் உண்டு; மேற்கூறிய மூன்று இலக்கியங்களைத் தவிர வேறு சிறந்த இலக்கியங்களும் உண்டு என்பதே என் விடை. யார் யார் அந்தப் புலவர்கள்? எந்தெந்த இலக்கியங்கள் அவை? என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு புலவர் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் சிறந்த புலவர்கள் என்று நான் சொல்லப் போவதில்லை. ஒவ் வொரு இலக்கியங்கள் பெயரையும் குறிப்பிட்டுச் சிறந்த இலக் கியங்கள் இவைகள் என்று நான் சொல்லப் போவதில்லை. ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன். அது படிக்கப் படிக்க இனிமையாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன் பிறகு உங்களுக்கே விளங்கும் யார் சிறந்த புலவர்கள்? எவை சிறந்த இலக்கியங்கள்? என்று. வேலன் இருபதாண்டு இளைஞன் வள்ளி பதினாறாண்டு மங்கை. இருவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு விட்டது. இருவரும், தங்கள் பெற்றோர்கள் அறியாமல் மறைவாகக் காதலன். காதலிகளாக வாழ்ந்து நின்றனர். இவர்களுடைய காதல் வாழ்வு, ஆற்றோரங்களில், தோட்டங்களில், குட்டிச் சுவர்களில், வீட்டுக் கொல்லைப்புறங்களில், சந்தடியற்ற சந்து பொந்துகளில், இரவில், பகலில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் நடைபெறுகின்றது. கள்ளம் எத்தனை நாளைக்கு வெளிப்படாமல் இருக்கும்? பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் அல்லவா? இவர்களு டைய கள்ள நட்பு எப்படியோ வெளிப்பட்டு விட்டது. ஊரார், வேலனைப்பற்றியும், வள்ளியைப் பற்றியும் பேசத் தொடங்கி விட்டனர். ஊரார் அறிய மணம் செய்து கொள்ளாத ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நட்பாக இருப்பதைப் பற்றிப் பேசுவ தென்றால் அதில் எல்லோருக்குமே தனிச் சுவையுண்டு. எப்படியோ இச் செய்தி வள்ளியின் தாய்க்கு எட்டி விட்டது. அவள் வள்ளியைக் காவல் காக்கத் தொடங்கி விட்டாள். முன்போல் வள்ளியும் வேலனும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் உடல்கள் தான் சந்திக்க முடிய வில்லை. ஆனால் அவர்களுடைய உயிரும், அன்பும் ஒன்றை யொன்று கட்டித் தழுவிக்கொண்டுதான் இருந்தன. கள்ளக் காதல் செய்பவர்கள் ஒருவரை யொருவர் எளிதில் சந்திக்க முடியாத தடை ஏற்படும் போது, அவர்கள் இருவருக்கும் இடையில் தூதுப்போக்குவரத்து எப்படியோ ஏற்பட்டுத்தான் தீரும். காதலனோ, அல்லது காதலியோ தனக்கு அந்தரங்கமான நண்பர்கள் மூலம் கடிதப் போக்குவரத்தோ, செய்திப்போக்கு வரத்தோ வைத்துக் கொள்ளுவார்கள். இது இன்றும் நடை பெறும் செய்தி. காதலை எவரும் தடுக்கமுடியாது. வள்ளி தனது உயிர்த்தோழி ஒருத்தியின் மூலம் வேலனு டன் தொடர்பு வைத்துக் கொண்டாள். இருவருக்கும் செய்திப் போக்குவரத்துக்கள் தாராளமாக நடந்து கொண்டிருந்தன. கள்ளக் காதல் வெளிப்பட்டுங் கூட, வள்ளியின் பெற் றோர்கள் அவளை வேலனுக்குக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. காதலர்கள் என்ன செய்வார்கள்? உண்மையான காதலர்கள் என்ன செய்வார்களோ அந்த முடிவுக்கு வந்தார்கள். உண்மை யான காதலின் முடிவு இக்காலத்தில் கதைகளில் காட்டப்படுவது போலத் தற்கொலையல்ல. அது கோழைத்தனம். தம் எண்ணத்தில் வெற்றி பெறுவதே வீரத்தனம். தோழியின் உதவியால் வள்ளியும், வேலனும் தனியிடத்தில் சந்தித்தனர். வீட்டை விட்டு வெளியேறி வேற்றிடம் புகுந்து காதலன் காதலிகளாக வாழ்வது என்று முடிவு கட்டிக் கொண்டனர், முடிவின்படி அன்றிரவே, விடியற்காலையில் புறப் பட்டு எங்கேயோ போய்விட்டனர். விடிந்து எழுந்தாள் தாய், வள்ளியைப் படுக்கையில் காண வில்லை. நெஞ்சம் பகீர் என்றது; கூண்டில் அடைத்து வைத் திருத்த கிளி பறந்துவிட்டது. என்ன விருந்தாலும் தாயுள்ளம் அல்லவா? தவித்தது மனம். மகளைத் தேடிப் புறப்பட்டாள். ஒரு பாலைவனத்தின் வழியே போகின்றாள். 1. எதிரே சில அந்தணர்கள்- உயிர்களிடம் தாய் போல அன்பு காட்டும் குணமுடைய தவசிகள் வந்தனர். அவர்கள் சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குடையைப் பிடித்திருந்தனர். உறியில் வைக்கப்பட்ட நீர்ப் பாத்திரத்தையும், முக்கோலையும் தோளில் தாங்கியிருந்தனர். அவர்கள் வெப்பம் நிறைந்த காடுகளில் நடந்து செல்லுதலையே இயல்பான ஒழுக்கமாகக் கொண்டவர்கள். 2. அவர்களைப் பார்த்தாள் வள்ளியின் தாய், அந்தணர் களே! என் மகள் ஒருத்தி; வேறு ஒருத்தியின் மகன் ஒருவன் இரு வரும் பிறர் அறியாமல் கள்ளக் காதல் புரிந்து வந்தனர். (இப் பொழுது மற்றவர்கள் தங்கள் காதலை அறியும்படி செய்து விட்டனர்) அப்படிப்பட்ட இரண்டு பேரை நீங்கள் வந்த வழியில் காணாமல்விட்டு விட்டீர்களோ? என்றாள். 3. அந்தணர்கள், நாங்கள் அவர்களைப் பார்க்காமல் இல்லை. வழியில் கண்டோம்; ஆண் தன்மையும் அழகும் நிறைந் தவன் அவன். நடந்து செல்லுவதற்கு முடியாத பாலைவனத்தில், உடன் சென்ற அவள் சிறந்த வேலைப்பாடுடைய நகைகளை அணிந்திருந்தாள் உலகப் போக்கை முழுதும் உணராத அழகிய இளம் பெண் அவள். நீங்கள் அப்பெண்ணின் தாயார் என்று நினைக்கிறோம் என்றனர். வள்ளியின் தாய், அவர்கள் கூறியது கேட்டு வருந்தினள்; தானே அப்பெண்ணின் தாய் என்பதைப் பேசாமலிருந்ததன் மூலம் அறிவித்தாள். அந்தணர்கள் அவள் துன்பத்தை அறிந்து ஆறுதல் கூறுகின்றனர். 4. வாசனைகள் பல கலந்த சந்தனம் பூசிக் கொள்கிறவர் களுக்குத் தான் பயன் தரும். சந்தன மரங்கள் மலையில் பிறந்தவை யானாலும் அவைகளால் மலைக்கு ஒரு பயனும் இல்லை. நினைத்துப் பார்த்தால் இதைப்போலத்தான் உமது மகளும். அவள் பயன்படக்கூடிய பருவ காலத்தில் பிறருக்குப் பயன்படு வாளே ஒழிய உமக்குப் பயன்படமாட்டாள். 5. சிறந்த வெண்மையான முத்து அதை அணிந்து கொள்ளு கிறவர்களுக்குத் தான் பயன்படும். முத்துக்கள் தண்ணீரில் பிறந்தவை. ஆனால் அவைகளால் தண்ணீருக்கு ஒரு பயனும் இல்லை. இதை ஆராய்ந்து பார்த்தால் உம்முடைய மகளும் முத்தைப் போல் உமக்குப் பயன்படமாட்டாள். 6. ஏழு வகை நரம்புகளின் மூலம் உண்டாகும் இனிய ஓசைகள் பாடுவோர்க்குதான் இன்பமளிக்கும். அவை யாழிலிருந்து பிறந்தாலும் அவற்றால் யாழுக்கு ஒரு பயனும் இல்லை. எண்ணிப்பார்த்தால் இதைப் போலவே உமது மகள் உமக்கு இன்பந்தரமாட்டாள். 7. உமது மகள் சிறந்த கற்பனையுடையவள்; அவள் பொருட்டுத் துன்புற வேண்டாம். தாய் தந்தையரைக் காட்டினும், ஒரு பெண்ணுக்குக் கணவனே சிறந்தவன். ஆதலின் கணவன் சென்ற வழியே சென்றனள். அதுவே இல்லறத்தில் குற்றமற்ற செயலுமாகும், இவைகளைக் கேட்ட வள்ளியின் தாய் உண்மையுணர்ந் தாள், வீடு திரும்பினாள். சில நாட்கள் கடந்தபின், ஓடிப் போன இளந்தம்பதிகள் ஊருக்கு வந்தனர். இருவரின் பெற்றோர்களும் வரவேற்றனர். சிறந்த முறையில் இல்லறம் நடத்தினர். இக்கருத்தை விளக்கும் பாட்டு 1. எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நிழல் உறித் தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும். நெறிப் படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்! வெவ்விடைச் செலன் மாலை ஒழுக்கத்தீர். 2. இவ்விடை, என் மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ பெரும! 3. காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை ஆண் எழில் அண்ணலோடு, அருஞ்சுரம் முன்னிய மாண் இழை மடவரல் தாயிர்நீர் போறீர்! 4. பலஉறு நறுந்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. 5. சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. 6. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 7. இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் அறந்தலைபிரியா ஆறும் மற்று அதுவே. பாட்டு, கொஞ்சம் கரடுமுரடுதான். மிகப் பழம் பாட்டு, கலித்தொகைப் பாட்டு. பாலைக் கலியின் ஒன்பதாவது பாடல். பாலையே கொஞ்சம் கடுமை தானே! இதைப் பாடிய புலவர் பெருங்கடுங்கோ என்பார். இவர் சேரர் குலத்தினர் ஆதலில் சேரமான் பெருங் கடுங்கோ என்று வழங்குவர். இவர் பாலைக் கலியென்னும் நூலையும் செய்தி ருப்பதால், அதையும் சேர்த்துச் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற நீண்ட பெயரிட்டழைப்பர். பொருள் தெரிந்து மேற்கூறிய பாடலைப் படித்தால் எத்தனை தடவை திருப்பிப் படித்தாலும் சலிக்காது. இது போன்ற பாடல்கள் பலவுள்ளன. கலித்தொகையில்- இன்னும் பல சங்க நூல்களிலும் உள்ளன. ஒரு தடவை படித்தவுடன், சமாச்சாரப் பத்திரிகையைப் போல வீசி யெறிந்து விடும் புத்தகங்கள் இலக்கியம் ஆகா. அத்தகைய பாடல்கள் கவிகள் அல்ல. திருப்பித் திருப்பிப் படித்தாலும் சலிக்காதிருக்க வேண்டும். அவைகளெல்லாம் சிறந்த நூல்கள்; சிறந்த பாடல்கள், அத்தகைய பாடல்களை - நூல்களை இயற்றுகிறவர்கள் சிறந்த புலவர்கள். இதுவே என் கருத்து. மேலே கூறியபடி பாரதியார் அவர்களால் குறிப்பிடப் பட்ட முப்பெரும் புலவர்களைத் தவிர வேறு பல பெரும்புலவர்கள் உள்ளனர் என்பதற்காகவே இதுவரையில் ஏதேதோ கூறினேன் நான் கூறுவது சரியா அல்லவா? என்பதைப் பற்றி நீங்களே தீர்ப்புக் கூறி விடுங்கள். பல தடவை படித்தாலும் சலிக்காமல் இருப்பது தான் கவி; அவ்வாறு கவி எழுதுகிறவர்கள் தான் பெரும் புலவர்கள் என்ற விளக்கத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால் அத்தகைய புலவர்கள் மரபில் சேர்க்க வேண்டியவர்கள் பிற்காலத்தில் இருவர் தான். ஒருவர் பாரதியார்; மற்றவர் பாரதிதாசன். பாரதியாரின் குயிற் பாட்டு. பாரதி அறுபத்தாறு, பாஞ்சாலி சபதம் போன்றவை படிக்கப் படிக்கச் சுவை தருவன. பாரதிதாசன் பாடிய சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, மாந்தோப்பில் மணம், போன்றவைகளும் திருப்பித் திருப்பிப் படிக்கக் கூடியவை. இனி, சிறந்த கவிகள், சிறந்த நூல்கள், சிறந்த புலவர்கள். இன்னவை- இன்னவர்கள் என்று நான் கூற வேண்டியதில்லை நீங்களே படிக்கும்போது தெரிந்து கொள்ளலாமல்லவா? சிறுகதைச் சோலை (1964) அணிந்துரை பேராசிரியர் சாலை இளந்திரையன் இயக்குநர்: தமிழியல் ஆராய்ச்சி மய்யம் பேரவை இல்லம், கோபாலபுரம், சென்னை-86. அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களுக்கு இந்த நூற்றாண்டுத் தமிழ்ப்பணி வரலாற்றில் சிறப்பானதோர் இடம் உண்டு. செய்யுள், கட்டுரை, திறனாய்வு, நாடகம், கதை என்னும் பல இலக்கிய வடிவங்களிலும் உலவிய பன்முகச் சிறப்புக்கு உரியது அவருடைய எழுதுகோல். இறுதிக் காலத்தில் இலக்கியத் திறனாய்விலேயே ஊன்றி நின்ற சிதம்பரனார் அவர்கள் தொடக்க நாட்களில் எழுதிய சில கதைகளின் தொகுப்பே இந்த நூல். இன்றைக்குச் சற்றேறக்குறைய அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகள் இவை. ஆனாலும், மதவெறி - மடமை வெறி மிஞ்சிநிற்கும் இன்றையத் தமிழகத்துக்கு மிகமிகத் தேவையான எழுத்துக்கள் இவை. இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை, சோதிட நம்பிக்கை, குழந்தைமணக் கொடுமை, பணக் காரர் கொடுமை, விதவைமண மறுப்பு போன்ற மூட மடமை களுக்கு எதிரான குரல்கள்; வலுவான குரல்கள். தமிழகத்தின் தன்னேரில்லாத மடமை ஒழிப்பு இயக்க மான தன்மான இயக்கம் கால்கொண்ட காலத்தின் சிந்தனைகளே இந்தக் கதைகளின் கருப்பொருள்கள்; சிறுகதைக்கே உரிய விறுவிறுப்பும், சபென் என்னும் மறைகவர்ச்சியும் குன்றாமல் ஒவ்வொரு கதையையும் வடித்துள்ளார் சாமி. சிதம்பரனார் அவர்கள். ஆற்றில் குதித்த அலமு, குழந்தை மணத்தின் கொடு மையை விளக்கி, விதவை மறுமணத்தின் அவசியத்தை விளக்கி வலியுறுத்துகிறது. முதல் மரியாதை, கோயிலில் கிடைக்கும் முதல் மரியாதை என்னும் போலியான சம்பிரதாயத்துக்கு அடிமைப்படும் இந்த நாட்டுப் பணக்காரர்களின் மடமையை இடித்து உரைக்கிறது. கேட்டேனா பாவி, கடவுள் நம்பிக்கை என்னும் மடமையால், குடும்பங்களே சிதைந்து சின்னாபின்னமாகும் அவலத்தை உருக்க மாகச் சித்திரிக்கிறது. சோதிடம், கோயில் வழிபாடு, நாட்டு அரை வைத்தியம் போன்றவைகளாலும், ராசியான இடம் என்ற மூடநம்பிக்கையாலும் ஒரு குடும்பத்தின் ஒரே மகன் செத்து மடிந்த சீர்கேட்டை மரணயோகம் சொல்லுகிறது. காணாமல் போன கலைமகள், ஒரு பால்ய விதவைக்குத் தன் சொந்த வீட்டிலும் வெளியிலும் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது. நல்ல ஜாதகம், சோதிடர் களின் போலித் தனத்தையும் அதிலே மயங்கி வீணாகப் போகும் மூடநம்பிக்கை மனிதர்களையும் சித்திரிக்கிறது. வண்டிக் காரக்குப்பன், கடவுளை நம்பிக் கடைகெட்டு அழிந்த ஒரு குடும்பத்தின் சோக வரலாற்றைச் சொல்லுகிறது. செட்டியார் செல்வம் என்னும் கதை, தீய முறைகளில் செல்வம் சேர்ப்பவர்கள் பாதிக்கப்பட்டோரால் அழிக்கப்படுவார்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இப்படியே, ஒவ்வொரு கதையும், மடமை நிறைந்த இந்தச் சமுதாயத்தின் மவுடீகங்களில் ஒன்றை வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. பொடிப்போடும் அசிங்கப் பழக்கத்தைக் கூட ஒரு கதை (பொடி நன்றாயில்லையா?) மிகமிக அருமையாக அறுவை செய்து ஆற்றுகிறது. . . அய்கிரீம் சாதியார் என்று நான் குறிப்பிடும் பூர்சுவா- புதுப் பணக்கார வர்க்கத்தினர், இந்தக் கதைகளில் கலைத் தன்மை மிகுதியாக இல்லையே என்று சிணுங்குவார்கள். ஆனால், கலைத்தன்மை என்பதன் பேரால் இந்தக் கதைகளில் குமிழியிட்டுப் பொங்கும் கருத்துத் தன்மையை மறந்து விடக் கூடாது. சமுதாயப் பொறுப்புணர்ச்சி வாய்ந்த (committed) எழுத்தாளர்கள் கருத்துத் தன்மையை வைத்தே ஒரு படைப்பை மதிப்பிடுகிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கதை சொல்லும் கலைஞர் என்ற முறையில் சாமி சிதம்பரனார், கதை நிகழ்ச்சிகளில் தலையிடாமல் நயமாக விலகியே நிற்கிறார். ஆனாலும், ஒரு சமுதாயப் பொறுப்புணர்ந்த எழுத்தாளர் என்ற நிலையில், சில கருத்துக்களைத் தாமே யாகவும் கதைப் பாத்திரங்களின் மூலமும் சுட்டிக் காட்டிட அவர் தவறவில்லை. . . உண்மையில் நமது நாட்டில் சாமியை நம்பி ஏமாறு கிறவர்கள் ஏழைமக்கள்தான். பணக்காரர்கள் சாமி பக்தி யுள்ளவர்கள் போல் நடிப்பதில் கைதேர்ந்தவர்கள். பணம் சம்பாதிக்கின்ற தங்கள் முயற்சியில் எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஏழைகள் அப்படியல்ல. உண்மையிலேயே சாமியின் பேராலும், சடங்குகளின் பேராலும் தங்கள் சொற்ப வருமானத்தையும் இழந்து துன்பப்படுகின்றார்கள். அதிலும் தொழிலாளர்களிடம் இந்தக் குணம் அதிகம். இதனால் தான் அவர்கள் நிலை உயர்வடையாமலிருக்கிறது. ஏழைமக்கள் - துன்பப்படும் மக்கள்- பட்டினி கிடந்து சாகின்ற மக்கள் எத்தனை நாளைக்குத்தான் தங்கள் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? என்றைக்கோ ஒருநாள், அவர்கள் மனதில் உள்ள ஆத்திரம் படீர் என்று வெடிக்க வேண்டியதுதானே. இந்த வரிசையில் சாமி சிதம்பரனார் சுட்டிக்காட்டியுள்ள வேறொரு பழமடமை மோகமும் குறிப்பிடத்தக்கது: நாம் எவ்வளவு நாகரிகமடைந்திருந்தாலும், நமது கடவுள்கள் இன்னும் நாகரிகமடையவில்லை யல்லவா? அவை களுக்குப் பழைய காலக் குத்துவிளக்குத் தானே ஏற்றி வைக்க வேண்டியிருக்கிறது! ஆதலால் அங்கு ஏற்றி வைத்திருந்த குத்து விளக்கின் மூலம் திரையில் தீப்பிடித்து விட்டது. தமிழ்ப்பண்பாடு என்பதன் பேரால், - புத்தாடைப் பெண்கள் குழுமிக் குவியும் கல்யாண வீடுகளிலும், அரசு விழாக்களிலும், கல்வி நிலைய மன்றங்களின் தொடக்க விழாக்களிலும், வெயில் சுட்டெரிக்கும் பட்டப் பகலிலும் குத்துவிளக்கைக் கொளுத்தி வைக்கும் அரசுப் பெருமக்கள், - பேராசிரியப் பெரு மக்கள்- திருவிளக்கின் மூலம் திருஅக்னி திருப் பிடித்த இந்த நிகழ்ச்சியைப் படித்தாவது திருந்துவார்களா?. . . மக்களைத் திருத்த வேண்டும் என்று எழுந்த அறிவு இயக்கத் தொண்டராக நின்று சாமி. சிதம்பரனார் படைத்த இக்கதைகள், அந்த இயக்கத்தையே குட்டிச்சுவராக்கிய குட்டிப் பெரியவர்கள் நிறைந்துள்ள இந்த நாளில் மிகமிகத் தேவை; அவை எழுந்து நின்று, இன்றைய ஏமாற்றுக்காரர்களையும் ஏமாளிப் பூச்சிகளையும் எச்சரிக்கை செய்ய வேண்டும். இந்தத் தேவையை நன்கு உணர்ந்து, பழைய அறிவுக் கொடி இதழ்களுக்குள் முடங்கிக் கிடந்த இந்தக் கதைகளைத் தொகுத்து அருமையாக வெளியிட்டுள்ள அம்மா- சிவகாமி சிதம்பரனார் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். . . மிச்ச சொச்சமாக அங்கங்கே வீரத்தளிர் விட்டுக் கொண்டு இருக்கும் அறிவுப்பணித் தொண்டர்கள் இந்தப் புத்தகத்தை நன்கு பயன் படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பேரனை இல்லம் முனைவர் சாலை இளந்திரையன் சென்னை-86 4-9-86 பாராட்டுரை தமிழ்நாட்டில் ஒருவகையான எழுத்தாளர்கள் தோன்றி யிருக்கிறார்கள். அவர்கள் இலக்கியத்தில் பிரச்சாரம் கூடாது என்றும், பிரச்சார நோக்கத்தில் எழுதுபவை இலக்கியம் ஆகா என்றும் ஒரு விந்தையான கருத்தைக் கூறி வருகிறார்கள். எந்த விதமான குறிக்கோளும் இன்றி எதையெதையோ, எப்படியெப் படியோ எழுதிக்காலம் தள்ளும் அவர்களுடைய படைப்பு களுக்கு வேண்டுமானால் இக்கூற்று பொருந்தலாம். இலக்கு என்றாலே குறிக்கோள் என்றுதான் பொருள். குறிக்கோளற்றது இலக்கியம் ஆகாது. எந்தக் கருத்தையும் வெறும் கருத்துரையாகக் கூறினால் அதைப் பொறுமையோடு கேட்பவர்களைக் காண்பது அரிது. அதனால்தான் சான்றோர்கள் தாங்கள் கூற எண்ணும் கருத்துக் களை ஏதாவது ஓர் இலக்கியவடிவில் உலகத்துக்காக எழுதி வைத்தார்கள். திருமறையாகிய திருக்குறள் ஓர் அறநூல்தான். அறவழியை வையகத்திற்கு வகுத்துக் கூறும்நூல் தான். இருந்தாலும், அறிஞர்கள் அதைச் சிறந்த இலக்கிய நூலாகவே மதிப்பிடுகிறார்கள். ஏனெனில், சொல்நயம், பொருள் நயத்தோடு பல் வகை அணிநயமும் பொருந்தி விளங்குகிறது திருக்குறள். ஓர் ஆசிரியன் தனக்குத் தோன்றிய சிறந்த கருத்தினை உலகுக்கு வழங்கக் கடமைப்பட்டு இருக்கிறான். அந்தக் கடமையை ஆற்ற அவன் பயன்படுத்தும் கருவியே இலக்கிய மாகும். தமிழில் புதிதாகத் தோன்றி வளர்ந்துவரும் சிறுகதை இலக்கியத்தைத் தம்முடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். கதைகள் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் சுவை யாக எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில் பழைய மூடப் பழக்க வழக்கங்களின் தீமைகள் மனத்தில் பதியுமாறு நிகழ்ச்சிகள் தொகுத்து அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை சாதிமத சம்பிரதாயங்களினாலும் மூடப் பழக்க வழக்கங்களினாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடிமைப் புத்தி, அதனால் விளையும் வாழ்வுக் கேடுகள், எளிதாகவும் இன்பமாக வும் நடக்க வேண்டிய உலக வாழ்வைக் கடினமானதாகவும் துன்ப மயமானதாகவும் மாற்றித் தொல்லை வாழ்வாக்கும் தீய ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கதைகள் மூலமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். ஒரு முறை இக்கதைகளைப் படிப்பவர்கள் நல்ல அறிவுத் தெளிவு பெறுவார்கள் என்பது உறுதி. ஆண்டாண்டு காலமாக நம்மைச் சூழ்ந்துள்ள துன்பப் பகைகளாகிய, போலித்தனமான, மடமை நிரம்பிய சாதி, மதம், பக்தி, கடவுள், சோதிடம், கைம்பெண் கொடுமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் மூலமாக ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டாகக் கூடிய தீமைகளையும், துன்பங்களையும் எடுத்துக் காட்டும் சூழ்நிலைகளைக் கதைகளில் படைத்துக் காட்டிப் பகுத்தறிவுப் பிரசாரம் செய்கிறார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். சமுதாயத்தின் நலன் கருதி தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் இவ்வரிய பணியை எண்ணித் திறம்படச் செய்திருக்கிறார். இதனைத் திருமதி சிவகாமி சிதம்பரனார் அவர்கள் தொகுத்துப் பேணிப் பாதுகாத்து இன்று வெளியிடுவது, இன்றைய தமி ழுலகு பெற்ற பெரும் பேறாகும். நாட்டில் இதுபோன்ற அறிவு வழி இலக்கியங்கள் பரவினால், உண்மையான வளர்ச்சியைக் காணலாம். நாரா நாச்சியப்பன் ஆற்றில் குதித்த அலமு கோதண்டராம சாத்திரியாரைப் பற்றித் தஞ்சாவூரில் எல்லோருக்கும் தெரியும். அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். டிப்டி கலெக்டர் உத்தியோகம் வகித்து ஓய்வு பெற்றவர். இப்பொழுது தஞ்சாவூர் வடக்கு ராசவீதியில் ஒரு பெரிய வீட்டில் குடியிருக்கிறார். சாதிரியாராக இருந்தாலும், ஆரம்பத்தில் பகுத்தறிவு வாதியாக விளங்கினவர். உலகநாகரிகம் அறிந்தவர். வாலிபத்தில் கலாசாலைப் படிப்புக் காலத்தில் அதிதீவிர சீர்திருத்தவாதியாக இருந்தார். அக்காலத்தில் சீர்திருத்த விஷயங்களைப் பற்றி அடிக் கடி விவாதிப்பார். தனக்கு ராசாராம் மோகன்ராய் அவர்களே குரு என்று சொல்லிக் கொள்ளுவார்; சாதிபேதங்கள் ஒழிய வேண்டும் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும்; விதவைகளை மணஞ்செய்து கொடுக்கவேண்டும். பால்ய விவாகம் செய்தல் கூடாது. அர்த்தமற்ற அநாவசியமான சடங்குகளையெல்லாம் நிறுத்தவேண்டும். என்றெல்லாம் பேசுவார். அவருக்குக் கல்யாணம் ஆனபிறகு கூட இப்படியெல்லாம் பேசிக் கொண்டு தான் இருந்தார். அவருடைய மகன் கோபாலன் பிறந்துங்கூட இவ்வாறு பேசுவதை விட்டுவிடவில்லை. அவர் மகள் அலமேலு பிறந்து பத்து வயது வரையிலுங்கூட இம்மாதிரி பேசுவதை நிறுத்தவில்லை. இவருடைய மாமனார் கல்யாணராம சாதிரிகள் பெரிய வைதீகர். இம்மாதிரி பேச்செல்லாம் அவருக்குப் புதிது. இந்தச்சொற்கள் காதில் விழுந்தாலே பாவம் என்று காதைப் பொத்திக் கொள்ளுவார். இவருடைய மகள் தானே சானகியம்மாள்; அவளுக்குத் தந்தையின் குணமே உண்டு. தந்தைக்குத் தெரிந்த சாதிரங்கள் முழுவதையும் அவள் படித்திரா விட்டாலும் அடிக்கடி கேட்டுக்கேட்டு அந்தச் சம்பிரதாயங்களையெல்லாம் அறிந்தவர். கோதண்டராம சாதிரியார் கல்யாணம் செய்து கொண்ட நாள் முதல் சானகியைத் தன் வழிக்குத் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. செய்த உபதேசம் எல்லாம் பாழ்; விழலுக் கிறைத்த நீர்; செவிடன் காதில் ஊதிய சங்கு; குருடனுக்குக் கொடுத்த முகம் பார்க்கும் கண்ணாடி. அவள் காதில் கொஞ்சங்கூட நுழையவே இல்லை. கத்திக் கத்தி சாதிரியாரின் தொண்டைதான் தகராறு ஆயிற்று. தொண்டைக்கு வயித்திய உதவியைத் தேட வேண்டி வந்தது தான் கண்டபலன். அலமுக்கு வயது 10 முடிந்தது. 11 ஆரம்பம். தாயும், பாட்டா னாரும் பாட்டியும் அவசரப்படுத்துகிறார்கள்; அலமுவின் கல்யாணத்துக்காகத் துடிக்கிறார்கள். கோதண்டராம சாதிரி யார் கல்யாணத்தைத் தடுக்க எவ்வளவோ முயற்சி யெடுத்துக் கொண்டார். அவர் மகன் கோபால் சாமியும், தகப்பனார் கட்சியிலேயே இருந்தான். என்ன சொல்லியும் பயனில்லை. எவ்வளவு தடை செய்தும் நிற்கவில்லை. பெண்டாட்டித் தெய்வம் பெருந்தெய்வம் அல்லவா? மீறிச் செய்ய முடியவில்லை. மாப்பிள்ளைக்குச் சொந்தவூர் மாயவரம். 2000 வேலி நிலம்; 50 ஆயிரம் கையில் ரொக்கம்; கடன் இல்லை; நிரம்ப வைதீகம். வயது அதிகமில்லை 50 தான் இருக்கும். கல்யாணம் முதல்தாரம் என்றோ. இரண்டாம் தாரம் என்றோ தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்; மூன்றாந்தாரந்தான் கல்யாணம் வெகு ஆடம்பரம். சகல பூர்வீக சம்பிரதாயங்களுடன் நடந்தது. அலமுவுக்கு எல்லாம் விளையாட்டாகவே இருந்தது பாவம்! சிறு குழந்தை! என்ன தெரியும்? அடுத்த வருஷம் மார்கழி மாதம் 25-ம் தேதியில் கோதண்டராம சாதிரியாருக்கு மாயவரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்தது. விசயம் என்ன? மாப்பிள்ளை மவுத்தா வானார் அவ்வளவு தான். சாதிரியாரும் அவர் குடும்பத்தினரும் அடித்துக் அழுதனர். அலமுவைக் கட்டிக் கொண்டு அலறினார்கள். அவளுக்கு விஷயம் புரியவில்லை; எல்லோரும் அழுவதைப் பார்த்து அவளும் அழுதாள். பிறகு பெண்ணை அழைத்துக் கொண்டு மாயவரம் போய்ச் செய்ய வேண்டிய சடங்குகளை யெல்லாம் செய்து விட்டுத் திரும்பினார்கள். வருஷங்கள் ஐந்துகழித்தன. அலமுவுக்கு வயது 16. தங்கப் பதுமை போல் ஜொலிக்கின்றாள். சுருண்டு நீண்டு வளர்ந்த கூந்தல், துக்கம் நிறைந்த அழகிய முகம் காதல் திரைக்குள் அகப் பட்டுத் தவிப்பதைக் காட்டும் கண்கள். உலக இன்பத்தில் ஈடு படத் தவித்துக் கொண்டிருக்கும் தோற்றம். அலமுவின் உடம்பில் நகைகள் இல்லாவிட்டாலும், இயற்கை யழகு கண்டோர் மனத்தையும் கண்களையும் கவருகின்றது. தந்தையின் பிடி வாதத்தாலும் அண்ணன் வேண்டுகோளாலும் விதவைக்குரிய முழுக்கோலமும் செய்யப்படாமலிருந்தாள். ஒரு நாள் இரவு மணி பத்திருக்கும். அலமுவின் தாய் சாதிரியாரிடம் கீழ்கண்டவாறு சொன்னாள்:- என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறீர்கள்! விதவையாகி வருஷம் 5 ஆயிற்று. இன்னும் கன்னிப் பெண் மாதிரி வைத்துக் கொண்டிருக்கலாமா? சாதி ஆசாரத்தைக் கவனிக்க வேண்டாமா? அண்டை அயலார் பழிக்க மாட்டார்களா? நாளைக்காவது அல்லது மறுநாளைக்காவது அம்பட்டனை அழைத்து வந்து அலமுவுக்கு மொட்டையடிக்க வேண்டும். ஊரார் பேசுவதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை என்றாள். அய்யரும் எத்தனை நாளைக்குத் தான் தட்டிக் கழிப்பார். சரி என்று ஒத்துக் கொண்டார். அலமுவும் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சம் பகீர் என்றது. விதவைக் கோலமாயிருப்பது பற்றிக் கூட கவலையில்லை. நீண்ட நாள் அருமையாக வளர்த்த தலை மயிரைப் பிரிவதில் அவ்வளவு கவலை; எந்தப் பெண்கள் தான் தலை மயிரை இழக்கச் சம்மதிப்பாள். அலமுவின் கவலை பெருங்கவலையாயிற்று. மணி 12 ஆகியும் தூக்கம் பிடிக்க வில்லை. ஆலோசனை பலமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டாள். மெதுவாக எழுந்தாள். வீட்டின் பின்புறம் சென்றாள். அங்கே கிணற்றங்கரை; சுற்றிலும் அழகிய பூஞ்செடிகள். மெல்லென வீசும் தென்றற் காற்று. பால்போல் எரிக்கும் நிலா. அங்கு ஒரு கல்லின் மீது உட்கார்ந்து கொண்டாள். இச்சமயத்தில் அவளைப்போலவே தூங்காமல் விழித்துக் கொண்டு கிடந்த அவள் செல்வன் வெகு வேகமாக ஓடி வந்தான். அவள் மீது ஏறி விழுந்து விளையாடினான். அவளும் தனது ஆலோசனையைக் கொஞ்சம் விட்டு விட்டுச் செல்வனுடன் விளையாடினாள். ஆயினும் அவளுடைய துக்கம் அடங்க வில்லை. அடா செல்வா! உனக்கு நான் என்ன நன்றி செய்யப் போகிறேன். நான் ஒரு பாவி! என் தனிமையைக் கண்டு இரங்குவார் யார்? என்னுடன் உல்லாசமாக விளையாட உன்னைத் தவிர வேறு யார்? நீ ஒருவன் தான் என்னை ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது சந்தோஷத்துடன் இருக்க வைக்கிறாய். உனக்குள்ள தயவு- இரக்கம்- அன்புகூட இந்தப் பாழும் மனிதப் பிராணிகளிடம் இல்லையே! நீ வேறு சாதி, நான் வேறு சாதி ஆனாலும் என்னிடம் உன் அன்பு குறைவதில்லை. வாய்ப்பேச்சு ஒன்றுதான் உன்னிடமில்லை. ஆனாலும் உன் அபிப்பிராயங்களை எல்லாம் எப்படியோ என்னிடம் சொல்லிவிடுகிறாய். பேசும்சக்தியும் உனக்கும் உன் இனத்துக்கும் இருந்து விட்டால் மனித சமூகமே உன்னிடம் ஐக்கியமாகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. உனக்கிருக்கும் அறிவு மக்கள் மனதைக் கவரும் சக்தி வேறு யாருக்கு உண்டு? என்று சொல்லிக் கொண்டு அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். இவள் கண்களிலிருந்து அவன் முதுகின் மேல் அவளை அறியாமலே முத்துக்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன. அவள் தடவுவது அம்முத்துக்களைத் தேடுவது போலிருந்தன. இச்சமயத்தில் தெருப்பக்கம் ஏதோ முணுக்கென்ற சத்தம் கேட்டது. செல்வனும் வெகு சரூராக வள் வள் என்று குரைத்துக் கொண்டு ஓடி விட்டான். அலமு தனியானாள். ஆ என்ன கொடுமை! இந்தப் பாழும் மனித சமூகத்திலா நான் பிறக்க வேண்டும்? கொஞ்சமும் நெஞ்சிரக்கமற்ற சமூகம்; பழக்கம் வழக்கம் என்னும் இரும்புச் சங்கிலியால் கட்டுண்டு கிடக்கும் சமூகம்! இந்த அநியாயக்கார சமூகத்தில் பிறந்தேனே நான். என் பெற்றோர் செய்யுங் கொடுமையோ பெருங் கொடுமை. பாவம்! அவர்கள் தான் என்ன செய்வார்கள். என் தந்தை எல்லாம் படித்தவர்தான். உலக விவகாரங் களையெல்லாம் அறிந்தவர்தான். ஆனால் அவர்தான் என்ன செய்வார். பரிதாபம்! என்னைக் காணும் போதெல்லாம். கண்ணீர் விடுகின்றார்; நெஞ்சங்குமுறுகிறார். அம்மா கூட அப்படித் தான். என் விருப்பப்படி அவர்களால் எப்படி நடக்க முடியும்? அதற்கான தைரியமில்லை; அண்டை அயலார் நிந்திப்பார்களே என்ற பயம்; சாதிக் கட்டுபாடு செய்வார்களே என்ற அச்சம். என்று இவ்வாறு தானே சொல்லிக் கொண்டிருக்கும் போது, யாரோ வீட்டுக்குள்ளிருந்து வருவதுபோல் இருந்தது. உற்று நோக்கினாள். தன் தாயார் சானகியம்மாள் சிறுநீர் கழிக்க வந்தாள். தானும் சிறுநீர் கழிக்க வந்தது போலப் பாசாங்கு செய்து கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள் அலமு. மறுநாள் இரவு மணி 12. முதல் நாள் அலமு துக்கப்பட்டுக் கொண்டிருந்த கிணற்றங்கரை சந்திரன் பூரணமாகப் பிரகாசிக் கின்றான். பூக்களின் மணம் கம் மென்று பரிமளிக்கின்றது. அலமு கிணற்றின் கைப்பிடிச் சுவரின் மேல் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு துக்கத்துடன் உட்கார்ந்திருக்கிறாள். ஆழ்ந்த யோசனை. துக்கத்துடன் மங்கிவாடிய முகம் நீண்ட யோசனைக்குப் பின் திடீரென்று எழுந்தாள். முகத்தில் ஒரு கிளர்ச்சி. உடம்பில் ஒரு புதிய பலம். மனத்தில் ஒரு துணிவு. இவை எங்கிருந்து வந்தனவோ தெரியவில்லை. வாத்து போல் அசைந்தசைந்து நேரே கொல்லையின் பின்புற வேலியைத் திறந்து கொண்டு செல்கிறாள். இரண்டு பர்லாங்குக்கு அப்புறம் வடவாறு ஓடுகிறது. அதை நோக்கிச் செல்கிறாள். சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் செல்கிறாள். அதே சமயம் அடுத்த வீட்டு அருளானந்தன் அலமுவைப் பின் தொடருகிறான். இவள் திரும்பும் போதெல்லாம் அவன் மர நிழலில் மறைந்து கொள்ளுவான்; அவனும் கொல்லைப்புறம் ஏதோ காரியமாக அச்சமயத்தில் வந்தவன் ஒரு பெண் செல் வதைக் கண்டு பின் தொடர்ந்தான். அவனுக்கு இன்னும், முன்னே செல்லுகிறவள் அலமு என்று தெரியாது. அலமுவுக்கும் அருளானந்தனுக்கும் பாலியத்தில் நட்புண்டு. இருவரும் தெருவில் விளையாடினவர்கள். அலமுவின் அண்ணன் கோபாலனும், அவனும் ஒரு வகுப்பில் படித்தவர் நண்பர்களும் ஆவார்கள். கடைசியில் அலமு ஆற்றங்கரையை அடைந்துவிட்டாள். அங்கு நின்று கொண்டு வந்த வழியை நோக்கினாள். சுற்றிலும் பார்த்தாள். நிலா வெளிச்சத்தில் அவள் முகம் மற்றொரு சந்திரன்போல் நன்றாகத் தெரிந்தது. அப்பொழுது அருளானந்தன் இன்னாரென்று அலமுவைத் தெரிந்து கொண்டான். அவன் மனம் திடுக்கிட்டது. அவள் நிலை அவனுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் இவ்வளவு துணிகரமான காரியத்தைச் செய்வாள் என்று அவனுக்குத் தெரியாது. அலமுவைப் பற்றி அருளானந்தன் ஆலோசனை செய் வதற்குள் தொப்பென்று யாரோ ஆற்றில் குதித்த சத்தம் கேட்டது. அவ்வளவு தான் அலமுவைக் காணவில்லை. திடீரென்று அருளானந்தனும் ஓடி ஆற்றில் விழுந்தான். விழுந்த வுடனேயே அலமுவின் சேலை ஆனந்தன் கையில் சிக்கியது. உடனே பிடித்து இழுத்து, அலமுவையும் முதுகிற் சுமந்து கொண்டு கரை சேர்ந்தான். அலமுவுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. சேலை நனைந்தது. ஒன்று தான். நல்லகுளிர். வெடவெடவென்று நடுங்குகிறாள். பயம் வேறு. அஃது இன்னும் கொஞ்சம் நடுக்கத்தை