சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 13 தேவாரத் திருமொழிகள் ஆழ்வார்கள் அருள்மொழி ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 13 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 280 = 288 படிகள் : 1000 விலை : உரு. 180/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை தேவாரத் திருமொழிகள் முன்னுரை 3 1. திருஞானசம்பந்தர் 7 2. உலகம் வாழ்க 12 3. சம்பந்தர் கண்ட இயற்கைக் காட்சிகள் 16 4. வேளாளர் யார்? 21 5. இன்புறும் வழி 25 6. அன்புக்குள் ஆண்டவன் 29 7. நெஞ்சமும் நிலமும் 33 8. இன்பமே இறைவன் 37 9. திருநாவுக்கரசர் 42 10. ஆண்டானும் அடிமையும் 48 11. அறநெறியே அருள்நெறி 52 12. அன்பினால் இன்பம் 56 13. அன்பும் அறிவும் 60 14. இறை அருளே இன்பம் 64 15. எல்லாம் ஒன்றே 68 16. கலைகளின் பெருமை 72 17. எது வந்தால் என்ன? 76 18. பேச்சால் பயன் இல்லை 80 19. நல்ல கதி ஒரு தான்யம் 83 20. அமைதிக்கு வழி 87 21. நீதியிலே நிலைத்து வாழ்க 91 22. சுந்தரமூர்த்தி நாயனார் 95 23. இன்சுவைக் கவிதைகள் 99 24. தம்பிரான் தோழர் 104 25. எல்லாம் அவன் செயல் 109 26. உலகியல் உணர்ந்த உத்தமர் 114 27. நம்பினார் கெடுவதில்லை 119 28. மந்திர சக்தியின் மாண்பு 124 29. புலவர்களுக்கு அறிவுரை 129 ஆழ்வார்கள் அருள்மொழி முன்னுரை 137 1. பெரியாழ்வார் 141 1. குழந்தைக்குப் பெயர் வைத்தல் 143 2. தாயின் தியாகம் 148 3. குழந்தைக் குறும்பு 153 4. கூட்டுறவால் குணம் 157 2. ஆண்டாள் 161 5. நல்லவர் குறிக்கோள் 163 6. பெண்கள்பால் அன்பு 167 7. அருளும் அன்பும் 171 8. காமனைப் பணிந்த கன்னியர் 175 3. குலசேகர ஆழ்வார் 180 9. மலைநாட்டுப் பெருமாள் 182 10. குடும்பத்திலே குதூகலம் 184 11. குழந்தைக் குணங்கள் 188 12. அன்புக்கு உவமைகள் 192 4. திருமழிசை ஆழ்வார் 196 13. உண்மை உணர்வின் பயன் 198 14. அருள் உள்ளம் 201 5. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் 205 15. மாசற்ற மனம் 207 16. சாதிகள் அழியும் 211 6. திருமங்கை ஆழ்வார் 215 17. மங்கை மன்னன் தமிழ் 217 18. கூறையும் சோறும் 221 7. முதலாழ்வார்கள் 225 19. நல்வாழ்க்கை 227 20. தமிழும் தமிழரும் 231 21. நல்லோர்க்கு எல்லாம் ஒன்றே 235 22. அழியாத உண்மை 239 8. நம்மாழ்வார் 244 23. தூயமனத்தோர் தொழில் 246 24. அன்பர்கள் அனைவரும் ஒன்றே 251 25. நினைப்பு ஒன்றே 255 26. மனிதரைப் பாடேன் 258 27. அரச வாழ்வும் நிலையல்ல 262 28. அன்பும் காதலும் ஒன்றே 266 29. அருள் நோக்கி அழுதல் 269 30. நாரை விடு தூது 273 தேவாரத் திருமொழிகள் (1959) முன்னுரை தேவாரத் திருமொழிகள் என்னும் இப்புத்தகம் அருள் நெறித் தொடரின் இரண்டாவது பகுதியாக வெளி வருகிறது. இந்நூலில் உள்ள கட்டுரைகள், சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகை ஞாயிறு இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. மெய்கண்டான் என்னும் பெயரில் நான் எழுதி வந்தவை. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கொஞ்சம் கூட்டல், கழித்தல், அடித்தல், திருத்தல் பெற்றவை. தேவாரம் என்றால் தெய்வ பக்தி என்று பொருள். தே-தெய்வம்; வாரம் - அன்பு. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று நாயன்மார்களின் பாடல்களின் தொகுதிக்குத் தேவாரம் என்று பெயர். இதை அடங்கல்முறை என்றும் கூறுவர். தேவாரத் தொகுப்பு ஏற்பட்ட காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி. தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பவர். அவர் காலத்து வாழ்ந்த சோழ மன்னன் அபயகுல சேகரன் என்பவன். சோழ மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி, நம்பியாண்டார் நம்பி, அவர் காலத்தில் வழங்கிய சைவ சமய பக்திப் பாடல்களையெல்லாம் பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். திருஞானசம்பந்தர் பாடல்களை முதல் மூன்று திருமுறை களாகவும் திருநாவுக்கரசர் பாடல்களை இரண்டாவது மூன்று திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி பாடல்களை ஒரு திருமுறை யாகவும் வைத்துத் தேவாரத்தைத் தொகுத்தார். தேவாரத் தொகுப்பில் இவ்வகையில் ஏழு திருமுறைகள் அடங்கியிருக் கின்றன. மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் இரண்டையும் எட்டாம் திருமுறையாக வைத்தார். திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், நம்பி காடவநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதர், புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பது அடியார்கள் பாடிய பதிகங்கள் இருபத்தெட்டு: இவர்களுள் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்று; இவைகளை ஒன்பதாம் திருமுறை என்னும் தொகுதியாகச் செய்து அமைத்தார். திருமூலநாயனாரின் திருமந்திரம் என்னும் நூலைப் பத்தாம் திருமுறையாக வைத்தார். திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடனார், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் ஆகியோர் பாடல்களையும், நம்பியாண்டார் நம்பி தாமே பாடிய பத்துப் பிரபந்தங்களையும் தொகுத்துப் பதினோராந் திருமுறை யாக்கினார். இவைகள் நம்பியாண்டரால் தொகுக்கப்பட்ட பதினொரு திருமுறைகள். பிற்காலத்தினர், பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தோன்றிய பெரிய புராணத்தைப் பன்னிரண்டாந் திருமுறையாகக் கொண்டனர். ஆகவே, இன்று சைவ சமய பக்தி நூல்கள் பன்னிரண்டு திருமுறைகளாக விளங்குகின்றன. தமிழிலே சைவ சமய பக்தி நூல்கள்தாம் ஏராளமாக இருக்கின்றன. சைவத்தின் பன்னிரு திருமுறைகளே இவ்வுண்மையை விளக்கும். வைணவ சமய பக்தி நூல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று ஒரு தொகுப்பில் அடங்கிவிட்டன. திருமுறைகள் காலத்திற்குப் பின்னும், திவ்யப் பிரபந்த காலத்திற்கு பின்னும் பக்தியைப் போதிக்கும் சைவ, வைணவப் பாடல்கள் எவ்வளவோ பிறந்திருக்கின்றன. ஆயினும் கணக்குப் பார்த்தால் சிவபக்தியை ஊட்டும் பாடல்களே - நுல்களே - எண்ணிக்கையில் அதிகம். இவ்வாறு, சைவ சமய சம்பந்தமான நூல்களே தமிழில் மிகுந்திருப்பதனால், சைவ சமயப் பற்றுள்ள புலவர்களிலே பலர் சைவத்தையும் தமிழையும் இணைத்தே பேசுகின்றனர். சைவம் இன்றேல் தமிழ் இல்லை; சைவமும் தமிழும் ஒன்றே என்று கூறுகின்றனர். திருமுறைகள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எல்லாவற்றிலும் சிவபெருமானைப் போற்றும் நூல்களே ஊராளம். இவைகளிலே பல நூல்கள், சிறந்த இலக்கியச் சுவையுடன் விளங்குகின்றன என்பதையும் எவரும் மறுக்க முடியாத. ஆதலால், சைவந்தான் தமிழை வளர்த்தது; சைவம் இன்றேல் தமிழ் வளர்ச்சியில்லை; தமிழ் இல்லை என்று சைவப் புலவர்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்வதற்கு உரிமையுண்டு. அவ்வுரிமையைத் தமிழன்பர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில் தவறில்லை. இப்புத்தகம் முதல் எட்டுத் திருமுறைகளாகிய தேவாரப் பாடல்களைப் பற்றியதேயாகும். தேவாரப் பாடல்களின் ஆசிரியர்களாகிய, சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் சிறந்த கருத்துக்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுவதே இந்நூலில் உள்ள கட்டுரைகளின் நோக்கம். தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரும், தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். ஒழுக்கமும், பக்தியும் மனித வாழ்க்கையை உயர்த்தும் என்று நம்பினார்கள். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று விரும்பினார்கள். மக்கள் அனைவரும், உண்மை நெறியிலே ஒழுக வேண்டும்; மக்களை மக்கள் வெறுக்கும் செய்கை ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். கடவுள் ஒன்றே என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கடவுள் ஒன்று என்ற நம்பிக்கை மக்களிடம் பரவினால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்; ஒன்றுபட்டு வாழ்வார்கள் என்பது நாயன்மார் களின் நம்பிக்கை. இவ்வுண்மைகள் தேவாரப் பாடல்களைக் கொண்டே இந்நூலில் எடுத்துக்காட்டப் பட்டிருக்கின்றன. தேவார ஆசிரியர்களிடம் மொழி வெறுப்பில்லை: சாதி, இன வெறுப்பில்லை. தேவார ஆசிரியர்கள் தமிழையும், வட மொழியையும் கற்றவர்கள் என்ற உண்மைகளையும் இந்நூல் கட்டுரைகளில் காணலாம். தேவாரம் பக்தி நூல்தான் - சைவ சமயத்தைப் போற்றும் நூல்தான் - பிற சமய வெறுப்பும் ஓரளவு அமைந்த நூல்தான்; ஆயினும் சிறந்த தமிழ் இலக்கியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. புலவர்கள் போற்றும் இலக்கியச் சுவையுடன் விளங்கும் சிறந்த பாடல்கள் தேவாரத்திலே அமைந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவாரம் பெருந்துணை செய்திருக் கின்றது. இவ்வுண்மையைத் தமிழர்கள் மறக்க முடியாது. இந்நூல் கட்டுரைகளைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். சென்னை, 1-12-1960 சாமி.சிதம்பரன் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே பிறந்தவர். அவர் பிறந்த காலத்தில் தமிழகம் எங்கும் சமண மதம் பரவியிருந் தது. தமிழ்நாட்டு மன்னர்கள் பலர் சமண மதத்துக்கு ஆதர வளித்து வந்தனர். இதனால், சைவம், வைணவம் முதலிய புரா தன மதங்கள் தமிழகத்தில் தலை தூக்க முடியாமல் முடங்கிக் கிடந்தன. இம்மதங்களைச் சார்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டுக் கிடந்தனர். இந்தக் காலத்திலேதான் திருஞானசம்பந்தர் பிறந்தார். இவர் பிறந்த திருப்பதி சீகாழி: பிராமண குலம்; தந்தையார் சிவ பக்தர்; அவர் பெயர் சிவபாத இருதயர். தாயார் பகவதியார். இவர் ஏன் பிறந்தார் என்பதைப் பற்றிப் பெரிய புராண ஆசிரியர் அழகாகக் கூறுகின்றார். சிவனடியார்களின் உள்ளங்களிலே களிப்பு நிரம்பி வழியும்படி - பரிசுத்தமான திருநீற்றை அணியும் சைவ நெறி எட்டுத் திசைகளிலும் தடையின்றிப் பரவ - ஏழுலகங்களும் மகிழ்ச்சியடைய - அந்தணர்கள் செய்யும் வேத வேள்விகள் சிறந்தோங்க - சிறந்த தமிழ்த்தாய் புரிந்த தவம் பயன்பெற - பெரிய தவசிகள் தங்கள் தவத்தின் பயனை அடைய ஞான சம்பந்தர் அவதரித்தார். தொண்டர் மனம் களிசிறப்பத், தூய திரு நீற்றின் நெறி எண் திசையும் தனி நடப்ப, ஏழ் உலகும் களிதூங்க, அண்டர் குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக, வண் தமிழ்செய் தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப என்ற பெரிய புராணப் பாடலால் இதைக் காணலாம். திருஞான சம்பந்தர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் பதினாறு ஆண்டுகள்தாம். இந்தப் பதினாறு ஆண்டுகளிலே இவர் தமிழுக் கும், தமிழகத்துக்கும், சைவத்துக்கும், பக்தி மார்க்கத்திற்கும் செய்திருக்கும் பணிகள் அளவற்றவை. சம்பந்தர் பாடல்கள் இலக்கியச் சுவை மிகுந்தவை: பழந்தமிழர் பண்பாட்டின்வழியே பிறந்தவை. நல்ல கற்பனை களையும், இயற்கைக் காட்சிகளையும் இவருடைய பாடல் களிலே மிகுதியாகக் காணலாம்: சம்பந்தர் உற்சாகமும், உடல் உரமும் குன்றாத இளமைப் பருவத்தினர். அவருடைய இளம் பருவ மிடுக்கை அவருடைய பாடல்களிலே காணலாம். அவர் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் தன்னுடைய பெயரை முத்திரையாக வைத்துப் பாடியிருக்கின்றார். அவர் தன்னைத் தானே நற்றமிழ் ஞானசம்பந்தன் என்பன போன்ற அடைமொழிகளோடு இணைத்துப் பாடுகின்றார். இது தன் செய்யுள், சிறந்த செந்தமிழ்க் கவிதை, என்ற தன்னம்பிக்கை அவரிடம் குடிகொண்டிருந்ததைக் காட்டும். திருப்பிரம்மபுரப் பதிகமே சம்பந்தர் பாடிய முதல் பதிகம். இது அவருடைய மூன்றாம் வயதில் பாடியதாகக் கூறப்படு கின்றது. இப் பதிகத்தின் முதல் பாட்டு தோடுடைய செவியன் என்று தொடங்குகின்றது. இப்பாட்டு சிவபெருமான் மேல் காதல் கொண்ட தலைவி ஒருத்தி, அவன் திருவுருவைக் குறித்துப் பாடுவது போல் அமைந்திருக்கும் பாட்டு. இது தலைவியின் காதலை வெளியிடும் அகப்பொருள் பாடலாகும். இப் பதிகப் பாடல்கள் அனைத்தும் தலைவி கூற்றாகவே அமைந்திருக் கின்றன. சம்பந்தர் தமது மூன்றாவது வயதிலேயே இத்தகைய அகப்பொருள் சுவை அமைந்த பாடலைப் பாடியிருப்பது வியப்புக்குரியதுதான்: அவர் பாடிய முதல் கவியிலே அமைந் திருக்கும் பொருள் இனிமையைக் காண்போம். காதணியைப் பூண்டவன்: காளையின்மேல் ஏறிக் காட்சி அளிப்பவன்; ஒப்பற்ற தூய்மையான வெண் பிறையைச் சூடி யிருப்பவன்: சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு நிற்பவன்: இவனே என் உள்ளத்தைக் கவர்ந்த கள்ளக் காதலன். இவன் யார் என்றால், இதழ்களையுடைய மலர்களால் முன்னாளில் அவனைப் பணிந்து போற்றும்படி அருள் செய்தவன், பெருமையுள்ள பிரமபுரம் என்னும் சீகாழியில் அமர்ந்திருக்கும் தலைவன்: இவன்தான் என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன். தோடுஉடைய செவியன், விடைஏறி, ஓர் தூவெண் மதி சூடிக் காடுஉடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்; ஏடு உடைய மலரால் முனம் நான் பணிந்து ஏத்த அருள் செய்த பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றோ. இதுவே தமது மூன்றாவது வயதில் சம்பந்தர் பாடியதாகக் கூறப்படும் செந்தமிழ்ப் பாடல். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலின் பகுதி கீழ் வருவது. கங்கை நீர் நிரம்பியிருக்கின்ற நீண்ட மெல்லிய சடையிலே நிலவொளி வீசும் வெண்பிறைச் சந்திரன் ஒன்றைச் சூடிக் கொண்டு நின்றான்; அவனே, நான் அணிந்திருக்கின்ற அழகமைந்த பல வெண்மையான வளையல்களும் தாமே கழன்று விழும்படி என் உள்ளத்தைக் கவர்ந்தான்; என் உடம்பை இளைக்கும்படி செய்தான். நீர் பரந்த நிமிர்புன் சடைமேல் ஓர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன் இது பிரமபுரப் பதிகத்து மூன்றாம் பாட்டின் முதல் இரண்டு அடிகள். காதலன் காதலிகளுக்குள் நிகழும் அன்பே பிரிக்க முடி யாத பேரன்பு என்பது முன்னோர் கருத்து. பக்தி மார்க்கத்திலும் இவ்வுண்மை ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆதலால் பக்தர்கள் தாம் போற்றிய கடவுளைக் காதலனாகவும், தம்மைக் காதலி யாகவும் வைத்துப் பாடினர். இது பழந்தமிழர் பண்பாடு. இந்தப் பண்பாட்டைச் சம்பந்தரிடம் காண்கின்றோம். அவருடைய பாடல்களிலே பல, நாயகன் நாயகி பாவத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தரைச் சைவர்கள் முருகன் அவதாரமாகக் கருது கின்றனர். சம்பந்தரைச் சேக்கிழார், முத்தமிழ்விரகர் என்று அழைக்கிறார். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் சம்பந்தர் தேர்ச்சியுள்ளவர் என்பதே இதன் பொருள். சம்பந்தர் சமணர்களையும், புத்தர்களையும் வசை பேசு வதிலே வல்லவர்; அவர் காலத்தில், சமணர்களும், புத்தர்களும் தாங்கள் போதித்த அறநெறிக்கு மாறான ஒழுக்கங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களை வெறுத்துப் பாடியிருக்கின்றார். சம்பந்தருக்குச் சமணர்கள் கொடுத்த தொல்லைகள் பல. அவைகளையெல்லாம் அவர் பொருட்படுத்தவே யில்லை. எதிரிகள் அவருக்குச் செய்ய நினைத்த தீமைகளை அவர்களே அனுபவித்தனர். அவர் தம் எதிரிகளுக்குச் சிறிதும் அஞ்சவே யில்லை. சம்பந்தருடைய அஞ்சாத தன்மையை அவருடைய அருந்தமிழ்ப் பாடல்களே காட்டுகின்றன. சம்பந்தர் பாடல்கள் அழகும் கம்பீரமும் அமைந்தவை: தமிழ்ச் சொற்களுடன் வட சொற்களும் கலந்து ஓசை நயம் பெற்று உலவுகின்றன. சம்பந்தர் வேதங்களையும், வேதாகம நெறிகளையும் பாராட்டிப் பாடியிருக்கின்றார். வேத வேள்விகளை நிந்தனை செய்வோரை அறிவிலிகள் என்று இகழ்ந்து பேசுகின்றார். அவர் வட மொழியிலேயும் வல்லுநர் என்பதை அவருடைய பாடல் கள் காட்டுகின்றன. தமிழும் வட மொழியும் ஒத்த பெருமை யுடையன. சமமானவை; என்பதே சம்பந்தர் கருத்தாகும். வடமொழி, தென்மொழி, வடநாடு, தென்னாடு என்ற பேத உணர்ச்சியற்றவர் திருஞானசம்பந்தர். சம்பந்தர் செய்த அற்புதங்கள் பல; அவற்றுள், அவர் சமணர்களுடன் - கல்வி கேள்விகளிலே நிரம்பிய சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றது குறிப்பிடத்தக்கது. சமண மதத்தவனாக மாறியிருந்த பாண்டிய மன்னனைச் சைவனாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க சம்பந்தர் பிறந்தார். இதற்காகவே தேவாரத் தமிழ் அமுதத்தைச் சொரிந்தார். பதினாறு வயதுக்குள் பெரும புலமை பெற்று விளங்கினார். அசையாத சைவப் பற்றுள்ளவராயிருந்தார்; அவருடைய பாடல்களிலே பல உண்மைகள் பொதிந்து கிடக் கின்றன. மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் அறநெறிகள் பலவற்றை அவருடைய பாடல்களிலே காணலாம். திருஞானசம்பந்தர் செந்தமிழும் சைவமும் தழைத் தோங்கச் செய்தவர்; தமிழ் நாட்டிலே தோன்றிய ஒரு ஞானச் சுடர். இந்த உண்மையை எவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். உலகம் வாழ்க தமிழர் பரந்த உள்ளம் படைத்தவர்கள்; அன்பு காட்டு கின்ற அனைவருடனும் நெருங்கிப் பழகுவார்கள்; அன்பு காட்டு வோர் வேறு இனத்தவராயினும் சரி, வேறு மொழியினராயினும் சரி, வேறு மதத்தவராயினும் சரி, வேறு நாட்டவராயினும் சரி அவர்களுடன் ஒன்று கலந்து உறவாடுவார்கள். அன்பர்களுடன் ஒன்றாகக் கலந்து உறவாடுவதிலே தமிழருக்கு நிகர் தமிழரேதான். இப்பண்பு காரணமாகத்தான் தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் வாழமுடிகின்றது. இவ்வுலகின் தமிழன் சென்று வாழாத பகுதியே இல்லை என்று சொல்லிவிடலாம். எல்லோருடனும் கலந்து பழகும் பண்பு எல்லா இனத்தி னர்க்கும் வந்துவிடாது; பண்பட்ட பழைய நாகரிகமும் பண் பாடும் உள்ளவர்களிடந்தான் இத்தன்மையைக் காணமுடியும். உலகம் ஒன்று: உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்; ஆதலால் யாருடனும் பகைமை பாராட் டக்கூடாது; யாரையும் வெறுக்கக்கூடாது; இவ்வுலகில் உள்ள எல்லா ஊர்களையும் நமது ஊர்களாகவே எண்ண வேண்டும்; இவ்வுலகில் உள்ள எல்லா மக்களையும் நமது உறவினராகவே நினைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையைக் கொண் டவர்கள் தமிழர்கள். இக்கொள்கை - இப்பண்பு - இவ்வுயர்ந்த தன்மை தமிழர் களிடம் இன்று அல்லது நேற்றுப் பிறந்தது அன்று. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தது. இக்கொள்கையை - இப்பண்பை - தமிழர்கள் இன்றும் கைவிட்டு விடவில்லை; மறந்து விடவில்லை. தமிழர்களிடம் எல்லோருடனும் உறவினர்போல ஒத்துப் பழகும் பண்பு இருப்பதனால் தான், அவர்கள் சென்ற இடங் களில் எல்லாம் சிறப்புடன் வாழ்கின்றனர். மற்ற இன, மத, மொழியினருடன் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். இந்த நிலைமை இன்றும் நாம் கண்கூடாகக் காணுகின்றோம். தமிழர்கள், தாம் சென்று குடியேறிய நாடுகளில், அந் நாட்டு மக்களுடன் எவ்வாறு ஒத்து வாழுகின்றார்களோ, அவ்வாறே தமிழகத்தில் வந்து குடியேறிய மக்களுடனும் ஒத்து வாழுகின்றனர். தமிழகத்திலே குடியேறிய வேற்று இனத்தினரில் எத்தனையோ பேர் தமிழர்களாகவே மாறிவிட்டனர். வேற்று மொழியினரில் எவ்வளவோ பேர் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு விட்டனர். வேற்று மொழியினர் என்று பிரித்துக் காணமுடியாமல் தமிழரோடு தமிழராகக் கலந்தவர்களின் தொகையைக் ..க்கிட்டுச் சொல்லிவிட முடியாது. தமிழர்களிடம் இருக்கும் பண்பே இவ்வாறு வேற்றாரைத் தம்மோடு சேரும்படி செய்துவிட்டது. தமிழர்களிடம் உள்ள தனிச் சிறப்பிலே இது ஒன்று. தமிழர்களின் இப்பண்பாட்டைப் பழைய இலக்கியங் களிலே காணலாம். சங்க இலக்கியப் பாடல்கள் இப்பண்பைப் பாராட்டிக் கூறியிருக்கின்றன. தமிழர்கள் பல நாட்டினருடனும், பல மொழியினருடனும், பல மதத்தினருடனும் ஒத்து வாழ்ந்த வாழ்வைச் சங்க இலக்கியங்களில் சிறப்பாகக் காணலாம். பிற்காலத்துச் சான்றோர்களும், இப்பண்பாட்டைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். உலகம்துன்பம் இன்றி இன்புற்று வாழவேண்டும் என்று பாடியிருக்கின்றனர். திருஞான சம்பந்த நாயனாரின் ஒரு செய்யுளே இதற்குப் போதுமான சாட்சியாகும். வாழ்க அந்தணர்; வானவர் ஆனினம்; வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக; ஆழ்க தீயதெல்லாம்; அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே. இதுவே அப்பாடல். தேவாரம் படித்தோர் அனைவரும் இப்பாடலை அறிவார்கள்; சைவர்கள் - சைவமதப் பற்றுள்ள வர்கள் அனைவரும் இப்பாடலை உள்ளம் உருகிப் பாடுவார்கள். தமிழர்களின் உயர்ந்த உள்ளத்தை எடுத்துக் காட்டுவதற்கு - ஒப்பற்ற பண்பாட்டை விளக்குவதற்கு இந்தப் பாடலே போது மானதாகும். வாழ்க அந்தணர் என்று முதலிலே அந்தணருக்கு வாழ்த்து. எல்லா உயிர்களிடமும் இரக்கம் காட்டுவோர் அந்தணர்கள். எல்லா உயிரும் இன்புற்று வாழப் பணிபுரிவோர் அந்தணர்கள். இத்தகைய அந்தணர்களே மனித சமூக வாழ்வுக்கு வழிகாட்டிகள். ஆகையால் அவர்கள் நன்றாக வாழ வேண்டும். வானவர் வாழ்க என்று அடுத்தபடி கூறினார். வானவர் என்றால் உயர்ந்தவர்கள்; உயர்ந்த பண்புள்ளவர்கள்; மக்களைக் காப்பாற்றும் வல்லமை படைத்தவர்கள்; இத்தகையவர்கள் நன்றாக வாழ்ந்தால்தான் மனித சமூகம் உயர்வடைய முடியும். அடுத்தபடி ஆனினம் - அதாவது பசு மந்தையை வாழ்த் தினார். மக்கள் வாழ்வுக்குப் பலவகையிலும் உதவி செய்வது பசு மந்தை; பசும் பால் சிறந்த உணவாக இருப்பதைக் காண்கின் றோம். உலகம் எங்கும் பசுக்கள் மக்கள் நன்மைக்காகப் பாதுகாக் கப்படுவதைக் காண்கின்றோம். மனித சமூக நன்மைக்குப் பசுக்கள் இன்றியமையாத சாதனம் என்பதை மறுப்பார் இல்லை. ஆதலால்தான் பசுக் கூட்டங்கள் வாழ்க என்று கூறினார். அடுத்தபடியாக, வீழ்க தண்புனல் என்று சொல்லி மழை வளம் குறையக்கூடாது என்று வேண்டுகின்றார். மழை வளம் குறைந்தால் தான் நாட்டிலே பஞ்சம் தாண்டவமாடும்; மழை யில்லாவிட்டால், உலகிலே எந்த உயிரும் வாழ முடியாது. ஆகை யால்தான் போதுமான மழை பெய்க; பருவமழை தவறாமல் பெய்க என்று கூறினார். அடுத்தபடி வேந்தனும் ஓங்குக என்று அரசனுக்கு வாழ்த்து கூறினார். நாட்டிலே எவ்வளவுதான் செல்வம் செழித் திருந்தாலும் அரசாட்சி நல்ல நிலையிலே இல்லாவிட்டால் அந்த நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ முடியாது. பண்டைக் காலத்தில் அரசாட்சியின் தலைவன் அரசன். ஆதலால் அரசன் சிறந்து வாழ்ந்து செங்கோல் செலுத்துக என்றார். அடுத்தபடி ஆழ்க தீயதெல்லாம் என்றார். தீமையானது என்று சொல்லத் தக்கது எதுவானாலும் சரி, அது முழுவதும் ஒழிந்துபோக வேண்டும். உலகில் எத்தகைய தீமையும் உலவக் கூடாது; தீமைகளால் மக்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள்; ஒழுக்கக்கேடு உள்ளவர்களாகி விடுவார்கள். ஆகையால் தீமை முழுவதும் அடியோடு தொலைந்து போகட்டும் என்றார். அடுத்தபடி அரன் நாமமே சூழ்க என்றார். அரன் என்றால் சுகத்தைத் தருகின்றவன் என்று பொருள். சுகத்தைத் தருபவனாகிய இறைவனுடைய பெயர் உலகமெங்கும் சூழ்க; நிலவுக என்று கூறுவதிலே எத்தகைய தவறும் இல்லை. நல்லவர் பெயர் உலகமெல்லாம் பரவினால் நன்மைதான் ஏற்படும். ஆகையால்தான் அரன் பெயர் - சிவபெருமான் பெயர் - உலக மெல்லாம் சூழ்க என்று கூறினார். அடுத்தபடி இச்செய்யுளின் இறுதியிலே உள்ள வைய கமும் துயர்தீர்க்கவே என்ற அடிதான் மிகச் சிறந்த தொடர். தமிழர் பழம் பண்பாட்டை அப்படியே எடுத்துக்காட்டும் தொடர். உலகமெல்லாம் ஒன்று என்று எண்ணும் தமிழருடைய பெருந் தன்மையை எடுத்துக் காட்டும் தொடர். உலகம் துன்பம் அற்று இன்பத்துடன் வாழ்க என்பதே இத்தொடரின் கருத்து. அந்தணர், வானவர், பசுக்கள் இவர்கள் வாழ்வு உலகிற்கு நன்மை தருவது; மழை பெய்தால் தான் மாநிலம் வாழ முடியும். நல்ல அரசாட்சி இருந்தால்தான் உலகில் அமைதி நிலவும்; தீமையெல்லாம் ஒழிய வேண்டும்; இன்பந் தரும் இறைவன் பெயர் உலகமெல்லாம் பரவவேண்டும். உலகம் துன்பந் தீர்ந்து இன்பத்துடன் வாழ வேண்டும் என்பதே திருஞான சம்பந்தர் கருத்து. பழந் தமிழர் பண்பாட்டின் சாரத்தை அப்படியே திரட்டிக் கூறிய செய்யுள் இதுவாகும். இச்சிறந்த செய்யுளின் தன்மை இன்றும் தமிழ் மக்களிடம் குடி கொண்டிருப்பதைக் காண் கிறோம். சம்பந்தர் கண்ட இயற்கைக் காட்சிகள் திருஞானசம்பந்தர் பால கவி; குழந்தைப் புலவர். அவர் தமது மூன்றாவது வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டார் என்பது வரலாறு. சிறுவர்களுக்கு இயற்கைக் காட்சிகளைக் காணுவதில் ஆவல் அதிகம். இந்த இயற்கையைச் சம்பந்தர் பாடல்களிலே காணலாம். சம்பந்தர் தான் சென்ற இடங்களில் காணும் இயற்கைக் காட்சிகளிலே குரங்குகள் அவர் உள்ளத்தைக் கவர்கின்றன. குரங்குகளின் விளையாட்டுகளைப் பார்த்து வியப்படைகின் றார். தாம் கண்ட குரங்காட்டங்களைப் பாடல்களிலே அமைத் துப் பாடுகின்றார். இன்றும் குரங்குகளின் குறும்புத்தனங்கள் குழந்தைகளின் உள்ளத்தைக் கவர்வதைக் காண்கின்றோம். அவர்கள் குரங்குகளின் விளையாடல்களைப் பார்த்துச் சுவைப் பதைக் காண்கிறோம். ஆளுடைய பிள்ளையார் என்னும் குழந் தைப் பாவலரிடம் இக்குணம் அமைந்திருப்பதில் வியப்பில்லை. சம்பந்தர், சீகாழியிலே ஒரு சோலையைப் பார்க்கின்றார். அச்சோலையிலே தேன்கதலி என்னும் வாழை மரம் உயரமாக வளர்ந்திருக்கின்றது. அதன் உச்சியில் வாழைத்தாறு பழுத்துத் தொங்குகின்றது. உயரத்தில் உள்ள அக்கனியைப் பறித்துத் தின்பதற்குப் பெண் குரங்கு ஒன்று ஆசைப்பட்டது. ஆனால், அதனால் அக்கனியைப் பறிக்க முடியவில்லை. ஆகவே அக் குரங்கு மரத்தின் அடியில் உட்கார்ந்துவிட்டது. உச்சியிலே பழுத்திருக்கும் கனியைப் பார்த்துக்கொண்ட உட்கார்ந்திருக் கின்றது. இந்தக் காட்சியைக் கண்டார் சம்பந்தர். தேன்ஆர்ந்து எழுகதலிக் கனிஉண்பான் திகழ்மந்தி மேல்நோக்கி நின்றுஇரங்கும் பொழில்வேணுபுரம் அதுவே. என்று அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுவது போல் பாடியிருக்கின்றார். சம்பந்தர் திருககுற்றாலத்துக்குச் சென்றார். இன்றும் குற்றாலத்தில் குரங்குகள் அதிகம். அவைகளின் விளையாட்டு நம் உள்ளத்தைக் கவர்வன. சம்பந்தர் அங்கே கண்ட காட்சிகளில் குரங்குகளின் காட்சிகளே முன்னிற்கின்றன. அவர்தான் கண்ட காட்சியைப் பாடினார். மலைச்சாரலிலே, தன் குட்டியுடன் வந்த அழகிய பெண் குரங்கு குலையிலே பழுத்திருக்கும் இனிய வாழைப்பழத்தை உண்ணுகின்றது. மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி குலையார் வாழைத் தீங்கனிமாந்தும் குற்றாலம் என்று பாடி மகிழ்ந்தார். திருவையாற்றைத் தரிசிக்கப் போன சம்பந்தர், அங்கேயும் குரங்குகள் செய்யும் வேடிக்கை களைப் பார்க்கத் தவறவில்லை. கோயிலை