சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 14 வடலூரார் வாய்மொழி சங்கப் புலவர் சன்மார்க்கம் பட்டினத்தார் தாயுமானவர் பாடல் பெருமை ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 14 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 408 = 416 படிகள் : 1000 விலை : உரு. 260/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை வடலூரார் வாய்மொழி முன்னுரை 3 1. இராமலிங்கர் வரலாறு 7 2. திருஅருட்பா 12 3. தமிழும் தமிழ் நூலும் 16 4. சமரச சன்மார்க்கம் 21 5. இவ்வுலகில் இன்பம் 26 6. இயற்கையும் அறிவுமே இறைவன் 30 7. ஆராயும் அறிவு 35 8. அறிவுச் சுடர் 40 9. தன்னைப்பற்றி 43 10. போர் வெறி 47 11. மனிதப் பண்பு 51 12. சாதி வேற்றுமை 54 13. ஒரே இனம் 58 14. உலகம் ஒன்றாகும் 62 15. ஒரே உலகம் 66 16. வறுமைப் பேய் 70 17. ஏழைகள் துன்பம் 74 18. வட்டிச் சுரண்டல் 78 19. வீட்டுப் பஞ்சம் 82 20. நில உரிமை 85 21. எல்லார்க்கும் செல்வம் 89 22. கருணையிலா ஆட்சி 93 23. அதிகார வெறி 97 24. மாறுபடும் மதங்கள் 102 25. மதச் சண்டை 106 26. சாத்திரங்களின் உண்மை 110 27. மூட நம்பிக்கை 114 28. உயிர்ப் பலி 117 29. இம்மையும் மறுமையும் 121 30. சுரர், அசுரர், மனிதர் 124 31. ஆண், பெண் சமத்துவம் 128 32. விதவை மணம் 131 33. மதுவிலக்கு 135 34. அடித்துப் படிப்பித்தல் 138 35. ஜீவகாருண்யம் 142 36. சாவாத வாழ்வு 145 37. செத்தார் எழுதல் 148 38. பிள்ளை விளையாட்டு 151 39. கோபத்தின் கொடுமை 155 40. உண்மைக்கு வெற்றி 161 சங்கப் புலவர் சன்மார்க்கம் முன்னுரை 169 1. நீதி சொல்லும் காதல் கவிதை 173 2. சோம்பர்க்கு வாழ்வில்லை 177 3. பேதம் இல்லை 181 4. இன்ப வாழ்வுக்கு அடிப்படை 185 5. செல்வரும் ஆலமரமும் 190 6. செல்வத்தின் பயன் 194 7. நயமொழியால் நன்மை 198 8. இரக்கத்தால் இன்பம் 203 9. புகழ் கெடுக்கும் புன்மை 207 10. செய்ந்நன்றி அறம் 210 11. இனம் இனத்தோடே 215 12. அறம் தரும் பயன் 219 13. ஒற்றுமையே உயர்ந்த பண்பு 223 14. அருளே அரசியலுக்கு அடிப்படை 228 15. அரசுக்கு வெற்றி அறமே 232 16. கொடுங்கோலாட்சி குலையும் 236 17. அமரிலும் அருள்நெறி 240 18. அறநெறி வாழ்வு 245 19. உலகத்தை உணர்ந்த உத்தமர் 249 20. நீதியும் அமைச்சும் 253 21. உழவரும் வணிகரும் 258 22. தமிழநாட்டுத் தவசிகள் 262 23. நாட்டின் நல்வாழ்வு 266 24. தமிழர் பரம்பரைப் பண்பு 270 25. சித்திரத்தால் அருள்நெறி 274 26. நட்புக்குத் தகுதியற்றவர் 278 27. பசுவைப் பாதுகாத்தல் 282 28. சிறந்த நடத்தைகள் 286 29. நான்கு நல்லுரைகள் 290 30. இருகால் எருதுகள் 294 பட்டினத்தார் தாயுமானவர் பாடல் பெருமை ஆசிரியர் முன்னுரை 301 1. பட்டினத்தார் 305 2. உயர்ந்த மனிதன் 308 3. உதவாக்கரை மனிதர்கள் 312 4. நன்மையும் புகழும் 317 5. கல்லிலும் செம்பிலுமா கடவுள்? 321 6. சொல்லும் செயலும் 325 7. செல்வர்க்கு அறிவுரை 329 8. அருட் புலம்பல் 333 9. தாயுமானவர் 337 10. வேதாந்த சித்தாந்த முடிவு 340 11. பேராசையால் பெருந்துன்பம் 344 12. பண்புள்ள வாழ்வின் பயன் 348 13. கருணாகரக் கடவுள் 352 14. மனக் கனிவின் மாண்பு 356 15. சாந்தமும் சமரசமும் 360 16. ஆனந்த வாழ்வு 364 17. இன்பக் கடல் 368 18. சமயக் குரல்கள் 372 19. உலகில் நிலைக்க வழி 376 20. நிலைகலங்கா நெஞ்சம் 380 21. ஆகாத அரும்செயல் 384 22. காலனைக் கண்டும் கலங்காமை 388 23. இயற்கை நிகழ்ச்சிகள் 391 24. உனையன்றி அறியேன் 394 25. எல்லையற்ற இன்பம் 397 உள்ளுறை வடலூரார் வாய்மொழி முன்னுரை 3 1. இராமலிங்கர் வரலாறு 7 2. திருஅருட்பா 12 3. தமிழும் தமிழ் நூலும் 16 4. சமரச சன்மார்க்கம் 21 5. இவ்வுலகில் இன்பம் 26 6. இயற்கையும் அறிவுமே இறைவன் 30 7. ஆராயும் அறிவு 35 8. அறிவுச் சுடர் 40 9. தன்னைப்பற்றி 43 10. போர் வெறி 47 11. மனிதப் பண்பு 51 12. சாதி வேற்றுமை 54 13. ஒரே இனம் 58 14. உலகம் ஒன்றாகும் 62 15. ஒரே உலகம் 66 16. வறுமைப் பேய் 70 17. ஏழைகள் துன்பம் 74 18. வட்டிச் சுரண்டல் 78 19. வீட்டுப் பஞ்சம் 82 20. நில உரிமை 85 21. எல்லார்க்கும் செல்வம் 89 22. கருணையிலா ஆட்சி 93 23. அதிகார வெறி 97 24. மாறுபடும் மதங்கள் 102 25. மதச் சண்டை 106 26. சாத்திரங்களின் உண்மை 110 27. மூட நம்பிக்கை 114 28. உயிர்ப் பலி 117 29. இம்மையும் மறுமையும் 121 30. சுரர், அசுரர், மனிதர் 124 31. ஆண், பெண் சமத்துவம் 128 32. விதவை மணம் 131 33. மதுவிலக்கு 135 34. அடித்துப் படிப்பித்தல் 138 35. ஜீவகாருண்யம் 142 36. சாவாத வாழ்வு 145 37. செத்தார் எழுதல் 148 38. பிள்ளை விளையாட்டு 151 39. கோபத்தின் கொடுமை 155 40. உண்மைக்கு வெற்றி 161 சங்கப் புலவர் சன்மார்க்கம் முன்னுரை 169 1. நீதி சொல்லும் காதல் கவிதை 173 2. சோம்பர்க்கு வாழ்வில்லை 177 3. பேதம் இல்லை 181 4. இன்ப வாழ்வுக்கு அடிப்படை 185 5. செல்வரும் ஆலமரமும் 190 6. செல்வத்தின் பயன் 194 7. நயமொழியால் நன்மை 198 8. இரக்கத்தால் இன்பம் 203 9. புகழ் கெடுக்கும் புன்மை 207 10. செய்ந்நன்றி அறம் 210 11. இனம் இனத்தோடே 215 12. அறம் தரும் பயன் 219 13. ஒற்றுமையே உயர்ந்த பண்பு 223 14. அருளே அரசியலுக்கு அடிப்படை 228 15. அரசுக்கு வெற்றி அறமே 232 16. கொடுங்கோலாட்சி குலையும் 236 17. அமரிலும் அருள்நெறி 240 18. அறநெறி வாழ்வு 245 19. உலகத்தை உணர்ந்த உத்தமர் 249 20. நீதியும் அமைச்சும் 253 21. உழவரும் வணிகரும் 258 22. தமிழநாட்டுத் தவசிகள் 262 23. நாட்டின் நல்வாழ்வு 266 24. தமிழர் பரம்பரைப் பண்பு 270 25. சித்திரத்தால் அருள்நெறி 274 26. நட்புக்குத் தகுதியற்றவர் 278 27. பசுவைப் பாதுகாத்தல் 282 28. சிறந்த நடத்தைகள் 286 29. நான்கு நல்லுரைகள் 290 30. இருகால் எருதுகள் 294 பட்டினத்தார் தாயுமானவர் பாடல் பெருமை ஆசிரியர் முன்னுரை 301 1. பட்டினத்தார் 305 2. உயர்ந்த மனிதன் 308 3. உதவாக்கரை மனிதர்கள் 312 4. நன்மையும் புகழும் 317 5. கல்லிலும் செம்பிலுமா கடவுள்? 321 6. சொல்லும் செயலும் 325 7. செல்வர்க்கு அறிவுரை 329 8. அருட் புலம்பல் 333 9. தாயுமானவர் 337 10. வேதாந்த சித்தாந்த முடிவு 340 11. பேராசையால் பெருந்துன்பம் 344 12. பண்புள்ள வாழ்வின் பயன் 348 13. கருணாகரக் கடவுள் 352 14. மனக் கனிவின் மாண்பு 356 15. சாந்தமும் சமரசமும் 360 16. ஆனந்த வாழ்வு 364 17. இன்பக் கடல் 368 18. சமயக் குரல்கள் 372 19. உலகில் நிலைக்க வழி 376 20. நிலைகலங்கா நெஞ்சம் 380 21. ஆகாத அரும்செயல் 384 22. காலனைக் கண்டும் கலங்காமை 388 23. இயற்கை நிகழ்ச்சிகள் 391 24. உனையன்றி அறியேன் 394 25. எல்லையற்ற இன்பம் 397 26. உயர்ந்தோர் உள்ளம் 400 வடலூரார் வாய்மொழி (1959) முன்னுரை இராமலிங்க அடிகளைத் தமிழர்கள் பலர் ஒரு அவதார புருஷராகவே நினைக்கின்றனர்; ஒரு தீர்க்கதரிசியாகப் போற்று கின்றனர். அவருக்குப் பல இடங்களிலே கோவில்கள்; பல இடங்களிலே உருவச்சிலைகள்; பல இடங்களிலே பஜனை மடங்கள்; பல இடங்களிலே அவர் படத்திற்குக் கற்பூர தீபாரதனைகள்; பூஜை நைவேத்தியங்கள் அவர் பெயரால் பல சங்கங்கள், பல புத்தக சாலைகள், பல வியாபார தலங்கள் இன்று விளங்குகின்றன. ஆண்டாண்டுதோறும் வடலூருக்குச் செல்லும் அடியார் களின் கூட்டம் வளர்ந்து வருகின்றது. அவருடைய அருட் பாவைப் பாராயணம் செய்வோர் பெருகி வருகின்றனர். எங்கும் அருட்பெரும் ஜோதி ! தனிப்பெரும் கருணை என்ற முழக்கம் கேட்கின்றது. சாதிவெறி கொண்டவர்கள் பலர்; சமயவெறி கொண்ட வர்கள் பலர்; ஆச்சாரவெறி பிடித்தவர்கள் பலர்; வகுப்புவாதம் பேசும் அரசியல்வாதிகள் பலர்; பொதுமக்களிடம் ஏமாற்றிப் பொருள் பறிப்போர் பலர்; தமது கடமையை மறந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பலர்; உழைப்பவர்களிடம் கருணை காட்டாதவர்கள் பலர் இன்று இராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக விளங்குகின்றனர். இராமலிங்கர் தன்னை யாரும் வணங்கவேண்டும் என்று விரும்பவே இல்லை. தன்னை இராமலிங்க சுவாமிகள் என்று அழைப்பதைக்கூட அவர் வெறுத்தார் அவரைத் தெய்வமாகக் கொண்டாடுவதை அவர் வெறுத்தார். அவரைத் தெய்வம் என்று கூறிய வணங்கிய மக்களின் அறியாமைக்காக அவர் பரிதாபப்பட்டடார். உலகம் எல்லாம் அவரைப் பெரியவர் என்று கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் அவருக்கில்லை. அவர் தன்னைச் சாதாரண மனிதராகவே கருதினார் மற்ற மனிதர்களும் தன்னைச் சாதாரண மனிதராகக் கருதவேண்டும் என்பதே அவருடைய ஆசை. அவருடைய வாசகமே இவற்றைக் காட்டுகின்றன. இராமலிங்க சுவாமி என்று வழங்குவிப்பது என் சம்மதம் அன்று என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்று தலின், இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும். தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் எனச் சுற்றுகிறார்கள். ஐயோ! நம் சதோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததனாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்; இருக்கின்றேன்; இருப்பேன். உலகெலாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசையில்லை. இவைகள் அவராலேயே சொல்லப்பட்டவை. சாதாரண மனிதர்களும் கூட இந்தக் காலத்தில் தம்மைப் பலர் போற்று வதையும், புகழ்வதையும் விரும்புகின்றனர். இதற்காகவே தம்முடைய கைப்பணத்தைச் செலவு செய்வேர்கள்கூடச் சிலர் உண்டு. பொதுவாழ்விலே ஈடுபட்ட பலரிடம் இக்குணந்தான் குடி கொண்டிருக்கின்றது. ஆனால் இராமலிங்கர் தன்னைத் தெய்வமாகக் கொண் டாடுவதை வெறுத்ததற்கு ஒரு உண்மைக் காரணம் உண்டு. உலகத்தைச் சீர்திருத்தவேண்டும்; மக்களைச் சீர்திருத்த வேண்டும்; மக்கள் சமுதாய அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்ற எவனும் தற்புகழ்ச்சிக்கு ஆசைப்பட மாட்டான்; தன்னை மற்ற மக்கள் வணங்க வேண்டும். புகழவேண்டும் என்று எண்ணமாட்டான். மற்ற மக்களுடன் சமமாக ஒன்றுபட்டு தோழமைகொண்டு வாழவேண்டும் என்றே நினைப்பான். மற்ற மக்களும் தன்னைத் தங்களுடைய தலைவனாக எண்ணாமல் கூட்டாளியாக தோழனாக எண்ணவேண்டும் என்றே ஆசைப் படுவான். இதுவே உண்மையான சீர்திருத்தவாதியின் இயல்பு. புரட்சிக் காரனுடைய தன்மை. மக்கள் ஒரு சீர்திருத்தக்காரனைத் தெய்வமாக அல்லது அவதாரபுருஷனாகக் கொண்டாடத் தொடங்கி விட்டார் களானால் வந்தது ஆபத்து. அன்றே அவனுடைய கொள்கை களுக்கு மக்கள் குழிதோண்டி விட்டவர்கள் ஆவார்கள். ஒருவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், பிறகு அவருடைய ஆராய்ச்சியைப்பற்றி எண்ணமாட்டார்கள். அவருடைய சொற் களைப் பற்றிச் சிந்தனை செய்யவே மாட்டார்கள். அவரை வணங்குவதனாலே தாங்கள் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்; தங்களுக்குப் புண்ணியம் கிடைத்து விடும் என்று நினைத்து விடுவார்கள். இந்த உண்மையை வள்ளலார் நன்றாக உணர்ந் திருந்தார். ஆதலால்தான் என்னை வணங்கவேண்டாம்! நான் கூறியவை களைப் படியுங்கள்! அதன்படி நடவுங்கள் என்றே கூறினார். இராமலிங்க அடிகள் இருக்கும் காலத்தில் அவருடைய மாணவர்கள் அவரை சுவாமிகள் என்று அழைப்பத் தில்லை. ‘ஐயா! என்றே அழைத்து வந்தனர் இது குறிப்பிடத்தக்கது. இன்று புத்தரைப் போற்றும் மக்கள் பலர் அவருடைய கொள்கைகளை ஊறுகாய் போட்டுவிட்டனர்! ஏசு கிறிதுவை வணங்கும் மக்கள் பலர் அவருடைய அகிம்சா தர்மத்தை அடியோடு மறந்துவிட்டனர்; முகம்மது நபியைக் கொண்டாடும் மக்களிலே பலர் அவருடைய கொள்கையை வாயளவிலே மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றனர்! இதே கதி நமது இராமலிங்கருக்கும் நேர்ந்து விடக்கூடாது. இராமலிங்கரின் பாடல்களிலே புதிய கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். அவருடைய பாடல்கள் திரு அருட்பா என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. அவைகள் ஆறு திருமுறை களாக வகுக்கப்பட்டுள்ளன. ஆறாந் திருமுறையில் தான் முற்போக் கான கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் மிகுந்திருக்கின்றன. உலக மக்கள் ஒன்றுபட்ட ஒரே சமுதாய மாக வாழவேண்டும் என்பதே இராமலிங்கரின் கருத்து. முதல் ஐந்து திருமுறைகளில் எவ்வளவு பாடல்கள் அடங்கி யிருக்கின்றனவோ அவைகளைவிட அதிகமான பாடல்கள் ஆறாம் திருமுறை ஒன்றில்மட்டும் அடங்கியிருக் கின்றன. உலகைச் சீர்திருத்தவே என்னைக் கடவுள் அனுப்பினார் அவரே எனக்குப் பல உண்மைகளை அறிவுறுத்தினார்; நான் பசித்திருக்கும்போது உணவளித்துக் காப்பாற்றினார்; அவருடைய திருவருத் துணைக்கொண்டே நான் மக்களைச் சீர்திருத்த எண்ணுகின்றேன் என்றெல்லாம் அவர் பாடல்களில் காணப் படுகின்றன அவர் இருந்த காலத்தில் மக்கள் கடவுள் அருள் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களிடந் தான் மதிப்பும் மரியாதையும் காட்டிவந்தனர். ஆதலால் தன் சொல்லுக்கு மக்களிடம் மதிப்பு ஏற்படவேண்டும் என்பதற் காகவே இவ்வாறு கூறினார் என்றுதான் கொள்ளவேண்டும். பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்போர். தமிழர்கள் காலத்துக்குக் காலம் எவ்வாறு முன்னேறி வந்திருக்கின்றனர். என்பதைக் காண்பார்கள். அரசியல், சமுதாயம், பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வாழ்க்கை முறைகள் இவைகளிலே மக்கள் முன்னேறி வருவதுதான் இயல்பு இந்த இயல்பைப் பண்டை இலக்கியங்கள் காட்டுகின்றன இத்தகைய இயற்கை முன்னேற்றத்தை ஒட்டியே இராமலிங்கரின் கருத்துக்களும் கொள்கைகளும் வளர்ந்திருக்கின்றன. இவ்வுண்மையை அவரது ஆறாந்திருமுறைப் பாடல்களைப் படிப்போர் அறியலாம். அவைகளை எடுத்துக் காட்டுவதே வடலூரார் வாய்மொழி என்னும் இப்புத்தகத்தின் நோக்கமாகும். சென்னை 31.03.1959 சாமி.சிதம்பானார் இராமலிங்கர் வரலாறு தமிழகத்திலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே பல பெரும்புலவர்கள் வாழ்ந்தனர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், காஞ்சி சபாபதி முதலியார், மயிலை சண்முகம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இன்னும் பல புலவர்களும் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தமிழ் மறுமலர்ச்சியின் ஆரம்ப காலம் என்று கூறலாம். இக்காலத்துப் புலவர் பெரு மக்களிலே இன்று பொது மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் புலவர் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை அவர்கள். வடலூரார், வள்ளலார், இராமலிங்க சுவாமிகள், இராமலிங்க அடிகள், அருட்பெருஞ்சோதி அடிகள், சமரச சுத்த சன்மார்க்க ஞானி என்ற பல பெயர்களால் இன்று இவர் அழைக்கப்படுகிறார். இவரை இன்று பல மக்கள், அவதார புருஷராகக் கருதுகின்றனர்; இவர் படத்தை வைத்துப் பூசிக்கின்றனர்; இவர் பாடிய செய்யுட்களைப் பாடி ஆனந்த மாக ஆடுகின்றனர்; இவருடைய பாடல் தொகுதியை வைத்து மலரிட்டுத் தூபதீபங் காட்டிப் போற்றுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களிலே நூலாசிரியர்கள் உண்டு; உரையாசிரியர்கள் உண்டு; ஆராய்ச்சியாசிரியர்கள் உண்டு; பதிப்பாசிரியர்கள் உண்டு; பலருக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ்சொல்லிய போதகா சிரியர்கள் உண்டு. இவர்கள் எல்லோரினும், தெய்வத் தன்மை பொருந்திய பெரியராகத் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றவர் வடலூர் வள்ளலார் ஒருவர்தான். இப் பெரியார்1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரிலே பிறந்தார். இவர் தந்தையார் பெயர் இராமய்யா பிள்ளை. கருணீகர் குலத்தவர். கிராமக் கணக்கர்; நல்ல தமிழ்ப் பயிற்சியுள்ளவர்; சிவபக்தியிலே சிறந்தவர். முதல் ஐந்து மனைவிகளை முறையே மணந்து இழந்தவர்; ஆறாவது மனைவியாகச் சின்னம்மை என்பவரை மணந்தார். அம்மையார் பிறந்த ஊர் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி. இராமலிங்கம், கடைசிப்பிள்ளையாக இராமய்யா-சின்னம்மை தம்பதிகளுக்குப் பிறந்தார். சபாபதி பிள்ளை, பரசுராமபிள்ளை என்போர் இராமலிங்கத்தின் மூத்த சகோதரர் கள். சுந்தரம்மாள், உண்ணாமலை அம்மாள் இருவரும் மூத்த சகோதரிகள். ஐந்தாவது பிள்ளையாக இராமலிங்கத்தை அனைவரும் அன்புடன் வளர்த்து வந்தனர். அக்காலத்தில்-இராமலிங்கம் குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே தந்தையார் இராமய்ய பிள்ளை மண்ணுலகை விட்டு மறைந்தார். அன்னை சின்னம்மையார், மருதூரை விட்டுப் புறப்பட்டார். குழந்தைகளுடன், பிறந்தகமாகிய பொன்னேரியை அடைந்து சில காலம் வாழ்ந்தார். பிறந்த 1824-ல் சென்னையிலேயே தமது மக்களுடன் குடியேறினார். இராமலிங்கத்தின் மூத்த சகோதரர் சபாபதி பிள்ளை காஞ்சி சபாபதி முதலியாரிடம் முறையாகத் தமிழ்க் கல்வி பயின்றார்; பிரசங்கம் செய்யும் திறமைப் பெற்றார்; புராணப் பரிசங்கத்தில் வல்லுநரானார்; இதன் மூலமே குடும்ப வாழ்க்கை நடைபெற்று வந்தது. சபாபதி பிள்ளை சிறந்த பிரசங்கியராகப் போற்றப்பட்டார். சபாபதி பிள்ளை, தம்பி இராமலிங்கத்திடம் அன்பு பாராட்டினார்; அவரைச் சிறந்த தமிழ்ப் புலவராக்க எண்ணினார்; தாமே அவருக்குத் தமிழ் நூல்களைப் போதித்து வந்தார். இராமலிங்கமும் தமிழ்க் கல்வியிலே தேர்ந்தார்; பிரசங்கம் செய்யவும் வல்லுநரானார்; செய்யுள் பாடும் திறமையும் பெற்றார். இவரைப் பொது மக்கள் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்று அழைத்துவந்தனர். இராமலிங்கம் பிள்ளை தமது ஏழாவது வயதிலேயே அறிவிலே சிறந்து விளங்கினார்; இறைவனிடம் அன்பு செலுத்து வதிலே ஈடுபட்டிருந்தார்; ஒழுக்கத்திலே ஒப்பற்ற வராயிருந்தார். அனைவரும் அவருடைய அறிவையும் ஒழுக்கத்தையும் பாராட்டு வராயினர். இராமலிங்கம் பிள்ளை தமது ஒன்பதாம் வயதிலேயே சிறந்த செய்யுட்களை இயற்றும் திறமை பெற்றிருந்தார். இவர் சென்னையிலிருந்து நாள்தோறும் திருவொற்றி யூருக்குப் போவார்; ஒற்றியூரனை உள்ளத்திலே வைத்துக் கனிந்துருகிக் கவிகள் பாடுவார். இறைவனை வணங்குவது, இன்சுவைக் கவிகள் புனைவது, தமிழ் கற்க விரும்புவோர்க்குத் தமிழ் கற்பிப்பது, ஐயமுற்றுக் கேள்விகள் கேட்போர்க்குத் தக்க விடையளித்து ஐயந் தீர்ப்பது இவை போன்ற செயல்களிலேயே அவர் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார். சென்னைக் கந்தசாமிக் கோயிலுக்கும் செல்வார்; முருகனைக் கண்டு உருகிப் பாடுவார். இவ்வாறு அன்பு நெறியி லேயே காலங்கடத்தி வந்தார். பணத்தைப் பற்றி இவர் சிறிதும் கவலைப்பட்டதேயில்லை. குடும்ப வாழ்விலே இவருக்குப் பற்றும் உண்டாகவில்லை; மணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் எழவே யில்லை. இந்நிலையில், அண்ணனும், அன்னையும் இவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினர்; அக்காள் பெண்ணையே மணம் புரிந்து வைத்தனர். பெயருக்குத்தான் திருமணம்; மணவாழ்க்கையில் இவர் ஈடுபடவே இல்லை. இதன்பிறகு இவர் தனியாகச் சிதம்பரத்திற்குச் சென்று வாழ்ந்தார். அங்கிருக்கும்போது பல ஊர்களுக்கும் சென்று திரும்புவது வழக்கம். பல அறிஞர்களும் இராமலிங்கம் பிள்ளையிடம் வருவார்கள்; அவருடன் உரையாடிச் செல்வார்கள். இக்காலத்தில் தான் இவர் இராமலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் வெளிவரத் தொடங்கின. அவற்றை அறிஞர்கள் பலர் போற்றினர்; பக்தர்கள் பலர் பராட்டினார்கள். இராமலிங்க சுவாமிகள் 1858-ம் ஆண்டில் வடலூருக்கு வந்த சேர்ந்தார். வடலூரை அடுத்த கருங்குழியை உறைவிட மாகக் கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது 45. அக் காலத்தில் வடலூரின் பெயர் பார்வதிபுரம் என்பது. அங்கு நின்று பார்த்தால் சிதம்பரத்தின் நான்கு கோபுரங்களும் நன்றாகத் தெரியும். தில்லைக்கு வடக்கே இவ்வூர் அமைந் திருப்பதால் வடலூர் என்று பெயர் பெற்றது. இராமலிங்க சுவாமிகள் என்னும் வடலூர் அடிகள் 1865-ல் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அதுவரையில் அவரால் பாடப்பட்டிருந்த பாடல்கள் அருட்பா என்னும் பெயரால் வெளிவந்தன. அவை நான்கு திருமுறைகளாக அமைந்திந்தன. 1867-ஆம் ஆண்டிலே வடலூரில் சத்திய ஞான சபையைத் தொடங்கினார். சாதி பேதம் இல்மல் எல்லோரும் ஒன்றுபட்டு இறை வனை வழிபட வேண்டும் என்பதே இச் சபையின் நோக்கம். வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்திலே சித்திவளாகத் திருமாளிகையிலே வள்ளலார் வீற்றிருந்தார். மக்களுக்குச் சன்மார்க்கத்தை உணர்த்தி வந்தார். எல்லா மக்களும், எல்லா மதத்தினரும், எல்லா இனத்தினரும், எல்லா நாட்டினரும் வேற்றுமையின்றி வாழவேண்டும்; அறிவே ஆண்டவன் என்ற உண்மையை உணரவேண்டும்; அறிவையே இறைவனாக எண்ணி வழிபாடு செய்ய வேண்டும். இறைவன் அருட்பெரும் சோதி, தனிப்பெருங் கருணை என்ற உண்மையை உணர்வது சன்மார்க்கம்; இவ்வுமையை அறிந்தவர்கள் ஒன்று பட்டு வாழ்வது சன்மார்க்க சங்கம் என்பதே வள்ளலார் கொள்கை. இறுதியாக 1874 ஜனவரியில் இவர் மறைந்தார்; தாம் இருந்த அறையின் வெளிக்கதவைப் பூட்டிக்கொள்ளும்படி தமது மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் அவ்வறைக் கதவைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நான் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவேன் என்று கூறி மறைந்தார். அடிகளின் ஆணைப்படியே அவரை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டனர். அடிகள் குறித்தக் காலத்திற்குப்பின் அதைத் திறந்து பார்த்தனர்; அடிகளைக் காணவில்லை. அனைவரும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். அடிகள் எங்குச் சென்றார்? எப்படி மறைந்தார்? என்ற உண்மை இன்னும் ஒருவருக்கும் தெரியாது. நான் மீண்டும் தோன்றுவேன் என்று அடிகள் கூறியது மட்டும் இன்று உண்மையாகி விட்டது. அவர் பூத உடம்புடன் காணப்படவில்லை; ஆனால், புகழுடம்புடன் பிறந்து வளர்ந்து வருகிறார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருடைய சமரச சன்மார்க்கத்தைப் பலர் எதிர்த்தனர். அவருடைய பாடல்கள் அருட்பா அல்ல என்றனர். அவரைப் பற்றியும் வசை மொழிகள் கூறினர். இன்றே, வடலூர் அடிகளை அனைவரும் போற்று கின்றனர். தமிழ் மக்கள் உள்ளங்களில் வடலூரார் குடிபுகுந்து வருகின்றார்; உலக மக்கள் உள்ளங்களிலும் அவருடைய சமரச சன்மார்க்ககொள்கைகள் குடியேறி நிலைத்து வருகின்றன. இன்று உலகிலே வளர்ந்து வரும் கருத்துக்களையும், வடலூர் அடிகளின் வாய்மொழிகளையும் ஒத்திட்டுப் பார்ப் போர்க்கு இவ்வுண்மை விளங்கும். அருட்பெரும் சோதி ! தனிப்பெரும் கருணை! என்பதே வள்ளலாரின் முழக்கம். இம்முழக்கம் இன்று தமிழகம் எங்கும் ஒலிக்கிறது. இறைவன் எல்லையற்ற சோதி வடிவானவன்; ஒளியே அவன் உருவம்; ஒப்பற்ற கருணையே அவனுடைய பண்பு; அறிவும் கருணையுமே இறைவன் என்பதுதான் இம் முழக்கத்தின் பொருள். 1823 அக்டோபர் மாதத்திலே தோன்றிய தமிழகத்தின் அறிவுச் சுடர்-வடலூர் வள்ளலார்-இராமலிங்க அடிகள்-1874 ஜனவரி மாத இறுதியிலே மறைந்தது! வடலூரார் இவ்வுலகில் வாழ்ந்த காலம் 51 ஆண்டுகள்தான். இந்த ஆண்டுகளிலே இவர் தமிழகத்திற்கு-தமிழ் மக்களுக்கு தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் பணி அளவற்றது. திருஅருட்பா இராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்குட் திரு அருட்பா என்று பெயர். இது ஆறு திருமுறைகளாக அமைந் திருக்கின்றது. எல்லாம் தோத்திரப் பாடல்கள். சுவாமிகளின் புலமைத் திறத்தை இப்பாடல்களிலே காணலாம். அச்சிலே வெளிவந்திருக்கும் அருட்பாவில் 6500-க்கு மேற்பட்ட பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அடிகளின் பாடல்கள் பல இன்னும் அச்சில் வராமல் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர். இராமலிங்க அடிகள் கவிஞர் மட்டும் அன்று; உரைநடை ஆசிரியர்; உரையாசிரியர். உரைநடையிலே பல செய்திகளை எழுதியிருக்கின்றார். சீவகாருண்ய விளக்கம், மனுமுறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூல்கள் பலராலும் பாராட்டப் படுகின்றன; அவைகளிலே, சிறந்த கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். வள்ளலார்க்கு இசைத்தமிழ் உணர்ச்சியும் உண்டு. இதை அவர் பாடியிருக்கும் இசைப் பாடல்களால் அறியலாம். கீர்த்தனை போன்ற பாடல்களும், அருட்பாவிலே காணப்படு கின்றன. வள்ளலார் சிறந்த மருத்துவராகவும் விளங்கினார். மக்கள் உடலை நோயின்றி வைத்துக்கொள்வது எப்படி என்பதற் கான வழிகளை உரைநடையிலே எழுதியிருக்கின்றார். நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல் என்ற தலைப்பிலே அவர் எழுதியிருக்கும் உரைநடை குறிப்படத்தகக்கது. அதில் அவருடைய மருத்துவ நூல் அறிவைக் காணலாம். இராமலிங்க அடிகள் ஆழ்ந்த சிவபக்தி உள்ளவர்; ஆயினும் அவர் உள்ளத்திலே பிற மத வெறுப்போ, பிற தெய்வ நிந்தனையே குடியேறவேயில்லை. சிவபெருமானைப்பற்றி, முருகனைப்பற்றி, விநாயகரைப்பற்றி, வடிவுடை மாணிக்கம், பெரியநாயகி அம்மை முதலிய சக்தி வடிவங்களைப்பற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் படிப்போர் உள்ளத்தை உருக்குவன. இலக்குமி, கலைமகள், திருவெவ்வளுர் வீரராகவப் பெருமாள், இராமபிரான், திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் இவர்களைப்பற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன. அருட்பாப் பாடல்கள்; இனிய பாடல்கள்; எளிய பாடல்கள்; பலருக்கும் பொருள் விளங்கும் பாடல்கள். இவைகள் மட்டும் அல்ல; பல சிறந்த முற்போக்கான கருத்துக்கள் இப்பாடல் களிலே காணப்படுகின்றன; சிறந்த அறிவுரைகளும் அமைந் திருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டிலே பிறந்த தமிழ்ப் பாடல் களிலே இராமலிங்க அடிகளின் பாடல்களுக்கு இணையாக எதையும் சொல்ல முடியாது. தெய்வ மணிமாலை என்பது ஐந்தாம் திருமுறையில் உள்ளது; 31 பாடல்களைக் கொண்டது; சென்னைக் கந்தசாமிக் கோவிலில் குடிகொண்டிருக்கும் முருகனைப்பற்றிப் பாடியது. அதில் ஒரு பாடல்: ஒருமையுடன் நினது திரு மலர்அடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள் ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும்; பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும்; பொய்மை பேசாது இருக்க வேண்டும்; மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்; உனை மறவாது இருக்க வேண்டும்; மதிவேண்டும்; நின்கருணை நிதி வேண்டும்; நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்; தருமம்மிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்த வேளே! தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே! நல்லவர் நட்பு வேண்டும்; வஞ்சகர் உறவு கூடாது; எப்பொழுதும் இறைவனைப் பற்றியே பேசவேண்டும்; பொய் பேசக் கூடாது; பெண்ணாசை கூடாது; இறைவனை மறத்தல் கூடாது; நல்லலறிவு வேண்டும். இறைவன் கருணை வேண்டும்; நோயின்றி நல்லுடம்புடன் இவ்வுலகில் வாழ வேண்டும் என்ற கருத்துக்களை இப்பாடலிலே காணலாம். சிறந்த கருத்துக்களை எளிய நடையிலே கூறியிருக்கும் இதுபோன்ற பாடலை வேறு எங்கும் காணமுடியாது. ஸ்ரீ ராமநாமத் திருப்பதிகம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் ஆறாம் திருமுறையில் காணப்படுகின்றன. அதில் ஒரு பாடல்: அறம்பழுக்கும் தருவே! என் குருவே! என்தன் ஆருயிருக்கு ஒரு துணையே! அரசே! பூவை நிறம்பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே நெடும்கடலுக்கு அணையளித்த நிலையே! வெய்ய மறம்பழுக்கும் இலங்கை ராவணணைப் பண்டு ஓர் வாளியினால் பணிகொண்ட மணியே! வாய்மைத் திறம்பழுக்கும் சீராமா! வள்ளலே நின் திருவருளே அன்றிமற்றோர் செயல் இலேனே. இராமனைப் போற்றும் இப்பாடலிலே அமைந்திருக்கும் சிறந்த கருத்து குறிப்பிடத்தக்கது. இராமனை அறத்தின் வடிவம், உண்மையின் உருவம் என்று குறிப்பிடுகின்றார். அறம் பழுக்கும் தருவே! வாய்மைத் திறம்பழுக்கும் சீராமா என்ற தொடர்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. கொடிய பாவத்தின் உருவமே இராவணன் என்று குறிப்பிடுகின்றார். வெய்ய மறம்பழுக்கும் இலங்கை ராவணனை என்ற தொடர் இவ் வுண்மையை உணர்த்தும். இராமனைப்பற்றியும், இராவணனைப்பற்றியும் கம்பன் கொண்ட கருத்தை இச்செய்யுளிலே காணலாம். அறம் வெல்லும்; பாவம் தோற்கும் என்ற இராமாயணத்தின் மூலக் கருத்தையும் இப்பாடலிலே காணலாம். திருஅருட்பாவில், முதல் ஐந்து திருமுறைகளைக் காட்டிலும் ஆறாம் திருமுறையிலே அரும்பொருள்கள் பல அடங்கியிருக் கின்றன. மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மதவெறி, அரசியல் கொடுமை, ஏழைகளைத் துன்புறுத்தும் வஞ்சகர்கள் வாழ்வு இவைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கும் பாடல்கள் நிரம்பியிருக்கின்றன. மனிதன் படிப்படியாக அறிவியேல சிறந்து வளர்ந்து வருகிறான். நல்லவர்கள்., உண்மையைக் காணவேண்டும் என்ற உணர்ச்சியுள்ளவர்கள், வயதேற வயதேற அறிவு வளர்ச்சி பெறுவது இயற்கை. இந்த உண்மையை இராமலிங்க சுவாமி களின் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. அருட்பாவை முதலிலிருந்து இறுதிவரையிலும் படிப்போர் இவ்வுண்மையை உணர்ந்துகொள்ளலாம். இன்று இராமலிங்க அடிகளைக் கொண்டாடுவோர் பலர்; ஆயினும் அவர் கருத்தைப் பின்பற்றி நடப்போர் சிலராவது உண்டா என்பது சந்தேகந்தான். சுரண்டலைக் கண்டிக்கும் இராமலிங்க அடிகளை, சுரண்டுவோர்கள் தங்களுக்கு மறை விடமாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். மூடநம்பிக்கை யாளர்கள், சாதிபேதம் பாராட்டுவோர், பிறருக்குத் தீமை செய்ய அஞ்சாதவர்கள் இவர்களெல்லாம் கூட இராமலிங்க அடிகளைத் தங்களை மறைக்கும் திரைச்சீலையாகப் பயன்படுத்திக்கொள்ளு கின்றனர். இராமலிங்க அடிகள் உலகம் திருந்த வேண்டும் என்று எண்ணினார்; உலக மக்கள் ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று எண்ணினார்; மனிதர்க்கு மனிதர் கொடுமை செய்யும் மிருகத்தனம் உலகை விட்டு ஒழிய வேண்டும் என்று நினைத்தார். அவர்தம் எண்ணங்கள் முழு வதையும் இனிய பாடல்களிலே பாடி வைத்திருக்கின்றார். அருட்பாவைப் படிப்போர், பாடல்களின் கருத்தறிந்து படிக்கவேண்டும். கருத்தறிந்து பாடவேண்டும். சிறப்பாக, ஆறாம் திருமுறையிலே அவர் பாடியிருக்கும் செய்யுட்களின் சிறந்த கொள்கைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இராமலிங் கரிடம் அன்புள்ளவர்கள் இப்பணியைச் செய்ய வேண்டும். திருவருட்பாவில் உள்ள கொள்கைகள்-கருத்துக்கள்-இராமலிங்க சுவாமிகளின் எண்ணம்-மக்களிடம் பரவுமானால் சிறந்த பயன் உண்டு. மக்களிடம் உள்ள அறியாமை ஒழியும். அன்பின்மை ஒழியும்; அனைவரும் உண்மை நெறியை உணர்ந்து ஒன்று கலந்து வாழ்வார்கள். இது உண்மை; உறுதியும் ஆகும். தமிழும் தமிழ் நூலும் இராமலிங்க அடிகள் தமது தமையனாரிடம் கல்வி பயின்ற காலம் குறைவுதான். எல்லா நூல்களையும் அவரிடமே கற்றறிந்தார் என்று கூறமுடியாது. மூல நூல்களையும் தாமே தமது நுண்ணறிவைக்கொண்டு கற்றறிந்தார். என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே, என் திறத்தில், பயின்று அறிதற்கு அருமை யாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளத்தேயிருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று தனது சத்திய விண்ணப்பத்தில் கூறியிருக்கின்றார். இது அவர் தாமே பல நூல்களையும் பயின்று உண்மை ஞானம் பெற்றார் என்பதை விளக்குவதாகும். இராமலிங்க சுவாமிகள் திருக்குறளிலே மிகுந்த பற்றுள்ளவர். திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை அவருடைய பாடல்கள் காட்டுகின்றன. செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்அதனில் தீயது; என்றது எண்ணிலையே! - மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கின், சினம்காக்க; என்றதனைப் பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே! - துன்னி அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னும் திகழ்வாய்மையும்நீ தெளியாய்! இவைகள் முதல் திருமுறையிலே நெஞ்சறிவுறுத்தல் என்னும் பகுதியிலே காணப்படுகின்றவை. இவைகள் அப்படியே திருக்குறளை அமைத்துப் பாடிய பாடல்கள். செல்லா இடத்தும் சினம்தீது; செல்இடத்தும் இல்அதனில் தீயபிற. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. என்ற குறட்பாக்களின் சொற்றொடர்களையும், கருத்துக்களையும் அப்படியே இராமலிங்க அடிகள் எடுத்தாண்டுள்ளார். உறங்குவதுபோலும் என்ற ஒண்குறளின் வாய்மை, மறம்கருதி அந்தோ! மறந்தாய்! நெருநல் உளன்ஒருவன் என்னும் நெடும்சொல் மருவும் குறட்பா மறந்தாய்! என்று திருக்குறளின் பெயரையே குறிப்பிட்டுப் பாடுகின்றார். இவையும் நெஞ்சறிவுறுத்தலில் காணப்படுவன. உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை; என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. என்ற இரண்டு குறள்பாக்களை மேலேகாட்டிய அடிகளில் குறித்திருப்பதைக் காணலாம். தாயுமானர் தத்துவங்களை இராமலிங்கர் பாராட்டினார்; பின்பற்றினார் என்று கூடக் கூறலாம். தாயுமானார் பாடல்கள், சித்தர் பாடல்கள் இவைகள் எல்லாம் மத வெறுப்பைக் கண்டிப்பவை; மூடநம்பிக் கைகள் பலவற்றை அகற்றுவன; சமரச மனோபாவத் தை மக்களிடம் பரப்புவன. தாயுமானவர் பாடல்கள், சித்தர் நூல்கள் இவைகளையெல்லாம் வள்ளலார் படித்தறிந்தவர் என்பதிலே ஐயம் இல்லை. இன்று இருந்தார் நாளைக்கு இருப்பதுபொய் என்று அறவோர் நன்று இருந்த வார்தைநீ நாடிலையே! இது தாயுமானவர் பாடலிலே சச்சிதானந்த சிவம் என்ற பகுதியில் உள்ள ஒரு செய்யுளை நினைவூட்டுகின்றது. இனிஏது எமக்குஉன் அருள்வாருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ! இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே; அநியாய மாய்இந்த உடலைநான் என்றுவரும் அந்தகற்கு ஆள் ஆக்கவோ; ஆடிட் திரிந்துநான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ! கனியேனும், வறியசெங் காயேனும், உதிர்சருகு கந்தமூ லங்க ளேனும், கனல்வாதை வந்துஎய்தின், அள்ளிப் புசித்துநான் கண்மூடி மௌனி யாகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன்; எண்ணம் இது சாமிநீ அறியா ததோ! சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்த சிவமே. இது தாயுமானவர் பாடல். இராமலிங்கர் கருத்தைக் கவர்ந்த செய்யுள். இந்தச் செய்யுளையே மேலே கண்ட அடிகளில் குறித்துக் காட்டினார். இராமலிங்க அடிகள் மூவர் தேவாரத்தை முறையாகப் படித்தவர்; அப்பாடல்களிலே உள்ளத்தைப் பறிகொடுத்தவர் திருவாசகத் தேனைத் தெவிட்டாமல் பருகியவர். இவ்வுண்மை களை அவருடைய பாடல்களை காட்டுகின்றன. நான்காவது திருமுறையிலே நால்வரைப் பற்றியும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை என்பது 11 பாடல்களைக் கொண்டது; சம்பந்தர் பெருமையைப் பாடுவது. ஆளுடைய அரசு அருள்மாலை என்பது 10 பாடல்களைக் கொண்டது; நாவுக்கரசரைக் குறித்துப் பாடியது ஆளுடைய அடிகள் அருள்மாலை என்பது சுந்தர மூர்த்தியைக் குறித்தது. 10 பாடல்களைக் கொண்டது இவை களைப் படித்தால் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மணிவாசகர் நால்வர் பாலும் வள்ளலார் எவ்வளவு ஈடுபாடுள்ளவராயிருந்தார் என்பதைக் காணலாம். வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான்கலந்து பாடும்கால், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து என் ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே என்ற பாடல் ஆளுடைய அடிகள் அருள்மாலையுள் ஒன்று. இதனால் திருவாசகத்தில் இவருக்குள்ள அன்பைக் காணலாம். தேவார, திருவாசகங்களின் சாரம் எல்லாம், அருட்பாவில் அடங்கியிருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. அகப்பொருள் துறைகளை அமைத்துப் பாடிய பாடல்கள் அருட்பாவிலே பல உண்டு. அவைகள் எல்லாம் அடிகளின் பரந்த தமிழ் நூல் பயிற்சியை விளக்குவன. தமிழ் மொழியிலே பக்தி நூல்கள் ஏராளம்; கடவுள் பெருமையைக் கூறும் நூல்கள் கணக்கில் அடங்கா. சூதவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் இவைகள் எல்லாம் பக்தி நெறியைப் பரப்புவன. இவைகளைத் தவிர எத்தனையோ கலம்பகங்கள், அந்தாதிகள், மாலைகள், பிள்ளைத்தமிழ்கள், கோவைகள், உலாக்கள், புராணங்கள் பக்திச்சுவையை ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன. தமிழில் இருக்கின்ற அவ்வளவு பக்தி நூல்கள் வேறு எம்மொழியிலும் இல்லையென்று கூறிவிடலாம். இக்காரணத்தால், இவ்வுலக வாழ்வை வெறுத்தவர்கள் துறவறமே சிறந்தது என்று எண்ணுகின்றவர்கள்-பக்தி மார்க்கமே மக்களாய்ப் பிறந்தவர்கள் பயன்பெறும் மார்க்கம் என்று நம்பு கின்றவர்கள்-தமிழ் மொழிதான் எம்மொழியினும் சிறந்தது என்று கூறுகின்றனர். இந்த உண்மையை இராமலிங்க அடிகள் எடுத்துக் காட்டியிருக்கின்றார். இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசையையும் பெருமறைப்பையும், போதுபோக்கையும் உண்டுபண்ணுகிற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது. பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் லேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை மிகவும் இலேசில் அறிவிப்பதாய் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென் மொழியால் பலவகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித் தருளினீர். என்று சத்திய விண்ணப்பத்தில் வள்ளலார் கூறுகின்றார். இதனால் அவர் தமிழ் மொழியின்மேல் கொண்டிருந்த அன்பையும், ஆர்வத்தையும் காணலாம். இராமலிங்க அடிகளின்மேல் அளவு கடந்த பக்தியுள்ள வர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலர் அடிகள் படிக்கவே இல்லை; எல்லாவற்றையும் இறைவன் அருளால் உணர்ந்தார் என்று கூறுகின்றனர். இது உண்மையன்று என்பதை அவருடைய அருட்பாவால் உணரலாம் அவர் தமிழ்நூல் பலவற்றையும் கசடறக் கற்றறிந்து பெரும் புலவர் என்பதை மேலே காட்டிய உதாரணங்களால் அறியலாம். சமரச சன்மார்க்கம் இரக்கமே சன்மார்க்கத்திற்கு வழிகாட்டும்; சன்மார் க்கத் தில் நடக்கச் செய்யும்: துன்மார்க்கத்திலே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தும் என்பது இராமலிங்க அடிகள் கருத்து. சத் என்பதற்கு உண்மையென்பது பொருள். மார்க்கம் என்பதற்கு வழி அல்லது நெறியென்பது பொருள். சத் மார்க்கம் என்பதற்கு உண்மைநெறி என்று பொருள். சத் மார்க்கம் என்ற வடமொழித் தொடர் சன்மார்க்கம் என்று தமிழுருவாகி நின்றது. இதனுடன் சமரசம் சேர்ந்து சமரச சன்மார்க்கம் ஆயிற்று. சன்மார்க்க நெறி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதற்குச் சாதி, சமய, இன, நிற பேதங்கள் ஒன்றும் இல்லை எந்தச் சாதியினரும், எந்த இனத்தினரும், எந்த மதத்தினரும் சன்மார்க்க நெறியை அடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனைதான் அதற்குண்டு. அந்த நிபந்தனை என்ன? யாராயிருந்தாலும் சரி, உள்ளம் குழைவுடையவராய் இருக்க வேண்டும்; நெஞ்சிலே இரக்கம் நிரம்பியவராயிருக்க வேண்டும். மற்ற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டால் மனம் இரங்க வேண்டும்; உள்ளம் உருக வேண்டும்; தம்மையறி யாமலே கண்ணீர்த்தாரை வெளிப்பட வேண்டும், இதுவே இரக்கத்தின் இயல்பு. இந்த அநுதாபத்தோடு அந்த இரக்கம் தேங்கித் திகைத்து நின்றுவிடக் கூடாது. துன்பப்படும் உயிர்களின் துக்கத்தைத் துடைக்க முந்த வேண்டும். தம்மால் முடிந்தவரையிலும் முயன்று அவ்வுயிர்களின் துக்கத்தைப் போக்க வேண்டும். அவை மகிழ்ந்து வாழும்படி செய்ய வேண்டும். இதுவே இரக்கத்தின் செய்கை; நடத்தை; முயற்சியாகும். உண்மையான இரக்கம் ஒருவகை வேற்றுமையும் பாராட்டாது. மனத்திலே மட்டற்ற கருணையுள்ளவர்கள் யார் துன்புற்றாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மரஞ் செடி கொடிகள் துன்புறுவதாகத் தோன்றினாலும் உதவி செய்யத் துடிதுடிப்பார்கள்; பறவை விலங்குகள் பதைபதைத் தாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; பரிந்து சென்று உதவி புரிவார்கள். பழந்தமிழகர்கள் இரக்கத்தை உயிரினும் சிறந்ததாகப் போற்றிவந்தனர். அவர்களுடைய உள்ளத்தின் உயர்வை விளக்கும் வரலாறுகள் பல உண்டு. பாரி என்னும் வள்ளல் வரலாறு பலருக்குத் தெரியும். படர்வதற்குக் கொம்பில்லாமல் தவித்துக்கொண்டிருந்த ஒரு முல்லைக்கொடியைக் கண்டான்; அவன் மனம் பரிதவித்தது. உடனே அதன் தளர்ச்சியைப் போக்க எண்ணினான். உடனே தான் ஏறிவந்த தேரை அதன் பக்கத்திலே நிறுத்திப் படர விட்டான். நடமாடாத கொடிக்கும் நலிவு வராமல் காக்க வேண்டும் என்று எண்ணிய அவன் எண்ணமும் அவன் செய்கையும், அவன் இரக்கமே உருவானவன் என்பதைக் காட்டுகின்றது. பேகன் என்பவன் மற்றொரு வள்ளல். இவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று கூறுவர். குளிர்காலத்திலே ஒரு மயில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். குளிரால்தான் அந்த மயில் நடுங்குகிறது என்று நினைத்துவிட்டான். அது துன்புறுவதாகத் தன் உள்ளத்திலே துணிந்துவிட்டான். அவ்வளவுதான்; உடனே தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அம்மயிலின் மீது போத்தினான். பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும், பேகன் மயிலுக்குப் போர்வையளித்ததும் தமிழ் நூல்களிலே பாராட்டப்படுகின்றன; தமிழ்ப் புலவர்களால் போற்றிப் பாராட்டிப் பாடப் பட்டிருக் கின்றன. இவர்கள் செய்கையைப் பரிகசிக்கும் பகுத்தறிவுவாதிகள் இக்காலத்தில் உண்டு. முல்லைக்கொடி தவித்தால் பக்கத்தில் உள்ள ஒரு மரக்கிளையை ஒடித்து அதன் அண்டையிலே நடக்கூடாதா? விலையுயர்ந்த தேரைத்தானா அதன் பக்கத்திலே நிறுத்த வேண்டும்? மயிலுக்குக் குளிரைத் தாங்கும் வல்லமை இயற்கையாகவே உண்டு. அதன் உடம்பில் சிறகுகள் அடர்ந்திருப்பது தட்ப வெப்பப் பாதுகாப்புக்காகத்தான். எல்லாப் பறவைகளும் குளிரையும், வெப்பத்தையும் தாங்கிக்கொள்ளும் இயல்புடையன. ஆதலால், மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணியதே மடமை என்று வாதாடுவோர் உண்டு. இரக்கத்தின் சிறப்பை அறிந்தவர்கள் இவ்வாறு வழக்கிட மாட்டார்கள். முல்லைக்கொடி வருந்துவதாக எண்ணினான் பாரி. உடனே உதவிசெய்ய அவன் உள்ளம் விரைந்தது. மரக்கிளையை ஒடிப்பதற்கோ, வெட்டுவதற்கோ, நடுவதற்கோ காலதாமத மாகும். காலதாமதம் இன்றி உடனே செய்யக்கூடிய உதவி தன் தேரை அந்தக் கொடியின் அண்டையில் நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை; ஆதலால்தான் அப்படிச் செய்தான். இவனைப்போலவேதான் பேகனும், மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணியவுடன் அவன் சிந்தனை வேறு ஒன்றிலும் ஒடவில்லை. அதன் நடுக்கத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற ஒன்றில்தான் நிலைத்தது. ஆதலால், உடனே அவன் தன் போர்வையை அந்த மயிலின் மேல் போர்த்தினான். மட்டில்லாத மனவிரக்கமுள்ளவர்களின் செயலுக்குப் பாரியும் பேகனும் உச்சத்தில் ஒளிரும் விளக்குகளாகக் காட்சி யளிக்கின்றனர். ஆதலால்தான் அருந்தமிழ்ப் புலவர்கள் அவர் களைப் பாராட்டினார்கள். இரக்கமுள்ளவர்கள் இவ்வாறு கொடி செடிகளிடமும், பறவை விலங்குகளிடமும் பரிவுகாட்டும்போது மக்களிடம் எப்படி நடந்துகொள்ளுவார்கள் என்பதைப் பற்றி நாம் கூறவேண்டியதேயில்லை. இரக்கமே உருவாகியுள்ளவர்கள், வாழ்க்கையை ஓட்ட முடியாமல் வறுமைச் சேற்றிலே அகப்பட்டுத் தவித்தாலும் சரி, பிறருக்கு உதவிசெய்யப் பின்வாங்கமாட்டார்கள். துன்புறு கின்றவர்கள் என்ன சாதி? என்ன இனம்? என்ன மதம்? என்ன நிறம் என்று எண்ணிப்பார்க்கவே மாட்டார்கள். இவை அவர்கள் கண்களுக்கும் தெரியமாட்டா; இவற்றைப்பற்றி அவர்கள் உள்ளமும் நினைக்காது; அவர்களுடைய துன்பத்தை மட்டுமே உள்ளம் உணரும்; கண்கள் காணும். ஆதலால், உடனே விரைந்து உதவி செய்வார்கள். இதுதான் இரக்கத்தின் உயர்ந்த தன்மை. இத்தகைய இரக்கம் உள்ளவர்கள் எல்லாரும் அவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்கள் சன்மார்க்கர்கள்; சமரசசன்மார்க்க வாதிகளாவர். இத்தகைய சன்மார்க்கர்களுடன் சேர்ந்து வாழவேண்டும். அவர்களுடைய சேர்க்கையால் மகிழ்ச்சியடையலாம்; அன்புடைய வர், அறிவுடையவர் என்று அனைவரும் போற்றும் படி வாழலாம்; அறியாமை நீங்கி அறிவுடையவர்களாகவும் வாழலாம், இந்த உண்மையை இராமலிங்க அடிகள் பல பாடல களிலே பாடியிருக்கின்றார். தயையுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே ! இங்கவர்கள் தம்மோடும் கூடி நயமுறுதல் அருள்நெறியில் களித்துவிளை யாடி நண்ணுகவென்று எனக்கிசைத்த நண்புருசற் குருவே! உயல்உறும்என் உயிர்க்கினிய உறவே! என் அறிவில் ஓங்கியபே ரன்பே ! என் அன்பில் ஊறும் ஒளியே! மயல்உறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில் மாநடத்துஎன் அரசே! என் மாலை அணிந் தருளே! கருணையுள்ளவர்கள் அனைவரும் சமரச சள்மார்க்கத் தைச் சேர்ந்தவர்கள் தாம். இவ்வுலகிலே அவர்களுடன் சேர்ந்து சிறந்த நல்ல அருள்நெறியிலே வாழ்ந்து, மகிழ்ந்து விளையாடு வாயாக என்று எனக்குக் கூறிய உண்மையான குருவே! சாகாத என் உயிரோடு இணைந்திருக்கும் உறவே! என் அறிவிலே உயர்ந்து நிற்கும் பேரன்பே ! என் அன்பிலே அமைந்து நிற்கும் பகுத்தறிவே! தவத்திலே ஈடுபட்டவர்கள் சூழ்ந்து நின்று போற்றும் மெய்ப்பொருளே! அழகிய பொது மன்றத்திலே நடனமாடும் அரசே! எனது பாமாலையை அணிந்தருள்ளவாய்! இதுவே இப்பாடலின் பொருள். சன்மார்க்கத்தைச் சமரச சன்மார்க்கம் என்றே வள்ளலார் குறிப்பிடுகின்றார். சமரசம் என்பது பொது; எல்லோர்க்கும் ஒப்ப முடிந்தது; எல்லோ ராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆதலால்தான், சன்மார்க் கம் எல்லோர்க்கும் பொதுவானது என்ற பொருளிலே சமரசசன் மார்க்கம் என்று குறிப்பிடுகிறார். இக்கருத்தடங்கிய மற்றொரு பாட்டையும் பார்ப்போம். அருளுடையார் எல்லாரும் சமரசசன் மாக்கம் அடைந்தவரே! ஆதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச் செழித்திடுக! வாழ்க! எனச் செப்பியசற்குருவே! பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே! போதாந்தம் முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே! மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில் வயங்குநடத் தரசே ! என் மாலையும் ஏற் றருளே! இப்பாடலிலும் சன்மார்க்கம் என்பது சமரச சன்மார்க்கம் என்றே குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் சமரச சன்மார்க்க உணர்ச்சிக்கு அடிப்படை இரக்கம் ஒன்றேதான் என்பதை இவ்விரு பாடல்களாலும் அறியலாம். இவ்வுலகில் இன்பம் மக்கள்வாழப்பிறந்தவர்கள்; இன்பத்திலே இணைந்து நின்று மகிழப் பிறந்தவர்கள். எல்லா இன்பங்களையும் அடை வதற்கு எல்லா மக்களுக்கும் உரிமையுண்டு. மக்கள் மாண்டுபோகப் பிறக்கவில்லை. மாண்டுபோக வேண்டுமானால் ஏன் பிறக்க வேண்டும்? மக்கள் வாழ்க்கையே துன்பத்திற்கு ஊற்றாக இருப்பது என்பது கையாலாகாத பேச்சு; வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கையுள்ளவர்களின் சொல். இது இயற்கைக்கு மாறானது; உண்மைக்கு ஒவ்வாதது. இவ்வுலகிலே பிறந்த எல்லா மக்களும் துன்பத்தைத் துரத்தியடிக்க முடியும்; இன்பக் கடலிலே குதித்து நீந்திக் குதூகலமாக வாழமுடியும். இதுவே மக்கள்பால் அன்பு கொண்ட அறிஞர்கள் கருத்து. இவர்கள்தாம் மனிதாபி மானிகள். இக் கருத்துள்ளார்களின் முயற்சியினால்தான் உலகம் முன்னேற முடியும். மனித சக்தியிலே-மக்களுடைய அறிவாற்றல்களிலே நம்பிக்கையற்றவர் கள்தாம் வேறுவிதமாகச் சொல்லுவார்கள். நம்மால் ஒன்றும் நடக்காது; எல்லாம் இறைவன் செயல்; அவனன்றி அணுவும் அசையாது; ஒன்றை நினைக்க அது ஒழிந்திட்டு ஒன்றாகும் என்றெல்லாம் வாய்வேதாந்தம் பேசுவார்கள். எல்லாம் இறைவன் செயல் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை யுள்ளவர்களுங்கூட இதை அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். முயற்சி யுள்ளவர்களுக்குத்தான் இறைவனும் துணை செய்வான்; கைகட்டிக்கொண்டு, சும்மா காலாட்டிக் கொண்டிருப்பவைனக் கடவுளும் வெறுப்பார்; இதுவே கடவுள் நம்பிக்கையுள்ளவர்களின் கருத்துமாகும். இறந்தபின் அடையும் உலகம் ஒன்றுண்டு. அந்த உலகத்தில் தான் இன்பங்கள் அத்தனையையும் அடைய முடியும். இந்த உலகத்தில் என்னதான் செய்தாலும், எவ்வளவு தான் பாடு பட்டாலும் துன்பமும் தொல்லையும்தான் கிடைக்கும் பலன். இவ்வாறு பிடிவாதமாகப் பேசுவோர் சிலர் உண்டு. இதைப் பெரும்பாலான இறையன்பர்களும் அதாவது கடவுள் பக்தர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்; நாத்திகர்கள் அடியோடு மறுப்பார்கள்; பகுத்தறிவுவாதிகள் காது கொடுத்துக் கேட்கவே மாட்டார்கள். பரலோகம் சென்று அடையக்கூடிய செல்வத்தை வாழ்க் கையை இவ்வுலகிலேயே பெறமுடியும் என்பதிலே ஆத்திகர்க்கும் நாத்திகர்க்கும் கருத்துவேற்றுமையில்லை. இராமலிங்க அடிகள் நாத்திகர் அல்லர்; கடவுள் நம்பிக்கை யுள்ள பகுத்தறிவுவாதி. அவரும் இகலோகத்திலேயே, பரலோக இன்பங்களை அடைய முடியும் என்பதை எடுத்துக் காட்டு கின்றார். அகத்தே கறுத்துப் புறத்தேவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித் திட, அவரும் இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே, எனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்; அருளைப் பெற்றேனே. இந்தப் பாடல் மிகவும் உற்றுநோக்கி ஆராயவேண்டிய ஒரு உயர்ந்த பாடல். பொதுப் பணியிலே உண்மையாகத் தலை யிட்டிருக்கும் ஒவ்வொருவரும் உள்ளத்திலே எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய பாடல். இவ்வுலகில் உள்ளவர்கள் வெறும் ஆடம்பரக்காரர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றவர்கள். உள்ளத்தில் கறுத்தவர்கள்; கறை படிந்தவர்கள்; குற்றங்கள் நிறைந்தவர்கள், வெளியில் மட்டும் வெள்ளை சள்ளையாகக் காட்சியளிக்கும் வேடதாரிகள். இத்தகைய போலிகள் அனைவரையும் இவ்வுலகில் திருத்திச் சன்மார்க்க சங்கத்திலே சேர்ப்பேன் அவர்கள் இவ்வுலகிலேயே மறுவுலகம்-அதாவது பரலோகத்தில் உண்டென்று உரைக்கப் படும் நன்மைகளையெல்லாம் பெற்று மகிழ்வார்கள். இதைச் செய்வதற்காகவே நான் இவ்வுலகிலே பிறந்திருக் கின்றேன், இதற்காகவே என்னை இந்த யுகத்திலே இறைவன் படைத்தான். நானும் இந்த நோக்கத்துடனேயே அன்பையும் இரக்கத்தையும் துணையாகக் கொண்டு உழைக் கின்றேன். இதுவே மேலே காட்டியுள்ள செய்யுளின் பொருள். இவ்வுலகிலேயே பரலோக நன்மையை அனைவரும் அடைய முடியும் என்ற கருத்தைக் காணலாம் இச்செய்யுளிலே இவ்வுலக மக்களுடைய குற்றங்களைத் திருத்த முடியும். உள்ளத்திலே கறுத்த ஆடம்பரக்காரர்கள் தான் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றார்கள். அந்தத் துன்மார்க்கர்களை யெல்லாம் சன்மார்க்கர்களாக்கிவிட்டால் போதும்; எல்லா மக்களும் இகத்தே பரத்தைப் பெறலாம். இக்கருத்தையும் இச்செய்யுள் வலியுறுத்துகின்றது. பொதுமக்களின் நன்மைக்காக - வாழ்வுக்காக உழைக்கும் அனைவரும் இத்தகைய உறுதியுள்ளம் பெறவேண்டும். என் கடன் பணி செய்வது; மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழச் செய்யமுடியும்; அவர்களுடைய இன்பவாழ்வுகுத் தடைகளாக இருக்கும் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கும் வல்லமை எனக்குண்டு; பொதுமக்கள் ஆதரவின் மூலம் இத்தகைய வல்லமையைப் பெறுவேன் என்ற துணிவு ஒவ்வொருவருக்கும் வேண்டும். இத்துணிவே வெற்றி தரும். இந்த உயர்ந்த உண்மையை நமக்கு அறிவுறுத்தினார் அருட்பிரகாச வள்ளலார். அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்தவர்கள் திருந்துவது எப்படி? அவர்கள் சன்மார்க்கர்களாவது எவ்வாறு? என்பதை மற்றொரு செய்யுளிலே விளக்கமாகப் பாடியிருக்கின்றார். ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, என் உளத்தே நீதியுள் கலந்து நிறைந்தது; நானும் நித்தியன் ஆயினேன்; உலகீர்! rhâí« kjK« rkaK« jÉ®¤nj r¤âa R¤jr‹ kh®¡f åâÆš cik¤jh‹ ÃWîtš; c©ik És«ãnd‹; t«Änd!விரைந்தே. தான் அழியாத புகழுடம்பு பெற்றுச் சிரஞ்சீவியான வகையையும், மற்றவர்களும் இகத்தே பரத்தைப் பெறுவதற் கான வழியையும் இச்செய்யுளிலே சொல்லிவிட்டார். ஆதி, நடுவு, அந்தம் என்று மூன்றுமற்ற அழியாத இரக்கத் தோடு கூடிய பேரறிவு என் உள்ளத்தே புகுந்தது. அது நீதியோடு இணைந்து என் உள்ளமெல்லாம் நிரம்பிவிட்டது. ஆதலால் நான் நித்தியமும் எல்லோர் உள்ளத்திலும் அழியாமல் இயங்கு கின்றவனாக ஆனேன். உலகில் உள்ளவர்களே! சாதிகள், மதங்கள், மதங்களின் உட்பிரிவுகள் எல்லாவற்றிலிருந்தும் உங்களை விடுதலை செய்வேன். உண்மையான குற்றமற்ற சன்மார்க்க சங்கப் பெரு வீதியிலே உங்களை நடமாடவைப்பேன். இதுதான் இகத்திலே பரத்தைப் பெறும் மார்க்கம். நான் சொல்லுவது உண்மை. விரைந்து என்னிடம் வாருங்கள்! உலகத்தினரே ! எல்லோரும் வாருங்கள். சாதி மத சமய பேதமின்றிச் சன்மார்க்க நெறியிலே வாழ்வதுதான் இகத்திலே பரத்தைப் பெறுவதாகும். இதுவே வள்ளலாரின் கருத்து. சாதி மத சமய பேதமற்ற சமுதாயத்தை அமைக்கப் பாடுபடவேண்டியதே மனிதாபிமானிகளின் கடமை இத்தகைய சன்மார்க்கச் சமூகத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை யுடன் உழைக்க வேண்டும். இந்த நம்பிக்கையுடன் உறுதியாக உழைத்தால் வெற்றி கிடைப்பது திண்ணம். இக்கருத்து இராம லிங்கருடைய பாடல்களிலே வெளிப்படையாக அமைந்து கிடக்கின்றது. இவ்வுலகிலே இன்பம் இல்லை என்று கூறும் நயவஞ்சகரின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே வள்ளலார் நோக்கம். ஆருக்கும் அஞ்சாமல், உறுதியுடன் வஞ்சகர்களின் மாயத்திரைகளை அருந்தமிழ்ப் பாடல்களால் இவ்வாறு சுக்குநூறாகக் கிழித்தெறிகிறார் வள்ளலார். இயற்கையும் அறிவுமே இறைவன் கடவுள் என்பது எங்கேயோ ஒரு தனி உலகத்தில் வாழ் கின்றது; அதற்கும் நம்மைப்போல் கால், கை, மூக்கு, வாய் முதலிய உறுப்புகள் உண்டு; நம்மைப்போல் எண்ணம், செயல்கள் எல்லாம் உண்டு என்று நம்புகின்றனர் பலர். இதுமட்டும் அல்ல; கடவுள் மக்களைப்போலவே கோப தாபங்கள் உடையவர்; விருப்பு வெறுப்பு உள்ளவர்; பெண்டு பிள்ளைகள் உள்ளவர்; கட்டின மனைவியைத் தவிர வேறு பல பெண்களையும் காதலிக்கும் தன்மையுள்ளவர் என்று கதை கட்டி வைத்திருக்கின்றனர். மக்கள் எந்தெந்த நிலையில் வாழ்கின்றனரோ அந்தந்த நிலையிலே இறைவனையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை உண்மையென்று மெய்ப்பிக்கக் காரணம் காட்டு வோரும் உண்டு. உண்மையென்று ஒப்புக்கொள்ளாதவர் களுக்குப் பல தத்துவார்த்தங்கள் சொல்லி, அக்கதைகள் எல்லாம் வேண்டியதுதான் என்று வாதாடுவோரும் உண்டு. இந்த விவாதங்கள் எல்லாம் இப்பொழுது நமக்கு வேண்டாம். கடவுள் உண்டா இல்லையா? என்ற வாதத்தைத் தொடங்கினால், அது எரிந்த கட்சி, எரியாத கட்சி விவாதத் தைப்போல் வளர்ந்து கொண்டே போகும். மன்மதன் என்பவன் மக்களிடையிலே காம உணர்ச்சியை எழுப்புகின்றவன். அவன் மனைவி ரதிதேவி. அவன் பரமசிவன் செய்த தவத்தைக் கலைக்க முயன்றான், உடனே அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தார். மன்மதன் சாம்பலானான் என்பது புராணக் கதை. ரதிதேவி பரமசிவனிடம் தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்கும்படி வேண்டிக்கொண்டாள். பரமசிவனும் அவளுடைய வேண்டுகோளுக்கு இசைந்தார். உனக்கு மட்டும் மன்மதன் உருவாகக் காணப்படுவான்; மற்றவர்களின் கண்களுக்குக் காணப்படமாட்டான் என்று வரங்கொடுத்தார். இது கதையின் முடிவு. இக்கதையை வைத்துக்கொண்டு இரண்டு கட்சிகள் வாதம் புரியும். ஒரு கட்சி, மன்மதன் எரிந்துபோனது உண்மை என்று சொல்லும் மற்றொரு கட்சி, அவன் எரியவில்லை; உயிருடன் தான் இருக்கின்றான்; உருவத்தோடுதான் வாழ்கின்றான் என்று கூறும். இந்த இரண்டு கட்சியின் வாதமும் இன்னும் தீரவில்லை. இதுபோன்றதுதான் கடவுளைப்பற்றிய வாதமும் தீராத வாதம். ஆகையால், அந்த வாதத்தில் குதித்துப் புரளுவது வீண்காலம் போக்குவதாகும். இதுவே அறிஞர்கள் கருத்து. ஆகையால் நாமும் இதில் தலையிட வேண்டாம்; முடியாத வழக்கில் தலையிட்டுக்கொண்டு முட்டுப்படுவது வேண்டவே வேண்டாம். கடவுள் இல்லையென்று விவாதிப்போரும், உண்டு என்று நம்புவோரும் இரண்டு உண்மைகளை மறுப்பதில்லை; அப்படியே ஒப்புக்கொள்ளுகின்றனர். இயற்கை நிகழ்ச்சி ஒன்று; அறிவு ஒன்று. இந்த இரண்டையும் நாத்திகர், ஆத்திகர் அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். இயற்கை நிகழ்ச்சியென்பது நம்மால் உண்டாக்கப்படுவது அன்று; தானே தோன்றி இயங்குவது. அது யாரால் இயக்கப் படுவது என்பதும் நமக்குத் தெரியாது. இயற்கை நிகழ்ச்சி களிலே ஆபத்தை உண்டாக்கும் பயங்கரமான நிகழ்ச்சிகளும் உண்டு; மக்களுக்கு இன்பத்தை உண்டாக்கும் நல்ல நிகழ்ச்சிகளும் உண்டு. இந்த இயற்கை நிகழ்ச்சிகள் யாவும் கடவுளால் நடத்தப் படும் திருவிளையாடல்கள் என்று கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கூறுவர்; கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளுவ தில்லை. ஆனால் இயற்கையே கடவுள்தான் என்று சொன்னால் நாத்திகர்கள் அதை மறுப்பதில்லை. நாங்கள் இயற்கையென்று சொல்லுகின்றோம்; நீங்கள் கடவுள் என்று சொல்லுகிறீர்கள்; சொல்லிக் கொண்டு போங்கள். இயற்கையென்றாலும் கடவுள் என்றாலும் ஒனறுதான் என்றால் அதை எப்படி மறுப்பது? என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளும் நாத்திகர்கள் பலர் உண்டு. ஆகவே, இயற்கையென்பது நாத்திகராலும் ஆத்திகராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஒரு பொருளாகும். இது போலவே அறிவைப்பற்றியும் யாருக்கும் ஐயம் இல்லை; அறிவுக்குத் தனிவலிமை உண்டு அறிவினால் எதையும் சாதிக்கலாம். அறிவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகும். அறிவுள்ளவர்கள் தான் எல்லாம் வல்ல இறைவனுடைய சக்தியை அறிந்து துன்பமின்றி இன்புற்று வாழ்வதற்கு வழிகாண முடியும் என்பது கடவுள் பக்தர்களின் கொள்கை. அறிவுள்ளவனுக்குக் கடவுளும் வேண்டாம்; கடவுள் பிராத்தனையும் வேண்டாம். கையாலாகாதவன்தான் கடவுளையும் தலைவிதியையும் நம்பிக்கொண்டு கிடப்பான். அறிவுள்ள வனுக்கு எல்லாத் திறமையும் உண்டு. ஆதலால் அறிவைத் துணைக்கொண்டு அனைவரும் வாழவேண்டும் என்று கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூறுவார்கள். அறிவுதான் கடவுள்; அதுதான் ஆக்கமும் அழிக்கவும் வல்லது; அதைத்தான் கடவுள் என்று சொல்லுகிறோம் என்றால் இதை ஆத்திகரும் நாத்திகரும் மறக்கமாட்டார்கள். ஆகவே, இயற்கையையும், அறிவையும் உயர்ந்தவை என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. இயற்கை தான் கடவுள்; அறிவுதான் கடவுள் என்றால் அது அனைவருக்கும் உடன்பாடு. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் இயற்கை யையும் அறிவையுமே கடவுள் என்று கூறுகிறார் இறைவன் என்று பாடுகின்றார். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே! ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தன் ணீரே! உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே! bk‹fh‰¿š ÉisRfnk !சுகத்தில் உறும் பயனே! ஆடையிலே எனைமணந்த மணவாளா! பொதுவில் ஆடுகின்ற அரசே! என் அலங்கல் அணிந் தருளே! இது, படிப்பர் உள்ளத்தை உருக்கும் பண்புள்ள பாட்டு; எத்தனை தரம் படித்தாலும் பாடினாலும் இன்பம் சுரக்கும் இனிய பாட்டு. இந்தப் பாடலை இன்று எத்தனையோ பேர் பாடிப்பாடிப் பரவசம் அடைகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் இப்பாடலின் உண்மைப்பொருளை அறிந்தவர்கள் தானா என்பதில்தான் சந்தேகம். இறைவன் இயற்கையாகவும் அறிவாகவும் கூறுவதுதான் இப்பாடல். இயற்கைதான் இறைவன். அறிவு தான் இறைவன் என்று இப்பாடல் கூறுகின்றது என்றாலும் பொருந்தும். இப்பாடலின் இனிய பொருளைப் பார்ப்போம். வெயிற் கொடுமையால் உள்ளமும் உடலும் சோர்ந்த கோடைகாலத்திலே, ஓய்வாக உட்கார்ந்து இளைப்பாறும்படி கிடைத்த குளிர்ச்சியான தழைத்த மரமே! அந்தக் குளிர்ந்த மரந் தருகின்ற நல்ல நிழலே! அந்த நிழலிலே, அந்த மரத்திலிருந்து பழுத்து விழுந்த இனிய கனியே! நல்ல கோடை காலத்திலே, நீரோடையிலே ஊற்றெடுத்து ஓடிவருகின்ற இனிய சுவையுள்ள தண்ணீரே! எல்லோரும் விரும்புகின்ற அந்தத் தண்ணீரின் இடையிலே கண்ணுக்கு அழகாக மலர்ந்து அழகாக மலர்ந்து மூக்குக்கு நறுமணமும் மனத்திற்கு மகிழ்ச்சியும் தரும் வாசனையுள்ள மலரே! மேடையிலே உட்கார்ந்திருக்கின்றபோது, வேனிலின் வெப்பம் தீரும்படி வீசுகின்ற மென்மையான நறுமணமுள்ள காற்றே! அந்தக் காற்றினால் உள்ளத்திற்கும் உடம்புக்கும் உண்டா கின்ற இன்பமே! அந்த இன்பத்தால் உண்டாகும் பயனே! நான் விளையாடிக்கொண்டிருக்கும் பருவத்திலே என்னை மணந்துகொண்ட அறிவென்னும் தலைவனே! என் உள்ளமாகிய அம்பலத்தில் எப்பொழுதும் நடனமாடிக் கொண்டிருக்கும் என் தலைவனாகிய அறிவே! என்னுடைய தமிழ் மலர்மாலையை ஏற்று அணிந்து கொள்ளுவாயாக! இதுவே அந்த இனிய பாட்டில் அமைந்துள்ள பொருள். குளிர்ந்த நிழல் தரும் மரம்! அம்மரத்தின் நிழல், அம்மரத்திலே பழுத்தகனி, தாகந் தீர்க்கும் இனிய தண்ணீர், நறுமணம் வீசும் மலர், மெல்லிய தென்றற்காற்று, இளமைப் பருவத்திலே வளர்ந்து நிலைத்த அறிவு-இவையே இப்பாடலில் கூறப்பட்டவை. இந்த இயற்கை நிகழ்ச்சிகளும், அறிவும் எல்லோருக்கும் பொது. இவை இன்னாருக்குச் சொந்தம், இன்னாருக்குச் சொந்தம் அல்ல என்று கூறிவிட முடியாது. இப்பாடலிலிருந்து வள்ளலாரின் உள்ளக் கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை உணர்ந்து கொண்டால் எல்லா மக்களும் ஒரே குலமாய் இன்புற்று வாழ முடியும். இயற்கையும், இயற்கை இன்பமும் எல்லோர்க்கும் பொது, அறிவும் எல்லோர்க்கும் பொது; ஆயினும் ஒரு சிலர்தான் நல்ல நிழலும், நல்ல தண்ணீரும், நல்ல மேடை வீடும், நல்ல காற்றும், நல்ல இன்பமும் பெற்று வாழ்கின்றனர். பலருக்கு இந்த இயற்கை இன்பம் கிடைப்பதில்லை. எல்லோர்க்கும் இந்த இயற்கை இன்பம் கிடைக்கும்படி செய்யவேண்டும். இதுதான் இரக்கம் உள்ளவர்களின் கடமை, அறிவுள்ள வர்கள் ஆற்றவேண்டிய அருந்தொண்டு. அனைவரும் இதை அறிந்து இந்த நெறியிலே பணிசெய்ய முயன்றால் மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ முடியும்; துன்பக் கடலிலிருந்து கரையேறி இன்பவூர்தியிலே ஏறிக் கவலையற்றுத் திரிய முடியும். ஆராயும் அறிவு அறிவே மக்களுக்குச் செல்வம், அறிவின்மையே வறுமை, அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவுடையவர்க்கு ஆண்மையுண்டு; திறமையுண்டு; செல்வம் உண்டு; வாழ்க்கையில் வெற்றியுண்டு; இன்பம் உண்டு; எதிர்காலத்தை அறிந்து அதற் கேற்றவாறு நடந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அறிவிலார் என்னுடையரேனும் இலர். அறிவிலார்க்கு இடம், பொருள், ஏவல் எல்லாமிருந்தும் பயனில்லை. அவற்றை அநுபவிக்கும் வழியை அறியமாட்டார்கள்; அவர்களுக்குத் திறமையோ, வாழ்க்கையில் வெற்றியோ, இன்பமோ எதுவும் இருக்க முடியாது. இதனால்தான் அறிவு அனைவர்க்கும் வேண்டும்! வேண்டும்! என்று பறை சாற்றுகின்றனர். இக்கருத்தையே வள்ளுவரும் வலியுறுத்துகின்றார். அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என்ற குறளால் இதைக் காணலாம். அறிவிலே பொது அறிவு, சிறப்பறிவு என்று இரண்டு வகை. பொது அறிவு, பசி, தாகம், சரீர இன்பம் இவற்றை உணர்தல்; இவற்றைத் தேடுவதிலேயே வாழ்நாளைப் போக்கல். இவ்வறிவு மக்களினம், விலங்கினம், பறவையினம் எல்லா வற்றிற்கும் பொது. இவ்வறிவு உயிருள்ள - நடமாடும் -பிராணி களிடமெல்லாம் உண்டு. ஆனால் சிறப்பறிவு மக்களுக்கு மட்டிலும் சொந்தம். நல்லது இது, தீயது இது; செய்யத் தகுந்தது இது செய்யத் தகாதது இது; இதைச் செய்தால் இப்படி முடியும். என்றெல்லாம் சிந்தனை செய்து செயலில் இறங்கும் அறிவே சிறப்பறிவாகும். இந்தச் சிறப்பறிவு படைத்தவர்கள் சிலர்தான். அவர் களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது; இவ்வுலகம் நாகரிகம் பெற்றிருக்கிறது; இவ்வுலகம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடத்துக்கொண்டிருக்கிறது. எல்லா மக்களிடமும் அதாவது பெரும்பாலான மக்களிடம் சிறப்பறிவு இருந்தால் இவ்வுலகம் இன்னும் உயர்ந்த நிலையிலிருக்கும். இந்தச் சிறப்பறிவு - படிப்பினால் - புத்தகப் படிப்பினால் மட்டும் உண்டாவதில்லை. பிறர் சொல்லிக் கொடுப்பதனாலும் வருவதில்லை. தானே உணர்வதனால் வளர்வதாகும்; ஓதா விட்டாலும் உலகப் போக்கை உய்த்துணர்ந்து சிந்தனை செய்வ தனால் வருவதாகும். இது பற்றிய வள்ளலார் கருத்து கீழ் வருமாறு: ஓதாது உணர்ந்திட ஒளியளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெரும் சோதி. அருட்பெரும் சோதி என்பதற்கு இரக்கத்தோடு கூடிய பேரறிவு என்பதே பொருள். வௌச்சத்தில் எல்லாவற்றையும் காண முடியும். அதுவும் பெரிய வெளிச்சத்தால் காண முடியாத பொருள் எதுவும் இருக்க முடியாது. ஆதலால்தான் அறிவை ஒளியென்றும், ஜோதியென்றும், விளக்கென்றும் குறிப்பிடு கிறார் இராமலிங்கர். புத்தகங்களைப் படிக்காமலே உலக நிலைமையை உணர்ந்து கொள்ளும் படியான அறிவை எனக்களித்தாய், மற்றும் செய்யக்கூடிய செயல்களுக் கெல்லாம் ஆதரவாகவும் இருக்கின்றாய். இரக்கத்தோடு கூடிய பேரறிவாகிய நீ தான் இந்த நிலையை எனக்களித்தாய்! என்பதே மேலே காட்டிய அடி களின் பொருள். இந்தச் சிறப்பறிவை அவர் பாராட்டும் முறையைப் பாருங்கள்:- ஏடகத்தே எழுதாத மறைகள் எல்லாம் களித்தே என் உள்ளத்தே எழுதுவித்த என் உரிமைப் பதியே! என்று உண்மையை வெளியிடுகிறார். ஏடுகளிலே - அதாவது சாத்திரங்களிலே - வேதபுராண இதிகாசங்களிலே - எழுதப் படாத இரகசியங்களையெல்லாம் என் உள்ளத்தில் களிப்போடு எழுதச் செய்தாய்; எனக்கே உரிமையாக என் உள்ளத்தில் வளர்ந்திருக்கின்ற அறிவே ! இதுவே இவ் வடிகளின் பொருள். ஆகவே படிப்பதனால் மட்டும் உலக நிகழ்ச்சியை மக்களின் மனோ நிலைமையை - உலகம் மாறிக்கொண்டு வரும் போக்கை-உணர்ந்துகொள்ள முடியாது. சிந்தனை சக்தியால் தான் உலகப்போக்கை உணர்ந்துகொள்ள முடியும் என்று முழக்கஞ் செய்கிறார். இவ்வுலகில் பேரறிஞராகக் கருதப்படுகிறவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையிலே தேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றனர். சிலர் அரசியல் துறையிலே வல்லுநர்கள்; சிலர் பொருளாதாரத் துறையிலே தேர்ந்தவர்கள்; சிலர் கதைகள்-கட்டுரைகள் எழுதுவதிலே தேர்ந்தவர்கள்; சிலர் கற்பனைகள் நிறைந்த கவிதைகள் புனைவதிலே அறிஞர்கள்; சிலர் வைத்தியத் துறையிலே வல்லவர்கள்; சிலர் சிறப்த் துறை யிலே சிறந்தவர்கள்; சிலர் விஞ்ஞானத் துறையிலே வித்தகர்கள். இவ்வாறு பலர் தங்கள் தங்கள் துறையிலே இணையற்றவர் களாக விளங்குகின்றனர். ஆயினும் இவர்கள் எல்லோரும் நம் தமிழ்நாட்டுப் பெருந்தகையார் இராமலிங்கம் அவர்கள் கருத்துப் படிபேரறிவு படைத்தவர்கள் அல்லர். இவர்கள் இரக்கத்தோடு கூடிய பேரறிவு படைத்தவர்களாக இருந்தால் உலகினரை ஒன்று சேர்க்க உழைப்பர்; உலகத் தினரை ஒரே ஒரே சமுதாயமாக்க உழைப்பர். உலக ஒற்றுமையைக் கருதுவோர் இக் கூட்டத்தினருள் எவரேனும் இருந்தால் அவர்கள் அருட்பெருஞ்சோதியைக் கண்டவர்கள் என்பதில ஐயமில்லை. இந்த இரக்கத்தோடு கூடிய பேரறிவு-அதாவது அருட் பெருஞ்சோதியை - யார் பெறமுடியும்? சாதிப்பற்றை விட்டவர்கள் - இனப்பற்றை ஒழித்தவர்கள் - சமயப்பற்றை மறந்தவர்கள்-தேசப்பற்றைக்கூடத் துறந்தவர்கள் தான் பெற முடியும். தன் சாதியிலே மட்டிலும் பற்றுள்ளவர்கள் மற்றச் சாதியினரிடம அன்புகாட்ட இடமில்லை; தன் இனத்தைப் பெரிதெனக் கூறுபவர்கள் மற்ற இனத்தாரிடம் வெறுப்புக் காட்டுவர்; தன் சமயத்திலே மட்டும் வெறிகொண்டவர்கள் மற்றச் சமயத்தவர் களை வெறுப்பார்கள்; தன் தேசம் மட்டும் முன்னேற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை படைத்த வர்கள் மற்ற நாட்டினரை அடக்கியாள முயல்வார்கள். இவைகளையெலலாம் நாம் கண் கூடாகக் காணுகின்றோம். இத்தகைய பற்றுடையவர்களிடம் இரக்கம் ஏது? பேரறிவு ஏது? இவைகளை விட்டவர்கள் உள்ளத்தில் தான் இரக்கத்துடன் கூடிய பேரறிவு தோன்றும். இக்கருத்தை, சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெரும் சோதி என்று விளக்கியிருக்கிறார் இராமலிங்கர். சிந்தனாசக்தி படைத்தவர்களே இவ்வுலகத்திலே துன்ப மில்லாமல் வாழமுடியும். சிந்தனாசக்தியின்மூலம் வளர்ந்த பகுத்தறிவின் வழியில் நடப்பவர்களே உலகத்தில் பயன்பெற்று வாழமுடியும். உலக ஒற்றுமைக்கு - மக்கள் ஒரே குலமாக வாழ்வதற்கு-முட்டுக்கட்டைகளாக இருக்கின்ற சாதி, மத, பொருளாதராரச் சண்டைகளைப் பகுத்தறிவுவாதிகளே ஒழிக்க முடியும். பகுத்தறிவின் மூலம் துன்பமில்லாமல் வாழக்கூடிய வழியை அறிந்தவர்கள் தான் இவ்வுலகில் எண்ணிய நன்மை களையெல்லாம் பெற்று வாழமுடியும். பகுத்தறிவுதான் எண்ணி யவற்றையெல்லாம் கொடுக்கும் இயல்புடையது. இவ்வாறு வீரமுழக்கம் செய்கிறார் வள்ளலார். எனைத்தும் துன்பிலா இயல்பளித்து, எண்ணிய அனைத்தும் தரும்சபை அருட்பெரும் சோதி. ஆதலால் பகுத்தறிவையே வாழ்க்கைக் கருவியாக உலக மக்கள் கொள்ளவேண்டும் என்பதே நமது தமிழ் வள்ளலாரின் ஆவல். இந்த நிலை உலகில் என்று ஏற்படுகிறதோ அன்றே உலகில் ஒற்றுமை நிலவும். உலக மக்கள் எண்ணிய இன்பங்களை யெல்லாம் பெற்று இன்புறுவர் என்பதும் உறுதி. வெறும் பகுத்தறிவு மட்டிலும் போதாது. அது இரக்கத்தோடு கூடிய பகுத்தறிவாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. வள்ளலாரின் இக்கருத்தே பண்டைத் தமிழரின் கருத் தாகும். எழுத்துப் புத்தகங்களைக் கற்றல் ஒரு தொழில்தான். ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் துறையில் தேர்ந்திருப்பது போல், சிலர், கவிகளை - காவியங்களைக் கற்றுத் தேர்ந்திருக் கின்றனர். கல்வி, படிப்பு, கற்றல், படித்தல், ஓதல் முதலிய கல்வியைக் குறிக்கும் சொற்களெல்லாம் தொழிற் பெயர்களாக இருக்கின்றன. இதைக்கொண்டே கல்வியும் ஒரு தொழில்தான் என்பதைக் காணலாம். செந்தாப் புலவராகிய திருவள்ளளுவர் கல்வி வேறு, அறிவு வேறு என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்:- நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை யறிவே மிகும் என்பது வள்ளுவர் வாக்கு. எவ்வளவு படித்தருந்தாலும் - எவ்வளவு நுட்பமான பொருள்களைக் கூறும் நூல்களைக் கற்றிருந்தாலும் அது அறிவாகாது. ஒருவனுடைய இயற்கை யறிவே எக்காரியத்திலும் முன்னிற்கும், இதுவே குறளின் கருத்து. அந்த இயற்கை அறிவுதான் சிந்தனாசக்தியென்பது. எந்தப் பொருளைக் கண்டாலும், அந்தப் பொருளின் தன்மையை ஆராய்ந்து அறியவேண்டும். எந்தச் செய்தியைக் கேட்டாலும் அந்தச் செய்தியின் உண்மையைக் கண்டுபிடிக்க முயலவேண்டும். இதுவே அறிவு வளர்வதற்கு வழி. இவ்வழியில் தங்கள் அறிவைத் தீட்டிக் கொண்டவர்களே நுண்ணறிவாளர்கள். உலக மக்கள் எல்லோரும் சிந்தனா சக்தியுடையவர்களாகி நுண்ணறிவு பெற்று விளங்குவார்களாயின் உலகம் ஒன்று படும்; எல்லோரும் சமாதானமாக வாழ்வர்; வீண் சண்டை சச்சரவுகள் நடைபெற வழியில்லை. இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந் திருந்தனர். இவ்வுண்மை யைப் பண்டைத் தமிழ்நூல்களில் காணலாம். தமிழரின் இச்சீரிய கொள்கையையே நமது புரட்சிப் புலவரும், எல்லோருக்கும் விளங்க இனிய பாடல்களின் மூலம் விளக்கியுள்ளார். அறிவுச் சுடர் மக்களுக்கு அறிவு வேண்டும். எல்லா மக்களுக்கும் அறிவு வேண்டும். அறிவில்லாதவர்கள் யாரும் இருத்தல் கூடாது. மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக இருந்தால்தான் சமூகத்திலே அமைதி நிலவும். கொலை, கொள்ளை, வஞ்சகம், சூது முதலிய தீமைகள் தலைகாட்டமாட்டா. ஆதலால் நாடெங்கும் மக்களின் அறிவை வளர்க்கக்கூடிய சாதனங்களை அமைக்க வேண்டும். இது அரசாங்கத்தின் முதற்கடமை. குடிமக்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அரசும் ஆடி அசைந்து விழுந்து விடாமல் நன்றாக இயங்கும். ஆம்; இது உண்மை. மக்கள் அறிவுடையவர்கள் என்பதற்கு அடையாளம் என்ன? அறிவு வளர்ந்திருப்பதன் பயன் என்ன? அறிவு வளர்ந்திருந்தால் நாடு எப்படியிருக்கும்? மக்கள் சமூகம் எப்படியிருக்கும்? இவைகளைச் சிந்திப்பது பகுத்தறிவுடையார் கடமை. நமது வள்ளலார் அறிவின் பயன் இதுவென விளக்கி யிருக்கின்றார். துன்புறும் உயிர்களிடம் இரக்கம் காட்டுவதே அறிவின் பயன். மனித சமூகம் எப்பொழுதும் தனித்து வாழ முடியாது. பல மக்கள் பலதிறப்பட்ட வேலைகளைச் செய் கின்றனர். பலதிறப்பட்ட தொழில்களே உலகை உருவாக்கி வருகின்றன; மக்களை வாழும்படி செய்துவருகின்றன; மக்கள் சமூகத்தை மேலும் மேலும் நாகரிகம் அடையச் செய்து வருகின்றன. இந்த உணமையை உணராதவர்கள், மதம், சமூகம், வகுப்பு, இனம் என்ற பேதம் பாராட்டுவர். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொடுமைப்படுத்தும் நிலை மாறவேண்டும். இந்த மாற்றம் எப்பொழுது மனித சமூகத்தில் ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் அறிவு பரிமளிப்பதாக எண்ண முடியும். மனித சமூகத்தை ஒன்றாக நினைக்காத அறிவு அறிவல்ல; அது அறியாமைதான். அருள் அறிவு, ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருள் அறிவு என்றே வகுத்தமெய்ச் சிவமே இவ்வடிகளை ஊன்றி நோக்குங்கள்; எது அறிவு, எது அறிவின்மை என்பது புலப்படும். இரக்கத்தோடு கூடிய அறிவு ஒன்றுதான் அறிவு. மற்ற-அறிவு என்று சொல்லப்படுவன வெல்லாம் அறிவல்ல; அறியாமைதான். அறிவின் பயனை அறிந்தால் உலகம் தூங்காது; சோம்பிக் கிடக்காது. உலக மக்கள் உண்மை உணர்வார்கள். ஏமாந்திருக்கும் மக்கள் கூட்டம் விழித்தெழும். சுரண்டுவோர்க்கு இடங்கொடுக்க மாட்டார்கள். எல்லா மக்களும் ஏக்கம் இன்றி வாழ்வர். தூக்கம் தொலைந்தது, சூரியன் தோன்றினன், ஏக்கம் தொலைத்தேன். அறிவுபெற்ற ஒவ்வொரு மகனும் சொல்லிக்கொள்ள வேண்டியது இது: என்னுடைய உறக்கம் ஒழிந்தது; விழிப்படைந்தேன்; அறிவுச் சூரியன் உதயமாகிவிட்டான்; அவனுடைய வெளிச்சத் தால் என்னை அடிமையாக்கிய தளைகளைக் கண்டறிந்தேன்; அவைகளை அறுத்தெறிந்தேன்; துன்பத்தைக் தொலைத்தேன்; விடுதலை பெற்றேன்; இன்பத்தை நுகர்கின்றேன் என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும். கொடுமை செய்தல் கூடாது; எல்லார்க்கும் நலம் செய்தல் வேண்டும் என்று பேசாதார் இல்லை. ஆனால், செய்கையோ வேறு. சீவகாருண்யம் என்று சொல்லிக்கொண்டு எறும்புக்கு அரிசி போடுகிறார்கள்; காக்கைக்குச் சோறு போடுகின்றனர்; பாம்புக்குப் பால் வார்க்கின்றனர்; சோம்பித் திரியும் பிச்சைக் காரர்களுக்குச் சோறு போடுகின்றனர். ஆனால், அல்லும் பகலும் உழைக்கும் மக்களிடம் இரக்கம் காட்டுவதில்லை. நாள் முழுதும் வயல்களிலும், தோட்டங்களிலும் உழைக்கின்றனர்; பண்டங் களைப் பெருக்குகின்றனர். அவர்கள் உழைப்பின்றேல் உலகம் இயங்காது. இத்தகைய உழைப்பாளிகளிடம் இரக்கம் காட்டா தவர்கள் எவ்வளவோ பேர். ஆனால் அவர்கள் வெளி ஆடம் பரத்திற்காகச் செய்யும் தருமம் பல. அவைகள் தருமம் ஆகுமா? மக்கள் மனத்தில் உள்ள மயக்கம் ஒழியவேண்டும். மயக்கத்தை உண்டாக்கக்கூடிய கருவிகள் ஒழியவேண்டும். மது மயக்கமாவது சிலமணிநேரம் இருந்து பிறகு மறைந்துவிடும்; மடமையால் ஏற்பட்ட மயக்கம் எளிதில் தெளியாது. மடமைக்குக் காரணமாக இருக்கும் கருவிகள் பல. இக்கருவிகள் மதத்தின் பேரால் - சட்டங்களின் பெயரால்- சாத்திரங்களின் பெயரால் பழக்கவழக்கங்களின் பெயரால் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஒழிந்தால்தான் உண்மை ஞானம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்; மக்கள் அனைவரும் இன்பத்தை அடைவார்கள். வெவ்வினைக் காடெலாம் வேரோடு வெந்தது; வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது; செவ்விய ஞானம் சிறப்புற வந்தது; சித்திகள் யாவும் செய்திடத் தந்தது, இவ்வுலகில், கொடுமைகள்-தீவினைகள்-காடுபோல் மண்டிக் கிடந்தன; அந்தக் கொடுவினைக் காடுகள் இன்று வேரோடு வெந்து சாம்பலாயின. கொடிய பெரிய வஞ்சனைகள் வளர்ந்து கொண்டிருந்தன; அந்த வஞ்சனைகள் இனி வளர்ச்சி யடைய முடியாது அழிந்தன. இப்பொழுது உண்மையான அறிவு வந்து விட்டது. அதுவும் நன்றாக-அழிக்க முடியாததாக உறுதியாக வளர்ந்துவிட்டது. நினைக்கும் செயல்களை யெல்லாம் செய்து வெற்றியடையும் வல்லமையைத் தந்து விட்டது இது வள்ளலார் வாய்மொழி. இதுவே அறிவின் பயன். முதலிலே மனதிலே இரக்கம் ; இரண்டாவது சோம்பல் இன்மை; மூன்றாவது கொடுமைகளை அழிப்பது; நான்காவது மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; ஐந்தாவது உண்மையான அறிவுடன் எண்ணிய இன்பங்களைப் பெற்று எல்லா மக்களும் ஒன்றுபட்டு இனிது வாழ்தல். இவையே அறிவின் பயன். இத்தகைய அறிவின் பயனை மனித சமூகம் பெறவேண்டும் என்பதே வள்ளலார் உள்ளம். தன்னைப்பற்றி தன்னையறிந்து இன்பம்உற வெண்ணிலாவே-ஒரு தந்திரம்நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே இது இராமலிங்கர் பாட்டு. தன்னை அறிதல் என்பதை வேதாந்தத்தில் மிக வற்புறுத்திச் சொல்லுவார்கள். தன்னை அறிந்து கொண்டவனே ஜீவன்முக்தனாவான் என்பது வேதாந்த தத்துவம். தன்னை இன்னார் என்று அறிந்து கொண்ட மனிதன் உலக பந்தங்களை உதறித் தள்ளுவான். உயர்ந்த ஞானமுடைய வனாய் உய்யும் வழி அறிவான். ஆகையால் ஒவ்வொருவனும் தன்னை அறிந்து கொள்ள முயல்வது - தன்னை அறிந்து கொள்வது - அவசியம். தான் வேறல்ல; பிரமத்தின் பிரிவு; தானும் பிரமமும் ஒன்று; என்று உணர்ந்து கொண்டவன் வேதாந்தி. இதை வேதாந்த பாஷையில் சிவோகம் பாவனை என்பர். இந்த வேதாந்தக் கருத்தில் ஒரு உண்மையிருக்கிறது. தனக்கு எல்லாச் சக்தியும் உண்டு; உலகை மாற்றவும், திருத்தவும், குழப்பத்தில் ஆழ்த்தவும் மூலம் ஏற்படுமாயின் அது வரவேற்கத் தக்கது. இந்த உணர்ச்சி பெற்றவன் உலகை மறக்க மாட்டான்; உலகைத் துறக்கமாட்டான்; தன்னலத்தை மாத்திரம் கூறிக் கொண்டு மூலையிலே கண்மூடி உட்கார்ந்திருக்க மாட்டான். உலகம் ஒன்றுபட, மக்கள் நலம்பெற, விவேகானந்தர் போல, ராமதீர்த்தர்போல, புத்தர்பேல, லெனின்போல உழைப்பான். ஆனால் நமது வள்ளலார் கூறிய தன்னை யறிதல் என்பதும் இதே கருத்தை ஒட்டியதுதான். அவர் உலகப்போக்கை உலக நிலைமையை உற்று நோக்கி, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை நிலையை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்; அப்படி அறிந்துகொண்டால்தான் உலகத்தில் மக்களுக்குள் அன்பு வளரும்; சமாதானம் நிலைக்கும் என்று கூறுகின்றார். உலகில் இன்றுள்ள உயர்வு-தாழ்வு, ஆண்டாள்-அடிமை இவைகள் இரண்டு காரணங்களால்தான் நிலைத்திருக்கின்றன. ஒன்று பணம், பணமில்லாமை-மற்றொன்று பிறப்பினால் உயர்வு தாழ்வு. இந்த இரண்டும் அழிந்துவிட்டால் உலகில் அடிமை வாழ்வுக்கு வழியில்லை. அன்பும் அமைதியும் வேரோடித் தழைக்கும். இந்த இரண்டும் நீங்குவதற்கு வழியென்ன? ஒவ்வொரு வரும் தன்னையும், தன் செய்கையையும், தன் செய்கையின் பலனையும், தான் அடையும் நன்மையையும் உணர்ந்து கொள்வது தான். பணம்படைத்த ஒருவன் முதலில் தன்னைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். தனக்குப் பணம் எப்படிவந்தது? தன் உழைப்பு எவ்வளவு? தனக்காக மற்றவர்கள் உழைக்கும் உழைப்பு எவ்வளவு? மற்றவர்களின் உதவியில்லாவிட்டால்-கூட்டுறவு இல்லாவிட்டால்-மற்றவர்கள் உழைப்பின் பயனால் உண்டாகும் செல்வத்தில் பெரும் பாகத்தைத்தான் கவர்ந்து கொள்ளா விட்டால் - தான் செல்வமுடையவனாக வாழ முடியுமா? என்று சிந்திக்க வேண்டும். நடுநிலைமையோடு, நல்ல இரக்க சிந்தையோடு சிந்திக்கும் ஒருவனுக்கு உண்மை தெரியாமல் போகாது. மற்றவர்களின் உழைப்பே தனது செல்வம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அவன் உழைப்பாளரை, வறியவரை நசுக்க, கொடுமைக்குள்ளாக்கத் துணியமாட்டான்; அன்பு காட்டுவான். இதைப்போலவே வறியவனாக வாழும் ஒருவனும் தன்னைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். நம்முடைய உழைப்பு எவ்வளவு? அனால் கிடைக்கும் பயன் எவ்வளவு? அந்தப் பயனில் நமக்குக் கிடைப்பது எத்தனையில் ஒரு பாகம்? நம்முடைய உழைப்பின் பயனில் மற்றவர் சுரண்டிக்கொள்வது எத்தனை பாகம்? நாம் ஏன் இப்படிச் சுரண்டப்படுகிறோம்? என்று சிந்தித்தால் அவனுக்கு உண்மை தோன்றும்; உணர்ச்சியுண்டாகும். இவ்வுணர்ச்சியின் பயனாக, பணக்காரனும், வறியவனும் சமாதானம் செய்துகொள்ளுவர். அவர்களுக்குள் ஒற்றுமை நிலவும். எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற்று இன்புறுவர். இதன்மூலம் பணத்தால் நிலவும் உயர்வு தாழ்வு ஒழியும். இரண்டாவது, பிறப்பினால் நிலவும் உயர்வு தாழ்வு. இது ஆண்-பெண் அடிமையிலேயே தொடங்குகிறது. ஆண் தன்னை உயர்வாகக் கருதிக் கொள்ளுகிறான். பெண்ணைப் பேதை யாக்கி இழிவுசெய்கின்றான். இந்த உயர்வு தாழ்வு ஒழிந்தால், மற்றைய உயர்வுதாழ்வு ஒரு சிறிதும் நிலைக்காது. ஆண்மகன் தன்னைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் பெண்ணில் லாமல் தான் பிறந்திருக்க முடியுமா? பெண்ணில்லாமல் வாழ்க்கையிலே இன்புற முடியுமா? அறிவிலோ, ஆற்றலிலோ, செயல்கள் செய்வதிலோ அவர்களுக்கும் நமக்கும் என்ன வேற்றுமை? என்று சிந்திக்க வேண்டும். ஆண்கள் செய்யும் தொழில்கள் அத்தனையும் செய்யும் திறமை பெண்களுக்கும் உண்டு என்பதை ஆண்கள் அறிய வேண்டும். இச்சிந்தனையின் மூலம் பெண்களை இழிவாக நினைக்கும் குணம் ஒழியும். பெண்களிடம் சமத்துவம் பாராட்டுவர். இதுபோலவே பெண்களும் நாம் ஏன் அடிமையாக நடத்தப்படுகிறோம்? நாம் ஆண்களைவிட எந்தக் காரியத்தைக் குறைவாகச் செய்கிறோம்? நாம் ஏன் அடிமையாக வாழ வேண்டும்? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இச்சிந்தனையில் ஈடுபட்ட பெண்கள் அடிமையாக வாழமாட்டார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இத்தகைய சிந்தனை வளருமாயின் இருபாலாரும் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்வர், அவர்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் வளரும் அடிமையும், அடக்குமுறையும் தலைகாட்டாமல் அழியும். இதன்மூலம் பிறவியில் உயர்வு தாழ்வு பாராட்டப்படும். ஆண்-பெண் அடிமை மனப்பான்மை அழியும். இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மைப்பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ளுவதையே தன்னை அறிதல் என்று இராம லிங்கர் கூறுகின்றார். இத்தகைய தன்னுணர்ச்சியில் அவர் தலைசிறந்தவர். இத்தன்னுணர்ச்சியே அவரை உலகம் ஒன்று படுவதற்கான உயர்ந்த பல கொள்கைகளை அஞ்சாது எடுத் துரைக்கத் தூண்டிற்று. மற்றவர்கள் யாரும் கூறாத அரசியல், பொருளாதார, மத, சமூகச் சீர்திருத்தக் கொள்கைளை அவர் உலகத்துக்குக் கூறிச் சென்றார். அன்னையே! அப்பா! திருச்சிற்றம் பலத்துஎன் ஐயனே! இவ்வுல கதிலே பொன்னையே உடையார், வறியவர், மடவார், புகலும் ஆடவர் இவர்களுக்குள் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈது எனவே சொன்னபோது எல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீ அறி யாயோ! இவ்வுலகில் பொன்படைத்த பணக்காரர்கள், ஏழைகள், பெண்கள் தம்மை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆண்கள், இவர்களுக்கு ஒரு நோய் உண்டு; இந்த நோய் காரணமாகவே இவர்களெல்லாம் வாழ்க்கையில் ஒற்றுமை யடையவில்லை; அன்பு கொள்ளவில்லை; இன்பம் அடைய வில்லை. வாழ்க்கைத் துன்பத்தால் உயிர் துடிக்கின்றார்கள். அந்த நோய் தன்னை அறியாமை என்னும் நோய்தான், இது வள்ளலார் தெளிவாகக் கூறியிருக்கும் கருத்து. தம்மைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். தம்மைப்பற்றித் தெரிந்துகொள்ளாதவர்களே அடிக்கடி தவறு செய்வார்கள்; வாழ்க்கையில் துன்பம் அடை வார்கள்; செயலில் தோல்வியடைவார்கள். இந்த உண்மையை நாம் யாரிடத்திலும் காணலாம். ஆகவே, தன்னைப்பற்றி உணர்ந்துகொள்ளும் அறிவு வேண்டும்; எவருக்கும் இது இன்றி யமையாத அறிவாகும். போர் வெறி போர்க் கொடுமையைப்பற்றி இந்த நாளில் நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இதைப்பற்றி இன்று உலக மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்கின்றனர். உணர்ந்திருப்பது மட்டும் அல்ல; அக்கொடுமையை அனுபவித்தும் விட்டனர். ஆதலால் இன்னும் ஒரு போர் வேண்டுமா என்று உலக மக்களைக் கேட்டால் எல்லோரும் வேண்டாம் என்றுதான் ஒரே குரலில் கூறுவார்கள். அவ்வளவுதூரம் உலகமக்களை ஆட்டிவைத்து விட்டது சென்ற போர். பண்டைக்காலத்தில் ஒரு அரசன் தன் குடிகளைக் கொடு மைப்படுத்துவானாயின் அதை மற்றொரு அரசன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனே அக்கொடுங் கோல் அரசன் மீது படையெடுத்துச் சென்று, அவனை ஒழித்து, அந்த நாட்டிலே நல்ல அரசு நபெறும்படி செய்யவேண்டும்; துன்பமின்றி அந்நாட்டுக் குடிகள் வாழும்படி செய்ய வேண்டும். இது பழங்காலத்திய அரசநீதி. இக்காலத்திலோ, ஒரு நாட்டின் உள்நாட்டு ஆட்சியில் மற்றொரு அரசாங்கம் தலையிடக் கூடாது என்று கூறப்படு கின்றது. இன்றைய ஐக்கிய நாடுகள் சங்கத்தில் இதை முக்கிய கொள்கையாகவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். பண்டைய அரசநீதி, கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை நிறுவப் பிற நாட்டின்மீது படையெடுக்கலாம் என்ற கொள்கையை ஆதரித்துவந்துள்ளது. மக்கள் சார்பிலே நின்று நீதியை நினைத்துப் பார்தால் இது மிகமிகச் சிறந்தது என்பதில் ஐயமில்லை. இந்தப் பண்டைய நீதி இந்த நாளில் நேரடியாக நடைமுறைக்கு வரமுடியாது. ஆயினும் நாளடைவில் -இனி எதிர்காலத்தில் கொடுமை செய்யும் அரசாங்கத்தின் உள்நாட்டு ஆட்சியில் ஐ.