அதிகப் படுத்தி விட்டது. அவளும் தன்னை பிடித்துத் தூக்கியவர் இன்னார் என்று கண்டுகொண்டாள். கொஞ்சநேரம் மவுனம் இருவரும் திகைத்து நின்றனர். ஆனால் அவர்களையறியாமலேயே இருவரிடமும் ஓர் உணர்ச்சி பெருக்கெடுத்தது. ஒருவர் மீது ஒருவர்க்கு ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போலக் காணப்பட்டது. இச்சமயத்தில் அருளானந்தன் முதலில் வார்த்தையாடத் தொடங்கினான். அலமு! ஏன் இன்று இக்காரியம் செய்தாய்? நீ இக்காரியம் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே யில்லையே! அலமு சற்றுத் தயங்கி நண்பரே ஏன் இப்பாவியைக் கரையேற்றினீர்? நான் உங்களுக்குச் செய்த தீங்கென்ன? என்னைப் பேசாமல் விட்டிருந்தால் எவ்வளவோ சவுக்கியம் அடைந்திருப்பேனே. அருளானந்தம் - அலமு! என்ன அறியாமை! பெண் தன்மையைக் காட்டிவிட்டாயே! எவ்வளவு கோழைத்தனம்! தற்கொலை செய்வதைவிட பயங்கொள்ளித்தனம் ஏதாவது உண்டா? தன் கஷ்ட நஷ்டங்களை சகித்துக்கொண்டு சுகமாக வாழ வழி தேடவேண்டியது அறிவாளிகள் கடமையல்லவா? உலகமென்றால் துன்பம் இருக்கும் தான். எதையும் ஆராய்ந்து பார்த்தல்லவா செய்ய வேண்டும். அலமு- நீங்கள் சொல்வது சரிதான்; நான் என்ன செய்வேன்? அபலை. அதிலும் இளமையில் கைம்பெண் ஆனேன். எல்லோரும் என்னைப் பழிக்கிறார்கள். விடிந்தால் என்னை உண்மையான விதவைக் கோலஞ்செய்து விடுவார்கள். அக் கோலத்துடன் வாழ்வதைக் காட்டிலும் உயிர் விடுவது மேல் எனத் துணிந்தேன். இக்காரியஞ் செய்ய முன்வந்தேன். இது தைரியமான செயலே ஒழிய கோழைத்தனம் அல்லவே. இதைத் தவிர நான் வேறு என்ன தான் செய்ய முடியும்? அருளானந்தன்- மனமிருந்தால் இடமுண்டு. கொஞ்சம் தைரியம் வேண்டும்; உனது சொந்த அறிவை கொஞ்சம் உப யோகப்படுத்தி யோசனை செய்து பார்த்தால் துன்பமில்லாமல் வாழும் வழியைக் கண்டுபிடிக்கலாம். பழக்கம், வழக்கம், சாதி மதம் இவற்றையெல்லாம் அடியோடு மறந்து விட வேண்டும். களங்கமற்ற மனசோடு நினைத்துப்பார்க்க வேண்டும். அலமு- நீங்கள் சொல்லுவது எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. நான் இப்பொழுது களங்கமற்றவளாகத் தான் இருக் கிறேன். வெளிப்படையாக நான் இன்னது செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். என் மனதுக்குப் பிடித்தமானால் செய்கின்றேன். அருளானந்தன்- நீ ஏன் உனது வாலிபப் பருவத்தை வீணாக்க வேண்டும். உயர்ந்த மனிதப் பிறவியை இவ்வாறு பாழ் பண்ணவேண்டும்? உன் வயதுக்கேற்ற ஓர் ஆண் மகனை மணந்து வாழலாகாதா? மற்ற சமூகங்களிலும் மற்ற நாடுகளிலும் உள்ள பெண்கள் விதவா விவாகம் செய்துகொள்ள வில்லையா? உங்கள் இந்து சமூகத்தில் மாத்திரந்தானே இம்மாதிரி பெண் களை வாட்டி வதைக்கிறார்கள். உன்னைப் போன்ற அறிவுடைய பெண்களும் இந்த அர்த்தமற்ற கட்டுப்பாட்டுக்கு அடங்கியிருக்க வேண்டுமா? அலமு- ஐயோ! நான் என்ன செய்வேன். தாங்கள் சொல் வதெல்லாம் உண்மைதான். ஆனால் ஊரார் பழிச்சொல்; வழக்கத்துக்கு விரோதம். சித்திரவதை செய்யும் சமூகக் கொடுமை; பெற்றோர்களின் கோழைத்தனம் இவைகளே என்னைப் பிணமாக்குகின்றன; என்னவோ என் வாழ்வு அவ்வளவு தான். அருளானந்தன்- அலமு ஏன் இன்னும் கோழை நெஞ்சம்! துரத்து கோழைத்தனத்தை! தைரியங்கொள்! ஊரார் பழிச் சொல்லுக்குப் பயந்தால் என்ன காரியந்தான் செய்யமுடியும்? நல்லதையும் பழிக்க ஊரார் உண்டு: கெட்டதையும் கொண்டாட ஊரார் உண்டு; அறிவுக்குப் பொருத்தமான காரியத்தை அஞ்சாமல் செய்து முடிப்பதே புத்திசாலித்தனம் ஆகும். அதுவே ஆண்மையுமாகும். அர்த்த மற்ற சாதி பேதம்: உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்! நமக்குள் அன்பில்லையா? எந்தச் சாதிபேதம் நமது அன்பைத் தடுத்தது! எந்த மதம் நமது காதலை வழி மறித்து விட்டது! பழக்கம்! வழக்கம்!! என்ன பழக்கம் வேண்டியிருக்கிறது இவை வஞ்சகர்கள் கட்டி வைத்த வலை. அதிலா நீயும் விழ வேண்டும்? ஆணுக்கொரு நீதி! பெண்ணுக்கொரு நீதி! சாதிக் கொரு நீதி! மதத்துக்கொரு நீதி! என்ன அக்கிரமம்! என்ன அநியாயம்!! அன்பே அலமு இன்னும் ஏன் யோசனை? இப்பொழுதே விடுதலை பெறத் துணிந்து நில் அவதிப்படும் பெண்கள் சமூகத்துக்கு நீ ஒரு வழிகாட்டியாக நில் உன்னால் உன் செய்கை யால் காதல் மணம் பெருகட்டும் கலப்புமணம் வளரட்டும். விதவா விவாகம் பரவட்டும். பால்ய மணம் பாழாகட்டும். குருட்டுத் தனத்தில் பிடிவாதமுள்ள பெற்றோர்களுக்குப் புத்தி வரட்டும் என்று அருளானந்தன் கூறினான். அவனுடைய வார்த்தையில், அன்பும், காதலும் உண்மை யும் பொங்கிக் கிடந்தன. இச்சொற்கள் இவள் மனத்தில் செல்லச் செல்ல அவளும் புதிய தோற்றமுடையவளாகிக் கொண்டே வந்தாள். அருளானந்தன் சொல்லும் முடிந்தது, அலமுவின் தலையும் நாணத்தால் கவிழ்ந்தது. அவள் முகத்தில் ஒரு புதிய சோதி! புன்சிரிப்பு! கெம்பீரத் தோற்றம்; இருவரும் தன் உணர்ச்சியின்றிக் கட்டியணைத்தனர் பொழுது விடிந்தது; கோதண்டராம சாதிரியின் முகம் மூன்றாம் பேது கொடுத்தது போல் இருந்தது. முகத்தில் துக்கக் குறி; எழுந்து திண்ணைக்கு வந்தார்; காத்தான் கத்திப்பையுடன் வந்து கும்பிட்டு நின்றான். சாதிரியார் உள்ளே போனார் அடியே! எங்கே அலமு என்றார். ஜானகி அலமு படுத்திருந்த இடத்தைப் போய்ப் பார்த் தாள். காணவில்லை. புழக்கடைப் பக்கம் சென்று பார்த்தாள். அங்கும் இல்லை. அலமு! அலமு! என்று தொண்டை வறளக் கூப்பிட்டுப் பார்த்தாள். ஏன் என்ற குரல் கேட்கவில்லை. அலமுவை எங்கேயும் காணோமே - என்றாள் சானகி, இரையாதே; என்றார் சாதியார். அப்படியா? என்று சொல்லி விட்டு மனத்திற்குள் மகிழ்ச்சியடைந்தான் அலமுவின் அண்ணன் கோபாலன். எப்படியோ விஷயம் தெருவாருக்குத் தெரிந்தது. ஊருக்குள் பரவிற்று; உறவினர் அறிந்தனர்; எங்கும் இதே பேச்சு. இவ்வாறே நாட்கள் பல கழிந்தன. மாதங்கள் பல போயின; வருஷங்களும் பல ஆய்விட்டன. சாதியார் மரணப் படுக்கையில் இருக்கிறார். உயிர் இப்பொழுது போகிறதோ, இன்னுஞ் சற்று நேரங்கழித்துப் போகிறதோ என்ற நிலையில் இருக்கிறது. அவர் மனத்தில் ஒரே குறைதான். அது அலமுவின் விஷயம் தெரியாதது தான். இச்சமயத்தில், அன்று முதல் நாள் தான் தஞ்சாவூர் அர சாங்க ஆபத்திரிக்குப் புதிதாக ஒரு டாக்டர் வந்தார். அந்த டாக்டரும், அவர் மனைவியும், குழந்தைகளும் இப்பொழுது சாதிரியார் வீடு நோக்கி வந்தனர். சாதிரியார் வீட்டு வாசலில் ஒரு மோட்டார் கார் பும், பும் என்ற சத்தத்துடன் வந்து நின்றது. அதிலிருந்து சுமார் 40 வயதுடைய டாக்டர் அருளானந்தமும், சுமார் 35 வயதுடைய அவர் மனைவியும், நான்கு குழந்தைகளும் இறங்கினர். நேரே சாதியார் படுத்திருந்த படுக்கையண்டைச் சென்றனர். அங்கு படுக்கையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்த கோபாலன், ஜானகி இன்னும் சில உறவினர்கள் ஆச்சரியத்துடன் எழுந்து நின்றார்கள். டாக்டரின் மனைவி, திடு திடென்று சாதியாரிடம் சென்று அப்பா என்றாள். அப்பொழுதுதான் அங்கிருந்தவர் களுக்கு விஷயம் புரிந்தது. சாதிரியாரும் தனது மகள் அலமு என்று தெரிந்து கொண்டார். குழந்தைகளையும் கண்டார். டாக்டரையும் அருகில் அழைத்துக் கண்டு ஆனந்தம் அடைந்தார். உங்கள் வாழ்க்கை சுகமடைய வேண்டும்; சமூகக் கொடு மையை ஒழிக்கப் பாடுபடுங்கள்; என்று சொல்லிக் கொண்டே உயிர் நீக்கினார். தம்பதிகள் கடைசி வரையிலும் இருந்து காரியங்கள் எல்லாம் நிறைவேறிய பின் வீடு வந்து சேர்ந்தனர். அதன் பின் இன்று வரையிலும், கோபாலனும், டாக்டர் அருளானந்தமும் இணைபிரியா நண்பர்களாகவேயிருக்கின்றனர். பாழுந் தெய்வமே எரிக்கும் வெயில் முழுவதும் வீட்டுக்குள் தான். மழை பெய்தாலோ வீட்டுக்குள் ஒரு குளமே குடியேறி விடும். பதினாறடி நீளம்; 8 அடி அகலமுள்ள ஒரே அறை: வெளியில் 3அடி அகலத்தில் ஒரு ஆளோடி; உட்கார்ந்து உள்ளே நுழையத் தகுந்த ஒரு சிறிய வாசல்; இந்த மாதிரியான ஒரு குடிசை. இக்குடிசை பாகனூர் சேரியின் மேலக் கோடியில் இருக்கின்றது அதில்தான் நமது காத்தான் வசிக்கிறான். கருப்பாயி படுக்கையில் படுத்து நான்கு தினங்கள் ஆகி விட்டன. சுரம் மிகுந்துவிட்டது. ஆகாரம் செல்லவில்லை. காத்தானும் ஏதேதோ அண்டை அயலார் சொன்ன இலை தழைகளை அரைத்துக் கொடுத்தான். சுக்கு, மிளகு, திப்பிலி வைத்தியங்களும், பிறர் சொன்னபடி செய்து பார்த்தான். ஒன்றிலும் சுரம் படியவில்லை. கருப்பாயிக்கு நாளுக்கு நாள் பலவீனம் அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. பிழைக்க வழி யில்லை என்ற நம்பிக்கைதான் வரவர உறுதியாகிக்கொண்டு வந்தது. 5 வயதில் ஒரு பையன்; 3 வயதில் ஒரு பெண்; ஒன்றரை வயதில் ஒருபெண் குழந்தை; பிறந்து மூன்று மாதங்கூட ஆகாத ஒரு பச்சிளங் குழவி. குழவிக்குப் பாலில்லை. குழந்தைகளுக்குக் கஞ்சியில்லை. அண்டை வீட்டுக்காரர்கள் இரக்கங் கொண்டு சில சமயங்களில் ஊற்றிய கஞ்சியே குழந்தைகளுக்கு ஆகாரம். காத்தான் சாப்பிட்டும் நான்கு நாளாயிற்று. குழந்தைகள். குடித்த கஞ்சியில் மீதமிருந்தால் ஒரு முணர், அரைமுணர் குடித்திருப் பான். பச்சைத் தண்ணீரைத் தவிர வேறு உணவில்லை. தைமாதம்; அறுவடை காலம். ஆதலால் சேரியில் உள்ள வர்கள் எல்லோரும், காலை ஐந்தரை மணிக்கு வேலைக்குப் போவார்கள். இரவு 8 மணிக்குத்தான் வீடு வந்து சேர்வார்கள். இதனால் பக்கத்தார்களுடைய உதவிகூட காத்தானுக்குக் கிடைக்க வழியில்லாமல் போயிற்று. கைக்குழந்தை நான்கு நாள் எப்படிப் பசி தாங்கும்? நாலாம் நாள் தீர்ந்து விட்டது. அதைக் கண்டதும் தாய் வருந்திய வருத்தத்துக்கு அளவேயில்லை. காத்தானும் கருப்பாயிக்கு எவ்வளவோ சமாதானம் கூறித் துக்கத்தை மாற்ற முயன்றான். பலிக்கவேயில்லை. கருப்பாயியின் கண்கள் இருண்டுவிட்டன. பேச்சே அடியோடு ஒடுங்கி விட்டது. பக்கத்திலிருந்து அழுதுகொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் பார்க்கிறாள். கணவன் கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அலங்கோலத் தையும் பார்க்கின்றாள். அவ்வளவுதான்; கருப்பாயியின் முகத்தில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. பக்கத்தில் சென்று பார்த்தான் காத்தான் இச் சமயத்தில் அவள் கண்கள் சுழன்றன. அப்படியே நின்று விட்டன. ஆ! வென்று அலறிக் கீழே விழுந்தான் காத்தான். சற்று நேரங்கழித்து எழுந்தான். ஒன்றும் புரியாமல் திக்பிரமை கொண்டவன் போல் உட்கார்ந்திருக்கிறான். II சின்ன பண்ணை பொன்னுசாமி பிள்ளை யென்றால் ஊர் முழுவதும் தெரியும். மகா கடுஞ்செட்டுப் பேர் வழி. பண்ணையாட்களிடம் வேலை வாங்குவதில் வெகு சமர்த்தர். கூலி கொடுப்பதில் அதிலும் சமர்த்தர். எல்லாப் பண்ணை களிலும், ஒரு நாளைக்குப் பண்ணையாட்களுக்கு இரண்டு படி கூலியென்றால் இவருடைய பண்ணையில் ஒன்றே முக்கால் படிதான் கூலி. அதையும் வீட்டில்கொண்டு போய் அளந்து பார்ப்பார்களானால், ஒன்றைரைப் படிதான் இருக்கும். அதிலும் கால்படி பதராக இருக்கும் மிஞ்சுவது. ஒன்றே கால்படிதான். பாவம்! பண்ணையாட்கள் என்ன செய்வார்கள்? ஒவ்வொருவர் மேலும் பரம்பரையாக ஆயிரம் இரண்டாயிரம் என்று பற்று எழுதி வைத்திருக்கிறார் பொன்னுசாமிப் பிள்ளை. அன்றியும் அவர்கள் குடியிருக்கும் இடங்கள் பிள்ளைக்குச் சொந்தம். அவரை விட்டு நீங்குவதென்றால் அவர் சொல்லும் கணக்குப்படி உள்ள பணத்தைக் கொடுத்துத் தீர்க்கவேண்டும். மனையிலும் குடியிருக்கக் கூடாது. ஆதலால் அவருடைய பண்ணையாட்கள் விடுதலைக்கு வேறு வழியின்றி அவரிடத் திலேயே வேலை செய்து கொண்டு வந்தார்கள். மற்ற பண்ணை யாட்கள் எப்படியோ சமாளித்துக்கொண்டு பிள்ளையிடம் வேலை செய்து கொண்டு வந்தார்கள். ஆனால் நமது காத்தானால் அவர் கொடுக்கும் கூலியைக் கொண்டு சமாளிக்க முடிவதில்லை. அவனுக்குப் பொய் பித் தலாட்டந் தெரியாது. பத்து படியை ஆறுபடி என்று சொல்லத்தெரியாது. எஜமான் வீட்டு நெல்லை இரவிலேயே களத்திலிருந்துபடியே கொண்டு வந்து விடத் தெரியாது. இந்தக் காரணங்களால்தான் காத்தானுக்கு இவ்வளவு கஷ்டம் நிர்க்கதி யான நிலைமையில் இருக்கிறான். நான்கு தினங்களாகக் காத்தான் அறுவடைக்கு வராததால் பிள்ளைக்குப் கோபம் அதிகம். அவன் மனைவியின் மேலும் அப்படித் தான். கருப்பாயிக்கு உடம்பு சுரம் என்ற விஷயம் பிள்ளைக்குத் தெரியும். தெரிந்தும் என்ன? சுரமா யிருந்தால் என்ன? ஏன் வேலைக்கு வரக் கூடாது? என்பதே அவருடைய கேள்வி. பிள்ளையின் ஆத்திரம் அதிகரித்தது. மற்ற பண்ணை யாட்களை அழைத்து உடனே காத்தானைக் கையோடு அழைத்து வரும்படி உத்திரவு பிறப்பித்தார். வராவிட்டால் குடிசையை நெருப்பு வைத்துக் கொளுத்தி விடும்படி கூறினார். III காத்தான் அநாதையாக உட்கார்ந்திருக்கிறான். கைக் குழந்தை உயிர் நீங்கிக் கிடக்கிறது. கருப்பாயியும் வாயைப் பிளந்து விட்டாள். மற்றமூன்று குழந்தைகளும் பசி பொறுக்க முடியாமல் கஞ்சி கஞ்சி என்று கத்துகின்றன. இந்தக் கோலத்தில் காத்தானுடைய சக வேலைக்காரர்கள் வாசற்படியில் வந்து நின்று கொண்டு ஏ காத்தான், ஏகாத்தான் என்று கூப்பிட்டார்கள். காத்தானும் தட்டுத் தடுமாறிக் கொண்டு வெளியில் வந்தான். வேலைக்காரர்கள்: ஆண்டெ கூப்பிடுராரு! நீ நாலஞ்சு நாளா வேளைக்கு வராததுனாலே ரொம்ப கோவமாயிருக்காரு. ஒன்னை எப்படியாச்சும் இன்னைக்குக் கையோடே கொண் டாரச் சொன்னாரு. கிளம்பு இப்பவே. நாழி வளத்தாதே என்றார்கள். கோவென்று கதறினான் காத்தான். தலையில் அடித்துக் கொண்டு கீழே விழுந்தான். உடனே ஆட்கள் சென்று தூக்கி நிறுத்தினார்கள். ஏ அண்ணே. நான் என்னா பண்ணுவே, பாழும் கடவுள் என்னை சோதிச்சிப்பிட்டது. புள்ளை செத்துப் போச்சு, பெண்டாட்டியும் பொயிட்டா. தாயத்த மூணு புள்ளை கத்திக்கிட்டு கிடக்கு. அதுவளுக்குக் கஞ்சியில்லை. ஒங்களுக்கு என் கயிட்டம் தெரியாதா அண்ணே என்றான் காத்தான், வேலைக்கார்கள்- நாங்கள் என்னாப்பா பண்ணுவோம். அந்தப்பாவி சொல்லுறபடி கேக்காட்டி குடியிருக்க இடமில்லே. கடனைத் தொலைக்க முடியாது. அவன் சொல்றபடி கேட்டுத் தான் ஆவவேண்டியிருக்கு. நீ இப்பவே பொறப்புட்டு வந்துடு. இல்லாக்கட்டி ஒங்குச்சிக்கு நெருப்பு வைச்சுப்பிடுவோம். எல்லாம் அவருக்கிட்டே வந்து சொல்லிக்கோ என்றார்கள். என்னப்போல இருந்தா நீங்க என்னப் பண்ணுவீங்கோ? ஒங்களுக்கு ஈவிரக்கமில்லையா; பொண்டுபுள்ளைவோ இல்லையா? பொணத்துக்குச் செய்யவேண்டியதெல்லாம் செய்துட்டுவர்ரே; அந்தப் பாவி மனிசங்கிட்ட கொஞ்சம் சொல்லப்படாதோ? என்றான் காத்தான். அவர்களும், பிள்ளையிடம் சென்று காத்தானுடைய கஷ்டத்தைக் கூறினார்கள். ஏன் நான் சொன்னபடி செய்ய வில்லை என்று வேலைக்காரர்களை கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அரைநாள் கூலியைப் பிடித்துக் கொள்ளுவதை அபராதமாக விதித்தார். பிறகு, அன்று எப்படியாவது போகட்டும் என்று சும்மா இருந்துவிட்டார். IV கருப்பாயி இறந்த மறுதினம், பிள்ளை வீட்டில் அவர் தகப்பனார்க்குச் சிரார்த்தம். காலை முதல் வீடு ஏக அமர்க்களப் படுகிறது. பெரிய மனிதரல்லவா? விஷயம் புரிந்ததோ புரிய வில்லையோ, நம்பிக்கையிருக்கிறதோ, நம்பிக்கை யில்லையோ, நன்மையிருக்கிறதோ, நன்மை இல்லையோ, நன்மை தீமைகளில் ஊரார் மெச்ச நடந்துகொள்ள வேண்டும். இதுதான் பல பெரிய மனிதர்களின் ஒரு முக்கியமான குணம். இந்த இனத்தைச் சேர்ந்தவர் தான் நமது பிள்ளையும். ஏழெட்டு பிராமணர்கள், பிள்ளை வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஊம், சிரார்த்த காலம் வந்துடுத்து, பிதுர் காரியம் சீக்கிரம் ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இச்சமயத்தில் வேலைக் காரர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், வாழைக்காய், வாழையிலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, தேங்காய், மாங்காய், முதலிய காய்கறிகள், இன்னும் கடைச்சரக்குகள், சில புதிய வெண்கலப் பாத்திரங்கள், குடை, பாதரட்சை போன்ற பல பொருள்களும் வந்து வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் பிள்ளை வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தார். உடனே எதிரில் நமது காத்தான் தோன்றிக் கும்பிட்டான். அவ்வளவு தான்; பிள்ளைக்குக் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. காத்தான் வாய் திறந்து ஒன்றும் சொல்லவேயில்லை. பிள்ளை ஓடினார் உள்ளே; ஒரு தடியை எடுத்துக் கொண்டு வந்தார். காத்தானைக் கண் மூஞ்சி தெரியாமல் அடித்தார். காத்தானால் அடி பொறுக்க முடியவில்லை. ஐயோ வென்று அலறிக் கீழே விழுந்தான். அவ்வளவுதான்! பக்கத்தி லிருந்த ஆட்கள் ஓடிப் பார்த்தார்கள். காத்தானும் கருப்பாயி சென்றவிடம் சேர்ந்தான். பிள்ளைக்கு இன்னது செய்வது என்று தெரியவில்லை. அவர் மிக தைரியதர். ஆகையால் உடனே காத்தான் மயக்கமடைந்தான். தூக்கிக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்குப் போங்கள். மயக்கத்தைத் தெளிவியுங்கள் என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார். பிறகு நடக்க வேண்டிய சிரார்த்தம் வழக்கம் போல் நடந்தது. அன்று மாலையே சேரியில் ஒரு பெருங்கிளர்ச்சி. என்ன வந்தாலுஞ் சரி. விஷயத்தைப் போலீசுக்குத் தெரிவிப்பது என்று சேரியில் உள்ளவர்கள் முடிவுகட்டி விட்டார்கள். பார்த்தார் பிள்ளை. வேறு வழியில்லை. விஷயம் வெளி யானால் தனக்கு அவமானம்; ஆபத்துங்கூட நிச்சயமாக உண்டு. அது வரையிலும் சம்பாதித்து வைத்திருந்த பணமும் செல வழிந்து போய்விடும் என்று நினைத்தார். ஆதலால் சேரியில் உள்ளவர்களை ஒருவாறு சமாதானப்படுத்தினார். அதனால் காத்தான் சம்பந்தமான விஷயம் மறைக்கப்பட்டு விட்டது. செல்வத்தால் ஆகாத காரியம் என்ன இருக்கிறது? அந்தச் சமாதானத்தின் பயனாக இன்று அச்சேரியில் உள்ள மனைகள் யாவும் குடியிருப்பவர்களுக்கே சொந்தம். கூலியும் பண்ணையாட்களுக்குச் சரியாகக் கிடைக்கிறது. காத்தானுடைய மற்ற மூன்று குழந்தைகளும் பிள்ளையின் செலவிலேயே வளர்ந்து வருகின்றனர். சின்ன பண்ணை பொன்னுசாமி பிள்ளையின் கொட்டம் அடங்கிவிட்டது. இன்னும் சேரியில் உள்ளவர்கள் காத்தானைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். முன்னிருந்த அடிமைப் புத்தி நீங்கி அவர்கள் இப்பொழுது சுதந்திர புத்தியுடன் இருந்து வருகின்றனர். புது உலகக் காட்சி என் கஷ்டத்தை இம்மனித சமூகத்திடமும், இவ்வுலகத் திடமும் இனிமேல் நான் கூறிப்பயனில்லை. அப்படிச் சொன்னால் என்னைப் பைத்தியம் என்பார்கள். நான் ஏன் மனிதனாகப் பிறக்க வேண்டும்? வேறு ஜென்மம் எடுத்திருந்தால் எப்படியாவது வயிறு வளர்ப்பேன். என் வீட்டிற்குக் கையில் பணமில்லாமல் போய் என்ன செய்வது? பசியுடனிருக்கும் குழந்தையின் முகத்தை எப்படிக் காண்பேன். வீட்டிற்குப் போனதும் குழந்தை? குமரன் அப்பா பட்சணம் வாங்கி வந்தாயா என்று கேட்பான். இல்லையென்று சொல்லி எத்தனை நாளாய் ஏமாற்றி வந்தேன். அவனது ஏமாற்றமடைந்த முகத்தை நான் இனி பார்க்கமாட்டேன் என்ற திடமான முடிவுக்கு வந்து ஒரு நாள் எங்களூர் சமீபத்திலுள்ள காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தேன். எனது மனக்கண்முன் என் ஒரே குழந்தையின் பரிதாபமான முகம் தோன்றியது. துக்கத்தினாலோ, பசியின் கொடுமை அல்லது இரண்டும் சேர்ந்ததாலோ நான் மரணை யிழந்து அங்கிருந்த ஒரு பாறையின் மேல் சாய்ந்தேன். கண்ணை விழித்துப் பார்த்தபொழுது காலை நேரமாய் இருந்தது. உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. எழுந்திருக்க முயன்றும் முடியவில்லை. செடி கொடிகள் என்னைச் சுற்றிலும் வளர்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். மெதுவாகச் செடி கொடிகளை ஒதுக்கிக் கொண்டு சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டேன். முதல் நாள் இரவு நான் கற்பாறை யின் மேல் படுத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அடர்த்தியான பூஞ்செடிகள் ஆறடி உயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தன. முதல் நாள் சாயங்காலம் என்னருகிலிருந்த நாவல் மரங்களும் வேப்ப மரங்களும் காணப்படவில்லை. இரவில் ஏதாவது பைசாசங்கள் என்னை இவ்விடம் கொண்டுவந்து போட்டுவிட்டனவோ என்று யோசித்தேன்; யோசிக்க யோசிக்க என் மூளைதான் குழப்பமடைந்தது. சட்டென்று குழந்தையின் முகம் என் மனக்கண் முன்வந்து நின்றது. இனி வேறொன்றைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை. வீட்டிற்குச் சென்று குழந்தையை அணைத்து முத்தமிட்டால் தான் என்மனம் நிம்மதி அடையும். ஆனால் . . . . . ? கையில் பண மில்லாமல் பசியோடிருக்கும் குழந்தையின் முகத்தை எப்படிப் பார்ப்பது! கையில் பைசாகூட இல்லையே! அக்குன்றை விட்டுத் தள்ளாடித் தள்ளாடிக் கொண்டே கீழே இறங்கினேன். ஓர் இரவில் நான் அவ்வளவு தைரியத்தையு மிழந்து விட்டது எனக்கு ஆச்சரியமாக விருந்தது. கவலையாலும் மனச்சோர்வினாலும் தான் நடக்க முடியவில்லையோ? என்று எண்ணினேன். குறுக்கும் நெறுக்குமாக மரமும் செடியும் வளர்ந்திருந்ததால் பாதையே எனக்குத் தெரியவில்லை. பசியினாலும் களைப்பினாலும் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன். சில நிமிஷங்கள் கழித்து ஊர்ப்பக்கம் நோக்கினேன். என்ன ஆச்சரியம்! நேற்று சாயங்காலம் இருந்த ஊர் வேறு; இப்போது இருப்பது வேறு. எங்கே பார்த்தாலும் சிறு மாளி கைகளாக அல்லவோ இருக்கின்றன. எவ்வளவு அழகான பூந்தோட்டங்கள்! ஆஹா! என்ன அதிசயம்! என்று கூறினேன். நான் காண்பது ஒரு வேளை கனவுதானா என்று சந்தேகித்தேன். வேறு எந்த ஊருக்காவது வந்துவிட்டோமா என்று சந்தேகித்தேன். ஆனால் தூரத்தில் தெரியும் திருகூட மலையின் தொடரையும், தாம்பிரபரணி நதியையும் கண்டதும் அவ்வூர் மாறவில்லை என்பது எனக்கு உறுதிப்பட்டது. பிறகு எப்படி இந்த மாறுதல்கள்? குழந்தையின் ஞாபகம் என்னை நகரை நோக்கி இழுத்தது. பழைய தெருக்கள் குடிசைகள் எல்லாம் எங்கேயோ காணோம். சுத்தமான வீதிகளும், அழகான சிறு வீடுகளும் எனக்குப் பிரமிப்பை அளித்தன. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எல்லோரும் அவரவர்க்குரிய முறையில் சுத்தமாய் உடை அணிந்திருந்தனர். பெண்கள் ஆண்கள் போலவே வெளியில் போவதும் வருவது மாய் இருந்தார்கள். முன்போல் அழுக்கு வேஷ்டி ஒருவரிடமாவது காணப்பட வில்லை. சோம்பேறித்தனம், சஞ்சலம், குடிமயக்கம் இவை களுக்குப் பதிலாகச் சுறுசுறுப்பு, சந்தோஷம், குதூகலம் முதலியன எங்கும் குடிகொண்டிருந்தன. ஒவ்வொருவரும் தத்தம் காரியங் களைப் பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் போய்க் கொண்டிருந் தார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பார்த்ததும் அப்படியே தம்பித்து நின்றுவிட்டார்கள். சில குழந்தைகள் பைத்தியம், பைத்தியம் என்று கூறினார்கள். பைத்தியம் என்று கூப்பிட்டதும் எனக்குக் கோபம் வந்து விட்டது. இதற்குள் ஒரு பெரிய கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அப்போது இரண்டு போலீஸார்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தார்கள்; அடுத்த நிமிஷம் கூட்டம் கலைந்தது. போலீகாரர்கள் என்னைத் தங்களுடன் போலீ டேஷனுக்கு வரும்படி மரியாதையாகக் கூப்பிட்டார்கள். நான் ஏன் போலீ டேஷனுக்கு வரவேண்டும்? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உம்மை அதிகாரி களின் முன் ஆஜர்படுத்த வேண்டியது எங்கள் கடமை. ஐயா! என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? என்னை விட்டுச் செல்லுங்கள். தயவு செய்து பேச்சை வளர்க்க வேண்டாம்; எங்கள் கூட வாரும். என்னை ஏன் சந்தியிலிழுக்கின்றீர்கள்? நான் ராஜீயவாதி யல்ல; அல்லது சமதர்ம வாதியுமல்ல; நான் ஓர் ஏழை, பிழைக்கும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றேன். என் குழந்தை களைப் பார்க்கவேண்டும்; என்னை விடுங்கள். நீ சமதர்மவாதி இல்லையா? என்று அவ்விரு சேவகர் களும் என்னைக் கோபத்துடன் பார்த்தார்கள். நீர் வேலை யில்லாமல் தவிக்கின்றேன் என்கிறீரே! நீர் சோம்பேறியா? சோம்பேறிகளுக்கு இந்தத் தேசத்தில் இடமில்லையே! உம்மேல் இப்போது அநேக குற்றங்கள் இருக்கின்றன என்று சொல்லி அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். போலீ டேஷனை அடைந்தவுடன் ஒரு அதிகாரிமுன் நான் நிறுத்தப் பட்டேன். அந்த அதிகாரி என்னை அநேக கேள்விகள் கேட்டார். தங்கள் பெயரென்ன? எந்த ஊர்? என்றார். சுப்ரமண்யம் என்று பெயர். எனக்கு இந்த ஊர்தான் என்றேன். எந்தத் தெருவிலிருக்கிறீர்? என்றார். பேட்டைத் தெருவில் 33- நெம்பர் வீடு என்றேன். அதிகாரி ஒரு புத்தகத்தை அப்படியும் இப்படியும் புரட்டினார். அப்படி ஒரு தெருவும் இவ்வூரில் இல்லையே. நீர் பொய் சொல்லுவதாய் அபிப்பிராயப்படுகின்றேன். முற்றிலும் குழம்பி இருந்த என் மனத்தில் அப்போது எனக்கு சொந்த நிலையை விவரிக்க இயலாததாக இருந்தது. ஏதோ சொப்பன உலகத்திலிருப்பது போல் பிரமித்து நின்றேன். என்ன ஐயா! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற மாட்டேன் என்கிறீர். ஏன் என்னைக் கஷ்டப்படுத்துகிறீர்கள்? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்றபடி ஏழையை என் உபத்திரவிக்கின்றீர்கள்? என்று பொறுமை இழந்து கூறினேன். இங்கு பாரும்! உம்மீது அநேக குற்றங்கள் சாட்டப்பட்டி ருக்கின்றன. முதலாவதாக இத்தேசத்தில் எவரும் கிழிந்த அழுக்கு ஆடையை அணியக் கூடாது; நீர் அணிந்திருக்கிறீர். ஆச்சரியத்துடன் நான் என்னைக் கவனித்துப் பார்த்தேன். என்ன அதிசயம்! முதல் நாள் இரவு உடுத்தியிருந்த வேஷ்டியும் சட்டையும் கிழிந்து கந்தலாகியிருந்தன. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆச்சரியத்தினால் திரும்பித் திரும்பி என்னையே பார்த்துக் கொண்டேன். நான் நேற்று சாயங்காலம் நல்ல ஆடை அணிந்திருந்தேன். இப்பொழுது எல்லாம் இப்படிக் கிழிந்திருக் கிறது எனக்கு ஆச்சரியமாக விருந்தது. கிழவரே! தாங்கள் என்னை மீண்டும் ஏமாற்றப் பார்க்கி றீர்கள். தாங்கள் அசுத்தமாயிருப்பது இரண்டாவது குற்றம். கிழவர் என்று என்னை கூப்பிட்டதும் எனக்குக் கோபமும் ஆச்சரியமும் மேலிட்டன. மறுபடியும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டேன். தோல் சுருங்கி கிழவனுடையதைப் போலிருந்தது. உடம்பு புஷ்டியில்லாமல் பலஹீனமாக இருந்தது. நான் திகிலடைந்து விட்டேன். ஒரு வேளை துர்தேவதைகள் காட்டில் என்னை இவ்வாறு மாற்றிவிட்டனவோவென்று எண்ணினேன். பிரமையடைந்து அப்படியே கல்தூண் போல் அசைவற்று நின்றேன். இவைகளைவிடப் பெரிய குற்றம் ஒன்றும் உம்மேல் சுமத்தப்பட்டிருக்கின்றதே! உம்முடைய தோற்றத்தையும் உடைகளையும் பார்த்தால் நீர் இந்தத் தேசத்து மனிதராகவே காணப்பட வில்லை. சமதர்மராஜ்யம் இன்னும் ஏற்படாத துர்பாக்கிய அந்நிய தேசம் எதையோ சேர்ந்தவர் போல் தோன்று கின்றது. அங்கிருந்து முதலாளி அரசாங்கம் எதனாலாவது அனுப்பப்பட்டு ஒற்றர் வேலை பார்ப்பதற்கு வந்தவராயிருக் கலாம் என்று உம்மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. என்ன சொல்கிறீர்? என்னையா! நீர் கூறுவது ஆச்சரியமாக விருக்கின்றதே. எனக்கு எந்த அரசாங்கம் என்ன வேலை கொடுத்திருக்கின்றது? நான் தான் வேலை கொடுக்காமல் திண்டாடுகின்றேனே; வேலை அகப்பட்டால் என் மனைவியையும் குமாரனையும் பட்டினியுடன் பரிதவிக்க விடுனோ? நீர் சொல்வது எனக்கு விளங்கவில்லையே. இப்போது அரசாங்கம் ஒவ்வொருவருக்கும் வேலை கொடுத்து உணவும் வீடும் அளித்திருக்கிறது. அப்படி இருக்கையில், பசிபட்டினி என்று நீர் சொல்லுகிறீரே. பட்டினி, திருட்டு, பொறாமை, ஏழ்மை, கொடுமை, துன்பம் என்று வார்த்தைகளெல்லாம் இந்த மலையேறி விட்டனவே நீர் சொல்வதெல்லாம் புதுமையாக விருக்கின்றது. என்னைப் பரிகசிக்கிறீர் போலும். என் குழந்தையை முதலில் பார்க்க வேண்டும். என்னை விடுங்கள். அதிகாரி சற்று ஏதோ யோசித்தார். தன்முன் நிற்கும் மனிதன் பைத்தியக்காரனோ என்று சந்தேகப்பட்டார். பிறகு என்னைப் பார்த்து கிழவரே! உங்கள் வரலாற்றை விவரமாய்க் கூறும். ஐயா எனக்கு இதே ஊர்தான். நான் சாதாரண சொற்ப மிராசுதரரின் மகன். எனக்கு மூன்றாவது வயதில் என் தகப்பனார் காலமானார். எனக்குள்ள ஆதியை நான் படிப்பில் செலவிட் டேன். எனது இருபதாம் வயதின்போது கல்யாணம் செய்து கொண்டேன். அதற்கு இரண்டு வருஷத்திற்கு முன்பு என் தாயாரும் இறந்தாள். நான் பி.ஏ. படித்து முடிப்பதற்குள் கையுள்ள பணமெல்லாம் செலவழிந்துவிட்டது. பிறகு வாராவாரம் ஒருரீம் பேப்பர் வாங்கி மனுப்போட்ட வண்ணமா யிருந்தேன். பீஹாரில் எனது மைத்துனர் ஒருவர் இருந்தார். அவர்தான் மாதாமாதம் கொஞ்சம் பணம் அனுப்பி வந்தார். இந்த அழகில் அபாக்கியவனான எனக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. பாவியாகிய எனக்கு இதுவரை உதவி செய்து வந்த மைத்துனருக்கு இக்கதி வர வேண்டுமா பீஹாரில் பூகம்பத்தில் அவர் அகப்பட்டு இறந்து போனார். அதிலிருந்து கொடிய வறுமை என்னைப் பற்றியது. மனுப்போட காகிதம் வாங்கக் கூட பணமில்லை. என் குழந்தை பட்டினி கிடப்பதைக்கண்டு என்னால் சகிக்க முடியவில்லை. நேற்று சாயங் காலம் மனச்சோர்வினாலும், கவலையாலும், பக்கத்துக் காட்டில் மெய்மறந்து தூங்கிவிட்டேன். காலை எழுந்ததும் தான் இவ்வளவு மாறுதலடைந்த ஆச்சரிய உலகில் நின்று கொண்டி ருக்கின்றேன்! இதை எல்லாம் பிளந்த வாயுடன் அதிகாரி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வரலாற்றைக் கேட்க கேட்க அவருடைய வியப்பு அதிகமாகி வந்தது. கிழவரே! நீர் அடிமை இந்தியாவில் நடந்தவைகளைப் பற்றியல்லவோ கூறுகின்றீர்கள். 1935ம் வருஷத்துப் பூகம்பத்தைப் பற்றி இந்துதேச சரித்திரத்தில் படித்திருக்கின்றேன். தாங்கள் பழைய காலத்து மனிதரல்லவா! ஆ! நீர் இவ்வளவு வருஷமாக தூங்கிக் கொண்டிருந்தீரா? என்ன ஆச்சரியம்! நீர் இப்பொழுது புது உலகத்தில் அல்லவா இருக்கின்றீர். எனக்கு பல ஆச்சரியங்களுக்கு இடையில் அவர் கூறியதும் ஆச்சரியமாக விருந்தது. ஆனால் என் மனதில் குழந்தையின் முகம் வந்து தோன்றியது. என் குழந்தை, என் குழந்தை என்று கூவினேன். எனது கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. அதிகாரியின் கண்களும் கலங்கின. தங்கள் பையனைக் கண்டு பிடிப்பது கஷ்டம்தான்; இருந் தாலும் அதற்கு முயற்சி செய்கிறேன். உமது குழந்தையின் பெய ரென்ன? குமரன். குமரனா தாங்கள் மனைவியின் பெயரை நான் அறிய லாமா? அவள் பெயர் அமிர்தம். அதிகாரி ஆவென்று கதறி என்னைத் தழுவிக் கொண்டு அப்பா! அப்பா!! இவ்வளவு வருஷங்களாகக் காட்டில் தூங்கினீர் களா? என்று கதறினார். முதல் மரியாதை I நிரம்ப நல்ல மனிதர்; இந்தக் காலத்தில் இந்த மாதிரியான மனிதர் கிடைப்பது ஏது? எல்லாம் தலைகீழாக மாறி வருங் காலத்தில் இப்படி ஒரு அபூர்வமான மனிதரைப் பார்க்க முடியுமா? அடடா! என்ன பக்தி, எவ்வளவு சிரத்தை, அவரைப் போல பக்தி மான் யாருமேயில்லை; மிகவும் தரும குணமுள்ளவர் என்று ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் பேசிக் கொள்ளுவார்கள். ஏ.கு.அ.