வலம் வந்த அழகிய பெண்கள் நடனம் ஆடுகின்றனர்; நடனத்துக்கு ஏற்ப மத்தள ஓசை முழங்குகின்றது; இதைக் கேட்ட சில பெண் குரங்குகள் பயந்தன. அவ்வோசையை மழை பெய்யும் மேக முழக்கமோ என்று நினைத்தன; உடனே மரத்தின்மேல் ஏறி நின்று வானத்திலே நடமாடும் மேகத்தைப் பார்த்தன. வலம்வந்த மடவார்கள் நடம்ஆட முழவு அதிர மழைஎன்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரம்ஏறி முகில்பார்க்கும் திருவை யாறே சம்பந்தர் தான் கண்ட காட்சியை இவ்வாறு கவியில் அமைத்துப் பாடிவிட்டார். இப்படியே சம்பந்தர், தான் செல்லும் இடங்களில் எல்லாம் குரங்குகளின் செயல்களைக் கண்டு வியந்து பாடிய பாடல்கள் பல. சம்பந்தரின் இச்செயல் ஒரு உண்மையை உணர்த்து கின்றது. மனிதர்களிடம், பருவத்திற்கேற்ற பண்பு மறைந்து விடாது என்பதே அவ்வுண்மை. சம்பந்தர் எவ்வளவு சிறந்த ஞானியாக இருந்தாலும், பக்தராக இருந்தாலும், அவருடைய இளமைப் பருவத்தின் இயல்பு அவரை விட்டு நீங்கவில்லை; மறைந்துவிடவில்லை. இதனைக் குரங்குகளைப்பற்றி அவர் பாடியிருப்பவைகளே வெளியிடுகின்றன. சம்பந்தர் நீர்வளம் நிறைந்த சோழ நாட்டிலே பிறந்தவர். காவிரி பாயும் நாடு சோழ நாடு. காவிரியின் நீரோட்டத்தை - வெள்ளப் பெருக்கை - அவர் அடிக்கடி கண்டு களித்தவர். அவர் அந்தக் காட்சியைத் தமது பாடல்களிலே வைத்துப் பாடாமல் விட்டுவிடவில்லை. அலைகள் பலவகையான மலர்களைச் சுமந்து வருகின்றன. காவிரி வெள்ளமானது, நல்ல மாணிக்கம், முத்து, பொன் முதலியவைகளையும் வாரிக் கொண்டு வருகின்றது. இதனால், காவிரி நீர் ஓடுகின்ற வாய்க்கால்களின் கரைகளில் எல்லாம், காவிரி வெள்ளமானது இரத்தினங்களுடன் சேர்ந்து உரசிக் கொண்டு, வாய்க்கால்களின் இருகரைகளையும் மோதிக் கொண்டு ஓடுகின்றது. இத்தகைய காட்சி பொருந்திய திருக்காட்டுப் பள்ளி திரைகள் எல்லா மலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன் வரன்றி கரைகள் எல்லாம் மணிசேர்ந்து உரிஞ்சிக் கால்பொரு காட்டுப்பள்ளி இவ்வாறு திருகாட்டுப்பள்ளிப் பதிகத்திலே காவிரியின் சிறப்பைப் பாடியிருக்கின்றார். அவர் காவிரிக்கரையில் - ஆற்றங்கரையில் - உள்ள தலங்களைப் பாடும் போதெல்லாம், நதியின் வளத்தைப் பாடாமல் விடுவதில்லை. சம்பந்தர் நீர் நிரம்பிய மலர் பூத்த தடாகங்களைக் காணும் போது, அவைகளின் இயற்கை அழகைக் கண்டு வியப்பார். குளங்களில் எல்லாம் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் மாதர்களின் முகத்து அழகைக் காட்டுகின்றன; செவ்வல்லி மலர்கள் அவர்களின் வாயின் அழகைக் காட்டுகின்றன; பூத்துப் பொலிவுடன் இருக்கும் காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கருநெய்தல் மலர்கள் மாதர்களின் கண்களின் அழகைக் காட்டுகின்றன. வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக் காவி, இருக்கும் கருங்குவளை, கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே என்று சீகாழியில் உள்ள தடாகங்களின் இயற்கை அழகைப் பாடியிருக்கின்றார். சம்பந்தர் கடற்கரைத் தலங்களைப் பற்றிப் பாடும்போது கடலின் இயற்கையைப் பற்றியும் பாடுவார். கரையிலே வெள்ளமாக வந்து உலவும் கடலிலே விளங்கு கின்ற சங்கு, வெண்மையான முத்துச் சிப்பி, இவைகள் வலிமை யான அலைகளிலே நிறைய உலவிக் கொண்டிருக்கும். கடல் அருகில் உள்ள கழிகளில் மீன்கள் புரண்டு திரியும். இத்தகைய கடற்காட்சியமைந்த திருவான்மியூர். கரைஉலாம் கடலில்பொலி சங்கம், வெள்இப்பி, வன் திரைஉலாம்; கழிமீன் உகளும் திருவான்மியூர் என்று திருவான்மியூர்ப் பதிகத்தில் பாடுகின்றார். செழிப்பான வளம் பொருந்திய மலையைக் காணும்போது அதன் இயற்கை வளத்தில் மனத்தைப் பறிகொடுக்கும் தன்மை சம்பந்தரிடம் உண்டு. இதனைத் திருக்குற்றாலப் பதிகத்தால் காணலாம். மலர் மணம் வீசும் மலை; உயர்ந்த மலைச்சாரல்; அங்கே வேங்கை மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அவைகளின் கிளைகள் நாலாப் பக்கங்களிலும் பரந்திருக்கின்றன. இத்தகைய நிழல் அடர்ந்த சோலை; இச் சோலையிலே அழகிய வண்டுகள் யாழ் போலப் பாடிக் கொண்டிருக்கின்றன; இக்காட்சியமைந்த குற்றாலம், வம்பார் குன்றம் நீடு உயர் சாரல்வளர் வேங்கைக் கொம்பு ஆர்சோலைக் கோலவண்டு யாழ்செய்யும் குற்றாலம். குற்றாலத்துக் குறத்தியர்களின் கண்களின் அழகே அழகு; அவர்கள் கண்கள் கருமையானவை; அழகுள்ளவை; நீல நிறம் பொருந்தியவை. அவர்கள் தாம் காக்கும் தினைப்புனத்தை நாடி வரும் கிளிகளை ஓட்டுகின்றனர்: தினைக்கதிர்களைத் தின்ன வரும் கிளிகளை விரட்டுகின்றனர். மலைச்சாரலில் உள்ள-குவிந்து கிடக்கின்ற - இரத்தினங்களை வாரி வீசிக் கிளிகளை ஓட்டுகின்றனர். இத்தகைய காட்சி அமைந்த குற்றாலம் மைம்மா நீலக்கண்ணியர் சாரல்மணி வாரிக் கொய்ம்மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம். இவ்வாறு இயற்கைக் காட்சிகளை வியந்து பாடும் சம்பந்தர், இயற்கைக் காட்சிகளிலும் தெய்வீக சக்தியைக் கண்டார் என்பதில் ஐயமில்லை. எங்கும் இறைவன் நிலைத்திருக்கின்றான் என்று நம்பு வோர் எதையும் வெறுக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பாராட்டுவார்கள். எல்லா இயற்கை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பார்கள். இத்தகைய பண்பை ஞானசம்பந்தரிடம் காணலாம். நல்ல இலக்கியப் பண்பு வாய்ந்தவை சம்பந்தருடைய தேவாரம். அவை, படிக்கப் படிக்க நம் உள்ளத்தை பரவசப்படுத் துவன. தமிழர் அருள் நெறிக்கு எடுத்துக்காட்டாக இருப்பன. வேளாளர் யார்? வேளாளர் என்பது இன்று ஒரு சாதிப் பெயராக வழங்குகின்றது. பண்டைக் காலத்திலே இது சாதிப் பெயராக வழங்கவில்லை. தொழிலைக் குறிக்கும் பெயராக வழங்கிவந்தது. வியாபாரி, நீதிபதி, வழக்குரைஞன், ஆசிரியர், கணக்கன், உழவாளி, நெசவாளி, என்ற பெயர்கள் தொழில் செய்பவரைக் குறிக்கும் பெயர்கள்; இவைகளில் ஒன்றுதான் வேளாளன் என்பதும். வேள் என்பது முயற்சி என்னும் பொருள் உடைய சொல். இச் சொல்லே பின்னாளில், உதவி செய்தல் என்னும் பொருளி லும் வழங்கலாயிற்று. ஆகவே வேளாளன் என்றால் முயற்சி செய்கின்றவன் உதவி செய்கின்றவன் என்ற பொருளில்தான் பழங்காலத்தில் இச்சொல் வழங்கிற்று. முயற்சி செய்கின்றவர்கள் அனைவரும் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். உதவி செய்யும் உத்தம குணம் பொருந்திய மக்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். பின்னால் இச் சொல் எப்படியோ சாதிப் பெயராக மாறி விட்டது. உழைப்பைக் கண்டு நடுங்கி வீட்டுக்குள்ளே பதுங்குகிற வர்கள்; எச்சில் கையால், காக்கையை ஓட்டத் துணியாதவர்கள்; காயம்பட்ட கைக்குச் சிறிது சுண்ணாம்பு கேட்டால்கூடக் கொடுக்கத் துணியாதவர்கள்; இவர்களெல்லாம் வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். முயற்சியையும், உதவியையும் குறிக்கும் இச்சொல்லை, அவை இல்லாதவர்களும் வைத்துக் கொண்டனர். பெருமைக் காக வைத்துக் கொண்டனர். தங்களை உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொள்ள இப்பெயரை வைத்துக் கொண்டனர். வேளாளர் என்றால், இல்லாதவருக்கு ஈயும் தன்மையுள்ள வர்கள்; முயற்சியுள்ளவர்கள்; என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தெளிவாகக் கூறியிருக்கிறார். திருஞானசம்பந்த நாயனார் காலத்தில் கூட வேளாளர்கள் என்பவர் முயற்சியுடை யவர்களாய் வாழ்ந்தவர்கள், உதவும் குணம் உள்ளவர்களாக வாழ்ந்தவர்கள் என்று தெரிகின்றது. வாள் ஆர்கண் செந்துவர் வாய் மாமலையான் தன்மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்குஇருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே என்ற ஆக்கூர் தேவாரப்பதிகம் இவ்வுண்மையைத் தெளி வாகத் தெரிவிக்கின்றது. ஆக்கூர் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிவத் திருப்பதி. இங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றி மாடம் என்று பெயர். தானே தோன்றிய மாளிகை என்பது இதன் பொருள். பார்வதியைப் பாகத்திலே கொண்டிருக்கும் சிவபெரு மான், தொன்றுதொட்டு வாழ்கின்ற கோயில் தான்தோன்றி மாடமாகும்; ஆக்கூரில் உள்ளது அந்தத் தான்தோன்றிமாடம். அந்த ஆக்கூரிலே சிறந்த வேளாளர்கள் வாழ்கின்றனர். அவ் வேளாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், அவர்கள் வள்ளல் தன்மையிலே - அதாவது இல்லாதவருக்கு உதவி செய்யும் தன்மையிலே சிறந்தவர்கள். கொடுப்பதோடு மட்டும் அவர்கள் நின்றுவிடுவதில்லை. இடையறாத முயற்சியுள்ள வர்கள். இவ்வாறு கொடையினாலும், முயற்சியினாலும் சிறந்திருக்கும் வேளாளர்கள் வாழ்கின்ற ஊர் ஆக்கூராகும். இத்தகைய ஆக்கூரிலே, தான் தோன்றி மாடத்திலே பார்வதியுடன் பரம சிவன், நீண்ட காலமாக வாழ்கின்றார். இச்செய்தியே இப்பாடலில் கூறப்படுகின்றது. இதே செய்தியை மற்றொரு பாட்டிலும் குறித்துள்ளார் சம்பந்தர். நன்மையராம் நாரணனும் நான்முகனும் காண்பரிய தொன்மையான்; தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோவில் இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார்; ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. சிவபெருமான், நல்லவர்களாகிய நாரணன், நான்முகன் ஆகியவர்களாலும் காணமுடியாதவன்; பழமையானவன்; இத்த கையவன் வாழ்கின்ற பழமையான கோயில் எதுவென்றால், அது, தான்தோன்றி மாடமாகும். வறுமையால் வாடிவந்து, பொருள் வேண்டும் என்று இரந்தவர்களுக்கு இல்லை என்னாமல் கொடுக்கின்றவர்கள்; கொடுத்து மகிழ்ச்சியடைகின்றவர்கள்; இவற்றையே தங்கள் குணமாகக் கொண்டவர்கள் வேளாளர்கள்; இவர்கள் வாழ்கின்ற ஆக்கூரில் உள்ளது அந்தத் தான்தோன்றி மாடம். அந்தத் தான்தோன்றி மாடமே சிவ பெருமான் வாழும் கோயில் ஆகும். இப் பாடலும் வேளாளர் பெருமையை விளக்கிக் காட்டு கின்றது. பண்டைக் காலத்திலே சிறந்த தொழிலாக விளங்கியது உழவுத் தொழிலாகும். உணவு இன்றேல் உலகம் வாழ முடியாது. சோற்றிலிருந்து தான் நாகரிகம் வளர்ந்தது; விஞ்ஞானம் வளர்கின்றது; தொழில்கள் வளர்ச்சியடைகின்றன. அறிவு வளர்கின்றது; இலக்கியங்கள் வளர்கின்றன; கலைகள் வளர் கின்றன. சண்டை பெருகுகின்றது. சாந்தி தழைக்கின்றது; உலகம் வாழ்வதற்கு - வளர்வதற்குச் சோறுதான் - உணவுதான் அடிப்படை. உணவின்றேல் உலகமே அழிந்து போய்விடும். இந்த உண்மையை உணர்ந்துதான் முன்னோர்கள் உழவுத் தொழில் செய்வோரை உயர்த்திப் பேசினார்கள். பண்டைக்கால வேளாளர்கள் - உபகாரிகள் முயற்சியுள்ளவர்கள் - இந்த உழவுத் தொழிலையே உயிர்த் தொழிலாகக் கொண்டிருந்தனர். இதைப் போற்றி வளர்த்து வந்தனர். இவர்கள் - உலகம் வாழ்வதற்கு அடிப்படையான தொழிலைச் செய்து வந்த இவர்கள் - வேளாளர் என்ற வர்க்க மாக அழைக்கப்பட்டனர். வேளாளர் என்ற இப்பெயர் ஒரு குலப் பெயராக வழங்காமல் - சாதிப் பெயராக வழங்காமல் - தொழில் புரிவோரைக் குறிக்கும் பெயராகவே வழங்கி வந்தது. ஆகவே வேளாளர் என்ற பெயர் ஒரு குலப் பெயராக ஆதி யில் வழங்கப்படவில்லை. பிறருக்கு உதவி செய்பவரைக் குறிக்கும் பட்டப் பெயராக வழங்கி வந்தது; முயற்சி செய்பவரைக் குறிக்கும் சிறப்புப் பெயராக வழங்கி வந்தது. வேள் பேகன், வேள் பாரி என்ற பெயர்கள் இவ்வுண் மையை விளக்குகின்றன. பேகனுக்கும், பாரிக்கும் உள்ள சிறப்புப் பெயர் வேள்; அவர்கள் உதவியையும் முயற்சியையும் குறிக்கும் பட்டப் பெயர். இப்பட்டமே வேளாளர் என்ற பெயராக வழங்கி விட்டது. இவ்வுண்மையைத் திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்களும் விளக்கி நிற்கின்றன. உதவி செய்யும் குணமும் முயற்சியும் உள்ளவர்களே சிறந்த மக்கள் என்பது திருஞான சம்பந்தர் கருத்து ஆகும். இன்புறும் வழி அறிஞர் கடமை, அனைவர்க்கும் நல்ல நெறியைக் காட்டு வதாகும். தான் பெற்ற இன்பத்தை - தான் பெறும் இன்பத்தை - மற்றவர்களும் பெறவேண்டும்; பெற்று மனங்களிக்க வேண்டும்; இவ்வுலகிலே மகிழ்ந்து வாழவேண்டும்; என்பதே அறிஞர்களின் குறிக்கோள். தமிழகத்திலே வாழ்ந்த அறிஞர்கள் - பக்தர்கள் - அடியார் கள் அனைவரும் இந்த நெறியையே பின்பற்றினர். இவ்வுண்மை யை அவர்கள் இயற்றியுள்ள இனிய செய்யுட்களிலே காணலாம். பக்தி மார்க்கத்தைப் பரப்பிய பெரியோர்களும் இவ்வுண்மையை மறந்துவிடவில்லை. அவர்களுடைய பக்திப் பாடல்களுக்கு மத்தியிலே - அன்புப் பாடல்களுக்கு இடையிலே பல அறிவுரை களையும் செருகி வைத்திருக்கின்றனர்; பக்தி நூல்களைப் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பல பாடல்களிலே நல்லஅறிவுரைகளை அமைத்துப் பாடியிருக்கின்றார். மனித சமுதாயம் துன்புறாமல் வாழ வேண்டுமென்பது அவர் கருத்து. துன்புறாமல் வாழ்வதற்கு அவர் காட்டும் வழி வேறு. எல்லாவற்றுக்கும் இறைவனே காரணம்; இறைவன் அருளில்லாமல் எதுவும் நடக்காது; நாம் செய்யும் செயல்கள் எல்லாம் அவனுடைய வல்லமையால்தான்; என்ற நம்பிக்கை யுள்ளவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். இத்தகைய உறுதியான நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றுக்கும் மனஞ்சலிக்க மாட்டார்கள். நமக்கு இறைவன் துணை உண்டு; அருள் உண்டு; அவன் துணையால் இக் காரியத்தைச் செய்து முடிப்போம்; நாம் தொடங்கிய செயல் அவன் அருளால் இனிது நிறைவேறும்; தொட்ட காரியத்தில் தோல்வி அடைய மாட்டோம்; வெற்றி பெற்று மகிழ்ச்சியடைவோம்; என்ற துணிவுடன் காரியம் செய்பவர்கள் துக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள். அவர்கள் தொட்ட காரியம் ஒருக்கால் தோல்வியடைந்து விட்டால் கூடக்கவலைப்பட மாட்டார்கள்; மனங்கலங்க மாட்டார்கள். தோல்வி அடைய வேண்டும் என்பது இறைவன் எண்ணம், என்று முடிவுகட்டி விடுவார்கள். தோல்வியைத் தன் தோளின் மேல் போட்டுக் கொள்ள மாட்டார்கள். கடவுள் தலைமேல் சுமத்திவிட்டுக் கவலையைக் குறைத்துக் கொள்ளுவார்கள். இது கடவுள் பக்தர்களின் தன்மை. எந்த முறையைப் பின்பற்றினாலும் சரி, மக்கள் அல்லல் படாமல் வாழவேண்டும் என்பதே அறிஞர்களின் ஆசை யென்பதில் ஐயம் இல்லை. அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர் நல்லதோர் நெறியினை நாடுமின்! நடமினோ! வில்லை அன்ன வாள்நுதல் வெள்வளை ஓர் பாகமாம் கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே! என்று பாடுகிறார் ஞான சம்பந்தர். இதில் மக்கள் துன்புறாமல் இன்புற்று வாழ வேண்டும் என்னும் கருத்தைத் தெரிவிப் பதைக் காணலாம். மக்களே நீங்கள் துன்பம் மிகுந்த வாழ்க்கையை விரும்ப வேண்டாம்; ஆதரிக்க வேண்டாம். துன்பம் அடையாமல் இன்பம் அடைந்து வாழக்கூடிய நல்வாழ்க்கை நெறியைத் தேடுங் கள்; அந்த நல்வாழ்க்கை நெறியைத் தேடிக் கண்டுபிடிப்பதோடு மட்டும் நின்று விடாதீர்கள்; அந்த நெறியிலே நடவுங்கள் என்று முதல் இரண்டு வரிகளிலே அறிவுரை கூறினார். இதனால் எல்லா மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே சம்பந்தர் கருத்தென்பதைக் கண்டோம். இன்ப வாழ்வுக் கான நெறியைத் தேடிக் கொள்ளுவதும், அந்த நெறியிலே நடப்பதும் மக்கள் கடமை; அவர்களுக்குள்ள உரிமை என்பதை அறிந்தோம். பின் இரண்டு வரிகளிலே துன்புறாமல் இன்புற்று வாழ்வதற்கு எது சிறந்த நெறி என்று அவர் கண்டாரோ அதை வலியுறுத்திக் கூறுகின்றார். கடவுளை நம்பி அவரைச் சரணா கதி அடைவதுதான் இன்பந்துய்ப்பதற்குரிய வழி என்பது அவர் கண்டறிந்த உண்மை. அந்த உண்மையையே மற்றவர்களுக்கும் மனத்திலே பதியும்படி எடுத்துரைக்கின்றார். வில்லைப்போல் வளைந்த புருவத்தை உடையவள்; வெண்மையான சங்கு வளையல்களை அணிந்தவள்; இக்கோல முள்ள பார்வதி தேவியை இடது பாகத்திலே கொண்டவன். முல்லை நிலத்திலே வாழும் வெண்மையான காளையை ஊர்தி யாக உடையவன். இத்தகைய சிவபெருமான் வாழ்கின்ற திருக் கோடிக்கா என்னும் ஊரையடையுங்கள். அங்கே குடி கொண்டி ருக்கும் அவ்விறைவனை வணங்குங்கள். உங்கள் இன்ப துன்பங் களுக்கெல்லாம் அவனே காரணம் என்று எல்லாவற்றையும் அவன் தலையிலே போட்டுவிட்டு நீங்கள் சும்மாவிருங்கள். இன்புறலாம் என்று கூறுகின்றார். மக்கள் இன்புற்று வாழவேண்டும் என்ற கருத்தையே இதற்கு அடுத்த பாட்டிலும் வலியுறுத்துகின்றார். துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர் தக்க துஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்; அக்கணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னிமேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே! துன்பம் மிகுந்த இல்வாழ்க்கையில் உள்ள துக்கத்தை விட்டு நீங்குங்கள். நீங்கள் உங்களுக்கு வாழ்க்கையிலே இன்பந் தரத்தக்கதாகிய ஓர் வழியை அறிந்து அவ்வழியிலே செல்லுங் கள். இடையிலே எலும்பு மாலையை அணிந்தவன்; தலையின் மேல் கங்கையை அணிந்தவன்; கொக்கிறகையும் அணிந்தவன்; இத்தகைய சிவபெருமான் உறையும் இடமான திருக்கோடிக் காவை அடையுங்கள். அவ்விறைவனை வணங்குங்கள். உங்கள் துன்பம் எல்லாம் தொடராமல் ஒழியும். இது இவ்விரண்டாவது செய்யுளின் பொருள். இப் பாடல்கள் இரண்டும் திருக்கோடிக்கா பதிகத்தில் உள்ளவை. அறிஞர்கள் உள்ளம் எத்தகையது என்பதற்கு இப்பாடல் கள் உதாரணமாகும். தமிழர்களின் இரக்கத்தன்மையை உணர்த்துவதற்கு இப் பாடல்கள் சான்றாக நிற்கின்றன. ஒருவர் காட்டும் வழி, நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். ஆனால் அவ்வழியைக் காட்டுகின்றவர்கள் உள்ளம் எத்தகையது? அவர்கள் எண்ணம் குறுகியதா? பரந்ததா? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். தாம் அடைந்த இன்பத்தை மற்றவர்களும் அடையவேண்டும் என்று நினைக்கின்றவர்கள் யாராயிருந் தாலும் அவர்கள் போற்றத் தகுந்தவர்கள்தாம்; அவர்கள் கோணல் புத்தி படைத்த குறுகிய உள்ளம் படைத்தவர்கள் அல்லர்; பரந்த உள்ளம் படைத்த தமிழ்ப் பண்பு வாய்ந்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். இந்த முறையிலே பார்க்கும்போது திருஞானசம்பந்தர் தமிழர்களின் பரம்பரைப் பண்பான பரந்த உள்ளம் படைத்த அறிஞராக விளங்குவதைக் காண்கின்றோம். அன்புக்குள் ஆண்டவன் அன்பினால் அனைவரையும் அடக்கி ஆளமுடியும். அன்புக்கு ஆள்படாதவர்கள் யாரும் இல்லை. வெய்யிலைக் கண்டு ஒருவரும் அஞ்ச மாட்டார்கள்; எவ்வளவு கடும் வெய்யிலானாலும் மக்கள் தம் காரியங்களைக் குறைவில்லாமல் நடத்துவார்கள். காலில் செருப்பணிந்து கொண்டும், கையில் குடை பிடித்துக்கொண்டும் போகவேண்டிய இடங்களுக்கெல் லாம் போய் வருவார்கள். பெரிய தீப்பிழம்பைக் கண்டும் மக்கள் அஞ்சுவதில்லை. நீரைக்கொண்டு எவ்வளவு பெரு நெருப்பையும் அவிக்க முயலுவார்கள்; அவித்தும் விடுவார்கள். தீயோடு நெருப்போடு எதிர்த்துப் போராடும் வல்லமை மக்களுக்கு உண்டு. ஆனால் நீரோடு எதிர்த்துப் போராட முடிவதில்லை. நீர் குளிர்ச்சியானது. வெய்யிலைப்போல் - நெருப்பைப்போல் மக்களைச் சுடுவதில்லை; பயமுறுத்துவதும் இல்லை. ஆயினும் நெருப்புடன் - வெய்யிலுடன் எதிர்த்துப் போராடுவதுபோல் நீருடன் எதிர்த்துப் போராட முடிவதில்லை. உதாரணமாக மழையை எடுத்துக்கொள்ளுவோம்; பெரு மழை. தொடர்ந்து பல நாட்களுக்குப் பெய்யுமானால் பல வேலைகள் தடைப்படும். தொழிற்சாலைகளிலே சரியாக வேலைகள் நடைபெறமாட்டா. போக்குவரத்துக்கள் தடைப் படும். மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நினைத்த நேரத்திலே போக முடியாது. நெருப்பை எதிர்த்து நின்று அணைப்பதுபோல - அதன் கொடுமையைத் தணிப்பது போல - மழையை எதிர்க்க முடிவ தில்லை. அதனால் ஏற்படும் சேதங்களைத் தணிக்க முடிவ தில்லை. இவைகளை நாம் அனுபவத்தில் காண்கின்றோம். கொடுமைக்கு - கோபத்திற்கு - வெறுப்புக்கு நெருப்பை உதாரணமாகக் கூறலாம். அன்புக்கு மழையை உதாரணமாகக் கூறலாம். இவ்வுதாரணம் மிகவும் பொருத்தமானது. நாம் ஒருவரிடம் கோபம் காட்டுவோமானால் பயந்தவர் கள் தாம் நமது கோபத்திற்கு அஞ்சுவார்கள்! பயமற்றவர்கள் - நம்மைப் போலவே ஒத்த பலம் உள்ளவர்கள் அஞ்ச மாட்டார்கள்; எதிர்த்துத்தான் நிற்பார்கள், இது இயற்கை. நாம் பிறரிடம் அன்பு காட்டுவோமானால், அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலும் விலகமுடியாது; நம்மை எதிர்க்க வேண்டும் என்று எண்ணினா லும் எதிர்க்க முடியாது. அன்பு காட்டுகின்றவர்களை எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு எதிர்க்க முடியும்? நமது அன்புக்கு அவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும்; கீழ்படிந்து தான் ஆக வேண்டும். அன்பு எதிரிகளின் கை கால்களைக் கட்டிவிடும்; அவர்களைச் செயலற்றவர்களாக்கிவிடும். மக்களிடம் காணப்படும் இந்த இயல்பே கடவுள் தொடர்புக்கும் பொருந்தும் என்று முன்னோர்கள் மொழிந் திருக்கின்றனர். நாம் காட்டும் அன்பும் உண்மை அன்பாக இருக்க வேண்டும்; பொய் அன்பாக இருத்தல் கூடாது. ஏமாற்றும் நடிப்பும் அன்பாக இருக்க முடியாது. உண்மை அன்பினால் உலகையே வசமாக்கி விடமுடியும். மக்கள் அனைவரும் அன்பையே ஆருயிராகக் கொண்டு வாழவேண்டும். அப்பொழுதுதான் உலக மக்களிடம் கொடுமை கள் தோன்றமாட்டா; கலகங்கள் எழும்ப மாட்டா; ஒருவரை யொருவர் ஏமாற்றி அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பிறக்காது. இந்த உண்மையை உள்ளத்தில் கொண்டுதான் இறைவன் - ஆண்டவன் - அன்புருவானவன்; உண்மையே உருவாக இருப்பவன் என்று உரைத்தனர். அன்புள்ளவர்கள்தான் ஆண்டவனைக் காணமுடியும். அவன் அருளையும் பெற முடியும். அன்புள்ளவர்களோடு தான் இறைவன் எப்பொழுதும் இணைபிரியாமல் வாழ்வான். அன் பற்றவர் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான். உண்மை யுள்ளவர்களுடன் கடவுள் வாழ்வார். உண்மையற்ற பொய்யர் களிடம் கடவுள் உறவுகொள்ளமாட்டார்; என்றெல்லாம் அறிஞர்கள் கூறிச் சென்றனர். ஆண்டவனை அன்பின் வடிவாக எண்ணுகின்றவர்கள், இறைவனை உண்மையின் உருவமாக நினைக்கின்றவர்கள், ஒருவரிடமும் வெறுப்புக் காட்டமாட்டார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழமாட்டார்கள். உண்மையையே உரைப்பார்கள். உண்மை நெறியையே பின்பற்றி நடப்பார்கள். இச்சிறந்த கருத்தைப் பல அறிஞர்களின் பாடல்களிலும் பார்க்கலாம். பக்தி மார்க்கத்தைப் போதிக்கும் அனைவரும் இக் கருத்தை வலியுறுத்திப் பாடியிருக்கின்றனர். அருந்தானை; அன்பு செய்து ஏத்த இயலார்பால் பொருந்தானைப்; பொய் அடிமைத் தொழில் செய்வாருள் விருந்தானை; வேதியர் ஓதிமிடை காழி இருந்தானை, ஏத்துமின்! நும்வினை ஏகவே. என்பது திருஞான சம்பந்தர் செய்யுள். சீகாழியைப் பாடிய பதிகத்தில் உள்ள பாட்டு. இச்சிறிய செந்தமிழ்ப் பாட்டிலே மேலே கூறிய உயர்ந்த கருத்துக்கள் அடங்கியிருப்பதைக் காணலாம். யாராலும் எளிதிலே காண்பதற்கு அரிதாக இருக்கின்ற வனை; உள்ளத்தால் அன்பு செய்து போற்றாதவர்கள்பால் பொருந்தாமல் இருப்பவனை; உள்ளத்திலே அன்பும் உண்மை யும் இல்லாமல் பொய்யாக அடிமைத்தொழில் செய்கின்றவர் களிடம் காணற்கு அரியவிருந்தாக இருப்பவனை; வேதங்களை நன்றாக ஓதியவர்கள் என்றும் பெயர் சொல்லி வணங்குவதற்குக் கூடியிருக்கும் சீகாழியிலே இருக்கின்ற சிவபெருமானை; நும் தீவினைபோக வேண்டுமானால் போற்றுங்கள். இதுதான் மேலே காட்டிய செய்யுளின் பொருள். இதில் அன்பிலாரிடம் இறைவன் இல்லை. பொய்யாக நடிப்பவர் களிடமும் ஆண்டவன் அணுகமாட்டான் என்ற கருத்தமைந் திருப்பதைக் காணலாம். இதே கருத்தை மற்றொரு செய்யுளிலும் வலியுறுத்து கின்றார் ஞானசம்பந்தர். நெதியானை, நெஞ்சு இடம் கொள்ள நினைவார்தம் விதியானை; விண்ணவர்தாம் வியந்து ஏத்திய கதியானைக்; கார் உலவும் பொழில் காழியாம் பதியானைப் பாடுமின் நும் வினைபாறு அறவே. எல்லாச் செல்வங்களுமாக இருக்கின்றவனை; எப்பொழு தும் மறவாமல் தன் மனத்திலே வைத்திருப்பவர்களின் விதியாக நின்று அவர்கள் வாழ்வுக்கு வழிகாட்டுகின்றவனை; தேவர்கள் அனைவரும் வியந்து போற்றும் உயர்ந்த கருவியாக இருக்கின்ற வனை; மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் நிறைந்த சீகாழியாகிய திருப்பதியிலே உள்ளவனைப் பாடுங்கள்; உமது தீவினை சிதறி ஓடும்படி உள்ளன்புடன் பாடுங்கள். இதுவே மேலே காட்டிய செய்யுளில் உள்ள பொருள். இச்செய்யுளில் உள்ள நெஞ்சு இடம் கொள்ள நினைவார்தம் விதியானை என்ற தொடர்தான் குறிப்பிடத்தகுந்தது. அன்பில்லாதவர்கள் - இரக்கம் இல்லாதவர்கள் நெஞ்சி லே இறைவன் இருக்க மாட்டான். மக்கள் மீது வெறுப்பும் - சினமும் - ஆத்திரமும் காட்டுகின்றவர்கள் இறைவனிடம் அன்புள்ளவர்கள் போல் நடிப்பதெல்லாம் வீண் ஆடம்பரம். இறைவனிடம் உண்மையில் அன்பு கொண்டவர்களாயிருந்தால் அவர்களிடம் வெறுப்போ - சினமோ - ஆத்திரமோ தோன்ற மாட்டா. இவை தோன்றக்கூடாது என்பதற்காகவே நல்லவர்கள் எப்பொழுதும் இறைவனை உள்ளத்திலேயே வைத்திருக்க முயல்வார்கள். அன்புருவாகிய இறைவன் - ஆண்டவன் - உள்ளத்திலே குடி கொண்டிருப்பானாயின், அவன் அருள் நெறியைத்தான் காட்டுவான்; நல்ல வழியிலே நடக்கத்தான் தூண்டுவான். அருளற்ற - இரக்கமற்ற - பாதக வழியிலே நடக்க விட மாட்டான். இந்த உண்மையை உள்ளடக்கிக் கொண்டிருப்பதுதான் நெஞ்சு இடம் கொள்ள நினைவார் தம் விதியானை என்பது. இத்தகைய அன்பை அடிப்படையாகக் கொண்டதுதான் தமிழர் அருள் நெறியாகும். நெஞ்சமும் நிலமும் படிப்பது பிரபந்தம், இடிப்பது பெருமாள் கோயில் என்பது வைணவர்கள் கூறும் பழமொழி. படிப்பது இராமா யணம் இடிப்பது பெருமாள் கோயில் என்றும் உரைப்பர். சைவர்கள் படிப்பது திருவாசகம், இடிப்பது சிவன் கோயில் என்று கூறுவர். வைணவர்கள் கூறும் பழமொழிக்கும், சைவர்கள் சொல்லும் பழமொழிக்கும் கருத்து ஒன்றுதான். சொல் வேறு செய்கை வேறு என்பதே இப் பழமொழிகளின் கருத்து. திரிகரணசுத்தி என்று சொல்லுவார்கள். மூன்று கருவி களும் தூய்மையாய் இருக்க வேண்டும்; குற்றமற்றவையாக இருக்க வேண்டும். இது திரிகரணசுத்தி, எண்ணம், சொல், உடல் இவையே மூன்று கருவிகள். மனம், வாக்கு, காயம் இவையே திரிகரணங்கள் என்பர். மூன்று கருவிகள் என்றாலும், திரிகரணங் கள் என்றாலும் ஒன்றுதான். மூன்று கருவிகள் என்பது தமிழ்ச் சொற்றொடர். திரிகரணம் என்பது வடமொழி வாக்கியம். உள்ளத்திலே நல்லனவற்றைப் பற்றியே நினைக்க வேண்டும். தீயவற்றைப் பற்றி நினைக்கவேகூடாது. கெட்ட எண்ணங்கள் பிறந்தால் உடனே அவற்றைத் தலைதூக்கவிடா மல் கிள்ளி எறிந்துவிட வேண்டும். நல்ல எண்ணங்கள் உள்ளத் திலே தோன்றும்போது அவற்றை மேலும் மேலும் வளர்க்க வேண்டும். நல்ல எண்ணங்களுக்கு இடையிலே கிளைக்கும் கெட்ட எண்ணங்களை முளையிலேயே அடியோடு பறித்து எறிந்து விடவேண்டும். நல்ல பலன் கொடுக்கும் பயிருக்கு இடை யிலே களைகள் முளைத்தால் பயிர் வளர்வது எப்படி? அந்தக் களைகளை உடனே பிடுங்கிவிட்டால்தான் பயிர் வளர்ந்து பலன் கொடுக்கும். இந்த