சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 16 புதிய தமிழகம் வளரும் தமிழ் தொல்காப்பியத் தமிழர் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 16 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 296 = 304 படிகள் : 1000 விலை : உரு. 190/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படு கிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கை யாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண் பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சி யையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதை களையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடி யாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை புதிய தமிழகம் ஆசிரியர் வேண்டுகோள் 3 முன்னுரை 5 முந்துவோம்! 8 1. புதிய தமிழக அமைப்பு 9 2. ஆட்சியே மக்களுயிர் 16 3. மொழிவாரி மாகாணக் குறிக்கோள் 20 4. மக்கள் கேட்கும் மாகாணம் 26 5. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு 32 6. அன்னியர் சுரண்டல் 38 7. வெற்றிக்கு வழி 43 8. தனித்து நிற்க வேண்டுமா? 51 9. சுரண்டல் ஏது? 57 10. மத்திய அரசாங்க வேண்டுமா? 61 11. புதிய தமிழகத்தில் மக்கள் உரிமை 67 12. நமது குறிக்கோள் என்ன? 71 வளரும் தமிழ் முன்னுரை 77 1. வளரும் தமிழ் 79 2. உயிருள்ள பாட்டு 84 3. கடவுளும் தலைவிதியும் 88 4. தானே தனக்கு உவமை 93 5. விளம்பரத்தால் விலை போகும் 97 6. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை 101 7. கருத்து ஒருமித்த காதலர் 105 8. உங்களுக்கு அனுபவம் உண்டா? 109 9. சங்க காலக் கடவுள்கள் 113 10. பழமைப் பண்பிலே புதுமை 123 11. சமூக மாற்றம் 127 12. பாலைவனக் கொதிப்பு 132 13. உயிருள்ள கவிதை 136 14. அறிஞர் தன்மை 141 15. பின்னோக்கிச் செல்லும் பெரியோர்கள் 145 16. மன்னரும் மக்களும் 152 தொல்காப்பியத் தமிழர் ஆக்கியோன் முன்னுரை 165 1. ஆசிரியர் வரலாறு 173 2. தொல்காப்பிய காலம் 177 3. தொல்காப்பியம் முதல் நூலா? 181 4. தொல்காப்பிய அமைப்பு 184 5. மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் 188 6. மண வாழ்க்கை 194 7. ஆண் பெண் உரிமை 205 8. சாதிப் பிரிவு 210 9. நிலத் தலைவர்கள் 221 10. ஆண்டான் அடிமை 229 11. பார்ப்பாரும் அந்தணரும் 232 12. வடமொழி வேதம் 238 13. உலகத் தோற்றம் 241 14. தெய்வங்கள் 243 15. விக்கிரக வணக்கம் 248 16. உயிரும் உடலும் 251 17. கலை வளர்ச்சி 254 18. நால்வகைப் படைகள் 260 19. போர்முறை 262 20. எழுத்து மாற்றம் 266 21. மொழி வளர்ச்சி 270 22. தமிழ் நாட்டின் எல்லை 279 23. பழக்க வழக்கங்கள் 282 புதிய தமிழகம் (1952) ஆசிரியர் வேண்டுகோள் புதியதமிழகத்தின்குறிக்கோள்என்ன?அதுஎந்தமுறையில்அமையவேண்டு? புதிய தமிழகம் யாருக்காக? எதற்காக? புதிய தமிழகத்தை அமைக்கத் தமிழ் மக்கள் செய்யவேண்டிய கடமை என்ன? இவைகளை விளக்குவதே இச்சிறு நூல். இந்திய யூனியனுக்குள் இன்றுள்ள மாகாணங்களை மொழிவாரி அடிப் படையில் திருத்தி அமைக்க வேண்டும். மொழிவாரி மாகாணங்கள் என்பதும், தேசீய இனவாரி மாகாணங்கள் என்பதும் ஏறக்குறைய ஒன்றே தான். எல்லாத் தேசீய இனமக்களும் சுதந்தரமாக - ஒற்றுமையாக - ஒருவரை ஒருவர் சுரண்டாமல்-ஒருவரை ஒருவர் அடக்கி நசுக்குவதற்கு இடமில்லாமல வாழு வதற்கு இதுவே வழி. மொழிவாரி மாகாணங்கள் ஒவ்வொன்றும் சுய நிர்ணய உரிமையுடன் விளங்க வேண்டும். எந்த மொழிவாரி மாகாணத்திலும் அந்நியர் சுரண்டலுக்கு இடமிருக்கக் கூடாது; நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைக்கு இடமிருக்கக் கூடாது. ஒவ்வொரு மொழிவாரி மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சியே நிலவ வேண்டும். இதுவே மொழிவாரி மாகாணம் கேட்பதன் நோக்கம். இந்த அடிப்படையில் தான் மொழிவாரி மாகாணங்கள் அமைய வேண்டும். இத்தகைய மாகாணங்கள் ஏற்படும் வரையில் மொழிவாரி மாகாணக் கிளர்ச்சி நடந்தே தீரும். ஆனால் இதற்கிடையில் தற்காலிகமாக, எந்த அளவில், எந்த அடிப்படையில் மொழிவாரி மாகாணங்கள் அமைந்தாலும் அதை நாம் வரவேற்கின்றோம். உடனடியாக அடையக்கூடிய எத்தகைய மொழிவாரி மாகாணத்திற்கும் புதிய தமிழகக் கிளர்ச்சி முட்டுக்கட்டையாக நிற்கவே நிற்காது. எத்தகைய அரை குறை மொழிவாரி மாகாணப் பிரிவினையும் முழு உரிமையுள்ள மொழிவாரி மாகாண அமைப்புக்கு அடிப்படை கோலும் என்ற நம்பிக்கையுடன் அதை ஆதரிக் கின்றோம். தனி நாடு பிரிந்தாலும் ஏற்றுக் கொள்ளுவோம். ஆகவே மொழிவாரி மாகாணத்தின் முடிவான நோக்கம் என்ன என்பதை விளக்குவதே இந்நூல். மாகாணப் பிரிவினைக் காக நடைபெறும் எந்த முயற்சியையும், எந்தக் கிளர்ச்சியையும் வெறுப்பதோ, தடுப்பதோ, குறை கூறுவதோ இந்நூலின் நோக்கம் அல்ல. தமிழர்கள் ஊன்றிப் படித்து உண்மை காணவேண்டும் என்பதே எனது ஆவல். இதற்கு முன்னுரை தந்து உதவிய தோழர் மணலி கந்தசாமி அவர்களுக்கு எனது நன்றி. நெ. 9 ஏழாவது தெரு, அன்பன் சவுராஷ்டிர நகர். சாமி. சிதம்பரன் சென்னை-24 18-12-52 முன்னுரை மணலி சி. கந்தசாமி M.L.A இன்று தமிழ்நாட்டில் ஒரு புதிய எழுச்சி. நாட்டுப் பிரிவினை பற்றி எல்லா வட்டாரங்களிலும் பேசப்படுகிறது. இன உணர்ச்சி முறுக்கேற்றப்படுகிறது. தாய்மொழிப் பற்று மக்கள் உள்ளத்தில் தவழுகிறது. பொதுவாகத் தமிழ் மக்கள் ஒரு புத்தம் புதிய வாழ்வுக்காகத் திரண்டெழுகிறார்கள். ஆனால் இந்த எழுச்சியின் போக்கு ஒரு முகமாயில்லை. பலப்பல விதத்தில் இந்த எழுச்சி சிதறுண்டு தனித்தனியே உருவெடுப்பதைப் பார்க்கிறோம். ஒன்றுபட்ட எழுச்சிக்குச் சரியான வழி வகை வேண்டும். அதுவே இன்று ஜனநாயக சக்திகளின் முன் உள்ள தலை சான்ற கடமை. அதுதான் புதிய தமிழகம் ஜனநாயகத் தமிழகம் சகல தமிழர்களையும் ஒன்றுபடுத்தி உய்விக்கும் தமிழகம். புதிய தமிழகம் என்று சொல்லும்போது அது ஏதோ ஒரு சிலரின் கற்பனை லட்சியம் எனும் கால கட்டம் அல்ல; அல்லது கிளர்ச்சிக்காரர்களின் மேடை முழக்க மட்டுமல்ல; ஆனால் இன்று கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்திலிருந்து ஒலிக்கும் இதய ஒலி. இந்த இதய ஒலி ஒன்றுபட்டு உருவாகி உரிய பாதையில் ராஜ நடை போட்டு கம்பீரமாக முன்னேறியாக வேண்டும். பிளவும் கூடாது, ஒத்திப் போடுவதும் தப்பு. கிடைத்ததாகச் சொல்லப்படும் சுதந்திரம் ஏற்பட்டு ஆண்டு ஐந்துக்கு மேலாகிவிட்டது. தமிழன் வாழ்வு வளம்பெறவில்லை; வறண்டுதான் வருகிறது. உணவு தான்ய விளைவு ஒடுங்கி வருகிறது. உறுதொழில்கள் எல்லாம் நசிந்து வருகின்றன. உரிமைகள் பறிபோகின்றன. ஆங்கிலம் ஆட்சி புரிகிறது. இந்தியும் இடுக்கிலே பலவந்தமாக நுழைக்கப்படுகிறது. இந்தப் பாழும் சூழ்நிலையில் தமிழன் சிந்திக்கத் தொடங்கி விட்டான். தன்னைப்பற்றி, தன் இனத்தைப் பற்றி, தன் தாய் மொழிபற்றி, தன் தாயகம் பற்றிக் கவலை தோய்ந்த முகத்துடன் சிந்திக்கத் தொடங்கிவிட்டான். இந்த இதயத் துடிப்பின் எதிரொலியைக் கண்டு கொண்ட பல கட்சியாளரும் குழுக்களும் அதற்கு உருக்கொடுக்க - உயிர் கொடுக்க முன்வந்துள்ளனர். நாட்டுப் பிரிவினை தான் நல்ல ஒரு மருந்து என்பது சிலரின் விடாப்பிடிவாதம். ஒன்று பட்ட இந்தியாதான் தமிழனின் உறுதுணை என்பது ஆட்சியாளரின் மந்திரோப தேசம். இந்த இரண்டு கூட்டமும் தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் தங்களின் இயக்கத்தை இணைப்பதை ஒப்புவ தில்லை. முன்னவருடைய வழிவெறும் பிரசாரக் கிளர்ச்சி, பிந்தியவரின் வழி அதிகார அடக்குமுறை ஆட்சி. இந்த நிலைமையால்தான் புதிய தமிழகம் என்னும் முழக்கம் அனுபவத்தின் அடிப்படையினின்றும் அலங்காரமாக எழுகிறது. ஜனநாயகப் பண்பாடுள்ள சகலரின் தெளிவான ஒன்றுபட்ட கோரிக்கை அது. சுயேச்சையான, பிரிந்து போகும் உரிமை உத்தரவாதத்துடன் கூடிய தமிழனின் தன்மானக் கோரிக்கை அது. சகல தேசீய இனங்களுடனும் சமத்துவ அடிப்படையில், தங்கள் நலன் சிறிதும் பாதிக்கப்படாத வகையில் கூட்டு வாழ்வு கோரும் கோரிக்கை அது. சகல யதேச்சாதி காரத்தையும் முடிவு கட்டி, மக்களாதி பத்தியத்தை சகல துறை களிலும் நிறுவுவதில் கொண்டு செல்லும் கோரிக்கை அது. தமிழனின் இனப் பற்றை - மொழிபபற்றை பிற இனத்தின் மீதுள்ள வெறுப்பாக மாற்றாத ஜன ஒற்றுமைக் கோரிக்கை அது. பெரும் பகுதி தமிழர்களான விவசாயிகளின் வாழ்வை உறிஞ்சும் நிலப் பிரபுத்துவப் புல்லுருவியை ஒழித்துக் கட்டி உழுப வனுக்கு நிலமளிக்கும் உத்தமக் கோரிக்கை அது. இத்தகைய கோரிக்கையான புதிய தமிழகத்தை என்னுடைய மதிப்புக்குரிய நண்பர், புலவர், திரு. சாமி சிதம்பரனார் இந்த நூலில் தனக்கே உரித்தான விளம்பர மான எளிய நடையில் படம் பிடித்துக் காட்டுகிறார். தேசப்பற்றும், மொழிப்பற்றும், இனப்பற்றும் மக்களின் நல்வாழ்வுடன் இணைந்தவையே தவிர அதற்கு சம்பந்தமில்லாத வறட்டு வக்ஷியங்களல்ல என்ற சித்தாந்த பரம்பரையில் வளர்ந்துள்ளவர் நண்பர் சாமி. சிதம்பரனார். விருப்பு வெறுப்பில்லாத வகையில், தமிழனின்புது உணர்வை யதார்த்தச் சூழ் நிலைமை என்னும் அளவுகோல் கொண்டு அளந்து காட்டித் தமிழனை அறை கூவி அழைக்கிறார் இச்சிறு நூலில். இச்சிறுநூல் இனப் பிரச்சினையைப்பற்றிய ஒரு சரியான ஜனநாயகக் கண்ணோட்டத்தைப் பார்க்க உதவும், மக்களின் இனப்பிரிவினை கோஷமும், பலவந்தமான இனப்பிணைப்பும், கோஷமும், சுரண்டும் வர்க்கத்தின் நலன் என்ற ஒரே அடிப்படையின் மீது கட்டப்பட்ட இருமுகங்கள் என்பதை ஆத்திர மூட்டாத வகையில் அறிவு பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். உழைத்துப் பாடுபடும் சகல தமிழர்களின் உண்மையான விடுதலையின்றும் எழுவது தான் புதிய தமிழகம் என்பதை விவசாயிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் அறிவாளிகளுக்கும் விளங்கக் கூறும் நூல் இது. புதிய தமிழகம் அமைக்கும் பாதையில் இத்தமிழ் நூல் நல்லதொரு வழி காட்டியாகும். ஒவ்வொரு தமிழ் மகனுடைய - மகளுடைய கையிலும் இந்த நன்னூல் இருக்கவேண்டும் என்பது என் அபிப்பிராயம். சென்னை 18-12-1952 மணலி. சி. கந்தசாமி முந்துவோம்! முந்துவோம்! முந்துவோம்! முந்துவோம்! 1. இனிய புதிய தமிழகத்தை ஏற்படுத்த முந்துவோம்! ஏழை அடிமை நிலைமை மாற்றி எவரும் ஒன்றாய் வாழுவோம்! மனிதர்தம்மை மனிதர் ஏய்க்கும் மாய வாழ்வை வீழ்த்துவோம்! மக்கள் வாழ்வில் இன்பம் வளரும் வழிகள்கண்டு மகிழுவோ! 2. அன்னியர்கள் நமது நாட்டில் ஆட்சி செய்ய இனிவிடோம்! அவர்கள் தோட்டம் தொழில்கள் யாவும் நமக்குச் சொந்தம் ஆக்குவோம்! இன்னும் உழவர் வாழ்வை உறிஞ்சும் முறைமை நாட்டில் இருப்பதா? இந்த நிலையை நீக்கி உணவுப் பண்டம் பெருக வழி செய்வோம்! 3. தமிழில் ஆட்சி, தமிழில் கல்வி தாயகத்தில் நாட்டு வோம்! தரணியெங்கும் தமிழைக் கலையைப் பண்பைப் புகழைப் பரப்புவோம்! தமிழர் என்று தலை நிமிர்ந்தே உரிமையோடு வாழுவோம்! தயக்கம் இன்றிப் பிறரும் நமது நிலையில் வாழ உதவுவோம்! சாமி - சிதம்பரனார். புதிய தமிழக அமைப்பு மொழிவாரி மாகாணம் ஏன்? அடிமைத் தளையை அறுத்து வீசுவோம்! ஆண்டான் அடிமையற்ற புதிய சமுதாயத்தை ஆக்குவோம்! பள்ளம் படுகுழியற்ற சமநிலைச் சமுதாயத்தைக் கட்டுவோம்! மக்கள் வாழ்விலே இன்பத் தேன் பாய்ந்தோடச் செய்வோம்! இன்று எங்கும் இதே முழக்கந்தான். இத்தகைய வாழ்க்கைக்கு வழி காட்டும் சாலை அமைப்பதே இன்று நமது முன்னே நிற்கும் முதல் வேலை. இதற்காகவே இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியினரும உரிமையாட்சி கேட்கின்றனர். எல்லோரும் இன்புற்றிருக்கும் இனிய வாழ்வை விரும்பாதவர்கள் யார்? மனிதத் தன்மையை அறிந்த அனைவரும் - மனிதத் தன்மையுடைய மக்கள் அனைவரும் ஒற்றுமை வாழ்வையும், உரிமை ஆட்சியையும் வரவேற்றே தீர்வார்கள். புதிய தமிழகம்! ஒன்றுபட்ட தமிழகம்! புத்துணர்ச்சி! புது வாழ்வு! தமிழ் முன்னேற்றம்! தமிழ்க் கல்வி! தமிழர் ஒற்றுமை! தமிழ் ஆட்சி! இந்த முழக்கங்கள் தமிழ் நாட்டிலே எங்கும் கேட்கின்றன. ஏன் இம்முழக்கங்கள்! ஏழை - அடிமையற்ற சமுதாய வாழ்வு ஏற்பட்டேயாக வேண்டும் என்பதே இம் முழக்கங்களின் குறிக் கோள். மக்கட் சமுதாய வளர்ச்சி வரலாற்றை அறிந்தவர்கள். இந்த நோக்கத்தில் மாறு பட மாட்டார்கள். மக்களின் கூட்டுறவு வாழ்க்கைதான் இன்றைய மகத்தான நாகரிக வளர்ச்சிக்குக் காரணம்; மக்கள் விலங்குகளைப்போலத் தனித்தனியே வாழ்ந் திருப்பார்களாயின் இந்த உலகம் காடாகத் தான் காட்சியளிக்கும்; விலங்கு களைப்போல் தம் வயிற்றுப்பாடு ஒன்றையே குறியாகக்கொண்டு வாழ்ந்திருப்பார் களாயின் இன்றைய நாகரிக உலகப் பூஞ்சோலையை நாம் காணவே முடியாது. மக்களும் விலங்குகளைப் போலத்தான் வாழ்வார்கள்; உலகமும் வெறும் காடு, மலை, வனம், பள்ளம் படுகுழி, மேடு களாகத்தான் காட்சியளிக்கும். இவை உண்மையா அல்லவா? சிந்தியுங்கள்! கூட்டு வாழ்க்கையின் சிறப்பைப் பல மக்கள் இன்னும் உணரவில்லை. பொது மக்கள் இதை உணராமல் இருக்க வேண்டும் என்பதே சில குள்ள மனத்தர்களின் குறிக்கோள். இவர்கள்தாம் சமுதாயப் புல்லுருவிகள். தன்னலவாதிகள். மக்களை அடிமைப்படுத்தி - அவர்கள் உழைப்பைச் சுரண்டி உயர்ந்தவர்கள்போல் வாழ்வு நடத்துகிற சிலந்திப் பூச்சிகள். இவர்களால்தான் மனித சமூகம் சின்னா பின்னமாகச் சிதைந்து கிடக்கிறது. இப்படிச் சிதைந்துகிடக்கும் மக்களை ஒன்று சேர்த்தாக வேண்டும். இதுவே இன்று மனிதாபிமானிகள் - மக்கள் அன்பர்கள் - மக்கள் ஊழியர்கள் செய்யவேண்டிய முதல்வேலை. மக்களை ஒன்றுசேர்க்கும் பணியின் முதற் படிதான் மொழி வாரியாக மாகாணங்கள் பிரியவேண்டும் என்பது; அல்லது தேசீய இனவாரியாக மாகாணங் கள் பிரிய வேண்டும் என்பது. இந்த மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியுடன் இணைந்ததுதான் ஐக்ய தமிழகக் கிளர்ச்சி. புதிய - ஐக்ய தமிழகம் ஏன்? மொழிவாரி - அல்லது இனவாரி மாகாணங்கள் ஏன்? அவைகள் எவ்வாறு அமைந் திருக்க வேண்டும்? அவற்றை அடைவது எப்படி? இத்தகைய மாகாணங்கள் அமைந்தால் மக்கள் வாழ்வு எப்படியிருக்கும்? மொழிவாரி மாகாணப் பிரிவினையை எதிர்ப்பவர்கள் யார்? அவர்கள் எண்ணம் என்ன? இவைகளைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும். பரந்த தமிழகம்! ஐக்ய - அல்லது புதிய தமிழகம் என்றால் என்ன? அதன் எல்லை யாது? அதன் கொள்கை என்ன? இவைகளை முதலில் அறிந்துகொள்ளுவோம். பழய சிறந்த தமிழகத்தை மீண்டும் உருவாக்குவதே புதிய தமிழகம்! பழய தமிழர்களின் சிறந்த பண்பாடுகளை இந்திய நாடு முழுவதும் பரப்புவதே புதிய தமிழகத்தின் நோக்கம். எல்லோரும் இன்புற்றிருக்க வழி காண்பதே எங்கள் நோக்கம் என்று முழங்கிய பண்டைத் தமிழனுடைய குறிக்கோளை உலகுக்குப் பறை சாற்றுவதே புதிய தமிழகத்தின் அடிப்படைக் கொள்கை. புதிய தமிழகத்திற்குச் சென்னையே தலைநகரம், தமிழ கத்தின் நடுப்பாகத்திலே தலைநகரை மாற்றிக் கொள்ளும்படி நேர்ந்தாலும் சென்னை தமிழ் நாட்டைச் சேர்ந்ததாகவே இருக்கும். சென்னை நகரை ஆந்திர மாகாணத்துடன் சேர்க்க முடியாது. சென்னை நகரை இரு துண்டாக வெட்ட வேண்டும் என்பது வெறும் பேச்சு. சென்னை நகரைத் தனி மாகாணமாக்க வேண்டும் என்பது பொறாமைப் பேச்சு. சென்னை நகரம் தனிமாகாணமாவது புதிய தமிழகத்துக்குப் புற்று நோய். புதிய தமிழகத்திலே அயலநாட்டு ஏகாதிபத்திய அரசு நிலைத்திருக்க முடியாது; நிலைத்திருக்க இடங்கொடுத்தால் அது புரையோடிய புண்ணாகவே இருக்கும். இன்று பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் புதுக்கிசரி. காரைக்கால் என்ற இரண்டு நிலப் பகுதிகள் இருக்கின்றன. இவைகள் தமிழகத்துடன இணைக்கப்படவேண்டும். அவை தாயகத்தோடு இணைய வேண்டும். இது அப்பகுதி மக்களின் ஆவல்; துடிதுடிப்பு. இதற்கு ஆதரவளித்து அவர்களின் ஆவலை நிறைவேற்றுவது புதிய தமிழகக் கிளர்ச்சிக்காரர்களின் கடமை. திருவாங்கூர் - கொச்சி ராஜ்யத்தில் நீண்ட நெடுங் காலமாக அடங்கிக் கிடக்கும் தமிழ் மக்களும் தமிழ்த் தாயகத்தோடு இணையப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய போராட்டத்திற்கும் ஆதுரவளித்தாக வேண்டும். அவர்களையும் அவர்கள் வாழும் நிலப்பகுதியையும் தமிழ்த் தாயகத்தோடு இணைத்தாக வேண்டும். இந்தத் தமிழகத்துடன் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில நிலப் பகுதிகளையும் சேர்க்கவேண்டும் என்ற கிளர்ச்சி தமிழகத்திலும் இருந்து வருகிறது. சித்தூர் மாவட்டத் தமிழ் மக்களிடையும் இருந்து வருகிறது. திருத்தணி, புத்தூர், சித்தூர், கங்குந்திகுப்பம் ஆகிய சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தாலுக்காக்களிலும் தமிழர்களே பெரும்பான்மையோர். ஆகையால் அந்த வட்டாரங்களையும் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இந்த இணைப்பை வரவேற்க வேண்டும். இதனை ஒரு எல்லை வரையறுப்புக் குழுவின் மூலம் முடிவு செய்துகொள்ளலாம்; அல்லது அந்த வட்டார மக்களின் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்துகொள்ளலாம்; ஆகையால் புதிய தமிழகம் உருவாவதற்குச் சித்தூர் மாவட்டப் பகுதிகளையும் இணைக்கவேண்டும் என்பதைத் தற்போது ஒரு நிபந்தனையாக வைத்துக்கொள்ள வேண்டாம். இதுவே ஐக்கிய தமிழக இயக்கத் தாரின் விருப்பம். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலே கூறிய நான்கு தாலுக்காக்களில் உள்ள மக்களும் தமிழகத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்வார்களானால் அந்த முடிவுக்கு எவரும் முட்டுக்கட்டை போட முடியாது. நமது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள இலங்கை ஒரு சிறு தீவு. அத்தீவின் ஒரு பகுதியான யாழ்ப்பாணத்தில் பரம்பரை யாகத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் பண்பாட்டில் வேற்றுமையில்லை. இலங்கைக்கும் தமிழகத்திற்கும் சரித்திர உறவுண்டு; கலை உறவுண்டு; பண்பாட்டு உறவுண்டு; அங்கு வாழும் சிங்களவர் களுக்கும் தமிழர்களுக்கும் நெடுங்கால உறவுண்டு. இன்று அங்கு முளைத்திருக்கும் சிங்களவர் தமிழர் வெறுப்பு - சிங்களவர் இந்தியர் வெறுப்பு - இயற்கையாக மூண்டதல்ல. இவை அந்த நாட்டிலே இன்னும் ஆதிக்கம் பெற்றிருக்கும் வெள்ளையர் வைத்த நெருப்பு. இலங்கையிலிருந்து வெள்யைர் ஆதிக்கம் அறவே ஒழிந்தால் - நிலப் பிரபுத்துவம் ஒழிந்தால் - அந்நியா மூலதனமும் அவர்கள் வியாபாரமும் ஒழிந்தால் அங்கு இன்று பற்றியெரியும் வெறுப்புத் தீ அணைந்து சாம்பலாகி விடும். சிங்களவர் - தமிழர் உறவு மீண்டும் வளரும். இந்த இலங்கைத் தீவும் தமிழகத்தோடு இணைய விரும் பினால் அதற்கும் யாரும் அணைபோட முடியாது. ஆகவே நமது புதிய தமிழகம், வடவேங்கட முதல் தென் குமரிவரை, இலங்கையும் சேர்ந்த பரந்த தமிழகமாக விளங்கக் கூடிய காலம் வந்தால் அதில வியப்பில்லை வரலாம். வருவதற்கு இடம் உண்டு. உடனடிக் கோரிக்கை இத்தகைய பரந்த தமிழகம் ஏற்படுவது உடனடியாக முடியாத செயல். இத்தமிழகத்தை உருவாக்க வேண்டுமானால் பல்லாண்டுகளாகலாம். அதுவரையிலும் தமிழகம் உருவாகாமல் தயங்கி நிற்கவும் முடியாது. தமிழகம் உருவாகாமல் தயங்கி நிற்குமானால் தமிழர்களின் முன்னேற்றமும் தடைப்பட்டே நிற்கும். தமிழர்க்குள் பிளவும் பிரிவினையும் வளர்ந்து கொண்டே போகும். பிற்போக்கு சக்திகள் தலையெடுத்து இன்றுள்ள தமிழர்கள் வாழ்வை இன்னும் அலங்கோலமாக்கி அல்லற் படுத்தும். ஆகையால் உடனடியாக உருவாகக்கூடிய ஒரு தமிழகத்தை உண்டாக்கித் தீரவேண்டும். இதுவே ஐக்கிய தமிழகக் கிளர்ச்சியின் உடனடியான குறிக்கோள். சென்னை நகரம், செங்கற்பட்டு, வட ஆற்காடு, தென்னாற் காடு, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் ஆகிய தமிழ் ஜில்லாக்கள்; பிரஞ்சு ஆதிக்கத்தில் உள்ள காரைக்கால், புதுச்சேரி பகுதிகள்; திருவாங்கூரில் தமிழர்கள் வாழும் பகுதிகள்; இவைகளை ஒன்று சேர்த்து, உடனடியாக தமிழகம் அமைக்கவேண்டும். சித்தூர் மாவட்டத்தில் தமிழர் வாழும் பகுதிகளைப் பற்றி ஒரு எல்லைக் கமிட்டியின்மூலம் முடிவு செய்துகொள்வது, அல்லது பொது மக்கள் வாக்களிப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளுவது என்ற நிபந்தனையையும் புதிய தமிழக அமைப்பிலே ஏற்படுத்திக் கொள்ளலாம். இதுவே புதிய தமிழகக் கிளர்ச்சிக் காரர்கள் குறிப்பிடும் தமிழகத்தின் எல்லை. இத்தகைய புதிய தமிழகக்கிளர்ச்சியுடன் கீழ்க்கண்ட கொள்கைப் போராட்டமும் நடந்தே தீரவேண்டும். 1. தமிழ் நாட்டில் உள்ள வெள்ளையர் மூலதனத்தை - அவர்கள் நடத்திவரும் தொழில்களை எவ்வித கைமாறும் தராமல் தேசீய மயமாக்குவது; அதாவது தமிழகத்துக்கு உரிமை யாக்குவது. 2. வெள்ளையர் முதலீட்டையும், தொழில்களையும் பறிமுதல் செய்து தேசீய மயமாக்குவதன் மூலம் தமிழ் நாட்டிலே தொழில் வளர்ச்சியைப் பெருக்குவது. இதன்மூலம் அன்னியர் சுரண்டலுக்கும் முடிவு கட்டுவது. 3. நிலப் பிரபுக்கள், மடங்கள். கோயில்கள், ஆகியோரின் நிலங்களை கைமாறின்றிப் பறிமுதல் செய்து அவைகளை நிலத்திலே உழைக்கும் உழவர்களுக்கு உரிமையாக்குவது. 4. ஆங்கில ஆதிக்கத்தை அரசாங்கத்திலிருந்து விரைவில் விரட்டி, தமிழ் மொழியை அரசாங்க மொழியாக்குவது. 5. தமிழ் நாட்டின் உயர்ந்த கலாசாரத்தை வளர்ப்பது. மேலே கூறிய எல்லையையும் கொள்கைகளையும் உடைய புதிய ஐக்கிய தமிழகத்தை உடனடியாக உருவாக்கத் தமிழர்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்தாக வேண்டும். புதிய - ஐக்கிய தமிழகம் சுய நிர்ணய உரிமையுடன் விளங்கவேண்டும். சுய நிர்ணய உரிமை என்பது தன்னுடைய ஆட்சி முறையைத் தானே வகுத்துக்கொள்ளும் உரிமை, இந்த ஐக்கிய தமிழகம் இந்திய யூனியனுடன் இணைந்தே நிற்கும். ஆனால் தமிழர்களின் உரிமையிலே தலையிடாமலிருந்தால் இணைந்திருப்போம்; தலையிட்டால் உறவை அறுத்துக் கொள்ளுவோம் என்று சொல்லும் உரிமையும், செய்யும் உரிமையும் ஐக்கிய தமிழகத்திற்கு உண்டு. புதிய - ஐக்கிய தமிழகக் கிளர்ச்சியுடன் நிலப் பிரபுத்துவ ஒழிப்புக் கிளர்ச்சி, அந்நிய மூலதன ஒழிப்புக் கிளர்ச்சி இரண்டையும் இணைத்தே நடத்தியாக வேண்டும். இந்த இரண்டு ஒழிப்பும் ஏற்படாமல் உருவாகும் தமிழகத்தால் பயனில்லை. நிலப் பிரபுத்துவ நிலைப்பும், அந்நிய மூலதன ஆதிக்கமுங் கொண்ட தமிழகத்தில் தமிழ் மக்களின் உண்மையான ஆட்சி ஏற்பட முடியாது. அந்த ஆட்சி இன்றைய ஆட்சியைப் போலவேதான் இருக்கும்; நிலப் பிரபுக்களையும், முதலாளி வர்க்கத்தையும், அந்நியர் ஆதிக்கத்தையும் கொண்ட ஆட்சியாகவே தான் இருக்கும். ஆகையால் நிலப் பிரபுத்துவ ஒழிப்பைப்பற்றிப் பேசாமல் - அந்நியர் மூலதன ஒழிப்பைப்பற்றிப் பேசாமல் நாட்டுப் பிரிவினையைப்பற்றி மட்டும் பேசுவோர் யாராயிருந்தாலும் சரி! அவர்கள் உண்மையான மக்கள் ஆட்சியை விரும்புகிறவர்கள் அல்லர்; அவாகள் சர்வாதிகார வெறியர்கள்; அல்லது வெறும் கலகக்காரர்கள் என்று தான் பொது மக்கள் முடிவு கட்டுவார்கள். மக்கள் பகுத்தறிவு வளர்ந்தோங்கி வருங்காலம் இது. பொது மக் களிடையிலே சுயேச்சையான எண்ணங்களும், கொள்கைகளும் பரவி வரும் காலம் இது. பொது மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருந்த காலம் மலையேறிக் கொண்டிருக் கிறது. தாமாகவே சிந்திக்கும் திறமை பெற்றுவருகின்றனர் மக்கள். இந்த நிலைமையில் ஒரு தனி மனிதனால் எதையும் சாதித்துவிட முடியாது. பொது மக்களின் விருப்பத்திறகு மாறாக எந்த மனிதனாலும் எதுவும் செய்துவிடு முடியாது. இது இன்றுள்ள உண்மை நிலைமை. ஆகையால் மக்களின் ஒன்றுபட்ட கிளர்ச்சியினால் தான் - போராட்டத்தினால் தான் - புதிய ஐக்கிய தமிழகத்தை உருவாக்க முடியும். இந்த உண்மையைத் தமிழ் மக்கள் அறியாதவர்கள் அல்லா. ஆகையால் ஐக்கிய தமிழகத்தை உருவாக்கத் தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட வேண்டும். ஒன்று பட்டால் தான் உண்டு புதிய வாழ்வு. அரசியலே ஒரு நாட்டு மக்களின் உயிர்! அரசியலின் மூலந்தான் தங்கள் வாழ்வை நல்வாழ்வாக்கிக் கொள்ள முடியும். இதுவே பண்டைத் தமிழர் கொள்கை, இன்றைய அரசியல் தத்துவமும் இதுதான். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட எவரும் சுய நிர்ணய உரிமையோடு கூடிய புதிய தமிழகத்தை வாழ்த்தி வரவேற்றே தீர்வார்கள். ஆட்சியே மக்களுயிர் தமிழர் கொள்கை அரசாட்சியே நாட்டின் உயிர் நாடி. அரசாட்சியினால் தான் மக்கள் வாழ்வை நல்வாழ்வாக்க முடியும். ஆட்சி சீர்கெட்டிருந்தால் மக்கள் வாழ்வும் சீர்கெட்டிருக்கும். நல்ல ஆட்சிமுறை இருந்தால்தான் நாடும், நாட்டு மக்களும் நல்ல முறையில் வாழ முடியும். இந்த உண்மையைத் தமிழர்கள் அறிந்தவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் இதை அறிந்திருந்தனர். இதனையே எல்லாவற்றிலும் முதன்மையான கொள்கையாகக் கொண்டிருந்தனர். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இவ்வுண்மையை நமக்குப் பறை சாற்றுகின்றன. நெல்லும் இவ்வுலகமக்களின் உயிரைக் காப்பாற்றுவ தன்று; தண்ணீரும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்று வதன்று. அரசியலையே இவ்வுலகம் உயிராகக் கொண்டிருக் கின்றது. ஆகையால், நாமே இவ்வுலகத்திற்கு உயிர் என்பதை அறிந்திருத்தல் ஆட்சியாளரின் கடமை என்பது புறனூற்றுப் பாட்டு ஒன்றின் கருத்து. நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்ன உயிர்த்தே மலர் தலை உலகம், அதனால், யான் உயிர் என்பது அறிகை, வேல் மிகுந்தானை வேந்தற்குக் கடனே. இதுதான் அந்தப் பாடல். இப்பாட்டு தனிப்பட்ட ஒரு அரசனைக் குறிப்பதாயினும், இதில் உள்ள அரசன் என்பதை அரசியல் என்று மாற்றிக் கொண்டால் போதும். நில வளம் பொருந்திய நாடாகட்டும்; நீர் வளம் நிறைந்த நாடாகட்டும்; நல்ல ஆட்சி இல்லாவிட்டால் அவைகளால் பயனில்லை. மக்களுடைய - வாழ்வை முன்வைத்து நடத்தாத ஆட்சியில் நிலவளமும் பயன்படாது; நீர் வளமும் பயன்படாது. உழவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்; உற்பத்தியைப் பெருக்க ஊக்க மூட்டவேண்டும்; அப்பொழுது தான் நெல் முதலிய உணவுப் பண்டங்கள் மிகுதியாக விளையும். விளைவது மட்டும் போதாது; விளைந்த தானியங்களை நாடெங்கும் உள்ள மக்களுக்குக் கிடைக்கும்படி செய்யவேண்டும். அதற்கேற்ற சாலைகளும் போக்குவரத்துச் சாதனங்களும் இருக்கவேண்டும். இவைகள் இல்லாவிட்டால் விளைந்த தான்யங்கள் விளைந்த இடங்களிலே தான் கிடக்கும். அவைகளால் யாருக்கு என்ன பயன்? இதைப் போலவே நாட்டிலே பெய்யும் மழை நீரைத் தேக்கி வைக்க ஏரிகள் - கண்மாய்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆற்றிலே ஓடி வரும் நீரைத் தடுத்து வாய்க்கால்களின் வழியே செலுத்தி வயல்களுக்குப் பாய அணைக்கட்டுகள் கட்டப்பட வேண்டும்; வாய்க்கால்கள் வெட்டப்பட வேண்டும். புதிய ஆறுகள் அமைக்கப்பட வேண்டும். இவைகளைத் தனிப்பட்ட மனிதர்கள் செய்வதைவிட, மக்களின் கூட்டுறவைக் கொண்ட அரசாங்கத்தால் தான் திறம்படிச் செய்ய முடியும். இவைகளைச் செய்ய வேண்டியதே அரசாங்கத்தின் முதற் கடமை. இதனால் தான் நெல்லைக் காட்டிலும், நீரைக் காட்டிலும் அரசாட்சியே நாட்டின் உயிர் என்று கூறினர். தமிழன் எந்தக் காலத்திலும் அரசியலைப் புறக்கணித்தவன் அல்லன்; என்றும் அவன் அரசியலிலே கவலை கொண்டவன். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு நல்வாழ் வில்லை என்ற பழமொழிகள் - இடைக்காலத்திலே எழுந்தவை. தமிழர்களை அரசியலிலே பங்கெடுத்துக் கொள்ள ஒட்டாமல் தடை செய்வதற்கே இப்புதுமொழிகள் எழுந்தன. தன்னலத்தைக் குறிக்கோளாகக் கொண்ட நிலப் பிரபுக்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் தான் இத்தகைய பழமொழிகள் தோன்றின. நாட்டைக் காக்கவே மக்கள் தமிழர்கள் எந்தக் காலத்திலும் அன்னியர்களுக்கு அடிமைப் பட்டு வாழ விரும்பியதே இல்லை. பண்டைத் தமிழர்கள் தம் நாட்டை அன்னியர்கள் கைக்கொள்ளாமற் காப்பாற்றுவதற் காகவே பிள்ளைப் பேறு வேண்டுமென்று விரும்பினர். தாம் சேர்த்துவைக்கும் செல்வத்தை ஆள -கட்டி வைத்திருக்கும் மாளிகையிலே வாழ - வாங்கிவைத்திருக்கும் நில புலன்களை அனுபவிக்கப் பிள்ளை பிறக்க வேண்டும் என்று இக்காலத் தமிழர்கள் விரும்புகின்றனர்; தாம் இறந்த பின் தமக்குக் கொள்ளிவைத்துக் குடமுடைக்கப் பிள்ளை வேண்டு மென்று விரும்புகின்றனர். நாட்டின் மேல் மாற்றான் படைதிரட்டி வந்தால் தங்கள் பிள்ளைகள் அஞ்சாமல் போர்க்களத்திலே குதிக்க வேண்டும். எதிரிகளின் படைகளை விரட்டியடித்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இது தான் பண்டைத் தமிழர்கள் விருப்பம். இதுவே தங்கள் மக்களின் கடமை: இதற்காகவே மக்கட்பேறு வேண்டும் என்று கருதினர். இதனை ஒளிறுவாள் அரும் சமம் முருக்கிக், களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளால் அறியலாம். ஒளி பொருந்திய வாளைக் கையிலே கொண்டு, அரிய போர்க்களத்திலே புகுந்து, எதிரிகளை அழித்து, அவர்களுடைய யானைகளையும் கொன்று வெற்றியுடன் திரும்புதல் தான் என்னுடைய மகன் கடமை என்பதே இதன்பொருள். அன்னியன் ஆட்சி நமது நாட்டிலே நிலைத்த பின் - நிலப்பிரபுத்துவ ஆட்சி நிலைத்து வேரோடிய பின் தமிழர்கள் தங்கள் உரிமைக்குப் போராட வல்லமையற்றுக் கிடந்தனர். அந்நியரை இந்நாட்டில் நிலைக்கவிடமாட்டேன் என்று மூச்சுள்ள வரையிலும் போராடிய கட்டபொம்மன் போன்றவர்கள் துரோகிகளின் துணை கொண்டு அன்னியர்களால் அடக்கப் பட்டனர். வெள்ளையர்கள் தமிழர்களை அடக்க எவ்வளவோ அடக்கு முறைகளை யெல்லாம் கையாண்டனர். அவர்களால் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தத் தான் முடிந்தது. ஆனால் அவர்கள் உள்ளத்திலே பொங்கிக் கொண்டிருந்த சுதந்தர தாகத்தை அடக்க முடியவில்லை; அழிக்கமுடியவில்லை. தமிழர்களின் சுதந்தர தாகத்தின் சின்னந்தான் கப்பலோட்டிய தமிழன் வீரச் சிதம்பரனாரின் சாதனை; யார் தடுத்தாலும் தாயின் மணிக்கொடியை விடேன் என்று உயிர் நீத்த திருப்பூர்க் குமரனின் தியாகம். செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதி முழங்கியது பண்டைத் தமிழர்களின் தேசப்பற்றின் பிரதிபலிப்பே. புதிய தமிழகத்தை அமைப்போம்! தமிழ்நாடு தமிழருக்கே! திராவிட நாடு திராவிடருக்கே! தமிழரசு வேண்டும். இந்த முழக்கங்கள் இன்று தமிழ் நாட்டிலே எத்திசையிலும் ஒலிக்கின்றன. இவைகள் தமிழ் மக்களின் பரம்பரை உரிமை வேட்கையிலிருந்து உதித்த முழக்கங்களே. நமது நாட்டை நாமே ஆள வேண்டும் என்ற உணர்ச்சி - முழக்கம் தமிழ்நாட்டில் மட்டிலும் இல்லை. இந்திய நாடெங்கும் வேரோடிவிட்டது. தமிழரைப் போலவே ஒவ்வொரு மொழி யினரும் தாங்கள் வாழும் வட்டாரத்தைத் தாங்களே ஆளவேண்டும் என்று விரும்புகின்றனர்; கேட்கின்றனர். ஒவ்வொரு மொழியினரிடையும் தோன்றியுள்ள இந்த உணர்ச்சி வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு மொழியினரும் ஒன்றுபட்டுநின்று தங்கள் வட்டாரத்தைத் தாங்களே ஆளக் கூடிய உரிமையை அடைய வேண்டும். அவ்வுரிமையை அடைந் தால் தான் இந்தநாட்டிலே நீண்டநாளாக நிலைத்திருக்கும் நிலப்பிரபுத்துவக் கொடுமை நீங்கும். சுரண்டல் கொள்ளை ஒழியும்; அந்நிய நாட்டினரின் ஆதிக்கம் அழியும், பல்லாண்டு களாக நசுங்குண்டு கிடக்கும் பாட்டாளிகளும், விவசாயிகளும் மனிதர்களாக வாழமுடியும். இதற்காகவே தான் நாம் இருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம் என்று முழங்கினான் பாரதி. எதற்காக மொழி வாரி மாகாணம் வேண்டும்? மக்கள் ஏன் மொழி வாரி மாகாணம் கேட்கின்றனர்? இதை மறுப்போர் யார்? அவர்கள் உள் எண்ணம் என்ன? என்பவைகளை இனி விளக்கிக் கூறுவோம். மொழிவாரி மாகாணக் குறிக்கோள் பாரதியின் கனவு மொழிவாரி மாகாணம் பிரிவினை உணர்ச்சியை உண்டாக்குவது, மாகாணப் பற்றையும், மாகாண வெறுப்பையும் வளர்ப்பது; இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைப்பது; இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல; என்று பிதற்றுகின்றனர் சிலர். `இப்படிப் புலம்புகின்றவர்கள் யார்? இன்று மத்திய அரசாங்கத்திலே அதிகாரம் வகிப்பவர்கள்தான் இதைப்பற்றி அடிக்கடி அலறுகின்றனர். இன்றைய அரசியல் சட்டப்படி மத்திய அரசாங்கம் சர்வாதிகாரம் படைத்தது. மாகாண அரசாங்கங்கள் வெறும் தல தாபனங்கள் போன்றவை. மத்திய அரசாங்கத்தின் கருணாகடாட்சமின்றி மாகாண அரசாங்கங்கள் நிர்வாகம் நடத்த முடியாது. ஆகையால் மத்திய அரசாங்கத்திலே அதிகாரம் வகிப்பவர்கள் மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு முட்டுக்கட்டையாயிருப்பதில் வியப்பில்லை. இந்நாட்டின் புல்லுருவிகளான நிலப் பிரபுக்கள், ராஜப் பிரமுகர்கள், இந்நாட்டிலே பல பெரிய தொழில்களை நடத்திக் கொள்ளையடிக்கும் அந்நியர்கள், அவர்களுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்கும் கும்பல்கள், ஆகியவர்களும மொழி வாரி மாகாணப் பிரிவினையை எதிர்க்கின்றனர், இவர்கள் மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்புப் பல்லவிக்கு ஏற்றவாறு மத்தளம் அடிக்கின்றனர். ஆனால் இந்த நாடெங்கும் உள்ள எல்லாத் தனித்தனி மொழி பேசும் மக்களும் தனித்தனி மொழிவாரி மாகாணம் வேண்டுமென்றே கேட்கின்றனர். இவர்கள் இவ்வாறு கேட்பதற்குக் காரணம் என்ன? இந்த நாடு குடிஅரசு நாடு; ஜனநாயக நாடு; சுதந்தர நாடு; என்று காங்கிர தலைவர்கள் முழங்குகின்றனர். எங்கும் சுதந்தரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்று உரத்துப் பாடுகின்றனர். ஆனால் சுதந்தரம் வந்தது என்பதற்கான அறிகுறி ஒன்றுமே காணப்படவில்லை. சுதந்தர நாட்டிலே மக்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பாரதி பாடினார். ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை; சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே; வாழி! கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே. இந்தப் பாட்டைப் பாடாத காங்கிரசுக்காரர்கள் இல்லை. ஆனால் சுதந்தரம் வந்த பின்னும் இந்தப் பாட்டைப் பாடு கின்றனர். இந்தப் பாடலை அர்த்த மற்றபாடலாக ஆக்கி விட்டனர். இந்தப் பாடலை அர்த்தம் உள்ள பாட்டாக்குவதற்கு ஆளுவோர் ஒன்றுமே செய்யவில்லை. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! என்று வானதிர முழங்கினார். இன்று என்ன நடக்கிறது? உழவர்கள் உயிருக்குப் போராடுகின்றனர். தொழிலாளர்கள் வாழ்வுக்குப் போராடுகின்றனர். உழவும் தொழிலும் உயர்ந் தோங்கவேண்டுமானால் உழவர்களும் தொழிலாளர்களும் நல்வாழ்வு வாழவேண்டாமா? இனி யொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்; தனி யொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம். என்று பாடினார் பாரதி. இதை எல்லாத் தேச பக்தர்களும் பாடினார்கள். ஆனால் நடப்பதென்ன? வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த அதிகார தர்பார்தான் இன்றும் நடைபெறுகின்றது. அடக்கு முறைக் கொடுமையில் வெள்ளைக்காரன் கெட்டான் என்று பெயர் எடுத்துவிட்டனர் காங்கிரசுக்காரர்கள். இந்த நாட்டு மக்களிலே நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பேர் விவசாயிகள். பாட்டாளிகள்; இவர்கள் வாழ்க் கையிலே எந்த மாறுதலும் ஏற்படவில்லை. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் இருந்ததைவிட பாட்டாளி விவசாயிகளின் இன்றைய வாழ்வு படுமோசம். இந்த நாட்டு விவசாயம் வளர்ச்சியடையவில்லை. நாளுக்கு நாள் நாசமடைந்து வருகிறது. இந்த நாட்டிலே இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமான பெரிய தொழிற்சாலைகள் எதுவும் ஏற்படவில்லை. அந்நிய நாட்டு மூலதனம் - அதுவும் ஆதிக்க வெறிகொண்ட அமெரிக்க மூலதனம் இந்த நாட்டிலே நுழைந்து கொண்டிருக் கிறது; நுழைக்கப்படுகிறது. எந்தெந்தத் துறைகளில் அந்நியர்கள், வெள்ளையர் ஆண்ட காலத்தில் நம்மைச் சுரண்டிக்கொண்டிருந்தார்களோ அந்தத் துறைகளெல்லாம் அப்படியே இருக்கின்றன. இன்னும் எவ்வித மாறுதலும் ஏற்படவேயில்லை. அவர்களுடைய சுரண்டற் கொள்ளை ஒழியவேயில்லை. ஜனநாயகம் எங்கே? இவைகளைப்பற்றிப் பிறகு பேசுவோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லப்படும் இந்த ஆட்சியிலே எல்லா மக்களும் பங்குகொள்ளுவதற்காவது வழியிருக்கிறதா? அரசாங்க நடவடிக்கைகளை நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள முடியுமா? பொது மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் தொடர்புகொண்டிருக்கும் தல தாபனங் கள் - நீதி மன்றங்கள் - சட்ட சபைகள் - இவைகளின் நடவடிக்கைகளைப் பற்றியாவது பொது மக்கள் புரிந்துகொள்ள முடியுமா? முதலில் சட்ட சபையை எடுத்துக்கொள்ளுவோம், வெள்ளைக்காரன் போய் விட்டாலும் நடவடிக்கைகள் எல்லாம் அவனுடைய மொழியில்தான். இன்றைய சட்ட சபையில் ஆங்கிலந் தெரியாத அங்கத்தினர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்கள் அந்த நடவடிக்கைகளை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? இன்றைய சென்னைச் சட்ட சபையிலே மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் இருக்கின்றனர். இவர் களிலே ஆங்கிலம் பேசினால் புரிந்துகொள்ள முடியாதவர்கள் உண்டு. தமிழிலே பேசினால் தமிழர் அல்லாத மற்றவர்களுக்குப் புரியாது. கன்னடத்திலே பேசினால் கன்னடியர் அல்லாத ஏனையோருக்குப் புரியாது. தெலுங்கிலே பேசினால் தெலுங் கரல்லாத பிறருக்கு விளங்காது. ஆகவே இன்றைய சட்ட சபையின் நடவடிக்கைகளிலே எல்லா அங்கத்தினர்களும் எப்படிப் பங்கெடுத்துக்கொள்ள முடியும்? அங்கத்தினர்கள் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நடை பெறும் ஒரு சட்ட சபையை மக்களின் பூரண பிரதிநிதித்துவம் பொருந்திய சபையென்று எப்படிச் சொல்ல முடியும்? எல்லா மக்களுக்கும் புரியும் மொழியில்தான் சட்ட சபை களின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும். இந்த நிலை ஏற்பட வேண்டுமானால் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டாக வேண்டும். சட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்கவேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்கு விளங்கும் மொழியிலேயே நடைபெறவேண்டும். அரசாங்க நிர்வாக நடவடிக்கைகள், தல தாபன நடவடிக்கைகள் எல்லாம் மக்கள் மொழியிலேயே நடத்தப்பட வேண்டும். மக்கள் பேசும் மொழியிலேயே மக்களுக்குக் கல்விப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். இந்த மாதிரி மக்களுக்குப் புரியும் மொழியில்தான் எல்லா நடவடிக்கைகளும் இருக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தால் தான் நாட்டு மக்கள் எல்லோரும் அரசாங்க நடவடிக்கைகளிலே பங்கு கொள்ள முடியும். இத்தகைய அரசாங்கந்தான் உண்மை யான ஜனநாயக அரசாங்கமாக மிளிர முடியும். புதிய தமிழகத்தில் புதிய தமிழகம் உருவானால் எல்லாச் சட்டங்களும் தமிழில்தான் இருக்கும். சட்ட சபையின் நடவடிக்கை தமிழ், இயற்றப்படும் சட்டங்கள் தமிழ். நீதி மன்றங்களின் நடவடிக் கைகள் தமிழ்; நியாயாதிபதிகளின் தீர்ப்புக்கள் தமிழ்; சட்ட வல்லுநர்களின் விவாதங்கள் தமிழ். கல்லூரிகள், கலாசாலைகள் எல்லாம் தமிழ் மயம்; இப்படி எல்லாம் தமிழாகவே விளங்கும்; எங்கும் தமிழே ஆட்சி செய்யும். தமிழ் நாட்டிலே தமிழ்த்தாய் தான் அரியணையிலே அமர்ந்து அரசு புரிவாள். இதுபோலவேதான் கன்னட நாட்டில் கன்னட மொழியே அரசாங்க மொழி: தெலுங்கு நாட்டில் தெலுங்கே அரசாங்க மொழி; கேரளத்தில் மலையாளமே அரசாங்க மொழி; மகாராஷ்டிரத்தில் மகாராஷ்டிரமே அரசாங்க மொழி. குஜராத்தில் குஜராத்தியே அரசாங்க மொழி. இவ்வாறே ஒவ்வொரு மாகாணத்திலும் அந்தந்த மாகாண மொழியே ஆட்சி செலுத்தும். ஒவ்வொரு மொழியினருக்கும் அவரவர்களுடைய மொழியிலேயே கல்விப் பயிற்சி அளிக்கவேண்டும். அதுதான் அவர்களை விரைவிலே அரசியல் சமுதாயத் துறைகளிலே முன்னேறும்படி செய்யும். இத்தகைய கல்வியால்தான் அவர் களிடையிலே சுதந்தர ஆவத்தை வளர்க்க முடியும். அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இல்லாமல் - தங்கள் உழைபபின் பயனைப் பிறர் கொள்ளை கொள்ள விட்டுவிட்டு ஏமாறு வோர்களா யில்லாமல் வாழவும் முடியும். இந்தக் காரணங்களால் தான் சுயநிர்ணய உரிமையுள்ள மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சி வலுத்து வருகிறது. மொழிவாரி மாகாணம் வேண்டும் என்போர் எவரும் இதை மறுக்கவில்லை. வட்டார மொழியிலே சட்ட திட்டங்கள் வேண்டும் அரசாங்க நடவடிக்கைகள் நடைபெற வேண்டும்; என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். ஜனநாயகத்திலே நம்பிக்கையுடையவர்கள் - உண்மையான ஜனநாயக ஆட்சி தோன்றவேண்டும் என்று சொல்லுகிறவர்கள் இதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆகவே மொழிவாரி அடிப்படையில் மாகாணம் பிரிக்க வேண்டும் என்பவர்களின் முதல் நோக்கம் ஜனநாயக ஆட்சி தான்; தேசத்தின் ஆட்சி உண்மையாகவே மக்கள் ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதுதான். மொழிவாரி மாகாணம் கேட்போர் பிற்போக்காளர்கள். மொழிவாரி மாகாணம் கேட்போரும் காங்கிரசுக்காரர்களும் ஒன்றேதான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான கருத்து; காங்கிரசுக்காரர்கள் சொல்லிக்கொண்டு வந்த மொழி வாரி மாகாணம் வேறு. இன்று பொது மக்கள் கேட்கும் மொழிவாரி மாகாணம் வேறு; அடிப்படையிலேயே இரண்டுக்கும் வேற்றுமையுண்டு. இவ்வுண்மையை மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியைக் கண்டு நக்கல் செய்வோர் நன்றாக உணர வேண்டும். மக்கள் கேட்கும் மாகாணம் முப்பதாண்டுக் கிளர்ச்சி மொழிவாரி மாகாணப் போராட்டம் இன்று நேற்றுத் தோன்றிய கிளர்ச்சியன்று. பல்லாண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளத்திலே உதித்தது; பொது மக்களின் மனதிலே புகுந்திருப்பது. இன்று பொது மக்களின் கிளர்ச்சி வடிவத்தில் உருவாகியிருக்கிறது. பொதுமக்கள் உள்ளத்தில் புகுந்து ஊன்றி நிலைத்த கிளர்ச்சி எதுவும் வெற்றி பெறாமற் போனதில்லை. மொழிவாரி மாகாணப் பிரிவினையை இந்திய அரசியல் சட்டம் ஒப்புக்கொள்ளுகிறது. ஆதலால் இதற்குச் சட்டம் குறுக்கே நிற்க முடியாது. வெள்ளையர் அதிகாரம் இந்தியர் கைக்கு மாறுவதற்கு முன் இந்த நாட்டிலே பெரிய அரசியல் கட்சியாக விளங்கியது காங்கிரசு. இந்திய சுதந்திரத்திற்காகக் காங்கிரசு நடத்திய போராட்டங்கள் பல. அந்தக் காங்கிரசு மொழிவாரி மாகாணப் பிரிவினையை ஒப்புக்கொண்டுள்ளது, இந்தியா விடுதலை அடைந்தபின் இப்பொழுதுள்ள மாகாண எல்லைகள் திருத்தி யமைக்கப்படும்; மொழிவாரி அடிப்படையில் - மாகாணங்கள் திருத்தி அமைக்கப்படும்; என்று காங்கிரசு வாக்களித்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக இந்த மொழிவாரி மாகாணப் பேச்சு வேரூன்றி வளர்ந்திருக்கிறது. காந்தியடிகள் காங்கிரசிலே செல்வாக்குப் பெற்றபின் இந்த மொழிவாரி மாகாணப் பிரிவினை வலுவடைந்தது. ஆனால் காங்கிரசுக்காரர்கள் ஒப்புக்கொண்ட மொழிவாரி மாகாண அமைப்பு வேறு. இன்று பொது மக்கள் கேட்கும் மொழிவாரி மாகாண அமைப்பு வேறு. இரண்டுக்கும் அடிப்படையிலே வேற்றுமையுண்டு. புதிய தமிழகக் கோரிக்கையை அதிகார வெறிகொண்ட காங்கிரசுத் தலைவர்கள் ஒத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வேற்றுமையுண்டு. காந்தியடிகள் காலத்தில்தான் அகில இந்திய காங்கிரசு தாபனத்தின் கிளைகள் மொழிவாரி மாகாண அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டன. சென்னை மாகாணத்தை எடுத்துக் கொள்ளுவோம். தமிழ் நாடு காங்கிரசுக் கமிட்டி; கேரளா காங்கிரசுக் கமிட்டி; கர்நாடக காங்கிரசுக் கமிட்டி; ஆந்திரா காங்கிரசுக் கமிட்டி; என்று நான்கு கமிட்டிகளாக அமைக்கப்பட்டிருந்தன. இவைகள் மொழிவாரி மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப் பட்டவை. இவைகளைத் தவிர, திருவாங்கூர் சமதான காங்கிரசுக் கமிட்டி, மைசூர் சமதானக் காங்கிரசுக் கமிட்டி, ஹைதராபாத் சமதானக் காங்கிரசுக் கமிட்டி என்பனவும் தனித்தனியாக இருந்தன. மாகாணங்களில் மொழிவாரியாகத் தனித் தனிக் கமிட்டி களும், சமதானங்களில் தனித் தனிக் காங்கிரசுக் கமிட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தது ஏன்? இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டாலும் சமதானங்கள் அப்படியே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். காங்கிரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட மொழிவாரி மாகாணத்தில் இந்திய சமதானங்களுக்கு எவ்வித ஆபத்து மில்லை. ஆனால் இன்று பொது மக்கள் கேட்கும் மொழிவாரி மாகாணத்தில் சமதானங்கள் சாய்ந்தே போய்விடும்; மகா ராஜாக்களின் ராஜப் பிரமுகர் பதவிகளும் மறைந்து போய்விடும். இதனால் இந்த நாட்டின் நிலப் பிரபுத்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பல தூண்கள் சுக்கு தூறாகச் சிதறிவிடும். சமதானங்கள் ஒழியும் இன்று சென்னை மாகாண மக்கள் கேட்கும் மொழிவாரி மாகாணங்களைப்பற்றி மட்டும் ஆராய்வோம். ஆராய்ந்தால் தான் காங்கிரசார் ஒப்புக்கொண்டிருக்கும் மொழிவாரி மாகாணம் எப்படிப்பட்டது? இவை இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேற்றுமை என்ன? என்பவை நன்றாக விளங்கும். தனி ஆந்திர மாகாணம் வேண்டுமென்று ஆந்திர மக்கள் பல்லாண்டுகளாகக் கிளர்ச்சி செய்து வருகின்றனர். ஆந்திர மகாசபை தோன்றிய கால முதல் இக்கிளர்ச்சியுந்தோன்றி வலுத்து வருகின்றது. தனி ஆந்திர மாகாணக் கிளர்ச்சி இன்று விசால ஆந்திரக் கிளர்ச்சியாக உருவாகி விட்டது. ஆந்திர மொழி பேசும் மக்கள் வாழும் வட்டாரங்கள் அத்தனையையும் ஒன்றுசேர்த்து ஆந்திர மாகாணமாக அமைக்க வேண்டும் என்பதுதான் விசால ஆந்திரக் கிளர்ச்சி. ஹைதராபாத் நைசாமின் கொடுங்கோல் ஆட்சியிலே லட்சக்கணக்கான ஆந்திரர்கள் பல்லாண்டுகளாக நசுங்குண்டு கிடக்கின்றனர். அந்த மக்கள் தங்கள் ஆந்திரத் தாயகத்துடன் சேரவேண்டுமெனத் துடி துடிக்கின்றனர். ஆகவே விசால ஆந்திரக் கிளர்ச்சியிலே ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர மக்கள் வாழும் வட்டாரத்தைச் சேர்க்கும் கொள்கை அடங்கிக் கிடக்கிறது. சம் யுக்த கர்நாடக மாகாணம் கேட்கின்றனர் கன்னடி யர்கள். சம் யுக்த கர்நாடக மாகாணத்தில் - அல்லது ஐக்கிய கன்னடத்தில மைசூர் சமதானம் அப்படியே மறைந்து விடும். ஹைதராபாத்தில அகப்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மொழி பேசும் மக்கள் வாழும் வட்டாரங்களும் சம்யுக்த கர்நாடகத்தில் இணைந்து விடும். கேரள மக்கள் கேட்கும் ஐக்கிய கேரளத்தில் திரு - கொச்சி ராஜ்யம் மறைந்து விடும். கேரள மொழி பேசும் மக்கள் வட்டாரம் அத்தனையும் ஒன்று சேர்ந்தால் தான் ஐக்கிய கேரளமாக முடியும். புதிய ஐக்கிய தமிழகத்தில், தமிழகத்தின் கிழக்குக் கடற் கரையிலே சுமார் முந்நூறு ஆண்டுகளாக உட்கார்ந்திருக்கும் பிரஞ்சு ஏகாதிபத்திய நிலப்பகுதிகள் தாய்த் தமிழகத்துடன் சேர்ந்து விடும். புதுவை, காரைக்கால் வட்டாரத்தில் வாழும் தமிழர்கள் தாயகத்துடன் சேரத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இது போலவே திருவாங்கூர் ராஜ்யத்தின் கீழ் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் பத்து லெட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களும் தாய்த் தமிழகத்துடன் ஒன்று சேருவார்கள்; ஒன்று சேர வேண்டும் என்று அவர்கள் செய்து வரும் கிளர்ச்சி வெற்றி பெறும். சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, புத்தூர், சித்தூர், கங்குந்தி குப்பம் ஆகிய தாலுக்காக்களில் உள்ள மக்களும் தமிழகத்தோடு சேர முடிவு செய்வார்களானால் அதை யாரும் தடுக்க முடியாது. விசால ஆந்திரம் அமைந்தால் - சம்யுக்த கன்னடம் அமைந்தால் ஹைதராபாத் ராஜ்யம் மறைந்து விடும். மைசூர் ராஜ்யமும் மறைந்து விடும். ஐக்யகேரளம் அமைந்தால் - ஐக்கிய தமிழகம் உருவானால் திரு - கொச்சி ராஜ்யம் மறைந்து விடும். தமிழகத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியமும் ஒழிந்து போய்விடும். இந்த நாட்டின் உழவர்களை நசுக்கிப் பிழிந்து அவர்களை நடைப் பிணமாக வைத்திருப்பது நிலப் பிரபுத்துவ அமைப்பு. நிலப்பிரபுத்துவ அமைப்பு இந்த நாட்டில் நிலைத்திருக்கும் வரையிலும் விவசாயமும் வளராது; தொழிலும் வளர்ச்சி யடையாது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் அடிப்டையாக விளங்குகிறவர்கள் ராஜப்பிரமுகர்கள்; அவர்களை அண்டிப் பிழைக்கும் கையாட்கள். இன்றைய ஆட்சியும் நிலப்பிரபுக்களின் செல்வாக்குப் பெற்ற ஆட்சிதான். இத்தகைய நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையைத் தகர்க்க வேண்டுமானால் சமதானங்கள் மறைந்தொழிய வேண்டும். ராஜப் பிரமுகர்கள் பொது மக்களோடு கலந்துவிட வேண்டும். இதற்கு வழி மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்படுவது தான். ஒத்துழைப்பே வேண்டும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தாங்கள் வாழும் பகுதிகளைத் தாங்களே ஆளக்கூடிய சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தனித்தனி மாகாணங்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஒன்றுபட்டுத் தங்கள் விருப்பப்படி நடக்கக் கூடிய ஒரு மத்திய அரசாங்கத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மொழியினரும் இத்தகைய தனி மாகாணம் வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆகவே இந்த மொழிவாரி மாகாணக் கிளர்ச்சி ஒரு அகில இந்தியக் கிளர்ச்சியாக உருவாகிக் கொண்டு வருகிறது. இந்த அகில இந்தியக் கிளர்ச்சியின் ஒரு பகுதிதன் புதிய தமிழகக் கிளர்ச்சியுமாகும். மொழிவாரி மாகாணம் கேட்கும் ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்குள் ஒத்துழைக்க வேண்டும். வங்கத்து மக்கள் மொழி வாரி மாகாணம் கேட்கின்றனர். ஆந்திர மக்கள் மொழிவாரி மாகாணம் கேட்கின்றனர். ஒரியர், மராட்டியர், குஜராத்தியர், கன்னடர், தமிழர், கேரளர் அனைவரும் மொழிவாரி மாகாணம் கேட்கின்றனர். இவர்கள் எல்லோரும் இணைந்து நின்று போராட வேண்டும். இந்த இயக்கம் ஒரு அகில இந்திய இயக்கமாகிப் பொது மக்களை ஒன்று திரட்டினால் தான் வெற்றிக் கொடியை நாட்ட முடியும். எந்த அகில இந்திய இயக்கத்துடனும் கலக்க மாட்டோம். நாங்கள் தனித்து நின்றே மொழிவாரி மாகாணத்துக்குப் போராடுவோம். நாட்டைத் துண்டு போடப் போராடுவோம். அகில இந்திய மக்களின் தயவும் எங்களுக்கு வேண்டாம். ஆதரவும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பரம்பரை வீராதி வீரர்கள். எங்கள் கோரிக்கைதான் எங்களுக்குப் பெரிது; மற்ற மக்களின் கோரிக்கைகளைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று யாரேனும் சொல்லுவார்களானால் அவர்கள் வெறும் ஆர்ப்பாட்டக்காரர்கள்தான். அவர்கள் பொது மக்களின் இன்பதுன்பங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். அவர்களால் செயலாற்றவே முடியாது. மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சிக்குக் கொஞ்சம் முட்டுக்கட்டை போடத் தான் அவர்களால் முடியும். மொழிவாரி மாகாணத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களைப் போலவே உரிமை வேட்கையுடைய மற்ற மக்களுடன் கூட்டுறவு கொள்ள மறுப்பது, அவர்களை அறியாமலே அவர்கள் முயற்சிக்குத் தடையாகத் தான் நிற்கும். இந்த உண்மையை மாகாணப் பிரிவினை வேண்டுவோர் உணர்ந்தாக வேண்டும். இந்த மொழிவாரி மாகாணப் போராட்டத்திலே அந்நிய மூலதன ஒழிப்பும் அடங்கியிருக்கிறது. அந்நிய நாட்டினர் நமது நாட்டிலே பல பெரிய தொழில்களை நடத்துகின்றனர். இதன் மூலம் நமது நாட்டில் தொழில் வளர்ச்சி குன்றுகிறது, நமது நாட்டுச் செல்வம் அந்நிய நாடுகளுக்குக் கொள்ளை போகிறது. இதன் மூலம் அந்நியர் ஆதிக்கமும் இங்கு நிலை கொள்ளுகிறது. இதைப்பற்றிப் பின்னால் விரிவாகக் கூறுவோம். ஆகவே ஐக்கிய தமிழகக் கிளர்ச்சி வெறும் மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியல்ல. பிரிந்து கிடக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பது; நிலப்பிரபுத்துவத்தின் ஆணி வேரைக் கில்லி யெறிவது; அந்நியர் சுரண்டலையும், ஆதிக்கத்தையும் ஒழிப்பது; இந்த மூன்றும் அடங்கியதே புதிய தமிழகக் கிளர்ச்சி. விசால ஆந்திரம்; சம்யுக்த கன்னடம்; ஐக்கிய கேரளம் ஆகிய இயக்கங்களிலும் இந்த மூன்று கொள்கைகளும் அடங்கிக் கிடக்கின்றன. மகாராஷ்டிரம் கூர்ஜரம், பஞ்சாப், வங்கம், அசாம், பீகார், ஒரியா போன்ற தனித்தனி மாகாணங்கள் அமைக்க வேண்டும் என்பதும் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது தான். இதே காரணத்தால் தான் சென்ற முப்பதாண்டுகளாக மொழிவாரி மாகாண அமைப்பை ஒப்புக்கொண்டிருந்தவர்கள் இன்று ஏதேதோ கூறித் தட்டிக் கழிக்கின்றனர். காங்கிரசுத் தலைவர்கள் இன்று மொழிவாரி மாகாணப் பிரிவினையின் பால் அணுகுவதற்கு அஞ்சுகின்றனர். இதற்குக் காரணம் காங்கிரசு கருதிய மொழிவாரி மாகாணத்துக்கும், இன்று பொது மக்கள் கோரும் மொழிவாரி மாகாணத்திற்கும் உள்ள அடிப்படை வேற்றுமைதான். இந்த அடிப்படை வேற்றுமையை அறியாதவர்கள் தான் - அல்லது அறிந்தும் மறைப்பவர்கள் தான் - காங்கிரசின் திட்டமான மொழிவாரி மாகாணமும் பொது மக்கள் கோரும் மொழிவாரி மாகாணமும் ஒன்றெனக் கூறுவர். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முனைவர். நிலப்பிரபுத்துவ ஒழிப்பு உழவன் உரிமை மொழிவாரி மாகாணங்கள் பிரிந்தால்தான் விவசாயம் வளரும்; உணவுப் பொருள் உற்பத்தி பெருகும்; பட்டினிப் பேய்பறந்தோடும். மக்களிடையிலே வாங்கும் சக்தி வளரும். உள்நாட்டுக் கைத்தொழில்கள் ஓங்கும். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியுடன் நிலப்பிரபுத்துவ ஒழிப்புக் கிளர்ச்சியும் இணைந்துள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். நிலம் உழவர்களுக்கு உரிமையாக இருக்கவேண்டும். அல்லது நிலத்திலே வேலை செய்யும் விவசாயிக்கு அந்த நிலத்திலே இணைப்பிருக்கவேண்டும். நிலத்திலே இறங்கி வேலை செய்யாத ஒருவன் நிலம் எனக்குத்தான் உரியது என்று சொல்லிக் கொள்ளுகிறான். தலைமுறை தலைமுறையாக - அல்லது பல்லாண்டுகளாக அந்த நிலத்திலே பாடுபடுகின்றவனை நிலத்தைவிட்டு வெளியேற்றுகிறான். இது இன்றைய நிலை. இது அநியாயம்; அக்கிரமம். இது ஒழிய வேண்டும். நீதி முறைப்படி பார்த்தால் நிலத்தோடு தொடர்பில்லா மலிருக்கும் நிலச் சொந்தக்காரன் தான் வெளியேற்றப்பட வேண்டியவன். எந்தக் கைமாறும் கொடுக்கப்படாமல் வெளி யேற்றப்படவேண்டியவன் அவனேதான். எந்த நிலப்பிரபுவும் பாடுபட்டு உழைத்துப் பணம் சேர்த்து நிலம் வாங்கியவன் அல்லன். சும்மாகிடந்த நிலத்தைத் தன்னுடைய தடியடி தர்பாரின் மூலம் வளைத்துக் கட்டிக் கொண்டவன்தான் நிலப்பிரபு. அல்லது ஏழைக் குடியானவர் களின் உழைப்பைச் சுரண்டி, அந்தச் சுரண்டற் பொருளைச் சிறிய நிலக்காரர்களுக்குக் கடன் கொடுத்து வட்டியைப் பெருக்கி அந்தக் கடனுக்கு ஈடாக அவர்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டவன்தான் நிலப்பிரபு. அல்லது இந்த நாட்டை - இந்த நாட்டு மக்களை வெள்ளையர்கள் சுரண்டுவதற்கு ஆதரவா யிருந்து, அவர்களின் கைக் கூலியாகி, அவர்கள் தயவினால் புறம்போக்கு நிலங்களை யெல்லாம் தனதாக்கிக் கொண்டவன் தான் நிலப்பிரபு. கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டான் கள்வன். அவனிட மிருந்து திருடப்பட்ட பொருள் பறிக்கப்படுகிறது. அச்சமயத்தில் என்னிடமிருந்து பறிக்கப்படும் பண்டங்களுக்காக எனக்கு விலை கொடுத்தாக வேண்டும் என்று அந்தத் திருடன் வீணே வாதாடுகின்றான். இந்த வாதத்தை எவராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? அத்திருடனுக்காகப் பரிவு கொண்டு அவனுக்கு நஷ்ட ஈடு கொடுக்கத்தான் வேண்டும். என்று யாராவது வழக்காட முன் வருவார்களா? திருடனிடமிருந்து பறிக்கப்படும் பொருளுக்கு ஈடு கொடுக்கவேண்டுமென்று எவரேனும் கூறினால் அதைப்போன்ற விதண்டாவாதம் - திமிர்வாதம் ஒன்றும் இருக்கவே முடியாது. இதற்கும் நிலப் பிரபுக்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்பதற்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. நிலப் பிரபுக்களுக் காகப் பரிந்து பேசுவோர் இதைப்பற்றி நிதானமாகச் சிந்திக்க வேண்டும். நடு நிலைமையிலிருந்து சிந்தித்தால் உண்மை விளங்காமற் போகாது. உழுது பயிர்செய்து பண்டத்தை உற்பத்தி செய்கின்ற வனுக்கு நிலத்திலே நிலையான உரிமை இருக்கவேண்டும். உற்பத்தி செய்யும் பண்டத்திலே அவனுக்குச் சரியான பங்கிருக்க வேண்டும். அவனுடைய குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான பங்கிருந்தால் தான் அவன் உற்சாகத்துடன் உற்பத்தியைப் பெருக்குவான். இந்த முறை இன்று நமது நாட்டில் இல்லை. பாடுபட்டுப் பண்டத்தை உற்பத்தி செய்வது நமது கடமை. அந்தப் பலனை அனுபவிக்க முடியாமல் அவதிப்படுவது நமது தலைவிதி. பாடுபடாதவன் அந்தப் பண்டங்களை அள்ளிக் கொண்டுபோய் அனுபவிப்பது அவன் செய்த புண்ணியம் என்று எண்ணியிருந்தகாலம் மலையேறி விட்டது. உழுது பாடுபடுகின்ற விவசாயிகளிலே சிலர் மிகக் குறைந்த நிலத்தை யுடையவர்கள்; பலருக்கு நிலமே சொந்தமில்லை; பலருக்கு உழுகின்ற நிலத்தில் எத்தகைய உரிமையும் இல்லை. அவர்கள் வெறும் கூலிக்காரர்கள். கூலிப்படை ஏறிவெட்டாது என்பது நமது நாட்டுப் பழமொழி. கூத்தாடிக்குக் கிழக்கே கண்; கூலிக்காரனுக்கு மேற்கே கண் என்பதும் ஒரு பழமொழி, கூலிக்காரனுக்கு உற்பத்தியிலே உற்சாகம் இருக்காது என்பதற்கு இப்பழமொழிகளே போதும். புள்ளி விவரம் சென்னை மாகாணத்தை எடுத்துக்கொண்டு மொத்தமாகப் பார்த்தால் 94 சதவிகித விவசாயிகளுக்கு 54 சதவிகித நிலந்தான் சொந்தமாக உள்ளது. ஆனால் 6 சதவிகிதம் உள்ள பட்டா தாரர்களுக்கு - அதாவது மிராசுதாரர்களுக்கு 46 சதவிகித நிலம் சொந்தம். தமிழ்நாட்டில் மாத்திரம் எடுத்துக்கொண்டால் 95 சதவிகித விவசாயிகளுக்கு 56 சதவிகித நிலம் சொந்தம் மீதம் 44 சதவிகித நிலம் 5 சதவிகித மிராசுதார்களுக்குச் சொந்தம். நமது நாட்டிலே 84 சதவிகித மக்கள் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். 95 சதவிகித விவசாயிகள் அத்தனை பேருக்கும் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கணக்குப் பார்த்தால் கூட ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலந்தான் வரும். இந்த இரண்டு ஏக்கர் நிலத்திலே கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும்? தமிழ்நாட்டிலே நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சை ஜில்லாவைமட்டும் எடுத்துக்கொண்டால் போதும். அந்த ஜில்லாவின் பெரும்பாலான நிலங்கள் ஒரு சிலருக்கே சொந்தம். தர்மபுரம் மடத்திற்கு மட்டும் 70 ஆயிரம் ஏக்கர் சொந்தம். திருப்பனந்தாள் மடத்திற்கு 30 ஆயிரம் ஏக்கர்; வடபாதி மங்கலம் முதலியாருக்கு 12 ஆயிரம் ஏக்கர்; பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர்; கபிதலம் மூப்பனார் குடும்பத்திற்கு 5 ஆயிரம் ஏக்கருக்குமேல் சொந்தம். இன்னும் சீர்காழி முதலியார், குன்னியூர் அய்யர், திருவாவடுதுறை ஆதினம் நெடும்பலம் முதலியார், கோட்டூர் முதலியார், உக்கடை தேவர்போன்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் இருக்கின்றனர். தஞ்சை ஜில்லாவிலே எண்ணற்ற விவசாயிகளுக்குச் சொந்த நிலமில்லை. அங்கே நிலத்தில் வரும் லாபத்தை விவசாயி களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையிலே உள்ள பலர் கொள்ளையடிக்கின்றனர். இதே நிலைமை தஞ்சை ஜில்லாவில் மட்டும் இல்லை; தமிழ் நாடெங்கும் இருக்கின்றது. தமிழ் நாட்டில் மாத்திரம் இல்லை; எல்லா மாகாணங்களிலும் இருக்கின்றது. இந்தியா முழுவதிலும் இந்த நிலைமைதான். இந்தக் கொள்ளை முறை மாற்றப்படவேண்டாமா? மக்கள் ஆட்சி ஏற்பட்ட எந்த நாட்டிலும் நிலச் சீர்திருந்தந் தான் முதன் முதலிற் செய்யப்பட்டது. ரஷியாவிலே நிலப் பிரபுத்துவ முறை ஒழிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரிமை வழங்கும் முறையில் நிலச் சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகுதான் உணவுப் பஞ்சம் ஒழிந்தது. புதிய சீனத்திலே முதன் முதல் நிலப் பிரபுத்துவத்தை ஒழித்து நிலச் சீர்திருத்தம் செய்த பிறகுதான் அந்நாட்டு உணவுப் பஞ்சமும் ஒழிந்தது. ஈரானிலே நிலச் சீர்திருத்தம்! எகிப்தில் நிலச் சீர்திருத்தம்! பர்மாவிலே நிலச் சீர்திருத்தம்! நேப்பாளத்திலே நிலச் சீர்திருத்தம்! நிலப் பிரபுத்துவ நெடும்பூதத்தை வெட்டி வீழ்த்துவதே இவைகளின் நோக்கம். இந்திய யூனியனுக்குள் இணைந்திருக்கும் காஷ்மீரத்திலே நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விட்டது. அங்குள்ள விவசாயிகள் இன்று சுதந்தர புருஷர்களாய் விளங்குகின்றனர். இந்திய யூனியனுக்குள் அமைக்கப்படும் ஒவ்வொரு மொழிவாரி மாகாணத்திலும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்; நிலச் சீர்திருத்த முறை நடை முதலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்; இது மொழிவாரி மாகாணம் கேட்கும் பொது மக்கள் கொள்கை. வாங்கும் சக்தி வளர வேண்டுமானால்? நாட்டிலே 84 சதவிகிதமுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். வறுமையின்றி வாழவேண்டும். பணப் புழக்க முடையவர்களாய் வாழவேண்டும். விவசாயிகள் வாங்கும் சக்தி படைத்தவர்களாய் இருந்தால் தான் நெசவாலைகளிலே உற்பத்தியாகும் துணிகள் விலை போகும். நெசவுத் தொழிலாளர்களின் வேலைக்கு நிலையான உத்தரவாதமளிக்க முடியும். விவசாயிகள் படித்தவர்களாகவும், பணமுள்ளவர்களா கவும் இருந்தால்தான் பத்திரிகைகள், புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாகும்; அச்சுக்கலை வளர்ச்சியடையும். பெரும்பான்மை மக்களான விவசாயிகள் கையிலே பணவோட்டம் இருந்தால்தான் நாடகம், சினிமா, பாட்டு, நடனம் போன்ற கலைகள் வளர்ச்சியடையும், பெரும்பான்மை மக்களால் கலைகள் ஆதரிக்கப்படாவிட்டால் கலைஞர்கள் வாழ்வு சிறக்காது. விவசாயிகள் வாங்கும் சக்தி படைத்தவர்களாயிருந்தால் தான் செம்பு, பித்தளை, வெள்ளி, அல்மோனியும் போன்ற பாத்திரத் தொழில்கள் வளர்ச்சியடையும். தோலால் செய்யப் படும் பண்டங்கள், மரத்தால் செய்யப்படும் பண்டங்கள், தயாரிக்கப்பட்ட ஆடைகள், தின்பண்டங்கள், சிறு யந்திரங்கள் எல்லாம் விற்பனையாக வேண்டுமானால் மக்களிடம் வாங்கும் சக்தியிருக்க வேண்டாமா? தச்சு வேலை, கொத்து வேலை போன்ற தொழில்களைச் செய்வோர்க்கும், கல்லறுத்து, ஓடறுத்து அவைகளைச் சூளை யிலே வேக வைக்கும் வேலை செய்வோர்க்கும் நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டுமாயின் கிராமாந்தர விவசாயிகள் கையிலே பணம் நடமாடவேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் புது வீடுகள் கட்டவோ இடிந்த வீடுகளைச் செப்பனிடவோ முடியும். ஆகவே உழவர்களின் வாழ்க்கைத்தரம் உயராத வரையில் இந்த நாட்டில் எந்தக் கைத்தொழிலும் ஏற்றமடையாது; எந்த வியாபாரமும் வளர்ச்சி யடையாது; பாட்டாளிகளின் வாழ்க் கையும் உயராது. வாங்குவோர் இருந்தால்தானே பண்டங்கள் உற்பத்திக்குப் பலன் உண்டு. உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் விற்பனையாகாமல் - அல்லது மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் படாமல் அப்படியே குவிந்து கிடக்குமானால் மேலும் மேலும் பண்டங்களை உற்பத்தி செய்வதால் என்ன பயன்? மடங்கள், கோயில்கள், பெருநிலச் சுவான்தார்கள் ஆகியோரின் நிலங்களை நஷ்டயீடு தராமல் பறிமுதல் செய்தாக வேண்டும். அவைகளை பற்றாக்குறை நிலமுடைய விவசாயி களுக்கும், நிலமற்ற விவசாயிகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். இத்திட்டம் மொழிவாரி மாகாணக் கோரிக்கை யுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. வெறிகள் தணியும் மொழிவாரி மாகாணம் பிரிக்கப்படாமலே நிலப் பிரபுத்துவ முறையை ஒழித்துவிட முடியாதா? இதற்காக ஏன் மொழிவாரி மாகாணங்களாக இந்தியாவைத் துண்டாட வேண்டும்? என்று கேட்கலாம். இது ஒரு கேள்விதான். பல மொழிகள் அடங்கிய இந்திய யூனியனில் - மொழிவாரி மாகாணம் இல்லாவிட்டால் எல்லா மக்களும் அரசியலில் பங்கு கொள்ள முடியாது. ஜனநாயக முறையில் நாட்டின் அரசியலை நடத்த முடியாது. சட்டசபை நடவடிக்கைகளை எந்த மொழியிலே நடத்துவது? நீதி மன்றங்கள் போன்ற அரசாங்க நடவடிக்கைகளை யெல்லாம் எந்த மொழியிலே எழுதி வைப்பது? இவ்வித வழக்குகள் - சண்டைகள் - விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். இன்றுள்ள மொழிச் சண்டை - வகுப்பு வெறுப்பு - முடிவுக்கு வராமல் வளர்ந்துகொண்டே போகும். இந்த மொழிச் சண்டைக்கும், வகுப்பு வெறுப்புக்கும், வகுப்புச் சண்டைக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால் மொழிவாரி மாகாணம் பிரிந்தேயாக வேண்டும். வகுப்புச் சண்டையும், மொழிச் சண்டையும் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள்தான் நிலப்பிரபுத்துவ ஒழிப்புக்கும் மொழிவாரி மாகாணப் பிரிவுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியைக் கிளப்புவார்கள். இந்தக் கேள்வியும் நிலப் பிரபுத்துவத்தைக் காப்பாற்றும் எண்ணங் கொண்டவர்களால் கிளப்பி விடப்படும் கேள்வியே என்பதை மறந்துவிட வேண்டாம். ஏன்? மக்களுக்குள் ஒற்றுமை யின்மையும், மொழிச் சண்டை, வகுப்புச் சண்டை போன்ற வெறிகளும் தாண்டவமாடுகின்ற வரையிலுந்தான் நிலப் பிரபுத்துவம் வாழ முடியும். இவ்வுண்மை அவர்களுக்குத் தெரியும், ஆகையால் நிலப்பிரபுக்களால் தந்திரமாகக் கிளப்பி விடப்படும் கேள்விகளைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம்! அன்னியர் சுரண்டல் கொள்ளை! கொள்ளை! இந்தியா சுதந்தர நாடு என்று சொல்லுகின்றனர் வெள்ளையர் வெளியேறி விட்டனர் என்று முழங்குகின்றனர். இவை மக்களை ஏமாற்றும் மாயமால வார்த்தைகள். நமது நாட்டுச் செல்வத்தை அந்நியர்கள் அள்ளிக் கொண்டு போகின்றனர். இதனாலேயே இந்நாட்டில் தொழில் துறை முன்னேறவில்லை. மக்கள் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. ஏழ்மையும், ஏகாதிபத்தியப் பிடிப்பும் ஏழை மக்களை இன்னற் கடலிலும், ஏக்கக் குழியிலும் தள்ளித் தத்தளிக்கச் செய்கின்றன. ஆகையால் அந்நியர் ஆட்சி அழியவேண்டும். மக்கள் ஆட்சி மலரவேண்டும் இவ்வாறு சுயராஜ்யப் போராட்ட காலத்தில் அனைவரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள். ஆனால் விடுதலை பெற்றுவிட்டோம்; வெள்ளையர்கள் போய்விட்டார்கள் என்று சொல்லும் இக்காலத்தில் நமது நாட்டில் என்ன நடக்கின்றது? இந்தியாவிலே வெள்ளையர்களின் மூலதனம் சுமார் 500 கோடி ரூபாய் இன்னும் இருக்கின்றது, அவர்கள் பல தொழில் களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சுரங்கத் தொழில்கள்; எண்ணெய்க் கிணறுகள்; எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள். சணல் ஆலைகள், இஞ்சினீரிங் தொழிற்சாலைகள், நூல் ஆலைகள், நெசவாலைகள், பாங்குகள், இன்ஷ்யூரன் கம்பெனிகள், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் எல்லாம் இன்னும் வெள்ளையர்களின் ஆதிக்கத்திலேயே கிடக்கின்றன. வெள்ளையர்கள் இந்தியாவில் நடத்திவரும் தொழில் களின் மூலம் - வியாபாரங்களின் மூலம் - அவர்கள் இந்நாட்டில் வைத்திருக்கும் மூலதனங்களின் மூலம் ஒவ்வோராண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சுரண்டிக் கொண்டிருக் கின்றனர். இது போதாதென்று அமெரிக்காவிலிருந்து கம்பெனி களும், தொழிற்சாலைகளும் மூலதனங்களும் இன்னும் இறக்கு மதியாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வோராண்டும், நமது நாட்டிலிருந்து, சுமார் 100 கோடி ரூபாய் வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலே இந்நாட்டில் தொழில்கள் வளர்ச்சியடைவது எப்படி? தமிழ் நாட்டை மட்டும் எடுத்துக் கொள்வோம், பக்கிங்காம் கர்நாட்டிக் மில், ஹார்வி மில், பாரி கம்பெனி, போன்றவைகள் தமிழ் மக்களின் உழைப்பையும், தமிழ் நாட்டின் செல்வத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. எ.