கெ. அருணகிரி செட்டியாரைப் பற்றியது தான் இப்பேச்சு. செட்டியார் என்றால் ஊரிலே ஒரு மரியாதை; ஒரு அபி மானம். திருத்தேங்காயூர் வன்மீக நாதர் கோயிலை இடித்துக் கட்டினவர் இவர்தான். கோயில் பாழடைந்து கிடந்தது. வவ்வால் களுக்கும், பாம்பு, தேள் முதலிய விஷப் பிராணிகளுக்கும் உறைவிடமாக இருந்தது அந்தக் கோயில், அந்தக் கோயில் திருப்பணிக்குப் பிறகு தான் செட்டியாருக்கு நல்ல பெயர். அவருடைய சொந்தவூர் காவிரிப்பூம்பட்டினம். ஆனால் கோயில் திருப்பணிக்குப்பின் அவர் திருத்தேங்காயூருக்கே குடிவந்து விட்டார். அதையே தமது நிலைத்த வாசதலமாக வைத்துக் கொண்டார். அந்தக் கோயில் திருப்பணிக்குப் பிறகு செட்டி யாருக்கு அதிர்ஷ்டந்தான். அவருடைய லேவாதேவி இன்னும் விரிவாக நடந்த வந்தது. அந்தவூரில் கடன் வாங்காதவர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். கோயில் கட்டும் போது அவருக்குப் புதையல் கிடைத்ததாக ஒரு வதந்தி, இன்றளவும் ஊரார் புதையல் விஷயத்தைப் பற்றி ரகசியமாகப் பேசுவதுண்டு. ஆனால் அதன் உண்மை என்னவோ; சத்தியமாக நமக்குத் தெரியாது. II கருப்பையா பிள்ளை பரம்பரையாக அவ்வூர் வாசி. அவரு டைய குடும்பம் பெரிய குடும்பம். அவர்களுடைய முன்னோர்கள் பணக்காரர்கள். திருத்தேங்காயூர் கோயிலின் பரம்பரை டிரடி பாத்தியம் கருப்பையா பிள்ளைக்கே. கோயிலுக்குச் செலவு செய்தே அவர்கள் குடும்பச் செல்வம் அழிந்தது என்று சொல்லாம். பிள்ளை இப்பொழுது ஏழையாயிருந்தாலும் அவரிடம் ஊராருக்கு ஒரு மரியாதையுண்டு. இன்றும் கோயிலில் முதல் மரியாதை பிள்ளைக்குத் தான். திருப்பணிச் செட்டியாருக்கு இரண்டாவது மரியாதை தான். ஆனால் செட்டியாருக்கு மாத்திரம் உள்ளூரக் கொஞ்சம் வருத்தம் உண்டு; முதல் மரியாதை தனக்கில்லையே என்பதைப் பற்றி. இப்பொழுது கருப்பையா பிள்ளையின் குடும்பம் நொடித்துப் போயிருந்தது குடியிருக்கும் வீடு ஒன்றே மீதம். மீதமிருந்த நாலு ஏக்கர் நஞ்சை நிலமும், சென்ற வாரந்தான் கடனுக்காக ஏலம் போயிற்று. ஏதேனும் தொழில் செய்தா லொழிய ஜீவனம் பண்ண முடியாத நிலைமையி லிருந்தார் பிள்ளை. கடைசியாக அவ்வூரில் ஒரு ஜவுளிக் கடை வைக்கலாம் என்று யோசனை செய்தார். அதற்குப் பணம் வேண்டுமே- நமது திருப்பணிச் செட்டியாரைத் தவிர அவ்வூரில் வேறு பணப் புழக்க முள்ளவர்களும் இல்லை. அவரிடம் பிள்ளைக்கும் அபிமானம் உண்டு. செட்டியாரைக் கடன் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து அவரிடம் சென்றார் பிள்ளை. செட்டியாரும் பிள்ளை தன்னிடம் வந்த நோக்கத்தை ஒருவாறு தெரிந்து கொண்டார். கடைசியாக ஒரு வருஷத் தவணையில் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தார் செட்டியார். குறைந்த வட்டி என்று பேர். நூற்றுக்கு மூன்று விகிதந்தான். வெண்ணிலைக் கடனல்ல; வீட்டின் மேல் பெந்தகம். பிள்ளைக்கு ஏதோ கடனாவது கிடைத்ததே என்று சந்தோஷம். பிள்ளையும் ஜவுளிக் கடை ஆரம்பித்தார். அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் ஏற்கனவே உள்ள அபிமானத்தால் ஊரார் அவரிடமே வியாபாரம் செய்து வந்தனர். பிள்ளையும் அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் வியாபாரத்தை நடத்தி வந்தார். குடும்பச் செலவுக்குக் கஷ்டமில்லாமலிருந்தது. கடை முதலுக்கும் அழிவில்லாமலிருந்தது. ஆனால் வாங்கின கடனுக்கு வட்டி செலுத்த முடியவில்லை. முதலோடு வட்டியும் வளர்ந்து கொண்டே போயிற்று. கடனைப் பற்றியும் வட்டியைப் பற்றியும் பிள்ளையின் மனதில் சதா கவலை குடிகொண்டுதான் இருந்தது. III பகல் மணி 3 இருக்கும்; செட்டியார் அப்பொழுது தான் காப்பி சாப்பிட்டார். வெறுங் காப்பி மாத்திரம் அல்ல- நாலு துண்டு அல்வா; ஒரு கிண்ணம் சொஜ்ஜி; நாலு ஜிலேபிகள்; நாலு வடைகள்; ஒரு கூஜா காப்பி; சிற்றுண்டி தானே! இவ் வளவோடு நிறுத்திக் கொண்டார் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார்; திண்டில் சாய்ந்து கொண்டார். வாசனைத்திர வியங்களுடன் நல்ல வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டார். கவலையில்லாமல் வெற்றிலை பாக்கை மென்று கொண்டிருக்கும் சமயத்தில் ஏதோ ஒரு யோசனை தோன்றிற்று. உடனே பக்கத்தில் விசிறிக் கொண்டு நின்ற பையனிடம்; ஏலே பொன்னையா நம்மக் கணக்குப் பிள்ளை அய்யரைக் கூப்பிடு என்றார். கணக்குப் பிள்ளை சுப்பு அய்யரும் வந்து வணக்க ஒடுக்க மாக நின்றார். செட்டியார் அய்யரே, நம்ம கருப்பையா பிள்ளை கணக்கைப் பார்த்தீர்களா? ஒரு வருசத் தவணை ஆயிருக்கும் போலெருக்கே, பணம் கேக்க வாண்டாமா என்றார். உடனே அய்யர் ஓட்டமும் நடையுமாய்த் திண்ணைக்குப் போய்க் கணக்கு நோட்டை எடுத்து வந்தார்; விறுவிறெனப் பக்கங் களைப் புரட்டினார். ஆமாம் கெடு ஆய்விட்டது. இன்னும் நான்கு நாள்தான் இருக்கு, தவணைத் தேதி முடிய என்றார். செட்டியார் சரி ஒரு பயலை அனுப்பி பிள்ளையைக் கூப்பிட்டு வரச் சொல்லும் என்றார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பிள்ளையும் வந்து சேர்ந்தார். செட்டியார் என்ன பிள்ளைவாள் நம்ம கணக்கு இன்னும் தீரலையே; பணத்துக்கு என்ன சொல்றீக; எனக்கு இப்பொழுது ரொம்ப மொடை; எப்படியாவது தீர்த்தூட்டால்தான் தேவலாம் என்றார். பிள்ளை செட்டியார்வாள்! தாங்கள் சமயத்தில் செய்த உதவியை மறக்கவில்லை. வட்டியோடு ஆயிரத்து முன்னூறு ரூபாய் ஆகுமென்று நினைக்கிறேன். ஆயிர ரூபாய் முதல் அப்படியே இருக்கிறது. கடையை எடுத்துவிட்டால் வேறு ஜீவனத்துக்கு வழியில்லை. வேண்டுமானால் வீட்டைச் சாசனம் பண்ணிக் கொள்ளுங்கள் என்றார். செட்டியார் அதெல்லாம் இப்பொழுது சரிப்படாது; எப்படியோ நாளைக்குள் பணம் வந்தாகணும். அப்புறம் வீணா என்மேலே கோவிச்சுக்கப் படாது. ஆமாம் சொல்லிவிட்டேன் என்றார். பிள்ளைக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. சரி; நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கடைக்கு வந்து விட்டார். IV செட்டியார் கணக்குப் புள்ளை அய்யரே, புள்ளை எப்படி யிருக்கான்; பணம் வந்து விடுமா? இல்லை கச்சேரிக்குப் போய் தான் பணம் வாங்கணுமா? அய்யா பிள்ளையின் நிலைமை ரொம்பச் சிரமம்; பணம் வருவது துர்பலம். எங்கிருந்து கொடுக்கப் போகிறார். எப்படி யாவது வேறு வகையில் தான் பணத்தை ஈடுசெய்துகொள்ள வேண்டும். அவர் மீது பிராது போட்டால் ஊரிலும் நமக்குக் கெட்ட பெயர் வந்து விடும். செட்டியார்- அப்புறம் என்னா பண்றது. பணத்தை விட்டுடறதா? அய்யர் - எனக்கு ஒரு வழி தோண்றது. அதைச் செய்தால் முதலாளிக்கு அதிக பெருமையும் உண்டாகும். செட்டியார்- என்ன வழி அது? அய்யர்- தாங்கள் ஊரிலேயே பெரிய முதலாளியாக இருந்தும், கோயிலைக் கட்டி முடித்திருந்தும் கோயிலில் தங்களுக்கு முதல் மரியாதை இல்லாதிருப்பது ஒரு பெருங் குறையல்லவா? நாம் கொடுத்த பணத்துக்குப் பதிலாகப் பிள்ளை யிடமிருந்து அந்த உரிமையை எழுதி வாங்கிக் கொள்ளலாம். பிள்ளையும் தடையில்லாமல் கொடுத்து விடுவார். இது என்னுடைய யோசனை. பிறகு தங்கள் இஷ்டம். செட்டியார்- ரொம்பக் கெட்டிக்காரர் நீர். நல்ல யோசனை தான்- சரி அப்படியே செய்யும் அன்றைக்கே அய்யர் பிள்ளையிடம் சென்று சமாச் சாரத்தைத் தெரிவித்தார். பிள்ளைக்குக் கோயில் என்றாலே ஒரு வெறுப்பு. பரம்பரையாகக் கோயிலுக்குக் கொட்டிக் கொடுத்தும் தன் குடும்பம் உருப்படவில்லையே என்ற கோபம். பல நாள் கோயிலைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் சிந்தித்த காரணத்தால் கோயிலாலும், குளத்தாலும் ஆகப்போவது ஒன்று மில்லை என்ற முடிவுக்கு வந்தவர். ஆதலால் அய்யர் சொல்லைக் கேட்டவுடன் தடை சொல்லாமல் தன்னுடைய உரிமையைக் கொடுத்து விடுவதாக வாக்களித்தார். மறுநாள். கோயில் முதல் மரியாதை பெறும் உரிமையை ரூபாய் 1300- க்குக் கொடுத்து விட்டதாகப் பத்திரம் எழுதப் பட்டது; பதிவும் செய்யப்பட்டு விட்டது; பிள்ளையின் கடனும் ரத்துச் செய்யப்பட்டது. பிள்ளை நிம்மதியடைந்தார். செட்டி யாரும் பெரியபுதையல் கிடைத்தது போலச் சந்தோஷப் பட்டார். V இன்று தைபூசம். வன்மீக நாதர்கோயில் மேளதாளங்கள் முழங்குகின்றன. ஊர் சனங்கள் அதிகமாகக் கூடாவிட்டாலும், செட்டியாரும், அவருடைய சிப்பந்திகளும், கோயில் வேலைக் காரர்களும் கூடியிருக்கின்றனர். ஊர்க்காரர்கள் சிலர்தான் வந்திருந்தார்கள். மூலதானத்திலிருந்த சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்தன. குருக்கள் கையில் மாலையும் விபூதித் தட்டும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். அவருக்கு இனி செட்டியாருக்குத் தான் முதல் மரியாதை செய்ய வேண்டும் என்ற விஷயம் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. குருக்கள் செட்டியாருக்கு மாலை போடப் போகும்போது குமாரசாமி பிள்ளை என்பவர் இதென்ன அக்கிரமம், வழக்கத்துக்கு காரியம் என்று சத்தம் போட்டார். செட்டியார்: - நான் கருப்பையா பிள்ளையிடமிருந்து எழுதி வாங்கியருக்கேன். இனிமேல் எனக்குத் தான் மொத மரியாதை செய்யணும்; இது ஒண்ணும் அக்கிரமமல்ல என்றார்- குமாரசாமிபிள்ளை:- கருப்பையா பிள்ளைக்கு எழுதிக் கொடுக்க அதிகாரமே இல்லை. அவர் அந்த உரிமையை விட்டு விட்டால் எனக்குத்தான் அந்த உரிமை. ஆதலால் வழக்கத்துக்கு விரோதமாக நடந்தால் கட்டாயம் கலகம் பண்ணுவேன். இதற்குள் குருக்கள் பேசாமல் உள்ளே போய்விட்டார். ஒருவருக்கும் பிரசாதம் வழங்கப்படாமலே கும்பல் கலைந்தது. செட்டியார் பெரிய அவமானம் அடைந்தார். எப்படியேனும் தனக்கு முதல் மரியாதை கிடைக்கும்படியான உரிமையை தா பித்துக் கொள்ளவேண்டும் என்று அப்பொழுதே முடிவு கட்டிக் கொண்டார். கடைசியாக வக்கீல்களின் ஆலோசனையின் படி வழக்குத் தொடரப்பட்டது. கீழ்க் கோர்ட்டிலிருந்து ஹைக்கோர்ட்டு வரையிலும் செட்டியாருக்குப் பாதகமாகவே முடிந்தது வழக்கு. குமார சுவாமி பிள்ளையின் தந்தை கருப்பையாபிள்ளை யின் தந்தையுடன் கூடப் பிறந்த தம்பியாவார். மூத்த பிள்ளைக்கு முதல் மரியாதை என்ற வழக்கத்தை ஒட்டி கருப்பையா பிள்ளை யின் தந்தைக்குக் கோயிலில் முதல் மரியாதை ஏற்பட்டது. அதுவே கருப்பையா பிள்ளைக்கும் பாத்தியமாக இருந்து வந்தது. இப்பொழுது கருப்பையா பிள்ளை தனது உரிமையை விட்டு விட்டதால் நியாயப்படி அந்த மரியாதை குமாரசாமிப் பிள்ளைக்கே சேர வேண்டும் என்பது கோர்ட்டாரின் முடிவு. கடைசியாகச் செட்டியார் இங்கிலாந்து பிரிவிக்கவுன்சிலுக்கும் அப்பீல் பண்ணலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சுமார் 10 வருடங்களாக நடந்து வந்ததால், செட்டியாரின் லேவாதேவி சரியாகக் கவனிக்கப்படாமல் போயிற்று. கொடுத்த கடன்கள் வசூல் செய்யப்படவில்லை. வழக்கிற்காக வாங்கின கடன்கள் கொடுக்கப் படவில்லை. செட்டியாரின் வீடுகளும், தோட்டங்களும். நிலங்களும் திடீ ரென ஏலம் போயின. இப்பொழுது செட்டியார் சிவசிவா என்று உட்கார்ந்து விட்டார். முதல் மரியாதைக்கு ஆசைப்பட்டு முதலிழந்தேனே என்பது சதா அவர் பாடும் பல்லவியாக இருந்து வருகிறது. இப்பொழுது கருப்பையா பிள்ளையின் உதவி யினால் தான் ஜீவனஞ் செய்துகொண்டு வருகிறார். வயதான கிழங்கள் செட்டியார் செய்த தருமங்களைப் புகழ்ந்தாலும், வாலிபர்கள் அவருடைய பயித்தியக்காரத்தனத்தைப் பரிகசிக் காமல் இருப்பதில்லை. கேட்டேனா பாவி! பராங்குசம் நாயுடுவின் பெயர் ஊர்முழுதும் தெரியும். தஞ்சாவூரில் பெரிய அரிசி வியாபாரி அவர்தான். சொந்தத் திலேயே ரைமில் உண்டு. ஒரு காலத்தில் சிலோன் வியாரம் முழுதும் அவர் கையிலேயே இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாவின் நெல்லும் அரிசியும் நாயுடுவின் மூலமாகவே சிலோனுக்குச் சென்று கொண்டிருந்தன. சிலோன் வியாபாரம் குறைந்தபின் நாயுடுவின் வியாபாரமும் படுத்து விட்டது. ஆயினும் நாயுடு தொழிலை விட்டு விடவில்லை. ஏதோ சொற்பமாக வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வியாபாரத்தில் சம்பாதித்து ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. நாயுடுவுக்கு மாதம் 500 ரூபாய்க்குக் குறையாத வருமானம் வரக்கூடிய வீடுகளும், கொஞ்சம் நிலங்களும் உண்டு. நாயுடு தலையெடுத்த பின் சம்பாதித்ததுதான் எல்லாச் சொத்தும். பூர்விக சொத்து ஒன்று மில்லை, வியாபாரகாலத்தில் நாயுடு பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. அடிக்கடி சிலோன் யாத்திரை, வேளாவேளைக்குச் சோறில்லை, தவணைக்காரர் களின் தொந்தரவு; கடன் வசூலிப்பதில் கஷ்டம். ஆனால் நாணய விஷயத்தில் வெகுகண்டிப்பானவர். இதனால் தான் திடீரென்று வியாபாரம் படுத்த சமயத்தில் நாயுடு பாதிக்குப் பாதியாவது தப்பிக்க முடிந்தது. இப்படியிருந்தும் நாயுடுவுக்குத்தன் திறமையில் நம்பிக்கை யில்லை எல்லாச் சொத்துக்களும் திருப்பதி வெங்கடாஜலபதியின் கிருபையினால் கிடைத்ததென்பதே அவருடைய ஞாபகம். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம்; ஏகாதசி விரதமும் உண்டு; வருஷந்தவறினாலும் திருப்பதி யாத்திரை தவறுவதில்லை. நாயுடு எந்தக் காரியம் செய்ய ஆரம்பித்தாலும் வெங்கடா ஜலபதியை வேண்டிக் கொண்டுதான் செய்வார். திருப்பதி உண்டியில் எப்பொழுதும் காசு சேர்ந்துகொண்டேயிருக்கும். சதாதிவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்து கொண்டிருப்பார். தன்னிடம் வரும் பாகவதர்களைச் சும்மா போகச் சொல்ல மாட்டார். இந்த வகையில் நாயுடுவுக்கு செலவு அதிகம். வேறு தப்பு தண்டாவான செலவு ஒன்றுமில்லை. சிலோன் வியாபாரம் நின்றபின் நாயுடு கடைக்குப் போவதேயில்லை. கடையைப் பார்த்துக் கொள்வது சம்பளஆள்தான். பராங்குசம் நாயுடுவுக்கு இப்பொழுது வயது சுமார் 50 தான் இருக்கும். குழந்தை குட்டிகள் ஏராளம், மூத்த மகனுக்கு வயது 16. அவன் தஞ்சை செயின்ட் பீட்டர் ஹைகூலில் ஆறாவது பாரத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் பெண்களில் 4 ஆண்களில் 5 குழந்தை இருக்கின்றன. நாயுடு நல்ல திடகாத்திரப் பேர் வழி. வயது 50 ஆனாலும் 40 வயது தான் மதிக்கலாம். யாராவது கர்ப்பத்தடை கிர்ப்பத் தடை என்று சொல்ல வந்தால் அது அவருக்குப் பிடிக்காது; குழந்தைகள் எல்லாம் பகவான் அநுக்ரகம் என்பதே அவர் கருத்து. நாயுடுவின் மனைவியின் பெயர் அலர்மேல் மங்கையம் மாள். அம்மாள் உடம்பில் நல்ல இரத்தமில்லை; வெறும் எலும்புந் தோலுந்தான். இந்திய சமூகத்தில் ஒரு பெண் பத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தாயென்றால், இது வரையிலும் உயிரோடிருப்பதே பெரிய காரியமல்லவா? இந்த நிலையிலும் அலர்மேல் மங்கையம்மாள் சில தினங் களுக்குமுன் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். பிரசவம் கஷ்டபிரசவம்; லேடி டாக்டரின் உதவியால் தான் பிரசவிக்க முடிந்தது. குழந்தை அப்பொழுதே மரித்து விட்டது. ஆயினும் அம்மாளின் உடம்பு மாத்திரம் இன்னும் குணமாக வில்லை. ஜன்னி கண்டு விட்டது; கடைசியில் டாக்டரின் உதவியால் நோய் ஒருவாறு குணமடைந்தது. ஆயினும் சரியான அன்னபான மில்லை. மனைவிக்கு வைத்தியம் பார்த்த விஷயத்தில் நாயுடுக்கு விருப்பமேயில்லை. ஏன்; வைத்தியத்தில் அவருக்கு நம்பிக்கை யில்லாமையே காரணம். பாரம் எல்லாம் வெங்கடாஜலபதியின் மேல் போட்டு விட்டுச் சும்மா இருப்பதல்லவா அவருடைய வழக்கம்? இச் சமயத்தில் அந்த மாதிரி இருக்கத் தான் பார்த்தார். ஆனால் அண்டை அயலார் சும்மாவிருக்கவில்லை; அவர் களுடைய வற்புறுத்தலின் பேரிலேயே வைத்தியஞ் செய்தார். இப்பொழுது நாயுடுவின் மனைவி எழுந்து நடமாடக் கூடிய நிலையில் இருக்கிறாள். இச்சமயத்தில் ஒருநாள் காலை யில் நாயுடு எழுந்தவுடன் தனது மனைவியைக் கூப்பிட்டார். பக்கத்தில் படுத்திருந்த அவருடைய மூத்த மகனும் விழித்தெழுந் தான். நாயுடு:- என்ன அலமேலு நான் ராத்திரி ஒரு கனவு கண்டேன். நமது வெங்கடாஜலபதி ஒரு தாடிவைத்த கிழ வராட்டம் வந்தார். அவர்கைகளில் சங்கு சக்கரமிருந்தது. பக்தா என்னுடைய இருப்பிடத்திற்கு உன் குடும்பத்தோடு வா என்று சொல்லிவிட்டு மாயமாய் மறைந்தார். என்ன உன்னுடைய உத்தேசம்? எப்பொழுது ஏழு மலையான் தெரிசனத்துக்குப் புறப் படலாம்? அலர்மேல்:- என்னை ஏன் கேக்கிறீங்க! உங்கள் இஷ்டம். எப்ப வேண்டுமானாலும் கிளம்புவதற்குக் காத்திருக்கிறேன், எல்லாம் பெருமாளுடைய கிருபை. அவன் எப்பொழுது வரச் சொல்லி உத்திரவு கொடுத்து விட்டானோ இனி தாமசம் பண் ணக் கூடாது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த பையன் கோபால கிருஷ்ணன் :- என்ன நாயனா! ஏதோ கனவு கண்டதை வைத்துப் பயணங் கட்டுகிறீர்களே! எவ்வளவோ கனவு காணுகிறோம். அவைகளின்படி யெல்லாம் நடக்கமுடியுமா? நாயுடு:- உனக்கு என்னடா தெரியும்? நீ பேசாமலிரு. கனவில் காணுவதெல்லாம் உண்மையாக நடந்து தான் தீரும். கனவு பொய்யல்ல. பின்னால் நடக்கப் போவதை முன்னால் தெரிவிக்கும் அடையாளந்தான் கனவு என்பது. ராத்திரி என் கனவில் தோன்றியவர் நமது வெங்கடாஜலப் பெருமாள் தான். நாம் அவருடைய கட்டளையை மீறக் கூடாது. பையன்:- இல்லை நாயனா! கனவு முழுதும் நிசமல்ல. நாம் மனத்தில் நினைத்துக்கொண்டிருப்பதைத் தான் கனவில் காணு கிறோம். வயிற்றுக் கோளாறினால் சரியான தூக்கமில்லாம லிருக்கும் போதுதான் கனவு காணுகிறது. நாம் இதற்குமுன் நினைத்தவைகளைப் பற்றியும், செய்தவைகளைப் பற்றியும், செய்ய நினைத்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றியுமே கனவு காணுகிறோம். பெரிய டாக்டர்கள் இந்த மாதிரிதான் கனவைப் பற்றிச் சொல்லுகிறார்கள். நான் இதைப் பற்றி ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். நாயுடு:- போடா! எவனோ பைத்தியக்காரன் எழுதினதைப் படித்து விட்டுப் பேசுகிறாய்! கனவு உண்மை; நம்பு! விதண்டா வாதம் பேசுகிறவர்கள் பேச்சைக் கேட்க வேண்டாம். நீயும் வீணாகக் கெட்டுப் போகாதே. என்று நாயுடு பையன் மேலே பேசமுடியாமல் சொல்லிவிட்டுப் பிறகு திருப்பதி யாத்திரையைப் பற்றிப் பேசி, வரப்போகும் சனிக்கிழமையன்று புறப்படலாம் என்று திட்டஞ் செய்தார். மனைவியும் சம்மதம் அளித்து விட்டாள். II இன்று சனிக்கிழமை; சென்ற செவ்வாய்க்கிழமை காலையில் தான் திருப்பதி யாத்திரைத் தீர்மானம் நிறைவேறிற்று. இதற்கிடையில் அவசரம் அவசரமாகப் பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. அக்கம் பக்கத்தார்களுக்கு விஷயந் தெரிந்தது. உங்கள் மனைவி இப்பொழுது தான் படுக்கையிலிருந்து எழுந்தாள். பிரசவித்து இன்னும் சரியாக ஒரு மாதங் கூட ஆகவில்லை. நல்ல உடம்பாயிருந்தாலும் குற்றமில்லை. சுகப்பிரசவமும் இல்லை; கஷ்டப் பிரசவம்; அதன்பின் ஜன்னி கண்டு ஆபத்தானநிலையி லிருந்த உடம்பு; இந்த நிலையில் தூரப்பிரயாணம் போவது அழகல்ல; கொஞ்சநாள் பொறுத்துப் போவதனால் வெங்கடா ஜலபதி கோபித்துக்கொள்ள மாட்டார். என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். நாயுடுவா கேட்பவர்? அவர் பிடித்தால் ஒரே பிடிதான்; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிக்கும் குணம் உள்ளவர். அவர் எந்த விதத்திலும் திருப்பதிப் பிரயாணத்தை ஒத்தி வைக்கவில்லை. சனிக்கிழமை காலையிலிருந்து நாயுடு வீட்டில் ஏகதட புடல்; தளிகைக்காக ஏற்பாடு. யாத்திரைக்கு முன் ஒரு முறை தளிகை போடுவதும் யாத்திரையிலிருந்து திரும்பிய பின் ஒரு முறை தளிகை போடுவதும் நாயுடுவின் வழக்கம் சுற்றத்தார்களும், நண்பர்களும் கூடியிருந்தனர்; மத்தியானம் தளிகை போடப் பட்டுப் பூஜை நடந்தபின் எல்லோரும் சாப்பிட்டனர். பிராயணத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் நாயுடுவும் அவர் குடும்பத்தினரும் புறப்பட்டனர்; நண்பர்களும் உறவினர்களும் வழியனுப்பினார்கள். நாயுடுவும், அவர் மனைவியும், குழந்தைகளும் ரயில்வே டேஷனுக்குச் சமீபத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந் தார்கள்; மாலை 6- மணிக்குப் புறப்படும் ரயிலில் போகப் போகிறார்கள். எல்லோரும், உட்கார்ந்து பிரயாணத்தைப் பற்றியும், திருப்பதி மகாத்மியத்தைப் பற்றியும். பேசிக் கொண்டி ருந்தனர். அச்சமயத்தில் திடீரென்று, நாயுடுவின் மனைவி மயங்கி விழுந்து விட்டாள். அன்று காலை முதல் தளிகைக்காகக் கொஞ்சம் வேலை செய்ததனாலும், காலை முதல் ஆகாரமில்லாமலிருந்து 3மணிக்குச் சாப்பிட்ட தினாலும் அலர்மேல் மங்கையம்மாளின் உடல் நிலை கெட்டு விட்டது. நோயிற் கிடந்த உடம்பல்லவா? அம்மாள் மயக்கமுற்று விழுந்தவுடன்- தண்ணீர் தெளித்து, விசிறி. செய்ய வேண்டிய உபசாரங்களைச் செய்தார்கள். கொஞ்சநேரம் சென்ற பின் அலர்மேலும் சிறிது மயக்கந் தெளிந்து கண்விழித்துப் பார்த்தாள். முற்றும் உடம்பு குண மடைந்த பாடில்லை. சிறிது சுரம் அடிப்பது போலவும் காணப் பட்டது. பிறகு ஒரு டாக்டர் வந்து பரிசோதித்துப் பார்த்தார். உடம்பில் சிறிதும்பலமில்லை. நல்ல இரத்த மேயில்லை. இருதயமும் பலவீனமாக இருக்கிறது; சிறிது சுரமும் இருக்கிறது; இந்நிலையில் பிரயாணம் செய்வது ஆபத்து; கண்டிப்பாக ரயில் பிரயாணம் செய்யவே கூடாது என்று சொன்னார். நாயுடுவா கேட்கிறவர்? எந்த விதத்திலும் பிரயாணத்தை நிறுத்த முடியாது; பெருமாளின் கட்டளைப் படியே போகிறோம். எம்பெருமானே கனவில் வந்து சொல்லியும் போகாமலிருந்தால் அபசாரம் செய்தவனாவேன். நிச்சயம் அவர் காப்பாற்றுவார். ஒன்றும் ஆபத்தை யுண்டாக்கி விட மாட்டார் என்று சமாதானம் கூறிவிட்டார். முதலில் தீர் மானித்த படியே நாயுடுவும் அவர் குடும்பத்தினரும் 6- மணி வண்டியில் சென்னை மார்க்கமாகத் திருப்பதிக்குப் புறப்பட்டனர். III காலை 6- மணியிருக்கும்; திருவனந்தபுரம் பாசஞ்சர் வண்டி தாம்பரம் டேஷனை யடைந்தது; ஒரு மூன்றாவது வகுப்பு வண்டியில் குழந்தைகளின் ஏக அழுகுரல் சத்தம் கேட்டது. டேஷன் அதிகாரிகளும், மற்ற வண்டியிலிருந்தவர்களும் ஓடிப்பார்த்தனர். ஒரு பெண் இறந்து கிடக்கிறாள்; ஏழெட்டு சிறுவர்கள் கூடி நின்று அலறுகின்றனர். அம்மா! அம்மா! என்று ஓலமிடுகின்றனர். கேட்டோர் நெஞ்சஞ் கரைந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. குழந்தைகளைக் கண்ட ஒவ்வொருவரும் கண்ணீர்விட்டனர். பிணம் தாம்பரம் டேஷனிலேயே இறக்கப்பட்டது; குழந்தைகளும் இறக்கப்பட்டனர். அவர்களுடன் கூட மற்றொரு மனிதரும் கண்ணீர் விட்டுக் கொண்டே இறங்கினார். இறங்கினவர் தன்னை யறியாமலே புலம்ப ஆரம்பித்து விட்டார்; ஐயோ! நானே எமனாக வந்து சேர்ந்தேனே என் மனைவிக்கு; எல்லோரும் பிரயாணம் செய்வது சரியல்ல என்று தடுத்தார்களே, கேட்டேனா பாவி! இனி என் கதியென்ன? இது தானா வெங்கடாஜலபதியை நம்பின பலன்? என்று ஏதேதோ சொல்லிப் புலம்பினார். புலம்பினவர்தான் பராங்கும் நாயுடு; இறந்தவர் அவர் மனைவியார் என்று சொல்லவேண்டியதில்லை. பிறகு நாயுடு டேஷன் அதிகாரிகளின் உதவியைக் கொண்டு தன் மனையியைக்கொண்டுபோய் அடக்கஞ் செய்தார். அவர் மனம் பட்ட கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல முடியாது; தனது பிடிவாத புத்தியையும், பைத்தியக்காரத் தனத்தையும் நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்டார். நாயுடுவின் திருப்பதிப் பிரயாணம் தாம்பரத்தோடு நின்று விட்டது. ஊருக்குத் திரும்பி வரவும் வெட்கமாக இருக்கிறது. நாங்கள் அப்பொழுதே சொன்னோமே! கேட்டீர்களா? என்று அக்கம் பக்கத்தார் கேட்டால் என்ன பதில் சொல்வது? என்ற வெட்கத்தால் உடனே ஊருக்குத் திரும்பச் சம்மதிக்கவில்லை. நேரே சென்னை சென்று அங்கு பத்து தினங்கள் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். மனைவி இறந்த விஷயத்தைப் பற்றி உறவினர்க் கோ நண்பர்க்கோ தெரிவிக்கவும் இல்லை. தெரிவித்தால் தனக்குத் தான் அவமானம் என்பது அவர் கருத்து. கடைசியாக நாயுடு தஞ்சாவூர் வந்து சேர்ந்தார். எப்படியோ விஷயம் ஊராருக்குத் தெரிந்திருந்தது. பலர் அநு தாபங் காட்டினர். இன்று அவர் படும் கஷ்டம் சொல்லி முடியாது. அவர் தான் செய்த தவறை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார். அவர் பிடிவாதமெல்லாம் இப்பொழுது இருக்குமிடம் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சம் செய்து கொண்டிருந்த பழைய வியாபாரத்தையும் நிறுத்தி விட்டார். வீட்டை விட்டு வெளிக்கிளம்புதே கிடையாது. வீட்டில் சமயல் காரனிருந்தாலும் குழந்தைகளின் பாடு திண்டாட்ட மாகத்தான் இருந்து வருகின்றது. நாயுடுவோ மூத்தமகனுக்கு ஒரு கல்யாணம் செய்து விட்டால் ஒருவாறு குடும்பக் கவலை குறையலாமென்று கருதி அதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். மரண யோகம் I நாம் என்ன செய்ய முடியுங்க! எல்லாம் அவுங்க அவுங்க வந்த விதி! என்னமோ ஆண்டவன் அப்படிப் படைச்சிருக்கான்; ஆனாலும் அந்த ஒலக மாதா இருக்கா காப்பாத்தறத்துக்கு; அவளுக்குச் செய்யறத்தைச் செய்தூட்டா அவள் காப்பாத்து வாளுங்க; கங்கண்ட கலியுக தேவதை அவள் தானுங்க என்று மாரியம்மன் கோயில் பூசாரி தேவருக்குச் சமாதானம் சொன்னான். தேவரும் ஆட்டுக் கடாவுக்கு ஐந்து ரூபாய் பணமும், மற்ற அபிஷேகச் சாமான்களுக்காகப் பத்துரூபாŒபணமு«பூசாÇமுனியனிட«கொடுத்Jஅனுப்பிவிட்டார். அடுத்தபடியாகச் சோதிட குருசாமி வந்து சேர்ந்தான். தேவரும் பையனுடைய ஜாதகத்தைக் கொண்டுவந்து கையிற் கொடுத்தார். சோதிடன் திண்ணையில் உட்கார்ந்த படியே பஞ்சாங்கத்தைப் புரட்டினான்; கையிலிருந்த சாதகத்தைக் கவ னித்தான். உடனே ஒரு சிலேட் டும் குச்சியும் வேண்டுமென்று கேட்டான். தேவரும் வீட்டுக்குள் சென்று ஒரு உடைந்த சிலேட்டையும், ஒரு புழுக்கைக் குச்சியையும் கொண்டு வந்து கொடுத்தார். குருசாமி அந்தச் சிலேட்டில் கோடுகளைக் கிழித்தான்; கிரகங்களை அடைத்தான், கொஞ்சங் கணக்குகளும் போட்டான். கடைசியாக இந்த ஜாதகத்துக்கு ஆயிசு ரொம்ப கெட்டி, எந்தக் காரணத்தாலும் உயிருக்குப் பாதகமில்லிங்க. ஆனால் இப் பொழுது சனியன்பார்வை பலமாக இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு கஷ்டம். சனி பொல்லாதவன் இன்னும் பத்துநாளைக்கு அவனுடைய பார்வை இருக்கிறது. அது வரையிலும், சும்மா விருக்கக் கூடாது. சனி பகவானுக்குப் பூசை செய்தாக வேண்டும். நானே அந்தப் பூசையைச் செய்து முடித்து விடுகிறேன். குறைந்தது 30 ரூபாயாவது செலவாகும் என்றான். உடனே தேவரும் சனி பூசைக்காக முப்பது ரூபாயும், சோதிடம் பார்த்ததற்கு 2ரூபாய் தட்சணையும் கொடுத்துக் குருசாமியை அனுப்பி விட்டார். வீட்டில் ஒரு மூலையில் வைத்திய ராமசாமி ஏதேதோ பச்சிலைகளை யிடிப்பதும் பிழிவதுமாக இருக்கிறான். சுக்கு மிளகு திப்பிலிகள் ஒரு பக்கம் இடிபடுகின்றன. கல்வத்தில் ஏதேதோ மருந்துகள் அரைபட்டுக் கொண்டிருக்கின்றன. அவனுடைய சிஷ்யர்கள் எல்லாம் மருந்துகளைக் கவனித்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமசாமி அடிக்கடி தேவரிடம் வந்து, நீங்கள் கொஞ்சங் கூட பயப்பட வேண்டாம். ராமசாமி கைவைத்தால் நிச்சயம் தீர்ந்துவிடும். இதுவரையில் நான் பார்த்த வியாதியதர்களில் ஒருவரையாவது அரைகுறையாக விட்ட தில்லை. எனது மருந்துகள் எல்லாம் மிகவும் அருமையான மருந்துகள். இந்தக் காலத்தில் ஏதோ நாலு கோணல் எழுத்துப் படித்து விட்டு டாக்டர் என்று பெயர் வைத்துக்கொண்டு வந்து விடுகிறார்கள்; அவர்களுக்கு என்ன தெரியும்; கைபிடித்துப் பார்க்கத் தெரியுமா முதலில்? பாருங்கள் எனது சாமர்த்தியத்தை இன்னுஞ் சில தினங்களில் என்று சொல்லிக் கொண்டே யிருப்பான். இவ்வாறு தேவரின் வீடு பத்து தினங்களாக அல்லோலகல்லோலப்படுகின்றது. II திருக்களத்தூர் மார்த்தாண்டத் தேவர் என்றால் கும்ப கோணம் தாலுக்கா முழுவதும் தெரியும். அந்த ஊர் அவருடைய ஏக போக கிராமம். தேவருக்கு நன்றாகப் படிக்கத் தெரியும். என்பதில் யாருக்கும் சந்தேகமேயில்லை. நல்ல வியாபகதர். உலக வியவகாரங்களை நன்றாக அறிந்தவர். அவர் பாட்டனார் கால முதல் அந்தக் கிராமம் அவர்களுடையதுதான். அவருக்கும் தனது பரம்பரையைப் பற்றிய கவுரவமான நினைப்புக் கொஞ்சம் உண்டு. அவர் செய்யும் காரியங்களும் முன்னோர் அநுஷ்டித்த காரியங்களாகவே யிருக்கும். அவர் வீட்டில் யாருக்கு எந்த வியாதி வந்தாலும் ஜோசியம் பார்ப்பதோடும், கோயிலுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வ தோடும் வியாதி சொதமாகி விடும். இவைகளாலும் பிணி நீங்காவிட்டால் நாட்டு வைத்திய ராமசாமி தான் கை வைப்பான். அவனுக்கு எழுத்து வாசனையே தெரியாது. பரம்பரை வைத்திய னென்று பெயர். அதுதான் அவனுடைய வைத்தியப் பெருமை. தேவருக்கு ஐந்து பெண்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி விட்டது. குறைந்த பட்சம் மூன்று பெண் களாவது வீட்டில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய குழந்தைகளும் அதாவது தேவருடைய பேரக் குழந்தைகளும் அங்கு தான் இருப்பார்கள். குடும்பம் பெரிய குடும்பம். அவர் வீட்டிற்குப் பூசாரி வராத நாள் இராது. ஜோசியர் வராதநாள் இராது. மந்திரவாதி வராத நாள் இராது. வைத்தியன் மாத்திரம் எப்பொழுதாவது தான் வருவான். வீடோ ஒரு தனியிடத்தில் உள்ளது. வீட்டைச் சுற்றிலும் பள்ளத்தாக்கு. பக்கத்தில் மாட்டுக் கொட்டில். கிராமத்தைச் சொந்த பண்ணை யில் வைத்துப் பயிர் செய்யவரானதால் ஏராளமான மாடுகள் இருந்தன. வீட்டிற்குள்ளோ காற்று நுழைய வழியில்லை. பகலில் கூட விளக்கேற்றினால் தான் நன்றாகக் கண் தெரியும். தணிந்த கூரை வெய்யில் காலத்தில் உஷ்ணமெல்லாம் உள்ளேயிருப்பவர் மேல் படியும். மழை காலத்தில்- பனிக்காலத்தில் குளிர் தாங்க முடியாது. அவர்கள் பாட்டனார் காலத்திலிருந்து வசித்து வருகிறார். அந்த வீடு தான் அவர்கள் பூர்வீக வீடாம். அதற்குக் குடி வந்த பிறகு தான் அவருடைய பாட்டனாருக்கு அந்தக் கிராமம் முழுவதும் சொந்தமாயிற்றாம். கொஞ்ச தூரத்தில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் ஒரு சவுக்கண்டி உண்டு. அது சகல சுகாதார வசதிகளும் அமைந்தது. ஆனால் தேவர் அதில் வசிக்க விரும்புவ தேயில்லை. ஏனெனில் இந்தப் பழைய வீடுதான் ராசியுள்ளது, இதை விட்டு மாறினால் ஏதேனும் விபரீதம் வந்து விடும்;தனது செல்வத்திற்கும் பெருமைக்கும் பங்கம் உண்டாகி விடும் என்பது அவருடைய உள்ளெண்ணம். அவருக்கு ஒரே புதல்வர். அவர் பெயர் சின்ன துரை. அவரை பி.ஏ. வரையிலும் படிக்க வைத்து விட்டார். மற்ற பெரிய மனிதர்களெல்லாம் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் களே என்ற போட்டியில் தான் படிக்க வைத்தார். துரை பி.