உண்மையை உணர்ந்தவர்கள், உள்ளத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவே முயல் வார்கள். முட்செடிகளும், புதர்களும் நிறைந்த பண்படாத நிலத் திலே எந்தப் பயிரும் வளரமாட்டா. முட்களையும் புதர்களையும் கல், கரம்புகளையும் மாற்றாவிட்டால் அந் நிலத்தில் பயிர் செய்யவும் முடியாது. நிலத்தின் தன்மை மனத்திற்கும் உண்டு. தூய உள்ளத்திலே தான் அன்பு குடி கொண்டிருக்கும்; அருள் நிறைந்திருக்கும் அனைவரையும் ஒன்றாக எண்ணும் சமரச எண்ணம் நிலைத் திருக்கும். அன்பும் அருளும் சமரச எண்ணமுமே கடவுள் தன்மை என்பது. கடவுள் என்பதும் இவைதான். இந்த உண்மையையே நமது முன்னோர்கள் உரைத்திருக்கின்றனர். வெளிப்பூச்சால் - வேடத்தால் - பயன் இல்லை; கள்ளமற்ற மனமே வேண்டும். கள்ளமற்ற மனத்திலேதான் இறைவன் வாழ்வான். இவ்வுண்மை யைத் திருஞானசம்பந்தர், திருவாரூர்ப் பதிகம் ஒன்றிலே அழகாக எடுத்துக் காட்டுகின்றார். கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்தஊர் துள்ளி வாளை பாய்வயல் கரும்பு உலாவு நெய்தல் வாய் அள்ளல் நாரை ஆரல்வாரும் அம்தண்ஆரூர் என்பதே. நெஞ்சிலே பிறக்கின்ற கள்ளத்தனமும், வஞ்சகமும் நிறைந்த எண்ணங்களை அடியோடு விட்டொழித்து விட வேண்டும்; அன்போடு உள்ளம் வேறு வழியிலே செல்லாமல் ஒரே நிலையிலே நின்று இறைவனை நினைக்க வேண்டும். இப்படி நினைக்கிறவர்கள் உள்ளத்திலேதான் இறைவன் இருப்பான். இத்தகைய இறைவன் விரும்பி வாழும் ஊர் திருவாரூர். திருவாரூர் காண்போர் கண்ணுக்கும் மனதிற்கும் இனிய காட்சியைத் தரும் இயற்கை வளம் நிறைந்தது. நீர் நிறைந்த வயல்களிலே வாளை மீன்கள் துள்ளிக் குதிக்துக் கொண்டி ருக்கும்; வண்டுகள் மொய்க்கின்ற நெய்தல் பூக்கள் மலர்ந்தி ருக்கும்; நாரைகள், சேற்றிலே துள்ளும் ஆரல் மீன்களைக் கொள்ளை கொள்ளையாக வாரித்தின்னும். இத்தகைய அழகும், குளிர்ச்சியும் பொருந்தியது திருவாரூர். இதுவே இச் செய்யுளில் உள்ள பொருள். அழகும் குளிர்ச்சியும் பொருந்தியது திருவாரூர். அந்த இடத்தை இறைவன் விரும்புவதுபோல, கள்ளமற்ற உள்ளத்துடன், ஒன்றுபட்ட மனத்தோடு நினைப்பவர்களின் உள்ளத்திலேயே இறைவனும் இருப்பான் என்ற உட்கருத்து இச்செய்யுளில் அடங்கியருப் பதைக் காணலாம். தூய்மை நிறைந்த உள்ளத்திலே இறைவன் குடியிருப்பான் என்பதைச் சம்பந்தர் பல பாடல்களிலே பாடியிருக்கின்றார். திருக்கானப்பேர்ப் பதிகத்தில் காணப்படும் பாடல் ஒன்றைக் காண்போம். திருக்கானப்பேர் என்பது இப்பொழுது காளையார் கோவில் என்று வழங்கப்படுகின்றது. பழங்காலத்திலே இது சரித்திரப் பெருமை வாய்ந்த ஊர்; கானப்பேரில் இருந்த கோட்டையின் பெருமையைப் பற்றிய பாடல்கள் சங்க நூல் களிலே காணப்படுகின்றன. கானப்பேர் பற்றிச் சம்பந்தர் பாடியுள்ள பாடல் மிகுந்த கருத்துச் செறிவுள்ளது. இறைவன் எங்கெங்கே இருப்பான் என்பதை அப்பாடலில் எடுத்துக் காட்டுகின்றார். இன்பம் தரும் பொருள்கள் எல்லாம் இறைவன் வாழும் இடம். இனிமை தருகின்ற எல்லாப் பொருள்களிலும் இறைவன் இருப்பான்; என்ற கருத்தை அச் செய்யுள் எடுத்துக் காட்டுகின்றது. நிறையுடைய நெஞ்சுளும், நீருளும், பூவுளும், பறையுடை முழவுளும், பலியுளும், பாட்டுளும், கறையுடை மிடற்று அண்ணல்; கருதிய கானப்பேர், குறையுடை அவர்க்கலால் களைகிலார் குற்றமே. குற்றங்குறைகள் அற்ற தூய்மையான அன்பு நிறைந்த மனத்திலே, குளிர்ந்த நீரிலே, இனிய ஒலி பொருந்திய மிருதங்க ஓசையிலே, அன்போடு கொடுக்கும் பலியிலே, கருத்தும், இனிமையும் நிறைந்த பாட்டிலே கழுத்திலே கறையை உடைய பெருமை சிறந்த சிவபெருமான் வாழ்வான். அவனால் விரும்பப் படுவது கானப்பேர் என்னும் ஊர். அக் கானப்பேர் இறைவன், குறைகளைச் சொல்லி முறையிடுவோர் குறைகளையெல்லாம் களைவான்; மற்றவர்கள் தங்கள் குற்றங்களை நீக்கி நலம் பெற மாட்டார்கள். இதுவே இச்செய்யுளில் அமைந்த பொருள், நிறையுடை நெஞ்சுளும் என்ற தொடர்தான் இங்கு மிகவும் ஆராயத்தக்க தொடர். நிறையுடை நெஞ்சு-நிறைந்திருக்கின்ற நெஞ்சு, அன்பு நிறைந்திருக்கின்ற மனம்; இரக்கம் நிறைந்திருக்கின்ற மனம், தூய்மை நிறைந்திருக்கின்ற உள்ளம்; என்ற பொருள் இத் தொடருக்கு உண்டு. அன்பும், இரக்கமும் தூய்மையும் நிறைந்த நெஞ்சிலேதான் இன்பம் நிறைந்திருக்கும்; குதூகலமும் குடி கொண்டிருக்கும்; கலக்கமற்ற அமைதி நிலை கொண்டிருக்கும். இன்பமும், குதூகலமும், அமைதியும் உள்ளவர்களே வாழ்க்கை இன்பத்தை அனுபவிப்பவர்கள், இவர்கள்தாம் மற்றவர்களுக்கும் மனப்பூர்வமாக - அதாவது முழுமனத்தோடு உதவி செய்யக்கூடியவர்கள். உள்ளத்திலே கல்லும், முள்ளும், காடும், புதரும் நிறைந் திருந்தால் அதில் நல்ல பயிரும் தோன்றாது. உள்ளத்திலே நல்லெண்ணம் சிறிதும் இல்லாமல் வெளிவேடம் போடுகின்ற வர்கள் தந்நலவாதிகள்; அவர்களால் யாருக்கும் எப்பயனும் இல்லை. ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை ஆராய வேறு எக்கருவியும் வேண்டாம். அவர் சொல், செயல்களை ஆராய்ந்தால் போதும். அவர்கள் உள்ளத்தில் இன்னவைதாம் இருக்கின்றன என்று உணர்ந்து கொள்ளலாம். மேலே காட்டிய திருவாரூர்த் தேவாரப் பாடலும், கானப்பேர்த் தேவாரப் பாடலும் மக்களுக்குத் திரிகரண சுத்தி அவசியம் என்பதை உணர்த்தின. மனம், மொழி, மெய் என்னும் மூன்று கருவிகளிலே உள்ளந்தான் முதன்மையானது. ஆதலால் உள்ளத் தூய்மையுள்ளவர்களே மொழியிலே தூய்மையும், மெய்யிலே தூய்மையும் பெற முடியும் என்ற உண்மையையும் உணர்த்தின. ஆகவே அருள்நெறியிலே செல்வதற்கு உள்ளத் தூய்மையே - மாசற்ற மனமே இன்றியமையாதது என்பதில் ஐயம் இல்லை. இன்பமே இறைவன் அறிவிலே வளர்ச்சியடையாத மக்கள் கடவுளைக் கண்டறிந்த விதம் வேறு; அறிவிலே வளர்ச்சியடைந்த மக்கள் கடவுளைக் கண்டறிந்த விதம் வேறு. தேவாரம், பிரபந்தம் முதலியவை தோன்றிய காலம் அறிவு முதிர்ந்த காலம்; அதுதான் சமயத் துறையிலே அன்பு மார்க்கத்திலே அறிவுள்ளவர்கள் ஆழமாக ஈடுபட்ட காலம். ஆதலால் அக்கால மக்கள் இன்பந் தருவன எவை எவை உண்டோ அவற்றை எல்லாம் இறைவனே என்று போற்றினர்; இன்னிசைப் பாடல்களால் பாடி வணங்கினர். அறிவு முதிராத காலத்தில் தான் இன்பத்தைத் தருவதும் கடவுள், துன்பத்தைத் தருவதும் கடவுள்; பயமுறுத்துவதும் கடவுள்; மகிழ்ச்சியைத் தருவதும் கடவுள்; அச்சத்தை உண்டாக்கி, ஆபத்தைத் தருவதும் கடவுள்; இன்பத்தைத் தரும் இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் கடவுள்; என்று எண்ணி வந்தனர். மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத இன்பந்தருவன வெல்லாம் இறைவன் என்பதைப் பல பெரியோர்களும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ்ச் சான்றோர்களும் இந்த உண்மையை இயம்பாமல் விட்டுவிடவில்லை. மன் ஆனவன்; உலகிற்கு ஒரு மழையானவன்; பிழையில் பொன் ஆனவன்; முதலானவன், பொழில் சூழ் புளமங்கை என் ஆனவன்; இசையானவன்; இளஞாயிறின், சோதி அன்னான், அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே. இது திருஞானசம்பந்தர் தேவாரம். இதில் இறைவன் எந்தெந்த உருவில் நிலவுகின்றான் என்பதைக் காணலாம். மன் ஆனவன் என்று இறைவனை அரசனாகக் குறிப்பிடு கின்றார். ஒரு காலத்திலே அரசன் உலகுக்கு உயிர் என்ற கொள்கை தமிழகத்தில் நிலவி இருந்தது; ஆள்வோர் இன்றேல் நாடு சீர்குலைந்து அல்லல் அடையும் என்பதே முன்னோர் கொள்கை. பின்னோர் கொள்கையும் இதுதான். ஆனால் முன்னோர் தனிப்பட்ட தலைவனுடைய ஆளுகையைப் பாராட் டினர். பின்னோர் அதை விரும்பவில்லை. முன்னோர்கள், நாடாளும் மன்னவனைக் கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தப் பழங்கருத்தை உட்கொண்டதுதான் மன் ஆனவன் என்னும் சொற்றொடர். மழையின்றேல் மாநிலம் வறண்டுபோகும்; மக்கள் அனைவரும் வறுமையால் வாடுவார்கள். மழையால்தான் இவ்வுலகம் வாழ்கின்றது. மழையின்றேல் சோலைகள் எல்லாம் பாலையாகி விடும். இந்த உண்மையைக் குறியாகக் கொண்டு தான் வள்ளுவர் வான்சிறப்பு என்று ஒரு அதிகாரமே தனியாக வகுத்தார். அதில் மழையின் பெருமையைக் கூறினார். ஆதலால் உலகிற்கு இன்பந்தரும் மழையை இறைவனாகவே கருதினார் சம்பந்தர். இக்கருத்துடனேயே உலகிற்கு ஒரு மழையானவன் என்று குறிப்பிட்டார். பொன் எல்லோராலும் போற்றப்படுவது. பொன்னிருந் தால் எல்லா இன்பங்களையும் பெறலாம். இன்பங்களையெல்லாம் ஈட்டித்தரும் செல்வப் பொருள்களிலே சிறந்தது பொன்னே தான், ஆதலால் அந்தப் பொன்னையும் இறைவன் உருவாகவே கருதினர். ஆதலால் பிழை இல் பொன்னானவன் என்று கூறினார். பொன்னிலும் பிழையில்லாத பொன்; அதாவது குற்றமற்ற பொன் என்று குறித்தார் இறைவனை. இசையால் இன்புறாத உயிர்கள் இல்லை. விலங்குகளும் இசையைக் கேட்டு மயங்கிவிடும். தாவரங்களும் இசையைக் கேட்டு உருகும். இசையிலே உள்ளத்தைப் பறிகொடுக்காதவர் உலகில் இல்லை. இசை பல்வேறு உருவில் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் மக்களின் பொழுது போக்காகவே அமைந் திருக்கின்றன. உழைத்துச் சோர்ந்தவர்கள் உட்கார்ந்து பாடல்களைக் கேட்டு பரவசமடைகின்றனர். உழைக்கின்றவர்கள் - உழைக்கும் போது - உள்ளமும் உடலும் சோர்வடையாமல் இருக்கப் பாட்டு கள் பாடுகின்றனர். உழைக்காத சோம்பேறிகளும் பொழுது கழிக்க இசைப்பாடல்களிலே சிந்தையை ஈடுபடுத்துகின்றனர். அதிலும் இந்தக் காலத்தில் இசையுணர்ச்சியும், அதன் பயனும் மிகுதியாக வளர்ந்துவிட்டன. தமிழ், என்று தோன்றியதோ அன்று முதல் இசையும் பிறந்து வளர்ந்து வருகின்றது. ஆதலின் இசையையும் இறைவன் உருவாகவே எண்ணிப் போற்றினர் தமிழ்ச் சான்றோர்கள். இதைத்தான் இசையானவன் என்று சுட்டுகிறார் சம்பந்தர். இளஞாயிற்றின் சோதியைக் கண்டு மகிழாதவர் எவரும் இல்லை. காலை இளம்பரிதியின் கதிரொளி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பந் தருவது. மக்கள் அனைவரையும் உறக்கத் திலிருந்து தட்டியெழுப்பி ஊக்கத்துடன் உழைக்கத்தூண்டுவது இளஞாயிற்றின் சோதிதான். மக்களை மட்டுமா? விலங்குகள், பறவைகள் அனைத்தையும் அவற்றின் தொழில்களிலே ஈடுபடச் செய்வது காலைக் கதிரவன் ஒளிக்கற்றைதான். கதிரொளி இன்றேல் உலகிலே உயிர்களே தோன்றமுடியாது. வாழ முடி யாது. உலகவாழ்வுக்குக் கதிர் ஒளிதான் மூலாதாரம். ஆதலால் தான் இளஞாயிற்றின் சோதியை எல்லா அறிஞர்களும் ஏத்திப் பாடியிருக்கின்றனர். சம்பந்தரும் இளஞாயிற்றின் சோதி யாக இறைவனைப் போற்றினர். இப்பொழுது பாட்டு முழுவதையும் பார்ப்போம். இயற் கைப் பொருள்கள் எல்லாம் இறைவனே. இறைவன்தான் இயற் கைப் பொருளாக நிற்கின்றான் என்ற உண்மை விளங்கும். உலகத்திற்கு இன்பந்தருகின்ற அரசனானவன்; மழையான வன்; குற்றமற்ற பொன்னானவன்; எல்லாவற்றிற்கும் முதன்மை யானவன்; சோலைசூழ்ந்த திருப்புள்ள மங்கையில் யானாகவே இருப்பவன்; இசையின் வடிவாகவே இருப்பவன்; இளஞாயிற் றின் ஒளி வடிவைப் போன்றவன்; அவன் உறையும் இடம் திரு ஆலந்துறையாகும். இதுவே மேலே காட்டிய செய்யுளின் பொருள். இதனால் மன்னன், மழை, பொன், முதன்மை, இசை, இளஞாயிற்றின் ஒளி இவை எல்லாம் இறைவனே என்று கூறியிருப்பதைக் காணலாம். உள்ளத்திலே பொறுமைவேண்டும். இன்பமே இறைவன். ஆதலால் நாமும் உலகில் துன்புறுவோர்க்கு இன்பம் கிட்டப் பணிபுரியவேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளத் தன்மையைக் கடிந்தொழுகவேண்டும். கடுஞ் சொற்கள் பேசுவதை விட்டொழிக்க வேண்டும். குற்றமற்ற செயல்களையே செய்ய வேண்டும், தன்னலத்திற்கான செயல் களை யெல்லாம் தலைகாட்டாமல் அழிக்க வேண்டும், இதுவே எல்லாம் இறைவனே என்று எண்ணுவோர் பின்பற்ற வேண்டிய சீலமாகும். இத்தகைய சிறந்த உள்ளமும் ஒழுக்கமும் உள்ளவர் களே இன்பந்தருவன யாவும் இறைவனே என்று காண்பார்கள். ஒல்லைஆறி, உள்ளம்ஒன்றிக், கள்ளம் ஒழிந்து, வெய்ய சொல்லைஆறித், தூய்மைசெய்து, காமவினை அகற்றி, நல்லவாறே உன்றன் நாமம்நாவின் நவின்றேத்த வல்லவாறே வந்து நல்காய்! வலிவல மேயவனே. என்பதும் திருஞானசம்பந்தர் தேவாரம். இதிலே இறைவன் இன்ப உருவானவன் என்று உணர்கின்றவர்கள் யார் என்பதை விளக்கியிருக்கின்றார். உள்ளத் தூய்மையுள்ளவர்கள்தாம் உண்மையைக் காண முடியும். கல்லும் மண்ணும் நிரம்பியிருக்கும் அழுக்கடைந்த பானையிலே எந்தப் பொருளைப் போட்டாலும் அது கெட்டுத் தான் போகும். சுத்தமான பாண்டத்திலே வைக்கப்படும் பொருள்தான் சுத்தமாக இருக்கும். ஆகையால் உண்மையான ஒழுக்கம் உள்ளவர்கள்தாம் இயற்கையே இறைவன் என்பதைக் கண்டறிந்து இன்புற முடியும். பொறுமையைச் சிதைக்கும் நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும் உடனே பொறுமையைக் கடைப்பிடித்து; உள்ளம் பலவேறு வழிகளிலே சென்று சிதறாமல் ஒன்றுபட்டு, வஞ்சனையை விட்டொழித்து, சுடும் சொல்லை மாற்றி, குற்றமற்ற செயல் களையே செய்து, தன்னல ஆசையை வளர்க்கும் செயல்களை ஒழித்து, நல்லவிதமாக உன்னுடைய பெயரைச் சொல்லி வணங்குவதற்கு நான் நல்லவன் ஆகுமாறு வந்து எனக்கு அருள் அளிப்பாய்! திருவலிவலம் என்னும் நகரில் வாழ்பவனே, இச்செய்யுள் உண்மையான அன்பர்கள் எப்படியிருப் பார்கள் என்பதை எடுத்துக்காட்டிற்று. பொறுமைக் குணம், உறுதியுள்ளம், வஞ்சகமற்ற தன்மை, இன்சொல், நல்வினை, ஆசையற்ற செயல், இவை அருளுடையவர்களின் குணமாகும். இத்தகைய இனிய பண்புள்ளவர்களே இறைவன் அருளைப் பெற்றவர்கள். இக்குணங்கள் ஏதும் இன்றிச் சமயவாதிகள் போல - பக்திமான்கள் போல - இறைவனை நேரே கண்டவர்கள் போல நடிப்பவர்கள் எல்லாம் உலகை ஏமாற்றுகிறவர்கள். குணங்களை - செயல்களை - அளவுகோலாகக் கொண்டு தான் ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று முடிவுகட்ட வேண்டும். வெறும் கோலத்தையும், நடிப்பையும் கண்டு ஏமாந்து விடக்கூடாது. இந்த உண்மை, பக்தி மார்க்கத்திலே ஈடுபட்ட நாயன் மார்கள் பாடல்களிலே காணப்படுகின்றது. ஆகவே, இன்பந்தருவனவெல்லாம் இறைவன் உரு; தன்னலமற்ற ஒழுக்கமுடையவரே இந்த உண்மையை அறிய முடியும்; என்ற இவ்விரு உண்மைகளையும் தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். இதனை மேலே காட்டிய இரண்டு பாடல்களும் உணர்த்தின. திருநாவுக்கரசர் திருநாவுக்கரசர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்தவர். திருஞானசம்பந்தர் காலமும் இவர் காலமும் ஒன்று. நாவுக்கரசர் வேளாளர் குடியிலே பிறந்தவர். இவ்வுலகிலே எண்பத்தோராண்டுகள் உயிர் வாழ்ந்தவர். திருமணம் ஆகாதவர்; உலகின்பங்களை வெறுத்தவர்; தன்னலந்துறந்த உண்மைத் துறவி; சிவனடியார். நாவுக்கரசர் சிவபெருமானிடம் இடையறாப் பேரன்புள் ளவர்; எப்பொழுதும் இறைவனையே நினைத்திருந்தவர். இவர் உழவாரப்படை தாங்கிக் கோயில்களுக்குத் திருப்பணி செய்து வந்தார்; உடலாலும், உள்ளத்தாலும் இறைவனுக்குப் பணி புரிந்து இன்புற்றார். ஈசனுடைய இரண்டு பாதங்களையும் எப்பொழுதும் நினைப்பதனால் - வணங்குவதனால் - கிடைக்கும் இன்பத்தைப் பற்றி இவர் கூறுவது குறிப்பிடத்தக்கது. இயற்கையினால் பெறும் இன்பம் அனைத்தையும் ஈசன் பாதங்களை நினைப்ப தனால் பெறலாம் என்று பாடுகின்றார். அவர் தாம் கண்ட அனுபவத்தையே பாடுகிறார். எங்கும் இருப்பவன், எமது தந்தை; அவருடைய இரண்டு பாதங்களின் நிழலிலே அமர்ந்திருப்பதனால் நான் இன்பம் அடைகின்றேன். என் உள்ளமும் இன்புறுகின்றது; உடலும் இன்புறுகின்றது. அவ்வின்பம் எதைப்போன்றது என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள். எம்பெருமான் அடிகளின் நிழல், குற்றமற்ற வீணையின் இசையைப் போல உள்ளத்துக்கு இன்பம் தருகின்றது; மாலைக் காலத்துச் சந்திரனைப்போல உள்ளத்துக்கும் உடம்புக்கும் இன்பம் தருகின்றது. மெதுவாகக் குளிர்ச்சியுடன் வீசுகின்ற தென்றற் காற்றைப்போலச் சுகந்தருகின்றது; சிறந்த இளவேனிற் காலத்தைப்போல மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. மலர் களிலே மொய்க்கின்ற வண்டுகள் தேனுண்டு பாடுகின்ற கண் கொள்ளாக் காட்சியமைந்த பொய்கையைக் காண்பது போல இன்பம் தருகின்றது; அதில் மூழ்கி விளையாடுவது போல ஆனந்தத்தை அளிக்கின்றது. என்று பாடுகின்றார். இயற்கை அளிக்கும் இன்பத்தை இறைவனை மறவாமையால் பெறலாம் என்பதே இப்பாடலின் கருத்து. மாசில் வீணையும், மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும் மூசுவண்டுஅறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்பதுதான் அந்த அருமையான தெய்வத் தமிழ்ப்பாட்டு. நாவுக்கரசர், வடமொழியும் தமிழும் நன்றாகக் கற்றறிந் தவர். இவருடைய கல்விச் சிறப்பை இவருடைய பாடல்களிலே காணலாம். வேத வேதாங்கங்களின் சாரத்தை இவர் பாடல் களில் படிக்கலாம். நாவுக்கரசர் முதலில் சமண சமயத்தில் ஈடுபட்டார்; சமணர்களுக்குத் தலைவராக விளங்கினார். தருமசேனர் என்பது அவருடைய சமண மதப் பெயர். பின்னர் சமண மதத்தை வெறுத்துச் சைவரானார். நாவுக்கரசர் தொண்டை நாட்டிலே பிறந்தவர். அவர் காலத்துத் தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சிபுரம். அங்கே பல்லவர் ஆட்சி நிலைத்திருந்த காலம் அது. நாவுக்கரசர் காலத்துப் பல்லவ மன்னன் மகேந்திரன் என்பவன். அவன் சமணர்களை ஆதரித்து வந்தான். அவனே சமண மதத்தை மேற்கொண்டிருந்தான். ஆதலால் சமண சமயத்தைத் துறந்த நாவுக்கரசர் பல துன்பங்களுக்கு ஆளானார்; சமணர்கள் அரசன் ஆதரவைக்கொண்டு அவரைப் படாதபாடுபடுத்தி வைத்தனர். இதைப் பெரிய புராணம் விரிவாகக் கூறுகின்றது. நாவுக்கரசைத் துன்புறுத்திய மகேந்திர பல்லவனே, இறுதியில் சைவனாக மாறினான். நாவுக்கரசரிடமே உபதேசம் பெற்றுச் சைவன் ஆனான். நாவுக்கரசரின் உள்ளத்து உறுதியும், பொறுமைத்தன்மையும் அன்புப் பணியும், தெய்வத் தமிழ்ப் பாடல்களும் பல்லவன் மனத்தை மாற்றின. நாவுக்கரசரின் கனிந்த உள்ளத்தை அவருடைய பாடல் களிலே காணலாம். அவருடைய பாடல்களிலே செஞ்சொற் களும் சிறந்த கருத்துக்களும் அமைந்திருக்கின்றன. படிப்போர் - பாடுவோர் - உள்ளத்தை உருக்கும் உயர்ந்த கவிதைகள் அவை. உவமைகளும் உருவகங்களும் நிரம்பிய பாடல்கள். தென் சொற்களுடன் வடசொற்களும் கலந்து சிந்தைக்கும் செவிக்கும் இன்பந்தரும் ஓசையுடன் அமைந்த பாடல்கள். உதாரணமாக நம் உள்ளத்தை உருக்கும் பாடல் ஒன்றைக் காண்போம். திருவே! என் செல்வமே! தேனே! வானோர் செழும் சுடரே! செழும்சுடர் நற்சோதீ! மிக்க உருவே! என் உறவே! என் ஊனே! ஊனின் உள்ளமே! உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே! என் கற்பகமே! கண்ணே! கண்ணில் கருமணியே! மணியாடு பாவாய்! காவாய்! அருவாய வல்வினைநோய் அடையாவண்ணம்! ஆவடுதண் துறைஉறையும் அமரர்ஏறே. இந்தப் பாடலின் பொருள் வெளிப்படை. எத்தனை தரம் பாடினாலும் சலிப்பேற்படாது. பாடப்பாட உள்ளத்திலே இன்பமும் மகிழ்ச்சியும் சுரக்கும். தானும் இறைவனும் ஒன்று என்பதை இப்பாடலால் இசைத்தார். இறைவன் தனக்கு எப்படி எப்படி இருந்து இன்பந் தருகிறான் என்பதை இப்பாடலால் அறிவித்தார். ஆற்றுநீர் ஓட்டம்போல அருமையாக அமைந் திருக்கும் இப்பாடலின் இனிமையே இனிமை! உலக நிலைமையை மனிதர்க்கு எடுத்துக்காட்டி, உண்மை யை விளக்குவதிலே வாகீசர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன. அவருடைய பாடல்களில் பெரும்பாலானவை இவ்வுண்மை யைப் பாடுவனவேயாகும். எல்லா மார்க்கங்களிலும் பக்தி மார்க்கமே சிறந்தது; உயர்ந்தது; உண்மையானது; என்பது அப்பர் கருத்து. இதை அவர் பல பாடல்களின் வாயிலாக எடுத்துக்காட்டியிருக் கின்றார். ஒழுக்கத்தைவிட பக்தியே சிறந்தது என்பது இவர் கருத்து. வேதம் ஓதில்என்? சாத்திரம் கேட்கில்என்? நீதி நூல்பல நித்தம் பயிற்றில் என்? ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில்என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே. என்பது பாவநாசப் பதிகத்தில் உள்ள பாட்டு. எல்லா வற்றினும் பக்திமார்க்கமே சிறந்தது என்பதை வலியுறுத்தும் பாடல் இது. வேதங்களை நாள்தோறும் ஓதினால் என்ன? பல சாத்திரங்களையும், பெரியோர்கள் சொல்லக் கேட்டால்தான் என்ன? பல நீதி நூல்களையும் நிதமும் படித்தும் சொல்லியும் தான் என்ன பயன்? வேதாங்கங்கள் ஆறையும் ஓதி உணர்ந்தால் தான் என்ன பயன்? ஈசனை உள்ளத்திலே நினைப்பார்க்குத்தான் நன்மை உண்டு. ஏனையோர்க்கு நன்மை ஒன்றும் இல்லை என்பதே மேலே காட்டிய பாடலின் பொருள். நாவுக்கரசர் தன் எதிரிகள் செய்த இடையூறுகளைப் பொருட்படுத்தவேயில்லை. தனக்குத் துன்பம் செய்தவர்களை யெல்லாம் தோல்வியடையச் செய்தார். சைவத்தை எதிர்த்த சமணர்கள் பலரை அன்பு நெறியால் சைவர்களாக மாறும்படி செய்தார். இறைவனிடம் இவர் வைத்திருந்த உறுதியும் நம்பிக் கையுமே இவருக்கு வெற்றியைத் தந்தன. அவர்தம் உள்ளத்தின் உறுதியைப் பல பாடல்களிலே பாடியிருக்கின்றார். இறைவனிடம் அன்பு கொண்டோர், உறுதியான பக்தி கொண்டோர் எவருக்கும் அடிமைப்பட வேண்டியதில்லை; அஞ்ச வேண்டியதில்லை; கீழ்ப்பட வேண்டியதில்லை என்று பல பாடல்களில் பாடியிருக் கின்றார். அப்பாடல்களிலே ஒன்று கீழ்வருவது. நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்! நமனை அஞ்சோம்! நரகத்தில் இடர்ப்படோம்! நடலையில்லோம்.! ஏமாப்போம்! பிணி அறியோம்! பணிவோம் அல்லோம்! இன்பமே எந்நாளும்; துன்பம் இல்லை; தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மையான சங்கரன், நற்சங்க வெண்குழை ஓர்காதில் கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி யிணையே குறுகினோமே. இது திருத்தாண்டகம். இப்பாடல் நாவுக்கரசரின் பக்தியின் உறுதியைக் காட்டுகின்றது. நாவுக்கரசர், பரமசிவன் பாதங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டமையால் தான் பெற்ற நன்மை களை - உறுதிகளை உலகத்தார்அறியும்படிதலைநிமிர்ந்துநின்றுபடினார்.. திருத்தாண்டகப் பதிகத்தின் மற்றொரு பாடலின் பகுதியும் குறிப்பிடத்தக்கது. என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்! இருநிலத்தில் எனக்கெதிர் ஆவாரும் இல்லை; சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்! சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம். இதுவே இந்தப் பாடலின் பகுதி. இப்பாடலினாலும் நாவுக்கரசரின் அசையாத நம்பிக்கையைக் காணலாம். சிவபக்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்; அடியார்கள் அனைவரும் ஒரே குலத்தினர். அவர்களுக்குள் பிறப்பினால் பேதம் பாராட்டுதல் தவறு என்பது நாவுக்கரசர் கொள்கை. நாவுக்கரசர் காலத்திலே நாட்டிலே சாதி பேதங்கள் நிறைந்திருந்தன; பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டப் பட்டு வந்தன. இந்த உயர்வு தாழ்வுளை ஒழிக்கவே நாவுக்கரசர் விரும்பினார். நாவுக்கரசரைப் போலவே சைவ சமய ஆசாரியர்கள் அனைவரும் விரும்பினார்கள். இதனைப் பெரிய புராணத்தால் அறியலாம். சாதி வேற்றுமையை மறுக்கும் நாவுக்கரசர் பாடல் ஒன்று கீழ்வருவது. சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லர் ஆகில்; அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆஉரித்துத் தின்றுஉழலும் புலையரேனும் கங்கை வார்சடை கரந்தார்க்கு அன்பர் ஆகில், அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே. இப்பாடலைக் கொண்டு சைவத்தின் சமரசத்தைக் காணலாம். இதுபோன்ற சமரசம் போதிக்கும் பாடல்கள் பல நாவுக்கரசர் தேவாரத்தில் உண்டு. நாவுக்கரசர் பாடல்கள் சிந்தைக்கும் செவிக்கும் இனிய சிறந்த தமிழ் இலக்கியம் ஆகும். ஆண்டானும் அடிமையும் தன்னையே சரணாக அடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பது அறிஞர் கடமை; தலைவர்கள் என்பவர்களின் தனிக் கடமை; வாழ்க்கை வசதி படைத்தவர்களின் கடமை. பண்டைக் காலத்தில் இந்த முறைதான் குடி கொண்டிருந்தது. பழங்காலத்து நிலக்கிழவர்கள் தங்களிடம் வேலை செய்வோர்களைத் தம் குடும்பத்தினராகவே எண்ணினர். வேலைக்காரர்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகளைத் தமக்கு ஏற்பட்ட நன்மை தீமைகளாகவே கருதி வந்தனர். இக்காரணத்தால் நிலக்கிழவர் வேலைக்காரர் என்ற சச்சரவுக்கு இடமில்லாமல் இருந்தது. ஆண்டான் அடிமை முறை ஆயிரக்கணக்கான ஆண்டு களாக நிலைத்து வந்தது; வருகின்றது. இதற்குக் காரணம் ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையிலே தொடர்ந்து கொண்டிருந்த அன்புதான். அடிமைகள், தலைவர்கள் தம்மிடம் காட்டும் அன்பு காரணமாகவே, தாம் அடிமைகள் என்பதை மறந்தே விட்டனர். இன்றும் தாம் வேறன்று, தம்மிடம் வேலை செய்வோர் வேறன்று; அவர்களுடைய நலமும், தம்முடைய நலமும் ஒன்று தான்; தாம் இன்பமடைய எண்ணுவது போலவே தம் கீழ் உள்ளவர்களும் இன்பமடைய எண்ணுவது இயல்பு; ஆதலால் அவர்கள் வாழ்க்கையின்பத்திற்கு முட்டுக்கட்டை போடக் கூடாது; அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஆனவரையிலும் உதவி செய்ய வேண்டும்; என்று நினைக்கும் தலைவர்களுண்டு. இந்த உண்மையைக் கடவுள் அடியார்களும் வலியுறுத்தி இருக்கின்றனர். தமக்குத் தலைவன் இறைவன்; தம் நினைப் பெல்லாம் இறைவன்மேல்; தாம் செய்யும் செய்கைகள் எல்லாம் இறைவனுக்கான பணி, இவ்வாறு இறைவனையே நம்பி வாழ்வோர் அவ்விறைவனிடமிருந்து நாம் விரும்புகின்றவற்றை யெல்லாம் எதிர் பார்ப்பது முறையேயாகும். தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ தலை ஆயவர்தம் கடன் ஆவதுதான் என்று திருநாவுக்கரசு நாயனார் பாடுகின்றார். தன்னையே சரணாக அடைந்தவர்களின் துன்பத்தைத் தீர்ப்பதே தலைவர் என்போரின் கடமையாகும் என்பதே இவ்வடியின் பொருள். நாவுக்கரசர் சிவபெருமானைக் குறித்துப் பாடும் இக் கருத்து மக்களைத் தலைவராகக் கொண்ட ஊழியர்களுக்கும் பொருந்து வதாகும். சிவபெருமானையே எப்பொழுதும் நம்பியிருந்த நாவுக்கர சருக்கு ஒரு சமயத்தில் சூலைநோய் வந்து விட்டது. அப்பொ ழுது அவர் நோய் நீங்கும்படி ஆண்டவனிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிட்டுப் பாடிய பாடல்களிலே அவருடைய அன்புத் திறம் வெளிப்பட்டு கிடக்கின்றது. எனது நெஞ்சத்தில் வேறு யாருக்கும் இடமேயில்லை. உமக்கு மட்டுந்தான் எனது நெஞ்சை இடமாக ஒழித்து வைத்திருக்கிறேன். உம்மை நினைக்காத நேரமேயில்லை. எப்பொ ழுதும் உமது நினைவாகவே இருக்கின்றேன். அப்படியிருந்தும் என்பால் இந்த நோய் வந்து என்னைத் துன்புறுத்தும்படி செய்கின்றீர். வஞ்சனையில்லாத அன்பனாகிய எனக்கு இத் துன்பத்தைத் தந்தது உமது வஞ்சகமேயாகும்; இது போன்ற வஞ்சகத்தை நான் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை என்று பாடி தனது உண்மையான - தீங்கற்ற - எஜமான விசுவா சத்தை வெளியிடுகின்றார். நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்தறியேன்; வஞ்சம், இது ஒப்பது கண்டறியேன் என்ற வாசகங்களால் நாவுக்கரசர் தம் உண்மை