ஒ.சி. என்ற அமெரிக்க எண்ணெய்க் கம்பெனி, பி.ஓ.சி. என்ற பிரிட்டிஷ் எண்ணெய்க் கம்பெனி, ஜார்ஜ் ஓக் என்ற மோட்டார் கம்பெனி, பல வியாபாரங்களைச் செய்யும் அடிசன் கம்பெனி, குரோம் லெதர் கம்பெனி, கிராம்டன் கம்பெனி போன்ற இன்னும் பல கம்பெனிகள் தமிழ் நாட்டின் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள பக்கிங்காரம் கர்நாட்டிக் மில் மட்டும் 1951 ஆம் ஆண்டில் சுமார் 41 லட்சத்து 52 ரூபாய் லாபம் அடித்திருக்கிறது. மதுரை ஹார்வி மில்கரர்கள் செந்தமிழ்ப் பாண்டி நாட்டின செல்வத்தைப் பல வழிகளில் வாரிக் குவிக்கின்றனர். பஞ்சு வியாபாரம், நூல் வியாபாரம், காகித உற்பத்தி, பாங்க், இன்ஷியூரன் கம்பெனி, சிமென்ட் கம்பெனி ஆகிய பல துறைகளிலும் அவர்கள் புகுந்து சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். பாங் ஆப் இந்தியா, இம்பீரியல் பாங்க், நாஷனல் பாங்க், மர்க்கென்டைல் பாங்க், லாயிட் பாங்க் போன்ற பல பாங்கு களில் வெள்ளையர் ஆதிக்கமே வேரோடியிருக்கிறது. இதுவா சுதந்திரம்? சென்னை மாகாணத்தில் உள்ள காபித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர் களுக்குச் சொந்தமானவை. 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேற்பட்ட தோட்டங்கள் வெள்ளையர்களுக்கு ஏகபோக உரிமையுள்ளவை. தேயிலை, காப்பித் தோட்டங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 800 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கின்றது. ஆனால் ஏக்கர் ஒன்றுக்கு 8 அணா முதல் 2-8-0 ரூபாய் வரையில் தான் வரி வாங்கப்படுகின்றது. தமிழ் நாட்டு விவசாயிக்கு ஒரு ஏக்கரில் ரூபாய் 100, 200 தான் வருமானம். இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 5 ரூபா முதல் 25 ரூபாய் வரையில் வரி. 1500 ரூபாய் லாபந் தரும் வெள்ளைக்கார முதலாளி நிலத்திற்கு 2தி ரூபாய் வரி. 200 ரூபாய் லாபந் தரும் தமிழ் நிலச்சுவான் தாருக்கு 25 ரூபாய் வரி. இந்த அநியாயத்தை எங்கே போய் எடுத்துச் சொல்லுவது? வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டிலே நடத்தி வரும் தொழில்களை யெல்லாம் தமிழ் நாட்டுக்குச் சொந்தமாக்கித் தீர வேண்டும். வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான தோட்டங் களை யெல்லாம் அத்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டக்காரர்களுக்குச் சொந்தமாக்க வேண்டும். இந்தியாவிலே மூலதனம் போட்டுத் தொழில் நடத்தும் வெள்ளைக்காரர்கள் அவர்கள் போட்ட மூலதனத்திற்கு மேல் எத்தனையோ மடங்கு சம்பாதித்து விட்டார்கள். தோட்ட முதலாளிகளும் அவர்கள் போட்ட மூலதனத்திற்கு மேல் எத்தனையோ பங்கு சம்பாதித்து விட்டார்கள் ஆகையால், அவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டிய அவசியமேயில்லை. தமிழ் நாட்டில் உள்ள வெள்ளையர் தொழிற்சாலைகளும், தோட்டங்களும் நஷ்டஈடு கொடுக்கப்படாமல் புதிய ஐக்கிய தமிழகத்திற்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் செல்வம் தமிழ் நாட்டிலே ஏராளமான இயற்கைச் செல்வம் உண்டு. தமிழ்த் தாய் தன் மடியிலே நமக்குத் தேவையான செல்வங்கள் அவ்வளவையும் வைத்துக்கொண்டிருக்கிறாள். அவற்றை எடுத்து அனுபவிக்கும் அறிவும் திறமையும் நமக்கு இல்லை. தென்னாற்காடு மாவட்ட நெய்வேலிப் பகுதியிலே நிலக்கரி யிருக்கிறது. அது பழுப்பு நிலக்கரி. உலகத்திலே உயர்ந்த நிலக்கரி. ஜெர்மனியின் ரூர்ப்பிரதேசத்திலே உள்ள நிலக்கரியைத் தான் உயர்ந்த நிலக்கரி என்று கூறுவார்கள். முதலாவது யுத்த முடிவிலே அந்த ரூர்ப் பிரதேசம் ஜெர்மனியிடமிருந்து பிடுங்கப்பட்டது. இரண்டாவது யுத்தம் தோன்றுவதற்கு அந்த ரூர்ப் பிரதேச நிலக்கரிதான் காரணம் என்று கூடச் சொல்லிவிடலாம். அத்தகைய ரூர்ப் பிரதேச நிலக்கரியைக் காட்டிலும் தமிழ் நாட்டுத் தென்னாற்காட்டு நெய்வேலிப் பகுதி நிலக்கரி உயர்ந்தது; சிறந்தது; இது நிலக்கரி நிபுணர்களின் தீர்ப்பு. இன்னும் சேலம் மாவட்டத்திலே மலையடி வாரங்களிலும், மற்றும் பல இடங்களிலும் இரும்புச் சுரங்கங்கள் இருக்கின்றன. இரும்பும் நிலக்கரியும் உள்ள இடங்களில் இன்னும் எத்தனையோ செல்வங்கள் உண்டு. இன்று உலகத்தை ஆட்டிவைப்பவை இரும்பும் நிலக்கரியுந்தான். இரும்பின் உதவியைக் கொண்டும், நிலக்கரியைக் கொண்டும் இந்த உலகத்தையே எப்படி வேண்டு மானாலும் மாற்றியமைத்து விடலாம். பணமில்லையா? இத்தகைய தொழில்களை வளர்க்க நமக்கு வலிமை யில்லை; வசதியில்லை. நமது செல்வம் அந்நிய நாட்டுக்குக் கொள்ளை போய்க்கொண்டிருந்தால் நமக்கு வலிமை ஏற்படுவது எங்கே? வசதி ஏற்படுவது எப்படி? அமெரிக்கர், ஆங்கிலேயர், ஜப்பானியர் மூலதனங்கள் நமது நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. நிலக்கரிச் சுரங்கங் களும், இரும்புச் சுரங்கங்களும் அவர்கள் வசம் போய்க் கொண்டிருக்கின்றன. நமது நாட்டுத் தங்கச் சுரங்கங்களும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தில்தான். ஏன் இவைகளில் அன்னியர்களின் ஆதிக்கம் வரவேண்டும்? நமது அரசாங்கமே ஏன் இவைகளை நடத்தக் கூடாது? என்று கேட்டால் பணம் இல்லை; இயந்திர வசதிகள் இல்லை; நிபுணர்கள் இல்லை; என்று கூறுகின்றனர். எதற்கெடுத்தாலும் இப்படியே இல்லை, இல்லை, இல்லையே என்று பல்லவி பாடுகின்றனர். அந்நிய நாட்டுக்குக் கொள்ளை போகும் லாபங்களைத் தடுத்து நிறுத்தினால் - அந்நியர் மூலதனங்களை - அந்நியர் தொழிற்சாலைகளை - தோட்டங்களை யெல்லாம் நமது நாட்டுக்குச் சொந்தமாக்கி விட்டால் பணமில்லை என்ற பல்லவி பறந்து போய்விடும். பணத்தை வீசி யெறிந்தால் எந்த நாட்டி லிருந்தும் தற்காலிகமாக இயந்திரங்களையும், நிபுணர்களையும் வரவழைத்தக் கொள்ளலாம். கூடிய விரைவில் நாமே - நமது நாட்டிலேயே நமக்குத் தேவையான பெரிய இயந்திரங்களையும் - நிபுணர்களையும் உற்பத்தி செய்து கொள்ள முடியும். இது போலவே தான் ஒவ்வொரு மொழிவாரி மாகாணத்திலும் - செய்யப்பட வேண்டும். அந்நியர் சுரண்டலை அப்படியே வைத்துக் கொண்டு மொழிவாரி மாகாணம் பிரிக்கப்படு வதனால் எந்தப் பயனும் ஏற்படாது. ஆகையால் தான் புதிய - ஐக்கிய தமிழகக் கிளர்ச்சியுடன் அந்நியர் மூலதன ஒழிப்புக் கிளர்ச்சியும் அடங்கியிருக்கின்றது. ஒவ்வொரு மொழிவாரி மாகாணமக்களும் அந்நிய மூலதனங்களைத் தேசீய மயமாக்க வேண்டும் என்று ஒன்று பட்டுக் கிளர்ச்சி செய்தால் வெற்றி கிடைப்பது நிச்சயம். அந்நிய மூலதனம் ஒழிந்தால் தான் - அதாவது அந்நிய மூலதனமும் - அதன் மூலம் நடைபெறும் தொழில்களும் நமது நாட்டுக்குச் சொந்தமானால் தான் நமது நாட்டு இயற்கைச் செல்வங்களை நாம் எடுத்து அனுபவிக்க முடியும். இதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணர வேண்டும். இந்திய யூனியனுக்குள் மொழிவாரியாக - அல்லது தேசீய இனவாரியாக மாகாணங்கள் ஏற்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும், அதற்காகச் செய்ய வேண்டிய ஒன்றுபட்ட கிளர்ச்சியைப் பற்றியும் இனி ஆராய்வோம். வெற்றிக்கு வழி கிளர்ச்சி புதிதல்ல இந்தியாவைப் பதினேழு மொழிவாரி மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற திட்டத்தை 1946 ஆம் ஆண்டிலேயே இந்நாட்டு ஜனநாயக வாதிகள் வெளியிட்டனர். இக்கொள்கையை அவர்கள் தங்கள் தேர்தல் திட்டமாகவும் அறிவித்தனர். அந்தப் பதினேழு மாகாணங்களும் தங்கள் அரசியல் நிர்ணய சபையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையளித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்களே அரசியல் நிர்ணய சபையில் இடம் பெறுவர். இந்த மாகாணங்கள் சுய நிர்ணய உரிமையுள்ள மாகாணங்களாக இருக்கும். இந்தக் கொள்கையைக் காங்கிரசுத் தலைவர்கள் ஒப்புக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியாவின் நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும். பாக்கிதான் பிரிவினை கூட ஏற்பட்டி ருக்காது. நமது நாடு இன்றைய பிளவுபட்ட இந்தியாவாக இல்லாமல் ஒரே இந்தியாவாகக் காட்சியளிக்கும். இதுமட்டும் அல்ல; இந்த மொழிவாரி மாகாணக் கொள்கை ஒப்புக் கொள்ளப் பட்டிருந்தால் இன்றைய சர்வாதிகார மத்திய அரசாங்கம் தோன்றியிருக்க முடியாது. மாகாணங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு ஜனநாயக மத்திய அரசாங்கந்தான் ஏற்பட்டிருக்க முடியும். ஜனநாயகக் கட்சிகளின் இன்றைய கொள்கையும் இந்திய யூனியன் 15 மொழி வாரி மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தான். 1. ஐக்கிய தமிழகம் 2. ஐக்கிய கேரளம் 3. சம்யுக்த கன்னடம் 4. விசால ஆந்திரம் 5. மகாராஷ்டிர மாகாணம் 6. கூர்ஜர மாகாணம் 7. ராஜதான் மாகாணம் 8. மத்திய பாரத் மாகாணம் 9. ஒரிசா மாகாணம் 10. பீகார் மாகாணம் 11. வங்காள மாகாணம் 12. அசாம் மாகாணம் 13. உத்தர பிரதேச மாகாணம் 14. பஞ்சாப் மாகாணம் 15. காஷ்மீர் மாகாணம் இவைகள் ஜனநாயக அரசியல் வாதிகள் கோரும் மாகாணங்கள். மொழிவாரி மாகாணம் என்றாலும் தேசீய இனவாரி மாகாணம் என்றாலும் ஒன்றேதான். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் மொழிவாரி அல்லது தேசீய இனவாரி மாகாணங்களைத் தான் விரும்பு கின்றனர். இத்தகைய மாகாணப் பிரிவினையை அகில இந்திய இயக்கங்கள் எல்லாம் ஒத்துக்கொண்டிருக்கின்றன. கம்யூனிடுக் கட்சி, அகில இந்திய சோஷலிடுக் கட்சி, இந்து மகாசபை, முன்னேற்றக் கட்சி, ஆகியவைகள் சுய நிர்ணய உரிமையோடு கூடிய மொழிவாரி மாகாணத்தை ஒத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மொழிவாரி - மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சி யென்பது ஒரு அகில இந்தியக் கிளர்ச்சி; இந்திய மக்கள் எல்லோராலும் வரவேற்கப்படும் கிளர்ச்சி; இந்திய அரசியல் கட்சிகள் எல்லாவற்றாலும் ஒப்புக் கொள்ளப்படும் கிளர்ச்சி. சுமார் முப்பது ஆண்டுகளாக மொழிவாரி மாகாணக் கொள்கையை ஒப்புக் கொண்ட காங்கிரசு ஒன்று தான் இன்று இந்தப் பிரச்சினையைத் தட்டிக் கழிக் கிறது. அகில இந்திய காங்கிரசுத் தலைவர்கள் அதிகார வெறி காரணமாகத் தங்கள் வாக்குறுதியைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டனர். மொழிவாரி மாகாண அமைப்பைத் தள்ளி வைப்பதற்கு ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லுகின்றனர். வெள்ளையர் செய்த சூழ்ச்சி இன்றுள்ள மாகாண அமைப்புக்களை அப்படியே வைத்துக் கொண்டால் மக்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. மத்திய அரசாங்கத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரிகள் தங்கள் அதிகார அட்டகாசத்தை நடத்திக் கொண்டிருக்கத்தான் உதவும். இன்றுள்ள மாகாண அமைப்பு நம்மை அடக்கி ஆண்ட அந்நியர்களால் - வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டது. வேண்டுமென்றே - ஒரு மொழி பேசும் மக்கள் ஒன்று சேராமல் இருக்க வேண்டுமென்பதற்கென்றே பிரிக்கப்பட்டது. ஒரே இனமக்கள் ஒன்று கூட இடமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது. ஒரே இன மக்கள் ஒன்று சேர்ந்து விட்டால் - ஒருமொழி பேசும் மக்கள் ஒன்று சேர்ந்து விட்டால் தங்கள் சுரண்டலும் சூழ்ச்சியும் செல்லாது என்பது வெள்ளையர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் தான் அவர்கள் பலமொழி பேசும் மக்களைக் கொண்ட பலப்பல மாகாணங்களாகப் பிரித்தனர். தங்கள் ஆங்கில மொழியை அரசியல் மொழியாக்கி மக்களையும் நாட்டையும் அடிமைப்படுத்தினர். பொது மக்களுக்கு அரசியல் நடப்புகள் தெரியாதபடி செய்து விட்டனர். ஆங்கிலம் படித்தவர்களைத் தங்கள் கையாட்களாக வைத்துக் கொண்டு யதேச்சாதிகாரம் புரிந்தனர். சுயராஜ்யம் என்றால் அது உண்மையான மக்கள் ஆட்சி யாக விளங்க வேண்டாமா? மொழிவாரியாக மாகாணங்களைப் பிரித்து, மக்களுக்குப் புரியும் மொழியிலே அரசாங்கத்தை நடத்தினால் தானே பாட்டாளியும் விவசாயியும் அரசாங்கத்தை நடத்துவதிலே பங்கு கொள்ள முடியும்? காங்கிரசுக்காரர் களாகட்டும், மற்ற எந்தக் கட்சியினராகட்டும் மொழிவாரி மாகாணத்தை எதிர்ப்பார்களாயின் அவர்களை ஜனநாயக வாதிகள் என்று நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சுய நிர்ணய உரிமையோடு கூடிய மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியை வேண்டாம் என்று வெறுப்போர் யாரும் இல்லை. இந்திய யூனியனில் உள்ள எல்லா மொழியினரும் வரவேற் கின்றனர். ஆதலால் எல்லா மக்களும் சேர்ந்து நின்று தான் இதற்குப் போராட வேண்டும். இத்தகைய அகிய இந்தியப் போராட்டந்தான் வெற்றியளிக்கும். இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தும் போராட்டத்தை அதிகார வர்க்கம் அலட்சியம் செய்துவிட முடியாது. எந்த வித அடக்கு முறை களினாலும் நசுக்கிவிடவும் முடியாது. விட்டுக் கொடுத்தே தீரவேண்டும். அகில இந்திய மக்களின் கோரிக்கையை ஒரு சிறு அதிகாரக் கும்பல் எதிர்க்கு மானால் அந்தக் கும்பல் முறியடிக்கப்படும். மக்கள் தாங்களே தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையைப் பெற்று விடுவார்கள். உலக வரலாறு நமக்கு எடுத்துச் சொல்லும் உண்மை இதுதான். நம்முடைய மாகாண உரிமையைப் பெற - மொழிவாரி மாகாணம் அமைக்க - நாமே தனித்து நின்று போராடி வெற்றி பெறுவோம். இதற்கு மற்றவர்களின் துணை நமக்கு வேண்டாம். முலிம்கள் தனித்து நின்று போராடிப் பாக்கிதான் பெறவில்லையா? இன்று காஷ்மீர மக்கள் தனித்து நின்று போராடி உரிமை பெறவில்லையா? என்று சிலர் கேட்கின்றனர். பாக்கிதான் கிடைத்தது முலிம்கள் பாக்கிதான் பெற்றுவிட்டனர். இந்திய யூனியனுக்குள்ளேயே - இன்றுள்ள அரசியல் சட்டத்தை வைத்துக்கொண்டே காஷ்மீர மக்கள் சுய நிர்ணய உரிமை யுள்ளதுபோன்ற தனி மாகாணம் பெற்றுவிட்டனர். இவை உண்மைதான். ஆனால் இவர்கள் வெற்றியின் இரகசியத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் தான் உண்மை விளங்கும். ஒரு நாட்டின் சுதந்தரப் போராட்டத்திலே பக்கத்து நாடுகள் பரிவு காட்ட வேண்டும். அந்தச் சுதந்தரப் போராட்டத்திலே நீதியிருக்கிறது, உண்மை யிருக்கிறது என்பதை உலக மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தகைய சுதந்தரப் போராட்டங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றன. தன் பக்கத்தில் உள்ளவர்களின் அன்பை - ஆதரவை - அனுதாபத்தைப்பெறா எந்தப் போராட் டமும் வெற்றி பெறாது. இது சுதந்தரப் போராட்டத்தில் அடங்கியுள்ளதொரு தத்துவம். இதனால்தான் சுதந்தரப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தினரும் தங்கள் கோரிக்கைகளைப் பக்கத்து நாட்டினரும், வெளி நாட்டினரும் அறியும்படி செய்கின்றனர். பாக்கிதான் பெற காலஞ்சென்ற ஜின்னா அவர்கள் நடத்திய போராட்டத்திலே இந்தியா முழுவதும் பங்கு கொண்டது. இந்தியாவின் மூலை முடுக்குகளிலே வாழ்ந்த முலிம்கள் அவ்வளவு பேரும் பாக்கிதான் ஜிந்தாபாத் என்று ஒரே குரலாக முழக்கமிட்டனர். இந்தியாவின் வட பகுதியிலே பாக்கிதான் என்ற ஒரு முலிம் ராஜ்யம் ஏற்படுவதனால் தமக்கு ஒரு நன்மையும் இல்லை என்பது தஞ்சாவூர் முலிம்களுக்குப் புரியாததல்ல; திருநெல்வேலி முலிம்களுக்குத் தெரியாததல்ல; சென்னை முலிம்களுக்கு விளங்காததல்ல. ஆயினும் முலிம்கள் பெரும்பான்மை யாக வாழும் மாகாணங்கள் முலிம்களின் ஆட்சியிலேதான் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையிலே நியாயமுண்டு என்பதை இந்தியாவில் உள்ள முலிம்கள் அனைவரும் ஆதரித்தனர். காசி முதல் கன்னியாகுமரி வரை யுள்ள அத்தனை முலிம்களும் பாக்கிதான் இயக்கத்திற்கு ஆதரவாய் நின்றனர். வெளிநாட்டு முலிம்களும் அனுதாபம் காட்டினர். இதனாலேயேதான் பாக்கிதான் போராட்டத்திலே வெற்றி கிடைத்தது. இந்த உண்மையை மறப்பதோ, மறைப்பதோ சரியல்ல. பாக்கிதான் வேண்டாம் பாக்கிதான் பிரிவினைக் கிளர்ச்சி வெறும் இனவெறி யையும் மத வெறியை யும் அடிப்படையாக்கொண்ட கிளர்ச்சி தான். அந்தக் கிளர்ச்சியிலே நிலப் பிரபுத்துவ ஒழிப்புக் கிளர்ச்சி புகுத்தப்படவில்லை. அன்னிய நாட்டு மூலதன ஒழிப்புக் கிளர்ச்சியும் இணைக்கப்படவில்லை. ஆயினும் முலிம் பொது மக்களின் நன்மைக்காகவே - வாழ்வுக்காகவேதான் பாக்கிதான் வேண்டும் என்று முலிம் பொது மக்ளின் உள்ளத்தைக் கவரும்படி பிரிவினைக் கிளர்ச்சிக்காரர்கள் பேசினார் கள். இந்தப் பேச்சுதான் அவர்களுக்குப் பொது மக்களின் ஆதரவைத் திரட்டித் தந்தது. ஆனால் இன்றைய பாக்கிதான் நிலைமை யென்ன? பாக்கிதானில் உண்மையான பாட்டாளி - விவசாயிகளின் ஆட்சி நிலவுகிறதா? பாக்கிதானத்தில் மக்கள் ஆட்சி நிலவு கிறதா? இல்லை, அங்கே நிலப் பிரபுத்துவ - முதலாளித்துவ நவாப் தர்பார்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஜனநாயக ஆட்சிக்கு - மக்கள் ஆட்சிக்குப் பாடுபடும் முற்போக்கு இயக்கங்கள் நசுக்கப்படுகின்றன; முற்போக்கு சக்திகள் குலைக்கப்படுகின்றன; முற்போக்குவாதிகள் பலர் சிறைக்குள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றனர் இந்திய யூனியனில் உள்ள பிரஜா உரிமைகள்கூட அங்கில்லை. நிலப் பிரபுத்துவத்துவ ஒழிப்புக்கு வழி தேடாமல் - அன்னிய மூலதன ஒழிப்புக்கு வழி தேடாமல் தனி நாடு பெற்ற தன் பலனைப் பாக்கிதானத்திலே பார்க்கிறோம். அத்தகைய தனி நாடு பெறுவதனால் யாருக்கு என்ன பலன்? பாக்கி தானத்திலே விவசாயிகளும் பாட்டாளிகளும் வேதனைப்பட்டு வெந்து மடி கின்றனர். நிலப் பிரபுக்களும், தாய் நாட்டை அந்நிய நாட்டுக்கு அடிமைப் படுத்தும் முதலாளிக் கும்பல்களும் பொது மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குதூகலித்துப் பேயாட்டம் ஆடுகின்றனர். இத்தகைய தனி நாடு வேண்டுமா? நிலப் பிரபுத்துவ ஒழிப்பைப்பற்றியும், அன்னிய மூலதன ஒழிப்பைப்பற்றியும் கவலைப்படாமல் தனி நாடு கேட்பவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்களை ஜனநாயகவாதிகள் என்று ஒப்புக்கொள்ள முடியாது. அவர்கள் பாக்கிதான் பிரிவினைக் காரர்களைப் போன்ற மதவெறியர்களாகத் தான் இருக்க வேண்டும். அல்லது இனப்பித்தவர்களாகத் தான் இருக்கவேண்டும். அல்லது மொழி வெறியர்களாகத்தான் இருக்கவேண்டும். வடநாட்டார் தொடர்பற்ற திராவிட நாடு வேண்டும் என்று கேட்கின்றனர் திராவிட இயக்கத்தினர். வடநாட்டார் ஆதிக்க ஒழிப்பு என்ற ஒன்றைமட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு திராவிட நாடு தனியாகப் பிரிவதாகவே வைத்துக்கொள்ளுவோம். அல்லது தமிழ்நாடு தனியாகப் பிரிவதாகவே வைத்துக்கொள்ளுவோம். பிந்தால் இந்த நாட்டிலே யாருடைய ஆட்சி நடக்கும்? கண்டிப்பாக நிலப் பிரபுத்துவ ஆட்சிதான் நடக்கும். அன்னிய நாட்டினருக்கு இந்நாட்டைக் காட்டிக்கொடுக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் துரோகிகள் ஆட்சிதான் நடக்கும். திராவிட இயக்கத்தார் விரும்பும் ஆட்சி முறை ஏற்பட முடியாது. நிலப் பிரபுத்துவ முறைக்கு உலை வைக்காமல் அந்நிய மூலதனத்தைப் பறிப்பதற்கு அடிகோலாமல் ஏற்படும் திராவிட நாட்டிலோ - அல்லது தமிழகத்திலோ இன்றைய இந்திய ஆட்சியைப்போன்ற ஆட்சிதான் நடக்கும். பாக்கிதானத்து ஆட்சியைப் போன்ற ஆட்சிதான் நடக்கும். நிலப் பிரபுக்களும், மாடதிபதிகளும், அன்னிய நாட்டு முதலாளிகளுந் தான் ஆட்சியை நடத்துவார்கள். நாட்டுப் பிரிவினைக்குப் பாடு பட்டவர்களே நசுக்கப்பட்டாலும் படலாம். முற்போக்குச் சக்திகளெல்லாம் சிதைக்கப்படும். இத்தகைய கொடுங்கோ லாட்சிக்கு வழிகோலும் நாட்டுப் பிரிவினை வேண்டுமா? காஷ்மீர் வெற்றி காஷ்மீரத்தின் வெற்றியைக் கவனித்தால் பல உண்மைகள் விளங்கும். காஷ்மீர் முதல் மந்திரி ஷேக் அப்துல்லாவுக்கு மக்களின் பேராதரவு இருந்தது ஒன்று. இரண்டாவது; பாக்கி தான் காஷ்மீரத்தை அடிமைப்படுத்த நினைக்கிறது; நாங்கள் காஷ்மீர மக்களின் சுதந்தரத்தைக் காப்பாற்ற விரும்புகிறோம்; என்று இந்திய அரசாங்கம் சொல்லிக் கொண்டதை மெய்ப் பித்துக் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய சிக்கலான நிலைமையை ஷேக் அப்துல்லா உண்டாக்கி விட்டார். காஷ்மீர மக்களின் கோரிக்கையை - ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையை - இந்திய அரசாங்கம் ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்திய அரசாங்கத்தை உலகம் பழிக்கும். பாக்கிதான் அரசாங்கத்தின்மேல் சுமத்தும் அதே ஆக்கிரமிப்புக் குற்றச் சாட்டை இந்திய அரசாங்கத்தின் மீதும் உலகம் சுமத்தும். ஆகையால் இந்திய அரசாங்கம் ஷேக் அப்துல்லாவுக்கு இணங்கும்படி நேர்ந்தது. காஷ்மீரத்தின் வெற்றியிலே அடங்கியுள்ள மற்றொரு உண்மையை மறந்து விடக்கூடாது. காஷ்மீர விவசாய மக்கள் நிலப்பிரபுத்துவ அமைப்பை ஒழித்துக்கட்ட ஒன்றுபட்டு நின்றனர். தங்கள் உரிமையைப் பெற்றே தீருவதென்ற பிடிவா தத்துடன் பல்லாண்டுகளாகப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்திலே அவர்கள் தங்கள் பச்சை இரத்தத்தையும் பரிமாறினர். அவர்களுடைய உறுதியும் போராட்டமுமே ஷேக் அப்துல்லாவுக்குப் பலத்தையும் ஊக்கத்தையும் ஊட்டின. இதனால்தான் அவர் இந்திய அரசாங்கத்துடன் வாதிட்டு வெற்றி பெற முடிந்தது. ஆகவே எந்தச் சுதந்தரப் போராட்டமும் உள்நாட்டு மக்களின் ஆதரவையும் பெறவேண்டும். உலக மக்களின் ஆதரவையும் பெற வேண்டும். இந்த முறையிலே நடத்தப் பட்டால் தான் விரைவில் வெற்றியடைய முடியும். உலகின் பல பகுதிகளில் நடந்த ஒவ்வொரு சுதந்தரப் போராட்டங்களும் இந்த முறையிலே நடந்து தான் வெற்றி பெற்றன. இந்த உண்மை யைத் தனித்து நின்றுபோராடியே தனி நாடு பெறுவோம் என் போர் உணர வேண்டும். மாகாணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித் தனியே நிற்கவேண்டுமா? அல்லது தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு அந்த உடன்படிக்கையை நடத்திவைக்க ஒரு மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டுமா? என்பதை இனி ஆராய்வோம். தனித்து நிற்க வேண்டுமா? சென்னை மாகாணத்தில் தனி மொழி மாகாணம் வேண்டும் என்ற கிளர்ச்சி இன்று சென்னை மாகாணத்தில்தான் தீவிரமாகியிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக வங்காளத்தைக் கூறலாம், இதற்குக் காரணம் உண்டு. வடநாட்டு மாகாணங்கள் பெரும்பாலானவை ஏறக் குறைய மொழிவாரி அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. தென்னாட்டில் இருப்பது போன்ற அவ்வளவு சிக்கல்கள் அங்கில்லை. சில சிறு மாறுதல்கள் மூலம் அவைகளைத் திருத்தி விடலாம். ஆனால் சென்னை மாகாணம் முக்கியமாக நான்கு மொழி பேசும் மக்களைப் பிணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழர், கேரளர், கர்நாடகர், ஆந்திரர் ஆகிய நால்வரே இவர்கள். இவர்கள் தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து தங்கள் ஆட்சியைத் தாங்களே நடத்த விரும்புகின்றனர். ஆந்திர மாகாணக் கிளர்ச்சி நீண்ட நாட்களாக நடந்து வருகின்றது. சம்யுக்த கன்னடம், ஐக்கிய கேரளம் ஆகிய கோரிக்கைகளும் இன்று வளர்ந்து வலுத்து வருகின்றன. தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்ற கிளர்ச்சியும் நீண்ட நாளைய கிளர்ச்சிதான். ஆயினும் அது ஒரு பொது ஜனக் கிளர்ச்சியாக உருவெடுத்தது 1938 ஆம் ஆண்டில் தான். அப்பொழுது இந்த மாகாணத்தில் திரு. ராஜகோபாலாச் சாரியாரின் காங்கிரசு மந்திரி சபை இருந்தது. அவர் எல்லா உயர்தரக் கலாசாலைகளிலும் முதல் பாரத்திலிருந்து மூன்றாம் பாரம் வரையிலும் இந்தியைக் கட்டாய பாடமாக்கினார். இதனைக் காங்கிரசின் எதிர்க்கட்சியினர், காங்கிரசை எதிர்ப்பதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஜடி கட்சியினரும் அவர்களை ஆதரித்து நின்ற பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைத் தலைமையாகக்கொண்ட சுயமரியாதைக் கட்சியினரும் இந்தியைக் கட்டாயமாக்காதே என்று போராடினர். தமிழ்நாடெங்கும் மாநாடுகள், பொது கூட்டங்கள், ஊர் வலங்கள் நடத்தினர். முதல் மந்திரி ராஜகோபாலாச்சாரியாரின் வீட்டின் முன்னே மறியல் செய்தனர். பின்னர் சென்னையில் இந்து தியாலாஜிகல் உயர்தரக் கலாசாலையின் முன்னே மறியல் செய்தனர். இத்தகைய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைப்பட்டனர். கட்டாய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மொழி வெறுப்புக் கிளர்ச்சியாக மாறியது; வடநாட்டினரை வெறுக்கும் கிளர்ச்சி யாகவும் உருவெடுத்தது. மொழிவெறுப்புக் கிளர்ச்சி இன வெறுப்புக் கிளர்ச்சியாக மாறும்படி நேர்ந்தது வருந்தக் கூடியதே. மக்களையே மக்கள் வெறுக்கும் மனப்பான்மை தவறானது. இந்த மனப்பான்மை மறைவதற்கான வழிகாண வேண்டுவது அறிஞர்கள் கடமை. இச்சமயத்தில் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஓசை பிறந்தது. சில மாதங்களில் இந்த ஓசை திராவிட நாடு திராவிடர்க்கே என்று உருவெடுத்தது. வெறுப்புணர்ச்சி வேண்டுமா? இக்காலத்தில் திராவிட நாடு வேண்டும் என்றவர்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில்லாத தனித்திராவிட நாடு வேண்டும் என்றனர். ஆனால் நேரே இங்கிலாந்துடன் சம்பந்த மிருக்கலாம் என்று கூறினர். வடநாட்டினர் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கேட்டனர். திராவிட நாடு திராவிடர்க்கே என்று முழங்கியவர்கள் பாக்கிதான் இயக்கத்தை ஆதரித்து நின்றது குறிப்பிடத் தக்கது. திராவிட நாடு கேட்போர் இன்னும் தனித்திராவிடமே கேட்கின்றனர். மத்திய அரசாங்கத்திலிருந்து தனியாக நிற்கும் திராவிடமே இவர்கள் வேண்டுவது. ஆனால் திராவிட நாடு என்றால் என்ன? அதன் எல்லையாது? என்றால் சரியான பதில் இல்லை. கன்னியா குமரியிலிருந்து விந்தியமலை வரையிலும் திராவிட நாடு என்பர் சிலர், சென்னை மாகாணமே திராவிடநாடு என்பர் சிலர். தமிழ் நாடே திராவிடநாடு என்பர் சிலர்; தமிழ் நாட்டில் ஒரு ஜில்லாவை - அதாவது தஞ்சாவூர் ஜில்லாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொடுத்தாலும் போதும். அதுவே திராவிட நாடு என்றும் கூறுவர். இவர்கள் வேண்டும் திராவிடநாடு மத்திய அரசாங்கத்தின் இணைப்பிலிருந்து பிரிந்து தனித்திருக்கவேண்டும். மத்திய அரசாங்கம் வட நாட்டினரின் ஆதிக்கத்தில் இருப்பது. ஆகையால் அதன் நாற்றமே கூடாது; என்பதுதான். இத்தகைய திராவிட நாட்டுக் கோரிக்கையிலே சுதந்தர உணர்ச்சி முன்னிற்கின்றது; யாருக்கும் தலைவணங்கோம் என்ற தன்மான உணர்ச்சி தலைதூக்கி நிற்கின்றது. இது தமிழரின் பரம்பரைப் பண்பாடு. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு பாடம் போதிப்பவன் அல்லவா தமிழன்? ஆகையால் இத்தகைய உணர்ச்சி பாராட்டற்குரியதுதான். திராவிட இயக்கத்தாரைப் போலவே தனித் தமிழகம் வேண்டுவோரும் தமிழ்நாட்டில் உண்டு. இவர்கள் தமிழ்நாடு தனியாகப் பிரியவேண்டும். மத்திய அரசாங்கத்தின் தொடர் பின்றி வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் தனித் தமிழகத்தின் ஆட்சி எப்படியிருக்கும் என்பதைப்பற்றி இவர்கள் சரியான பதில் சொல்லுவதில்லை. தமிழரின் தனிச் சிறப்பு தமிழ்நாடு, அல்லது திராவிட நாடு தனித்திருக்க வேண்டும் என்று கூறுவோர் சிறிது சிந்தனை செய்து பார்க்கவேண்டும். தமிழரின் பண்டைப் பண்பாட்டை எண்ணிப்பார்க்கவேண்டும். இது நமது வேண்டுகோள். தமிழன் எக்காலத்திலும் தனிவாழ்வை விரும்பியவன் அல்லன். தமிழன் எதைப்பற்றிப் பேசினாலும் உலகத்தையும் சேர்த்தே தான் பேசுவான், உலகத்தொடர்பை அறுத்துக் கொண்டு, தன்னந்தனியனாய் வாழ வேண்டுமென்று எக்காலத் திலும் தமிழன் எண்ணியதே யில்லை. உலக உருண்டையிலிருந்து தமிழகத்தைத் தனியே கிள்ளி எடுத்துவிட முடியாது என்ற உண்மையைத் தமிழன் மறந்தவன் அல்லன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது திருவள்ளுவருக்கு முன்னிருந்த தமிழன் பேச்சு. எல்லா ஊர்களும் நம்முடைய ஊர்கள் தாம்; எல்லா மக்களும் நம்முடைய உறவினர்கள்தாம். இதுவே அந்தவரியின் பொருள். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காம் உறுவர்கற்றறிந்தார் என்பது திருவள்ளுவர் கூற்று, தாம் இன்பம் அடை வதைப்போல உலகமும் இன்பம் அடைவதற்கு வழி கண்டு, அதைச் செய்வதற்கே விரும்புவார்கள் கல்வியும் அறிவும் உடையவர்கள் என்பதே இந்தக் குறளின் பொருள். பின்னாள் தமிழர்களும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் என்று தான் கூறினார்கள். ஆகவே முன்னாள் தமிழர்களும் பின்னாள் தமிழர்களும், இடைக்காலத் தமிழர்களும், இடைக்காலத் தமிழர்களும் உலகத்தை மறந்தவர்கள் அல்லர். இதுதான் தமிழர் சமுதாயத் திற்குள்ள ஒரு தனிச் சிறப்பு. இன்றைய தமிழர்களும் இந்தப் பரம்பரைப் பண்பை மறந்துவிடக்கூடாது. புதிய - ஐக்கிய தமிழகத்திலே, மக்கள் வாழ்க்கை எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்று விரும்புகின்றோமோ அவ்வாறே மற்றய தனித்தனி மொழிவாரி மக்களின் வாழ்க்கையும் அமைந் திருக்க வேண்டும். அதற்காகத் தமிழன் பாடுபடவேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தமிழனுடைய கொள்கையைச் செயலிலே காட்ட வேண்டுமானால் மற்ற மொழிவாரி மக்களுடன் கூட்டுறவு கொண்டிருக்கத்தான் வேண்டும். இந்தக் கூட்டுறவை வளர்ப்பதற்கு - இந்தக் கூட்டுறவுக்குத் துணை செய்வதற்குத்தான் ஒரு மத்திய அரசாங்கத்தின் கீழ் எல்லோரும் ஒத்த சகோதரர்களாய் இணைந்து நிற்க வேண்டும் என்று கூறுகிறோம். வடநாட்டினருக்குக் கால் பிடிக்கவேண்டும் என்பதோ மத்திய அரசாங்கத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும் என்பதோ ஐக்கிய தமிழகம் வேண்டுவோரின் நோக்கம் அல்ல. இந்திய யூனியன் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மொழிவாரி மக்களும் சுய நிர்ணய உரிமை பெற்ற தனித்தனி மாகாண அரசு பெற்று வாழவேண்டும என்பதே ஐக்கிய தமிழகம் வேண்டு வோரின் கொள்கை. ஒரு மொழி மாகாணம் மற்றொரு மொழி மாகாணத்தைச் சுரண்டுவதற்கும் இடமிருக்கக்கூடாது என்ற கொள்கையும் மொழிவாரி மாகாணப் பிரிவினையுள் அடங்கி யுள்ளது. இத்தகைய கொள்கைக்கு ஆதரவு தரும் ஒரு மத்திய அரசாங்கத்துடன் இணைந்திருப்பதில் தவறென்ன? சர்வாதிகாரமற்ற மத்திய அரசாங்கம் சுய நிர்ணய உரிமையுள்ள மொழிவாரி மாகாணங்கள் ஏற்பட்ட பின்னும் இன்றுள்ள மாதிரியான மத்திய அரசாங்கமே நிலைத்திருக்கும் என்று சிலர் நினைக்கின்றனர்; மத்திய அரசாங்கத்திற்கு இன்றுள்ள சர்வாதிகாரம் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும் என்று எண்ணுகின்றனர். இது தவறு. சுய நிர்ணய உரிமையோடு கூடிய மொழிவாரி மாகாணங்கள் ஏற்பட்டபின் இயங்கும் மத்திய அரசாங்கத்தின் அமைப்பு வேறு. அது இன்றுள்ள சர்வாதிகாரம் படைத்த - எதேச்சாதிகாரங் கொண்ட மத்திய அரசாங்கம்போல இயங்க முடியாது. மாகாண அரசாங்கங்களின்மேல் தான் எண்ணியபடி யெல்லாம் அதிகாரம் செலுத்த முடியாது. மாகாண அரசாங்கங்களின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டே தான் நடந்து கொள்ளவேண்டும். இப்பொழுது மாகாண அரசாங்கங்களை ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் மத்திய அரசாங்கத்தினிடம் இருக்கிறது. இத்தகைய அதிகாரத்தை மத்திய அரசாங்கம் சட்டத்தின் மூலம் பறித்து வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் சுய நிர்ணய உரிமையோடு கூடிய மொழிவாரி மாகாணங்கள் ஏற்படும்போது மத்திய அரசாங்கத்தை இயக்கும் சக்தி மாகாணங்களுக்கு மாறிவிடும். மாகாண அரசாங்கங்களின் முடிவின்படிதான் மத்திய அரசாங்கம் நடந்தாக வேண்டும். இதை மத்திய அரசாங்கத்தின் தொடர்பற்ற தனி நாடு வேண்டும் என்போர் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆகவே மத்திய அரசாங்கத்தின் சேர்க்கையே கூடாது என்று இப்பொழுது பிடிவாதம் செய்யவேண்டிய அவசியமே இல்லை. இந்திய யூனியனில் உள்ள எல்லாத் தேசீய மக்களும் தனித்தனி மொழிவாரி மாகாணம் பெற்று வாழவேண்டும் என்னும் கொள்கையை ஒப்புக் கொள்ளாவிட்டால் - இக் கொள்கைக்கு ஆதரவளிக்காவிட்டால்தான் மத்திய அரசாங் கத்தின் கூட்டுறவற்ற தனி மாகாணம் கேட்கலாம். தமிழ் மாகாணம் - அல்லது திராவிட நாடு பிரிய வேண்டும் என்று விரும்பும் எவரும் மற்ற தேசீய இன மக்களின் கோரிக்கைக்குக் குறுக்கே நிற்கவில்லை. அவர்களின் கோரிக்கைகளையும் ஆதரித்தே நிற்கின்றனர். ஆகையால் மத்திய அரசாங்கத் தொடர்பே கூடாது என்பதைப்பற்றிப் பிடிவாதமின்றி அவர்கள் ஆலோசிக்கவேண்டும். ஆதலால் மத்திய அரசாங்கத்தின் கூட்டுறவே கூடாது என்ற பேச்சு அவசியமற்ற தென்பதே நமது கருத்து. மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்திருக்க விருப்பமில்லா விட்டால் பிரிந்துகொள்ளும் உரிமை எந்தச் சுய நிர்ணய உரிமை யுள்ள மாகாணத்திற்கும் உண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது. மத்திய அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மாகாணங் களில் அந்நியர் சுரண்டலை ஒழிக்கமுடியாது; அந்நியர் சுரண்டலை ஆதரிப்பவர்களே மத்திய அரசாங்கத்தின் கீழ் மொழிவாரி மாகாண கேட்கின்றனர்; என்று கூறுவோர் கூற்றும் சரியானதல்ல என்பதை விளக்குவோம். சுரண்டல் ஏது? அடிமையில்லை சுரண்டல் இல்லை ஒரு மத்திய அரசாங்கத்தின் கீழ் தனித்தனி மொழிவாரி மாகாணங்கள் அமையவேண்டும்; அவைகள் சுயநிர்ணய உரிமை பெற்றவைகளாக இருக்கவேண்டு; என்று கூறுவோரை வடநாட்டுக் கூலிகள்; வடநாட்டுக் கங்காணிகள்; என்று வசை பாடுவதில் அர்த்தமில்லை. மத்திய அரசாங்கத்தோடு இணைந்து நின்றால் வட நாட்டினர் தமிழ் நாட்டைச் சுரண்டியே தீர்வார்கள் என்பதே இவர்களுடைய வாதம். இந்த வாதம் சரிதானா? இதில் உண்மையுண்டா? என்பதை நாம் கவனித்துத்தான் ஆகவேண்டும். இவர்கள் வாதத்தில் உண்மையில்லை என்பதை நாம் எடுத்துக்காட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம். யாரும் யாரையும் சுரண்டுவதற்கு இடமில்லாத அரசியல் அமைப்பே அந்தச் சுயநிர்ணய உரிமையுள்ள மாகாணங்களின் அரசியல் அமைப்பாக இருக்கும். ஒரு இனத்தினர் மற்றொரு இனத்தினர் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே மொழிவாரி மாகாணம் கேட்கப்படுகின்றது. மொழிவாரி மாகாண அமைப்பினால் முதலில் நீண்ட நெடுங்காலமாக உழவர்கள் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் நிலப் பிரபுத்துவத்துக்குப் பாதுகாப்பு அளித்துவரும் சம தானங்கள் ஒழிக்கப்படுகின்றன; ராஜப் பிரமுகர்களுக்கு நிரந்தரமான ஓய்வு கொடுக்கப்படுகின்றது. அவர்கள் நிலைமாறி சாதாரண குடிமக்களாகி விடுகின்றனர். இரண்டாவது, நிலப் பிரபுத்துவமுறை அடியோடு ஒழிக்கப்பட்டு விவசாயிகளின் நிலை உயர்த்தப்படுகின்றது. இதன் மூலம் 84 சதவிகிதமுள்ள விவசாய மக்கள் நீண்டகால அடிமையிலிருந்து நீங்குகின்றனர். அவர்கள் நிலப்பிரபுத்துவச் சுரண்டலிலிருந்து நிலையான விடுதலை பெறுகின்றனர். துன்ப வாழ்விலிருந்து, இன்ப வாழ்வுக்குத் திரும்புகின்றனர். மூன்றாவது, அன்னிய நாட்டு மூலதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவைகள் அரசாங்க உடைமையாக்கப்படு கின்றன. இதைச் செய்வதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்திலும் தேசீயத் தொழில்கள் வளர்ச்சியடையும். தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்குப் போதுமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும். பாட்டாளி மக்களின் உழைப்பை யாரும் சுரண்டமுடியாது. நான்காவது, முதலாளிகளின் லாபம் வரையறுக்கப்படும். இவ்வளவுதான் லாபம் பெறலாம் என்று திட்டம் வகுக்கப்படும். ஆகையால் யாரும் தங்கள் மனம்போனபடி லாபம் என்ற பெயரால் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்ச முடியாது. தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம்; அவர்கள் சம்பள நிர்ணயம்; முதலாளிகளின் லாபக் கொள்ளைக் கட்டுப் பாடு; இவைகள் எல்லாம் ஏற்பட்டால் சுரண்டல் பூதம் மாண்டு மடிந்து போகும். ஐந்தாவது, ஒவ்வொரு மொழிவாரி மாகாணத்திலும் அந்தந்த மாகாண மக்களுக்குத் தான் வியாபாரம் - கைத்தொழில் முதலியவைகளை நடத்துவதில் முதல் உரிமையும், பாதுகாப்பும் அளிக்கப்படும். சமதானங்கள் கலைக்கப்பட்டு, நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு, அந்நியநாட்டு மூலதனங்களும் தொழில்களும் மாகாண அரசாங்கத்தின் வசமாக்கப்பட்டு, முதலாளிகளின் லாபக் கொள்ளையும் வரையறுக்கப்பட்டு விட்டால் சுரண்டல் நிலைத்திருக்க முடியுமா? வட நாட்டினர் தென்னாட்டைச் சுரண்டுவது, தென்னாட்டினர் வடநாட்டைச் சுரண்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த மாகாணத்திலும் சுரண்டுவோர்க்கும் இடமில்லை; சுரண்டப்படுவோர்க்கும் இடமில்லை. ஆகவே, ஐக்கிய தமிழகம் வேண்டுமென்போர் வடநாட்டு அடிமைகள் என்று கூறுவதிலே அர்த்தமில்லை. மொழிவாரி மாகாணங்கள் வேண்டுமென்போர் - தனித் தமிழகத்தின் எதிரிகள் - தனித்திராவிடத்தின் எதிரிகள் என்று வசை கூறுவதிலும் நீதியில்லை; நேர்மையில்லை; உண்மையும் இல்லை. வர்க்க பேத மற்ற ஆட்சியே ஒவ்வொரு மொழியினரும் கேட்பது எத்தகைய சுரண்டலு மற்ற தனிமாகாண அமைப்புத் தான். இன்றுள்ள மத்திய அரசாங்கம் சுரண்டல் கூட்டத்தாரால் ஆட்டிவைக்கப்படுவது; நிலப்பிரபுக்களின் தயவையும், அந்நிய நாட்டினரின் தயவையும் நாடி நிற்பது. எந்த அந்நிய நாட்டுடனும் நாங்கள் சேரமாட்டோம்! நடுநிலைமையிலேயே இருப்போம்! என்று இந்திய அரசாங்கம் பறைசாற்றுகிறது. ஆனால் ஏகாதிபத்திய வெறி கொண்ட பிரிட்டன், அமெரிக்கா, அவைகளை ஆதரிக்கும் நாடுகள் ஆகியவைகளுடன் தான் அதிகமான ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் செய்து வருகின்றது. இந்தப் பிற்போக்கு நாடுகளுடனேயே இந்திய அரசாங்கம் அதிகமாக உறவாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் இத்தகைய பிற்போக்குத் தன்மையை ஒவ்வொரு மொழிவாரி மக்களும் வெறுக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் இன்றைய போக்கினால் இந்தியா முன்னேற முடியாது; இந்தியாவிலே வர்க்கபேத மற்ற சமுதாயம் ஏற்பட முடியாது; இதுவே பொது மக்களின் நம்பிக்கை. ஆதலால் தான் மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஒவ்வொரு மொழிவாரி மக்களும் சுய நிர்ணய உரிமையோடு கூடிய தனி மாகாணம் கோருகின்றனர். திராவிட இயக்கத்தாரின் திராவிட நாட்டுக் கோரிக்கை யிலும் இந்தத் தத்துவம் அடங்கியிருக்கின்றது. தமிழரசுக் கிளர்ச்சிக்காரர்களின் தமிழகக் கோரிக்கையிலும் இந்தத் தத்துவம் அமைந்திருக்கிறது. தனித் தமிழகம் வேண்டுவோரின் கோரிக்கையிலும் இந்தத் தத்துவம் மறைந்திருக்கிறது. மொழிவாரி மாகாணம் கேட்கும், சோஷலிடுகள், பிரஜா கட்சியினர், முன்னேற்றக் கட்சியினர் எல்லோருடைய கோரிக்கையும் மேலே கூறிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். குறைகூறிக் கொள்ள வேண்டாம் ஆகையால் மொழிவாரி மாகாணம் - தனி நாடு கேட்போர் யாரும் ஒருவரை ஒருவர் குறை கூற வேண்டிய அவசியமே யில்லை. ஒருவரை ஒருவர் சந்தேகிக்க வேண்டியதும் இல்லை. எல்லோரும ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டியது தான் மொழிவாரி மாகாணத்தை அடைவதற்கான வழி. இத்தகைய கிளர்ச்சியிலே ஈடுபடாமல் ஒதுங்கி நிற்போர் - ஐக்கிய தமிழகக் கிளர்ச்சிக்காரர்களின் மீது வசைமொழி பாடுவோர் - ஐக்கிய தமிழகக் கிளர்ச்சி முயற்சிக்கு இடையூறு செய்வோர் யாராயிருந்தாலும் சரி! அவர்கள் உண்மையில் மாகாணப் பிரிவினையை விரும்புகிறவர்களா என்பதைப்பற்றி சந்தேகிக்கத்தான் வேண்டும். ஒன்றுபட்ட கிளர்ச்சிதான் வெற்றிதரும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் ஐக்கிய தமிழகக் கிளர்ச்சியில் ஒன்றுபட்ட தமிழகக் கிளர்ச்சியில் - புதிய தமிழகக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்க மாட்டார்கள். தமிழர்கள் எந்தக் கட்சியிலே யிருந்தாலும் சரி அவர்கள் ஐக்கிய தமிழகக் கிளர்ச்சியிலே பங்கு கொள்ளவேண்டும். மற்ற மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியினருக்கும் ஆதரவு காட்ட வேண்டும். மகாராஷ்டிரர்களின் கிளர்ச்சியை - குஜராத்திகளின் கிளர்ச்சியை - தெலுங்கர்களின் கிளர்ச்சியை - கர்நாடகர்களின் கிளர்ச்சியை - கேரளர்களின் கிளர்ச்சியைத் தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்; தமிழர்களின் கிளர்ச்சியை அவர்களும் ஆதரிக்க இதுதான் வழி. இது போன்ற ஒன்றுபட்ட கிளர்ச்சி யினால் தான் மொழிவாரி மாகாணக் கிளர்ச்சி வெற்றி பெற முடியும். மத்திய அரசாங்கம் வேண்டுமா? தனித்து நின்றால் என்ன? ஒவ்வொரு மொழிவாரி மாகாணமும் சுயநிர்ணய உரிமை பெற்று ஆட்சி புரியுமானால் மத்திய அரசாங்கந்தான் எதற்கு? அந்த மத்திய அரசாங்கம் மாகாணங்களுக்கெல்லாம் ஒரு சுமை தானே? அந்த மாகாணங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து பிரிந்து - வெட்டிக் கொண்டு, தனித்தனியாக இயங்கினால் என்ன? சுயநிர்ணய உரிமையுள்ள தனி மாகாணம் என்று சொல்லி விட்டுப் பிறகு மத்திய அரசாங்கத்தின் கீழ் இருப்பது என்பது அடிமைப்புத்தி அல்லவா? என்று பல கேள்விகளை வாரி வீசலாம். இக்கேள்விகளைக் கேட்பவர்கள் இன்னும் சிலகேள்வி களையும் கேட் கின்றனர். அல்லது கேட்கலாம். ஐரோப்பாவிலே பல சிறு சிறு நாடுகள் தனித்தனி அரசுகளாக இல்லையா? அந்தச் சிறு சிறு தனித்தனி அரசுகள் பெரும்பாலும் மொழியையும் இனத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாடுகள் தானே? அவைகளைப் போலவே நாமும் ஏன் சிறு சிறு தனித் தனிநாடுகளாக இருக்கமுடியாது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு ஐம்பத்தாறு தேசங்களாக இருக்கவில்லையா? அந்த ஐம்பத்தாறு தேசங்களும் தனித்தனி வல்லரசுகளாகத் தானே இருந்தன? தமிழ்நாடு மட்டும் சேரநாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்று மூன்று தனித் தனி வல்லரசு நாடுகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கவில்லையா? ஆகையால் மத்திய அரசாங்கம் ஒன்று வேண்டும் என்பது பொருளற்ற பேச்சு. தமிழ்நாட்டை - திராவிட நாட்டை வட நாட்டார் கைப்பிடியில் அடக்கிவைப்பதற் காகவே மத்திய அரசாங்கம் வேண்டும் என்று கூறுகின்றனர். இவர்கள் திராவிடர் களுக்கு - தமிழர்களுக்கு நன்மை செய்கிறவர்கள் அல்லர்; திராவிடர் சமுதாயத் தின் துரோகிகள்; தமிழர் சமுதாயத்தின் துரோகிகள்; என்று ஆத்திரத்துடன் பேசலாம் சிலர். மத்திய அரசாங்கம் ஏன் என்பது பற்றி இவர்களுக்குநாம் தெளிவுபடுத்தியாக வேண்டும். மத்திய அரசாங்கத்தின் நாற்றமே கூடாது; அந்தப் பிணைப்பை வெட்டிக் கொண்டே தீர வேண்டும் என்று பிடிவாதம் பேசினால் எவ்வளவு சமாதானம் கூறினாலும் அவர்களை மாற்ற முடியாது. வாதத்திற்கு மருந்துண்டு; அதைக்கொடுத்து மக்கள் உடம்பில் ஏற்பட்ட வாத நோயைக் குணப்படுத்த முடியும். ஆனால் பிடிவாதத்திற்கு மருந்தில்லை. அது எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. இது அனைவரும் அறிந்த செய்தி. ஆயினும் தனியாட்சிக்காரர் களின் கேள்விகள் சரியல்ல என்பதைப் பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காகவே சமாதானம் கூறுகின்றோம். சர்வதேச சங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு எப்பொழுதுமே அந்நிய நாட்டுப் படையெடுப்பும் பயம் இருந்ததில்லை. ஆகையால் அவர்களுக்கு ஒரு மத்திய அரசாங்கம் வேண்டுமென்ற அவசியம் ஏற்பட வில்லை. அப்படியிருந்தும் அவர்களுக்குள்ளேயே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதைப் பார்த்தோம். தனித்தனி நாடுகளுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் தான் உலக யுத்தமாக மாறியதையும் கண்டோம். ஐரோப்பிய சரித்திரம் பெரும்பாலும் யுத்த சரித்திரமாகத் தான் காணப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? அவர்களுக்குள் சரியான உடன்படிக்கையில்லாமல் இருந்தது; உடன்படிக் கையைச் சில நாடுகள் மீறி நடந்தது; உடன்படிக்கையை மீறாமல் பாதுகாப்பதற்கு ஒரு மத்திய தாபனம் இல்லாமல் இருந்தது. இவைகள்தான் யுத்ததிற்குக் காரணம். யுத்தத்தைத் தடுக்கவும், பல நாடுகளுக்குள் சமாதானம் நிலவவுமே முதல் மகா யுத்தத்திற்குப் பிறகு சர்வதேச சங்கம் என்று ஒன்று ஏற்பட்டது. ஏறக்குறைய இது ஒரு மத்திய அரசாங்கத்தைப் போன்றதுதான். இந்தச் சர்வதேச சங்கம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளாத காரணத்தால் உடைந்து விட்டது. இது உடைந்ததனால் தான் இரண்டாவது யுத்தம் ஏற்பட்டது. இரண்டாவது யுத்தத்தின் முடிவிலும் உலக சமாதனத்தை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சங்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் இன்று சரியாக நடைபெறவில்லை என்பதே பலர் கருத்து. பணக்கார நாடுகளே இந்தச் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலக மத்திய அரசாங்கம் என்பதற்குப் பதிலாக ஏற்பட்டிருக்கும் இந்த ஐ.நா. சங்கமும் சரியான வழியில் நடந்துகொள்ளாவிட்டால் உடைந்து விடும். பழைய சர்வதேச சங்கத்தின் கதியை அடைந்து விடும். இந்த நிலைமை ஏற்பட்டால் மூன்றாவது உலகப் போர் தோன்றி மீண்டும் உலகத்தை அல்லோல கல்லோலப்படுத்திவிடும். இதில் ஐயமில்லை. ஐரோப்பாவில் அடிக்கடி சண்டை நடந்ததற்குக் காரணம், அந்த நாடு களுக்குள் ஏற்படும் வழக்குகளைத் தீர்க்க ஒரு மத்திய தாபனம் இல்லாமல் இருந்தது தான். இந்த உண்மையை அறிந்த பிறகுதான் அவர்கள் தங்கள் நன்மைக்காகவே முதல் பெரும் போருக்குப் பின் சர்வதேச சங்கத்தை நிறுவினர்; அது கலைந்த பின் இரண்டாம் பெரும் போருக்குப் பின் ஐ.நா.வை நிறுவினர். இந்த உண்மையை மறந்துவிடக்கூடாது. உரிமை நிலைக்க வேண்டாமா? இந்தியா பண்டைக் காலத்தில் பல நாடுகளாகப் பிரிந்து கிடந்ததனால் தான் அந்நியர்களின் படையெடுப்புக்கு ஆளாயிற்று. அந்நியர்கள் இந்நாட்டை எளிதிலே கைப்பற்ற முடிந்தது. இந்நாட்டு மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமை யின்றிப் போரிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களே இந்நாட்டின் மீது படையெடுத்து வந்த அன்னியர்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்தனர். தமது பக்கத்து நாட்டு மன்னனைப் பழி வாங்குவதற்கு அந்நிய நாட்டானுக்கு உதவி செய்தனர். இத்தகைய துரோகச் செயல்கள் நிறைந்தவைகளே பிரிட்டிஷார் காலம் வரையிலும் உள்ள இந்திய சரித்திரம். பழைய இந்திய நாட்டு மன்னர்களுக்குள் ஒற்றுமையும், அவர்களுக்குள் ஏற்படும் வழக்குகளைத் தீர்த்து வைக்க எந்தப் பெயராலோ ஒரு மத்திய தாபனமும் இருந்திருந்தால் இந் நாட்டில் அந்நியர் புகுந்து ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியுமா? தமிழ் நாட்டை முடியுடை மூவேந்தர்கள் தனித்தனி வல்லரசுகளாக இருந்து ஆட்சி செய்ததாகச் சரித்திரம் படிக்கிறோம். தமிழ் இலக்கியங்களும் இந்த வரலாற்றைக் கூறுகின்றன. ஆனால் முடியுடை மூவேந்தர்களான சேர,சோழ, பாண்டியர்கள் ஆண்ட காலத்தில் தமிழ் நாட்டின் நிலைமை எப்படியிருந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும். சேர, சோழ, பாண்டியர்கள் தங்களுக்குள் சண்டையின்றி ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் மிகக் குறைந்த காலமேயாகும். பெரும்பாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பகைமையும், பொறாமையும் கொண்டு போர் செய்து கொண்டிருந்த காலந்தான் மிகுதி. இந்த உண்மையைக் காண வேறு சரித்திரச் சான்றுகளை வருந்தித் தேட வேண்டியதில்லை. புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டுப் போன்ற சங்க இலக்கியங்களே இதற்கு ஆதரவளிப்பவை. தமிழ்நாடு சிறு சிறு துண்டு துண்டு அரசாங்கங்களாகப் பிரியாமல் ஒரே ஆட்சியின் கீழ் இருந்திருக்குமானால் உள் நாட்டுப் போர்களால் தமிழ் மக்கள் துன்புற்றிருக்கவே மாட்டார்கள். அல்லது சேர,சோழ, பாண்டியர்களுக்குள், பிணக்கோ பூசலோ ஏற்படும்போது, அதை வளர வொட்டாமல் சமாபதானப் படுத்துவதற்கான ஒரு பொதுக் கழகம் அக் காலத்தில் இருந்திருந்தால் மூவேந்தர்களுக்குள் சண்டை சச்சரவே நேர்ந்திருக்காது. தமிழ் நாட்டில் சமாதானமே நிலைவி யிருந்திருக்கும். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியுடையோர் இவ் வுண்மையை மறுக்க மாட்டார்கள். ஐரோப்பாவில் தனித்தனி நாடுகள் இருப்பதைப்போல இந்தியாவிலும் ஏன் தனித்தனி நாடுகள் இருக்கக்கூடாது என்று கேட்கலாம். அத்தகைய தனித்தனி நாடு இருக்கலாம். இதை மறுப்பார் எவரும் இல்லை. ஆனால் அந்தத் தனித்தனி நாடுகளின் உரிமை நிலைத்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கு அந்நிய நாட்டுப் படையெடுப்பு பயம் இன்னும் இருக்கிறது. இந்தியா ஒன்றாக நின்று தற்பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டால் தான் அந்நிய நாட்டினர் படையெடுப்பைத் தடுக்க முடியும். அந்நியர் படையெடுத்தாலும் சமாளிக்க முடியும். மொழிவாரி மாகாணங்கள் அனைத்தும் சேர்ந்து தங்கள் பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒரு இந்திய யூனியன் - அதாவது மத்திய அரசாங்கம் இல்லையென்று வைத்துக் கொள்ளுவோம். இந்தியாவின் இன்றைய அமைப்புக்கு ஏற்றபடி காஷ்மீரை உள்ளிட்ட தனித்தனி பதினைந்து அரசாங்கங்கள் ஆட்சி புரிகின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். இந்தப் பதினைந்து மாகாணங்களும் எல்லைப்புற சம்பந்தமாகவும், வியாபார சம்பந்தமாகவும், அந்நிய நாட்டுப் படையெடுப்பு சம்பந்தமாகவும் பல ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுவதாகவும் வைத்துக் கொள்ளுவோம். இந்த நிலையிலும் ஒரு மாகாணம் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி நடந்தால் என்ன செய்வது? அதை யார் கேட்பது? அந்நியப் படையெடுப்பு நேரும்போது சில மாகாணங்கள் தேசத்துரோகமாக நடந்து கொண்டால் அதற்கென்ன செய்வது? அதை யார் கேட்பது? தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு ஒவ்வொரு மாகாணமும் நடந்து கொண்டால் தான் அவைகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்கு மதிப்புண்டு, ஒவ்வொரு மாகாணங்களும், பேராசைக்கும் சுயநலத்திற்கும் ஆளாகி ஒப்பந்தங்களை மீறினால் அது இந்திய நாட்டுக்கே ஆபத்தல்லவா? இந்தியா ஐம்பத்தாறு தேசங்களாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கதி மீண்டும் ஏற்படாமல் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாட்டின் பாதுகாப்பு எல்லா வளங்களும் நிறைந்த நாடு இந்தியா. மற்ற நாட்டை எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு இல்லை. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களையெல்லாம் உற்பத்தி செய்து கொள்ளுவதற்கு வேண்டிய மூலப்பொருள்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன. இந்நாட்டின் ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சியாக மட்டும் இருந்தால் உலக மக்களுக்கு வேண்டிய பண்டங்களையெல்லாம் இந்தியாவிலேயே செய்து குவித்து விட முடியும். நீர்வளம் நிலவளம் அற்ற நாட்டில் வாழ்வோர் இந்தியா போன்ற செல்வங் கொழிக்கும் நாட்டைச் சுரண்டுவதற்குத் தான் திட்டமிடுவார்கள். உயர்ந்த பொருளுக்குக் கிராக்கி அதிகம் அல்லவா? இந்தியாவின் மேல் பல அந்நியர்களின் படை யெடுப்புக்கள் நேர்ந்ததற்குக் காரணம் இந்தியாவின் செல்வக் கொழிப்பே என்பதை மறுப்பவர் யார்? இந்தியாவின் மூன்று பக்கமும் திறந்தவெளி. மூன்று பக்கமும் கடற்கரை. இவ்வளவு பெரிய நாட்டைப் பாதுகாப் பதற்குப் பலமான ஏற்பாடு வேண்டும். உதாரணமாக ஐக்கிய கேரளத்தை எடுத்துக் கொள்ளுவோம். ஐக்கிய கேரளம் ஒரு சிறு ராஜ்யமாகத்தான் இருக்கும். அது தனது பாதுகாவலுக்காக ஒரு பெரிய படையை வைத்துச் சமாளிக்க முடியுமா? தமிழ் நாட்டையே எடுத்துக் கொள்ளுவோம்! தூத்துக் குடியிலிருந்து சென்னை வரையிலும் உள்ள நீண்ட கடற்கரைப் பகுதியைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு படை பலம் வேண்டும்? இதற்கு வேண்டிய தரைப்படை, கடற்படை, விமானப் படைகளை வைத்துக் காப்பாற்றுவதென்றால் அதற்கு எவ்வளவு செலவாகும்? நாட்டின் வருமானத்தில் பெரும்பகுதியை இத்தகைய படைப் பாது காப்புக்குச் செலவழித்தால், பொது மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்குப் பணம் செலவழிக்க முடியுமா? முடியாது. இதைப் போலவே ஒவ்வொரு சிறுசிறு ராஜ்யங்களும் படைகளைப் பெருக்கிப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. முதன்மையாக இந்தியாவின் பாதுகாப்புக்காகத் தான் மத்திய அரசாங்கம் வேண்டும் என்பது. இந்தியாவின் பாதுகாப்பு; அந்நிய நாட்டு உறவு; உள்நாட்டு அமைதி, ஆகிய மூன்றே காரியங்கள் தான் மத்திய அரசாங்கத்தின் முதன்மையான வேலையாக இருக்கும். இவைகளிலும் மத்திய அரசாங்கத்தின் அல்லது இந்திய யூனியனின் அதிகாரம் சர்வாதி காரமாக இல்லாமல், மாகாண அரசாங்கங்களின் சம்மதம் பெற்ற ஜனநாயகமாகத் தான் இருக்கும். இத்தகைய இந்திய யூனியனுடன் தான் - இத்தகைய மத்திய அரசாங்கத் துடன் தான் மொழிவாரி மாகாணங்கள் இணைந் திருக்க வேண்டுமென்பது இந்நாட்டு மக்களின் கோரிக்கை - இந்தக் கோரிக்கையை ஆதரிப்பது தான் புதிய - ஐக்கிய தமிழகப் போராட்டமும், ஆகவே புதிய - ஐக்கிய, தமிழகம் மேலே கூறிய படி அமையும் இந்திய யூனியனோடு இணைந்திருப்பதால் தமிழகத்திற்கு என்ன நஷ்டம்? இத்தகைய ஐக்கிய தமிழகத்தை விரும்புவோர் தான் பாதுகாப்புடன் - சுதந்தரத்துடன் என்றும் நிலைத்திருக்கக் கூடிய புதிய - ஐக்கிய தமிழகத்தை விரும்பு கிறவர்கள் இவர்கள்தான் தமிழர் சமுதாயமும், மற்ற சமுதாயங் களும் வர்க்கபேத மற்ற சமுதாயங்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள். இவர்கள் யாருக்கும் யாரையும் அடிமைப்படுத்த விரும்பு கிறவர்கள் அல்லர்; யாருக்கும் யாரையும் காட்டிக் கொடுக்க விரும்புகிறவர்களும் அல்லர்; இந்த உண்மையை மறுக்க முடியாது. புதிய தமிழகத்தில் மக்கள் உரிமை எல்லோரும் சமம் புதிய தமிழகத்திலே குடி உரிமை - அதாவது பிரஜா உரிமை பெற்றவர்கள் அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திலே கவலை கொண்டவர்கள் எல்லோரும் தமிழர்கள். தமிழர் கலையையும், பண்பாட்டையும் ஒப்புக்கொள்ளுகிறவர்கள், இவைகளை வளர்க்கப் பாடுபடுகிறவர்கள் அனைவரும் தமிழர்கள். விவசாயி - பாட்டாளி மக்களின் ஆட்சியே தமிழ் நாட்டு ஆட்சியாக விளங்கவேண்டும் என்பதை முழு மனதுடன் ஒப்புக்கொண்டு இதற்காகப் பணியாற்றுகிறவர்கள் எல்லோரும் தமிழர்கள். இவர்கள் தமிழ் நாட்டில் குடியுரிமை பெற்றுத் தமிழர்களாகவே வாழ்வார்கள். இவர்களிடையே சாதி, மதம் காரணமாக எவ்வித வேற்றுமையும் பாராட்டப்படமாட்டாது. தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் கேடு சூழ்பவர்கள் யாரா யிருந்தாலும் அவர்கள் தமிழின் துரோகிகளாகவே, தமிழரின் எதிரிகளாகவே எண்ணப்படுவார்கள். அவர்களுடைய பிரஜா உரிமை பறிக்கப்படும். இன்றைய தமிழ் நாட்டிலே பல மதத்தினர் வாழ்கின்றனர். இவர்களுள் இந்துக்கள், முலிம்கள், கிறிதுவர்கள் ஆகியோரை முதன்மையாகக் குறிப் பிடலாம். தமிழ் நாட்டில் வாழும் இந்துக்கள், முலிம்கள், கிறிதுவர்கள் அனை வரும் தமிழையே தாய் மொழியாகக் கொண்டவர்கள்; தமிழ்க் கலையையோ, தமிழர் நாகரிகத்தையோ வெறுப்பவர்கள் அல்லர். இந்துக்களைப் போலவே முலிம்களிலும், கிறிதுவர் களிலும் தமிழப் புலமை வாய்ந்தவர்கள் பலர் உண்டு. தமிழ் - தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு உழைபவர்கள் பலர் உண்டு. இவர்கள் மதத்தில் வேறுபட்டிருந்தாலும் இனத்தில் தமிழர்கள் தான். இவர்களுடைய மத சுதந்தரத்திற்கு தமிழகத்தில் யாதொரு ஆபத்தும் ஏற்படாது. யாராயிருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய மது நூல்களைப் படிக்கவும், மதக் கோட்பாடுகளைப் பின் பற்றவும், அவர்களுக்கு நம்பிக்கையுள்ள தெய்வங்களை வணங் கவும் முழு உரிமையுண்டு. இவைவள் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமை. இந்தத் தனிப்பட்ட உரிமைகளிலே புதிய தமிழக ஆட்சி தலையிடக் கூடாது; தலையிடாது. ஆனால் யாராயிருந்தாலும் சரி. சாதியின் பெயரலாலோ, மதத்தின் பெயராலோ, மற்ற மக்களைச் சுரண்டவோ, ஏமாற்றவோ, அடிமைப்படுத்தவோ புதிய தமிழகத்தில் இடமிருக்காது. இந்து மதத்தின் பெயரால் இன்று நடைபெறும் பித்தலாட்டப் பிரசாரங்களுக்கு இடமிருக்காது. இந்து மதக் கோட்பாடுகளின் பெயரால் - புராணங்களின் பெயரால் - தெய்வங்களின் பெயரால் பொது மக்களை மூட நம்பிக்கைப் படுகுழியிலே தள்ள முடியாது. பொது மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் சுரண்ட முடியாது. முலிம்களும் மதத்தின் பெயரால் யாரையும் அடக்க முடியாது, சுரண்ட முடியாது. எந்தப் பொது மக்களின் முன்னேற்றத்தையும் தடைப்படுத்த முடியாது. இதைப்போலவே கிறிதவர்களும் மதத்தின் பெயரால் பொது மக்களின் உழைப்பைக் கொள்ளை கொள்ள முடியாது. சுருங்கக் கூறினால் மதச் சுரண்டல்களுக்குப் புதிய தமிழகத்திலே இட மில்லை. மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு எவரும் உழைப்பற்ற சோம்பேறிகளாக உல்லாச வாழ்க்கை நடத்தப் புதிய தமிழகம் இடம் கொடுக்காது. திராவிட நாடு திராவிட இயக்கத்தாரிலே சிலர் புதிய தமிழக இயக்கத் தைத் திராவிட நாட்டுப் பிரிவினை இயக்கத்திற்கு எதிரான இயக்கம் என்று எண்ணுகின்றனர். இப்படி எண்ணுவது சரியல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக் கிறோம். இன்றுள்ள சென்னை மாகாணம் தனியாகப் பிரிய வேண்டும். சென்னை மாகாணத்தில் தமிழர்களும், ஆந்திரர்களும், கேரளர்களும், கர்நாடர்களும் தனித்தனி ஆட்சி ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த நான்கு ஆட்சியினரும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு மத்திய அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய திராவிடக் கூட்டுறவு ஆட்சிக்கே திராவிட நாடு என்று பெயர். இந்த திராவிட நாட்டுக்கும் இன்றுள்ள மத்திய அராசங்கத்துக்கும் சிறிதும் தொடர்பே இருக்கக் கூடாது. இதுதான் திராவிட இயக்கத்தார் கேட்கும் திராவிட நாடு. இத்தகைய திராவிட நாட்டுக் கிளர்ச்சி ஆந்திர நாட்டில் இல்லை; கன்னட நாட்டில் இல்லை; கேரள நாட்டில் இல்லை; தமிழ் நாட்டில் மட்டுந்தான் இருக்கிறது. அன்றியும் ஆந்திரர் களோ, கன்னடர்களோ, கேரளர்களோ, தமிழ் நாட்டோடு இணைந்து வாழ விரும்ப வில்லை; தனித் தனியாகப் பிரிந்து வாழவே விரும்புகின்றனர். ஆகையால் திராவிட இயக்கத்தார் கோரும் திராவிட நாடு எப்படி ஏற்பட முடியும்? இவ்வாறு கேட்டால் இதற்குத் திராவிட இயக்கத்தார் கூறும் விடை புதிய தமிழக அமைப்பை ஒப்புக் கொள்ளுவ தாகவே இருக்கிறது. நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம். திராவிட நாடு பிரிந்தாலும், அல்லது தமிழ்நாடு மட்டும் பிரிந்தாலும் சரி, அதற்குப் பெயர் திராவிட நாடு தான் தமிழர் என்றாலும் திரவிடர் என்றாலும் ஒன்றே தான், என்று கூறி விடுகின்றனர். இந்த விடைவரவேற்கத்தக்கது. அன்றியும் திராவிட இயக்கத்தின் மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு எதிரிகள் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. உடனடியாக எத்தகைய உருவில் மொழிவாரி மாகாணம் பிரிந்தாலும் அதை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். வரவேற்றே தீர்வார்கள். திராவிட இயக்கத் தலைவர்கள் மொழிவாரி மாகாணப் பிவினையை நாங்கள் எதிர்க்க வில்லை என்பதை எத்தனையோ மேடைகளிலே பேசியிருக்கிறார்கள். அவர் களுடைய பத்திரிகைகளிலே எழுதியிருக் கிறார்கள். புதிய தமிழக மக்களும், விசால ஆந்திர மக்களும், சம்யுக்த கர்நாடக மக்களும், ஐக்கிய கேரள மக்களும் தங்களுக்குள் ஒரு மத்திய அரசாங்கம் அமைத்துக் கொள்ளுவது என்று முடிவு செய்வார்களானால் அதை யாரும் தடுக்க முடியாது! அந்த மத்திய அரசாங்கம் இன்றுள்ள வடநாட்டு மத்திய அரசாங் கத்துக்கு அடங்கியிருக்க முடியாது சமவுரிமையோடு தான் தொடர்பு வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று தீர்மானிக்கு மானால் இதை எவரும் தடுக்க முடியாது. இத்தகைய ஆட்சி அமையுமானால் இது தான் திராவிட நாடு ஆகும். இத்தகைய திராவிடநாடு ஏற்படுவதற்கு மொழிவாரி மாகாணப் பிரிவினை - புதிய தமிழக அமைப்பு எவ்வகையிலும் இடையூறல்ல என்பது திராவிட இயக்கத் தார்க்குத் தெரியாததல்ல. ஆகையால் திராவிட நாட்டுக் கிளர்ச்சிக்குப் புதிய தமிழகக் கிளர்ச்சி எவ்வகையிலும் தடை செய்வதல்ல என்பதை அறிய வேண்டும். மொழியுரிமை புதிய தமிழகத்தில் தமிழ்மொழி தான் அரசாங்க மொழி. புதிய தமிழகத்தில் வாழும் குடி மக்கள் அனைவரும் தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படித்தே தீர வேண்டும். தமிழ் தெரியாதவர்களுக்குக் குடி மக்களுக்குரிய உரிமைகூட வழங்கப் பட மாட்டாது. அவர்கள் வேற்று நாட்டுக் குடிமக்களாகவே கருதப்படுவார்கள். இதைத் தவிர மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த மொழியும் கட்டாயப் படுத்தப்பட மாட்டாது இன்றிருப்பது போன்ற கட்டாய இந்தித் திணிப்புக்கு இடமே இராது. மக்கள் விரும்பினால் எந்த மொழியையும் கற்கலாம். ஆகவே புதிய தமிழகத்தில் ஏமாற்றுக்காரர்களுக்கு இடமில்லை. சுரண்டல் கொள்ளைக்காரர்களுக்கு வழியில்லை. பிறர் உழைப்பிலே வாழும் பித்தலாட்டக்காரர்களுக்கு வாழ் வில்லை. பொது மக்களை அடக்கி நசுக்கிக் கொண்டிருக்கும் அக்கிரமக்காரர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது. இதைத்தவிர தனிப்பட்ட எந்த மக்களின் மத, காலை, நாகரிகக் கொள்கை களுக்கும் எவ்விதத் தடையும் ஏற்படாது. நமது குறிக்கோள் என்ன? வெறும் பிரிவினையால் வினையும் பலன் இதுவரையிலும் கூறியவைகளைக் கொண்டு மொழிவாரி மாகாணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருக் கலாம். மொழிவாரி மாகாணங்களின் முதன்மையான குறிக் கோள் என்ன? என்பதை இப்பகுதியிலே முடிவாகத் தெரிந்து கொள்ளுவோம். மொழிவாரி மாகாணங்கள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதில் இருவகையான கருத்துடையவர்கள் இருக்கின்றனர். 