நா. சங்கமாகிய சர்வதேச சங்கம் தலையிட்டு முடிவு செய்துதான் ஆகவேண்டும். இத்தகைய நீதி வரத்தான் போகின்றது. அப்போதுதான் உலகில் ஒற்றுமை நிலவமுடியும். பண்டைக்காலத்தில் நாடு பிடிக்கும் ஆசையுடன் போர்க் களத்தில் புகக்கூடாது என்று இருந்தாலும், மண்ணாசை கொண்டோர் அதை மதிப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி நாடுபிடிக்கும் ஆசையுடன் தான் போர் செய்து வந்தார்கள். அரசர்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்ட-தங்கள் நாட்டின் பரப்பை விரிவாக்கப் போர் செய்தார்கள். அந்தப் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வீரர்களானார்கள்; சக்கர வர்த்திகளானார்கள்; அவர்களுடைய சொந்த சுகபோகங் களை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இவைகளையே நாம் பழைய சரித்திரங்களில் இதிகாசங்களில், புராணங்களில் காணுகின்றோம். ஆனால் அந்தப் போர்களினால் அன்று துன்புற்றவர்கள் ஒரு குற்றமும் அறியாத பாமர மக்கள்தான். வெற்றிபெற்ற படையினர் தோல்வியடைந்த நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தனர்; நகரங்களைத் தீக்கிரையாக்கினர்: பயிர் பச்சைகளை நாசமாக்கினர். கால்நடைகளைக் கவர்ந்தனர்; பெண்களையும் சிறைபிடித்தனர். இவைகள் பழையகால தருமயுத்தத்திலேயே நடந்த அக்கிரமங்கள். தோல்வியுற்ற நாடு துன்புறுவது போல வெற்றிபெற்ற நாடுகளில் உள்ள குடிமக்களும் தங்கள் உழைப்பின் பயனை யுத்தச் செலவுக்காக அரசனுக்குக் கொடுத்து அவதியுற்றனர். இந்தக் காலத்தில்-இயந்திரத் தொழில்கள் மிகுந்துள்ள இந்த காலத்தில்-போர் உண்டாவதற்குக் காரணம் பேராசை பிடித்த முதலாளிகளின் தூண்டுதல்; முதலாளிகளின் போட்டி. முதலாளிகள் தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பண்டங்களை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்கவே போருக்கு ஊக்கம் ஊட்டுகின்றனர். இவ்வுண்மை, முதல் மகாயுத் தத்தினாலும் வெளியாயிற்று; இரண்டாவது மகாயுத்தத்தினாலும் வெளிப்பட்டது. ஆனால் ஒரு சிலருடைய தந்நலத்திற்காகச் செய்யப்படும் இந்த யுத்தத்தினால், உலக மக்களுக்கு உண்டாகும் துன்பத்தை யார்தான் அளவிட்டுக் கூறமுடியும்? உணவுப்பொருளை விளைவிக்கும் உழவர்களுக்கு சாப்பாடு கிடைப்பதில்லை; அவர்களுடைய தானியங்கள் போர்முனைக்குச் செல்லுகின்றன; உடைகளை நெய்யும் நெசவாளர்களுக்குத் துணி கிடைப்ப தில்லை; அவர்கள் நெய்யும் உடைகள் போர்முனைக்கு. மற்றும் வாழ்க்கைக்காண பல பண்டங்களையும், உற்பத்திசெய்யும் தொழிலாளர்களுக்கு அப்பண்டங்கள் கிடைப்பதில்லை; அவைகளெல்லாம் போர்முனைக்குச் செல்லும்போது அவை முற்றும் அங்குபோய்ச் சேர்வதில்லை. கொள்ளை லாபக்காரர் களிடம் சிக்குவது, வழியில் எதிரிகளால் சேதமடைவது, நீராலும், நெருப்பாலும் அழிந்துபோவது; இவைபோக மீதம்தான் போர் முனைக்குப் போகின்றன. உயிர் துறப்பதும், போர்முனையில் வீரர்கள்மாத்திரம் அல்ல; உழவர்கள், தொழிலாளர்கள், நடுத்தர வகுப்பினர் அனைவரும் உயிர் துறக்கின்றனர். போரினால் எவ்வளவு செல்வம் பாழ்! எவ்வளவு உழைப்பு பாழ்! எவ்வளவு உயர்கள் பாழ்! போர் நின்ற பின்பும் பல ஆண்டுகள் மக்கள் பஞ்சத்தினால், நோயால் துன்புறுவதைக் காண்கிறோம். சரித்திரங்களிலும் இவ்வுண்மையைக் கண்டோம். இதனாலேயே உலக அறிவாளிகள் போரை வெறுக் கின்றனர். ஒவ்வொரு போர் முடிந்த பின்பும், இனி உலகில் போர் நிகழாதவாறு தடுக்கவேண்டும் என்று அறிவாளிகள் முயன்றனர்; முயல்கின்றனர். போர் உண்டாவதற்குக் காரணமாயிருப்பவர்கள் உயிர்க்கொலைபுரியும் வெறியர்கள்; கடைப்பட்ட மக்களிலும் கடைப்பட்ட கயவர்கள்! போர்புரிவதிலே வெறிகொண்டவர் கள், புகழ் மீது ஆசைகொண்டவர்கள். இத்தகைய கயவர்களின் பிடிப்பிலிருந்து உலகம் விடுபட வேண்டும். இத்தகைய போர்வெறியர்களிடம் அரசாங்க ஆதிக்கம் இருத்தல் கூடாது. போர்வெறியர்களைக் கொண்ட அரசாங்கம் எப்படியோ போரில் தலையிட்டுத்தான் தீரும். இந்தப்போர்க் கொடுமையைப்பற்றித் தமிழ்ப் பெருந்தகையார் இராமலிங்கர், அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினும் கடையேன் என்று படைகொண்டு போர்புரிபவர்களைக் கயவர்கள் என்று குறிப்பிடுகின்றார். வீணில்போர் இழைவெறியர் புகழ்பெறு வெறியேன். வெறிகொண்டு புகழ்பெறுவதற்காகப் போர்புரிகின்றார்கள்; அவர்கள் திமிர்பிடித்தவர்கள், கொழுப்பெடுத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். இன்னும் போரை அவர் எவ்வளவு வெறுக்கிறார். எவ்வளவு கண்டிக்கிறார் என்பதைக் கீழ்வரும் அடிகளாலும் அறியலாம். உலகரசு ஆள்வோர் உறைமுடி வாள்கொண்டு ஒருவரைஒருவர் உயிர்அறச் செகுத்தனர் எனவே தரையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துளம் நடுங்கிநின்று அயர்ந்தேன். ஆகவே போரினால் உண்டாகும் கொடுமையை அறிந்து நமது வள்ளலார் வருந்தியதை இன்று உலகம் உணர்ந்து விட்டது. இனி உலகில் வள்ளலார் யுகம் நிலைபெறும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்கள் அறிவாளிகளாகி விட்டால் தந்நலம் கொண்டவர்கள் அவர்களை ஏமாற்ற முடியா தல்லவா? மனிதப் பண்பு மற்ற உயிர்களைக் காட்டிலும் மக்களிடத்திலே ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்தத் தனிச்சிறப்புக் காரணமாகவே மக்கள் தரணியிலே உயர்ந்து வாழ்கின்றனர். மற்றப் பிராணிகளை யெல்லாம் அடக்கி ஆள்கின்றனர். எந்த மனிதனும் பிறருடைய உதவியின்றித் தனித்து வாழ முடியாது. மக்கள் எல்லோரும் அறிந்தோ அறியாமலோ வாழ்க்கையிலே ஒன்றாகப் பின்னிக் கிடக்கின்றனர். இந்தப் பின்னலைப் பலர் அறிவதில்லை. ஒரு கூட்டத்தார் வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்று கழனிகளிலும் காடுகளிலும் உழைக்கின்றனர். அவர்கள் உழைப்பின் பலனால் உண்டாகும் விளைபொருள்களை எத்தகைய உழைப்பற்றவர்களும் உண்டுகளித்து உறங்குகின்றனர். ஒரு கூட்டத்தார் யந்திரசாலைகளிலே அடைந்து கிடந்து நூல்நூற்றுக் கொடுக்கின்றனர். மற்றொரு கூட்டத்தார் அந்நூலை ஆடையாக்கித் தருகின்றனர் இத்தொழில்களைச் செய்தறியாத கோடிக்கணக்கான மக்கள் அவ்வாடைகளை அலங்காரமாக அணிந்து ஆடம்பரமாக வாழ்வு நடத்துகின்றனர். எங்கோ ஒரு தொழிற்சாலையிலே ஒரு சிலரால் செய்யப் படுகின்ற துணி தைக்கும் ஊசி, துணி வாங்கும் சக்தியற்ற ஏழை மக்களின் கிழிந்த ஆடைகளைத் தைக்க உதவுகின்றது. சில மக்களால் செய்து விற்பனை செய்யப்படுகின்ற தையல் யந்திரம் பல மக்களை அலங்கரிக்க உதவி செய்கின்றது. இவ்வாறு மனித சமூகம் செய்துவருகின்ற தொழில்களை எண்ணிப் பாருங்கள்; அந்தத் தொழில்களின் பலன்களை அனுபவிக்கும் மக்களை நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் பல மனிதர்களால் செய்யப்பட்ட பல பண்டங்கள் தேவையாகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் பல நாட்டுப் பண்டஙகள் வேண்டப்படுகின்றன. ஆதலால் ஒரு மனிதனாவது பிறர் உதவியின்றித் தனித்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சமூகம் மற்ற சமூகத்தின் உதவியின்றித் தனித்து வாழமுடியாது. ஒரு மாகாணம் மற்ற மாகாணங்களின் உதவியின்றி ஒதுங்கி வாழமுடியாது. இவை போல ஒரு நாடு மற்றொரு நாட்டின் கூட்டுறவின்றிக் குதூகலமாக வாழமுடியாது. இந்த உண்மையை உலகமக்கள் அறிவார்களானால் உலகிலே ஒற்றுமை மரம் விழுதூன்றித் தழைக்கும். உண்மையான மனிதத் தன்மையென்பது எத்தகைய பேதமும் இன்றி எல்லோரும் ஒத்து வாழ்தல்தான். ஆண்மக்கள் பெண்மக்கள் முதலியவர்களி டத்தும் சாதி, சமயம், ஆச்சிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாத்திர சம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி எல்லவர்களும் தம்மவர்களாய் சமத்திற்கொள்ளு தலாம். என்பது வள்ளலார் வாக்கு. மனித சமூக வாழ்வின் உயிர் நாடியை உணர்ந்த மக்கள்தான் இத்தகைய உயர்ந்த மனோபாவத்துடன் வாழமுடியும். இந்த உயர்ந்த மனப்பான்மையுடையவனே உண்மை மனிதன். அவனே பூரண மனிதத்தன்மை உள்ளவனும் ஆவான். இந்த மனிதத்தன்மையைப்பற்றி ஒரு பாடலில் விளக்க மாகக் கூறியிருப்பதைப் பாருங்கள். சாதி, மதம், இனம், நிறம், தேசம் பாஷை நாகரிகம் ஆகிய எந்த வகையிலும் பேதம் பாராட்டக்கூடாது. எல்லாவுயிர் களையும் தம்முடைய உயிரைப்போலவே எண்ணவேண்டும். இது வெளிவேஷமாக இருந்தால் பயனில்லை. உள்ளத்திலே இந்தவகையான ஒற்றுமை எண்ணம் அமைந்திருக்க வேண்டும். எல்லா உயிர்களோடும் உறவு கொண்டாடி உவப்படைய வேண்டும். இப்படிச் செய்கின்றவர் யாரோ அவருடைய மனந்தான் களங்கமற்ற அறிவு வடிவாகும் அந்த அறிவில்தான் எம்பெருமான் அன்புருவில் நடம் புரிவான். அதுதான் அன்பு நடனம் புரியும் இடம். இந்த உண்மையை நான் உணர்ந்து விட்டேன். இத்தகைய அறிவுடையவர்களின் பாதத்திற்குத் தொண்டு செய்யவே என் மனம் விரும்புகின்றது. இத்தகைய மனிதத்தன் மையுடைய பேரறிவாளரைப் பின்பற்றித் தொண்டு செய்யவே ஆசைப்படுகின்றேன். எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி, உள்ளே ஒத்து, உரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவர்? அவர் உளந்தான் சுத்த சித்துஉருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்; என, நான் தெரிந்தேன்; அந்த வித்தகர்தம் அடிக்குஏவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ இந்த அன்புருவப் பாடலை அகமுருகிப் பாடுகின்றனர் பலர். ஆனால் அவர்கள் உள்ளத்திலே இத்தகைய உயர்ந்த ஞானம் குடிகொண்டிருக்கிறதா? அவர்களுடைய செயல் களிலே இந்தப் பாட்டின் வாடை பரிமளிக்கின்றதா? இத்தகைய மனிதத்தன்மையைக் கொண்ட மக்கள் சமுதாயம் வளர்ந்து தழைப்பதைக் காண்பது எந்நாள்? இத்தகைய மனிதத்தன்மை வேண்டும் என்பதை நம்முடைய கலைகள் ஒத்துக்கொள்ளுகின்றன; சமயங்கள் எல்லாம் ஒத்துக்கொள்ளுகின்றன; பெரியோர்கள் எல்லோரும் ஒத்துக்கொள்ளுகின்றனர். ஆனால் நடைமுறையிலே ஒன்றும் நடப்பதில்லை: வாயளவிலே சமரசம்பேசி வாழ்கின்ற மக்களே பலர். உள்ளத்திலே சமரசம் கொண்டோர் ஒரு சிலர்தான். ஆனால் இன்றைய தலைமுறையில் இந்தச் சமரச மனப் பான்மை வளர்ந்துவருகிறது. இவ்வளர்ச்சி நிச்சயம் பயன் அளிக்கும் என்பது உறுதி: சாதி வேற்றுமை சாதி என்று தமிழில் வழங்குகிறோம். இது வடமொழிச் சொல். இதன் உண்மை உருவம் ஜாதி, ஜம் என்ற பகுதியி லிருந்து பிறந்த சொல். பிறப்பில் வேற்றுமை உள்ள பொருள் களையே ஜாதி என்ற பெயரால் வழங்கலாம். மக்கட்பிரிவு, ஜாதி என்ற பெயரால் தமிழில் குறிப்பிடவில்லை. குலம், குடி என்ற பெயர்களே மக்கட் பிரிவைக் குறிப்பவை. குலம்-பெரும்பிரிவு. குடி-தனிக்குடும்பம் பரம்பரையாக வரும் தனிக்குடும்பம் குடி. பல குடிகளின் கூட்டம் குலம். ஜாதி என்றால் மக்கள் எல்லோரும் ஒரு சாதிதான். இதுபோல் பறவைகள் ஒரு சாதி, விலங்குகள் ஒரு சாதி. நீர்வாழ்வன ஒரு சாதி. ஊர்வன ஒரு சாதி. இதுதான் பழந்தமிழ் நூல்களில் நாம் காணும் சாதிப் பிரிவுகள். நாளடைவில் இம்முறை மாறிவிட்டது. தொழில் காரண மாக நான்கு பிரிவுகள் தோன்றின. நான்கு நாற்பதாகி நாற்பது நானூறாகி, நானூறு நாலாயிரமாகிவிட்டன. இந்தப் பிரிவு காரணமாக மக்களுள் ஒற்றுமை குறைந்தது. குரோதம் வளர்ந்தது. ஒன்றுபட்டு வாழவேண்டிய மனித சமூகம் துண்டுபட்டுப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. சாதி என்ற நினைப்பின் காரணமாக, மக்கள் தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை மறந்துவிடுகின்றனர். நாம் உண்ணும் உணவு முழுவதையும் நாமே தேடிக் கொள்ள முடியாது. நிலத்தைப் பண்படுத்துகின்றனர் ஒரு கூட்டத்தார். நிலத்தைப் பண்படுத்துவதற்கான கருவிகளைச் செய்து கொடுக்கின்றனர் ஒரு கூட்டத்தார். நிலத்தைப் பண் படுத்துவதற்கு இரும்புக் கருவிகள், மரக்கருவிகள் தேவைப்படு கின்றன. இரும்புக் கருவிகள் கிடைப்பதற்கு இரும்புச் சுரங்கத் தொழிலாளர்கள், நிலக்கரிச் சுரங்கத் தொழி லாளர்கள் உதவி செய்கின்றனர். சாதாரணக் கொல்லுவேலை செய்வோர். தச்சுவேலை செய்வோர் உதவியும் அவசியம். இத்தகைய பல தொழிலாளர்களின் மூலமே விவசாயம் நடைபெறுகின்றது. தானியத்தை விதைத்துப் பயிராக்கி, அறுத்து, அரைத்து, சமைத்து உணவாக்கி, உண்ணும்வரையில் எவ்வளவு மனிதர்களின் உதவி தேவையென்று எண்ணிப் பாருங்கள், உண்மை விளங்கும். நமது வாழ்க்கையில், நாம் அனுபவித்து வருகின்ற ஒவ்வொரு பண்டங்களையும், அவைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர் களையும் பற்றிச் சிந்தித்துப்பாருங்கள். இவ்வாறே உலகம் இயங்கும் விதத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால் மனித வாழ்க்கையின் கூட்டுறவு விளங்கும். இந்தக் கூட்டுறவை மறந்த மக்கள்தான் சாதிப் பிரிவு காரணமாகச் சண்டையிட்டுக் கொள்ளுகின்றனர். எண்ணற்ற சாதிகள்! ஒவ்வொரு சாதியினரும், வேறு வேறு விதமாக உடையணிகின்றனர். ஆண்களின் உடையில் அவ்வளவு வேறுபாடில்லை. பெண்களுக்குள் தான் உடை வேறுபாடு, கல்யாணம், கருமாதிபோன்ற சடங்குகளில் சாதியின் பெயரால் வேறுபாடுகள். நகையணிவதில் கூட சாதி வேற்றுமை. இப்பொழுது ஓரளவு சாதி வித்தியாசம் பாராட்டுவது மறைந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ஏன் இன்றுகூடச் சிலரிடம் சாதி மனப்பான்மையுண்டு. ரயிலிலோ மோட்டாரிலோ பிரயாணம் செய்யும்போது முன்பின் அறியாத இருவர் பேசிக்கொள்ளும்போது, முதலில் ஊரை விசாரிக்கின்றனர். இரண்டாவது தொழிலை விசாரிக் கின்றனர்; மூன்றாவது தாங்கள் என்ன வர்ணமோ? என்று சாதியை விசாரிக்கின்றனர். இதன் பிறகே குடும்பத்தைப்பற்றி விசாரிக் கின்றனர். இந்த வழக்கம் இன்னும் இருந்துவருவது சாதி வெறி மாறவில்லையென்பதற்கு அடையாளம். இந்தச் சாதி வெறி எந்த அளவு மனித சமூகத்தைத் துன்புறுத்துகின்றது என்பதைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள். ஒரு உயர்தரப் பதவியில், ஒரு பிராமணர் இருந்தால் அவர் தன்னுடைய சாதிக்கே சலுகை காட்டுகின்றார். ஒரு முதலியார், ஒருபிள்ளை, ஒரு நாயுடு, ஒரு ரெட்டியார். ஒரு நாடார்போன்ற எந்த மனிதர் இருந்தாலும் அவர்கள் தங்கள் சாதியினருக்குச் சலுகை காட்டப் பின்வாங்குவதேயில்லை. சாதிவெறி பிடித்தவர்கள் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்துவிட்டால், அதனால் பலருக்குத் தீங்கு விளைகின்றது. உழைப்பும், தகுதியும், திறமையும் உடைய பல ஊழியர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவிகள் கிடைப்பதில்லை. சாதியின் பேரால் கட்சிகளும், சங்கங்களும், சண்டை களும் தோன்றுகின்றன. இவைகள் மக்களுடைய ஒற்றுமை யைக் கெடுத்துக் கலகத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கு கின்றன. கலகமும், குழப்பமும் நிலவும் நாட்டில், தொழில் வளர்ச்சி குன்றும்; விவசாயம் தடைபடும்; நாட்டின் பொருளா தாரம் குறையும். நீண்ட நாட்களாக நமது நாட்டில் நிலைத்துப் பெருகி வந்த சாதிச் சண்டைகளே நம்மை அந்நியர்க்கு அடிமை யாக்கின என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. நமது வள்ளலார் , பல பாடல்களில் சாதி வித்தியாசம் பாராட்டுவது அர்த்தமற்றது: சாதி என்பது பொய், கற்பனை என்று பாடியிருக்கின்றார். நால்வருணம், ஆச்சிரமம், ஆசாரம் முதலாம் நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளையாட்டே. நால்வகைச் சாதிகள் கூறுதல், நால்வகைச் சாதிகளுககும் தனித் தனி ஒழுக்கம் உண்டென்று கூறுதல், அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் எல்லாம் அறிவுடையார் செய்கையல்ல; சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் செயல். அறியாமையால் எழுந்தது. சாதிமதம் சமயம் எனும் சங்கடம்விட்டறியேன். மக்களைப் பிரித்து வைத்திருப்பது சாதி, மதம், சமயம் என்பவைகள் இவைகள் மக்கள் சமூகத்திற்குச் சங்கடத்தை உண்டாக்குவன. சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன். ஆதலால் இந்தச் சங்கடத்திலிருந்து நீங்கினேன். சாதியை, நீள் சமயத்தை, மதத்தையெல்லா விடுத்து, என்றன்னை ஞான நீதியிலே, சுத்தசிவ சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தி னானை. இந்தச் சங்கடம் விளைக்கும் சாதிவெறியை விட்டேன். மதவெறியை விட்டேன். அதன் பிறகுதான் அறிவின் வழி நீதி மார்க்கத்தில் - அன்போடுகூடிய உண்மை மார்க்கத்தில்-நின்றேன். மேலே காட்டியவை இராமலிங்கரின் கருத்துக்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழரின் பண் பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதே வள்ளலாரின் நோக்கம். ஒரே இனம் எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் இவ்வுலக மக்கள். இது உண்மை. நாம் இவ்வுலக மக்களின் ஒரு பகுதி. நமது நாடு இவ்வுலகில் ஒரு பாகம். நம்மை இவ்வுலக மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. நமது நாட்டை இவ்வுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்க முடியாது. நம்மை அறிந்தோ அறியாமலோ, நாம் உலகமக்களுடன் இணைந் திருக்கின்றோம்; நமக்குத் தெரிந்தாலும் சரி, தெரியா விட்டாலும் சரி, நமது நாடு உலகத்துடன் இணைந்துதான் இருக்கின்றது. இந்த உண்மையை மறவாதவர்கள்தான் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லாரும் இவ்வுலக மக்கள் என்ற கொள்கையை ஒப்புக்கொள்ளுவார்கள். எல்லா உயிர்களும் ஒன்றே. உயிர்களுக்குள் வேறுபாடே இல்லை. எல்லாவற்றையும் ஒன்றேன நினை, வேற்றுமை பாராட்டாதே என்பதுதான் நமது வேதாந்தம். ஒரு காலத்தில் வேதாந்தம் என்றால் அது திண்ணைத் தூங்கிகளின் பாடம்; சோம்பேரிகளின் வாய்ப்பேச்சு; உலக வாழ்க்கைக்குப் பொருந்தாத உருப்படாத கொள்கை; குடும்ப வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் கொள்வோர்க்குச் சாதகமான ஊன்றுகோல்; என்றெல்லாம் பரிகசிக்கப்பட்டு வந்தது. ஆனால் சுமார் நூறாண்டுகளுக்கு முன்தான் இந்திய வேதாந்தத்தின் உண்மை உலக முழுவதும் பரவிற்று. இன்று உலகமக்களுடைய சமாதான வாழ்வுக்குச் சாதனம் என்று பேசப்படுவது பொதுவவுடைமைத் தத்துவம். அபேதவாதம், சமதர்மம் போன்ற நவீன அரசியல் கொள்கைகள். இந்த அரசியல் தத்துவங்கள் மேலோங்க மேலோங்க, இந்திய வேதாந்தத்தின் உயர்வும் மேலோங்கி வருகின்றது. எல்லா மக்களும் ஒன்று என்னும் வேதாந்தத்தை ஒப்புக்கொண்டவர்கள் உலகம் ஒரு சமுதாயம் என்ற முடிவை ஒப்புக்கொள்ளப் பின்வாங்கமாட்டார்கள். இவர்கள் சமுதாய வேற்றுமைகளைப் பராட்டமாட்டார்கள். மக்களைப் பல வகையில் உயர்வாகவும், தாழ்வாகவும் பாகுபாடு செய்யும் அரசியல் சூழ்ச்சிகளையும் வெறுப்பார்கள். உலகம் ஒன்று, மக்கள் ஒன்று எல்லோரும் இன்புற்றுவாழ வேண்டும் என்னும் உயர்ந்த வேதாந்த விளக்கை நமது நாடு தான் உலகில் முதலில் ஏற்றிவைத்தது. இன்று இவ்விளக்கின் ஒளி உலக முழுவதும் சுடர்விடுகின்றது. இவ்வொளியே எல்லா மக்களும் ஒரே சமுதாயமாக இணைந்து வாழவேண்டும் என்னும் அரசியல் தத்துவத்தை உலகத்திற்குக் காட்டிக் கொடுத்தது. நமது வேதாந்தத்தின் உண்மையையும் அவ்வுண்மையி லிருந்து தோன்றிய புதிய-சமுதாய வேறுபாடற்ற -அரசியலையும் பின்பற்றினால்தான் உலகசமாதானம் உண்டாகும். ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அவ்வூருக்குப் பெருமையுண்டு. எல்லா மக்களுக்கும் இருக்கச் சுகாதார வசதியுள்ள இடம், உண்ணப்போதுமான உணவு, உடுத்துவதற்கு ஆடை, படிப்பதற்குப் பள்ளிக்கூடம், வைத்திய வசதிகள், பொழுதுபோக்குவதற்கான கலைக்கூடங்கள் வேண்டும். இந்த வசதிகள் ஒரு ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் கிடைக்குமானால் அவ்வூரில் திருட்டுக்கு வேலை யில்லை; பொய்க்கு இடமில்லை; அடிபிடி சண்டைக்கு ஆதரவில்லை; கொலை தலைகாட்டாது; தந்நலங்கருதிய தீச்செயல்கள் மக்களிடம் தோழமைகொள்ள அஞ்சும். இது ஒரு ஊருக்கும் பொருந்தும்; ஒரு நாட்டுக்கும் பொருந்தும். இந்த உலகுக்கே பொருந்தும். ஒரு ஊரில் உள்ள தந்நலங்கொண்ட ஒருமனிதன் இவ் வுண்மையை மறந்து தான்மாத்திரம் வாழ்ந்தால் போதுமென்று நினைத்தால் இறுதியில் அவன்கதி அதோகதிதான். அவன் வாழும் ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் இடிந்து குட்டிச்சுவராகி விட்டால்-ஒவ்வொரு குடும்பத்தினரும், உணவுக்கும் உடைக்கும் வழியின்றி வெளியேறிவிட்டால்-மிஞ்சியிருக்கும் ஒரு மனிதன் கதியென்ன? அவன் ஒருவசதியும் பெறமுடியாமல் அவ்வூரிலேயே கிடந்து சாகவேண்டும்; அல்லது மற்ற மக்களைப் போல் எல்லா வசதிகளையும் துறந்து வெளியேற வேண்டும். தான்மாத்திரம் சுகமாக வாழ்ந்தால் போதும் என்ற அவனுடைய கோரிக்கையும் பாழடைந்து போகின்றது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். மற்றவர்க்குத் தீமை செய்து தன்னுடைய சுகத்திற்கு மாத்திரம் இடந்தேடிக்கொள்ளும் மனிதன் தன்னையறியாமலே தனக்கே அழிவைத்தேடிக் கொள்ளு கின்றான். இவ்வுண்மையை நமது நாட்டினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். அதனால்தான் அவர்கள், உனக்கென வாழ்க்கை நடத்தாதே; பிறர்க்கென வாழ்க்கை நடத்துக; பிறர் நலத்துக்காகவே எப்பொழுதும் பணி செய்க ; பிறர் நலத்திற்கு உழைப்பதே மக்கள் கடமை என்றெல்லாம் கூறிவைத்தனர். பரந்த நோக்கமுள்ளவர்கள் தந்நலத் தியாகத்தையே பெரிதாகப் போற்றினர். தந்நலத் தியாகிகளாலேயே உலகம் அமைதி பெறமுடியும். மக்கள் இன்புற்று மகிழ்ந்துவாழ முடியும். தந்நலத் தியாகமுடையவர்களையே, உலகம் அவதார புருஷர் களாகப் போற்றுகின்றது; பெரியோர்களாகக் கொண்டாடு கின்றது. ஞானிகளாக - தீர்க்கதரிசிகளாக - சீர் திருத்தவாதி களாகப் பாராட்டுகின்றது. இத்தகைய தந்நலத் தியாகம் உலகம் உய்யப் பணிபுரியும் தன்மை- ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் அருங்குணம் மக்களிடம் வளரவேண்டும் என்பதே வள்ளலார் உள்ளம். பார் உய்யப் புரிக எனப் பணித்துஎனக்கு அருளிஎன் ஆருயிர்க் குள் ஒளிர் அருட்பெரும் சோதி. உலகம் முன்னேறும்படியான செயல்களைச் செய் என்று கட்டளையிட்டு எனக்கு அருள்செய்து, என் உயிரோடு இணைந்து நிற்கும் இரக்கமாகிய பேரொளியே! எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும். இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்க் கூட்டங்களும், என்னுடைய உயிரும் ஒன்றுதான்: மற்ற உயிர்களுக்கும் என்னுடைய உயிருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்ற உண்மையை எண்ணி, எல்லாவுயிர்களும் இன்பம் அடையும் படியான செயல்களைச் செய்யவேண்டும். அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும். அப்பனே, நான் பலநாளும், பலமுறையும் வேண்டுகின்ற வேண்டுகோளைக் கேட்டு, எனது வேண்டுகோளின்படி நான் நடப்பதற்கு இடங்கொடுக்க வேண்டும். அந்த வேண்டுகோள் என்ன? உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும், அவைகள் நன்மை பெறும்படி, நான் அன்போடு பணிசெய்ய வேண்டும். இதுதான் எனது வேண்டுகோள். மன்னுயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியடையும் வகையில்; தந்நலமின்றிப் பணிபுரிவதே தமிழர் பண்பாடு; உலகம் போற்றும் உயர்ந்த கொள்கை; வேதாந்தத்தின் சாரம்; நவீன அரசியலின் முடிவு. உலகம் ஒன்றுபட்டு அமைதியோடு வாழ்வதற்கு வழி காட்டும் சிறந்த சாலை. உலகம் ஒன்றாகும் உலகம் ஒன்றுபட்டு வாழவேண்டும் சாதிபேதம், இன பேதம், சமயபேதம், மொழிபேதம் தேசபேதம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அடியற்றுச் சாய வேண்டும் இவ்வாறு பலர் சொல்லுகின்றனர். இதைச் சொல்பவர்களைப் பார்த்து இன்று சிலர் ஏளனம் செய்யலாம். சாதிபேதம் பேசிச் சமூகத்தைச் சுரண்டுகின்றனர் சிலர். இனவெறியைக் கிளப்பிவிட்டுப் பொருளாதாரப் சமத்துவக் கிளர்ச்சிக்குத் தடை விதிக்கின்றனர் சிலர். சமயபேதங்கள் பேசிச் சதிசெய்து மக்களைச் சுரண்டுகின்றனர் சிலர் மொழி பேதம் பேசி மக்களை மூடர்களாக்கப் பார்க்கின்றனர் சிலர். தேச பேதத்தைப் பலப்படுத்தித் தங்கள் ஏகபோக வாழ்வுக்கு இடையூறு நேராமல் சமாளிக்கப் பார்க்கின்றனர் சிலர். இத்தகைய பேதங்கள் இனி நிலைத்து நிற்க முடியாது. மக்கள் விழித்துக கொண்டனர். பேதங்களால் வரும் தீமைகளைக் கண்டறிந்தனர். பேதங்களால் ஒருசில சூதர்களே உயர்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர் என்ற உண்மையை உணர்ந்து விட்டனர். ஆதலால் இனி அவைகள் அழிந்துபோக வேண்டியது தான். அழிந்துபோகும் காலமும் நெருங்கிவிட்டது. இவ்வுண்மையைக் கூறுவோரைப் பார்த்து, பேதம் பேசிப் பாமர மக்களைச் சூறையாடும் சூதர்கள் பரிகசிக்கலாம். பைத்தியக்காரர்கள் என்று வசை கூறலாம். வாய்வேதாந்திகள் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், இன்று உண்மையிலே உலகம் ஒன்றாகிக் கெண்டு வருகிறது. இதை இவர்கள் கண்கள் பார்க்க மறுக்கின்றன. இன்று எந்தச் சமூகமும் தங்கள் பழமையான தனி நாகரிகத் துடன் வாழவேயில்லை. ஆண்பெண்கள் அனைவரும் நடை உடை பாவனைகளில் ஒத்த நாகரிகமுடையவர்களாக ஒன்று பட்டுக் கொண்டே வருகின்றனர். இன்று எந்த ஒரு மொழியும், பிறமொழி கலவாத தனி மொழியாக வழங்கவில்லை. பேச்சு வழக்கிலே உள்ள ஒவ்வொரு மொழியிலும் பேச்சு வழக்கிலே உள்ள பிற மொழிகளின் சொற்கள் கலந்து வருகின்றன! இது இயற்கை. கல்வி காரணமாக -பலநாட்டு மக்கள் ஒன்றாகப் பழகுவதன் காரணமாக-சாதி, இனம் மடிந்து வருகிறது பல சாதிக்காரர் களுக்குள்ளும், பல இனத்தினர்க்குள்ளும், பல நாட்டினர்க் குள்ளும் கலப்பு மணங்கள் நடைபெறத் தொடங்கி யிருக்கின்றன. இனியும் சமய பேதங்களை நிலைநாட்டிச் சமூகத்தை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால், கண்டிப்பாக, அவர் களை விடப் பிறபோக்காளர்கள் யாரும் இருக்க முடியாது. இனியும் மக்களிடையிலே சாதி பேதத்தைப் பரப்பிச் சமூகத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று முயற்சிப்போரின் வஞ்சகம் அதிக நாளைக்கு நிலைத்து நிற்காது. அவர்களுடைய சூழ்ச்சியை வெகுவிரைவில் மக்கள் உணர்ந்து கொள்ளுவார்கள். இன்று உலகபோக்கைப் பாருங்கள்; எல்லா நாட்டிலும் உலகம் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கின்றது. ஒருசில சுயநலவாதிகளைத் தவிர எல்லா நாட்டுப் பொதுமக்களும் வேற்றுமையை வெறுக்கின்றனர். எல்லா நாடுகளிலும் சாதி வித்தியாசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் சட்டங்கள் செய்யப்படுகின்றன. ஒருசில வெறியர்களின் ஆட்சி நடைபெறுகின்ற சில சிறு நாடுகளிலே சாதி வேற்றுமைக்கு உயிர்க்கொடுக்கும் வகையிலே சட்டங்கள் கொண்டுவர முயற்சி செய்யப்படுகின்றன. அந்த முயற்சியை அந்தநாட்டு மக்களே எதிர்க்கின்றனர்; வெறுக்கின்றனர்; அநாகரிகமான ஆபாசச்செயல் என்று ஆத்திரப்படுகின்றனர். எந்த நாட்டிலும், நாகரிகத்தை மாற்றிக்கொள்வதைத் தடுக்கச் சட்டம் இல்லை. புதிய நாகரிகத்தை ஏற்றுக்கொள் வதைத் தடுக்கச் சட்டம் இல்லை. அநாகரிகமாகக் கருதப்படும் பழைய நாகரிகத்தை ஒழிப்பதைத் தடைசெய்யச் சட்டம் இல்லை. எந்த நாட்டு மக்களும் எந்த நாகரிகத்தையும் மேற்கொள்ளலாம்; எந்த நாட்டு மக்களும் எந்த நாகரிகத் தையும் உதறித் தள்ளி விடலாம். இந்த நிலையிலே ஒருசில சுயநலக்கார வெறியர்கள் ஜாதி, மதம், நாகரிக வித்தியாசங்களைக் காப்பாற்ற முனைவது வீண் முயற்சி; பயன்தராத பாடு. இந்த உண்மையை 1872-ம் ஆண்டி லேயே வள்ளலார் கூறிவிட்டார். அவர் கூறியிருப்பது இன்று நடைமுறையில் வளர்ந்து வருவதைக் காணலாம். பலவகைப்பட்ட, சமயபேதங்களும், ஜாதி பேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 வருஷத் திற்குமேல். இது வள்ளலார் எழுதியது; 1872-ஆம் ஆண்டிலே இதை எழுதினார். இதன்படி பார்த்தால் 1901-ஆம் ஆண்டு முதல் ஜாதி, மத, ஆச்சார பேதங்கள் ஒழியும் என்பது அவருடைய நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண்போகவில்லை. 1901-ஆம் ஆண்டு முதல் உலக சரித்திரத்தை ஆராய்ந்து பாருங்கள். 1901-லிருந்து இன்று வரையிலும் உலகத்திலே பல நாடுகளிலும் பல அரசியல் புரட்சிகள் நடந்திருக்கின்றன; பல சமூகப் புரட்சிகள் நடந்திருக்கின்றன; பல நாகரிகப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. இந்தப் புரட்சிகளால் மத ஆதிக்கக் கோட்டைகள் பல இடிந்து பாழாயின: ஜாதீய வலைகள் சுக்குநூறாக அறுந்து போய்விட்டன: பல நாகரிகங்களும் ஒன்றுபட்டுக் கலந்து விட்டன. 1901-ஆம் ஆண்டு முதல்தான் உலகிலே பல பாகங்களிலும் பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றி வேலை செய்து வருகின்றன இன்று ஒவ்வொரு நாடுகளிலும் பல பெயர்களிலே, பல உருவங் களிலே பகுத்தறிவு இயக்கங்கள் வேலை செய்கின்றன. இந்த இயக்கங்கள் சில சில்லரைக் கொள்கைகளிலே ஒன்றோடு ஒன்று முரண்பட்டுத் தனித்தனியாக வேலை செய்து கொண்டிருந் தாலும் வள்ளலார் கூறிய மூன்று விஷயங்களிலே முரண்படு வதில்லை. சமய பேதங்கள் தொலையவேண்டும் என்பதிலே, ஜாதி பேதங்கள் ஒழியவேண்டும் என்பதிலே, ஆச்சார பேதங்கள் அழியவேண்டும் என்பதிலே எல்லாச் சீர்திருத்த இயக்கங்களும் ஒத்துழைக்கின்றன. இது ஒன்றே வள்ளலாரின் தீர்க்க திருஷ்டி நிறைவேறிக்கொண்டு வருகிறது என்பதைக் காட்டுவதாகும். உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களும் ஒன்றாகப் போய்விடும். உலகத்தவர்களே, நான் கூறுவது வெறுங்கனவு என்று நினைக்காதீர்கள்! இது உண்மை. உங்களுடைய சோம் பேரித்தனத்தை விட்டுத் துணிவுகொள்ளுங்கள்! இன்று மக்களைத் தனித்தனியே பிரித்து வைத்துத் துன்புறுத்தும் பேதங்களெல்லாம் என்று ஒழியுமோ என ஏக்கமடையா தீர்கள்! சன்மார்க்க சங்கமாகிய உண்மைநெறிக் கழகத்தைச் சேருங்கள்! உண்மையாகவே நீங்கள் இன்பமைடயும் நல்வழியைக் கண்டு கொள்வீர்கள்! ஆதலால் இப்பொழுது இதைச் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார். மார்க்கஎலாம் ஒன்றாகும், மாநிலத்தீர் வாய்மையிது; தூக்கம்எலாம் நீக்கித், துணிந்து, உளத்தே-ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின்! சத்தியம், நீர் நன்மார்க்கம் சேர்வீர் இந் நாள். என்ற வெண்பாவால் உலகம் ஒன்றாகும் என்ற உண்மையைக் காணலாம். மேலும் வடலூரார் இக்கொள்கையை, பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே என்று வலியுறுத்திக் கூறுவதையும் காணலாம். ஆகவே, உலக ஒற்றுமையை விரும்புவோர் வேற்றுமையைக் கூச்சல்களைக் கண்டு வெருளவேண்டியதில்லை. ஒரே உலகம் உலகம் ஒன்றுதான். நாம் காணும் இவ்வுலகம் ஒரே உருண்டையாகத்தான் இருக்கின்றது. இந்த உலகத்தைத் தவிர இன்னும் எண்ணற்ற உலகங்கள் இருப்பது உண்மை. விஞ்ஞானி களும் இதைக்காட்டிலும் விரிந்த பல உலகங்கள் உண்டென உரைக்கின்றனர். புராணக்காரர்களும் பல உலகங்கள் உண்டெனப் புகல்கின்றனர். ஆனால் புராணங்காரர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேற்றுமையுண்டு. புராணக்காரர்கள் கண்டறிந்த உலகங்கள் பதினான்கு. நமது உலகுக்கு மேலே ஏழுலகம்; கீழே ஏழுலகம். அடுக்குப்பானைபோல் இந்தப் பதினான்கு உலகங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்திருக்கின்றன. பதினான்கு உலகங்களிலும் பதினான்கு வகையான உயிர்த்தொகைகள் வாழ்கின்றன. இவற்றைப்பற்றித் திட்டமாகக் கட்டுப்பாடாக இந்த உலகங் களையெல்லாம் சுற்றிப் பார்த்தவர்களைப்போல் எழுதி விட்டார்கள். இந்துமதப் புராணங்களைப் படித்தவர்களுக்கு இதைப்பற்றித் தெரியும். ஆனால் விஞ்ஞானிகள் கூறும் உலகங்களுக்குக் கணக் கில்லை. இந்த உலகங்களைக்காட்டிலும் இன்னும் பெரிய பெரிய உலகங்கள் உண்டு; நாம் காணும் சூரியனைக்காட்டிலும் இன்னும் பெரிய சூரியர்கள் உண்டு. எத்தனையோ சந்திரர்கள் உண்டு என்றெல்லாம் கூறுகின்றனர். இவைகளில் யார் கூறுவது உண்மை? யார் கூறுவது பொய்? என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இருவர் கூற்றிலிருந்தும் நமக்குத் தெரியும் உண்மை. இன்னும் பல உலகங்கள் உண்டென்பதுதான்: இந்த உலகம் ஒன்றாக இருக்கிறது என்பது தான். இந்த உலகத்தைப் பொறுத்தவரையிலும் உருவத்தில் ஒன்றேயென்பதில் ஐயமில்லை. ஒன்றாக உள்ள இவ்வுலகத்தில் மக்கள் மாத்திரம் ஒன்றாக இல்லை; சிறிது சிறிது உருவத்தில் வேறுபட்டிருக்கின்றனர். இவை இயற்கையில் உண்டான வேற்றுமைகள். அந்தந்த நாட்டின் பூபாகத்தில் உள்ள தட்பவெப்ப நிலைமை காரணமாக உண்டான வேறுபாடுகள். ஆனால் கொள்கையில் மக்களிடம் வேறுபாடேயில்லை. இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்பதில் எந்த மக்கள் கருத்திலும் வேற்றுமை இல்லை. எல்லா மக்களும் ஒரே கருத்துடனேயே வாழ்கின்றனர். பிறந்த நமக்கு இறப்பு உண்டு. இருக்கும் வரையிலும் நாம் இவ்வுலகில் இன்பத்துடன் வாழவேண்டும். நோயற்று வாழ வேண்டும். உலகில் உள்ள இயற்கை அதிசயங்களைப் பார்க்க வேண்டும் கண்ணுக்கினிய காட்சிகளைக் காணவேண்டும். காதுக்கினிய மொழிகளைக் கேட்க வேண்டும். உடலுக்கு இன்பந்தரும் விஷயங்கள் நுகரவேண்டும். இதுவே மக்களுடைய முடிந்த நோக்கம். இதற்காகவே மதம், ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கம், அரசாங்கச் சட்ட திட்டங்கள், சுதந்திரம், கலை, கலைவளர்ச்சி, வேத புராண சாதிரங்கள் எல்லாம். இன்பத்துடன் வாழ்வது மக்கள் நோக்கம். இந்நோக்கம் ஈடேற அவர்கள் பின்பற்றும் வழிகளிலே வேற்றுமைகள் பல. இந்த வேற்றுமைகளின் மூலம் மனிதகுலம் பலப்பலப் பிரிவாகப் பிரிந்து கிடக்கின்றது. மக்கள் யாவரும் பிறப்பிலே ஒன்று. அவர்கள் பிறப்பிலே வேற்றுமையில்லை என்பதே இன்றைய அறிஞர்களின் கொள்கை பண்டைய ஞானிகள் என்போரும் இவ்வுண்மையை மதங்களின் மூலம், மத உபதேசங்களின் மூலம் வெளியிட்டிருக் கின்றனர். இருந்தும் மக்கள் எவரும் இதனைப் பின்பற்றுவ தில்லை. பேசுகின்றவர்கள் எல்லாரும், மக்கள் அனைவரும் ஒன்று என்று பேசுகின்றனர். எழுதுகின்றவர்கள் எல்லோரும் மக்களுடைய பிறப்பிலே வேற்றுமையில்லை என்று எழுது கின்றனர். இவ்வாறு பேசுவது பேச்சுக்கு மெருகு; எழுதுவது எழுத்துக்ககு அழகு; அவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இதுவே காரணம். ஒவ்வொரு நாடும் கூறுவது. தங்கள் நாட்டு மக்கள் இன்பத்துடன் வாழவேண்டும்; வறுமையின்றி வாழவேண்டும்; அடிமையின்றி வாழவேண்டும் என்பதுதான். இது உண்மை யானால் ஏன் ஒரு நாட்டோடு மற்றொரு நாடு முட்டிக்கொள்ள வேண்டும்? ஏன் மோதிக்கொள்ள வேண்டும்? பாமர மக்களின் உயிரைப் போர்க்களத்திலே ஏன் பலி கொடுக்கவேண்டும்? பாமர மக்களின் உழைப்பை-செல்வத்தைப் போரின் மூலம் ஏன் பாழ் படுத்த வேண்டும்? இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? உலகம் பலவாறு பிரிந்து சண்டையிட்டுக் கிடப்பதற்குக் காரணம் உலகப் பொதுமக்கள் அல்லர். உலகப் பொதுமக்கள் இடையில் ஒத்த கருத்துண்டு; ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் எண்ணம் உண்டு; எல்லா மக்களும் ஒன்றுதான் என்னும் உள்ளக்கிடக்கை உண்டு. ஆனால், இந்த ஒற்றுமைக்கு உலை வைப்பவர்கள் ஒரு சிறிய கூட்டத்தினர். இச்சிறிய கூட்டத் தினருக்குத் தந்நலத்தை தவிர வேறு கொள்கையில்லை தாங்களே மக்களுக்குத் தலைவராக விளங்கவேண்டும்; தங்கள் சொற்படியே உலகம் ஆடவேண்டும்; உலகத்திலே பாடுபட்டும் பட்டினி கிடக்கும் கூட்டம் நிரந்தரமாக வாழ வேண்டும்; பாடுபடாமலேயே பரமாநந்தம் அனுபவிக்கும் சிறு கூட்டமும் சிரஞ்சீவியாக வாழவேண்டும்; அப்பொழுது தான் அவனியை நாம் அடக்கி ஆளலாம்; எல்லோரும் வேற்றுமை யின்றி இன்புற்று இணைந்து வாழும் நிலைமை ஏற்பட்டு விட்டால் நமது தனிப் பெருமதிப்புக்குத் தலைவலி வந்துவிடும்; என்று எண்ணும் ஒரு சிறுகூட்டம் உண்டு. இந்தச் சிறு கூட்டமே இன்று உலகத்தைச் சின்னாபின்னப்படுத்திச் சீரழித்து வருகின்றது. இந்தக்கூட்டம் விரிந்திருக்கும் சாதி வலையிலே, மத வலையிலே, சமூக வலையிலே, இனவேற்றுமை வலையிலே, அரசியல் பித்தலாட்ட வலையிலே பொதுமக்களிற் பலர் வீழ்ந்து தடுமாறுகின்றனர். இத்தடுமாற்றத்தாலேயே உலகம் ஒன்றுபட முடியவில்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விரித்து வைத் திருக்கும் மேற்கண்ட வலைகள் அறுபடும் காலங் குறுகி விட்டது. விரைவில் அந்த மாயவலைகள் எல்லாம் மக்கிப் போய்விடும். மக்கள் விடுபடுவர். இன்றைய உலக வேற்றுமைக்குக் காரணம் மக்களுடைய அறியாமை. பையித்தியக் காரணத்தனமான உண்மை உணராமை, இதை வள்ளலார் அழகாகக் கூறியுள்ளார். பித்தெலாம் உடைய உலகர்தம் கலகப் பிதற்றெலாம் என்று ஒழிந் திடுமோ? பைத்தியக்காரத்தனமான எண்ணங்களையும் கொள்கை களையும் உடை யவர்கள் உலகத்தில் உள்ளவர்கள். அவர் களுடைய கலகத்திற்குக் காரணமான உளறுதல்கள் எல்லாம் என்றுதான் ஒழியுமோ! உலகம் ஒன்றாகுமோ அறியேன். ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ! உலகில் உள்ள மக்கள் எல்லாரும் ஒன்றே என்று நினைக்கும் -அவ்வாறே பார்க்கும்-அந்த நினைப்புடனேயே நடந்து கொள்ளும் உணர்ச்சி எப்பொழுதுதான் வருமோ! கள்ளவா தனையைக் களைந்து அருள்நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே, உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று ஓங்குதல் என்றுவந்து உறுமோ! வஞ்சத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை நீக்கி, அன்புடன் வாழ்வதில் ஆவல்கொண்டு, ஒன்றாகி வாழ்வதில் விருப்புற்று, உண்மையிலேயே இந்த உலகமெல்லாம் ஒன்றாகிக் களிப்படைந்து உயர்ந்து வாழும் வாழ்வு என்றுதான் வந்து சேருமோ! இவ்வாறு ஒற்றுமையின் உயர்வை வெளியிட்டார். உலகம் ஒன்றாகி வாழ்வதிலேதான் இன்பம் உண்டு என்பதைக் குறிபிட்டார். சற்றுப் பொறுத்துச் சிந்தித்தார். உலகப் போக்கைக் கண்டார். மக்களிடம் மாறிவரும் மனப் பான்மையை உணர்ந்தார். தன் விருப்பம்-உலகமெல்லாம் ஒன்றாகி இணைந்து வாழ வேண்டும் என்னும் தன் ஆசை-நிறைவேறும் காலம் விரைவில் வந்துவிடும் என்று நம்பிக்கை கொண்டார். ஒருமையின் உலகெலாம் ஓங்குக! எனவே ஊதின சின்னங்கள்! ஊதின சங்கம்! ஒன்றுபட்டு உலகமெல்லாம் உயர்ந்து வாழ்க என்று ஊது குழல்கள் எல்லாம் ஊதின; வெற்றிக்கு அடையாளமாகச் சங்குகளும் பூம்பூம் என்று முழங்கின. இவ்வாறு எதிர்காலத்தை உணர்ந்து கூறினார் வள்ளலார். இந்த நாள் இன்று நம்மை அணுகிக்கொண்டிருக்கின்றது. உலகெலாம் ஒன்றே என்ற உணர்ச்சி பரவி வருகின்றது. இதை இனி எவராலும் தடுக்க முடியாது. வறுமைப் பேய் பிறந்த உயிர்கள் எல்லாம் வாழவே விரும்புகின்றன. இறக்க விரும்பும் உயிர்கள் எவையும் இல்லை. மற்ற உயிர்களைக் காட்டிலும் மக்களுக்கு இந்த ஆசை அதிகம். அவர்கள் உலகத்தில் இன்பத்துடன் உயிர் வாழவே விரும்புகின்றனர். மக்களுக்கு வேண்டியவைகளுள் முதன்மையானவை உயிர் வாழ உணவு; மானத்தை மறைக்க உடை. உணவும் உடையும் இல்லாதவர்கள் வறியவர்கள்; ஏழை மக்கள், அவர்கள் வாழ்க் கையில் இன்பம் எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் இந்த இரண்டுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைக்கின்றனர். உழைத்தும் அவர்கள் அகத்தில் அமைதிநிலைக்கும் அளவுக்கு அவை கிடைப்பதில்லை. பூமி பரந்து கிடக்கின்றது. பூமிக்குள் செல்வம் நிறைந் திருக்கின்றது. நம் பெட்டியில் இருக்கும் பணம் எடுக்க எடுக்கக் குறைந்துவிடும். வைத்த பணத்தை எடுத்து விட்டால் பிறகு எவ்வளவு முயன்று முயன்று பெட்டி முழுவதும் துருவினாலும் ஒன்றும் கிடைக்காது. வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியங்களும் எடுக்க எடுக்கக் குறையுமே ஒழிய வளராது. தானியக்களஞ்சியத்தை எவ்வளவுதான் கூட்டிப் பெருக்கிப் பார்த்தாலும் வைத்ததற்கு மேல் வராது. ஆனால் நிலத்தின் தன்மை அதுவல்ல. முயல முயலப் பலன் தரும். உணவிற்கான தானியங்களைக் கொடுக்கும். உடுப்பதற்கான உடைகளின் மூலப்பொருள்களைக் கொடுக்கும். இன்னும் வாழ்க்கைக்குப் பயன்படும் உலோகப் பொருள்கள் எல்லாவற்றையும் கொடுக்கும். தன்னைச் சரண் புகுவோர்க்கு இல்லையென்று சொல்லும் வழக்கமே பூமிதேவியிடம் இல்லை. உலகத்தில் போதுமான உணவுப்பொருள் இல்லை. நிலம் சரியான பலன் கொடுக்கவில்லை. தானியங்களின் விளைவுகள் குறைந்துவிட்டன என்று கூறுவது மக்களுடைய சோம்பேறித் தனம். ஒரு நாடு சிறப்புற முதலில் அந்நாட்டில் பசிப்பிணி இல்லா திருக்க வேண்டும். பசிப்பிணியற்ற நாட்டில்தான் நோயில்லா திருக்கும். போதுமான சத்துள்ள உணவு கிடைக் காத மக்களே பலவகையான பிணிகளுக்கு ஆளாகின்றனர். பசியும் பிணியும் தாண்டவம் ஆடும் நாட்டில் அமைதித்தேவி வாழமாட்டாள். கலகக் காளி புகுந்துவிடுவாள்; கொடுமைக் கூத்தாடுவாள். பசியால் வாடும் மக்கள் பொறுமையிழப்பர். எப்படியேனும் உயிர் பிழைத்தால் போதுமென எண்ணுவர். உயிர் வாழ்வதற்கு எதையும் செய்யத் துணிந்து இறங்குவர். இது இயல்பு ஆதலால் தான், உறுபசியும், ஓவாப்பிணியும், செறுபகையும், சேராது இயல்வது நாடு என்று வள்ளுவர் கூறினார். மக்களுக்கு உண்டாகும் மிகுந்த பசி. அந்தப் பசி காரண மாக உண்டாகும் நீங்காத நோய்கள், இவைகள் காரணமாக எழுந்து நாட்டைநாசப்படுத்தும் பகைவர்-கூட்டம் இவை யெல்லாம் இல்லாதிருப்பதே நாடாகும். ஆகவே ஒரு நாட்டில் எல்லாத்தீமைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பசிக்கொடுமை. இந்த உண்மையை மறந்த எந்த அரசியலும் நிலைத்திராது. மாறிவிடும். மாறாவிட்டாலும் அதனை மக்கள் மாற்றிவிடுவர். வறுமை, அதாவது உணவில்லையே உடையில்லேயே என்ற கவலையே மக்களுடைய உடல் உரத்தைக் குலைத்து விடும். உள்ளக்கிளர்ச்சியை ஒடுக்கிவிடும். உடல் தளர்ச்சி, உள்ளக் கவலை உண்டானால் வாலிபர்களும் வயோதிகராகத் தோற்ற மளிப்பார்கள். வாலிபர்களின் கருத்த மயிர்கள் நரைத்து வெள்ளிக் கம்பிகளாகக் காட்சியளிக்கும். கவலையினாலேயே-உடல்தளச்சி யினாலேயே விரைவில் தலைமயிர் நரைக்கிற தென்பது இன்றைய விஞ்ஞானிகளும் கண்டறிந்த உண்மை. உணவும் உடையும், இடமும் மக்களுக்குக் கிடைக்கு மாயின் உலகத்திலே கவலை. குடிபுகாது நோய்கள் தலைகாட்ட மாட்டா. கலகமும் தோன்றமாட்டாது. இன்று நடைபெறும் - தலைவிரித்தாடும் -சாதிச்சண்டை மதவெறி எல்லாம வறுமையை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மக்கள் வறுமையால் வாடுகின்றனர். அவ்வறிய மக்களுக்கு நலம் செய்வதாகக் கூறியே, சாதித் தலைவர்களும் மதத்தலைவர்களும், அவர்களை ஒருவரோடு ஒருவர் மோத விடுகின்றனர். நம்முடைய சாதிக்கு அதிகாரம் வந்தால் நமது வறுமை ஒழிந்துவிடும்; நமது மதத்துக்கு அரசு கிடைத்தால் நமது துன்பம் தொலைந்துவிடும் என்று சாதி-மதத்தலைவர்கள் கூறுகின்றனர்; கல்வியறிவற்ற பாமர மக்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றனர். வறுமையே இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் காரணம். நாட்டில் வறுமை இல்லாவிட்டடால் - எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் உடை, எல் லோருக்கும் உறையுள், எல்லோருக்கும் போதுமான ஓய்வு கிடைத்துவிட்டால் நாடு அமைதியாக இருக்கும். மக்கள் ஒரே குலமாய்க் குரோதமின்றிக் கூடிவாழ் வார்கள். உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்து ஓதிய வறிஞருக்கு ஏதும் கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் என்று வறியோர்க்கு உதவாத தன்மையைத் தன்மேல் ஏற்றிக் கூறினார். பரைத்தனி வெளியில் நடம்புரிந்தருளும் பரமனே! அரும்பெரும் பொருளே! தரைத்தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி நரைத்தவர் இளையர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள் உரைத்தபோ தெல்லாம் நடுங்கியென் உள்ளம் உடைந்தது உன் உளம்அறி யாதோ ! வாடிய பயிரைக் கண்டாபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோறு இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுஉளம் துடித்தேன் ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சில் இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். வறுமையால் வாடுவோர் அற்ற சிறந்த சமுதாயமாக மனித சமுதாயம் வாழவேண்டும் என்பதே வள்ளலார் உள்ளம். ஏழைகள் துன்பம் ஏழை என்றால் வறியவர். பொருளில்லாதவர், தரித்திரர்கள் என்று எல்லோரும அறிவர். ஆனால், ஏழை என்றால் அறியாத வர் என்று ஒரு பொருள் உண்டு. இது இலக்கிய வழக்கு. ஒருவனைப் பார்த்து பாவம், இவன் ஒரு ஏழை என்றால் அதன் பொருள் தமிழிலே அறியாதவன் என்பதுதான். தமிழிலே இத்தகைய ஆழ்ந்த பொருளில் வழங்கிவரும் இந்தச் சொல்லில் சிறந்த கருத்து உண்டு. அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்உடையரேனும் இலர் என்ற வள்ளுவர் வாய்மொழியின் கருத்தையே அறியாமை என்னும் பொருளில் வரும் ஏழைமை என்னும் சொல் விளக்கு கின்றது. அறிவுடையான் உலகப் பந்தய ஓட்டத்தில் வெற்றி பெறுவான். வாழ்க்கை இன்பத்தை நுகர்வது எப்படி? உலகில் இன்புறுதற்கான சாதனங்கள் எவை? அவைகளை அடைவது எப்படி? என்பவைகளே யெல்லாம் அறிவான்; அவைகளை அடைவான். புத்திமான் பலவான் என்பது நாம் சாதாரணமாகக் கேட்கும் பழமொழியல்லவா? ஆனால், மூடன் செய்கை இதற்கு முற்றிலும் வேறானது. நீக்குப் போக்குத் தெரியாமல் நிலை தவறுவான். நன்மை தீமையறியாமல் செல்வச் செருக்கால் அட்டகாசம் செய்வான். இன்புறுதற்கான சாதனங்களையெல்லாம் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு வந்துவிடுவான். செல்வம் படைத்த அறிவீனன் கதி இதுவானால், செல்வமற்ற அறியாதார் கதி அதோகதிதான். தங்களுடைய உழைப்பின் சக்தியை அறிந்துகொள்ளும் அறிவற்ற மக்களே இன்று ஏழைமக்களாகத் தவிக்கின்றார்கள். உணர்ச்சிகொண்ட மக்கள் தங்கள் உழைப்பின் பலனைப் பெறப் போராடுகின்றனர். ஆகவே, ஏழை என்பது வறுமையைக் குறிப்பதானாலும், அறியாமையே வறுமைக்குக் காரணம் என்ற பொருளில் இருப்பதைக் காணலாம். ஏழைமக்கள் அறிவு பெற்றுத் தங்கள் துயரைத் தீர்த்துக் கொள்ள முனையும்போது அவர்களுக்கு இடையூறுகள் பல நேரலாம். அவர்களை வாட்டிவதக்கி வந்த கூட்டத்தார். தங்கள் பலம் முழுதையும் கொண்டு அடக்க முன்வருவார்கள். அடக்கப் பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழை மக்கள் இருந்தால்தான் ஒருசிலர் சோம்பேரிகளாக வாழ முடியும். சுக போகிகளாக வாழ முடியும். அறிவு பெற்றெழும் ஏழைகளை அடக்குததற்கு அந்தக் காலத்தில மதம் பயன்பட்டது; பாவபுண்ணியம் பயன்பட்டது, தலைவிதி பயன்பட்டது. ஏழை ஒருவன் தன் துன்பத்திற்குத் தானே சமாதானம் செய்து கொள்ளுவான். என்ன செய்வது? நாம் வந்த வழி இது. ஆண்டவன் நம் தலையில் இப்படித் துயரத்தில் சாகவேண்டும் என்று எழுதிவிட்டான். அன்று எழுதினவன் அழித்து எழுதப்போவதில்லை! இதுவே அவன் சமாதானம். ஏழைகளை அடக்கி ஆண்டவர்களும் அவர்களுக்கு இந்த உபதேசத்தையே செய்து வந்தார்கள். ஒருவருடைய சுகத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் அவர்கள் பூர்வஜென்மத்தில் செய்த புண்ணிய - பாவம் மேலைத் தவத்தளாகவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் என்பது பெரியோர் வாக்கு. பூர்வத்தில் புண்ணியம் செய்யாதவர்கள் இப்பொழுது வறிஞராய்ப் பிரந்து வாடுகின்றனர். பூர்வத்தில் புண்ணியம் செய்தவர்கள் இப்பொழுது எல்லாச் செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ்கின்றனர் என்று தர்மோபதேசம் செய்து வந்தனர். இன்று இவ்வுப தேசத்திற்கு மதிப்பில்லை. கையால் ஆகாதவனுக்குத் தான் கடவுளும் தலைவிதியும் என்னும் காலம் வந்துவிட்டது. ஏழைகளின் எழுச்சிக்கு எதிரணி எப்பொழுதும் காத்திருக் கின்றது. அந்த எதிரணியைத் தகர்ப்பது எளிதல்ல. பெருமுயற்சி, பெருந்தியாகம், பெரும்போராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி கிடைக்க முடியும். உலக இயற்கையே எளியாரை வலியார் அடக்குதல்தான். நீர்வாழ் சாதியில் பெரிய திமிங்கிலம். சுறா போன்றவைகள் சிறு மீன்களை இரையாக்கிக் கொள்ளுகின்றன. விலங்குகளில் சிங்கம், புலி போன்ற கொடு விலங்குகள் மற்ற விலங்குகளைக் கொன்று தின்று உயிர் வாழ்கின்றன. பல்லி,பாம்பு, பூனை, சிலந்தி போன்ற உயிர்களை எல்லாமும் இவ்வாறுதான் தம்மினும் மெலிந்த உயிர்களை உண்டு உயிர்வாழ்கின்றன. ஆகையால், மக்களிலும் செல்வத்தால், பலத்தால,அறிவால் வலியவர்கள் மற்றவர்களை அடக்கியாளுதல் இயல்பு என்று கூறலாம். சுரண்டுவோர் கூறும் சமாதானமும் இதுதான். ஆம்; இயல்புதான். ஆனால் மக்கள் மிருகப் பிராயத்தி லிருந்து எத்தனையோ படி மேலேறி வந்துவிட்டனர். மக்களும் இயற்கையோடு இணைந்தே வாழ்ந்து கொண்டிருப்பார் களானால் இன்றைய உலகத்தை நாம் கண்டிருக்கவே முடியாது. மக்களும் மனிதக் குரங்குகளாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும். மக்களுடைய சிறப்பே இயற்கையை விட்டு வெளியேறிச் செயற்கையில் மேம்பட்டு வாழ்வதில்தான் அடங்கி யிருக்கிறது. இவ்வுண்மையை உணர்ந்த மனிதர்கள் ஏழைகளைச் சுரண்ட எண்ணமாட்டார்கள். பிறர் உழைப்பில் உயிர்வாழ நினைக்கமாட்டார்கள். பணம் இல்லார்க்கு இடுக்கண் புரிந்து, உண்ணும் சோற்றுப் பணம் பறித்து உழல்கின்ற படிறேன். பணமற்றவர்களுக்கெல்லாம் துன்பஞ் செய்கின்றேன். அவர்கள் சோற்றுக்காக வைத்திருக்கின்ற பணத்தைப் பறித்துக் கொண்டு திரிகின்ற பொய்வாழ்க்கையை உடையேன். எளியவர் வளைத்த நிலம்எலாம் கவரும் எண்ணமே பெரிதுளேன்; புன்செய்க் களிஉணும் மனையில் சர்க்ரை கலந்து காய்ச்சுபால் கேட்டுஉண்ட கடையேன்; துளிஅவர்க்கு உதவேன்; விருப்புஇலான் போலச் சுவைபெறச் சுவைத்தநாக்கு உடையேன்; நளிர்எனச் சுழன்றேன்; எனினும் உனையே நம்பினேன்; கைவிடேல் எனையே. புன்செய் நிலத்துத் தானியங்களைக் கொண்டு களிசெய்து உண்ணும் வீட்டில் புகுந்து சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிய பால் வாங்கிக் குடித்தேன். அதில் ஒரு துளிகூட அவர்களுக்குக் கொடுத்திலேன். இவ்வாறு செல்வர்கள் ஏழைகளின் நிலையை அறியாமல் நடந்துகொள்ளுந் தன்மையைத் தன்மேல் ஏற்றிக் கூறுகின்றார். இரக்க சிந்தையுடையவர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் பணமற்றவர்களின் பணத்தைப் பறிக்க முந்தமாட்டார்கள். களியையே உணவாகச் சாப்பிடுகிறவர்கள் வீட்டில் புகுந்து பசும்பால் காய்ச்சிக் கொடுக்கவேண்டும் என்று பயமுறுத்த மாட்டார்கள். எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம் தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன்; திருவுளம் அறியும்எந் தாயே! எளியவரை வலியார் அடித்தபோது என் மனத்தில் உண்டான கலக்கத்தை என்னால் தெளிவாகக் கூறமுடியாது. பிறர் அக் கொடுமையை உணரும்படி தெளிவாகக் கூறும் வல்லமை எனக்கில்லை. இதை உன் திருவுள்ளம் அறியும். இவ்வாறு வலியோர் எளியோர்க்கு இழைக்கும் தீமையை வள்ளலார் எடுத்துக் கூறுகிறார். வலிமையுடையவர்கள், எல்லோர் பாலும் இரக்கம் உடையவர்களாய், மனிதத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே வள்ளலார் வாய்மொழி. வட்டிச் சுரண்டல் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். - இது பழமொழி. பழமொழியாயினும், என்றும் புதுமொழியாகவே விளங்குகின்றது. இந்தப் பணத்திற்கு இவ்வளவு மகிமை எப்படி வந்தது? எப்படி நிலைத்திருக்கிறது? பணத்தால் ஆகாத செயல் எதுவும் இல்லை. பணத்தால எப்பொருளையும் பெறலாம். பணம் இல்லாதார் பிணம் என்பது ஒரு பழமொழி. இதுவும் பண்டுதொட்டு வழங்கிவருகிறது. இன்றும் இப்பழ மொழி வழக்கில் -அநுபவத்தில் உள்ள புதுமொழியாகவே விளங்குகின்றது. பணமில்லாதவரை ஒருவரும் மதிப்ப தில்லை. பணமில்லாதவர்களுக்கு எப்பொருளும் கிடைப்பதில்லை. அவர்கள் விரும்பிய சுகங்களை அடைய முடியவதில்லை. அவர்கள் உயிருடன் இருப்பினும் - நடப்பினும் பேசினும்-நடமாடும் பிணங்கள்தாம். வாழ்க்கையானது பணமில்லாவிட்டால் நடக்காது. பணமில்லாதவர்கள் உலகில் உயிர்வாழ வேண்டுமானால் பணமுள்ளவரிடம் அடிமையாக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வயிறு கழுவ வேண்டும். தனது எண்ணம், சொல், செயல் இவைகளுக்குச் சுதந்திரமின்றி மாடுபோல உழைக்க வேண்டும்; அல்லது தெருத்தெருவாய் அலைந்து பிச்சையெடுக்க வேண்டும்; அல்லது தற்கொலை செய்துகொண்டு உலக வாழ்க்கையைத் துறக்கவேண்டும். ஒரு சிலரிடம் பணம் அகப்பட்டுக் கொண்டது. பலரிடம் பணம் இல்லை. அந்த ஒரு சிலரே பண்டங்களை உற்பத்தி யாவதற்குக் காரணமான பல கருவிகளையும் தம் வசப்படுத்திக் கொண்டனர். அவைகளைக்கொண்டு பணத்தைத் திரட்டுகின்றனர். ஈட்டி எட்டினமட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையும் பாயும் என்பதை இவர்கள் உண்மையாக்கிவிட்டனர். வேலை செய்யும் தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கைச் செலவுக்கு வருவாய் போதாமையினால் லேவாதேவிக்காரர் களிடம் கடன் வாங்குகின்றனர். வாங்குகின்ற கடனுக்கு வட்டி கொடுக்கின்றனர். குறித்த காலத்தில் கடனையும் வட்டி யையும் கட்ட முடியாவிட்டால் வட்டிக்கு வட்டி கொடுக் கின்றனர். இந்த முறையில் உழைப்பாளிகளின் பணத்தில் பெரும்பகுதி வட்டியின் பேரால் பணக்காரர்களிடமே திரும்பிப் போய்விடுகிறது. சிறிய விவசாயிகளின் நிலையும் இதுதான். குறைந்த நிலம் உள்ளவர்கள் தங்கள் வருவாய் போதாமையால் நிலதை தாங்கள் வசிக்கும் வீட்டை-லேவாதேவிக்காரர்களிடம் அடமானம் வைத்துக் கடன் வாங்குகின்றனர்; அதிக வட்டிக்குக் கடன் வாங்குகின்றனர். குறித்த காலத்தில் கடனைக் கொடுக்க முடியாமல் வட்டிக்கு வட்டி சேர்த்துக் கொடுக்கின்றனர். கடைசியில் தங்கள் வாழ்க்கைச் சாதனமாகிய நிலத்தையே இழக்கின்றனர்; வீட்டையும் இழக்கின்றனர். பிறகு பிறரிடம் வேலை செய்யும் தொழிலாளிகளாகிடுகின்றனர். வியாபாரிகளில் பலருடைய நிலையும் இப்படித்தான். வட்டி கொடுத்துக் கடன் வாங்கியே பலர் வியாபாரம் செய் கின்றனர். அவர்கள் வியாபாரத்தின்மூலம் பெறும் லாபத்தில் ஒருபகுதியை வட்டிக்காக இழந்துவிடுகின்றனர். வியாபாரத்தில் லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும் சரி, வாங்கின கடனுக்கு வட்டிகொடுத்துத்தான் தீரவேண்டும். இந்த முறையில் பார்த்தால் பல வியாபாரிகள் லேவாதேவிக் காரர்களின் கைப்பாவைகளாகவே வாழ்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், சிறிய வியாபாரிகள் முன்னுக்கு வராமைக்குக் காரணம் முதலில் போதுமான வருவாய் இல்லாமை; இரண்டாவது வட்டிக்குக் கடன் வாங்குவது; மூன்றாவது வட்டிக்குமேல் வட்டிகொடுப்பது. லேவாதேவி இல்லாவிட்டால் - பாங்கிகள் கடன்கொடுக்க விட்டால் நாட்டில் வியாபாரம் பெருகாது. கைத்தொழிற்சாலைகள் உண்டாக வழியில்லை. தொழில்கள் வளர்ச்சியடையமாட்டா என்று சிலர் கூறுவார்கள். இப்பொழுதுள்ள அரசியல் அமைப்பு முறையில்-சமூக அமைப்பு நிலைமையில் இது உண்மைதான். ஆனால் இந்த அரசியலமைப்பும், சமூகம் அமைப்பு என்றும் சிரஞ்சீவியாக வாழவேண்டும் என்று ஏழை மக்கள் விரும்ப வில்லை. இவை மாறவேண்டும்; மாறாவிட்டால் மாற்ற வேண்டும் என்றே விரும்புகின்றனர். பணம் கடன்கொடுப்பது, அதற்கு வட்டி வாங்குவது என்ற முறை இருக்கும்வரையில் உலகத்தில் கொடுமைதான் தாண்டவ மாடும். வட்டி பெறுகின்றவர்களைக்காடிலும் வட்டிக்கு வட்டி வாங்குகிறவர்களைக் காட்டிலும் கடின சித்தம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. தாட்சண்யம் தனநாசம் என்பது பழமொழியல்லவா? இப்பழமொழி வட்டிக் கடைக்காரர்களுக் காகவே அதாவது லேவாதேவி செய்பவர்க்காகவே ஏற்பட்டிருக் கலாம் என்பதில் ஐயமில்லை. லேவாதேவிக் காரர்களிடம் தாட்சண்யம் இருந்தால் வட்டியை இழக்கவேண்டியது தான்; முதலையும் இழக்க வேண்டியது தான். உலகை அடிமைப்படுத்துவது, ஏழைகளைக் கொடுமைப் படுத்துவது, மனித சமூகத்தில் பொருளாதார உயர்வு தாழ்வு ஏற்படுத்துவது, மக்கள் மனத்தை இரக்கமற்றதாக்குவது இந்த வட்டித் தொழில்தான்; பணத்திற்கு வட்டி வாங்கும் முறைதான். இதனால்தான் முன்னோர், பணத்திற்கு வட்டி வாங்கு வோன் நரகத்தையடைவான் என்று கூறினர். பணத்திற்கு வட்டி வாங்குவது பாவம் என்பதே இந்துமதக் கொள்கை. இந்தக் கொள்கையை வட்டிக் கடைக்காரர்கள் மறந்துவிடுவதில்லை. அநியாய வட்டி வாங்குவது பாவம் என்றே அவர்களும் நினைக் கின்றனர். ஆயினும் வட்டி வாங்குவதில் தவறுவதில்லை அந்தப் பாவத்தை ஏதேனும் தருமம் செய்வதன் மூலம் பரிகரித்துக் கொள்ளலாம் என்று நினைத்துவிடுகின்றனர். பாவத்திற்குப் பிராயச்சித்தம் உண்டு என்ற கொள்கையே, இவ்வாறு பலரை நீதியற்ற-நெறியிலே நடக்கச் செய்கிறது. முலீம் மதத்திலும் பணத்திற்கு வட்டி வாங்குவது பாவம் என்ற வற்புறுத்தப்படு கின்றது. ஆனால் இன்று யாரும் மதக் கோட்பாட்டைப் பின் பற்றுவதில்லை. பணக்கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர். இந்தக் கொடுமையான நிலைமையைக் கண்டுதான் வள்ளலார் கண்ணீர் விடுகின்றார். வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர். பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கின்றீர், வயிற்றுப் பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டிஉள் ளிருந்தீர். பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர், பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர். எட்டிபோல் வாழ்கின்றீர்! கொட்டிபோல் கிளைத்தீர்! எத்துணை கொள்கின்றீர் ? பித்துல கீரே! ஏ, உலக மக்களே ! நீங்கள் வட்டிக்குமேல் வட்டிபோட்டு வாங்குகிறீர்கள் ! பணத்தைப் பெருக்குகிறீர்கள்! உண்மையாக இந்த உடலைப் பெற்றதற்கான லாபத்தை வளர்க்கின்ற வழியை அறியாமல் இருக்கின்றீர்கள். பணப்பெட்டியின் மேல் பணப்பெட்டியை அடுக்கி வைத்துக் கொண்டிருக் கின்றீர்கள். உங்களுடைய வயிற்றுப் பெட்டியை மாத்திரம் சோற்றால் நிரப்பிக் கொண்டு வீட்டுக்குள் இருக்கின்றீர்கள். பட்டினிகிடப்பார் முகத்தைப் பார்ப்பதற்குக்கூடச் சம்மதப் படமாட்டீர்கள். சாப்பிட முடியாமல் புளித்துப் பான பழங் கஞ்சியைக் கூட அவர்களுக்கு ஊற்றச் சம்மதிக்க மாட்டீர்கள். எட்டி மரம்போலப் பிறர்க்கு உதவாமல் தீமை செய்து வாழ் கின்றீர்கள்; கொட்டிச் செடிபோல் பெருகியிருக் கின்றீர்கள்; எவ்வளவு பாவத்தைக் கட்டிக் கொள்ளுகின்றார்கள்? பைத்தியம் பிடித்த உலகமக்களே! இப்படிச் செய்யலாமா? இவ்வாறு கதறுகிறார் வள்ளலார். வட்டித்தொழில் மனிதனுக்கு எவ்வளவு ஆசையை உண்டாக்குகிறது? அவனை எவ்வளவு சுயநலமுடையவனாக்குகிறது? எவ்வளவு பச்சாதாபம் அற்றவனாக்குகிறது ? என்பதை இதனால் அறியலாம். வட்டிக்கொடுமை ஒழியவேண்டுமானால் அரசாங்கமே மக்களுக்குப் பணஉதவி செய்ய முன் வரவேண்டும். தனிப்பட்ட வர்களின் பாங்கிகள்-லேவாதேவிகள் ஒழியவேண்டும். வீட்டுப் பஞ்சம் எவருக்கும் இன்ப வாழ்க்கையில் ஆசையுண்டு. துன்புற்று வாழத் துணிவார் யாரும் இல்லை. இன்பமாக வாழ்வதற்கு வேண்டுவன பல. அவற்றுள் அடிப்படையானவை சில. அந்த அடிப்படைக் கருவிகள் மூன்று இடம், பொருள், ஏவல் என்பன. இந்த இடம், பொருள், ஏவலைப் பொறுத்ததே ஒரு மனிதனுடைய வாழ்க்கை. இந்த மூன்றுள் முதலில் நிற்பது இடம். சுவர் இல்லா விட்டால் சித்திரம் எங்கே? உடம்பில்லாவிட்டால், உடம்பு நோயுற்று நடக்கப் பலமற்று நலிவடையுமாயின் நாம் என்ன செய்யமுடியும்? உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று திருமூலர் கூறியிருப்பது உண்மையன்றோ? ஆதலால் எதற்கும் இடமே ஆதரவு. ஒரு இடத்தின் மேல்தான் எந்தப்பொருளும் வாழவேண்டும். ஆதலால்தான் மனிதன் வாழ்வதற்கு அடிப்படைச் சாதனங்களாகிய மூன்றினுள் முதலில் இடத்தைக் கூறினர். முதலில் மக்கள் வாழ்வதற்கு இடம் வேண்டும். அந்த இடத்தில், காற்றோட்டம், போதுமான வெளிச்சம், தேவையான நல்ல தண்ணீர், சுற்றுப்புறம், உட்புறம் சுகாதாரம் எல்லாம் அமைந்திருக்க வேண்டும். நாள் முழுவதும் உடம்பு நோகப் பாடுபடுகின்ற மக்கள் பலர். பகல் முழுவதும் தலைவலிக்கச் சிந்தனையில் ஈடுபட்டுச் செயல்புரிவோர் பலர். அவர்களுக்கெல்லாம் உழைபபுக்கேற்ற ஓய்வு வேண்டும். ஓய்வு பெறுவதற்கு இடம் தேவை. அந்த இடம், இவர்களுக்கும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர் களுக்கும் போதுமானதாக இருக்கவேண்டும். உழைத்த நேரம்போக ஓய்ந்த நேரத்தில் ஓரிடத்தில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து ஓய்வு பெற்றுக்கொள்ளுபவரே மீண்டும் தம்முடைய உழைப்பைத் திறமையுடன் செய்ய முடியும். அமைதியாகத் தூங்குவதற்கு கவலையின்றி மகிழ்ந் திருப்பதற்கு வழியற்றவர்கள் தமது உழைப்பில் வெற்றி பெறமுடியாது; உள்ளத்தோடு உழைக்கவும் முடியாது. கடனுக்கு உழைத்துக் காலம் கழிப்பவராகிவிடுவர். இதனால் அவருடைய உள்ளமும் நலியும்; உடலும் மெலியும்; வாழ்க்கையில் விருப்பம் கொள்ளமாட்டார்; வெறுப்பே கொள்வர்; ஆகையால்தான் எல்லோரும் முதலில் இருப்பதற்கு இடம் தேடுகின்றனர். இது இயற்கை. உலகில் உறைவிடம் தேடாத உயிர்களே இல்லை. பாம்புக்கும் புற்றுண்டு. நரிக்கும், எறும்புக்கும் வளையுண்டு. சில பறவைகளும் அழகிய வேலைப்பாடமைந்த கூடுகள் கட்டி வாழ்கின்றன. எல்லா உயிரும் இன்புறுதற்கு இடந்தேடிக் கொள்கின்றன. மக்களும் பண்டைக் காலத்திலிருந்தே, பருவ காலக் கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வீடுகள் கட்டிக்கொண்டனர். உழைத்த நேரம்போக ஒழிந்த நேரத்தில் ஓய்வு பெறுவதற்கு இடம் தேடிக்கொண்டனர். பண்டை நாளில் மக்களிடையில் பண்டமாற்றுதல் முறையே வழங்கி வந்தது. நெல்லைக் கொடுத்துத் துணி வாங்கிக் கொள்வது; துணியைக் கொடுத்து துவரை வாங்கிக்கொள்வது. இதுபோல் தன்னிடம் உள்ள பண்டத்தைக் கொடுத்துத் தனக்கு வேண்டிய பண்டத்தை வாங்கிக் கொள்வது. இதற்கே பண்ட மாற்றுதல் என்ற பெயர். இந்தமுறை மாறி, நாணயத்தைக் கொடுத்துப் பண்டத்தை வாங்குவது என்ற முறை ஏற்பட்டது. இந்தமுறை ஏற்பட்ட பிறகுதான் சமூகத்தில் சோம்பேரிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. தந்திரசாலிகளுக்குத் தகுந்த வசதி கிடைத்தது. ஏமாற்றும், தந்திரமும், கள்ளங்கபடமற்ற உழைப்பாளர்களைக் கட்டிப் பிணைத்து அடிமையாக்கின. தமது பண்டத்தை விற்றதனால் பெற்ற பொருளைக் கொண்டு தமக்குத் தேவையானவைகளைப்பெற முடியாதவர் களாயினர் பலர். இதனால் அவர்கள் கடன் வாங்கத் தொடங்கினர். கடனுக்கு வட்டி கொடுத்தனர். கடன் கொடுத்து வட்டி வாங்கினவர்கள் செல்வர்களாயினர் கடன்பெற்று வட்டி கட்டினவர்கள் ஏழைகளாயினர்; தங்கள் வாழ்க்கைச் சாதனங் களையிழந்தனர்; ஓட்டாண்டிகளாயினர். கடன் வாங்கினவர்கள் பலர் தங்கள் இடத்தை வீட்டை யிழந்தனர். இதனால் ஒருசிலருக்குத் தேவைக்குமேல் வீடுகள், பலருக்கு இருக்க இடமே இல்லை. இருக்க இடமில்லாமல் பலர் பரிதவிப்பது இயற்கைக்கு விரோதம். ஏராளமான வீடுகளைத் தேவைக்கு மேற்பட்டதாக ஒருசிலர் வைத்துக்கொண்டிருப்பது அநீதி. பணக்காரனுக்கு வீடுகள் சேர்வது விந்தை. பணமில்லா தவன் தன் வீடின்மேல் கடன் வாங்குகின்றான். வாங்கின கடனை அவனால் கொடுக்கமுடிவதில்லை; வட்டியையும் கட்டமுடிவதில்லை. இதனால் வாங்கின கடன் வளருகிறது. கடைசியில் கடன் கொடுத்தோன் வீட்டைப் பிடுங்கிக் கொள்கிறான். இம் முறையிலேயே பலர் தங்கள் பரம்பரைச் சொத்தான வீட்டையிழந்து பரிதவிக்கின்றனர். ஏழை வீட்டைப் பணக்காரன் கவர்ந்துகொள்ளும் இந்த முறை பல நூற்றாண்டு களாகவே வழக்கத்தில் இருந்து வருகின்றதுபோலும். வீட்டைக் கவரும் நோக்கத்துடனேயே பணக்காரர்களும் வீட்டின்மேல் கடன் கொடுத்துவந்தனர்; இன்றும் கொடுத்து வருகின்றனர். இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்பதே இராமலிங்கர் கருத்து. வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன். வட்டிக்குக் கொடுத்து, அந்த வட்டிக்கு வட்டி சேர்த்து, பணத்தை அதிகமாக்கி வீட்டைக் கவர்ந்துகொள்ளும் வழக்கம் கொடுமை யானது. எல்லா மக்களுக்கும் இடம் இன்றியமையாதது. இந்த இடத்தைப் பிடுங்கும் செய்கை கொடுமை ஒழிய வேண்டும் என்பதே அவர் கருத்து. எல்லா மக்களுக்கும் இடவசதி வேண்டும். இருப்பதற்கு இடமில்லாவிட்டால் எவரும் இன்புற முடியாது. வீடற்றோர் தொகை பெருகிக்கொண்டே போகுமானால் அது ஆபத்தாகும். சமுதாயம் பாதிக்கப்படும் வீடற்றவர்கள் அமைதியாக வாழ்வதற்கு வழியில்லை. நல்ல உணவு பெறு வதற்கும் ஓய்வு பெறுவதற்கும் வழியில்லை. இதனால் உழைப்பின் திறமை குறையும். உழைக்கும் திறமை குறைந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் புரையோடும். ஆட்சிமுறையில் அசைவு காணும். நாட்டிலே போதுமான இடமுண்டு; வீடமைப்ப தற்குக் கருவிகளும் ஏராளம். உழைப்போரும் உண்டு. ஆளுவோர் உள்ளம் விரிவடைந்தால் எல்லோரும் இன்புறுவர். நில உரிமை நிலத்திலே யாருக்கு உரிமை? என்ற பேச்சே இன்று எங்கும் நிலவுகிறது. ஏழை விவசாயிகள் எங்களுக்கே நிலம் சொந்தம் என்கின்றனர். உழைப்பின் அருமை அறியாமல் உண்டு உறங்கி உல்லாசமாக வாழும் நிலச்சுவான்தாரர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். இந்தப் பண்ணையாட்களுக்கு இவ்வளவு அகங்காரமா? இந்தக் குத்தகைதாரருக்கு இவ்வளவு தைரியமா? என் பணத்தைக் கொட்டி வாங்கிய நிலத்தை இந்தப் பஞ்சைகள் ஆக்கிரமிப்பதா? நானா விட்டு விடுகிறவன்? பார்க்கிறேன் இவர்களை ஒருகை? என்று சண்டப் பிரசண்டமாகப் பேசுகிறார் பெரிய நிலக்காரர். ஆம்; ஆசை யாரைவிட்டது? நிலத்திலே பாடுபட்டுப் பலன் உண்டாக்க முடியாதவர்கள் நிலத்தைப் பிறர் கையில் கொடுக்க விரும்ப மாட்டார்கள்தான். பணத்தை எப்படிச் செலவு செய்வது? பணம் பெற்றிருப்பதற்குப் பயன் என்ன? பொன்காத்த பூதமாய் விளங்குவதால் யாருக்கு நன்மை? என்று எண்ணிப் பார்க்கும் இயல்பற்றவர்களும் பணத்தில் உள்ளபற்றை விட மாட்டார்கள். வயதேறிவிட்டது. தலையாடுகின்றது. நடந்தால் கைகால்கள் நடுங்குகின்றன. கோலின் துணையின்றிக் கொஞ்ச தூரங்கூட நடக்கமுடியாது. நரம்புகள் எல்லாம் முறுக்கின்றி நலிவடைந்துவிட்டன. இந்த நிலையில் உள்ள கிழவர்களுக்கும் இளமை உணர்ச்சி இல்மல் போய்விடுவ தில்லை. அழகுள்ள பெண்ணென்றால் ஆ வென்று அண்ணாந்து பார்க்கின்றனர். ஆகவே நிலத்தாசை, பணத்தாசை நீள்விழி மடவார்மேல் ஆசை மூன்றும் மனிதனை விட்டுவிடுவதில்லை. சாகும் வரையிலும் ஆடவர்களின் அகத்திலே குடி கொண்டிருக் கின்றன. நிலத்தினும், பணத்தும், நீள்விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன். இது வள்ளலார் வாக்கு மனத்திலே தோன்றும் மூவகை ஆசைகள் மண், பொன், பெண். இவற்றுள் முதன்மையானது மண்ணாசை. மண்ணிலேதான் உணவுக்கான தானியங்கள் விளைகின்றன; பழங்கள், பருப்பு வகைள், கிழங்குகள், காய்கறிகள் எல்லாம் தோன்றுகின்றன. இவைகள் இல்லாவிட்டால் எவ்வுயிரும் இவ்வுலகில் இயங்கமுடியாது. உணவின்றேல் யார்தான் உயிர் வாழமுடியும். நமது வாழ்க்கைக்கு உதவும் மற்றைய பொருள்களையும் நிலமே தருகின்றது. பொன்னைத் தருகிறது. வெள்ளியைத் தருகிறது. இரும்பைத் தருகிறது. ஈயத்தைத் தருகிறது. எண்ணெ யைத் தருகிறது. நிலக்கரியைத் தருகிறது. இன்றும் வைரம், வைடூரியம், கோமேதகம் முதலிய நவரத்தினங்களையும் நமக்குக் கொடுப்பது பூமியே. நிலமே முதன்மையான செல்வம்; அடிப்படையான செல்வம். இந்த நிலம் பாழாக தரிசாக பயிர் செய்யாமல் வீணாகக் கிடப்பது நாட்டுக்கு நட்டம். உலகத்திற்கு வறுமை. மக்களுக்குத் தொல்லை. ஆதலால் நிலங்கள் சும்மா கிடப்பதை அறிவுள்ள எவரும் அனுமதிக்க முடியாது. உணவுப் பொருள் உற்பத்தியாகும் நிலங்கள் நமது நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. இருந்தும் நமது நிலை மானக் கேடானது. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய் கிடைக்கவில்லையே என்று நெஞ்சங் குமுறி அழுகிற வனுக்கும் நமக்கும் வேற்றுமையில்லை. விளைநிலங்கள் இருந்தும் பசி தீர்க்கும் பண்டங்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை. காரணம் என்ன? பெரிய நிலச்சுவான்தாரர்களது நிலங்களின் பல பாகம் பாழாய்க் கிடக்கின்றன. உழுது பயிரிடப்படும் நிலங்களும் உரம் போதாமல், ஒழுங்கான பாதுகாப்பில்லாமல் விளைவதில்லை. குறைந்த பலனையே கொடுக்கின்றன. நிலங்களில் இறங்கிவேலை செய்கின்றனர் கோடிக் கணக்கான மக்கள். அவர்களுக்கு அந்த நிலத்தில் உரிமை யில்லை. இன்னும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாடுபட்டுப் பயிர் செய்வதற்கு நிலமே கிடைப்பதில்லை. பாடுபட்டால் பலன் கிடைக்கும். அந்தப் பலனை நாம் அனுபவிப்போம். இன்றைய கஷ்டம், நாளைக்க நன்மை தரும் என்ற நம்பிக்கை யிருந்தால் தானே உழைப்பாளிகள் ஊக்கத்தோடு உழைப் பார்கள். நேரடியாக நிலத்தில் இறங்கி உழைக்கும் ஆற்றல் அற்றவர் களிடம் அதிகமான நிலங்கள் அடங்கிக் கிடக்கின்றன. நிலம் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாதவர்களுக்கு எவ் வளவோ நிலம் சொந்தம். நிலத்தில் எப்படிப் பயிர் செய்வது? எந்த நிலத்தில் என்ன பயிர் செய்யலாம்? என்று எண்ணிப் பார்க்கும் திறமையற்றவர்கள் பலர் நிலச்சுவான் தாரர்களா யிருக்கின்றனர். பண்டைநாளில் நிலம், பாடுபடுவனுக்குச் சொந்தம், ஒவ்வொருவரும் தமது உழைப்புச் சக்திக்கேற்ற அளவு நிலத்தைப் பயிர்செய்து வந்தனர். மக்களின் தேவைக்கேற்ற பயிர்களைச் செய்து வந்தனர். இதனால் அந்நாளில் உணவுப் பஞ்சம் ஏற்பட வேயில்லை. இந்நாளில் உழைப்பவனுக்கு உரியது நிலம் என்ற கொள்கை மாறிவிட்டது. பாடுபடாத பணக்காரனுக்கு நிலத் உரிமை ஏற்பட்டது. அந்நாளில் உழவர்களே நிலத்தலைவர் கள்; இந்நாளில் பணக்காரர்கள் நிலக் கிழவர்கள். இந்த முறை மாறினாலன்றி நாட்டில் உணவுப்பொருள் உற்பத்தி பெருக முடியாது. வறிஞன் ஓம்பும் ஓர் செய்யெனக் காத்து இனிது அரசு செய்தான். என்று கம்பர் தசரதனைப் பற்றிக் கூறுகிறார். நேரடியாக நிலத்தில் உழைக்கும் ஏழை விவசாயி தன்னுடைய நிலத்தை எவ்வாறு பாதுகாத்து அதிக விளைவை உற்பத்தி செய்கிறானோ அது போல் தசரதன் தனது நாட்டைப் பாதுகாத்தான் என்கிறார் கம்பர். இதிலிருந்து, நிலம் உழுகிறவனுக்கு உரிமையாயிருந்தால் தான் உற்பத்தி குறையாது என்பது கம்பன் கருத்தென்பதைக் காணலாம். இதே கருத்தைத்தான் வள்ளலாரும் வற்புறுத்தியிருக்கிறார். எளியவர் வளைத்த நிலமெலாம் கவரும் எண்ணமே பெரிதுளேன். ஏழைகள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பாடுபடுவதற்கு வைத்துக் கொண்டிருக்கும் நிலத்தைப் பணத்தால் கவரு கின்றனர் பலர். இந்த எண்ணம் மனித சமுதாயத்தில் வளர்ந்து வந்தால் பெரும் பாதகம் விளையும்! இதனால் நிலத்தில் விளையும் பலன் குறைந்துவிடும். நிலத்தில் பாடுபடுவோர் குறைவர். பாடுபடுவோர்க்கும் ஊக்கம் இராது. உற்பத்தி குறையும். இவ் வுண்மையை இன்றைய உலகம் உணர்ந்து விட்டது. நமது நாடும் அறிந்துவிட்டது. உழவர்க்கு நிலத்தில் உரிமை வேண்டும் என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் இன்று ஒருவரும் இல்லை. வள்ளலார் கருத்து நிறைவேறும் காலம் இன்று வந்துவிட்டது. ஆதலால் உழவர்களின் நிலம் பணக்காரர்கள் வசம் ஆகாமல் தடுக்க வேண்டும். இதுவே வள்ளலார் உள்ளக்கிடக்கை. எல்லார்க்கும் செல்வம் சாதி இரண்டொழிய வேறில்லை. கொடுப்போர் ஒரு சாதி, கொடாதவர்கள் ஒரு சாதி. கொடுப்போர் உயர்ந்தவர்கள். கொடாதவர்கள் இழிந்தவர்கள், ஆகையால் சாதிகள் பல சொல்லிச் சண்டையிட்டுச் சாகவேண்டாம் என்றார் ஔவைப் பிராட்டியார். பணம் படைத்தவன் கொடுக்கும் தன்மை யுள்ளவன்; பணமில்லாதவன் வாங்கும் தன்மையுள்ளவன். ஆகவே, பணக்காரன் ஒரு சாதி, ஏழை ஒரு சாதி. இதுவே ஔவையார் கருத்து. இன்று உலகில் மக்கள் இரு அணியாகப் பிரிந்து நிற்கின்றனர். இல்லாதவர்கள் அதாவது பாடுபகிறவர்களின் அணி ஒன்று; உள்ளவர்கள் அதாவது இல்லாதவர்களை அடக்கியாளுவோர் அணி ஒன்று. ஆக இரண்டே அணிதான். இந்தச் செல்வர் படைக்கும், ஏழைகள் படைக்கும் சமாதானம் ஏற்படவேண்டும். அல்லது இரு படைகளில் எந்தப் படையேனும் தோல்வியடைய வேண்டும். அப்பொழுதுதான் மனித சமுதாயத்தில் சமாதானம் தோன்றும். இந்த இரண்டில் ஒன்று நடைபெறாவிட்டால், சமூகத்தில் சண்டையும் சச்சரவும் குமுறிக்கொண்டுதான் இருக்கும். இல்லாதவர்களின் கூட்டத்துக்கும் உள்ளவர்களின் கூட்டத்திற்கும் இடையில் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் இல்லாதவர்களும் அல்லர்; உள்ளவர் களும் அல்லர். இல்லா தவர்கள் கேட்கும் வசதிகள் எல்லாம் தங்களுக்கும் வேண்டும் என்பர்; உள்ளவர்கப்போல நடிப்பர். துன்பப் படாமல் இன்பத்தை நுகரவேண்டும் என்பதே இந்த நடுத்தர வாதிகளின் நோக்கம். இவர்கள் உள்ளவர்களின் கைப்பதுமைகள். இல்லாதவர் களிடம் இவர் களுக்கு அனுதாபம் உண்டு; இரக்கம் உண்டு. உள்ளவர்கள் செய்வதில் அநியாயம் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள்; இல்லாதவர்கள் கூறும் குறைக ளெல்லாம் உண்மையானவை என்று ஒப்புக் கொள்ளுவார்கள். ஆனால் இவர்கள் தங்கள் சுயநலம் கருதி, உள்ளவர்கள் பக்கத்திலேயே நிற்பார்கள். உள்ளவர்கள் கைகள்தான் பலமுள்ளவை என்பது இவர்கள் கருத்து. உள்ளவர்களின் கோட்டை உடைந்து போய் விடும்; இல்லாதவர்களின் படை வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை நேரும்போது இந்த நடுத்தரவாதிகள், பெரும் பான்மை யினர் பக்கம் சேர்ந்துவிடுவார்கள். இந்த முறையில் பார்க்கும்போது, இப்பொழுதுள்ள மனித சமூகத்தை மூன்று பிரிவாகப் பிரித்துவிடலாம். முதலாளிகள், தொழிலாளிகள், நடுத்தர வகுப்பினர் என்ற மூன்றுதான் அப்பிரிவு. நாட்டில் உள்ள நிலங்களையெல்லாம் தம் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் ஒருசிலர். பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை யெல்லாம் தங்களுக்கே உரிமை யென்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர் சிலர். பண்டங்களை யெல்லாம் வாங்குவதற்குக் கருவியான நாணயச் செலாவணி ஒருசிலரின் இரும்புக் பெட்டிகளுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. இவ்வாறு தேசத்தின் செல்வங்களையெல்லாம் தமக்கே உரிமை யாக்கிக் கொண்டிருப்போரே முதலாளிகள் ஆவார்கள்; அல்லது உயர்ந்த வர்க்கத்தினர் ஆவார்கள். இவர்களுக்கு நேர்மாறாக உள்ள, இல்லாத வகுப்பினருக்கு இவ்வுலகில் எதுவும் சொந்தம் இல்லை. உழைப்பு ஒன்றுதான் அவர்களுக்குச் சொந்தம். நிலங்களில் வேலை செய்வார்கள்; உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வார்கள்; அரை வயிற்றுச் சோற்றுக்குக் கூட வழியில்லாமல் ஆவி துறப்பார்கள் அவர்கள் பெண்டு பிள்ளைகள் எல்லாம் பட்டினி கிடந்து பரிதவிக்கும் நல்ல அழகிய ஆடைகளை நெய்து குவிப்பார்கள்; அவர்களும், அவர்களை அண்டி வாழ்வோரும் கந்தைத் துணியுடன் காட்சி யளிப்பார்கள்! எல்லா வசதிகளும் நிறைந்த எழில் வளரும் மாளிகைகளை எழுப்புவார்கள்; அவர்கள் குந்தக் குடிசை யின்றிக் குளிரிலும் வெயிலிலும் அகப்பட்டு வருந்தி நெஞ்சு குமுறுவார்கள் ! இம்மாதிரி உள்ளம் வருந்தி, உடல் வற்றி, உயிர் விடுகின்றவர்கள் தாழ்ந்த வகுப்பினர்; கடைசி வர்க்கம் இவர் களே அன்று சூத்திரர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்; இன்று பாட்டாளி மக்கள் தொழிலாளர்கள் என்று வேறு பெயரால் அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இடையில் உள்ளவர்கள் நடுத்தர வகுப்பினர். இவர்கள் முதலாளிகளிடம் கணக்கப்பிள்ளைகளாக இருப்பர்; காரியதர்களாக இருப்பர்; அவர்கள் இட்ட கட்டளை களைச் செய்வார்கள். அரசாங்கக் காரியாலயங்களில் பற்றாக் குறைச் சம்பளத்துடன் வேலை பார்ப்பார்கள். இவர்களும் முதலாளி களைப் போல ஆக முயற்சிப்பார்கள். தங்களையும் முதலாளி களாக நினைத்துக் கொண்டு அவர்களோடு ஒட்டிக் கொண்டே திரிவார்கள். இவர்களுடைய துணை உதவி ஊழியம் இல்லா விட்டால் முதலாளிகள் வாழமுடியாது. இவர்கள்தாம் நடுத்தர வகுப்பினர். ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்த வேண்டும். இது வள்ளலார் வாக்கு, நடுத்தர வகுப்பினரும், பாட்டாளி மக்களும், முதலாளி வர்க்கமும் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒரு மனத்தினர் ஆகி, உலகத்திலே இன்புற்று வாழவேண்டும்; உலகக் காரியங்களைத் திறம்பெற நடத்தவேண்டும். ஒத்தார் என்பவர்கள் நடுத்தர வகுப்பினர். தாழ்ந்தார் என்பவர்கள் பாட்டாளி வர்க்கத்தினர். உயர்ந்தார் என்பவர்கள் முதலாளி வர்க்கம். இம்மூவரும் இல்லாத உலகமே உயர்ந்த உலகம், இம்மூன்று வர்க்கமும் ஒழிந்துவிட்டால் மக்கள் எல்லாரும் ஒருமையுளர் ஆகிவிடுவார்கள். இந்த நடுத்தர வகுப்பினர் இல்லாவிட்டால் முதலாளித்துவம் ஒழிந்துவிடும். முதலாளிகள் சிறுபான்மையினர்; பாட்டாளிகள் பெரும்பான்மையினர். இருவருக்கும் நேரடியான சச்சரவு நேர்ந்தால், முதலாளித்துவம் சடசட எனச் சாய்ந்துவிடும். தொழிலாளர்களின் மோதுதல் முதலாளித்துவத்தைக் தாக்காத படி இடைநின்று தடுத்து நிற்கும் குட்டிச் சுவர் இந்த நடுத்தர வர்க்கந்தான். இந்த நடுத்தர வர்க்கம் மறைந்து விட்டால் முதலாளி தொழிலாளி சண்டைமயும் மறைந்துவிடும். சமூகம் ஒன்றாகி விடும். முதலாளித்துவம் அளவுக்குமேல் வலுக்க வலுக்க நடுத்தர வர்க்கம் நசித்துக்கொண்டே வரும். முதலாளித்துவமும் வலுத்து, நடுத்தர வர்க்கமும் நசிந்துவிட்டால், உடனே பாட்டாளி வர்க்கமும், முதலாளி வர்க்கமும் சண்டையின் மூலமோ, சமாதானத்தின்மூலமோ ஒன்றுபடுவிடுவார்கள். இவ்வாறு ஒன்றுபடும் காலமே உலகில் அமைதி நிலவும் காலம். அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு. என்று திருவள்ளுவர் கூறினார். பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகில் இன்பம், புகழ் பெருமை இல்லாததைப்போல, அருள் இல்லாதவர்க்கு மறுவுலகில் இன்பம் இல்லை. இவ்வுலக இன்பத்திற்கு முதற்காரணம் பொருள்தான்; துன்பத்திற்கு முதற் காரணம் வறுமைதான். வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்பது நாலடி. அறம், பொருள் இன்பம் இம்மூன்றில் நடுவில் உள்ள பொருள் கிடைத்தால், இரு பக்கத்திலும் உள்ள அறமும் இன்பமும் கிடைக்கும் என்பது இதன் கருத்து. ஆகவே, மக்கள் எல்லோருக்கும் எல்லாச் செல்வமும் கிடைக்கவேண்டும். எல்லாச் செல்வமும் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டுமானால் இப்பொழுது சமுதாயத்தில் உள்ள மூன்று வர்க்கமும் ஒரு வர்க்கமாக வேண்டும் இந்த மூன்று வர்க்கமும் ஒன்றுபடவேண்டும் என்றே விரும்பினார் வள்ளலார். கருணையிலா ஆட்சி கொடுங்கோல் மன்னன் வாழும்நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே. இது நமது இளமைப் பாடம். எல்லோரும் இன்றும் சொல்லிக்கொண்டிருப்பது. மக்கள் இன்புற்று வாழ் வதற்கே அரசாட்சி. மக்கள் சிறுசிறு கூட்டமாக வாழ்ந்த காலத்தில், தங்கள் உணவுக்கு, உடைக்கு, உறையுளுக்கு, கூட்டுற வுக்குத் துணை செய்கின்றவனைத் தலைவனாகக் கொண்டனர். அவனை மன்னனாக, இறைவனாக ஆண்டவனாக, ஆண்டவன் பிரதிநிதியாக எண்ணினார். மக்கள் கூட்டம் பெருகப் பெருகத் தனிப்பட்டவன் ஆட்சி குறைந்தது. ஒருவனால் மக்கள் வாழ்வுக்கான எல்லாக் காரியங் களையும் இயற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. பல துறை களையும் கவனிக்கத் தலைவனுக்கு மன்னனுக்குப் பலர் துணை அவசியமாயிற்று. இவ்வகையில் மன்னனுக்குத் துணைசெய்யும் கூட்டத்தாருக்கே மந்திரிகள் என்றும், குருமார் கள் என்றும், சேனைத் தலைவர்கள் என்றும் பெயர்கள் வழங்கின. மன்னனுக்குத் துணையாயிருந்தவர்கள் பெரும்பாலும் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவேயிருந்தனர். பொதுமக்களின் மதிப்பைப் பெற்றவர்களையே அரசனும் தனக்குத் துணையாகக் கொண்டான். அவர்களும் பொது மக்களின் குறைகளை அறிந்து, அக்குறைகளை நீக்குவதற்கான சட்ட திட்டங்களைச் செய்தனர்; ஆட்சி நடத்தினர். ஆரம்பத்தில் மக்களின் விருப்பப்படியே சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அதாவது மன்னன் ஆட்சி தோன்றியது. அது நாளடைவில் ஜனநாயக ஆட்சியாக மாறியது. மன்னனைத் தலைவனாகக் கொண்ட மக்கள் ஆட்சியாக மாறியது. இன்று பொதுமக்கள் மதிப்பைப் பெற்றவர்களே, அதாவது மக்களின் பிரதிநிதிகளே ஆண்டால் போதும்; ஒரு வேலையும் இல்லாத மன்னன் ஒருவன் எதற்காக? என்ற எண்ணம் நாட்டுப் பற்றுள்ளவர்களிடம் குடிகொண்டு விட்டது. இவ்வெண்ணம் சரியானதுதான். இயற்கையும்கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குழு நாட்டின் நலத்தைக் கவனிக்கும்போது மக்களின் நன்மையைப் பாது காப்பதற்கான எல்லாக் காரியங்களையும் கவனிக்கும்போது மன்னன் என்னும் ஒரு பதுமை எதற்காக? வேண்டியதே இல்லைதான். தமிழ் இலக்கியங்களில் அரசாட்சியே உயிர் எனப் போற்றப் படுகின்றது. மன்னன் என்று தமிழ் இலக்கியங்களில் வரும் இடங்களில் எல்லாம் அரசாட்சி என்று மாற்றிக் கொண்டால் போதும், இவ்வாறு மாற்றிக்கொண்டு எந்தத் தமிழ் இலக்கியப் பாடலைப் பார்த்தாலும் அது ஜனநாயக குடி அரசு பொதுஜன ஆட்சியைக் குறிப்பதாகவே காணப்படும். நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே. இது மோசிகீரனார் என்னும் ஒரு பழந்தமிழ்ப் புலவர் பாட்டு. ஒரு நாட்டுக்கு அரசாட்சியே உயிர். அரசாட்சி சரியாக நடந்தால்தான் ஒரு நாடு வாழமுடியும். அந்த நாட்டு மக்கள் நாகரிகத்துடன் பட்டினி பசியில்லாமல் வாழ்வர். ஒற்றுமை யாக வாழ்வர். செல்வத்துடன் சிறப்புற்று வாழ்வர். அடிமை யின்றிச் சுதந்தரமாக வாழ்வர். ஒழுங்கான, திறமையான மக்களின் விருப்பத்திற்கேற்ற ஆட்சியினாலேயே ஒரு நாட்டின் செல்வம் வளர்ச்சியடையும்; கல்வி வளரும்; கைத்தொழில் வளரும்; வாணிகம் வளரும்; கலைகள் வளரும். இவை மறுக்க முடியாத உண்மை. ஒரு நாட்டிற்கு நெல்லும் உயிர் அல்ல. தண்ணீரும் உயிர் அல்ல. இந்த விரிந்த உலகமானது அரசாட்சியையே உயிராகக் கொண்டிருக்கின்றது. ஆதலால் நாம்தாம் இந்த நாட்டிற்கு உயிர் என்பதை உணர்ந்திருந்தால் அரசாட்சியின் கடமையாகும். மக்களைப் பசியில்லாமல் காக்கவேண்டியது அரசின் கடமை. மக்களுக்கு நோய் வராமல் காக்கவேண்டியது அரசின் கடமை. மக்களுக்குள் சாதிச் சண்டையோ மதச் சண்டையோ வராமல் காக்கவேண்டியது அரசின் கடமை. இக்கடமையைச் செய்வதற்குத் திறமையற்ற அரசாங்கம் மக்களிடம் துன்புறுத்தி வரி வாங்குமானால் அது கொடுங்கோல் அரசுதான்; மக்களி டையே தாங்காத அடக்கு முறையை அவிழ்த்து விடுமானால் அது அக்கிரம அரசுதான். ஆட்சியிலிருப்போர் பொதுமக்களின் துன்பங்களை நீக்கவழியறியாமல் தங்கள் நலத்தில் மாத்திரம் கருத்துக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் கண்டிப்பாக மக்களால் வெறுக்கப்படுவார்கள். பழிக்கப்படுவார்கள்; பதவியிலிருந்து ஒழிக்கப்படுவார்கள். இத்தகைய அரசாங்கப் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கொடுங் கோலர்கள் தாம். ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தப்ப ஒரு மனிதனைப் பலிகொடுக்க வேண்டுமானால் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதுதான் நீதி. ஒரு மனிதன் வாழ ஆயிரக்கணக்கான மக்களைப் பலிகொடுப்பது அநீதி; அக்கிரமம்; பலாத்காரம்; கொடுங் கோன்மை. இத்தகைய அக்கிரம ஆட்சியே கருணையிலா ஆட்சி. தமிழர்கள் குடிகளின் விருப்பப்படி அரசாண்ட மன்ன னையே போற்றி வந்தனர். குடிகளின் குறைகளைப் போக்கும் திறமையுள்ள அரசாட்சியையே ஆதரித்து வந்தனர். தமிழ் இலக்கியங்களில் இத்தகைய அரசாட்சியே போற்றப்படுகின்றது. குடிதரீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. குடிகளின் விருப்பம்போல் ஆளுகின்ற மன்னனுடைய அடிச்சுவட்டையே உலகம் பின்பற்றும். குடிகளின் விருப்பத் திற்கு மாறாக நடைபெறும் அரசாட்சியை நாடு பின்பற்றாது. குடிகளின் துன்பங்களுக்குப் பரிகாரந் தேடாத வெறும் பதவிப் பித்துக் கொண்ட அரசாங்கம் தானாகவே கவிழ்ந்து விடும். அல்லது துன்பத்தைப் பொறுக்கமுடியாமல் ஆத்திரங் கொண்ட பொதுமக்கள் எழுச்சியால் கிளர்ச்சியால் கவிழ்க்கப் படும். இந்த உண்மையை அரசியல்வாதிகள் அறிந்திருத்தல் வேண்டும். அறிந்திருந்தால் மட்டிலும் போதாது; மறவா திருத்தல் வேண்டும். மக்களிடம் கருணைகாட்டாத ஆட்சி, இரக்கங்காட்டாத ஆட்சி நீடிப்பதற்குத் தகுதியற்றது. மக்களை ஆள்வதற்கு உரிமை யற்றது. அவ்வாட்சி நீடித்தால் மக்களின் துன்பமும் நீடிக்கும்; நாட்டிலே குழப்பமும் நீடிக்கும். வறுமையும் நீடிக்கும், ஆதலால் அத்தகைய கருணையற்ற திறமையற்ற கொடுங்கோல் ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும். கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக! அள்நயந்த சன்மார்க்கர் ஆள்க. என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் வள்ளலார். திறமையற்ற ஆட்சி ஒழிந்து போகவேண்டும்; இரக்கமுள்ளவர்கள் ஆட்சி உண்மை நெறியை அறிந்தவர்களின் ஆட்சி தோன்ற வேண்டும். பெரும்பாலான மக்களின் குறைகளைப் போக்கு வதற்கு வழி தெரிந்தவர்களின் ஆட்சி ஏற்பட வேண்டும். வஞ்சகர்களின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாதவர்களின் ஆட்சி நிலைக்க வேண்டும். தயவோ தாட்சண்யமோ காட்டாத நடுவு நிலைமையும் திறமையும் படைத்த உண்மையான பொது ஜனப் பிரதிநிதிகளின் ஆட்சி நீடித்திருக்க வேண்டும். இத்தகைய அருள் நயந்த ஆட்சியே உலகை ஆளவேண்டுமென்பது வள்ளலார் கருத்து. மனுமறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூல் வள்ளலாரால் எழுதப்பட்டது. அதில் அரசன் கடமையை வலியுறுத்தும் வாசகங்கள் காணப்படுகின்றன. அவ்வாசகங்கள் அரசாட்சியில் ஆதிக்கம் பெற்றிருப்போர் அறியத்தக்கவை. தேர்க்காலில் பசுங்கன்று அரைபட்டு இறந்ததைக் கேட்ட மனுச்சோழன் துக்கம் தாங்காமல் வருந்துகின்றான். அப்பொழுது அவன் கூறுவதாக அமைந்துள்ள சொற்றொடர்கள் ஆட்சியாளர் உள்ளத்தில் அப்படியே பதிய வேண்டியவை. நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ? தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ? கலந்த சிநேகிதரைக் கலகம் செய்தேனோ? மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய் தேனோ? குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ? ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ? தருமம் பாராது தண்டம் செய்தேனோ? களவு செய்வோர்க்கு உளவு சொன்னே னோ? வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ? பசித்தோர் முகத்தைப் பாராது இருந்தேனோ? கோள் சொல்லிக் குடும்பம் கலைத் தேனோ? கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ? அன்புடை யவர்க்குத் துன்பு செய்தேனோ? இவைகள் மனுநீதி கண்ட சோழன் சொற்கள். இதில் அரச நீதி வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். கருணையற்ற ஆட்சி எது? கருணை நிறைந்த ஆட்சி எது என்பதை இவ்வாக்கி யங்களாலும் அறியலாம். அதிகார வெறி நம்முடைய உடம்பை நடத்துவன எவை ? நமது வெளி உறுப்புக்களும் உள்உறுப்புக்களுமே. இந்த உறுப்புகள் இல்லா விட்டால் நம்உடம்பு வெறும் மாமிசப் பிண்டந்தான். இந்த இருவகை அவயங்களும் பழுதற்றனவாக இருத்தல் வேண்டும். கைகால்கள் நொண்டி முடமாக இருந்தால் கண்கள் குருடாக, காதுகள் செவிடாக இருந்தால், உடம்பால் நல்ல காரியங்களைத் திறம்படச் செய்ய முடியாது. இதுபோலவே நமது எண்ணம், சிந்தனை, பேச்சு முதலியன தெளிவற்றனவாக ஆராய்ச்சி யற்றனவாக இருந்தால் நாம் எந்தக் காரியத்திலும் வெற்றி பெறமாட்டோம். இந்த நிலை ஒரு அரசாங்கத்துக்கும் பொருந்தும். அரசாங்கம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உள்ளுறுப்புக்களாகவும் வெளியுறுப்புக்களாகவும் விளங்குவன ஆலோசனை சபையும், அதிகார வர்க்கமும்தான். அரசியல் ஆலோசனை சபையில் உள்ளவர்கள். எந்தக் காரியங்களைப் பற்றியும் நன்றாக யோசிக்கவேண்டும். அதன் பின்பே முடிவு செய்யவேண்டும். அவசரப்பட்டு இப்பொழுது இப்படிச் செய்து விடுவோம்; பிறகு யோசித்து முடிவு செய்து கொள்ளுவோம் என்று கூறுகின்றவர்கள் அரசியல் நிபுணர்கள் ஆகமாட்டார்கள். அரசியல் ஆலோசகர்கள் செய்யும் முடிவு தேசத்தின் முற்போக்குக்கு அணை போடுவதாக இருத்தல் கூடாது. பொது மக்களின் உணர்ச்சிக்கு மதில்சுவராக அமையக்கூடாது. ஆலோசனை சபையில் அங்கம் வகிப்போர், தங்களுடைய சொத்து சுதந்தரத்துக்கு மாத்திரம் பாதுகாப்பு அளித்துக் கொண்டு பொதுமக்களின் நலன்களைக் காற்றில் பறக்க விடுபவர்களாக இருக்கக்கூடாது. ஒரு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் உண்மையான அரசியல் சபை சட்டசபைதான். நகரசபைகள், பஞ்சாயத்து சபைகள் கூட அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் சபைகள் தாம். ஆகையால் இவைகளுக்கு உறுப்பினராகச் செல்வோர் அதிகாரத்திற்கு ஆசைப்படாதவர்களாக இருக்கவேண்டும். தந்நலமற்றறவர்களாக, பொதுஜன முன்னேற்றத்தில், நன்மையில் கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டும். சாதி மத இனவெறுப் பற்றவர்களாகவும், எல்லா மக்களையும் உடன்பிறந்தாராக எண்ணும் சமரச உள்ளம் படைத்தவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய தியாக சிந்தை உள்ளவர்கள் நிறைந்த ஆலோசனை சபைகளால்தான் நாட்டை உயர்வாக உருவாக்கி வைக்க முடியும். ஆலோசனை சபைகளைக் காட்டிலும் முக்கியமானது அதிகார வர்க்கம். ஆலோசனை சபைகள் வரையறுக்கும் சட்டதிட்டங்கள் நடத்தி வைப்பது அதிகாரவர்க்கம். நெருப்பு, மக்களுக்கு - உலகத்திற்கு இன்றியமையாத ஒரு இயற்கைப் பொருள். நெருப்பின்றேல் உஷ்ணமில்லா அதே நெருப்பைக்கொண்டு உலகத்தை அழித்துவிடலாம்; மக்கள் வாழ்க்கையைச் சிதைத்துவிடலாம். மின்சாரம் நம்முடைய நன்மைக்காக ஏற்பட்டது. இதையே நம்முடைய அழிவுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுகிறோம். இதைப்போலவே நாட்டின் நன்மைக்காகவே மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற் காகவே இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைக் கொண்டே நாட்டில் தீமையைப் பெருக்கி விடலாம். மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அடிமைச் சேற்றில் பலவந்தமாக அமிழ்த்தி வைக் கலாம். சட்டதிட்டங்களைக் கையாளும் அதிகார வர்க்கத்தின் போக்கைப் பொறுத்தது இவ்விஷயம். ஒரு நாட்டில் அமைதி நிலவுவதற்குக் காரணம் அதிகார வர்க்கமே. ஒரு நாட்டில் கலகமும் குழப்பமும், பஞ்சமும் பிணியும், கொள்ளையும் கொலையும் குடியேறுவதற்குக் காரணமும் அதிகாரவர்க்கமே. அரசாங்கத்தின் வெளி அங்கங்களாக இருக்கின்றன அதிகார வர்க்கம் தங்களை மக்களுக்கு அதிகாரிகளாக நினைத்துக் கொண்டால் வந்தது ஆபத்து. அவர்கள் உண்மை யாகவே தங்களை அரசாங்கமென்னும் உடலின் கண்களாக, கால்களாக, கைகளாக, காதுகளாக நினைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அரசாங்கத்தை அரசாங்க காரியங்களைத் திறம்பட ஒழுங்காக நடத்தும் நல்லெண்ணம் அவர்களிடம் குடிகொள்ளும். உண்மையில் ஒரு நாட்டை நாடாக ஆக்கிவைத்திருப்ப வர்கள் வேளாண்மை செய்வோரும், பண்டங்களை உற்பத்தி செய்வோரும் ஆகிய தொழிலாளர்களேயாவர். உடல் வருந்த உழைக்கும் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் எந்த நாடும் சுடுகாடாகத்தான் கிடக்கும். இவ்வுண்மையை அதிகார வர்க்கம் அறிந்தால்தான் அவர்கள் தங்களை நாட்டின் ஊழியர்கள் என்று உணர்வார்கள்; நாட்டுப் பொதுமக்களே தங்களுக்குத் தலைவர்கள் என்று காண்பார்கள். அதிகார வர்க்கத்திற்கு மனித சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் சரித்திரம் தெரிந்திருக்கவேண்டும். அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் நாட்டின் மக்களின் அரசாங்கத்திள் ஊழியராக இருப்பதற்கு விரதம் பூண்டவர் களையே அதிகார பீடங்களில் அமர்த்த வேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்வதே நமது கடமை; நாட்டிலே பஞ்சம் பிணி வராமல் பாதுகாப்பதே நமது கடமை; கட்டுப் பாட்டோடும், ஒழுங்கோடும் நடப்பதற்குப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவதே நமது செய்கை; மக்களுக்குள் அன்பும், சகோதரத் தன்மையும் வளரச் செய்து நாட்டின் உற்பத்திப் பெருக்கில் எல்லோர் உள்ளத்தையும் ஈடுபடச் செய்வதே நமது வேலை என்று கருதும் உயர்ந்த மனப்பான்மை அரசாங்க ஊழியர்களுக்கு அவசியமானதாகும். சுரண்டும் கூட்டத்தாருக்கு பதுக்கல் கொள்ளைக்காரர் களுக்குக் கால்கொடுக்கும் அதிகார வர்க்கமே ஒரு நாட்டின் புல்லுருவி; அந்த அதிகாரவர்க்கமே அந்த நாட்டில் பொது ஜனப் புரட்சியை உருவாக்கி அரசாங்கத்தைத் தகர்க்கும் சதிகாரக் கும்பல். தந்நலம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு அரசாங்கத் தின் சட்ட திட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகார வர்க்கம் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் காவல்காரனே திருடத் தொடங்கிவிட்டால் பிறகு யார்தான் திருடமாட்டார் கள்? சட்டத்தை அமுல் நடத்தும் அதிகாரியே அதை மீறினால், பொதுமக்கள் எப்படி சட்டத்திற்கு மதிப்புக் கொடுப்பார்கள். தமக்கு என்ன ஆபத்து வருவதாயிருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு லாபம் வருவதாயிருந்தாலும் சரி, அவற்றைப் பொருட் படுத்தாமல் நடுநிலைமையோடு நடந்துகொள்ளும் தன்மை அதிகாரவர்க்கத்துக்கு வேண்டும். கல்நெஞ்சம் இன்றி இளகும் இருதயம் படைத்திருக்கவேண்டும். தன்னுடைய சிறு அதிகாரத் தைப் பெரிதாகக் கருதக் கூடாது. மக்களுக்குத் தீங்கு செய்யாத தூய மனம் படைத்திருக்க வேண்டும். பொய்யை வெறுத்து, மெய் பேசி, உண்மை இத்தகைய பண்புடையவர்களே அரசாங்கத்தின் அங்கங்களாக - அதிகாரிகளாக ஊழியர்களாக இருக்கத் தகுதியுடையவர்கள். இக்குணங்களுக்கு மாறான குணங்களைப் பெற்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்களானால் நாடு பாழாகும். அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை அச்சமும் அவலமும், பசியும் பிணியும், கலகமும் குழப்பமும் புகுந்து பாழ்படுத்தும். நடுநிலை யில்லாக் கூட்டத்தைக் கருனை நண்ணிடா அரையரை, நாளும் கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யல்லால் கிளத்தாப் படுநிலை யவரைப், பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம் விடுநிலை உலக நடையெலாம் கண்டே வெருவினேன்! வெருவினேன் எந்தாய் ! என்பது வள்ளலார் வாசகம். அதிகார வர்க்கமும் அரசும் எப்படி இருக்கவேண்டும் என்பதை இதனால் விளக்கிக் கூறினார். பணத்திற்கு ஆசைப்பட்டுக் கையுறை வாங்கிக் கொள்வது; நீதியை அழிப்பது; நடுநிலைமை தவறி நடப்பது; இச்செயல் களைக் கொண்ட அதிகாரிகளைப் பார்க்கவே நான் அஞ்சு கின்றேன். கருணையற்ற ஆட்சியாளரை அரசரைப் பார்த்தாலே பயமாயிருக்கின்றது. கையிலே சிறு அதிகாரம் கிடைத்துவிட்டாலே போதும்; அதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும், பிறருக்கு தீமை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றவர்கள் மகா கொடியவர்கள்; கேடு செய்பவர்கள். இவர்களைக் காணவும் அஞ்சுகின்றேன். மறந்தும்கூட மெய் பேசுவதேயில்லை; பொய்யையே எப்பொழுதும் பேச்சாகக் கொண்டிருப்பவர்கள்; இவர்கள் படுமோசக்காரர்கள். இவர்களைக் காணும்போதும் நான் அஞ்சுகின்றேன். இவ்வாறு சுத்த சன்மார்க்கத்தைக் கைவிடுகின்ற நிலையிலே செல்லும் உலக நடையைக் கண்டு அஞ்சினேன்! எந்தையே! மிகவும் பயந்து போனேன்! இதுவே மேற்காட்டிய செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். இதனால் அநீதியிழைக்கும் அதிகாரவர்கத்தை வள்ளலார் எவ்வளவு வெறுக்கிறார் என்பதைக் காணலாம். வள்ளலார் காலத்திலே இந்நாட்டில் வெள்ளையர் ஆட்சி வேரூன்றியிருந்தது. அவர்கள் அதிகாரச் செருக்குடன் மக்கள் மேல் ஆணை செலுத்திவந்தனர்; அக்காலத்தில், அரசாங்கத்தைப் பற்றி மக்கள் ஒரு வார்த்தை பேசமுடியாது. அதிகார வர்க்கம் வைத்ததே சட்டமாக இருந்தது. மக்கள் அதிகார தேவதைகளைக் கண்டு அஞ்சி நடுங்கி அடங்கி வாழ்ந்தனர். இந்த நிலையை நேரில் கண்டே இவ்வாறு கூறினார். மாறுபடும் மதங்கள் மதம் மக்களுக்கு அபின் என்பது இன்றைய பகுத்திறி வாளர் கூற்று. இது குருட்டுத்தனமாகக் கூறியதன்று. உலகப் போக்கைப் பார்த்து, உளம் வருந்திக் கூறியது; மதவெறி கொண்ட மக்கள் மண்டைகளை உடைத்துக் கொண்டு மனிதத் தன்மையை இழந்ததைக் கண்டு கூறியது. மக்களுக்கு மதவெறியை உண்டாக்கி அவர்களைச் சின்னா பின்னமாக்கித் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் சுயநலக் கும்பல்களின் அக்கிரமத்தைக் கண்டு கூறியது. சரித்திரம் படித்தவர்கள் மதச் சண்டைகளை அறிவார்கள். அவ்வளவுதூரம் போகவேண்டாம். மதவெறிதான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சகோதரர்களாக வாழ்ந்தமக்ளை ஆவேசத்துடன் அடித்துக்கொண்டு சாகும்படி செய்தது; மதவெறிதான் உலகத்திற்கு அகிம்சையைப் போதித்த மகாத் மாவின் உடலைக் கொள்ளை கொண்டது. இவை நாம் நமது காலத்திலேயே கண்கூடாகக் கண்ட காட்சி; நமது சந்ததியினர் சரித்திரத்தில் படித்து நம்மை என்றும் ஏளனம் செய்து கொண்டிருப்பதற்கு வழி செய்த அழியாத வடு. அறிவுடன், பொறுமையுடன் சிந்திப்போர்க்கு மதவெறியால் விளைந்த கொடுமைகள் தெரியும். மதங்களின் உண்மைக் கொள்கைகளை அறிந்தவர்கள் ஒரு சிலர்தான். அவர்கள்தாம் எம்மதமும் சம்மதம் என்றிருப்பர். இத்தகைய உத்தமர்களால் உலகிற்கு ஒரு தீங்கும் இல்லை. மதப் பற்றுத்தான் மனிதனை நல்ல வழியில் நடக்கச் செய்யும், மதப்பற்றுத்தான் நன்மை செய்யத் தூண்டும், தீய வழிகளில் செல்லாமல் தடுக்கும்; மதப் பற்றுடையவன் தான் புண்ணிய பாவங்களுக்கு அஞ்சுவான்; மதப் பற்றுடையவன் தான் சீவகாருண்யம் உள்ளவனாயிருப்பான். மதப்பற்றில் லாதவன் கெட்டுப்போய்விடுவான்; நன்மை தீமைகளுக்கு அஞ்சமாட்டான்; புண்ணிய பாவங்களுக்குப் பயப்பட மாட்டான்; கண்டதே காட்சி. கொண்டதே கோலமென்று திரிவான். ஆதலால், மதப்பற்று இன்றியமையாதது; ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவையானது என்பார்கள். இந்த விவாதம் நமது நாட்டிலே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதற்கு முடிவில்லை. ஆனால் நாம் ஒன்றை மாத்திரம் நினைவூட்டுகிறோம். மதப் பற்று வேறு, ஆத்திகம் வேறு; மதப்பற்றின்மை வேறு, நாத்திகம் வேறு. மதப் பற்றுடையவர்கள்தாம் ஆத்திகர்கள், மதப்பற்றில்லாதவர்க ளெல்லாம் நாத்திகர்கள் என்று கூறுவதை ஒப்புக் கொள்ள வேண்டாம். மதவெறி - மதப்பெற்று உள்ளவர்களிலும் நாத்திகர் உண்டு; ஆத்திகரும் உண்டு. மதப் பற்று மதவெறி இல்லாதவர் களிலும் ஆத்திகர் உண்டு, நாத்திகரும் உண்டு. மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன்; வாட்டமே செய்யும் கூட்டத்தில் பயில்வேன். மதத்திலே பற்றுக்கொண்டு திரிகின்றேன். ஆனால் பிறர்க்குத் துன்பங்களையே செய்து கொண்டிருக்கும் கூட்டத்தி லேயே வாழ்கின்றேன் என்கிறார் வடலூரார். இன்றைய உலகைப் பாருங்கள். பெண்களைப் கற்பழிப்பவர்கள் எல்லாம் மதப் பற்றுடையவர்கள்தாம். குழந்தைகளையும், மாதர்களையும், முதியவர்களையும் ஈவிரக்கமின்றிக் கொல்லுகிறவர்கள் எல்லாம் மதப் பற்றுடையவர்கள்தாம். இவ்வாறு மதப் பற்றுடையோர் கொடுமை செய்து வருவதை இன்றும் பார்க்கிறோம். வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன் தன்னை விழாதவகை மறிக்கும் ஒருபேர் அறிவளித்த வள்ளல் கொடியே. வெறியை உண்டாக்கும் மதம் என்னும் படுகுழியில் விழு வதற்கு விரைந்து சென்று கொண்டிருந்த என்னை அப்படி விழாமல் தடுக்கத் தகுந்த ஒரு பேரறிவை அளித்த கருணா மூர்த்தியே! என்று கூறுகிறார் வள்ளலார். வெறிக்கும் சமயக் குழி என்பது குறிப்பிடத தகுந்தது. வெறி குடியினால் வருவது; போதையினால் வருவது. அறிவில்லார்க்கு மதமும், சமயமும் இத்தகைய வெறியை உண்டாக்கும் என்றே உரைக்கின்றார். ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன். மதம் மக்களுக்கு ஊடலை உண்டாக்குவது; மக்களை ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள்ளச் செய்வது. மதத்தில் சொல்லப்படுவன கற்பனைகள்; மதங்கள் கூறுவனவெல்லாம் உண்மையென்று நம்பி மோசம் போகவேண்டாம் என்பதை இவ்வாறு விளக்கினார். மதமெனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றார் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செய்யும் மாநடம் காண்குவரோ? மதமென்னும் பேயால் பீடிக்கப்பட்டு ஆடுகின்றவர்கள் உண்மையை அறியமாட்டார்கள். அவர்கள் உள்ளமாகிய சபையிலே அறிவு நடனமிடுவதைக்காணமாட்டார்கள். இது உண்மை. மதப்பேய் பிடித்து வெறியாட்டம் ஆடு கின்றவர்களுக்கு அறிவேது? ஆலோசிக்கும் திறமையேது? பொறுமைதான் ஏது? அவர்கள் தங்கள் உள்ளொளியைக் காணமாட்டார்கள். உள்ளொளியாகிய பகுத்தறிவைக் கண்டவர் கள்தான் உண்மை வழியில் நடக்கமுடியும். இதுமட்டும் அல்ல; மதங்கள் எல்லாம் பொய்! ஏட்டிலே பாடல்களிலே எழுதப்பட்டிருக்கும் மதங்கள், சமயங்கள் எல்லாம் பொய்: பொய்! நம்பாதீர்கள்! உங்கள் அறிவைத் துணையாகக்கொண்டு உண்மை நெறியுணர்ந்து நடவுங்கள் என்று வள்ளலார் கூறுகின்றார். குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின்! இங்கே வம்மின்! கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்! வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்! பொறித்தமதம் சமயம் எலாம் பொய்! பொய்யே! அவற்றில் புகுதாதீர்! சிவம் ஒன்றே பொருள்எனக்கண்டு அறிமின்! தெரிந்துதுதித் திடுமின்! சித்தியெல்லாம் இத்தினமே செறித்திடுசிற் சபை நடத்தைத் சத்தியம்சேர்ந் திடுமே! என்பது வள்ளலார் கூற்று. மதவெறி கொள்ளவேண்டாம்; அதனால் பயன் ஒன்றும் இல்லை. ஏட்டிலே எழுதப் பட்டிருக்கும் மதங்கள் எல்லாம் பொய்கள்! அவைகளில் புகுந்து வீணாக வேண்டாம். சிவம் என்னும் மங்களத்தையே உண்மையென்று கொள்ளுங்கள். அறிவுச் சபையில் உள்ள பகுத்தறிவைக் கண்டறி யுங்கள். நீங்கள் நினைத்தவைகளை யெல்லாம் இப்பொழுதே பெறலாம் என்பதே இச் செய்யுளின் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண் டிருந்தது. இவ்வளவென்று அளவுசொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்தற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கின்ற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்களுடைய பாடல்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்த தென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இது வள்ளலார் எழுதிய வசனநடை. இன்று இராமலிங்க பக்தர்களில் சிலர் இதை ஒப்புக்கொள்வதில்லை. இது வள்ளலாரால் எழுதப்பட்டதல்ல. பிற்காலத்தில் மதவெறுப்புக் கொண்டவர்களால் எழுதப்பட்டு, வள்ளலார் பெயரால் வெளியிடப்பட்டது என்று கூறுகின்றனர். இதன் உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி இங்க வேண்டுவதில்லை. இவ்வெழுத்தில் உள்ள கருத்துக்கள் வள்ளலார்க்கு உண்டா? இல்லையா? என்பதுதான் நமது கேள்வி. அவருடைய பாடல்களையும், ஆறாந் திருமுறையில் அவர் கூறியிருக்கும் புரட்சிகரமான கருத்துக்களையும் காணும்போது இக்கருத்து வள்ளலார்க்கு உண்டு என்றுதான் முடிவு கட்ட வேண்டும். அவர் உள்ளம் அவர் எண்ணம் உயர்வானது என்பதில் ஐயமில்லை. கொடுமை செய்வதற்கு வெறியூட்டும் மதச் சேற்றில் மூழ்க வேண்டாம் என்பதே அவர் கூறும் அறிவுரை. மதச் சண்டை மத நம்பிக்கை வேறு; மதப்பற்று வேறு. மத நம்பிக்கை யுள்ளவர்கள் மதத்தின் கொள்கைகளை அறிந்திருப் பார்கள். மதப் பற்றுள்ளவர்கள் எல்லோரும் மதத்தின் கொள்கைகளை அறிந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. அறிந்தவர்களும் உண்டு. பெரும்பாலானவர்கள் மூடப் பற்றும், முரட்டுப் பிடி வாதமும் கொண்டவர்களே. மதப் பற்றுக்கும் மத வெறிக்கும் இடைவெளி சிறிதுதான். பற்று, வெறியாக மாறிவிட்டால், அது வேறு மதத்தினர்பால் வெறுப்பை வளர்க்கும்; பகைமையை உண்டாக்கம்; கலகத்தை மூட்டி விடும். மதத்திலே நம்பிக்கையுள்ளவர்கள் மனித வர்க்கத்தை வெறுக்கமாட்டார்கள்; எம்மதமும் சம்மதம் எனக் கொள்வர். எவரையும் உடன்பிறந்தாராகக் கருதுவர். மதத்தின் தத்துவங் களை உண்மைக் கருத்துக்களை உள்ளத்தில் கொண்டு உறுதியாக நடப்பர். பொதுவாக மதங்களின் தத்துவம் ஒன்றுதான். மக்கள் எல்லோரும் சகோதரர்கள். மக்கள் பிறர் நன்மைக்காக உழைக்க வேண்டும். பணம் சேர்ப்போர் பிறரைக் கொடுமைப் படுத்தியோ, பட்டினி போட்டோ, ஏமாற்றியோ சேர்த்தல் கூடாது. சேர்த்த பணத்தையும் தன்னுடைய இன்பத்திற்கு மட்டிலும் பயன்படுத்தக் கூடாது. எல்லோர் நன்மைக்கும் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். சுருங்கக் கூறினால் செல்வம் படைத்தவர்கள் அந்தச் செல்வத்தைத் தம்முடைய தாகக் கருதாமல், நாட்டின் மக்களின் பொதுப் பொருளாகக் கருதவேண்டும். செல்வம் உடையவன், தன்னைச் செல்வத்தின் சொந்தக்காரனாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தன்னை தர்மகர்த்தாவாக பாதுகாப்பாளனாக சம்பளமில்லாத கௌரவப் பாதுகாப்பாளனாக நினைத்துக் கொள்ள வேண்டும் இதுவே உண்மையான மதக் கொள்கை. இதையே மகாத்மா காந்தியும் வலியுறுத்தினார். இதையே ருஷிய ஞானியான டால்டாயும் வலியுறுத்தினார். மதத்தில் உண்மையான நம்பிக்கையுள்ள செல்வர்கள் தான் தர்மகர்த்தாக்களைப் போல நடக்கமுடியும். மதப் பற்றுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்வோரில் பலருக்கு இவ்வுண்மை தெரியாது. தெரிந்தாலும் நம்பமாட்டார்கள். நம்பினாலும் செயலில் காட்டமாட்டார்கள். மதம், பண்டைக் காலத்தில் மக்களின் ஒற்றுமைக்காக ஏற்பட்டது. மக்களின் நல்லொழுக்கத்தை வளர்க்கவே தோன்றிற்று. மக்களின் வறுமை, பிணி இவற்றைப் போக்கவே ஏற்பட்டது. மக்களை இவ்வுலகத்தில் அல்லல் இன்றி அன்புடன் இணைந்து வாழச் செய்வதற்காக ஏற்பட்டது. இதனால்தான் ஒவ்வொரு மதமும், அரசியலும், சுகாதாரமும் பொருளாதாரமும், சமூகச் சீர்திருத்தமும் கலந்து பின்னி, மதம் என்ற பெயரால் காட்சி யளிக்கின்றது. ஆனால் நாளடைவில் மதக் கொள்கைகளை மக்கள் மறந்தனர். மதத்தின் மூலம் உண்டான வெளிவேஷங்களையும், ஆடம்பரங்களையும் ஆர்ப்பாட்டங்களையுமே மதமாகக் கருதினர். சுயநலவாதிகள் மதத்தின் பெயரால் மக்களைக் கலகநெறியில் செல்லத் தூண்டிவிட்டுத் தங்கள் காரியங்களைச் சாதித்துக்கொண்டனர்.மத நம்பிக்கை மாறி, மதவெறி மிகுந்து மக்களுக்குள் வெறுப்பும், கலகமும் மிகுந்தன. மதச் சண்டை யும், சாதிச் சண்டையும் அண்ணன் தம்பிகள்தான். ஆதலால் வகுப்புச் சண்டைகளை மதச் சண்டையில் முளைத்தெழுந்த கிளைப் பயிர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மதவெறி கொண்ட அரசாங்கங்களின் மூலம் உலக மக்கள் எய்திய இன்னலுக்கு எல்லையில்லை. இந்தப் படிப்பினையின் காரணமாக அரசாங்கமும் மதமும் ஒன்றாக இருத்தல் கூடாது. அரசியல், நாட்டில் உள்ள பல திறப்பட்ட மக்களுக்கும் சொந்தம்; மதம் ஒவ்வொரு மனிதனுடைய தனி உடைமை என்ற கொள்கை தோன்றிற்று. இக்கொள்கையே மதச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்று கூறலாம். இதன் பிறகு மதங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி தாபனங்கள் ஏற்பட்டன. அவைகள் மதப் பிரசாரம் செய்து வருகின்றன. இன்றளவும் அந்த தாபனங்கள் மதப் பிரசாரங்கள் செய்வதில் தவறுவதில்லை. ஆனால் மதப் பிரசாரத்தின் பயன் மட்டும் பூரண சந்திரவடிவந்தான். ஒட்டகம் ஊசியின் காது வழியிலே நுழைந்து சென்றாலும் செல்லலாம். ஆனால் பணக்காரன் சுவர்க்கத்தை அடைய முடியாது என்பது கிறிதுநாதர் போதனை. கிறிதுவர் களுக்குள்தான் முதலாளி தொழிலாளி சண்டை தொடங்கிற்று. இலாம் என்றாலே சமாதானம் என்று பொருள். இதன் பொருளையே முலீம் தோழர்கள் மறந்துவிட்டனர். பெண்ணுரி மையை முலீம் மதம் வலியுறுத்தும் அளவு வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை. ஆனால்? சீவகாருணண்யத்தையே உருவாகக் கொண்டது ஜைன மதம். பாட்டாளிகளைச் சுரண்டுவதில் இன்று ஜைனர்களே முதலில் நிற்கின்றனர். பெரும்பாலான லேவாதேவிக்காரர்கள் அவர்களே என்பதை நினைவுறுத்துகிறோம். அஹிம்சையையும், சகோதரத்துவத்தையும், உண்மை ஒழுக்கங்களையும் வலியுறுத்த வந்தது புத்த மதம். அந்த மதம் வளரும் நாடுகளைப் பார்த்தால், புத்தமதக் கொள்கையில் எந்த அளவு நிலைத்திருக்கின்றது என்பது விளங்கும். தனக்கென்று வாழாமல் பிறர் நன்மைக்காகவே உயிர் வாழவேண்டும். தொழில் செய்யவேண்டும், வாழ்நாள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என்று போதிப்பது காலங் குறிப்பிட முடியாத இந்து மதம். இன்று எத்தனை இந்துக்கள் இந் நெறியைப் பின்பற்றுகின்றனர் ? மதம் போதிக்கும் நல்லொழுக்கங்கள் மக்கள் மனத்தில் ஏறவில்லை. பெயருக்காக மதத்தைச் சொல்லிக்கொள்கிறார்கள்; செயலிலோ அதன் கொள்கைகளுக்கு நேர்மாறாக நடக்கின்றனர். மதங்களின் இந்த நிலையை பல்லாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தார் நமது வள்ளலார். பழைய மதங்களை இனிச் சீர் திருத்த முடியாது. புதுமதம் வேண்டுமென எண்ணினார். பழைய மதங்களில் பிழிந்தெடுத்த சாரந்தான் ராமலிங்கர் கூறும் சமரச சுத்த சன்மார்க்கம்.ஒற்றுமையான பரிசுத்த முள்ள உண்மை நெறிதான் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது. அந்த உண்மை நெறிதான் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பது. எல்லா மக்களும் அன்போடு ஒன்றுபட்டு வாழ்தல் தான் ஆன்மநேய ஒருமைப்பாடு. பழைய மதங்களின் இன்றைய நிலைமையைப்பற்றி வள்ளலார் கூறுவது இதுதான் : கூறுகின்ற சமயமெலாம் மதங்களளெலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார்; வீணே நீறுகின்றார்; மண்ணாகி நாறுகின்றார்; அவர்பால் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ ! நிலைமேல் ஏறுகின்ற திறம் விழைந்தேன் ; ஏற்றுவித்தாய் ! ஆங்கே இலங்குதிருக் கதவுதிறந்து இன் அமுதம் அளித்தே தேறுகின்ற மெஞ்ஞான சித்திஉறப் புரிவாய் ! சித்தசிகா மணியே ! என் திருநடநா யகனே ! சுயநலவாதிகள் மக்களிடம் அபிமானவற்றவர்கள் பொய்ந் நூல்கள் சொல்லுகின்ற சமயங்களையும், மதங்களையும் உண்மையென்று பிடித்துக் காள்ளுகின்றனர். அர்த்தமின்றி வீண் கூச்சலிடுகின்றனர். அவைகளால் அவர்கள் ஒரு பயனையும் அடையவேயில்லை. வீணாக ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு சாம்பலாகின்றனர். மண்ணோடு மண்ணாகி மடிகின்றனர். அவர்களைப்போல் நானும் இந்தப் பெரிய உலகத்தில் வீணாக அழிந்துபோக நினைக்க மாட்டேன். உயர்ந்த நிலையை அடைகின்ற தன்மையை விரும்புகின்றேன்; அவ்வாறே ஏற்றம் அளித்தாய் ! விளங்குகின்ற அறிவுக் கதவைக் திறந்து இனிய அமுதம் அளிப்பாய்! அறிவினால் பல காரியங்களையும் சாதிக்கும்படி செய்வாய் என் உள்ளத்தில் நடமாடும் ஒப்பற்ற அறிவொளியே!. வள்ளலாரின் இக்கருத்தை இவ்வுலகம் மேற்கொள்ளும் காலத்தில்தான் மக்களுக்குள் உண்மையான சமாதானம் நிலவ முடியும். மக்களிடையில் இன்று நிலவும் வெறுப்பும், பிளவும் ஒழியும்; உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள். சாத்திரங்களின் உண்மை இக்காலத்தில் அறிவு நூல்களுக்குச் சாத்திரங்கள் என்ற பெயர். நிலத்தில் விளையும் பண்டங்களைப்பற்றிக் கூறுகின்ற நூல்கள் உண்டு. மரம் செடி கொடி ஆகீய தாவரங்களைப் பற்றிக் கூறும் நூல்கள், நீர்வாழ் பிராணிகளைப்பற்றிக் கூறும் நூல்கள் உள்ளன. வானத்தைப் பற்றி, வானத்தில் வாழும் சூரியன், சந்திரன், நட்சத்திரம், மற்ற கிரகங்களைப் பற்றிக் கூறும் நூல்கள் உண்டு. மக்களுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றிக் கூறும் நூல்கள் உண்டு. உலோகப் பொருள்களைப் பற்றி, மருந்துகளைப் பற்றி, அவைகளைப் பயன்படுத்தும் விதங்களைப்பற்றிக் கூறும் நூல்கள் உண்டு. இத்தகைய ஆராய்ச்சி நூல்களையே இன்று சாத்திரங்கள் என்று வழங்குகிறோம். நமது நாட்டில் தமிழ் மொழியில், உடல்நூல், உளநூல், நிலநூல், வானநூல், உயிர்நூல், ரசாயனநூல் முதலிய நூல்கள் தனித்தனியாக இல்லை. இவைகள் நமது பண்டைய இலக்கியங் களில் மத, தத்துவ சாதிரங்களில் கலந்துள்ளன. நமது முன்னோர்கள் உடல், உள்ளம், நிலம், வானம், உயிர். ரசாயனம் முதலியவைகளைப்பற்றி அறியாதவர்கள் அல்லர். ஆனால் அவைகளைப்பற்றி அவர்கள் தனித்தனியாக நூல்கள் எழுதி வைக்க வில்லை. இவைகளைப் பற்றி வைத்திய நூல்களிலும், சோதிட நூல்களிலும் புராண இதிகாசங்களிலும் ஆங்காங்கே கூறிச் சென்றனர். ஆதலால் நமது நாட்டினர் புராணம், இதிகாசம், வேதம் ஆகமம் முதலியவைகளையே சாத்திரங்கள் என்று எண்ணி வந்தனர். இத்தகைய நூல்களையே நமது வள்ளலாரும் சாத்திரங்கள் என்று கூறுகின்றார். நமது நாட்டில் வழங்கும் வேத புராண இதிகாச ஆகம சாத்திரங்களில் மக்கள் வாழ்க்கைக்குப் பெரும்பயன் விளைவ தில்லை. இவைகளை அப்படியே நம்பும் மக்கள் உலக மக்கள் எல்லோரும் ஒன்றென்னும் உண்மையை உணர்வதில்லை. சாதியினால், மதத்தினால், மொழியினால், பழக்க வழக்கங்களால், மூடநம்பிக்கைகளால் ஒருவர்மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளு கின்றனர். உதாரணமாகத் தீர்த்தயாத்திரை போதல், தலயாத்திரை போதல் என்ற வழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இவை களைப் பற்றிப் பல புராணங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு தலத்தைப்பற்றிக் கூறும்போது, மதுரையைப்பற்றியோ, திருவரங் கத்தைப் பற்றியோ, தில்லையைப் பற்றியோ திருவேங்கடத்தைப் பற்றியோ கூறும்போது, அந்தந்த ஊர்களையே உயர்த்திக் கூறுவர். அந்த ஊர்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கினால் எல்லாப் பாவங்களும் தொலைந்து விடும் என்று கூறப்படும். இதைப்போலவே எந்தத் தீர்த்தங்களைப்பற்றிக் கூறினாலும் அதனைக் கங்கையிலும் உயர்ந்ததென்று கூறுவர். அந்தத் தீர்த்தத்தில் மூழ்கினால் பஞ்சமா பாதகங்கள் தொலைந்துவிடும் என்று பகர்வர். யாத்திரை என்பது எதற்காகக் கூறப்பட்டது என்பதை உணர்ந்தவர்கள் வெகு சிலரே. பண்டைநாளில் ரயில், மோட்டார், வானூர்தி முதலிய பிரயாண வசதிகள் இல்லாத காலத்தில் மக்கள் நடந்து யாத்திரை செய்துவந்தனர். அவர்கள் போகும் வழியில் பல இயற்கைக் காட்சிகளைக் கண்டறியலாம். பல திறப்பட்ட மக்களின் நாகரிகத்தைக் காணலாம். பலதேச மக்களுடன் ஒன்றாகப் பழகலாம். பல நாடுகளில் நடைபெறும் வியாபாரம், விளைபொருள் உற்பத்தி முதலியவைகளை நேரே கண்டறியலாம். இவைகளை அறிவதன் மூலம், மக்களுடைய அறிவு தெளிவடையும்; பல மக்களின் கூட்டுறவு ஏற்படும்; பல நாட்டினருடன் வாணிகத் தொடர்பு, கலைத் தொடர்பு முதலியன ஏற்படும். இந்த நோக்கத்துடனேதான் யாத்திரை என்பதை மத சம்பந்தமுள்ளதாக வைத்தனர். இவ்வுண்மைகளை உணர்ந்து இந்நாளில் யாத்திரை செய்வோர் எத்தனை பேர்? இவ்வுண்மை களை எந்தப் புராணமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அடுத்து, தீர்த்தங்களைப்பற்றி எடுத்துக் கொள்ளுவோம். பண்டை நாளில் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்த்தங்கள் பல. அவை ஆறுகள், குளங்கள். ஆறுகள் பெரும்பாலும் மலைகளிலிருந்து வெட்டவெளிகளின் வழியே ஓடி வருவன. மலைகளில் நோய் தீர்க்கும் மூலிகைகள் பல உண்டு. உடலுக்கு நலமளிக்கும் உலோகச் சத்துக்கள் உண்டு. ஆறுகள் ஓடிவரும் வெட்டவெளிகளிலும் சுட்டாந்தரை களிலும் இத்தகைய உலோகச் சத்துள்ள வெளிகள் உண்டு. அவற்றின் வழியே வரும் நீரில் அச் சத்துக்கள் கலந்துள்ளதால் அந்நீரில் குளிக்கும் மாந்தர்க்குப் பல நோய்கள் தீரலாம். தீர்த்தங்களாக விளங்கும் குளங்களிலும் பல, மலையிலிருந்து வந்த நீர் நிரம்பியதாக இருந்தன. சில தடாகங்கள், கெந்தக பூமியிலோ, இரும்புச் சத்துள்ள நிலத்திலோ, தாமிரச் சத்துள்ள நிலத்திலோ, அப்பிரகச் சத்துள்ள நிலத்திலோ இயல்பைக் கொண்டிருக்கும். நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்றாகும் அன்றோ ? ஆதலால், இந்த நீர் நிலைகளில் முழுகுவோர்க்குச் சில நோய்கள் நீங்கலாம். இந்த நலங்கருதியே தீர்த்த யாத்திரையை நலமென்று கூறினர். இவ்வுண்மை தெரிந்து தீர்த்தமாடுவோர் இன்று எத்தனை பேர்? இன்று உண்மையறிவற்ற யாத்திரிகர், பாசி பிடித்து, நாற்றம் பிடித்து, பல நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்யும் குட்டை குளங்களிலும் தீர்த்தம் என்று முழுகி நோயடை கின்றனர். இது சாத்திரத்தால் நேர்ந்த கோளாறு. பண்டை நாளில் இருந்ததுபோல் இன்று ஆற்றங்கரைகள் சுத்தமாக இல்லை. மக்கள் கழிக்கும் மலங்கள் ஆற்று நீரிலேயே கலந்து வருகின்றன. குளங்களும் அப்படியே. அவற்றின் இயல்பே மாறிவிட்டது. ஒரு பொருளைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டு மானால், மூன்று வழிகளால் உணர்ந்து கொள்ளலாம் என்றனர் அறிஞர். நேரே பார்த்துத் தெரிந்துகொள்ளுதல்; சில அறிகுறி களைக் கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல்; நூல்களின் மூலம் தெரிந்து கொள்ளுதல். இம்மூன்று வழிகளால் ஒரு பொருளைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம். இம்மூன்றுள் நேரே கண்டு ஆராய்ந்து தெரிந்துகொள்வதே சிறந்தது என்பது வள்ளலார் கருத்து. இவ்வாறு தெரிந்து கொள்ளும் மக்களே பூரண அறிவு பெற்றவராவர். சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே என்று காட்சியளவையே சிறந்ததெனக் கூறினார். சாதிமதம் சமயம் எனும் சங்கம்விட் டறியேன் சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன் சாத்திரங்கள் சேற்றுநிலம். அதில் இறங்கினால் அவதியுற வேண்டியதுதான். சஞ்சலத்தையே சாத்திரங்கள் தரும். சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்; சாத்திரக் குப்பையும் தணந்தேன்; நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம் அருட்பெரும் சோதிஎன்று அறிந்தேன்; ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதுஎன்? அடிக்கடி உனக்கே. சாத்திரம் என்பன குப்பைகள். அவைகளில் உண்மை மணிகள் இல்லை. வேதா கமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேதா கமத்தின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைத்தல் இலை; என்ன பயனோ இவை? என்றார். ஆதலின் பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைப் பார்ப் போர், பகுத்தறிவுக் கண்ணாடி தரித்துப் பழம் புராணங்களை ஆராய்வோர் சேற்றில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்; சஞ்சலத்தில் அகப்படமாட்டார்கள்; குப்பைக்குள் புகுந்து உடலும் மனமும் அழுக்காகி அல்லற்பட மாட்டார்கள். சூதுகளை உணர்ந்து உண்மைவழி நடப்பார்கள். இக்கருத்துடனேயே சாத்திரங்களைப்பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கின்றார் வடலூர் வள்ளலார். மூட நம்பிக்கை சிலர் தாம் செய்யும் காரியங்கப்பற்றி நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம் ? இவற்றைச் செய்தால் என்ன பயன்? செய்யாவிட்டால் என்ன? செய்யாமல் விட்டு விட்டால் குடி முழுகிப் போய்விடுமா? என்று யோசிப்பதேயில்லை. யோசிக் காமல் சில காரியங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய தகப்பனார் செய்த காரியம்; நம்முடைய பாட்டனார் செய்த காரியம்; வழக்கமாகச் செய்து வந்த காரியம்; நாம் நிறுத்தக் கூடாது. நம்முடைய பிள்ளைகள். பெயரன்கள் எப்படி யாவது போகட்டும். நாமுள்ள வரையிலும் புதிய மாறுதல் எதுவும் வேண்டாம்; முன்னோர் முறையையே பின்பற்றிச் செல்வோம். இவ்வாறு சமாதானம் சொல்லிவிடுகின்றனர். அர்த்தமில்லாத காரியங்களைச் செய்பவர்கள் சொல்லும் சமாதானம் இது. தென்னாட்டில் சில வகுப்பினர்கள் கிறிதுவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பப் பழக்கவழக்கங் களை எடுத்துக்கொண்டால் இன்னும் இந்துக்கள் போலவே நடந்து வருகின்றனர். அவர்கள் கிறிதுவ மத வழக்கப்படி மாதா கோவிலில் பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளுவார்கள். மீண்டும் வீட்டுக்கு வந்ததும், தங்கள் பழைய மதக்கொள்கைப்படி புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொள்ளுவார்கள். சிலர் அமாவாசை விரதங்கூட இருக்கிறார்கள். இந்த வழக்கம் கிறிதுவராக மாறினவர்களிடமும் இருந்து வருகின்றது. இதற்குப் பெயர்தான் மூடநம்பிக்கை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மணம் செய்துகொள்ள வேண்டுமானால் அவர்களுக்குள் உடன்பாடு வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர் களுக்குள் திருமணம் நடைபெற வேண்டும்; நடத்தி வைக்கவும் வேண்டும். இதுவே பண்டைத் தமிழர்களின் கொள்கை. பெற்றோர்கள் அறியாதபடி ஒரு பெண்ணும், ஒரு ஆணும் காதலித்தலுக்குக் களவு என்று பெயர். இருவரும் மணம் புரிந்து கொண்டு ஊரார் அறியக் குடித்தனம் பண்ணுவதற்குக் கற்பு என்று பெயர். களவு இல்லாமல் கற்பு நிகழாது. இது தமிழர் மரபு. பெரும்பாலும் உலகமெங்கும் திருமணம், இந்த முறையில்தான் நடைபெற்று வந்தது. இன்றும் பெரும்பாலான நாடுகளில் இம்மாதிரியான திருமணம்மான் நடைபெறு கின்றது. இதுதான் இயற்கையுமாகும். ஆனால் நமது நாட்டில் பல குடும்பங்களில் இந்தமுறைக்கு மாறாகத் திருமணங்கள் நடைபெறுவதைக் காணுகின்றோம். மணமக்கள் சம்மதத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுதேயில்லை. நோய்க்கு மருந்துண்டு, உடலில் இரத்தக் குறைவால் பல நோய்கள் உண்டாகின்றன. தாய் தந்தையர்கள் காரணமாகப் பலர் நோயாளிகளாக இருக்கின்றனர். சீதோஷ்ண மாறுபாடு களால் பல தொத்துநோய்கள் தோன்றுகின்றன; இவற்றால் பீடிக்கப்படும் மக்களைக் காப்பாற்றவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருந்து கொடுக்கும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. மருந்தினால்தான் நோய் தணிய முடியும். அது இயற்கையான காற்று, சூரிய வெளிச்சம் போன்ற மருந்தாகவும் இருக்கலாம்; அல்லது இயற்கை மருந்தாகவும் இருக்கலாம். அறியாத மக்களில் பலர் அறிந்தவர்களிலும் கூட ஒரு சிலர் நோய்க்குக் காரணம் பேய் பிசாசுகள் என்று கருதுகின்றனர். மருந்துண்ணாமல், மந்திரத்தால் உயிர்பிழைக்கலாம் என்று எண்ணுகின்றனர்; மந்திரவாதிகளிடம் சிக்கி மாளுகின்றனர். இது மூட நம்பிக்கையின் விளைவு. நகை அணியும் ஒரு வர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது காட்டுமிராண்டித்தனமான வழக்கம். மக்கள் நாகரிக மின்றி, காடு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில், காட்டுப் பூக்களைக் கழுத்திலும், காதிலும், மூக்கிலும் அணிந்து கொண்டனர். சிறிய கொட்டைகளையும் விதைகளையும் மாலையாகக் கோத்துக் கழுத்திலே போட்டுக் கொண்டனர். அதே வழக்கம் இன்றைய நாகரிகத்திலும் ஆட்சி புரிகின்றது. மலர் வடிவாகவும், கொட் டைகள், விதைகள் வடிவாகவும் தங்கத்தைச் செய்து, காதில், மூக்கில், கழுத்தில், தலையில் அணிகின்றனர். பாவம்! இந்தத் தங்கத்தையும் கல்லையும் சுமப்பதற்காக மூக்கையும் காதையும் துளைத்துக்கொள்ளுகின்றனர்! இது இயற்கையா? ஆராய்ந்தால் அறிவீனம் என்று விளங்கு மல்லவா? ஏன் இம்மாதிரி செய்கின்றனர்? முன்னோர் வழக்கம் என்ற மூடத்தனம் அல்லவா? இத்தகைய பொருளற்ற மூடத்தனங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று இராமலிங்கர் வற்புறுத்துகிறார். சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமம் ஆச்சாரம் சமயமதாச் சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்கு வெளுத்தது கலையுரைத்த கற்பனைகள் நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக! மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெற, மெய்யுலகம் வாழ்ந்து ஓங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே என்று இவ்வாறு பாடியிருக்கின்றார். இக்கருத்தை இன்னும் தெளிவாக உரைநடையிலும் வலியுறுத்திச் சொல்லியிருக் கின்றார். காதில் இரண்டு பொத்தல் செய்துவரவிடுத்தவர் ஆணுக் குக்கடுக்கன் இடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியன போடுதலும், தமக்குச் சம்மதமானால், காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தலிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா? என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுகிற பட்சத்தில் காதில் கடுக்கன் இடவும், மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா ? இதுவே அவர் சொல்லியிருக்கும் உரைநடை. ஆண்களும், பெண்களும் நகை அணிவது இயற்கைக்கு விரோதமானது என்பதை இவ்வாறு வலியுறுத்தி யிருக்கின்றார். மேலே காட்டியவைகள் வள்ளலாரின் வாய்மொழிகள். மூட நம்பிக்கை யிலிருந்து முதலில் விடுபட்ட மக்கள்தான், அரசியலிலும் சமுதாய வாழ்விலும் உயர்வடைய முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர் நமது வடலூரார். அதனா லேயே அவர் அச்சமின்றி மூட நம்பிக்கைகளைக் கண்டிக்கிறார். வெறுக் கிறார். உயிர்ப் பலி மனிதன் அறிவற்றவனாயிருந்த காலத்திலே காற்றைக் கண்டு கலக்கம் அடைந்தான் நீரோட்டத்தைக் கண்டு நிலை கலங்கினான். நெருப்பைக் கண்டு நெஞ்சம் நடுங்கினான். தகதகவென்று பிரகாசிக்கும் சூரியனைப்பற்றிச் சிந்தித்தான்; ஒன்றும் புரியவில்லை. காலையில் அதன் இளங் கதிரில் காய்ந்து இன்புற்றான். நடுப்பகலில் அதன் கொடும் வெயிலில் அகப்பட்டு வருந்தினான்; மாலையில் அதன் மஞ்சள் நிறக் கதிரால் மனம் மகிழ்ந்தான். இரவிலே வானத்திலே வளர்ந்து எழுந்த பிறைச் சந்திரனால் பெரிதும் களிப்புற்றான். பூரணச் சந்திர பிம்பத்தைக் கண்டு புளகாங்கிதம்அடைந்தான். இந்த நிலையிலே அவனால் இவை களைப் பற்றி இன்னவையென்று தீர்மானிக்க முடியவில்லை. தலைவெடிக்கக் கதிரவன் காய்கின்றான். வெயிலிலே தலை நீட்ட முடியவில்லை. பூமியிலே அடி வைக்க முடிய வில்லை. அடிவைத்தால் அவ்வளவுதான்; கால்கள் வெந்து குழம்பாகிவிடும் போல் காணப்படுகிறது. சிறிது நேரத்தில் வானத்திலே கருமேகங்கள் கவிந்துவிடுகின்றன. கண்ணைப் பறிக்கும்படியான மின்னல்கள்; காது செவிடுபடும்படியான இடிமுழக்கம் சோவென்று மழை பெய்கின்றது. வாடிய பயிர்கள் தழைக்கின்றன. கொதித்த பூமி குளிர்ச்சியடை கின்றது. வெயிலால் வெந்து வாடிய மக்களின் உடலிலே உற்சாகம், உள்ளத்திலே ஊக்கம், மனத்திலே கட்டுக்கடங்காத மகிழ்ச்சி தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு அந்தக்காலத்து மனிதர்கள் ஆச்சரியப்பட்டனர். இவைகளுக்குக் காரணத்தை அறிய முயன்றனர். அவர்கள் அறிவிலே ஒன்றும் புலப்படவில்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தனர். தம்மைக்காட்டிலும் சக்தி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இக்காரியங் களைச் செய்கிறார்கள். அவர்களை நாம் வணங்க வேண்டும் அவர்களை நாம்வணங்காவிட்டால் அவர்களால் நமக்குத் தீமை ஏற்படும் என்று எண்ணினார். இந்த எண்ணம் காரணமாகவே காற்று ஒரு தெய்வம்; வாயு ஒரு பகவான்; நெருப்பு ஒரு கடவுள் அக்கினி ஒரு ஆண்டவன்; தண்ணீர் ஒரு தெய்வம்; வருணன் ஒரு பகவான்; சூரியன் ஒரு தெய்வம்; சந்திரன் ஒரு தெய்வம் இவ்வாறு, அவர்கள் கண்ட அதிசயங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கினர். இந்த முறையிலே, ஆதிகாலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பலவாயின. எந்த நாட்டிலும் இந்தப் பல தெய்வக் கொள்கைகளே இருந்தன. தெய்வங்கள் பலவென்று சொல்வது தவறு. தெய்வம் ஒன்றுதான் என்று அந்தக் காலத்திலே கூறியவர்கள் புரட்சிக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். சாக்கரட்டீ, ஏசுநாதர், நபிநாயகம் போன்றவர்கள் ஏகதெய்வக் கொள்கையைப் பிரச் சாரம் செய்த காரணத்தினாலே அல்லல்களுக்கு ஆளாயினர். இயற்கைப் பொருள்களையெல்லாம் தெய்வங்கள் என்று நம்பிய மக்கள் இயற்கை நிகழ்ச்சிகளையெல்லாம் தெய்வச் செயல்கள் என்று நம்பிய மக்கள் அவைகளை ஆராதித்தனர்; அவைகளுக்குத் தாங்கள் உண்ணும் உணவுகளை, குடிக்கும் பானங்களை வைத்துப் படைத்தனர். இவ்வாறுதான் தெய்வங்களுக்குப் பலியிடும் வழக்கம் ஏற்பட்டது. இவ் வழக்கம் இல்லாத நாடுகளேயில்லை. உலக சரித்திரத்தைப் படிப்போர், கேட்போர் இவ்வுண்மையை அறிவார்கள். மக்கள் அறிவுவளர்ச்சியடைந்த பின் பல இயற்கை நிகழ்ச்சி களின் உண்மைகளை அறிந்தனர். பலதெய்வ வணக்கங்கள் பல நாடுகளிலும் ஒழிக்கப்பட்டன. பலதெய்வ வணக்கங்கள் ஒழிக்கப் பட்டதோடு கூடவே பலியிடும் வழக்கங்களும் ஒழிக்கப்பட்டன. தெய்வம் என்பது சத்தியம் உண்மை அறிவு, அன்பு, ஒளி என்பவைகள். இத் தெய்வ உணர்ச்சி மனித சமூகத்தில் வளர வேண்டும் என்றால் அதை மறுப்பார் எவரும் இல்லை. எந்த விஞ்ஞானமும் இத்தகைய தெய்வத்தை இல்லையென்று சொல்லவில்லை. மகாத்மாவின் கொள்கை இதுவே. தெய்வத்தின் பெயரைச் சொல்லி மனித சமூகத்தை ஏமாற்றுகிறவர்களுக்கே விஞ்ஞானம் எமனாக நிற்கிறது. இவ்வளவு அறிவும் நாகரிகமும் வளர்ந்த இக்காலத்திலும் பழைய அநாகரிகச் சின்னங்கள் மறைந்துவிடவில்லை. மக்களிடம் இருந்த பழைய மூட நம்பிக்கைகள் முழுவதும் ஒழிந்து போய் விடவில்லை. பழைய காட்டுமிராண்டித்தனமான செயல்கள் இன்னும் தொடாந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய பழைய மூடத்தனமான செயல்களிலே பல தெய்வ வணக்கம் ஒன்று. பலதெய்வ வணக்கம் நிலைத்திருக்கும் வரையிலும், அவைகளுக்குப் பலியிடும் வழக்கம் நிலைத்துத் தான் இருக்கும். நாகரிகம் பெற்ற மனித சமுதாயத்திலே பல தெய்வங்கள் வாழ முடியாது. அநாகரிகமுடைய சமுதாயத்தில்தான் பல தெய்வங்கள் வாழ முடியும். பலதெய்வ வணக்கங்களும், அவை களுக்குப் பலியிடும் அநாகரிக வழக்கங்களும் கட்டாயமாக ஒழிக்கப் பட வேண்டும். மக்கள் தாமே சீர்திருந்துவார்கள் என்று கூறும் வாதம் தவறு. எந்தக் காலத்திலும் மக்கள் தாமே சீர்திருந்தியதில்லை. மதத் தலைவர்களும், சீர்திருத்தவாதிகளும் ஜன சமூகத்தின் எதிர்ப்பு வெள்ளத்தில்தான் நீந்தினார்கள். அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்துதான் தங்கள் கொள்கைகளை நிலை நாட்டினார்கள். இந்த உண்மையை அறிந்தவர்கள் மக்கள் ஒப்புக்கொள்ளா விட்டாலும், எதிர்த்தாலும் பலாத்காரமாகச் சீர்திருத்தத்தைப் புகுத்துவதை மறுக்கமாட்டார்கள்; எதிர்க்க மாட்டார்கள். பலதெய்வக் கொள்கையை வள்ளலார் ஒப்புக் கொள்ள வில்லை. அவைகளைச் சிறுதெய்வங்கள் என்ற குறிப்பிடுகின்றார். இச் சிறுதெய்வங்களுக்குப் பலியிடும் அநாகரிகத்தை வன்மை யாகக் கண்டிக்கிறார். பலியிடுவதைக் கண்டு உள்ளம் வருந்து கிறார். இதைப்பற்றி அவர் கூறியிருப்பதைப் பாருங்கள். சிறுதெய்வக் கொள்கை மக்களுக்கு நன்மை தருவது அல்ல. துன்பங்களைத்தான் உண்டாக்குகின்றது. ஒரு சிறு தெய்வம் பல பெயர்களைக் கொண்டிருக்கின்றது. அது ஆடு, மாடு, பன்றி, கோழி, எருமைக் கடா முதலியவற்றைப் பலியாகக் கொள்கின்றது. இதைக் காணும்போதெல்லாம் நான் மனம் நொந்து உடல் நடுங்குகின்றேன். மக்களுக்குத் துன்பத்தைத் தருகின்ற இந்தச் சிறுதெய்வக் கோயில்களைக் காணும் போதெல்லாம் நான் அஞ்சுகிறேன்! என்று கூறுகின்றார். நலிதரு சிறிய தெய்வம்ஒன்று ஐயோ, நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு, பன்றி, குக் கிடங்கள், பலிகடா முதலிய உயிரைப், பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந்து உளம்நடுக் குற்றேன்; கலியுறு சிறிய தெய்வவெம் கோயில் கண்டகா லத்தினும் பயந்தேன். இதுவே அப்பாடல். ஆகவே மக்களின் பழைய மூடத்தனத்தின் சின்னமாகிய சிறுதெய்வக் கொண்டாட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்; நாகரிக மக்கள் வாழும் உலகத்தில் இன்னும் அநாகரிகமான தெய்வங்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவைகளுக்குப் பலியிடுவதும் மனித சமூகத்திற்கே அவமானம், என்பதே வடலூரார் கருத்தாகும். இக் கருத்து உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட ஒப்புக் கொள்ளும் உண்மை யாகும். வடலூரார் கருத்து இன்று முழுவதும் நிறைவேறா விட்டாலும், தெய்வங்களின் பெயரால் பலியிடுவது தவறு என்ற கருத்து நிறைவேறிவிட்டது. அரசாங்கச் சட்டம் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி யிடுவதைத் தடுக்கின்றது. பல தெய்வ வணக்கமும் நாளடைவில் ஒழிந்துபோகலாம் என்பது உறுதி. இம்மையும் மறுமையும் இந்த உலகத்தில் இன்பமில்லை; வேறு எங்கோ ஒரு உலகத்தில்தான் இன்பம் ஊற்றெடுத்து ஓடுகின்றது; இங்குள்ள மக்கள் யாராயினும் இந்த உடலோடு அந்த உலகத்தை அடைய முடியாது; இறந்த பிறகுதான் அவ்வுலகம் சென்று, அந்த இன்பத்தை அடையமுடியும்; ஆதலால் அதற்கான காரியங் களை அனைவரும் செய்யவேண்டும் என்று கூறுபவர்களின் கூற்றுக்களைப் பகுத்தறிவுவாதிகள் ஒத்துக்கொள்ளுவதில்லை. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திட லாம்என்று எண்ணி யிருப்பவர் பித்த மனிதர், அவர்சொல்லும் சாத்திரம் பேய் உரையாம், என்றுஇங்கு ஊதேடா சங்கம் என்று சங்கநாதம் செய்கிறார் பாரதியார். செத்த பிறகு சிவலோகம் சேர்வோம்; வைகுந்தம் சேர்வோம் என்று எண்ணி யிருப்பவர்கள், இவ்வெண்ணங் காரணமாக இவ்வுலகில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் புறக்கணிப்பவர்கள் பைத்தியக்காரர்கள்; தங்கள் செய்கைதான் சரி, தங்கள் எண்ணந் தான் சரி என்பதற்காக அவர்கள் காட்டும் சாத்திரங்கள் அறிவு டையவர்களால் எழுதப்பட்டவை யல்ல. அவைகள் மக்களுக்குத் தீங்கு செய்ய எண்ணிய பேய்கள் கூறிய மொழிகள் என்று விளக்கமாகக் கூறிச் சென்றார் பாரதியார். ஆகவே, இம்மையின்பம், மறுமையின்பம் இரண்டும் இவ்வுலகில் உள்ளவைகள்தாம் என்பதை அறிவுடையவர்கள் மறுக்கமாட்டார்கள். இந்த நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முன்வருவார்களானால் எல்லா மக்களும் இன்புறுவதற்கு வழியுண்டு. இரண்டின்பமும் இவ்வுலகிலே உள்ளவைகள்தாம்; அவைகள் இன்னின்னவை; அவைகளை அடையும் வழியும், முறையும் இவையிவை என்பதை வடலூரார் பாரதியாருக்கு முன்பே விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இம்மை யின்பம் மறுமையின்பம் இரண்டையும் பாருங்கள். நல்ல உடம்பையும், பழுதற்ற அவயங்களையும் பெற்றிருக்க வேண்டும்; போதுமான அளவுக்கு எல்லாச் செல்வங்களையும் எய்த வேண்டும்: நன்மை தீமையைக் கண்டறியும் பகுத்தறிவு வேண்டும்; பசியினால் வாடுதல், பிணியினால் நலிவுறுதல், கொலையினால் பிறர்க்குத் தீங்கு செய்தல் கூடாது; இவைகள் வாழ்க்கையின்பத்திற்குத் தடை விளைவிப்பவை. உறவினர், நண்பர், அயலார் என்ற வேறுபாடின்றி எல்லோருடனும் ஒன்றாகக் கலந்து உறவாட வேண்டும். மனைவியுடனும் கூடிப் புத்தரப்பேறு பெற்று இன்புற வேண்டும். இவ்வாறு வாழ்வது இம்மையின்ப வாழ்வாகும். இவர்கள் அன்பு, தயை ஒழுக்கம், அடக்கம், பொறுமை, உண்மை, பரிசுத்தம் முதலிய நல்ல குணங்களை மேற்கொள்ள வேண்டும். முயற்சியனால் மேலே கண்ட இன்பங்களைப் பெற்றுப் புகழுடன் வாழவேண்டும். இதுவே இன்பத்தின் பயன், இதனை வள்ளலார் வாசகத்தால் காணுங்கள். இம்மை யின்பமாவது: மனிதப் பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும், புவனத்திலும் போகங்களிலும் குறைவின்றி நல்லறிவுடையவர்களாய், பசி, பிணி, கொலை முதலிய தடைகள் இல்லாமல் உறவினர் சிநேகிதர் அயலார் முதலியோரும் தழுவ, சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியோடு விடயங் களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மையின்ப லாபம் என்று அறியவேண்டும். இம்மையின்பத்தை அடைந்தவர் பெருமை எதுவென்று அறியவேண்டில், அன்பு, தயை, ஒழுக்கம், அடக்கம், பொறுமை, வாய்மை, தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று, விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறியவேண்டும். இது வள்ளலார் கூறிய வசனம். இதன்மூலம் இம்மை யின்பம் இன்னதென்று தெளியலாம் மறுமையின்பத்தைப் பற்றி அவர் கூறியிருப்பதையும் காண்போம். சிலகாலம் மாத்திரம் இன்பத்தை அனுபவிப்பது இம்மை யின்பம் பெருமுயற்சியால், பெரிய காரியங்களைச் சாதிப்பது; அப்பெரிய காரியங்களைச் செய்வதன்மூலம் இன்புறுவது; பிறரையும் இன்புறச்செய்வது. இதுவே இன்பமாகும். இம்மையின்பம் என்ற சொல்லப்பட்டவைகள் என்றும் நிலைத்திருக்கும்படி செய்யவேண்டும். இம்மை யின்பத்திற்குத் தடையாக இருப்பவைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும். மாறுபடாத நல்ல குணத்திலே நிலைத்து நீடித்த புகழ்பெற வேண்டும். மறுமை யின்பமாவது யாதெனில்: உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்று, பெரிய முயற்சியால் பெரிய விஷயங் களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமையின்ப வாழ்வென்று அறியவேண்டும். மறுமையின்ப லாபம் எதுவெனில், உயர் பிறப்பைப் பெற்று இம்மையின்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்கள் எல்லாம் பொருந்த உயர்நிலையில் சுத்த விடயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமையின்பலாபம் என்று அறியவேண்டும். மறுமையின்ப லாபத்தை அடைந்தவர் பெருமையாதென்று அறியவேண்டில், அன்பு, தயை முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை, எண்ணிய படி தடை படாமல் முயன்று பல நாள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறியவேண்டும். என்று வள்ளலார் மறுமையின்பத்தைப்பற்றி விளக்கியிருக் கின்றார். அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித் திடஅவரும் இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனையிந் யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே என்ற செய்யுளும் குறிப்பிடத்தக்கது. இகத்திலே பரத்தைப் பெறமுடியும்; இம்மையிலே எல்லா உயர்வையும் அடை முடியும்; என்ற உண்மையை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. மேலே கூறியவற்றால் இம்மை மறுமை என்பன இரண்டும் இவ்வுலகில் உள்ளவைகளே என்பதை அறியலாம். சுரர், அசுரர், மனிதர் சுரர் என்பவர்கள் ஓர் இனத்தினர்; அசுரர்கள் என்பவர்கள் வேறு இனத்தினர்; மனிதர்கள் வேறு இனத்தினர் என்று கதைகளில் படிக்கின்றோம். சுரர் என்பவர்கள் தேவர்கள். அவர்கள் வாழ்வதற்குத் தனி உலகம் உண்டு; அவர்கள் நியாய வழி நடப்பவர்கள். மக்களிலே புண்ணியம் செய்தவர்கள்தான் தேவர்களாகப் பிறக்க முடியும். தேவர்கள் அதாவது சுரர்கள் வாழும் உலகம் தேவலோகம். அங்கே எல்லாச் செல்வங்களும் உண்டு. தேவர்களுக்கு அரசன் தேவேந்திரன். அசுரர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அதாவது சுரர்களுக்குப் பங்காளிகள்; இவர்கள் அக்கிரமக்காரர்கள்; தேவர்களைத் துன்புறுத்தி அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொள்ளுபவர்கள்; பல சமயங்களில் தேவலோகத்தைக் கைப்பற்றினர்; தேவ மாதர்களை வசப்படுத்திக்கொண்டனர் என்று கதைகள் கூறப்படுகின்றன. இவர்களைப் போன்றவர் களே அசுரர்கள் அதாவது இராட்சதர்கள் என்பவர்களும். ஆனால், இக்கதைகள் போதிக்கும் உண்மைகளை உணந் தவர்கள், தேவர்கள் என்ற ஒரு தனியினமோ, அரக்கர்கள் அல்லது அசுரர்கள் என்ற ஒரு தனியினமோ இல்லையென் பதைக் காண்பார்கள். தற்பெருமை பாராட்டித் தந்நலத்துக்காகவே பாடுபவர் களை அசுரர்களாக உருவகம் செய்யப்பட்டிருக்கிறது. மற்றவர் களைத் தமக்கு அடிமையாக்கி அவர்கள் உழைப்பைக் கொள்ளை கொள்ளுகின்றவர்களை அசுரர்களாகக் கூறப் பட்டிருக்கிறது. மற்றவர்கள் வருந்தி பாடுபட்டுச் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களை முரட்டுத்தனமாகப் பறித்துக் கொள்ளுகின்றவர்களை அரக்கர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கிறது. அசுரர்களைப் பற்றியோ, அரக்கர்களைப் பற்றியோ எழுதப்பட்டிருக்கும் கதைகளைப் பாருங்கள்! அவர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையுடையவர்கள்; மற்றவன் மனைவி அழகாயிருந்தால் அவளை வலியத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்; புலன் அடக்கம் அற்றவர்கள்; குடிகாரர்கள்; ஒழுக்கமில்லாதவர்கள், ஒழுக்கமுள்ளவர்களைத் தங்கள் விரோதி களாகக் கருதுபவர்கள்; தம் விருப்பபடியே சர்வாதி காரம் செலுத்துவதில் ஆர்வம் உடையவர்கள்; அவர்களிடையிலே தோன்றிய அரக்கர்கள் சர்வாதிகாரிகள்; குடிகளைக் காப்பாற்றுவது அரசன் கடமை என்பதை மறந்து அரசனுடைய தனிப்பட்ட சுக வாழ்க்காகவே குடிகள் எல்லோரும் உழைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்கள். இந்த அசுரர்களும் அரக்கர்களும், தம்முடைய சுயநலத் திற்காக எதுவும் செய்வார்கள்; கொலை செய்யப் பின்வாங்க மாட்டார்கள்; திருட்டைத் தாராளமாகக் கையாளுவார்கள்; வஞ்சனை செய்வதில் தலைசிறந்து நிற்பார்கள்; இரக்கம் என்பது எள்ளத்தனையும் இல்லாதவர்கள்; வறண்ட உள்ளம் படைத் தவர்கள். இத்தகையவர்களைத்தான் அரக்கர்கள், அசுரர்கள் என்று புனைந்து கூறியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மனித இனத்திலேயே கலந்து கிடப்பதைக் காண்கிறோம். தேவர்களைப்பற்றிக் கூறும் கதைகளைக் கவனிப்போர் எத்தகைய குணமுடையவர்கள் தேவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக் கிறது என்பதைக் கவனிப்போம். பகுத்தறிவுடன் நடந்து கொள்ளுபவர்கள் தேவர்கள். தெய்வம் என்பதற்கு அறிவுடைமை என்பது பொருள்; அறிவை யுடையவர்கள் தேவர்கள். தேவர் அனையர் புலவரும் என்பது நீதிநூல். அறிவுடையவர்கள் தேவரைப் போன்றவர்கள் என்பதே இதன் பொருள். தேவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள்; தம்மைப் போலவே பிறரும் இன்புற்று வாழவேண்டும் என்று நினைப் பவர்கள்; பிறருக்கு நேரும் துன்பத்தைத் தொலைக்க முன்வருபவர்கள்; நாடு செழிக்கவேண்டும், நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து வாழவேண்டும் என்னும் நாட்ட முள்ளவர்கள். கதைகளிலே, புராணங்களிலே கற்பனை செய்யப்பட்டி ருக்கும் தேவர்களிடம் இச் சிறந்த குணங்களைக் காணலாம். இச் சிறந்த நோக்கமுள்ளவர்களையும், செய்கையுள்ளவர் களையும் மக்கட் சமூகத்திலே பார்க்கின்றோம். குற்றமற்ற அறிவுடைய மக்களை அகில உலகமும் கொண்டாடுகிறது; அவர்களிடம் மக்கள் அன்பு செலுத்து கின்றனர்; அவர்களை வணங்கவும் செய்கின்றனர். இவர்கள் மக்களில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்; இந்த உயர்ந்த தன்மையுடையவர்களையே உம்பர் என்று அழைத்தனர்; வானவர் என்றும் வழங்கினர். இவ்வுண்மையை வள்ளலார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் தரும் விளக்கத்தைப் பாருங்கள். சுரர், அசுரர் என்பதற்குப் பொருள்: சுரர் என்பது அறிவுடைய ஜீவர்கள் என்பது முதல் வாசனாதி வதுக்கள் எல்லாம் சுரர். அகங்காரி முதல் துர்க்கந்த வதுக்களெல்லாம் பூமிக்குள் தோன்றும் கந்தமூலம், அழுக்குடைய வது, இவைகள் அசுரர். அறிவுடையவர்களையும், மக்களுக்கு நன்மை தரும் நல்ல பண்டங்களையும் சுரர்கள் அதாவது தேவர்கள் என்று வள்ளலாரின் இந்த வாசகங்கள் குறிப்பிடுகின்றன. அகங்காரிகளான அறிவிலிகளையும், மனிதர்க்குத் தீங்கு தரும் பண்டங்களையும், ஆபாசப் பொருள்களையும் அசுரர்கள் என்று குறிப்பிடுகின்றன. இதைப்போலவே தேவர்கள் வேறல்லர், மனிதர்கள் வேறல்லர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் தேவர் என்றும், மனிதர் என்றும் சொல்லப்பட்டதே தவிர வேறு எந்தக் காரணத் தாலும் அல்ல. மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர் வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது; பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்; நலம்பெறும் அருட்பெறும் சோதியா நண்ணவே. இவைகள் தேவர்கள் யார், மனிதர்கள் யார் என்பதை விளக்குகின்ற வள்ளலார் வாய்மொழி. ஆகவே, அசுரர் அல்லது அரக்கர்; தேவர் அல்லது சுரர்; மக்கள்; இவர்கள் தனித்தனி இனத்தினர் அல்லர்; தனித்தனி உலகில் வசிப்பவர்களும் அல்லர்; எல்லோரும் மனித சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அக்கிரமத்திலே தலைநின்று அகங்காரிகளாகத் திரிவோர் அரக்கர்கள்; அசுரர்கள். தந்நலமற்று, அறிவுடையவர்களாய், பிறர்நலங் கருதி வாழ்வோர் தேவர்கள். இரண்டுமின்றிச் சாதாரணமாக வாழும் மக்கள் மனிதர்கள். மனிதர்களே குணத்திலும் தேவர்களாக வாழ்கின்றனர்; அரக்கர் அசுரர்களாகவும் வாழ்கின்றனர். இவ்வுண்மையை அறிந்து எல்லோரும் அமரர்களாய், அன்புடையவர்களாய், அறிவுடையவர்களாய் வாழவேண்டும். இந்த உண்மையை உணராதவர்களே தேவர்கள் வேறு அசுரர்கள் வேறு, மனிதர்கள் வேறு; இவர்கள் தனித்தனி இனத்தவர் என்று நினைக்கின்றனர். இன்று மனிதர்களிலே ஒருசிலர், தங்களே அரக்கர் இனம் என்று சொல்லிக் கொள் வதிலே பெருமைப்படுகின்றனர். இது வெறுப்பினாலும் அறியா மையாலும் தோன்றும் பேச்சாகும். இத்தகைய மனிதர்கள் வடலூரார் வாழ்ந்த காலத்திலும் இருந்தனர் போலும். ஆதலால் தான் அவர் இதைப்பற்றியும் கூறினார் என்று கொள்ளவேண்டும். ஆண், பெண் சமத்துவம் இப்பொழுது பெண்கள் சமுதாயம் வீறுகொண்டு எழுந்து விட்டது. தங்கள் உரிமையை அவர்கள் உணர்ந்து விட்டனர். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று முழங்குகின்றனர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே! என்று ஆர்வத்தோடு பாடுகின்றனர். பெண்களை வற்புறுத்திக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடு வோம் என்பது இன்றைய பெண்ணுலகப் பேச்சு. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்பவர்கள் விந்தையான மனிதர்களாகிவிட்டனர். அவர்களுக்கு இந்த நாட்டிலே வேலை இல்லை. கற்பு, கற்பென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்றார் பாரதியார். கற்பென்னும் திண்மை என்றார் திருவள்ளுவர். கற்பு என்றால் கற்றுக் கொள்ளுதல் என்றே பொருள். உலக ஞானத்தை, குடும்பக் கலையை, அரசியல் சமூக பொருளாதாரக் கலைகளைக் கற்றுக் கொள்ளாத பெண் கள் எப்படித் திறமையுடன் ஆண்களின் மாய்மால மொழிகளில் மயங்காமல் வாழமுடியும்? பெண்களின் குணம், மனம், செயல்கள் வேறு; ஆண் களின் குணம், மனம் செயல்கள் வேறு என்பர். இதுவும் கலைக்கு நிற்காத வாதம். இளகிய மனம்; அன்பில் மாறாதிருப்பது; துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வது அவசரமற்ற தன்மை இவைகளையெல்லாம் பெண்தன்மையென்று கூறலாம். கல் நெஞ்சம், காரியம் முடியும் வரையிலும் அன்பு காட்டுவது, துன்பங்களைத் தாங்க முடியாமல் சீறி விழுதல், எதிலும் ஆத்திரமும் அவசரமும் கொள்ளுதல் இவைகளை ஆண் தன்மையென்று கூறலாம். இத்தகைய குணங்கள் பெண்களிடமும் உண்டு; ஆண் களிடமும் உண்டு. ஒருவருடைய குணம், மனப்பான்மை, நடத்தை இவைகளுக்குக் காரணம் அவர்களின் தொட்டில் பழக்கந்தான் இளமையிலிருந்து, அதாவது, குழந்தைப் பருவத்திலிருந்து பழகும் சுற்றுச் சார்பே ஒருவருடைய குணத்தையும், மனப்பான் மையையும், நடத்தையையும், உருவாக்குவது. இவ்வுண்மையைக் கொண்டு பார்த்தால், ஒவ்வொரு ஆணிடமும் ஆண்தன்மையும் உண்டு; பெண்தன்மையும் உண்டு. ஒவ்வொரு பெண்ணிடமும் பெண்தன்மையும் உண்டு; ஆண் தன்மையும் உண்டு. இதை உணர்ந்தவர்கள் பெண் ஆண்பேதம் பாராட்ட மாட்டார்கள். பெண்கள் உரிமை வேறு; கடமை வேறு. ஆண்கள் உரிமை வேறு; கடமை வேறு; என்று வழக்கிட மாட்டார்கள். ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதைப்பற்றி வள்ளலார் கூறும் உண்மைகள் மிகச் சிறந்தவை. பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி! பெண்ணுருவத்தில் ஆண்தன்மைகளும், ஆண் உருவத்துள் பெண் தன்மைகளும் ஒன்றுபட்டிருக்கும்படி செய்த அருட் பெரும் சோதியே ! பெண்ணியல் மனமும் ஆண்இயல் அறிவும் அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி! ஆண் பெண் இருபாலாரிடமும், பெண்தன்மையான இளகிய மனமும், ஆண்தன்மையான தெளிந்த உறுதியான அறிவும் ஒன்றுபட்டிருக்கும்படி செய்த அருட்பெரும் சோதியே! தனித்தனி வடிவனும் தக்கஆண் பெண்செயல் அனைத்துற வகுத்த அருட்பெரும் சோதி! ஒவ்வொரு ஆண் பெண்களிடமும் சிறந்த ஆண்தன்மைகள், பெண்தன்மைகள் அனைத்தும் அமைந்திருக்கும்படி செய்த அருட்பெரும் சோதியே ! இவ்வாறு, ஆண் பெண்கள் இருவரிடமும், இது தன்மை யான குணங்களும் உண்டென்று கூறுகின்றார். இதனால் இருபாலாரும் சமத்துவமுடன் வாழத் தகுதியுடையவர்கள் என்பதே வள்ளலார் உள்ளம். ஆகையால், பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப் பயன்பெற நல்அருள் அளித்தபரம் பரனே என்ற புகல்கின்றார். பெண்களும் ஆண்களும் சன்மார்க்கத்தில் தொண்டாற்றிப் பயன்பெறத்தக்க தகுதியுடையவர்கள். பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும், பேதமற்று, அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. இது வள்ளலாரின் வாய்மொழி. பெண்களுக்கு உடல் உறுதி வேண்டும். இதற்கு யோகப் பயிற்சி, தேகப் பயிற்சி முதலியன வேண்டும். பெண்கல்வி, ஆண்கல்வி என்ற பிரிவினை யின்றிப் பொதுக்கல்வி பயிலவேண்டும். இருவரும் கூட்டுக்கல்வி பயில்வதே சிறிந்தது. இந்த முறையைப் பின்பற்றினால் ஆண்பெண் சமத்துவம் வளரும். சாதி, மத, வகுப்பு, வெறிகளும் ஒழியும், ஆண் பெண் அனைவரும் சன்மார்க்கர்களாய் இணைந்து வாழ்வர். விதவை மணம் விதவா விவாகம் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. வழிவழி யாகச் சில வகுப்பாரிடையில் இன்னும் நடந்து வருகிறது. நாகரிகம் என்று கருதிச் சில வகுப்பினர் இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். விதவா விவாகம் சாதிர விரோதம்; சமய விரோதம்; சாதி வழக்கத்திற்கு மாறானது என்று கருதியிருந்த வகுப் பினர்கள்கூட இன்று இதைச் செய்ய முன் வந்து விட்டனர். சாதாரண பகுத்தறிவுடைய எவரும் விதவா விவாகத்தைத் தடுக்க முன்வர மாட்டார்கள். ஆணும் பெண்ணும் சமமான வர்கள்; இருவருக்கும் சம உரிமை உண்டு; ஆற்றலிலும் அறிவிலும் இருவர்களும் ஒத்தவர்கள்தாம் என்பதை ஒப்புக்கொள்ளும் எவரும் விதவா விவாகத்தை மறுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும், வழக்கத்திலும் விதவா விவாகம் நடைபெற்றது. சாத்திரமும் சமயமும் இதைத் தடுக்கவில்லை. இதற்கு அதிக உதாரணம் தேவையில்லை. சைவ சமய ஆசாரியர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதமே போதும். தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலினால் என்று திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகின்றது. சங்கிலியார் விதவை. அவர்மீது காதல்கொண்டு மணந்தார் சுந்தரர். ஒரு பெண்ணை ஒருவனுக்கு மணம் பேசி முடித்து விட்டால் போதும்; திருமணம் முடிந்துவிட்ட தாகவே கொள்வது பண்டைய வழக்கம். சங்கிலியாருக்கு முதலில் மணம் பேசி முடிந்திருந்தது. அந்த மணமகன் மாண்டு விட்டான். சாதிரப்படி - வழக்கப்படி அவர்விதவை; மஞ்சள் நூல் இழந்திருந்திருந்தார். விதவைக் கோலத்திலிருந்தார். அவரை மணம் புரிந்தார் சுந்தரர். பெண்ணடிமை புகுந்தபின் விதவா விவாகம் குறைந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையில் மட்டும் அது நடை பெற்றது. தங்களை உயர்வகுப்பினராகக் கருதிக் கொண்டிருந்த வர்கள் இவ்வழக்கத்தைக் கைவிட்டு விட்டனர். விதவைகள் வாலிப விதவைகள் அனைவரும் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமா? இயற்கை உணர்ச்சி அவர்களை விட்டுவிடுமா? ஆகையால் அவர்களில் பலர் கள்ளத்தனமாக உள்ளத்தின் உணர்ச்சியை அனுபவித் தனர். இதனால் சிசுக் கொலைகளும், கர்ப்பச் சிதைவுகளும் அனாதைக் குழந்தைகளும் தோன்றத் தொடங்கின. உடன்கட்டை ஏறும் வழக்கம் பண்டைத் தமிழ் நாட்டிலும் உண்டு. உண்மையிலேயே காதலன் பிரிவுக்கு ஆற்றாமல் கணவனுடன் சேர்ந்து மடிவது உடன்கட்டை ஏறுதல். இது பெண்கள் தாமாகவே மனம் விரும்பிச் செய்யும் செயல். இது நாளடைவில் மாறி, உயிர்விடச் சம்மமதிக்காத பெண்களையும், பலவந்தமாகப் பிடித்துக், கணவனுடன் சேர்த்துவைத்துக் கொளுத்தத் தொடங்கினர். இந்தக் கொடுமை வடநாட்டில் அதிகமாக நடைபெற்றது. உடன்கட்டை ஏறும் வழக்கம் இம்மாதிரி உடன்கட்டை ஏற்றும் வழக்கமாக மாறியதற்குக் காரணம் விதவா விவாகம் கைவிடப்பட்டதுதான். உடன்கட்டை ஏற்றும் கொடுமையைச் சட்டத்தின்மூலம் ஒழித்தவர் காலஞ்சென்ற ராஜாராம் மோகன்ராய் என்பதை உலகம் அறியும். வைதீகக் குடும்பத்திலே பிறந்த அவர் சிறந்த சீர்திருத்தவாதியாக விளங்கினார். விதவா விவாகத்தை அவர் ஆதரித்தார். அவருக்குப் பின் பொதுவாகவே இந்தியா முழுவதும் விதவா விவாகத்திற்கு ஆதரவு தோன்றியது. நமது நாட்டில் சமூகச் சீர்திருத்தத் துறையில் உழைத்த பெரியார்கள் பலர் உள்ளனர். அவர்களில் விதவா விவாகத்தை அஞ்சாமல் ஆதரித்த அறிவாளிகள் ஒரு சிலரே. தமிழ்நாட்டில் ஜி. சுப்பிரமண்ய அய்யரே முதலில் விதவா விவாகத்தை ஆதரித்தார். இவர் பாலியத்தில் விதவையாய் போன தமது மகளுக்குப் பம்பாய்க் காங்கிர மகாநாட்டில் தேசத் தலைவர்கள் முன்னிலையில் மறுமணம் செய்வித்தார். இதன்மூலம் இவருக்கு ஏற்பட்ட தொல்லைகள் பல. அவர் சமூகத்தார் அவரை எதிர்த்தனர்; குறைகூறினர். சமூகத்திலிருந்து விலக்குவதாகப் பயமுறுத்தினர். ஒன்றுக்கும் அஞ்சாமல் உறுதி யாக நின்று விதவா விவாகத்தை ஆதரித்தார். இவர்தான் ஹிந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகளை முதன் முதலில் தொடங்கியவர். தெலுங்கு நாட்டில் வீரேசலிங்கம் பந்துலு விதவா விவாகத்தை ஆதரித்தார். பல விதவை மணங்களைச் செய்து வைத்தார். இன்றும் வீரேசலிங்கம் பந்துலு என்றால் சீர்திருத்த வாதிகளான தெலுங்கர்கள் தலைவணங்கி மரியாதை செய் கின்றனர். வங்காளத்தில் ஈவர சந்திர வித்தியாசாகரர் பெரிய சீர் திருத்தக்காரர். சிறந்த வடமொழி வல்லுநர். கல்வி இலாகாவில் உயர்தர உத்தியோகம் தாங்கியவர். இவர் விதவா விவாகத்தை ஆதரித்து உழைத்தார். பாஞ்சால மாகாணத்தில் லாலா கங்கா ராம் என்பவர் விதவா விவாகத்தை நாடெங்கும் பரப்புவதற்காகவே உயிர் வாழ்ந்தார். ஆயுள் முழுவதும் உழைத்தார். அவருடைய சொத்து முழுவதையும் இந்த இயக்கத்திற்காகவே கொடுத்தார். இவருடைய சொத்தின் உதவியினாலேயே பல மாகாணங்களில் விதவா விவாக விடுதிகள் நடைபெற்று வருகின்றன. மகாஷ்டிரத்தில் மகாதேவ கோவிந்த ரானடே இந்த இயக்கத்தில் ஈடுபட்டுழைத்தார். இவர் உயர்தர நீதிபதியாக இருந்தவர். காலஞ்சென்ற பெரியார்களான ராஜாராம் மோகன் ராய், ஜி. சுப்பிரமணிய அய்யர், வீரேசலிங்கம் பந்துலு, ஈவர சந்திர வித்தியாசாகரர், லாலா கங்காராம், மகாதேவ கோவிந்த ரானடே ஆகியவர்கள் சரித்திரப் பிரசித்தி பெற்று விட்டனர். இந்திய சரித்திரத்தில் இவர்கள் பெயர் அழுத்தமாகப் பதிக்கப் பெற்றுவிட்டன. ஏறக்குறைய இவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந் தவர்தான் வடலூர் வள்ளலார். இவரும் விதவா விவாகத்தை ஆதரித்துள்ளார். ஆனால், சீர்த்திருத்தவாதிகள் இவர் பெயரைக் குறிப்பிடுவதில்லை. காரணம் வள்ளலாரின் கருத்துக்களைச் சீர்திருத்தவாதிகள் அறியாதிருப்பதுதான். கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே! இது வடலூரார் வாக்கு. கைமையாவதை அதாவது விதவையாவதை ஒழித்து, மங்கலத்தைக் கொடுத்த இரக்கமே! என்று கூறுகிறார். கணவன் இறந்தபின் பெண்களுக்குத் தாலி வாங்கக் கூடாது என்று குறிப்பிடுகிறார். விதவைக் கோலம் செய்வதையே தடுக்கிறார் வள்ளலார். தமிழ்நாட்டில் தமிழர் மரபில் தோன்றிய, உயர்ந்த சீர் திருத்தக்காரராகிய வடலூராரின் இத்தகைய சிறந்த கருத்தைம நாடறியச் செய்வது உலகம் அறியச் செய்வது வள்ளலார் அன்பர்களின் கடமையல்லவா? மதுவிலக்கு மதுவைப்பற்றிக் கூறாத பண்டை இலக்கியங்கள் எதையும் காணமுடியாது. பண்டை நாட்களில் நாகரிகம் முற்றும் முதிர்ச்சி பெறாத காலத்தில் பெரும்பாலான மக்கள் மதுபானத்தைப் பாவம் என்று கருதியதில்லை. உலகின்பம் நுகர வசதியுள்ள எல்லா மக்களும் மதுவருந்தி வந்தனர். களிப்பு என்னும் சொல் கள்ளிலிருந்து பிறந்தது. கள் இல்லாவிட்டால் களிப்பு எனும் சொல் இலக்கியங்களை யெல்லாம் ஆட்கொண்டிருப்பதைப் பார்த்தாலே, கள்ளரக்கன் தமிழர் சமூகத்தை எவ்வளவுதூரம் அடக்கி ஆண்டான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். புத்தர் சமணர் காலத்திற்குப் பிறகுதான் கள்ளுண்டல் பாவம் என்ற நிலைமை ஏற்பட்டது. புத்தர் சமணர் காலத்திற்கு முன்புள்ள நம்நாட்டு இலக்கியங்களில் மதுவருந்துதல் பாவம், சமூகத் துரோகம். இழிந்த குணம் என்று கூறப்படவே இல்லை. இதற்கு மாறாக, சுப, அசுப காலங்களில் மதுவருந்தி மகிழ்ந்த தாகவே காணப்படுகின்றது. தமிழ் இலக்கிய ஆசிரியர்களில் முதல் முதலில் மது விலக்குப் பிரசாரத்தைத் தொடங்கியவர் திருவள்ளுவர் தான். திருக்குறளுக்கு முந்திய எந்த நூலிலும் மதுபானம் கண்டிக்கப் படவேயில்லை. கட்குடியன் கட்குடிக்காமல், நல்ல புத்தித் தெளிவோடு இருக்கும் சமயத்தில் அவனுக்குக் குடித்திருப்பவனைக் காட்ட வேண்டும். அப்பொழுது அவன் மனதில் நாம் குடித்திருக்கும் போதும் இப்படித்தான் பொதுமக்களால் அவமானப்படுத்தப் படுவோம் என்ற உண்மை தோன்றும் இதன்மூலம் அவன் குடிக்காமல் திருந்தக்கூடும். கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு என்று வள்ளுவர் கூறுகிறார். இந்தியாவில் மதுவிலக்குப் பிரச்சாரம் புத்த சமண மதத்தினரால்தான் முதல்முதல் தொடங்கப்பட்டது. பிறகு இந்து மதத்தினரும், இந்து மதத்தைச் சேர்ந்த பல பிரிவினரும் மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்றினர். இதன் பிறகு முலிம் மதமும் மதுவிலக்கை முதன்மையாகக் கொண்டது. மதுபான மிகுதியால் நாட்டின் சமூக வாழ்க்கை பாழ் பட்டது. சூதாட்டம், விபசாரம், பொய்யுரைத்தல் முதலியவைகள் மதுவின் அரிய புத்திர பௌத்திரிகள். ஆதலால் அறிஞர்களும் சான்றோர்களும் குடியர்களைக் கண்டாலே அருவருக்கத் தொடங்கினர். இந்த நிலையை வள்ளலார் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். கள் உணும் கொடியேன்! கள்ளுண்பவர்கள் கொடுமையானவர்கள். அவர்கள் கள்ளுண்டி ருக்கும்போது எதையும் செய்யத் துணிவார்கள். களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரிதுகண்டாய் கள்ளுண்டு மயங்கியிருப்பவரைக் கண்டு நான் பயந்த பயத்திற்கு அளவேயில்லை. அந்தப் பயம் கடலைக்காட்டினும் எல்லை காண முடியாதது. கொடுமை செய்வாரைக் கண்டு யார்தான் பயப்பட மாட்டார்கள் ? கள்ளருந்துதல் சூதாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே விள்ளுதல் புரிவார். கொடியவர்கள், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள், கள்ளுண் பவர்கள்! அவர்கள் வேசியர்கள் வீட்டு வாசல்கள் தோறும் புகுந்து மயங்கி நிற்பார்கள் ; பொய் பேசுவார்கள் ; இவைகளின் இனங்களும் அவர்களிடம் குடிகொள்ளும். கள், சூது, காமம், பொய் இவைகள் எல்லாம் ஒரு வயிற்றுப் பிள்ளைகள்; தோழர்கள். கள்ளுண்போர் மதுபானம் செய்வார் சூதாடுதற்கும் துணிவார்கள். கள்ளும் சூதும் உள்ளவர்கள் காமவெறியர்களாவதிலும் வியப்பில்லை. கள், சூது, காமம் மூன்றும் உள்ளவர்கள். தங்கள் செல்வத்தை இழந்து விடுவார்கள். இவர்களுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் பேதாது. நித்திய தரித்திரர்களாக நிலைகலங்கித் திரிவார்கள். ஆதலால் பொய் சொல்லப் பின்வாங்க மாட்டார்கள். பொய் சொல்லிக் கடன் வாங்குவார்கள். கடனைக் கொடுக்க முடியாமல் திண்டாடு வார்கள். மதுபானத்தின் கொடுமையை வடலூரார் நேரில் கண்டறிந்தவர். கட்குடியார்கள் செய்யும் அடாத செயல்களை யும், அவர்களுடைய வாழ்வின் அலங்ககோலத்தையும் கண்ணால் கண்டறிந்தவர். ஆதலால்தான் கள்ளுண்பதால் உண்டாகும் கொடுமையை தீமையை உள்ளது உள்ளபடி உரைத்திருக் கின்றார். மதுபானம் செய்தது, தீமைகளுக்கெல்லாம் அடிகோலும் என்பதே வடலூரார் கருத்து. சமுதாயம் மேன்மை பெற மக்களி டையே சன்மார்க்கம் வளர்ந்தோங்க மதுவிலக்கு அவசியமாகும் இதுவே வடலூரார் கருத்து. அடித்துப் படிப்பித்தல் இளங்கன்று பயமறியாது : இது குழந்தைகளுக்கும் பொருந்தும். பாலகர்களுக்குப் பயம் தெரியாது. மாசு மறுவற்றது அவர்கள் உள்ளம். அத்தகைய குற்றமற்ற உள்ளத்திலே குறைகள் நிரம்பும்படி செய்பவர்கள் அவர்களுடன் பழகு கிறவர்கள் தாம். முதலில் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்க்கும் அன்னையர் குழந்தைகளைக் குறைபாடின்றி வளர்க்க வேண்டும். கடுஞ்சொல் கூறாமல், கனிந்து பேசி, அவர்களைக் கட்டுப் பாட்டுக்குள் அடங்கி நடக்கும்படி செய்ய வேண்டும். இத்தகைய பொறுமையும், அன்பும் தாய்மார்களுக்கு அவசியம். இரண்டாவது, தந்தையர் குழந்தையின் முன்னேற்றத் திற்குப் பொறுப்பாளிகள். முரட்டுத்தனமும் பிடிவாதமும் குழந்தைகளிடம் ஏற்படுவது இயற்கை. அவைகளை வளர விடுதல் நன்றன்று; வளரவிட்டால் நாளடைவில் அச்சிறுவர்கள் சிறுமிகள் எதற்கொடுத்தாலும் சண்டித்தனம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஆதலின், பக்குவமாகப் பாலர்களைச் சமாதானப்படுத்துங் குணம் தந்தைமார்களுக்கு அவசியம். குழந்தைகளைச் சமாதானப்படுத்திச் சாந்தமுடன் நடத்தத் தெரியாதவர்களே அவர்களை அடிப்பார்கள்; கடிந்து கொள்ளு வார்கள். பாவம் ! பச்சிளம் பாலகர்களுக்கு என்ன தெரியும்? அவர்களை அடிப்பதும், பயமுறுத்துவதும் அவர்களுடைய அறிவை மழுக்குவதாகும்; ஆற்றலைச் சிதைப்ப தாகும். இவ் வுண்மையைப் பெற்றோர்கள் அறிதல் நன்று. மூன்றாவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே குழந்தை களின் எதிர்கால வாழ்வுக்குப் பொறுப்பாளிகள், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து; தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். இவைகள் நாம் கேட்டிருக்கும் பழமொழிகள். அறிவு வளர்ச்சி, உடல் வலிமை, நல்லொழுக்கம், ஒற்றுமை உணர்ச்சி பரந்த மனப்பான்மை, அனைவரிடத்திலும் அன்புடன் பழகுதல் கல்வி வளர்ச்சி இவைகள் எல்லா வற்றுக்கும் பொறுப்பாளிகள் ஆரம்பக் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தாம். இளங் குழந்தைகளுக்கு மத வித்தியாசங்களைக் கற்பிப்பது பெருந்தவறு. அந்த மதம் உயர்ந்தது; இந்த மதம் உயர்ந்தது; முலிம்கள் இந்துக் கோயில்களை இடித்தார்கள் விக்கிரகங் களை உடைத்தார்கள்; இந்துக்கள் முலிம்களை வெறுத்தார் கள்; அவர்களுடைய மசூதிகளை இடித்தார்கள். கிறிதுவர்கள் நம்முடைய மதத்திற்கு மாறானவர்கள்; புத்தர்கள், சமணர்கள் இந்து மதத்தை அழிக்க முயன்றார்கள்; வைணவர்களும் சைவர்களும் புத்த மதத்தையும், சமண மதத்தையும் அழித்து விட்டார்கள் என்றெல்லாம் சிறுவர்களுக்குப் போதிப்ப தனால் அவர்கள் உள்ளத்தில் மதவெறுப்பு வேரூன்றுகின்றது. எல்லாவற்றிலும் குழந்தைகளைக் கோலேடுத்து அடிப்பது கொடுமை! பெருங்கொடுமை! ஒரு சிறுவன் குறும்புத்தனம் செய்தால் அவன் செய்த குறும்பை அவன் உணரும்படி செய்தல் வேண்டும். இதுவே மீண்டும் அவன் அக்குற்றத்தைச் செய்யாம லிருப்பதற்கு வழி. கற்றுக் கொடுத்த பாடத்தை ஒரு சிறுவனுக்குத் திருப்பிச் சொல்லத் தெரியாவிட்டால், மீண்டும் அவன் உள்ளத்தில் உணரும் வகையில் சொல்லித்தர வேண்டும். பன்முறையும் சொல்லித்தர வேண்டும். இதுவே ஆசிரியிர் கடமை. இதை விட்டுவிட்டுக் குறும்புத்தனம் செய்ததற்காக இளைஞர்களை அடிப்பது அறிவீனம்; பாடம் தெரியவில்லை என்பதற்காகப் பாலர்களை அடிப்பது பாதகச் செயல். இளம்பிள்ளைகளுக்கு அடித்துக் கல்வி புகட்டுவது அறியாமை; கொடுமை; பொறுத்துக் கொள்ள முடியாதது; என்பதை வள்ளலார் நன்றாக எடுத்துக் காட்டியுள்ளார். தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால், பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில், சகிப்பிலா மையினால் அடித்தனன்; அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம் வகுப்புற நினது திருவுளம் அறியும். கூட்டமாகக் கூடிச் சிறுவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் ஏற்பட்ட கோபத்தினால், பொறுமையென்னும் குணம் இல்லாமையால் அவர்களை அடித்துவிட்டேன். அப்படி அடித்த சமயத்தில் என் மனம் கலங்கிய கலக்கத்தை உன்னுடைய திருவுள்ளந்தான் அறியும்: என்று கூறுகிறார். சகிப்புத்தன்மை உடையவர்கள் தான் ஆசிரியத் தொழி லுக்குத் தகுதியானவர்கள்; அவர்களாலேயே சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இளம்பிள்ளைகளைப் பயமுறுத்தி அடித்துக் கல்வி கற்பிக்கும் வழக்கம், வளர்கின்ற பயிரின் தலையைக் கிள்ளுவதேயாகும். சிறுவர்களை அடிப்பது வெறுக்கத்தக்கது; அடித்துப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது. இதை வடலூர் அடிகள் விரும்பவே இல்லை. இதை மற்றொரு நிகழ்ச்சியாலும் காணலாம். புராணிகர் சுந்தரம் பிள்ளை என்பவர் வடலூர் அடிகளின் நண்பர்; அவர் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும்போது, அவர்கள் செய்யும் தவறைத் திருத்தும் பொறுமையற்றவர்; அவர்களை அடிப்பார். அச்செய்கையைக் குறித்து அவருக்கு இராமலிங்கர், ஒர செய்யுளின் மூலம் அறிவுரை கூறினார். படிப்பதுநன்று எனத்தெரிந்த பாங்குடையாய்! மன்றுள் வெளிப் பரமன் அன்பே தடிப்பதுநன்று எனத்தெரிந்த சதிர் உடையாய்! அறம்நவின்ற தவத்தாய்! வீணில் துடிப்பதுஇலாத் தூயமனச் சுந்தரப்பேர் உடையாய்! என் தோழ! கேள் நீ! அடிப்பதும், அச் சிறுவர்களை அடிப்பதும், நன்று அல; என்மேல் ஆணை! ஆணை! இதுவே அச் செய்யுளாகும். எல்லோரும் படிப்பது நல்லது என்று உணர்ந்த மனப்பாங்கு உள்ளவனே! சபையில் வெளிப் படையாக நடமாடும் பரமன் மீதுள்ள அன்பு உள்ளத்தில் உரம் பெறுவதே நன்று என்ற அறிந்த ஆற்றலுடையவனே! அறநூல் களில் சொல்லப்பட்ட தவத்தையுடையவனே! வீணாக ஆத்திரம் கொள்ளாத தூயமனமுள்ளவனே! சுந்தரம் என்னும் பெயர் உள்ளவனே ! என் தோழனே! தயவுசெய்து நான் சொல்வதைக் கேள் ! உன்னிடம் கல்வி பயிலும் சிறுவர்களை அடிப்பதும் அடிக்கடி அவர்களை அடிப்பதும் நன்மை அல்ல, என்மேல் பலமுறை ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்; அடிப்பதை அடியோடு நிறுத்திவிடு. இவ்வாறு தன் தோழருக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருப்பது படிப்போர் உள்ளத்தை உருக்கும். படிப்புச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் வடலூரார் கருத்தைப் பின் பற்றுவது நலம். ஜீவகாருண்யம் நமது நாட்டிலே ஜீவகாருண்யத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பேசாத பெரியோர்கள் எவருமேயில்லை. மதத்தை மாற்றி அமைக்க முயன்றவர்கள் பலர்: புதிய கொள்கைகளை ஜன சமூகத்திலே புகுந்த முயன்றவர்கள் பலர். இவர்கள் நோக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். மக்கள் அனைவரும் துன்பம் இன்றி இவ்வுலகத்தில் இன்பத்துடன் வாழவேண்டும் என்பது தான் இந்த நோக்கத்திற்கு மாறுபட்ட பெரியோர்கள் எவரும் இல்லை. ஆனால் இன்று ஜீவகாருண்யம் பேசுவோர்களில் பலர் உண்மையான ஜீவகாருண்யம் இன்னதென்று உணராமல் இருக்கிறார்கள். ஜீவகாருண்யத்தின் சிறந்த பகுதியை மறந்து விடுகின்றனர். மனித சமூகத்தைப்பற்றி மனதில் கொள்ளாமல் பெருமைக்காக ஜீவகாருண்யம் பேசுவோர் பலர். மத பக்தியிலே தலைசிறந்து நிற்போர்களில் பலர் எறும்பு களிடம் ஜீவகாருண்யம் காட்டுகின்றனர்; காக்கைகளிடம் கருணை காடுகின்றனர்; ஆடு கோழிகளிடம் அனுதாபம் காட்டு கின்றனர்; மாடு, குதிரைகளிடம் மனவிரக்கம் காட்டுகின்றனர். நோயினால் வருந்தும் மாடு ஆடுகளிடம் கருணை காட்டும் பலர். நோய்த்துயர் தாங்கமாட்டாமல், ஆண்டவனே! ஆண்டவனே! என்று அலறும் ஏழை மக்களிடம் இரக்கம் காட்டவில்லை. எறும்புக்கும் காக்கைக்கும் இரைபோடும் கருணையாளர்களிலே பலர், நாள்தோறும் உழைத்து உழைத்து ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் வறுமையால் வாடிச்சாகும் ஏழைகளிடம் எள்ளளவும் இரக்கம் காட்டுவ தில்லை. முரட்டு ஜீவகாருண்யவாதிகளிலே சிலர் மாமிசம் சாப்பிடுவது ஜீவஹிம்சை, மாமிசம் சாப்பிடாமை ஜீவகாருண்யம் என்ற அளவோடு நின்று விடுகின்றனர். மாமிசம் உண்ணாமை ஜீவகாருண்யத்தின் ஒரு பகுதி என்பதில் ஏதும் தவறில்லை. அது ஒன்றேதான் ஜீவகாருண்யம் என்று வாதிடுவதுதான் தவறு. ஜீவகாருண்யத்திலே தலைசிறந்து நின்றவர் இராமலிங்கர் அவர் தமது பாடல்களில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே சிறப்பித்துப் பாடியிருக்கிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற ஒரு தனி நூலும் எழுதியிருக்கிறார். அவற்றை ஊன்றிப் படிப் போர் வள்ளலாரின் உள்ளக் கருத்தை உணரலாம். மக்களிடம் உயிர்க்கருணை யில்லாவிட்டால், அவர் களுடைய அறிவு வளர்ச்சியடையாது; அன்பு வளர்ச்சியடை யாது; அவர்கள் ஒன்றுபட்டு வாழமாட்டார்கள். இதுவே வள்ளலாரின் கருத்து. இக்கருத்தையே அவர் தமது பாடல்களில் வற்புறுத்துகிறார். ஜீவகாருண்ய ஒழுக்கத்திலும் எடுத்துக் காட்டுகிறார். ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். ஜீவகாருண்யம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும். இது வள்ளலாரின் வாக்கு. மக்களிடம் ஜீவகாருண்யம் இருந்தால்தான் அவர்கள் இவ்வுலகின் இன்பங்களை யெல்லாம் பெறுவார்கள். நாகரிகம் பெற்ற சிறந்த சமூகத்தினராய் வாழ் வார்கள் ஜீவகாருண்யம் அற்ற மனிதர்களின் வாழ்க்கைக்கும் மிருகங்களின் வாழ்க்கைக்கும் மாற்றமிருக்க முடியாது; விலங்குகளின் வாழ்வும், ஜீவகாருண்ய மற்ற மக்களின் வாழ்வும் ஒன்றுதான். இக்கருத்தை வள்ளலார் வலியுறுத்திக் கூறுகிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் சிறிதும் இல்லாத புலி, சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவே இல்லை. அதுபோல் ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் வழங்கும் இடத்திலும் இகலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென்று அறியவேண்டும். இது வள்ளலார் வாய்மொழி. இன்னும் அவர் ஜீவகாருண் யத்தைப்பற்றி விளக்கமாகக் கூறியிருப்பதைக் கவனியுங்கள்: செல்வம் உடையவர்கள் நிறைய உண்ணுகிறார்கள். அளவுக்குமேல் உண்ணுகிறார்கள். வறியவர்கள் மிகுந்த பசியினால் உடல் வருந்துகிறார்கள்; மனம் வேகின்றார்கள்; நெஞ்சங் கொதிக்கின்றார்கள்; இதைப்பற்றி நினைக்கவே என்னால் முடியவில்லை. இதை நினைக்கும்தோறும் யாரையும் இகழ மனம் வரவில்லை. என் மனம் எரிகின்றது. என் உடம்பும் எரிகின்றது. ஐயோ! நான் இக்கொடுமைக்கு என்ன தான் செய்வேன் ! என்று இவ்வாறு மனம் கசிந்து பாடுகின்றார். உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியர் உறுபசி யுழந்துவெந் துயரால் வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்றிதை நினைந்திடுந் தோறும் எள்ளலேன், உள்ளம் எரிகின்றது, உடம்பும் எரிகின்றது என்செய்வேன் அந்தோ! கொள்ளலேன் உணவும்; தரிக்கிலேன் இந்தக் குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்! இது வள்ளலார் பாடல். இக்கருத்தே வள்ளலாருடைய ஜீவகாருண்யத்தைப் பற்றிய சிறந்த கருத்து. வள்ளலார் வலியுறுத்தும் முதன்மையான ஜீவகாருண்யம், வறியோர்க்கு உதவி செய்தல், பசிப்பிணியால் வருந்தும் ஏழை மக்களின் பரம்பரையை மாற்றுதல். மக்களிடம் பேதம் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றெனக் கொள்ளல் இவை களேயாகும். சாவாத வாழ்வு இவ்வுலகில் என்றும் அழியாமல் வாழ்வதே சாவற்ற வாழ்வு. இதைச் சிரஞ்சீவி என்றும் கூறுவர். முதியோர் இளைஞர் களுக்கு வாழ்த்துக் கூறும்போது என்றும் சிரஞ்சீவியாக இனிது வாழ்க! என்று கூறுவர். சித்தர்கள் என்பவர்கள் தங்கள் உடலை அப்படியே வைத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றவர்கள் என்று நம்புகின்றனர் உடலை அழியாமல் பாதுகாத்துக்கொள்ளும் வித்தையில் சித்தி பெற்றவர்களைச் சித்தர்கள் இன்னும் காடுகளிலும் மலை களிலும் வாழ்வதாக நம்புகின்றனர். இத்தகைய நிலையை அடையவேண்டும் என்று முயல்பவர்கள் சிலர் உண்டு. அனுமான், விபீஷணன் போன்றவர்கள் சிரஞ்சீவிகள்; அவர்கள் இறக்கவில்லை; இன்னும் உயிர் வாழ்கின்றனர் என்று நம் நாட்டு இலக்கியங்கள் கூறுகின்றன. இதை உண்மையென்று நம்பியிருப்போர் பலர். மக்கள் சாகாமல் வாழ முடியுமா? என்றால் வாழ முடியும் என்பதே நாம் கூறும் விடை. எப்படிச் சாகாமல் வாழ முடியும்? சாதாரண மக்கள் நினைப்பதுபோல் இந்த உடலோடு சாகாமல் வாழ முடியும் என்று நாம் சொல்லவில்லை. தன்னுடைய உடல் அழிந்தாலும் தன் பெயர் இவ்வுலகில் நிலைத்திருப்பதே சாகாத வரம். பல வீரர்களைப்பற்றி மக்கள் பேசுகின்றனர்; கொண்டாடுகின்றனர். பல புலவர்களைப் பற்றி. பல அரசியல் வாதிகளைப் பற்றி, பல சீர்திருத்தக்காரர்களைப் பற்றி, பல வள்ளல்களைப் பற்றி. பல அரசியல் வாதிகளைப் பற்றி, பல சீர்திருத்தக்காரர்களைப்பற்றி, பல வள்ளல்களைப் பற்றி இன்னும் மக்கள் கதைகள் கூறுகின்றனர்; பாராட்டு கின்றனர். இவர்களில் பலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே மறைந்தவர்கள். ஆனால் அவர்கள் புகழ் மறையவில்லை; பெயர் மறையவில்லை. இவர்களை என்னென்று கூறுவது? இவர்கள் தான் சாகா வரம் பெற்றவர்கள்; சிரஞ்சீவிகள் என்று சொல்ல வேண்டும். சித்தர்கள் என்பதற்குப் பொருள், அறிவுடையவர்கள் என்பதுதான். சித்தம் என்பது அறிவு. இதிலிருந்துதான் சிந்தை தோன்றியது; சிந்தையிலிருந்து சிந்தனை அல்லது ஆராய்ச்சி பிறக்கும். ஆராய்ச்சியின் மூலம் உண்மைகள் வெளிப்படும். ஆகவே, சிந்தனா சக்தியுடையவர்கள் சித்தர்கள்; சிந்தனா சக்தியின் மூலம் சிறந்த ஆராய்ச்சி வல்லமையைப் பெற்றிருப் பவர்கள் சித்தர்கள்; ஆராய்ச்சி வல்லமையின் மூலம் உண்மை களைக் கண்டறிந்து, அவைகளை உலக முன்னேற்றத்திற்கு உதவும்படி செய்பவர்கள் சித்தர்கள். இத்தகைய சித்தர்கள்தான் உடலழிந்தாலும், உலக மக்களின் உள்ளத்திலே என்றும் உயிர் வாழ்பவர்கள். அந்தக் காலத்தில தமிழ்நாட்டில் பதினெட்டுச் சித்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒற்றுமைக்காக உழைத்தவர்கள்; மக்கள் சமுதாயத்தில் குடிகொண்டிருக்கும் மூட நம்பிக்கை களைப் போக்க முயன்றார்கள்; மக்களை ஒன்றுபடுத்த முயன்றார்கள். அவர்கள் பெரிய சமுதாயப் புரட்சிக்காரர்கள். அவர்கள் பெயரால் இன்று வழங்கும் நூல்களிலே அவர் களுடைய கருத்துக்களைக் காணலாம். நமது முதற்பெரும் புலவர் திருவள்ளுவரும் புகழுடன் வாழ்வதுதான் மனித வாழ்க்கை என்று கூறியுள்ளார். தோன்றில் புகழொடு தோன்றுக அஃதுஇலார் தோன்றலின் தோன்றாமை நன்று. மனிதனாகப் பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; இன்றேல் பிறப்பதைவிடப் பிறக்காமல் இருத்தலே நல்லது என்பதே திருவள்ளுவர் கூற்று. இதுதான் சாகா வரம் என்பது, நமது வள்ளலார் இராமலிங்கர் இத்தகைய சாகா வரம் பெற்றதாகக் கூறுகிறார். அவர் பெற்ற சாகா வரம் புகழுடம்பு. உள்ளம் தளிர்த்திடச் சாகா வரம்கொடுத்து, என்றும், தடைபடாச் சக்திகள் எல்லாம் அளித்தனை. எனது மனம் மகிழ்ச்சியடையும்படி, என் பெயர் என்றும் அழியாதிருககும்படியான வரத்தைக் கொடுத்தாய் ! என்றும் அழியாமல் நிற்கும்படியான அறிவுடைய காரியங்களைச் செய்யும் ஆற்றலையும் அளித்தாய் ! என் மார்க்கம் எனக்களித்து என்னையும் மேலேற்றி இறவாத பெருவரம் ஈந்தமெய்ப் பொருளே ! நான் எண்ணிய உண்மைநெறியில் செல்லும்படியான சக்தியை எனக்களித்தாய்! என்னையும் உயர்ந்தவனாக்கினாய்! நான் என்றும் இறவாமல் புகழுடன் வாழும்படியான வரத்தையும் எனக்களித்தாய்! கருணைநெறி உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன் , எல்லா மக்களையும் ஒன்றெனக் கருதி, அவர்களையெல்லாம் ஒரே சமுதாயமாகச் செய்யும் ஜீவகாருண்ய மார்க்கத்தை அடைந்தேன். இதனால் எக்காலமும் சாகாமல் மேலும் மேலும் என் பெயர் உலக முழுவதும் பரவும்படியான புகழ் உடம்பைப் பெற்றுவிட்டேன்! சித்தாடு கின்றனன்; சாகா வரமும் சிறக்கப் பெற்றேன். இத்தாரணியில் எனக்கு இணையார் என்ற இயம்புவனே என் அறிவால் ஆராய்ந்து கண்ட உண்மையைப் பின்பற்றி நடக்கின்றேன். இதனால் என்றும் அழியாத புகழ்பெற்று வாழும் நிலையை அடைந்துவிட்டேன். இந்த உலகில் இனி எனக்கு யார்தான் இணையாவார்கள் ? ஒருவரையும் எனக்கிணையாகச் சொல்ல முடியாது !. வள்ளலார் பெற்ற சாகா வரத்தைப்பற்றி அவரே கூறிய வைகள் இவை. ஆகவே சாகா வரம் என்பது, மக்களுக்கான நன்மை களைச் செய்தல்; அவர்கள் மனத்திலே குடிபுகுதல்; பலரும் தன்னைப்பற்றி, தன் கொள்கைகளைப் பற்றிப் பேசும்படி கொண்டாடும்படி செய்தல். இவ்வாறு செய்கின்றவர்கள் தாம் சாகா வரம்பெற்றவர்கள் ; புகழுடம்பு பெற்றவர்கள். செத்தார் எழுதல் வள்ளலார் தமது பாடல்களில், துஞ்சிய மாந்தரை எழுப்புக, செத்தார் எழுந்தனர் என்றெல்லாம் பாடியுள்ளார். இவைகளுக்கு மாண்ட மனிதர்கள் மீண்டும் எழுவர் என்று பொருள் கொள்கின்றனர். செத்தவரைப் பிழைக்க வைக்கலாம் என்று நம்புகின்றனர் பலர். இந் நம்பிக்கை மூடநம்பிக்கை. வள்ளலார் கருத்து இது அன்று; இறந்த மனிதரைப் பிழைக்க வைக்க முடியும் என்று அவர் கூறவில்லை. அதாவது, அழிந்த உடலை மீண்டும் எழுப்பலாம் என்று அவர் கூறவில்லை. அவர் கூறிய செத்தார் எழுந்தனர் என்பதன் கருத்து வேறு. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்பது நமது இளமைப் பாடம் அல்லவா ? துருப்பிடித்து மண்ணாகிப் போன இரும்புக் கம்பி மீண்டும் கம்பியாவதில்லை. உடைந்து போன மண்பாண்டம் மண்ணோடு கலக்க வேண்டியதுதான். உலகப் பொருள்களால் ஆகிய உடல் சிதைந்தவுடன் உலகப் பொருள்களோடு கலக்கவேண்டியது தான். உடல் ஒரு இயந்திரம் போன்றது. இயந்திரத்தில் முக்கிய மல்லாத இரண்டொரு மறையாணிகள் கழன்று விட்டாலும், தளர்ந்துவிட்டாலும் இயந்திரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். இயந்திரத்தின் சில பாகங்களுக்குப் பழுது நேர்ந்தால் அதற்கு ஒட்டுப்போட்டு ஒட்டுகிறோம். இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டால் அதை அகற்றிவிட்டுப் புதிய பகுதியைச் சேர்த்து ஒட்டுகின்றோம். இதைப்போல இன்று உடம்பிலும் பழுதடைந்த உறுப்பை அகற்றிவிட்டுப் புதிய உறுப்பைச் சேர்க்கும் வித்தை வளர்ந்து வருகின்றது. கண் பழுதடைந்தால் வேறு கண் வைக்கின்றனர். பல் ழுதடைந்தால் வேறு பல்; இருதயம் பழுதானல் வேறு இருதயம் வைத்து உடம்பை இயக்க முயற்சிக்கின்றனர். ஆனால் ஒரு இயந்திரத்தின் எல்லா உறுப்புக்களுமே நெடு நாள் ஓடித் தேய்ந்துவிட்டால பிறகு அதை ஒன்றும் செய்ய முடியாது. இதைப்போலவே நமது உடலும், எவ்வளவு பாதுகாத்து வந்தாலும் நீண்டநாளாகிவிட்டால் தேய்ந்து தளர்ந்து போய் விடுகின்றது அதன் பிறகு ஓட்டம் நின்றுவிடுகின்றது. இத்தகைய நிலையில் ஏற்படும் சாவுதான் இயற்கைகச் சாவு. இயற்கைச் சாவு எய்தியவரை மீண்டும் பிழைக்க வைப்பது என்பது இயலாத காரியம். இனி வள்ளலார் குறிப்பிடும் செத்தாரைக் கவனிப்போம். மக்களாகப் பிறந்தும் ஒரு சுகத்தையும் காணாமல் இயந்திரம் போல் உழைத்து ஒடுங்கிக் கிடப்பவர்கள் செத்தவர்கள்; உலகப் போக்கை உணரும் அறிவின்றி, மாடுகள் போல் உழைத்துக் கிடப்பவர்கள் செத்தவர்கள்; நன்மையிது தீமையிது. நம்மை முன்னேறச் செய்யும் வழியிது, அடிமைப்படுத்தும் வழியிது என்று அறியாமல் மூடத்தனத்தில் மூழ்கியிருப்பவர்கள் செத் தவர்கள். இத்தகைய செயலற்ற மக்களையே செத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார். துஞ்சிய மாந்தரை எழுப்புக! நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக! இறந்த மக்களை அல்லது தூங்கிக் கிடக்கும் மக்களை எழுப்புங்கள், எல்லா நன்மைகளும் நிறைந்த உண்மை வழியில் செல்லும்படி செய்யுங்கள். செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது. பிணம்போல் செத்துக் கிடந்தவர்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் முயற்சியால் குற்றமற்ற உண்மை நெறி பரவி விட்டது. இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினார். இன்பத்தை அடையும் மார்க்கத்தைக் கண்டு, அதைப்பின் பற்றி இன்புறுகின்றமையால் உலகமெல்லாம் சிறந்து காணப்படு கின்றன; இதுவரையில் துன்பத்தினால் செத்துக் கிடந்த மக்கள் இன்று துன்பமின்றி மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர். மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார் திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம். மூடத்தனத்திலே மூழ்கிக் கிடந்த மக்கள் இன்று அறிவு பெற்று வாழ்கின்றார்; கோழைத்தனத்தால் செத்துக் கிடந்தவர்கள் ஒவ்வொரு நாளும் திடம் பெற்றுத் தமது உரிமைக்காகப் போராடப் புறப்படுகின்றனர். புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போயொழிக! நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில், செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் ஒத்தாராய் வாழ்க உவந்து. கொடுஞ் செயல்கள், கெட்ட நடத்தைகள் எல்லாம் கடலில் வீழ்ந்து ஒழியட்டும். மக்களெல்லோரும் இன்புறுதற் கான நல்ல செயல்களே, நடத்தைகளே உலகில் உயர்வுபெற்று விளங்கட்டும். இல்லற வாழ்க்கைகயில் இன்பமின்றிச் செத்துக் கிடந்தவர்கள் எல்லோரும் மீண்டும் ஊக்கத்தோடு எழுந்து எல்லா மக்களோடும் ஒன்றுபட்டு ஒரு மனம் உடையவர்களாய் மகிழ்ந்து வாழ்க! மேலே காட்டிய வள்ளலார் வாக்கை நோக்குவார்க்குச் செத்தார் யார்? என்பது புலப்படும். அவர் பிழைப்பது எப்படி யென்பதும் விளங்கும். உண்மை நெறியை உணராதவர் செத்தார்! துன்பத்தில் வாழ்பவர் செத்தார்! மூடத்தில் வாழ்பவர் செத்தார்! கோழைகள் செத்தார்! இல்லற இன்பம்பெறாதவர் செத்தார்! இவை களையே மேற்கண்ட பாடல்களில் கூறியுள்ளார். பிள்ளை விளையாட்டு குழந்தைகள் சிறுவர்கள் சேர்ந்து விளையாடுவதைப் பிள்ளை விளையாட்டு என்பர். விளையாடுவதிலே கருத் தொன்றும் இல்லை; பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக் காகவுமே அவர்கள் பலவகையான விளையாட்டுக்களை விளை யாடுவார்கள். ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு சிறுபிள்ளைகளிடம் இல்லை. தாம்பார்த்த வற்றை, தமக்கு எளிதாகச் செய்யகூடியவற்றை, அவை தப்போ சரியோ செய்து களிப்பார்கள்; மகிழ்வார்கள். விளையாடுவார்கள். இது குழந்தைகளின் பண்பு. இவ்வுலகிலே இன்று மக்களைச் சுரண்டுவதற்கு உதவு கின்ற சமயங்களைப் போற்றுவது சிறுபிள்ளைத்தனம்! சமயங் களின் பெயரால் நிலவுகின்ற கலைகளைக் கொண்டாடுவது சிறுபிள்ளை விளையாட்டு! சமயக் கலைகள் காட்டும் நிலை களைக் கொண்டாடுவதும் சிறுபிள்ளை விளையாட்டு! அச் சமயக் கலைகளின் காட்சிகளும் பிள்ளை விளையாட்டு! அச் சமயங்களாலும், கலை களாலும் கூறப்படும் பிள்ளை விளை யாட்டு! அச் சமயங்களாலும், கலைகளாலும் கூறப்படும் கடவுள் களை நம்புவதும் கொண்டாடுவதும் பிள்ளை விளையாட்டு ! இவற்றை நம்பவேண்டாம் என்று கூறுகின்றார் இராமலிங்க அடிகள். அறிவுள்ளவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமயங் களையும், அந்த சமயக் கலைகளையும். அக் கலைகள் கூறும் பல திறப்பட்ட தெய்வங்களையும் கட்டிக்கொண்டு அழமாட்டார் கள். பகுத்தறிவற்ற சிறுவர்கள்தாம் அவற்றை நம்பித்திரிவார்கள். பகுத்தறிவுள்ளவர்கள் சமரச சன்மார்க்கத்தையே விரும்பு வார்கள். இதுதான் வடலூர் அடிகளாரின் கருத்து. கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் கூட்டமும், அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும், கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளைவிளையாட்டென நன்கு அறிவித்திங்கு எனையே பிள்ளையெனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே! தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் தனிநடஞ்செய் அரசே! என் சாற்றும் அணிந் தருளே! இப்பாடல் மக்களின் மனத்திலே பகுத்தறிவுணர்ச்சியை ஊட்டும் பாடல். இவ்வுலகிலே இன்று நிலவும் பல சமயங்களும் உண்மையை விளக்குவன அல்ல. அவை மக்களைக் கொள்ளை யடிக்கும் தொழிலோடு கூடியவை. மக்களுடைய அறிவையும், செல்வத்தையும் சுரண்டுவதற்கே அவை உலவுகின்றன. சமயக் கூட்டங்கள் கூவுகின்ற கலைகளும் உண்மைகளை உரைப்பவை அல்ல. வஞ்சத்தையும், கள்ளத்தையும் அடிப்படை யாகக் கொண்டவையே அக் கலைகள். அக் கலைகளால் கூறப்படும் நிலைகள் கதிகள் சாட்சிகள் தெய்வங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. சிறு பிள்ளைகளின் விளையாட்டுக் கருவிகளைப் போன்றவை தாம். இந்த உண்மையை எனக்குத் தெளிவாக அறிவித்தாய்; என்னையும் உனது பிள்ளையாக ஏற்றுக்கொண்டாய்! எனக்கும் பிள்ளையென்று பெயர் வைத்தாய்! என் உள்ளத்திலே ஒளிரும் அறிவாகிய தலைவனே உன் பெருமையே பெருமை! என்றும் அழியாத உண்மையை உணர்ந்த அன்பர்கள் போற்றும்படி அழகிய பொதுமன்றத்திலே ஒப்பற்ற நடன மாடும் அரசே! எனது பாமாலையையும் அணிந்தருள்வாய்! இதுதான் இந்தப் பாடலில் அடங்கியிருக்கும் பொருள். சமயங்களையும், சமய நூல்களையும், அவற்றின் கூற்றுக் களையும் நம்புகின்றவர்கள் சிறுபிள்ளைகள் என்று கூறியது இப்பாடல். சாதிபேதம். வருணாசிரம தருமம், ஆசிரம தருமங்கள் அனைத்தும் பொருளற்றவை; சிறுபிள்ளைத்தனமான செயல்கள்! என்று மேலுங்கூறுகிறார் இராமலிங்க அடிகள். பிர்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்குவகைச் சாதிகள் வகுத்திருக்கின்றனர். பிரம்மச்சரியம், கிருகதம், வானப்பிரதம், சந்தியாசம் என்று நால்வகை ஆசிரமங்கள் கூறுகின்றனர். இந்த நால்வகை வருணங்களுக்கும், நால்வகை ஆச்சிரமங்களுக்கும் தனித்தனி ஒழுங்கங்களும் வகுத்திருக் கின்றனர். இவற்றைப்பற்றிக் கூறும் கலைகள் நூல்கள் பல விருக்கின்றன. அவற்றை உண்மையென்று சொல்லுவதும், நம்புவதும் சிறுபிள்ளைத்தனம்; சிறுபிள்ளை விளையாட்டு என்பதே ராமலிங்கர் கருத்து. மடமையை நீக்கி உண்மையை உணர்ந்தவர்களே உத்தமர்கள்; அவர்களே சாதி, சமயச் சாக்கடைகளில் சிக்கிச் சாகமாட்டார்கள். வீணில் கிடந்து அலைந்து திரியமாட்டார்கள். உண்மைகளைக் கண்டறிவார்கள். இக்கருத்தை அவர் பல பாடல்களிலே பாடியிருக்கின்றார். இக கருத்துடைய செய்யுள் ஒன்றைக் காண்போம். நால்வருணம், ஆச்சிரமம்; ஆசாரம் முதலாம் நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை வளையாட்டே! மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே! கால்வருணம் கலையாதே ! வீணில் அலையாதே! காண்பனவெல் லாம்எனக்குக் காட்டியமெய்ப்பொருளே மால்வருணம் கடந்தவரை மேல்வருணத்தேற்ற வயங்குநடத் தரசே! என் மாலை அணிந் தருளே! நால்வகை வருணங்களைப்பற்றியும், நால்வகை ஆச்சிரமங் களைப் பற்றியும், அவற்றுக்குரிய ஆசாரங்களைப்பற்றியும் சொல்லுகின்ற சாத்திரங்கள், வரலாறுகள் எல்லாம் சிறந்த கருத்துடையன அல்ல. சிறுபிள்ளைகளின் விளையாட்டு களைப் போன்றவை. அறிவுள்ளவர்கள் தோலின் நிறத்தைக் கொண்டு மேல் வருணம், கீழ்வருணம் என்று கண்டறிய மாட்டார்கள். நீ உன் ஞானக் கண்ணைக் கொண்டு இவ்வுண்மையைத் தெரிந்து கொள் என்று எனக்கு உண்மைகளையெல்லாம் எனக்குக் காட்டிய மெய்யறிவே. மயக்கம் என்னும் வரணத்தைக் கடந்த வரை உயர்ந்த வருணத்தவராக வாழும்படி செய்வதற்காக விளங்குகின்ற நடனத்தில் வல்லவனே! என் பாமாலையையும் அணிந்தருள் வாய்! இராமலிங்க அடிகள் நாத்திகர் அல்லர். உண்மையான அன்பு நெறியைத் தழுவியவர், அவர் சமயங்களை வெறுத்துப் பேசுகின்றார். சமய நூல்களை அருவருக்கிறார்; சமயங்களை வெறுத்துப் பேசுகின்றார். சமய நூல்களை அருவருக்கிறார்; சமயங்கள் கூறும் தெய்வங்களை நம்பவேண்டாம் என்று நவில்கின்றார். வருணாசிரம தருமத்தை வெறுக்கின்றார். நால்வகை ஆச்சிரமங் களையும் வெறுக்கின்றார். அவற்றுக்கான ஒழுக்கங்களையும் விரும்பவில்லை. இவற்றிலே நம்பிக்கை வைப்பது சமரச சன்மார்க்கத்திற்கு ஒத்துவராது என்பதே அவர் கருத்து. ஒரு சாதியிலே பற்றுக்கொண்டவன் மற்றொரு சாதியிடம் அன்பு காட்டுவ தில்லை. வெறுப்புக்கூடக் காட்டுகின்றான். ஒரு சமயத்திலே வெறிகொண்டவன் பிற சமயத்தை வெறுக்கின்றான். சாதி வெறியும், சமய வெறியும் மக்கள் சமூகத்தின் ஒற்றுமைக்கு உலைவைக்கின்றன. இனவெறியும் அப்படித்தான். உலக மக்களிடையிலே சாமாதானம் நிலவ வேண்டு மானால், சமரச சன்மார்க்க நெறி பரவவேண்டுமானால் சமரச சன்மார்க்கத்திற்குத் தடைக் கற்களாக நிற்பவை சமய வேற்றுமை, சாதி வேற்றுமை, இன வேற்றுமை, நிற வேற்றுமை ஆகியவையே. ஆகையால்தான், இவற்றை ஆதரிக்கும் கொள் கைகள், நூல்கள், கலைகள், காட்சிகள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாதவை; சிறுபிள்ளைகளின் விளையாட்டுக்களைப் போன்றவை என்று விளக்கியிருக்கின்றார். மேலே காட்டிய இரண்டு பாடல்களும் இந்த உண்மைகளை விளக்கும் பாடல்கள். அன்புள்ளவர்கள் - கருணையுள்ளவர்கள் - இரக்க முள்ள வர்கள் எந்த வெறியிலும் அகப்பட்டு அல்லற்பட மாட்டார்கள். மக்கள் சமூகத்தை ஒன்றாகக் காண்பர்; ஆருக்குத் துன்பம் நேர்ந்தாலும் அன்புடன் உதவி புரிவர்; அதனால் அகமகிழ்வர். கோபத்தின் கொடுமை குற்றங்களை ஐவகையாகப் பகுத்துக் கூறுவர். அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்பன இவை உள்ளத்தோடும் உடலோடும் இணைந்தவை. இவற்றை முறையே ஆசை; கோபம், கருமித்தனம், செருக்கு, பகை என்று சொல்லி விடலாம். இந்த ஐந்து வகைக் குற்றங்களுக்கும் அகப்படாதவர்கள் உயர்ந்தவர்கள் உத்தமமானவர்கள் ஒருவருக்கும் தீங்கிழைக் காதவர்கள்; இவர்கள் எல்லோராலும் போற்றப்படும் புகழுடன் வாழ்வார்கள். இந்தக் குற்றங்களிலே கோபத்தையே முதன்மையான குற்றம் என்று குறிப்பிடுகிறார் இராமலிங்க அடிகள். இதற்குக் காரணம்உ ண்டு.எல்லாக் குற்றங்களுக்கும் நாற்றங்கால் கோபந் தான். முன்கோபமோ, பின்கோபமோ - எதுவாயினும் சரி; அது தீமைக்கே வழிகாட்டும். கோபம், பாவம், சண்டாளம் என்று எல்லோரும் கோபத் தைப்பற்றிப் பேசுவதுண்டு. இது உலக வழக்கு. கற்றவர்களும் கல்லாதவர்களும் எடுத்துரைக்கும் அறவுரை, கோபமானது பாபத்தைச் செய்யத் தூண்டும்; அதாவது நீதி நெறி பார்க்காமல் எதையும் செய்வதற்கு ஏவும். கண்மூடித் தனமாகக் காரியத்திலே குதிப்பவன் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டான். சண்டாளன் செயலாகிய கொலையையும் துணிந்து செய்வான். ஆகையால் தான், கோபம், பாபம், சண்டாளம் மூன்றையும் ஒரே அடுக்காகச் சொல்லுகிறார்கள். இந்த உலக வழக்கை உள்ளத்திற்கொண்டே இராமலிங்க அடிகள் பாடுகிறார். கோபத்தின்மேல் கனகோபம் வருகிறது அவருக்கு. தன் வாயில் வந்த கடுஞ் சொல்லைக் கோபத்தின் முகத்திலே வாரி வீசுகின்றார். எவ்வளவு கடுமையாக அதைத் தாக்க முடியுமோ அவ்வளவு கடுமையாகத் தாக்குகிறார். கோபமெனும் புலைப்பயலே! என்று அழைக்கின்றார். இதைவிட இன்னும் கடுமையான வார்த்தையைச் சொல்ல முடியாது. கோபத்தை மட்டும் தாக்குவதோடு விட்டுவிடவில்லை. அதன் துணைவர்களையும் தோழர்களையும் சாடுகிறார். காம மாகிய மோகத்தையும், கர்வமாகிய மதத்தையும், உலோபத் தையும், மாற்சரியத்தையும் பிடித்து இழுத்துச் சரியான அறை கொடுக்கின்றார். எத்தகைய கடுஞ் சொற்களால் அவர் தாக்குகிறார் என்பதைப் பாருங்கள்! கோபம்எனும் புலைப்பயலே! காமவலைப் பயலே! கொடுபோகக் கடைப்பயலே! குறும்புமதப் பயலே! காண்! தாபஉலோ பப்பயலே! மாற்சரியப் பயலே! தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்! தீபமெலாம் கடந்துஇருள்சேர் நிலம்சாரப் போவீர்! சிறிதுபொழுது இருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்! சாபம்உறு முன்னம் அறிந்து ஓடுமினோ! என்னைத் தான் அறியீர்! தனித்தலைவன் தலைப்பிள்ளை தானே! இந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள். துப்பாக்கி யிலிருந்து வெடிக்கும் குண்டுகள்போல் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன. சிறிதும் தட்டுத் தடங்கலின்றி வன் சொற்கள் வந்து குவிந்திருக்கின்றன. இச்செய்யுளில் அமைந் திருக்கும் சொற்களாலேயே கோபம், காமம் மதம், லோபம், மாற்சரியங்கள் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணரலாம். இவற்றை இராமலிங்கர் கடிந்ததோடு மற்றவர்களையும் கடியும்படி அறைகூலி அழைக்கின்றார். இவ்வளவு கடுஞ் சொற்கள், இளகிய உள்ளம் படைத்த அவர் நாவில் விளையாடியிருக் கின்றன. இப்பாட்டு நமக்கு எவ்வளவு உணர்ச்சி யூட்டுகின்றது என்பதைக் காண்போம். கோபம் என்று சொல்லப்படும் அற்பப் பயலே! அற்பத் தன்மையுள்ள செயல்களைச் செய்பவன் புல்லன் - புலையன் - அற்பன்! காமவலையை வீசுகின்ற பயலாகிய கொடியமோகம் என்னுங் கீழ்த்தரமான பயலே! கடைப்பயலே! குறும்புத்தனம் - அடாதசெயல்கள் - வெறுக்கத்தக்க வினைகள் - எல்லாவற்றுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னிற் கின்ற ஆணவப் பயலே! மதப் பயலே! தீமைக்கெல்லாம் அடிகோலும் உலோபம் என்னும் கஞ்சப் பயலே! பகையை மூட்டும் மாற்சரியப் பயலே! தயவுடன் உங்களிடம் ஒன்று சொல்லுகின்றேன். இன்னும் நீங்கள் இங்கே என்னிடம் தங்கியிருக்க வேண்டாம்! ஆமாம்! கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். என்னை விட்டு ஓட்டம் பிடியுங்கள்! இன்னும் சொல்லுகின்றேன். எங்கே ஒளியிருக்கின்றதோ அங்கே நீங்கள் தலைகாட்டக் கூடாது! ஒளியென்பது அறிவு. அதுதான் தீபம்; ஒளிவிளக்கு. ஆதலால் ஒளியுள்ள இடத்தில் தங்கவேண்டாம். இருட்டு நிலம் எங்கேயிருக்கின்றதோ அங்கே ஓடுங்கள். அதாவது அறியாமை - மூடத்தனம் - எங்கே குடிபு குந்திருக்கின்றதோ அந்த இடந்தான் நீங்கள் வாழ்வதற்குத் தகுந்த இடம்! என்னிடம் அறிவு விளக்குச் சுடர்விட்டு எரிகின்றது. சிறிது நேரம் நீங்கள் இங்கே இருந்தாலும் உங்களுக்கு நாசகாலந்தான். நீங்கள் அழிந்துபோவது உறுதி! சாபம் கிடைப்பதற்கு முன் புறப்பட்டு ஓடுங்கள்! உம் நிற்கவேண்டாம்! உங்கள் நிலையைத் தெரிந்து கொண்டு ஓட்டம் பிடியுங்கள்! அகங்காரத்தை முதற்பொருளாக வைத்துப் பேசி யிருக்கின்றார்கள்; பாடியிருக்கின்றார்கள். அகங்காரத்தை விட்டவன்தான் அறிவைப் பெறமுடியும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். தத்துவ நூல்களில் இதுபற்றி விரிவாகக் காணலாம். பொது மக்களும் அகங்காரம் பிடித்தவனைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று பாருங்கள்; மண்டைக் கிறுக்குப் பிடித்தவன்! தலைக்கனம் பிடித்தவன்! பெரிய கர்வி! தான் என்ற ஆணவம் பிடித்தவன்! தான்தோன்றித் தம்பிரான்! என்று பட்டப்பெயர் சூட்டிக் கூப்பிடுகின்றனர். பொது மக்களும் அகங்காரத்தின் தீமையை அறிந்திருக்கின்றனர் என்பதை இந்தப் பட்டப் பெயர்கள் காட்டுகின்றன. பொருத்த மான பட்டங்கள், எனக்கு ஒன்றுமே தெரியாது; எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது; சோறுண்டு உறக்கம் உண்டு, சுகம் உண்டு என்று நினைப்பவனும் முன்னேற முடியாது. சமுதாயத்திலே அடிமையாகத்தான் வாழ்வான். எனக்கு எல்லாம் தெரியும்! என்னைப்போலச் சர்வ கலாநிதி யாருமே இல்லை! நான் இனி யாரிடமும் எதையும் தெரிந்து கொள்ளவேண்டியதே இல்லை! என்று நினைப்ப வனும் அழிந்து போவான். அவன் எவ்வளவு உச்சநிலையி லிருந்தாலும் சரசரவென்று படுபாதாளத்திலே சரிந்து வீழ்ந்து விடுவான். எனக்குத் தெரிந்தது கொஞ்சம்தான்; தெரியாதவை எவ்வளவோ உண்டு; மேலும் மேலும் பல பொருள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்; படித்துணர்ந்து கொள்ள வேண்டி யவை பல உண்டு. கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை எவ்வளவோ உண்டு; அனுபவத்தால் அறிந்து கொள்ள வேண்டியவை அளவற்றவை என்று நினைக்கிறவனே முன்னுக்கு வருவான். ஒவ்வொரு நாளும் அவன் முன்னேற்றப் பாதையிலே அடிவைத்து ஏறிக்கொண்டேயிருப்பான். இந்த உண்மைகளைத் தமிழர்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே அறிந்தவர்கள். இவற்றை அவர்கள் நீதி நூல்களிலே, வணக்கப் பாடல்களிலே புராணங்களிலே இதிகாசங்களிலே, சமய நூல்களிலே எடுத்துக்காட்டியிருக் கின்றனர். இந்த அகங்காரத்தைப்பற்றி வடலூர் வள்ளலார் இரா மலிங்க அடிகள் எவ்வளவு வெறுத்துப் பேசுகிறார்; பாடுகிறார் என்பதைப் பாருங்கள். கலை அறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே! கால்அறியாய்! தலை அறியாய்! காண்பனகண்டறியாய்! நிலை அறியாய்! ஒன்றைஒன்றாய் நிச்சயித்துஇவ் வுலகை நெறிமயங்க மயக்குகின்றாய்! நீயோ இங்கு உறுவாய் அலைஅறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ, அசைவாயேல் அரைக்கணத்தே அடக்கிடுவேன் உன்னைத்தான் அலைவுஅறிவாய்! என்றனைநீ அறிவாயோ! நான்தான் ஆண்டவன்தன் தாண்டவம்கண்டு அமர்ந்தபிள்ளை காணே! இந்தச் செந்தமிழ்ப் பாட்டு, செருக்கின் கொடுமையைக் கூறுவது ஆணவத்தை எவ்வளவு ஆவேசமாகத் தாக்குகிறார் இராமலிங்கர் என்பதை இதனால் காணலாம். கலையுணர்ச்சி உள்ளத்திலே அமைதியையும் அறிவையும் உண்டாக்கும்; பொறுமையை வளர்க்கும். கலையென்றாலும், இலக்கியம் என்றாலும் ஒன்றுதான். கலையென்பது கற்றுக் கொள்ளப்படுவது. இலக்கியங்கள் தாம் பல உண்மைகளை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. ஆதலால், உண்மையான கலையறிவுள்ளவர்கள் தலைக்கனம் கொள்ளமாட்டார்கள். கலையுணர்ச்சியற்ற அறிவைப் பார்த்து எப்படி அழைக்கிறார் வள்ளலார் என்பதைப் பாருங்கள்; கலை அறியாச் சித்தம் எனும் கனமோசப் பயலே என்று கேட்பதுடன் கூப்பிடுகிறார். கொடியவனைக் கண்டால் கோபம் வராமல் இருக்குமா? நம்மைக் கழுத்தறுக்கும் கயவனைக் கண்டால் கைகொடுத்து வரவேற்கவா தோன்றும்? அயோக்கியப் பயலே! எங்கே வந்தாய்? என் முகத்தில் விழிக்காதே! ஒடிப்போ! என்று சீறிவிழாதவர்கள் சிலர் தான் இருக்கலாம். இந்தச் செய்யுளிலே அகங்காரத்தைப்பற்றி அருட்சுடர் வள்ளலார் சொரிந்திருக்கும் அனல்கக்கும் சொற்களைப் பாருங்கள். கலைப் பண்பை அறியாதவனே! அறிவு என்று பெயர் வைத்துக்கொண்டிருக் கின்றவனே! பெரிய மோசக்காரப் பயலே! உனக்குத் தலைகால் தெரியாது; எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவற்றைத் தெரிந்துகொள்ள மாட்டாய்! இவை மட்டுமா? உண்மை நிலையை உணரமாட்டாய்! ஒன்றை வேறொன்றாக நிச்சயித்துக் கொள்வாய். இந்த விபரீத அறிவு காரணமாக இவ்வுலகை மயக்குகின்றாய். உண்மை நெறியில் செல்லுகின்றவர் களையும் தீயநெறியிலே செலுத்துகின்றாய்; நீயோ இங்கு என்னிடம் வருகின்றாய்! என்னிடம் நெருங்காதே! அலையற்ற கடல்போல அசையாமல் அப்படியே நில்! நீ அப்படி இப்படி அடியெடுத்து வைத்தால் விடமாட்டேன்! அரைவிநாடியில் உன்னை அடக்கி விடுவேன்! துன்பம் ஒன்றைத்தான் நீ அறிவாய்! என்னை நீ அறிவாயோ? அறிய மாட்டாய்! நான் யார் என்று தெரிந்துகொள்! ஆண்டவனுடைய உண்மை நடனத்தைக் கண்டவன் நான்! அவன் சித்தப்படி, உலகத்திற்கு நன்மை செய்ய முடிவு செய்து கொண்டிருப்பவன் யான்! ஆதலால் என் கிட்டத்தில் வராதே! ஏ, அகங்காரப் பயலே! விலகிப்போ! என்று ஆணவத்தை வெறுக்கின்றார். இவ்வாறு ஆணவத்தைத் தான் வெறுப்பதன் மூலம் மற்றவர்களையும் ஆணவத்திலிருந்து தப்பிக்க வழிகாட்டியுள்ளார். உண்மைக்கு வெற்றி உலகில் இன்றுள்ள சாதி, மத, சமய வேற்றுமைகள் எல்லாம் தவிடு பொடியாகித்தான் போகும். அவை இனிமேல் புத்தகங்களிலே படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய சரித்திர மாகப் போய்விடு. நடைமுறையிலே நிலைத்து வாழ்வதற்கு முடியாமல் நாசமாகிவிடும். இதைத்தான் இன்றுள்ள அறிஞர் களும் கூறுகின்றார்கள். புதிய சமுதாய அமைப்புக்குப் பாடுபடுவோர் நம்பிக்கை இதுதான். இந்த உறுதியான நம்பிக்கை சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்த இராமலிங்க அடிகளிடம் இருந்தது. இந்த உறுதி யுள்ளம் காரணமாகவே புரட்சிக் கருத்துக் கொண்ட புதிய செய்யுட்கள் பலவற்றை அவர் பாடிச்சென்றார். அப்பாடல் களைப் படிப்போர் அனைவரும் அவரைப்போலவே இவ்வுலகம் மாறவேண்டும் என்றே மனத்தில் நினைக்கின்றனர். இவ்வாறு படிப்போர் உள்ளத்தை அள்ளிக்கொள்ளும் பாடல்களாக அமைந்திருக்கின்றன அவை. சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்; சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்; நித்திய ஞான நிறை அமுது உண்டனன்; நிந்தை உலகியல் சந்தையை விண்டனன். உண்மையான அறிவுச் சபையென்பது வெளியில் எங்கும் இல்லை. என் உள்ளத்திலேயேதான் இருக்கின்றது அதை நான் கண்டுகொண்டேன். என் உள்ளத்திலே உள்ள அறிவுச் சபையில் நடனமாடும் பகுத்தறிவின் மூலம் சன்மார்க்கத்தை அடையும் வெற்றியை நான் பெற்றேன். சன்மார்க்க சித்தியைப் பெற்றதனால் தினந்தோறும் அறிவென்னும் நிறைந்த அமுதத்தை உண்டேன்; அதாவது நாள்தோறும் அறிவு நெறியிலேயே நடந்து கொண்டிருக் கின்றேன். இதனால் பழிக்கத்தக்க செய்கைகளை யெல்லாம் விட்டேன். நிந்தைக்கு இடமான உலகியல் என்னும் சந்தையைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அதை அகற்றிவிட்டேன். இதிலே, உண்மையறிவு உள்ளத்தில் இருக்கின்றது; அதை அறிவதுதான் சத்திய சபையைக் காண்பதாகும் என்று எடுத்துக் காட்டினார். அதைக் கண்டவர்களே சன்மார்க்க நெறியைப் பின்பற்ற முடியும் என்றும் இயம்பினார். மேலும் அவர் பாடுவதைப் பாருங்கள் சாதி சமயச் சழக்கெலாம் அற்றது; சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது; மேதினியில் சாகாத வித்தையைக் கற்றது; மெய்அருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது. சன்மார்க்கம் - உலக சன்மார்க்க சமுதாயம் - எப்பொழுது நிலைபெற முடியும்? அழியாமல் வாழ முடியும்? என்பதை இச்செய்யுளிலே கூறியிருக் கின்றார். சாதிமதக் கோளாறுகள் - குற்றங்கள் எல்லாம் அடியோடு அழிந்தன. அதன் பிறகுதான் சன்மார்க்கத்தைக் காட்டும் அறிவுச் சபை அழியாமல் நிலைபெற்றது. சாதிமதச் சழக்கற்று உண்மை நெறியைப் போதிக்கும் அறிவுச் சபை நிலைத்த பிறகு, இவ்வுலகம், என்றும் அடிமைச் சாவுக்கு ஆளாகாமல் இன்பத் தோடும், உரிமையோடும் வாழும் கலையைக் கற்றுக்கொண்டது. என் உள்ளத்திலும் உண்மையான இரக்கத்தோடு பேரறிவு நிலைத்து நின்றது. சாதி சமயச் சழக்குகள் எல்லாம் ஒழிந்தால் தான் உலகிலே சன்மார்க்கம் பரவும்; அறிவுச் செயல்கள் நிலைத்து நிற்கும்; மக்கள் சமுதாயம் அடிமைச் சாவுக்கு இரை யாகாமல் வாழும். உரிமையும் இன்பமும் பெற்று உன்னதமாக வாழும். இந்த உண்மையை இச்செய்யுளால் உரைத்தார். உலக சமுதாயம் ஒன்றாகக்கூடாது என்று நினைப்பவர்கள் தந்நலக்காரர்கள்; வஞ்சகர்கள். அவர்கள் சாதி, மத, சமய பேதமற்ற சன்மார்க்க நெறி பரவாமலிக்க முட்டுக் கட்டைகள் போடுவார்கள். அவர்கள் போடும் முட்டுக்கட்டைகளால் சன்மார்க்க நெறியை அடைத்துவிட முடியாது. சன்மார்க்க வெள்ளம் எல்லாக் குப்பைகூளங்களையும் அடித்துக் கொண்டு முன்னேறித்தான் செல்லும், வஞ்சகர்கள் வாய்மூடிக் கொண்டு ஓடிப்போவார்கள். அவர்கள் தாமாகவே சன்மார்க்க சங்கத்தைச் சரணாகதியடைவார்கள். சன்மார்க்க சங்கத்தவர் களுக்குத்தான் இறுதி வெற்றி. இவ்வாறு வெற்றிக்களிப்புடன் ஆனந்தமாகப் பாடுகிறார் வள்ளலார். அந்தச் செய்யுளைப் பாருங்கள். வஞ்சகர் அஞ்சினர்; வாய்மூடிச் சென்றனர்; வந்து திரும்பவும் வாயிலின் நின்றனர்; தஞ்சம்! எமக்கருள்! சாமிநீ என்றனர்; சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர். சன்மார்க்க நெறியை அடக்க முயன்ற வஞ்சகர்கள் தம் செயலில் தோல்வி கண்டு பயந்து போனார்கள். ஒன்றும் சொல்ல முடியாமல் வெட்கத்தால் வாய் மூடிப் போனார்கள். அவர்கள் தாமாகவே உண்மையுணர்ந்து, உள்ளந் திருந்தி மீண்டும் சன்மார்க்க சங்கத்தின் வாசலிலே வந்து நின்றனர். சாமி நாங்கள் சரணமடைந்தோம்! எமக்கு அருள் செய்வாய்! என்று கெஞ்சினார்கள். இதனால் சன்மார்க்கத்தவர்களுக்கே இறுதி வெற்றி கிடைத்தது. உலக மக்களை ஒன்று சேரவொட்டாமல் பிரித்து வைக்க நினைத்தவர்கள் தோற்றார்கள். ஒன்றுபட்ட சன்மார்க்க சமுதாயமாக்க முயன்றவர்களே வெற்றி பெற்றார்கள்! எதிர்காலத்திலே சாதி, மத, சமய பேதமற்ற உலக சமுதாயந் தோன்றுவதை - உருவாவதை - யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய திடநம்பிக்கை இராமலிங்கரிடம் குடி கொண்டிருந்தது. பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே; சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே என்றுமேலும் தனது திடநம்பிக்கையைக் கூறியிருக்கிறார். சன்மார்க்கத்திற்கு எதிரான பல மார்க்கங்களும் சிறிதும் பசையில்லாமல் ஒழிந்து போய்விட்டன. இவ்வுலகத்திலே இல்லாமல் மறைந்துவிட்டன. உண்மை நெறியாகிய சன்மார்க்கம் ஒன்றுதான் தழைத்து வளர்ந்தது என்று உறுதியோடு உரைத் திருக்கிறார். உலகத்திலே ஒன்றுபட்ட சமுதாயம் தோன்றுவது உறுதி என்பது அவர் நம்பிக்கை, அவர் உலகத்தாரை சாதி, மதபேத மற்றபுதிய சமுதாயத்திலே சேரும்படி அழைக்கிறார். ஆடாதீர்! சற்றும் அசையாதீர்! வேறு ஒன்றை நாடாதீர் பொய்உலகை நம்பாதீர்! - வாடாதீர்! சன்மார்க்க சங்கத்தைச் சார்விர்! விரைந்தினியிங்கு என்மார்க்க மும்ஒன் றாகுமே. வஞ்சகர் வார்த்தை கேட்டு நடுங்காதீர்கள்! சிறிதும் அசையவேண்டாம்; சன்மார்க்கத்தைத் தவிர வேறு ஒன்றையும் தேடாதீர்கள்! உலகில் உள்ள பொய்மைகளை நம்பாதீர்கள்! எதற்கும் துன்பமடையாதீர்கள்! சன்மார்க்க சங்கத்தைச் சேருங்கள்; விரைவிலே இங்குள்ள எல்லா மார்க்கங்களும் சன்மார்க்க மென்னும் ஒரே மார்க்கமாகிவிடும் இதை நம்புங்கள். இறுதியாக வடலூரார் முழங்கும் வீர முழக்கத்தைக் கேளுங்கள். மார்க்கம்எல்லாம் ஒன்றாகும் மாநிலத்தீர்! வாய்மையிது; தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டு சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின்! சத்தியம்நீர் நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள். இதைவிட உறுதியாக வேறு சொற்களை அமைத்துப் பாட முடியாது. எதிர்காலத்திலே உலகிலே சன்மார்க்கம் ஒன்று தான் ஓங்கும் என்ற கருத்தை மிகுந்த நம்பிக்கையுடன் பறைசாற்றி யிருக்கிறார். மாநிலத்தவர்களே! கேளுங்கள்! உலகில் உள்ள எல்லா நெறிகளும் ஒரே நெறியாகத்தான் போகின்றது; நான் கூறுவது பொய்யன்று; உண்மையாகும் ஆகையால், உங்கள் தூக்கத்தை விட்டுத் தொலையுங்கள்! உள்ளத்திலே துணிவு கொள்ளுங்கள்! கவலையையும் களைந்து வீசுங்கள்! சன்மார்க்க சங்கத்தைச் சேருங்கள்! சத்தியமாகச் சொல்லுகின்றேன்! நீங்கள் அனைவரும் இப்பொழுதே நன்னெறியை அடைவீர்கள்! இதுவே இப் பாடலின் பொருள். வள்ளலாரின் இந்தக் கருத்த முழுவதும் உண்மையென் பதை இக்காலப் போக்கை உற்று நோக்குவார் உணர்ந்து கொள்ளுவார்கள். உலக மக்கள் அன்போடு ஒன்றுபட்டுச் சன்மார்க்க நெறியிலே வாழும் காலம் நெருங்கி வந்து கொண்டே யிருக்கின்றது. விரைவிலே இது நிறைவேற உழைப்பதே அறிஞர் கடமை. சங்கப் புலவர் சன்மார்க்கம் (1960) முன்னுரை சங்கப் புலவர் சன்மார்க்கம் என்னும் இப்புத்தகம், அருள் நெறித் தொடரின் மூன்றாவதாக வெளிவருகின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த புலவர்களை யெல்லாம் பொது வாகச் சங்ககாலப் புலவர்கள் என்று கருது கின்றனர். அவர்கள் சங்ககாலத்துத் தமிழ்மக்களின் கொள்கைகளைப்பற்றியே பெரும்பாலும் பாடியிருக்கின்றனர். ஆதலால் அவர்களைச் சங்ககாலப் புலவர் மரபினராகக் கருதுவதிலே தவறில்லை. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழகத்திலே வைதீக மார்க்கமும், பக்தி மார்க்கமும் பரவின. தேவார காலத்துக்குப்பின் தோன்றிய தமிழ்நூல்களால் இவ்வுண்மையை அறியலாம். கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குமுன் தோன்றிய கவிதைகளிலும், நூல்களிலும் வைதீக மார்க்கத்தையோ, பக்தி மார்க்கத்தையோ மிகுதியாகக் காணமுடியாது. அக்கவிதைகளும், அந்நூல்களும் பெரும்பாலும் ஒழுக்க நெறியையே எடுத்து ஒதுகின்றன. சங்க நூல்களாகக் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே பல வகைப்பட்ட தெய்வங்கள் காணப்படுகின்றன; சொர்க்கம், நரகம் காணப்படு கின்றன; ஊழ்வினை காணப்படுகின்றது; தெய்வப் பிரார்த்தனை களும், வழிபாடுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவை களைப்பற்றி விரிவாகக் கூறவில்லை. சங்ககாலப் பாடல்களிலும், நூல்களிலும், சங்ககாலப் பண்பைப் பின்பற்றிய பாடல்களிலும், நூல்களிலும் மக்கள் இவ்வுலகில் வாழவேண்டிய வழியைப் பற்றியே சொல்லப்படு கின்றன. அவைகள் உலக வாழ்வைப் பொய்யென்றோ, மாயம் என்றோ, நிலையற்றவை என்றோ வலியுறுத்தவில்லை. இல்லறத்தை நன்றாக நடத்துவது எப்படி? காதலனும் காதலியும் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும்? மக்களின் சமூதாய வாழ்வு எப்படியிருக்கவேண்டும்? மக்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் யாவை? அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? கணவன் கடமை யென்ன? மனைவியின் கடமை என்ன? அரசாட்சி எப்படி நடைபெற வேண்டும்? அரசன் கடமை என்ன? அமைச்சர்களின் கடமை என்ன? இவ்விஷயங்களைப்பற்றியே சங்க நூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இவைபோன்ற செய்திகளை அகத்திணைப் பாடல் களிலும் காணலாம்; புறத்திணைப் பாடல்களிலும் பார்க்கலாம். சங்ககாலப் புலவர்கள் கூறும் அறங்கள், நீதிகள் அனை வர்க்கும் பொது வானவை. அவைகள் இன்ன மதத்தினர்க்கு உரியவை; இன்ன இனத்தினர்க்கு உரியவை; இன்ன மொழி யினர்க்கு உரியவை; இன்ன நாட்டினர்க்குத் தான் ஏற்றவை என்று சொல்லமுடியாது. அவைகள் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவாக அமைந்திருக்கின்றன. உலக மக்கள் அனைவரும் அவற்றை ஒப்புக் கொள்ளுவார்கள். இத்தகைய உண்மை நெறிகளே சங்ககாலக் கவிதைகளில் காணப்படுகின்றன. மதப் பற்றோ, இனப் பற்றோ, சாதிப் பற்றோ இல்லாமல் மனிதப் பற்றுடன் மட்டும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றிக் கூறுவதனால் அவை எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடி யவைகளாகத்தான் அமையும். சங்ககாலப் புலவர்கள் மனிதப் பற்று ஒன்றையே உளங்கொண்டவர்கள். ஆதலால் அவர்கள் பாடல் களிலே பொதுதர்மமே ஓங்கி நிற்கின்றது. உலக மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க பொதுதர் மத்தையே உண்மை அறம் - உண்மை நெறி - சன்மார்க்கம் என்று கூறினர்; கூறுகின்றனர். சங்கப் புலவோர் பாடல்களிலே உண்மை நெறி - சன் மார்க்கம் காணப்படு கின்றது. சன்மார்க்க போதனை செய்வதைச் சங்ககாலப் புலவர்கள் தமது கடமையாகக் கொண்டனர், அவர்கள் அகத்திணைப் பாடல்களிலும், புறத்திணைப் பாடல் களிலும் சன்மார்க்கத்தைக் குறித்தனர்; அமைத்தனர். இது மறுக்கமுடியாத உண்மை. இவ்வுண்மையை விளக்குவதே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். சங்ககால நூல்களில் உள்ள கவிதைகள் சிலவற்றை எடுத்துக்காட்டி அவற்றில் உள்ள சன்மார்க்க போதனையைச் சுட்டிக்காட்டும் முறையிலேயே இக்கட்டுரை கள் எழுதப்பட்டிருக் கின்றன. சங்ககாலப் புலவர்களின் பாடல்கள் வெறும் வறட்டுப் பாடல்கள் அல்ல. அவைகள் அறம், பொருள், இன்பங்களைக் குறிக்கோளாகக் கொண்ட பாடல்கள் என்பதையும் இப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளால் அறியலாம். இந்நூல் கட்டுரைகளைப் படிப்போர் மற்றொரு உண்மை யையும் அறியலாம். சங்ககாலத்தைவிட, செய்யுள் அமைக்கும் - கவிதை பாடும் கலையிலே இக்காலத்திலே நாம் வளர்ச்சி யடைந்திருக்கின்றோம். பொதுமக்களுக்குப் புரியும் வகையிலே, அவர்கள் சுவைத்துப் படித்துப் பாடும் வகையிலே விதவிதமான பாடல்களைப் பாடியிருக்கின்றனர்; இன்னும் பாடி வருகின்றனர். இது கவிதையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி என்பதில் ஐயமில்லை. கவிதைகளின் உருவ அமைப்பில்தான் வளர்ச்சி கண்டிருக் கிறோம். ஆனால் அவற்றின் பொருள் அமைப்பில் நாம் வளர்ச்சி யடையவில்லை என்பதை மறுக்கமுடியாது. இவ்வுண்மையைச் சங்ககாலப் பாடல்களையும், இக்காலப் பாடல்களையும் படிப்போர் காணலாம். கவிதைகளின் உருவில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது போலவே, அதன் உள்ளடக்கத்திலும் வளர்ச்சியேற்பட வேண்டும். அப் பொழுதுதான் கவிதைக் கலை பூரண வளர்ச்சியை அடைந்து விட்டது எனக் கூறலாம். இத்தகைய வளர்ச்சியைக் காண வேண்டும் என்பதே நமது ஆவல். கவிஞர் பட்டத்துடன் விளங்கும் இக்காலக் கவிஞர்கள் இவ்வுண்மையை மனங்கொள்ள வேண்டும். இவ்வுண்மையை உள்ளத்திற்கொண்டு, அவர்கள் மிகுந்த வேதனைப்பட்டாவது கவிதைகளைப் பெற்றெடுப்பார்களானால், அக்கவிதைகள் சிறந்து விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. இவ்வுண்மைகளை எடுத்துக் காட்டும் நோக்கத்துடனேயே இப்புத்தகம் வெளிவருகிறது. இந்நூலின் கட்டுரைகளிலே பல, சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பிலே, மெய்கண்டான் என்னும் பெயரில் என்னால் எழுதப்பட்டவை. அவைகளே கூட்டல், கழித்தல், பெருக் கலுடன் இப்புத்தக உருவில் வெளிவருகின்றன. சாமி. சிதம்பரன் நீதி சொல்லும் காதல் கவிதை காதல் கவிதைகள் எழுதப்படாத காலமே இல்லை. இன்றும் பலர் காதல் கவிதைகள் எழுதுகின்றனர்; அன்றும் பலர் எழுதினர். இக்காலத்தினர் எழுதும் கவிதைகளிலே, காதலைப் பற்றிய கவிதைகள்தாம் மிகுதியாகக் காணப்படு கின்றன. ஆனால் இக்கால கவிதைகளிலே ஆழ்ந்த பொருளைக் காண முடிய வில்லை. ஒரு சிலர் கவிதைகளில்தான் நல்ல கருத்துக்களைக் காணமுடிகிறது. ஒரு பெண்ணைப்பற்றிப் புகழ்ந்து கூறுவது; அவளுடைய தோற்றத்திலே நெஞ்சைப் பறிகொடுத்துவிட்ட தாகச் சொல்லுவது; அவளுடைய பார்வையினால் தன்வசம் இழந்துவிட்டதாகப் பேசுவது; அவளுடைய வாய்மொழி கேட்டுத் தன் உள்ளம் உருகிவிட்டதாகப் பாடுவது; அவளுடைய அன்பைப் பெறாமல் பரித விப்பது; அன்பைப் பெற்றுவிட்டால் அதுவே சுவர்க்க வாழ்வு என்று மொழிவது; இவை போன்ற விஷயங்கள்தாம் இன்றையக் காதற் கவிதைகளிலே காணப் படுகின்றன. நிலவொளியில் காதல் மூள்வது; தென்றல் காற்றால் உள்ளத்திலே காதல் வளர்வது; தன் காதலியின் முகத்தை வானத்து மதியிலே காண்பது; அவளுடைய உடம்பின் சேர்க்கை யைத் தென்றல் காற்றிலே நினைப்பது; நீலத் திரைக்கடலிலே காதலியின் கூந்தலழகைக் காண்பது; வானத்தில் பளிச்சிடும் நட்சத்திரங்களிலே காதலியின் புன்சிரிப்பு நிலவுவதாகக் கூறுவது; பறவைகளின் இனிய ஓசையிலே, தன் காதலியின் சொற்கள் தவழ்ந்து வருகின்றன என்று பாடுவது; இவை போன்ற செய்திகளையும் தற்காலக் கவிஞர்களின் காதற் கவிதைகளிலே காண்கிறோம். சங்ககாலப் புலவர்கள் ஏராளமான காதற் கவிதைகள் பாடியிருக்கின்றனர். சங்க நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலிய நூல்களில் உள்ள கவிதைகள் எல்லாம் காதல் கவிதைகள்தாம். இவைகளை அகப்பொருள் நூல்கள் என்பர். இவைகளில் உள்ள பாடல்களை அகத்திணைப் பாடல்கள் என்பர். சங்ககாலத்துப் புலவர்களின் அகத்திணைப் பாடல்கள் வெறும் வறட்டுப் பாடல்களாக இல்லை. காதலனும் காதலியும் சந்திப்பது; ஒன்றுகூடுவது; பிரிவது; பிள்ளைகளைப் பெற்று வாழ்வது; காதலனுக்கும் காதலிக்கும் ஏற்படும் பிணக்குகள்; காதலனும் காதலியும் ஒருமனப்பட்டு இல்லறம் நடத்துவது; அவர்கள் இல்லறத்துக்குரிய கடமைகளைச் செய்வதிலே கண்ணும் கருத்துமாக இருந்து நடத்துவது; இவை போன்ற செய்திகளையே சங்கப் புலவர்களின் காதற் பாட்டுகள் கூறுகின்றன. சங்கப் புலவர்களின் காதற் பாட்டுகளிலே இயற்கை நிகழ்ச்சிகள் பலவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. சங்கப் புலவர்களின் காதல் கவிதைகளிலும் கடலைக் காணலாம்; கடலின் அழகைக் காணலாம்; மழையைக் காணலாம்; மின்னலைக் காணலாம்; இடி வானத்தைக் காணலாம்; முழக்கத்தைக் கேட்கலாம்; தண்மதியைக் காணலாம்; நட்சத்திரங்களைக் காணலாம்; தென்றலை அனுபவிக்கலாம்; மரங்களையும், செடிகொடிகளை யும், மணம் வீசும் பல வண்ண மலர்களையும் காணலாம்; ஆறு, மலை, அருவி, காடு, கழனி முதலியவை களையும் பார்க்கலாம்; பலதிறப்பட்ட மக்களின் உரையாடல் களையும் அவர்கள் பண்பையும் பார்க்கலாம். இன்னும் எத்தனை எத்தனையோ இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். சங்கப் புலவர்களின் காதல் பாடல்களின் இத்தனை காட்சிகளுக்கும் இடையிலே நீதிகள் பல அமைந்திருக்கும்; அப்பாடல்கள் மக்கள் இன்பத்துடன் வாழ்வதற்கான அறிவுரை கள் பலவற்றைச் சொல்லும்; சன்மார்க்கத்துடன் வாழ்வதற்கு வழி காட்டும். இதுதான் பண்டைக்காலக் காதல் பாடல்களில் உள்ள தனிச்சிறப்பு. காதலிலும், நீதியை - அறத்தை - சன்மார்க்க நெறியை எடுத்துரைக்கப் பண்டைக்காலப் புலவர்கள் மறந்து விடுவதில்லை. இதற்கு உதாரணமாக நற்றிணைப் பாடல் ஒன்றைக் காணலாம். செல்வம் உள்ள காதலன் ஒருவன்; அவன் மருத நிலத்துத் தலைவன்; நீர்வளம் பொருந்திய நிலத்துத் தலைவனுக்குப் பஞ்சம் என்பதே தெரியாது. அவன் அரசனால் பாராட்டும் செல்வச் சிறப்புள்ளவன்; அரசனால் கௌரவப் பட்டமும் பெற்றவன். அவன் பரத்தையர் மீது காதல் கொண்டான். தன் மனைவியை விட்டுப் பிரிந்தான். பரத்தையர் சேரிக்குச் சென்று சிலநாள் தங்கிவிட்டான். பிறகு தன் மனைக்குத் திரும்பினான். இவன் செயலைக் கண்டு அவன் காதலிக்கு ஒரே கோபம். அதனால் திரும்பி வந்த அவனுடன் அவள் முகங் கொடுத்துப் பேசவில்லை. ஆதலால் அவன் தன் காதலியின் தோழியிடம் சென்று தன் மனைவிக்கும் தனக்கும் சமாதானம் செய்து வைக்கும்படி வேண்டினான். அப்பொழுது அத் தோழி, அத் தலைவனிடம் - அக் காதலனிடம் - சொல்லியதாக அமைந் திருக்கின்றது ஒரு நற்றிணைப் பாட்டு. அந்த நற்றிணைப் பாட்டிலே அமைந்திருக்கும் கருத்து மிகச் சிறந்தது; அது சன்மார்க்கத்தைப் போதிக்கும் கருத்தாகும். முதலில் பயிர் செய்த நெல்லை அறுத்தபின் அந்த அழகிய பெரிய வயல் சும்மா கிடந்தது; மீண்டும் உழுத ஈரமுள்ள அந்த வயலிலே விதைப்பதற்காக விதை நிரம்பிய கூடையை எடுத்துச் சென்றாய்; விதைத்தாய். அந்தக் கூடையை வெறும் கூடையாகக் கொண்டு வராமல் அதிலே பற்பல மீன்களை நிரப்பிக் கொண்டு வந்தாய். இத்தகைய புதிய வருவாயையுடைய மருத நிலத்துத் தலைவனே! அரசனால் பாராட்டப்படுவதும், விரைந்து செல்லக் கூடிய வாகன வசதியைப் பெற்றிருப்பதும் செல்வம் அன்று. இவை வினைப்பயனால் வருபவை. செல்வம் என்று அறிவுடை யோர்களால் கொண்டாடப்படுவது வேறு. அது என்னவென்றால், தன்னைச் சேர்ந்தவர்களின் துன்பத்தைக் கண்டால் அஞ்சுவது; அவர்கள் துன்பத்தை நீக்குவது; இத்தகைய பண்புடன் அவர் களிடம் அன்பு காட்டுவது; அவர்களை இன்புறச் செய்வது; இத்தன்மை தான் செல்வம் என்பது; இது தான் ஆன்றோர்கள் போற்றும் செல்வமாகும். நீ உன்னை நம்பிய காதலியைக் கைவிட்டாய்; பரத்தையரை நாடினாய்; உன் காதலி யின் உள்ளத்தைப் புண்படுத்தினாய்; ஆதலால், உன்னிடம் சான்றோர் போற்றும் செல்வம் இல்லை என்று கூறினாள் தோழி. இப்பொருளமைந்த பாடல் கீழ்வருவது: அரிகால் மாறிய அம்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி, பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர! நெடிய மொழிதலும், கடிய ஊர்தலும் செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே; சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம், செல்வம் என்பதுவே. (நற்றிணை - 210) இப்பாட்டு ஒரு மனிதனுடைய சிறந்த கடமை இன்னதென் பதை வலியுறுத்திற்று. தன்னை நம்பியிருக்கும் மனைவி மக்களை, உறவினரைக் காப்பாற்றுவது; அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வது, ஆண்மகன் கடமை என்பதை எடுத்துக் காட்டிற்று. இதுதான் உண்மையான செல்வம்; வீண் ஆடம்பர மான ஏனைய புகழும், வாகனாதிகளும், ஆடையணிகளும் செல்வம் அல்ல என்று சொல்லிற்று. பழந்தமிழ்ப் புலவர்கள் காதல் பாடல்களிலும் நீதியை - சன்மார்க்கத்தை எடுத்துக்காட்ட மறந்துவிடுவதில்லை என்ப தற்கு இப்பாடல் ஒரு உதாரணமாகும். இப்பாடல் மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. சோம்பர்க்கு வாழ்வில்லை சோம்பர் என்பவர் சோம்பித் திரிவர் என்பது நாம் இளமையில் படித்த பாடம். இது உண்மையான பாடம். ஒன்றும் செய்யாமல் - ஒன்றும் செய்யத் திறமையில்லாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள். இவர்கள் இவ்வுலக வாழ்விலே எந்தப் பயனும் பெறமாட்டார்கள்; தேம்பித் தான் திரிவார்கள். அதாவது உடைக்கும், உணவுக்கும் வழியின்றி வாடித் திரிவார் கள். இப்படித் திரியும் சோம்பேறிகளை நாம் காண்கிறோம். மனிதன், இவ்வுலகிலே சோற்றுக்குக் கேடாகவும், பூமிக்கு பாரமாகவும் வாழப் பிறக்கவில்லை. நல்ல செயல்கள் பலவற்றைச் செய்வதற்கே பிறந்தான். ஆகையால் நல்ல செயல்களைச் செய்கின்றவனே-செய்ய முயல்கின்றவனே மனிதன்; மனிதப் பிறப்பின் பண்பை அறிந்தவன். இதுவே ஆன்றோர்களின் - சான்றோர்களின் கொள்கை. மனிதன் என்றால் அவனைப் பலர் புகழ்ந்து பேச வேண்டும். எல்லா மனிதர்களையும் நாம் புகழ்ந்து பேசுவதில்லை. எத்த னையோ கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்தார்கள்; வாழ்ந்தார்கள்; மறைந்தார்கள். இன்றும் வாழ்கின்றார்கள். இவர்களிலே ஒரு சிலரைப்பற்றித்தான் உலகம் அறியும்; நாமும் அறிவோம். இவ்வாறு உலகம் அறியும் மக்களே புகழ்பெற்றவர் கள்; நம்மால் நினைக்கப்படும் மக்களே புகழ்பெற்றவர்கள். புகழ்பெற்று வாழ வேண்டுமானால் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் மக்கள் பெற வேண்டும். இவ்வுலகில் மக்கள் அடையவேண்டிய செல்வம் இம்மூன்றும் என்பதே முன்னோர்களின் கொள்கை. பழந்தமிழ் நூல்களிலே இம்மூன் றைப்பற்றித்தான் சொல்லப்படுகின்றன. இம்மூன்றையும் பொரு ளாகக் கொண்டே கவிதைகளும், நூல்களும் இயற்றப்பட வேண்டும் என்று மொழிந்தனர். பொருள் என்பது செல்வம்; முயன்று அதைச் சேர்க்க வேண்டும். அப்பொருளால் இன்பந் துய்க்க வேண்டும்; அப் பொருளால் அறம் புரிய வேண்டும்; அறம் புகழைத் தரும். பெருமையை உண்டாக்கும். மக்கள் இத்தகைய அறம், பொருள், இன்பங்களாகிய வாழ்க்கைப் பயனைப் பெற வேண்டும் என்பதைப் பற்றி பழங்காலத்துப் புலவர்கள் காதல் பாடல்களிலும் பாடியிருக் கின்றனர்; அகத்திணைப் பாடல்களிலும் அறம், பொருள், இன்பத்தை அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக நற்றிணைப் பாடல் ஒன்றைக் காண்போம். தலைவன் பொருள் தேடப் போனான்; அவன் காதலி அவனுடன் கருத்திலும் அன்பிலும் ஒன்றுபட்டவள். அவனை விட்டுப்பிரிந்து வாழ்வதால், பெருந்துயரத்தில் மூழ்கியவள். அவனும் அப்படித்தான். சிறிது நேரங்கூடப் பிரிந்து வாழ முடியாத அவ்விருவரும் சில மாதங்கள் பிரிந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம், செல்வந் தேடவேண்டிய அவசியந்தான். செல்வம் இருந்தால்தான் அவனும் அவளும் இன்புற்று வாழமுடியும். ஆதலால், அக்காதலன் பொருள்தேடப் போவதற்கு முடிவு செய்தான். இதை அறிந்த அவன் காதலி வருந்தினாள். காதலனை விட்டு எவ்வாறு பிரிந்திருப்பேன் என்று ஏங்கினாள். அப்பொ ழுது அக்காதலன் அவளுக்கு ஆறுதல்மொழி கூறினான். அவன் கூறிய ஆறுதல்மொழி மக்களின் கடமையை உணர்த்துவதாகும். இவ்வுலகிலே பிறந்த மக்கள் வீணாகப் பிறந்து, இருந்து, சாவதிலே பயன் இல்லை. புகழ் பெற வேண்டும். புகழ் சும்மா வந்துவிடாது. ஈதல் என்னும் அறத்தினால் தான் வரும். அறம் புரிவதோடு இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும். இன்பத்தை நுகரவேண்டுமானால் பொருள் வேண்டும். வீட்டிலே சும்மா இருப்பவர்க்குப் பொருள் கிடைத்து விடாது. பொருள் இருக்கும் இடத்தை நாடிச் சென்று, அதைச் சேர்க்க முயலவேண்டும். முயன்றால்தான் - முயல்வோர்க்குத்தான் பொருள் கிடைக்கும். வீட்டிலே சோம்பிக் கிடப்போர்க்குத் தப்பித் தவறிக் கூடச் செல்வம் கிடைக்காது. ஆதலால் நீ வருந்தாதே. நான் சென்று பொருள் தேடிக்கொண்டு மழைக்காலம் வருவதற்கு முன் வந்துவிடுவேன். என்று உறுதி கூறிச் சென்றான். இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கும் பாடல் மக்கள் கடமை யை உணர்த்தும் பாடல்; மக்களுக்கு அவர்கள் செய்யவேண்டிய கடமையை அறிவுறுத்தும் பாடலாகும். மழைக்காலம் வந்துவிட்டது; ஆயினும் காதலன் இன்னும் வரவில்லை. அப்பொழுது அத்தலைவி காதலன் கூறிய மொழி களை எடுத்துரைத்து வருந்தியதுபோலப் பாடப்பட்ட பாட்டு அது. இசையும், இன்பமும், ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்என வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை; அரும்பு அவிழ் அலரிச் சுரும்புண் பல்போது அணிய வருதும்நின் மணியிரும் கதுப்பு;என எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி, மைசூழ் வெற்பின் மலைபல இறந்து செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் கேளார் கொல்லோ தோழி! தோள் இலங்குவளை நெகிழ்த்த கலங்குஅஞர், எள்ளி நகுவதுபோல மின்னி, ஆர்ப்பது போலும்இக் கார்ப்பெயல் குரலே. (நற்றிணை - 214) இதுவே மக்கள் கடமையை உணர்த்தும் அப்பாடலாகும். தோழியே! புகழும், இன்பமும், அறமும் ஆகிய இம்முன்றும் சோம்பியிருப்போரிடம் தவறிக்கூட உண்டாவ தில்லைஎன்று கூறினார். இப்படிச் சொல்லிப் பொருள் தேடும் தொழிலை மேற்கொண்டு வேறுபட்ட கொள்கையுடன் சென்றார். அவர் செல்லும்போது, கார்காலத்திலே அரும்பு விரிந்த மலர்களையும், வண்டுகள் தேனையுண்ணும் பல வண்ணப் பூக்களையும் உன்னுடைய நீலமணி போன்ற நீண்ட கூந்தலிலே அணியும்பொருட்டு நாம் வந்துவிடுவோம் என்றார். இவ்வாறு என் மனங்கொள்ளும்படி உறுதியாகச் சூள் உரைத்துச் சென்றார். மேகங்கள் சூழ்ந்த வெற்பாகிய மலைகள் பலவற்றையும் கடந்து செல்வத்தைச் சேர்க்கும்பொருட்டு அவர் சென்றார். அவர் குற்றமற்றவர். என்பால் ஆராத அன்புள்ளவர். அவர் சென்றதனால் என் தோளில் உள்ள வளையல் கழலும்படி என் மனங் கலங்கிய துன்பத்தைக் கண்டு இகழ்ந்து சிரிப்பது போல மேகம் மின்னுகின்றது. ஆரவாரம் செய்வது போல மேகம் மழையைப் பெய்து இடியையும் எழுப்புகின்றது. இந்த இடியின் குரலை அவர் கேட்கமாட்டாரோ? அவர் கேட்டால் உடனே திரும்பி வந்துவிடுவார் அன்றோ? இதுவே மேலேகண்ட பாடலில் பொருந்தியுள்ள பொருள். தலைவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றான இந்த அகத்திணைப் பாட்டிலே உயர்ந்த சன்மார்க்க போதம் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இப் பாடல் கருவூர்க் கோசனார் என்னும் புலவர் பாடியது. பேதம் இல்லை உலகிலே ஒற்றுமை நிலவவேண்டும்; மனிதர்களுக்குள் இன்று நிலவி வரும் வெறுப்பும், பிரிவுகளும் ஒழிந்து போக வேண்டும்; எல்லா மக்களும் அன்புடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும்; மதத்தால் - மொழியால் - இனத்தால் - நாட்டில் மனிதர்கள் பிரிந்து நிற்கும் நிலை மாறவேண்டும். மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லா மனிதர்களும் ஒன்று தான்; இவ்வுலகில் இன்பத்துடன் வாழவே எல்லா மனிதர்களும் விரும்புகின்றனர். இத்தகைய மனிதர்கள் ஏன் பல்வேறு காரணங்களைச் சொல்லிக் கொண்டு பிரிந்து நிற்க வேண்டும்? வேண்டாம்; பிரிவினைகள் - வேற்றுமைகள் - வேண்டாம்! ஒன்றுபட்டு மனிதத் தன்மையுடன் வாழ்வோம் என்று தான் இன்று உலகில் உள்ள அறிஞர்கள் அனைவரும் சொல்லு கின்றனர். மனித குலம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு மாறாக நிற்கும் தடைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும். அப்பொழுது தான் ஒற்றுமை தழைக்கும் என்றும் அறிஞர்கள் சொல்லுகின்றனர். பண்டைக்கால மக்களுக்குள் ஒற்றுமையின்மையால் அவர்கள் அடைந்த தீமைகளுக்கு அளவில்லை. தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். பண்டைத் தமிழகம் எப்படி யிருந்தது? பண்டைத் தமிழக மக்களின் வாழ்வு எப்படியிருந்தது? என்பதை ஆராய்ந்தால் அக்கால வாழ்வைக் காணலாம். பண்டைத் தமிழகம் மிகவும் உன்னதமான நிலையில் இருந்தது. பண்டைத் தமிழக மக்களிடம் ஒன்றுபட்ட வாழ்வும், இன்ப வாழ்வும் தழைத்துக் கிடந்தன; நாடெல்லாம் பாலுந் தேனும் வழிந்தோடின; புலியும் மானும் ஒரு துறையிலே நீர் குடித்தன; பாம்பும் கீரியும் சேர்ந்து விளையாடின; கிளியும், பூனையும் கூடிக் குலாவின; பண்டைத் தமிழர்களிடம் எத்தகைய வேற்றுமையும் இல்லை என்று பேசி மகிழ்வோர் உண்டு. இது உண்மைதானா? என்பதைக் காணவேண்டும். இன்றுள்ள தமிழ்நாடு, இப்பொழுது இருப்பதை விடப் பரப்பிலே இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்த தமிழ்நாடு - பண்டைக் காலத்தில் மூன்று வல்லரசுகளின் கையிலே இருந்தது. தமிழகத்து முடியுடை வேந்தர்கள் மூவர். அவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்கள். இவர்கள் ஆண்ட நாடுகளைத் தான் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று சொல்லுகிறோம். மூன்று நாடும் மூன்று வல்லரசுகள் நாடுகளாகும். இவ்வரசுகள் ஒவ்வொன்றின் கீழும் பல சிற்றரசுகள். மூன்று வல்லரசுகள் நிலைபெற்ற தமிழகம் எப்படியிருந் தது? தமிழகத்தில் அமைதி-சமாதானம் நிலவியிருந்த காலம் குறைவு; அமைதியின்மையும், கலகமும், சண்டையும் குடிகொண் டிருந்த காலமே மிகுதி. சேர, சோழ, பாண்டியர்கள் ஒத்து வாழ்ந்த காலம் குறைவு; ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்த காலந்தான் மிகுதி. இந்த உண்மையைப் பேசும் மக்கள் வாழும் நாட்டில் - அரசுப் பிரிவினை காரணமாக - சதா சண்டையும் சச்சரவும் நடந்து கொண்டிருந்தால் அந்நாட்டு மக்கள் எப்படித்தான் ஒன்றுபட்டு வாழ்ந் திருக்க முடியும்? அரசு வேற்றுமை காரண மாக அவர்கள் அல்லற்பட்டார்கள் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய அவலநிலையைக் கண்ட தமிழ்ப் புலவர் ஒருவர் மிக்க மனவேதனைக்கு ஆளானார். மனிதர்க்கு மனிதர் வேற்றுமை ஏது? எல்லா மனிதர்களும் பண்பிலும், வாழ்விலும், எண்ணத் திலும், ஆசைகளிலும் ஒன்றாகத்தானே இருக்கின்றனர்? இருந்தும் அவர்களுக்குள் ஒருமைப்பாடு ஏற்படாத காரணம் என்ன? என்று ஆலோசித்தார். அவர் உள்ளத்திலே உண்மை பிறந்தது. தமது ஊர் வேறு, மற்ற மக்கள் வாழும் ஊர் வேறு; தமது நாடு வேறு, பிறர் வாழும் நாடு வேறு; என்று நினைக்கின்றனர். தமது நன்மை தீமைகளுக்கெல்லாம் தாம்தான் காரணமென்பதை மறந்தனர்; பிறர்தான் தமது நன்மை தீமைகளுக்குக் காரணம் என்று நினைக்கின்றனர். தாம் என்ற அகங்காரம் வேறு; இது மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது. தமது இன்ப துன்பங் களுக்குத் தமது வினைதான் காரணம் என்பதை அறியாமல் போய்விட்டனர் என்பதே அவர் கண்டறிந்த உண்மை. மக்கள் அனைவரும் இந்த உண்மையை உணர்ந்து விட்டால் இவ்வுலகில் எவ்வித வேற்றுமையும் காலூன்றி நிற்க முடியாது; வாழ முடியாது. உலகம் ஒன்றுபடும்; உலக மக்கள் மத, இன, மொழி, நாடு என்ற வேற்றுமையின்றி ஒன்றுபட்டு வாழ்வார்கள் என்று நம்பினார். உடனே தன் கருத்தை - முடிவை - உண்மையை ஒரு பாடலாக எழுதி வைத்தார். யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றுஓர் அன்ன சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல்பேர் யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆர்உயிர் முறைவழிப் படுஉம் என்பது, திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறநா - 192) இதுவே அப்பாடல். இப்பாடலை எழுதிவைத்த புலவர் கணியன் பூங்குன்றனார் என்பவர் எமக்கு எல்லாவூரும் சொந்த ஊர்தான்; எல்லா மக்களும் உறவினர்தாம்; தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல; துன்புறுவதும் துன்பந் தீர்வதும்கூட அவைபோலத்தான்; சாவதும் புதிது அன்று; பிறந்தவர் இறந்துதான் ஆக வேண்டும்; வாழ்வது என்றும் நிலையானது. இன்பமானது என்று மகிழ்ச்சியடையவும் இல்லை. ஏதேனும் வெறுப்பு வந்த போது மட்டும் இவ்வுலக வாழ்வு துன்பமு டையது என்று சலிப்படையமாட்டோம். மின்னுகின்ற மேகம் குளிர்ந்த மழையைப் பெய்வதால் எப்பொழுதும் கல்லிலே மோதி ஆற்றிலே, நீர் ஓட்டத்தின் வழியே அதிலே விட்ட தெப்பம் - மிதவை ஓடிக் கொண்டேயிருக்கும். அதுபோல் இன்பமோ துன்பமோ அடையும். இவ்வுண்மையை அறிஞர் களின் நூல்களால் தெளிவாக அறிந்தோம். ஆதலால் நன்மை செய்யும் பெரியோரைக் கண்டு வியப்படையவும் மாட்டோம்; சிறியோரைப் பழிக்கவும் மாட்டோம். இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். இப்பாடலைப் போற்றாத தமிழ்ப் புலவர்கள் இல்லை. இப்பாடலைப் பாடி, உலக ஒற்றுமைய விரும்பியவன் தமிழன்; உலகம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வழிகாட்டியவன் தமிழன் என்று புகழாத புலவர்கள் இல்லை. இப்பாடலைப் பாராட்டும் புலவர்களிலேயே பலர், இப் பாடலின் கருத்துக்கு மாறாக இனவேற்றுமை பாராட்டுவதைக் காண்கிறோம்; மொழி வேற்றுமை பாராட்டுவதைக் காண்கி றோம். நாட்டின் ஒற்றுமைக்கு விரோதமாக நாட்டைத் துண் டாட வேண்டும் என்று பேசுவதைக் காண்கின்றோம். உலகமே ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் கருத்துள்ள இப்பாடலைப் போற்றுவோர், நாடு, இன, மொழி, மத வெறுப் பிலோ, வெறியிலோ தலையிடமாட்டார்கள்; உலகம் ஒன்று படவே உழைப்பார்கள். இப்பாடலில் கூறும் பொருள்தான் உண்மை நெறியாகும்; சன்மார்க்க நெறியாகும். எல்லா மக்களும் - எல்லா நாட்டு மக்களும் ஒன்றுபட்டு வாழ்வதுதான் சன்மார்க்கமாகும். இத்தகைய சன்மார்க்க நெறியை ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன் கண்டறிந்த கனியன் பூங்குன்றனாரின் அறிவு வியத்தற்குரியது. அவர் காலத்தில் தமிழகத்தில் இருந்த சூழ்நிலை அவரை, இவ்வுண்மையைக் காணச் செய்தது என்பதில் ஐயம் இல்லை. இன்ப வாழ்வுக்கு அடிப்படை உலகிலே அனைவரும் இன்பமாக வாழ முடியும். இன் பத்துடன் வாழ்வதற்கு வழியுண்டு. மக்கள் அல்லற் படத்தான் இவ்வுலகிலே பிறந்தார்கள் என்று எண்ணுவது தவறு. வாழ்விலே அல்லல்கள் - துன்பங்கள் - அவதிகள் இருக்கலாம். ஆனால் அவைகளைத் தகர்த்தெறிந்து ஆனந்தமாக வாழ்வதற்கு இடம் உண்டு. இதுவே சங்க காலப் புலவர்களின் கொள்கை. மனிதன் வாழ்வதற்குத்தான் பிறந்தான்; சாவதற்குப் பிறந்தவன் அல்லன். மனிதனுக்கு அறிவுண்டு; எதைப் பற்றியும் சிந்திக்கும் மதியுண்டு; உண்மையைக் கண்டறியும் திறமையுண்டு. உண்மையென்று கண்டதை உறுதியுடன் நடத்தி வைக்கும் ஆற்றலும் மனிதனுக்கு உண்டு. பண்டைக் காலத்தில் மனிதனால் செய்யமுடியாதவை என்று நினைத்திருந்த காரியங்கள் பல. மனிதனால் செய்ய முடியாத காரியங்கள் இயற்கையாக நடைபெற்றால் அவை களைத் தெய்வீக நிகழ்ச்சிகள், தெய்வத்தால் நடத்தப்படுகின்ற வைகள் என்று நம்பினர். இன்று அந்த நம்பிக்கையிலே மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மனிதனால் ஆகாதவை என்று நினைத்திருந்த பல காரியங்கள் இன்று மனிதனாலேயே செய்யப்படுகின்றன. உதாரணமாக ஒன்றை மட்டும் காண்போம். பண்டையோர், வானத்தில் செல்பவர்கள் - வான வழியிலே நடப்பவர்கள் தேவர்கள்; அவர்கள் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர்கள். அவர்கள் வாழும் உலகமே வேறு; அது மண்ணுலகத்திற்கு அப்பால் இருக்கின்றது. அவ்வுலகத்துக்கு தேவலோகம் - அமரலோகம் என்று பெயர். அந்த உலகத்தின ரான தேவர்களால்தான், நினைத்த இடத்திற்கு வான வழியிலே பறந்து - நடந்து போக முடியும். இது மனிதனால் ஆகாத காரியம் என்று நம்பி வந்தனர். தேவர்களைப் போல வானவீதியிலே நாமும் செல்ல முடியும் என்று நம்பிய மனிதர்களும் அக்காலத்தில் இருந்தனர். அவர்கள் யோக மார்க்கத்தால் - யோகசித்தியால் அக்காரியத் தைச் செய்யலாம் என்று எண்ணினர். யோகிகள், ஞானிகள் என்போர் தங்கள் தெய்வ சக்தியால் வானத்தின் வழியே சென்ற தாகக் கதைகளில் காண்கிறோம். இக்கதைகள், மனிதர்களும் வானவர்களைப் போல - தேவர்களைப் போல ஆகாய மார்க்க மாகச் செல்லமுடியும் என்ற நம்பிக்கை பண்டை மக்களிடமும் இருந்தது என்பதற்கு உதாரணம். இன்று மனிதன் வானத்தில் பறப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். வானவூர்திகள் - ஆகாய விமானங்கள் பறக்காத நாள் இல்லை; நாடுகள் இல்லை. வானத்தில் இயங்குவது தெய்வச் செயல் என்று நினைத்திருந்த கொள்கை இன்று மறைந்துவிட்டது. இதுபோலவே தெய்வச் செயல்கள் என்று எண்ணப்பட்ட பல செயல்கள் இன்று மனிதச் செயல்களாக மாறி வருகின்றன. இத்தகைய சக்தி படைத்த மனிதன் இவ்வுலகில் ஏன் துன்பமடைய வேண்டும்? வாழ்வை வெறுக்க வேண்டும்? துன்பம் அடைய வேண்டாம்; வாழ்வை வெறுக்கவும் வேண் டாம். எல்லா மனிதர்களும் இன்பத்துடன் வாழ முடியும். வாழ்வ தற்கான வழி உண்டு. இந்த உண்மையைச் சங்ககாலப் புலவர்ஒருவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உலகம் இன்பமாக வாழ்வதற்கு அவர் சொல்லும் வழியைக் காண்போம். இவ்வுலகம் நிலையற்றது; அழிந்து விடக்கூடியது; ஆதலால் இவ்வுலக வாழ்வில் இன்பம் இல்லை என்று சொல்லு வது உண்மையன்று. இவ்வுலகம் உண்டு; இவ்வுலகிலே இன்பம் உண்டு; இவ்வுலகிலே வாழ்வு உண்டு. இது உண்மை. இதைத் தெளிவாகச் சொல்லுகிறேன் கேளுங்கள். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும், தந்நலமுடைய வராய் இருந்தால்தான் இவ்வுலகில் இன்பம் இல்லையென்று சொல்லலாம்; தந்நலம் பிடித்தவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ மாட்டார்கள்; ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொள்ள மாட்டார்கள்; ஒருவரிடம் மற்றொருவர் அன்புகாட்ட மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள்; தமக்குள் அடித்துக்கொள்ளுவார்கள்; ஒருவரை ஒருவர் அழிப் பதற்கே - ஒழிப்பதற்கே - கெடுப்பதற்கே சமயம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தகைய மிருகத்தன்மை படைத்தவர் கள் நிரம்பிய சமுதாயத்திலே எவரும் இன்பமாக அமைதியாக - மகிழ்ச்சியாக வாழ முடியாது என்பது உண்மை. ஆனால் உலகம் இப்படியில்லை. உலகில் உள்ள எல்லா மனிதர்களும் தந்நல வெறி கொண்டவர்கள் அல்லர். மனிதப் பண்புள்ளவர்கள் ஏராளமாக இவ்வுலகில் இருக்கின்றனர். ஆகையால் இவ்வுலகில் இன்பம் உண்டு; வாழ்வுண்டு. உலகத்தை இன்பமயமாக்கும் மனிதத்தன்மையுள்ளவர்கள் யார் தெரியுமா? அதையும் சொல்லுகிறேன் கேளுங்கள். மக்க ளுக்குக் கிடைக்காத உயர்ந்த இனிய உணவு, இந்திரர் - அதாவது தேவலோகத்தில் உள்ளவர்கள் உண்ணும் உணவாகி அமுதம் கிடைத்தால்கூட அதைத் தாம் மட்டும் உண்ணமாட்டார்கள். இது இனிய உணவு; கிடைத்தற்கரிய உயர்ந்த உணவு; ஆதலால் நாமே உண்டு மகிழ்வோம் என்று எண்ண மாட்டார்கள். பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள். யாரிடத்திலும் வெறுப்புக் காட்டமாட்டார்கள்; எல்லா மக்களிடமும் அன்பு காட்டுவார்கள். சும்மா சோம்பேறித் தனமாகத் தூங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள்; சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். பிறர் - அறிஞர்கள் செய்வதற்கு அஞ்சுகின்ற கெட்ட காரியங்களைத் தாமும் செய்வதற்கு அஞ்சுவார்கள்; கெட்ட காரியங்களைச் செய்யவே மாட்டார்கள். ஆனால் அழியாத புகழ் உண்டாகக்கூடிய நல்ல காரியங்களை - சிறந்த செயல் களைச் செய்யப் பின்வாங்க மாட்டார்கள்; தமது உயிரைக் கொடுத்தாவது அக்காரியங்களைச் செய்து முடிப்பார்கள். பிறர் பழிக்கத்தக்க - வெறுக்கத்தக்க - பிறருக்ககுத் தீமை உண்டாக்கத்தக்க - பழிச் செயல்களைச் செய்வதற்கு முன்வரவே மாட்டார்கள். பழிச் செயலைச் செய்வதனால், இந்த உலகமே பரிசாகக் கிடைப்பதானாலும் செய்யவே மாட்டார்கள். சிறிதும் சோர்வடையமாட்டார்கள்; உள்ளத்தில் உறுதியுடன் இருப்பார்கள். இத்தகைய தன்மையுள்ள பெருமையுள்ளவர்கள் இவ்வுல கில் இருக்கின்றனர். அவர்கள் தம் நலத்தைக் கருதி உழைக்காத வர்கள்; இவ்வுலக மக்களின் உயர்வுக்காகவே உழைப்பார்கள். இத்தகையோர் இவ்வுலகில் இருக்கின்றனர்; ஆதலால் இவ்வுல கிலே இன்பம் உண்டு; வாழ்வு உண்டு. இதுவே அந்தப் பழம்புலவரின் பாட்டு. இப்பொருள மைந்த பாடல் கீழ்வருவது; உண்டால் அம்ம! இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்; துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின் உலகுஉடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்; அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்குஎன முயலா நோன்தாள் பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே. (புறநா. 182) இது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் புலவர் பாட்டு. கிடைத்ததைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ண வேண்டும்; சோம்பேறித்தனம் கூடாது; யாரையும் வெறுக்கக் கூடாது; அஞ்சத்தக்க பாவ காரியங்களைச் செய்யக் கூடாது; நல்ல செயல்களையே செய்ய வேண்டும். எவ்வளவு தான் லாபம் கிடைப்பதாயினும் பழிச்செயல்களைச் செய்யக் கூடாது; இத்தகைய மன உறுதி வேண்டும். தந்நலமின்றிப் பிறர் நன்மைக் காக உழைக்க வேண்டும் என்பதே இப்பாடல் அறிவிக்கும் நீதி. எல்லா மக்களும் இத்தகைய நீதியைப் பின்பற்றுவார் களானால், இவ்வுலகில் துன்பமேது? துக்கமேது? இவ்வுலகை யார்தான் வெறுப்பார்கள்? பழங்காலத் தமிழர் கண்ட இந்த உண்மையைத்தான் வள்ளுவரும் வலியுறுத்தினார். பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பதே வள்ளுவர் வாய்மொழியாகும். கிடைத்த உணவைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துப் பல உயிர்களையும் காப்பாற்று தல் வேண்டும்; இதுதான் அற நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறமாகும். இதுவே வள்ளுவர் சொல்லியதன் பொருள். ஆகவே உலகம் பட்டினியின்றி வாழவேண்டும்; பட்டினி யில்லாத உலகிலேதான் மக்கள் வாழ்வு இன்பமாக இருக்கும்; ஆகையால் பட்டினியற்ற உலகத்தைக் காண வேண்டும். இது பழம்புலவர்கள் காட்டும் சன்மார்க்கமாகும். இத்தகைய உலகில் தான் ஒழுக்கமும், நீதியும், அன்பும் நிலைத்து வாழும். செல்வரும் ஆலமரமும் வறியவர்க்கு இவ்வுலகில் வாழ்வில்லை. செல்வம் உள்ளவர் களே சிந்தை மகிழ்ந்து சிறந்த இன்பத்தை நுகர்வார்கள். இது எந்தக் காலத்திலும் உள்ள இயற்கை உண்மை. ஆதலால் தான் அக்காலத்திலும் இக்காலத்திலும் செல்வத்திற்கு மதிப்புக் கொடுத்தனர். ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுவோம். மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்கு வேண்டிய பண்டங்கள் எல்லாம் நிரம்பியிருக்கும் நாட்டில்தான் அமைதி நிலவும்; இன்பம் தழைக்கும்; மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்கு வேண்டிய கலைகள் எல்லாம் வளர்ந் திருக்கும்; மக்கள் மனப் பண்பும் உயர்ந்திருக்கும். அவர்கள் ஒழுக்கந் தவறாமல் வாழ்வர்; உலகுக்கு வழிகாட்டும் நன்மக்களாக நாள்தோறும் சிறந்து வாழ்வார்கள். வறுமை குடிகொண்டிருக்கும் நாட்டிலே அமைதியைக் காணமுடியாது; மக்களிடையிலே ஆனந்தம் தாண்டவம் ஆடாது; உயிரினும் சிறந்த ஒழுக்கத்தையும் உதறித் தள்ளுவார்கள். தங்கள் வாழ்க்கைப் பள்ளத்தை நிரப்பிக் கொள்ளுவதே மக்களுடைய குறிக்கோளாக இருக்கும். அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். பஞ்சப் பிணி மக்களை வாட்டுங் காலத்திலே இத்தகைய கொடும் நிகழ்ச்சிகளை நாம் கண் கொண்டு பார்க்கலாம். பண்டோ, அல்லது இன்றோ தோன்றிய இதிகாச புராணங்கள் எவற்றை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலே நாட்டுச் சிறப்புக்களையும், நகரப் பெருமைகளையும் பற்றி நவில்வதைக் காண்கிறோம். நாட்டுச் சிறப்பும், நகரப் பெருமை களும் புலவர்களுடைய கற்பனைத் திறத்திலே பிறந்த காட்சி களாக இருக்கலாம். ஆயினும் அவற்றுள் ஓர் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அந்த உண்மை, வறுமையற்ற நாடு; செல்வம் நிறைந்த நகரம் என்பது தான். இப்படிப் புகழ்ந்து பாடியிருப்பது தான் அவ்வுண்மை. வறுமையற்ற நாட்டிலேதான் மக்கள் மனக்குறையில் லாமல் வாழ்வார்கள். செல்வம் நிரம்பிய நகரத்திலேதான் மக்கள் சிறுமைப்படாமல் வாழ்வதற்கு வழியுண்டு என்ற உண்மைகளை உணர்த்துவதற்காகவே புலவர்கள், நாட்டு, நகரச் சிறப்புகளைப் புனைந்துரைத்தனர். இந்தப் பொதுக்கொள்கை ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். செல்வம் பெற்ற மனிதனே சிந்தையிலே கலக்க மின்றி அமைதியுடன் வாழமுடியும். இதை எண்ணித்தான் இடம், பொருள், ஏவல் என்ற மூன்றையும் முதற்செல்வமாகக் குறித்தனர். வாழ்வதற்கு வசதியுள்ள இடம், வேண்டியவற்றைப் பெறுவதற்குப் போதுமான செல்வம், உதவி செய்யும் உறவினர்கள் இவை மூன்றும் உடையவரே இன்பத்துடன் வாழ்க்கை நடத்த முடியும் என்றனர். செல்வம் பெற்றவர்கள், அவர்கள் மட்டும் அச் செல்வத் தைக் கொண்டு இன்பம் நுகர வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை. தந்நலத்துக்காக மட்டும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று ஒருவரும் உரைக்கவில்லை. தாம் வாழ்வும், தம்மை அண்டியிருப்போர் வாழ்வும், துன்புறுவோர் துயரைத் துடைக்கவுமே அரும்பொருளைச் சேர்க்க வேண்டும் என்பதே நீதி நூல்களின் கொள்கை. செல்வத்தைச் சேர்த்து வைத்து அழகு பார்ப்பவனை அறிஞர்கள் வெறுத்தனர்; அவனை கஞ்சன், உலோபி, தந்நலக் காரன் என்றெல்லாம் பெயரிட்டு அழைத்தனர். பிறருக்கு உதவும் நோக்குடன் பொருள் ஈட்டும் பெருந் தன்மையுள்ளவனைப் பாராட்டினர். உபகாரி, கொடை வள்ளல், பேரறிவாளன், நல்லறிவாளன் என்றெல்லாம் புகழ்ந்தனர். ஊர்உணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம் பேர் அறிவாளன் திரு என்பது வள்ளுவர் வாய்மொழி. பெரியோர்களால் பாரட்டப் படும் பெரிய அறிவுள்ளவனிடம் உள்ள செல்வம் அனைவர்க்கும் பயன்படும்; அது ஊராரால் தண்ணீர் எடுத்து உண்ணப்படும் குளத்திலே நீர் நிறைந்திருப்பது போன்றதாகும் என்பது இக்குறளின் பொருள். ஒருவனுடைய செல்வம் பலர்க்கும் பயன்படவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. பலர்க்கும் உதவி செய்யும் செல்வர் களைத்தான் பண்டைத் தமிழர்கள் சிறந்த செல்வர்களாக நினைத்தனர்; போற்றினர். அறிவுள்ளவர்களிடம் - இரவலரை வரவேற்று உதவி செய்யும் கருணையாளர்களிடம் - செல்வம் நிறைந்திருக்க வேண் டும். இவர்களிடம் உள்ள செல்வம், வறுமையுள்ளவர்களின் செல்வமாகும். இத்தகைய புரவலர்களிடம் உள்ள வறுமை இரவலர்களின் வறுமையே ஆகும் என்ற உண்மையைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று எடுத்துரைக்கின்றது. அப் பாடல் செல்வரை ஆலமரத்திற்கு ஒப்பாகவும், அவர்களிடம் செல்லும் இரவலரைப் பறவைக் கூட்டத்திற்கு ஒப்பாகவும் கூறியிருக் கின்றது. இத்தகைய உவமையமைந்த அரிய செய்யுளைக் கீழே காண்போம்: கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் செலவு ஆனாவே கலிகொள் புள்இனம்; அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவுஎதிர் கொள்ளும் பெரும்செய் ஆடவர் உடைமை, ஆகும் அவர் உடைமை; அவர்இன்மை, ஆகும் அவர் இன்மையே. (புறநா. 199) தெய்வம் வாழ்கின்ற ஆலமரத்தினது பெரிய கிளையிலே பழுத்த பல பழங்களையும், நேற்று தான் கொத்தித்தின்றோ மென்று நினைத்து ஓசையிடுகின்ற பறவைக் கூட்டம், மீண்டும் அந்த மரத்தை அணுகாமல் இருப்பதில்லை. அத்தன்மையுள்ள வர்களே இரவலர்களும். அவர்களை ஆதரிக்க எதிர்கொண்டு அழைத்து மிகுந்த நன்மையைச் செய்வர் கொடை வள்ளல்கள். அத்தன்மையுள்ளவர்களின் உடைமை - செல்வம் - அவ்விரவலர் களின் செல்வமே யாகும். அவ்வுபகாரிகளின் வறுமை, அவ்விர வலர்களின் வறுமையே ஆகும். செல்வம் பெற்ற மக்கள் எப்படி, வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே இச் செய்யுள். இக்கால நிலைக்கு இச் செய்யுளின் கருத்து முரண்பட்டதாயிருக்கலாம். இக்காலத்திலே பிறரிடம் சென்று பிச்சை கேட்டுப் பொருள் வாங்கிப் பிழைப்பதை அறிவுள்ளோர் ஆதரிப்ப தில்லை. பிச்சை யானாலும் - யாசகமானாலும் - நன்கொடை பெறுவதனாலும் - எல்லாம் ஏறத்தாழ ஒன்றே தான். உழைக்க வேண்டும்; ஊதியம் பெற வேண்டும்; வாழ வேண்டும்; ஊதியம் என்பது பற்றாக்குறையாக இல்லாமல் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்க வேண்டும்; இதுவே இக்காலக் கொள்கை. இக்கொள்கைக்கு பண்டைக் கொள்கை முரண்பட்டது தான். ஆயினும் செல்வமுள்ளவர் கொடையாளியாக வாழ வேண்டும் என்னும் கொள்கை பண்டைக்காலச் சமுதாய அமைப்பிலே இன்றியமையாத ஒரு பண்பட்ட கொள்கையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. செல்வம் படைத்தவர்கள் சிலர்; வறியவர்கள் பலர். இந்தச் சமுதாய அமைப்பு நிலைத்திருந்த காலத்திலே ஈகையும், இரப்பும் நிலவியிருந்தன. இதனாலேயே மக்களுக்குள் சண்டை சச்சரவின்றி ஒழுக்கமும் நீதியும் நிலவியிருந்தன. பிறருக்கு உதவி செய்வது மக்கள் கடமை; பிறருக்கு உதவி செய்யும் குணமே மக்கட் பண்பு என்னும் உண்மையும் உதவி செய்வோர்களின் மூலம் உலகிலே பரவி வந்தது. மிருகங்கள் பறவைகளை விட மனிதர்கள் உயர்ந்த பண்புள்ளவர்கள் என்பதை மெய்ப்பிக்க இதைத் தவிர வேறு வழியில்லை. ஆதலால்தான் ஈகைத் தன்மையை ஏற்றிப் போற்றினர். செல்வத்தின் பயன் செல்வம் நிலையற்றது என்று எல்லோரும் பேசுகின்றனர். அது ஒருவரிடம் அசையாமல் நிலைத்திருக்கக் கூடியது அன்று; கை மாறிக் கொண்டுதான் இருக்கும். செல்வம் என்னும் சொல்லுக்கே ஓரிடத்தில் நிலைத்து வாழ்வதன்று என்பதுதான் பொருள். நாம் செல்வம்; அதாவது நாம் செல்வோம்; என்று சொல்லிக் கொண்டிருக்கிறதாம் அது. இந்த மாதிரி செல்வத்தின் நிலையாமையைப் பற்றி எடுத்து ரைப்போர் பலர். நீதி நூல்கள் எல்லாம் இதைப் பற்றியே அறிவுறுத்துகின்றன. படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் இந்த உண்மையைப் பற்றிப் பேசுவதற்குப் பின்வாங்குவதில்லை. செல்வம் என்பது நாம் தேடுவதுதான், இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போய்விடும்; மறுநாள் வரும். ஆதலால் அதன் இழவுக்காக ஏக்கம் உறக் கூடாது என்று இனிமையாக உரை யாடுவோரும் உண்டு., செல்வம் நிலையற்றதென்று எவ்வளவுதான் வாய் வலிக்கப் பேசினாலும் அதன்மேல் ஆசை வைக்காதவர்கள் யாரும் இல்லை. செல்வம் இருந்தால்தான் இன்பமாக வாழ முடியும்; செல்வம் இருந்தால்தான் எண்ணிய செயல்களையெல்லாம் எளிதிலே நிறைவேற்ற முடியும்; செல்வமிருந்தால் தான் மற்ற மக்கள் மதிக்கும்படி மனிதர்களாக வாழ முடியும்; இந்த நிலை இப்பொழுதுள்ள சமுதாய அமைப்பில் ஏற்பட்டுவிட்டது. இந்தக் காரணத்தால்தான் செல்வத்தைச் சேர்க்க முயலாதவர் கள் இல்லை; அதன்மேல் ஆசைப்படாதவர்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்கள் சூழ்நிலையைப் பொறுத்தே மாறுகின்றன. உழைத்தால் போதும்: அவர்களுக்கு உணவுண்டு; அவர்கள் விரும்பும் காட்சிகளைக் காண வசதியுண்டு; பொழுது போக்கப் போதுமான நேரம் உண்டு; உழைக்கமுடியாத வயதேறிய பருவத்திலும் பட்டினி கிடந்து சாவாமல் வாழ முடியும்; அவர்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கும் இத்தகைய வசதியுண்டு என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் யாரும் செல்வத் தைச் சேர்க்க ஆசைப்படமாட்டார்கள். மனித சமுதாயத்தில் இந்த நிலை இப்பொழுது இல்லை. இப்பொழுது மட்டும் அன்று; ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே செல்வம் உள்ளவர்கள்தாம் சிறந்து வாழ முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது. ஆதலால் ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த மக்களிலும் பலர் பேராசைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். செல்வத்தின் உண்மைத் தன்மையை உணராமல் தங்கள் நன்மைக்கு மட்டும் என்றே செல்வத்தைச் சேர்க்கத் தொடங்கினர். இவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை; மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்ணால் கண்டாலும் மனதிலே அதைப் பற்றி எண்ணுவதில்லை; வறுமையால் வருந்துகின்றவர்கள் தங்கள் துயரத்தைச் சொல்லிக் கொண்டாலும் அச் சொற் களைக் காதிலே போட்டுக் கொள்வதில்லை. இப்படிப் பட்ட பேராசை பிடித்த செல்வர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே இருந்தனர். இவர்களைக் கண்ட அறிஞர்கள் மனம் வருந்தினர். உலகில் உள்ள செல்வம் எல்லாம் பேராசை பிடித்த ஒரு சிலரிடம் சேர்ந்து விட்டால் அது மனித சமுதாயத்திற்குப் பெருந் தீமையை உண்டாக்கிவிடும்; மக்கள் அனைவரும் இல்லாமைக் கொடுமை யால் இறந்துபடுவார்கள். இல்லாமை மனித சமுதாயத்தை ஆட்கொள்ளுமானால் மக்களின் கட்டுத் திட்டங்கள் குலைந்து விடும்; ஒழுக்கக் கேடுகள் உருப்பெற்று உலவத் தொடங்கும்; பல மக்கள், மக்கள் பண்பையே மறந்துவிடுவார்கள் என்ற உண்மையைச் சிந்தித்தார்கள் அந்த அறிஞர்கள். செல்வம் ஓரிடத்தில் குவியாமல் இருக்க வேண்டும்; அது பலரிடமும் பரவவேண்டும் என்பதே அந்த அறிஞர்களின் கொள்கை. ஆதலால் செல்வத்தின் பயன் ஈகை தான் என்று வற்புறுத்திக் கூறினர். தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு உதவுகின்றவனே உத்தமன்; நல்லவன்; உயிர் இரக்கம் உள்ளவன்; மனிதருக்குள் மாணிக்கமானவன்; புகழுக்கு உரியவன்; மனிதனாகப் பிறந்த பயனை அடைகிறவன் என்றெல்லாம் அறிவுரை புகன்றனர். இதனால் செல்வமுள்ளவர்களிலே பலர் திருந்தினர்; பிறர் துயரங் கண்டபோது உதவினர்; பிறருக்கு உதவி செய்வதே தம் கடமையென்று கொண்டனர்; துன்புறுவோரை இன்புறச் செய்து, அதனால் தாமும் இன்புற்றனர். இத்தகைய இரக்கம் உள்ள செல்வர்களால்தான் பண்டைத் தமிழகத்திலே கலைகள் வளர்ந்தன. காவியங்கள் வளர்ந்தன; மக்களுக்குள் அன்பும், தொடர்பும், சமுதாய ஒற்றுமையும் பிறந்து வளர்ந்தன. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் செல்வம் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறிய நீதிப்பாடல்கள் பலவுண்டு. அப் பாடல்களின் கருத்துக்கள் இன்றும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வன. அவை என்றும் அழியாத உண்மையை உரைப்பன. அப் பாடல் களிலே ஒரு பாடல்தான் கீழ்வருவது: தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, நப்புத பலவே. (புறநா. 189) இப் பாடல் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரனாரின் பாட்டு. தமிழரின் அருள் நெறியை விளக்கும் பாடல்களிலே இது ஒரு தலைசிறந்த பாட்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகை ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசனாயினும் சரி, இரவும் பகலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனாயினும் சரி - இருவரும் உண்பது நாழி அரிசிச் சோறுதான்; உடுப்பவை இரண்டு தான்; இடையில் ஒன்று, தோளில் ஒன்று; ஆக இரண்டேதான்; மற்றவையும் அப்படித்தான். ஆதலால் செல் வத்தின் பயன், இல்லாதார்க்கு ஈவதாகும். இப்படியில்லாமல், நாம் மட்டும் அதை அனுபவிப்போம் என்று இருந்தால் அதனால் வரும் தவறுகள் பல உண்டு. இதுதான் மேலே கண்ட செய்யுளின் பொருள். உணவு, உடை, உறக்கம், இன்பம், துன்பம், சாவு, வாழ்வு எல்லாம் அரசனுக்கும் உண்டு; ஆண்டிக்கும் உண்டு. இவற்றிலிருந்து யாரும் தப்புவதில்லை; ஆதலால் செல்வத்தைப் பெற்றால் அதை வறியோர்க்குக் கொடுத்து வாழ்தலே சிறந்தது என்ற நீதியை இப் பாடல் எடுத்துரைத்தது. நமக்கு மட்டுந் தான் செல்வம் என்று சேர்த்து வைத்துக் கொள்வதால் பல ஆபத்துக்களும் உண்டு; அத்தகைய ஆபத்துக் களுக்கு ஆளாகாமல் செல்வம் பெற்ற போதே அதை நல்வழி யிலே பயன்படுத்து என்று எச்சரிக்கையும் செய்கிறது இச் செய்யுள். ஏறத்தாழ ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றியது இப் பாட்டு. செல்வம் செலவு செய்வதற்கே உரியது; வருந்துவோர்க்கு வழங்குவதற்கு உரியது. இவ்வாறு செய்யாவிட்டால் செல்வத் தால் பயன் இல்லை.இச் செய்தியைக் குறிப்பதே இப்பாடல். நயமொழியால் நன்மை குற்றம் செய்வது மக்கள் இயற்கை அன்று. குற்றவாளி களில் பெரும்பாலோர் சூழ்நிலையைப் பொறுத்தே குற்றவாளி கள் ஆகின்றனர். சில சந்தர்ப்பங்கள் அவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுகின்றன. நேர்மையிலே நிலைத்த உறுதியுள்ள வர்கள் சூழ்நிலைச் சிறையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். குற்றப் படுகுழியிலே தம்மைத் தள்ளும் சந்தர்ப்பப் பிடியிலி ருந்து விடுபடுவதற்கு மனஉறுதியும் ஆண்மையும் வேண்டும். இவை இல்லாதவர்களே குற்றங்களைப் புரிகின்றனர். பொய் சொல்வது குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பொய் சொல்லாதவர்கள் ஒருவருமே இல்லை யென்று சொல்லிவிடலாம். சிறு காரியங்களில் கூடச் சிலர் பொய் சொல்லுகின்றனர். உண்மையைச் சொன்னால் தமது திறமையைக் குறைவாக நினைக்கிறார்கள்; தமது மதிப்புக்குப் பங்கம் உண்டாகும் என்று நினைத்துப் பொய் சொல்கின்றவர்கள் பலர். இதற்கு ஒரு உதாரணம்; நாம் இருபது ரூபாய்க்கு ஒரு பண்டம் வாங்கியிருப்போம். அந்தப் பண்டத்தை மற்றவர்கள் இருபது ரூபாய் மதிப்பிடுவார்களா? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகிறது. இந்த நிலையில் அப் பண்டத்தின் விலையென்ன வென்று நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். நாம், உள்ள விலையைக் கூறாமல், ஐந்து ரூபாய் குறைத்துப் பதினைந்து ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறுவோம். உடனே அந்த நண்பர், இதன் விலை இருபது ரூபாய் பெறும்; நீங்கள் மலிவாகத்தான் வாங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டால் போதும்; நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். பண்டம் வாங்குவதில் நாம் ஏமாறவில்லை; சாமர்த்தியமாகத்தான் வாங்கியிருக்கிறோம். என்ற மனநிறைவு உண்டாகும். அந்த நண்பர் நாம் வாங்கியதாகச் சொல்லிய பதினைந்து ரூபாய் சரியான விலைதான் என்று சொல்லிவிட்டால் போதும்; நம் மனத்துக்குள் சிறிது வருத்தந்தான் தோன்றும். ஐந்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து ஏமாந்து போனோமே என்று எண்ணா மலிருக்க முடியாது. ஆயினும் நாம் இருபது ரூபாய் கொடுத்த செய்தியை அவருக்குத் தெரியாமல் மறைத்து விட்டதில் சிறிது மகிழ்ச்சி; நமது ஏமாந்த தன்மை வெளிப் படாமல் போனதிலே ஒரு திருப்தி. இத்தகைய சிறு குற்றங்களைப் பலர் செய்கின்றனர். பெருங் குற்றங்களைச் செய்வோர் சிலர் உண்டு. அவர்களை யெல்லாம், வேண்டும் என்றே குற்றம் செய்கின்றவர்கள்; தலைக் கனம் காரணமாகத் தவறு செய்கின்றனர்; என்று சொல்லி விட முடியாது. சோற்றுக்கு வழியில்லாதவன் திருட்டு தொழிலிலே இறங்குகின்றான். அவனுக்குத் தான் செய்யும் தொழில் மோசமானது என்பது தெரியும்; அகப்பட்டால் மானம் போகும் என்பதையும் அறிவான்; தான் மனித சமுதாயத்தில் மதிப்புள்ள வனாக வாழ முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் திருடத் தொடங்குகின்றான். இதற்குக் காரணம் வறுமை தான்; பிழைப்பதற்கு வேறு வழியில்லாமைதான். பிறரை ஏமாற்றிப் பணம் பறிப்பது; கடன் என்று பணம் வாங்கிக் கொண்டு பிறகு அதைக் கொடுக்க முடியாமல் திண்டாடுவது; கடன் கொடுத்தவர் கேட்டால், நீ கொடுக்கவும் இல்லை, நான் வாங்கவும் இல்லை என்று பேசுவது; கடன் கொடுத்தவர், வாங்கினவர் இருவருக்கும் பேச்சு வளர்ந்து, கைகலப்பு ஏற்பட்டு, அதன் மூலம் குத்து, வெட்டு, கொலை வரையிலும் போய்விடுவதும் உண்டு. இவையெல்லாம்கூட சூழ்நிலை காரணமாக ஏற்படுவதுதான். சூழ்நிலை காரணமாக ஏற்படும் குற்றங்களைத் திருத்துவது அவ்வளவு எளிதல்ல; குற்றங்கள் நிகழ்வதற்கேற்ற சூழ்நிலைகளே தோன்றகூடாது. அப்பொழுதுதான் அக் குற்றங்களும் பிறந்து வளராமல் இருக்கும். உலகத்தில் உள்ள இந்தச் சூழ்நிலையைச் சிறிது சிறிதாகத்தான் மாறும்படி செய்ய வேண்டும். குற்றம் செய்யவேண்டிய அவசியமே இல்லை; யாருக்கும் எந்தத் தீமையையும் செய்யாமல் மானமாக வாழ்க்கை நடத்த முடியும்; என்ற நிலையில் உள்ளவர்களும் குற்றம் செய்கின்றார்கள் என்றால் அது மன்னிக்க முடியாத குற்றம்தான். பேராசை, சுயநலம், கடினசித்தம், அறியாமை இவை காரண மாகத்தான் அவர்கள் குற்றம் புரிகின்றனர். போதுமான வருமானம் இருக்கின்றது. நிலைத்த வருமான முள்ள வீடுகள், நிலங்கள், தோட்டங்கள் முதலான செல்வங் களும் இருக்கின்றன. இருந்தும், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க நினைக்கின்றோம். இப்படி நினைப்பதும், செய்வதும் தவறல்ல. தாராளமாக நினைக்கலாம்; செய்யலாம். ஆனால் இந்த ஆசை காரணமாகப் பிறரை ஏமாற்றிப் பொருள் பறித்தல்; பிறர் செல்வத்தை வஞ்சித்து கவர்தல்; தம்மை நம்பிச் செல்வத்தை ஒப்படைத்தவர்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிடுதல்; கள்ளச் சந்தையிலே கொள்ளையடித்தல் இவைபோன்ற காரியங்களிலே ஈடுபடுவோர் சிலர் உண்டு. இவர்கள் எல்லாம் மக்கள் சமுதாயத்திற்கே தீங்கிழைப் போராவர். பொது ஊழியர்கள், உத்தியோகதர்கள், அதிகாரிகள், அரசை நடத்தி வைப்பவர்கள் என்பவர்களிலே சிலர் தம் கடமையைக் கைவிட்டவர் களாயிருப்பதைக் காண்கின்றோம். இவர்களிலே சிலர் தமது அதிகார உரிமையை வரம்பு மீறிய வழியிலே பயன்படுத்துவதையும் பார்க்கின்றோம். பொதுமக்க ளிடம் பணம் பறிப்பதையும் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அரசுக்குக் கேடு சூழ்பவர்கள்: பொது மக்களுக்குத் தீங்கு செய்பவர்கள். இவர்கள் பொதுமக்களால் வெறுக்கப் படுவார்கள். இத்தகைய சுயநலம் பிடித்த அதிகாரவர்க்கம் நிறைந்த அரசாங்கம் நிலைத்து வாழமுடியாது; விரைவில் அழிந்து விடும். அதிகாரவர்க்கமானாலும் சரி, பொதுமக்களாயினும் சரி - தம் கடமையை மறந்து தீமை செய்வார்களானால் கண்டிப்பாக அவர்களைத் திருத்தித்தான் ஆக வேண்டும். அதிகாரவர்க்கமாகட்டும், பொதுமக்களைச் சேர்ந்தவர் களாகட்டும்-அவர்கள் செய்த குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால் ஒழிய அவர்களைத் தண்டிக்க முடியாது. இது என்றும் உள்ள நீதி. ஆதலால் சிலர் மிகத் திறமையுடன் மறைந்திருந்து குற்றம் புரிந்து கொண்டிருக்கலாம். அவர்களை நல்ல வார்த்தை களால்தான் திருத்தமுடியும்; பொதுவான அறிவுரைகளால் தான் மாற்றமுடியும். இது தான் பழந்தமிழர் கையாண்ட முறை. இந்த முறையை வலியுறுத்தும் பாடல் ஒன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. பல்சான் றீரே! பல்சான் றீரே! கயல்முள்அன்ன நரைதுமுதிர் திரைகவுள் பயன்இல் மூப்பின் பல்சான் றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடும்திறல் ஒருவன் பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ! நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும் நல்ஆற்றுப்படூஉம் நெறியும்ஆர் அதுவே. (புறநா. 195) இது நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் பாட்டு. வாழ்நாள் முழுவதும் நல்லவற்றைச் செய்யாமலே வயிற்றுப் பாட்டுக்கு உழைத்து வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துப் பாடிய பாடல் இது. வயது முதிர்ந்தவர்களுக்குத் திடுதிப்பென்று கோபம் வருவது இயற்கை. ஆகையால் அவர்கள் கோபப்படாத வகையில் வெகு நயமாகக் கூறுகிறார் புலவர். பல சிறந்த நற்குணங்களை யுடையவர்களே! பல சிறந்த நற்குணங்களை யுடையவர்களே! கயல்மீனின் முள்ளைப் போன்ற நரைமயிரையுடைய முதிர்ந்தவர்களே! சுருங்கிய கன்னங்களை உடையவர்களே! பயனில்லாமல் கிழப்பருவம் அடைந்த பல சிறந்த குணங்களை உடையவர்களே! மழுவாகிய கூர்மையான ஆயுதத்தையுடைய வலிமை நிறைந்த காலன் உம்முடைய உயிரைக் கவரும் போது துன்புறுவீர்கள். நன்மை செய்திருந்தால் எமவாதனைக்கு ஆளாகாமல் இருக்கலாமே என்று அப்பொழுது நினைப்பீர்கள். ஆதலால் இப்பொழுது உங்களால் நன்மை செய்யமுடியாவிட்டாலும் குற்றமில்லை; தீமை செய்யாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் போதும்; இதுதான் எல்லாரும் மகிழ்ச்சியடையக்கூடிய செயலாகும். அன்றியும் நல்லற வழியிலே செல்லும் வழியும் அதுதான். இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். நல்லது செய்யமுடியாவிட்டாலும் பாதகம் இல்லை; அல்லது - அதாவது தீமை செய்யாமல் இருந்தால் போதும்; தீமை செய்யாதவர்கள் எமனுக்கு அஞ்சவேண்டியதில்லை. தீமை செய்யாமை ஒன்றே நல்லறமாகும் என்ற கருத்தை இப்பாடல் வலியுறுத்திற்று. பயனின்றி வயதேறியவர்களே! என்று மட்டும் கிழவர் களைப் பார்த்துக் கூறினால் கண்டிப்பாக அவர்கள் சண்டைக்குத் தான் வருவார்கள். நாம் என்ன சொன்னாலும் காதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்களை, ஐயா, பெரியவர் களே! உத்தம குணம் நிறைந்த பெரியவர்களே! என்று முதலில் புகழ்ந்துவிட்டால் போதும்; பிறகு நம் வழிக்கு வந்துவிடுவார்கள். இந்த மனப்பாங்கை உணர்ந்து கூறிய இப்பாடல் சிறந்ததொரு பாடலாகும். மறைந்திருந்து குற்றம் புரிகிறவர்கள் இப் பாடலைப் படித்தால் அவர்கள் உள்ளமே அவர்களை உதைத்துத் திருத்தி நல்வழிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நயமான வார்த்தைகளால் குழந்தைகளையும் திருத்த முடியும்; வயது முதிர்ந்தவர்களையும் திருத்த முடியும். கண்டிப்பை விட - கடுஞ் சொல்லை விட - நயமான சொல் நல்ல பலனைத் தரும். இதுவே உண்மை. இந்த உண்மையைப் பின்பற்றியே இப் பாடலின் போக்கு காணப்படுகின்றது. இரக்கத்தால் இன்பம் இல்லாமையால் வருந்துவோர் ஒருபுறம்; செல்வத்தால் சிறந்து வாழ்வோர் ஒருபுறம். இல்லாதவர்கள் எண்ணற்றவர்கள்; செல்வமுள்ளவர்களை எண்ணிக்கையிலே அடக்கிவிடலாம். மக்களிடம் நாகரிகம் பிறந்த காலத்திலிருந்து இந்த இரு பிரிவும் இருந்துதான் வருகின்றது. இந்த நிலைமையை மாற்றுவதற்கான முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகின்றது. எல்லோரும் எல்லாச் செல்வமும் எய்திவிட்டால் இவ்வுலகமே இன்பமாகத் திகழும் என்பது முன்னோர் கண்ட உண்மை. இந்த உண்மை ஒருபுறம் இருக்க, செல்வம் நிறைந்தவர் களில் சிலர் எளியவர்களிடம் இரக்கங்காட்டி வாழ்ந்தனர். எளியவர்களுக்கு உதவி செய்து அவர்கள் துன்பத்தைத் துடைப் பதே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள் பலர் உண்டு. இவர்களைத் தான் வள்ளல்கள், அறிஞர்கள், சான்றோர்கள், பெரியோர்கள் என்று மக்கள் பாராட்டினர். பிறர் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாத செல்வர்களும் இருந்தனர். அவர்கள் தங்கள் இன்பமே பெரியதெனக் கொண்டு வாழ்ந்தவர்கள். உலக சமுதாயத்தின் அமைப்பைப் பற்றி எண்ணாதவர்கள், கூட்டுறவினால்தான் மனித சமூகம் நாகரீகம் அடைந்தது என்பதை அறியாதவர்கள். இப்படிப்பட்டவர் களுக்கு உண்மைகளை விளக்கிக் காட்டுவதற்கே கலைகளும், காவியங்களும், கவிதைகளும் ஏற்பட்டிருக்கின்றன. வாழ்க்கை யிலே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் அறநூல்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றை அறியாமல் இறுமாந்து வாழ்ந்தவர்களுக்கும் புலவர்கள் அவ்வப்போது அறிவுரைகளைப் புகட்டி வந்தனர். அவர்களுக்கு உலக நிலைமையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டி வந்தனர். ஏழைகளும் வாழவேண்டும்; வாழ்க்கையின்பங்களைப் பெற வேண்டும்; செல்வம் படைத் தோரும் வீணாக அழியாமல் சிறந்து விளங்கவேண்டும் என்று நினைத்த அறிஞர்கள் - புலவர்கள் சும்மாவிருக்கவில்லை. ஏழை களுக்கும் செல்வர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த என்னென்ன செய்வேண்டுமோ அவற்றைச் செய்து வந்தனர். எல்லோரும் ஒன்றென்னும் காலம் வருமுன் கையைக் கட்டிக் கொண்டு சும்மாவிருந்தால் என்ன செய்வது? ஏதேனும் செய்து தானே தீரவேண்டும்? செல்வம் படைத்தவர்கள், உணவில்லாமல் உயிர் விடும் ஏழைகளுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். இத்தகைய உதவியும் ஒத்தாசையும் புரியும் இரக்க மனம் செல்வர்களுக்கு உண்டாக வேண்டும். துன்புறுவோர்பால் இரக்கங் காட்டும் சிந்தையை மக்களிடம் எழுப்ப வேண்டியது அறிஞர் கடமை - புலவர் கடமை - என்று கருதி வந்தனர் தமிழர். இந்த உண்மையை விளக்கும் தமிழ்ப் பாடல்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்றைக் காண்போம். சோழன் நலங்கிள்ளி என்பவன் ஒரு சோழ மன்னவன். அவன் செல்வத்திலே சிறந்தவன். ஆனால் கொடை வள்ளல் அல்லன். பசியினால் வருந்துவோர் துன்பத்தைக் கவனிக்காமல் வாழ்ந்து வந்தான்; தானும் தன் சுற்றமும் மட்டும் இன்பத்திலே வாழ்ந்தால் போதும் என்று எண்ணியிருந்தான். இவனுடைய நிலையைக் கண்டார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர். சோழர் குலத்திலே ஒரு மன்னன் தன் குடிப் பெருமைக்குக் கேடு வரும் நெறியிலே வாழ்வது தவறு என்று கருதினார்; அவனுடைய கஞ்சத்தனத்தை விரட்டி அவனை இளகிய நெஞ்சமுள்ள இனியவன் ஆக்க எண்ணினார். அவர் அவ்வரசனை நெருங்கி உலக நிலைமையை எடுத்துச் சொல்லி உண்மையான அருள்நெறி இன்னதென்று அறிவித் தார். இதைப் புறநானூற்றின் 27-வது செய்யுளால் காணுகின் றோம். இதோ அந்தப் பாடல். சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேள் நூற்றுஇதழ் அலரின் நிரைகண் டன்ன, வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணும் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே; மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே; புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின் வலவன்ஏவா வானஊர்தி எய்துப என்ப, தம் செய்வினை முடித்துஎனக் கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி! இருள்இலர் கொடாமை வல்லர் ஆகுக; கெடாத துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே. (புறநா. 