அன்பைக் கூறுகின்றார். மேலும் அவர் தன் செய்கையையும் விரித்துரைக்கின்றார். சிவபெருமானே நான் செய்வன அனைத்தும் சிவத்தொண்டு தான்; வேறு எப்பணியும் செய்தறியேன் என்று பாடுகிறார். சலம் பூவோடு, தூபம் மறந்து அறியேன்; தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்; நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்; உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய்! உடல் உள் உறு சூலை தவிர்த்து அருளாய்! அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து றை எம்மானே. இதுதான் நாவுக்கரசர் தாம் செய்யும் சிவப்பணியைப் பற்றிப் பாடும் செய்யுள். நான் எப்பொழுதும் உனக்கு நீராட்டுவேன்; பூச்சூட்டு வேன்; தூபங் காட்டுவேன்; இச்செயல்களைச் செய்ய மறந்தறிய மாட்டேன். தமிழோடு கலந்த இசைப் பாடல்களை எப்பொழுதும் பாடிக் கொண்டேயிருப்பேன். உன்னைக் குறித்து இவ்வாறு இனிமையாகப் பாடுவதையும் நான் மறந்தவன் அல்லேன். எனக்கு எவ்வளவு நன்மை வந்தாலும் சரி அல்லது தீமை வந்தாலும் சரி அக்காலங்களிலும் உன்னை நான் மறந்ததில்லை. எப்பொழுதும் உனது பெயரையே எனது நாக்கு விளம்பிக் கொண்டிருக்கும். எனது நா உன் பெயரை மறந்ததே யில்லை. இறந்தார் தலையோட்டிலே பிச்சை ஏற்கும் சிவபெரு மானே; பிச்சையேற்கும் தொழில் இழிவென்று உணர்த்தும் அத்தொழிலையே செய்து திரிகின்றவனே! என் உடம்புக்குள் தோன்றிய சூலை நோயை நீக்கிப் பாதுகாத்தருளாமல் இருக் கின்றாய். திருவதிகைக் கெடிலம் என்னும் வீரட்டானத் தலத்தில் உறையும் என் தலைவனே! அடியேன் மிகவும் வருந்தினேன். என் குறையைத் தீர்த்தருளாய். இதுவே மேலே கண்ட செய்யுளின் பொருள். எனது, மனம், மொழி, மெய் மூன்றும் உனக்கே பணிபுரி கின்றன. அப்படியிருந்தும் என் குறையை நீக்க வில்லையே என்று இச்செய்யுளின் மூலம் வேண்டுகின்றார் நாவுக்கரசர். நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன் என்பது மனம் முழுவதும் இறைவனுக்கே பணிபுரிகின்றது என்பதைக் குறித்தது. தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் என்பதும், உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்பதும் இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறொரு பேச்சையும் பேசவில்லை என்பதைக் குறித்தன. சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் என்பது மெய்யும் அதாவது உடம்பும் எப்பொழுதும் இறைவனுக்குத் தொண்டு செய்வதிலேயே ஈடுபட்டிருக்கின்றது என்பதைக் குறித்தது. இவ்வாறு மனமொழி மெய்களால் பணிபுரிவதே சிறந்த பணியாகும். இவ்வாறு பணிபுரிவதுதான் சிறந்ததென்று முன்னோர்கள் எண்ணி வந்தனர். உண்மையான பணி--உண்மையான ஊழியம்--உண்மை யான உழைப்பு--இது என்பதற்கு நாவுக்கரசரின் இத் தேவாரப் பாடல் ஒரு எடுத்துக்காட்டாகும். அறநெறியே அருள்நெறி அறநெறியில் வாழ்வதையே தமிழர்கள் போற்றி வந்தனர். மறநெறி வாழ்வை வெறுத்து வந்தனர். அறநெறி என்பது பிறர்க் குத் தீங்கு செய்யாத வாழ்வு. உள்ளத்தால் ஒருவருக்கும் கெடுதி நினையாமை; மற்றவர் களின் மனம் வருந்தும்படி சுடு சொற்கள் சொல்லாமை; செயலாலும் பிறர்க்குச் சிறிதும் தீமை செய்யாமை. இவ்வாறு மனம், மொழி, மெய்களால் தவறு செய்யாமல் வாழ்வதே அறநெறி வாழ்வாகும். நீதி இன்னது, அநீதி இன்னது என்பதை அறிந்தவர்கள் மேற்கண்ட அறிநெறியைக் கைவிட மாட்டார்கள். நீதியைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் என்னதான் மனத் தளர்ச்சி நேர்ந்தாலும் நீதியைச் சிதைத்து விட மாட்டார்கள்; எவ்வளவு தான் இலாபம் வருவதாயிருந்தாலும் நீதிக்கு மாறாக, அநீதி செய்யத் துணிய மாட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் செய்கையைச் சீர்தூக்கிப் பார்த்துத்தான் செய்வார்கள். படித்தவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் என்று கொள்ள முடியாது. படிப்பு வேறு; அறிவு வேறு. படித்தவர்கள் எல்லாம் படித்தவற்றின் கருத்துக்களை அறிந்தவர்கள் என்றும் சொல்லி விட முடியாது. இயந்திரம் போல் படித்தவற்றை அப்படியோ திருப்பிச் சொல்லுகிறவர்கள் பலர் உண்டு. வினாக் களுக்கு விடையளிக்கும் - விடையெழுதும் - பள்ளிக்கூட மாணவனைப் போலவே பலர் தாம் படித்த பாடத்தை ஒப்பிப்பார்கள். இவர்களையெல்லாம், உணர்ந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. படித்த நூல்களின் கருத்தை அறிந்தவர்களே உணர்ந்தவர்களாவார்கள். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தீமை செய்யத் துணியமாட்டார்கள். தாம் செய்யும் தீமைகளை மக்கள் அறியாமல் எப்படியாவது மறைத்துவிட முடியும்; ஆனால் இறைவன் அறியாமல் ஏமாற்றி விட முடியாது; என்பது அவர் களுடைய நம்பிக்கை. கடவுள் கோவிலில் தான் இருக்கிறார்; ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கிறார் என்று நினைப்பவர்கள் சிலர் உண்டு. இவர்கள் கடவுளுக்குத் தெரியாமல் காரியம் செய்யலாம் என்று கூட எண்ணுவார்கள். இப்படி நினைப்பவர்கள் கடவு ளைப் பற்றிய கருத்தை அறியாதவர்கள் கடவுள் என்பது எதற் காக ஏற்பட்டது? கடவுளை நம்ப வேண்டிய அவசியம் என்ன? கடவுளுக்கு அஞ்சி நடக்க வேண்டிய காரணம் என்ன? என்ற உண்மைகளை உணராதவர்கள் இவர்கள். கடவுள் எங்கும் இருக்கின்றார்; அவர் ஒவ்வொரு மனிதருடைய உள்ளத்திலும் உறைகின்றார். அவர் ஜோதி வடிவானவர்; ஒப்பற்ற ஒளிவடிவுள்ளவர்; ஆதலால் அவர் அறியாமல் ஒன்றையும் செய்ய முடியாது; இப்படி நம்புகின்ற வர்கள்தான் யாருக்கும் இன்னல் இழைக்க அஞ்சுவார்கள். நீதிநெறியைப் பின்பற்றி நடப்பார்கள். ஒவ்வொரு நாளும் தூய நெறியிலே நடந்து வருவார்கள். இந்த உண்மையைத் திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல் ஒன்றால் உணரலாம். நீதியால் வாழ மாட்டேன்; நித்தலும் தூயன் அல்லேன்; ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்; சோதியே! சுடரே! உன் தன் தூமலர்ப் பாதம் காண்பான்; ஆதியே அலைந்து போனேன்; அதிகை வீரட்டனாரே. திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் உள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடிய பாடல் இது. நீதியோடு வாழ வேண் டும்; நாள்தோறும் ஒழுக்கந்தவறாமல் நடக்க வேண்டும்; ஓதிய நூல்களின் உண்மைகளை உணரவேண்டும்; கடவுளைக் கருத்திலே காண வேண்டும்; கடவுள் அளவிடற்கரிய சோதி - ஒளிவடிவானவன் என்று அறிய வேண்டும்; இதுவே மக்கள் கடமை. இவ்வொழுக்கத்தைப் பின்பற்றாதவர்கள் மக்கள் அல்லர். இந்த மக்கள் தன்மையை மீறி நடப்பதாகத் தன்னைத் தானே குற்றஞ்சாட்டிச் கொள்ளுகிறார் நாவுக்கரசர். பிறர் என்ன செய்யக் கூடாது என்று எண்ணுகின்றார்களோ அதைத் தாம் செய்வதாகச் சொல்லி வருந்துவதே அறிஞர்கள் இயல்பு; பக்தர்கள் பண்பு. இந்தப் பண்பை ஒட்டி எழுந்த பாடல்தான் இது. இப் பாடலின் பொருள் கீழ் வருமாறு: நீதிநெறியைப் பின்பற்றுவதன் மூலம் சிறந்து வாழ மாட்டேன்; நாள்தோறும் ஒழுக்கத்திலே நின்று குற்றமற்ற வனாக வாழ மாட்டேன்; பல நூல்களைப் படித்துங்கூட உண்மையை அறிய மாட்டேன்; உன்னை என் உள்ளத்திலே மறவாமல் வைத்திருக்க மாட்டேன்; பேரொளியே; அப்பேரொ ளியில் தோன்றும் தீப்பொறியே உனது தூய மலர்போன்ற பாதத்தைக் காணும் பொருட்டு, ஆதிமுதல் அலைந்து திரிந் தேன். திருவதிகை வீரட்டத்தில் வாழ்கின்ற சிவபெருமானே. இவ்வாறு வாழ வேண்டிய நெறியைக் கூறி நாவுக்கரசர், இதற்கு அடுத்த செய்யுளிலும் இதையே வலியுறுத்துகின்றார். அறியவேண்டிய உண்மைகளை அறிந்தால் தான் தீவினை புரியாமல் வாழ முடியும். அறிய வேண்டிய உண்மைகளை அறியாதவர்கள் நல்வினைகளைச் செய்ய மாட்டார்கள். தீவினை களே அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொள்ளும். அத்தீவினைகளே அவர்களை ஆட்டி வைக்கும். அத்தீவினைகளிலேயே அவர்கள் அழுந்தி விடுவார்கள். அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பார்கள். ஆகையால் அறிய வேண்டிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டியதே மக்கள் கடமை. இக்கருத்தையே வலியுறுத்துகிறார் நாவுக்கரசர். தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும் பொருள் உளே அழுந்தி நாளும். போவது ஓர் நெறியும் காணேன்; இருளுமா மணிகண்டா! நின் இணையடி இரண்டும் காண்பான் அருளுமாறு அருள வேண்டும்; அதிகை வீரட்டனாரே! இச்செய்யுளிலும் அறியாமையைத் தன்மேல் ஏற்றிப் பாடுகிறார். இச்செய்யுளின் பொருள் கீழ்வருவது: தெளிந்து கொள்ளும் வழியிலே உண்மையைத் தெளிந்து கொள்ள மாட்டேன்; தீவினைகளாகிய சுற்றம் என்னும் பொருள் களிலே முழுகி, ஒவ்வொரு நாளும் அவதிப்பட்டு, அதிலிருந்து தப்பிப் போவதற்குரிய ஒரு வழியையும் காண மாட்டேன்; கரிய சிறந்த இரத்தினம் போன்ற கழுத்தை யுடையவனே. உனது இணைந்த பாதங்கள் இரண்டையும் காணும்படி அருள் செய்யும் முறையிலே எனக்கு அருள் செய்ய வேண்டும்; திருவதிகை வீரட்டத்தில் உள்ள சிவபெருமானே. மேலே காட்டிய இரண்டு பாடல்களும் தமிழ்ச் சான்றோர் களின் அருள் நெறியை எடுத்துக் காட்டுகின்றன. முதற் செய்யுள் நீதியும் ஒழுக்கமும் சிறந்தவை என்று எடுத்துக் காட்டிற்று. ஒவ்வொருவரும், நீதியையும் ஒழுக்கத் தையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்திற்று. இறைவன் - எங்கும் நிறைந்தவன் என்ற நம்பிக்கை நீதிக்கும், ஒழுக்கத்துக்கும் அடிப்படை என்பதையும் எடுத்துரைத்தது. அறிவே சிறந்தது; தீவினைகளிலே ஈடுபடாமல் நல் வழியிலே நடப்பதற்கு வழிகாட்டுவது. இறைவன் அருள் இருந்தால் அறிவையும் பெறலாம்; உண்மையான தெளிந்த அறிவைப் பெறலாம்; தீவினைக் கூட்டங்களின் பிடிக்கு அகப்படாமல் விடுபடலாம்; இந்த உண்மையை இரண்டாவது பாட்டு எடுத்துக் காட்டுகின்றது. மனித சமுதாயத்திலே அமைதியையும், ஒழுக்கத்தையும் பரவச் செய்வதற்கு ஆயிரங் காலத்துக்கு முன்னிருந்த அறிஞர் களின் கருத்துக்கள் இவை. இவை பழங்காலத் தமிழர்கள் கண்ட அருள் நெறியாம். அன்பினால் இன்பம் எல்லாரும் இவ்வுலகில் இன்புற்று வாழத்தான் விரும்புகின் றனர். துன்பத்தோடு கட்டிப்புரள யாரும் விரும்பவில்லை. துன்பத்தைத் தொலைத்துத் தலை முழுகுவது எப்போது? இன்பத்தால் மகிழ்ந்து வாழ்வது எப்பொழுது என்பதுதான் எல்லோருடைய கவலையும். துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழ ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் பற்றி நினைக்கின்றனர். அவர்கள் நினைப்பும் செய்கையும் வெவ்வேறாக இருக்கலாம். வியாபாரியாக இருக்கின்ற ஒருவன் ஏராளமாக லாபம் கிடைக்க வேண்டும்; கிடைக்கும் லாபத்தைக் கொண்டு என்றும் இன்பத்துடன் வாழ ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வியாபாரத்தைப் பிள்ளைக்குட்டிகளிடம் ஒப்படைத்துவிட்டு வயதேறிய காலத்தில் மன அமைதியுடன் வாழ வேண்டும் என்று நினைக்கின்றான். இந்தக் குறியுடன் உழைக்கிறான். உத்தியோ கத்தில் உள்ள ஒருவன் விரைவில் உத்தியோகத்தை விட்டு விலகிவிட வேண்டும்; விலகுவதற்கு முன் பிற்கால வாழ்க்கைக்குப் போதுமான பொருளைச் சம்பாதித்து வைத்துவிட வேண்டும். வயதேறிய காலத்திலாவது மனத்தொல்லையில்லாமல் அமைதியுடன் வாழ வேண்டும் என்று நினைக்கின்றான். இம்மாதிரி யாரை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு வரும் இன்பத்தையும் அமைதியையுமே விரும்புகின்றனர் என்பதைக் காணலாம். பக்தர்கள் - கடவுள் நம்பிக்கையில் தலைசிறந்து நிற்பவர் கள் இன்புற்று வாழ்வதற்குக் கொடுக்கும் மருந்து வேறு. அது பத்தியம் கித்தியம் ஒன்றுமில்லாத எளிதான மருந்து. இராப் பகல் இடைவிடாமல் இறைவனை நினையுங்கள்; ஏத்தி வணங்குங்கள். இறைவனே எமது செல்வம்; அவனே எமது தலைவன் என்று உறுதியாக நம்புங்கள். நம்முடைய செயல் ஒன்றும் இல்லை; எல்லாம் அவன் செயல் என்று எண்ணுங்கள்; உங்கள் துன்பங்கள் யாவும் தொலைந்து போகும்; இன்பமுடன் இருக்கலாம்; உங்கள் உள்ளத்தில் இருக்கும் இறைவன் உமக்குத் துணையாவான்; அன்பனாக இருந்து அல்லல் களைவான் என்பதே பக்தர் தரும் மருந்து. உண்மையில் இந்த மருந்தை உண்பவர்கள் இன்பமாகத்தான் இருப்பார்கள்; எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் என்பதும் உண்மைதான்; ஆனால் இதை உண்மையாக நம்புகின்றவர்கள் எத்தனை பேர்? துன்பம் இன்றித் துயர்இன்றி என்றும்நீர் இன்பம் வேண்டின் இராப்பகல் ஏத்துமின்! என்பொன் ஈசன் இறைவன் என்று உள்கு வார்க்கு அன்பன் ஆகிடும் ஆனைக்கா அண்ணலே. இது நாவுக்கரசர் பாடல். திருவானைக்கா - திருக்குறுந் தொகை. துன்பம் இல்லாமல் கவலையில்லாமல், எப்பொழு தும் நீங்கள் இன்பத்தை வரும்புவீர்களானால், .இரவும் பகலும் இடைவிடாமல் இறைவனை ஏத்துங்கள். எனது செல்வம் ஈசன் தான் என்று நினைப்பவருக்குத் திருவானைக்காவில் உள்ள அவ்விறைவன் அன்பனாக ஆய்விடுவான் என்பதே இப்பா டலின் பொருள். இவ்வாறு இலாபம் அடைய அன்பு செய்வதே சிறந்த நெறியென்று கூறினார் நாவுக்கரசர். இவ்வுலகப் பாசத்தால் கட்டுண்டு துன்புறுவோர் - எப்படித்தான் இவ்வுலக மாயையிலிருந்து விடுபடுவோமோ என்று ஏங்கிக் கிடப்போர் - அஞ்சிக் கிடப்போர் தப்பிப் பிழைக்க வழியுண்டு. உள்ளத்திலே வஞ்சகம் இல்லாமல் நாள்தோறும் இறைவனை வணங்க வேண்டும்; கடும் சொற் பேசுவதை விட்டொழிக்க வேண்டும்; கடும் சொல்லே தீமைகளுக்கெல்லாம் அடிப்படை; ஆதலால் அதை அகற்றி எப்பொழுதும் இனிமை யாகப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும்; உலகப் பாசமாகிய குற்றம் நீங்கும்படி மனம் உருகி உருகி உள்ளம் குளிர வேண்டும். இவ்வாறு அன்பு செய்ய இவர்களுக்கெல்லாம் இறைவன் அருள் செய்வான்; அஞ்சற்க என்று அபயம் அளித்துக் காப்பாற்றுவான்; என்று மற்றொரு செய்யுளிலே கூறுகின்றார் நாவுக்கரசர். அச்செய்யுள் வருமாறு. வஞ்சம் இன்றி வணங்குமின், வைகலும் வெஞ்சொல் இன்றி விலகுமின், வீடுஅற நெஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே இதுவும் திருவானைக்காத் திருக்குறுந்தொகையில் உள்ள செய்யுளாகும். தினந்தோறும் உள்ளத்திலே கள்ளம் கபடு இல்லாமல் வணங்குங்கள்; எப்பொழுதும் கொடுஞ்சொல் கூற வேண்டாம்; கொடுஞ்சொற் கூறுவதை அடியோடு விட்டு விலகிவிடுங்கள். உலகப் பாசமாகிய குற்றம் நீங்கவேண்டி மனம் நைந்து நைந்து நின்று, உள்ளம் குளிர்ந்து அன்பு செய்கின்றவர்களுக்கெல்லாம் ஆனைக்கா அண்ணல் அஞ்ச வேண்டாம் என்று சொல்லி அருள்புரிவான் இதுவே மேற்காட்டிய திருக்குறுந்தொகைப் பாட்டின் பொருள். உள்ளத்தில் வஞ்சனையற்றவர்கள்; கடுஞ்சொற் கூறுவதை விட்டவர்கள்; மனம் உருகிப் பக்தி பண்ணுகிறவர்கள்; இவர்கள் தான் உண்மையான அன்பர்கள்; இவர்களுக்குத்தான் இறைவன் அபயம் அளிப்பான் என்ற உண்மையை இப்பாடலால் உணர்த்தினார் நாவுக்கரசர்! உள்ளத்தில் வஞ்சம் பொருந்தியவர்கள், எப்பொழுதும் கடுகடுவென்று எரிந்து விழுந்து பேசித் திரிபவர்கள் எவ்வளவு தான் பக்தி செய்தாலும் பயன் இல்லை; மனம் உருகினாலும் இறைவன் அருளைப் பெற முடியாது என்ற பொருளும் இச் செய்யுளில் அடங்கிக் கிடப்பதைக் காணலாம். குடும்பத்தைப் பற்றிய கவலை; செல்வத்தைப் பற்றிய - சுக வாழ்வைப் பற்றிய கவலை; சுற்றத்தாரைப் பற்றிய கவலை; இவையெல்லாம் ஆசையை வளர்ப்பவையாகும். குடும்பத்தார் இன்பம் உற்று வாழப் பொருள் சேர்க்க வேண்டும்; தனக்குப் பின்னும் தன் குடும்பம் துன்பப்படாமல் வாழச் செல்வம் சேர்த்து வைக்க வேண்டும்; தான் துன்பம் இல்லாமல் இன்பம் அடைந்து வாழ்வதற்கான வசதிகளையெல்லாம் தேடி வைத்துக் கொள்ள வேண்டும்; சுற்றத்தாரையெல்லாம் காப்பாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களை வாழவைப்பதற்குப் பொருள் சேர்த்து உதவ வேண்டும் என்று நினைப்போர் பலர் உண்டு. இப்படி நினைப்பவர்கள் உலகப் பாசத்திலிருந்து விடுபட முடியாது; இறுதிவரையிலும் மன அமைதியின்றி உழைத்துத் தான் - வருந்தித்தான் ஆக வேண்டும். இந்தப் பாசம் விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. அவ்வழி சிவபிரானிடம் அன்பு கொண்டு, அவனை நினைப்பதுதான். அப்படி நினைத்தால் பாசம் - உலக ஆசை அற்றுப் போகும். அழியாத ஆனந்த நிலையை அடை யலாம். அத்தகைய நிலையை இறைவன் அருள் செய்வான்; என்று கூறுகிறார் நாவுக்கரசர். நேசம் ஆகிய நினைமட நெஞ்சமே! நாசம் ஆய குலம், நலம், சுற்றங்கள் பாசம் அற்றுப் பராபர ஆநந்த ஆசையுற்றிடும் ஆனைக்கா அண்ணலே. இதுவே அப்பாடல். இதுவும் திருவானைக்காத் திருக் குறுந் தொகைப்பாடல்தான். அறியாமையுள்ள மனமே, மிகவும் அன்பு கொண்டு இறைவனை நினைப்பாயாக. அப்படி அன்பு டன் நினைத்தால், அழிவைத் தருவதாகிய குடும்ப ஆசை, சுகத் தில் உள்ள ஆசை, சுற்றத்தார் மேல் உள்ள ஆசை எல்லாம் அறும்; உயர்ந்த அழியாத ஆனந்த வாழ்விலே ஆசையுண்டாகும் படி, ஆனைக்கா அண்ணல் அருள் செய்வான் என்பதே இப்பாட்டின் பொருள். மேலே காட்டிய மூன்று பாடல்களும் பக்தியின் சிறப்பை உணர்த்தின. துன்பம் இல்லாமல் இன்புற்று வாழ வேண்டுமானால் இராப்பகல் இடைவிடாமல் இறைவனையே எண்ணியிருக்க வேண்டும். வஞ்சம் இல்லாமல் இறைவனை வணங்க வேண்டும்; கடுஞ் சொற்களைக் கூறவே கூடாது; மனம் இளகி இறைவனை நினைந்து உருக வேண்டும்; இவ்வாறு செய்வோர் எதற்கும் அஞ்சாமல் வாழ்வார்கள். உலகப் பாசம் நீங்க வேண்டுமானால் குடும்பம், சுகம், சுற்றம் இவற்றின் மீதுள்ள பற்று ஒழிய வேண்டும்; இப்பற்று ஒழிய வேண்டுமானால் இறைவனை வணங்க வேண்டும். இவ்விஷயங்களையே மேலே காட்டிய பாடல்கள் கூறின. மக்கள் கவலையின்ற வாழ நாவுக்கரசர் காட்டும் வழி இது வாகும். அன்பும் அறிவும் அன்புள்ளவர்களே அறநெறியைப் பின்பற்றி வாழ்வார் கள். உள்ளத்திலே அன்புள்ளவர்கள் ஒருவர்க்கும் தீங்கு செய்ய மாட்டார்கள்; ஒழுக்கந் தவறியும் நடக்க மாட்டார்கள்; அவர்கள் செய்யும் செயல்கள் பயனுள்ள செயல்களாகத்தான் இருக்கும். பயனற்ற செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள். அன்பற்ற கல்மனங் கொண்டவர்கள் அறநெறியைப் பின்பற்ற மாட்டார்கள். அவர்கள் தான்தோன்றித் தம்பிரான் களாகத் தான் வாழ்வார்கள். தம் உடலை வளர்ப்பதற்கு-தாம் உயிர் வாழ்வதற்கு-தாம் இன்பந்துய்ப்பதற்கு எதையும் செய்வார்கள். அன்புள்ளவர்கள், மக்கள் சமுதாயம் முன்னேறுவதற்கு உழைப்பார்கள். மக்கள் சமுதாயம் நன்றாக வாழ்ந்தால் தான் தாமும் நன்றாக வாழ முடியும். சமுதாயம் துன்பச் சூழலிலே தடுமாறும் போது தாம் மட்டும் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது என்ற உண்மையை அன்புள்ளவர்களால் தான் அறியமுடியும். அன்பற்றவர்கள் மனித சமுதாயத்தைப் பற்றி மனத்தில்கூட எண்ண மாட்டார்கள்; தம்மைத் தவிர வேறுயாரைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. யார் வாழ்ந்தால் என்ன? யார் தாழ்ந்தால் என்ன? இவ்வுலகம் எக்கேடு கெட்டால் என்ன? நாம் நன்றாக உண்டு உறங்கி உலகில் வாழ வேண்டும் என்பதுதான் அன்பற்றவர்களின் குறிக்கோளாக இருக்கும். சிலர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நன்றாக - இனிமையாக - மெதுவாக ஆற அமரப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் சொல்லைப் பின்பற்றினால் அதோகதிதான் ஏற்படும். நஞ்சு கலந்த இனிப்பைத் தின்றவன் கதியைத்தான் அடைவோம். ஆதலால் ஒருவர் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு அவரை அன்புள்ளவர் என்று சொல்லி விடமுடியாது. அல்லது அன்பற்றவர் என்று அகற்றி விடவும் கூடாது. அவர் செய்கையை - நடத்தையைக் கொண்டுதான் அவர் அன்புள்ளவரா? வன்புள்ளவரா? என்று முடிவு செய்ய இயலும். கயவர்களுக்கு நாம் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் பயன்படாது. பிறர் உரைக்கும் புத்திமதிகளை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்கள். அவர்களுக்குக் கூறும் அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் முடியும். அப்படியே காதில் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் நெஞ் சத்திலே அப்புத்திமதிகள் புக மாட்டா; தம் மனம் போன போக்கிலேதான் போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அடாத நெறியிலே சென்று அல்லற்படும் போது தான் உண்மையைத் தெரிந்து கொள்ளுவார்கள். தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்று ஒரு பழமொழியுண்டு. இது அறிவற்றவர்கள் தன்மையை விளக்கும் பழமொழியாகும். பிறர் தலைவலியாலும் காய்ச்சலாலும் துன்புறும்போது கவலைப்பட மாட்டார்கள். இந்தத் தலை வலிக்கா இவ்வளவு துன்பம்? என்ன காய்ச்சல் பிரமாதமாக வந்து விட்டது? இதைப் பொருட்படுத்தலாமா? என்று அலட்சி யமாகப் பேசுவார்கள். ஆனால் இவர்கள் தலைவலியாலும் காய்ச்சலாலும் திணறும்போது படும் வேதனையைப் பார்க்க முடியாது; ஐயோ! அப்பா! அம்மா! என்றெல்லாம் கதறுவார்கள். கயவர்கள் நிலைமையும் இந்நிலைமைதான். நெருப்பிலே கால் வைக்காதே சுடும் என்றால் கேட்க மாட்டார்கள்; என்னையா நெருப்பு சுடும்? இதோ பார்! கால் வைக்கிறேன் என்று சொல்லி அசட்டுத்தனமாக அக்கினியிலே காலை வைத்து அப்பாடா என்று கூச்சலிடுவார்கள். துன்பத்திலே அகப்பட்டுத் தவிப்போர் இன்னது செய்ய லாம். இன்னது செய்யக்கூடாது என்பதைக் கூட மறந்து விடு வார்கள். எப்படியாவது துன்பத்திலிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்றே நினைப்பார்கள். கடலிலே வீழ்ந்து தவிப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால் கூட அதைப் பிடித்துக் கொண்டு கரையேறத்தான் முயற்சிப்பான். இந்தத் துரும்பைக் கொண்டு எப்படிக் கரைகாண முடியும்? என்ற எண்ணமே எழும்பாது. தாவித் தாவித் துரும்பைப் பிடிக்கத்தான் முயற்சிப்பான். இடையறாத தொல்லையிலே அகப்பட்டுத் துடிப்பவன், ஞானத்தைப் பற்றி அறிவதற்கு வாய்ப்பு ஏது? வந்த துன்பம் எப்படித் தொலையும்? இத் துன்பத்தை விரட்டியடிக்க என்ன செய்யலாம்? என்ற கவலைதான் துன்புறுவோனை ஆட்டி அலைகழிக்கும். இவை எல்லாம் உலகில் இயற்கையாக நிகழும் செயல்கள். அன்பற்றவர்கள் பயனுள்ள செயல்களில் ஈடுபடமாட்டார்கள். கயவர்களது தீமையைச் செய்து துன்பத்திற்கு ஆளானால் அல்லது சொற்புத்தி கேட்டுத் திருந்த மாட்டார்கள்; துன்பத்திலே கிடந்து தவிப்பவர்களின் அறநெறிகளைப் பற்றி நினைக்கவோ, அதன் வழியிலே நடக்கவோ முடியாது. இவ்வுண்மைகளை நாவுக்கரசர் ஒரு பாட்டில் அடக்கிக் கூறியிருக்கிறார். பற்றுஇலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்; உற்று அலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்; எற்று உளேன்; என் செய்கேன் நான்; இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர் வீரட்டனாரே. என்பதுதான் அப்பாடல்; இது திருக்கடவூர்ப் பதிகத்திலே உள்ள ஒரு பாட்டு.. உலகில் உள்ளோர் இயல்பைத் தன்னியல்பாக வைத்துப் பாடினார் வாகீசர். இப்பாடல் சிறந்ததொரு செந்தமிழ்ப் பாடல். மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக எடுத்துரைக்கும் இனியபாட்டு. அன்பற்ற வாழ்க்கை வாழ்ந்து வீணுக்கு-அல்லது விழலுக்கு நீர் இறைத்தேன். துன்பம் உற்றால் அல்லாமல் கயவர்கள் தீமையின் பலனை அறியமாட்டார்கள் என்னும் பழமொழிக்கு இலக்கானேன். எவ்வாறு உள்ளேன் நான்; என்ன செய்வேன்; நான்படும் துயரத்தால்--ஓய்வு ஒழிவு இல்லாத தொல்லையால் - அறிவுரைகள் ஒன்றையும் தெரிந்து கொள்ளா மல் போனேன்; திருக்கடவூர் வீரட்டானத்தில் வாழும் இறைவனே! எனக்கு ஆதரவாயிருப்பார் யாரையும் காண்கிலேன். இதுதான் மேலே காட்டிய பாடலின் பொருள். இந்தப் பாடல் இரண்டு அறங்களை - உண்மைப் பொருளை உணர்த்துகின்றது. ஒன்று அன்புள்ளங் கொண்டு வாழ வேண்டும். அன்புள் ளந்தான் எல்லா உயிர்களிடமும் இரக்கத்தைச் செலுத்தும். ஆகையால் அன்பை மறக்கவே கூடாது. இயற்கையில் உள்ளத்திலே அன்பில்லாவிட்டாலும், செயற்கையிலாவது அன்பு காட்டப் பழகிக் கொள்ள வேண்டும். இரண்டாவது, தீமை தரும் செயல்களைச் செய்யக் கூடாது; இதைத் செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். எண்ணித் துணிக கருமம் என்று வள்ளுவர் வலியுறுத்தும் கருத்தும் இதுதான். ஒன்றையும் எண்ணிப் பார்க்காமல் ஒரு செயலைச் செய்துவிட்டுப் பின்னர் வேதனைப்படுவது வீணர் செயல். இந்த இரண்டு சிறந்த நீதிகளைக் கொண்ட இனிய செந்தமிழ்ப் பாடல் இதுவாகும். இறை அருளே இன்பம் ஒரே பொருளில் கருத்தைச் செலுத்துவது; வேறு எந்த நினைப்பும் இல்லாமல், மனத்திலே ஒரு எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டுஅதை கைவிடாமல் இருப்பது; இச் செய்கை எளிதானது அன்று. உள்ளத்தை ஒரு வழியில் நிறுத்துவது என்பது எல்லோருக்கும் இயலக் கூடியதன்று; அதற்குப் பயிற்சி வேண்டும்; பழக்கம் வேண்டும். அறிஞர்கள் - கவலையற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் - தொடங்கிய காரியங்களைத் தோல்வியின்றி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உள்ளத்தை ஒரு நிலையில் நிறுத்துவதற்கு முயலுவார்கள். சிந்ததையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது என்றார் தாயுமானார். சிந்தை சும்மாவிருக்காது; ஒரு பொருளின் மேல் நிற்கவும் நிற்காது; ஒன்றை விட்டு மற்றொன்றின் மேல் தாவிக் கொண்டுதான் இருக்கும். எத்தனை பொருள்களின் மேல் தாவுகின்றது என்று கணக்குச் சொல்ல முடியாது. கண்ணில் காணும் பொருள்களின் மேல் எல்லாம் திடீர் திடீர் என்று பாய்ந்து செல்லும். இத்தகைய இயற்கையுள்ள மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் தொல்லையான வேலை தான். சிந்தையைக் கட்டுப்படுத்தியவர்களைத் தான் சிறந்த ஞானிகள்; பெரியோர்கள்; தவசிகள்; தர்மாத்மாக்கள் என்ற பல பெயரிட்டு அழைத்தனர் முன்னோர். சிந்தையை-உள்ளத்தை-மனத்தை ஒரு வழியிலே நிற்கச் செய்வதற்கான கருவிகளிலே கடவுளைப் போற்றுவது சிறந்தது என்று எண்ணினர் முன்னோர். நாம் வழிபடும் கடவுளைப் பற்றி மனத்திலே இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருந்தால் போதும்; உள்ளத்தை வேறு வழிகளில் அலையவிடாமல் தடுத்து விடலாம் என்று அறிஞர்கள் நம்பினார்கள். இப்படி வேறு கருத்து எதுவும் இல்லாமல் இறைவனையே எண்ணிக் கொண்டிருக்கும் ஆற்றல் ஏற்பட்டு விடுமாயின், அதனால் இன்பமும் உண்டு என்பது பெரியோர்களின் நம்பிக்கை. இறைவனுடைய அடிகளையே நினைத்திருப்பவர்கள் தேவர்களின் வாழ்வைக்கூட விரும்ப மாட்டார்கள்; தேவலோக இன்பத்தைக் கூடப் பொருட்படுத்த மாட்டார்கள். தேவ வாழ்வில் உள்ள இன்பத்தையும் தேவலோக வாழ்வில் உள்ள இன்பத்தையும் இறைவனுடைய பாதங்களே கொடுக்கும். இது