1. அரசாங்க நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்குத் தெரிந்த மொழியிலே நடைபெற வேண்டும். இதற்கேற்றவாறு தனித் தனி மொழி வழங்கும் வட்டாரங்களைத் தனித் தனி மொழிவாரி மாகாணங்களாகப் பிரித்து விட்டால் போதும். 2. இந்த மொழிவாரி மாகாணங்கள் மத்திய அரசாங் கத்தின் கீழ் இன்றுள்ளது போலவே இருந்து வரலாம். 3. பி. பிரிவு ராஜ்யங்களான ராஜப் பிரமுகர்களைக் கெண்ட சமதானங்கள அப்படியே இருந்து வரலாம். அவை களைக் கலைத்து மொழிவாரி மாகாணங் களுடன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இப்பொழுது இல்லை. 4. நிலப் பிரபுத்துவ ஒழிப்பைப்பற்றியோ, அன்னிய நாட்டு மூலதனத்தைப் பறிமுதல் செய்வதைப்பற்றியோ இப்பொழுது கிளப்ப வேண்டாம். மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்ட பிறகு இதைப்பற்றி முடிவு செய்து கொள்ளலாம். 5. ஏ. பிரிவு ராஜ்யங்களை மட்டும் மொழிவாரி மாகாணங் களாகப் பிரித்தால் போதுமானது. (ஏ.பிரிவு ராஜ்யங்கள் என்றால் இன்று மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யப் படும் கவர்னர்களின் கீழ் இருந்து வரும் மாகாணங்கள்.) இத்தகைய மொழிவாரி மாகாணப் பிரிவினையைக் கோரு கின்றவர் ஒரு வகையினர். காங்கிரசுக் காரர்கள் வாக்களித்த மொழிவாரி மாகாண அமைப்பும் இதுதான். பெரும்பாலும் காங்கிரசுக்காரர்கள் வேண்டும் மொழிவாரி மாகாணமும் இதுதான். நாங்கள் கேட்கும் மொழிவாரி மாகாணத்தில் - இனவாரி மாகாணத்தில் ஒரு ஜில்லா அடங்கியிருந்தாலும் போதும். அது மத்திய அரசாங்கத்துடன் இணைந் திருக்கக் கூடாது. சுதந்தரத் தனி நாடாக இருக்கவேண்டும் இதுதான் எங்கள் கோரிக்கை என்போரும் உண்டு. இந்த முறையில் மொழிவாரி மாகாணமோ, தனி நாடோ பிரிக்கப்பட்டால் அதனால் பொது மக்கள் அடையும் பயன் ஒன்றுமேயில்லை. இத்தகைய மாகாணங்களிலே ஜனநாயக ஆட்சி ஏற்பட முடியாது. மக்கள் ஆட்சி மலர இடமில்லை. இத்தகைய மாகாணங்களிலே இரக்கமற்ற நிலப் பிரபுக்கள், பிற்போக்கு முதலாளிகள் வெறிபிடித்த மதவாதிகள், தன்னலங் கொண்ட வகுப்பு வாதிகள் ஆகியோரின் கூட்டு முன்னணிதா கொடுங்கோலாட்சி நடத்தும். இந்தியாவிலே இன்று ஆதிக்கம் பெற்றுள்ள அன்னிய நாட்டு முதலாளிகளால் ஆட்சி வைக்கப் படும் பதுமைகளாகவே இந்த மாகாணங்கள் இருக்கும். மொழிவெறி - அல்லது இனவெறி ஒன்றையே அடிப்படை யாகக்கொண்ட வெறும் நாட்டுப் பிரிவினை முற்போக்குச் சக்திகளை நசுக்குவதற்கே பயன்படும். பாட்டாளி, விவசாயி, ஏழை மக்களின் கிளர்ச்சிகளைப் பாழாக்குவதற்கே பயன்படும் சுருங்கக் கூறினால் ஜனநாயக சக்திகளை ஒடுங்கிப் பண நாயகத்தை நிலை நிறுத்தத்தான் இந்தப் பிரிவினை பயன்படும். இதற்குப் பாக்கிதான் ஆட்சியே போதுமான சான்றாகும். மக்கள் விருஸபம் மாகாணம் ஆகையால் பொது மக்கள் கேட்பது இத்தகைய வறட்டு மாகாணப் பிரிவினை யல்ல. பொது மக்கள்கேட்கும் மொழிவாரி மாகாணம் இதற்கு முற்றிலும் மாறு பட்டது. 1. எந்த வகையிலும் ஒருமொழி பேசும் மக்கள் மற்றொரு மொழி பேசும் மக்களின்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அதாவது ஒரு தேசீய இனம் மற்றொரு தேசீய இனத்தை அடக்கி ஆளக்கூடாது; சுரண்டவும் கூடாது. 2. துண்டு துண்டாக, வேறு வேறு மொழியினரின் ஆதிக்கத்தின் கீழ் பிரிந்து கிடக்கும் ஒரே மொழி பேசும் மக்களையும் அவர்கள் வாழும் வட்டாரங்களையும் ஒன்றாக இணைக்கும் மொழிவாரி மாகாணங்கள் ஏற்படவேண்டும். 3. ராஜப் பிரமுகர்களின் கீழுள்ள பி.பிரிவு ராஜ்யங்கள், அல்லது சமதானங்கள் கலைக்கப் பட்டு, அவைகள் மொழி வாரி மாகாணங்களுடன இணைக்கப்படவேண்டும். சி. பிரிவு ராஜ்யங்களும் மறைந்தாக வேண்டும். 4. நிலப் பிரபுத்துவ முறை டியோடு ஒழிக்கப்படவேண்டும். 5. இந்த நாட்டின் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அன்னிய நாட்டு மூலதனங்களை யெல்லாம் கைமாறு தராமல் பறி முதல் செய்ய வேண்டும். 6. மொழிவாரி மாகாணங்களிலே நிலப் பிரபுத்துவ - முதலாளித்துவ ஆட்சி ஏற்பட இடமில்லாமல் முழு ஜனநாயக ஆட்சி நிலவ வேண்டும். 7. மொழிவாரி மாகாணங்களின் ஆட்சி மக்களுக்குப் புரியும் மொழியீலே, மக்கள் நன்மைக்காகவே, மக்களுடைய ஆட்சியாகவே நடைபெற வேண்டும். 8. ஆண்டான்; - அடிமை; முதலாளி - தொழிலாளி; ஏழை - பணக்காரன்; உயர்ந்தசாதி - தாழ்ந்த சாதி; ப்டித்தவன் - படிக்காதவன்; ஆண் உயர்வு - பெண் தாழ்வு; என்ற வேற்றுமை யில்லாத சமதர்மச் சமுதாயம் ஏற்படவேண்டும் என்பதே மொழிவாரி மாகாணங்க்ளின் நோக்கம். 9. சுய நிர்ணய உரிமையோடு இந்திய யூனியனுடன் கூட்டுறவு கொண்டு சம உரிமையுடன் இந்த மொழிவாரி மாகாணங்கள் இயங்கவேண்டும். இவைபோன்ற ஜனநாயகத் தத்துவங்களை அடிப்படை யாகக் கொண்ட மொழிவாரி மாகாணங்கள் தான் மக்கள் கேட்கும் மொழிவாரி மாகாணங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு தேசீய இனவாரி மாகாணம் என்றாலும் மொழிவாரி மாகாணம் என்றாலும் ஒன்றேதான். இந்நாட்டில் இன்று ஒவ்வொரு இனத்தினரும் அவரவர் பேசும் மொழியினாலேயே அழைக்கப்படுகின்றனர். தமிழ் பேசுவோர் தமிழர்; தெலுங்கு பேசுவோர் தெலுங்கர்; மலையாளம் பேசுவோர் மலையாளிகள்; கன்னடம் பேசுவோர் கன்னடியர்; மராட்டி பேசுவோர் மராட்டியர்; குஜராத்தி பேசுவோர் குஜராத்தியர்; ஒரியா பேசுவோர் ஒரியர்; வங்காளம் பேசுவோர் வங்காளிகள்; இந்த நாட்டில் மட்டும அல்ல; மற்ற நாடுகளிலும் பெரும்பாலும் இப்படித்தான் மொழியின் பெயரே மக்கள் இனத்தைக் குறிக்கும் பெயராக வழங்குவதைக் காணலாம். ஒவ்வொரு மொழி பேசுவோரையும் ஒவ்வொரு இனத்தினராகக் கொள்ளுவதுதான் நடைமுறைக்கும் ஏற்றதாகும். நடை முறையில் உள்ளதுமாகும். தேசீய இனத்தைப் பற்றி முடிவுகட்ட பழம் புராணங்களைத் துருவிக்கொண்டிருக்க வேண்டாம். தமிழ் நாட்டில் இன்று வளர்ந்துவரும் வறுமை ஒழிய வேண்டுமானால் புதிய ஐக்கியம் சுய நிர்ணய அதிகாரம் படைத்ததமிழகம் தோன்றியாகவேண்டும். தமிழ் நாட்டுத் தொழிலாளர்களின் துயரந் தீரவேண்டுமானால், தமிழ்நாட்டுப் பெண்களின் அடிமைத்தனை ஒழியவேண்டுமானால் தமிழ் நாட்டு உழவர்களின் உள்ளக்குமுறல் அடங்கி அவர்களிடையே அமைதியும், ஆநந்தமும் நிலவவேண்டுமானால் புதிய ஐக்கிய - ஒன்றுபட்ட தமிழகத்தை உருவாக்கித் தீரவேண்டும். இத்தகைய பொதுப்பணியிலே தமிழ் நாட்டுக்கலைஞர்கள் பங்கு கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் ஈடுபடவேண்டும்; பத்திரிகசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள் பணி யாற்றவேண்டும். பெண் மக்கள் போதுன முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டும். அரசியல் வாதிகள் முன்னின்றுவேலை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழர்கள் அனைவரும் புதிய ஐக்கிய - ஒன்றுபட்ட தமிழகத்தை உருவாக்குவதே நமது முதல் வேலையென உள்ளத்திலே உறுதி கொள்ளவேண்டும். ஜனநாயகத்திலே நம்பிக்கையும், தமிழ் நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டும் என்ற ஆர்வமும், தமிழ் நாட்டு வாணிகம் வரவேண்டும் என்ற கருத்தும் உள்ள முதலாளிகள், தொழில் நிபுணர்கள், வியாபாரிகள் அனைவரும் புதிய தமிழக இயக்கத்திலே கலந்து கொண்டு முழு மூச்சுடன் உதவி செய்தாக வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்முள், ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு! ஆதலால் ஒழிக வேற்றுமை வாழ்க தமிழர்! வலுப்பெற்று வளர்க புதிய தமிழக இயக்கம்! அனைவரும் ஒன்று பட்டால் புதிய - ஐக்கிய தமிழகத்தை அடைவது உறுதி. வளரும் தமிழ் (1954) முன்னுரை திரு.மு.சண்முகம் பிள்ளை தலைவர். திருக்குறள் துறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை-5. தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் தமிழை முறையாக முயன்று கற்றவர். இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் இவருக்குத் தனிச் சிறப்புண்டு. இவர் காலத்தை வீணாக்காது கடமை புரிந்தவர்; பள்ளியாசிரியர்; பத்திரிகாசிரியர்; முற்போக்கு நோக்கமுடைய எழுச்சி மிக்க எழுத்தாளர்; கவிஞர். இவர் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை. அவற்றுள் செம்பாதிக்குமேல் இதுவரை வெளிவந்துள்ளன. ஏனையவும் நாளடைவில் வெளிவரும் வாய்ப்பும் உள்ளது. சிதம்பரனாரின் மனைவியார், சிவகாமியம்மையார் தம் கணவர் சேர்த்து வைத்துள்ள தமிழ்ச் சொத்துக்களை நன்கு பாதுகாத்து, இடைவிடா முயற்சியுடன் ஒவ்வொன்றாக வெளியிட்டும் வருகின்றார். அம்மையாரின் தொண்டு பெரிதும் போற்றத்தக்கது. இப்பொழுது சிவகாமியம்மையாரால் வெளியிடப்பெறும் புது நூல் வளரும் தமிழ் என்பது. அருமையான பெயர். இந்நூலில் உள்ள கட்டுரைகளுள் முதன்மை யாய், முதலாவது அமைந்துள்ளது வளரும் தமிழ் என்னும் கட்டுரை. அதுவே இந்நூலுக்குப் பெயராய் அமைந்துள்ளது மிகவும் பொருத்தமாம். தமிழ் காலத்தோறும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதனை ஆசிரியர் முதற்கட்டுரையில் விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். அதன் வளர்ச்சி புலவர் பெருமக்கள் பாடிய தனிப்பாடல்களிலும் உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுமுகத்தான் பல தனிப் பாடல்களின் நயங்களை விளக்கும் கட்டுரைகள் அமைந்துள்ளன. இவ்வகைத் தனிப்பாடல்ககளைக் கற்பார் மேன்மேலும் விரும்பும் வகையில் இந்நூலின் பெரும் பகுதியும் ஆற்றுப்படுத்திச் செல்லுகிறது. பதினாறு நற்பேறுகள் போல - சந்திரனது வளர் கலை போலப் பதினாறு கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பத்துக் கட்டுரைகள் வளரும் தமிழில் தனிப்பாடல் நயம் காண்பவை. சத்திமுற்றப் புலவர் (1), இராமச்சந்திர கவிராயர்(2), ஔவையார் (5), பட்டினத்தார் (1), கம்பர் (1) என்போர் பாடிய தனிப் பாடல்களுள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நயப்பொருள் கண்டு சிறந்த முறையில் எல்லாரும் எளிதில் கற்று மகிழும் வண்ணம் எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலையும் விளக்குவதற்காக இவர் எழுதும் அறிமுக-உரை கதை சொல்லுவது போல உள்ளது. மக்களுக்குப் புரியும்படியான உலகியல் நிகழ்ச்சிகளைச் சுவைபட எடுத்துக் கூறித் தாம் விளக்க எடுத்த பாடற்பொருளுடன் இயைபுபடுத்தி, அப்பாடல் பிறந்த சூழலையும் அதனால் பெறப்படும் பொருள் நயங்களையும் அழகுறச் சித்திரித்துக் காட்டுகிறார். ஒரு புதிய அனுபவ உணர்வு, ஒரு புதிய சுவையுணர்வு வெளிப்படும் வகையில் சிதம்பனாரின் வளரும் தமிழ்க் கட்டுரைகள் அமைந்துள்ளன. சங்க காலக் கடவுள்கள், மன்னரும் மக்களும் என்பவை சங்கத் தமிழின்வழி அமைந்த ஆய்வுரைகள். சமுக மாற்றம், பின்னோக்கிச் செல்லும் பெரியார்கள் என்னும் இரண்டும் காலப் போக்கில் நிகழும் மாறுதல்களை வரவேற்று வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவன. பொது மக்களுக்கப் புரியும்படி தமிழ் எழுத வேண்டும்; பொது மக்களுக்குப் புரியும்படி எழுதுவதுதான் வளரும் தமிழ் என்னும் நோக்கம் கொண்டவர் தமிழறிஞர் சாமி சிதம்பரனார். எனவே, இவருடைய வளரும் தமிழ் எல்லா நிலையினரும் கற்று மகிழும் பெற்றி வாய்ந்தன. இத்தகைய இந்த வளரும் தமிழ் மேன்மேலும் வளர்வதாக. சென்னை மு.சண்முகம்பிள்ளை 17-12-76 வளரும் தமிழ் மக்கள் வளர்வதைப் போலவே அவர்கள் மொழியும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அடிமைப்பட்டு வாழும் மக்களின் மொழியிலே வளர்ச்சி காண முடியாது. அடிமைப்பட்ட மக்களின் வாழ்க்கைத் துறைகள் அனைத்துமே மங்கித்தான் கிடக்கும். ஆதலால் அவர்கள் மொழியும் தேய்ந்து போவதில் வியப்பில்லை. தமிழ் மொழியின் வரலாறும் இப்படித்தான் காட்சி அளிக்கின்றது. தமிழ் மக்களின் வாழ்க்கைப் போக்கை ஒட்டியே தமிழும் வளர்ந்து வந்திருக்கின்றது. தமிழர்களின் - தமிழகத்தின் வாழ்க்கையையும் ஒத்துப் பார்ப்போர் இந்த உண்மையை உணர்வார்கள். சங்க காலத்திற்குப் பின்னே தமிழ் வளரவே இல்லை. சங்க காலத்திலிருந்த தமிழுக்கு இணையான தமிழ் இன்று இல்லை. சங்க நூல்களைப் போன்ற நூல்கள் பிறக்கவேயில்லை; சங்க காலப் புலவர்களைப் போன்ற புலவர்கள் பிற்காலத்தில் தோன்றவேயில்லை. தமிழ் வளர்ச்சி என்பது சங்க காலத்தோடு தேங்கி நின்றுவிட்டது என்று சொல்லுவார் உண்டு. இவர்கள் சில சங்கச் செய்யுள்களைப் பற்றி எடுத்துக் கூறி இன்புறுவார்கள். அவற்றின் சொல்நயம் பொருள் நயங்களைப் பற்றிப் போற்றிப் புகழுவார்கள். சங்க நூல்களைப் பற்றியே ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார்கள். மற்றொரு வகையினர் உண்டு. அவர்கள், சங்க நூல்களில் என்ன இருக்கின்றது? அகப் பொருள் நூல்கள் எல்லாம் காதற் பாட்டுக்கள்; புறப் பொருள் நூல்கள் எல்லாம், மன்னர்களைப் பற்றியும், வள்ளல்களைப் பற்றியும், போற்றிப் புகழ்வன; வறுமையுள்ள புலவர்கள், தங்களுக்கு வாழ்வளித்த மனிதர்களைப் பற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவை. இவைகளைத் தவிர வேறு என்ன இருக்கின்றன? என்று சொல்லுகின்றனர். இன்னும் சிலர், கம்பன் காலத்தோடு தமிழ் வளர்ச்சி நின்றுவிட்டது. அவனுக்குப் பின் தமிழன்னை எழுந்து நடமாடவே இல்லை; உட்கார்ந்துவிட்டாள்; உறங்கியும் போனாள் என்று சொல்லுகின்றனர். வேறு சிலர், சங்க காலம் வரையிலும் ஆரியர் ஆதிக்கம் தமிழகத்தில் இல்லை. அதன் பிறகுதான் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்டது. ஆகையால் தமிழ்வளர்ச்சி குன்றிவிட்டது. ஆரியர்கள் தமிழைக் கெடுத்துவிட்டனர்; தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுத்துவிட்டனர் என்று சொல்லுகின்றனர். இவைகள் எல்லாம், உண்மையை ஆராய்ந்து உரைப்பன என கொள்ள முடியாது. மக்கள் வாழ்க்கையைப்பற்றி மட்டும் எண்ணிக் கூறும் மொழிகள் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழ் வளரவே இல்லை என்று சொல்வது தவறு; உண்மைக்கு மாறானது; இதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. தமிழ் மக்கள் எப்படி வாழ்ந்து வந்தோர் களோ அப்படியே தமிழும் வளர்ந்துதான் வந்திருக்கின்றது. மக்கள் வாழ்வையும், அவர்கள் மொழியையும் எப்படிப் பிரிக்க முடியும்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழர்கள் அந்நியர் படை யெடுப்புக்கு ஆளாகவில்லை. அமைதியாக வாழ்வைப்பற்றிச் சித்திரிக்கும் நூல் களே சங்க காலத்து அகப் பொருள் இலக்கியங்கள். தமிழகத்தில் அந்நியர் படையெடுப்பு இல்லையானாலும் தமிழ் மன்னர்களே அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு சண்டைபோட்டுக் கொண்டிருந்தாலும், அம்மன்னர்கள் பொது மக்களுக்குத் தீமை செய்வதில்லை. அவர்களுடைய வாழ்வு நல்வாழ்வாக விளங்குவதற்கு வேண்டிய நற்செயல்களைச் செய்து வந்தனர்; நல்லாட்சி நடத்தி வந்தனர். இவைகளையே புறப்பொருள் நூல்கள் கூறுகின்றன. சங்க காலத்திற்குப் பின்னே தமிழகத்தில் புத்த மதமும், ஜைன மதமும் பரவின. ஜைனத் துறவிகளும், பௌத்த பிட்சுக் களும் வடநாட்டிலிருந்து தமிழ் நாட்டில் புகுந்தனர். அவர்கள் தமிழைக் கற்றுத் தமிழிலேயே பல சிறந்த இலக்கியங்களைச் செய்தனர்; இலக்கணங்களையும் செய்தனர். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி போன்ற சிறந்த காவியங்கள் எல்லாம் இவர்களால் இயற்றப்பட்டவை. நன்னூல், நேமிநாதம், யாப்பருங்கலம் போன்ற இலக்கணங்களும் இவர்களால் இயற்றப்பட்டவை. ஜைனர்களும், பௌத்தர்களும் தமிழுக்கு அளவற்ற பணி புரிந்து வந்திருக்கின்றனர். ஜைன பௌத்த ஆதிக்கத்தை ஒட்டித் தமிழ் வளர்ந்தது. தமிழகத்தில் வைதிய சமயக் கிளர்ச்சி தலையெடுத்தது. அதன் பயனாக ஜைன பௌத்த எதிர்ப்புக் கிளம்பியது. இக்காலத்தில்தான், பிரபந்தங்கள், தேவாரங்கள் பிறந்தன. சைவ வைணவ புராணங்களும் தோன்றின. அறநெறியே - நல்லொழுக்கமே - சிறந்ததென்று சொல்லிய ஜைன பௌத்த மதங்களின் செல்வாக்குக் குறைந்தது. பக்தி மார்க்கமே சிறந்ததென்று போதிக்கும் சைவ வைணவ மதப் பிரசாரம் மேலோங்கியது. இந்தப் பக்தி மார்க்கம் காரணமாக எழுந்த நூல்கள் அளவற்றவை. அவைகள் புராணங்களாக - அந்தாதிகளாக - கலம்பகங்களாக - உலாக்களாக - மாலை களாகப் பல வடிவங்களிலே குவிந்தன. இதுதான் அக்காலத் தமிழ் வளர்ச்சி. ஜைன, பௌத்த மதங்கள் குன்றிச் சைவ வைணவ மதங்கள் தலையெடுத்த காலத்தில், சைவத்திற்கும் வைணவத்திற்குமே சண்டைகள் தொடங்கின. இரு சாராரும் தங்கள் தங்கள் மதமே உயர்ந்தது என்றனர். இக்கொள்கைகளை வைத்துக்கொண்டு இரு சமயவாதிகளும் புராணங்கள் பல புனைந்தனர். இக் காலத்தில்தான் கம்பன் இராமாயணம் பாடினான். அவன் சைவ வைணவச் சண்டையைத் தணிக்கவே அந்நூலைச் செய்தான். இராமாயணம் வைணவ நூலாயினும் அதிலே சைவ மத வெறுப்பைக் காணவே முடியாது. சிவனைப் பற்றிக் குறைத்துப் பேசவேயில்லை. கம்பன் காலத்துக்குப் பின்னும் தமிழ் வளர்ந்து கொண்டு தான் இருந்தது. தமிழகத்தில் மத பக்தி தலையெடுத்து நின்றது. தமிழ் மக்களில் பெரும்பாலோர் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டி ருந்தனர். ஆதலால் புராணங்கள் பெருகின. பல தெய்வங்களைப் பற்றியும் தனித்தனியான தோத்திரப் பாடல்கள் வளர்ந்தன. இந்த முறையிலே தமிழ் நூல்கள் பிறந்தன. வெள்ளையர்களின் ஆதிக்கத்தின்கீழ் நமது நாடு வரும் வரையிலும் இவ்வாறு பக்தி நூல்களே பயிர் செய்யப்பட்டு வந்தன. தமிழிலே இன்றுள்ள நூல்களையெல்லாம் ஒன்று குவித்து எண்ணிப் பார்த்தால் பக்தியைப் புகட்டும் நூல்களே அளவில் மிகுந்து நிற்கும். இதை வைத்துக் கொண்டுதான் இன்றும் சிலர், தமிழ் என்றால் பக்தி மார்க்க மொழி; தமிழ் என்றால் சமய மொழி; தமிழ் என்றால் தெய்வீகத்தை விளக்கும் மொழி; பக்தி இல்லாவிட்டால் தமிழ் இல்லை; சைவம் இல்லா விட்டால் தமிழ் இல்லை; வைணவம் இல்லாவிட்டால் தமிழ் இல்லை என்றெல்லாம் பேசுகின்றனர். தமிழ் வேந்தர் ஆட்சி குலைந்த பின்னரும், வெள்ளைக் காரர்கள் ஆட்சி வருவதற்கு முன்னும் நமது நாட்டிலே நிரந்தர மான ஆட்சி ஒரு பாகத்திலும் வேரூன்றி இருக்கவில்லை. நிலப் பகுதிகள் அடிக்கடி கைமாறிக் கொண்டிருந்தன. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை குடி கொண்டிருந்தது. இக்காலத்திலிருந்த புலவர்கள் புராணங்கள் பாடினர். தெய்வங்களைக் குறித்த தோத்திரங்களைப் பாடினர். தங்களை ஆதரித்த நிலப் பிரபுக்களின் மேல் பல பிரபந்தங்களைப் பாடினர். அவைகள் கோவை, உலா போன்ற நூல்களாக காட்சியளிக்கின்றன. இந்நூல்கள் எல்லாம் மதத்தைப் பரப்புவதாக இருக்கலாம்; தனிப்பட்ட பெரிய மனிதர்களைப் பாராட்டுவதாக இருக்கலாம். ஆயினும் அவைகளிலே அந்நாள் தமிழக மக்களின் வாழ்க்கை நிலையையும் காணலாம். அந்நூல்களைப் பாடிய புலவர்கள் தமிழக நிலையை மறந்துவிடவில்லை. அந்நூல்களைப் படிப் போர் இவ்வுண்மையைக் காண்பர். மற்றொரு செய்தி குறிப்பிடத் தக்கது. அது, தனிப் பாடல் களைப் பற்றியதுதான். பல புலவர்கள் ஒவ்வொரு சமயங்களிலே தனிப் பாடல்கள் பாடியிருக்கின்றனர். அவைகள் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரிலும், தனிச் செய்யுள் சிந்தாமணி என்ற பெயரிலும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இத்தனிப் பாடல்களிலே ஜீவன் உள்ள பாடல்கள் எத்தனையோ உண்டு. அவைகள் இன்றும் உயிர் வாழ்ந்து வருகின்றன. அவைகள் பல உண்மைகளை உணர்த்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே தமிழ் வளரவில்லை என்று சொல்லுவதிலே பொருள் இல்லை. வளர்ந்துதான் வந்திருக்கின்றது. ஆனால் பாரதியார் அறிவிக்கும் முறையிலே தமிழ் இன்னும் வளர வில்லை. அவர் பாட்டைத்தான் திருப்பித் திருப்பி பாடுகின்றோம். அப்பாட்டின் பொருளை முழுவதும் பின்பற்றவில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும். இந்த முறையில் தமிழ் வளர்கின்றதா? இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும். உயிருள்ள பாட்டு பாட்டுக்கு உயிர் உண்டு. உயிருள்ள பாடல்கள்தான் எப்பொழுதும் நடமாடிக் கொண்டிருக்கும். பலருடன் ஒன்று கூடிப் பழகும்; பலரிடம் அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும். பாட்டுக்கு உயிர் என்பது குறிக்கோள்; அதாவது இலட்சியம் அல்லது நோக்கம். தனி பாடலானாலும் சரி, அல்லது தனியொரு நூலானாலும் சரி, அதில் குறிக்கோள் இருந்தால்தான் - ஏதோ ஒரு இலக்கை நோக்கி இழுத்துக் கொண்டு போவதாயிருந்தால்தான் அது இலக்கியமாகும். இத்தகைய நூலோ பாட்டோதான் மக்களிடையே தாராளமாக நடமாடும். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது என்று ஒரு பழமொழி உண்டு. இதைப் போல இலக்கியத்தைப் பற்றிக் கூட ஒரு சிலர் எதையோ நினைத்துக்கொண்டு என்னமோ பேசுகிறார்கள். இலக்கியத்தில் பிரசாரம் கூடாது; இலக்கியம் இலக்கியமாகவேதான் இருக்க வேண்டும் என்று சொல்லு கின்றனர். குறிக்கோள் இல்லாதது - ஒரு இலட்சியத்தைக் கொண்டி ராதது இலக்கியம் ஆகாது என்பது பெரும்பாலோரால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. குறிக்கோளைக் கொண்டிருப்பது எதுவானாலும் சரி - அது பாட்டோ, நூலோ, கட்டுரையோ, கதையோ எதுவானாலும் சரி - அது பிரசாரத்தை அடிப்படை யாகக் கொண்டதுதான் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர். இந்த வழக்கை இப்பொழுது நீட்டிக் கொண்டு போகாமல் இவ்வளவோடு நிறுத்திக் கொள்ளுகின்றேன். குறிக்கோளைக் கொண்டிருக்கும் செய்யுட்கள் இலக்கியமாக விளங்குகின்றது என்பதற்கு ஓர் உதாரணம் மட்டும் காட்டி விடுகிறேன். மக்கள் வாழ்வை ஒட்டியே மொழி வளர்ச்சியடை கின்றது, இலக்கியங்கள் பிறக்கின்றன என்பதற்கும் இந்த உதாரணம் பயன்படும். சத்திமுத்தப் புலவர் என்று ஒருவர். அவர் வறுமையால் பீடிக்கப்பட்டு வருந்தியவர். வறுமையால் தாம் பட்ட துன்பத்தை 14 வரிகள் கொண்ட ஓர் ஆசிரியப்பாவிலே படமாகத் தீட்டி வைத்துவிட்டார். அவர் காலமும் தெரியவில்லை. அவர் இந்த ஒரு செய்யுளைத் தவிர வேறு எந்தப் பாடலையோ, நூலையோ இயற்றியதாகவும் தெரியவில்லை. இந்த ஒரே பாடல்தான் அவருடைய புலமையை விளக்கி நிற்கின்றது. இந்தத் தனிப் பாடல் தமிழ் கற்ற பலருக்கும் தெரியும். பலரும் விரும்பிப் படிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இப்பாடல் கற்றவர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்து வாழ்கின்றது. இப்பாட்டுக்கு உயிரில்லாம லிருந்தால் இந்நிலையிலிருக்க முடியுமா? சத்திமுத்தப் புலவர், சோழ நாட்டில் உள்ள சத்திமுத்தம் என்னும் ஊரினர். வறுமைத் துன்பம் தாங்க முடியவில்லை. உள்ளூரிலே தம் வறுமையை வாய்விட்டுக் கூறவும் வெட்கம். ஆதலால் மதுரைக்கு - பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரைக்கு போய்விட்டார். அவர் சென்ற காலம் குளிர் காலம்; குளிர் தாங்க முடியாமல் கை கால்களை முடக்கிக் கொண்டு ஒரு சத்திரத்தில் படுத்துக் கிடந்தார். அப்பொழுது தம் துன்பத்தை தாங்க முடியாமல் ஒரு நாரையைப் பார்த்து பாடுவது போல - அந்த நாரையைத் தம் மனைவியின் பால் தூது அனுப்புவது போல ஒரு பாடலைப் பாடினார். அதை நகர் சோதனை செய்து வந்த பாண்டிய மன்னன் கேட்டான். உடனே அவன் புலவரை அழைத்துச் சென்று பாராட்டிப் பரிசும் பல கொடுத்தான். இதுதான் அப்புலவரைப் பற்றி வழங்கும் கதை. இனி அவர் பாடியுள்ள பாடலைப் பார்ப்போம்: நாராய்! நாராய்! செங்கோல் நாராய்! பழம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன பவளக் கூர்வாய்ச் செங்கோல் நாராய்! நீயும் நின்மனைவியும் தென்திசைக்குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம் ஊர் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரை கனைகுரல் பல்லி பாடுபார்த் திருக்கும் என் மனைவியைக் கண்டே, எம்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடை இன்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பு என உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே. இந்தச் சிறிய பாடலிலே நாரையின் இயற்கைத் தோற்றத்தை அப்படியே காணுகின்றோம். நாரையின் வண்ணப்படத்தைக் காண்கின்றோம். வறுமையைத் தீர்த்துக்கொள்ள கணவன் பொருள் தேடப் போயிருக்கிறான்; அவன் எப்பொழுது வருவான் என்ற கவலை யுடன் மனைவி காத்திருக்கிறாள். குடிசை வீட்டிலே ஏங்கியிருக் கின்றாள். அவளுடைய தோற்றத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது இச்சிறு செய்யுள். இராக் காலத்திலே, குளிர் காலத்திலே போதுமான ஆடையில்லாத ஒரு மனிதன் எப்படி அவதிப்படுவான்; எப்படிப் படுத்திருப்பான், எப்படித் துன்புறுவான் என்பதையும் அப்படியே படமாக எழுதப்பட்டிருக்கின்றது. இப்பாட்டிலே இத்தகைய சிறந்த மூன்று செய்திகள் காணப்படுகின்றன. இப்பாடலின் பொருளைத் தெளிவாகக் கண்டால் இம் மூன்று செய்திகளையும் விளக்கமாக காணலாம். ஆதலால் இப்பாடல் பொருளையும் பார்ப்போம். நாரையே! நாரையே! சிவந்த கால்களையுடைய நாரையே! பழத்திலிருந்து முளைக்கும் பனங்கிழங்கு பிளந்திருப்பது போன்ற, பவளம் போன்ற செந்நிறமுள்ள கூர்மையான வாயையுடைய நாரையே! சிவந்த கால்களையுடைய நாரையே! நீயும், உனது மனைவியும் தென்திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடி, வடதிசைக்குப் போவீர்களானால் எமது ஊரிலே சத்திமுத்தக் குளத்திலே சிறிது நேரம் தங்குங்கள். மழையால் நனைந்த சுவரையுடைய ஓட்டைக் குடிசையிலே என் மனைவி உறைவாள். அவள், ஒலிக்கின்ற குரலையுடைய பல்லி; என்ன சொல்லுகின்றது என்று எதிர்பார்த்திருப்பாள். அவளைக் கொஞ்சம் நீ பார்க்க வேண்டும். கீழ்வரும் செய்தியை அவளிடம் சொல்லவேண்டும். எமது தலைவனாகிய பாண்டிய மன்னது மதுரை மாநகரிலே உன் காதலன் இருக்கின்றான். அவன் ஆடை யில்லாமல் குளிரால் வருந்துகின்றான். கையினால் உடம்பை மூடிக் கொண்டும், கால்களை முடக்கிக் கொண்டும் பெட்டிக்குள் அடைப்பட்டிருக்கும் பாம்பைப் போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான். இத்தகைய ஏழையைக் கண்டோம் என்று சொல்லுங்கள். நாரையின் இயற்கைத் தோற்றம், கணவனை எதிர் பார்க்கும் ஏழை மனைவியின் நிலைமை, வறுமையுற்ற ஒரு மனிதன் ஆடையில்லாமல் வாடைக் காலத்தில் படும் துன்பம், இவை களை இப் பாடலில் அப்படியே காண்கின்றோம். இச்செய்யுளைச் செய்த புலவரிடம் கற்பனை சக்தியுண்டு. இயற்கை நிலையை அப்படியே எடுத்துக் காட்டும் கவிதா சக்தியும் உண்டு. இந்த ஒரு பாடலே இதற்குச் சான்று. இவர் காலத்திலே இவர் வாழ்ந்த ஊரில் உள்ள மக்கள் இவரை ஆதரித்திருப்பார்களானால், இவரும் இவர் குடும்பமும் வயிறார உண்டு வாழ வழியிருந்திருக்குமானால் - இவரால் எத்தனையோ சிறந்த நூல்களை இயற்றியிருக்க முடியும்; இன்னும் பல அருமையான பாடல்களைப் பாடியிருக்கவும் முடியும். இத்தகைய ஆதரவு இவருக்கில்லை என்று தெரிகிறது. ஆதலால் வறுமையால் வாடி வதங்கிய இவரால், இந்த ஒரு பாடலைத்தான் பாட முடிந்தது. இவருடைய வறுமைத் துன்பமே இப்பாடலை உருவாக்கியது; இவருடைய உள்ளத்தி லிருந்து உணர்ச்சியைப் பாடல் உருவமாக வெளியில் இழுத்து விட்டது. இப்பாட்டிலே குறிக்கோள் இருக்கின்றது. வறுமையானது ஊரை விட்டு விரட்டும்; மனைவியை விட்டுப் பிரித்து விடும். குடும்ப வாழ்விலே குதூகலம் இருக்க முடியாது. கணவன்தான் சென்றவிடத்திலே தன் இல்லத்தை எண்ணி ஏங்குவான்; மனைவி தன் கணவன் வருகையை எதிர்பார்த்துக் கலக்கங் கொண்டிருப்பாள். ஆதலால் வறுமை ஒழிந்தால்தான் மக்கள் வாழ்விலே இன்பம் உண்டு; மகிழ்ச்சியுண்டு; குடும்ப வாழ்வு குறையற்றதாக இருக்க முடியும். இத்தகைய எண்ணத்தை இச்செய்யுள் நம் உள்ளத்திலே எழுப்புகின்றது. இதுதான் சிறந்த இலக்கியத்தின் தன்மை. இத்தகைய பாடல்கள் இன்னும் எத்தனையோ பல. கடவுளும் தலைவிதியும் கையலாகாதவனுக்குக் கடவுளும் தலைவிதியும் என்று ஒரு பழமொழியுண்டு. இந்தப் பழமொழி உண்மைதானா? அல்லது பொய்யா? என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். இந்தப் பழமொழி ஆதிகர் பக்கத்திலிருந்து எழுந்ததா? நாதிகர் பக்கத்திலிருந்து முளைத்ததா? என்ற ஐயம் தோன்றுவது இயற்கை. ஆனால் அந்த ஐயத்திற்கு இடங்கொடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தால் காலம் வீண் போகும். இப்பழமொழி இரு சார்பாருக்கும் பொதுவான பழமொழி என்று வைத்துக் கொண்டு மேலே செல்வோம். முயற்சி என்பதை இரு பக்கத்தாரும் மறுப்பதில்லை. எல்லாம் இறைவன் செயல் என்பதிலே அழுத்தமான நம்பிக்கையுள்ளவர்களாகட்டும்; கடவுளாவது, மண்ணாங் கட்டியாவது, மனித முயற்சியால் ஆகாதது மாநிலத்தில் ஒன்றும் இல்லை என்று கூறுவோர் ஆகட்டும்; இவர்கள் இருவரும் முயற்சியை ஒத்துக் கொள்ளுகின்றனர். பொதுவாக மனித சமூகத்திற்கே முயற்சியிலே நம்பிக்கை யுண்டு; இந்த விஷயத்தில் ஆதிகர், நாதிகர் என்ற வேற்று மைக்கே இடம் இல்லை. ஒருவன் ஒரு பெரிய கட்டடத்தை கட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். கட்டடம் நன்றாகக் கட்டி முடிந்துவிட்டது. விரைவில் கட்டப்பட்டு விட்டது. கட்டடத்திற்கு மதிப்பிடும் விலையை விடக் குறைந்த செலவில் கட்டி முடிந்துவிட்டது. அக்கட்டடத்தைக் கட்டியவனுடைய முயற்சியை அனைவரும் பாராட்டுகின்றனர். அப்பொழுது கட்டடத்தைக் கட்டியவன் என்ன நினைக்கின்றான்? என்ன சொல்லுகிறான் என்பதைத்தான் நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்டடத்தைக் கட்டியவன் நாதிகன் அல்லன்; கடவுள் நம்பிக்கையுள்ளவன். கட்டடம் தொடங்கும் போதும் நல்ல நாள் பார்த்தான். தன்னுடைய வழிபடு தெய்வத்தை வேண்டிக் கொண்டான். குலதெய்வத்தையும் கும்பிட்டான்; மந்திரம் சொல்லிப் பூசைப் போட்டுதான் கட்டடத்தை ஆரம்பித்தான். இப்படியெல்லாம் அவன் செய்தும் கூட இறைவன் அருளால் கட்டடம் செவ்வையாக முடிந்தது என்று சொல்லுவதில்லை; நினைப்பதுகூட இல்லை. தன்னுடைய திறமையைப் பற்றியே அவன் நினைக்கிறான்; பேசுகிறான். தன்னுடைய முயற்சியைப் பற்றியே அவன் எண்ணு கின்றான்; பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகின்றான். மிகவும் பாடுபட்டு கட்டடச் சாமான்கள் சேகரித்தேன். நல்ல வேலைக்காரர்களைத் தேடிப் பிடித்தேன். இராப் பகலாக அலைந்து திரிந்தேன்; இராத் தூக்கம் பகல் தூக்கம் இல்லாமல் உழைத்துக் கட்டடத்தைக் கட்டி முடித்தேன் என்று பெருமை யடித்துக் கொள்ளுகின்றான். பொதுவாக எல்லோருமே, தாம் தொடங்கிய காரியத்தில் வெற்றி பெற்றால் அவ்வெற்றிக்குத் தாமேதான் காரணம் என்று சொல்லிக் கொள்ளுவார்கள்; இப்படிச் சொல்லிக் கொள்ளு வதிலே எவருக்கும் ஒரு மகிழ்ச்சி உண்டு. ஆனால், தாம் தொட்ட காரியம் தோல்வியடைந்து விட்டால், அப்பொழுது அவர்கள் பேசும் பேச்சு வேறுவிதமாக இருக்கும். அவர்கள் பாடும் பல்லவியின் போக்கே மாறிவிடும். தோல்விக்குத் தம்மைக் காரணமாகச் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். என்ன செய்வது? எவ்வளவோ முயன்று பார்த்தோம்; நாம் நினைத்தபடியா எல்லாம் நடக்கின்றன? கடவுள் செயல் அப்படி முடிந்து விட்டது. நம் செயலால் என்ன இருக்கின்றது. எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லி விடுகின்றவர்களே பெரும்பாலானவர்கள். வெற்றியைத் தம்முடையது என்று சொல்லிக் கொள்ளு வதும், தோல்வியைக் கடவுள் தலையிலே சுமத்துவதும் அல்லது தலைவிதியின் மேல் ஒட்டி விடுவதும் பெரும்பாலான மக்கள் இயற்கை. தோல்விக்கும் காரணம் தாமே தான் என்று ஒத்துக் கொள்ளும் மக்கள் மீண்டும் தோல்வியடைய மாட்டார்கள். தோல்வியின் காரணத்தைக் கண்டறிந்து கொள்ளுவார்கள். மீண்டும் எதையாவது செய்யும்போது, மிகுந்த முன்னறிவுடன் தொடங்கும் காரியத்திற்குப் பழுது வராமல் செய்து முடிப்பார்கள். தோல்வியை ஒப்புக் கொள்ளுகின்றவர்கள் மேலும் மேலும் முயற்சியும் உழைப்பும் எடுத்துக் கொள்ளுவார்கள். ஆனால் தோல்வியை தலைவிதியின் மேலோ, கடவுளின் மேலோ சுமத்து கின்றவர்கள் விரைவில் மன அமைதி பெறுவார்கள். ஏன் தோற்றோம்? எப்படித் தோற்றோம்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். இது இயற்கை. தனி உடைமைச் சமுதாயத்திலே வாழும் மக்களிடம் இத்தகைய இயற்கைக் குணம் எப்பொழுதும் உண்டு. இந்த இயற்கைத் தன்மையை விளக்கும் தனிச் செய்யுட்கள் பல உண்டு. அவைகளில் ஒரு செய்யுள் நம் உள்ளத்தைக் கவ்வும் தன்மையில் அமைந்துள்ளது. அச்செய்யுளும் விளக்கமும் கீழ் வருவன. வறுமையால் வாடும் ஒருவன்; அவனால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கையிலே காசும் இல்லை; பண்டமும் இல்லை. இருந்தவை எல்லாம் தீர்ந்துபோய்விட்டன. தாமே வந்து உதவி செய்வோரும் இல்லை. எங்கேனும் ஏதாவது வேலை செய்தாவது வயிறு வளர்க்கலாம் என்று நினைத்தால் வேலையும் கிடைக்கவில்லை; வேலை, வேலை என்று எங்கும் அலைந்து திரிந்து முடிந்துவிட்டது. உயிர் வாழ்வதற்கு இனி மீதமாக உள்ள வழி ஒன்றே ஒன்றுதான். அந்த வழி மிகவும் இழிவானது; மானத்தை துறந்தால்தான் அந்த வழியிலே இறங்க முடியும். மானத்தைத் துறப்பதற்கோ மனம் இல்லை. ஆனால் சாவதற்கும் துணி வில்லை. தருமசங்கடம் என்பது இதுதான். தான் மட்டும் அன்று; தன்னை நம்பியிருக்கும் குடும்பமும் வாழ வேண்டும். அதற்காக மானத்தை விட்டாவது வாழ வழி தேட வேண்டும். பிறரிடம் - செல்வம் உள்ளவரிடம் - ஏழை களுக்கு உதவும் இளகிய மனம் படைத்தவர்களிடம் சென்று பல்லைக் காட்டிக் கையேந்தி நிற்பதுதான் அந்த மானங் கெட்டவழி. இதைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த வழியைப் பின்பற்றத் துணிவு கொண்ட அவன் உள்ளத்திலே உடனே ஒரு சமாதானம் பிறக்கின்றது. அவன் நெஞ்சத்தில் கிடந்த தெய்வ நம்பிக்கை, இந்தச் சமாதானத்தை அவனுக்குத் தந்து, அவனைத் தற்கொலை செய்துகொள்ள விடாமல் தடுக்கின்றது. பிறரிடம் பல்லைக் காட்டி நின்று வயிறு வளர்க்கும்படி பிரமன் என்னைப் படைத்து விட்டான்; ஆகையால் எனது மானங் கெட்ட செயலுக்கு நான் காரணம் அன்று. என்னைப் படைத்த பிரமன்தான் காரணம். இதுதான் அவன் மனதில் எழுந்த ஆறுதல். கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத் தான் கொடுத்துதான் இரட்சித்தானா? அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான்; ஐயோ! எங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே! வறுமையால் வாடி வதங்கும் ஒருவன் உள்ளத்தை அப் படியே படம்பிடித்துக் காட்டுகின்றது இப்பாட்டு. வறுமையை வர்ணிக்கும் இச்செந்தமிழ்ச் செய்யுள் நம் செஞ்சத்தை அப்படியே அள்ளிக் கொள்ளுகின்றது. என்னைப் படைத்த நான்முகன் நான் மானத்துடன் வாழ்வதற்கு வழி செய்திருக்க வேண்டும். பசி வந்தபோது, கல்லையோ, மண்ணையோ கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கவாவது ஏற்பாடு செய்தானா? இல்லை. அப்படி இல்லையென்றால் பொன்னையாவது எனக்குக் கொடுத்து, இதைக் கொண்டு வேண்டியவற்றை எல்லாம் வாங்கிக்கொள் என்றாவது காப்பாற்றினானா? இதுவும் இல்லை. என்னுடைய துன்பத்தைத்தான் யாரிடம் சொல்லி யாரைத்தான் நொந்து கொள்ளுவேன்? ஐயோ! எங்கும் சென்று, யாரிடமும் பல்லைத் திறந்து கொண்டு நிற்கும்படி அந்த பிரமதேவன், என்னை இவ்வுலகிலே படைத்து விட்டானே! இதுதான் இப்பாட்டிலே அமைந்துள்ள பொருள். இப் பாட்டு ஓர் ஏழையின் உள்ளத்தை, பிச்சை வாங்கும் பிழைப்பை மேற்கொண்ட ஒருவன் உள்ளத்தை, அப்படியே எடுத்துரைக் கின்றது. நமது மனத்தைத் தொட்டு அசைக்கின்றது. வாழ்வுக்கு வேறு வழி தெரியாமல் பிச்சையெடுத்து வாழும் மக்கள் வேறு என்னதான் எண்ண முடியும்? ஏற்றத் தாழ்வுள்ள சமுதாய வாழ்வில் ஏழை மக்களின் நிலை எப்படியிருக்கும்? அவர்கள் தாங்கள் படும் அல்லலைப் பற்றி என்ன நினைப்பர் என்பதை விளக்கும் செய்யுள் இது. ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை என்ற சமுதாயத்தில் இத்தகைய செய்யுட்கள் பிறவா? இச்செய்யுள் பிறந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகள் இருக்கலாம். இப்பாடலைப் பாடியவர் இராமச்சந்திர கவிராயர் என்பவர். இவர் சென்னையிலே வாழ்ந்தவர். இவரால் பாடப் பட்ட இன்னும் பல சுவையுள்ள பாடல்கள் உண்டு. இவர் நாடக நூல்கள் பல எழுதியுள்ளார். தானே தனக்கு உவமை மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு பெரும் வேற்றுமை உண்டு; உருவத்தில் மட்டும் அன்று; உணவில் மட்டும் அன்று. வாழ்வு முறையில் மட்டும் அன்று; குறிப்பாகக் குணத்தில்தான் பெரியதொரு வேற்றுமை. மனிதத் தன்மை என்று சொல்லுகிறோம். மிருகத் தன்மை என்று சொல்லுகிறோம். இரண்டு தன்மைகளும் வெவ்வேறாக இருப்பதனால்தான் இப்படிச் சொல்லுகிறோம். இந்த இரண்டு தன்மைகளுக்கும் உள்ள வேற்றுமை என்ன? இதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது மிருகத் தன்மை. தன் உணவு ஒன்றே அதன் குறிக்கோள். அதற்காகவே ஆயுள் முழுவதும் உழைக்கின்றது, பாடுபடுகின்றது, இறக்கின்றது. மனிதத் தன்மை இதற்கு மாறுபட்டது. மனிதன் தன்னை பாதுகாப்பதோடு மட்டும் நிற்பதில்லை. தன்னைச் சேர்ந்தவர் களைப் பாதுகாக்கின்றான்; தன் ஊரில் உள்ளவர்களும் நன்றாக வாழவேண்டும் என்று எண்ணுகின்றான். தனது நாட்டில் உள்ளவர்கள் நலத்திற்கும் உழைக்க வேண்டும் என்று நினைக் கின்றான். இவ்வாறு தனக்கு - தன்னைச் சேர்ந்தவர்களுக்கு - தனது ஊரினர்க்கு - தனது நாட்டினர்க்கு நலம் புரிய நினைப்பவன் மனிதத் தன்மையின் உச்சியிலே உறைபவன் ஆவான். இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்த தன்மையையே சிறந்த மனிதத் தன்மை என்பர். இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்லா விட்டாலும், கூடிய வரையிலும் பிறருக்கு உதவியாக இருக்க முயற்சிப்பவனே மனிதத் தன்மையுள்ளவன். மனிதனிடம் அமைந்துள்ள இச்சிறந்த தன்மையைக் கூடி வாழும் குணம் என்றும் குறிப்பிடலாம். கூட்டுறவு வாழ்விலே தான் மனித நாகரிகமே வளர்ந்து வந்திருக்கின்றது. மனிதர்கள் ஒன்று கூடி வாழும் தன்மையுள்ளவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் குணம் உள்ளவர்கள். இக்குணத்தி லிருந்து வேறுபட்டிருப்பவர்களை மனிதத் தன்மையில்லாதவர்கள் என்றே சொல்லிவிடலாம். மக்கள் கூடி வாழ வேண்டும்; அன்புடன் வாழ வேண்டும்; ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழவேண்டும். அப்பொழுததான் மனித சமுதாயத்தில் அன்பும் இன்பமும் தழைத்து வளர்ந்து பெருகும். இவ்வுண்மையைப் பண்டைய அறிஞர்கள் அனைவரும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். பழய அறநூல்கள், நீதிநூல்கள் எல்லாவற்றிலும் இக் கருத்தைக் காணலாம். இக் கருத்தைக் கொண்ட கதைகள், காவியங்கள், கவிதைகளும் எழுதி வைத்திருக்கின்றனர். பண்டு முதல் இன்று வரையிலும் இவ்வுண்மையை அறிஞர் மறுத்த தில்லை, மறைத்ததும் இல்லை. செல்வம் சேர்ப்பது பிறருக்கு உதவி செய்வதற்கே என்பது தான் முன்னோர் கொள்கை. தமிழர்கள் மட்டும் அன்று; உலகில் உள்ள அனைவரும் இக்கொள்கையை ஒப்புக் கொள்ளு கின்றனர். நமது நாட்டில் உள்ள பழமையான மொழிகளில் உள்ள எல்லா அற நூல்களிலும் இக்கொள்கை வலியுறுத்தப் பட்டிருக்கின்றது. பிறருக்கு உதவி செய்யாத செல்வமுடையவனை உலோபி என்பர்; உலுத்தன் என்றும் உரைப்பர். உலோபி உலுத்தன் என்பவை வடமொழிச் சொற்கள். தமிழ் சொற்கள் அல்ல. தமிழிலே உலோபியை ஈயாதான், இவறன்மையன், கடும் பற்றுள்ளத்தான் என்பர். இச்சொற்களைக் கொண்ட வடமொழி நூல்களிலும், தமிழ் நூல்களிலும் உலோபி பழிக்கப்படுகிறான். ஈயாதான் இழித்துரைக்கப்படுகின்றான். ஒருவன், தனது தனி முயற்சியால் மட்டும் செல்வத்தைச் சேர்த்துவிட முடியாது. வேறு பலர் உதவியுடன்தான் செல்வங்களைச் சேர்க்கின்றான். ஆனால் இவ்வுண்மையைச் சிலர் ஒப்புக் கொள்வதில்லை. தனது தனி உழைப்பு, தனி முயற்சி, இவை களாலேயே எல்லாச் செல்வங்களையும் சேர்த்து விட்டதாக எண்ணுகின்றான். சற்றுப் பொறுமையுடன் எண்ணிப் பார்த்தால் இவ்வெண்ணம் தவறு என்பதை அறிவுள்ளவர்கள் அனைவரும் அறியக்கூடும். இத்தகைய கருத்தை வலியுறுத்துவதற்காகவே, பிறருக்கு உதவி செய்யாத செல்வர்களை உலோபிகள் எனப் பழித்துக் கூறியிருக்கின்றனர். இந்த உண்மையை பாரத நாட்டினர் அனைவரும் அறிவர்; அனைவரும் ஒப்புக் கொள்வர். எல்லா நூல்களும் கருத்து வேற்றுமையில்லாமல் ஒப்புக் கொள்ளுகின்றன. தமிழர்களும் இப்பழம்பெரும் பண்பாட்டை உடையவர்கள், பண்டைத் தமிழ் நூல்களும் இவ்வுண்மையை எடுத்துக்காட்டியிருக்கின்றன. பிற்காலத் தமிழ் நூல்களும் இதைச் சொல்லிக் கொண்டே வருகின்றன. இக் கருத்தைப் பிற்காலத் தமிழ்ப் பாடல் ஒன்று விளக்கமாகவும் வேடிக்கையாகவும் கூறிச் செல்லுகின்றது. பிறருக்கு உதவி செய்யாதவன் கல்லிலும் கேடு கெட்டவன்; கழுதையிலும் தாழ்ந்தவன்; எருமைக் கடாவிலும் இழிந்தவன்; மலத்திலும் ஈனமானவன்; காளைமாட்டிலும் மட்டமானவன்; பிணத்திலும் வெறுக்கத்தக்கவன்; குட்டிச் சுவரிலும் தாழ்ந்தவன். துடைப்பத்திலும் இழிவானவன் என்று பழித்துக் கூறுகிறது. அப்பாட்டு, அவனுக்கு உலுத்தன் என்ற பெயரும் சூட்டுகின்றது. அவனுக்கொப்பான இழிந்த பொருள் ஒன்றுமே இல்லை. அவனுக்கவனே ஒப்பாவான் - என்று முடிவு கட்டுகிறது அச்செய்யுள். இச்செய்யுள் ஒரு தனிப் பாடல்; இராமச்சந்திரக் கவிராயரால் இயற்றப்பட்ட இனிய செய்யுள். கல் ஆலயமாம்; தேவரும் ஆம்; கழுதை கசடர் பொதி சுமக்கும்; கடாவோ, உழுது பயிர் இடற்கு ஆம் கட்டம் பன்றிக்கு இரை ஆகும்; புல் ஏறு ஈசர் வாகனம் ஆம் பொதியும் சுமக்கும்; பிணம் எனிலோ பூசி முடித்து மறையோர்க்குப் பொருளை ஈந்து புகழ் எய்தும்; மல் ஆர் குட்டிச்சுவர் எனிலோ மாடும் உரைஞ்சும், மறைவு ஆகும்; மதியாத் துடைப்பந்தான் எனிலோ மாட கூடம் தனை விளக்கும்; அல்லாது உலுத்தன் தனக்கு இணையாய் யாரை உரைப் பேன்; புவிமீதில், அவனைக் குறித்துக் கூறும் இடத்து அவனுக்கு அவனே சரிதானே. (கசடர் - அழுக்கர்; வண்ணார். கட்டம் - மலம்; புல் ஏறு - புல் உண்ணும் காளை; மல் ஆர் - வலியைப் பொருந்திய, புவிமீதில் -உலகில்) இதுதான் அந்தப் பாடல். உலுத்தனாக இருப்பவன் உலோபியாக இருப்பவன், மனிதனே அல்லன் என்று கூறுகிறது. கல்லாக இருந்தாலும் அது கோயில் கட்டப் பயன்படும். தெய்வங்களின் உருவச்சிலைகள் செய்து வைக்கவும் பயன்படும். கழுதை அழுக்கைப் போக்கும்; வண்ணார்களின் பொதியைச் சுமக்கப் பயன்படும். எருமைக் கடாவாக இருந்தாலும் நிலத்திலே உழுது பயிர் செய்வதற்கு உதவி செய்யும். மலம் பன்றிக்காவது உணவாகப் பயன்படும். புல் உண்ணும் காளை மாடாக இருந்தாலும் அது சிவ பெருமான் வாகனமாக இருக்கும்; பொதியும் சுமந்து செல்லும். பிணமாக இருந்தாலும் வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ளும். பூ முடித்துக் கொள்ளும்; வேதியர்க்குத் தானம் கொடுக்கும்படி செய்து புகழ் பெறும். வலிமையுள்ள குட்டிச் சுவராகயிருந்தால், மாடுகள் தம் தினவு தீர உரசிக் கொள்ளும், மறைந்து கொள்வதற்கு இடமாகும். நம்மால் இழிவாக எண்ணப்படும் துடைப்பக்கட்டை யாயிருந்தாலும் மாட மாளிகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படும். இவைகளைத் தவிர உலோபிக்கு வேறு யாரைத் தான் உவமையாகக் கூறுவேன்? இவ்வுலகிலே அவனைப் பற்றிப் பேசும்போது, அவனுக்கு அவனே தான் உவமையாவான். வேறு யாரும் அவனுக்குச் சரியாக மாட்டார்கள். பண்டைத் தமிழரும், பாரத நாட்டினரும் கொண்டிருந்த பண்பாட்டைக் கூறும் பாடல் இது. தனியுடைமைச் சமுதாயத்திலே மனிதப் பண்பை, மனத்தில் படியும்படி இதைவிட விளக்கமாக எப்படிக் கூறுவது? மனிதத் தன்மையை விளக்கமாகவும், வேடிக் கையாகவும் விளம்பும் இனிய பாடல் இது. விளம்பரத்தால் விலை போகும் சரக்கு முடுக்கா? செட்டியார் முடுக்கா? என்பது ஒரு பழமொழி. சரக்கைப் பற்றிக் கவலையில்லை. அது மட்டமாயிருக்கலாம், அல்லது உயர்வா யிருக்கலாம். அது விலை போக வேண்டுமானால் செட்டியார்தான் - அதாவது வாணிகம் செய்யும் வியாபாரிதான் திறமையுள்ளவராயிருக்க வேண்டும். சரக்கு உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அதைப்பற்றிய விளம்பரம் போதுமானதாக இல்லாவிட்டால் அது அப்படியே தேங்கி கிடக்கும். வாங்குவோர் உள்ளத்தைக் கவரும்படி வார்த்தை பேச வேண்டும்; அவர்கள் தலையிலே அந்தச் சரக்கை ஏற்றியாக வேண்டும். இது வியாபாரத்தில் உள்ள ஒரு கலை. இந்தக் கலையை அறியாத வியாபாரி விரைவில் முன்னுக்கு வரமுடியாது. வாணி கத்தில் இலாபம் சம்பாதிக்க முடியாது. இது இக்கால நிலை. திறமையுள்ள வியாபாரி, மட்டமான சரக்கையும் உயர்ந்த சரக்காகக் காட்டி வியாபாரம் பண்ணிவிடுவார். இப்படி வியாபாரம் பண்ணுகிறவர்தான் முடுக் குள்ள செட்டியார். மேலே காட்டிய பழமொழி, கலை, கவி, காவியம் முதலி யவைகளுக்கும் பொருந்தும். தேர்ச்சியற்ற அரைகுறைக் கலைஞன் ஒருவனை விளம்பரத்தால் சிறந்த கலைஞன் என்று மக்கள் நம்பும்படி செய்துவிடலாம். கன்னா பின்னாவென்று பாட்டுப் புனைந்து அதைக் கவியென்று சொல்லுகின்றவனை நாலு பேர் கூடிக் கொண்டு கவிஞனாக்கி விடலாம். மக்கள் அவனைப் புலவன், நாவலன், கவிசிங்கம், மகாகவி என்றெல்லாம் அழைக்கும்படி செய்து விடலாம். சுவையற்ற கவிகளைக் கொண்டு கதை கட்டிய ஒருவனைக் காவியப் புலவன் என்று அழைக்கும்படி செய்து விடலாம். இவைகள் எல்லாம் விளம்பரத்தைப் பொறுத்த செய்தி. செட்டியார் பேச்சைக் கேட்டு அவர் பேச்சை நம்பி ஏமாந்து மட்டமான சரக்கைக் கொள்முதல் செய்தவர்கள் சரக்கின் தரத்தை அறியாமற் போக மாட்டார்கள். அவர்கள் வாங்கிய பண்டத்தைப் பயன்படுத்தும்போது தான், செட்டி யாரிடம் ஏமாந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வார்கள். அதைப் போலவே மட்டமான கலைஞர்களை - கவிஞர்களை - புலவர்களை விளம்பரத்தால் சிரோன்மணிகளாக எண்ணி ஏமாந்தவர்கள் எப்பொழுதும் ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்கள். உண்மை தெரிந்தபின் உயர்வாக மதிப்பதை விட்டு விடுவார்கள். ஆயினும் ஆடம்பரத்தாலும், விளம்பரத்தாலும் மக்கள் ஏமாறுவது இயற்கை. இது அன்றும் உண்டு; இன்றும் உண்டு. பொது மக்களை ஏமாற்றும் வல்லமை விளம்பரத்திற்கு உண்டு. விளம்பரம் ஒரு கலையாக இக்காலத்தில் மதிக்கப்படு கின்றது. விளம்பரம் இல்லாவிட்டால் வியாபாரம் இல்லை. எத்தனையோ சரக்குகள் விளம்பரத்தையே உயிராகக் கொண்டு உலகில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மருந்தைப் பற்றிய விளம்பரங்களைப் பத்திரிகைகளிலே பார்க்கிறோம். நோயாளிகள் சிலர் விளம்பர மருந்துகளை வரவழைக்கின்றனர். மருந்து விளம்பரக்காரர்கள் தங்கள் மருந்தால் இன்னார் இன்னார் நோய்கள் தீர்க்கப் பட்டன என்று விளம்பரம் செய்கின்றனர். அந்த நோயாளிகள் தங்கள் நோய் அந்த மருந்தால் தீர்ந்துவிட்டதாக எழுதிய கடிதங்களையும் பத்திரிகைகளிலே வெளியிடுகின்றனர். அவர்கள் படங்களையும் வெளியிடுகின்றனர். இப்படி யெல்லாம் விளம்பரம் செய்து பணந்திரட்டுகின்றனர். இத்தகைய விளம்பரங் களைக் கண்டு பொது மக்களும் ஏமாறுகின்றனர். இதைப்போலவே புத்தக விளம்பரங்களும் வெளிவரு கின்றன. ஆசிரியர் பெயரில்லாமல் சிறந்த மேதாவிகளால் எழுதப்பட்டவை என்று சில புத்தகங் களுக்கு விளம்பரம். புத்தகம் எழுதியவர் ஒருவர். அதை எழுதிய ஆசிரியராக மற்றொரு பிரபலதர் பெயர். உண்மையில் புத்தகத்தின் மேல் அச்சிட்டி ருக்கும் பெயருள்ள ஆசிரியரைக் கண்டு அந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியாது. பேந்த பேந்த விழிப்பார். இம்மாதிரிப் புத்தகம் வெளியிட்டுப் பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய் வோர் பெருகி வருகின்றனர். மட்டமான புத்தகத்திற்கு அறிஞர்களிடம் முன்னுரை வாங்கி அச்சிட்டு அப்புத்தகத்தைச் சிறந்தது என்று விளம்பரம் செய்வோரும் உண்டு. பயனற்ற புத்தகங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுதி விற்பனை செய்வோர் பலர். மக்களிடம் மதிப்புப் பெற்றவர்களால் அப்புத்தகம் உயர்ந்தது என்று சொல்லச் செய்து வியாபாரம் செய்வோர் சிலர். இத்தகைய விளம்பர நிகழ்ச்சிகளை இன்று நாம் காண்கிறோம். விளம்பரம் இல்லாவிட்டால் எந்தச் சரக்கும் விலை போகாது என்பதுதான் இன்றுள்ள பொதுவான கருத்து. ஆயினும் உயர்ந்த சரக்கை ஒருமுறை வாங்கிப் பதம் பார்த்தவர்கள் அந்தச் சரக்குள்ள இடத்தைத் தேடிக் கொண்டு போகாமல் இருக்க மாட்டார்கள். ஆதலால் உயர்ந்த சரக்கை ஒருமுறை விளம்பரப்படுத்தினால் போதுமானதாகும். அச்சரக்கு இருக்கும் இடம் பொதுமக்களுக்குத் தெரிந்தாலே போதுமானதாகும். மட்டச் சரக்கு விளம்பரத்தால்தான் எடுபடும். விளம்பரம் இல்லாவிட்டால் அதை ஒருவரும் திரும்பியே பார்க்க மாட்டார்கள் என்பது உண்மை. விளம்பரத்தால் தம்மைப் பெரிய மனிதர்களாகச் செய்து கொள்வோர் சிலர் உண்டு. அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், பத்திரிகாசிரியர்கள் போன்ற வர்களைத் தம் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் விளம்பரம் தேடும் பிரமுகர்களும் உண்டு. இம்மாதிரி விளம்பரத்தால் ஆடம்பர வாழ்வு நடத்துவோர் பண்டைக் காலத்திலும் நமது நாட்டில் இருந்தனர். அவர்கள் தம்மைப் பிறர் புகழும்படி செய்து கொண்டனர். தாமும் ஆடம்பரமாக ஆடை அணிகள் புனைந்து வாழ்ந்து வந்தனர். பிறர் புகழ்வதையும் அவர்களின் ஆடம்பரத் தோற்றத்தையும் கண்டு மக்களும் ஏமாந்து வந்தனர். இந்த ஆடம்பரக்காரர்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்த புலவர்களும் இருந்தனர். இந்த உண்மையை ஔவையாரின் தனிப்பாடல் ஒன்று நமக்கு உணர்த்துகின்றது. விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்; விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரைஅதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. இப்பாடல் விளம்பரத்தால் சரக்கு விற்பனையாகும் என்ற கருத்தையே அடிப்படையாகக் கொண்டது. வல்லவர் இரண்டு பேர், இவர் கவிஞர், அரும்புலவர், சிறந்த மேதாவி என்று சொல்லிப் புகழ வேண்டும். விரல்கள் நிறைய மோதிரங்கள் தரித்திருக்க வேண்டும். இடுப்பிலே பார்ப்போர் கண்களைக் கவரும்படியான உயர்ந்த பருத்தி நூல் ஆடையாவது, பட்டாடையாவது உடுத்தியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆடம்பரக்காரர்களின் கவிதை, படிப்போர் உள்ளத்தைக் கெடுக்கும் கெட்ட விஷயங்கள் அடங்கிய நஞ்சாக இருந்தாலும் சரி அல்லது படிப்பதற்கு இனிமையில்லாமல் கரடுமுரடாக இருந்தாலும் சரி அதை நல்ல கவிதை என்று மற்றவர்கள் வாயால் புகழ்வார்கள். ஔவையாரின் இந்தப் பாடலை வைத்துக் கொண்டு இப்பொழுது நம் கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். விளம்பரத்தாலும், செல்வாக் காலும் செம்பு பித்தளைகள் எல்லாம் தங்கம் பொன்னாகக் கொண்டாடப் படுவதைக் காணலாம். பொதுமக்கள் உண்மையை அறியும் திறமை பெறவேண்டும். அப்பொழுதான் உண்மையான நூல்களுக்கும், உண்மையான கவிகளுக்கும், கலைஞர்களுக்கும் புலவர்களுக்கும் நாட்டில் மதிப்பு வளரும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒரு ஔவையார் பெயரால் பாடப்பட்டு வழங்கும் பாடல் இன்றைய நிலைக்கும் ஏற்றதாக இருப்பதைக் காண்கின்றோம். இதுதான் உயிருள்ள கவி என்பது. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை மனிதனைச் சீரழிப்பது செருக்கு; செருக்கு என்றால் கர்வம்; அல்லது மமதை. இன்னும் சொல்லப்போனால்தான் என்ற அகம்பாவம் என்று இதைச் சொல்லிவிடலாம். செருக்கைப் போன்ற பெரும் பகை வேறொன்றுமில்லை. எந்தத் துறையிருந்தாலும் சரி; மமதை வந்துவிட்டால் போச்சு; அவ்வளவோடு அந்தத் துறையின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான். படித்த ஒருவன், என்னைப் போல படித்தவன் வேறு யார்? எனக்கு மீறினவர்தான் வேறு எவர்? என்று நினைத்துக் கொண்டான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவுதான். அவன் வேறு எதையும் படிக்க மாட்டான். வளர்ந்து வரும் உலகத்திலே பிறந்துவரும் புதிய புதிய கருத்துக்களைக் காணவே மாட்டான். தான் எந்த அளவு படித்தானோ அவைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். நினைத்துக் கொண்டிருப்பான். பாடகன் ஒருவன் நான்தான் சங்கீத சிரோன்மணி; என்னைவிடச் சங்கீத நுட்பந் தெரிந்தவர்கள் வேறு எவரும் இல்லை என்று எண்ணி விட்டால் போதும். அவனுடைய சங்கீத வளர்ச்சி அவ்வளவோடு முடிந்துவிட்டது. மேலும் மேலும் சாதகஞ் செய்ய அவன் துணியமாட்டான்; புதிய புதிய சங்கதிகளைக் கண்டுபிடித்து முன்னேற மாட்டான். ஓவியன் ஒருவன், நான்தான் சிறந்த ஓவியன்; என்னைத் தோற்கடிப்பார் எவரும் இல்லை; எனக்கு இணையாகச் சித்திரம் தீட்டுவோர் ஒருவரும் இல்லை என்று எண்ணிவிட்டால் போதும். அதன்பின் அவன் சிந்தனை கருகிவிடும்; கற்பனையிலே செல்லாது. கற்பனைத் திறன் இல்லாதவன் சிறந்த ஓவியனாக முடியாது. கற்பனைத் திறன்தான் கைத்திறனை வளர்க்கும். இந்த உண்மையை அறியாத ஓவியன் தான் மமதை கொள்வான். கவிஞன் ஒருவன், நான் தான் சிறந்த கவிஞன்; என்னைப் போல் கவி கட்டுகின்றவன் வேறு எவனும் இல்லை என்று எண்ணிவிட்டால் போதும். இந்த மண்டைக் கர்வம் அவன் உள்ளத்தில் உதிக்கும் கற்பனை ஊற்றை அடைத்துவிடும். புதிய சுவை பொருந்திய கவிகளை அவனால் இயற்ற முடியாது. கவிஞன் ஒருவனுக்கு எப்பொழுது அகங்காரம் வந்ததோ அப்பொழுதே அவன் கவிஞன் பதவியை இழந்து விடுகின்றான். அவனை முன்னாள் கவிஞனாகத்தான் கருத வேண்டும். கருதுவது என்ன? முன்னாள் கவிஞன் - விளக்கமாகச் சொன்னால் மாஜி கவிஞனாகத்தான் ஆகிவிடுகிறான் அவன். மண்டைக் கர்வம் பிடிக்காததற்கு முன் அவன் எழுதிய கவிகளைத்தான் நாம் படித்துச் சுவைக்க முடியும். கர்வம் தலைக்கேறியபின் அவன் எழுதும் கவிகளைப் படித்துச் சுவைக்க முடியாது. புலவன் ஒருவன் எழுதும் கவிதைகளைக் கொண்டே அவன் கர்வம் - செருக்கு - அகங்காரம் ஆட்கொண்டு விட்டதா? இல்லையா? என்பதை நாம் தீர்மானித்து விடலாம். இதற்கு அவனுடைய கவிதைகளே அளவுகோலாக நிற்கும். எந்தத் துறையிலும் அடக்கம் உள்ளவன்தான் மேலும் மேலும் முன்னேறு வான்; வளர்ச்சிக்கு வழிகாட்டுவது அடக்கம் தான்; பொறுமைதான். எனக்கு தெரிந்தது சிறிது; தெரியாம லிருப்பது பெரிது; நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்; கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துள்ளவன்தான் வளர்ச்சிப் பாதையிலே செல்வான். புதிய செய்திகளைப் புரிந்து கொள்ளுவான். வாழ்க்கை யிலே முன்னேறுவான். வளர்ச்சிப் பாதையைத் தடுப்பதுதான் செருக்கு; வளர்ந்து வரும் முளையைக் கிள்ளி எறிவது கர்வந்தான். கர்வம் கொண்டவன் தற்பெருமை பேசிக்கொண்டு திரியத் தொடங்கிவிடுவான். பிறர் கூறும் புத்திமதிகள் அவன் காதில் ஒலிக்கமாட்டா; ஒலித்தாலும் உள்ளத்தில் நுழையவே மாட்டா. மமதை பிடித்துத் திரிகின்றவர்களைத்தான் தான் தோன்றித் தம்பிரான்கள் என்பர். இந்தத் தான்தோன்றித் தம்பிரான்கள் பிறர் தூற்றும் வசை மொழிகளைக் கூடப் பொருட் படுத்தமாட்டார்கள். அவ்வளவு கிறுக்குப் பிடித்தவர்களாகி விடுவார்கள். அகங்காரம் பிடித்தவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாகக் காணலாம். பணக்காரன் ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் செய்யும் அட்டகாசங் களுக்கு அளவே இராது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று சாதிக்கத்தான் முயல்வான். பணச்செருக்கால் தான் எண்ணு வதும் செய்வதும் தான் சரியென்று சொல்வான். அவன் பணம் ஒழியும் வரை யிலும் அவன் மமதை அடங்காது. கர்வம் பிடித்த அதிகாரி ஒருவன் சட்ட திட்டங்களுக்கு அடங்கிக்கூட நடக்கமாட்டான். தான் செய்வதுதான் சட்டம், ஒழுங்கு, நீதி என்று நினைப்பான். அவனைப் பிடித்த மமதை இவ்வாறு அவனுடைய அறிவை உருவாக்கி விடுகின்றது. இவைகளையெல்லாம் பார்க்கும் போது ஒருவனை உயர்த்தி விடுவது அடக்கம், பொறுமை. மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆவல் என்பதைக் காணலாம். ஒருவனைப் படுபாதாளத்தில் தள்ளிவிடுவது அடக்கம் அற்ற மண்டைக் கர்வம், அகங்காரம், மமதை, செருக்கு என்பதில் ஐயம் இல்லை. இந்த உண்மையை அறிந்த முன்னோர்கள், மமதையை ஒரு பெருந்தீமை யாகக் கருதினர். அது மனிதனிடம் அமையவே கூடாது; உள்ளத்திலே கர்வம் பிறந்தால் உடனே அதைக் களைந்தெறிய வேண்டும். மமதையை ஒழிப்பதுதான் மாசற்ற வாழ்வு வாழ்வதற்கு வழி - என்றெல்லாம் கூறினார்கள்; பாடி னார்கள்; அறவுரை தந்தார்கள். செருக்கடைந்த புலவர்களை நோக்கி ஔவையார் ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். அப் பாடலைப் பற்றி வழங்கும் கதைகள் பல. ஆயினும் அப்பாடல் செருக்கால் விளையும் தீமையை விளக்கி நிற்கின்றது. கற்றதுகைம் மண்அளவு கல்லாத உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்; - மெத்த வெறும்பந் தயம்கூற வேண்டாம்; புலவீர் எறும்புந்தன் கையால்எண் சாண். இதுதான் ஔவையார் பாடியதாக வழங்கும் பாட்டு; வெண்பாச் செய்யுள். நாம் படித்திருப்பது - கற்றிருப்பது - தெரிந்துகொண்டிருப்பது நம் கையில் அள்ளும் மண் அளவுதான். நாம் கற்காமலிருப்பது நம் கையில் உள்ள மண்ணை நீக்கி இவ்வுலகம் எவ்வளவு பரப்பு இருக்கின்றதோ, அவ்வளவினதாகும். இந்த உண்மையைக் கலைமகளே - சரவதியே உணர்ந்திருக்கின்றாள். ஆதலால், அவள் இன்னும் படித்து கொண்டே இருக்கின்றாள். ஆதலால், புலவர்களே எமது கவிதான் சிறந்தது என்று மிகவும் வீண் பந்தயம் பேச வேண்டாம். நம் கண்ணுக்குச் சிறிதாகக் காணப்படும் எறும்பும் அதன் கையால் அளந்தால் எட்டுச் சாண் அளவுடையதாகத்தான் இருக்கும். நாமும் நம் கையால் எட்டுச் சாண் அளவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றோம். ஆகையால் வீண் கர்வம் கொள்ள வேண்டாம் என்பதே இப்பாடலின் பொருள். நாலுவரி கொண்ட இச் சிறிய வெண்பாவிலே பெரிய உண்மை அடங்கியிருக் கின்றது. இவ்வுண்மை என்றும் நிலைத்திருக்கும் உண்மை. இவ்வுண்மையை மறந்த மனிதர்கள் சின்னப்பட்டுச் சீரழிந்துதான் வாழ்வார்கள், மறவாதவர்களே படிப்படியாக உயர்ந்த நிலையை அடைவார்கள். நமது உள்ளத்தில் எப்பொழுதும் உலவிக் கொண்டிருக்க வேண்டிய பழங் காலத் தனிப்பாடல்களில் இது ஒன்றாகும். கருத்து ஒருமித்த காதலர் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அத்தகைய குடும்ப வாழ்வில்தான் இன்பம் இருக்க முடியும்; கணவன் மேற்கே போனால் மனைவி கிழக்கே போகவேண்டும் என்கிறாள். வந்தவரை உபசரிக்க வேண்டும் என்று கணவன் சொன்னால் மனைவி அதைக் காதால் கூடக் கேட்பதில்லை. மனைவியின் உறவினரைக் கண்டால் கணவன் முகம் சுளிக்கின்றான். கணவன் உறவினரைக் கண்டால் - நண்பரைக் கண்டால் மனைவி மூஞ்சியைத் திருப்பிக் கொள்ளுகின்றாள். இம்மாதிரியான குடும்பத்திலே அமைதியிருக்க முடியாது; சாந்தி நிலவ முடியாது. இக்குடும்பத்தில் எப்பொழுதும் போர்முரசுதான் ஒலித்துக் கொண்டிருக்கும். இக்குடும்பம் போர்க்களமாகத்தான் காட்சியளிக்கும். இந்த உண்மையை முன்னோர்கள் பல பாடல்களில் எடுத்துக்காட்டி யிருக்கின்றனர். பல நிகழ்ச்சிகளில் அமைத்துக் கதை போலவும் எழுதியிருக் கின்றனர். ஒரு குடும்பத்தில் ஒற்றுமையில்லாமலிருப்பதற்குக் கணவனுடைய கெட்ட குணமே காரணமாயிருக்கலாம் அல்லது மனைவியின் போக்கு காரணமாயி ருக்கலாம். மனைவி உத்தமி; கணவன் வார்த்தைக்கு மறுமாற்றம் பேசாதவள் மானத்தோடு அடக்கமாகக் குடித்தனம் பண்ண வேண்டும் என்னும் ஆவல் உள்ளவள்; வந்தாரை அன்புடன் உபசரிக்கும் அருங்குணம் உள்ளவள்; வருமானத்திற்குத் தக்கவாறு செலவு செய்யும் திறமையும் உள்ளவள்.... கணவனோ அடாபிடிப் பேர்வழி; நீக்குப் போக்குத் தெரியாதவன்; வரவுக்கு மேல் செலவு செய்யும் ஆடம்பரக்காரன்; கூடா ஒழுக்கங்களிலும் பழகியவன் தன் குற்றத்தை உணராமல் எதற்கெடுத்தாலும் மனைவியின் மேல் சீறி விழு கின்றவன்; மனைவியைப் பெண் என்று கருதாமல் ஆடு மாடு போல் எண்ணி அடக்குமுறை தர்பார் நடத்துகின்றவன். இந்தக் குடும்பத்தில் இன்பம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை. சதா கண்ணீரும் கம்பலையுந்தான் குடி கொண்டிருக்கும். கணவன் ஒழுங்கானவன்; அடக்கம் உள்ளவன்; வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன்; கடன்படாமல் வருவதைக் கொண்டு மானமாகக் காலங்கடத்த வேண்டும் என்னும் கருத்துள்ளவன். மனைவியோ ஆடம்பரக்காரி. பெரும் பணக்காரிபோல் ஆடை அணிகள் பூண வேண்டும் என்னும் ஆசையுள்ளவள். கணவனுடைய கருத்தறியாமல் வரு மானத்தையும் உணராமல் அது வேண்டும் இது வேண்டும் என்று பாடாய்ப்படுத்தி வைப்பவள். இத்தகைய குடும்பத்திலும் இன்பத்தைக் காண முடியாது. எப்பொழுதும் கணவனும் மனைவியும், நாயும் புனையும் மாதிரிச் சீறிக் கொண்டிருப்பதைக் காணலாம். கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமையில்லாத காரணத் தால் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல துண்டுக்கதைகள் உண்டு. இந்தப் பழைய துண்டுக் கதைகள் பெரும்பாலும் பெண்ணின்மேல் குற்றம் சாட்டுவதாக அமைந்திருக்கும்; ஆண் மகன்மேல் குற்றம் சாட்டுவதாக அமைந்திருக்கும் கதைகளைக் காண்பது அரிது. இதற்குக் காரணம் உண்டு. ஆண் மகன்தான் சமுதாயத்தில் தலைமை இடத்தில் இருப்பவன். அவன்தான் குடும்பத்திலும் தலைமை தாங்குகின்றவன். அவனுக்கோ வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தக் கூடிய உரிமை முழுவதும் உண்டு. பெண் ஆணுக்கு அடங்கியவள்; ஆண் மகன் எண்ணப்படி நடக்க வேண்டியது தான் அவள் கடமை. அவளுக்கென்று தனிச் சுதந்திரம் எதுவும் இல்லை. இதுதான் சென்ற நூற்றாண்டு வரையிலும் நிலைத்திருந்த சமுதாயக் கொள்கை. ஆதலால் இந்த நூற்றாண்டுக்கு முன் பிறந்த எல்லா நிகழ்ச்சிகளும் இந்தக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டதாகத்தான் அமைந்திருக்கும். காலத்தின் நிலையை ஒட்டித்தான் கதைகளும் நிகழ்ச்சிகளும் அமையும். இலக்கியங்களும் கவிதைகளும் தோன்றும். இந்த உண்மையை உள்ளத்தில் வைத்துக் கொண்டுதான் பழைய நிகழ்ச்சிகளை நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக ஔவையார் பாடியதாக வழங்கும் நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். நல்லவன் ஒருவன்; ஔவையார் வழி நடந்து போவதைக் கண்டான்; அவர் களைத்திருப்பதைப் பார்த்தான்; அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் தெருத் திண்ணை யிலே உட்கார வைத்தான். அவன் மனைவியோ படுபட்டி, காயம்பட்ட புண்ணுக்குச் சுண்ணாம்புகூடக் கொடுக்காதவள். எச்சில் கையால் காக்கையை விரட்டவும் இணங்காதவள். அவளிடம் சென்றான். பக்கத்தில் உட்கார்ந்தான். அவள் முகத்தை தடவிக் கொடுத்தான். தலையில் உள்ள ஈர்பேன் முதலியவைகளை எடுத்தான். தலை மயிரை அழகாக முடிந்தான். மெதுவாக அவள் காதிலே விருந்து ஒன்று வந்திருக்கிறது என்று கூறினான். அவ்வளவுதான் கணவன் செய்த உபசாரம் அவ்வளவும் மறந்து விட்டாள்; வருந்தினாள்; எழுந்து கூத்தாடினாள். அவனைப் பற்றி வசை பாடினாள். கோரத் தாண்டவம் ஆடி பழைய முறத்தைக் கொண்டு அவனை ஓட ஓட அடித்து விரட்டினாள். இந்தக் காட்சியைக் குறிப்பாகக் கண்ட ஔவையார் இப்படியே ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடினார். இருந்து, முகத்திருத்தி, ஈரொடுபேன் வாங்கி, விருந்து வந்தது, என்று விளம்ப - வருந்திமிக ஆடினாள்; பாடினாள்; ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத்தான் என்று பாடிவிட்டார். இதன் பின்பும் கணவன் அந்தப் பட்டி மனைவியைச் சும்மா விடவில்லை. காலைக் கையைப் பிடித்துச் சமாதானம் செய்தான். ஔவைக்கு விருந்தளிக்கச் சம்மதிக்கும்படி செய்தான். அந்தப் பட்டிப் பெண் தனக்குச் சிறிதும் சம்மதம் இல்லாமல் கணவன் கெஞ்சுதலுக்காக இணங்கிச் சோறு சமைத்தாள். ஏதோ காமாச் சோமா என்று கறியும் குழம்பும் ஆக்கினாள். இலையில் பரிமாறினாள். ஔவையார் அந்த இலையின் முன் அமர்ந்தார். அவ்வளவு தான், தன் மனத்துக்குள்ளேயே அந்த உணவைப் பற்றிக் கீழ்வருமாறு நினைத்தார். அதைப் பாட்டாகவும் அமைத்துக் கொண்டார். இந்த உணவைக் காண்பதற்கே கண்கள் கூசுகின்றன. கையால் இதை எடுக்க வெட்கமாயிருக்கின்றது. கையில் எடுத்து வாயில் வைப்போம் என்றால் வாய் திறக்க மாட்டேன் என்கின்றது; வலுக்கட்டாயமாக வாயைத் திறந்து உள்ளே உணவைத் திணிக்க வேண்டியிருக்கின்றது. அப்படி உள்ளே புகுந்த உணவினால் வீணாக எனது எலும்பெல்லாம் பற்றி எரிகின்றது; அன்பில்லாதவள் இட்ட உணவு இவ்வாறு செய்கின்றது. ஐயையோ என்ன செய்வேன்! என்று வருந்தினாள். காணக் கண் கூசுதே கையெடுக்க நாணுதே மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கு என் என்பெலாம் பற்றி எரியுதே ஐயையோ அன்பில்லாள் இட்ட அமுது என்பதுதான் அக்கருத்துள்ள பாட்டு, இவ்வாறு எண்ணி வருந்தி ஏதோ ஒருவாறு சாப்பிட்டுப் போனாள் ஔவையார். இந்த நிகழ்ச்சி வேடிக்கையானது; ஆயினும் இதில் உள்ள கருத்தைத்தான் நாம் கவனிக்க வேண்டும். இரண்டு கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருக்கின்றன. ஒன்று, குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்; காதலனும் காதலியும் கருத்தொருமித்து எக்காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது. மற்றொன்று, அன்பில்லாத உபசரிப்பு பிறர்க்கு இன்பம் அளிக்காது; அன்புடன் உபசரிப்பதே இன்பம் தரும் என்பது. நிகழ்ச்சி, பெண்ணடிமையும் ஆண் ஆட்சியும் உள்ள காலத்தில் தோன்றியது. ஆதலால் இந்த முறையில்தான் - பெண் மீது பழி போடுவதாகத்தான் அமைந்திருக்க முடியும். நாம் கொள்ள வேண்டியது கருத்தைத் தான். கருத்து உண்மை யானது; என்றும் போற்றக் கூடிய கருத்து; இது உண்மைதானே? உங்களுக்கு அனுபவம் உண்டா? நாம் வாழ்க்கையிலே பெற்றிருக்கும் அனுபவங்கள் பல. அவைகளை எல்லாம் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப் பதில்லை. பலவற்றை மறந்துவிட்டிருப்போம். சிலவற்றை நாம் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவைகள் நம்மை விட்டுப் போய் விடுவதில்லை. அடிக்கடி நம் உள்ளத்திலே உலா வந்து கொண்டிருக்கும். புல்லர்களாக இருப்பவர்களிலே சிலர், குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பாட்டாக எழுதி வைத்து விடுவார்கள். டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்கள், தாம் கண்ட அனுபவத்தை டைரியிலே - நாட் குறிப்பிலே குறித்து வைத்து விடுவார்கள். இரண்டும் செய்யாதவர்களிலே பலர், தம் நண்பர்களிடம் சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லி நினைவுப்படுத்திக் கொள்வார்கள். இவ்வுண்மையை நாம் கண்கூடாகக் காணலாம் பண்டைய புலவர் ஒருவர், குறிப்பிடத்தக்க தம் அனுபவத்தை ஒரு வெண்பாவிலே எழுதி வைத்திருக்கிறார். அது அவ்வளவு பிரமாதமான சங்கதி அன்று; சாதாரணமான ஒரு நிகழ்ச்சிதான். ஆனாலும் அந்தப் பாட்டு, இன்று நமக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கின்றது. அப்பாடலைப் பற்றிக் கூறுவதற்கு முன் மற்றொரு செய்தியைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நான் சொல்லப் போவதைப்பற்றி உங்களுக்கு அனுபவம் உண்டோ? இல்லையோ? அது எனக்கு தெரியாது. எனக்கு நிச்சயமாக அனுபவம் உண்டு; ஒரு தடவை அல்ல; பல தடவை அனுபவித்திருக்கின்றேன். அதைச் சொல்லி விட்டு மேலே போகிறேன். சில பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களுக்கு நீங்களும் போயிருப்பீர் கள்; நானும் போயிருக்கின்றேன். கல்யாணத்தில் விருந்துதான் முதன்மையானது என்பது பழய காலத்துச் சம்பிரதாயம். விருந்தில்லாமல், சும்மா பேசிவிட்டுக் கலையும் கல்யாணந்தான் இப்பொழுது நாகரிகமாக கருதப்படுகின்றது. ஆதலால் நான் புதியமுறைத் திருமணத்தைப் பற்றி பேசவில்லை. பழைய முறைக் கல்யாணம் ஆகட்டும், புதிய முறைக் கல்யாணம் ஆகட்டும், விருந்தோடு கூடிய - அதாவது சாப்பாட்டோடு சேர்ந்த கல்யாணத்தைப் பற்றித்தான் நான் சொல்லுகின்றேன். கல்யாணத்தை நடத்துகிறவர்களிலே சிலர்தான் கச்சிதமாக நடத்தத் தெரிந்தவர்கள். எத்தனை பேரை அழைத்திருக்கின்றார் களோ, அத்தனை பேருக்கும் காலாகாலத்திலே விருந்திட்டு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள். வந்த விருந்தினர்கள், கல்யாண வீட்டுக்காரரின் திறமையான ஏற்பாட்டைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டு போவார்கள். சிலர் நல்ல பணம் படைத்திருப்பார்கள்; செல்வாக்குள்ள வர்களாயி ருப்பார்கள்; ஆடம்பரப் பிரியர்களாயுமிருப்பார்கள். தம் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ நடத்தப் போகும் கல்யாணத்தைப் பலரும் பார்த்துப் பாராட்டும்படி அவ்வளவு ஆடம்பரமாக நடத்திவிட வேண்டும் என்று எண்ணியிருப் பார்கள். அவர்கள் வீட்டிலே பெண்ணுக்கோ பிள்ளைக்கோ கல்யாணம் பண்ணத் தீர்மானித்தவுடன், ஆடம்பரமாக எல்லா ஏற்பாடுகளும் செய்திருப்பார்கள். தமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் - கொஞ்சம் கௌரவமானவர்கள் எல்லோருக்கும் அழைப்பு; கல்யாணத்திலே பெரிய புள்ளிகளின் கச்சேரிகள்; வந்தவர்கள் எல்லோரும் நன்றாகச் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்ற நினைப்புடன் தடபுடலான சமையல்; இன்னும் பந்தல் முதலிய ஆடம்பரங்கள் எல்லாம் இருக்கும். ஆனால் சாப்பாட்டுச் சமயத்திலே, ஒழுங்காக வந்தவர்களை அமரச் செய்து விருந்து செய்வதிலே பெரிய ஊழல் ஏற்பட்டு விடும். கியூ வரிசையில்லாத ப நிலையத்திலே பஸில் ஏறுவதற்கு என்ன பாடுபட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால் மின்சார ரெயிலில் ஏறும் அனுபவத்தையாவது நினைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரித்தான், சாப்பிடும் இடத்திற்குள் போய்ச் சேர வேண்டும். கல்யாண வீட்டுச் சாப்பாட்டிற்குக்கூட இந்த மல்யுத்தம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படுவது என்றால் அது உண்மையில் சகிக்க முடியாதுதான். கல்யாண வீட்டு விருந்துச் சாப்பாட்டுக்கு இப்படி முண்டி அடித்துக் கொண்டு போகின்றவர்களைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புத்தான் வரும். கௌரவம் உள்ள மனிதர்கள் என்று நாம் நினைக்கின்றவர்களில்கூடச் சிலர் இந்த மல்யுத்தக் கோஷ்டியில் சேர்ந்திருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவது உண்டு. என்ன செய்வது? பசி நேரம்; வீட்டுக்குப் போக நேரம் இல்லை; நேரம் கடந்து போனால் வீட்டிலும் சாப்பாடு கிடைக்காது. குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வந்திருந்தால் இந்த குதியிலே கலந்து கொண்டால்தான் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க முடியும். வெளியூர் விருந்தினர்கள் வேறு எங்கும் போக முடியாது. கட்டாயம் மல்யுத்த வீரர்களாகித்தான் தீர வேண்டும். இந்தச் சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்களோ அது எனக்குத் தெரியாது. ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்கள் சில சமயம் எனக்குக் கிடைத்தது உண்டு. அச் சமயங்களில் நான் அந்த இடத்தை விட்டுப் பேசாமல் நழுவி விடுவது வழக்கம். எட்டி நின்று கொண்டு பார்ப்பேன். யாராவது அழைத்துக் கொண்டு போனால்தான் போவேன். அல்லது இடிபடாமல் உள்ளே நுழையக்கூடிய சந்து கிடைத்தால்தான் நுழைந்து சாப்பிடுவேன். இன்றேல் சாப்பிட்டு முடித்தவனைப்போல் வந்துவிடுவேன். ஓட்டல் உள்ள ஊராயிருந்தால் ஏதேனும் கிடைப்பதை வாங்கிச் சாப்பிட்டுப் பசியை நீக்கிக் கொள்வேன். உள்ளூராயிருந்தால் பேசாமல் வீட்டுக்கு வந்து விடுவேன். வீட்டிலும் கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்ததாகச் சொல்லி விடுவேன். இது என்னுடைய அனுபவம். இதற்காக நான் யாரையும் நொந்து கொள்வதில்லை. கல்யாண வீட்டுக்காரர்களின் உள்ளத்திலே எந்தக் குற்றமும் இல்லை; ஏராளமான பண்டங்களைச் சமைத்திருப்பார்கள். வந்தவர்கள் அனைவரும் வயிறார உண்டு மகிழ வேண்டும் என்பது அவர்கள் ஆசை. ஆனால் சரியான ஏற்பாடு செய்யாத காரணத்தால் விருந்தாளிக்கு மனத் தாங்கல். பண்டங்கள் பாழ். முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்திருந்தால் இந்த ஊழல் ஏற்பட்டிருக்காது. ரொம்பப் பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலே போலீகாரர்கள் புகுந்து விருந்தினர்களை விரட்டியடித்ததாகக் கூடக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த மாதிரி கல்யாண விருந்தில் கலவரம் ஏற்படுவது புதிது அல்ல. பெரிய மகாராஜாக்கள் வீட்டுக் கல்யாணங்களில் கூட இந்த மாதிரியான ஊழல்கள் நடந்திருக்கின்றன. இதை ஔவையார் பாடல் ஒன்று நமக்கு நினைவூட்டு கின்றது. வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் :-அண்டி நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; நீள்பசியி னாலே சுருக்குண்டேன் சோறு உண்டிலேன். இதுதான் அந்த பாட்டு, பாண்டிய மன்னன் வீட்டுக் கல்யாணத்துக்கு ஔவைப்பிராட்டி அழைக்கப்பட்டிருந்தாள். ஏராளமான கூட்டம்; ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும்; சோற்று மண்டபத்தில் நுழைவதற்கு மல்யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் ஔவையாரும் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. தோல்வி யுற்றுத் திரும்பினார்; பரிதாபம்! அதைத்தான் இந்த வெண்பாவில் அமைத்துப் பாடியிருக்கிறார். சிறந்த தமிழ் மொழியை ஆராய்ந்து அறிந்த பாண்டிய மன்னன் வீட்டுக் கல்யாணத்திலே, நான் விருந்துண்ட சிறப்பைச் சொல்லுகின்றேன், கேள்! சாப்பாட்டு மண்டபத்தை அணுகினேன்; கூட்டத்திலே நெருக்கப்பட்டேன்; இடித்துத் தள்ளப்பட்டேன்; பெரிய பசியினால் உடல் வற்றிப் போனேன்; இவ்வளவு பெற்றேன்; ஆனால் சோறு மட்டும் கிடைக்கவில்லை; பட்டினிதான் கிடந்தேன். இதுவே மேலே காட்டிய வெண்பாவின் பொருள். பாண்டியன் வீட்டுக் கல்யாணத்திலே அவ்வளவு கூட்டம் இருந்தது. எண்ணற்ற பேருக்கு விருந்தளிக்கப்பட்டது என்று புகழ்ந்து கூறியதாக இப்பாடலுக்குப் பொருள் கூறுவர். உண்மை யில் இப்படி நடந்திருந்தால், அது ஊழல் என்பதில் ஐயம் இல்லை. நிர்வாகத் திறமையற்றவர்கள் நடத்திய கல்யாணம் என்பதில் ஐயம் இல்லை. இதுதான் என் முடிவு. உங்கள் அனுபவம் என்ன சொல் கிறது? ஔவையார் பாட்டு நிர்வாகத் திறமையற்றவர்களுக்கு ஒரு சாட்டை அடி அல்லவா? நிர்வாகத் திறமையும் நமது பரம்பரைச் சொத்துதான். நமது பரம்பரைச் சொத்து என்பதற்காக நிர்வாகத் திறமையோடு ஊழலும் நிலைத்திருக்க வேண்டுமா? சங்க காலக் கடவுள்கள் ஆராய்ச்சி யென்பது உண்மையைக் காணுவதுதான். நம் உள்ளத்திலே ஒரு கருத்தை வைத்துக் கொள்ளுவது; நம் கருத்திற்கு மாறானவைகள் உண்மையானவைகளாயிருந்தாலும் அவைகளை ஒப்புக்கொள்வதில்லை; அவைகளை மறந்து விடுவது; நாம் கருதியவற்றையே இருந்தனவென்று சாதிப்பது; இவைகள் உண்மையான ஆராய்ச்சிகள் ஆக மாட்டா. பழமை யைப் பற்றி ஆராய்வோர் இதை உள்ளத்திலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நமக்குப் பிடிக்காத செய்திகள் பழங் காலத்திலே பல உண்டு. அவைகளை எடுத்துக் கூறுவதால், இக்காலத்து மக்கள் அக்காலத்துக்குப் பாய்ந்துவிடப் போவதில்லை. முற்போக்கி லிருந்து பிற்போக்கிற்குப் பாய்வது மக்கள் இயல்பல்ல. முன்னேதான் பாய்வார்கள்; பின்னேதான் முடியாது. இந்த இயற்கைத் தன்மையை உணர்ந்தவர்கள் தமக்குப் பிடிக்காத செய்திகள் பண்டைக் காலத்தில் இருந்தால் அவற்றை வெளி யிடத் தயங்க மாட்டார்கள். சீர்திருத்தவாதிகள் இவ்வுண்மையைக் கருத்திற் கொள்ள வேண்டும். ஆராய்ச்சி யென்ற பெயரிலே ஒரு சாரார் என்னென்னவோ சொல்லிக் கொண்டு வருகிறார்கள்; எதை எதையோ எழுதிக் கொண்டு வருகின்றார்கள். பழைய இலக்கியங்களைப் படிக்காதவர்கள் அவற்றை நம்பவும் தொடங்கு கின்றார்கள். இச்செயல் உண்மையான வரலாற்று முறைக்கே எதிரானதாகும்; உண்மையான வரலாற்றை அறிய முடியாமல் திரையிடுவதும் ஆகும். தமிழகத்தில் தெய்வங்கள் பண்டைக் காலத்தில், அதாவது சங்க காலத்தில், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன; உருவ வணக்கங்கள் இருந்தன; தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் செய்யப்பட்டு வந்தன. மக்கள் தெய்வங்களையும், திருவிழாக்களையும் கொண்டாடினார்கள். இவைகளைச் சங்க இலக்கியங்களிலே நாம் காண முடியும். தெய்வம் ஒன்றே - கடவுள் ஒன்றே என்ற கொள்கை திருக்குறள் காலத்திற்குப் பின்புதான் தமிழ் நாட்டில் பரவியது என்று கூறலாம். திருக்குறள் ஆசிரியருக்குப் பின்னே தோன்றிய பல நூலாசிரியர்கள், சமய குரவர்கள், அறிஞர்கள், தெய்வம் ஒன்றேதான் என்பதை நிலை நாட்ட முயன்றனர். மத தத்துவங்களும் ஒரே தெய்வந்தான் மக்கள் நினைக்கும் பல உருவங்களிலே காட்சியளிக்கின்றது என்ற கொள்கையைப் பரப்புவதற்குப் பாடுபட்டனர். தெய்வங்களை நம்பியவர்கள் இருந்த காலத்திலேயே தெய்வ நம்பிக்கையில்லாதவர்களும் இருந்தனர்; தெய்வங்களை மறுப்போரும் இருந்தனர். இத்தகையவர்கள் எந்நாட்டிலும் இருந்தனர். இவைகளைப் பண்டை நூல்களை ஆராய்வோர் காண்பார்கள். தமிழ் நாட்டிலே இன்று சிலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தமிழர் கொள்கையென்று கூறுகின்றனர். இது திருமூலர் கண்ட உண்மை. சங்க காலத்திற்குப் பின்னே தோன்றிய சான்றோர்கள் ஏக தெய்வ வணக்கத்தை விரும் பினார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. சங்க காலத்திற்குப் பின்னே தோன்றிய இக்கொள்கையை வைத்துக்கொண்டு, பழந்தமிழரின் நாகரிகத்தைக் கவசம் போட்டு மறைக்க முயல்வது தவறு. தமிழர்கள் ஏக தெய்வம் வணக்கம் உள்ளவர்கள்; ஆரியர்களால்தான் பல தெய்வ வணக்கம் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டது; ஆரியர்கள்தான் விக்கிரக வணக்கத்தைத் தமிழ் நாட்டிலே பரவச் செய்தார்கள்; இன்று தமிழ் நாட்டில் வழங்கும் தெய்வங்கள் எல்லாம் ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட தெய்வங்களாகும் என்று சண்டப் பிரசண்டமாகச் சிலர் பேசுகின்றனர்; எழுதித் தள்ளுகின்றனர். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் என்றொரு பழமொழியும் உண்டு. இப்பழமொழிக்கு இக்கூற்று முற்றும் பொருத்தமானதாகும். தொல்காப்பிய காலத்தில் பழந்தமிழர் கொள்கையை அறிவதற்கு இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியம் ஒன்று தான் பழமை யானது. இன்றுள்ள தமிழ் நூல்களில் எல்லாம் காலத்தால் முற்பட்ட நூல் தொல்காப்பியம் ஒன்றுதான் என்பது எல்லோ ராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அது இலக்கண நூல்தான். ஆயினும் இலக்கியம் போல் நின்று பல உண்மைகளை உரைக்கின்றது. பழந்தமிழர்களின் தெய்வக் கொள்கைகளை அந்நூலிலிருந்து தெரிந்து கொள்ளுவோம். உலகத்திற்கு நானிலம் என்பது ஒரு பெயர். நான்கு வகையான நிலப் பிரிவுகளையுடையது உலகம் என்பதுதான் இதன் பொருள். காட்டு நிலம், மலை நிலம், நீர் வளமுள்ள நிலம், கடற்கரை நிலம் என்பவைகள்தாம் அந்த நான்கு வகை நிலங்கள். இவற்றைத்தான் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற பெயரால் வழங்குவர். இந்த நால்வகை நிலத்திற்கும் தனித்தனியே தெய்வங்கள் உண்டு. அவைகளை அந்நிலத்து மக்கள் வணங்கி வந்தனர்; அவைகளுக்குத் திருவிழாக்களும் செய்து வந்தனர். இவ்வுண்மயைத் தொல்காப்பியத்திலே காணலாம். மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே. (தொல். பொருள். அகத்திணை 5) காட்டு நிலமாகிய முல்லை நிலத்துக்கு மாயோன் தெய்வம்; மலை நிலமாகிய குறிஞ்சி நிலத்துக்குச் சேயோன் தெய்வம்; நீர்வளமுள்ள நிலமாகிய மருத நிலத்துக்கு வேந்தன் தெய்வம்; மணல் நிறைந்த கடற்கரையாகிய நெய்தல் நிலத்துக்கு வருணன் தெய்வம். இவ்வுண்மையை இச்சூத்திரம் எடுத்துக் காட்டுகின்றது. மாயோனைத் திருமால் என்றும், சேயோனை முருகன் என்றும், வேந்தனை இந்திரன் என்றும் கூறுவர். ஆகவே, திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகியவர்கள் தொல்காப்பியர் காலத்திலே தமிழர்களால் வணங்கப்பட்டு வந்தனர் என்பதை அறியலாம். கொற்றவை என்னும் தெய்வத்தையும் தமிழர்கள் வணங்கி வந்தனர்; போரிலே வெற்றி பெற உதவும் தெய்வத்திற்குக் கொற்றவை என்று பெயர். இதனைப் பிற்காலத்தால் காளியென்றும், ஐயை யென்றும் கூறினர். போரிலே வெற்றி பெற்றவர்கள் மீண்டும் போரில் வெற்றி பெறுவதற்காக இக்கொற்ற வைக்குப் பலியிட்டு வழிபாடு செய்வார்கள். இதைத்தான் கொற்றவை நிலை என்று கூறுகின்றது தொல்காப்பியம். மறங்கடை கூட்டிய துடி நிலை, சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. (தொல். பொருள், புறத்திணை 62) வீரத்திலே வெற்றி பெற்றதற்காக உடுக்கடித்துக் கொண்டு ஆரவாரிக்கும் துடிநிலையும், சிறந்த கொற்றவையென்னும் தெய்வத்தை வழிபடும் கொற்றவை நிலையும் வெட்சித் திணையைச் சேர்ந்ததாகும் என்பதே இச்சூத்திரத்தின் பொருள். இச்சூத்திரத்தால் கொற்றவை என்னும் தெய்வமும் தொல் காப்பிய காலத்தில் தமிழ்நாட்டில் வழிபாடு செய்யப்பட்டு வந்ததைக் காணலாம். முருகனை வணங்கி வழிபாடாற்றுவதைக் காந்தள் நிலையென்றால், மாயோனைப் போற்றுவதைப் பூவை நிலையென்றும் கூறுகின்றார் தொல் காப்பியர். இவற்றை, தொல்காப்பியப் பொருள் அதிகாரம், புறத்திணை 63-வது சூத்திரத்தால் அறியலாம். நிலையாமையை அறிவிப்பதற்குக் காஞ்சித் திணை யென்று பெயர். இத்திணையைப் பற்றிக் கூறும் தொல்காப்பியச் சூத்திரத்தின் முதல் வரி, மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் (தொல். பொருள். புறத்திணை 77) என்பது. பிறரால் தடுக்க முடியாத கூற்றம் வரும் என்று கூறிய பெருங்காஞ்சியும் என்பது இதன் பொருள். இதனால் கூற்றுவன், காலன், எமன் என்று சொல்லப் படும் ஒரு தெய்வம் உண்டென்று தமிழர்கள் நம்பியிருந்தனர் என்பதை அறியலாம். பேய், பிசாசுகள் உண்டென்ற நம்பிக்கையும் தொல்காப்பிய காலத் தமிழர்களிடம் இருந்ததை அறியலாம். அமரர்கள் (தொல். பொருள். புறத் 79), அமரர் சுட்டியும் (தொல். பொருள். கற்பியல் 144), இமையோர் தேஎத்தும் (தொல். பொருள். பொருளியல் 245), வழிபடு தெய்வம் (தொல். பொருள். செய்யுள் 416) தேவர்ப்பராஅய (தொல். பொருள். 443). இவைகள் எல்லாம் தொல்காப்பிய காலத்திலே பல தெய்வங்கள் இருந்தனவென்பதற்குச் சான்றுகள். அமரர்கள், அமரர், இமையோர், தேவர் இவைகள் பல தெய்வங்களைக் குறித்து வந்தன. தேவர்களையெல்லாம் கடவுளர் என்ற பெயரால் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். காமப்பகுதி கடவுளும் வரையார் என்ற புறத்திணை இயல் சூத்திரத்தால் இவ்வுண்மையைக் காணலாம். கடவுளும் என்ற சொல்லுக்குத் தேவர்கள் என்றே பொருள். வழிபடு தெய்வம் என்று தொல்காப்பியர் குறித்திருப்ப தனால் ஒவ்வொரு வரும் வழிபட்ட பல தெய்வங்கள் இருந்தன என்பதைக் காணலாம். இவைகளைத் தவிர, சூரியன், அக்கினி, சந்திரன் முதலியவைகளையும் தொல்காப்பிய காலத்து மக்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். கொடிநிலை, கந்தழி, வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். பொருள். புறத்தினை - 85) உச்சியில் நிற்கின்ற கதிரவன், பற்றியதை அழிக்கும் தீ, குளிர்ந்த சந்திரன் என்ற குற்றமற்ற சிறப்பினையுடைய முதன்மை யாகிய மூன்றும் கடவுள் வாழ்த் தோடு எண்ணப்பட்டு வரும் என்பதே இதன் பொருள். இதனால் தொல்காப்பியத் தமிழர்கள் சூரியன், சந்திரன், தீ ஆகியவைகளையும் தேவர்களாக வணங்கி வந்தனர் என்பதைக் காணலாம். திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, கூற்றுவன், பல வகையான தேவர்கள், சூரியன், அக்கினி, சந்திரன், பேய்கள் முதலியவைகள் தொல்காப்பிய காலத்திலே தமிழ் நாட்டிலே நிலவியிருந்தன என்பதை மேலே காட்டிய ஆதரவுகளைக் கண்டு அறியலாம். உருவ வணக்கம் இறந்த வீரர்களுக்குக் கல்நட்டு, அக்கல்லை அவ்வீரர்களாக எண்ணி வணங்கி வந்தனர். இவ்வழக்கம் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ் நாட்டில் இருந்தது. வீரர்களுக்குக் கல்நடுவதைப் பற்றி ஆறு வகையாகப் பிரித்துக் கூறுகிறது தொல்காப்பியம். காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு மரபில் பெரும்படை, வாழ்த்தல் என்று இருமூன்று மரபின் கல்லொடு புணர (தொல். பொருள். புறத்திணை - 63) என்பதனால் அந்த ஆறு வகையையும் காணலாம். நடுவதற்குரிய கல்லைத் தேர்ந்தெடுத்தல், அந்தக் கல்லை நடுவதற்கான ஆரம்ப விழாச் செய்தல், அக்கல்லைத் தண்ணீரிலே போட்டுச் சுத்தம் செய்தல், பின் அந்தக் கல்லை நாட்டுதல், மிகச் சிறப்பாகப் படை வீரர்கள் அக்கல்லுக்கு மரியாதை செலுத்துதல், எல்லோரும் கூடி அக்கல்லிலே இறந்த வீரனுடைய ஆவி குடி கொண்டிருப்பதாக எண்ணி வாழ்த்தி வணங்குதல் என்று ஆறு வகையாகக் கல்நடும் விழாவைப் பிரித்தனர். இது விக்கிரக ஆராதனத்துக்கு அடிப்படை. முதலில் வீரர்களுக்குக் கல் நாட்டி வணங்கி வந்த வழக்கமே பத்தினிப் பெண்களுக்கும், தெய்வங்களுக்கும் உருவக் கல் நட்டு வணங்கும் வழக்கத்தை ஏற்படுத்தி விட்டது. முதலில் வெறுங்கல்லை அடையாளமாக நாட்டினர். பிறகு அக்கல்லிலே இறந்த வீரன் பெயரை எழுதினர். பின்னர் அவ் வீரனைப் போலவே உருவச் சிலை செய்தனர். இவ்வழக்கமே சிற்பக்கலை வளர்வதற்கு அடிப்படையென்று கூறலாம். ஆகவே தொல்காப்பிய காலத்தில் பல தெய்வ வணக்கங் களும் உருவ வணக்கமும் தமிழ்நாட்டில் குடி கொண்டிருந்ததைக் காணலாம். சங்க இலக்கியங்கள் தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களிலே, தொல்காப்பியத்தில் உள்ள அவ்வளவு தெய்வங்களும் காணப்படுகின்றன. பத்துப்பாட்டைச் சேர்ந்த திருமுருகாற்றுப்படையிலும், எட்டுத்தொகையைச் சேர்ந்த பரிபாடலிலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் காணப்படுகின்றனர். திருமால், முருகன், சிவன் முதலிய தெய்வங்களைப் பற்றிய புராணக் கதைகள் காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படையிலும், பரிபாடலிலும், கந்தபுராண வரலாறுகளையும் காணலாம். பரிபாடலிலே திருமாலின் அவதாரங்களைக் காணலாம். சிறப்பாக வராகவதாரம், கிருஷ்ணாவதாரம், மோகினி அவதாரம், நரசிம்மவதாரம், பலராமாவதாரம் முதலிய திருமாலின் அவதாரங்களைப் பரிபாடலிலே காணலாம். சிவபிரான் திரிபுரம் எரித்த கதையும் கலித்தொகையிலும், பரிபாடலிலும் காணப்படுகின்றன. இவ்வாறு சங்க இலக்கியங்களில் தெய்வங்களும், அவை களைப் பற்றிய வரலாறுகளும் வழங்குகின்றன. இன்று வழங்கும் புராணக் கதைகள் பல சங்க காலத்திலே வழங்கி வந்தன. வள்ளுவர் தெய்வம் இதன்பின் திருக்குறளில்தான் தெய்வத்தின் பெயர் சொல்லாமல் பொதுக் கடவுள் வணக்கம் காணப்படுகின்றது. திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பாட்டுகளிலே தெய்வத்தின் குணங்கள் மட்டுமே கூறப்படுகின்றன. திருவள்ளுவர் கூறும் கடவுள் உருவம் உள்ள கடவுள்தான் உருவமிருந்தால்தான் குணங்கள் இருக்க முடியும். குணங்கள் இருந்தால் அக்குணங்களையுடைய பொருளும் இருந்தாக வேண்டும். இறைவன்; வேண்டுதல் வேண்டாமை யிலான்; எண் குணத்தான். மலர்மிசை ஏகினான் என்று கடவுளை ஆண் பாலாகவும், உருவமுள்ளவனாகவுமே கூறுகின்றார் வள்ளுவர். சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு என்ற குறளின் மூலம் விக்கிரக வணக்கத்தையும் திருவள்ளுவர் ஒப்புக் கொண்டிருக்கின்றார். சிறப்பு என்பது திருவிழா; பூசனை யென்பது நாள்தோறும் நடைபெறும் பூஜை. விக்கிரகங்களுக்குத் தான் தினசரிப் பூசனையும் குறிப்பிட்ட நாள்களில் விழாவும் நடத்த முடியும். திருவள்ளுவர் தெய்வ ஏக வணக்கத்தையே குறிப்பிட்டுள் ளார். ஆயினும் அவர் காலத்திலும் பல தெய்வ வணக்கங்கள் நீடித்திருந்தன என்பதைத் திருக்குறள் மூலமே காணலாம். இந்திரன், திருமால், திருமாலின் வாமனாவதாரம், காலன், இலக்குமி, மூதேவி, பேய் பிசாசுகள், மோகினி, தேவர்கள் முதலியவர்களும் திருக்குறளிலே காணப்படுகின்றனர். ஏக தெய்வக் கொள்கை திருவள்ளுவருக்குப் பின்னே தோன்றிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் முதலியவர்களும் ஏக தெய்வக கொள்கையை ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் போட்டி நிலவியது. வைணவர்கள் திருமால் ஒருவரே தெய்வம்; அவரே எல்லாத் தெய்வங்களாகவும் காட்சியளிக்கிறார் என்றனர். இதைப் போலவே சைவர்களும் சிவபெருமான் ஒருவரே தெய்வம்; அவர்தான் எல்லாத் தெய்வங்களாகவும் காட்சி தருகின்றார் என்றனர். இவ்வாறு ஏக தெய்வக் கொள்கையை ஒப்புக்கொண்ட சைவர்களும், வைணவர்களும் தங்களுக்குள் தம்தம் தெய்வமே பரத்துவமுடையது என்று வழக்கிட்டுக் கொண்டனர். இவ்வழக்கு வளர்ந்தது; வெறுப்பாகவும் மாறியது. இதற்குப் பிறகு சித்தர்கள் என்ற கூட்டம் தமிழ் நாட்டிலே தோன்றினார்கள். அவர்கள் பகுத்தறிவுவாதிகள். பல தெய்வக் கொள்கையை அவர்கள் விரும்பவில்லை. உருவ வணக்கங் களையும் வெறுத்தனர். கடவுள் என்பவர் எங்குமிருப்பவர்; குறித்த இடத்தில்தான் கடவுள் இருக்கின்றார் என்று கூறுவது அறியாமை; ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுள் உண்டு என்று பாடினார்கள். உருவ வணக்கம், புராண நம்பிக்கை, தனித்தனி கடவுள்கள் போன்ற மூட நம்பிக்கைகளையெல்லாம் இவர்கள் வெறுத்தார்கள். அறிவே கடவுள் இந்தச் சித்தர்கள் வழியைப் பின்பற்றியவர்கள் தாம் தாயுமானார், இராமலிங்கர் போன்றவர்கள். அவர்கள் அறிவே கடவுள் அன்பே கடவுள், உள்ளத்துள் ஒளிரும் ஒளியே கடவுள் மக்களுக்குச் செய்யும் பணியே கடவுட் பணி என்ற பரந்த நோக்கத்தைத் தமிழகத்திலே பரப்பினார்கள். சித்தர்கள், தாயுமானார், இராமலிங்கர் முதலியவர்கள் காட்டிய கடவுள் நெறியையே பாரதியாரும் பின்பற்றினார் என்று கூறிவிடலாம். அறிவு வளர்ச்சி தொல்காப்பியர் காலத்திலே தமிழர்கள் பல தெய்வங் களை வழிபட்டு வந்தனர். அக்காலத்திலே தெய்வங்களைப் பற்றிய புராண வரலாறுகள் வழங்கியதாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த சங்க இலக்கியங் களிலே தொல்காப்பிய காலத்துத் தெய்வங்கள் பலமாக வேரூன்றியிருக்கின்றன. தொல்காப்பிய காலத்திலே சிவன் என்ற பெயர் காணப்படவில்லை. சங்க இலக்கியங்களிலே சிவபெருமான் தோன்றிவிட்டார். திருவள்ளுவர் காலத்திலே ஏக தெய்வக் கொள்கை தோன்றியது. ஆயினும் பழைய தெய்வங்களும் மறைந்து விட வில்லை. திருக்குறளுக்குப் பின்னே ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலே ஏக தெய்வக் கொள்கையிருந்தது. ஆயினும் மதச் சண்டை காரணமாக அக்கொள்கை மதிப்பிழந்தது. ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தங்கள் தெய்வமே பரத்துவமுள்ளது என்று கூறிக்கொண்டனர். இக்காலத்திலேதான் விநாயகர் என்ற புதிய தெய்வமும் பிறந்தது. தமிழ்நாட்டுத் தெய்வங்களுடன் கலந்தது. ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்தில்தான் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூலர் கொள்கையும் தோன்றியது என்று கூறி விடலாம். ஏக தெய்வக் கொள்கை பரவினாலும், பல தெய்வக் கொள்கை மறைந்து விடவில்லை. ஒவ்வொரு தெய்வங்களைப் பற்றிய கதையும் புராணங்களாக உருவெடுத்தன. பலதரப்பட்ட தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் மதத்தினரும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டனர். இக்காலத்தில்தான் சித்தர்கள் என்னும் அறிஞர்கள் தோன்றினார்கள். சித்தர்கள் மூடநம்பிக்கைகளைக் கண்டித்தனர். உருவ வணக்கங்களைக் கண்டித்தனர். மக்களை அறிவு நெறியிலே புகுத்துவதற்கு முயன்றனர். தாயுமானார், இராமலிங்கர், பாரதியார் போன்றவர்களால் இந்த நெறி தமிழ் நாட்டில் பரவி வந்ததைக் காணலாம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியை உலக வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உலகத்தோடு இணைந்தே தமிழ் நாடும் வளர்ச்சியடைந்து வந்ததை அறியலாம். தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரையிலும், உள்ள தெய்வக் கொள்கையிலே ஆரியர் தமிழர் என்ற வேறு பாட்டுக்கும் இடமில்லை. தமிழர்கள் வணங்கி வந்த அத்தனை தெய்வங்களையும், வடநாட்டினரும் வணங்கி வந்தனர். வடநாட்டினர் வணங்கி வந்த அவ்வளவு தெய்வங்களையும் தமிழர்களும் வணங்கி வந்தனர். இவற்றைத் தமிழ் நூல்களிலும் காணலாம்; வடமொழி நூல்களிலும் காணலாம். ஆகவே தெய்வக் கொள்கையிலே ஆரியர் தமிழர் - வடவர் தென்னவர் என்ற பிரிவினைக்கும் வேற்றுமைக்கும் இடமில்லை என்ற உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். தெய்வக் கொள்கை வர வர எவ்வளவு நாகரிகமடைந்து வளர்ந்து வந்திருக் கின்ற தென்பதையும் பழைய இலக்கியங்களை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பழமைப் பண்பிலே புதுமை புதிய தமிழகம் பிறந்துவிட்டது பிறந்திருக்கும் தமிழகம் பரிபூரணமானது என்று நாம் சொல்லவில்லை. கொஞ்சம் குறையிருக்கலாம். நாளடைவில் அக்குறை நிறைவேறி விடும். இந்த நம்பிக்கையுடன்தான் தமிழர்கள் அனைவரும் புதிய தமிழகத்தை வரவேற்பார்கள். இதில் ஐயம் இல்லை. புதிய தமிழகம் பிறப்பதற்கு முயன்றவர்கள் பலர்; முட்டுக் கட்டை போட்டவர்கள் சிலர். புதிய தமிழகம் பிறந்த பின்புகூட அதன் கழுத்தை முறித்து விட வேண்டும் என்று முயன்றோரும் உண்டு. அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. புதிய தமிழகம் பிறந்து விட்டது என்பது உண்மைதான். ஆனால் பெயர் மட்டும் தமிழகம் இல்லை. இது நமக்கு மனக்குறைதான். இக்குறையும் எளிதில் நீங்கும். தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே உண்மை யான தியாகி ஒருவர் உயிர் நீத்தார். அவர்தான் தியாகி சங்கரலிங்க நாடார் என்பவர். அவர் அப்பழுக்கற்ற காந்தியவாதி; தன்னலந் துறந்த தேசியவாதி. அவர் தியாகம் வீண் போகாது. சென்னை ராஜ்யம் என்பது தமிழ்நாடு என்று மாறுவது தூரத்தில் இல்லை. தமிழ்நாடு என்று பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதாது குருடிக்குச் செந்தாமரைக் கண்ணியென்று பெயர் வைத்து விட்டால் கண் பார்வை வந்து விடாது. அசல் ஆஞ்சநேயர் உருவில் இருப்பவனுக்கு அழகு சுந்தரம் என்று பெயர் வைத்து விட்டால் போதுமா? கோழி பாய்ந்தால் குலை நடுங்குகின்ற வனுக்கு வீரமார்த்தாண்டன் என்று பெயர் வைத்தால் அவன் வீரனாகி விடுவானா? இல்லை. இதைப்போல இன்றைய தமிழக நிலையிலே மாறுதல் ஏற்படாமல் - ஏற்படுத்த மனமும் இல்லாமல் - தமிழ்நாடு என்று பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதுமா? போதாது; போதவே போதாது. இன்றைய துருப்பிடித்த தமிழகம் சுடர்விட்டு விளங்க வேண்டும். தமிழ் மக்களை இன்று பிடித்து உலுக்கிக் கொண்டி ருக்கின்ற பஞ்சமும் பிணியும், அறியாமையும் இருந்த இடந் தெரியாமல் மறைந்து போக வேண்டும். எல்லா மக்களும் இன்பத்துடன் வாழ்வதற்கான வழி காண வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால்தான் புதிய தமிழகம் பிறந்ததற்குப் பயன் உண்டு. பழந்தமிழ் நாட்டிலே பல சண்டை சச்சரவுகள் மலிந்திருக்கலாம். பழந் தமிழ்நாடு துண்டுதுண்டாகப் பிரிந்து கிடந்திருக்கலாம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற பழமொழிக்கு இலக்காகக்கூடப் பழந்தமிழ் நாட்டின் நிலைமை இருந்திருக்கலாம். இந்தச் சண்டைகள் எல்லாம் உழவர்களிடம் இருந்த தில்லை; தொழிலாளர்களிடம் இருந்த தில்லை; வணிகர்களிடம் இருந்ததில்லை. மண்ணாசை கொண்ட மன்னர்கள்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டி ருந்தனர். சிற்றரசர்களும் பேரரசர்களும் அடிக்கடி முட்டி மோதிக் கொண்டி ருந்தனர். இது பழந்தமிழ் நாட்டு வரலாற்றின் ஒரு பகுதி. இந்த வரலாற்றை நாம் மறந்துவிடுவோம்; இது இனி மேல் நடக்கப் போவதில்லை. சரித்திரம் திரும்பி வரும் என்பது நிச்சயம் அன்று. அந்தப் பழந்தமிழகத்து மக்கள் அமைதியான வாழ்க்கையை விரும்பினர். அரசர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் மக்கள் அமைதியாக வாழ்ந்தனர். இவ்வுண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்களிலே காணலாம். இதற்கு ஓர் உதாரணம் பார்ப்போம். காதலன் வெளியூருக்குப் போயிருந்தான். போன இடத்திலே கருதிய காரியம் விரைவில் முடியவில்லை; சிறிது காலந் தாழ்ந்தது. ஆதலால் தாமதித்துத் திரும்பி வந்தான். காதலியோ, காதலன் வருவதாகக் கூறிய நேரத்தில் வரவில்லையே என்று வருந்தியிருந்தாள். காலந் தாழ்த்துக் காதலன் வந்தான்; வந்தவன் நேரே காதலியிடம் சொல்ல வில்லை; அவள் தோழியைக் கண்டான். நான் குறித்த காலத்தில் வராமையால் தலைவிக்குக் கோபமோ என்று கேட்டான். தலைவிக்குக் கோபம் இல்லை. பால் கறக்கும் பசுக்கள் பெருகட்டும்; ஏர் உழுவதற்கான காளைகள் பல பெருகட்டும்; இல்லறம் இனிது நடக்க வேண்டும் - என்பதே தலைவியின் விருப்பம்; நிலத்திலே விதைத்த உழவர்கள், நெல்லோடு மனைக்குத் திரும்புகின்றனர்; எங்கும் பூக்கள் பூத்திருக்கின்றன. இந்த ஊரை யுடைய தலைவன் தன் மனை வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்த வேண்டும்; இவ்வாறு நாங்கள் விரும்பினோம் என்றாள் தோழி, தலைவியின் விருப்பமும் உன்னுடன் சேர்ந்து இல்வாழ்வை இனிதாக நடத்த வேண்டும் என்பதுதான். எங்கள் ஆசையும் எக்குறையும் இன்றி நீ மனை வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான். இதுவே தோழி கூறிய விடை. வாழி ஆதவி! வாழி அவனி! பால் பல ஊறுக! gfL gy áw¡f! என வேட்டோளே யாயே; யாமே வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன்மனை வாழ்க்கை பொலிக என வேட்டேமே. (ஐங்குறு நூறு 3) இதுதான் அக்கருத்தமைந்த பாட்டு. இதிலே பழந்தமிழ் நாட்டின் பண்பைக் காணலாம். உழவர்களின் மனைகளிலே கறவைப் பசுக்கள் கறவை எருமைகள் இருந்தன. அவர்கள் நல்ல பாலும், தயிரும் வெண் ணெயும், நெய்யும் உண்டு வாழ்ந்தனர். அவர்கள் மனையிலே ஏர் உழக்கூடிய நல்ல காளைகளும் இருந்தன. உழவர்களுக்கு நிலம் உரிமையாக இருந்தது, விதைப்பவன் ஒருவன்; அறுப்பவன் ஒருவன்; அறுத்துச் சேர்த்த தானியத்தை அள்ளிக்கொண்டுபோய் அனுபவிப்பவன் ஒருவன் என்ற அநீதியில்லை. விதைத்தவனே அறுப்பான்; தன் மனையிலே கொண்டு வந்து சேர்ப்பான்; தானும் சுற்றமும் உண்டு மகிழ்வான்; மனை வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்துவான். இந்தப் பழைய தமிழகத்தையே மேலே காட்டிய செய்யுள் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது. நமது புதிய தமிழகத்திலே இந்தப் பழைய பண்பாடு பிறக்க வேண்டும் உழவர்கள் வாழ்வு நல்வாழ்வாக வேண்டும். அவர்கள் வாங்கும் வல்லமை படைத் தவர்களாக வேண்டும். அப்பொழுதுதான் நமது நாட்டுத் தொழில்கள் வளரும். தொழிலாளர்கள் வாழ்வு பெறுவார்கள். கலைகள் வளரும்; கலைஞர்கள் சிறப்படைவர். உழவும் உழவருமே உலகத்திற்கு அடிப்படை. இப்பழைய பண்பாட்டை மறவாமல் புதிய தமிழகம் அமைக; தமிழர்கள் வாழ்க. அவர்கள் வாழ்க்கையிலே வளம் பெற்று வாழ்க! சமூக மாற்றம் மனித சமூகம் எக்காலத்திலும் ஒரே விதமாக இருப்பதன்று. மற்றப் பிராணிகளுக்கும், மக்களுக்கும் உள்ள பெரிய வேற்றுமை இதுவாகும். மக்கள் ஒரே நிலையில் இருப்பார்களாயின், மற்றப் பிராணிகளுக்கும் இவர்களுக்கும் வேற்றுமை இராது. மக்களிடத்தில் உள்ள சிறப்புக்குக் காரணம் அவர்களிடம் குடிகொண்டுள்ள இயற்கைப் புரட்சிக் குணமேயாகும்; அதாவது அவர்களுடைய வாழ்க்கை முறை காலந்தோறும் மாறுதல் அடைந்து கொண்டே வருவதாகும். மனித வாழ்க்கையின் முற்கால சரிதத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாக விளங்கும். நமது முன்னோர்களைப் பற்றிய உண்மையை இன்னும் நமது சமூகம் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. அவர் களுடைய சமூக வாழ்வு எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதைக் கவனிப்பதில்லை; அவர்கள் வாழ்க்கையில் படிப்படியாக உண்டாகி வந்திருக்கும் புரட்சியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. இத்தகைய குணமுடையவர்களில் இரு கூட்டத்தார்கள் இருக்கிறார்கள். ஒரு கூட்டத்தார் வைதிக மனப்பான்மையுடைவர்கள்; அதாவது மதவாதிகள் என்று சொல்லலாம். மற்றொரு கூட்டத்தார்; முன்னோரைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத அதிதீவிரச் சீர்திருத்தக்காரர்கள். இவர்களில், மதவாதிகள், முன்னோர்கள் நம்மைக் காட்டிலும், ஒழுக்கத்திலும், நாகரிகத்திலும், அறிவிலும் சிறந்திருந்தார்கள் அவர்கள் தீர்க்கதரிசனமுடையவர்களாயிருந் தார்கள்; தெய்வங்கள் எல்லாம் அவர்களுடன் நேரே பேசிக் கொண்டிருந்தன. எந்தக் காரியங்களையும், தெய்வங்களை யழைத்து அவைகளைக் கொண்டே வெற்றிகரமாகச் செய்து கொண்டு வந்தார்கள். இப்பொழுது மக்கள் ஒழுக்க மற்றவர் களாகி விட்டார்கள்; ஆகையால் தெய்வங்கள் இந்த ஒழுக்கமற்ற மனிதக் கூட்டத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல் அஞ்சி நடுநடுங்கி மறைந்துவிட்டன; என்று சொல்லுகிறார்கள்; நம்புகிறார்கள். இவர்கள் சரித்திரத்தை நம்புவதே கிடையாது. எப்படிப் புராணங்களைக் கட்டுக் கதைகள் என்று சரித்திரக் காரர்கள் நம்புகிறார்களோ அதுபோலவே சரித்திரத்தைத் தெய்வ நம்பிக்கையற்ற அதிகபிரசங்கிகளின் ஆர்ப்பாட்டம் என்று இவர்கள் நம்புகிறார்கள். மனிதன் உயர்ந்த நாகரிகமுடை யவனாக படைக்கப்பட்டான் என்பது இவர்கள் நம்பிக்கை. மற்றொரு கூட்டத்தினரான அதிதீவிரச் சீர்திருத்தக் காரர்கள், முன்னோர்கள் அநாகரிகம் வாய்ந்தவர்கள். அவர்கள் அறிவுடையர்களாக இருக்கவில்லை. எல்லாம் தெய்வ சக்தியென்று நம்பிச் சோம்பேறிகளாக இருந்தார்கள்; உண்பதும், உறங்குவதும், உறங்காத நேரங்களில் வேதாந்தம் பேசுவதும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள்; இதனால் மனித சமூகத்தில் சோம்பேறி வாழ்க்கை குடிபுகுந்தது; இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படாமலே இருந்தார்கள். நாகரிக வளர்ச்சிக்கான காரியங்களில் அவர்கள் கவலை செலுத்தினதே இல்லை. ஆதலால் அவர்களைப் பற்றி நாம் சிந்திப்பது பயனற்றதாகும் என்று கருதுகிறார்கள். ஆனால், மனித சரித்திர இயற்கை மேற்கூறிய இரண்டு கொள்கைகளும் உண்மையல்லவென்பதை நன்றாக விளக்கிக் காட்டுகிறது. நமது முன்னோர்கள் வரவர நாகரிகத்திலும், அறிவு வளர்ச்சியிலும் முன்னேறியே வந்துகொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நாம் மெய்பித்துக் காட்டுவது அரிதன்று. நமது நாலாவது பாட்டனாரை எடுத்துக் கொள்வோம். அவரைவிட, நமது மூன்றாவது பாட்டனுடைய அறிவும், செயலும், நாகரிகமும் மேம்பட்டதாக இருந்திருக்கிறது. ஏனெனில் நாலாவது பாட்டனார் அவருடைய தகப்பனார் கற்றக் கொடுத்த விஷயங் களுடன் தமது அனுபோகத்தின் மூலம் பல உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கக் கூடும். அவ்வளவு விஷயங்களையும் அவருடைய மகனாகிய நமது மூன்றாவது பாட்டனார் எளிதில் கற்றறிந்து அதற்கு மேலும், இவர் இன்னும் பல புதிய உண்மை களைக் கண்டுபிடித்திருக்கக்கூடும். அவ்விருவரைக் காட்டிலும், நமது இரண்டாவது பாட்டனார் இன்னும் கொஞ்சம் பரந்த அறிவுடையவராகியிருந்தார் என்பதில் ஐயமில்லை. நமது இரண்டாவது பாட்டனாரைக் காட்டிலும் நமது பாட்டனாருக்கு இன்னும் விசாலமான அறிவுண்டாகியிருக்கும் அல்லவா? நமது பாட்டனார் அறிவைக் காட்டிலும் நமது தகப்பனார் அறிவு இன்னும் விசாலமுடையது; நமது தகப்பனாரைக் காட்டிலும், நாம் இன்னும் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக் கிறோம் அல்லவா? இவ்வாறே நமது மனித சமூகத்தின் அறிவு நாளுக்கு நாள் வளர்ந்து வந்திருக்கிறது. இதை இன்னும் ஓர் உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ஒருவன் ஒரு வீடு கட்டுவதற்கான திட்டத்தை, ஆலோசித்து அதைப் படமாக எழுதி வைக்கிறான். அவன் காலத்தில் அதைக் கட்ட முடியாமல், விட்டுவிட்டு இறந்து விடுகிறான். பிறகு அவன் மகன், அந்தத் திட்டத்தை ஆதரவாகக் கொண்டு, வீடு கட்டுவதற்கு அடிப்படை போடுகிறான்; அவ்வளவோடு அவன் காலம் முடிந்து விடுகிறது. பிறகு அவனுடைய மகன் அதன் மேல் கூரையைக் கட்டி வீட்டைப் பூர்த்தி செய்கிறான். அதன் பின்னும், ஒவ்வொரு தலைமுறையிலும், அந்த வீட்டில் சுகாதாரத்திற் கேற்ற பலப்பல மாறுதல்கள் செய்யப்படுகின்றன. இப்பொழுது இவர்களில் யாரை அறிவாளிகள் என்று கூறுவது? யாரை அறிவற்றவர்கள் என்று கூறுவது? எல்லோரையும் அறிவாளிகள் என்றுதான் கூறவேண்டும். முதலில் வீடு கட்டுவதற்கு யோசனை செய்து படம் எழுதியவரே அந்த வீடு முடிவதற்கு அடிகோலியவர் என்பதை மறுக்க முடியுமா? இந்த உதாரணத்தைக் கொண்டு பார்த்தால் ஒவ்வொரு தலைமுறையில் உள்ளவர்களும், அறிவுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்; மாறுதல் மனப்பான்மையுடைவர்களாக இருந்திருக் கின்றார்கள்; புரட்சித் தன்மை அவர்களிடம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பது விளங்குகிறதல்லவா? நாம் இன்றுள்ள நாகரிக நிலைக்கு நமது முன்னோர்களின் புரட்சி மனப்பான்மையே காரணம் என்று நிச்சயமாகக் கூறலாம். பழங்காலத்தில், வீடு வாசல்களின்றிக் காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் குடிசை கட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள்; அதிலிருந்து வீடுகள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள். முண்டமாகத் திரிந்த மனிதர்கள், தழைகளைக் கட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள்; பின்னர் மரவுரிகளைக் கட்டிக் கொண்டார்கள்; பிறகு ஆடைகள் நெய்து உடுத்திக் கொள்ளும் நிலைமைக்கு வந்தார்கள். பல்லையும் கைநகங்களையும் ஆயுதங்களாக உபயோகப்படுத்திக் கொண்டிருந்த மனிதர்கள், கூர்மையான மரக்கிளைகளையும், கூர்மையான கற்களையும் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்; அதன் பின்னர் உலோகங்களைக் கண்டு பிடித்து நல்ல இரும்புக் கருவிகளைச் செய்யக் கற்றுக் கொண்டனர். இன்று எக்காரியங்களையும் இயந்திரங்களாற் செய்து முடிக்கும் நிலைமைக்கு வந்திருக்கின்றனர். மலர்களையும், காய்கறிகளையும் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டிருந் தவர்கள் இன்று அவைகளைப் போல பொன், வெள்ளி, இரத்தினங்களால் ஆபரணங்கள் செய்து அணிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்; கால் நடையாகத் திரிந்து கொண்டி ருந்த மனிதர்கள், மாடு, குதிரைகளில் ஏறித் திரியக் கற்றனர்; அதன்பின் அவைகளைப் பூட்டியோட்டும் வண்டிகளைச் செய்தனர்; இதன்பின் பிராணிகளின் உதவியின்றித் தாமே இயங்கும் மோட்டார் போன்றவைகள் வந்தன; இன்று வானத்தில் பறக்கும் நிலையில் இருக்கிறோம். இவ்வாறே நமது நீர்ப்பாதைப் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்திருக்கிறது. நமது வாழ்க்கையில் உள்ள, எந்தத் துறைகளை எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றிலும் இவ்வாறே ஒவ்வொரு தலைமுறையிலும் படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறோம் என்பதையறியலாம். பழங்காலத்து மக்கள் அவர்களுக்குப் பயங்கரத்தைத் தந்த இடி, மின்னல், காற்று, வெள்ளம் முதலியவைகளையெல்லாம் தெய்வங்களென்று நம்பினர்; அவைகளால் மனித சமூகங் களுக்கு உண்டாகும், நம்மை தீமைகளைக் கொண்டே இவ்வாறு ஊகித்தனர். பிறகு அவைகளால் உண்டாகும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறிந்தனர். இவற்றின் மூலம் உண்டாகும் காலமாறுபாட்டால், மக்களுக்கு உண்டாகும் நோய்களைத் தணிக்க மருந்துகளையும் கண்டு பிடித்தனர். இப்பொழுது நோய்கள் வராமலே தடுத்துக் கொள்ளுவதற்கான முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. இம்முறைகள் முற்றிலும் மனித சமூகத்தில் பரவிவிட்டால் பிறகு மக்கள் தெய்வ நம்பிக்கையற்றவர்களாகி விடுவார்கள் என்பதில் வியப்பில்லை. தெய்வ சம்பந்தமுடைய காரியங்கள் என்பவைகள் எல்லாம் இன்று மனிதனால் செய்யக்கூடிய நிலைக்கு வந்து விட்ட போது தெய்வங்களுக்கு மதிப்பிருக்க முடியுமா? இவ்வாறே ஒவ்வொரு காரியங்களிலும் நாம் மாறிக் கொண்டே வருகிறோம். நாம் மாற்றமடைந்து வருவதற்குக் காரணம், வைதீகர்கள் சொல்லுவதுபோல நமது விபரீத புத்தியல்ல; கெடு புத்தியல்ல; கலியுகமல்ல என்பது நிச்சயம். நம் முன்னோர் போட்ட அடிப்படையே காரணமாகும். நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக நமக்குப் புரட்சி மனப்பான்மையை ஊட்டி வந்திருக்கிறார்கள். அது நமது இரத்தத்தில் நன்றாகக் கலந்து ஊறியிருக்கிறது. இன்று நம்மை நாகரிகத்தின் உச்சிக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வுண்மையை மறந்து விட்டுச் சிலர் நாம் மாறுதல் மனித சமூகத்திற்கு ஆபத்து என்று கூச்சலிடுவார்களாயின் அக் கூச்சல் அறியாமையிலிருந்து வெடிப்பதேயாகும். மாறுதல் மனித சமூக இயற்கை; நம் முன்னோர் காட்டிய வழி. பின்பற்றிய முறை என்று கொள்ளுவதே சரி. மாறுதல் கூடாதென்பதற்காகச் செய்யப்படும் முயற்சி ஆற்றில் கரைத்த புளிதான். எவ்வளவு தான் பழைய நாகரிகத்தைப் புதுப்பிக்க முயற்சித்தாலும் அம் முயற்சி பலிக்காது. வருங்காலத்தில் மனித சமூக வாழ்வு எந்தவித மாறுதலையடையும் என்பதை நாம் திட்டமாகக் கூறவே முடியாது; ஆனால் எக்காலத்திலும் நமது மனித சமூகம் ஒரே நிலையில் இருக்கமுடியாது. பெருத்த மாறுதலுக்குட்பட்டுத் தான் தீரும்; அதுவும் பண்டைக் காலத்தை விட இக்கால மாறுதல் அதி தீவிர மாறுதலாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மாறுதல்களால் விபரீதம் நேரும் என்பது ஆராய்ச்சி யில்லாதார் கூற்று; இதுவரை நடந்துவந்த மாறுதல்களால் மனித சமூகம் உயர்வடைந்தே வந்திருக்கிறது. இனிவரும் மாறுதல்களும் மனித உயர்வுக்கேயாகும். ஆகையால் மாறுதல் களைக் கண்டு வெறுப்படையாமல் அவைகளை வரவேற்க வேண்டுவதே அறிவாளர் கடமை. பாலைவனக் கொதிப்பு ஒரு பொருளுக்கு உவமை கூறுவதில்தான் ஒரு புலவனுடைய சிறப்பைக் காணலாம். அறிவின் திறத்தை அறியலாம்; ஒரு பொருளை - அப்பொருளின் தன்மையை உவகை காட்டிக் கூறுவது, அப்பொருளின் தன்மையை நன்றாக விளக்கிக் கூறுவதாகும். தெரிந்த ஒரு பொருளை எடுத்துக் காட்டித் தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது தான் உவமையின் கருத்து. ஒரு பொருளை பற்றி அப்பட்டமாக அப்படியே எடுத்துச் சொல்லுவதைவிட, உவமானங்காட்டிச் சொல்லும் பாடல் இனிமையாகவும் இருக்கும்; சுவை தருவதாகவும் இருக்கும். சிந்தனைக்கு வேலைதரும் சிறந்த கவியாகவும் இருக்கும். சிறந்த புலவர்கள் - உலகியலை நன்றாக உணர்ந்த புலவர்களின் செய்யுட்களில்தான் நல்ல உவமைகளைக் காண முடியும். உவமையை எடுத்துக் காட்டுவதில் ஒரு தனிச் சிறப்பு உண்டு. சிலரிடம்தான் இத்தகைய ஆற்றலைக் காண முடியும். சிலர் சாதாரணமாக உரையாடும் போதும்கூட உவமை களை வாரி வீசுவார்கள். இவர்கள் பேசுவது நகைச்சுவை தருவதாகவும் இருக்கும். கற்றவர்களிடமும் இத்தன்மையைக் காணலாம். கல்லாதவர்களிடமும் இத்தன்மையைக் காணலாம். பார்வைக்கு உடம்பாக இருப்பான், எட்டி நின்று பார்த்தால் பெரிய ஆள்போலத் தோற்றம் அளிப்பான். கிட்டே நெருங் கினால் நமக்கு ஆபத்துத்தான்; விலகிச்செல்ல வேண்டியதுதான் என்ற எண்ணத்தை உண்டாக்குவான்; முரடனைப் போலவும் காணப்படுவான். ஆனால் கிட்டே நெருங்கிப் பார்த்தால் ஆள் பரம சாதுவாக இருப்பான். அவனிடம் நாம் எவ்வளவு சேட்டைகள் பண்ணினாலும் பொறுத்துக் கொள்வான். அவன் நம்மிஷ்டப்படி ஆட்டி வைக்கலாம். இத்தகைய மனிதர்கள் சிலர் உண்டு. இவர்களுக்குச் சோளக் கொல்லையிலே செய்து வைத்திருக்கும் பதுமையை உவமானமாகக் கூறுவார்கள். சோளத்தைப் பறவைகள் கொத்திக் கொண்டு போகாமலிருக்கப் பதுமை செய்து, அதை உயரத்திலே கட்டி வைத்திருப்பார்கள். அது வைக்கோலால் செய்யப்பட்டிருக்கும். கரும்புள்ளி, செம்புள்ளிகளுடன் காட்சியளிக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் பெரிய முரட்டு ஆள் ஒருவன் பரண்மேல் நின்று கொண்டு காவல் காப்பதாகவே தோன்றும். இதன் தோற்றத்தைக் கண்டு பறவைகள், சோளக்கதிர்களைக் கொத்தாமல் பயந்து ஒதுங்கிப் பறந்து போகும். தைரியமாகக் கிட்டே நெருங்கினால் இப்பதுமையால் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடாது. இதை விளக்கும் பழமொழிகள், ஆளைப்பாரு, சோளக் கொல்லை பொம்மை மாதிரி என்பது. செயலற்ற அப்பாவி கஎள- பார்வைக்கு மட்டும் நல்ல தோற்றம் உள்ளவர்களைக் குறிக்கும் பழமொழி இதுவாகும். பதுமையையும் மனிதனையும் ஒப்பிட்டுக் கூறும் பழமொழி மிகவும் பொருத்தமான பழமொழி. அர்த்தம் இல்லாமல் சும்மா கூச்சல் போடுகிறவனைப் பார்த்து, ஏண்டா கழுதை மாதிரி கத்துகிறாய் என்று கேட்ப துண்டு. பகல் காலத்தில் ஆந்தையைப் பார்த்தால் விழித்துக் கொண்டிருப்பது போல்தான் காணப்படும். ஆனால் அதற்குக் கண் தெரியாது. இதைப்போல ஒன்றும் எண்ணாமல் சும்மா விழிக்கிற ஒருவனைப் பார்த்து - நாம் கேட்ட கேள்விக்கு விடைதர அறியாமல் சும்மா விழிக்கின்ற ஒருவனைப் பார்த்து - ஏண்டா ஆந்தை மாதிரி விழிக்கிறாய் என்று கேட்பதுண்டு. எல்லாரும் இப்படிப் பேசிவிட முடியாது. ஒரு சிலர்க்குத் தான் இவ்வாறு பேசக்கூடிய சக்தி உண்டு. இதுபோல்தான் புலவர் நிலைமையும் ஆகும். ஆனால் சிறந்த புலவர்கள் பாடல்களிலே காணப்படும் உவமைகளிலே சில உண்மைகளும் காணப்படும். அவ்வுண்மைகள் நமக்குப் பல படிப்பினைகளை ஊட்டுவதாகவும் அமைந் திருக்கும். இதற்கு ஓர் உதாரணத்தை காண்போம். ஔவையார் என்னும் புலவர் பெருமாட்டி அசதி என்னும் வள்ளல் மீது பல பாடல்களைப் பாடினார் என்று ஒரு செய்தி வழங்குகின்றது. அவன் மீது அசதிக்கோவை என ஒரு பிரபந்தமே பாடியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஔவையார் அசதியின் மேல் பாடியதாகச் சில பாடல்களும் தனிப்பாடல் திரட்டிலே காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு பாட்டு கீழ் வருவது: அற்றாரைத் தாங்கிய வைவேல் அசதி அணிவரை மேல் முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றனள்? முத்தமிழ் நூல் கற்றார் பிரிவும், கல்லாதவர் ஈட்டமும், கைப்பொருள் அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அரும் சுரமே. இப்பாட்டு, தன் காதற்கணவனுடன் சென்றுவிட்ட மகளைக் குறித்து, அவளுடைய தாய் வருந்துவதாக அமைந்திருக்கும் பாட்டு. அந்தச் சிறு பெண் அவள் காதலனுடன் சேர்ந்து சென்ற வழி பாலை நிலவழி. பாலை நிலம் வெப்பம் நிறைந்த நிலம். கொதிப்பு நிறைந்தது. வெயில் கொடுமை நிறைந்தது. அந்தக் கொதிப்பு நிலத்திலே, அந்தப் பெண் எப்படித்தான் மெல்லிய அடிகளை ஊன்றிச் சென்றனளோ என்று அவள் அன்னை வருந்துவது இயல்புதானே. பாலை வனத்தின் கொதிப்புக்கு இப்பாடலில் மூன்று உவமைகள் கூறப்படுகின்றன. அந்த உவமைகளின் சிறப்புதான் ஒப்புயர் வற்றது. முத்தமிழ் நூல்களையும் கற்றவர்களை விட்டுப் பிரிதல், கல்வியறிவற்ற வர்களுடன் கூடி வாழ்தல், இளம் பருவத்திலே வறுமையால் வாடுதல்; இம்மூன்றையும் பாலைவனத்தின் வெப்பத்திற்கு, கொதிப்புக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. அந்த மூன்று உவமைகளும், நல்ல படிப்பினைகளையும் அளிக்கின்றன; மக்கள் வாழ்வுக்கும் வழிகாட்டுகின்றன சமுதாய நல்வாழ்வுக்கும் பாதை காட்டுகின்றன. முத்தமிழ் நூல்களைக் கற்றவர்களுடன் கூடி மகிழ்ந்து வாழ்வதிலே இன்பம் உண்டு; அவர்களுடன் கூடியிருந்து பிரிந்த பின் அந்த இன்பத்தைக் காண முடியாது, துன்புற வேண்டியது தான். கல்லாதவர்கள் நட்பால் நன்மையில்லை. நன்மையில்லாமல் போனாலும் போகட்டும், அளவு கடந்த தீமைகள்தான் உண்டாகும். அவர்கள் நட்பைக் கைவிட்டால்தான் சுகமடைய முடியும். இளமையில் வறுமை வயப்பட்டவர்கள், வாழ்நாள் முழுதும் துன்புற வேண்டியதுதான். இளமையில் வசதியுள்ளவர்கள்தாம் கல்வி கற்க முடியும்; தீய செயல்களிலே தலையிடாமல், நல்ல பழக்கங்களையும் பெற முடியும். பிற் காலத்தில் நன்றாக வாழ்வதற்கான திறமை, அறிவு, உடல் உரம் ஆகியவை களைத் தேடிக் கொள்ளவும் முடியும். கற்றாரைப் பிரிந்தவரும், கல்லாரைச் சேர்ந்தவரும் வறுமையால் வாடும் இளைஞரும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய துன்பத்தைப் போன்ற கொதிப்பை - வெய்யில் கொடுமையைக் கொண்டிருந்தது பாலைவனம். இவ்வாறு பாலைவனத்தைப் பற்றி கூறியிருக்கும் உவமைகள் எவ்வளவு அழகுடையன; ஆழ்ந்த பொருள் உடையன என்பதை ஆராய்ந்து பாருங்கள். சிறந்த கற்பனை உள்ளம் படைத்த புலவரின் உயர்ந்த பாடலுக்கு இச்செய்யுள் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இச்செய்யுளின் பொருள் முழுவதையும் கண்டால் இதன் அருமை விளங்கும். அதன் பொருள் பின்வருமாறு: வறியோர்களை யெல்லாம் வாடாமல் காப்பாற்றிய கூர்மையான வேற் படையை உடையவன் அசதியென்பவன். அவனுடைய அழகிய மலையின் பக்கத்து வழியிலே இளம் மார்பையுடைய என் மகள் எவ்வாறுதான் நடந்து சென்றாளோ? அந்த அரிய வழியிலே, முத்தமிழ் நூல்களைக் கற்றவர்களை விட்டுப் பிரிதலும், கல்லாதவர்களுடன் சேர்ந்திருத்தலும் செல்வங்கள் இல்லாத வர்களின் இளமைப் பருவமும் போல் கொதிப்பு வெப்பம் குடிகொண்டிருக்கும். இதுவே இப்பாடலில் அமைந்துள்ள பொருள். இப்பாடலை மறுமுறையும் படித்துப் பாருங்கள். இதில் உள்ள உவமை நயத்தை உணர்ந்து சுவைப்பீர்கள். பாட்டென்றால் இதுவன்றோ? (அற்றார்-வறியவர்; வை-கூர்மை; அணிவரை-அழகிய மலை; ஈட்டம்-கூட்டம்; கைப்பொருள்கள்-செல்வங்கள்; அற்றார் -இல்லாதவர்; அரும்சுரம் நடப்பதற்கு முடியாத பாலை வழி.) உயிருள்ள கவிதை கற்பனையை விட, உள்ள நிலையை அப்படியே எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்படிச் சொல்லுவதன் மூலம், படிப் பவர்களின் மனத்திலே பல படிப்பினைகள்-எண்ணங்கள்-நினைப்புகள் பிறக்கச் செய்ய வேண்டும். இப்படி எழுதுவதுதான் சிறந்த எழுத்து என்பர்; இவ்வாறு கதைகளும், கட்டுரைகளும் எழுதுவோர் உண்டு. இம்முறையில் எழுதுவது ஒரு கலை என்பதில் ஐயம் இல்லை. பாட்டானாலும் சரி, உரைநடையானாலும் சரி, படிப்பவர்களின் உள்ளத்தைக் கவர வேண்டும்; அந்த எழுத்திலே அமர்ந்து, விழித்துக் கொண்டிருக்கும் கருத்துக்கள் படிப்பவர்களின் உள்ளத்தை விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இப்படி எழுதுவதுதான் சிறந்த எழுத்து என்பதில் ஐயம் இல்லை. உண்மையை எடுத்துக்காட்டி, உபதேசம் செய்கின்ற எழுத்தாளர்கள் பண்டும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். இவர்களுடைய எழுத்துக்கள் தாம் உயிர் பெற்ற ஓவியமாக என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் தன்மையுடையவை. இத்தகைய பழம் பாடல் ஒன்றைக் காண்போம். கீழே குறிக்கும் அப்பழம்பாடல் பட்டினத்தார் பாடினார் என்று சொல்லப்படுகின்றது. அது ஒரு தனிப் பாடல். அந்தப் பாடலிலே கூறப்படும் கருத்து, பட்டினத்தாரின் கருத்தை ஒட்டியதாக அமைந்திருக்கின்றது. ஆதலால் அதைப் பாடியவர் பட்டினத்தார் என்று குறித்தனர் என்று எண்ணலாம். பட்டினத்தார், செல்வமுள்ளவராகச் சிறப்புடன் வாழ்ந்தார்; உலக வாழ்வு நிலையற்றது; இறந்த பின் இவ்வுலகில் நாம் தேடி வைத்திருக்கின்ற எந்தச் செல்வமும் நம்முடன் வரப்போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தார். உடனே கோவணத்தைக் கட்டிக் கொண்டு முற்றுந் துறந்த துறவியாக மாறினார். இதுதான் பட்டினத்துப் பிள்ளையாரின் கதை. செல்வத்தைத் துறந்து, உலக இன்பத்தைக் கைவிட்டுத் துறவியாவதுதான் தொல்லை நீங்க வழி என்பது ஒரு தத்துவம். இந்தத் தத்துவம் ஏன் தோன்றியது? எதற்காகத் தோன்றியது? இந்த உண்மைகளைப் பலர் உணர்வதேயில்லை. மனித சமூகத்திலே சிலர்தான் எல்லா இன்பங்களையும் பெற்று வாழ்கின்றனர்; பலர் துன்புறுகின்றனர். உழைத்தும் ஒரு பலனும் இல்லாமல் உள்ளம் வருந்தி, உடல் நலம் குன்றி வாழ்கின்றனர். இந்த ஏழை மக்கள் நிலையைக் கண்டு மனம் இரங்கிய அறிஞர்கள் இவர்களுக்கு நன்மை செய்ய எண்ணினர். அவர்கள் தங்கள் பெரிய குடும்பத்தையும் காக்க வேண்டி யிருந்தது; குடும்ப பார அவர்களை வேறு பணிகளில் செல்ல விடாமல் தடுத்து வந்தது. குடும்பம் அவர்களோடு, ஒத்து நடக்க இணங்கவில்லை; மறுத்து மல்லாடவும் செய்தது. இந்த நிலையில் குடும்பத் தொல்லை உள்ளவரால் இடைவிடாமல் பொதுப் பணி செய்ய முடியாது என்ற முடிவுக்கு அந்த அறிஞர்கள் வந்திருக்க வேண்டும். அவர்களே, பொதுப் பணிபுரியும் பொருட்டுத் துறவு நிலையை வலியுறுத்தியிருக்க வேண்டும். இதுதான் துறவு பிறந்த உண்மைக் கதையாக இருக்க முடியும். இந்த உண்மையை அறியாதவர்களே, தந்நலம் ஒன்றையே குறியாகக் கொண்டு துறவு பூணத் தொடங்கினர். இப்படித் துறவு பூணுவது உயர்ந்த தர்மம் என்பதை எடுத்துக்காட்ட என்ன என்னவோ வேதாந்த தத்துவங்களையெல்லாம் எழுதி வைத்தனர். துறவிகளிலே பலர், உழைத்து பிழைக்கும் திறமையில்லாமல் ஓடிப் போனவர்கள் என்பதில் ஐயம் இல்லை. தந்நலம் இல்லாமல் வாழ்ந்து, அல்லற்படும் மக்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் துறவை மேற் கொண்டவர்கள் சிலர் இருக்கலாம்; தமது உள்ளத்தாலும், உடலாலும், மனங் குமுறும் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் துறவு பூண்டோரும் சிலர் உண்டு. இத்தகைய பரோபகாரத் துறவிகள் சிலர் இருப்பதனால்தான் துறவி வேடத்திற்குப் பொது மக்களிடையே இன்றும் மதிப்பு இருக்கின்றது. இங்கே எடுத்துக் காட்டப்படும் தனிப்பாட்டு, துறவை-சந்நியாசங் கொள்ளுவதை ஆதரிக்கும் பாட்டுத்தான். ஆனால் எல்லோரையும் சந்நியாசி ஆகும்படி சொல்லவில்லை. முதலில் கடமையைச் செய் என்று கட்டாயப்படுத்துகிறது. கடமையைச் செய்யாவிட்டால்-செய்யத் திறமையில்லா விட்டால் ஏன் தொல்லைப்படுகிறாய்? தொல்லையில்லாமல் மன அமைதியுடன் வாழ மார்க்கந் தேடிக் கொள் என்று தான் சொல்லுகின்றது. நாப்பிளக்கப் பொய்உரைத்து நவநிதியம் தேடி, நலன் ஒன்றும் அறியாத நாரியாரைக் கூடிப், பூப்பிளக்க எழுகின்ற புற்றுஈசல் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்! காப்பதற்கும் வகை அறியீர்! கைவிடவும் மாட்டீர்! கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே ஆப்புஅதனை அசைத்துவிட்ட குரங்குதனைப் போல அகப்பட்டீர்! கிடந்துஉழல அகப்பட் டீரே. இதுதான் மேலே எடுத்துக் காட்டிய தத்துவங்களுக் கெல்லாம் இடம் கொடுக்கும் தனிப் பாடல். இந்தப் பாடலைப் பட்டினத்தார், தம்மை ஆதரித்து வந்த இளைஞர் ஒருவர் திருமணம் புரிந்து கொண்ட போது பாடினாராம். இந்தப் பாடலைப் பற்றி வழங்கும் கதை அதுதான். இந்தப் பாடலைப் படிக்கும்போது நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இன்று கருத்தடைப் பிரசாரத்தில் ஈடுபட்டி ருக்கும் நமது நண்பர்களுக்கு இதை ஒரு பரிசாக அனுப்பலாம் என்பதுதான் அந்த யோசனை. ஏனென்றால் அளவுக்கு மேல் பிள்ளைகளைப் பெறாதீர்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலில் அடங்கியிருக்கின்றது. ஆதலால்தான் இந்த யோசனை. இந்தப் பாட்டின் பொருளை நன்றாக விரிவாக எண்ணிப் பார்த்தால் பாட்டின் அருமை விளங்கும்; பாட்டில் அமைந் திருக்கும் பண்பும் காணப்படும். செல்வங்களையெல்லாம் தேடுவதில் முனைகின்றீர்கள்; என்னென்ன செல்வங்கள் உண்டோ அவ்வளவும் வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசை. ஆதலால் எப்படியாவது செல்வங் குவிந்தால் போதும்; செல்வம் கிட்டினால் போதும் என்ற குறிக்கோளுடன் உழைக்கின்றீர்கள். செல்வத்தை அறநெறியிலே தான் சேர்க்க வேண்டும் என்ற தர்மத்தை மறந்துவிட்டு எதையும் செய்து செல்வத்தைச் சேர்க்கின்றீர்கள். சதா பொய்யைப் பேசி, பணத்தைத் தேடுகின்றீர்கள். நன்மை இன்னது, தீமை இன்னது என்பதை அறியாத பல பெண்களுடன் கூடி வாழ்கின்றீர்கள். பூமி பிளக்கும்படி உயர்ந்த புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதைப் போலப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகின்றீர்கள். எத்தனை பிள்ளைகளை நம்மால் காப்பாற்ற முடியும்? ஏராளமான பிள்ளைகள் பிறந்து விட்டால் என்ன செய்வது? நம்முடைய பிள்ளைகளை நம்மை விட நல்ல நிலையிலே வாழும்படி வைக்க வேண்டாமா? என்ற பொறுப் புணர்ச்சியே இல்லாமல் புலபுல, கலகல என்று பிள்ளைகளை உதிர்த்துத் தள்ளுகின்றீர்கள். பெற்ற பின் அந்த பிள்ளைகளைக் காக்க வழியறிய மாட்டீர்கள். பிள்ளைகளை வேறு யாராவது காப்பாற்றட்டும் என்று கைவிடவும் மாட்டீர்கள். ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்? இரண்டாகப் பிளந்திருக்கின்ற மரப் பிளவையைக் கண்ட ஒரு குரங்கு அந்தப் பிளவிலே கால விட்டதாம். அந்தப் பிளவிலே வைத்திருந்த ஆப்பை அசைத்து எடுத்துவிட்டதாம். அதனால் பிளவு ஒன்று சேர்ந்தது. அதன் கால் பிளவுக்குள் அகப்பட்டது. நெருக்குண்டு நசுங்கிற்று. அதுபோல் நீங்களே இந்தக் குடும்பத் தொல்லையை தேடிக் கொண்டு துன்பப் படுவது ஏன்? குடும்ப வலையில் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடித் திணறி விழிப்பது ஏன்? வீணாக விழிக்க வேண்டாம். இதுதான் இந்தப் பாட்டிலே அமைந்திருக்கும் பொருள். பாட்டு வேதாந்தப் பாட்டாயிருந்தாலும் இதிலே சில கருத்துக் களும், நல்ல சொற்றொடர்களும், உவமை நயமும் அமைந்திருப் பதைக் காணலாம். உள்ள நிலைமையை அப்படியே எடுத்துக்கூறும் பாட்டுத் தான் இது. ஆயினும் இதில் சில உபதேச மொழிகளும்-அதாவது அறவுரைகளும் அடங்கியிருப்பதைக் காணலாம். 1. பொய்யுரைத்துப் பொருள் தேடாதீர்கள்; லஞ்சம் வாங்காதீர்; கறுப்புச் சந்தையிலே பொருள் தேடாதீர்கள். 2. பல பெண்களை மணந்து கொள்ள வேண்டாம். பல பெண்களை மணந்து, ஏராளமான பிள்ளைகளைப் பெற்றுத் தள்ள வேண்டாம். ஒரு மனைவியிருந்தால் போதும்; அளவோடு பிள்ளை பெறுங்கள்; பெற்ற பிள்ளைகளைப் பொறுப்புடன் காப்பாற்றுங்கள். 