ஏ. படித்திருந்தாலும் தேவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். அந்தச் சவுக்கண்டி கூட சின்ன துரையின் நச்சரிப்புக் காகத் தான் கட்டப்பட்டது. இப்பொழுது சின்ன துரை பத்து தினங்களாகப்படுத்த படுக்கையில் கிடக்கிறார். இவருடைய வியாதியை நீக்கத்தான் பூசாரிக் கூட்டம், வைத்தியர் கூட்டம் எல்லாம். சின்ன துரையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கும்பகோணத்திலிருந்து டாக்டர் சாம்பசிவத்தை அழைத்து வந்து காட்டவேண்டுமென்று தேவர் அதெல்லாம் நம்ம வழக்கத்துக்கு விரோதம். நம்ம ராமசாமியை விட ஒருவரும் கெட்டிக்காரர் இல்லை என்று சொல்லிவிட்டார். III சின்னத் துரையின் வியாதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பூசாரி முனியப்பன் ஒன்றும் பயப்படா தீங்க எஜமான்! எல்லாம் மாரியாத்தாள் கோபம்! அவள் மனசு வைத்தால் சரியாகி விடும். நாளைக்குள் சவுக்கிய மாய் விடும் என்று ஆயி உத்தரவு கொடுத்துட்டாளுங்க என்று தினந் தோறும் சொல்லி விட்டு விபூதிப் பிரசாதம் கொடுத்து விட்டுப் போகிறான். சோதிட குருசாமியும் ஆச்சு! இன்றைக்குக் குணமாகி விடும்; நாளைக்குக் குணமாகிவிடும்; கிரக தோஷம் குறைந்து கொண்டு வருகிறது என்று தினந்தினம் தேவருக்குச் சமாதானம் சொல்லி விட்டுப் போகிறான். வைத்திய ராமசாமியோ, வியாதியின்னதென்று சொல்லா மலே அது பெரிய வியாதியுங்க! இதில் தானுங்க என்னுடைய கைவேலையைப் பார்க்கணும். நீங்க பயப்படாதீங்க. நான் பார்த்துக் கொள்ளுகிறேன். என்று சொல்லிக் கொண்டே ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான். சின்னதுரையின் வியாதியோ, நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டேவருகிறது. அவன் அடிக்கடி தந்தையிடம் அப்பா! என்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம். இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை, இங்கு நல்ல காற்றில்லை; வெளிச்ச மில்லை. என்னைச் சவுக்கண்டியில் கொண்டு போய் படுக்க வையுங்கள்! கொஞ்ச நாளைக்குள் வியாதி சவுக்கியமடைந்து விடும். நல்ல காற்றினாலும் நல்ல வெளிச்சத்தினாலும் சவுக்கிய மடையாத நோய்களே இல்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். தேவருக்குக் கொஞ்சங் கூட சம்மதமில்லை. பரம்பரை யாக ராசியுள்ள வீட்டை விட்டுவிட்டு வேறு இடத்திற்குப் போனால் என்ன ஆபத்து வருமோ என்று பயந்தார். அதனால் அவர் சவுக்கண்டிக்குக் குடிபோக மறுத்து விட்டார். கடைசியாக ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர்; தான் ஒரு பெரிய மந்திரவாதியென்றும், தனது மாந்திரீகத்தால் நடக்காத காரியம் ஒன்றுமேயில்லை யென்றும் பிரமாதமாகச் சொல்லிக் கொண்டார். தேவர் அவர் பேச்சை நம்பி அவருக்கும் வேண்டிய பொருள்களைக் கொடுத்து அவர் காரியத்தைப் பார்க்கச் சொன்னார். சாமியார், சின்ன துரையின் வியாதிக்குக் காரணம் எதிரியின் ஏவலே என்று ஒரேடியாகச் சொல்லி விட்டார். அவர் தனக்கு ஒழித்து விடப்பட்ட அறையில் கடம் வைத்துக் காலை, நடுப்பகல், மாலை மூன்று வேளையும் மந்திரோச்சாடனங்களும், பூஜைகளும், நடத்திக் கொண்டிருக் கிறார். சின்னதுரையின் வியாதி. என்னமோ அதிகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தஞ்சாவூர் பெரிய ஆபத்திரிக்குக் கொண்டு போனால் சவுக்கியமாகி விடும். நமக்கென்ன பணமில்லையா? சென்னை ஜெனரல் ஆபத்திரிக்கே கொண்டு போய் விடலாம். கும்ப கோணத்திலிருந்து யாராவது நல்ல டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து காட்டலாம். இந்த வீட்டிலிருந்தால் எப்படி நோய் நீங்கும்? அந்தச் சவுக்கண்டியில் கொண்டு போய் வைத்தாலே போதுமே என்று உற்றார்களும், நண்பர்களும், வருவோர் போவோர்களும் கூறும் யோசனைகளை யெல்லாம் தேவர் கேட்கவேயில்லை. அவர் பூசாரியின் சொல்லையும், சோதிடர் சொல்லையும், நாட்டு வைத்தியன் சொல்லையும், மந்திரவாதியின் சொல்லையும் நம்பிக்கொண்டே கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார். செலவாவதில் மாத்திரம் என்னமோ கொஞ்சங் கூட குறைவில்லை; சின்ன துரை பிழைக்கும் வழியைத் தான் காணோம். IV காலை மணி 7 இருக்கும். டாக்டர் சாம்பசிவம் தனது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு ஆபத்திரிக்கு வந்து கொண்டிருக்கிறார். வழியில் ஒருவன் ஓடி வந்து திருக்களத்தூர் சின்ன துரைக்கு ரொம்ப ஆபத்தாயிருக்கு. தங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாரு என்று சொன்னான். டாக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. சின்ன துரையும் அவரும் காலேஜில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நெருங்கிய நண்பர்கள். சின்ன துரையின் தகப்பனார் சங்கதியெல்லாம் டாக்டருக்குத் தெரியும். சின்னதுரைக்குக் கொஞ்சம் அசௌக்கியம் ஏற்பட்டாலும் தகப்பனாருக்குத் தெரியாமல் கும்பகோணம் வந்து டாக்டர் வீட்டில் தங்கி குணப்படுத்திக் கொண்டு சென்று விடுவார். இந்தத் தடவை தன்னிடம் வராமைக்குக் காரணம் திடீரென்று அசௌக்கியம் ஏற்பட்டதே. டாக்டரும் துடி துடித்துக் கொண்டு உடனே சில முக்கியமான மருந்துகளை எடுத்துக் கொண்டு காரில், புறப்பட்டு விட்டார் திருக்களத் தூருக்கு. தேவர் வீட்டுக்கு முன் கார் வந்து நின்றது. டாக்டர் காரை விட்டு இறங்கி நேரே சின்ன துரையின் படுக்கையறைக்குள் சென்றார். தேவரும் அவரைத் தடுக்கவில்லை. இருவரும் நண்பர்கள் என்று அவருக்குத் தெரியும். டாக்டருக்கு ஐந்து நிமிஷங்கூட அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. சின்ன துரையின் உயிர் இப்பொழுதோ இன்னுங் கொஞ்ச நேரத்திலோ என்றிருக்கிறது. டாக்டர் சின்ன துரையின் கையைப் பிடித்துப் பார்ப்பது போல் மெதுவாக ஒரு ஊசி மருந்தை ஏற்றி விட்டார். சிறிது நேரத்திற் கெல்லாம் உணர்ச்சி வந்தது. கண் விழித்துப் பார்த்தார் சின்ன துரை. அப்பாவென்று அழைத்தார். உடனே தேவர் உள்ளே ஓடி வந்தார். சின்னதுரை அப்பா! இப்பொழு தாவது என்னை அந்தச் சவுக்கண்டிக்குக் கொண்டு போகக் கூடாதா? சாகப் போகிற நான் கொஞ்சம் சந்தோச மாகவாவது சாகக்கூடாதா? என்றார் கண்ணீர் விட்டுக் கொண்டு. தேவர் என்ன இருந் தாலும் அது புது இடம். இது நாம் பரம்பரையாக இருந்து வாழ்ந்த இடம். இந்த இடத்தை விட்டு மாறினால் நிச்சயம் விபரீதம் ஏற்படுமே என்று சொல்லி அவரும் கண்ணீர் விட்டார். உடனே தேவர்வாள். நீங்கள் பயப்பட வேண்டாம். பழைய வழக்கம்! பழைய வழக்கம்!! என்று சொல்லிக் கொண்டே பிள்ளையின் முக்காலே அரைக்கால் உயிரைப் போக்கி விட்டீர்கள்! இப்பொழுதாவது அதை மறந்து விட்டுச் சின்ன துரையை அந்தப் பங்களாவுக்குத் தூக்கிச் செல்லுங்கள். உங்களுக்குத் தெரியாமல் நான் ஒரு இஞ்சக்ஷன் கொடுத்ததனால் கொஞ்சம் உணர்ச்சி பெற்றுப் பேசுகிறார். இன்னும் நாலைந்து இஞ்சக்ஷன் பண்ணினால் வியாதி நீங்கி விடும். இந்த இடமே வியாதிக்குக் காரணம். இப்பொழுதே இதைவிட்டு மாற்ற வேண்டும் என்று டாக்டர் சொன்னார். தேவர், டாக்டர் இஞ்சக்ஷனால் தான் சின்னதுரை பேசுகிறார் என்பதை அறிந்ததும் அவர் வார்த்தையில் கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று. அவரும் சவுக்கண்டிக்குச் சின்ன துரையைக் கொண்டு போகச் சம்மதித்தார். உடனே தேவர், சோதிட குருசாமியைக் கூப்பிட்டு இன்று சவுக்கண்டிக்குச் சின்னதுரையைக் கொண்டு போகலாமா; நாள் நன்றாகயிருக்கிறதா பார் என்றார். அவனும் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து விட்டு இன்று மரணயோகம் இன்று ஒரு காரியமும் செய்யக் கூடாது. மருந்து கூடக் கொடுக்கக் கூடாதுங்க என்று சொல்லி விட்டான். தேவருக்கு மனத்தில் குழப்பம் உண்டாயிற்று. டாக்டர் தனக்குத் தெரியாமல் இஞ்சக்ஷன் கொடுத்ததில் கூட அளவு கடந்த கோபம். ஆனால் சின்னதுரை கொஞ்சம் பிரஞ்ஞை யடைந்து பேசுவதைப் பார்க்க அது தணிந்தது. ஆயினும் தேவர் கண்டிப்பாக இன்றைக்கு இந்த விடத்தை விட்டுப் போகக் கூடாது என்று சொல்லி விட்டார். இனிமேல் இஞ்சக்ஷனும் கொடுக்கவேண்டாம். நாளைக்குத் தயவு செய்து வந்து பாருங்கள். எப்படியாவது சௌக்கியப்படுத்திவிட வேண்டும் என்று டாக்டரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். டாக்டர் இப் பொழுதே சிகிச்சை செய்தால் தான் குணப்படுத்த முடியும். இந்த இடத்தை விட்டும் மாற்றியாக வேண்டும். ஆபத்தான சமயத்தில் நாள் கிழமையும் பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல என்று எவ்வளவோ சமாதானம் சொல்லியும் தேவர் கேட்கவில்லை உடனே டாக்டரும் சின்னதுரையிடம் விடை பெற்றுக் கொண்டு கும்பகோணம் வந்துவிட்டார். மறுநாள் காலையில் திருக்களத்தூர் முழுவதும் அழுகைக் குரல், தேவர் பிரஞ்ஞை தவறிக் கிடக்கிறார். ஊர் ஜனங்களில் விஷயந் தெரிந்தவர்கள் கெடுத்தானே கிழவன்; கேட்டானா டாக்டர் பேச்சை; வியாதி வந்த நாள் முதல், சவுக்கண்டிக்குப் போக வேண்டும் என்று கதறினாரே சின்னதுரை. கொஞ்சங் கூட மனமிரங்கவில்லையே கிழவனுக்கு. பாழும் பூசாரியையும், சோதிடனையும், மந்திரவாதியையும், அரைகுறை வயித்தி யனையும் நம்பி, கொலை பண்ணினானே அருமை மகனை. கடைசிலாவது கேட்டானா? மரணயோகத்தை நம்பி மகனைப் பறி கொடுத்தானே என்று பேசிக்கொண்டர்கள். இன்றும் ஊரில் இப்பேச்சு மறையவில்லை. பொடி நன்றாயில்லையா? இது என்ன எழவு! சனியன்! எப்பொழுது பார்த்தாலும் மூக்கில் பொடியைத் திணித்துக் கொண்டா இருக்க வேண்டும்? அது இல்லா விட்டால் உயிர் போய் விடுமா என்ன? மூக்கை அடைத்துக் கொண்டு கொண கொண என்று பேசினால் யாருக்கு என்ன புரிகிறது? இந்தி பாஷை கற்றுக் கொள்ளு வதற்காக இப்பொழுதே மூக்கைக் கொண கொண என்று பண்ணிக் கொள்ளுகிறீர்களா? அல்லது மலையாளங் கற்றுக் கொள்ளுவதற்காக இப்படிச் செய்து கொள்ளுகிறீர்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே நானும் எவ்வளவு நாளாகச் சொல்லுகிறேன், இந்த ஆபாசப் பொடியை விட்டுத் தொலை யுங்களென்று. நல்ல பழக்கம் இது! போயும் போயும் இந்தப் பொடியையா பழக்கம் பண்ணிக் கொள்ள வேண்டும்? என்று ஒரேயடியாகப் பல்லவி பாடினாள் கமலம். கனக சபை ஏதோ தன் மனைவியிடம் சொன்னான். அது அவள் காதில் சரியாக விழவில்லை. பொடிபோட்டுப் போட்டு அவன் மூக்கு நன்றாக அடைத்துக் கொண்டு எப்பொழுதும் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டேயிருக்கும். பேசுவது புரியாததனால் அவன் மனைவி கமலம் என்ன? என்ன? என்று இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிக் கேட்டாள். அதனால் கனகசபைக்குக் கோபம் வந்து என்ன நான் சொல்லுவது கேட்கவில்லையா? செவிட்டுக் கழுதை என்று ஒரு அதட்டு அதட்டினான். இதற்குப் பதிலாகத்தான் கமலம் மேற்கண்ட வாறு பேசினாள். அதைக் கேட்டவுடன் கனக சபையின் சுரம் கொஞ்சம் இறங்கிற்று. பிறகு மெதுவாக, நான் என்னடி செய்வது? ஏதோ பழகிவிட்டேன் பள்ளிக் கூட வயதில். இன்னும் இது என்னை விடமாட்டேன் என்கிறது; பொடியில்லாவிட்டால் ஒரு வேலையும் ஓடமாட்டேன் என்கிறது. தலையை வலிக்கிறது; மூக்கை என்னென்னமோ பண்ணுகிறது. அதை எனக்குச் சொல்லவே தெரியவில்லை. ஆமாம்! இதற்காக நீதான் ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும்? இதனால் உனக்கென்ன தொந்தரவு? இனி நான் ஏதாவது பேசு வதாயிருந்தால் உன் கிட்டத்திலேயே வந்து நன்றாய்க் காதில் விழும்படி உரக்கப் பேசி விடுகிறேன். இனி என்னைத் தயவு பண்ணித் தொந்தரவு பண்ணாதே என்றான் கனகசபை. சரிதான் போங்கள்! எனக்கு என்ன தொந்தரவா? வீட்டில் எந்த மூலையிலாவது அடிவைக்க முடிகிறதா? எந்தத் தூணி லாவது கைவைக்க முடிகிறதா? உங்கள் மூக்கிலிருந்து சதா வடிந்து கொண்டிருக்கும் தேனை மூலை முடுக்குகளில் எல்லாம் சொட்ட விட்டிருக்கிறீர்கள்! தூண்களில் எல்லாம் தடவி வைத்தி ருக்கிறீர்கள். அடிவைத்த இடமெல்லாம் விளாம்பிசின் மாதிரி ஒட்டிக் கொள்ளுகிறது. கிட்டேநின்று பேச முடியவில்லை. கப் கப் என்று பொடி நாற்றம் வீசுகிறது. தப்பித்தவறிக் குழந்தையைத் தூக்கி வைத்திருந்தால் குழந்தை மேலெல்லாம் பொடி நாற்றம். என்றைக்கு நீங்கள் பொடியை விடுகிறீர்களோ அன்றைக்குத் தான் வீட்டில் உள்ள நாற்றம் போகும் என்றாள் கமலம். கனகசபை ஏதோ மனைவியிடம் பேசவந்த காரியத்தைக் கூட மறந்து விட்டான். ஒன்றும் பதில் பேச முடியாமல் சும்மா திரும்பிப் போய் விட்டான். II பையன் வேலுவுக்கு நிரம்ப நாளாக ஒரு ஆசை. அப்பா போடுகிற பொடியை எப்படியாவது ஒரு தடவை போட்டுப் பார்க்க வேண்டு மென்பதே அவனுடைய சபலம். அனேகமாக கனகசபை பொடிடப்பியை எந்த இடத்திலும் வைப்பதில்லை, எப்பொழுதும் இடுப்பில் தான் வைத்திருப்பான்; ஆகையால் பையனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்க வேயில்லை. ஒரு நாள் கனகசபை எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் போது பக்கத்திலிருந்த மாடத்தில் பொடிடப்பியை வைத்து விட்டான். இதைப் பையன் கவனித்து விட்டான். கனகசபை எண்ணெய் தேய்த்துக் கொண்டு கிணற்றங்கரைக்குப் போய் விட்டான். வேலு இதுதான் சமயம் என்று பொடிடப்பியை எடுக்கப் பார்த்தான். மாடம் உயரத்திலிருந்ததால் எட்டவில்லை. அங்கிருந்த ஒரு கூடையைத் தூக்கியபோது தவறிவிழுந்த சப்தம் கேட்டது. பையன் கூடை மேலேறி டப்பியை எடுத்துத் திறந்து பொடியை விரலால் அள்ளினான். கூடை விழுந்த சப்தம் கேட்டதும் தாய் சமையல் கட்டி லிருந்து வெளியில் வந்தாள். பையனைப் பார்த்தாள். தாழ்வாரத் தில் பையன் நிற்குங் கோலத்தைக் கண்டாள். அப்பொழுது தான் பையன் பொடியை மூக்குக்குள் வைக்குஞ் சமயம். பொடி மூக்கின் சமீபம் போனவுடனேயே அவனுக்கு அதன் காரம் தாங்க முடியவில்லை. அச்சமயத்தில் கமலம் ஐயையோ! மூக்கில் போடாதேடா! மிளகாய்ப் பொடிடா அது! காரம் மண்டையைத் துளைத்துவிடும் மூக்கில் போட்டாயோ உடனே செத்தாய்! என்று சத்தம் போட்டுக் கொண்டு பையனிடம் ஓடினாள். அவன் கையில் இருந்த டப்பியைப் பிடுங்கி மாடத்தில் போட்டாள். கையிலிருந்த பொடியைப் பிடித்து உதறி விட்டாள். பையனும் பயந்து விட்டான். பொடிமூக்கின் சமீபம் சென்றதும் அடித்த காரமும் அம்மாள் மிளகாய்ப் பொடி என்று சொன்னதும், பையனுக்கு நம்பிக்கை உண்டாகிவிட்டது நிச்சயம் அது மிளகாய்ப் பொடி யென்றே நம்பினான். அது முதல் பையன் பொடிப் பரீக்ஷை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையே அடியோடு விட்டு விட்டான். ஆனால், வேலு, அப்பாவைப் பார்த்து ஏன் அப்பா! மிள காய்ப் பொடி காரமாக இல்லையா? அதை எப்படியப்பா போட்டுக் கொள்ளுகிறாய்? மூக்கிலே போய் உரைக்குமே அப்பா? என்றும் அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருப்பான். கனகசபையும் தனது பொடியை மிளகாய்ப் பொடி யென்றே ஒப்புக் கொண்டு எனக்கு உரைக்காது; என் மூக்குக்குச் சொரணையில்லை என்று ஏதாவது தப்புச் சமாதானம் கூறிப் பையன் வாயை அடக்கி விடுவது வழக்கம். III மழை விடாமல் பெய்கிறது; கனகசபை திண்ணையில் உட் கார்ந்திருக்கிறான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குடையோ வீட்டில் இல்லை. அதனால் வெளியில் போக முடியாமல் திண்டாடுகிறான். இந்த மழை காலத்தில் குடையை இரவல் வாங்கிக் கொண்டு போனால் உடனே கொண்டு வந்து கொடுத்து விட வேண்டாமா? பிறத்தியார் சௌகரியம் தெரிய வேண்டாமா? இப்படியும் இருப்பார்களா மனிதர்கள்? இதற்குத் தான் நேற்றே சொன்னேன் கொடுக்க மாட்டேன் என்று. கருக்கலோடு கொண்டு வந்து தருகிறேன் என்று ஒரே பிடி வாதமாகக் கூறி வாங்கிக் கொண்டு போறானே என்று தன் சினேகிதன் ராமசமியை வைது கொண்டேயிருந்தான். ஏன் அப்பா! யாரையோ வைகிறாய்! என்ன அப்பா கோபம் என்னோடு கூட விளையாட மாட்டேன் என்கிறாயே! என்மேல் கூட கோபமா? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்று பையன் வேலு நச்சரித்துக் கொண்டேயிருந்தான். சீ! கழுதை! பேசாமல் கிட! தொந்தரவு பண்ணாதே! குரங்கு மாதிரி ஒரு நிமிஷங்கூட சும்மா இருக்க மாட்டேன் என்கிறாயே! போட்டுக் கொள்ள ஒரு தரத்துப் பொடிக்குக் கூட வழியில்லை. இந்த இழவிலே உன்னுடைய சனியன் வேறு என்று வள்ளென்று சீறி விழுந்தான் கனகசபை. இதற்கத்தானா அப்பா! இவ்வளவு கோபம்! அம்மா விடத்தில் நல்ல பொடி இருக்கு அப்பா! இதோ நான் போய் வாங்கிக் கொண்டு வருகிறேன் பார்! என்று அம்மாவிடம் வெகுவேக மாக ஓடி வந்தான் பையன். அம்மா அப்பாவுக்குக் கொஞ்சம் மிளகாய்ப் பொடி வேண்டும்; சீக்கிரம் கொடு! என்றான். கமலமும் எதற்காவது இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சாம்பாருக்காக வைத்திருந்த மிளகாய்ப் பொடியில் கொஞ்சம் எடுத்தாள். பக்கத்தில் ஒரு வாழை மட்டை கிடந்தது. அதில் மடித்துப் பையன் கையில் கொடுத்தாள். பையன் ஓடிச் சென்று கனகசபை யின் கையில் கொடுத்தான். கனகசபை அதை வாங்கியவுடன் என்ன ஏது என்று கூட கவனிக்காமல், ஆவலோடு நிறைய அள்ளி மூக்கில் வைத்து இழுத்து விட்டான். அவ்வளவுதான் ஐயையோ! ஆ! ஹூ! ஓஹோ! ஹோ! என்று சத்தமிட்டுக் கொண்டு கிடந்து திணறுகிறான். மூச்சு விடமுடியாமல் திக்குமுக்காடுகிறான். இதற்கிடையில் பையன் சும்மா இருக்கிறானா? ஏன் அப்பா சத்தம் போடுகிறாய்! பொடி நன்றாகயில்லையா? அதிக காரமாயிருக்கா அப்பா! கொஞ்சம் நெய் வாங்கிக் கொண்டு வரட்டுமா? நெய் போட்டுக் கொண்டால் காரம் குறைந்து விடும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். இந்தச் சத்தம் கேட்டு கமலம் திண்ணைக்கு ஓடி வந்தாள். கனகசபையின் திண்டாட்டத்தைக் கண்டாள். அவன் என்னென்ன மோ பேசினான் அவளும் என்னென்னமோ சொன்னாள். அன்று முழுதும் வீடு நிர்த்தூளிப்பட்டு விட்டது. விஷயம் எப்படியோ பலருக்கும் வெளியாகி விட்டது. எப்படியோ கனகசபை ஆபத்தில்லாமல் தப்பித்துக் கொண்டான். ஆனால், அன்று முதல் கனகசபைக்கு பொ என்ற எழுத்தின் உச்சரிப்பைக் கேட்டாலே ஒரு பயம்; ஒரு நடுக்கம். பையன் வேலு செய்த வேலை இப்படி முடிந்தது. கமலத்திற்கு இதில் வெகு திருப்தி. ஆ. கமலாவா! I என் கண்ணிருக்கும் போதே நமது கமலாவுக்கும் கலியாணத்தை செய்து பார்த்து விட்டுப் போகிறேன் என்று கணபதி செட்டியார் தனது மனைவி கங்கையம்மாளிடம் சொன்னார். கமலாவோ இப்பொழுது தானே தலை யெழுத்துப் படிக்கிறாள். அதற்குள் அவளுக்கும் கலியாணம் என்கிறீர்களே! உங்கள் பிரியத்துக்காக நமது கந்தனுக்கு இப்படிச் செய்து தானே அவன் மேல் படிப்பை விட்டு விட்டான் என்றாள் கங்கையம்மாள். கணபதி செட்டியாருக்கு பூர்வீக ஊர் கங்கைகண்டபுரம். அவருக்குக் கொஞ்சம் நிலபுலங்களும், காசு பணமும் உண்டு. அவ்வூரில் கணபதி செட்டியார் ஒரு புள்ளி. புள்ளியென்றால் ஒரு பெரும் புள்ளியென்றே சொல்லலாம். செட்டியாரின் முதல் மனைவி, கந்தசாமி என்ற மகனை விட்டு இறந்து விடவே, கங்கையம்மாளை இரண்டாந்தாரமாகக் கலியாணம் செய்து, கமலா என்ற பெண்ணைப் பெற்றார். II கமலா, தன் தமயனுடன் பள்ளிக்கூடம் போய் வருவது வழக்கம். கந்தசாமி படிப்பை விட்ட பின், கமலா பள்ளிக் கூடம் போய் 5வது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். இப் பொழுது கமலாவுக்கு வயது 12 ஆகிறது. இவளுக்குச் சித்திரம் எழுதுவதில் இயற்கையாகவே பிரியமிருந்தது 5வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கமலா சித்திரத்தில் கெட்டிக்காரப் பெண் என்று ஊராரும், உபாத்தியாயர்களுங் கூட, சொல்லிக் கொண்டிருந்தனர். சிவந்த மேனியும், கருத்த கூந்தலும், குளிர்ந்த பார்வையும், கூரிய கண்களும், குலுக்கெனச் சிரிக்குந் தன்மையும், வெண்ணிறப் பற்களும், அவளுடைய வனப்பைத் தெரிவிப்ப தாயிருந்தன. தோற்றத்திற்குத் தக்க அறிவும், அமைதியும் கமலாவின் ஹிருதயத்தைத் தங்களது வாசதலங்களாக வைத்திருந்தன. வயது பன்னிரண்டேயாயினும், பதினைந்து வயது மதிக்கத்தக்க வளர்ச்சியுடையவளாய் விளங்கினாள். கணபதி செட்டியாருக்குக் கமலாவைப் பற்றிய பூரிப்பும், பெருமையும் அதிகமாயிருந்தது. செட்டியாருக்கு வயதாகி விட்டபடியால், கங்கையம் மாளிடம் முதலில் குறிப்பிட்டவாறு கமலாவின் கலியாண விஷயமாகக் கவலையெடுத்துக் கொண்டு மாப்பிள்ளை பார்க்க முயன்றார். சென்னையில் கருப்பைய செட்டியார் இவரது நெருங்கிய உறவினர். அவருக்குக் கல்யாண சுந்தரம் என்ற பையனிருப்பதும், அவன் கல்வி பயின்று வருவதும் கணபதி செட்டியாருக்குத் தெரியும்; ஆகையால் சென்னைக்குச் சென்று, கருப்பைய செட்டி யாரைக் கண்டு க்ஷேம லாபங்களை இருவரும் விசாரித்துக் கொண்ட பின், நமது கமலாவுக்கு எனது கண்ணிருக்கும் போதே, நாம் முன்பு பேசிக் கொண்டபடி கலியாணத்தை முடித்துப் பார்க்கப் பிரியமாயிருக்கிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார் கணபதி செட்டியார். கருப்பைய செட்டியாருக்கு அதற்கு முன்னமேயே கமலாவைப் பற்றி நன்கு தெரியுமாதலால் தன் மனைவியுடன் ஆலோசித்து, இந்தச் சான்ஸை விடப்படாது என்று தீர்மானித்தவராய் பையன் படிக்கிறானே! என்றார். அதற்கென்ன நம்மபெண்ணுந்தான் படிக்கிறது. படிப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்று கூறி முடித்தார் கணபதி செட்டியார். பிறகு ஒரு சுப முகூர்த்த தினத்தில் (பொம்மைத்) திருமணம் நடைபெற்றது. III கலியாணமான பின்பும் கமலா பள்ளிக்கூடம் போகப் பிரியப்பட்டாள். போக வேண்டாம் என்று பெற்றோர்கள் சொல்லவே, படிப்பை முடித்துக் கொண்டாள். கமலாவின் கலி யாணத்திற்குப்பின், செட்டியார் நோய்வாய்ப்பட்டுக் கால மானார். இப்பொழுது குடும்ப பாரத்தைக் கமலாவின் தமையன் கந்தசாமி ஏற்கலானான். கந்தனுக்கு, முன்பே விவாஹம் நடந்து விட்டதென்று வாசகர்களுக்குத் தெரியுமல்லவா? ஆகவே தனது மனைவியுடன், சிறிய தாயாரையும், தங்கை கமலாவையும், காக்கும் பொறுப்பு கந்தனுக்கு ஏற்பட்டது. கமலா, கலியாண காலத்தில் மங்கைப் பருவம் அடையாத வளாய் இருந்தபடியால் அவளை புருஷனுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கவில்லை. பருவமடைந்த பின் ஒரு நல்ல நாளில் மாப்பிள்ளையை அழைத்து வந்து விருந்து முதலியவை நடத்தி அனுப்பலாமென்று எண்ணியிருந்தனர். தகப்பனார் இறந்த சில தினங்களில் கமலாவும் மங்கைப் பருவத்தை யடைந்தாள். குழந்தைப் பருவத்திலேயே கமலாவிட மிருந்த அழகு பன்மடங்கு இப்பொழுது அதிகரித்தது. இப் பொழுது அவள் அடிக்கடி தன் கணவனைப் பற்றி நினைப்பதும், தன் தாயிடம் விசாரிப்பதுமாக இருந்தாள். ஒரு நாள் சென்னையிலிருந்து ஒரு தந்தி, கந்தசாமிக்குக் கிடைத்தது. கலியாண சுந்தரம் காரில் அடிபட்டு ஆபத்தான நிலைமை; உடனே புறப்படுக என்று தந்தி. யாவரும் பதறினர். கமலா விட்ட கண்ணீருக்கு அளவில்லை. கங்கையம்மாளோ வெனில் தனது புருஷன் இறந்த துக்கத்தில் மூழ்கியிருக்கும் சமயத்தில் இதைக் கேள்வியுற்று, அதிகமாய்ப் பதறலானாள். கல்யாண சுந்தரம். . . . . . . காலமாய் விட்டால் என்னாவது? தனது மகள் கதி என்னாவது? எனக் கதறினாள். உடனே புறப்பட்டு யாவரும் சென்னை சென்றனர். மூர்ச்சையுற்று சாகுந்தருவாயில் கிடந்த கல்யாண சுந்தரத்திடம் கமலாவின் வருகையை அறிவித்தவுடன் சட்டென எழுந்து கமலா வா! எனது கண்ணே!! எனக் கட்டியணைத்து, இது தான் முதல் தடவையும், கடைசி தடவையும் ஆகும். என்று சொல்லி முடித்தான். அவனது கண்களும் கண்ணீரை விட்டு விட்டு மேல்நோக்கி விட்டன. கமலா கதறினாள். தேகம் தட தட வென்று ஆடிற்று. அலறினாள். துடித்தாள். என் செய்வது? கமலாவைப் பார்த்த வர்களெல்லாம், இவ்வளவு அழகும், வாலிபமும் உள்ள கட்டழகி விதவை என்னும் நோய்க்கு இரையாய் விட்டாளே எனக் கலங்கினர். அன்றிரவே புறப்பட்டு மற்ற சடங்குகளை ஊர் போய் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, கங்கை கண்டபுரம் வந்து சேர்ந்தனர். இந்தச் சிறுவயதில் ஏன் தான் இந்தக் கலியாணம் என்போரும் இப்படிப் பலவாறாகக் கமலாவைப் பார்க்க வந்தவர்கள் பேசிப் போயினர். கங்கையம்மாள் தன் புருஷனையும் மாப்பிள்ளையையும் நினைத்து வருந்துவதோடு, நடமாடும் பிணமாக மாறிய தனது மகள் கமலாவைப் பற்றி அதிக கவலையுற்றாள். அந்தோ! பாழும் சமூகமே!! இப்படியும் சில பழக்க வழக்கங்களை வைத்திருக் கிறாயே!!! என ஏங்கினாள். கமலாவைப் பார்க்கும் பொழு தெல்லாம் கலங்குவதும் பெருமூச்சு விடுவதுமாக இருந்தாள். கமலாவோ, அன்று தன்னை மணந்த மணமகனை மறு தடவை சாகுந்தறுவாயில் பார்த்ததையும், இறந்து போனதையும் பார்த்த காட்சி அவள் கண் விட்டு அகலவில்லை. கமலா, எல்லாவித ஆபரணங்களையும் கழற்றி விட்டாள். இப்பொழுது இயற்கையழகுடனே விளங்குகிறாள். நாட்களோ சென்று கொண்டிருக்கின்றன. நாட்கள் செல்லச் செல்ல, இயற்கை உணர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டு வருகிறாள். தன் தமையன் மனைவியுடன், எல்லாவித சுக போகங்களோடு வாழவும், தான் அதே வீட்டில் பாவப்பிறவி யாக இருப்பதும் கமலாவுக்கு வெறுப்பாயிருந்தது. எனது நிலை, இப்படியும் இருக்குமென்று எண்ணவில்லையே! இவ்வுலகில் நான் ஏன் யாருக்காக, எதற்கு இருக்க வேண்டும்? என எண்ணி ஏங்கினாள். ஒரு நாள் கமலாவின் ஆப்த சிநேகிதி கமலாவின் கதியைக் கேள்வியுற்று சென்னையிலிருந்து, தனது சொந்த ஊராகிய கங்கை கண்டபுரம் வந்திருந்தாள். இவள் இறந்து போன கலியபெருமாள் பிள்ளையின் மகள், இவள் பெயர் கனகம். கமலாவைக் கனகம் கண்டு, பேசி, மனமிரங்கினவளாய் கமலாவை நோக்கி நான் இன்னும் 2 தினங்களில் சென்னை செல்லுகிறேன். என்னோடு வந்து விடுகிறாயா? அங்கு உன் நிலைமை சீர்படும் என நான் நினைக்கிறேன், என்றாள். நான் அங்கு வந்து என் செய்வது? என்றாள் கமலா. அதைப் பிறகு சொல்லுகிறேன் என்றாள் கனகம். சரி என்று சம்மதித்து குறிப்பிட்ட காலத்தில் கனகத்துடன் சென்னை சென்று விட்டாள் கமலா. கனகத்திடம் அவளுக்கிருந்த நம்பிக்கையும் அன்பும் அவளை அவ்வாறு, தாயிடமும் மற்ற யாரிடமும் கூறாது புறப்படச் செய்தது. சென்னையில், கனகத்தின் தம்பி கமலநாதன் எலக்ட்ரிக் கம்பெனியில் மாதம் 125ரூ சம்பளத்தில் உத்தியோகத்தில் அமர்ந்திருப்பதால், கனகம் தன் தம்பியுடன் வாசஞ் செய்கிறாள். கனகத்திற்குக் கலியாணம் செய்யப்பட்டு இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று அவள் புருஷனும் இறந்து நாளாகி விட்டபடியால் தம்பியின் ஆதரவில் காலந்தள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தாள். கமலாவுக்குத் தன் வீட்டிற்குப் பக்கத்திலே ஒரு வீடும், வேலைக்காரியும் அமர்த்திக் கொடுத்து, அவளைச் சித்திரப் பரீஷைக்குப் போக தகுதியுடையவள் எனக் கருதி அதற்கு வேண்டிய உதவிகள் புரிந்தாள் கனகம். கமலாவும் உரிய காலத்தில் சித்திரத்தில் முதல் தரமாகத் தேர்ச்சி பெற்று சென்னையிலேயே ஒரு பாடசாலையில் சித்திர உபாத்தியாயனி வேலைக்கமர்ந்தாள். கமலாவின் வாழ்க்கையில் குளிர்ந்த காற்று வீசலாயிற்று. இயற்கை உணர்ச்சி அவளை வருத்திற்று. கண்ட வழிகளில் தன் உணர்ச்சிக்கு இடமளிக்க கமலா விரும்பவில்லை நேர்மையான வழியும் அவளுக்கு ஏதும் புலனாகவில்லை. கமலநாதன் தனது ஆபீசுக்கு போகும் போதும் வரும் போதும், கமலாவைக் காணுவதுண்டு. கமலநாதன் ஒரு சீர் திருத்தக்காரன். கண்ணியம் வாய்ந்தவன். கமலாவும், கமல நாதனை அவ்வழியில் காணுவதுண்டு. இருவருடைய கண்களும், இணைபிரியாது ஒன்றுக்கொன்று உறவு கொண்டாடின. ஒரு நாள் கமலா, கனகத்திடம் கமலநாதனைப் பற்றி வேடிக்கையாக விசாரித்தாள். கனகம் குலுக்கெனச் சிரித்தாள். கமலமும் சற்று நாணமடைந்தவளாய் ஏன் சிரிக்கிறாய்? என்றாள் நீ விசாரிக்கும் ஆடவர் தான் என் தம்பி என்றாள். இருவர் உள்ளத்திலும் ஒரே மகிழ்ச்சி. கமலநாதனுக்கும் கமலாவிடம் நோக்கமும், அனுதாபமும் உண்டாகையால், அவனுக்கு அறிவிக்கப்பட்டதும், பெரு மகிழ்சி யுற்றான். ஜாதி, குலம், முதலியவைகள் அன்பிடத்தில் என்ன செய்யும்? கமலா, இப்பொழுது, தனது தாய்க்குக் கடிதம் எழுதி, தன்னை வந்து உடனே சந்திக்கும்படியும், தான் சுகமாக இருப்ப தாகவும் அறிவித்தாள். ஒரு நாள் கங்கையம்மாள் இக்கடிதத்தைக் கண்டு, ஆவலுடன் சென்னைக்கு வந்து இறங்கினாள். தமாஷாக வாக்கிங் போயிருந்த கமலாவும், கமலநாதனும், கங்கையம்மா யைக் கண்டனர். அம்மா என்று ஓடி அணைத்தாள் கமலா. கங்கையம்மாளும் ஆ! கமலாவா! என்று கட்டி அணைத்தாள். காணாமல் போன கலைமகள் இரவு மணி 8ஆகி விட்டது. வெளியில் சென்றிருந்த இராசமய்யங்காரும் அவர் மனைவி இராசாமணியம்மாளும் வரவில்லை. திருவேங்கடத்தின் மனைவி சானகியும் ஊரிலில்லை. வீட்டில் இப்பொழுது திருவேங்கடமும், அவன் தங்கை கலை மகளும் தான் இருக்கிறார்கள். திருவேங்கடம் தன் தங்கை மீது வைத்திருந்த காதல் எல்லையற்றது. அதை நிறைவேற்றுவதற்கு இந்தச் சமயம் தான் ஒரு நல்ல சமயமாக இருந்தது. வெளிக் கதவுகளைத் தாளிட்டான். உள்ளே நாவலொன்றைப் படித்துக் கொண்டிருக்கும் கலைமகளிடம் சென்றான். தன் அறைக்கு எப்பொழுதும் வராதவன், அன்று வந்தது கலைமகளுக்குப் பெரும் வியப்பைத் தந்தது. நாவலை வைத்து விட்டு என்ன என்று விசாரிக்க எழுந்தாள். உள்ளே சென்ற திருவேங்கடம் கலை மகளை உற்று நோக்கிப் புன்சிரிப்புச் சிரித்தான். கலைமகள்! நீ இன்று எனது வெகு நாளைய ஆசையைப் பூர்த்திசெய்; உன் நடையும், தோற்றமும், கூந்தலும், இயற்கை வதனமும் என் மனதைக் கவர்ந்து விட்டன. நாழியாகிறது. என்ன சொல்லு கிறாய்? என்றான். கலைமகள் விழித்தாள். ஆ! இதுவும் என் கஷ்ட காலமே!! வாழ்க்கையில் வாசனை யிழந்தமலரைப் போன்றிருக்கும் எனக்கு இவ்வழகும் வேண்டுமா!!! என் அண்ணனும், தங்கை யென்பதை மறந்து, தவறி வார்த்தை யாடுகிறானே!!! இருக்கட்டும் என மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அண்ணா! உன்னுடைய வார்த்தைகள் என் காதில் ஈயத்தைக் காய்ச்சி விடுவது போல் இருக்கிறதே!! நீ பி. ஏ. படித்திருந்து தான் என்ன? தங்கை என்றும் நினையாது என்னைப் பெண்டாள நினைக்கும் உன் புத்திக்கு நான் என்ன செய்வது! இனி இந்த யோசனையை விட்டு விடு என்று வாய் பதறிக் கூறி முடித்தாள். கலைமகள்! எனக்கு ஞானோபதேசம் செய்ய வேண்டாம். இரண்டில் ஒன்று சொல் என்றான் திருவேங்கடம். II திருச்சியில் ராஜம் அய்யங்கார் ஒரு வக்கீல். வக்கீல் வீடு எது என்று யாரையாவது அவ்வூரில் கேட்டால் ராஜமய்யங்கார் வீட்டைத்தான் காண்பிப்பார்கள். வாதாடுவதில் மகா சமர்த்தர். ஆனால் பரம வைதீகர். இவருடைய திருப்புதல்வன்தான் திரு வேங்கடம். திருக்குமாரி தான் கலைமகள். பருவமடையாததற்கு முன் ஒரு நாள் கலைமகள் தன் தாய் ராஜாமணியம்மாளை நோக்கி என் தலையை வாரி, சாந்துப் பொட்டிட்டு, பூச்சூட்டம்மா! என்றாள். ராஜாமணியம்மாள். அடுத்தாத்து மங்களத்துக்கு மட்டும் உதவுமோ? என்றாள் கலைமகள். இல்லை யம்மா! அடுத்தாத்து மங்களத்துக்குக் கல்யாணமாயி ஆத்துக்காரரோடு இருக்கிறாள். உனக்குக் கல்யாணம் பண்ணி வருஷம் திரும்பு வதற்குள் உன்னை இந்தக் கோலத்தோடு பார்க்கிறேன். என்னமோ உன் தலைவிதி. நான் செய்த பூஜா பலன். என்று தாய் சொல்லி முடிப்பதற்குள் அவருடைய இரு கண்களும் தாரை தாரையாக கண்ணீரைப் பெருக்கின. இதைக்கண்ட இளம் கலை மகள் ஆமாம் போ! எப்போ பார்த்தாலும் என்னைக் கூப்பிட்டு வச்சிண்டு ஏன் இப்படி அழரே என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டாள். III வருஷங்கள் பல சென்றன. கலைமகளும் பருவமடைந்து 16 வயதினையுடைய ஒரு யௌவன மாதாக விளங்குகிறாள். அப்பொழுதுதான், தான் ஒரு விதவை என்பதையும், தனக்கு இவ்வுலகில் எவ்வித சுகபோகத்திலும் பங்கில்லை என்பதையும், சிதைத்துவிட வேண்டிய தலைமயிரைக் கூட அம்மா பிரியத்துக் காக சிதைக்காமல் இருக்கிற தென்பதையும் உணர்ந்து கண்ணீர் வடிக்கிறாள், தனக்குச் சரியான உடையும், தக்க ஆகாரமுங்கூட கொடுக்கப்படாமல் இருப்பதின் தத்துவத்தையும் இப்பொழுது தான் உணர்கிறாள்; திருவேங்கடம் அடிக்கடி பக்ஷணங்களும், சாக்லெட்டுகளும் கலைமகளுக்கு வாங்கிக் கொடுப்பதைச் சகோதர வாஞ்சையில் செய்கிறானாக்கும் என்று வீட்டிலுள்ளோரும் எண்ணினர். கலைமகளும் அப்படித்தான் எண்ணினாள். ஆனால் திருவேங்கடம் எண்ணம் மட்டும் வேறாக விருப்பதை யார்தான் கண்டார்கள். தன் இச்சையைப் பூர்த்திச் செய்து கொள்ளுவதற்குத் தான் அன்று யாவரும் இல்லாத சமயத்தில் மேற்கூறியவாறு சம்பாஷித்தான் என்பது இப்பொழுதாவது தெரிகிறதா? மேலே கூறியசம்பாக்ஷணை முடிவதற்குள் வெளி யில் கதவைத் தட்டும் சத்தம் கேட்கவே திருவேங்கடம் ஓடி வந்து கதவைத் திறந்தான். தன் தந்தையும், தாயும் வந்து விட்டார்களா கையால் தன் எண்ணம் நிறைவேறவில்லையே என தனக் குள்ளேயே வருந்திக் கொண்டதோடு முடிந்தது. IV திருவேங்கடத்தின் மனைவி ஜானகியிடம் செல்லம்மாள் தினம் வருவதுண்டு. செல்லம்மாள் ஒரு உபாத்தியாயினி. ஜானகிக்கு இங்கிலீஷ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கவே வருகிறாள். வழக்கம் போல் ஒரு நாள் வந்தபோது ஜானகியும், அவள் மாமியும் வெளியில் இருப்பது செல்லம்மாளுக்குத் தெரியாது, செல்லம்மாள் வரும் பொழுதெல்லாம் கலை மகளுடன் கொஞ்ச நாழியாவது பேசித்தான் போவாள். என்னமோம்மா! அன்று எழுதியவன் உன் தலையில் அழித்து எழுதவோ போகிறான்? என்று சொல்லி அனுதாபப்படுவ துண்டு. வீட்டுக்கு வந்தவுடன் கலைமகள் மாத்திரந் தானிருந்தாள். ஜானகியும் அவள் மாமியும் வெளியிலிருப்பதைக் கலைமகள் மூலம் அறிந்து கொண்டாள் செல்லம்மாள். கலைமகள் செல்லம்மாளிடம் நெருங்கி அண்ணனுடைய நடத்தைகளைக் கூறி இனி இங்கிருந்தால் என் மானம் போய்விடும். நான் எங்கேயாவது போய் என்னுயிரை மாய்த்துக் கொள்கிறேன். இங்கு இருக்க மனமில்லை என்று கதறினாள். செல்லம்மாள் கலைமகள் சொன்ன விபரத்தைக் கேட்டுத் திடுக்கிட்டாள். சரி, கலைமகள்! நீ இன்றிரவே என் வீட்டுக்கு வந்து விடு. என் வீடுதான் உனக்குத் தெரியுமே! என்றாள். சரி என்றாள் கலைமகள். V அன்றிரவு மணி 12. கலைமகள் மெதுவாக வீட்டுக் கொல்லைக் கதவைத் திறந்தாள்; வெளியேறினாள். நாய்கள் குரைக்கின்றன. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம். மெதுவாகச் சந்துகளைத் தாண்டிச் சாலைக்கு வந்தாள். ஒரு ஒற்றை மாட்டு வண்டி லொடக்- லொடக் கென்று நகர்ந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தயங்கி நின்றாள். வண்டிக்காரன் பார்த்துவிட்டான். இவ்வளவு அழகிய மங்கை இந்நேரத்தில் ஏன் இங்கு நிற்கிறாள் என்ற சந்தேகம் அவனுக்கு. இருக்கட்டும் இவளை எப்படியாவது வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் விட்டால் எந்தப் பண்டார சந்நிதியிடமும், நல்ல விலைக்கு விற்றுவிடலாம், நல்ல அதிர்ஷ்டம் வந்தது. என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அம்மா வண்டி வேண்டுமா? எங்கே போகிறீர்கள்? யார் வீட்டுக்கு? என்று அடுக்கினான். கலைம களுக்குப் பேச நா எழவில்லை. ஆமாம் என்று சொல்லி வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். முன்பக்கமும் பின்பக்கமும் துணியால் மறைவு கட்டிக்கொண்டாள். வண்டிக்காரனை நோக்கி ஐயா! வண்டிக்காரரே! வாத்தியாரம்மா செல்லம்மா வீடு தெரியுமா என்றாள் வாத்தியாரம்மா வீட்டுக்குத்தானே! அவுங்களை எனக்கு நல்லாத்தெரியும் என்று சொல்லி வேகமாக ஓட்டினான் வண்டியை. வண்டி வெகு வேகமாய் வெகு தூரம் செல்லுகிறது. சற்று அயர்ந்து விட்டாள் கலைமகள். பிறகு விழித்தாள். இருட்டான சாலையில் வண்டி செல்லுவதைக் கண்டு நடுங்கினாள். மெதுவாகப் பின் திரையைத் தூக்கிக் கொண்டு கீழே குதித்தாள். வண்டிக்காரன் கவனிக்க வில்லை. குதித்தவள் கொஞ்ச நேரம் ஓடி வந்தாள். வண்டிக்காரன் கொஞ்சதூரம் போய் திரையை நீக்கினான். யாரையும் காணோம். திருப்பினான் வண்டியை. முன்னிலும் அதிவேகமாக ஓட்டினான். ஓடிவரும் கலை மகளுக்கு வண்டி வரும் சப்தம் கேட்டது. சடக்கென்று ஒரு மரத்தடியில் ஒளிந்து கொண்டாள். வண்டி இவளைத் தாண்டிய பிறகு, ஓட்டமும், நடையுமாக ஏதோ ஒரு தெருவுக்குக்கு வந்தாள். மணியோ 4 ஆகிறது. ஒரு வீட்டுத் திண்ணையில் ஒரு பாட்டியம்மாள் கொக் கொக்கென்று இருமும் சத்தம் கேட்டு, கலைமகள் அவ் வீட்டை யடைந்து. பாட்டி! செல்லம்மாள் வீடு இன்னும் எவ்வளவு தூரம் என்றாள். இது தாண்டியம்மா! செல்லம் வீடு, நீ யாரு? என்று வாரிச் சுருட்டி எழுந்தாள் பாட்டி. இச் சம்பாஷணை யால் விழித்துக் கொண்ட செல்லம்மாள் கதவைத் திறந்து கொண்டு வந்தாள். கலைமகளைக் கண்டாள் ஏன் இவ்வளவு நாழி? ஏன் உடம்பெல்லாம் வியர்வை? என்று கேட்டாள். நடந்த ஆபத்தைக் கூறினாள் கலைமகள். திடுக்கிட்டாள் செல்லம். மறுநாள் இரவு செல்லம்மாள் கலைமகளை அழைத்துக் கொண்டு, தஞ்சைப் பெண் போதனா முறைப் பாடசாலை தலைமை உபாத்தியாயினியிடம் வந்து கலைமகளின் விருந்தாந்தத்தைக் கூறி, பாடசாலையில் சேர்த்துப் பயிற்சி கொடுக்குமாறு வேண்டிக் கொண்டாள். தலைமை உபாத்தியாயினி பெயர் மேரி சகாயம் அம்மாள். யாவரும் மேரியம்மாள் என்றே அழைப்பார் கள். பெயருக்கேற்ப மிக்க தயாள குணமுடையவள். பிறர் கஷ்டப்படுவதைக் காணச் சகியாள். ஆகையால் கலைமகளை நோக்கி கலைமகள் நீ இன்று முதல் என் பெண்ணைப் போல் என்னோடிரு. உனக்கு ஒரு ஆபத்தும் இனி இருக்காது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிரு என்று சொல்லியணைத்தாள். கலைமகள் உபாத்தியாயினி வேலைக்குப் பயிலுவதுடன் வீணை வாசிப்பதில் மிக்க கவனம் செலுத்தி வந்தாள். ஆகையால் வீணை வாசிப்பதில் சில வருடங்களில் கெட்டிக்காரியாய் விட்டாள். பள்ளிக் கூடத்திலேயே வீணைக்காரி கலைமகள் என்று தான் அழைப்பார்கள். VI சென்னையில் வேணுகோபால் நாயுடு ஒரு பி.ஏ. அவன் பட்டதாரியாகி விட்டதால் வேணுகோபாலன் என்று மட்டும் தன் பெயரைச் சுருக்கிக் கொண்டான். தகப்பனார் அனுப்பிய பணத்தையெல்லாம் ஒருவாறு சென்னையில் காலிசெய்து விட்டு, தகப்பனாரையும் போண்டி யாக்கித் தானும் போண்டி யானான். அவன் நுழையாத கம்பெனிகளில்லை போகாத ஆபிசுகளில்லை. போடாத அப்ளிகேஷன்களில்லை. வேலை மட்டும் இரண்டு வருஷங்களாகக் கிடைக்கவில்லை. சிகரட் வாங்கக் கூட கையில் சில்லரை இல்லாமல் கஷ்டப்பட்டான். பிறகு சாப்பாட்டுக்கும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது, புறப்பட்டான் யாத்திரை. ஒவ்வொரு ஊராக அலைந்து கால் நடையாகவே தஞ்சை வந்து சேர்ந்தான். அப்பொழுது அவனுடன் தமாஷ் செலவு செய்த நண்பர்களெல்லாம் உன்னை ஞாபகமில்லையே. . . என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். கண்கள் பாதாளத்தை நோக்கி உள்குவிந்து இருக்கின்றன. அவனுடைய குட்டைத் தாடி, அவன் க்ஷவரம் செய்து கொள்ளக்கூட கையில் பணமில்லாததைக் காண்பித்தன. சட்டையெல்லாம் கிழிந்தும், பொத்தலாகவும் இருக்கின்றன. இந்தக் கோலத்துடன் தஞ்சை வந்தவன் எல்லா ஆபி களையும் பார்த்து விட்டுப் பெண்கள் போதனா முறைப் பாடசாலை வாசற்படியை யடைந்தான். உள்ளே சென்றான். தலைமை உபாத்தியாயினி மேரியம்மாள் ஆபீ அறையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள். அம்மா! நான் ஒரு பி.ஏ. பட்டதாரி; உயிரை வைத்துக் கொண்டிருக்க ஒரு வேலை கொடுத்தால் போதும். எவ்வளவோ ஆபீசர்களையும் உத்தியோகதர்களையும் பார்த்துவிட்டேன். வேலையில்லை என்ற பதில் தான் கிடைத்தது. தாய்மார் களிடம் இரக்கமும், தயாள குணமும் உண்டு என்று சொல்லு கிறார்களே என்று சொல்லிக் கொண்டே ஒரு கவரை நீட்டி விட்டு உட்கார்ந்தவன் மூர்ச்சையுற்றுச் சாய்ந்து விட்டான். பசிக்களையால் மூச்சற்ற வேணுகோபாலனுக்கு வேண்டிய உபசாரம் செய்து அவனுக்கு அட்டெண்டர் வேலை கொடுத்து மாதம் 15ரூ சம்பளமும் போட்டாள். வேணுகோபாலன் மட்டற்ற மகிழ்ச்சியுற்று, தனக்கிட்ட வேலையைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான். பாடசாலைக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் விஜயாளுக்கு வேணுகோபாலன் மீது இரக்கம் தோன்றியது. ஒரு பி. ஏ. பட்டதாரி 15ரூ சம்பளத்துக்கு வேலை செய்கிறாரே என்று. அடிக்கடி அட்டெண்டர் மேரியம்மாள் வீட்டுக்குப் போகும் பொழுது, இருவர் கண்களும் ஒன்றொடொன்று உறவாடின. கலைமகளுக்கு வேணுகோபாலனிடம் இருந்த இரக்கமானது அன்பு, ஆசை, காதலாகப் பரிணமித்தது. வேணு கோபாலனுக்கும் வீணைவாசிக்கும் கலைமகளின் அழகும், வாலிபமும், தோற்றமும், இனியகானமும் ஒரு உணர்ச்சியைக் கொடுத்தன. ஒரு நாள் வீட்டுக்குப் போன வேணுகோபாலனுக்கு ஜன்னல் வழியாய் ஒரு கடிதம் வந்து விழுந்தது. அதை வாசித்து விட்டு அவனடைந்த பூரிப்பிற்கு அளவே இல்லை. தனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கியிருந்த அக்கனி, இப்பொழுது கிடைக்கும் போல் தோன்றிற்று. அந்தக் கடிதம் கலைமகளின் கடிதம் தான். இருவரும் சந்தித்துப்பேச சமயம் பார்த்திருந்தனர். மேரியம்மாள் வீட்டில் இல்லை. அன்று இருவர்களின் முதல் சந்திப்பு. முதல் பேச்சு. முதல் பரிசம். முதல் உறுதி. என் அன்பிற்கிசைந்த கலைமகள்! எனது வாழ்க்கையில் என் நிலைமை உயர நாளாகாது. அப்பொழுது நாம் இருவரும் விவாகம் செய்து கொள்ளுவோம். இனிச் சந்திப்பது அன்று தான் என்று ஆனந்தக் கண்ணீர் பெருகப் பிரிந்தான். தான் தஞ்சையில் இருப்பதைத் தன் தகப்பனாருக்கு அறிவித்திருந்த வேணுகோபாலனுக்குச் சென்னையில் 80ரூ சம்பளம் கொண்ட உத்தியோகம் காத்திருப்பதை, அவன் தகப்பனார் அறிவித்தார். கடிதத்தைப் பார்த்து மகிழ்ச்சியுற்றாலும், கலைமகளைப் பிரியக் கலங்கினான். சென்னையில் உத்தியோகத்தில் அமர்ந்த உடன் கலைமகளுக்குக் கடிதம் போடுவதாக, கலைமகளிடமும் கூறி விட்டு, மேரியம்மாளிடமும் சொல்லிப் பிரிந்தான். போனவன் போனவன் தான். உத்தியோகம் வகித்துக் கொண்டு. தன் தகப்பனார் பிரியத்துக்கும் ஜாதி மத சம்பிர தாயத்துக்கும் இணங்க, விவாகம் ஒன்றை முடித்துக் கொண்டு, வீணைக்காரி கலைமகளை விதவை என்ற காரணத்தால் மணக்க அஞ்சி வீணே மறந்து விட்டான். VII கலைமகள் ஒவ்வொரு நாளும் தபாலை எதிர்பார்த் திருந்தாள். வாழ்க்கையில் வெறுப்பு; அன்று தன்னிடம் உறுதி கூறிய அழகிய ஆடவனைப் பற்றியே எப்பொழுதும் மனதில் தியானம். கலைமகள் வீணை வாசிப்பதில் இணையற்றவளானாள். பல கச்சேரிகளில் நல்ல பெயரெடுத்தாள்; பணமும் சேர்ந்தது. பணம் சேர்ந்தென்ன? வேணுகோபாலன் வந்து சேரவில்லையே சென்னையில் முதல் முதலில் ஒரு கச்சேரிக்கு வர ஒப்புக் கொண்டாள். கலைமகளின் வீணைக் கச்சேரி என்று ஏராளமாக விளம்பரஞ் செய்யப்பட்டிருந்தது. கச்சேரியன்று காலையில் கலைமகள் சென்னை வந்திறங்கினாள். இறங்கின வுடன் திரும்பினாள்; எதிரில் நாகரீக உடைதரித்த ஒரு இளம் மங்கை; ஐரோப்பிய உடைதரித்த ஓரிளம் வாலிபன். இரு வரையும் சற்று உற்று நோக்கினாள்; வேணுகோபாலனுக்காக வாழும் கலைமகள் கண்களில் வேணுகோபாலனே காணப் படுகிறான். ஐயா தாங்கள் யார்? தங்களைத் தஞ்சையில் பார்த்த ஞாபகமாக இருக்கிறதே! என்றாள். இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே தலையைக் கீழே போட்டுக் கொண்டு தன் மனைவியின் கையைக் கோத்துக் கொண்டு சென்று விட்டான் அவன். கலைமகள் மனம் வேதனையடைந்தது. அன்று செய்த உறுதி- பேசின பேச்சுகள் நடந்த காட்சிகள் எல்லாம் ஞாபகத்துக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஓடிவந்து ஞாபகமூட்டின ஆ! உமக்காக என் வாழ்க்கையைத் தத்தம் செய்தேன். உம்முடைய உறுதி மொழியையும், பொய்க் காதலையும் மெய்யென நம்பினேனே! இப்படித் துரோகம் செய்தது ஞாயமா? என, தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். மனதில் சடக்கென ஒரு யோசனை. முகமலர்ச்சி ஏற்பட்டது. வந்திறங்கிய வண்டியில் மறுபடியும் போய் உட்கார்ந்து கொண்டாள். வண்டியும் நகர்ந்து காரினும் கடிந்து செல்லுகிறது. வண்டியில் இருக்கும் கக்கூ அறைக்குள் சென்றாள். தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்தாள் ஓ! கத்தியே நீ என்னை ஆபத்தில் காப்பாற்ற உதவுவாய் என்று என் இடுப்பில் இத்தனை நாளாய் இருந்தாய்; நீயே என்னை இப்பொழுது கொல். இந்நாட்டில் உள்ள விதவையின் கண்ணீருக்கும் கஷ்டத்துக்கும், நீ வெளியே கொண்டு வரும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் அடையாளமாகவிருக்கட்டும் என்றாள். மறுநிமிஷம் பிண மாய்ச் சாய்ந்தாள் கலைமகள். உள்ளே சென்ற யௌவன மாது நெடுந்நேரம் வரை வராததைக் கண்ட அங்குள்ளோர் கதவை உடைத்துப் பார்த்தனர். பார்த்தோர் அனைவரும் அக்கோரக் காட்சியை கண்டு கண்ணீர் விடாதாரில்லை. வீணைக்காரி கலைமகளின் வீணை மட்டும் இருக்கிறது. கலைமகளைக் காணோம். வேணு கோபாலனும் இருக்கிறான். தணிகாசலம் யார்? காத்தான் ஒரு உண்மையான வேலைக்காரன்; தன் ஆண்டையின் சொல்லை மறுத்துச்சொல்லாதவன்; அவர் காலால் இட்ட வேலையைத் தலையாற் செய்பவன். அவனுடைய ஆண்டையின் பெயர் சோமசுந்தரம் பிள்ளை; கடம்பூரில் அவர் ஒரு நடுத்தரமான மிராசுதாரர். அந்த ஊரில் இருபது முப்பது சில்லரை மிராசுதாரர்கள் உண்டு. கடம்பூரைப் பற்றி நல்ல கட்டுப்பாடுடைய கிராமம் என்று எல்லோரும் பேசிக் கொள் வார்கள்; கிராமத்துக் காரியங்கள் எல்லாம் மிக ஒற்றுமையாக நடைபெறுவது வழக்கம். சண்டை சச்சரவுகள் அக்கிராமத்தில் நடைபெறுவதில்லை. காத்தானைப்பற்றி அந்தக் கிராம மிராசுதாரர்களுக் கெல்லாம் நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட வேலையாள் தமக்கு அமையவில்லையே என்று மற்ற மிராசுதார்கள் அடிக்கடி கவலைப்படுவதுண்டு; சோமசுந்தரம் பிள்ளை இல்லாத சமயங் களில் மற்ற மிராசுதார்கள் காத்தானைப் பற்றிப் பேசிக் கொள்ளுவதும் உண்டு; அவர்களுடைய பேச்சுக்களில் காத்தானுடைய நல்ல குணமும், எசமான விசுவாசமும் உண்மை யான நடத்தையும் பேசிக்கொள்ளப்படும். ஆனால் சோமசுந்தரம் பிள்ளை மாத்திரம் காத்தானிடம் அந்தரங்க அன்பு காட்டுவதில்லை. அந்தவூரில் காத்தானைப் பாராட்டாதவர்கள் யாராவது இருந்தார்கள் என்றால் சோம சுந்தரம் பிள்ளை ஒருவரைத்தான் சொல்லலாம். பிள்ளை அடிக்கடி அவன் மீது குற்றம் சுமத்துவார்; ஒரு நாள் கொஞ்சம் நேரந்தவறி வேலைக்கு வந்துவிட்டால் போதும்; அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு வேலையைச் செய்து முடிக்கா விட்டால் போதும்; பிள்ளைக்குக் கனத்த கோபம் வந்துவிடும்; காத்தான் நெஞ்சம் பதறும் படியான வசைமொழிகளைப் பொழிவார்; சமயத்தில் கையில் கிடைத்த பொருள் எதுவோ அதைக் கொண்டு அடிப்பதும் உண்டு; இவ்வளவோடவா? அவனுடைய கூலியைப் பிடித்தஞ் செய்வதும் உண்டு. காத்தானுக்கு இவ்வளவு தொந்தரவுகள் இருந்தும் அவன் ஒரு நாளும் தன் எஜமானனை வெறுத்ததில்லை. அவன் மற்றொரு மிராசுதாரிடம் வேலைக்கமர்ந்தால் எவ்வளவோ கஷ்டமின்றி வாழமுடியும். எவ்வளவோ பேர் அவனைத் தம்மிடம் வேலைக்கு வைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தனர். ஆயினும் அவன் தன் எஜமானைவிட்டுப் பிரியும் எண்ணமில்லாதவனாகவே இருந்தான். காரணம் அவனுடைய பரம்பரையும், பிள்ளையின் பரம்பரையும் வெகுகாலமாக ஆண்டான் அடிமையாக இருந்து வந்தார்கள். தம்முன்னோர் வழியைவிட்டு மாறக்கூடாது என்பதே காத்தான் கொள்கை. ஆதலால், அவனை அவனுடைய எஜமானை விட்டு பிரிப்பதற்காகச் சிலர் செய்த முயற்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன. காத்தான் தனக்கு அளவுகடந்த துன்பம் வரும் போ தெல்லாம், எஜமானால் கூலி பிடிக்கப்பட்டுப் பட்டினி கிடந்து வருந்தும் போதெல்லாம் தனக்குத்தானே சமாதானஞ் செய்து கொள்வான்; எல்லாம் ஆண்டவன் விட்டவழி. நம் தலையில் இப்படி எழுதிவிட்டான்? நாம் என்ன செய்வது; ஆண்டவன் எப்பொழுதாவது நல்ல வழியைக் காட்டுவான் என்பதே அவன் செய்துகொள்ளும் சமாதானம். அவன் மனைவியும் அவனைப்போலவே நல்ல குணம் உள்ளவள்தான். ஆனால், தன் புருஷன் எஜமானால் அநீதமாகக் கண்டிக்கப்படும் சமயங்களில் ஏன் நாம் கஷ்டப்பட வேண்டும்? வேறு நல்ல குணமுள்ள ஆண்டைமார்களிடம் வேலை செய்யக் கூடாதா என்ற கேள்விகளைக் கேட்பாள். அவனுக்கு நாலைந்து குழந்தைகளும் உண்டு. II ஆடிமாதம் வயல்களுக்கெல்லாம் தண்ணீர் பாய்ந்து விட்டது. கிராமமே வெகு சுறுசுறுப்பாக வேலைசெய்கிறது; வேலைக்காரர்கள் எல்லாம் அதிகாலையிலேயே விழித்துக் கொள்ளுவார்கள். ஏர், கலப்பைகளைத் தூக்கிக் கொண்டு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வயல்களுக்குச் சென்று ஏர் உழுவார்கள். பெரிய மிராசுதார்கள் வரப்புகளில் நின்று கொண்டு குடியானவர்களும், பண்ணையாட்களும் உழுவதைக் கண்ணோட்டமிடுவார்கள். நாலு ஏர், ஐந்துஏர் உழுகின்ற இடங்களில் உழவர்கள் பாடும் பாட்டுக்கள் கேட்போர் மனத்துக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சோமசுந்தரம் பிள்ளைக்கு நாலு ஏக்கர் உண்டு. அவருடைய வயலிலும் உழவு நடக்கிறது. இச்சமயத்தில் ஒரு நாள் காத்தான் அதிகாலையில் வரத்தவறிவிட்டான். காரணம் தலைவலியும் சுரமுமே. மாலையில் வேலையை விட்டு வீட்டுக்குச் சென்று படுத்தவன் அயர்ந்து தூங்கி விட்டான். விடிந்து மணி ஆறு ஆகிவிட்டது. எல்லாப் பண்ணையாட்களும் எழுந்து வேலைக்குச் சென்று விட்டனர். இவன் மட்டிலும் நாழிகழித்துச் சென்றான் பிள்ளையின் வீட்டிற்கு. இவன் போவதற்கு முன்னேயே மற்ற வேலைக்காரர்கள் வந்து ஏர் கலப்பைகளைத் தூக்கிக் கொண்டு, வயலுக்கு போய் விட்டார்கள். அன்று அதிகாலையில் காத்தான் வரவில்லை யென்ற சங்கதி பிள்ளைக்குத் தெரியும். பிள்ளையும் வயலுக்குப் போயிருந்தார். காத்தான் பிள்ளை வீட்டுக்குப் போய்ப் பார்த்தான். மாடுகள் இல்லாமையைக் கண்டான்; பதைபதைப்போடு வயலுக்கு ஓடி வந்தான். இவன் வருவதற்குச் சற்று முன் தான் மாடுகள் ஏரில் பூட்டப்பட்டன. மூன்று ஏர்கள் உழுது கொண்டிருக்கின்றன. சோமசுந்தரம் பிள்ளை நிரம்பக் கோபங் கொண்டவராய் வரப்பின் மேல் நின்று கொண்டிருக்கிறார். காத்தான் ஓட்டமும் நடையுமாய் வயலுக்கு வந்தான். தன் எஜமான் நிற்பதையும் கவனியாமல், அவசரம் அவசரமாக வயலில் இறங்கி மேழியைப் பிடிக்கப் போனான். பிள்ளை டே பயலே! இங்கே வாடா; உன்னுடைய இஷ்டப்படி வேலைக்கு வருவதென்று நினைத்துக் கொண்டிருக் கிறாயா? என்றார். காத்தான், இல்லை ஆண்டே! தூங்கி விட்டேனுங்க. நேத்து ராத்திரியெல்லாம் தலைவலியும் காய்ச்சலுமா இருந்தது. முழிச்சவுடன் தண்ணீர் கூட குடிக்காமே வர்ரே எஜமா னென்றான். பிள்ளை, திருட்டுப்பயல்! தலைவலியாவது! காய்ச்சலாவது! பொய் சொல்லுகிறாய்! பயலே என்று கையில் வைத்திருந்த மாடு ஓட்டும் தார் குச்சியால் காத்தானைச் செம்மையாக அடித்தார். அவன் அடி பொறுக்க முடியாமல் ஐயோ! ஐயோ! என்றுகத்தினான். அவனை அடித்தஅடியின் அதிர்ச்சி மற்ற பண்ணையாட்களின் நெஞ்சிலும் விழுந்தது. ஒரு மனிதனை இரக்கமில்லாமல் இப்படிக் கொடுமைப் படுத்துகிறானே பாவி! நாளைக்கு நம்மிடமும் ஏதாவது தற்செயலான தவறுதல் காணப்பட்டால் இப்படித்தானே நம்மையும் மிருகமாக நடத்து வான் என்ற எண்ணம் அவர்கள் மனதில் உதிக்காமல் இல்லை. ஆயினும் என் செய்வது? வயிற்றுப் பிழைப்பை நினைத்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்கள். பிள்ளை காத்தானை இம்மாதிரி அடித்ததோடு மாத்திரம் விட்டுவிட வில்லை. நாலு நாளைக்குக் கூலியில்லை என்றும் சொல்லி விட்டார். பாவம் காத்தான் பாடு திண்டாட்டமாகி விட்டது. III நாட்கள் மூன்றாயின. காத்தான் வீட்டில் மீதமாக இருந்த உணவுச் சாமான்கள் இரண்டு நாட்களுக்குக் தான் கண்டன. மூன்றாம் நாளைக்கு கஞ்சியில்லை. நாலாம் நாளாவது கஞ்சி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கும் வழியில்லை. கூலி கிடைத்தால் அல்லவோ கஞ்சி. அவன் ஆண்டை தான் நாலு நாளைக்குக் கூலியில்லை யென்று சொல்லிவிட்டாரே. ஆண்டையின் தீர்மானத்தை மாற்றுவது யாராலும் முடியாத காரியம்; அவர் பிடித்தால் குரங்குப்பிடி தான். காத்தானும் வழக்கம் போல் வேலைக்கு வருவதில் மாத்திரம் தவறுவதில்லை. மூன்றாம் நாள் பகல் முழுவதும் உணவில்லாமலே வேலை செய்தான். வீட்டில் அவனுடைய பிள்ளை குட்டிகளும் பசி பசி யென்று கிடந்து அலறுகின்றன; பரிதவிக்கின்றன. வீட்டில் பித்தளை, செம்பு முதலிய உலோகங்களால் ஆகிய தட்டு முட்டுச் சாமான்கள் ஏதாவது இருந்தாலாவது குற்றமில்லை; எங்கேனும் அடகு வைத்தாவது கால் அரை வாங்கிச் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் மண் பாண்டங்களே. ஆதலால் அதற்கும் வழியில்லை. அல்லது நகை நன்னி இருந்தாலாவது அடகு வைத்து ஒன்று, இரண்டு பக்கத்தில் வாங்கலாம். அதற்கும் வழியில்லை. அவன் மனைவி அணிந்திருப்பதெல்லாம் பித்தளை ஓலையும் கண்ணாடி வளையலுந்தான். வழக்கம் போல் காத்தான் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போனான். அடுப்பில் பூனைக்குட்டி தான் தூங்குகிறது. குழந்தை கள் ஒரு புறம் ஓட்டைக் குடிசையில் சோர்ந்து கிடக்கின்றன. மனைவி ஒரு புறம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றாள். காத்தானும் அவர்களுடன் ஒன்றும் போசாமல் ஒரு புறம் சோர்ந்து படுத்தான். அவன் மனைவி, மெதுவாக அவனிடம் வந்து, மாமா ஏன் நம்ப இப்படிக் கஷ்டப்படனும்; வேறு ஒரு ஆண்டைக்கிட்ட வேலை செய்தா கஞ்சியாவது ஆம்புடாதா? கஷ்டப் பட்டுட்டு இப்படி ஏந் திண்டாடனும் என்றாள். காத்தான்:- நம்ப என்னா பண்றது. ஆண்டவெ நம்பளை இந்தப் பாடு படுத்துறாரு. நம்ப என்னா செய்றது எல்லாம் அவெ விட்ட வளிதானே என்றான். மனைவி:- ஆண்டவனாவது விட்டவழியாவது. வேறெ ஒத்தர்கிட்ட வேலை செய்யப் போரத்தைக்கூடவா ஆண்டவ தடுக்கிறா? என்னமோ பரம்பரையா இருந்தோ, இருந்தோ எண்ணு சொல்லிக்கிட்டு இப்படிக் கயிட்டப்படறது நம்ப பயங்காளிதனமா? ஆண்டவஞ் செய்யறதா? ஞாயமாப் பாத்தா கயிட்டப்படற நம்பளுக்குச் சோறு இல்லாமெபின்னே யாரு சாப்பிடறது. நம்ப ஆண்டவிட்டுத் திண்ணையில கெடக்கிற நெல்லு மூட்டையிலே கொஞ்சம் நெல்லு அள்ளிக்கிட்டு வந்தா என்னா கொறைஞ்சு போயிடும். ஆபத்துக்குப் பாவம் இல்லேண்ணு சொல்றாங்களே. இண்ணைக்கிச் சோறில்லாட்டி நம்ப புள்ளே குட்டியோ பொழைக்கறதே திண்டாட்டந்தா, நீ போறியா நா போவட்டுமா, என்றாள், காத்தானுக்கு ஒன்றும் புரியவில்லை, இன்னது செய்வ தென்று தெரியவில்லை. அவன் மனம் அடைந்த துன்பத்தை நம்மால் அளவிட முடியாது. மனைவி சொன்ன வார்த்தை களைப் பற்றிப் பல தடவை யோசித்தான். ஆபத்துக்குப் பாபமில்லை என்று அவள் சொல்லிய சொல் அவனுடைய மற்ற நினைப்புகளை யெல்லாம் மறக்கடித்தது. கடைசியில் எசமான் விட்டுக்குப்போய் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடிக் கொஞ்சம் அரிசி வாங்கிக் கொண்டு வரலாம் என்று நினைத் தான். மனைவி கூறிய யோசனை கொஞ்சங் கூட அவனுக்குப் பிடிக்கவேயில்லை; அதைச் செய்யவும் அவனுக்கு மனந்துணிய வில்லை பிள்ளையிடம் போய் ஏதாவது அரிசி, கிரிசி யென்று கேட்டால், கட்டாயம் வசை மொழிகள் கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் கடைசியாக ஒருவாறு துணிந்து புறப்பட்டான். இதற்குள் மணி 9 ஆகிவிட்டது. புறப்பட்டவன் நேரே பிள்ளையின் வீட்டுக்கு வரவில்லை. வர அவன் மனம் இடங்கொடுக்கவேயில்லை. ஆதலால் வழி நெடுக அவன் நின்று நின்று பலவாறு யோசித்துக் கொண்டு கடைசியாகச் சோமசுந்தரம் பிள்ளை வீட்டு வாசலையடைந்து நின்றான். இதற்குள் மணி 10 ஆகிவிட்டது. பிள்ளை சாப்பிட்டுப் படுத்து விட்டார். காத்தான் தன் எஜமானை ஆண்டே என்று கூப்பிடு வதற்குப் பல தடவை வாயெடுத்தும் ஓசை எழும்பவில்லை. ஆதலால் வாசலுக்கெதிரில் நின்று கொண்டேயிருந்தான். இச்சமயத்தில், பிள்ளை கதவைத் திறந்து கொண்டு ஏதோகாரியமாக வெளியில் வந்தார். வீட்டெதிரில் ஒரு ஆள் நிற்பதைக் கண்டார். உடனே யாரடா அங்கே நிற்பவன் என்றார். காத்தான் நான் தான் எஜமா காத்தா. ஆண்டையைப் பார்த்தூட்டுப் போக வந்தேனுங்க என்றான். பிள்ளை அடே திருட்டுப் பயலே, திண்ணையில் இருக்கும் நெல் மூட்டையைத் திருடிக்கொண்டு போகவா வந்தாய்? அயோக்கியப் பயலே என்று இரைந்தார். காத்தான், ஐயோ! இல்லிங்க எஜமா அபாண்டமா என்மேலே பளி சொமத்துரீங்களே! இண்ணைக்கி முழுதும் கஞ்சியில்லிங்கோ; கொஞ்சம் அரிசியாவது வாங்கிக்கிட்டு போய் கஞ்சிக்காச்சிக் குடிக்கலாமெண்ணு வந்தேனுங்கோ எஜமா என்றான். பிள்ளைக்கு அவன் சொல்லில் நம்பிக்கையே இல்லை. உண்மையில் அவன் திருடவந்தாகவே நினைத்துக் கொண்டார். அதிக கோபமடைந்தார். சடக்கென்று வீட்டுக்குள் சென்று ஒரு குச்சியைக் கொண்டுவந்து அதனால் கண் மூஞ்சி தெரியாமல் காத்தானை அடிக்கத் தொடங்கினார். அவன் போட்ட சத்தத்தில். தெருவில் கூட்டம் கூடி விட்டது. காத்தான் தன் எஜமான் வீட்டுக்குத் திருடவந்தான்; அகப்பட்டுக் கொண்டான்; அடிபடுகின்றான். என்ற பேச்சு அப்பொழுதே அவ்வூர் முழுதும் பரவி விட்டது. காத்தானும் அடிபொறுக்க முடியாமல் கீழே விழுந்து விட்டான். அவனை அப்படியே போட்டு விட்டுப் பிள்ளையும் வீட்டுக்குள் போனார்; மற்றவர்களும் போய் விட்டார்கள். அரை மணி நேரங் கழித்த பிறகு காத்தான் கண் விழித்தான். ஒருவரும் அங்கில்லை. தன் உடல் முழுதும் தாங்க முடியாத வலியாக இருந்தது. ஆயினும் வலியைத் தாங்கிக் கொண்டு மெதுவாக எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடந்து வீட்டையடைந்தான். IV அவன் மனைவி வழிமேல் விழிவைத்துக் காத்தானை எதிர்பார்த்திருந்தாள்; வெறுங்கையோடு திரும்பிய காத்தானைக் கண்டாள்; ஏமாமா! சும்மா வந்தாய்! ஒண்ணும் ஆம்புடலியோ! அந்தப் பாவி நெல்லு மூட்டையைக் கூட உள்ளத் தூக்கிப் போட்டுட்டானா? என்று கேட்டுக் கொண்டே அவனை உற்றுப் பார்த்தாள். அவன் உடம்பெல்லாம் அடிப்பட்டுத் தடித்திருப்பதைக் கண்டாள். துடி துடித்தாள் ஐயோ மாமா! என்னால் ஒனக்கு இந்தத் துன்பம் வந்துதா. ஒன்னைத் திருடன் இண்ணு பிடிச்சுக் கிட்டாங்களா? என்று அழுதாள். காத்தான் அழுவாதே குட்டி; என்னமோ நம்ப காலம் அப்படி. நான் திருடவும் போவலே. ஆண்டெ விட்டுத் தெருவுலே நிண்ணுக் கிட்டிருந்தே; அவுரு வந்தா ஏதாவது கஞ்சிக்காவது கெஞ்சிக் கேட்டுக் கொஞ்சம் அரிசி வாங்கிக்கிட்டு வரலாம் இண்ணு. வெளியிலே வந்தவரு என்னைத் திருடனெண்ணு புடிச்சு அடிச்சாரு. அதுகிடக்கு இனி நம்ப இந்த ஊருலே இருக்கவே பிடாது. திருட்டுப் பட்டம் வந்தூட்டுது. யாரும்நம்புளை மதிக்க மாட்டாங்கோ. எங்கேயாவது போய் வயிறு பொழைக்க வேண்டியது தான் என்றான். மனைவியும் காத்தானுடைய அபிப்பிராயத்திற்கு இணங் கினாள். அவர்கள் இருவரும் குழந்தை குட்டிகளை அழைத்துக் கொண்டு அன்றிரவே புறப்பட்டுப் போய் விட்டார்கள். விடிந்ததும் காத்தான் திருடப் போய் அகப்பட்டுக் கொண்டான். அதனால் அவமானம் தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிப் போய்விட்டான் என்று எங்கும் ஒரே புரளி. சோமசுந்தரம் பிள்ளை, அவன் தனது பரம்பரை அடிமையானதால் தனக்குப் பெரிய நஷ்டமடைந்து விட்டதாக நினைத்தார். பரம்பரையாக அவன் குடும்பத்தின் மீது பற்று எழுதிவைத்திருந்த ரூபாய்கள் நஷ்டமாயிற்றென்று வருந்தினார். அவனைக் கண்டு பிடித்துக்கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். முடியவில்லை. V நாட்கள் சென்றன; மாதங்கள் கடந்தன; வருஷங்களும் சுமார் 20க்கு மேல் ஆயின. கடம்பூரில் காத்தானைப் பற்றிய பேச்சே மறைந்து விட்டது. காத்தான் கதை நடந்த 20 வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அவ்வூருக்கு மாயவரம் தாசில்தார் வந்து முகாம் போட்டார். அவர் அவ்வூருக்கு வரும்போது அவருடைய தாய் தந்தையர் களும் அவ்வூரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். ஆதலால், அவர்களையும் கூட அழைத்து வந்திருந்தார் அந்தத் தாசில்தார், சென்னையிலிருந்து மாயவரத்திற்குப் புதிதாக வந்தவர். அவருக்கு ஊர் முழுவதும்; ஏன் அந்த தாலுக்கா முழுவதுமே நல்ல பெயர்; தாசில் தணிகாசலம் என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை சாதிமத பேதம் பாராட்டாதவர். எந்த ஊருக்குச் சென்றாலும் அவர் ஆதி திராவிட சேரிகளைப் போய்ப் பார்க்காம லிருப்பதில்லை, சேரியில் உள்ள ஆதி திராவிடர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு முன்னேற்றமடை யும் வழிகளையும் சொல்லாம லிருக்க மாட்டார். அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்துவார்; குடியை ஒழித்து விட்டுப் பொருளாதார முன்னேற்றமடைய வேண்டும் என்று வற்புறுத்துவார். இவர் கடம்பூருக்கு வந்தபோது. சோமசுந்தரம் பிள்ளை குடியிருந்த தெருவிலேயே, ஒரு. தனி வீடு ஒழித்துக் கொடுக்கப் பட்டது. தாசில்தார் தணிகாசலமும் அவருடைய தாய் தந்தை யரும் வந்து தங்கினார்கள். வழக்கம் போல் தாசில்தார்- தனது உத்தியோக காரியங்களை முடித்தபின் சேரிக்குப் போனார். அங்குள்ளவர்களுக்குச் சுகாதாரம் பொருளாதாரம் முதலிய வற்றைப் பற்றி எடுத்துக் கூறினார். அப்பொழுது அவருடைய தாய் தந்தையர்களும் அவருடன் சென்றிருந்தனர். பிறகு அன்று மாலை, அவ்வூரில் சோமசுந்தரம் பிள்ளை யென்பவர் இருக்கிறாரா? என்று தாசில்தார் கிராம அதிகாரியைக் கேட்டார். கிராம அதிகாரி; தன்னுடைய தந்தைதான் சோமசுந்தரம் பிள்ளை யென்று சொன்னார். அவர் மிகுந்த தள்ளாத வயதினராக வீட்டில் இருக்கிறார் என்றும் சொன்னார். அவரைத் தன் தாய் தந்தையர்கள் பார்க்க விரும்புவதாகக் கூறினார். தகப்பனாரை அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டுக் கிராம அதிகாரி வீட்டுக்குச் சென்றார். VI மாலை மணி ஆறு இருக்கும். சோமசுந்தரம் பிள்ளை ஒரு தடியை ஊன்றிக் கொண்டு, தாசில்தார் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது அங்கே தாசில்தாரின் தாய் தந்தையரைத் தவிர வேறு யாருமில்லை; அவர்களும் பழுத்த கிழங்கள். அவர்கள் இருவரும் சோமசுந்தரம், பிள்ளையைக் கண்டவுடன் எழுந்து கும்பிட்டு நின்று வாங்க எசமான் என்றார்கள். பிள்ளை அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் திகைத்து விட்டார். ஒன்றும் பதில் சொல்லத் தெரியாமல் அப்படியே நின்றுவிட்டார். தாசில்தாரின் தாய் தந்தையர்கள் நம்மை எசமான் என்று அழைப்பதற்குக் காரணம் என்ன வென்று தெரியாமல் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார். அவர்கள் நாங்கள் தான் உங்கள் காத்தானும்; காத்தான் மனைவியும்; எங்களை அடையாளம் தெரியவில்லையா? என்றார்கள். பிள்ளை விஷயந் தெரிந்து கொண்டார். வந்திருக்கும் தாசில்தார், தன் பண்ணையாள் மகன் என்பது அப்பொழுது தான் அவருக்குத் தெரியும். பிள்ளைக்குப் பழைய விஷயங்கள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தன. உடனே, ஆ! காத்தானா? நான் பழைய காலத்தில் உனக்குச் செய்த தீமைகளை யெல்லாம் மறந்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். காத்தான் நான் உங்களை ஒரு நாளும் மறக்க மாட்டேன்; தாங்கள் அன்று என்மேல் திருட்டுக்குற்றம் சுமத்தாவிட்டால், இன்று நான் இவ்வளவு சுகமாக இருக்க முடியாது; என் மகனும் தாசில் உத்தியோகத்துக்கு வந்திருக்க முடியாது. இன்னும் பண்ணையாளாகத்தான் இருந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடனையே நானும் என் மனைவியும் வந்தோம். கடைசியாகத் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்; நான் இன்னார் என்பதையும், என் மகன் இன்னார் என்பதையும் தயவு செய்து வெளியிடாமலிருக்க வேண்டும். இதுவே எனது வேண்டுதல்; என்று காத்தான் கூறினான். பிள்ளை அவ்வாறே ஒப்புக் கொண்டு வீடு திரும்பினார். இதுவரையிலும் தணிகாசலம் யாரென்று பலருக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு பெரிய சமூகச் சீர்திருத்தக்காரர் என்று உலகம் அறியும். சோமசுந்தரம் பிள்ளை தன் மகனுக்குக் கூட தாசில்தார் விஷயத்தைப் பற்றித் தெரிவிக்கவில்லை. ஐயோ! நீங்களா? I இரவு மணி பத்துக்கு மேல் ஆயிற்று; கமலா இன்னும் சாப்பிடவில்லை; குழந்தைகள் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டன; கமலாவை மாத்திரம் தூக்கம் பிடித்து ஆட்ட முடியவில்லை; கவலையுள்ளவர்களைக் கண்டால் தூக்கம் நெருங்குமா? மனோ வேதனையினால் முகம் வாடியிருக்கிறாள்; கன்னத்தில் கை வைத்தபடி விளக்கண்டை உட்கார்ந்திருக்கிறாள். படிப்பதற்கு என்று கொண்டு வந்த பத்திரிகைகள் சும்மா கிடக்கின்றன. சில மாதங்களாகவே ராமய்யர் இவ்வாறு அகாலமாகி வீட்டுக்கு வருவது வழக்கமாகி விட்டது. கமலா என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லை. ஐயரின் வருகை நேரம் நாளுக்கு நாள் மயிர் மாணிக்கக் கொடி போல் வளர்ந்து கொண்டே போயிற்று. பெருமாள் திண்ணையில் உட்கார்ந்திருக்கின்றான். அவன் தலை சுற்றுகிறது; பேயாட்டம் ஆடுகிறது. தூக்கத்தை அவனால் சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வான் பாவம். பகல் முழுவதும் ஆபீசில் ஓடியாடும் வேலை. இரவிலும் 10 மணி 11 மணி வரையிலும் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் தூக்கம் வராமல் இருக்குமா? மணி 11 ஆயிற்று; இன்னும் அய்யர் வரவில்லை. கமலா எழுந்து திண்ணைப்புறம் வந்து ஏண்டா பெருமாள்! ஏன் அய்யர் தினந்தினம் இப்படி நேரங்கழித்து வாரார். கச்சேரியில் இவ்வளவு நேரமா வேலை நடக்கிறது. என்றாள். இல்லை யம்மா! ஆபீ வேலை 6 மணிக்கே முடிஞ்சுடுது. எஜமா எங்கேயோ கை காட்டி மரத்தெருப் பக்கம் போராங்கோ. எங்கே போராங்கண்ணு. எனக்குத் தெரியாது அம்மா என்றான். கை காட்டி மரத்தெருப் பக்கம் என்று சொன்னவுட னேயே கமலாவுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் வந்தது. அவர் அது வரையிலும் கச்சேரி வேலையால் தாமதம் என்று சொன்ன தெல்லாம் பொய்யென்றறிந்தாள். இச்சமயத்தில் ராமய்யரின் நிலைமையைப் பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் படிப்பு 5 வது பாரத்தோடு நின்றுவிட்டது. காரணம் அவர் 5வது பாரத்தில் படிக்கும்போதே தாய் தந்தையர் இறந்து விட்டது தான். மற்றபடி நல்ல புத்திசாலி; கெட்டிக்காரர். இந்தக் காரணத்தால் சில பெரிய மனிதர்களின் சிபார்சால் ஆரம்பத்தில் கலெக்டர் ஆபீசில் அட்டெண்டராகப் போய்ச் சேர்ந்தார். அதிலிருந்து நல்லவர், கெட்டிக்காரர் என்று பெயரெடுத்துப் படிப்படியாக உத்தியோக உயர்வு பெற்றார். இப்பொழுது ஒரு வருஷமாகத் தான் கும்பகோணத்தில் இருக்கிறார். கும்பகோணம் சோலை யப்பன் தெருவில் அவருக்கொரு சிறிய- பழைய- சொந்த வீடுண்டு- அதில்தான் குடியிருந்து வருகிறார். கும்பகோணம் வந்தவுடன் அய்யரின் நடத்தை இப்படியாகிவிட்டது. சம்பளம் முழுவதும் செலவுக்குப் போதவில்லை. போதாமைக்குக் கிம்பளமும் வாங்க ஆரம்பித்து விட்டார். II மணி 11 1/2 ஆயிற்று. அதற்கு மேல் கமலாவால் விழித்திருக்க முடியவில்லை; பெருமாள் சொன்ன விஷயத்தைக் கேட்டவுடன் விழித்துக் கொண்டிருக்கவும் இஷ்டமில்லை. விளக்கை அடக்கி வைத்து விட்டுக் கதவையும் தாழிட்டுப் பேசாமல் படுத்து விட்டான். சாப்பிடவுமில்லை; தூக்கமுமில்லை; கோபம்; மனோவேதனை. 