அடியார்களின் நம்பிக்கையாகும். அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும், கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலேம்; வண்டுசேர் மயிலாடு துறை அரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே என்பது நாவுக்கரசர் பாட்டு. இறைவனுடைய தொண்டர் களின் - அடியார்களின் - பாதங்களை வணங்குவதே எல்லா இன்பங்களையும் தரும் என்று கூறுகிறது இச் செய்யுள். இறை வனுடைய அடியார் பாதங்களே எல்லா இன்பங்களையும் தருமாயின், இறைவனுடைய பாதப் பெருமையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இறைவனுடைய பாதங்களைப் பற்றி எண்ணுவதும் ஒன்றுதான்; அவனது அடியார்களின் பாதங் களைப் பற்றி நினைப்பதும் ஒன்றுதான். தேவர்களின் வாழ்க்கை இன்பத்தையும் தேவர் உலகில் உள்ள இன்பத்தையும் கண்டு நுகர்ந்து அவ்வாழ்வில் அமர்ந் திருக்கும் கருத்து எமக்குச் சிறிதும் இல்லை. வண்டுகள் மலர்களிலே மொய்த்து இசை பாடிக் கொண்டிருக்கும் வளம் பொருந்தியது மயிலாடுதுறை என்பது. அவ்வூரிலே எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானுடைய அடியார்களின் பாதங்களை எனது தலையிலே சூடிக்கொண்டு வாழ்வதே போதுமான தாகும்.. அடியார்களின் பாதங்களை நான் வணங்கி வாழும் போது தேவர் வாழ்வையும் தேவலோக இன்பத்தையும் நான் ஏன் விரும்ப வேண்டும்? என்பதே இச்செய்யுளின் பொருள். இது அடியார் வணக்கத்தை எடுத்துரைத்ததன் மூலம், பக்தி மார்க்கத்தின் பெருமையைக் கூறிற்று. இறைவன் அடியார்களை வணங்கியோ, அல்லது இறை வனையே வணங்கியோ அவன் அருளைப் பெற்று விட்டால் என்றும் இன்புற்று வாழலாம்; இறப்புக்கும் பிறப்புக்கும் அஞ்சாமல் வாழலாம்; உயிரைக் கவரும் காலன் நெருங்க மாட்டான் என்று மற்றொரு செய்யுளில் உரைக்கிறார் நாவுக்கரசர். வெம் சினக் கடும்காலன் விரைகிலான்; அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்; மஞ்சன் மாமயில் ஆடுதுறை உறை அம் சொலாள் உமை பங்கன் அருளிலே சிறந்த வலிமையுள்ளவன்; பெருமையுள்ள மயிலாடு துறையில் வாழ்கின்றவன்; அழகிய சொல்லையுடைய உமா தேவியைப் பாகத்திலே வைத்திருக்கின்றவன்; இத்தகைய சிவ பெருமான் அருள் செய்வான் ஆயின், அதன் பின் நம்மிடம் கொடுமையான சினத்தையுடைய காலன் நெருங்க மாட்டான்; எப்பொழுது சாவு வருமோ என்று அஞ்சுகின்ற இறப்பும் இல்லை; அதன் பின் பிறக்கின்ற பிறப்பும் இல்லை. இவை இரண்டையும் அடியோடு அறுத்துவிடலாம். இவ்வாறு இறைவன் அருளினால் வரும் நன்மையை எடுத்துக்கூறினார் நாவுக்கரசர். சாவுக்கு அஞ்சாத மனிதர் யாருமில்லை; உலகில் பிறந்த மக்கள் வாழ்வில் எவ்வளவு தொல்லைப் பட்டாலும் சரி சாவு என்றால் பயப்படத்தான் செய்கின்றனர்; இப்படி இன்னல்பட்டு உயிர் வாழ்வதை விட இறந்து மடிவது நல்லது; யாருக்கோ சாவு வருகின்றது; நமக்குச் சாவு வரமாட்டேன் என்கிறதே என்று சலித்துக் கொள்வோர் பலர் உண்டு. ஆனால் அவர்களும் நிச்சயமாகச் சாவு வருகிறதென்றால் அஞ்சி நடுங்காமல் இருப்ப தில்லை; சாவைத் தடுத்துக் கொள்ள முயலாமல் இருப்பதில்லை. ஆதலால் மக்கள் அஞ்சுவதிலே சாவு தான் முதன்மையானது என்பதைக் காணலாம். இத்தகைய சாவையும் தடுக்கும் வல்லமை இறைவன் அருள் ஒன்றுக்குத்தான் உண்டு. இதையே நாவுக் கரசரின் மேலே காட்டிய தேவாரப் பாடல் வலியுறுத்திற்று. இறைவன் அருளே எல்லா இன்பங்களையும் தரும் என்ற உண்மையை உணர்ந்தவர்க்கு வேறு எத்தகைய தவமும் வேண் டியதில்லை; கோலங்களும் வேண்டியதில்லை. துன்பத்தைத் தரக்கூடிய வேறு எந்த முயற்சிகளும் வேண்டவே வேண்டாம்; என்று மற்றொரு பாடலில் கூறுகிறார் நாவுக்கரசர். கோலும் புல்லும் ஒரு கையில் கூச்சமும் தோலும் பூண்டு துயரம் உற்று என்பயன்? நீல மாமயில் ஆடு துறையனே நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர் கட்கே. என்பதே அந்தச் செய்யுள். கையிலே முக்கோலும், நாணல் புல்லும், ஒரு கையில் குடையும், மான்தோலும் தரித்துக் கொண்டு துயரம் அடைய வேண்டியதில்லை; நீல நிறம் பொருந்திய மயில் ஆடிக் கொண்டிருக்கின்ற நீர்த் துறையை உடைய ஊரிலே வாழ்கின்ற தலைவனே, உன்னை அறிந்து வணங்கும் நுட்பத்தை அறிந்தவர்களுக்கு, வேதநூல் பாரா யணம்கூடத் தேவையில்லை. இவற்றால் ஒரு பயனும் இல்லை. உன்னை வணங்குவது ஒன்றே போதுமானதாகும் என்பதே இப் பாடலின் பொருளாகும். முதல் திருப்பாட்டு அடியாரை வணங்குவதால் அடையும் இன்பத்தை வலியுறுத்திற்கு. இரண்டாவது திருப்பாட்டு, சிவபெருமானை வணங்குவதால் பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சாத பெரு வாழ்வை அடையலாம் என்று கூறிற்று. மூன்றாவது திருப்பாட்டு இறைவனிடம் உண்மையான அன்பு கொண்டோர்க்கு வெளி வேடங்கள் எதுவும் வேண்டாம் என்று உரைத்தது. இவ்வாறு மூன்று பாடல்களும் மூன்று உண்மை களை உரைத்தன. மயிலாடுதுறை என்பது மயூரம் என்னும் ஊர். இது இப்பொழுது மாயவரம் என்று வழங்குவது, இவ்வூரைப் பற்றிய நாவுக்கரசர் தேவாரத்திலே இந்த அரிய செய்திகள் காணப்படு கின்றன. எல்லாம் ஒன்றே அறிவு வளர்ச்சி குன்றியிருந்த காலத்தில்தான் மக்களிடம் பலவகையான வேற்றுமைகள் தோன்றி வளர்ந்தன. மக்கள் அறிவு பெற்று வளர்ந்து முன்னேறி வரும் இக்காலத்தில் கூட அந்த வேற்றுமைகள் மறைந்து போய் விடவில்லை. வேற்றுமை கள் மறைந்து ஒற்றுமை நிலவ வேண்டும் என்று கருதாத அறிஞர்கள் இல்லை; பேசாத பெரியவர்கள் இல்லை; எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. ஆனால் ஒற்றுமை காண்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கின்றது. வேற்றுமையென்பது ஆயிரங்காலத்து வயிரம் பாய்ந்த மரமாக வளர்ந்து நிற்கின்றது. அதன் ஒவ்வொரு கிளையையும் வெட்டிச் சாய்த்து அடிமரத்தையும் வேரொடு கல்லி வீழ்த்துவ தென்றால் அது ஓராண்டு ஈராண்டுகளில் ஆகக்கூடிய செயலாக இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக வேற்றுமை மரத்தைக் களைந்தெறியப் பாடுபட்டோம்; இன்னும் பல ஆண்டுகள் பாடுபடத்தான் வேண்டும். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் வேற்றுமை இல்லாமல் இல்லை; அரசியல் துறையிலே பலதிறப்பட்ட கொள்கைகள்; அக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்கள், சமுதாயத் துறையை எடுத்துக் கொண்டால் எத்தனையோ கருத்து வேற்றுமைகள். சமயத் துறையிலே எடுத்துக் கொண்டால் எவ்வளவோ கருத்து மாறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள், பழக்கவழக்க மாறுபாடுகள். இவை இன்னும் காணப்படுகின்றன. பண்டைக்கால மக்கள், கண்ணால் கண்டவற்றை எல்லாம் கடவுள் என வணங்கி வந்தனர்; தங்கள் வாழ்வுக்குப் பயன்படு வனவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று எண்ணினர்; தங்களுக்கு அச்சத்தைத் தரும் நிகழ்ச்சிகளையெல்லாம் தெய்வச் செயல்கள் என்று நினைத்தனர். மக்கள் இந்த நிலையில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர். காற்று, நீர், நெருப்பு, நிலம் முதலியவையெல்லாம் தெய்வங்கள் என்று நம்பினர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மழை, இடி, மின்னல் போன்றவற்றை யெல்லாம் தெய்வங்கள் தாம் என்று நினைத்தனர். எல்லா நாட்டு மக்களும் ஆரம்பத்தில் இந்த நிலையில் தான் இருந்தனர். நாளடைவில்தான் அறிஞர்கள், எல்லாம்வல்ல சக்தி யொன்று கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றது; அதை மனத்தாலும் எண்ண முடியாது; வாக்காலும் சொல்ல முடி யாது என்று முடிவுகட்டினர். இத்தகைய எல்லாம் வல்ல சக்திக்கு அவரவர்கள் மனம்போனவாறு பெயரிட்டு அழைத் தனர். தாங்கள் பெயரிட்டு அழைக்கும் சக்தியையே கடவுள், ஆண்டவன், இறைவன், கர்த்தா, தலைவன், சிவன், திருமால், நான்முகன் என்ற பெயர்களால் அழைத்தனர். இந்த நிலைக்கு மக்கள் வந்த காலத்திலும் அவர்களுக்குள் வேற்றுமை நிலவியது. ஒவ்வொருவரும் தாம் பெயரிட்டு அழைக்கும் ஆண்டவனே உயர்ந்தவன் என்று எண்ணினர். இவ்வெண்ணம் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தன. இவ்வாறு தெய்வக் கொள்கை காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் பலப் பல சண்டைகள் நடந்திருக்கின்றன. கடவுளின் பெயராலும், தெய்வங்களின் பெயராலும், சமயங்களின் பெயராலும் உலகில் நடந்திருக்கும் சண்டைகளுக்குக் கணக்கு வழக்கில்லை. கடவுள் வேற்றுமை காரணமாக எத்தனையோ மக்கள் மடிந்தனர்: எவ்வளவோ செல்வங்கள் பாழாயின. மக்கள் ஒன்றுபட்டு வாழ முடியாமல் தனித்தனியாகப் பிரிந்து சின்னா பின்னமுற்றனர். ஆனால் கடவுள் தத்துவத்தின் உண்மையை மக்கள் அறிந்தால் சமயச் சண்டைகள் தோன்றவே மாட்டா. கடவுள் உண்டா இல்லையா என்பது வேறு விஷயம். கடவுள் தத்து வத்தின் கருத்தைத்தான் நாம் கவனிக்க வேண்டும். கடவுள் ஒருவரேதான்; பல கடவுள்கள் இல்லை. ஒரே கடவுள்தான், தன் நினைப்பு வல்லமையாலேயே உலகைப் படைத்திருக்கிறார்; அந்த ஒரே கடவுள்தான் பல உருவில் காட்சி தருகிறார்; பல செயல்களைச் செய்து வருகின்றார்; சிறப்பாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றி வருகின்றார். இதுதான் கடவுள் தத்துவம் ஆகும். இந்த உண்மையை அறிந்திருப்பதோடு மட்டும் இல்லாமல், இதை நம்புகின்றவர்கள்தாம் உண்மையான கடவுள் அன்பர்கள். அவர்கள் மற்றவர்களை வெறுக்க மாட்டார்கள். கடவுளின் பெயர் வேற்றுமை காரணமாக யாருடன் சண்டை பிடிக்க மாட்டார்கள். உண்மைப் பக்தர்கள் பிற சமயத்தினர்பால் - பிற மதத்தினர் பால்-வெறுப்பு கொள்ள மாட்டார்கள். ஏனைய மதத்தினர்கள்-சமயத்தினர்கள் வணங்கும் கடவுளர்களும் நம் கடவுளின் உருவந்தான் என்று எண்ணிப் பொறுமையுடன் இருப்பார்கள். இந்த உண்மையைத் திவ்யப்பிரபந்த நூலாசிரியர்களும் அறிந்திருந்தனர். தேவார ஆசிரியர்களும் தெரிந்து கொண்டிருந் தனர். இதை விளக்கும் நாவுக்கரசர் பாடல்கள் பல உண்டு. நாதனாய், உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதனாம், பரமயோகி, பலப் பல திறத்தினாலும் பேதனாய் தோன்றினானைப் பெருவேளூர் பேணினானை, ஓத நாவுடையன் ஆகி உரைக்குமாறு உரைக்கின்றேனே இப் பாடல் உலகமெல்லாம் ஒரே கடவுள்தான் பரவி யிருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. திருப்பெரு வேளூர்த் திருநேரிசையிலே உள்ள பாடல் இது. தலைவனாக உலகம் எல்லாம் எங்கள் தலைவன் என்று சொல்லி வழங்கும்படி நின்ற பாதங்களையுடையவன்; உயர்ந்த யோகியாவான்; பலப் பல துறையிலும் நின்று பல்வேறு உருவிலே காணப்படுகின்றவன்; பெருவேளூரை விரும்பி அங்கே கோயில் கொண்டிருப்பவன்; அவனையே எப்பொழுதும் ஓதி வணங்கும் நாவையுடையேன்; அவன் பெருமையை எவ்வாறு சொல்லிப் போற்ற வேண்டுமோ அவ்வாறு சொல்லிப் போற்று கின்றேன். இதுவே மேலே காட்டிய பாட்டின் பொருள். இதில் இறைவன் ஒருவனே. அவனே எல்லாவிடங்களிலும் இருக் கின்றான்; பல்வேறு உருவில் இருக்கின்றான்; என்ற உண்மையைக் காணலாம். இதே பதிகத்தில் உள்ள மற்றொரு நேரிசையில் இறைவன் ஒருவனே என்பதை இன்னும் விளக்கமாகக் கூறியிருக்கிறார். விரிவிலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்; பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை மருவி நான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின்றேனே. மேலே உள்ள பாட்டில் கடவுள் ஒன்று என்று கூறப்பட் டது. இச் செய்யுளில் எல்லாச் சமயங்களும் ஒன்றே என்பது கூறப்படுகின்றது. குறுகிய அறிவுள்ளவர்கள், சைவத்திற்கு மாறாக மற் றொரு சமயத்தை உண்டாக்கலாம். சைவத்தின்மேல் ஆத்திரம் கொண்டு, தாம் செய்த சமயமே உயர்ந்ததென்று கூறலாம். அப்படிக் கூறினாலும், அது எமது தலைவனால் ஒப்புக் கொள்ளக்கூடியதேயாகும். அன்புடன் பெரியோர்களால் போற்றப்படுகின்ற, பெருவேளூரை வாழ்விடமாகக் கொண்ட வனை நான் அடைந்து அவனையே எப்பொழுதும் வாழ்த்தி, ஈடேறும் வழியை எப்பொழுதும் எண்ணுகின்றேன். இந்த இரண்டு பாடல்களையும், உணர்ந்தவர்கள், இவற் றின் பொருளை அறிந்தவர்கள், தெய்வச் சண்டையில் ஈடுபட மாட்டார்கள்; சமயத் சண்டையில் தலையிட மாட்டார்கள். எல்லாத் தெய்வங்களும், ஒரு கடவுளின் பல்வேறு தோற்றங்களே என்று கருதுவார்கள்; எல்லாச் சமயங்களும், இறைவனுக்குச் சம்மதமான சமயங்களே என்று உணர்வார்கள். இதுவே தமிழர் கண்ட உண்மை நெறியாகும். சைவம் கண்ட சமரச சன்மார்க்க மாகும். கலைகளின் பெருமை மனிதன் மாடுகளைப்போல் சும்மா உழைத்துச் சாவதற்குப் பிறந்தவன் அல்லன்; அல்லது உணர்ச்சியற்ற கற்கள், கட்டைகள் போன்றவனும் அல்லன்; அல்லது பிறர் முடுக்கி விட்டால் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் போன்றவனும் அல்லன். மனிதனுக்கு உணர்ச்சியுண்டு; ஆராயும் அறிவுண்டு; சிந்தனா சக்தியுண்டு. தன் சிந்தனையினால், செயல்களினால் புதுப்புதுப் பொருள்களைக் கண்டறியும் ஆற்றல் உண்டு. இவ்வறிவு ஆற்றல்களைப் பயன்படுத்தும் மக்கள் தாம் சிறந்து வாழ்வார்கள்; உயர்ந்த வாழ்வு நடத்துவார்கள்; மற்ற மக்களால் கொண்டாடப்படுவார்கள்; இது நாம் இவ்வுலகிலே காணும் உண்மை. இவ்வுலகிலே பிறந்து இறந்த மக்களைக் கணக்கிட முடியாது. கணக்கும் இல்லை; கணக்கும் வைக்க முடியவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் பிறப்பு இறப்புக் கணக்குகள் உள்ளன. அரசாங்கத்தார் தங்கள் நாட்டிலே பிறந்தோர் எண்ணிக்கை யையும், இறந்தோர் எண்ணிக்கையையும் குறித்து வைத்துக் கொள்கின்றனர். இந்தக் கணக்கைப் பரிசோதிப்பதன் மூலம் இந்த ஆண்டிலே--அல்லது சென்ற ஆண்டிலே பிறந்தோர் இறந்தோர் எத்தனைபேர் என்ற கணக்கைத்தான் குறிக்கலாம். உலகில் இதுவரையிலும் பிறந்தவர்கள் எத்தனை பேர்? இறந்தவர்கள் எத்தனைபேர்? என்ற கணக்கைத் திரட்ட ஒரு வழியும் இல்லை. சில நூற்றாண்டுகளாகத்தான் - நாகரிகம் நன்றாகப் பரவிய பிறகுதான்-சிறந்த அரசியல் முறைகள் தோன்றிய பிறகுதான்- இறப்பு பிறப்புக் கணக்கு வைக்கத் தொடங்கினோம். இக்கணக்கு தொடங்குவதற்கு முன் இறந்தோர்-பிறந்தோர் கணக்கைக் காண வழியேயில்லை. ஆனால் சிறந்த கலைஞர்கள் - உயர்ந்த புலவர்கள் - உத்தம ஞானிகள் - அற்புதங்களைச் செய்த அடியார்கள் எத்தனை பேர் என்ற கணக்கை நாம் ஒரளவு கண்டுபிடித்து பிடலாம். ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய சான்றோர்கள் மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாட்டு இலக்கியங் களிலும், சரித்திரங் களிலும் இவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். ஆதலால் இவர்கள் எண்ணிக்கையை முற்ற முடியக் கூற முடியாவிட்டாலும் ஓரளவாவது உரைத்து விட முடியும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இவ்வாறு வரலாற்றிலே இடம் பெறும்படி - மக்கள் உள்ளத்திலே குடிகொள்ளும்படி உயர்ந்த அறிஞர்கள் இவ் வுலகில் வாழ முயற்சிப்பது அவர்கள் கடமையாகும். மக்களாகப் பிறந்தவர்கள் மறுமைக்காவது வழிதேட வேண்டும்; அல்லது இம்மையிலாவது எல்லோரும் போற்றும் படி சிறந்து வாழ வேண்டும். இரண்டும் இல்லாமல் சும்மா பிறந்து இருந்து இறப்பதிலே பயன் இல்லை; என்பது தான் சான்றோர்களின் கருத்து. இக்கருத்தையே நாவுக்கரசர் ஒரு செய்யுளிலே கூறுகின்றார். மறுமைக்கான காரியங்களைச் செய்ய ஆற்றல் இல்லாவிட்டாலும் இம்மையிலாவது இன்புற்று வாழ முயல வேண்டும்; என்று வலியுறுத்துகின்றார் நாவுக்கரசர். கற்றிலேன் கலைகள்; ஞானம் கற்றவர் தங்களோடும் உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்; பெற்றிலேன்; பெரும் தடம்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன்; எற்றுள்ளேன்; இறைவனே! நான் என்செய்வான் தோன்றினேனே. இது-குறைந்த திருநேரிசையில் உள்ள ஒரு செந்தமிழ்ச் செய்யுள். இச்செய்யுளின் பொருளைக் கண்டால் நாவுக்கரசரின் கருத்தை அறியலாம். இவ்வுலகில் எத்தனையோ கலைகள் உண்டு. அவை கற்றவர்களுக்கு இன்பம் அளிக்கும்; அவற்றால் மற்றவர்களையும் இன்புறச் செய்யலாம். அத்தகைய கலைகள் ஒன்றையாவது நான் கற்கவில்லை. ஆதலால் நானும் இன்புற வழியில்லை; பிறரை இன்புறுத்தவும் அறியேன். நான்தான் கலைகளைக் கற்காமல் விட்டேன். என்றாலும், கலைகளைக்கற்ற அறிஞர்களின் கூட்டத்தோடு சேர்ந்து வாழ்கின்றேனா என்றால் அதுவும் இல்லை, கலைவாணர் களுடன் கூடி வாழ்ந்தாலாவது கலையின்பத்தை நுகரலாம். கவலையின்றிப் பொழுது போக்கலாம்; வேறு தீய நெறிகளிலே செல்லாமல், கலைநெறியிலாவது கலந்து வாழலாம்; அதையும் செய்யாமல் காலம் போக்கி விட்டேன். கலைகளைக் கற்காதது; கலைஞர்களுடன் சேர்ந்து வாழாதது ஆகிய இரண்டு காரணங்களால் அறிவற்றவனாகவும் ஆகிவிட்டேன். அறிவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை; அதற்கும் எனக்கும் தொலைத்தூரம் ஆகிவிட்டது. எல்லோரையும் தங்கள்பால் இழுத்து அடக்கிக் கொள்ளும் பெரிய வல்லமை பொருந்திய கண்களையுடைய பெண்களின் அன்பையாவது பெற்றேனா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் அன்பைப் பெற்றாலாவது இவ்வுலகிலே இன்புற்று வாழலாம். ஆதலால் அவர்கள் என்னைப் பொல்லாதவன்; பெண்கள் பால் நேசம் காட்டாதவன் என்று வசைபாடும்படி வாழ்கின்றேன். நான் எத்தன்மையுள்ளேன்; எப்பக்கத்தைச் சேர்ந்துள் ளேன்; நான் அடியார்கள் பக்கத்திலும் இல்லை; உலக இன்பத்தை நுகரும் அறிஞர்கள் பக்கத்திலும் இல்லை. இறைவனே! இப்படி இரண்டில் ஒன்றுக்கும் தகுதியற்ற நான் இவ்வுலகிலே ஏன் பிறந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? ஒன்றும் புரியாமல் திகைக் கிறேன். இவ்வாறு விரிந்த பொருளைக் கொண்ட பாடல் இது. இப்பாடல் மற்றொரு சிறந்த உண்மையை உணர்த்து கின்றது. வைதீர்களிலே சிலர் கலைகளை வெறுப்பார்கள். கலைகள் இவ்வுலக இன்பத்தின் மேல் ஆசையை வளர்ப்பது; அவை மக்களைத் தீயொழுக்கத்தையே மேற் கொள்ளவும் செய்யும்; ஆதலால் நடனம், சங்கீதம், நாடகம் போன்ற கலைகள் அழியவேண்டும்; அவற்றை அழிக்கவும் வேண்டும்; என்று கூறும் முரட்டு வைதீர்கள் சிலர் உண்டு. இவர்கள் கூற்று இயற்கைக்கு மாறானது. உறுதியுள்ளம் படைத்தவனை எந்தத் தீமைகளும் அசைக்க முடியாது; ஐம்புலன் களையும் அடக்கியாளும் உரவோனை யார்தான் என்னதான் செய்ய முடியும்? இந்த உண்மையை உணராதவர்கள் தாம் கலைகள் மேல் பழி சுமத்துவார்கள்; தங்கள் குற்றத்தை மறந்து கலைகளை இழித்துரைப்பார்கள். இப்படிப்பட்ட வைதீர்களுக்கு ஒரு நல்ல விடையாக அமைந்திருக்கின்றது இச் செய்யுள். நாவுக்கரசர் கலையிலே வெறுப்புள்ளவர் அல்லர்; தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் என்பது அவர் வாசகம். தமிழும் இசையும் இணைந்தது; இசை மட்டும் அன்று; நாடகமும் தமிழோடு இசைந்தது. முத்தமிழ் என்ற சொல்லே இதனை விளக்கும். உண்மையான கலைஞன் ஒழுக்கமற்றவனாக இருக்க மாட்டான்; கலைகளைப் புனிதமாக மதிப்பவன் தானும் புனித மான வாழ்வையே நாடுவான். நமது நாட்டுப் பழந்தமிழ்ப் புலவர்கள் அனைவரும் சிறந்த கலைஞர்களாக இருந்திருக் கின்றனர். அவர்கள் ஒழுக்கங் கெட்டவர்களாக மக்கள் பழிக்கும் படி திரியவில்லை. எல்லா மக்களும் பாராட்டும்படி உயர்ந்த நடத்தையுள்ளவர்களாகவே வாழ்ந்தனர். இசையும், நடனமும் கற்றவர்களிலே எத்தனையோ பெரியோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் எல்லாம் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்திருக்கின்றனர். கூடா ஒழுக்கமுள்ள சில கலைஞர்களைப் பார்த்துவிட்டு கலையைப் பழிப்பது சரியாகாது. கலைஞர்களிலே ஒழுக்கங் கெட்டவர்கள் இருப்பார்களானால், அவர்கள் உண்மையான கலைஞர்கள் அல்லர், கலைகளின் உயர்வை-புனிதத் தன்மையை- உணர்ந்தவர்களும் அல்லர். கலை உலகுக்கு வசைதேடி வாழும் இத்தகைய கலைஞர்கள் நாட்டின் வரலாற்றிலே - மக்கள் உள்ளத்திலே இடம்பெற மாட்டார்கள். ஆதலால் இந்தக் கலைஞர்கள் என்போரை அளவு கோலாகக் கொண்டு கலையைப் பழிப்பது தவறு; அதை வெறுப்பது அறியாமை. கலைகள், இவ்வுலகிலே இன்புற்று வாழ வழிகாட்டும்; அவற்றால் அன்பும் ஒழுக்கமும் வளரும்; மக்களிடையே கூட்டுறவும் பெருகும். ஆதலால் கலைகளைக் கற்பதும் கற்றவர் களோடு இணங்கி வாழ்வதும் இன்புறுவதற்காக வழி என்றார் நாவுக்கரசர். எது வந்தால் என்ன? கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது பழ மொழி. நம்பிக்கை நல்வாழ்வு அளிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. நம்பிக்கை ஒரு சிறந்த நடைபாதை. முயன்றால் முடியும். முயல்வோம்; வெற்றி பெறுவோம் என்ற எண்ண முள்ளவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற ஏதேனும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். நம்பிக்கையுள்ளவர்களின் நடத்தையை நாம் கண்கூடாகக் காணலாம்; அவர்கள் இடைவிடாமல் முயன்று கொண்டிருப் பதையும் பார்க்கலாம். அவர்கள் தாம் தொடங்கிய செயல் களிலே வெற்றி பெறுவதையும் காண்கின்றோம். நம்பிக்கையுள்ளவர்களில் இரு வகையினர் உண்டு; ஒருவகையினர் குறுகிய நோக்கம் உள்ளவர்கள், மற்றொரு வகையினர் பரந்த நோக்கம் படைத்தவர்கள். உதாரணமாக, பக்தி என்பதை எடுத்துக் கொள்வோம். பக்தி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான். நம்பிக்கையில்லாவிட்டால் பக்தி ஏற்படாது; முருக பக்தர்கள் இருக்கிறார்கள்; சிவபக்தர்கள் இருக்கிறார்கள்; வைணவ பக்தர்கள் இருக்கிறார்கள்; காளி பக்தர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தாங்கள் பக்தி செய்யும் தெய்வங்களை உள்ளத்திலே வைத்து வணங்குகின்றனர். முருக பக்தர்கள், புராணங்களிலே முருகனுக்குக் கூறப்பட் டிருக்கும் உருவத்தை நினைக்கின்றனர். ஆறுமுகம், பன்னிரண்டு கைகள், மயில் வாகனம், வள்ளி, தெய்வானை, கையிலே கூர்மை யான வேற்படை, இத்தகைய உருவத்தை உள்ளத்திலே முதன்மை யாகவே எண்ணுகின்றனர். வாயினால் புகழ்ந்து பாடுகின்றனர். இப்படி எண்ணுவதிலும், பாடுவதிலும் இன்பம் அடைகின்றனர். பரவசமாகின்றனர். இவர்களைப் போலவே சிவபக்தர்கள், வைணவ பக்தர்கள், காளி பக்தர்கள், அவ்வத் தெய்வங்களின் தோற்றங்களை நினைத்து வாழ்த்தி, வணங்கிப் பாடி மகிழ்கின்றனர். மற்றொரு வகையினர் - மத நூல்களையெல்லாம் படித்த வர்கள் - மதத் தத்துவங்களை எல்லாம் உணர்ந்தவர்கள் - தெய் வங்கள் என்றால் என்ன என்பதைக் கண்டறிந்தவர்கள் - பக்தியும் உள்ளவர்கள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை வணங்க லாம்; ஆனால் மற்ற தெய்வங்களை வெறுக்க மாட்டார்கள். மற்ற மதத்தினர்களைக் குறை சொல்ல மாட்டார்கள். தெய்வத்தை - கடவுளை - முதன்மையாகக் கொண்ட எல்லா மதத்தினர்களிட மும் ஒரு தன்மையாக நடந்து கொள்வார்கள். இத்தகைய அறிஞர்கள், தாம் வணங்கும் தெய்வம் எங்கும் நிறைந்திருக்கின்றது; எல்லாப் பொருள்களிலும் இருக்கின்றது; எல்லாத் தெய்வங்களும் தாம் வணங்கும் தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்கள் தாம் என்று தான் எண்ணுவார்கள். இவர்கள் பக்தி விரிவானது. பரந்த மனத்தின் பண்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய பக்திமான்கள், தாம் வணங்கும் தெய்வந்தான் பெரிது; கண்கண்டது; ஏனைய தெய்வங்களுக்குத் தம் தெய்வத் துக்கு இருப்பது போன்ற சக்தியில்லை; வல்லமையில்லை; ஆற்றல் இல்லை என்று நினைக்கவும் மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள். சிவபெருமானை வழிபடு தெய்வமாகக் கொண்டவர் நாவுக்கரசர். அவர் சிவபெருமானைக் குறித்து எப்படி நினைக் கிறார் என்பதைப்பற்றி அவருடைய தேவாரப் பாடல்களிலே தெளிவாகக் காணலாம். அவற்றுள் ஒரு பாட்டு தான் கீழ் வருவது: விண்ணகத்தான்; மிக்க வேதத்துள்ளான்; விரி நீர் உடுத்த மண்அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய பண்அகத்தான்; பக்தர் சித்தத்து உள்ளான்; பழநாய் அடியேன் கண்அகத்தான்; மனத்தான்; சென்னியான்; எம்கறைக் கண்டனே. எமது நீலகண்டனாகிய சிவபெருமான், எங்கும் நிறைந்தவன், வானத்திலே இருக்கின்றான். சிறந்த வேதத்திலே வீற்றிருக்கின்றவன். கடல் சூழ்ந்த இந்த மண்ணுலகிலே எங்கும் இருப்பவன். திருமால் என்று வேறு தெய்வம் போல் சொல்லப் படும் தெய்வத்தினிடமும் இருக்கின்றவனும் அவன்தான். கேட் பதற்கு இனிமையான இசையிலும் இருக்கின்றான். பக்தர்களின் உள்ளத்தை விட்டு விலகாமல் எப்பொழுதும் இருக்கின்றான். பழமையான - நாய் போன்ற - அடியேனுடைய கண்களில் எப்பொழுதும் தோன்றிக் கொண்டிருப்பவன். என் உள்ளத்திலும் உறைபவன். என் தலையிலும் தங்கிருப்பவன். இவ்வாறு தாம் வணங்கும் இறைவன் எங்கும் இருக்கின் றான் என்று பாடினார் நாவுக்கரசர். கடவுள் உண்மையை அறிந்தவர்கள் அனைவரும் இப்படித்தான் பாடி இருக்கின்றனர். பரந்த மனமும், உறுதியான அன்பும், பக்தியும் உள்ளவர் கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள்; தமக்கு எந்தத் தீமை நேர்ந் தாலும் உள்ளங் கலங்க மாட்டார்கள்; உலகத்திலே எந்த மாறு பாடுகள் நிகழ்ந்தாலும் மனந்தடுமாறாமல் தலை நிமிர்ந்தே நிற்பார்கள். தங்கள் நிலையிலிருந்து தடுமாற்றம் அடைய மாட்டார்கள். இந்த உண்மையையும் நாவுக்கரசரின் மற்றொரு செய்யுளால் அறியலாம். நாவுக்கரசர் பாடலைப் படித்தவர்கள் பலரும் இச் செய்யுளை அறிவார்கள். வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும் தானம்துளங்கித் தலை தடுமாறில் என்? தண்கடலும் மீனம்படில் என்? விரிசுடர் வீழில் என்? வேலை நஞ்சுண்டு ஊனம்ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆள்பட்ட உத்தமர்க்கே என்பதுதான் அச்செய்யுள். உண்மையான பக்தர்களின் தன்மையை எடுத்துக் காட்டுகின்றது இச்செய்யுள். நாவுக்கர சரின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இச் செய்யுள் ஒன்றே போதுமான சான்றாகும். பாற்கடலிலே தோன்றிய நஞ்சை உண்டான் சிவபெரு மான். உண்டும் ஒரு குறையும் இல்லாமல் இருந்தான். அப்படிப் பட்ட ஒப்பற்ற இறைவனுக்கு அடிமையானவர்கள் உத்தமர்கள் ஆவார்கள். அவர்களுக்கு எக்காலத்திலும் யாவராலும் எவ்விதத் துன்பத்தையும் செய்துவிட முடியாது. வானம் கிடுகிடென்று ஆடினால்தான் என்ன? பூமி முழுவதும் தடதடவென்று ஆடி அசைந்தால் தான் என்ன? பெரிய மலைகள் தாம் இருந்த இடத்திலே அசைந்து இடம் பெயர்ந்தால் என்ன? குளிர்ந்த நீர் நிறைந்த கடல் வறண்டு, அதில் உள்ள மீன்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியும்படி காய்ந்து போனால் தான் என்ன? மிகுந்த ஒளியுள்ள சூரியனே எரிந்து விழுந்தால் என்ன? எதற்கும் அவர்கள் மனங் கலங்க மாட்டார்கள், இது தான் மேலே காட்டிய செய்யுளின் பொருள். இவ்விரண்டு பாடல்களும் தனித்திருவிருத்தத்திலே கண்டவை.. உண்மையான கடவுள் நம்பிக்கை இன்னது என்று முதலில் காட்டிய திருவிருத்தம் கூறியது. உறுதியான கடவுள் நம்பிக்கை யுள்ளவர்களின் உண்மைத் தன்மையை இரண்டாவது திருவிருத்தம் எடுத்துக்காட்டிற்று. வானந் துளங்கில் என் என்று