27) சேற்றிலே பிறந்து வளர்ந்துவந்திருக்கும் தாமரையில், ஒளிபொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. அதுபோல, ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், அவர்களிலே புகழும் பாட்டும் பெற்றவர்கள் சிலர் தாம்.. தாமரை யிலைபோல பாட்டும், புகழும் இன்றி மாண்டவர்கள் பலர். புலவர்களின் பாடல் பெற்ற புகழுடையவர்கள் தாம் செய்யும் கடமைகளைக் குறைவறச் செய்து முடிப்பர். அதன் பயனாக வானத்திலே ஓட்டுவோன் இல்லாத வானஊர்தியிலே ஊர்ந்து இன்புறும் பெரும்பொருளைப் பெற்று இன்புறுவர். எந்தையே! சேட்சென்னியே! நலங்கிள்ளியே! இவ்வாறு அறிஞர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இவ்வுலகிலே சந்திரன் ஒரு உண்மையை விளக்கிக் காட்டிக் கொண்டே திரிகின்றது. செல்வம் தேய்ந்து போவது உண்டு; பெருகுவது உண்டு; அடியோடு அழிவதும் உண்டு; மீண்டும் பிறப்பதும் உண்டு; என்ற உண்மையைச் சந்திரன் தன் செய்கை யால் வெளிப்படுத்துகின்றது. கற்றறியாதவரையும் உண்மையைக் காணுங்கள் என்று கூறுவது போலக் காட்டுகின்றது. ஆதலால் இவ்வுலகிலே ஒன்றைச் செய்வதற்கு வல்லவ ராயினும் சரி; வல்லமை அற்றவராயினும் சரி; வறுமையால் வருந்திவந்தோர் யாராயினும் சரி; அவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்கு. அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்! அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுள்ளவன் ஆகுக. இத்தகைய செல்வத்தையும் நீ என்றும் அழியாது அடைந் திருப்பாயாக. அழியாத வலிமையுள்ள உன்னைப் பகைத்து எதிரியாக இரு.ப்பவர்கள் வறுமையுள்ளவர்களுக்குக் கொடாத தன்மையை உள்ளவர்கள் ஆகுக! அத்தகைய கல்நெஞ்சமும், செல்வமற்ற சீர்கேடும் அவர்கள் அடைவார் களாக! இதுவே இப்பாடலின் பொருளாகும். இது தமிழர் அருள் நெறியை விளக்கும் பாடல்களிலே ஒன்றாகும். உயர்ந்த புகழ் பெற்ற குடிப்பிறப்பினால் மட்டும் ஒருவனுக்குப் பெருமையுண்டாகிவிடாது. அவன் புகழுக்குரிய செயல்களைப் புரியவேண்டும்; அறிஞர்களால் பாராட்டப்பட வேண்டும். அவனே சிறந்தவன். தீமைகளை நீக்கி, நன்மைகளைச் செய்பவனே புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவான். பண்டைக் காலப் புலவர்கள் இத்தகையவர்களையே போற்றிப் பாடுவார் கள். இந்த உண்மையை, வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை எண்ணுங்காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே என்ற மூன்றடிகளும் விளக்கிக் காட்டின. சந்திரனுடைய இயற்கைத் தன்மையை வைத்து ஒரு உண்மையை விளக்கி உரைத்தது இச்செய்யுள். சந்திரன் தேய் கின்றது; வளர்கின்றது; சிலகாலம் நாம் பார்க்க முடியாமல் மறைந்து விடுகின்றது; பின்னர் புறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி யைச் செல்வத்தின் இயல்போடு இணைத்துக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் என்ற வரிகள் எவ்வளவு எளிய சொற்கள் கொண்டவை! எவ்வளவு இனிய தொடர்கள்! என்பதைப் படிப்போர் - சுவைப்போர் - அறிவர். இவ்வடிகளின் கருத்து, செல்வம் நிலையற்றது என்பதைக் குறிப்பதுதான். கண்ணாலே கண்டுணரும் இந்த உவமை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமை யாகும். புகழுடன் வாழ்க! செல்வம் இருக்கும்போதே நல்லறம் புரிக! என்பதுதான் தமிழர் அருள்நெறி. இதனையே இச்செய் யுள் விரிவாக விளக்கிக் காட்டிற்று. புகழ் கெடுக்கும் புன்மை அவர் மிகவும் கண்டிப்பானவர்: உண்மையானவர்: வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுதான் பேசுவார்: அவர் நம்மைப் பலமுறை அலையவைக்க மாட்டார்: முடியும் அல்லது முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார் என்று சில மனிதர்களைப் பற்றி பேசுகின்றோம். இத்தகைய குணமுள்ள சிலர் இருக்கின்றனர். இவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். இவர்களை அனைவரும் சிறந்த மனிதர்கள் என்றுதான் எண்ணுவார்கள்; கொண்டாடுவார்கள். மக்கள் பின்பற்றவேண்டிய சிறந்த குணங்களிலே இது ஒன்றாகும்; தலைசிறந்த குணமும் ஆகும். அதிலும், செல்வாக் குடன் இருக்கும் மக்களுக்கு - அதிகாரத்திலிருக்கும் மக்களுக்கு - இம்மாதிரியான தன்மை மிகவும் இன்றியமையாதது. தன்னிடத்தில் ஒரு காரியத்தை நாடி வருகின்றவரை வீணாகக் காக்க வைக்கக்கூடாது; பல தடவை வந்து அலையும் படி செய்யவும் கூடாது. தன்னால் செய்யக்கூடிய காரியமானால்- உதவியானால் - உடனே செய்து அனுப்பி விடவேண்டும். செய்ய முடியாத காரியமானால், ஐயா! என்னால் அக்காரியம் செய்ய முடியாது; வீணாக என்னை நீங்கள் நம்புவதில் பயனில்லை; என்னைத் தேடி அலைவதும் வீண் முயற்சிதான்; வேறு யாரை யாவது கொண்டு உங்கள் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கூறிவிடுவதுதான் உயர்ந்த குணமாகும். முடிந்ததை முடியும் என்று சொல்லிச் செய்வதும் முடியாததை முடியாது என்று சொல்லிவிடுவதும் உயர்ந்த குணம் என்பதில் ஐயமில்லை. இவர்களுக்கு நண்பர்கள்தான் பெருகுவார்களே யன்றிப் பகைவர்கள் பெருகமாட்டார்கள். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் இத்தகைய குணத்தைப் பாராட்டியிருக்கும் பாடல்கள் பல. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இத்தகைய குணத்தைப்பற்றி மிகவும் புகழ்ந்து கூறப்படு கின்றது. இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஒரு பாண்டிய மன்னன். ஆவூர் மூலங்கிழார் என்பவர் ஒரு புலவர். அவர் அப் பாண்டிய மன்னனிடம் பரிசில் பெறவேண்டிச் சென்றார். மன்னவன் புலவர் வந்திருக்கும் செய்தியை அறிந்தான். அறிந்தும் அவன் உடனே அவருக்குப் பரிசில் கொடுத்து அனுப்பவில்லை; காலந் தாழ்த்திக்கொண்டே வந்தான். அதைக் கண்ட புலவர் அந்த மன்னவனுக்கு அறிவுரை கூறவேண்டும் என்று கருதினார்; அவனுடைய இந்த கெட்ட குணத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த அரசனைப் பார்த்து ஆவூர் மூலங் கிழார் கூறியதாவது; மன்னவனே! தம்மால் கொடுக்கமுடிந்த பொருளை முடியும் என்று சொல்லிக் கொடுப்பது; தம்மால் கொடுக்க முடி யாத பொருளை முடியாது என்று மறுத்து விடுவது. - இந்த இரண்டும் நல்ல குணந்தான்; உதவி செய்யும் தன்மையோடு கூடிய நட்பின் தன்மைதான். தன்னால் முடியாததை முடியுமென்று சொல்லுதல், தன்னால் செய்யமுடிந்தததைச் செய்யமுடியாது என்று மறுத்தல் - இந்த இரண்டு செயலும் தீய குணங்கள்; தன்னிடம் உதவிதேட விரைந்துவந்த இரவலர்களைத் துன்புறுத்துவதாகும். அதுமட்டு மன்று; ஈவோரின் புகழ் தேய்ந்து போவதற்கான வழியுமாகும். நீ என்னிடம் இத்தன்மையுடன் நடந்து கொண்டனை எம் குடியிலே பிறந்தவர்கள், இதற்கு முன் இத்தகைய குணமுள்ளவர் களைக் கண்டதில்லை. நாம் மட்டும் இன்று புதிதாக இத்தகைய குணமுள்ள உன்னைப் பார்த்தோம். நீ செய்த தவறால் உனக்கு யாதொரு குற்றமும் நேரா திருக்கவேண்டும்; உன் புதல்வர்கள் நோயின்றி வாழவேண்டும்; எனது வேண்டுகோளும் விருப்பமும் இதுவாகும். வெயில் என்று வெறுக்காமல், பனியென்று சோம்பியி ராமல் கல்லாற் செய்யப்பட்டது போன்ற உடம்பையுடைய நான் போகின்றேன். காற்றை மறைத்துக் கொண்டிருக்கின்ற ஏழ்மை நிறைந்த என் இல்லத்திலே, நாணம் என்ற அணிகலனைத் தவிர வேறு அணிகலனே இல்லாத கற்பு நிறைந்த என் மனைவியை நினைந்து நான் செல்லுகின்றேன். நீ நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக. இவ்வாறு பாண்டியனைப் பார்த்துக் கூறிச் சென்றார் புலவர். இந்த நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 196-வது பாடல் எடுத்துக்காட்டுகின்றது. அது ஆவூர் மூலங்கிழார் பாட்டு. அப் பாட்டும், அதன் பொருளும் கீழ்வருவன: ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே இரப்போர் வாட்டல், அன்றியும், புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்; அத்தை, அனைத்து ஆகியர்; இனி இதுவே, எனைத்தும், சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால் நோயிலர் ஆக நின் புதல்வர்; யானும் வெயில்என முனியேன், பனியென மடியேன்; கல்குயின் றன்ன, என் நல்கூர் வளி மறை நாண் அல்லது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்இயல் குறுமகள் உள்ளிச் செல்லல், அத்தை; சிறக்கநின் நாளே. (புறம். 196) பாண்டியன் கொடுக்கும் வல்லமையுள்ளவன்; இருந்தும் காலந்தாழ்த்திருந்தான். அவன் காலந்தாழ்த்தமை கொடாமைக் குத்தான் அறிகுறியாகும். ஆதலால் தன்னால் முடிந்ததை முடியாது என்று கூறுவது போலவே அவன் நடந்து கொண் டான். இது அறநெறிக்கு முரணானது. அற நெறிக்கு முரணாகப் பாண்டியன் நடந்து கொண்டாலும் அவனுக்கோ, அவன் குடும்பத்துக்கோ எத்தகைய தீமையும் நேரக்கூடாது என்பது புலவர் கருத்து. ஆதலால் அவன் பிள்ளைகளையும், அவனையும் புலவர் வாழ்த்திச் சென்றார். இது தமிழரின் அருள்நெறியை உணர்த்துவதாகும். செய்ந்நன்றி அறம் செய்ந்நன்றி அறிதல்: பிறர் செய்த நன்றியை மறவாமலி ருத்தல். பிறர் நமக்கொரு நன்மை செய்தால் அதை நாம் மறவா மல் மனத்திலே வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாமும் அவர்க்கு நன்மை செய்வோம். ஆதலால்தான் செய்த நன்றியை மறக்கக் கூடாது. செய்நன்றியறிதலுக்கு இவ்வாறுதான் பலர் பொருள் உரைப்பர். ஆனால் செய்ந்நன்றி அறிதலிலே அடங்கியிருக்கும் சிறந்த உண்மைப் பொருள் வேறாகும். வேறாயினும் இப் பொருளுக்குத் தொடர்புள்ளதுதான். நமக்கு நன்மை செய்தவருக்குத்தான் நாம் நன்மை செய்யவேண்டுமென்றால் அதிலே சுயநலந்தான் பொதிந்து கிடக்கின்றது. நன்மையோ, உதவியோ புரிகின்றவர்கள்கூட, இவர் நமக்குப் பின்பு உதவி செய்யக்கூடியவர்தாமா என்று எண்ணித்தான் உதவி செய்வார்கள். இவ்வாறு செய்யும் உதவி உன்னதமான உதவியாக இல்லாமல் வாணிகமாக மாறிவிடக் கூடும். மக்கள் கடமையே உதவி செய்வதுதான். துன்புறுவோ ரைக் கண்டால் உள்ளம் இளகவேண்டும்; உடனே அவர்கள் துன்பம் தவிரும்படி உதவவேண்டும். இது மக்கள் கடமை. இரக்கமற்ற தன்மை மனிதப் பண்பே அன்று. இரக்கங் காட்டுதல் தான் மக்கட் பண்பின் ஊற்றுக்கேணி யாகும். இந்த மக்கட் பண்பு நம்மிடம் நிலைத்திருக்கவேண்டு மானால் நாம் பிறர் செய்த நன்றியை மறத்தல் கூடாது. மறவா மலிருந்தால்தான், நாம் துன்புறும்போது நமக்குப் பிறர் நன்மை செய்ததுபோல, பிறர் துன்புறும்போது அவர்க்கு நாம் நன்மை புரியவேண்டும்; நன்மைபுரிவது நமது கடமை என்ற எண்ணம் நமது உள்ளத்திலே பிறக்கும். பிறர்க்கு நன்மை புரிவதே ஒவ்வொரு மனிதனுடைய கடமையுமாகும் என்பதை வலியுறுத்தவே செய்ந்நன்றியறிதல் என்பதைச் சிறந்த பண்பாடாகப் பண்டைத் தமிழர்கள் போற்றினார்கள். இதைப்பற்றித் திருவள்ளுவர் மிகவும் அழுத்தமாகக் கூறுகின்றார். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு என்பது திருக்குறள். எந்த நன்றியை மறந்தவர்க்கும், அந்த நன்றியை மறந்த பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழியுண்டு. ஆனால் பிறர் செய்த நன்றியை மறந்தவனுக்கு அப் பாவத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள வழியேயில்லை என்பதுதான் இக்குறளின் பொருள். மக்களிடையிலே இந்த அறம் நிலவாவிட்டால் நாம் சிறப்பாக புகழ்ந்து பேசும் மனிதப் பண்பு என்பதே போய்விடும். பண்டைக்கால முதல் இச்சிறந்த குணம் மக்களிடம் குடிகொண் டிருப்பதால்தான் மக்களிடையே அன்பு நிலைத்திருக்கின்றது; கூட்டுறவு நிலைத்திருக்கின்றது; நாகரிகம் வளர்ந்து வருகின்றது. திருவள்ளுவர் இதைப்பற்றி மேலும் கூறும்போது நன்மையை மட்டும் எப்பொழுதும் மறந்துவிடுதல் கூடாது; அப்படி மறந்துவிடுதல் நன்றாகாது; பிறர் தீமை செய்தால் அதை உடனே மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார். இக்கருத்து டையதுதான், நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்னும் குறள். ஒருவர் செய்த நன்றியை மறக்காமலிருந்தால் நமக்கும் நன்றி செய்யத்தான் தோன்றும். நினைப்பே செயலுக்கு வழி காட்டுவது. எண்ணமே வினைசெய்யத் தூண்டுவது. உள்ளத்திலே உயர்ந்த மாசற்ற நினைப்புள்ளவர்கள் தாம் உயர்ந்த செயல் களிலே ஈடுபடுவார்கள். பிறர் செய்த தீமைகளையே நினைத்துக் கொண்டிருப்பவர் களின் உள்ளத்திலே நல்ல எண்ணங்கள் குடியேற இடமே யில்லை. அவர்கள் உள்ளத்திலே, நமக்குத் தீமை செய்தவர் களுக்கு நாம் என்ன தீமை செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? எப்பொழுது செய்யலாம்? என்ற எண்ணங்களே உலவிக் கொண்டிருக்கும். சமயம் வந்த போது தமக்குத் தீமை செய்தவர் களுக்குத் தீமையைத் தான் செய்வார்கள். அவர்களும் எதிர்த்துத் தீமை செய்வார்கள். இப்படி இரு திறத்தாரிடையும் பகைமையும் தீமையும் வளர்ந்துகொண்டேதான் வரும். ஆதலால் தான் பிறர் செய்த தீமையை உள்ளத்திலே வைத்துக் கொள்ளக்கூடாது; அப்பொழுதே மறந்துவிடவேண்டும் என்று கூறினார் வள்ளுவர். செய்ந்நன்றி அறிதல் என்னும் இச் சிறந்த அறம் தமிழர் களின் சமுதாயத்திலே வழிவழியாக வளர்ந்து வந்த பண்பாகும். இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டும் வலியுறத்து கின்றது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவன் ஒரு சிறந்த மன்னவன்; புலவர்களால் பாராட்டப்பட்டவன். அவனைப் பற்றிப் பாடிய ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் செய்ந்நன்றி அறிதலின் சிறப்பை வலியுறுத்தி இருக்கின்றார். ஆன்முலை அறுத்த அறன்இல் லோர்க்கும், மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன, நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என அறம் பாடிற்றே ஆயிழை கணவ. (புறநா. 34) செய்ந்நன்றி மறத்தலின் தீமையை இச்செய்யுள் விளக்க மாக எடுத்துக் காட்டுகின்றது. பசுவின் மடியை அறுப்பவர்கள் அறமற்றவர்கள்; மனித சமுதாயத்திற்கே மறம் புரிகின்றவர்கள். இரக்கமற்ற கடுஞ்சித்த முள்ளவர்கள்தான் பசுவின் மடியை அறுப்பார்கள். பால் கொடுக்கும் பசுவின் மடியை அறுப்பதனால் பசுவுக்கும் ஆபத்து; அந்தப் பசுவின் பாலை உண்டு வாழும் மக்களுக்கும் பாதகம் செய்வதாகும். ஆதலால் இக்கொடுஞ் செயலைச் செய்கின்ற வர்கள் அறநெறியையே அறியாதவர்கள் ஆவர். பெண்களின் கருவைச் சிதைப்பது பெரும் பாதகம் என்று பண்டைக் காலத்தில் கருதப்பட்டது. இக்காலத்தில் மக்கள் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகக் கருவை அழித்தல் சமுதாய முன்னேற்றத் திட்டங்களில் ஒன்றாக எண்ணப்படுகின்றது. பண்டைக் காலத்திலே கருச் சிதைத்தலைக் கடும் பாதக மாகக் கருதியதற்குக் காரணம் உண்டு. அக் காலத்திலே மக்கள் எண்ணிக்கை குறைவு. மக்களும் தனித்தனிக் கும்பலாகப் பலப்பல இடங்களிலே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நேர்வது உண்டு. ஒரு கும்பலுக்கும் மற்றொரு கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுக் கொண்டே யிருக்கும். ஆதலால் ஒவ்வொரு குழுவினரும் தங்கள் கூட்டத்தைப் பெருக்கிக் கொள்ளவே விரும்பினர்; முயன்றனர். ஆதலால் பிள்ளைப் பேற்றைப் பெரிய செல்வமாகவும், கருச் சிதைவைக் கடும் பாவமாகவும் கருதினர். கருச்சிதைவு செய்வதை வெறுத்தனர். பார்ப்பார்கள் என்பவர்கள் பண்டைகாலத்திலே சமுதாய ஊழியர்களாயிருந்தவர்கள். தமிழர் சமுதாயத்திலே தோன்றிய வர்களிலே, தந்நலந் துறந்து மக்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தவர்கள் பார்ப்பார்களானார்கள். மக்கள் தீநெறிகளிலே படராமல் நல்வழிகளிலே நடக்க வழிகாட்டிய வர்கள் பார்ப்பார்களானார்கள். இத்தகைய அறிஞர்கள் சமுதாயத்திலே மிகவும் குறைவாக இருந்தனர். ஆகையால் இவர்களுக்கு எத்தகைய தீமையும் எவரும் இழைக்கக்கூடாது என்று எண்ணி வந்தனர். இவர்களுக்குத் தீமை செய்தவர் படுபாதகம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டனர். இந்தப் பசு, கருவுற்ற மகளிர், பார்ப்பார் ஆகியோர்க்குக் கொடுமை செய்தவர்களும் அக்கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்; அதற்கான பரிகாரங்கள் - பிராயச்சித்தங்கள் - கழுவாய்கள் உண்டு. ஆனால் இந்த உலகமே தலைகீழாக மாறுவதாயிருந் தாலும் சரி, பிறன் செய்த நன்மையை மறந்தோர்க்கு அப் பாதகத்திலிருந்து தப்பிக்கும் வழியே இல்லை; இவ்வாறு அறநூல்கள் அனைவரும் அறியப் பாடுகின்றன; இந்த உண்மையை நீ அறிந்துகொள். இதுதான் மேலேகாட்டிய செய்யுளில் அமைந்திருக்கும் பொருளாகும். அறம் பாடிற்று என்பதற்கு, அறநூல் ஆகிய திருக்குறள் கூறிற்று என்று பொருள் கூறுவோரும் உண்டு. இந்தப் புறநானூற்றுப் பாட்டின் பொருளைத் திருக்குறள் எடுத்துக் கூறியதா? அல்லது திருக்குறளின் பொருளை இந்தப் புறநானூறு விளக்கிக் கூறியதா? என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். செய்ந்நன்றி அறிதல் என்பதைச் சிறந்த அறமாகத் தமிழர் போற்றினர் என்பது உண்மை. இவ்வுண்மை எல்லா அறநூல் களிலும் காணப்படுகின்றது. இனம் இனத்தோடே இனம் இனத்தோடே என்பது ஒரு பழமொழி. இந்தப் பழமொழியின் பொருளை நாம் கண்ணெதிரே கண்டறியலாம். இப் பழமொழி, மக்களுக்கும் பொருந்தும்; மற்ற உயிரினங் களுக்கும் ஒக்கும். பறவையினங்களிலே பல ஒரு கூட்டமாக வாழ்வதைக் காணலாம்; விலங்குகளிலே பல ஒரு கூட்டமாக வாழ்வதைக் காணலாம். காக்கைகள் பல ஒன்றுகூடி வாழ்கின்றன; கடற் பறவைகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. குரங்குகள் பல ஓரிடத்திலே வாழ்கின்றன; மாடுகள், ஆடுகள் மந்தைகளாக வசிக்கின்றன. மக்களும் மொழி, மதம், நாகரிகம், நாடு, கட்சி காரணமாக ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறோம். ஒரு மொழி பேசும் மக்கள் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். அவர்களுக்குள் மத வேற்றுமை, சாதி வேற்றுமை இருந்தாலும் மொழியால் ஒன்றுபடுகின்றனர். மதத்தினால் மக்களுக்குள் ஒரு ஒற்றுமை உருவாகின்றது; பல்வேறு நாட்டினர், பல மொழியினர், பல்வேறு இனத்தினர் மத அடிப்படையில் ஒன்றுபடுகின்றனர். நாகரிகம் - அல்லது கலாச்சாரம் காரணமாக மக்களுக்குள் ஒரு ஒற்றுமை வளர்கின்றது. பலவேறு நாட்டினராயினும், பலவேறு மொழியினராயினும், பலவேறு மதத்தினராயினும், கலையிலும், பழக்கவழக்கங்களிலும் ஒன்றுபட்டிருப்பார் களானால் அவர்களுக்குள் தொடர்பு வளர்கின்றது. ஒரு நாட்டினர்க்குள் ஒற்றுமை தழைக்கின்றது. அவர்களுக் குள் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தங்கள் தாய்நாட்டின் மீதுள்ள பற்று அவர்களை விட்டு விலகிவிடுவ தில்லை. தாய்நாட்டிற்கு ஒரு ஆபத்தென்றால் அனைவரும் ஒன்று திரண்டு நாட்டைக் காப்பாற்றப் பாடுபடுகின்றனர். நாட்டுப் பற்றின் முன்னே எல்லா வேற்றுமைகளும் நாசமாகி விடுகின்றன! கட்சிக் கொள்கை காரணமாக பல நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை வளர்கின்றது. கட்சிக் கொள்கையின் அடிப்படையிலே நாடு, மொழி, மதம், இனம் என்ற வேற்றுமைகளை மறந்து விடுகின்றனர். பல நாட்டு மக்கள் ஒன்றுகூடி உறவாடுகின்றனர். கொள்கைப் பற்று அவர்களை ஒன்றுசேர்த்து விடுகின்றது. அகில உலக இயக்கங்களே இதற்குச் சான்று. இனம் இனத்தோடே என்பதன் உண்மைப் பொருளை இவ்வாறுபல துறையிலும் நாம் காணலாம். அறிஞர்கள், கற்றவர்கள், நல்லொழுக்கமுள்ளவர்கள் ஒன்றுகூடி வாழ்வார்கள்; அவர்களுக்குள் ஒவ்வொரு நாளும் ஒற்றுமை வளரும்; அவர்கள் ஒன்றுபட்டு உலகம் நன்றாக வாழ்வதற்கு வழி தேடுவர். அறிவும், கல்வியும், ஒழுக்கமும் உள்ளவர்களே சான்றோர் என்று அழைக்கப்படுவார்கள். சான்றோர் என்றால் எல்லா நன்மைகளும் நிரம்பியவர்கள் என்று பொருள். யார் எவ்வளவு முயன்றாலும் - சூழ்ச்சிகள் செய்தாலும் - சான்றோர்களுக்குள் சண்டைத் தீயை வளர்க்க முடியாது; அவர்களைப் பிரித்துவிட முடியாது; அவர்களிடையிலே மொழி, இனம், நிறம், நாடு, மதம், கலாச்சாரம் என்ற பேதங்கள் தலைகாட்ட மாட்டா; இவற்றால் அவர்கள் வேறு வேறாயிருந் தாலும் அறிவால் - கல்வியால் - ஒழுக்கத்தால் - ஒன்றுபட்டே வாழ்வார்கள். மூர்க்கர்கள் - தந்நலமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் - தம் வாழ்வுக்காக இன்னது இனியது என்று பாராமல் எதையும் துணிந்து செய்கிறவர்கள் பலர் உண்டு. இந்தக் கும்பல் எல்லா நாட்டிலும் உண்டு. இவர்களும் ஒன்றுபட்டு வாழ்வார்கள். மூர்க்கன் மூர்க்கனைத் தான் விரும்புவான்; கல்லாதவன் கல்லாதவனைத் தான் காமுறுவான். ஒழுக்கமற்றவன் ஒழுக்க மற்றவனைத் தான் விரும்புவான். இந்தக் காட்சியையும் நாம் கண்கூடாகக் காணலாம். இந்த உண்மையைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று விளக்கிக் காட்டுகின்றது. சான்றோர்கள் எப்பொழுதும் சான்றோரைத்தான் விரும்புவார்கள்; அவர்களோடுதான் சேர்ந்து வாழ்வார்கள். சாலாதவர்கள் - கல்வி அறிவு ஒழுக்கங் களிலே நிரம்பாதவர்கள் - சான்றோரைச் சேர மாட்டார்கள்; விரும்ப மாட்டார்கள்; தங்களைப்போல ஒன்றும் நிரம்பாதவர் களைத் தான் நேசிப்பார்கள் என்று கூறுகிறது அச்செய்யுள். சான்றோர்கள் சான்றோர்களைத் தான் சேர்ந்து நிற்பார் கள் என்பதற்கு அச் செய்யுளின் அழகான உவமானம் ஒன்று காட்டப்பட்டிருக்கின்றது. பொன், பவளம், முத்து, இரத்தினம் இவை வெவ்வேறி டத்திலே பிறப்பன. இவை ஒன்றிக்கொன்று சம்பந்தமில்லாத தொலைதூரத்திலே பிறந்தனவாக இருக்கலாம். சிறப்பாக பொன்னும், இரத்தினமும் நிலத்திலே பிறப்பன. பவளமும், முத்தும் நீரிலே பிறப்பன. ஆயினும், பொன் ஒரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்; இரத்தினம் மற்றொரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்; பவளம் பிறந்த நாடு ஒன்றாயிருக் கலாம்; முத்து பிறந்த நாடு மற்றொன்றாயிருக்கலாம். இப்படிப் பொன்னும், பவளமும், முத்தும், மணியும் வெவ்வேறு நாடுகளிலும், இடங்களிலும் பிறந்தனவாயினும், அவைகளை ஒன்றாகச் சேர்த்து வரிசையாக மாலையாக்கலாம். அந்த மாலை கண்ணுக்கு அழகு தரும்; மக்கள் அதை விரும்பி அணிவார்கள்; அது உயர்ந்த விலை மதிப்புள்ளதாயிருக்கும். இதைப் போலவேதான் அறிவு நிரம்பியவர்கள், மொழி, இன, மத வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டிருப்பர்: மற்றவர் களுக்கு நலம் புரிவதிலே ஈடுபட்டிருப்பர். சான்றோர்களின் ஒற்றுமை தன்மையை இவ்வாறு அழகிய உவமானத்தினால் விளக்கிச் சொல்லியிருக்கின்றது அச்செய்யுள். அச் செய்யுள் புறநானூற்றின் 218-வது பாட்டு. கண்ணகனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ் சோழன் என்னும் வேந்தனும், ஒருவரை ஒருவர் சந்திக்காமலே அன்பினராயிருந்தனர்; நட்பினரா யிருந்தனர். அவர்களுடைய அன்பை-நட்பை-ஒற்றுமையைப் பாராட்டும் முறையிலேயே அச்செய்யுளைப் பாடினார் கண்ணகனார். அச் செய்யுள் கீழ் வருவது: பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை; ஒருவழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே. ஏழே வரிகள் கொண்ட இச் செய்யுளின் இனிய பொரு ளைப் பார்த்தால் இனம் இனத்தோடே என்ற பழமொழியின் பரந்த பொருளைக் காணலாம். தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் செய்யுட்களிலே இது ஒரு சிறந்த செய்யுளாகும். இக்கருத்துள்ள செய்யுட்கள் பிற்காலத்திலே பல தோன்றியிருக்கின்றன. அறம் தரும் பயன் இறந்த மக்கள் மீண்டும் பிறப்பர்; அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளை அனுபவிக்கப் பிறப்பார்கள்; நல்வினை செய்தவர்கள் செல்வர்களாய்ப் பிறந்து சிறந்து வாழ்வார்கள்; அல்வினை செய்தவர்கள் ஏழையர்களாய்ப் பிறந்து இன்னல் அடைவார்கள். இது மறுபிறப்பு உண்டு என்பவர்கள் கூறும் கொள்கை. இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை; மறுபிறவி எடுப்ப தில்லை. இவ்வுலகிலே பாவம் பண்ணியவர்களை ஆண்டவன் தண்டிக்கிறான்; புண்ணியம் புரிந்தவர்களை நல்லுலகிலே வாழ வைக்கின்றான்.இது மறுபிறப்பு இல்லை என்பவர்களின் கொள்கை. மறுபிறப்பு உண்டு; மறுபிறப்பு இல்லை; என்ற இந்த வழக்கு இன்று நேற்று எழுந்தது அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது; இன்னும் முடிவு பெறாமல் நிற்பது. உலகில் இன்று நிலவி வரும் மதங்களிலே மறுபிறப்பு உண்டு என்னும் மதங்களும் உண்டு; மறுபிறப்பு இல்லையென்று கூறும் மதங்களும் உண்டு. இந்த இரு கொள்கையினரும் தங்களுக்குள் வழக்கிடத் தொடங்கினால் அது தீராவழக்காகத்தான் முடியும். வாய்ப் போர் முற்றிக் கைப்போரில்தான் போகும். ஆனால் இவ்விரு கொள்கைகளும், ஊகத்தால் கூறுவனவேயன்றிக் கண்கூடாகக் கண்டு கூறப்படுவன அல்ல. ஆதலால்தான் இன்று வரையிலும் இவ்விரு கொள்கைகளும் தொடர்ந்து வழக்கிலும், வாதப் போக்கிலும் இருந்துவருகின்றன. மறுபிறப்பு உண்டென்போரும், இல்லையென்போரும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கின்றனர்; அதில் அவர்கள் முரண் படுவதில்லை. நாம் நல்வினைகளைத்தான் செய்ய வேண்டும்; தீவினைகளைச் செய்தல் கூடாது. நன்மை புரிந்தால்தான் நன்மை யடைவோம்; தீமை செய்தால் தீங்கடைவோம். நல்வினைகளே அறமாகும்; தீவினைகள் பாவமாகும் என்பதே அந்த உண்மை. இந்த உண்மையை ஒத்துக்கொள்ளாத மதங்கள் ஒன்றுமே யில்லை. எல்லா மதங்களும் இந்த உண்மையைப் போதிக்கின் றன. எல்லா மதத் தலைவர்களும் இந்த உண்மையை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றே கூறிவந்தனர்; கூறி வருகின்றனர். இக்காலத்திலே மக்களிடையே கல்வியும் அறிவும் வளர்ந்து வருகின்றன. ஆதலால் இக்கால மக்கள் எத்தகைய மதக் கொள்கையினராயினும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றுபட்டுப் பழகுகின்றனர்; மத வேற்றுமை பாராட்டாமல் மனிதத் தன்மையுடன் பழகுகின்றனர். உலகப் போக்கையறியாத - நாகரிக வெளிச்சத்தை நன்றாக அறியாத-சிலரிடம் மதவெறுப்பும், வெறியும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இதுவும் இன்னும் சில ஆண்டுகளில் மாறிவிடும் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டு வருகின்றோம். பண்டைக் காலத்திலே - தம் இனமே உயர்ந்தது; தம்மு டைய பழக்க வழக்கங்களே சிறந்தவை; தம்முடைய கொள்கை களே தெய்வீகமானவை; என்று நம்பிவந்த பண்டைக் காலத் திலேதான் - மதச் சண்டைகள் நடந்து வந்தன. மக்கள் காட்டு மிராண்டித்தனமாக வாழ்ந்த காலத்திலேதான் மதச் சண்டை கள் நடந்து வந்தன. மக்கள் மற்ற வகைகளிலே முன்னேறி யிருந்தாலும், மதவெறியைப் பின்பற்றியிருந்த காலத்திலேதான் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டும், வெட்டிக் கொண்டும் செத்து மடிந்தனர். இன்றுங்கூட மதவெறி காரணமாக மக்களுக்குள் வெறுப்பைப் பரப்புவோர் எவரேனும் இருந்தால் அவர்களை முழு மனிதத்தன்மை படைத்தவர்கள் என்று அறிஞர்கள் மதிப்பதில்லை. பழைய காட்டுமிராண்டித்தனம் இன்னும் அவர்களைப் பிடித்து ஆட்டி அலைக்கழிக்கின்றது என்றுதான் முடிவு கட்டுகின்றனர். மக்கள் இவ்வுலகில் ஒழுக்கத்துடன் வாழவேண்டும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பாவ, புண்ணியம் அறிந்து நடக்க வேண்டும் என்பதற்கே மதங்கள் தோன்றின என்ற உண்மையை ஒப்புக் கொண்டவர்கள் ஒரு நாளும் மதப்போரில் குதிக்க மாட்டார்கள்; மதவெறியிலே மூழ்கி விடமாட்டார்கள். மதத்திலே அன்புள்ளவர்கள் மக்களிடம் கருணை காட்டு வார்கள். இதை நாம் உண்மையான மதப்பண்புள்ளவர்களிடம் கண்கூடாகக் காணலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்த உண்மையைக் கண்டறிந்தார்கள். மதக் கொள்கை காரண மாக ஒருவர்க்கொருவர் வெறுப்புக் கொள்ள வேண்டாமென்றே அவர்கள் கூறிவந்தார்கள். ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பே பலதிறப்பட்ட மதக் கொள்கை யினரும் தமிழ்நாட்டிலே ஒன்றுபட்டு வாழ்ந்தனர்; தமிழின் வளர்ச்சிக்கு உழைத்தனர்; தமிழ் மக்களின் உயர்வுக்கு பாடுபட்ட னர்; ஒற்றுமை வாழ்வுக்கு அடிகோலினர். இந்த உண்மைகளைச் சங்கத் தமிழ் நூல்களிலே காணலாம். இதைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று மெய்ப்பிக் கின்றது. அப்பாடலின் பொருளைப் பார்ப்போம். குற்றம் நிரம்பிக் குடிகொண்டிருக்கும் அறிவுள்ளவர்கள் - ஆராய்ந்து காணும் தெளிவான அறிவில்லாதவர்கள் நல்வினை செய்யத் துணியமாட்டார்கள். நல்வினைகளைச் செய்வோமா? வேண்டாமா? என்றுதான் எண்ணிக் கொண்டேயிருப்பார்கள். இந்த ஐயம் அவர்கள் நெஞ்சை விட்டு நீங்காது. யானையை வேட்டையாட எண்ணிச் செல்கின்றவன் அந்த யானையை எளிதிலே வேட்டையாடிப் பெறுதலும் கூடும். குறும்பூழ் என்னும் கௌதாரிப் பறவையை வேட்டையாடச் செல்கின்றவன் அந்த வேட்டை கிடைக்காமல் திரும்புவதும் உண்டு. ஆகையால், உயர்ந்த செயல்களைச் செய்வதிலே விருப்பம் உள்ளவர்கள் தாம் செய்த நல்வினையின் பயனை அனு பவித்தலும் கூடும். அவர்கள் அந்த நல்வினையின் பயனை அனு பவிக்க நேர்ந்தால், நல்வினையோ தீவினையோ செய்வதற்கு இடமில்லாத சுவர்க்கத்திலே இன்பந் துய்ப்பார்கள். சுவர்க்கத்திலே இன்பந் துய்ப்பதற்குரிய நல்வினைகளைச் செய்யாதவர்கள் இவ்வுலகிலே மீண்டும் பிறந்து வறியராய்த் துன்புற்று வாழவும் கூடும். நல்வினை செய்தவர்கள் இவ்வுலகில் மீண்டும் பிறவார்; ஆயினும் அவர்கள் புகழ் இவ்வுலகை விட்டு அகலாது. இமய மலையின் சிகரத்தைப் போல் அவர்கள் புகழ் உயர்ந்து நிலை நிற்கும். பிறரால் சிறிதும் பழித்துப் பேசாத உடம்புடன் வாழ்ந்து இறப்பார்கள். இவ்வாறு இறத்தலே மிகவும் சிறந்த தாகும். ஆதலால், மறுபிறப்பு இருந்தாலும் சரி, இல்லை யானாலும் சரி, இவ்வுலகிலே நல்வினைகளை - நல்லறங்களைச் செய்து வாழ்வதே மக்கட்குரிய கடமையாகும். இதுவே மனிதத் தன்மையுமாகும். இவ்வாறு கூறுகிறது அச்செய்யுள். அச்செய்யுள் கீழ்வருவது: செய்குவம் கொல்லோ நல்வினை? எனவே ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத் துணிவு இல்லோரே, யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறும்கையும் வருமே; அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டுஎனில், தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக் கோடுஉயர்ந் தன்ன தம்இசை நட்டுத் தீதுஇல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே. (புற. 214) இது கோப்பெருஞ் சோழன் என்னும் வேந்தன் பாடிய செய்யுள். மறுபிறப்பு உண்டு; இல்லை என்ற கவலை வேண்டாம். இவ்வுலகிலே நல்லறம் புரிந்தால் சுவர்க்கத்திலே இன்பம் உண்டு; இல்லையாயினும் இவ்வுலகிலே புகழ் உண்டு; புகழுடன் வாழா தான் மனிதன் அல்லன்; ஆதலால் நல்லறம் புரியுங்கள்; புகழுடன் வாழுங்கள் என்று அறிவுரை கூறுகின்ற அருமையான செந்தமிழ்ச் செய்யுள் இதுவாகும். பழந்தமிழரின் இக்கருத்தைப் பின்பற்றினால் பலதரப்பட்ட மதத்தினரும் ஒன்றுபட்டு உடன் பிறந்தார் போல வாழமுடியும். நல்வினை புகழ் தரும்; தீவினை பழி தரும்; ஆதலால் செய்யத்தக்கது நல்வினை. இதுவே தமிழர் கண்ட உண்மை: யாவரும் போற்றும் உண்மை. ஒற்றுமையே உயர்ந்த பண்பு ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; இன்றேல் தாழ்வு தான். எல்லாத் துறையிலும் வெற்றிக்கு வழிகாட்டும் வெளிச்சம் ஒற்றுமைதான்; ஒருவர்க்கொருவர் முரண்பட்டுப் பகைமை பாராட்டும் கும்பலால் எந்தச் செயலையும் முற்றுப்பெற நிறைவேற்றமுடியாது. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை சின்னாபின்னமாகச் சிதைந்துதான் போகும். ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த அலுவலகத்தின் பொறுப்பாளருக்கும், அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஒற்றுமையிருக்க வேண்டும். ஊழியர்களும் தங்களுக்குள் வம்பு தும்புகள் இன்றித் தங்கள் கடமையைச் செய்துவர வேண்டும். அப்பொழுது தான் அந்த அலுவலகத்தின் வேலை தாமதமில்லாமல் நடைபெறும்; அலுவலகத்தின் நோக்கமும் நிறைவேறும். முரண்பட்ட கருத்துக்களின் காரண மாக ஒருவரோடு ஒருவர் சண்டைபிடித்துக் கொண்டிருக்கிற அலுவலகங்களிலே சரியாக வேலைகள் நடைபெற மாட்டா. ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையில்லாவிட்டால் அந்தப் பள்ளிக்கூடம் குட்டிச்சுவர் தான். அவ்வாசிரியர்கள் பாடஞ் சொல்லிக் கொடுப்பதிலே போதுமான கருத்தைச் செலுத்த மாட்டார்கள்; தங்களுடைய வம்புகளிலேதான் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பார்கள். இதைப்போலவே மாணவர்களிடம் ஒற்றுமையில்லா விட்டால் அவர்கள் சரியாகப் பாடம் படிக்கமாட்டார்கள். பாடங்களைப் பற்றி - படித்தவற்றைப் பற்றி - ஒருவரோடு ஒருவர் அளவளாவமாட்டார்கள்; தங்களுக்குள் கட்சி கட்டிக் கொண்டு சண்டை பிடித்துக்கொள்வதில்தான் காலம் போக்குவார்கள். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர் களிடமும் ஒற்றுமை வேண்டும். அவர்களிடம் ஒற்றுமை இல்லா விட்டால் பேராசை கொண்ட முதலாளிகள் அவர்கள் தலையிலே மிளகாய் அரைத்துவிடுவார்கள். தொழிலாளிகள் முன்னேறவே முடியாது; தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளவே முடியாது. ஒருநாட்டு மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றிச் சண்டை யிட்டுக் கொண்டிருப்பார்களாயின் சுயநலக்காரர்கள் அவர் களைச் சும்மா விட்டுவிட மாட்டார்கள்; அவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களிடமிருந்து எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவும் சுரண்டிக் கொண்டிருப்பார்கள். தங்களுக்குள் சாதி, மதம், இனம், மொழி காரணமாகச் சண்டையிட்டுக் கொண்டி ருக்கும் மக்கள் சுதந்தரமாக வாழமுடியாது. பிறர் பூட்டாமலே, தாங்களாகவே அடிமை விலங்கை மாட்டிக்கொண்டு துன்பப் படுகுழியிலே வீழ்ந்து தவிப்பார்கள். ஒரு நாட்டுக்கும், அதன் பக்கத்து நாட்டுக்கும் ஒற்றுமை யில்லாவிட்டால் ஆபத்துதான். சமாதானம் குலையும். சண்டைக்கு விதை போடப்படும். சண்டை நேர்ந்தால் அதனால் பெரும் பாதகம் ஏற்படும். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் ஏற்பட்ட சண்டையாக வளர்ந்து உருவெடுத்துவிடும். இதைப்போலவேதான் குடும்ப நிலையும். குடும்பம் என்பது ஒரு இருசக்கர வண்டி. அந்த வண்டியின் இரு சக்கரங்கள் கணவனும் மனைவியும். அக் கணவன் மனைவியிருவரும் நாயும் பூனையுமாக வாழ்ந்தால் அவர்கள் குடும்பக் காரியங்களைச் சரிவர நிறைவேற்ற மாட்டார்கள். கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கூட நல்ல முறையிலே வளர முடியாது; அக் குழந்தைகளிடம் நல்ல பண்புகள்கூட வளராமல் தேய்ந்து விடும். குடித்தனமோ துரைத்தனமோ என்பது ஒரு பழமொழி. இது இன்னும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. தன் குடும்பத்தைக் கண்ணியமாக நடத்தத் தெரிந்தவன் தான் அரசி யலையும் நடத்த முடியும். தன் குடும்பத்தைத் திறமையுடன், ஒற்றுமையுடன் நடத்தத் தெரியாதவன், தான் மேற்கொண்ட எந்த அலுவலையும் நன்றாக நிறைவேற்ற மாட்டான். ஒரு நாடு என்பது பல சமூகங்களைக் கொண்டது. ஒவ்வொரு சமூகமும் தனித்தனிக் குடும்பங்களைக் கொண்டது. பல குடும்பங்களைக் கொண்டது ஒரு சமூகம். பல சமூகங்களைக் கொண்டது ஒரு சமுதாயம். இந்தச் சமுதாயமே ஒரு தேசத்தின் உயிர்நாடி. ஆகவே ஒவ்வொரு குடும்பத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும்; ஒற்றுமை நிலவினால்தான் சமூகமும், சமுதாயமும், நாடும் நன்றாக வாழமுடியும்; இதுவே பண்டைத் தமிழர்களின் கருத்து. இக் கருத்தை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி. பேகன் என்பவன் ஒரு கொடைவள்ளல். யார் துன்பப் பட்டாலும் அதைக் காண அவனால் முடியாது. உடனே அவர்கள் துன்பத்தைக் களைய முற்படுவான். இவன்தான் மயிலுக்குப் போர்வை தந்தவன். இவன் மனைவியின் பெயர் கண்ணகி என்பது. அவள் கணவனே தெய்வமெனக் கொண்ட கற்புடையவள். எந்தக் காரணத்தாலோ, பேகனுக்கும் அவன் மனைவிக்கும் பிணக்கு ஏற்பட்டது. அப்பிணக்கு வளர்ந்து விட்டது. தன் மனைவியை அவள் தாய்வீட்டுக்கு அனுப்பி விடும் அளவுக்குப் பிணக்கும் பிளவும் வளர்ந்துவிட்டன. பேகன் தன் மனைவியை - கண்ணகியை - அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான். கண்ணகி தாய்வீட்டுக்குச் சென்றதுமுதல் துக்கமே உருவாகிவிட்டாள். கட்டின சேலையோடு கண் கலங்கி நின்றாள். குளித்தல், உண்ணல், உடுத்தல் எல்லாவற்றையும் இழந்தாள். ஏங்கிப் பெருமூச்சு விடுவதே அவள் வாழ்க்கையாகிவிட்டது. பேகன் இருக்கும் இடத்திற்கு வரும் வழியில்தான் கண்ணகியின் தாய்வீடு. பேகனைத் தேடிவரும் புலவர்கள் அந்த வீட்டிலே இளைப்பாறி வருவது வழக்கம். கண்ணகியின் கோலத் தைக் கண்ட புலவர்கள் அத்தனை பேரும் அவளிடம் அநுதாபம் கொண்டனர். அவர்கள் பேகனிடம் வந்து அவன் கொடுக்கும் பரிசிலை ஏற்றுக் கொள்வதில்லை. உன் கற்புக்கரசியின் கவலையைக் களைவதுதான் நீ எமக்களிக்கும் பரிசு என்று பாடிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். பேகன் தன் மனைவியைப் பிரிந்திருக்கும் வரையிலும் அவனிடம் எந்தப் புலவர்களும் பரிசு பெறவேயில்லை. பேகன் ஒரு சிற்றரசன்; சிறந்த கொடையாளி. அவன் குடும்பத்தில் பிளவிருந்தால் அவன் மனத்திலே அமைதியிருக்க முடியாது. உள்ளத்திலே அமைதியற்றவன் ஒன்றையும் ஒழுங்காகச் செய்து முடிக்கமாட்டான். அமைதியின்மை காரணமாக அவசரப் பட்டுத் தவறு செய்தாலும் செய்துவிடுவான். இவ்வுண்மை புலவர் களுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் அவர்கள் பேகனுடைய குடும்பத்திலே சமாதானம் - ஒற்றுமை - ஏற்படுத்தவே பாடுபட்டு வந்தனர். புலவர்களுடைய முயற்சியாலும் அறிவுரையாலும் பேகன் தன் மனைவியின் மீது கொண்டிருந்த வெறுப்பை கைவிட்டான். அவளை அன்புடன் அழைத்து வந்து ஒருமனப்பட்டு வாழ்ந் தான். வழக்கம்போல புலவர்கள் போற்றப் புகழுடன் வாழ்ந்தான். இது ஒரு உண்மை நிகழ்ச்சி. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தமிழ்மக்களின் குடும்பங்களிலே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதிலே எவ்வளவு கவலை கொண்டிருந்தனர் என்பதை இந்நிகழ்ச்சி விளக்கி நிற்கின்றது. இதற்கு ஆதரவான ஒரு செய்யுளை மட்டும் காண்போம். அன்ன ஆகநின் அரும்கல வெறுக்கை! அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக! சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புலம் நன்னொடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவை ஆயின், குரிசில்நீ! நல்காமையின் நைவரச் சாஅய் அருந்துயர் உழக்கும்நின் திருந்துஇழை அரிவை கலிமயில் கலாவம் கால்குவித்து அன்ன ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே. (புற. 146) இது அச் செய்யுள். இது அரிசில் கிழார் என்னும் புலவரால் பாடப்பட்டது. நீ கொடுக்கும் பரிசில் அப்படியே இருக்கட்டும். நீ கொடுக்கின்ற சிறந்த ஆபரணங்களையும், செல்வங்களையும் நாம் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. போரிலே பகைவர் களைக் கொல்லும் பேகனே! சிறிய யாழை நல்ல சுதியுடன் நிற்கும் படி செய்து வாசித்தேன்; உனது வலிய நிலமாகிய நல்ல மலைநாட்டைப் புகழ்ந்து பாடி வந்தேன். இப்படி வந்த என்னை நீயும் அன்புடன் வரவேற்றாய்; நல்ல பரிசில்களைத் தர விரும் பினாய். உண்மையாகவே நீ என்னிடம் இரக்கமும் அன்பும் கொண்டவனாக இருந்தால் எனது வேண்டுகோள் ஒன்றுண்டு; அதை நிறைவேற்ற வேண்டும். பெருமைக்கு உரியவனே! நீ அருள் செய்யாமையால் உன் கற்பரசி வருந்திக் கிடக்கின்றாள்; கண்டோர் மனம் வருந்தும்படி சோர்ந்து கிடக்கின்றாள்; சிறந்த ஆபரணங்களை அணிந்த நினது இல்லாள் பெருந்துயரால் வருந்துகின்றாள். அவள் குளித்து நீராடவில்லை; கூந்தலைச் சீவி முடிக்கவில்லை; உண்ண வில்லை; உறங்கவும் இல்லை. ஆதலால் தழைத்த மயில் பீலியை ஒன்றாகச் சேர்த்து வைத்தது போன்ற செழித்த மெல்லிய அவள் கூந்தல் வாசனைப் புகையைப் பெறவில்லை. அக்கூந்தல் நல்ல வாசனைப் புகையைப் பெற்று, குளிர்ந்த மணம் கமழும் மலர் மாலையையும் சூடும்படி செய்யவேண்டும். அதன் பொருட்டு மிக விரைந்து செல்லும் உன்னுடைய பெரிய தேரிலே உன் குதிரைகள் பூட்டப்பட வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். அரிசில் கிழாரின் இச்செய்யுள், அக்காலப் புலவர்களின் அருள் உள்ளத்தை - இரக்க மனத்தைக் காட்டுவதாகும். நாட்டிலே வாழும் நல்லவர்களின் குடும்ப வாழ்வும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் குடும்பத்திலே ஒற்றுமை நிலவ வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் நாட்டுக்கு நலம் புரிவார்கள் என்ற கருத்துடன் இரு.ந்தனர். அதற்காகத் தம்மால் இயன்ற வரையிலும் பாடுபட்டனர்; முயன்றனர். இவ்வுண்மை யையே இப்பாடல் நமக்கு அறிவிக்கின்றது. அருளே அரசியலுக்கு அடிப்படை அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி. அற்பன் என்றால் அறிவில்லாத வனைக் குறிக்கும். ஆராய்ந்து பார்க்கும் அறிவற்றவன் திடீரென்று ஏராளமான செல்வத்தைப் பெற்றுவிட்டால் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாதுதான். இப்பழமொழியின் கருத்தை வேறுவிதமாக மாற்றிக் கூறுவோர் சிலர் உண்டு. அற்பன் என்பது வறுமையாளனைக் குறிக்கும் என்பர். வறுமையிலேய பிறந்து செல்வத்தையே காணாமல் வாடிய ஒருவனுக்குப் பணம் வந்துவிட்டால் அவன் தலைகால் தெரியாமல் துள்ளுவான் என்று சொல்லுவர். இது அவ்வளவு பொருந்தாது. வறுமையால் வாடியவன் செல்வத்தின் சிறப்பை அறிவான்; அருமையை உணர்வான். ஆதலால் அவன் அதனை ஆடம்பரமாக வீண்செலவு செய்து விடமாட்டான். கஞ்சத்தனம் செய்தாலும் செய்வானே தவிர, கண்மூடித்தனமாகச் செலவு செய்துவிட மாட்டான். இதுதான் இயற்கை யாகும். அறிவற்றவன்தான் ஆகாத செயல்களிலே செல்வத்தை அநியாயமாகச் செலவழிப்பான். அதனால் இன்பமும், புகழும் எய்துவதற்கு மாறாகத் துன்பமும், தொலை யாத அவமதிப்பும் அடைவான். இதுதான் பழந்தமிழர்களின் கருத்துமாகும். இதை விளக்கும் பழம்பாட்டு ஒன்று உண்டு. அது வெறும் கற்பனை பாட்டு அன்று. செல்வத்திலே சிறந்து நிற்கும் ஒருவனுக்கு அறிவுரை கூறும் அருந்தமிழ்ச் செய்யுள். ஒரு காலத்தில் கருவூர் சேரர்களின் தலைநகராயிருந்தது. சேர மன்னர்களைச் சேர்ந்தவர்கள் அந்த நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்டிருக்கின்றனர். இதற்குச் சரித்திரச் சான்றுகள் உண்டு. இதை வைத்துக் கொண்டு கருவூர்தான் வஞ்சிமாநகரம் என்று சாதிப்போரும் உண்டு. ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் ஒரு சேரமன்னன். இவன் வாட்போரிலே வல்லவன். இவன் கருவூரிலே இருந்து ஆட்சிபுரிந்தான். இவன் சிறந்த வீரனாயிருந்த தோடு, ஒப்பற்ற செல்வமும் பெற்றிருந்தான். இவன் காலத்திலிருந்த வேந்தர்களின் இவனே சிறந்த செல்வம் உள்ளவன். இவனை நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் கண்டார். அப்பொழுது அவர் உள்ளத்தில் என்ன தோன்றிற்றோ! இரும் பொறையின் செல்வத்தையும் வீரத்தையும் கண்டதும் அவர் சிந்தனையில் ஒரு உண்மை பிறந்திருக்க வேண்டும். வீரமும் செல்வமும் ஒன்று சேர்ந்துவிட்டால் செருக் கென்னும் குழந்தை பிறக்காமல் போகாது. செருக்கென்னும் செல்வப் புதல்வன் யாரையும் பொருட்படுத்த மாட்டான். மனம்போன போக்கில் எல்லாம் போய் அல்லல்களிலே மாட்டிக் கொள்வான். தன்னைப் பெற்றெடுத்த வீரமும் செல்வமும் வீழ்ந்து வீணாகும்படியான செயல்களையெல்லாம் செய்து விடுவான். என்ற உண்மை அவர் உள்ளத்திலே பிறந்தது. ஆதலால் அவர் அந்த அரசனுக்கு அறிவுரை கூறவேண்டு மென்று தீர்மானித்தார். இவன் குலப்பெருமை படைத்த சேரமன்னன். வீரத்திலும் செல்வத்திலும் நிகரற்று விளங்குகின்றவன்; நானோ ஒரு ஏழைப் புலவன். ஏழை பேச்சு அம்பலம் ஏறாது என்று சொல்லுவார்கள். ஆகையால் நான் சொன்னால் இவன் கேட்பானா? மாட்டானா? என்ற எண்ணம் அவர் நெஞ்சிலே பிறக்காமல் இல்லை. இவ்வெண்ணத்தால் சிறிது தயங்கித்தான் நின்றார். உடனே கடமை உணர்ச்சி - தமிழர் பரம்பரையின் அருள் உள்ளம் - எது வரினும் உண்மையை உரைத்தே தீர்வது என்ற தமிழர் வீரம் அவர் உள்ளத்திலே தலையெடுத்தது. இம்மன்னன் தீய நெறியிலே செல்லாமல் தடுக்கவேண்டியது நமது கடமை என்று உறுதி கொண்டார். ஆதலால் அச் சேரமன்னனைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்; பேசுவதுபோலப் பாடத் தொடங்கினார். சேரமன்னனே! உன்னுடைய நாடு கானக நாடு. உனக்குக் காட்டுச் செல்வமும் உண்டு நாட்டுச் செல்வமும் உண்டு. எருமைபோலக் காணப்படும் கருங்கற்கள் நிறைந்த இடங்களில் எல்லாம் பசுவைப்போலப் பல யானைகள் நிறைந்து கிடக் கின்றன. பசு மந்தையைப் போல உன்னிடம் யானைக் கூட்டங்கள் நிரம்ப உண்டு. இத்தகைய காடுகள் நிறைந்த நாட்டின் தலைவன் நீ; மிகச் சிறந்த பெருமையுடையவன். நீ ஒப்பற்றவனாக விளங்குகின்றாய்! உன்னை எதிர்க்கும் வேந்தர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை. பகைவர்கள் உன்னை அணுகுவதற்கு அஞ்சும்படியான வீரத்தையும், செல்வத்தையும் உடையவனாக விளங்குகின்றாய். இத்தகைய உனக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். நீ கேட்டாலும், கேட்காவிட்டாலும் நான் உறுதியாகச் சொல்லித்தான் தீரவேண்டும். நான் சொல்வது உன் செவிக்கு இனிமை தராவிட்டாலும் - கசப்பாயிருந்தாலும் உனது நன்மைக்காகவே சொல்லுகிறேன். உனது நன்மைக்காக மட்டும் அன்று; இந்த நாட்டின் நன்மைக்காகவும் சொல்லு கிறேன்; இந்த நாட்டு மக்களின் நன்மைக்காகவும் சொல்லு கிறேன். உன் வீரத்தையும் செல்வத்தையும் பார்த்துப் பலர் உன்னைப் பாராட்டிப் போற்றுவார்கள். உன்னைக் கொண்டாடு வோர் அத்தனை பேர்களையும் அறிவாளிகள் என்று எண்ணி ஏமாந்துபோகாதே. அவர்களிலே இரக்கமும் அன்பும் அற்றவர்கள் பலர் உண்டு. அவர்கள் எப்பொழுதும் நரகத்திலேயே கிடந்து உழலத் தகுந்தவர்களாயிருப்பார்கள். அப்படிப்பட்ட கொடுமைக் காரர்களுடன் நீ கூட்டுறவு வைத்துக் கொள்ளக்கூடாது. இரக்கமும் அன்பும் இல்லாதவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் நீயும் இரக்கத்தையும் அன்பையும் விட்டு விடுவாய். இரக்கமும் அன்பும் உன்னைவிட்டு ஓடிவிடுமானால் உன் வீரமும் செல்வமும் என்ன நிலையை அடையும் தெரியுமா? தள்ளாடித் தடுமாறுவோரைத் தாங்கி வாழ வைப்பதே வீரத்தின் செயல். இதற்கு மாறாக உன் வீரம் தந்நலங் கருதிக் கொடுமையாக மாறிவிடும். துன்புறுவோரை இன்புறுத்து வதற்குப் பயன்படுவதே செல்வத்தின் சிறப்பு. இதற்கு மாறாக உன் செல்வம் உனக்கும் உனது கூடாநட்பினரின் ஆடம்பரத்துக்குமே பயன்பட்டு அழிந்து போகும். ஆதலால்தான் அருளும் அன்பும் அற்றவர்களுடன் சேராதே என்று சொல்லுகிறேன். நீ உனது நாட்டை நன்றாகப் பாதுகாப்பதிலே கருத்தைச் செலுத்து. குழந்தையை வளர்ப்பவர்கள் எவ்வளவு கருத்தோடு - பாதுகாப்போடு - அதை வளர்ப்பார்களோ அவ்வாறு நீ உன் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு என்பது இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இரக்க மற்றவர்களிடம் நால்லாட்சி மாட்டிக்கொண்டால், அந்நாட்டு மக்கள் தாயில்லாப் பிள்ளைகளைப்போலத் தவியாய்த் தவிக்க வேண்டியதுதான். இத்தகைய நாடுகாவல் கிடைத்தற்கரிய செல்வமாகும். ஆதலால் நீ இந்த உண்மையை மறந்துவிடாதே என்று கூறினார் புலவர். அச்செய்யுள் கீழ்வருவது: எருமை அன்ன கருங்கல் இடைதோறு ஆனில் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ! பெரும! நீஓர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்! அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி அளிதோ தானே; அதுபெறல் அரும் குறைத்தே. (புற. 5) எட்டே வரிகள் கொண்ட இச்சிறிய செய்யுளிலே எத் துணை அரும்பொருள் அடங்கியிருக்கிறது என்பது மேலே காட்டப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் எவ்வளவு இரக்கச் சிந்தை படைத்தவர்களாயிருந்தனர் என்பதற்கு இச் செய்யுள் ஒரு எடுத்துக்காட்டாகும். மன்னர் ஆட்சி நடைபெற்று வந்த அக்காலத்திலே மக்களிடம் அன்பு கொண்ட புலவர்களும் அமைச்சர்களும் மன்னர்களை அடக்கி ஆண்டு வந்தனர். ஆட்சிமுறை அருளை யும், அன்பையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதே பழந்தமிழர்களின் கருத்தாகும். இக் கருத்தை இச் செய்யுள் உள்ளங்கையில் உள்ள பதுமை போல் விளக்கிக் காட்டுகின்றது. அரசுக்கு வெற்றி அறமே படைபலத்தால் மற்றவர்களை அடக்கி ஆளலாம்; அல்லது நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்; என்று எண்ணுகின்றனர் பலர். இப்படி எண்ணக்கூடியவர்கள் தாம் இன்று பல நாடுகளில் அரசியல் ஆதிக்கம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படும் செல்வத்தை, படைகளைப் பெருக்குவதற்குச் செலவழித்து வருகின்றனர். இப்படிப் படைகளைப் பெருக்குவோர் சமாதானத்திற் காகவே படைகளைப் பெருக்கி வருகின்றோம், வளர்த்து வருகின்றோம் என்று பேசுகின்றனர். இதுதான் வேடிக்கை. இவர்கள் மற்றவர்களைப் பார்த்து, போர் வெறியர்கள்; யுத்த மோகத்தால் ஆட்டி வைக்கப்படுகிறவர்கள்; உலக சமாதானத் துக்கு உலை வைக்கின்றவர்கள் என்றெல்லாம் உளறிக் கொட்டு கிறார்கள். இது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை. ஒரு அரசாட்சிக்குப் படைபலம் ஆக்கந் தந்துவிடாது. படைப் பெருக்கத்தால் மட்டும் எந்த அரசும் நிலைத்து வாழ்ந்துவிட முடியாது. அறநெறியே அரசு நிலைத்து நிற்பதற்கு அடிப்படையாகும். குடிமக்களிடம் விருப்பு வெறுப்பின்றி நடந்துகொள்ளும் அரசாங்கமே மக்களால் மதிக்கப்படும். குடிமக்களின் குறைகளைக் களைந்து அவர்களை அமைதியுடன் வாழச் செய்யும் அரசாங்கமே படை பலத்தைக் காட்டிலும் சிறந்த பலம் பெற்ற அரசாங்கமாக விளங்கும். இந்த உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர். அற நூல்களிலே இதையே சிறந்த நீதிமுறையாக எழுதிவைத்தனர். தமிழ்ப் புலவர்கள் இந்த அறத்தை மன்னர்களுக்கு அடிக்கடி நினைப்பூட்டி வந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந் திருந்த இந்த உண்மையை உணராத அரசாங்கங்கள் இன்றுகூட இவ்வுலகில் இருக்கின்றன. இதை எண்ணும்போது தமிழர்களின் பழமையான பண்பாட்டின் பெருமை விளங்கும். இந்த உண்மை யை நமக்குக் காட்டுகின்ற செந்தமிழ்ச் செய்யுட் கள் எத்தனையோ உள்ளன. இங்கே புறநானூற்றுப் பாட்டு ஒன்றைமட்டும் பார்ப்போம். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பவன் சேர, சோழர்களைவிடச் சிறந்த புகழ் பெற்றவன்; வீரமுள்ளவன்; படைபெருக்கமுள்ளவன். அவன் ஒரு சமயம் தன் பெரும்படையைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டிருந்தான். மற்றவர் களை விட நால்வகைப் படைகளும் அவனிடம் நிறைந்திருந்தன. அதனால் அவன் எக்களிப்பும் இறுமாப்பும் கொண்டிருந்தான். இவன் நிலைமையைக் கண்ட மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் அவன் செருக்கடங்கும்படி சில அறிவுரை களைக் கூறினார். அவர் கூறியுள்ள அறவுரையில் தமிழர்களின் அருள்நெறி அடங்கிக் கிடக்கின்றது. புலவர் உரையைப் பாருங்கள். பூமாலையை அணிந்த பாண்டியனே! நீ அரசர்களுக் குள்ளே சிறந்தவன். மேரு மலையை வில்லாகக் கொண்டு வாசுகியை நாணாக ஏற்றி ஒரே அம்பினால் திரிபுரத்தை அழித்து, தேவர்களுக்கு வெற்றியை அளித்தான் சிவ பெருமான். அவன் கழுத்திலே நஞ்சை அடக்கியவன்; அழகிய சென்னியை யுடையவன்; பிறை போன்ற நெற்றியை உடையவன். அந்த நெற்றியிலே ஒரு கண்ணும் அவனுக்கு உண்டு. அந்த நெற்றிக்கண் பார்வையால் இந்த உலகை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவான். அவ்வளவு ஆற்றலும் பெருமையும் உள்ளது அக்கண். அந்தக் கண்ணைப் போல் நீ உயர்ந்தவன். உனக்கு ஒரு உண்மை அறத்தை உரைக்கின்றேன்; கேட்பாயாக. உன்னுடைய படையிலே களிறுகள் நிறைந்திருக் கின்றன. அவை கடுமையான சினத்தையுடையன; பகைவர்களை அஞ்சாமல் கொன்று குவிக்கும் குணம் உடையன! இத்தகைய யானைப்படை உன்னிடம் நிறைய உண்டு. விரைந்து ஓடக்கூடிய குதிரைப் படைகளும் நிறைந்திருக்கின்றன; நீண்ட கொடிகள் அமைந்த பெரிய தேர்களும் நிறைந்திருக்கின்றன; அஞ்சா நெஞ்சமுள்ள - போரென்றால் மகிழ்ந்து துள்ளும் புகழ்பெற்ற - வீரர்களும் நிறைந்திருக்கின்றனர். இவ்வாறு யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகைப் படைகளால் உன்னுடைய சேனை, வீரத்தில் உயர்ந்து விளங்குகின்றது; அளவிலும் பெருகியிருக்கின்றது. ஆயினும் உன் அரசாட்சியின் வெற்றிக்கு இந்தப் படை அடிப் படையாக நிற்கமுடியாது; ஆதரவளிக்கவும் முடியாது. எக்காலத்திலும், எல்லோராலும் கொண்டாடப்படும் சிறப்புள்ள அறநெறிதான் அரசுக்கு வெற்றி தருவதாகும். அறநெறியை மறந்த அரசு - அதைக் கைவிட்ட அரசு - நிலைக் காது; தலைசாய்ந்து தரைமட்டமாகி அழிந்து விடும். ஆகையால் கொடுமை செய்த ஒருவரை, இவர் நமது உறவினர் என்று எண்ணித் தண்டிக்காமல் விடக் கூடாது; பிறர் என்பதற்காக நல்ல குணம் உள்ளவர்களைத் தண்டித்து விடக் கூடாது. யாராயிருந்தாலும் சமமாக எண்ணி, கோல் கோடாமல் முறை செய்ய வேண்டும். கதிரவனைப் போன்ற சிறந்த ஆண்மையும், சந்திரனைப் போன்ற இனிமை தரும் தண்மையும், மேகத்தைப் போல் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையும் கொண்டு, நீ நீடூழி வாழ்க! இவ்வுலகிலே, இல்லையென்று சொல்லி வருந்தும் வறியவர்களே இல்லாதபடி செய்து, நீ நீடூழி வாழ்க! சிறந்த பெருமையுள்ளவனே! சிறந்த முருகன் அமர்ந்திருக் கின்ற செந்தில் நகரிலே, ஆழமுள்ள கடல் கரையிலே, வெண்மை யான தலையையுடைய அலைகள் மோதும் பெரிய கடல் துறையிலே கடுங்காற்றால் குவிந்திருக்கும் மணலைக் காட்டிலும் நெடுங்காலம் நீ வாழ்க! இதுதான் மருதன் இளநாகனார் கூறிய அறிவுரை. தமிழர் களின் பண்பாட்டையும், தமிழ்ப் புலவர்களின் அறநெறி உள்ளத் தையும் தெளிவாக எடுத்துக்காட்டும் சிறந்த கவிதை. மேலே காட்டிய பொருள் அமைந்த பாடல் வருமாறு: ஓங்குமலைப் பெருவில், பாம்புஞாண் கொளீஇ; ஒருகணை கொண்டு, மூஎயில் உடற்றிப் பெருவிரல் அமரர்க்குவென்றி தந்த கரைமிடற்று அண்ணல், காமர் சென்னிப், பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற! கடும்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும், நெடுங்கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகல்மறவரும், என நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்; அதனால், நமர்எனக் கோல்கோடாது, பிறர்எனக் குணம்கொல்லாது, ஞாயிற்று அன்ன வெம்திறல் ஆண்மையும், திங்கள் அன்ன தண்பெரும் சாயலும், வானத் தன்ன வண்மையும், மூன்றும் உடையை ஆகி, இல்லோர் கையற நீநீடு வாழிய; நெடுந்தகை! தாழ்நீர் வெண்தலைப் புணரி அலைக்கும், செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுறைக், கடிவளி தொகுப்ப ஈண்டிய, வடுவாழ் எக்கர் மணலினும் பலவே. (புறநா. 55) கொடுங்கோலாட்சி குலையும் அரசு என்பது மக்கள் நன்மைக்காக, மக்களால் ஏற்படுத்திக் கொண்டதாகும். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள், கருத்துடையவர்களாக வளர்ந்தபின் தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியைக் கருதிப் பல கட்டுப்பாடுகளை உண்டாக்கி கொண்டனர். அவர்கள் வகுத்துக் கொண்ட சமுதாயக் கட்டுப் பாடுகளைக் கண்காணித்து காப்பாற்ற அரசு அவசியமாயிற்று. வல்லான் ஒருவனைத் தலைவனாக வைத்து, அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதென்று முடிவு செய்து கொண்டனர். அந்த வல்லானையே அரசனாக வைத்துக் கொண்டனர். அவனுக்கு அனைவரும் அடங்கி நடக்க வேண்டும்; அவனைப் பெரியவனாக மதிக்க வேண்டும் என்பதற்காகவே அரசன் கடவுளின் அம்சம் என்று கூறினர். அவன் செய்வது கொடுமையாயினும், நன்மையாயினும் மறுக்காமல் கீழ்படிவதே மக்கள் கடமை யென்றும் சொல்லி வைத்தனர். இந்தக் காரணத்தால் அரசர்களிலே சிலர் குடிகளின் நலத்தைக் கருதாமல் தங்கள் நலமொன்றையே பெரிதாக எண்ணி நடக்கவும் தொடங்கினர். இவ்வாறு நடந்த மன்னர்களுக்கு அறிஞர்கள் அவ்வப்போது அறிவுரைகளைப் புகட்டி வந்தனர். இவர்களைப் பார்த்து, நீ நேர்மையுடன் நடக்காவிட்டால் உன் வாழ்வு நிலைக்காது; உன் அரசும் தாங்காது; நீயும் நிலைகெட்டுப் போவாய் என்று பயமுறுத்தியும் வந்தனர். அறிஞர் சொற்களைக் கேட்காத அரசன் அழிந்து போ வான் என்ற நீதியையும் இளம் பருவத்திலேயே மன்னர்களின் உள்ளத்திலே ஊன்றி வைத்தனர். ஆதலால் அக்காலத்து அரசர்கள் அவ்வப்போது அறிஞர்கள் காட்டும் நெறியிலே நின்று செங்கோலாச்சி வந்தனர். அரசர்கள் தவறு செய்த காலத்தில் அவர்களுக்குப் புலவர் களால் எடுத்துரைக்கப்பட்ட அறிவுரைகள் பல, அவை இன்று நீதிநூல்களாகவும் அறிவுரைகளாகவும் திகழ்கின்றன. அக் காலத்திலே தனிப்பட்ட மன்னர்களுக்குக் கூறிய அறிவுரைகள் இக்காலத்திலே மக்களின் பிரதிநிதியாக இருந்தது ஆளுவோர்க்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். இதற்கு ஒரு உதாரணம் கீழ்வரும் வரலாறாகும். பாண்டியன் அறிவுடை நம்பி என்பவன், அறிவுள்ளவன் தான். அவனிடம் அறிவும் இருந்தது; அழகும் இருந்தது. நம்பி என்பது எல்லா அழகும் பொருந்தியவனையே குறிக்கும். இப் பாண்டியன் அழகோடு அறிவும் நிரம்பியிருந்தான். இவன் தீயோர் சேர்க்கை காரணமாகக் குணங்கெட்டான்; தன் அரசக் கடமையை மறந்தான்; தனது இன்ப வாழ்வை மட்டும் எண்ணினான். ஆதலால் குடிகளிடம், அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக வரிகளைத் தண்டினான். குடிகளும் மன்னன் சொல்லுக்கு மறுசொல்லுரைக்காமல் மனவேதனை யோடு தாங்கமுடியாத வரிச்சுமையால் தள்ளாடினார்கள். அரசனுடைய கொடுமைக்கு ஆதரவாயிருந்த அதிகாரவர்க்க மும் அட்டகாசம் புரிந்து வந்தது. இந்தக் கொடுமைகளைக் தாங்கமுடியாமல் பரிதவித்தனர் பாண்டிய நாட்டுக் குடிமக்கள். இந்நிலையைக் கண்டு ஏக்கமடைந்தார் ஆந்தையார் என்னும் அருந்தமிழ்ப் புலவர். அவரும் பாண்டிய நாட்டுக் குடிகளிலே ஒருவர்தான். அவர் இருந்த ஊரின் பெயர் பிசிர் என்பது. ஆதலால் அவருக்குப் பிசிராந்தையார் என்று பெயர். மதியுள்ள மன்னன், மதியற்ற நெறியிலே நடந்து வருவது அவர் மனத்தைக் கலக்கிற்று. உடனே புறப்பட்டு மன்னனிடம் வந்தார். அவன் உள்ளத்திலே இடித்து நல்லுரை கூறினார். அவர் அவனுக்கு நவின்ற நல்லுரை ஒரு செய்யுள் உருவாக இன்றும் நின்று நிலவுகின்றது. அந்தப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறிய அறிவுரையைப் பார்ப்போம். நிலத்திலே நெல் விளைந்து கதிர்கள் முற்றிக் காய்த்திருக் கின்றன. அந்த நிலம் பரந்த நிலமும் அன்று; ஒரு மாவுக்குக் குறைந்த அளவுள்ள நிலம்தான். ஆயினும் அந்நிலத்தில் உள்ள கதிர்களைச் சேதமில்லாமல் சிறிது சிறிதாக அறுத்துக் கொண்டு வந்து உணவாகக் கொண்டால் பல நாட்கள் உணவாகக் கொள்ளலாம். நூறு வயல்களிலே நெற்பயிர் விளைந்திருக்கின்றது; நன்றாக விளைந்திருக்கின்றது. அவ்வயல்களிலே ஒரு யானை தனியாகப் புகுந்து அந்த நெற்கதிர்களை மேயத் தொடங்கினால் என்ன ஆகும்? அந்த யானையின் வாயிலே புகும் நெல்லை விட அதன் கால்களால் மிதியுண்டு சேதமடையும் நெல் ஏராள மாகும். யாருக்கும் பயன்படாமல் நூறு வயல்களிலே விளைந்த நெல்லும் பாழ்பட்டுப் போய் விடும். பாண்டியனே! இந்த உண்மை உனக்குத் தெரியாதது அன்று. அறிவுள்ள ஓர் அரசன் மக்களிடம் வரி வாங்கும் முறை யை அறிந்து அறவழி கெடாமல் வாங்க வேண்டும். இம்முறை யிலே வரி தண்டினால், குடிகள் கோடிக்கணக்கான பொருளை மனங்கோணாமல் கொடுப்பார்கள். மக்கள் மகிழ்ச்சியோடு வரி கொடுக்கும் நாடும் மிகவும் சிறந்து விளங்கும்; வளம் பெருகும். அரசன் அறிவற்றவனானால், அளவுக்கு மேல் தகாத வழியில் வரி தண்டினால், அவனுடைய அதிகாரிகளும் ஒழுங் கீனமாக நடப்பார்கள். குடிகளின் தரமறியாமல் வற்புறுத்தி வரி வாங்குவார்கள். இவ்வாறு வரி வாங்குவதனால் குடிகளின் அன்பு அடியோடு அறுந்து போகும்படி வரி வாங்கி உண்டு உண்டு கொழுக்கும் அரசன் அழிந்து போவான்., யானை புகுந்த நெல்வயல்போலத் தானும் செல்வத்தை நுகரமாட்டான். பிறரும் செல்வத்தை அனுபவிக்கமாட்டார்கள். அவனால் ஆளப்படும் இந்த உலகமும் கெடும். என்று இவ்வாறு அறிவுரை கூறினார். இந்த அறிவுரை அமைந்த பாடல் கீழ்வருவது. காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே, மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு வாயினும் தமித்துப்புக்கு உணினே, வாய்புகு அதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன், ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடுமே. (புற. 184) இச் செய்யுளிலே எடுத்துக் காட்டியிருக்கும் உவமானம் மிகவும் சிறந்தது. சேதமாகாமல் அறுக்கப்படும் சிறு வயலின் நெல் பலர்க்கும் பல நாட்களுக்கும் உணவாகும். நூற்றுக்கணக் கான வயல்களிலே விளைந்திருக்கும் நெல், யானை புகுந்தால் அதற்கும் பயன்படாது; பிறருக்கும் பயன்படாது பாழடையும். இது போலக் குறைவாக வரி வாங்கும் அரசு - குடிகள் தாங்கும் அளவுக்கு வரி விதித்து வாங்கும் அரசு - நிலைத்து வாழும்; குடிகள் தாங்கமுடியாத அளவுக்கு வரி விதிக்கும் அரசு வீழ்ந்து விடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்தது இச்செய்யுள். இன்னும் இது உயிருடன் செழித்து நடமாடு கின்றது. இச்செய்யுளில் அமைந்திருக்கும் அறவுரையை இன்றும் அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முடிஅரசுக்கு உரைத்த இந்த நல்லுரை இன்றையக் குடியரசுக்கும் ஏற்றதாக இருக் கின்றது. இந்த அரசியல்பற்றிய தமிழர் அருள்நெறி, என்றும் அழியாத செல்வம் என்பதில் ஐயம் இல்லை. அமரிலும் அருள்நெறி தமிழர்கள் யாருக்கும் தலைவணங்காத வீரர்கள்; தங்களன்புக்காகத் தயங்காமல் உயிரையும் கொடுப்பவர்கள்; மானங்கெட்டு வாழ ஒருபொழுதும் நினைக்க மாட்டார்கள்; எதிரிகள் யாராயிருந்தாலும் அவர்களுக்குத் தலைவணங்க மாட்டார்கள்; அவர்களை எதிர்த்துச் சண்டை செய்து அழிப்பார்கள் என்று சொல்லிப் பாராட்டுவார்கள். வீணான முரட்டுத்தனத்தைக்கூட வீரம் என்று விளம்புவோர் உண்டு. முரட்டுத்தனம் வேறு; வீரம் வேறு. உடல் பலத்தால், அச்சமற்ற தன்மையால் எதையும் செய்யத் துணிவது முரட்டுத்தனம். இதைக் குருட்டுத் தனம், கண்மூடித்தனம் என்றும் கூறுவர். இந்த முரட்டுத் தனத்தை வீரம் என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தன்மானத்திற்கு ஆபத்து வரும்போது அதைக் காப் பாற்றிக் கொள்ளத் துணிவது வீரம். தான் உண்மை என்று நம்பும் கொள்கையை நடத்தி வைக்கப் பாடுபடுவது வீரம்; தான் தந்த உறுதிமொழிகளை உயிர் போனாலும் மறுக்காமல் நிறைவேற்றிவைப்பது வீரம்; உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் உண்மையை உண்மையாகவே உரைப்பது வீரம்; அறிவையும், பொறுமையையும் துணையாகக் கொண்டு எக்காரியத்தையும் இனிது செய்து முடிப்பது வீரம். படைக்கலமேந்திப் போர்க்களத்திலே புகுந்து முன் வைத்த காலைப் பின்வைக்காமல் போர் செய்து உயிர் விடுகின்றவன் சிறந்த வீரன்தான். ஆனால் அவனைவிடப் போர்களத்திற்கே செல்லாமல் தான் கருதிய செயலைச் செய்து முடிப்பவன் சிறந்த வீரன். எதிரியின் ஆத்திரத்தை அடக்கி, அவனால் ஆகவேண்டிய வற்றைச் சமாதானமாகவே செய்து முடித்துக்கொள்வது எல்லோராலும் ஆகக் கூடிய செயல் அன்று. அறிவும், பொறு மையும், திறமையும், அஞ்சாமையும் உள்ளவர்களால் தான் இவ்வாறு செய்து முடிக்கக்கூடும். அன்றியும், உண்மையான வீரர்களிடம் தனிச்சிறப்பு ஒன்றுண்டு. அவர்கள் தமக்குச் சமமானவர்களோடுதான் சமர்புரிவார்கள். எதிரி தமக்குச் சமமானவராயிருந்தாலும் அவர் கையில் ஆயுதம் இல்லாதபோது, தாம் மட்டும் படையேந்திப் போர் புரிய மாட்டார்கள். இப்படிச் செய்வது யுத்த தர்மத்திற்கு விரோதம். எதிரிகளோடுதான் சண்டை போடுவார்கள். சண்டைக்குச் சம்பந்தம் இல்லாதவர்களோடு சண்டை போட மாட்டார்கள். இதுமட்டும் அன்று; போர் செய்யத் தகுதியற் றவர்களுக்குத் தக்க பாதுகாப்புத் தேடி தருவார்கள். தாமும் எதிரியும் போர் செய்வதன்மூலம் தம்மைத் தாம் காப்பாற்றிக் கொள்ளத் திறமற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் உண்டா காமல் பாதுகாப்பதில் அவர்கள் முழுக் கருத்தையும் செலுத்து வார்கள். தம்மைத் தாம் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர் களுக்குப் போர் தொடங்குவதற்கு முன்பே அறிவிப்புக் கொடுத்து விடுவார்கள். போதுமான காலத்திலேயே முன்னறி விப்புக் கொடுப்பார்கள். இது பழந்தமிழ் மக்களிடம் இருந்த சிறந்த அருள் நெறி யாகும். பசு, பசுவின் தன்மையைக் கொண்ட பார்ப்பனர்கள், பெண்கள், நோயாளிகள், தம் முன்னோர்க்குரிய அரிய கடன் களைச் செய்வதற்குரிய சிறந்த பிள்ளைகளைப் பெறாதவர்கள் இவர்களுக்குப் போரால் எவ்வித இன்னலும் நேரக் கூடாது என்பது தமிழர்களின் தலைசிறந்த அறம். பசு குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் சத்துள்ள உணவளிக்கும் உயிர்ப்பிராணி. அதனாலேயே பசுவைப் பாது காப்பதை ஒரு அறமாகக் கொண்டனர். பசுக்களின் பரம்பரை குறைந்துவிட்டால் அது மக்களின் உடல்நல வளர்ச்சிக்கே ஆபத்தாகிவிடும். இயற்கைச் சத்து நிறைந்த உணவிலே பசும் பாலுக்கு நிகர் வேறொன்றுமில்லை. இதை உணர்ந்துதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் பசுவைப் பாதுகாக்கும் வேலையை மேற்கொண்டிருக்கின்றனர். எதிரியுடன் போர் தொடங்குவதற்கு முன், அவர்களுடைய பசு மந்தையைக் கவர்வதுதான் முதல் வேலை. பசுக்களுக்குச் சேதம் உண்டாகாமல் அவற்றைப் பத்திரமான இடத்திற்குக் கொண்டு போவதற்காகத்தான் அதைக் கவர்வார்கள். இதுவும் மக்கட்சமுதாயத்திற்குப் பசுக்கள் எவ்வளவு பயன் உள்ளவை என்பதைக் காட்டுவதே யாகும். பசுப் போன்ற தன்மையுள்ள பார்ப்பனர்களும் யாருக்கும் தீங்கு செய்யாதவர்கள். அறநூல்களைக் கற்பது, அந்த அறங்களை மக்களுக்கு எடுத்துரைப்பது, ஒழுக்க நெறி தவறாமல் நடப்பது, மற்றவர்களையும் ஒழுக்க நெறியிலே நடக்கும்படி அறிவுரை கூறுவது, மக்கட் சமுதாயத்திற்குக் கல்வி போதிப்பது, அரசாட்சி, வியாபாரம், விவசாயம், தொழில்கள் ஆகியவை வளர்வதற்கு ஆலோசனை கூறுவது, இவை எல்லாம் பார்ப்பனர்கள் தொழில் களாக இருந்தன. இக்காரியங்களைச் செய்து வருவோரையே பார்ப்பனர்கள் என்று அழைத்தனர். இவர்கள் நாட்டின் நன்மைக்கு இன்றியமையாதவர்களாயிருந்தனர். போர் காரணமாக இத்தகைய நிபுணர் கூட்டங்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று கருதினர். ஆகையால் இவர்களையும் காப்பாற்றவேண்டியது தங்கள் கடமையென்று கொண்டனர் முன்னோர். அக்காலத்துப் பெண்கள் போரின் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாதவர்கள்; பிறர் பாதுகாப்பில் வாழ வேண்டிய வர்கள். ஆதலால் அவர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதைக் கடமையாகக் கொண்டனர். நோயாளிகள் பிறர் துணையின்றி வாழமுடியாது. ஆகையால் அவர்களையும் போர் நடக்கப்போகும் இடத்தி லிருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள். இறந்து போன முன் னோர்களைத் தெய்வம்போலப் போற்றும் வழக்கம் பண்டைத் தமிழர் வழக்கம். பழமையான நாகரிகமுள்ள எல்லா இனத்தாரி டையிலும் இவ்வழக்கம் இருக்கின்றது. புராதன நாகரிகம் படைத்த சீனர்களும் தங்கள் முன்னோரை வழிபடுகின்றனர். எகிப்தியர்களும் தங்கள் முன்னோரை வணங்கி வந்தனர். ஆதலால் பண்பாட்டிலே முதிர்ந்த தமிழர்களிடம் இவ்வழக்கம் குடி கொண்டிருந்ததிலே வியப்பில்லை. தங்கள் முன்னோர்களுக்கான கடன்களைச் செய்வதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று விரும்பினர். பிள்ளை பெற்றவர்களுக்குத்தான் புண்ணிய லோகம் உண்டு; பிள்ளை பெறாதவர்களுக்குப் புண்ணிய லோகம் இல்லை என்ற நம்பிக்கை கூடத் தமிழர்களிடம் உண்டு. ஆகையால்தான் பிள்ளை பெறாதவர்களையும் போர் நடக்கும் இடத்தைவிட்டுப் போய்விடும்படி முன்னறிவிப்புக் கொடுத்து வந்தனர். தமிழர்களின் இச் சிறந்த அறத்தைப் பற்றி எண்ணுவோர் வியப்படைவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னி ருந்த தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை எண்ணுந்தோறும் நமக்கு வியப்புண்டாகின்றது. அறிவுத்துறையிலே இன்று எவ்வளவோ முன்னேறி யிருப்பதாகப் பெருமையடித்துக் கொள்கின்றோம். பண்டைக் கால மக்கள் அறிவுத்துறையிலே ஓரளவு பின் தங்கித்தான் இருந்தார்கள். ஆனால் மனிதத் தன்மை என்பது வேறு; அறிவு என்பது வேறு. அறிவும் மனிதத் தன்மையும் ஒன்று சேர்ந்திருந் தால் எவ்வளவோ நன்மையாக இருக்கும். பண்டைக் காலத்திலே அறிவு குறுகியிருந்தாலும் மனிதத் தன்மை பெரும்பாலான மக்களிடம் குடிகொண்டிருந்தது. இன்று அறிவு எவ்வளவோ விரிந்து கிடந்தாலும் மனிதத் தன்மை சுருங்கிவிட்டது. இந்த உண்மையைச் சிறந்த விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளிகள், பிள்ளை பெறாதவர்கள் ஆகியவர்களைக் கொல்லக்கூடாது என்ற தமிழர் அருள்நெறியை இக்காலப் போர்வெறியர்கள் பின்பற்ற முடியாது. அணுக்குண்டும், நீர்வாயுக் குண்டும் போர்ப்படை யாகப் பெருகிவரும் காலத்தில் பொது மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்? அணுக்குண்டும், நீர்வாயுக் குண்டும் ஒரு தீவையே - ஒரு நாட்டையே - ஒரு பெரிய நகரத்தையே - அப்படியே அழிக்கக் கூடியன. இத்தகைய போர்க்கருவிகளைப் பெருக்குவோர் மனிதத் தன்மையை எப்படிப் பாதுகாக்க முடியும். போரிலே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது; போர்வெறி கொண்ட வீரர்கள்தாம் போர்க் களத்தில் சண்டையிடவேண்டும்; உயிர்ச்சேதம் அவர்களிடம் மட்டுந்தான் உண்டாகலாம்; போர்வீரர்கள் அல்லாத மற்றவர் களுக்குப் பாதுகாப்பளித்த பிறகுதான் போர் தொடங்க வேண்டும். இதுதான் போர் பற்றித் தமிழர்கள் கொண்டிருந்த அருள்நெறி யாகும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யென்பவன் சிறந்த வீரன். தமிழர் அருள்நெறியைப் பின்பற்றி நடப்பவன். அவனைப்பற்றி நெட்டிமையார் என்னும் புலவர் பாடியிருக்கும் ஒரு செய்யுளிலே தமிழர் அருள்நெறி அமைந்து கிடக்கின்றது. ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்! என அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்தின், கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எம்கோ வாழிய குடுமி! தம்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புற. 9) பாண்டியன் பெருவழுதியை வாழ்த்தும் முறையிலே அமைந்தது இச் செய்யுள். அவனை வாழ்த்தும்போது அவனிடம் உள்ள உயர்ந்த மனிதத் தன்மையை எடுத்துக் காட்டினார் புலவர். இச்சிறிய பாட்டு, தமிழர்கள் போர்க்காலத்திலும் அறத்தையும், அருள்நெறியையும் பாதுகாத்து வந்தார்கள் என்பதைக் காட்டுகின்றதன்றோ! அறிவுத்துறையிலே உலகம் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டது உண்மைதான். ஆனால் அறிவும், மனிதத் தன்மையும், வீரமும், அருளும் இணைய வாழ்ந்த தமிழர் அருள்நெறியை இன்று உலகம் பின்பற்றினால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அறநெறி வாழ்வு பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் சேரமன்னர் பரம்பரையைச் சேர்ந்தவராக எண்ணப்படுகிறார். இவர் பாலைத் திணையைப் பற்றிப் பாடுவதிலே வல்லவர். இவருடைய பாடல்கள் பெரும் பாலும் பாலைத்திணையைப் பற்றிக் கூறுவதாகவே அமைந் திருக்கின்றன. வளமற்ற வறண்ட நிலமே பாலைநிலம். அந்த நிலத்தைப் பற்றியும், அதில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் பாடுவ தென்றால் அது சிறந்த கற்பனை உள்ளம் படைத்தவர்களால் தான் முடியும். இவர் எவற்றையும் உற்று நோக்கும் இயல்பு படைத்தவர்; கற்பனா சக்தி மிகுந்தவர். ஆதலால்தான் பாலையைப் பற்றிப் பாடும் ஆற்றல் பெற்றுள்ளார். இவர் பெயருக்கு அடை மொழியாக - சிறப்பு மொழியாக - பாலை பாடிய என்னும் பட்டம் பெற்று விளங்குகின்றார். இவருடைய பாடல்கள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு முதலிய தொகை நூல்களிலே காணப்படுகின்றன. இவர் தாம் சொல்லத் தொடங்கிய பொருளை உவமை கூறி விளக்குவதிலே வல்லவர்; சிறந்த கருத்துக்களை - நீதிகளை - அறங்களை - அழகாகவும் விளக்கமாகவும் சொல்லுவார். பிறர் நன்மைக்காக வாழ்வதே மனித வாழ்வாகும் என்ற கருத்துள்ளவர். இவருடைய உயர்ந்த கருத்துக்கள் - அறவுரைகள் - சிலவற்றைக் காண்போம். ஆண்கள் ஒரு காரியமும் செய்யாமல் சோம்பிக் கிடத்தல் கூடாது; சுறுசுறுப்புடன் எதையாவது நல்ல காரியங்களைச் செய்து கொண்டேயிருக்கவேண்டும்; செய்யும் தொழில் பயனற்ற வீண் செயலாக இருத்தல் கூடாது; நல்ல பயன் தரத்தக்க தொழிலாக இருக்க வேண்டும்; அது பழிபாவத்திற்கு இடமான தொழிலாக இருக்ககூடாது; அவற்றிலிருந்து விலகி நிற்கும் செயலாக இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாமல் சும்மா சோம்பித் திரிகின்ற - கிடக்கின்ற - வாழ்கின்ற - ஆண்மக்கள் உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் உண்ணலாம்; உறங்கலாம்; உலவலாம்; வீண் வம்புப் பேச்சுக்கள் பல பேசலாம்; ஆயினும் அவர்கள் உயிருள்ள மக்களாகமாட்டார்கள்; நடைப் பிணங்களாகத்தான் கருதப் படுவார்கள். இவ்வுலகில் இன்பம் அடைவதற்கான பொருள் சும்மா வந்துவிடாது. ஏதேனும் தொழில் முயற்சியில் ஈடுபட்டால்தான் பொருள் சேர்க்க முடியும்; பொருள் சேர்த்தால்தான் அப்பொரு ளால் அறம் புரிய முடியும்; இன்பம் நுகரவும் இயலும். அறத் துக்கும், இன்பத்துக்கும் பொருளே - செல்வமே - அடிப்படை யாகும். ஆதலால், வினையை - தொழிலை - காரியம் செய்வதை - உயிராகக் கொண்டிருப்பவர்கள் தாம் ஆண்மக்கள் ஆவார்கள்; ஆண் தன்மையுள்ளவர்கள் ஆவார்கள்; உள்ளத்திலே ஊக்கம் உள்ளவரையில் - உடலிலே வலுவுள்ளவரையில் - உழைப்பது, பிறருக்கு உதவுவது, தாமும் இன்புறுவது ஆடவர் கடமை யாகும். இல்லத்திலே வாழும் மனைவிகளின் கடமை - பெண் களின் கடமை - தம் கணவர்களைப் போற்றுவதே யாகும். தம்முடைய உயிர் தம் கணவரைத் தவிர வேறில்லை என்று கருதுவதேயாகும். கணவர் வாழ்வு போய்விட்டால் தமது வாழ்வும் போய்விட்டது; அதன்பின் தமக்கு வாழ்வில்லை; என்று கருதுவதாகும். நல்ல மனைவியின் கடமை கணவன் மனங்கோணாமல் நடப்பதுதான். வெளியிலே சென்று வேலைபார்த்துத் திரும்பும் கணவனுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்; அவன் உள்ளத்திலே ஒரு கவலையும் தோன்றாதபடி நடந்து கொள்ள வேண்டும். அவன் உடல்நலத்தைப் பாதுகாக்கத் தக்க நல்ல உணவை ஆக்கி அளிக்க வேண்டும். சிறந்த மனைவிமார்கள் - இல்லறத்திலே பற்றுள்ள மனைவிமார்கள் - குடும்பம் வளர்ந்து தழைக்க வேண்டும் என்னும் பற்றுள்ள மனைவிமார்கள் - தம்முடைய இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணவே மாட்டார்கள்; பொருட் படுத்தவே மாட்டார்கள். தம் கணவர்களின் மனத்திலே மகிழ்ச்சி பொங்கும்படி நடந்து கொள்ளுவார்கள்; அவர்களின் நாவுக்குச் சுவையும், உடலுக்கு உரமும் தரக்கூடிய நல்ல உணவு வகைகளைத் தேடிச் சமைத்து ஊட்டுவார்கள் தம் கணவரை உயிரென நேசிக்கும் மனைவிமார்களின் முதல் கடமை இதுதான். முயற்சி - உற்சாகம் - உள்ள கணவன், அன்பு நிறைந்த மனைவி இவர்கள் நடத்தும் இல்லறம் சிறந்து விளங்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆதலால் இத்தகைய ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழும் வாழ்வே சிறந்த இல்லற வாழ்வாகும்; நல்ல குடும்ப வாழ்வாகும். இவர்களே பிறர்க்கு நன்மை செய்யும் உத்தம குடும்பமாக - தம்பதிகளாக விளங்குவார்கள். ஒரு குறுந்தொகைப் பாடலிலே இத்தகைய உயர்ந்த கருத்துக்களை அமைத்துப் பாடியிருக்கிறார் பெருங் கடுங்கோ வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்; என நமக்குஉரைத் தோரும் தாமே; அழாஅல்தோழி! அழுங்குவர் செலவே. (குறுந். 135) இதுவே அந்தக் குறுந்தொகைப் பாட்டு. நான்கே அடிகளைக் கொண்ட இக் குறுந்தொகைச் செய்யுளிலே மேலே எடுத்துக்காட்டிய சிறந்த பொருள் அமைந்து கிடப்பதைக் காணலாம். கணவன் பொருள் தேடும்பொருட்டு வெளியூருக்குச் செல்லத் துணிந்தான். அதை அறிந்தாள் தலைவி; காதலி. அவள், காதலன் பிரிந்து சென்றால், நாம் தனித்திருக்க வேண்டுமே! அவர் இல்லாமல் எப்படித் தனித்திருந்து வாழ்வது? என்று நினைத்து வருந்தினாள். அப்பொழுது அவளுடைய தோழி அவளுக்குச் சொல்லிய சமாதானமாக - ஆறுதல் மொழியாக - அமைந்திருப்பது இச்செய்யுள். தொழில் தான் ஆண்களுக்கு உயிராகும்; வீட்டிலே வாழ்கின்ற ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண்களுக்கு ஆண்களே உயிர் ஆவர். இவ்வாறு நமக்கு நீதியைச் சொல்லி யவர் அவர்தான். ஆதலால் தோழியே! நீ அழ வேண்டாம். அவர் நம்மை விட்டுப் பிரிந்து போக மாட்டார். போனாலும் விரைவில் வந்து நமக்கு மகிழ்ச்சியூட்டுவார். இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருளாகும். இவ்வாசிரியர் - இப்புலவர் - மற்றொரு செய்யுளில் கூறியிருக்கும் அறமும் குறிப்பிடத்தக்கது. அச்செய்யுளில், பொருளீட்டுவதும், வறியோர்க்கு உதவுவதுந்தான் ஆடவர் கடமை என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். மெல்இயல் அரிவைநின் நல்அகம் புலம்ப நின்துறந்து அமைகுவென் ஆயின், என்துறந்து இரவலர் வாரா வைகல் பலஆகுக; யான் செலவுறு தகவே. (குறுந். 137) இதுவே அந்தச் செய்யுள். மெல்லிய தன்மையுள்ள அரிவை! உன்னுடைய நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்தும்படி நான் உன்னை விட்டுப் பிரிந்து செல்லமாட்டேன். சென்றாலும், சென்ற இடத்திலேயே தங்கிவிட மாட்டேன். அப்படித் தங்கி விடுவேனாயின் இரவலர்கள் யாரும் என்னை வெறுப்பார் களாக! என்னிடம் வாராமல் ஒழிவார்களாக! இப்படியே பல நாட்கள் கழிவதாக! என்பதே இப்பாடலின் பொருள். இச்செய்யுள் ஆடவர் கடமையை வலியுறுத்துவதைக் காணலாம். பொருளீட்டுவதும், ஈட்டிய பொருளால் இல்லாத வர்களுக்கு உதவி செய்வதுமே ஆண்மக்கள் கடமையாகும். ஆண்கள் இக்கடமையைச் செய்வார்களானால் மனித சமுதாயம் உயர்ந்து வாழும்; எல்லா நன்மைகளையும் பெற்று இன்பத்துடன் வாழும். இதில் ஐயம் இல்லை. தலைவியை முதல்முதல் சந்தித்துக் காதல்கொண்டு கலந்து மகிழ்ந்த தலைவன் அவளை விட்டுப் பிரியும்போது சொல்லிய உறுதிமொழி இது. மேலே காட்டிய குறுந்தொகைப் பாடல்கள் இரண்டும் பழந்தமிழ் மக்களின் அருள்நெறியை உணர்த்தின. ஆடவரும், பெண்டிரும் கணவன் மனைவிகளாய் ஒன்றுபட்டு வாழ்வது இல்லறம்; அவர்கள் தந்நலத்தை மட்டும் பேணாமல், பிறர்நலம் பேணும் பண்புள்ளவர்களாய் வாழ்வதே அருள்நெறியாகும்; இப்படி வாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும். இவ்வுண்மை களையே மேலேகாட்டிய குறுந்தொகைப் பாடல்கள் இரண்டும் - பாலைபாடிய பெருங்கடுங்கோவின் செய்யுட்கள் இரண்டும் எடுத்துக்காட்டின. உலகத்தை உணர்ந்த உத்தமர் உலக இயல்பை நன்றாக உணர்ந்தவர்களே ஞானிகள், அறிவுள்ளவர்கள், தீர்க்கதரிசிகள் என்று போற்றப்படுவார்கள்; உத்தமர்கள் என்று புகழப்படுவார்கள். உலகப் போக்கின் உண்மையை உணர்ந்தவர்கள் சிலர் தாம். எல்லோரையும் உலக நிலைமையின் உண்மையை உணர்ந்தவர்கள் என்று சொல்லி விட முடியாது. யார் உலகப் போக்கின் உண்மையை உணர்ந்தவர்? இதற்கு விடை காணவேண்டும். இவ்வுலகில் காணப்படுகின்றவைகளிலே என்றும் அழியாமல் நிலைத்திருப்பவை யாவை? நிலைத்து நிற்காமல் நீர்மேல் குமிழிபோல் அழிந்து மறைவன யாவை? இவ்வுலகிலே நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும்? நாம் பின்பற்றி நடக்க வேண்டிய ஒழுக்கங்கள் எவை? பின்பற்றாமல், நெஞ்சத்தாலும் நினைக்காமல் விடடுவிடக்கூடிய, ஒதுக்கித் தள்ள வேண்டிய செயல்கள் யாவை? இவைகளையெல்லாம் சிந்தித்து முடிவுகட்டுகின்றவனே சிறந்தவன் ஆவான்; அறிவாளி யாவான். உள்ளத்தால் நினைத்து நினைத்து உண்மையை உணர்வது மட்டும் போதாது; உணர்ந்த உண்மையைப் பிறர் அறிய வாயால் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது மட்டும் போதாது, வாய்ப்பறையால் தான் அடையும் பயன் ஒன்றுமில்லை. தான் அறிந்த உண்மையை - நம்பும் உண்மையை - ஓரளவாவது, முடிந்த வரையிலாது பின்பற்றி நடக்க வேண்டும்; இப்படி உண்மை நெறியிலே ஒழுகுகின்றவர்கள்தாம் உயர்ந்த மனிதர்கள்; உத்தம மனிதர்கள்; உலகத்தாரால் மதிக்கப்படும் மனிதர்கள் ஆவார்கள். பண்டைக்காலத்திலே உலகம் எவ்வளவோ உயர்ந்த நிலையில் இருந்தது; மனிதன் சிறந்தவர்களாக வாழ்ந்தனர்; என்று சொல்வோர் உண்டு. இவர்களை உலக சரித்திரம் அறியாதவர்கள் என்று சொல்லிவிடலாம். பண்டைக்காலத்தை விட இக்காலத்திலே மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் மறுக்க மாட்டார்கள். கல்வித் துறை, செல்வத் துறை, அரசியல் துறை, சமுதாயத் துறை, வாழ்க்கைத் துறை, விஞ்ஞானத் துறை போன்ற பல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றோம். பண்டைக் காலத்தில் நெஞ்சிலே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்; இன்னும் முன்னேறிக் கொண்டே வருகின்றோம். இந்த முன்னேற்றம் எந்த எல்லையிலே போய் நிற்கும் என்பதை நம்மால் முடிவு கட்ட இயலாது. ஆயினும் ஒரு உண்மையை மட்டும் நாம் மறந்து விடுவதற் கில்லை. ஒரு துறையில் மட்டும் நாம் முன்னேறவில்லை. பின்தங்கித்தான் நிற்கின்றோம். நிற்கின்றோம் என்பதை விடப் பின்னோக்கிப் போய்க் கொண்டேயிருக்கின்றோம் என்று சொன்னால் கூடப் பொருந்தும். அந்தத் துறை யாது? சுருங்கக் கூறினால் ஒழுக்கத் துறையென்று அதைச் சொல்லிவிடலாம். முன்னோர்கள் பெரும்பாலும் தங்கள் சொல்லையும், நினைப் பையும் செயலிலே காட்டினார்கள். அவர்கள் உள்ளமும், சொல்லும், செயலும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்து வந்தன. இம்முறையைப் பின்பற்றி நடப்பதுதான் அறம், ஒழுக்கம், தர்மம் என்று நம்பினார்கள். இதற்கு மாறாக நடப்பது பாவம், பழிச் சொல்லுக்கு இடம், அறமற்ற செயல் என்று நினைத்தார்கள். இக்காலத்தினர் - பல துறைகளிலும் இக்காலத்தில் முன்னேறி யிருக்கும் மக்கள் - இந்த நடத்தையைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை. எண்ணம் வேறு; சொல் பற்றிக் கவலைப் படுவதில்லை. எண்ணம் வேறு, சொல் வேறு, செயல் வேறு என்று சொல்லும் படி நடக்கும் மனிதர் களையே மிகுதியாகக் காணுகின்றோம். இது ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் நாம் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு காரணம், அறிவின் வளர்ச்சிதானோ? அல்லது வேறு என்னவோ? அகடவிகடங்கள் செய்வதிலே அறிவுள்ளவர்கள் தாம் சமர்த்தர்கள். அப்பாவிகளுக்குத் தில்லுமுல்லுகள் செய்யத் திறமையேது? இந்த உண்மையை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரு செய்யுளில் எடுத்துக்காட்டியிருக்கின்றார். அந்தப் பாடல் குறுந்தொகையிலே உள்ளது. அது குறிஞ்சித் திணையைப் பற்றிப் பாடும் அகப்பொருள்பாட்டு. உற்றார், உறவினர், ஊரார் அறிய மணம் புரிந்து கொள்ளாத காதலர்கள், களவு மணத்திலே தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். காதலன், காதலியை விரைவிலே கற்புமணம் புரிந்துகொள்ளத் தீர்மானித்தான். அதன் பொருட்டு அவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து போனான். அப்பொழுது காதலி காதலன் பிரிவால் வருந்தியிருந்தாள். அவள் துன்பத்தைக் கண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறியதாக அமைந்திருப்பது அச்செய்யுள். அச்செய்யுளிலே அமைந்திருக்கும் அரும் பொருள் என்றும் அழியாமல் நிற்கும் அறமாகும்; பழந் தமிழர்களின் அறநெறியைப் பறைசாற்றுவதாகும். சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்ணே! தலைவன் பிரிந்து சென்றான் என்பதற்காக நீ வருந்த வேண்டாம். அவன் நமது நன்மைக்காகத்தான் பொருள் தேடப் பிரிந்து போனான். அவன் பொருள் தேடிக் கொண்டு வந்தவுடன் நம்மை மணம் புரிந்துகொள்ளுவான்; இப்பொழுதுள்ள களவு ஒழுக்கத்திற்கு முடிவு கட்டுவான். உற்றார்க்கும், ஊரார்க்கும் தெரியாமல் அஞ்சி மறைந்து வாழும் இந்த வாழ்வுக்கு இனி இடமில்லை. உற்றார் உறவினர் காண, ஊரார் அறிய, வெளிப்படையாக உன்னைக் கற்புமணம் புரிந்து கொள்ளுவான். ஆதலால் இனி ஏற்படப்போகும் இன்ப வாழ்வை நினைத்து நீ வருந்தாமலிரு; சிறிதுகாலம் பிரிந்திருக்க நேர்ந்ததைக் குறித்து மனம் கலங்காதே. நல்ல பயனைத் தரும் மலைநாட்டுத் தலைவன் நம்மைப் பிரிந்து போனதால் அவனுக்கு எவ்வித இன்பமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. அவன் சென்ற இடத்திலே தனிமையால் நம்மைப் போலவே வருந்துவான். அவன் சிறந்த பண்புள்ளவன்; பழிக்கு அஞ்சும் இயல் புள்ளவன்; பிறர் தன்னைப் பழித்துப் பேசும்படி - குறைகூறும்படி - வசை கூறித் தூற்றும்படி - ஒருபொழுதும் நடந்து கொள்ளவே மாட்டான். அவன் இந்த உலக இயல்பையும், போக்கையும் நன்றாக அறிந்தவன். நமது இளம்பருவமும் யாக்கையும் நிலைத்தவை அல்ல; நம்முடைய செல்வமும் வாழ்வும் சிதையாமல் சிரஞ்சிவீ யாக வாழ்வன அல்ல; இவைகள் எல்லாம் அழிந்துபோகக் கூடியவைகள். இவ்வுலகில் என்றும் அழியாமல் நிலைத் திருப்பது புகழ் ஒன்றுதான் என்ற உண்மையை உணர்ந்தவன். ஆதலால் நீதிநெறி தவறாமல், நேர்மையாக நடந்து கொள்ளும் உத்தம குணம் உள்ளவன் அவன். இத்தகைய உண்மை அறிவும், உத்தம குணமும் உள்ளவர்கள் யாராயிருந் தாலும் சரி, அவர்கள் தம் பொருளை நல்வழியிலேதான் செலவழிப்பார்கள். வறுமை யால் வாடி வதங்கும் ஏழைகளுக்கு இரங்காமல் உதவி செய்யாமல் இருக்க மாட்டார்கள். இவ்வாறு உதவி செய்யும் குணம் உள்ளவர்களின் செல்வம் அவர்களிடம் தங்கியிராது. அவர்களை விட்டுப் பிரிந்துதான் போகும். இதைப்போலவே உன் உடம்பிலே தோன்றி விளங்கும் பசலை நிறமும் நீங்கிப் போய்விடும். ஆதலால் நீ வருந்தாதே இதுவே அச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். அழியல் ஆயிழை! அன்புபெரிது உடையன்; பழியும் அஞ்சும், பயமலை நாடன்; நில்லா மையோ நிலையிற்று, ஆகலின் நல்இசை வேட்ட நயனுடை நெஞ்சின் கடப்பாட் டாளனு டைப்பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று; நின் அம்கலுழ் மேனிப் பாஅய பசப்பே. (குறுந். 