12 மணியிருக்கும் அய்யர் வந்து கதவைத் தட்டினார்- கமலா விழித்திருந்தாலும் கதவு திறக்கவில்லை. தட்டித் தட்டிப் பார்த்துக் கைவலித்துத் திண்ணையில் உட்கார்ந்தார். பெருமாளும் நாலு சத்தம் கூப்பிட்டுப் பார்த்து விட்டுப் பேசாமல் உட்கார்ந்து விட்டான். கடைசியில் கமலாவும் எழுந்து வந்து கதவைத் திறந்து விட்டுப் பேசாமல் உள்ளே போய் விட்டாள். அய்யர் கமலா கோபமாயிருப்பதற்குக் காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டே உள்ளே போனார். பெருமாள் கொஞ்ச நேரம் திண்ணையிலிருந்து பார்த்தான். அய்யரோ அம்மாளோ வெளியில் வராததால் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டான். உள்ளே சென்ற ராமய்யர். ஏன்? கமலா! என்றுமில்லாத ஒரு மாதிரியாக இன்றைக்கு இருப்பதேன்? நாழி கழித்து வந்தேன் என்றா கோபம்; இன்று கச்சேரியில் அதிக வேலை இருந்தது. பெரிய உத்தியோகம் வந்ததும் போதும் கஷ்டமும் போதும் சாதாரண அட்டென்டராகவே இருந்துவிட்டால் இந்தக் கஷ்டமில்லை என்றான். ஆமாம்! சாதாரண அட்டென்டராக இருந்தால் இந்தக் கஷ்டம் வந்திருக்காதுதான். அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் சமாசாரந்தான் உங்கள் சங்கதி. இனி என்ன பேச்சு வேண்டியிருக்கு! வீடேன்! வாசலேன்! குழந்தை குட்டிகளேன்! ஒரேயடியாக அங்கேயே தங்கி விடலாமே என்றாள் கமலா. இதைக் கேட்டவுடன் அய்யரின் மனத்தில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. விஷயம் கமலாவுக்குத் தெரிந்து விட்டதோ என்று எண்ணினார். என்ன கமலா என்னை எங்கே போகச் சொல்லு கிறாய்! நான் ஓரிடமும் போவதில்லையே. கச்சேரியுண்டு; வீடுண்டு இது உனக்குத் தெரியாதா? என்றார். சரிதான்! போதும்! நிறுத்துங்கள்! இவ்வளவு நாள் ஏமாற்றியது போதும். இன்று தான் விஷயந் தெரிந்தது. பெருமாள் கூடவா பொய் சொல்லுவான். கைகாட்டி மரத் தெருவுக்கே போய்விடுங்கள். நான் தடைப்படுத்தவேயில்லை என்றாள். அய்யருக்கு யார் மூலம் கமலாவுக்கு விஷயம் தெரிந்த தென்று விளங்கி விட்டது. அவர் ஆத்திரம் எல்லாம் பெருமாள் மேல் திரும்பியது. உடனே திண்ணைப்புறம் ஓடி வந்து பெரு மாளைப் பார்த்தார். காணவில்லை. சரி இருக்கட்டும் நாளைக்கே அவனுக்குச் சீட்டுக் கிழித்து விடுகிறேன். என்று தீர்மானித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார். அன்று இரவு முழுதும், அய்யருக்கும் அம்மாளுக்கும் ஓயாத போராட்டம். அன்று முதல் அய்யர் அதிக மாறுதலடைந்தார்; கமலாவிடமும் மிகவும் கொடு மையாகவும், வெறுப்பாகவும் நடந்து கொள்ள ஆரம்பித்தார். III வழக்கம் போல் ஆபீ காலை 10 மணிக்குத் திறக்கப் பட்டது. ராமையரும் தனது ஆசனத்தில் உட்கார்ந்தார். அங்கு நின்று கொண்டிருந்த பெருமாளைக் கூப்பிட்டு இனி நீ வீட்டுக்குப் போக வேண்டாம் என்று கனகடுமையாக உத்தரவு போட்டு விட்டார். அவர் எப்படியாவது பெருமாளை வேலையி லிருந்து நீக்கியபிறகுதான் மறுவேலை பார்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒரு நாள் ஆபீசிலிருந்த நாற்காலி யொன்று காணாமல் போயிற்று. அன்று இரவு பெருமாளே ஆபீ காவலாக இருந் தான். இந்தச் சாக்கை வைத்துப் பெருமாள் மேல் குற்றஞ் சுமத்தி மேலதிகாரிகளுக்கெழுதி அவனை டிமி செய்து விட்டார். பெருமாள் பிள்ளை குட்டிக்காரன்; அவன் வாங்கிய சம்பளம் மாதம் 15 ரூபாய் தான். அதை வைத்துக்கொண்டுதான் குடும்பத்தைப் பாதுகாத்து வந்தான். இப்பொழுது உத்தியோகம் போனவுடன் அவன் அடைந்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பெருமாள் மீண்டும் உத்தியோகம் பெற எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். காரியம் கை கூடவில்லை. ஏழை களுக்கு உதவுபவர்கள் யார்? கடைசியாகப் பெருமாள் கும்பகோணத்தை விட்டே வெளியேறி விட்டான். போகும் போது ராமய்யரின் வீட்டுக்கு வந்து கமலாவையும் குழந்தை களையும் ஒரு முறை பார்த்து, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கஷ்டத்தைச் சொல்லி விட்டு எங்கேயோ சென்றான். அய்யரின் நடத்தையோ நாளுக்கு நாள் கெட்டு விட்டது. விபசாரம் சேர்ந்தால், குடியும் சேராமலிருக்குமா? வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டம். கமலாவும் ராமய்யரும் சந்தோஷமாக பேசிச் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றன. கமலாவுக்குக் கிழியாத புடவை ஒன்று கூட இல்லை. 6 வயதுள்ள குழந்தை ஜெயராமனுக்கும், 4வயதுள்ள குழந்தை ராஜத்துக்கும் கூட நல்ல துணியில்லை. குழந்தைகள் விரும்பும் பண்டங்களை வாங்கிக் கொடுக்க கமலாவின் கையில் காசில்லை. அய்யருக்கோ ஊர்முழுதும் பிடுங்கல். காப்பிக் கிளப்பில் கடன்; வெற்றிலை பாக்குக் கடையில் கடன்; ஜவுளிக் கடையில் கடன் வண்டிக்காரனிடத்தில் கடன்; பார்ப்பர் ஷாப்பில் கூட கடன்; தினம் நாலு பேர் அய்யரைப் பார்க்க வேண்டுமென்று ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து கொண்டேயிருப்பார்கள். ஏன்? கடன் கேட்கத்தான். அய்யரும் மான ஈனம் எல்லாவற்றையும் விட்டுவிட்டார். காலணா முதல் எவ்வளவு வந்தாலும் கூச்ச மில்லாமல் வாங்க ஆரம்பித்து விட்டார். ஆபீ வேலையிலும் ஏகப்பட்ட ஊழல் மேலதிகாரிகளுக்கும் அவரிடத்திலிருந்த நல்லெண்ணங்களெல்லாம் போய் விட்டன. ராமய்யருக்கு உத்தியோக முறையில் எத்தனையே தடவை அபராதத் தண்டனை கிடைத்தது. வார்னிங் கிடைத்தது. ஒரு முறை ஒரு மாத சபென்ஷன் (வேலையை விட்டு நீக்கி வைத்தல்) கூடக் கிடைத்து விட்டது. இனி டிமி ஒன்று தான் பாக்கி. IV அங்கம்மாள் என்பவள்தான் அய்யரின் ஆசைநாயகி; அவளும் நாளுக்கு நாள் அய்யரை வெறுக்க ஆரம்பித்தாள். பணம் குறைந்தவுடன் யார் தான் அன்பு காட்டுவார்கள்; பணம் சுரக்கும் வேறு இடத்தைப் பார்க்க வேண்டியது தானே. அய்யர் சப்மாஜிட்ரேட் ஆபீ ஹெட் கிளார்க்காயிருப்பதனால் சீக்கிரம் நீர் இனி என் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. சமயம் பார்த்துக் கொண்டேயிருந்தாள். இச்சமயம் ஒரு நல்ல புள்ளி சிக்கியது. குமரகுரு பிள்ளை கும்பகோணத்தில் ஒரு பெரிய மனிதர். தப்பு தண்டாவுக்கும் பயப்படாதவர். அவர் அங்கம்மாளுக்கு நேசமானார். அவரைக் கொண்டு எப்படியாவது அய்யருடைய சேர்க்கையைக் கத்தரித்துக் கொள்ள எண்ணினாள். அங்கம்மாள். அவளும் விஷயத்தைப் பிள்ளையிடம் தெரிவித்தாள். அவர் அன்று இரவே செய்து முடிக்கும்படி ஒரு தந்திரஞ் சொன்னார். அங்கம்மாளும் பிள்ளை சொல்லிய படியே அன்றிரவு அய்யர் வந்தபோது அவருக்குத் தெரியாமலேயே அக்காரியத்தைச் செய்து முடித்து விட்டாள். மறுநாள் அங்கம்மாள் வீட்டில் அவள் அணிந்திருந்த வயிர அட்டிகை களவு போய் விட்டதாக ஊரெல்லாம் ஒரே புரளி. அங்கம்மாள் போலீ டேஷனுக்குச் சென்று, தான் படுத்திருந்த அறையில், கைப்பெட்டியில் வைத்திருந்த வயிர அட்டிகை களவு போய் விட்டதாகவும், அன்று ராமய்யரைத் தவிர தன் வீட்டிற்கு வேறு யாரும் வரவில்லையென்றும் எழுதி வைத்தாள். இதன் பின் தான் விஷயம் ஊர் முழுவதும் பரவிற்று. காலை மணி 7 இருக்கும். ஒரு சப்இன்பெக்டரும் இரண்டு கான்டேபிள்களும் ராமய்யர் வீட்டுக்கு வந்து சோதிக்க ஆரம் பித்தார்கள். முதலில் அய்யருடைய கோட்டுப் பாக்கெட்டுகளைப் பரிசோதனை செய்தவுடனே தடயம் கிடைத்து விட்டது. உடனே அவர்கள் அய்யரை விலங்கிட்டு அழைத்துச் சென்று விட்டனர். முறைப்படி கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. குமரகுரு பிள்ளை தக்க சாட்சியங்கள் எல்லாம் தயார் பண்ணி விட்டார். கடைசியில் அய்யர் குற்றவாளியாகி மேலதிகாரிகளின் கருணையால் குறைந்த தண்டனையாக ஆறுமாதத் தண்டனை பெற்றார். உத்தியோகமும் போய் விட்டது. கமலாவையும் குழந்தைகளையும் ஆதரிப்பார் யாருமில்லை; ஏதோ கையில் மடியில் இருந்த நகை நட்டுகளை விற்றுக் காலட்சேபஞ் செய்து கொண்டிருந்தனர். V நாட்கள் கழிந்தன; வாரங்கள் கழிந்தன; மாதங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. கமலா வெளியிற் செல்லும்போது குனிந்த தலை நிமிர்வதில்லை. அவளைக் கண்டவுடன் மற்றவர்கள் ராமய்யர் சமாசாரத்தைப் பற்றிக் குசு குசு வென்று பேசுவது அவளுக்குச் சகிக்காது. உலகமே அவளுக்கு வெறுப்பாயிருந் தாலும் உயிர் வாழ்வதற்கு இரண்டு பலமான காரணங்கள் இருந்தன. ஒன்று குற்றமற்ற குழந்தைகளை ஆதரவின்றிவிடக் கூடாது என்பது; மற்றொன்று தன் கணவன் உண்மையில் குற்றவாளியாக இருக்க மாட்டானென்பது. இக்காரணங்களால் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் கமலா. ஒரு நாள் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக வீட்டினுள் உட்கார்ந்திருக்கின்றாள் கமலா. குழந்தைகள் இரண்டும் உலகக் கவலையில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இச் சமயத்தில் தலையில் முக்காடிட்டுக் கொண்டே ஒரு மனிதன் வீட்டினுள் வந்து நுழைந்தான். கமலாவும் வந்த மனிதனும் சந்தித்தனர். இருவருக்கும் இன்னது பேசுவதென்று புரியவில்லை. ஒரே மவுனம். கண்கள் மட்டிலும் துக்கத்தை வெளிப்படுத்தின. இச்சமயத்தில் குழந்தைகள் வந்த மனிதரை அடையாளங் கண்டுபிடித்துவிட்டன. அப்பா வென்று சத்தமிட்டுக் கொண்டு ஓடிவந்து முழங்காலைக் கட்டிக் கொண்டன. அய்யரும் குழந்தை களைத் தூக்கி முத்தமிட்டார். கண்ணே! கமலா! என் குற்றத்தை மன்னிப்பாயா? அறியாமையால் அவதியடைந்தேன்; துஷ்ட சாவகாசம் என்னைக் கெடுத்து விட்டது; அந்த வேசி அங்கம்மாள், என் சட்டைப் பையில் நான் அறியாமல் நகையைப் போட்டு விட்டு என்னைத் திருடனாக்கி விட்டாள். இனி ஒரு நாளும் தப்பு வழியில் செல்லமாட்டேன். இனி இவ்வூரில் இருக்க என்மனஞ் சம்மதிக்க வில்லை. எங்கேனும் முகமறியாத இடத்திற்குச் சென்று ஜீவனஞ் செய்ய விரும்புகிறேன் என்றார். கமலாவும் தக்க சமாதானங் கூறி அவர் விருப்பப்படி நடக்க இணங்கினாள். VI காலை மணி 4 இருக்கும்; மதுரை ஜங்ஷனில் செங்கோட்டா பாசஞ்சர் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வேதனைப் பட்ட குடும்பம் இறங்கிற்று. டேஷனை விட்டு வெளியில் வந்த பின் அக்குடும்பத்துக்கு இன்ன இடம் போவதென்று தெரிய வில்லை. விடியும் வரையிலும் டேஷனிலேயே படுத்துத் தூங்கினர். பொழுதும் விடிந்தது. ராமய்யரும் கமலாவும் விழித் தெழுந்தனர். குழந்தைகளை அழைத்துக் கொண்டு மங்கம்மாள் சத்திரத்தை நோக்கிச் சென்றனர். சத்திரம் சமீபமாகச் செல்லும் போது பால்காரன் ஒருவன்பாற் செம்புடன் வந்து கொண்டிருந்தான். அவன் இவர்களை உற்று நோக்கினான். அய்யர் எலும்புந்தோலுமாக இருக்கிறார்; அம்மாளும் அதற்கு மேல்; குழந்தைகளையோ பார்க்க முடிய வில்லை! ஒட்டிய வயிறு; வற்றிய கன்னங்கள்; குழிந்த கண்கள்; வாடிய முகம்; அழுக்கடைந்த கந்தைத் துணி; இக்கோலமுள்ள மக்களை இரக்க சிந்தையுள்ளவர்கள் யார் தான் உற்று நோக்க மாட்டார்கள். பார்த்தான் பாற்காரன்; ஐயோ! நீங்களா இந்தக் கோலம்? என்று அலறிக் கொண்டே ஓடி வந்தான். அவன் தன்னையறியாமல் கலக்க மடைந்ததால் கையிலிருந்த பாற்சொம்பும் தவறி விழுந்து விட்டது. அவனைக் கண்டவுடன் குழந்தைகள் நம்ம பெருமாள் வந்தூட்டான் அம்மா! என்று சந்தோஷத்தால் அவனிடம் ஓடின. அவனும் குழந்தைகளைத் தூக்கி முத்த மிட்டான். அய்யர் வெட்கத்துடன் தனது நிலையை அவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பெருமாள் அவர்களைத் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றான். தான் கும்பகோணத்திலிருந்து வந்த பின் பாலெடுத்து விற்று ஜீவனம் செய்த விஷயத்தையும், இப்பொழுது சொந்த மாகவே இரண்டு மாடுகள் வைத்துக் கொண்டு பால் கறந்து விற்பனை செய்து கொண்டிருப்பதையும் சொன்னான். தனக்குப் பல பெரிய வீடுகளில் பால் வாடிக்கை யிருப்பதாகவும், அவ் வீடுகளில் எங்காவது அய்யருக்கு ஒரு கணக்குப்பிள்ளை உத்தியோகம் பார்த்துக் கொடுப்பதாகவும் கூறினான். அய்யரும் அவர் குடும்பமும், தற்சமயம் கணக்கப்பிள்ளை வேலையை எதிர்பார்த்துக் கொண்டு பெருமாளின் ஆதரவில் இருந்து கொண்டிருக்கின்றனர். நல்ல ஜாதகம் கும்பகோணம் கடலங்குடித் தெரு அவ்வூருக்கே ஒரு அழகைக் கொடுப்பது, அத்தெருவுக்கு அழகைக் கொடுப்பது சண்முக முதலியார் வீடுதான்; அது உயர்ந்த இரண்டடுக்கு மாடிவீடு; கெம்பீரமான தோற்றம்; தெருவோடு போகிறவர்கள் அந்த வீட்டைக் கொஞ்சம் அண்ணாந்து பார்க்காமல் போக மாட்டார்கள். இன்று காலையிலிருந்து முதலியார் வீட்டில் ஏக அமர்க்களம்; வேலைக்காரர்கள் நாலு பேர் வெளியில் கை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்; சிலர் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்; வீட்டிற்குள்ளே பெண்கள் கூட்டம் பெண்கள் கூடினால் பேச்சிற்குப் பஞ்ச முண்டா? விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. முதலியார் வீட்டில் சமையற் காரர்கள் இருந்தாலும், முதலியாரின் சம்சாரம் கமலத்தண்ணி கிட்டேயிருந்து சமையலைக் கவனிக்காமலிருக்க மாட்டார்கள். தங்கள் வீட்டுச் சாப்பாட்டில் சிறிதும் குறை சொல்லும்படி யிருக்கக் கூடாது என்பதே அண்ணியாரின் அபிப்பிராயம்; முதலியாரின் கருத்தும் அதுதான். குடந்தைக்கு அடுத்துள்ள காவேரிபுரம் என்னும் கிராமம் அவருக்கே சொந்தமானது. ஆயினும் முதலியார் எப்பொழுதும் கும்பகோணத்தில் தான் இருப்பார். கிராமத்தைக் கவனிப் பவர்கள் காரியதர்களே. அவர் ஒரு நாளாவது கும்பேசுர சுவாமியைத் தரிசிக்காமல் இரவில் சாப்பிடுவதில்லை, ஆதலால் எப்பொழுதும் குடந்தையிலேயே தனது வாசத்தை வைத்துக் கொண்டார். முதலியார் வழக்கம் போல் காலையிலேயே எழுந்து நீராடினார். பூசையை முடித்தார். காலையாகாரம் ஆயிற்று. திண்ணையில் பிரப்பம் பாய் விரித்து அதன் மேல் இரத்தினக் கம்பளம் போடப்பட்டிருந்தது. ஒரு வெள்ளித் தட்டில் வாசனைத் திரவியங்களுடன் தாம்பூலம் வைக்கப்பட்டிருந்தது. முதலியார் தாம்பூலந் தரித்துக் கொண்டு சிவவேடத்தோடு இரு நண்பர்களுடன் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். மணி பத்து இருக்கும். நான்கு ஜட்கா வண்டிகள் ஜல் ஜல் என்று கெம்பீரமாக ஓடி வந்து முதலியார் வீட்டு வாயற்படியில் நின்றன. இரண்டு வண்டிகளிலிருந்து ஆண்களும், பெண்களும் இறங்கினார்கள். சண்முக முதலியார் திண்ணையை விட்டு இறங்கி வந்து, வந்தவர்களை வரவேற்கிறார். ஆண்கள் திண்ணையில் உட்கார்ந்தார்கள், வண்டிக்காரர்களுக்கு வாடகை கொடுத் தனுப்பப்பட்டது. வந்தவர்கள் மாயவரம் சிவக்கொழுந்து முதலியாரும். அவருடைய மனைவியும். நெருங்கிய உறவினர்களுந்தான். சிவக்கொழுந்து முதலியாரும், சண்முக முதலியாரும் ஒருவர்க் கொருவர் க்ஷேமம் விசாரித்துக் கொண்டார்கள். சிவக்கொழுந்து முதலியார், தான் காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் உண்டான நல்ல சகுனங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே யிருந்தார். வந்தவர்களும் அதை ஆமோதித்து ஒப்பம் வைத்துக் கொண்டிருந்தார்கள். சண்முக முதலியாரும் காலை முதல் தனக்கு நேர்ந்த நல்ல சகுனங்களைக் கூறிச் சந்தோஷப்பட்டார். இதற்குள் மணியும் 12ஆகிவிட்டது. ஜோதிடம் ராமச்சந்திர அய்யரை மூன்று மணிக்குள் வீட்டுக்கு வந்து சேரும்படி ஒரு ஆள் மூலம் சொல்லியனுப்பினார் சண்முக முதலியார். பிறகு சாப்பாட்டிற்கு எழுந்து சென்றார்கள். கேட்க வேண்டுமா முதலியார் வீட்டுச் சாப்பாட்டைப் பற்றி? வெகு தடபுடல். முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பது நமது முதலியார் விஷயத்தில் முழுவதும் விரோதமானதாகும். II விருந்து சாப்பிட்டவர்கள் சுமார் 20பேர்கள் இருக்கலாம். எல்லோரும் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள். சந்தனம் பூசிக் கொண்டார்கள்; தாம்பூலம் தரித்துக் கொண்டார்கள். இதற்கிடையில் ஊர்க்கதைகள் பல பேசப்பட்டன. அக விலையைப் பற்றியும், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றியும் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த எலக்ஷனைப் பற்றிய பேச்சுக்கூட இடையிடையே வராமலிருக்கவில்லை. இதற்குள் மணியும் மூன்றுக்கு மேல் ஆயிற்று. சிற்றுண்டிக் காகக் காப்பி பட்சணங்களும் தயாராகி விட்டன. உடனே எல்லோரும் தாம்பூலத்தைத் துப்பிவிட்டுக் கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு அந்த வேலையையும் முடித்துக் கொண்டு. திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள். இதற்குள் சோதிடம் ராமச்சந்திர அய்யரும் வந்து தயாராகத் திண்ணையில் உட்கார்ந்தார். சிவக்கொழுந்து முதலியார் கையோடு கொண்டு வந்திருந்த தனது மகன் சுப்பிரமணியனுடைய சாதகத்தைக் கொடுத்தார். சண்முக முதலியாரும் சடக்கென்று உள்ளே சென்று தயாராக எடுத்து வைத்திருந்த தனது புதல்வி சுந்தரத்தின் சாதகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். ராமச்சந்திர அய்யரும் இரு சாதகங்களையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். இரண்டும் பேஷான நல்ல ஜாதகம்; இரண்டுக்கும் ஆயுள் பலன் ரொம்பக் கெட்டி. புத்திர சந்தானத்துக்குக் குறைவேயில்லை. இந்தப் புருஷனுக்கென்றே இந்தப் பெண்ணும், இந்தப் பெண்ணுக்கென்றே இந்தப் புருஷனும் சிருஷ்டிக்கப்பட்டது போல் இருக்கிறது. எல்லாப் பாவங்களிலும் சரியான பொருத்தம் இருக்கிறது. என்று சரமாரியாகப் பொழிந்தார் ஜோசியர். ஜோசியருக்குச் சண்முக முதலியாரின் குடும்பத்தைப் பற்றியும் தெரியும்; மாயவரம் சிவக்கொழுந்து முதலியாரின் குடும்பத்தைப் பற்றியும் தெரியும்: இரண்டும் பெரிய இடங்கள். சொல்லுவதை மனது சந்தோஷப்படும்படி சொல்லி வைத்தால் நல்ல லாபங் கிடைக்கும் என்று ஜோசியருக்குத் தெரியாம லிருக்குமா? நல்ல அனுபவசாலியல்லவா அவர்? ஆகையால் நன்றாகப் பொருத்தங் கூறி விட்டார் சோதிடர். இந்தக் கல்யாண பேச்சு இப்பொழுதுதான் புதிதாக ஆரம்பித்தது என்று நினைத்து விடாதீர்கள். சென்ற ஒரு மாதமாகவே சிவக்கொழுந்து முதலியாரின் பந்துக்கள் சிலருக்கும் சண்முக முதலியாரின் பந்துக்கள் சிலருக்கும் சண்முக முதலியாருக்கும் இந்தக் கல்யாண சம்பந்தமான பேச்சு நடந்து கொண்டுதான் இருந்தது. கடைசியில் சண்முக முதலியார் சகுனம் பொருத்தம் முதலியவை சரியாக இருந்தால் பெண் கொடுக்கத் தடையில்லை என்று கூறிய பிறகே இரு குடும்பத் தாரும் நேரில் சம்பிரதாயத்தை ஒட்டிச் சந்தித்தார்கள். நாள், நட்சத்திரம் பெயர் ராசி, ஆகிய எல்லாப் பொருத் தங்களும் சரியாக இருக்கிறதென்று சோதிடர் கூறியவுடன் இருதரத்தினருக்கும் சந்தோஷமாகப் போயிற்று அப்பொழுதே கல்யாணத்திற்கு முகூர்த்தம் குறிப்பிட்டு விட்டார்கள். அடுத்த மாதம் 15ம் தேதி முகூர்த்தநாள். கல்யாணத்தைப் பெண் வீட்டிலேயே நடத்துவதாகத் தீர்மானம். கிரகப்பிரவேசத்தை வெகு விமரிசையாக மாயவரத்தில் வைத்துக் கொள்ளுவது என்றும் முடிவு செய்து விட்டார்கள். அன்று இரவு சிவக்கொழுந்து முதலியாரும் அவருடன் வந்தவர்களும் குடந்தையிலேயே தங்கினார்கள். கும்பேசுர சாமி கோயிலில் இவர்கள் பெயரால் அபிஷேக ஆராதனைகள் தட புடலாக நடந்தன. மறுநாள் காலையில் மாயவரம் முதலியாரும் அவருடன் வந்தவர்களும் சண்முக முதலியாரிடம் விடை பெற்றுக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள். இரண்டு இடங்களிலும் கல்யாண காரியங்கள் வெகு ஜரூ ராகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. III சிவக்கொழுந்து முதலியாருக்கு ஏராளமான சொத்துண்டு; 50 வேலி நிலங்கள் மாயவரத்துப் பக்கத்தில்; காவிரி ஆற்றுப் பாய்ச்சல்; கையில் 70 அல்லது 80 ஆயிரம் ரொக்கம்; கொடுக்கல் வாங்கல் உண்டு. கடன் இல்லை. அவருக்குச் சுப்பிரமணியன் ஒரே பிள்ளைதான். சண்முக முதலியாருக்கு ஒரு பிள்ளையும், ஒரு பெண்ணும் உண்டு. பிள்ளையின் பெயர் சோமசுந்தரம். பெண்ணின் பெயர் தான் சுந்தரம் என்று முன்பே சொல்லி விட்டோம். பெண்ணை மிகவும் அருமையாக வளர்த்து வந்தனர். பெண்ணுக்கு அதிகப் படிப்பு இல்லாவிட்டாலும் நன்றாக எழுதப்படிக்கத் தெரியும். சோமசுந்தரமும், சுப்பிரமணியனும் ஒரு கலாசாலை மாணவர்கள். கும்பகோணம் காலேஜில் இருவரும் இண்டர்மீடியேட் வகுப்பிலிருந்து பி. ஏ. வரையிலும் சேர்ந்து வாசித்தார்கள். இப்பொழுது சோமசுந்தரம் சென்னையில் சட்டக் கல்லுரியில் படித்துக் கொண்டிருக்கிறான். சுப்பிரமணியன் படிப்பு பி.ஏ. வகுப்போடு நின்று விட்டது. சுப்பிரமணியன் பி.ஏ. வகுப்பில் படிக்கும் போது அடிக்கடி ஒருவலிப்பு வந்து கீழே விழுந்துவிடுவதுண்டு. இந்தக் காரணத் தாலேயே அவனை மேலே படிக்க வைக்காமல் நிறுத்தி விட்டார் சிவக்கொழுந்து முதலியார். இவ்விஷயம் நமது சண்முக முதலியாருக்குத் தெரியாது. பையனை மாத்திரம் முதலியார் பார்த்திருக்கிறார். சில சமயங் களில் சோமசுந்தரத்தோடு வீட்டுக்கு வருவதுண்டு. மற்றபடி பையன் நல்ல குணசாலி; தங்கக் கம்பியென்றால் அவனுக்குத் தான் தகும். பரம சாது. தங்கை சுந்தரத்துக் கல்யாணம் பேசி முடித்திருக்கும் விஷயத்தைச் சண்முக முதலியார் மகனுக்கு எழுதியிருந்தார். சோமசுந்தரம் இதைக் கேட்டவுடன் திடுக்கிட்டான். தன்னைக் கலக்காமல் சுந்தரத்துக்குக் கல்யாணம் முடிவு செய்ததைப் பற்றி வருத்தமுற்றான். உடனே இரண்டு தினங்களுக்கு விடுமுறை வாங்கிக் கொண்டு குடந்தைக்குப் புறப்பட்டான். சுப்பிரமணியன் தன் தங்கையிடம் அளவற்ற அன்புடையவன். அவளுடைய வாழ்வு வீணாகக் கூடாது என்பதே அவனுடைய எண்ணம். ஒரு நாள் காலை ஐந்தரை மணியிருக்கும்; ஒரு ஜட்கா மிக விரைவாக ஓடி வந்து சண்முக முதலியார் வீட்டு வாயில் தெருவில் நின்றது. அதிலிருந்து இறங்கினான் சோமசுந்தரன். உடுப்புக்கள் வைத்துள்ள தோல் பெட்டியை வண்டிக்காரன் கொண்டு வந்து திண்ணையில் வைத்தான்; கூலியைப் பெற்றுக் கொண்டு போய்விட்டான். கதவைத் தட தட வென்று தட்டினான் சோமசுந்தரம். உடனே அரைத்தூக்கத்திலிருந்த முதலியார் விழித்து, யார்? என்று கேட்டுக் கொண்டு வந்து கதவைத் திறந்தார். சோமசுந்தரம் எதிரில் நிற்பதைக் கண்டு ஆச்சரியத்துடன், வா தம்பி! என்ன அவசரம்! கடிதம் கூட எழுதவில்லையே வருகிறேனென்று என்று கேட்டார். சும்மா தான் ஒன்றும் அவசரம் இல்லை என்றான் சோமசுந்தரம். சரி; நீ போய் கொஞ்சம் படுத்துத் தூங்கு; இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு வந்திருப்பாய்; கல்யாண காலம்; போட் மெயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லி சோமசுந்தரத்தைப் படுக்கைக்கு அனுப்பிவிட்டார் முதலியார். சோமசுந்தரமும் படுத்தவன் காலை 8 மணிவரையிலும் நன்றாய் அயர்ந்து தூங்கிவிட்டான்; பிறகு, எழுந்து நீராடி விட்டுத் தயாராக இருந்த காப்பி பலகாரம் சாப்பிட்டுத் தந்தை யிடம் வந்தான். தந்தையார் சுந்தரத்தின் கல்யாணத்தைப் பற்றிக் கூறினார். சோமசுந்தரம்:- தங்கையின் கல்யாணத்தைப் பற்றி எனக்கு ஒரு வார்த்தை எழுதியிருக்கக் கூடாதா? சுப்பிரமணியன் நல்ல பையன் தான். ஆனால் அவனுக்கு ஒரு வியாதியிருக்கிறது. அது மிகவும் ஆபத்தான வியாதி. ஆகையால் இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விடுவது தான் நல்லது என்றான். தந்தை:- அதனால் என்ன? சோதிடர் ராமச்சந்திரய்யர் தான் இருவர் ஜாதகங்களையும் பார்த்தார். அவரைவிடப் பெரிய ஜோசியன் எவனிருக்கிறான். இருவருக்கும் ஆயுள் கெட்டி என்று சொல்லி விட்டார். இதைப்போல் பொருத்த மான ஜாதகங்கள் வேறு கிடைக்கவே கிடைக்காது என்று கூறினார். சொத்தினும் குறைவில்லை; நல்ல கவுரவமுள்ள குடும்பம்; பிறகு என்ன வேண்டும்? ஆகையால் நாம் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை என்றார். சோமசுந்தரம்:- என்ன! அப்பா? கண்ணுக்கு முன்னே மாப்பிள்ளைக்கு வியாதி இருக்கிறது என்று தெரிகிறது. அதுவும் ஆபத்தான வியாதி என்று டாக்டர்களே சொல்லி இருக் கிறார்கள். இதை நம்பாமல் நீங்கள் ஏதோ ஜோசியர் கூறி விட்டார் என்று சொல்லுகிறீர்களே; இந்தக் காலத்தில் இதை யாராவது நம்புவார்களா? புத்திசாலிகள் கேட்டால் சிரிக்க மாட்டார்களா? அப்பா! தயவு செய்து என் சொல்லைக் கேளுங்கள்! சுந்தரத்துக்கு இந்த வரன் வேண்டாம் என்றான். இதைக் கேட்டவுடன் முதலியாருக்குக் கொஞ்சம் கோபம் வந்து விட்டது. என்னடா நீயும் கெட்டுப் போய் விட்டாய் போலிருக்கிறதே சென்னப் பட்டணம் போனவுடன். இதற்குத் தான் அப்பொழுதே சொன்னேன் போதும் படித்தது என்று. எல்லாப் பொருத்தங்களும் சரியாக இருக்கிறபோது நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? நாம் செய்வதைச் செய்தால் நடக்கிற படி நடக்கிறது. சுந்தரத்தின் விஷயத்தில் எனக்கில்லாத கவலை உனக்கென்ன வந்து விட்டது. சோதிடம் ராமச்சந்திர அய்யர் என்ன சாமானியமானவரா? என்று கடிந்து கூறினார். சோம சுந்தரம் அப்பொழுது பேசாமல் இருந்து விட்டான். மறுநாளும் இது விஷயமாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். முதலியார் திரும்புகிற வழியைக் காணோம். முதலியார் ஒரே பிடிவாத குணம் உள்ளவர். எந்தக் காரியத்திற்கும் பஞ்சாங்கத்தைப் பார்க்காமல் இருக்கமாட்டார். ரயிலுக்குப் புறப்படுவதா யிருந்தால் ராவுகாலத்தில் புறப்படும் வண்டியில் ஏறமாட்டார். இப்படிப்பட்டவர் எப்படி சோமசுந்தரத்தின் பேச்சைக் கேட்பார்? கடைசியாகச் சோமசுந்தரம் துக்கத்துடன் சென்னைக்குப் புறப்பட்டான். பாவம்! சுந்தரத்துக்கு என்ன தெரியும்? அவள் மிக அன்புடன் அண்ணா கல்யாணத்துக்கு நாலுநாள் முன்ன தாகவே லீவு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினாள். சோமசுந்தரம் சரி என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டான். தாய் தந்தையினிடமும் சொல்லிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தான். IV நாளைக்கு முதலியார் வீட்டில் கல்யாணம். ஒரு நாள் இரண்டு நாள் கல்யாணம் அல்ல. 5நாள் கல்யாணம். மூன்று நாளிலாவது கல்யாணத்தைச் சுருக்கி முடித்து விடலாம். என்ற ஆசை சண்முகம் முதலியாருக்கு இருந்தாலும், கல்யாணத்தில் கூட காசு கணக்குப் பார்க்கிறார். என்று எங்கே ஊரார் சொல்லிவிடப் போகிறார்களோ என்ற ஒரு பயம். எல்லோருக்கும் உள்ள பொருளாதார நெருக்கடி முதலியாருக்கும் இல்லாமல் இல்லை. ஆயினும் குடும்பத்தின் மதிப்புக்குக் குறைவு வராமல் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் 5 நாள் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். விடிந்து ஆறு மணிக்கு முகூர்த்தம். இன்னும் சோம சுந்தரம் மாத்திரம் வரவில்லை. முதலியாருக்கும் அண்ணி யாருக்கும் மகன் வராதது பெருங்கவலையாக இருந்தது. சுந்தரமும் அண்ணனைக் காணவில்லையே என்று கவலைப்பட்டாள். சோமசுந்தரமோ தனக்குக் காலேஜ் பரீட்சை நெருங்கியிருப்பதால் முன்னாடியே வரமுடியவில்லை என்றும், கல்யாணத்தன்று காலையில் வருவதாகவும் கடிதம் எழுதியிருந்தான். இரவு மூன்று மணியிலிருந்தே முகூர்த்தத்திற்குக் குடும்பத்துப் புரோகிதர் பஞ்சாமி அய்யர் கனத்த குரலோடு மந்திரங்களை உச்சரிக்கிறார். மாமூல் படி சொர்ண புஷ்பச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பச் சடங்குகள் முடிந்து தாலி கட்டும் நேரம் வந்தது. மணமகன் தாலியைக் கையில் எடுத்துப் பெண்ணின் கமூத்தில் கட்டும் போது ஏக தடபுடலாக மேள வாத்தியங்கள் கோஷித்தன. அச்சமயம் மாப்பிள்ளை திடீரென்று மணவரையி லிருந்து கீழே விழுந்து கை கால்களை உதைத்துக் கொள்கிறார். கையொரு பக்கம் இழுக்கிறது. வாய் ஒரு பக்கம் கோணுகிறது. இதற்குள் மாப்பிள்ளை தாலிகட்டும் போது உதவிக்கிருந்த பெண்கள் தாலியைப் பெண்கழுத்தில் கட்டிவிட்டனர். கல்யாண வீடு முழுவதும் ஏக அமர்க்களம். வாத்திய கோஷங்கள் நின்றன. புரோகிதர் கூச்சலும் அடங்கிற்று. கல்யாணத்திற்கு வந்திருந்த கூட்டம் அல்லோலகல்லோலப் படுகிறது. உடனே டாக்டர் வரவழைக்கப்பட்டார். ஏதோ சில ஆரம்ப சிகிச்சைகளைச் செய்தார். மாப்பிள்ளையின் ஹிருதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பழைய நிலையை அடைய இன்னும் 10 தினங்களாவது செல்லும். அது வரையிலும் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். உடனே சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்துவிடும்படி புரோகிதருக்குக் கட்டளையிடப்பட்டது. அவர் இதோ 5 நிமிஷங்களில் என்று சொல்லிக் கல்யாணத்தை ஒரு நிமிஷம் முன்னதாகவே முடித்து விட்டார். 