3. பல பெண்களை மணந்து ஏராளமான பிள்ளைகளை ஈன்று, தொல்லைப்படுவது நீங்களாகவே தேடிக்கொள்ளும் தொல்லைதான். ஆதலால் அறிவுடன் நடந்து கொள்ளுங்கள். இத்தகைய மூன்று அறிவுரைகள் இச்செய்யுளில் அமைந் திருக்கின்றன. பல பிள்ளைகளைப் பெறுவதற்குப் புற்றிலிருந்து புறப்படும் ஈசல்களை உவமை காட்டப்பட்டுள்ளது. தானே தேடிக் கொள்ளும் தொல்லைக்கு, மரப்பிளப்பிலே காலை விட்டுக் கொண்டு, ஆப்பை எடுத்துவிட்ட குரங்கு உவமானம். இவ்விரண்டு உவமைகளும் பொருத்தம் உள்ளவை. புலபுல என, கலகல எனப் புதல்வர்களைப் பெறுவீர் என்ற தொடர் மிகவும் அழகான தொடர். பாட்டின் கருத்து நமக்குப் பிடிக்கலாம்; பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது ஒரு சிறந்த இலக்கியத் தன்மை பொருந்திய பாட்டு என்பதில் ஐயம் இல்லை. இக்கால நிலைக்கு ஏற்றபடி பொருள் சொல்லும்படியும் அமைந்திருப்பதுதான் இப்பாட்டின் சிறப்பு. இதுதான் உயிருள்ள பாட்டு என்பது. அறிஞர் தன்மை அறிஞர்கள் - புலவர்கள் - படித்தவர்கள் யாருக்கும் அடிமைப்பட மாட்டார்கள். தன் மதிப்புக்குப் பங்கம் வரும் முறையில் நடந்துகொள்ள மாட்டார்கள். தங்கள் மதிப்பை எப்பொழுதும் காப்பாற்றிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால், நாங்கள்தாம் படித்தவர்கள்; எங்களுக்குத் தெரிவது மற்றவர்களுக்குத் தெரியாது; எமக்குத் தெரியாதது ஒன்றுமேயில்லை என்று கர்வம் கொள்ள மாட்டார்கள். நமக்குத் தெரிந்திருப்பவைகளை விட நமக்குத் தெரியாதவைகள் எத்தனை யோ பல உண்டு; அவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடக்கமான தன்மையும் அவர்களிடம் உண்டு. மண்டைக் கனம் கொண்டு திரிவது படித்தறிந்த மக்களின் பண்பன்று. அடக்கமான-ஆனால் தன் மதிப்பை விட்டுக் கொடுக்காத அறிஞர்களை இன்றும் காண்கிறோம். பண்டைக் காலத்திலும் பலர் இருந்தனர். ஆனால், இன்று படித்தவர்களிலே பலர் படிப்பின் பண்புக்கு மாறாக நடந்து கொள்ளுகின்றனர். அவர்களைக் குறை சொல்லுவதில் பயன் இல்லை. காலம் அவர்களை அப்படி நடந்துகொள்ளச் செய்கிறது. நல்ல திறமையுண்டு; நல்ல படிப்பு உண்டு; நல்ல அறிவு உண்டு; இருந்தும் என்ன காரணத்தாலோ உண்மையைக் கூற அஞ்சுகின்றனர். கலைத் துறையிலே, இலக்கியத் துறையிலே, அரசியல் துறையிலே, சமுதாயத் துறையிலே தமக்கென்ற தனிக்கொள்கையிருந்தும் கூட, அதை வெளியிட அஞ்சுகின்றனர். பட்டம் பெற்றோர்-பதவியிலேயிருப்போர்-செல்வாக்குப் பெற்றிருப்போர் தவறு செய்தாலும் கூட அதைக் கண்டிக்க அஞ்சுகின்றனர். இவ்வளவோடு நின்றுவிட்டாலும் பாதகம் இல்லை; அவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சமாதானம் சொல்லி மழுப்பவும் வந்து விடுகின்றனர். அந்தப் பெரிய மனிதர்கள் கேட்டுக்கொள்ளாமலே இவர்கள் வலிய வந்து சமாதானம் கூறுகின்றனர். படித்தவர்களிலே சிலருடைய இந்த நிலையைக் கண்டு நாம் பரிதாபந்தான் படவேண்டும். படித்தவர்கள் உள்ளத்திலே தெளிவு வேண்டும்; அதனோடு பொதுநல உணர்ச்சியும் வேண்டும். பொதுமக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும். யாராயிருந்தாலும் சரி, கலைத்துறையிலோ, இலக்கியத் துறையிலோ, சமுதாயத் துறையிலோ போலிப் பெருமை பாராட்டுகின்றவர்களுக்கு இடந்தரக் கூடாது. சமயம் வரும் போது அவர்களுடைய போலித் தன்மையை வெளிப்படுத்தப் பின் வாங்கக்கூடாது. இப்படிப்பட்ட உண்மை அறிஞர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்க வேண்டும். இவர்களால்தான் கலையோ, இலக்கியமோ, சமுதாயமோ, அரசியலோ எதுவும் வளர முடியும். அவைகள் பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் முன்னேற்றமடைய முடியும். இத்தகைய உண்மையாளர்கள் வேண்டுமென்று நடுநிலை தவறி நடக்கமாட்டார்கள்; ஒருதலைப்பட்சமாகப் பேச மாட்டார்கள்; உள்ளத்திலே ஒன்றை வைத்துக்கொண்டு எழுத்திலே வேறொன்றை எழுத மாட்டார்கள். யாருடைய எதிர்ப்பு வந்தாலும் தமக்குச் சரியென்று படுவதைச் சொல்லியே தீருவார்கள். குற்றங் குறைகளைக் காணும்போது ஈவு இரக்கம் இன்றிக் கண்டிப்பார்கள். இதனால் வரும் லாப நஷ்டங்களையோ, இன்ப துன்பங்களையோ லட்சியம் பண்ணமாட்டார்கள். இதுதான் உண்மை அறிவுள்ளவர்களின் உயர்ந்த தன்மையாகும். படித்தவர்கள் எல்லோரும், அறிஞர்கள் அனைவரும், புலவர்கள் முழுவதும் இப்படியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பலர் இதற்கு விரோதமாக இருப்பதைத்தான் இன்று நாம் பார்க்கின்றோம். இப்படி இருப்பவர்களிடம் தந்நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தம் படிப்பிலே நம்பிக்கை-தம் அறிவிலே நம்பிக்கை-தம் திறமையிலே நம்பிக்கை-உண்மைகளைக் கூறுவதனால் வாழமுடியும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இல்லையென்று தான் நாம் முடிவுகட்ட வேண்டும். தந்நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு பொழுதும் நியாயமற்ற காரியத்தின் பொருட்டுப் பிறருக்கு தலை வணங்கமாட்டார்கள். இவ்வுண்மையை உணர்த்தப் பல கதைகள் உண்டு; பாடல்கள் உண்டு. இங்கே இரண்டு தனிப்பாடல்களை மட்டும் பார்ப்போம். இவ்விரண்டு பாடல்களும் கம்பர் பாடியதாக வழங்கும் பாடல்கள். கல்வியில் சிறந்தவன் கம்பன் என்பது தமிழ்நாடு எங்கும் பரவியுள்ள பழமொழி. அப்பழமொழியை உண்மையாக்கவே இப்பாடல்கள் பிறந்திருக்கலாம். கல்வியில் சிறந்த ஒருவன் எப்படித் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத வீரனாக விளங்கு வான் என்பதைக் காட்டவே இப்பாடல்கள் எழுதப்பட்டிருக் கலாம். கம்பர் சோழநாட்டிலே பிறந்தவர்தான். அவர் காலத்திலே சோழ அரசு நல்ல நிலையிலேதான் இருந்தது. ஆயினும் அவர் சோழமன்னரின் ஆதரவு பெற்ற புலவர் என்று சொல்ல முடியாது; சோழ மன்னனுடைய ஆதரவில்லாதிருந்தாலும் அவனுடைய வெறுப்பையாவது அடையாமல் இருந்தார் என்று சொல்லவும் முடியவில்லை. சோழனுடைய வெறுப்புக்கு ஆளான புலவர் என்றே தெரிகின்றது. இதற்குக் காரணம் என்ன என்பதை இப்பொழுது ஆராய வேண்டியதில்லை. கம்பர் சோழ மன்னனுடைய வெறுப்புக்கு இலக்கான போது என்ன செய்தார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும். மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்-என்னை விரைந்து ஏற்றுக் கொள்ளாதவேந்து உண்டோ? உண்டே. குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு. என்று மன்னனைப் பார்த்துக் கூறினார். கல்வியில் சிறந்த கம்பருடைய நெஞ்சழுத்தத்தை இப்பாடல் வெளிப்படுத்து கிறது. நீ ஒருவன்தான் அரசனா? உன்னுடைய நாடு ஒன்றுதான் செல்வம் கொழிக்கும் நாடா? நீ ஒருவன் இருக்கிறாய்; எனக்கு உதவி செய்வாய் என்று நினைத்துத் தானா நான் தமிழ்க் கல்வி கற்றேன்? குரங்கு தாவினால் அதை ஏற்றுக் கொள்ளாத கொம்பும் உண்டோ? இல்லை. அது போல் நான் சென்றால் விரைந்து முன்வந்து என்னை ஏற்றுக்கொள்ளாத வேந்தர்கள் இந்த நாட்டிலே யாராவது உண்டா? இவ்வாறு அரகனைப் பார்த்துக் கேட்பதற்கு எவ்வளவு நெஞ்சுறுதி வேண்டும்? தன்னம்பிக்கை வேண்டும்? இவ் வளவோடு விட்டுவிடவில்லை; மேலும் கேட்கிறார்: fhj« ïUg¤J eh‹F xÊa¡ fháÅia Xj¡ flšbfh©L xˤjnjh?-nkâÅÆš கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா! நீ முனிந்தால், இல்லையோ எங்கட்கு இடம்? தேன் ஊற்றிக் கொண்டிருக்கும் கொல்லிமலையை யுடைய அரசனே, இந்த நாட்டில் உனக்குச் சொந்தமான பகுதி இருபத்து நான்கு காதம்தானே. மற்ற நிலப்பகுதியைக் கடல் கொண்டு விட்டதா? நீ கோபித்துக் கொண்டால் இவ்வுலகில் எங்களுக்கு வேறு இடம் இல்லையா? என்று கேட்டார். முதல் பாட்டிலே தன்னுடைய பண்பை மட்டும் வெளியிட்டார். இந்த இரண்டாவது செய்யுளிலே நீ முனிந்தால் மேதினியில் எங்கட்கு இடம் இல்லையோ என்று கூறி, புலவர்களின் உயர்ந்த தன்மானச் சிறப்பை வெளியிட்டார். இப்பாடல் இரண்டும் கம்பரால் பாடியவைகளோ அல்லவோ, அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். இப் பாடல்களின் கருத்துக்களைத்தான் நாம் கவனிக்க வேண்டும். தன்னம்பிக்கையுள்ளவர்கள் உண்மையை உரைக்க அஞ்சமாட்டார்கள். உண்மையை உரைப்பதனால் யாருடைய பகைமை வந்தாலும் பயப்பட மாட்டார்கள். உண்மைக்குப் பாடுபடுவதனால் எத்தகைய துன்பம்-தொல்லை-ஆபத்து வந்தாலும் அசைந்து கொடுக்க மாட்டார்கள். இதுவே அறிஞர்கள் -புலவர்கள்-தெளிந்த கல்வியுள்ளவர்கள் தன்மையாகும். மேலே காட்டிய வெண்பாக்கள் இரண்டும்-கம்பர் பெயரால் வழங்கும் தனிப்பாடல்கள். இரண்டும் நமக்குக் காட்டும் படிப்பினை இதுதான். பின்னோக்கிச் செல்லும் பெரியோர்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழ் மொழியைப் பற்றி இன்று பலரும் பேசுகின்றனர். நமது நாடு சுதந்திரம் பெற்றபின் தமிழைப் பற்றிய பேச்சும் பெருகி வளர்ந்திருக்கின்றது. நாட்டின் முன்னேற்றத்தை நாடு கின்றவர்கள்-மக்கள் அனைவரும் அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள்-அனைவரும் தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்று கூறுகின்றனர். தமிழிலே ஏராளமான இலக்கியங்கள் இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. இன்றுள்ள பழைய இலக்கியங்கள் அனைத்தும் படிப்பதற்கும் பாராட்டுவதற்கும் உரியன என்பதிலும் ஐயம் இல்லை. பழந்தமிழ் மற்ற மொழி இலக்கியங்களோடு போட்டி போடக் கூடிய வகையில் சிறந்து விளங்குகின்றன என்பதும் உண்மை. உலக இலக்கியங்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் வகையிலே பழந்தமிழ் இலக்கியங்களிலே பல சிறந்து விளங்குகின்றன என்பதிலும் ஐயம் இல்லை. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகியவை களுடன் போட்டி போட்டு வெல்லக் கூடிய இலக்கியங்கள் எம்மொழியிலும் இல்லை என்று அறிஞர்கள் பலர் பாராட்டி யிருக்கின்றனர். இப்படிப்பட்ட இலக்கியங்கள் எல்லாம் இன்றைய நமது வாழ்க்கைக்குப் பயன்பட்டுவிடும் என்று சொல்லி விட முடியாது. இவ்விலக்கியங்களைப் படிக்கின்றவர்கள் எந்தக் கைத்தொழிலையும் கற்றுக் கொண்டுவிட முடியாது; எந்தத் தொழிற்சாலையையும் ஏற்படுத்திவிட முடியாது; கட்டடக் கலைஞர்களாகிவிட முடியாது; சிறந்த மருத்துவர்கள் ஆகிவிட முடியாது; நவீன விவசாய முறைகளிலே தேர்ந்தவர்களாகிவிட முடியாது; மோட்டார் டிரைவராகவோ; நீராவி இயந்திர டிரைவராகவோ, கப்பலோட்டிகளாகவோ ஆகிவிட முடியாது. இவை போன்ற கலைகளையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் பல புதிய நூல்களைப் படித்துத்தான் ஆக வேண்டும்; தொழில்களிலே பயிற்சி பெறவும் வேண்டும். ஆகவே நமது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் படிப்புக்குப் புலவர்களால் போற்றப்படும் பழைய இலக்கியங்கள் துணை செய்ய முடியாது. ஆனால், பழைய இலக்கியங்களால் நல்ல மனப்பண்பைப் பெறலாம்; சிறந்த ஒழுக்கத்தை அறியலாம். பழந்தமிழர்களின் வரலாற்றை அறியலாம். அவர்களின் வாழ்க்கைமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறியலாம்; இவற்றுக்குத்தான் பழைய இலக்கியங்கள் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. இது இவ்வுலகில் உள்ள பழமையான இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழங்காலத்தில் கலைகள் பழங்காலத்தில் ஒழுக்கத்துடன் வாழவும், பொழுது போக்கவும்தான் இலக்கியத்தைத் துணையாகக் கொண்டனர். அன்றாட வாழ்வுக்கு வேண்டிய தொழில்முறைகளையெல்லாம், கண்ணால் பார்த்துக் கையால் செய்து வந்தனர். பெரும்பாலும் தந்தையின் தொழிலை மகன் கற்றுக்கொண்டு செய்து வந்தான். இந்த முறையில்தான் பண்டைய காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான தொழில்கள் எல்லாம் நடைபெற்று வந்தன. இக்காரணத்தால்தான் பழங்காலத்தில் தொழில் பற்றிய இலக்கியங்கள் எழுதப்படவில்லை. வானசாத்திரம், வைத்தியம் போன்ற இலக்கியங்களைப் பற்றி மட்டும் நூல்கள் எழுதினர். இவை சம்பந்தமான தனி நூல்கள், தமிழில் மிகப் பிற்காலத்தில்தான் எழுதப்பட்டன. அவைகளும், மொழிப் பயிற்சியிலே முற்றுப் பெறாதவர்களால் எழுதப்பட்டவை. அவைகள் புலவர்கள் பாராட்டும் தமிழிலே எழுதப்படாமையால், தமிழ்ப் புலவர்கள் அந்நூலைப் பாராட்டாமல் விட்டனர். அவர்கள் எல்லாப் பொருளும் இதன் பால் உள; இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்று திருக்குறள் போன்ற நூல்களைப் பாராட்டிப் பொழுது போக்குவதிலே காலம் கடத்தி வந்தனர். இதனால், கலை நூல்கள் தமிழில் வெளிவரவேண்டும்-எழுதப்பட வேண்டும் என்று கலைஞர்கள் சிலர் செய்த முயற்சியும் சரியானபடி வளர்ச்சியடையவில்லை. மொழியின் பயன் மொழியென்பது மக்கள் முன்னேற்றத்திற்காகத் தோன்றியது; மக்கள் தாங்கள் நினைக்கும் எண்ணத்தைப் பரிமாறிக் கொள் வதற்காகத் தோன்றியது. மொழியென்பது எல்லா மக்களுக்கும் அறிவூட்டும் வகையில்-மக்களின் போக்கை ஒட்டி வளர்ந்து வரும் தன்மையுள்ளது. இந்த உண்மையைப் பெரும்பாலான புலவர்கள் மறந்துவிட்டனர். மக்களுக்காக மொழியென்பதை மறந்து-மொழிக்காக மக்கள் என்று கருதி வந்த காரணத்தால் ஓரளவு மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. விஞ்ஞானமும் நாமும் இன்று விஞ்ஞானக் கலை வளர்ந்துவிட்டது; சந்திரனிலே போய் குடியேறுவதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. சந்திரனிலே மண்ணுலகத்தின் கொடி நாட்டப்பட்டு விட்டது; சோவியத் கொடி பறக்கின்றது. அதன் இருண்ட பக்கத்தைப் படம் பிடித்தாகிவிட்டது. பழமைக் கட்டிலிருந்து விடுபட்ட சோவியத் நாட்டினர் இந்த முயற்சியிலே வெற்றி பெற்றிருக் கின்றனர். இதைக் கண்டு உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் பாராட்டுகின்றனர். ருஷ்யர்கள் சந்திரனுக்குப் போனால், நாம் செவ்வாய்க்காவது செல்ல வேண்டும்; வியாழனுக்காவது போக வேண்டும் என்று மற்ற நாட்டினர் முயற்சி செய்து கொண்டிருக் கின்றனர். நமது நாட்டுப் புலவர்களிலே பலர்-ஆங்கிலம் படித்த தமிழ்ப் புலவர்களிலே பலர் வேறு விதமான ஆராய்ச்சித் துறையிலே இறங்கியிருக்கின்றனர். ஸபுட்னிக் என்பது எந்த மொழியிலிருந்து வந்தது. அதற்குத் தனித்தமிழ்ச் சொல் என்ன? ராக்கெட் என்பதற்குத் தனித் தமிழ்ச் சொல் என்ன? புட்னிக் என்பதை சுபுட்டினிக்கு என்று எழுதுவதா? ராக்கெட் என்பதை இராக்கெட் என்று எழுதுவதா? இராக் கெட்டும் சுபுட்டினிக்கும், தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்த சொற் களாகவே ஏன் இருக்கக் கூடாது? இச்சொற்களுக்கான மூல மொழி எவை? என்பன போன்ற ஆராய்ச்சிகளிலே இறங்கி யிருக்கின்றனர். இத்தகைய ஆராய்ச்சிகள் எல்லாம் மக்களை மறந்தவர்கள் செய்யும் ஆராய்ச்சிகள். அல்லது புது உலகை நோக்கி முன்னேறும் மக்களைப் படுகுழியிலே வைத்துத் தாங்கள் மட்டும் சமுதாயத்தின் தலைவர்களாக விளங்க வேண்டும் என்னும் சர்வாதிகார மனப்பான்மை படைத்தவர்களுக்குத் துணை செய்யும் ஆராய்ச்சிகள். பொதுமக்களும் புலவர்களும் பொதுமக்களுக்குப் புரியும்படி தமிழ் எழுதவேண்டும்; பொதுமக்களுக்குப் புரியும்படி எழுதுவதுதான் வளரும் தமிழ் என்று சொன்னாலே போதும். புலவர்கள் போருக்குப் புறப்பட்டு விடுவார்கள். இவர்கள், சங்கத் தமிழ்தான் சரியான தமிழ்; தொல்காப்பியத் தமிழ்தான் சரியான தமிழ். பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதுவதுதான் சரியான தமிழ்; தூய தமிழ் எழுதுகின்றவன்தான் தமிழை வளர்ப்பவன் என்று சண்டை போடத் தொடங்கிவிடுகின்றார்கள். இவர்கள் பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். தம்மைப் போன்றவர்கள் படித்து மகிழ்வதற்காக மட்டும் பழைய இலக்கியங்களைத் திருப்பி எழுதிக் கொண்டிருந்தால் போதும், பழைய இலக்கியங்களிலே இல்லாதவைகள் ஒன்றுமேயில்லையென்று சொல்லிக்கொண்டி ருந்தால் போதும் என்பதே இவர்கள் நினைப்பு. தமிழில் மாறுதல் சங்கத் தமிழை, தொல்காப்பியத் தமிழை நாம் போற்று கின்றோம்; பாராட்டுகின்றோம். அவை அக்கால மக்களுக்கேற்ற தமிழ். அக்காலத்திலே பொதுமக்களுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ்; எதனையும் தெளிவாக விளக்கும் தமிழ்; இந்த வகையிலே அதன் சிறப்பை-மாண்பை-பெருமையை எவரும் பழித்துரைக்க முடியாது. ஆனால் மக்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே யிருந்த நிலையில் இன்றில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எவ்வளவோ மாறுதலடைந்துவிட்டன. வாழ்க்கை முறையிலும் எவ்வளவோ மாறுதல்கள். இதற்கேற்றவாறு, மொழியிலும் மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும். மாறுதல் ஏற்பட்டே வந்திருக்கின்றது. இந்த உண்மையைச் சிலர் மறந்து விடுகின்றனர். சங்க காலத் தமிழிலே பிறமொழிக் கலப்பு அதிகமில்லை. இடைக்காலத்திலே நாயன்மார்கள், ஆழ்வார்கள், கம்பன், சேக்கிழார் முதலிய புலவர்கள் காலத்திலே பிறமொழிச் சொற்கள் தமிழிலே மிகுதியாகக் கலந்துவிட்டன. நமது காலத்திலே தாயுமானார், சித்தர்கள், இராமலிங்க அடிகள், வேதநாயகம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியவர்கள் காலத்திலே இடைக் காலத்தைவிட அதிகமான பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்து விட்டன. சங்க காலத்திலே தொல்காப்பியம் இலக்கணம். பிற்காலத்திலே நன்னூல் இலக்கணம். இன்று புதிய இலக்கணம் தேவையாக இருக்கின்றது. இலக்கணத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் எழுதப்பட வில்லை; இலக்கியத்தின் வளர்ச்சியைக் காட்டவே இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மையை மறந்துவிடுதல் கூடாது. சங்க காலத்திற்கு முந்திய இலக்கியங்களின் இலக்கண அமைப்பை விளக்குவதே தொல்காப்பியம். இடைக்கால இலக்கியங்களின் இலக்கண அமைப்பை விளக்குவதே நன்னூல் முதலியன. இன்றைய இலக்கிய அமைப்பை விளக்கும் இலக்கணம் இனி மேல்தான் தோன்ற வேண்டும். மாறுதல் இயல்பாகும் மக்களின் வளர்ச்சியை ஒட்டியே-வாழ்க்கை மாறுதலை ஒட்டியே மொழியும் வளர்ந்து வருகின்றது என்பதற்காகவே-மேலே இலக்கண வளர்ச்சியைப் பற்றி எடுத்துக் காட்டப் பட்டது. பழமை தானாகவே மாறிக் கொண்டுதான் வருகின்றது. வாழ்க்கை வசதிக்காக, மக்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ளப் பின்வாங்குவதில்லை. உணவிலே மாற்றம்; உடையிலே மாற்றம்; கொள்கையிலே மாற்றம்; இவ்வளவு மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டிருப்பவர்களிலே சிலர் மொழியிலே மட்டும் மாற்றம் உண்டாவதை விரும்புவதில்லை. மொழியிலேமட்டும் மாற்றம் விரும்பாத பெரியோர் களைப் பார்த்து, நீங்கள் ஏன் கிராப்பு வைத்திருக்கின்றீர்கள்? நறுக்கு மீசை வைத்திருக்கின்றீர்கள்? முகத்தில் மயிர் இல்லாமல் மழுங்கச் சிரைத்துக் கொள்ளுகின்றீர்கள்? கால்கூடு கைக்கூடு பூண்டிருக்கின்றீர்கள்? இவைகள் உங்கள் பழைய நடைமுறை அல்லவே? பழைய முறைப்படி தாடி மீசையுடன் இயற்கையாக வாழுங்கள்; உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என்பது தான் பழைய நடைமுறை; ஆதலால் நான்கு முழ ஒற்றைத் துணியுடன் உலவித்திரியுங்கள்; ஆடையில்லாமல் வாழ்ந்த மிகப்பழந்தமிழர் காலத்தைப் பின்பற்றினாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நாம் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். இவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நாம் சொல்லப் போவதில்லை. ஒருசமயம் நாமும் புதுமையிலே உள்ள வெறி காரணமாகச் சொல்லுவதாக இருந்தால் இதை அவர்கள் ஒப்புக் கொள்ளுவார்களா? ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இது விதண்டாவாதம் என்று சொல்லி ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். எந்தத் துறையிலும், முழுக்க முழுக்க நாம் பழமைக்குப் போய்விட முடியாது; பழமையைப் பின்பற்ற முடியாது, இதைப் போலத்தான் மொழிபற்றிய விஷயமும் என்பதற்காகத்தான் மேலே காட்டிய செய்தியைக் கூறினோம். இச் சமயத்திலே, மொழியில் மாற்றம் வேண்டாம் என்று சொல்லுகின்றவர்களுக்கு நாம் ஒரு சில உதாரணம் கூற விரும்பு கின்றோம். இன்று ஒரு கூட்டம் வானொலி என்று அழைக்க வேண்டும் என்கின்றனர். மற்றொரு சாரார் ஆகாசவாணி என்றுதான் குறிப்பிடுவோம் என்கின்றனர். பொது மக்களுக்கு இந்தப் போராட்டத்தில் கவலையில்லை; அவர்களுக்கு வானொலியும் தெரியாது; ஆகாசவாணியும் தெரியாது. ரேடியோ என்பதுதான் தெரியும். சிலர், ஈருருளி என்று சொல்ல வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர் துவிச்சக்கர வண்டி என்றுதான் அழைக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் பொது மக்கள் சைக்கிள் அல்லது பைசைக்கிள் என்றுதான் வழங்குகின்றனர். ரிக்ஷா, சைக்கிள்-ரிக்ஷா, ரயில்வண்டி, பிளசர் கார், ப, ஏரோபிளேன், ஹோட்டல் அல்லது கிளப், சினிமா போன்ற சொற்களைப் பாமர மக்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. இவைகளுக்கு என்னென்ன தமிழ் வார்த்தைகளைச் சொன்னாலும் அவைகள் எழுத்தில்தான் இருக்கும். மக்கள் பேச்சில உலவ மாட்டா. இந்த உண்மையை மறக்க போர் மொழியை மக்களுக்கு பயன்படும் வகையிலே வளர்க்க முடியாது. புரியும் தமிழ் வேண்டும் சங்ககாலத் தமிழ் நடையை நாம் மறுக்கவில்லை. அவை வளரட்டும். அந்த முறையிலே எழுதப்படும் புத்தகங்கள் மாணவர்களின் படிப்புக்குப் பயன்படட்டும்; அல்லது படித்தறிந் தவர்கள் கையிலே விளங்கட்டும்; அல்லது புலவர்கள் கரத்திலே இருக்கட்டும்; அல்லது புத்தகசாலைகளின் அலமாரிகளிலே கொலுவீற்றிருக்கட்டும். இந்த வகையிலே பயன்படுமாறு தமிழை வளர்ப்போரை நாம் குறை சொல்லவில்லை. தமிழின் புனிதத்தைக் காப்பாற்றும் இவர்கள் நமது மதிப்புக்கும் வணக்கத்திற்கும் உரியவர்களாவார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைத் தமிழ் அன்பர்கள் மறந்துவிட வேண்டாம் என்பதை மட்டும் நினைவூட்டுகின்றோம். எண்பொருள் ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. என்ற திருக்குறள், புலவர்களுக்கெல்லாம் தெரியும். எந்தப் பெரிய விஷயத்தையும் கேட்போர் உள்ளத்திலே பதியும்படி தெளிவாகச் சொல்ல வேண்டும். பிறர் கூறும், புரிந்து கொள்ளமுடியாத சிறந்த பொருளையும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்குறள் நெறியைப் பின்பற்றினால் போதும். தமிழ்மொழி பொது மக்களுக்குப் புரியும்படியான இலக்கியச் செல்வத்தைப் பெற்றுவிடும். இது உண்மை. எந்த விஷயத்தையும் பொதுமக்களுக்குப் புரியும்படி எழுதவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். கம்பன் விழாவிலே வெறுப்பு; பாரதி விழாவிலே வெறுப்பு; இவைகள் மட்டும் தமிழை வளர்த்துவிடாது. உண்மையிலே தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் வளந் தந்த நூல்களின் மேல், வெறுப்புக் காட்டுவோர் தமிழுக்கு என்ன பணி செய்துவிட முடியும்? தமிழ் மக்களுடைய முன்னேற்றத்திற்குத்தான் என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் செய்து விடமுடியாது. ஆகையால் தமிழ் மக்களிடம் உண்மையான அன்பு கொண்டோர், தமிழை வளர்க்க விரும்புவோர் தமிழை இரும்புக் கம்பியாக்க வேண்டாம். இழுத்த இழுப்புக்கு வரும் ரப்பர் போலச் செய்யவேண்டும். இதுதான், மொழியால் பொதுமக்களுக்குப் பணி செய்யும் முறையாகும். மன்னரும் மக்களும் நன்றி மறக்காத பண்பு ஒரு சிறந்த பண்பாகும்; இப்பண்பு மக்களிடம் மட்டும் அல்லாமல் ஏனைய உயிர்களிடமும் உண்டு; மாடு, ஆடு, குதிரை முதலிய விலங்கினங்கள் தங்களை வளப் போரிடம் நன்றி காட்டுகின்றன. நாயின் நன்றியறிவை அறியாதார் இல்லை. அதன் நன்றி யறிவைப் பற்றி இலக்கியங்களில் கூடக் கூறப்பட்டிருக்கின்றது. ஆதலால் பகுத்தறிவுள்ள மனிதன் நன்றியறிவுடன் இருப்பதில் வியப்பில்லை. மக்களிலே நன்றி மறந்தவர்கள் இருப்பதுதான் வியப்புக்குரியது. உதவி செய்தோரை மறக்கும் மனிதர்கள், அவர்களைப் பற்றி உள்ளத்தில் எண்ணாத மனிதர்கள், உதவி செய்தோர்க்கு உலைவைக்க முந்தும் மனிதர்கள் உண்டு. இவர்களை மக்கள் என்று கூற முடியாது. உருவத்தில்தான் மக்கள், செயலில் யாரோ அறியோம் என்றுதான் சொல்ல வேண்டும். நல்லவர்களிடம் நன்றியறியும் குணம் உண்டு. இதைத் தான் செய்ந்நன்றி அறிதல் என்பார்கள். இதன் சிறப்பை-இன்றியமையாமையை வள்ளுவர் விளக்கியிருக்கின்றார்; செய்ந் நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திலே இதைக் காணலாம். பண்டைத் தமிழ் மக்களிடம் இப்பண்பு படிந்திருந்தது. இப்பண்புக்கு நாம் பல சான்றுகளைத் தேடித் திரிய வேண்டாம். அரசருக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பை மட்டும் பார்த்தாலே போதும். பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் மன்னர்களைத் தெய்வ மாகவே மதித்து வந்தனர். அரசர் வாழ்வே தங்கள் வாழ் வென்று எண்ணி வந்தனர். அரசர் வாழ்வுக்காகத் தெய்வங்களை வணங்கி வந்தனர். இதற்குக் காரணம், அரசர்கள் மக்கள் நலமே பெரிதென்று வாழ்ந்ததுதான். இதனாற்றான் மன்னர்கள் மக்கள் மனத்திலே குடியிருந்தனர். முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை வாழ்த்திப் பாடியிருக் கின்றார். அவன் நீடுழி காலம் நிலைத்து வாழவேண்டும் என்று மனமார வாழ்த்தியிருக்கின்றார்: மக்கள் சார்பாகவே முடிநாகராயர் மன்னனை வாழ்த்துகின்றார். குதிரைப் படைகளையுடைய பாண்டவர்களுடன், கௌரவர் நூற்றுவர் மாறுபட்டனர். அவர்களுக்குரிய நாட்டை யும் தமது நாடாகக் கவர்ந்து கொண்டனர். இதனால் பாரதப் போர் விளைந்தது. இப்போரிலே துரியோதனாதியர் நூறு பேரும் போர் செய்து போர்க்களத்திலே மடியும் வரையிலும் இருபக்கத்துப் படைகளுக்கும் உணவிட்டாய். வேண்டிய அளவு உணவை மிகுதியாக அளித்தாய். இத்தகைய வள்ளன்மை பொருந்திய சேரனே! பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பேறினாலும், கதிர் தன் விளக்கம் குன்றி இருண்டு போனாலும், நான்கு வேதங்களில் கூறப்பட்ட ஒழுக்க முறைகள் மாறுபட்டாலும், நீ நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாயாக! அந்திக் காலத்திலே, சிறிய கன்றுகளுடன், பெரிய கண்களையுடைய மான்பிணைகள், அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே தூங்கிக்கொண்டிருக்கும். இத்தகைய காட்சியையுடையன பொன்னொளி பொருந்திய சிகரங்களையுடைய இமயமலையும், பொதியமலையும்; இந்த மலைகள் என்றும் நிலைத்து நிற்பன; இம்மலைகளைப் போல நீயும், உனது பண்பு வேறுபடாத சுற்றமுடன் நிலைத்து வாழ்வாயாக! என்பதே அவர் கூறும் வாழ்த்து. அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் பெரும் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேதம் நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ! அத்தை அடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பினை அந்தி அந்தணர் அரும்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறம் 2) இதுவே புறநானூற்றுப் பாடற் பகுதி. இச் செய்யுளிலே மன்னனும் வள்ளல்; அவனுடைய அமைச்சர்கள் முதலிய அலுவலர்களும் நல்லவர்கள்; அனைவரும் நாட்டின் நலத்தை நாடுவோர் என்ற குறிப்பைக் காணலாம். திரியாச்சுற்றம் என்ற சொற்றொடர் அமைச்சர் முதலியோரின் பண்பை விளக்கிற்று. இத்தகைய மன்னரை மக்கள் ஏன் வாழ்த்தமாட்டார்கள்? காரி கிழார் என்னும் மற்றொரு புலவர். பாண்டின் பல்யாக சாலை முதுகுடுமியை வாழ்த்திப் பாடியிருக்கின்றார். இப் பாடலும் மக்கள் மன்னர்களை ஏன் மனமார வாழ்த்தினர் என்பதை விளக்குவதற்குத் துணை செய்யும். உன்னுடன் போர் செய்ய முன்வந்த உன் பகைவர்களின் கோட்டைக்குள், கடல் போன்ற உன் படைகள் நுழைவதற்காக முதலில் உனது யானையை ஏவுவாய்; பசுமையான விளை நிலங்களின் பக்கத்திலேயுள்ள கோட்டைகள் பலவற்றையும் கைக்கொள்வாய், அக்கோட்டைகளிலே கைப்பற்றிய அழகாகச் செய்யப்பட்ட அணிகலன்களையெல்லாம் பரிசிலர்க்கு அவரவர் தகுதியறிந்து கொடுத்துவிடுவாய். உனது குடை முனிவர் போற்றும் முக்கண் மூர்த்தியான சிவபெருமான் கோயிலை வலம் வரும்போது தாழ்க; சிறந்த நான்கு வேதங் களையும் அறிந்த அந்தணர்கள் உன்னை வாழ்த்தும்போது எடுத்த கையின் எதிரில் உன் தலை வணங்குக; பகைவர்களின் நாட்டைச் சுடும்போது எழுந்து சுற்றும் புகையினால்மட்டும் உனது மலர்மாலை வாடுக; உனது மனைவிமார்களின் ஊடிய முகத்தைக் காணும்போது உனது வெகுளி-சினம்-தணிவதாக; இவ்வாறு, உனது வெற்றியால் நீ செருக்கடையாமல், அவ்வெற்றியை உன் உள்ளத்திலே அடக்கிக்கொண்டு வாழும் ஆற்றல் அமைந்தவனே! என்றும் குன்றாத கொடையை உடை யவனே! மிகுந்த பெருமையை உடைய குடுமியே! நீ இவ்வுலகிலே குளிர்ந்த ஒளியை உடைய சந்திரனைப் போலவும் சுடுகின்ற ஒளி பொருந்திய கதிர்களையுடைய சூரியனைப் போலவும் நிலைத்து வாழ்வாயாக! இதுவே காரிகிழார் கூறும் அரசு வாழ்த்து. இதுவும் மக்கள் மன்னரிடம் கொண்டிருந்த அன்பை விளக்குவதாகும். செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடல்படை குனிர்ப்ப மண்டி அடல் புகர்ச் சிறுகண் யானை செவ்விதின் ஏவிப் பாசவல் படப்பை ஆர்எயில் பலதந்து அவ் எயில் கொண்ட செய்வுற நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே; இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே; தூடுக இறைவநின் கண்ணி, ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்தலானே; செலியர் அத்தைநின் வெகுளி வால் இழை மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே, ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (புறம் 6) இதுவே மேலே காட்டிய பொருள் அமைந்த பாடற் பகுதியாகும். சுருங்கக் கூறினால், மன்னர்களை வாழ்த்துவதே புறநானூறு ஆகும்; புறநானூற்றின் பெரும்பாலான பாடல்கள், மன்னர்களின் வீரம், கொடை, புகழ், நீதிமுறை இவற்றைக் கூறுகின்றனவாகவே அமைந்திருக்கின்றன. பதிற்றுப்பத்துநூல் முழுவதும் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களே. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் எட்டுப் பத்துக் களும், எட்டுச் சேர மன்னர்களின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றன. பத்துப்பாட்டிலே ஏழு பாட்டுக்கள் பண்டைத்தமிழ் மன்னர்களின் பெருமையை பாராட்டும் பாடல்களேயாம். பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை இரண்டும் கரிகால் பெருவளத்தானைப் பாராட்டும் பாடல்கள். மதுரைக் காஞ்சியும், நெடுநல் வாடையும், பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தும் பாடல்கள், பெரும்பாண் ஆற்றுப்படை தொண்டை மான் இளந்திரையனைப் பாராட்டும் பாட்டு. சிறுபாண் ஆற்றுப்படை நல்லியக்கோடனைப் புகழும் பாட்டு. மலைபடுகடாம் நன்னனைப் பற்றிப் பாராட்டும் பாட்டு. இவ்வாறு பத்துப்பாட்டில் ஏழு பாடல்கள் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இதுவும் பண்டைக்கால மக்கள் மன்னர்கள் பால் எவ்வளவு அன்பு கொண்டிருந்தனர் என்பதை விளக்கும். பண்டைக் காலத்தில் அரசன் படையில் இருந்த வீரர்கள், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யும் தன்மையுள்ளவர்களா யிருந்தனர். அவர்கள் அரசனையும் நாட்டையும் ஒன்றாகவே எண்ணினர். இத்தகைய உறுதியும், அன்பும் உள்ளவர்களையே படைவீரர்களாகச் சேர்த்து வந்தனர். உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர். (குறள். 778) போர் மூண்டால், உயிருக்கு அஞ்சாமற் போர் புரியும் வீரர்கள், அரசன் தம்மேல் சினந்தாலும் சிறந்த தம் கடமையில் தவறமாட்டார்கள் என்று வள்ளுவர் படை வீரர்களின் தன்மையை எடுத்துக் கூறுகின்றார். பண்டைக் காலப் படை வீரர்கள் அரசன் வெற்றிக்காக உயிர்விடப் பின்வாங்குவதில்லை. இது படை வீரர்களின் நாட்டுப்பற்றையே விளக்குவதாகும். பண்டைப் படை வீரர்கள், தம் அரசன் வெற்றி பெற வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக் கொள்ளுவார்கள்; தங்கள் தலையைத் தாங்களே தெய்வத்தின் முன்னிலையில் பலிபீடத்தில் அறுத்து வைப்பார்கள். இந்த வழக்கம் தமிழகப் படைவீரர்கள்பால் இருந்தது. ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென நற்பலி பீடிகை நாம் கொள வைத்துஆங்கு. ஆரவாரித்து வெற்றி கொண்டவர்கள், போர்களத்திலே, பகைவர்க்கு அச்சத்தைத் தந்து, கடைக்கண் சிவந்த கடுமையான பார்வையையுடைய தலையைத் தாமே அறுப்பர், வெற்றியை யுடைய எமது அரசன் மேலும் வெற்றியடைக என்று வாழ்த்துவர்; நல்ல பலிபீடத்திலே, அரசன் நன்மை அடையும்படி வைப்பர் (இந்திர விழவு 83-86) என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனால் பழங்காலத்துப் படை வீரர்கள் தங்கள் வேந்தர் களிடம் வைத்திருந்த உள்ளன்பை உணரலாம். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும் நீதி முறைகளைச் செய்து குடிமக்களைக் காப்பாற்றும் வேந்தன், மக்களுக்கு தெய்வம் என்றே சிறப்பாக மதிக்கப் படுவான் (கு.338) என்ற வள்ளுவர் கூற்றும், மன்னர்களை-மக்களுக்கு நலம் புரிந்த மன்னர்களை-மக்கள் எப்படிப் போற்றி வந்தனர் என்பதைக் காட்டும். வள்ளுவர் கூறிய இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கின்றார். ஆய்ச்சியர் குரவையிலே இதனைக் காணலாம். கோவா மலைஆரம் கோத்த கடல்ஆரம் தேவர்கோன் பூண்ஆரம் தென்னர்கோன் மார்பினவே, தேவர்கோன் பூண்ஆரம் பூண்டான் செழும்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பாரால். கோக்கப்படாத பொதியின் மலை ஆரம் கோக்கப்பட்ட கடல் ஆரம், இந்திரன் பூண்ட பூணாகிய ஆரம்; இம் மூன்றும் மார்பிலே உள்ளன; இவ்வாறு தேவர்கோன் ஆரம் முதலியவற்றைப் பூண்டவன் யார் என்றால் செழிப்புள்ள துவாரகையிலே வளர்ந்தவன்; பசு மந்தையை மேய்த்தவன்; குருந்த மரத்தை ஒடித்தவன்-ஆகிய கண்ணன் என்பர். இவ்வாறு பாண்டியனைத் திருமாலாக வைத்துப் போற்றி வாழ்த்துகிறது இப்பாடல். பொன் இமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ஆண்டான் மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் மன்னன் வனவன் மதில்புகார் வாழ்வேந்தன் பொன்அம் திகிரிப் பொருபடையான் என்பர்ஆல் பொன்னாகிய இமயமலையின் உச்சியிலே தன் புலிமுத் திரையைப் பொறித்தவன்; இமயமலையை வடவெல்லை யாகக் கொண்டு அதற்கு இப்பால் உள்ள நாட்டை யெல்லாம் ஆண்டவன்; மதில் சூழ்ந்த புகார் நகரில் வாழ்கின்ற சோழ மன்னன்; அச்சோழன் யார் என்றால், பொன்னொளி வீசும் சக்கரப் படையைத் தனது போர்ப் படையாகக் கொண்ட திருமாலே என்பர். இப்பாடல் சோழ மன்னனைத் திருமாலின் உருவாகப் போற்றி வாழ்த்துகின்றது. முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்புஎறிந்தான் மன்னர் கோச்சேரள் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் வளவஞ்கி வாழ்வேந்தன் கன்னவில் தோள்ஒச்சிக் கடல்கடைந்தான் என்பர் ஆல். கடலின் உள்ளே சென்று, முதிராமல் செழித்து நின்ற கடம்ப மரத்தை வெட்டி எறிந்தவன்; வளங்கள் நிறைந்த வஞ்சிமா நகரில் வாழ்கின்ற வேந்தனாகிய சேரன்; அவன் யார் என்றால், மலை என்று சொல்லப்பட்ட தன் தோள் களை வீசிக் கடலைக்கடந்த திருமால் என்று சொல்லுவர். இப்பாடல் சேரனைத் திருமாலின் அவதாரம் என்று கூறிற்று. மேலே காட்டிய சிலப்பதிகாரச் செய்யுட்கள், பாண்டிய, சோழ, சேர மன்னர்களைத் திருமாலின் அவதாரங்கள் என்றே கூறின. வள்ளுவர் குறளை விளக்கும் முறையிலே இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. மன்னர்களைத் திருமாலின் வடிவமாக மக்கள் எண்ணினர் என்பதை நம்மாழ்வார் பாடல் ஒன்றும் கூறுகின்றது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்; உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந்தான் என்று துள்ளும்; கருஉடைத் தேஇல்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும்; வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே. என்பது திருவாய்மொழி. இதில் உள்ள திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்னும் அடி குறிப்பிடத்தகுந்தது. சிலப்பதிகாரப் பாடலின் கருத்தும், இதுவும் ஒத்திருப்பதைக் காணலாம். மன்னர்களைத் திருமாலின் அவதாரம் என்று கூறும் வழக்கம் தமிழ் நூல்களிலே மலிந்து கிடக்கின்றது. சங்ககால நூல்களிலே இவ்வழக்கத்தைக் காண முடியவில்லை. சங்க காலத்திற்குப் பிற்பட்டெழுந்த நூல்கள் எல்லாம் மன்னர்களை மாயோன் பிறப்பென்றே கூறுகின்றன. கலிங்கத்துப்பரணியிலே விசயதரனுடைய பிறப்பு வளர்ப் பைப்பற்றி அவதாரம் என்ற பகுதியிலே கூறப்படுகின்றது. 1. அன்று இலங்கை பொருது அழித்த அவனேஅப் பாரதப்போர் முடித்துப் பின்னை வென்று இலங்கு கதிர்ஆழி விசயதரன் என உதித்தான் விளம்பக் கோண்மின்! 2. தேவர்எலாம் குறைஇரப்பத் தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு மூவுலகும் தொழுநெடுமால் முன் ஒருநாள் அவதாரம் செய்த பின்னை. 3. இருள் முழுதும் புவிஅகல, இரவிகுலம் இனிது ஓங்க இராச ராசன் அருள்திருவின் திருவயிறாம் ஆல்இலையின் அவதரித்தான் அவனே மீள. இவை செயங்கொண்டார் கூற்று, இலங்கையில் போர் செய்து அழித்த இராமனே கண்ணனாகப் பிறந்தான்; அந்தப் போரை முடித்தான்; அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப்படையையுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான். தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக் கொண்டனர். அதனால் வாசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான்; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான். அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரியகுலம் புகழ் பெற்று ஓங்க, இராசராசனுடைய மகள் வயிறாகிய ஆலிலையிலே விசயதரனாக அவதரித்தான். இச்செய்திகளே மேலே காட்டிய கலிங்கத்துப்பரணிப் பாடல்களிலே கூறப்பட்டன. ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட உலாக்கள் எல்லாம் மன்னர்களைத் திருமால் அவதாரம் என்றே கூறுகின்றன. கையும் மலர் அடியும், கண்ணும், கனிவாயும் செய்ய கரிய திருமாலை- கைகளும், மலர்போன்ற அடிகளும், கண்களும், கனிபோன்ற வாயும், சிவந்திருக்கின்ற கரியநிறமுள்ள திருமாலாகிய விக்கிரம சோழனை (விக்கிரம சோழன் உலா 158) என்று விக்கிரம சோழனைத் திருமாலாகவே கூறுகிறார் ஒட்டக் கூத்தர். ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை இறுக்கும் அவன் இவன் என்பார் - மறுக்காமல் சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீ என்பார். (குலோத்துங்க சோழன் உலா 116-117) இவைகள் குலோத்துங்க சோழன் உலாவிலே கண்டவை குலோத்துங்க சோழனை இராமனாக உருவகம் செய்திருப் பதை இக்கண்ணிகளிலே காணலாம். சிலையால் வழிபடு தெண்திரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் (இராசராசசோழன் உலா 12) என்று இராசராசன் இராமனாகக் கூறப்படுகின்றான். இராசராச சோழன் உலாவிலே பின்னும் மன்னன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுகின்றான். 379. முன்பு கருடன் முழுக்கழுத்தில் ஏறுவது பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல் 380. இமைக்கும் கடவுள் உடையினைப்பண்டு இப்போது அமைக்கும் துகிலினை அன்றே - அமைத்தது ஓர் 381. பாற்கடல் சீபாஞ்ச சன்னியம்பண்டு, இப்போது கார்க்கடல் சென்று சங்கே - சீர்க்கின்ற 382. தண்அம் துழாய்பண்டு சாத்தும் திருத்தாமம் கண்ணி இன்று ஆரின் கவட்குஇலையே - தண்என்ற 383. பள்ளி அறை பாற்கடலே பண்டு, திருத்துயில்கூர் பள்ளி அறை இன்று பாசறையே. இவ்வடிகளும், இராசராச சோழனைத் திருமாலின் அவதாரமாகவே கூறுகின்றன. செயங்கொண்டாரால் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி; ஒட்டக்கூத்தப் புலவரால் பாடப்பட்ட மூவர் உலா; இவைகள் எல்லாம் மன்னர்களை வாழ்த்தும் நூல்களேயாகும். மூவருலா என்பது, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய மூன்றும் சேர்ந்த தொகுதி. ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும் மன்னர் புகழைப் பாடாமல் விடவில்லை. சோழமன்னர்களின் பெருமை யைப் பாராட்டிப் பாடுகின்றார். சிவஞானச் செல்வராகிய ஞானசம்பந்தரும் மன்னனை வாழ்த்துகின்றார். வாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்; வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக, ஆழ்க தீயஎல்லாம்; அரன் நாமமே சூழ்க; வையக மும்துயர் தீர்கவே என்பது சம்பந்தர் பாடல். மன்னன் சிறந்து வாழ்க என்று வாழ்த்துகின்றார். மன்னர்களின் பாதுகாவலால்தான் மக்கள் நலம் பெற்று வாழ முடியும் என்ற நம்பிக்கை நிலவியிருந்த காலத்தில் அனைவரும் இவ்வாறு மன்னனை வாழ்த்தினர். மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு உழைப்ப வர்கள் எக்காலத்திலும் போற்றப்படுவார்கள்; எல்லோராலும் போற்றப்படுவார்கள். இன்றும் மக்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் போற்றப்படுகின்றனர்; மக்கள் நலங்கருதி உழைக்கும் அரசாங்கத் தலைவர்கள் கொண்டாடப்படுகின்றனர். மக்கள் நன்மை ஒன்றையே கருதி உழைப்பவர்கள், மன்னர்களைவிட இன்னும் மிகுந்த சர்வாதிகாரம் படைத்தவர்களாயிருந்தாலும் அவர்களும் போற்றப்படுகின்றனர். நமது நாட்டில் வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் அரசாங்கத் தொடர்புள்ள ஒவ்வொரு விழாக்களின் முடிவிலும் அரசு வாழ்த்துப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் இங்கிலாந்திலே அவ்வழக்கம் உண்டு. அரசர்கள் ஆளும் நாடு களில் எல்லாம் அரச வாழ்த்துப் பாடும் வழக்கம் உண்டு. இது போலவேதான் பண்டைத் தமிழகத்தில், மக்கள் மன்னர்களைக் கொண்டாடி வந்தனர். ஆனால் தமிழ் மக்கள் மன்னர்களின் ஆணைக்கு அஞ்சி அவர்களைப் போற்றவில்லை; அவர்களுடைய பணியைப் பாராட்டிப் போற்றினார்கள். இந்த உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. இனி, மன்னர்களின் ஆட்சி வரப்போவதில்லை. மக்களாட்சி தான் இனித் தொடர்ந்து வாழ முடியும். மக்களாட்சியைத் திறம்பட நடத்தி வைக்கும் தலைவர்கள்-தன் நலம் அற்ற சான்றோர்கள்-நாட்டு மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் மக்களால் போற்றப்படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை; பழைய மன்னர்களைப் போலவே பாராட்டத் தான் பெறுவார்கள். இது மக்கள் இரத்தத்தோடு கலந்திருக்கும் பழம் பெரும் பண்பாகும்; செய்ந்நன்றி அறிதல் என்னும் சிறந்த ஒழுக்கம். தொல்காப்பியத் தமிழர் (1956) ஆக்கியோன் முன்னுரை தமிழரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் எத்தனை எத்தனையோ வெளிவந்திருக்கின்றன: தமிழ் மொழியைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களும் எத்தனையோ வெளிவந்திருக்கின்றன. தமிழரைப்பற்றிய உண்மை வரலாற்று நூல்கள் இன்னும் வெளி வர வேண்டும். தமிழ்மொழியைப் பற்றிய நூல்களும் இன்னும் வெளிவரவேண்டும். பழந்தமிழர் வரலாற்றைக் காணத் தமிழ் இலக்கியங் களையே ஆதரவாகக் கொள்ளவேண்டும். தமிழ் இலக்கியங் களில்தான் பழந்தமிழர் பண்பாடுகளையும். வரலாறுகளையும் தெளிவாகக் காணமுடியும். பழந்தமிழர் நாகரிகத்தை விளக்குவன பழந்தமிழ் நூல்களேதான். தமிழர்களைப் பற்றித், தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதாவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. ஒரு பழமையின் உண்மையைக் கண்டறிய வேண்டுமானால் அதற்குத் துணை செய்யும் கருவிகள் இரண்டு, ஒன்று உள் ஆதரவு. மற்றொன்று வெளி ஆதரவு. உள்ளாதரவை அகச்சான்று என்பர். வெளி ஆதரவைப் புறச்சான்று என்பர். உண்மையை அறிவதற்குப் புறச்சான்றை விட அகச்சான்றே சிறந்தது. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்லுகின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும். இவ்வுண்மையை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்: பழந்தமிழர் வரலாறு, நாகரிகம், ஆகியவைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதன் நோக்கம். தமிழகத்திலே இன்று இன வெறுப்புத் தலை விரித்தாடுகிறது, மொழி வெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர் களைச் சொல்லித் தமிழ் மக்கிளிடையிலே கலகத்தீயை மூட்டி விடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத் தீ அணைக்கப் படவேண்டும். அப்பொழுதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும். சில ஆராய்ச்சிக்காரர்கள் பண்டைத் தமிழர்கள் நாகரிகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தாமாகவே ஒரு முடிவு செய்து கொள்ளுகின்றனர். அவர்கள் முடிவு இன்று உருவாகி வரும் புதிய சமுதாயத்தை மனத்தில் வைத்துக்கொண்டு செய்யப் பட்ட முடிவாகும். இன்று உருவாகி வரும் புதிய சமுதாய முறை பண்டைத் தமிழகத்தில் இருந்தது என்று காட்டவே அவர்கள் முயல்கின்றனர். இன்று உருவாக வேண்டும் என்று நாம் நினைக்கின்ற புதிய சமுதாய முறை புதுமையானதன்று. பண்டைத் தமிழர்களிடமிருந்த சமுதாய முறைதான் என்று மெய்ப்பிக்கவே அவர்களுடைய அறிவையும் ஆராய்ச்சியையும் பயன்படுத்துகின்றனர். பண்டைத்தமிழர் உன்னதமான உயர்ந்த வாழ்க்கையிலே இருந்தனர். அந்நியரால் அவர்களுடைய உன்னத வாழ்க்கை நாசமாகப்பட்டது. ஒற்றுமையும் நாகரிகமும் நிறைந்த தமிழர் சமுதாயம் வேற்றாரால் உருக்குலைந்தது. தமிழர்களின் பண்டைப் பண்புகள் மறைந்தன. மாற்றார்களின் பண்புகள் தமிழர்களிடம் குடிகொண்டன இக்கொள்கையைப் பரப்புவதே இந்தப் புதிய ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். ஒரு சமுதாயம் எவ்வளவுதான் நிலை குலைந்தாலும். எத்தனை ஆண்டுகள் மாற்றானுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தாலும் அச்சமுதாயத்தின் பண்பாட்டை அடியோடு மாற்றிவிட முடியாது பழைய பண்பாடு. புதிய நாகரிகத்துடன் கலந்து வளர்ந்து கொண்டுதான் வரும் இந்த உண்மையை ஆராய்ச்சியாளார்கள் மறந்துவிடக்கூடாது. மக்கள் வாழ்வு நாளாக நாளாக நாகரிகப் படியிலே முன்னேறிக் கொண்டுதான் வருகின்றது. கீழேயிருந்து மேலே போவதுதான் நாகரிகம் ஆகும். உயர்ந்த நிலையிலிருந்த நாகரிகம் வரவரத் தாழ்ந்துகொண்டே வருகிறது என்பது வரலாற்று முறைக்கு மாறான கருத்து. ஒரு பழைய சமுதாயத்தைப் பற்றி ஆராயும்போது இந்த உண்மையையும் உள்ளத்தில் வைத்துக் கொண்டுதான் ஆராயவேண்டும். அப்பொழுதுதான் அச் சமுதாயத்தின் உண்மைப் பண்பாட்டைக் கண்டறிய முடியும். உலகின் பலநாடுகள்-பல நாட்டு மக்கள் காட்டுமிரண்டி களாக வாழ்ந்த காலத்தில் தமிழ் மக்கள் உயர்ந்த நிலையிலே வாழ்ந்திருந்தனர். தமிழ் மக்களுடைய நாகரிகம் மற்றவர்களைக் காட்டிலும் சிறந்திருந்தது. தமிழர்கள் விவசாயத்திலே தேர்ச்சி பெற்றிருந்தனர். நல்ல அரசியல் அமைப்பைக் கொண்டிருந்தனர். வாணிகம், கைத்தொழில் முதலியவைகளில் உயர்ந்திருந்தனர். நல்ல கட்டுத்திட்டமுள்ள சமுதாயமாக வாழ்ந்தனர். இந்த உண்மைகளைப் பண்டைத் தமிழ் நூல்களால் நாம் காணலாம். தமிழ் நூல்களில் முதல் நூலாகிய தொல்காப்பியமும் இவ் வுண்மைகளை நமக்குக் காட்டுகின்றது. இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பண்டைப் பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டை மக்கள் கொண்டிருந்த நம்பிக் கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும், நம்பிக்கை களும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும் நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை. தமிழ் இலக்கியங்களை நன்றாகக் கற்றவர்களுக்கு இவ் வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவு பெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்க வழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் என்று கூறுகின்றனர். இவர்கள்; கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம். ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையிலே புகுத்தினர் என்பது உண்மையன்று. இது உண்மையானால்- இன்றுள்ள பழந்தமிழ் நூல்களிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல் ஒன்றுகூட இல்லை என்றுதான் கொள்ள வேண்டும். தொல்காப்பியமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய நூல் என்றுதான் கருதவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் ஆரியர்கள் இந்நாட்டுக்கு வந்தார்கள் என்று பெரும்பாலான சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். ஆதலால் இந்த முடிவுதான் ஏற்படும். நமது முன்னோர்களிடம் இருந்த பழக்க வழக்கங்களிலே சில இக்காலத்திற்கு ஏலாதன: நம்பிக்கைகளிலே சில, அறிவுக்குப் பொருத்தமற்றவை; இவ்வுண்மை தமிழ் நூல்களில் காணப்படு கின்றன என்று கூறுவதனால் நமக்கு இழுக்கு ஒன்றும் இல்லை. முன்னோர்களைப் பழிப்பதாகவும் ஆகாது. மக்களின் பழக்க வழக்க நம்பிக்கைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிலைமையை ஒட்டியே வளர்ந்து வந்தன என்ற வரலாற்று உண்மையைத்தான் இது காட்டும். ஆதலால் பழைய நூல்களில் காணப்படும் தமிழர் களின் உண்மை நாகரிகத்தை எடுத்துக்காட்டுவதே சிறந்தது. இதுவே நமது முன்னோர் வரலாற்றை அறிவதற்குத் துணை செய்யும் நமக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக, உண்மையை மறைப்பது தவறு. இது வரலாற்றையே சிதைப்பதாகும். தொல்காப்பிய காலத்திலே தமிழர்களிடம் இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் என்ன வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை. இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. இந்திய மக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள் வரவும், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவ புண்ணியம், மோட்ச, நரகம், பற்றிய கொள்கைகள், இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவர்க்கும் இவைகளைப்பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தான் பண்பாட்டுக்கு அடிப்படை யானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்திய மக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதர வளிக்கிறது. தமிழ் நாட்டு உண்மை வரலாறு பண்டைத் தமிழர்களின் பண்பாடு; செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பு இவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்கு இந்நூல் பயன்படும். இவ்வாறு பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடனேயே இந்நூல் எழுதப் பட்டது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகளையே இந்நூலில் திரட்டி எழுதப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகள் அனைத்தையும் அப்படியே ஒன்று விடாமல் எழுதப்பட்ட நூல் என்று இதைச் சொல்லமுடியாது. இன்னும் எழுத வேண்டியவை எவ்வளவோ உண்டு. எழுதாமல் விடுபட்டுப் போனவை எவ்வளவோ உண்டு. குறிப்பிடத்தக்க செய்திகள் மட்டுமே இதில் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தையே அடிப்படையாகக் கொண்டவை. தமிழர் நாகரிகத்தைக் காணுவதற்குப் பொருளதிகாரமே பெருந் துணை செய்கின்றது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரங்களில் உள்ள சில பகுதிகளும் இவ்வாராய்ச்சிக்குத் துணை செய்திருக் கின்றன. ஆயினும் இது தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சியாகவே முடிந்திருக்கின்றது. இந்நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன. சூத்திரத்தின் எண்கள் தொல்காப்பிய மூலத்தில் உள்ளவை. இது, காலஞ்சென்ற கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்காப்பிய மூலத்தைப் பின்பற்றியது. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினை இயல், ஐந்தாவது சூத்திரம் என்று குறிக்கப்பட வேண்டிய இடத்தில் (தொ.பொ. அக.5) என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் ஒவ்வொரு சூத்திரமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சூத்திரங்களைப் பற்றி-தொல்காப்பியத்தில் அவைகள் எங்கேயிருக்கின்றன என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டுமானால், தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள இயல்களையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தொல்காப்பியச் சூத்திரங்களை எளிதில் கண்டுபிடிக்க இதுதான் வழியாகும். அதிகாரங்களும், இயல்களும் கீழ் வருவன. I. எழுத்ததிகாரம் 1. நூல் மரபு 2. மொழிமரபு 3. பிறப்பியல் 4. புணரியல் 5. தொகைமரபு 6. உருபியல் 7. உயிர் மயங்கியல் 8. புள்ளி மயங்கியல் 9. குற்றியலுகரப் புணரியல் II. சொல்லதிகாரம் 1. கிளவியாக்கம் 2. வேற்றுமையியல் 3. வேற்றுமை மயங்கியல் 4. விளிமரபு 5. பெயரியல் 6. வினையியல் 7. இடையியல் 8. உரியியல் 9. எச்சவியல் III. பொருளதிகாரம் 1. அகத்திணையியல் 2. புறத்திணையியல் 3. களவியல் 4. கற்பியல் 5. பொருளியல் 6. மெய்ப்பாட்டியல் 7. உவமவியல் 8. செய்யுளியல் 9. மரபியல் இவைகளே தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களும், இயல்களுமாகும். மூன்று அதிகாரங்கள்; ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள். இந்நூலில் கூறப்படும் ஒரு சில செய்திகள் புதுமையாகத் தோன்றலாம். ஆனால் தொல்காப்பியத்தை ஆராய்வோர் அக்கருத்துக்களைக் கண்டு வியப்புற மாட்டார்கள். உண்மை என்று ஒப்புக்கொள்வர். மனித சமூதாயத்தின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அறிஞர்கள் இந்நூலை வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. நெ. 9, ஏழாவது தெரு, சவுராஷ்டிர நகர் சாமி. சிதம்பரன் சென்னை-24. 15-2-56 ஆசிரியர் வரலாறு தொல்காப்பியம் தொல்காப்பியம் ஒரு பழந்தமிழ்ப் பெரும் செல்வம் தமிழில் இன்றுள்ள நூல்களில் இதுவே பழமையானது: முதன்மையானது; காலத்தால் முற்பட்டது; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட அரிய நூல். நமது முன்னோர்களால் நமக்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களில் இதுவே தலை சிறந்தது. தொல்காப்பியத்திற்கு முன்னும் பல நூல்கள் தோன்றியிருந்தன. ஆனால் அப்பழந்தமிழ் நூல்களில் ஒன்றேனும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. பண்டைத் தமிழர் நாகரிகத்தைப்-பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தொல்காப்பியமே துணை. தொல் காப்பிய காலத்திலே தமிழர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் எந்தெந்தத் துறைகளிலே முன்னேறியி ருந்தார்கள்? அவர்களுடைய சமுதாய அமைப்பு எத்தகையது? இவைகளைக் கண்டறிவதுதான் இவ்வாராய்ச்சியின் நோக்கம். தொல்காப்பியம் என்றால் என்ன? தொல்காப்பியம் என்ற பெயரைக் கேட்டவுடன் அது ஒரு காவியமோ என்று கருதலாம் தொல்காப்பியத்தைப் பற்றி அறியாதவர்கள் இப்படி நினைப்பது இயல்புதான். இவர்கள் தொல்-பழமை, காப்பியம்-காவியம், தொல்காப்பியம்-பழமையான காவியம், என்று பொருள் பண்ணிக் கொள்ளலாம். தொல்காப்பியம் காவியம் அன்று; புராணம் அன்று; சரித்திரம் அன்று; திருக்குறள், பகவத்கீதை போல மக்களுக்கு நல்லுரைகளைத் தெரிவிக்கும் நீதிநூலும் அன்று; தத்துவ நூலும் அன்று. தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். செந்தமிழுக்கு இன்றுள்ள பழமையான சிறந்த இலக்கணம் இது ஒன்றுதான். நன்னூல் நேமிநாதம், வீரசோழியம், இலக்கண விளக்கம், இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, போன்ற இலக்கண நூல்கள் எல்லாம் பிற்காலத்தே தோன்றியவை. தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றியவை; இவ்விலக்கண நூல்கள் எல்லாவற்றுக்கும் தொல்காப்பியமே தாயகம். தமிழிலே இன்றுள்ள இலக்கண நூல்கள் அவ்வளவும் தொல்காப்பியப் பேராற்றிலிருந்து பிரிந்து நிற்கும் சிற்றோடைகள்தாம். இந்தத் தொல் இலக்கணம், தொல்காப்பியம் என்று பெயர் பெற்றது ஏன்? எவர்க்கும் இந்த ஐயம் தோன்றுவது இயல்புதான். தொல்காப்பியர் என்பவரால் செய்யப்பட்ட நூல் அது. ஆகையால் அதைச் செய்த ஆசிரியர் பெயரையே அந்த நூலுக்குப் பெயராக வைத்துவிட்டனர். இவ்வாறு ஆக்கியோன் பெயரையே நூலுக்குப் பெயராக அமைப்பது பழைய வழக்கம். இவ்வழக்கம் எல்லா மொழிகளிலும் உண்டு. சேரர்குடி, சோழர்குடி, பாண்டியர்குடி என்பது போலக் காப்பியக்குடி என்பதும் ஒரு பழமையைன தமிழ்ப் பரம்பரை. காப்பியனார் என்ற மற்றொரு புலவரும் உண்டு. இவர் காப்பியாறு என்ற ஊரிலே, காப்பியர் குடியிலே பிறந்தவர். ஆதலால் காப்பியாற்றுக் காப்பியனார் என்று பெயர் பெற்றார். இவர் பதிற்றுப்பத்திலே நாலாம் பத்தைப் பாடியவர். சேக்கிழார் என்பதும் குடிப்பெயர், பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் குடியிலே பிறந்தவர். பிறந்த குடியைப் பெயராக வைத்து அழைப்பதற்கு இவைகள் உதாரணம். ஆகையால் தொன்மையான காப்பியக் குடியில் தோன்றிய ஒரு பெருந்தமிழ்ப் புலவரைத் தொல்காப்பியர் என்ற பெயரால் அழைத்தனர். தொன்மை-பழமை தொல்காப்பியரால் ஆக்கப்பட்ட அருந்தமிழ் இலக்கணம் தொல்காப்பியம். ஆசிரியர் தொல்காப்பியரைப் பற்றிய பிற்காலத்தார் வேறு பல கதைகள் தொடுத்துவிட்டனர். ஜமதக்கினி முனிவரின் புதல்வர் தொல்காப்பியர் அவர் பெயர் திரணதூமாக்கினி முனிவர். இந்தத் திரணதூமாக்கினி முனிவரும் பரசுராமரும் உடன் பிறந்தவர்கள். அகத்தியர் என்னும் முனிவர் சிவபெருனிடம் தமிழ் கற்றவர், அந்த அகத்தியருக்குப் பன்னிருமாணவர்கள். அவர்களிலே இந்தத் திரணதூமாக்கினி முனிவராகிய தொல்காப்பியரும் ஒருவர். இது ஒரு கதை. இக்கதையிலிருந்து முளைத்த கிளைக் கதை ஒன்றுண்டு. சிவபெருமானுக்குத் திருமணம், அப்போது தேவர்க ளெல்லாம் இமயத்திலே ஒன்று கூடினர். இதனால் வடதிசை தாழ்ந்தது; தென்திசை உயர்ந்தது. இந்த உயர்வு தாழ்வைச் சரிப்படுத்த அகத்தியரைத் தென்திசைக்குச் செல்லும்படி தேவர்கள் வேண்டிக்கொண்டனர். அவரும் தென்றிசைக்குப் புறப்பட்டார். புறப்படும்போது, கங்கையாரிடம் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டார். பின்னர் ஜமதக்கினியாரிடம் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டார். பிறகு புலத்தியனாரிடம் சென்று உலோபாமுத்திரை யாரைத் தனக்கு மனைவியாக ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் துவராபதிக்கு வந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணலின் வழியிலே வந்த பதினெட்டு அரசர்களையும், பதினெட்டுக் கோடி வேளிர் களையும் அருவாளரையும் அழைத்துக் கொண்டு தென்திசைக்கு வந்தார். காடுகளை அழித்து நாடாக்கிப் பொதிகை மலையிலே தங்கினார். இராவணனை இசையால் வசமாக்கி அவனையும் அரக்கர்களையும் அங்கு நடமாடாமல் செய்தார். பிறகு அகத்தியர் திரணதூமாக்கினியாராகிய தொல் காப்பியரைப் பார்த்து. நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக என்று கூறினார். அவர் எப்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவது என்று கேட்டார். முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று அழைத்து வருக என்றார். திரண தூமாக்கினியாரும் குமரியாரை இவ்வாறு அழைத்து வரும் போது வையையிலே வெள்ளம் பெருகிற்று. வெள்ளம் குமரி யாரை இழுத்துக் கொண்டு போயிற்று. திரண தூமாக்கினியார் ஒரு மூங்கிற் கோலை முறித்துக் குமரியாரிடம் நீட்டினார். குமரியார் அக்கோலைப் பற்றிக் கரையேறினார். இச்செய்கையைத் தன் கட்டளையை மீறிய கடுங்குற்ற மென்று கருதினார் அகத்தியனார். நீங்கள் சுவர்க்கம் புகமாட்டீர்கள் என்று திரணதூமாக்கினியாரையும் குமரி யாரையும் சபித்தார் அவர். நாங்கள் ஒரு குற்றமும் செய்ய வில்லை. எங்களைச் சபித்தீர். எம்பெருமானும் சுவர்க்கம் புகமாட்டீர்கள் என்று திரணதூமாக்கினியாரும் உடனே சபித்தார். இது தொல்காப்பியச் சிறப்புப்பாயிர உரையிலே உரை யாசிரியர் நச்சினார்க்கினியர் நுழைத்திருக்கும் கதை. இக்கதைகள் எல்லாம் ஆதாரமற்ற வெறும் கட்டுக் கதைகள் இந்தக் கதைகள் உண்மையாக இருக்குமானால் தொல்காப்பி யத்தின் பெயர் வேறாக இருந்திருக்கும். தொல்லிலக்கணம் அல்லது திரணதூமாக்கினீயம் என்ற பெயர்களில் ஒன்றுதான் ஏற்பட்டிருக்கும் இப்பெயர் ஏற்படாததைக் கொண்டே மேலே காட்டிய கதைகள் பொருத்தமற்ற புனைந்துரைகள் என்று அறியலாம். தொல்காப்பியர் தமிழ்நாட்டிலே, தமிழ்ப் பழங்குடியிலே தோன்றிய ஒரு சிறந்த தமிழர். பழமையான காப்பியக்குடி என்னும் தமிழர் பரம்பரையிலே பிறந்தவர். இதனால் தொல் காப்பியனார் என்ற பெயர் பெற்றார். அவர் பழந்தமிழ் நூல்களையும், வடமொழி நூல்களையும் கற்றறிந்த சிறந்த தமிழ்ப்புலவர். அவரால் இயற்றப்பட்ட அரிய தமிழிலக்கணமே தொல்காப்பியம். இதுதான் தொல்காப்பிய ஆசிரியரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைச் செய்தியாகும். தொல்காப்பிய காலம் தொல்காப்பியம் எப்பொழுது தோன்றியது? அது தோன்றி எத்தனை ஆண்டுகள் இருக்கலாம்? இன்ன ஆண்டில்தான் தொல்காப்பியம் தோன்றியதென்று திட்டமாக வைரயறுத்துச் சொல்ல முடியாது. இத்தனை ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி யிருக்கலாம் என்று ஒரு உத்தேசமாகத்தான் உரைக்க முடியும். தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர்; பிற்பட்டதென்று கூறுவோர் சிலர். 1. வேத வியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல் காப்பியம் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வேதங்கள் இப்பொழு துள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வண வேதங்கள் அல்ல. இவ்வாறு நான்காக வகுத்தெழுதியவர் வேத வியாசர். வேத வியாசருக்கு முன்னிருந்த நான்கு வேதங்கள் தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பன. இந்த நான்கு வேதங்களையே தொல்காப்பியனார் கற்றவர். இதனைத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையினால் உணர்ந்து கொள்ளலாம். ஆகவே இன்றுள்ள நான்கு வேதங்களுக்கும் முற்பட்டது தொல்காப்பியம் என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்து. 2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச் சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் ஏறக்குறைய 7300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம். தொல்காப்பியம் இடைச்சங்ககாலத்து இலக்கணம், இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் கடைச்சங்கம் நின்று நிலவியதாக நம்புகின்றனர். முச்சங்க வரலாறு உண்மையென்று ஒப்புக் கொள்ளப்பட்டால், இந்தக் கணக்கின்படி தொல் காப்பியம் தோன்றிய காலம் 7300 ஆண்டுகளுக்கு முன்பு என்றே முடிவு செய்யப்படும். 3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தமிழ்நாட்டின் பருவகாலத்தை ஆறாக வகுத்துக் கூறினர் முன்னோர். அவை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்பன. ஆவணியும், புரட்டாசியும் கார்காலம். ஐப்பசியும், கார்த்தி கையும் கூதிர்காலம். மார்கழியும், தையும் முன்பனிக்காலம். மாசியும், பங்குனியும் பின்பனிக்காலம். சித்திரையும், வைகாசியும் இளவேனிற்காலம். ஆனியும், ஆடியும் முதுவேனிற்காலம். கூதிர்-குளிர்: வேனில்-கோடை. தொல்காப்பியர் கார்காலத்தையே முதலில் கூறியுள்ளார். இதனை காரும் மாலையும் முல்லை-குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலலர். (தொல். பொருள் அகம். 6) என்ற சூத்திரத்தால் காணலாம். ஆவணி, புரட்டாசி மாதங் களாகிய கார்காலமும், மாலைக்காலமும் முல்லை நிலத்திற்குரிய பொழுதாகும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகிய குளிர் காலமும், யாமம் என்னும் நள்ளிரவும் குறிஞ்சி நிலத்திற்குரிய பொழுதாகும். ஒரு காலத்திலே ஆண்டின் முதல் மாதம் ஆவணியாகவும் இறுதி மாதம் ஆடியாகவும் வைத்து எண்ணப்பட்டு வந்தது. இதனை காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடகவோரையீறாக வந்து முடியுந் துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து, இரண்டு திங்கள் ஒருகால மாக்கினார். என்று நச்சினார்க்கினியர் மேலே காட்டிய சூத்திரத்தின் உரையிலே குறிப்பிட்டுள்ளார். சிங்கஓரை-ஆவணி மாதம், கற்கடகஓரை-ஆடிமாதம். பிற்காலத்திலேதான் சித்திரையை முதல் மாதமாக வைத்து எண்ணினர். ஆவணி, ஆண்டின் முதல் மாதமாக இருந்த காலம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாகுமாம். இவ்வாறு வானநூல் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டி ருக்கின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்போர் காட்டும் காரணமாகும். 4. மக்கள், இரும்பு பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு. ஐயாயிரத்திற்குப் பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. ஐயாயிரத்திற்குப் பிற்பட்டதுதான் என்பதில் ஐயமில்லை என்பர். 5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். இவர்கள் காட்டும் காரணங்களைக் காண்போம். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற சொற்றொடர் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலே காணப்படுகின்றது. ஐந்திரம் என்ற இலக்கண நூலறிவு நிரம்பிய தொல்காப்பியன் என்பதே இதன் பொருள். ஐந்திரம் என்பது இந்திரனால் இயற்றப்பட்ட ஓர் இலக்கணம். தமிழிலே இப்பெயர்கொண்ட ஓர் இலக்கணம் இருந்ததாக எண்ண இடமில்லை இப்பெயர் கொண்ட இலக்கணம் வடமொழியிலே இருந்திருக்கலாம். பாணினி இலக்கணம் தோன்றுவதற்கு முன் இந்த ஐந்திரம் வடமொழியில் இருந்திருக்க வேண்டும் பாணினிக்கு முன்னே இதுவே வடமொழியிலக்கணமாக இருந்திருக்கலாம். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு. தொல் காப்பியர் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும். 6. தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் தோன்றியது. 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர். 7. தொல்காப்பியர் காலம் கி.பி.5-ஆம் நூற்றாண்டு என்போரும் உண்டு. தொல்காப்பியம் ஒரு தனி ஆசிரியரால் செய்யப்பட்டதன்று; அது ஒரு தொகுப்பு நூல் என்போரும் உண்டு. 8. எந்த வகையில் பார்த்தாலும், தொல்காப்பியம் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றிப் பிற்பட்ட நூல், அன்று என்போர் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக்கொள்ளப் படுகின்றதோர் முடிவு. தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் இவ்வாராய்ச்சி களில் எது பொய்? எது மெய்? என்ற கவலை நமக்கு வேண்டாம். தமிழிலே இன்றுள்ள நூல்களிலே தொல்காப்பியந்தான் பழமையான நூல். இதற்கு முற்பட்ட நூல் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை, இது மட்டும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை. தமிழ் நூல் ஆராய்ச்சியாளர் அனைவராலும் ஒருமனதாக ஒப்புக்கொள்ளும் முடிவு. தொல்காப்பியம் முதல் நூலா? தொல்காப்பியம் முதல் நூலா? வழிநூலா? வழி நூலானால் எந்த நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது? தொல்காப்பியம் முதல் நூல் அன்று; வழிநூல்தான். ஐந்திரம் என்பது இந்திரனால் செய்யப்பட்டதோர் இலக்கணம். இத்தகைய இலக்கணம் இன்று வடமொழியிலும் இல்லை: தமிழிலும் இல்லை. இது தமிழிலோ வடமொழியிலோ இருந்து மறைந்துபோன ஒரு இலக்கணமாக இருக்கலாம். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திலே கூறப்படுகின்றது. இந்த ஐந்திரத்தை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டதே தொல்காப்பியம் இவ்வாறு கூறுவோர் உண்டு. இக்கொள்கைக்குத் தொல் காப்பியச் சிறப்புப்பாயிரத்தைத் தவிர வேறு ஆதரவில்லை. ஆயினும் இக்கூற்று தொல்காப்பியம் வழிநூலே என்பதை மெய்பிக்கும். அகத்திய முனிவரால் செய்யப்பட்ட நூல் அகத்தியம். அது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறப்பட்ட முழு முதல்நூல். இந்த அகத்தியமே தொல்காப்பியத்திற்கு முதல்நூல். ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியனும் அழியாத பெருமையுடைய அகத்தியன் என்னும் அருந்தவ முனிவனால் ஆக்கப்பட்டது அகத்தியம் என்னும் முதல்நூல். அதனை நன்றாகக் கற்றுக் குற்றமற அதன் பொருளை அறிந் தோருள் நல்ல புகழை நிலைநாட்டிய தொல்காப்பியனும். இது பன்னிரு படலத்தின் பாயிரச் சூத்திரம். இதில் அகத்தியத்தைக் கற்றவருள்ளே தொல்காப்பியர் சிறந்தவர் என்பதைக் காணலாம். முதற் சங்கத்தார்க்கு இலக்கணம் அகத்தியமே. இடைச்சங்கத்தார்க்கும்அகத்தியமும்,தொல்காப்பியமுமேஇலக்கணநூல்கffddfள். கடைச்சங்கத்தார்க்கும் அகத்தியமும், தொல்காப்பியமுமே இலக்கண நூல்கள். அகத்தியம் தமிழ்நூல் என்பதில் ஐயம் இல்லை. அது இலக்கண நூல்தான் என்பதும் எல்லோராலும் ஒப்பு கொள்ளும் முடிவு. அகத்தியம், பேரகத்தியம் சிற்றகத்தியம் என இரு வகைப்படும் என்று கூறுவர் சிலர். பேரகத்தியம் முதல் நூலாக இருக்கலாம்; சிற்றகத்தியம் அதன் சுருக்கமாக இருக்கலாம். ஆகவே, தொல்காப்பியம், தமிழ் முதல் நூலாகிய அகத்தியம் என்னும் இலக்கணத்தின் வழி நூலாகத்தான் இருக்க வேண்டும். இதுவும் தொல்காப்பியம் வழி நூல் என்பதையே மெய்ப்பிக்கின்றது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் மூன்று காலங்களிலும் நின்று நிலவியது அகத்தியம். இன்று அது நமக்குக் கிடைக்கவில்லை. அகத்தியம் என்ற பெயரில் சில சூத்திரங்களே காணப்படுகின்றன. இலக்கியமே முதலில் தோன்றியது. இலக்கியம் பிறந்த பின்னர்தான் இலக்கணம் பிறந்தது. தொல்காப்பியம் இலக்கண நூல்தான். அகத்தியமும் தொல்காப்பியமும் அவைகளுக்கு முன்னிருந்த இலக்கியங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட இலக்கணங்கள்தாம். தொல்காப்பியர் தனக்கு முன்னிருந்த இலக்கணங்களை யும், இலக்கியங் களையும் ஆராய்ந்தவர். அவைகளை வைத்துக் கொண்டே தனது இலக்கணத்தை எழுதினார். அவர் தமிழ்ப் புலமையோடு வடமொழியறிவும் வாய்த்தவர் என்பதில் ஐயம் இல்லை. வடசொற்களும், வேதத்தைப்பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இதைப் பின்னர் விளக்கிக் கூறுவோம். என்மனார் புலவர்; என்பவாய் மொழிப் புலவர்; மொழிப யாப்பறி புலவர்; என்ப சிறந்திசினோர் என்பவை போன்ற சொற்றொடர்களும், என்ப, மொழிப'' என்பவை போன்ற சொற்களும் தொல்காப்பியச் சூத்திரங்களிலே காணப்படுகின்றன. முன்னைய நூலாசிரியர்கள் இவ்வாறு கூறுவார்கள்'' என்பதே இச்சொற்றொடர்களுக்கும், சொற்களுக்கும் பொருள். தொல்காப்பியர் தனக்கு முன்னிருந்த இலக்கண, இலக்கிய ஆசிரியர்களின் கொள்கைகளையே தனது நூலில் தொகுத்து எழுதியிருக்கிறார் என்பதை இதனால் அறியலாம். ஆகவே, தொல்காப்பியம் முதல் நூல் அல்ல; வழி நூல்தான். இதற்கு முதல் நூல் அகத்தியமாகத்தான் இருக்கவேண்டும். தொல்காப்பிய அமைப்பு ஐவகை இலக்கணம் தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் என்பது பிற்காலத்தினர் கொள்கை. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்பவை அவை. இந்த ஐவகை முறையைப் பின் பற்றியே பிற்காலத்தில் இலக்கணநூல் எழுதப்பட்டன. நன்னூல், நம்பியகப்பொருள், புறப்பொருள்வெண்பாமாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டி யலங்காரம் இவைகள் பிற்காலத்தினரால் ஆரம்பத்தில் படிக்கப்படும் ஐவகை இலக்கணங்கள். நன்னூலில் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமுமே நவிலப்படுகின்றன. நம்பியகப்பொருள் என்பது பொருள் இலக்கணத்தின் ஒரு பகுதியான அகப்பொருளைப் பற்றி மட்டும் கூறுகின்றது. அகப்பொருளை மட்டும் கூறும் இறையனார் அகப்பொருள் என்ற இன்னொரு நூலும் உண்டு. புறப்பொருள் வெண்பாமாலை என்பது பொருள் இலக்கணத்தின் மற்றொரு பகுதியான புறப்பொருளைப் பற்றி மட்டும் கூறுவது. யாப்பருங் கலக்காரிகை என்பது செய்யுள் இலக்கணத்தைப் பற்றி மட்டும் சொல்வது. தண்டியலங்காரம் என்பது அணியிலக்கணத்தைப் பற்றி மட்டும் அறிவிப்பது. யாப்பருங்கலம் என்ற பெயருடன் மற்றொரு செய்யுள் இலக்கண நூலும் உண்டு. இவ்வாறு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிகளைப் பற்றிப் பிற்காலத்தார் தனித்தனி இலக்கணங்களை எழுதி வைத்தனர். இத்தகைய தனித்தனியிலக்கணங்கள் எழுதப்பட்ட பிறகுதான் தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் அவை எழுத்து சொற்பொருள் யாப்பணி என்று கூறும் கொள்கை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். மூவகையிலக்கணம் தொல்காப்பியர் தமிழ் இலக்கணத்தை மூன்று பிரிவாகவே பிரித்தார். அந்த முப்பிரிவைக் கொண்டதே தொல்காப்பியம். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்பவை தான் அம் முப்பிரிவுகள். எழுத்துக்களைப் பற்றி இயம்புவது எழுத்திலக்கணம். அந்த எழுத்துக்களால் ஆகிய சொற்களைப் பற்றிக் கூறுவது சொல்லி லக்கணம். அந்தச் சொற்களில் அடங்கியுள்ள பொருள்களைப் பற்றிக் கூறுவது பொருள் இலக்கணம். பொருள் இலக்கணம் என்பதிலே செய்யுள் இலக்கணமும், அணி யிலக்கணமும் அடங்கியிருக்கின்றன. பொருளும் அணியும் அடங்கியிருப்பதே செய்யுள். எந்தப் பாடலை எடுத்துக் கொண் டாலும் அதில் அடங்கியிருக்கும் பொருள், அகப்பொருள் தழுவியதாக இருக்கும். அல்லது, புறப்பொருள் தழுவியதாக இருக்கும். அதில் அணியும் அமைந்திருக்கும். அணி-அழகு. அணியும் பொருளும் அமைந்ததே பாட்டு. அணியும் பொருளும் இல்லாவிட்டால் அது பாடலாகாது. ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிப் புகல்வதற்குத்தான் பாட்டு எழுதப்படும். அந்தப் பொருள் அகப்பொருளாகவோ, புறப்பொருளாகவோ தான் இருக்கும். அகப்பொருள் தழுவிய காதற்பாடல் களையும் புறப்பொருள் தழுவிய அரசியல், வாணிகம், அறிவுரை போன்ற செய்திகளைப் பற்றியுமே முன்னோர்கள் செய்யுட்களையும் நூல்களையும் செய்து வந்தனர். இந்தப் பாடல்களுடன், ஆடையும் இழையும் ஒன்றாக அமைந் திருப்பதுபோல் அணியும் பொருந்தியிருக்கும். ஆகையால் தான் யாப்பையும், அணியையும், பொருளையும், ஒன்றாகக் கருதியே அதற்குப் பொருள் இலக்கணம் என்று பெயர் வைத்தார் தொல்காப்பியர். தொல்காப்பியத்திலே எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பகுதி உண்டு. பிற்காலத்திலே தோன்றிய இலக்கண விளக்கம் என்னும் நூல் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகளையுடையதே இலக்கண விளக்கம் இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்று கூறுவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் ஒன்பது இயல்கள் உண்டு. இவை எழுத்திலக்கணத்தை ஒன்பது வகையாகப் பிரித்துக் கூறுகின்றன. சொல்லதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. இந்த ஒன்பது இயல்களும் சொல்லிலக்கணத்தை ஒன்பது வகையாகப் பிரித்துச் சொல்லுகின்றன. பொருளதி காரத்திலும் ஒன்பது இயல்கள் உண்டு. பொருளைப் பற்றி கூறுவதற்கான இலக்கணத்தை இந்த ஒன்பது இயல்களும் உரைக்கின்றன. ஆகவே தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்கள் உண்டு. தவறான கொள்கைகள் பண்டைத்தமிழர் நாகரிகம் பற்றி இன்று பலர் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். பண்டைத்தமிழர் நாகரிகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முயற்சியிலே இன்று இளைஞர் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். பண்டைத் தமிழர் பண்பாட்டைப் பற்றிக் கூறுவோர்க்குள் கருத்து வேற்றுமை கைகள் காணப்படுகின்றன. இக்கருத்து வேற்றுமையுடையவர்களை இருவகை யினராகப் பிரிக்கலாம். பண்டைத் தமிழர்க்குத் தனி நாகரிகம் இல்லை. அவர் களைத் திருத்தி நாகரிகமுடைய மக்களாக வாழச் செய்தவர்கள் வடக்கிலிருந்து தெற்கே வந்த ஆரிய முனிவர்களும், அறிஞர்களுமே. என்றுரைப்பர் ஒரு சிலர் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சியை எழுதிய பெரும்புலவர் மு. ராகவய்யங்கார் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டி ருக்கின்றார். உலகிலே தமிழர் நாகரிகமே மிகப் பழமையானது. தலை சிறந்தது நாம் இக்காலத்தில் என்னென்ன வேண்டும் என்று நினைக்கின்றோமோ இவைகள் எல்லாம் பண்டைத் தமிழர் நாகரிகத்திலே படிந்து கிடந்தன. பழந்தமிழர்கள் சாதி வேற்றுமை பாராட்டாதவர்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். மூடப் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள். ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையில்லா தவர்கள். ஆணுக்குப் பெண் அடிமையென்ற கொள்கை அவர்களிடம் இருந்த தில்லை. ஆரியர்கள், இந்தியாவுக்கு வந்த பின்னர்தான் தமிழர் நாகரிகம் சிதைந்தது. அவர்கள் தமிழகத்தில் குடி புகுந்த பின்னர்தான் தமிழர் நாகரிகமே தலைகீழாகப் புரண்டுவிட்டது. பல தெய்வ வணக்கம், விக்கிரக வணக்கம், மூடநம்பிக்கைகள் மூட நம்பிக்கையை நிலைநாட்டும் சடங்குககள் எல்லாம் ஆரியர்களால் நுழைக்கப்பட்டவை. என்று இவ்வாறு சொல்லுகின்றனர், எழுதுகின்றனர் மற்றொரு பிரிவினர். இந்த இரு பிரிவினரும் எடுத்துக் கூறுகின்றனவைகளிலே உண்மை எவை? பொய்மை எவை? இவைகளைக் கண்டறிய வேண்டும். தொல்காப்பிய காலத்திலும், அதற்கு முன்னும் தமிழர் களின் வாழ்வு எவ்வாறு தழைத்திருந்தது? அவர்களிடையிலே படிந்திருந்த பழக்க வழக்கங்கள் யாவை? அவர்களுடைய அரசியல் வாழ்வும், சமுதாய வாழ்வும் எத்தகைய நிலையி லிருந்தன? இந்த உண்மைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும். தமிழர் நாகரிகத்தைப் பற்றி-திராவிடர் நாகரிகத்தைப் பற்றி-ஆரியர் நாகரிகத்தைப் பற்றி இன்று தலைவிரித்தாடும் ஆராய்ச்சிகளின் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். இவை களை அறிந்து கொள்ளுவதன் மூலம் இன்று தமிழரிடையிலே வளர்ந்து வரும் இன-மொழி-கலை வெறுப்புணர்ச்சிகள், வீழ்ந்து அன்பும் நண்பும் கூட்டுறவும் வளர வழியுண்டாகும். இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதற்குத் தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதியான பொருளதிகாரமே பெரிதும் துணை செய்வதாகும். ஆகையால், எத்தகைய விருப்பு வெறுப்பும் இன்றி அதனை ஆராய்வது தமிழர் கடமையாகும். மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் மக்கள் வாழ்வு அகவாழ்வு, புறவாழ்வு என இருவகைப்படும். இவ்வாறு இரண்டாகப் பகுத்துரைப்பதே தமிழ்நூல் முறை. அகவாழ்வைப் பற்றிக் கூறுவதே அகத்திணை அல்லது அகப்பொருள்; புறவாழ்வைப்பற்றி புகழ்வதே புறத்திணை அல்லது புறப்பொருள். ஆணும் பெண்ணும் அன்போடு ஒன்றுபட்டுக் கூடி வாழும் காதல் வாழ்வே அகவாழ்வாகும். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் ஏற்படும் இன்பத்தை எவராலும் வெளிப்படையாக எடுத்துரைக்க முடியாது. அது அவர்கள் உள்ளத்தால் உணரும் ஒப்பற்ற இன்பமாகும். இவ்வாறு அகத்திலே நிகழும் இன்பத்தையே அகத்திணை என்றனர். திணை-ஒழுக்கம் அகத்திலே நிகழும் ஒழுக்கம் அகத்திணை. அகம்-மனம். அரசாட்சி, போராட்டம், விவசாயம், வாணிகம், மற்ற தொழில்கள் எல்லாம் புறத்திலே நிகழ்வன. இவைகளைப் பற்றியும், இவைகள் எப்படி நடைபெற வேண்டும் என்ற வழி துறைகளைப் பற்றியும் வாயினாற் சொல்ல முடியும். ஒவ்வொரு வரும் இவற்றைப் பற்றி புறத்தார் உணரும்படி உரைக்க முடியும். இவ்வாறு எல்லோரும் அறியும்படி சொல்லவும் செய்யவும் கூடிய செய்திகள் எல்லாம் புறப்பொருளாகும். புறத்திலே நிகழும் ஒழுக்கம் புறத்திணை. தமிழிலே உள்ள நூல்கள் எல்லாம் இருவகைப்படும். அவை அகப்பொருள் நூல், புறப்பொருள் நூல் என்பன. உலகிலே உள்ள எல்லா இலக்கியங்களும் இந்த இரண்டு வகையுள் அடங்கிவிடும். காதல் வாழ்வைப்பற்றிக் கூறும் நூல்கள் அகப்பொருள் நூல்கள். அரசியல் நூல், பொருளாதார நூல், நிலநூல், வரலாற்று நூல் விஞ்ஞான நூல், கணக்கு நூல், சிற்ப நூல், மருத்துவ நூல் போன்ற பல வகைக் கலைகளும் புறப் பொருள் நூல்கள். மக்கள் வாழ்க்கையும் அகத்திணை வாழ்வு, புறத்திணை வாழ்வு என்ற இந்த இரண்டினுள் அடங்கிவிடும். தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணை இலக் கணத்தையும், புறத்திணை இலக்கணத்தையுமே விரிந்துரைக் கின்றது. அகவாழ்வு கைக்கிளைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பெருந்திணை என்று அகத்திணை ஏழு வகைப்படும். கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொ.பொ.அக.1) கைக்கிளைத்திணை முதல் பெருந்திணை இறுதியாக உள்ள முன்னே சொல்லப்பட்ட ஏழு திணைகளையே அகத்திணையென்று சொல்லுவார்கள் தொல்காப்பியருக்கு முன்னிருந்த தமிழர்கள் தங்கள் அகவாழ்வு வகுத்துக் கொண்ட முறையிதுவாகும். இந்த ஏழுவகைத் திணையில் தமிழரின் காதல் வாழ்வு-குடும்ப வாழ்வு அடங்கும். கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம். அதாவது ஆண்-பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும் காதல் உணர்வு தோன்றுவது. காதல் உணர்ச்சி கொண்ட ஒருவன் பருவ மடையாத இளம்பெண் ஒருத்தியிடம் காதல் கொள்ளுவது. இதுவே கைக்கிளைத் திணையாகும். இதனால் பருவமடையாத பெண்களை மணந்து கொள்ளும் வழக்கமும் பண்டைத் தமிழகத்தில் இருந்ததென்று கொள்ளலாம். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். பிறர் பழிக்கும் வகையிலே கணவனும் மனைவியும் காம வெறிகொண்டு வாழ்தல். இந்தக் கைக்கிளை, பெருந்திணைகளைப் பற்றிச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. ஆதலால் இந்த இரு திணைகளும் தொல் காப்பிய காலத் தமிழர்களால் அவ்வளவாகப் பாராட்டப்பட வில்லையென்பதை அறியலாம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற ஒழுக்கங்கள் அந்தந்த நிலங்களிலே நடைபெறுவன. இவைகளைப் போலக் கைக்கிளைத்திணைக்கும், பெருந்திணைக்கும் தனித்தனி நிலங்கள் குறிக்கப்படவில்லை. இதுவும் குறிப்பிடத்தக்கதாகும். குறிஞ்சித்திணை: குறிஞ்சி நிலத்திலே நிகழும் ஒழுக்கத்தைப் பற்றி உரைப்பது. மக்கள் வாழும் மலையும், மலைச்சாரலும் குறிஞ்சி நிலம். சேயோன் என்பவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம். சேயோனை முருகன் என்பர். சேயோன் மேயாமைவரை உலகமும் (தொ.பொ.அக.5) என்பது தொல்காப்பியம். கண்ணுக்கினியகாட்சிகள் நிறைந்த மலையிலோ, மலைச் சாரலிலோதான் முதலில் காதலன் காதலிகளின் சந்திப்பு ஏற்படும். இருவரும் ஒருமனப்பட்டுக் கணவன் மனைவிகளாய் இணைந்து வாழ்வார்கள். இவர்களுடைய சந்திப்பைப் பற்றியும், இதற்கான காரணங்களைப் பற்றியும் எடுத்துரைப்பதே குறிஞ்சித்திணை. குறிஞ்சியொழுக்கம், தம்பதிகளாதல். பாலைத்திணை: பாலை நிலத்திலே நிகழும் ஒழுக்கத்தைப் பற்றி உரைப்பது பாலைத்திணை. நீரற்று வறண்டு போன நிலப்பகுதியே பாலைநிலம், தொல்காப்பியர் பாலைக்குத் தனி நிலம், குறிக்கவில்லை. முல்லையிலும் பாலை தோன்றலாம்; குறிஞ்சியிலும் பாலை தோன்றலாம்; மருதத்திலும் பாலை தோன்றலாம்; நெய்தலிலும் பாலை தோன்றலாம். வானம் பொய்த்து வறண்டுபோன எந்த நிலைத்திலும் பாலை தோன்றும். பாலைக்குத் தனித் தெய்வமும் கூறப்படவில்லை. எந்த நிலத்தில் பாலை தோன்றுகிறதோ அந்த நிலத்துத் தெய்வமே பாலைக்கும் தெய்வமாகும். காதலன் தன் காதலியை விட்டுப் பிரிந்து செல்வதைப் பற்றிச் சொல்லுவதும், பிரிவதற்கான காரணங்களைச் சொல்லுவதும் பாலைத்திணை. பாலைத்திணை யின் ஒழுக்கம் பிரிவாகும். முல்லைத்திணை: முல்லை நிலத்திலே நிகழும் ஒழுக்கம் முல்லைத்திணை. காடும், காடுசார்ந்த நிலமும் முல்லை நிலம். முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன். மாயோனைத் திருமால் என்பர். மாயோன் மேய காடுறை உலகமும் (தொ.பொ.அக.5) என்பது தொல்காப்பியம். பிரிந்துபோன காதலன் திரும்பும்வரையிலும் காதலி தன் கற்பின் வலிமையால் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டி ருப்பது முல்லையொழுக்கம். அவள் ஆறுதலோடு இருப்பதற்கான காரணங்களைக் கூறுவதும் முல்லைத் திணையே. முல்லைத் திணையின் ஒழுக்கத்தை இருத்தல் என்று சுருக்கமாகக் கூறுவர். மருதத்திணை: மருத நிலத்திலே நடைபெறும் ஒழுக்கம் மருதத்திணையாகும். நீர்வளமும், செல்வங்கொழிக்கும் நில வளமும் அமைந்த நிலப்பகுதிகளும், ஊர்களும் மருதநிலமாகும். மருத நிலத்தின் தெய்வம் வேந்தன். மருதநிலத்தின் தெய்வம் வேந்தன் என்றதனால் நல்ல அரசும், நாகரிகமும் அமைந்த இடமே மருதநிலம் என்பதைக் காணலாம். வேந்தனை இந்திரன் என்றனர் பிற்காலத்தவர். வேந்தன்மேய தீம்புனல் உலகமும் (தொல்.பொ.அக.5) தொல்காப்பியம். காதலன் காதலிகளிடையே தோன்றும் ஊடல்; ஊடல் உண்டாவதற்கான காரணங்கள்; பாணன், கூத்தன், பாங்கன், தோழி, விறலி, பார்ப்பான் முதலியோர் தூதர்களாயிருந்து இவர்கள் ஊடலை நீக்கிக் கூடி வாழச் செய்யும் நிகழ்ச்சிகள் ஆகிய இவைகளைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூறுவது மருதத்திணை. மருதத்திணையின் ஒழுக்கம் ஊடல் ஆகும். நெய்தல்திணை: நெய்தல் நிலத்திலே நடைபெறும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது நெய்தல்திணை. கடற்கரையும் கடற்கரையைச் சேர்ந்த இடங்களும் நெய்தல்நிலம். நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன். வருணன்மேய பெருமணல் உலகமும் (தொ.பொ.அக.5) என்பது தொல்காப்பியம். காதலன் பிரிவை எண்ணிக் காதலி மனம் வருந்துதலும், தன் உள்ளத் துயரத்தை வாய்விட்டு உரைப்பதும் நெய்தல் ஒழுக்கம். இதற்கான காரணங் களைக் கூறுவதும் நெய்தல் திணையே. இரங்கல் என்னும் செய்தியே நெய்தல் ஒழுக்கம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் இந்த ஐந்திணை நிகழ்ச்சிகளைப் பற்றியே தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது. அகப் பொருளைப் பற்றிக் கூறும் நூல்கள் அனைத்தும் இந்த ஐந்திணை நிகழ்ச்சி களையே அழகுபட எடுத்துரைக்கின்றன. ஒத்த பருவமும், ஒத்த உருவமும், ஒத்த குணமும், ஒத்த அறிவும், ஒத்த நிலைமையும் உடைய ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே காதல் மணமாகும். இவ்விருவருள் பெண்ணைக் காட்டிலும் ஆணின் தரம் உயர்ந்த தாகவும் இருக்கலாம். இத்தகைய மனமொத்த இரு தம்பதிகளுக்குள் நடைபெறும் காதல் நிகழ்ச்சிகளைப் பற்றியே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் கூறுகின்றன. பண்டைத் தமிழர் திருமணம், களவு, கற்பு என்று இருவகைப்படும். இதன் விரிவை `மணவாழ்க்கை என்ற பகுதியிலே விரிவாகக் காணலாம். இந்தக் களவு, கற்பு மணத் தம்பதிகளிடமே மேலே கூறிய ஐவகை ஒழுக்கமும் நடைபெறும். கைக்கிளையும், பெருந்திணையும் சிறந்த ஒழுக்கமல்ல ஆயினும் அவ் வொழுக்கங்களும் தமிழ் மக்களிடையிலே நடை பெற்று வந்தன. அவைகளும் வெளியில் சொல்ல முடியாத அகவொழுக்கங்களாகவே கருதப்பட்டன. ஆகை யால் அவை களையும் அகத்திணையுடன் சேர்த்தனர் முன்னோர். அதைப் பின் பற்றியே தொல்காப்பியரும் கூறினார். புறவாழ்வு அகத்திணையை ஏழாக வகுத்தது போலவே புறத்திணை யையும் ஏழாக வகுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவே ஏழுவகைப் புறத்திணை. இந்தப் புறத்திணைகளிலே தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் நடைபெற்ற போர்முறை களைக் காணலாம்; போரிலே தமிழர் காட்டிய வீரச் செயல் களை அறியலாம்: தமிழரின் அரசியல், கொடை, புகழ் ஆகியவை களையும் உணரலாம். உலக நிலையாமையும், அறிவுரைகளும் இவற்றுள் காணப் படுகின்றன. வெட்சித்திணை: போர்புரியக் கருதிய வேந்தன் எதிரியின் பசுமந்தையைக் கவர்வதும், கவர்ந்த பசு மந்தையை எதிரி மீட்டுக்கொள்வதும் வெட்சித்திணை. வஞ்சித்திணை: ஒரு மன்னன் தன் பகைவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்குப் படையெடுத்துச் செல்வதும், பகை வேந்தன் அவனை எதிர்ப்பதும் வஞ்சித்திணை. உழிஞை: படையெடுத்துச் சென்ற வேந்தன் பகைவனுடைய கோட்டை மதிலை வளைத்துக் கொள்ளுவதும் உள்ளிருக்கும் வேந்தன் அம்மதிலைக் கைவிடாமல் காப்பாற்றுவதும் உழிஞைத்திணை. தும்பைத்திணை: ஒரு வேந்தன், தனது நாட்டின்மீது படையெடுத்து வந்த வேந்தனை எதிர்த்துப் போர் செய்து அவனுடைய வலிமையை அழிப்பது தும்பைத்திணை. வாகைத்திணை: பகைவரை வெல்லுதலும், ஒவ்வொரு வரும் தத்தம் செயல்களை வெற்றிபெறச் செய்தலும் வாகைத் திணை. காஞ்சித்திணை: உலகம், இளமை, செல்வம் இவைகளின் நிலையாமையைப் பற்றியும், மற்றும்பல அறிவுரைகளையும் கூறுவது காஞ்சித்திணை. பாடாண்திணை: மக்களைப் பற்றியோ. கடவுளைப் பற்றியோ, அவர்களுடைய ஒழுக்கம், வீரம், புகழ் கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணையாகும். இவ்வாறு புறத்திணையை ஏழு பகுதியாகவும், அகத் திணையை மேலே கூறியபடி ஏழு பகுதிகளாகவும் வகுத்துக் கூறுகிறது தொல்காப்பியம். மக்களுடைய வாழ்க்கைச் செய்திகள் அனைத்தும் இவ்விரு திணைகளில் அடங்கிவிட்டது. மண வாழ்க்கை களவும் கற்பும் பண்டைத் தமிழர் திருமண முறை களவு, கற்பு என்று இருவகைப்படும். இந்த இருவகை மணங்களும் எவ்வாறு நடைபெறும்? இந்த மணவாழ்க்கையில் ஈடுபட்ட காதலனும் காதலியும் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? அவர்களுடைய வாழ்க்கைக்குத் துணை செய்கின்றவர் எவரெவர்? இச்செய்தி களைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் விரிவாகக் காணலாம். இவைகளைக் களவியலும் கற்பியலும் எடுத்துரைக் கின்றன. களவு மண வாழ்க்கையைப் பற்றிக் கூறுவது களவியல், கற்பு மண வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுவது கற்பியல். களவு மணமாவது, பெற்றார் உற்றார் உறவினர் அறியாமல், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மறைவிலே மணமக்களாக வாழ்க்கை நடத்துவது. ஒத்த தன்மையுள்ள ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது அவர்களுக்குள் காதல் பிறக்கும். இவர்கள் இருவரும் ஒரே நிலத்தில் வாழக் கூடியவர்களாகவும் இருக்கலாம்.: வேறு வேறு நிலத்து மக்களாகவும் இருக்கலாம். முன் வினைப்ப யனாகவே இருவரும் சந்திப்பார்கள். அவர்கள் இருவரும் மனமொத்துக் காதலித்து இன்புறுவர். இவர்கள் அடிக்கடி இரவிலும் பகலிலும் குறித்த இடத்திலே சந்திப்பார்கள். இப்படி ஊரார் அறியாமல்-உறவினருக்குத் தெரியாமல் நடத்தும் வாழ்வே களவு மணம். இந்தக் களவுச் செய்தி பெண்ணின் பெற்றோர்க்குத் தெரிந்து விட்டால், அவர்கள் பெண்ணை வீட்டை விட்டு வெளியிலே போகவொட்டாமல் அடக்கிவிடுவார்கள். அப்பொழுது அவளுடன் கூடி மகிழ்ந்த ஆடவன் தன் உறவினரைக் கொண்டு பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்கச் செய்வான். அவர்களும் சம்மதிப்பார்கள். ஏற்கனவே மணமக்களாக மறைந்து வாழ்ந்த அந்த இருவருக்கும் சில சடங்குகளுடன் திருமணம் நடைபெறும். பின்னர் வெளிப்படையாக இருவரும் இல்லறம் நடத்துவார்கள். இதற்கே கற்பு மணம் என்று பெயர். இது களவு மணம் ஊரார்க்குத் தெரிவதற்கு முன்பே நடைபெறும் கற்பு மணமாகும். ஒரு பெண்ணும் ஆணும் நடத்தும் களவு மண வாழ்க்கை ஊராருக்குத் தெரிந்துவிட்டாலே போதும்; அதன் பிறகு அவர்கள் வெளிப்படையாக இல்லறத்திலே இணைந்து வாழ்வார்கள். இதுவும் கற்பு மணமே தான். காதலன், தான் காதலித்து வாழும் பெண்ணை ஒருவரும் அறியாமல் தன்னூருக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவான். தன்னூரிலே வெளிப்படையாக, யாவரும் அறிய இல்லறம் நடத்துவான். தன்னூரை அடைந்தவன் சில சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்வதும் உண்டு. பெண்ணின் பெற்றோர் களும் இத்திருமணச் சடங்கிலே கலந்து கொள்வதும் உண்டு. இம்முறையிலே காதலன் காதலிகளின் களவு வெளிப்பட்டு இருவரும் இல்லறம் நடத்துவதும் கற்பு மணமேதான். ஆகவே, களவு என்பது ஒரு காதலனும் காதலியும் மறைவாக மணமக்களாகி மகிழ்தல்; கற்பு என்பது எல்லோரும் அறிய வெளிப்படையாக இல்லறம் நடத்துதல். களவு நிகழ்ந்த பிறகுதான் கற்பு நிகழும். களவுமணம் நடக்காமல் கற்பு மணம் நடப்பதில்லை. இதனால் தமிழரின் மண வாழ்வு காதல் மணவாழ்வே என்பதைக் காணலாம். காதலற்ற மணவாழ்வு பண்டைத் தமிழரிடம் நடைபெற்றதில்லை. வெளிப்படவரைதல், படாமை வரைதல் என்று ஆயிரண்டென்ப வரைதல் ஆறே (தொ.பொ.கள.50) மணந்து கொள்ளும் முறையை, களவுப் புணர்ச்சி வெளிப் பட்டபின் மணந்து கொள்ளுதல், களவுப் புணர்ச்சி வெளிப்படு வதற்கு முன்பே மணந்து கொள்ளுதல் ஆகிய இரண்டு வகையென்பர். களவு மணம் நடைபெறாமல் கற்பு மணம் நடைபெறு வதில்லை என்பதற்கு இச்சூத்திரமே ஆதாரம். திருமணச் சடங்கு கணவன்-மனைவி, காதலன்-காதலி, அகத்துக்காரர்-அகமுடையாள், என்ற கட்டுத் திட்டங்களும் முறைகளும் காட்டுமிராண்டி மக்களிடம் இருந்ததில்லை. அவர்கள் வரைதுரையின்றி வாழ்ந்தனர். தாய்-மகன், அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி, மகள்-தந்தை என்ற முறைகளைக் கூட அவர்கள் எண்ணியதில்லை. மணம் என்றாலே இன்னதென்று அவர்கள் அறியமாட்டார்கள். ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து என்றும் இணைபிரியாமல் வாழும் வழக்கங்கூட அவர்களிடம் இல்லை. ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, அவர் களுக்குச் சிற்றின்ப வெறி ஏற்பட்ட போது எதிர்ப்பட்டவர்கள் எவராயினும் அவர்களுடன் கலந்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்ளுவார்கள். இதிலே அவர்கள் எந்த உறவு முறையையும் பாராட்டியதேயில்லை. மக்களிடம் நாகரிகம் பரவிய பிறகுதான், ஒரு ஆணும் பெண்ணும் பிரியாத நட்புடன் இணைந்து வாழ்வது என்ற வழக்கம் ஏற்பட்டது. காட்டுமிராண்டிப் பரு வத்தைக் கடந்த பிறகுதான் கட்டுத்திட்டமுள்ள ஆண் பெண் வாழ்க்கை தோன்றத் தொடங்கியது. இதுவே மக்கள் நாகரிக வாழ்க்கையின் ஆரம்பப் படியாகும். பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் காட்டுமிராண்டிப் பருவத்தை விட்டுக் கரையேறிவிட்டார்கள். நல்ல நாகரிகத்தை அடைந்துவிட்டனர். ஆணும் பெண்ணும் அன்புடன் இணைந்து ஒன்றுபட்டு வாழும் முறை தமிழர்களிடம் தோன்றிவிட்டது. காதலுற்றுக் கலந்து வாழும் ஆண் பெண்கள், என்றும் இணை பிரியாமல் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடும் அவர்களுக்குள் தோன்றிவிட்டது. இவ்வாறு இணைந்து வாழ்வதையே மண வாழ்க்கையாக அவர்கள் எண்ணினர். தொல்காப்பியருக்கு முன்னே, மிகப் பழங்காலத்திலே, தமிழரிடையிலே திருமணம் சடங்கு எதுவும் நடந்ததில்லை. காதலன் காதலிகளின் களவு மணத்தைப்பற்றி, அவர்கள் பெற்றோர்கள் அறிந்த பின் இருவரும் கூடி வாழ் வதற்கு இணங்கு வார்கள்; அவர்களுடைய காதல் வாழ்வுக்குக் குறுக்கே நிற்க மாட்டார்கள். முட்டுக்கட்டை போடமாட்டார்கள். பெண்ணின் பெற்றோர்-காதலி யின் பெற்றோர்-இதற்குத் தடையாக நின்றால், காதலன் தன் காதலியை அழைத்துக் கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் ஊரை விட்டுப் போய்விடுவான். இச்செய்தியை ஊரார் அறிந்த பின் இதுவே கற்பு மணம் எனப்படும். இதுதான் பண்டைத் தமிழரிடம் குடி கொண்டிருந்த கற்பு மணமுறை. இந்த முறையினால் பிற்காலத்திலே சில தவறுகள் நேர்ந்தன. மண மக்களாய் வாழ்ந்த மக்களுக்குள் மன வேற்றுமை ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தனர். மற்றொரு பெண் மீது காமவெறி கொண்ட ஆடவன் தன் மனைவியை அவள் என் காதலி அல்லள் என்று சொல்லிப் பிரியவும் முன் வந்தான். மணந்த மங்கையின்மேல் ஏதோ காரணத்தால் வெறுப்பு கொண்ட ஆடவன் அவளை நான் மணக்கவே யில்லை என்று பொய் புகலவும் தொடங்கினான். காமவெறி கொண்ட ஆண் மகன் உன்னையே நான் மணப்பேன்; வேறு ஒருத்தியை என் கனவிலும் கருதமாட்டேன் என்று பொய்யுரைத்துப் பேதைப் பெண்களை ஏமாற்றினான். காதல் மண வாழ்க்கையிலே இத்தகைய பொய்யும் தவறுகளும் தோன்றத் தொடங்கின. இத்தவறுகளால் சமுதாய வாழ்விலே சீர் குலைவு ஏற்பட்டது. இதை ஒழித்து, நேர்மையும் ஒழுக்கமும் நிரம்பிய சமுதாய வாழ்வை நிலை நாட்டுவதற்குச் சமுதாயத் தலைவர்கள் முன் வந்தனர். பலரைச் சாட்சியாக வைத்துத் திருமணத்தை நடத்திவிட்டால், பிறகு அத்தம்பதிகள் பொய் கூறவோ தவறு செய்யவோ மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தனர். இதற்காகவே கற்பு மணத்திற்குச் சில சடங்குகளை உண்டாக்கினர். இந்தச் சடங்குகளை ஏற்படுத்தி யவர்கள் தமிழர் சமுதாயத் தலைவர்களும், அறிஞர்களுமே தான். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்.பொ.கற். 4) தாமே வரைந்து கொண்ட தம்பதிகளிடம் பொய்யும் தவறுகளும் ஏற்பட்ட பிறகுதான் சமுதாயத் தலைவர்கள் கற்பு மணத்திலே சில சடங்குகளை ஏற்படுத்தினர். இச்சூத்திரம் திருமணத்திலே சடங்குகள் செய்யும் வழக்கம் ஏற்பட்ட காரணத்தை எடுத்துக் காட்டுகிறது. ஐயர்-தலைவர்கள். தலைவர்களால் உண்டாக்கப்பட்ட இத்தகைய சடங்கு களுடன் நடைபெறு வதுதான் கற்புத் திருமணம் என்று கூறுகிறார் தொல்காப்பியனார். f‰bgd¥gLtJ fuzbkhL òzu¡ bfhs‰FÇ kuã‹ »Ht‹, »H¤âia¡ bfhil¡FÇ kuãndh® bfhL¥g¡ bfhŸtJnt (bjh.bgh.f‰ã.-1) கற்புமணம் என்று சொல்லப்படுவது, திருமணச் சடங்குடன், பெண்ணைக் கொள்ளுவதற்கேற்ற தகுதியுடைய தலைவனுக்கு, தலைவியைக் கொடுப்பதற் குரிமையுடைய பெற்றோர் கொடுப்ப, தலைவன் மணந்து கொள்வதாகும். கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான (தொ.பொ.கற். 2) தலைவியின் பெற்றோர்க்குத் தெரியாமல், தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துக் கொண்டு போய்விட்ட போது, பெண்ணைக் கொடுக்கும் பெற்றோர்கள் இல்லாமலே திருமணச் சடங்கு நடைபெறுவதும் உண்டு. இத்தகைய திருமணச் சடங்குகள் செய்யும் உரிமை தமிழ்க் குடியிலே பிறந்த அனைவர்க்கும் உண்டு. மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே (தொ.பொ.கற். 3) மேலோராகிய அந்தணர் அரசர் வணிகர்களுக்கு என்று ஏற்பட்ட இந்தச் சடங்குகள், அவர்களுக்குக் கீழ்ப்பட்ட மற்ற தமிழர்களுக்கும் உரியன என்று ஏற்பட்ட காலமும் உண்டு. முதலில் நாகரிகமுடைய உயர்ந்த மக்களிடையேதான் திருமணத்தைப் பற்றிய பொய்யும் புரட்டுக்களும் ஏற்பட்டன. அவர்களுக்காவே தலைவர்களால் சடங்குகள் ஏற்படுத்தப் பட்டன: பிற்காலத்தில்தான் அவ்விதச் சடங்குகள் செய்யும் வழக்கம் ஏனைய தமிழர்களிடையிலும் ஏற்பட்டது என்ற உண்மையை இச் சூத்திரம் எடுத்துக்காட்டுகிறது. திருமணத்திலே சில சடங்குகள் செய்யப்படவேண்டும் என்பதே தொல் காப்பியர் கருத்து. தொல்காப்பியத் தமிழர்கள் சில திருமணச் சடங்குகளைச் செய்து வந்தார்கள். மேலே காட்டிய மூன்று சூத்திரங்களும் இவ்வுண்மையை விளக்குகின்றன. தமிழர் சடங்கு கற்பு மணத்திற்கென்று உண்டாக்கப்பட்ட சடங்குகள் எவை? அவை இன்றைய திருமணங்களில் நடைபெறும் சடங்குகள் போன்றவைகளா? அல்லது வேறுவகையா? இன்றைய திருமணச் சடங்குகள் வேத முறைப்படி நடை பெறுவன என்பர். தீயின் முன் வடமொழி மந்திரங்களுடன் நடைபெறுவன இன்றைய சடங்குகள். பண்டைத் தமிழர் திருமணச் சடங்குகள் வேதத்தைப் பின்பற்றியன அல்ல. தீ வளர்த்து அதன் முன்னர்த் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தததில்லை. திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பதற்கென்று குருமார் களோ, புரோகிதர்களோ இருந்தார்கள் என்று எண்ணவும் இடமில்லை. தமிழர் களுடைய சடங்குகளிலே அக்கினிக்கு வேலையில்லை. தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றிய சங்க இலக்கியங்களில் கூட அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் சிறுபான்மையாகத்தான் காணப்படுகின்றன. தமிழர்களிடம் நடைபெறும் சடங்குகள் எல்லாம் பெரும் பாலும் பெண்களால் நடத்தப்படுவனவே. இன்றும் பருவம் வந்த பெண்களுக்கு நடத்தப்படும் சடங்கு, கருவுற்ற மகளிர்க்கு நடத்தப்படும் வளைகாப்பு போன்றவை பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. இவைகளில் ஆண்கள் தொடர்பில்லை. இச்சடங்குகளில் புரோகிதமும் இல்லை. இவைகளைப் போலவேதான் திருமணச் சடங்குகளும் நடைபெற்றன. தமிழர் திருமணச் சடங்கு முறைகளைப் பற்றி அகநானூற்றில் இரண்டு பாடல்களில் கூறப்பட்டுள்ளன. 86வது பாடலிலும், 136 வது பாடலிலும் இவைகளைக் காணலாம். நல்ல நாளிலே குளிர்ச்சியான திருமணப்பந்தலிலே புதுமணல் பரப்பப்பட்டது. பந்தலிலே பூமாலைகள் புனைந்து தொங்கவிடப்பட்டன. இரவு கழிந்து காலை நேரம் எழுந்தது. மணப் பந்தலிலே வரிசை வரிசையாக விளக்குகள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. வயது நிரம்பிய பெண்கள் தங்கள் தலைகளிலே நீர்க் குடங்களைச் சுமந்து நின்றனர். பிள்ளை பெற்ற பெண்கள் நால்வர் அந்த நீர்க்குடங்களை வாங்கி மணமகளை நீராட்டினர். நீராட்டும்போது இவள் கற்பு நெறியிலே தவறாமல் வாழ்க! தன் கணவனுடைய அன்புக்குரிய மனைவியாகுக என்று வாழ்ந்து கூறினர். பின்னர், பெற்றோர் நீ சிறந்த இல்லக் கிழத்தியாகுக என வாழ்த்தி, அவளை மணமகன் கையிலே மகிழ்ச்சியுடன் கொடுத்தனர். திருமண வீட்டிலே பெரிய சோற்றுக் குவியல் இருந்தது. திருமுணம் முடிந்தபின் அனைவரும் அச்சோற்றுக் குவியலை உண்டு உள்ளம் களித்தனர். இது அகநானூற்றின் 86 -வது பாடலில் காணப்படும் செய்தி. இத்தகைய திருமணச் சடங்கின் போது வாத்தியங்கள் முழங்கின. தெய்வத்தை வணங்கிப் பெண்ணுக்கு மலர் மாலையும், நல்லாடையும்,. நகைகளும் அணிவித்து அழகு செய்தனர், என்ற செய்தி 136 வது பாடலில் காணப்படுகின்றது. தொல்காப்பிய காலத் தமிழர் திருமண முறை ஒரு தனி முறையாகும். இன்றுள்ள சடங்கு முறையும், புரோகித முறையும் பண்டைத் தமிழர் கொண்டவையல்ல. இந்த உண்மையைத் தொல்காப்பியம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. பொருந்தா மணம் பண்டைத் தமிழர்களிடையிலே, சில பொருத்தமற்ற திருமணங்களும், ஆண் பெண் உறவுகளும் இருந்தன. இவை களையே கைக்கிளைத் திணை, பெருந்திணை என்று இரு வகையாகக் கூறுகின்றார் தொல்காப்பியர். காமத்தின் தன்மையறியாத ஒரு சிறுமியிடம் ஒருவன் காதல் கொண்டு வருந்துவான். நல்ல மொழிகள், தீய மொழிகள் என்ற இருவகையான மொழிகளையும் தன்னோடும் அவளோடும் இணைத்துப் பேசுவான். அச்சிறுமியோ அவனுக்கு மறுமொழி சொல்வதற்கு அறியாமல் விழிப்பாள். அவனோ தான் பேசுவதை விடாமல் பேசியே இன்புறுவான். இதற்கே கைக்கிளை ஒழுக்கம் என்று பெயர். கைக்கிளையை ஒரு தலைக்காமம் என்பர் பிற்காலத்தார். காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிருதிறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறான் சொல்லி யின்புறல் புல்லித்தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (தொ.பொ.அக.53) இதனால் தொல்காப்பியர் காலத்திலும், அதற்கு முன்னும் பருவமடையாத இளம்பெண்களை மணந்துகொள்ளும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததென்பதை அறியலாம். பெருந்திணையென்பது பொருந்தாக் காதல். பிறர் கண்டு எள்ளி நகையாடும் வகையிலே ஆண் பெண்களிடம் ஏற்படும் காமவெறியே பெருந்திணை. இந்தப் பெருந்திணையை நான்கு வகையாக வகுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர். 1. ஒருவன் தன்னை விரும்பாத பெண்ணின் மேல் தாங்க முடியாத காதல் கொண்டு மடலேறுதல். கருக்கு மழுங்காத பனை மட்டைகளால் குதிரை உருவத்தில் ஓர் ஊர்தி செய்யப் படும். காமவெறி கொண்ட காளை அதன் மீது ஏறி உட்கார்ந்து கொள்ளுவான். தான் காமுற்ற பெண்ணின் உருவத்தை ஒரு துணியிலே எழுதுவான். அவ்வுருவத்தின் கீழ் அவள் பெயரையும் குறிப்பான். அதைத் தன் கையிலே பிடித்துக் கொள்ளுவான். தான் ஏறியிருக்கும் பனை மட்டை ஊர்தியைப் பிறரால் இழுக்கச் செய்வான். பனை மட்டைகளின் இரு புறங்களிலும் வாள் போல் அமைந்துள்ள கருக்குகள் அவன் உடம்பிலே உரசிப் புண்படுத்தும். அந்தப் புண்களிலிருந்து செந்நீர் கசியாமல், வெண்ணீர் கசிந்தால் ஊரார் ஒன்று கூடி அவன் விரும்பிய பெண்ணை அவனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். இன்றேல் அவன் ஒரு மலைச் சிகரத்திலேறிக் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வான். அவன் உடம்பிலிருந்து வெண்ணீர் கசியாமல் செந்நீர் கசிந்தால் ஊரார் ஒன்று சேர்ந்து அவன் உயிரை வாங்கி விடுவார்கள். மடலேறுதல் என்னும் இப்பகுதி பெருந்திணை. 2. வயதேறிய ஒருத்தியை வாலிபன் கூடி வாழ்வதும், கிழவனைக் குமரி மணந்து வாழ்வதும் பெருந்திணை. 3. தம்மைத்தாம் அடக்கிக் கொள்ள முடியாத காமவெறியுடன் ஆண் பெண்ணை அணைந்து வாழ்வதும் பெருந்திணை. 4. காமவெறி தலைக்கேறி ஆணைப் பெண் பலவந்தப் படுத்துவதும், பெண்ணை ஆண் பலவந்தப்படுத்துவதும் பெருந்திணை. ஏறிய மடல்திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடலொடு, தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. (தொ.பொ.அக. 54) என்ற சூத்திரத்தால் பெருந்திணையின் நால்வகைப் பகுப்பையும் காணலாம். கைக்கிளையென்னும் ஒருதலைக் காமத்தைப் பற்றியோ பெருந்திணை யென்னும் பொருந்தாக் காமத்தைப் பற்றியோ தொல்காப்பியர் ஓரிடத்திலும் பாராட்டிப் பேசவில்லை. இத்தகைய வழக்கங்கள் தமிழ்நாட்டில் தமிழரிடையிலே சிறுபான்மை விரவியிருந்தன என்பதற்கே இவ்விரண்டையும் குறித்துள்ளார். இவற்றைப் பாராட்டிப் பேசும் இலக்கியங்களும் இல்லை. இதனை மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் என்ற பகுதியிலும் காணலாம். ஒத்த ஆணும் பெண்ணும் முதலில் களவிலும், பிறகு கற்பிலும் இணைந்து காதல் வாழ்வு நடத்துவதே தமிழர்களின் மண வாழ்க்கையாகும். கன்னிப் பெண்களைக் காமுறும் கைக்கிளையும், காமவெறி கொண்ட பெருந்திணையும் சிறுபான்மையாகத் தமிழர்களிடம் நிலவியிருந்தன. இந்த மூன்று வகையே தமிழர் மணவாழ்க்கை முறை. இவைகளைத் தொல்காப்பியர் தெளிவாகக் கூறியிருக்கிறார். எண்வகை மணம் வடமொழி நூல்களிலே மணம் எண் வகைப்படும் என்று சொல்லப் படுகின்றன. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமணம்: பெண் கொடுப்பதற்கு ஒத்த கோத்திர முடையவன்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரம்மச்சரிய விரதங்காத்தவன்; இவனுக்குப் பருவமடைந்த பன்னிரண்டு வயதுடைய பெண்ணை, இரண்டாவது பூப்பெய்துவதற்கு முன் அணிகலன்களைப் பூட்டித் தானமாகக் கொடுப்பது. பிரசாபத்திய மணம்: மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் பரிசத்தைப் போலப் பெண் வீட்டார் இரண்டு பங்கு பரிசம் கொடுத்து மணம் செய்விப்பது. ஆரிட மணம்: காளையையும், பசுவையும் பொன் கொம்பும், பொன்குளம்பும் உடையனவாகச் செய்து அவற்றின் இடையிலே பெண்ணுக்கு நகைகள் பூட்டி நிறுத்தித் தக்கான் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பது. தெய்வ மணம்: பெரிய யாகங்களைச் செய்கின்றவர்களில் ஒருவனுக்கு அந்த யாகத்தின் முன்னே பெண்ணைத் தக்கணை யாகக் கொடுப்பது. அசுர மணம்: கொல்லும் கொடுங்காளையைப் பிடித்து அடக்குதல், திரிகின்ற பன்றியை அம்பெய்து கொல்லுதல், வில்லை நாணேற்றுதல் முதலிய வீரச் செயல்களைச் செய்து பெண்ணைக் கொள்ளுவது, சுயம்வர மணமும் இவைகளில் அடங்கும். இராக்கத மணம்: பலவந்தமாகப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் மணம் புரிந்து கொள்ளுவது. பைசாச மணம்: மூத்தவர்களையும், கள்ளுண்டு மயங்கினவர்களையும், தூங்குகின்றவர்களையும் இழிந்தவர் களையும் மணந்து கொள்ளுவது பைசாச மணம். கந்தருவ மணம்: கந்தவர்களிலே ஆண் பெண் இருவர் ஒருவரை ஒருவர் கண்டபோது காதல்கொண்டு இணைவர். அது போல ஒரு ஆணும் பெண்ணும் எதிர்ப்படும்போது காதல் கொண்டு மணமக்களாவது. இந்த எட்டு வகை மணங்களிலே தமிழரின் களவு மணம் கந்தருவ மணத்தைப் போன்றது என்று தொல்காப்பியர் கூறுகின்றார். காமக் கூட்டம் காணுங்காலை மறை ஓர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறைஅமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொ.பொ.கள.1) காமக் கூட்டம் எத்தகையது என்று காணும்போது வேதத்தில் ஓர் புறத்திலே கூறப்படும் எண்வகை மணங்களிலேயே சிறந்த நல்ல யாழைத் துணையாகக் கொண்ட கந்தருவர்களின் வழக்கத்தைப் போன்றதாகும். களவுமணம் கந்தருவத்தைப் போன்றது என்ற இந்த ஒன்றை வைத்துக் கொண்டு ஏனைய ஏழுவகைத் திருமணங்களும் தமிழரிடையிலே வழங்கின என்று கூறுவோரும் உண்டு. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், இளம் பூரணர், பேராசிரியர் போன்றவர்களும் தமிழர் திருமண முறையும் வடநூல்களில் கூறப்படும் திருமணங்களும் ஒன்றே என்று கூற முயன்றுள்ளனர். ஐந்திணை ஒழுக்கத்திலே கந்தருவ மணம் அடங்கும் கைக்கிளை, பெருந்திணைகளிலேயே மற்ற ஏழுவகை மணங்களும் அடங்கியிருக்கின்றன என்பர். அசுர மணம், இராக்கத மணம், பைசாச மணம் போன்ற வழக்கங்கள் தமிழ் நாட்டில் இருந்திருக்கலாம். இத்தகைய வழக்கங்கள் உலகமெங்கும் காமவெறி கொண்ட மக்களிடம் நடப்பதுண்டு. இது இயற்கை. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம் தெய்வம் போன்ற மணங்கள் தமிழ் நாட்டில் தொல்காப்பியருக்கு முன்னே நடை பெற்றதாக எந்த இலக்கியமும் கூறவில்லை. வேதத்திலே கூறப்படும் மண முறைகளைத்தான் தமிழர்கள் பின்பற்றி வந்தார்கள் என்று சொல்வதற்கு இடமில்லை. பின்பற்றி இருப்பார்களானால் களவு மணத்தைக் கந்தருவ மணத்திற்கு ஒப்பிட்டு உரைத்திருப்பதைப்போல, ஏனைய ஏழு திருமணங்களை ஒத்த திருமணங்கள் இவை இவையென்று தொல்காப்பியர் கூடியிருப்பார். இவ்வாறு அவர் எங்கும் சொல்லவேயில்லை. எனவே ஐந்திணை ஒழுக்கமாகிய களவு-கற்புத் திருமணமும் கைக்கிளை மணம், பெருந்திணை வாழ்வு இம்மூன்றும் தமிழர் வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த நாட்டில் குடிபுகுந்தவையல்ல; எந்தச் சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன் வாங்கியவையல்ல; எந்த மொழிகளிலிருந்தும் தமிழ் மக்கள் கற்றுக் கொண்டவை களும் அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும் உண்மை. ஆண் பெண் உரிமை பெண்ணுக்கு விலங்கு தொல்காப்பியர் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை இல்லை. ஆண் உயர்ந்தவன்; பெண் தாழ்ந்தவள். ஆளப் பிறந்தவன் ஆண்மகன்; அவனுக்கு அடங்கி வாழப் பிறந்தவள் பெண்பிள்ளை. இக்கொள்கைதான் அக்காலத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தது. அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொ. பொ. கள. 96) பயமும், வெட்கமும், அறியாமையும் முற்பட்டு நிற்றல் எப்பொழுதும் பெண்பாலுக்கு உரிய குணங்கள் என்று கூறுவார்கள். அச்சம், நாணம், மடமை இவைகள் பெண்களுக்கு மட்டும் உரிய குணங்கள் என்பது எப்படிப் பொருந்தும்? பயங்காளிக் கோழைகள் ஆண்களில் இல்லையா? கூச்சமும் நாணமும் உடைய ஆண்கள் நாட்டில் இல்லையா? அறிவற்ற ஆண் பிள்ளைகள் ஒருவர் கூட உலகில் இல்லையா? கல்வியறிவில்லாமல் -யாருடனும் பழகாமல்-வெளியுலகம் அறியாமல்-வீட்டுக்குள் அடைந்து கிடப்போர் ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, அவர்களிடம் இந்த மூன்று குணங்களும் இருப்பதைக் காண்கிறோம். அச்சம், நாணம், மடமை என்னும் முக்குணங்களும் யாருக்கும் இயற்கையாகவே ஏற்படுவனவல்ல. செயற்கை யாலேயே வந்து சேருகின்றன. தொல்காப்பிய காலத்தில் தமிழ் நாட்டுப் பெண்கள் ஆண்களால் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அச்சமும், நாணமும், அறியாமையும் உடையவர்களாக வளர்க்கப்பட்டனர். இம்முக்குணங்களும் பெண்ணுரிமையின் விலங்குகள். இதற்கு முன்னுள்ள சூத்திரம் பெருமையும் உரனும் ஆடூஉ மேன என்று ஆண்மக்களைச் சிறப்பித்துச் சொல்லு கிறது. பெருமையும் வலிமையும் ஆண்களுக்குரிய குணங்கள் என்பதே இதன் பொருள். முந்நீர் வழக்கம் மகடுஉ வோடில்லை (தொ.பொ. அக. 37) கடல் கடந்து செல்லும்போது பெண்களையும் உடன ழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார் (தொ. பொ. கற்பு.34) எண்ணுதற்கரிய போர்க்களத்துப் படைவீட்டுக்குப் பெண்களுடன் போக மாட்டார்கள். இந்த இரண்டு சூத்திரங்களும் தமிழ் நாட்டுப் பெண்கள் கப்பலேறி அயல்நாடு செல்வதில்லை. ஆண்களுடன் சேர்ந்து போர்க்களம் புகுவதில்லை என்பதைக் காட்டுகின்றன. பெண்ணுக்கே கற்பு கற்பு கற்பென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்பது இக்காலத்து மக்கள் வேண்டும் நீதி. கற்பொழுக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகும். ஆனால் தொல்காப்பியர் காலத்திலே கற்பு பெண்களுக்குரிய தனி உடைமை என்றே கருதப்பட்டது. ஒரு பெண் ஒரே ஆடவனை மணந்து அவனுடன் இணை பிரியாக் காதல் கொண்டு இன்புற்று வாழவேண்டும். அவன் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் அவள் மட்டும் தவறுகள் செய்யாமல் அவனுக்கு அடங்கியே நடக்க வேண்டும். காதலன் உள்ளம் களிக்க, உடல் நலம் பெற அவனுக்குப் பணிவிடை, புரிவதே கற்புள்ள பெண்ணின் கடமை. கணவன் செய்யும் குற்றங்களை எவரும் அறியும்படி எடுத்துச் சொல்லக்கூடாது. கணவன் செய்யும் இழி செயல்களை ஊரார் அறிந்தால் அவனைப் பற்றி இழிவாக எண்ணுவார்கள்; ஏளனமாகப் பேசுவார்கள். ஆதலால் அவன் செய்யும் குற்றங்களை மறைப்பதே மனைவியின் கடமை. இவைபோன்ற குணங்கள் பெண்களுக்கு வேண்டும். இவ்வாறு நடப்பதே கற்புடைமை. முன்னூல்களிலும் பின்னூல் களிலும் இவைகளே கற்புடைமை என்று காட்டப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியர் காலத்திலும் இத்தகைய கற்புடைமை பெண்களுக்கு மட்டுமே வேண்டும் என்று கருதப்பட்டது. உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (தொ.பொ.கள.23) உயிரைக் காட்டிலும் நாணம் சிறந்தது; நாணத்தைக் காட்டிலும் குற்றமற்ற காட்சியினையுடைய கற்பே சிறந்ததாகும். போக்குஉடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும். (தொ.பொ.கள. 25) தலைவன் பிரிந்து செல்லும் போக்கை அறிந்த பின், தலைவி தன் தோழியைத் துணையாகக் கொண்டு, தலைவனைப் பற்றி குறை கூறாத கற்பு நெறியிலே நிற்கும் போது. இவைகள் பெண்களுக்குக் கற்பே உயிர் என்பதை விளக்கு கின்றன. பெண்களுக்கு கற்பின் வழி நடப்பதே கடமை என்பதைக் காட்டும் இன்னும் பல சூத்திரங்களும் உண்டு. பலதார மணம் ஒருவனுக்கு ஒருத்தியே என்ற ஏகதார மணமுறை தமிழரிடம் இருந்த தில்லை. ஒருவனுக்குப் பல மனைவியர் என்ற பலதார மணமே தமிழர்களிடம் குடிகொண்டிருந்தது. தொல்காப்பியருக்கு முன்னும், தொல்காப்பியர் காலத் திலும் இவ்வழக்கமே இருந்து வந்தது. ஆண்கள் மட்டும் பல பெண்களை மணந்து கொள்ளலாம். மணந்திருக்கும் மனைவியரைத் தவிர வேறு பல விலைமாதர் களுடனும் கூடி குதூகலிக்கலாம். பெண் மக்களுக்கு இவ்வுரிமை யில்லை. ஒருத்தி ஒருவனைத்தான் மணக்க வேண்டும். காமக்கிழத்தி மனையோன் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் (தொல்.பொ.கற்பு. 5) காமக் கிழத்தி, மனைவி என்று சொல்லப்பட்ட இவர்கள் வருத்தத்தோடு சொல்லிய வார்த்தைகளுக்கு எதிராகவும். இச்சூத்திரம் ஒருவனுக்குக் காதலித்து மணம்புரிந்து கொண்ட மனைவியுடன் காமக்கிழத்தி என்ற வேறு மனைவியும் உண்டு என்று குறிப்பதைக் காணலாம். காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும். (தொல். பொ. கற்பு. 7) மனையறத்திற்கு உரியவளாக வரைந்து கொண்ட காமக் கிழத்தி, வீட்டுக்குப் புறத்திலே விளையாடுகின்ற தலைவியின் புதல்வனைத் தழுவிக்கொண்டு வருந்துகின்ற விளையாட்டின் முடிவிலும். இதில் உள்ள காமக்கிழத்தி என்பது இரண்டாவதாக மணந்து கொண்ட மனைவியைக் குறிக்கின்றது. இதே சூத்திரத்தில் காமக்கிழத்தியர் என்ற பன்மைச் சொல்லும் காணப்படுகின்றது. இதே சூத்திரத்தில் மாயப்பரத்தை உள்ளிய வழியும் என்ற தொடரும் காணப்படுகின்றது. பரத்தை என்பது மணந்து கொள்ளாத பொதுமக்கள். முதலில் மணந்து கொள்ளும் மனைவியே இல்லக்கிழத்தி; வீட்டின் தலைவி. இரண்டாவதாக ஆசைப்பட்டு மணந்து கொள்ளும் பெண்கள் காமக்கிழத்தியர். மூன்றாவதாக விலைமாது, பொருட்பெண்டிர், கணிகையர், பொது மகளிர், வரைவின் மகளிர் என்ற பெயர்களால் அழைக்கப்படும் பரத்தையர்கள். இன்னுஞ் சில கற்பியல் சூத்திரங்களிலே இந்த மூவகையினரைப் பற்றியும் காணலாம். ஆகவே பல பெண்களை மணப்பதும், அவர்கள் போதாமல் பல பரத்தையர் களுடன் கூடிக் களிப்பதும் ஆடவர்களின் உரிமையாக இருந்தது. தமிழர்களில் உயர்ந்த வகுப்பினராக செல்வமுடையவர்களாக வாழ்ந்த மக்களிடமே இவைகள் நடந்திருக்கக்கூடும். இவ்வாறு நடந்துகொள்ளும் வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கே உண்டு. சங்க இலக்கியங்களில் உள்ள அகப்பொருட் பாடல் களிலே இச்செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கணவன் பரத்தையர் வீட்டுக்குப் போய் வரும் செய்தி அறிந்து மனைவி ஊடல் கொள்கிறாள். அவன் பரத்தையர்களுடன் சேர்ந்து நீராடிய செய்தியைக் கேட்டு காதலி கனலுறுகிறாள். அவன் பரத்தையர்களுடன் கூடிக் குலாவியபோது, அவன் மார்பிலே சந்தனக் குழம்பும், மலரிதழ்களும் படிந்திருப்பதைக் கண்டு மனைவி சீறுகிறாள். இத்தகைய பல நிகழ்ச்சிகள் காதலனுக்கும் காதலிக்கும் ஊடல் தோன்றுவதற்குக் காரணங்களாக இருக் கின்றன. இத்தகைய ஊடல்களின்போது பாணன், கூத்தன் முதலியவர்கள் தூதுவர்களாயிருந்து காதலனையும் காதலி யையும் ஒன்றுசேர்த்து வைக்கின்றனர். மருதத் திணையைப் பற்றிக் கூறும் பாடல்களிலே இந்த ஊடல் நிகழ்ச்சிகளை மிகுதியாகக் காணலாம். நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு போன்ற அகப்பொருள் நூல்களிலே இந்நிகழ்ச்சி களைக் காட்டும் பாடல்கள் பலவற்றைப் படிக்கலாம். மேலே கூறியவைகளைக் கொண்டு தொல்காப்பியர் காலத்திலே ஆண்-பெண் சமத்துவ நிலை இருந்ததில்லை என்று அறியலாம். பெண்ணடிமை குடி கொண்டிருந்த காலமே அது. இப்பெண்ணடிமை வேறு யாராலும் தமிழரிடம் புகுத்தப் பட்டதன்று. இப்பெண்ணடிமை முறை இக்காலத்திற்கு ஏற்றதன்று. இது ஒதுக்கித் தள்ள வேண்டிய உளுத்துப் போன பழைய முறை. சாதிப் பிரிவு வீண்பழி தமிழ் நாட்டிலே இன்று எண்ணற்ற சாதி வேற்றுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இந்த வேற்றுமைகள் எப்படித் தோன்றின? எவரால் உண்டாக்கப்பட்டன? இயற்கையாக எழுந்த வேற்றுமைகளா? செயற்கையால் அமைக்கப்பட்டனவா? அல்லது வேற்றாரால் இந்நாட்டிலே புகுத்தப்பட்டனவா? இவைகளைப் பற்றிப் பல தவறான கொள்கைகள் நிலவுகின்றன. பண்டைத் தமிழகத்திலே பல வகையான சாதிப் பிரிவுகள் இருந்ததில்லை. நால்வகைச் சாதி முறை இந்நாட்டில் எழுந்ததன்று ஆரியர்களே நால்வகைச் சாதியை இந்நாட்டிலே நாட்டினார்கள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான் பண்டைத் தமிழர் கொள்கை என்று சிலர் சொல்லுகின்றனர். நால்வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர் என்ற கபிலரகவலை இவர்கள் பெரியதோர் ஆதரவாகக் காட்டு கின்றனர். இதை வைத்துக் கொண்டு பல கட்டுரைகளும் கதைகளும் எழுதுகின்றனர். தமிழர் வரலாற்றைத் தாறுமாறாக்கி வருகின்றனர். தொல்காப்பியத்தை ஆராய்ந்தால் இவர்கள் கூற்று ஆதாரமற்றது. வேண்டாதார்மேல் வீண்பழி சுமத்துவது என்பதை அறியலாம். மக்கள் அனைவரும் பிறப்பினால் பேதமற்றவர்கள் உயர்வு தாழ்வுகள் பிறப்பினால் உண்டானவையல்ல. ஆயினும் செய்யும் தொழில்களிலே சிறுமை பெருமை பாராட்டத் தொடங்கினர். இச்சிறுமை பெருமைகளே உயர்வு தாழ்வுகளுக்கு உறைவிட மாயின. வடமொழியிலே உள்ள வேத-உபநிடத-ஸ்மிருதிகளும் இவ்வுண்மையை ஒப்புக்கொள்ளுகின்றன. செந்தமிழ்த் தொல் காப்பியமும் இவ்வுண்மையை எடுத்துக்காட்டுகின்றது. ஆரியர்கள் இந்தியாவில் நுழைவதற்கு முன்பு இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் தமிழர்கள் தங்கியிருந்தனர். சரித்திரக்காரர்கள் இவர்களைத்தான் திராவிடர்கள் என்று குறிப்பிட்டனர். இந்தத் தமிழ் மக்களிடையிலே நால்வகை வகுப்புப் பிரிவுகள் இருந்தன. அடிமைகள், தொழிலாளர்கள், தலைவர்கள் என்ற வர்க்கப் பிரிவுகளும் இருந்தன. நாடோடிகளாகத் திரியும் மக்களிடம் நாகரிகம் வளர்ச்சியடைந்திருக்க முடியாது. அவர்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் - ஆடுமாடுகளுடன்-மூட்டை முடிச்சுகளுடன் உணவுக்கு இடந்தேடி ஊர்சுற்றும்போது அவர்களிடம் தொழில் வளர்ச்சியும் தோன்றியிருக்க முடியாது. ஓரிடத்திலே நிலையாகத் தங்கி அரசியல் சமுதாய வாழ்விலே சிறந்து வாழ்வோரிடந்தான் தொழில் வளர்ச்சி தோன்றியிருக்க முடியும். தொழில்கள் காரணமாகப் பல பிரிவுகளும் பிறந்திருக்க முடியும். இதுவே சரித்திர வல்லுநர்களின் கொள்கை. மக்கள் நாகரிகத்திற்கு அடிப்படை விவசாயந்தான். நிலத்தைக் கிளறி, நீர்பாய்ச்சி, நெல்போன்ற தானியங்களை விதைத்துப் பயிர் செய்து அறுப்பதற்கு எப்பொழுது மக்கள் கற்றுக் கொண்டார்களோ அப்பொழுதுதான் அவர்கள் நாகரிகப் பாதையிலே நடக்க அடியெடுத்து வைத்தார்கள். இதன் பிறகுதான் மக்களிடையிலே, அரசியல் அமைப்பும், வாணிகமும், கைத்தொழில்களும், கலைகளும் வளர்ந்தன. விவசாயம் செய்யத் தெரியாத மக்களிடையிலே எவ்வித வேற்றுமையும் விளைந்திருக்க முடியாது. தனித் தனி இல்லற வாழ்வும் அவர்களிடம் இருந்ததில்லை. அவர்கள் தமக்கென்று தனித்தனியே செல்வப் பொருள்களைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் இல்லை. இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து உணவு தேடுவார்கள். அகப்பட்ட உணவை அனைவரும் பங்கிட்டு உண்பார்கள். பருகுவதற்கு நீர் கண்ட இடத்திலே-படுப்பதற்கு நிழல்கண்ட இடத்திலே தங்குவார்கள். இத்தகைய பண்படாத பொதுவுடைமைச் சமுதாய முறைதான் நாகரிகம் காணாத மக்களிடம் இருந்தது. மற்ற நாடுகளில் வடஐரோப்பாவிலும், மத்திய ஐரோப்பாவிலும் தங்கி யிருந்த மக்களே ஆரியர் என்ற பெயருடன் பல நாடுகளுக்கும் பிரிந்து சென்றனர். இவர்களில் ஒரு பிரிவினரே கைபர் கணவாய் வழியாக இந்தியாவிலும் குடிபுகுந்தனர். ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பே திராவிடர் கள் நாகரிகத்திலே சிறந்திருந்தனர். இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பது பெரும்பாலான சரித்திரா சிரியர்களின் கொள்கை. ஆரியர்கள் இங்குக் குடியேறிய காலத்தைப் பற்றிக் கருத்து வேற்றுமையுண்டு. கி.மு. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இந்தியாவில் குடியேறினர். இந்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்போர் சிலர். திராவிட நாகரிகத்தை ஒப்புக் கொள்ளாதவர்களே ஆரியர்கள் குடியேறிய காலத்தை நீட்டி வைத்து, இன்று இந்நாட்டில் உள்ள நாகரிகம் ஆரியர் தந்த நாகரிகமே என்று காட்ட முற்படுகின்றனர் என்போர் சிலர். ஆரியர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் எல்லாத் துறை களிலும் நாகரிகம் அடைந்திருந்தனர் என்று கூறுவோரும் உண்டு. கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரியர்கள் இந்தியாவில் குடிபுகுந்தனர் என்பதே பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கொள்கை. இவர்கள் கூறுவது உண்மையானால் தொல்காப்பியத்திற் காணப்படும் வகுப்புப் பிரிவுகள் ஆரியர் களால் ஏற்பட்டவையல்ல. இது மறுக்க முடியாத உண்மை. அன்றியும் மற்றொரு உண்மையையும் உற்றுநோக்க வேண்டும். வடஐரோப்பாவிலிருந்தும், மத்திய ஐரோப்பாவி லிருந்தும் புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவுக்கு மட்டும் வரவில்லை. வேறு பல நாடுகளுக்கும் சென்று குடியேறினர். அவர்கள் குடியேறிய ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஏன் இந்தியாவிலிருப்பது போன்ற வகுப்புப் பிரிவுகள்-வருணாசிரம முறை-ஏற்படவில்லை? இந்தியாவில் மட்டும் அவைகள் தோன்றக் காரணம் என்ன? இவற்றைத்தான் நாம் நன்றாக ஆராய வேண்டும். வகுப்புப் பிரிவும்-வருணாசிரம முறையும் ஆரியர்களிடம் இல்லை. அவர்கள் சென்ற வேறு நாடுகளிலும் அவைகள் இல்லை. இந்தியாவில் மட்டுமே வருணாசிரம முறைக்கு அடிப் படையான வகுப்புப்பிரிவுகள் நிலைத்திருந்தன! ஆதலால் ஆரியர்கள் இங்கு வந்தபின் இப்பிரிவினைகளை ஒப்புக் கொண்டனர். தங்கள் இலக்கியங்களிலும் ஏற்றுக்கொண்டனர். ஆரியர்கள் குடியேறிய ஏனைய நாடுகளில் பிறவியிலே சாதி வேற்றுமை இல்லாதிருப்பதற்கும், இந்தியாவிலே மட்டும் இருப்பதற்கும் இதுவேதான் காரணமாகும். ஆரியர்கள் இந்தியாவுக்கு வருமுன், இந்தியநாடு முழுவதும் திராவிடர்கள் குடியேறியிருந்தனர். திராவிட நாகரிகமே பரவியிருந்தது என்ற உண்மையை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் இந்த முடிவுக்குத்தான் வர இயலும். பல பிரிவுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில், தமிழ் மக்களிடையில் வகுப்புப் பிரிவுகள் ஏற்பட்டிருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் இருந்தன. ஆரியர்கள் வருவதற்கு முன்பே இப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. இவைகளைத் தவிர மற்றும் பல பிரிவுகளும் இருந்தன பாணர், கூத்தர், பொருநர், பார்ப்பார், அடிமை வேலை செய்வோர், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் போன்ற பல பிரிவுகளும் இருந்தன. இவர்களைத் தவிர நால்வகை நிலங்களிலே வாழ்ந்த மக்களும் இருந்தனர். குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மக்களுக்குக் கானவர், வேட்டுவர், இறவுளர், குன்றுவர், வேட்டுவித்தியர், குறத்தியர், குன்றுவித்தியர் என்று பெயர். முல்லை நிலத்திலே வாழ்ந்த மக்களுக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைச்சியர், கோவித்தியர், ஆய்ச்சியர், பொதுவியர் என்று பெயர். இவர்களெல்லாம் அந்தணர் முதலிய நால்வகைப் பிரிவினருக்கு அப்பாற் பட்டவர்கள். நெய்தல் நிலத்திலே வாழ்ந்த மக்களுக்குக் நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர் என்று பெயர். மருத நிலத்திலே வாழ்ந்த மக்களுக்குக் களமர், உழவர், கடையர், உழத்தியர், கடைச்சியர் என்று பெயர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்கள் செய்யும் தொழில்கள் இவை இவையெனத் தொல்காப்பியம் கூறுகின்றது. அந்தணர் முப்புரி நூல் (பூணூல்), தண்ணீர்க் குண்டான், முக்கோல், ஆசனம், இவைகள் அந்தணர்க்குரியவைகள். நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய அரசர்க்கு ஆலோசனை கூறுவது, நாட்டு மக்களுக்கு நல்லுரை வழங்குவது, மக்களின் நல்வாழ்வுக்காகக் கடவுளரை வேண்டித் தவங்கிடப்பது இவைகளும் அந்தணர் கடமை. அந்தணர்கள் அரசு செய்வதற்கும் உரியவர்கள் அந்தணாளர்க்கு அரசுவரைவின்றே (தொ.பொ.மர 80) அறிவு, ஆராய்ச்சி, நல்லொழுக்கம், தந்நலந்துறந்த தன்மை, இவைகளை உடையவர்களெல்லாம் அந்தணர் என்று அழைக்கப் பட்டனர். அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான். எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி வாழும் இயல் புடையவர்களாதலால், அந்தணர் என்று சொல்லப்படுகிறவர்கள் அறநெறியிலே நடப்பவர்களாவர். தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றிய இக் குறட்பாவும், அந்தணர் இன்னார் என்று அறிவுறுத்துவதைக் காணலாம். அரசர் ஆயுதமும், கொடியும், குடையும், முரசவாத்தியமும், சிறந்த நடையையுடைய குதிரையும், யானையும், தேரும், மலர் மாலை யும், முடியும், பொருத்தமான வேறுபல பண்டங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோலையுடைய அரசர்களுக்கு உரியனவாகும். படையும், கொடியும், குடையும், முரசும், நடைநவில் புரவியும், களிறும், தேரும், தாரும், முடியும், நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குஉரிய (தொ.பொ.மர.57) வேட்டையாடுவதிலே வல்லமை, பகைவர்களை எதிர்த்துப் போர் செய்து அவர்களை முறியடித்து வெற்றி பெறும் வீரத்தன்மை, தந்நலந் துறந்து, என்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்காகப் பொறுமையுடன் உழைக்கும் உறுதியுள்ளம், நடுநிலைமை தவறாத நல்லொழுக்கமுடைமை, நீதிவழங்கும் நேர்மை குணம் இவைபோன்ற உயர்ந்த குணமுடையவர்களே பண்டைத் தமிழர்களால் அரசர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தெரிவுகொள் என்ற சொற்றொடர் இவ்வுண்மையை நமக்கு உணர்த்துகின்றது. அந்தணாளர்க்கு உரியவைகளும் அரசர்களுக்கு உரியனவாக வருதலும் உண்டு. அந்தணாளர்க்குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே (தொ. பொ.மர.68) அரச வாழ்க்கையிலே வெறுப்படைந்தவர்கள் அந்தணர் வாழ்க்கையைப் பின்பற்றுவார்கள்; அந்தணர்களாகவே வாழ் வார்கள். மேலே காட்டிய சூத்திரம் இவ்வுண்மையைக் கூறுகின்றது. வணிகர் வாணிகம் செய்யும் வாழ்க்கையை வைசியன் பெறுவான் வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொ.பொ.மர. 73) இதனால் வியாபாரம் செய்யும் தொழிலே வைசிகனுடைய தொழில் என்பதை அறியலாம். வியாபாரத்தோடு தானியங் களை விளைவிக்கும் தொழிலும் வைசியனுக்கு உண்டு. மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பாலான (தொ.பொ.மர. 74) உண்மை தெரிந்த வகையினால் எட்டுவகையான உணவு தானியங்களை உண்டாக்கும் செய்தியும் வைசியனுக்கு உண்டு. இதுவும் வாணிகத்துடன் தொடர்புள்ள தொழில். ஆதலால் தொல்காப்பிய காலத்தில் வியாபாரிகளும் நிலக்கிழவர்களாக இருந்து வந்தனர் என்று கூறலாம். கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே (தொ.பொ.மர. 75) என்றதனால் வைசிகர்களுக்கும் அரசர்களைப் போல மலரும் மாலையும்கூட உண்டு என்று உணரலாம். வேளாளர் வேளாளர்க்கு உழுதுண்பதைத் தவிர, வேறு தொழில்கள் இல்லையென்று மொழிவார்கள். வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொ.பொ.மர. 76) அரசர்கள் கொடுத்தால் படைக்கலமும், மாலையும் வேளாளர் பெறக்கூடிய பொருள்கள் என்று சொல்லுவார்கள். வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே. (தொ.பொ.மர.77) ஆகவே வேளாளர்கள் உழு தொழிலோடு படைக்கலம் பெற்று, மாலைபூண்டு போர் வீரர்களாக ஊழியஞ் செய் வதற்கும் உரியவர்களாயிருந்தனர். அவர்கள் படைக்கலப் பயிற்சி பெற்றுப் போர்வீரர்களாவது, வேந்தர்களின் விருப்பத்தைப் பொறுத்தாகும். இடையிரு வகையோர் அல்லது நாடின் படைவகை பெறாஅர் என்மனார் புலவர் (தொ.பொ.மர.72) ஆராய்ந்தால் நால்வகையினருள், இடையிலே உள்ளவர் களான அரசர், வணிகர், ஆகிய இருவகையினரைத் தவிர மற்றவர்கள் ஆயுதந் தரிக்கும் உரிமை அற்றவர்கள் என்று கூறுவார்கள் புலவர்கள். எத்தகைய கட்டுப்பாடுமின்றித் தாமே ஆயுதமேந்தும் உரிமை; நாட்டுப் பாதுகாப்பிலே பங்குகொள்ளும் உரிமை; இவைகள் இயற்கையாகவே அரசர் வணிகர் ஆகிய இருவகை யினர்க்குத்தான் உண்டு. அரசர்களால் அளிக்கப்பட்டால்தான் வேளாளர்க்கு இவ்வுரிமையுண்டு. மேலே கூறியவற்றைக் கொண்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்ற நால்வகைப் பிரிவுகள் தொல்காப்பிய காலத் தமிழரிடம் நிலைத்திருந்ததைக் காணலாம். மேலே எடுத்துக் காட்டப்பட்ட எல்லாச் சூத்திரங்களும் தொல்காப்பிய மரபியலிலே காணப்படுவன. தொல்காப்பிய மரபியலிலே பிற்காலத்தார் பல சூத்திரங்களைப் புகுத்தி யிருக்கின்றனர்; நால்வகை வகுப்புப் பிரிவைக்கூறும் சூத்திரங்கள் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவையல்ல. அவை ஆரியர் தமிழ் நாட்டுக்கு வந்தபின் எழுதி இணைக்கப்பட்டவை என்று சிலர் சொல்லுகின்றனர். இவர்கள் சொல்லுவது எவ்வகையிலும் பொருந்தாது. வேறுபல இயல்களிலும் வகுப்புப் பிரிவுகளைக் காட்டும் பல சூத்திரங்கள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் ஆரியர் நுழைப்பு என்று சொல்லி எடுத்தெறிந்து விட்டால், அதன் பிறகு தொல்காப்பியப் பொருளதிகாரமே இருக்க முடியாது. புதிய பொருளதிகாரம் எழுத வேண்டியதுதான். நால்வகைப் பிரிவினர் கடமை அந்தணர்க்கு அறுவகைத் தொழில், அரசர்க்கு ஐவகைத் தொழில், வணிகர்க்கும், வேளாளர்க்கும் தனித்தனியே ஆறுவகைத் தொழில்கள் உண்டு. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் (தொ.பொ.புறத். 74) அறுவகைப்பட்ட தொழில்களையுடைய பார்ப்பனப் பகுதியும், ஐவகைத் தொழில்களையுடைய அரசர் பகுதியும், ஆறுவகைத் தொழில்களுடைய வணிகர், வேளாளர் பகுதியும் என்பதே இதன் பொருள். இது புறத்திணை இயலிற் காணப்படும் சூத்திரம். ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், பொருளைப் பெற்றுக் கொள்ளுவது, பொருளைக் கொடுக்கச் செய்வது, இந்த ஆறுவகைத் தொழில்களும் அந்தணர்க் குரியவை. ஓதல், வேள்வி செய்தல், ஈதல், நாட்டைக் காத்தல், தீயோரைத் தண்டித்தல், இந்த ஐந்து தொழில்களும் அரசர்க் குரியவை. ஓதல், வேள்வி செய்தல், ஈதல், உழவுத் தொழில் செய்தல், பசுமந்தைகளைக் காப்பாற்றுதல், வாணிகம் புரிதல், இந்த ஆறு தொழில்களும் வணிகர்களுக்கு உரியவை. ஓதல், ஈதல், உழவு பசுமந்தைகளைக் காப்பாற்றுதல், வாணிகம், மேலோர் மூவர்க்கும் கீழ்ப்படிந்து நடத்தல் இந்த ஆறு தொழில்களும் வேளாளர்க்குரியவை. இந்தப் புறத்திணை இயல் சூத்திரத்தாலும் தமிழ் மக்களிடம் நால்வகை வகுப்புப் பிரிவுகள் இருந்தனவென்பதை அறியலாம். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பது சரியான பாடமல்ல. அறுவகைப்பட்ட அந்தணர் பக்கமும், என்பதே சரியான பாடமாயிருக்க வேண்டும். நெடுங்காலத்துக்கு முன்பே அந்தணர் என்பது பார்ப்பனர் என்று மாறியிருக்க வேண்டும். பிரிவு என்பது பாலைத் திணையாகும். மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் என்ற பகுதியிலே பிரிவின் விளக்கத்தைக் காணலாம். காதலியை விட்டுக் காதலன் பிரிந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று கல்வி கற்கப் பிரிவது, இரண்டு பொருள் தேடப் பிரிவது. அரசனுடைய தூதாகப் போவதும், அரசனுடைய படையிலே போர் வீரனாகச் சேர்ந்து பகைவருடன் போர் செய்யப் போவதும் பொருள் தேடச் செல்லும் பிரிவாகும். ஒதல், பகையே, தூது இவை பிரிவே (தொ.பொ.அக. 27) ஓதுவதற்குப் பிரிதல், பகைவருடன் போர் செய்வதற்குப் பிரிதல், சமாதானம் செய்து வைக்கும் தூதராகப் பிரிதல் ஆகிய இம்மூன்று வகைப்படும் பிரிவு. பிரிவு மூன்று வகையானாலும், படிப்பு, பணம் தேடல் ஆகிய இரண்டு காரணங்களுக்காகவே காதலன் காதலிகளுக்குள் பிரிவு நிகழும். மூன்று பிரிவினுள் ஓதுவதற்குப் பிரிவதும், தூது போவதற்குப் பிரிவதும் உயர்ந்தவர்களுக்குரியன. அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன (தொ.பொ.அக. 28) உயர்ந்தோர் என்பதற்கு அந்தணர், அரசர், வணிகர் என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். பகைவருடன் போராடச் செல்லும் தகுதியுடையவர்கள் யாவர்? இதற்கு அடுத்த சூத்திரம் இதைக் குறிப்பிடுகின்றது. அரசனும் அரசனுடன் சேர்ந்திருப்பவர்களுமே பகைவருடன் போர் செய்வதற்காகப் பிரிந்து செல்வதற்குத் தகுதியுடையவர்கள். தானே சேறலும் தன்னோடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே (தொ.பொ.அக. 29) தானே பகைவருடன் போராடப் பிரிந்து செல்லுவதுடன், தன்னுடன் சேர்ந்த மற்றவர்களைப் பகைவருடன் போர் செய்யப் பிரிந்து செல்லும்படி செய்வதும் அரசனுடைய கடமையாகும். பகைவயிற் பிரிதல் அரசன் கடமை என்று இச்சூத்திரம் கூறுவதால், இதற்கு முன்னுள்ள சூத்திரத்தில் உயர்ந்தோர் என்பதற்கு அந்தணர் அரசர், வணிகர், என்று பொருள் சொல்லுவது பொருத்தமானதே. இந்த அகத்திணை இயற் சூத்திரங்களும் தமிழ் நாட்டில் நால்வகை வகுப்புப் பிரிவுகள் இருந்தன என்பதை வலியுறுத்துவதைக் காணலாம். அடிமைகளும் தொழிலாளரும் அடிமைகள், தொழிலிலே வல்லவர்கள், நடனமாடுவோர், யாழ் வாசிப்போர், நாடகம் ஆடுவோர், ஆகிய வகுப்பினரும் தமிழ் நாட்டில் இருந்தனர். அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும். (தொ. பொ.அக. 25) என்னும் அகத்திணையியற் சூத்திரமும். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் என்பன போன்ற பகுதிகளும் இவ்வுண்மையைக் காட்டுகின்றன. இவைகளைத் தவிர நால்வகை நிலங்களிலே வாழ்ந்த வேறுபல மக்களும் இருந்தனர். பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய திணைதொறும் மரீய திணைநிலைப் பெயரே (தொ.பொ. அக. 23) பெயர்ப் பெயரும், வினைப்பெயரும் என்று ஆக இரு வகைப்படும். நால்வகை நிலத்திலும் வாழ்கின்ற மக்களின் திணைப்பெயர்கள். ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் (தொ. பொ.அக. 23) ஆயர் என்பதும், வேட்டுவர் என்பதும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர். நால்வகை நிலங்களிலே வேறுவகையான மக்களும் வாழ்ந்தனர். இவர்கள், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகையினருள் அடங்கினவர் அல்லர். அடிமைகள், தொழிலாளர்களும் அல்லர். இவர்கள் வேறு என்பதை இந்த இரண்டு சூத்திரங்களும் காட்டுகின்றன. பிறப்பால் சாதியில்லை தொல்காப்பியர் காலத்திலிருந்த இத்தகைய, வகுப்புப் பிரிவுகள் பிறப்பால் ஏற்பட்டவை அல்ல. தொழில் ஒழுக்கம், கல்வியறிவு, திறமை காரணமாகவே மக்களுக்குள் பல பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. சாதி என்னும் சொல் தொல்காப்பியத்திலே காணப் படுகின்றது. ஆனால் அச்சொல் ஓரிடத்திலேனும் மக்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கப்படவில்லை. சாதி என்னும் சொல் நீரிலே வாழும் உயிர்களையே குறிக்கின்றது. பிறப்பிலே வேற்றுமையுண்டு என்பதைக் குறிப்பதே சாதி என்னும் சொல். சாதி-ஜாதி. ஜம்-பிறப்பு. ஜனித்தல்-பிறப்பித்தல், ஜன்மம்-பிறப்பு. நீர் வாழ்சாதியுள் அறுபிறப்பு உரிய (தொ.பொ.அக. 40) நீரில் வாழும் பிறவியுள் ஆறுவகைப்பட்ட பிறவிகள் உண்டு நீர் வாழ்சாதியுள் நந்தும் ஒன்றே (தொ.பொ.அக. 60) நீரில் வாழும் பிறவிகளிலே நத்தையும் ஒன்றாகும். பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டு என்ற கொள்கை தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை. ஒழுக்கம், தொழில் முதலியவைகள் காரணமாகவே வகுப்புப் பிரிவுகள் தோன்றின. இவைகள் தமிழகத்திலே தாமே தோன்றியனவே யன்றி யாராலும் புகுத்தப்பட்டவையல்ல. இவ்வுண்மைகளை மேலே கூறியவற்றால் காணலாம். நிலத் தலைவர்கள் நிலத்தலைமை தொல்காப்பியர் காலத்திலே தமிழ்நாட்டிலே சாதிப் பிரிவுகள் நிலைத்திருந்தன. நிலமுள்ளோர், நிலமற்றோர் என்ற வர்க்கப்பிரிவும் வேரோடியிருந்தது. நிலத்தலைவர்களே பல வகையான வகுப்புப் பிரிவுகளுக்கும் காரணமாயிருந்தனர். நிலத்தலைவர்கள்தாம் உயர்ந்தவர்களாக வாழ்ந்தனர். நிலமற்ற ஏழைகள் தாம் தாழ்ந்தவர்களாகவும், அடிமைகளாகவும் வாழ்ந்தனர். மக்கள் விவசாயம் செய்யக் கற்றுக்கொண்ட பின்னர்தான் நிலப் பிரபுத்துவம் தோன்றியது. உடல் நோகாமல் உலகத்திலே இன்புற்று வாழ எண்ணும் அறிவுடையவர்கள் - மற்றவர்களை அதிகாரத்தாலோ அன்பு மொழியாலோ அடக்கியாளும் திறமைசாலிகள்-நல்ல நிலப்பகுதிகளைத் தங்கள் உடைமை யாக்கிக் கொண்டனர். வஞ்சனையறியாத பொது மக்களை அந்த நிலங்களிலே உழைக்கச் செய்தனர்; அவர்களின் உழைப்பால் உண்டான பலன்களைத் தாமே வாரிக் கொட்டிக் கொண்டனர். ஆனால் அக்காலத்தில் உழைப்பாளிகள் உணவின்றிப் பட்டினி கிடக்கவில்லை. அவர்களுக்குப் போதுமான உணவுப் பொருள்கள் கிடைத்துவந்தன. ஆதலால் அவர்கள் சுரண்டுவோரின் சூழ்ச்சி களை அறியாமல் அவர்களுக்கு அடங்கி நடந்து வந்தனர். நிலத் தலைவர்கள்-அதாவது நிலப் பிரபுக்களின் முயற்சி யால் ஏராளமான உணவுப் பொருள்கள் உற்பத்தியாயின. இந்த நிலப்பிரபுத்துவ முறை ஏற்பட்ட பிறகுதான்-அதாவது நிலக்கிழவன் - உழவன் என்ற முறை ஏற்பட்ட பிறகுதான் பண்டமாற்று முறையும் வளர்ச்சியடைந்தது. பண்டமாற்று - வியாபாரம். ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்கிக் கொள்ளும் வழக்கமே பண்டைக் காலத்து வாணிகம். உழவுக்கும் வாணிகத்திற்கும் இடையிலே பலவகையான கைத்தொழில் களும் வளர்ச்சியடைந்தன. நெசவுத்தொழில், தச்சுத்தொழில், இரும்புத்தொழில், ஓவியத்தொழில், சிற்பத் தொழில் போன்ற பலவகைத் தொழில்களும் தோன்றி வளர்ந்தன. மக்கள் வேளாண்மையிலும், வேறு பல தொழில்களிலும், வியாபாரங் களிலும், ஈடுபட்டிருக்கும் இடங்களிலே வீணர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் எத்தொழில்களிலும் ஈடுபடாத சோம்பேறிகள். இந்தச் சோம்பேறிகளைத் தவிர, பாடுபட்டுச் சேர்த்து வைத்திருக்கும் பண்டங்களைப் பறித்துக் கொள்ளும் முரடர்களும் திருடர்களும் தோன்றினார்கள். இவர்களைத் தவிர காட்டு விலங்குகளாலும் மக்களுக்கும், அவர்கள் செய்த பயிர்களுக்கும் அடிக்கடி சேதங்கள் ஏற்பட்டு வந்தன. இந்தச் சோம்பேறிகளைச் சுறுசுறுப்புடையவர்களாக மாற்ற வேண்டும். முரடர்களையும் திருடர்களையும் அடக்கி நசுக்க வேண்டும். காட்டு விலங்குகளையும் வேட்டையாடி விரட்ட வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இவைகளைப் பயமின்மையும், உடற்கட்டுமுடைய பலசாலிகளால்தான் செய்ய முடியும். இவைகளைச் செய்த பலசாலிகளே நாளடைவில் எல்லா மக்களையும் அடக்கியாளு வோராகவும், அரசர்களாகவும் ஆகிவிட்டார்கள். இந்த அரசர்களே நிலப்பிரபுத்துவத்தின் காவலர்களாக-நிலத் தலைமையைப் பாதுகாப்பவர்களாக ஆகிவிட்டனர். நிலத்தலைமை வேரூன்றிய பிறகுதான் கலைகள் வளர்ச்சி யடைந்தன. அறிஞர்கள், மக்கள் முன்னேறுவதற்கான வழித் துறைகளை வகுப்பதற்கு அரும்பாடுபட்டு உழைத்தனர். இத்தகைய அறிஞர்கள் நிலத்தலைவர்களால் ஆதரிக்கப்பட்டனர். இவர்கள் உணவுக் கவலையின்றி உழைத்தனர். தாங்கள் உள்ளத்திற் கண்டறிந்த உண்மைகளை உலகத்தார்க்கு அறிவித்தனர். பண்டைக்காலத்து நூலாசிரியர்கள் பலரும் நிலத் தலைவர் களின் பாதுகாப்பிலே வாழ்ந்தவர்கள். நாடகம், சங்கீதம் போன்ற கலைகளெல்லாம், அவர்களுடைய ஆதரிப்பிலேதான் வளர்ந்தன. கூத்தர்கள், பாணர்கள், பொருநர்கள், விறலிகள் என்பவர்கள், இசை, நடனம், நாடகங்களிலே வல்லவர்கள். இவர்களை ஆதரித்தவர்கள் அனைவரும் நிலத்தலைவர்கள் தாம். குறுநில மன்னர்கள் என்போர் அனைவரும் நிலத் தலைவர்கள்தாம். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச்சொன்ன பக்கமும் (தொ. பொ.புறத். 30) கூத்தர், பாணர், பொருநர், விறலி என்பவர்கள் வழியிலே தம்போன்ற இரவலரைக்கண்டு, தாம்பெற்ற செல்வத்தைப் பற்றி, அச்செல்வம் பெறாதவர் களுக்கு எடுத்துக்கூறி, தாம் செல்வம் பெற்ற வள்ளல்களிடம் அவர்களும் சென்று செல்வம் பெறும் படி கூறிய பகுதியும் என்பதே இதன் பொருள். இதனால் நிலத்தலைவர்களின் ஆதரவிலே கலைகளும், கலைஞர்களும், வளர்ந்ததையும் வாழ்ந்ததையும் காணலாம். பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, கூத்தர் ஆற்றுப்படை யென்னும் மலைபடுகடாம் ஆகியவைகள் இந்தத் தொல்காப்பிய இலக்கணத்திற்கு ஏற்ற இலக்கியங்களே. தமிழிலே இன்றுள்ள சங்க இலக்கியங்களிலே பல நிலத் தலைவர்களின் வீரத்தையும், கொடையையும் பெருமையையும் புகழ்ந்து பாடப்பட்டவைகள்தாம். பத்துப்பாட்டுள் எட்டுப்பாட்டுக்கள் நிலத்தலைவர்களைப் புகழ்ந்து பாடியவை. ஏறக்குறைய புறநானூற்றுப் பாடல்கள் எல்லாம் நிலத்தலைவர்களைப் பற்றியனவே. பதிற்றுப்பத்தும் அப்படித்தான். பண்டைத் தமிழ்ப்புலவர்களின் இவ்வழக்கத் தையே, பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களில் பலர் பின்பற்றினர். சிற்றரசர்களையும் ஜமீன்தார்களையும் நிலச்சுவான்தார்களையும் தலைவர்களாக வைத்துக் கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், தூது, மடல் போன்ற பல நூல்களைப் பாடியிருக்கின்றனர். நிலத்தலைமை முறை தோன்றாமல், மக்கள் ஆரம்ப அநாகரிகப் பொதுவுடைமை வாழ்க்கையிலேயே நிலைத் திருப்பார்களானால், மனித சமூகத்திற்கு வரலாறே இருந்திருக்க முடியாது. இன்றுள்ள எத்தகைய நாகரிகமும் பிறந்திருக்கவும் முடியாது. வளர்ந்திருக்கவும் முடியாது. முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவமுறை வேரோடி நிலைத்துவிட்ட நீண்ட காலத்திற்குப் பிறகுதான், முதலாளித்துவமுறை தோன்றியது. ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளும் முறைமாறி, ஒரு பண்டத்திற்குப்பதிலாக நாணயத் தை வாங்கிக்கொள்ளும் முறை எப்பொழுது தோன்றியதோ, அப்பொழுதே முதலாளித்துவமுறை வளரத் தொடங்கி விட்டது. விஞ்ஞானம் வளர்ந்தபிறகு முதலாளித்துவம் உச்ச நிலை அடைந்தது. நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் மக்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு மட்டற்ற உதவி புரிந்திருக்கின்றன. இன்றுள்ள கலைகள், இலக்கியங்கள், தத்துவங்கள், நாகரிகங்கள் எல்லாம் முதலாளித்துவம் ஈன்றெடுத்த பிள்ளைகளே. ஆகையால்தான் பண்டை இலக்கியங்கள் எல்லாம் நிலத்தலைவர்களான சிற்றரசர்களையும், வள்ளல்களையும் பாராட்டும் இலக்கியங் களாகவே காணப்படுகின்றன. அவைகள் எல்லாம்-அவைகளில் காணப்படும் கொள்கைகள் எல்லாம்-பழக்க வழக்கங்கள் எல்லாம்-பிரபுத்துவ முறையை அடிப்படையாகக் கொண்டவை களாகவேயிருக்கின்றன. தமிழ்நாடு விவசாயத்தில் சிறந்தது. தமிழர்கள் விவசாயத் திலே பேர்போன வர்கள். இதை மறந்துவிடக்கூடாது. நீர்வளம் நிறைந்த நிலப்பகுதிகளில்தான் விவசாயம் வளர்ச்சியடையும். இந்த உண்மையையும் மறந்துவிட வேண்டாம். பண்டைத் தமிழர்கள் இமயமலை வரையிலும் குடியேறி யிருந்தனர். நீர்வளம் நிறைந்த நல்ல நிலப்பகுதிகளிலேதான் அவர்கள் தங்கியிருந்தனர். உழவுத் தொழிலையே தங்கள் உயிர்த் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். விவசாயமும், வாணிகமும், அரசியல்முறையும், கைத்தொழில்களும் இவர்களிடம் வளர்ந் திருந்தன. இந்தத் தொழில்கள் காரணமாக முதல் முதல் இவர்களிடமே நிலப்பிரபுக்காளகிய குறுநில மன்னர்களும் நால்வகை-வகுப்பினர்களும் தோன்றினர். நாகரிகத்தின் பிறப்பிடம் இந்திய நாட்டுக்குப் புறம்பே உறைந்த காலத்தில் ஆரியர்கள் ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டு, அவற்றைக் கொண்டே பிழைப்பவர்களாய், அவற்றின் மேய்ச்சலுக்குப் புல் நிலங்களைத் தேடித் திரிபவர்களாயிருந்தமையின், அவர்கட்கு அந்நாளில் உழவுத் தொழில் இன்னதென்றே தெரியாது. மற்று அவர்கட்கு முன் இந்திய நாட்டில், இமயமலைச்சாரல் வரை பரவியிருந்த தமிழர்களோ, ஆரியர்களைப் போல் ஆடுமாடு களை மேய்த்துக் கொண்டு அலைந்து திரியும் வாழ்க்கையில் இல்லாமல், நாகரிகத்தில் சிறந்து தாம் தாம் சென்ற இடங்களில், ஆறுகளும், ஏரிகளும் உள்ள பக்கங்களில் நிலையாகக் குடியேறி, உழவுத் தொழிலைச் செய்து, அதனாற் செல்வம் பெருக்கி, நாடு நகரங்களை அமைத்துத் தமக்குள் அரசர்களை ஏற்படுத்தி, வறுமையின்றி உயிர் வாழ்ந்தவர்கள் ஆவர். இங்ஙனம் செல்வத் தாற் சிறந்த நாகரிக வாழ்க்கையுடையவர்களுக்குள்ளேதான் பலவகைத் தொழிற் பிரிவுகளும், அத்தொழில்களைச் செய்யும் மக்கட் பிரிவுகளும் உண்டாகுமே யல்லாமல், நிலையான இருப்பிடம் ஏதும் இன்றி இன்றைக்கு ஓரிடத்தும் நாளைக்கு ஓரிடத்தும் அலைந்து திரியும் மக்கள்பால் அத்தகைய தொழில் களும், பிரிவுகளும் உண்டாகமாட்டா. இது, மும்மொழி வல்லுநரான பேராசிரியர் மறை மலையடிகளின் கொள்கை. சாதி வேற்றுமையும், போலிச் சைவரும் என்ற தமது நூலிலே இவ்வாறு கூறுகின்றார். இதுவே சரித்திர உண்மை சரித்திரப் பேராசிரியர்கள் பலரும் இன்று இவ்வுண்மையை ஒப்புக் கொள்ளுகின்றனர். நால்வகை நிலங்களிலே மருத நிலமே நீர்வளம் நிரம்பியது. ஊர்வளம் உடையது. நாகரிகம் செழித்து வளரும் நல்ல நிலம். ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம் இன்னின்னது என்று குறித்த தொல்காப்பியர், மருத நிலத்திற்கு வேந்தன் தெய்வம் என்று குறித்தார். வேந்தன் மேய தீம்புனல் உலகமும் (தொ.பொ.அக. 5) என்பது தொல்காப்பியம். முல்லைக்கு மாயோன்(திருமால்) தெய்வம், குறிஞ்சிக்குச் சேயோன் (முருகன்) தெய்வம், நெய்தலுக்கு வருணன் தெய்வம் என்று கூறியவர் மருதத்திற்கு மட்டும் வேந்தனைத் தெய்வம் என்று விளம்பியதன் கருத்தென்ன? இதை ஆராய்ந்தால் மேலே கூறிய உண்மைகள் விளங்கும். மருத நிலந்தான் நாகரிகத்தின் பிறப்பிடம். நீர்வளம் நிறைந்த இடத்திலேதான் நாகரிகம் பிறந்தது. நாகரிகத்தின் சின்னந்தான் அரசும், அரசனும், பண்டைக்காலத்தில் மக்களைக் காத்து, அவர்கள் சமுதாய வாழ்விலே முன்னேறத் துணை செய்தவன் அரசனே. மக்களும் தங்களுக்குத் துணை செய்த மன்னவனைத் தெய்வமாக-தெய்வப்பிறவியாக-மதித்து வணங்கினர். ஆதலால் வேந்தனையே மருத நிலத்தின் தெய்வமாக வைத்தார் தொல்காப்பியர். நால்வகைப் பிரிவுக்கு அடிப்படை வேந்தர்களிலே முடியுடை வேந்தர்கள், குறுநில மன்னர்கள் என்று இருவகையினர் இருந்தனர். குறுநில மன்னர்களெல்லாம் முடியுடை வேந்தர்களுக்கு அடக்கம். பெருநிலக் கிழவர்களே குறுநில மன்னர்கள், அல்லது சிற்றரசர்கள். முதல் முதலிலே மருத நிலத்திலேதான் குறுநில மன்னர்களும், முடியுடை வேந்தர் களும் தோன்றினார்கள். இதன் பிறகுதான் நாளடைவில், முல்லை, குறிஞ்சி, நெய்தல் முதலிய நிலங்களிலும் நில முதலாளி களாகிய குறுநில மன்னர்கள் தோன்றினார்கள். இந்தக் குறுநில மன்னர்களும், இவர்களை அடக்கியாண்ட மன்னர்களும் அரசர்களானார்கள். இவர்களிலே அறிவும், இரக்கமும், தந்நலத் தியாகமும், சிந்தனா சக்தியும் உடையவர்கள் அந்தணர்களானார்கள். பண்டமாற்றுத் தொழில் செய்தவர்கள் வணிகர்களானார்கள். நிலத்திலே நேரடியாக உழுது பயிர் செய் தவர்கள் வேளாளர்களானார்கள். ஆகவே நிலத் தலைமையே நால்வகைப் பிரிவையுண்டாக்கக் காரணமாயிருந்ததைக் காணலாம். நிலத் தலைமை வளர்ச்சி முதலில் அரசர்கள் தாம்-அதாவது குறுநில மன்னர்கள் தாம் நிலத் தலைவர்களாயிருந்தனர். பின்னர் வணிகர்களிலும் நிலத்தலைவர்கள் தோன்றினர் வேளாளர்களிலும் நிலத் தலைவர்கள் தோன்றினர். மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பாலான (தொ.பொ.மர. 74) உண்மை தெரிந்த வகையால் எட்டு வகை உணவுப் பண்டங்களை உண்டாக்கும் செய்தியும் வணிகர்க்கு உண்டென்பதை; நீக்க மாட்டார்கள், இதுவும் அவ்வணிகர்க்கு உரிய கடமையாகும். எண்வகைத் தானியங்கள்: பயறு, உழுந்து, கடுகு, கடலை, எள்ளு, கொள்ளு, அவரை, துவரை என்பவை. வணிகர்களும் தொல்காப்பியர் காலத்தில் நிலக்கிழவர் களாயிருந்தனர். இவர்கள் நேரடியாக நிலத்தில் உழுதவர்கள் அல்லர். கூலிக்கு ஆள் வைத்து உழுது தானியம் விளைத்து வந்தனர். வணிகர்க்குரிய அறுவகைத் தொழில்களில் உழவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. வேளாளர்களும் நாளடையில் நிலக்கிழவர்களானார்கள். வேளாளருள் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்று இரண்டு வகையாகப் பிரிந்தனர். உழுதுண்போர்-நிலத்திலே நேரடியாக உழுபவர்கள். உழுவித் துண்போர் - பண்ணை யார்கள்; கரையாளார்கள், பெருநிலக்கிழவர்கள். மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே (தொ.பொ.அக. 21) இதற்கு முன்னுள்ள சூத்திரம் பொருள் தேடப் பிரியும் உரிமை சிறப்பாக வணிகர்க்கே உரியதென்று கூறுகிறது. பொருளீட்டுவதற்காகப் பிரிந்து செல்லும் உரிமை பொதுவாக மற்றவர்களுக்கும் உண்டு என்று சொல்லுகிறது இச்சூத்திரம். வணிகர்க்குள்ள பொருள் தேடப் பிரியும் உரிமை அந்தணர், அரசர், உழுவித் துண்ணும் வேளாளர், உழுதுண்ணும் வேளாளர் ஆகிய நால்வர்க்கும் உரியதாகும் என்பதே இதன் பொருள். இதில் குறிப்பிட்டுள்ள உழுவித்துண்போர் நிலத் தலைவர்கள், உழுதுண்போர் விவசாயிகள். வேளாளர்களிலும் நிலத் தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இது ஆதாரம். ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப் பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே (தொ.பொ.அக. 23) ஆயர் என்பதும் வேட்டுவர் என்பதும் ஆண்களைக் குறிக்கு.ம் திணைப் பெயராகும். அவ்விடங்களிலே வேறு பெயர் குறித்து வரும் தலைவர்களும் உள்ளனர். முல்லை நில மக்கள் ஆயர்; குறிஞ்சி நில மக்கள் வேட்டுவர். இந்த நிலங்களிலே இவர்களை அடக்கி ஆளும் தலைவர்களும் இருந்தனர். இத்தலைவர்கள் குறுநில மன்னர்களாக விளங்கினர்; நிலத் தலைவர்களாக வாழ்ந்தனர். அரசர்க்குரிய கடமை அந்தணர்க்கும் உண்டு என்று தொல்காப்பியர் கூறுவதனால் அவர் காலத்தில் அந்தணர்களில் கூட நிலத்தலைவர்கள் இருந்தனர் என்று நினைக்க இடமுண்டு. தொல்காப்பியர் காலத்தில் நால்வகை நிலங்களிலும் நிலத்தலைவர்கள் இருந்தனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினருள்ளும் நிலக்கிழவர்களும், நிலத்தலைவர்களும் வாழ்ந்தனர். நிலத் தலைமையும் நால்வகை வகுப்புப் பிரிவுகளும் வேறு பல பிரிவுகளும் தமிழர்களிடம் தோன்றியவைகள்தாம். இவ்வுண்மைகளை மேலே கூறியவைகளைக் கொண்டு உணரலாம். ஆண்டான் அடிமை உயர்வு தாழ்வு செல்வமுள்ளவன் சிறந்தவன்; செல்வமற்றவன் தாழ்ந்தவன். நிலக்கிழவன்-அதாவது நிலத்தலைவன் உயர்ந்தவன் நிலத்திலே நெற்றி வேர்வை சிந்தப் பாடுபடும் உழவன் தாழ்ந்தவன். வேலை வாங்கும் தலைவன் உயர்ந்தவன்; வேலை செய்து ஊதியம் பெறும் உழைப்பாளி தாழ்ந்தவன். இந்த முறை தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் நாட்டில் நிலைத்திருந்தது. இன்று உலக மக்களிடையே உயர்வு தாழ்வுகள் நிலைத்திருப்பதற்கும் இம் முறைகளே காரணமாயிருப்பதைக் கண் கூடாகக் காணலாம். மக்களுடைய உயர்வு தாழ்வுக்குப் பொருளாதாரமே காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஔவையாரால் பாடப்பட்டதாக வழங்கும் பிற்காலத்துப் பாடல் ஒன்றும் இவ்வுண்மையை எடுத்துக் காட்டுகின்றது. சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால், நீதிவழுவா நெறிமுறையின், மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதோர் இழிகுலத்தோர்; பட்டாங்கில் உள்ளபடி. சாதிகள் இரண்டுதாம். வேறு சாதிகள் இல்லை சொல்லு மிடத்து நீதி தவறாது முறைப்படி இவ்வுலகில் வறியோர் களுக்குப் பொருள் கொடுப்பவர்கள் பெரியோர்; அதாவது உயர்ந்த சாதியினர். பொருள் கொடுக்காதவர் தாழ்ந்த சாதியினர். இதுதான் நீதி நூல்களில் கூறப்படும் செய்தி. இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இது யார் பாடிய பாட்டாயினும் சரி, எந்தக் காலத்தில் பாடிய பாட்டாயினும் சரி. இந்தப் பாட்டு ஒரு உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. பணம் படைத்தோர்-செல்வம் படைத்தோர் உயர்ந்த சாதியினர். பண மற்ற ஏழைகள் இழிந்த சாதியினர். இதுதான் இப்பாட்டு விளக்கும் உண்மை. கொடுக்கும் சக்தி பணம் படைத்தோரிடந்தான் உண்டு. இல்லாதவர்களிடம் கொடுக்கும் சக்தி எது? தொல்காப்பியர் காலத்திலேயே உள்ளவர் - இல்லாதவர் என்ற உயர்வு தாழ்வுகள் தோன்றிவிட்டன. நிலத்தலைவர் களாகிய மன்னர்கள், குறுநில மன்னர்கள், நிலம் படைத்த வணிகர்கள், நிலம் படைத்த வேளாளர்கள் இவர்கள் எல்லாம் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இல்லாதவர்கள் உள்ளவர் களிடம் அடிமை வேலைகள் செய்து வந்தனர். தாங்கள் செய்யும் வேலைக்கு அவ்வப்பொழுது கூலி பெறும் தொழிலாளர் களாகவும் இருந்து வந்தனர். இவ்வுண்மை இதற்கு முன்னும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொ.பொ.அக.25) என்னும் சூத்திரம், அடிமைத் தொழில் செய்யும் மக்களும் இருந்தனர்; ஏவிய வேலையைச் செய்து அவ்வப்பொழுது கூலி பெறும் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களும் இருந்தனர் என்பதற்கு ஆதரவாகும். ஏவன் மரபின் ஏனோர் (தொ.பொ.அக. 26) பிறரை வேலை வாங்கும் உரிமையுடைய மற்றவர்கள் என்பதனால், வேலை வாங்கும் தலைவர்கள் இருந்தனர்; வேலை செய்யும் தொழிலாளர்கள் இருந்தனர் என்று காணலாம். இரப்பொருள் உயர்வு தாழ்வு இல்லாதவர்களில் கூட முப்பிரிவினர் இருந்தனராம். உள்ளவரைக் காட்டிலும் இழிந்தவர்கள், உள்ளவருக்குச் சமமானவர்கள், உள்ளவரைவிட உயர்ந்தவர்கள். இவைகளே அந்த முப்பிரிவு. ஈதா கொடு எனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே (தொல்.சொல்.எச்ச. 48) ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்று சொற்களும் இரத்தலைக் குறிக்கும் சொற்களாக வரும் இடமும் உண்டு. அவற்றுள் ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே (தொ.சொல்.எச்ச. 49) அந்த மூன்று சொற்களில் ஈ என்ற சொல், இழிந்தோன் உயர்ந்தவர்களிடம் யாசிக்கும் சொல்லாகும். தா வென் கிளவி ஒப்போன் கூற்றே (தொ.சொல்.எச்ச. 50) தா என்னும் சொல் தனக்குச் சமமுள்ளவனிடம் யாசிக்கும் சொல்லாகும். கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே (தொ.சொல்.எச்ச. 51) கொடு என்று கேட்கும் சொல், தன்னைக் காட்டிலும் தாழ்ந்தவர்களிடம் உயர்ந்தவன் யாசிக்கும் சொல்லாகும். தமிழ் நாட்டிலே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஈவோரும் இருந்தனர். இரப்போரும் இருந்தனர். ஈவோருள்ளும் உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஒப்போர் இருந்தனர். இரப்போருள்ளும், உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஒப்போர் இருந்தனர். இக்காலத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவுகளும் நன்றாக வேரூன்றியிருந்திருக்க வேண்டும். இந்த நால்வகை வகுப்பினருள்ளும் உள்ளவர்களும், இல்லாதவர்களும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் தத்தம் வகுப்பினரிடம் பொருள் கேட்கும்போது தா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். தமக்கு மேற்பட்ட வகுப்பினரிடம் யாசிக்கும் போது ஈ யென்று பல்லைக் காட்டியிருக்க வேண்டும். தமக்கு கீழ்ப்பட்ட வகுப்பினரிடம் இரக்கும் போது கொடு என்ற சொல்லைக் கூறியிருக்க வேண்டும். ஆகவே, மக்களுக்குள் ஆளுவோர் - அடிமைகள் உயர்ந்தவர்கள் - தாழ்ந்தவர்கள் என்ற நிலைமை ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் செல்வம் என்பதைக் காணலாம். இவ்வுண்மைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கின்றது. பார்ப்பாரும் அந்தணரும் பார்ப்பார் என்ற சொல்லும், அந்தணர் என்ற சொல்லும் தொல்காப்பியத்திலே வந்திருக்கின்றன. பார்ப்பார் யார்? அந்தணர் யார்? இருவரும் ஒரே வகுப்பினரா? அல்லது வெவ்வேறு வகுப்பினரா? இவை ஆராயத்தக்கவை. பார்ப்பார் வேறு அந்தணர் வேறு, என்று எண்ணுவதற்கே அதிக ஆதரவுண்டு. பார்ப்பார் தமிழர்; அந்தணர் ஆரியர் என்று எண்ணுவோரும் உண்டு. பார்ப்பார் வேறாகத்தான் இருக்க வேண்டும். அந்தணர் வேறாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் பார்ப்பார் தமிழர்; அந்தணர் ஆரியர் என்று கருதுவதற்குப் போதுமான காரணம் இல்லை. அந்தணர் தொழில் நூலே, கரகம், முக்கோல் மணையே, ஆயுங்காலை அந்தணர்க்குரிய (தொ.பொ.மர. 66) முப்புரிநூலும், நீர்க்குண்டானும், முக்கோலும், ஆசனமும் அந்தணர்க்குரிய பொருள்கள் அந்தணர்க்குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமாருளவே (தொ.பொ..ku..98) அந்தணாளர்க்குரிய பொருள்களிலும் அரசர்க்குப் பொருந்திவரும் சில பொருள்களும் உண்டு. அந்தணாளர்க்கு அரசுவரை வின்றே (தொ.பொ.மர.80) அந்தணாளார்க்கு அரசாளும் உரிமையும் உண்டு அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் (தொ.பொ.கற்பு. 5) அந்தணர்களிடத்திலும் சான்றோர்களிடத்திலும் அளவற்ற பெருமையுடையை தேவர்களிடத்திலும் அந்தணர் மறைத்தே (தொ.எழு.பிறப்பு.20) அந்தணர்கள் படிக்கும் வேதத்திலே கூறப்படுகின்றது அந்தணர்கள்தவம்சய்வதற்குஉரியவர்கள்.அரசாள் வதற்கும் தகுதியுடையவர்கள். இல்லறத் தோரால் வணங்கி உபசரிப்பதற்கு ஏற்றவர்கள். வேதங்களைப் படித்தவர்கள். இவைகள் அந்தணரைப்பற்றித் தொல்காப்பியத்தில் கூறப்படுவன. மேலே காட்டிய சூத்திரங்களால் இவற்றைக் காணலாம். அந்தணர்க்கு அறுவகைத் தொழில்கள் உண்டு அத் தொழில்கள் இவை இவை என்பதைச் சாதிப்பிரிவு என்ற பகுதியில் கூறப்பட்டது. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்ற சூத்திரம் அந்தணர்களின் அறுவகைத் தொழில்களைக் குறிப்பதாக அங்கே காட்டப்பட்டிருக்கின்றது. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பது அறுவகைப்பட்ட அந்தணர் பக்கமும் என்றிருப்பதே பொருத்தமாகும். அந்தணர் என்ற சொல் பிற்காலத்தினரால், உரையாசிரியர்களுக்கு முன்பே பார்ப்பன என மாற்றப்பட்டிருக்க வேண்டும். பார்ப்பார் தொழில் தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் தோன்றும்போது அவர்களுடைய ஊடலை நீக்கிக் கூடிவாழச் செய்வதற்குச் சிலர் காரணமாயிருப்பார்கள். அவர்கள் யார் யார்? என்பதைக் குறிக்கிறது ஒரு சூத்திரம் கீழ்வருவதே அச் சூத்திரம். தோழி, தாயே, பார்ப்பான் பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர், யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (தொ.பொ.கற்பு. 52) தலைவனும் தலைவியும் ஊடலை விட்டுக் கூடிவாழ் வதற்குப் பார்ப்பானும் காரணமாயிருப்பான் என்று குறிப் பிட்டிருப்பதைக் காணலாம். ஒரு ஆணும் பெண்ணும் களவு மணவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும்போது அதற்குத் துணைசெய்பவர்கள். துணைசெய்வதற்குத் தகுதியுடையவர்கள் யார் யார் என்பதை விளக்குகிறது மற்றொரு சூத்திரம் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, சீர்த்தகு சிறப்பிற் கிழவன், கிழத்தியொடு அளவியன் மரபின் அறுவகையோரும் களவிற் கிளவிக்கு உரியர் என்பர். (தொ.பொ.செய்.181) பார்ப்பான், தோழன், தோழி, செவிலித்தாய், சிறந்த தலைவன், தலைவி என்ற அளவினையுடைய அறுவகை யினர்தாம் களவுப்புணர்ச்சியிலே குறிப்பிடுவதற்கு உரியவர்கள். பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும் என்று பேராசிரியர் உரை கூறினார். களவு மணத்திலே ஈடுபட்டிருக்கும் தம்பதிகளுக்கு உதவி செய்யும் தொழில் பார்ப்பானுக்கு உண்டு என்பதை இதனால் அறியலாம். காதலனும் காதலியும் வெளிப்படையாக இல்லறம் நடத்தும் கற்பு மணவாழ்க்கையிலே அவர்களுக்குத் துணை செய்பவர்கள் யார் யார் என்பதை இதற்கு அடுத்த சூத்திரம் எடுத்துரைக்கின்றது. பாணன், கூத்தன், விறலி, பரத்தை, யாணம் சான்ற அறிவர், கண்டோர், பேணுதகு சிறப்பின் பார்ப்பான், முதலா முன்னுறக் கிளந்த கிளவியோடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற்குரியர். (தொ.பொ. செய் 182) பாணன், கூத்தன், விறலி, பரத்தை, வருங்காலத்தையும் அறியும் அறிவு நிரம்பிய பெரியோர், பொது மக்கள், பாராட்டத் தகுந்த சிறப்பினையுடைய பார்ப்பான் முதலாக முன்னே கூறப் பட்டவர்களும் பழமையான வழக்கப்படி கற்புமண வாழ்க்கை யின்போது உதவி செய்வதற்கு உரியவர்கள். இதில் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் என்று அடை மொழியுடன் பார்ப்பான் பெயர் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. இல்லறத்திலே வாழ்வோர்க்குத் துணை செய்வது பார்ப்பான் தொழில் என்பதை இச்சூத்திரத்தாலும் காணலாம். பார்ப்பார் செய்யும் வேலைகள் எவை என்பதை விளக்கிக் கூறும் மற்றொரு சூத்திரமும் உண்டு. தலைவனது காம நிலைமையைத் தலைவியிடம் உரைத்தல், தலைவியின் காமநிலைமையைத் தலைவனிடம் சொல்லுதல்; தலைவனும் தலைவியும் ஊடல் நீங்கிக் கூடும் வகையிலே பேசுதல்; தலைவனுடைய எண்ணத்தைக் கண்டறிந்து சொல்லுதல்; பசுவைக்கொண்டு இனி நடக்கப் போகும் நன்மை தீமைகளைக் கூறுதல்; செல்லுதற்குரிய நன்னாள் இன்னதென்று எடுத்துக் காட்டுதல்; இது தீயநாள் என்று சொல்லிச் செலவைத் தடுப்பது இவை போன்ற செயல் களெல்லாம் பார்ப்பார்க் குரியவை. இதனை, காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும், கிழவோன் குறிப்பினை எடுத்துக்கூறலும், ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும், செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும், அன்னவை பிறவும் பார்ப்பார்க்குரிய (தொ.பொ.கற்பு. 36) என்பதனால் அறியலாம். பார்ப்பார் என்பவர்கள், பாணன், கூத்தன், விறலி, பாங்கன், தோழி முதலியவைகளைப்போல் உயர்குடி மக்களாகிய காதலன் காதலிகளின் ஒற்றுமை வாழ்வுக்கு உதவி செய்பவர்கள்; நல்ல நாள் கெட்ட நாள் பார்த்துச் சொல்லுவார்கள்; சகுணம் பார்த்தல், குறி பார்த்தல் முதலியவைகளிலும் தேர்ச்சியுள்ளவர்கள், மேற்கூறியவைகளைக் கொண்டு இவ்வுண்மையை உணரலாம். யாகம் பண்ணாத பார்ப்பார் வகுப்பு ஒன்று தமிழ் நாட்டிலே இருந்தது. அவர்களுடைய தொழில் சங்கறுப்பது. சங்கை அறுத்து வளையல்களும், காதணிகளும் செய்து விற்பனை செய்து வாழ்ந்தனர். இவர்களுக்குச் சங்கறுக்கும் பார்ப்பார் என்று பெயர். வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை................... (அகம். 24) என்ற அகநானூற்றுப்பாடல் இதற்கு ஆதரவு. வேள்வி செய்யாத பார்ப்பான் கூர்மையான அரத்தினால் துண்டித்துச் செய்த வளையல் என்பதே இதன் பொருள். நக்கீரரைப் பற்றிப் பேசப்படும் கதையிலே, சங்கறுப்ப தெங்கள் குலம். சங்கரனாருக்கு ஏதுகுலம் என்று நக்கீரர் பாடியதாக ஒரு பாடலும் வழங்குகிறது. நக்கீரர் என்னும் புலவர் சங்கறுக்கும் பார்ப்பார் மரபைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. மேலே கூறியவைகளைக் கொண்டு பார்ப்பனர் செய்யும் தொழில்கள் எவை என்பதைக் கண்டோம். இருவரும் தமிழரே ஆகவே தமிழர்களிலே அந்தணர் என்பவர்கள் ஒரு வகையினர்; பார்ப்பார் என்பவர்கள் ஒரு வகையினர். இருவரும் வேறு வேறு வகுப்பினர் என்பதைக் காணலாம். பிற்காலத்திலே பார்ப்பாரையும், அந்தணரையும் ஒன்றாகவே கருதிவிட்டனர். அந்தணர்கள் கல்வியறிவிலே வல்லவர்கள். தமிழ் மொழியையும், வடமொழியையும் வேறு பல மொழிகளையும் கற்றவர்கள்; மக்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டி உதவிய தலைவர்கள்; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுடைய நாகரிகம் பெற்ற தமிழர்களிலே முதல் வகுப்பினராயிருந்தவர்கள்; அரசர், வணிகர் வேளாளர் ஆகிய மூவருக்கு உறுதுணையாயிருந்து அரசுக்கும், வணிகத்துக்கும் வேளாண்மைக்கும் உதவி செய்தவர்கள். பார்ப்பார் என்பவர்கள், பாணன், கூத்தன், பாங்கன், தோழி முதலியவர்களைப் போல உயர்ந்த வகுப்பினருக்கு ஊழியஞ் செய்து அவர்கள் உதவி பெற்று வாழ்ந்தவர்கள். அந்தணரும் பார்ப்பாரும் தமிழர் மரபினரே, இவர்களில் யாரும் அந்நியர் அல்லர், அந்தணர் நாகரிகம் பெற்ற நால்வகை வகுப்பைச் சேர்ந்தவர்; பார்ப்பார் அவர்களைக் காட்டிலும் கீழ்ப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தொல்காப்பியத்தைக் கொண்டு நாம் இந்த முடிவுக்குத்தான் வரலாம். ஆயினும் இது இன்னும் நன்றாக ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டிய செய்தி. பார்ப்பார் வேறு, அந்தணர் வேறு என்று கூறும் இக்கூற்று முடிவானதன்று. இவ்வாறு சொல்லுவதற்கு இடமுண்டு; இதற்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது. இதுவே இங்கு எடுத்துக்காட்டப்பட்ட செய்தி. வடமொழி வேதம் தொல்காப்பிய காலத்திலே தமிழ் நாட்டிலே வட மொழியும் வழங்கி வந்தது. தமிழர்களிலே கல்விப் பயிற்சியும் உயர்ந்த ஒழுக்கமும் உடைய அந்தணர்கள் தமிழ்க் கல்வியோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தனர். வடமொழி வேதக் கொள்கைகளும், தமிழர் கொள்கைகளும் வேற்றுமை காண முடியாமல் தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் புகுந்தன. இந்த அளவுக்கு வடமொழி யாளர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது. தொல்காப்பியரும் வடமொழிப் பயிற்சி உள்ளவர். அக்காலத்தில் உயர்ந்த வகுப்பினரும் தாழ்ந்த வகுப்பினரும் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் ஒன்றாகப் பழகியது போலவே, தமிழும், வட மொழியும் வெறுப்பின்றித் தமிழ் நாட்டிலே பரவியிருந்தன. வேதத்தைப் பற்றித் தொல்காப்பியர் தமது நூலிலே குறிப்பிட்டுள்ளார். எழுத்துக்களின் ஒலியைப் பற்றியும் அவை களை உச்சரிக்கும் முறைகளைப் பற்றியும் எழுத்ததிகாரத்தில் பிறப்பியலில் பேசப்படுகிறது. அவ்வியலின் இறுதிச் சூத்திரத்தில் அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே என்று கூறப்பட்டுள்ளது. எழுத்துக்களின் உச்சரிப்பைக் கூட்டியும் குறைத்தும் குற்றமற உச்சரிக்கும் முறைகள் அந்தணர்கள் பயிலும் வேதத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது என்ற கருத்தை அச்சூத்திரம் தெரிவிக்கின்றது. ஒருவனும் ஒருத்தியும் சந்தித்துக் காதல் கொண்டு கலந்து வாழும் களவு மணத்தைப் பற்றிக் கூறும்போது, அதைக் கந்தருவ மணம் போன்றது என்று தொல்காப்பியர் கூறுகிறார். வடமொழி வேதத்திலே சொல்லப்படும் எண்வகை மணங்களிலே கந்தருவ மணம் என்பதும் ஒன்று. கந்தருவ மணமும் களவு மணமும் ஒன்றல்ல. களவு மணமே கற்பு மணமாக மாறுவது. களவில்லாமல் கற்பில்லை. கற்பு மணத்திற்குக் கால்கோளாயிருப்பது களவு மணமேதான். கந்தருவ மணம் இப்படியல்ல. கந்தருவ மணம் செய்து கொண்டவர்கள் பிறகு மணத் தம்பதிகளாய் நீடித்து வாழ்வார்கள் என்று சொல்ல முடியாது. கந்தருவர்கள் என்ற தேவ சாதியினரைச் சேர்ந்த ஒருவனும் ஒருத்தியும் சந்திக்கும் போது காமங்கொண்டு கூடி மகிழ்வார்கள் என்பதை கதை. இதைப் போல ஒருவனும் ஒருத்தியும் சந்தித்துக் காதல் கொண்டு கலந்து மகிழும் அந்த அளவு வரையிலும், அது கந்தருவ மணத்தைப் போன்றது என்பதே தமிழ் நூலாசிரியர்களின் கருத்து. இதைத்தான் தொல்காப்பியரும் தெரிவித்துள்ளார். காமக் கூட்டம் காணுங்காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியலின் முதற் சூத்திரம். ஒருவனும் ஒருத்தியும் தாமே சந்தித்துக் கூடும் காமக் கூட்டத்தைப் பற்றி ஆராயும்போது, அது வேதத்திலே ஓரிடத்திலே கூறப்படும் எண்வகை மணங் களிலே யாழ் வாசிக்கும் திறமையுடைய கந்தருவர்களின் வழக்கத்தைப் போன்ற தாகும் என்பதே இதன் பொருள். எண்வகை மணம் தமிழ் நூல்களில் கூறப்படவில்லை. தமிழர் தங்கள் மணத்தை எட்டுவகையென்று வரையறுத்துக் கொள்ளவும் இல்லை. ஆகையால் இச்சூத்திரத்திலே சொல்லப் படும் மறை என்பது வடமொழி வேதமேதான். தொல்காப்பியர், வேதத்தைக் குறிப்பிடும் மறை என்னும் சொல் வடமொழி வேதம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை இன்றுள்ள இருக்கு, எசுர் சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களா? அல்லது வேறா? இது ஆராய் வதற்குரியது. இன்றுள்ள வேதங்களைத்தான் தொல்காப்பியம் குறிப்பிடு கின்றது. வேறு வேதங்களைக் குறிப்பிடுவதாக எண்ணுவது தவறு என்பர் சிலர். தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் இதற்கு மாறான கருத்தைக் கூறுகிறார். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் வல்லவர். சிறந்த பல நூல்களுக்கு உரை யெழுதியிருப்பவர். தமிழ் நாட்டு அந்தணர் குடியிலே பிறந்தவர். தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திலே காணப்படும் நான்மறை என்னும் சொல்லுக்கு அவர் எழுதியிருக்கும் உரை குறிப்பிடத்தக்கது. நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையால் நான்மறையென்றார். அவை, தைத்திரியமும் பௌடிகமும், தலவகாரமும், சாம வேதமுமாம். இனி, இருக்கும் எசுவும் சாமமும் அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின் இதுதான் நான்மறையைப் பற்றி நச்சினார்க்கினியர் கூறியிருக்கும் விளக்கம். நச்சினார்க்கினியர் குறிப்பிடும் நான்மறைகள் வடமொழி மறைகள் அல்ல. தமிழிலே நான்கு வேதங்கள் இருந்தன. அவை களைத்தான் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார் என்பர் சிலர். தமிழிலே நான்கு வேதங்கள் இருந்தன. அவைகள் கடல் கொண்ட தமிழகத்தில் மறைந்துவிட்டன. தமிழ்க் குடியிலே பிறந்த தொல்காப்பியர் அந்த நான்கு வேதங்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது வெறும் ஊகமேயொழிய உண்மையன்று. தமிழிலே நான்மறைகள் இருந்தனவா என்பதே ஐயத்திற்கு இடமான ஆராய்ச்சியாகும். தொல்காப்பியர்: அந்தணர் மறைத்தே என்று குறித் திருப்பதும், எட்டு வகை மணங்களைக் குறிப்பிட்டிருப்பதுமே அவை வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். ஆகையால் தமிழ் வேதங்கள் என்பது பொருந்தாது. உலகத் தோற்றம் இப்பரந்த உலகம் ஒரு தனிப்பெரும் கடவுளின் படைப்பு. ஒரு பொருள் இருந்தால் அதை ஆக்கிய தலைவன் ஒருவன் இருக்க வேண்டும். எப்பொருளும் தாமே தோன்ற முடியாது. காலந் தவறாமல் பொழுது போவதும், பொழுது விடிவதும், கடவுள் கட்டளையே. சூரியனையோ, சந்திரனையோ யாராலும் உண்டாக்க முடியாது. கடல், மலை, நிலம், மரம், செடி, கொடி வகைகள், மக்கள், விலங்குகள், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன எல்லாம் இறைவன் ஏற்பாடே. இது கடவுள் நம்பிக்கை யுடையவர்களின் கொள்கை மதவாதிகளின் நம்பிக்கை. பழைய புராணங்கள் இக்கொள்கையைத்தான் கூறுகின்றன. இந்த உலகம் எவராலும் உண்டாக்கப்படவில்லை. சூரியனிடமிருந்து தெறித்து விழுந்த ஒரு நெருப்புத்துண்டே இந்த உலகம். இந்த நெருப்புத் துண்டின் மேல்பாகம் ஆறிய பிறகே கடலும், நிலமும் மலைகளும் தோன்றின. எல்லா வுயிர்களும் இயற்கையாகத் தோன்றியவை. நீரிலே தோன்றிய சிற்றுயிர்களே பறவைகளாய், விலங்குகளாய், மக்களாய் மாற்ற மடைந்தன. சூரியனுடைய சுழற்சியினாலேயே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது. இதுவே உலகத் தோற்றத்தைப் பற்றி இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுவது. உலகம் ஒருவருடைய படைப்பும் அன்று. தாமே இயற்கையாகத் தோன்றியது. பல சிற்றணுக்களின் சேர்க்கையே உலகம் இக்கொள்கை யுடையோர் பண்டைக்காலத்திலும் நமது நாட்டிலிருந்தனர். உலகம் கடவுள் படைப்பு அன்று தானே தோன்றியது. மண், நெருப்பு, தண்ணீர், காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள்களும் கலந்து உருவாகியிருப்பதே இவ்வுலகம் இதுவே தொல்காப்பியர் கூறுவது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொ.பொ.மர. 86) இதனால் உலகத் தோற்றத்தைப் பற்றித் தொல்காப்பியர் கருத்து இன்ன தென்று தெளிவாகின்றது. சார்வாக மதம் கடவுள் உண்டென்று ஒப்புக் கொள் வதில்லை. உலகம் ஐம்பூதங்களின் சேர்க்கையால் தாமே தோன்றியதென்பதே சார்வாகர் கொள்கை. சார்வாகம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று இதையே உலோகாயதம் என்று கூறுவர். பிருகஸ்பதியின் மாணவன் சார்வாகன். அவனால் உண்டாக்கப் பட்டதே சார்வாக மதம். புத்தமதம், சமணமதங்களும் உலகம் கடவுள் படைப்பு என்பதை ஒப்புக்கொள்வதில்லை. பூதங்களின் சேர்க்கையே உலகம் என்பதுதான் அம்மதங்களின் கொள்கையும். ஆனால் அவர்கள் நான்கு பூதங்களையே ஒப்புக் கொள்ளுவார்கள். வானத்தை ஒரு பூதமாக அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆதலால் சமணர்களையோ, புத்தர்களையோ பின்பற்றித் தொல்காப்பியனார் இவ்வாறு கூறினார் என்று சொல்ல முடியாது உலகத் தோற்றத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியிருக்கும் கருத்தும், சார்வாகர், புத்தர், சமணர்களின் கருத்தும் ஒன்றுபட்டிருக்கின்றன. இயற்கைத் தோற்றமே உலகம் என்பது தொல்காப்பியர் கருத்து. ஆயினும் தொல்காப்பியம் கடவுளையும்/ வேறு பல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்றே துணிந்து கூறலாம். தெய்வங்கள் தொல்காப்பியர் காலத்திலே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை குடி கொண்டி ருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கினார்கள். தெய்வ நம்பிக்கை யையும், தெய்வ வழிபாட் டையும் பண்டைத் தமிழர் நாகரிகமாகத்தான் கொள்ள வேண்டும். தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவி (bjh.brhš.கிsÉ. 4) தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொற்கள் என்பது இதன் பொருள். மாயோன்மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன்மேய தீம்புனல் உலகமும் வருணன்மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும்படுமே (தொ.பொ.அக. 5) முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன்; குறிஞ்சி நிலத்தின் தெய்வம் சேயோன்; மருதநிலத்தின் தெய்வம், வேந்தன்; நெய்தல் நிலத்தின் தெய்வம், வருணன்; காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை; மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி, நீர்வளம் நிறைந்த ஊரும், ஊரைச்சார்ந்த இடங்களும் மருதம்; கடற் கரையும், கடற் கரையைச்சார்ந்த இடமும் நெய்தல். பண்டைத் தமிழர்கள் நிலத்தை இவ்வாறு நான்கு வகை யாகவே பிரித்தனர். இந்தக் காரணத்தாலேயே உலகத்திற்கு நானிலம் என்ற பெயரும் எழுந்தது. நான்கு வகையான நிலம்-நானிலம், நான்கு, நிலம் என்ற இரண்டு சொற்களே நானிலமாயிற்று. பிற்காலத்தினர் பாலை நிலம் என்ற ஒரு பகுதியைத் தனி நிலமாகச் சேர்த்துக் கொண்டனர். பாலையைச் சேர்த்து நிலத்தை ஐவகையென்று அறைந்தனர். பாலை தனி நிலமன்று. மழையின்றி - நீரின்றி வறட்சியும், கதிரவன் கொடுமையும் எந்த நிலத்தில் காணப்பட்டாலும் அப்பகுதி பாலை நிலமாகும். இதுவே தொல்காப்பியர் கருத்து. இக்காரணத்தால் பாலைக்குத் தனி நிலமும், தனித் தெய்வமும் தொல்காப்பியரால் சொல்லப் படவில்லை. ஆயினும் மற்ற நிலங்களைப்பற்றிய செய்திகளைச் சொல்வது போலவே பாலைநிலத்தின் செய்திகளையும் கூறகிறார். இதுபற்றி முன்னும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலத்தின் இயற்கையையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கையும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளையும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பகுதிகளாக்கிக் கூறுகிறார் தொல்காப்பியர். இந்த மூன்றனுள் கருப்பொருள்தான் முதன்மையானது. மக்கள் வணங்கும் தெய்வம், அவர்கள் உண்ணும் உணவு, அவர்கள் வாழும் நிலத்தில் உள்ள விலங்குகள், பறவைகள், அங்கே வளர்ந்திருக்கும் மரங்கள், அந்த நிலத்து மக்கள் அடிக்கும் பறைகள், அவர்கள் செய்யும் தொழில்கள், அவர்கள் பொழுது போக்குக்காக வாசித்து மகிழும் யாழ் இவை போன்றவை கருப்பொருள். கருப்பொருள்கள் எல்லா நிலங்களிலும் உண்டு. நிலங்களுக்குத் தக்கவாறு தெய்வம், உணவு, விலங்கு, பறவை, மரம், தொழில், யாழ் முதலியவை வேறுவேறாக மாறுபட்டிருக்கும். தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொ.பொ.அக.18) கருப்பொருள்கள் எவை என்பதைக் கூறும் சூத்திரம் இது. ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய இன்றியமையாத கருப் பொருள்களிலே தெய்வம் முதலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டிலே இன்றும் பலவகைப்பட்ட தெய்வ வணக்கங்களையும், திருவிழாக்களையும் பார்க்கின்றோம். தெய்வத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, கையில், வேல்; சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி ஆவேசங் கொண்டு ஆடுகின்றனர். காளி, மாரி, வீரன், காடன், மாடன் என்ற பல பெயர்களைக் கொண்ட கோவில்களிலே இத்தகைய ஆவேச ஆட்டங்கள் இன்றும் நடைபெறுகின்றன. இப்படி ஆடுகின்ற ஆவேசக்காரர்களின் மேல் தெய்வமே வந்து ஏறியிருப்பதாகப் பாமர மக்கள் நம்புகின்றனர். இவர்களிடம் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லிப் பரிகாரம் கேட்கின்றனர். இது போன்ற நம்பிக்கைகளும். நிகழ்ச்சிகளும் தொல்காப்பிய காலத் தமிழர் களிடமும் இருந்தன. இதனை வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் (தொ.பொ.புற.5) என்ற சூத்திரத்தால் காணலாம். கொல்லுந் தன்மையுள்ள கூர்மையான வேலைத் தாங்கியிருப்பவன் வேலன். அவன் தெய்வத்தின் கோபத்தை அறிந்து அதைத் திருப்தி செய்யும் சிறப்புள்ளவன். அவன் காந்தள் மலர் மாலையைப் பூண்டு ஆவேசங் கொண்டு ஆடுவான். இப்படி ஆடும் நிகழ்ச்சிக்குக் காந்தள் என்று பெயர். அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்தது. இதைப் பூவைநிலை என்று கூறுகிறார் தொல்காப்பியர். இதனை, மாயோன் மேய மன்பெரும் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவைநிலையும் (தொல்.பொ.புற.5) என்பதனாற் காணலாம். மாயோனாகிய திருமாலுக்குரிய நிலைத்த பெருமையையும், அழியாத புகழையும் மன்னனோடு இணைத்துப் பாராட்டும் பூவை நிலையும் என்பது இதன் பொருள். போரிலே வெற்றியைப் பெற்றபின் போர் வீரர்கள் கொற்ற வைக்குப் பலியிட்டு வணங்குவார்கள். போரிலே வெற்றியடை வதற்குத் துணை செய்யும் தெய்வத்திற்குக் கொற்றவை என்று பெயர். கொற்றவைக்குப் பலியிட்டு வணங்குவதைக் கொற்றவை நிலை என்று குறிக்கின்றது தொல்காப்பியம். இதனை, மறம்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொ. பொ.புற.4) என்ற சூத்திரத்தாற் காணலாம். வீரத்தினால் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் துடிநிலையும். அவ்வெற்றிக்குத் துணைசெய்த சிறந்த கொற்றவை என்னும் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்தி வணங்கும் கொற்றவை நிலையும் வெட்சித் திணையை ஒட்டியதாகும் என்பதே இதன் பொருள். மேலே காட்டிய காந்தள் நிலை, பூவை நிலை, கொற்றவை நிலை என்பவை முறையே முருகனையும், திருமாலையும், காளியையும் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத்திலே, தமிழ்நாட்டிலே சூரியனையும், சந்திரனையும், அக்கினியையும் தெய்வமாக வணங்கி வந்தனர். இவ்வழக்கம் தொல்காப்பியருக்கு முன்பே இருந்தது. வடமொழி வேதங்களிலே சூரிய, சந்திர அக்கினி வணக்கப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இவ்வகையிலே வடமொழியின் போக்கும், தமிழ் மொழியின் போக்கும் ஒத்திருக்கின்றன. இதனைக் கொடி நிலை என்று தொடங்கும் கீழ்வரும் சூத்திரத்தால் காணலாம். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொ.பொ.புற. 27) சூரியன், நெருப்பு, சந்திரன் என்ற மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வரும் என்பதே இச்சூத்திரத்தின் பொருள். கொடிநிலை-உச்சியில் நிற்பது; சூரியன். கந்தழி-பற்றுக் கோட்டை அழிப்பது; நெருப்பு. வள்ளி-குளிர்ச்சியைத் தருவது; சந்திரன். தெய்வம் வாழ்த்தலும் (தொ.பொ.கள.24) ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் (தொ.பொ.கற்பு.5) தெய்வம் அஞ்சல் (தொ.பொ.மெய்.24) தேவர்ப்பராய முன்னிலை (தொ.பொ.செய்.133) இவைகள் எல்லாம் பண்டைத் தமிழர்களிடம் பல தெய்வ வணக்க முறை இருந்தது என்பதையே காட்டுகின்றன. கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்து நிற்பது; குணம் குறியற்றது; மனம் மொழி மெய்களுக்கு எட்டாதது என்று பொருள் கூறுகின்றனர். கடவுள்-கடந்து நிற்பது. பொருளும் சரியாகத்தான் காணப்படுகின்றது. ஆனால் தொல்காப்பியத்தில் வழங்கும் கடவுள் என்ற சொல் இப்பொருளில் வழங்கப்படவில்லை. தேவர்கள் என்ற பொருளில்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (தொ.பொ.புற.23) காமப் பகுதியிலிருந்து கடவுளையும் நீக்கமாட்டார்கள். மக்கள் சார்பிலும் காமப்பகுதியை நீக்க மாட்டார்கள் என்று கூறுவர் புலவர் என்பதே இதன் பொருள். மக்களிடம் காணப்படும் காம சம்பந்தமான-காதல் சம்பந்த மான நிகழ்ச்சிகள் தேவர்களிடமும் காணப்படும். என்பதே இதன் கருத்து. இங்கே கடவுள் என்னும் சொல் தேவர்களையே குறிக்கின்றது. தேவர்களுக்கென்று தனியுலகம் உண்டென்பதே தொல் காப்பியர் கருத்து. இமையோர் தேயத்தும் எறிகடல் வரைப்பினும் (தொ.பொ.பொருள். 53) தேவர்கள் வாழும் உலகிலும், கடல் பொருந்திய மண்ணுலகிலும் என்பதே இதன் பொருள். தொல்காப்பியர் காலத்திலே, திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலியவர்கள் தெய்வங்களாக வணங்கப்பட்டனர். இன்னும், கூற்றுவன், தேவர்கள், பேய் பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ் நாட்டிலிருந்தது; தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று; போதிக்கப் பட்டதும் அன்று. வீரர்களுக்குக் கல்நட்டு, அவர்களைத் தெய்வம் போல் எண்ணி வணங்கும் வழக்கமும் தமிழ் நாட்டிலிருந்தது. இதனை விக்கிர வணக்கப் பகுதியிலே காணலாம். நால்வகை நிலங்களுக்கும் தெய்வங்களாகக் குறிக்கப்பட்டி ருப்பவர்களும், அந்த நிலத்திலே வாழ்ந்த சிறந்த வீரர்களாக இருந்திருக்கலாம். விக்கிரக வணக்கம் கடவுள் எங்கும் நிறைந்தவர். அவருக்கு ஓர் உருவமும் இல்லை. உருவம் உள்ளவர் கடவுள் ஆகமாட்டார். ஆண்ட வனுக்கு உருவம் வைத்து வணங்குவதை விட அறியாமை வேறொன்றுமில்லை என்று சில மதவாதிகள் கூறுகின்றனர். மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உள்ள அறிஞர்களும் இதை ஒப்புக்கொள்ளுகின்றனர். சித்தர்கள் என்ற பெயருடைய தமிழர்களும் உருவ வணக்கத்தை வெறுத்தனர். சித்தர்கள் என்றால் அறிஞர்கள் என்று பொருள், கல்லாலும், செம்பாலும், உருவம் செய்து வைத்துக் கடவுளை வணங்குவதிலே பொருளில்லையென்று புகன்றனர். கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே என்பது ஒரு அறிஞர் கூற்று. பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறு களிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்க முறை ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். போரிலே வீரச்செயல் புரிந்து மறைந்துபோன வீரர் களுக்குக் கல்நட்டு வணங்கும் வழக்கம் தமிழ்நாட்டிலே இருந்தது. வீரர்களின் நினைவுக்குறியாக நடப்பட்ட கல்லில் அவ்வீரர்கள் குடி கொண்டிருப்பதாகவே கருதினர். அந்தக் கற்களுக்குப் படையலிட்டு வணங்கி வழிபாடு செய்தனர். விழாவெடுத்துக் கொண்டாடினர். இது தமிழர்களின் பழமையான வழக்கம். இந்த வழக்கமே தமிழ்நாட்டில் விக்கிரக வணக்கத்தை வளர்த்தது. இக்காலத்திலும் உருவம் செதுக்கப்படாத வெறுங்கற்கள் கடவுளர்களின் பிரதிநிதிகளாகக் காட்சியளிப்பதைக் காணலாம். தமிழ் நாட்டில் பல பகுதிகளிலே வெறும் கற்களை நட்டு, அவைகளுக்குக் காடன், மாடன், வீரன், சூரன் என்று பெயர் வைத்து வணங்கும் வழக்கத்தை இன்றும் பார்க்கிறோம். இது தமிழர்களின் பரம்பரை வழக்கம். இறந்த வீரர்களுக்குக் கல் நாட்டி வணங்கும் முறையைத் தொல்காப்பியம் விளக்கமாகக் கூறுகின்றது. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு மரபில் பெரும்படை, வாழ்த்தல் என்று இருமூன்றுமரபின் கல்லொடுபுணர (தொ.பொ.புற.5) காட்சி-கல்லைத் தேர்ந்தெடுத்தல்; கால்கோள்-அந்தக் கல்லை நடுவதற்கான ஆரம்பவிழாச் செய்தல்; நீர்ப்படை-அந்தக் கல்லைத் தண்ணீரிலே போட்டுச் சுத்தம் செய்தல்; நடுகல்-பிறகு அந்தக் கல்லை நடுதல்; சீர்த்தகு சிறப்பில் பெரும்படை-மிகச் சிறப்பாகப் படைவீரர்கள் அந்தக் கல்லுக்கு மரியாதை செலுத்துதல்; வாழ்த்தல்-எல்லோருங் கூடி அந்தக்கல்லிலே இறந்த வீரனுடைய ஆவி குடி கொண்டிருப்பதாக எண்ணி, வாழ்த்தி வணங்குதல். தமிழர்கள் வெகு காலமாக வெறுங் கல்லை நட்டுத் தெய்வமாக வணங்கினார்கள். சிற்பத் தொழிலிலே தேர்ந்தபின் மாண்டவர்களின் உருவங்களை மரத்திலும் கல்லிலும் செதுக்கக் கற்றுக்கொண்டனர். அந்த உருவங்களை வைத்துத் தெய்வமாக வழிபாடு செய்தனர். முதலிலே மரத்தடிகளிலே இவ்வுருவங் களை வைத்து வணங்கினார்கள். பிறகு அவைகளுக்குக் கோயில்கள் கட்டத் தொடங்கினர். உலகங் கண்டு வியக்கும்படி தமிழர்கள் சிற்பக்கலையிலே சிறப்படைந்ததற்கு இந்தக்கல் நாட்டும் வழக்கமே காரணமாயிருந்தது. இதைத் தவறு என்று மறுத்து விட முடியாது. வீரர்களுக்குக் கல்நாட்டிக் கொண்டாடிய இந்தப் பழக்கத்தி லிருந்துதான் பத்தினிப் பெண்டிர்க்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் முறையும் பிறந்தது. அறிஞர்களுக்கும் துறவிகளுக்கும் கல்நாட்டி வணங்கும் வழக்கமும் பிறந்தது. இன்று தமிழ் நாட்டிலே மூலை முடுக்குகளில் எல்லாம் எண்ணற்ற பல கற்சிலைகள் காணப்படுகின்றன. அவைகள் சித்திர வேலைப் பாடுகளுடன் சிறந்து விளங்குகின்றன. உயிருள்ளவைபோலவே பல சிலைகள் காட்சியளிக்கின்றன. இதற்கு காரணம் வீரர் களுக்குக் கல்நாட்டும் வழக்கம்தான். இவ்வழக்கமே தமிழர்களைச் சிற்பக்கலையிலே சிறப்படையும்படி செய்தது. உயிரும் உடலும் தொல்காப்பிய காலத்திலே தமிழ்நாட்டிலே இருந்த மதம் என்ன? ஒரே மதம் இருந்ததா? பலமதங்கள் இருந்தனவா? தமிழர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? ஒரே மதந்தான் அக்காலத்தில் இருந்ததென்றால் அந்த மதத்தின் பெயர் என்ன? அதன் கொள்கை என்ன? பலமதங்கள் இருந்தனவென்றால் அவைகளின் பெயர்கள் யாவை? அவைகளின் தத்துவங்கள் எவை? தமிழர்கள் பின்பற்றிய மதத்தின் கொள்கை என்ன? தொல்காப்பியத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது இக்கேள்வி கள் எழுவது இயற்கை. இக்கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் தொல்காப்பியர் காலத்தில் இன்று வழங்கும் பெயருள்ள எந்த மதமும் இல்லை என்பதுதான். தெய்வ நம்பிக்கையும், தெய்வ வழிபாடும் மக்களிடம் வேரூன்றி நிலைத்த நெடுங்காலத்திற்குப் பின்னரே மதங்கள் தோன்றின. தாங்கள் நம்பிய எல்லாத் தெய்வங்களையும் பேதா பேதமின்றி மக்கள் வணங்கிய முறையிலே மாற்றம் ஏற்பட்டது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தையோ, அல்லது குறிப்பிட்ட சில தெய்வங்களையோ வணங்கத் தொடங்கினர். இவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களே உயர்ந்தவை; ஆக்கவும், காக்கவும், அழிக்கவும், ஆற்றலுடை யவை; என்று தங்களுக்குள் வாதம் புரியத் தொடங்கினர். இவ்வாதம் வலுப் பெற்ற காலத்தில்தான் தங்கள் தெய்வமே உயர்ந்ததென்று உரைக்கும் மதங்கள் தோன்றின. இதன் பிறகுதான் மதத் தத்துவங்கள் பலவாறாகப் பெருகி வளர்ந்தன. இன்றுள்ள மதங்கள், மதத் தத்துவங்கள் எல்லாம் பிறப்பதற்குமுன்பே தோன்றியது தொல்காப்பியம். ஆதலால் தான் எந்த மதத்தைப் பற்றிய குறிப்பும் அதில் காணப்பட வில்லை. ஆனால் மதங்கள் பிறப்பதற்கு அடிப்படையான தத்துவங்கள் மட்டும் தொல்காப்பியத் தமிழர்களிடம் தோன்றியிருந்தன. ஆன்ம விசாரணையும் நாகரிகச் சின்னமே உயிர் வேறு, உடல் வேறு என்ற நம்பிக்கை தொல்காப்பியத் தமிழர்களிடம் குடிகொண்டிருந்தது. ஆன்மா வேறு, சரீரம் வேறு என்ற நம்பிக்கைதான் மதத் தத்துவங்களுக்கு இருப்பிடம். ஊழ்வினை உண்டென்ற கொள்கையும் அக்காலத்தில் ஊன்றி யிருந்தது. உயிர் வேறு, உடல் வேறு என்ற எண்ணமோ, இவை களைப் பற்றிய சிந்தனையோ நாகரிகமற்ற மக்களிடம் உண்டாவதில்லை. உடலைப்பற்றிய சிந்தனையும், உயிரைப் பற்றிய எண்ணமும் காட்டுமிராண்டிகளிடம் இல்லை. ஆராயும் அறிவுபெற்ற மக்களிடம்தான் இச்சிந்தனை தோன்றும். ஆன்ம விசாரணை ஒரு நாகரிகச் சின்னம். நாம் எப்படிப் பிறக்கிறோம். எப்படி வாழ்கிறோம்? நாம் இறந்த பின் எங்கே போகிறோம்? நாம் என்பது என்ன? செத்துப் போன உடலுக்கு இயக்கம் இல்லை. இயங்கிக் கொண்டிருக்கும் உடலிலிருந்து ஏதோ ஒரு பொருள் வெளியேறி விட்டது. இதனால் தான் உடல் நடமாட முடியாமல் பிணமாகிவிட்டது. இப்படி யெல்லாம் சிந்திக்கும் எண்ணம் நாகரிகமுடைய மக்களிடையிலே தான் தோன்றும். இன்றுள்ள இயற்கையராய்ச்சியும், விஞ்ஞான ஆராய்ச்சியும் பண்டைக் காலத்தில் இல்லை. ஆகையால் அவர்கள், மக்கள் பிறப்பதையும் இயங்குவதை யும் இறப்பதையும் வைத்துக்கொண்டு உயிர் வேறு உடல் வேறு என்று முடிவு கட்டினர். இன்றுள்ள பழைய மதங்கள் எல்லாம் உடல் வேறு, அதை நடமாடச் செய்யும் உயிர் வேறு, உயிரையும் உடலையும் இணைக்கும் சக்தி வேறு, என்ற அடிப்படையின் மேல் கட்டப்பட்டிருப்பவைகள்தாம். உடம்பை நடமாடச் செய்யும் உயிர் ஒரு தனிப்பொருள் என்பதே தொல் காப்பிய காலத் தமிழர் கொள்கை. எழுத்துக் களை உயிர் எழுத்துக்கள், மெய் யெழுத்துக்கள், உயிர்மெய் யெழுத்துக்கள் என்று பிரித்திருப்பதற்கு இக் கொள்கைதான் அடிப்படை. தாமே தனித்து ஓசை பெற்று இயங்கும் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள். உயிரெழுத்தின் உதவியில்லாவிட்டால் இயங்க முடியாத எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள். உயிரும் மெய்யும் சேர்ந்து இயங்கும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள். காலம், உலகம், உயிரே, உடம்பே (bjh.brhš.கிsÉ.58) சென்ற உயிரின் நின்ற யாக்கை (தொ.பொ.புறத் 13) உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் (தொ.பொ.பொருளி.8) இவ்வாறு ஆன்மா வேறு, உடல் வேறு என்பதைக் குறிக்கும் சூத்திரங்கள் பல தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. ஊழ்வினை நம்பிக்கை ஊழ்வினை அதாவது பிராரத்வகர்மம் உண்டு என்பதும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்களின் கொள்கை. ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காதல் கொள்ளுவதற்குக் காரணம் ஊழ்வினைதான். அவர்களுடைய ஊழ்வினைதான் அவர்களைச் சந்திக்கச் செய்கின்றது. இதுவே தொல்காப்பியர் கருத்து இதனை, ஒன்றே வேறே என்று இருபால் வயின், ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப, மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே (தொ.பொ.கள. 2) என்ற களவியல் சூத்திரத்தால் காணலாம். ஒத்த அழகும், ஒத்த பருவமும் உள்ள ஒரு ஆண், ஒரு பெண், இவர்கள் இருவரும் ஒரே நிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். வேறு வேறு நிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஊழ்வினையின் கட்டளைப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொள்ளுவர். பெண்ணைக் காட்டிலும் ஆண் சிறந்தவனாயி ருந்தாலும் குற்றமில்லை. இதுவே இச்சூத்திரத்தின் பொருள். தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் 58-வது சூத்திரத்தில் பால் வரை தெய்வம் என்று ஊழ்வினையைக் குறித்திருப்பதும் நினைவு கூரத் தக்கது. மேலே கூறியவைகளால், தொல்காப்பிய காலத்திலே தமிழ் நாட்டிலே இன்றுள்ள எந்த மதங்களும் இல்லை; வேறு எந்தப் பெயருடைய மதமும் இருந்ததில்லை. மதங்களுக்கு அடிப்படையான உயிர், உடல், ஊழ்வினைக் கொள்கை மட்டும் இருந்தன. இதுவே நாம் காணும் உண்மை. கலை வளர்ச்சி தொல்காப்பியர் காலத்திலே தமிழ் நாட்டிலே பல கலை களும் சிறந்து வளர்ந்திருந்தன. இக்காலத்தினர், நாடகம், சங்கீதம், நடனம் போன்றவை களையே கலைகள் என்று கருதுகின்றனர். கற்றுக்கொள்ளப்படுவனவெல்லாம் கலைகள். நாம் அணியும் ஆடைக்குக் கலையென்றே ஒரு பெயர். ஆகவே நெசவும் ஒரு கலை. மக்கள் வாழ்வுக்குத் துணை செய்யும் தொழில்கள் யாவும் கலைகள்தாம். இதுவே பண்டைத் தமிழர்கள் கொள்கை. அறுபத்து நான்கு கலைகள் என்று சொல்லப்படுகின்றன. இந்த அறுபத்துநான்கு கலைகளும் அறுபத்துநான்கு தொழில்கள். இந்த அறுபத்துநான்கு தொழில்கள் இவைகள் என்பதை சுக்கிரநீதியென்னும் வடமொழி நூலிலே காணலாம். கூத்தும் பாட்டும் சங்கீதம், நடனம், நாடகம் இவைகளையே உயிர் வாழ்க் கைக்குரிய தொழிலாகக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் இத்தொழில் களைச் செய்து வாழும் தனி வகுப்பினராகவே வாழ்ந்தனர். கூத்தர் என்பவர் ஒரு பிரிவினர் இவர்களுடைய தொழில் கூத்து. குதித்தல்-கூத்து. கூத்தில் இரண்டு வகையுண்டு. கதை தழுவிய கூத்து; கதை தழுவாமல் பாட்டின் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தாடும் நாட்டியம். இருவகைக் கூத்துக் களையும் நடத்திக்காட்ட வல்லவர்களே கூத்தர்கள். இன்றும் கூத்தாடி என்ற ஒரு வகுப்பினர் தமிழ் நாட்டில் இருக்கின்றனர். பல கோயில்களிலே திருவிழாக்களின் முடிவிலே கூத்தாடுவார்கள். பல கோயில்கள் இவர்கட்குக் காணியாட்சியாக உண்டு. இவர்கள் பண்டைக் கூத்தர் வழியினராக இருக்கலாம். பாணர் என்பவர் மற்றொரு பிரிவினர். பாண்-யாழ் பண்ணிலிருந்தே பாண் பிறந்தது. பண்-இசை. பண்ணாகிய இசையைத்தரும் கருவியைப் பாண் என்று வழங்கியிருக்கலாம். பாண் வாசிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் பாணர்கள். யாழின் மூலம் இசை விருந்தளிப்பதில் இவர்கள் வல்லவர்கள். இவர்களிள் பெண்களைப் பாடினி என்று அழைப்பது வழக்கம். பாணர் வீட்டுப் பெண்கள் வாய்ப்பாட்டில் வல்லவராயிருந்தனர். இதனால்தான் ஆண்களைப் பாணர் என்றும், பெண்களைப் பாடினி என்றும் அழைத்திருக்கின்றனர். பொருநர் என்பவர் மற்றொரு பிரிவினர். இவர்களிலே ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடு வோர் எனப் பலவகையினர் உண்டு என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார். ஏர்க்களம் பாடுதல்: ஏருழுது விளைந்த தானியத்தைத் குவிக்கும் இடத்தையும் அவ்விடத்திற்குரிய வணிகர், வேளாளர், குறுநிலமன்னர் போன்றோரையும் புகழ்ந்து பாடுதல். போர்க்களம் பாடுதல்-போர்க்களத்தைப் புகழ்ந்து பாடுதல்: பரணி பாடுதல்-வெற்றிபெற்ற அரசனுடைய பெருமையைச் சிறப்பித்துப் பாடுதல். இவ்வாறு பிறரை ஏற்றிப் புகழ்ந்து வாழ்க்கை நடத்துவோர்க்குப் பொருநர் என்று பெயர். இவர்களைச் சேர்ந்த பெண்களுக்கு விறலியர் என்று பெயர். விறல்-வெற்றி; திறமை. இசை, நடனம் முதலியவைகளிலே திறமையுடையவர்கள். கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பினராகவும் இருக்கலாம். ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களிலே சிலர் கூத்துப் பழகியவர்கள்; சிலர் யாழ் போன்ற வாத்தியங்கள் வாசிப்பதிலே வல்லவர்கள்; சிலர் போர்க்களம், ஏர்க்களம், பரணி பாடுவதிலே சிறந்தவர்கள், இவ்வாறு இருந்திருக்கலாம். இவர்களுக்குச் சாதிப் பாகுபாடு இல்லை என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர். இத்தகைய இசைக்கலை, நாடகக்கலையைத் தொழிலாகக் கொண்ட ஒரு வகுப்பினர் தொல்காப்பிய காலத்திலேயே தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொ.பொ.புற. 30) ஆடுவதிலே தேர்ந்த கூத்தரும் பாடுவதிலே சிறந்த பாணரும், புகழ் கூறுவதிலே வல்ல பொருநரும், எல்லாவற்றிலும் தேர்ந்த விறலியும் ஆகிய இந்த நால்வரும், வழியிலே தம் கண்ணெதிரே தோன்றிய வறியோர்க்கு, தாம் யாரிடத்திலே செல்வம் பெற்றோம் என்பதைக் கூறி, அவரிடத்திலே சென்று செல்வம் பெறும்படி கூறிய பகுதியும்- என்பதே இதன் பொருள். இதனால் இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை வளர்ச்சியைக் காணலாம். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் (தொ.பொ.அக. 56) நாடக வழக்கம் என்பது புனைந்துரைக் கதையை நாடகமாக நடத்துவது. இல்லாதவனைத் தலைவனாக-அதாவது கதாநாயகனாக வைத்து, மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பல நிகழ்ச்சிகளைச் சேர்த்து எழுதி நடிக்கப்படுவதே நாடகமாகும். உலகியல் வழக்கம்-உலகிலே நடைபெறும் உண்மை நிகழ்ச்சி களைக் கூறுவது. நாடக வழக்கத்தைப் பின்பற்றிப் பாடல்கள் பாடுவதும், உலகியல் வழக்கத்தை அமைத்துப் பாடல்கள் பாடுவதும் பண்டைத் தமிழர்கள் வழக்கம். சிற்பக் கலை தமிழ் நாடு சிற்பக் கலையிலே சிறப்புற்ற காலம் எது என்பதை அளவிட் டுரைக்க முடியாது. தொல்காப்பியம் தோன்று வதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்கள் சிற்பக்கலையிலே சிறந்து விளங்கினர். மாட, மாளிகைகளையும், கூட கோபுரங் களையும் கண்கவரும் வனப்புடன் கட்டியிருந்தனர். கட்டிடக் கலையிலே தமிழர்கள் தலை சிறந்து விளங்கினர். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் (தொ.பொ.புற.8) எல்லாப் பாதுகாப்பும் அமைந்த கோட்டைச் சுவரை முற்றுகையிடுவதும், கைப் பற்றுவதும், முழு முதல் அரணம் எல்லாவகையான பாதுகாப்பும் பொருந்திய கோட்டைச் சுவர். தொல் லெயிற்று இவர்தல் (தொ.பொ.புற. 10) பழமையான கோட்டைச் சுவரை அழிக்க விரும்புதல் ஆர் எயில் (தொ.பொ.புற. 10) அரிய வேலைப்பாடுகள் அமைந்த மதில். பண்டைக் காலத்திலே நகரங்களும் அமைந்திருந்தன. நகருக்குப் பாது காப்பாக நகரைச் சுற்றிச் சுவர் எழுப்பியிருந் தனர். பகைவர்களாலும், விலங்கு களாலும் பயமில்லாமல் மக்கள் வாழ்வதற்காகவே அச்சுவர்கள் எழுப்பப்பட்டன. அச்சுவர்களை ஒட்டி ஆழமான பள்ளம் வெட்டி அதிலே நீரை நிரப்பியிருந்தனர். இதற்கு அகழி என்று பெயர். இதனை, அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் (தொ.பொ.பற. 11) என்பதனாற் காணலாம். பகையரசன் வெளியிலே கோட்டையை முற்றுகையிட்ட போது, உள்ளிருக்கும் மன்னன் நொச்சியணிந்து, கோட்டையைப் பாதுகாப்பான். இதுவே நொச்சி. அகழியின் இரு கரைகளிலும் நின்று பகையரசர்கள் போர் செய்வதற்குப் பாசியென்று பெயர். நீரிலே படர்ந்திருக்கும் பாசி காற்றினால் விலகும்; பின்னர் கூடும். இதுபோல் படைவீரர்கள் விலகியும், நெருங்கியும் நின்று போர் செய்வார்கள். வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் (தொ.பொ.புற.7) வருகின்ற வேகமுடைய வெள்ளத்தைக் கல்லணைதேக்கி நிற்பது போல், எதிரியின் படையைத் தான் ஒருவனே நின்று தடுத்து தன் படைக்குச் சேதம் வராமல் காப்பாற்றிய பெருமையாலும். ஆறுகளுக்குக் கல்லணை கட்டித் தண்ணீரைத் தேக்கி அந்நீரை வயல் களுக்குப் பாய்ச்சிப் பயிர்செய்யும் வழக்கம் பண்டைத் தமிழர் காலத்தில் இருந்தது. உலோகப் பொருள்கள் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் நாட்டில் இரும்பு பொன் முதலிய உலோகங்கள் வழக்கத்திலிருந்தன. அவைகளால் ஆயுதங்களும், அணிகளும் செய்தனர். இரும்பைக் கண்டெடுத்து ஆயுதங்கள் செய்ய அறிந்த பிறகுதான் மக்களுடைய நாகரிகம் வளர்ச்சியடைந்தது. வாள் என்னும் ஆயுதம் சிறந்த போர்க்கருவிகளிலே ஒன்று இது இரும்பி னால் செய்யப்பட்டதாகும். வள் மலைந்து எழுந்தோன் (தொ.பொ. புற. 5) வாளோர் ஆடும் அமலை ஒள்வாள் வீசிய நூழில் (தொ.பொ.புற. 14) அம்பு, வேல் முதலிய ஆயுதங்களையும் அக்காலத்தினர் போர்க் கருவி களாகப் பயன்படுத்தினர். இவைகளும் இரும்பினாற் செய்யப்பட்டவைகள் தாம். கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொ.பொ.புற. 13) வேல்மிகு வேந்தன் (தொ.பொ.புற. 14) பகைதாங்கும் வேல் (தொ.பொ.புற. 17) தொல்காப்பிய காலத்தில் பொன்னும் செல்வத்திலே சிறந்த பொருளாக வழக்கத்திலுருந்தது அதைச் செல்வப் பொருளாகவும் சேமித்துப் போற்றினார்கள்; அதனால் ஆபரணங்கள் செய்தும் அழகுக்காக அணிந்தனர். பொற்பே பொலிவு என்பது உரியியல் சூத்திரம். பொன் என்ற சொல்லிலிருந்தே பொற்பு என்னும் சொல் பிறந்தது. பொன் என்றும் மங்காத எழிலும் ஒளியும் உடையது. பொன்னிலிருந்து தோன்றிய பொற்பு என்னும் சொல்லுக்கு ஒளி என்று பொருள் உரைத்தார் தொல்காப்பியர். காதொன்று களைதல் அணிந்தவை திருத்தல் (தொ.பொ.மெய். 14) இழையே (தொ.பொ.கள. 4) இவைகள் அணிந்துகொள்ளும் ஆபரணங்களைக் குறிக் கின்றன. காதென்று களைதல்-காதில் அணிந்துள்ள தோட்டை நழுவவிடல். அணிந்தவை திருத்தல்-அணிந்திருக்கும் ஆபரணங் களைச் சரியாகத் திருத்தல். இழை-பொன்னால் செய்யப்பட்டது. இவைகளாலும், அரசர்க்கு முடி முதலியன கூறப்படு வதாலும் பொன்னால் அரிய வேலைப்பாடுகள் அமைந்த அணிகலன்கள் செய்யுந் தொழிலும்-கலையும் தமிழ்நாட்டில் சிறந்திருந்த செய்தியைக் காணலாம். உடைபெயர்த்து உடுத்தல் (தொ.பொ.மெய். 14) இதனால் நெய்யுந் தொழிலும் தொல்காப்பியர் காலத்தில் நிலைத்திருந்தது என்பதைக் காணலாம். சங்கீதத்திற்குரிய கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக் கருவி என்று நால்வகையாகக் கூறுவர். பறை, முரசு முழவு, தண்ணுமை போன்றவைகள் தோலால் செய்யப்படும் கருவிகள் குழல் போன்றவைகள் துளை யிட்டுச் செய்யப்படும் கருவிகள். யாழ் போன்றவைகள் நரம்புகளால் நாதம் எழுப்பப்படும் கருவிகள். தாளம் போடுவதற்காகச் செய்யப்படும் ஜாலரா கஞ்சக்கருவி. இத்தகைய கருவிகளைச் செய்யும் கலையும் இசைக் கலையிலே வல்லவர் களான தமிழர்களிடம் இருந்திருக்க வேண்டும். ஓவியம் முதலிய கலைகளிலும் தமிழர்கள் உயர்ந்திருந்தனர். ஆகவே தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் பல கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தினர் என்பதில் ஐயமில்லை. நால்வகைப் படைகள் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் குதிரைவண்டிகள் வைத்திருந்தனர். யானையின் மீது ஏறி ஊர்ந்தனர். குதிரைகளின் மேலும் ஏறிச் சென்றனர். அக்காலத்தில் தேர் என்று குறிக்கப்படுவது குதிரை வண்டியே. இன்றுள்ள குதிரை வண்டிகளுக்கும் அக்காலத்தி லிருந்த குதிரை வண்டிகளுக்கும் வேற்றுமையுண்டு. அக்காலக் குதிரை வண்டிகள் இன்று கோயில்களிலே காணப்படும் தேர் உருவத்தில் இருந்திருக்கலாம். போர்ப்படைகளிலே, தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட் படை என்ற நால்வகைப் படைகளும் இருந்தன. தேரும், யானையும், குதிரையும், பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. (தொ.பொ.மெய். 17) இச்சூத்திரம் தொல்காப்பியர் காலத்திலிருந்த ஊர்தி களைக் குறிப்பிடு கின்றது. தொல்காப்பியர் காலத் தமிழர்கள் தேரினையும், யானையையும், குதிரையையும் மற்றவைகளையும் வாகனங்களாக வைத்திருந்தனர் என்பதற்கு இச்சூத்திரம் உதாரணம். தானை, யானை, குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் (தொ.பொ.புற. 14) இது சிறந்த காலாட்படை, குதிரைப்படை, யானைப் படைகள் இருந்தன என்பதைக் குறிப்பிடுகிறது. தேரோர் தோற்றிய வென்றியும், தேரோர் வென்ற கோமான் முன்தேர்க்குரவையும் (தொ.பொ.புற. 17) தேரிலே ஏறிவந்த பொருநர் முதலியோர் புகழ்ந்து கூறிக் காட்டிய வெற்றி யும், தேரேறிப் போர் செய்ய வந்த அரசர்களை வென்ற வேந்தன் தன் வெற்றிக் களிப்பால் தேர்த்தட்டிலே ஏறி நின்று ஆடும் குரவைக் கூத்தும். இதிலே தேர்ப்படையின் சிறப்பு கூறப்படுகின்றது. தொல்காப்பிய காலத்துத் தமிழ் மக்கள் கடல் கடந்து சென்று போர் செய்த தாகத் தெரியவில்லை. ஆனால் பொருள் தேடுவதற்காக அவர்கள் கடல் கடந்து சென்றனர். பொருள் தெடுவதற்காக அவர்கள் கால்நடையாகவும் சென்றனர்; கலத்திலும் சென்றனர்; அதாவது கப்பலேறிக் கடல் கடந்தும் சென்றனர். கால்நடையாகப் பொருள் தேடச் செல்வ தற்குக் காலிற் பிரிவு என்று பெயர். கடல் கடந்து போவதற்குக் கலத்திற் பிரிவு என்று பெயர். `திரை கடலோடியும் திரவியந்தேடு, என்பது பண்டைத் தமிழர் பண்பாட்டிலிருந்து எழுந்ததே. கடல் தாண்டிச் செல்வதற்குக் கருவிகளான கப்பல்களையும், ஓடங்களையும், கட்டுமரங்களையும் அமைப்பதற்கு அவர்கள் அறிந்திருந்தனர். இது பிற்காலத்தில் அவர்களுக்குக் கப்பற்படை அமைக்கும் திறமை உண்டாகக் காரணமாக இருந்தது. கப்பற்படை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகச் சொல்வதற்கு இடமில்லை. போர்முறை சமாதானத்துக்காகவே போர் தமிழர்களின் போர்முறையைத் தொல்காப்பியப் புறத்திணையியலிலே விரிவாகக் காணலாம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பெரும்பகுதி காதலைப்பற்றியும், வீரத்தைப் பற்றியுமே விளக்கிக் கூறுகின்றது. பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஐந்து இயல்கள் காதலைப்பற்றியே கூறுகின்றன. அவை அகத்திணை இயல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் என்பன. வீரச்செயல்களைப் பற்றிய விளக்கத்தைப் புறத்திணை இயலிலே காணலாம். செய்யுளியலும், உவமவியலும் இப்பொருள்களை அமைத்துப் பாடல்கள் இயற்றும் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றன. மரபியலிலே பல பழக்க வழக்கங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. தொல்காப்பியத் தமிழர்கள் போர்வெறி கொண்டவர்கள் அல்லர். அவர்கள் பெருமைக்காகவோ, பொருளாசை கொண்டோ போர் புரியவில்லை. நாடுபிடிக்கும் மண்ணாசை கொண்டும் அவர்கள் போர் புரியவில்லை. மக்களைக் கொன்று குவித்துத் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்ற வெறிகொண்டு சண்டை செய்தவர்களும் அல்லர். தற்காப்புக்காகவே பண்டைத் தமிழர்கள் போர்புரிந்து வந்தனர். அமைதியே மக்களை இன்பபுரிக்கு இழுத்துச் செல்லும். கலகமும் சண்டையும் நல்வாழ்வுக்கு உலை வைப்பவை. இது தமிழர்கள் அறிந்த உண்மை ஆகையால் சமாதானத்தை நிலை நாட்டவே அவர்கள் போர் செய்தனர். காதல் வாழ்வைக் கைக்கொண்டு இல்லற வாழ்வைச் சிறப்புடன் நடத்தி இன்புறும் எந்த மக்களும் போரை விரும்ப மாட்டார்கள் அமைதி நிறைந்த சமாதான காலத்தில்தான் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான ஆக்கவேலை களைச் செய்ய முடியும். நாட்டின் அமைதி குலைந்தால் குடிமக்களின் வாழ்வு சிதையும். குடிமக்களின் வாழ்வு சிதைந்தால் காதல் வாழ்வு கருகிவிடும். காதல் வாழ்வு கருகிவிட்டால் மக்களிடம் அன்பும், அமைதியும், நல்வாழ்வும் வளர இடமில்லை; அவை நசித்து நாசமாகிவிடும். போர்க்காலத்திலே உழவுத் தொழில் உருப்படி யாக நடைபெறாது; மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் கைத் தொழில்களும் கலகலத்து நிலைகுலையும். இதனால் உணவுப் பண்டங்களின் உற்பத்தி குறையும்; ஏனைய உதவிப் பண்டங்களின் உற்பத்தி குறைந்து போய்விடும். எங்கும் பற்றாக்குறையும், பஞ்சமும், வறுமையும் தோன்றி மக்கள் வாழ்க்கையைப் பாழ்படுத்தும். இவ்வுண்மைகளைத் தொல்காப்பிய காலத் தமிழர்கள் அறிந்திருந்தனர். ஆக்கிரமிப்புப் போரை வெறுத்தனர். பண்டைத் தமிழர்கள் ஆக்கிரமிப்புப்போரை அடியோடு வெறுத்தனர். ஆனால் படையெடுத்து வந்தோர்க்குப் பணிந்து வாழவில்லை. அத்தகைய பயங்காளிகள் அல்ல தமிழர்கள். வெறிகொண்டு படையெடுத்து வந்த வேந்தர்களை எதிர்த்தனர். தற்காப்புப் போர் புரிந்து வெற்றி கொண்டனர். தனது குடிகளை நடுங்க வைக்கும் கொடுங்கோல் மன்னர்களைப் பண்டைத் தமிழர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. அவர்களைப் போரிலே வென்று விரட்டினர். நாட்டு மக்களுக்கு நலம் புரிந்து வந்தனர். வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்றே (தொ.பொ.புற. 6) வஞ்சியென்பது முல்லையென்னும் அகத்திணையோடு தொடர்புள்ளது. அடங்காத மண்ணாசை கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த வேந்தனை, அறங்கருதும் மற்றொரு வேந்தன், படையெடுத்து வந்தோன் அஞ்சும்படி படைதிரட்டிச் சென்று அவனோடு போர் செய்வது. தும்பைதானே நெய்தலது புறனே மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற் றென்ப (தொ.பொ.புற. 12) தும்பை என்பது நெய்தல் என்னும் அகத்திணையோடு தொடர்புள்ளது. தனது ஆற்றலை உலகம் புகழ வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு போர் புரிய வந்த அரசனை எதிர்த்துச் சென்று போர் செய்து அவன் கர்வத்தைப் போர்க் களத்திலே அழிக்கும் சிறந்த செயலாகும். தமிழர்கள் அகந்தை கொண்டு ஆக்கிரமிப்புப் போரிலே இறங்கமாட்டார்கள்; எதிரிகளுக்கு அடி பணியவும் மாட்டார்கள். தற்காப்புப் போரின் மூலம் தங்கள் வீரத்தையும், வாழ்க்கை யையும் பாதுகாத்துக் கொள்ளும் பண்புடையவர்கள், இவ்வுண்மைகளை மேலே காட்டிய வஞ்சித்திணை, தும்பைத்திணை இரண்டும் விளக்கும். எந்த நாட்டிலே போர் மூண்டாலும். அந்த நாட்டு மக்களின் நலம் நாசமாகும். பொது மக்கள் சேர்த்து வைத்திருக்கும் பொருள்கள் பாழாகும். பஞ்சம் வறுமை காரணமாக மக்களின் உயிரினும் சிறந்த ஒழுக்கமும் ஒழிந்து விடும். அறமுறை யிலே போர் நடத்த வேண்டும் என்ற எண்ணம் குடிகொண்டிருந்த பண்டைக் காலத்திலும் போரினால் பொது மக்களே துன்பத்திற்கு ஆளாயினர். போர் வீரர்கள் செய்த நாச வேலைகளினால் நாட்டுச் செல்வங்கள் பாழ்பட்டன. இவ்வுண்மை யைத் தொல் காப்பியம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. போர் தொடங்குவதற்கு முன்பே எதிரியின் பசு மந்தை களைக் கவர்ந்து கொள்ளுவது அக்கால வழக்கம். இதுதான் போருக்கு ஆரம்பம். பசு மந்தையைக் கவரும் எதிரிகளைக் காவலரும் ஊராரும் எதிர்ப்பார்கள். இந்த எதிர்ப்பிலே படுகொலைகள் பல நடைபெறும். இந்தப் படுகொலைகளில் குற்றமற்றவர்களும் கொல்லப்படுவார்கள். ஊர்கொலை ஆகோள் என்ற தொ.பொ. புறத்திணை மூன்றாவது சூத்திரத்தால் இவ்வுண்மையைக் காணலாம். எதிர்த்த ஊராரைக் கொலை செய்து விட்டுப் பசு மந்தையைக் கவருதல் என்பதே இதன் பொருள். வெற்றி பெற்றவர்கள், தோற்றுப் போனவர்களின் ஊர் களைத் தீயிட்டுப் பொசுக்குவார்கள். அவர்கள் சேமித்து வைத்திருக்கும் பண்டங்களைக் கொள்ளை யடிப்பார்கள்; தோற்றுப் போனவர்களின் விளை நிலங்களைப் பாழ் பண்ணு வார்கள்; அவர்கள் கட்டியிருக்கும் கட்டிடங்களை யெல்லாம் இடித்து தகப்பார்கள். போரினால் இத்தகைய கொடுமைகள் நடந்தன. இதனால்தான் தமிழர்கள் ஆக்கிரமிப்புப் போரை வெறுத்தனர். தற்காப்புப் போரை மட்டும் மேற்கொண்டனர். ஆயினும், போர் வெறிகொண்டவர்களும் தமிழ் நாட்டில் இல்லாமல் இல்லை. போர் வெறி கொண்டவர்கள் இருந்ததால் தான் இவர்கள் புகழாசை கொண்டோ, பொன்னாசை கொண்டோ, மண்ணாசை கொண்டோ, பெண்ணாசை கொண்டோ வலியச் சென்று போர் புரிந்ததனால்தான்-தற்காப்புப் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. போரை வெறுத்தவர்கள் - போரினால் பொதுமக்கள்தாம் துன்புறுவார்கள் என்பதை உணர்ந்தவர்கள் - தொல்காப்பியர் காலத்தில் இருந்தனர். இவர்கள் போர் நேராமல் இருப்பதற்கு முயன்றனர். அப்படிப் போர் நேர்ந்தாலும் அதனால் பொது மக்கள் தொல்லைப்படக் கூடாது என்பதற்காக அவர் களுக்கு முன்னறிவிப்பு செய்தனர்; பாதுகாப்பளித்தனர். எழுத்து மாற்றம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னே தமிழ் எழுத்துக் களின் உருவம் எப்படியிருந்தது? இன்றுள்ள உருவத்திலா? அல்லது கல்வெட்டுக்களில் காணப் படும் உருவிலா? அல்லது வேறு எந்த உருவத்தில் தமிழ் எழுத்துக்கள் இருந்தன? இதைப் பற்றித் தொல்காப்பியத்தைக் கொண்டு திட்டமாக ஒன்றும் கூற முடியாது. ஆனால் தொல்காப்பியர் காலத்தில் சில தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் மாற்றப்பட்டன. இது மட்டும் உண்மை. தொல்காப்பியர் கூறும் எழுத்துருவம் மஎஒ என்ற எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக் களும், எவ்வித உருவத்தில் இருக்க வேண்டும். என்பதைத் தொல்காப்பியர் சொல்லுகிறார். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இந்த எழுத்துக்கள் வெவ் வேறு வடிவங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால்தான் அவைகள் இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்று வரையறுத்துக் கூற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. மெய்யெழுத்துக்களுக்கெல்லாம் புள்ளி உண்டு என்று கூறுகிறார். ஆனால் தலையில் புள்ளி வைப்பதா? பக்கத்தில் புள்ளி வைப்பதா? இதைப் பற்றி விளக்கம் ஒன்றுமில்லை. இன்று குறிலாக வழங்கும் எஒ இவைகள் தாம் தொல் காப்பிய காலத்தில் நெடிலின் உருவம். எஒ என்பவை புள்ளி பெற்றால் குறில் ஓசை. இவற்றை, உட்பெறு புள்ளி உருவாகும்மே (தொ.எ.நூன். 14) மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்(தொ.எ. நூன். 15) எகர ஒகரத்து இயற்கையும் அற்றே (தொ.எ.நூன். 16) என்ற சூத்திரங்களால் காணலாம். ப் என்பதுதான் ம என்ற எழுத்தின் உருவம். உயிர்மெய்யெழுத்துக்கள் இருவகையான உருவங்களில் வழங்கிவந்தன. மெய்யெழுத்துக்களின் உருவிலே மாற்ற மில்லாமல் உயிர்மெய் எழுத்துக்களாக வழங்கியது ஒருவகை. மெய்யெழுத்துக்களின் உருவம் மாற்றமடைந்து உயிர் மெய் எழுத்துக்களாக வழங்கியது மற்றொரு வகை. இந்த இரண்டுவகை யாவன:- மெய்யெழுத்துக்கள் புள்ளி யில்லாமல் அப்படியே எழுதப்படுமானால் அவை அகர மேறிய உயிர்மெய்கள். மெய் யெழுத்துக்கு அடையாளமான புள்ளி மட்டும் இல்லை. ஆனால் மெய்யின் உருவம் அப்படியே இருக்கிறது. இது ஒரு வகை. கங சஞ-இவை மாறுபடாத உருவம். மெய்யெழுத்துக்கள் அகரத்தைத் தவிர மற்ற உயிர்களுடன் சேரும்போது தமது உருவம் மாறுபடும். இது இரண்டாவது வகை. புள்ளியில்லா எல்லா மெய்யும் உருஉருவாக அகரமோடு உயிர்த்தலும், ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்தலாறே (தொ.எ.சுநூன். 17) புள்ளியில்லாத எல்லா மெய்யெழுத்துக்களும் தமது உருவம் அப்படியே நின்று அகர உயிரோடு சேர்ந்து உயிர், மெய்யாக உச்சரிக்கப்படுதலும், மற்ற உயிர் களோடு சேரும் போது தமது உருவம் மாறுபட்டு உயிர் மெய்யாக உச்சரித்தலும் ஆக இரண்டு வகையாக எழுதி உச்சரிப்பதே உயிர் மெய்களை உச்சரிக்கும் வழியாகும். அகர உயிரைத் தவிர மற்ற உயிர்களோடு சேரும் மெய் யெழுத்துக்கள் இன்னபடி மாறுபடும் என்று தொல்காப்பியர் சொல்லவில்லை. இக்காரணத் தால்தான் அவை இன்று பலவகை உருவங்களில் எழுதப்படுகின்றன. றா னா ணா னை ணை ளை லை கி.... கீ.... கு..... கூ.... இவைகள், மெய் யெழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்துக்களாகும் போது மாறுபட்டு வழங்கும் உருவங்கள். தொல்காப்பியர் இத்தகைய மாறுதலைத்தான் குறித்திருக்க வேண்டும். புதிய மாற்றம் மெய்யெழுத்தின் பக்கத்தில் உயிரெழுத்தின் அடை யாளத்தை அமைத்து உயிர் மெய்யெழுத்தாக எழுதும் வழக்கம் தொல்காப்பிய காலத்திற்குப் பின்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். கா...கெ....கே....கை....கொ.....கோ.....கௌ..... இந்த வரிசைகள் முறையே ஆ எஏஒஓஔ என்ற உயிர்கள் ஏறிய மெய் யெழுத்துக்கள். இவ்வாறு மெய்யெழுத்துக்களின் பக்கத்திலே உயிரின் அடையாள மிட்டு எழுதும்போதும் மெய்யெழுத்துக்களின் உருவம் மாறுவதில்லை. மெய்யின் உருவம் சிதையாமல் அப்படியேதான் இருக்கின்றது. ஆகையால் இவைகளை உருவு திரிந்த மெய்யெழுத்துக்களாகக் கொள்ள முடியாது. இந்த முறை தொல்காப்பியத்திற்குப் பிறகு ஏற்பட்ட முறைதான். ஒரு எழுத்தை வேறு எழுத்துக்களால் எழுதி அதே உச்சரிப்பை உண்டாக்கலாம் என்பதும் தொல்காப்பியர் கொள்கை. ஐ என்ற எழுத்தை அஇ, அய். என்ற இரண்டு விதமாகவும்எழுதலாம்.இதனால் ஐயின்உச்சரிப்புகடாது.அகர இகரம் ஐகாரமாகும் (தொ.எ.நூன். 21) அகரமும் இகரமும் சேர்ந்து ஐகாரமாக ஒலிக்கும். அகரத்திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (தொ.எ.நூன். 23) அகரத்தின் பக்கத்தில் ய் என்னும் மெய்யெழுத்து வந்து ஐ என்னும் நெட் டெழுத்தாக உண்மை உச்சரிப்புடன் தோன்றி நிற்கும். ஔ என்ற எழுத்தை அஉ என்று எழுதி உச்சரிக்கலாம் என்பதும் தொல்காப்பியர் கருத்து. இதனை, அகர உகரம் ஔகாரமாகும் (தொ.எ.நூன் 22) என்பதனால் அறியலாம். அவ் என்று எழுதினாலும் ஔ போலவே ஒலிக்கின்றது. இதைத் தொல் காப்பியத்தின் வழி நூலாகிய நன்னூல் ஒப்புக்கொள்கிறது. மேலே கூறியவைகளைக் கொண்டு தமிழ் எழுத்துக்களின் உருவம் காலத்திற் கேற்றவாறு மாறி வந்திருக்கின்றது. என்பதைக் காணலாம். தொல்காப்பியர் குறிக்கும் உருவங்களை இன்று நாம் அப்படியே எழுதவில்லை; மாற்றி எழுதி வருகிறோம். ப் என்ற மகரத்தை, ம என்ற உருவில் எழுதுகிறோம். எ ஒ என்ற குற்றெழுத்துக்களை எஒ என்ற உருவில் புள்ளியில்லாமல் எழுதுகிறோம். எ ஒ என்ற நெட்டெழுத்துக்களை ஏ.ஓ. என்று மாற்றி எழுதுகின்றோம். அகரமல்லாத மற்ற உயிர் எழுத்துக்களும், மெய் யெழுத்துக்களும் சேரும்போது மெய்யெழுத்துக்களின் உருவம் திரியும் என்பது தொல்காப்பியம். ஆனால் நாம்கா.கெ... கே....கை....கொ....கோ....கௌ.... என்று மெய்யெழுத்துக்களின் உருவங்களைமற்றாமல்முன்னும்பின்னும்அடயாளமிட்டுஎழுதிவருகின்றோம். தÄœ எழுத்துக்களைக் காலத்திற்கு ஏற்றவாறு படிப்ப தற்கும், எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் எளிதாக இருக்கும் வகையில் மாற்றிக் கொள்ளுவதில் தவறில்லை. இப்படி மாற்றிக் கொள்ளுவது தமிழர் பண்பாட்டிற்கு ஏற்றதேயாகும். தமிழ்எழுத்துக்கŸதொல்காப்பிய®காலத்திற்குமுன்னிருந்nதgலமாறுதல்கsப்பெ‰றுவந்திருக்கின்றd. இந்த உண்மையைத் தொல்காப்பியம் நமக்கு கூறுகிறது. ஆகவே தமிழ்எழுத்து¡களை¢சீர்திருத்âஅமைப்பதனால்தÄழ்மெhழிகெ£டுவிடாJ. தமிழ் வளம் பெறும் வகையிலே எத்தகைய எழுத்து மாற்றம் ஏற்பட்டாலும் அது தமிழர் நாகரிகத்திற்கு ஏற்றதுதான். மொழி வளர்ச்சி இலக்கியம் இலக்கியத்தின் தாயகம் இலக்கு; இலக்கு என்னும் சொல்லிலிருந்தே இலக்கியம் என்னும் சொல் பிறந்தது. இலட்சியத்திலிருந்து இலக்கியம் பிறந்ததாகவும் சொல்லுவர். இலக்கு-இடம்; திசை, இலக்கிலிருந்து இலக்கியம் பிறந்தாலும் சரி; அல்லது இலட்சியமே இலக்கியமாக உருமறினாலும் சரி; இலக்கியம் என்பதற்கு இலட்சியம், நோக்கம், குறிக்கேள் என்பத பொருள். பண்டைக் காலத்தில் ஒரு குறிக்கோளை அடிப்படை யகக் கொண்டு தான் இலக்கியங்கள்எ ழுதப்பட்டன. குறிக்கோள் முற்போக்கானதாகவும் இருக்கலாம்: பிற்போக்கானதாகவும் இருக்கலாம். குறிக்கோளைக் கொண்ட இலக்கியங்கள் என்றும் குன்றாமல் நின்று நிலவும். ஆயிரங்காலத்து இலக்கியங்கள் பல இன்றும் மக்களால் ஆவலுடன் படிக்கப்பட்டு வருகின்றன. அவைகள் அருமையாகப் போற்றப்பட்டும் புகழப்பட்டும் வருகின்றன. அவைகளைப் பற்றி ஆராய்ச்சியுரைகள் எழுதப் பட்டும் வருகின்றன. அவைகளின் அருமை பெருமைகளைப் பற்றி மேடைகளிலே பேசப்பட்டும் வருகின்றன. இன்று எத்தனையோ புதுப் புதுப் புத்தகங்கள் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் இலக்கியம் என்ற பெயரில் வெளிவரு கின்றன. இப்புத்தகங்களிலே பல ஒருமுறை படித்தவுடன் உதவாக்கரைகளாகக் கருதப்பட்டுக் குப்பைக் கூடைகளிலே இடம் பெறுகின்றன. பழைய இலக்கியங்கள் பல இன்றும் பாராட்டிப் போற்றப்படுவதற்குக் காரணம் என்ன? புதிய புத்தகங்கள் பல போற்றப்படாமல் குப்பைக் கூடைகளுக்குள் குடியேறுவதற்குக் காரணம் என்ன? ஏதேனும் குறிக்கோளை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் பண்டைக்காலப் புலவர்கள் இலக்கியங் களைப் புனைந்தனர். ஆகையால்தான் இன்றும் அவைகள் சிரஞ்சீவிகளாய் நின்று நிலவுகின்றன. குறிக்கோளற்ற வறட்டுப் புத்தகங்களே குப்பைக் கூடைகளிலே போடப்படுகின்றன. காரணம் இதுதான். இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். துன்பத்தால் துடிப்போரை இன்பக் கரையிலே ஏற்றுவதற்கான வழிகளை எடுத்துக்காட்டுவதே இலக்கி யங்கள்; மக்கள் அனைவரும் மனிதத் தன்மையை உணர்ந்து ஒன்றுபட்டு வாழ்வதற்கான வழிதுறைகளைக் காட்டுவதே இலக்கியம் ஒற்றுமையைச் சிதைத்து மனித சமுதாயத்தை ஒன்று சேரவொட்டாமல் தடுக்கும் சீர்கேடுகளை ஒழிப்பதற்கு உதவுவதே உயர்ந்த இலக்கியம். மக்களின் நல் வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் பொருளாதார சமுதாய அமைப்புக்களை உருவாக்கி, அவைகளை நடத்திக் காட்டும் வழிகளைப் போதிப்பதே இலக்கியம். சுருக்கமாகச் சொன்னால், பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதும், அவர்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டுவதுமே இலக்கியமாகும். ஒரு மொழியின் செல்வம் அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள்தாம். சிறந்த இலக்கியங்கள் நிறைந்த மொழிகளே உயர்ந்த மொழிகள் என உலகினரால் போற்றப்படுகின்றன. ஒரு சிறந்த இலக்கியம் எந்த மொழியிலே தோன்றினாலும் அது உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும்; எல்லா மக்கள் கையிலும் ஏறிவிடும். மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இன்று இலக்கிய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி என்னும் பெயரால் எத்தனையோ புத்தகங்கள் வெளிவருகின்றன. அவைக ளெல்லாம் இலக்கியங்களா? அவைகளால் மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? குறிக்கோளற்ற இத்தகைய வெறும் புத்தகங்கள் வெளிவரத்தான் வேண்டுமா? இவைகளைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்காமலிருக்க முடியாது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாகயிருப் பவர்களில் இருவகையினர் உள்ளனர். தமிழ் மொழியிலே வேறு எம்மொழிச் சொற்களும் இணையவே கூடாது. அதுவும் குறிப்பாக வடமொழிச் சொற்கள் தமிழிலே கலந்தால் தமிழின் வடிவமே குலைந்து போகும். ஆகையால் தனித் தமிழிலேதான் எழுத வேண்டும்; தனித் தமிழிலேதான் பேசவேண்டும் என்று சொல்லுகின்றனர் சிலர். இவர்களுடைய தமிழ்ப் பேரன்பைப் பாராட்டத்தான் வேண்டும். குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், அடுக்குச் சொற்களைச் சேர்த்து அழகுபட எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர் மற்றொரு சாரார். மறு மலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக் கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம்/ தமிழர் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித் தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவே யில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழி வெறி, சாதிவெறி, இனவெறி, மத வெறி இவைகளையே அடிப் படையாக வைத்துக் கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபடவேண்டும் என்னும் ஆர்வத்துடன் எழுதப்படும் புத்தகங்கள் மிகச் சிலதான். ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப் புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவவில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும் விரோதப்பான்மையுமே வளர்த்து வருகின்றன. இது தமிழ் வளர்ச்சியா? இலக்கிய வளர்ச்சியா? தமிழர் பண் பாட்டை எடுத்துக்காட்டும் வழியா? தொல்காப்பியர் காட்டும் வழி தொல்காப்பியர் காலத்திலும், அதற்கு முன்னும் இலக்கி யங்கள் நால்வகைப் பாடல்களிலே இயற்றப்பட்டன. அந்த நால்வகைப் பாடல்கள் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்பன. இதனை ஆசிரியம், வஞ்சி, வெண்பாக், கலியே நால் இயற்று என்ப பாவகை விரியே (தொ.பொ.செய். 101) என்னும் சூத்திரத்தால் காணலாம். ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்னும் நான்கு பகுதியுடையது என்பார்கள். பாடல் வகைகளின் விரிவை என்பதே இதன் பொருள். இப்பாடல்களால் செய்யப்படும் நூல் மூன்று பொருள் களை உணர்த்துவதாக இருக்கும். மூன்று பொருள்கள்; அறம், பொருள், இன்பம் என்பன. இவ்வுலகில் மக்கள் இம்மூன்றைத் தான் காணமுடியும். மக்கள் வாழ்க்கை இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டது. பொருளீட்டுதல், அறம் புரிதல், இன்பம் நுகர்தல் இவைகளே மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள். மக்கள் வாழப்பிறந்தவர்கள் என்பதை இந்த மூன்று குறிக்கோளைக் கொண்டு அறியலாம். வீடு என்பதைப்பற்றிப் பழந்தமிழர்கள் கவலைப்பட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை. மூன்று அறங்களையும் பின்பற்றும் ஒருவன் வீட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதுதான் எதற்கு? இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பொருள் பெற்று, அறம் புரிந்து, இன்பம் துய்த்து வாழ்வார்களானால், இவ் வுலகமே வானுலகமாகும். வீடு என்னும் சொல்லின் பொருளான விடுதலை என்பதைப் பெற்ற உலகமாகும். இதுவே, தொல் காப்பியத் தமிழர் கருத்து. அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப (தொ.பொ.செய். 102) அந்த நிலையில் உள்ள செய்யுட்கள், அறம் பொருள் இன்பம் முதலான மூன்று சிறந்த பொருளையும் அமைத்துப் பாடுவதற்கு உரியன என்பர். இச்சூத்திரத்தினால் பாடல்கள், நூல்கள்-இலக்கியங்கள்-எந்தக் குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் காணலாம். மொழி வளர்ச்சிக்குத் தொல்காப்பியர் காட்டியிருக்கும் வழி சிறந்தவழி. அவர் வழியைப் பின்பற்றினால் தமிழிலே எண்ணற்ற இலக்கியங்களை-சிறந்த பல இலக்கியங்களைச்-செய்து குவிக்க முடியும். பண்டைத் தமிழர் இலக்கியங்களை எப்படி வளர்த்தனர்? எந்த முறையிலே பெருக்கினர்? என்பதைத் தொல்காப்பியர் தெளிவாகச் சொல்லுகின்றார். அவர் இலக்கிய வளர்ச்சிக்குக் காட்டும் வழியைக் காண்போம். இலக்கியங்கள் முதல் நூல், வழிநூல் என இருவகைப்படும். முதல்நூல் என்பது ஒரு ஆசிரியர் தானே பல செய்திகளை ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகளை மக்கள் அறியும்படி எழுதி வைப்பது. இந்த முதல் நூலைச் சுருக்கியோ பெருக்கியோ எழுதுவது வழிநூல். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் (தொ.பொ.மரபு. 91) தீவினைகள் செய்வதை ஒழித்து நல்லொழுக்கமுடை யவனாய்ச் சிறந்த அறிவினையுடைய தலைசிறந்த ஆசிரியன் செய்தது முதல் நூல் ஆகும். வழியெனப்படுவது அதன் வழித்தாகும் (தொ.பொ.மரபு. 92) வழிநூல் எனப்படுவது அந்த முதல் நூலைப் பின்பற்றி எழுதப்படுவதாகும். இந்த இரண்டு சூத்திரங்களும் முதல் நூல் என்றால் என்ன? வழி நூல் என்றால் என்ன? என்பதை விளக்கிவிட்டன. வழிநூல்கள் நான்கு வகைப்படும் என்று கூறுகிறார் தொல் காப்பியர். தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தலோடு அனைமரபினவே (தொ.பொ.மர. 94) 1. முதல் நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதைச் சுருக்கி எழுதுதல். 2. முதல் நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருப்பதை விரித்து எழுதுதல். 3. முதல் நூலிலே விரிவாக உள்ளதைச் சுருக்கியும், சுருக்க மாக உள்ளதை விரித்தும் மக்களுக்கு விளங்கும் முறையிலே எழுதுதல். 4. வேறு மொழிகளிலே உள்ள சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து எழுதிவைத்தல். இவ்வாறு நான்கு வகையாக எழுதப்படுவன வழிநூல்கள் என்று கூறுகிறார் தொல்காப்பியர் சிறந்த நூல்கள் எந்த மொழிகளிலே இருந்தாலும் அவை களை மொழிபெயர்த்துக்கொள்ளும் உயர்ந்த வழக்கம் தமிழரிடம் இருந்தது. பண்டைத் தமிழர்கள் பலமொழிப் பயிற்சி யுடையவர்களாயிருந்தனர். இடைச் சங்ககாலத்திலே இருந்தன என்று சொல்லப்படும் மாபுராணம், பூதபுராணம் போன்ற நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். மொழிபெயர்ப்பு நூல்களும் புது நூல்களும் மொழிப்பற்றுடைய பல மொழியினரும் தங்கள் இலக்கியங் களை வளர்ப்பதற்கு இன்றும் இந்த மொழி பெயர்ப்பு முறையைப் பின்பற்றி வருவதைக் காண்கிறோம். உலக மக்களுக்குள் ஒற்று மையும், கலாசாரத் தொடர்பும் வளர்வதற்கு ஒரு மொழியிலே தோன்றும் சிறந்த இலக்கியங்கள் பல மொழிகளிலும் பரவ வேண்டும். இக்கொள்கை பண்டைத் தமிழர் பண்பாடுகளில் ஒன்றென்பதைத் தொல்காப்பியம் நமக்கு எடுத்துக்காட்டு கின்றது. சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். என்று பாரதியாரைப் பாடும்படி தூண்டியது தமிழரின் இந்தப் பண்பாடுதான். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் இது வழிநூல்களைப் பெருக்கி இலக்கியங்களை வளர்க்கும் வழியாகும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். இது முதல் நூல்களைப் பெருக்குவதற்கு எடுத்துக்காட்டும் சிறந்த முறையாகும். இவ்வாறு வழிநூல்களையும், முதல் நூல்களையும் வளர்த்துத் தமிழை இலக்கியங்கள் நிறைந்த சிறந்த மொழியாக்க வேண்டும் என்பது பாரதியார் கருத்து. இக்கருத்தும் தொல் காப்பியர் சொல்லியிருக்கும் கருத்தும் ஒத்து வருவதைக் காணலாம். தனித் தமிழ் அன்பர்கள் உலகப் போக்கைக் கவனிக்க வேண்டும். வளர்ந்திருக்கும் மொழிகளின் வரலாற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். வளர்ந்து வரும் எந்த மொழி களிலும், பிறமொழிச் சொற்கள் கலப்பது இயற்கை. இதைத் தடுக்க முயல்வது மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே முடியும். இன்று வளர்ச்சியடைந்திருக்கும் எந்த மொழிகளைப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும். பிறமொழிச் சொற்கள் இலக்கியச் செல்வங்கள் நிறைந்திருப்பதாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும். ஆங்கில மொழியிலே எத்தனையோ வேறு பல மொழிச் சொற்கள் இணைந்து விட்டன. ஆங்கிலேயர் எந்தெந்த நாடுகளிலே குடியேறி ஆட்சி புரிந்தார்களோ அந்தந்த நாட்டு மொழிச் சொற்களும் ஆங்கிலத்திலே கலந்திருக்கின்றன. இதனால் அம்மொழி அழிந்து சிதைந்துபோய்விடவில்லை. வளர்ச்சியடைந்து வற்றாத இலக்கியச் செல்வத்தை ஈட்டியிருக் கின்றது. இந்த உண்மை தனித்தமிழ்க் காதலர்களின் கருத்திலே பதிய வேண்டும். தமிழ் மொழி தொல்காப்பிய காலத்திற்கு முன்னிருந்தே பிறமொழிச் செல்வங்களை ஏற்றுக் கொண்டே வளர்ந்து வந்திருக்கின்றது. பிற மொழிச் சொற்கள் தமிழிலே கலக்கக் கூடாது என்ற எண்ணம் பண்டைத் தமிழரிடம் தோன்றியதே இல்லை. நாம் பல மொழியினருடன் கலந்து உறவாடும்போது அவர்களுடைய மொழியும் நமது மொழியில் கலப்பது இயற்கை. இது போலவே பலதிறப்பட்ட நாகரிகமுள்ள மக்களுடன் சேர்ந்து பழகும் போது அவர்களுடைய நாகரிகமும், நமது நாகரிகமும் ஒன்றுபடுவதும். இயற்கை. பிற மொழிச்சொற்கள் நமது மொழியிலே கலக்கக்கூடாது என்றால் பிறமொழி பேசும் மக்களுடன் நமக்குத் தொடர்பே இருக்கக் கூடாது. உலகத்தி லிருந்தே நாம் பிரிந்து தனித்து விலகி நிற்க வேண்டும். இது நடக்குமா? பிறமொழிச் சொற்கள் தமிழிலே கலப்பதைப் பற்றித் தொல்காப்பியர் தெளிவாகக் கூறிவிட்டார். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற நான்கு வகைச் சொற்களும் சேர்ந்து வரலாம் என்பது தொல்காப்பியர் கூற்று. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொ.சொப.எச்ச. 1) இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொல்லப்படும் அவைகளே செய்யுளில் சேர்க்கப்படும் சொற்கள் இச்சூத்திரத்திலே திசைச்சொல்லும், வடசொல்லும் செய்யுளிலே சேர்ந்து வரலாம் என்று கூறுவது குறிப்பிடத் தக்கது. இயற்சொல் என்பது எல்லோருக்கும் பொருள் விளங்கும் படி வழக்கத்திலிருக்கும் சொற்கள். திரிசொல் என்பது பேச்சு வழக்கில் பெரும்பான்மையாக வழங்காமல் இலக்கிய வழக்கிலே உள்ள சொற்கள், ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ள சொற்களும், ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களும் திரிசொற்களின் வகை களாகும். திசைச்சொல் என்பது செந்தமிழ்நாட்டை அடுத்திருக்கும் பன்னிரண்டு நாடுகளிலும் வழங்கும் சொற்கள் என்று கூறுகிறார் தொல்காப்பியர். போக்குவரத்து வசதிகள் குறைந்திருந்த-பண்டைக் காலத்தில், தமிழர்கள் பக்கத்து நாடுகளுக்குத்தான் அடிக்கடி போய்வர முடியும். அந்த நாட்டு மக்களுடன்தான் அடிக்கடி பழகவும் முடியும். ஆகையால் பக்கத்து நாட்டு மொழிகளின் சொற் களையே திசைச்சொல் என்று குறித்தார். இக்காலத்தைப் போலத் தொல்காப்பியர் காலத்தில் உலகம் முழுவதும் சுற்றிவரக் கூடிய சாதனங்கள் இருந்திருந்தால் வேற்று நாட்டுச் சொற்களை யெல்லாம் திசைச் சொற்கள் என்று தீர்மானமாகக் கூறியிருப்பார் அவர். வடமொழியும் தமிழும் வடசொல் என்பது வடமொழிச் சொல். வடசொற்கள் தமிழிலே கலக்கும் போது, அவற்றின் உருவம் மாறும். வடமொழிச் சொற்களில் உள்ள வடமொழி எழுத்துக்கள் மறையும். தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்கள் மறைந்த இடத்தை நிரப்பும். அந்த வடமொழிச் சொற்களின் ஓசையும் தமிழோசை யாக மாறும். இக்கருத்தைத் தொல்காப்பியர் கூறியுள்ளார். திசைச்சொல் - வடசொல் - என்று ஏன் தனித்தனியே சொல்லப்படவேண்டும் என்ற ஐயம் கிளம்பலாம். இதற்குக் காரணம் உண்டு. தொல்காப்பியர் காலத்தில் தமிழுக்கும் வடமொழிக்குந்தான் அதிகத் தொடர்பிருந்தது. அக்காலத்தில் வடமொழியில்தான் சிறந்த இலக்கியங்கள் இருந்தன. தமிழர்கள் பலர் வடமொழிப் பயிற்சியுள்ளவர்களாயிருந்தனர். இதனால் வடசொற்கள் தாம் தமிழிலே மிகுதியாகக் கலந்து வரும் நிலைமையும், நிர்ப்பந்தமும் இருந்தன. திசைச் சொற்களைவிட வட சொற்களே மிகுதியாகத் தமிழிலே கலந்து வந்தன. ஆகை யால்தான் திசைச்சொற்களைத் தனியாகவும்-வடசொற்களைப் பற்றித் தனியாகவும் கூறினார். தமிழிலே பிறமொழிச் சொற்கள் கலக்கக்கூடாது என்ற பிடிவாதம் பழந்தமிழ் மக்களிடம் இருந்ததில்லை. இன்றியமை யாத இடங்களிலே திசைச் சொற்களோ, வடசொற்களோ தமிழுடன் கலந்து வருவது மொழி வளர்ச்சிக்கு இடஞ்செய்யுமே யன்றித் தடை செய்யாது இதுவே பழந்தமிழர் கருத்து. பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், தெய்வம், பிண்டம், ஏது (ஹேது) பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகன், ஞாபகம் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பிய காலத்தமிழர்கள் இலக்கியத்தை வளர்க்க மொழிபெயர்ப்பு நூல்களும் இன்றியமையாதவை என்று எண்ணினார்கள். மொழி வளர்ந்து செழிப்படைவதற்கு-பொருட் செல்வத்தைக் குவிப்பதற்கான சொற்செல்வம் பெருகுவதற்கு வடமொழிச் சொற்களும் பிற நாட்டுச் சொற்களும் தமிழிலே கலப்பது தவறல்ல என்று கொண்டனர். அக்காலத்தில் மொழி வெறுப்போ, சாதி வெறுப்போ, இன வெறுப்போ தமிழரிடம் சிறிதும் தலைகாட்டியதே இல்லை. இதனால் தமிழும் வளர்ந்தது; தமிழரும் இன்பமும் புகழும் பெற்று வாழ்ந்தனர். தமிழ் நாட்டின் எல்லை தொல்காப்பியம் தோன்றிய காலத்திலே தமிழ் நாட்டின் எல்லைகள் எவை? தமிழ் நாட்டை அடுத்திருந்த நாடுகள் எவை? இவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்குத் தொல்காப்பியத்துள் தக்க ஆதரவொன்றும் அகப்படவில்லை. தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் பனம்பாரனார் என்னும் புலவரால் பாடப்பட்டது அது. வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து என்று தொடங்குகிறது. வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம் என்று அந்நான் கெல்லை என்று காக்கைபாடினியாரால் பாடப்பட்டதாக வழங்கும் பாடல் ஒன்றும் உண்டு. இவைகளைக் கொண்டே தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடம் தெற்கெல்லை குமரி; மேற்கெல்லையும், கிழக் கெல்லையும் கடல்கள் என்று கூறிவருகின்றனர். தமிழ் இலக்கியங்களிலே அன்று தொட்டு இன்று வரையிலும் இவ்வாறே தமிழ் நாட்டின் எல்லையைக் குறித்து வருகின்றனர். இன்றும் தமிழ் நாட்டில் எல்லை இது தான் என்று சொல்லுவது பொருந்தாது. இன்று தமிழ்நாட்டில் எல்லை குறுகிவிட்டது. மேலைக் கடற்கரைப் பகுதியிலே மலை யாளமும், கன்னட நாடும் தோன்றிவிட்டன. வடபகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லையை ஆந்திரநாடு ஆக்கிரமித்துவிட்டது. ஆகவே இன்று தமிழ் நாட்டின் எல்லை குறுகிவிட்டது. ஒரு நாட்டின் எல்லை குறுகுவதும் விரிவதும் இயற்கை யாகும். தமிழ்நாட்டின் எல்லை, குறுகிப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குத் தொல்காப்பிய உரையில் ஆதரவுண்டு. தொல்காப்பியச் சொல்லதிகாரம் எச்ச வியலில் தமிழ்நாட்டை அடுத்துள்ள நாடுகள் குறிக்கப்படுகின்றன. திசைச்சொல் இன்னதென்று விளக்கும் சூத்திரத்திலே இக்குறிப்பு காணப்படு கின்றது. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினவே திசைச் சொற்கிளவி என்பது திசைச்சொல்லை விளக்கும் சூத்திரம். செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு நாடுகள் பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூமிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு என்று கூறுவர். இது சில உரையாசிரியர்களின் கூற்று, பாண்டி நாட்டைச் செந்தமிழ் நாடாகக் கொண்டு அதைச் சூழ்ந்துள்ள இந்தப் பன்னிரண்டு நாடுகளையும் கொடுந்தமிழ் நாடென்று எண்ணியவர்கள் கூறும் உரையிது. இது பொருந்தா உரையென்று மறுப்போரும் உண்டு. இந்தப் பன்னிரண்டு நாடுகளும் தமிழ் நாட்டிலேயே இருப்பன. இவை தமிழ் வழங்கும் நாடுகள். தமிழர் வாழும் நாடுகள். இந்த நாட்டுச் சொற்கள் திசைச் சொற்கள் அல்ல. செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள வேற்று மொழிகள் வழங்கும் நாட்டுச் சொற்கள் தமிழிலே வந்து வழங்கும்போதுதான் அவைகளுக்குத் திசைச் சொற்கள் என்று பெயர். இவ்வாறு உரை கூறியிருக்கின்றனர் சில உரையாசிரியர்கள். இதுதான் பொருத்தமான உரை. இவர்கள் காட்டும் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு நாடுகளாவன:- குமரியாற்றின் தென்கரையிலே உள்ள பழந்தீபம், கொல்லம், கூபகம், சிங்களம், சையமலைக்கு மேற்கேயுள்ள கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம், சையமலைக்கும் கிழக்கேயுள்ள கருநடம், வடுகம், தெலிங்கம், கலிங்கம், ஆகிய பன்னிரண்டு நாடுகள். பழந்தீபம், கூபகம் இரண்டு நாடுகளும் கடலிலே மறைந்து விட்டதாகக் கருதுகின்றனர். கொல்லம்-மலையாள நாடு. சிங்களம்-இலங்கைத்தீவு - கருநடம்-கன்னடதேசம், வடுகம்-தெலுங்கு நாடு. தெலிங்கம்-தெலிங்கானா. கலிங்கம்-கோதா வரியின் வடக்கில் உள்ள நாடு. கலிங்கத்தைத் தமிழ் நாட்டை அடுத்துள்ள நாடாகக் குறிப்பிட்டிருப்பதனால் கோதாவிரி நதிவரையிலும் உள்ள கீழ்க்கடற்கரைப் பகுதி ஒரு காலத்தில் தமிழ் நாடாக இருந்தது என்று ஊகிக்க இடம் உண்டு. வடவேங்கடம் தென்குமரி என்று தொடங்கும் பனம் பாரனார் பாட்டு தொல்காப்பியர் காலத்திலேயே தோன்றிய தானால், அதில் கூறப்படும் எல்லை சரியாக இருக்கலாம். அப்பாடல் தொல்காப்பியர்க்குப் பின்னே தோன்றியதனால், தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை எது என்று வரையறுத்துச் சொல்ல வழியில்லை. அதற்கான ஆதரவு ஒன்றும் கிடைக்கவில்லை. பழக்க வழக்கங்கள் இதற்கு முன் கூறப்பட்டவை 1. தொல்காப்பியம் செந்தமிழ் மொழியின் சிறந்த இலக்கண நூல்; தொல்காப்பியர் என்ற புலவரால் அது இயற்றப்பட்டது. 2. இன்றுள்ள தமிழ் நூல்களிலே காலத்தால் முற்பட்ட நூல் தொல்காப்பியந்தான். 3. தொல்காப்பியம் வழிநூல்; அதற்கு முதல்நூல் அகத்திய மாகும். 4. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் முப்பகுதி களைக் கொண்டது தொல்காப்பியம். இலக்கணத்தை மூவகையாகப் பிரிந்துக் கூறுவதே பழந்தமிழர் முறை. 5. மக்கள் வாழ்வு அகவாழ்வு, புறவாழ்வு என இருவகைப்படும். அகப் பொருளிலே அகவாழ்வைப் பற்றியும், புறப்பொருளிலே புறவாழ்வைப் பற்றியும் சொல்லப்படுகின்றன. 6. பழந்தமிழர் மணமுறை களவு, கற்பு என்று இருவகைப் படும். களவுமணம் இல்லாமல் கற்புமணம் நடைபெறுவதில்லை. பழங்காலத் தமிழர்களிடம் திருமணச் சடங்குகள் எவையும் இருந்ததில்லை. பிற்காலத்திலே தான் சடங்கு கள் செய்யும் வழக்கம் உண்டாயிற்று. பலதாரமணம் பழந்தமிழ் நாட்டில் உண்டு. 7. ஆண்கள் உயர்ந்தவர்கள்; பெண்கள் தாழ்ந்தவர்கள். ஆணுக்கிருந்த உரிமை பெண்ணுக்கு இருந்ததில்லை. பெண்கள் அடிமைகளாகவேயிருந்தனர். 8. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைப் பிரிவுகளும் தமிழ் மக்களிடம் இருந்தன. இவைகளைத் தவிர இன்னும் பல பிரிவுகளும் இருந்தன. சாதிப்பிரிவுகள் தமிழரிடம் தாமாகவே தோன்றியவை. 9. நிலத்தலைவன், விவசாயி என்ற பிரிவுகளும் தொல் காப்பியர் காலத்தில் நிலைத்திருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை யினருள்ளும் நிலக் கிழவர்கள் இருந்தனர். 10. நிலத்தலைமை காரணமாகவே உயர்வு தாழ்வுகள், ஆண்டான் அடிமை முறைகள் தோன்றின. 11. பார்ப்பார் என்பவர்கள் வேறு; அந்தணர் என்பவர்கள் வேறு. இருபிரிவினரும் தமிழர்களேதாம். 12. தொல்காப்பியர் காலத்திலே வடமொழி வேதங்களைத் தமிழர் படிந்திருந்தனர். 13. உலகம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டானது. 14. பல தெய்வ வணக்கம் தமிழர்களிடம் இருந்தது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியவைகளையும் தமிழர்கள் தெய்வங் களாக வணங்கி வந்தனர். 15. விக்கிரக வணக்கம் தமிழ்நாட்டில் உண்டு. இதுவே சிற்பக்கலை வளர்ச்சிக்குக் காரணம். 16. தொல்காப்பியர் காலத்தில் உள்ள மதம் இன்னதென்று கூறமுடியாது. தமிழர்கள் உயிர்வேறு, உடல்வேறு என்று நம்பினர். ஊழ்வினையிலும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு. 17. தமிழகத்திலே இசை, நாடகம் போன்ற கலைகள் வளர்ந்திருந்தன. தமிழர்கள் சிற்பக்கலை, ஓவியக்கலைகளிலும் சிறந்திருந்தனர். வாத்தியங்களைச் செய்தமைக்கும் கலையிலும் வல்லவர்கள்; ஆயுதங்கள் செய்தல், அணிகள் செய்தல், வாகனங்கள் அமைத்தல், நெசவு நெய்தல் ஆகிய தொழில்களும் அவர்களுக்குத் தெரியும். 18. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட் படை ஆகிய நால்வகைப் படைகளும் தமிழ் நாட்டில் இருந்தன கப்பல்கட்டும் தொழிலும் தமிழர்களுக்குத் தெரியும். 19. தமிழர்கள் போரின் கொடுமையை உணர்ந்திருந்தனர். ஆக்கிரமிப்புப் போரைப் பெரும்பாலான தமிழர்கள் விரும்ப வில்லை. அவர்கள் செய்த போர்கள் பெரும்பாலும் தற்காப்புப் போர்கள்தாம். ஆயினும் போர்வெறி கொண்டவர்களும் தமிழ்நாட்டில் இருந்தனர். 20. தொல்காப்பிய காலத்திலே வழங்கிய எழுத்துக்கள் சிலவற்றின் உருவங்கள் இப்பொழுது மாறியிருக்கின்றன. எழுத்து மாற்றம்-அதாவது எழுத்துச் சீர்திருத்தம் தமிழர் பண்பாட்டுக்கு விரோதமானதன்று. 21. பிறமொழியில் உள்ள சிறந்த இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்தெழுவது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்றதாகும். சிறந்த குறிக்கோளையுடைய நூல்களே இலக்கியங்கள். தமிழிலே வடமொழிச் சொற்கள் கலந்தால் தமிழ்மொழியின் வளர்ச்சி தடைப்படும் என்பது தவறு. 22. தொல்காப்பிய காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை எது என்பதைப் பற்றித் திட்டமாகச் சொல்லமுடியாது. தமிழ் நாட்டின் எல்லை ஒரேவிதாமாக இல்லாமல், நீண்டும், சுருங்கியும் இருந்தது என்று கருத இடமுண்டு. இவைகளைப்பற்றியே இதற்கு முன்னுள்ள பகுதிகளில் விரிவாக விளக்கப்பட்டன. இவைகளில் தொல்காப்பியர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டின் நிலைமையை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். அக்காலத்தில் இருந்த பல பழக்க வழக்கங்களைப் பற்றிக் கீழ்வரும் இப்பகுதியிலே சுருக்கமாகக் கூறப்படுகின்றது. நம்பிக்கையும் செயலும் 1. பண்டங்களை அளப்பதற்கான மரக்கால், படி, நாழி போன்ற அளவுக் கருவிகள் பண்டைத் தமிழர்களிடம் இருந்தன. பண்டங்களை நிறுப்பதற்கான துலாக்கோல் போன்ற கருவிகளும் நிறையைக் காட்டும் படிக்கல் போன்றவைகளும் அக்காலத்தில் இருந்தன. நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் என்னும் எண்ணல் முறைகளையும் தொல்காப்பியத் தமிழர்கள் அறிந்திருந்தன. பண்டங்களை எண்ணவும், நிறுக்கவும், அளக்கவும் அறிந்தவர்களே நாகரிகமுடைய மக்கள். தொல்காப்பிய காலத் திற்கு முன்பே தமிழர்கள் விவசாயிகளாகவும், பண்டங்களை உற்பத்தி செய்பவர்களாகவும், வாணிகம் செய்பவர்களாகவும் இருந்தனர். ஆதலால் அவர்களுக்கு எண்ணவும், நிறுக்கவும், அளக்கவும் தெரிந்திருந்ததில் ஆச்சரியம் இல்லை. 2. தொல்காப்பிய காலத் தமிழர்களுக்கு மந்திரத்திலே நம்பிக்கையுண்டு. இப்பொழுதும் யாருக்கும் மந்திரச் சொற் களுக்குப் பொருள் தெரியாது. அக்காலத்திலும் பெரியோர் களால் சொல்லப்பட்ட பொருள் தெரியாத சொற்களையே மந்திரங்கள் என்று மக்கள் நம்பினர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப (தொ.பொ.செய். 171) பெரியோர்களின் கட்டளையால் தோன்றுகின்ற பொருள் மறைந்த மொழிகளையே மந்திரம் என்று கூறுவர் 3. நல்லநாள், கெட்டநாள் பார்க்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது. மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கில்லை (தொ.பொ.கள.45) களவுமணம் நிகழுங் காலத்திலே கெட்ட ராசியிலும் கெட்ட நாளிலும் காதலியுடன் சேராமல் இருக்கும் ஒழுக்கம் தலைவனிடம் இல்லை. நல்லராசி, தீய ராசி. நல்லநாள், கெட்ட நாள் எந்த நாளிலும் களவுமணம் நடந்து கொண்டுதான் இருக்கும். கற்பு மணத் தம்பதிகள் தீய ராசியிலும் தீய நாளிலும் ஒன்றுசேர மாட்டார்கள். 4. நாள் பார்ப்பதோடு சகுனம் பார்க்கும் வழக்கமும் தமிழர்களிடம் உண்டு. நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் (தொ.பொ.புற. 30) நாளாலும், பறவைகளாலும், பிற பொருள்களாலும் உண்டாகும் காரணங்களும் 5. மாண்ட கணவனுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கமும் பழந் தமிழர்களிடம் உண்டு. இதனைப் பாலை நிலை என்று கூறுகிறார் ஆசிரியர். நல்லோள் கணவனொடு நளியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலை நிலையும் (தொ.பொ.புற. 19) கற்புடைய மனைவி தன் கணவனோடு உடன்கட்டை ஏறப்போகும்போது, அதை வேண்டாம் என்று சொல்லி விலக்கு வாரோடு எதிர்த்துக் கூறும் பாலை நிலையும் என்பதனாற் காணலாம். 6. இல்லறம் நடத்துவோர்க்குப் பல கடமைகள் உண்டு. அவைகளில் அந்தணர், அறிஞர், தேவர்கள் இவர்களை வணங்கி வழிபாடு செய்வதும் அவர்கள் கடமையாகும். அந்தணர் திறத்தும், சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினானும் (தொ. பொ.கற்பு. 5) அந்தணர்மாட்டும், அறிஞர்களிடத்தும், தேவர்கள் பாலும் நடந்து கொள்ளும் முறையைக் காட்டும் குறிப்பினாலும் என்பதனால் காணலாம். 7. இல்லறத்தை நடத்தும் பெரும் பொறுப்பை இல்லாள் தலையிற் சுமத்தினர் பழந்தமிழர். இல்லறத்தை இனிது நடத்து வதற்கேற்ற செல்வத்தைச் சேர்ப்பது ஆண்களின் பொறுப்பாக அமைத்தனர். ஆண் பெண் இருவருள் பெண்களுக்கே பொறுப்பு மிகுதி. பெற்றோரும் மற்றொரும் கற்பித்த நல்லுரைகளை மறவாது பின்பற்றுதல்; காதலனிடம் அன்பு காட்டுதல்; நல்லொழுக் கத்துடன் நடந்து கொள்ளுதல்; இளகிய நெஞ்சுடன் பொறுமை காட்டுதல், இரகசியங்களை ஒருவர்க்கும் உரைக்காமல் உள்ளத்திலேயே நிறுத்தி வைத்துக்கொள்ளுதல்; இயன்றவாறு விருந்தினர்களை உபசரித்தல்; தன்னைச் சூழ்ந்திருப்போரையும் சூழ்ந்திருக்கும் பொருள்களையும் பாதுகாத்தல். இவைகள் எல்லாம் இல்லாளுக்கு வேண்டிய இன்றியமையாத குணங்கள். இதுவே சிறந்த கற்பாகும். இதனை கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும் மெல்லியல் பொறையும், நிறையும், வல்லிதின் விருந்து புறந்தருதலும், கற்றம் ஓம்பலும், பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள். (தொ.பொ.கற்பு. 11) என்ற சூத்திரத்தால் காணலாம். இதில் வல்லிதின் விருந்து புறந்தருதல் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. விருந்தினர் வேறு; சுற்றத்தார் வேறு, சுற்றத்தார் தன்னைச் சூழ்ந்திருப் பவர்கள்; விருந்தினர் முன்பின் அறியாத புதியவர்கள், தமது இல்லத்திற்கு வந்த புதியவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் தம் நாட்டவராயினும் பிற நாட்டவராயினும் அவர்களை வரவேற்று உபசரிக்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடம் குடிகொண்டிருந்தது. இதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மை படைத்தவர்கள் தமிழர்கள் என்பதை அறியலாம். 8. பெற்றோரின் குணம் பிள்ளைகளுக்கும் உண்டு. இதை இப்பொழுதும் கண்கூடாகக் காண்கிறோம். இக்குணம் பழக்கத் தினால் உண்டாகிறதா? பிறவியிலேயே தோன்றுகிறதா? இது ஆராய்ச்சிக்குரியது. பழக்க வழக்கங்களும், சுற்றுச் சார்பும், சூழ்நிலையுமே ஒருவருடைய நடத்தைக்கும் குணத்திற்கும் காரணம் என்பதே அறிஞர் கொள்கை. ஆனால் குழந்தைகளின் குணம் எப்படியிருந்தாலும், அவர்களின் உருவம் தாயைப் போலவோ, தந்தையைப் போலவோ, அல்லது பாட்டன் பாட்டியைப் போலவோ அமைந்திருப்பதைக் காண்கிறோம். தந்தையின் குணம் மகனுக்கும் உண்டு என்பதே பழந் தமிழர் கொள்கை. இதனை தந்தையர் ஒப்பர் மக்கள் (தொ.பொ.கற்பு. 7) என்ற பகுதியால் அறியலாம். 9. மனைவி மக்களைத் துறந்து தனித்துறையும் துறவறம் என்பது பழந்தமிழர்களிடம் இருந்த வழக்கமல்ல. இத்தகைய சந்நியாசம்! பழந்தமிழ் நாட்டில் இல்லை. தமிழர்களின் துறவற முறை வேறு. தமிழர்கள் காம உணர்ச்சி மறைந்துபோன கடைசிக் காலத்தில்தான்-அதாவது இல்லற இன்பத்தைப் பூரணமாக அனுபவித்த பிறகு தான்-துறவரத்தை மேற்கொள்ளுவர். கணவனும், மனைவியும் தம்மைப் பாதுகாக்கும் மக்களோடும், நன்னெறியில் ஒழுகும் சுற்றத்தாரோடும் சேர்ந்து வாழ்ந்தே சிறந்த செயல்களைச் செய்வார்கள். இதுதான் இல்லறத்திற்குப் பிறகு பின்பற்றப்படும் துறவற வாழ்வாகும். இதனை, காமம் சான்ற கடைக்கோட்டை காலை, ஏமம்சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு, கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொ.பொ.புற. 51) என்பதனால் அறியலாம். இதுவே தமிழர்கள் பின்பற்றி வந்த துறவற வாழ்வு. தன்னலந் துறந்து பிறர் நலத்துக்காக உழைக்கும் தூய வாழ்வே துறவறம் என்பதை இதனால் அறியலாம். 10. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களிலும் குற்றங் குறைகள் ஏற்படாமல் அற நெறியிலே வாழ்ந்த அறிஞர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். (தொ.பொ.புற. 16) 11. உணவிலே ஆசையின்மை, நீரிலே விருப்பம் இன்மை, வெப்பம் பொறுத்தல், குளிர்ச்சியைத் தாங்குதல், அமைதி யான இடத்தைத் தேடிக் கொள்ளுதல், யோகாசன முறையில் அமர்தல், உண்ணும்போது உரையாடாமை, மவுனமாயிருத்தல், இந்த எண் வகைப் பயிற்சிகளையும் உடைய தவசிகளும் தமிழ் நாட்டில் இருந்தனர். 12. செல்வமுடையவன் தன் செல்வத்தால் வறியோரின் துயரைப் போக்க வேண்டும். இதுவே அவன் கடமை பிறருக்கு உதவி செய்யாமல் தமக்காக மட்டும் பொருளீட்டி வாழ்ந்த தந்நலக்காரர்கள் மக்களால் பழிக்கப்பட்டனர். அறிஞர் களாலும் புலவர்களாலும் வெறுக்கப்பட்டனர். கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் (தொ.பொ.புற.29) என்பதனால் இந்த உண்மையைக் காணலாம். 13. மக்கட் சமுதாயத்திலே உயர்வு தாழ்வு ஏற்படுவதற்கான காரணங்களில் முதற் காரணம் செல்வந்தான். செல்வம் உடைய மக்களே சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர்; செல்வமற்ற வறியவர்கள் தாழ்ந்தவர்களாக எண்ணப்பட்டனர். உள்ளவர் உயர்ந்தோர், இல்லாதவர் இழிந்தோர். இந்த நீதி தொல்காப்பிய காலத்திலே நிலவியிருந்தது. (தொ.பொ.அக. 44) 14. தமிழர்கள் புகழுடனும் மானத்துடனும் வாழ்வதையே சிறந்த வாழ்க்கையெனக் கொண்டனர். (தொ.பொ.அக. 44) 15. போர்க்களத்திலே வெற்றி பெற்ற வீரர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் மன்னர்கள், பட்டமும் பரிசும் அளித்துப் பாராட்டுவார்கள். ஒரு நாட்டையே அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதும் உண்டு. ஒரு ஊரையோ, பல ஊர்களையோ இனாமாக வழங்குவதும் உண்டு. ஏனாதி, காவிதி போன்ற பட்டங்கள் கொடுப்பதும் உண்டு. இவைகள் அவரவர்கள் ஆற்றிய வீரச் செயல்களுக்கு ஏற்றவாறு வழங்கப்படும். இப்பரிசையும், பட்டத்தையும் மாராயம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். மாராயம் பெற்ற நெடுமொழியானும் (தொ.பொ.புற. 7) அரசனிடம் மாராயம் பெற்றதனால் புகழ்ந்து பேசப்படும் சொல்லாலும் இது இவ்வழக்கத்தை விளக்கும். 16. போர் செய்யப் புறப்படும் வேந்தன், குறித்த நேரத்திலே புறப்படுவதற்குத் தாமதமானால், குறித்த நல்ல நேரத்திலே தன் குடையையும் வாளையும் ஊருக்குப் புறத்தே அனுப்பி வைப்பான். இதனை குடையும் வாளும் நாள்கோள் (தொ.பொ.புற. 69) என்பதனால் காணலாம். 17. நான் நினைக்கும் காரியம் நிறைவேறினால் உனக்கு இன்னது செய்வேன் என்று தெய்வத்தை வேண்டிக்கொள்ளும் வழக்கம் பழந்தமிழர்களிடம் இருந்தது. இதைப் பிரார்த்தனை என்றும் வேண்டுதல் என்றும், நேர்த்திக்கடன் என்றும் இக் காலத்தினர் இயம்புவர். தொல்காப்பியம் இதைத் தெய்வக் கடம் என்று குறிப்பிடுகிறது. (தொ.பொ.கற். 9) 18. போர்க்களத்திலே புகுந்து நிற்கும் படை வீரர்கள், தாங்கள் இன்ன அரசன் படை வீரர்கள் என்பதைக் காட்டு வதற்காக, அவர்கள் தங்கள் அரசர்களுக்குரிய மலர் மாலை களை அணிந்து நிற்பார்கள். (தொ.பொ.புற. 63) 19. கூற்றுவன் வரும்நாள் இன்னதென்று குறிப்பிட்டுரைக்க முடியாது. அவன் எப்போதாயினும் வருவான். உயிரைக் கவர்ந்து செல்வான். ஆதலால் வாழ்நாள் உறுதியன்று. இப்பொழுதே நல்லன செய்யுங்கள். நாளைக்குப் பார்க்கலாம் என்று தள்ளி வைக்காதீர்கள் என்ற அறிஞர்கள் நல்லுரை வழங்குவார்கள். 20. வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்களுக்கு முதியவர் களைச் சுட்டிக்காட்டுவார்கள். அவர்களைப் போல நீங்களும் பழுத்து முதிர்ந்த கிழவர்களாகிவிடுவீர்கள்; ஆதலால் இளைஞர் களாயிருக்கும் இப்பொழுதே நல்ல காரியங்களைச் செய்து புகழ் பெற்று வாழுங்கள்; என்று சொல்லுவார்கள். 21. மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்வனாயின் அவனுடைய நிலையைத் தபுதார நிலை என்று கூறுவர். தாரமிழந்தான் தபுதாரன். ஆனால், மனைவியை இழந்தவன் தபுதாரனாகத்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதலனை இழந்து தனித்து வாழும் மனைவின் நிலையைத் தாபத நிலை என்று கூறுவர். கணவனை இழந்த மனைவி மறுமணம் செய்து கொள்ளாமல் தவம் செய்து கொண்டிருப்பாள், உடன்கட்டை ஏறாத மனைவி தவஞ் செய்து வாழ்தல் அக்கால வழக்கம் தவம் செய்வோள் தாபதியாவாள். 22. போர் நின்றவுடன் பெண்கள் போர்க்களத்திலே புகுவர். எதிரிகளின் வேற்படைகளால் தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் தங்கள் கணவன்மார்களின் உடம்பைத் தேடியெடுத்து வைத்துக் கொண்டு வாய்விட்டு அழுவார்கள். 23. போர்க்களத்திலே மாண்டு போன வீரனுடைய உடம்பை நடுவிலே போட்டு, அதைச் சுற்றிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஒப்பாரி பண்டைத் தமிழர் வழக்கம். 24. உன் மகன் போர்க்களத்திலே எதிரிகளுடன் இறுதி வரையிலும் எதிர்த்து நின்று சண்டையிடவில்லை. எதிரிகளுக்கு அஞ்சிப் புறமிட்டு ஓடிவிட்டான் என்று யாரேனும் ஒருவர், ஒரு போர் வீரனுடைய அன்னையிடம் கூறிவிட்டால் போதும், உடனே அவள் ஆத்திரமடைவாள். இது உண்மையானால் நான் தற்கொலை செய்துகொள்ளுவேன் என்று சூளுரைப்பாள். போர்க்களத்திற்கு ஓடுவாள். தன் மகன் உடம்பைத் தேடுவாள். அவன் எதிரிகளின் வாளுக்கோ வேலுக்கோ இரையாகி இறந்து கிடந்தால் ஈன்ற ஞான்றினும் மகிழ்ச்சியடைவாள். இன்றேல்-அவன் புறமிட்டோடியது உண்மையானால்-தற்கொலை செய்து கொள்ளுவாள். இவைகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத் திணையியல், 77-வது சூத்திரத்திலே காணலாம். 25. தாங்கள் பிறந்த நாளிலே வெள்ளாடையணிந்து யாருக்கும் துன்பம் செய்யாமல் தான தருமம் செய்வது தமிழ் வேந்தர்களின் வழக்கமாகும். 26. தாங்கள் அரியணையேறி முடிசூட்டிக் கொண்ட நாளைக் கொண்டாடும் வழக்கமும் தமிழ் வேந்தர்களிடம் இருந்தது. இவைகளைத் தொ. பொ. புறத்திணையியலின் 87-வது சூத்திரத்திலே காணலாம். 27. வானுலகில் வாழ்வோர் வானவர்கள். அவர்கள் உண்ணும் உணவு அமிர்தம். அது மிகவும் சுவையுடையது. இந்த நம்பிக்கை தமிழர்களிடம் இருந்தது. 28. குழந்தை பிறந்த சில நாட்கள் கழித்து அக்குழந்தையின் பொருட்டுச் சில சடங்குகள் செய்வர். அப்பொழுது குழந்தையின் நல்வாழ்வைக் கருதிப் பெரியோர்களை உபசரிப்பார்கள். தேவர் களையும் வேண்டிக் கொள்வார்கள். 29. பொருள் தேடும்பொருட்டோ, போர் செய்யும் பொருட்டோ, தூதனாகவோ போர் வீரானாகவோ, சென்று வெற்றியுடன் திரும்பிவந்த தலைவனை அவனுடைய மனைவி மார்களும், மக்களும், சுற்றத்தார்களும், மாலையிட்டு, வரவேற்று மகிழ்ச்சியடைவார்கள். இவைகளைத் தொ.பொ.கற்பியலின் ஐந்தாவது சூத்திரத்தால் அறியலாம். 30. ஆண்மகன் பரத்தையர்களுடன் கூடி வாழும் வழக்கத்தைக் கொடுமையான வழக்கம் என்று கூறுகின்றார் தொல்காப்பியர். ஆண் மக்களின் இவ்வழக்கத்தைப் பெண்களும் கண்டித்தனர். மனைவிமார்களும் இவ்வழக்கமுடைய கணவன் மார்களை வெறுத்தனர். இது ஒழுக்கத்திற்கு முரணானது என்பதே தொல்காப்பியர் கருத்து. ஆதலால் கொடுமை ஒழுக்கம் என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளார். (தொ.பொ.புற.6) 31. மக்களுக்குப் பயனளிக்கும் இலக்கியங்களைப் புதிய பாடல்களிலே இயற்றுவது தவறாகாது. பழைய இலக்கணத்தைப் பின்பற்றி எழுதப்படும் பாடல்கள் தாம் சிறந்தவை. புதிய முறையிலே எழுதப்படும் பாடல்கள் பழைய இலக்கணத்திற்கு எதிரானவை; அவைகளைப் பாடல்கள் என்று ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறுவோர் சிலர் உண்டு. இதைத் தொல்காப்பியம் ஒப்புக் கொள்ளவில்லை. சிறந்த செய்திகளை எளிதிலே மக்கள் புரிந்து கொள்ளும்படி புதிய பாடல்களிலே நூல்கள் இயற்றலாம். இது இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற வழியுமாகும். இம்முறையைத் தொல்காப்பியர் ஒப்புக் கொள்ளுகிறார். இப்படிப் புதிதாக எழுதப்படும் பாடல்களுக்கு விருந்து என்று பெயர் சொல்லுகிறார். விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொ.பொ.செய். 23) விருந்தாவது புதிய பொருள்களைப் புதிய வகையிலே எழுதப்படும் பாடலுக்குப் பெயராகும் இதுவரையிலும் கூறியவைகளைக் கொண்டு தொல் காப்பியர் காலத்திலே தமிழர் வாழ்வு எவ்வளவு தலை சிறந்திருந்தது என்பதைக் காணலாம். தொல்காப்பிய காலத் தமிழர்கள், வகுப்பு வெறியற்றவர்கள்; மொழி வெறியற்றவர்கள். அவர்களிடையிலே ஒழுக்கத்தால், தொழில்களால் உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டிருந்த போதிலும் எல்லோரும் ஒற்றுமை யுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். நடுநிலையிலிருந்து தொல் காப்பியத்தைப் படிப்போர் இந்த உண்மைகளைக் காணலாம்.