தொடங்கும் இரண்டா வது பாடல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்க வேண்டிய பாடல். ஒவ்வொருவர் நாவிலும் நடமாட வேண்டிய நற்றமிழ் மந்திரமாகும். இப்பாடலிலே நம்பிக்கை வைத்தவர்கள், எடுத்துக் கொண்ட எச்செயலையும் வெற்றியுடன் முடிப்பார்கள்; இன்பம் காண்பார்கள். தீமைகளைக் கண்டு - துன்பங்களைக் கண்டு - இடையூறுகளைக் கண்டு உள்ளந்தளர மாட்டார்கள்; ஊக்கம் குன்ற மாட்டார்கள். பேச்சால் பயன் இல்லை பல நூல்களையும் படித்திருப்பார்கள்! அவற்றில் கூறப் படும் செய்திகளைப் பற்றிப் பலருக்கும் எடுத்துரைப்பார்கள்; அவர்கள் அறியாத வேதாந்த தத்துவங்கள் எதுவும் இல்லை; ஆனால் இப்படிப் பேசுகின்றவரிடத்திலே பேச்சுக்கேற்ற நடத்தையைக் காண முடியாது. சொல் வேறு; செயல் வேறாகத் தான் இருக்கும். சிலர் தங்கள் குலத்தையும் கோத்திரத்தையும் பெரிதாகப் பாராட்டிக் கொள்ளுவார்கள். தங்கள் குலத்தைப் போல உயர்ந்த குலம் இல்லை; தங்கள் கோத்திரத்தைப் போல் உயர்ந்த கோத்திரம் இல்லை என்று பெருமை அடித்துக் கொள்ளுவார் கள். ஆனால், அவர்களிடம் ஒழுக்கத்தையோ உண்மையையோ காண முடியாது. இவ்வாறு சாத்திரம் பேசுவோர்களும் கோத்திரப் பெருமை, குலப் பெருமை பேசுபவர்களும் பக்தியும் ஒழுக்கமும் இல்லாதவர்களானால், அவர்கள் உயர்ந்தவர்கள் அல்லர்; மனிதத் தன்மை உள்ளவர்கள் அல்லர்; அவர்கள் கீழ்த்தரமான வர்கள்; கயவர்கள்; சழக்கர்கள். இந்தச் சழக்கர்களைப் பார்த்துக் கூறுகிறார் நாவுக்கரசர். சாத்திரங்கள் பலவற்றைப் படித்துவிட்டு, அவற்றைப் பற்றி வாயால் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் சழக்கர்களே! அறிவற்றவர்களே! கீழ்த்தரமானவர்களே! நீங்கள் சிறந்த கோத்திரத்திலே வந்தவர்களாக இருக்கலாம்; உங்கள் குலம் உயர்ந்ததாயிருக்கலாம். இந்தக் கோத்திரப் பெருமையும் குல உயர்வும் உங்களுக்கு என்ன பயனைத்தரும்? ஒரு பயனையும் தரமாட்டா. நாம் அடையக்கூடிய பாத்திரம் சிவபெருமான்தான் என்று முடிவு செய்து அவனை வணங்குங்கள்; அப்படி வணங்கு வீராயின், திருமால் பேறு என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான் ஒரு மாத்திரைப் பொழுதுக்குள் உங்களுக்கு அருள்புரிவான். இதுதான் நீங்கள் பயன்பெறும் வழி என்று கூறுகிறார். இதனை, சாத்திரம் பல பேசும் சழக்கர் காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்! பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் பால் பேறர் ஏ! என்பதே மேலே காட்டிய பொருள் உள்ள பாடல். இது திருமாற் பேறு என்னும் தொண்டை நாட்டுத் தலத்தைப் பற்றிப் பாடிய பாடல். மேலும் நாவுக்கரசர் மக்களுக்குச் சிவபெருமான்னுடைய பெருமையை எடுத்துரைக்கின்றார். எல்லா உண்மைகளையும் ஆராய்ந்து பார்த்திருந்து சொல்லுகின்றேன். அறிவற்றவர்களே கேளுங்கள். அரிய தவம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவற்றை யெல்லாம் ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினால் பெற முடியும். அந்த மந்திரத்துக்குரிய சிவபெருமான் உங்களிடம் உள்ள பிறவி நோயையும் உடல் நோயையும் ஓடும்படி விரட்டுகின்ற மருந்தாகவும் ஆவார். திருமாற் பேறு என்னும் தலத்தில் உள்ள சிவபெருமான் இவ்வாறு உதவுவார். இப்பொருளை: இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்! அரும்தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால் பொருந்து நோய், பிணி போகத் துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர் மன்னும் மால் பேறர் ஏ என்னும் பாடலால் காணலாம். இதற்கு மேலும் சிவபெருமான் பெருமையை நாவுக்கரசர் தெளிவாக நவில்கின்றார். இவ்வுலகில் வாழும் மக்களே! நான், நீங்கள் எல்லோரும் அறியும்படி பறைசாற்றிச் சொல்லுகின்றேன் கேளுங்கள்: சிவபெருமான் காளையின் மேல் ஏறி வருகின்றவன். அவன் பாதங்களை ஏற்றிப் போற்றுங்கள். இப்படி ஏற்றிப் போற்றுவீர் களானால், திருமாற்பேறு என்னும் ஊரிலே வாழ்கின்ற அச் சிவபெருமான் உங்களை நீண்ட காலம் வாழவைப்பான்; உங்கள் உயிரைக் கவரும் கூற்றுவனை உங்களிடம் நெருங்கவிட மாட்டான். இது மட்டுமா? உங்கள் குறைகளையெல்லாம் தீர்ப்பவன். உங்களை ஆட்கொள்ளுவான். ஒப்புச் சொல்ல முடியாத - அல்லது இத்தனை மாற்று என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாத - சிறந்த பொன்னாக நின்று உதவி செய்வான். இந்த உண்மையை உணருங்கள் என்பது நாவுக்கரசர் பேச்சு. இந்த உண்மையைக் கீழ்வரும் பாடல் கூறுகின்றது. சாற்றிச் சொல்லுவன் கேண்மின்! தரணியீர்! ஏற்றின் மேல்வருவான் கழல் ஏத்தினால், கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்றுஇலாச் செம்பொன் ஆவர் மாற்பேறர் ஏ. மேலே காட்டப்பட்ட மூன்று தேவாரப் பாடல்களும் சிறந்த கருத்துள்ளவை. இறைவனையே உண்மையாக உறுதியாக - நம்பி நன்மையடைந்த நாவுக்கரசர் தம் அனுபவத்தைக் கூறியவை. சிவபிரானைச் சரண் என்று அடைந்ததனால் அவர் பல நன்மைகள் அடைந்தார். அவர் தம் பகைவர்கள் அவருக்குச் செய்த இடையூறுகளால் எவ்வித இன்னலும் அடையவில்லை. அவரை நெருங்கிய துன்பங்கள் அனைத்தும் பெருங்காற்றில் சிக்கிய பஞ்சுபோல் ஒழிந்து போயின. ஆதலால்தான் அவர் இவ்வளவு உறுதியாகச் சிவபெருமானைப்பற்றிப் பேசியிருக் கின்றார். முதற்பாடலால் சாத்திரம் பேசுவதால் பயன் இல்லை; கோத்திரப் பெருமை குலப்பெருமை, பேசுவதால் பயன் இல்லை. சிவனைப் பணிவதுதான் பயன்பெறும் வழி என்று கூறினார். இரண்டாவது பாடலில் சிவபெருமானுக்குரிய அஞ் செழுத்து மந்திரத்தை ஓதி வணங்குங்கள். உங்கள் பிறவிபோகும்; உடல் நோய் ஒழியும். இவற்றை ஒழிக்கும் மருந்தாக நின்று உதவுவார் சிவபெருமான் என்று கூறினார். மூன்றாவது பாடலில் சிவபெருமான் பாதத்தைப் பணிமின்! சாவாமல் வாழலாம்; உங்கள் குறைகள் எல்லாம் தீரும். சிபெருமான் மாற்றறியாத்தங்கமாக நின்று உதவுவார் என்று கூறினார். இவைகளால் அப்பர் காட்டும் அருள்நெறியை அறியலாம். நல்ல கதி ஒரு தான்யம் ஒரு தான்யத்தை விளைவிக்க வேண்டுமானால் உழுது பயிர் செய்தாக வேண்டும். உழுது பயிர் செய்வதாகிய உழைப்பை மேற்கொண்டால்தான் தான்யத்தை அறுத்துக் குவிக்க முடியும். பயிர் செய்வதற்குக் கருவிகளும் உழைப்பும் வேண்டும்; செய்த பயிரைப் பாதுகாக்க வேண்டும்; அப்பொழுதுதான் உணவுப்பொருள் உண்டாகும். விளைந்த உணவுப் பொருள் வீடு வந்து சேரும். உழவர்கள் இந்த உண்மையை உணர்வார்கள். நிலத்திலே விதைத்த விதையை மீண்டும் தான்யமாகப் பெறுவதென்றால் அது எளிதில் இல்லை. எவ்வளவோ வேலை; எவ்வளவோ உழைப்பு; எத்தனையோ செய்நத்தி; எவ்வளவோ பாதுகாப்பு. இவ்வாறு பல மாதங்கள் பாடுபட்டால்தான் பயிர் செய்ததன் பலனைக் காணமுடியும். சிவகதி என்னும் நல்ல கதியைப் பெறுவதும் எளிதல்ல. பயிர் செய்கின்றவன் பாடுபடுகின்றது போல இதற்கும் பாடு பட்டாக வேண்டும். பாடுபட்டால்தான் சிவகதி என்னும் தான்யத்தை அடைய முடியும். நிலத்திலே முதலில் உழ வேண்டும்; பிறகு விதை தெளிக்க வேண்டும்; அதன்பின் முளைத்த பயிருக்குள்ள உரத்தை வேறு செடிகள் சாப்பிட்டுவிடாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்; அந்தப் பயிரை மாடு ஆடு மேய்ந்து அழித்துவிடாமல் பயிரிட்ட நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் தான்யம் விளைந்து பலன் தரும். சிவகதி என்னும் தான்யம் பெறவேண்டுமானால், மெய்ம்மை என்னும் உழவைச் செய்யவேண்டும்; விருப்பம், அதாவது அன்பு என்னும் விதையை விதைக்க வேண்டும். பொய்ம்மை என்னும் களையைக் களைந்தெறிய வேண்டும்; பொறுமை என்னும் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்; தகுதி என்னும் நல்ல பண் பாகிய வேலியைப் போட வேண்டும்; நல்வழியிலே நடத்தலாகிய செம்மை என்னும் நெறியிலே நிற்க வேண்டும். இப்படியிருந்தால் தான் சிவகதி என்னும் தான்ய மாகிய பலனைப் பெறமுடியும். இவ்வாறு நாவுக்கரசர் கூறுகின்றார். சிவகதி-நல்லகதி. நல்வாழ்க்கை வாழ்வதையே சிவகதி என்று கூறிவிடலாம். உலகில் உயிருடன் வாழ்கின்றபோதும் நல்வாழ்வு; இறந்த பின்னும் நல்வாழ்வு; இரண்டையும் குறிப்பதே சிவகதி என்பது. இச் சிவகதியை அடையும் வழியை ஒரு பாடல் விளக்கு கின்றது. மெய்யைப் பின்பற்ற வேண்டும்; உண்மையை ஒருபொழுதும் கைவிடக்கூடாது; எண்ணுவதும், பேசுவதும், செய்வதும், ஒரு தன்மையாக இருக்க வேண்டும்; இதுதான் உண்மை - மெய்ம்மையாகும். இரண்டாவது, அன்பு வேண்டும்; துன்பப்படுவோர் அனைவரிடமும் அன்பு காட்டவேண்டும்; யாரையும் அன்பாக வரவேற்பது; அனைவருடனும் அன்போடு பேசுவது; அன்போடு பழகுவது ஆகிய தன்மை மக்களுக்கு அவசியமாகும். பொய்ம்மையை அடியோடு களைந்தெறிய வேண்டும். பொய் பேசுதல் - பொய்யொழுக்கத்தை மேற்கொள்ளுதல் - வஞ்சகமாக நடித்தல் இவற்றையெல்லாம் விட்டுவிட வேண்டும், ஒரு பொய் சொன்னால் அதை உண்மையாக்க - அல்லது மறைக்க - மேலும் பல பொய்கள் புனைந்தாக வேண்டும். பொய் நடிப்பு, நடிப்போர் நன்மைக்குப் பயன்படுவதாக இருக்கலாம். ஆனால் அந் நடிப்பின் குறிக்கோள் பிறரை ஏமாற்றுவதுதான். ஒருவன் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது; ஏமாந்தவர்கள் எப்பொ ழுதும் ஏமாந்துகொண்டேயிருக்க மாட்டார்கள்; அவர்கள் எப்பொழுதாவது விழித்துக்கொள்ளத்தான் செய்வார்கள்; விழித்துக் கொண்டால் ஏமாற்றியவர் பாடு திண்டாட்டமாகி விடும். ஆதலால் ஏமாற்றுவதற்கு அடிப்படையான பொய்யொ ழுக்கம் - பொய் நடிப்பு இவற்றை அறிஞர்கள் ஒப்புக் கொள் ளவே மாட்டார்கள். பொறுமைக்குணம் அறிவுள்ளவர்களின் ஆபரணம்; வீரர் களின் கைத்துப்பாக்கி; ஆத்திரத்தால் - கோபத்தால் காரியம் கைகூடாது; ஆத்திரமும் கோபமும் அழிவு வேலையைத் தான் செய்யும்; ஆக்கவேலைக்கு உதவவே உதவாது. ஆக்க வேலைகள் நடக்க வேண்டுமானால் பொறுமைக் குணம் வேண்டும். பொறுமைத் தன்மைதான் எதையும் ஆராய்ந்து பார்க்கச் செய்யும். எக்காரியத்தையும் எண்ணிப் பார்த்த பின் செய்ய வழிகாட்டும். ஆகையால் உலக வாழ்விலே வெற்றி பெற விழைவோர் எப்பொழுதும் பொறுமையைக் கைவிடாமல் காப்பாற்ற வேண்டும். பயிரை வளர்ப்பது தண்ணீர்; மனிதனு டைய அறிவை வளர்ப்பது பொறுமை; இந்த உண்மையை மறந்துவிடுதல் கூடாது. தம்மைத் தாம் நன்றாக உணர வேண்டும்; தமது சூழ்நிலை யைக் கண்டறியவேண்டும். தன்னால் இன்னது செய்ய முடியும், இன்னது செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தாம் செய்வது நல்லதா? கெட்டதா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்த்தால்தான் தம் நிலை தவறாமல் வாழமுடியும்; நல்ல பண்பிலிருந்து நழுவாமல் நிற்கமுடியும். இத்தகைய தகுதிதான் தீமை அணுகாமல் காக்கும் வேலியாகும். எப்பொழுதும் நல்ல நெறியிலே நிற்க வேண்டும்; என்ன துன்பம் நேர்ந்தாலும் சரி அறிவைச் சோர விட்டு விடக்கூடாது; மனத் தளர்ச்சியடையக் கூடாது. உறுதியாக ஒரு நிலையிலே நிற்க வேண்டும். இதுதான் செம்மை நெறியாகும். இத்தகைய செம்மை நெறியிலே நிற்பவர்கள் உறுதியாகச் சிவகதியைப் பெறுவார்கள்; நல்ல கதியை அடைவார்கள்; நல்ல நிலையை எய்துவார்கள். இந்த உண்மைகளையே நாவுக்கரசர் ஒரு பாடலில் எடுத்துக் காட்டுகிறார். மெய்ம்மையாம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி, பொய்ம்மை ஆம் களையை வாங்கிப், பொறை எனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கொண்டு, தசவு எனும் வேலி இட்டுச் செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே. இது தனித் திரு நேரிசைப் பதிகத்தில் ஒரு செய்யுளாகும். பக்தி மார்க்கத்தில் நிற்போர்க்கு ஒழுக்கமும் இன்றியமை யாதது என்பதையும் நாவுக்கரசர் வலியுறுத்துகின்றார். ஒழுக்கத் தையே போதிக்கும் சமண மதத்தை மேற்கொண்டிருந் தவர் நாவுக்கரசர்; ஏதோ சில காரணங்களால் அவர் பக்தி மார்க்கத்தை மீண்டும் தழுவினார். தழுவியும், ஒழுக்கம் சிறந்தது என்ற சைனமதக் கொள்கையை அவர் போற்றாமல் விடவில்லை. பண்ணக்கூடாத பழிபாவங்களையெல்லாம் பண்ணி விட்டு என்னப்பனே! ராமா! கோவிந்தா! கோபாலா! சிவபெரு மானே! என்னைக் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண் டால் மட்டும் பாவம் தீர்ந்து விடாது. மனதாரத் தீமை செய்யக் கூடாது. கூடியவரையிலும் நல்லொழுக்கத்தை மேற்கொண்டு நடக்கவேண்டும். அறநெறி யிலே ஒழுகுவதோடு ஆண்டவனைப் பற்றிய நினைப்பு வேண் டும்; அன்பு நெறியும் வேண்டும்; இரண்டு நெறிகளையும் ஏற்று நடக்கும் மக்களே சிறந்த மக்கள்; நல்ல நிலையிலே வாழும் மக்கள். சிவகதி என்னும் உயர்ந்த நல்ல நிலையைப் பெறுவதற் குத் தகுதியுள்ள மக்கள். இதுவே நாவுக்கரசர் கருத்து, இக்கருத் தையும் மேலே காட்டிய செய்யுளில் காணலாம். அமைதிக்கு வழி புலன் அடக்கம் உள்ளவர்களே மக்களுட் சிறந்தோராவர்; புலன்கள் ஐந்து; அவை உணர்ச்சி, பார்வை, நாற்றம், சுவை, கேள்வி என்பவை. இவற்றையே ஐம்புலன் என்பர்; இவை பிறக்கும் இடத்தைப் பொறி என்பர். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. மெய்யின் இயல்பு உணர்ச்சி; வாயின் தன்மை சுவை யறிதல், கண்ணின் தன்மை பார்வை; மூக்கின் தன்மை நாற்றம் அறிதல்; காதின் தன்மை கேட்டல். இந்த ஐந்து பொறிகளையும் அவற்றில் பிறக்கும் உணர்ச்சி களையும் தன் வசமாக்கி ஆளவேண்டும். இது அவ்வளவு எளிதான செயல் அன்று. இந்த ஐந்து புலன்களையும் யானைகளுக்கு ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றார்கள். இந்த ஐந்து யானைகளையும் அடக்கி யாள வேண்டும் என்றால் மனோவலிமை வேண்டும். இவற்றை அடக்கி ஆளும் மனோவலிமையை எல்லோரும் பெற்றுவிட முடியாது; ஒருசிலர்தான் பெற முடியும். ஐம்புலன்களை அவை செல்லும் வழியிலே போகவிடாமல், தம் விருப்பப்படி செலுத்து வோரே சிறந்த ஞானிகள் என்று போற்றப்படு கின்றனர். இத்தகைய புலன் அடக்கம் உள்ளவர்கள் எத்தகைய இன்னல் களையும் சமாளித்துக் கொள்வார்கள். மெய்யின் இயல்பு தொடுதல் உணர்ச்சி; உடம்பால் அடை யும் இன்பம் பல உண்டு; சுகமான படுக்கை தேடுவது உடலின் பத்தைப் பொறுத்தது; குழந்தைகளைக் கட்டி அணைத்து முத்தமிடுவது; மனைவியுடன் கூடிக்களித்து இன்புறுவது இவை எல்லாம் உடல் இன்பம். ஆண்களிலும் சரி, பெண்களிலும் சரி, எத்தனையோ பேர் கல்யாணமே வேண்டாமென்று சொல்லுவோரைக் கண்டிருக் கின்றோம். பல்லாண்டுகள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த வர்கள் திடீரென்று மணவாழ்க்கையில் புகுந்துவிடுவதைக் காண்கின்றோம். பிரம்மச்சாரிகள், துறவிகள், மாதர் இன்பத்தை மனமார வெறுத்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிலே பரிசுத்தமானவர்கள் ஒருசிலர்தான் இருக்கலாம்; பலர் கள்ளத்தனமாக உடலின்பம் அனுபவிக்க முயற்சிப்பதையும் அனுபவிப்பதையும் காணலாம். மிகுந்த மன உறுதியுள்ளவர்களால்தான் மாதர் இன்பத் தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும். அடுத்தபடி வாயின் தன்மையான சுவை அறிதலை எடுத்துக் கொள்ளுவோம். நாக்கு ருசியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை; உலகை வெறுத்துப் பேசும் துறவிகளும் சுவையுள்ள உணவாக இருந்தால்தான் உண்பார்கள். இல்லறத்தில் வாழ்வோரைப்பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. வீட்டிலே நல்ல சமையல் இல்லாவிட்டால் போராட் டந்தான். சமையல்காரன் சமைத்ததாயினும் சரி, மனைவி சமைத்ததாயினும் சரி, நாவுக்குச் சுவையாக இல்லாவிட்டால் வயிறு நிரம்பச் சாப்பிட முடிவதில்லை. சாப்பாட்டு விடுதிகளில் சாப்பிடுவோர் நிலையும் இதுதான்; விடுதியில் உணவுகள் நன்றாக இல்லாவிட்டால் சண்டைதான். எங்கே நல்ல சுவையுள்ள உணவு கிடைக்கின்றதோ அங்கே தேடிக்கொண்டு செல்லு கின்றனர். நாவின் சுவையைக் கட்டுப்படுத்த முடியாமையால் தான் இந்தத் தொல்லை. நமது கண் நல்ல காட்சிகளைக் காண விரும்புகின்றது; படக்காட்சி, நாடகம் முதலியவற்றைக் காண விரும்புவதற்குக் கண்தான் முதற்காரணம். ஒரு மனிதன் அல்லது ஒரு பெண் தன் நிலை தவறி மற்றொரு பெண்ணை அல்லது மற்றொரு ஆணை விரும்புவதற்கு முதற்காரணம் கண்தான். முதலில் உருவத்தைக் காண்பது கண். அதன் வழியாகவே உள்ளத்தில் விருப்பம் உண்டாகின்றது. ஆதலால் கண்ணின் வழி மனத்தைச் செல்ல விடாமல் தடுப்பது அரிதுதான். அடுத்ததாக மூக்கின் தன்மை நாற்றம் உணர்தல். நாற்றம் என்பது நறுமணம். பண்டைக் காலத்தில் நாற்றம் என்றால் நறுமணத்தையே குறிக்கும். நாளடைவில் இது பொதுச் சொல்லாக மாறிவிட்டது. பல்லாண்டுகளுக்கு முன்பே மாறிவிட்டது. நறுநாற்றம், தீ நாற்றம் என்று சொல்லும்போது நாற்றம் என்பது பொதுச் சொல்லாக நிற்கின்றது. இப்பொழுது நாற்றம் என்றால் கெட்ட நாற்றத்தையும் வாசனை என்றால் நறுமணத்தையும் சுட்டுகின்றது. ஆதியில் நறுமணத்தைக் குறித்த நாற்றம் பின்னர் பொதுச்சொல்லாகி, அதன்பின்னர் துர்நாற்றமாகவே மாறிவிட்டது. நமது மூக்கு எப்பொழுதும் நறுமணத்தைத்தான் விரும்பும்; நறுமணமுள்ள உணவை விரும்பும்; நறுமணமுள்ள மலரை விரும்பும்; நறுமணமுள்ள புகையை விரும்பும். இது மூக்கின் இயல்பு. மூக்கின் இத்தன்மையை அடக்கியாளுவதும் அரிது தான். காதின் இயல்பு ஒலிகளைக் கேட்டல். கடூரமான ஓசை களை நம் காதுகள் விரும்புவதில்லை; இனிய ஓசைகளையே விரும்பும்; இனிய ஓசைகளை விரும்பியே சங்கீதக் கச்சேரி களுக்குச் செல்லுகின்றோம்; படக்காட்சி, நாடகம் முதலிய வற்றுக்கும் போகின்றோம்; வானொலிப் பெட்டியையும் திறந்து வைத்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்து ஆனந்தம் அனுபவிக் கின்றோம். இந்த ஐந்து புலன்களையும் அடக்கி ஆளுவது என்றால், அது எல்லோராலும் இயலுமா என்பதை எண்ணிப்பாருங்கள், முடியாது; ஒருக்காலும் முடியாது. பெரிய ஞானிகள், பக்தர்கள், அடியார்கள் என்று பாராட்டப்படுகின்றவர்கள் எல்லாம். ஐம்புலன்களையும் அடக்கமுடியவில்லையே என்று பாடிப் பரிதவிக்கின்றனர். ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றல் பெற்றவன் அல்லல் இன்றி வாழ்வான்; அவனுக்கு உலகம் அடங்கி நடக்கும்; அவனை ஆராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஐம்புலன்களை அடக்கி ஆளுகின்றவனால், எதையும் செய்ய முடியும். அவன் எண்ணியவற்றையெல்லாம் எளிதிலே செய்து முடிப்பான். இவ்வாறு முன்னோர்கள் மொழிந்திருக்கின்றனர். இந்த உண்மையை நாவுக்கரசர் ஒரு செய்யுளிலே எடுத்துக் காட்டுகின்றார்: பழிப்பதற்குரிய என்னுடைய உடம்பினால் நான் நற்பயன் பெறவில்லை; பாழுக்கே உழைத்தேன். நல்ல வழியைப் பின்பற்றி வாழமாட்டேன்; இவ்வுலகில் உள்ள மாயத்தையும் அறியாமல் மயங்கினேன்; அழியக்கூடிய வாழ்க்கையையே உண்மையென்று நம்பினேன். ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலும் இல்லாமல், அப்புலன்களால் ஆட்டி அலைக்கப்படுகின்றேன். நீரோடையில் ஓட்டுகின்றவன் இல்லாமல் மிதக்கின்ற தோணியைப்போல் நான் வாழ்கின்றேன். இவ்வாறு நாவுக்கரசர், பொதுமக்களின் தன்மையைத் தன்மேல் ஏற்றிப் பாடியிருக்கின்றார். திருக்கடவூர்த் தேவாரப் பதிகத்தில் இப்பொருள் அமைந்த பாடல் காணப்படுகின்றது. பழியுடை யாக்கைதன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழமாட்டேன், மாயமும் தெளிய இல்லேன்; அழிவு உடைத்தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனாரே என்பதுதான் அப்பாடல். இதிலே ஐவரால் அலைக்கப்பட்டுக் கழியிடைத்தோணி போன்றேன் என்ற தொடர்தான் குறிப்பிடத்தக்கது. நீரோடை யிலே உள்ள தோணி, தனக்கு என்று திசையில்லாமல் காற்று வாக்கிலே போய்க்கொண்டிருக்கும்; தோணியை ஓட்டுவோன் இருந்தால், அவன் விருப்பப்படி வேண்டிய திசையிலே செலுத்து வான். அது போல என்னிடம் உரம் இல்லாமையால், நெஞ்சு துணிவு இல்லாமையால் என் உள்ளத்தை என்னால் அடக்கியாள முடியவில்லை; ஐம் புலன்கள் செல்லும் வழியிலே சென்று அல்லற்படுகின்றேன். இத்தகைய கருத்து உடையதே அத்தொடர். புலன் அடக்கமுள்ளவனே உத்தமனாக வாழமுடியும்; ஒழுக்கம் உள்ளவனாக வாழ முடியும்; அமைதியுள்ளவனாக வாழ்க்கை நடத்த முடியும். புலன் அடக்கம் இல்லாதவர்களால் மனச்சாந்தி பெறவே முடியாது. எப்பொழுதும் அலைந்து திரிந்து அல்லற்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அமைதி யுடன் வாழ்வதற்குப் புலன் அடக்கத்தையே சிறந்த கருவி என்று கொண்டனர் முன்னோர்கள். பழந்தமிழர்களும் இக்கொள் கையை ஒப்புக்கொண்டு போற்றினார்கள். நீதியிலே நிலைத்து வாழ்க மக்களுக்குப் பெருமை தருவது எது? என்று ஒரு கேள்வியைப் போட்டால் இதற்குப் பலவகையான விடைகள் கிடைக்கும். சிலர் பணம்தான் பெருமை தருவது என்பர். சிலர் படிப்பு தான் பெருமை தருவது என்பர். சிலர் நல்ல அழகும் தோற்றமும் தான் பெருமைதரும் என்பர். சிலர் மனைவி மக்களோடு கூடி மனச் சாந்தியுடன் இல்லறத்திலே வாழ்வது தான் பெருமை தருவது என்பர். சிலர் உயர்ந்த பதவியிலே வாழ்வதுதான் பெருமை தரும் என்பர். சிலர் பிறர் பார்த்து மூக்கில் விரல் வைத்து வியக்கும்படி உயர்ந்த ஆடை அணிகலன் களைச் சுமந்துகொண்டு அலைவதுதான் பெருமைதரும் என்பர். இவ்வாறு பல படியாகப் பகர்வர். ஆனால் மக்களுக்குப் பெருமை தருவது நல்லொழுக்கம் ஒன்றே என்று வள்ளுவர் கூறுகின்றார். குலமும், குடியும் பெருமை தருவனவல்ல; உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்பதற்குப் பொருள் இல்லை; ஒழுக்கம் அற்றவர் தாழ்ந்த குடியினர்; என்று வள்ளுவர் கூறுகின்றார். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பது குறள். நல்லொழுக்கமே பெருமை தருவ தால், அது உயிரைக் காட்டினும் அருமையாகக் காப்பாற்றக் கூடியதொன்றாகும் என்பதே மேற்கூறிய குறளின் பொருள். ஒழுக்கம் உடைமை குடிமை ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பண்பாகும்; என்று மற்றொரு குறளிலே குறிக்கின்றார். இத்தகைய ஒழுக்கத்தை முதல் முதலில் மிகுதியாக வலியுறுத்தியவர்கள் புத்தர்களும் சமணர்களுந்தான். புத்த மதமும், சமண மதமும் அறநெறியையே முதன்மையாகக் கொண்டவை. அடிப்படையாகக் கொண்டவை. கடவுள் பக்தி யைப்பற்றி அவை கவலைப்படவே யில்லை. மக்கள் அனைவரும் நன்னெறியிலே வாழ்ந்தால் போதும் என்பதே அம்மதங்களின் கொள்கை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் மக்களிடையே பக்தி மார்க்கத்தைப் பரப்பினர்; சைவத்தின் பேராலும் வைணத்தின் பேராலும் பக்திமார்க்கம் பரப்பப்பட்டது. பக்தியோடு அறநெறி களையும், ஒழுக்க முறைகளையும் நாயன்மார்களும், ஆழ்வார் களும் போதித்து வந்தனர். அவர்களுடைய அருந் தமிழ்ப் பாடல்களிலே ஒழுக்க நெறியைப்பற்றி உரைக்கும் பகுதிகள் உண்டு. சமயாச்சாரியார்களின் பாடல்களிலே நாவுக்கரசர் தேவாரத்தில் ஒழுக்க நெறியை மிகுதியாகக் காணலாம். அவர் சில ஆண்டுகள் சமண மதத்திலே சிறந்ததொரு தலைவரா யிருந்தவர்; ஒழுக்க நூல்களை எல்லாம் நன்றாகப்படித்தவர். பக்தியுடன் நல்லொழுக்கமும் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்துள்ளவர். பக்தியில்லாமல், ஒழுக்கம் மட்டும் இருந்தாலும் போதாது. ஒழுக்கமும், பக்தியும் ஒன்றோடொன்று இணைந்தவை; ஆதலால் அவற்றைப் பின்பற்றுகின்றவர்களே சிறந்தவர்கள். இக்கருத்தை மக்களிடையிலே பரவச் செய்தவர்கள் சைவ - வைணவ ஆச்சாரியார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களுடைய பிரச்சாரத்தால்தான் தமிழகத்திலே செல்வாக்கு பெற்றிருந்த புத்த சமண மதங்கள் செல்வாக்கை இழந்தன. ஒழுக்கமும் பக்தியும் நிறைந்தவன் சிறந்த மனிதனாகத்தான் இருப்பான். ஒழுக்கமுள்ளவன் யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்யமாட்டான். பக்தியுள்ளவன் நெஞ்சிலே உரமுடையவனா யிருப்பான். உள்ளத்தை ஒரு வழிப்படுத்துவது பக்தி. ஆதலால் உண்மையான பக்தியுள்ளவனுடைய உள்ளம் பண்பட்டிருக்கும். எதிலும் உறுதியாக நிற்கும். இறைவன் துணைபுரிவான் என்ற நம்பிக்கையினால் எடுத்த செயலிலே வெற்றி தோல்வியைப்பற்றி எண்ணாமல் உழைப்பான். பக்தியின் பண்பு இதுவாகும். ஆதலால் ஒழுக்கத்தையும் பக்தியையும் முன்னோர்கள் வலியுறுத்தினர். நீதியால் வாழமாட்டேன்; நித்தலும் தூயேன் அல்லேன்; ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்; சோதியே! சுடரே! உன்றன் தூமலர்ப் பாதம் காண்பான் ஆதியே அலைந்து போனேன்; அதிகை வீரட்டனாரே. இது நாவுக்கரசர் வாக்கு; திருவதிகை வீரட்டானத் தேவாரப்படல். எப்படி வாழ வேண்டுமோ அப்படி நான் வாழ வில்லை என்று தன்னைப்பற்றியே இழிவாகக் கூறிக்கொள்ளு கின்றார்; இதன்மூலம் எப்படி வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். இச்செய்யுளின் பொருளைக் காண்போம். திருவதிகை வீரட்டம் என்னும் தலத்தில் உள்ள சிவ பெருமானே! நீதி நெறியிலே நின்று நேர்மையான வழியிலே வாழ்க்கை நடத்தமாட்டேன்; ஒவ்வொரு நாளும் உடலிலும் உள்ளத்திலும் தூய்மையற்றவனாகவே வாழ்கின்றேன்; ஒரு நாளாவது சுத்தமான உள்ளத்துடன், உடலுடன் இருந்தறி யேன். பல நூல்களையும் ஓதியிருக்கிறேன்; மனப்பாடம் பண்ணி யிருக்கிறேன்; நன்றாக உருப்போட்டிருக்கின்றேன்; ஆயினும் அந்நூல்களிலே சொல்லப்பட்டிருக்கும் உண்மைப் பொருளை அறியமாட்டேன்; ஆதலால் உன்னை என் உள்ளத்திலே நினைத்து வைத்திருக்கவில்லை; மறந்து திரிகின்றேன். ஓதிய நூல்களின் உண்மையை உணர்ந்திருப்பேனாயின் கண்டிப்பாக உன்னை என் உள்ளத்திலே அடைத்து வைத்திருப்பேன். சோதியே - சுடரே, அதாவது பேரொளியாக இருக் கின்றவனே; அந்தப் பேரொளியின் சுடராக இருக்கின்றவனே, உன்னுடைய தூய மலர்போன்ற பாதங்களைக் காணும் பொருட்டு, ஆதிமுதல் அலைந்து திரிகின்றேன். இச்செய்யுளில் மக்கள் எப்படி வாழவேண்டும்? எப்படி வாழ்வது சிறந்த வாழ்க்கை? - பெருமையுள்ள வாழ்வு? என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார் நாவுக்கரசர். அறறெநியிலே வாழ்வது; நீதியிலே நிலைத்து நின்று வாழ்வது; ஒருவருக்கும் தீங்கு செய்யாத நன்னெறியைப் பின்பற்றி வாழ்வது சிறந்த வாழ்வாகும். உள்ளத்திலே தீய எண்ணங்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளுவது; அல்லது வெளி யிலிருந்து நுழையவிடாமல் தடுப்பது; இதைப்போலவே உடம் பையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுவதும் நல்வாழ்வாகும். ஒவ்வொரு நாளும் உள்ளத்திலே அழுக்கேறாமலும், உடலிலே தூசு படியாமலும் கருத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த நூல்களைக் கற்க வேண்டும். சும்மா நாப்பாடம் செய்வது மட்டும் போதாது. எல்லா நூல்களையும் அடிக்கடி மூச்சுவிடாமல் சொல்லிச் சொல்லி உள்ளத்திலே உருவேற்றிக் கொள்ளுவது படிப்பன்று; கல்வியன்று. எந்த நூலாயினும் சரி அதன் உண்மைப் பொருளை உய்த்துணர வேண்டும். இதுவே அறிவுடைமையாகும். உண்மையான