143) இதுவே மேலே காட்டிய - சொல்லிய - பொருள் அமைந்த பாடல். அகப்பொருள் துறையிலே புறப்பொருள் அறத்தை அமைத்துப் பாடிய அழகான பாட்டு. தமிழர்களின் - பண்டைத் தமிழர்களின் - அறிவையும், அறத்தையும், அருளையும் விளக்கும் அருமையான தமிழ்ப் பாட்டு. இப்பாட்டு, பண்டைத் தமிழர்களின் சிறந்த பண்பாட்டை உணர்த்துவதோடு, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுவதாகவும் அமைந்துள்ளது. இப்படி வாழ்வது தான் மனிதப் பண்பாகும் என்ற உண்மையையும் உரைத்தது. நீதியும் அமைச்சும் செல்வத்திலும், செல்வாக்கிலும் வலுத்தவர்களிலே நீதிவழி நடப்போரும் உண்டு; தம்மைப்போலவே பிறரையும் எண்ணி மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளுவோர் உண்டு; தமது செல்வத்தையும், செல்வாக்கையும் பொதுஜன நன்மைக் குப் பயன்படுத்துவோர் உண்டு. ஆனால் இவர்களிலே பலர், ஏழைகளைக் கசக்கிப் பிழிவதிலேயே கண்ணும் கருத்துமா யிருப்பர். மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நாம் வாழ்ந் தால் போதும் என்ற எண்ணத்துடன் ஏழைகளின் உழைப்பையும், செல்வத்தையும் சுரண்டுவோர் உண்டு; தமக்கு அடங்காதவர் களை - தமது அக்கிரமத்தை எதிர்ப்பவர்களைப் பலாத்காரத் தால் அடக்கி நசுக்குவோர் உண்டு. ஒரு நல்ல அரசாங்கம் உள்ள நாட்டிலே அகங்காரம் பிடித்த செல்வர்கள் தங்கள் இஷ்டம்போல் நடக்க முடியாது; சட்டத்தையும் நீதியையும் மீறி நடக்க முடியாது. ஏனென்றால், இவர்களால் கொடுமைப்படுத்தப்படும் மக்கள் அரசாங்கத்திடம் முறையிட்டுக் கொள்ளுவார்கள்; அரசாங்கத்தின் அடிப்படை யாக இருக்கின்ற நீதிமன்றத்திலே வழக்கு தொடுப்பார்கள்; தங்கள் உரிமையைப் பெற முயற்சிப்பார்கள். இது சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுவதற்காக அமைந்திருக்கும் ஆட்சி யுள்ள எல்லா நாடுகளிலும் நடைபெறுவதாகும். நாட்டின் ஆட்சியும், ஆள்வோரும் எப்படியிருந்தாலுங் கூட, பொதுஜனங்களுக்கு நீதிமன்றங்களிலேயுள்ள நம்பிக்கை போய்விடவில்லை. நீதி மன்றங்களிலே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மனிதர்களிடம் இன்றும் குடி கொண்டிருக்கின்றது. நல்ல அரசாட்சி ஏற்பட்ட காலந்தொட்டு மக்களுக்கு நீதி வழங்கும் மன்றங்களும் அமைக்கப்பட்டிருக் கின்றன. அரசாட்சியுள்ள எல்லா நாடுகளிலும் நீதி மன்றங்கள் உண்டு. அவற்றில் அமர்ந்து நீதியை நிலைநாட்டும் சிறந்த நியாயாதிபதிகளும் இருக்கின்றனர். நீதிபதிகள், நியாய சபைகள் இல்லாத நாடுகள் எவையும் இல்லை. இவைகள் இல்லாத நாடுகள், நாடுகள் என்ற பெயருக்குத் தகுதியுடையவைகளும் அல்ல. நீதி சபைகளில் அமர்ந்து நியாயம் கூறும் நீதிபதிகளை - அறிஞர்களை - பண்டைக்கால மக்கள் தெய்வங்களுக்குச் சமமாகவே நினைத்து வந்தனர். அவருக்குப் பொது ஜனங்கள் நல்ல மதிப்பும் மரியாதையும் காட்டி வந்தனர். இன்றும் நீதிபதி களிடம் மக்கள் கொண்டிருக்கும் மதிப்பில் குறைவில்லை. நீதிபதிகளிடம் மக்கள் நம்பிக்கையிழந்தால் - நியாய சபைகளைப் பற்றிக் தவறாக எண்ணத் தொடங்கிவிட்டால் அவர்கள் நீதிமன்றங்களை நாடமாட்டார்கள்; பணத்தைச் செலவு செய்து கொண்டு நியாயந் தேடி நீதிமன்றங்களுக்குப் போக மாட்டார்கள். பண்டைக் காலத்தில் நீதிபதிகள் எப்படி இருந்தனர் என்பதைப் பற்றிப் பத்துப் பாட்டிலே காணப்படுவது குறிப்பிடத் தக்கது. பத்துப்பாட்டிலே மதுரைக் காஞ்சியில் நீதிபதிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது. நியாயாதிபதிகள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவதாகும். மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் என்னும் பழம்பெரும் தமிழ்ப் புலவர். புலவர்களிலே தலைசிறந்தவராகப் போற்றப் படுகின்றவர். நீதிபதிகளின் பண்பைப் பற்றி அவர் சொல்லியிருப் பதைக் காண்போம். இவர் நடுநிலையிலிருந்து வழக்கை ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவாரா? நடுநிலை தவறி நீதியைப் பொருட்படுத்தாமல் ஒரு பக்கமாக நின்று தீர்ப்புச் சொல்லுவாரா? என்ற ஐயமோ, அச்சமோ பொது மக்கள் உள்ளத்திலே பிறப்பதில்லை. வழக்கிலே தோற்றவர்களும், அத்தோல்வியால் துன்புற மாட்டார்கள். நியாயமான தீர்ப்பாக - முடிவாக - இருந்தால் ஏன் மனத்துயரம் அடைய வேண்டும்? வழக்கிடுவோர் உள்ளத்திலே கொண்டிருந்த நியாய மற்ற ஆசையை நீக்குவார்கள். அவர்கள் மனம், நீதிபதியின் முடிவு நியாயந்தான் என்று ஒப்புக்கொள்ளும்படி தீர்ப்பளிப்பார்கள். நீதிபதிகள் எக்காரணத்தாலும் தமது உள்ளத்தைப் பிறரிடம் ஒப்படைத்து விடமாட்டார்கள்; நடுநிலையிலே நிறுத்திக் கொள்ளும் உரம் படைத்தவர்கள். வழக்கிடுவோர் உறவினராயிருந்தாலும் சரி, பகைவராயிருந்தாலும் சரி, நொது மலராயிருந்தாலும் சரி, நடுநிலையிலே நின்று வழக்குரைகளைக் கேட்டறிவார்கள். ஒரு பக்கம் கோபமும், மற்றொரு பக்கம் உவகையும் கொள்ளமாட்டார்கள். துலாக்கோலைப் போல நடுநிலையிலே நின்று நீதி உரைப்பார்கள். இத்தகைய சிறந்த கொள்கையையுடைய நீதிபதிகள் உறையும் நீதிசபை. இது, மதுரையில் அக்காலத்திலிருந்த நீதிமன்றத்தைப் பற்றி மாங்குடி மருதனார் சொல்லியிருப்பது. அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச், செற்றமும் உவகையும் செய்யாது காத்து, ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச் சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும் (மதுரைக் 489-492) இவ்வடிகளிலே மேலே குறித்த பொருளைக் காணலாம். நீதிமன்றத்தை அறம் கூறு அவையம் என்று பெயரிட்டு அழைத் தனர். சபை என்ற சொல்லே அவை, அவையம் என்று திரிந்தது. இவ்வாறு நீதிமுறை ஒழுங்காக நடைபெறுமானால், அதற்கு நல்ல அரசே அடிப்படையாகும். ஆட்சியை நடத்து வோரும், நேர்மையாளர்களாக - நடுநிலை தவறாதவர்களாக - தந்நலமற்றவர்களாக - இருக்க வேண்டும். ஆட்சியாளர்க்கும், நீதிமன்றங்களுக்கும் இணைப்புண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது; ஆட்சியாளர்களிடம் கோளாறு ஏற்பட்டால் அது நீதிமன்றங்களையும் குலுக்கித்தான் தீரும்; இது மறுக்கமுடியாத உண்மை. அரசை இயக்கும் - நடத்தும் அச்சாணிகள் அமைச்சர்கள் தாம். குடிஅரசிலும் சரி, முடி அரசிலும் சரி, இவர்கள் தாம் ஆட்சி வண்டி குடைசாயாமல் காத்து வருகின்றனர்; வந்தனர். இத்தகைய பொறுப்புள்ள அமைச்சர்களிடம் - மந்திரிமார் களிடம் - நேர்மையிருக்க வேண்டும்; நடுநிலையிருக்க வேண்டும்; தியாக புத்தியிருக்க வேண்டும்; மனிதாபிமானம் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய அமைச்சர்களைக் கொண்ட அரசுதான் உண்மையான ஜனநாயக அரசாக - மக்கள் அரசாக - விளங்கும். ஆட்சித் தேரும் தங்குதடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். அமைச்சர்கள் ஒழுங்கு தவறினால் நீதிபதிகளும் ஒழுங்கு தவறக் கூடும். நீதபதிகள் நியாயமாக நடக்க நினைத்தாலும் அவர்கள் ஒழுங்கீனமாக நடக்கும்படி கட்டாயப்படுத்தப் படுவார்கள். ஆதலால் அமைச்சர்களின் உயர்வையும், ஒழுக்கத் தையும், மனிதத் தன்மையையும் பொறுத்தே ஒரு நாட்டின் ஆட்சி அமைந்திருக்கும். அந்த நாட்டின் நீதி முறையும் நடைபெறும்; இது ஐயத்திற்கிடமில்லாத உண்மை. இந்த உண்மையையும், மதுரைக் காஞ்சியிலே மாங்குடி மருதனார் குறிப்பிடுகின்றார். அரசனிடம் உள்ள நல்ல எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் ஆராய்ந்து காண்பார்கள்; அவர்களை நல்ல எண்ணத்தின்படி நடக்கச் செய்வார்கள்; நல்ல காரியங்களையே செய்யும்படி தூண்டுவார்கள்; கெட்ட எண்ணங்களைக் கைவிடும் படி செய்வார்கள்; கெட்ட செயல்களைச் செய்ய விடாமல் அடக்குவார்கள். அன்பையும் அறத்தையும் கைவிடாமல் காப்பார்கள். அரசர்கள் குடிமக்களிடம் அன்புடன் நடந்து கொள்ளும்படி செய்வார்கள்; அறந் தவறாமல் நடந்துகொள்ளும்படியும் செய்வார்கள். தாமும் பழிப்புக்கு இடமான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; பலரும் புகழத்தக்க - பாராட்டத்தக்க - ஏற்றுக் கொள்ளத்தக்க - நல்ல காரியங்களையே செய்வார்கள். இதனால் உயர்ந்த நிலையிலே வைத்துப் போற்றப்படுவார்கள். எல்லோரும் அறியும்படியான புகழையும் பெறுவார்கள். இத்தகைய சிறப்பமைந்தவர்கள்; காவிதிப் பட்டம் பெற்றவர்கள்; இவர்களே அமைச்சர்கள். இவைகளே அமைச்சர்களின் பண்பென்று கூறுகின்றது மதுரைக்காஞ்சி. நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து, அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்துப், பழிஒரீஇ, உயர்ந்து, பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும் (மதுரைக் 496-499) இவ்வடிகள் மேலே காட்டிய கருத்தை வலியுறுத்து கின்றன. மதுரைக்காஞ்சியில் இவ்வாறு நீதியைப்பற்றியும், அமைச்சரைப்பற்றியும் அடுத்தடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நாம் அறியும் உண்மை ஒன்றுண்டு. அமைச்சர்களின் ஒழுக்கத்தையும், திறமையையும், நேர்மையையும் பொறுத்தே ஒரு நாட்டின் நீதிமுறையும் அமைந்திருக்கும் என்பதுதான் அவ்வுண்மை. அமைச்சர்கள் அநீதியாளர்களாயிருந்தால் அந்த நாட்டிலே நீதியும் நிலைகுலையும்; நியாயசபைகள் அநியாய சபைகளாக மாறத்தான் செய்யும். இதை நாம் உலக நடப்பிலே - உலக வரலாற்றிலே இன்றும் நேராகக் காணலாம். மாங்குடி மருதனார் பாடியிருக்கும் மேலேகாட்டிய அடிகள் பண்டைத் தமிழர்களின் சிறப்பைக் காட்டுகின்றன; அவர்கள் நீதியைக் காப்பாற்றுவதிலே எவ்வளவு கவலை கொண்டிருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. மதுரைக் காஞ்சியின் அடிகள், மாங்குடி மருதனாரின் காலத்தில் நீதி மன்றங்கள் எப்படியிருந்தன? அமைச்சர் எப்படி இருந்தனர்? என்பதை விளக்கின. ஆயினும், இவைகள் நீதிமன்றங்கள் எப்படி யிருக்க வேண்டும்? அமைச்சர்கள் எப்படியிருக்க வேண்டும்? என்பதையும் அறிவுறுத்துவதைக் காணலாம். இத்தகைய அறத்தைப் பின்பற்றும் நாடு என்றும் உயர்ந்து சிறந்து விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. உழவரும் வணிகரும் தேசம் என்பதை ஒரு வண்டியாக வைத்துக் கொண்டால், அதற்கு உழவரும், வணிகரும் இரண்டு உருளைகள் ஆவார்கள். அல்லது அவ்வண்டியை இழுத்துச் செல்லும் இரண்டு எருதுகள் என்று சொன்னாலும் பொருந்தும். இந்த இரண்டு இனத்தினரும் நல்வாழ்வு வாழவேண்டும்; நேர்மையாக நடக்கவேண்டும்; தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். இவர்கள் ஒழுங்கு தவறினால் - தங்கள் கடமையை அலட்சியம் செய்தால் - அவர்கள் வாழும் நாடு பாழ்படும்; அந்த நாட்டு மக்களின் வாழ்விலே இன்பமோ, மகிழ்ச்சியோ, ஒழுக்கமோ, கட்டுப் பாடோ, ஒற்றுமையோ,உற்சாகமோ எதுவும் இருக்க முடியாது. நாட்டிலே உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர் களையெல்லாம் உழவர்கள் என்ற வரிசையிலே நிறுத்தி விடலாம். உற்பத்தி செய்த பண்டங்களை நாட்டு மக்கள் அனைவர்க்கும் கிடைக்கும்படி - அவர்கள் பெற்று அனுபவிக் கும்படி - விநியோகம் செய்பவர்களையெல்லாம் வணிகர்கள் என்ற வரிசையிலே வைத்து விடலாம். பண்டங்களை உற்பத்தி செய்பவர்களும், அவற்றைப் பங்கீடு செய்வோரும் ஒரு தேசத்தின் இரு கண்கள். இவர்கள் சரியாக இல்லாவிட்டால் அந்த நாடு உருப்படாது; வாழாது. முதலில் உழவர்களை எடுத்துக்கொள்வோம். உழவர் என்னும் சொல், ஏரைப் பிடித்து உழுகின்றவர்கள் என்னும் பொருளுடையது. இது முதலில் நேரடியாக வயலில் - நிலத்தில்- ஏர் பிடித்து உழுகின்றவர்களையே குறித்தது. நாளடைவில் இச்சொல்லின் பொருள் விரிவடைந்தது. உழுகின்ற பலருக்குத் தலைமை தாங்கி, அவர்களை வேலை வாங்கி உணவுப் பண்டங் களை உற்பத்தி செய்கின்றவர்களையும் இச்சொல் குறித்தது. இதனால் உழவர்களில் உழுதுண்போர், உழுவித் துண்போர் என இரு பிரிவுகள் தோன்றின. இருவரும் உழவர்கள் என்றே வழங்கப் பட்டனர். உழுவித்துண்போர் நாளடைவில் வேளாளர் என்று குறிக்கப்பட்டனர். வேளாண்மை செய்பவர் வேளாளர்; வேளாண்மை முயற்சி. க்ருஷி என்னும் வடமொழிச் சொல்லும் இப்பொருளுடையதே. வேளாண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு உபகாரம் என்னும் பொருளும் உண்டு. உழுவித் துண்போரிலே பலர் பெரிய நிலக்கிழவர்களாயிருந்தனர்; குறுநில மன்னர்களாக வாழ்ந்தனர்; பெரிய கொடைவள்ளல் களாகவும் விளங்கினர். ஆதலால் அவர்கள் மக்களால் பாராட்டப்பட்டனர்; வேளாளர் என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். பண்டைத் தமிழகத்தில் வேளாளர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்தி வந்தனர்? எத்தகைய சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி வந்தனர்? அவர்கள் நாட்டுக்குச் செய்த நன்மைகள் யாவை? மக்களுக்குச் செய்த உதவி - உபகாரம் என்ன? இக்கேள்வி களுக்குப் பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் சரியான விடையளிக்கின்றார். அவ் விடையின் மூலம் வேளாளர் களின் பண்பை விளக்கியிருக்கின்றார். உழவுத்தொழில் செய்து வாழ்வோர் வேளாளர்கள். அவர்கள் கொலைத்தொழிலை அறியாதவர்கள்; அக் கொடுந் தொழிலை அடியோடு வெறுத்தவர்கள்; திருட்டுத் தொழிலை நெஞ்சத்தாலும் நினைக்காதவர்கள்; அவ்வெண் ணத்தை அடியோடு கடிந்தவர்கள். அவர்கள் தேவர்களைப் போற்றி வணங்குவார்கள். அவர்களுக்கு திருவிழாச் செய்வார்கள்; அவர்களுக்காக வேள்வி செய்து, வேள்விப் பலியை அர்ப்பணிப்பார்கள். நாட்டுக்கு - மக்களுக்கு - சிறந்த உணவூட்டும் நல்ல பசுக்களை வளர்ப்பார்கள்: காப்பார்கள்: உழவுக்கு உதவும் எருதுகளை பாதுகாப்பார்கள். அவர்கள் நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர் களுக்கு உதவுவார்கள்; இவர்களின் உதவியினால் அந்தணர்கள், சோற்றுக் கவலையின்றி, வேத விதிப்படி நடந்து புகழ் பெறுவார்கள். அவர்கள் தம்மிடம் வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பார்கள்; அவர்களுக்குப் பலகாரங்களைக் கொடுத்து உண்ணும்படி செய்வார்கள்; புதிதாகச் சமைத்த, பதமான உணவளிப்பார்கள். வேளாளர்கள் இத்தகைய சிறந்த செயல்களைச் செய் வார்கள்; புண்ணிய காரியங்களையே இடைவிடாமல் செய்து கொண்டிருப்பார்கள்; அவர்களும் நல்ல இன்ப வாழ்வில் வாழ்வார்கள். இவர்கள் உழுதொழிலால் வரும் செல்வம் ஒன்றையே விரும்பி வாழும் உழவர்கள். இச் செய்தி பட்டினப்பாலையில் காணப்படுவது. கொலை கடிந்தும், களவு நீக்கியும், அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், நல்ஆ னொடு பகடு ஓம்பியும், நான்மறையோர் புகழ் பரப்பியும், பண்ணியம் அட்டியம், பசும்பதம் கொடுத்தும், புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசைஉழவர். (பட்டினப் 199 - 205) இவ்வடிகளே மேலேகூறிய பொருளமைந்த அடிகள். இவ்வடிகள் உழவர்களின் இயல்பையும், உழவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தின. இத்தகைய உழவர்கள் வாழும் நாட்டிலே பஞ்சம் ஏது? பிணியேது? இன்பம் கொழிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அடுத்தபடி, வணிகர்களைப் பற்றிய பட்டினப்பாலை கூறுகின்றது. அவர்களுடைய நேர்மையைப் பற்றியும், பண்பைப் பற்றியும், நடத்தையைப் பற்றியும் உருத்திரங் கண்ணனார் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வணிகர்கள் நடுநிலை தவறாதவர்கள்; நீண்ட நுகத்தடியின் நடுவிலே உள்ள ஆணி போன்றவர்கள். அந்த ஆணி, நுகத்தடி யின் இரு முனைகளும் ஏற்றத் தாழ்வின்றிச் சமமாக நிற்கும்படி செய்யும். அதுபோல் இவர்கள் எவரிடமும் பட்சபாதம் காட்ட மாட்டார்கள்; விருப்பு வெறுப்பின்றி நடந்து கொள்ளுவார்கள். அவர்களுடைய மனம் எல்லோரையும் சமமாகவே நினைக்கும். பழிக்கு அஞ்சுவார்கள்; உண்மையையே உரைப்பார்கள்; தம்முடைய பொருள் வேறு, பிறர்பொருள் வேறு என்று எண்ணமாட்டார்கள்; தாம் கொடுக்கும் பண்டத்துக்கு அதிக விலை வாங்கமாட்டார்கள். தாம் கொடுக்கும் பண்டத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்க மாட்டார்கள்; முகத்தல் அளவிலும், நிறுத்தல் அளவிலும் மோசம் இருக்காது; பல பண்டங்களையும் விற்பனை செய்யும் போது நியாய விலைக்குத் தான் விற்பார்கள்; பண்டத்தின் கொள்முதலையும், இலாபத் தையும் சொல்லியே விற்பனை செய்வார்கள். இவ்வாறு செய்யும் பழமையான வியாபாரத்தையுடையவர்கள் - வணிகர்கள் நிறைந்திருக்கும் இடம். இவ்வாறு வணிகர்களின் பண்பைக் குறிப்பிடுகிறார் உருத்திரங்கண்ணனார். நெடுநுகத்துப் பகல்ஆணிபோல் நடுவுநின்ற நல்நெஞ்சினோர்; வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது, பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றுஇருக்கை. (பட்டினப். 206 - 212) இவ்வடிகளிலே மேலேகாட்டிய பொருள் அமைந்திருக் கின்றது. இவை, ஒரு வியாபாரி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நேர்மையான வியாபாரி எப்படி நடந்து கொள்ளு வான்? என்பதை அறிவித்தன. இக்காலத்தில் இத்தகைய நேர்மை யுள்ள வியாபாரிகள் எத்தனை பேர் இருக்கின்றனர்? மேலே சொல்லியவற்றைக் கொண்டு, பண்டைத் தமிழ கத்து வேளாளர்கள் - அதாவது உழவர்களின் பண் பாட்டை அறியலாம். வணிகர்களின் பண்பாட்டைக் காணலாம். உழவர் களும், வணிகர்களும் எப்படி வாழ வேண்டும்? அவர்கள் எப்படி வாழ்ந்தால் அவர்கள் வாழும் நாட்டுக்கு நன்மையுண்டு? என்ற உண்மையையும் உணரலாம். இவைகள் பழந்தமிழர்களின் அறநெறியையும், அருள்நெறியையும் விளக்கி நிற்கின்றன. தமிழநாட்டுத் தவசிகள் உழைப்பில்லாத சோம்பேறிகள் ஒருநாளும் உருப்பட மாட்டார்கள்; பிறர் உழைப்பிலே வாழும் பேதைகள் அடிமைகளாகத்தான் வாழ்வார்கள். அவர்கள் எந்நாளும் மனஅமைதியுடன் வாழ மாட்டார்கள். எவ்வளவு தான் இனிய பண்டங்களை வயிறார உண்டாலும், கவலையில்லாதவர் களைப் போல உறங்கினாலும், ஆடம்பரமாக ஆடையணிகள் பூண்டு உலவினாலும் அவர்கள் நெஞ்சிலே வேதனைத் தீ அணையாமல் எரிந்து கொண்டுதான் இருக்கும். மன அமைதியுடன் - கவலையில்லாமல் - வாழ்கின்றவர்கள் சிலர்தாம். தந்நலம் துறந்தவர்கள், பிறர்நலத்திற்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். ஒருபொழுதும் சோம்பிக் கிடக்காமல் பொதுஜன நன்மைக்காகவே எப்பொழுதும் ஊக்கத்துடன் உழைப்பவர்கள் சிலர் உண்டு. இவர்கள் மக்களால் மதிக்கப்படுவார்கள்; இவர்களே எல்லோராலும் ஞானிகள், முனிவர்கள், தவசிகள் என்று பாராட்டப்படுவார்கள். இவர்கள் தாம் உண்மையான தியாகிகள் ஆவார்கள். இத்தகைய மனிதர்கள் பண்டைக் காலத்தில் பலர் இருந்தனர்.; இன்றும் இல்லாமல் போய்விடவில்லை. இவர்கள் நல்லொழுக்கம் உள்ளவர்கள், பொதுப் பணி புரிகின்றவர்கள், தந்நலம் துறந்தவர்கள், உலக மக்களின் நன்மைக்காகவே தங்கள் வாழ்நாளைத் தத்தம் செய்தவர்கள் என்பதற்கு அடையாளமாகச் சில ஆடையணிகளைத் தாங்கி யிருப்பர். இத்தகைய வேடத்தையே தவவேடம், சமயக் குறிகள் என்பர். பொதுஜனங்கள் இவர்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டே இவர்களுக்கு என்று தனியான ஆடையணிகளை அமைத்துக் கொண்டனர். உண்மையான தவநெறியில் வாழ்கின்றவர்கள் தாம் தவவேடம் கொள்ளத் தகுதியுள்ளவர்கள். இதுவே முன்னோர் களின் கொள்கை; கருத்து. தவவேடம் பூண்டோர் யாராயிருந் தாலும் அவர்களுக்கு மரியாதை காட்டுவது இந்நாட்டு மக்களின் பரம்பரைப் பண்பு. தவவேடம் பூண்டோர் ஒழுக்கந் தவறியவர் களானாலும் அவர்களுடைய வேடத்திற்கு மதிப்புத் தரத்தான் வேண்டும் என்று கூறுவோர் இன்றும் உள்ளனர். இன்றும், மனிதன் இயல்பை அறியாமல் வேடத்திற்கு மதிப்புக் காட்டும் மக்களைக் காண்கின்றோம். துறவிகளும், தவசிகளும் தரிக்கும் தவவேடம் வெறும் கோலத்திற்காக அன்று; ஆடம்பரத்துக்காகவோ, பிறரை பயமுறுத்துவதற்காகவோ அன்று. தவசிகளும், துறவிகளும், தியாகிகளும் மனம், மொழி, செயல், நடத்தை இவைகளை விளக்கிக் காட்டும் அடையாளமாகவே வெளிக்கோலம் கொண்டி ருப்பர். அவர்கள் அணிந்திருக்கும் வேடத்தைக் கொண்டு அவர்கள் யார்? அவர்கள் பணி என்ன? எதற்காக வாழ்கின்றனர்? என்பவைகளை அறியலாம். பண்டைக் காலத்தில் மக்களின் உள்ளத்தை உணர்வதற்கு, அவர்களுடைய மாசற்ற பண்பைக் காட்டுவதற்கு வெளிக் கோலத்தையும் கருவியாகக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்ட வேடம் பொய் வேடமோ, போலி வேடமோ, பிறரை வஞ்சிக்கும் வேடமோ அன்று. இந்தக் காலத்தில் இந்த நிலை மாறிவிட்டது. புனிதமான வேடம் பூண்டவர்களையெல்லாம் கள்ளம் கபடற்ற மனிதர்கள் என்று நம்பிவிட முடியாது. தூய்மைக்கு - பரிசுத்தத்துக்கு - அடையாளமான வேடங்களைப் பூண்டு குற்றங்களைச் செய்து வாழ்வோர் பலர். தங்கள் குற்றங்களை, வஞ்சக நடத்தைகளை மறைக்கவே பலர் பரிசுத்தமான வேடம் பூண்டு திரிவதைப் பார்க்கின்றோம். தந்நலத்தின் பொருட்டே பரிசுத்தமான சின்னங்களைப் பயன்படுத்திக்கொள்ளுகின்றனர். மக்களுக்குச் சமய போதனை அளிக்கத் தோன்றிய புனிதமான மடங்களின் தலைவர்களிலே பலர், புனித வேடம் பூண்டு கூடாவொழுக் கத்தில் மூழ்கியிருப்பதைக் காண்கிறோம். இந்த நிலைமை பண்டைக் காலத்தில் அவ்வளவு அதிகமாக இல்லை. உள்ளத்திலே களங்கமற்ற முனிவர்கள் பலர் தமிழகத்திலே வாழ்ந்தனர். உலகம் - உலக மக்கள் - துன்பமில்லாமல் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் தவம் புரிந்த முனிவர்கள் பலர் தமிழகத்திலே வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் உள்ளத்தை - மாசற்ற மனத்தை ஒழுக்கத்தை - விளக்கும் தவக்கோலமும் பூண்டிருந்தனர். இவ்வுண்மையைத் திருமுருகாற்றுப்படையிலே நக்கீரர் தெளிவாகத் தெரிவிக்கின்றார். முருகன் வாழும் பழனி மலையிலே முனிவர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் ஆடம்பரமான பட்டாடையோ, பருத்தி நூல் ஆடையோ அணிவதில்லை; மரவுரியைத் தான் ஆடையாக அணிந்திருப்பார்கள். அவர்கள் அழகாக நரைத்த தலைமயிரை உடையவர்கள்; அவர்கள் தலைமயிர் வலம்புரிச் சங்கைப்போல வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும்; அம்மயிரைச் சங்கின் உருவாக உச்சியிலே உயர்ந்து நிற்கும்படி எடுத்து முடிந்திருப் பார்கள். ஆதலால் அவர்கள் தலைமயிர் உருவிலும், நிறத்திலும் வலம்புரிச் சங்குபோலவே காணப்படும். அவர்கள் மூன்று காலமும் குளித்து முழுகி இறைவனைப் பூசிப்பர். அதனால் அவர்கள் உடம்பு மாசற்றுப் பரிசுத்தமாக காணப்படும். மான் தோலை அணிந்திருப்பர். அவர்கள் மார்பிலே உள்ள எலும்பு முழுவதையும் எண்ணிக் கணக்கிட்டு விடலாம். பல பகல் விரதம் என்னும் பெயரால் உணவின்றி வாழ்கின்றவர்கள்; ஆதலால் இவ்வாறு எலும்பு தெரியும்படி இளைத்துக் காணப்படுகின்றனர். அவர்கள் உள்ளத்திலே பகையில்லை; நீடித்திருக்கும் சினமும் இல்லை. அவர்கள் எல்லாவற்றையும் கற்றவர்களும் அறியாத உண்மையை உணர்ந்தவர்கள்; கற்றவர்களுக்கெல்லாம் ஒரு எல்லையாக நிற்பவர்கள். காமத்தையும், தீமை செய்யும் கொடிய சினத்தையும் கடிந்தவர்கள்; அவற்றைத் துறந்தவர்கள்; சிறந்த ஞானம் உள்ளவர்கள்; எவர்க்கும், எவ்வளவேனும் கெடுதி செய்ய எண்ணாத, கெடுதி செய்யாத இயல்புள்ளவர்கள்; மேலும் மேலும் வளர்கின்ற மாசற்ற அறிவுள்ளவர்கள். இவ்வாறு தமிழகத்துத் தந்நலந் துறந்த முனிவர்களைப் பற்றிப் பேசுகின்றது திருமுருகாற்றுப்படை. சீரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர்; மாசற இமைக்கும் உருவினர்; மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்; நன்பகல் பலஉடன் கழிந்த உண்டியர்; இகலொடு செற்றம் நீங்கிய மனத்தினர்; யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர்; காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவரர். இவைகளே முனிவர்களின் பண்பை விளக்கும் திருமுருகாற்றுப்படை அடிகள். இவ்வடிகள் தமிழ் நாட்டிலே வாழ்ந்த தவசிகளின் சிறப்பையும், இயல்பையும், தோற்றத்தையும் எடுத்துக்காட்டின. இத்தகைய தவசிகளால் - முனிவர்களால் - தமிழகம் சீரும் சிறப்பும் அடைந்திருந்தது. நாட்டின் நல்வாழ்வு பண்டைத் தமிழர்கள் நாட்டின் நல்வாழ்விலே கவலை கொண்டவர்கள்; நாடு நன்றாக வாழ்ந்தால்தான் நாமும் நன்றாக வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள். நாட்டு மக்கள் அனைவரும் வறுமையின்றி வாழ வேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் உள்ளவர்களாயிருந்தனர். இதயத்திலே கனிவுள்ள மக்கள் இதைத்தான் விரும்புவார் கள். பண்டைத் தமிழகத்தில் இருந்த அறிவுள்ள ஆண்மக்கள், பெண்மக்கள் அனைவரும் பொது மக்களின் நல்வாழ்வைத்தான் சிறப்பாகக் கருதினார்கள்; அவர்கள் அதற்காக அல்லும்பகலும் பாடுபட்டும் வந்தனர். இதற்கு இலக்கியங்களிலே பல சான்றுகள் கிடைக்கின்றன. மக்கள் நல்வாழ்வுக்கு அடிப்படையென்று அவர்கள் எண்ணிய கொள்கைகள் மிகச் சிறந்தவை; அக் கொள்கைகளும், கருத்துக் களும் இன்றும் நம்முடைய நல்வாழ்வுக்கு அடிப்படையாக நிற்பதைக் காணலாம். எல்லா மக்களும் பசியின்றிப் பிணியின்றி வாழ வேண்டும். மக்கள் மட்டும் அல்ல; மற்றைய உயிர்த் தொகைகளும் இந் நிலையிலே இனிது வாழவும் வேண்டும் என்று விரும்பினர். இந்த விருப்பம் முதன்மையானது. இன்றும், உலகம் இவ்வாறு வாழவேண்டும் என்று விரும்பாதவர்கள் இல்லை. மக்களுடைய பசித்துன்பத்தை நீக்குவதற்கான பல முயற்சிகள் இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன; நோயைத் தடுப்பதற்கான முயற்சியும், நோய் வந்தால் அதை நீக்குவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக் கின்றன. உலகிலே பசிக்கொடுமையும், நோய்த் துன்பமும் இருக்கும் வரையிலும் இம் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும். பசிக்கொடுமை ஒழிய வேண்டுமானால், பிணிகள் தலை தூக்காமல் மறைய வேண்டுமானால் நாட்டிலே சமாதானம் நிலவவேண்டும்; அமைதி குடிகொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் பசியையும் பிணியையும் அழிப்பதற்கான முயற்சிகள் வெற்றியடையும். நாட்டிலே சமாதானம் ஓங்கி வளரவேண்டுமானால், அரசாங்கத்திற்குள்ள பகைகள் ஒழியவேண்டும். உள் நாட்டிலும் அரசாங்கத்திற்குப் பகைவர்கள் இருக்கக் கூடாது; வெளிநாட்டி லும் பகைவர்கள் இருக்கக் கூடாது. உள்நாட்டு மக்கள் உள்ளத்திலே வெறுப்பும், பகையும் வளராத முறையில் அரசாங்கம் நடத்த வேண்டும். மக்களுக்கான நல்ல காரியங்களை நடத்தும் அரசாங்கம் நாட்டு மக்கள் எல்லோருடைய ஆதரவையும் பெறும் என்பதிலே ஐயம் இல்லை. தனது நாட்டு மக்களின் செழித்த வாழ்வையே குறிக் கோளாகக் கொண்ட எந்த அரசாங்கமும் பக்கத்து நாட்டின் மேல் பகையை வளர்த்துக்கொள்ளாது; சமாதானத்துடன் வாழ்ந்து அமைதியை வளர்க்கத்தான் முயற்சிக்கும். இவ்வாறு உள்நாட்டு ஆதரவும், வெளிநாட்டு உறவும் பெற்று வாழும் அரசாங்கத்தில் உள்ள மக்கள்தான் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வார்கள். பசியும், பிணியும் இல்லாத நாட்டிலே மக்கள் நீண்ட வாழ்நாள் பெற்று வாழ்வதிலே வியப்பில்லை. ஆதலால்தான் அமைதியுடன் வாழும் அரசாங்கம் வேண்டும் என்று மக்கள் விரும்பினர். பண்டைக்காலத் தமிழ் மக்களின் இவ்விருப்பம் இன்றும் நன்மை தரும் உண்மையாக இருப்பதைக் காணலாம். நாட்டிலே நல்லறங்கள் சிறக்கவேண்டும்; அவை வளர்ந் தோங்க வேண்டும். அனைவரும் அன்புடன் கூடி வாழ்வது, ஒருவரை ஒருவர் வெறுக்காமலிருத்தல், துன்புறுவேர்க்குத் துணையாக நின்று அவர்கள் துன்பத்தைக் களைதல் இவையே சிறந்த நல்லறங்கள். வெறுப்பையும், கலக்கத்தையும், வேற்றுமை யையும் விளைவிக்கக்கூடிய தீமைகள் நாட்டிலே நடைபெறக் கூடாது. நன்மை வளர வேண்டும்; தீமை ஒழிய வேண்டும் என்ற இத்தகைய நோக்கமே, பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த நோக்கம். பண்டைத் தமிழர்கள், மக்களுடைய நல்வாழ்வுக்கு ஏற்றவை என்று எண்ணியிருந்த கொள்கைகள் உலக நன்மைக்கே அடிப்படைகளாக இருக்கின்றன. முதலாவதாக, உலகில் உள்ள உயிர்த் தொகைகள் பசியின்றி வாழவேண்டும்; நோயின்றி வாழ வேண்டும். இரண்டாவதாக, பசியும், பிணியும் பரவாமல் காக்க வேண்டுமானால் அரசாங்கம் நன்றாகத் திறமையுடன் நடை பெற வேண்டும். உள்நாட்டு மக்களின் வெறுப்புக்கும், அயல் நாட்டினரின் படையெடுப்புக்கும் ஆளாகாமல் அமைதியை நிலைநாட்டும் அரசாங்கமாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, நாட்டிலே நல்லறம் - நல்லொழுக்கம் - நிலவண்டும்; தீமைகள் - அறநெறிக்கு மாறான செயல்கள் - நடைபெறக்கூடாது. மேற்காட்டிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வையாக நிற்பதைக் காணலாம். வாழி ஆதன்! வாழி அவினி! பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக எனவேட்டோளே யாயே வாழ்க ஆதன் அவினி என்னும் மன்னவன்! இவ்வுலகம் பசியில்லாமல் வயிறார உண்டு இன்புறுக. உயிர்களைப் பிடித்துத் துன்புறுத்தும் நோய்களும் இல்லாமல் ஒழிக; அவை தூரத்தில் தொலைந்து போகட்டும் என்று விரும்பினாள் என் தலைவி. இது ஐங்குறுநூற்றில் ஐந்தாவது பாட்டு. வாழி ஆதன்! வாழி அவினி வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக; எனவேட்டோளே யாயே வாழ்க ஆதன் அவினி என்னும் மன்னவன்! அரசன் எத்தகைய பகையும் இன்றி வாழ்க! அரசன் பகைவர் இல்லாமல் வாழ்வதனால் நாடு செழிப்புற்று நாட்டு மக்கள் நீண்டநாள் பசியும் பிணியும் இன்றி வாழ்க! என்று விரும்பினாள் எமது தலைவி. இது ஐங்குறுநூற்றின் ஆறாவது பாட்டு. வாழி ஆதன்! வாழி அவினி அறம்நனி சிறக்க! அல்லது கெடுக! எனவேட்டோளே யாயே வாழ்க ஆதன் அவினி என்னும் மன்னவன்! அரசன் அறத்துறைகள் எல்லாம் சிறந்து வாழ்க! வளர்ந்து பெருகித் தழைப்பதாகுக! அறம் அல்லாத தீமை - அறநெறிக்கு மாறான புறநெறி - அடியோடு அழிக! என்று விரும்புகின்றாள் எம் தலைவி. இது ஐங்குறு நூற்றின் ஏழாவது பாட்டு. இவ்வாறு மூன்று பாட்டுக்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருக்கின்றன. இந்த மூன்று பாடல்களில் உள்ள கருத்துக்களும் ஒன்றையொன்று தாங்கி நிற்பன; ஒன்றற்கு ஒன்று அடிப்படையாக இருப்பன. முதலிலே உயிர்கள் எல்லாம் பசியின்றி வாழ்வதற்கான உணவுப்பொருள்கள் நாட்டிலே நிறைந்திருக்க வேண்டும். உணவுப் பஞ்சம் இன்றேல் பிணியும் இருக்காது. இரண்டாவதாக சமாதானத்தை நிலைநாட்டும் அரசாங்கம் நடைபெற வேண்டும். சமாதானம் நிலைத்திருக்கும் நாட்டிலே தான் உற்பத்தி பெருகும்; வறுமையும் பிணியும் வாழ்வதற்கு இடம் இல்லை. மூன்றாவதாகச் சமாதானம் நிலவும் நாட்டிலேதான் அறநெறி தழைத்தோங்கும்; மறநெறிக்கு இடம் இல்லை. இந்த மூன்று உண்மைகளும் இக்காலத்து அறிஞர்களாலும் போற்றப்படுகின்றன. இந்த மூன்றும் உலகிலே நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே அறிஞர்கள் - அருள் உள்ளம் படைத்தவர்கள் - மக்கள் சமுதாயத்தின் முன்னேற் றத்தை நாடுகின்றவர்கள் - அனைவரும் பாடுபட்டு வருகின்றனர். இச் சிறந்த உண்மைநெறியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இது வியப்புக்குரியது. தமிழர் பரம்பரைப் பண்பு நான் வருந்திப் பாடுபடுகிறேன்; பொருளீட்டுகிறேன். என்னுடைய உழைப்பில்லாவிட்டால் - என்னுடைய முயற்சி இல்லாவிட்டால் - என்னுடைய திறமையை பயன்படுத்தா விட்டால் - இந்தப் பொருள்களைச் சேர்த்திருக்க முடியாது; சேமித்திருக்க முடியாது. ஆகையால் இப்பொருள் முழுவதும் எனக்கே உரிமை; இவற்றையெல்லாம் நானேதான் அனுபவிக்க வேண்டும்; அழகாக அடுக்கி வைத்து உள்ளங் குளிரக் கண் குளிரக் கண்டு ஆனந்தமடையவேண்டும். இவ்வாறு நினைப்பது மக்கள் இயற்கை. செல்வத்தைச் சேர்ப்போர் சிந்தையிலே இவ்வெண்ணம் முளைத்துத் தழைத்து கிளைவிட்டுத் தழைக்கத்தான் செய்யும். எல்லா நாட்டிலும் இவ்வெண்ணம் படைத்தவர்களே பெரும்பாலான மக்கள்; எல்லா இனத்தினரிலும் இவ்வெண்ணம் உள்ளவர்களே எண்ணற்ற மக்கள். இதற்கு மாறான மனம் படைத்தவர்கள் மிகச் சிறுபான்மை யினர். நாம் உழைப்பது நமக்காக மட்டும் அன்று. உலகம் வாழ, மக்கள் இன்பமடைய, எல்லோரும் இனிது வாழ நாம் உழைக் கின்றோம். நமது உழைப்பின் பலன் நமக்குமட்டும் பயன் பட்டால் போதாது; அல்லது ஒருவர்க்கு மட்டும் பயன்பட்டால் போதாது; பலருக்கும் பயன்படவேண்டும் என்று நினைக் கிறவர்கள் சிலர்தான் இருக்க முடியும். இத்தகைய எண்ணம் கொண்ட சிலரால்தான் இவ்வுலக மக்களிடையே ஓரளவாவது ஒற்றுமையுணர்ச்சி நிலவுகின்றது. அன்பு படர்ந்திருக்கின்றது. இது மறக்க முடியாத உண்மை. நாட்டு மக்கள் அனைவரும் வாழவேண்டும்; பசி பட்டினி யில்லாமல், பல நன்மைகளும் பெற்று வாழ வேண்டும். பசி, பட்டினியில்லாவிட்டால்தான் நாடு செழிக்கும்; நாட்டு மக்களிடம் அறமும் அருளும் நிலைத்து நிற்கும்; நாட்டிலே நல்ல வினைகள் நடைபெறும் என்பதே சான்றோர்களின் கொள்கை. தமிழ்ச் சான்றோர்கள் இக்கொள்கையையே உயிராகக் கொண்டவர்கள். இக்கொள்கையைத் தாங்கள் நடைமுறையிலே பின்பற்றி வந்தனர்; மற்றவர்களையும் பின்பற்றும்படி செய்து வந்தனர். பிறருக்கு உதவி செய்வது நமது கடமையென்று நினைப் பது தமிழர்களின் பரம்பரைக் குணம். நாட்டு மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ்ந்தால் தான் நாமும் வாழ முடியும்; அமைதி யுடன் மனச்சாந்தியுடன் அறநெறியிலே வாழ்க்கை நடத்த முடியும் என்று இன்றும் தமிழ் மக்களில் பெரும்பாலோர் எண்ணுகின்றனர். இதை மறுக்கும் தமிழர்கள் எவருமில்லை. நாளை உணவுக்கு என்செய்வோம் என்று ஏங்கும் ஏழைத் தமிழனிடமும் இரக்கத்தன்மையுண்டு; தன்னிடம் வந்தவர்களை வரவேற்கும் தன்மையுண்டு. தன்னால் உதவி செய்யமுடியா விட்டால்கூட, அன்புடன் பேசி ஆதரவு காட்டும் இயல்பு உண்டு. இது தமிழரின் வழிவழிப் பண்பாடு. பெரும்பாலான தமிழ் மக்களிடம் இப் பண்பாட்டைக் காணலாம். தமிழர்கள் இத்தகைய பண்பாடுள்ளவர்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களிலே காணலாம். சங்க இலக்கியங்களில் எல்லாம் இக்கருத்துள்ள செய்யுட் கள் காணப்படுகின்றன. ஐங்குறுநூற்றிலே மருதத்தைப் பற்றிய பாடல்களிலே இக்கருத்துப் பொதிந்திருப்பதைக் காணலாம். காதலன் பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பினான். அவன் தன் தலைவியைச் சந்திப்பதற்கு முன் அவளுடைய தோழியர்களைச் சந்தித்தான். தான் பரத்தையர் நலத்தை நாடிச் சென்றதால், தன் மனைவி தன்மேல் மிகவும் சீற்றங் கொண்டிருப் பாள்; ஆதலால் அவள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள்; தன்பால் அன்பு காட்ட மாட்டாள்; இன்சொற் பேசமாட்டாள்; புன்சிரிப்புடன் வரவேற்க மாட்டாள் என்பது தலைவன் எண்ணம். ஆதலால் அவன் தலைவியின் - அதாவது தன் மனைவியின் மனப்பான்மையைத் தெரிந்து கொள்ளுவதற் காகவே தோழியர்களை அணுகினான். தோழியர்கள் அவனுக் குத் தலைவியின் உள்ளத்தை எடுத்துரைக்கின்றனர்; தங்கள் கருத் தையும் தெரிவிக்கின்றனர். இம்முறையிலே பத்துப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தமிழர்களின் அருள்நெறியை - கருணை உள்ளத்தைக் காணலாம். வாழி ஆதன்! வாழி அவினி! விளைக வயலே! வருக இரவலர்; என்வேட் டோளே யாயே! யாமே பல்இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்துறை ஊரன் கேண்மை; வழிவழி சிறக்க என வேட் டேமே. வாழி ஆதன் அவினி என்னும் மன்னன்! வயல்கள் நன்றாக விளைக! இரவலர்கள் தாராளமாக வந்து வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு போகட்டும் என்று என் தலைவி விரும்பி னாள். நாங்கள் பல இதழ்களோடு கூடிய நீலோற்பல மலர்க ளோடு, நெய்தல் மலர்கள் ஒத்துக் காணப்படுகின்ற குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவனிடம் எம் தலைவி கொண்டி ருக்கும் உறவு இடையறாமல் சிறக்க வேண்டும் என்று விரும்பி னோம். இது ஐங்குறுநூற்றின் இரண்டாவது பாட்டு. விளைக வயலே வருக இரவலர் என்ற அடிதான் தமிழர் அருள்நெறியை விளக்குவதாகும். வயலில் தானியங்கள் விளைவது தமக்கு மட்டும் அன்று; இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே என்ற கருத்தைக் கொண்டதே இவ்வடி.. இவ்வடி இல்லறத்தில் உள்ள ஒரு தமிழ் மங்கையின் மனத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. வாழி ஆதன்! வாழி அவினி! பால்பல ஊறுக; பகடுபல சிறக்க; என, வேட் டோளே யாயே! யாமே, வித்திய உழவர் நெல்லோடு பெயரும், பூக்கஞல் ஊரன் தன், மனை வாழ்க்கை பொலிக, எனவேட் டேமே. வாழ்க ஆதன் அவினி! நமது வீட்டில் உள்ள கறவைகள் மிகுந்த பாலைச் சொரியட்டும்; உழவுத் தொழில் மிகவும் வளரட்டும் என்று விரும்பினாள் தலைவி. விதைத்த உழவர்கள் வயல் விளைந்தபின் அறுத்துத் திரட்டிய நெல்லுடன் வீட்டுக்கு வருகின்ற மலர்கள் நிறைந்த நீர்நிலைகளையுடைய இவ்வூரின் தலைவன் சிறந்து வாழ்க! அவனுடைய இல்லற வாழ்வு இனிது சிறப்பதாக! என்று நாங்கள் விரும்பினோம். இது மூன்றாவது செய்யுள். இச்செய்யுளும் தமிழரின் அருள்மனத்தை எடுத்துக்காட்டுகின்றது. தன் வீட்டிலே உள்ள மாடுகள் ஏராளமாகப் பால் கறக்க வேண்டும்; தன் குடும்பத் துக்குரிய உழவுத் தொழில் நன்றாக நடைபெற வேண்டும்; அதன்மூலம் ஏராளமான உணவுத் தானியங்கள் வீட்டிலே வந்து குவிய வேண்டும் என்று இல்லக்கிழத்தி விரும்புகின்றாள். இச்செய்யுளில் உள்ள, பால் பல ஊறுக; பகடு பல சிறக்க என்ற அடி இக்கருத்தை விளக்கி நிற்கின்றது. பண்டைக்காலத் தமிழ்மக்களின் இல்லறச் சிறப்பை விளக்க இந்த இரண்டு செய்யுட்களே போதுமானவை. இல்லறத்திலே வாழும் ஒரு தமிழ் மங்கையின் மனப்பான்மையை இச்செய்யுட்கள் எடுத்துக்காட்டின. இல்வாழ்வோன் கடமை மற்றவர்களுக்கு உதவி செய்வ தாகும். இல்லார்க்கு உதவுவது, உறவினர்க்கு உதவுவது இல்வாழ் வோன் கடமை. துறவறத்தில் இருப்பவரை விட இல்லறத்தில் உள்ளவர் களுக்குத்தான் உதவி செய்யும் வாய்ப்பு மிகுதியாக உண்டு. இதனால்தான் தமிழர்கள் இல்லறமே நல்லறம் என்று போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர். இல்லறமே சிறந்தது என்ற கொள்கையே தமிழர்களின் உயர்ந்த அருள்நெறியை உணர்த்தும். இல்லறத்தில் வாழ் கின்றவர்களே உழைக்கின்றனர்; உற்பத்தி செய்கின்றனர்; உதவு கின்றனர். குடும்பப் பொறுப்பற்றவர்கள் எதுவும் செய்ய வேண்டும் என்ற கவலையற்றவர்கள். இது நாம் கண்கூடாகக் காணும் உண்மை. சித்திரத்தால் அருள்நெறி ஓவியர்களும், கவிஞர்களும் ஒரே மனப்பான்மை படைத் தவர்கள். கற்பனை உள்ளம் படைத்தவனே கவிஞனாகத் திகழ முடியும்; கற்பனைச் சித்தம் படைத்தவனே சித்திரக்கார னாகச் சிறந்து விளங்க முடியும். இன்ன செய்தியை இன்ன முறையிலே பாடவேண்டும்; பாட்டில் உள்ளவை படிப்பவர் உள்ளத்தை உடும்புபோல் பற்றிக் கொள்ள வேண்டும்; பாட்டில் உள்ள செய்தியைப் படிப்பவன் பின்பற்றி நடந்து மகிழவேண்டும் என்ற குறிக்கோளுடன் சிறந்த கவிகளைப் பாடுகின்றவனே உயர்ந்த கவிஞன்; அவன் உடம்பு மறைந்தாலும், புகழ் மறையாத புலமையுள்ளவன். இத்தகைய கவிஞனைப்போலவே ஓவியத்தில் உயிர்த் தன்மையை அமைத்துக் காட்ட முயற்சிப்பவன்தான் உண்மை யான ஓவியன். சிரிப்பு, அழுகை, வியப்பு, சினம், ஐயம், ஆலோ சனை, வீரம், பொறுமை, சாந்தம் முதலிய மனப்பான்மைகளை முகத்திலே அமைத்து எழுதும் ஓவியனே உயர்ந்த ஓவியக்காரன்; கற்பனை உள்ளம் படைத்த கவிஞனைப் போன்றவன். கவிஞன் பல நூல்களைப் படித்தவனாக இருக்கலாம். ஆனால் படிப்பு மட்டும் கற்பனா சக்தியை உண்டாக்கி விட முடியாது. உலகத்திலே கண்ணாற் காணப்படும் இயற்கை நிகழ்ச்சிகள், தம் வாழ்க்கை அனுபவம், பிறர் வாழ்க்கை நிகழ்ச்சி களைக் கண்டும் கேட்டும் தெளிதல் இவையெல்லாம் கற்பனை உணர்ச்சியை வளர்க்கும் எருவும் தண்ணீருமாக இருப்பவை. கவிஞனுக்குக் கல்வியும் அவசியமானதாகும். கல்லாதான் கவிஞர் உலகிலே நடமாடமுடியாது. ஆனால் ஓவியனுக்குக் கல்வி வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏட்டுப் படிப்பு இல்லாதவனும் ஓவியனாக உயர்ந்து வாழமுடியும். கற்பனாசக்தியிருந்தால் போதும். காணும் காட்சியை உள்ளத்திலே படம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்; கேட்கும் செய்திகளை மறவாமல் மனத்திலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்; மனக்கருத்தை வெளியிலே காட்டும் முகத் தோற்றங்களை அப்படியே நினைவுகூரக்கூடிய ஆற்றல் வேண்டும். இப்பண்புள்ளவன் சிறந்த ஓவியனாக முடியும். இப்பண்புகளுடன் கல்வி அறிவிருந்தால் அது அவனை நிகர் அற்ற சிருஷ்டிகர்த்தாவாகச் செய்துவிடும். ஆகவே கவிஞனுக்கும் ஓவியனுக்கும் கற்பனாசக்தியே அடிப்படை உயிர்நிலை யாகும். சிறந்த கவிதைகள், காவியங்கள், கற்பனை செய்யுட்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்பட்டு வந்தன. அவற்றைப் போலவே, உயர்ந்த சித்திரங்களும் மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்து வதற்குப் பயன்பட்டு வந்தன. கவிஞர்களின் படைப்பான கவிதைகளில் உள்ள பொருள் களைப் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறி அவர்களை நல்வழிப் படுத்தி வந்தனர் அறிஞர்கள். பண்டைக் காலத்தில், திருவிழாக் காலங்களில், கோயில்களிலும், பொதுவிடங்களிலும் புலவர்கள் இவ்வாறு பணிபுரிந்து வந்தனர். இதைப்போலவே சித்திரங்களும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வந்தன. கோயில்களிலும், பொது விடங்களிலும் சித்திரங்களை எழுதி வைத்தனர். அச் சித்திரங்கள் பொது மக்களுக்கு நல்லுரைகள் கூறவே எழுதப்பட்டன. தீமை செய்தவர்கள் கெட்டுப் போவர்கள்; நன்மை செய்தவர்கள் தீமை அடைய மாட்டார்கள்; நன்மை தான் பெறுவார்கள் என்ற உண்மையைக் காட்டும் படங்களை எழுதி வைத்தார்கள். இத்தகைய ஓவியங்கள் கவிதைகளைப் போலவே பயன்பட்டு வந்தன. இந்த உண்மையைப் பரிபாடல் என்னும் நூல் விளக்க மாகக் கூறுகின்றது. இரதி காமன், இவள், இவன் எனாஅ விரகியர் வினவ, வினாஇறுப் போரும்; இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன், சினம்உறக் கல்உரு ஒன்றிய படிஇது, என்று உரை செய்வோரும்; இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் ரதிதேவி இவளா? மன்மதன் இவனா? என்று காமங் கொண்ட பெண்கள் கேட்பர். அவர்களுக்கு, அவர்களுடன் இணைந்து செல்லும் ஆடவர்கள், ஆம் இவள் ரதிதேவி; இவன்தான் மன்மதன் என்று பதில் இறுக்கின்றார்கள். இந்திரன் - தேவேந்திரன் - இதோ பூனை வடிவாகக் காணப்படுகின்றான். இதோ நிற்கும் பெண் உருவம் அகலிகை யின் உருவமாகும். இவன் - இந்திரன் அகலிகையின் கற்பை அழித்த காலத்தில் சென்று, அந்த அநீதியைக் கண்ட கவுதம முனிவன். இதோ கிடக்கும் கல், கவுதமன் சினங்கொண்டதனால் அகலிகை அடைந்த உருவம். இவ்வாறு இந்திரனுடைய காமச்செயலையும், அகலிகை யின் கற்பழிவையும், கவுதமரின் சினத்தையும் சித்தரித்துக் காட்டும் சித்திரத்தைப் பார்த்து அதை விளக்கிக் கூறுகின்றனர். இதுபோன்ற இன்னும் பலப்பல சித்திரங்கள் எழுதப்பட்டி ருக்கும் மண்டபம். இது பரிபாடலின் பத்தொன்பதாவது பாட்டிலே உள்ள அடிகள். திருப்பரங்குன்றத்திலே இத்தகைய சித்திரந் தீட்டிய மண்டபம் இருப்பதாகக் கூறுகின்றது. இதனால் சித்திரங்களின் மூலம் மக்களுக்கு நல்லுரைகள் போதித்த செய்தியைக் காணுகின்றோம். இந்தப் பரிபாடல் பாட்டிலே இரண்டு செய்திகள் சித்திரங்கள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக் கின்றது. காதலனும் காதலியும் வாழ்க்கையிலே என்றும் இணை பிரியாமல் வாழவேண்டும். மன்மதனையும், ரதியையும் போல மாறாத அன்புடன் வாழவேண்டும். மன்மதன் ரதியைத் தவிர வேறு மாதரைக் காதலித்ததாகக் கதையில்லை. ரதியும் மன்மத னைத் தவிர வேறு ஆடவனைக் உள்ளத்திலே எண்ணியதாகக் கதையில்லை. அவர்களைப் போலவே காதலர்கள் வாழவேண்டும். இந்திரன் காமத்தால் அறிவிழந்தான். அகலிகை தன்னைத் தான் காத்துக் கொள்ள முடியாமல் இந்திரனிடம் ஏமாந்தாள்; கற்பிழந்தாள். அதனால் முனிவன் கல்லுருவாகும்படி சாபம் இட்டான். இந்திரன் தான் இழைத்த குற்றத்திற்காக அருவருப் பான உருவம் பெற்றான். உடம்பெல்லாம் பெண்குறி களைப் பெற்றான்; ஒன்றிரண்டல்ல ஆயிரம் பெண்குறிகள். அவையே கண்கள் எனப்படுவன. ஏமாந்து கற்பிழந்த அகலிகை கல்லுரு வானாள். இவை மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சிகள். இந் நிகழ்ச்சி களைக் கவிகளிலே புனைந்துரைப்பது போலவே வண்ணச் சித்திரங்களிலே தீட்டியிருக்கின்றனர். இந்நாளில் ஓவியம் எவ்வளவு பயன்பட்டுவருகின்றதோ, இதைப் போலவே பண்டைநாளிலும் ஓவியம் பயன்பட்டு வந்தது என்பதைக் காண்கின்றோம். காவியப் புலவன் மக்களின் அறிவுக் கண்ணைத் திறப்பது போலவே ஓவியப் புலவனும் மக்களின் அறிவுக் கண்ணைத் திறந்து வந்தான். காவியப் புலவன் மக்களின் உள்ளத்திலே இன்ப உணர்ச்சியை வளர்த்து வந்தது போலவே, ஓவியப் புலவனும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் காதற் சித்திரங்களைத் தீட்டிவந்தான். தமிழர்களின் வாழ்க்கையை வளம்படுத்த - அவர்கள் வாழ்க்கை மறநெறியிலே செல்லாமல் அருள்நெறியிலே செல்லும் வாழ்க்கையாக மிளிர, காவியப் புலவர்களையும், ஓவியப் புலவர்களையும் பண்டைக்காலத் தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஆதரித்து வந்தனர்; அவ்விரு புலவர்களும் கவலையின்றிக் கற்பனா சக்தியிலே ஊறித் திளைத்து, வாழ்ந்து, உலகுக்கு நன்மை செய்வதற்காக அவர்களை ஊக்குவித்து வந்தனர். மக்களை அருள்நெறியிலே நடக்கச் செய்வதற்கு நமது முன்னோர்கள் பின்பற்றிவந்த இந்த முறை வியக்கத் தக்கது. காவியப் புலவர்களும், ஓவியப் புலவர்களும் தமிழர்களின் அருள்நெறி வாழ்வுக்குத் துணை செய்ததும், துணை செய்வதும் போற்றத்தக்கது. நட்புக்குத் தகுதியற்றவர் கலித்தொகையிலே உள்ள பாலைக்கலிப் பாடல்கள் இனிமையானவை; படிக்கப் படிக்க உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றவை. அவைகள், தெவிட்டாத இன்பம் ஊற்றெ டுத்துச் சுவை தரும் செய்யுட்கள். இச் செய்யுட்கள் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியவை என்று சொல்லப்படுகின்றன. பாலைக்கலிப் பாடல்களிலே பல சிறந்த நீதிகளைக் காணலாம். அரசியல் தர்மம்; சமூக தர்மம்; மக்கள் பண்பு; இவை களை விளக்கும் பல உண்மைகளைக் காணலாம்; உள்ளத்தைக் கவரும் உவமைகள் பலவற்றைக் காணலாம். இனிய நடை யினாலும், சிறந்த உவமைகளாலும் கலித்தொகை பாடல்களிலே பாலைக் கலிப் பாடல்களே சிறந்து நிற்கின்றன. பாலைக்கலியின்சிறப்புக்கு-பெருங்கடுங்கோவின் புலமைக்கு - உதாரணமாக ஒரு பாடலை மட்டும் பார்ப்போம்; தலைவன் பொருள் தேடப் புறப்படுகின்றான். அப்பொ ழுது தோழி அவனிடம் உரையாடுகின்றாள். நீ தலைவியை விட்டுப் பிரிந்துபோகாதே என்று சொல்லுகின்றாள். இவ்வாறு அமைந்த பாடல் ஒன்று. இது கலித்தொகையின் 24-வது பாட்டு. தோழி தலைவனைப் பார்த்து, நீ அற்பரைப்போல, அறிவற்றவரைப்போல, பெருமையற்றவரைப்போலத் தலைவியை விட்டுப் பிரிந்துபோகாதே என்று சொல்லுகின்றாள். இப்படிச் சொல்லுகின்ற தோழியின் கூற்றிலே, அற்பர்கள் யார்? அறிவற்றார் யார்? பெருமையற்றார் யார்? என்பதை விளக்க மாகக் காணலாம். இன்னார்தான் அற்பர் என்று தெளிவாகச் சொல்லி யிருப்பது, இன்னார்தான் அறிவற்றவர் என்று விளக்கிக் கூறியிருப்பது, இன்னார்தான் பெருமையற்றவர் என்று விரித் துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவைகள் நம் உள்ளத்திலே படியும்படி நீங்காமல் ஒட்டிக்கொள்ளும்படி அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகள் படிப்போர், கேட்போர் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திலே கொள்ள வேண்டிய அறிவுரைகளாக, அருள் நெறியாக, நீதி மொழிகளாக அமைந் திருக்கின்றன. வெறுக்கத்தக்க குணம் படைத்த மக்களிலே பல வகையினர் உண்டு: வெறுக்கத்தக்க குணம் படைத்தவர்கள் நட்புக்குத் தகுதியற்றவர்கள். சில மனிதர்கள் செய்கை மிகவும் வெறுக்கத்தக்கது; அவர்கள் ஒருவர் தம் பக்கத்தில் இருக்கும் போது, அவருடைய குறைகளை எடுத்துச் சொல்ல மாட்டார்கள்; அவர்களைப் போற்றி உபசரிப்பார்கள்; புகழ்ந்து கொண்டாடு வார்கள்; உங்களைப்போல் உத்தமர்கள் உலகில் ஒருவருமே இல்லையென்று எதிரிலேயே புகழ்வார்கள். அவர்கள் அவ் விடத்தை விட்டுப் போனவுடன் அவர்களைப் பற்றிப் பிறரிடம் குறை கூறுவார்கள்; அவர்களிடம் இல்லாத குற்றங்களைக்கூட இருப்பதாகக் சொல்லி வசைபாடுவார்கள். இது சிலருடைய இயற்கைக் குணமாக இருக்கும். இத்தகைய வர்கள் மிகவும் அற்பமானவர்கள்; விரும்பத் தகாதவர்கள்; நட்புக்கு தகுதி யற்றவர்கள்.இவ்வாறு அற்பர்களின் இயல்பை விளக்கமாகக் கூறியுள்ளார். சிறப்புச்செய்து உழையராய்ப் புகழ்போற்றி, மற்றுஅவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் இவ்வடிகள் அற்பர்கள் யார் என்பதை விளக்கின. ஒருவரை எதிரில் புகழ்ந்துவிட்டு, அவர் இல்லாதபோது இகழ்வோரே - புறம் பேசுவோரே - அற்பர் என்று இவ்வடி களால் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இதன்பின் அறிவற்றவர்கள் யார் என்பதை விளக்கிச் சொல்லுகின்றார். ஒருவருடைய படிப்பைக் கொண்டோ, பட்டங்களைக் கொண்டோ அவரை அறிவுள்ளவர் என்று தீர்மானித்துவிட முடியாது. அவருடைய நடத்தையைக் கொண்டு தான், செய்கையைக் கொண்டு தான் அவரை அறிவுள்ளவர் அல்லது அறிவற்றவர் என்று தீர்மானிக்க வேண்டும். ஒருவருடைய நடத்தையே - பண்பே - ஒழுக்கமே - அவருடைய அறிவின் தன்மையை வெளியிடுவதாகும்; இதுவே ஒருவருடைய அறிவை அளந்து காணும் கருவியாகும். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, பெருங்கடுங்கோ சொல்வதை நாம் காண வேண்டும். சில மனிதர்கள், பிறர் நல்ல செல்வத்துடன் வாழும் போது அவர்களிடம் சேர்ந்து வாழ்வார்கள்; அவர்களுடைய உயிர் நண்பரைப் போல நடிப்பார்கள்; அவர்கள் விரும்பியபடி யெல்லாம் ஆடுவார்கள். கண்டவர்கள், இவரைப்போல உத்தம நண்பர் - உள்ளன்புடைய சினேகிதர் உண்டா? என்று சொல்லும்படி இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்து, செல்வர்களிடம் பிடுங்கித் தின்பார்கள். வேண்டியமட்டும் அவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை யடிப்பார்கள். அந்தச் செல்வர் வறியவர் ஆகி விட்டால் - தமது செல்வத்தை இழந்து விட்டால் - அவ்வளவு தான்; அதன்பின் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். அவருக்கு உதவி செய்யக்கூடிய சக்தி தனக்கிருந்தாலும் கூட இம்மி அளவும் உதவமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும் மனம் இரங்கமாட்டார்கள். இதற்கு முன் நமக்கு ஏராளமாக உதவி செய்தவர்கள் ஆயிற்றே. அவர்கள் செல்வத்தை நாம் ஏராளமாக அனுபவித்தோமே என்று கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். இவர்கள்தான் அறிவற்றவர்கள் என்று கூறியிருக் கின்றார். செல்வத்துள் சேர்ந்துஅவர் வளன் உண்டு, மற்றவர் ஒல்கிடத்து உலப்புஇலா உணர்விலார் என்ற அடிகளால் மேற்கூறிய பொருளைக் காணலாம். தனக்கு உதவி செய்தவர் வறுமையால் வாடும் போது அவர்க்கு உதவி செய்யாதவர் அறிவற்றவர் என்று இவ்வாறு தெளிவாக எடுத்துக்கூறினார் பெருங் கடுங்கோ. அடுத்தபடி, பெருமை அற்றவர்கள் யார் என்று கூறியிருப் பதைக் காண்போம். சிலர் உண்மையான நண்பர்களைப்போல நடிப்பார்கள். நண்பர்களிடமுள்ள இரகசியங்களையெல்லாம் தெரிந்து கொள்ளுவார்கள். நண்பர்களுடைய இரகசியங்களைப் பிறர் அறிய உரைப்பது, தூற்றுவது நட்புக்குத் துரோகமாகும் என்பதை உணரமாட்டார்கள். நண்பர்கள் பிரிந்தவுடன் - அல்லது நண்பர்களை விட்டுப் பிரிந்தவுடன் அல்லது ஏதோ காரணத்தால் நட்பு விட்டுப் போனபின் - அவர்களிடம் தாம் தெரிந்து கொண்ட இரகசியங்களைப் பிறரிடம் - அவர்க ளுடைய விரோதிகளிடம் வெளியிடுகின்றவர்கள் சிறிதும் பெருந்தன்மையில்லாதவர்கள்; பெருமை அற்றவர்கள். இதனை, பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து, அம்மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடுஇலார் என்ற அடிகளால் அறியலாம். நண்பர்களின் இரகசியத் தைப் பிறரிடம் வெளியிடுவோர் பெருமையற்றவர்; பெருந் தன்மை அதாவது மனிதத்தன்மை இல்லாதவர் என்பதை இவ்வாறு தெளிவாகக் கூறினார். மேலே காட்டியவற்றால், அற்பர்கள், அறிவற்றவர்கள், பெருமையற்றவர்கள் யார் என்பதைக் காணலாம். புறம்பேசுவோர் அற்பர்கள்; ஒருவரிடம் செல்வம் உள்ள போது அவரைச் சுரண்டிச் சாப்பிட்டுவிட்டு, அவர் செல்வ மற்று வருந்தும்போது உதவாதவர்கள் அறிவற்றவர்கள்; நண்பர் களின் இரகசியங்களைப் பிறரிடம் சொல்லித் தூற்றுவோர் பெருமையற்றவர்கள்; என்று இவ்வாறு மூவரைப் பற்றியும் விளக்கியுரைத்தார் பாலைபாடிய பெருங்கடுங்கோ. மனிதர்கள் அற்பத்தன்மையில்லாமல் வாழ வேண்டும்; அறிவற்ற தன்மையில்லாமல் வாழவேண்டும்; பெருந்தன்மை யுடன் வாழவேண்டும்; என்பதற்காகவே அகத்திணைப் பாடலிலே இப் புறத்திணையாகிய அறம் கூறப்பட்டது. இவ்வாறு கூறுவதே பண்டைத் தமிழர்களின் அருள்நெறியாகும். பசுவைப் பாதுகாத்தல் மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் உயிர்களைக் கொல் லாமல் பாதுகாக்கவேண்டும் என்பது பழந் தமிழர் கொள்கை. அது மட்டும் அல்ல. அவ்வுயிர்களை நன்றாக வளர்க்க வேண்டும்; அவற்றால் பெரும்பயனைப் பெற வேண்டும் என்பதும் தமிழ் மக்களின் பண்பாகும். மற்ற உயிர்களைக்காட்டிலும் பசுவைப் பரிபாலிப்பதிலே பழந்தமிழர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். தமிழர்கள் மட்டும் அன்று; பாரதநாடே இதில் கருத்தைச் செலுத்தி வந்தது. திருமால் கண்ணனாகப் பிறந்து பசுக்களை மேய்த்தான் என்னும் கதையும், மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் பசுக்களையும், உழவுக்கு உதவி செய்யும் காளைகளையும் நன்றாகப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டதுதான். பசும்பால் மிகவும் இனிமையானது; பால்களிலே மிகவும் உயிர்ச் சத்து நிறைந்தது; மக்களுக்கு நல்ல உடல்நலத்தை ஊட்டவல்லது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட செய்தி. பசும்பாலின் சிறப்பைப் பற்றியும், அதில் உள்ள உணவுச் சத்தைப்பற்றியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் அறிந்திருந்தனர். ஆகையால்தான் எல்லா நாடுகளிலும் பால் தரும் பசுக்களைப் பாராட்டி வளர்த்து வந்தனர்; இன்றும் வளர்த்து வருகின்றனர். பண்டைத் தமிழகத்திலே பசுக்கள் மேய்வதற்கென்று தனி நிலங்கள் உண்டு. நன்றாகப் புல் வளரக் கூடிய செழித்த நிலங்கள் பசுக்கள் மேய்வதற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும். அரசாங்கமே இவ்வாறு நிலங்களை ஒதுக்கிவிட்டது. இன்றுங்கூட நாட்டுப்புறங்களிலே மாடுகள் மேய்வதற் கான பொது நிலங்கள் உண்டு. இந்நிலங்களை மந்தைவெளி யென்றும், மேய்ச்சல் நிலமென்றும் அழைக்கின்றனர். இந்நிலம் ஊருக்குப் பொதுவான நிலமாகும்; தனிப்பட்ட யாருக்கும் உரிமையுள்ளதன்று. புல் மேய்ந்த பசுக்களின் பால் மிகவும் சத்தும் இனிமையும் உள்ளது. உலர்ந்து போன தானியங்களையும் வைக்கோல் முதலியவற்றையும் தின்று வளரும் மாடுகளின் பாலிலே அவ்வளவு கொழுப்பில்லை; இனிமையுமில்லை; தம் விருப்பப் படி பசும்புல்லை மேய்ந்து வரும் பசுக்களின் பால்தான் சிறந்தது என்பது எல்லோருமறிந்த உண்மை. இதற்காகத்தான் முன்னோர் கள் மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி வைத்தனர். பசுவை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்; அதனுடைய பால் மக்கள் வாழ்வுக்கு மிகவும் வேண்டியதொன்று; பசு மிகவும் சாதுவான விலங்கு; அதற்குத் துன்பம் செய்வது கூடாது; என்ற கருத்தை விளக்கும் கதைகளும் பல உண்டு. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையுள் இக்கருத்துடைய கதை ஒன்றுண்டு. பசுவின் சிறப்பைக் கூறி அதைக் காப்பாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே அக்கதை புனையப்பட்டது என்று சொல்லிவிடலாம். ஆபுத்திரன் என்பவன் வேத வேதாந்தங்களையெல்லாம் கற்றறிந்தவன். அவன் இருந்த ஊரிலே ஒருநாள் வைதீகப் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு யாகம் செய்யத் தொடங்கினர். அந்த யாகத்திலே பலி கொடுப்பதற்காகப் பசுவொன்று கட்டப்பட்டிருந்தது. யாகச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரவு நேரத்திலே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள்தான் யாகம் முடியும். அப்பொழுதுதான் பசுவும் பலிகொடுக்கப்படும். இரவிலே அவ்வழியாக வந்த ஆபுத்திரன், அந்த யாகப் பசுவின் கதறலைக் கேட்டான்; உள்ளங் கலங்கினான். ஒரு பாவமும் அறியாத இந்த உத்தமமான உயிரைப் பலி கொடுக்கப் போகிறார்களே என்று எண்ணி ஏக்கமடைந்தான். அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று கருதினான். ஆதலால் அந்த ஆபுத்திரன் யாகம் புரிவோர் அயர்ந் திருக்கும் சமயம் பார்த்து, அந்தப் பசுவை கட்டிலிருந்து அவிழ்த்துப் பிடித்துக்கொண்டு வெளியிலே வந்து விட்டான். இதற்குள் யாகசாலையில் அயர்ந்திருந்த அந்தணர்கள் விழித்துக் கொண்டனர். பசுவைக் காணாமல் தேடிக் கொண்டு புறப்பட்டனர். பசுவைப் பிடித்துக் கொண்டு போன ஆபுத்திர னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர். அந்த யாகத்தைச் செய்துவைக்கும் ஆசிரியன் ஆபுத்திரனைப் பிடித்துக் கொண்டு, தன் கையிலிருந்த கோலால் அடிக்கத் தொடங்கினான். திருட்டுப் பயலே! நீ ஏன் இந்த யாகப் பசுவைப் பிடித்துக் கொண்டு வந்தாய்? நீ அந்தணன் மகனாக இருந்தும் இந்த நீசத்தன்மையான செயலை ஏன் செய்தாய்? என்று அடித்துத் துன்புறுத்தினான். அப்பொழுது அந்தப் பசு ஆபுத்திரன் கையிலிருந்து விடுபட்டது. மற்றவர்கள் யார் கையிலும் பிடிபடவில்லை. ஆபுத்திரனைக் கோலால் அடித்துத் துன்புறுத்தும் அந்தணர் உபாத்தியின் வயிற்றிலே தன் கொம்பால் முட்டிற்று. அவன் குடலை வெளியிலே சரியும்படி செய்து விட்டு காட்டை நோக்கி ஓடிவிட்டது. அப்பொழுது அந்த ஆபுத்திரன் அந்த அந்தணர்களை நோக்கிக் கூறுகின்றான்: அந்தணர்களே! என்னைத் துன்புறுத்த வேண்டாம்; நான் சொல்வதைச் சிறிது கேளுங்கள். இந்தப் பசு உங்களுக்கு யாதொரு துன்பத்தையும் செய்யவில்லை. இந்தப் பசுவுக்கு நீங்கள் உணவு கொடுத்துக் காப்பாற்றி னீர்களா என்றால் அதுவும் இல்லை. அரசாங்கத்தால் பசுக்களுக் கென்று விடப்பட்ட நிலத்திலே, தானே முளைத்த புல்லை மேய்ந்து வளர்ந்த பசு இது. இன்னும் இப்பசுவின் செயலைப் பாருங்கள். இப்பெரிய உலகிலே பிறந்துள்ள மக்களுக்கெல்லாம் தன்னுடைய சிறந்த இனிமையான பாலை மிகவும் அன்புடன் ஊட்டி வருகின்ற உயர்ந்த பண்புடையது. இப்படிப்பட்ட இப் பசுவுடன் உங்களுக்கு நேர்ந்த பகைமைக்கு காரணம் என்ன? நீங்கள் எல்லாம் பழைய வேதங் களை நன்றாக பயின்றவர்கள்; அவற்றின் உண்மைகளையெல்லாம் உணர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள். நீங்கள் இப் பசுவைப் பலியிட நினைத்தது ஏன்? அதைச் சொல்லுங்கள் என்று கேட்டான். இந்தப் பகுதியை மணிமேகலை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. நோவன செய்யன்மின்! நொடிவன கேண்மின்! விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து, நெடுநில மருங்கின் மக்கட்கு எல்லாம் பிறந்தநாள் தொட்டுச், சிறந்ததன் தீம்பால் அறம்தரு நெஞ்சொடு அருள்சுரந்து ஊட்டும், இதனொடும் வந்த செற்றம் என்னை? முதுமுறை அந்தணிர்! முன்னியது உரைமோ! இதுவே அப்பகுதி யாகும். இதிலே பசுவைப் பற்றி - அதன் தன்மையைப்பற்றி - எடுத்துரைக்கும் அடிகள் படிப்போர் உள்ளத்தை உருக்கும் தன்மையுடையன. இந்த நான்கு வரிகளும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கின்றன என்பதைக் காணலாம். இதனால் தமிழர்கள் மனித சமுதாய வாழ்வுக்குப் பயன் படும் பிராணிகளின்மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என்பதை அறியலாம். சிறந்த நடத்தைகள் ஒழுக்கம், நடத்தை, நெறி முதலியன ஒரே பொருள் உடைய சொற்கள். மக்களுக்கு மதிப்பளிப்பது ஒழுக்கமே யாகும். ஆதலால்தான் திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்தது என்று கூறினார். ஒழுக்கமற்றவன் உயிரற்ற மனிதன். அவன் மக்களுக்குள் மதிப்புப் பெறவே மாட்டான்; எல்லா மக்களாலும் இழிவாகவே எண்ணப்படுவான். ஆதலால்தான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார். உயிரைக்காட்டிலும் ஒழுக்கமே சிறந்ததாகக் காப்பற்றத்தக்கதாகும் என்பேத வள்ளுவர் கொள்கை. இதுவே தமிழர் கொள்கை. தமிழில் உள்ள அற நூல் களில் எல்லாம் - நீதி நூல்களில் எல்லாம் - நல்லொழுக்கத்தின் பெருமையைப் பற்றியே பேசப்படுகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நூல் களில் எல்லாம் நன்னடத்தை வலியுறுத்தப்படுகின்றது. இதனால் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ்ந்தனர்; எல்லா மக்களும் நெறியுள்ளவர் களாக வாழவேண்டுமென்பதிலே கவலை கொண்டிருந்தனர். நெறியுள்ள சமுதாயந்தான் நிலையான ஒற்றுமையுடனும், அன்புடனும் நீண்டநாட்களுக்கு வாழ முடியும் என்றும் நம்பியிருந்தனர் என்பதை அறியலாம். நான்மணிக்கடிகை என்னும் நூல் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. அதில் ஒரு செய்யுளில் கூறப்படும் உயர்ந்த ஒழுக்கத்தைமட்டும் பார்ப்போம். இந்த ஒரு வெண்பாவிலே நான்கு நீதிகள் இருக்கின்றன. அந்நான்கு நீதிமொழிகளும் எவ்வளவு உயர்ந்தவை, சிறந்தவை என்பதை எண்ணிப் பார்த்தால் போதும்; ஒழுக்கத்தின் உயர்வைக் காணலாம். திருஒக்கும் தீதுஇல் ஒழுக்கம்; பெரிய அறன்ஒக்கும் ஆற்றின் ஒழுகல்;-பிறனைக் கொலைஒக்கும் கொண்டு கண்மாறல், புலைஒக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. இந்த வெண்பாவிலே உள்ள செய்திகள் நான்கு. வெண் பாவும் அழகிய முறையில் மோனை எதுகைகளுடன் அமைந் திருக்கிறது. தெளிவான கருத்துக்கள் இதன் பொருளைப் பார்ப்போம். 1. தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் - குற்றமற்ற ஒழுக்கம் செல்வத்தைப் போன்றதாகும். குற்றமற்ற நல்லொழுக்கமே சிறந்த செல்வம். செல்வம் உள்ளவன் ஒழுக்கம் அற்றவனாயிருந்தால் அவனை ஒருவரும் போற்ற மாட்டார்கள். அவனுடைய செல்வத் திற்காக, அவன் எதிரிலே அவனைக் குறைசொல்லாமல் இருக்க லாம்; அவனைப் புகழ்ந்தும் பேசலாம். ஆனால் உள்ளத்தால் அவனை மதிப்போர் - புகழ்வோர் - பாராட்டுவோர் ஒருவருமே இருக்கமாட்டார்கள். அவனைப்பற்றிய புகழ்ச்சியெல்லாம் உதட்டளவில்தான். நல்ல நெறியுள்ளவன் வறுமையால் நலிவடையலாம்; ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த முடியாதவனாயிருக்கலாம்; ஒருவருக்கும் உதவி செய்து உபசரிக்கமுடியாதவனாயிருக்கலாம். ஆயினும் அவனைப்பற்றி ஒருவரும் குறை கூறமாட்டார்கள். அவனைப் பற்றிப் பேச்சு வரும்போது, நல்ல நெறியுள்ளவன்; நெறி தவறாதவன்; ஒழுக்கம் உள்ளவன்; நடத்தைப் பிசகு இல்லாதவன்; நீதிமான், பாவம் வறுமையால் வாடுகின்றான்! என்றுதான் அனைவரும் அனுதாபம் காட்டுவார்கள். ஆகையால் அழிந்து - குறைந்து - மறைந்துபோகும் செல்வத்தைக் காட்டிலும், என்றும் அழியாத பெருமையைத் தரும் ஒழுக்கமே சிறந்தது. 2. ஆற்றில் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் - முறைப்படி ஒழுங்கு தவறாமல் நடந்துகொள்ளுவது பெரிய அறத்தைப் போன்றதாகும். தன்னுடைய கடமையை முறைப்படி செய்வதே சிறந்த அறம். தன் கடமை தவறாதவன் வேறு எந்த அறத்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. அரசாங்க அலுவலிலே இருப்பவர்களை எடுத்துக் கொள்ளுவோம். அவர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்வது என்று முடிவுகட்டிக்கொள்ளுவார்களாயின் தொல்லையே இல்லை. சுகாதார அதிகாரிகள், தயவு தாட்சண்யம் இல்லாமல் சுகாதாரத்திற்காகப் பாடுபட வேண்டும்; பொது மக்கள் நல்வாழ்விற்கு விரோதமாக நடந்து கொள்கின்றவர்களைத் தண்டிக்கவேண்டும்; மக்கள் உண்ணும் உணவு விடுதிகளிலே நோய்க்கிருமிகள் அணுகுவதற்கு இடமின்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வியதிகாரிகள், ஆசிரியர்கள் தந்நலமின்றிக் கல்வி வளர்ச்சியிலே கருத்துள்ளவர்களாகப் பணியாற்றவேண்டும். கல்வியை மக்கள் அனைவரும் கற்பதற்கான திட்டங்களை வகுத்து அதிலே கவனத்தைச் செலுத்தவேண்டும். பத்திரிகையாசிரியர்கள் மக்கள் சார்பிலே நின்று நேர்மைக்காகப் போராட வேண்டும். நீதியின் பக்கத்திலே நின்று அநீதியை எதிர்க்கவேண்டும். இவ்வாறே ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் உண்மையாக உழைப்பார்களானால் அதுவே அறநெறியில் நடப்பதாகும்; முறைப்படி நடப்பதாகும். இப்பரந்த பொருளிலேயே இச்செய்யுள் இரண்டாவது நீதி அமைந்திருக் கின்றது. 3. பிறனைக்கொண்டு கண்மாறல் கொலை ஒக்கும் - பிறன் ஒருவனை நட்பாகக் கொண்டு, பிறகு அவனைக் கைவிட்டு அவன்மேல் குறைகூறுவது, அவனைக் கொலை செய்வது போன்றதாகும். ஒருவனுடன் நட்புக்கொள்ளும்போது ஆராய்ந்தபின் தான் நட்புகொள்ள வேண்டும். நட்பாக ஏற்றுக் கொண்டபின் அவன் நட்பைக் கைவிடக்கூடாது; அவன் தவறு செய்தாலும் திருத்த வேண்டும்; பொறுத்துக் கொள்ளவேண்டும்; பொறுமை காட்ட வேண்டும். நட்புள்ளவன் பெரிய குற்றம் இழைத்தாலும் அதற்காக அவன்மீது சினத்தல் பிழையாகும். அவன் உள்ளம் திருந்தும் வகையிலே நயமாகப் பேசி அவனை நல்லவனாக்க வேண்டும். நட்பைக் கைவிடுதல் தவறு. அதை விடப் பெருந்தவறு. நட்பினைப் பற்றிப் பிறரிடம் குறை கூறுதல் ஆகும். இதுவே புறம்பேசுவதும் ஆகும். இச் செய்கை கொலை செய்வதைக் போன்றதாகும். 4. போற்றாதார் முன்னர்ச் செலவு புலை ஒக்கும்- தம்மை மதியாதாரிடம் சென்று ஒன்றைப் பெற விரும்புதல் இழிவை ஒப்பதாகும். மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்பது நமது பள்ளிக்கூட பாடம். தமிழர்களின் தன்மான உணர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நம்மை மதிப்பவர்களையே நாமும் மதிக்க வேண்டும்; நம்முடன் வேற்றுமையின்றிச் சமமாகப் பழகுகின்ற வர்களுடன் நாமும் அப்படியே பழக வேண்டும். நம்மை இழி வாக நினைப்பவர்கள் - அல்லது நம்மைத் திரும்பிப் பாராதவர் யாராயிருந்தாலும் சரி, நாமும் அவர்களிடம் அப்படியே நடந்து கொள்ளவேண்டும். இது எல்லோரும் போற்றக்கூடிய சிறந்த நீதி. இந்தச் சிறய வெண்பாவிலே கூறப்படும் நான்கு நல்லுரை களையும் நமது நடத்தையிலே காட்டுவோமாயின் நாம் சிறந்து வாழ்வோம். குற்றமற்ற நடத்தை, கடமையைத் தவறாமல் செய்தல், நட்பினரைக் குறைகூறாமை, மதியாதாரிடம் செல்லாமை இவையே அந்த நான்கும். இந்த நான்கு நல்லொழுக்கங்களும் தமிழர் அருள்நெறிக்குத் துணை செய்வன. நான்கு நல்லுரைகள் பழந்தமிழ் நீதிநூல்களில் பல நல்லுரைகள் கூறப்படு கின்றன. அந்த நீதியுரைகள் யாவும் இயற்கையோடு இணைந் தவை; அறிவால் ஆராய்ந்து கூறப்பட்டவை; அனுபவத்தில் கண்டறிந்து சொல்லப்பட்டவை. பண்டைய தமிழாசிரியர்கள் தங்கள் அறிவுக்கும் அனுப வத்திற்கும் ஒத்து வராததைப்பற்றி உரைக்கமாட்டார்கள். அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராதவை உண்மைகளா கவும் இருக்க முடியாது; உறுதியாக நிலைத்து நிற்கவும் முடியாது. இது அவர்கள் அறிந்த உண்மை. அறிவுக்கும், நடத்தைக்கும் பொருந்தாதவற்றைச் சொல்லி வைப்பது புலமைக்குப் பொருத்தம் அன்று. புலமை என்றாலே அறிவுடைமை என்றுதானே பொருள்? அறிவுக்கு ஒத்து வராதவற்றை உரைப்போரைப் புலவர்கள் என்றுதான் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? மெய்யுரைகள்தாம் எப்பொழுதும் நிலைத்து நிற்கும்; மக்களால் போற்றப்படும்; பின்பற்றப்படும்; பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படும். அவ்வுரைகள் வழிவழியாக மக்களுக் குப் பாடமாகப் போதிக்கப்பட்டு வரும். ஆயிரங்காலத்து நீதிநூல்கள் பழமையானவையானாலும், புதுமைக்கு மதிப்புக் கொடுக்கும் இக்காலத்தில் போற்றப்படு கின்றன; கற்கப்படுகின்றன. இதற்குக் காரணம் அவற்றில் பல உண்மைகள் அடங்கியிருப்பது தான். இதற்கு உதாரணமாக ஒரு அரிய செய்யுளைப் பார்ப் போம். இங்கே எடுத்துக்காட்டப் போகும் செய்யுள் நான்மணிக் கடிகை என்னும் நூலில் உள்ளது. அந்தச் செய்யுளிலே நான்கு செய்திகள் சொல்லப் படுகின்றன. அந்த நான்கிலும் உண்மையும் அறிவும் பொதிந் திருக்கின்றன. அவற்றை முறையே காண்போம். 1. எல்லாவற்றையும் நன்றாகக் கற்றறிந்தவர்கள் சென்ற தைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். சென்றதைப்பற்றிக் கவலைப்படுவதனால் எப்பயனும் ஏற்படாது. சென்றதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் மேலே செய்யவேண்டிய வேலைகள் சுணக்கமாகும். மேலே செய்யவேண்டியவற்றைச் சிறப்புடன் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் வலுப்படாது; உள்ளத்திலே ஊக்கம் பிறக்காது; முயற்சி குறையும். அறிவற்றவர்தாம் நடந்துபோன செய்தியைப் பற்றி எண்ணிக் கொண்டேயிருப்பார்கள்; காணாமற்போன பொரு ளைப்பற்றி நினைத்து நினைத்துக் கலக்கமடைவார்கள்; இருந்ததை இழந்துவிட்டோமே என்று ஏங்கி நிற்பார்கள். கல்வியுள்ளவர்கள் - உலக இயற்கையை உணர்ந்தவர்கள் - இவ்வாறு இழந்ததைப்பற்றி எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பார் களாயின் அவர்கள் அறிவாளிகள் அல்லர். அவர்கள் படித்திருந் தாலும், பல செய்திகளை அறிந்திருந்தாலும் அவற்றை அவர்கள் தம் வாழ்க்கையிலே பயன்படுத்திக் கொள்ளவில்லை யென்று தான் கருதப்படுவார்கள். ஆகையால் உண்மையாகக் கற்றறிந்த வர்கள் என்பவர்களிடம், இழந்த பொருள்களைப் பற்றி ஏக்கமே உண்டாகாது. 2. இரண்டாவது, முயற்சியுள்ளவர்கள் இடையிலே தம் முயற்சியைக் கைவிட்டுவிடமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தை நிறைவேற்ற முயலும்போது அவர்களுடைய சொல், சிந்தை, செயல் எல்லாம் அந்த முயற்சியிலேயே மூழ்கிக் கிடக்கும். இன்னும் காரியம் நிறைவேறவில்லையே! எப்பொழுது முடியுமோ? இவ்வளவு நாள் உழைத்தும் பலன் இல்லையே! இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு உழைக்க வேண்டுமோ, தெரியவில்லையே! என்பனபோன்ற எண்ணங்களே அவர்களி டம் எழும்பமாட்டா. காரியம் கைகூடும் வரையிலும் அலுப்பு சலிப்பின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இதுதான் உண்மையான உழைப்பாகும்; சிறந்த முயற்சியாகும். 3. எந்தக் காரியத்தில் இறங்கவேண்டுமானாலும் நன்றாக எண்ணிப் பார்த்த பின்தான் இறங்கவேண்டும். தான் தலையிடும் காரியத்தை முடிக்கும் திறமை தன்னிடம் இருக்கின்றதா? அக்காரியத்தைச் செய்துமுடிப்பதனால் வரும் பயன் என்ன? அது நற்பயனா? தீப்பயனா? என்றெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதுதான் அறிவுள்ள மக்கள் கடமை. இந்தக் கடமையை மறந்து, தீமையானது என்று தெளி வாகத் தெரிந்துங்கூட அதைச் செய்யத் துணிகின்றவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். அவர்களுக்கு அறத்தைப் பற்றியே ஒன்றும் தெரியாது. அதன் சிறப்பை - மாண்பை அவர்கள் அறியவே மாட்டார்கள். அறியாமையால் தீமை புரிகின்றவர்களைத் திருத்த முடியும். அவர்களை நல்வழிப்படுத்த முடியும். வேண்டுமென்றே அறமல்லாதவற்றை துணிந்து செய்கின்றவர்களை நல்வழிப்படுத் தவே முடியாது. இவர்கள் மனித சமுதாயத்திற்கே ஒரு நோய் போன்றவர்கள். இவர்களை விட்டு விலகுவதே சிறந்ததாகும். 4. அடுத்தது சினத்தின் குணம். சினத்தைப் போல - கோபத்தைப் போலக் கொடுமையானது ஒன்றுமில்லை. சினம் உள்ளவர்களிடம் எந்த நல்ல பண்புகளும் பொருந்தாமல் போய்விடும். கோபத்தைப்போலக் கொடுமை செய்வது வேறு ஒன்றுமே இல்லை. அன்பை அறுப்பது சினம்; நட்பைக் கைவிடுவது சினம்; செல்வத்தைச் சிதைப்பது சினம்; உதவி செய்தவர்கள் உயிருக்குக் கூட உலைவைக்கும் கொடுமையைச் செய்வது சினம். சினம் தன்னைக் கெடுப்பது மட்டும் அன்று; பிறருக்கும் இன்னல் செய்யும். அமர்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் அறிவைச் சிதைப்பதில் சினத்திற்கு ஒப்பாக வேறு எதையும் இயம்ப முடியாது. சுருக்கமாகச் சொன்னால் சினத்துடன் எந்த நன்மைகளும் நட்புக்கொண்டிருக்க முடியாது. நன்மைகள் என்பவை என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் அடியோடு கல்லி யெறிவது சினமேதான். ஆகையால், அறிவுள்ளவர்கள் சிறுபிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும்போதே, ஆறுவது சினம் என்று கற்பித் தார்கள். மேலே காட்டிய நான்கு பொருள்களைப் பற்றியும் நான் மணிக்கடிகைப் பாட்டு ஒன்று அழகாக எடுத்துரைக்கின்றது. அச்செய்யுள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அமைந்திருக்க வேண்டிய செய்யுளாகும். கற்றார்முன் தோன்றா கழிவுஇரக்கம்; காதலித்துஒன்று உற்றார்முன் தோன்றா உறாமுதல்; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம் வெகுண்டார்முன் தோன்றா கெடும். என்பதே அப் பாடல். கற்றவர்களிடத்திலே சென்று போனதைப் பற்றி வருந்தும் தன்மை காணப்படாது. ஒரு பொருளைப் பெற அன்புடன் முயல்பவர்களிடத்திலே அப் பொருள் விரைவில் கிடைக்கவில்லையே என்று துன்பங் காணப்படாது. தெளிவாகத் தீமையென்று தெரிந்தும் அவற்றைச் செய்வோரிடம் அறநெறியில் ஒழுகும் குணம் உண்டாகாது. சினங்கொண்டவர்களிடம் எல்லா நன்மைகளும் ஒழிந்துவிடும். ஒரு நன்மையாவது காணப்பட மாட்டாது. இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள். இச்சிறந்த நீதிகள் என்றும் நிலைத்திருக்கும் உண்மையுரைகள். இருகால் எருதுகள் இனி என்ன செய்யவேண்டும்? வாழ்வதற்கு வழி என்ன? இன்புறுவதற்கு நெறியுண்டா? துன்பத்தைத் தொலைக்க என்ன செய்யலாம்? வரும் இடையூறை எப்படித் தடுப்பது? இப்படி யெல்லாம் எண்ணிப் பார்ப்பவர்களே அறிவுள்ள மக்கள் ஆவார்கள். ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, எதிர்காலத் தைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றவர்களே சிறந்தவர்கள். இவர் கள்தாம் இன்னல்நெறியிலிருந்து தப்ப முடியும்; நன்னெறியிலே நடக்க முடியும். எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கும் குணம் சிலரிடம் இருப்பதில்லை. நடந்ததைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப் பார்கள்; பேசிக்கொண்டிருப்பார்கள். இரவுபகல் எந்த நேரத்திலும் கடந்தவற்றைப்பற்றியே நினைப்பு; அவற்றைப் பற்றியே அடிக்கடி பேச்சு. இவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரைகளை எடுத்துரைத் தாலும் பயன்படாது. நடந்தவற்றை மறந்து விடுங்கள்; அவற்றை எண்ணவேண்டாம்: பேசவேண்டாம்; நடந்தவற்றைப்பற்றி நினைப்பதாலும், பேசுவதாலும் எப்பயனும் ஏற்படமாட்டா என்று சொன்னாலும் கேட்கமாட்டார்கள். எப்பொழுதும் சென்ற செய்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சுக்கும் இறந்தவர்களைப் பற்றி எண்ணி வருந்திப் பெண்கள் ஓலமிடும் ஒப்பாரிக்கும் ஒரு வேற்றுமையும் காண முடியாது. கடந்தவற்றைப்பற்றியே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தம்மையும் துன்புறுத்திக் கொள்ளுவார் கள்; தம்மைச் சேர்ந்தவர்களையும் கவலைக் குழியிலே தள்ளிச் சித்திரவதை செய்வார்கள். சென்ற நிகழ்ச்சிகளைப்பற்றியே எண்ணிப் பேசிக் கொண் டிருப்பவர்கள் உள்ளத்திலே ஒருபொழுதும் அமைதியிருக்காது. அமைதியில்லாவிட்டால் ஆனந்தமாக வாழ்வது எப்படி? எப்பொழுதும் கவலையிலேயே அவர்கள் காலம் கழிந்து கொண்டிருக்கும். ஆதலால்தான் கழிந்தவற்றைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று எல்லா அறிஞர்களும் சொல்லிவைத் திருக்கின்றனர். நடந்தவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்களிலே இருதிறத்தினர் உண்டு. ஒருசார்பினர் கடந்த காலத்திலே தாம் அடைந்த துன்பங் களைப்பற்றிப் பேசுவார்கள்; தாம் சாதித்த சாதனைகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருப்பார்கள்; வாழ்க்கையிலே தமக்கு நேர்ந்த துன்பங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உயர் பதவியை அடைந்ததைப் பற்றிச் சொல்லுவார்கள். இத்தகைய வர்கள் இன்று நல்ல நிலையிலே வாழ்வார்களானால் அவர் களால் யாருக்கும் ஆபத்தில்லை; துன்பம் இல்லை. அவர்களும் முன்னிருந்ததைவிட இன்று நல்ல நிலையில் வாழ்வதை எண்ணி எண்ணி இன்பம் எய்துவார்கள். கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள் எமது பழமையைப்பற்றி நினைப்பதனால், அவர்களின் உள்ளத்தின் அமைதி குலைந்துவிடாது; அவர்கள் வாழ்க்கையிலே எந்த இடையூறும் ஏற்பட்டுவிடாது. அவர்கள் வாழ்க்கையிலே அமைதியும் மகிழ்ச்சியுமே கலந்து கிடக்கும். அன்று நாம் உயர்ந்த நிலையிலிருந்தோம்; இன்று தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று எண்ணுவோரும், பேசு வோரும் பலர் உண்டு. இவர்கள் அமைதியாக வாழும் வழியை அறியாதவர்கள். சில மனிதர்கள் தமது பழம்பெருமையைப் பற்றிப் பேசிக் கொள்ளுவதிலே அளவுகடந்த மகிழ்ச்சியடைவார்கள். இன்றி ருக்கும் நிலையைப்பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்கவே மாட்டார்கள். இன்று நல்ல நிலையிருந்தாலுங்கூடப் பழம் பெருமையைச் சொல்லிக் கொள்ளுவதிலேதான் அவர்களுக்குத் தனியொரு மகிழ்ச்சி. அந்தக் காலத்தில் நான் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளானதில்லை. துன்பம் என ஒன்று இருப்பதாகவே எனக்குத் தெரியாது. செல்வத்திலே கிடந்து புரண்டேன்; இன்பக் கடலிலே மூழ்கி நீந்தி விளையாடினேன்; இன்று என் கதி இப்படி யாயிற்று என்று எண்ணி எண்ணிப் பேசிப் பேசிப் பெருமூச்சு விடுவோர் உண்டு. இவர்கள் அறிவுடையவர்கள் கூட்டத்திலே சேர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள். இன்னும் சிலர் தம்முடைய அழகைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று அவர்களைப் பார்த்தால் அசல் அனுமந்த ராயராகக் காணப்படலாம். நானே அழகுள்ளவன்; மன்மதன் அவதாரம் நானேதான் என்று சொல்லுவார்கள். இவ்வாறு சொல்லிக்கொள்ளும் ஆண்களும் உண்டு. அலர்மேல் மங்கை - திருமகள் - இலக்குமி தேவி என்றால் நானேதான்! என்னை விட அழகுள்ளவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? என்று சொல்லிக்கொள்ளும் பெண்களும் உண்டு. பழைய காலத்தில் துன்பமில்லாமல் வாழ்ந்தோம்; இன்று துன்பத்திற்கு ஆளாகித் துடிக்கின்றோம். அக்காலத்தில், கண்டவர்கள் விரும்பும் அழகுள்ளவராகக் காணப்பட்டோம்; இன்று, பார்ப்போர் அருவருக்கும் உருவெடுததுள்ளவராக மாறிவிட்டோம் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் மனிதர் களே அல்லவாம். அவர்கள் உருவத்திலே மனிதர்களாயிருந் தாலும் பண்பிலே விலங்கினத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு கூறுகின்றார் ஒரு பழந்தமிழ்ப் புலவர். எருதுகளுக்கு நான்கு கால்கள் உண்டு. இரண்டு கால் களையுடைய எருதுகள் இல்லை. இரண்டு கால்களையுடைய எருதுகள் இருந்தால் அது வியப்புக்குரியதாகும் அன்றோ? முன்பு துன்பமில்லாமல் வாழ்ந்தோம்; நாங்கள் தான் அழகுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் இருகால் எருதுகளாம்! என்ன வியப்பு! சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் காரி ஆசான் என்பவர் இந்தத் தற்புகழ்ச்சிக்காரர்களை இருகால் எருது என்று குறிப்பிட்டிருக்கின்றார். தேவரே கற்றவர்; கல்லாதர் தேருங்கால் பூதரே; முன்பொருள் செய்யாதார் - ஆதரே; துன்பம் இலேம் பண்டு, யாமே வனப்புடையேம், என்பார் இருகால் எருது. இச்செய்யுளின் பின்னடிகள் குறிப்பிடத்தக்கவை. துன்பம் இலேம் பண்டு; யாமே வனப்புடையேம்; என்பார் இருகால் எருது என்ற அடிகள் குறிப்பிடத்தக்கவை. கல்வி கற்றவர்கள் தேவர்களைப் போன்றவர்கள்; கல்வி கற்காதவர்கள் பைசாசங்களைப் போன்றவர்கள்; முதுமைக் காலத்துக்கு வேண்டிய செல்வத்தை இளமைக் காலத்திலேயே சேர்த்து வைத்துக்கொள்ளாதவர்கள் அறிவில்லாதவர்கள். முன்பு நாம் செல்வம் உள்ளவராயிருந்து துன்பம் இன்றி வாழ்ந்தோம்; நாம் தாம் அழகுடையேம் என்பார் இருகால் எருதுகள் ஆவார்கள். இதுவே இச்செய்யுளின் பொருள். பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பவர்களும், தம் அழகைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கின்றவர்களும் முன்னுக்கு வரமுடியாது; வாழ்க்கை யிலே இன்பம் பெறமுடியாது என்ற கருத்தை வலியுறுத்துவதே இதன் நோக்கம். பழம் பெருமையைப் பேசாதவர்களே வருங்கால வாழ்வுக்காக உழைப்பார்கள். பட்டினத்தார் தாயுமானவர் பாடல் பெருமை (1963) ஆசிரியர் முன்னுரை அருள்நெறித் தொடரின் ஆறாவது பகுதியாக பட்டினத் தார் - தாயுமானார் பாடல் பெருமை என்னும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூலில் உள்ள பட்டினத்தார் பாடல் பற்றிய கட்டுரை களிலே சில, சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளி வந்தவை; பல இதற்கென்றே எழுதப் பட்டவை. தாயுமானவர் பாடல் பற்றிய கட்டுரைகள் அனைத்தும், மேலே கண்ட பத்திரிகையில் வெளிவந்தவைகளே. சில திருத்தங்களுடன் இப்பொழுது நூல் வடிவில் வெளிவருகின்றன. தமிழ் முரசில், தமிழர் அருள்நெறி என்னும் தலைப்பில், மெய்கண்டான் என்னும் பெயரில் என்னால் எழுதப் பட்ட கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்நூலில் உள்ள கட்டுரைகள். பட்டினத்தாரைப்பற்றி நமது நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள். அவருடைய பாடல்களைப் பலரும் படிக்கின்றனர். அவர் சொல்லியிருக்கும் வேதாந்தக் கருத்துகளைப் பலரும் போற்றுகின்றனர். தாயுமானவர் பாடலும் பிரசித்தமானவை. பலருக்கு அப் பாடல்களைப் பற்றித் தெரியும். பலர் தாயுமானவர் பாடல்களை உள்ளம் உருகிப் பாடுவதைக் கேட்கின்றோம். தாயுமானவர், பட்டினத்தார், இருவருடைய பாடல்களும் படிப்பதற்கும், பாடுவதற்கும் இனிமையானவை. பலர்க்கும் பொருள் விளங்கும் எளிய நடையில் இயன்றவை. தமிழ் மொழி, மக்களுக்குப் புரியும் வகையிலே - மக்களோடு இணைந்து எப்படி வளர்ந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவ்விருவர் பாடல்களை யும் உதாரணமாகக் கொள்ளலாம். மொழியின் வளர்ச்சியில் மட்டும் அன்று: கருத்திலும் இவ்விருவர் பாடல்களிலும் வளர்ச்சியைக் காணலாம். பட்டினத்தார் என்ற பெயருடன் தமிழகத்தில் இரண்டு பெரியார்கள் இருந்தனர் என்று எண்ண இடம் உண்டு. ஒருவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர்; மற்றொருவர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்தவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பட்ட சைவத் திருமுறையாகிய பதினோராந் திருமுறையிலே அடங்கியிருக்கும் பட்டினத்தார் பிரபந்தங்கள் வேறு: பாமர மக்களும் படித்து இன்புறும் பட்டினத்தார் பாடல்கள் வேறு. பதினோராந் திருமுறையிலே, பட்டினத்தார் பாடியனவாக உள்ள நூல்கள் ஐந்து. அவை கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்பவைகள். பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு என்னும் நூலிலே, கோயில் திருஅகவல், கச்சித் திருஅகவல், திருவேகம்ப மாலை, பொதுப் பாடல்கள், அருட் புலம்பல், உடற்கூற்று வண்ணம் என்னும் பிரபந்தங்கள் காணப்படுகின்றன. பட்டினத்தார் ஞானம் என்ற பெயரில் நூறு பாடல்கள் - வெண்பாக்கள் சித்தர்கள் பாடல் திரட்டிலே காணப்படுகின்றன. சித்தர் பாடல் திரட்டில் பட்டினத்தார் அருட்புலம்பல், பட்டினத்தார் புலம்பல் என்ற பெயருடன் காணப்படுகிறது. பதினோராந் திருமுறையில் உள்ள பட்டினத்தார் பாடல் களையும், பட்டினத்தார் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல் களையும் படிப்போர் இரு தொகுதிகளின் ஆசிரியர்களும் ஒருவர் அல்லர் என்றுதான் எண்ணுவார்கள். பாடல்களின் போக்கு, அவ்வாறு அமைந்திருக்கின்றது. கருத்திலுங்கூட வேற்றுமையுண்டு. பதினோராம் திருமுறைப் பாடல்கள் பக்தி மார்க்கத்தைப் போதிப்பன. பட்டினத்தார் பாடல் திரட்டிலுள்ள பாடல்களிலும் பக்திமார்க்கம் காணப்படுகின்றது. ஆயினும், யோக மார்க்கத்தைப்பற்றியே மிகுதியாகப் பாடுகின்றன. சாதி, விக்கிரக வணக்கம், தேர், திருவிழா முதலியன கண்டிக்கப் பட்டிருக்கின்றன. சித்தர்களின் தத்துவங்கள் பாடல் திரட்டில் அடங்கியிருக்கின்றன. ஆதலால், பதினோராந் திருமுறைப் பிரபந்தங்களைப் பாடிய பட்டினத்தார் வேறு, பட்டினத்தார் திருப்பாடல் திரட்டுப் பாடல்கள் பாடிய பட்டினத்தார் வேறு என்றுதான் கொள்ள வேண்டும். தாயுமானாரைப்பற்றி இத்தகைய வேறுபாட்டுக்கே இட மில்லை. தாயுமானார் ஒருவரேதான். இவர் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் என்பதிலும் ஐயம் இல்லை. பட்டினத்தார், தாயுமானார், இருவர் பாடல்களிலும் சமரச சன்மார்க்க போதனைகள் பல நிறைந்திருக்கின்றன. இருவர் பாடல்களும், அவர்களைச் சிவனடியார்கள் - சிவபக்தர் கள் என்று எண்ணும்படியே அமைந்திருக்கின்றன. ஆயினும், அவர்கள் பாடல்களிலே மத வெறுப்பைக் காண முடியவில்லை. பட்டினத்தார், தாயுமானார் இருவரும் எந்தத் தெய்வங் களையும் இகழ்ந்து பேசவில்லை. எந்த மதங்களையும் கண்டித்துப் பாடவில்லை. யாரிடத்திலும் அவர்கள் வெறுப்புக் காட்டவில்லை. ஒன்றே தெய்வம்: தெய்வத்தை உள்ளத்திலே காணலாம்; அன்பு, அருள், அறிவு, இன்பம், ஒளி இவைகள் தெய்வ வடிவம் என்று இவர்கள் காட்டும் தத்துவம் அனைவர்க்கும் பொதுவானது. பட்டினத்தார், தாயுமானார் இருவரும் வெறும் தத்துவ ஞானிகள் மட்டும் அல்லர்; உலக அனுபவம் நிறைந்தவர்கள். இதனை அவர்கள் பாடல்களிலே காண முடிகின்றது. உலகில் நடைபெறும் வஞ்சனை, சூதுகளை யெல்லாம் எடுத்துக் காட்டிப் பாடியிருக்கின்றனர். உலகில் உள்ள மக்களின் பலதிறப்பட்ட பண்புகளை யெல்லாம் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். மக்கள் அனைவரும், ஒன்றுபட்டுச் சமாதானமாக வாழ்வதற்கு இவர் களின் பாடல்கள் வழிகாட்டுகின்றன. மக்களுக்கு அறிவுரையும், சன்மார்க்கத்தையும் போதிக்கும் பட்டினத்தார் பாடல்களும், தாயுமானவர் பாடல்களும், தமிழ் மக்கள் அனைவராலும் போற்றப் படுகின்றன. அப்பாடல்களின் பெருமையை எடுத்துக் காட்டுவதே இந்நூலில் அமைந்திருக்கும் கட்டுரைகளின் நோக்கம். சாமி.