சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 15 அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் மணிவாசகர் - மூவர் மணிமொழிகள் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 15 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 240 = 248 படிகள் : 1000 விலை : உரு. 155/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் ஆசிரியர் முன்னுரை 3 1. அருணகிரிநாதர் 7 2. முருகன் பெருமை 11 3. முருகனை வேண்டுதல் 15 4. தமிழ்த் தெய்வம் 18 5. விலைமாதர் நடிப்பு 22 6. வேசையர் இழிவு 26 7. மக்கள் முப்பருவம் 31 8. சமுதாயத் துரோகிகள் 35 9. கரும்பும் கசந்து தேனும் புளிக்கும் 41 10. வெறும் பேச்சால் பயன் இல்லை 44 11. ஊழ்வினை ஓடும் 48 12. பகுத்தறிவின் பயன் 52 13. காலனுக்கு அஞ்சாக் கவிஞர் 55 14. தனக்குத்தானே உபதேசம் 59 15. வறுமையின் கொடுமை 63 16. உண்மை வாழ்வு 67 17. குமரகுருபர சுவாமிகள் 72 18. முருகனிடம் முறையீடு 75 19. தாய்மொழிப் பற்று 78 20. பொதிய மலைக் காட்சி 82 21. விருந்தோம்பல் 86 22. தெய்வம் போற்றிய தமிழ் 90 23. கற்றோர் பெருமை 94 24. வழிகாட்டும் தெய்வங்கள் 98 25. செல்வமும் வறுமையும் 103 26. குரு பக்தி 108 27. கவிகளின் பெருமை 112 28. கவிதா சக்தியே கலைமகள் 116 மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் 1. மாணிக்கவாசகர் 123 2. மெய்ஞ்ஞானமே இன்ப ஊற்று 127 3. பக்தர்களின் பண்பு 132 4. சாவதற்கு விரும்பேன் 136 5. தேவரும் காணாத தேவன் 140 6. தீமை என்ன செய்யும்? 144 7. உள்ளம் உருக்கும் உயர்மொழி 149 8. அன்புக்கு நிகரில்லை 153 9. பெரியோர் கடன் 157 10. பழமை புதுமை 161 11. தித்திக்கும் தெய்வம் 165 12. வண்டுவிடு தூது 169 13. காலைக் காட்சி 173 14. நானே சமர்த்தன் 176 15. இரக்கமே இறைவன் 180 16. திருமூலர் 183 17. இறைவன் ஒருவனே 187 18. வேதாந்த உண்மை 191 19. பொய் வேடத்தார் 195 20. ஆண்டவனை அறிந்தவர் 199 21. கல்லாமையால் பொல்லாமை 203 22. வல்லமையே சக்தி 207 23. கதையும் கருத்தும் 211 24. நெஞ்சத் தூய்மை 215 25. நல்லோரைப் போற்றுக 219 26. பெரியார் நட்பு 223 27. சுவரிலே சித்திரம் 227 28. அருளால் அனைத்தும் உண்டு 231 29. அன்பும் அறிவும் 234 30. ஒன்றே குலம் ஒருவனே தேவன் 237 அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் (1960) ஆசிரியர் முன்னுரை `அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள் என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை. அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; குருபரர் என்பது சிற்றிலக்கியங்கள் பல இயற்றிய குமரகுருபர சுவாமிகளைக் குறிக்கும். இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புக்களை, அருணகிரிநாதர் என்ற தலைப்பிலும், குமரகுருபர சுவாமிகள் என்ற தலைப்பிலும் காணலாம். இருவரும் சிறந்த புலவர்கள்; பக்தர்கள்; துறவிகள்; வடமொழிக் கலைகளையும், தமிழ்க் கலைகளையும் கற்றுணர்ந் தவர்கள். இருவர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. குமரகுருபரர் பாடல்களிலே வடமொழியல்லாத வேற்று மொழிச் சொற்களும் உண்டு. தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்தால், தமிழ் கெட்டுப் போய்விடும்; அதன் தனித்தன்மை போய்விடும்; அதன் தூய்மை அழிந்துவிடும்; தமிழே அழிந்து போய் விடும்; என்று சொல்வோர் உண்டு. இவர்கள் கூற்று, மொழி வளர்ச்சியின் தத்துவத்தை அறியாதார்- அறிந்தும் அதை ஒப்புக்கொள்ளாதவர் கூற்று என்றே கொள்ளவேண்டும். பல மொழி மக்களுடன் கூடிப் பழகுவோரின் தாய்மொழியிலே பிற மொழிச் சொற்கள்- அவர்களுடன் பழகுவோர் மொழியில் உள்ள சொற்கள்- கலந்து தான் தீரும். இதற்கு உதாரணம் ஆங்கில மொழி ஒன்றே போதுமானது. ஆங்கிலத்திலே பல மொழிகள் கலந்ததால் அதன் இலக்கியம் அழிந்துவிடவில்லை; அதன் வளர்ச்சி குறைந்துவிடவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி போய் விட்டாலும், அந்த ஆட்சி இருந்த இடங்களில் எல்லாம் ஆங்கில மொழி நிலைத்து நின்று உலவுகின்றது. ஆங்கிலந்தான் உலக மொழி என்று சொல்லும் அளவுக்கு அது பெருமைபெற்று விட்டது. பிற மொழிக் கலப்பால் ஆங்கிலத்தின் தன்மையும், அதன் மதிப்பும் குறைந்துவிடவில்லை என்பதற்கே இவ்வுதாரணம். சிறப்பாகத் திருப்புகழில் ஏராளமாக வடசொற்கள் கலந்து விட்டன. இதனால் தமிழின் தன்மை கெடவில்லை என்பது நிச்சயம். மனிதருள்ளே எல்லோருடனும் கூடிப் பழகும் மனிதர்- எல்லோரிடமும் அன்பு காட்டும் மனிதர்- எல்லோரையும் சமமாக நினைக்கும் மனிதர்- மக்களுள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறார். இப்படிப் பலருடனும் ஒத்துப் பழகுவது- பலருடனும் அன்புடன் கலந்து பழகுவது- உயர்ந்த மனிதப் பண்பு என்று பாராட்டப் படுகின்றது. மக்களைப்போலவே, அவர்கள் பேசும் மொழியும், அவசியம் நேர்ந்தபோது பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளுவதிலே தவறில்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் இயல்பு படைத்த மொழியே சிறந்த மொழியும் ஆகும். தமிழுக்கு இத்தகைய இயற்கைப் பெருமையுண்டு. தமிழ் பண்டைக் காலத்திலிருந்து- பழமையானது என்று அனைவராலும் போற்றப்படும் தொல்காப்பிய காலத்திலிருந்து- வடமொழிச் சொற்களை ஏற்று வந்திருக்கின்றது. தமிழிலே கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் தமிழோடு கலந்து தமிழ்ச் சொற்களாகவே ஆகிவிட்டன; உருவத்தில்- ஓசையில்- எல்லாம் தமிழ் மயமாகவே ஆகிவிட்டன. இந்த உண்மையைத் திருப்புகழ் படிப்போர் காணலாம். குமரகுருபரர் பிரபந்தங்களைப் படிப்போர் அறியலாம். வடமொழியைத் தமிழில் கலந்து எழுதுவோர் தமிழ்த் துரோகிகள் என்று வசைபாடுவோரும் உண்டு. தமிழ் மக்களுக்குப் புரியாத- தமிழ் மக்களிடையிலே வழங்காத- வடசொற்களை யெல்லாம் வேண்டுமென்றே தமிழுக்குள் திணிப்பது தவறு; அது மொழியை வளர்ப்பது ஆகாது; அத்தகையோர் தமிழைக் கெடுக்கவேண்டும் என்று நினைப்போர்தான் என்று சொல்வதை மறுக்கவில்லை. ஆனால், தமிழர்க்குத் தெரிந்த வடசொற்கள்- பேசிப் பழகிய வடசொற்கள்- தமிழுடன் கலந்து வருவது இயல்பு. இந்த இயற்கையைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம். சிலப்பதிகார- மணிமேகலைகளாகிய காவிய காலங்களுக்குப் பின் தோன்றிய தமிழ் நூல்களில் எல்லாம் வடசொற்கள் மிகுதியாக வழங்கியிருக்கின்றன. சிலப்பதிகார மணிமேகலை களிலும் வடசொற்கள் உண்டு. வட மொழிக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட ஒற்றுமை- கூட்டுறவு- இவைகள்தான் இதற்குக் காரணம். தமிழ் நூல்கள் இயற்றிய புலவர்கள் பெரும்பாலும் வடமொழியும் பயின்றவர்கள். ஆதலாலும், அவர்கள் பாடல்களிலே வடசொற்கள் கலந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை. தேவாரப் பாடல்களிலே வடசொற்கள் உண்டு; திவ்வியப் பிரபந்தப் பாடல்களிலே வடசொற்கள் உண்டு; கம்பன் கவிதைகளிலே வடசொற்கள் உண்டு; இராமலிங்க சுவாமிகள் பாடல்களிலே வடசொற்கள் உண்டு. அவைகளைக் காட்டிலும் திருப்புகழிலே வடசொற்கள் கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான். திருப்புகழிலே வடசொற்கள் கலந்திருப்பதனால் பாட்டின் சுவை குறைந்துவிடவில்லை. அவைகள் பக்தியைப் புகட்டும் பாட்டுக்களாகத்தான் விளங்குகின்றன; உள்ளத்தை உருக்கும் ஓசை நயத்துடன்தான் உலவுகின்றன. ஆதலால் அவசியங் கருதிப் பிறமொழிச் சொற்களை ஏற்பதனால் எந்த மொழியும் அழிந்து விடாது. வளருமே ஒழியக் குறையாது. இவ்வுண்மையை உணராதவர்கள்- உணர்ந்தும், உள்ளத்திலே ஏதோ ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்தாம், தனித்தமிழ்! தனித்தமிழ்! என்று கூச்சலிடுவார்கள். இத்தகைய கூச்சல்காரர்களால் தமிழ் வளர்ந்ததும் இல்லை. வளரப் போவதும் இல்லை. இது உண்மை. தமிழிலே இப்பொழுதுள்ள சிரஞ்சீவி இலக்கியங்கள் அனைத்தும் வடமொழிச் சொற்கள் கலந்தவைதான். சில இலக்கியங்களிலே வடசொற்கள் மிகக் குறைவாக இருக்கலாம். அருணகிரியார், வில்லிப்புத்தூரார், குமரகுருபரர், தாயுமானார் போன்றோர் பாடல்களிலே வடசொற்கள் கொஞ்சம் அதிகமாகக் கலந்திருக்கலாம். இதுதான் வித்தியாசம். திருப்புகழிலும், பொதுவாக அருணகிரியார் பாடல் களிலும், குமரகுருபரர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதற்காக அவற்றை வெறுப்போர் தமிழின் பெருமையை அறியாதவர்கள்- தமிழ்ப் பற்று இல்லாதவர்கள்- என்பதே நமது நம்பிக்கை. இவ்விருவர் பாடல்களும் ஓசைநயம் பெற்று விளங்கு கின்றன; படிப்போர் மனத்தைப் பரவசமாக்குகின்றன. இவ்விருவர் கவிதைகளிலும், மக்கள் வாழ்வை வளம்படுத்தக்கூடிய- மக்கள் அறிவை வளர்க்கக்கூடிய- மக்களை நல்ல நெறியிலே நடக்கும் படி அறிவுறுத்தக் கூடிய- பல கருத்துரைகளும் அடங்கியிருக் கின்றன. அவர்கள் கவிதைகளைப் படிப்போர் இவ்வுண்மைகளை உணரலாம். அவர்களின் பெருமையை- அவர்கள் கவிதைகளின் உயர்வை- மக்கள் உணர வேண்டும்; அக்கவிதைகளைப் படிக்க வேண்டும்; படிப்பதற்குத் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்னும் ஆவலுடன் தான் இக்கட்டுரைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவருகின்றது. தமிழன்பர்கள் இதை வரவேற் பார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு. இலக்கிய நிலையம் 9, 7-வது தெரு, சவுரஷ்டிர நகர் சாமி. சிதம்பரன் சென்னை- 24. 24-12-1960 அருணகிரிநாதர் அருணகிரிநாதர் கி.பி. பதினாந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவர். முருகனையே கடவுளாகக் கொண்டு வணங்கிப் பாடி வாழ்ந்தவர். இவர் இயற்றியிருக்கும் பாடல்கள் எல்லாம் -நூல்கள் எல்லாம்- முருகன் பெருமையையே போற்று கின்றன. இவர் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தார்; ஆதலால் அருணகிரிநாதர் எனப் பெயர்பெற்றார். இவர் இசைவேளாளர் குலத்திலே பிறந்தவர் என்பது வரலாறு. அருணகிரி என்பது திருவண்ணாமலை. இவரைப்பற்றி வழங்கும் வரலாறுகள் பல உண்டு. அருணகிரியாரின் தந்தை பெயர் தெரியவில்லை. இருவருடைய அன்னையார், இவர் இளம் பருவமாயிருக்கும்போதே இறந்து போனார். அதனால் இவருடைய தமக்கையாரால் வளர்க்கப் பட்டார். இவர் தமது வாலிப வயதிலே காமவெறியராய்க் கணிகையர் நட்பில் காலங் கடத்தினார். இவர் செய்கையைத் தமக்கையார் வெறுத்தார்; கண்டித்தார்; ஆதலால் இவர் வாழ்விலே வெறுப்புக் கொண்டு துறவியானார் என்பர். அருணகிரியார், காமவெறியராய்த் திரிந்ததை அவர் தமக்கையார் கண்டித்ததனால் வெறுப்படைத்தார்; உயிர் விடத் துணிந்தார். அருணைக் கோயிலின் கோபுரத்தின் மேல் ஏறி நின்று கீழே குதித்தார்; குதித்தும் அவர் இறந்து போய் விடவில்லை; பிழைத்துக்கொண்டார். இப்பொழுது முருகன் ஆசாரிய வடிவில் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்; உபதேசித்தார்; அதன்பின் துறவறத்தை மேற்கொண்டார்; எப்பொழுதும் முருகனையே பாடிக்கொண்டிருந்தார் என்பர். அருணகிரிநாதர் பாடல்களைப் படிக்கும்போது அவரைப் பற்றிய சில உண்மைகளை நாம் காணலாம். அவருடைய பாடல்களே அவ்வுண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன. அருணகிரிநாதர் சிறந்த கல்விப் பயிற்சியுள்ளவர்; தமிழ்க் கல்வியிலும் தேர்ந்தவர்; வடமொழிக் கல்வியிலும் தேர்ந்தவர். இயற்றமிழ்ப் பயிற்சியோடு இசைத் தமிழிலும் வல்லவர் ஆவார். அவர் வாலிப வயதிலே வேசையர்கள் வலையிலே வீழ்ந்து கிடந்தார். அதனால் அவர் பல துன்பங்களுக்கு ஆளானார்; வறுமை உடல்நோய் இவை களால் வருந்தினார். இதன் பிறகே காமத்தின் தீமையைக் கண்டறிந்தார்; விலைமாதர்களின்- வேசையர்களின்- பொய்யன் பையும், நயவஞ்சகங்களையும், பொருள் பறிப்பதற்காக அவர் செய்யும் நடிப்புக்களையும் உணர்ந்தார். நல்லறிவு பெற்றார். முருகனை வேண்டினார்; பாடினார்; பரவினார். வேசையர் நட்பால் தான் பட்ட தொல்லைகளைப் பிறரும் அறிந்து கொள்ளும் பொருட்டு விரிவாகப் பாடினார். இவையே அருணகிரிநாதர் பாடல்களிலிருந்து நாம் ஊகிக்கும் உண்மைகள். அருணகிரிநாதரால் பாடப்பட்ட நூல்கள் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, திருவகுப்பு, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம் என்பவை இன்னும் சில நூல்களும் உண்டு. இவற்றுள் பக்தர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்படும் நூல் திருப்புகழ் ஆகும். பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியதாகக் கூறுகின்றார். ஆனால் ஏறக்குறைய 1250 திருப்புகழ் தான் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. திருப்புகழ் என்ற மொழிக்கு அழகிய புகழ் அல்லது அழகிய பெருமை என்பதே பொருள். ஆகவே திருப்புகழ் என்னும் பெயர் பொதுப் பெயர். இப் பொதுப் பெயர், முருகன் புகழ் பேசும் நூலுக்குச் சிறப்புப் பெயராக அமைந்துவிட்டது. திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்தும் வண்ணப் பாடல்கள்; அதாவது இசையுடன் பாடக்கூடிய பாடல்கள். அருணகிரிநாதர் பாடல்களிலே திருப்புகழ்தான் முருக பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. முருகன் அடியார்கள் அப்பாடல்களை மனம் உருகிப் பாடுகின்றனர். திருப்புகழ் பாடுவோர்- திருப்புகழ் படிப்போர்- முருக பக்தர்களாகி விடுகின்றனர். இத்தகைய சக்தி- தன்மை- திருப்புகழ்ப் பாடலுக்கு இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. விலைமாதர்களின் வஞ்சகங்களை- பொருள் பறிப்பதற்காக நடிக்கும் தந்திரங்களை- மோசடிகளை- ஆடவர்களை மயக்கு வதற்காக அவர்கள் செய்யும் மாயங்களை- விளக்கிச் சொல்லுவதிலே திருப்புகழுக்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது. விலை மாதர்களுடன் நீண்ட நாள் பழகி, அவர்களின் மாயா ஜாலங்களிலிருந்து தப்பித்துக் கொண்ட ஒருவரால்தான் அவ்வளவு விளக்கமாகச் சொல்ல முடியும். விலை மாதர்களைப் பற்றி- அவர்கள் நடத்தைகளைப் பற்றி- திருப்புகழில் வர்ணிக்கப் படுவதைப் பார்க்கும்போது அருணகிரிநாதர் தமது அனுபவத்தைக் கூறுகிறாரோ என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது. ஆபாசத்தை- காமவெறியூட்டும் நிகழ்ச்சிகளை- பன்னிப் பன்னிப் பாடும் நூல் திருப்புகழ் என்போர் உண்டு. ஆபாசத்தை எடுத்துக்காட்டுவது ஆபாசத்தைப் பாராட்டுவது ஆகாது; காமத்தால் விளையும் துன்பங்களை எடுத்துச் சொல்வது காமவெறியை ஊட்டுவது ஆகாது; தீயொழுக்கம் இன்னது என்பதை எடுத்துரைப்பது தீமையைப் போற்றுவது ஆகாது. மாதர் மயக்கால்- காமத்தால்- வேசையரால்- விலைமாதரால் - ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி வலியுறுத்திப் பாடுவது திருப்புகழ் அதனால் திருப்புகழைக் காமவெறியை ஊட்டும் நூல் என்று சொல்வது வீண் பழியாகும். திருப்புகழின் பெருமையை- சுவையை- உணராதவர் உரையாகும். திருப்புகழிலே, நீதிமொழிகள் பலவற்றைக் காணலாம்; அறிவுரைகள் பலவற்றைக் காணலாம்; மனித வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் பலவற்றைக் காணலாம். பல பாடல்கள் மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள்; வாலிப வயதில் உள்ள செயல்கள்; வயதேறிய பருவத்தில் வரும் நோய்கள்; கிழப் பருவத்தில் மக்கள் அடையும் துன்பங்கள்- இவைகளையெல்லாம் திருப்புகழ்ப் பாடல்களிலே காணலாம். வாத்திய வகைகள்; அவைகளின் முழக்கங்கள்; பெண்களின் ஆடை அணிகள்; குழந்தைகளின் ஆடை அணிகள்- இவைகளை யெல்லாம் திருப்புகழ்ப் பாடல்களிலே காணலாம். பதினைந்தாம் நூற்றாண்டிலே, தமிழகத்திலே நுண்கலை என்று சொல்லப்படும் இசை, நடனம் முதலியவை மிகுந்த வளர்ச்சியடைந்திருந்தன. இவ்வுண்மையைத் திருப்புகழ் விளக்கி நிற்கின்றது. காமவெறி கொண்டு விலைமாதரை நம்பி வீணாகாதீர்கள்; முருகனை நம்பி- வழிபட்டு நன்மையடையுங்கள்; ஒழுக்கத்துடன் வாழுங்கள் என்று மக்களுக்கு உபதேசம் செய்வதே திருப்புகழாகும். திருப்புகழ்ப் பாடல்களிலே பிற மத வெறுப்பைக் காண முடியாது. முருகனே முதல் தெய்வம் என்று கூறுகின்ற திருப் புகழ்ப் பாடல்களிலிருந்து கந்தபுராணக் கதை முழுவதையும் எழுதிவிடலாம்; இராமாயணத்தை எழுதி விடலாம்; கண்ணன் திருவிளையாடல்களைத் தொகுத்து விடலாம்; நாயன்மார் களின் வரலாறுகள் பலவற்றையும் தொகுக்கலாம். அருணகிரியார், முருகனைத் திருமாலின் மருகன் என்று வைத்துப்பாடுகிறார். திருமாலை முருகனுடைய தாய்மாமன் பெருமையைப் பேசும் முறையிலே திருமாலின் அவதாரங்களின் சிறப்புக்களையும் புகழ்ந்து பாடுகிறார். இன்னும் சிவபெருமான், விநாயகர், சக்தி முதலிய பல தெய்வங்களின் பெருமைகளையும் திருப்புகழிலே காணலாம். அருணகிரிநாதரின் பாடல்களிலே ஏராளமான வடமொழிச் சொற்கள் கலந்துதான் இருக்கின்றன. இதனால் பக்திச் சுவை கெட்டுப் போய்விடவில்லை. தமிழின் இனிமையோ பாட்டின் இனிமையோ குறைந்து போய்விடவில்லை. இதனால் பக்தர் களுக்கு மொழியைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லை என்பதை அறியலாம். கந்தரலங்காரம், கந்தர் அநுபூதி என்ற இரண்டு நூல் களிலும் வேதாந்த உண்மைகள் பலவற்றைக் காணலாம். இவை களும் முருகன் புகழையே பாடுகின்றன. ஏனைய நூல்களும் பக்திச் சுவையிலே சிறந்து விளங்குவனவே. பாரதம் பாடிய வில்லிப்புத்தூராழ்வார் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்தார். வில்லிப்புத்தூராழ் வாரும், அருணகிரிநாதரும் ஒரு காலத்தவர் என்பாரும் உளர். இவர்கள் கால முதல் தமிழில் ஏராளமாக வடமொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. இதனை வில்லிப்புத்தூராழ்வார் பாரதத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் காணலாம். இக்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பலர் வடமொழியிலும் வல்லுநராயிருந்தனர்; வடமொழிக் கலப்பே இவ்வுண்மையை உணர்த்துகின்றது. முருகன் பெருமை முருகன் தமிழ்நாட்டுப் பழந்தெய்வம். மலை நிலமாகிய குறிஞ்சி நிலத்துத் தெய்வம். மலைநிலத்து மக்கள் மட்டும் அல்ல; தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முருகனை வணங்கி வருகின்றனர்; வணங்கி வந்தனர். முருகனைப் பற்றி வழங்கும் வரலாற்றுக்குக் கந்தபுராணம் என்று பெயர். கந்தபுராண முருகன் சிறந்த வீரனாக உருவகம் செய்யப்பட்டுள்ளான். முருகன் பிறப்பு, வளர்ப்பு, தேவர்களுக்குப் பரிந்து அவர்களுக்குப் பகைவர்களான அசுரர்களை அழித்து, தன்னை அண்டினவர்களுக்கு அபயம் அளித்தது ஆகிய வரலாறுகளைக் கந்தபுராணத்திலே காணலாம். நம்பினவர் களுக்கு நன்மை தரும் ஒப்பற்ற தெய்வம் முருகன் என்பதே கந்தபுராணக் கருத்து. முருகு என்பது தனித் தமிழ்ச்சொல். முருகு என்னும் சொல்லே முருகன் ஆயிற்று என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. முருகு என்றால் அழகு என்று பொருள். மணம், இளமை, தெய்வத்தன்மை என்ற பொருளும் உண்டு. ஆகவே முருகு என்ற சொல்லுக்கு அழகு, மணம், இளமை, தெய்வத்தன்மை என்ற நான்கு பொருளும் உண்டு. அழகிலே மணம் உண்டு; மாறாத இளமைத் தன்மையும் உண்டு; தெய்வத்தன்மையும் உண்டு. ஆகவே இயற்கை அழகைத் தான் முருகனாக வைத்து வணங்கினர் முன்னோர். நாளடைவிலே இந்த இயற்கை அழகை- முருகை - முருகனாக்கினர்; தந்தை தாய் கற்பித்தனர்; பல திருவிளையாடல்கள் கற்பித்து விழாச் செய்து போற்றி வணங்கினர். வாழ்நாள் முழுவதும் முருகனையே பாடிப் போற்றி வாழ்ந்த அருணகிரிநாதர் இந்த உண்மையை உணர்வார். அவருடைய பாடல்கள் பெரும்பாலும் புராண முருகன் புரிந்த திருவிளையாடல்களையே பாராட்டிப் போற்றுகின்றன. ஆயினும் இயற்கையழகிலிருந்துதான் முருகன் பிறந்தான் என்ற உண்மையை அவர் மறந்துவிடவில்லை; மறைத்துவிடவும் இல்லை. முருகனை அழகன் என்றே அவர் அழைக்கிறார், பாடுகிறார்; பணிகிறார். முதுமலை அழக - குருநாதா முதுமலையில் காணப்படும் அழகனே! குருநாதனே! புதுமா மயில்மீது அணையா வரும் - அழகோனே! புதிய அழகிய மயிலின்மீது ஏறி வருகின்ற அழகுள்ளவனே. ஐந்து இந்திரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும்- அழகோனே! ஐம்புலன்களையும் வென்று உன்னிடம் மனம் ஒன்றுபட்ட அன்பர்களிடம் வாழும் அழகுள்ளவனே. அயிலும், மயிலும், அறமும், நிறமும் அழகும் உடைய- பெருமாளே. கூர்மையான வேற்படையும், மயில்வாகனமும், அறத்தைக் காக்கும் தன்மையும், கண்கவரும் வண்ணமும், அழகும் அமைந்த பெருமையுள்ளவனே. இவ்வாறு முருகனை அழகின் வடிவமாகவே திருப்புகழில் பலவிடங்களில் போற்றுகிறார். அழகுள்ள இடத்திலேதான் முருகனை வைத்துப் போற்றினர் முன்னோர். மலை, இயற்கை அழகுள்ளது. பசுமை நிறைந்த கொடிகள்; கனிகள் பழுத்த மரங்கள்; கண்கவர மலர்ந்து மணம் வீசும் மலர்கள்; உடலுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சி தரும் அருவிகள்; அழகான பறவைகள்; விலங்குகள்- இவைகள் அமைந்த மலைகளை அழகுள்ளவை என்று சொல்லாதவர் யார்? இத்தகைய அழகிய மலைகளில் எல்லாம் அழகுத் தெய்வ மாகிய முருகன் இருப்பதாக நம்பினர். இந்த நம்பிக்கையை அருணகிரிநாதரும் வெளியிட்டிருக்கிறார். அழகு திருத்தணி மலையில் நடித்தருள்- பெருமாளே. அழகிய திருத்தணி மலையில் அமர்ந்து விளையாடுகின்ற பெருமையுள்ளவனே. செகத்தில் உச்சம்பெற்று, அமராவதி அதற்கும் ஒப்பென்று உற்று அழகேசெறி திருக்கழுக் குன்றத்தினில் மேவிய- பெருமாளே. இவ்வுலகிலே உயர்வுபெற்று, இந்திரன் தலைநகராகிய அமராவதி நகருக்கு நிகரானது என்று இருந்து, அழகு பொருந்தியிருக்கின்ற திருக்கழுக்குன்றத்தில் வாழும் பெருமையுள்ள முருகனே. பலவின் முதுபழம் விழைவுசெய்து ஒழுகிய நறவு நிறைவயல், கமுகுஅடர் பொழில்திகழ் பழனி மலைவரு புரவல! அமரர்கள்- பெருமாளே. பலாமரத்திலே தானாகவே பழுத்த பழம். தானே விரும்பிச் சிந்துகின்ற தேன் நிறைந்த வயல்களும், பாக்குமரங்கள் அடர்ந்த சோலையும், விளங்குகின்ற அழகிய பழனி மலையிலே வந்து வீற்றிருக்கின்ற அரசே! தேவர்களின் தலைவனே! இத் திருப்புகழ்கள், முருகன் விரும்பும் இடம் அழகுள்ள இடமே என்பதை உணர்த்தின. இவைபோன்ற பல பாடல் களைத் திருப்புகழிலே காணலாம். தூய்மையான இடத்திலே அழகு அமைந்திருக்கும்; அழுக்கும் குப்பையும் நிறைந்த இடத்திலே அழகு எது? கள்ளங் கபடமற்ற தூய்மையான உள்ளம் அழகிய இடமாகும். அங்கும் அழகுருவான முருகன் அமர்ந்திருப்பான் என்று கூறுகிறார் திருப்புகழாசிரியர். செம்ம னத்தர் மிகுத்த மாதவர், நன்மை பெற்ற உளத்தி லேமலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய- பெருமாளே. அறம் நின்ற மனத்தவரிடமும், மிகுந்த தவமுள்ளவரிடமும், நன்மை நிலைபெற்ற உள்ளத்திலும் தோன்றுகின்றவனே! செல்வம் நிறைந்த சிக்கல் நகரிலே வாழுகின்ற முருகனே! திரு.விக. அவர்களின் முருகன் அல்லது அழகு என்னும் நூலில் இயற்கை அழகே முருகன் என்பதை விரிவாகக் காணலாம். திருப்பழனி வாழ்வுக்கு உகந்து அடியர் ஆவிக்குள் நின்று உலவிவரு- பெருமாளே. அழகிய பழனியிலே வாழ்வதற்கு விரும்பி, அன்பர்களின் உயிருக்கு உயிராக நின்று உலவுகின்ற முருகனே. கழல்இணை அணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியாப் - பெருமாளே! மாசற்ற உள்ளத்திலே உன் பாதங்களையே அணிந்திருக்கின்ற அன்பருடன், கனவிலும் வெறுக்காமல் வாழ்கின்ற தலைவனே. குற்றம் அற்றவர் உள்ளத்தில்- உறைவோனே! மாசற்றவர் மனத்திலே எப்பொழுதும் குடியிருப்பவனே. மேலே காட்டியவை மாசற்றவர்கள் மனத்திலே முருகன் அழகைக் காண்பான்: அங்கே அமர்ந்திருப்பான் என்ற உண்மையை உணர்த்தின. மேலே எடுத்துக்காட்டிய திருப்புகழ்ப் பகுதிகள், அழகுருவே முருகன் வடிவு; அவன் அழகுள்ள இடங்களிலே அமர்ந் திருப்பான்: மாசற்றோர் உள்ளம் அழகிய இடம் ஆனதால் அங்கும் வீற்றிருப்பான் என்ற உண்மையை உணர்த்தின. முருகனை இளையோனே! என்று பல பாடல்களில் குறிப்பிடுகின்றார்; எங்கும் நிறைந்தவன் என்று பாடுகின்றார். அவனுடைய அற்புதங்களையெல்லாம் எடுத்துப் பாராட்டிப் போற்றுகின்றார். இவைகளால் அருணகிரியார் முருகனை மாறாத இளமைத் தன்மையுள்ளவனாகவும், எங்கும் பரந்த நறுமணமாகவும், தெய்வத் தன்மையாகவும் போற்றுகிறார் என்பதை அறியலாம். முருக பக்தர்கள் பலர் இன்றும் முருகனைக் குழந்தைக் கோலத்தில் வைத்து வணங்குகின்றனர்; வாலிபக் கோலத்தில் வைத்து வணங்குகின்றனர். ஆகவே முருகனை வழிபடுவோர் அனைவரும் அவனை அழகிய உருவில் வைத்துத்தான் வழிபட்டு வருகின்றனர். இது ஒன்றே இயற்கை அழகான முருகில் இருந்து தான் முருகன் பிறந்தான் என்ற உண்மையைக் குறிப்பதாகும். முருகனை வேண்டுதல் உடல் நிலையற்றது; இதை நிலையாக வைத்திருப்பதற்கு இளமை முதல் நாம் படும் பாட்டுக்கு அளவேயில்லை. நம்மைப் பெற்றோர், நாம் பிற்காலத்தில் வலுவுடன் வாழ நமக்குக் கொடுத்த கொழுப்புள்ள உணவுகளுக்கு அளவில்லை; நமக்கு நோய்நொடிகள் வராமலிருக்க எத்தனையோ மருந்துகளும் கொடுத்தார்கள்; நம்மை அன்புடன் ஆடை அணிகள் பூட்டி வளர்த்தார்கள்; அவர்கள் தமது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நம்மை வளர்த்த அருமை பெருமைகளை ஆரும் அறிவார்கள். நாமும் வயதேறியபின் நமது உடலைப் பாதுகாக்க முனைந்து வருகிறோம்; உடம்பு நலம்பெறப் பல உணவுகளை உண்ணுகிறோம்; நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளுவதிலே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றோம். எவ்வளவு செய்துதான் என்ன? இந்த உடல் என்றேனும் ஒரு நாள் திடீரென்று மறைந்து விடத்தான் போகிறது. மெலிந்த உடல்தான் நோயால் பிணிக்கப்பட்டு விரைவில் மறையும்; வலுத்த உடல் நோய்களால் பற்றப்படாது, எளிதில் மறையாது என்பதில்லை. இளைத்தவர்கள் நீண்ட நாள் வாழ் வதைக் காண்கிறோம். வலுத்தவர்கள் திடீரென்று மறைவதைப் பார்க்கின்றோம். காய் உதிர்வதும், பழம் உதிராமல் இருப்பதும் நாம் காணும் காட்சியல்லவா? இந்த நாளில் ஏற்படும் திடீர்ச் சாவைப்பற்றிக் கேட்கவா வேண்டும்! நம்மைச் சுற்றி எமதூதர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்; நாம் போகும் இடங்களுக்கும் அவர்கள் தொடர்ந்துதான் வந்துகொண்டிருக்கிறார்கள். மோட்டார் காரில் போகும்போது கார் கவிழ்ந்தால் போச்சு; எதிரில் வரும் காருடன் மோதிக் கொண்டால் போச்சு; புகைவண்டியில் போகும்போது எத்தனையோ ஆபத்து; வானவூர்தியில் செல்லும்போது, அது முறிந்து வீழ்ந்தாலும் போச்சு; கப்பலில் செல்லும்போது அது கவிழ்ந்தாலும் போச்சு. சும்மா தெருவில் நடந்து செல்லும்போது எத்தனையோ ஆபத்துக்கள். இவ்வாறு உயிரை வாங்குவதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றன. வீட்டிலிருந்து புறப்பட்டால், திரும்பி வீட்டுக்கு வருவோம் என்ற நிச்சயம் இல்லை. இந்த நிலையில்தான் நமது வாழ்வு அமைந்திருக்கின்றது. இருந்தும் இதைப் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆயிரங் கோடி ஆண்டுகள் வாழப் போவதாகச் சிலர் எண்ணிக் கொண்டு காரியங்கள் செய்கின்றனர். நீண்ட நாளைக்கு நாம் உயிர் வாழ்ந்தாலும் எப்பொழுதும் நல்ல இளமைப் பருவத்துடன் இருக்கப் போவதில்லை. நாளேற நாளேற உடல் தளர்ச்சியடையத் தான் செய்யும்; உடலின் பலம் குறையும்; காது செவிடாகும்; கண் குருடாகும்; பிணிகள் பல உண்டாகும். படுத்த படுக்கையிலேயே மல மூத்திரங்கள் கழியக்கூடிய நிலையும் ஏற்படும். இந்த நிலையிலே உள்ள வயதேறியவர்கள் பலரை நாம் பார்த்திருக்கின்றோம். நமக்கு என்றும் நிலைத்த இன்பத்தைத் தருவது இறைவன் அடிகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இவ்வுலகில் கவலை யில்லாமல் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் இறந்த பின்னரும் இன்புறுவார்கள் என்பது முன்னோர்கள் நம்பிக்கை. ஆதலால் வீணாக உடம்பு மூத்து இளைத்து நோயுற்று மடிவதற்குமுன் மனக் கவலையின்றி வாழும் வழியைத் தேடிக்கொள்வது அறிவுடையோர் கடமையாகும். மனக் கவலைக்கு மருந்து கடவுள்- இறைவன் - நினைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை யென்பது உண்மை. உலகிலே துன்பங்கள் பலவற்றை அடைந்தவர்கள். இறுதியாக இறைவனைத்தான் சரணமாக அடைந்திருக்கின்றனர். இதன் மூலம் தங்கள் துன்பங்களை மறந்து இன்பத்தைப் பெற்றிருக் கின்றனர். இத்தகைய பெரியார்களிலே அருணகிரிநாதரும் ஒருவர். அவர் முருகனைக் குறித்துப் பாடிய பாடல்களிலே திருப்புகழ் என்னும் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன. அவர் அப்பாடல்களை முருகப்பெருமானுக்கு மலர்மாலையாக- வாடாத தமிழ்மலர் மாலைகளாக- புனைந்து போற்றி இன்புற்றார். அப்பாடல்கள் இன்றும் அடியார்கள் உள்ளத்திலே அன்புத் தேனை ஊறச் செய்யும் அரும் பாடல்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒரு பாடலைக் காண்போம். நிலையாப் பொருளை உடலாக் கருதி நெடுநாள் பொழுதும் - அவமேபோய் நிறைபோய்ச், செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப், பொறிகள் - தடுமாறி மலம் நீர்ச் சயனம் மிசையாய்ப் பெருகி மடிவேற்கு, உரிய - நெறியாக மறைபோற் றரிய ஒளியாய்ப் பரவும் மலர்தாள் கமலம்- அருள்வாயே; கொலைநாட்டு அவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற - முதுசூதாம் குறிபோய்ப் பிளவு பட, மேல் கதுவு கொதிவேல் படையை - விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர! அழியாப் புனித - வடிவானார் அரனார்க்கு அதிக பொருள்காட்டு அதிப! அடியார்க்கு எளிய - பெருமாளே. இதுவே அப்பாடல். இதன் அரிய பொருளைக் காண்போம். நிலையாத பொருளை நிலைத்த உடலாக எண்ணி நீண்ட நாட்களை வீணாக்கினேன். எனது உடல்நலம் குன்றி, செவிடும் குருடுமாகி, பிணிகள் நிறைந்து, ஐம்பொறிகளும் தடுமாறி, மலமும் நீரும் படுக்கையிலே பெருகியோடும்படி இருந்து இறந்து போகின்ற எனக்கு ஏற்ற வழியாக, வேதத்தாலும் துதிக்க முடியாத, பேரொளியாய்ப் பரந்து நிற்கின்ற மலர்களாகிய உனது பாத பங்கயத்தை நான் அடையும்படி அருள் செய்யவேண்டும். கொலைத் தொழிலையுடைய அசுரர்கள் அழியும்படி பெரிய கடல் குளம்போல் வற்றவும், அதிலே மாமர வடிவாக நின்ற சூரபன்மன் இரண்டாகப் பிளந்து போகவும் வீரமிக்க வேற்படையை விடுகின்ற தலைவனே! கடல் அலைகள் மோதும் அழகிய திருச்செந்தூர் நகரில் மகிழ்ந்திருக்கும் குமரனே! சிவபெருமானுக்குச் சீரிய பொருளை உபதேசித்த தலைவா! அடியவர்களுக்கு எளிய பெருமாளே! பொருளுணர்ந்து இப்பாடலைப் பாடும்போது நம் உள்ளமும் அழகுத் தெய்வமான முருகனின் பாதகமலங்களில் ஒன்றுகிறது. தமிழ்த் தெய்வம் அருணகிரிநாதரின் தமிழ்ப் பற்று அளவிட முடியாதது. தமிழைத் தெய்வத்தன்மை நிறைந்ததாகவே நினைக்கிறார்; அவருடைய பாடல்களிலே வடமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. அவைகள் தமிழோடு கலந்து தமிழ்த்தன்மை யையே பெற்ற விட்டன; தமிழின் பெருமைக்கு - சிறப்புக்கு - இயல்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். வடமொழிச் சொற்களை அவர் தாராளமாகக் கையாள்வதினால் அவரைத் தமிழ்த் துரோகி என்றோ, தமிழ்ப் பற்றில்லாதவர் என்றோ சொல்லிவிட முடியாது. இப்படிச் செல்வோர் இருப்பாரானால் அவர்கள் மொழி வளர்ச்சியின் தத்துவத்தை அறியாதவர்கள் என்பதில் ஐயம் இல்லை. தமிழுக்கு இலக்கணம் செய்தவர்- தமிழை வளர்த்தவர்- அகத்தியர் என்பது தமிழர் பரம்பரையாக நம்பி வரும் செய்தி. தமிழ் முனிவன் என்பது அகத்தியரையே குறிக்கும். தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன், என்று கம்பர் அகத்தியரைக் குறிப்பிடுகிறார். இத்தகைய அகத்தியருக்கு முருகக் கடவுளே தமிழைப் போதித்தார் என்று கூறுகிறார் அருணகிரிநாதர். சிவபெருமானுக்கு ஒப்பானவன் அகத்தியன்; அவன் பொதியமலை முனிவன். அவன் மனம் மகிழும்படி - இரண்டு காதுகளும் குளிரும்படி- இனிமை யான தமிழை உபதேசித்தவனே! சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழஇரு செவிகுளிர இனியதமிழ்- பகர்வோனே குடமுனிவனாகிய அகத்திய முனிவன் கற்றுக் கொள்ளும் படி, அக்காலத்தில் தமிழ்மொழியை அவன் காதிலே கூறிய குமரனே! குறத்தியாகிய வள்ளியின் அன்புக்குரிய பெருமாளே! குடமுனிவன் கற்கஅன்று தமிழ்செவி யில்பகர்ந்த குமர! குறத்திநம்பு- பெருமாளே. இத்திருப்புகழ்கள், முருகனே அகத்தியர்க்குத் தமிழை அறிவித்தான் என்ற தமிழர் கொள்கையை அறிவித்தன. அகத்தியருக்கு மட்டுமா? சிவபெருமானுக்குக் கூடத் தமிழின் உண்மையைப் போதித்தவன் முருகன்தான் என்று பாடுகின்றார் அருணகிரிநாதர். கொன்றை மலரை அணிந்த சடையையுடைய சிவபெரு மானுக்கு, ஒப்பற்ற உண்மையை அறியும்படி கொஞ்சிப் பேசித் தமிழை உபதேசித்தவனே! கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் - பகர்வோனே. மழுவாயுதத்தைக் கையிலே கொண்ட சிவபெருமானிடம் சென்று, வளம்பொருந்திய தமிழ்ச் சொல்லின் இனிய சந்தம் ஒன்றைக் கூறியருள்கின்றவனே! மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண் தமிழ்ச்சொல் சந்தம்ஒன்று - அருள்வோனே. இத்திருப்புகழ்கள், சிவபெருமானுக்கும் முருகப் பெருமானே தமிழின் உண்மையை - தமிழின் இனிமையை- எடுத்துரைத்தான் என்று கூறுகின்றன. முருகனை ஒப்பற்ற தமிழ்ப் புலவன் என்று போற்றுகிறார் அருணகிரிநாதர். பாண்டியர் வளர்த்த தமிழ்மொழியிலே தோன்றிய நூலின் சிறந்த பொருளை எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி கூறிய முருகப் பெருமானே! வழுதியர் தமிழின் ஒருபொருள் அதனை வழிபட மொழியும்- முருகேசா. என்பது திருப்புகழ். இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப் புலவர்கள் பலர் உரை செய்தனர். உருத்திரசன்மர் என்னும் பெயருடன் அவதரித்திருந்த முருகப் பெருமான் அவ்வுரைகளை யெல்லாம் தனித்தனியே சொல்லக் கேட்டார். அவற்றுள் நக்கீரர் செய்த உரையையே சிறந்ததென்று பாராட்டினார். இது இறையனார் அகப்பொருள் உரை பற்றி வழங்கும் செய்தி. இச்செய்தியையே மேலே கண்ட திருப்புகழ் குறித்தது. சிறப்பாக மதிக்கப்பட்ட, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் சிறந்தவனே! மதித்த முத்தமிழில் - பெரியோனே முத்தமிழிலும் சிறந்த வினோதனே! இசையுருவாக இருப்பவனே! மற்றவர் யாரும் ஒப்பில்லாத அழகனே! ஒளி உருவானவனே! அன்பர்களுக்கு முத்தி கொடுத்து, அவர்கள் மேல் அன்பு காட்டுகின்றவனே! முத்தமிழ் வித்வ வினோதா! கீதா! மற்றவர் ஒப்பிலர் ரூபா! தீபா! முக்தி கொடுத்துஅடி யார்மேல் மாமால் - உறுவோனே அளவற்ற சிறப்பையுடைய தமிழாராய்ச்சியால் உயர்ந்து நிற்கும் திறமுள்ள புலவனே! வணக்கம்! அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி மேலே காட்டிய திருப்புகழ்ப் பகுதிகள், முருகன் சிறந்த தமிழாராய்ச்சியுடையவன், உயர்ந்த தமிழ்ப் புலவன் என்ற கருத்தை உணர்த்தின. அருணகிரிநாதர், தனக்குத் தமிழிலே பாடும்படி அருள் செய்தவன் முருகப் பெருமானே என்று கூறுகின்றார். கதிரொளி வீசும் பாத தாமரைகளை, நான் தினந்தோறும் போற்றிப் பாடும்படி சிறந்த தமிழ்மொழியை எனக்களித்த மயில் வாகனத்தையுடைய வீரனே! அருணதள பாதபத்மம் அதுநித மேதுதிக்க அறியதமிழ் தான் அளித்த- மயிர்வீரா! என்று முருகனே தனக்குத் தமிழை அருளிச்செய்தான் என்று பாடினார். அடியேன், செந்தமிழ்மொழி நூல்களை நாள்தோறும் ஓதி, தீமையினின்றும் நீங்கி நல்வழியிலே செல்லும்படி, அறிவுரைகள் ஊறி வருகின்ற உனது சிவந்த கனி போன்ற வாயினால் ஒரு சொல் அருள்வாயாக! செந்தமிழ் நாளும்ஓதி உய்ந்திட ஞானம்ஊறும் செங்கனி வாயில்ஓர்சொல் - அருள்வாயே. இதனால், மேலும் தமிழைப் போதிக்கும்- ஞானத் தமிழை அருளும்படி வேண்டினார். இவ்வுலகிலே வளர்ந்து வரும் மொழி செந்தமிழ் மொழி. அச்செந்தமிழ்ப் பாடல்களால் உன்னை என்றும் வாழ்த்திப் போற்றிக்கொண்டே இருக்கும் உறுதியான உள்ளத்தை எனக்கு அருள் செய்வாயாக. அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்திஉனை அன்பொடு துதிக்கமனம் - அருள்வாயே. இதனால், எப்பொழுதும் மாறாமல், முருகனையே பாடிப் போற்றிக்கொண்டிருக்கும் உறுதியான உள்ளம் வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றார். இவ்வடியில் வளர் செந்தமிழ் என்ற தொடர் அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது. வளருந் தமிழிலே சொற்கள் பெருகிக்கொண்டேயிருக்கும். இருக்கும் சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு, புதிய சொற்களைச் சேரவொட்டாமல்- கலக்க ஒட்டாமல்- தடுத்து நின்று எந்த மொழியையும் வளர்க்க முடியாது. இவ்வாறு மொழியை வளர்க்க முயல்வோர் மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருப்பார்கள். வளர் செந்தமிழ் என்ற தொடர் இவ்வுண்மையை விளக்கி நிற்கின்ற தென்பதில் ஐயம் இல்லை. மேலேகாட்டிய உதாரணங்கள் அருணகிரிநாதரின் தமிழ்ப் பற்றை விளக்குவதற்குப் போதுமானவை. தமிழ் தெய்வத்தன்மை பொருந்தியது; அகத்தியருக்கு முருகனே தமிழைப் போதித்தான்; சிவபெருமானுக்கும் தமிழின் சிறப்பை முருகன் மொழிந்தான்; முருகனே ஒரு சிறந்த புலவன்; முத்தமிழிலும் வல்லவன்; தனக்குத் தமிழிலே பாடும் வல்லமையை யளித்தவன் முருகப் பெருமானே- என்ற உண்மையை யளித்தவன் முருகப் பெருமானே- என்ற உண்மைகளை மேலேகாட்டிய திருப்புகழ்ப் பகுதிகள் விளக்குகின்றன. இத்தகைய சிறந்த தமிழ்ப் பற்றுள்ள அருணகிரி நாதரை- தமிழுக்குச் சிறந்த பணியாற்றிய அருணகிரிநாதரை- யார்தான் போற்றாமலிருக்க முடியும்? விலைமாதர் நடிப்பு வேசையர் நட்பால் விளையும் தீமையைப் பற்றி அறிஞர்கள் அளவில்லாமல் கூறியிருக்கின்றனர். வேசையர்க்கு விலைமாதர் என்று ஒரு பெயர். அவர்கள் யார் தங்களுக்குப் பொருள் கொடுக்கிறார்களோ அவர்களிடம் அன்பு காட்டு கின்றவர்கள்போல் நடிப்பார்கள். அந்த நடிப்பும் நீண்ட நாட்களுக்கு நிலைத்திராது. நெய்யிருக்கும் பாண்டத்தைச் சுற்றிலும் எறும்பு மொய்க்கும்; இனிப்புள்ள பண்டங்களைக் கண்டால் ஈக்கள் சூழ்ந்து கொள்ளும். தக்க பாதுகாப்புடன் வைத்திருந்தால்தான் நெய்யை எறும்புகள் அணுகாமல் செய்யலாம்; இனிப்பை ஈக்கள் சூழாமல் செய்யலாம். எல்லா வசதியும் படைத்தவர்கள் ஏமாந்திருந்தால் அவர்கள் தலையைத் தடவப் பலர் சூழ்ந்து கொள்வார்கள். பணம் படைத்தவர்களைச் சுற்றிக்கொள்ளாதவர்கள் யாரும் இல்லை. ஒருவனிடம் நல்ல வாலிப முறுக்கும் இருக்கிறது; தாராள மான பணப் புழக்கமும் இருக்கிறது; அவற்றோடு பிறர் பேச்சிலே - நடிப்பிலே- எளிதிலே ஏமாந்து போகும் இளிச்சவாய்த்தனமும் இருக்கிறது. இத்தகையவர்கள் வஞ்சகர் பிடிப்பிலிருந்து தப்பித்து வாழ்வது அவ்வளவு எளிதன்று. வஞ்சகர்களிலே மிகவும் கொடுமையானவர்கள் வேசை யர்கள். வறுமை காரணமாக வேசித் தொழிலை மேற்கொண்டி ருக்கிறவர்கள் எவ்வளவுதான் நீதிநெறிகளை உணர்ந்தவர்களா யிருந்தாலும் அவர்கள் கொடுந்தன்மை யுள்ளவர்களாக மாறித்தான் ஆகவேண்டும். தன்னை யடைந்தவர்களின் செல்வத்தை ஈவிரக்கமற்ற முறையிலே எப்படியாவது பறித்துக் கொள்ளும் வித்தையிலே தேர்ச்சி பெறத்தான் வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் வாழ்வு நடக்கும்; இல்லா விட்டால் அவர்கள் வாழ முடியாது. வறுமை காரணமாக, வழுக்கி வீழ்ந்த சகோதரிகள் இம்மாதிரி மனிதத் தன்மையையே மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றது. வேசித் தொழில்- விபசாரத் தொழில்- எந்தக் காலத்தில் ஏற்பட்டதென்று கூற முடியாது. நீண்ட நெடுங்காலமாக அத்தொழில் இருந்துதான் வருகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, கணிகையர்- விலை மகளிர்- பொது மகளிர்- என்ற ஒரு கூட்டத்தார் இருந்து வந்திருக்கின்றனர். இக்கூட்டம் வளர்ந்து வந்ததற்குக் காரணம், பெருநிலக் கிழவர்கள்- சிற்றரசர்கள்- பேரரசர்கள்- வாழ்க்கை வசதி படைத்த பெரிய மனிதர்கள் என்றுதான் கூறவேண்டும். விலைமாதரைப் பற்றிச் சேக்கிழார் என்னும் பெரும் புலவர் - பெரியபுராண ஆசிரியர் - பதியிலார் என்று குறிப்பிடுகின்றார். பதியிலார்: கணவன் அற்றவர்கள்; காதலன் இல்லாதவர்கள்; தலைவன் இல்லாதவர்கள்; தங்களுக்குத் தாங்களே தலைவர்களாயிருப்பவர்கள்; அவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர். அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற விரிந்த பொருளைக் கொண்டது பதியிலார் என்னும் சொல். வேசையர்களின் கூட்டுறவைப் பற்றி- அதனால் வரும் அல்லல்களைப் பற்றி- திருக்குறள் முதல் பல நூல்களும் விளக்க மாகக் கூறுகின்றன. ஒழுக்கக் கேட்டில்- தீயொழுக்கத்தில்- பஞ்சமா பாதகங்களில்- வேசையர் கூட்டுறவும் ஒன்று என்று அறநூல்கள் அறிவிக்கின்றன. ஆயினும் இத்தீமையைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பதில் திருப்புகழுக்கு இணையாக வேறொன்றையும் சொல்ல முடியாது. திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் ஆரம்பத்தில் பெருங் காமுகராயிருந்தார். விலைமாதர் நட்பையே விரும்பித் திரிந்தார்; அதனால் உடல்நோயும் உளநோயும் பெற்றார். பிறகுதான் அந்தத் தீயொழுக்கத்தை வெறுத்தார். முருகனிடம் அன்பு கொண்டார்; அடியவரானார்; திருப்புகழ் முதலிய நூல்களைப் பாடினார் என்று வரலாறு வழங்குகின்றது. இதனால் அருணகிரிநாதர் விலைமாதர்களைப் பற்றிக் கூறுவனவெல்லாம் வெறும் கற்பனையல்ல; வீட்டில் இருந்தபடி எண்ணிப் பார்த்து எழுதப்பட்டவையல்ல; தாம் அனுபவித்த- கண்ணாற் கண்டறிந்த- உண்மையை அப்படியே உரைப்பன என்று கொள்ளலாம். இதில் தவறில்லை. வேசையர்மீது எழும் ஆசையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று முருகனிடம் முறையிடும் அவர் பாடல்கள் நமது உள்ளத்தை உருக்குவன; விலைமாதர் மோகத்திலே ஈடுபட்டவர்கள் படிப்பார்களானால் அவர்களை நன்னெறியிலே நடக்கும்படி செய்வன. அருணகிரிநாதர் தன்னையே வேசையர் வெறியனாக வைத்துக்கொண்டு பாடுகின்றார். அப்பாடல்களில் ஒன்று கீழ்வருவது:- வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை தனைத் திறந்து, எதிர் வரும் இளைஞர்கள் உயிர் மயக்கி, ஐங்கணை மதனனை ஒருஅரு - மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு, மெலமெல நகைத்து, நண்பொடு வரும்இரும் எனஉரை, வழுத்தி அங்கவ ரொடுசரு வியும்உடல் - தொடு போதே விடத்தை வென்றிடு படைவிழி கொடும்உளம் மருட்டி, வண்பொருள் கவர்பொழு தினில்மயல் விருப்பெனும்படி மடிமிசை யினில்விழு- தொழில் தானே. விளைத்திடும். பல கணிகையர் தமதுபொய் மனத்தை நம்பிய சிறியனை, வெறியனை விரைப்ப தந்தனில் அருள் பெற நினைகுவது - உளதோதான் என்பது திருப்பரங்குன்றத் திருப்புகழ். ஒரு பாடலின் முன் பகுதி இது. இதன் பின்பகுதியிலே முருகனுடைய பெருமையும் புகழும் உரைக்கப்படுகின்றன. மேலே காட்டிய முதல் பகுதியில் வேசையர் பண்பு விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது. விலைமாதர்கள் தங்கள் மார்பைத் திறந்து போட்டி ருப்பதற்கு நாணம் அடைய மாட்டார்கள். முத்து ரத்தினம் முதலியவற்றாலாகிய மாலைகளுக்கு மேலாக விளங்குகின்ற பருத்த மார்பைத் திறந்து கிடக்கும்படி செய்து கொள்வார்கள்; இப்படிச் செய்வதன்மூலம் தன் எதிரில் வரும் இளைஞர்களின் உள்ளத்தையும், உயிரையும் தம் வசமாக்கிக் கொள்ளுவார்கள். இளைஞர்களை மட்டுமா? மன்மதனைக் கூட ஒப்பற்ற தங்கள் அழகினால் துன்புறச் செய்வார்கள். இவர்கள் உள்ளத்திலே வஞ்சக நினைப்புள்ளவர்கள். மெல்ல மெல்ல நகைப்பார்கள்; மிகவும் அன்பு காட்டுகின்றவர் களைப்போல நடிப்பார்கள்; வந்தவர்களை இனிய மொழிகளினால் வாருங்கள், உட்காருங்கள் என்று கூறிக் கொண்டாடுவார்கள். அவர்களோடு அளவளாவுவார்கள். வந்த இளைஞர்கள் காமவெறியுடன் தமது உடம்பைத் தொடும்போது, நஞ்சையும் வேற்படையையும் வெல்லுந் தன்மை யுள்ள தமது கண்களால் அவர்கள் உள்ளதை மயக்கி விடுவார்கள். அவர்களிடம் உள்ள சிறந்த செல்வங்களையெல்லாம் கவர்ந்து கொள்ளும்பொழுது, அவர்கள் மடியிலே விழுந்து புரளுவார்கள். அதன்மூலம் தாம் மிகுந்த காதலும், அன்பும் கொண்டிருப்பவர் களைப்போல நடிப்பார்கள். இவ்வாறு வஞ்சகச் செயல்கள் பலவற்றையும் செய்கின்ற கணிகையர்களின் வஞ்சகத்தை நான் உணரமாட்டேன்; அவளுடைய பொய் உள்ளத்தையும், பொய் நடிப்பையும் உண்மையென்று நம்பும் சிறுமதி படைத்தவன் நான்; காமவெறி தலைக்கேறியவன்; இத்தகைய சிறுமையும் காமவெறியும் கொண்ட என்னை உன்னுடைய மணம் பொருந்திய பாதங்களை பணிந்து, உனது அருளைப் பெறும்படி நீ நினைப்பாயோ? இப்படி நினைத்து அருள் செய்யும் தன்மை உன்னிடம் உண்டோ? இதுவே இத்திருப்புகழின் பொருள். இத்திருப்புகழில் கூறப்படும் பொருளை அப்படியே சித்திரமாகத் தீட்டிக் காட்ட முடியும். அவ்வளவு அழகாகப் பாடப்பட்டிருக்கும் பாடல் இது. விலைமாதர்கள் இளைஞர்களை ஏமாற்றும் விதத்தை அவர்களுடைய நடிப்பை- இதைவிட விளக்கமாகக் கூற முடியாது. விலைமாதர் உறவால் பொருள் இழப்பு நேரும், செல்வம் சீரழியும் என்ற ஒரு கருத்தை மட்டுமே இப்பகுதி விளக்கிக் காட்டிற்று; இளைஞர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்திற்று. வேசையர் இழிவு தீயோருடன் சேர்ந்து திரிவோர் முதலில் அவர்களை வெறுக்கமாட்டார்கள்; தீயோர்களின் பேச்சு, நடத்தை, செய்கை எல்லாம் அவர்களுக்கு பிடித்தமாகவே இருக்கும். தீயோர் நட்பு தீமை தரும்; ஆதலால் அவர்களுடன் சேரவேண்டாம்; அவர்கள் நட்பை விட்டு விடுங்கள் என்று புத்திமதிகள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்; புத்திமதிகள் சொல்கின்றவர்கள்மேல் சீறி விழுவார்கள். இது இயல்பு. தீயோர்களின் நட்பால் கெட்டுப்போனவர்கள் - தங்கள் வாழ்வைக் கெடுத்துக் கொண்டவர்கள்- தீயோர் சேர்க்கையால் வரும் தீமைகளை எடுத்துரைக்கத் தயங்க மாட்டார்கள்; அவர் களால், தாம் அடைந்த தீமைகளை, மற்றவர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லுவார்கள்; அவர்களுடைய வஞ்சகச் செயல் களையும், கொடுமைகளையும் வாய்கூசாமல் கடிந்துரைப்பார்கள். தாம் கெட்டுப் போனது போல மற்றவர்கள் கெடாமலிருக்க வேண்டும் என்பதற்காகத் தீயோர்களைப் பற்றி வசை மொழிகளைக் கூட வாரி இரைப்பார்கள். தீயோர்கள் மேல்- கெட்டவர்கள் பால்- மற்றவர்களுக்கு அருவருப்பு உண்டாக வேண்டும் என்பதற்காக எவ்வளவு தூரம் அவர்களைப் பற்றி இழிவாகச் சொல்லவேண்டுமோ அவ்வளவு தூரம் இழிவாகப் பேசுவார்கள். இதையும் நாம் இவ்வுலகிலே கண்கூடாகக் காணலாம். பரத்தையர் இன்பத்தை நம்பி- வேசையர் கூட்டத்தை விரும்பி- அறிவிழந்து திரிவோரை, ஆரம்பத்தில் புத்திமதி புகட்டித் திருத்துவது எளிதல்ல. அவர்கள் தங்கள் பொருளை யிழந்து, உடல் நலத்தை இழந்து, மானத்தை யிழந்து, வேசையர் களால் கைவிடப்பட்ட பிறகுதான் உண்மையை உணர்வார்கள். பொருள்போன பிறகுதான் புத்திவரும். புத்தி வந்த பிறகுதான் விலைமாதர்களின் இழிசெயல்களைப் பற்றிப் பேசுவார்கள். அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படி வசைமொழிகளை அடுக்கி வைவார்கள். இதுவும் இவ்வுலகத்து இயல்பு. திருப்புகழ்ப் பாடல்களிலே பரத்தையர்களைப் பற்றிப் பழித்துப் பேசும் பாடல்கள் பல உண்டு. அப்பாடல்களில் அவர்களுடைய ஈனச் செயல்களை யெல்லாம் காணலாம். அவர்களைப்பற்றி- பரத்தையர்களைப் பற்றி- வசை மொழிகளை அள்ளிக் கொட்டுவதிலே அருணகிரிநாதர்க்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. அடக்க முடியாத ஆத்திரத்துடன் அவர்களைப் பற்றிப் பாடுகிறார். உதாரணமாகச் சில பாடல் களைக் காண்போம். கிரிஉ லாவிய முலைமிசை துகில்இடு கபட நாடக விரகிகள்; அசடிகள்; கெடுவி யாதிகள் அடைவுடை உடலினர்; - விரகாலே கிருபையி னாரொடு மணம்இசை நழுவிகள்; முழுதும் நாறிகள்; இதமொழி வசனிகள்; கிடையின் மேல்மனம் உருகியே தழுவிகள்; - பொருளாலே பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்; அதிக மாஒரு பொருள்தரு பவரொடு பழய பேர்என இதம்உற அணைபவர்; - விழியாலே பகழி போல்விடு வினைகவர் திருடிகள்; தமைஎ ணாவகை, உறுகதி பெறும்வகை பகர, மாமயில் மிசைவர நினைவதும் - ஒருநாளே பரத்தையர்களின் நடத்தையை இப்பாடல் எடுத்துக் காட்டுகின்றது. இப்பாடல்களில் காணும் வசைமொழிகள் அனைத்தும் பரத்தையர்க்குப் பொருத்தமானவை. மலைபோல் விளங்கும் முலையின்மேல் உள்ள ஆடையை நழுவ விடுவார்கள்; பிறகு எடுத்துப் போடுவார்கள்; வாலிபர் களின் உள்ளத்தை இழுப்பதற்கே இப்படிச் செய்வார்கள். இவ்வாறு வஞ்சக நாடகம் நடிக்கும் காமிகள்; அசட்டுத்தன முள்ளவர்கள்; தம்மை அணைவோர்க்குத் தீமை தரும் நோய்கள் பலவும் அப்பிக் கொண்டிருக்கின்ற உடம்புள்ளவர்கள். தந்திரத்தினால் அன்புள்ளவர்களுடன் மணம் புரிந்து கொள்ளுவதற்கு இசைவதுபோல் நடிப்பர். அவர்கள் பொருளைக் கவர்ந்தவுடன் நழுவிவிடுவார்கள். உடம்பு முழுதும் நாற்றமடிக்கும் நோயினர்; ஏமாற்றுவதற்காக, நயமான மொழி பேசுகின்றவர்கள்; படுக்கையின் மேல் மனம் உருகியவர்கள் போல் நடித்துத் தழுவிக் கொள்ளுவார்கள். தம்மை விரும்புவோர் பொருள் கொடுக்கும் காரணமாக, அன்பில்லாமல், அவர்களுடன் காமங்கொண்டு அவர்களுடன் காமப்போர் புரிபவர்; அவரை விட அதிகமாக பணம் கொடுக்கின்றவருடன் அவரைப் பழைய அன்பன் எனப் பாராட்டி அவர் இன்பம் அடையும்படி தழுவிக்கொள்ளுகின்றவர்கள். தங்கள் கண்பார்வையை அம்புபோல் விடுத்து, தம்மை விரும்புவோர் செயல்களையெல்லாம் கவரும் திருடிகள்; இவர்களை நினைத்து மயங்காதபடி- நன்மையடையும் கதியைப் பெறும் வகையை எனக்கு உபதேசம் செய்வதற்காக, நீ சிறந்த மயிலின்மீது ஏறி வந்து அருள் செய்ய வேண்டும். இவ்வாறு நான் நினைத்து வேண்டுவதாகிய ஒரு நாளை எதிர்பார்க்கின்றேன். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இது குன்று தோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஒன்றின் முதற்பகுதி. மற்றொரு பாடலின் பகுதியையும் காண்போம்: மாயா சொரூப முழுச்ச மர்த்திகள்; ஓயா உபாய மனப்ப சப்பிகள்; வாணாளை ஈரும் விழிக்க டைச்சிகள்; - முனிவோரும் மாலாகி வாட நகைத்து ருக்கிகள்; ஏகாச மீது தனத்தி றப்பிகள்; வாரீர் இரீர்என முழுப்பு ரட்டிகள்; - வெகுமோகம் ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்! ஈயாத போதில் அறப்பி ணக்கிகள்; ஆவேச நீர்உண் மதப்பொ றிச்சிகள்; - பழிபாவம் ஆம்ஆ றெணாத திருட்டு மட்டைகள்; கோமா ளமான குறிக்க ழுத்திகள்; ஆகார ஈன விலைத்த னத்தியர்; - உறவாமோ? இதுவும் குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஒன்றின் முதற் பகுதி இப்பாடலில் அமைந்துள்ள வேசையரைக் குறிக்கும் வசைமொழிகள் அனைத்தும் உண்மையானவை. வஞ்சகமே உருவானவர்கள்; வஞ்சகத்திலே முழுச் சமர்த்துள்ளவர்கள்; ஓயாத தந்திரசாலிகள்; பிறர் மனதைக் கவரப் பசப்பு வார்த்தை பேசுகின்றவர்கள்; தம்மை அடைந்தவர் களின் ஆயுளையே பிளந்து அழிக்கும் விழிகளையுடைய கடைப் பட்டவர்கள். தவநெறியிலே நிற்கும் முனிவர்களும்கூட, காம மயக்க முற்று வருந்தும்படி நகைத்து மயக்குகின்றவர்கள்; போர்வையின் மீதுள்ள தனத்தைத் திறந்து காட்டி மயக்குகின்றவர்கள்; உள்ளத்தில் அன்பில்லாமல், பொருள் படைத்தவர்களைக் கண்டால் வாருங்கள்! இருங்கள்! என்று பொய்யாக நடிப்பவர்கள். மிகுந்த மோகத்தையும் அவசரமான காமத்தையும் எழுப்புகின்ற தந்திரசாலிகள்; கேட்டபோது பொருள் கொடா விட்டால் அதற்குமுன் எவ்வளவு பொருள் கொடுத்திருந்தாலும் அதை மறந்து, அடியோடு கோபித்துக் கொள்ளுகின்ற நன்றி கெட்டவர்கள் போதை தரும்பானத்தை அருந்துகின்றவர்கள்; கர்வம் பிடித்தவர்கள். பழிபாவம் உண்டாகும் என்பதைப்பற்றிச் சிறிதும் நினைக்காத திருட்டு மட்டைகள்; சந்தோஷமான செயல்களைச் செய்யும் குறுங்கழுத்தையுடையவர்கள்; பெரிய இழிவான விலைக்கு விற்கும் மார்புகளை உடையவர்கள்; இத்தகைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா? ஒரு நாளும் ஆகாது. இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். மேலே காட்டிய இரண்டு பாடல்களிலும் அமைந்திருக்கும் வசை மொழிகளைப் பார்த்தால்- அவைகளின் பொருளைச் சிந்தித்தால்- யார்தான் வேசையர் நட்பை விரும்புவார்கள்? கபட நாடக விரகிகள்; அசடிகள்; மணமிசை நழுவிகள்; முழுதும் நாறிகள்; திருடிகள்; மாயா சொரூப முழுச் சமர்த்திகள்; மனப் பசப்பிகள்; கடைச்சிகள்; தனத் திறப்பிகள்; முழுப் புரட்டிகள்; எத்திகள்; அறப்பிணக்கிகள்; மதப் பொறிச்சிகள்; திருட்டு மட்டைகள் - இவைகள் எல்லாம் பரத்தையரைப் பற்றிக் கூறும் வசை மொழிகள். இவைகள் மேலேகாட்டிய பாடல்களில் உள்ளவை. காமா காரிகள்; க்ரீடா பீடிகள்; நானா மோடிகள்; மாயா ருபிகள்; பொல்லா மூதேவிகள்; வீணிகள்; ஓயா மாரிகள்; பேய் நீர் உண்ணிகள்; மாபாவிகள்; விடமிகள் (விஷமிகள்); படிறிகள்; கபடிகள்; தூர்த்திகள் என்றெல்லாம் பரத்தையரைப்பற்றிப் பாடியிருக்கின்றார். இவைபோன்ற இன்னும் பல சொற்களைத் திருப்புகழிலே காணலாம். பரத்தையர்களைப்பற்றி அருணகிரிநாதர் பாடியிருப் பவைகளைப் படிக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் விலை மாதர்களை வெறுப்பார்கள்; அவர்கள் நேசத்தில் ஈடுபட மாட்டார்கள். பரத்தையர் மோக வலையில் வீழும் இளைஞர் களுக்கு அறிவூட்டவே, அருணகிரியார் பரத்தையர்களின் செயல்களைப் பச்சைப் பச்சையாகப் பாடியிருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. மக்கள் முப்பருவம் மக்கள் வாழுங் காலத்தை மூன்று பிரிவாகப் பிரித்து விடலாம். பொதுவாக மக்கள் வாழ்வு மூன்று பருவத்தில் அடங்கிவிடும். இது மக்களிடையில் நாம் நேரே காணும் உண்மையு மாகும். குழந்தைப் பருவம், வாலிப வயது, கிழப் பருவம் என்பனவே அந்த மூன்று நிலைகள். இம்முப்பருவங்களைப் பாலப் பருவம், குமாரப் பருவம், விருத்தப் பருவம் என்று கூறுவர். மக்கள் வாழ்நாளை- வாழ்கின்ற பருவத்தை- இவ்வாறு மூன்று பகுதியாகப் பிரிப்பது ஆண்களுக்கும் பொருந்தும், பெண்களுக்கும் பொருந்தும். அருணகிரி நாதர், மக்கள் வாழ்வை இவ்வாறு மூன்று பிரிவினுள் அமைத்தே பாடியிருக்கின்றார். இவ்வுண்மையைத் திருப்புகழ்ப் பாடல்களிலே காணலாம். ஒரே பாடலில், முப்பருவ நிகழ்ச்சிகளைப் பற்றியும் கூறியிருக்கின்றார். இத்தகைய பாடல்கள் பல உண்டு. சில பாடல்களில் குழந்தைப் பருவத்தைப்பற்றி மட்டும் பாடுவார்; சில பாடல்களில் வாலிபப் பருவ விளையாட்டைப் பற்றி மட்டும் பாடுவார்; சில பாடல்களில் மக்களின் முதுமைப் பருவ நிலையைப்பற்றி மட்டும் எடுத்துரைப்பார். வாலிபப் பருவத்தைப்பற்றி அருணகிரியார் கூறுவது குறிப்பிடத்தக்கது. வாலிப முறுக்கால்- இளமைத் திமிரால்- அவர்கள் காமத்திற்கு இரையாகிக் கெட்டலைவதைப் பற்றித்தான் மிகுதியாகப் பாடியிருக்கின்றார். அவர் பாடியிருக்கும் அவ்வளவும் இயற்கை யாக அமைந்திருக்கின்றன; நடந்த அல்லது நடைபெறும் நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவ்வுண்மைகளை விளக்கும் சில பாடல் பகுதிகளைக் காண்போம்: அவனிதனி லேபி றந்து, மதலைஎன வேத வழ்ந்து, அழகு பெற வேந டந்து, - இளையோனாய்; அருமழலை யே,மி குந்து, குதலைமொழி யே,பு கன்று, அதிவிதம தாய்,வ ளர்ந்து, - பதினாறாய்; சிவகலைகள், ஆகமங்கள், மிகவும்மறை ஓதும் அன்பர் திருவடிக ளே, நி னைந்து, - துதியாமல்; தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகுகவலை யாய்,உ ழன்று திரியும்,அடி யேனை, உன்றன்- அடிசேராய்! என்பது பழனியைப் பற்றிப் பாடியுள்ள ஒரு திருப்புகழின் முதல் பகுதியாகும். இப்பாடலில் குழந்தைப் பருவ நிலையும், குமாரப் பருவ நிலையும் காணப்படுகின்றன. முதல் அடி குழந்தைப் பருவத்தைக் குறிப்பிடுவது; இரண்டாவது அடி வாலிபப் பருவத்தை வர்ணிப்பது. இந்த உலகிலே மனித உருவில் பிறந்தேன்; சிறு குழந்தையாகி நடக்கத் தெரியாமல் தவழ்ந்தேன்; அதன் பின் என் பெற்றோர் கண்டு மகிழ அழகாக நடந்தேன்; குழந்தைப் பருவம் கடந்து இளைஞன், அதாவது சிறுவன் ஆனேன். இதன்பின் சிறந்த மழலைமொழி பேசக் கற்றுக் கொண்டேன்; திருத்தமற்ற குதலைச் சொற்கள் கூறி அனைவரையும் மகிழச் செய்தேன். இவ்வாறு மிகவும் சிறந்த வகையிலே வளர்ந்தேன்; இவ்வாறு இளமைப்பருவத்தைக் கடந்து பதினாறு வயது நிரம்பிய வாலிபன் ஆனேன்; குமரன் ஆனேன். இதுவே முதல் அடியின் பொருள். இவ்வடி குழந்தைப் பருவ நிலையைக் குறித்தது. இதன் பிறகு- குமரன் ஆன பிறகு- என்ன நடந்தது என்பதை இரண்டாவது அடியில் குறிப்பிடு கிறார். சிவபுராணங்கள், ஆகமங்கள், மிகவும் சிறந்த வேதங்கள்- இவைகளை ஓதிக்கொண்டிருக்கும் அன்பர்களின் திருவடிகளை எண்ணிப் போற்றுவது வாலிபர்களின் கடமையாகும். இத்தகைய நல்லொழுக்க நெறியிலே நிற்கும் வாலிபர்களால் மனித சமூகம் நன்மையடையும். ஆனால் இந்தக் கடமையை நான் செய்ய வில்லை. கல்விகற்ற- தெய்வத்தின்பால் அன்பு கொண்ட- அடியார்களை நான் போற்றவில்லை. பெண்ணாசை மிகுந்தேன்; பல பெண்கள் மேல் காமங் கொண்டேன்; அவர்கள் மேல் அளவற்ற ஆசை கொண்டேன்; பெண்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பி, அதே கவலை யாகத் திரிந்து வருந்தினேன். இன்னும் பெண்ணாசை என்னை விட்டுவிடவில்லை; என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படிக் கிடந்து தவித்துத் திரிகின்ற அடியேனை உன் பாதத்தில் சேர்க்கும்படி வேண்டுகின்றேன்; உன் பாதத்தை நினைத்து வணங்கும்படி அருள் செய்ய வேண்டுகின்றேன். இதுவே இரண்டாவது அடியின் பொருள். ஆகவே மேலே காட்டிய பாடலில், குழந்தைப் பருவ இயல்பையும், குமரப் பருவ இயல்பையும் எடுத்துக்காட்டியிருப்பதைக் காணலாம். முதுமைப் பருவத்தின் இயல்பை அருணகிரிநாதர் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். பல பாடல்களிலே இதைக் காணலாம். திருச்செந்தூர்த் திருப்புகழில் உள்ள ஒரு பாடலின் பகுதியைப் பார்த்தாலே போதும்; முதுமைப் பருவ நிலையை அப்படியே எடுத்துக்காட்டுவதில் அருணகிரிநாதரின் ஆற்றலைக் காணலாம். தொந்தி சரிய, மயிரே வெளிறநிரை தந்தம் அசைய, முதுகே வளைய இதழ் தொங்க, ஒருகை தடிமேல் வர மகளிர் - நகையாடி; தொண்டு கிழவன் இவன்ஆர் என, இருமல் கிண்கிண் என, முன் உரையே குழற, விழி துஞ்சு குருடு படவே, செவிடுபடு - செவியாகி; வந்த பிணியும், அதிலே மிடையும்ஒரு பண்டி தனும், மெய் உறவே தனையும், இள மைந்தர், உடைமை? கடன்? ஏ தென, முடுகு - துயர்மேவி; மங்கை அழுது விழவே, எமபடர்கள் நின்று சருவ மலமே ஒழுக, உயிர் மங்கு பொழுது, கடிதே, மயிலின் மிசை - வரவேணும்; இது திருச்செந்தூர்ப் பாட்டு ஒன்றின் முதல்பகுதி. தன்னையே விருத்த வயதினராக ஆக்கிக்கொண்டு பாடுகின்றார். இதன்மூலம் விருத்த வயதிலே ஒருவன் நிலைமை எப்படி யிருக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றார். இதன் பொருளைக் காண்போம். வயிறு மடிந்து சுருங்கிச் சரிந்துவிட்டது; மயிர் வெள்ளை வெளேர் என்று நரைத்துவிட்டது. அழகாக வரிசையுடன் இருந்த பற்கள் ஆட்டங் கண்டுவிட்டன. நிமிர்ந்து உட்காரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை; முதுகு வளைந்துவிட்டது. வாயைச் சரியாக மூட முடியவில்லை. இதழ் தொங்குகின்றது. நடை தளர்ந்து விட்டது; ஒரு கையில் தடியைப் பிடித்து ஊன்றிக் கொண்டுதான் நடக்க முடிகின்றது; இவ்வாறு நான் தள்ளாடித் தள்ளாடி நடக்கும் கோலத்தைக் கண்டு பருவ மங்கையர்கள் சிரிக்கின்றனர். இப்படி நடக்கும் இத்தொண்டு கிழவன் ஆர் என்று கேட்டுப் பரிகசிக்கின்றனர்; கிண் கிண் என்ற ஒலியுடன் இருமல் தொண்டையைக் கிழித்துக்கொண்டு வருகின்றது; நினைக்கின்ற நினைப்பைச் சொல்லால் புரியும்படி வெளியிட முடியவில்லை; உரைகள் குழறுகின்றன. விழிகள் பார்வை இழந்தன; குருடாகி விட்டன. காதுகள் ஓசையைக் கேட்க முடியாமல் செவிடாகிவிட்டன. நோயும் வந்துவிட்டது; அந்த நோயின் காரணமாக வைத்தியம் செய்வதற்கு என்று வந்த பண்டிதனும் தருகின்ற வேதனை- துன்பம்- என் உடம்பை வருத்துகின்றது. இந்த நிலை யிலே எனது இளமைந்தர்கள் குடும்பக் கணக்குக் கேட்கின்றனர்; எவ்வளவு சொத்து இருக்கிறது? எவ்வளவு கடன் இருக்கிறது? யார் யாரிடமிருந்து எவ்வளவு வரவேண்டும்? யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்று நச்சரிக்கின்றனர். இதனால் எனக்குச் சாகுங் காலத்தில் கூட மனச் சாந்தியே இல்லை. இந்தச் சமயத்தில் எனது மனைவி, மிகுந்த துக்கத்துடன் அழுது விழுந்து புரளுகின்றாள். யமதூதர்கள் என் எதிரில் வந்து என் உடம்பில் உள்ள மல மூத்திரங்கள் தாமே படுக்கையில் கழியும்படி உயிரைக் கவர நிற்கின்றனர். இப்படி எனது உயிர் போகும்பொழுது- மறையும் பொழுது - நீ மயிலின்மேல் ஏறி வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். இதுவே மேலேகாட்டிய திருப்புகழ் அடிகளின் பொருள். மேலேகாட்டிய திருப்புகழ்ப் பாடல்கள், மனிதப் பிறவியை வீணாக்கக்கூடாது; மனிதப் பிறவி அழியக் கூடியது; ஆதலால், வீணாக மூத்து இறப்பதற்கு முன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற உண்மையை உரைக்கின்றன. சமுதாயத் துரோகிகள் பிறருக்குத் தீமை புரிவோரைப் பாதகர்கள் என்று சொல்லுகின்றோம்; சமூகத் துரோகிகள் என்று சொல்லு கின்றோம். ஒன்றுக்கும் கட்டுப்படாமல் மனம் போன போக்கில் திரிவோர் உண்டு. இவர்கள் நாம் செய்யும் காரியங்கள் நன்மை யானவைகளா? தீமையானவைகளா? நாம் செய்யும் காரியங் களால் மற்ற மனிதர்களுக்கு நன்மையுண்டா? தீமையுண்டா? நாம் செய்யும் வேலைகளை அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்களா? ஒப்புக் கொள்ளமாட்டார்களா? நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று நினைக்கவே மாட்டார்கள். தாம் நினைத்தவைகளை யார் தடுத்தாலும் கேட்காமல் செய்து கொண்டேயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை அடங் காப்பிடாரிகள் என்று அழைக்கின்றோம். தாம்தோன்றித் தம்பிரான்கள் என்று பட்டஞ் சூட்டி அழைக்கின்றோம். நல்ல நடத்தைகள் என்பவைகளைக் கைவிடுகின்றவர்கள், செய்யவேண்டிய கடமைகள் என்பவற்றைச் செய்யாமல் விடுகிறவர்கள், செய்யத் தகாதவை என்பவைகளைத் தாராள மாகச் செய்கின்றவர்கள் ஒழுக்கம் அற்றவர்களாகக் கருதப் படுகின்றனர்; அறிவற்றவர்களாக எண்ணப்படுகின்றனர்; மக்கள் சமுதாய ஒழுங்கை மதிக்காத ஆணவம் பிடித்தவர்களாக நினைக்கப்படுகின்றனர். இவர்களை மக்கள் சிறிதும் மதிப்ப தில்லை. சமுதாய ஒழுங்கு- சமுதாயக் கட்டுப்பாடு - சமுதாய நீதி என்பவை எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. யுகத்துக்கு யுகம் மாறுதல் உண்டு; காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே வரும். மனித சமுதாய வளர்ச்சியை அறிவோர் இந்த உண்மையை உணர்வார்கள். ஒரு காலத்திலே, புலால் உண்பது, கள்ளுண்பது, விபசாரம் செய்வது, சூதாடுவது போன்ற சில செயல்கள் பாபமான செயல்களாகக் கருதப்படவில்லை. இவைகள் வாழ்க்கையின் இயற்கை நிகழ்ச்சிகளாகவும், பொழுது போக்கும் இன்பங்களாகவும் எண்ணப்பட்டு வந்தன. பிற்காலத்திலே இவைகளை மாபாதங்கள் என்று எண்ணினர்; நீதிநூல்களிலே இவைகளைக் கண்டித்து எழுதி வைத்தனர்; இவைகளைக் கடிவதே- விலக்குவதே- ஒழுக்கம், அறிவுடைமை, புண்ணியமான செயல் என்று கொண்டனர். சமுதாய ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இது ஒரு உதாரணமாகும். ஒரு காலத்திலே, ஒருவன் ஏராளமான சொத்துச் சுதந்திரங் களைப் பெற்று இன்ப வாழ்விலே புரளுவது அவன் செய்த பூர்வ புண்ணியப் பலன் என்று நினைத்தனர். அவனுடைய வாழ்வைக் கண்டு பொறாமைப்படுவது பாவம் என்று எண்ணினர். கோடிக் கணக்கான மக்கள் அந்த ஒருவனுக்காக உழைப்பது, அவன் இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்வது, அவனுக்கு அடங்கி நடப்பது, அவன் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, அவனைத் தெய்வப் பிறவியாக நினைத்துத் தொழுவது- இவைகள் தலைவிதி, தெய்வக் கட்டளை, பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மபலன் என்று எண்ணப்பட்டன. இது பண்டைக்காலத்துச் சமுதாய நீதி. இந்த நீதிதான் சரியானது என்று வாதிப்போர் இன்றும் இருக்கின்றனர். ஆனால் இன்றைய சமுதாய நீதியிலே பல மாற்றங்களைப் பார்க்கிறோம். உழைப்பவர்களே சமுதாய ஊழியர்கள், உழைக் காதவர்கள் சமுதாயத் துரோகிகள் என்று பேசப்படுகிறது. சமுதாய நன்மைக்காகப் பொருள் சேர்க்கின்றவனே தேசபக்தன்; ஒரு நன்மையும் செய்யாமல்- ஒருவருக்கும் உதவாமல்- பொருளைக் குவித்து வைத்துக் கொண்டிருப்பவன் தேசத் துரோகி. சமுதாயத் துரோகி என்று சொல்லப்படுவதைக் கேட்கிறோம். உழைப்பாளிகளால்தான் உலகம் வாழ முடியும், வளர முடியும், இன்புற முடியும் என்ற கொள்கை எங்கும் பரவி வருவதைக் காண்கிறோம். நமது சமுதாய வாழ்வு எப்படி இருந்தது? எந்தெந்த நடத்தைகளை நமது சமுதாயம் ஒழுக்கம் என்று போற்றி வந்தது?- என்பவைகளைப் பண்டைத் தமிழ் நூல்களிலே பார்க்கலாம். எந்தெந்தக் காலத்தில் எவை எவை சமுதாய ஒழுங்குகளாக எண்ணப்பட்டன என்பதையும் அந்தந்தக் காலங்களில் காணலாம். அருணகிரிநாதர் சமுதாய ஒழுக்கங்கள் இன்னின்னவை என்று சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறும் ஒழுக்கங்களும் நீதி களும் அவர் காலத்தில் நமது நாட்டு அறிஞர்களால் போற்றப் பட்டவை, ஒப்புக்கொள்ளப்பட்டவை என்று தான் நாம் கொள்ளவேண்டும். அவர் சுட்டிக்காட்டும் ஒழுக்கங்களிலே பல இக்காலத்திற்கும் ஏற்றனவாயிருப்பதைக் காணலாம். நரகத்திலே கிடந்து துன்புறப் போகும் மனிதர்கள் யார் என்று பாடுகிறார் அருணகிரிநாதர்; நரகத்துக்குத் தகுதியான வர்களின் அட்டவணையையே தந்திருக்கிறார். ஓதி வைத்தவர் கூலிகொ டாதவர்; மாத வர்க்கு அதி பாதக மானவர்; பூச லில்கன லாய்எரி காளையர்; - மறையோர்கள் ஊர்த னக்குஇட ரேசெய்வர்; ஏழையர் ஆர்த னக்குஉ தாசினம ஆனவர்; ஓதும் உத்தம நீதியை நாடிலர்; - இரவோருக்(கு) ஏதும் இத்தனை தானம்இ டாதவர்; பூத லத்தினில் ஓரம்அ தானவர்; ஏதி னில்சிவ ஞானியை மோனியை - இகழ்வோரும்; ஏத சிற்றறி ஞானம்இ லாதவர்; யோகம் அற்றிடு போகிதம் மீறினர்; ஈனர்; இத்தனை பேர்களும் ஏழ்நரகு - உழல்வாரே; இப்பாடலில் நரகத்தையடைவோர்கள் யார் யார் என எடுத்துக்காட்டினார். ஓதிவைத்த ஆசானுக்குக் கூலி கொடுக்காதவர்கள்; சிறந்த தவசிகளுக்குப் பெருந் தீமை செய்கின்றவர்கள்; வாய் வழக்குப் போரில் நெருப்பாகக் கோபிக்கும் வாலிபர்கள்; வேதியர்கள் வாழும் ஊருக்கு தீமை செய்கின்றவர்கள். ஏழை மக்களால் விரும்பப்படாமல் வெறுக்கப்படுகின்றவர்கள்; நீதி நூல்கள் கூறும் சிறந்த நீதியை அலட்சியம் செய்கின்றவர்கள்; வறுமையால் வந்து இரப்போருக்குச் சிறிதளவேனும் உதவி செய்யாதவர்கள்; இவ்வுலகில் நீதிவழி நின்று பேசாமல் ஒரு பக்கமாக நின்று பேசுகின்றவர்கள்; குற்றமற்ற சிவஞானத்தையுடைய மௌனி களை இகழ்ந்து பேசுவோர்; குற்றமுள்ள கீழ்மைகளைக் கண்டறியும் அறிவில்லாதவர்கள்; யோக மார்க்கத்தை அறியாமல் மாதர்களின் போக இன்பத்திலே மூழ்கியவர்கள்- இவர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள் அல்லர்; ஈனமானவர்கள். இத்தனை பேர்களும் ஏழு என்று சொல்லப்படும் நரகங்களில் கிடந்து வருந்துவார்கள்; இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். இது, குன்று தோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாட்டு ஒன்றின் முதல் பகுதி. மற்றொரு பாடலிலும் ஒழுக்கமற்றோர் வரிசையைக் காணலாம். ஒழுக்கமற்றவர்களைக் குண்டர்கள் என்று குறிப் பிடுகிறார் அருணகிரியார். குண்டர்கள் என்ற சொல் தமிழிலே நெடுங்காலமாக வழங்கி வரும் சொல்; குண்டர் என்ற சொல்லுக்கு, அடிமைகள்; வேசிமக்கள்; ஒழுக்க மற்றவர்கள்; பிறருக்குத் தீமை செய்வோர்; இரக்கம் அற்றவர்கள்; வஞ்சகர்கள்; கைக்கூலி வாங்கிக்கொண்டு காலித்தனம் செய்வோர்; அடங்காப்பிடாரிகள்- என்று பல பொருள் கூறலாம். தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்; ஓதிய நன்றி மறந்து குண்டர்கள்; சூழ்விர தங்கள் கடிந்த குண்டர்கள்; - பெரியோரை தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்; ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்; சூளுற வென்பது ஒழிந்த குண்டர்கள்;- தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்; வாதை நமன்றன் வருந்தி டும்குழி- விழுவாரே. இப்பாட்டு யார் யார் குண்டர்கள் என்பதைக் குறிப்பிடு கின்றது. நட்புக் கொண்டு பிறகு துன்பந் தருகின்ற குண்டர்கள்; சிறந்தது என்று சொல்லப்பட்ட நன்றியை மறந்த குண்டர்கள்; நன்மைக்காக ஆராய்ந்து சொல்லி வைத்த விரதங்களை இகழ்ந்த குண்டர்கள்; பெரியோர்களைத் தூஷித்துப் பழி பேசிய குண்டர்கள்; பிறர், வருந்துவோர்க்குக் கொடுப்பதைத் தடுத்த குண்டர்கள்; சொன்ன உறுதிமொழியை நிறைவேற்றாமல் கைவிட்ட குண்டர்கள்; எப்பொழுதும் அழியாமல் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியைச் செய்யாமல் சும்மா வருந்திக்கொண்டிருக்கின்ற குண்டர்கள்; தேவர்களுக்கு உரிமையான சொத்துக்களைக் கவர்ந்த குண்டர்கள்- இவர்கள் எல்லாம் துன்பந்தரும் எமலோகத்தில் உள்ள - துன்பமயமான- நரகக்குழியில் விழுந்து துடிப்பார்கள். இப்பாடலும் குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஒன்றின் முதல் பகுதியாகும். மற்றொரு பாட்டிலே, தீமை செய்கின்றவர்களை- ஒழுக்கங் கெட்டவர்களை- துட்டர்கள் என்றே குறிப்பிடுகிறார் அருண கிரிநாதர். ஒழுக்கமற்ற துஷ்டர்களைக் குறிக்கும் ஒரு பட்டியலைக் கீழ்வரும் பாடலில் காணலாம்:- ஆசார ஈனக் குதர்க்க துட்டர்கள்; மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்; ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள்; - பரதாரம் ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள்; நானாஉ பாயச் சரித்ர துட்டர்கள்; ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்; - தமியோர் சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள்; உரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்; கோலால வாழ்வில் செருக்கு துட்டர்கள்; - குரு சேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள்; ஓயாது தேடிப் புதைத்த துட்டர்கள்; கோமாள நாயின் கடைப்பி றப்பினில் - உழல்வாரே. இதுவே துட்டர்கள் வரிசையைக் காட்டும் பாடல். இதில் குறிப்பிடப்பட்டிருப்போர் இன்றும் மக்களால் துஷ்டர்களாகக் கருதப்படுகின்றனர் என்பது உண்மை. இத்துஷ்டர்களை அனைவரும் வெறுப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆசாரமற்ற விதண்டாவாதம் பேசும் துட்டர்கள்; தாய் தந்தையரை இகழ்ந்த துட்டர்கள்; பசுவின் மாமிசத்தை அறுத்த துட்டர்கள்; பிறர் மனைவியைக் கூடுவது பாவம் என்று கருதாமல் அவர்களை அனுபவித்த துட்டர்கள்; பல வகைப்பட்ட தந்திரங் களைச் செய்து ஏமாற்றி வாழும் துட்டர்கள்; மதுபானம் செய்யும் துட்டர்கள்; தனியே செல்வோர் பொருளை வழிப்பறி செய்த துட்டர்கள்; ஊரார்களுடன் ஒட்டி வாழாமல்- அவர்கள் விருப்பத்துக்கு மாறாக- தம்மையே பெரிதாக நினைத்துப் பிதற்றுகின்ற துட்டர்கள்; கோலாகலமாகக் கர்வம் கொண்டு அடாதவைகளைச் செய்யும் துட்டர்கள்; குருவுக்குப் பணிவிடை செய்யாத பாவத்தையுடைய வீணான துட்டர்கள்; ஓயாமல் பொருள் தேடி அதை நல்வழியிலே செலவு செய்யாமல் மறைத்து வைத்திருக்கும் துட்டர்கள்- இவர்கள் எல்லாம் பரிக சிக்கத்தக்க நாயைப் போலக் கடைப்பட்ட பிறப்பினராகக் கருதப்பட்டு வருந்துவார்கள். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இப்பாடல் திருநாகீச்சுரத் திருப்புகழின் முதற் பகுதி. இது போன்ற நீதிகளை, இன்னும் பல திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம். இவ்வாறு அருணகிரியார் எடுத்துக் காட்டும் நீதிகள் அனைத்தும் மனித சமுதாயத்தைத் திருத்தும் கருத்துடைய வைளேயாகும்; அருணகிரியார் காலத்தில் தமிழகத்தில் வெறுக்கப்பட்ட செயல்கள் இவை இவை என்று காண்பதற்குத் துணை செய்வனவாகும். கரும்பும் கசந்து தேனும் புளிக்கும் பலர், தமக்குப் பிடித்தமான பல தெய்வங்களை வழி படுகின்றனர்; தாம் வழிபடும் தெய்வங்களைப் பற்றியே அவர்கள் போற்றிப் புகழுவார்கள்; கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுவார்கள்; எல்லாம் வல்ல தெய்வம் அதுதான் என்று இயம்புவார்கள்; அத்தெய்வத்தின் தோற்றத்தையும் செயல்களையும் நினைத்து நினைத்துச் சொல்லிச் சொல்லி உள்ளம் உருகுவார்கள். இது பக்தர்களின் பண்பு. முருகனிடம் அன்பு கொண்ட அருணகிரியார். முருகனைப் பாராட்டியிருக்கும் பாடல்கள் படிப்போர் மனத்திலே பக்திச் சுவையை ஊட்டுவன. அவர் தமது பாடல்களில் முருகன் திருவிளையாட்டைப் பலவிதமாகப் பாராட்டிப் பாடி உருகு கின்றார். முருகன் தமிழ் நாட்டின் பழம்பெரும் தெய்வம் குறிஞ்சி நில மக்கள் மலை நிலத்தில் வாழும் மாந்தர்கள்- முருகனையே குல தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வம் முருகன் என்பதே தமிழர் கொள்கை. இதனால் முருகனுக்குக் குறிஞ்சிக் கிழவன் என்று ஒரு பெயர் உண்டு. இத்தகைய முருகனுடைய பிள்ளைப் பருவத்தைக் குறிக்கும் பாடல் ஒன்று கந்தர் அலங்காரத்தில் காணப்படுகின்றது. அப்பாடல் வருமாறு:- திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை விரும்பிக் கடல்அழக் குன்று அழச் சூர் அழ விம்மிஅழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே. என்பதுதான் அப்பாடல். இச்செய்யுள் முருகனை எல்லாம் வல்ல தெய்வம், உலகம் எங்கும் நிறைந்த தெய்வம், எல்லாப் பொருளாகவும் இருக்கின்ற தெய்வம் என்று கூறுகின்றது. ஒழுங்காக இவ்வுலகம் முழுவதையும் ஈன்றெடுத்தவள் பார்வதி தேவியார். அவள் அழகிய பாவை போன்றவள். முருகன் அவளுடைய முலைப்பாலை அருந்தினான். சரவணப் பொய்கையிலே பூத்து நின்ற தாமரை மலராகிய தொட்டிலிலே ஏறி விளையாடினான். கார்த்திகை முதலிய மங்கையர்களின் முலைப்பாலை வேண்டி அழுதான். அவன் அழுதபோது, கடலும் அழுதது; மலைகளும் அழுதன; தேவர்களும் அழுதனர்; இவ்வாறு உலகமே அழும்படி வாய்விட்டு அழுத சிறு குழந்தை உருவானவன். அவனை இவ்வுலகம் குறிஞ்சி நிலத் தெய்வம் என்று கூறும் என்பதே இச்செய்யுளின் பொருள். இதில், முருகன் உமாதேவியின் புத்திரன்; கார்த்திகை நட்சத்திரங்களாகிய அறுவரின் முலைப்பால் உண்டான்; அவனே இவ்வுலகுக்கெல்லாம் தலைவன்; அவனே குறிஞ்சி நிலக் கடவுள்- என்று குறித்திருப்பதைக் காணலாம். இத்தகைய குறிஞ்சிக் கிழவன்மீது அன்பு வைத்தால் இவ்வுலகப் பாசம்- ஆசை- பற்று- விட்டுப் போகும் என்றும் அழியாத ஆனந்தத்தை அடையலாம். அந்த முருகன் ஏழையர் பால் இரக்கம் உள்ளவன்; அன்பு செய்கின்றவர்களுக்கு அருள் புரியும் அண்ணல்; ஆதலால் அவனிடம் மெய்யன்பு காட்டுங்கள். உங்கள் துயரம் ஓடிப்போகும். உயர்ந்த ஆனந்த வாழ்வில் நிலைத்து வாழலாம். இவ்வாறு அடுத்த பாட்டிலே கூறுகின்றார். முருகனிடம் அன்பு செய்து, அதனால் தான் அடைந்த இன்ப நிலையை எடுத்துரைப்பதே அந்தப் பாடலாகும். அப்பாடல் வருமாறு:- பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பி னால்மெல்ல மெல்ல உள்ள அரும்பும் தனிப்பர மானந்தம்; தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே. இப்பாடல் அந்தக் குறிஞ்சிக் கிழவனுடைய பெருமையைக் கூறிற்று. அவனிடம் மெய்யன்பு பூண்பதினால் ஏற்படும் இன்ப நிலையை எடுத்துரைத்தது. முருகன் அடியார்க்கு எளியவன். வள்ளி என்ற குலப் பெண் முருகனையே மணக்கவேண்டும் என்று விரும்பியவள். அவனையே எப்பொழுதும் உள்ளத்தில் நினைந்து உருகியவள். அவள் பெரிய பசுமை நிறைந்த தினைப்புனத்திலே சிறிய தினைக் கதிர்களைக் கிளிகள் கொய்யாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவள். அத்தகைய பேதையின் கொங்கையைத் தழுவிக்கொள்ள முருகன் தானாகவே சென்றான். மணந்து தழுவிக்கொண்டு அவன் நீண்ட நாளைய காதலை நிறை வேற்றினான். இத்தகைய முருகனைக் கொஞ்சம் கொஞ்சமாக- மெதுவாக- சிறிது உண்மையன்புடன் நினைத்தால் போதும்; உள்ளத்திலே ஒப்பற்ற அழியாத ஆனந்தம் தோன்றி நிற்கும். அந்த ஆனந்தத்தைச் சுவைத்து அறிந்த போதே இவ்வுலகப் பொருள்களில் உள்ள ஆசை அற்றுப் போகும்; ஐம்புலன்களும் அவன் வசமாகிவிடும். அதன் பின் கருப்பஞ்சாறும் கசக்கும்; நல்ல தேனும் புளிக்கும். இவை முற்றிலும் கைத்துப் போகும். நான் அவனை- அந்த வள்ளியைத் தழுவிய முருகனை- உள்ளன்புடனே நினைத்த போதே எனக்கு ஒப்பற்ற பரமானந்தம் உண்டாயிற்று; கருப்பஞ்சாறும் கசந்தது; தேனும் புளித்துக் கைத்துப் போயிற்று. இதுவே இப்பாடலில் அடங்கியிருக்கும் பொருள். முதல் பாட்டு, குறிஞ்சிக் கிழவன்- முருகன்- இன்னார் என்பதை உணர்த்திற்று. இரண்டாம் பாட்டு, அம்முருகனை மெய்யன்புடன் நினைப்போர் அடையும் இன்பத்தை எடுத்துக் காட்டிற்று. உண்மையன்பர்கள்தான் இத்தகைய ஆனந்தத்தை அடைய முடியும். போலி பக்தர்கள் எந்த இன்பத்தையும் எய்த முடியாது. அவர்கள் மேலும் துன்பத்திற்குத்தான் ஆளாவார்கள். ஆதலால் உண்மைப் பக்திதான் உயர்வளிக்கும் என்பதை இரண்டாவது பாடல் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள, அரும்பும் தனிப் பரமானந்தம் என்ற தொடர் உண்மையன்பின் சிறப்பை உணர்த்தி நின்றது. பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன் என்ற தொடர், தன்னை விரும்புவோர் ஏழைகளானாலும் சரி, நாகரிகமற்ற கீழ்க் குடி யினராயினும் சரி, அவர்களுக்கு அருள் செய்யும் பண்புள்ளவன் முருகன் என்பதை உணர்த்திற்று. அருணகிரிநாதர் தாம் கண்ட அநுபவத்தை, இவ்வாறு செந்தமிழ்ச் செய்யுள் உருவாக உலகினர்க்கு உணர்த்துகின்றார். வெறும் பேச்சால் பயன் இல்லை முருகன் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஒன்றைக் கூறுகின்றார் அருணகிரிநாதர். அவர் சொல்வது, பொதுவாக இறைவன் அருளைப் பெற விரும்புவோர் எல்லோர்க்கும் ஏற்றதாகும். பலருக்குப் பயன்படும்படி ஒன்றை உரைப்பது தான் உயர்ந்த உரையாகும். அறிவுள்ளோர்- அருளுள்ளோர் - புலமையுள்ளோர் - கூறும் மொழிகளில் இத்தகைய பொதுத் தன்மையைக் காணலாம். மனத்தைப் பொறிவழி செல்லாமல் தடுக்க வேண்டும்; கண்ணாற் காணும் பொருள்கள்மேல் எல்லாம் மனத்தைச் செல்லவிடாமல் தடுக்கவேண்டும்; காதுக்கு இனிமை தரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதிலே மனத்தைத் தாராளமாகச் செல்ல விடக்கூடாது; தடுத்தாள வேண்டும் மூக்கு விரும்பும் வாசனைப் பொருள்களையெல்லாம் நுகர்வதற்கு இடந்தரக் கூடாது. நாக்கு விரும்பும் சுவைகளையெல்லாம் சுவைக்க இடந்தரக்கூடாது. உடல் விரும்பும் இன்பத்தை எல்லாம் நாடி வருந்துவதற்கு இடந்தரக்கூடாது- இவற்றில் எல்லாம் மனத்தைக் கட்டுப் படுத்தியாள வேண்டும். இதுதான் மனத்தைத் தடுக்கும் வழியாகும். அடுத்தபடியாகப் பொறுமையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். வெகுளி- கோபம்- சினம் தோன்ற இடந் தரக்கூடாது. சினத்தைப் போலச் சீரழிப்பது வேறு ஒன்றும் இல்லை. சினம் பொருந்தியவர்- சினத்துடன் தொடர்பு கொண்டவர்- எல்லா இன்னல்களுக்கும் ஆளாவார்கள். சினம் உள்ளவர்களுக்கு நட்பினர்- உறவினர் - ஒருவரும் இருக்க மாட்டார்கள். அதைப்போல எல்லா நன்மைகளையும் சுட்டுப் பொசுக்கும் பெருநெருப்பு ஒன்றுமேயில்லை. ஆதலால் சின மின்றிப் பொறுமையுடன் வாழவேண்டும். மூன்றாவதாக, வறுமையால் வாடுவோர்க்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும்; ஒளிக்காமல் மறைக்காமல் உதவி புரிய வேண்டும்; வருந்துவோர் துன்பம் தீர நமது கையில் கிடைத்த பொருளை உதவ வேண்டும். நான்காவதாக, மௌனமுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அளவுக்குமேல் பேசுவதால் தீமைகள் பல தோன்றும். பயனற்ற சொற்களைக் கூற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு விடும். ஆதலால் பேச்சை மட்டுப் படுத்திக்கொள்ள வேண்டும். கூடிய வரையிலும் மவுனமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த நான்கு பண்புகளையும் பின்பற்றினால் முருகன் திருவருள் தானாகவே கிடைக்கும்; அவன் திருவருள் வேண்டித் தவம் கிடக்க வேண்டியதில்லை. இந்த உண்மையை ஒரு செய்யுளில் எடுத்துரைக்கின்றார் அருணகிரிநாதர். தடுங்கோள் மனத்தை; விடுங்கோள் வெகுளியைத்; தானம் என்றும் இடுங்கோள்; இருந்த படிஇருங் கோள்; ஏழு பாரும் உய்யக் கொடும்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் துளைக்கவைவேல் விடும்கோள் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. இதுதான் மேலேகாட்டிய கருத்தமைந்த பாட்டு. உலகினர்க்கு அறிவுரை கூறும் முறையில் அமைந்த பாடல் இது. உலக வாழ்வில் திளைத்துத் திகைப்போர்க்கு உய்யும் நெறியை உரைக்கும் செய்யுள் இதுவாகும். உள்ளத்தைப் பொறிகளின் வழியிலே செல்லாமல் தடுத்துக் கொள்ளுங்கள்; கோபத்தை விட்டுவிடுங்கள் என்றும் தானம் புரியுங்கள்; இருந்தபடியே மவுனமாக இருங்கள்; இப்படி யிருந்தால் ஏழுலகங்களும் பிழைக்கும்படி கொடுமையான கோபத்தையுடைய சூரபதுமன் உடல் பிளக்கும்படியும், கிரவுஞ்சம் என்னும் குன்றம் துளைபடும் படியும் தனது கூர்மை யான வேலாயுதத்தைச் செலுத்திய முருகப் பெருமானுடைய அருள் தானாகவே உம்மிடம் வந்து சேரும். இதுவே இச் செய்யுளின் பொருளாகும். இவ்வாறு முருகன்- இறைவன்- அருளை அடைவதற்கு வழியுரைத்தார் அருணகிரிநாதர். மனத்தை அடக்கியாளுதல், கோபத்தை கைவிடுதல், தானம் புரிதல், மொளனமாக இருத்தல்- இந்த நான்கும் சன்மார்க்க நெறியாகும். மற்றொரு செய்யுளிலே முருகன் அருளைப் பெறும் வழியை வலியுறுத்தியுள்ளார். முருகா! முருகா! வடிவேலா! மயில்வாகனா! தேவாதி தேவனே! குருநாதா! என்று வாயளவில் வாழ்த்தி வணங்குவது மட்டும்போதாது; இத்தகைய வாழ்த்தினால் மட்டும் அவன் அருளை அடைந்துவிட முடியாது. கையில் உள்ள பொருளை ஏழையர்க்கு உதவுங்கள். மிகுதியாக உதவி செய்ய உள்ளம் இல்லாவிட்டாலும் சிறிதளவாவது உதவி செய்யுங்கள். அதுதான் பயன் தரும். வீணாகப் பொருளைச் சேர்த்து வைப்பதனால் பயன் இல்லை. நீங்கள் சாகும்போது அப்பொருளால் உங்களுக்கு எப்பயனும் இல்லை என்று அறிவுரை கூறுகின்றார் அருணகிரிநாதர். வையில் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவுஅள வேனும் பகிர்மின்கள்! நுங்கட்குஇங்ஙன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. இந்த அரிய செய்யுள் மூலம் மன்பதைக்கு அறிவுரை கூறினார். இதன் பொருளைக் காண்போம்; முருகன் கூர்மையும் ஒளியும் அமைந்த வேலாயுதத்தை உடையவன். அவனை என்றும் வாழ்த்தி வழிபடுங்கள். அவ்வள வோடு நின்றுவிடாதீர்கள். வறிஞர்களின் துன்பத்தைக் கண்டு இரக்கங் கொள்ளுங்கள். ஒரு நொய்யின் பிளப்பு அளவாவது, அதாவது ஒரு நொய்யின் பாதி அளவாவது அவர்கள் உண்ணும் படி உங்கள் உணவிலிருந்து பிரித்துக் கொடுங்கள். நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பொருள் நீங்கள் இறக்கும்போது உதவி செய்யாது. நுமது உடம்பின் நிழலிலே, வெயிலைக் கண்டு அஞ்சியவர் ஒண்டி இளைப்பாற முடியாது. உங்கள் உடம்பின் நிழல் வெறும் நிழலே அன்றிப் பயன்படும் நிழல் அன்று. அதுபோல உங்கள் கையில் உள்ள பொருளும் உங்கள் இறுதிக் காலத்தில் உங்களுடன் உதவியாக- துணையாக- வரப்போவ தில்லை. இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இதுதான் இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். கடவுளிடம் அன்பு செலுத்துவதோடு, ஏழையர்பால் இரக்கம் காட்டி அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையும் அமைந்திருக்க வேண்டும். இதுதான் இறைவன் அருளை எய்தும் வழி. இதையே அருணகிரிநாதர் வலியுறுத்தினார். மேலேகாட்டிய இரண்டு பாடல்களும் இறைவன் அருளைப் பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டின. வெறும் பக்தி யால் மட்டும் இறைவன் இரங்கிவிட மாட்டான். ஒழுக்கமும் வேண்டும்; பிறர்க்கு உதவி செய்யும் பண்பும் வேண்டும். பக்தியும் ஒழுக்கமும் பிரிக்க முடியாதவை. ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதாது; பக்தி மட்டும் இருந்தாலும் போதாது. இரண்டும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்பதே அருணகிரிநாதர் போன்ற அறிஞர் பெருமக்களின் கொள்கையாகும். ஊழ்வினை ஓடும் இறைவனை வணங்குகிறவர்களிடந்தான் இரக்கம் இருக்கும். அவர்கள்தாம் மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்குவார்கள். துன்புறுகின்றவர்களின் துயரத்தைப் போக்கத் துணிவார்கள். தம்மால் இயன்ற உதவியைச் செய்ய பின்வாங்க மாட்டார்கள். இது அருணகிரிநாதர் கருத்தாகும். இதுமட்டும் அன்று. முருகனிடம் அன்புகொண்டவர்கள் தாம் தமது செல்வத்தின் பயனையும் அனுபவிப்பார்கள். செல்வத்தால் பயன் பெறுவது என்பது, அதனால் தாமும் இன்பம் அடைவது, பிறருக்கும் உதவி செய்து அவர்களையும் இன்பம் அடையச் செய்வதாகும். சிலர் மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கின்றனர். வேண்டிய எல்லாச் செல்வங்களும் இருக்கின்றன. அவற்றால் அவர்கள் நன்றாக வாழலாம்; பிறரையும் வாழச் செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. தாமும் ஒன்றும் இல்லாத ஓட்டாண்டி கள்போல நடிக்கின்றனர். யாரேனும் அவர்களிடம் உதவி கேட்டால் எம்மிடம் ஒன்றும் இல்லையே! நான் செய்வேன், கொடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான்; இல்லாத குறைதான் ஒன்றும் உதவ முடியவில்லை என்று கையை விரிப்பதைக் காணலாம். ஏராளமான செல்வம் இருந்துகூடப் பஞ்சப்பாட்டுப் பாடுவதைப் பார்க்கலாம். செல்வம் இருந்தும் சிலர் இப்படி இருப்பதற்குக் காரணந் தான் என்ன? இக்கேள்விக்குச் சரியான விடை கூறுகின்றார் அருணகிரிநாதர். அவர்களுடைய ஊழ்வினை தான் அவர் களை அவ்வாறு செல்வம் இருந்தும் இல்லாதவர்களைப்போல வாழச் செய்கின்றது; ஊழ்வினைதான் அவர்கள் ஒன்றாலும் இன்புற்று வாழ முடியாதபடி தடுத்து வைத்திருக்கின்றது; செல்வத்தைச் சும்மா சேர்த்து வைத்திருக்கும்படி- ஒருவருக்கும் உதவாமல் அழுத்தி வைத்திருக்கும்படி- புதைத்து வைத்திருக்கும் படி- செய்திருக்கின்றது. எவ்வளவுதான் அவர்கள் செல்வத்தைப் பத்திரமாக, பாதுகாப்புடன் சேமித்து வைத்திருந்தாலும் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. அவர்கள் செத்தாலும் அவர்கள் பின் செல்லப் போவதில்லை. இவ்வாறு செல்வத்தை அனுபவிக்காமைக்குக் காரணம் கூறுகின்றார். செல்வத்தை அனுபவிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை தடுத்தாலும் அதையும் உதறித் தள்ளி விட்டுச் செல்வத்தின் பயனை நுகர வேண்டுமானால் அதற்கு ஒரு வழிதான் உண்டு என்று கூறுகிறார் அருணகிரிநாதர். அந்த ஒரு வழி முருகப்பிரானை வழிபடுவதுதான் என்பது அவருடைய அசையாத நம்பிக்கை. இதனைக் கந்தர் அலங்காரப் பாட்டு ஒன்றால் காணலாம்: கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி காள்! உங்கள் வல்வினைநோய் ஊழின் பெருவலி உண்ணவொட் டாது; உங்கள் அத்தம்எலாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோநும் அடிப்பிறகே இச்செய்யுள் மேலேகூறிய கருத்தை வலியுறுத்தி இருப்பதைக் காணலாம். கோழிக்கொடியை உடையவன் முருகப்பெருமான். அவனது அடியைப் பணிய மறந்தீர்கள். இவ்வுலகத்தில் நன்றாக வாழலாம் என்று கருதி உழைக்கின்றீர்கள். உங்களுக்கு அறிவே இல்லை. முருகப் பிரானை வணங்காமல் நீங்கள் அறியவில்லை. நீங்கள் எவ்வளவு உழைத்து, எத்தனை செல்வங்களைச் சேர்த்தாலும் உங்களால் இன்புற்று வாழ முடியாது. வலிமை பொருந்திய வினைத் துன்பம் என்னும் ஊழ்வினையாகிய பெரிய வலிமையை நீங்கள் மீற முடியாது. அது உங்களை உங்கள் செல்வத்தை அனுபவிக்க முடியாமல்- உண்ண முடியாமல்- தடுத்துவிடும். உங்கள் செல்வங்களை எல்லாம் பிறர் கவராதபடி ஆழமான பள்ளத்திலே புதைத்து வைத்திருந்தாலும் அது உங்களுக்குப் பயன்படாது. நீங்கள் இறந்தால் அச்செல்வம் உங்கள் பின், உங்கள் அடியைத் தொடர்ந்து வரப்போவதில்லை. இந்த உண்மையை உணருங்கள். இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். மேலும் அந்த முருகனுடைய பெருமையை எடுத்துரைக் கின்றார் அருணகிரிநாதர். முருகன் இரக்கம் உள்ளவன். தமிழிலே தனிச்சுவை காணுகிறவன். அரக்கனை- கொடிய அரக்கனாகிய இராவணனை- கொன்றழித்த திருமாலின் மருகன்; உமையாளின் புதல்வன்- ஆதலால் அவனை வணங்கி வழிபடுங்கள். அருள் புரிவான். உங்கள் துன்பந் தணியும் என்று கூறுகின்றார். மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்; முத்தமிழால் வைதா ரையும் அங்கு வாழவைப் போன்; வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன்; உமையாள் பயந்த இலஞ்சியமே. இச்செய்யுளில் அமைந்திருக்கும் அரும்பொருள் சிந்திக்கத் தக்கதாகும். முருகன் வள்ளியைத் தானே விரும்பிச் சென்று மணம் புரிந்துகொண்டவன். ஆதலால் அவன் உலக வாழ்வை நன்றாக அறிவான். மக்கள் இவ்வுலகில் பெண்ணுடன் கூடி வாழும் இன்பத்தை விரும்புகின்றனர் என்பதையும் உணர்வான். ஆகவே, உங்களையும் இவ்வுலகில் இல்லறத்திலிருந்து இன்பந் துய்த்து வருவதற்கு உதவி செய்வான். அடுத்தபடியாக, அம்முருகன் தமிழ்த் தெய்வம் தமிழை நன்றாக அறிந்து சுவைப்பவன். தமிழ் ஓசையினாலேயே அவனை வயப்படுத்திவிட முடியும்; தமிழ் மொழியைக் கேட்கும்போது தமிழால் தன்னைத் துதிக்கிறார்களா, பழிக்கிறார்களா என்று கூட எண்ணமாட்டான். தமிழால் அவனை வைதாலும், அவனைப் பழித்துப் பாடினாலும் சரி, சினங்கொள்ள மாட்டான். தமிழோ சையின் இனிமையிலே உள்ளத்தைப் பறிகொடுத்து உதவிசெய்ய முந்துவான். தமிழால் தன்னை வைகின்றவர்களைக்கூட வாழ வைக்கும் தன்மையுள்ளவன் அவன் அத்தகைய முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்தால் அவன் என்னதான் செய்ய மாட்டான்? அன்றியும் அந்த முருகன் பகைவர்களுக்கு அஞ்சாதவன். உங்களுடைய பகைவர்களை எல்லாம் அழித்து உங்களைக் காப்பாற்றுந் தன்மையுள்ளவன். அத்தகைய பரம்பரையிலே பிறந்தவன் அவன். கொடிய யானை போன்ற இராவணன் இருபது கைகளும் பத்துத் தலைகளும் உடையவன். அவனுடைய பத்துத் தலைகளையும் கத்தரிக்கும்படி அம்பெய்தான் திருமாலாகிய இராமன். அத்தகைய திருமாலின் மருகன்தான் முருகன். ஆதலால் நீங்கள் அவனைப் பணிந்தால் பகைவர்க்கு அஞ்ச வேண்டிய தில்லை. உங்களுக்குப் பாதுகாப்பாக என்றும் துணை நிற்பான். அன்றியும் அவன் உலகத்தை ஈன்றெடுத்து வளர்க்கும் உமாதேவியின் புதல்வன். ஆதலால் எப்பொழுதும் இரக்கமே உருவாக இருப்பவன். அவனை நினைத்தால்- பணிந்தால்- போற்றினால் உங்களுக்கு அருள் புரியாமல் இருக்க மாட்டான். அவன் இரக்கம் நிறைந்த இலஞ்சியம், அதாவது களஞ்சியமாக இருப்பவன். பணியுங்கள், அவனைப் பணிந்து அருள் பெறத் தவறாதீர்கள். இப்பாடலிலே இவ்வாறு விரிவான பொருள் அடங்கி யிருப்பதை காண்கின்றோம். செந்தமிழ்ப் புலவர்- முருக பக்தர்- அருணகிரிநாதரின் திருமொழிகளிலே இத்தகைய ஆழ்ந்த கருத்துக்களைக் காணலாம். பகுத்தறிவின் பயன் தேசிகன், குரு என்ற சொற்கள், ஞானோபதேசம் செய்யும் ஆசிரியனைக் குறிக்கும் சொற்கள். அருணகிரிநாதர் முருகனைத் தேசிகன் என்று அழைக்கின்றார். பல இடங்களிலே குருநாதனே என்று குறிக்கின்றார். தனக்கு உண்மையறிவைக் காட்டியவர் முருகன். ஆதலால் முருகனைத் தேசிகன் என்றும், குருநாதன் என்றும் அவர் விளிப்பதிலே வியப்பில்லை. முருகனாகிய தேசிகன்- குருநாதன்- குருமூர்த்தி- அருண கிரிநாதருக்கு அருளிய உண்மையை, அருணகிரிநாதருடைய திருமொழிகளாலேயே காணலாம். பகுத்தறிவாகிய ஒளியின் மூலந்தான் உண்மையான அறிவு- ஞானம் - உண்டாகும். உண்மை ஞானம் உண்டானால் தான், அன்பு, அருள் என்னும் குணம் பிறக்கும். இத்தகைய நிலையை அடைந்தவர்கள் எங்கும் இறைவனைக் காண்பார்கள். அவன் உருவாக இல்லை, வெட்டவெளியிலே அருவாக அமைந் திருக்கின்றான் என்று காண்பார்கள். இந்த உண்மையை முருகன் தனக்கு உபதேசித்ததாகக் கூறுகிறார் அருணகிரிநாதர். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்ததுஓர் ஆநந்தத் தேனை; அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறும்தனியைத்; தெளிய விளம்பிய வா! முகம் ஆறுஉடைத் தேசிகனே! இச்செய்யுளிலே ஞானத்தை மலையாகவும், ஆனந்தத்தை தேனாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. இனிய செந்தமிழ்ப் பாட்டு. பகுத்தறிவாகிய ஒளியிலே தோன்றிய உயர்ந்த ஞான மாகிய மலையின் உச்சியிலே, அன்பிலே உண்டான ஒப்பற்ற ஆனந்தமாகிய தேனை, காலம் குறிக்க முடியாத காலத்திலே தோன்றிய ஒன்றுமில்லாத சூன்யத்தையே உருவாகக் கொண்ட, ஒன்றுமற்ற தனித்த பொருளை, நான் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி உபதேசித்தவனே! ஆறுமுகங்களைக் கொண்ட தேசிகனே! முருகன் தனக்கு உபதேசித்த உண்மையை- முருகன் திருவருளால்தான் உணர்ந்த உண்மையை- இவ்வாறு உரைத்தார் அருணகிரிநாதர். பகுத்தறிவாகிய ஒளியினால் உண்மையறிவைப் பெறலாம். உண்மையறிவின் முடிவிலே அன்பைக் காணலாம். அன்பிலே ஆனந்தத்தைப் பெற்றவர்கள் வெட்டவெளியாகிய பரம் பொருளைப் பெறுவார்கள். இந்த உண்மையை இப்பாடல் நமக்கு உணர்த்தியது. இதற்கு அடுத்த செய்யுளும் முருகன் கூறிய உண்மையை எடுத்துரைக்கின்றது. முருகன் தனக்கு உரைத்த உண்மை இன்னது என்பதை அருணகிரிநாதர் எடுத்துரைக்கின்றார். அவர் அச் செய்யுளில் உரைப்பதைக் காண்போம். முருகன் தெய்வத் தன்மை பொருந்திய வள்ளியம்மையின் தலைவன். வள்ளியின் மொழிகள் மிகவும் இனிமையானவை. அம்மொழிகளின் இனிமை தேனையும், சர்க்கரைப் பாகையும் மிஞ்சியவை. அவற்றை அம்மொழிகளுக்கு உவமை கூற முடியாது. இத்தகைய வள்ளி மணாளன் எனக்குச் செய்த உபதேசம் ஒன்று உண்டு, அது ஒப்பற்ற உயர்ந்த உபதேசம். அந்த உபதேசத்தைப் பற்றி இன்னதென்று சொல்ல முடியாது. அவன் கூறியது வானத்தைப் பற்றியதும் அன்று; வானமும் அன்று. காற்றைப் பற்றியதும் அன்று; காற்றும் அன்று, நெருப்பைக் குறித்ததும் அன்று; நெருப்பும் அன்று. தண்ணீரைப் பற்றியதும் அன்று; தண்ணீரும் அன்று. நிலத்தைப் பற்றியதும் அன்று; நிலமும் அன்று, தன்னைப் பற்றியதும் அன்று; தானும் அன்று. என்னைப் பற்றியதும் அன்று; நானும் அன்று. உருவம் அற்றதைப் பற்றியும் அன்று; உருவமும் அன்று. இவற்றையெல்லாம் கடந்த பொருளையே வள்ளி மணானன் எனக்கு உபதேசித்தான். காட்டினான். தேன் என்று பாகுஎன்று உவமிக் கொணாமொழித் தெய்வள்ளி கோன், அன்று எனக்குஉப தேசித்தது ஒன்றுண்டு கூறஅற்றோ! வான்அன்று, கால்அன்று, தீஅன்று, நீர்அன்று, மண்ணும் அன்று, தான்அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே. இந்தப் பாடலும் முதலிலே காட்டிய பாடலின் கருத்தையே வலியுறுத்துகின்றது. வள்ளிமணாளராகிய முருகப்பெருமான் எனக்கு உபதேசித்த உண்மைப் பொருள் ஒன்றுண்டு. அது இவ்வுலகில் நம்மால் காணப்படும் பஞ்ச பூதங்களையும் கடந்தது. அத்தகைய உண்மை ஞானத்தையே எனக்கு அறிவுறுத்தினார் என்பதே இப்பாடலின் கருத்தாகும். மேலே கூறிய பாடல்கள் இரண்டும் கந்தர் அலங்காரத்தில் உள்ளவை. இப்பாடல்களால் ஓர் உண்மையை நாம் காண முடிகின்றது. அருணகிரிநாதர் முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்டார். உள்ளத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு ஒரு கருவி யாகக் கொண்டார். முருகனை உள்ளத்திற் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்தி உண்மைப்பொருளை ஆராய்ந்து உணர்ந்தார் என்றுதான் நாம் முடிவு கட்ட வேண்டும். அருணகிரிநாதர் கண்ட உண்மையான கடவுள் எல்லா வற்றையும் கடந்து நிற்கும் பரம்பொருளாகும். அந்தப் பரம் பொருளை இன்னதென்று குறித்துக் காட்ட முடியாது. வெறும் வெட்டவெளியாக இருப்பதை எப்படிச் சுட்டிக்காட்ட முடியும்? ஆனால், பகுத்தறிவு என்னும் ஒளிவிளக்கைக் கொண்டு உண்மை ஞானம், அந்த உண்மை ஞானத்தின் தன்மையாகிய அன்பு, அந்த அன்பின் மூலம் உண்டாகும் ஆனந்தம்- இவற்றால் அந்தப் பரம்பொருளை அறிய முடியும் என்பதே அருணகிரிநாதர் கருத்தாகும். அறிவு, அன்பு, ஆனந்தம் மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. இத்தொடர்பே உயர்ந்த பரம் பொருளை அறிந்துகொள்ள வழி காட்டுவன என்று சுருங்கக் கூறிவிடலாம். அருணகிரிநாதர் பாடல்கள் பலவற்றிலே இத்தகைய சிறந்த தத்துவங்களைக் காணலாம். காலனுக்கு அஞ்சாக் கவிஞர் சாவு என்றால் அஞ்சாதவர்கள் எவரும் இல்லை. எவ்வளவு துன்பத்தில் வாழ்கின்றவர்களும் கூடச் சாகத் துணிவதில்லை. காடு வா வா என்று அழைத்துக்கொண்டே இருக்கின்றது. வீடு போ போ என்று துரத்திக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலைக்கு ஆளான முதியோர்களும் சாகத் துணிவதில்லை. நோயாளிகளும் இறக்கத் துணிவதில்லை. எவ்வளவு தொல்லைப் பட்டாலும் உயிருடன் வாழத்தான் விரும்புகின்றனர். ஒரு சிலரே இதற்கு விலக்காக இருக்கும் வீரர்கள். உலகம் நிலையற்றது; உலகத்தில் உள்ள பண்டங்கள் எல்லாம் நிலையற்றவை; உலக இன்பம் என்பதும் நிலையான தன்று; அழிந்து போகக்கூடியது. ஆகையால், உலகப்பற்றை விட்டு விலகவேண்டும். எந்த ஆசையும் இல்லாமல் இறைவன் ஒருவனையே கருத்தில் கொண்டு வாழவேண்டும். நமது வாழ்வும் நிலையற்றது. என்றைக்கு நாம் சாவோம் என்பதைப்பற்றி நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆதலால், ஆசையின்றி வாழ்வதுதான் அறிவுடைமை என்று வேதாந்தம் பேசி வாழ்வோர் பலர் உண்டு. இவர்களும் சாவு என்றால் அஞ்சித்தான் நடுங்குவார்கள். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று தத்துவம் பேசுகின்ற வீரர்களும் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள முயலாமல் இருக்கமாட்டார்கள். உலகமே நிலையற்றது என்று பேசுகின்ற தத்துவ ஞானிகள் கூட உயிர் விட அஞ்சுவார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? இவ்வுலக இன்பத்தை வெறுத்து மறுவுலக இன்பத்தை வேண்டுகின்ற- விரும்புகின்ற - பக்தகோடிகள் பலரும் சாவைக் கண்டு அஞ்சினார்கன். தாங்கள் வழிபாடு செய்த தெய்வங்களிடம் தங்களைச் சாகாமல் காப்பாற்ற வேண்டும் - எமனுடைய கையில் அகப்படாமல் தப்புவிக்க வேண்டும் - என்று வேண்டிக் கொண்டிருக்கின்றார்கள்; பாடல்களின் மூலம் மனம் உருகிப் பணிந்திருக்கின்றனர். முருகன் அருள் பெற்ற முனிவர் என்று போற்றப்படும் புலவர் அருணகிரிநாதர். அவர் பாடிய கந்தர் அலங்காரத்திலே, தான் சாவதற்கு முன் - தனது உடல் அழிவதற்கு முன்- முருகன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றார். அவர் வேண்டுகோளைக் காண்போம். திருச்செங்கோடு என்னும் திருமலை தெய்வத் தன்மை பொருந்தியது. சிறந்த சோதி வடிவான நீ வாழ்வதனால்தான் அந்தத் திருச்செங்கோட்டுக்குத் தெய்வத் தன்மை பிறந்தது. அது தெய்வத் தன்மையுடன் விளங்குகிறது என்பதில் ஐயம் இல்லை. இந்த மலையில் வாழ்கின்ற கூர்மை பொருந்தி வேற்படையுடைய தேவனே! நான் உன்னை ஒருபொழுதும் மறக்க மாட்டேன். உன்னுடைய கையில் உள்ள கூர்மையான வேற்படையால் எனது பகைவர்களையெல்லாம் அழித்து என்னைத் துன்புறாமல் காப்பாய் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. ஆதலால், உன்னையே நம்பி நிற்கின்றேன். எனது உடம்பாகிய வீடு ஐம்புலன்கள் வாழ்வதற்காக அமைக்கப்பட்டது. அதற்காக இரண்டு கால்களை நட்டு, இரண்டு கைகளையும் அமைத்துக் கட்டப்பட்ட வீடு. இந்த வீடு நிலையற்றது. எப்பொழுது அழியும் என்பதை நான் அறியேன். இன்றோ, நாளையோ அல்லது மற்றொரு நாளிலோ இந்த வீடு இடிந்து விழுவது நிச்சயம். ஆதலால், இப்பொழுதே நீ உனது கூர்மையான வேற்படை யுடன் வந்து என்னைக் காத்தருள வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் என்று பாடுகிறார் அருணகிரிநாதர். தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே! கைவைத்த வேல்படை வானவனே! மறவேன் உனைநான்; ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி, அதில் இரண்டு கைவைத்த வீடு குலையும்முன் னேவந்து காத்தருளே. இப்பாடலிலே, அருணகிரிநாதர் தான் சாவதற்கு முன் தன்னை அணுகிச் சாவாமல் காக்க வேண்டும் என்று முருகனை வேண்டுவதைக் காணலாம். இவ்வாறு முருகனை வேண்டிக்கொண்ட அருணகிரி நாதர், தனக்கு முருகன் அருள் கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கை கொண்டார். தனக்கு எவ்வித ஆபத்து வந்தாலும் முருகன் முன்வந்து காப்பான் என்னும் துணிவு கொண்டார். தனக்கு முருகப் பெருமானுடைய பூரண அருள் உண்டு என்பதிலே அவருக்கு உறுதி பிறந்து விட்டது. அதனால், தான் சாவாமல் வாழ முடியும்; தன்னிடம் எமன் அணுக முடியாது; அப்படி அணுகினாலும் அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நெஞ்சுரம் பெற்றார். ஆதலால், உயிர்களைக் கவரும் காலனை நோக்கிச் சூள் உரைக்கத் தொடங்கிவிட்டார். இச் செய்தியையும் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றிலே காணலாம். ஏ, குருடனே! அந்தகன் என்னும் பெயருள்ள எமனே! நான் இப்பொழுது செந்தூர் வடிவேலனுக்குத் தொண்டன் ஆகிவிட்டேன். என்னிடம் இப்பொழுது உண்மை ஞானம் பிறந்துவிட்டது. அந்த உண்மை ஞானம் ஒளி பொருந்திய வாளாக என்னிடம் விளங்குகின்றது. இதோ பார்! உண்மை ஞானச் சுடர் வாள் என்னிடம் விளங்குகின்றது அந்தகனே! கொஞ்சம் என் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து பார்! உனக்குத் தைரியம் இருந்தால் கொஞ்சம் நெருங்கி வா, பார்க்கலாம்! நீ தைரியத்துடன் என் கைக்கு எட்டும் தூரத்தில், என்முன் வந்தால் என்ன செய்வேன் தெரியுமா? உன் கையில் உள்ள தண்டா யுதமும் முத்தலைச் சூலமும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. அவை உன் கையிலிருந்து விழும்படி உன்னை எனது ஞானச் சுடர் வாளால் தாக்குவேன் உன்னை- உன் உயிரை- எப்படிக் காப்பாற்றுவது என்று திகைத்துத் திண்டாடும்படி வெட்டிக் கீழே விழும்படி வீழ்த்துவேன்! என்று பாடியிருக் கின்றார். தண்டா யுதமும் திரிசூல மும்விழத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்; செந்தில் வேலனுக்குத் தொண்டா கியஎன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடா! அந்த கா! வந்து பார், சற்று என் கைக்கு எட்டவே! என்பதுதான் மேலேகாட்டிய பொருள் அமைந்த பாடல். இச்செய்யுளிலே அவிரோத ஞானச் சுடர் வடிவாள் என்று அமைந்திருக்கும் தொடர்தான் சிறந்த தொடர். ஆழ்ந்த கருத்தமைந்த தொடர். அவிரோத ஞானம் என்பது விபரீத உணர்வு ஒழிந்த அறிவு. அதாவது உண்மை அறிவாகும். அந்த உண்மை அறிவு வாளுக்கு ஒப்பிடப்பட்டது. உண்மை அறிவாகிய ஒளி பொருந்திய கூர்மையானவாள் என்பதே அவிரோத ஞானச் சுடர் வடிவாள் என்பதன் பொருள். இதனால் உண்மை ஞானம் பெற்றவர்கள் சாவுக்கு அஞ்ச மாட்டார்கள். காலனை எதிர்த்து நிற்பார்கள் என்பதைக் காணலாம். அருணகிரிநாதர் உண்மையறிவு பெற்றவர். அதில் அவர் வைத்த நம்பிக்கை காரணமாக எமனுக்கும் அஞ்சவில்லை. அவனை அறைகூலி அழைக்கின்றார். போர் செய்ய வருமாறு வீர முழக்கம் செய்கின்றார். இதுதான் சிறந்த ஞானப் புலமை யாகும். தனக்குத்தானே உபதேசம் தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்பது முறை அன்று. முதலில் தன்னைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தகாத வழிகளிலே நடந்து தனக்கு இன்பந் தேடுவது- சுகந் தேடுவது- அடாத செயல். எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி, நீதி தவறி- முறை தவறி- ஒழுங்கு தவறி- நடக்காதவர்களே உத்தமர்கள். தாம் தவறான வழியிலே நடப்பது; நியாய அநியாயம் பாராமல் தாம் இன்புறுவதற்கான சாதனங்களைத் தேடுவது; பிறர் இன்ப துன்பங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அவர்கள் செல்வத்தை, உழைப்பைக் கொள்ளை கொள்ளுவது; தம்மை எதிர்த்துச் சமாளிக்க வல்லமையற்றவர்களின் மனம் நோகும்படி அவர்களுக்குத் தீங்கிழைப்பது- சிலர் செய்கை. இத்தகைய மக்களை, யாரும் மதிக்கமாட்டார்கள். இவர்கள் செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்களாயிருக்கலாம். இருந்தாலும் இவர்களை மனிதத் தன்மையுள்ளவர்களாக அறிவுள்ளவர்கள் எண்ண மாட்டார்கள். இவர்கள் குறைகளை எடுத்துக்காட்ட அஞ்சினாலும் பொது ஜனங்கள் இவர்களைப் புறம் பேசாமல் இருக்கமாட்டார்கள். தாம் குற்றவாளிகளாயிருப்பவர்கள் பிறர் குறைகளை எடுத்துக்காட்ட முடியாது. தாம் ஒழுக்கமற்றவராயிருக்கும் போது, பிறரை ஒழுக்கமுடையவராயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஒழுங்கீனத்தையே வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்டவர்கள் பிறரைப் பார்த்து, ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒருவன் பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவன். அவன் மற்றொருவனைப் பார்த்து, யாரையும் ஏமாற்றாதே என்று சொல்லுகின்றான். உடனே அவன் என்ன சொல்லுவான்? நீ என்ன யோக்கியனோ? எனக்கு உபதேசம் செய்ய வந்துவிட்டாய்! என்றுதான் பளிச்சென்று சொல்லி விடுவான். விபசாரி ஒருத்தி, அவள் மற்றொருத்தியைப் பார்த்து, வேசி என்று வைதால், அவள் கேட்டுக்கொண்டிருப்பாளா? நீ என்ன பத்தினியோ! என்றுதான் கேட்பாள். இவ்வாறு நடைபெறுவது உலக இயற்கை. ஒவ்வொருவரும் தம்மை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்; தாம் நல்ல வழியிலே ஒழுகவேண்டும்; தாம் அப்பழுக் கின்றி வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர். அறிவுள்ளவர்கள்- ஒழுக்கநெறி தவறாமல் வாழவேண்டும் என்று விரும்புகின்றவர்கள்- பரிசுத்தமாக வாழத்தான் முயல்வார்கள். நம்மால் இன்றும் போற்றப்படும் பெரியோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். ஒழுக்க நெறியிலே உறுதியாக நடக்க விரும்புவோர் முதலில் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுவார்கள். உள்ளத்திலே தீய எண்ணங்கள் புகுவதற்கு இடங் கொடுக்க மாட்டார்கள். இரண்டாவது பிறருக்குக் கெடுதி தரும் சொற் களை- பிறர் மனம் புண்படும் படியான மொழிகளைப் பேச மாட்டார்கள். நல்ல சொற்களையே பேசுவார்கள். உடம்பையும் கெட்ட காரியங்கள் செய்வதற்கு விட மாட்டார்கள்; தங்கள் உடல் உழைப்பை நல்ல காரியங்களிலே ஈடுபடுத்துவார்கள். இவ்வாறு மனம், மொழி, மெய் மூன்றையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுவதே தம்மைத் தூயவராக வைத்துக் கொள்ளுவதாகும். இவ்வுண்மையை அருணகிரிநாதர் எடுத்துக் காட்டுகிறார். கெடுவாய் மனமே! கதிகேள்! கரவாது இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்; சுடுவாய், நெடுவே தனை, தூள் படவே; விடுவாய்! விடுவாய்! வினையா வையுமே. மனமே! நீ மெய், வாய், கண், மூக்கு, காது என்னும் ஐம்பொறிகளின் வசமாகிக் கெட்டுப் போகின்றாய்! நீ உய்யும் படி உனக்கு ஒரு நல்ல வழியைச் சொல்லுகின்றேன் கேட்பாயாக! வறுமையால் வருந்தி உன்னிடம் உதவி தேடி வந்தவர்க்கு உன்னிடம் உள்ளதை ஒளிக்காமல் இன்சொல்லால் மகிழ்வித்துக் கொடுத்து உதவுவாயாக! எப்பொழுதும், வேறு சிந்தனை யில்லாமல், கூர்மையான வேலாயுதத்தையுடைய முருகனுடைய பாதங்களையே நினைத்து வாழ்த்திக் கொண்டிருப்பாயாக! பெரிய துன்பங்களை எல்லாம் தூளாக அழியும்படி, முருகன் திருவடித் தியானமாகிய நினைப்பால் சுட்டெரிப்பாயாக! தீமைக்குக் காரணமாகிய செயல்களையெல்லாம் விட்டொழிப் பாயாக! காலந் தாழ்த்தாமல் விட்டொழிப்பாயாக! இது கந்தர் அனுபூதிப் பாட்டு. தம்முடைய மனம், மொழி, மெய்கள் சுத்தமாக இருக்கும்படி, தமக்குத் தாமே உபதேசம் செய்துகொண்ட பாட்டு. அருணகிரிநாதர், தமக்குத் தாமே உபதேசம் செய்து கொள்ளும் மற்றொரு பாடலும் உண்டு. கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனமே! ஒழிவாய்! ஒழிவாய்! மெய், வாய், விழி, நாசியொடும், செவியாம் ஐவாம் வழிசெல் லும் அவா வினையே. மனமே! ஒளி வீசும் வேலாயுதத்தைத் திருக் கரத்திலே கொண்டிருப்பவன் முருகப் பெருமான். அவனுடைய பாதத்தையே சரணமாக அடைந்து பிழைப்பாயாக! மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியே நடக்க விரும்புகின்ற ஆசையை ஒழித்துவிடு! அவ்வாசைக்குச் சிறிதும் இடங் கொடுக்காமல் இப்பொழுதே ஒழித்து விடுவாயாக! இதுவும் கந்தரனுபூதிப் பாட்டு, ஐம்பொறிகளின் தன்மைகனான புணர்ச்சி, சுவை, ஒளி, மணம் ஓசை என்னும் புலனுணர்வுகளே பேராசைகளுக்கெல்லாம் காரணம். ஆதலால், அப்புலன்களின் வழியே போகாமல் மனத்தை அடக்குவதே அறிவுடைமை. முருகன் பாத தியானத்தால் உள்ளத்தை அடக்கி யாள முடியும். இவ்வுண்மையை இப்பாடலின் மூலம் கூறினார். மற்றொரு செய்யுளிலும், மக்களுடைய துன்பங்களுக் கெல்லாம் காரணம் மனமேதான் என்பதை வலியுறுத்துகிறார் அருணகிரிநாதர். உள்ளத்தை ஆசைப் படுகுழியிலே விழாமல் தடுக்க வேண்டும என்று பாடுகிறார். பேரா சைஎனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா முதுசூர் பட, வேல் எறியும் சூரா! சுரலோ கதுரந் தரனே! வீரனே! பழமையான சூரபதுமன் அழியும்படி வேற் படையை வீசிய சூரனே! தேவலோகம் அசுரர்களால் அழியாத படி அதைப் பாதுகாத்தவனே! என் மனம், பேராசை என்னும் பெருநோயினால் கட்டப்பட்டு விட்டதால், நான் அடையும் துன்பத்துக்கு அளவில்லை. செய்வது இன்னது, செய்யத்தகாதது இன்னது என்று பகுத்தறியும் அறிவின்றிக் கலங்குகின்றேன். உன்னைப் பணியும் நான் இவ்வாறு கலங்குவது தகுமோ? இதுவும் கந்தரனுபூதிப் பாட்டு. உள்ளத்தில் எழும் பேராசையே தீவினைகளுக்குக் காரணம் என்று உரைத்தது இச்செய்யுள். மேலே எடுத்துக்காட்டிய மூன்று செய்யுட்களும், அருண கிரிநாதர் தமக்குத் தாமே உபதேசம் செய்து கொண்டவை. இதுதான் பெரியோர் இயல்பு. இவ்வுலகிலே உத்தமமான நல்ல வாழ்வில் வாழ விரும்புவோர், முதலில் தம்மைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளத்தான் முயல்வார்கள். தாம் குற்றமற்ற வர்களாய் வாழ்கின்றவர்களே உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள். இவ்வுண்மையையே அருணகிரியாரின் கந்தரனுபூதிச் செய்யுட்கள் எடுத்துக்காட்டின. வறுமையின் கொடுமை செல்வமில்லாமல் - வாழ்வதற்குப் போதுமான சாதனங்கள் இல்லாமல்- துன்பப்படுவதும் வறுமைதான். ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன; வாழ்க்கையைத் தட்டுத் தடங்கலின்றி இன்பமாக ஓட்டுவதற்கான சாதனங்கள் எல்லாம் இருக்கின்றன; இருந்தும் சமாதானத்துடன் வாழ முடியாமல் சீரழிகின்றனர்; இன்பத்துடன்- மகிழ்ச்சியுடன்- வாழத் தெரியாமல் அல்லற்படு கின்றனர். வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்தக் கூடிய அறிவும் ஆற்றலும் இவர்களிடம் இல்லை. இந்த அறிவு வறுமைதான் எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் இவர்கள் தொல்லைப் படுவதற்குக் காரணம். ஆகவே, செல்வம் இன்மையும் வறுமைதான்; அறிவின் மையும் வறுமைதான். ஏழை என்ற தமிழ்ச் சொல்லே இவ்வுண் மையை விளக்கும். ஏழை என்ற சொல்லுக்கு வறியவன் என்ற பொருளும் உண்டு. அறிவில்லாதவன் என்ற பொருளும் உண்டு. செல்வமற்றவர்களும் வாழ்விலே பல துன்பங்களுக்கும் ஆளா வார்கள். அறிவற்றவர்களும் வாழ்விலே பல வேதனைகளுக்கு ஆளாகித்தான் தீருவார்கள். இவ்வுண்மைகளை எவரும் மறுக்க முடியாது. வாழ்வதற்கு வசதியற்ற வறுமையின் கொடுமையை அதனால் உண்டாகும் துன்பங்களை- அருணகிரிநாதர் விளக்கமாகப் பாடியிருக்கிறார். வடிவும், தனமும், மனமும், குணமும் குடியும், குலமும், குடிபோ கியவா! அடிஅந் தம்இலா அயில்வேல் அரசே! மிடிஎன்று ஒருபாவி வெளிப் படினே. இதுவே அந்த அருமைச் செய்யுள். இது கந்தரனுபூதியில் காணும் செய்யுள். இதன் பொருளைக் காண்போம். பிறப்பும் இறப்பும் இல்லாத முருகனே! கூர்மையான வேற்படையைக் கொண்ட அரசே! வறுமை என்ற ஒரு பாவி என்னிடம் தோன்றியதனால் நான் படும் தொல்லைகளுக்கு- துயரங்களுக்கு - அளவேயில்லை. என்னுடைய வடிவமே- உருவமே- அழகே - சிதைந்து விட்டது. என்னிடம் கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருந்த செல்வமும் போய்விட்டது. என் மனமும் கெட்டுப் போய் விட்டது. என் மனத்திலிருந்த இரக்கம் முதலிய நல்ல குணங்களும் ஒழிந்துவிட்டன. நான் பிறந்த குடிப் பெருமையும் அழிந்துவிட்டது. எனது குடும்பப் பரம்பரைப் பெருமையையும் யாரும் மதிப்பதில்லை. அதுவும் போய் விட்டது. வறுமையென்னும் பாவியால் இவைகள் எல்லாம் என்னை விட்டுக் குடிபெயர்ந்து விட்டனவே! இது என்ன வியப்பு! என்பதே மேலே காட்டிய செய்யுளின் பொருள். அருணகிரிநாதர், வறுமையால்தான் பட்ட துன்பத்தை முருகனிடம் இவ்வாறு முறையிட்டார். வறுமையையும், அதனால் அடைந்த துன்பத்தையும் தன்மேல் ஏற்றிக் கூறினார். இதன் மூலம் பொதுமக்களுக்கு வறுமையின் கொடுமையை விளக்கினார். வறுமையின்றி வாழ முயற்சியுங்கள் என்ற அறிவுரையையும் இச் செய்யுளால் மறைமுகமாகக் கூறினார். மற்றொரு திருச்செய்யுள் அறிவு வறுமையின் செயலை எடுத்துக் காட்டுகின்றது. அதுவும் கந்தரனுபூதியில் காணும் செய்யுள்தான். கரவா கியகல் வியுளார் கடைசென்று இரவா வகைமெய்ப் பொருள்ஈ குவையோ! குரவா! குமரா! குலிசா யுத! குஞ் சரவா! சிவயோ கதயா பரனே! இது அறிவின்மை- ஞானம் இன்மை- என்னும் வறுமை யைப் போக்கும்படி இரந்து பாடிய பாடல். இதன் பொருளைக் காண்போம். குருநாதனே! என்றும் அழியாத இளமையுடன் இருப்ப வனே! வச்சிராயுதத்தை உடையவனே! பிணிமுகம் என்னும் யானையை ஊர்தியாகக் கொண்டவனே! சிவ யோகமுள்ளவனே! இரக்கத்திற்கு வாழ்விடமாக இருப்பவனே! என்னுடைய ஞான மின்மை என்னும் வறுமையை ஒழித்தருள வேண்டுகின்றேன். உண்மைப் பொருளைச் சொல்லாமல் ஒளிக்கின்ற வஞ்சகக் கல்வியாளர்கள் பலர் உண்டு. அவர்களின் வீட்டு வாசலிலே நான் சென்று, அவர்களிடம், எனக்கு உண்மைப் பொருளை உபதேசியுங்கள் என்று இரவாதபடி- கெஞ்சாதபடி- எனக்கு அருள் புரிய வேண்டும்; உண்மை ஞானத்தை உபதேசித்தருள வேண்டும்; எனக்கு என்றுதான் உபதேசம் செய்தருள்வாயோ? இதுவே மேலே காட்டிய செய்யுளின் பொருள். தனக்கு உண்மையான அறிவைத் தந்தருளும்படி இப் பாடலின் மூலம் முருகனை வேண்டினார் அருணகிரிநாதர். உண்மைகளைக் கண்டறிந்து அதன்வழி ஒழுகும் ஞானமாகிய செல்வத்தால் சாந்தியுண்டு; சமாதானம் உண்டு; உள்ளத்துக்கு ஆறுதல் உண்டு. ஆதலால்தான் ஞானத்தை அருளும்படி முருகனை வேண்டினார். மற்றொரு செய்யுளிலே மனவேதனைக்குக் காரணமாயி ருப்பவை எவை எவை உண்டோ, அவைகளையெல்லாம் தீர்த்தருள வேண்டும் என்று முறையிடுகின்றார். எந்தா யும்எனக்கு அருள்தந் தையும்நீ! சிந்தா குலம்ஆ னவைதீர்த்து எனையாள்! கந்தா! கதிர்வேலவனே! உமையாள்! மைந்தா! குமரா! மறைநா யகனே! இதுதான் அச் செய்யுள். இதுவும் கந்தரனுபூதிச் செய்யுள் தான். இச்செய்யுளின் பொருள் கீழ்வருவது:- கந்தனே! ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே! உமாதேவியின் மைந்தனே! என்றும் மாறாத இளமையுடன் இருப்பவனே! நான்கு வேதங்களுக்கும் தலைவனாயிருப்பவனே! எனக்குத் தந்தையும் நீதான்; என்னிடம் அன்பு காட்டும் தாயும் நீயேதான். மைந்தன் கவலையை- துன்பத்தைத் தீர்ப்பது தந்தை தாயார் கடமை அல்லவா? பொறுப்பல்லவா? மைந்தன் முதலில் தனது துயரத்தைத் தந்தை தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல்-முறையிடாமல் - வேறு யாரிடந்தான் முறையிடுவான்? ஆதலால் நான் உன்னிடம் முறையிடுகின்றேன். என் மனத் துயருக்குக் காரணமானவைகளையெல்லாம் தீர்த்தருள்வாய்! என் மனத் துயருக்குக் காரணம் பொருள் வறுமையானாலும் சரி, அறிவு வறுமையானாலும் சரி, வேறு எதுவானாலும் சரி- அவைகளை நீக்கி எனக்கு அருள் புரிவாயாக என்பதே மேலே காட்டிய பாடலின் பொருள். இப்பாடல் மூலம், தனது மனத்துயருக்குக் காரணமான செல்வ வறுமை, அறிவு வறுமை இரண்டையும் தீர்க்கும்படி வேண்டினார். மேலேகாட்டிய மூன்று பாடல்களும், செல்வத்துடன் வாழவேண்டும், அறிவுடன் வாழவேண்டும் என்ற உண்மையை உணர்த்தின. உள்ளத்திலே உறுதியுள்ளவர்கள் இவ்வறுமைத் துன்பங்கள் தம்மிடம் அணுகாமல் செய்துகொள்ள முடியும். முருகனை வேண்டுவது உள்ளத்தில் உறுதி நிலைப்பதற்கு ஒரு கருவியாகும். உண்மை வாழ்வு இவ்வுலக வாழ்வு நிலையற்றது, அழியக் கூடியது. நாம் பார்க்கும் பொருள்கள் எல்லாம் நிலைத்திருப்பவை அல்ல. கண்ணால் காணும் பொருள்கள் அத்தனையும் அழிந்து போய் விடக் கூடியவைகள். ஆதலால் ஒன்றையும் உண்மையென்று நினைக்காதே, நம்பாதே. எல்லாவற்றையும் பொய்யென்று தெரிந்துகொள், நம்பு. இவ்வாறு உபதேசம் செய்வோர் உண்டு. இந்த உபதேசம் முழுவதையும் உண்மையென்று கொள்ளுவதற்கில்லை. நாம் பார்க்கும் இந்த உலகம் பொய்யல்ல; இந்த உலகில் உள்ள காடுகள் பொய்யல்ல; மலைகள் பொய்யல்ல; ஆறுகள், நீர்நிலைகள் பொய்யல்ல; பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோக வகைகள் பொய்யல்ல. இவைகள் எல்லாம் கண்ணெதிரே காணப்படும் உண்மையான பொருள்கள்தாம். இவ்வுலகிலே நடமாடும் விலங்குகள் பொய்யல்ல. வானத்தில் பறந்து திரியும் பறவையினங்கள் பொய்யல்ல; நாளுக்குநாள் பல அற்புதங்களைக் கண்டுபிடித்துச் செய்துவரும் மக்கள் பொய்யல்ல; அவர்கள் செய்யும் வேலைகளையும், அவைகளால் உண்டாகும் பலன்களையும் கேட்கின்றோம், பார்க்கின்றோம், அனுபவிக்கின்றோம். இவைகளைப் பொய் யென்று சொன்னால் யார்தான் ஒப்புக்கொள்ள முடியும்? நம்ப முடியும்? நாம் வாழ்வது பொய்யல்ல. வாழ்விலே இன்ப துன்பங்களை நுகர்வது பொய்யல்ல. அப்படியிருந்தும் அறிஞர்கள், ஏன் இவ்வுலகைப் பொய்யென்று சொன்னார்கள்? இவ்வுலக வாழ்க்கை நிலையற்றவை, பொய்யானவை, மாயை என்று ஏன் சொன்னார்கள்? ஆன்றோர்கள், அறிவுள்ளவர்கள், ஆராய்ச்சி யுள்ளவர்கள், ஞானிகள் என்பவர்கள் எல்லாம் இப்படிச் சொல்லியிருப்பதற்குக் காரணம் என்ன? இதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் காணும் பொருள்கள் அனைத்தும் நிலைத்திருப்பவை அல்ல. இன்றிருப்பனவெல்லாம் என்றோ ஒரு நாளில் அழிந்து போகக்கூடியனதாம். எத்தனையோ பொருள்கள் அழிந்து போவதைப் பார்க்கின்றோம். மக்கள் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். விலங்குகள் பறவைகள் எல்லாம் பிறக்கின்றன, இறக்கின்றன. மலை கடலாகவும், கடல் மலையாகவும், நாடு காடாகவும், காடு நாடாகவும், நிலம் கடலாகவும், கடல் நிலமாகவும் மாறியிருக் கின்றன. இவைகள் சரித்திரங் கண்ட உண்மை. இந்த உண்மையை வைத்துக்கொண்டுதான் இவைகள் மாயை- பொய்- என்று ஆன்றோர்கள் கூறினர். மக்களைத் திருத்துவதற்கே இப்படிக் கூறினர். இவ்வுலக வாழ்வு அழியாதது, உலக இன்பம் அழியாதது, நாம் அடையும் சுகம் என்றும் நிலைத்து நிற்கும் என்ற எண்ணம் மக்களிடம் வேரொடிவிட்டால் அவர்கள் தன்னலம் பிடித்தவர் களாகி விடுவார்கள். பரோபகார சிந்தையே அவர்களிடம் பிறக்காது. எல்லாம் எமக்கே என்ற பேராசையுடனேயே எல்லாக்காரியங்களையும் செய்வார்கள். எல்லா மக்களும் இந்த நினைப்புடன் நடக்கத் தொடங்கிவிட்டால் மக்களிடம் இன்றுள்ள தன்மையே மாறிவிடும். ஒருவர்க்கொருவர் உதவி செய்வது- துன்புறுவோர்க்குத் துணைசெய்து அவர்கள் தொல்லையைத் தணிப்பது- பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் நேர்மையான நெறியிலே வாழ்வது- என்ற மனிதத்தன்மையே மக்களிடமிருந்து மறைந்துவிடும். மக்களிடம் உள்ள மனிதத்தன்மை போய்விட்டால் மனித சமுதாய வாழ்வே சீர்குலைந்துவிடும். மனித வாழ்வுக்கும், மிருக வாழ்வுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லாமல் போய்விடும். மனிதனை மனிதன் அடித்துத் தின்னும் காட்டு மிராண்டிகளாகத் தான் மனிதர்கள் வாழ்வார்கள். இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே உலக வாழ்வின் நிலையற்ற தன்மையை முன்னோர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். உலக இன்பம்- வாழ்வு- நிலையற்றது என்பதை உணர்ந்தால் தான் மக்கள் நேர்மையுடன் வாழ்வார்கள்; பேராசையின்றி வாழ்வார்கள்; பிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ்வார்கள். இக்கருத்துடன்தான் உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் ஞானநூல்கள்- தத்துவ சாத்திரங்கள்- எல்லாம் பிறந்தன. இவ்வுண்மையை அருணகிரிநாதர் நன்றாக உணர்ந்தவர். மெய்யே எனவெவ் வினைவாழ் வைஉகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ? கையோ, அறிலோ, கழலோ முழுதும் செய்யோம்! மயில்ஏ றியசே வகனே. இவ்வாறு பாடியுள்ளார் அருணகிரிநாதர். இது கந்தரனுபூதிப் பாட்டு. கைகளும், வேலும், பாதங்களும், உடல் முழுவதும் செந்நிறமாயிருப்பவனே! மயிலின்மீது ஏறிப் பவனி வரும் வீரனே! கொடுமையான செயல்களைச் செய்வதற்கு இடமான இவ்வுலக வாழ்வை என்றும் நிலைத்திருக்கும் உண்மையானது என்று நான் நம்புவதா? இந்நம்பிக்கை காரணமாக ஐயோ! நான் வீணாக அலைந்து திரிவதா? இப்படித் திரிவது மனிதப் பிறப்பெடுத்தற்குத் தகுதியாகுமா? என்பதே மேலே காட்டிய பாடலின் பொருள். இவ்வுலக வாழ்வை மெய்யென்று நம்பினால்- அழியாத இன்ப வாழ்வு என்று நினைத்தால்- நமது உள்ளம் நல்ல வழியில் நிற்காது. எத்தகைய கொடுமைகளைச் செய்தாவது இன்பத்தை அடைவதற்கான சாதனங்களைச் சேர்க்கத்தான் தூண்டும். அதனால் நாம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைவோம். இவ்வுண்மையை உணர்த்திற்று இச்செய்யுள். இதோ மற்றொரு பாடல். பாழ்வாழ் வெனும்இப் படுமா யையிலே வீழ்வாய்; என, என் னைவிதித் தனையே. தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில்வா கனனே! இதுவும் கந்தரனுபூதிச் செய்யுள். இதிலும் உலக வாழ்வின் நிலையாமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார். மயில் வாகனத்தையுடைய முருகப் பெருமானே! அழிந்து போகக்கூடிய வாழ்க்கை என்னும் இந்தத் துன்பம் நிறைந்த பொய்வாழ்விலே என்னை வீழ்வாய் என்று கட்டளை இட்டாயே! உன் மனம் புண்படும்படி நான் தாழ்வான காரியங்களைச் செய்தது உண்டோ? அப்படி ஒன்றும் செய்ய வில்லை. ஆதலால் என்னை உய்வித்தால்தான் இனி நீ வாழ்வாய்! இன்றேல் வாழமாட்டாய்! இது நிந்திப்பதுபோலப் பாடிய வாழ்த்துப் பாடல். இவ்வுலக வாழ்வையே முழுதும் நம்பி, அதில் கிடந்து துன்ப மடையாத வாழ்வை அருளவேண்டும் என்று முருகனைத் துதிக்கும் பாடலாகும். இறைவனை நம்புகின்றவர்கள் தீமை செய்வதற்கு அஞ்சு வார்கள்; இறைவன் தனது அன்பர்களுக்கு அருள் செய்ததாக வழங்கும் திருவிளையாடல்களை நினைப்பவர்கள் பிறரிடம் கருணை காட்டுவார்கள்; கொடியோர்களை இறைவன் தண்டித்தாக வழங்கும் வரலாறுகளை எண்ணுகின்றவர்கள் கொடுமை செய்வதற்குத் துணியமாட்டார்கள். இவர்கள் உலக வாழ்வின் நிலையின்மையையும் மறக்க மாட்டார்கள். ஆதலால் தான் தெய்வ சிந்தை வேண்டும்- தெய்வத்தை மறவாமல் வாழ வேண்டும்- என்று முன்னோர்கள் மொழிந்தனர்; பாடினர்; வலியுறுத்தினர். இவ்வுண்மையை அருணகிரிநாதரும் வலியுறுத்தி யிருக்கின்றார். கலை கற்கினும்என்? கவி பாடினும்என்? நிலை கற்கினும்என்? நினைவந்து உணராக் கொலை கற்றிடுவோர் கொடு வஞ்சகமாம் மலை கட்டறஎன்று அருள்வாய் குகனே! இப்பாடலில் மேலேகூறிய உண்மையைக் காணலாம். இதுவும் கந்தரனுபூதிப் பாடல்தான். குகப் பெருமானே! உன்னை வந்து அடுத்து, உன் பாதத்தைப் பணிந்து வாழாதவர்கள் நன்மை தீமைகளை அறிய மாட்டார்கள். அவர்கள் பிறரைத் துன்புறுத்தும் கொலைச் செயல்களைத்தான் கற்பவர்கள் ஆவார்கள். உன்னை உள்ளத்தில் எண்ணிப் பணியாத இவர்கள் பல வகையான சாத்திரங்களையும் கற்றால்தான் என்ன பயன்? பலவகைப்பட்ட பாடல்களைப் பாடினாலுந்தான் என்ன பயன்? உடலை உறுதி செய்வதற்கு, உள்ளத்தை ஒரு நிலையில் நிறுத்தும் யோகநிலையைக் கற்றால் தான் என்னபயன்? ஆதலால், கொடிய வஞ்சனைகளைச் செய்வதற்குக் காரணமான- இவ்வுலக வாழ்வு மெய்யென்று நம்பும் அறியாமையாகிய பிணிப்பு- தனை- பந்தம்- அறுந்து தொலையும்படி அருள் புரிவாய்! என்றுதான் எனக்கு இவ் வருளைப் புரிவாயோ! இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். மேலே எடுத்துக்காட்டிய கந்தரனுபூதிப் பாடல்கள் மூன்றும், உலக வாழ்வின் உண்மையை உணர்த்தின. உலக வாழ்வின் இயல்பை அறிந்தால்தான மக்கள் நல்வழியிலே நடப்பார்கள். மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுவார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பன. அருணகிரியாரின் அருட் பாடல்கள் இத்தகைய இயற்கை உண்மைகள் பலவற்றை எடுத்து ரைக்கின்றன. அவர் பாடல்களைப் படிப்போர் உண்மைகள் பலவற்றை உணரலாம். குமரகுருபர சுவாமிகள் குமரகுருபர சுவாமிகள் கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்தவர். இலக்கண இலக்கியங்களிலே தேர்ச்சி பெற்றவர். இவர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாக இவரைப் பற்றிய வரலாறு வழங்குகின்றது. இவர் பிறந்து ஐந்து வயது வரையிலும் ஊமையாகவே இருந்தார். திருச்செந்தூர் முருகன் அருளால் பேசத் தொடங் கினார். அவரால் தமிழ் அறிவு பெற்று, அவர் மேல் திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா என்னும் நூலைப் பாடினார். இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்தைப் பாடினார். அதை மதுரையிலே, திருமலை நாய்க்கர் முன்னிலையிலே, மீனாட்சி அம்மன் சந்நிதியிலே அரங்கேற்றினார். அப்போது மீனாட்சி அம்மை, கோயில் அர்ச்சகரின் புதல்வி உருவில் வந்து திருமலை நாயக்கர் மடியின் மீது அமர்ந்து பிள்ளைத் தமிழைக் கேட்டார். இவர் காசிக்குச் சென்றார். கலைமகள் அருள் வேண்டி சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடினார். கலைமகள் அருளால் இந்துதானி மொழியை அறிந்தார். காசியை ஆண்ட முலிம் அரசரிடம் சென்றார். அவர் இவரை மதிக்கவில்லை. நிற்கவைத்துப் பேசினார். அடுத்த நாள் இவர் சிம்மத்தின் மேல் அரசவைக்குச் சென்று தமது பெருமையை வெளிப்படுத்தினார். முலிம்கள் இவரைப் பல பரிசோதனைகள் செய்தனர். அவைகளில் எல்லாம் இவர் வெற்றி பெற்றார். இறுதியில் காசியை யாண்ட பாதுஷா இவரிடம் பெரு மதிப்புக் கொண்டான். இவ்வாறு இவரைப் பற்றி வழங்கும் கதைகள் பல. காசியிலே கேதார கட்டத்திலே சைவ மடம் ஒன்றைக் கட்டினார் முலிம் மன்னனே இம்மடம் கட்டுவதற்கு இடம் அளித்தான். அந்த மடத்திற்குக் குமாரசுவாமி மடம் என்று பெயர். கேதாரநாதர் கோயில் திருப்பணி இவரால் செய்யப் பட்டது. மதுரை நாயக்க மன்னர் இவருக்கு அளித்த பரிசுகளைக் கொண்டே இக்காரியங்களைச் செய்தார். அக்காலத்தில் தருமபுர மடத்திலே நான்காவது குருமூர்த்தியாகப் பட்டத்தில் இருந்தவர் மாசிலாமணி தேசிகர் என்பவர்; அவர் இலக்கிய இலக்கணங்களிலே வல்லவர்; சைவ சித்தாந்தத்திலும், வேதாகமங்களிலும் சிறந்த பயிற்சியுள்ளவர்; சிவானுபூதிச் செல்வர் அவரிடம் குமரகுருபரர் ஞான தீட்சை பெற்றார். குமரகுருபரரால் நிறுவப்பட்டது திருப்பனந்தாள் மடம் என்று கூறுகின்றனர். குமரகுருபரர் தமிழும் வடமொழியும் கற்றவர், மொழி வெறுப்பில்லாதவர், தமிழின்மேல் அளவிறந்த பற்றுள்ளவர். குமரகுருபரர் பெரிய காவியம் ஒன்றும் பாடவில்லை; புராணங்கூட ஒன்றையும் பாடவில்லை; அவர் பாடியிருப்பன அனைத்தும் சிற்றிலக்கியங்கள்தாம் அவருடைய பாடல்களிலே ஓசைநயம், பொருட் சிறப்பு, கற்பனைகள், இயற்கை நிகழ்ச்சிகள், நீதிகள் எல்லாம் அமைந்திருக்கின்றன. முருகனைப் பற்றிக் குமரகுருபரர் பாடிய நூல்கள் இரண்டு. அவை, திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா, வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்பவை. மதுரை மீனாட்சியம்மையைக் குறித்து மூன்று பிரபந்தங்கள் பாடியுள்ளார். அவை, மீனாட்சி அம்மைபிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், மீனாட்சி அம்மை இரட்டை மணி மாலை என்பன. மதுரைச் சொக்கநாதரைக் குறித்து மதுரைக் கலம்பகம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். திருவாரூர் தியாகேசரைப் பொருளாகக் கொண்டு திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலைப் பாடியிருக்கின்றார். சிதம்பரத்தைக் குறித்து, சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமி அம்மை இரட்டைமணி மாலை என்ற நூல்களைப் பாடியுள்ளார். தமது ஞான குருவான மாசிலாமணி தேசிகரைப் போற்றிப் புகழ்ந்து பண்டார மும்மணிக் கோவை என்னும் நூலைப் பாடினார். காசியிலே வாழ்ந்தபோது காசிக் கலம்பகம் என்னும் நூலைப் பாடினார். இது சிவபெருமான் பெருமையைக் கூறுவது. கலைமகளைப் போற்றி, சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடியிருக்கின்றார். நீதிநெறி விளக்கம் என்பது குமரகுருபரரால் இயற்றப் பட்ட நீதிநூல்; நூறு வெண்பாக்களைக் கொண்டது; அரிய நீதிகள் பலவற்றை உரைப்பது; இதனைத் திருக்குறளின் கருத்துச் செல்வம் என்று சொல்வார்கள். குமரகுருபரர் இயற்றியுள்ள பிரபந்தங்கள் பதினான்கு. அவற்றுள் நீதிநெறி விளக்கம் ஒன்றைத் தவிர மற்றவைகள் எல்லாம் பக்திச்சுவையை ஊட்டும் தோத்திரப் பாடல்கள். தமிழிலே, யாப்பிலக்கணத்திலே எத்தனை பாடல் வகைகள் உண்டோ, அத்தனை பாடல் வகைகளையும் பாடும் திறமை குமரகுருபரருக்கு உண்டு. இதனை அவர் இயற்றியுள்ள சிதம்பரச் செய்யுட் கோவையே உணர்த்தும். இந்நூல் செய்யுள் இலக்கணத்திற்கு இலக்கியமாகவே இயற்றப்பட்டதாகும். குமரகுருபரருடைய பாடல் சிறப்பையும், அவருடைய கற்பனைத் திறமையையும், அவருடைய நூல்களைப் படிப்போர் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். முருகனிடம் முறையீடு குமரகுருபரர் முதலில் பாடிய பிரபந்தம் கந்தர் கலிவெண்பா. இது திருச்செந்தூர் முருகனைப் போற்றிப் பாடிய நூல். 244 அடிகளைக் கொண்ட ஒரே செய்யுளால் ஆனது. இந்நூலில் முருகன் பெருமை, அவனது திருவிளையாடல்கள் எல்லாம் கூறப்படுகின்றன. முருகனுக்குப் பரத்துவம் கூறப்படுகின்றது. திருமுருகாற்றுப் படையைப் போல இந்நூலையும் நாள்தோறும் பாராயணம் பண்ணுவோர் உண்டு. இந்நூலைப் பாராயணம் பண்ணுவோர் கல்வியிலே தேர்ச்சி பெறுவார்கள் என்று நம்புகின்றனர். இந்நூலின் இறுதியிலே, குமரகுருபரர் முருகனிடம் கல்வியையும் அருளையும் வேண்டி முடிக்கிறார். அவ்வேண்டு கோளைப் படிக்கும்போது, மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்கின்றவன் சிறந்த மனிதன்? - என்ற முடிவைக் காணலாம். முருகப் பெருமானே! நீ எனக்கு, நான் பார்க்கும் இட மெல்லாம் நின்று காட்சியளிக்கவேண்டும். பச்சை நிறமுள்ள மயில் வாகனத்தின்மேல் வந்து காட்சி தரவேண்டும்; பன்னிரண்டு வலிய புயங்களுடன் தோன்றுக; பகைவரை அழித்து, அன்பர் களின் அச்சத்தைப் போக்கும் வேற்படையுடன் வருக; கச்சை அணிந்த இடை, சிறிய அடிகள், சிவந்த பன்னிரண்டு கைகள், கருணை காட்டும் பன்னிரண்டு விழிகள், அழகிய முகங்கள் ஆறு, கதிரொளி வீசும்படி அணிந்திருக்கின்ற ஆறு திருமுடிகள்- இவைகளுடன் காட்சி தரவேண்டும்; நான் பார்க்கின்ற எல்லாத் திசைகளிலும் வந்து நின்று காட்சி அளிக்க வேண்டும். இவ்வாறு உனது அலங்காரத் திருஉருவுடன் தோன்றி எனது துன்பங்களையெல்லாம் பொடியாக்கி அழிக்கவேண்டும்; நான் கேட்கும் வரங்களையெல்லாம் தந்தருள வேண்டும்; என் உள்ளத்தில் புகுந்து உல்லாசமாக வாழவேண்டும்; என் உள்ளத்தி லிருந்து எனக்கு நீ அருள் செய்யவேண்டியவை பல உண்டு. அவைகளையும் சொல்லி விடுகின்றேன். பலவிதமான கவிகளைப் பாடும் வல்லமை அளிக்க வேண்டும்; ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி என்னும் நால்வகைப் பாடல்களையும் பாடும் கவித் திறமை அளிக்க வேண்டும். அட்டாவதானம் செய்யும் திறமையையும் அருள் செய்யவேண்டும். இவற்றுடன் உனது பெருமையைப் பேசும் இயல்புள்ள பல நூல் தொகுதிகளையும், பல காவியத் தொகுதிகளையும் நான் கற்றுத் தேறவேண்டும்; ஒலிக்கு அடையாளமான எழுத்தைப் பற்றிக் கூறும் எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகிய ஐவகை இலக்கணங்களையும் நான் கற்க வேண்டும். இவ்வாறு கற்றுச் சிறந்த தமிழ்ப் புலமை பெரும்படி எனக்கு அருள் புரியவேண்டும். புலமை மட்டும் வந்துவிட்டால் போதாது; கற்றவற்றுக்குத் தக நடந்துகொள்ளும் ஒழுக்கமும் வேண்டும். ஆதலால் என்னை நன்னெறியிலே நடக்க அருள் செய்யவேண்டும். நல்வினை, தீவினைகளால் வரும் பிறவித் துன்பத்தை நீக்கியருள வேண்டும்; காமம், வெகுளி, மயக்கம் என்று சொல்லப்படும் மூன்று பெருங் குற்றங்களும் என்னை அணுகாமல் அருள் செய்யவேண்டும். தாம் என்ற மமதையை ஒழித்து, உன் பெருமையையே ஆராய்ந்து கொண்டிருக்கின்ற பழமையான அடியார்களுடன் என்னைச் சேர்த்தருள வேண்டும்; அழியாத உயர்ந்த இன்பத்தை நான் துய்க்கும் படி- அனுபவிக்கும்படி- செய்யவேண்டும். உனது அருளுக்கு இலக்காகாமல் எட்டி நிற்கும் இரக்க மற்றவனாகிய எனக்கும் உனது மெல்லிய தாமரை போன்ற பாதங்களைக் காட்டி என்னை ஆட்கொண்டருள வேண்டும்; என் கண் முன்னே நின்று காட்சியளித்து என்னை ஆண்டு அருள வேண்டுகின்றேன். இதுவே குமரகுருபரர் முருகனிடம் வேண்டிக் கொள்ளும் முறையீடு. இவ்வேண்டுகோளில், கல்வி, ஒழுக்கம், பக்தி மூன்றையும் அருளும்படி முருகனிடம் முறையிடுவதைக் காணலாம். குருபரர் வாழ்க்கை வரலாறு இம்மூன்றிலும் அவர் தலைசிறந்து வாழ்ந்தார் என்பதைக் காட்டுகின்றது. மேலே காட்டிய பொருளமைந்த கந்தர் கலிவெண்பாவின் அடிகள் கீழ்வருவன:- பச்சைமயில் வாகனமும், பன்னிரண்டு திண்தோளும், அச்சம் அகற்றும் அயில்வேலும்- கச்சைத் திருஅரையும், சீறடியும், செங்கையும்,ஈராறு அருள்விழியும், மாமுகங்கள் ஆறும்- விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓர் ஆறும், எந்தத் திசையும் எதிர்தோன்ற- வந்து, இடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி, எவ்வரமும் தந்து, புகுந்து உல்லாச மாக உளத்துஇருந்து, -பல்விதமாம் ஆசுமுதல் நால்கவியும், அட்டாவ தானமும், சீர்ப் பேசும்இயல் பல்காப் பியத்தொகையும், -ஓசை எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து, பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து, - ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி, மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து ஆயும் பழய அடியார் உடன்கூட்டித், தோயும் பரலோகம் துய்ப்பித்துச் - சேய கடியேற்கும் பூம்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள். இவைகளே கந்தர் கலிவெண்பாவின் இறுதியடிகள். இவ்வடிகளில் அமைந்துள்ள பொருள் மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தாய்மொழிப் பற்று விலங்குகளும் பறவைகளும் நம்மைக்காட்டிலும் வாழ்விலே வேறுபட்டவை. அவை ஈன்ற கன்றுகளும் குஞ்சுகளும் தாயின் உதவியை எப்பொழுதும் நாடுவதில்லை. தாங்கள் வளரும் வரையில்தான் தாயினிடம் அன்பு செலுத்துகின்றன. அவையும் தங்கள் கன்றுகளும் குஞ்சுகளும், தாமே இரை தேடிக் கொள்ளும் ஆற்றலைப் பெறும் வரையிலுந்தான் ஆதரவு காட்டுகின்றன. பால் மறந்த கன்றுகளுக்குத் தாயின் தயவு தேவையில்லை. சிறகு முளைத்த குஞ்சுகளுக்கு அன்னையின் ஆதரவு வேண்டுவ தில்லை. இந்த நிலை எய்தியவுடன் அவை வெவ்வேறாகிப் பிரிந்து விடுகின்றன. ஆனால், மக்களுடைய வாழ்க்கை வேறு, எவ்வளவு வயது நிரம்பிய அன்னையும், தான் பெற்ற மக்களிடம் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துகின்றாள். நரைத்து முதிர்ந்து நல்வாழ்விலே இருக்கும் மகனையும் மகளையும், என் கண்ணே! நான் பெற்ற செல்வமே! என்று கொஞ்சத்தான் ஆசைப்படு கிறாள் அன்னை. தனயனுக்கொரு ஆபத்தென்றால் தாய் மனங் கலங்குகின்றாள், கண் கலங்குகின்றாள். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றொரு பழமொழியுண்டு. தாயைப் போன்ற அவ்வளவு இளகிய உள்ளம் மக்களுக்கு இருப்பதில்லை என்பது உண்மைதான். தாயைத் தவிக்க விட்டு வாழும் தான்தோன்றிகள் எவ்வளவோ பேர் உண்டு. தாயைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவே அன்னையைப் போற்றுக! தெய்வமாகப் போற்றுக! என்று முன்னோர்கள் இளமையிலேயே போதித்து வந்தனர். தாயில் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்று கூறியத இதற்காகத்தான். எவ்வளவு கல்மனம் படைத்தவர்களாயிருந்தாலும், தாயைப் போற்றிப் பாதுகாக்காதவர்களாயிருந்தாலும், தாய்க்கொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்றால், அவர்கள் நெஞ்சம் நெகிழாமல் இருப்பதில்லை. தான் ஆடா விட்டாலும் தன் சரீரம் ஆடும் என்பார்களே, அது மறக்கமுடியாத உண்மை. தாயின் துயர் கேட்டுக் கண் கலங்கித் தவிப்படையாதவர்கள் யாரும் இல்லை. இளமையிலேயே தனது வாழ்வுக்காகத் தாய் செய்த தியாகத்தை எண்ணிப் பார்த்தால் உள்ளம் உருகத்தான் செய்யும். இந்த உண்மை தாய்மொழிக்கும் பொருந்தும். இளம் பருவத்தில் தாய்மொழியிலே போதிக்கப்படும் நல்லுரைகள் நமது உள்ளத்தை விட்டு மறைந்துவிடுவதில்லை. நமது பண்பு பெருகுவதற்கு அந்த அறிவுரைகளே ஊன்றுகோல் போல் கைகொடுத்து உதவுகின்றன. மற்றவர்களைக் காட்டிலும் இந்த உண்மையை இறைவன் அடியார்கள் என்பவர்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். ஆண்டவன் பால் அன்புள்ளவர்கள் தங்கள் தாய் மொழியிலே அன்புப் பாடல்களைப் பாடும்போதுதான் நெஞ்சம் நெக்குருகி நிற்கின்றனர்; நெஞ்சம் கனிந்து கண்ணீர்விட்டு நிற்கின்றனர். எவ்வளவு பொருள் நிறைந்த இனிய பாடலாயிருந்தாலும், பொருள் தெரியாத- தெரிந்துகொள்ள முடியாத- வேற்று மொழிப் பாடலால் இவ்வாறு நெஞ்சம் இளகுவதில்லை. பக்தியுள்ளவர்கள் அனைவரும் இந்த உண்மையை அனுபவத்தில் அறிவார்கள். தமிழகத்திலே வாழ்ந்தவர் தியாகையர். ஆனால் அவர் தாய்மொழி தெலுங்கு. அவர் இராமனைப் பணிந்து பாடியவை அனைத்தும் தெலுங்கில்தான். அவர் தம் தாய்மொழியில் பாடியிருப்பதால்தான் அவர் கீர்த்தனங்களில் அன்பு- பக்தி- சொட்டுகின்றது. இவ்வுண்மை நினைவுகூரத் தக்கது. தமிழ்நாட்டு அறிஞர்கள்- அன்பர்கள்- அடியார்கள்- அனைவரும், தாய்மொழியை அன்னையைப்போலவே போற்றினர், வாழ்த்தினர், வணங்கினர். அன்னையைக் காட்டிலும் ஒருபடி மேலாகவே உயர்த்திப் பேசினார்கள் என்றும் சொல்லிவிடலாம். தாய்மொழியை இறைவனாகவே, இறைவியாகவே எண்ணிப் போற்றினார்கள். தாய்மொழியை இறைவனாகவும், இறைவி யாகவும் போற்றினார்கள் என்று கூறுவதைவிடத் தாய் மொழியின் வடிவமாகவும், அதன் சுவையாகவும், பயனாகவும் இறைவனையும், இறைவியையும் எண்ணினார்கள் என்றே கூறிவிடலாம். இவ்வளவு அன்பும், ஆதரவும் தாய்மொழியின் மேல் கொண்டிருந்தார்கள். இந்த உண்மையை விளக்கும் பாடல்கள் பல உண்டு. தமிழர்கள்- தமிழ்நாட்டுப் புலவர்கள்- தமிழ்நாட்டிலே தோன்றிய அடியார்கள்- தமிழ்மொழியிலே கொண்டிருந்த அன்புக்கு எல்லையில்லை. இவ்வளவுக்குத் தாய்மொழியிலே பற்றுள்ள வர்கள் வேறு எந்த மொழியாளர்களிலும் இல்லையென்றே துணிந்து சொல்லிவிடலாம். இதற்கு உதாரணமாக ஒரு செய்யுளைப் பார்ப்போம். தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே! நறைபழுத்த துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும் சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே! வளர்சிமைய இமயப் பொறுப்பில் விளையாடும் இளம்மென் பிடியே! எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன், திருவுள்ளத்தில் அழகு ஒழுக, எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே! மதுகரம், வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும், இள வஞ்சிக் கொடியே வருகவே! மலையத் துவசன் பெற்றபெரு வாழ்வே! வருக! வருகவே! இது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்தில் உள்ள ஒரு செய்யுள். இச் செந்தமிழ்ச் செய்யுளை எத்தனை தரம் படித்தாலும், பாடினாலும் நம் உள்ளம் சலிப்படைவதில்லை. தமிழ்தாயின்பால் அன்பும் ஆர்வமும் அளவின்றிப் பெருகி வளர்கின்றது. இச் செய்யுளால் மீனாட்சி அம்மையின்பால் பிறக்கும் அன்பைவிட, தமிழ்த்தாயிடம் பிறக்கும் அன்புதான் அதிகம். நம் உள்ளமெல்லாம் தமிழ்த்தேன் நிரம்பி, நம் உணர்ச்சியே தமிழ் மயமாகிவிடுகின்றது. இச்செய்யுளை இயற்றிய- அல்ல, பாடிய- புலவர் குமர குருபரர். இவர் தென்பாண்டி நாட்டினர். இவரால் தான் திருப்பனந்தாள் மடம் தோன்றியது. இவர்தான் தில்லியிலே வாழ்ந்த பாதுஷாவைத் தமிழின் அருமையை உணரச் செய்து, காசியிலே தமிழ்மணங் கமழும் சைவ மடத்தை நிறுவினார். இந்துதானியும் தெரிந்தவர். இவர் வணங்கிப் போற்றிய இறைவியை- மீனாட்சி யம்மைத் தமிழின் இனிமையாகவே காண்கிறார். தனது புலமைக்கும், தூய் மைக்கும், பண்புக்கும் காரணமான தாய் மொழியை எவ்வளவு அருமையாகப் போற்றுகிறார் என்பதற்கு இந்த ஒரு செய்யுளே போதுமான எடுத்துக் காட்டாகும். இச்செய்யுளின் பொருளை உணர்ந்தால் தமிழ்தான் தமிழர் உயிர் என்பதை மறவோம். தொடுத்துக் கூறுகின்ற தெய்வத்தன்மையுள்ள பழைய செந்தமிழ்ப் பாடல் மாலையின் பயனே! தேன் மிகுந்திருக்கின்ற, பல துறைகளைப் பற்றியும் உரைக்கினற் இனிய தமிழ்ச் செய்யுட் களிலே வடிகின்ற நல்ல சுவையே! யான் எனும் அகங்காரமாகிய கிழங்கைக் கல்லி எடுத்தெறிகின்ற தொண்டர்களின் உள்ளமாகிய கோயிலிலே ஏற்றியிருக்கும் அணையா விளக்கே! வளர்ந்த சிகரத்தையுடைய இமயமலையிலே விளையாடுகின்ற இளைய மெல்லிய பெண் யானைக் கன்றே! அலை வீசுகின்ற கடலாற் சூழ்ந்த இவ்வுலகத்தைத் தாண்டி நிற்கும், ஒப்பற்ற சிவபெருமான் தனது உள்ளத்திலே அழகு நிரம்ப எழுதி வைத்துப் பார்த்திருக் கின்ற உயிருள்ள சித்திரமே! வண்டுகள் பொருந்தி, வாயாரத் தேனை உண்ணுகின்ற மலர்கள் நிறைந்த கூந்தற் காட்டைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற முற்றாத வஞ்சிக் கொடியே! வருக! மலயத்துவசன் என்னும் பாண்டிய மன்னன் பெற்றெடுத்த பெரிய செல்வமே! வருக வருகவே! இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். குமர குருபரர் கற்பனையிலே பிறந்ததுதான், உயிரோவியம் என்னும் சொல். இந்தச் சொல்லை இன்று பொன்போல் போற்றுவதைக் காண்கிறோம். பழம்பாடல்களின் தெய்வீகத் தன்மையை இச்செய்யுள் விளக்கி நிற்கின்றது. தமிழின் சுவையை- பெருமையை - அழகை - விளக்குவதிலே இச்செய்யுளுக்கு நிகர் இதுவேதான். பழந்தமிழர்கள் தங்கள் ஆருயிர் அன்னை மொழியை எவ்வளவு அருமையாகப் போற்றினார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று என்னதான் வேண்டும்? பொதிய மலைக் காட்சி குறம் என்பது ஒருவகை நூல். இத்தகைய நூல் பிற்காலத்தில் எழுந்தது. பிற்காலத்திலும் புதிதாகத் திடீரென்று கிளம்பிவிட வில்லை; தமிழரின் பண்டைக் காலப் பண்பாட்டை ஒட்டிப் பிறந்ததேயாகும். குறவர்கள் குறிஞ்சி நில மக்கள்; மலைநிலத்தில் வாழ்வோர். அவர்களிடம் குறி சொல்லும் வழக்கம் உண்டு. தாய், தன் மகளிடம் ஏதேனும் வேறுபாட்டைக் கண்டால் குறத்தியை அழைத்துக் குறி கேட்பாள்; மகளின் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதைக் கேட்டறிவாள். குறத்தியும் முறத்திலே நெல்லை வைத்து எண்ணிக் குறி சொல்லுவாள். இச்செய்தி பழந்தமிழ் இலக்கியங்களிலே காணப்படுகின்றது. இச்செய்தியை அடிப்படை யாகக் கொண்டு பிறந்ததுதான் குறம் என்னும் நூல். குறத்திலே சிறந்தது மீனாட்சியம்மை குறம். உருவிலே சிறியது மீனாட்சியம்மை குறம். குறைந்த பாடல்களைக் கொண்டது. இதுவே முதலில் தோன்றிய குறம் என்று கூடச் சொல்லிவிடலாம். குற்றாலக்குறவஞ்சி என்பது உருவிலே பெரியது. மீனாட்சியம்மை குறத்தைவிட அதிலே பாடல்கள் மிகுதி. சந்தப் பாடல்கள் அதிகம். மீனாட்சியம்மை குறமும், குற்றாலக் குறவஞ்சியும் செந்தமிழ் வளம் நிறைந்த நூல்கள். ஆயினும் இரண்டையும் சீர்தூக்கினால் மீனாட்சியம்மை குறம் பழந்தமிழ் வளத்திலே ஒரு படி உயரத்தான் நிற்கும். மீனாட்சியம்மை குறத்தில் கதைப்போக்கு இல்லை; குற்றாலக் குறவஞ்சி கதைப்போக்கில் அமைந்திருக்கின்றது. குமரகுருபர முனிவர் மீனாட்சியம்மை குறத்தின் ஆசிரியர்; திரிகூட ராஜப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர். பொதிய மலைக் குறத்தி ஒருத்தி மதுரைக்கு வருகின்றாள். மீனாட்சியம்மையின் கையைப் பார்த்து குறி சொல்லுகின்றாள், இதுதான் மீனாட்சியம்மை குறத்தின் அமைப்பு. இதிலே குறி சொல்லும் குறத்தி தன் பிறந்தகமாகிய பொதிய மலையைப் புகழ்ந்து பேசும் பகுதி மிகவும் அழகாக அமைந்துள்ளது. அது, பாண்டி நாட்டின் பெருமையையும், பொதிய மலையின் சிறப்பையும், தமிழின் அருமையையும் விளங்கும் சித்திரங்களாகக் காட்சியளிக்கின்றன. பொதிய மலையின் சிறப்பைக் கூறும் பாடலைக் காண்போம். திங்கள்முடி சூடும்மலை; தென்றல்விளை யாடும்மலை; தங்குபுயல் சூழும்மலை; தமிழ்முனிவன் வாழும்மலை; அங்கையற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவது எனப் பொங்குஅருவி தூங்கும்மலை; பொதிய மலை என்மலையே. குறத்தி தான் வாழும் பொதிய மலையைப் பற்றிச் சொல்வ தாகக் குமரகுருபரர் இவ்வாறு பாடுகின்றார். இச்செய்யுளின் பொருள் எளிதானது. இனிய செய்யுள். சந்திரனைத் தன் உச்சியிலே சூடிக் கொண்டிருக்கின்ற உயர்ந்த மலை; தென்றற் காற்று மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்ற மலை; அம்மலையிலே குடியிருக்கின்ற மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்ற மலை; தமிழ் முனிவராகிய அகத்தியர் வாழ்கின்ற மலை; அந்த மலையிலே அருவி நீர் வற்றாமல் ஓடுகின்றது; அது மீனாட்சியம்மையின் திருவருள் எப்படி வற்றாமல் சுரந்து பெருகுமோ அதுபோலப் பெருகி ஓடிக்கொண்டேயிருக்கின்றது. இத்தகைய பொதிய மலைதான் என்னுடைய மலையாகும். இதுதான் பொதிய மலையின் சிறப்பு. இந்தப் பாட்டிலே பொதிய மலையின் உயர்வு, அதில் உள்ள இனிமை, அந்த மலைக்குள்ள பெருமை, அந்த மலையின் இயற்கைச் சிறப்பு எல்லாம் எடுத்துக்காட்டப்பட்டன. திங்கள் முடிசூடும் மலை என்பதும், தங்கு புயல் சூழும் மலை என்பதும் மலையின் உயர்ச்சியைக் குறித்தன. தென்றல் விளையாடும் மலை என்பது மலையிலுள்ள இனிமையைக் குறித்தது. தமிழ் முனிவன் வாழும் மலை மலைக்குள்ள சிறப்பைச் சுட்டிற்று, அருவிக்கு அங்கையற்கண் அம்மையின் அருளை உவமையாகக் காட்டப்பட்டது. இதன் மூலம் இறைவியின் வற்றாத பேரருள் விளக்கப்பட்டது. மீனாட்சி என்பதற்கு மீன் போன்ற கண்ணுடையவள் என்பது பொருள். இதைத் தூய தமிழ்ச் சொல்லால் அம்கயல் கண் என்று குறித்திருப்பது வியக்கத் தக்கது! அம் கயல் கண்: அழகிய மீன் போன்ற கண். தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் வாழ்வதும் மலைக் கொரு பெருமையாகக் குறிக்கப்பட்தும் குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த பாட்டும் பொதிய மலையின் சிறப்பைக் குறிப்பிடுகின்றன. மேலே காட்டிய பாட்டைப் போலவே கீழ்வரும் பாட்டும் சந்தமும் பொருளும் அமைந்த பாட்டு. கன்னம் பெய்து உறங்குகொலைக் களிறு கிடந்து பிளிறுமலை; தென் அம் தமிழும் பசும்குழவித் தென்றல் கொழுந்தும் திளைக்கும் மலை; அன்னம் பயிலும் பொழில்கூடல் அறம்அம் கூந்தல் பிடி ஆள் பொன்அம் குடுமித் தடம்சாரல் பொதிய மலைஎன் மலைஅம்மே. இந்தப் பாட்டும் மலையின் சிறப்பைச் சொல்லுகிறது. தென்றலும் தமிழும் அம்மலையிலே பொருந்தியிருப்பது, அம்மலையிலே விளையாடிக் கொண்டிருப்பது- இது அதற் கொரு பெருமை. இதைப் போன்ற மற்றொரு சிறந்த பெருமை, அந்தப் பொதிய மலை மீனாட்சி அம்மையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகும். தென்றல், தமிழ், மீனாட்சியம்மையின் ஆட்சி- இவற்றால் பொதிய மலை சிறப்படைந்தது, பெருமை பெற்றது. இக்கருத்தை இச்செய்யுளிலே காண்கிறோம். செய்யுளின் பொருள் முழுவதையும் காண்போம். காதின் வழியே மத நீரை ஊற்றிக் கொண்டிருக்கின்ற கொலை செய்யுந் தன்மையுள்ள ஆண் யானைகள் சில சமயங் களில் படுத்துக் கிடந்து உறங்குகின்றன. சில சமயங்களில் உறக்கம் வராமல் பிளிறுகின்றன. யானைகள் வாழும் இத்தகைய பெரிய காடு நிறைந்த மலை. மிக அழகும் இனிமையும் பொருந்திய தமிழும், இளங் குழந்தையாகிய தென்றற் கொழுந்தும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்ற இனிமை நிறைந்த மலை. அன்னப் பறவைகள் வாழ்கின்ற நீர்நிலைகள் அமைந்த சோலைகளோடு கூடிய மதுரை நகரத்தையாண்டவள் அங்கயற் கண் அம்மை. கருமையான அழகிய கூந்தலையுடைய பெண் யானை போன்றவள் அந்த அம்மையார். அவரால் ஆளப்பட்டது அந்தப் பொதியமலை. அந்த மலை அழகான உச்சியை உடையது. பரந்த பக்கங்களை உடையது. இத்தகைய பொதிய மலைதான் நான் வாழுகின்ற மலை. இந்த இரண்டு பாடல்களும், குறத்தி, தன்னுடைய இருப்பிடமாகிய பொதிய மலையைப் புகழ்ந்து சொல்லியது. யாரும் தன் தாயகத்தைக் குறைத்துப் பேசமாட்டார்கள். அதைப் புகழ்ந்துதான் பேசுவார்கள். தன் தாயகம், வறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம்; கொடுமைக்கு உறைவிடமாக இருக்கலாம். இருப்பினும் அதைப் பற்றிப் பிறர் இழித்துப் பேச இடந்தரமாட்டார்கள். தன் தாயகத்திலே எல்லாச் செல்வமும் அமைந்திருந்தால் அதைப் பற்றிப் பெருமையடைவதைக் குறித்துக் கேட்கவா வேண்டும்? பொதிய மலை, இயற்கையிலேயே வளம் நிறைந்தது. பொருள் வளம் மட்டும் அன்று, அருள் வளமும் நிரம்பியது. அந்தப் பொதியத்தைத் தாயகமாகக் கொண்ட குறத்தி அதைத் புகழ்ந்து பேசுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? பெண்கள் பிறந்தகத்தின் பெருமை பேசுவதிலே தவற மாட்டார்கள். இது அவர்கள் இயற்கை. இயற்கையை ஒட்டியும் இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. விருந்தோம்பல் நாகரிகம் பெற்ற மக்கள் நண்பர்களை உபசரிப்பதில் வியப்பில்லை. விருந்தினரை வரவேற்பதில் புதுமையில்லை. நண்பர்களுடனும் விருந்தினர்களுடனும் ஒன்றுபட்டுப் பழகுவது நாகரிக முறை என்று கருதுகின்றனர். பண்டைக்கால மக்கள் நாகரிகம் அற்றவர்கள்; விஞ்ஞான முறை தெரியாதவர்கள்; சுகாதாரத்தை அறியாதவர்கள்; மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வந்தவர்கள்; இப்பொழுது இருப்பது போன்ற வீடு வாசல்களை அமைத்துக்கொண்டு வாழத் தெரியாதவர்கள்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய மக்கள் இப்படித்தான் வாழ்ந்து வந்தனர். மக்கள் வாழ்க்கையைப் பற்றிப் பழைய வரலாறும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளுகின்றது. பழைய இலக்கியங்களிலும் இந்த உண்மையைக் காண்கின்றோம். எல்லா நாடுகளிலும் மக்கள் ஆரம்ப காலத்தில்- நாகரிகம் வளராத காலத்தில்- இந்த நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே தமிழ்நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காணலாம். பண்டைக்காலத் தமிழ் மக்களிடம் இன்று இருப்பது போன்ற சாதியின் பேரால் வேற்றுமைகள் இல்லை. நிலப் பிரிவுகள் காரணமாக வேறு வேறு பெயர் பெற்றிருந்தார்களே அன்றி அவர்களிடம் உயர்வு தாழ்வு இருந்ததாகக்கூடச் சொல்ல முடியாது. முல்லை நில மக்கள், மருத நில மக்கள், குறிஞ்சி நில மக்கள், நெய்தல் நில மக்கள், பாலை நில மக்கள் என்ற ஐவகைப் பிரிவுதான் அவர்களிடம் இருந்தது. இந்த ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும், அந்தந்த நிலத்துக்கேற்ற தொழில்களைச் செய்து வந்தனர். இவர்களிலே மருத நில மக்கள்தான் நாகரிகம் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் என்பது வரலாறு கண்ட உண்மையாகும். அந்த ஆராய்ச்சி இப்பொழுது வேண்டாம். இன்றுள்ள நாகரிகத்தைப் பற்றிச் சிந்திக்கவும் முடியாத ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த மக்களின் பண்பாடு எப்படி இருந்தது என்பதைக் காணும்போது நமக்கு வியப்பு உண்டாகின்றது. ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் தெய்வம் உண்டு. அவர்கள் அத்தெய்வங்களை வணங்கி வழிபட்டனர். இன்றுள்ள தத்துவ ஞானிகள் கருதுவதுபோல், அக்கால மக்கள் மறுமைப் பயன் வேண்டித் தெய்வங்களை வழிபடவில்லை; மோட்சத்தை விரும்பி- தன் ஆன்மசாந்தியை மட்டும் நாடித் தெய்வத்தை வணங்கவில்லை. தங்கள் வாழ்க்கையின்பத்தைக் கருதியே தெய்வத்தை வணங்கினர்; தங்கள் மக்கள் வளம் பெற்று வாழவேண்டும்; தாங்கள் வாழும் இடத்தில் மழை பெய்ய வேண்டும்; செல்வம் சுரக்கவேண்டும்; பஞ்சம், பட்டினி, பிணியில்லாமல் வாழ வேண்டும் என்றே அவர்கள் தெய்வங்களை வழிபட்டனர். பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே இந்த உண்மையைக் காணலாம். இன்றுள்ள நாகரிகம் அக்காலத்து மக்களிடம் இல்லை தான்; ஆயினும் அவர்கள் குதூகலமாக வாழ்ந்தார்கள்; நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள்; பட்டினி பசியின்றி வாழ்ந்தார்கள்; தம்மிடம் வந்தோரை உபசரிக்கும் உயர்ந்த பண்புடன் வாழ்ந் தார்கள். இத்தகைய பண்பாடு பண்டைத் தமிழ் மக்களிடம் குடிகொண்டு இருந்தது. இந்த உண்மையைக் குமரகுருபர சுவாமிகள் ஒரு செய்யுளிலே அமைத்துப் பாடி இருக்கின்றார். பண்டைத் தமிழர் நாகரிக வரலாற்றை அப்படியே சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார். கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி எடுப்போம்; குறிஞ்சிமலர் தெரிந்து, முல்லைக் கொடியில்வைத்துத் தொடுப்போம்; பழம்பிழிந்த கொழும்சாறும் தேறலும்வாய் மடுப்போம்; பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்; செழுந்தினையும் நறுந்தேனும் விருந்துஅருந்தக் கொடுப்போம்; சினவேங்கைப் புலித்தோலின் பாயலில்கண் படுப்போம்; எழுந்துகயல் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம்! எங்கள்குறக் குடிக்கு அடுத்த இயல்பு இது காண் அம்மே! என்பதே அச்செய்யுள். இதில் குறக்குடியினரின் வாழ்க்கைப் படம் காணப்படுகின்றது. குன்றத்தில் வாழ்கின்றவர்கள் குறவர்கள்; மலைச் சாதியினர். நாட்டு வாழ்க்கை அவர்களிடம் இல்லை. மலைவாழ்க்கைத்தான் அவர்களுடைய வாழ்க்கை. அந்த மக்களின் வாழ்க்கை எவ்வளவு சிறப்புடன் அமைந்திருந்தது என்பதை இச்செய்யுளால் காணலாம். நல்ல சிறந்த கொடியின்கீழ் நிலத்தில் விடப்பட்டிருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைத் தோண்டியெடுப்போம்; குறிஞ்சிப் பூக்களைப் பறிப்போம்; முல்லை மலர்களையும் சேர்த்து முல்லைக் கொடியிலே வைத்துத் தொடுப்போம். இவை எங்கள் விளையாட்டும், தொழிலும் ஆகும். மா, பலா முதலிய பழங்களைப் பறித்து அவைகளின் சாற்றைப் பிழிவோம். தேனும் தேடி எடுத்து வைத்திருப்போம். இந்தப் பழச் சாற்றையும் தேனையும் அருந்துவோம். பசுந் தழைகளை வைத்துத் தொடுத்த ஆடைகளை அணிவோம்; மர உரிகளையும் ஆடைகளாக அணிவோம்; இவைதான் நாங்கள் அணியும் ஆடைகள். விருந்தினர்கள் வந்தால் அவர்களை வரவேற்போம். நல்ல தினைமாவையும், இனிய தேனையும் அவர்கள் உண்ணும்படி கொடுப்போம். நாங்கள் எவ்வளவு ஏழ்மை வாழ்வு நடத்தினாலும் விருந்தினரைப் புறக்கணிக்க மாட்டோம். எங்களுக்குப் படுக்கை புலித்தோல்தான். கோபம் உள்ள வேங்கையை வேட்டையிலே கொல்லுவோம். அதன் தோலைப் படுக்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளுவோம். விடியற்காலத்தில் எழுந்ததும் முதல் வேலையாக மீனாட்சி அம்மையின் பாதங்களிலே விழுந்து வணங்குவோம். எங்கள் தீவினையை ஒழிப்போம். எங்கள் குறக் குடிக்கு ஏற்ற தன்மை இதுவாகும். குறவர்களின் தெய்வம் - மலைநில மக்களின் தெய்வம்- குறிஞ்சி நிலத் தெய்வம் - முருகன் என்பதே இலக்கணம். ஆனால், இப்பாடலில், குறவர்கள் மீனாட்சியம்மையை வணங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பாடல், மீனாட்சி அம்மை குறம் என்ற நூலில் உள்ளது. மீனாட்சி அம்மையைப் பாடுவதற்காகவே- துதிப்பதற்காகவே- போற்றுவதற்காகவே- எழுந்த நூல். ஆதலால், முருகனை வைக்க வேண்டிய இடத்தில் மீனாட்சி அம்மையை வைத்துப் பாடினார் ஆசிரியர். மீனாட்சி அம்மை என்பதற்குத் தமிழ்ச் சொல் அங்கயற்கண் அம்மை என்பது. பண்டைத் தமிழ் மக்களிடம் தெய்வ வணக்கமும் இருந்தது; விருந்தினரைப் போற்றும் வழக்கமும் இருந்தது என்பதை இப்பாடல் காட்டுகின்றது. மீனாட்சி அம்மை குறம் ஏறக்குறைய நானூறு ஆண்டு களுக்கு முன் எழுந்த நூல்தான்; ஆயினும் அதிலே பழந்தமிழர் பண்பாட்டைக் காணுகிறோம். தமிழின் பெருமைக்கும், தமிழ்ப் புலவர்களின் தன்மைக்கும் இப்பாடல் ஒரு எடுத்துக்காட்டாக நிற்கின்றது. சிறந்த தமிழ்ப் புலவர்கள், பழந்தமிழர் பண்பாட்டை மறந்துவிடுவதில்லை; சமயம் நேரும்போதெல்லாம் அப் பண்பாட்டை வைத்துப் பாடிவிடுவார்கள்; தாங்கள் பாடும் பாடல்களிலும், எழுதும் நூல்களிலும், பழந் தமிழர் சிறப்பை அமைத்துப் பாடுவதும், எழுதுவதும் அவர்கள் பண்பு. இது தமிழர்களின் வழிவழிப் பண்பாகும். இது பாராட்டப்பட்ட சிறந்த பண்பு என்பதில் ஐயம் இல்லை. இதனால்தான், மறைந்து போன பழந் தமிழர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. தெய்வம் போற்றிய தமிழ் உலகத்திலே தாய்மொழியைத் தெய்வமாகப் போற்றியவர் களிலே தலைசிறந்தவர்கள் தமிழர்கள். தாய்மொழிப் பற்றிலே, தமிழர்க்கு நிகராக வேறு யாரையும் சொல்ல முடியாது. தமிழர்கள், தமிழின்மேல் கொண்ட அன்பு- பக்தி- பற்று காரணமாகத் தமிழையே தாயெனப் போற்றினர்; தெய்வம் என வாழ்த்தினர்; தெய்வம் ஈன்ற தமிழ் என வாழ்த்தினர்; தெய்வத் தன்மை பொருந்தியது என்று கொண்டாடினர். தமிழின் இன்பத் தை நுகரவே, தெய்வங்கள் எல்லாம் மக்கள் உருவில் வந்தன என்று கூறினர்; பாடினர்; ஆடினர்; மகிழ்ந்து கொண்டாடினர். இவ்வுண்மையை விளக்கப் பல பாடல்கள் உண்டு. பிற்காலத்துப் புலவர்களிலே குமரகுருபரர் என்னும் புலவர் தமிழின் தெய்வத் தன்மையைப் பல பாடல்களில் விளக்கிப் பாடியிருக்கின்றார். அவருடைய நூல்களிலே மதுரைக் கலம்பகம் என்னும் பிரபந்தம் சிறந்ததொரு நூல். அதில் உள்ள பாடல்களில் ஒன்றைக் காண்போம். தமிழின் சிறப்பையும் தெய்வத் தன்மையையும் விளக்கும் பாடல் அது. திருவிளையாடல் புராணக் கதையை மூலமாக- அடிப் படையாக வைத்துக்கொண்டு செய்த- பாடிய- கற்பனைப் பாடல் அதுவாகும். கருத்திலும், கதையிலும், கற்பனையிலும் அப் பாடலில் இனிமை விளையாடுகின்றது; தமிழின் சிறப்பு ஒளி விட்டுத் தவழ்கின்றது. குமரகுருபரர் தமிழின்பால் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதையும் விளக்குகிறது அப்பாடல். முதலில் அப்பாடலைக் காண்போம். அதன்பின் அதன் பொருளைச் சுவைத்து இன்புறுவோம். தமரநீர்ப் புவனம் முழுதுஒருங்கு ஈன்றாள் தடாதகா தேவிஎன்று ஒருபேர் தரிக்கவந் ததுவும், தனிமுதல் ஒருநீ சவுந்தரமாறன்ஆ னதுவும், குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில்இக் கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார் பமரம்யாழ் மிழற்ற நறவுகொப் பளிக்கும் பனிமலர்க் குழலியர், பளிக்குப் பால்நிலா முன்றில் தூநிலா முத்தின் பந்தரில் கண்இமை ஆடாது அமரர்நா டியரோடு அம்மனை ஆட, ஐயம்நுண் நுசுப்புஅள வலஎன்று அமரரும் மருளும் தெளிதமிழ்க் கூடல் அடல்அரா அலங்கல்வே ணியனே! சிவபெருமானே! பார்வதிதேவி, தடாதகா தேவி என்ற பெயருடன் பாண்டிய குலத்திலே மதுரையிலே பிறந்தாள்! நீ சவுந்தர பாண்டியன் என்னும் பெயருடன் பிறந்தாய்! முருகன், உக்கிர குமாரன் என்ற பெயருடன் பிறந்தான்! மதுரையில் வளரும் தமிழின்பத்தைச் சுவைக்கத்தான் நீங்கள் இப்படிப் பிறந்தீர்கள். ஆதலால், தமிழின் பெருமையை அளவிட முடியாது! இக்கருத்தையே இப்பாடல் அழகாக எடுத்துக்காட்டு கின்றது. இப்பாடலில் மதுரையின் செல்வச் சிறப்பும், தமிழின் பெருமையும் கூறப்படுகின்றன. பமரம் யாழ் மிழற்ற என்பது தொடங்கிப் பின்னுள்ள அடிகளின் பொருளை முதலில் கண்டு அதன்பின் மேல் உள்ள வரிகளுக்குப் பொருள் காணவேண்டும். அப்பொழுதுதான் எளிதில் பொருள் விளங்கும். இப்பாடலின் பொருள் கீழ்வருவது:- வண்டுகள் யாழ்போலப் பாடுவதனால் தேன் உமிழ்கின்ற குளிர்ந்த மலர்களைத் தலைமயிரிலே பெண்கள் அணிந்திருக் கின்றனர். அவர்கள் பளிங்கால் கட்டப்பட்ட பால்போல் நிலவெரிக்கும் மேல்மாடியிலே முத்துப்பந்தரின் கீழே அம்மானையாடுகின்றனர். அவர்கள் தேவ மாதர்களுடன் சேர்ந்து அம்மானை ஆடுகின்றனர். அம்மானை ஆடும்போது, உண்டோ இல்லையோ என்று ஐயம் கொள்ளும்படியான அவர்களுடைய இடைகள் துவளுகின்றன. அதைக் கண்டு, தேவர்களும், இவர்களின் இடைகள் இதைத் தாங்குவன அல்ல என்று அஞ்சுகின்றனர். இத்தகைய மதுரையிலே தெளிந்த தமிழ் வழங்கும் கூடலிலே வாழ்கின்ற சிவபெருமானே! பிறரைக் கொல்லுந் தன்மையுள்ள பாம்பையும், மலர் மாலையையும் சடையிலணிந்திருக்கின்ற சிவபெருமானே! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலக முழுவதையும் பெற்றெடுத்தவள் பார்வதி தேவி. அவள் தடாதகை தேவி என்ற பெயருடன் மலையத்துவசப் பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தாள். ஒப்பற்ற முதல்வனாகிய நீ, சவுந்தர பாண்டியன் என்னும் பெயருடன் மதுரையை அடைந்தாய். தடாதகைப் பிராட்டியை மணந்தாய். முருகப் பெருமான் உக்கிர குமார பாண்டியன் என்னும் பெயருடன் பிறந்தார். இவ்வாறு நீங்கள் மூவரும் தெளிதமிழ் மதுரையிலே பிறந்தீர்கள். இதற்குக் காரணம், குளிர்ந்த தமிழின் இனிமையைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆவலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. தமிழை நுகர்வதற் காகவே, மதுரையில், தேவர்களாகிய நீங்கள் மனித உருவில் பிறந்தீர்களானால், இச்சிறந்த தமிழின் பெருமையை யார்தான் அறிய முடியும்? தமிழைப் போல் சிறந்த மொழி ஒன்றும் இல்லை. இப்பாடல் திருவிளையாடல் புராணக் கதையை அடிப் படையாகக் கொணடு எழுந்த கற்பனை. தடாதகைப் பிராட்டி என்பவள், மலையத்துவசப் பாண்டியனுடைய தவப்புதல்வி. மலையரசனே மலையத்துவசப் பாண்டியனாகப் பிறந்தான்; அவன் மகளாகிய மலை மகளே- பார்வதி தேவியே- தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தாள் என்பது புராணக் கொள்கை. தடாதகைப் பிராட்டியே பாண்டிய நாட்டின் அரசியானாள். அவ்ள திக்விஜயம் செய்து வந்தாள். எல்லா அரசர்களையும் வென்றாள். சிவபிரானை எதிர்த்தபோது அவள் நாணித் தலைகுனிந்தாள், அதன்பின் சிவபெருமானே சவுந்தர பாண்டி யனாக வந்து தடாதகைப் பிராட்டியை மணந்து கொண்டார். இவர்களுக்கு மகனாக முருகனே உக்கிரகுமார பாண்டியன் என்னும் பெயருடன் பிறந்தான்; மதுரையை ஆண்டான். அவன் செய்த வீரச் செயல்கள் பல. இக்கதைகளை வைத்துக் கொண்டே இப்பாடலைக் குருபரர் பாடினார். இவ்வாறு பார்வதி, பரமசிவன், முருகன் மூவரும் மதுரையில் மனிதர்களாகப் பிறந்ததற்குக் காரணம், வேறு எதுவும் இல்லை. தமிழின் இன்பத்தை அனுபவிக்கவே பிறந்தனர். தமிழைப் படித்துப் பேசிப் பாடி அதன் சுவையை நுகரவே தேவர்களாகிய அவர்கள் மனிதர்கள் வாழும் மதுரையிலே மக்களாகப் பிறந்தனர் என்று பாடினார். இப்படிப் பாடியதன் மூலம் தமிழின் சிறப்பை- பெருமையை- இனிமையை- தெய்வத் தன்மையை எடுத்துரைத்தார் குமரகுருபரர். தமிழுக்கு இப்பாடலில் அமைந்திருக்கும் அடை மொழிகள்- சிறப்புச் சொற்களே தமிழின் பெருமையை உணர்த்துகின்றன. தண்தமிழ், கொழிதமிழ் தெளிதமிழ் என்று மூவகை அடை மொழிகளுடன் தமிழ் வழங்கப் பட்டிருக்கின்றது. தண்தமிழ்: குளிர்ந்த தமிழ்; இன்பத்தைத் தரும் தமிழ். கொழிதமிழ்: பொருளும் சுவையும் நிரம்பிக் கிடக்கின்ற தமிழ். தெளிதமிழ்: எப்பொருளையும் தெளிவாக விளக்கும் திறம் படைத்த தமிழ்; குற்றம் குறைகள் இல்லாத தெளிவான தமிழ். - இவ்வாறு இத்தொடர்களுக்குப் பொருள் கூறலாம். தடாதகைப் பிராட்டியைத்தான் அங்கயற்கண்ணி அம்மை, மீனாட்சி அம்மை என்று வழங்குவர். சிவபிரானை முன்னிலைப்படுத்தியது போல் பாடப்பட்ட பாடல் இது. பொருளை நன்றாக அறிந்து இப்பாடலைப் பாடும் போது நம் உள்ளத்தைக் கவரும். நல்ல ஆற்றோட்டம் போன்ற நடையும் இனிமையும் அமைந்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழின் சிறப்பை விளக்கும் சிறந்த பாடல் இதுவாகும். கற்றோர் பெருமை குமரகுருபரர் இயற்றியிருக்கும் நீதிநெறி விளக்கம் சிறந்ததொரு நூல். நூறு வெண்பாக்களிலே உயர்ந்த நீதிகள் பலவற்றை அமைத்துப் பாடியிருக்கிறார். இதைத் திருக்குறளைப் பிழிந்தெடுத்த சாரம் என்றே சொல்லி விடலாம்; இந்நூலைப் பற்றி வழங்கும் கதையே இவ்வுண்மையை வலியுறுத்தும். திருமலை நாயக்கர், திருக்குறள் விரிவாக இருப்பதனால், அதனை முழுவதும் படிக்க நேரம் இல்லை; ஆதலால் அந்நூலின் கருத்துக்களைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறும் நூல் ஒன்றை இயற்றித்தரவேண்டும் என்று கேட்டாராம். அவர் வேண்டுகோளுக்கு இணங்கியே குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் பாடினார் என்பதே அந்த வரலாறு. நீதிநெறி விளக்கத்தில், கல்வியின் சிறப்பு, அதைக் கற்பதனால் உண்டாகும் நன்மை, உண்மையான கல்வியைக் கற்றவர்களின் இயல்பு- இவைகள் சிறப்பாக வலியுறுத்தப்படுகின்றன. நூறு வெண்பாக்களிலே ஏறக்குறைய பதினைந்து வெண்பாக்கள் கல்வியின் சிறப்பையும், அதன் பயனையும் பற்றிக் கூறுகின்றன. இதனால், மனித சமுதாயம் முன்னேற வேண்டுமானால்- ஒற்றுமையுடன் வாழவேண்டுமானால்- நல்ல நெறியிலே வாழ வேண்டுமானால்- அதற்குக் கல்வி அறிவே துணை செய்யும். இதுவே குமரகுருபரர் கருத்தாகும் என்பதைக் காணலாம். அவர் கூறும் சில பாடல்களைக் காண்போம். இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் அடையவேண்டிய பயன் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவை. இதுவே தமிழ் நூல்களிலும், வடமொழிநூல்களிலும் கூறப்படுவது. வடநூலார். இதனை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று சொல்லுவார்கள். பிறருக்குத் தீமை செய்யாமல், உதவி செய்யும் வாழ்வு அறநெறி வாழ்வாகும். இத்தகைய வாழ்வை மேற்கொள்ளுதல், நல்ல வழியிலே பொருள் சம்பாதித்தல், அப்பொருளால் பிறர்க்கும் உதவி செய்து தானும் இன்பம் நுகர்தல், இறந்தபின் நற்கதியை- பிறவா நிலையைப் பெறுதல்- இவையே அறம், பொருள், இன்பம் மூன்றும் இவ்வுலகில் பெறுவன; வீடு இறந்தபின் பெறுவது. இவ்வுலகிலே வாழ்கின்றவர்கள் நல்ல பெயருடன் வாழ வேண்டும்; தம்மைப் பிறர் பழித்துப் பேசாதபடி புகழ்ந்து பேசும்படி வாழவேண்டும்; தாம் இருக்கும்போதும் தம்மைப் பிறர் புகழவேண்டும்; தாம் இறந்த பின்னும் தம்மைப்பற்றி மற்ற மக்கள் புகழ்ந்து பேச வேண்டும். இவ்வாறு வாழ்வதே புகழ் பெற்ற வாழ்க்கையாகும். இவ்வாறு வாழவிரும்பாதவர்கள் யாருமேயில்லை. எல்லா மக்களும் புகழுடன்- மற்றவர்கள் தம்மைக் கொண்டாடும்படி- வாழத்தான் ஆசைப்படுகின்றனர். அடுத்தபடி கவலையில்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்; எவ்வளவு துன்பம் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் நெஞ்சுரம் வேண்டும். இன்பம் வந்தபோது மகிழ்ச்சி யால் துள்ளிக் குதிப்பவர்களும், துன்பம் வந்தபோது ஏங்கிப் பரிதவித்து அழுது புலம்புகிறவர்களும் அறிவுள்ளவர்கள் அல்லர். எது வந்தாலும் சரி; நடப்பது நடக்கட்டும் என்று கவலைப் படாமல் வாழும் மனிதர்களே உயர்ந்தவர்கள். இவ்வாறு வாழ விரும்பாத மனிதர்கள் இல்லை. ஆனால் எல்லா மனிதர்களும் இத்தன்மையை எளிதிலே பெற்றுவிட முடியாது. சிறந்த கல்வியைக் கற்றவர்கள் அறம், பொருள், இன்பம், வீடுகளை அடையலாம்; புகழுடன் வாழலாம்; கவலைப்படாமல் வாழலாம் என்று கூறுகிறார் குமரகுருபரர், இதனை அறம், பொருள், இன்பமும், வீடும் பயக்கும்; புறம்கடை நல்இசையும் நாட்டும்; -உறும்கவல்ஒன்று உற்றுழியும் கைகொடுக்கும்; கல்வியின் ஊங்கில்லைச் சிற்றுயிர்க்கு உற்ற துணை. என்ற பாடலால் காணலாம். மனித சமுதாயத்திலே கல்வி பரவவேண்டும்; மக்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துவது இப்பாடலாகும். கல்வியின் பயனை இதைவிடத் தெளிவாக யாரும் விளக்கிச் சொல்ல முடியாது. கல்வி கற்றவன் அடையும் இன்பத்தை மற்றொரு வெண்பா வினால் விளக்கிக் கூறுகின்றார் குமரகுருபரர். கல்வி கற்றவனுக்கு வேறு குடும்பமே தேவையில்லை; கல்வியே அவனுடைய குடும்பம். மனைவி, மக்கள், செல்வம் எல்லாம் அவன் கற்ற கல்விதான் என்று கூறுகிறது அவ்வெண்பா. கல்வியே கற்புடைப் பெண்டிர்; அப்பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே தீம்கவியாச்;- சொல்வளம் மல்லல் வெறுக்கையா; மாண் அவை மண்உறுத்தும் செல்வமும் உண்டு சிலர்க்கு என்பதே அவ்வெண்பா. இதன் பொருள் கீழ்வருவது:- உண்மை யான கல்வியறிவுள்ளவர்க்குக் கல்விதான் கற்புள்ள மனைவியர் ஆவர்; அவர் பாடும் இனிய கவிதையே மனைவியர் ஆவர்; அவர் பாடும் இனிய கவிதையே அவருடைய செல்வப் புதல்வனாகும்; அவர் ஆராய்ந்து சொல்லும் சிறந்த சொல்லே வளம் பொருந்திய செல்வமாகும்; இவைகளுடன், அறிவுள்ளோர் கூடிய சபையைச் சிறக்கும்படி செய்கின்ற சொற் செல்வமும் கற்றவர்கள் சிலரிடம் உண்டு என்பதே இதன் பொருள். கல்வி அறிவுள்ளவர்கள் தம் குடும்பத்துக்கு வரும் துன்பத் தைப் பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டார்கள். தம் மனைவி மக்களைப் பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டார்கள். கல்வியே இத்தகைய கவலையற்ற வாழ்க்கையை அளிக்கும். இத்தகைய தன்மையை இன்றும் கற்றவர்கள் சிலரிடம் காணலாம். பெற்ற தாய்க்குத் தன் பிள்ளையே சிறந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சல்லவா? தான் பெற்ற பிள்ளையின் அழகைப் பழித்துரைக்கும் தாயைக் காணமுடியாது. இவரைப் போன்றவர்கள்தாம் நூலாசிரியர்கள். ஒரு எழுத்தாளன் தான் எழுதியதைத் தானே படித்து இன்புறுவான். தான் எழுதியதைப் புத்தக வடிவிலே காண்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி; தனது நூலைப் பிறர் பாராட்டிப் பேசினால் அதிலே ஒரு ஆனந்தம். ஒரு எழுத்தாளனுக்கு, அவன் மனைவியைவிட - அவன் பெற்ற மக்களைவிட- அவன் எழுதிய நூலே- அருமையாகக் காணப் படும். இதுபோலவே ஒரு கவிஞன் தனது கவிதையைப் போற்றுவான்.அதிலும் ஒருவன் எழுதிய நூல்- பாடிய கவி- என்றும் நிலைத்து வாழும் சிறப்புடையதாக இருக்குமானால், அந்த நூலாசிரியன்- கவிஞன்- அடையும் இன்பத்திற்கு ஈடு சொல்லவே முடியாது. இவ்வுண்மையைக் குமரகுருபரர் பாடல் ஒன்றிலே காணலாம். கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான்; - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா; புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு என்பதே அந்த அருங்கவி. இதன் பொருளைக் கண்டால் புலவர் பெருமையை- அவர் அடையும் இன்பத்தை- அறியலாம். கலைமகள்- கல்வியின் அதிதேவதையாகிய சரசுவதி- வாழும் இடம் முகமாக இருக்கலாம்; நாவாக இருக்கலாம். ஆயினும், அத்தகைய வாழ்வைப் பெற்ற பிரமதேவன், சிறந்த தமிழ்ப் புலவர்களுக்கு ஒப்பாக மாட்டான். ஏன் என்றால் இதற்குக் காரணம் உண்டு. மலரவன் படைக்கும் உடம்புகள் வெறும் உடம்புகள்; இனிமையற்ற உடம்புகள். அவ்வுடம்புகள் அழியாமல் நிற்பவையும் அல்ல; சிலகாலம் இருந்து மறைந்து விடக் கூடியவை. புலவர்கள் செய்யும் உடம்பாகிய கவிதையோ அப்படியல்ல. புலவர்கள் படைக்கும் சிறந்த கவிதைகள் புகழ் பெற்று நிற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டகளானாலும், நரை திரை மூப்புப் பிணியின்றி வாய்ந்திருக்கும். இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். இத்தகைய படைப்பு சக்தி படைத்த புலவர்களின் மகிழ்ச்சியை யார்தான் எல்லை காண முடியும்? அவர்கள் அடையும் ஆனந்தத்துக்கு எதைத்தான் ஈடு சொல்ல முடியும்? ஆகவே, கல்வி கற்பதனால் மக்கள் அடையும் நன்மை, கற்றவர்க்குக் கல்வி அளிக்கும் இன்பம், கற்றவர்கள் தமது நூலால்- கவிதையால்- பெறும் இன்பம்- இம்மூன்றையும் மேலே காட்டிய நீதிநெறி விளக்க வெண்பாக்கள் எடுத்துக் காட்டின. இவற்றைக் கொண்டே நீதிநெறி விளக்கத்தின் பெருமையைக் காணலாம். குமரகுருபரரின் செய்யுட் சிறப்பையும் அறியலாம். வழிகாட்டும் தெய்வங்கள் கடவுளுக்கு உருவமில்லை; குணம் இல்லை; விருப்பில்லை; வெறுப்பில்லை. கடவுளை இத்தன்மையன், இவ்வடிவினன், இந்நிறத்தினன் என்று எழுதிக் காட்ட முடியாது; சொல்லியும் காட்ட முடியாது. அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவன் என்றுதான் எல்லா அறிஞர்களும் இயம்புகின்றார்கள். கடவுள் அன்பர்களிலே- பக்தர்களிலே - இதை மறுப்பவர்கள் எவரும் இல்லை. இவ்வுண்மையை உணர்ந்தவர்களிலே பலரும் கடவுளை வணங்கும்போது அவருக்கு ஒரு உருவம் கற்பித்தே வணங்கியிருக் கின்றனர்; அவரைப்பற்றிப் பாடும்போது ஒரு உருவம் அமைத்துப் பாடியிருக்கின்றனர். இப்படிச் சிந்தித் திருப்பது ஏன்? பாடியிருப்பது ஏன்? - என்ற கேள்விகள் எழும்புவது இயற்கை. இக்கேள்விக்கு விடையிறுப்பது அவ்வளவு அரிதல்ல. மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக் கடவுள் வாழ்க்கை யையும் மனித வாழ்க்கையோடு இணைத்துப் பாடினர். மக்களால் உயர்வாக மதிக்கப்படும் கடவுளை ஒரு குடித்தனக் காரராக வைத்து- இல்லறத்தினராக வைத்து- குடும்பம் நடத்தும் முறையை மக்களுக்கும் போதித்தனர். தாங்கள் வழிபடும் கடவுளர்களை, மக்களைப்போல் குடும்பம் நடத்துவோராகக் கற்பனை செய்ததிலே சில கோளாறுகளும் புகுந்துவிட்டன. இதில் ஐயம் இல்லை; உண்மை தான். ஆயினும் சில உண்மைகளும் அடங்கியிருக்கின்றன. அவற்றை மறைக்க இயலாது. திருமாலோ, சிவனோ, நான்முகனோ, முருகனோ- தங்கள் மனைவியுடன் வாழ்கின்றனர் என்று சொல்லும்போது அவர்கள் தங்கள் மனைவியரிடம் காட்டும் அன்பு வெளிப்படுத்தப்படு கின்றது; அவர்களுடைய காதல் சிறப்பிக்கப்படுகின்றது. மக்களும், காதலனும் காதலியுமாக வாழ வேண்டும்; அவ்வாறு வாழ்வதிலேதான் இன்பம் உண்டு; காதலுடன் வாழ்வதுதான் இல்லறத்தின் சிறப்புக்கு அடிப்படையாகும் என்ற உண்மை எடுத்துக்காட்டப்படுகின்றது. கடவுளர்கள், இவ்வுலகில் வாழ்ந்த கொடியவர்களை அடக்கினார்கள்; அழித்தார்கள்; நல்லவர்களைக் காப்பாற்றி னார்கள்; கொடியவர்களின் செயல்களை வெறுத்தார்கள்; நல்லவர்கள் பணிகளை ஏற்றுக் கொண்டார்கள்; இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன. மனிதர்களும் கொடுமைகளை வெறுக்க வேண்டும்; கொடியவர்களை வெறுக்க வேண்டும்; நன்மைகளை செய்யவேண்டும்; நல்லவர்களைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே கடவுளைப் பற்றிய இக்கதைகள் எழுந்தன. இத்தெய்வங்கள் தங்கள் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவுவதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. இப் பாடல் களிலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காட்டும் ஆதரவும் அன்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, தமிழர்கள், தங்கள் வணங்கும் கடவுளரைப் பெண்டு பிள்ளைகளுடன் அமைத்துக் காட்டியிருப்பது மாநில மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டுவதற்காகத்தான் என்பது உண்மை. அவர்கள் கடவுள் ஒன்றென்பதை அறியாமல் இப்படிச் செய்து விடவில்லை; கடவுள் உருவமற்றவர் என்பதை உணராமல் இப்படிச் செய்து விடவில்லை. தமிழ் இலக்கியங்களை நன்றாகச் சுவைத்தவர்கள் இவ்வுண்மையை உணர்வார்கள். இவ்வுண்மையை ஒரு உதாரணத்தால் காண்போம். திருவாரூர் நான்மணிமாலை என்பது ஒரு சிறு நூல்; குமர குருபரால் இயற்றப்பட்டது. இந்நூலிலே திருவாரூரின் சிறப்பைக் காணலாம்; இயற்கை வளத்தைக் காணலாம். இந்நூலிலே ஒரு ஆசிரியப்பாவில் திருவாரூரின் இயற்கைக் காட்சியும், சிவ பிரானும் பார்வதியும் தங்கள் குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சும் காட்சியும் குறிக்கப்பட்டிருக் கின்றன. இந்த ஆசிரியப்பாவில் 28 அடிகள் இருக்கின்றன. முதல் 14 அடிகள் திருவாரூரின் காட்சியைக் காட்டுகின்றன; அடுத்த 14 அடிகள், பரமசிவனும் பார்வதியும் தங்கள் குழந்தையிடம் காட்டும் அன்பை அறிவிக்கின்றன. சூரியன் கதிரைக் கண்டறியாத அடர்ந்த இருண்ட சோலை. மேகங்கள் படுத்துறங்கும்படி வான் முட்ட வளர்ந்த சோலை. காவலர்கள் விரட்டுவதற்கு அஞ்சி ஒரு குரங்கு அச் சோலையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் கிளையிலே பதுங்கிற்று. மனித உருவும் மிருகத் தோற்றமும் கலந்ததே குரங்கின் உருவமாகும். கரிய விரலையுடைய அந்தக் குரங்கு தன் எதிரிலே பொன்னிறமான சுளைகளையுடைய ஒரு பலாப் பழத்தைக் கண்டது. உடனே பல்லையிளித்துக் கொண்டு அப்பழத்தைத் தன் மடியிலே தூக்கி வைத்துக் கொண்டது. அதைத் தன் நகத்தால் கீறிப் பலாச்சுளைகளை எடுத்துத் தின்றுகொண்டிருக்கின்றது. இக்காட்சியைக் காணும்போது பழய செய்தி ஒன்று நினைவுக்கு வருகின்றது. வியப்பைத் தருகின்றது. இரணியனைக் கொல்லுவதற்காகத் தூணிலே தோன்றிய நரசிங்கம் அவ் விரணியனைத் தன் துடையிலே வைத்துக் கொண்டு அவன் மார்பைக் கீறி அவனுடைய நீண்ட குடலை எடுத்துத் தின்ற காட்சி நினைவுக்கு வருகின்றது. இத்தகைய காட்சிகள் நிறைந்த சோலைகள் அமைந்த திருவாரூர், நல்ல வயல்கள் சூழ்ந்த மருத நிலத்திலேயுள்ள அழகிய குளிர்ந்த திருவாரூர். முதல் பதினான்கு அடிகளில் அமைந்த பொருள் இது. அடுத்த பதினான்கு அடிகளில் அமைந்திருக்கும் அரும் பொருள் கீழ்வருவது:- திருவாரூரில் அமர்ந்திருக்கும் எந்தையே! எம்பெருமானே! சிம்மாசனத்திலே இரவும் பகலும் நீயும் இறைவியும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றீர்கள். இறைவி இடப்பக்கத்தில், நீ வலப் பக்கத்தில். உங்களைப் பார்த்தால் இரவும் பகலும் ஒன்று சேர்ந்திருப்பது போன்ற காட்சி. நீ செந்நிறம், இறைவி கருநிறம். இக்காட்சி இரவும் பகலும் போல் இருக்கின்றது. உங்கள் நடுவே இளங் குழந்தையான முருகனை வைத்துக் கொண்டு கொஞ்சுகின்றீர்கள். ஒருவரை விட மற்றொருவர் மிகவும் மனங்கனிந்து அக்குழந்தையை எடுத்து எடுத்துத் தழுவிக் கொள்ளுகின்றீர்கள். சந்திர -சூரிய- அக்கினியென்னும் முச்சுடரும் குளிர்ச்சி யடையும்படி அக்குழந்தையைக் கண்டு மகிழ்கின்றீர்கள். அக்குழந்தையின் உச்சியிலே முத்தம் இடுகின்றீர்கள். அக்குழந்தையின் மழலைச் சொற்கள் செவ்வல்லி மலரிலே கசியும் தேனைப்போல இருக்கின்றன; வேதத்தின் எழிலிசையைப் போல இருக்கின்றன. அத்தகைய சிறந்த மழலைச் சொற்களைக் கேட்டு மகிழும் உங்கள் செவி களிலே என்னுடைய அற்பமான சொற்களைக் கூறி உங்கள் அருளைப் பெற விரும்புகின்றேன். எனது நிலை மிகவும் வியப்புக்குரியதுதான். இவ்வாறு இரண்டாவது பகுதி கூறுகின்றது. இப்பகுதியில் குழந்தைகளிடம் பெற்றோர்களுக்குள்ள அன்பு அப்படியே படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஒண்கதிர் பரப்பும் செங்கதிர் கடவுள் வெயில்கண்டு அறியா வீங்குஇருள் பிழம்பின், புயல்கண் படுக்கும் பூம்தண் பொதும்பின், காவலர்ப் பயந்து பாதபத்து ஒதுங்கிய இருவேறு உருவின் கருவிரல் மந்தி, பொன்நிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை முன் உறக் காண்டலும் முளை எயிறு இலங்க, மடித்தலத்து இறுத்தி வகிர்ந்துவள் உகிரால், தொகுத்த பொன் சுளைபல் எடுத்துவாய் மடுப்பது, மானுட மடங்கல் தூண்இடைத் தோன்றி, ஆடகப் பெயரின் அவுணன் மார்பு இடந்து, நீடுபைம் குடரின் நிணம் கவர்ந்து உண்டுஎன இறும்பூது பயக்கும் நறும்பணை மருதத்து அம்தண் ஆரூர்; இது செய்யுளின் முதல் பகுதியாகும். இதன் தொடர்ச்சி இரண்டாம் பகுதியாகும். எந்தை! எம்பெரும! சிங்கம் சுமந்த செழுமணித் தவிசில், கங்குலும் பகலும் கலந்து இனிது இருந்துஆங்கு, இடவலம் பொலிந்த இறைவியும் நீயும் நடுவண் வைகும் நாகு இளம் குழவியை, ஒருவரின் ஒருவர் உள்ளம் நெக்கு உருக இருவரும் தனித்தனி ஏந்தினிர் தழீஇ, முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி, உச்சி மோந்தும், அப் பச்சிளம் குழவி நாறுசெங் குமுதத் தேறலோடு ஒழுகும் எழுதாக் கிளவியின் ஏழ்இசைப் பழுத்த இழுமென் குரல மழலைத் தீஞ்சொல் சுவை அமுது உண்ணும் செவிகளுக்கு, ஐய! என் பொருள் இல் புன்மொழி போக்கி, அருள்பெற அமைந்தது, ஓர் அற்புதம் உடைத்தே! செல்வமும் வறுமையும் ஒருவன் ஏராளமான செல்வங்களைப் படைத்திருக்கலாம். எல்லா வசதிகளும் அமைந்த குடியிருக்கும் இடம்; ஏவிய வேலைகளைக் கேட்கும் வேலைக்காரர்கள்; எள் என்றால் எண்ணெய் கொண்டுவரும் சுறுசுறுப்புள்ள ஏவலாளர்கள்; தன் விருப்பப்படி நடந்துகொள்ளும் மனைவி மக்கள்; நிலத்திலே திரியவேண்டிய கஷ்டமில்லாதபடி, நினைத்த இடத்திற்கு விரைந்து செல்லக் கூடிய வாகன வசதிகள்; எண்ணியவைகளை யெல்லாம் - விரும்பியவைகளையெல்லாம் - உடனே பெறக் கூடிய பண வசதி- இவைகள் எல்லாவற்றையும் ஒருவன் பெற்றிருக்கலாம். இவ்வளவு வசதிகளையும் பெற்ற ஒருவன் மனச்சாந்தி இல்லாமல் வாழ்வானாயின்- மன அமைதியில்லாமல் வாழ் வானாயின்- இருப்பது போதும் என்ற நிலை மனம் இல்லாமல் வாழ்வானாயின்- இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைந்து திரிவானாயின்- அவன் வாழ்விலே கடுகளவும் இன்பத்தைக் காண முடியாது. எப்பொழுதும் வேளா வேளைக்கு உணவுகூட அருந்த முடியாமல், ஓய்வு பெற முடியாமல், இரவில்கூட உறக்கமில்லாது கவலையுடன்தான் அவன் வாழ்வான். கவலைப் படுகின்றவன் வாழ்க்கையில் இன்பத்தையோ மகிழ்ச்சியையோ காணமுடியாது. மன நிறைவு இல்லாதவன் எவ்வளவு செல்வங் களை- வசதிகளை- உடையவனாயிருந்தாலும் அவன் வறியவன் தான்; ஏழைதான். இத்தகையோர் சிலரை நாம் கண்டிருக்கலாம். ஒருவனுக்கு இருப்பதற்குக்கூட இடம் இல்லை; விரும்பிய உணவை உண்பதற்கும் பணம் இல்லை; அன்றாடம் உழைத்துத் தான் சாப்பிட்டாக வேண்டும்; ஒரு நாளைக்கு உழைப்பில்லா விட்டால்- உழைப்பினால் கிடைக்கும் வருமானம் இல்லா விட்டால்- அவனும் அவன் குடும்பமும் உண்ணா விரதிகளாகத் தான் காலம் போக்க வேண்டும். இத்தகைய வறியவன் வாழ்விலே குதூகலத்தைக் காண் கிறோம். போதுமான வருமானமும், தேவையான உணவும் கிடைத்தபோது அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் ஆனந்தக் கூத்தாடுவதைக் காணலாம்; எல்லா வசதியும் இருந்தும் கவலையும் துக்கமும் துணையாகக் கொண்டு வாழ்வோரைக் கண்டு நக்கல் செய்வதைக் காணலாம். நாளையைப் பற்றிய கவலையே அவனுக்கில்லை; ஏராளமான செல்வத்தைக் குவித்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனிடம் இல்லை. இதனால்தான் வறுமைக்கும் அஞ்சாமல் அதனுடன் போராடி மகிழ்ச்சியடைகின்றான். எல்லா வசதிகளையும் படைத்தவர்கள் கவலையால் வருந்துவதற்குக் காரணம் என்ன? ஒரு வசதியும் இல்லாமல் கூலிக்கு உழைப்பவன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குக் காரணம் என்ன? - இக்கேள்விக்கு மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உள்ளவர்கள் உடனே கூறும் பதில் ஒன்றுதான். எல்லாம் தலைவிதிதான்; பூர்வ ஜன்ம வினைதான். அவனவன் தலை யெழுத்துப்படியே ஒவ்வொருவனும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்; இதை மாற்ற நம்மால் முடியாது என்று கூறிவிடுவார்கள். ஆனால் மத நம்பிக்கையும், தெய்வ பக்தியுமுள்ள குமரகுருபரர், மேலேகாட்டிய கேள்விகளுக்குச் சொல்லியிருக்கும் விடை இதுவன்று. அது வேறுவிதமானது. சிதம்பர மும்மணிக்கோவையில் உள்ள இருபத்தைந்தாவது செய்யுளில் அவ்விடையைக் காணலாம். கொடி, முரசு, வெற்றியைக் காட்டும் வெண்பட்டுக் குடை- இவைகள் மற்ற அரசர்களுக்கு இல்லாமல் செய்தவன்; தான் ஒருவனே இவைகளைக் கொண்டவன்; இவ்வுலகம் பலருக்கும் பொது என்பதை ஒழித்தவன்; தனது ஆட்சிச் சக்கரத்தை எல்லா திசைகளிலும் இயங்கச் செய்திருப்பவன்; செவியினால் எல்லா வற்றையும் கேட்டறிபவன்; தான் சொல்ல வேண்டியதை வாயினால் சொல்லாமல் கண் குறிப்பினால் வெளியிடுகின்றவன்; அவனுடைய கண் குறிப்பைக் கொண்டே அவன் என்ன நினைக்கின்றான் என்பதைத் தெரிந்து கொண்டு அதைச் செய்து முடிக்கும் அமைச்சர்களையும், ஏவலர்களையும் பெற்ற வன் - இவ்வாறு இவ்வுலகை ஆளும் ஒப்பற்ற பெரிய மன்னவன் அவன். இத்தகைய அரசன் தன்னைக்காட்டிலும் சிறந்த ஒருவனுடைய செல்வத்தைப் பார்க்கின்றான். அவனுடைய செல்வத்தைவிட, தனது செல்வம் குறைவாகக் காணப்படுகின்றது. அதனால் அவன் தனது செல்வத்தை இழந்தது போன்ற துன்பத்தை அடைகின்றான். பொறாமை கொள்ளுகின்றான். அந்த மிக்கோனுடைய செல்வத்தைக் கவர்வதற்கான வழிகளை எல்லாம் ஆராய்கின்றான். இதன் காரணமாக- பிறன் செல்வத்தைக் கண்டு ஆற்றாமையும், பொறாமையும் கொண்டதன் காரணமாக அவன் சுவையுள்ள உணவுகளை உண்ணமாட்டான்; தூங்கும் சுகத்தை அறியமாட்டான்; பெண்களால் அடையும் இன்பத்தையும் துறப்பான். அவன் சிறுமூச்சும் பெருமூச்சும் விட்டுக் கவலைப் பட்டு வருந்துவதைக் காண்கிறோம். இப்படியில்லாமல்- எச்செல்வமும் இல்லாமல் வாழுகின்ற ஒருவன், விறகுக்கட்டைத் தலையிலே சுமந்து கொண்டு ஊர் தோறும் சென்று விலைகூறி விற்கின்றான். இதுதான் அவன் தொழில். இதனால் கிடைக்கும் கூலிதான் அவன் வருமானம். இந்த வருவாயைக் கொண்டு கூழும் கீரையும் உண்டு வாழ் கிறான் அவன். தன் மக்களையும், மனைவியையும் பார்த்து மகிழ்கின்றான். இவ்வாறு வாழ்கின்றவன் பக்கத்து வீட்டிலே வாழ்கின்ற ஒரு சோம்பேறியைப் பார்த்துப் பழிக்கிறான்; பரிகசிக்கிறான். எனக்கு யாரும் இணையில்லை என்று எண்ணி எப்பொழுதும் உழைக்கிறான். இத்தகைய ஒருவன் உள்ளத்திலே ஒரு கவலையும் இல்லாமல் களிப்புடன் வாழ்வதைக் காண்கின்றோம். இக்காட்சியிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் உண்மை ஒன்றுண்டு. செல்வம் என்று சொல்லப்படுவது போதும் என்ற மனநிறைவேயாகும். பெரிய வறுமை என்று சொல்லப்படுவது இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்! என்னும் ஆசையே யாகும். இதுவே மேலே கண்ட காட்சியிலிருந்து நாம் காணும் உண்மையாகும். மன நிறைவுதான் செல்வம்; ஆசைதான் வறுமை என்று கூறினார் குமரகுருபரர். செல்வம் உள்ளவன் துன்பத்திற்குக் காரணம் மனக்குறைதான்; வறியவன் மகிழ்ச்சிக்குக் காரணம் மனநிறைவுதான். இவ்வுண்மையை உணர்ந்தவர்கள், செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் வாழவே முயல்வார்கள். இப்பொருள் அமைந்த பாட்டு கீழ்வருவதாகும்:- கொடியும், முரசும் கொற்றவெண் குடையும் பிறர் கொளப்பொறஅன், தானே கொண்டு பொதுநீங்கு திகிரி திசை திசை போக்கிச் செவியில் கண்டு, கண்ணின் கூறி, இருநிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்; மிக்கோன் ஒருவன் வெறுக்கை நோக்குழித் தொக்க, தன் வெறுக்கை சுருங்கித் தோன்ற இழப்புஉறு விழுமம் எய்தி, அழுக்கறுத்து, மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ; அயில்சுவை பெறாஅன், துயில்சுவை உறாஅன், மாண்இழை மகளிர் தோள்நலம் கொளாஅன், சிறுகாற்று வழங்காப் பெருமூச்சு எறிந்து கவலையுற்று அழிவதூஉம் காண்டும்; அதாஅன்று, விறகெடுத்து ஊர்தொறும் சுமந்து விற்றுக் கூலிகொண்டு, புற்கையும், அடகும் மாந்தி, மக்களோடு மனையும் பிறவும் நோக்கி, அயல்மனை, முயற்சியில் மகனை இழித்தனன், எள்ளி. எனக்கு இணை இலை, என வினையன், மற்று ஒருவன் மனக்களிப்பு உறீஇ மகிழ்வதூஉம் காண்டும்; அதனால், செல்வம் என்பது சிந்தையின் நிறைவே; அல்கா நல்குரவு அவாஎனப் படுமே. இதுவே சிதம்பர மும்மணிக்கோவையின் சிறந்த பாட்டு. இச்செய்யுளில் அமைந்துள்ள இரண்டு அடிகள் குறிப்பிடத் தக்கவை. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே; அல்கா நல்குரவு அவாஎனப் படுமே. இவ்வடிகள் நம் மனத்தில் மறவாமல் உலவ வேண்டிய மணிமொழிகள். இம்மொழிகளை மறவாதவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதில் ஐயம் இல்லை. அதிருப்திக்கு- மனக் குறைக்கு- இதைவிடச் சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை, இம்மருந்தைக் கொள்வோர் மகிழ்ச்சி யுடன் வாழ்வர் என்பதை மறுப்பார் யார்? குரு பக்தி குருமார்கள் இருவகைப்படுவார்கள். ஒருவகையினர், வித்தை- கல்வி கற்பிக்கும் குருமார்கள். மற்றொரு வகையினர் ஞானத்தையூட்டும் குருமார்கள்; இவ்வாறு வித்யா குரு, ஞான குரு என்று இருவகையினராகக் கொண்டனர் குருமார்களை. இது பண்டைக்கால முறை. வித்யா குரு என்பவர்கள் கல்வி கற்பிப்பவர்கள்; பல நூல்களைப் போதிப்பவர்கள்; பல தொழில்களைக் கற்றுக் கொடுப்பவர்கள், சுருக்கமாகக் கூறவேண்டுமானால், இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய அறிவு புகட்டும் கல்வி கற்றுக் கொடுப் பவர்கள் வித்தை கற்பிக்கும் குருமார்கள் ஆவார்கள். ஞான குரு என்பவர்கள், மறுமை இன்பத்தைப் பெறுவதற்கு வேண்டிய ஞானோபதேசம் புரிகின்றவர்கள்; மதகுருமார்கள் என்பவர்களும் ஞான குருமார் இனத்தைச் சேர்ந்தவர்கள். மடாதிபதிகள், பாதிரிமார்கள் போன்றவர்களும் ஞான குருமார் இனத்தைச் சேர்ந்தவர்கள். சைவ சித்தாந்தத்திலே குரு பக்தி, சிவ பக்தி, அடியார் பக்தி- இவை மூன்றும் சிறப்பாகக் கொள்ளப்படுகின்றன. இதைத்தான் குருலிங்க சங்கம் பக்தி என்பார்கள். இறைவனே குரு வடிவாக, எழுந்தருளிப் பிறவிப் பிணியை நீக்க ஞானத்தை உபதேசிக்கின்றான் என்பது சைவ சித்தாந்த முடிவு. குருவையும் கடவுளைப்போலவே எண்ணி வணங்கு வதும், போற்றுவதும் சைவ சமயத்தின் கோட்பாடுகளில் ஒன்றாகும். சைவ சமய பக்தர்களில் பலர்- அடியார்களில் பலர்- புலவர்களில் பலர் -தங்கள் ஞானகுருவைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பல உண்டு. போற்றியுரைத்த நூல்கள் பல உண்டு. அப்பாடல்களையும், நூல்களையும் கொண்டு குரு பக்தியின் பெருமையைக் காணலாம். இதற்கு உதாரணமாகக் குமரகுருபர சுவாமிகளின் குரு பக்தியைக் கூறலாம். குமரகுருபரர் நல்ல தமிழ்ப் புலவர்; சிறந்த கற்பனா சக்தியும், கவிதா சக்தியும் படைத்தவர். அவருடைய ஞானகுரு மாசிலாமணி தேசிகர் என்பவர். இவர் தருமபுர ஆதினத்தின் நான்காவது குருமூர்த்தி ஆவார். இந்த மாசிலாமணி தேசிகரைப் போற்றும் முறையிலே குமரகுருபரர் பாடியிருக்கும் நூலுக்குப் பண்டார மும்மணிக்கோவை என்று பெயர். இந் நூலில் அவர் தமது தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொள்ளு வதாக அமைந்துள்ள ஒரு பாடலைக் காணலாம். மாசிலாமணி என்ற நல்ல பெயரை நிலை நிறுத்தினாய்; மிகச் சிறப்புடன் அமர்ந்திருக்கின்ற ஞானசம்பந்தனே! இங்கே, அடியேன், உன்னை வேண்டிக் கொள்ளுவது ஒன்றுண்டு; அது யாதென்றால்: மதவாதிகள் ஆன்மா வேறு, கடவுள் வேறு என்பர்; ஆன்மாவும் கடவுளும் வேறல்ல: இரண்டும் ஒன்றேதான் என்பர்; கடவுளும் ஆன்மாவும் வேறும் ஆகும், ஒன்றும் ஆகும். என்பர்; இவ்வாறு பலவாறு கூறும் சொற்களின் வழியிலே சென்று நான் தடுமாறாமல் இருக்கவேண்டும்; தெய்வத்தன்மை பொருந்திய சைவசித்தாந்தம் கூறும் அழியாத நிலைமையைப் பெறவேண்டும். அந்நிலையைப் பெற்று, இன்பத்திலே திளைத் திருக்கும் பிறவா நெறியை நான் அடையவேண்டும்; இதற்கு நீ அருள் செய்ய வேண்டும். இந்த அருளை நீ தராவிட்டால் இங்கு வேறொரு பிறவியை வேண்டுகின்றேன். அப்பிறவியையாவது எனக்கு நீ கொடுத்தருள வேண்டும். அந்தப் பிறவி எதுவென்றால், கூறுகிறேன் கேட்டருளுங்கள். ஐந்தருக்களின் நிழலின் கீழ் அரசனாக வீற்றிருந்து- அமரர்கள் பணிசெய்யும் தேவேந்திரனாக இருந்து- இன்பமுறும் பிறவியை நான் வேண்டவில்லை. நான்முகனாகி, தாமரை மலரிலே வீற்றிருந்து பலரும் கொண்டாடும்படி, இவ்வுலகத்து உயிர்களைப் படைக்கும் தெய்வப் பிறவியையும் நான் விரும்பவில்லை. இந்திரன், நான்முகன், திருமால் என்ற பிறவிகளிலே பிறந்தாலும் பழவினையை ஏமாற்றிவிட முடியாது. இந்தப் பிறவிகளில் இன்பம் உண்டு என்று கூறினாலும், தீவினை தன் பலனைத் தராமல் இராது. ஆதலால், இப் பிறவிகளைத் தவிர நான் வேறு எப்பிறவியைத்தான் வேண்டுகின்றேன் என்றால், அதையும் சொல்லிவிடுகின்றேன். உன் பாதத்துக்குப் பணி புரிகின்றவர்கள் யாராயிருந் தாலும் சரி, அவர்கள் சிறந்த கல்வியும் ஒழுக்கமும் இல்லாதவர் களாயினும் சரி- அவர்கள் திருவமுது உண்டபின் தெருவிலே எறியப்பட்ட எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு இப் பிறவிக்கடலிலே கிடந்து வருந்தும் உன் வரம் பெற்ற ஒரு நாயாய்ப் பிறந்து வாழ விரும்புகிறேன். நாயாய்ப் பிறந்து எச்சில் இலையைப் பொறுக்கினாலும் உன் அருளை மறவாமல் வாழ விரும்புகின்றேன். இதுதான் எனது வேண்டுகோள் என்று பாடுகின்றார். இதனால் குரு பக்தியின் சிறப்பைக் காணலாம். இப் பொருள் அமைந்த பாடல்தான் கீழ்வருவது:- மாசிலா மணிஎன வண்பெயர் நிறீஇ, மேன்மையோடு அமர்ந்தஞான சம்பந்த; ஈண்டுஉனைத் தமியனேன் வேண்டுவது யாது எனின்? அந்நியம் என்றும், அநநியம் என்றும், இந்நிலை இரண்டும் எய்திற்று என்றும், பல்வேறு உரைக்குநர் சொல்வழிப் படாது. திவ்வியம் பழுத்த சைவ சித்தாந்தத்து இறவா நிலைமைபெற்ற இன்பம் ஆர்ந்து இருக்கும் பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே; அங்கது புரிதற்கு அரிது எனின், இங்கு ஒரு சன்னம்யான் வேண்டுவது இனிது அருள் எனக்கே! அதுவே, ஐந்தரு நிழல்கீழ் அரசுவீற் றிருக்கும் இந்திரன் ஆகி வாழ்ந் திருப்பதோ; அன்றே; மலரோன் ஆகி மன்உயிர்த் தொகுதி பலர் புகழ்ந்து இசைப்பப் படைப்பதோ; அன்றே; அடல்அரா வணையில் அறிதுயில் அமர்ந்த கடவுளாய் உலகம் காப்பதோ; அன்றே; அவைதாம்: ஆரா இன்பம் என்று அரும்பெயர் பெறினும் வாரா வல்வினை வருவிக் கும்மே. அன்னவை ஒழிய, மற்று என்னைகொல்? பிறஎனில், விழுத்தகு கல்வியும் ஒழுக்கமும் இலராய்ப் பழிப்பு உளர் ஆயினும் ஆக; வழுத்திநின் பொன்அடித் துணைசேர் நின்னடித் தொண்டர் திருஅமுது ஆர்ந்து தெருக்கடை எறிந்த பரிகலம் மாந்தி, இப்பவக் கடல் உழக்கும் வான்உடை ஞமலி யாகிநின் அருளையும் அயராது அவதரிப் பதுவே. இதுவே குரு பக்தியைக் காட்டும் குமரகுருபரர் பாடல். எனக்குச் சைவ சித்தாந்த போதம் அருளி, அந்நெறியிலே வாழ அருள் செய். இன்றேல், இவ்வுலகில் ஒரு நாயாகப் பிறந்து, உனது அடியார்களின் எச்சில் இலையை உண்டு, உன்னை மறவாமலிருக்கும்படியாகவாவது அருள் செய்யவேண்டும் என்ற கருத்துள்ளதே இப்பாடல். குருவை வேண்டுவதனால் குருபக்தி; சைவ சித்தாந்த நெறியிலே நின்று சிவபிரானைப் பணிய வேண்டுவதால் லிங்க பக்தி; நாயாய்ப் பிறந்தாவது அடியார்களின் எச்சில் இலையைத் தின்ன விரும்புவதால் அடியார் பக்தி (சங்கம் பக்தி) ஆகிய மூன்று கொள்கைகளையும் இச்செய்யுளில் காணலாம். கவிகளின் பெருமை இக்காலத்தில் கவிகள் கணக்கில்லாமல் மலர்கின்றன; அவற்றில் கவி மணம் கமழ்கின்றதா என்பது விவாதத்திற்கு உரிய செய்தி. கவி மணம் வீசும் செய்யுட்களும் உண்டு; மணம் அற்ற பாடல்களும் உண்டு, மணம் வீசாத பாடல்கள் எல்லாம் வெயிலால் வாடி வதங்கி உதிர்ந்து காய்ந்து சருகாகப் போகும் மலர்களைப் போலவே சிதைந்துவிடுகின்றன. கவிகள் சுவையுள்ளனவோ, சுவை இல்லாதனவோ- அவற்றைப்பற்றிப் பாடுவோர் கவலைப்படுவதில்லை. தமது கவிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா? ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? - என்பதைப் பற்றிக்கூடப் பலர் கவலைப் படுவதில்லை. தமது பாடல்கள் படிப்போர் மனத்திலே குடிகொள்ளுமா? குடி கொள்ளாதா? - என்பதைப் பற்றிக்கூடப் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. நமது பாடல்கள் பத்திரிகைகளில் வெளிவந்தால் போதும்; அல்லது புத்தக உருவில் வெளியிடப்பட்டால் போதும் என்று நினைக்கின்றனர். பிறர் படிக்காவிட்டாலும்- சுவைக்கா விட்டாலும்- பாராட்டாவிட்டாலும், தாம் எழுதிய பாடல் களைத் தாமே படித்துப் படித்து இன்புறுவோர் உண்டு. தாம் எழுதியவை கவிகளாயினும் சரி, கட்டுரைகளாயினும் சரி, கதைகளானாலும் சரி- அவற்றைத் தாமாகவே ஒன்றிரு தடவை படித்து மகிழாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சிலரே இதற்கு விலக்காக இருக்கலாம். நல்லவையோ கெட்டவையோ, உயர்ந்தவையோ, தாழ்ந் தவையோ- விடாமுயற்சியுடன் எழுதிக்கொண்டே இருப்பவர் களைப் பாராட்டத்தான் வேண்டும். நீந்தக் கற்றபின்தான் தண்ணீரில் குதிப்பேன் என்றால் முடியுமா? ஏதோ காமா சோமா என்று எழுதப் பழகத்தான் வேண்டும். இப்படித் துணிந்து எழுத முன்வருகின்றவர்கள் வர வர எழுத்திலே வல்லவர்கள் ஆவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவர் களிடம் ஓர் உறுதி மட்டும் வேண்டும். நான் சிறந்த புலவனாவேன்; கவிஞன் ஆவேன். மக்கள் மனத்தைக் கவரும்படி கவி எழுத வல்லவனாவேன் என்பதுதான் கவி எழுதுவோன் உள்ளத்தில் இருக்க வேண்டிய உறுதி. இதைப் போலவே, நான் சிறந்த கட்டுரையாளன் ஆவேன்; கதை ஆசிரியனாவேன்; படிப்போர் சுவைக்கும்படி கட்டுரை களும் கதைகளும் இனிமை தவழ எழுதும் சக்தியைப் பெற்றே தீருவேன் என்ற உறுதி, மறுமலர்ச்சி எழுத்தாளன் மனத்திலே இருக்கவேண்டும். இத்தகைய எழுத்தாளன் பிற்காலத்திலே பலரும் போற்றத்தக்க எழுத்தாளன் ஆவான் என்பதில் ஐயமில்லை. ஆகவே, முயற்சியும் உறுதியும் வீண்போகமாட்டா. மக்களை முன்னுக்குத் தள்ளும் ஊர்திகள் இவைதாம். இந்த முயற்சியும் உறுதியும் இரு வகைகளில் ஏற்பட வழியுண்டு. ஒருவகை, தன்னம்பிக்கையுடன் உழைப்பது; எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் சலிக்காமல் உழைப்பது. தாம் எழுதுவன நன்றாயில்லை என்று பிறரால் புறக்கணிக்கப்பட்டாலும் அலுப்புச் சலிப்பில்லாமல் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதுவது; எழுதியவை நன்றாக இல்லா விட்டால் எழுதியவற்றைச் சுக்குநூறாகக் கிழித் தெறிந்துவிட்டுப் புதிதாக எழுதுவது; மையும் காகிதமும் நேரமும் வீணாகின்றனவே என்று கவலைப்படாமல் மேலும் மேலும் எழுதிக்கொண்டே இருப்பது. இவ்வாறு செய்வது முயற்சியும் உழைப்பும் ஆகும்; முன்னேறுவேன் என்ற உறுதியையும் காட்டுவதாகும். இத்தகை யவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. இன்றில்லா விட்டாலும் நாளைக்கு வெற்றி நிச்சயம். வெற்றி பெறுவதற்கு வேறு ஒரு வழியும் உண்டு. அது தெய்வ நம்பிக்கை. தமிழக மக்கள், கலைத் தெய்வமாகக் கலைமகளை வழிபட்டு வருகின்றனர். கலைத் தெய்வ வணக்கம் பாரத நாடு முழுவதும் உண்டு. இந்தக் கலைத் தெய்வத்தைச் சரசுவதி என்றும், இவள் பிரமதேவன் மனைவி என்றும், அவனுடைய நாவில் வசிப்பவள் என்றும் புராணங்கள் கூறும். இப்புராணக் கூற்றுப் புனைந்துரையாகும். ஆயினும் இதில் ஒரு தத்துவம் உண்டு. நான்முகன் நாவில் இருப்பவள் கலைமகள் என்ற கூற்றை ஆராய்ந்தால் இவ்வுண்மையைக் காணலாம். யாராவது நாக்கிலே ஒரு பெண்ணை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு பெண்ணை நாக்கிலே உட்கார வைத்துக்கொள்ளுவ தென்றால், அந்த ஆண் உருவம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? அல்லது ஓர் ஆண் உருவத்தின் நாவிலே ஒரு பெண் உருவம் உட்கார்ந்தோ படுத்தோ இருப்பதென்றால் அப் பெண்ணின் உருவம் எப்படி இருக்க வேண்டும்? இந்தப் பெண்ணும் ஆணும் கணவன்- மனைவி என்றால், அவர்களுக்குள் உருவப் பொருத்தம் இருக்க முடியுமா? இவற்றை எண்ணிப் பார்த்தால் கலைமகள் என்பது ஒரு கற்பனை என்பதைக் காணலாம். நாவன்மையைத்தான் நாமகள் என்று குறித்தனர். கலைத் திறமையைத்தான் கலைமகள் என்று குறித்தனர். கலைமகள் வெண்தாமரை மலரில் வீற்றிருப்பாள் என்று குறித்திருப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்; வெண்தாமரை என்பது உள்ளத் தைக் குறிப்பது. வெண் தாமரை உள்ளத்தின் தூய்மையை உணர்த்துவது. நாமகள் என்பது நாவின் வல்லமையைக் காட்டுவது. இதை அறியாமல், நாமகள் என்பவள், புராணங்கள் சொல்லுவது போல் நான்முகன் நாவிலே வீற்றிருப்பவள் என்று நம்பி அவளை வழிபடுகின்றவர்களும் சோர்வடைந்து விடுவதில்லை. நம்பிக்கை அவர்களுக்கு உள்ள துணிவையும், நாவன்மையையும் அளிக்கின்றது. நாமகளை வழிபட்டுப் பாடும் புலமை பெற்ற புலவர்கள்- கவிகள்- பலருடைய வரலாறுகளைக் கேட்டிருக்கின்றோம். நம்பிக்கை வீண் போவதில்லை. நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு என்பது ஒரு பெரியார் வாக்கு. நம்பிக்கை வெற்றிப் பாதையிலேதான் நடத்திச் செல்லும். இத்தகைய நம்பிக்கை கொண்ட புலவர்களிலே குமர குருபர சுவாமிகள் ஒருவர். அவர் தனக்கு நல்ல செய்யுள் திறமை வேண்டும் என்று நாமகளை முன்னிட்டுப் பாடுகின்றார். நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள் வாய்; பங்க யாசனத்தில் கூடும் பசும் பொன் கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகலகலா வல்லியே! என்பது அவர் பாடல்களுள் ஒன்று. இப்பாடலில், அவர் தனக்கு நல்ல சொல்லின்பம், பொருளின்பம் அமையும்படி நான்கு வகையான கவிதைகளையும் பாடும்படி அருள் செய்வாய் என்று கலைமகளை வேண்டுகின்றார். தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பசுமை யான பொற்கொடியே! பருத்த தனமாகிய குன்றுகளையும் ஐந்து வகையாக அழகு செய்யும் கூந்தல் காட்டையும் சுமந்திருக்கும் கரும்பே! சகலகலாவல்லி என்னும் பெயருள்ளவளே! பிறர் விரும்பும்படி, சொற் சுவையும் பொருட் சுவையும் அமையும்படி ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்கு வகையான கவிதைகளையும் பாடும்படி எனக்கு அருள் செய்வாய் என்பதே இதன் பொருள். குமரகுருபரரிடம் இருந்த உறுதியுள்ளம் அவரைச் சிறந்த கவியாகச் செய்தது என்பதில் ஐயமில்லை. ஆகவே, உறுதியும் உழைப்பும் வெற்றி தரும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. கவிதா சக்தியே கலைமகள் கல்வியைத் தெய்வமாக உருவகம் செய்து வணங்கினர் நமது முன்னோர்கள். மக்களுக்கு நன்மை தரும் பலவும் தெய்வத் தன்மை பொருந்தியவை என்பதே பண்டைச் சான்றோர்கள் கொள்கை. இதை ஒட்டியே கல்வியையும் தெய்வ உருவமாக ஒப்பனை செய்தனர். சொல்லிலே- இனிமையான மொழிகளிலே- தெய்வத் தன்மையுண்டு; சொல்லில் அடங்கிய சிறந்த பொருளிலே- கருத்திலே - தெய்வத் தன்மை உண்டு; சொற்களும் பொருள் களும் சிறப்பாக அமையும்படி பாடும் பாடல்களிலே தெய்வத் தன்மையுண்டு என்பதே முன்னோர் கருத்து. இனிய சொற்களும், இனிய பொருள்களும் அமைந்த பாடல்களிலே சுவையுண்டு; உயிர் ஓட்டம் உண்டு. அவையே பாடுவோர்- கேட்போர் உள்ளத்தை ஆட்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை; பிறர் மனத்தைக் கவரும் வன்மை- ஆற்றல் - சக்தி- படைத்தவை. எவையானாலும் சரி, அதிலே ஒரு தெய்வீக சக்தி உண்டு என்றே அறிவுடையோர் நம்பினர். இனிய மொழியும், அரிய பொருளும், உயர்ந்த நடைப் போக்கும் அமைந்த பாடல்களோ, வசனங்களோ எல்லோரிடமும் பிறந்துவிட மாட்டா; நல்ல ஒழுக்கமும், உயர்ந்த குணமும், இரக்க உள்ளமும், பொதுநலங் கருதும் தன்மையும், தன்னலத் தியாகமும் படைத்தவர்களிடமே பிறக்கும். இத்தகைய பண்பு படைத்தவர்களைத்தான் உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்றெல்லாம் உலக மக்கள் போற்றினர்; வாழ்த்தினர்; புகழ்ந்தனர்; பணிந்தனர். இன்றும் உயர்ந்த பண்புள்ளவர்களை உலக மக்கள் போற்றுவதைக் காண்கின்றோம். அவர்களுக்குச் சாதாரண மக்களைவிடத் தனித்த மதிப்பு பெருகிப் பரவுவதைக் காண்கின்றோம். இந்த உண்மையை அறிந்த மக்கள், தாமும் புகழ் பெற வேண்டும், மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; ஆசைப்படுவார்கள். இவ்வாறு விரும்புவதோடு- ஆசைப்படுவார்கள். இவ்வாறு விரும்புவதோடு- ஆசைப்படு வதோடு- நின்றுவிட்டால் மட்டும் போதாது; இந்த நிலையை அடைவதற்கு முயன்றாக வேண்டும். முயல்பவர்கள் முதலில் தோல்வி கண்டாலும் இறுதியில் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள்: அதனால் இன்பம் அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை. உயர்ந்த நிலையை அடைய- உத்தமர்கள் என்று பெயர் வாங்க- உலக மக்கள் உள்ளத்திலே மதிப்புப் பெற்று வாழ முயன்று வெற்றி பெற்றவர்கள் வரலாறுகள் பலவுண்டு. அநேகமாக நாம் படிக்கும் பண்டைக் கதைகளும் இப்படிப்பட்ட வரலாறுகளைத்தான் சொல்லுகின்றன. புதிய சரித்திரங்களும் இவற்றைத்தான் கூறுகின்றன. சரித்திரங்களானாலும் சரி, கதைகளானாலும் சரி - அவற்றில் எல்லாம் தெய்வத் தன்மை பெற்று வாழ விரும்பிய வரலாறுகளே - கதைகளே - நிரம்பிக் கிடப்பதைக் காண்கிறோம். இந்த உண்மையைக் குமரகுருபர சுவாமிகள் பாடல் ஒன்றிலே காணலாம். உயர்ந்த கவிதையைத் தெய்வத் தன்மை படைத்தது என்று அவர் கூறுகிறார். தெய்வ சக்தி பெற்றால் தான் உயர்ந்த கவிதையைப் பாட முடியும் என்பதும் அவர் கருத்து. கவிதா சக்தியையே கலைமகளாக உருவகம் செய்து பாடுகின்றார் அவர். சகலகலாவல்லி மாலையின் மூன்றாவது பாட்டில் இவ்வரும்பொருளைக் காணலாம். அப்பாடலையும் அதன் பொருளையும் காண்போம். அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து, உன் அருட்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொலோ? உளம் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே, சகலகலா வல்லியே! இதுவே அந்தச் செய்யுள். இனிய சொற்களும் அரிய பொருளும் அமைந்த பாடல். இனிய தமிழ்ச்சுவை நுகர்ந்து உனது அருட்கடலில் விளையாடும் நிலைமை எனக்கு எப்பொழுது கிடைக்குமோ என்று கவிதா சக்தியாகிய கலைமகளை நோக்கி வேண்டுகிறார் ஆசிரியர். இப்பாடலுக்குப் பொருள் சொல்லும்போது கீழ்வருமாறு மாற்றியமைத்துப் பொருள் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் எளிதில் பொருள் விளங்கும். உளம் கொண்டு, தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர், கவிதைமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாபமயிலே, சகலகலாவல்லியே! அளிக்கும் செழுந்தமிழ்த் தன் அமுது ஆர்ந்து, உன் அருள் கடலில் குளிக்கும்படிக்கு என்று கூடுங் கொல் ஓ. இதன் சிறந்த பொருளைக் காண்போம். ஓ, கவிதா சக்தியே! உன்னை உள்ளத்திலே கொண் டவர்கள், தெளிந்த சொற்களைக் கொண்டு விளக்கமான பொருளைக் கூறும் பாடல்களைப் பாடும் புலவர்களாக விளங்குவார்கள். அவர்கள் தங்குதடையின்றி, பலர்க்கும் பயன் தரும்படியான கவிதைகளை மழைபோலப் பொழிவார்கள். அந்தக் கவிமழையைக் கண்டு நீ தோகை பொருந்திய மயிலைப் போல நின்று களித்து நடனமாடுவாய்; எல்லாக் கலைகளையும் உணர்த்த வல்ல உனக்கு இத்தகைய கவி மழையே களிப்பை ஊட்டுவதாகும். இத்தகைய கலைமகளே! எனக்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையளிப்பது நல்ல தமிழ்தான்! - குற்றமற்ற வளம்பொருந்திய தமிழ்தான்- தெளிந்த அமுதம் போன்ற தமிழ்தான்! ஆதலரால் அத்தகைய அமுதமான தமிழின் சுவையை அருந்தவே ஆசைப்படுகின்றேன். என் விருப்பப்படி- தமிழ் அமுதத்தை அருந்தி, உனது அருளாகிய கடலிலே குதித்து நீந்தி விளையாடும் பாக்கியம் எனக்கு என்றுதான் கிடைக்குமோ, அறியேன்! விரைவில் தமிழ் அமுதை அருந்தி உன் அருள் கடலில் நீந்தி விளையாடும் பேற்றை அருள்வாயாக! இதுவே மேலேகண்ட பாடலில் அடங்கியுள்ள அரும் பொருள். இந்தப் பாடலைப் பார்க்கும்போது இது அருட்பாடல் போலவே- கவிதா சக்தி படைத்த பாடல் போலவே- கவிதா தேவியின் அருள் பெற்ற பாடல் போலவே- அமைந்திருப்பதைக் காணலாம். அளிக்கும் செழுந்தமிழ் என்பது அருமையான தொடர். இம்மை, மறுமை இன்பங்களை அளிக்கும் சக்தி பொருந்தியது தமிழ் என்பது இதன் கருத்து. தமிழைத் தெள் அமுது என்று உருவகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தட்டுத் தடங்கல் இன்றி, இனிய சொல்லும், அரிய பொருளும் அமையப் பாடுவோரே கவிஞர் ஆவார். இதனை, தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை என்ற தொடரால் காணலாம். கலைமகளை - அதாவது கவிதா சக்தியை, மயிலாக உருவகம் செய்திருப்பது பாராட்டத்தக்கது. கவிமழை கலாப மயில் - இவைகள் அருமையான உருவகம். கலாபம் = தோகை. மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் (1961) மாணிக்கவாசகர் மாணிக்கவாசகரின் நூல்கள் திருவாசகம். திருக்கோவையார் இரண்டும் ஆகும். திருக்கோவையார் தில்லைக் கூத்தனைத் தலைவனாகக்கொண்டு அகப்பொருட் பாடல்கள்; கட்டளைக் கலித்துறைகளால் ஆனவை. கோவை என்னும் பிரபந்தத்திற்கு இதுவே முதல் நூல். திருவாசகம் சிவபிரானைப் போற்றிப் பணியும் பக்திப் பாடல்கள். படிப்போர் உள்ளத்தை உருக்கும் பண்புள்ள பாடல்கள். பலவகைப்பட்ட பாடல்களைக் கொண்டது. மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், 9- ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் ஆகும். அமைச்சுத் தொழில்புரியும் குடியிலே பிறந்தவர்; பாண்டியனுக்கு அமைச்சராயிருந்தவர். திருப்பெருந் துறையென்னும் ஆவுடையார் கோயிலைக் கட்டியவர் இவர் தான் என்று சொல்லப்படுகின்றார். இவரைப்பற்றி வழங்கும் வரலாறு. பல தெய்வீக நிகழ்ச்சி களைக் கூறுகின்றது. சிவபெருமான் நரிகளைப் பரிகள் ஆக்கியது; பரிகளை மீண்டும் நரிகளாக்கியது. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது; இத் திருவிளையாடல்கள் இவர் பொருட்டே நிகழ்ந்தன என்பது திருவிளையாடல் புராண வரலாறு. சிவபெருமானே குருமூர்த்தியாக எழுந்தருளினார்; இவருக்கு ஞானோபதேசம் செய்து ஆட்கொண்டார் என்பதும் வரலாறு. வாதவூர் அடிகள் புராணம் என்பது இவர் வரலாற்றைக் கூறும் தனி நூல். இவருக்கு வாதவூர் அடிகள் என்ற பெயரும் உண்டு. திருவாதவூரில் பிறந்தவர்; ஆதலால் இப்பெயர் பெற்றார். திருவாசகப் பாடல்களை மணிவாசகர் பாடினார்; தில்லைக் கூத்தனே இவர் பாடல்களின் இனிமையிலே மூழ்கினார்; மணிவாசகர் பாடப்பாடப் பரமசிவனே எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதினார். இது திருவாசகத்தைப்பற்றி வழங்கும் வரலாறு. திருவாசகத்தின் மாண்பை- தெய்வத்தன்மையை விளக்கவே இவ்வரலாறு வழங்குகின்றது. திருவாசகத்தில் உருகார் ஒரு வாசகத்திலும் உருகார் என்பது பழமொழி. வேதம் ஓதுகின்றவர்கள் யாரும் பக்திப் பரவசமாவ தில்லை; விழிகளிலே நீரைப் பெருக்கிச் சிந்துவதில்லை. நெஞ்சம் உருகி நிற்பவர் இல்லை. திருவாசகத்தை ஒரு முறை ஓதினால் போதும். கருங்கல் மனமுள்ளவராயிருந்தாலும் அவர் மனம் கரையும். நீர்க்கேணியில் ஊறும் ஊற்றைப்போல ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கி நிற்பர். இக்காட்சியை நான் கண்கூடாகக் காண்கின்றேன் என்று திருவாசகத்தின் சிறப்பைப்பற்றிப் பாடியிருக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி நெஞ்சம் நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேன்; திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகக், கண்ணீர் தொடுமணல் கேணியின் சுரந்துநீர் பாய அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையோர் இலரே என்பதே அப்பாடல். திருவாசகத்தைப் பாடுவோர்- படிப்போர் இவ்வுண்மையை அனுபவத்தில் காணலாம். மணிவாசகர் உறுதியான சைவப் பற்றுள்ளவர். சிவ பெருமானே பராபரன் என்ற நம்பிக்கையுள்ளவர்; ஆணவ மலத்தை அகற்றிய அன்பர்; அன்பே சிவம் என்ற உண்மையை அறிந்தவர்; உலகத்தை- உலகில் உள்ள பொருள்களையெல்லாம் சிவபெருமான் உருவமாகவே கண்டவர். மணிவாசகர், சிவபெருமானை அன்னையாக- அப்பனாக - தலைவனாக- தேனாக- பாலாக- பழச் சுவையாக- தித்திக்கும் பொருள்களாக- இன்ப ஊற்றாக- வெட்டவெளியாக- பெரிய சோதியாக- கடலாக- மலையாக- ஆறுகளாக- இன்னும் நன்மை தரும் பண்டங்கள் எவை எவைகள் உண்டோ அவை அவை களாகக் கொண்டு பாடிப் பரவுகின்றார். மணிவாசகர் பாடல்களிலே உலக வழக்கம் பலவற்றைக் காணலாம்; வேத வேதாந்த உண்மைகள் பலவற்றைக் காணலாம். தமிழின் இனிமைக்குத் திருவாசகம் எடுத்துக்காட்டு. இதற்கு இணையாக வேறு நூலொன்றும் இல்லை. திருவாசகப் பாடல்களிலே ஏராளமான வடசொற்கள் புகுந்து கிடக்கின்றன. திருவாசகப் பாடல்களில் உள்ள வட சொற்கள் எல்லாம் தமிழ் மயமாகத் தமிழோசை பெற்று விளங்குகின்றன. வடமொழிச் சொற்கள் தமிழிலே புகுந்துவிட்டதால் தமிழின் இனிமை கெட்டுவிட்டது என்போர்க்குத் திருவாசகம் சரியான மறுப்புரையாகும். வாசகம் என்ற சொல்லே வடமொழியாக அமைந்திருக்கின்றது. திருவாசகத்தில் முதலில் அமைந்திருப்பது சிவபுராணம் என்னும் பாடல். சிவபெருமானது பழமையைப் பாடுவது என்பது இதன் பொருள். புராணம்- வடமொழி. நமச்சிவாய என்ற வடமொழி மந்திரத்திலேயே பாட்டுத் தொடங்கு கிறது. நமச்சிவாய; நாதன்; குரு; ஆகமம்; ஏகன்; அநேகன்; வேகம்; பிஞ்ஞகன்; கரம்; சிரம்; இச் சொற்களை சிவபுராணத்தில் முதல் 10 அடிகளிலே காணலாம். இவ்வாறே ஏராளமான வடசொற் களுடன் கலந்து காணப்படுகின்றது தமிழ்த் திருவாசகம். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாட என்று தான் தொடங்குகிறது திருவெம்பாவை. கீதம் இனிய குயிலே கேட்டியேல் என்றுதான் தொடங்குகிறது குயிற்பத்து. சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே! என்று தொடங்குகிறது அருள்பத்து. இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணமாய் என்று தொடங்குகிறது கண்டபத்து. தேவ தேவன், மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன் என்று ஆரம்பிக்கிறது சென்னிப்பத்து. இவ்வாறு வடசொற்கள் கலவாத பாடல்களே திருவாச கத்தில் இல்லை யென்று சொல்லி விடலாம். வடசொற்கள் கலந்திருப்பதனால் திருவாசகப் பாடல் களில் கசப்பேறிவிட வில்லை; கசப்புக் கலந்துவிடவும் இல்லை. திருவாசகம் தேனாகத்தான்- தெவிட்டாத தேனாகத்தான் பாடுவோர் உள்ளத்தைப் பரவசமாக்கிக்கொண்டு நிற்கின்றது. இந்த உண்மையை மறுப்பார் யார்? மெய்ஞ்ஞானமே இன்ப ஊற்று மெய்யறிவுள்ளவர்கள் அழியாத இன்பத்தை அடையவே விரும்புவார்கள். அழியாத இன்பத்தைத் தரக்கூடியவர் யார்? நண்பர் அல்லர்; உடன்பிறந்தார் அல்லர்; சுற்றத்தார் அல்லர்; மனைவிமக்கள் அல்லர்; தாய் தந்தையரும் அல்லர். அன்பும் அருளுமே அழியாத இன்பம் அளிக்கும். மனமாசற்று, யான், எனது என்னும் செருக்கற்று, எல்லாம் இறைவனே என்ற நம்பிக் கையுடன் அன்புருவமாக வாழ்வோரே அழியாத இன்பத்தை நுகர்வார்கள். இதுவே ஆன்றோர்கள் அனுபவித்துக் கண்டறிந்த உண்மை. இறைவனை நம்பினோர் எதற்கும் கவலைப்பட மாட்டார்கள். தம்முடைய அறிவிலே, ஆற்றலிலே நம்பிக்கை யுள்ளவர்களும் எடுத்த காரியம் எதனையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள். இதுபோலவே, இறைவன் துணை நமக்குண்டு; அவன் அருள் உண்டு; அவனை நம்பினோர் கெடுவதில்லை; நமது காரியத்திலே திருவருள் துணை நிற்கும். வெற்றியைக் கூட்டுவிக்கும் என்று உண்மையாக நம்புகின்றவர் களும் எதிலும் வெற்றி அடைவார்கள். வெற்றி வழியிலே நடத்திச் செல்வன நம்பிக்கையும், உறுதியும், முயற்சியுமேயாகும். இந்த உண்மையைப் பண்டைப் பெரியார்கள் பலர் தமது அனுபவத்தில் அறிந்திருந்தனர்; தாம் கண்ட அனுபவ உண்மைகளை அவர்கள் மறைத்து விடவில்லை. தமது பின்னோரும் அவ்வுண்மையை அறிந்து உய்யவேண்டும் என்னும் கருணை உள்ளத்துடன், அவர்கள் அவைகளை எழுதி வைத்திருக்கின்றனர். அவைகளை நாம் படிக்கும்போது, நம்மை அறியாமலே நமது நெஞ்சத்தில் ஆனந்தம் புகுந்து தாண்டவம் புரியும். தமது அனுபவத்தை அருந்தமிழ்க் கவிதைகளாகப் பாடி யிருப்பவர்களிலே மாணிக்கவாசகரும் ஒருவர். அவருடைய அனுபவ அன்புக் கவிதைகள்தாம் திருவாசகம் என்னும் தேனாகத் திகழ்கின்றது. திருவாசகத்தில் முதலில் அமைந்திருப்பது சிவபுராணம். இது கலிப்பாட்டு வகையைச் சேர்ந்தது. 95 அடிகளைக்கொண்ட ஒரே பாட்டு. சிறந்த பல உண்மைகளை இப்பாடலிலே காணலாம். நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க! என்பது புராணத் தொடக்கம்; முதல் இரண்டடிகள். சிவபிரானை வணங்குகின்றேன். அவன் பெயர் என் உள்ளத்தில் வாழ்க; அவன்தான் எல்லாவற்றுக்கும் தலைவன்; அவன் பாதங்கள் என் உள்ளத்தில் வாழ்க; கண்ணிமைக்கும் நேரம்கூட நான் அவனை மறந்ததில்லை; எப்பொழுதும் என் உள்ளத்திலே குடிகொண்டிருக்கின்றான்; அப்பெருமான் என்றும் வாழ்க என்பதே இவ்வடிகளின் பொருள். இதனால், மாணிக்கவாசகர் சிவபெருமான்பால் வைத்திருந்த மாறாத அன்பைக் காணலாம். சிவபெருமானை இமைப்பொழுதுகூட மறவாத அவர், அதனால் தாம் பெற்ற பயனை- கண்ட உண்மையை இப் பாட்டிலேயே சொல்லிவிடுகின்றார். புறத்தார்க்குச் சேயோன் அப்பெருமான் தன்னிடம் அன்புசெலுத்தாத அன்னியர்பால் அணுகமாட்டான்; அவர் களை விட்டு எட்டியே நிற்பான். நேயத்தே நின்ற நிமலன் அவன் அன்புள்ள இடத்திலே நிலையாக நிற்பவன்; குற்றமற்றவன். மாயப் பிறப்பு அறுக்கும் மன்னவன் அவன் நிலையற்ற பிறப்பிலே நம்மை மீண்டும் பிறக்காமல் செய்யவல்லவன்; பிறப்புக்குக் காரணமான வினையை வெட்டி வீழ்த்தும் வேந்தன். ஆராத இன்பம் அருளும்மலை அவன் தெவிட்டாத- குறையாத இன்பத்தைத் தருகின்ற மலையாக நிற்பவன். இவ்வாறு சிவபிரானைப்பற்றித் தான் கண்ட உண்மையை உரைத்தார். இவ்வுரைகளால், ஆணவத்தை விட்டு அன்புடன் வாழ்வோர் பிறவித் துன்பத்தை ஒழிக்கலாம், என்றும் இன்புற்று வாழலாம் என்ற அறிவுரையையும் அருளினார். மேலும் மாணிக்கவாசகர், தாம் பட்ட துன்பங்களையும், அவைகள் அகன்ற விதத்தையும் எடுத்துச் சொல்லியிருப்பதும் அனுபவ உண்மையாகும். புல்லாய்ப், பூடுஆய்ப் புழுவாய், மரம்ஆகி பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான் இவ்வாறு தாம் பிறந்து வருந்திய பல பிறப்புக்களைப் பற்றியும் இயம்பினார். எந்தப் பிறவியானாலும் துன்பந்தரும் என்பதே மாணிக்கவாசகர் கருத்து. மேலும் அவர், மெய்யே உன் பொன்அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் என்று தொடர்ந்து கூறினார். உண்மையாகவே உன் பொன் அடிகளைக் கண்டபின் விடுதலை பெற்றேன்; பல பிறவிகளிலும் பிறந்து அடைந்த துன்பத்திலிருந்து விடுதலை பெற்றேன் என்று கூறினார். இதனால் இறைவன் திருவடியைக் காண்போர் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவார்கள் என்ற ஞான போதத்தையும் உலகுக்கு ஊட்டினார். மேலும், தன் உள்ளத்துள் இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கும் இறைவனைப்பற்றி மணிவாசகர் கூறுகின்றார். உலகறிய - உலக மக்கள் அறிய- அவர் எடுத்துக் காட்டும் உண்மை நம்மைத் துன்பக் கடலிலிருந்து கரைசேர்க்கும் தோணியாகும். 1. உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே! 2. வெய்யாய் தணியாய் இயமானன்ஆம் விமலா! பொய்ஆயின உல்லாம் போய்அகல வந்தருளி மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே! 3. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே. 4. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே! என்று பாடுகின்றார். இந்த எட்டு அடிகளிலும் பல சிறந்த உண்மைகள் படிந்திருக்கின்றன. அவை யாவை எனக் காண்போம். 1. நான் பிறவிப் பிணியிலிருந்து தப்பிப் பிழைக்கும் படி என் உள்ளத்திலே ஓங்கார வடிவமாக வந்து நின்றாய். நீ உண்மையான ஓங்காரமே உருவானவன்! குற்றமற்றவனே! காளையின் மேல் ஏறி ஊர்பவனே! வேதங்கள் எல்லாம் ஐயா! என்று உரத்துக் கூவி அழைக்கும்படி, அவற்றிலே மூழ்கிப் பரவிக் கிடக்கும் நுண்ணிய பொருளாக இருக்கின்றவனே! 2. வெப்பமாக இருக்கின்றவனே! குளிர்ச்சியாக உள்ள வனே! தலைவனாக இருக்கும் குற்றமற்றவனே! பொய்யான இவ்வுலகப் பற்றுக்கள் எல்லாம் என் உள்ளத்தைவிட்டு ஓடிப் போகும்படி எழுந்தருளி வந்து அருள்புரிந்தவனே! உண்மை யறிவாகி நின்று எனக்குக் காட்சி தரும் பேரொளியே! 3. எனக்கு எத்தகைய தனியான அறிவும் இல்லை; நல்லவை, தீயவற்றைக் காணும் பகுத்தறிவில்லை. இத்தகைய பகுத்தறிவற்றவர்கள் இவ்வுலகிலே இன்பம் நுகர முடியாது என்பர். ஆயினும் பகுத்தறிவற்ற நான் இன்பம் நுகரும்படி எனக்கு அருள்செய்த தலைவனே! 4. உன்னை யார் நினைக்கின்றார்களோ, நம்புகின்றார் களோ, வணங்குகின்றார்களோ அவர்களிடம் அஞ்ஞானத்துக்கு வேலையில்லை. அறியாமை அவர்களை விட்டு ஒழியும். அறியாமை நீங்கினால் பகுத்தறிவு வளர்வது இயல்பு. இந்த இயல்பு உண்மையாகும்படி நீ என்னிடம் நல்லறிவாக நின்றாய்! அதனால் நான் அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்றேன். மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றேன். மேலே காட்டிய சிவபுராண அடிகளின் பொருள் இவை. இவ்வடிகளில் காணப்படும் உண்மைகள்- உபதேசங்கள்- மக்கள் மறவாமல் மனத்தில் பதிக்கவேண்டியவை. சிவபெருமானைப்பற்றி நினைப்பவர்கள் உள்ளத்திலே அவன் உலவுவான்; வேதங்கள் அவனுடைய பெருமையையே பேசுகின்றன. உலகமே சிவபெருமான் உருவம்; அவனை நினைப் போர் பொய்களில் மயங்க மாட்டார்கள்; உண்மைகளை உணர்வார்கள். அவனை நினைப்போர் சிறந்த சிந்தனா சக்தியைப் பெறுவார்கள். இக்கருத்தை மேலே காட்டிய அடிகளில் காணலாம். இத்தகைய பல, அனுபவ உண்மைகளை மாணிக்கவாசகர் அழகான- உள்ளம் உருக்கும் தமிழ்ப் பாடல்களிலே எடுத்துக் காட்டியிருக்கின்றார். திருவாசகத்தை ஓதுவோர்- படிப்போர்- பாடுவோர்- அவ்வுண்மைகளை அறிவர்; நுகர்வர்; ஆனந்தத்தில் மிதப்பர். பக்தர்களின் பண்பு மனங்கரைத்து மலம் கெடுக்கும் வாசகம் என்று திருவாசகத்தைப் போற்றினார் சுந்தரம் பிள்ளை அவர்கள். உண்மையில் பக்தியில்லாதவர்கள் கூடத் திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் உருகுவார்கள். அதில் அமைந்திருக்கும் தமிழ், உள்ளத்தை உருக்கும் கன்னித்தமிழ்; படிக்கப்படிக்க இனிமை தரும் பழமையும் புதுமையும் கலந்த தமிழ். பக்தி யில்லா விட்டாலும், தமிழ் அன்புள்ளோர் அப்பாடல்களைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். திருவாசக ஆசிரியர் மாணிக்கவாசகர், சிவபெருமானிடம் ஆழ்ந்த அன்புள்ளவர். கணவனிடம் மாறாத காதல் கொண்ட கற்புள்ள மங்கை போன்றவர். கற்புள்ள மங்கை ஒருத்தி, தன் காதலனிடம் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் போலவே, மாணிக்கவாசகரும் சிவபெருமானிடம் உறுதியான அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். இந்த உண்மையை அவருடைய பாடல்களே காட்டுகின்றன. உள்ளத்தில் உறுதி இருந்தால் பக்தி நிலைக்கும். உள்ளத்தில் உறுதியற்றவர் கள் பக்தி செய்வதெல்லாம் வெறும் நடிப்புத்தான். பக்தியுள்ளவர்கள் அன்புள்ளவர்களாய் இருப்பார்கள். யாரையும் வெறுக்க மாட்டார்கள்; யார் மேலும் சீறி விழமாட்டார்கள்; கோபம் அவர்களிடமிருந்து ஓடிப் போகும். கோபத்துக்கும் பக்திக்கும் சென்மப் பகை. கோபம் உள்ள இடத்திலே பக்திக்கு வேலை இல்லை. பக்தி என்பது அன்புதானே? கோபம் உள்ள இடத்திலே பக்திக்கு என்ன வேலை? பக்திமான்களின் பாடல்களிலே இந்த உண்மையைக் காணலாம்; அவர்களுடைய இளகிய மனத்தையும், இனிய நடத்தையும், ஆராத அன்பையும் காணலாம். திருவாசகத்தில் மெய்யுணர்தல் என்னும் பகுதியிலே 20 பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அவ்விருபது பாடல்களும் பக்தியின் உறுதியை விளக்கிக் கூறுவன. இன்றும், அப்பாடல்கள் இருபதையும் வரிசையாகத் தினந்தோறும் காலை மாலைகளில் பாடி இன்புறுவோர் உண்டு. அந்த மெய்யுணர்தலின் முதல் செய்யுள் கீழ்வருவது; மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து, உன் விரையார் கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி, உள்ளம் பொய்தான் தவிர்ந்து, உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்; உடையாய் என்னைக் கண்டுகொள்ளே: இச்செய்யுள் பக்தியுடையவர் செயலை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது. அவர்கள் பக்தியினால் எந்த நிலையை அடைகின்றனர்? அவர்கள் உடலும் உள்ளமும் எப்படி உருக்க மடைகின்றன? என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. மணிவாசகர், தனது அன்பு நிலையைத் தானே எடுத்து மொழிவதாக அமைந்திருக்கின்றது இச்செய்யுள். இறைவனே! உன்னை நான் நினைக்கும்போது- உன்னிடம் என் உள்ளத்தை அடைக்கலமாக வைத்தபோது- என் உடம்பு சிலிர்த்தது; மயிர்க்கூச்செறிந்தது; அதே சமயத்திலே அந்த ஆனந்தம் காரணமாக உடம்பு நடுநடுங்கிற்று. அவ்வளவோடு நானும், உள்ளமும் நின்றுவிடவில்லை. உன் திருப்பாதங்களை எண்ணி- அடியார்களின் உள்ளத்திலே அன்பு மணத்தை வீசும் நறுமணம் நிறைந்த உனது பாதங்களை நினைத்து என் கைகளைத் தலையின்மேல் குவித்துக் கும்பிட்டேன். என் கண்களிலிருந்து மகிழ்ச்சியால் நீர் ததும்பிற்று; அது வெந்நீராகக் கீழே சிந்திற்று. என் உள்ளத்திலே குடி கொண்டிருந்த பொய்ம்மைகள் எல்லாம் ஒழிந்தன. உன்னைப் பற்றிய நினைப்பு உள்ளத்தில் குடிபுகுந்தால் வேறு நினைப்புக்கள் எப்படித் தங்கியிருக்க முடியும்? இவ்வாறு உன்னைப் போற்றினேன்; ஜய! ஜய! வணக்கம்! என்று என் வாயும் உன்னைப் போற்றியது. தலையிலே குவித்த எனது கைகளை நான் சிறிதும் தளர்த்தவில்லை. அப்படியே நின்று உன்னைப் பாடு கிறேன். எல்லா வன்மைகளையும் உடைய தலைவனே, என்னைக் கைவிடாதே! என்னை உன்பக்தன் என்று கண்டுகொள்ள வேண்டுகின்றேன். இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். இச்செய்யுளிலே உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி என்னும் தொடர்தான் குறிப்பிடத்தக்க தொடர். உண்மையான பக்தியுள்ளவர்கள் மனத்திலே கள்ளம் கபடு குடியிருக்க முடியாது; அவர்கள் உள்ளம் தூய்மையாக இருக்கும். இறைவனைக் கருதும் எண்ணம் ஒன்றைத் தவிர வேறு எந்த நினைப்பும் இராது. இந்த உண்மையை மேற்கண்ட தொடர் விளக்கிற்று. இதற்கு அடுத்த செய்யுள் பக்தியின் வைராக்கியத்தை - உறுதியை எடுத்துக்காட்டுகிறது. இறைவனிடம் அன்பு கொண்டவர்கள் அந்த அன்பைத் தவிர- அந்தப் பக்தியைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்; எந்த உயர்ந்த பொருளைக் கொடுத்தாலும், பதவியை அளித்தாலும் அவர் களுடைய பக்தியைச் சிதைக்க முடியாது; அழிக்க முடியாது; மாற்ற முடியாது. கற்புள்ள மங்கை தன் கணவனைத் தவிர வேறு ஆடவரைக் கருதமாட்டாள். அதுபோலவே உண்மையாக ஒரு தெய்வத்தை வழிபடு தெய்வமாகக் கொண்டவர்களும் வேறு தெய்வத்தைப்பற்றி எண்ணமாட்டார்கள். இந்த உண்மைகளை இரண்டாவது பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. கொள்ளேன் புரந்தரன்; மால் அயன்வாழ்வு; குடிகெடினும்; நள்ளேன் நினது அடியா ரொடு அல்லால்; நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா; உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. இதுவே அந்த இரண்டாவது செய்யுள். இது பக்தியின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது; அதன் உறுதியைக் கூறுகின்றது. மணிவாசகர் தனது பக்தியின் உறுதியை அறிவிப்பதுபோலப் பாடப்பட்ட செய்யுள். இச்செய்யுளின் பொருள் கீழ்வருவது; எனக்கு இந்திரலோகத்திலே தேவேந்திரனாக வாழும் வாழ்வு கிடைத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வைகுந்த லோகத்திலே திருமாலாகப் பதவியேற்று வாழக்கூடிய பதவி கிடைத்தாலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பிரம்மலோகத்திலே பிரம்மதேவனாகப் பதவி வகிக்கும் வாழ்வு கிடைத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் குடி முழுவதும் அடியோடு அழிவதானாலும் சரி; உனது அடியார்களோடுதான் நட்புக் கொள்வேன். உனது அடியார் அல்லாதவர்கள் யாவராயினும் அவர்களுடன் நட்புக் கொள்ளமாட்டேன். இறைவனே! உன் திருவருளால் நான் இவ்வுலகிலே வாழ்ந் திருப்பேனாயின் எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன்னை இகழமாட்டேன். நான் நரகத்தை அடைவதானாலும் சரி; உன்னைச் சிறிதும் இகழவே மாட்டேன். எங்கள்- எம்போன்ற அடியார்களுக்கு- உத்தமனாகக் காட்சியளிக்கும் தெய்வமே! எக்காலத்திலும் உன்னைத் தவிர வேறு தெய்வங்களை நினைக்கவே மாட்டேன்; வேறு தெய்வங் களை நினைப்பதனால் எத்தகைய புகழ், செல்வம், பதவி கிடைப்பதாயினும் சரி; நினைக்கவே மாட்டேன்! இச்செய்யுள் மணிவாசகரின் உறுதியான அன்பை எடுத்துக் காட்டுகின்றது. முதற் செய்யுள் பக்தியினால் பரவசமானதை உணர்த்திற்று. இரண்டாவது செய்யுள் பக்தியின் உறுதியைத் தெரிவித்தது. உள்ளம் உருகுதல்; உள்ளம் தூய்மையாதல்; மாறாத உறுதி இவை பக்தியின் சிறந்த தன்மைகள் என்பதை மேலே கண்ட பாடல்களில் காணலாம். இத்தகைய தன்மையுள்ளவர்கள் சிறந்த மனிதர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியும். பக்திக்கு மட்டும் அன்று; உலக வாழ்வில் வெற்றிபெறவும் இத் தன்மைகள் வேண்டும். இரக்க மனம், பரிசுத்த உள்ளம், உறுதியான நெஞ்சம் இவற்றை உடையவர்களால் எதைத்தான் சாதிக்கமுடியாது? அவர்கள் தாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் தோல்வி காணமாட்டார்கள்; வெற்றியே காண்பார்கள். பக்தர்களின் பண்பு. உலக வாழ்வினருக்கும் வேண்டும் என்பதையே இப் பாடல்களின் மூலம் காணலாம். சாவதற்கு விரும்பேன் பிறவியிலே மனிதப் பிறவிதான் உயர்ந்தது என்பது முன்னோர் கொள்கை. பின்னோரும் இதை மறுப்பதில்லை. இவ்வுலகில் உள்ள உயிர்த்தொகைகளிலே இயற்கையை வெல்லும் வல்லமை மனிதப் பிறவிக்குத்தான் உண்டு; வெல்வ தோடு மட்டும் அன்று; இயற்கையை அடக்கி ஏவல் கொள்ளும் ஆற்றலும் மனிதனுக்கு உண்டு. இந்தக் காரணத்தால் மனிதப் பிறப்பை உயர்ந்த பிறப்பாகக் கூறினர். நாம் இறந்தால் மீண்டும் பிறப்போமா? மாட்டோமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படாத செய்தி. இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன; அந்தந்த உயிர்கள் ஆற்றிய நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, உயர்ந்த பிறவியிலோ, தாழ்ந்த பிறவியிலோ பிறக்கின்றன என்பது பலர் கொள்கை. இறந்த உயிர் மீண்டும் உடல் பெற்றுப் பிறப்பதில்லை. இவ்வுலகில் அவை செய்த நல்வினைகள் தீவினைகளுக்கேற்ற தண்டனையை ஆண்டவன் அளிக்கிறார். இறந்தபின், எல்லா உயிர்களும், தங்கள் செய்வினைக்கேற்ற பலனைப் பெறுவதோடு சரி; மீண்டும் பிறக்கிறது என்பதில்லை என்று கூறுவோரும் உண்டு. ஆனால் இப்பிறப்பு உயர்ந்தது; இப்பிறப்பிலே எதையும் சாதித்துக்கொள்ளலாம்; என்பதை அறிஞர்கள் அனைவரும் மறுக்கவில்லை. இப்பிறப்பிலே இன்பம் இருக்கிறது என்ற நம்பிக்கை அனைவர்க்கும் உண்டு; அதனால்தான் எப்பாடுபட்டும் உயிர்வாழ விரும்புகின்றனர். மனிதப் பிறப்பே பாவத்தின் அறிகுறிதான். வாழ்வதால் நன்மையில்லை; இன்பம் இல்லை. இறந்தால்தான் இன்பம் உண்டு; நன்மையுண்டு என்று பேசுவோர் உண்டு. சிலர் இவ்வுலக வாழ்வில் வெறுப்புற்றதுபோல் நடிப்பார்கள்; அவர்கள் சாவைப்பற்றிச் சிறிதும் எங்களுக்கு அச்சம் இல்லை. மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்; ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆதலால் எப்பொழுது செத்தால்தான் என்ன? என்று பேசிக்கொண்டிருப்போர் உண்டு. இப்படிப் பேசுவோரைப் பார்த்து, நீங்கள் உயிர்விடத் தயார்தானா என்றால், ஓ! எப்பொழுதும் தயார் என்பார்கள். உண்மையில் இவர்கள் உயிரைக் கொடுக்க விரும்புகிறவர் களாயிருந்தால்- சாவுக்குப் பயம் இல்லை; எப்பொழுதும் சாவை வரவேற்கக் காத்து நிற்கிறேன் என்று இவர்கள் சொல்வது மனமார்ந்த மொழிகளாயிருந்தால் அதைப் பாராட்டலாம்; இவர்களையும் ஞானிகள் என்று போற்றலாம்; அல்லது ஆண்மையுள்ளவர்கள்; அஞ்சாநெஞ்சம் படைத்தவர்கள் என்று புகழலாம். ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது இவர்கள் உயிரைக் கொடுப்பார்களா? என்பது ஐயத்திற்கு இடமானதுதான். இவர்களின் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர். அல்லது மனைவி, மக்கள், தாய்தந்தையர் இவருள் யாரேனும் ஒருவர் இறந்து கிடக்கும்போது உயிரைப் பொருட்படுத்தாதவர்களைப் பரிசோதனை செய்துவிடலாம். இறந்தவர்க்காக வருந்தும் இவர்களிடம், உங்கள் உயிரைத் தந்தால் மாண்டவர் மீண்டு விடுவார். என்ற சொல்லுகிறீர்கள்? என்று கேட்டால் போதும். அப்பொழுது இறப்பதாக நான் எங்கே சொன்னேன்? எப்பொழுது சொன்னேன்? யாரிடம் சொன்னேன்? என்று சொல்லிக்கொண்டு நழுவிவிடுவார்கள். ஆகையால் ஏதோ வெறுப்பினால் சாவதற்குப் பயம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்களேயன்றி உண்மையில் சாகும் துணிவுடன் சொல்வதன்று. சாவு என்றால் பயங்கொள்ளாதவர்கள் யாருமேயில்லை. வீடு போபோ என்று தள்ளுகின்றது. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இந்தக் கிழம் இன்னும் வாழ்கிறதே; என்றுதான் செத்துத் தொலையுமோ? யார் யாருக்கோ சாவு வருகின்றது; இன்னும் இந்தக் கிழத்துக்கு வரவில்லையே என்று வெறுத் தாலும் சரி; அவர்களும் சாவு என்றால் அஞ்சத்தான் செய்வார்கள். பொதுமக்கள் என்ன துன்பம் இருந்தாலும் சரி, வாழத் தான் விரும்புகின்றனர். அறிஞர்கள்- ஞானிகள் என்பவர்களும் கூட வாழத்தான் விரும்புகின்றனர்; சாவை விரும்புவதில்லை. மாணிக்கவாசகர் சிறந்த அடியார்; இறைவனை எண்ணி யெண்ணி உருகும் உள்ளம் படைத்தவர். அன்பு கனிந்து வழியும் அழகிய திருவாசகத்தைப் பாடியவர். உலக இன்ப இச்சையை வெறுத்தவர். இத்தகைய மணிவாசகரே இறப்பென்றால் அஞ்சுகின்றேன் என்று பாடுகின்றார். பற்றற்ற ஞானியாகிய மணிவாசகரே இறப்புக்கு அஞ்சும்போது ஏனைய பொதுமக்கள் சாவுக்கு அஞ்சுவதைப்பற்றிக் கேட்கவா வேண்டும்? யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என்கடவேன்; வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்; தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்; எம் மானே! உன் அருள்பெறும்நாள் என்று? என்றே வருந்துவனே என்பது திருவாசகம்; மாணிக்கவாசகரின் மனமுருக்கும் பாட்டு. நான் எந்தப் பிறப்பிலே பிறப்பதற்கும் அஞ்சமாட்டேன்; எத்தனை முறை பிறப்பதற்கும் அஞ்சமாட்டேன்; ஆனால் இறப்புக்குத்தான் அஞ்சுகின்றேன். இறப்பு என்று கேட்டாலே அஞ்சுகின்றேன்; என்செய்வேன்! அளவில்லாத இன்பத்தை நுகரக்கூடிய வானுலக வாழ்வு கிடைப்பதாயிருந்தாலும் அதையும் நான் மதிக்கமாட்டேன். தேன் பொருந்திய மலராகிய கொன்றையை அணிந்திருக்கின்ற சிவபெருமானே! எம்பெரு மானே! எம் தலைவனே! உன் அருளையே நான் பெரிதாகக் கருதுகின்றேன்; அது கிடைக்கும் நாள் எப்பொழுது என்று நான் காத்துக் கிடக்கின்றேன்; வருந்தி நிற்கின்றேன். இதுதான் இச்செய்யுளில் அடங்கியிருக்கும் பொருள். யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பதனுக்கு என் கடவேன் என்ற தொடர்தான் குறிப்பிடத்தகுந்தது. முற்றுந் துறந்த முனிவர் இனத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகரே இறப்புக்கு அஞ்சுகிறார் என்றால் வேறு யார்தான் அஞ்சாதவர்கள்? சாவு என்றால் அனைவருக்கும் அவ்வளவு பயம். மாணிக்கவாசகரே இறப்பு அதனுக்கு என் கடவேன் என்று வருந்தும்போது வேறு யார்தான் சாவுக்கு வருந்தா மலிருக்க முடியும்? மாணிக்கவாசகர் கோழையல்லர்; உறுதியுள்ளம் பூண்டவர்; கலங்காத உள்ளம் படைத்தவர். இவ்வுண்மையை அவருடைய மொழிகளே காட்டுகின்றன. வானுலக இன்பத் தையும் வேண்டேன்; இவ்வுலகத்தை ஆளும் அதிகாரத்தையும் அதன்மூலம் அடையும் இன்பத்தையும் விரும்பமாட்டேன் என்று கூறுகின்றார். செல்வத்தையும் இன்பத்தையும் கண்டு மயங்குவது மக்கள் இயற்கை. எத்தகைய அறிவாண்மை படைத்த மக்களும் இன்பத்தையும், அதிகாரத்தையும் கைவிட விரும்பமாட்டார்கள். கலங்காத உள்ளம் படைத்தவர்கள்தான் இன்பத்தையும் அதிகாரத்தையும் விரும்பாமலிருக்க முடியும். மணிவாசகரும் கலங்கா உள்ளம் படைத்தவரானதால்தான் வானுலக இன்பம், இவ்வுலக அரசு இரண்டையும் இழிவு எனக் கருதுகின்றார். இறைவன் அருள் ஒன்றே அழியாத இன்பம் என்று நினைக் கின்றார். ஆதலால்தான் உன் அருள்பெறும் நாள் என்று? எனக் கேட்டுத் துன்புறுகின்றார். இறைவன் அருள் ஒன்றுக்காக, எந்த இன்பத்தையும் அதிகாரத்தையும் துறக்கத் துணிந்திருக்கும் பெரியாரே சாவுக்கு அஞ்சுகிறார் என்றால் சாவின் கொடுமையைப்பற்றிக் கூறவும் வேண்டுமா? இவ்வுலகிலே வாழ்வதன்மூலம் இன்பம் பெற முடியும் என்ற நம்பிக்கை உலகை வெறுப்பவர்களுக்கும் உண்டு; உலகில் வாழ விரும்புகின்றவர்களுக்கும் உண்டு. திறமையும் அறிவும் உள்ள மக்கள் இவ்வுலகில் இன்புறு வதைக் காண்கின்றோம். இறந்த பின் என்ன ஆவோம் என்பதைப் பற்றி யாருக்கும் உண்மை எதுவும் தெரியாது. ஆதலால் கண் கூடாகக் காணும் நன்மை வாழ்வதில்தான் உண்டு என்பதால் தான் அறிவுள்ள பெரியோர்கள் எல்லாம் வாழ விரும்புகின்றனர்; இறக்க விரும்பவில்லை. இது தமிழர்கள் கண்டறிந்த நீண்ட நெடுங்கால உண்மை. தேவரும் காணாத தேவன் மணிவாசகர், தான் காணும் எல்லாவற்றையும் இறை வனாகவே எண்ணியவர். உலகம் வேறு; உலகப் பொருள்கள் வேறு; தான்வேறு; இறைவன் வேறு என்று எண்ணவில்லை. அதனால் இறைவன் அருளைப் பெற்றார்; இறைவனை எண்ணி எண்ணி, மனங் கனிந்து சிந்தை உருகிச் செந்தமிழ்த் தீஞ்சுவைப் பாடல்களைப் பாடினார். மணிவாசகர் தம் சிந்தை உருகிப் பாடிய செந்தமிழ்ப் பாடல்கள் படிப்போர்- பாடுவோர் உள்ளத்தை உருகச் செய் கின்றன. அவர் கண்ட இறைவனைப்பற்றி- இறைவன் தனக்கு அருள் செய்ததைப்பற்றிப் பல பாடல்களிலே பாடியிருக்கின்றார். அவருடைய அருள்வாசகமான திருவாசகத்தைப் படிப்போர் இதைக் காணலாம். திருச்சதகத்திலே ஒரு பாட்டைக் காண்போம். இமையவர்கள்- அதாவது தேவர்கள் இறைவன் இன்னார் என்று அறிய முடியாமல் உள்ளந் தடுமாறுகின்றனர். அவனை அடைய முடியாமல் அல்லற்படுகின்றனர். அவர்கள் இறை வனைப்பற்றிப் பலவாறு நினைக்கின்றனர். அவனுடைய நிறம் செம்மையும் அன்று; வெண்மையோவென்றால் அதுவும் அன்று; அவன் பல உருவாக இருக்கின்றானோவென்றால் அப்படியும் இல்லை; அல்லது ஒருவனாகத்தான் உறைகின்றானோவென்றால் அப்படியும் இல்லை. அணு உருவில் உள்ளவனோ என்றால் அப்படியுமில்லை. அணுவையும் கடந்தவனோ என்றால் அப்படியும் இல்லை. இப்படியெல்லாம் அவர்கள் எண்ணி உள்ளந் தடுமாறுகின்றனர். தேவர்களாலும் அறியமுடியாத எந்தையே! நீ எனக்கு எளிதிலே அருள்புரிந்தாய்! உன்னுடைய தன்மை இன்னது என்பதை நான் உணரும்படி காட்டினை; உன் உருவத்தையும் என் கண்கள் கண்டு ஆனந்தமடையும்படி காட்டினை; உன்னுடைய மலர்போன்ற கழல்களையும்- பாதங்களையும் எனக்குக் காட்டினை. உன்னைக் காணும் வழியறியாது தவித்துக் கொண்டிருந்த எனக்கு ஆறுதல் அளித்தாய். உறுதியாக- நான் இவ்வுலகிலே மீண்டும் பிறவாமல் என்னைக் காத்து ஆட்கொண்டாய்! எம்பெருமானே! இத்தகைய பேர் அருளைத் தந்த உன்னை என்னவென்று சொல்வேன்! உன்னைக் குறித்துச் சொல்வதற் கான சொற்களைக் காணாமல் திண்டாடுகின்றேன். உன்னைப் பற்றி எப்படி எண்ணுவது, நினைப்பது என்று அறியாமலும் தவிக்கின்றேன் என்று கூறுகின்றார் ஒரு செய்யுளில். அச் செய்யுள் கீழ்வருவது; 1. வண்ணந்தான் சேயது அன்று; வெளிதே அன்று; அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்; என்று அங்கு எண்ணத்தான் தடுமாறி இடையோர்கூட்டம் எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன்தன் வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி. மலர்க்கழல்கள் அவைகாட்டி, வழி அற்றேனை திண்ணந்தான் பிறவாமல் காத்து ஆள் கொண்டாய்! எம்பெருமானே! என்சொல்லிச் சிந்திக் கேனே! என்பதே மேலே கூறப்பட்ட பொருள் அமைந்த செய்யுள். இச் செய்யுள் இமையோரால் காணமுடியாத இறைவன். மனிதனாகிய தனக்குக் காட்சியளித்து அருள்புரிந்ததைக் குறித்தது. இதற்கு அடுத்த திருவாசகமும் இறைவன் தனக்குச் செய்த ஒப்பற்ற உதவியையே எடுத்துக் கூறுகின்றது. உன்னைத் துதிக்கின்ற சொற்களும் சிந்தையும் இல்லாத தனிப்பட்ட எனக்கு நீ அருள்புரிந்த விதம் வியக்கத்தக்கது. என்னுடைய சிந்தனையை உன்னுடையதாகச் செய்து கொண்டாய்; ஆதலால், உன்னைத்தவிர வேறொன்றையும் நினைக்காத தன்மை பெற்றேன். அடியேனுடைய இரண்டு கண்களையும் உனது பாதமலர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டாய். என் கண்கள் வேறொன்றையும் பார்ப்பதில்லை. நான் செய்யும் வணக்கமும் பிறருக்கில்லை. என் வணக்கம் உனது பாதங்களையே அடையும்படி செய்துவிட்டாய். என் நாவும் வேறொன்றைப் பற்றிச் சொல்லுவதில்லை. உன்னைப்பற்றிய அழகிய சொற் களையே சொல்லிக்கொண்டிருக்கும்படி செய்துவிட்டாய். என்னுடைய ஐம்புலன்களும் உன்னையே கண்டு அனுபவிக்கும்படி என்முன் வந்தாய். என்னை ஆட்கொண்டாய், என் உள்ளத்திலே புகுந்தாய். வித்தைகளின் உருவான பெரிய அமுதமயமான கடலே! மலையே! என்னையே உனக்குத் தந்தாய். செந்தாமரைக் காடு போன்ற நிறங்கொண்ட ஒப்பற்ற சுடர் வடிவான இறைவனே என்று பாடுகின்றார். இப்பாடல் கீழ்வருவது: 2. சிந்தனைநின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன் கண்இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி, வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆள்கொண்டு வந்துஎனை ஆள் கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெரும்கடலே! மலையே என்னைத் தந்தனை, செந்தா மரைக் காடு அனைய மேனித் தனிச்சுடரே! இரண்டும் இல் இத்தனிய னேற்கே என்பதே மேலே காட்டிய பொருள் பொதிந்த பாடல். இரண்டும் இல் இத் தனிய னேற்கு என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. இரண்டும் என்பது முதல் பாட்டின் இறுதியில் குறித்த என் சொல்லிச் சிந்திக்கேனே என்ற தொடரில் உள்ள சொல்லும் சிந்தனையும் ஆகும். இப்பாடல்கள் இரண்டும் மணிவாசகரின் உண்மை உள்ளத்தை வடித்துக் காட்டுகின்றன. எப்பொழுதும் இறை வனைப் பற்றியே எண்ணியிருக்கும் அன்பர்கள் எல்லாவற்றையும் இறைவனாகவே காண்பார்கள். தனக்கென்ற சிந்தனையோ, சொல்லோ, செயலோ எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் இறைவன்பால் ஈடுபடுத்தியே வாழ்வார்கள். இவ்வுண்மைகளை மேலே காட்டிய மணிவாசக மொழிகள்- திருவாசகங்கள் உணர்த்தின. தீமை என்ன செய்யும்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது ஒரு பழமொழி; தனக்குத் துணைசெய்யும் தம்பியை உடையவனுக்குத் தான் இப்பழமொழி பொருந்தும்; தனக்குக் குழி தோண்டும் தம்பியை உடையவனுக்கு இப்பழமொழி பொருந்தாது. இப்பழமொழியின் உண்மைக் கருத்தை உணர வேண்டும். பின்பலம் உள்ளவன் எதற்கும் அஞ்சமாட்டான் என்பதுதான் இதன் உண்மைக் கருத்து- பின்பலம் உள்ளவர்கள்தான் எண்ணிய எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள் - அரசியலில் ஆனாலும் சரி, சமூகத் துறையில் ஆனாலும் சரி, தம்மைப் பின்பற்றுவோர் களைப் பெற்ற தலைவர்கள்தாம் வெற்றிபெறுவார்கள். தம்மோடு ஒத்துழைக்கும் தோழர்களையுடைய ஊழியர்கள்தான் எண்ணிய காரியங்களை எளிதில் முடிப்பார்கள். அரசியல் என்று எடுத்துக்கொண்டால், அதற்கு ஒரு நிறுவனம் வேண்டும்; அரசியல் திட்டங்களை நடத்தி வைப்பதற் காகக் கட்டுப்பாடான ஒரு சங்கம்- ஒரு கழகம் வேண்டும். இன்னின்ன காரியங்களை அரசாங்கத்தின்மூலம் செய்ய வேண்டும்; அரசாங்கத்தால் நடத்தப்படும் இன்னின்ன காரியங் களைத் தடைசெய்ய வேண்டும். இக்காரியங்களை எப்படி நடத்துவது? எந்த முறையிலே நடத்துவது? என்பவற்றுக்கான சட்டதிட்டங்கள் எல்லாம் வேண்டும். இவற்றை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களைத் தம் பக்கம் இழுக்க முயற்சி செய்யவேண்டும். இவை போன்ற செயல்களை ஒரு தனி மனிதனால் செய்து விட முடியாது; இவற்றைச் செய்வதற்குப் பல மக்களுடைய கூட்டுறவும் வேண்டும்; ஆதரவும் வேண்டும்; இத்தகைய கூட்டுறவையும், ஆதரவையும் வளர்ப்பதுதான் சங்கம், சபை, கழகம், நிறுவனம் என்பவை. இத்தகைய நிறுவனங்களின் ஆதரவுபெற்ற தலைவனால் தான் தன் எண்ணங்களைச் சாதிக்க முடியும். நிறுவன ஆதரவு பெறாத ஒருவன், எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவனா யிருந்தாலும், அறிவுபடைத்தவனாயிருந்தாலும், முயற்சியுள்ள வனாயிருந்தாலும் அவனால் அவன் கொள்கையில் வெற்றிபெற முடியாது. அவன் கூறும் திட்டங்களை நடத்திவைக்கத் துணை வர்களோ, ஊழியர்களோ இருக்க மாட்டார்கள்; ஆகையால் தோல்வியே அடைவான். இதைப்போலவே சமுதாயச் சீர்திருத்தத்திலே கருத்துடைய வீரனுக்கும் துணைவர்கள் வேண்டும்; அல்லது கொண்டர்கள் வேண்டும். அத்துணைவர்கள் கூட்டமும் தொண்டர்கள் குழுவுந்தான் அவர்களைப் பின்பற்றும் நிறுவனமாகும். மக்கள் சமுதாயம் முன்னேறுவதற்காக அத்தலைவன் கூறும் திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றி வைக்க- மக்களிடையே பரவச் செய்ய அத்துணைவர்களும் தொண்டர்களும்தான் பயன்படுவார்கள். நாம் எழுதிய தபாலை உரியவரிடம் சேர்ப்பதற்காகத் தபால் இலாகா ஒன்று வேண்டும். தபால் இலாகா இல்லா விட்டால் நாம் எழுதிய தபால் நம்மிடமே இருக்கவேண்டியது தான். இதுபோன்றதுதான் தலைவரும், அவரை ஆதரிக்கும் நிறுவனமும் ஆகும். உலக நடப்பிலே, வெற்றிபெறுவதற்கு நிறுவன பலம் வேண்டும். இதைப்போலவே மறுமையிலே நன்மை பெறுவதற்கும், இம்மையிலே அப்பழுக்கின்றித் தூய வாழ்வு நடத்துவதற்கும் நிறுவன பலம் வேண்டும். கடவுள் நம்பிக்கையும், அடியார்கள்- அன்பர்கள்- சேர்க்கையும்தான் நிறுவனமாகும். உறுதியான கடவுள் நம்பிக்கையுள்ளவன் எதற்கும் அஞ்ச மாட்டான். எதற்கும் என்றால் தீமைகளைச் செய்வதற்குங்கூட என்பது பொருள் அல்ல; தீமைகளை எதிர்த்து நிற்பதற்கும் என்பதுதான் பொருள். கடவுள் நம்பிக்கையின் பலத்தால் தீமைகளை எதிர்த்துப் போராடுகின்ற வீரனைத்தான் நல்லோர்கள் ஆதரிப்பார்கள்; அவனுடைய நல்ல பணிகளுக்குத் தான் துணைசெய்வார்கள். நிறுவனத்தை மதிக்காமல், நிறுவன உறுப்பினர்களின் கருத்துக்கு மாறாக நடக்கும் தலைவன் நிறுவனத்தின் ஆதரவை இழந்துவிடுவான். அவனால் எண்ணிய செயல்கள் எவற்றையும் சாதிக்க இயலாது. இதைப்போலவேதான், கடவுள் எண்ணத்திற்கு மாறாக நடப்பவனும், எவ்வளவுதான் கடவுள் பக்தியுள்ளவனா யிருந்தாலும், அவன் சாதுக்களின் ஆதரவைப் பெறமாட்டான்; துணையைப் பெறமாட்டான். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவன்- கடவுள் வல்லமையிலே உண்மையான நம்பிக்கையுள்ளவன்- எந்தத் தீமை தன்னை எதிர்த்து வந்தாலும் அத்தீமைக்குத் தலை வணங்க மாட்டான். அதை எதிர்த்து நின்று முறியடிக்கவே முயல்வான். இப்படி முயல்கின்றவனுக்குக் கடவுள் நம்பிக்கை கொண்ட அடியார்கள் அனைவரும் துணைநிற்பார்கள். அவனுடைய நல்ல பணிகளுக்கெல்லாம் ஆதரவு அளிப்பார்கள். இதில் சிறிதும் ஐயம் இல்லை. எல்லாத் துணைகளையும்விட, ஒருவனுக்கு நம்பிக்கை தான் சிறந்த துணையாகும். நாம் வெற்றி பெறுவது உறுதி; நம்மால் இச்செயலை முடித்துவிட முடியும்; இச்செயலை முடிப்பதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்மிடம் இருக்கிறது; எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் சரி, இக்காரியத்தை மட்டும் நிறைவேற்றாமல் விடுவதில்லை; என்ற உறுதிகொண்டவனுக்கு ஒருநாளும் தோல்வி ஏற்படாது. இத்தகைய உறுதி கொண்டவனுக்குத் துணைவர்களும் சேர்வார்கள். இது நம்மால் ஆகுமோ, ஆகாதோ என்ற ஐயத்துடன் ஒரு செயலைத் தொடங்குவது எப்பொழுதும் தவறாகும். அந்த ஐயம் தோல்விக்குத்தான் வழிகாட்டும். வெற்றிப் பாதையை விட்டு விலகித்தான் செல்லும். அந்த உண்மையை மறந்துவிடுதல் கூடாது. மணிவாசகரின் திருவாசகச் செய்யுள் ஒன்று இந்த உண்மைகளை நமக்கு விளக்கிக் காட்டுகின்றது. அவர் கொண்ட உறுதியும் நம்பிக்கையும் எத்தகைய சிறப்புடையன; அந்த உறுதியினாலும், நம்பிக்கையினாலும் அவர் உள்ளம் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளது என்பதைக் காணலாம். கடவுளுக்கு ஆட்பட்டதன் காரணமாகத்தான் அடைந்து நிலையை அச்செய்யுளிலே அவர் விளக்கிக் காட்டுகிறார். அதன்மூலம், கடவுளை நம்பினால்- வழிபட்டால்- எத்தகைய நிலையை அச்செய்யுளிலே அவர் விளக்கிக் காட்டுகிறார். அதன்மூலம், கடவுளை நம்பினால்- வழிபட்டால்- எத்தகைய நிலையை அடையலாம் என்பதையும் மற்றவர்களுக்கும் எடுத்துக் காட்டுகின்றார். அச்செய்யுள் கீழ்வருமாறு: 3. தேவர்கோ அறியாத தேவ தேவன்; செழும் பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி; மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை; யாவர்கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்; யாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; யாதும் அஞ்சோம்; மேவினோம் அவன்அடியார் அடியாரோடு; மேன்மேலும் குடைந்துஆடி ஆடுவோமே. இதுவே அச்செய்யுள். இச் செய்யுளின் பொருளைப் பார்த்தால் உண்மை விளங்கும். நெஞ்சிலே உறுதி கொண்டவர்கள் நேர்மையிலே தவறமாட்டார்கள்; இடையூறுகளுக்கு அஞ்ச மாட்டார்கள் என்ற உண்மை விளங்கும். தேவர்களின் தலைவர்களாலும் காணமுடியாதவன்; தேவர்களுக்கெல்லாம் மேலான தேவன். உலகம் எல்லா வற்றையும், படைத்துக் காத்து அழிக்கின்ற முத்தேவர்களின் வடிவாய் நிற்பவன்; முதல்வனாகிய தலைவன். சிறந்த மூர்த்தியாக இருப்பவன். மூதாதை; பார்வதியைப் பாகத்தில் உடையவன்; எல்லோருக்கும் தலைவன்; அவன் என்னையும் ஒரு பொருளாகக் கருதிவந்து அடிமைகொண்டான். நானும் உறுதியாக அவனுடைய ஆளாகிவிட்டேன். ஆதலால் இனி நாம் வேறு ஒருவருடைய குடி அல்லோம்; மற்றவர்கள் யாரும் எம்மேல் ஆணை செலுத்த முடியாது. எந்தத் தீமைக்கும் நாம் அஞ்சமாட்டோம்; எல்லாத் தீமைகளையும் எதிர்த்து நின்று முறியடிப்போம். நாம் அவனுடைய அடியார்க்கு அடியார்களுடைய கூட்டத்தைத் துணையாக அடைந்தோம். ஆதலால் இன்னும் அவனுடைய கிருபைக் கடலிலே மூழ்கி ஆனந்தமாக ஆடுவோம். இப்பாடல் பக்தியற்றவர்களையும், ஒருமுறை படித்தால் மறுமுறையும் படிக்கத் தூண்டும் தமிழ்ச்சுவை ததும்பிய பாடல். இறைவன் அருட்பெருமையை விளக்கும் பாடல். உள்ளம் உருக்கும் உயர்மொழி மணிவாசகர் பாடலைத் திருவாசகம் என்பர். மனம் உருக்கும் தமிழ்ப் பாடல்களிலே அவற்றுக்கு ஒப்பு அவையே தாம். நெஞ்சத்தை உருக்கும் செஞ்சொற் பாடல்கள் பாடுவதிலே அவற்றுக்கு ஒப்பு அவையேதாம். நெஞ்சத்தை உருக்கும் செஞ்சொற் பாடல்கள் பாடுவதிலே வல்லவர் இராமலிங்க அடிகள். அவரே மணிவாசகர் பாட்டில் மயங்கிக் கிடந்தார்; அதன் இன்பத்தை நுகர்ந்து எல்லையற்ற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். மணிவாசகர் பாடலைக் குறித்து, வான் கலந்த மாணிக்கவாசக உன் வாசகத்தை, நான் கலந்து பாடுங்கால், நல்கருப்பம் சாற்றினிலே, தேன் கலந்து பால் கலந்து தீம் சுவைப் பாகு கலந்து, ஊன் கலந்து என் உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்று பாடினார் இராமலிங்க அடிகள். இராமலிங்க அடிகளே மணிவாசகர் மொழிகளை இவ்வாறு பாராட்டினார் என்றால் அவற்றின் அருமையில் ஈடுபடாதவர் யார்? திருவாசகத்தை எவர் படித்தாலும் அவர் உள்ளத்தைத் தொட்டு உருக்கியே தீரும். தமிழின் இனிமைக்குத் திருவாசகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அரிய பொருளும், இனிய சொல்லும் உள்ளத்தை உருக்கும் ஓசைநயமும் பொருந்திய பாடல்கள் திருவாசகப் பாடல்கள். அவற்றுள் இரண்டு பாடல் களைக் காண்போம்; தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா போற்றி! வான விருத்தனே போற்றி! எங்கள் விடலையே போற்றி! ஒப்பில் ஒருத்தனே போற்றி! உம்பர் தம்பிரான் போற்றி! தில்லை நிருத்தனே போற்றி! எங்கள் நின்மலா போற்றி! போற்றி! இது காருண்யத்து இரங்கல் என்ற தலைப்பில் உள்ள பாடல்களின் முதற்பாட்டு. முதலில் இச்செய்யுளின் பொருளைக் காண்போம். இந்த உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை என்னால் தாங்க முடியவில்லை; பொறுக்க முடியவில்லை; சங்கரனே வணக்கம்; உயர்ந்த பழமையானவனே வணக்கம்; எங்கள் வாலிபனே வணக்கம்; ஒப்பற்ற தனிப்பட்ட சிறப்புள்ளவனே வணக்கம். தேவர்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவனே வணக்கம்! தில்லை வனம் என்னும், சிதம்பரத்திலே பொதுவான பொன்னம்பலத்திலே அனைவரும் காண நடனமாடும் நாயகனே வணக்கம்; அடியார்களாகிய எங்கள் துயர் தீர்க்கும் குற்றமற்ற வனே வணக்கம்: வணக்கம். இதுவே இப்பாடலின் பொருள். இச்செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லமைப்பு நம் உள்ளத்தைக் கவாகின்றது. வான விருத்தனே போற்றி இதில் விருத்தன் என்பதற்குப் பழமையானவன் என்று பொருள் கூறப்பட்டாலும் விருத்தன் என்ற சொல் முதியவன் என்று நேரே பொருள்படும். விருத்தன் என்று கூறியதனால், சிவபெருமானைக் கிழவன் என்று நினைத்துவிடுவார்களோ என்று எண்ணினார் மணிவாசகர்; உடனே எங்கள் விடலையே போற்றி என்று கூறினார். இல்லை! இல்லை! அச்சிவபெருமான் தள்ளாத கிழவன் அல்லன்; நல்ல காளை போன்ற வாலிபன் என்ற பொருளில் விடலை என்ற சொல்லை வைத்தார். சிவபெருமான் விருத்தனாகவும் இருக்கின்றான்; வாலிபனாகவும் இருக்கின்றான் என்பதுதான் இதன் கருத்து. அடுத்து ஒப்பு இல் ஒருத்தனே போற்றி என்றார். அவன் ஒப்பற்ற தலைவன் என்று குறிப்பிட்டார்; எப்படி ஒப்பற்ற தலைவன் என்பதை அடுத்த தொடரில் விளக்கி உம்பர் தம்பிரான் என்று கூறினார். தேவர்களுக்கெல்லாம் தலைவன் அவன்; அவனுக்குத் தலைவன் யாரும் இல்லை, என்ற பொருளில் இவ்வாறு கூறினார். இதன்மூலம் சிவபெருமான் ஒப்பற்ற தலைவன் என்பதை மெய்ப்பித்தார். அவன் எல்லோருக்கும் அருள் செய்பவன்; அவனைக் காண்பது எளிது; சென்று காணுங்கள்; கண்டு பணிந்து அவன் அருளை அடையுங்கள் என்ற பொருளில்தான் தில்லை நிருத்தனே என்று அழைத்து வணங்கி வாழ்த்தினார். நிருத்தன்- நடனம் ஆடுகின்றவன் ஆரும் காணத் தில்லைச்சிற்றம்பலத்திலே நடனம் ஆடுகின்றவன் என்று அவன் இயல்பைக் கூறினார். இவ்வாறு சிவபிரானை வணங்கிய மணிவாசகர், மீண்டும் போற்றும்போது ஓர் உண்மையை எடுத்துக்கூறி வணங்குகின்றார்; நான் சிறியவன்; சிற்றறிவும் சிறு தொழிலும் உடையவன்; ஆற்றல் அற்றவன்; நீயோ பெரியவன்; பேர் அறிவும் பெரும் செயலும் உடையவன்; பேர் ஆற்றல் பொருந்தியவன்; ஆதலால் நான் என்ன குற்றம் புரிந்தாலும் சரி. அதைப் பொறுத்துக் கொள்வது உனது கடமை; என்னை ஆளுவது உனது பொறுப்பு என்ற உண்மையை நினைப்பூட்டிப் பாடுகிறார். இழித்தனன் என்னையானே! எம்பிரான் போற்றி! போற்றி! பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி! பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை! போற்றி! ஒழித்திடு இவ் வாழ்வு: போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே. இதுதான் மேலே சொல்லிய கருத்தடங்கிய பாட்டு. இப்பாட்டின் பொருளைக் கண்டு சுவைப்போம்! என்னை நான் உயர்த்திக்கொள்ளவில்லை; தாழ்வாகவே கொண்டேன்; ஆதலால் அகந்தை அற்றவனானேன்; எமது தலைவனே! வணக்கம்! வணக்கம்! உன்னை நான் ஒருபோதும் பழித்துப் பேசியதே இல்லை; எப்பொழுதும் உயர்த்தித்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்; என்னை ஆட்கொண்ட உன்னுடைய பாதங்களை வணங்கு கின்றேன். சிறியவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெரியவர் களாக இருப்பவர்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்; அத் தவறுகளை மன்னிக்கவேண்டும்; இது தான் பெரியவர்களின் கடமை. ஆதலால் பிழைகள் புரிவதற்குக் காரணமாக இருக்கின்ற இந்த வாழ்வை ஒழித்துவிடுவாயாக! பிழை செய்வதற்கு இடமில்லாத வாழ்வையளிப்பாயாக என்று வணங்குகின்றேன். உயர்ந்த உலகில் வாழும் எம் தலைவனே! என் வேண்டுகோளை நிறைவேற்றும்படி உன்னை வணங்குகின்றேன். இதுவே இப்பாடலில் அமைந்துள்ள பொருள். இச் செய்யுளில் உள்ள இரண்டு தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. அவை இழித்தனன் என்னையானே என்ற தொடர் ஒன்று. பழித்திலேன் உன்னை என்ற தொடர் ஒன்று. இவ்விரண்டு தொடரும் சிறந்த உண்மைப் பொருள் ஒன்றை உணர்த்தி நிற்கின்றன. என்னுடைய அகங்காரத்தை- யான் என்னும் செருக்கை விட்டொழித்தேன்; எப்பொழுதும் உன்னையே உயர்த்திக் கூறி வணங்கி நிற்கின்றேன் என்பதுதான் அப்பொருள். தான் என்னும் செருக்கை விட்டுவிட்டு இறைவனைப் போற்றவேண்டும்! அதுவே இறை அருளைப் பெறுவதற்கு ஏற்ற வழி! என்ற அறிவுரையும் இச்செய்யுளில் அடங்கியிருக்கின்றது. இத்தகைய சிறந்த கருத்துக்களும் இனிய செய்யுள் அமைப்பும் அடங்கிய பாடல் தொகுதியே மணிவாசகர் மொழிந்த திருவாசகம் ஆகும்; தமிழின் இனிமைத் தன்மையை விளக்குவதில் திருவாசகத்தைப் போன்ற நூல் வேறு எதுவும் இல்லை. அன்புக்கு நிகரில்லை கடவுளை நம்புவோர், எல்லாம் அவன் செயல் என்பதை மறுக்கமாட்டார்கள். இவ்வுலகைப் படைப்பவன். காப்பவன். அழிப்பவன் இறைவன்தான் என்பது கடவுள் அன்பர்களின் கருத்து. இது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தகைய உறுதியான நம்பிக்கையுள்ளவர்கள்தான் உண்மை யான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க முடியும். இவ்வுலகம் கடவுள் படைப்பு என்பதை மறுப்போர் உண்டு. உலகம் பல அணுக்களின் கூட்டம். ஒருவருடைய படைப்பு அன்று. இயற்கையாகத் தோன்றியதே உலகம் என்போர் உண்டு. இதை மறுப்போர் உலகம் கடவுள் படைப்புத்தான் என்பதற்குப் பல உதாரணங்கள் கூறுவர். அவர்கள் கூறும் உதாரணங்கள் சாதாரணமாகப் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகத்தான் இருக்கும். அவ்வுதாரணங் களையும் விளக்கங்களையும் காண்போம்; நாம் காணும் ஒவ்வொரு பொருளும் தாமாகத் தோன்றி யவையல்ல. எவராலோ உண்டாக்கப்பட்டவைதாம். ஒரு நாற்காலி இருந்தால் அதைச் செய்த தச்சன் ஒருவன் இருக்கத் தான் வேண்டும். ஒரு மண்பாண்டம் இருந்தால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும். ஒரு புத்தகத்தை- நூலை எடுத்துக்கொண்டால் அதை எழுதிய ஆசிரியன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும். தச்சன் இல்லாமல் நாற்காலி உருவாக முடியாது; குயவன் இல்லாமல் மண்பாண்டம் உருவாக முடியாது; ஆசிரியன் இல்லாமல் புத்தகம் பிறக்க முடியாது. அவைபோலவே இவ்வுலகமும் ஒரு தலைவன் இல்லாமல் தோன்ற முடியாது. இவ்வுலகைப் படைத்த தலைவன்தான் கடவுள் என்பவன்! என்பதே கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கூற்று. உலகம், கடவுள் படைப்புத்தான்; இயற்கையாகத் தோன்றியது அன்று; என்பவர்களின் விவாதம். ஆனால், தச்சன் நாற்காலியைப் படைப்பதற்கு மரம் வேண்டும்; உளி, வாள் முதலிய கருவிகள் வேண்டும். இக் கருவிகளைக் கொண்டே தச்சன் ஒரு நாற்காலியை உருவாக்கு கின்றான். இதுபோலவே, குயவன் மண்பாண்டத்தைச் செய்வதற்கும் மண் வேண்டும். சக்கரம், தண்டம் முதலிய கருவிகள் வேண்டும். இக்கருவிகளின் துணை கொண்டே குயவனால் பாண்டத்தை உருவாக்க முடியும். இதுபோலவே, ஆசிரியன் புத்தகத்தை உருவாக்க காகிதம், மை எழுதுகோல் முதலியன வேண்டும்; இவற்றின் துணைகொண்டுதான் புத்தகத்தை உருவாக்க முடியும். ஆனால், கடவுள் இவ்வுலகத்தைப் படைப்பதற்கு எந்தக் கருவிகளையும் கைக்கொள்ளவில்லை. ஒரு கருவியும் இல்லா மலே, ஒரு துணையும் இல்லாமலே, இவ்வுலகத்தைக் கடவுள் படைத்தார். அவர் இவ்வுலகம் இன்ன வடிவில் உருவாக வேண்டும் என்று நினைத்தால் அந்த வடிவில் உருவாகும். இவ்வுலகில் இன்னின்ன பொருள்கள் தோன்றவேண்டும் என்று நினைத்தால் அப்பொருள்கள் தோன்றும். கடவுள் தம் நினைப்பினாலேயே எல்லாவற்றையும் படைத்தார். இதற்கு இச்சாசக்தி என்பார்கள். ஒரு பொருளை உண்டாக்கும் மக்கள், பல கருவிகளின் துணைகொண்டு, முயற்சி செய்து அப்பொருளை உண்டாக்குவர். கடவுள் தன் நினைப்பு ஒன்றினாலேயே எதையும் படைக்கும் வல்லமை வாய்ந்தவர். இதுதான் கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள வேற்றுமை என்பர். இத்தகைய எல்லாம் வல்ல சக்தி ஒன்று இருக்கின்றது; அதை மக்கள் வணங்கவேண்டும்; அந்தச் சக்தியின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்; என்பதே நம்பிக்கையுள்ளவர்களின் கொள்கை; பேச்சும் ஆகும். இத்தகைய சக்தியொன்று இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதம் தொலையாத விவாதம்; இருக்கிறது என்பதற்குப் படித்தவர்களும், பக்தர்களும், ஆத்திகர்களும் காட்டும் உதாரணங்களுக்குக் கணக்கு வழக்கில்லை. சக்தி இருக்கலாம். ஆனால், அதற்கு மனிதனைப்போல சிந்தனை, சொல், செயல் ஒன்றும் இல்லை; ஆதலால் அதை நாம் வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு கூறுவர் நாத்திகர்கள்; பகுத்தறிவுவாதிகள்; விஞ்ஞானிகள். ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. நம்மை மீறிய ஆற்றல்- சக்தி- வல்லமை ஒன்று இருக்கின்றது. அந்தச் சக்தியை நம்மால் மீற முடியாது. அச்சக்திக்கு ஆக்கும் வல்லமை, காக்கும் வல்லமை. அழிக்கும் வல்லமை எல்லாம் உண்டு. அத்தகைய வல்லமை நம்மிடம் இல்லை என்று நம்புவோர் அடக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள். பொறுமை உள்ளவர்களா யிருப்பார்கள். பிறருக்குத் தீமை செய்யமாட்டார்கள்; நல்ல செயல்களைச் செய்வார்கள்; மக்களிடம் கருணை காட்டுவார்கள்; மனித சமுதாயத்தை ஒன்றென மதிப்பார்கள்; அநீதிகளைச் செய்யத் துணியமாட்டார்கள். இவை உண்மை. மாசற்ற கடவுள் நம்பிக்கையுள்ளவர்களிடம் இத்தன்மைகளைக் காணலாம். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று திரிபவர் களிடம் இத்தகைய தன்மைகளைக் காண்பது அரிது. ஆதலால் தான் மக்கள் அனைவரும் நல்ல நெறியிலே வாழவேண்டும் என்று விரும்பிய பெரியார்கள் அனைவரும் கடவுளைப் பற்றிப் பலவாறு பாடிவைத்தனர். எல்லாம் கடவுள் செயல் என்பதை மக்கள் அனைவரும் நம்பும்படி நூல்கள் எழுதினர். பாடல்கள் பாடினர். அவர்களும் தம்மைக் கடவுளின் அடிமைகள்; அன்பர்கள்; அவர் அருளை விரும்பி அலைகின்றவர்கள் என்று சொல்லிக்கொண்டனர். கடவுளின் தன்மையைப்பற்றிச் சொல்லிச் சொல்லி- மனம் உருகி உருகிப் பாடிய அன்பர்களிலே மணிவாசகர் தலை சிறந்தவர். கடவுளிடம் அவர் கொண்டிருந்த அன்பு கரையற்றது. மாணிக்கவாசகரை அன்பர் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். அன்பர் என்ற சொல் மாணிக்கவாசகரைத்தான் குறிக்கும் என்போரும் உண்டு. இத்தகைய மணிவாசகர் இறைவனைப் பற்றிப் பாடியிருக்கும் ஒரு பாடலைக் காண்போம். விச்சுஅது இன்றியே விளைவு செய்குவாய்; விண்ணும், மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்! வஞ்சகப் பெரும் புலையனேனை உன், கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பர்க்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும், கொலார்; நானும் அங்ஙனே; உடைய நாதனே; இச்செய்யுள்- இத்திருவாசகம்- கடவுள் இயல்பைக் காட்டுகின்றது. மணிவாசகர் அவரிடம் கொண்டிருந்த கரையற்ற அன்பையும் காட்டுகின்றது. விதை ஒன்று இல்லாமலே எல்லாவற்றையும் நினைப்பு வல்லமையினாலேயே உண்டாக்கிவிடுவாய்; வானுலகம் மண்ணுலகம் முழுவதையும் ஏனைய உலகங்களையும் பொருள் களையும் இவ்வுலகிலே நிலைத்திருக்கும்படி பாதுகாப்பாய்; பிறகு அவற்றை அழிப்பாய்; உள்ளத்திலே தூய்மையற்ற வஞ்சகனாகிய அற்பனாகிய என்னை உன் சந்நிதியின் முன் நின்று உன்னையே நினைந்து துதிக்கும் பித்தனாகச் செய்தாய். சிறந்த அடியார்களுக்கெல்லாம் தொண்டு செய்வதற்குரியவனாக என்னை ஆக்கினாய்; இப்படிப்பட்ட நீ என்னை விரைவில் ஆட்கொள்ளவேண்டும். நான் கெட்டவனாக இருந்தாலும் என்னைக் கைவிடக்கூடாது. தாம் நீரூற்றி வளர்த்த மரம் நச்சு மரமானாலும் வளர்த்தவர்க்கு அதை வெட்டித்தள்ள மனம் வராது. அதைப் போன்றவனே நான். நான் கெட்டவனாக இருந்தாலும் உன்னால் வளர்க்கப்பட்டவன். ஞான மார்க்கத்திற்கு வழி காட்டப்பட்டவன். என்னை அடிமையாகக் கொண்ட தலைவனே, இதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும். இதுவே மேலே காட்டிய திருவாசகத்தின் பொருள். பெரியோர் கடன் உலகிலே நல்லவர்கள் சிலர் உண்டு; அவர்கள், நாங்கள் நல்லவர்கள்; எங்களிடம் வாருங்கள்; உங்களுக்கு வேண்டிய வற்றை எல்லாம் தருகின்றோம்; உங்கள் துன்பங்களையெல்லாம் தொலைத்துவிடுகின்றோம்; உங்களை உயர்ந்த உன்னதமான வாழ்விலே ஏற்றிவைத்துவிடுகின்றோம் என்று தாமே தம் பட்டம் அடித்துக்கொள்ள மாட்டார்கள். நல்லவர்கள் எப்பொழுதும் அடக்கமாகத்தான் இருப்பார். ஆனால், அவர்களைப்பற்றிப் பலருக்குத் தெரியும். ஆயினும், பலர் அவர்களிடம் செல்வதில்லை. அவருடைய அரிய நல்லுரைகளைப் பெறுவதற்கு முயல்வதில்லை. அவர்களுடைய நல்லுரைகளைப் பெற்றாலும்கூட அவ்வுரையைப் பின்பற்றி நடப்பதில்லை; நடக்க முயல்வதும் இல்லை. இது உலக இயற்கை யாகும். ஆயினும் இத்தகைய நல்லவர்களை நாம் அணுகினால்- அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்க விரும்பினால்- அவர்கள் அறிவுரை கூற மறுப்பதில்லை. இத்தனை நாள் ஏன் எங்களிடம் வரவில்லை; நாங்கள் இருப்பதுதான் உமக்குத் தெரியுமே; தெரிந்தும் பொருட்படுத் தாமல்தானே இருந்தீர்கள்? இப்படி அலட்சியம் செய்து வந்த உங்களுக்கு எதுவும் நன்மை செய்யமாட்டேன்; வந்த வழியைப் பார்த்துக்கொண்டு திரும்பிப்போ என்று இவர்கள் மறுத்துப் பேசிவிட மாட்டார்கள்; முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லி அனுப்பிவிட மாட்டார்கள். எத்தனை நாட்கள் கழித்து அவர்களிடம் சென்றாலும் அவர்கள் நம்மை இன்முகத்துடன் வரவேற்பார்கள்; நாம் சொல்லும் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்; நம் உள்ளத்திலே அமைதியுண்டாகும்படி ஆறுதல் உரைகள் அளிப்பார்கள்; மகனிடம் தந்தை காட்டும் அன்பைப்போல் நம்மிடம் அன்பு காட்டுவார்கள்; ஆவன செய்து நம்மை ஆதரிப் பார்கள். இதுவே அறிவுள்ள ஆன்றோர்களின் உயர்ந்த தன்மை. நல்லவர்கள் பலரிடம் நாம் இத்தன்மையைக் காணலாம். இத்தகைய பெருந்தன்மையுள்ளவன்தான் இறைவன். மக்கள் நீண்ட நாட்களாக இறைவனை மறந்துவிட்டு மனம் போன போக்கிலே திரியலாம்; இறைநெறிக்கு மாறான செயல்களிலே ஈடுபட்டுத் திரிந்துகொண்டிருக்கலாம்; நன்னெறி என்பது இன்னதென்று அறியாமல்- அறிந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல்- தீநெறியிலே ஒழுகிக் கொண்டிருக்கலாம். ஆனால், எப்பொழுதாவது உண்மை ஞானம் பெற்றுவிட்டால் போதும்; தாம் செய்த குற்றங்களை உணர்ந்துவிட்டால் போதும்; செய்த குற்றங்களுக்காக வருந்தினால் போதும்; இனிக் குற்றங் களைச் செய்வதில்லை என்று சிந்தையிலே உறுதி கொண்டால் போதும்; செய்த குற்றங்களையெல்லாம் மன்னிக்கும் தன்மை இறைவனுக்குண்டு; அவனைச் சரணடைந்து மன்னிப்பளிக்கும் படி வேண்டிக்கொள்ளுவோம் என்று உறுதி கொண்டால் போதும். இறைவனை எண்ணி உள்ளங் கசிந்து உருகினால் அவன் மனம் இரங்கி அருள் செய்வான் என்பது நிச்சயம். இத்தகைய நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு. ஆரம்ப காலத்திலே அறியாமை காரணமாகப் பல தீய நெறிகளிலே சென்று தடுமாறிய பலருடைய கதைகளைக் கேட்டிருக்கின்றோம். இறுதியிலே அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து இறைவனைச் சரண் அடைந்து பெரிய அன்பர்களாக- அடியார்களாக- ஆன சரித்திரங்கள் பலவற்றைப் படித்திருக் கின்றோம். இந்த உண்மையை மணிவாசகரின் திருவாசகப் பாட்டு ஒன்று தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மாணிக்கவாசகர் தன் அனுபவத்தை அப்பாடலிலே எடுத்துரைக்கின்றார் என்றுதான் கொள்ளவேண்டும். அந்தப் பாடலையும் அதன் பொருளையும் காண்போம். மறுத்தனன்யான், உன் அருள் அறியாமையின் என்மணியே! வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே! பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே என்பதுதான் அப்பாடல். இப்பாடலிலே உள்ள உத்தர கோச மங்கைக்கு அரசே என்னும் தொடரை முதலில் வைத்துப் பொருளைக் கவனிக்கவேண்டும். மணிவாசகர், உத்தரகோச மங்கை என்னும் ஊரில் உள்ள சிவபெருமானைப் பார்த்து- எண்ணி- வணங்கி- முன்னிலை யாக்கிப் பாடிய திருவாசகமே இப்பாடல். உத்தரகோச மங்கை என்னும் ஊரில் வாழும் அரசனாகிய சிவபெருமானே! நீ பெருங் கருணைக் கடல்; யார் வந்தாலும் இரங்கி அருள்கின்றவன்; வற்றாத கருணைவாரிதி என்ற உண்மையை நான் அறியேன். ஆதலால் நான் முதலிலேயே- ஆரம்பத்திலேயே உன்னைச் சரண் அடைய மறந்தேன். எனது சிறந்த மாணிக்கமாக இருப்பவனே! இப்படி நான் மறுத்திருந்தது என் பிழைதான் என்பதை இப்பொழுது உணர்கின்றேன். ஆதலால், என்னை நீ வெறுத்து ஒதுக்கிவிடாதே; இதற்கு முன்பே ஏன் இவன் நம்மைப் பணியவில்லை என்று சினந்து தள்ளிவிடாதே. என்னை உன் அடியவனாக ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன். எனது தீவினைக் கூட்டத்தையெல்லாம் அழியும்படி அறுத்துவிடு. என்னைச் சூழ்ந்து நின்று நல்ல வழியிலே நடக்க விடாமல் தடுக்கும் அவ்வினைகளையெல்லாம் அழித்துத் தொலைத்துவிடு. என்னையும் உனது அடிமையாக ஆட்கொண்டு காப்பாற்றுக. நீ பெரியவன் என்பது உலகம் அறிந்த செய்தி. நான் உன்னைவிட எத்தனையோ மடங்கு தாழ்ந்தவன். நான் சிறியநாய் போன்றவன். பெரியோர்களின் தன்மை உனக்குத் தெரியாதது அல்ல. அவர்கள், நாய் போன்ற சிறியோர்கள் செய்யும் குற்றங் களைப் பொருட்படுத்த மாட்டார்கள். அக்குற்றங்களை மன்னித்துப் பொறுத்துக்கொள்ளுவார்கள்; ஆகையால் பெரியோனாகிய நீ என்னை மன்னித்து நான் இதுவரையில் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டு கின்றேன். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். ஏறக்குறைய இதே கருத்தை விளக்குவதே இதன் அடுத்த பாடலும். அதனையும் பார்ப்போம்; பொய்யவ னேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே! விட்டிடுதி கண்டாய்! விடம் உண் மிடற்று மையவனே! மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே! செய்யவனே! சிவனே! சிறியேன் பவம் தீர்ப்பவனே! இப்பாடலைக் கீழ்வருமாறு அடிகளை மாற்றிக் கொண்டால் போதும். விடம் உண்மிடற்று மையவனே! மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே! செய்யவனே! சிவனே! சிறியேன் பவம் தீர்ப்பவனே! பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே விட்டிடுதி கண்டாய்! இவ்வாறு மாற்றியதன் பொருள் கீழ்வருவது: விஷம் உண்டு தங்கிய கழுத்தையுடைய கரியவனே! நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசாக விளங்கு கின்றவனே! செம்மை நிறம் உள்ளவனே! சிவபெருமானே! அற்பனாகிய எனது பிறவித் துன்பத்தை நீக்குகின்றவனே! பொய்மை பொருந்திய என்னை ஒரு பொருளாக மதித்து ஆட்கொண்டவனே! என்னை உன்னுடன் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டவனே; உண்மையானவனே! என்னைக் கைவிட்டு விடுவாயோ? கைவிடாமல் காப்பாற்ற வேண்டுகின்றேன். இவ்விரண்டு பாடல்களும் மணிவாசகர், தம் அனுபவ முதிர்ச்சியால் பாடியவை. பழமை புதுமை இவ்வுலகில் உள்ள பொருள்களைப் பழமையான பண்டங்கள், புதிய பண்டங்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். எல்லாப் பொருள்களையும் இப்படி இரண்டு வகைகளாகப் பிரித்துவிட முடியும். சில பொருள்கள் பழமையாகிவிட்டால்- அவைதோன்றி நீண்ட நெடுங்காலம் ஆகிவிட்டால்- அப் பொருள்களைப் பயன்படுத்த முடியாது. அப்பொருள்களை அழித்துத்தான் ஆகவேண்டும்; புதிதாகச் செய்துதான் ஆகவேண்டும். உதாரணமாக வீடுகளை எடுத்துக்கொள்ளுவோம். உறுதி யான கட்டிடங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைத் திருக்கலாம். போலியான கட்டிடங்கள், கட்டிய சில ஆண்டு களிலேயே வசிப்பதற்குப் பயன்படாமல் போய்விடக்கூடும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடுகள் ஆகட்டும்; அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடுகள் ஆகட்டும்; இன்று புதிதாகக் கட்டிய வீடுகளோடு ஒப்பிடும்போது அவை பழைய வீடுகள்தாம். இந்த ஆண்டிலே கட்டிய வீட்டைப் புதிய வீடு என்று சொல்லுகிறோம்; பத்து ஆண்டுகளுக்குமுன் கட்டிய வீட்டைப் பழைய வீடு என்று சொல்லுகின்றோம். இதைப்போலவே ஒவ்வொன்றையும் பழமை, புதுமை என்ற வரிசையிலே சேர்த்துப் பேசுகின்றோம். இன்று வாங்கிய துணி புதுத் துணி; நேற்று வாங்கிய துணி பழைய துணிதான். இன்று சமைத்த சோறு புதிய சோறு; நேற்றுச் சமைத்து வைத்திருக்கும் சோறு பழைய சோறுதான். இன்று செய்த பணியாரம் புதிய பணியாரம்; நேற்றுச் செய்த பணியாரம் பழைய பணியாரம் ஆகும். இவற்றைப்போலவே எல்லாவற்றையும் காலத்தைக் கொண்டு பழமை, புதுமை என்று குறிப்பிடுகின்றோம். பண்டங்களைப் பழமை, புதுமை என்று வகுப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; நமது எண்ணம் பேச்சு முதலிய வற்றிலும் கூட பழசு, புதுசு பார்க்கின்றோம். நம்முடைய சமுதாயத்தில் எந்தவிதமான மாறுதலும் கூடாது. பழைய சாதி வேற்றுமைகள் அப்படியே நிலைத்திருக்க வேண்டும். உயர்ந்த சாதிக்காரன்தான் எல்லா வசதிகளையும் அனுபவிக்கவேண்டும். படிக்கும் வசதி, வாணிகம் செய்யும் வசதி, அரசாளும் உரிமை, அரசாங்கத்தில் அதிகாரம் வகிக்கும் உரிமை எல்லாம் உயர்ந்த சாதிக்காரர்களுக்குத்தான் உரியன. தாழ்ந்த சாதி என்ற சொல்லப்படும் குடியிலே பிறந்தவர்கள். உயர்ந்த சாதியினர்க்கு ஊழியம் செய்யத்தான் கடமைப்பட்டவர்கள்: அவர்கள் தம் இச்சையாக எக்காரியமும் செய்ய உரிமை அற்றவர்கள். அவர்கள் தமக்கென்று சொந்தமாகச் சொத்துச் சேர்த்து வைத்திருக்கக்கூட உரிமையற்றறவர்கள் என்பது பழைய கொள்கை; பழமையிலே நம்பிக்கையுள்ளவர்களின் எண்ணம். இத்தகைய எண்ணம் உள்ளவர்கள் இன்றும் உலகில் எங்கும் இருக்கின்றனர். இவர்கள் ஆதிக்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள்கூட உலகில் உண்டு. இவர்கள் பல துறைகளின் பெயரால்- அரசியலின் பெயரால்- மதத்தின் பெயரால்- தர்மங்களின் பெயரால்- சாத்திர சம்பிரதாயங்களின் பெயரால்- பழமையைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர். இவர்கள் எண்ணம் பழைய எண்ணம் என்பதில் தவறில்லை. இவ்வுலகில் மக்களாகப் பிறந்தவர்கள் அனைவரும் சமம்; அவர்களுக்குள் எந்த வகையிலும் வேற்றுமை பாராட்டுதல் தவறாகும். நிறபேதம், மொழிபேதம், இனபேதம், மதபேதம், தேச பேதம் எல்லாம் அழிந்துபோக வேண்டும்; மக்கள் அனைவரும்- உலக மக்கள் அனைவரும உடன் பிறந்தவர்களாக- அன்புடன் ஒன்றுபட்டவர்களாக வாழவேண்டும். எல்லா மக்களுக்கும் படிப்பதற்கு வசதி வேண்டும்; எல்லா மக்களும் அவர்கள் திறமைக்கேற்றபடி அவர்கள் விரும்பும் தொழிலைச் செய்ய உரிமை வேண்டும்; எல்லா மக்களும் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெற்று வாழ வேண்டும். இல்லையே என்ற ஏக்கத்தால் எவரும் கண் கலங்கி நிற்கக்கூடாது. எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்று எண்ணுவது புதிய எண்ண மாகக் கருதப்படுகிறது. பழைய எண்ணங்களை வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருப்பது பழைய பேச்சு; அவற்றைப்பற்றியே அடிக்கடி திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருப்பது பாட்டிப் பேச்சு; கர்நாடகப் பேச்சு: கவைக்குதவாத பேச்சு; காலத்துக்கு ஒவ்வாத பேச்சு என்ற அலட்சியம் செய்யப்படுகின்றது. புதிய கருத்துக்களை வெளியிடுவது, புதிய கொள்கைகளை ஆதரித்துப் பேசுவது, புதிய பேச்சாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலே பழமை, புதுமை என்ற பாகுபாட்டைக் காணா மலிருக்க முடியாது. இத்தகைய உலகிலே- பழமை புதுமை என்ற பாகுபாடு அமைந்த உலகிலே. இந்தப் பாகுபாட்டுக்கு அடங்காத ஒரு பொருள் உண்டு. அந்தப் பொருளைப் பழமை- புராதனமானது என்றும் சொல்லலாம். புதுமையானது என்றும் உரைக்கலாம். இப்படிப் பழமைக்குப் பழமையாய்- புதுமைக்குப் புதுமையாய் நிற்கும் பொருள் என்றும் அழியாத பொருளாக இருக்க வேண்டும்; எவ்வளவு நீண்ட காலமானாலும் ஒருகாலத்தில் அழிந்துபோகும் தன்மையுள்ள பொருள் இந்த நிலையை அடைய முடியாது. பண்டைக்கால ஞானிகள் அழியாத பொருள்- சக்தி- கடவுள் ஒன்றுதான் என்று கண்டனர். ஆதலால் அவர்கள் கடவுளையே என்றும் உள்ள பொருள் என்று உறுதி கொண்டனர்; இவ் வுறுதியின் காரணமாகவே அவர்கள் இறைவன் ஒருவன்தான் பழையனவற்றில் எல்லாம் பழமையானவன், புதியனவற்றில் எல்லாம் புதுமையானவன் என்று முடிவு செய்தனர். கடவுள்- இறைவன்- தோன்றிய காலத்தைக் கணக்கிட முடியாது; மறையும் காலமும் இல்லை; உலகம் தோன்றிய காலத்திலும் இருந்தான்; உலகம் அழியும் காலத்திலும் இருப்பான்; நேற்று இருந்தவன் பழையவன் நாளை இருப்பவன் புதியவன்; இறைவன் நேற்றும் இருந்தான்; நாளையும் இருப்பான்; ஆதலால் அவனே பழமைக்குப் பழமை, புதுமைக்குப் புதுமை என்று குறிப்பிடுவதற்குத் தகுதியுள்ளவன். இவ்வுண்மையை மாணிக்கவாசகர் குறிப்பிட்டிருக்கின்றார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீர் அடியேம் உன் அடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம்கணவர் ஆவார்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்; இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம்; ஏல் ஓர் எம்பாவாய்! இப்பாடல் இறைவனிடம் அன்புகொண்ட பல பெண்கள் ஒன்று சேர்ந்து பாடியதுபோலப் பாடப்பட்டதாகும். இறை வனைப் பதுமை உருவிலே- பாவை உருவிலே- வைத்து அவனை நோக்கிப் பாடியதுபோலப் பாடப்பட்டது. இந்த முறையிலே மணிவாசகரால் பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் இது. இதன் பொருள் கீழ்வருவது: பழமையான் பழம்பொருளைக்காட்டிலும் பழமையான பழம்பொருளே! பிற்காலத்தில் தோன்றிய புதிய பொருளைப் போலவே மீண்டும் மீண்டும் புதிய பொருளாகவே காட்சியளிப் பவனே! உன்னைத் தலைவனாக அடையப் பெற்ற உனது சிறந்த அடியார்களாகிய நாங்கள், உன் பக்தர்களின் பாதங்களைப் பணிவோம்; அவர்கள் பக்கத்திலே நிற்போம்; அவர்களே எமது தலைவர்கள் ஆவார்கள்; காதலர்கள் ஆவார்கள்; அவர்கள் எதை விரும்பிச் சொல்லுகின்றனரோ அவற்றையே மேற்கொண்டு அடிமையாய் நின்று பணி செய்வோம். இந்த வகையிலே வாழ, எம் தலைவனாகிய நீ எமக்கு அருள் செய்வாயானால் நாங்கள் எவ்விதக் குறையும் இல்லாமல் வாழ்வோம். ஒப்பற்ற எமது பாவையே, நாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம். இதுவே பாடலின் பொருள், இதனால், பழமையாகவும் புதுமையாகவும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்பதைக் காணலாம். திருவெம்பாவையில் உள்ள இப்பாடலால் இறைவனுடன் ஒன்றுபட்டவர்களும் இறைவனைப் போலவே விளங்குவர். அவர்களும் பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் மக்களால் போற்றப்படுவார்கள் என்பதை அறியலாம். தித்திக்கும் தெய்வம் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றுதான் சுவை தரும் பண்டமாக இருக்கும். எல்லார்க்கும் எல்லாச் சுவையும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தித்திப்புக்கு மதிப்பு உண்டு; தித்திப்பைத் தான் உயர்ந்த சுவை என்று சொல்லுவார்கள். தித்திப்புக் கலந்த பண்டங்கள் பல உண்டு. பெரும்பாலான மக்கள் தித்திப்புப் பண்டங்களைத்தான் விரும்பித் தின்பார்கள். இலக்கியங்களில் எல்லாம் இனிப்பைத்தான் புகழ்ந்து பேசுகின்றனர். ஆயினும் இனிப்பை வெறுக்கும் பேர்வழிகளும் உண்டு. சர்க்கரையோ- சீனியோ- வெல்லமோ- கருப்பட்டியோ- கற்கண்டோ கலந்த பண்டத்தை வேண்டாம் என்று வெறுப் போர் சிலர் உண்டு. இவர்கள் புளிப்பை விரும்புவார்கள். புளிப்பைத்தான் தங்களுக்குப் பிடித்தமான சுவை என்பார்கள். சிலர் அளவுக்கு மீறிய உரைப்பைத் தின்பார்கள். அந்த உரைப்பை நாம் தின்றால் நம்மால் தாங்கமுடியாது. நம்மை அறியாமலே நம் கண்களிலிருந்து தாரையாக நீர் வடியும். கசப்பை விரும்பித் தின்பவர்கள் கூட உண்டு. இப்படிச் சிலர் இனிப்பை வெறுப்பதனால்- புளிப்பை விரும்புவதனால்- உரைப்பை உண்பதனால்- கசப்பைத் தின்பதனால் தித்திப்பின் மதிப்புக் குறைந்துவிடாது. அதுதான் சுவைகளிலே உயர்ந்த சுவையாகக் கருதப்படுகின்றது. இனிப்புப் பொருந்திய இயற்கைப் பொருள்களையெல்லாம் உயர்ந்தவை என்றே போற்றிக் கொண்டாடியிருக்கின்றனர். பெரும்பாலோர் விரும்பி உண்ணும் உயர்ந்த சுவை இனிப்பு என்பதில் ஐயம் இல்லை. ஆதலால் தாம் வணங்கும் கடவுளைக் கூட அன்பர்கள் சுவையுள்ள பண்டங்களுக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கின்றனர். தித்திப்புப் பொருள்களை அடுக்கி வைத்துப் பாடும் பாடல்களும் சுவை நிறைந்த செய்யுள்களாய்த் தான் இருக்கின்றன. பாடவும் படிக்கவும் இனிமையாக இருக்கின்றன. இதற்கு உதாரணமாகத் திருவாசகத்தில் ஒரு செய்யுளைக் காண்போம். திருவாசகத்தையே தேன் என்று சொல்லியிருக்கின்றனர். மணிவாசகர் பாடிய நூல் திருவாசகம். இது படிக்கப் படிக்க இனிக்கும் பாடல்களின் தொகுதி. ஆதலால், இதனைத் திருவாசகம் என்னும் தேன் என்று கூறினர். தேன் தித்திப்புப் பண்டம் அல்லவா? ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத் தேனைப், பழச்சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனை, பிறப்பு அறுத்து ஆண்டு கொண்ட கூத்தனை, நாத்தழும்பு ஏற வாழ்த்தி, பானல் தடம்கண் மடந்தை நல்லீர்; பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. இப்பாடல் திருவாசகத்தில், திருப்பொற் சுண்ணம் என்னும் பகுதியில் உள்ள ஒரு பாடல். இறைவனுக்காக- இறைவன்மேல் பூசிக் குளிப்பாட்டு வதற்காக- நீராட்டுவதற்காக, ஒரு தலைவி வாசனைப் பொடி இடிக்கின்றாள். அவளுடன் இன்னும் பல இளம் பெண்களும் சேர்ந்து பொடி இடிக்கின்றனர். அவர்கள் அவளுடைய தோழிமார்கள். வாசனைப்பொடி இடிக்கும் தலைவி, உலக்கை பிடித்து இடிப்பதனால் உண்டாகும் சோர்வு தீரப் பாட்டுப் பாடுகின்றாள். ஒவ்வொரு தொழில் செய்வோரும், தங்கள் சோர்வு நீங்கப் பாட்டுப் பாடுவது வழக்கம். இந்தப் பண்டை வழக்கம் இப்பொழுது மறைந்து வருகின்றது. ஆண்கள் வேலை செய்யும்போதும் சேர்ந்து பாடுவார்கள்; பெண்கள் வேலை செய்யும்போதும் சேர்ந்து பாடுவார்கள். மேலே காட்டிய பாடல் வாசனைப் பொடி இடிக்கும் பெண்கள் பாடுவதுபோலப் பாடப்பட்ட பாடல். இவ்வாறு மணிவாசகர் இருபது பாடல்கள் பாடியிருக்கின்றார். திருப்பொற் சுண்ணம் என்ற தலைப்பிலே திருவாசகத்திலே இப்பாடல் களைக் காணலாம்; படித்துச் சுவைக்கலாம். முதலில் மேலே கண்ட பாடலின் பொருளைக் காண்போம். அதன்பின் அதில் அமைந்திருக்கும் சுவையைக் காண்போம். இப்பாடலுக்குப் பொருள் சொல்லும்போது பானல் தடம்கண் மடந்தை நல்லீர் என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்லவேண்டும். நீலோற்பல மலர்போன்ற அகன்ற கண்களையும் இளமைப்பருவமும் உடைய அழகிய தோழிமார்களே! நமது தலைவன் ஞானமாகிய கரும்பின் தெளிந்த சாறாக இருப்பவன்; காய்ச்சிய சர்க்கரைப் பாகாக இருப்பவன்; யாராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத நன்மையாக இருப்பவன்; சுவை கெடாத தேனாக இருப்பவன்; மா, பலா முதலிய பழங்களின் சுவையாக இருப்பவன்; நம் உள்ளத்திலே புகுந்து இனிப்புடன் இருக்கும் இயல்பு படைத்த தலைவன்; நம்முடைய பிறப்பை நீக்கி இனிப் பிறவாத தன்மையைத் தந்து ஆட்கொண்ட கூத்தன்; இத்தகைய ஒப்பற்ற தலைவனை நாவிலே தழும்பு உண்டாகும்படி பாடிப் பாடி- சொல்லிச்சொல்லி- வாழ்த்தி- பாடிக்கொண்டு நாம் அழகிய சுண்ணத்தை இடிப்போம். இச்செய்யுளிலே, சிவபெருமானைச் சுவையுள்ள இனிப்புப் பண்டங்களுக்கு ஒப்பாக- என்று சொல்லுவதைவிட இனிப்புப் பண்டங்களாகவே சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். முதலில் கூறப்படுவது ஞானக் கரும்பின் தெளிவு அதாவது கருப்பஞ்சாறு. ஞானத்தை- அறிவை- கரும்பாக உருவகம் செய்யப்பட்டது. அந்தக் கரும்பில் பிழிந்தெடுத்த சாறாகக் கூறப்பட்டது. இதற்கு அடுத்தது பாகு. கரும்பிலிருந்து வடித்தெடுத்த சாற்றிலிருந்து செய்யப்படுவது சர்க்கரை அல்லது வெல்லம். அந்த வெல்லத்தை அல்லது சர்க்கரையைக் காய்ச்சியது தான் பாகு என்பது. அல்லது கருப்பஞ்சாற்றிலிருந்து தேன் பாகு என்று ஒருவகைப் பண்டம் செய்யப்படுவதும் உண்டு. இதையும் பாகு என்று கூறுவர். இதன் சுவை கருப்பம் சாற்றைவிட உயர்ந்தது. இதற்கு அடுத்தது நந்தாத் தேனை என்பது. இது சுவை கெடாத தேனைக் குறித்தது. உயர்ந்த தேன் எத்தனை ஆண்டு களானாலும் சுவை கெடாமல் அப்படியே இருக்கும். தேன் பாகைவிடத் தேனின் சுவை சிறந்ததாகும். இதற்கு அடுத்தது பழச் சுவை; தேனின் சுவையை விடப் பழச்சுவை உயர்ந்தது தேனாவது ஓர் அளவுக்குமேல் போனால் தெவிட்டும்; உடலுக்கும் தீங்கு விளைத்தாலும் விளைக்கும். பழச்சுவை தெவிட்டாது. எவ்வளவு பழம் வேண்டுமானாலும் தின்னலாம். எத்தனை குவளை வேண்டுமானாலும் பழச்சாற்றை அருந்தலாம். ஆதலால்தான் பழச்சாற்றை இறுதியாக வைத்துக் கூறினார். ஆகவே, இந்தப் பாடலில் ஒன்றற்கொன்று சுவையிலும் தன்மையிலும் உயர்ந்த இனிய பண்டங்களை வரிசையாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். முதலில் கருப்பஞ் சாறு; அதன் பிறகு அதிலிருந்து செய்யப் படும் தேன் பாகு அல்லது சர்க்கரைப் பாகு; அதன்பின் தேன் பாகைவிட உயர்ந்ததாகிய- என்றும் கெடாத சுவையுள்ள தேன். கருப்பஞ்சாறு, தேன்பாகு, தேன் இவை ஓர் அளவுக்குமேல் போனால் தெவிட்டக்கூடியவை. ஆதலால், இவற்றுக்குப்பின் பழச்சுவையைக் கூறினார். பழச்சுவை தெவிட்டாத சுவையுள்ள தாகும். இறைவன் நம்பினோர்க்கு இன்பம் தருகின்றவன். இறை வனிடம் அன்புகொண்டுள்ளவர்கள் இறைவனை நினைப்பதால் இன்புறுவர்; பாடுவதால் இன்புறுவர்; வணங்குதால் இன்புறுவர்; அவன் புகழைப் பேசுவதால் இன்புறுவர்; இவையே அவர் களுக்குச் சுவை பயப்பன. ஆகவே, அன்பர்களுக்கு ஆண்டவன் இனிப்புப் பண்டமாக இருக்கின்றான். அகந்தை நீங்கி அன்பிலே ஊறியவர்க்குத் துன்பம் ஏது? அவர்கள் என்றும் இன்பத்திலேயே மிதப்பர் என்பது உண்மையன்றோ? வண்டுவிடு தூது மணிவாசகர் சிவபெருமானிடம் வண்டைப் பார்த்துத் தூது செல்லும்படி வேண்டுகின்றார். தூது சென்று, தன் துன்பத்தைத் துரத்தி உதவும்படி மன்றாடுகின்றார். சிவபெரு மானிடம் நான் வைத்திருக்கும் அன்பு அளவு கடந்தது; அவனும் என்னிடம் கருணை உள்ளவன்; அவனால் நான் அடைந்த புகழும், பெருமையும், அருளும் சொல்லுந் தரமன்று. நானாக அவனைத் தேடிச் செல்லவில்லை. அவனே தான் என்னைத் தேடிவந்து அருள்செய்தான். அத்தகைய அருளாளனை நான் காணவேண்டும் ஆதலால் அவனிடம் போய் எனது நிலைமை யைக் கூறி வருக என்றெல்லாம் வண்டைப் பார்த்துப் பேசுகின்றார். திருக்கோத்தும்பி என்னும் தலைப்பிலே திருவாசகத்துள் இருபது பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்களில் இக் கருத்தைக் காணலாம். தும்பி என்பது ஆண்வண்டு; கோத்தும்பி என்பது அரச வண்டு; திரு என்பது அடைமொழி. திருக்கோத்தும்பி என்றால், அழகிய அரசவண்டைப் பார்த்துச் சொல்லுவது என்று பொருள். தூதாகச் செல்வோர்க்கு நல்ல அறிவு, சிறந்த குடிப்பிறப்பு, இனிமையாகப் பேசுந் திறமை, பிறர் மதிக்கத்தக்க தகுதி இவைகள் வேண்டும். தூதர் தகுதியைப் பொறுத்தே அவருடைய சொல்லுக்கு மதிப்பிருக்கும். ஆதலால், மணிவாசகர் தன் ஆவலை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு அரச வண்டைத் தூதாகத் தேர்ந்தெடுத்தார். வண்டோ அரச வண்டு; தேனை உண்டு வாழ்வது; ஆதலால் அதன் குரல் கேட்போரை வசப்படுத்தும் இனிய குரல். மணிவாசகர் பாண்டியனிடம் மந்திரியாக இருந்தவர். யாரைத் தூதுவராக அனுப்பலாம்? யாரைத் தூதுவராக அனுப்பக்கூடாது? என்பதை அவர் நன்றாக அறிவார். ஆதலால் கண்டவரைத் தூதனுப்பத் துணியவில்லை. அரச வண்டைத் தூதாக அனுப்புகின்றார். மாணிக்கவாசகர் தேர்ந்தெடுத்த தூதன் சரியான தூதன். ஏ, அரச வண்டே! நீ தேன் அருந்தும் பூவிலே, தினை அளவு தேன் கிடைப்பதுகூட அரிது, எவ்வளவுதான் ஒட்ட உறிஞ்சினாலும் தினை அளவு தேனுக்குமேல் கிடைக்கப் போவதில்லை. இந்த அற்பத் தேனுக்கு ஆசைப்பட்டுக் காலம் போக்குவதால் என்ன பயன்? இதனால் உன் வயிறும் நிரம்பாது; உள்ளமும் திருப்தியடையாது. ஆதலால் இம்முயற்சியை விட்டுவிடு; நான் சொல்வதைக் கேட்பாயாக. ஏராளமாக- வற்றாமல்- தேனைச் சொரிந்துகொண்டிருக்கும் வாடாமலர் ஒன்று உண்டு. அம்மலராகிய இறைவன், இல்லை என்னாமல் இன்பத்தைச் சுரக்கும் வள்ளல். அவனை நெஞ்சால் நினைத்தாலே போதும்- ஆனந்தத் தேன் சொரியும்; கண்ணால் கண்டாலே போதும்- இன்பத்தேன் ஊற்றொடுக்கும். அவன் எப்பொழுதும் நம் உடம்பில் உள்ள எலும்பெல்லாம் உருகும் படி இனிய இன்பத் தேனைச் சொரிவான். இப்பண்புடன் நடனமாடும் இறைவன் அவன். அவனிடம் போய் என் ஆவலை எடுத்துரைப்பாயாக. இவ்வாறு அரச வண்டைப் பார்த்துச் சொல்லுகிறார் மாணிக்கவாகசர். இப்பொருள் அமைந்த இனிய செந்தமிழ்ப் பாடல் கீழ்வருவது: தினைத்தனை உள்ளது ஓர் பூவினில், தேன் உண்ணாதே. நினைத்தொறும் காண்தொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்துஎலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புஉடை யானுக்கே சென்று, ஊதாய், கோத்தும்பி! இந்த அருந்தமிழ்க் கவியில் அமைந்திருக்கும் பொருள் நயம் சிந்தையைக் கவரும் சிறப்புள்ளது. தூது போகும் வண்டுக்கும், தூது போவதனால் இன்பம் உண்டு; இலாபம் உண்டு; நன்மையுண்டு! என்று சொல்லுவதுதான் அந்த நயம். ஏ, அரச வண்டே! நீ தினை அளவுதான் தேன் கிடைக்கும் மலர்களிலே தேனுக்காக அலைய வேண்டாம்; பறந்து திரிய வேண்டாம். சிவபெருமானிடம் செல்வாயானால். உனக்கு என்றும் வற்றாத தேன் கிடைக்கும். அந்தத் தேன் எளிதிலே கிடைக்கும் என்று சொல்லியிருப்பது உலக இயல்பை ஒட்டி யிருப்பதைக் காணலாம்; இலாபமும், இன்பமும் தரும் வேலையைச் செய்ய யார்தான் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்? திருக்கோத்தும்பியில் உள்ள மற்றொரு பாட்டு குறிப்பிடத் தக்கது. அக்கவிதையிலே திருக்குறள் ஒன்றின் பொருளை அப்படியே எடுத்துச் சொல்லுகிறார் மாணிக்கவாசகர். பற்றுக பற்றுஅற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்பது திருக்குறள். பற்றில்லாதவனாகிய கடவுளின்மேல் உள்ள அன்பை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்ளுக. ஏனைய ஆசைகள் ஒழிவதற்கே அந்த அன்பைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இக்குறளின் பொருள். இக்குறளின் பொருளை அப்படியே பின்பற்றி நின்றவர் மாணிக்கவாசகர். இவ்வுண்மையை அவரே அழகாகப் பாடியிருக்கிறார். இப்பூதலத்தில் உள்ளவர்கள் உண்மைத் தெய்வம் இன்னதுதான் என்று உணரவில்லை. அந்தத் தேவர்தான் சிறந்த தேவர்; அவர்தான் எல்லாம் வல்ல தேவர்! என்று இவ்வாறு பொய்த் தெய்வங்களைப்பற்றிப் பேசிப் புலம்புகின்றனர். இத்தகைய பைத்தியக்காரர்கள் நிறைந்த உலகம் இது. இவ் வுலகிலே நான் உண்மைத் தெய்வத்தை உணர்ந்தேன். வேறு ஒரு பற்றும் எனக்கில்லை; என் பற்று முழுவதும் அழிந்து போக வேண்டும்; என்னை விட்டு நீங்க வேண்டும். இதற்காகவே நான் உண்மையான தெய்வத்தினிடம் பற்றுக்கொண்டு- அன்பு கொண்டு நின்றேன். அந்த உண்மையான தேவதேவனிடம் நீ தூதாகச் செல்லவேண்டும்; என் ஆவலை எடுத்துச் சொல்ல வேண்டும். ஏ! அரச வண்டே! இதுதான் நீ எனக்குச் செய்ய வேண்டிய உதவியாகும். என்று வேண்டிக்கொள்ளுகிறார். இப்பொருள் அமைந்த பாடல் கீழ்வருவது: அத்தேவர் தேவர்! அவர்தேவர்! என்று இங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே, பத்துஏதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பி, இப்பாடலிலே, பத்து ஏதும் இல்லாது, என் பற்றுஅற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கு என்று வரும் தொடரும், மேலே காட்டிய திருக்குறளும் ஒன்றே; ஒரே கருத்துடையனவே. இப்பாடலின் மூலம் மணிவாசகர் ஒரு உண்மையை உணர்த்தினார். சிவபெருமானே உண்மைத் தெய்வம்; அவரிடமே அன்பு காட்டவேண்டும்; உலகப்பற்று ஒழிவதற்குத்தான் அந்த அன்பும். பற்றற்ற பண்பு வேண்டுமானால் பற்றற்ற கடவுளைப் பற்றுவதனாலேயே அடைய முடியும் என்பதுதான் அந்த உண்மை. மேலே காட்டிய இரண்டு இனிய செந்தமிழ்ப் பாடல் களும் தமிழர் அருள்நெறியை விளக்கும் சிறந்த பாடல்கள். காலைக் காட்சி மாணிக்கவாசகரின் மனமுருக்கும் பாடல்களிலே இனிய இயற்கைக் காட்சிகள் பலவற்றைக் காணலாம். திருவாசகத்தில் திருப்பள்ளி எழுச்சி என்னும் தலைப்பில் உள்ள பாடல்கள் பத்து; அவைகள் நம் உள்ளத்தைக் கனிவிக்கும் கவிதைகள். அக் கவிதைகளிலே இயற்கை நிகழ்ச்சிகளைக் காணலாம்; கடவுள் தத்துவத்தை உணரலாம்; பக்தியால் ஏற்படும் பயனை அறியலாம். பள்ளி- படுக்கை. எழுச்சி- எழுவது. திருப்பள்ளி எழுச்சி- அழகிய படுக்கையிலிருந்து எழுவது. பொழுது விடிந்துவிட்டது என்று சொல்லிப் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்படி வேண்டுவது திருப்பள்ளி எழுச்சி, உறங்கும் சிவபெருமானைக் குறித்து, விடிந்துபோயிற்று; இன்னும் உறக்கமா? எழுந்திருந்து அன்பர்களுக்கு- உன்னைப் பார்த்துப் பணியக் காத்துநிற்கும் அன்பர்களுக்கு- அருள்புரிய வேண்டும் என்று வேண்டிப் பாடி யிருப்பதே திருவாசகத்தில் உள்ள திருப்பள்ளி எழுச்சியாகும். அந்த அழகு தமிழ்ப் பாடல்களில் இரண்டைப் படிப்போம். அழகுள்ள குயில்கள் கூவின; கோழிகளும் பொழுது விடிந்ததை அறிவித்துக் கூரைமேலிருந்து கூவின; பறவைக் கூட்டங்கள் எல்லாம் மரக்கிளைகளிலே அமர்ந்து பொழுது விடிந்துவிட்டது என்று இரைந்து சொல்லின; சங்குகள் காது செவிடுபடும்படி முழங்கின. வானத்தில் காணப்படும் நட்சத்திரங் களின் ஒளி மறைந்துவிட்டது. கதிரவன் ஒளி, அவன் எப் பொழுதும் உதயமாகும் கீழ்த்திசையிலே காணப்படுகின்றது. சிவபெருமானே! நமக்கு, அன்புடன், வீர கண்டாமணி அணிந்த உன் பாதங்களைக் காட்டியருள்வாய்! திருப்பெருந்துறையிலே வாழ்கின்ற சிவபெருமானே! யாராலும் அறியமுடியாத பராபரனே! ஆனால் எமக்கு எளிதிலே காட்சி அளித்தவனே! எமது தலைவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக! என்று பாடிச் சிவபெருமானைத் துயில் எழுப்புகின்றார் மாணிக்கவாசகர். கூவின பூங்குயில் கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்கு தேவ! நல் செறிகழல் தாள்இணை காட்டாய்! திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே! யாவரும் அறிவறி யாய்! எமக்கு எளியாய்! எம்பெரு மான்பள்ளி, எழுந்தரு ளாயே! இப்பாடலில் காலைப் பொழுதின் இயற்கைக் காட்சியைக் காணுகின்றோம். இவ்வாறு பொழுது விடிந்த செய்தியைத் தெரிவித்தார். இதன்பின், சிவபெருமான் தெரிசனத்துக்காகக் காத்துநிற்பவர்கள் யார் யார் என்பதை எடுத்துரைக்கின்றார். இனிய ஓசையை எழுப்பும் வீணையை வாசித்துக் கொண்டும், யாழிலே இசையை எழுப்பிக்கொண்டும் பலர் ஒருபுறத்திலே உன் தெரிசனத்துக்காகக் காத்து நிற்கின்றனர். மற்றொரு பக்கத்திலே, இருக்கு வேத பாராயணத்துடன், இனிய பல செந்தமிழ்த் துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டு பக்தர்கள் கூட்டம் காத்து நிற்கின்றது. இன்னொரு புறத்திலே, நெருக்கமாக வைத்துத் தொடுத்த மலர்மாலை களைக் கைகளில் வைத்துக்கொண்டு, உன்னைப் பூசிப்பதற்காகப் பலர் காத்து நிற்கின்றனர். வேறொரு இடத்திலே, உன் பாதங்களைப் பணிகின்றவர் களும், உனது அருளை நோக்கி ஆனந்தக் கண்ணீர் சிந்து கின்றவர்களும், உடல் துவள் கின்றவர்களுமான அடியார் திருக்கூட்டத்தினர் நிற்கின்றனர். இன்னொரு புறத்திலே, உன் பாதங்களைப் பார்த்து, தம் தலைமேல் கைகளைக் கூப்பிநிற்கும் அன்பர்கள் காத்துக் கொண்டு நிற்கின்றனர். ஆதலால் திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! என்னையும் உனது அடிமையாகக் கொண்டு, இனிய அருளைச் செய்யும் எமது தலைவனே! இன்னும் நீ உறங்காதே! பள்ளியி லிருந்து எழுந்தருள்வாய்! உன்னைப் பணிந்து அருள்பெறக் காத்திருக்கும் பக்தர்களுக்கெல்லாம் காட்சி அளிப்பாயாக. இன்இசை வீணையர் யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள்புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தருள் வாயே! இவ்வாறு, விடியற்காலத்திலே சிவபெருமான் தெரிசனத் துக்காகக் காத்துநிற்கும் அன்பர்கள் வரிசையை எடுத்துச் சொல்லுகின்றார். இவர்களையெல்லாம் காக்க வைக்காமல் எழுந்து காட்சி தரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறார். மேலே காட்டிய இரண்டு பாடல்களும், படிப்போர் மனத்தைப் பரவசமாக்கும் இனிய பாடல்கள். முதல் பாட்டு, விடிந்துவிட்டது என்பதற்கான அடையாளங்களை அறிவித்தது. இரண்டாவது பாட்டு. பக்தகோடிகள் பலர் திருவருள் பெறக் காத்து நிற்கின்றனர்; அவர்களைக் காக்க வைக்காமல் எழுந்தருள் வாயாக என்று வேண்டிற்று. அன்பர்களைக் காக்கவைப்பது கருணைக்கு அழகன்று; விரைவில் அருள் செய்வதுதான்- கிருபை செய்வதுதான்- காட்சி அளிப்பதுதான்- பெருங் கருணையின் பண்பாகும் என்ற நீதியும் இரண்டாவது திருவாசகத்தில் அடங்கியிருப்பதைக் காணலாம். சிவபெருமானே விடியற்காலத்தில் உறங்கக்கூடாது; படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டும்; அன்பர்களைக் காக்கும் தனது கடமையைச் செய்யவேண்டும்; என்று விரும்பு கிறார் அடிகள். இவர், மக்கள் சுறுசுறுப்பில்லாமல் சோம்பிக் கிடப்பதை விரும்புவாரா? எல்லா மக்களும் காலாகாலத்தில் தங்கள் கடமைகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்பதும் மணிவாசகர் கருத்தாகக் கொள்ளலாம். நானே சமர்த்தன் ஆண்டவன் அருளை அடையவேண்டுமானால் அது எளிதிலே கிடைக்காது; அவனுடைய அருள் இருந்தால்தான் கிடைக்கும். இதுவே ஆன்றோர்கள் கொள்கை. இந்த உண்மையை மாணிக்கவாசகர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். சிவநேயச் செல்வராகிய அவர், சிவபக்தரானதற்குக் காரணம் சிவபெரு மான் அருள்தாள் என்று கூறியிருக்கிறார். அவன் அருளாலே அவன்தான் வணங்கி என்பது மணிமொழியார் வாசகம். இக் கருத்தை அவர் தமது இனிய தமிழ்க் கவிகள் பலவற்றிலே எடுத்துரைத்திருக்கின்றார். உலகமே- உலகில் உள்ள தாவர சங்கமப் பொருள் எல்லாம் ஆண்டவனேதான் என்பது மணிவாசகர் கண்ட உண்மை. அவர் ஆண்டவனைப் பணிந்து பாடும்போது அவனுடைய அற்புத மான பண்புகளையெல்லாம் புகழ்ந்து புகழ்ந்து போற்றுகிறார்; வியந்து வியந்து பாடுகின்றார். இறைவன் நாம் எண்ணியவற்றை எல்லாம்- விரும்பியவை களையெல்லாம்- கொடுக்கும் கற்பகத் தரு; எவ்வளவு எடுத்தாலும், எடுக்கக் எடுக்கக் குறையாத பெருநிதிக் குவியல்; அவன் உண்ணத் தெவிட்டாத அமுதம்; உடலுக்கும் உள்ளத்துக்கும் இன்பந்தரும் அமுதம்; அவன் ஒரு பெரிய சுடர்க் குன்றம்; என்றும் மங்காத- குன்றாத- அழியாத- பேரொளி பொருந்திய சோதிமலை. அவன் வேதங்களாக நிற்பவன்; வேதங்களின் முடிவான பொருளாகவும் நிற்பவன். வேதங்களாகவும், வேதப் பொருளாகவும் என் உள்ளத்திலே புகுந்து நிலைத்திருப்பவன். அணையால் தடுக்கப் படாத வெள்ளம்போல் என் உள்ளத்திலே விரைந்து புகுந்த திருப்பெருந்துறைப் பெருமான். இத்தகைய இறைவன் என் உடம்பையே தான் குடியிருக்கும் கோயிலாகக் கொண்டான். இனி அவனை இரந்து வேண்டுவது ஒன்றும் எனக்கில்லை. என் உள்ளத்தில்- என் உடம்பில்- நிலைத்து வாழ்கின்றவனிடம் நான் இரந்து- கெஞ்சிக் கேட்பதற்கு என்ன இருக்கின்றது? என் தேவைகளையெல்லாம் அவனே அறிவான்; ஆதலால் அவனா கவே எல்லாவற்றையும் அருள்வான். இவ்வாறு அவன் அருளைப் பெற்ற விதத்தைப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இக்கருத்து- இப்பொருள் அமைந்த பாடல் கல்மனத்தையும் கரைக்கும் தெய்வீகத் தன்மையுள்ளது. அன்பு கனிந்த பேச்சில் வசமாகாதவர்கள் ஒருவரும் இல்லை. அன்பு கலந்த மொழிகள் அனைவரையும் மகிழ்விக்கும். பேச்சுக்கே இவ்வளவு சக்தியிருக்குமானால் அன்பிலிருந்து விளைந்த அருந்தமிழ்ப் பாட்டுக்கு எவ்வளவு சக்தியிருக்கும் என்பதை அளவிட்டுச் சொல்ல முடியுமா? குறைவுஇலா நிறைவே! கோதுஇலா அமுதே! ஈறுஇலாக் கொழும்சுடர்க் குன்றே! மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்துஎன் மனத்திடை மன்னிய மன்னே! சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறைஉறை சிவனே! இறைவனே! நீ, என் உடல்இடம் கொண்டாய்! இனிஉன்னை என்இரக் கேனே! இப்பாடலில், மணிவாசகர், இறைவன் தானாகவே வந்து தனக்கு அருள்புரிந்த தன்மையை எடுத்துரைத்தார். இறைவன் அருளைப் பெற்றதனால் தனக்குக் கிடைத்த பலனையும் இக் கவிதையில் எடுத்துக்காட்டினார். இறைவன் அருள் புரிந்ததால், குறைவற்ற செல்வம் கிடைத்தது; வேதம் அறிந்தேன்; வேதப் பொருளையும் அறிந்தேன் என்று பாடினார். மற்றொரு கவிதையில்- திருப்பாட்டில்- மணிவாசகர் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் வியப்புக்குரியது. பரமசிவனை நேரே பார்த்துப் பாடுவதுபோல அமைந்தது அக்கவிதை. நீ, தலைவன்தான்; நான் தொண்டன்தான். ஆயினும் நம்முள் யார் சதுரர்? திறமைசாலி? கெட்டிக்காரர்? தெரியுமா? தலைவனாகிய உன்னைவிடத் தொண்டனாகிய நானே சமர்த்தன் என்று பாடுகின்றார். அவர், தானே சமர்த்தன் என்று சும்மா சொல்லிவிடவில்லை. தகுந்த காரணத்துடன் சொல்லுகிறார். சிவபெருமானே! நீ உன்னை என்னிடம் ஒப்படைத்து விட்டாய்! என் உள்ளத்திலும் உடலிலும் நிலைத்து வாழ் கின்றாய்! இதற்கு மாறாக என்னை உன் அடியவனாக எடுத்துக் கொண்டாய்! ஆதலால் நம்முள் யார் சமர்த்தர்? உன்னை, நான் பெற்றதனால் நான் அடைந்த பயன் பெரிது; அழிவில்லாத ஆனந்தத்தைப் பெற்றேன்; என்னை நீ கொண்டதனால் என்னால் நீ பெற்ற பயன் என்ன? ஒன்றும் இல்லை. என்னைக் காக்கவேண்டிய பாரந்தான்- சுமைதான்- நீ பெற்ற பயன். என் நெஞ்சத்தையே கோயிலாகக் கொண்ட எம்பெரு மானே! திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! எம்மைப் பாதுகாத்த தந்தையே! ஈசனே! என் உடம்பையே நீ இடமாகக் கொண்டு வாழ்கின்றாய்! இதற்கு நான் செய்யக் கூடிய எதிர் உதவி ஒன்றுமே இல்லை என்று பாடுகின்றார். தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை; சங்கரா! ஆர்கொலோ சதுரர்? அந்தம் ஒன்றுஇல்லா ஆனந்தம் பெற்றேன்; யாதுநீ பெற்றதுஒன்று என்பால்? சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்! திருப்பெருந் துறைஉறை சிவனே! எந்தையே! ஈசா! உடல்இடம் கொண்டாய்! யான்இதற்கு இலன்ஓர் கைம்மாறே. இக் கவிதையும், மணிவாசகருக்குச் சிவபெருமான் தானாகவே முன்வந்து அருள் புரிந்தார் என்ற உண்மையை உணர்த்திற்று. நான் சிவபெருமான் அருளைப் பெற்றேன்; அதனால் நான் அடைந்த பலன் என்றும் அழியாத ஆனந்தம். எல்லா மக்களும் மகிழ்ச்சிகரமான ஆனந்த வாழ்வைத்தான் விரும்பு கின்றனர். ஆனந்த வாழ்வை விரும்பியே அனைவரும் உழைக் கின்றனர்: முயற்சிகள் பல செய்கின்றனர். அவ்வாழ்வு எனக்குக் கிடைத்துவிட்டது. அது சிவபெருமான் அருளால் கிடைத்தது. நமது முயற்சியால் அடையும் ஆனந்தம் நிலையானது; அழியாதது; என்று எண்ணிவிட முடியாது. ஆனால் சிவபெருமான் அருளால் அடையும் ஆனந்த வாழ்வு என்றும் எப்பொழுதும் அழியாத சிரஞ்சீவியாகும். ஆதலால் அவ்வருளைப் பெறவே நீங்கள் முயலுங்கள்; அடைந்து இன்புறுங்கள் என்று இவ்வாறு உலகுக்கு உரைத்தார் மணிவாசகர். தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறவேண்டும் என்று விரும்புவதே அருளுடையார் தன்மை. அந்தத் தன்மையை- அருள் நெஞ்சத்தை- மணிவாசகரிடம் காணலாம்; அவருடைய ஒவ்வொரு திருவாசகத்திலும் கண்டு களிக்கலாம். இரக்கமே இறைவன் உள்ளத்தில் கனிவுள்ளவர்கள்- இரக்கம் உள்ளவர்கள் - கருணையுள்ளவர்கள்- ஒருபொழுதும் தீமைகளைப்பற்றி நினைக்கவே மாட்டார்கள்; ஒருவர்க்கும் தீமை செய்யவும் மாட்டார்கள்; துன்புறுவோர் யாராயினும் அவரிடம் இரக்கம் காட்டுவார்கள். துன்புறும் பிராணிகளிடமெல்லாம் அனுதாபம் காட்டுவார்கள். அன்பு தவழும் உள்ளத்திலே வேற்றுமை குடி புகாது. எல்லோரையும், எல்லாவற்றையும் ஒன்றாக நினைப்பதே இளகிய நெஞ்சத்தின் இயல்பாகும். இறைவன் இரக்கத்தின் உருவம், கருணைக்கடல் என்றே அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். இறைவன் அருளை எண்ணி எண்ணிப் பாடிய பக்தர்கள் எல்லாம் அவனை அன்பில் விளையும் ஆரமுது, கருணை ஊற்றெடுத்தோடும் கனி, இனிமை கனியும் பழரசம் என்றெல்லாம் அழைத்திருக்கின்றனர். இரக்க வடிவமான இறைவன் இரக்கம் உள்ளவர்களுக்குத்தான் அருள்புரிவான். உருக்கம் உள்ளவர்களின் உள்ளத்திலேதான் எழுந்தருள்வான்; குடியிருப்பான்; என்றும் கூறியிருக்கின்றனர். இவ்வுண்மைகளை மாணிக்கவாசகரின் திருவாசகத்திலே காணலாம். மாணிக்கவாசகர் அன்பு வேறன்று; ஆண்டவன் வேறன்று: என்ற உண்மையை உணர்ந்தவர். அவன் அருளே அழியாத இன்ப மாகும் என்பதை அறிந்தவர். அவன் அருளையே எப்பொழுதும் எண்ணி எண்ணி உள்ளங்கசிந்து- கனிந்து- உருகி உருகிப் பாடியவர். பாடிப் பாடிப் பரவியவர். ஆதலால் அவருடைய திருப்பாடல்கள்- பாடுவோர்- கேட்போர் நெஞ்சத்தை நெகிழச் செய்யும் பண்புடன் அமைந்திருப்பதில் வியப்பில்லை. அம்மையே! அப்பா! ஒப்புஇலா மணியே! அன்பினில் விளைந்த ஆர்அமுதே! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே! இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்குஎழுந் தருளுவது இனியே. இப்பாடலை எத்தனை தடவை படித்தாலும், பாடினாலும் உள்ளம் உருகுகின்றது; இன்பத் தேன் சொட்டுகின்றது. குழந்தையை வளர்ப்பதிலே தாயும் தந்தையும் படும் துன்பங்களுக்கு எல்லையில்லை. வளர்ப்பதில் மட்டுமா? அவர்கள் வாழ்வைப்பற்றியும் கவலைப்படுகின்றனர். தங்களுக்குப் பிற்காலத்திலும், தம் பிள்ளைகள் இன்பத்துடன் வாழவேண்டும். செல்வத்துடன் வாழவேண்டும். செல்வாக்குடன் வாழவேண்டும் என்று கவலைப்படாத பெற்றோர்களேயில்லை. இதன் பொருட்டு அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கு அளவேயில்லை. பெற்ற பிள்ளைகளிடம் அவர்கள் வைத்த பாசந்தான் அவர்களை இவ்வாறு பாடுபட வைக்கிறது. அன்பு காட்டுவதிலே பெற்றோர் களுக்குப் பிறகுதான் மற்றவர்கள். ஆகையால்தான் ஆரம்பத் திலேயே அம்மையே அப்பா என்று அழைக்கிறார் சிவபெரு மானை. அன்னையே! அப்பனே! ஒப்பற்ற இரத்தினமே! அன்பிலே தோன்றிய சிறந்த தெவிட்டாத அமுதமே! பொய்ச் செயல் களையே மிகுதியாகச் செய்து. ஆயுட்காலத்தை வீணாகப் போக்கி, வாழ்நாளைக் குறைத்துக் கொண்டு வருகின்ற வீணன் நான்; புழுத்த தலையையுடைய அற்பன் நான்; இத்தகைய எனக்குக் கருணைபுரிந்தாய்; அழியாத சிவபதத்தை அளித்தாய்! என் செல்வமாக இருக்கின்றாய்! சிவபெருமானே! இப்பிறப்பிலேயே - இப்பொழுதே - உன்னை உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். இனி நீ என்னைவிட்டுப் பிரிந்து எங்கும் போய் விட முடியாது. இதுவே மேலே காட்டிய திருவாசகத்தின் பொருள். இப்பாடலிலே மாணிக்கவாசகர், சிவபெருமானை, தாய் தந்தையாகவும், விலை உயர்ந்த, ஒளி உள்ள, இரத்தினமாகவும், அன்புள்ள இடத்தில் தோன்றிநின்று அருள்வோனாகவும், அழியாத பதத்தை அளிப்பவனாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதற்கு அடுத்த திருவாசகமும் நம் உள்ளத்தை உருக்கும் பாடல். அருள்ஒளி! கனிந்த பழம்! தவத்தினர் செல்வம்! சிறந்த கலை; இன்பம்; யோகத்தின் பயன்; அன்புடையார் நெஞ்சத்தில் நிலையாக நிற்பவன்! என்று சிவபிரானைப் போற்றிப் பரவு கின்றது அக் கவிதை. அருள்உடைச் சுடரே! அளிந்ததுஓர் கனியே! பெரும்திறல் அருந்தவர்க்கு அரசே! பொருள்உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே! தெருள்இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெரு மானே! இருள்இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்குஎழுந் தருளுவது இனியே. இதுவே அந்த அருந்தமிழ்க் கவிதை. இதன் ஓசையும், மொழிகளும், பொருளும் நம் உள்ளத்தைக் கனிவிப்பன. அருள் அமைந்த ஒளியே! நன்றாகப் பழுத்துக் கனிந்த ஒப்பற்ற பழமே! ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெரிய திறமை பெற்று சிறந்த தவசிகளுக்கெல்லாம் அரசனாக இருப்பவனே! மக்களுக்கு அறிவூட்டும் உயர்ந்த கருத்தமைந்த கலை உருவாக இருக்கின்றவனே! புகழ்ந்து பேசுவதற்கு முடியாத சிறந்த இன்ப மாக இருப்பவனே! யோகத்தின் தோற்றமாக இருப்பவனே! உண்மையை உணர்ந்தபோது- அடியார்களின் நெஞ்சத்திலே புகுந்துநிற்கும் அழியாத செல்வமே! சிவபெருமானே! அறியாமை நிறைந்த இவ்வுலகிலே உன்னை நான் கண்டறிந்தேன்; உறுதியாக என் உள்ளத்தால் பற்றிக்கொண்டேன். இனி நீ என்னைவிட்டு எங்கே போக முடியும்? ஓரிடமும் போகமுடியாது. இதுவே இக் கவியின் பொருள். மேலே காட்டப்பட்ட இரண்டு திருவாசகங்களும், இரக்கமே இறைவன்; அவன் இரக்கம் உள்ளவர்களின் நெஞ்சத்திலேதான் நிற்பான்; இரக்கம் உள்ளவர்கள்தாம் அவனை உள்ளத்திலே உறுதியாக வைத்துக்கொண்டு வாழ முடியும்; இன்புற முடியும் என்ற உண்மைகளை உணர்த்தின. மாணிக்கவாசரின் கவிதைகள் எல்லாம் இவ்வாறே இன்பத்தேன் பீறிட்டுப் பாயும் இனிய கனிகள். தமிழர்களின் அருள்நெறியை விளக்குவதிலே திருவாசகத்துக்கு ஒப்பாக ஒரு வாசகத்தையும் காட்ட முடியாது. திருமூலர் திருமூலர் நந்திதேவரைக் குருவாகக் கொண்டவர் என்பது மரபு. திருநந்திதேவர், சிவபெருமான். திருமூலர், திருக்கைலாய பரம்பரையினர். இவர் வாழ்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியென்று கூறுகின்றனர். தமிழகத்தில் திருவாவடுதுறையில் வாழ்ந்தவர். திருமூலர் பாடிய நூல்- இயற்றிய பாடல்கள் திருமந்திரம் என்ற பெயருடன் வழங்குகின்றன. திருமூலர் பாடிய பாடல்கள் மூவாயிரம் ஆகும். மந்திரம் என்ற சொல்லுக்குப் பெரியோரால் சொல்லப் பட்டது; பொருள் உணர்வதற்கு அரியது; இரகசியத்தை உடையது; என்பது பொருள். திருமந்திரத்தைப் பொறுத்த வரையில் இப்பொருள் பொருந்துவதாகும். திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் யோக நிஷ்டையில் இருந்தார். ஆண்டுக் கொருமுறை கண்ணை விழித்துப் பார்த்தார். அப்பொழுது ஒரு பாடல் பாடினார். இவ்வாறு பாடிய பாடல் களே திருமந்திரப் பாடல்கள் என்று கூறுவர். இவ்வரலாறு திருமந்திரத்தின் பெருமையை உணர்த்துவது; திருமந்திரப் பாடல்கள் ஆராய்ந்து சிந்தித்து அனுபவித்துப் பாடிய பாடல்கள் என்ற உண்மையை அறிவிப்பதாகும். திருமந்திரப் பாடல்கள் வேதாந்த சித்தாந்த உண்மைகளை உணர்த்துகின்றன; ஆகமப் பொருள்களை அறிவிக்கின்றன. சரியை, கிரியை, யோக, ஞானங்களைப் பற்றிக் கூறுகின்றன. படைப்புச் சக்தியின் பெருமையைப் பாராட்டுகின்றன. மக்கள், தொல்லையில்லாமல் இன்புற்று வாழ்வதற்கான நெறி களை எடுத்துக் கூறுகின்றன. திருமந்திரத்திற்கு இணையான நூல் எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம். தமிழர்களின் ஆத்ம ஞானத்திற்குத் திருமந்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்று வளர்ந்திருக்கும் விஞ்ஞானத்தை ஒட்டிய கருத்துக்கள் பலவற்றைத் திருமந்திரத்திலே காணலாம். இத்தகைய மந்திர நூலின் பெருமை இன்னும் தமிழரி டையே சரியாகப் பரவவில்லை. இந்நூல், மக்கள்- உலகம்- உய்யவேண்டிய பல உண்மைகளையே உரைக்கின்றது. ஆயினும் சைவ சமய நூலாக விளங்குகின்றது. இதனால் தான் ஏனைய மதத்தினர்கள் இதன் அருமை பெருமைகளை அறியவில்லை. சைவ சமயக் கோட்டைக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. திருமூலர் சைவ சமய நாயன்மார்களுள் ஒருவராயினும் - அவர் பாடியிருக்கும் பாடல்கள் சைவ சமயத் தொடர்புள்ள வைகளாகக் காணப்படுகின்றனவாயினும்- அவர் சொல்லும் பொருள்கள் மனித சமூகம் முழுவதற்கும் பொருந்தும். மனித சாதி ஒன்று; தெய்வம் ஒன்று; உடம்பைப் பேணுவதே உயிரைப் பேணுவதாகும்; மக்களுக்கு உதவி செய்வதே இறைவனுக்குச் செய்யும் பணி. அறிவும் கடவுளும் ஒன்று. மக்கள் உள்ளத்தில் உள்ள அறிவொளியே இறைவன். இறைவன் தனியாக இல்லை. அவன் எங்கும் இருக்கின்றான்; காணப்படும் எல்லாப் பொருள்களும் இறைவனே! மக்களை ஏமாற்றும் பொய்வேடத்தாரை நம்பாதீர்கள்! தந்நலந் துறந்தவர் களே கடவுளைக் கண்டவர்கள். அருள் உடையவர்களே ஆண்ட வனை அறிந்தவர்கள். ஆணவத்தை விட்டவர்களே அன்பும் அருளும் அமைந்தவர்களாக வாழ முடியும். என்பன போன்ற தத்துவங்கள் திருமந்திரத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. இத்தத்துவத்தை மறுக்கும் மதம் யாது? எல்லா மதத்தினரும் ஒப்புக்கொள்ளும் தத்துவங்கள் இவைகள். இத்தகைய அரும்பெரும் சேமநிதி தமிழகத்தில் பதுக்கப் பட்டுக் கிடக்கின்றது. உலகெலாம் பரவவேண்டிய நூல் மங்கிக் கிடப்பதற்குக் காரணம் தமிழர்கள்தாம் என்பதில் ஐயம் இல்லை. திருக்குறள் வாழ்க்கைத் தத்துவம்- உலகில் வாழ வேண்டிய முறை- இவைகளைப் பற்றியே கூறுகின்றது; மூலரோர உலகியல் வாழ்வைப்பற்றியும் கூறுகிறார்; ஆத்ம சாந்திக்கான மார்க்கங் களைப் பற்றியும் பேசுகின்றார். இந்த வகையில் திருக்குறளை விடத் திருமந்திரத்தை ஒரு பங்கு உயர்ந்ததாகக் கூறலாம். இத்தகைய அருமையான நூலுக்கு இன்னும் சரியான உரை காணப்படவில்லை. சாதாரண இலக்கண இலக்கியப் புலவர்கள் திருமந்திரத்துக்கு உரை காண முடியாது. வேத வேதாங்கங்களிலே பயிற்சி- தத்துவ நூல்களிலே தேர்ச்சி- ஓரளவாவது அனுபவ ஞானம் உள்ளவர்கள்தாம் திருமூலர் பாடல்களுக்கு உரை காணமுடியும். இத்தகைய அறிஞர் தமிழகத்தில் இல்லாமல் அடியோடு அற்றுப்போய்விடவில்லை. இவர்களைத் தேடிப் பிடித்து திருமந்திரத்திற்கு உண்மை உரை காணும் முயற்சியை- தமிழ்ப் பணியை- யார் எப்பொழுது செய்வார்களோ தெரியவில்லை. திருமந்திரப் பாடல்கள் தங்கு தடையில்லாமல் அருவி நீர்போல் விழுந்திருக்கின்றன. திருமூலர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் பசுமரத்தாணிபோல் பதியும்படி சொல்லு கிறார். ஒன்றைச் சொல்லும்போது சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாகச் சொல்லுவதே திருமந்திரப் பாடல்களின் தனிச் சிறப்பு. தனித் தமிழ்க் காதலர்களுக்குத் திருமந்திரம் எப்படிச் சுவை தருமோ என்பதை நம்மால் சொல்லமுடியாது. மந்திரம் என்ற சொல்லே வடமொழிச் சொல். சரியை, கிரியை, யோகம், ஞானம் எல்லாம் வடமொழிகள். வட சொற்களும் தமிழ்ச் சொற்களும் பின்னிப் பிணைந்துகிடக்கும் பாடல்களே திருமந்திரப் பாடல்கள். தமிழுக்கும் வடமொழிக்கும் எத்தகைய இணைப்பு இருந்தது என்பதற்குத் திருமந்திரம் ஒன்றே போதுமானதாகும். வடமொழி ஞானம் இல்லாதவர்கள் திருமந்திரத்துக்குப் பொருள் கூறவும் முடியாது. மொழி பேதம் இன்றி- கலாசார பேதம் இன்றி, பாரத நாடு முழுவதும் போற்றக்கூடிய ஒப்பற்ற நூல் திருமந்திரம். திருமந்திரத்திலே மேம்போக்காகச் சில பாடல்களைப் படித்தவர்கள் கூட இவ்வுண்மையை மறுக்க மாட்டார்கள். திருமந்திரம் தோன்றிய காலம். கி.பி. 5- ஆம் நூற்றாண்டு; மூவர்கள் காலத்திற்கு முன்பு என்று கூறுகின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது ஆராயத்தக்கது. திருமூல நாயனார் சுந்தரமூர்த்தியாரின் திருத்தொண்டத் தொகையிலே காணப்படுகின்றார். சுந்தரர் எட்டாம் நூற்றாண்டின் முதற் பகுதி யிலே வாழ்ந்தவர். நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியிலே திருமூல நாயனார் காணப்படுகிறார். பெரிய புராணத்தில் திருமூல நாயனார் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. திருமூல நாயனாரும், திருமந்திரம் பாடிய திருமூலரும் ஒருவர்தான் என்பத உறுதியானால் திருமந்திரம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலே தோன்றியதென்பது உண்மையாகலாம். இது உண்மையானால், ஆரியர் தமிழர் வெறுப்பையும், வடமொழி தமிழ்மொழி வெறுப்பையும் வளர்க்கும் வெறியருக்குத் திருமந்திரமே சரியான சவுக்கடியாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, தமிழகத்திலே வட மொழி நாகரிகமும், தமிழ் நாகரிகமும், வடமொழிக் கலைகளும், தமிழ்க் கலைகளும் ஒன்றுபட்டிருந்தன; உறவாடின. இதுதான் தமிழர் கலை. இதுதான் ஆரியர் கலை என்று பிரித்தறியாத முடியாத அளவுக்கு இரு மொழிகளும் கூடி வாழ்ந்தன. இவ்வுண்மையை விளக்கத் திருமந்திரம் ஒன்றே போதுமான சான்றாகும். இறைவன் ஒருவனே மக்கள் நாகரிகம் அடையாமல் வாழ்ந்த காலத்திலே அச்சமின்றி வாழ்ந்தனர். அவர்கள் உள்ளத்திலே பேய் பிசாசு பூதம் என்ற உணர்ச்சிகூட உண்டாகியிருக்க முடியாது இது என்ன? அது என்ன? இது ஏன் இப்படி இருக்கிறது? அது ஏன் அப்படியிருக்கிறது? இதற்கென்ன காரணம்? அதற்கென்ன காரணம்? என்று ஆலோசிக்கத் தொடங்கிய காலத்தில்தான் அவர்கள் உள்ளத்திலே ஐயம் பிறந்தது. காற்று, மழை, இடி, மின்னல், நெருப்பு, வெள்ளம் போன்றவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று நினைக்கத் தொடங்கினர். ஐயம் பிறந்தது; அச்சம் தோன்றியது; தெய்வங்கள் பிறந்தன. இதன்பின் பல சடங்குகள்- மூட நம்பிக்கைகள் - வளர்ந்து வாழத் தொடங்கின. இதன் பிறகு அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருக ஆண்டவன் ஒருவன் தான் என்ற உணர்ச்சி பிறந்தது. ஒரே கடவுள்தான் இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கின்றார் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். ஒரே கடவுள் என்ற உணர்ச்சி தோன்றுவதற்குமுன் மக்களிடம் நிலைத்திருந்த எண்ணம் வேறு. உலகிலே பல உயிர்கள் புதிது புதிதாகப் பிறப்பதைக் கண்டனர். மக்களிடையில், விலங்குகளிடையில், பறவைகளி டையில், தாவரங்களிடையில் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பிறப்பதை உற்று நோக்கினர். இப்படி ஒவ்வொரு நாளும் உயிர்களுடன் கூடிய உடம்புகன் தோன்றுவதற்கு ஒரு தலைவன் இருக்கவேண்டும். அவன் தான் பிறப்பிக்கும் கடவுள்; பிரம்ம தேவன்; நான்முகன் என்று முடிவு கட்டினர். பிறந்த பலவகையான உயிர்களும் நாளும் நாளும் வளர்ந்து வருவதைக் கண்டனர். இவை வளரும்படி காப்பாற்றுவதற்கு ஒரு தலைவன் இருக்கவேண்டும். அவனே காத்தற் கடவுள்; திருமால் என்று முடிவுகட்டினர். இப்படி வளர்ந்த உயிர்கள் இறந்துபடுவதைக் கண்டனர். இவற்றை இறக்கச் செய்வதற்கும் ஒரு தலைவன் இருக்க வேண்டும். அவனே உருத்திரன்; இறந்தபின் துன்பம் இல்லை; துன்ப மில்லாத நிலையைப் பெறுவதே இன்பம் இந்த இன்பத்தைத் தருகின்றவன் சிவன்; அரன்; மங்களமானவன்; சுகத்தைத் தருபவன்; என்று முடிவுகட்டினர். இப்படி உயிர்கள் பிறப்பதையும், வாழ்வதையும், இறப்பதையும் கண்டு மூன்றுக்கும் மூன்று தலைவர்கள் உண்டு; அந்த மூவரும் கடவுளர்கள்; அவர்கள் மும்மூர்த்திகள் என எண்ணினார்கள். இப்படி எண்ணி வந்தவர்கள் தங்கள் எண்ணத் தை நிலைநாட்டுவதற்காகக் கதைகள் புனைந்தனர்; காவியங்கள் எழுதினர்; கவிதைகள் பாடினர். இந்த மூவரில் யார் உயர்ந்தவர்? யார் பெரியவர்? யார் வல்லமை வாய்ந்தவர்? என்ற சண்டைகளும் சச்சரவுகளும் பிறந்து வளர்ந்தன. இதன் காரணமாக எழுந்த மதங்கள் பல; சமயங்கள் பல; தெய்வங்கள் பல. இப்படிப்பட்ட பிரிவுபட்ட மதக் கொள்கைகளும், தெய்வக் கொள்கைகளும் மக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்தன; அவர்களுக்குள் அன்பைச் சிதைத்து அல்லலை உண்டாக்கின. ஒன்றுபட்ட மக்களைத் துண்டு துண்டுகளாகச் செய்துவிட்டன. இதன்பிறகுதான் அறிஞர்கள், கடவுள்கள் தனித்தனியாக இருக்கமுடியாது. ஒரே கடவுள்தான் இருக்கவேண்டும்; அந்த ஒரு கடவுளால்தான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அத்தனை தொழில்களும் நடைபெறவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். உலகில் உள்ள எல்லா மதங்களும் இறுதியாக இந்த முடிவையே உண்மையென்று ஒப்புக்கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சான்றோர்களும் கடவுள் ஒருவரே என்ற முடிவுள்ளவர்கள்தான். இதைப் பழந்தமிழ் நூல்களில் எல்லாம் பார்க்கலாம். சைவம், வைணவம் போன்ற மதப் பிரிவுகளிலும் காணலாம். சைவ சித்தாந்தம், உபய வேதாந்தம், வேதாந்தம், மாத்துவம், வீரசைவம் போன்ற பல மதங்களிலும் காணலாம். பலதிறப்பட்ட மதத்தினரும் கடவுள் ஒன்றே என்பதை ஒப்புக்கொள்ளுகின்றனர். அவர்களுக்குள் உள்ள வேற்றுமை ஒன்றே ஒன்றுதான். பெயரில்தான் வேற்றுமை. வைணவர்கள் திருமால் ஒருவர்தான் மும்மூர்த்தியாக நின்று முத்தொழில் களையும் புரிகிறார் என்பர். இவ்வாறுதான் முலிம்கள், கிறிதுவர்கள் போன்ற ஏனைய மதத்தினரும் கூறுகின்றனர். இவற்றை ஆராய்ந்து பார்த்தால் கடவுளைப்பற்றிய கொள்கையில் எல்லோரும் ஒன்றுபட்டிருப்பதையே காணலாம். இவ்வுண்மையை உணராமல் கடவுள் வெவ்வேறு என்று கூறுவது அறியாமையேயாகும். கடவுள் வெவ்வேறு என்று சொல்வோர் உண்மையுணராத காரணத்தால் அவர்கள் ஒற்றுமை கலைந்து சண்டை போடுகின்றார்கள். இக்கருத்தைத் தமிழ்ச் சான்றோராகிய திருமூலர் விளக்கமாகக் கூறுகின்றார்; ஆதிப் பிரானும், அணிமணி வண்ணனும், ஆதிக் கமலத்து அலர்மிசை அயனும், சோதிக்கில், மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார், பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே என்பது திருமந்திரம். சிவனும் கருமணி நிறந்தோனாகிய திருமாலும், தாமரையில் தோன்றிய பிரமனும், யார் என்று ஆராய்ந்து பார்த்தால் ஒருவரேதான். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் செய்கைத் தொடர்ச்சியால் இவர்கள் ஒருவர்தான் என்று அறியாதவர்களால்தான் உலக ஒற்றுமை குலைந்து, ஒருவரோடு ஒருவர் பிணங்குகின்றார்கள். இப்பாடல் கடவுள் ஒருவரே என்று குறிப்பிடுவதைக் காணலாம். மும்மூர்த்திகள் தனித்தனியன்று; மூவரும் ஒருவரே தான் என்று விளக்குவதைக் காணலாம். மும்மூர்த்திகள் வெவ்வேறு என்று வாதிப்பவர்களுக்கு மேலும் அறிவரை கூறுகின்றார் திருமூலர். இறைவனைப் பணியும் பயனை அறிந்து, அந்நெறியை ஆராய்ந்து பார்த்தால் நமக்கு வேறான தெய்வம் என்று ஒன்றும் இல்லை. யார் எத்தெய்வத்தின் பெயரைச் சொன்னாலும் அவை எல்லாம் நாம் நினைக்கும் ஒரே தெய்வத்தின் கூறுகள்தான். பெயர் வேறாயிருப்பதைக் கொண்டு அவை வேறு தெய்வங்கள் என்று எண்ணவேண்டாம். வேறு வேறு பெயர்களால் கட்டப் படும் எல்லாம் தெய்வங்களும், மூன்று கண்களையுடைய நந்திதேவனுடைய சுற்றத்தினர்கள்தாம். ஆதலால் அவற்றையும் பணியுங்கள். அவ்வாறு பணிவதன் மூலம் நீங்கள் நினைத்த காரியங்களிலே வெற்றி பெறுங்கள் என்று மற்றொரு பாடலிலே கூறுகின்றார் திருமூலர். அந்தத் திருமந்திரப் பாடலைக் கீழே பாருங்கள்; பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை; நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்; வயன் பெறுவீர்அவ் வானவ ராலே. இதுவும் இறைவன் ஒருவனே என்பதைக் குறிக்க எழுந்த பாட்டு. உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுளர் மூவர் என்ற நம்பிக்கையுடன் மதவாதிகள் சண்டையிட்டதைத் தடுப்ப தற்காகத் திருமூலர் இத்தகைய அரிய பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தமிழர் கொள்கை என்று கூறுவதற்கு ஆதாரம் திருமந்திரம்தான். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பதும் திருமந்திரச் செய்யுளின் ஓரடிதான். இச்சிறந்த நூலிலே தமிழர் அருள்நெறி களைக் காணலாம். கடவுள் வெவ்வேறல்லர்; ஒருவர்தான்; ஒரே கடவுள் தான் பல உருவில் காட்சியளிக்கின்றார் என்பதை மேலே காட்டிய திருமந்திரங்கள் இரண்டும் விளக்குகின்றன. வேதாந்த உண்மை தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவுக் கதிர்- உண்மை அருள் நெறியை உலகினர்க்கு உரைக்கும் உயர் ஞானி- நானில மக்களை ஞான நெறியிலே நடத்திச் செல்லும் நல்லாசான்- அருள்நெறிப் பெரும் பொருள்களை ஆய்ந்து ஆய்ந்து பாடி அருளிய அருந்தமிழ் வள்ளல் பெயர் திருமூலர். இவர் பாடிய நூல் திருமந்திரம். சித்தர் கணத்திலே சிறந்து விளங்குகின்றவர் இவர். வேதாந்தம் என்றால் என்ன? என்பதை விளக்கிக் கூறியிருக் கின்றார். பூணூல் என்றால் யாது? உச்சிக்குடுமி என்றால் என்ன? என்பவைகளையும் எடுத்துக் காட்டியிருக்கின்றார். உச்சிக் குடுமியும் பூணூலும் தரித்து வாய் வேதாந்தம் பேசித் திரியும் குழுவினர்க்கு உண்மையை எடுத்து விளக்கி இருக்கின்றார். வெளிவேடம் பூண்டு, வேதாந்தம் என்று எதை எதையோ பேசிக்கொண்டு திரிவோர்கள் மக்களை ஏமாற்றும் சோம் பேறிகள்; நாட்டு மக்களுக்கு நல்ல வழி காட்டாதவர்கள்; தமிழர் அருள்நெறியின் உண்மையை உணராதவர்கள் என்பதுதான் திருமூலர் கருத்து. இன்று பலர் வேதாந்தம் படிப்பதைப் பார்க்கின்றோம். சங்கரர் தத்துவமே வேதாந்தம். ஞானவாசிட்டம், கைவல்யம், பகவத் கீதை, பிரபோத சந்திரோதயம், வள்ளலார் சாதிரம், மகாராஜா துறவு போன்ற பல வேதாந்த நூல்கள் உண்டு. இவைகளைப் பாடஞ் சொல்லும் குருமார்கள் இருக்கின்றனர். பாடம் கேட்கும் மாணவர்கள் இருக்கின்றனர். வேதாந்தப் பாடங்களைப் போதிப்பவர்களும், வேதாந்தப் பாடங்களைக் கேட்பவர்களும் உண்மையான வேதாந்திகளா யிருக்கின்றார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை. உலகப் பற்றை விட்டுவிட வேண்டும். பலன் கருதாமல் உழைக்க வேண்டும். தனக்கென்று எதையும் தேடக் கூடாது. இதுவே வேதாந்தத்தின் முடிந்த கருத்து. சுருங்கக் கூற வேண்டுமானால் ஆசையை அடியோடு அறுத்து விடுவதுதான் வேதாந்தமாகும். தந்நலத்தைத் துறந்தவர்கள்தான் உண்மையான வேதாந்தக் கொள்கையை உணர்ந்தவர் ஆவர்; அதைப் பின்பற்றுகின்ற வரும் ஆவர்; வேதாந்தத்தைக் கேட்டவரும் ஆவர். தந்நலத்தை விடாதவர் வேதாந்தி அல்லர். இவ்வுண்மையை ஒரு செய்யுளிலே எடுத்துக் காட்டியிருக்கின்றார் திருமூலர். வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தம் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்; வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடல்; வேதாந்தம், கேட்டவர் வேட்கைவிட் டாரே. இதுதான் அச்செய்யுள். வேதாந்தம் பற்றி விளக்கும் செய்யுள் இது. திருமூலர் எந்தச் செய்தியைக் கூறினாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற முறையிலே தீர்மானமாகக் கூறுவார். வழவழ கொழகொழ என்று கூறும் வழக்கத்தை அவரிடம் காணமுடியாது. பட் பட்டென்று கன்னத்தில் அறைவதுபோல் எதையும் தெளிவாகத் தெரிவித்துவிடுவார். இந்தச் செய்யுளின் தெளிவும் போக்கும் எப்படியிருக்கிறது என்று பாருங்கள். வேதாந்தத்தின் உண்மையைக் கேட்டறிய விரும்பிய வேதியர்கள் வேதாந்தம் கேட்டார்கள்; கேட்டும் அவர்கள் தங்கள் உலக போக இச்சையை விட்டுவிடவில்லை. ஆதலால் இவர்கள் வேதாந்தத்தின் கருத்தை உணர்ந்துகொண்டவர்கள் அல்லர். வேதாந்தம் என்பது உலக போக ஆசை ஒழிந்த இடமாகும். ஆதலால் வேதாந்தத்தின் உண்மையைக் கேட்டவர் உலக ஆசையை விட்டவராகத்தான் இருப்பார்கள். இப்படி இல்லா தவர்கள் வேதாந்தத்தின் உண்மையை உணர்ந்தவர்கள் அல்லர். இது அச்செய்யுளின் பொருள். ஐயத்திற்கு இடமின்றி எவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். பூணூலைப்பற்றியும், சிகையைப்பற்றியும் உரைப்பதைப் பார்ப்போம். வேதம் ஒதுவதற்குமுன் பூணூல் தரித்துக்கொள்ள வேண்டும். உச்சிக்குடுமி வைத்துக்கொள்ள வேண்டும். இவை களையுடையவர்களே வேதம் ஓதுவதற்குத் தகுதியுள்ளவர்கள்; வேதாந்தம் படிப்பதற்கு உரிமையுள்ளவர்கள். இது வேதியர் களின் கொள்கை. வெறும் பூணூலும், ஆடும் உச்சிக்குடுமியும் வேதாந்தம் ஆகமாட்டா; இவைகள் பிரம்மத்தைக் காட்டிவிட மாட்டா; இவைகளால் யான், எனது என்னும் செருக்கற்ற பிரம ஞானத்தைப் பெற்றுவிட முடியாது; வேதங்களின் உண்மைப் பொருளை அறிந்து கற்காமல், அக்கல்வியின் மூலம் உண்மை அறிவைக் காணாமல், பூணூல் தரிப்பதனால் பயன் இல்லை; உச்சிக்குடுமி வைப்பதனாலும் உபயோகம் இல்லை. இவைகள் உலகத்தை ஏமாற்றும் வெறும் ஆர்ப்பாட்டமாகவே முடியும். இவ்வுண்மையைத் திருமூலர் எடுத்துக் காட்டுகின்றார். இன்று வேதாந்தம் என்றால் இன்னது என்று தெரிந்து கொள்ளாதவர்கள் பலர், பூணூல் பூண்டு திரிவதைக் காண் கிறோம். உச்சிக் குடுமியோடு உலாவுவதைக் காண்கிறோம். இத்தகைய வேடதாரிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே திருமூலர் காலத்திலும்கூட திரிந்து இருக்க வேண்டும். ஆகையால்தான் பூணூலுக்கும், உச்சிக்குடுமிக்கும் பொருள் சொல்லவேண்டிய நிலைமை அவருக்கு உண்டாயிற்று. நூலையும், சிகையையும் பற்றி அவர் சொல்லியிருக்கும் அருந் தமிழ்ச் செய்யுளைப் பாருங்கள்; நூலும் சிகையும் நுவலின் பிரமமோ! நூலது கால்பாசம், நுண்சிகை கேசமாம்; நூலது வேதாந்தம், நுண்சிகை ஞானமாம்; நூலுடை அந்தணர் காண நுவலிலே. வேதநூற் பயிற்சியும், அறிவும் இல்லாமல், பூணூல் தரிப்பதும், உச்சிக்குடுமி வைப்பதும் பயன் இல்லை என்பதே இப்பாடலின் கருத்து. பூணூல் என்பது என்ன? உச்சிக்குடுமி என்பது யாது? என்பதையும் ஐயத்திற்கு இடம் இன்றி இச் செய்யுள் மூலம் அறிவித்துவிட்டார். சொல்லப்போனால் பூணூலும் உச்சிக்குடுமியும் பிரமம் ஆகிவிடுமா? இவை பிரமஞானத்தைத் தந்துவிடுமா? இல்லை. நூல் என்பது காலிலே மாட்டிக் கொள்வதற்கு ஏற்ற பாசக்க யிறாகும். நுண்மையான உச்சிக்குடுமி என்பது வெறும் மயிராகும். நூல் அறிவுள்ள அந்தணர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளும்படி கூறவேண்டுமானால் வேதாந்தத்தை அறிவதே நூல் ஆகும். அந்த வேதாந்தத்தின் உண்மையை அறியும் ஞானமே நுண்ணிய உச்சிமயிராகும். பூணூலும், உச்சிக் குடுமியும் வெறும் வேடம். வேதாந்த அறிவும் உண்மை ஞானமும் உள்ளவர்க்கு இவை வேண்டுவதில்லை. இதுவே மேலே காட்டிய செய்யுளில் அமைந்த பொருள். இந்த இரண்டு பாடல்களைக் கொண்டு தமிழர்களின் உண்மையான கருத்தைக் காணலாம். தந்நலம் இன்றிப் பகுத்தறிவுடன் ஒவ்வொரு மக்களும் வாழவேண்டும். இத்தகையவர்களால்தான் பொதுப்பணிபுரிய முடியும். இந்த அறிவைப் போதிப்பதற்கே ஞானநூல்கள் தோன்றின. ஞானநூல்களின் போதனைகள் எல்லாம் தந்நல மறுப்புத்தான். வேதாந்தம் என்பது இதுதான். இந்த உண்மையை அறியாமல், வேதாந்தம்! வேதாந்தம் என்று காது செவிடுபடும் படி கத்திக்கொண்டிருப்பதால் பயனில்லை. இக்கருத்தையே திருமூலர் இச்செய்யுட்களின் மூலம் வெளியிட்டார். வேதாந்தம் என்பதற்கும், பூணூல் என்பதற்கும், உச்சிக் குடுமி என்பதந்கும் திருமூலர் சொல்லியிருக்கும் பொருள் தெளிவான பொருள். சிறிதும் ஐயத்திற்கு இடம் வைக்காமல். இவற்றின் பொருளை நமக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றார். வேட்கையறுத்தல் வேதாந்தம்; வேதாந்த அறிவே பூணூல்; தெளிந்த ஞானமே உச்சிச் சிகை. இதுவே திருமூலர் தந்திருக்கும் விளக்கம். இந்த விளக்கத்தைக் கற்றவர்கள் பின்பற்றுவார் களானால் பூமியில் பொய்யொழுககம் அனைத்தும் புதைந்து போகும். எங்கும் உண்மையும், அன்பும், கூட்டுறவும் கூடிக் குதூகலமாக நடனமாடும்; தமிழர் அருள்நெறி தழைத்தோங்கும். பொய் வேடத்தார் அரசாங்க அலுவலர் சிலருக்கு இத்தகைய உடைதான் பூண வேண்டும் என்ற நிபந்தனை என்றும் உண்டு. இந்த உடை வேறுபாடு, அவர்களிடையே உள்ள உயர்வு தாழ்வைக் காட்ட ஏற்பட்டது அன்று. அவர்கள் இன்ன வேலை செய்பவர்கள் என்பதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளுவதற்காகவே இந்த உடை வேறுபாடு ஏற்படுத்தப்பட்டது. இது பழங்கால வழக்க மாக இருக்கலாம். ஆனால் இன்னும் இந்த உடை வேற்றுமை எல்லா அலுவலர்களுக்கும் வேண்டியதில்லை யானாலும் ஒரு சில வகையினர்க்கு இன்றியமையாததாகும். போலீசார், போர் வீரர்கள் ஆகியோருக்கு உடை வேறுபாடு தேவைதான். உடை வேறுபாடு வேடத்தில் சேர்ந்ததேயாகும். போலீ உத்தியோகத்தில் இல்லாத ஒருவன், போலீ உடையணிந்து திரிகின்றான். அவன் எதற்காக அந்த உடைதரிக்கவேண்டும்? ஏமாற்றுவதற்காகத்தான் அந்த உடையை அவன் அணிந் திருக்கவேண்டும்; இதில் ஐயப்படுவதற்கே இடம் இல்லை. இதைப்போலவே வைதீகர்கள்- குருமார்கள்- பக்தியுள்ள வர்கள் சில நடையுடைய பாவனைகளைப் பின்பற்றி வந்தனர்; வருகின்றனர். அந்த நடையுடைய பாவனைகளால் அவர்கள் உள்ளம் தூய்மையுடன் இருக்க இடமுண்டு; மற்றவர்கள் அவர் களை அறிந்து அவர்களுக்கு உதவவும் இடம் உண்டு. அந்த வேடத்திற்கு மக்கள் மதிப்புக் கொடுத்து அவர்களை மாண் புள்ளவர்களாக மதித்துப் போற்றியும் வந்தனர். இத்தகைய வைதீக வேடத்தையே தவவேடம் என்றும் கூறினர். தவம் என்பது ஒரு குறிக்கோளை நாடி அதற்கான முயற்சியிலே உறுதியுடன் நிற்பது. எனக்கென எந்நலமும் வேண்டேன்; இவ்வுலகம் உய்ய இறைவனை வேண்டுகின்றேன்; மக்களுக்கு நல்லறம் உரைப்பேன்; அவர்களை நன்னெறியிலே நடக்கச் செய்வேன் என்ற கொள்கையே தவத்தினரின் கொள்கை. இதை நிறைவேற்றுகின்றவர்கள், இதற்காக உழைப்பவர்கள், முயலுகின்றவர்கள் என்பதைக் காட்டவே அவர்கள் தவ வேடம் பூண்டனர். இதுவே தவ வேடம் பூண்பதின் தத்துவம். உண்மையான உள்ளத் தூய்மையுள்ளவர்களுக்கு ஏற்ற இவ்வேடத்தைச் சில பொய்யர்களும் பூணத் தொடங்கினர். வஞ்சகர்களும் பூண்டு மக்களை ஏமாற்றிவிடத் தொடங்கினர். இத்தகைய பொய் வேடக்காரர்களை நம்பவேண்டாம் என்ற அறிஞர்கள் பொதுமக்களுக்குக் கூறிவந்தனர். எந்தக் காலத்தில் பொய் வேடதாரிகள் புறப்பட்டார்களோ அந்தக் காலத்தி லேயே அவர்களை எதிர்ப்பவர்களும் புறப்பட்டு விட்டார்கள். வள்ளுவர் காலத்திலேயே பொய் வேடதாரிகள் சமுதா யத்தின் புல்லுருவிகளாகத் தோன்றிவிட்டனர் என்று தெளிவாகத் தெரிகிறது. தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம் அதனை அஃது இலார் மேற்கொள்வது என்ற குறளே இதற்குச் சான்று. தவ வேடம், உண்மையான தவம் புரிகின்றவர்களுக்கே ஏற்றதாகும். அத்தகைய தவம் புரியாதவர் அவ்வேடத்தை மேற்கொள்ளுவது வீண் என்பது இதன் பொருள். இதற்குப் பின்பும் தவம் செய்பவரைப்போல வேடம் பூண்டு ஏமாற்றுவோர் கூட்டம் பெருகியே வந்தது. திருமூலர் இந்த உண்மையைக் கண்டார். அவர்களை மிகவும் வன்மை யாகக் கண்டித்தார். தனிப்பட்ட முறையிலே கண்டித்ததோடு நிற்கவில்லை. இந்த வேடதாரிகளை- சமூகத்தை வஞ்சிக்கும் சதிகாரர்களை- மக்களை ஏமாற்றும் மாயாவிகளை - அரசாங்கம் சும்மா விட்டுக்கொண்டிருக்கக்கூடாது. அவர்களை அடக்க வேண்டும். அப்பொழுதுதான் நாடு விடுதலை பெறும். அரசும் ஆபத்தின்றி வாழும் என்று கூறுகின்றார். பொய் வேடம் பூண்டு திரிவோரை அடக்க வேண்டும்; அல்லது பொய் வேடதாரிகளை அந்த வேடத்திற்குரிய உண்மை ஒழுக்கம் உள்ளவர்களாக நடக்கச் செய்யவேண்டும் என்பது திருமூலர் கருத்து. இக்கருத்துள்ள இரண்டு திரு மந்திரங்களைக் காண்போம். வேடநெறி நில்லார் வேடம்பூண்டு என்பயன்? வேடநெறி நிற்போர் வேடமே மெய்வேடம்; வேடநெறி நில்லார் தம்மை, விறல் வேந்தன் வேடநெறி செய்தால், வீடுஅது வாமே என்று கூறுகின்றார். வேடதாரிகளைப் பற்றித் தெளிவாகக் கூறும் செய்யுள் இது. வேடத்திற்கு ஏற்றவாறு, நன்னெறியிலே ஒழுகாதவர்கள், அந்த வேடத்தைப் பூண்டதனால் என்ன பயன்! தாம் கொண்ட பரிசுத்தமான வேடத்திற்குத் தகுந்தபடி நன்னெறியிலே நிற்போரின் வேடமே உண்மையான தவவேடமாகும். வேடநெறியிலே ஒழுகாதவர்களை அரசிலே வெற்றி காணும் வேந்தன் கண் காணிக்க வேண்டும். அவர்களை வேடத்திற்கு ஏற்ற மெய்ந் நெறியிலே நடக்கும்படி செய்ய வேண்டும்; அதுதான் தேசத்தின் உண்மையான விடுதலையாகும்; நாட்டு மக்களை. ஏமாற்றத்தி லிருந்தும், வஞ்சகத்திலிருந்தும் விடுதலை செய்வதாகும். இவ்வாறு எடுத்துரைத்த திருமூலர், அந்த வேடதாரி களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதை விளக்கிக் கூறுகின்றார். அறிஞர்களைப்போல நடிக்கின்ற வேடதாரிகளை அறிஞர் களைக் கொண்டுதான் கண்டறியவேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், லஞ்சம் வாங்காத நேர்மையுள்ளமும், கடமையுணர்ச்சியும் உள்ளவர் களால்தான் முடியும். லஞ்சம் வாங்குவோரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை லஞ்சம் வாங்குவோரிடமே ஒப்படைத்தால் ஒன்றும் நடக்காது; லஞ்சக் குற்றம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டுதான் போகும். பொய் வேடதாரிகளைக் கொண்டு பொய் வேடதாரிகளைக் கண்டு பிடிக்கச் செய்யும் முயற்சியும் இதுபோலத் தான் முடியும். ஆதலால் உண்மையான அறிஞர்களைக் கொண்டே பொய் வேடதாரிகளை- ஞானிகள் போல் நடிப்பவர்களைக் கண்டறிந்து நல்வழிப்படுத்தவேண்டும். இந்த உண்மையைத் திருமூலர் தெளிவாகக் கூறுகின்றார். ஞானம் இலாதார், கடை சிகை, நூல்நண்ணி, ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை, ஞானிக ளாலே நரபதி சோதித்து, ஞானம் உண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. ஆழ்ந்த கருத்தமைந்த இத்திருமந்திரத்தை ஆராய்ந்து பாருங்கள். பொய் வேடத்தைக் கண்டறிவது எப்படி என்ற உண்மை புலப்படும். பண்டைக்காலத்திலே உச்சிக்குடுமியும் பூணூலும் அறிவுக்கு அடையாளமாகக் கருதப்பட்டன. வேதத்தை அறிந்தவர்கள் அதன் நுண்பொருளை அறிகின்றவர் என்பதற்கு அடையாள மாகவே அவை ஏற்பட்டன. வேதத்தை அறியாதவர்களும் வேத ஒழுக்கத்தைப் போற்றாதவர்களும் உச்சிக் குடுமியும் பூணூலும் பூண்பவர்களாயின் பயன் இல்லை. அது வீண் வேடமேயாகும். உண்மையான அறிவில்லாதவர்கள், அவ்வறிவைக் காட்டும் அடையாளமான உச்சிக்குடுமி, பூணூல் இவற்றைப் பெற்று, அறிவுள்ளவர்களைப்போல நடிப்பார்கள். இவர்களை உண்மையான அறிவுள்ளவர்களைக் கொண்டு அரசன் சோதனை செய்யவேண்டும். அவர்களுக்கு உண்மை அறிவை உண்டாக்க வேண்டும். இதுதான் நாட்டுக்கு அரசன் செய்யவேண்டிய நன்மையான செயலாகும். இதுவே இத்திருமந்திரத்தின் பொருள். இதிலே ஞானம் உண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே என்ற தொடரில் உள்ள ஆழ்ந்த பொருள் பாராட்டத்தக்கது. நாம் இனி மேல் இத்தகைய வேடம் பூண்டு மக்களை ஏமாற்றக்கூடாது என்ற நல்லறிவை உண்டாக்குதல் ஞானம் உண்டாக்குவதாகும். நாம் இனி மேலாவது அறிவுநூல்களைக் கற்று அவை கூறும் அறநெறியிலே நிற்போம் என்ற அறிவை உண்டாக்குவதும் ஞானம் உண்டாக்குவதாகும். இத்தகைய சிறந்த பொருளைக் கொண்டது அவ்வடி. வஞ்சகர்களும், வேடதாரிகளும் எங்கே இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி, அவர்களால் நாட்டுக்குத் தீமைகள்தான் விளையும்; இதுவே பழந்தமிழர்களின் கருத்து. எந்த அரசாங்கமும்- குடி அரசாயினும் சரி, முடியரசாயினும் சரி, இந்தப் பூண்டுகளைக் களைந்து மக்களை ஒழுக்கநெறியிலே உயர்ந்து வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும்; இதுவே தமிழர் கண்ட அருள்நெறி. ஆண்டவனை அறிந்தவர் கடவுளைக் கண்டுவிட்டோம் என்று களிக்கூத்தாடுவோர் பலர். கடவுளைக் காண முயற்சிக்கிறோம் என்று அதற்கான முயற்சிகளிலே முனைந்து நிற்போர் பலர். கடவுளைப்பற்றிக் கவலையே வேண்டாம்; நமது காரியத்தை நாம் செவ்வையாகச் செய்துவந்தால் போதும் என்று உரைப்போர் பலர். இது கடவுள் அன்று; அது கடவுள் அன்று; இவ் வொழுக்கம் கடவுள் நெறிக்கு மாறானது; அவ்வொழுக்கம் கடவுள் நெறிக்கு மாறானது என்று எதையும் குறை சொல்லிக் கொண்டிருப்போர் பலர். இத்தகைய பேச்சுவார்த்தைகளை நாம் உலகிலே கேட்கின்றோம். அன்புநெறியே கடவுள் நெறி; அருள் நெறியே கடவுள் நெறி; அனைவரிடமும் அன்பு காட்டுகின்றவர்களே கடவுள் நெறியைப் பின்பற்றி நடப்பவர்கள்; எல்லோரிடமும் இரக்கங் காட்டுகின்றவர்களே அருள் நெறியைப் பின்பற்றி நடப்பவர்கள். இரக்கம் அற்ற தன்மையை இல்லாமல் விரட்ட வேண்டும்; இளகிய நெஞ்சம் பெறவேண்டும்; தந்நலம் ஒன்றையே மனத்தில் கொண்டு மற்றவர்களுக்குத் தீமை செய்யும் கொடுந்தன்மையை விட்டொழிக்கவேண்டும். நம்முடைய உடலுக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் எப்படி வருந்துகின்றோமோ அப்படித்தான் மற்றவர்களும் தங்கள் உடலுக்குத் துன்பம் வந்தால் உள்ளம் வருந்துவார்கள்; நம்முடைய உள்ளத்தில் கவலைதோன்றினால் ஊணும் உறக்கமும் கெட்டு வருந்துகின்றோம்; இதைப் போலவே மற்றவர்களும் மனக் கவலையினால் மகிழ்ச்சியிழந்து கலங்குவார்கள். நம்முடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் அஞ்சி நடுங்கு கின்றோம். அந்த ஆபத்தைத் தடுத்துக்கொள்ளஎதையும்- உயிரைத் தவிர எதையும்- தியாகம் செய்ய முன்னிற்கின்றோம்; இதைப் போலவேதான் மற்றவர்களும் தங்கள் உயிரைப் போற்றுவதற்கு முயல்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இத்தகைய உண்மையை உணர்ந்த அன்புக் குணம் படைத் தவர்களே இரக்க சிந்தை உள்ளவர்கள்; அன்பு மார்க்கத்தின் உண்மையை அறிந்தவர்கள். அன்பு மார்க்கத்தின் உண்மையை அறிந்தவர்கள்; அன்பு வேறு. ஆண்டவன் வேறு என்று எண்ணவே மாட்டார்கள்; அன்புதான் ஆண்டவன். ஆண்டவன்தான் அன்பு என்று தான் நினைப்பார்கள்; அன்பு நெறியிலே- அருள் நெறியிலே தவற மாட்டார்கள். இந்த உண்மையைத் திருமூலர் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். அன்புடைமை என்னும் தலைப்பிலே பத்துப் பாடல்கள் திருமந்திரத்திலே காணப்படுகின்றன. அவை அன்பும் ஆண்டவனும் ஒன்றே என்பதை வலியுறுத்துகின்றன. அப் பாடல்களில் முதலில் நிற்கும் பாடல் வெளிப்படையாக அன்பே இறைவன் என்று முழங்குகின்றது. அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்; அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்; அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே. நம் சிந்தையைக் கவரும் செந்தமிழ்ப் பாடல் இது. சிறிதும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை அப்பட்டமாகச் சொல்லுகிறது இச்செய்யுள். அன்புள்ளவர்கள்- அன்புள்ளம் படைத்தவர்கள்- அன்பு வேறு, சிவம் வேறு என்று சொல்லமாட்டார்கள். அறிவற்றவர்கள் தாம் அன்பு என்பது ஒன்று, சிவம் என்பது ஒன்று; இவ்விரண்டும் தனித்தனியாகும் என்று உரைப்பார்கள். அன்புதான் சிவம், சிவம்தான் அன்பு என்பதை அருள்நெறியை உணராத யாரும் அறியமாட்டார்கள். அன்புதான் சிவமாகும் என்பதை ஆரும் அறிந்தபின் அன்புருவமாகவும் மங்களகரமான சிவ உருவமாகவும் அமர்ந்திருப்பார்கள். சிவம் என்பதற்கு மங்களம் என்பது ஒரு பொருள். தமிழ், இனிமை என்று பொருள் கூறுவோரும் உண்டு. மக்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நிறைமனத்துடன்- வாழ வேண்டுமானால் அன்புள்ளம் படைத்தவர்களாய் வாழவேண்டும் என்னும் கருத்தையே திருமூலர் வலியுறுத்துகிறார். அன்புதான் இறைவன்; அன்புள்ளவர்களிடந்தான் இறைவன் தன்மை காணப்படும். அன்பற்றவர் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், செல்வச் சிறப்புள்ளவராக இருந்தாலும் அவரிடம் கடவுள் தன்மை காணப்படாது. எல்லோருடனும் ஒத்துப் பழகுவதும் இரக்கங் காட்டுவதும்- இயன்றவரையில் உதவுவதும்- கடவுள் தன்மை. அன்பற்ற உள்ளம் பெற்றவர்களிடம் இத்தன்மை தோன்றுவதற்கே இடம் இல்லை. அன்பின் உள்ளான்; புறத்தான்; உடலாய் உளான்; முன்பின் உள்ளான்; முனிவர்க்கும் பிரான்; அவன் அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள்; அன்பின் உள்ளார்க்கே அணைதுணை யாமே. இதுவும் திருமந்திரம். அன்பும் ஆண்டவனும் ஒன்றென் பதை விளக்கும் பாட்டு. ஆண்டவன் என்பவன் தனியாக இல்லை; மக்களின் உள்ளத்திலும், உடம்பிலும், செயலிலும் இணைபிரியாமல் தொடர்ந்து நிற்கின்றான் என்ற உண்மையை இச்செய்யுளில் காணலாம். அன்பு நிறைந்த உள்ளத்திலே இருக்கின்றான்; உள்ளத்தின் புறத்திலும் இருக்கின்றான்; உடம்பாகவும் இருக்கின்றான்; வலிமையிலும் இருக்கின்றான்; முனிவர்களுக்கும் தலைவன்; அவன் அன்புக்குக் கட்டுப்பட்டு அன்புள்ள இடத்திலே வீற்றிருக்கும் அரும் பொருளாவான்; அன்பு நெறியிலே நிற்பவர்க்கே நெருங்கி நிற்கும் துணையாக இருப்பான் அன்பே சிவம்; அன்புடன் செய்யப்படும் செயல்களே இறைவன் விரும்பும் செயல்கள் என்ற கருத்தை மேலே காட்டிய இரண்டு செய்யுட்களும் விளக்குகின்றன. தமிழர் மரபிலே வந்த திருமூலர் தமிழர்களின் பரம்பரைப் பண்பையே எடுத்துக்காட்டினார். எல்லோரிடமும் அன்பு காட்டுவதே தமிழ் மக்களின் பரம்பரைப் பண்பு. அனை வருடனும் கலந்து வாழ்ந்து களிப்படைவதே தமிழர்கள் வழிவழி யாகப் பின்பற்றி வரும் வழக்கம். எந்தச் சமூகமானாலும் சரி. உள்ளத்திலே இரக்கமும் அன்பும்கொள்ளாத மக்களைக்கொண்ட சமூகம் உயர்ந்து வாழாது. அந்தச் சமூகத்தில் உள்ளவர்களே ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள்ளுவார்கள். எவ்வித முன்னேற்றமும் எய்த முடியாமல் அநாகரிக நிலையை அடைவார்கள். அவர்கள் கெடுவதோடு மட்டும் நின்றுவிட மாட்டார்கள். பக்கத்து வீட்டிலே புகுந்த தொத்துநோய், பாதுகாப்புடன் இராவிட்டால், அடுத்த வீட்டிலும் நுழையாமல் போகாது, தொத்து நோயை ஊரைவிட்டே விரட்டினால்தான் ஊரார் பயமின்றி உலாவ முடியும். ஊரிலே, கொள்ளைக் கூட்டம் உலாவும்போது, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டை மட்டும் பத்திரமாகப் பாதுகாப்பதால் கொள்ளையைத் தடுத்து விட முடியாது. கொள்ளைக் கூட்டத்தையே ஒழித்தால்தான் எல்லோரும் இரவிலே அமைதியாகத் தூங்கமுடியும். ஆதலால் அன்பு நெறிக்கு மாறான ஒழுக்கம் உலகில் எந்தச் சமூகத்தில் இருந்தாலும் அது உலகுக்குத் தீமைதான்; நாட்டுக்குக் கேடுதான். எல்லாரும் இன்புற்று வாழ- மக்கள் இனம் மகிழ்ந்து வாழ- அன்பு நெறி மக்களிடம் பரவ வேண்டும். எல்லா மக்களின் உள்ளமும் அன்பு வடிவமாக விளங்குமானால் உலகில் எத்துறை யிலும் பகைமை தலைதூக்காது. எல்லா மதத்தினரும், எல்லா இனத்தினரும், எல்லா மொழியினரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இந்த உண்மையை- அருள்நெறியைப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிந்து போற்ற வந்தனர்; பலர் பின்பற்றி வந்தனர். இந்த அருள்- அன்பு- நெறியைப் பின்பற்றியவர்களே, இன்று உலகில் தெய்வீகப் பிறப்பினராகவும், ஆண்டவன் அருள் பெற்றவர்களாகவும், மகாத்மாக்களாகவும், பெரியார்களாகவும், அறிஞர்களாகவும், ஞானிகளாகவும் போற்றப்படுகின்றனர். கல்லாமையால் பொல்லாமை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலரும் கல்வியின் பெருமை யைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகின்றனர். கல்வியின் சிறப்பைப் பற்றி- அதைக் கற்கவேண்டிய அவசியத்தைப் பற்றி உரைக்காத உத்தமர்களே இல்லை. உலகத்தில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் கல்வியில் கருத்தைச் செலுத்திவருகின்றது. எல்லா மக்களுக்கும் கல்வி போதிப்பது என்பதை எல்லா அரசாங்கங்களும் தங்கள் கடமை என்று சொல்லுகின்றன; தாங்கள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களிலே கல்வி போதிப்பதை, முதன்மையான திட்டமாகவும் வைத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசாங்கமும் ஆண்டுதோறும் கல்விக்காகப் பணம் செலவிடாமல் இருப்பதில்லை. கல்வியைப் பரப்புவதற் காகத் தனி அமைச்சர்; அதற்கென்று ஒரு தனிப் பிரிவு - இலாகா- அமைப்பு. அதற்காகப் பத்திரிகைகள், விளம்பரங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆயினும் இன்னும் இவ்வுலகிலே கல்வியறிவற்ற மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். உலகிலே உள்ள மக்கள் அனைவரும், கல்வி கற்றவர்களாக விளங்கும் நாள் எப்பொழுது என்று கூறமுடியாது. சில அரசாங்கங்கள் கல்வியை இத்தனை ஆண்டுகளிலே நாடெங்கும் பரப்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றன. ஆயினும் குறித்த ஆண்டுகளுக்குள் அதைச் செய்து முடிக்க இயலுமா என்பது சந்தேகந்தான். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைப்பற்றி நாம் ஆராயவேண்டுவதில்லை. கல்வியினால் மக்களை நல்வாழ்வு பெறச் செய்யமுடியும் என்பதை முன்னோரும் மறுக்கவில்லை. பின்னோரும் மறுக்கவில்லை என்பதுதான் நாம் இங்கே சொல்ல வந்த செய்தி. கல்வியின் பெருமையைப்பற்றிப் பேசும் அனைவரும், கல்லாமையின் சிறுமையைப்பற்றியும் சொல்லாமல் இருப்ப தில்லை. கல்லாமையின் இழிவும், கல்வியின் சிறப்பும் கண்கூடாகக் காணப்படும் பொருள். கற்றவர்கள் செல்வம் இல்லாமல் இருந்தாலும், நாகரிகமுடன் வாழ்வதற்கு முயல்கின்றனர். நன்மை இவை, தீமை இவை என்பதை அறிந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் சுயநலத்தின்பொருட்டுத் தீமை செய்யத் துணிந்தாலும் வெளிப்படையாகச் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மறைந்து நின்றே தீமைகளைச் செய்கின்றனர். தீமை செய்வது தவறு என்று அவர்கள் உள்ளம் உணர்கிறது; அவர்கள் கற்ற கல்வி அதை உணர்த்துகின்றது. ஆயினும் சூழ்நிலை காரணமாக- சந்தர்ப்பம் காரணமாகத் தீமை செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இப்படித்தான் நினைக்க வேண்டும். கல்லாதவர்கள், நன்மை இவை, தீமை இவை என்பவற்றை அறிய மாட்டார்கள்; ஆதலால் அவர்கள் தங்கள் இன்பத்தை எண்ணி எதையும் செய்யத் துணிகின்றனர்; அவர்கள் செய்வன நன்மையா? தீமையா என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படவே மாட்டார்கள். கல்லாதவர்களுக்கு உண்மையின்னது, பொய்மை இன்னது என்றுகூடத் தெரியாது. நன்னெறி இன்னது, தீ நெறி இன்னது என்றும் தெரியாது. உலக மக்களோடு ஒன்று பட்டு, ஒத்து வாழ்ந்து இன்பம் உறவும் உணரமாட்டார்கள். ஆதலால் கல்லாதவர்களால், மக்கள் சமுதாயத்திலே பல குற்றங்கள் உயிர்பெற்று நடமாட இடமுண்டு; அவர்களால் சமுதாய ஒற்றுமை குலைந்து சீரழிந்துவிடும் என்று எண்ணித்தான் நமது முன்னோர்களும் கல்வியின் சிறப்பை எடுத்துரைத்தார்கள்; கல்லாமையின் இழிவைப் பன்னிப் பன்னிப் பகர்ந்திருக்கின்றார்கள். எல்லாவுயிர்க்கும் இறைவன் ஒருவன்தான் என்ற உணர்ச்சி மக்களுக்குள் ஒற்றுமையை உண்டாக்கும். இவ்வுணர்ச்சியுள்ள மக்கள் எக்காரணத்தைக்கொண்டும் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொண்டு மாளமாட்டார்கள்; ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கணை தொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கற்றவர்களால்தான் எல்லாவுயிர்க்கும் இறைவன் ஒருவன் என்பதை உணரமுடியும்; அவர்களால்தான் தம் உள்ளத்திலே இரக்கமே உருவான இறைவனைக் காணமுடியும். ஆதலால் கல்லாமை- படிப்பின்மை ஒழிய வேண்டும் என்று கூறுகிறார் திருமூலர். நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்! எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே நிலைத்து நிற்காதவற்றையெல்லாம், நிலைத்து நிற்பனவாக, நெஞ்சத்திலே நினைப்பவர்களே! நிலைத்து நிற்காமல் அழிந்து போகும் இவ்வுடம்பையும் நிலையென்று நினைக்கின்றீர்கள். அதனால் இவ்வுடல் இன்பத்திற்காகவே அல்லும் பகலும் உழைத்து உழைத்து அலுத்துச் சாகின்றீர்கள். இறைவன் எல்லாவுயிர்களோடும் இணைந்திருக்கின்றான் என்பது உண்மைதான்; ஆயினும், கல்லாதார் நெஞ்சத்திலே அவனைக் காணவே முடியாது. கல்லாதார் நெஞ்சம் தூய்மை யற்றது; அழுக்கும் தூசும் நிரம்பி அடிவைக்க முடியாத பாழ் இடம்; இரக்கம் என்னும் ஈரம் அற்ற வறண்ட புழுக்கறை; ஆதலால் அங்கே இறைவனைக் காணமுடியாது. இச்செய்தியைக் கூறிற்று இப்பாடல். கல்லாதவர்களுடைய தொடர்பே கூடாது என்று மற்றொரு பாட்டிலே வலியுறுத்து கின்றார். கல்லாத மூடரைக் காணவும் ஆகாது; கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று; கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லாராம்; கல்லாத மூடர் கருத்து அறியாரே. கல்லாதவர்களின் நட்புறவே கூடாது என்று உரைக் கின்றது இச்செய்யுள். கல்லாத மூடர்களைக் காண்பதுகூடத் தீமை தரும்; ஆகையால் அவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போகவேண்டும். கல்லாத மூடர்கள் சொல்வது எவ்வளவு அழகாக இருந்தாலும், காதுக்கு எவ்வளவு இனிமையைத் தந்தாலும் அதைக் கேட்பது நம் கடமையல்ல. அவர்கள் சொல்லைக் கேட்பது கடமை தவறிய செயலாகும். கல்லாத மூடர்கள் நல்லவர்களை விரும்ப மாட்டார்கள்; கற்றவர்களை விரும்பமாட்டார்கள்; கற்றவர் களையோ நல்லவர்களையோ பாராட்டவும் மாட்டார்கள்; அவர்கள் கல்லாதவர்களைந்தான் விரும்புவார்கள்; பாராட்டு வார்கள்; நட்பாகக் கொள்வார்கள். கல்லாதவர்கள் சிறந்த கருத்துக்களை அறியாதவர்கள்; எதையும் எண்ணித் துணிந்து உண்மை காணும் நுண்ணறிவு அவர்களிடம் இல்லை. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; எண்ணியதே முடிவு என்பதுதான் அவர்கள் தன்மை. ஆகவே கல்லாதவர்கள் வெறுக்கத்தக்கவர்கள்; விரும்பத் தக்கவர்கள் அல்லர்; என்பதே இச்செய்யுளில் காணப்படும் கருத்து. இக்கருத்திலே மற்றொரு உண்மைப் பொருளும் அடங்கிக் கிடக்கின்றது. கல்லாதவர்களால் பல தீமைகள் வளரும்; அவர் களால் மனித சமுதாயத்திற்கு நன்மையில்லை; ஆதலால் கல்லாதவர்கள் என்று யாரும் நாட்டில் இல்லாமல் செய்யப் படவேண்டும் என்பதுதான் அக்கருத்து. கல்லாதவர் கூட்டம் ஒழிக்கப்படவேண்டும் என்பதனால் அவர்களையெல்லாம் கடலிலே மூழ்கடித்துவிடவேண்டும். அல்லது எரிமலைக்குள் தூக்கிப் போட்டுவிட வேண்டும் என்பது பொருளல்ல. கல்லாதவர்களையெல்லாம் கற்று அறிவுடையவர்களாகும்படி செய்யவேண்டும்; நாட்டிலே பிறந்த எல்லா மக்களும் கல்வி கற்கும்படி செய்யவேண்டும்; இதுதான் செய்யவேண்டிய காரியம். உண்மையையுணரும் கல்வியை மக்கள் அனைவரும் கற்று, ஒன்றுபட்டு, இன்பத்துடன் வாழவேண்டும் என்பதே நமது முன்னோர்களின் கொள்கை. இதையே மேலே காட்டிய திருமந்திரப் பாடல்கள் விளக்கிக் காட்டுகின்றன. வல்லமையே சக்தி சக்தி என்பது வடமொழிச் சொல். இச்சொல்லைத் தமிழிலே வழங்கும்போது சத்தியென்பர். சக்தி என்னும் போது அதன் ஓசை தமிழ் ஓசைக்குப் பொருந்தாது. ஆதலால் அதனை சத்தியாக்கித் தமிழோசைப்படுத்தினர். பெண் தெய்வத்தைச் சத்தி என்று குறிப்பிடுவர். பார்வதியே சக்தி உருவாகக் காட்சியளிக்கின்றான் என்பது புராண நம்பிக்கை. காளி போன்ற தெய்வத்தைச் சத்தியென்பர். இன்னும் மக்களால் வணங்கப்படும் பல வேறு பெண் தெய்வங்கள் எல்லாம் சக்தியின் கூறாகவே கருதப்படுகின்றன. சக்தியென்னும் தெய்வத்தைக் கொடிய உருவமாக ஆக்கி யிருக்கின்றனர். பார்ப்பதற்குப் பயங்கரமான உருவமாகச் செய்து வைத்திருக்கின்றனர். தமிழகத்தில் காளிகோயில்கள் இருக்கின்றன. அங்காளம்மன் கோயில்கள் இருக்கின்றன. துர்க்கையம்மன் கோவில்கள் இருக்கின்றன. இக்கோவில்களில் உள்ள உருவங் களைச் சிறு பிள்ளைகள் பார்த்தால் பயந்துபோய் விடுவார்கள். இவ்வுருவங்களைக் கருவுற்ற பெண்கள் கண்டால் அவர்கள் வயிற்றில் உள்ள கருச்சிதைந்து போய்விடுமாம். இத்தெய்வங்களைப்பற்றிக் கூறப்படும் கதைகளுக்குக் கணக்கு வழக்கில்லை. அறிவற்ற மக்கள் இத்தெய்வங்களின் கதைகளைக் கேட்கும்போதே பயங்கரமடைவார்கள். உள்ளம் நடுங்குவார்கள். சக்தியின் கூறாகக் கொள்ளப்படும் இத் தெய்வங்களுக்குத் திருவிழா நடத்தும்போது பலவகையான விலங்குகளையும் பறவைகளையும் பலியிடுவார்கள். ஆடு, எருமை, கோழி முதலி யவை இத்தெய்வங்களுக்குப் பலியிடப்பட்டுவந்தன. இப்பொழுது பலியிடுவதைத் தடுக்கும் சட்டத்தால் பலவிடங்களில் இவ் வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. இத்தெய்வங்கள் மதுவும் மாமிசமும் இல்லாமல் உயிர் வாழ முடியாது. இவற்றை வைத்துத்தான் படைப்பார்கள். பழங்காலத்திலே இத்தெய்வங்களுக்கு நரபலியிட்ட தாகவும் கதைகளிலே படிக்கின்றோம். காளி போன்ற தெய்வங்கள் நரபலி கேட்டன என்று சொல்லப்படும் கதைகள் பல. பலியிட்டு வணங்கப்படும் சக்தி போன்ற தெய்வங்கள் பழந்தமிழகத்திலே இருந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் மட்டும் இவ்வழக்கம் இருந்தது என்று சொல்ல முடியாது. கிறிதுவ மதம் தோன்றுவதற்குமுன் மேல் நாடுகளிலும் இவ்வாறு ஆடு மாடுகளைப் பலிகேட்கும் தெய்வங்கள் இருந்திருக்கின்றன. நபிகள் நாயகம் தோன்றுவதற்குமுன் அரேபியாவிலும் ஆடு மாடுகளைப் பலிகேட்கும் தெய்வங்கள் இருந்திருக்கின்றன. இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் உண்மை ஒன்று உண்டு. ஒவ்வொரு நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களுக்குத் தகுந்தாற்போல் அவர்களால் வணங்கப்படும் தெய்வங்களும் அமைந்திருந்தன. இதுதான் நாம் காணும் உண்மை. பிற்காலத் தார் அத்தெய்வங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல கதைகளைப் புனைந்தனர். ஆதிகாலத்திலே இத்தகைய கதைகள் இருந்திருக்க முடியாது. நாளேற நாளேற- மக்கள் அறிவு வளர வளரப் பல மூட நம்பிக்கைகள் மறைந்து வந்தன. ஆனால் சிறு தெய்வங்களைப் பற்றிய மூட நம்பிக்கைகள் இன்னும் அடியோடு மறைந்து விடவில்லை. பாமர மக்கள் உள்ளத்திலே குடி கொண்டுதான் இருக்கின்றது. இன்னும் காட்டுமிராண்டித்தனமான வழிபாட்டு முறைகள் நாட்டிலே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மந்திரவாதிகள் என்போர் சிலர் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் மந்திர சக்தியினால் தெய்வங்களுடன் பழகுவதாகவும் அவற்றுடன் உறவாடுவதாகவும் சொல்லிக்கொள்ளுவார்கள். தெய்வங்கள் இவர்களுடைய மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு இவர்கள் சொல்லுவதைக் கேட்பதாகவும் நம்புகின்றனர். இத் தகைய நம்பிக்கையுள்ள மக்கள் இன்னும் சிலர் இருக்கின்றனர். இத்தகைய மந்திரவாதிகளிலே பலர் சக்தியை வணங்கு கின்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளுவார்கள். இவர்களைச் சக்தி உபாசனைக்காரர்கள் என்று அழைப்பார்கள். இந்தச் சக்தி உபாசனைக்காரர்களிலே மந்திரவாதிகள் அல்லாதவர்களும் உண்டு. சக்தி உபாசனைக்காரர்கள் கூடத் தங்களைப் பயங்கரமாக அலங்கரித்துக்கொள்ளுவது உண்டு. அவர்கள் நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு; சந்தனப் பொட்டின்மேல் குங்குமப் பொட்டு: கழுத்திலே ஏதாவதொரு மாலை; கையிலே தாயத்து, தாடி, மீசை, வாயிலே முணுமுணுப்பு, வெறித்துப் பார்க்கும் பயங்கரமான பார்வை, சக்தியின் உருவை வர்ணிக்கும் பயங்கர மான சில பாடல்கள்; கையிலே ஏதாவதொரு கோல்; இத்தகைய கோலத்துடன் சக்தி உபாசனைக்காரர்களைக் காணலாம். சக்தி உபாசனைக்காரர்கள் பெரும்பாலும் மது மாமிச உணவுள்ளவர்களாயிருப்பார்கள். எப்பொழுதும் போதையில் இருப்பதிலே அவர்களுக்கு ஒரு மதிப்பு. சக்தி உபாசனைக்காரர்கள் மாமிசம் உண்ணாவிட்டாலும் மது உண்ணாமலிருக்க மாட்டார்கள். மாமிசமும் மதுவும் பராசக்தி விரும்பும் பவித்திரமான உணவல்லவா? சக்தியைத் தெய்வமாகக் கொண்டு வணங்கியவர்களிலே இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் ஒரு தனித்தன்மையுள்ளவர்; பெரிய அறிவாளி. உலகைப் படைத்த ஒரு சக்தியையே அவர் சக்தியென்னும் தெய்வமாகக் கண்டார். காளியென்னும் உருவிலே கண்டார்; அக்காளிதேவிதான் உலக அன்னை யென்று நம்பினார். அக் காளிதேவிதான் உலக அன்னெயென்று நம்பினார். ஆதலால் அவரைப்பற்றி நாம் இச்சமயத்திலே மறந்துவிடவேண்டும். சக்தியின் பேரால் வேடம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றித் திரியும் சக்தி தாசர்களைப்பற்றித் தான் நாம் கவனிக்க வேண்டும். சக்தி சக்தியென்று சொல்லிக்கொண்டு, மதுவுண்டு. பயங்கர வேடம் பூண்டு திரியும் பேர்வழிகள் உண்மையான சக்தியைக் கண்டறிந்தவர்கள் அல்லர். இதுவே பழந்தமிழ்ச் சான்றோர்களின் கொள்கை. மதுவுண்டு மயங்கித் திரியும் சக்திதாசர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் மோசக்காரர்கள்; அல்லது உண்மையை உணராமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் அறிவீனர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். சக்தி என்பதைப் பற்றித் திருமூலர் ஒரு செய்யுளில் விளக்க மாகச் சொல்லியிருக்கின்றார். சுருக்கமாகவும் தெளிவாகவும் சக்தியைப்பற்றி விளக்கியிருக்கின்றார்; பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் சக்தியைப்பற்றிக் கொண்டிருந்த கருத்து இன்ன தென்பதை அச்செய்யுள் விளக்குகின்றது. சத்தியை வேண்டிச் சமயத்தோர்கள் உண்பர்; சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்; சத்தி, சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே. இதுவே அச்செய்யுள். இதன் பொருள் கீழ்வருவது: சக்தி தேவியின் அருளை விரும்பி அந்தச் சக்தியை வணங்கும் மதத்தினர்கள் கள்ளுண்டு காலங் கழிப்பர். கள்ளுண் பவர்கள் தமது அறிவை இழந்துவிடுகின்றனர். தம்மை மறந்து விடுகின்றனர். தம் அறிவை இழந்தவர்கள் தம்மை மறந்தவர்கள் ஒரு உண்மையையும் உணரமுடியாது. அவர்கள் தமது சக்தியை- அறிவாற்றலைக்கூட மறந்தவராகி விடுகின்றனர். ஆதலால் கள்ளுண்டு மயங்குவோர் சக்தியை உணர்ந்தவர்களாக மாட்டார்கள். உண்மையான சக்தி என்பது சிவஞானம் பெறுவதாகும். சிவஞானம் என்பது உண்மை அறிவு; நன்மை இது, தீமை இது என்பதைத் தெரிந்துகொள்ளும் அறிவு. இந்த அறிவைத்தான் நல்லறிவு; மங்களகரமான அறிவு; சிவஞானம் என்பர். இத்தயை நல்லறிவாகிய சிவஞானத்தைப் பெற்றால்தான் இன்பம் அடைந்து வாழ முடியும். இந்த சிவஞானத்தைப் பெற்றவர்கள் தாம் உண்மையான ஆனந்தத்தைப் பெற்றவர்கள். இவ்வாறு உண்மையான அறிவைப் பெற்று ஆனந்தத்தை அடைவதுதான் சக்தியைக் காண்பதாகும். மேலே காட்டிய நான்கடிகளைக்கொண்ட திருமூலர் திரு மந்திரச் செய்யுள் சக்தி உபாசனைக்காரர்களின் ஏமாற்றுச் செயலை உடைத்தெறிகின்றது. உண்மை அறிவடைதல்; ஒழுக்க முடன் வாழ்தல்; நெஞ்சத்தில் தீமைகளுக்கு இடந்தராமல் இருத்தல்; எப்பொழுதும் கவலையின்றி ஆனந்தமாக இருத்தல்; இவைகளே சக்தியை அறிந்தவர்களின் செய்கை; நடத்தை; என்பதை அறியலாம். கதையும் கருத்தும் கதைகள் எழுதுவதிலே இரண்டு வகையுண்டு. கருத்துக் களை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைவது; கருத்துக் களையே