5 நாளுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்யாணம் கால் நாளோடு முடிந்தது. முதலியார் முகத்தில் ஈயாடவில்லை. அப்பொழுதுதான் அவருக்குச் சோமசுந்தரம் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்தன. ஆயினும் கடைசியில் உள்ளது உள்ளவாறு நடக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டார். அன்று மாலையில் தான் சோமசுந்தரம் வந்தான். அவனுக்கு அங்கிருக்க மனங்கொள்ளவில்லை. மறுநாளே அவன் சென்னை சென்றுவிட்டான். சிவக்கொழுந்து முதலியாரும் அவர் மனைவி யும் மாத்திரம், 10 தினங்கள் குடந்தையிலேயே தங்கி இருந்து சுப்பிரமணியத்துக்குக் கொஞ்சம் உடம்பு சவுக்கியமானவுடன், பெண்ணையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தனர். மாயவரத்திலும் அதிக தடபுடல் இல்லாமல் கிரகப் பிரவேசச் சடங்கு நடந்தது. கல்யாணம் முடிந்து மாதங்கள் மூன்று ஆயின, ஊர் முழுவதும் முதலியார் வீட்டுக் கல்யாணத்தில் நடந்த அலங் கோலத்தைப் பற்றிய பேச்சு மாத்திரம் ஓயவில்லை. இதிலிருந்து ஜோசியர் ராமச்சந்திரய்யருக்குங்கூட செல்வாக்குக் குறைந்து கொண்டு வந்தது. இப்படியிருக்கும் போது திடீரென்று ஒருநாள் மாலை 4 மணிக்கு ஒரு தந்திச் சேவகன், வெகுவிரைவாகச் சிவப்புச் சைக்கிள் மீது ஏறி ஓடிவந்தான். திண்ணையில் கவலையோடு உட்கார்ந்திருந்த முதலியாரிடம் ஒரு பழுப்புக் கவரைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றான். முதலியார் கவரைப் பிரித்துப் பார்த்தார். திடீரென்று ஆ! போனானா படுபாவி! ஐயோ சுந்தரம்! என்று சத்தம் போட்ட படியே சாய்ந்தார். உடனே வீட்டுக்குள்ளிருந்து அண்ணியார் ஓடிவந்து பார்த்தார். குழந்தை சுந்தரம் ஓடிவந்தாள். வேலைக் காரர்கள் ஓடிவந்தனர். காரியதர்கள் ஓடிவந்தனர். கீழே கிடந்த தந்தியை காரியதர் எடுத்துக் கொண்டார்; ஆனால் உடனே வெளிப் படுத்தவில்லை; அப்பொழுதே சோமசுந்தரத்துக்குத் தந்தி அனுப்பச் சொல்லிவிட்டு டாக்டருக்கும் ஆள் அனுப்பினார். டாக்டரும் வந்து முதலியார் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு இனி பயனில்லை என்று சொல்லிப் போய்விட்டார். முதலியார் வாழ்வு முடிந்தது. மறுநாள் தான் மாப்பிள்ளை இறந்து போய்விட்டார் என்று விஷயம் தெரிந்து சோமசுந்தரம் வந்து சேர்ந்தான். துக்க காரியங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டான். வண்டிக்காரக் குப்பன் I வண்டிக்காரக் குப்பன் என்றால், கும்பகோணம் முழுவதும் தெரியும். அடிக்கடி ரயில் பிரயாணம் செய்து வருகிறவர்களில் அவனை அறியாதவர்கள் கொஞ்சபேர் தான் இருப்பார்கள்; ரயிலை விட்டு இறங்கியவுடன், வண்டிக்காரர்கள் செய்யும் பலவந்தத்தை லட்சியம் பண்ணாமல் நேரே மூட்டை முடிச்சுக் களுடன் வீட்டுக்கு வருகிறவர்களில் சிலருக்கு மாத்திரம் அவனைப் பற்றித் தெரியாதிருக்கலாம். குப்பன் நல்ல குணசாலி; மற்ற வண்டிக்காரர்களைப் போல் ரயிலிலிருந்து வெளிவரும் பிரயாணிகளைப் பிய்த்துப் பிடுங்க மாட்டான். கும்பகோணம் டேஷனில் இறங்குபவர் களுக்குத்தான் வண்டிக்காரர்களின் மகாத்மியம் தெரியும்; கடைத்தெரு ஒரு அணா; மடத்தெரு ஒரு அணா, தனி வண்டி இரண்டணா; ஒருவர் தான் பாக்கி; இதோ வண்டி புறப்படு கிறது, வாங்க சாமி! வாங்க ஐயா! வாங்க என்று வண்டிக் காரர்கள் போடும் கூச்சல் காதைத் தொளைக்கும். ஏமாந்த சிலருடைய மூட்டைகளையோ, பெட்டிகளையோ வண்டிக் காரர்கள் பிடுங்கிக் கொண்டு போய் வண்டியில் வைத்து விடுவார்கள், அம்மா இங்கே வாங்க; ஐயா இங்கே வாங்க; சாமி இங்கே வாங்க; என்று சப்தம் இடுவார்கள். மூட்டையை ஒருவன் தூக்கிக் கொண்டு போய் விடுவான். ஆளை ஒருவன் பிடித்திழுப்பான். இதற்கிடையில் வண்டிக் காரர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் சச்சரவு நேர்ந்து விடும். கணவன் மனைவியாகச் செல்லும் தம்பதிகள் சில சமயம் பிரிக்கப்படுவார்கள். புருஷனை ஒரு வண்டிக்காரன் பிடித் திழுப்பான்; பெண்சாதியை மற்றொரு வண்டிக்காரன் வளைத்துக் கொள்வான். இந்த வேடிக்கை யெல்லாம் கும்பகோணம் டேஷனில் தான் அதிகம். ஆனால் நமது குப்பன் இந்தத் தகராறுகளுக்குப் போவதே யில்லை. அவனுடைய வண்டி ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டி ருக்கும்; அவன் வண்டியின் பக்கத்தில் நின்று கொண்டிருப்பான். வழக்கமாக அவன் வண்டியில் செல்லும் பிரயாணிகள் பலருண்டு; அவர்கள் டேசனை விட்டு வெளிவந்தவுடன் குப்பன் வண்டியிருக்கிறதா என்று தான் முதலில் கவனிப்பார்கள்; அவன் வண்டியில்லா விட்டால் தான் வேறு வண்டியில் ஏறுவார்கள். மற்ற வண்டிக்காரர்களுக் கெல்லாம் குப்பன் விஷயத்தில் பொறாமை உண்டு என்பதில் ஆச்சரியமில்லை. ஒருநாளாவது குப்பனுடைய வண்டி வெறும் வண்டியாக டேஷனுக்கு வந்ததில்லை; வெறும் வண்டியாகத் திரும்பியதுமில்லை. எப்பொழுதும் அவனுக்குச் சவாரியிருந்து கொண்டுதான் இருக்கும். ஆகையால் குப்பன் நல்ல அதிஷ்டசாலிடா! ஒரு நாளாவது அவனுக்குச் சவாரி கிடைக்காமே போனதில்லேடா என்று மற்ற வண்டிக்காரர்கள் எல்லாம் தினந்தினம் பேசிக் கொள்வார்கள். ஆனால் குப்பனுடைய வண்டியைப் பார்த் தாலும், மாட்டைப் பார்த்தாலும் அவனைப் பார்த்தாலும் அவ்வண்டியில் ஏறத்தான் தோன்றும். வண்டி சுத்தமாக இருக்கும்; அழகாகக் காணப்படும்; மாடும் நல்ல மாடு; விரைந்து செல்லும்; தகராறும் பண்ணாது; குப்பனும் பரம சாது; பிரயாணிகளைத் தொந்தரவு செய்ய மாட்டான்; வண்டி வாடகைக்கும் சண்டை போடமாட்டான்; கொடுத்ததைச் சந்தோஷத்தோடு பெற்றுக் கொள்வான். இதனால் ஒரு முறை அவன் வண்டியில் ஏறிச் சென்றவர்கள் மறுமுறைகளில் அவன் வண்டியைத் தான் விரும்புவார்கள். II ராமசாமிபிள்ளைதான் குப்பனுடைய தகப்பன். அவருக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும்; சரியாகக் கண் தெரியாது; ஆதலால் வெளியில் அதிகமாக வருவதில்லை; பெரும்பாலும் வீட்டிலேயே தான் வாசம். மாதளம் பேட்டைத் தெருவில் உள்ள ஒரு சிறிய குடிசை தான் அவர் குடியிருந்து வரும் வீடு. அவர் சிறு வயது முதல் செய்து வந்த வியாபாரம் பேரீச்சம் பழம். ஊர் ஊராகப் பேரீச்சம் பழத்தட்டைத் தூக்கிச் சென்று, ஓட்டை உடைசல், செம்பு. பித்தளை, செல்லாக் காசுகளுக்குப் பேரீச்சம் பழம். என்று கூறி விற்பனை செய்து வருவதையே தொழிலாகக் கொண்டிருந்தார். இந்த வியாபாரத்தின் மூலம் அவர் ஆயுள் முழுவதும் சம்பாதித்த பணம் ரூ 75 தான். அந்தப் பணத்தைக் கொண்டு தான் குப்பன் 18 வயது பையனானதும் இப்பொழு துள்ள வண்டியும் மாடும் வாங்கப்பட்டன. வண்டி வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆயின. வண்டி வாங்கின பின் ராமசாமி பிள்ளையும் பேரீச்சம் பழ வியாபாரத்தை நிறுத்தி விட்டார். ஆயினும் இன்றும் பேரீச்சம் பழக்காரர் வீடு என்றுதான் அவர் வீட்டுக்குப் பெயர். குப்பனையும் அத்தெருவில் உள்ளவர்கள் பேரீச்சம் பழக்காரன் மகன் என்றுதான் சொல்லுவார்கள். குப்பனுக்கு அந்த வண்டியும், மாடுந்தான் தகப்பனரால் தேடிவைக்கப்பட்ட ஆதி. குப்பன் வண்டி ஓட்ட ஆரம்பித்தது முதல் ராமசாமி பிள்ளையின் கஷ்டமும் தீர்ந்தது. சாப்பாட்டுக் கஷ்டமில்லை. தினம் ஒன்றரை ரூபாய்க்குக் குறையாமல் வரும்படி வந்தது. மாட்டுக்கு ஆன செலவு போக மீதியைக் கொண்டு சுகமாகச் சாப்பிட்டு வந்தார்கள். மீதம் பிடித்த வகையிலும் கையில் நூறு ஐம்பது பண நடமாட்டமிருந்தது. குப்பன் வீட்டுக்குப் பக்கத்து வீடு வண்டிக்காரக் கட்டையன் வீடு. அவனுக்கு தினம் எட்டணா கிடைப்பது கூட கஷ்டம். அவனுக்கோ மூன்று குழந்தைகள்; ஒரு மனைவி. கட்டையன் குப்பனைப் பார்த்துப் பொறாமை கொள்வதில் ஆச்சரியமில்லை. ஒரு நாள் இரவு கட்டையனுடைய மனைவிக்கும், கட்டையனுக்கும் கீழ் வருமாறு பேச்சு நடந்தது. மனைவி:- என்னங்க! எவ்வளவு நாளைக்கு இப்படித் திண்டாடுறது. என்னமோ வண்டியோடுதுன்னு பேருதான். ஒரு நாளாவது வவுறு ரொம்ப சாப்பிட முடியலே. கட்டுறத்துக்கு நல்ல துணி கெடையாது. வண்டியிலெப் படுத்துக் கிட்டுத் தூங்குவிங்களா? கட்டையன்:- நான் என்னாடி பண்றது? ரயிலடியிலேயே தான் காத்துக் கெடக்கிறேன்; ஒவ்வொரு ரயிலில் வாரவுங் களையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்க்கிறேன். வண்டிலே போற மனுஷனுகள் எல்லாம் மூட்டையைத் தூக்கித் தலையிலே வச்சிக்கிட்டு நடந்து போக ஆரம்பிச் சூட்டானுங்க. இந்தக் காலத்திலெ காசு இண்ணா அம்புட்டுக் கஷ்டமாயிருக்கு. மனைவி:- சரிதாம் போங்க! உங்களுக்கு மாத்திரந்தாம் அப்படியிருக்கு. அடுத்த வீட்டிலியுந்தா வண்டி ஓடுது. அவுங்களுக்கு ஏதாவது கொறைச்சலிருக்கா பாத்தீங்களா? சம்பாதிக்கலியா! அதெல்லாம் சவாரி பிடிக்கிற சாமர்த்தியத் திலேயிருக்கு. சும்மாயிருந்தா வருமா சவாரி? கட்டையன்:- போடி! போடி! குப்பனைப் போல ஊமைப் பய கெடையாது அவனுக்கு நல்ல அதிர்ஷ்டமிருக்கு. சாமி கிருபையால் அவனுக்குத் தவறாமல் சவாரி கிடைக்கிது. நம்மால் என்னடியிருக்கு, எல்லாம் மகமாயி கிருபை. இவ்வாறு அவர்களுடைய பேச்சு நீண்டு கொண்டே போயிற்று. இதைக் குப்பனும், அவனுடைய தந்தை ராமசாமிப் பிள்ளையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மனத்தில் இந்த விஷயம் பதிந்தது. தங்களுக்கு மகமாயி கிருபை யிருப்பதாகவே நம்பினார்கள். குப்பனுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை. அவன் ஒரே பிள்ளை தான். குப்பனுடைய தாயார் தான் வீட்டில் சமையல் செய்வது. இந்த நிலையில் குப்பனுடைய கல்யாணப் பேச்சும் நடந்து கொண்டிருந்தது. கட்டையனுக்கும் அவன் மனைவிக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்ட பின் குப்பனும், அவன் தந்தையும், தாயும் நிரம்ப பக்தியுடையவ ரானார்கள். அன்று முதல், மாரியம்மன் கோயிலுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யத் தொடங்கி விட்டார்கள். மாரியம் மனுக்காக வேண்டி வெள்ளிக்கிழமை விரதம் பிடிக்கத் தொடங்கினார்கள். அன்று குப்பனும் விரதம்; ஆகையால் வண்டி கட்டுவதில்லை. குப்பன் ஒவ்வொரு நாளும் காலை மாலை இருவேளையும் மாரியம்மன் கோயிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. வண்டியோட்டுவதில் உள்ள முயற்சியை விட மாரியம்மனைக் கும்பிடும் முயற்சியே அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. இச் சமயம் குப்பனுடைய வரும்படி குறைந்தது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. அனேகமாகக் கட்டையனுடைய நிலைமைக்கே குப்பனும் வந்து விட்டான். இதற்கிடையில் குப்பனுக்குக் கல்யாணமும் ஆகிவிட்டது. நல்ல வேளையாகக் குழந்தை குட்டிகள் ஒன்றுமில்லை. வரும்படி குறையக் குறைய மகமாயி பிரார்த்தனையும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால் கொஞ்ச நஞ்சங் கையிலிருந்த பணமும் செலவாகி விட்டது. III இவ்வாறு நாலைந்து ஆண்டுகள். குப்பனுடைய தந்தை யும் தாயும் இறந்துவிட்டார்கள். இப்பொழுது அவன் மனைவி யும் அவனுந்தான் மீதம். முன்போல் அவன் அடிக்கடி மாரியம்மன் கோயிலுக்குப் போக முடிவதில்லை. காரணம் வண்டி வரும்படி குறைந்தது தான். அவன் சவாரிக்காக வேண்டி ஊரெங்கும் சுற்ற வேண்டியதாக இருந்தது. முன்போல் யாரும் அவன் வண்டியில் ஏறுவதில்லை. முன்பு வழக்கமாக அவன் வண்டியில் ஏறிக்கொண்டிருந்தவர்கள் கூட இப்பொழுது ஏற மறுத்து விட்டார்கள். இதனால் அவன்பாடு திண்டாட்ட மாகி விட்டது. குப்பனும், அவன் வண்டியும், மாடும் முன்போல் இல்லை. அவன் தரித்திருப்பது அழுக்கடைந்த கந்தைத் துணி; வண்டியோ பழைய வண்டி; மாடோ தொத்தல் மாடு. குப்பனும் மற்ற வண்டிக் காரர்களைப் போலவே ரயிலடியில் சவாரி பிடிக்கக் கூவி அழைப்பான். அப்படியும் சவாரி கிடைப்பதில்லை. மற்ற வண்டிக் காரர்களுக்கு இப்பொழுது அவனுடைய விஷயத்தில் வெகு திருப்தி. இப்பொழுது குப்பன் தனது பழைய நிலையைப் பற்றி அடிக்கடி நினைத்து பார்ப்பான்; அதை நினைக்கும் போது வருந்தாமலிருக்க முடியவில்லை. நன்றாய் வரும்படி கிடைத்த சமயத்தில் சேர்த்து வைக்காமற் போனோமே என்று கூடச்சில சமயத்தில் நினைப்பான். நாளுக்கு நாள் அவன் கஷ்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கஷ்டம் அதிகரிக்க அதிகரிக்கச் சாமியை வேண்டுவதும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சாமியை வேண்டுவது என்பது ஏழை மக்களின் பரம்பரை உரிமையல்லவா? உண்மையில் நமது நாட்டில் சாமியை நம்பி ஏமாறுகிறவர்கள் ஏழை மக்கள் தான். பணக்காரர்கள் சாமி பக்தியுள்ளவர்கள் போல் நடிப்பதில் கைதேர்ந்தவர்கள். பணம் சம்பாதிக்கின்ற தங்கள் முயற்சியில் எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஏழைகள் அப்படியல்ல, உண்மையிலேயே சாமியின் பேராலும், சடங்குகளின் பேராலும் தங்கள் சொற்ப வருமானத்தையும் இழந்து துன்படுகின்றார்கள். அதிலும் தொழிலாளர்களிடம் இந்தக் குணம் அதிகம். இதனால் தான் அவர்கள் நிலை உயர்வடைய முடியாம லிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் சுகமடைவது அவனுடைய முயற்சி யினால் தான் என்ற எண்ணம் ஏழை மக்களிடம் வந்துவிட்டால் அன்றே அவர்கள் தரித்திரம் ஒழியும். ஆகவே நமது குப்பன் தெய்வ பக்தியில் ஊறிக் கொண்டிருந்தான் என்பதில் ஆச்சரிய மில்லை. IV ஒருநாள் காலை 6.45 மணிக்கு சென்னையிலிருந்து வரும் திருவனந்தபுரம் வண்டி கும்பகோணம் டேஷனில் வந்து நின்றது. டேஷனுக்கு வெளியில் ஒற்றை மாட்டு வண்டிக் காரர்கள் எல்லாம் வண்டிகளை வரிசையாக நிறுத்தி யிருந்தார்கள். வண்டிக்காரர்கள் பலரும் பிரயாணிகள் வரும் வாசற்படிக்கு எதிரில் வந்து நின்று கொண்டு என் வண்டிக்கு வாங்க! என் வண்டிக்கு வாங்க என்று இழுத்துக் கொண்டி ருந்தார்கள். அப்படி நின்று கொண்டிருந்தவர்களில் நமது குப்பனும் ஒருவன். அவனுக்கு இப்பொழுது பொருளாதார நெருக்கடி அதிகமாகிவிட்டதால் வண்டி தவறாமல் டேஷனுக்கு வந்துகொண்டிருந்தான்; சவாரிதான் கோளாறு. ஆனால் அன்று வண்டியில் சென்னைக்குச் சென்று வந்த மடத்துத் தெரு வக்கீல் ஒருவருடைய படுக்கையையும், ட்ரங்கை யும் வாங்கிக் கொண்டு அவரையும் தன் வண்டிக்கு அழைத்துக் கொண்டு வண்டிக்குப் போகும் போதே குப்பன் மனதில் இன்று விழித்த முகம் நல்ல முகம்; ஏதோ ஒரு சவாரி கிடைத்தது காலையில்; இரண்டணாவாவது கிடைக்கும் என்ற எண்ணம் உதித்துச் சந்தோஷத்தைத் தந்து கொண்டிருந்தது. படுக்கை யையும், பெட்டியையும் கொண்டு போய் வண்டியில் வைத்தான். சாமி வண்டியில் ஏறுங்கோ என்றான். வக்கீல் வண்டியிடம் வந்தார், அந்த வண்டியில் ஏற விருப்பமில்லை. உடனே அவர் தானாகவே படுக்கையையும், பெட்டியையும் கையில் எடுத்துக் கொண்டார். உன் வண்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறொரு வண்டியில் ஏறிக் கொண்டு போய் விட்டார். குப்பன் வந்த சவாரியும் போய்விட்டதே என்று ஏமாந்தான். அன்று கும்பகோணத்தில் ஏதோ விசேஷ தினமாகையால் எல்லா வண்டிகளுக்கும் நல்ல சவாரி கிடைத்து விட்டது. கடைசியாகக் குப்பன் வண்டி மாத்திரம் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது சோலையப்பன் தெருவுக்குப் போக வேண்டியவர் ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் வந்தார். கவலையோடு நின்று கொண்டிருந்த குப்பனைப் பார்த்து குப்பா வண்டியிருக்கிறதா? என்றார். இதோ இருக்கிறது சாமி! வாங்கோ என்று சொல்லிக் கொண்டு ஓட்டி வந்து அவருடைய மூட்டை முடிச்சுகளை வாங்கிக் கொண்டு போய் வண்டியில் வைத்தான். அவருக்கு அந்த வண்டியைப் பார்த் ததுமே அதில் ஏற மனமில்லை. ஆயினும் வேறுவண்டியில்லாத தால் ஏறி உட்கார்ந்தார். அந்த பிரயாணிக்கும் குப்பனுக்கும் அப்பொழுது சில பேச்சுக்கள் நடந்தன. பிரயாணி:- ஏண்டா குப்பா! உன்னுடைய பழைய வண்டி மாடுகள் எங்கே! ஏன் இந்த ஓட்டை வண்டியையும் தொத்தல் மாட்டையும் வைத்துக் கொண்டிருக்கிறாய்? குப்பன்:- பழைய வண்டி மாடுகள் தாஞ் சாமி. வண்டி பழசாப் போயிடிச்சு. மாடும் எளைச்சுப் போச்சுங்க. ஏதாவது சவாரி இருந்தாத் தானுங்களே மாட்டையும் வண்டியையும் நல்லா வெச்சிருக்கலாம். ஒன்றும் சவாரியில்லீங்களே. என்ன பண்றதுங்க. பிரயாணி:- இந்த மாதிரி வண்டியையும் மாட்டையும் வைத்துக் கொண்டிருந்தால் எங்கேயிருந்து சவாரி வரும்? நல்ல வண்டியும், நல்ல மாடுமாக இருந்தால் தான் சவாரி கிடைக்கும், நான்கூட வேறு வண்டியிருந்தால் உன் வண்டியில் ஏறியிருக்க மாட்டேன். இதற்கு முன் பழக்கப்பட்ட நானே உன் வண்டியில் ஏறப் பிரியப்படவில்லை என்றால் முன்பின் தெரியாதவர்கள் எப்படி ஏறுவார்கள்? இவ் வார்த்தை குப்பனுடைய மனதில் நன்றாய்த் தைத்தது. சவாரியைக் கொண்டு போய் விட்டுவிட்டு அவர் கொடுத்த இரண்டாவை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அன்று அவனுக்குக் கிடைத்த வரும்படி அவ்வளவுதான். குப்பன் காலையில் 6 மணிக்குப் பல்லை விளக்கிக் கொண்டு கொஞ்சம் நீராகாரம் குடித்துவிட்டு, வண்டி கட்டுவதற்குப் போனான். மாட்டைப் பார்த்தபோது, அதன் வாயிலிருந்து நுரை நுரையாக வந்து கொண்டிருந்தது. மாட்டை எழுப்பிப் பார்த்தான். எழுந்திருக்கச் சக்தியில்லாமல், படுத்திருந்தது, சரி சரி? மாட்டுக்கு ஏதோ வியாதி வந்து விட்டது என்று தெரிந்து கொண்டான். உடனே மாட்டு வைத்தியன் வீட்டுக்கு ஓடி மாட்டு வைத்தியம் மன்னார்சாமியை அழைத்து வந்தான். மன்னார்சாமி கைவைத்த மாடுகளெல்லாம் சந்தேகத் திற்கிடமில்லாமல் தீர்ந்து விடுவதுதான் வழக்கம். மன்னார்சாமி மாட்டைப் பார்த்ததும் ஏது? எனக்கு நம்பிக்கையில்லை. மாட்டின் உடம்பில் நல்ல ரெத்தமே கிடை யாது. அதனிடம் ஏதாவது சக்தியிருந்தால் தானே பிழைக்கும். ஆனாலும் என்னால் முடிந்த வரையிலும் பார்க்கிறேன் என்று சொல்லி ஏதேதோ மருந்துகளை அரைத்துப் போடும்படி செய்தான். கடைசியில் ஒன்றும் பயனில்லாமல் மாடு இறந்தது. குப்பன் அடைந்த துன்பத்துக்கு அளவேயில்லை. அப்பொழுது தான் அவனுக்கு உண்மை தெரிந்தது. மகமாயி மகமாயி என்று சொல்லி மாட்டையும், வண்டியையும் கவனிக்காமல் போனோம். அதனால் தானே நமக்கு இந்தக் கதி நேர்ந்தது. பாவம் நன்றாய் உழைத்துக் கொண்டிருந்த மாட்டுக்குத் தீனி போடாமல் கொன்றோமே. நல்ல தீனி தின்று மாடும் வலுவுள்ளதாக இருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்காதே என்று எண்ணி எண்ணி ஏங்கினான். வேறு இன்னது செய்வது என்று புரியவில்லை. ஜீவனத்துக்கு ஏதாவது ஒரு தொழிலைச் செய்து தான் தீர வேண்டும். வேறு மாடு வாங்குவதற்கோ பணம் இல்லை. ஓட்டை வண்டிதான் இருக்கிறது. மாட்டுக்கு வியாதி வந்த வகையில் நாலைந்து ரூபாய் கடன் வாங்கி செலவு செய்யும் படியும் நேர்ந்து விட்டது. இச்சமயத்தில் தன் மனைவியை யோசனை கேட்டான், ஜீவனத்துக்கு என்ன தொழில் செய்யலாம் என்று. அவள் பழைய தராசும் படிக்கல்லும் இருப்பதை ஞாபக மூட்டி ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று கூறினாள். திடீரென்று குப்பனுடைய மனம் பேரீச்சம்பழத்தில் படிந்தது. மறுநாளே வண்டியை விற்றான் அதில் கிடைத்த சொற்பப் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு தன் தந்தையைப் போலவே ஊர் ஊராகச் சென்று பேரீச்சம்பழம் விற்கத் தொடங்கி விட்டான். இப்பொழுது அவன் மகமாயி கிகமாயி ஒன்றையும் நினைப்ப தில்லை. மாடு செத்ததிலிருந்து அந்த நினைப்பும் மலையேறி விட்டது. இன்று அவன் பேரீச்சம் பழம் விற்றாலும் தெருவில் எல்லோரும் அவனை வண்டிக்காரக் குப்பன் என்றே அழைக் கிறார்கள். செட்டியார் செல்வம் புத்தாண்டு பிறந்து விட்டது. சந்திரசேகரஞ் செட்டியார் வீட்டில் ஏக தடபுடல். அவர் கோயம்புத்தூரிலேயே ஒரு பெரிய வியாபாரி. ஒவ்வொரு ஆண்டிலும், வருஷப் பிறப்பின் போது புதுக் கணக்குப் போடுவது வழக்கம். அந்த வழக்கப்படியே இந்த ஆண்டும் புதுக் கணக்குப் போட, பிற்பகல் 6 மணிக்கு மேல் செட்டியார் வீட்டில், இரண்டாங்கட்டில் உள்ள பொக்கிஷ அறையில் செட்டியார் கீழே விரிக்கப்பட்ட ஒரு பாயில் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய மகன் 18 வயதுள்ள சபாபதி யும் பணப் பெட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். கணக்கு குமாரசாமி பிள்ளை ஏழெட்டுக் கணக்குப் புத்தகங்களுடன் செட்டியாருக்கு எதிரில் உட்கார்ந்திருக்கிறார். மின்சார விளக்கு, பளிச்சென்று எரிந்து கொண்டிருக்கிறது. மின்சார விசிறி விறு விறென்று சுற்றிக் கொண்டிருக்கின்றது. வெளிக் கட்டில் மற்ற கடைக் காரியதர்கள் உட்கார்ந்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புதுவருஷ வரும்படிக்காக வழக்கமாக வரும் ஆட்களும் வந்து வாசற் படியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உள் கட்டில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த செட்டி யார் கணக்கு முடிந்தது. உடனே கையிருப்பு எவ்வளவு? அது சரியாகயிருக்கிறதா? என்று எண்ண ஆரம்பித்தார்கள். கையிருப்பு ரூ 50ஆயிரத்துக்கு மேலிருக்கும். அவை பெரும்பாலும் கரன்சி நோட்டுகளே. பணமாகச் சுமார் ஆயிரம் ரூபாய்தான் இருக்கலாம். பணம் முற்றும் எண்ணி முடியவில்லை. இதற்குள் ஐயையோ! நெருப்பு! நெருப்பு! செட்டியார் வீட்டு மாடியில் நெருப்பு! என்ற கூச்சல் தெருவில் கிளம்பிற்று. வெளிக் கட்டில் இருந்த காரியதர்களும் நெருப்பு, நெருப்பு என்று கத்திக் கொண்டு மேலே ஓடினார்கள். இச்சத்தம், உள் கட்டிலிருந்த, செட்டியார், கணக்குப் பிள்ளை, செட்டியார் மகன் ஆகியவர்கள் காதிலும் விழுந்தது. உடனே அவர்களும், வாரிச் சுருட்டிக் கொண்டு, தலைவிரி கோலமாக மாடியை நோக்கி ஓடினார்கள். இவர்கள் எழுந்து ஓடிய அவசரத்தில் பணத்தையோ, கணக்கையோ கவனிக்கவில்லை எல்லா வற்றையும் அப்படியப் படியே போட்டு விட்டுப் போய் விட்டார்கள். மேல் மாடியின் முன் வராண்டா வில் தொங்க விடப் பட்டிருந்த திரையில் தீப்பிடித்துக் கொண்டது. காரணம் அன்று அதன் பக்கத்தில், நடராஜா படம் அலங்கரிக்கப்பட்டு வைத்துப் பூஜை செய்யப்பட்டிருந்தது. நாம் எவ்வளவு நாகரிகமடைந் திருந்தாலும், நமது கடவுள்கள் இன்னும் நாகரிகமடைய வில்லையல்லவா? அவைகளுக்குப் பழைய கால குத்துவிளக்குத் தானே ஏற்றி வைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் அங்கு ஏற்றி வைத்திருந்த குத்து விளக்கின் மூலம் திரையில் தீப்பிடித்து விட்டது. திரையில் பற்றிய தீ வராண்டாவிலும் பிடித்துக் கொண்டது. மாடி மேலேயே ஒரு தண்ணீர்த் தொட்டியுண்டு; அதிலிருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தார்கள். வராண்டா முழுதும் எரிந்து போயிற்று. பூஜையிலிருந்த நடராஜா படங்கூடப் போய் விட்டது. பாவம்! தன்னையே தீயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாத சாமி நம்மை யெங்கே காப்பாற்றப் போகிறது? இவ்வுண்மையை நமது மக்கள் உணரவில்லையே என்பது தான் நமக்கு வருத்தம். தீயின் மூலம் பழுதடைந்த சாமான்களை எல்லோரும் பார்த்துக் கொண்டி ருந்தார்கள். II கீழே கொலை! கொலை! என்ற சப்தம் கேட்டது. அதனோடு கொள்ளை! கொள்ளை!! என்ற சப்தமும் சேர்ந்து ஒலித்தது. மாடியில் இருந்தவர்கள் எல்லோரும், தட தடவென்று கீழேயிறங்கி ஓடி வந்தர்கள். செட்டியார் வீட்டு வாசற்படியில் ஒருவன் மார்பில் குத்துண்டு மல்லாந்து கிடக்கிறான். அவனைப் புரட்டிப் பார்த்தார்கள். உயிரில்லை. ஆள் யாரென்று பார்த்தார்கள். கொலையுண்டு கிடந்தவன் கணக்கு குமாரசாமி பிள்ளையின் தம்பி அழகப்பிள்ளை. வெளியில் உள்ள ஜனங்கள் இதோ ஓடுகிறான் திருடன், அதோ ஓடுகிறான் திருடன் என்று துரத்திக் கொண்டு ஓடு கிறார்கள். இவர்கள் துரத்தும் வேகத்தை விட அவர்கள் போடும் கூச்சல்தான் காதைத் தொளைத்தது. எப்படியோ, ஜனக் கூட்டம் ஆளைப் பிடித்து விட்டது. திருடன் கையும் களவுமாகப் பிடிபட்டான். செட்டியார் வீட்டில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். இப்பொழுது தான் செட்டி யாருக்கும், அவர் மகனுக்கும் இரண்டாங் கட்டு அறையின் நினைவு வந்தது. உடனே அங்கே ஓடிப் பார்த்தனர் கரன்சி நோட்டுகளையும், பணத்தையும் காணவில்லை. இதற்குள், ஜனங்களும், செட்டியாரும் கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தனர். அழகப் பிள்ளை இறந்து போயிருப்ப தனால் இப்படிப்பட்ட முடிவு இவர்களுக்குள் ஏற்பட்டது. மேல் மாடியில் தீப்பிடித்தவுடன் நாம் எல்லோரும், தீயை அணைக்க அங்கு ஓடிவிட்டோம். ஓடிய அவசரத்தில் பின் கட்டில் உள்ள பொக்கிஷ அறையைப் பூட்ட மறந்து விட்டோம். இந்தச் சமயம் பார்த்துத் திருடன் உள்ளே நுழைந்து பணத்தை வாரிக் கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கிறான். திருடன் புறப்படும் சமயத்தில் கணக்கப் பிள்ளையின் தம்பி, அழகப் பிள்ளை வந்து திருடனை வளைத்திருக்கிறான்; வளைத்ததும் திருடன், அழகப் பிள்ளையின் மார்பில் கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டான். ஆதலால் அழகப் பிள்ளை இறந்தார். என்று, முடிவு கட்டி விட்டார்கள். துப்பறிதல், விசாரணை, சாட்சி, ஒன்றுமில்லாமலே செய்யப்பட்ட தீர்ப்பு இது. இவை யெல்லாம் அரை மணி நேரந்திற்குள் முடிந்த சங்கதி. இதன் பிறகுதான், முனிசுபாலிட்டியிலிருந்து, நெருப் பணைக்கும் மோட்டார் வந்தது. கொள்ளை, கொலை முதலிய சங்கதிகளுக்காகப் போலீசாரும் வந்து சேர்ந்தனர். நெருப் பணைக்கும் மோட்டார் மாத்திரம் வேலையில்லாமல் திரும்பிப் போய் விட்டது. ஆனால் போலீகாரர்கள் மாத்திரம் திரும்ப வில்லை. போலீசார் இறந்து கிடக்கும் பிணத்தண்டை வந்தார்கள். இன்பெக்டர் மணவாள நாயுடு, வீட்டுக்காரர் சந்திரசேகரச் செட்டியாரை அழைத்து, இறந்து கிடப்பவர் யார் தெரியுமா? என்றார். செட்டியார் இறந்து போனவர் என்னுடைய காரிய தர்தான். அவர் பெயர் அழகப்பிள்ளை. எனது பெரிய கணக்கு குமாரசாமிபிள்ளையின் தம்பி என்றார். மற்ற காரியதர்கள் யார் யார் என்று விசாரித்தார் இன்பெக்டர். ஒவ்வொரு வரையும் காட்டினார் செட்டியார். உடனே இன்பெக்டர், கணக்கு குமாரசாமி பிள்ளையுள்பட எல்லா காரியதர் களையும் கைது செய்து, பணப் பையோடு நின்ற திருடனையும் கைது செய்து கொண்டு போய்விட்டார். செட்டியார் அடைந்த துன்பத்துக்கு அளவில்லை. ஏது இனி நமக்கு கஷ்ட காலந்தான். இந்த விபரீதங்கள் எல்லாம் நல்லதற்கு நடந்ததாகத் தெரியவில்லை. அதுவும் புது வருஷத்திலா இந்த அலங்கோலம் நடக்க வேண்டும்? வீடு தீப்பிடித்தது; கையிருப்புப் பணம் கொள்ளை போயிற்று; காரியதர்களில் ஒருவன் கொலை செய்யப்பட்டான். நடராஜா படத்தை வழக்கம் போல் இருந்த இடத்திலேயே வைத்துப் பூஜை பண்ணாமல், மாடியின் வெளி வராண்டாவில் வைத்துப் பூஜை பண்ணியதால் இந்த விபரீதங்கள் உண்டாகியிருக்கலாமோ? என்று பலவாறு யோசனை செய்து கொண்டிருந்தார். III பின்னர், செட்டியார் வீட்டுக் கொள்ளை, கொலை வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையில் வெளியான விஷயம் கீழ் வருமாறு:- சந்திரசேகரஞ் செட்டியார் கோயம்புத்தூருக்கு வந்து வருஷம் மூன்றுதான் ஆயிற்று. அதற்குள் ஏராளமான பணம் சம்பாதித்து விட்டார். அவ்வளவும் ஜவுளி வியாபாரத்தில் சம்பாதித்ததல்ல. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது பழக்கம். வட்டியென்றால் நூற்றுக்கு மாதம் 3ரூபாய் தான் குறைந்த வட்டி. அடகில்லாமல் கடனில்லை. ஒரு நாள் கெடுத் தவறினாலும் கொடுத்த நகை செட்டியாரோடு தான். மறுபடி எவ்வளவு வட்டி சேர்த்துக் கொடுத்தாலும் நகையைத் திருப்பிப் பெற முடியாது. இம்மாதிரியே பணம் சேர்த்திருந்தார். இப்படி வட்டி கொடுத்தவர்களுள், செட்டியாருடைய காரியதர்களும் தப்பவில்லை. நகையை யிழந்தவர்களும் அவர்களில் உண்டு. இதனால் செட்டியாருடைய காரியதர் கள் உள்பட எல்லோருக்கும் அவர் மேல் கடுப்பு. செட்டியாரை எந்த சமயத்தில் கவிழ்க்கலாம் என்று சமயம் பார்த்திருந்தனர். சரியான சமயம் கிடைக்கவில்லை. வருஷப் பிறப்பில் புதுக்கணக்குப் போடும் சமயத்தில் செட்டியாரை எப்படியாவது கரையேற்றிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தனர். அதற்கென்று முன்னேற்பாட்டுடனேயே, நடராஜா படத்தை மேன்மாடி முன் வராண்டாவில் வைத்துப் பூஜை செய்யும்படி குமாரசாமிப் பிள்ளை ஏற்பாடு செய்தார். திரையின் பக்கத்தில் விளக்கை வைத்து நெருப்புப் பிடிக்கும்படி செய்தவரும் அவரே. தீப்பிடித்தவுடன் எல்லோரும் மேலே ஓடிய சமயம் பார்த்து, அறையிலிருந்த பணங்களை மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பும்போது, கூட்டத்தில் கலந்திருந்த முடிச்ச விழ்க்கி ஒருவன், அழகப் பிள்ளையைக் குத்திவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடினான். இது விசாரணையில் வெளிவந்த உண்மை. இதன்பின் ஊர் முழுவதும் செட்டியார் வீட்டுப் பேச்சுதான். ஊரைக் கொள்ளையடித்த பணம் தரிக்குமா? என்னமோ இன்று செட்டியாருக்குப் பணம் கிடைத்து விட்டது. என்றைக்கிருந்தாலும் ஆபத்துதான். அன்று வீடு தீப்பிடித்துக் கொண்டதன் மூலமே 5ஆயிரத்துக்குக் குறையாமல் நஷ்டம். அதுவும் புதுவருஷப் பிறப்பிலேயே இந்த அலங்கோலங்கள் நடந்தன. இது நல்லதற்கடையாளமல்ல என்று பேசிக் கொண்டார்கள். இந்தப் பேச்செல்லாம் செட்டியார் காதில் விழாமற் போகவில்லை. அவர் வீதியில் போகும் போதெல்லாம், அவரைப் பற்றியே மற்றவர்கள் குசுகுசுவென்று பேசுவார்கள். கடைசியாக கொள்ளை போன 50 ஆயிரமும் கோர்ட்டு மூலம் கைக்கு வந்தது. காரியதனைக் குத்திவிட்டு ஓடிய கொள்ளைக்காரன் ஜன்ம தண்டனை அடைந்தான். பின்னர், செட்டியார் பழைய காரியதர்கள் எல்லோரையும் நீக்கிவிட்டு புதுக் காரியதர்களை நியமித்துக் கொண்டார். IV செட்டியார் வீட்டுக் கொள்ளை, கொலை வழக்கு விசாரணையின் முடிவு வெளிவந்த நாள்முதல், செட்டியாரின் மனதில் அமைதியில்லை. ஆண்டவன் அருளால் தனக்கு ஏராள மான பணம் கிடைத்தது என்று நம்பிக் கொண்டிருந்த அவர் மனம் மாற்றமடைந்தது. நூற்றுக்கு மாதம் 3ரூபாய் வீதம் வட்டி வாங்காவிட்டால் நமக்கு இவ்வளவு பணம் சேர்ந்திருக்க முடியுமா? அடகு வைத்த நகைகளை, தவணை கடந்து விட்டது என்ற காரணத்தால் ஏப்பமிட்டிருக்காவிட்டால் தான் இவ்வளவு செல்வம் ஏது நமக்கு? எத்தனை ஏழைகள் குடிகளைக் கெடுத்திருக்கிறோம்; எத்தனை குடும்பங்கள் நம்மாற் பாழாயின; எத்தனை பேர் நமது கொடுமை தாங்கமாட்டாமல் வயிறு எரிந்தார்களோ; அந்த வயிற்றெரிச்சல் நம்மைச் சும்மா விடுமா? நம்முடைய அகட விகட தெகிடுதத்தத்தால் தான் இவ்வளவு பணம் கொள்ளையடித்தோமே யொழிய, வேறு ஆண்டவனா கொடுத்தான்? நம்மைப் போலவே இவ்வாறு பகற் கொள்ளை யடித்துப் பொருள் சேர்ப்பவர்கள் எல்லாம் பெரியபக்திமான்கள் போல நடிக்கிறார்களே! மதப் பூச்சுப் பூசுகிறார்களே! அவை எல்லாம் தெய்வங் கொடுத்தது என்று நம்புகிறார்களா? அல்லது தங்களுடைய நாணய மற்ற நடத்தையை மறைப்பதற்காக வேஷம் போடுகிறார்களா? என்ற எண்ணமெல்லாம் அவர் மனதில் தோன்றித் தோன்றி மின்னல் போல் மறைந்து கொண்டிருந்தன. ஒரு நாள் திடீரென்று, செட்டியார் கணக்குப் பிள்ளை யைக் கூப்பிட்டு, பழைய கணக்குகளை யெல்லாம் எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். அவைகளைப் பார்த்து தவணை கடந்தது என்று சாக்குச் சொல்லி யார் யாருடைய நகைகளை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அவைகளுக்குச் சேர வேண்டிய பணம் போக அதன் மூலம் அதிகப் பணம் எவ்வளவு வந்திருக்கிறது. அதற்கு இதுவரையிலும் வட்டி எவ்வளவு ஆயிற்று? என்று கணக்கெடுக்கச் சொன்னார். அவ்வாறே கணக்கெடுக்கப்பட்டது. பிறகு செட்டியார் நகையைப் பறி கொடுத்தவர்கள் ஒவ்வொருவரையும் வரவழைத்து, அவர் களுக்குச் சேரவேண்டிய பணத்தை வட்டியுடன் கொடுத்து விட்டார். இவ்வகையில் செட்டியாருக்கு ஏற்பட்ட செலவு ரூபாய் 75-ஆயிரம். 