செய்தியை உள்ளத்திலே மறவாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இறைவனைச் சோதிவடிவாக, அறிவின் உருவாக எண்ணி நல்வழியிலே நடக்கவேண்டும். இவற்றையே நாவுக்கரசர் பாட்டு நவில்கின்றது. சுந்தரமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவருள் சுந்தரர் வரலாற்றிலே பல சுவை யுள்ள பகுதிகள் உண்டு. இவர் வரலாறு மக்களுக்குப் பல படிப் பினைகளை அளிப்பது; மக்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழியைக் காட்டுவது. அவர் உலக வாழ்க்கையின் நிலையாமையை அறிந்த பக்தர்தான்; ஆயினும் உலக வாழ்வோடு ஒட்டி வாழ்ந்தார். இதுதான் அவர் வாழ்வில் உள்ள ஒரு தனிச் சிறப்பு. சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முதல் பகுதி. அவருடைய வரலாறு அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த பழக்கவழக்கங்களைக் காட்டுகின்றன; அவருடைய அருமையான செந்தமிழ்த் திருப்பாடல்களும், அக்கால நிகழ்ச்சிகள் பலவற்றை அறியத் துணை செய்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருமணம் நடக்கத் தொடங் கியபோது, பரமசிவன் ஒரு கிழ வேதியராக வந்தார். சுந்தர ருடைய முப்பாட்டனார், தானும் தன் குடும்பமும் அவ்வேதி யருக்கு அடிமை என்று முறி எழுதிக் கொடுத்திருக்கின்றார். அந்த அடிமை தீர்ந்த பிறகுதான் - அதற்கு வழி சொல்லிய பிறகுதான் சுந்தரர் மணம்புரிந்து கொள்ள வேண்டும் என்று வாதாடினார். சுந்தரரின் திருமணத்தைத் தடுத்தார். கிழவேதியர், தன் வழக்கை உண்மையென்று மெய்ப்பித்தார். அதன்பின், அவர் தன் வீட்டைக் காட்டுவதாகச் சொல்லி திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலுக்குள் புகுந்து மறைந்தார். இதைப் பார்த்ததும் சுந்தரருக்கு உண்மை ஞானம் உதித்தது. தன்னைத் தடுத்தாட் கொண்டவர் சிவபெருமானே என்று அறிந்து அவர்மேல் பதிகம் பாடினார். பல சிவத்தலங்களுக்கும் சென்று பரமசிவனை வழிப்பட்டுப் பதிகங்கள் பாடினார். இது சுந்தரர் வரலாற்றில் காணுவது. மேலே காணும் சுந்தரர் வரலாற்றால் நாம் ஒரு உண்மையை அறியலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே, தமிழகத்திலே மனிதனுக்கு மனிதன் அடிமையாகும் வழக்கம் இருந்தது; தொன்றுதொட்டு அடிமை வழக்கம் நீடித்திருந்தது. இன்னான் இன்னானுக்கு அடிமை என்று பத்திரம் எழுதிக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது. இதைச் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு காட்டுகின்றது. சுந்தரர் ஆதி வைசப் பிராமணர் குடியிலே பிறந்தவர்; அக்காலத்திலிருந்த சிற்றரசரான நரசிங்கமுனையரையர் என்னும் சிவபக்தர் வீட்டிலே வளர்ந்தவர். பின்னர் அவர் பரவையார், சங்கிலியார் என்னும் இரு மனைவியரை மணந்தார். பரவையார் கணிகையர் குலப்பெண்; சங்கிலியார் வேளாளர் வீட்டுப் பெண். இதனால் ஏழாம் நூற்றாண்டிலே தமிழகத்திலே சாதி பேதம் ஒழிவதற்கான முயற்சி நடைபெற்றது. கற்றாருள் சாதி பேதம் பாராட்டப்படவில்லை; கலப்பு மணம் நடைபெற்று வந்தது; ஓர் ஆண்மகன் பல பெண்களை மணக்கும் வழக்கமும் இருந்தது; என்ற உண்மைகளைக் காணலாம். சுந்தரருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் நம்பி யாரூரர் என்பது. அவர் பிறந்த ஊர் திருநாவலூர். ஆதலால் திருநாவலூரன் என்பது மற்றொரு பெயர். வன்றொண்டர், தம்பிரான் தோழர் என்ற பெயர்களும் உண்டு. சுந்தரர் பழந்தமிழ் நூல்களையெல்லாம் நன்றாகப் படித்தறிந்தவர்; வேத ஆகமங்களிலும் தேர்ச்சியுள்ளவர். அவரு டைய பாடல்களிலே பழந்தமிழ் நூல்களின் கருத்துக்களையும், வேதாகமங்களின் சாரங்களையும் காணலாம். வடமொழிச் சொற்களும் அவர் பாடல்களிலே கலந்து சுவை தருகின்றன. இவ்வுலகம் நிலையற்றது; உலகில் தோன்றியன எல்லாம் அழியக் கூடியன; இவ்வுலகிலே இன்ப வாழ்வு இல்லை; இவ்வுலக வாழ்வில் துன்பந்தான் மிகுந்து கிடக்கின்றது. ஆதலால் அழியாத இன்ப வாழ்வைப் பெற முயல்வதே அறிவுள்ளோர் கடமை என்பது ஞானிகளின் கொள்கை. தத்துவ நூல்களின் உபதேசம். இந்தக் கொள்கைகளை - உபதேசங்களை - சுந்தரர் மறுக்க வில்லை. ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார். வாழ்வாவது மாயம் இது மண் ஆவது திண்ணம் என்பது அவர் திருவாக்கு. தோற்றம் உண்டேல் மரணம் உண்டாம் துயரம் மனை வாழ்க்கை பிறப்பு உண்டானால், மரணமும் நிச்சயமாக உண்டு; மனை வாழ்க்கை துன்பத்துக்கு வாழ்விடமாகும். இன்பம் உண்டேல் துன்பம் உண்டு; ஏழை மனை வாழ்க்கை இன்பம் ஒன்று இருக்குமானால் துன்பம் என்பதும் உண்டு. மனை வாழ்க்கை இன்பமானது என்று நினைப்பது அறியாதான் முடிவாகும். மத்த யானை யேறி மன்னர்சூழ வருவீர்கள்! செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மினே மத்தகத்தையுடைய யானை மீது வைத்த அம்பாரியில் ஏறி அமர்ந்து மன்னர்கள் புடைசூழ வீதிவலம் வரும் முடி மன்னர்களே! நீங்கள் இறந்த போது உங்களுடன் வருவோர் ஒருவரும் இல்லை; இந்த உண்மையை மறவாதீர்! உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இவைகள் எல்லாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் உபதேசங் கள்தாம். ஆயினும் அவர் இவ்வுலக இன்பத்தை வெறுத்துவிட வில்லை. வாழ்க்கையின்பத்தை நன்றாக அனுபவித்தார்; என்றும் மாப்பிள்ளைக் கோலத்துடன் வாழ்ந்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிறந்த சரித்திராசிரியர் என்றும் கூறலாம். அவர் பாடிய திருத்தொண்டத்தொகையே இதற்கு உதாரணம். அவருடைய பாடல்கள் பலவற்றிலே நாயன்மார் களின் வரலாற்றுக் குறிப்புகள் பலவற்றைக் காணலாம். நாயன்மார்களின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் பெரிய புராணத்துக்குச் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகைப் பாடல்களே அடிப்படை. இத் திருத்தொண்டத் தொகையை ஆதரவாகக் கொண்டே கி.பி. பத்தாம் நூற்றாண்டிலே வாழ்ந்த நம்பி யாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடினார். இது திருத்தொண்டத் தொகையைவிட, நாயன்மார்கள் வரலாற்றைக் கொஞ்சம் விரிவிகக் கூறுவது. திருத்தொண்டர் வரலாற்றைப் பாடிய சேக்கிழாருக்குத் திருத்தொண்டத்தொகை - திருத்தொண்டர் திருவந்தாதி - இரண்டுமே அடிப்படை. மற்றும் மறைந்துகிடந்த சரித்திரக் குறிப்புகளையும் கண்டறிந்து பெரியபுராணத்தைப் பாடினார். சுந்தரரைப் போலவே அவருடைய பாடல்களும் அழகும், இனிமையும், கம்பீரமும் பெற்று விளங்குகின்றன. சுந்தரரின் தேவாரப்பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை. ஆயிரத்திற் குட்பட்ட பாடல்கள்தாம் அகப்பட்டிருக்கின்றன. அவர் பாடல்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் பெரும்பணி செய்திருக்கின்றன; செய்கின்றன. சுந்தரரின் தெய்வத் தமிழ்ப் பாடல்கள் என்றும் உலகில் நிலைத்து நிற்கும் இனிய பாடல்கள். இவ்வுண்மையை யார் மறுக்க முடியும்? இன்சுவைக் கவிதைகள் சுந்தரமூர்த்தி நாயனாரின் செந்தமிழ்க் கவிதைகளிலே உருக்கத்தைக் காணலாம்; உவமைகளைக் காணலாம்; நீதிகளைக் காணலாம்; நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் இனிய நடையைக் காணலாம்; பக்திச் சுவை பரந்துகிடப்பதையும் பார்க்கலாம்; இயற்கைக் காட்சிகளையும் கண்டு இன்புறலாம். நாயனாரின் இனிய தமிழ்ப்பாட்டிலே சிவபெருமானே மயங்கிப் போனார்; சுந்தரருக்காக, அவர் மனைவியரான பரவையாரிடம் தூது சென்றார் என்றால் அப்பாடல்களின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா? சுந்தரர் பாட்டின் சுவையை நுகரவேண்டுமானால், திருவாவடுதுறைப் பண் ஒன்றைப் பார்த்தாலே போதுமான தாகும்; கங்கைவார் சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே! பொங்குமா கடல்விடம் மிடற்றானே! பூமிநாதனே! புண்ணியா! புனிதா! செங்கண்மால் விடையாய்! தெளிதேனே! தீர்த்தனே! திருவா வடுதுறையுள் எங்கணா! எனை அஞ்சல் என்று அருளாய்! யார் எனக்கு உறவு அமரர்கள் ஏறே! இதுவே அப்பதிகத்தின் முதல் பாட்டு. சிறந்த சொல்ல மைப்பும் ஆழ்ந்த கருத்தும் அமைந்த பாடல் இது. இதன் பொருளை எண்ண எண்ண நம் இதயம் இன்புறும். கங்கைவார் சடையார் - குளிர்ந்த கங்கை நீர் ஒழுகும் சடையை உடையவனே. இத் தொடர், சிவபெருமான் தன்னைக் காண்போர்க்கும், கருதுவோர்க்கும் கங்கைபோல் இன்பந் தருகின்றவன் என்று குறித்தது. கணநாதா - தெய்வ கணங்களுக்கெல்லாம் தலைவனே. எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவன்; எல்லாத் தெய்வங்க ளாகவும் இருப்பவன் என்பது இத்தொடரின் கருத்து. கால காலனே - எமனுக்கும் எமனாயிருப்பவனே, தன்னைப் பணிகின்றவர்களை எமவாதனைக்கு ஆளாகாமல் காப்பவன்; அவர்களை எமன் நெருங்கினாலும் எமனைத் தடுத்து அவர் களைக் காப்பவன்; இக்கருத்தை வெளியிடுவது கால காலன் என்ற தொடர். காமனுக்கு அனலே - காமனை எரிப்பதற்கு நெருப்பாகி நின்றவனே. உலக ஆசையைச் சுட்டெரிப்பதற்கு நெருப்பாக நின்று உதவுகின்றவனே என்பது இதன் கருத்து. பொங்கும் மாகடல் விடம் மிடற்றானே - பொங்கி வந்த பெரிய கடலில் பிறந்த விஷத்தை உண்டு, கழுத்தில் வைத்தவனே. சிவபிரான் தன்னுடைய அன்பர்களுக்கு வரும் இடையூறு களை யெல்லாம் தானே ஏற்றுக் கொள்ளுவான். அவர்களைக் காப்பாற்றுவான் என்னும் கருத்தை வெளியிடுவது இத்தொடர். பூதநாதனே-பஞ்ச பூதங்களுக்கும் தலைவனே. உலகமே பரமசிவன் வடிவந்தான் என்ற கருத்தமைந்த தொடர் இது. புண்ணியா புனிதா - நன்மை செய்கின்றவனே! பரிசுத்த மானவனே, சிவபெருமான் எப்பொழுதும் உலகுக்கு - அடியார் களுக்கு நன்மை செய்கின்றவன்; பரிசுத்தமானவன் என்பது கருத்து. செங்கண்மால் விடையாய் - சிவந்த கண்களையுடைய திருமாலையே ரிஷபமாகக் கொண்டு ஊர்கின்றவனே. காத்தல் கடவுள் திருமால்; அவரை வாகனமாகக் கொண்டதால், அத் தொழிலையும் சிவபிரானே செய்து வருகிறார் என்பது இதன் கருத்து. தெளிதேனே - அன்பர்களுக்குத் தெளிந்த இனிமையான தேனாக இருக்கின்றவனே. தீர்த்தனே - உன்னைப் பணிகின்றவர் களின் அகக் குற்றம் புறக் குற்றங்களை யெல்லாம் போக்கிப் பரிசுத்தமாக்கும் தீர்த்தமாக இருக்கின்றவனே. திருவாவடுதுறையுள் எம்கணா எனை அஞ்சல் என்று அருளாய் - திருவாவடுதுறையுள் எழுந்தருளியிருக்கும் எம் கண்போன்றவனே! என்னை அஞ்ச வேண்டாம் என்று ஆறுதல் சொல்லி அருள் செய்வாயாக. அமரர்கள் ஏறே யார் எனக்கு உறவு - தேவதேவா! உன்னைத் தவிர யார்தான் எனக்கு உதவி செய்யும் உறவினர்? வேறு ஒருவரும் இல்லை. இதுவே மேலேகாட்டிய திருப்பாட்டின் பொருளாகும். இதே பதிகத்தில் வரும் இனிமையான தொடர்கள் பலவும் தம் உள்ளத்தை உருக்கும் இனிமையுடன் அமைந்திருக்கின்றன. அவைகளே கீழ் வருவன. குறைவுஇலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக்கா துடையானே! குறைவற்ற பரிபூரணமே! குணங்கள் எல்லாம் ஒன்றாகத் திரண்ட குன்றாக இருப்பவனே! எல்லார்க்கும் பொதுவில் நடமாடுகின்றவனே! காதணியை உடைய தலைவனே கோதுஇலா அமுதே! அருள்பெருகு கோலமே! இமையோர் தொழுகோவே! குற்றமற்ற அமுதாக இருப்பவனே! எப்பொழுதும் அருள் சுரந்து கொண்டேயிருக்கின்ற அழகிய வடிவமே! தேவர்கள் எல்லாம் வணங்கும் தலைவனே வான நாடனே! வழித்துணை மருந்தே! மாசிலா மணியே! மறைப் பொருளே! வானுலகத்தானே! நல்வழியிலே நடப்பதற்குத் துணை செய்யும் மருந்தாக இருப்பவனே! குற்றமற்ற மாணிக்கமே! வேதங்களால் போற்றப்படும் உண்மைப் பொருளே மேலேகாட்டிய அடிகளிலே பக்திச் சுவை பரந்து நிற்கின்றது. இத் தொடர்களிலே செந்தமிழின் சிறந்த சுவையைக் காணாதவர்கள் யார்? சோலைமலி குயில் கூவக், கோலமயில் ஆலச் சுரும்பொடு வண்டு இசைமுரலப் பசும்கிளி சொல்துதிக்கக், காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலைய நல்லூர் காணே! சோலையிலே குயில்கள் பல கூவிக் கொண்டிருக்கின்றன; அழகான மயில்கள் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக் கின்றன; ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் மலர்த்தேனை உண்டு மகிழ்ந்து பாடிக்கொண்டிருக்கின்றன; பச்சைக் கிளிகள் தமது சொற்களால் சிவபெருமானைப் போற்றுகின்றன. காலை யிலும் மாலையிலும் தவறாமல் கடவுள் அடிபணிந்து மனம் உருகுவோர் வாழ்ந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்புடையது திருக்கலைய நல்லூர் என்பது. இந் நகரில் உள்ள இறைவனைக் கண்டு பணிவாயாக. இது திருக்கலைய நல்லூர்ப் பதிகத்தில் கண்டது. இதில் உள்ள இயற்கைக் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கின்றது. குழக வாழைக் குலைத் தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக்காவிரி முற்றாத வாழைத்தாறு, தென்னங்குலைகள் இவைகளைக் கொண்டு வந்து கரைமேல் வீசுகின்றன. காவிரி வெள்ளத்தின் அழகான அலைகள் இக்காரியத்தைச் செய்கின்றன. மலைக்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு அலைக்கும் திரைக்காவிரி மலையிலிருந்து விழுகின்ற அருவியில் உள்ள பல பொருள்களையும் வாரிக் கொண்டது; இரத்தினங்களையும் முத்துக்களையும், பொன்னையும் அள்ளிக் கொண்டு கரைகளை மோதிக்கொண்டு ஓடுகின்றது; அலைகளை வீசிக்கொண்டு கம்பீரமாக ஓடுகின்றது இத்தகைய காவிரி இவை திருவையாற்றுப் பதிகத்தில் கண்டவை. காவிரியின் வெள்ளப் பெருக்கை அப்படியே நம் கண்முன் காட்டுகின்றன. மானும், மரையினமும் மயில் இனமும் கலந்து எங்கும் தாமே மிகமேய்ந்து தடம்சுனை நீர்களைப் பருகிப் பூமாமரம் உரிஞ்சிப் பொழில் ஊடே சென்று புக்குத் தேமாம் பொழில்நீழல் துயில் சீபர்ப்பத மலையே மானும், மரையென்னும் ஒருவகை மான் கூட்டங்களும், மயில் கூட்டங்களும் ஒன்றாகக்கூடி பல இடங்களிலும் சென்று மேய்கின்றன. பின்னர் பெரிய சுனைகளில் உள்ள தண்ணீரைக் குடிக்கின்றன. பூத்த பெரிய மரங்களிலே தம் உடம்பின் தினவு தீர உரைஞ்சிக் கொண்டன. பின்பு சோலையின் நடுவிலே புகுந்து சென்று இனிய மாஞ்சோலையின் நிழலில் தூங்குகின்றன. இத்தகைய இயற்கையழகு பெற்றது ஸ்ரீசைல மலையாகும். இது மலையின் இயற்கைக் காட்சியைப் பாடியது. இது சீபர்ப்பதம் என்னும் ஸ்ரீசைல மலையைப் பாடிய பதிகத்தில் முதல் பாட்டு. சங்கும் சிப்பியும், சலஞ்சலம் முரல, வயிரம்முத்தொடு, பொன்மணி வரன்றி மாகஓங்கும்கடல் ஓதம்வந்து உலவும் ஒற்றியூர்எனும் ஊர்உறை வானே சங்கும், முத்துச்சிப்பியும், சலம் சலம் என்னும் உயர்ந்த சங்கும் ஒலிக்கும்படி, வயிரம், முத்து, பொன், இரத்தினம் முதலியவைகளை வாரிக்கொண்டு வந்து ஒலிக்கின்ற பெரிய கடலின் வெள்ளம் வந்து உலாவுகின்ற ஒற்றியூர்; இத்திருவொற் றியூரில் வாழ்கின்ற சிவபெருமானே. இது கடல் வெள்ளத்தைப் பாடியது. திருவொற்றியூர்ப் பதிகத்தில் உள்ளது. இவ்வாறு இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்டு சுவைத்துப் பாடிய பல பாடல்களைச் சுந்தரர் தேவாரத்திலே காணலாம். பலவகைச் சுவையும் கொண்டு சிறந்து விளங்கும். செந்தமிழ்க் கவிதைகளே சுந்தரர் தேவாரம். தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தம்பிரான் தோழர் என்பது ஒரு பெயர். அவர் தம்மை ஆட்கொண்ட சிவபெருமானைத் தலைவனாக மட்டும் கொள்ளவில்லை. தூதனாகவும் கொண் டார்; தோழனாகவும் கொண்டார். தூதனை, என் தனையாள் தோழனை, நாயகனைத் தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்த காதனை நாய் அடியேன் எய்துவது என்று கொலோ. என்று பாடியிருக்கின்றார். இது திருக்கானப்பேர் பதிகத்தில் காணப்படுவது. சுந்தரர் இவ்வாறு, பரமசிவனைத் தூதனாகவும், தலைவ னாகவும் கொண்டார்; ஆதலால், அவர் தமக்கு வேண்டிய எல்லாவற்றையும் சிவபிரானையே கேட்டுப் பாடுகின்றார். சுந்தரர் இவ்வுலக இன்பத்தை நன்றாக நுகர்ந்தவர்; என்றும் திருமணக் கோலத்துடனேயே வாழ்ந்தவர்; இரு மனைவியரை மணந்து இன்புற்றவர். தான் இரு மனைவியரை மணந்து வாழ அருள் செய்தவர் சிவபெருமானே தான் என்று பாடியிருக்கின்றார். தோழமை கொண்ட இருவர் ஒத்துப் பழகுவார்கள்; தங்கள் உள்ளத்தை மறைக்க மாட்டார்கள்; ஒருவருக்கொருவர் தங்கள் கருத்தைத் தாராளமாகப் பரிமாறிக் கொள்ளுவார்கள்; தங்களுக்கு வேண்டியவைகளைத் தாராளமாக் கேட்பார்கள்; பெற்றுக் கொள்ளுவார்கள்; தங்கள் துன்பத்தை வாய்விட்டுச் சொல்லி உதவி பெறுவார்கள். இவை நண்பர்களின் - உண்மையான தோழர்களின் இயல்பாகும். இந்த இயல்பைச் சிவபிரானிடம் தோழமை கொண்ட சுந்தரமூர்த்தி நாயனாரிடம் காண முடிகின்றது. ஒரு சமயம், சுந்தரரின் முதல் மனைவியார் பரவையார் திருவாரூரில் வறுமையால் வாடினார். அப்பொழுது சுந்தரர் பரமசிவனிடம் முறையிட்டார். வம்பமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள், எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே. மணம் பொருந்திய கூந்தலையுடைய பரவையாகிய இவள் வறுமையில் வாடுகின்றாள். அது கண்டு நான் துன்புறுகின்றேன். எம்பெருமானே, அடியேன் துன்பம் ஒழியும்படி அருள் செய்வீர். மைத்துஆரும் தடம்கண் பரவை இவள் வாடாமே அத்தா! தந்தருள்வாய்; அடியேன் இட்டளம் கெடவே மை பூசி அமைந்த பெரிய கண்களையுடைய பரவையாகிய இவள் வறுமையால் வாடாதபடி, அடியேனது துன்பமும் கெடும்படி, தலைவனே, பொருள் தந்தருள்வாய். இவைகள் திருமுதுகுன்றப் பதிகத்தில் காணப்படுவன. சிவபெருமான் அவர் வேண்டுகோளுக்கு இரங்கிப் பொன் கொடுத்தார் என்பது கதை. ஒரு சமயம், குண்டையூர்க்கிழார் என்னும் வேளாளர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெல் கொடுத்தார். அந்த நெல்லைப் பரவையாரிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று சுந்தரர் சிவபெருமானையே வேண்டிக் கொண்டார்; பாடினார். கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான்! அவை அட்டி தரப்பணியே. திருக்கோளிலி என்னும் இடத்தில் வாழும் எமது தலைவனே! குண்டையூரிலே கொஞ்சம் நெல் கிடைக்கப் பெற்றேன். அதைப் பரவையாரிடம் கொண்டு போய்ச் சேர்க்க என்னிடம் ஆள் இல்லை. ஆதலால் அந்த நெல்லைப் பரவையார் வீட்டிலே சேர்க்கும்படி உத்தரவிட வேண்டும். இது திருக்கோளிலிப் பதிகத்தில் காணப்படும் பகுதி. சுந்தரர் முதலில் திருவாரூரில் பரவையாரை மணந்தார்; கணிகையர் குலத்தில் பிறந்த பரவையாரைச் சிவபெருமான் உதவியாலேயே மணந்தார். அதன்பின் திருவொற்றியூருக்குச் சென்றபோது சங்கிலியாரை மணந்தார். சங்கிலியாரைச் சிவபெருமானே தனக்கு மனைவியாக்கி வைத்தார் என்று பாடுகின்றார். சங்கிலியோடு எனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன் எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே சங்கிலியோடு என்னைச் சேர்த்து வைத்த உண்மை யானவன்; எனது ஆரூயிர் இறைவன்தான்; அவனைக் கீழ் மகனாகிய யான், என் உள்ளம் வருந்தும்படி எப்படிப் பிரிந்திருப் பேன். இவ்வாறு திருவாரூர்ப் பதிகத்திலே குறிப்பிட்டிருக் கின்றார். தனக்கு வேண்டிய ஆடை, ஆபரணங்கள், சாப்பாடு ஆகியவைகளை யெல்லாம் கொடுக்க வேண்டும் என்று பரம சிவனையே வேண்டிப் பாடியிருக்கின்றார் சுந்தரர். கந்தமுதல் ஆடை ஆபரணம்பண்டாரத்தே எனக்குப் பணித்தருளல் வேண்டும், வாசனைத் திரவியம் முதலான ஆடை ஆபரணங்களும், உன் பொக்கிஷத்திலிருந்து தான் எனக்குக் கொடுக்கும்படி உத்தரவிட வேண்டும். கறிவிரவு நெய் சோறு முப்போதும் வேண்டும். கறியும் நெய்யும் கலந்த நல்ல சுவையுள்ள சோறு எனக்கு மூன்று வேளைக்கும் கிடைக்க வேண்டும். இவைகள் திருநாகைக் காரோணப் பதிகத்திலே காணப் படுகின்றவை. சுந்தரர் திருவொற்றியூரிலே சங்கிலியாரை மணக்கும் போது, அவரை விட்டுப் பிரிவதில்லையென்று சத்தியம் செய்து கொடுத்திருந்தார். அவ் வாக்குறுதியை மீறி அவர் திருவாரூருக்குப் புறப்பட்டார். அப்பொழுது அவருடைய கண்பார்வை மங்கி விட்டது. அதனால் அவர் வருந்திப் பாடிய பாடல்கள் உள்ளத்தை உருக்குவன. அகத்தில் பெண்டுகள் நான்ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா எனத்தரியேன்: முகத்தில் கண்இழந்து எங்ஙனம் வாழ்கேன்! முக்கணா! முறையோ! மறை ஓதி! வீட்டில் உள்ள பெண்கள் பொட்டையன் ஆன என்னை மதிக்க மாட்டார்கள்; நான் ஏதேனும் சொன்னால், அழைக் காதே! போ, குருடனே என்று இகழ்வார்கள். அவர்கள் அப்படிச் சொல்வதை நான் பொறுக்க மாட்டேன். முகத்தில் உள்ள கண்ணை இழந்து நான் எப்படி வாழ்வேன்! மூன்று கண்களை உடையவனே! என் தோழனாகிய நீ மட்டும் மூன்று கண்களைக் கொண்டிருக்கின்றாய்! என்னை ஒரு கண் கூட இல்லாமல் அலையவிடுவது உனக்கு நீதியாகுமா? வேதங்களால் புகழப்படும் இறைவனே! எனக்கு அருள் செய் என்று வருந்திப் பாடினார். இது திருவொற்றியூர்ப் பதிகத்தில் காணப்படுவது. கண்கெட்ட எனக்கு ஒரு ஊன்றுகோலாவது கொடுத்தருள வேண்டும் என்று இறைவனை வேண்டிப் பாடினார். மூன்றுகண் உடையாய்! அடியேன் கண்கொள்வதே கணக்கு வழக்காகில், ஊன்றுகோல் எனக்காவது ஒன்று அருளாய்! ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! மூன்று கண்களை உடைய என் தோழனே! என்னுடைய கண்ணைப் பறிப்பது உன்னுடைய கணக்கும் வழக்குமாக இருக்குமானால், போகட்டும். எனக்குத் தகுந்த ஊன்றுகோலா வது ஒன்றைக் கொடுத்தருள்வாய்! திருவொற்றியூருள் வாழும் பெருமானே! .இதையாவது-இந்த உதவியையாவது நீ செய்யக் கூடாதா? இவ்வாறு வருந்திப் பாடினார் சுந்தரர். இதன் பின் அவர் திருவெண்பாக்கம் என்னும் ஊரிலே சிவபெருமான் அருளால் ஊன்றுகோல் பெற்றார். சில நாட்கள் சென்றபின், அவர் ஒரு கண் பார்வை வரப்பெற்றார். ஒரு கண் பார்வை பெற்றபோது மற்றொரு கண் பார்வையும் பெற வேண்டிப் பாடினார். எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர்! மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே! சுவாமிகளே! ஏன் என் கண்களைப் பறித்துக் கொண்டீர்! இதனால் எனக்கு எப்பழியும் இல்லை; நீர்தான் பழிக்கு ஆளானீர்! தோழனுக்குத் தீமை செய்தீர் என்று உம்மைத்தான் உலகம் தூற்றும். மற்றொரு கண்ணையும் கொடுத்தருள வேண்டும்; கொடுக்காவிட்டால், நீர் மட்டும் மூன்று கண்களை வைத்துக்கொண்டு நன்றாக வாழ்வீராக. இது திருவாரூர்ப் பதிகத்தில் காணப்படுவது. மேலே கூறியவைகளைக் கொண்டு சுந்தரர் சிவபெரு மானுக்கு உண்மையான தோழராக உறைந்தார் என்பதைக் காணலாம். சுந்தரர் கேட்டவற்றையெல்லாம் சிவபெருமான் தட்டாமல் கொடுத்து வந்தார் என்பதையும் அறியலாம். தோழமை பூண்டவர்கள் வாழ வேண்டியது எப்படி என்பதைச் சுந்தரமூர்த்தியாரின் பாடல்கள் - அவருடைய வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது. உண்மைத் தோழமையின் பண்புக்குச் சுந்தரர் பாடல்கள் ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் வரலாறு வழி காட்டுவதாகும். எல்லாம் அவன் செயல் சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையின்பத்தை நன்றாக அனுபவித்தவர். அவர் இவ்வுலக இன்பத்தை வேண்டாம் என்று வெறுத்துத் தள்ளிவிடவில்லை. ஏனைய பக்திமார்க்கத் தலைவர் களைப் போல, இவ்வுலக இன்பத்தை அவ்வளவு அதிகமாக இழித்துப் பாடவும் இல்லை. எல்லாம் இறைவன் செயலே என்ற நம்பிக்கை அவரை ஆட்கொண்டிருந்தது. இந்த நம்பிக்கை யுடன் அவர் இடைவிடாமல் இறைவனைப் பாடினார்; இம்மை யின்பத்தையும், மறுமையின்பத்தையும் தந்தருளும் தமிழ்க் கவிதை பாடினார். தேவாரத் தொகுப்பிலே சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் ஏழாந் திருமுறையாக அமைந்திருக்கின்றது. அந்த ஏழாந்திரு முறையிலே முதல் பதிகம் திருவெண்ணெய் நல்லூர்ப் பதிகம். அப்பதிகத்தின் முதல் திருப்பாட்டே நாயனார் நம்பிக்கையை விளக்கப் போதுமானது. உலகத்தார் உனது பேர் ஆற்றலைக் கண்டுணர முடியாது. அவர்கள் எளிதிலே உன்னை உன் பெருமையை உணர்ந்து கொள்ளக்கூடாது; மிகவும் வருந்திப் பாடுபட்டுத்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்; என்பதற்காக நீ பித்துக்கொள்ளி மாதிரி வேஷம் போட்டுத் திரிகின்றாய். தலையிலே சடைமுடி; எருக்கம்பூ மாலை; உடம்பிலே எலும்பு மாலை; சாம்பல் பூச்சு; புலித்தோல் ஆடை; யானைத்தோல் போர்வை; பாம்புகள் தாம் ஆபரணங்கள். கையிலே பிச்சைக்கலன். இப்படி அலங்கோலத் துடன் காட்சியளிக்கும் உன்னைப் பார்த்தால் சாதாரண மக்கள் பித்துக் கொள்ளி என்று நினைக்காமல் வேறு எப்படித்தான் எண்ணுவார்கள்? திடீர் என்று உன்னைப் பார்த்தவர்கள் பித்தன் என்றுதான் அழைக்கின்றனர்; நினைக்கின்றனர். இந்தப் பெயர் தான் உனக்குப் பிடித்தமான பெயர் போலும். ஆதலால், அடியேனும் உன்னைப் பித்தன் என்றே அழைக்கின்றேன். உன் தலையிலே இளம்பிறைச் சந்திரனை வைத்திருக் கின்றாய்; என்னை அடைந்தவர்கள் யாராயினும் அவர்கள் துன்பத்தைத் துடைப்பேன்; இன்பத்தை மணக்க வைப்பேன்; என்று சொல்லுவது போல அந்த இளம்பிறை காட்சி அளிக்கிறது. நீ மிகவும் பெருந்தன்மையுள்ளவன்; எல்லோரிடமும் கருணை காட்டும் கனிந்த தன்மையுடையவன்; ஆதலால் அனைவர்க்கும் தலைவனாய் விளங்குகின்றாய். இத்தகைய உன்னை எனது பெருமானே; எனது தலைவனே! என்று மனமார வாயார மகிழ்ந்து கூவுகின்றேன். நீ மிகுந்த கிருபையுள்ளவன்; துன்புறுவோரைக் கண்டால் மனமிளகித் துணை செய்வதே உனது இயல்பு; எப்பொழுதும் அருள் உருவுடன் இருப்பதுதான் உனது பண்பு; அருள் வேறு நீ வேறு அல்ல; ஆதலால் உன்னை அருள் ஆளா! - அருளைக் கையாள்கின்றவனே! - அருளின் தலைவனாகிய ஆண்டவனே - என்று அழைக்கின்றேன். எந்தக் காரணத்தாலும் நான் உன்னை மறக்கவே மாட்டேன். என் மனத்திலே எப்பொழுதும் உன்னையே நினைக் கின்றேன். நான் என்ன பேசினாலும், என்ன செய்தாலும், எதை அனுபவித்தாலும் அவைகளையெல்லாம் உன் நினைப்புடன் செய்கின்றேன். உன்னை மறந்து ஒன்றையும் நான் நினைப்ப தில்லை; செய்வதில்லை; பேசுவதில்லை; அனுபவிப்பதும் இல்லை. என்னை இந்த நிலையில் வைத்துக் கொண்டவன் நானல்ல; நீயேதான் என்னை இந்நிலையில் இருக்கும்படி ஆக்கினாய் பெண்ணையாற்றின் தென்கரையிலே, திருவெண்ணெய் நல்லூரிலே, அருள்துறை என்னும் கோயிலிலே எழுந்தருளி யிருக்கும் தலைவனே! இந்த நிலையில் உள்ள என்னை உனக்கு அடிமை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? நான் உனக்கு அடிமையேதான்; பரம்பரை அடிமையேதான் ; எப்பொழுதும் மீளாத அடிமைதான். என்று பாடினார். சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் புரிந்து கொள்ள மணவறையிலே உட்கார்ந்தார்; அப்பொழுது பரமசிவன் ஒரு கிழவேதியராக வந்து, நீ எனக்கு அடிமை; உனது பாட்டன் எனக்கு அடிமையோலை எழுதிக் கொடுத்திருக்கின்றான் என்று வாதிட்டார். அடிமை ஓலையைக் காட்டினார். திருமணத் தைத் தடுத்தார். இதுதான் எனது வீடு என்று சொல்லி திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்கு அழைத்துச்சென்று மறைந்து போனார். அச்சமயத்திலே உண்மையுணர்ந்து, சுந்தர மூர்த்தி நாயனார் பாடியது