சிதம்பரன் பட்டினத்தார் தமிழ்நாட்டிலே பட்டினத்தார் என்றால், ஒரு பெருமை யுண்டு; மதிப்பும் உண்டு. இன்றுள்ள பட்டினத்தில் வசிப்பவர் களை இப்பெயரிட்டு அழைப்பதாக நினைத்து விடாதீர்கள். பட்டினத்தார் - பட்டினத்துப் பிள்ளையார் - பட்டினத்தடிகள் என்ற பெயருடன் பன்னூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெரியாரைக் குறிப்பதே இப்பெயர். இவர் காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்து, இன்றுள்ள சென்னைப்பட்டினத்திற்கு அருகில் உள்ள திருவொற்றியூருக்கு வந்து அடக்கமானவர். இவரைப்பற்றித் தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்கள். இவருடைய பாடல்கள் தமிழ்நாட்டில் பெயர் பெற்றவை. இவ்வுலகிலே எல்லாம் நிலையற்றவை என்று வேதாந்தம் பேசுகிறவர்கள் எல்லோரும் பட்டினத்தார் பாடல்களை எடுத்துச் சொல்லுவார்கள். இப்பட்டினத்தார் செல்வக் குடியிலே பிறந்தவர்; பின்னர் துறவியானவர் என்று வரலாறு வழங்குகின்றது. இவர் பெயரால் வழங்கும் பாடல்கள் இரு பகுதிகளாக வழங்குகின்றன. ஒரு பகுதிப் பாடல்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றாகிய பதினொராம் திருமுறை என்னும் நூலில் காணப் படுகின்றது. அதிலே பட்டினத்தார் பெயரால் ஐந்து பிரபந்தங்கள் காணப்படுகின்றன. பதினொராம் திருமுறையில் உள்ள பட்டினத்தார் பாடல்கள் பக்திச் சுவை நிறைந்தவை. பழந்தமிழ்ப் பண்பாட்டை யொட்டிய பாடல்கள் - அகப்பொருள் துறை அமைந்த பாடல்கள் - அவற்றிலே நிறைந்திருக்கின்றன. நல்ல உவமைகளையும், சிறந்த வர்ணனைகளையும் அப்பாடல்களிலே காணலாம். பட்டினத்தார் சிறந்த தமிழ்ப் புலமை படைத்தவர் என்பதைப் பதினோராம் திருமுறைப் பாடல்கள் காட்டுகின்றன. பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு என்று மற்றொரு நூல் வழங்குகின்றது. இந்நூல் பாடல்கள் மிகவும் எளிய நடையில் அமைந்தவை. பதினோராம் திருமுறைப் பாடல் களையும், இப்பாடல்களையும் படிக்கும்போது, ஒன்றற்கொன்று ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். பதினோராம் திருமுறைப் பாடல்கள் சிறந்த இலக்கியத் தமிழ்; பழந்தமிழ்ச் சிறப்பை - போக்கை - அமைப்பைப் பின் பற்றி இருப்பவை. பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எளிய பாடல்கள்; அனைவரும் பொருள் உணரக்கூடிய, இனிமையான பாடல்கள் என்றும் கூறலாம். இந்தப் பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டிலே உலக வாழ்க்கை நிலையற்றது; செல்வங்கள், உறவு, சுற்றம், பெண்டு பிள்ளைகள் எல்லாம் நிலையற்றவை; நாம் செய்யும் புண்ணிய பாவங்களின் பலன்கள்தாம் நம்மைப் பற்றுவன, நாம் இறந்த பின்னும் நம்மோடு தொடர்வன என்ற உபதேசங்களே இப்பாடல் தொகுதியிலே அடங்கிக் கிடக்கின்றன. இல்லறத்தை விடத் துறவறமே உயர்ந்தது என்ற கொள்கை யைப் இப்பாடல்கள் வலியுறுத்துகின்றன. சங்கராச்சாரியார் அவர்களால் வடமொழியிலே பாடப்பட்ட பஜகோவிந்தம் என்றொரு நூல் உண்டு. அதிலே உலக நிலையாமைதான் மிகுதியாக வலியுறுத்தப்படுகின்றது. உலகத்தில் காணப்படுவனவெல்லாம் அழிவன; ஆகையால் அழியாத பரம்பொருளை அடையவேண்டும் என்ற கருத்துப் பஜகோவிந்தத்திலே காணப்படுகின்றது. பட்டினத்தார் பாடல் திரட்டிலேயுள்ள செய்யுட்கள் பஜகோவிந்தத்தின் கருத்துக்களையே கொண்டிருக்கின்றன. வேதாந்தக் கருத்துக்களை விளக்கிக் காட்டுவதிலே பட்டினத்தார் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன. அப்பாடல்கள் படிப்பதற்கு இனிமையாகவும், எளிதாகவும் இருப்பதனால் பலர் அப்பாடல்களைப் படித்து மகிழ்கின்றனர். பதினோராம் திருமுறையில் உள்ள பட்டினத்தார் பாடல்கள் பக்தி மார்க்கத்தையே பெருமபாலும் வலியுறுத்துவன. பட்டினத் தார் பாடல் திரட்டு பெரும்பாலும் ஞானமார்க்கத்தையே வலியுறுத்துகின்றன. செய்யுளின் நடை, கருத்து - இவைகளைக் கொண்டு, பதினோராம் திருமுறையில் உள்ள பிரபந்தங்கள் பாடிய பட்டினத்தார் வேறு, பட்டினத்தார் பாடல் திரட்டு ஆசிரியரான பட்டினத்தார் வேறு என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. அருணகிரிநாதர், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவர். அருணகிரியர், பட்டினத்தாரின் குமாரர் என்று கூறுவோர் உண்டு. இது உண்மையானால், இந்தப் பட்டினத்தார் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக இருக்கவேண்டும். பட்டினத்தார் பாடல்களில், அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய சமரசக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவருடைய பாடல்கள் சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டிருப் பனவாயினும், அவர் கூறும் நீதிகளும், உலக நிகழ்ச்சிகளும், கடவுளைப்பற்றிய கருத்துக்களும் பலரும் ஒப்புக்கொள்ளும் முறையில் அமைந்திருக்கின்றன. ஆதலால் இப்பட்டினத்தார் ஒரு சமரச சன்மார்க்க ஞானி என்பதில் ஐயம் இல்லை. பட்டினத்தார் பாடல் திரட்டில் உள்ள சமரசக் கருத்தை விளக்கும் முறையிலேயே சில கட்டுரைகள் எழுதப்பட்டிருக் கின்றன. அவர் கருத்தைப் பின்வரும் கட்டுரைகளில் காணலாம். உயர்ந்த மனிதன் பட்டினத்தார் பாடல்களிலே பழந்தமிழர் கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். உலக இயற்கையை - உலக மக்களின் இயல்பை - அவர்கள் உள்ளத்தை - அப்படியே படம் பிடித்துக் காட்டும் பாடல்கள் பல உண்டு. பட்டினத்தார் பாடல் திரட்டில் முதலில் அமைந்திருப்பது திருவேகம்ப மாலை என்னும் பகுதி. அதன் முதல்பாட்டு குறிப்பிடத்தக்கதொரு செய்யுள். இவ்வுலகில் வாழும் மக்களின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வுலகில் எத்தனையோ பேர் பெரிய தர்மங்களை யெல்லாம் செய்கின்றனர்; அப்படித் தர்மம் செய்கின்றவர்கள் யார்? அவர்கள் செய்யும் தொழில்கள் என்ன? வியாபாரங்கள் யாவை? என்பதைச் சிறிது கவனித்தால் போதும்; தருமம் செய்கின்றவர்களின் நோக்கம் விளங்கிவிடும். வியாபாரத்திலே கொள்ளை இலாபம் அடிப்போர் மருத்துவசாலைகள் கட்டு கின்றனர்; கோயில்கள் கட்டுகின்றனர்; பள்ளிக் கூடங்கள் கட்டுகின்றனர்; ஏழைகளுக்கு அன்னம் இடுகின்றனர்; உடுக்கத் துணிகள் உதவுகின்றனர். இவைபோன்ற பல அறங்கள் செய்வதைக் காண்கின்றோம். இவ்வாறு அறம் செய்வோர் அனைவரும், பணத்தின் மேல் ஆசையில்லாமல் செய்கிறார்களா? உள்ளத்திலே தியாகத் தன்மை கொண்டு செய்கின்றார்களா? என்று சிந்தித்தால் உண்மை விளங்கும். இவர்களிலே பலர், மேலும் தங்கள் வியா பாரம் பெருகுவதற்கு, இத்தருமங்களை விளம்பரங்களாகவே பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். அவர்களுடைய வியாபாரத் தில், தருமம் செய்வதும் ஒரு பகுதியாக அடங்கியிருப்பதை ஒரு சிலர்தான் அறிவார்கள். இது இவ்வுலகத்து இயல்பாகும். ஆதலால் அறம் புரிகின்றவர்களையெல்லாம் ஆசையற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது; மக்கள்மேல் கருணை உள்ளம் படைத்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அறங்கள் பலவற்றைச் செய்கின்றவர் ஆசையுள்ளவர் களாயிருக்கலாம்; மேலும் மேலும் செல்வத்தைக் குவிக்கின்ற வர்களாயிருக்கலாம்; தாங்கள் செய்யும் தர்மத்தை வியாபாரம் வளர்வதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கலாம். ஆயினும் இவர்கள் சிறந்தவர்கள் தாம். ஒருவருக்கும் இம்மியளவும் உதவாமல் கோடிக்கணக்காகக் குவித்து வைத்து விட்டுச் சாவோரை விட, இவர்கள் எத்தனையோ ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களைவிட, செல்வம் வேண்டாம்; வியாபாரம் வேண்டாம்; உற்றார் உறவினர் வேண்டாம்; ஊர் வேண்டாம்; பேர் வேண்டாம்; இன்பம் வேண்டாம்; எல்லாவற்றையும் வெறுத்து வெளியேறுகின்றேன் - என்று துறக்கின்றவன் சிறந்தவன். பொருளைக் கட்டிக் காத்து வைத்துக்கொண்டு - மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு - அறங்கள் பலவற்றைச் செய்கின்றவனை விடச் செல்வத்தையும், செல்வ ஆசைக்குக் காரணமான இல்லறத்தையும் துறப்பவன் கோடி மடங்கு உயர்ந்தவன். இவனைவிட உண்மையாகவே உள்ளத்திலே எவ்விதப் பற்றும் இல்லாமல் துறந்தவன் உயர்ந்தவன். பொருளாசை எளிதிலே விடாது; மண்ணாசை மனிதனை இறுகப் பிடித்துக் கொள்ளும். பெண்ணாசையால் தடுமாற்றம் அடையாதவர் களே இல்லை. புகழுக்கு ஆசைப்படாதவர்கள் ஒருவரும் இல்லை. ஆகையால் உள்ளத்திலே எவ்வித ஆசையும் இல்லாமல் - ஒருவிதப் பற்றும் இல்லாமல் இருப்பவன் உண்மையிலே அமரத் தன்மை படைத்தவனாவான். அவன் இல்லத்தை விட்டுத் துறந்தவனைவிட நூறு கோடி மடங்கு உயர்ந்தவனாவான். இவர்கள் எல்லோரையும்விட அளவற்ற பெருமையை உடையவன் ஒருவன் உண்டு. அவன் பலர்க்கும் பயன்படுகின்ற பலவகையான அறங்களைச் செய்வான்; ஆனால் அவைகளை மேலும் பொருள் சேர்ப்பதற்கோ, விளம்பரத்துக்கோ, புகழுக்கோ பயன்படுத்திக்கொள்ள மாட்டான். அவ்வறங் களால் வரும் புண்ணியத்தால் நல்ல கதி - இறந்தபின் நல்ல கதி - கிடைக்கும் என்ற நினைப்பும் கொள்ளமாட்டான்; அறம் புரிவது தனது கடமை என்று கருதியே அவைகளைச் செய்வான். இல்லறத்தை விட்டுத் துறந்து போய்விடவும் மாட்டான்; பெண்டு பிள்ளைகளுடன், உற்றார் உறவினருடன் கூடியே வாழ்வான்; மகிழ்சசியாக - இன்பத்தை நுகர்பவன் போல் வாழ்ந் திருப்பான்; ஆனால் குற்றமற்ற நூல்களைக் கற்றறிந்தவனாக இருப்பான்; சிறந்த அறிவு உள்ளவனாக இருப்பான். நல்வினை தீவினையைப் பற்றிக் கவலைப்படமாட்டான்; தான் செய்யும் வேலைக்குப் பலனை எதிர்பார்க்கமாட்டான்; மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தான் பிறவி எடுத்ததன் கடமை என்று கருதி எப்பொழுதும் பணி புரிந்துகொண்டிருப்பான். அவன் இவ் வுலகில் எல்லோரையும் போல் வாழ்ந்தாலும், பற்றற்று வாழ் வான்; உலகப் பற்றைக் கடந்தவனாக இருப்பான். இப்படிப் பட்டவனே உண்மையான தியாகி என்பவன். இவனுடைய பெருமை, சொல்லால் அளவிட்டுக் கூறக்கூடிய தன்று. இத்தகைய தியாகிகளால் தான் இவ்வுலகம் வாழ்கிறது; முன்னேறுகிறது. இச்செய்தியை எடுத்துரைக்கின்றது அப் பாடல். அப் பாடல் கீழ்வருவது: அறந்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான்; அவனிற் சதகோடி உள்ளத் துறவு உடையோன்; மறந்தான் அறக்கற்று அறிவோடு இருந்து இருவாதனை அற்று இறந்தான் பெருமையை என்சொல்லு வேன்;கச்சி ஏகம்பனே! இப்பாடல் செயற்கரிய செய்வர் பெரியர் என்ற திருக்குறளின் கருத்தோடு இசைந்திருப்பதைக் காணலாம். இச்செய்யுளின் பொருள் கீழ்வருவது: பல அறங்களையும் தவறாமல் செய்யும் இல்லற வாழ்க்கையையுடையவன் சிறந்தவன்; உயர்ந்தவன். அவனைக் காட்டிலும் அந்த இல்லற இன்பத்தையும் வெறுத்துத் துறவறத்தை மேற்கொள்ளுகிறவன் உயர்ந்தவன்; அவன் இல்லறத்தானை விட கோடி மடங்கு உயர்ந்தவன். இல்லற இன்பத்தை வெறுத்துத் துறவு பூண்டவனை விட உண்மையிலேயே உள்ளத்திலே துறவு பூண்டவன் உயர்ந்தவன். மனத்தால் எந்த இன்பத்தையும் எண்ணாமல் தன்னலந் துறந்து வாழும் உள்ளத்துறவுள்ளவன் சாதாரண துறவியைவிட நூறுகோடி பங்கு உயர்ந்தவன். இவனைக் காட்டிலும் உயர்ந் தவன் - சொல்ல முடியாத பெருமையுள்ளவன் யாரென்றால், கேளுங்கள் சொல்லுகிறேன்; குற்றமற்ற கல்வி கற்றவன்; கற்றதோடு மட்டும் நில்லாமல் அறிவுநெறியிலே நிற்பவன்; அறிவு நெறியிலே நிற்பதோடு நல்வினை, தீவினைப் பலன் களிலே நாட்டம் இல்லாமல் தன் கடமையைச் செய்து வாழ் கின்றவன் ஆகிய இத்தகையவனே அளவிட முடியாத பெருமையுள்ளவன். இக்கருத்தையே விளக்குகின்றது இப்பாட்டு. இப்பாட்டின் பொருளை நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான் வரவேண்டும்: இல்லறத்தில் வாழ்வோன் இல்லற தர்மங்களை விடாமல் பின்பற்றி நடக்கவேண்டும்; துறவு பூண்டவன், வெளிவேடத் துறவியாக இல்லாமல் உள்ளந் துறந்தவனாக இருக்க வேண்டும். யாராயிருந்தாலும், குற்றமறக் கற்று, அறிவுநெறியிலே வாழ்ந்து, தன்னலம் கருதாமல் உழைத்து வாழ்கின்றவன் எல்லோரினும் உயர்ந்தவன். இதுவே இச்செய்யுளின் முடிந்த கருத்தாகும். உள்ளத்திலே எவ்வித ஆசையும் இல்லாமல், ஒழுக்கந் தவறாமல், பிறர் நன்மைக்காக உழைப்பவனே உண்மையான துறவி. அவனே அளவற்ற பெருமைக்கு உரியவன் என்பதை இப்பாடல் மூலம் எடுத்துரைத்தார் பட்டினத்தார். இவை போன்ற சிறந்த கருத்துள்ள பாடல்கள், பட்டினத் தார் பெயரால் வழங்கும் பாடல் திரட்டிடலே இருக்கின்றன. எந்த நெறியிலே சென்றாலும் உண்மையைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதே தமிழர் உள்ளம் என்பதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டாகும். உதவாக்கரை மனிதர்கள் இவ்வுலகிலே எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களிலே பலவகையான மாறுபாடுகள்; தோற்றங்கள். உருவத்திலே உயரம்; குட்டை; பருமன்; ஒல்லி - இத்தகைய வேற்றுமை. நிறத்திலே கருப்பு; சிவப்பு; வெண்மை; மாநிறம் - இத்தகைய நிறவேறுபாடுகள். ஒவ்வோர் அங்கங் களிலும் சிறிது சிறிது வேறுபாடுகள். இவ்வேறுபாடுகள் இயற்கையானவை; அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்தவை; நாட்டைப் பொறுத்தவை; நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவை; ஒவ்வொரு குடும்பத்தையும் பொறுத்தவையும் ஆகும். மக்களிடையே தோற்றத்தில் சிறுசிறு வேற்றுமைகள் காணப்பட்டாலும் பண்பாட்டில் ஒன்றாக உள்ள இனத்தினர் உண்டு; மொழியினர் உண்டு; நாட்டினர் உண்டு; மதத்தினர் உண்டு. மக்கள் ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொண்டு - அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதுதான் மனிதத் தன்மையாகும்; மனிதத் தன்மையின் சிறந்த பண்பாடுமாகும். இப்பண் பாட்டுக்கு - மனிதத் தன்மைக்கு - விரோதமாக வாழும் மனிதர் களும் உண்டு. அத்தகைய மனிதர்கள் யார்? அவர்களால் மனித சமூகத் துக்கு என்ன பயன்? அவர்கள் மனிதர்களாகப் பிறந்ததனால் என்ன பயன்? என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்கிறார் பட்டினத்தார். ஒன்றிலும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மனிதர் கள் சிலர்; இடி இடித்தாலும், மழை பெய்தாலும் அவர்கள் கவலைப்படவே மாட்டார்கள்; நல்ல காரியங்களிலும் தலையிட மாட்டார்கள்; கெட்ட காரியங்களிலும் தலையிட மாட்டார்கள். அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு; உழைப்பார்கள்; உண்பார்கள்; உறங்குவார்கள்; பெண்டு பிள்ளைகளுடன் வாழ்வார்கள்; சாவார்கள். இவர்கள் வாழும் பொழுதும் இவர்கள் பெயரைப் பிறர் அறியார்; இவர்கள் செத்த பின்னும் இவர்களைப்பற்றி யாரும் எதுவும் பேச மாட்டார்கள். இவர் களால் யாருக்கும் நன்மையும் இல்லை; தீமையும் இல்லை. இம்மாதிரியான மனிதர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டி யதேயில்லை. வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உண்டு; மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க சில மனிதர்கள் உண்டு. அவர்கள் யார் என்பதைத்தான் நாம் அறியவேண்டும். அவர்களிடம் - அத்தகைய மனிதர்களிடம் - நாம் கொஞ்சம் பாதுகாப் புடனேயே நடந்து கொள்ள வேண்டும். அம்மனிதக்ள் யார் என்று பட்டினத்தார் சொல்லுகீறார். அனைவருக்கும் புரியும் படி மிகவும் தெளிவாக அம்மனிதர்களின் இயல்பை எடுத்துக் காட்டுகிறார். வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள்; வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம் என்றாலும் விடமாட்டார்கள்; வலிய மடியைப் பிடித்து இழுப்பார்கள்; மீண்டும் வருவார்கள்; பிறர் கேட்கா விட்டாலும் - கேட்க விரும்பாவிட்டாலும் - தமது வழக்கை மற்றவர்களிடம் சொல்லுவார்கள்; அவர்களைக் கேட்கும்படி வற்புறுத்து வார்கள். நன்மைக்கு உதவி செய்யமாட்டார்கள்; தீமை யென்றால் அதற்கு உதவி செய்யப் பின்வாங்க மாட்டார்கள்; தாராளமாக உதவி செய்வார்கள்; தீமைகளை வளர்ப்பதிலே அவர்களுக்கு ஓர் அலாதியான ஆனந்தம். தினந்தோறும் துன்பப்பட்டுப் பொருளைத் தேடுவர். அப்பெருளைத் தாம் விரும்பும் பெண்ணுக்குக் கொடுத்து, அப் பெண்ணையே சரணாகதியாக அடைந்து கிடப்பர்; அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர்; தம் ஆயுள் முடியும் மட்டும் - அதாவது தாம் சாகும் வரையிலும் இப்படியே நாளைப் போக்கு வார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகிலே ஏன் பிறந்தார்கள்? இறைவனே! காஞ்சியில் உள்ள ஏகம்ப நாதனே! இவர்கள் மனிதர்களாகப் பிறந்து பெற்ற பயன்தான் என்ன? என்று பாடியிருக்கிறார். இப்பொருள் கொண்ட பாடல் கீழ்வருவது: வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வருவார்; வழக்குரைப்பார்; தீதுக்கு உதவியும் செய்திடுவார்; தினம் தேடிஒன்றும் மாதுக்கு அளித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்; ஏதுக்கு இவர்பிறந்தார்? இறைவா! கச்சி ஏகம்பனே! இது தீய மனிதர்களின் இயல்பைக் கண்டறிந்து பாடிய பாடல். மேலும் தீயோர் இயல்பைப்பற்றிப் பட்டினத்தார் கூறியிருப்பதைக் காண்போம். சில மனிதர்கள் உண்மை என்பதைப் பேசியே அறிய மாட்டார்கள். ஓயாமல் பொய் பேசுவதில்தான் அவர்களுக்கு இன்பம். எதைப்பற்றியாவது, யாரைப் பற்றியாவது பொய் பேசுவதுதான் அவர்கள் வழக்கம். பொய் பேசுவதனால் புகழ் வந்தாலும் சரி, பழி வந்தாலும் சரி - அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவே மாட்டார்கள். பொய் சொன்னால்தான் அவர்கள் வயிறு நிரம்பம்; நெஞ்சம் மகிழும். நல்லவரை ஒருநாளும் போற்றமாட்டார்கள்; புகழ மாட்டார்கள்; பாராட்டமாட்டார்கள்; அவர்களைப் பின்பற்றவு மாட்டார்கள். நல்லவர்களைப்பற்றி நாலு வார்த்தைகளாவது பழித்து - இழித்து - எள்ளி - நகையாடிப் பேசினால்தான் அவர்கள் நாக்கின் அரிப்பு அடங்கும். நல்லோரை நிந்திப்ப தனாலேயே தமக்கு மதிப்பு, பெருமை உண்டு என்று நம்பித் திரிவார்கள். வசைபாடுவதற்கு இன்னார் இனியார் என்று பார்க்க மாட்டார்கள். தன்னைப் பெற்று வளர்த்த தாயையே நாவில் வந்தபடியெல்லாம் திட்டுவார்கள். முன்னறி தெய்வமாக வணங்கவேண்டிய அன்னையையே தாறுமாறாகப் பழித்துப் பேசும் இவர்கள் மிகவும் பயங்கரமான மனிதர்கள். நல்ல செயல்களைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்கள் துன்புறுவதைக் கண்டால்தான் இவர்கள் மனம் மகிழும். ஆதலால், ஆருக்கு என்ன தீமை செய்யலாம்? எவர் குடியை எப்படிக் கெடுக்கலாம்? எவரை எந்த வம்பிலே மாட்டி வைக்கலாம்? - என்று தான் சதா சதித்திட்டம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். திட்டம் போடும் முடிவு செய்து, யாருக்காவது ஏதாவது தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருப்பாக்ள். நல்ல பொழுதுபோக்கவேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு ஏற்படுவதில்லை. இவ்வெண்ணம் இருந்தால் நல்லவர்களுடன் நட்புக் கொள்ளுவார்கள்; நல்ல நூல்களை ஆராய்வார்கள்; ஆன் றார்களின் அறிவுரைகளான நல்ல நூல்களின் நுண்ணிய பொருள்களை அறிவார்கள்; அறநெறி யிலே நடப்பார்கள். நல்ல முறையில் பொழுது போக்க வேண்டும் என்ற கருத்து இல்லாதவர்கள் இதை ஏன் செய்யப் போகிறார்கள்? ஆதலால் இவர்கள் அறிவு நூல்களாகிய சாத்திரங்களைத் திரும்பியே பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் யாருக்குத்தான் உதவி செய்வார்கள்? இவர்கள், பிறர் தமக்கு உதவ வேண்டும் என்று மட்டுந்தான் எதிர்பார்ப்பார்கள். தாம் பிறருக்கு உதவினால் தான், தமக்கும் பிறர் உதவுவார்கள் என்ற உண்மையை மறந்த வர்கள் இவர்கள். இவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுவதையே தொழிலாகக்கொண்டிருப்பார்; தமக்காக உழைத்தவர்க்குச் சரியான ஊதியங்கூடக் கொடுக்க மாட்டார்கள். தமக்காக உழைத்தவர்களுக்குக்கூட உதவாத இவர்கள் - அவர்களிடம் இரக்கங் காட்டாத இவர்கள் - தம்மிடம் உதவி தேடி வந்தவர்க்கு உதவவா போகிறார்கள்? ஒருக்காலும் இல்லை. இவர்களிடம் உதவிநாடி வந்தவர்கள் சும்மா வெறுங்கையுடன் திரும்பவேண்டியது தான். இப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர் உண்டு. இவர்கள் மனிதர்கள் என்ற உருவில் - பெயரில் - வாழ்வதால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் உதவி செய்யாத இவர்கள் இவ்வுலகில் உயிரோடு இருந்தால் என்ன? அல்லது இவ்வுலகை விட்டுப் போய்விட்டால் தான் என்ன? காஞ்சியில் உள்ள ஏகம்பநாதனே! இவர்கள் இருப்பதால் எவருக்கும் இலாபமும் இல்லை; செத்துப போய் விட்டதால் யாருக்கும் நட்டமும் இல்லை. என்று பயனற்ற - தீய - மனிதர்களைப்பற்றிப் பாடியிருக் கிறார் பட்டினத்தார். இப் பாடல் வருமாறு: ஓயாமல் பொய்சொல்வர்; நல்லோரை நிந்திப்பர்; உற்றுப்பெற்ற தாயாரை வைவர்; சதிஆயிரம் செய்வர்; சாத்திரங்கள் ஆயார்; பிறர்க்குப காரம்செய்யார்; தமைஅண் டினர்க்குஒன்று ஈயார் இருந்தென்ன? போய்என்ன? fh©!கச்சி யேகம்பனே! இப்பாடல் மனிதத்தன்மை யற்றவர்கள் இன்னார் என்பதைக் குறித்தது. மேலே காட்டிய பாடலும், உதவாக்கரை மனிதர்கள் யாவர் என்பதைக் குறித்தது. இப்பாடல்களின் மூலம் பட்டினத்தார், மக்களுக்கு அறிவுரை கூறினார். உலக மக்களே! நீங்கள் உதவாக்கரை களாக நடமாட வேண்டாம். மனித சமுதாயத்துக்கு உதவி செய்யும் உத்தம மனிதர்களாக வாழுங்கள்! பண்புள்ள மனிதர் களாக வாழுங்கள்! வாழ முயலுங்கள்! என்று அறிவுறுத்து வதைக் காண்கிறோம். நன்மையும் புகழும் எத்தனையோ கோடி மக்கள் இவ்வுலகில் பிறக்கின்றனர்; வாழ்கின்றனர்; இறக்கின்றனர். இவர்களின் கணக்கைக் குறித்து விட முடியாது. இவ்வுலகில் ஒவ்வோராண்டும் இத்தனை மக்கள் பிறக்கின்றனர், இத்தனை மக்கள் இறக்கின்றனர், இத்தனை மக்கள் உயிர்வாழ்கின்றனர் என்று கணக்கெடுத்துவிடலாம். பிறப்பு இறப்புக் கணக்கு, மக்கள் தொகைக் கணக்கு இவற்றைக் கொண்டு மேற்சொல்லிய எண்ணிக்கையை ஒருவாறு சொல்ல முடியும். ஆனால் உலகம் தோன்றிய நாள்முதல் இன்றுவரையிலும் எத்தனை மக்கள் பிறந்து இறந்தார்கள் என்ற கணக்கை யாராலும் அளவிட முடியாது. அக்கணக்கு எண்ணில் அடங்காத கோடி யாகும். இப்படிப் பிறந்து இறந்த கோடிக்கணக்கான மக்களிலே சில மக்களின் பெயர் இன்றும் வழங்கப் படுகிறது. அவர்கள் இவ்வுலகத்தை விட்டுச் சென்று எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே மறைந்து போனவர்கள் இன்று நம்மால் நினைக்கப் படுகின்றனர். ஒருசில மனிதர்கள் பெயர்கள் மட்டும் இவ்வாறு மறைந்து போகாமல் மக்கள் மனத்திலே ஒட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? இதைத்தான் நாம் ஆராய வேண்டும். இவ்வுலகில் இன்று வாழும் மக்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். பொதுவாக எல்லா மக்களும் உழைக்கின்றனர்; பொருள் சேர்க்கின்றனர்; தாமும் தமது பெண்டு பிள்ளைகளும் இன்புற்று வாழ்கின்றனர். உழைப்பால் போதிய வருமானம் கிடைக்காமல் துன்புறும் மக்களுங்கூடப் போதிய வருமானம் பெறவேண்டும்; அதனால் அல்லல் நீங்கி, நன்மைகள் அனைத்தும் பெற்று வாழவேண்டும் என்னும் ஆசையுடன் இடைவிடாமல் உழைக்கத்தான் செய் கின்றனர். சிலர், தாங்கள் இன்பம் அனுபவிக்காவிட்டாலும், தமது பெண்டு பிள்ளைகள் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைக்கின்றனர். வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிப் பொருள் சேர்ப்போர் பலரைக் காண்கிறோம். தங்கள் பெண்டு பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அன்பும் ஆசையும் தான் இவர்கள் இப்படி உழைப்பதற்குக் காரணம். உலகிலே உள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கின்றது. இப்படிப்பட்ட மக்களிலே சிலர் மனிதத்தன்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவதைக் கூடக் காண்கிறோம். இவர்கள் தங்கள் மனைவி மக்கள் நன்றாக இன்புற்று வாழவேண்டும் என்பதற்காகப் பிறரைத் துன்புறுத்து வதைக்கூடக் காண்கிறோம். மற்றக் குடும்பத்தினரைத் தவிக்க விட்டு, அவர்களுடைய செல்வங்களைப் பறித்துக்கொள்ளும் மோசக்காரர்கள் உண்டு. இந்த மோசக்காரர்கள் பிறர் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தாம் வாழ்ந்தால் போதும், தமது மனைவி மக்கள் வாழ்ந்தால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் காரியங்களைச் செய்து வருகின்றனர். இத்தகைய மக்கள் - தம்மைப் பற்றியும் தமது மனைவி மக்களைப்பற்றியும் மட்டுமே கவலை கொண்ட மக்கள் - இன்றும் இருக்கின்றனர்; அன்றும் இருந்தனர். இவர்களின் எண்ணிக்கை அளவில் அடங்காது. பெரும்பாலான மக்கள் இப்படித்தான் வாழ்ந்து மறைந்தார்கள். இத்தகைய மக்களின் பெயரை நினைத்துப் பார்க்கின்றவர்கள் அவர்களுக்குப்பின் யாரும் இல்லை. அவர்களுடைய பிள்ளைகள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் கூட அவர்கள் பெயரைச் சில தினங்களில் மறந்து போயிருப்பார்கள். அவர்கள் குடும்பத்தாரே அவர்களைப் பற்றி நினைக்காதபோது, பொதுமக்களுக்கு அவர்களைப் பற்றிய நினைப்பு எப்படி வரும்? ஆகவே சாதாரணமாகக் குடும்பம் நடத்தி வாழ்ந்து மடியும் மக்கள், மறக்கத்தான் படுவார்கள். அப்படி யில்லாமல், மக்கள் வாழ்வுக்காக - பொதுமக்களின் நன்மைக்காகத் தம்மைத் தியாகஞ் செய்த மக்கள் பெயர் என்றும் மறையாது. இத்தகைய தியாகிகள்தாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனத்திலே நிலைத்திருக்கின்றனர். தந்நலமற்ற தியாகிகளே இன்று தெய்வீகத் தன்மை படைத்தவர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்; அவதார புருடர்களாகப் பாராட்டப்படுகின்றனர். உலக மக்களை யெல்லாம் ஒன்றாகக் கருதும் மக்கள்தாம் இத்தகைய தியாகி களாக முடியும். தாம் செய்யும் நன்மை ஒன்று தான் தம்முடன் வருவது; தாம் செத்தாலும் தம்மை இவ்வுலகில் பலரும் கொண்டாடும்படி செய்வது என்ற உண்மையை அறிந்தவர்களே தம்மையும் தமது மனைவி மக்களையும் காப்பாற்று வதிலே மட்டும் காலம் போக்கமாட்டார்கள். மனைவியாகட்டும், மக்களாகட்டும், நம்முடைய உதவியைப் பெறும் வரையிலும்தான் நம்மிடம் அன்பு காட்டுவார்கள். நம்மால் அவர்களுக்கு உதவியில்லா விட்டால் அவர்களும் நம்மை வெறுக்கத்தான் செய்வார்கள். உயிருக்கு உயிராக நேசிக்கும் மனைவியானாலும் சரி, மக்களானாலும் சரி, எத்தனை பேர் கணவன் இறந்தவுடன் உயிர்விட்டிருக்கின்றார்கள்? எத்தனை பேர் தந்தை மாண்டவுடன் உயிர் விட்டிருக் கின்றார்கள், இந்த உண்மையைப் பட்டினத்தார் ஒரு பாடலில் எடுத்துக்காட்டு கின்றார். f£o miz¤âL« bg©oU«, k¡fS«, fhy¤ j¢r‹, bt£o KÇ¡F« ku«nghš rßu¤ij 圤â É£lhš, bfh£o KH¡» mGth®; kahd« FW», m¥ghš v£o moit¥ gnuh?ïiw th!கச்சி ஏகம்பனே! இந்தப் பாட்டிலே கூறப்படும் உண்மை, யாராலும் மறுக்க முடியாதது; உலகில் இயற்கையாக ஒவ்வொரு நாளும் நடை பெறுவது, ஒருவன் இறந்த பின் அவனைக் கொட்டுமுழக்குடன் கொண்டுபோய்ச் சுடுகாட்டிலே கொளுத்துகின்றனர்; அல்லது புதைக்கின்றனர், அவ்வளவோடு சரி. அவனுடைய மனைவி மார்களோ, மக்களோ சுடுகாட்டுக்கு அப்பால் வருவதில்லை. இந்த உண்மையை எடுத்துக்காட்டுவதன் மூலம் மக்களுக்கு ஓர் அறிவை ஊட்டுகின்றார். புகழ்பட வாழுங்கள்; எல்லோர்க் கும் நன்மை செய்யுங்கள்; எல்லா மக்களையும் உறவினராகக் கருதி உழையுங்கள்; உதவி புரியுங்கள். அதனால் வரும் நன்மையும் புகழும் நீங்கள் இறந்த பின்னும் உங்களுடன் வருவதாகும் என்பதுதான் இப்பாடல் மக்களுக்கு உணர்த்தும் அறிவுரை. இவ்வாறு இயற்கையான உலக நிகழ்ச்சியை எடுத்துக் காட்டி உண்மை அறிவை ஊட்டும் அரும்பாடல்கள் பல தமிழ்மொழியில் உண்டு. அவற்றுள் இது ஒன்று. கல்லிலும் செம்பிலுமா கடவுள்? மக்களிடம் ஆதிகாலத்திலே கடவுள் நம்பிக்கை இல்லை; இருந்ததென்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் அவர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. அவர்கள் ஓரளவு நாகரிகம் பெற்ற பிறகுதான் அவர்களிடம் தெய்வ நம்பிக்கையும் பிறந்தது. தெய்வ நம்பிக்கையும் அவர்கள் உள்ளத்தில் உதித்த பயத்திலிருந்து பிறந்ததுதான். இடி, மின்னல், காற்று, வெள்ளம், தீ, ஆறு, மலை போன்ற இயற்கைகளை யெல்லாம் அவர்கள் தெய்வங்களாக நம்பினர்; வணங்கத் தொடங்கினர். அவர்கள் தாங்கள் நம்பிய தெய்வங்களுக்குக் கல்லை நட்டுவைத்து வணங்கினர்; நாளேற நாளேற மரத்தில் உருவஞ் செய்து வைத்து வணங்கினர்; கல்லிலும் உருவம் செய்து வைத்து வணங்கினர்; உலோகங்கள் கண்டு பிடிக்கப்பட்டவுன் செம்பு முதலிய உலோகங்களிலும் உருவங்கள் செய்து வைத்து வணங்கினர். தெய்வங்களுக்கு உருவம் வைத்து வணங்கும் வழக்கம் ஒருகாலத்தில் உலகம் முழுவதும் குடிகொண்டிருந்தது. உருவ வணக்கம் செய்யும் மக்கள், உருவங்களுக்குப் பூசை போட்டுத் திருவிழாச் செய்து கொண்டாடுகின்றனர். அத் தெய்வங்களைப் பற்றி ஏறக்குறைய மனிதர்களைப் போலவே வரலாறுகள், கதைகள் சொல்லி அவற்றைப் பாராட்டு கின்றனர். இன்றும் தெய்வங்களுக்கு உருவச் சிலை செய்து வைத்து வணங்கும் வழக்கம் உலகத்தை விட்டு மறைந்துவிட வில்லை. நமது நாட்டில் இவ்வழக்கம் மிகுதியாக இருக்கின்றது. உருவ வணக்கம் காரணமாக மக்களிடம் ஒருவித மூட நம்பிக்கை வளர்ந்து வருவதைக் கண்ட அறிஞர்கள் பலர் அதைக் கண்டித்திருக்கின்றனர். உருவ வணக்கம் கடவுளையே அவமானப் படுத்துவதாகும்; உருவத்தை வணங்குவோன் நாத்திகன் என்று கூறிய அறிஞர்கள் உண்டு; இக்கொள்கை யை ஒப்புக்கொள்ளும் மதங்களும் உண்டு. நமது நாட்டிலே பிறந்த ஞானிகள் சிலரும் உருவ வணக்கத் தைக் கண்டித்திருக்கின்றனர். எங்கும், எல்லாப் பொருள்களிலும் பரந்துள்ள இறைவனை ஒரு கல்லிலோ, ஒரு மரக்கட்டை யிலோ, ஒரு செம்புப் பதுமையிலோ இருப்பதாக நினைப்பது அறியாமை என்று பலர் பாடியிருக்கின்றனர். சிறப்பாகச் சித்தர்கள் என்பவர்களிலே பலர் இக்கருத்தை வெளியிட்டிருக் கின்றனர். உலக நிலையாமையைப் பன்னிப் பன்னிப் பாடும் பட்டினத்தாரும் விக்கிரகங்களில் இறைவன் இல்லை என்றே பாடியிருக்கின்றனர். அவர் பாடியுள்ள பாடல்களிலே இரண்டு பாடல்களைக் காண்போம். இறைவன் எங்கேயிருக்கின்றான் என்று தேடித் திரிந்து தடுமாற வேண்டாம்; அவன் சொல் வடிவமாக நிற்கின்றான்; ஆதலால் சொல்லிலே இருக்கின்றான். இறைவன் சொல்லின் பொருளாக, சொல்லின் முடிவான பொருளாக இருக்கின்றான். சொற்களையும், சிறந்த பொருளையும் கொண்ட வேத மந்திரப் பாடல்களிலே இறைவனைக் காணலாம்; வேத மந்திரங் களின் உருவமாக இறைவன் இருக்கின்றான். இரவிலும் இறைவன் பரவியிருக்கின்றான். குற்றமற்ற வானவெளியெங்கும் இறைவன் பரந்து நிற்கின்றான். உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆராய்ந்தவர் கள், எது உண்மை, எது பொய் என்ற உண்மையை அறிந்தவர்கள். பொய்யை விலக்கி உண்மையைப் பின்பற்றி நடப்பவர்கள் ஆகிய அருளுடையோர் உள்ளத்திலே இறைவன் இருக்கின்றான்; என்றும் இருப்பான். யார் இறைவனையே எப்பொழுதும் நினைத்து அன்பு செலுத்துகின்றார்களோ அவர்களை விட்டு இறைவன் பிரியவே மாட்டான். எப்பொழுதும் அவர்களுடனேயே இணைந்து - இரண்டறக் கலந்து வாழ்வான். உண்மையாகவே இறைவன் இருக்குமிடம் இவைகள். சொல், சொல்லின் பொருள், வேதம், இரவு, வானவெளி, தத்துவ ஞானிகள் உள்ளம், அன்பர்கள் மனம் - இவைகள் ஈசன் இருக்கும் இடம். இவற்றை விட்டு, கல்லையும், செம்பையும் கட்டிக்கொண்டு அழுவதனால் இறைவனைக் காண முடியுமா? கல்லிலும் செம்பிலுமா எங்கள் சிவபெருமான் வீற்றிருப்பான்? இல்லை; இவ்வுண்மையை உணருங்கள் என்று பாடினார் பட்டினத்தார். இப்பொருள் கொண்ட செய்யுள் கீர்வருவது: சொல்லினும், சொல்லின் முடிவினும்; வேதச் சுருதியிலும், அல்லிலும், மாசற்ற ஆகாயம் தன்னிலும், ஆய்ந்துவிட்டோர் இல்லிலும், அன்பர் இடத்திலும் ஈசன் இருக்கும்இடம்; கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்? எங்கள் கண்ணுதலே? என்பதுதான் அச்செய்யுள். மற்றொரு செய்யுளிலும் உருவங் களில் இறைவன் இல்லை என்பதை விளக்கிச் சொல்லுகிறார் பட்டினத்தார். உளியிட்டுச் செய்த கல்லுருவத்தை வணங்க மாட்டேன். சுண்ணாம்பைக் கொண்டு, இறைவனுக்கு ஒப்பென்று அமைத்த சுண்ணாம்புச் சிலையை வணங்க மாட்டேன். பிடித்த அழுக் காகிய களிம்பு போகும்படி புளியிட்டு விளக்கி வைக்கும் செம்பால் ஆகிய உருவத்தையும் வணங்க மாட்டேன். ஏனென்றால், கல்லுருவிலும், சுண்ணாம்புப் பதுமையிலும், செம்புச் சிலையிலும் தெய்வம் இருப்பதாக நம்புவது அறிவீனம். மாற்றுயர்ந்த பொன்போல் பிரகாசிக்கும் இறைவ னுடைய இரண்டு பாதங்களையும் என் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டேன். இப்படிச் செய்வதுதான் உண்மையாக இறைவனைக் காணும் முறையாகும். இதுவே பிறர் அறியும்படி செய்யும் உண்மையாகும். இவ்வுண்மையை வெளியிட்டு, என் உள்ளத்திலே இரண்டு பாத மலர்களையும் அடைத்து வைத்தேன். இதன் பிறகு நான் வேறு ஒன்றையும் விரும்ப வில்லை. இதுவே எனக்கு எல்லா இன்பங்களையும் தருவதாகும் என்று கூறுகிறது அப் பாடல். அப்பாடல் கீழ்வருவதாகும்: உளியிட்ட கல்லையும், ஒப்பிட்ட சாந்தையும், ஊத்தைஅறப் புளியிட்ட செம்பையும் போற்று கிலேன்;உயர் பொன்எனவே, ஒளியிட்ட தாள்இரண்டு உள்ளே இருத்துவது உண்மை,என்று வெளியிட்டு, அடைத்துவைத் தேன்;இனி மேல்ஒன்றும் வேண்டிலனே! என்பதே அப்பாடல். மேலே காட்டிய இரண்டு பாடல்களும், உருவ வணக்கம் பயனற்றது என்று கூறுவதைக் காணலாம். கல்லுருவம், மரச்சிலை, செம்புச் சிலை, சுண்ணாம்பால் செய்யப்பட்ட பதுமை - இவைகளை வணங்கும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் இருப்பதைக் காண்கிறோம். விக்கிரக வணக்கத்தை - உருவ வணக்கத்தை - ஆதரிப்போர் ஒரு கேள்வி கேட்பார்கள். எங்கும் இறைவன் உண்டு; எல்லாப் பொருள்களிலும் இறைவன் உண்டு என்றால், விக்கிரகத்தில் - உருவத்தில் - இறைவன் இருப்பதாக நினைத்தால் அங்கு வர மாட்டானா? இருக்க மாட்டானா? என்பதுதான் அக்கேள்வி. இக்கேள்விக்கு விடை கூறுவது கொஞ்சம் கடினந்தான். மக்களுக்குப் பயன்படும் பல பண்டங்களை, விக்கிரக ஆராதனையின் பெயரால் வீணாக்குவதை - பாழாக்குவதைக் காண்கிறோம். ஆதலால்தான் விக்கிரக வணக்கத்தைச் சிலர் வன்மையாகக் கண்டிக்கின்றனர் போலும். விக்கிரகங்களின் பெயரால் வீணாகும் பண்டங்கள் மக்கள் வாழ்வுக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கலாம். இக் கருத்துடன் தான் அறிவாளிகள் பலர் விக்கிரக வணக்கத்தை வெறுத்துரைக்கின்றனர். இந்நோக்கம் சமரச நோக்கம் என்பதில் ஐயம் இல்லை. சொல்லும் செயலும் சொல்லுதல் யார்க்கும் எளிது. இன்னபடி நடக்க வேண்டும் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டும்; இன்னின்ன காரியங்களைச் செய்யக் கூடாது; இவை இவை கெட்ட காரியங்கள்; இவை இவை நல்ல காரியங்கள் என்று சொல்லுவது எளிது. படித்துவிட்டுச் சொல்லலாம்; படித்தவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சொல்லலாம். இச்செய்திகளை அழகாக - கேட்போர் சுவைக்கும்படி - இனிய சொற்களிலே அலங்காரமாகத் தொடுத்துக் கூறலாம். இப்படிப் பேசுகின்ற - எழுதுகின்ற பலரை நாம் பார்க்கின்றோம். ஆனால் சொல்வதைப் பின்பற்றி நடப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. அறிவும், ஆற்றலும், நெஞ்சுரமும் உள்ளவர்கள்தாம் சொல்லின்படி நடப்பாக்ள். சொல்லுகின்றவர்கள் பலர்; சொல்லுகின்றபடி நடப்பவர்கள் சிலர். சொல்லுகின்றபடி நடக்க வேண்டுமே என்ற கவலை கூடப் பலரிடம் காணப்படுவதில்லை. இக்காலத்தில் இது நாம் கண் எதிரே காணும் காட்சி. இத்தகைய உலகில் சொல்லு கின்றபடி நடக்காதவர்கள் மிகுந்திருப்பதில் வியப்பில்லை. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பவர்கள்தாம் உத்தமர் களாக - உயர்ந்தவர்களாக - மகாத்மாக்களாக - மக்களால் மதிக்கப்படுகின்றனர்; போற்றிக் கொண்டாடப் படுகின்றனர். இவ்வுலகிலே ஞானிகள் - மகாத்மாக்கள் - தீர்க்கதரிசிகள் - பக்தர்கள் - அருளாளர்கள் - என்று மதிக்கப் பட்டவர்கள் எல்லாம் தாங்கள் உண்மையென்று நம்பிய வற்றையே வாய் விட்டு உரைத்தார்கள்; வாய்விட்டு உரைத்த படியே நடந்து காட்டினார்கள். இவ்வுண்மையைப் பெரியோர் களின் வரலாறு களிலே காணலாம். உண்மை ஞானம் பெற்ற பெரியோர்கள், பிறர்க்கு உபதேசம் செய்யும் முன்பே தமக்கே உபதேசம் செய்து கொள்ளுவார்கள். தமக்குத் தாமே அறிவுரை கூறிக் கொள்ளுவார்கள். முதலில், தாம் எண்ணுகிறபடி - சொல்லுகிறபடி - தாமே நடந்துகொள்ள வேண்டும்; அதன் பிறகுதான் பிறர்க்கு உபதேசம் பண்ணத் தொடங்கவேண்டும் என்பதே அவர்கள் கருத்து. இக்கருத் துடனேயே அவர்கள் தமக்குத் தாமே உபதேசம் செய்து கொள்ளுகின்றனர். இதன்மூலம் தமது உள்ளத்தை - நல்ல நெறியிலே - உறுதியாக நிலைத்து நிற்கும்படி செய்துகொள்ளு கின்றனர். இந்த உண்மையைப் பட்டினத்தார் பாடல்களின் மூலம் காணலாம். உலகம் எல்லாம் - உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் - பேதம் அற்றவை, ஒன்றேயாகும் என்று எண்ணி நடந்துகொள். தெய்வம் உண்டு என்று நம்பியிரு. நமக்கு இன்பத்தைத் தருகின்ற இவ்வுலகில் உயர்ந்த செல்வங்கள் எல்லாம் நிலையற்றவை, அழிந்து போகக்கூடியவை என்பதை அறிந்துகொள்; ஆதலால், இவ்வுலகிலே பசியால் வருந்துவோர் முகத்தைப் பார்த்தால் மனத்திலே இரக்கங் கொண்டு அவர்களுக்கு உதவி செய். நல்ல அறங்களைச் செய்யவேண்டும்; உயர்ந்த ஒழுக்கமும் அறிவும் உள்ளவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்; இதுவே நல்ல செயலாகும் என்று நம்பியிரு. எப்பொழுதும் நடுவுநிலைமை தவறாமல் நடந்துகொள். நமக்கென்று தனித்த செயல் ஒன்றும் இல்லை; எல்லாம் நமக்கென்று ஏற்பட்ட - விதித்த - வினையின் படியே நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் வெற்றி தோல்வியைக் கண்டு அஞ்சாமல் உன் கடமையைச் செய்து வாழ்க. மனமே! உனக்கு நான் செய்யும் உபதேசம் இதுதான். என்று தம் உள்ளத்தைப் பார்த்து உபதேசம் பண்ணுகிறார். இப்பொருளமைந்த பாடல் கீழ்வருவது: x‹Wv‹W ïU;bjŒt« c©Lv‹W ïU;ca® bršt«všyh« m‹Wv‹W ïU;gᤠnjh®Kf« gh®!நல் அறமும் நட்பும் நன்றுஎன்று இரு;நடு நீங்காம லே,நமக்கு இட்டபடி என்றுஎன்று இரு;மனமே! உனக்கே உப தேசம்இதே. இவ்வாறு தம் மனத்திற்கு அறம் போதித்த பட்டினத்தார், மற்றொரு செய்யுளின் மூலமும் தமக்குத்தாமே அறம் போதித்துக் கொள்ளுகிறார். உண்மையை உணர்ந்த ஒழுக்கமுள்ள குருவின் திருவடி களைத் தொழுது அவர் கூறும் உபதேசங்களை நம்பு; அவ்வுபதேச உண்மையை நாடுவதே நமது கடமை என்று எண்ணி அத்துறையிலேயே முயற்சி செய்வாயாக; உனது உடம்பையும், உறவினரையும், செல்வத்தையும் நிலையானவை என்று நம்பாதே; நம்பினால், பிறர் நன்மையைச் சிறிதும் கருத மாட்டாய்; உனது உடலை வளர்க்கவே உழைப்பாய்; உனது உறவினரைக் காக்க மட்டுமே உதவுவாய்; பொருளைச் செலவு செய்யாமல் சேர்த்து வைக்கவே நினைப்பாய். ஆதலால், இந்தப் பொல்லாத உடம்பைத் தோன்றி மறையும் ஒரு பொம்மலாட்டம் என்று எண்ணியிரு. மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தாரை மக்கள் நெருங்கிய சந்தையில் கூடும் கூட்த்தைப் போல் நினைத்திரு; செல்வத்தைக் குடத்திலிருந்து கவிழ்ந்து விட்ட தண்ணீரின் ஓட்டம் போல் மறைந்து விடக் கூடியது என்று எண்ணியிரு. இப்படி உண்மையை மறவாமல் எண்ணியிருந்தால் தான் நீ பாவம் செய்யாமல் - சுயநலத்திலே கிடந்து தத்தளிக்காமல் - பரோபகாரத் தன்மையுடன் வாழ முடியும். மனமே! நான் உனக்குச் செய்யும் உபதேசம் இதுவாகும். இவ்வாறு தம் ந்ஞ்சுக்கு நேர்மையைப் போதிக்கிறார் பட்டினத்தார். இப்பொருளமைந்த செய்யுள் கீழ்வருவது: நாட்டம்என் றே,இரு! r‰FU ghj¤ij e«ò!பொம்மல் ஆட்டம்என் றேஇரு! பொல்லா உடலை; அடர்ந்தசந்தைக் கூட்டம்என் றேஇரு! சுற்றத்தை! வாழ்வைக் குடம்கவிழ்நீர் ஓட்டம்என் றேஇரு! நெஞ்சே! உனக்குஉப தேசம்இதே. மேலே எடுத்துக்காட்டிய இரண்டு பாடல்களும், பட்டினத்தார், தம் மனத்திற்குத் தாமே சொல்லிக் கொண்ட அறிவுரையைக் காட்டுகின்றன; உபதேசத்தைக் கூறுகின்றன. யாராயிருந்தாலும் சரி, முதலில் தன்னை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும்; தான் நேர்மையான வழியிலே நடந்துகொள்ள வேண்டும்; தான் தாறுமாறான வழியிலே நடந்துகொண்டு பிறருக்கு உபதேசம் பண்ணுவோர் சொல்லுக்கு மதிப்பு இராது. இவ்வுண்மையைப் பட்டினத்தார் பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. சிறப்பாக - குறிப்பாக - பொது வாழ்க் கையிலே ஈடுபட்டிருப்போர்க்கு நன்னடத்தை முதன்மை யானதாகும். எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரு தன்மை யாக இருப்பது உத்தமமாகும். இதுவே பண்டைத் தமிழர் பின்பற்றிய அருள்நெறி. செல்வர்க்கு அறிவுரை பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்ந்த ஒரு பெரிய வணிகர்; கப்பலிலே சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்துவந்த ஒரு பெரிய வியாபாரி. அவருக்கு ஏராளமான செல்வம் இருந்தது. இருந்தும் அவர் துறவியானார்; தமது செல்வத்தையெல்லாம் வறியோர்களுக்கு வாரி வழங்கிவிட்டுத் துறவுபூண்டார் என்பது அவரைப்பற்றி வழங்கும் வரலாறு. அவர் செல்வப் பொருளை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் உள்ளம் எப்படியிருந்தது என்பதைப்பற்றிப் பாடியிருக்கிறார். அப்பாடல்கள் பணத்தாசை பிடித்தவர்களின் மனப்பாங்கை விளக்குகின்றன. அவைகள் பணத்திலே பற்றுக்கொண்டு செலவிடாமல் சேர்ப்போர்க்கு அறிவுரை கூறுவனவாகவும் அமைந்திருக்கின்றன. தமது நெஞ்சத்தைப் பார்த்துப் பாடுவனபோல் அமைந்த அப்பாடல் கள் இனிமையானவை. அன்னம் பகிர்ந்திங்கு அலைந்தோர்க்கு உதவிசெயும் சென்மம் எடுத்தும், சிவன்அருளைப் போற்றாமல், பொன்னும், மனையும்,எழில் பூவையாரும், வாழ்வும்இவை இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே என்பது ஒரு பாடல். நெஞ்சமே! இவ்வுலகில் வறுமையால் உணவின்றி வாடி அலைகின்றவர்கள் பலர். அவர்களுக் கெல்லாம் உணவை - அன்னத்தை - சோற்றை - பகிர்ந்து கொடுத்து உதவி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றாய்; அதற்கேற்ற செல்வத்தை அடைந்திருக்கின்றாய். இத்தகைய வசதியுடன், அறிவும் பண்பும் உள்ள மனிதப் பிறவியையும் பெற்றிருக்கின்றாய்; பெற்றிருந்துகூட, வறிஞர்களுக்கு உதவி செய்து, சிவபெருமானுடைய திருவருளுக்கு ஆளாகவில்லை. பொன், மண், அழகிய பெண்கள் இவைகளையெல்லாம் நிலைத்த இன்பந் தருகின்றவை, அழியாதவை என்று இன்னும் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். என்பதே இப்பாடலின் பொருள். செல்வம் பெற்று இருப்பதன் பயன் பிறர்க்கு உதவுவதே என்ற உண்மையை இச்செய்யுள் எடுத்துக்காட்டிற்று. செல்வத்தை யுடையவர்கள் இவ்வுண்மையை அறிந்தால் சமுதாயம் முன்னேறும் என்பதில் ஐயம் இல்லை. முற்றொடர்பில் செய்த முறைமையால் வந்தசெல்வம் இற்றைநாள் பெற்றோம்என்று எண்ணாது, பாழ்மனமே! அற்றவர்க்கும் ஈயாமல், அரன்பூசை ஓராமல் கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே என்பது மற்றொரு பாட்டு. இச்செய்யுளும் செல்வம் படைத்த வர்களின் கடமையை வலியுறுத்துகின்றது. பாழான மனமே! முற்பிறப்பிலே செய்த புண்ணியத்தினால் - தவத்தினால் - வந்தது செல்வம். அத்தவத்தின் காரணத் தாலேயே இப்பொழுது செல்வத்தை அடைந்திருக்கின்றோம். இவ்வுண்மையை நீ நினைக்கவில்லை. நினைத்தால் இப்பொழுதும் புண்ணியம் புரிந்தால்தான் அடுத்த பிறவியிலும் செல்வத்தை அடையலாம் என்ற உண்மையை உணர்வாய். இதை நினைக்காத காரணத்தால்தான் இப்பொழுது புண்ணிய காரியங்களைச் செய்யவில்லை; செல்வமற்ற வறியோர்க்கு உதவவில்லை. வறியோர்க்கு உதவுவதே சிவபிரானுக்குச் செய்யும் பூசனை என்பதையும் அறியவில்லை. கற்றவர்களுக்கும் உதவி செய்ய வில்லை. அறிவுக்கண் குருடாகி வாழ்கின்றாய். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இப்பாடலில் அமைந்திருக்கும் அரிய பொருள் சிந்தனைக் குரிய சிறந்த பொருளாகும். செல்வம் என்பது அவனவன் செய்யும் முயற்சியால் வருவதேயாகும். முயற்சி திருவினை ஆக்கும் என்பதே தமிழர் கொள்கை. ஆயினும், முன் செய்த தவமே - புண்ணியமே - இப்பொழுது ஒருவன் அடைந்திருக்கும் செல்வத்துக்குக் காரணம் என்பதிலே ஒரு கருத்துண்டு. உண்மையிலே, பணக்காரன் இதை நம்பவுனாயின் - பூர்வ புண்ணியத்தால்தான் நமக்குச் செல்வம் கிடைத்தது என்பதை நம்புவானாயின் - அவன் நல்ல காரியங்களையே செய்வான்; தன் செல்வத்தை நல்வழியிலேயே செலவிடுவான்; மீண்டும் பிறக்கும்போது செல்வமுள்ளவனாகவே பிறக்க வேண்டும் என்னும் ஆசையுடன், அறங்கள் பலவற்றையும் செய்வான். செல்வம் படைத்தவர்கள் நல்லகாரியங்களைச் செய்வார்களானால் நாடும் சமுதாயமும் நலம் பெறும். இந்த நோக்கத்துடன் செல்வத்துக்குக் காரணம் பூர்வ புண்ணியம் என்று சொல்லி வைத்தனர். செல்வம் படைத்தவர்கள் செய்யவேண்டிய நல்ல செயல்கள் இன்னவை என்பதையும் இப்பாடலில் காணலாம். செல்வம் இல்லாதவர்கள் உணவின்றி வருந்துவார் களானால் அவர்கள் ஒழுக்கமற்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள். மனித சமூகத்திலே பலர் ஒழுக்கமற்றுத் திரிவார்களானால் அதனால் நாடு கேடு அடையும்; மக்கள் பலர்க்கும் தீமை யுண்டாகும்; சமுதாயக் கட்டுக் கோப்புக் குலைந்துவிடும். ஆதலால் வறியோரைக் காப்பது செல்வர் கடமை என்று கூறினர். உண்மையில், இறைவனுக்குச் செய்யும் பணி என்பது, மக்களுக்கு உதவி செய்வதுதான். மனிதர்களிடம் இரக்கம் காட்டாமல் கடவுளை வணங்குகிறேன்; தெய்வத்தைப் போற்று கிறேன் என்பவர்கள் உண்மையான தெய்வத்தை உணராதவார்கள். இதுவே ஆன்றோர்களின் கொள்கை. இக்கொள்கையையே மேலே கண்ட செய்யுளில் அரன்பூசை ஓராமல் என்ற தொடர் எடுத்துக்காட்டுகின்றது. செல்வர்களின் மற்றொரு கடமை, கற்றவர்களை ஆதரித்துக் காப்பதாகும். பண்டைக் காலத்து மன்னர்கள், வள்ளல்கள், இக்காரியத்தைச் செய்து வந்தனர். அவர்கள் கற்றவர்களை - படித்தவர்களை - புலவர்களைக் காப்பாற்றி வந்தமையால் அவர்கள் கவலையின்றி வாழ்ந்தனர்; பல உண்மைகளைக் கண்டறிந்தனர். அவைகளை மக்களுக்குப் பயன்படும்படி எழுதி வைத்தனர்; பாடி வைத்தனர். ஆதலால் கற்றவர்களைக் காக்க வேண்டிய கடமையை வலியுறுத்தினர் முன்னோர். நாட்டிலே வறியவர்கள் துன்புறாமல் வாழச் செய்வது; மக்கள் துன்பத்தைப் போக்கும் பணியே தெய்வப் பணி என்று உணர்ந்து பணிசெய்வது; கற்றவர்கள் எவ்விதக் கவலையும் படாமல் அவர்கள் மேலும் கற்பதற்கும், ஆராய்வதற்கும் வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பது - இவை மூன்றும், நாடும், சமுதாயமும் முன்னேறுவதற்கான சிறந்த செயல் களாகும். இவ்வுண்மையை மேலே காட்டிய பட்டினத்தார் பாட்டு வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். மேலே எடுத்துக்காட்டிய இரண்டு பாடல்களிலும் அடங்கி யிருக்கும் கருத்துக்கள் எந்நாட்டினரும் ஏற்றுக் கொள்ளும் சிறந்த கருத்துக்கள்; மனித சமூகம் முழுவதற்கும் நன்மையளிக்கும் சமரச சன்மார்க்கமாகும். அருட் புலம்பல் அருள் புலம்பல் என்பது, அருள் நோக்கத்துடன் புலம்புவது என்று பொருள்படும். இறைவன் அருளை வேண்டிப் புலம்புதல் என்றும் பொருள் கொள்ளலாம். பட்டினத்தார் பாடலிலே அருட் புலம்பல் என்று ஒரு பகுதியுண்டு. அதில் உள்ள பாடல்கள் இரண்டு அடிகள் கொண்ட கண்ணிகள். அவைகளில் பல உண்மைகள் காணப்படு கின்றன. யோக மார்க்கத்தை வலியுறுத்திக் கூறும் கண்ணிகளும் அவைகளில் உண்டு. இறைவன் வேறு எங்கும் இல்லை; நமது உடம்புக்குள் தான் இருக்கின்றான். யோகத்தால் - நிஷ்டையால் - தியானத் தால் - அவனை நம்முள்ளேயே காணலாம் என்று வலியுறுத்தும் பாடல்களைக் காணலாம். மூக்கு முனையை முழித்திருந்து பாராமல் ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே! பூரணமே! மூக்கின் நுனியென்னும் சுழுமுனையைக் கண்விழித்துப் பார்ப்பதாகிய யோகத்தில் ஈடுபடாமல், எனது உடலும் கெட்டு, அறிவும் அழிந்தேன். இவ்வடிகள் யோகத்தின் இயல்பை எடுத்துக்காட்டின. உள்ளத்தை ஒருவழிப் படுத்துவதாகிய தியானத்தால் - யோகத்தால் - உடல்நலம் பெறலாம். யோகத்தை - தியானத்தை - அலட்சியம் செய்வோர் உடல் உறுதி குலைவர்; நோய்களுக்கு ஆளாகி வருந்துவர். இவ்வுண்மையை அறியாதவர்கள் அறிவு அற்றவர்கள். மேலே காட்டிய அடிகளால் இவ்வுண்மையை அறியலாம். இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல் தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே! பூரணமே! இடைகலை, பிங்கலை என்று சொல்லப்படும் சந்திரகலை, சூரிய கலைகளின் தன்மைகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் தடைப்பட்டு நின்றுவிட்டேன். இவ்வடிகளும் யோக மார்க்கத்தின் உயர்வை எடுத்துக் காட்டின. மூக்கின் இடது துவாரத்தின் வழியாக வரும் மூச்சுக்கு இடைகலை யென்று பெயர். இதனையே சந்திரகலை என்பர். மூக்கின் வலது துவாரத்தின் வழியாக வரும் மூச்சுக்குப் பிங்கலை யென்பர். இதனைச் சூரியகலை என்பர். இவ்வாறு வரும் மூச்சைக் கட்டுப்படுத்தி ஓர் அளவில் நிறுத்துவது யோகப் பயிற்சியாகும். ஊனுக்குள் நீநின்று உலவினதைக் காணாமல் நான்என்று இருந்து நலன் அழிந்தேன் பூரணமே! பூரணமே! என் உடம்பிலேயே நீ, ஜீவாத்மா பரமாத்மா என்ற பேதமின்றி ஒன்றாக நின்று உலவுகின்றாய். இதனை நான் அறியாமல், நான் என்று அகந்தை கொண்டேன்; நன்மைகளை இழந்தேன். உடலுக்குள் நீநின்று உலாவினதைக் காணாமல் கடல்மலை தோறும்திரிந்து கால்அலுத்தேன் பூரணமே! பூரணமே! எனது உடம்புக்குள்ளே நீ இருந்து உலாவு கின்றதை அறியாமல், கடல் தாண்டித் தேடியும், மலைகளிலே தேடியும் கால்கள் சலித்துப் போனேன். மேலே காட்டிய இரண்டு கண்ணிகளும், இறைவன் வேறு எங்கும் இல்லை; நமது உடம்பிலேயே உறைகின்றான்; ஆத்மாவுடன் ஒன்றுபட்டே உறைகின்றான் என்று கூறின. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மனக்கவலையின்றி வாழலாம். வாழ்வார்கள் என்று மற்றொரு கண்ணியிலே கூறுகிறார். எனக்குள்ளே நீயிருக்க, உனக்குள்ளே நான்இருக்க, மனக்கவலை தீர வரம்அருள்வாய் பூரணமே! நீயும் நானும் ஒன்று என்ற உண்மையை யறிந்து, எனக்குள் நீயிருக்கவும், உனக்குள் நான் இருக்கவும் செய்வாய்; இப்படிச் செய்வதன்மூலம் மனக்கவலையின்றி வாழ்வதற்கு வரந் தருவாய் என்பதே இந்தக் கண்ணி. இவ்வாறு இறைவனும் உயிரும் ஒன்று என்னும் உண்மையைப் பட்டினதார் வலியுறுத்தி யிருக்கின்றார். இறைவனும் உயிரும் ஒன்று என்ற உண்மையை உணர்ந் தவர்கள் யாரிடமும் பேதம் பாராட்ட மாட்டார்கள். எல்லா உயிர்களையும் ஒன்றெனக் காண்பார்கள்; எவ்வுயிர்களுக்கும் தீமை செய்யமாட்டார்கள். மக்கள் அனைவரையும் ஒன்றாகவே நேசிப்பார்கள். மக்களிடம் சாதி, மொழி, இன, நிற, மதபேதங் களும் பாராட்ட மாட்டார்கள். மனித குலம் - மனித இனம் - ஒன்றே என்ற உண்மையை மறக்க மாட்டார்கள். இந்த உண்மையைப் பட்டினத்தார் அருட் புலம்பலிலே காணலாம். எழுவகைத் தோற்றத்து இருந்துவிளை யாடினதைப் பழுதறவே பாராமல் பயன்இழந்தேன் பூரணமே! பூரணமே! தேவர், மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்றும் ஏழு வகையான பிறப்புக்களிலும் நீயே தங்கியிருக்கின்றாய்; விளையாடுகின்றாய். இதனை நான் குற்றமின்றித் தெரிந்துகொள்ளாமல் வீணன் ஆனேன். இவ்வடிகள், எல்லா உயிர்களும் ஒன்றே; யாரிடமும் பேதம் பாராட்டுதல் கூடாது என்று அறிவித்தன. சாதி பேதங்கள் தமையறிய மாட்டாமல் வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே! பூரணமே! சாதி வித்தியாசங்கள் பாராட்டுவது - கற்பிப்பது - தெய்வநெறிக்கு மாறானது என்பதை அறியாமல் போனேன். அதனால் - சாதிபேதம் பாராட்டுவதனால் - விளையும் தீமையை அறியாமல் போனேன். ஆதலால் சாதிபேதம் பாராட்டித் துன்பத்திலே நின்று கலங்கினேன். இவ்வாறு சாதி வித்தியாசக் கொடுமையைக் கண்டித்தார்; சாதி வித்தியாசம் பாராட்டுவது அறியாமை என்பதையும் எடுத்துக்காட்டினார். குலம்ஒன்றாய் நீபடைத்த குறியை அறியாமல்நான் மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே! பூரணமே! மனித குலத்தை ஒன்றாகவே நீ படைத் திருக்கும் கருத்தை நான் தெரிந்து கொள்ளவில்லை. மலம் நிறைந்த பாண்டமாகிய இந்த உடம்பில் நான் கட்டுப் பட்டிருந்து கலங்கினேன். இந்த அடிகளும், மனிதகுலம் ஒன்றே என்பதை எடுத்துக் காட்டின. எந்நாட்டு மனிதர் ஆயினும், எந்நிற மனிதராயினும் எல்லார் இயல்பும் ஒன்றுதான். மனித உடல், நரை, திரை, மூப்பு, பிணிகளுக்கு இடமானது. எல்லா வுடல்களுக்கும் வாழ்வும் சாவும் ஒன்றுதான். உடம்புக்குரிய பொதுத்தன்மை, உலகில் உள்ள எல்லா மனித உடல்களுக்கும் ஒன்றுதான். இவ்வுண்மை யை உணர்ந்தோர் மக்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்ட மாட்டார்கள். இவ்வுண்மையும் இக்கண்ணியிலே பொதிந்து கிடக்கின்றது. இத்தகைய சிறந்த சமரச ஞானம் படைத்தவர் பட்டினத் தார். அவர் ஒரு சமரச ஞானி என்பதில் ஐயம் இல்லை. தாயுமானவர் தாயுமானவர் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவர்; வடமொழியும் தமிழும் நன்றாகக் கற்றவர்; உலகப் பற்றில்லாமல் வாழ்ந்தவர். மக்கள் அனைவரும் ஒன்றே என்ற கொள்கையை யுடையவர். தாயுமானவர் என்பது, திருச்சிராப்பள்ளியில் உள்ள சிவபெருமான் பெயர். அப் பெயரையே இவருக்கு இவருடைய பெற்றோர்கள் இட்டு வழங்கினர். தாயுமானார் இளம் பருவத்திலேயே கருணையுள்ளங் கொண்டு சன்மார்க்க நெறியிலே ஈடுபட்டார்; தாம் கண்டறிந்த உண்மைகளை - எண்ணிய கருத்துக்களைப் பாடல்களாகப் பாடி வைத்தார். தாயுமானார் பாடலிலே, மத சமரசத்தைக் காணலாம். கடவுள் என்பது, அன்பு, ஆனந்தம், இன்பம், கருணை, வெட்டவெளி, அறிவு, சோதி என்பதே தாயுமானவர் கொள்கை. மனிதர்க்கு மனிதர் வேற்றுமை பாராட்டிக் கொள்வதையும், என் தெய்வம் பெரிது, உன் தெய்வம் சிறிது என்று பேசி மதச் சண்டை போடுவதையும் தாயுமானவர் வெறுத்தார். கடவுளை வேறிடங்களிலே தேடி அலைய வேண்டாம்; கடவுள் எங்கும் நிறைந்தவர்; நாம் காணும் பொருள்களில் எல்லாம் கடவுள் உண்டு என்ற கொள்கையைத் தாயுமானார் பல பாடல்களிலே பாடியிருக்கிறார். ஆயினும், அக்கடவுளை ஒவ்வொருவரும் தம் உள்ளத்திலேயே காணமுடியும் என்பதே அவர் நம்பிக்கை. எந்தெந்த நாளும் எனைப்பிரியாது என்உயிராய்ச் சிந்தை குடிகொண்ட அருள்தேவே பராபரமே! என்பதனால் இவ்வுண்மையைக் காணலாம். இது கடவுள் இயல்பை எடுத்துக்காட்டும் பொன்மொழி. எந்நாளும் என்னை விட்டுப் பிரியவில்லை. என்னுடனேயே என் உயிராக வாழ்கின்றாய்; என் உள்ளத்திலே குடிகொண்டிருக் கின்றாய்; அருள் உருவாக இருக்கின்றாய்; தெய்வமாக இருக்கின்றாய்; எல்லாவற்றினும் மேலான பொருளே! நீ இவ்வாறு என்னுள் இருக்கின்றாய் என்பதே மேலே காட்டிய அடிகளின் பொருள். அன்பர்களைப் போற்றவேண்டும்; அறிவுடையவர்களைக் காக்கவேண்டும்; அன்பர்களுக்கும் அறிவுடையவர்களுக்கும் பணி செய்வதே சிறந்த செயலாகும் என்பது தாயுமானவர் கொள்கை. உலக மக்கள் எல்லோரும் இன்பத்தைப் பெற்று வாழ வேண்டும என்னும் பரந்த நோக்கம் உள்ளவர் தாயுமானவர். எல்லோரும் - உலகில் பிறந்த எல்லா மக்களும் - இன்பத்துடன் வாழவேண்டும் என்பதே தாயுமானவர் கொள்கை. எல்லோர்க் கும் உண்மை நெறியை - சமரச சன்மார்க்கத்தைப் போதிக்கவே அவர் விரும்பினார். அக்கருத்துடனேயே அவர் தமிழ்ப் பாடல் களைப் பாடியிருக்கின்றார். தாயுமானார் காலத்திலே நமது நாட்டில் தமிழகத்தில் சாதிச் சண்டைகள் இருந்தன. மக்கள் பற்பல தெய்வங்களை வணங்கி வந்தனர்; தெய்வங்களின் பெயரால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டனர். மதச் சண்டைகள் இருந்தன. மதவெறுப்பும் மதவெறியும் குடிகொண்டிருந்தன. இவைகளை அவர் வெறுத்தார்; இவைகள் காரணமாக மக்கள் ஒற்றுமையின்றி வாழ்வதைக் கண்டு வருந்தினார். ஆகையால் தான், தெய்வம் ஒன்று; கடவுள் ஒன்று; மதங்கள், மத தத்துவங்கள் எல்லாம் ஒன்று; மக்களும் ஒன்றேதான்; வீண் சண்டைகள் வேண்டாம். எல்லாரும் உண்மையுணர்ந்து நன்னெறியிலே வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்கும் புரியும் தமிழில் பாடல்களைப் பாடி வைத்தார். தாயுமானவர் பாடல்கள் படிப்பதற்கு இனிமையானவை; பாடப் பாட, பக்தியையும் சுவையையும் பெருக்கும் பண்புள்ளவை; தாயுமானவர் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. அதனால் அப்பாடல்களின் இனிமையோ, ஓசை நயமோ, பொருட் சிறப்போ குறைந்து போய்விட வில்லை. தாயுமானவர் பாடலின் முதல் பாட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய், ஆனந்த மூர்த்தியாகி என்று தொடங்கு கிறது. இப்பாடலிலே ஏராளமான வடசொற்கள் இருக்கின்றன. இருந்தும் இப்பாடல் உள்ளம் உருக்கும் ஓசையும், உயர்ந்த கருத்தும் அமைந்த பாடலாகவே விளங்குகிறது. அறிஞர்கள் தம் உள்ளத்தில் உள்ள உண்மையைத் தாராளமாகத் தங்கு தடையின்றி வெளியிடும் பாடல்கள் சிறந்துதான் விளங்கும். அப்பாடல்களிலே உள்ள சொற்களைப் பற்றி ஆராயவேண்டியதேயில்லை. அவை படிப்போரின் - பாடுவோரின் - உள்ளத்தைத் தொடுவனவாக அமைந்திருக்க வேண்டும். இப்படி அமைந்திருக்கும் பாடல்களே அருட் பாடல்கள் என்று பாராட்டுவதற்குத் தகுந்தவை. தாயுமானவர் பாடல்கள் இவ்வாறே அமைந்திருக்கின்றன. தாயுமானவர் பாடல்களைப் படிப்போர், அதன் இனிமை யில் ஈடுபடாமல் இருக்க மாட்டார்கள்; அவர் கூறும் கருத்துக் களை ஒப்புக்கொள்ளாமலும் இருக்க மாட்டார்கள். மக்களுக்குச் சமரச சன்மார்க்க நெறியைப் போதிக்கும் தாயுமானவர் பாடலின் சிறப்பைப் பின்வரும் கட்டுரைகளிலே காணலாம். வேதாந்த சித்தாந்த முடிவு வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு. வேதம் என்றால் அறிவின் முடிவுகள் நிறைந்தது என்றுதான் பொருள். வேதம் என்றால் அறிவு என்றும் பொருள் சொல்லலாம். சித்தாந்தம் என்பதற்கும் அறிவின் முடிவு, அறிவின் தீர்ப்பு என்று பொருள். சித்தம் - அறிவு. அந்தம் - முடிவு. இன்று வேதாந்தம் என்பது ஒரு தனித் தத்துவமாக விளங்குகிறது. ஆதிசங்கராச்சாரியரை வேதாந்த தத்துவத்தின் போதகாசிரியராகப் போற்றுகின்றனர். சித்தாந்தம் என்பதும் ஒரு தனித் தத்துவமாக வழங்குகின்றது. மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதமே சித்தாந்தத்தின் தாயகம் என்று போற்று கின்றனர். சிவஞான போதத்தின் வழிவந்த தத்துவம் சைவ சித்தாந்தமென்று போற்றப்படுகின்றது. இராமாநுஜாச்சாரியார், வேதாந்த தேசிகர் இவர்களின் வழிவந்த தத்துவத்தை உபய வேதாந்தம் எனப் போற்றுகின்றனர். இவ்வாறு தத்துவங்கள் தனித்தனிப் பெயர்களுடன் விளங்கினாலும் எல்லாவற்றின் முடிவும் ஒன்றே என்பதுதான் அறிஞர்களின் கொள்கை. பலவகையான மதத் தத்துவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு அறிவுள்ளவர்கள் என்பவர்களே தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டனர். இந்தச் சண்டை காரணமாக அன்பையும் அறிவையும் வளர்க்கத் தோன்றிய மதங்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் பரப்பத் தொடங்கின. இந்த நிலையைக் கண்டு உள்ளம் வருந்திய பெரியோர்கள் எத்தனை பேர்! அவர்கள், எல்லாம் ஒன்றே; இறைவன் ஒருவனே; அவன் எங்கும் நிறைந்தவன்; அவனை இத்தகையவன் என்று எழுதிக் காட்ட முடியாது. அவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அவன் இன்ன உருவினன், இன்ன நிறத்தினன் என்று கூற முடியாது என்று போதித்து வந்தனர்; இதன்மூலம் மதச் சண்டைகளைத் தவிர்க்க முயன்றனர். இன்னும், உண்மையறிந்த உத்தமர்கள், கடவுள் நிலையைத் தெளிவாக விளக்கினர். அவர்கள், இறைவன் கோயிலில் இல்லை, குளத்தில் இல்லை; கல்லில் இல்லை, செம்பில் இல்லை; அவன் பரிபூரணன்; ஆதலால் எங்கும் இருக்கின்றான். நம் செயல், இறைவன் செயல் என்று வேறில்லை; நம் செயல் எல்லாம் இறைவன் செயல்கள் தாம்; இறைவன் செயல்கள் எல்லாம் நம் செயல்கள் தாம். இதுவே வேதாந்த சித்தாந்தங்களின் முடிவு என்று கூறி வந்தனர். நாம் வேறன்று, இறைவன் வேறன்று என்று தெளிந்தவர் களே அறிவுள்ளவர்கள்; அறிவின் முடிவான வேதாந்த சித்தாந்த முடிவுகளைக் கண்டறிந்தவர்கள். இதை மறந்து, கடவுள் எங்கோ ஓரிடத்தில் தனியாகப் பெண்டு பிள்ளைகளுடன் இருக்கிறார் என்று நினைப்பவர்கள் அறிவற்றவர்கள். இவர்களே ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலத்தாலும் வாடுகின்றவர்கள். நானே எல்லாவற்றையும் செய்கின்றேன் என்று நினைப்பது, ஆணவம். உள்ளத்திலே கட்டுப்பாடின்றி உலக இன்பத்தை யெல்லாம் விரும்புவது மாயை - அதாவது அறியாமை. இந்த அறியாமை காரணமாகச் செய்யும் வினைகள் கர்மம். இந்த முக்குற்றங்களும், எல்லாம் இறைவன் செயலே; என் செயல் என்று வேறில்லை என்று எண்ணுகிறவர்களிடம் ஏற்படுவ தில்லை. இந்த நிலையை அடையவேண்டுமானால் ஒவ்வொரு மனிதர்க்கும் இரண்டு கருவிகள் வேண்டும். ஒன்று முயற்சி; மற்றொன்று உண்மை அறிவு. இந்த இரண்டும் உள்ளவர்கள் உலக மாயத்தால் அறிவிழக்க மாட்டார்கள்; அவர்களை மடமை ஒன்றும் செய்துவிட முடியாது; அவர்களிடம் எவ்வித வேற்று மைகளும் எட்டிப் பார்க்க மாட்டா. இவர்கள், கடவுள் எங்கும் பரிபூரணமாகக் காட்சியளிப்பதைக் காண்பார்கள். ஆனந்த மயமே கடவுள் என்பதை அறிவார்கள்; இன்பமே கடவுள் காட்சியென்று கருதுவார்கள். இந்த உண்மையைத் தாயுமானவர் ஒரு பாடலிலே எடுத்துக்காட்டுகின்றார். கடவுள் வெவ்வேறு; அவை தனித் தனியே இருக்கின்றன. கோயில்களிலும், கல் உருவங்களிலும், செம்புருவங்களிலும் இருக்கின்றன என்று நினைப்போருக்கு - சொல்லுவோர்க்கு - உண்மையை விளக்குகின்றார். அச்செய்யுள் கீழ்வருவது: சந்ததமும், எனதுசெயல், நினதுசெயல், யான்எனும் தன்மை,நினை யன்றிஇல்லாத் தன்மையால் வேறலேன்; வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே! இந்தநிலை தெளியநான் நெக்குருகி வாடிய இயற்கைத் திரு வுளம்அறியுமே! இந்நிலையி லேசற்று இருக்கவென் றான்,மடமை இதசத்ரு வாகவந்து சிந்தைகுடி கொள்ளுதே! மலம்,மாயை, கன்மம் திரும்புமோ! தொடுவழக்காய்ச் சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது; சிரத்தையெனும் வாளும்உதவிப் பந்தம்அற மெஞ்ஞான தீரமும் தந்துஎனைப் பாதுகாத்து அருள்செய்குவாய்! பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற பரிபூர ணானந்தமே! முயற்சியென்னும் வாட்படையையும், உண்மையறிவு என்னும் ஆண்மையையும் பெற்றவர்கள் இவ்வுலகிலே துக்க மின்றி வாழ முடியும்; கவலையின்றிக் காலத்தைக் கடத்த முடியும். மற்றவர்களையும் துக்கமும் கவலையும் இன்றி இன்ப வாழ்விலே வாழவைக்க முடியும். இக்கருத்தையே இச்செய்யுள் வலியுறுத்துகின்றது. இச்செய்யுளின் பொருளைக் கண்போம்: எப்பொழுதும் என்னுடைய செய்கை, உன்னுடைய செய்கை, நான் என்னும் தன்மை இவை உன்னையன்றி எனக்கென்று வேறில்லை; ஆதலால் நான் உன்னைவிட்டு வேறாகத் தனித்திருக்கவில்லை; நீயும் நானும் ஒன்றாகவே இருக்கின்றோம். உயிரும், இறைவனும் வெவ்வேறல்ல; ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றேதான். இதுவே வேதாந்த சித்தாந்தங் களின் ஒன்றுபட்ட கொள்கையாகும். இந்த உண்மைநிலையைத் தெரிந்துகொள்ளுவதற்காக நான் பல நாட்கள் ஆராய்ந்தேன்; என் உள்ளம் உருகி வருந்தினேன். இதை உனது திருவுளம் அறியும். இந்த ஒன்றுபட்ட நிலையிலே சற்று அமைதியுடன் இருக்கலாம் என்றால் மடமை என்னைச் சும்மா விடவில்லை. என்னுடைய பகைவனாக வந்து என் உள்ளத்தில் குடி கொள் கின்றது; என் அமைதியைச் சிதறச் செய்கின்றது. என் உள்ளத்திலே அறியாமை குடிகொண்டதால் என்னைவிட்டுத் தொலைந்துபோன மும்மலங்களும் மீண்டும் வருமோ! அந்த ஆணவம், மாயை, கன்மம் என்னும் முக்குற்றங் களும் என்னை விடாமற் பிடித்துக் கொள்ளுமோ! அதனால் என்னை விடாமல் தொடர்ந்து வருகின்ற பிறப்பு மீண்டும் என்னைத் தொடருமோ! என்று என் சிந்தையிலே நினைப் பெழுகின்றது. அந்த நினைப்பு என்னை வாட்டுகின்றது. ஆதலால் சிரத்தை அதாவது முயற்சி என்ற வாட்படையை எனக்கு உதவுவாய். என்னைப் பற்றியிருக்கும் கட்டுப்பாடுகள் ஒழியும்படி உண்மையறிவு - பகுத்தறிவு - மெய்ஞ்ஞானம் - என்று சொல்லுகிற திறத்தையும் எனக்கு அளிக்கவேண்டும். நான் பார்க்கின்ற எல்லா இடங்களிலும் இடைவிடாமல் உறைகின்ற பரிபூரணனாகிய ஆனந்தமே! இந்த முயற்சி, ஆண்மை என்னும் இரண்டையும் அளித்து என்னைப் பாதுகாத்தருள்வாயாக. தாயுமானார் எடுத்துக்காட்டியிருக்கும் இந்த உண்மை எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மையாகும். முயற்சி யையும், உண்மையறிவையும் துணையாகக் கொண்டவர்கள் அனைவரும் இந்த முடிவுக்குத் தான் வருவார்கள். எங்கும் கடவுள் இருப்பதாகக் காண்பவர்கள் எல்லோ ரையும் கடவுளாகவேதான் காண முடியும். எல்லோரையும் கடவுளாகக் காண்போர் எவருக்கும் தீமை செய்ய மாட்டார்கள்; எவரையும் ஏமாற்ற மாட்டார்கள்; எவரையும் மோசடி செய்யச் சிந்திக்க மாட்டார்கள். சமரச சன்மார்க்க உண்மை இதுதான். பேராசையால் பெருந்துன்பம் ஆசையே கூடாது; அதை அடியோடு அகழ்ந்து வீசி விட வேண்டும்; எதிலும் பற்றல்லாமல் வாழ வேண்டும். இதுதான் இன்பம் பெறும் வழியென்பர் சிலர். இது வெறும் வாய்ப் பேச்சாகத்தான் முடியும். ஆசையில்லாமல் யாரும் வாழ முடியாது. உள்ளத்திலே உள்ள ஆசைதான் உயிருடன் உலவச் செய்கின்றது. மக்களை அங்குமிங்கும் நடமாடச் செய்யும் சூத்திரக் கயிறு ஆசைதான். ஆசையற்ற மக்கள் யாருமேயில்லை. பற்றற்றேம் என்று பேசும் துறவிகளும் ஆசையுள்ளவர்கள்தாம். அவர்களும் இவ் வுலகில் வாழத்தான் ஆசைப்படுகின்றனர். போலித் துறவிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உண்மையான துறவிகளைப்பற்றி எண்ணிப் பார்ப்போம். அவர்கள் இறந்தபின் நற்கதி பெறலாம் என்று எண்ணு கின்றனர்; இருக்கும்போது பிறருக்குத் தம்மால் இயன்ற நன்மையைச் செய்ய நினைக் கின்றனர்; தீநெறியிலே செல்லும் மக்களை நன்னெறியிலே திருப்ப விரும்புகின்றனர்; தாம் அறிந்த அறநெறிகளையும், ஒழுக்கநெறிகளையும் பிறரும் அறிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எத்தகைய ஆசையும் இல்லாத மக்களுக்கும் மரக் கட்டைக்கும் வேற்றுமையில்லை. ஆசைதான் மக்கள் முன்னேறுவதற்குக் காரணம். இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அளவுக்கு உட்பட்ட ஆசைதான் நன்மைதரும்; ஊக்கம் அளிக்கும்; உழைப்பதற்குத் தூண்டும். அளவுக்கு மீறிய ஆசை அல்லலுக்கு அடிப்படையாகும்; இன்பத்திற்கு எதிராகத் துன்பத்தையே கொடுக்கும். அளவோடு வாழ்வதற்குத் தெரிந்து கொள்ளாத மக்கள் அவதிக் கடலிலே வீழ்ந்துதான் தத்தளிப் பார்கள். இந்த உண்மையை நாம் கண்கூடாகக் காணலாம். இதனால்தான் அறிஞர் அனைவரும் அளவுக்கு மீறிய ஆசை கூடாது என்று பாடியிருக்கின்றனர். உலகிலே துன்ப மில்லாமல் வாழவேண்டும் என்று எண்ணுகின்ற ஞானிகள் அனைவரும் பேராசையைத் தான் வெறுத்துப் பேசியிருக் கின்றார்கள். ஞானநூல்கள் என்பவை எல்லாம் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் வேதம் என்னும் திருக்குறளும், பற்றை விட வேண்டும்; ஆசையை அறுக்க வேண்டும் என்றுதான் இயம்புகின்றது. பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு பற்றற்றவனாகிய கடவுளிடம் உள்ள அன்பை மட்டும் விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும்; ஏனைய பொருள்களின் மேல் உள்ள பற்று நீங்குவதற்காகவே அந்த அன்பைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது திருக்குறள். பண்டைத் தமிழறிஞரின் கருத்தையே திருவள்ளுவர் நமக்கு எடுத்துக்காட்டி யிருக்கின்றார். இக்கருத்து தமிழறிஞர்களிடம் வழிவழியாக வளர்ந்து கொண்டே வந்திருக்கின்றது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த தாயுமானவர் என்னும் பெரியாரும் இக்கருத்தை விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார். பிற்காலத்து ஞானிகளிலே தாயு மானவர் ஒரு தலைசிறந்தவர். அவர் தமது கருத்துக்களை யெல்லாம் தமது பாடல்களிலே கொட்டி வைத்திருக்கின்றார். பேராசையின் துர்க்குணத்தைப் பற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் மிகவும் அருமையானவை. அப்பாடல்களிலே ஒன்றை மட்டும் காண்போம்: ஆசைக்கோர் அளவில்லை; அகிலம்எல் லாம்கட்டி ஆளினும், கடல்மீதிலே ஆணைசெல வேநினைவர்; அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும், நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடுநாள் இருந்தபேரும் நிலையாக வேஇனும் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ஆவர்எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும்; உள்ளத்தே போதும்;நான் நான்எனக் குளறியே ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப் பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையைஅருள்வாய்! பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற பரிபூர ணானந்தமே! இந்தப் பாட்டு நமது உள்ளத்தைக் கனிவிக்கும் உருக்கமான பாட்டு; ஆசையின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றது. ஆசை யால் அவதிப்படுவோரைச் சுட்டிக் காட்டுகிறார் தாயுமானவர்; என்னை ஆசைக்கடலிலிருந்து கரையேற்று வாயாக என்று கடவுளை வேண்டுகின்றார். கடவுள் எங்கும் நிறைந்தவர்; ஆனந்த வடிவமாயிருப்பவர் என்பதையும் குறிப்பிட்டு அக்கடவுளை வேண்டுகிறார். இச்செய்யுளில் அடங்கியிருக்கம் பொருள் கீழ்வருவது: ஆசைக்கு ஓர் அளவேயில்லை; அது எல்லையற்றது. இவ்வுலகம் முழுவதையும் தம்முடையதாகக் கட்டி ஆளுகின்ற வர்களும், போதும் என்று மனநிறைவு அடைவதில்லை. கடலின் மீதும் அதிகாரம் செலுத்த நினைப்பார்கள். குபேரனுக்குச் சமமாக ஏராளமான பொன்னைக் குவித்து வைத்திருப்பார்கள். போதுமென்ற உள்ளம் அவர் களிடமும் பொருந்துவதில்லை. செம்பு, ஈயம்,வெள்ளி, இரும்பு போன்ற குறைந்த விலையுள்ள உலோகங்களைப் பொன்னாக்கி உயர்ந்த விலைக்கு விற்பனை செய்ய ஆசைப்படுவார்கள்; இவற்றைப் பொன்னாக்கலாம் என்று நம்புகின்றனர். இந்த முறைக்கு இரசவாதம் என்று பெயர். இரசவாத வித்தையைக் கற்றுக் கொள்ளக் குபேரர் போன்றவர்களும் அலைவார்கள். நீண்ட நாள் உயிர் வாழ்ந்துவிட்டோம். எல்லா இன்பங் களையும் அனுபவித்து விட்டோம்; வயதும் முதிர்ந்துவிட்டது; இனி நாம் இறந்துபோனால் நட்டம் எதுவும் இல்லை - என்று யாரும் எண்ணுவதில்லை. இன்னும் நீண்டநாள் உயிர்வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். உடம்பை நீண்ட நாளைக்குப் பழுதுபடாமல் வைத்திருக்க உண்ணும் மருந்துக்குக் காயகல்பம் என்று பெயர். இந்தக் காயகல்பத்தைத் தேடிப் பழுத்து முதிர்ந்த கிழவர்களும் அலைந்து திரிந்து வருந்துவார்கள். இந்தப் பேராசைக்காரர்களின் முயற்சிகள் கைகூடுவ தில்லை. அவர்கள் இந்தப் பேராசை காரணமாகத் துன்புறுவது தான் மிச்சம். இயல்பாகக் கைகூடும் காரியம் இரண்டே இரண்டு தான். அவை, நினைத்த சமயத்தில் பசிதீர உண்பது; படுத்து உறங்குவது ஆகியவை. இவைதான் எளிதில் முடியும் செயல்கள். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். இப்பொழுது இருப்பதே போதுமானதாகும். பார்க்கும் இடங்களில் எல்லாம் இடைவெளியில்லாமல் வாழ்கின்ற முழு முதலாகிய ஆனந்த வடிவமே! நான் உன்னிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், நான் நான் என்ற செருக்கால் குழப்பம் அடைந்து, ஒன்றிலே உறுதியாக நில்லாமல், ஒன்றை விட்டு மற்றொன்றிலே தாவி அதைப் பற்றிக் கொண்டு பாசம் என்னும் பேராசைக் கடலிலே நான் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். இதற்காக நான் என்னும் தன்மையற்ற பரிசுத்த மான நிலையை எனக்கு அருள்வாயாக. இதுதான் இச்செய்யுளில் அமைந்த பொருள். தீமைகள் உற்பத்தியாகும் தொழிற்சாலை நான் என்னும் அகங்காரந் தான். அகங்காரம் நிறைந்த உள்ளம் தூய்மையாகவும் இராது; தூசும் தும்பும் நிறைந்த அழுக்கறையாகத்தான் இருக்கும். ஆதலால்தான் செருக்கற்ற தூய உள்ளத்தை எனக்கருள்க என வேண்டிப் பாடுகின்றார். தாயுமானவரின் இக்கருத்து, வள்ளுவர் காட்டிய வழியி லிருந்து வளர்ந்து வந்த கருத்தேயாகும். மக்கள் மன அமைதியோடு வாழ்வதற்குக் காட்டும் வழி, பேராசை கூடாது என்பதுதான். பண்புள்ள வாழ்வின் பயன் கல்வி மட்டும் இருந்தால் போதாது; கற்றதனால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கல்வியற்றவருக்கும் அறிவுண்டு. ஆனால் அந்த அறிவு போதும என்று புகன்று விட முடியாது. கல்லாதவர்களிடம் உள்ள அறிவு வாழ்க்கைக்கு வழிகாட்டி விடும் என்று சொல்லி விட முடியாது. கல்வியும் வேண்டும்; அதனோடு எதைப் பற்றியும் நுணித்தறிந்து உண்மையைக் காணும் உயர்ந்த அறிவும் வேண்டும். இவற்றைப் பெற்றவர்களே வாழ்விலே இன்புற முடியும். கல்வியும் அறிவும் இருந்தால் மட்டுமே போதாது. அதற்கு மேல் கேள்வியும் வேண்டும். அறிஞர்களிடம் பல உண்மை களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தமக்குத் தோன்றும் ஐயங்களையும் கேள்விகளின் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும. கல்வியும், அறிவும், கேள்வி ஞானமும் உள்ளவர்கள் இளகிய நெஞ்சம் பெறவேண்டும். இரக்கமற்ற கன்னெஞ்சரா யிருப்பின், அந்தக் கல்வி, அறிவு, கேள்வி எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்; மணலிற் சிந்திய பால்போலத்தான் வீணாகும். யாரைப் பார்த்தாலும், எவ்வுயிர்களை நோக்கினாலும் கருணை நிறைந்த கண்கொண்டு காணவேண்டும். கொலை செய்தல், திருடுதல், கள்ளுண்ணல், காமவெறி கொள்ளுதல், பொய் மொழிதல் ஆகியவை பஞ்சமா பாதகங்கள் என்று சொல்லப்படும். இவை ஐந்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; அண்ணன் தம்பிகள்; அல்லது அக்காள் தங்கைகள்; ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இவற்றுள் ஒன்று நம்மைப் பற்றிக்கொண்டால் போதும்; ஏனைய நான்கும் எந்த இடுக்கின் வழியிலாவது வந்து நுழைந்துகொள்ளும். ஆகை யால்தான் இவற்றை ஐம்பெரும் பாவம் என்று அறைந்தனர். இந்த ஐந்தும் அணுகாமல் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்குமேல் நால்வகை உறுதிப் பொருள்களை ஒவ்வொரு வரும் நாடவேண்டும். இந்த நால்வகைப் பொருள் களையும் வடமொழியாளர் புருஷார்த்தங்கள் என்பர்; தமிழர் உறுதிப் பொருள்கள் என்பர். அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பவை. பொருள் தேடி, அறம் புரிந்து, இன்பம் பெற்று இவ்வுலகில் வாழ்கின்றவனே மனிதப் பிறப்பின் பயனைப் பெற்றவன். அவனே விடுதலை பெறுவான்; உரிமை யுள்ளவனாக வாழ்வான்; இறந்தபின் வீடு பெறுவான்; மோட்சம் அடைவான். ஆகவே, கல்வி, அறிவு, கேள்வி, கருணை, நோக்கம், ஐம்பெரும் பாவங்களைச் செய்யாமை, நால்வகை உறுதிப் பொருள்களையும் நாடுதல் - இவை மக்கள் அடையவேண்டிய பண்புகள். இவற்றை அடையாத மக்கள் பிறந்தும் பயன் பெறாதவர்; பண்பற்றவர்; மக்கள் பிறவியினர் என்று மதிக்கப் பட மாட்டார். இந்த உண்மையைத் தாயுமானார் ஒரு செய்யுளிலே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். இதோ அச்செய்யுளைப் பாருங்கள்: கல்லாத அறிவும்,மேல் கேளாத கேள்வியும் கருணைசிறிது ஏதும்இல்லாக் காட்சியும், கொலைகளவு கள்காமம் ஆட்சியாக் காதலித் திடும்நெஞ்சமும், பொல்லாத பொய்ம்மொழியும், அல்லாது நன்மைகள் பொருந்துகுணம் ஏதும்அறியேன்; புருடர்வடி வானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும்இல்லேன்; எல்லாம் அறிந்தநீ அறியாதது அன்று;எனக்கு எவ்வண்ணம் உய்வண்ணமோ! இருளைஇருள் என்றவர்க்கு ஒளிதா ரகம்பெறும்; எனக்குநின் அருள்தாரகம்; tšyh‹ vD«bga® cd¡FcŸs nj!இந்த வஞ்சகனை ஆளநினையாய்! மந்த்ரகுருவே யோக தந்த்ரகுருவே மூலன் மரபில்வரும் மவுனகுருவே! மக்களுக்கு அமையவேண்டிய பண்புகள் இவை என்பதை, இந்த இனிய பாடலிலே அமைத்துக் காட்டுகிறார் தாயுமானவர். எவ்வெக்குணங்கள் - பண்புகள் - தன்மைகள் - வேண்டும என்று எண்ணுகின்றாரோ, அவை தம்மிடம் இல்லையென்று கதறுகின்றார். அப்பண்புகளை எல்லாம் தமக்குத் தரும்படி அறிவையும், நூல்களையும், பொறுமையையும் வேண்டிக் கொள்கின்றார். நுண்ணறிவு, நூலாராய்ச்சி, பொறுமையாக - மவுனமாக - ஆராயுந்தன்மை இவற்றால் மேற்கண்ட மனிதப் பண்புகளை அடைய முடியும் என்பதே தாயுமானார் கருத்து. இச்செய்யுளின் பொருளை உணர்ந்தால் இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளலாம். இச்செய்யுளின் பொருள் கீழ்வருவது: கல்வி கற்காத அறிவும் சிறந்த பொருட்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாத கேள்வியும், கருணை சிறிதளவும் இல்லாத பார்வையும், கொலை, திருட்டு, கள், காமம் ஆகியவற்றை நிலையுள்ளவையாக எண்ணி அவற்றை விரும்புகின்ற மனமும், பிறர்க்குத் தீங்கு செய்கின்ற பொய்யுரைகளும் அல்லாமல் நன்மைகள் அமைந்த குணம் ஒன்றும் பழகியறியேன். மனிதர் வடிவாகப் பிறந்திருக்கிறேனே அல்லாமல், கனவில்கூட, புருஷார்த்தத்தைப்பற்றிச் சிறிதும் எண்ணியறியேன். இந்த உண்மைகள், எல்லாம் அறிந்த உனக்குத் தெரியாதது அன்று, எனக்கு எவ்விதந்தான் தப்பித்துக் கொள்ளும் விதம் கிட்டுமோ? இவ்வுலகில் உள்ள இருளை இருள் என்று உணர்ந்த வர்க்கு, அறிவாகிய ஒளியே அவ்வாறு அறிவதற்குக் காரணமாக நிற்கும். நன்மை பெற விரும்பும் எனக்கு உனது அருளே பற்றுக் கோடாகும். எல்லாம் வல்லவன் என்னும் பெயர் உனக்கு உள்ளது அன்றோ? ஆதலால் இந்த வஞ்சகனாகிய என்னை, என் குற்றங்களை யெல்லாம் தவிர்த்து ஆட்கொள்ள எண்ணுவாயாக. இரகசியங் களை எல்லாம் அறியும் ஞான குருவே! நூல்களின் உண்மை யுணர்ந்த குருவே! திருமூலர் மரபிலே தோன்றிய மவுன குருவே! மக்களுக்கு வேண்டிய தன்மைகள் எவையோ அவை யெல்லாம் தம்மிடம் இல்லை; அவற்றை அளித்தருள வேண்டும் என்று இச்செய்யுளின்மூலம் வேண்டுகிறார் தாயுமானவர். எனது அறிவு கல்வியோடு கூடியதன்று; சிறந்த கேள்வி அறிவும் என்னிடம் இல்லை. இரக்கமற்றிருக்கிறேன்; கொலை, களவு, கள், காமம் ஆகியவற்றை விரும்புகின்றது எனது உள்ளம். பொய் புகல்கின்றது எனது நா. நற்குணமற்றவன் நான். புருஷார்த்தத்தை விரும்பாமல் திரிகின்றேன். இத்தகைய நான் எப்படி வாழ்வேன்! நீ எல்லாம் வல்லவன். மேலே கண்ட என் குறைகளை எல்லாம் களைந்து என்னை ஆட்கொள்வாயாக! இதுதான் இச்செய்யுளில் அமைந்திருக்கும் கருத்து. மனிதப் பிறப்பின் உயிர்நாடி ஒழுக்கமாகும். ஒழுக்கமற்றவன் பிறந்திருப்பதும் ஒன்றுதான்; பிறவாமலிருப்பதுவும் ஒன்றுதான். அவன் வாழ்வதும் ஒன்று தான்; சாவதும் ஒன்றுதான். ஒழுக்கமே மக்களுக்குப் பெருமையைத் தருவது; சிறப்பைத் தருவது. ஆதலால் ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் உயர்வாகக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது வள்ளுவர் கொள்கை. ஒழுக்கம் விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். என்பதே அப்பொருளமைந்த குறள். இக்குறளின் கருத்தை மேலேகாட்டிய தாயுமானார் செய்யுள் வலியுறுத்துவதைக் காணலாம். இது சன்மார்க்க நெறியை விளக்கும் இனிய பாடலாகும். கருணாகரக் கடவுள் கடவுள் இல்லை என்போர் சிலர்; உண்டு என்போர் பலர்; கடவுளை வணங்குவோர் பலர்; வணங்காதோர் சிலர்; கடவுளை நம்பி வழிபடுவோரில் பலதிறக் கொள்கையினர் உண்டு; உருவ வழிபடுவோரில் பலதிறக் கொள்கையினர் உண்டு; உருவ வழிபாடே சிறந்தது என்போர் உண்டு; கடவுளுக்கு உருவம் இல்லை; அவனைக் கண்ணால் கண்டறியவும் முடியாது! அப்படிப் பட்ட ஆண்டவனுக்கு ஓர் உருவை அமைப்பது பெரிய பாவம்; இது இறைவனை அவமதிப்பதாகும் என்போர் பலர். இப்படிப் பலதிறப்பட்ட கொள்கைகள் நிலவுகின்றன. கடவுள் உண்டென்போர்க்கும் இல்லையென்போர்க்கும் பொதுவான வழிகாட்டும் அறிஞர்கள் பலர் உண்டு. இந்த இருவரும் ஒப்புக்கொள்ளும் பொதுக் கருத்தைக் கூறினால் அதை இருவரும் மறுக்க முடியாது அல்லவா? அறிவு, ஆனந்தம், கருணை - இவற்றை ஒருவரும் வெறுப்ப தில்லை. கடவுள் அன்பர்களும், அறிவின் வழி நடந்துகொள்ள வேண்டும்; ஆனந்தமாக நாமும் வாழ வேண்டும்; உலகத்தையும் வாழச் செய்ய வேண்டும்; எல்லோரிடமும் இரக்கம் காட்ட வேண்டும்; இக்குணம் மக்களிடம் என்றும் நிலவுமானால் மக்கள் சமுதாயமே மகிழ்ச்சியுடன் வாழும் என்ற கருத்தை ஒப்புக் கொள்ளுகின்றனர். இந்தப் பண்பைப் பெறுவதற்காகவே பராபரனை வாழ்த்தவேண்டும்; வழிபட வேண்டும் என்று கூறுகின்றனர். கடவுளை நம்பாதவர்களும் இவற்றை வெறுப்பதில்லை. அறிவு, ஆனந்தம், கருணையே மக்கள் வாழ்க்கையில் இன்பம் நிரம்புவதற்கான நீர் ஊற்றுக்கள் என்று ஒப்புக்கொள் கின்றனர்; மக்கள் இவற்றைப் பின்பற்றி நடப்பார்களானால், உலகிலே எத்துன்பமும் தலைகாட்ட முடியாது; மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ முடியும் என்று கூறுகின்றனர். இந்த உண்மையைத் தாயுமானவர் ஒப்புக்கொள்ளு கின்றார். நாத்திகரும், ஆத்திகரும் ஒப்புக்கொள்ளும் இவ்வுயர்ந்த கருத்தை அவர் பல பாடல்களிலே பாடி வைத்திருக்கின்றார். கருணாகரக் கடவுள் என்பது தாயுமானவர் பாடல் களிலே ஒரு பகுதி. இப்பகுதியில் பத்துப் பாடல்கள் இருக் கின்றன. ஒவ்வொரு பாட்டின் முடிவும் கருணாகரக் கடவுளே! என்று முடிகின்றது. கருதரிய சிற்சபையில் ஆனந்த நர்த்தம்இடு கருணா கரக்கடவுளே! என்பது ஒவ்வொரு பாட்டிலும் நாலாவது அடியின் சரிபாதி வரியாகும். எண்ணி அளவிட முடியாத அறிவுச் சபையிலே ஆனந்தமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கின்ற கருணையே உருவான கடவுளே என்பதுதான் இவ்வடியின் பொருள். கடவுள் என்பது எங்கேயோ தனித்திருக்கும் ஒரு மரமோ, கல்லோ, மலையோ அன்று. அதற்கென்ற உருவம் ஒன்றும் இல்லை. பண்புதான் கடவுள். மக்கள் பண்பிலேயே கடவுளைக் காண முடியும். இக்கருத்தையே தாயுமானார் வலியுறுத்து கிறார். கடவுள் எங்கும் இருக்கிறார். உலகிலே காணும் எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். உலகிலே உள்ள எல்லாப் பொருளாகவும் இருக்கிறார். அவர் மக்கள் உள்ளத்திலே இருக்கிறார்; மக்கள் குணத்திலே - பண்பிலே - நடத்தையிலே - இருக்கிறார். இதுவே அவர் முடிவு. இந்த முடிவு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் முடிவு. கடவுளை நம்புவோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவு. கடவுள் மறுப்புக்காரர்கள் கடவுள் என்னும் சொல்லைத்தான் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அறிவு, ஆனந்தம், கருணை இவற்றை ஒப்புக்கொள்வார்கள். மக்கள் பண்பாட்டிலே இந்த மூன்றும் கலந்து நிரம்பியிருக்கவேண்டும் என்பது அவர் களுக்கும் உடன்பாடுதான். நாத்திகரானாலும் சரி, ஆத்திகரானாலும் சரி - அனை வரும் மனிதத் தன்மையுடன் வாழவேண்டும் என்பதே தமிழர் கொள்கை. ஆகையால் இருவரும் ஒப்புக்கொள்ளும் பொது நெறிகளைப்பற்றித் தமிழ் அறிஞர்கள் பலர் அழகாகப் பாடி வைத்திருக்கின்றனர். பண்ணேன் உனக்கான பூஜை;ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச,ஆங்கே பார்க்கின்ற மலர்ஊடு நீயே இருத்தி;அப் பனிமலர் எடுக்கமனமும் நண்ணேன்; அலாமல்இரு கைதான் குவிக்கஎனில் நாணும்என் உளம்;நிற்றிநீ; நான்கும் பிடும்போது அரைக்கும்பிடு; ஆதலால் நான்பூஜை செய்யல்முறையோ! É©nz!விண் ஆதியாம் பூதமே! நாதமே! வேதமே! வேதாந்தமே! மேதக்க கேள்வியே! nfŸÉah« óÄ¡FŸ ɤnj!அவ் வித்தின்முளையே! கண்ணே! fU¤nj!என் எண்ணே! எழுத்தே கதிக்குஆன மோனவடிவே! கருதரிய சிற்சபையில் ஆனந்த நர்த்தம்இடு கருணா கரக்கடவுளே! இது கருணாகரக் கடவுள் என்ற தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களிலே ஒன்று. இச்செய்யுள் நீரோட்ட மாகத் தான் இருக்கின்றது. எளிதிலே பொருள் விளங்கக் கூடியதுதான். ஆயினும் இச்செய்யுளின் பொருள் தெளிவாக உள்ளத்திலே பதியவேண்டுமானால் இதை உரைநடையிலும் படித்தறிய வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களின் பண்பாடும், அருள்நெறியும் தெளிவாகத் தெரியும். இச்செய்யுளில் மூன்றாவது அடியிலிருந்து பொருள் கொள்ள வேண்டும். விண்ணே என்று தொடங்கும் மூன்றாவது அடியை முதல் அடியாக வைத்துக்கொள்ள வேண்டும்; கண்ணே என்று தொடங்கும் நான்காம் அடியை இரண்டாவது அடியாக வைத்துக்கொள்ள வேண்டும்; பண்ணேன் என்று தொடங்கும் முதல் அடியை மூன்றாவது அடியாக வைத்துக் கொள்ள வேண்டும்; நண்ணேன் என்று தொடங்கும் இரண் டாவது அடியை நான்காவது அடியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையிலே வைத்துக் கூறப்படுவதே கீழ்வரும் பொருள்; வானமே! வானம், நீர், நிலம், நெருபபு, காற்று ஆகிய ஐம்பூதமே! ஒலி வடிவே! வேதமே! வேதத்தின் முடிவே! சிறந்த கேள்விச் செல்வமே! கேள்வியாகின்ற நிலத்தின் ஆழத்திலே கிடக்கின்ற விதையே! அந்த வித்திலே முளைத்து மேலே தோன்றிய அறிவாகிய முளையே! ஒவ்வொரு பொருளையும் கண்டறிகின்ற கண்ணே! காணும் பொருள்களின் உண்மையை உணர்கின்ற கருத்தே! என்னால் கணக்கிடப்படும் எண்ணாக இருப்பவனே! எழுத் துருவே! நான் புகுவதற்கு இடமாக இருக்கின்ற மௌன உருவமே! உள்ளத்தால் எண்ணி அறிய முடியாத அறிவுச் சபை என்னும் சிற்றம்பலத்திலே ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருக்கின்ற கருணையே உருவமாகிய கடவுளே! உனக்கான பூசையை நான் செய்யவில்லை. ஓர் உருவத்திலே நீ இருப்பதாக எண்ணி வணங்கத் தொடங்கு வேனானால், அங்கே உனக்குச் சூட்ட அல்லது அருச்சனை செய்வதற்காக நான் எடுக்கப் பார்க்கின்ற மலர்களிலும் நீதான் இருக்கிறாய். ஆதலால் அந்தக் குளிர்ந்த மலர்களைப் பறிக்க மனமிசைய மாட்டேன். மலர் கொண்டு பூசை பண்ணாமல், இரு கைகளையும் குவித்து வணங்குவோம் என்றால், என் உள்ளம் நாணம் அடைகிறது. ஏன் என்றால் என் உள்ளத்திலேயே நீ நிலையாக நிற்கின்றாய்; ஆதலால் நான் உன்னை வெளியிலே இருப்பதாக வைத்துக் கும்பிடும்போது அது அரைக்கும்பிடாகத் தான் முடியும். ஆகையால் நான் உன்னை ஓர் உருவிலே இருப்பதாக வைத்துப் பூசை செய்தால் அது முறைதானா? இவ்வாறு கேள்வியிலேயே முடிகின்றது இச்செய்யுள்; ஆழ்ந்த கருத்தமைந்த செய்யுள்; அனைவரும் போற்றத் தகுந்த அரிய செய்யுள். கருணை - ஆகரம் என்ற சொற்கள் கருணாகரம் என்று நிற்கின்றது. ஆகரம் - உருவம்; வடிவம். கருணை வடிவானவர் கடவுள்; கருணையே கடவுள். கருணையுடன் நடந்துகொள்ளுவோரே கடவுள் தன்மை யுள்ளவர் என்ற கருத்து எல்லார்க்கும் ஒத்த கருத்து; உடன் பாடான கருத்து. இந்தச் சமரசக் கருத்தை - சன்மார்க்க போதத்தை - மறுப்பார் எவரும் இல்லை. மனக் கனிவின் மாண்பு மக்களிலே பலர், பிறர் துன்பத்தைப் பார்த்து வாய் அனுதாபம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் துன்புறு வோரின் துன்பத்தைப் போக்கும் பணியிலே துணிந்து இறங்க மாட்டார்கள். இப்படி வாய் அனுதாபம் காட்டுகின்றவர்கள் தாம் மக்கள் கூட்டத்தில் பெருந்தொகையினர். தேனொழுகப் பேசுவதோடு சரி; உள்ளத்திலே இரக்கம் என்பது எள்ளளவும் இராது. இரக்கம் உள்ளவர்களைப் போல் உரையாடுவோர் அனை வரையும் இரக்கம் உள்ளவர்கள் என்று நம்பிவிட முடியாது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று சொல்லும் பழமொழி உண்மையானது. புன்சிரிப்பையும், கனிந்த மொழி களையும் கண்டு ஏமாந்து விடக்கூடாது. இவ்வுலகில் உள்ள எல்லா மக்களும் உள்ளம் கனிகின்றவர் களாயிருந்துவிட்டால் துன்பச் சுழலுக்கு இவ்வுலகில் வேலையே இல்லை; அது அடங்கி மறைந்துவிடும். எங்கும் அமைதிதான் தவழ்ந்து கொண்டிருக்கும். பெரும்பாலான மக்கள் கல்மனம் படைத்தவர்கள்; தம்முடைய நன்மைக்காக - இன்பத்துக்காக - எதையும் செய்யத் துணிந்தவர்கள்; பொய், கொலை, களவு, பிறரைத் துன்புறுத்தல் போன்ற செயல்களைச் செய்கின்றவர்கள். கல்மனம் படைத்தவர் கள்தாம் இவற்றைச் செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் பத்திரிகையிலே பல செய்திகளைப் படிக்கின்றோம். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதற் காகக் கத்திக்குத்து; வீட்டு வாடகை கேட்டதற்காகக் கத்திக் குத்து; ஒரு பெண்ணை இருவர் காதலித்தனர் - அதன் காரணமாக அவர் களுக்குள் அடிதடி சண்டை; குழந்தைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டதற்காகப் பெற்றோர்களுக்குள் அடிதடி; சட்டைப் பையில் பணம் வைத்திருந்தவனை வழிமறித்துக் கொலை செய்தனர் என்பன போன்ற பல செய்திகளைப் பார்க்கின்றோம். உண்மையில் அனைவரும் இரக்கம் உள்ளவர்களாயிருந்தால் இத்தகைய நிகழ்ச்சிகளே நடைபெறமாட்டா. இவை மட்டுமா? எல்லா மக்களும் இரக்க மனம் படைத்தவர்களாயிருந் தால் இவ்வுலகில் பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள்; பட்டினி கிடந்து பரிதவிக்கும் மக்களையும் பார்க்க முடியாது; உடுத்த உடையின்றி அரை நிர்வாணத்துடன் அலையும் ஆண் களையோ பெண்களையோ காணமுடியாது; இருக்க இடம் இன்றி, மழையிலும் பனியிலும் குளிரிலும் வெயிலிலும் கிடந்த உழலும் மக்கள் கூட்டத்தையும் காணமுடியாது; இவர்கள் மக்கள்தானா என்று ஐயப்படும்படியாக உருக்குலைந்து, பேயோ பிசாசோ என்று அஞ்சத்தக்க ஆபாசத்துடன் அலையும் மனிதர்களையும் பார்க்கமுடியாது. எல்லா மனிதர்களும் மனிதத் தன்மையுடன், இன்புற்று வாழ்வதையே காணமுடியும். அறிவுள்ளவர்கள், அரசியல் வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், விஞ்ஞானிகள் - இவர்கள் எல்லாம் உண்மையில் உள்ளக் கனிவுள்ளவர்களாயிருந்தால், உலகத்தில் போர் என்னும் சொல்லுக்கே இடம் இருக்காது; மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் உற்பத்தியாக மாட்டா; ஒரு நகரையோ நாட்டையோ சுடுகாடாக்கும் தன்மையான சக்தி பொருந்திய ஆயுதக்ஙள், குண்டுகள், வாயுக்கள் உற்பத்தியாகியிருக்க மாட்டா, உள்ளத்தில் உண்மையான இரக்கம் என்பது இல்லாத காரணத் தால் தான் இவையெல்லாம் உற்பத்தி செய்ய்பபடுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அணுஅணுவாக வளர்ந்து வந்ததே இன்றுள்ள மனித நாகரிகம். இந்த மனித நாகரிகத்தை ஒரு நொடியில் அழித்துச் சிதைத்து விடக்கூடிய அவ்வளவு இரக்கமற்ற படைகள் - ஆயுதங்கள் - இன்று உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. மனித உள்ளம் இளகும் தன்மை யுள்ளதா யிருந்தால் எண்ணவும் நடுக்கம் தருகின்ற கொடுங் செயல்களுக்கு ஆதரவு தருமா? தரவே தராது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, மக்கள் மனம் இரக்கத்தன்மையைப் பெறவில்லை; கல்லின் தன்மையைத் தான் பெற்றிருக்கின்றது என்பதைக் காணலாம். மக்கள் உள்ளத்தைக் கனிவுடையதாகச் செய்து விடலாமா என்றால், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இன்றல்ல, நேற்றல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அறிவுள்ளவர்கள் அனைவரும் இதைத்தான் சொல்லிக்கொண்டு வந்திருக் கின்றார்கள். உள்ளத்திலே இரக்கம் உள்ளவர்கள்தாம் உயர்ந்த மனிதர்கள்; இரக்கம் இல்லாதவர்கள் கொடியவர்கள்; அவர் களால் தான் உலகிலே கொடுமைகள் நடைபெறுகின்றன. ஆகையால், இரங்கும் உள்ளம் வேண்டும், வேண்டும், வேண்டும் என்று கதறியிருக்கின்றார்கள். ஆயினும் அந்தத் தன்மை இன்னும் எண்ணற்ற மக்களிடம் உண்டாகவில்லை; ஒட்டவில்லை; வளர வில்லை. உள்ளத்தைக் கனியவைப்பது அவ்வளவு எளிதான செயல் அன்று; ஆகாது என்று உலகோர் எண்ணும் அரும் செயல் களையெல்லாம் செய்து முடிக்கலாம். ஆனால் உள்ளத்தை மட்டும் கனிய வைத்துவிட முடியாது என்று தாயுமானார் ஒரு பாடலிலே சொல்லுகிறார். அறிவுடையோர் கூட்டத்தைப் பார்த்து, வேண்டுவது போல - வினவுவதுபோலப் பாடப்பட்டது அச்செய்யுள். பாட்டுஅளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப் பாரின்இடை வரவழைப்பீர்! பத்மநிதி, சங்கநிதி இருபாரி சத்திலும் பணிசெயும் தொழிலாளர்போல், கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்;பிச்சை கேட்டுப் பிழைப்போரையும் கிரீடபதி ஆக்குவீர்; கற்பாந்த வெள்ளம்ஒரு கேணியிடை குறுகவைப்பீர்; ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும பொன் ஆக்குவீர்! உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே உலகுசுமை யாகஅருளான் மீட்டிடவும் வல்லநீர்,என்மனக் கல்லைஅனன் மெழுகுஆக்கி வைப்பது அரிதோ! வேதாந்த சித்தாந்த சமரசநல் நிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. கல்வி அறிவுகளிலே தேர்ந்தவர்களைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார் தாயுமானார். வித்தகச் சித்தர் கணம் என்பது கல்வி நிறைந்த அறிவுடைய கூட்டமாகும். இதன் பொருளைக் காண்போம்: வேதாந்த சித்தாந்தக் கொள்கைகளை ஒன்றாகக் கருதி, சமரச நிலையிலே நிற்கின்ற கல்விகள் எல்லாம் நிறைந்த அறிவுடைய கூட்டமே, பாடுகின்ற வண்டுகள் மொய்த்து வளர்கின்ற கற்பக விருட்சத்தின் நல்ல நிழலை இவ்வுலகிலே வரவழைத்து வைப்பீர்கள். பத்ம நிதி, சங்க நிதி என்னும் தேவலோகச் செல்வங்களை இரு பக்கத்திலும் வரவழைத்து வைத்து, அவை ஏவல் செய்யும் பணியாளர்களைப்போலக் கேட்டவற்றை யெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கும் படி நிற்கவைப்பீர்கள். பிச்சை வாங்கிப் பிழைப்பவர்களை, நினைத்தால் முடி மன்னர்களாக்கி வாழவைப்பீர்கள். ஊழியின் இறுதியிலே தோன்றும் வெள்ளத்தை உலகிலே பரவவொட்டாமல், ஒரு கிணற்றுக்குள் அடைத்து வைப்பீர்கள். உடைந்த மண் ஓட்டை எடுத்து, ஆயிரத்தெட்டு மாற்று மதிப்புப் போடும் பொன்னாக மாற்றிக் கொடுப்பீர்கள். ஆதிசேடன இளைப்பாறும்படி, இந்த உலகத்தை, யோக தண்டத்திலே சுமக்கும்படி செய்து அவனிடம் இரக்கம் காட்டி மீளச் செய்வீர்கள். இத்தகைய அரும்செயல்களை யெல்லாம் ஆக்கவல்ல நீங்கள் என் மனமாகிய கல்லை, நெருப்பிலே பட்ட மெழுகு போல உருகும்படி செய்வது முடியாத காரியமா? முடியும். அப்படியானால் ஏன் என் உள்ளத்தை இளகும்படி - கனியும்படி - செய்ய வில்லை என்பதே இப்பாடலின் பொருள். இப் பாடலில், உள்ளத்தை உருக வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்ற கருத்தைக் காணலாம்; உள்ளம் இளகும் தன்மையுள்ளவர்கள் உத்தமர்கள் என்ற உட்பொருளையும் உணரலாம். வேதாந்த சித்தாந்த என்று தொடங்கும் இறுதி அடியை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. சாந்தமும் சமரசமும் கல்வியின் பயன் அறிவு. அறிவு வளர்வதற்காகவே கல்வி கற்கவேண்டும் என்று சொல்லுகின்றோம். இந்தப் பாடத்தைப் படிக்காதவர்கள் யாரும் இல்லை. ஆரம்பப் பாடசாலை மாணவர் களிலிருந்து, கல்லூரிப் பேராசிரியர்கள் வரை அனைவரும் கல்வியைப்பற்றிப் பேசும்போது இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லுகின்றனர். கல்வியினால் அறிவு வளர்கின்றது என்பது உண்மை தான். ஆனால் அந்த அறிவு எதற்காக என்ற கேள்வியைப் பலர் கேட்பதில்லை. கேட்டால் இந்தக் காலத்திலே இதற்குக் கிடைக்கும் விடை கீழ்வருமாறுதான் இருக்கும்: அறிவுள்ளவர்கள்தாம் எல்லா நன்மைகளையும் அடைய முடியும்: எல்லாச் செல்வங்களையும் ஈட்டமுடியும்; இவ்வுல கத்திலே இன்பத்துடன் வாழமுடியும். ஆதலால் அறிவைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்; அதுவே என்றும் அழியாத செல்வம் என்று விடை தருவார்கள். இவ்விடை இக்கால நடப்புக்கேற்ற விடைதான். மேடும் பள்ளமும்போல், கசப்பும் இனிப்பும்போல், நெருப்பும் நிழலும் போல் இவ்வுலகிலே இன்பமும் துன்பமும் குடிகொண்டிருக் கின்றன. வறுமையும் செல்வமும் வாழ்ந்து வருகின்றன. பெரும் பாலான மக்கள் வறுமையால் வருந்துகின்றவர்கள். ஆதலால் அவர்கள் அறிவு எதற்காக? என்ற வேள்விக்கு மேற்கண்ட விடையைத் தான் விளம்புவார்கள். திருவள்ளுவர், கடவுளை வணங்குவதற்கே கல்வி கற்பது என்று சொல்லிவிடுகின்றார். கற்றதனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன், நற்றாள் தொழாஅர் எனின் என்பது திருக்குறள். இக்குறள், கடவுளை வணங்குவதுதான் கல்வியின் பயன்; கடவுளை வணங்காவிட்டால் எவ்வளவு கல்வி கற்றிருந் தாலும் பயன் இல்லை என்று திட்டமாகக் கூறுகின்றது. கையாலாகாதவனுக்குத்தான் கடவுளும் தலைவிதியும் என்பது இக்காலத்துப் பழமொழி. முயற்சியே எல்லா நன்மையும் தரும்; கடவுளால் நாம் பெறுவது ஒன்றும் இல்லை என்ற கருத்தைக் கொண்டதுதான் இப்பழமொழி. முயன்றால் தான் எதுவும் கிடைக்கும்; கடவுளை நம்பிக் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தால் ஒன்றும் கிடைத்துவிடாது. இது உண்மைதான். ஆனால், பண்டைத் தமிழர் கல்வியின் பயன் கடவுளை வணங்குதல் என்று ஏன் கூறினார்கள் என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். அக்காலத்திலே மக்களிடையிலே கடவுள் நம்பிக்கை குடிகொண்டிருந்தது. நாம் நன்மை செய்தால் கடவுள் கருணை காட்டுவார்; தீமை செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் நிலைத்திருந்தது. ஆதலால்தான் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தினர். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் மன அடக்கமுடன் இருப்பர்; யாருக்கும் தீமை புரியமாட்டார்கள்; மற்றவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளமாட்டார்கள்; ஒழுக்க நெறியிலே தவறமாட்டார்கள்; உலகில் வாழ்வோர் யாரிடத்திலும் வெறுப்பும் சினமும் காட்டமாட்டார்கள்; அனைவரையும் அன்புடன் நேசிப்பார்கள். இதுவே இறைவன் உண்டென்று உண்மையாக நம்புகின்றவர்கள் நடத்தை. ஆகை யால்தான் கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல் என்று உரைத்தனர். கடவுள் சாந்த சொரூபி என்று கூறப்படுகின்றார். கடவுள் எல்லா மக்களிடமும் சமரச நோக்கம் உள்ளவர் என்றும் சொல்லப்படுகிறார். சாந்தமும் சமரசமுமே கடவுள் உருவமாக நினைக்கின்றவர்களும் சாந்தத்தைக் கைவிடமாட்டார்கள்; சமரசப் பாதையிலிருந்து விலகிச் செல்ல மாட்டார்கள். இந்த உண்மையைத் தாயுமானவர் ஒரு செய்யுளிலே அழகாக விளக்கிக் காட்டுகின்றார். கல்வி, அறிவை வளர்க்கின்றது என்பது உண்மைதான்; கல்வியால் எவருடனும் திறமையுடன் வாதமிடும் வல்லமையைப் பெறுகிறோம் என்பதும் உண்மைதான். எத்தகைய அறிவாராய்ச்சி யுள்ளவர்களோடும் வழக்காடி, நாம் சொல்லுவதே சரியென்பதில் வெற்றி பெறுகிறோம். எதிரிகள் சொல்லுவன உண்மையானாலும், நமது கல்வித் திறமையால் - வழக்கிடும் வல்லமையால் - அவற்றைப் பொய்யாக்கலாம்; அவர்களையும் பொய்யர்களாக்கித் தோல்வி யடையச் செய்யலாம். கல்வியால் இத்தகைய வல்லமையை - அறிவைப் பெற்றிருந்தும் பயன் இல்லை. இந்தத் திறமையால் நாம் வாழ்க்கையின் பயனைப் பெற்று விட முடியாது; வாழ்க்கையிலே இன்பத்தையும் எய்திவிட முடியாது. சமரச ஞானத்தையும் அறிவையும் பெற்றிருந்தால்தான் சாந்தமுடன் - ஒழுக்கமுடன் - நன்னெறியிலே வாழ முடியும். இத்தகைய சமரச ஞான சாந்த வாழ்க்கைதான் உண்மையான இன்ப வாழ்வாகும். இதுவே தாயுமானவர் கருத்து. தாயுமானவரின் இக்கருத்து திருவள்ளுவரின் கருத்தைத் தழுவியதுதான். தாயுமானவர் பண்டைத் தமிழ்ச் சான்றோர் களின் கருத்தைத்தான் எடுத்துக் கூறினார். கல்லாத பேர்களே நல்லவர்கள்! நல்லவர்கள்! கற்றும்அறி வில்லாதஎன் கர்மத்தை என்சொல்வேன்! மதியைஎன் சொல்லுவேன்! கைவல்ய ஞானநீதி நல்லோர் உரைக்கிலோ கர்மம்முக் கியம்என்று நாட்டுவேன்; கர்மம்ஒருவன் நாட்டிலோ, பழைய ஞானம்முக் கியம்என்று நவிலுவேன்; வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வூந்ததா விவகரிப்பேன்; வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனே, வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்; வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தைஎன் வித்திதருமோ? வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே! இது தாயுமானவர் செய்யுள். நமது உள்ளத்தைக் கவரும் அரிய செய்யுள் இது. இச்செய்யுளில் அமைந்திருக்கும் ஆழ்ந்த கருத்துச் செறிவைக் காண்போம். நானும் நன்றாகச் சிந்தனை செய்து பார்த்தேன். சாந்தியும் சமரச ஞானமும் இல்லாதவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் பயன் இல்லை. அவர்களைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள். ஆம்; நல்லவர்கள் என்பதிலே ஐயமில்லை. கல்வி கற்றும் அறிவில்லாமல் இருக்கின்ற என்னுடைய பிராரத்துவ கர்மத்தைப்பற்றி நான் என்ன சொல்லுவேன்! என்னுடைய அறிவைப்பற்றித்தான் நான் என்ன சொல்லுவேன்! நன்மை கைகூடத்தக்க அறிவுள்ள நீதிமொழிகளை ஞானத்தை நல்லோர்கள் எடுத்துரைத்தால் அதை மறுப்பேன். ஞானமார்க்கத்தைவிடக் கர்மமார்க்கமே முக்கியம் என்று நிலைநாட்டுவேன். ஞான மார்க்கத்தைவிடக் கர்மமே சிறந்தது என்று ஒருவன் உரைத்தால் அதனையும் மறுப்பேன். அவன் முன்பு, ஞானமார்க்கமே உயர்ந்தது என்று கூறுவேன். வடமொழியிலே கற்றுத் தேர்ந்த வல்லவன் ஒருவன் வந்து என்னிடம் வழக்காடினால், அவன் கூறுவனவெல்லாம் திராவிட மொழியிலே - தமிழ் மொழியிலே - இருப்பதாக விளக்கிக் காட்டுவேன். கற்று வல்ல தமிழ் அறிஞர்கள் என்னிடம் வந்து வாதாடினால் அவர்களுக்கும் பின்வாங்கமாட்டேன். அவர்கள் அஞ்சும்படி கடபுட வென்று வடமொழி வசனங்கள் சிலவற்றைச் சொல்லி விரட்டிவிடுவேன். உண்மையில் வாதம் புரிந்து வெல்லாமல், எல்லோரையும் மருண்டு ஓடும்படி செய்கின்ற கல்வியினால் என்ன பயன்? அது முத்தியைத் தருமா? மனச் சாந்தியைத்தான் தருமா? வேதாந்த சித்தாந்த தத்துவங்கள் எல்லாம் ஒன்றே என்னும் நல்ல நிலையைப் பெற்ற வித்தையிலே சிறந்த அறிஞர்களின் கூட்டமே! இவ்வாறு அறிஞர்களின் கூட்டத்தைப் பார்த்து - சாந்தமும் சமரசமும் நிறைந்த சித்தர்கள் கூட்டத்தைப் பார்த்து - வேண்டு கிறார் தாயுமானவர். கல்வியை எதற்காகக் கற்கவேண்டும் என்ற உண்மையை இந்த ஒரு செய்யுள் தெளிவாக விளக்கிக் காட்டிற்று. கல்வியைக் கற்பது வீணாகப் பிறருடன் வாதம் பேசுவதற் காக அன்று; எதற்கெடுத்தாலும் உண்மையை ஒப்புக் கொள்ளாமல், வீண் வழக்குப் பேசுவதற்காக அன்று. சித்தர் கணம்போல் சாந்தமாக - சமரசமாக வாழ்வதற்கே கல்வி கற்க வேண்டும். இதுவே தாயுமானார் கருத்து; அவருடைய போதனை. ஆனந்த வாழ்வு கவலையற்ற வாழ்வே ஆனந்தமான வாழ்வு. மகிழ்ந்து வாழும் வழியைக் காண்பதே மக்கள் கடமை. ஒவ்வொரு மனிதரும் கவலையின்றி வாழ வழி கண்டு பிடித்துவிட்டால் உலகமே ஆனந்தத் தாண்டவமாடும். மகிழ்ந்து வாழ்வதற்கு நமது முன்னோர்கள் எத்தனையோ முறைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அம்முறைகளிலே பல ஆலோசித்துக் கூறப்பட்டவை; பல அனுபவித்துச் சொல்ப் பட்டவை. ஆலோசித்துக் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளை விட அனுபவித்துச் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரைகள் சிறந்தவை; பின்பற்றி நடக்கக்கூடியவை; எளிதிலே ஏற்றுக்கொள்ளத் தக்கவை. ஆனந்தமாக வாழ்வதற்கு வழி கூறும் அனுபவம் பெற்ற அறிஞர்களிலே தாயுமானவர் ஒருவர். அவருடைய அறங்கள் சமரச சன்மார்க்கத்தைப் போதிப்பவை; பல உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துரைப்பவை. அவருடைய பாடல் தொகுதியிலே ஆனந்தமான பரம் என்பது ஒரு பகுதி. அப்பகுதியில் உள்ள பாடல்கள் பத்து. பத்தும் பத்து இரத்தினங்கள். அதன் ஒன்பதாவது பாட்டில் மக்கள் எப்படி வாழ்ந்தால் இன்புறலாம் என்பதைத் தொகுத்துக் கூறிவிட்டார். அப்பாடலின் பொருளைக் காண்போம்: 1. நம் மனத்தை அடக்கியாளும் ஆற்றல் நமக்கு வேண்டும் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும் எவ்வளவு உயர்ந்த செய்தி களைக் கேட்டிருந்தாலும் இக்குணத்தைப் பெறுதல் அரிது. இந்த ஆற்றலை அடைதல் எளிதில் இயலாது. ஆதலால் இவ் வாற்றலைப் பெற முயற்சிக்க வேண்டும்; இதைப் பெறுவதிலே வெற்றிபெற வேண்டும். 2. நான் என்ற அகங்காரம் ஒழியவேண்டும். எவ்வளவு அறிவுள்ளவனிடமிருந்தும் இந்த மமதை எளிதிலே நீங்குவ தில்லை. இதுவும் உள்ளத்தைப் பற்றியிருக்கும் ஒரு பிறவிப் பிணி. இந்த அகந்தைதயாகிய பிறவிப் பிணியை ஒழிக்கின்றவனே உயர்ந்த மனிதன். ஒருவனால் தனியாக எக்காரியத்தையும் செய்துவிட முடியாது. எந்தக் காரியமானாலும் பலருடைய உதவியால் - ஒத்தாசையால் - கூட்டுறவால்தான் நிறைவேற்ற முடியும். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் செருக்கடைய மாட்டார்கள். நான்தான் இதைச் செய்தேன்; என்னால்தான் இதைச் செய்ய முடியும்; இச்செய்கையின் பலன் எனக்கேதான் வேண்டும் என்பவை அகந்தையின் விளைவுகள். 3. மனத்துக்குள்ள மற்றொரு பிறவிக்குணம் எதைப் பார்த் தாலும் ஆசைப்படுவது. இன்பந் தருவதற்கு உதவும் என்று எண்ணுகின்ற எல்லாப் பொருளையும் அடைவதற்கு ஆசைப் படுவது. இது மிகப் பொல்லாத குணம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை உணர்ந்து நிறைமனத்துடன் வாழப் பழகவேண்டும்; குறைமனம் கூடாது. 4. ஈகைக் குணமும் இரக்க சிந்தையும் வேண்டும். இவை இரண்டும் இரட்டைப் பிள்ளைகள். ஈகைக் குணம் உள்ளவரிடத் திலே இரக்க சிந்தனை உண்டு; இரக்க சிந்தை உள்ளவரிடத்திலே ஈகைக் குணம் உண்டு. மற்றவர்கள் படும் வேதனையைக் கண்டு உள்ளம் வருந்துகின்றவர்களே மனிதத் தன்மையுள்ளவர்கள். இவர்கள்தான் ஈகையும் இரக்கமும் உள்ளவர்களாக இருக்க முடியும். 5. ஒழுக்கம், முயற்சி, உறுதி இவை மக்களுக்கு இன்றிய மையாத குணங்களாகும். ஒழுக்கத்தைச் சீலம் என்பர்; முயற்சி யைத் தவம் என்பர்; உறுதியை விரதம் என்பர். பிறருக்குத் தீங்கு நேராமல் வாழ்க்கை நடத்துவது சீலம்; ஒழுக்கமாகும். தொடங்கிய செயலை எவ்வித இடையூறு களுக்கும் அஞ்சாது செய்து முடித்தல் முயற்சி; தவமாகும். இன்ன காரியத்தைச் செய்து முடிப்பேன் என்ற தீர்மானித்துக் கொள்வது உறுதி; விரதமாகும். இந்த முக்குணம் பெற்ற மக்களே முன்னேற முடியும். 6. எப்பொழுதும் பொய் பேசுவதில்லை என்ற உறுதியுடன் வாழ்வது; உண்மையே பேசுவது; எவ்வளவு இலாபம் வருவதா யினும் மெய்யைக் கை நழுவவிடாமல் இருப்பது, இதுவும் மக்களுக்கு வேண்டிய உயர்ந்த ஒழுக்கமாகும். 7. பிறர் கேட்கும்படி நல்லுரை கூறுதல்; ஆனால் தான் மட்டும் நல்வழியிலே நடக்காதிருத்தல். இக்குணம் உள்ளவர்கள் மதிக்கப்படமாட்டார்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். சொல் வேறு, செயல் வேறு என்று வாழ் கின்றவர்களைவிடத் தீயவர்கள் வேறுயாரும் இல்லை. மேலே காட்டிய குணங்களையுடைய மக்களே ஆனந்த மாக வாழ முடியும் என்று கூறுகின்றார் தாயுமானவர். மன அடக்கம் இல்லாதவர்கள், அகந்தையுள்ளவர்கள், கண்டவைகள்மேல் எல்லாம் ஆசை வைப்பவர்கள், ஈகையும் இரக்கமும் அற்றவர்கள், சீலம், தவம், விரதம் இல்லாதவர்கள், பொய் புகல்பவர்கள், சொல் வேறு செயல்வேறாயிருப்பவர்கள் - ஆகிய இந்த ஏழு வகையினரும் இன்பத்தைக் காண மாட்டார்கள்; இவ்வுலகில் ஆனந்தமாக வாழமாட்டார்கள்; அவர்கள் வாழ்க்கை துக்கம் - துன்பம் - தொல்லை - மனக் கவலை - நிறைந்து வழியும் வாழ்க்கையாகத்தான் இருக்கும். இது அனுபவ உண்மையாகும். இக்கருத்துப் பொதிந்த பாடல்தான் கீழே வருவது: எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என் இதயமும் ஒடுங்கவில்லை; யான்எனும் அகந்தைதான் எள்அளவும் மாறவில்லை; யாதினும் அபிமானம்என் சித்தமிசை குடிகொண்டது; ஈகையொடு இரக்கம்என் சென்மத்தும் நான்அறிகிலேன்; சீலமொடு, தவம்,விரதம் ஒருகனவில் ஆயினும் தெரிசனம் கண்டும்அறியேன்; பொய்த்தமொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி புகன்றிடேன்; பிறர்கேட்கவே! போதிப்பது அல்லாது சும்மா இருந்துஅருள் பொருந்திடாப் பேதைநானே; அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா அவனிமிசை உண்டோசொலாய்! அண்டபகிர் அண்டமும் அடங்கஒரு நிறைவாகி ஆனந்த மானபரமே! இச்செய்யுளைப் படிக்கும்போது, நம்முள்ளம் உருகுகின்றது. சொல்ல எண்ணிய பொருளை, எல்லோர்க்கும் எளிதிலே விளங்கும்படி பாடியிருக்கும் பாடல் இது. இந்தப் பாடலை அடிக்கடி படிப்பவர்கள் - படித்து அப்படியே மனப்பாடம் பண்ணிக்கொள்ளுகின்றவர்கள் - இப்பாடலின் பொருளை அனுபவத்தில் கொண்டு நிற்பவர்கள் - சிறந்த சீலமுடையவர்களாய், மனக் கவலையின்றி ஆனந்தமாக வாழ்வார்கள். எத்தனை வகையாகக் கற்றாலும் உயர்ந்த அறங்களைக் கேட்டாலும் என் உள்ளம் ஒடுங்கவில்லை. நான் என்னும் ஆங்காரம் என் உள்ளத்தைவிட்டு எள்ளளவு கூட மறைந்துவிடவில்லை. எல்லாவற்றிலும் ஆசை வைக்கும் தன்மை என் உள்ளத் திலே குடிகொண்டிருக்கின்றது. ஈகையையும், இரக்கத்தினையும் இந்தப் பிறவியிலே நான் கண்டதேயில்லை. சீலம், தவம், விதம் என்பவற்றை நான் என் கனவில்கூடக் கண்டதில்லை. எப்பொழுதும் பொய்தான் பேசுவேன்; மருந்துக்குக் கூட மெய் புகன்று அறியேன். பிறர் கேட்கும்படி அறிவுரைகள் புகல்வேன். இதைத் தவிர அந்த அறிவுரைகளைப் பின்பற்றி, உன் அருளைப் பெறாமல் சும்மாவிருக்கின்றேன். நான் ஒரு பேதை. இத்தனை குணங் கெட்டவர்களை இவ்வுலகிலே கண்டதாகவோ, இருப்பதாகக் கேட்டதாகவோ யாரேனும் இவ்வுலகில் சொல்லியதுண்டோ? இவ்வுலகிலும் வெளியுலகிலும் எங்கும் நிறைந்திருக் கின்ற ஆனந்தமயமான உயர்ந்த பொருளே! இதுவே இப்பாடலில் அடங்கியிருக்கும் பொருள். இந்த அருந்தமிழ்ச் செய்யுள், ஆனந்தமாக வாழக் கூடியவர்கள் யார்? துன்புற்றுக் கவலையுடன் வாழக் கூடியவர்கள் யார்? என்பதை விளக்கமாக உரைத்து விட்டது. தந்நலந் துறந்த மக்களே ஆனந்த வாழ்வைப் பெற முடியும்? தந்நலமே குறிக்கோளாக உடையவர்கள் ஆனந்தமாக வாழ முடியாது. இதுதான் இப்பாடலின் முடிந்த கருத்தாகும். இதுவே தமிழகத்திலே தோன்றிய அருள்நெறிச் சான்றோர் களின் அரிய கருத்தாகும். இன்பக் கடல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பமாகத் தோன்றும். அது அவரவர்களின் பழக்கத்தைப் பொறுத்தது. விளையாட்டுப் பிள்ளைகளைப் பாருங்கள். விளையாட்டிலேயே கருத்து. வெயில், மழை என்று பார்க்கமாட்டார்கள்; பசி தாகத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். எப்பொழுதும் விளையாடு வதிலேயே எண்ணம். செல்வத்தைச் சேர்ப்பதிலேயே சிந்தையைச் செலுத்து கின்றவர்களைக் காணுங்கள். அவர்களும் அப்படித்தான். எதைச் செய்தாவது - எந்த வழியிலாவது - எப்படியாவது - பணத்தைக் குவிக்க வேண்டும். அதற்காக அவர்கள் உடல் நன்மையையும் பேணாமல் உழைப்பதைப் பார்க்கிறோம். புகழை விரும்புவோரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் களும் புகழுக்காக - பெருமைக்காக - மற்றவர்களின் பாராட்டு தலைப் பெறுவதற்காக - எதையும் செய்வார்கள். எவ்விதத் தியாகத்தையும் செய்வார்கள். அவர்களுடைய இன்பம் எல்லாம், பிறர் அவர்களைப் புகழ்ந்து பேசுவதிலேயே அடங்கியிருக் கின்றது. படிப்பதிலே ஆர்வம் உள்ளவரைப் பாருங்கள். எப்பொழுதும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பார்கள். அதிலேதான் அவர்களுக்கு இன்பம். படிக்காவிட்டால் பொழுதே போகாது. குடிப்போர்க்குக் குடிப்பதில் இன்ப. சூதாடுவோர்க்குச் சூதாடுவதில் இன்பம். பேசிக்கொண்டே யிருப்போர்க்கு எதையாவது பேசிக்கொண்டே யிருப்பதில்தான் இன்பம். சண்டை போடுவோர்க்கு எதிரிகள் கிடைக்காவிட்டாலும் வழியோடு போகின்றவர்களையாவது அழைத்து வைத்துக் கொண்டு வம்புக்கு இழுப்பதிலே இன்பம். இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர்கள் பழகிய வழியிலே இன்பங் காணுகின்றனர். உண்மையான கடவுள் இன்னதுதான் என்பதை அறிந்த வர்கள், கடவுளை எண்ணுவதையே - நினைப்பதையே இன்ப மாக எண்ணுவார்கள். இவர்கள் கடவுளுக்கு இன்பக் கடல் என்றே பெயர் வைத்து அழைப்பார்கள்; அழைத்தே விட்டார்கள். இறைவனை எண்ணும் போது, எல்லாத் துன்பங்களையும் மறந்து இன்பத்திலே திளைக்கின்றனர்; ஆதலால் இன்பக் கடல் என்றே இறைவனை எண்ணுகின்றனர். இன்றும் நடைமுறையிலே ஓர் உண்மையைக் காணலாம். கடவுள்பால் நம்பிக்கை வைத்தவர்கள் தங்களுக்குத் தாங்க முடியாத துன்பம் வந்த காலத்தில் ஏதேனும் ஒரு கடவுள் பெயரையே அழைக்கின்றனர். அல்லாவே, ஏசுவே, கிருஷ்ணா, ராமா, சிவா, கோவிந்தா, முருகா, பகவானே என்று அவரவர்கள் தங்கள் உள்ளத்திலிருக்கும் தெய்வத்தின் பெயரைச் சொல் வதைப் பார்க்கிறோம். இவ்வாறு சொல்லுவதால் சிறிது மனச்சாந்தி அடைகின்றனர். மனச்சாந்தி இல்லாவிட்டால் ஏன் இப்பெயர்களைச் சொல்லுகின்றனர்? இறைவன்மேல் உள்ள நம்பிக்கை பயன் தருமா? பயன் தராதா? என்ற வழக்கே வேண்டாம். மனச்சாந்திக்கு இறைவன் பெயர் பயன்படுகின்றது. இறைவனைக் குறிக்கும் பெயர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்குக்கூட ஓர் ஆறுதல் மொழி யாக - சமாதான வார்த்தையாகப் பயன்பட்டு வருகின்றது. இதில் யாரும் குறை சொல்ல இடமில்லை. இந்த உண்மையைத் தாயுமானவர் பாடல் ஒன்று நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. தாயுமானவர் இறைவனைச் சுகவாரி என்னும் பெயரால் அழைக்கின்றார். குணம் அற்றது, உயர்ந்த தெய்வம், பெரிய ஒளி - இதுதான் சுகவாரி. சுகவாரி என்றால் இன்பக் கடல். இரக்கம் நிறைந்த உள்ளம் வேண்டும். கருணை காட்டு வோரிடம் கருணை காட்டவேண்டும். அறிவுடையோர் வகுத்த நெறியிலே ஒழுகவேண்டும். நான் எப்பொழுதும் துன்புறாமல் இன்புற்று வாழவேண்டும். பொய் பேசாமல் என்றும் உண்மையே உரைக்கும் தன்மை வேண்டும. வீண் மொழிகளைப் பேசிக் கொண்டு காலம் போக்காமல் இருக்கவேண்டும். மௌனமே இன்பத்திற்கு வழி. துன்பம் எதுவும் அணுகாமலிருப்பதற்கு அதைவிடச் சிறந்த நெறி எதுவும் இல்லை. ஆதலால் என் உள்ளம் அது நினைத்த வழிகளில் எல்லாம் ஓடாமல் அடங்கி யிருக்கும்படி உதவி செய்ய வேண்டுகின்றேன் என்று வேண்டிக் கொள்கிறார். சுகவாரி என்ற தலைப்பின் கீழே 12 பாடல்கள் காணப் படுகின்றன. அவற்றுள் நம் உள்ளத்தைக் கனிவிக்கும் பாடல் ஒன்றில் மேலே குறித்த பொருள் காணப்படுகின்றது. அப்பாடல் தான் கீழ்வருவது: கல்லேனும் ஐயஒரு காலத்தில் உருகும்,என் கல்நெஞ்சம் உருகவிலையே! கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒருகடவுளோ? வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும்பெரு வழக்குக்கு இழுக்கும்உண்டோ! வானமாய் நின்றுஇன்ப மழையாய் இரங்கிஎனை வாழ்விப்பது உன்பரம்காண்; பொல்லாத சேய்எனில் தாய்தள்ளல் நீதமோ? புகல்இடம் பிறிதும்உண்டோ? பொய்வார்த்தை சொல்லிலோ திருஅருட்கு அயலும்ஆய்ப் புன்மையேன் ஆவன்அந்தோ! சொல்லால் முழக்கிலோ சுகம்இல்லை; மௌனியாய்ச் சும்மா இருக்கஅருளாய்! R¤jî¡ Fzkhd gubjŒt nk!பரம் சோதியே! சுகவாரியே! இப்பாடலைப் படிக்கும்போது யார் உள்ளமும் உருகாமல் போகாது. பக்தியே - அன்பே இல்லாதவர்கள் நெஞ்சத்தையும் இத்தமிழ்ப் பாடல் இளகச் செய்து விடும். உள்ளத்தை உருக்கும் தமிழ்ச் சொற்கள் தலை சிறந்து நிற்கின்றன. இச்செய்யுளில் வடமொழிச் சொற்களும் கலந்து தான் கிடக்கின்றன. ஆயினும் அவ்வடசொற்கள் தமிழ்த் தேனில் ஊறித் தமிழ் மணம் பெற்றுத் தமிழாகவே நின்று நம்மை ஆட்கொள்ளுகின்றன. இச்செய்யுளின் பொருள் முழுவதையும் அப்படியே உரைநடையில் படிக்கும் போது நம் உள்ளம் பரவசம் அடைவதைக் காணலாம். ஐயனே! கல்லாவது ஒருகாலத்தில் வெப்பம்மிகுந்தால் உருகும். ஆனால் என் கல்மனம் சிறிதும் உருகவில்லை; பிறர் கருணை காட்டினாலும் அதற்கு ஒத்து கருணை காட்டாத ஒரு மனத் திண்மையை உண்டாக்கக்கூடிய நான்முகனும் ஒரு கடவுள் தானா? அறிவிலே வல்லவன் வகுத்ததுதான் மக்கள் பின்பற்றி ஒழுகும் நெறியாகும் என்னும் வழக்கத்தில் குற்றம் உண்டோ? மேகமாக நின்று, இன்பத்தைத் தரும் மழையாகப் பெய்து என்னை வாழ்விப்பது உன்னுடைய கடமையாகும். கெட்ட பிள்ளையானாலும் பெற்றெடுத்த தாய் அப் பிள்ளையை வெறுத்து விரட்டிவிடுதல் நீதியாகுமா? அடித்தாவது திருத்துதல் தன் கடமையாகும். தாயால் வெறுத்து விரட்டப்பட்ட பிள்ளைக்கு வேறு புகலிடம் உண்டோ? நான் பொய் சொல்லவில்லை; பொய் சொன்னால் உன் திரு அருளைப் பெறமாட்டேன். அதற்கு விலக்காவேன். அதுமட்டுமா? ஐயோ! நான் மிகவும் இழிந்தவனாகி விடுவேன். ஆதலால் மாசு மறுவற்ற, குணம் குறி அற்ற, உயர்ந்த தெய்வமே! பெரிய சோதியே! இன்பக் கடலே! என் வார்த்தை களால் எதையாவது முழங்கிக் கொண்டிருப்பதனாலும் பயனில்லை; இன்பம் இல்லை; வாய்பேசாமல் - உள்ளமும் அடங்கியிருக்கும்படி அருள் செய்வாய்! இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இச்செய்யுள் எளிய சொற்களால் அமைந்த இனிய செய்யுள். அருட் செல்வ ரான தாயுமானாரின் உள்ளத்தை அப்படியே எடுத்துக்காட்டும் இனிய செய்யுள். சமயக் குரல்கள் இவ்வுலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. அவை இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றன. இறைவனை ஏத்துவதால் இகத்திலும் இன்புற்று வாழ முடியும்; பரத்திலும் இன்புற்று வாழ முடியும் என்று அவைகள் கூறுகின்றன. இந்த உண்மையை உரைப்பதிலே சமயங்களுக்குள் வேறு பாடு இல்லை. எல்லாம் ஒருமனதாகவே ஒப்புக் கொள்ளு கின்றன. இறைவன் யார்? எவ்வுருவில் உள்ளான்? உருவந் தான் உண்டோ? இல்லையா? வழிபடுவது எப்படி? என்ற கேள்விகள் எழுந்தால் எல்லாச் சமயங்களிடமிருந்தும் ஒரேவிதமான விடையை எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமான விடையைத் தரும். ஒரு சமயம் கொடுக்கும் விடையை மற்றொரு சமயம் ஒப்புக்கொள்ளாது; மறுத்துரைக்கும். ஒரு சமயம் காட்டுகின்ற வழியை மற்றொரு சமயம் காட்டாது. ஒவ்வொரு சமயமும் தான் சொல்லுவது தான் உண்மையான விடை; தான் காட்டும் வழிதான் உண்மையான வழி; மற்ற சமயவாதிகள் கூறும் விடை சரியான விடையன்று; மற்ற சமயவாதிகள் காட்டகின்ற வழி உண்மையான வழியன்று - என்று வழக்காடும். இவ்வாறு வழக்காடுவதன் மூலந்தான் சமயச் சண்டைகள் உண்டாகின்றன. இத்தகைய சமயச் சண்டைகளால் இதுவரை யிலும் இவ்வுலகில் நேர்ந்திருக்கும் கலகங்கள் எண்ணற்றவை. இதனால் சிந்தப்பட்ட இரத்தப் பெருக்குக்கு எல்லையில்லை. உலக வரலாற்றை அறிந்தோர் இந்த உண்மையை உணர்வார்கள். மக்களுக்கு நல்லறத்தைப் போதனை செய்வதற்குப் புறப் பட்ட சமயங்கள், அவர்களைப் பொறாமையிலும், வெறுப்பிலும், சண்டை சச்சரவுகளிலும் தள்ளிவிட்டுத் தடுமாறச் செய்த கதைகளுக்குக் கணக்கில்லை. இதற்குக் காரணம் சமயம் அன்று; சமயங்களின் கொள்கைகள் அல்ல; சமயங்களைக் கையாளும் சமயவாதிகளே பொறுப்பாளிகள். இறைவனிடம் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் இகத்திலும் பரத்திலும் உயிருக்குள் உயிராக இருப்பவர்; அவர் இல்லாத இடம் ஒன்றும் இல்லை; எங்கும் நிறைந்திருப்பவர், எல்லாமுமாக இருப்பவர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கமாட்டார்கள். இத்தகைய உண்மையை மறவாமல் உள்ளத்திலே கொண்டவர்கள் சமயச் சண்டையிலே தலையிட மாட்டார்கள்; மதப் போராட்டங்களிலே மாட்டிக் கொள்ள மாட்டார்கள், இறைவனைப் பற்றிச் சமயவாதிகள் எது சொன்னாலும் சரிதான். அவை பொருந்துவனவே. நாமேன் அவர்களோடு வீண் வம்பு பேச வேண்டும் என்று வாய்முடி மவுனியாயிருப்பார்கள்; எல்லாம் இறைவன் திருவிளையாடல் தான் என்று அவன் செயலைப் புகழ்ந்துகொண்டிருப்பார்கள். சமய வெறுப்புக் கொள்ளமாட்டார்கள்; சமயச் சண்டை போடமாட்டார்கள். சன்மார்க்க ஒழுக்கத்தைப் பின்பற்றி மகிழ்ந்து வாழ்வார்கள். இந்த உண்மையைத் தாயுமானார் ஒரு செய்யுளிலே விளக்கிக் கூறியிருக்கின்றார். அவர் கூறுவதைக் காண்போம். சில சமயங்கள் அன்னையே! அன்னையே! என்று சொல்லிக்கொண்டிருக்கும். சில சமயங்கள் உன்னைப்பற்றி ஐயா! ஐயா! என்று அலறிக்கொண்டிருககும்; அல்லது எந்தையே! தந்தையே! என்று அலறும். இன்னும் சில சமயங்கள் மேற்கண்டவாறும் இல்லாமல், பேய் போல வறட்டுக் கூச்சலிடும்; அந்த வறட்டுக் கூச்சலால் எந்தப் பயனும் கிட்டாது. அதன் பின்னும் ஒன்றையும் உணராமல் வெறும் சொற்களால் பிதற்றும்; இப்பொழுத ஒன்று, மறுபொழுது ஒன்று, இன்று ஒன்று நாளை ஒன்று என உறுதியில்லாமல், ஒன்று கிடக்க மற்றொன்றைத் தாவித் தாவிப் பிதற்றும். இதற்குமேல் இன்னும் சில சமயங்கள் பல்வேறு விதமாகப் பேசும். சொல்லிக் காட்டமுடியாத பெரிய ஒளி வடிவே இறைவன் வடிவம் என்று கூறும்; ஒன்றுமற்ற வெறும் வெட்டவெளியென்று சொல்லும்; ஓசை முதலிய வேறு பொருள் களே இறைவனுக்கு உறைவிடம் ஆகும் என்று சொல்லும். தனக்கு வேறு எதையும் ஒப்புச் சொல்ல முடியாத மிகச் சிறிய அணுவடிவம் என்று சொல்லும்; இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலங்களின் வடிவமே இறைவன் என்று சொல்லும். இவ்வாறு சமயங்கள் சொல்லுகின்றவாறும் நீ இருக் கின்றாய்; இவற்றுக்கு மாறாகவும் இருக்கின்றாய். எப்பொழுதும் அறிவுருவாகவும் ஆனந்தமயமாகவும் இருக்கின்ற உனது கருணைத் திருவிளையாடல் என்னே! என்னே! உன் ஒப்பற்ற கருணைத் திருவிளையாடல்களை யெல்லாம் எம் போன்றவர்களால் எடுத்துக்கூற முடியுமோ? அவ்வளவு எளிய திருவிளையாடலா உனது திருவிளையாடல்? ஆதலால் எம் மனோரால் அவற்றை எடுத்துரைக்க இயலாது. இகத்திலும், பரத்திலும், உயிருக்கு உயிராகி எங்கும் நிறைந்திருக்கின்ற ஒப்பற்ற பரம்பொருளே! உனது திருவிளை யாடல்களை எல்லாம் உண்யில் எம்மனோரால் எடுத்துரைக்க இயலாது. இவையே தாயுமானவர் சொல்லியிருக்கும் செய்யுளில் உள்ள சிறந்த பொருள். அப்பாடல்: அன்னே! அனேஎனும் சிலசமயம்! நின்னையே ஐயா! Iah!என்னவே அலறிடும் சிலசமயம்; அல்லாது பேய்போல அலறியே ஒன்றும் இலவாய்ப் பின்ஏதும் அறியாமல் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிதற்றிடும் சிலசமயம்;மேல் பேசரிய ஒளிஎன்றும், வெளிஎன்றும், நாதாதி பிறவுமே நிலையம்என்றும், சாற்றிடும் சிலசமயம்; இவைஆகி, வேறுஆதாய்ச் சதாஞான ஆனந்தமாய், என்னே! vnd!கருணை விளையாட் டிருந்தவாறு! எம்மனோர் புகலஎளிதோ; இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி எங்கும்நிறை கின்றபொருளே! இந்தப் பாடலை இரண்டாம் முறையும் படித்துப் பாருங்கள். இப்பாடலுக்குப் பொருள் சொல்லும்போது இகபரம் இரண்டனிலும் உயிரினுக்கு உயிராகி எங்கும் நிறைகின்ற பொருளே என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்ல வேண்டும். இவ்வுலகிலும், வேறுலகிலும் உயிர்களோடு உயிராக உள்ள பொருள்; எங்கும் நிறைந்துள்ள பொருள்; அதுதான் இறைவன் இயல்பு. இதைத்தான் ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு விதமாக உரைக்கின்றன; உணர்கின்றன. ஆதலால் இறைவன் பெயரால் யாரும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ள வேண்டிய தேயில்லை. இறைவன் ஒருவனே; எங்கும் இருக்கின்றான் என்று உணர்ந்தால் அனைவரும் ஆனந்தமாக ஒன்றுகூடி ஒற்றுமை யுடன் வாழ முடியும். இதுவே தமிழர் அருள் நெறியாகும். உலகில் நிலைக்க வழி ஆரவாரத்தில் அமைதிபெற முடியாது; ஓசையற்ற இடத்தில் - சந்தடியில்லாத இடத்தில்தான் மனச்சாந்தி பெற முடியும். இது அறிஞர்கள் கண்ட உண்மை; நாமும் நடைமுறையில் - அனுபவத்தில் அறியக்கூடிய உண்மை. நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து களிலே ஓய்வு ஓர் இயற்கை மருந்து; யாருடனும் பேசக் கூடாது, யாரையும் பார்க்கக்கூடாது. சும்மா படுத்திருக்க வேண்டும்; ஓடியாடித் திரியக்கூடாது; சும்மா உட்கார்ந்துதான் கிடக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனை போடுவார்கள். இப்படி யிருந்தால்தான் நோய் குணமாகும்; மருந்துக்கும் பலன் உண்டு; மருந்தும் உடலிலே புகுந்து வேலை செய்யும் என்று சொல்லுவார்கள். ஆகவே ஓய்வு - அதாவது தனித்திருப்பது உடலுக்கு ஒரு நல்ல மருந்தென்று அறியலாம். இப்பொழுதும் உழைத்து அலுத்துப் போனவர்கள் ஓய்வு பெறுவதன் பொருட்டுத் தனித்திருக்கவே விரும்புகின்றனர். உள்ளுரைவிட்டுச் சுகாதார வசதியுள்ள வேற்றூருக்குப் போய்த் தங்க விரும்புகின்றனர். கடற்கரைப் பகுதியிலோ மலைப் பகுதியிலோ போய்த் தங்கி ஓய்ந்திருக்க விரும்புகின்றனர். உள்ளூரிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருக்க முடியாது. வேலைக்குப் போகாமல் - உழைக்காமல் சும்மா வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாலும் அது ஓய்வு ஆகாது. உறவினர்கள் அடிக்கடி வருவார்கள்; உடம்பு எப்படி இருக்கின்றது என்று இரக்கத்துடன் கேட்பார்கள்; நண்பர்கள் வருவார்கள்; நலம் விசாரிப்பார்கள். இம்மாதிரி வருவோர் போவோர்க்கெல்லாம் - அவர்கள் கேள்விக்கு விடை அளிப்பதிலேயே பொழுது போய்க் கொண்டிருக்கும். இப்படி இருப்பது ஓய்வாகாது. எட்டியுள்ள வெளியூரிலே போய்த் தங்கியிருந்தால் உறவினர்கள், அவ்வளவு தொலைவு தேடிக்கொண்டு வரமாட்டார்கள்; நண்பர்களும் வரமாட்டார்கள்; கடிதப் போக்குரவத்தோடு நின்றுவிடும். வெளியூரில் தங்கியிருந்தால் - நல்ல வசதியுள்ள இடத்தில் தங்கியிருந்தால் - பலரைச் சந்திக்க வழியில்லை. அமைதியாகத் தனித்திருக்க முடியும். தனித்திருந்து உடல் மட்டும் ஓய்வுபெற்றால் போதாது; உள்ளத்திலும் ஓய்வுவேண்டும்; கவலையற்று வாழவேண்டும்; வேலைத் தொல்லைகளையெல்லாம் மறந்து விட வேண்டும்; இலாபநட்டப் புள்ளிக் கணக்குப் போடுவதை நிறுத்திவைத்து அதற்கும் ஓய்வு கொடுத்துவிட வேண்டும். உள்ளம் ஒருநிலையில் நிற்க இறையன்புள்ளோர் பக்திப் பாடல்களைப் படிப்பதன் மூலம் அமைதி பெறலாம். இறையன் பில்லாதவர்கள் சிறந்த - உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இலக்கியங்களைக் - கவிதைகளைக் - காவியங்களைப் படிப்பதன் வாயிலாக இன்பத்தேனை அருந்தி அமைதி பெறலாம். போதை தரும் பொருள்களைக் குடித்து மகிழ்வாரும் உண்டு. இப்பழக்கம் உள்ளவர்கள் ஓய்வுக்கென்று வெளியூருக்குப் போகவேண்டாம். வீட்டிலேயே ஓர் அறையில் - கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வேண்டியமட்டும் குடித்து மயங்கிக் கிடக்கலாம். யாரேனும் வந்து விசாரித்தால் ஐயா ஊரில் இல்லை என்று சொல்லுவதற்கு ஓர் ஆளை வைத்து விட்டால் போதும். ஆனால் இது மன அமைதிக்கான நேர்மை யான நெறியாகாது. மனச்சாந்திக்கான வழி உள்ளத்தை ஒருவழியிலே நிறுத்தித் தனித்திருப்பதுதான். இந்த உண்மையைத் தாயுமானவர் பாடல் ஒன்று அழகாகச் சித்தரித்துக் காட்டுகின்றது. உள்ளம் அமைதியுடன் இருப்பதற்கு அவர் கண்ட உண்மை வழியை அப்பாடலிலே எடுத்துரைக்கின்றார். இனி எப்படி எமக்கு உனது திருவருள் கிடைக்குமோ என்று எண்ணி எனது நெஞ்சம் ஏக்கம் அடைகின்றது. ஐயோ! இந்த உலக வாழ்க்கையைப் பார்க்கும்போது எனக்கு அச்சமா யிருக்கிறது. இவ்வுலகிலே இன்றைக்கு உயிரோடு இருப்பவரை நாளைக்கு உயிரோடிருப்பார் என்று உறுதியாக எண்ண முடியவில்லை. ஆதலால் நானும் இன்றைக்கோ நாளைக்கோ மாண்டு மடிவது திண்ணம். இவ்வளவு காலம் அருமையாக வளர்த்த இந்த உடம்பை என்றேனும் ஒருநாள் என்னைப் பிடிக்கவரும் எமனுக்கு ஆளாக்கித்தான் தீரவேண்டும்; நான் எப்படி அவனுக்கு ஆளாக்குவேன்! இதுவரையிலும் நான் ஆடியோடிக் கற்ற கல்வியும், பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கேள்விச் செல்வமும் வீணாவது நல்லதாகுமா? பசி வந்தபோது ஏதேனும் புசிக்கவேண்டும்; நல்ல சுவை யுள்ள உணவுகள்தாம் வேண்டும் என்பதில்லை. உடலைப் பாதுகாப்பதற்காகப் பழங்கள் கிடைத்தாலும் போதும்; வற்றிய செங்காய்கள் கிடைத்தாலும் போதும்; உதிர்ந்த சருகுகள் கிடைத்தாலும் போதும்; வேர்களோ கிழங்குகளோ கிடைத் தாலும் போதும்; இவற்றில் எது கிடைத்தாலும், பசி வந்த போது அதை அள்ளி உண்டு, கண்களை மூடிக்கொண்டு மௌனியாய்த் தனித்திருக்க விரும்பினேன். இவ்வாறு இருப்பதன் மூலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்க விரும்பினேன். எனது இந்த எண்ணத்தை, என் தலைவனே! நீ அறியமாட்டாயா? நீயோ எங்கும் நிறைந்திருப்ப வன்; பரந்த உண்மையாக இருப்பவன்; உண்மையும், அறிவும், ஆனந்தமுமாக இருக்கின்ற சிவப்பிழம்பு நீ! ஆகையால் நீ எனது உள்ளத்தை எப்படி அறியாமல் இருக்கமுடியும்? அறிந்து வைத்தும் ஏன் எனக்கு அத்தகைய வாய்ப்பை அளிக்கவில்லை. விரைவில் நான் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்ற வேண்டு கிறேன்! இதைத்தான் தாயுமானவர் அப்பாடலிலே அமைத்து வைத்திருக்கின்றார். தாயுமானவர் பாடலைப் படிப்பவர்கள் இந்தப் பாடலை நெட்டுருப் போடாமல் இருக்க மாட்டார்கள். அத்தகைய அருமையான பாடல் இது. பாடல் கீழ்வருவது: இனியேது எமக்குஉன் அருள்வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்;ஐயோ! இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர்என்று எண்ணவோ திடம்இல்லையே; அநியாய மாய்இந்த உடலைநான் என்றுவரும் அந்தகற்கு ஆளாகவோ; ஆடித் திரிந்துநான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல்நன்றோ கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு கந்தமூ லங்களேனும் கனல்வாதை வந்துஎய்தின் அள்ளிப் புசித்துநான் கண்மூடி மௌனிஆகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம்இது சாமிநீ அறியாததோ! சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே! இப்பாடல் அருவி நீர்போல் சரளமாகத் தங்குதடையின்றி ஓசைநயம் பெற்று ஓடுகின்றது. உள்ளத்தில் ஒளியுண்டானால் வாக்கினில் பொருளும் சிறப்பும் வழங்கும் என்பதற்கு இப்பாடலை எடுத்துக்காட்டாக உரைக்கலாம். இப்பாடல் உலக நிலையாமையை உணர்த்துகின்றது; நிலையாத உலகத்தில் - இன்றுள்ளார் நாளை இருப்பார் என்று உறுதியாக நம்பமுடியாத உலகத்தில் - நீண்டநாள் உயிர் வாழ்வதற்கு வழிகாட்டுகின்றது. நிலைகலங்கா நெஞ்சம் எந்த நிலை வந்தாலும் இயற்கை அறிவு கெடாமல் இருக்க வேண்டும்; அறிவு தடுமாறாமல் இருக்க வேண்டும். கலங்காத அறிவுள்ளவர்கள் கர்ம வீரர்களாகத் தான் காட்சியளிப்பார்கள். தெளிவான அறிவுள்ளவர்களை யாரும் கெடுத்து விட முடியாது; அவர்கள் சேரத்தகாதவர்களுடன் சேர்ந்திருந்தாலும் சீரழிந்துவிடமாட்டார்கள்; தீமை செய்கின்றவர்களுடன் கூடித் திரிந்தாலும் சிந்தை கலங்கிவிடமாட்டார்கள்; தம்முடைய கொள்கையிலும், நடத்தையிலும் தவறி விட மாட்டார்கள்; உறுதியுடன் நிற்பார்கள். அறிவைத் துணைகொண்டவருக்கு வேறு எத்தகைய படைகளும் தேவையில்லை; அறிவுப்படையைக் கொண்டு எத்தகைய பெரும்பகையையும் இருந்த இடம் தெரியாமல் அழித்து ஓடச் செய்துவிடுவார். உள்ளத்திற்கு உரந்தருவது அறிவுதான்; உடலுக்குப் பலத்தை வருவிப்பது அறிவுதான். உள்ளத்திலே உரமில்லாதவர் எவ்வளவு உடல் பலம் படைத் திருந்தாலும் பயன் இல்லை. உடல் வலுக் குறைந்தவரா யிருந்தாலும் உள்ளத்தில் ஆண்மை - ஆண்மைக்கு அடிப் படையான அறிவு - குடிகொண்டிருக்குமாயின் அவர் ஆற்ற லுடையவராகவே விளங்குவார். இவ்வுலகிலே பலரிடம் இந்த உண்மையை நாம் கண் கூடாகக் காணலாம். அறிவுள்ளவர்கள் எத்தனையோ பல காரியங்களைச் செய்யவேண்டிய நிலையிலிருக்கலாம். அவர்கள் செய்வதற்கு எடுத்துக்கொண்ட செயல்களைச் சாதிக்கப் பலருடன் பழகவேண்டியிருக்கலாம். பலருடைய உதவியைத் தேட வேண்டிய நிலையிலும், இருக்கின்றனர். இதனால் அவர்கள் பலதிறப்பட்ட பண்புள்ள மக்களுடன் பழகவேண்டிய நிலையில் உள்ளனர். மேற்கொண்ட வினையை முடிக்க விரும்பும் ஒருவர், அவ்வினை முடிவதற்குத் துணைசெய்யும் மனிதருடன் ஒன்று பட்டுவிட்டால் காரியம் கெட்டுப்போகும். அவர்கள் வழியிலே தான் இவர் போக முடியும்; தன் எண்ணத்தின்படி வினையை நிறைவேற்ற முடியாது. தோல்வியைத் தான் காண்பார். ஆதலால் உள்ளத்திலே உறுதி வேண்டும். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்று ஒரு பழமொழியுண்டு. ஆரியக் கூத்து என்பது ஒருவகைக் கூத்து. அக்கூத்தை நடத்துகின்றவர் - ஆடுகின்றவர் - அதில் கருத்தைச் செலுத்தித்தான் ஆடவேண்டும்; கருத்தின்றி ஆடினால் உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரும். ஆயினும், அவர்கள் காரியம், பொருள் ஈட்டுவதாகும். ஆதலால் ஆபத்தான கூத்திலே ஈடுபட்டிருக்கும் போதும், மக்கள் பொருள் உதவி செய்கின்றார்களா என்பதை யும் கண்ணூன்றிப் பார்த்துக் கொண்டுதான் ஆடுவார்கள். இல்லாவிட்டால் கூத்தாடுவதில் பயன் இல்லை. அறிவுள்ளவர்களுக்கும் இப்பழமொழி பொருந்தும். எச்செயலிலே ஈடுபட்டிருந்தாலும் தம் நிலையை விட்டுவிடக் கூடாது; தவறிவிடக் கூடாது. பெரிய அறிஞர்கள், ஞானிகள், யோகிகள், பக்தர்கள் என்பவர்கள் எல்லாம் இதைத்தான் வேண்டித் தவம் இருந்திருக்கின்றனர். உடலின் செயல் எப்படி யிருந்தாலும் உள்ளம் ஒருநிலையில் இருக்கவேண்டும்; கள்ளங் கபடமற்று வாழவேண்டும்; விருப்பு வெறுப்பற்ற நிலையிலே உண்மையான ஆனந்த வாழ்வை அநுபவிக்க வேண்டும் - என்று தான் விரும்பினார்கள்; விரும்புகின்றார்கள். இவ்வுண்மையைத் தாயுமானவர் பாட்டு ஒன்றால் தெளிவாகக் காணலாம். கொந்துஅவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினும், குளிர்தீம் புனல்கைஅள்ளிக் கொள்ளுகினும், அந்நீர் இடைத்திளைத்து ஆடினும், குளிர்சந்த வாடை,மடவார் வந்துஉலவு கின்றதுஎன முன்றில்இடை உலவவே வசதிபெறு போதும்;வெள்ளை வட்டமதி பட்டப் பகல்போல நிலவுதர மகிழ்போதும்; வேலைஅமுதம் விந்தைபெற அறுசுவையில் வந்ததுஎன அமுதுஉண்ணும் வேளையிலும, மாலைகந்தம் வெள்இலை, அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம் விளையாடி விழிதுயிலினும் சந்ததமும் நின்அருளை மறவா வரம்தந்து தமியேனை ரட்சைபுரிவாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே! இதுதான் தாயுமானவர் பாடல். இதிலே அடங்கியிருக்கும் சிறந்த கருத்து, மனித சமுதாயத்தை வாழ்விக்கும் உயர்ந்த கருத்தாகும். பூங்கொத்துக்கள் நிறைந்த மலர்ச் சோலையிலே, குளிர்ந்த நல்ல நிழலிலே இன்பமுடன் வாழ்ந்தாலும் சரி; குளிர்ந்த இனிமையான நீரைத் தாகம் மிகுந்த நேரத்திலே, கைநிறைய அள்ளிப் புசித்து ஆனந்தம் அடைந்தாலும் சரி; களைப்புத் தீர, அக்குளிர்ந்த நீரிலே மூழ்கி விளையாடி னாலும் சரி; குளிர்ச்சியான தென்றல் காற்று, பெண்கள் உலவுவதுபோல, வாசலிலே வந்து வீசும்படி வசதியுளள வீட்டிலே சுகமாக வாழ்கின்ற காலமானாலும் சரி; வெண்மையான, வட்டமான முழுமதி, பட்டப்பகல் போல நிலவொளி வீசும்போது மகிழ்ந்திருந்தாலும் சரி; பாற்கடலிலே பிறந்த அமுதம், நாம் வியக்கும்படி, நாம் அறியாமல், நாம் உண்ணும் உணவிலே வந்து கலந்திருக்கின்றது என்று நினைக்கும் படியான இனிய உணவை உண்ணும் போதும் சரி; மாலையிலே, வாசனைப் பொருள்களை அணிந்து கொண்டு வெற்றிலை பாக்கை விருப்பத்துடன் போட்டுக் கொண்டு, விரும்பியபடியெல்லாம் விளையாடி மகிழ்ந்து, பிறகு இரவிலே அமைதியுடன் தூங்குகின்ற காலம் ஆனாலும் சரி; எப்பொழுதும் உனது அருளை மறக்காத வரத்தை அளிக்க வேண்டும். பரிபூரணமான - எங்கும் பரந்த உண்மையான - உண்மையும், அறிவும், அருள் ஆனந்தமும் ஆக இருக்கின்ற சிவமே! என்னைப் பாதுகாத்தருள்வாயாக! இதுதான் மேலேகண்ட பாடலில் அடங்கிய பொருள். தாயுமானவர் சர்வ பரிபூரணமான, அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவத்தை வேண்டிக் கொள்ளுகின்றார். சர்வ பரிபூரணம் - எல்லாம் நிறைந்தது. அகண்ட தத்துவம் - எங்கும் பரந்த உண்மை. சத் சித் ஆனந்தம் - உண்மை அறிவு; ஆனந்தமாக உள்ளது. சிவம் - இதுதான் மங்களகரமான சிவம் என்பதாகும். எல்லாவற்றையும் காணவல்ல அறிவுதான் கடவுள்; எங்கும் பரவியிருக்கும் அழியாத உண்மைதான் கடவுள்; உண்மையும், அறிவும், மகிழ்ச்சியும்தான் கடவுள். இவற்றைத் தான் சிவம் என்ற பெயரால் அழைக்கின்றனர். இதுதான் தாயுமானவர் நமக்கு உணர்த்தும் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் எக்காலத்திலும் ஒருநிலையில்தான் இருப்பார்கள்; இன்பத்திலும தம்மை மறந்து விடமாட்டார்கள்; துன்பத்திலும் தம்மை மறந்து விட மாட்டார்கள்; தம்மைத் திடமாக - ஒருநிலையில் - உறுதியாக - வைத்துக்கொண்டு, காரியத்தை நழுவ விடாமல் செய்து வெற்றி பெறுவார்கள்; களங்கமற்ற வாழ்விலே வாழ்வார்கள். இதுவே அறிவுள்ளவர்கள் கண்ட உண்மை நெறியாகும். ஆண்மை யுள்ளவர்கள் - வாழ்விலே வெற்றி பெற விரும்புகின்றவர்கள் - பின்பற்றவேண்டிய பெருநெறியாகும். ஆகாத அரும்செயல் உள்ளத்தைக் கொஞ்சநேரமாவது ஒருநிலையில் நிறுத்திவைக்க முடியாது. உள்ளமும் சரி; சிறு குழந்தையும் சரி; ஆரோக்கிய வாழ்வுள்ள குழந்தை ஒரு விநாடி சும்மா விருக்காது; எதையாவது செய்துகொண்டுதான் இருக்கும். அதை ஓர் இடத்திலே கட்டுப்படுத்தி வைத்திருப்பது மகா தொல்லை. சிறுகுழந்தையைப் பாதுகாக்காமல் சும்மா விட்டு விட்டால் எங்கேயாவது பள்ளம் படுகுழிகளிலே வீழ்ந்து கால் கைகளை ஒடித்துக்கொள்ளும். போக்குவரத்தும், வண்டி வாகனங்களும் மிகுந்த தெருவானால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்துதான். மக்களுடைய மனமும் இதுபோன்றதுதான். எதையாவது எண்ணிக்கொண்டுதான் இருக்கும். மண்டு மனமாயிருந்தால் நடந்தவற்றைப் பற்றிச் சிந்திக்கும்; சுறுசுறுப்புள்ள மனமா யிருந்தால் எதிர்காலத்திற்கான திட்டஙகளையாவது போட்டுக் கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் எத்தனை செய்தி களைப்பற்றி நினைக்கின்றான் என்ற கணக்கிட முடியாது. எண்ணிப் பார்த்தால் அளவில் அடங்காது; எழுதிப் பார்த்தால் ஏட்டில் அடங்காது; குழந்தை ஓடியாடுவதுபோல், எதையாவது எண்ணிக் கொண்டிருப்பதுதான் மனத்து இயல்பு. ஒன்றைப்பற்றி மட்டும் நினை; பலவற்றைப்பற்றி நினைக் காதே. ஓர் எண்ணத்தில் உறுதியாக நில்; குரங்கு கிளைக்குக் கிளை தாவுவதுபோல், ஒரு நினைப்பை விட்டு மற்றொரு நினைப்புக்குப் பாயாதே என்று உள்ளத்தைப் பார்த்து எவ்வளவுதான் உபதேசம் பண்ணினாலும் பயன் தராது. உள்ளம் ஓடிக்கொண்டு தான் இருக்கும். அதைப்பிடித்து ஓரிடத்திலே நிறுத்தி வைப்பது செய்தற்கரிய செயல். உள்ளத்தை ஒருவழியில் நிறுத்தும் ஆற்றல் படைத்தவர்கள், உண்மையிலேயே பேராற்றல் படைத்தவராவர். அவர்களால் எதையும் எளிதிலே சாதிக்க முடியும். இவர்களைத்தான் அறிஞர்கள், ஞானிகள், யோகிகள் என்றெல்லாம் புகழ்ந்து பேசுவார்கள். இவ்வுலகிலே செய்தற்கரிய சிறந்த காரியம் ஒன்று இருக்கிறது என்றால், அது உள்ளத்தை ஒருவழியில் பிடித்து நிறுத்துவதுதான். பெரிய ஞானிகள், யோகிகள் என்பவர்கள் எல்லாம், உள்ளத்தை ஒருவழியில் நிறுத்த முடியவில்லையே என்று தான் புலம்பியிருக்கின்றனர்; இதற்கு என்ன வழியென்று தான் தேடித் தேடி அலைந்திருக்கின்றனர். உள்ளத்தை ஒருநிலையில் நிறுத்து வது மிகவும் அரிய செயல் என்பதைப்பற்றித் தாயுமானவர் ஒரு செய்யுளிலே எடுத்துக்காட்டுகின்றார். மனிதனால் எல்லாக் காரியங்களையும் - சாதாரண மக்களால் செய்ய முடியாதவை என்று நினைக்கும் காரியங்களை யெல்லாம் - செய்து முடிக்க இயலும். ஆனால் மனத்தை அடக்கி ஒரு நிலையிலே நிறுத்தி ஆளுவது தான் ஆகாத அருஞ்செயல் என்று பாடியிருக்கின்றார். யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அதை அடக்குவது எளிதல்ல; தனது கட்டுத்தறியை முறித்துக் கொண்டு புறப்பட்டு விடும்; யார் கையிலும் அகப்படாமல் அட்டகாசம் புரியும். அத்தகைய மதங் கொண்ட யானையைக் கூட வசப்படுத்தி, நாம் சொல்வதைக் கேட்டு நடக்கும்படி செய்துவிடலாம். கரடி, கொடிய புலி இவை பிற உயிரைக் கொன்று தின்னும் தன்மையுள்ளவை. இவற்றினுடைய வாயையும் கட்டி விடலாம்; ஓர் உயிரையும் கொல்லாமல் கட்டுப்படுத்தி விடலாம். சிங்கத்தை அடக்கி அதன்மேல் ஏறிச் சவாரி செய்யலாம். பாம்பைப் பிடித்து ஆட்டி வைக்கலாம். நெருப்பைக்கொண்டு ரசவாத வித்தை செய்து, இரும்பு, ஈயம், வெள்ளி, தாம்பிரம், பொன் முதலிய ஐந்து உலோகங் களையும் நல்ல சொக்கத் தங்கமாக மாற்றலாம்; அவற்றை விற்பனை செய்து பொருள் பெற்று உண்டு வாழலாம். மற்றவர்கள் நம்மைக் காணாதபடி நமது உடம்பை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் உலாவலாம்; நம்மை ஏவல் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் தேவர்கள் என்போர். அத்தகைய தேவர்களை நாம் அடக்கி, நமக்கு அவர்கள் ஏவல் செய்யும்படி ஆட்டிவைக்க முடியும். நமது உடம்பு நரை, திரை, மூப்பு, பிணிகளுக்கு இட மானது. இஃது உடம்பின் இயற்கை. இத்தகைய உடம்பையும் மாற்ற முடியும்; நரை, திரை, மூப்பு, பிணிகளுக்கு ஆளாகாமல் என்றும் இளமையோடு இருக்கும்படி செய்துவிட முடியும். நாம் வேறொரு உடம்புக்குள் புகுந்து கொண்டு உலாவ முடியும். இதைக் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையென்பர். தவசிகள், யோகிகள் இவ்வாறு செய்யவல்லவர்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு செய்ததாகக் கதைகள் கேட்டிருக் கின்றோம். இத்தகைய கதைகளை இன்றும் படிக்கின்றோம். தண்ணீரின்மேல் நடக்க முடியும்; நெருப்பின் மேல் உட்கார்ந்திருக்க முடியும். கனத்தை உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மையுள்ளது தண்ணீர்; தன்னைச் சேர்ந்ததை அழிக்கும் ஆற்றலுடையது நெருப்பு. இத்தகைய நீரின்மேல் நடக்கவும் முடியும்; நெருப்பின்மேல் அமர்ந்திருக்கவும் முடியும். இவைபோன்ற ஒப்பற்ற சித்திகளையெல்லாம் பெற முடியும். முயன்றால் இவை கைகூடாமல் போகமாட்டா. ஆனால் முடியாத காரியம் என்னவென்றால், சிந்தையை அடக்குவதுதான். இதைத்தான் சிந்தையை அடக்கியே சும்மா யிருக்கின்ற திறம் அரிது என்று கூறுகிறார் தாயுமானவர். தன் உள்ளத்திலே குடிகொண்டிருக்கும் அறிவுத் தெய்வத்தைப் பார்த்து - பேரொளியாகிய தெய்வத்தைப் பார்த்து - இவ்வாறு கூறுகிறார் தாயுமானவர். கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடி,வெம் புலிவாயையும் கட்டலாம்; ஒருசிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்; கட்செவி எடுத்தாட்டலாம் வெம்தழலின் இரதம்வைத்து ஐந்துலோ கத்தையும் வேதித்து, விற்றுண்ணலாம் வேறுஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்; விண்ணவரை ஏவல்கொள்ளலாம் சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்; தன்னிகர்இல் சித்திபெறலாம்; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்அரிது; சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே! இதுதான் மேலே காட்டிய பொருள் அமைந்த தாயுமானவர் பாடல். இந்தப் பாடல் பலருக்குத் தெரியும். தாயுமானவர் பாடலைப் படித்தவர்கள் எல்லாம் இப்பாடலை உருப்போட்டிருப்பார்கள்; அடிக்கடி பாடிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்பாடலின் கருத்தறிந்து நடக்கின்றார்களா என்பதுதான் கேள்வி. பலர் இதன் கருத்தை உணர்வதில்லை. பாடுவதற்கு அழகாக - நல்ல சொல்லோசை யுள்ளதாக - இருப்பதனால் சும்மா பாடிக்கொண்டேயிருப் பார்கள்; அவ்வளவுதான். உள்ளத்தை அடக்கியாள்வது என்பது அரிதுதான். அந்த அரிய காரியத்தைச் செய்பவர்கள் பெரியவர்கள். ஒவ்வொரு வரும் தம் மனத்தை அடக்கியாளும் பயிற்சியைப் பெறவேண்டியது அவசியமாகும். மக்களுக்கு மனத்தை அடக்கியாளும் பயிற்சி கைவரப் பெற்றால், மனித சமூகமே இன்புற்று வாழ முடியும். ஆசைதான் அல்லலை உண்டாக்குவது. அளவுக்கு மேல் ஆசையுள்ளவர்கள் பழிபாவங்களுக்கு அஞ்சமாட்டார்கள்; தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்வார்கள். மனத்தை அடக்க வல்லவர்களால் ஆசையையும் அடக்கியாள முடியும். இந்த உண்மையை உள்ளத்தில் கொண்டுதான், மனவடக்கம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தவே தாயுமானவர் இச்செய்யுளைக் கூறினார். காலனைக் கண்டும் கலங்காமை உறுதியான உண்மை அறிவுள்ளவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்; தொடங்கிய காரியங்கள் எவற்றிலும் தோல்வி காணமாட்டார்கள்; வெற்றியே காண்பார்கள். சாவு என்பது மனித இயல்பு. ஆறிலும் சாவு; நூறிலும் சாவு என்பது பழமொழி. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும் என்பது மற்றொரு பழமொழி. ஆதலால், உயிர் போவதைப் பற்றி அஞ்சாதவன் - கவலைப்படாதவன் - கலக்கம் கொள்ளாதவன் - எச்செயலிலும் வெற்றி பெறுவான். கடவுள் துணை நமக்கு உண்டு; அவர் நம்மைக் கைவிட்டு விடமாட்டார். நாம் செய்யும் வேலையைச் சரியாகச் செய்வோம். இடைவிடாமல் முயன்று முடிப்போம். நாம் செய்யும் வேலைக்கு யார் என்ன தடை செய்தாலும் சரி; அத்தடைகளைப் பொருட் படுத்தாமல் நம்மால் முடிந்த வரையிலும் முயல்வோம். நமது நம்பிக்கை வீண்போகாது. இறைவன் - கடவுள் - நம் உள்ளத்தில் இருப்பதால் நம்மை யாரும் கெடுத்துவிட முடியாது. நம்மைக் கெடுக்க முன்வருகின்றவர்கள் - நம் காரியத்தை நிறைவேறாமல் தடுக்க முன் வருகின்றவர்கள் - யாராயிருந்தாலும் சரி; அவர்கள் வெற்றி பெற முடியாது. அவர்கள் முயற்சியைக் கடவுளின் துணைகொண்டு நம்மால் முறியடிக்க முடியும். அறிவு வடிவான கடவுள் - இறைவன் - எப்பொழுதும் நமது உள்ளத்திலே உறைகின்றார் என்ற நம்பிக்கை யுள்ளவர்களை யாராலும் அசைத்துவிட முடியாது. நாம் கடவுளுடன் ஒன்றுபட்டுவிட்டோம். கடவுள் நம்மை விட்டுப் பிரிந்திருக்கவில்லை; நாமும் கடவுளை விட்டுப் பிரிந்திருக்கவில்லை என்ற நம்பிக்கையுள்ளவர்கள் எமனுக்கும் அஞ்சமாட்டார்கள்; தமது உயிரைக் கவர வரும் காலனைக் கண்டும் கலங்கமாட்டார்கள்; அவனை எதிர்த்து விரட்டி யடிப்பார்கள். இத்தகைய ஆற்றலும் அஞ்சாமையும் அவர் களுக்கு உண்டு. மேலே காட்டியவை இறையருள் பெற்றவர்களின் நம்பிக்கை. இந்நம்பிக்கையை விளக்கும் பல கதைகள் உண்டு. அவற்றைப் புராணங்களிலே காணலாம்; பக்தர்களின் சரிதைகளிலே பார்க்கலாம்; அடியார்களாக - அறிஞர்களாக - வாழ்ந்த பல தமிழறிஞர்களின் பாடல்களிலே பார்க்கலாம். இதற்கு உதாரண மாகத் தாயுமானவர் பாடல் ஒன்றைக் காண்போம்: எல்லாம் அறிந்தவரும் ஏதுமஅறி யாதவரும் இல்லைஎனும் இவ்வுலகமீது, ஏதும்அறி யாதவன் எனப்பெயர் தரித்துமிக ஏழைக்குள் ஏழையாகிக், கல்லாத அறிவில் கடைப்பட்ட நான்,அன்று கையினால் உண்மைஞானம் கற்பித்த நின்அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன்; குற்றேவல்நான் உள் ஆந்த மேனியொடு, குண்டுகண், பிறைஎயிற்று, ஆபாச வடிவமான அந்தகா! நீஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா! காசுநம்பாற் செல்லா தடா! என்று பேசவாய் அதுதந்த செல்வமே! சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே! தேசோ மயானந்தமே. இச்செய்யுளிலே, தாயுமானவர் தான் பெற்ற இன்பத்தை எடுத்துக் கூறுகின்றார். இறைவனுடன் தன் உள்ளம் ஒன்று பட்டதால் தனக்கு ஏற்பட்ட அஞ்சாமையையும் ஆனந்தத் தையும் எடுத்துரைக்கின்றார். இச்செய்யுளில் அவர் கூறுவது என்ன என்பதைத் தெளிவாகக் காண்போம்: இவ்வுலகில் எல்லாவற்றையும் அறிந்த சகலகலா வல்லவர்களும் இல்லை; ஒன்றும் அறியாத முழு மூடர்களும் இல்லை. அறிந்தவர்களிடமும் அறியாமை யுண்டு; அறியாதவர் களிடமும் அறிவு உண்டு. இந்த உலகநிலை இதுவாகும். இந்த நிலைமையிலுள்ள இவ்வுலகிலே நான் ஒன்றும் அறியாதவன் என்ற பெயர் பூண்டேன். அறிவற்றவர்களிலே அறிவற்றவனாகத் திரிந்தேன். கல்லாத அறிவிலே நான்தான் கடைப்பட்டவன் என்ற பெயர் எடுத்துத் திரிந்தேன். இத்தகைய எனக்கு அன்று மௌனகுருவாகக் காட்சி தந்தாய். வாயினால் உண்மை இன்னதென்று உரைக்காமல் கையினால் உண்மையைக் குறித்துக் காட்டினாய். இவ்வாறு கைக்குறியால் உண்மை அறிவை எனக்குக் காட்டிய உன் கருணையே சிறந்த கருணை. அந்தக் கருணைச் செயலுக்கு என்னதான் என்னால் எதிர் உதவி செய்ய முடியும்? உன் குற்றேவலிலேயே - உனக்குப் பணிபுரிவதிலேயே - ஈடுபட்டுக் கிடப்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்வதற்கில்லை. மக்கள் உயிரைக் கவர்ந்து செல்லும் அந்தக் கொடிய எமனைக் கண்டாலும் நான் அஞ்சமாட்டேன். அவன் உருவைக் கண்டாலே பலர் பயந்து நடுங்கிப் போவார்கள். கருமையெல்லாம் திரண்டிருக்கும் உருவத்தை யுடையவன்; ஆழமான அகன்ற கண்களையுடையவன்; வாயின் இரு புறங்களிலும் பிறைபோல வளைந்து காணப்படும் கோரப் பற்களை யுடையவன். இத்தகைய ஆபாசத்தோற்றமுள்ள - அருவருக்கத்தக்க உருவத்தையுடைய - எமன், தனது எருமைக் கடா வாகனத்தில் ஏறிக்கொண்டு என் முன் வந்தாலும் அஞ்சமாட்டேன்! ஆபாச வடிவான அந்தகா! நீ ஓர் எருமைக் கடாவினால் ஆரவாரம் புரிவது தகாது; உன் அதிகாரமாகிய காசு நம்மிடம் செல்லாது; போடா, நீ வந்த வழியைப் பார்த்துக் கொண்டு! என்னிடம் நெருங்காதே அடா பயலே! என்று தைரியத்துடன் பேசுவதற்கு வாயளித்தாய். இத்தகைய எனது செல்வமே! உண்மை வடிவமாகி என் உள்ளத்திலே குடியிருக்கும் அறிவுருமான தெய்வமே! ஒளிமய மான ஆனந்தமே! மேற்கண்ட பாடலின் பொருள் இதுதான்: இறைவன் நம் உள்ளத்தில் இருக்கிறான். உண்மைதான் அவன். அறிவுதான் அவன். அறியாமையாகிய இருளை அண்ட விடாமல் செய்யும் ஒளிவிளக்காக இருப்பவன். துன்பம் இல்லாத ஆனந்தமயமாக இருப்பவன் அவன். இதுவே தாயுமானவர் கண்ட உண்மைப் பொருள்; உண்மை ஞானம். இக்கருத்தை இச்செய்யுளிலே காணுகின்றோம். இத்தகைய உண்மை அறிவைப் பெற்றவர்கள் யாரும் சாவுக்கு அஞ்சமாட்டார்கள். எமன் வந்தாலும் பயப்பட மாட்டார்கள்; எதிர்த்துப் போராடுவார்கள். உண்மையும் உறுதியும், அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் எதற்குத்தான் அஞ்ச வேண்டும்? இயற்கை நிகழ்ச்சிகள் கடவுளிடம் அன்பு கொண்டவர்களுக்கு எந்த நிகழ்ச்சியைக் கண்டாலும் அதிசயமாகத்தான் காணப்படும். இறைவனைக் காணவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் எந்த இயற்கை நிகழ்ச்சிகளையும் இறைவன் செய்கையாகவே நினைப்பார்கள். என் செயலாவது யாதொன்றுமில்லை என்ற நம்பிக்கை யுள்ளவர்களே சிறந்த கடவுள் பக்தர்களாக விளங்கினார்கள். இந்த நம்பிக்கைதான். யான், எனது என்ற ஆணவத்தை ஒழிப்பது. யான், எனது என்ற ஆணவம் ஒழித்தவர்களே சிறந்தவர்கள்; கடவுள் அருளைப் பெறுந் தன்மையுள்ளவர்கள். இவர்களே கடவுள் அருளைப் பெற்றவர்கள் என்று கருதப் பட்டார்கள். நவீன விஞ்ஞான அறிவு வளர்ந்து வரும் இக்காலத்தில் இரவுக் காலம் பகற்காலம் என்ற பிரிவுகள் இருப்பதற்குக் காரணமென்ன? சூரியன் காணப்படும் காலம் பகல்; சூரியன் காணப்படாத காலம் இரவு. பூமியின் சுழற்சியினாலேயே இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. இந்த உண்மையைப் பள்ளிக் கூடங்களில் ஆரம்ப வகுப்புக்களில் படிக்கும் மாணவர்கள்கூட அறிவார்கள். காற்று வீசாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? மெதுவாக வீசுவதற்குக் காரணம் என்ன? இக்கேள்விகளுக்கும் விடை உண்டு. இவை பெரிய கேள்விகள் அல்ல; சாதாரண கேள்விகள் தாம்; புரியக்கூடிய கேள்விகள்தாம். இதைப்போலவே மேகங்கள் மழை பொழிவதைப் பற்றியும் இக்கால மக்களுக்குத் தெரியும். மேகங்கள் எப்படிப் பிறக்கின்றன? எப்படி அவை மழைத் துளியாக மாறுகின்றன? அதிக மழை பெய்வதற்குக் காரணம் என்ன? குறைந்த மழை பெய்வதற்குக் காரணம் என்ன? - இவை, படித்தவர்கள் அனை வருக்கும் தெரிந்த விஷயம். பண்டைக் காலத்தில் - விஞ்ஞான அறிவு வளர்ச்சி யடையாத காலத்தில் - இத்தகைய இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் இறைவன் திருவிளையாடல்கள் என்றே எண்ணி வந்தனர். இன்றும் இப்படி நினைப்போர் உண்டு. விஞ்ஞான நூல்களைக் கற்றவர்களிலே மதப்பற்றும் நம்பிக்கையும் உள்ளவர்கள் இயற்கை நிகழ்ச்சிகளை யெல்லாம் இறைவன் திருவிளையாட்டு என்று நம்புகின்றனர். இக்காலத் திலேயே இப்படியிருக்கும்போது பண்டைக் காலத்தினர் இவற்றை இறைவன் செயல் என்று நம்பியதில் வியப்பில்லை. அவன் அன்றி அணுவும் அசையாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலே உறுதியுள்ளவர்கள் எச்செய லையும் இறைவன் செயலாகத் தான் எண்ணுவார்கள். எனது திறமையால் இதைச் செய்தேன்; எனது அறிவால் இதைச் செய்தேன்; எனது உழைப்பால் இதைச் செய்தேன் என்று அவர்கள் நினைக்கவே மாட்டார்கள். இப்படி நினைத்தார் களானால் அவர்கள் அவன் அன்றி அணுவும் அசையாது என்ற கொள்கையிலே நம்பிக்கையற்ற வர்களாகத் தான் இருக்க வேண்டும்; உறுதிகயற்றவர்களாகத் தான் இருக்கவேண்டும். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களின் உள்ளத்திலே, நான் செய்தேன். என்னால்தான் முடிந்தது என்ற எண்ணம் முளைக்கவே முளைக்காது. பண்டைக் காலத்துச் சைவப் பெருமக்ள், வைணவப் பெருமக்கள், ஏனைய சமயப் பெருமக்கள் எல்லோரும் எனது, யான் என்னும் செருக் கற்றவர்கள். அவர்கள் அனைவரும், நம்மால் நடப்பது ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கை கொண்டுதான் வாழ்ந்தார்கள். இவ் வுண்மைகளை அப்பெரியார்களின் வாய்மொழிகளாலேயே காண முடிகின்றது. இதற்கு உதாரணமாகத் தாயுமானவர் பாடல் ஒன்றைக் காண்போம்: nenujh‹ ïuîgfš nfhlh t©z« äj«tu c§fisïª Ãiy¡nf it¤jh® Mnu!m§F mt®bgUik v‹nd v‹ng‹; mo¡»‹w fh‰nwÚ Muhny jh‹ nguhnj RHš»‹whŒ v‹ng‹; tªJ bgŒ»‹w K»šfhŸ!எம் பெருமான் நும்போல் தாராள மாகக் கருணைபொழி யச்செய்யும் சாதகம் என்னே, கருதிச் சாற்றும் என்பேன் என்பதே அப்பாடல். இப்பாடலின் பொருளைக் காண்போம்: குறித்த நேரத்தில் இரவு தோன்றுகிறது; குறித்த நேரத்தில் பகல் பிறக்கின்றது. இவ்வாறு சிறிதும் தவறாமல் ஒவ்வொரு நாளும் நடைபெறுவதை நேரே, காண்கின்றோம். ஏ இரவே! ஏ பகலே! உங்களை இவ்வாறு தவறாமல் நடந்துகொள்ளும்படி இந்நிலையில் வைத்தவர் யார்? உங்களை இந்த நிலையில் வைத்த அவருடைய பெருமை எப்படிப் பட்டது? என்று கேட்கின்றேன். வீசுகின்ற காற்றே! நீ யாரால், யாருடைய உத்தரவின் மேல் பருவ மாறுபாடு இல்லாமல், பருவத்திற்கேற்ற படி சுழன்று வீசிக்கொண்டிருக்கின்றாய்? என்று கேட்கின்றேன். வானத்திலே வந்து தோன்றி மழையைப் பெய்கின்ற மேகங்களே! எம்பெருமானும், உங்களைப் போலத் தாராளமாக அவனுடைய கருணையாகிய மழையைப் பொழியச் செய்வதற் கான மார்க்கம் என்ன? அதற்காகச் செய்யவேண்டியது என்ன? இதற்கான வழியை ஆலோசித்துக் கூறுங்கள் என்று கேட்பேன். இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். இதனால் - தாயுமானவரின் இப்பாடலால் - இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் இறைவன் செயல்களே என்று கருதுவதே கடவுளடியார்களின் கருத்து என்பதைக் காணலாம். உனையன்றி அறியேன் இறைவன்பால் அன்புள்ளவர்கள் தமக்கென ஒன்றையும் சொந்தமாக நினைக்கமாட்டார்கள். இவ்வுலகப் பொருள் களை யெல்லாம் நிலையற்றவை என்றே நினைப்பார்கள். எல்லாவற் றையும் இறைவனுக்குரிய உடைமை என்றே மதிப்பார்கள். இதுவே ஞானிகளின் தன்மையாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் மூன்று பொருள் களைத் தமக்கு இன்பந் தருவதாக நினைப்பார்கள். அம்மூன்று பொருள்கள், மண், பெண், பொன் என்பன. இம்மூன்று பொருள் களின்மேல் உள்ள ஆசையைத் துறப்பது யாராலும் ஆகாத காரியம். இவ்வுலகத்தையே துறந்து விட்டேன். இம்மையின் பத்தை விரும்பவே மாட்டேன். இறைவனை வேண்டி மறுமையில் மோட்சம் பெறவே விரும்புகின்றேன் என்று கூறும் துறவிகளும்கூட மண்ணாசையைத் துறந்துவிடுவ தில்லை. அவர்களும் மடம் என்ற பெயரில் இடம் வைத்துக் கொண்டிருக் கின்றனர்; அந்த மடத்திற்கென்று விளைநிலங்களும் தோட்டந் துறவுகளும் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். துறவு பூண்டவர்கள் அனைவரும் பெண்ணாசையை முற்றுந் துறந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இவர் களிலே பலர் உண்மையாகவே தங்கள் உள்ளத்தை அடக்கி யாளும் உத்தமர்களாக இருக்கலாம்; பெண் இன்பத்தை நாடாத பெரியோர்களாக இருக்கலாம்; பெண்மீது எழும் ஆசையை அடக்கி ஆளும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கலாம். ஆயினும் துறவு பூண்டவர்களில் எத்தனையோ பேர் கூடா ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதைக் காண்கிறோம். பிரமச்சாரிகள், சந்நியாசிகள் என்று பெயர் வைத்துக்கொண்டு கள்ளத்தனமாகக் காரிகையரை நாடிக் கூடித் திரிகின்றவர் களையும் காண்கிறோம். துறவிகளிலே பலர், எங்களுக்குப் பொருளாசையில்லை என்று சொல்லிக்கொண்டாலும் மறைமுகமாகவும் வெளிப் படையாகவும் பொருள் சேர்ப்பதைக் காண்கிறோம். இவ்வுலக இன்பத்தை வெறுக்கின்றவர்கள், இவ்வுலக வாழ்வு நிலையற்றவை என்று நினைக்கின்றவர்கள் - பேசுகின்ற வர்கள் அடியோடு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை களை விட்டவர்கள் என்று முடிவுகட்ட முடியாது. இவர்கள் இந்த மூன்று ஆசைகளையும் துறந்தவர் களானால், நாட்டிலே இவர்களுக்கு வேலையில்லை. காட்டிலோ மலைகளிலோ சென்று தான் வாழ்வார்கள்; அல்லது இந்த உலகத்தைவிட்டே மறைந்து விடுவார்கள். இப்படியில்லாமல் மடம் என்ற பெயரில் பெரிய மாட மாளிகை கூட கோபுரங்களில் வாழும் துறவிகளைக் காண்கிறோம்; ஏராளமான நிலபுலன்களைச் சேர்த்து வைத்துக்கொண்டிருப் பவர்களைப் பார்க்கிறோம்; அளவற்ற வருமானத்தைப் பெற்று ஆடம்பரமாகச் செலவு செய்கின்றவர்களையும் பார்க்கிறோம். இவர்களிலே சிலர் கூடாஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதையும் காண்கிறோம். ஆதலால் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை - யாராலும் அவ்வளவு எளிதிலே விட்டுவிடக் கூடியவை அல்ல என்பதிலே ஐயம் இல்லை. இந்த மூன்றாசைகளையும் துறந்தவர்களே முற்றுந் துறந்த முனிவர்கள். இவர்களையே இறைவனும் விரும்புவான். இவர் களும் இறைவனும் ஒன்றாகவே ஆகிவிடுவார்கள். இவர்கள் இறைவனையும் அவன் அருளையுமே எப்பொழுதும் நாடி நிற்பார்கள். இவர்கள் வேறு எத்துணையும் வேண்டாமல், எவர் துணையையும் விரும்பாமல், தன்னந் தனியாகவே இறைவனை எண்ணியே வாழ்வார்கள். இதுவே மண், பெண், பொன்னாசை களைத் துறந்தவர்களின் மாண்பு என்று கூறுகிறார் தாயுமானவர். பொன்னை மாதரை என்ற தலைப்புள்ள பாடல் இதைத் தான் சொல்லுகின்றது. பொன்னை மாதரை பூமியை நாடிடேன், என்னை நாடிய என்உயிர் நாதனே! ஊன்னை நாடுவன்; உன்அருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னம் தனியனே என்பதே அந்தப் பாட்டு. இதில் அடங்கிய பொருள் உண்மையை உரைப்பது. எளிதிலே பொருள் விளங்கும் இனிய பாட்டு. பதங்களைச் சிறிது மாற்றியமைத்துக் கொண்டால் அர்த்தம் சொல்ல வேண்டிய தேயில்லை. என்னை நாடிய என் உயிர் நாதனே! பொன்னை, மாதரை, பூமியை நாடிடேன்; தன்னந் தனியனே, உன்னை நாடுவன், உன் அருள் தூவெளி தன்னை நாடுவன் என்று மாற்றிக் கொண்டால் போதும். நாடுதல் - தேடுதல். அருள் தூவெளி - அருளாகிய தூய வெட்டவெளி. தன்னந்தனியனே - தன்னந் தனியனாக நின்று. இவ்வுலகப் பற்றிலாத என்னை அடிமையாகக் கொண்டு ஆள்வது, இறைவனே! உனது கடமையாகும் என்று மற்றொரு செய்யுளில் வலியுறுத்துகின்றார். இறைவனே! நீ தான் என் உயிராக நிற்கின்றாய் என்பதை நான் அறிவேன். அறிந்தும், நான் அறிவு பெற்றவனாக நின்று உலகை மறந்து உன்னை வணங்கி நிற்க மாட்டேன். நீ இருப்பதற்கு இடமாகிய என் உள்ளத்தை உனக்குக் காணிக்கையாக அளிக்க மாட்டேன். இவ்வாறு உள்ள பாவியேனுடைய மனப்பான் மையைக் கண்டு,நீ என்னை வெறுத்துவிடாதே; விட்டுவிடாதே! நீ என்னை முதலில் எப்படி ஆட்கொண்டாயோ, அதே குரு வடிவான கோலத்தில் வருவாயாக! என்னை, மகனே! வா, கலங்காதே! என்று கூவி அழைத்து ஆட்கொள்ள வேண்டு கின்றேன் என்று பாடுகிறார் தாயுமானவர். நான் உன்னை மறந்து திரிந்தாலும் நீ என்னை மறவாமல் ஆட்கொள்ள வேண்டும் என்பதே அவர் வேண்டுகோள். இறைவன் அருளை வேண்டும் ஞானிகள் அனைவரும் இவ்வாறுதான் கடவுளை வேண்டிக் கொள்ளுவது வழக்கம். இக்கருத்தமைந்த பாடலும், பொன்னை மாதரை என்ற தலைப்பிலே உள்ள பாடல் வரிசையில் அமைந்ததுதான். ஆவி யேன்உனை யான்அறி வாய்நின்று சேவி யேன்;களச் சிந்தை திறைகொடேன்; பாவி யேன்உளப் பான்மையைக் கண்டுநீ கூவி ஆள்எனை; ஆட்கொண்ட கோலமே! தாயுமானவர் அருள் உள்ளத்தை விளக்கிற்று இச்செய்யுள். எல்லையற்ற இன்பம் தாயுமானவர் பாடலிலே கண்ணிகள் பல உண்டு. கண்ணி என்பது இரண்டடிகளைக்கொண்ட தனித் தனிப் பாடல்கள். இவை பாடுவதற்கு எளிதானது. சொல்ல வேண்டிய விஷயங் களைக் கேட்போர் உள்ளத்திலே பதியும்படி இக்கண்ணிகளின் மூலம் சொல்ல முடியும். யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் என்ற பரந்த உள்ளம் படைத்தவர் தாயுமானவர். ஆதலால் அவர் கண்ட இன்பத்தை - அனுபவித்த திருவருட்பேற்றை - கண்ணி வடிவிலே பாடி வைத்திருக்கின்றார். தாயுமானவர் பாடிய கண்ணிகள், பராபரக் கண்ணி, பைங்கிளிக் கண்ணி, எந்நாட் கண்ணி, காண்பேனோ என் கண்ணி, ஆகாதோ என் கண்ணி, பலவகைக் கண்ணி என்ற கண்ணிகளாக விளங்குகின்றன; மேலே காட்டிய தலைப்பெயர் களுடன் காணப்படுகின்றன. அக்கண்ணிகளிலே சிலவற்றைக் காண்போம். எவ்வளவு உண்டாலும் தெவிட்டாத அமுதமா இருப் பவனே! எல்லாப் பொருள்களுக்கும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தலைவனாக இருக்கும் அரசே! என்றும் எப்பொழுதும் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கின்ற ஆனந்தம் என்னும் வெள்ளப் பெருக் கையுடைய ஜீவநதியாக இருக்கின்றவனே! மவுனப் பெரும் பிழம்பாக இருக்கின்றவனே! உயர்ந்தவைகளுக்கெல்லாம் உயர்ந்ததாக இருக்கின்ற பராபரமே! ஆரா அமுதே! அரசே; ஆனந்த வெள்ளப் பேராறே! மோனப் பெருக்கே! பராபரமே! என்று இறைவனைப் போற்றுகின்றார். இறைவனைத் தெவிட்டாத அமுதம், அரசு, ஆனந்த வெள்ளம், ஓடும் ஜீவநதி, மவுனப் பேரொளி என்று கூறியுள்ளார். இவ்வுருவங்களிலே இறைவனைக் காண்கிறார்; கண்டு களிக்கின்றார். உன்னை ஒருவராலும் ஊனக் கண்ணால் காண முடியாது. ஞானக் கண் பெறாத, ஊனக் கண்ணை மட்டும் பெற்றவர்கள் யார்தான் உன்னை அறிய முடியும்? ஒருவராலும் உணர முடியாது. இவ்வாறு அளவற்ற வேதப் பாடல்கள் ஓலமிடுகின்றன. நீ பேர் அறிவாக விளங்குகின்றாய்; இன்ப வெள்ளமாகத் திகழ்கின்றாய். பராபரமே! இவைதான் உனது வடிவம் என்பதை நான் அறிவேன். ஆர்அறிவார் என்ன அனந்தமறை ஓலம்இடும் பேர்அறிவே! இன்பப் பெருக்கே; பராபரமே! இறைவன் ஒருவராலும் காண முடியாதவன்; ஆனால் பேர் அறிவாக இருக்கின்றான்; இன்ப வெள்ளமாக எங்கும் நிறைந்திருக்கின்றான் என்று கூறினார். உன்னிடம் அன்பு செய்கின்றவர்கள் சொல்ல முடியாத பெரும்புகழ் படைத்தவர்கள். அவர்கள் பெருமையை உரைப் பதற்கான சொற்கள் இல்லை. எவ்வளவு சொன்னாலும் அச் சொற்களையெல்லாம் கடந்து நிற்பதே அவர்கள் புகழாகும். அத்தகைய மெய்யன்பர்களின் உள்ளத்திலே நீ வீற்றிருக்கின்றாய்; பேரொளியாய் வளர்ந்து நிற்கின்றாய்; கரையற்ற இன்பக் கடலாக நிற்கின்றாய். பராபரமே! உன்னை இப்படித்தான் நான் காண்கின்றேன். உரைஇறந்த அன்பர்உளத்து ஓங்குஒளியாய் ஓங்கிக், கரைஇறந்த இன்பக் கடலே! பராபரமே! இக்கண்ணியின் மூலம் இறைவன் இருக்கும் இடம் இது, அவன் உருவம் இது என்பதைச் சுட்டிக் காட்டினார். இறைவன் இருக்கும் இடம், மெய்யன்பர்களின் உள்ளம்! அவன் வடிவம் இன்பவெள்ளம். இதுவே தாயுமானார் கருத்து. இத்தகைய இறைவன் அருளைப் பெறுவது எப்படி என்பதையும் அவர் சொல்லாமல் விட்டு விடவில்லை. பராபரமே! உன்னிடத்திலே நான் வற்றாத - இடையறாத - அன்பு கொண்டேன்; அந்த அன்பை வளர்த்தேன். ஆதலால் நீ எனக்குத் துணையானாய்; எனது அரிய உயிரை நாச வழியிலே செல்லாமல் காப்பாற்றினாய்; இன்ப வெள்ளமாக நின்று என் தலைவனானாய் என்று, தான், இறைவன்தன் அருள் பெற்ற விதத்தைக் கூறியிருக்கின்றார். உன்னிடம் எனது அன்பு வளரும்படி செய்தாய்; அதன்பின் எனது அரிய உயிரைக் காக்கும் துணையானாய்! இன்ப வெள்ளமே! தலைவனே! பராபரமே! அன்பைப் பெருக்கிஎனது ஆருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே! இறையே! பராபரமே! இதன் மூலம் தான் கடவுளைக் கண்டறிந்த வழியைக் கூறினார். இறைவனிடம் அன்பு செலுத்தினாலும் எத்தகைய பண் புள்ளவர்கள் அவ்விறைவனைக் காண முடியும் என்பதையும் தெளிவாக ஒரு கண்ணியின் மூலம் கூறுகின்றார். செல்வத்திலே ஆசையற்றவர்கள்தாம் இறைவனைக் காண முடியும்; அறிய முடியும். உடைந்த மண்ணோடும், பெரிய தங்கப் பாளமாகிய செல்வமும் காணப்பட்டால் அவ்விரண்டையும் ஒன்றாகவே நினைக்கின்றவர்கள் தாம் உண்மை ஞானிகள்; உலகப் பற்று இல்லாதவர்கள். இத்தகைய ஆசையற்ற அறிஞர்கள் தாம் உன்னைக் காண முடியும். இவர்கள் தேடிக் காணும் பொருளாகத்தான் நீ நிற்கின்றாய். இவர்களுடன்தான் நீ நட்பாக - ஒன்றாக - உறைவாய். பராபரமே! இதுதான் உனது உண்மைப் பண்பாகும். ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே! பராபரமே! இதனால் இறைவனை யாரால் காண முடியும் என்பதை எடுத்துரைத்தார். உயர்ந்தோர் உள்ளம் உண்மை உணர்ந்தோர் செம்மையர் ஆவர். செம்மை என்பது, என்றும் அழியாத உண்மைப் பொருள். இதனைச் செம்பொருள் என்பார் திருவள்ளுவர். செம்பொருளை - உண்மைப் பொருளை - உணர்ந்தவருக்குச் செம்மையர் என்று பெயர் சூட்டுகிறார் தாயுமானவர். செம்மையர் யார்? அவர் பண்பென்ன? என்பதைத் தாயுமானவர் விளக்கிக் காட்டியிருக்கின்றார். செம்மையரே உயர்ந்தவர்கள், போற்றத்தக்கவர்கள் என்று புகழ்ந்து பேசு கின்றார். செம்மையராக வேண்டுமானால் உள்ளத்திலே கனிவு வேண்டும்; குழைவு வேண்டும்; இரக்கம் வேண்டும. இரக்கமற்ற கல்மனத்தினர் செம்மையை - செம்பொருளை - அறிய முடியாது. உள்ளத்திலே உருக்கம் உள்ளவர்கள் எவ்வுயிரையும் வெறுக்க மாட்டார்கள்; எவ்வுயிர்களிடத்தும் சினம் கொள்ள மாட்டார்கள். எல்லா உயிர்களையும் தம்முயிர் போலவே நினைப்பாக்ள்; எந்த உயிர் துன்பறுமானாலும் அதைத் தமது துன்பமாகவே கருதுவார்கள். இதுவே செம்மையரின் சிறந்த பண்பாகும். இத்தகைய செம்மையருக்கு ஏவல் செய்வதே - பணிவிடை செய்வதே - தொண்டு புரிவதே - எனது ஆசை. அந்தப் பாக்கியம் - பேறு - எனக்கு என்றுதான் கிடைக்குமோ, அறியேன்! என்று பாடுகிறார் தாயுமானவர். தான் கண்ட - விரும்பிய - உண்மையை இவ்வாறு பாடுகிறார்: தம்உயிர்போல் எவ்வுயிரும் தான்என்று தண்அருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன்? பராபரமே! என்பதே அப்பாடல். எல்லா உயிரும் தம் உயிர் போன்றதுதான் என்று எல்லா உயிர்களிடமும் இரக்கங் காட்டுகின்றவர்களே செம்மையர் என்ற கருத்தை இக்கண்ணியிலே காணலாம். செம்மையர்க்கு ஏவல் செய்வதன்மூலம், அவர்களுடன் சேர்ந்து வாழுவதன் மூலம், தாமும் செம்மை பெறமுடியும் என்னும் கருத்திலேயே இவ்வாறு பாடினார். செம்மையரையே அன்பர் என்றும் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். அன்புள்ளங் கொண்டவர்கள் பொய்ந்நெறியிலே புகமாட்டார்கள்; உண்மை நெறியைத் தான் உணர்ந்திருப்பார் கள். யாரிடத்திலும் பேதம் பாராட்டமாட்டார்கள். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுவார்கள்; எல்லா உயிர்களுக்கும், உதவி - உபகாரம் - ஒத்தாசை - செய்வார்கள். அன்பர்களின் செயல் - அரும்பணி - இதுவாகும். இத்தகைய அன்பர்களுடன் இணைந்து வாழ்வோர்க்கும் இக்குணம் படியும் என்பதில் ஐயம் இல்லை. ஆதலால், அன்பர்களுக்கு நான் பணி செய்ய வேண்டும்; அவர்களுக்குப் பணி செய்யும் நற்காரியத்தில் என்னை ஈடுபடுத்த வேண்டும். இப்பணியில் என்னை ஈடுபடுத்தி விட்டுவிட்டால் நான் இன்பம் அடைவேன். துன்பம் என்னைத் தொடரவே தொடராது. இன்பநிலை தானாகவே என்னை வந்து அடையும் என்று பராபரமாகிய கடவுளை வேண்டிப் பாடுகின்றார். அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே! என்பதுதான் அவர் இக்கருத்தமைத்துப் பாடியிருக்கும் கண்ணி. செம்மையருக்குப் பணி செய்யவேண்டும்; அவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று துடிதுடிக்கும் தாயுமானவர், வஞ்சகர்களுடன் சேரக்கூடாது; அவர்களுடைய முக நோக்கே - நாற்றமே - கூடாது என்று கண்டித்துப் பேசுகிறார். நல்ல பேச்சாளர்களாக இருக்கலாம்; பிறர் வியக்கும்படி - நாமே ஆச்சரியப்படும்படி - ஆயிரக்கணக்கான அறிவுரை களை அள்ளி வீசுகின்றவர்களாக இருக்கலாம். இவ்வளவு கல்வித் திறமை படைத்திருந்தாலும் அவர்கள் செம்பொருள் காணாதவ ராயின் - உண்மையை உணராதவராயின் - இரக்கமும் அன்பும் அற்றவராயின் - அவர்களை நல்லவர்களாகக் கருத முடியாது. அவர்கள் மனத்தில் ஒன்றும் வாயில் ஒன்றும் பேசும் வஞ்ச நெஞ்சர் ஆவர். அவர்கள் எவ்வளவுதான் கற்றவர்களானாலும், அவர்கள் அறிவற்றவர்கள்தான்; பேயர்கள் தான். இத்தகைய பேயரோடு சகவாசமே கூடாது. இவர்களுடன் கூடுவது - சேர்ந்திருப்பது - பிழையாகும். இச்சேர்க்கை அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகிவிடும் என்ற உண்மையையும் உரைக்கின்றார் தாயுமானவர். இதனை, ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்சநெஞ்சப் பேயரோடு கூடிற் பிழைகாண் பராபரமே! என்ற கண்ணியால் காணலாம். இக்கண்ணியின் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றார். பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள்; ஒழுக்கத்தைக் கண்டு உறுவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத் தைக்கும் சம்பந்தமில்லாத பெயர்களுடன் உறவு கொள்ளுவது பிழை! பிழை! பெரும் பிழை! என்று முன்கூட்டியே எச்சரித்தார். உயர்ந்த பண்பு படைத்த மனிதர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்களின் மனப்பான்மை எப்படியிருக்கும்? அவர்கள் எப்படி யிருப்பார்கள்? என்பதை மற்றொரு கண்ணியிலே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் தாயுமானவர். எவ்வுயிர்களிடமும் பேதம் பாராட்டமை மனிதத் தன்மை. எவ்வுயிர் துன்பம் அடைந்தாலும் அத்துன்பத்தைத் துடைக்க முந்துவதே செம்மையோர் தன்மை. எவ்வுயிரையும் தம்முயிர் போலவே எண்ணுவதுதான் தயவுடையார் தன்மை. அறிஞர்கள், அன்பர்கள், நன்மை பெற விரும்புகின்றவர்கள் - இத்தகைய அன்பர்களுடன் சேர்ந்திருக்கவே விரும்புவார்கள்; சேர்ந்து பணி செய்வார்கள். இதுதான் உயர்ந்த பண்பாடாகும். இவ்வாறு கூறிய தாயுமானவர் தம் உள்ளக்கிடக்கையையும் மறைக்காமல் வெளியிடுகிறார். என்னுடைய கருத்து - குறிக்கோள் - ஒன்றே ஒன்று தான். அந்த ஒரு நோக்கத்தை நிறைவேற்றவே நான் உயிர் வாழ்கின்றேன். இவ்வுலகில் எல்லோரும் இன்பத்துடன் வாழ வேண்டும்; எம்மதத்தினரும், எச்சாதியினரும், எம்மொழியினரும், எந் நாட்டினரும் இன்பத்துடன் வாழவேண்டும். வேற்றுமை உணர்ச்சி ஒழிந்து ஒன்றுபட்டு இன்பத்துடன் வாழவேண்டும். இதுதான் எனது முடிவான - தீர்மானமான - கருத்து. இதைத் தவிர எனக்கு வேறு எக்கருத்தும், எந்தக் குறிக்கோளும் இல்லை. இதைத்தவிர, வேறு ஒன்றைப்பற்றியும் நான் நினைக்கவே மாட்டேன் என்று கூறுகின்றார். இதனை, எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறுஒன்று அறியேன் பராபரமே! என்று பாடியிருக்கும் கண்ணியினால் காணலாம். தாயுமானவரின் இக்கருத்துக்கள் பழந்தமிழரின் கருத்துக் களாகும்; தமிழர் அருள்நெறியை அறிவிப்பனவாகும். தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்பதாண்டுக் காலத்தைத் தமிழனுக்கும் தமிழுக்கும் அர்ப் பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்புகொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணிகளிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர். பிற்காலத்தில் பொதுஉடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர். தமிழ்மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும், கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறவேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். 1920 முதல் 1961 வரையுள்ள ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட புனை பெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொண்டாற்றியவர். பகுத்தறிவு,. புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோபகாரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றியவர்; பத்திரிகைத்துறையில் நாட்டம்கொண்டு அறிவுக்கொடி என்னும் பத்திரிகையை - 1936ல் - கும்பகோணத்தி லிருந்து ஈராண்டுக்காலம் நடத்தி மகிழ்ந்தவர். தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். மேலும் திராவிடன் நாளேடு, தமிழரசி, தாருல் இலாம், சாந்தி, தொழிலரசு, தமிழ்ப்பொழில், செந்தாமரை, சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு நாளேடு, பொன்னி, செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி, புதுஉலகம், கவிதா மண்டலம், புதுவை முரசு, நகரத்தூதன், சண்டமாருதம், பார்க்கவகுலமித்திரன், சுயமரியாதை, போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தவர். இவ்விதழ்களில்மெய்கண்டான்,கதைக் காதலன்,குருலூ,எ.சி..பரன்,மிடர் திங்கர், சாமி.சி. இடிமுழக்கம், காலக்கவி, வாமிÍ, வம்ப‹, அரட்l, சிகாமÂ, நாதிக‹,பொறுப்புள்ளவன்,விளக்கொளி,கண்ணாடி,தமிழன்,சல்லடசலிப்பு,அரசியல்வாதி, மெய்யன்என்னும்20க்கும்மேற்பட்டபுனபெயர்களில்எழுதிஉள்ளார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடிவாழையென வந்த தமிழ்ப் புலவர் கூட்டத்தின் வழித்தோன்றல்; பழைமைக்கும் - புதுமைக்கும் பாலமாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்தவர். தமிழ் இலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் சமதர்ம உணர்வு தழுவத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆராய்ச்சியாளர்; சங்க இலக்கியங் களைச் சாதாரணமானவர்களும் அறியும்படி செய்த தமிழறிஞர். படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல் - ஆரவாரத்தை நீக்கி அடக்கமாக வாழ்ந்து - மக்களுக்காக எழுதவேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சிக் காலத்திற்கு ஏற்பத் தம்மைப் பொருத்திக் கொண்டவர். தொல்காப்பியர் கலத்தில் தமிழன் முதல்பரதி- பரதிதாசன் கலத்தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த கடகம் என்னும் அழகிய சிற்றூரில் வீரபத்திர மலையமான் என்னும் சைவப் பெருநிலக் கிழாரின் பேரனாகவும் சாமிநாத மலையமான் - கமலாம்மாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின் செல்வ மகனாகவும் - சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16 ஆம் நாளில் (1.12.1900) சாமி சிதம்பரனார் பிறந்தார். கிராமப் பள்ளிகளிலும், மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். தஞ்சையில் தமிழ்ப்பெரும் புலவராக விளங்கிய கரந்தைக்கவியரசு ஆர்.வெங்கடாசலம் பிள்ள அவர்களிடம் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் மாணவராக இருந்து கல்வி கற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத்தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். முறையாகப் பயின்று 1923-ஆம் ஆண்டில் பண்டிதர்ப் பட்டம், வித்வான் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டுக் காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப்பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உட்பட எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் தமிழ் ஐயாக்களுக்கு நன்மதிப்புக் கிடைப்பது அரிது. ஆனால் சிதம்பரனாரோ, மாணவர்களுக்கு நூல்கள் பல எழுதியும் புதுமுறையில் அவர் களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நன்மதிப்புக்கிலக் காகினார். இலக்கணத்தை எளிய இனிய முறையில் கற்பித்தார். சீர்திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார். பள்ளியில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரே ஆவார். பெரியார் ஈ.வெ.ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு குடியரசு எழுத்தாளரானார். பெரியார் முதன் முதலாக மலாயா சென்றபோது சாமி சிதம்பரனாரும் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப்பட்ட அக்காலத்தில் - சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமிசிதம்பரனார் கும்பகோணத்தில் பிரபல நீதிக்கட்சிக்காரராக விளங்கிய திரு.ஏ.குப்புசாமிப் பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை, சமூகத்தையும், சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சாமி சிதம்பரனார் இளமையிலேயே - பள்ளி மாணவராக இருந்த காலத்திலேயே - எதையும் புரிந்துகொண்டு எளிமையாக விளக்கி எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். தமது 21-ஆம் வயதிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல் வடிவத்தில் வெளிவராமல், எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிநயம் வாய்ந்தவை. 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சேரும். பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாடப் புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் 1934,35, 36 ஆகிய ஆண்டுகளில் பாடப் புத்தகமாக வைத்தது. பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக - மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும், முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவர் 41ஆம் வயதிலேயே ஆசிரியர் பணியி லிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு தாம் விரும்பிய முழு நேர எழுத்துத்துறையில் ஈடுபட்டார். சாமி சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர். முதலில் தமிழ்ப் பண்டிதர், நீதிக் கட்சிக்காரர், தீவிர சுயமரியாதைக்காரர்; திராவிடக் கழகக்காரர். அதன் பின்னர் காங்கிரகாரர்; சமதர்மவாதி; 1949,50-இல் பொது உடைமை இயக்கம் நெருப்புக் குளியலுக்கு ஆளானபோது அதனிடம் நட்புப் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர். விட்ட இடத்தில் தொடுவதைப் போல,. தமிழ்ப் புலவராக வாழ்க்கையைத் தொடங்கிய சாமி சிதம்பரனார் 1948-இல் சென்னைக்கு வந்து பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத்துடன் விளக்கும் சங்க இலக்கியங்களின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் சாமி சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தாம் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன - இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஆகிய வற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தொடக்ககால முதலே குறிப்பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றி உள்ளார். சென்னை மகாஜன சபை சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலைவராக விளங்கினார். சாமி சிதம்பரனார் 1948-லிருந்து 1961 வரை உள்ள காலத்தில் இலக்கியத் துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. தமிழகத்தின் மிகச் சிறந்த புலவர்களான கம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பெரும் புலவர்களின் படைப்புக்களையும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆகியவற்றையும், சீத்தலைச் சாத்தனாரின் செந்தமிழ்க் காப்பியமான மணிமேகலையையும், குறுந்தொகைப் பெருஞ் செல்வம், நற்றிணைக் காட்சிகள், பழமொழி நானூறு, புகழேந்தியின் புலமை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் பொருள்விளக்கம், இவைபோன்ற சாமி சிதம்பரனார் எழுதிய நூல்களைவிட அவர் எழுத நினைத்த நூல்கள் ஏராளம், ஏராளம். இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும், உணர்ந்து கற்றுப் பயன்பெறத்தக்க வகையில் தமக்கே உரிய எளிய இனிய நடையில் அவற்றின் அடிப்படையை ஆய்ந்து தமிழகத்திற்கு அறிவித்துள்ளார். சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர். சாமி சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள் ஆய்வுக் கண்ணோட்டம் உடையனவாய் விளங்குகின்றன. சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர்களே சிறந்த நூல்களை ஆக்க முடியும். அத்தகைய நேரமும், வசதியும் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார் தம் வாழ்நாளில் பெற்று இருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள்நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதி வெளியிட்டு உள்ளார்கள். அதுதவிர, மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பன்னிரண்டாயிரம் பாடல்கள் உடைய கம்பராமாயணத்தி லிருந்து, இலக்கியத்தரம் அதிகம் வாய்ந்த நாலாயிரம் (4000) பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஆறு காண்டங்களும் கொண்ட கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளார். 1924 முதல் 1940 வரை பதினாறு ஆண்டுகள் தமிழாசிரிய ராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும், 1924 முதல் 1948 வரை இருபத்து நான்கு ஆண்டுகள் அரசியல் சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவு களிலும் பணியாற்றியும் வந்த சாமி சிதம்பரனார் 1948-க்குப் பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர், தமிழ்முரசு நாளேட்டின் மூன்று பகுதிகளுக்கு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடையறாமல் எழுதி அனுப்பி வந்தார். பாராட்டுதல்கள் குவிந்தன. இவரது புகழும் பெருமையும் பரவின. இதனால் இன்பமும் மனநிறைவும் பெற்று மெய்மறந்து உழைத்தார். இப்பணிதான் பிற்காலத்தில் தமக்கு நிலையான புகழ் தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். தமிழ்ப் பெரும்புலவர் - தமிழ் ஆராய்ச்சியாளர், தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் - தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் - தமிழ்ப் பாவலர், இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய சாமி சிதம்பரனார் அவர்கள் 17.01.1961-இல் இயற்கை எய்தினார். தமிழ்ப் பேரறிஞர் சீர்திருத்தச் செம்மல் சாமிசிதம்பரனார் புகழ் வாழ்க! வாழ்க! ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்.