நிகழ்ச்சிகளாக்கிக் கூறுவது. கருத்துக்களுக்குத் தக்கவாறு நிகழ்ச்சிகளை மாற்றிக்கொள்ளுவது. நடந்த உண்மை நிகழ்ச்சி யைக்கூடக் கருத்தைத் தழுவி மாற்றி அமைத்துக் கொள்ளுவது. இவ்வாறு கருத்தையே அடிப்படையாகக்கொண்டு எழுதும் கதைகள் ஒருவகை. இக்கதைகள் பெருங்கதைகளாகவும் இருக்கலாம்; சிறு கதைகளாகவும் இருக்கலாம். கருத்தைப்பற்றிச் சிந்திக்காமல் அதிசயமான நிகழ்ச்சிகளை அமைத்துக் கதை எழுதுவது; வேண்டும் என்று கருத்தைப் புகுத்துவதில்லை. கதை நிகழ்ச்சியிலே கருத்துக்கள் உருவாகும் படி விட்டுவிடுவது. இப்படிக் கதை எழுதுவது ஒருவகை. கருத்துக்களை அமைத்துக் கதை எழுதும் வேலை கொஞ்சம் கடினமானது. இது எல்லோராலும் இயலாத செயல். சிறந்த கொள்கைகளை உடையவனே இத்துறையில் வெற்றி பெற முடியும். சிறந்த கொள்கைகள் மட்டும் போதா. கற்பனைத் திறனும், மொழிவல்லமையும், உலக அனுபவமும், பல துறைகளைப்பற்றிய தெளிவான அறிவும் வேண்டும். ஆகவே, கற்பனைத்திறன்- இலக்கியத் தேர்ச்சி- உறுதியான கொள்கை இவை உள்ளவர்களால்தாம் கருத்துள்ள கதைகளைப் பெற்றெடுக்க முடியும்; கற்போர் கருத்தைக் கவரும்படியான நிகழ்ச்சிகளை உருவாக்கமுடியும். தமக்கென்ற கொள்கை ஒன்றும் இல்லாதவர்கள்- கதை எழுதுவது ஒன்றுதான் கொள்கை; வேறு நோக்கம் எதுவும் இல்லை, என்பவர்கள் கதைப்போக்கிலேயே சென்று கொண்டி ருப்பார்கள். இவர்களுக்குக் கொள்கை உறுதி வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கற்பனைத்திறன்- வியப்புக்குரிய நிகழ்ச்சி களை உருவாக்கும் ஆற்றல்- படிப்போர் சிந்தையை இழுக்கக் கூடிய மொழிகள் அமைந்த நடைத்திறன்- இவை இருந்தால் போதும். இன்று இருவகைக் கதைகளும் எழுதப்படுகின்றன. முதல் வகைக் கதையைவிட இரண்டாவது வகைக் கதைகளே மிகுதியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்விருவகைக் கொள்கையினரும் பண்டைப் பாரத நாட்டில் இருந்திருக்கின்றனர். இன்று போலவே பண்டைக் காலத்திலும் நமது நாட்டில் சிறு கதைகளும் பெருங்கதைகளும் எழுதப்பட்டுவந்தன. இன்று எழுதப்படும் சிறுகதைகள், சிறுகதைகள் என்ற பெயரிலேயே வழங்குகின்றன. பெருங்கதைகள் நாவல்கள் அதாவது புதுக் கதைகள் என்ற பெயரிலே வழங்குகின்றன. பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட கிறு கதைகளும் பெருங் கதைகளும் தனித்தனியாக வழங்கவில்லை. இரண்டும் ஒன்றாகவே கலந்து வாழ்ந்தன. ஒரு பெருங்கதையை எடுத்துக்கொண்டால் அதிலே பல கிளைக் கதைகளைக் காணலாம். அக்கிளைக் கதைகளைத் தனித்தனியாக எடுத்தெழுதினால் அவை சிறுகதை களாகக் காணப்படும். பண்டைக்காலத்தில் சரித்திரம்போல் எழுதப்பட்ட இதிகாசங்களைத் தவிர ஏனைய கதைகள் கருத்தை அமைத்தே எழுதப்பட்டன. புராணக் கதைகள் பெரும்பாலும் கருத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளைக் கொண்டவையேயாகும். மக்கள் ஆத்மீகத் துறையையே பெரிதாகக் கருதியிருந்த காலத்தில்தான் புராணக் கதைகள் ஏற்பட்டன. தெய்வசக்தி தான் பெரிது; இளைத்தவரை வலுத்தவர் வதைத்தால், வலுத்த வரைத் தெய்வம் வதைக்கும்; கட்டாயம் வதைக்கும். ஒவ் வொருவரும் தாம் தாம் செய்யும் வினையின் பலனைத் தாமே அனுபவித்தாகவேண்டும். நல்வினைகளைச் செய்வோர் நன்மையை அனுபவிப்பர்; தீவினைகளைச் செய்வோர் தீமை களையே அனுபவிப்பர் என்ற நம்பிக்கைகள் மக்கள் மனத்தில் வேரோடியிருந்த காலத்திலேயே புராணக் கதைகள் புனையப் பட்டன. ஆகையால் இவை போன்ற கருத்துக்களை வலியுறுத்தும் கதைகளாகவே புராணங்கள் விளங்குகின்றன. இந்த உண்மையைத் தமிழ் நாட்டுப் பேரறிஞர் திருமூலர் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். சிவபெருமான் திரிபுரத்தை எரித்தார் என்ற கதை அனைவர்க்கும் தெரிந்தது. சிவபெருமான் பெருமையைச் சொல்லும் இடங்களில் எல்லாம் இக்கதை வராமல் போகாது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்பது சிவபிரானுக்கு ஒரு பெயர். சைவ சமய நூல்கள் எல்லாவற்றினும் இக்கதைக் குறிப்பைக் காணலாம். அசுரர்களுக்கு ஒரு கோட்டை இருந்தது. அதற்கு மூன்று மதில்கள். ஒன்று இரும்பு, மற்றொன்று வெள்ளி, வேறொன்று பொன். இக்கோட்டை வானத்தில் பறப்பது; நினைத்த இடங் களுக்கெல்லாம் செல்லக்கூடியது. இதில் இருந்த அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர். அவர் மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுராதிகளுடன் போர் செய்யப்போனார். பூமியே தேர்; சூரிய சந்திரர்கள் அத்தேரின் சக்கரம். நான்கு வேதங்களும் குதிரைகள். பிரமனே தேர்ப்பாகன். இவ்வளவு தடபுடலுடன் திரிபுராதிகளை எதிர்க்கப்போனார். அப்பொழுது. மேரு, வாசுகி, திருமால், பிரமன் சூரிய சந்திரர்கள் முதலியவர்கள், நாம் துணைசெய்யாவிட்டால் இந்தச் சிவபெருமானால் திரிபுராதி களை வெல்ல முடியுமா என்று நினைத்தார்கள். அந்நினைப்பை அறிந்த சிவபிரான் சிரித்தார். உடனே திரிபுரம் சாம்பலாக எரிந்து போயிற்று. இதுதான் திரிபுரம் எரித்த கதை. இது நடந்த உண்மை நிகழ்ச்சி அன்று; கருத்துள்ள கற்பனைக் கதை என்று கூறுகின்றார் திருமூலர். அவர் கூறுவதை அப்படியே கேளுங்கள்: அப்புஅணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புறம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புரம் ஆவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே. இதுவே அச் செய்யுள். திரிபுரம் எரித்த கதைக்கு விளக்கம் உரைக்கும் பாட்டு. கங்கையை அணிந்த சிவந்த சடையுடைய பழமையான சிவபெருமான் முப்புரத்தை அழித்தான் என்று கதை சொல்லு கின்றவர்கள் மூடர்கள்: உண்மைக் கருத்தை உணராதவர்கள். முப்புரம் அழித்தான் என்பதன் கருத்து யாதென்றால் சொல்லு கின்றேன் கேளுங்கள். முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்பவை. இவற்றை ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் தோன்றாமல் அழிப்பதே முப்புரத்தை எரிப்பதாகும். இவற்றை அழித்தவர்தான் சிவபெருமான். ஒவ்வொரு மனிதனும் இந்த முக்குற்றங்களையும் அழித்தால் சிறந்து வாழலாம் இதுதான் உண்மையாகும். அந்தத் திரிபுரத்தை அம்பெய்து அழித்தார் என்பது யாருக்குத் தெரியும்? அது வெறும் கதை. இதுவே இச்செய்யுளில் அடங்கியிருக்கும் பொருள். பண்டைப் புராணக் கதைகளும், அவற்றுள் அமைந்து கிடக்கும் கிளைக்கதைகளும் இதுபோன்ற பல உண்மைக் கருத்துக்களைக் கொண்டவை என்பதே அறிஞர் கருத்தாகும். இதிலிருந்து ஒரு உண்மையை நாம் காண முடிகின்றது. கதைகள் என்பவை மக்களுடைய ஒழுக்கத்தைக் காப்பாற்றவே தோன்றியவை. கதைகளின் வாயிலாகப் பல கருத்துக்களைப் பொதுமக்களின் உள்ளத்திலே படிய வைப்பதே பண்டைக் கதாசிரியர்களின் நோக்கம். இதற்காகவே பல கதைகளைப் புனைந்தனர். அவையே பழைய புராணங்கள் என்ற பெயரில் வழங்கிவருகின்றன. இன்றும் கதையெழுதுகின்றவர்களுக்கு இம்முறை ஒரு வழிகாட்டியாகும். கருத்தின்றிப் பொழுதுபோக்குக்காகக் கதை எழுதுவதைவிடச் சிறந்த கருத்துக்களை மக்கள் உள்ளத்திலே பதியவைக்கக்கூடிய கதைகளைப் புனைவதே சிறந்ததாகும். இக் கருத்தையும் திருமூலர் செய்யுள் நமக்கு உணர்த்துகின்றது. பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் கருத்தையும், ஒழுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டவைகள். இக்காலத்தில் எழுதப்படும் சிறுகதைகள் இயற்கை நிகழ்ச்சியை அடிப்படை யாகக் கொண்டவைகள். இவை போன்றனதான் பண்டைக் காலப் பெருங்கதைகளும், இக்கால நவீனங்களும் ஆகும். நெஞ்சத் தூய்மை ஒழுக்கத்தை அகவொழுக்கம் புறஒழுக்கம் என்று இரண்டாகக் கூறுவர். ஒழுக்கம் என்றால்- நடத்தை, ஆசாரம் என்று சொல்லலாம். அக ஒழுக்கம் என்பது உள்ளத்தின் நடத்தை; உள்ளத்தின் போக்கு; உள்ளத்தின் ஆசாரம் ஆகும். புறவொழுக்கம் என்பது வெளியிலே உள்ள ஆசாரம். உடம்பைத் தூய்மையாக வைத்துக்கொள்வது; உடையைத் தூய்மையாக வைத்துக்கொள்வது; தம்மைப் பிறர் காணும்படி அலங்கரித்துக்கொள்வது; இவையெல்லாம் புறவொழுக்கம். மக்களுக்கு அகவொழுக்கமும் வேண்டும்; புறவொழுக்கமும் வேண்டும். இரண்டு ஒழுக்கங்களையும் பின்பற்றும் மக்கள்தான் அனைவராலும் போற்றப்படுவார்கள். இந்த இரண்டு ஒழுக்கங்களிலே, நல்ல வசதியுள்ளவர்கள் தாம் புறவொழுக்கத்திலே குன்றாமலிருக்கமுடியும். குளிப் பதற்குத் தண்ணீர் கிடைக்காத மக்கள் உடம்பைக் கழுவித் தூய்மை செய்துகொள்ள முடியாது. போதுமான உடை கிடைக்காத ஏழை மக்கள் ஆடைகளை அழுக்கின்றி வைத்துக் கொள்ளுவது எப்படி? எப்பொழுதும் புழுதியிலும், கல்லிலும், மண்ணிலும், புகைசூழ்ந்த தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் மக்கள் உடம்பிலே கலவைச் சந்தனம் பூசிக் கொண்டு நறுமணம் கமழ உலவித் திரிவது எப்படி? இதற்கு நேரம்தான் ஏது? ஆதலால், வருமானமும், ஓய்வும், வசதியும் உள்ளவர்கள் தாம் புறத் தூய்மையுடன் வாழமுடியும்; புற ஒழுக்கத்தைச் சரியாகப் பின்பற்ற முடியும். ஆனால் அகவொழுக்கத்தை அனைவரும் பின்பற்ற முடியும்; உள்ளவர் இல்லாதவர் என்ற வேற்றுமையின்றி எல்லாரும் உள்ளத்திலே ஒழுக்கம் உள்ளவராய் வாழலாம்; இதற்குக் காசு பணம் வேண்டும் என்பதில்லை. கருத்திருந்தால் போதும்; அறிவிருந்தால் போதும்; உள்ளத்திலே உறுதியிருந்தால் போதும். பொய் சொல்லாமலிருத்தல்; பிறருக்குத் தீங்கு புரிய எண்ணாதிருத்தல்; ஒழுக்கக்கேடான காரியங்களிலே உள்ளத்தை ஓடவிடாமல் தடுத்தல்; துன்புறுவோர்பால் இரக்கங் காட்டுதல்; எல்லோரையும் மக்களாகவே கருதி மதித்தல்; மக்களிடம் வேற்றுமை பாராட்டாமை; மதம் சாதி, இனம், பழக்கவழக்கம் காரணமாக மற்றவர்களிடம் வெறுப்புக் காட்டாமை; தம்மிடம் அன்புகாட்டும் அனைவரிடமும் தாமும் அன்பு காட்டுதல்; இவை போன்ற பண்புகள் அக ஒழுக்கமாகும். இத்தகைய அக ஒழுக்கத்தை அறிவுள்ளவர்கள் அனைவரும் பின்பற்ற முடியும். புறத்திலே தூய்மையற்றவர்களால்- புறவொழுக்கத்தைப் பின்பற்ற முடியாதவர்களால்- யாருக்கும் எத்தகைய தீமையும் இல்லை. ஆனால் அகத்திலே ஒழுக்கமற்றவர்களால் சமுதா யத்திற்குப் பெருங்கேடு உண்டாகும். அகத்திலே அழுக்குப் படிந்திருந்தவர்கள் சமுதாயத் துரோகிகளாகவே விளங்கு வார்கள். தந்நலத்தையே பெரிதாகக்கொண்ட மாசுள்ளம் படைத்த ஒரு சிலரால் இந்த உலகமே அல்லோல கல்லோலப் படுவதைக் காண்கின்றோம். ஆகையால் பழந்தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் புறவொழுக்கத்தைக் காட்டிலும் அகவொழுக்கம் சிறந்தது என்று கூறியிருக்கின்றனர். இக்கருத்தைத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறிவிட்டார். ஒருவன் மனத்திலே மாசற்றவனாய் வாழ்வானாயின், அவ் வொன்றோ அவன் எல்லா அறநெறிகளையும் பின்பற்றியவன் என்பதற்கு அடையாளமாகும். மனத்திலே மாசு பொருந்திய வனாய் இருந்து வெளியிலே பரிசுத்தமுள்ளவனாக நடிப்பது வெறும் ஆடம்பரத்தைத் தவிர வேறு அல்ல; உள்ளத்திலே தூய்மையில்லாதவன் வெளியிலே பின்பற்றும் ஒழுக்கங்கள் அத்தனையும் ஆடம்பரந்தான் என்று கூறுகிறார் வள்ளுவர். இதனை, மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்; ஆகுல நீர பிற என்ற குறளால் காணலாம். இக்காலத்திலே அகவொழுக்கத்தைவிட புறவொழுக்கந் தான் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. நன்றாகக் குளித்து முழுகித் தூய்மையான ஆடையணிகளைத் தரித்துக் கொண்டு உலவும் மக்கள்தாம் பெரும்பாலோர். இவர்கள் தங்களைச் சிறந்த ஆசாரம் உள்ளவர்களாக எண்ணிக் கொள் கின்றனர். வெளித்தோற்றத்தைப் பொறுத்தவரையிலும் இவர்கள் ஆசாரம் உள்ளவர்கள்தாம். இவர்கள் உள்ளத்திலே வஞ்சகம், பொறாமை, குடிகெடுக்கும் குணம், எப்பொழுதும் யாரை ஏமாற்றலாம். எப்படி ஏமாற்றலாம் என்ற எண்ணம்; இவை குடிகொண்டிருக்குமாயின் இவர்களை உண்மை ஒழுக்கம் உள்ளவர்களாக எப்படிக் கருதமுடியும்? பிறரைச் சுரண்டு வதற்காகவே ஆடம்பரத்துடன் சுற்றித் திரிந்து கொண்டி ருப்பார்களாயின் இவர்களை யார் நம்பமுடியும்? உள்ளத்திலே தூய்மையில்லாமல் வெளியிலே பரிசுத்த வான்களைப் போல் நடிக்கும் இத்தகைய மக்கள் பண்டைக் காலத்திலும் இருந்திருக்கின்றனர். அவர்களிலே ஒருவகையினர் தீர்த்த யாத்திரை செய்வதின்மூலம் தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தனர். இன்றும், கங்கை, காவேரி, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை போன்ற நதிகளிலே இறங்கி இரண்டு முழுக்குப் போட்டு விட்டால் போதும்; தாங்கள் செய்த பாவம் அனைத்தும் கரைந்துபோய்விடும் என்ற நம்பிக்கையுள்ள மக்கள் இருக்கின்றனர். உள்ளத்திலே தூய்மையில்லாமல் எத்தனை தீர்த்தங் களிலே போய்க் குளித்தாலும் பயன் இல்லை என்பதே அறிஞர் கொள்கை. தண்ணீர்- தீர்த்தம்- உடம்பைத்தான் கழுவமுடியும்; அதன்மேல் உள்ள அழுக்கைத்தான் அகற்ற முடியும்; உள்ளத் தைத் தூய்மைசெய்யும் தன்மை எந்தப் புண்ணிய தீர்த்தத்திற்கும் இல்லை என்பதே அறிஞர்களின் கொள்கை. இதனைப் புறம் தூய்மை நீரான் அமையும். அகம் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். தண்ணீரால் உடல் சுத்தம் ஒன்றுதான் உண்டாகும்; மனச் சுத்தம் உண்மை கூறுவதனால்தான் உண்டாகும் என்பதே இக்குறளின் கருத்து. இக்கருத்தைத் திருமூலர் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கின்றார். உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்; மெள்ளக் குடைந்துநின்று ஆடார்; வினைகெடல், பள்ளமும் மேடும் பரந்து திரிவரேல். கள்ளமனம் உடைக் கல்வி இல்லோரே. இது திருமூலர் திருமந்திரப் பாட்டு. திருக்குறளின் விளக்க உரைபோல் இப்பாடல் விளங்குகின்றது. மனத் தூய்மையுள்ள வர்களே? சிறந்தவர்கள் என்பதை விளக்குகின்றது இப்பாடல். மனத்தின் உள்ளேயே நம்மைப் பரிசுத்தமாக்கத்தக்க பல தீர்த்தங்கள் இருக்கின்றன. அத்தீர்த்தங்களிலே ஆடித் தம்மைத் தூய்மைசெய்து கொள்ளவேண்டும். இவ்வுண்மையை உணரா தவர்களாய்த் தமது தீவினை ஒழியத் தீர்த்தமாடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு பள்ளங்களிலும் மேடுகளிலும் அலைந்து திரிவார்களானால் அவர்கள் ஊரை ஏமாற்றும் வஞ்சக நெஞ்சர்களாயிருக்க வேண்டும்; அல்லது கல்வியறிவற்ற முழு மூடர்களாக இருக்கவேண்டும். இப்பாடல் மூலம், அக ஒழுக்கமே சிறந்தது; உள்ளத்தைப் பரிசுத்தம் செய்யும் தன்மைகள் உள்ளத்திலேயே அமைந் திருக்கின்றன; அத் தன்மைகளைப் பின்பற்றி வாழ்வதே உயர்ந்தது; என்ற உண்மையைக் காணலாம். அக ஒழுக்கத்தோடு கூடிய புற ஒழுக்கமே சாலச் சிறந்தது என்பதே அறிஞர் கொள்கை. இக்கொள்கையையே வலியுறுத்து கிறார் திருமூலர். ஐயத்திற்கு இடமில்லாத சொற்களால் ஆணித்தரமாக எடுத்து அறிவித்துவிட்டார். நல்லோரைப் போற்றுக ஒரு நாடு வாழ வேண்டுமானால், நாட்டிலே உள்ள நல்லவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நல்லவர்களால்தாம் நாடும், சமுதாயமும் முன்னேறும். நல்லவர்கள் காட்டும் வழியைத்தான் மக்கள் பின்பற்றி நடப்பார்கள். நல்லவர்கள் தாம் நாட்டு மக்களுக்கு நல்வழியைக் காட்டக் கடமைப்பட்டவர்கள். ஆகையால் நல்லவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அவர்கள் மனங்கலங்காமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு இடந்தர வேண்டும். இந்த உண்மையைத் திருமூலர் எடுத்துக் காட்டுகின்றார். நல்லவர்களுக்குத் துன்பம் செய்யத் துணிவோருக்கு எச்சரிக்கை செய்கின்றார். நல்லோருக்குத் துன்பம் செய்தவர்கள் இவ்வுலகில் வாழமாட்டார்கள். நாசமாய்ப் போய்விடுவார்கள் என்று சாபம் இடுகின்றார்; அவர் கூறும் உண்மையை அவர் பாடல்கள் மூலம் காண்போம். பத்தினிப் பெண்டிர்க்குத் துன்பம் செய்யும் கயவர்கள் வாழமாட்டார்கள்; இறைவன்பால் மனம் வைத்துத் தந்நலம் கருதாமல் உழைக்கும் பக்தர்களுக்குப் பாதகம் செய்வோர் வாழமாட்டார்கள். உண்மையை உணர்ந்து, அவற்றை உலக மக்களுக்கு விரித்துரைக்கும் தத்துவஞானிகளுக்குத் தீங்கு புரிவோரும் தப்பித்து வாழ்ந்துவிட மாட்டார்கள். பத்தினி மார்கள், பக்தர்கள், தத்துவஞானிகள் இவர்கள் மனங்கலங்கும் படி தீமை செய்தவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்கள் அழிந்துபோவார்கள். அவர்கள் தேடிவைத்திருக்கும் செல்வம் எல்லாம் சிதைந்து அழிந்துபோகும். ஓராண்டுக்குள் அக்க யவர்கள் இந்நிலையை அடைவார்கள். இது பொய்யல்ல. உண்மை, எப்பொழுதும் வாழும் நந்திதேவன் பாதசாட்சியாக நான் கூறுவது சத்தியம் என்று கூறுகிறார். பத்தினிமார் களுக்கும், பக்தர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் கொடுமை செய்யக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறினார். பத்தினி, பக்தர்கள் தத்துவ ஞானிகள், சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாய்ந்திடும்; சத்தியம் ஈது; சதாநந்தி தாளே. இதுவே மேலேகாட்டிய பொருளைக் கூறும் பாட்டு. இதற்கு அடுத்த பாடலிலே, நல்லோர்க்குத் தீமை செய் வோரை இன்னும் கடுமையாகத் தாக்குகின்றார் திருமூலர். ஓர் எழுத்து மந்திரம் பிரணவம். அதையே எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பவர். உலக நன்மையைக்கருதி சிறந்த தவத்தை மேற்கொண்டிருப்பவர் ஆவர். இத்தகையவர் மக்களால் போற்றத்தக்கவர்; காப்பாற்றப்பட வேண்டியவர். இவர்களுக்குத் தீமை செய்தவர்கள் அதோகதியை அடைவார்கள். இவர்கள், அனைவராலும் இகழப்பட்ட நாயாய்ப் பிறந்து, பலராலும் கல்லடிபடுவார்கள்; நல்ல உணவு கிடைக்காமல் புழுத்த மலத் தைத்தின்று திரிவார்கள். இது மட்டுமா? நூற்றுக்கணக்கான பிறவிகள் இவர்களை அடையும். அந்த நூற்றுக்கணக்கான பிறவிகளிலும் ஈனத்தொழில் புரிவோராகப் பிறந்து, இவ் வுலகத்தில் இறந்து போய்க்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நல்லோர்க்குத் துன்பம் செய்வோர்மீது வசைபாடுகின்றார் திருமூலர். இதன் மூலமும் நல்லோர்க்குத் தீங்கு செய்யாதீர்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறினார். இப்பொருள் பொதிந்த பாடல் கீழ்வருவது: மந்திரம் ஓர்எழுத்து உரைத்த மாதவர் சிந்தையின் நொந்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து, நூறுஉரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. இதற்கு அடுத்த பாடலிலே இன்னும் கடுமையாக நல்லோர்க்குத் தீங்கு புரிவதனால் வரும் தீமையை எடுத்துரைக் கின்றார். நல்லோர்க்கு நாசம் விளைக்கும் நாடே அழிந்து போகும் என்று உறுதியாக உரைக்கின்றார். இறைவன்பால் பற்றுக்கொண்ட அடியார்கள் தந்நலந் துறந்தவர்கள். அவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் மக்கள் நன்மையைக் கருதியனவாகவே இருக்கும். தமக்கென எதையும் செய்துகொள்ள மாட்டார்கள். இந்த உண்மையை உணராத அறிவுற்றவர்கள் அவர்கள் உள்ளங்கலங்கும்படி ஊறுவிளை விப்பார்களானால் அது உலகுக்கே ஆபத்தாக முடியும். தேசம் நிலைக்காது; அழிந்துபோகும்; நாடு வாழாது; நாசமாகும். தேசத்தின்- நாட்டின்- பெருமை யெல்லாம் சிதைந்து சீரழிந்து போய்விடும். இவ்வுலகுக்கு மழைவளம் சுரக்கும் இந்திரனுடைய ஆட்சி பீடமும் அழிந்து போகும். இவ்வுலகை ஆளும் பெரிய மன்னர்களின் ஆட்சி பீடமும் அழிந்துபோகும். இது பொய் யல்ல. புரட்டல்ல. வீண் உரையல்ல. நமது குருவான நந்தியெம் பெருமான் ஆணையாகக் கூறுகின்றேன். உண்மை; முற்றிலும் உண்மை? என்று முழங்குகின்றார். இப்பொருளமைந்த பாட்டுக் கீழ்வருவது: ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்; வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. முதல் செய்யுளால், நல்லோர்க்குத் தீங்கு செய்தவர்கள் ஓராண்டுக்குள் செல்வத்தை இழப்பார்கள்; சாவுக்கும் ஆளா வார்கள் என்று நந்திதேவன்மீது ஆணையிட்டுக் கூறினார். இரண்டாவது செய்யுளிலே நல்லோர்க்குத் தீமை செய்தவர் நாயாய்ப் பிறப்பார்கள். நூற்றுக்கணக்கான பிறவி எடுப்பார்கள்; சண்டாளர்களாய்ப் பிறந்து துன்புறுவார்கள் என்று கூறினார். மூன்றாவது செய்யுளிலே நல்லோர்க்குத் தீங்கு புரிவோர் வாழும் தேசமும் நாடும் பெருமை இழந்து அழிந்துபோகும். இந்திரனுக்கும் ஆபத்து. மன்னர்களுக்கும் அழிவு காலந்தான் என்று கூறினார். பத்தினிப் பெண்டிர், பக்தர்கள், தத்துவ ஞானிகள், மாதவர், ஈசனடியார் இவர்கள் எல்லாம் நல்லோர் என்பதே திருமூலர் கூற்று. இங்கே குறிப்பிட்டவர்கள் அனைவரும் மக்கள் வாழ்க் கைக்கு வழிகாட்டும் சிறந்த ஒழுக்கம் உள்ளவர்கள். இவர்களைக் காக்கவேண்டியது ஆட்சியின் கடமை! சமுதாயத்தின் கடமை. இவர்கள் நன்றாக வாழும் நாடுதான், நாட்டு மக்கள்தான் அறிவுத் துறையிலே- ஆத்மீகத் துறையிலே- உலகியல் துறையிலே சிறந்து வாழும்; சிறந்து வாழ்வார்கள். இவ்வுண்மையையே திருமந்திரப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பெரியார் நட்பு செய்வதற்கு அரிய சிறந்த செயல்களைச் செய்கின்றவர் பெரியோர். பெரியோர்கள் கவலைப்பட்டுக்கொண்டு சோம்பி யிருக்கமாட்டார்கள். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கு மட்டும் பயன்படுவதாக இரா. உலக மக்களுக் கெல்லாம் பயன்படும் உயர்ந்த செயல்களாக இருக்கும். பெரியாருக்கும் சிறியாருக்கும் வேற்றுமைகள் பல உண்டு. ஆயினும் முதன்மையான வேற்றுமை ஒன்றே ஒன்று. இந்த ஒரு வேற்றுமையைக் கண்டறிந்தால் இவர் பெரியார்; இவர் பெரியார் அல்ல! என்று சொல்லி விடலாம். தன்னுடைய இன்பத்தைக் கருதியே எதையும் செய்வது பொதுமக்களின் இயல்பு: தான், தன் பெண்டு பிள்ளைகள் நன்றாக இன்புற்று வாழவேண்டும் என்பதே பொதுவாக மக்களின் எண்ணம். இதன்பொருட்டே இவ்வுலகில் வாழும் மக்கள் இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைக்கின்றனர். இப்படித் தனக்காகவும், தன் குடும்ப நன்மைக்காகவும் உழைப் பவர்களைப் பெரியார்கள் என்று சொல்லமுடியாது. தன்னுடைய நன்மையைச் சிறிதும் சிந்தியாமல் உழைக்கும் மக்கள் சிலரைக் காண்கிறோம். இவர்கள் ஏன் இப்படி அல்லும் பகலும் கிடந்து அலைகின்றார்கள். ஊருக்கு உழைப்பதிலே என்ன பயன்? நேராநேரத்தில் உணவுண்டா உறக்கம் உண்டா? வீடு வாசல்கள் இருப்பதாகவே இவர்களுக்கு எண்ணமில்லை. பெண்டாட்டி பிள்ளைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இப்படித் திரிந்து ஊருக்காக ஏன் உழைக்கவேண்டும்? என்று சிலரைப்பற்றிப் பேசுவதைக் கேட்கின்றோம். இத்தகைய பேச்சுக்கு ஆளானவர்கள் உண்மையில் பெரியார்கள் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய பெரியார்களிலே சிலர், எல்லாப் பாரத்தையும் இறைவன் தலையில் போட்டுவிட்டு உழைப்பார்கள். நடப்பது நடக்கட்டும்? உழைப்பது நமது கடமை; எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு உழைப்பவர்கள் என்றும் சோர்வடைய மாட்டார்கள். இறை வனைப்பற்றி அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, அவர்களை உழைப்பிலே ஊக்குவிக்கும். இறைவனை நம்பிக்கொண்டு உழைப்பவர்கள் தாமும் நல்வழியில் நடப்பார்கள்; மற்றவர் களுக்கும் நல்வழி காட்டுவார்கள். ஆதலால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது- அவர்களுடைய கூட்டுறவைப் பெற்று வாழ்வது நன்மை தரும்; இன்பந் தரும் என்பது அறிஞர்களின் கொள்கை. இந்த உண்மையைத் திருமூலர் பெரியாரைத் துணைக் கோடல் என்னும் பகுதியிலே விளக்கிக் கூறுகின்றார்: ஓடவல்லார் தமரோடு நடாவு வன்; பாடவல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன்; தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும் கூட வல்லார் அடி கூடுவன் யானே! என்பது அப்பகுதியில் உள்ள முதல்பாட்டு. இப்பாடலின் பொருளைக் கண்டால் உண்மை விளங்கும். இவ்வுலகில் உள்ள தீமைகளைக் கண்டு, விலகி ஓடவல்ல அறிவுபெற்றவர்கள் சிறந்தவர்கள்; அவர்களுடன் உறவு கொண்டி ருப்பவர்களும் அத்தகையவர்களாகத்தான் இருப்பார்கள். ஆதலால், அவர்களுடன் சேர்ந்து உலாவுவேன். இறைவன் தன்மையை அறிந்து புகழ்ந்து போற்றிப் பாட வல்லார்களின், இசை ஒலியைக் கேட்டு, இவ்வுலகிலே அவர் களுடன் இணைந்து வாழ்வேன். அவ் வொலியிலேயே உள்ளத்தைச் செலுத்தினால், வேறு தீமைகளைப்பற்றி எண்ணுவதற்கே இடம் இருக்காது. ஆதலால், பாட்டொலியிலே மனத்தைப் பதிய வைத்து வாழ்வேன். தேவர் தலைவனாகிய இறைவன், தன்னைத் தேடவல்லவர் களுக்கு அருள்செய்யும் தன்மையுள்ளவன், இத்தன்மையுள்ள இறைவனைக்கண்டு, அவனுடன் கூடியிருக்க வல்லவர்கள் யாரோ அவர்களுடைய பாதங்களைச் சரணாகதியாக அடைந்து வாழ்வேன். இதுவே மேலேகண்ட செய்யுளின் பொருள். இது பெரியார் துணையின் பெருமையைச் சிறப்பித்தது. இதற்கு அடுத்த திருமந்திரத்திலே தன் உள்ளத்திற்குத் தானே உபதேசம் செய்கின்றார். ஏ உள்ளமே, நீதான் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகித் தயங்கினாலும்- வெயிலால் வாடும் தளிரைப்போலச் சோர்வடைந்தாலும் உன் மனத்திலே அன்பு கொள்ளவில்லை. இறைவன்பால் கொள்ளும் அன்பை ஏற்று வைத்துக்கொள்ளவில்லை. இதனால்தான் இடர்ப்படுகின்றாய்? இப்படித் துன்புற்றுக்கொண்டே இருந்தால் இறுதியில் என்ன செய்யப்போகின்றாய்? உன் துன்பத்திற்கு முடிவே இராது. விடி மோட்சமே ஏற்படாது. துன்பம் விடாமல் தொடர்ந்து கொண்டு தான் போகும். அழியும் வரையிலும் துன்பப்படவேண்டியது தான். நீ துன்பப்படாமல் வாழ வேண்டுமானால், நான் போகும் இடத்துக்கு என்னுடன் நீயும் வருக; வந்தால் தொல்லையின்றி வாழலாம் என்று தன் உள்ளத்திற்கு உரைக்கின்றார். பெரியாரைக் கண்டு சேருவதற்கு என்னுடன் வருக என்று இவ்வாறு இயம்புகின்றார். தாம்இடர் பட்டுத் தளிர்போல் தயங்கினும், மா மனத்து அங்கு அன்பு வைத்தது இலை ஆகும்; நீ இடர்பட் டிருந்து என் செய்வாய் நெஞ்சமே! போம் இடத்து என்னொடும் போது கண்டாயே! மேலேகாட்டிய பொருள் அமைந்த திருமந்திரம் இது தான். இதற்கு அடுத்த திருமந்திரத்திலே, யார் அறிவுடையவர்? அவர் செயல் என்ன? அவருடன் சேர்வதால் நாம் அடையும் பயன் என்ன? என்பவற்றைத் தெளிவாக உரைக்கின்றார். அறிவுள்ளவர்கள் நிலையற்ற பொருள்களைத் தேடித் திரியமாட்டார்கள். நிலையுள்ள உண்மைப் பொருளைத்தான் தேடியே அலைவார்கள். அவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவனைத் தேடி அடைவார்கள்; அவர்கள் சிவதத்துவத்தை உணர்வார்கள். சிவதத்துவம் என்றும் அரியாமல் நிலைத்து நின்று இன்பத்தைத் தரும் உண்மையாகும். இத்தகைய சிவதத்து வத்தை அறிந்தவர்கள் நல்ல நெறியிலே நிற்பர்; பிறருக்கும் அந்த நல்ல நெறியை அறிவிப்பார்கள்; பிறரிடம்- தீ நெறியில் செல்வோரிடம் - இரக்கம் காட்டி அவர்களை நன்னெறியிலே செல்லும்படி செய்வார்கள். இவர்களே பெரியார் எனப்படு வோர். இத்தகைய பெரியாருடன் கூடி வாழவேண்டும். இக் கூட்டுறவுதான். துன்பங்களைத் தொலைத்துப் பெரிய இன்பத்தைத் தருவதாகும்: இப்பொருளமைந்த பாடல் கீழ்வருவது: அறிவார், அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை; நெறி தான் மிகமிக நின்று அருள் செய்யும் பெரியார் உடன் கூடல் பேர் இன்பம் ஆமே. இப்பாடல் பெரியார் உடன் சேர்ந்து வாழ்வதே பேரின்பம் என்பதை விளக்கிற்று; பெரியார் யார் என்பதையும் ஐயம் அறத்தெளிவாக எடுத்துரைத்தது. மேலே காட்டிய மூன்று பாட்டுக்களும்- மூன்று திருமந்திரங் களும் சிறந்த கருத்துடையன. முதல் மந்திரம் நல்லவருடன் சேர்வேன் அவர்கள் பாடல்களைக் கேட்பேன்; இறைவனைக் காண வல்லாருடன் இணைவேன் என்று உரைத்தது. இரண்டாவது திருமந்திரம் மனமே நீ எவ்வளவு துன்புற் றாலும் இறைவனைப்பற்றி எண்ணவே இல்லை; இப்படித் துன்புறுவதால் பயன் இல்லை; நான் போகும் இடத்திற்கு என்னுடன் வா என்று பெரியாருடன் சேர அழைக்கின்றது. மூன்றாவது திருமந்திரம், சிவதத்துவத்தை அறிந்தார் பெரியார்; அவருடன் சேர்ந்தால் பேரின்பம் பெறலாம் என்று விளக்கமாகச் சொல்லிற்று. இவ்வாறு இம்மூன்று திருமந்திரங்களின் மூலம், திருமூலர் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லியருளினார். சுவரிலே சித்திரம் சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் எழுதவேண்டும்; இது நீண்டகாலப் பழமொழி. சுவர் நன்றாக இருந்தால்தான் அதிலே சித்திரம் தீட்டமுடியும். சுவரிலே பொக்கையும் போரை யும் நிரம்பியிருந்தால் சித்திரம் எழுதமுடியாது. ஆகையால் சித்திரம் தீட்டக்கூடிய சுவரை நன்றாக மேடுபள்ளம் இல்லாமல்- ஒத்தடியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழமொழி சுவரையும் சித்திரத்தையும் மட்டும் குறித்து எழுந்தது அன்று. இப்பழமொழியிலே உட்கருத்து ஒன்று உண்டு. பெரும்பாலான பழமொழிகள் உட்கருத்துடன்தான் வழங்கிவருகின்றன. அந்த உட்கருத்துத்தான் என்ன? உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். நோயற்ற நல்லுடம்பாக வைத்துக்கொள்ள வேண்டும். நோயற்ற நல்லுடம் பைப் பெற்றவர்களே மக்கள் பிறப்பின் பயனைப் பூரணமாக நுகரமுடியும். ஒவ்வொருவரும் தங்கள் உடம்பைப் பாதுகாத்துக் கொள்வதையே முதற் கடமையாகக் கொள்ளவேண்டும். இக்கருத்தைக் கொண்டதுதான் இப்பழமொழி. உடம்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலே எல்லோருக்கும் கவலையுண்டு. இதைப்பற்றிக் கவலைப்படாத மக்களே இல்லை. உடல் பழுதின்றி வாழ்வதற்கு உடல் பலத்துடன் வளர்வதற்கு- ஒவ்வொருவரும் தம்மாலான மட்டும் முயற்சி எடுத்துக்கொள்கின்றனர். அல்லும் பகலும் உடல் வருந்த உழைப்போருக்குப் போது மான உணவு வேண்டும். அவர்கள் மற்ற ஆரோக்கிய முறை களைப் பின்பற்றாவிட்டாலும், போதுமான சத்துள்ள உணவை அருந்தினால் பலம்பெற்று வாழ்வார்கள். அவர்கள் அணியும் உடைகள் கந்தல்களாக இருக்கலாம்; அழுக்கடைந்தவையாக இருக்கலாம்; அவர்கள் இருக்கும் இடங்கள்- உறங்கும் இடங்கள் குப்பைக்கூளங்கள் நிறைந்திருக்கலாம்; சாக்கடை நீர் தேங்கிநிற்கும் இடமாக இருக்கலாம். ஆயினும் உடல் உழைப்பின் காரணமாக நல்ல இரத்த ஓட்டம் ஏற்படுகின்றது. நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் உண்ட உணவு செரிமானமாகும். அந்த உணவின் பயன் உடலிலே ஓடும் இரத்தத்தோடு கலந்து உடலை வளர்க்கின்றது. உடல் நலம் குறையாமல் இருக்க உதவுகின்றது. ஆதலால் உடல் உழைப் புள்ளவர்களுக்கு நல்ல உணவு இருந்தால் அது ஒன்றே போது மானதாகும். உடல் உழைப்பில்லாதவர்கள் தங்கள் உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள என்னென்னவோ செய்கின்றனர். குறித்த நேரங்களில் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வோர் உண்டு. எளிதிலே செரிமானமாகும் நல்ல சத்துள்ள உணவுகளைத் தேடி உண்பார்கள். உண்ட உணவு செரிப்பதற்காக நல்ல மருந்து களைத் தேடி உண்போரும் உண்டு. உடம்பிலே நல்ல இரத்த ஓட்டம் ஏற்படுவதற்காக- உடல் பலத்தை வளர்த்துக் கொள்ளு வதற்காக டானிக்குகள் என்று சொல்லப்படும் மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி உண்போரும் உண்டு. ஏழைகள், பணக்காரர்கள், உழைப்பாளிகள் அனைவரும் தங்கள் உடலை வலுப்படுத்திக் கொள்ளுவதிலே கவலை காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். உடல்நலப் பாதுகாப்புக்காக எவ்வளவோ சாதனங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவோ மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றிய கருத்துக்கள் மக்களிடம் பரப்பப்பட்டும் வருகின்றன. ஊர் நிலையுள்ளதன்று; உலகம் நிலையுள்ளதன்று; உற்றார் உறவினர்களும் நிலைத்தவர்கள் அல்லர். தாய் தந்தையர் களும் நிலைத்தவர்கள் அல்லர்; பெண்டு பிள்ளைகளும் நிலை யுள்ளவர்கள் அல்லர்; செல்வங்களும் நிலைத்தவை அல்ல; எல்லாம் அழிந்துவிடக்கூடியவை; நீர் மேல் காணும் குமிழி போன்றவை. நாம் செய்யும் புண்ணிய பாவங்கள் மட்டும்தான் நம்மைத் தொடர்ந்துநிற்கும்; ஆதலால் நல்லறங்களிலேயே கருத்தைச் செலுத்தி நாள்தோறும் உயர்ந்த செயல்களைச் செய்து வாழவேண்டும் என்று இவ்வாறு பேசுகின்றவர்கள் உண்டு; இவர்கள்கூட உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதிலே கவலை கொண்டவர்கள்தாம். எத்தகைய ஞானிகளும், பக்திமான்களும் உடலை வெறுத்ததில்லை. யோக சத்தியினால் உடலை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். உடலை வலுப்படுத்திக் கொள்ளுவதற்கான யோகமுறையை 8 வகையாகப் பிரித்திருக்கின்றனர். இந்த யோக முறையிலே தேர்ந்தவர்களை யோகிகள் என்பர்; ஞானிகள் என்பர். சித்தர்கள் என்பர். இவர்கள் அனைவரும் உடலோம்பு வதைப் பற்றி மிகவும் கவலை கொண்டவர்கள். சித்தர் இனத்திலே சிறந்தவர் என்று கருதப்படுகின்ற வர்களில் திருமூலர் ஒருவர். அவர் உடலை வளர்க்க வேண்டிய- பாதுகாக்க வேண்டிய- கட்டாயத்தைப் பற்றி மிகவும் தெளிவாகக் கூறியிருக்கிறார். உடம்பார் அழியில் உயிரார் அழிவர்; திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்; உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே உடலோம்பலின் சிறப்பைப்பற்றிக் கூறும் இச்சிறந்த பாடலின் கருத்தைக் காண்போர், உடலை அலட்சியம் பண்ண மாட்டார்கள். உடலைப் பேணுவதிலே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இச்செய்யுளின் பொருளைப் பார்ப்போம்: உயிர், வாழ்வதற்கு இடமாக இருப்பது உடம்புதான். உடம்பில்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. குழிப்பாக உள்ள பாண்டத்தில்தான் தண்ணீர் தங்கி நிற்க முடியும்; பாத்திரம் உடைந்துவிட்டால் தண்ணீர் நிலத்திலே சுவறிப் போகும். திரி இருந்தால்தான் விளக்கு எரியும்; அதற்கு உதவியாக எண்ணெயும் வேண்டும். திரியில்லாவிட்டால் விளக்கொளி வானோடு கலந்துவிடும். ஆதலால் உடல் அழிந்தால் உயிரும் அழிந்துபோகும். நல்ல உடம்புள்ளவர்கள்தான் உண்மையான அறிவையும் அடைய முடியும். வலுவான உடம்புள்ளவர்களே கவலை யின்றி எப்பொருளையும் கருத்தில் வைத்துச் சிந்திக்க முடியும். சிந்தித்துச் சிறந்த முடிவுக்கு வருவதே உண்மை அறிவாகும்; மெய்ஞ்ஞானமாகும். உடம்பைப் பேணாதவர்கள் உறுதியான மெய்ஞ்ஞானத்தைப் பெறமாட்டார்கள். ஆகையால் உடம்பை வளர்க்கும் வழியை நான் கண்டறிந்தேன்; நான் கண்டறிந்த வழியைப் பின்பற்றினேன்; வெற்றிபெற்றேன். அதனால் என் உடம்பை வயிரம்போல் ஆக்கிக்கொண்டேன். எந்தப் பிணியும் என்னை நெருங்க முடியாது. நெருங்கினால் நெருப்பை எதிர்க்கும் பஞ்சுபோல் ஆகிவிடும். இத்தகைய நல்ல முறையிலே உடம்பை வளர்த்ததனால் என் உயிரையும் வளர்த்தவன் ஆனேன். என் உடம்புக்கு ஆபத்து நேராமல் பார்த்துக்கொண்டதன் வாயிலாக என் உயிருக்கும் அழிவில்லாமல் பாதுகாத்துக்கொண்டேன், இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். உடம்பைப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு மனிதருடைய கடமையும் ஆகும் என்பதை இவ்வாறு திருமூலர் வலியுறுத்தி யுள்ளார். திருமூலர் உடலை வளர்ப்பதற்கு- வலுப்படுத்துவதற்குக் கூறும் வழி, யோக சித்தியேயாகும். மருந்துகளைப் பற்றியோ- சத்துள்ள உணவுகளைப் பற்றியோ அவர் கூறவில்லை. யோகம் புரிந்து உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் முறைகளைப் பற்றித்தான் அவர் விரிவாக விளம்பியுள்ளார். தேகப் பயிற்சிக்கு ஒரு சிறந்த சாதனம் பிராணாயாமம் போன்ற யோகங்கள்; யோகாசனங்கள் என்பவை இன்றைய நல்லறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவை. காற்றையும், வெளிச்சத்தையும், தண்ணீரையும் மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்; வேறு மருந்து உண்ணக்கூடாது என்பதே இயற்கை வைத்தியத்தின் தத்துவம். இத்தகைய இயற்கை வைத்தியம் இந்த யோக முறையிலிருந்து பிறந்தது என்றே கூறிவிடலாம். ஆகவே எந்த முறையாக இருந்தாலும் சரி, மருந்து முறை யானாலும் சரி, உணவு முறையானாலும் சரி, தேகப் பயிற்சி முறையானாலும் சரி உடம்பை வலுவாக வைத்துக்கொள்ள அனைவரும் முயல வேண்டும்; இதுவே ஆன்றோர்கள் கருத்து. மக்கள் அனைவரும் உடல் நலம் உள்ளவராக வாழ்ந்தால்தான் மனித சமுதாயம் இன்பத்துடன் வாழும் என்பதிலே ஐயம் இல்லை. ஆதலால் பண்டைய அறிஞர்கள் பலரும் பலவிதமாக உடம்பைப் பாதுகாக்கும் முறைகளைப் பற்றி மொழிந் திருக்கின்றனர். அருளால் அனைத்தும் உண்டு இரக்கம் உடையவர்க்கே - அருள் உடையவர்க்கே- அறிவுண்டு; ஞானம் உண்டு. இரக்கம் பொறுமைக்கு இருப்பிடம். பொறுமைக்குணம் உள்ளவர் எக்காரியத்திலும், எதைப்பற்றியும் அவசரப்பட மாட்டார்கள். எதையும் நிதானத்துடன் சிந்திப் பார்கள் சிந்தனையின் முடிவு - பயன் - உண்மை காணல். உண்மையை ஆராய்ந்து - தேடிக் காண்பதே அறிவென்று சொல்லப்படும். ஞானம் என்று போற்றப்படும். இரக்கம், பொறுமை, ஞானம் இவைகள் தேனும், சுவையும் போன்றவை; ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இணைந்து நிற்பவை. இரக்கம், பொறுமை, ஞானம் இவைகள் எல்லாம் அறிவற்ற மனிதர்கள் அடைய முடியாதவை. ஆணவம் பிடித்தவர்களை இவைகள் எட்டியும் பார்க்க மாட்டா. ஆணவம் இல்லாமல்- ஆண்டவனிடம் அன்பு கொண்டவர்களிடமே இவைகள்- இப்பண்புகள் காணப்படும். ஆணவம் அற்றவர்க்குத்தான் ஆண்டவன் அருள்புரிவான் என்பது நிச்சயம்; மறுக்க முடியாத உண்மை. ஆண்டவன் அருள் பெற்றவர்க்கு எல்லா நன்மைகளும் உண்டு. நீரால் தணியாத நெருப்பில்லை; அன்பால் மறையாத தீமைகள் இல்லை; கொடுமைகளும் இல்லை. இறைவன் அருள் உண்டானால்- இறைவனுடைய கருணை நோக்கம் உண்டாகுமானால் நல்ல செல்வம் உண்டு. இறைவன் கருணையால் கிடைக்கும் செல்வம் என்றும் அழியாத செல்வ மாகவே இருக்கும். நன்மைதரும் செல்வமாகவே நிலைக்கும். இறைவன் அருள் கிட்டுமானால் அறியாமை நீங்கும்; நல்ல செயல்கள் இவை; கெட்ட செயல்கள் இவை; என்று உண்மை காண முடியாமல் திகைக்கும் மயக்கம் ஒழியும். இது நல்லது; இது தீயது; என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளக்கூடிய நல்லறிவு தோன்றும். இந்த நல்லறிவைத்தான் நன்ஞானம் என்பர். இறைவன் கருணையை- அருளைப் பெற்றோர் பெருந் தன்மையுடன் விளங்குவர்; தன்னலம் கருதும் அற்பகுணம் அவரை விட்டு நீங்கும். தான் வேறு; பிறர் வேறு; என்று நினைக்கும் பேதம் இல்லாமல் வாழ்வர். எல்லா உயிர்களும் ஒன்றே என்ற எண்ணத்துடன் நல்ல காரியங்களைச் செய்வார்கள். இறைவன் அருள் கிடைக்குமானால்- சிறந்த தெய்வத் தன்மையும் உண்டாகும். அருள் பெற்றோரை அனைவரும் ஞானிகளாகப் போற்றுவார்கள்; தெய்வம்போலக் கொண்டாடு வார்கள். அவர்கள் மக்களிலே சிறந்தவர்களாய்- உயர்ந்தவர் களாய்- புகழ்பெற்றவர்களாய் விளங்குவார்கள். இவ்வாறு, இறைவன் அருளுக்கு இலக்கானவர் அடையும் பயனைப்பற்றிப் பாடியிருக்கிறார் திருமூலர். பிரான்அருள் உண்டுஎனில், உண்டு. நல் செல்வம்; பிரான் அருள் உண்டுஎனில் உண்டு, நன் ஞானம்; பிரான்அரு ளின், பெருந் தன்மையும் உண்டு; பிரான்அரு ளால்,பெரும் தெய்வமும் ஆமே. என்பதே அந்தத் திருமந்திரம். இறைவன் அருள் பெற்றோர் அடையும் பயனை இவ்வாறு தெளிவாக- ஆணித்தரமான சொற்களால்- அறிவித்தார் திருமூலர். திருமூலர், தான் எதைச் சொன்னாலும் உறுதியாகச் சொல்லுவார்; தெளிவாகச் சொல்லுவார்; வழவழாப் பேச்சை அவரிடம் காணவே முடியாது. அனுபவம் இல்லாதவர்கள்தாம் எதை எடுத்தாலும் தெளிவாகச் சொல்லத் தெரியாமல்- உறுதி யாகச் சொல்ல முடியாமல் குட்டையைக் குழப்புவார்கள். அனுபவ ஞானிகளிடம் அத்தகைய குட்டை குழப்பும் பேச்சைக் காணவே முடியாது. இதை மேலேகாட்டிய திருமந்திரக் கவியே மெய்ப்பிக்கும். மீண்டும் இதே கருத்தை- இறைவன் அருள் பெற்றவர் எல்லா நன்மைகளையும் எய்துவர் என்ற கருத்தை- மற்றொரு திருமந்திரத்திலும் கூறியிருப்பதைக் காணலாம். சிவன்அரு ளால், சிலர் தேவரும் ஆவர்; சிவன்அரு ளால்சிலர் தெய்வத்தோடு ஒப்பர்; சிவன்அரு ளால்வினை சேர கிலாமை; சிவன்அருள் கூறில்அச் சிவலோகம் ஆமே. என்பதே அந்தக் கவிதை. சிவன்- இறைவன்- அருளைப் பெற்றவர்களிலே சிலர் தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்; சிலர் தெய்வத்துக்கு ஒப்பாக விளங்குவார்கள்; அவர்களை நல்வினை தீவினைப் பயன்கள் அடைய மாட்டா; அவர்கள் என்றும் அழியா சிவலோகத்தை அடைந்து இன்புறுவர் என்பதே இப் பாடலில் பொருள். தேவரும் ஆவர் என்ற தொடர் எல்லாவற்றையும் உணரும் அறிவுள்ளவராக இருப்பர்; என்னும் பொருளில் வந்தது. நல்வினையின் பயனாகிய புண்ணியமும் பிறப்புக்கு வித்து; தீவினையின் பயனாகிய பாவமும் பிறப்புக்கு வித்து; உள்ளத்தில் ஒருவித ஆசையும் இல்லாமல்- பற்றும் இல்லாமல்- செய்யும் வினையின் பயன்தான் செய்வோனைச் சேராது. சிவனருள் பெற்றோர்- எல்லோரும் இன்பத்துடன் வாழவேண்டும் என்று விரும்புவோர் - பற்றில்லாமலே- பலன் கருதாமலே பணிசெய்வர். பற்றில்லாமல் வினைசெய்து வாழ்வோரே மீண்டும் பிறக்க மாட்டார்கள். இதை விளக்கவே- மக்களுக்கு அறிவிக்கவே- சிவன் அருளால் வினையின் பயனை அடையாமை உண்டாகும் என்ற பொருளில் சிவன் அருளால் வினைசேர கிலாமை என்று உரைத்தார். சிவலோகம் என்பது இன்ப உலகம்; அழியாத உலகம். சிவன் அருள் பெற்றவர் எந்தவிதமான மனக்கவலையும் இல்லாமல் இன்பத்துடன்- ஆனந்தத்துடன் வாழ்வார்கள். இத்தகைய வாழ்வே சிவலோக வாழ்வு என்று குறித்தார் திருமூலர். சிவன் வேறன்று; சீவன் வேறன்று; எல்லா உயிர்களும் சிவன்தான்- என்ற உண்மையை அறிந்து பணி செய்வோர் இவ்வுலகிலேயே சிவலோகத்தைக் காண்பர். சிவலோகத்தை வேறு எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. மேலேகாட்டிய திருமந்திரங்கள் இரண்டும் அருளால் அனைத்தும் உண்டு; இவ்வுலகிலேயே சிவலோகத்தைக் காண முடியும்; என்ற உண்மையை உரைத்தன. அன்பும் அறிவும் இறைவன் திருவருளைப் பெறுவதென்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அன்று. அவனுடைய பெருந்தன்மையை- அருள் பண்பை- அறிந்துகொள்ளுவதற்கே நல்ல அறிவு வேண்டும். அறிவு மட்டும் இருந்தால் போதாது; அன்பும் வேண்டும். அன்பு வளர்ந்தால்தான்- முதிர்ந்தால்தான் - அவன் கிருபையை அடையும் முயற்சி தோன்றும். அந்த முயற்சி பலவகையாக இருக்கும். பலவகையான முயற்சிகளம் நீடித்து நடைபெற்றால்தான் பலன் காணமுடியும். எப்படியாவது இறைவன் கருணையைப்பெற்றே தீர்வது என்ற உறுதி பூண்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தம்மைப்பற்றிப் பிறர் என்ன நினைப்பார்; என்ன சொல்லுவார்; என்பதைப்பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டார்கள். தமது முயற்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இறைவன் பெயர்கள் பலவற்றையும் சொல்லிச் சொல்லிக் கூத்தாடுவார்கள்; இறைவனைப் பற்றிப் பக்தர்கள் மனம் உருகிப் பாடியிருக்கும் பாடல்களை வாய்விட்டுப் பாடுவார்கள். பாடும் போது அப்பாடல்களின் சொற்சுவையிலே- பொருட் சுவை யிலே ஈடுபட்டுக் கண்ணீர் சிந்துவார்கள். பலரும் கேட்கும்படி இறைவன் பெயரைக் கூவி அழைத்து ஓலமிடுவார்கள். இறைவன் குடிகொண்டிருக்கும் இடம்- வாழும் இடம், என்று நம்புகின்ற - சொல்லுகின்ற- இடங்களுக்கெல்லாம் ஓடுவார்கள்; தேடுவார்கள். இப்படியெல்லாம் பாடுபட்டு ஆண்டவன் பெருந்தன்மையை அறிவார்கள். இவ்வாறு செய்வது இறைவனைக் காணத் துடிப்போரின் இயல்பு. இம்முயற்சிகள் இறைவனைக் காணத் துணை செய்யவும்; காணும்படியும் செய்யும். இவ்வுண்மையைத் திருமூலர் தெளிவாகக் கூறுகின்றார். நானும் ஆரம்பத்தில் இப்படி யெல்லாம் செய்துதான் இறைவன் பெருந்தன்மையைக் கண்டேன். என்று சொல்லுகிறார் திருமூலர். இறுதியில் இறைவனை என்னுள் இருக்கக் கண்டேன்; நீங்களும் உங்களுக்குள் இறைவனைக் காணலாம்; காணமுடியும். என்று மக்களுக்கு உபதேசமும் செய்கிறார் திருமூலர். ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெருந் தன்மையை; கூடிய வாறே குறியாக் குறிதந்துஎன் ஊடு நின் றான்அவன் தன்அருள் உற்றே இம்மந்திரத்தால் இறைவனை- சிவபெருமானை- தான் கண்டறிந்த விதத்தை உரைத்தார் திருமூலர். கூத்தாடியும், பாடல்களைப் பாடியும், அழுதும், அலறியும், எங்கும் அலைந்து தேடியும் சிவபிரானுடைய பெரிய அருள் தன்மையைக் கண்டேன். அவன் தனது அருள்மிகுதியால் என்னுடன் கூடியபடியே. நான் எப்பொழுதும் மறவாமல் நினைக்கும் வடிவைக்காட்டி என் உள்ளத்திலேயே நிலைத்து நின்றான். இதுவே இப்பாடலின் பொருள். இவ்வாறு, திருமூலர் தான் அருள்பெற்ற விதத்தை- இறைவனைக் கண்ட நெறியை - அறிவித்தார். அவர்தான் கண்ட நெறியைப் பிறருக்கும் தெளிவாக உரைத்தார், இறைவனைக் காணும் வழியை எளிதாகவும் கூறினார். இறைவன் வெட்டவெளியாகவும் இருப்பான்; பெரும் சோதியாகவும் இருப்பான்; உங்கள் அறிவென்னும் விளக்கைக் கொண்டுதான் அவனைக் காணமுடியும். உங்கள் உள்ளத்திலே அறிவென்னும் விளக்கைத் தூண்டி எரிய விடுவீர்களானால் உங்கள் துன்பமெல்லாம் ஒழியும்; எல்லார்க்கும் பொதுவிளக்காக நிற்கும் இறைவனைக் காட்டும் அறிவு விளக்கை உடையவர்கள். உலகில் சிறந்து விளங்கும் விளக்குகளில் எல்லாம் பெருவிளக்காக- அணையாத சோதி விளக்காக - விளங்குவார்கள் என்று பாடுகின்றார். விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்! விளக்கினின் முன்னே வேதனை மாறும்; விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்குஅவர் தாமே. என்பதே மேலேகண்ட பொருள் அமைந்த திருமந்திரம். இப்பாடலில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் எத்தனை? அறிவு விளக்கால் அனைத்தையும் காணமுடியும் என்ற விஷயத்தை விளக்குவதற்குப் பல விளக்குகளை ஏற்றிப் பாடினார் திருமூலர். அன்பும் அறிவும் உடைய மக்களே சிறந்தவர்கள்; எல்லா இன்பங்களையும் அடையும் ஆற்றல் உள்ளவர்கள்; உண்மை காண வல்லவர்கள்; அமரத்தன்மை படைத்தவர்கள்; என்ற உண்மையை மேலேகாட்டிய இரண்டு திருமந்திரங்களாலும் காணலாம். ஆதலால் அன்புடன்- அறிவுடன் - வாழ்வதே மனிதப் பண்பாகும்; அருள்நெறியில் வாழ்வதாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் தந்நலத்தையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண் டவர்தாம் பேதம் பாராட்டுவார்கள்; சாதிபேதம், சமய பேதம், மொழிபேதம், தேசபேதம், இனபேதம் இவைகள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலேதான் தாண்டவமாடும். இத்தகைய பேதவாதிகள்- வேற்றுமை பாராட்டுவோர்- யாராயிருந்தாலும் சரி அவர்கள் உண்மைநெறியை உணர்ந்தவர்கள் அல்லர்; உண்மை நெறியைத்தான் சன்மார்க்கம் என்று சொல்லுவார்கள். மனித சமூகத்தை ஒன்றாக மதிக்காமல் பேதம் பாராட்டு வோரைச் சன்மார்க்க விரோதிகள்- துன்மார்க்கர்கள்- என்று கூடச் சொல்லிவிடலாம். இறைவன் ஒருவன்- எல்லாம் வல்ல ஆண்டவன் ஒருவன்- உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பராபரன் ஒருவன்- என்ற நம்பிக்கை உள்ளவர்கள் நெஞ்சிலே எத்தகைய பேத உணர்ச்சியும் நுழையாது; நுழைந்தாலும் சிறிதுநேரங்கூடத் தங்காது; மின்னல் ஒளிபோல் உடனே மறைந்துபோகும். இந்த உண்மையைத் திருமூலர் தெளிவாக உணர்த்து கின்றார். பல காரணங்களால் பேத உணர்ச்சி கொண்டிருக்கும் மக்களிடம் அவர் அனுதாபம் காட்டுகிறார்; இரக்கம் காட்டு கிறார். மூட மக்கள் உண்மையை உணராமல் தங்கள் வாழ்நாளை வீணாக்குகிறார்களே என்ற கருணை உள்ளத்துடன், அவர் தாம் கண்டறிந்த உண்மையை வெளியிடுகின்றார். உலக மக்களே! உண்மையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்! மனிதர்கள் அனைவரும் ஒரே குலந்தான்! மனிதர்களுக்குள் பேதம் பாராட்டுவது மூடத்தனம்; மனிதர்களைப் படைத்த இறைவனும் ஒருவனேதான். படைப்புக் கடவுள் பலர் இருப்பதாக நினைப்பது அறியாமை; பல தெய்வங்கள் உண்டு என்று சொல்வோர் பேச்சை நம்பாதீர்கள் அவைகள் உங்களை நல்ல வழியிலே நடக்க ஒட்டாமல் தடுக்கும் பொய்யுரைகள். உங்கள் நெஞ்சத்திலே எப்பொழுதும் நன்மையையே நினையுங்கள் தீமையைப்பற்றி நினைக்காதீர்கள். தீய நினைப்பு மனத்தில் புகுந்தால்- எழுந்தால், உடனே நல்ல நினைப்பு என்னும் கருவியால் அதனை அடித்து விரட்டுங்கள். தீமையைப்பற்றி நினைக்காமல் நன்மையைப்பற்றியே நினைப்போமாயின் நமக்கு எமபயமே இல்லை; எமனால் ஏற்படும் தண்டனையும், வேதனையும் இல்லை. தீமையை நினைத்துத் தீமையைச் செய்கின்றவர்களிடமே எமன் அணுகுவான்; தன்னுடைய அதிகாரத்தையும் கொடுமை யையும் காட்டுவான். நன்மையையே நினைத்து, நன்மையையே செய்கின்றவர்களிடம் எமனுக்கு வேலையே இல்லை. அன்றியும் நாம் இறந்தபின், வேறு எந்தப் பிறப்பிலும் பிறக்க மாட்டோம். துன்பந்தரும் எப்பிறப்பும் நம்மை அணுகாது. ஆகையால் உங்கள் உள்ளத்திலே, மனிதகுலம் ஒன்று; தெய்வம் ஒன்று; என்ற உண்மை அழியாமல் நிலைத்து நிற்கும் படி நினையுங்கள். இந்த நினைப்புடன் நன்மையையே நினைப் பீர்களாயின் நீங்கள் வேதனைச் சிறையிலிருந்து விடுபடுவீர்கள்; உலகில் உள்ள துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுவீர்கள். நான் சொல்லியபடி செய்வதுதான்- நடப்பதுதான்- நீங்கள் உய்யும் வழியாகும். என்று இவ்வாறு உலக மக்களுக்கு உபதேசம் செய்கின்றார்; அறிவுரை கூறுகின்றார்; திருமூலர். ஒன்றே குலமும், ஒருவனே தேவனும். நன்றே நினைமின்! நமன்இல்லை நான் நாமே சென்றே புகும்கதி இல்லை; நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே! என்பதுதான் அந்த அருந்தமிழ்ப் பாட்டு. இந்தப் பாட்டு, தமிழர்களின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் அரிய மந்திரம். மனிதகுலம் ஒன்று; கடவுளும் ஒன்றுதான்; என்ற இந்த உண்மை யையே பண்டைத் தமிழர்களும் போற்றி வந்தனர். இந்த ஞானம்- இந்த அறிவு- மனிதகுலம் ஒன்றேதான்; கடவுளும் ஒன்றேதான். என்ற உண்மை அறிவு- உலக முழுவதும் பரவினால் போதும். உலகில் இன்றுள்ள வெறுப்புணர்ச்சிகள் அனைத்தும் பறந்துபோய் விடும். மனித சமுதாயத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இராது. மனித சமுதாயத்தில்- ஏன் உலகம் முழுவதும், சாந்தி- அமைதி- சமாதானமே நிலைத்து நிற்கும். இந்த உண்மையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சங்கநாதம் போல் முழங்குகின்றார் திருமூலர். ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று வாய் இனிக்கப் பேசிவிட்டால் மட்டும் போதாது. உள்ளத்தில் இக்கொள் கையிலே உறுதியான நம்பிக்கை வேண்டும். இந்த உறுதியும் நம்பிக்கையும் மாசற்றதாக இருக்கவேண்டும். ஆதலால்தான் நன்றே நினைமின்! என்று வலியுறுத்தினார். பலசாதி, பல மதம், பல இனம், பல மொழி உணர்ச்சிகள் இன்றைய நாகரிக உலகத்திலே தலைதூக்கி நிற்கின்றன. இவ்வுணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கங்களும் இருந்து வருகின்றன. இத்தகைய உணர்ச்சிகளும், இயக்கங்களும் நாட்டை நாசப் படுகுழிக்கு இழுத்துச் செல்லு கின்றன என்பதில் ஐயம் இல்லை. இவ்வுணர்ச்சிகள் மக்களிடம் தோன்றக்கூடாது என்பதற்காக பண்டைக்கால அறிஞர்கள் எத்தனை எத்தனை நீதிகளை- அறங்களை எடுத்துக் கூறியிருக் கின்றனர். ஆயினும் இன்னும் இவ்வுணர்ச்சிகள் உயிர் வாழ்ந்து உலகத்தைப் போர்க்களமாகச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆதலால் உலக ஒற்றுமையைக் கருதுவோர் - மக்கள் முன்னேற்றத்தைக் கருதுவோர் இந்த அருமைத் திருமந்திரத்தை மனங்கொண்டால் போதும். இத்திருமந்திரக் கருத்தை உலகில் - மக்களிடையில் பரவும்படி. செய்வதைப் பணியாகக் கொண்டால் போதும். ஒன்றுபட்ட சன்மார்க்க உலகத்தைக் காணமுடியும். ஒன்றே குலமும் என்ற இந்த அருமைத் திருமந்திரம் நமது நெஞ்சத்தில்- சொல்லில்- செயலில் எப்பொழுதும் நடமாட வேண்டிய திருமந்திரமாகும். நாம் அருள்நெறியிலே நின்று வாழவேண்டுமானால் எப்பொழுதும் உருப்போட வேண்டிய ஒப்பற்ற திருமந்திரமாகும்.