50-ஆயிரம் கையில் ரொக்கமிருந்தது. பாக்கி 25ஆயிரத்திற்கும், வீட்டையும், ஜவுளிக் கடையையும் விற்றுக் கொடுத்து விட்டார். செட்டியார் கையில் மிஞ்சிய பணம் 5-ஆயிரம் இருக்கும். அதைக் கொண்டு வேறு ஒரு புதிய ஜவுளிக் கடை வைத்தார். இப்பொழுது வெகு நாணயமாக வியாபாரம் செய்து வருகிறார். அவருக்குத்தான் வியாபாரம் அதிகம். ஏனென்றால் மேலே சொல்லியபடி பணத்தை ஏழைகளுக்குத் திருப்பிக் கொடுத்தது முதல் அவருக்கு ஊரில் நல்ல பெயர். அதனால் பெரும்பாலும் அவரிடத்திலேயே பலர் ஜவுளி வாங்கினார்கள். இதன் மூலம் வியாபாரம் ஓங்கி, அவரும் பழைய நிலையை அடைந்து இன்றும் சவுக்கியமாக இருக்கிறார். பழைய காரியதர்களின் மேல் செட்டியாருக்கு இருந்த வெறுப்பும் போய் விட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் நாம் செய்த கொடுமைதான், அவர்களை நமக்கு எதிராகச் சதி செய்யும்படி தூண்டி விட்டது. ஏழைமக்கள்- துன்பப்படும் மக்கள் - பட்டினி கிடந்து சாகின்ற மக்கள் எத்தனை நாளைக்குத்தான் தங்கள் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். என்றைக்கோ ஒருநாள், அவர்கள் மனதில் உள்ள ஆத்திரம் படீர் என்று வெடிக்க வேண்டியது தானே என்று சமாதானம் செய்து கொண்டார். பழைய காரியதர்கள் அம்மாதிரி சதி செய்திருக்கா விட்டால், தனக்கு நல்ல புத்தி வந்திருக்காது; தனக்கிருந்த கெட்டபெயர் நீங்கியிருக்காது; இப்பொழுதுள்ள நல்ல பெயர் கிடைத்திருக்காது. என்று நிச்சய மாக நம்பினார் செட்டியார். அதனால் இப்பொழுது பழைய காரியதர்களையும் வேலையில் அமர்த்திக் கொண்டிருக்கிறார். முதல் அனுபவம் காலில், அன்றுதான் புதிதாக பாலிஷ் இடப்பட்டுப் புது மெருகுடன் பளபளக்கும் கருப்பு பூட். இடையில் சந்தனக் கலரில் சூட்- அதனுள் சொருகி விடப்பட்ட... மடிப்புக் கலையா. வெள்ளைஷர்ட் முழங்கைக்கு மேல் மடித்து விடப்பட்டிருந்தது. காலரை ஒட்டி முடியப்பட்ட சிகப்பு நெக் டை. நெற்றியை ஒட்டினால் போல் வாரிவிடப்பட்டு விழும் சுருள் சுருளான கிராப். இவற்றுடன், கண்ணாடியின் முன்பாக நின்று கொண்டு தன் அழகைத் தானே ரஸித்த படியே, கையில் வாட்சைக் கட்டிக் கொண்டிருந்தான், தனது ஹாடல் அறை ஒன்றில் வாசு, பி. எஸி. அகோ! வாரும் பிள்ளாய்!! பூலோக மன்மதனே!! தாங்கள் கிளம்பிக் கொண்டிருக்கும் ரதிதேவியாரின் இல்லத்தை அடியேன் அறியக் கூடுமோ!!! என்றவாறே உள்ளே நுழைந்தான். வாசுவின் நண்பன் அரட்டை அய்யாசாமி. உண்மையில் சொல்லப் போனால் அப்போதைய வாசுவைக் கண்டு, ஒருகணம் அய்யாசாமி கூட அசந்தே விட்டான்!! போடா மண்டூகம்!! . . . ஹி ஹி!! வந்து . . . பம்பாய், மாதுங் காவிலேருந்து விஜயா வந்திருக்கறதாக அவாப்பா சொல்லி யனுப்பிச்சார்னுட்டு, ஆள் வந்திட்டுப் போனான்!! ஆமாம்! ஏண்டா பழி? உனக்கு இப்ப ஒன்னும் அவசர ஜோலியே யில்லேயே . . . நீயுந்தான் வாயேண்டா கூட!! என்று முடுக்கி விட்ட மிஷன் போல். . . சாவி கொடுக்கப்பட்ட கிராம போனைப் போல. .. .அடுக்கிக் கொண்டே போனான்! வாசு. கடந்த ஒரு சில மாதமாகவே; இந்த விஜயா என்ற பெயரை வாசுவின் வாய் மூலமாகவே கேட்டுப் புளகாங்கித மடைந்து வருபவன் அரட்டை ஐய்யாச்சாமி!! பெரிய வைதீகக் குடும்பத்தில் பிறந்து. . . எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் காலேஜ் வாசலை எட்டிப் பிடித்த அய்யாச்சாமி, நண்பர்களுடன் இப்போதுதான் சினிமா முதலியவைகளுக்குச் செல்ல ஆரம்பித்தவன். இரண்டு படங்கள் பார்ப்பதற்குள்ளாகவே கட்டுக் குடுமியையும், . . . கீதை பாராயணத்தையும், காற்றில் விட்டவன். ஆனால் அவனுடைய அதிர்ஷ்டமோ! அல்லது யாருடைய அதிர்ஷ்டமோ? இதுவரை எந்தவித காதல் விஷயங்களிலும் தலையிட்டதில்லை. காதல் நவீனத்தையே கண்டறியாதவன். இந்த ஒரு சில மாதத்தில்தான் விஜயான்னா விஜயா தான் ஆஹா!!! என்ன அருமையான பர்சனாலிடி என்று வாசுவால் வர்ணிக்கப்பட்டதைக் கேட்கும் போதெல்லாம் தான் மகிழ்ச்சியால், அவன் முகமே ஒரு அலாதி (அசட்டுக்) களையுடன் இருக்கும். பெயரைக் கேட்டதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக, உருவத்தையும் கற்பனையில் கண்டறிந்தான் ஏண்டா!!! என்னமோ கள்ளச் சந்தைக்காரன் காவல்லே (போலீ) அகப்பட்டுண்டாப் போல முழிக்கிறியே என்று செல்லமாகத் தட்டினதும்; இருவரும் எழுந்து தத்தம் சைக்கிளில் அமர்ந்து, மாம்பலத்தை அடைந்தனர். அவர்கள் அங்கே போன போது. விஜயா இல்லை. பேசாமல் உள்ளே சென்று அமர்ந்தனர். ஜல்! ஜல் என்ற கைவளை குலுங்கும் சப்தத்தையும் தொடர்ந்து வரும் வீணையின் நாதத்தையும் நிகர்த்த குரலொலி இவற்றை எதிர் பார்த்திருந்தான். . . விஜயாவை வட்டமிடும் மனத்துடன், அய்யாசாமி!!! இவர்களுக்கு கெதிரில் (சூடான ஆவி விடும் காபியை வைத்து விட்டுச் சென்றான் வேலையாள் (பரிசாரகன்). தொடர்ந்து, அட! நீயா! என்றழைத்தபடியே உள்ளே வந்து அமர்ந்தான் ஒரு கட்டழகன் இவனைத் தெரியுமாடா அய்யாசாமி உனக்கு இவன் தான் விஜயரங்கம் பி. ஏ. (ஆனர்) பி. எ. ஸி. ஆப் இந்தியா ரேடியோ, செய்தி தாபன அசிடெண்ட் டைரக்டர். என்னடா! இன்னும்மா தெரியலை நான் கூட அடிக்கடி சொல்வேனே விஜயா ன்னுட்டு. .......!!! மறுகணம் பெருத்த சப்தத்துடன் மூர்ச்சை யானான் அய்யாசாமி. பாவம்!! விஜயாவின். . . . . என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, இவன்தான் விஜயா என்றால்? பின் எப்படி இருக்கும்? விஜயா என்ற பெயரைக் கேட்டதும் அது ஒரு பெண் என்று நினைத்திருக்கிறான். என்ன செய்வது, இதுதானே காதல் உலகில் அவனது முதல் அனுபவம். மறுகணம். விஜயாவின். . . .. . அட!! அதுதான் விஜயரங்கம் அவர்கள், மடியில் மயக்கமாய் விழுந்த அய்யாசாமியின் தலையைத் தாங்கியிருக்க, எதிர் சாரியில் கோடியிலிருந்த சோடாக்கடையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான் வாசு. ஸ்ரீமதி நண்பர் என்னங்க! உங்களைத்தானே அந்த மளிகைக் கடையி லிருந்து செட்டியார் நெதம் ஆளை அனுப்பிட்டே இருக்காருங் களே பணத்துக்கு. போய் பதில் சொல்லிட்டு, அப்படியே கொஞ்சம் காபி பொடியும் வாங்கிட்டு வாங்க!! ராகவுலு பதில் பேசாதிருக்கவே; மீண்டும் புராணத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தொடர்ந்தாள் அவர் மனைவி. இந்தாங்க!!! அப்படியே மிளகா வத்தலுங் கொஞ்சம். ராகவுலு அப்பவும் பேசாமல் இருக்கவே, நிறுத்திய இடத்திலிருந்து தொடங்கினாள் ஸ்ரீமதி ராகவுலு. அப்புறம். .... ராவிக்கி வௌக்கு கொளுத்த சீமை எண்ணெய் கூட இல்லை. .. . . சட்!! என்னண்ட கூடத்தான் பணமில்லே! என்று கூறி, வெறுப்பு மேலிட, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, நண்பர் சிங்காரத்தின் வீட்டை நோக்கி நடந்தான், ராகவுலு. வழக்கமாக, தன் வீட்டில் இதைப்போன்று நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், அமைதிக்காக ராகவுலு செல்லும் இடம் அதுதான். அதுதான் அன்றும் தன் மாமூல்படி சிங்காரத்தின் வீட்டிற்குக் கிளம்பினான். ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் திருநாளும் வெறும் நாள் ஆன கதையாக, அமைதியை நாடிச் சென்ற இடத்தில், இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் குலைப்பதாயிருந்தால் எப்படி இருக்கும்? உள்ளே யாருக்கோ அடி விழுந்து கொண்டிருந்தது, வெளியில் இருந்த அவனுக்கு ஓர் பூகம்ப நிகழ்ச்சியை நினைவூட்டியது. தான் காண்பது கனவோ? என்ற சந்தேகம் எழுந்ததும், தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு, தான் காண்பது கனவல்ல என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தான். மனைவியைக் கண்டாலே ஏன் மனைவியின் பெயரைச் சொன்னாலே அங்கம் பதறும் அவருக்கு. அவ்வளவு பயம். மனைவியிடத்தில் தப்பித் தவறி அவளிடம் தேடிச் செல்வது யாகசாலையில் பலிபீடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்டையும், காளி முன் செல்லும் பக்தனையும் தான் நினைவூட்டும் அப்படிப்பட்டவர் இன்று மனைவியை அடிப்பது என்றால். .. . . ஏனெனில் அவர்களிருவரையும் தவிர வேறு ஜன சஞ்சாரமே கிடையாது அங்கே!! பட்! பட்! என்று உள்ளே சென்று அறைக் கதவைத் தட்டி னான் ராகவுலு. பதில் இல். . . லை வேறுவழியின்றி, அங்கேயே நின்று ஒட்டுக் கேட்க ஆரம் பித்தான் ராகவுலு. நாயே! அற்பமே! புத்தியில்லை உனக்கு!! உன்னை இங்கே எல்லாம் வரக் கூடாதுன்னுதானே அவ்வளவு. . . .இதா வைச்சி ருக்கேன் ஹூம் பட். . . பளிர்!! மீண்டும் இரண்டு அறைகள். புத்தியற்ற நாயே!! போவியா இனிமே அங்கெல்லாம் பளிர் என்று மீண்டும் ஒரு பலத்த சாட்டையடி. அதைத் தொடர்ந்து வள் என்றொரு குலைப்பு. வெளியே இருந்த ராகவுலு பாவம்! எஜமானி அடிபடு வதைக் கண்டு சகிக்காமல் கத்துகிறது போலிருக்கிறது வாயில்லா ஜீவன்! என்று தனக்குத் தானே கற்பனை பண்ணிக் கொண்டான். சிங்காரமே, பயமில்லாமல் தன் மனைவியை ஊரே கண்டஞ்சும் ஒரு பெண்மணியைத் தொட்டு அடிப்ப தென்றால் . . . சுய நினைவுடன் அவர் இருந்தால் இதுமாதிரி நடக்காது என்பது நிச்சயம்! ஒரு வேளை குடித்து மயங்கி இருக்காரோ? அப்படியானால் ஏதும் விபரீதம் நடந்து விட்டால்!!! எப்படியும் அடிபடும் சிங்காரத்தின் மனைவியை. . . ஸ்ரீமதி நண்பரைக் காப் பாற்றியே தீர்வது எதுவாயினும் சரி!!! தீர்மானத்தை மனதிற்குள்ளாகவே உறுதி செய்து கொண்டு; மீண்டும் பலத்து இடித்தான் கதவை. வள் வள் சப் தத்திலும், பளிர்! பளிரென்ற சாட்டை அடியிலும் அதெங்கே அவர் காதில் விழப்போகிறது; கதவு திறக்கப்பட்ட பாடில்லை. ஒருவித தீர்மானத்துடன் ஓங்கி உதைத்தான் கதவை ராகவுலு; மனைவிமேல் இருந்த ஆத்திரத்தாலோ! ஒரு உயிரைக் காப்பாற்றும் ஆசையாலோ. . . . எதனாலோ ராகவுலு உதைத்த உதையில் கதவு திறந்து விட்டது. கையில் சாட்டைப் பிரம்புடன் நண்பர் திரு. சிங்காரம்! காலடியில் சுருண்டு விழுந்து கிடந்த கரு நிற நாய்!! நண்பரின் மனைவியை . . . ஸ்ரீமதி நண்பரைக் காணோம். பிறகு தான் நண்பர் சொல்லிப் புரிந்து கொண்டான் ராகவுலு. அவரிடம் அடிபட்டது அவருடைய ஸ்ரீமதியல்ல! நாய் தான்! மனைவி செய்து வைத்திருந்த. டிபன் பகோளாபாத்தை சமையலறையில் அது சென்று தின்றுவிட்டது. லேடி கிளப் பிற்கு நாழியாகவே அதை வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று போய்விட்டாள், எடுத்துக் கொள்ளாமலே. திரும்பி வந்தால் இதைப் பார்த்துக் கொள்ளக் கூடவா துப்பில்லை என்று இவரையல்லவா திட்ட ஆரம்பித்து விடுவாள். அப்போது அவளிடம் காட்ட முடியாத ஆத்திரத்தைத்தான், இப்போது நாய் மீது காட்டி யிருக்கிறார்! ஹும்! பாவம்! ஸ்ரீமதி நண்பர். . . .! சிரித்தால் என்ன? ஆனந்தமாகப் பொழுதைக் கழித்துவிட்டு சாதி ஏதையா மதம் ஏதையா என்ற கருத்து மிகுந்த பாட்டை எனக்கே ஏற் பட்டுள்ள கனத்த காம்போதி ராகத்தில் பாடிக் கொண்டே வீட் டிற்குள் நுழைந்தேன். என் தந்தை பார்க்க விரும்புவதாக அன்னை கூறியதும், அவர் இருந்த அறைக்குள் நுழைந்தேன். அறையில் கையைப் பின்புறம் கட்டிக் கொண்டு கூண்டிலடை பட்ட பெண் சிங்கம் போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் அவர். அப்பா! என்றேன் அன்புடன். நான் உனக்கு அப்பாவுமில்லை; நீ எனக்கு மகனுமில்லை என்ற கடூரமான பதில் வந்தது. அப்படி என்ன தவறு செய்தேன் நான்? இன்னும் என்னடா செய்ய வேண்டும்? என்ன நடந்தது அப்பா? டேய்! நீ செய்வது ஆண்டவனுக்குப் பொறுக்காதடா ஆண்டவன் என்பது அபத்தச் சொல். டேய்! ஆண்டவனைப் பழிக்கிறாய் இது அடுக்காது அப்பா! இது என்ன பேதமை? ஏதடா பேதமை? ஆண்டவனைப் பழித்த சிசுபாலன் நரகாசுரன், கம்சன், ராவணன் முதலானோர்களைச் சம்காரம் செய்தார்கள் என்று..... எவர்களோ எழுதி வைத்ததை ஆராயாமல் நம்புகி றீர்கள். அடப்பாவி! அப்பா! ரமணர் ஆண்டவன் அவதாரம் ஆயிரக் கணக்கான அன்பர்களுக்கு அனுதினமும் காட்சியளிக்கிறார் என்றெல்லாம் கூறினார். ஆனால் அவருக்குப் புற்றுநோய் வந்ததும் அந்த ஆண்டவன் ஏன் காப்பாற்றவில்லை? அல்லது ரமணனிடம் சக்தியில்லாமல் போய் விட்டதா? சண்டாளா! ஜோதியில் கலந்த உத்தமரடா. அவரை இகழ்ந்தால் நாக்கு அழுகி விடும். நல்ல பைத்தியக்கார உலகம் டேய்! நான் சொல்வதைக் கேள். நாம் சாதி என்ன குலம் கோத்திரம் என்ன எவளோ தாழ்ந்த சாதிப் பெண்ணைக் காதலிக்கிறாயாம். இது நம்ம சாதிக்கு அடுக்காதடா. அப்பா! ஆண்டவன் பக்தி கொண்ட நீங்களே அவன் படைப்பில் அர்த்தமற்ற பேதம் உண்டாக்குகிறீர்கள். மேலும் தாரையிழந்தவன் தாராளமாக மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விவரமறியாப் பருவத்திலே விதவைக் கோலம் பூண்ட பெண் தன் வாழ் நாட்களை வீணாகக் கழிக்க வேண்டும். இது நியாயமா? பகுத்தறிவுக்குப் பொருந்துமா? டேய் அதிகப் பிரசங்கி! எவனோ எழுதி வைத்ததைப் படித்து விட்டு என்னிடம் உளறுகிறாய். என் சொல் கேட்டு நடப்பதானால் இவ் வீட்டில் இடமுண்டு. இல்லையேல் வெளியே போ. என் முகத்திலே விழிக்காதே என்று முடிவாகக் கூறி விட்டார். அப்பா! எங்கள் காதல் கண நேர இன்பத்திற்காகவல்ல. இறக்கும் வரை மாறாது. பணம் இன்று வரும்; நாளை போகும். எனவே நான் காதலித்தவளைக் கைவிடப் போவதில்லை. நான் செல்கிறேன் என்று கூறி மேலும் அங்கு நிற்க விரும்பாமல் வெளியேறினேன். நான் சிதம்பரனார் உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி நூல் நிலையத்தில் உள்ள பல அறிஞர்களின் புத்தகங்களைப் படித்ததின் பயனாக சமூகத்தில் புரையோடிப் போன மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தெரிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு பரந்த மனப்பான்மைக்கு என் மனதில் இடமுண்டா யிற்று. என் வகுப்பு மாணவி பொற்கொடி. சமூகத்தின் கண் மூடித்தனமான கட்டுப்பாட்டின் காரணமாக பால்யத்திலேயே அவளுக்கு மணம் முடித்து, தாயும் தந்தையும் ஒருவர்பின் ஒருவராக இவ்வுலகினின்று விடை பெற்றுக் கொண்டனர். தாய் தந்தையற்ற அவள் மாமனின் பராமரிப்பின் கீழ் பள்ளியில் படித்துக் கொண்டிருக் கிறாள். அவளுடைய பெயருக்குத் தகுந்தாற் போலவே உடலமைப்பு. பருவத்தின் சாயல் அவளுடைய ஒவ்வொரு அங்கத்திலும் படர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் அவள் என்மீது ஒரு புன்னகையை வீசி என்னை நிலை தடுமாறச் செய்வாள். பிறகு தங்கையின் மூலம் ஏதாவது அவளுக்கு லஞ்சம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்கி வரச் சொல்லுவாள். எப்படியாவது அவளுடைய காதலைப் பெற வேண்டும் மென்றே முடிவாய் நகரில் பூங்காவில் சந்திக்கும்படி கடிதம் எழுதி துணிவுடன் புத்தகத்தில் வைத்து அனுப்பி விட்டேன். அன்று பள்ளி விடுமுறை. மாலை மணி ஆறு. நிலையிலா மனத்துடன் பூங்காவில் காத்துக் கொண்டிருந்தேன். முடிவில் அவள் வந்தாள். இருவரும் வெகுநேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். நம் காதல் மாறாதே என்றாள். வெண்ணிலா வானை விட்டு மறைந்தாலும், வெண் கதிரோன் திசைமாறினாலும், இவ்வையகமே நிலை குலைந்தாலும் நம் காதல் மாறாது என்றேன் உறுதியாக. ஆனால் ஒன்று கூற மறந்து விட்டேன்....... என்று கூறித் தயங்கினாள். பொற் கொடி! எதுவாக யிருந்தாலும் தயங்காமல் சொல் நான்...............பால்ய........விதவை” என்று கண்ணீருடன்கூறினாள்.மலும் “நீங்கள்என்னைமணப்பதால்உலகம்உங்களைத்தூற்றும்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்என்றாள். பொற் கொடி! இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்தஉலக«எதைத்தா‹தூற்றவில்லை. அவதிப்படுவோருக்கு ஆறுதல் கூறாமல் ஓட்டையைக் கண்டு ஓலக்கம்பாடும். இந்தப் பாழும் சமூகத்தின் சதியால் எத்தனையோ இளம் பெண்கள்விதtஎன்wசிறைக்குŸஅடைபட்Lவாழ்îபாழாக்கப்படுகிறது. சீர்திருத்த நோக்கமுள்ள வாலிபர்கள் ஒவ்வொருவரும் இளம் விதவைப் பெண்களை மணம் புரிய முன் வரவேண்டும். இதற்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவோம் என்றேன். அன்பே! என்றுகூறி உணர்ச்சி மேலீட்டால் என் மீது சய்ந்தாள்.“பாற்கொடி! என்று கூறி என்கரங்களுக்குள்அவளைச்சிறைப்படுத்திக்bகாண்டேன்.அன்று அதிலும் அந்த நிமிடம் முதல் எங்களின் புது வாழ்வு ஆரம்ப மாயிற்று. எங்களைக் கண்டு சிரிக்கிறது இவ்வையம். சமூகத்தின் புல்லுருவிகள் விதவையை மணந்த வீணன் என்று என்னை ஏசுகின்றனர். நான் கேட்கிறேன் அவர்களை. ஒருமுறை மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்றுமறியாப் பருவத்தில் சாதிக் கட்டுப்பாடு என்று சதியால் பாவையின் வாழ்வைப் பாழ் படுத்துகிறீர்கள். விதவையான பருவமடைந்த பெண்ணுக்கு உணர்ச்சி இருக்காதா? மனதில் மஞ்சள் பூச ஆசை இருக்காதா? மலரைச் சூட எண்ணம் ஏற்படாதா? உங்களைப் போன்ற புல்லுருவிகள் இச் சமூகத்தில் இருக்கும் வரை இளம் பெண் களின் வாழ்வு நிச்சயமாகப் பாழ்படும். நீங்கள் சமுதாயத்தில் இருக்கத் தகாதவர்கள். நீங்கள் வேருடன் களைந்தெறியப்பட வேண்டியவர்கள். எங்களைப் போன்ற சீர்திருத்த மனப்பான்மை யுள்ளவர்கள் இனி வாளாவிருக்க மாட்டார்கள். சீர்திருத்தச் செம்மல்களே! சிந்தித்துப் பாருங்கள். இச்சமூகத்தில் நடக்கும் அநீதிகள் எத்தனை. இச்சமூகம் அழுகி மக்கி அடி மட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதன் காரணத்தை அலசி ஆராய்ந்து சரியான நிலைக்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமை. இக்காரியத்தைத் தொடங்கும் நம்மீது சீறலாம் சிலர். சிறிதும் பயப்படாதீர்கள். நம் மீது சில பாதகர்கள் பாயலாம்; பதறாதீர்கள். அடக்குமுறைகளை அள்ளி வீசலாம்; அஞ்சாதீர்கள். நம் உடலில் வீரத் தமிழ் இரத்தம் ஓடுகிறது உடலில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரை இப்புல்லுருவிகளுடன் போராடி மடிவோம். நம் இரத்தவெள்ளம் இப்புல்லுருவிகளை அடித்துச் செல்லும். நம் சமாதியின் மீது இச் சமூகத்தில் ஒரு புதிய சமுதாயம்- அர்த்தமற்ற பேதங்கள் இல்லா அற்புத சமுதாயம் அமைக்கப்படும். அதைக் கண்டு அஞ்சும் இச் சிரிக்கும் வையம். புறப்படுங்கள் இப்பணிக்கு! புறப்படுங்கள்!! தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் (1900- 1961) அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்ப தாண்டு காலத்தைத் தமிழனுக்கும், தமிழுக்கும் அர்ப்பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்புகொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணி களிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர்; பிற்காலத்தில் பொது உடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைத் செலுத்தியவர். தமிழ் மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும், கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய சமுதாய, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். 1920 முதல் 1961 வரையுள்ள இடைப்பட்ட ஐம்பது ஆண்டு களுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட புனை பெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொண்டாற்றியவர். இவர் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோபகாரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றியவர்; பத்திரிகைத் துறையில் நாட்டம் கொண்டு அறிவுக் கொடி என்னும் பத்திரிகையை - 1935ல் கும்பகோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தி மகிழ்ந்தவர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். மேலும் திராவிடன் நாளேடு, தமிழரிசி, தாருல் இலாம், சாந்தி, தொழிலரசு, தமிழ்ப்பொழில், செந்தாமரை, சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு நாளேடு, பொன்னி, செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி, புது உலகம், கவிதா மண்டலம் , புதுவை முரசு, நகரத்தூதன், சண்டமாருதம், பார்க்கவகுலமித்திரன், சுயமரியாதை, போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களிலும், ஆண்டு மலர் களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். இவ்விதழ்களில் மெய்கண்டான், கதைக் காதலன், குரூ லூ, S.C. பரன், மிடர் திங்கர், சாமிசி, இடி முழக்கம் காலக்கவி, வாமிஜி, வம்பன், அரட்டை சிகாமணி, நாதிகன், பொறுப் புள்ளவன், எ. சி. பரன், விளக்கொளி, கண்ணாடி, தமிழன், சல்லடை சலிப்பு, அரசியல்வாதி, மெய்யன் எழுதிய பொய், என்னும் 20 க்கும் மேற்பட்ட புனை பெயர்களில் எழுதி உள்ளார். பண்டைத்தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித் தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடி வாழையென வந்த தமிழ்ப்புலவர் கூட்டத்தின் வழித் தோன்றல்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆய்ந்தவர்; தமிழ் இலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் முற்போக்குக் கண்ணோட் டத்துடனும் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் சமதர்ம உணர்வு தழுவத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆராய்ச்சி யாளர்; சங்க இலக்கியங்களைச் சாதாரணமானவர்களும் அறியும்படி செய்த தமிழறிஞர். தமது படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல் - ஆரவாரத்தை நீக்கி, அடக்கமாக வாழ்ந்து, மக்களுக்காக எழுத வேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சி காலத்திற்கு ஏற்ப தம்மைப் பொருத்திக் கொண்டவர். தொல்காப்பியர் காலத்தில் தமிழன் முதல் பாரதி - பாரதிதாசன் காலத்தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் * * * தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த- கடகம் என்னும் அழகிய சிற்றூரில் வீரபத்திர மலையமான் என்னும் சைவப் பெருநிலக் கிழாரின் பேரனாகவும்- திரு சாமிநாத மலையமான்- கமலாம்மாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின் செல்வமகனாகவும் - சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளில் ( 1- 12- 1900) சாமி சிதம்பரனார் பிறந்தார். கிராமப் பள்ளிகளிலும் மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். தஞ்சையில் தமிழ்ப்பெரும் புலவராக (விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர். செங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவராக இருந்து கல்விகற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். முறையாகப் பயின்று 1923- ஆம் ஆண்டில் பண்டிதர் பட்டம், வித்வான்பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டுக் காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப் பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உட்பட எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் தமிழ் ஐயாக்களுக்கு நன் மதிப்புக் கிடைப்பது அரிது. ஆனால் சிதம்பரனாரோ மாண வர்களுக்கு நூல்கள் பல எழுதியும், புதுமுறையில் அவர்களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நன்மதிப்புக்கிலக்காகினார். இலக்கணத்தை எளிய இனிய முறையில் கற்பித்தார். சீர் திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார். பள்ளியில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரே ஆவார். பெரியார் ஈ. வே. ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு குடியரசு எழுத்தாளரானார். பெரியார் முதன் முதலாக மலாயா சென்ற போது சாமி சிதம்பரனாரும் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப் பட்ட அக்காலத்தில்- சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமிசிதம்பரனார் கும்பகோணத்தில் பிரபல நீதிக் கட்சிகாரராக விளங்கிய திரு. ஏ. குப்புசாமி பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை, சமூகத்தையும் சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சாமி சிதம்பரனார் இளமையிலேயே- பள்ளிமாணவராக இருந்த காலத்திலேயே- எதையும் புரிந்து கொண்டு எளிமை யாக விளக்கி எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார். தன் 21-ம் வயதிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல்வடிவத்தில் வெளி வராமல், எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிநயம் வாய்ந்தவை. 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப்பாடப் புத்தகங்களும் சேரும். பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாட புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன் பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்றும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக் கழகம் 1934, 35, 36 ஆகிய ஆண்டுகளில் பாடப் புத்தகமாக வைத்தது. பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத் தின் காரணமாக- மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும் முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவர் 41ஆம் வயதிலேயே ஆசிரியர் பணியி லிருந்து விருப்பு ஓய்வு எடுத்துக் கொண்டு தாம் விரும்பிய முழு நேர எழுத்துத் துறையில் ஈடுபட்டார். சாமி சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர். முதலில் தமிழ்ப் பண்டிதர், நீதிக் கட்சிக்காரர், தீவிர சுயமரியாதைக்காரர்; திராவிடகழகக்காரர்; அதன் பின்னர் காங்கிரகாரர்; சமதர்மவாதி; 1949, 50-ல் பொது உடைமை இயக்கம் நெருப்புக் குளியலுக்கு ஆளானபோது அதனிடம் நட்புப் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர்; விட்ட இடத்தில் தொடுவதைப்போல, தமிழ்ப் புலவராக வாழ்க்கையைத் தொடங்கிய சாமி சிதம்பரனார் 1948- இல் சென்னைக்கு வந்து பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத் துடன் விளக்கும் சங்க இலக்கியங்களின் ஆய்வுப் பணியிலீடு பட்டார். * * * இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் சாமி சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தாம் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன - இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஓய். எம். சி. ஏ. பட்டிமன்றம் ஆகிய வற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தொடக்க கால முதலே குறிப்பிடத் தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றி உள்ளார். சென்னை மகாஜன சபை சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந் தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலைவராக விளங்கினார். சாமி சிதம்பரனார் 1948- லிருந்து 1961 வரை உள்ள இடைக் காலத்தில் இலக்கியத் துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. தமிழகத்தின் மிகச்சிறந்த புலவர்களைக் கம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பெரும் புலவர்களின் படைப்புகளையும் சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகியவற்றையும் சீத்தலைச் சாத் தனாரின் செந்தமிழ்க் காப்பியமான மணிமேகலையையும் குறுந் தொகைப் பெருஞ்செல்வம், நற்றிணைக் காட்சிகள், பழமொழி நானூறு, புகழேந்தியின் புலமை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் பொருள் விளக்கம், இவை போன்ற சாமிசிதம்பரனார் எழுதிய நூல்களை விட எழுத நினைத்த நூல்கள் ஏராளம், ஏராளம். இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள் ளவர்களும். உணர்ந்து கற்றுப் பயன் பெறத்தக்க வகையில் தமக் கே உரிய எளிய இனிய நடையில்- அவற்றின் அடிப்படையை ஆய்ந்து அறிவித்துள்ளார் தமிழகத்திற்கு. சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர். சாமி சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள் ஆய்வுக் கண்ணோட்டம் உடையனவாய் விளங் குகின்றன. சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர் களே சிறந்த நூல்களை ஆக்கமுடியும். அத்தகைய நேரமும் வசதி யும் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார் தம் வாழ்நாளில் பெற்று இருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள் நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதி வெளியிட்டு உள்ளார்கள். அது தவிர மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பன்னிரண்டா யிரம் பாடல்கள் உடைய கம்பராமாயணத்திலிருந்து, இலக்கியத் தரம் அதிகம் வாய்ந்த நாலாயிரம் (4000) பாடல்களைத் தேர்ந் தெடுத்து, ஆறு காண்டங்களும் கொண்ட கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இளமைக் காலத்திலிருந்தே நாத்திகராகவும், பகுத்தறி வாளராகவும், விளங்கி, சுயமரியாதை இயக்கத்திலும், திராவிட கழகத்திலும் ஈடுபாடு கொண்ட தமிழ்ப் பெரும் புலவர் பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள், கம்பனிடத்திலும், ஆழ்வார்களிடத்திலும் கொண்டுள்ள ஈடுபாடு முரண்பாடாகப் பலருக்குத் தோன்றக்கூடும். அதையும் சாமி சிதம்பரனார், ஆழ்வார்கள் கண்ட அருள் நெறி என்னும் நூலின் முன்னுரையில் விளக்குகிறார். நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவன் அல்லன், மதபக்த னும் அல்லன்; நான் எந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் உண்மை- அன்பு- ஒழுக்கம் - அறிவு- சமத்துவம் இவற்றை விரும்புகிறேன். யாரிடத்திலும் எத்தகைய பேதமும் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண் டும் என்பதே என் கருத்து. இத்தகைய நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருப்போர் பாடலைப் போற்றுகிறேன்; படிக்கிறேன்; சுவைக்கிறேன். இதற்குக் காரணம் என் கொள்கையை ஒட்டிய கருத்துகளை அப் பாடலிலே காண்கின்றேன். 1924 முதல் 1940 வரை பதினாறு ஆண்டுகள் தமிழாசிரிய ராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும், 1924 முதல் 1948 வரை இருபத்து நான்கு ஆண்டுகள் அரசியல், சமு தாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றியும் வந்த சாமி சிதம்பரனார் 1948-க்கு பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக் கும் மேலாக இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர், தமிழ் முரசு நாளேட்டில் மூன்று பகுதிகளுக்கு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடையறாமல் எழுதி அனுப்பி வந் தார்; பாராட்டுதல்கள் குவிந்தன. இவரது புகழும் பெருமையும் பரவின. இதனால் இன்பமும், மனநிறைவும் பெற்று மெய் மறந்து உழைத்தார். இப்பணிதான் தனக்குப் பிற்காலத்தில் நிலையான புகழ் தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர் கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். தமிழ்ப் பெரும்புலவர்- தமிழ் ஆராய்ச்சியாளர். தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்- தமிழ்ப்பாட நூலாசிரியர்- தமிழ்ப் பாவலர் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய சாமி சிதம்பரனார் அவர்கள் 17-1- 1961-ல் இயற்கை எய்தினார். தமிழ்ப் பேரறிஞர் சீர்திருத்தச் செம்மல் சாமி சிதம்பர னார் புகழ் வாழ்க வாழ்க ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்.