இப்பாடல் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருள் ஆளா! எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை; வைத்தாய்! பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. இதுவே அத்தமிழ்க் கவிதை. பித்தனைப்போல் காணப் படும் அவனை, எம்பெருமான் என்று கண்டறியும்படி வைத்த வன் சிவபெருமான்தான் என்று கூறினார். இதனை இப்பாடலில் உள்ள வைத்தாய் என்ற சொல்லால் விளக்கினார். இந்த உண்மையை, இதற்கு அடுத்துள்ள திருப்பாடலிலும் தெளி வாகச் சொல்லிவிடுகிறார். நாய் போன்ற நான் பல நாட்களாக உனது நினைப்பே இல்லாமல் - என் மனத்தில் உன்னைப்பற்றிச் சிறிதும் எண்ணா மலே திரிந்தேன்; சாதரண மனிதனாகத் திரிந்தேன். இல்லை, பிறர் என்னைக் கண்டு அஞ்சும்படி - வெறுக்கும்படி - பேய் மனிதனாகத் திரிந்தேன். இப்படித் திரிந்து அலைந்து - இளைத்துப் போனேன். குழி விழுந்த கண்ணும், ஒட்டிய வயிறும், வெளியில் காணத்தக்க எலும்புருவமாக இளைத்துப் போனால், அவ்வுருவத்தைப் பேய் என்று நினைக்காமல் - சொல்லாமல் - மனிதன் என்றா நினைப்பார்கள்? சொல்லுவார்கள்? இதன்பின் உன் கருணையால் எப்படியோ பிறர் பெற முடியாத பேரருளைப் பெற்றேன். என்னை உன் தோழனாக எண்ணுகின்ற அத்தகைய பெருங்கருணையை உன்னிடமிருந்து பெற்றேன் என்று விளக்கிப் பாடியிருக்கின்றார். இதோ அந்த அருங்கவி. நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்து உன்னை, பேயாய்த்திரிந்து எய்த்தேன்; பெறல்ஆகா அருள் பெற்றேன்; இதுவே அப்பாடல், இறைவன் என்னை ஆட்கொண்டது கருணையால்தான். அவ்வாறு அவன் கருணைபுரிந்து ஆட் கொண்டதால் நான் பெற்ற பயன் என்ன? என்பதை அவர் மற்றொரு பாடலில் விளக்கிச் சொல்லிவிட்டார். அந்தப் பாடல் இப்பதிகத்தின் நாலாவது பாட்டு. என்னை நீ ஆட்கொண்டதனால் இனி நான் இறந்து விடமாட்டேன்; ஒருக்கால், இவ்வுலகைவிட்டு, எனது பூத உடல் மறைந்தாலும், மீண்டும் பிறக்கமாட்டேன்; ஒரு சமயம் புண்ணிய வசத்தாலோ - நல்வினை காரணமாக - இன்பங்களை நுகர் வதற்கு இவ்வுலகிலே பிறந்தாலும் வயது ஏறிக் கிழவனாகி விடமாட்டேன்; செத்துப்போய் விடமாட்டேன்; இளங் காளை யாகவே வாழ்ந்து இன்பத்தை அனுபவிப்பேன். காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானே! நான் கொடியவனா யிருந்தாலும் பல பொய்களைச் சொல்லுகின்றவனாயிருந் தாலும், என்னை உனது அடிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அப்பாடலின் பொருள். முடியேன் இனிப்பிறவேன்; பெறின்மூவேன்; பெற்றம் ஊர்தீ! கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ இதுவே அந்தப் பாடல். இறைவன் அருளிலே நம்பிக்கை வைத்தவர்களின் உறுதிக்கு இப்பாடலை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இறைவனைத் தவிர உலகில் வேறு எதுவும் இல்லை; கண்ணிலே காணப்படும் அவ்வளவும் இறைவன் உருவந்தான்! காணப்படாமல் மறைந்து நிற்கும் சக்திகளும் இறைவன்தான் இப்படி நினைப்பதும், எல்லாம் அவன் செயல் என்று நம்பு வோரின் பண்பாகும். சுந்தரமூர்த்தி நாயனார் இந்தப் பண்பு படைத்தவர் என்பதில் ஐயம் இல்லை. நீதான் உடம்பாக உருக்கொண்டிருக்கின்றாய்; இந்த உடம்பை இயங்கச்செய்யும் உயிராகவும் நீதான் புகுந்திருக் கின்றாய்! நீதான் இவ்வுலகமாக இருக்கின்றாய்! வானமாக இருக்கின்றாய்! பூமியாக இருக்கின்றாய்! கடலாக இருக்கின்றாய்! மலையாக நிற்கின்றாய்! நீருடன் தேனும் நிறைந்தோடும் பெண்ணை நதி! அதன் தென்கரையிலே திருவெண்ணெய் நல்லூர். அவ்வூரிலே அமர்ந்திருக்கின்றாய்! இனியும் நான் உனக்கு ஆள் அல்லேன், அடிமை அல்லேன் என்று சொல்ல முடியுமா? முடியாது இது அப்பதிகத்தின் ஏழாவது பாட்டு. ஊனாய்! உயிர் ஆனாய்! உடல் ஆனாய்! உலகு ஆனாய்! வான் ஆய்! நிலன் ஆனாய்! கடல் ஆனாய்! மலை ஆனாய்! தேன்ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள் ஆனாய் உனக்கு ஆளாம் இனி அல்லேன், எனல்ஆமே. இந்தத் திருவெண்ணெய் நல்லூர்ப் பதிகம் சுந்தரமூர்த்தி யாரின் உள்ளத்தை அப்படியே திறந்து காட்டுவதாகும். தான் கண்ட உண்மையை உலகினரும் காணும்படி உருக்கமான பாடல்களாக அவர்பாடி வைத்திருக்கின்றார்; முதலில் பாடிய அவருடைய பாடல்களே இவ்வாறு உண்மையும் உருக்கமும் நிறைந்திருக்குமாயின் ஏனைய பாடல்களின் இனிமையை எடுத்துரைக்கவும் வேண்டுமோ? உலகியல் உணர்ந்த உத்தமர் சுந்தரர் ஒரு மனைவிக்குப் பதிலாக இருமங்கையரை மணந்தார். இன்பந் துய்த்தார். ஊடியிருந்த தனது மனைவியின் பால், சிவபிரானையே சமாதானத் தூதுபோகச் செய்தார். சுந்தரர் உலக இன்பத்தை வேண்டுமளவு அனுபவித்தார்; பரிபூரணமாக நுகர்ந்தார். ஆயினும் இந்த இன்பம் நிலையானது என்று அவர் நம்பிவிடவில்லை. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என்ற உலகாயதப் பண்பு அவர் உள்ளத்தில் குடிபுகுந்து விடவில்லை. இவ்வுலக வாழ்வு நிலையற்றது; மனித வாழ்வு நிரந்தரமானதன்று; பிறந்தார் இறப்பர்! இறந்தார் பிறப்பர்; உலகில் நாம் காணும் எல்லாப் பொருள்களும் இப்படித்தான் தோன்றி மறையும் இயல்புள்ளவை. இவ்வாறு உலகை நடத்தி வைப்பவன் ஆண்டவன்தான், அவனின்றேல் இவ்வுலகிலே எந்த நிகழ்ச்சியும் இல்லை. ஆதலால் எப்பொழுதும் அவனை மறவாமல் இருப்பதே ஈடேறும் வழி என்று உறுதி கொண்டிருந்தார். சுந்தரர் உள்ளத்திலே இத்தகைய உறுதி ஊன்றியிருந்த தற்குக் காரணம் ஆண்டவன் அருள்தான். ஆயினும் அவருடைய கல்வி அறிவும் அவர் உள்ளத்திலே இத்தகைய நினைப்பு நிலைத்திருக்க உதவி செய்தது. இவ்வுண்மையை அவருடைய அரிய பாடல்களிலே பார்க்கலாம். இவ்வுலகிலே நன்றாக - இல்லறத்திற்குரிய தர்மங்களை யெல்லாம் பின்பற்றி - பலருக்கும் பயன்படுகின்றவர்களாய் வாழ்ந்து - சிறப்புடன் இல்லறம் நடத்தினவர்கள் பலர். ஆயினும் அவர்கள் இறக்காமல், சிரஞ்சீவிகளாக வாழ்ந்துவிடவில்லை. அவர்கள் பலருக்கும் நல்லவர்களாக நடந்து வந்தார்கள்; நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு வாழ்ந்தார்கள். ஆயினும் அவர்கள் நாளேற நாளேற வயது முதிர்ந்து நரைத்துத்தான் போனார்கள். இறுதியிலே இந்த உலகைவிட்டு இறந்தே போனார்கள். இப்படி உலகிலே பலரும் சொல்லிக் கொள்ளும் படி மனித வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. இதை நான் கண்ணெதிரே கண்டேன்; காண்கின்றேன். ஆத லால் உன்னையே நான் தொடர்ந்தேன். நான் இந்தவிதமான நிலையற்ற வாழ்க்கைச் சுழலிலிருந்து தப்பித்துக் கொண்டு செல்லக்கூடிய இடத்தை நீதான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று சிவபெருமானை வேண்டுகிறார் நாயனார். நல்லாய்இல் செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார் என்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்றது அறிந்துஅடியேன் தொடர்ந்தேன் உய்யப் போவதுஓர் சூழல் சொல்லே. இப்பாடல் மேலே கூறிய பொருளை விளக்குகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாரின் இந்தக் கருத்து, நெருநல்உளன் ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு (நெருநல்-நேற்று) என்னும் திருக்குறளின் கருத்தைக் கொண்டது என்பதில் ஐயம் இல்லை. மேலும் சுந்தரர் உலகியலை எடுத்துக்காட்டும் உண்மை மறுக்க முடியாதது. உலகின்பச் சுழலிலே நான் சிக்கிச் சீரழி யாமல், உன் அடியைப் பின்பற்றி உய்யும் வழியை எனக்குக் காட்டுவாயாக என்று சிவபெருமானை வேண்டிக் கொள்ளு கின்றனர். இந்த மண்ணுலகம் நிலையற்றது; இங்கே காணப்படும் பொருள்கள் எல்லாம் மறைந்துவிடக்கூடியவை. இந்த உலகிலே என்னை மனிதனாக - பாவச் செயல்களிலே இறங்குவதற்குத் துணிகின்ற ஒரு நரனாக - என்னைப் படைத்தாய். நான் எத்தனை நாளைக்கு வாழப் போகின்றேன், நான் என்றேனும் ஒருநாள் இறந்து போவது நிச்சயம். நான் இவ்வுலகில் நிலையாக வாழ மாட்டேன். ஐம்பொறிகளின் புலன்களும் என்னை ஆட்டி வைக்கின்றன. அவ்வுணர்ச்சிகளை எதிர்த்துப் போர்புரிந்து நான் வெற்றி பெறவேண்டும், புலன் உணர்ச்சிகளுக்கு நான் அடிமைப் படாமல், அவைகள் எனக்கு அடிமையாக வேண்டும். இவ்வாறு அவைகளே வென்று வெற்றியுடன் வாழ உனது பாதங்களைச் சரணம் அடையவேண்டும். இதற்கு நீதான் வழிகாட்ட வேண்டும். அருள்கூர்ந்து அவ்வழியை எனக்குக் காட்டுவாயாக என்று சிவபிரானை வேண்டிப் பாடுகின்றார். வறிதே நிலையாதஇம் மண்ணுலகில் நரனாக வகுத்தனை நான்நிலையேன்; பொறிவாயில் இவைஐந்தனையும் அவியப் பொருதுஉன் அடியேபுகும் சூழல்சொல்லே இதுவே அந்தப் பாடல். இப்பாடலைப் படிக்கும் போது, பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (பொறிவாயில் ஐந்து - ஐம்புலன்கள்) என்ற திருக்குறள் நினைவுக்கு வருகின்றது அன்றோ? மேலும் சுந்தரமூர்த்தி நாயனார். பிறவிக் கடலை நீந்திக் கரையேற வேண்டும் என்று இறைவனைப் போற்றுகின்றார். இதற்கு வழிகாட்டும்படி கேட்கின்றார். எனக்கு இவ்வுலகிலே உன் மீதுள்ள பற்றைத் தவிர வேறு எப்பற்றும் இல்லை. எம்பெருமான்! வண்டுகள் மொய்க்கின்ற நறுமணம் வீசும் கூந்தலையுடைய பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டவனே! பற்றற்றவர்கள் கடக்கின்ற பிறவிக்கடலை நானும் நீந்திக் கரையேற வேண்டும். இனி இவ்வுலகில் பிறக்காமலும் தப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கான வழியை நீதான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறார் நாயனார். மற்றேல் ஒரு பற்றிலன் எம்பெருமான் வண்டார் குழலாள் மங்கை பங்கினனே! அற்றார் பிறவிக்கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவதுஓர் சூழல் சொல்லே என்பது அந்தத் திருப்பாட்டு. இதைப் பாடும்போது இரண்டு திருக்குறள் வெண்பாக்கள் நமது நினைவுக்கு வருகின்றன. பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (கு. 350) பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தவர் (கு. 10) இவைகளே அக்குறள் வெண்பாக்கள். இக்குறள்களின் கருத்துக்களே மேலே காட்டிய தேவாரப் பாடலில் அமைந்து கிடக்கின்றன. மற்றொரு திருப்பாடலில், இளமையும் நிலையற்றது; பிறப்பும் மாறி மாறி வருவது என்பதை விளக்கிச் சொல்லு கின்றார் சுந்தரர். வெள்ளப் பெருக்கெடுத்தோடும் ஆற்றங்கரையின் வாழ்வு நிலையில்லாதது; வெள்ளமும், அலைவீச்சும் அந்தக் கரையைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கரைத்துவிடும். வெள்ளம் பெருகும்போது கரைகள் உடைந்து போனாலும் போய்விடும். பிறப்போ, உறங்குவதைப் போலும், உறங்கி விழிப்பதைப் போலும் உள்ளது; தூங்குவதும், விழிப்பதும்போல இறப்பும், பிறப்பும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இத்தகைய நிலையில்லாத உலகிலே நான் வாடிக்கிடந்து வருந்தாமல் காக்க வேண்டும். இப்பிறவித் துன்பத்திலிருந்து நான் தப்பித்துச் சென்று வாழக்கூடிய இடத்தை நீதான் எனக்குக் காட்ட வேண்டும்; சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளு கிறார் சுந்தரர். இவ்வாறு இறைவனை வேண்டிப் பாடும் அத்திருப்பாடல் இதோ:- ஓடுபுனல் கரையாம் இளமை, உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி; வாடியிருந்து வருந்தல் செய்யாது அடியேன், உய்யப்போவது ஓர்சூழல் சொல்லே இந்தப் பாடலிலே, ஒரு திருக்குறளைக் காணலாம். உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பதே அந்தக் குறள். இக்குறளைச் சுந்தரர் மறவாது வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் சுந்தரர் பாடும்போது, அகரமாகிய தலைமை யினையுடைய எழுத்தாகி நின்ற இறைவனே! நான் இவ்வுலக மயக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்துப் போவதற்கான இடத்தை காட்டுக; சொல்லியருள்கஎன்று வேண்டுகின்றார். அகரமுதல எழுத்தாகி நின்றாய், அடியேன் உய்யப் போவதுஓர் சூழல் சொல்லே இதுவே அந்தப்பாட்டு. இது முதற் குறளை நினைவூட்டு கின்றது. அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவான் முதற்றே உலகு. என்ற இந்த முதல் குறளை அறியாதார் இல்லை. அருள் நெறிச்செல்வராகிய சுந்தரர், நல்ல தமிழ்க் கல்வி யுள்ளவர்; திருக்குறள் போன்ற பண்டைத் தமிழ் நூல்களைக் கசடறக் கற்றவர். அவருடைய திருப்பாடல்களே இவ்வுண்மையை உணர்த்துகின்றன. மேலே காட்டிய தேவாரப் பாடல்களின் பகுதிகள். திருநெல்வாயில் - திருஅரத்துறைத் தேவாரத்தில் உள்ளவை. இத் தேவாரப் பாடல்கள் படிக்க படிக்கச் சுவை தருவன. சுந்தரரின் மனப்பான்மையையும், தமிழ் நூல் பயிற்சியையும் எடுத்துக்காட்டும் தூண்டா விளக்காக இப்பண்பாடல் காட்சி யளிக்கின்றது. நம்பினார் கெடுவதில்லை உள்ளத்திலே உறுதி, இடைவிடாத முயற்சி, தன்காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இவைகளே வெற்றிக்கு வழி. இப்பண்புள்ளவர்கள் எதிலும் தோல்வி காணமாட்டார்கள்; தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியைத்தான் காண்பார் கள். நாம் மேற்கொண்டிருக்கும் வேலை நல்ல வேலைதான் என்ற தெளிவு வேண்டும்; நாம் தொடங்கியிருக்கும் காரியத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும். இத்தகைய தெளிவுடன் - உறுதியுடன் - உழைப்பவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம். நம்மிடம் அறிவுண்டு; ஆற்றல் உண்டு; முயற்சியும் ஊக்கமும் உண்டு; காரியத்தைச் சாதிப்பதற்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆதலால் சிறிதும் அஞ்சாமல் - ஐயமில்லாமல் - காரியத்தில் இறங்குவோம்; செய்து முடிப்போம்; என்று துணிந்துதான் வினையைத் தொடங்க வேண்டும். இப்படித் துணிந்து செயலில் இறங்குகின்றவர்கள் நிச்சயமாக வெற்றிப் பாதையிலேதான் செல்லுவார்கள். இவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்கள். நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதேயில்லை; எல்லா வற்றுக்கும் இறைவனையே நம்பியிருக்கின்றோம்; இறைவன் தன்னை நம்பினோரைக் கைவிடமாட்டான்; அவன் தன்னை நம்பினோரைக் காப்பாற்றியதாக வழங்கும் வரலாறு எத்தனை யோ பல. இறைவன் கருணையைப்பற்றி வழங்கும் வரலாறுகள் எல்லாம் - கதைகள் எல்லாம் - பொய்யல்ல. ஆதலால் ஆண்ட வனைத் துணையென்று நம்புவோம்; காரியத்தைத் தொடங்கு வோம்; வென்றாலும் தோற்றாலும் அவன் செயல். நமது வெற்றி ஆண்டவன் வெற்றி; நமது தோல்வி ஆண்டவன் தோல்வி என்று துணிந்து எதனையும் தொடங்குவோரும் இறுதியில் வெற்றி பெறுவது உறுதி. இவர்கள் வெற்றிக்குக் காரணம், ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை காரியத்தை நடத்துவதில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். இவர்கள் சிறிதும் அலுப்பு சலிப்பில்லாமல் காரியத்திலே கண்ணும் கருத்தும் உள்ளவர்களாய் உழைப் பார்கள். அல்லும் பகலும் இடைவிடாமல் உழைப்ர்கள். வெற்றி பெறுவார்கள். தந்நம்பிக்கையாலும் உழைப்பாலும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் பலர். கடவுள் துணையுண்டு; அவர் காப்பாற் றுவார்; கைவிடமாட்டார்; என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, வாழ்க்கையிலே வெற்றி பெற்றவர்களும் பலர். இவைகளை வரலாற்றிலும் காணலாம். புராணங்கள் - கதைகள் போன்ற இலக்கியங்களிலும் காணலாம். சுந்தரமூர்த்தி நாயனார், எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவன்தான் என்ற நம்பிக்கையுள்ளவர்; தன் வாழ்வுக்கு வழி காட்டி இறைவன்தான் என்று எண்ணியவர்; தான் செய்வன யாவும் இறைவன் திருஉள்ளத்தின்படி நடப்பனவே என்று உறுதியாக நினைப்பவர். இவை அவருடைய - அசையாத - தளராத - நம்பிக்கையாகும். ஆதலால் அவர் வாழ்க்கையிலே வெற்றி பெற்றார். இழந்த கண் பார்வையைக்கூட மீண்டும் பெற்றார்; இவ்வாறு அவர் வரலாறு சொல்லுகின்றது. இறைவன் திருவருளால், சுந்தரர் தான் பெற்ற இன்பத்தை- நன்மையை - இலாபத்தைப் பலரும் அறிய அழகிய பாடல் களால் அறிவிக்கின்றார். இவ்வுலகிலே இன்ப வாழ்வு வாழ்வதற்கு உதவி செய்வது பொன்; இதனையும் இறைவன் தருவான். எவ்வளவு பொன் கிடைத்தால்தான் என்ன? எவ்வளவு இன்பம் நுகர்ந்தால்தான் என்ன? இவைகள் சிரஞ்சீவிகள் அல்ல; அழிந்து மறைந்து போகக்கூடியனவே. அழியாத - மறையாத இன்பம் வேறொன்று உண்டு; அதற்குப் பேரின்பம் என்று பெயர். பற்றில்லாமல் - தன்னலமில்லாமல் வாழ்வதன் மூலம்தான் அந்தப் பேரின்பத்தைப் பெற முடியும். இவ்வுண்மையை உணர்வதே மெய்ப்பொருளை உணர்வதாகும். இந்த மெய்ஞ்ஞான அறிவையும் இறைவனே தருவான். இவ்வுலகிலும் நாம் அடைய வேண்டிய இன்பத்தை அடையும்படி செய்வான். உலக போகம் - இன்பம் - தானாகவே நம்மிடம் வந்து சேரும்படி செய்வான். அந்தப் போகத்தை நன்றாக அனுபவிப்பதற்கான செல்வத்தையும் அளிப்பான், இப்படிப் போகமும், செல்வமும் பெற்று வாழுங் காலத்தில் மகிழ்ச்சி காரணமாக - செல்வச் செருக்கு காரணமாக அறிவு தடுமாறிச் சில பிழைகளையும் நாம் செய்துவிடலாம். இப்படிப் பிழை செய்தாலும் இதற்காக இறைவன் நம்மீது சீறிவிழமாட்டான். அறியாமை காரணமாக நாம் ஆற்றிய பிழையைப் பொறுத்தருள்வான். மேலும் நாம் பிழை செய்யாமலிருக்கும்படி நமக்கு உத்தரவு போடுவான். நம்மை நல்ல நெறியிலே நமது உள்ளம் ஊன்றி உழைக்கும்போது, தீய நினைவுகள் நம் மனத்துள் நுழையமாட்டா. ஆதலால் தீமைகளை - பிழைகளை - தவறு களைச் செய்துவிடமாட்டோம். நம்மை ஆளும் இறைவன் இன்ன பண்புள்ளவன் என்று எவராலும் அறிய முடியாதவன். அவன் மேல் அன்பில்லாதவர்- அவனை நம்பாதவர் - அவன் துணையை நாடாதவர் - அவனைக் காணவே முடியாது; அவனுடைய பண்புகளை அறியவே முடியாது. ஆயினும் அவன் எனக்கு எளிதிலே காட்சியளித்தான். அவனே எனது தலைவன்; என்னை என்றும் ஆள்பவன். இத்தகைய பெருமான் எங்கேயிருக்கின்றான். அவ்வூர் அன்னப் பறவைகள் வாழ்கின்ற வயல்கள் சூழ்ந்த ஆரூர்; அழகான திருவாரூர்; இந்த ஊரிலே வாழ்கின்ற இறைவனை மறக்க முடியுமா? ஒருக்காலும் - இமைப் பொழுதுகூட மறக்கவே முடியாது. இவ்வாறு தன் உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையை அப்படியே சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். அச்சித்திரம் அமைந்த பாடல் இதோ: பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்; பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை, இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளிவந்த பிரானை, அன்னம் வைகும்வயல் பழனத்து அளி ஆரூரனை மறக்கலும் ஆமே, இது திருவாரூர்ப் பதிகத்தில் உள்ள முதல் பாட்டு. இதிலே இறைவன் இயல்பை-அவனால் தான் பெற்ற பயனை-அப்படியே சித்திரமாகத் தீட்டியிருப்தைக் காணலாம், இப்பதிகத்திலே, மற்றொரு திருப்பாட்டிலே, குறித்திருக்கும் உண்மையும் அழியாத உண்மையாகும். உலகம் வேறல்ல, இறைவன் வேறல்ல நம்முடைய முக்கியமான புலன்களில்கூட இறைவன்தான் இருக்கின்றான் உலகமே இறைவன் தான் உலக நிகழ்ச்சிகள் எல்லாம் இறைவன் திருவிளையாடல்தான். என்று சொல்லுகின்றது அக்கவிதை. கருமை நிறத்தையுடைய மேகமாகி நிற்பவன்; மழையைப் பெய்கின்றவன்; கலை என்னும் சாத்திரங்களுக்கெல்லாம் மூலப் பொருளாய் இருப்பவன் அவனேதான்; அவனிடம் உள்ளத் தைப் பதிய வைத்து அவனையே எப்பொழுதும் மனக்கண்ணால் பார்க்கின்ற உயிர்களுக்கெல்லாம் விரைந்து வந்து அருள் புரிகின்றவன்; அவனேதான், பகலாகவும் இருக்கின்றான்; இரவாகவும் இருக்கின்றான். பிறர் சொல்வதை ஓசையின்மூலம் உணர்கின்ற செவியும், செவிப்புலனும் அவனேதான்; சுவையாகவும், சுவையைக் காண் கின்ற நாவாகவும் இருக்கின்றவன் அவனேதான்; எல்லாப் பொருள்களையும் பார்க்கின்ற கண்ணாகவும் கட்புலனாகவும் அவனேதான் உருக்கொண்டிருக்கின்றான். ஆரவாரம் புரிகின்ற-ஓவென்று முழக்கம் செய்து கொண் டிருக்கின்ற - நீலத்திரைக் கடலும் அவனேதான்; ஆடாமல் அசையாமல் உயர்ந்து காணப்படுகின்ற மலையும் அவனேதான். இத்தகைய திருவாரூர் எம்மானை - எம்தலைவனை மறக்க முடியுமா? மறப்பது அறிவுள்ளோர் பண்பாகுமா? மறுக்கவே முடியாது. என்று இவ்வாறு பாடியிருக்கின்றார். இப் பொருளமைந்த பாடல் படிப்போர் உள்ளத்திலே அப்படியே ஒட்டிக் கொள்ளும் அப்பாடல் இதோ:- கார்க்கின்ற மழையாய்ப் பொழிவானை; கலைக்கெல்லாம் பொருளாய் உடன்கூடிப் பார்க்கின்ற உயிர்க்குப் பரிந்தானைப் பகலும் கங்குலும் ஆகி நின்றான்; ஓர்க்கின்ற செவியைச் சுவைதன்னை உணரும் நாவினைக்; காண்கின்ற கண்ணை; ஆர்க்கின்ற கடலை; மலைதன்னை ஆரூரனை மறக்கலும் ஆமே இப்பாட்டிலே கலைக்கெல்லாம் பொருளாய் என்று அமைந்திருக்கும் தொடர் குறிப்பிடத்தக்கது. கலைமகளின்- சாத்திரங்களின் குறிக்கோள் இறைவன் என்பதுதான் தான் இதன் கருத்து. இவ்வாறு எல்லாம் இறைவனே என்ற நம்பிக்கையுள்ள வர்களின் மனம் எந்தத் துன்பத்துக்கும் கலங்காது; எந்தத் தீமைக்கும்-பயமுறுத்தலுக்கும் தலைவணங்காது. எல்லாம் இறைவன் திருவருள் என்ற உறுதியுடன் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும். இந்த உண்மையையே சுந்தரமூர்த்தி நாயனார் தமது செந்தமிழ்ப் பாடல்களால் தெளிவாக உரைத்தார்; உணர்த்தினார். மந்திர சக்தியின் மாண்பு ஓரே தொடரை, அல்லது ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பித் சொல்லிக் கொண்டிருப்பது தான் மந்திரம் என்பது. ஓன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதால் உள்ளத்தில் ஒரு உறுதி பிறக்கின்றது. இந்த மந்திரம் போன்றதுதான் லோகன் என்பதும்; இதை முழக்கம் என்றும், கோஷம் என்றும் கூறலாம். மக்களை ஒன்று சேர்க்கும் வல்லமை அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் ஒலிக்கும் முழக்கத்திற்கு உண்டு. இந்நாளில் சிறப்பாக அரசியல்வாதிகள் ஏதேனும் ஒரு முழக்கத்தைத் தங்கள் இயக்கத்தின் மூலமந்திரமாகக் கொண் டிருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் முழக்கம் அல்லது கோஷம் மக்களின் உள்ளத்தைக் கவர்கின்றது; உணர்ச்சியைத் தட்டி எழுப்புகின்றது; அவர்கள் தங்கள் கொள்கையிலே உறுதியுடன் நிலைத்து நிற்கச் செய்கின்றது. லௌகீக இயக்கத்தினர்க்கும் முழக்கம் உண்டு; அரசியல், சமுதாய இயக்கத்தை நடத்துவோரும் ஏதேனும் முழக்கம் கொடுக்கின்றனர். வைதீகர்களும் தங்கள் வைதீகத்தை வளர்க்க முழக்கஞ் செய்கின்றனர். பண்டைக்காலந்தொட்டே லௌகீகர், வைதீகர் இரு சார்பினரும் முழக்கமிடும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். முழக்கமிட்டுக் கொள்கையைப் பரவச் செய்யும் பழக்கம் முதலில் யாரிடம் தோன்றியது? வைதீகர்களிடமிருந்து தான் - பிறந்தது என்று சொல்லி விடலாம். அரசியல் - சமுதாய வாதிகள் இவ்வைதீகர்களிடமிருந்துதான் முழக்கம் கொடுக்கும் முறையைக் கற்றுக் கொண்டிருக்கக்கூடும். இன்றும் சைவ அன்பர்கள் கூடும் போது ஒருவர் நமப் பார்வதீ பதையே என்று முழங்குவார்; ஏனையோர் அரஹர மகாதேவா என்று முத்தாய்ப்பாக முழக்கமிடுவர்; இதன் பிறகு அமைதி நிலவும்; பிரசங்கமோ, பஜனையோ நடைபெறும். வைணவர்கள் கூடும் போது, ஒருவர் கோவிந்த நாம சங்கீர்த் தனம் என்பார். ஏனையோர் கோவிந்தா; கோவிந்தா! என்று முழங்குவர்; அதன் பிறகே பிரசங்கமோ, கதாகாலட்சேபமோ நடைபெறும். இந்த முழக்கங்கள்பக்தி உணர்ச்சியைக் கிளப்பும் பண்புள்ளவை. சமயவாதிகளின்-பக்தி மார்க்கங்களின்-இந்த முறையைப் பின்பற்றித்தான் அரசியல்வாதிகளும் முழக்கமொழிகளை ஏற்படுத்திக் கொண்டனர். தங்கள் தலைவர் பெயரைச் சொல்லி ஜேய் என்று முழக்கமிட்டனர். மகாத்மா காந்திக்கு என்று ஒருவர் சொல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் ஜேய் என்று முழங்கும்போது நமக்கு ஒரு உணர்ச்சி பிறக்காமல் இல்லை. நமது நாட்டு மக்களுக்குத் தேசீய உணர்ச்சியை ஊட்டிய மந்திரம் வந்தே மாதரம் என்பது. இன்றும் இது தேசீய மந்திரமாக விளங்குகின்றது; வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்று சொல்லும்போது, தேசீயப் பற்றுள்ள எவர் உள்ளமும் உணர்ச்சி வசப்பட்டுத்தான் தீரும். இந்த மந்திரம் நமது தேசீய உணர்ச்சியைத் தூண்டிற்று; வளர்த்தது; நம்மை ஒன்றுபடச் செய்தது; வெள்ளையரை எதிர்த்துப் போராடச் செய்தது. இதன் பின் நேத்தாஜி சுபாஷ்சந்திரபோ அவர்களால் ஜெய் ஹிந்த் என்னும் மந்திரம் உருவாக்கப்பட்டது. இது பாரத நாட்டு மக்களின் உள்ளத்தை ஆட்கொண்டது. இன்று இந்த மந்திரமும் நமது தேசபக்தியைக் காட்டும் முழக்கமாக ஒலிக்கப் படுகின்றது. உண்மையான தேச பக்தர்கள் வந்தே மாதரத்தையும், ஜெய் ஹிந்த்தையும் மறக்க மாட்டார்கள். இவற்றைச் சிந்திப்போர், முழங்குவோர் உள்ளத்தில் தேசப்பற்று வளர்ந்து உறுதியாக நிற்கும். தேசப்பற்றில்லாமல், இவைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரும் உண்டு. அவர்கள் சிறுபான்மையினர்தான். ஒவ்வொரு தனி மனிதனும் தன் உள்ளத்தையும் உணர்ச்சியையும் ஒன்றுபடுத்த ஏதேனும் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ உச்சரித்துக் கொண்டிருப்பான். சிறப்பாகச் சமயப் பற்றுள்ளவர்கள். இறைவனை மறவாமலிருப்பதற்காக எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கும் வாக்கியத்தை மந்திரம் என்று அழைத்தனர். சைவர்கள் நமசிவாய என்ற தொடரை மந்திரமாகக் கொண்டு உருவேற்றுவார்கள். வைணவர்கள் நமோ நாராய ணாய என்ற தொடரை மந்திரமாகக் கொண்டு உள்ளத்தில் உருவேற்றுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு சமயத்தினர்க்கும் மந்திரம் உண்டு. இம் மந்திரங்கள் எல்லாம், உள்ளத்தை ஒருவழிப் படுத்த - தங்கள் கொள்கையிலே உறுதியுடன் நிற்க - தங்கள் தெய்வத்தை மறவாதிருக்க வழிகாட்டுவன என்பதில் ஐயம் இல்லை. சிவபெருமானிடம் பக்தி பூண்டவர்கள் உருப்போட வேண்டிய மந்திரம் நமசிவாய என்பது தான். அவர்களுடைய பக்தியை வளர்க்கும் மந்திரம் இது. அவர்கள் உள்ளத்திலே எப்பொழுதும் இறைவனைக் குடிகொண்டிருக்கச் செய்யும் மந்திரம் இதுதான். இம்மந்திரத்தை உருப்போட்டுப் பழகிய சிவனடியார்களின் நாவிலே எப்பொழுதும் இந்த மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர்கள் இறைவனை மறந்தாலும் அவர்களுடைய நாக்கு இந்த மந்திரத்தை மறக்காதாம். நான் வேறல்ல; சிவபெருமான் வேறல்ல; என்செயலாவது யாதொன்றும் இல்லை; எல்லாம் இறைவன் செயல்தான் என்ற நம்பிக்கையிலே ஊறிப் போனவர்கள் நாவிலேதான் நமசிவாய என்னும் தொடர் நடமாடிக் கொண்டேயிருக்கும். அவர்கள் நாக்கு, அவர்களை அறியாமலே இதை ஒலித்துக் கொண்டே யிருக்கும். ஊரை ஏமாற்ற நமசிவாய என்று சொல்லி வேடம் போடுவோரும் உண்டு. அவர்களைப் பற்றிக் கவலை வேண்டாம். தந்நலந் துறந்த தியாகிகள் தாம், வந்தே மாதரத்தையும், ஜெய்ஹிந்தையும் மறக்க மாட்டார்கள். இதைப் போலவே சிவபிரானைத் தவிர வேறு பற்று இல்லாதவர்கள் தாம் நமசிவாய மந்திரத்தை மறவாமல் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படித் தம்மை மறந்தும் நமசிவாய என்று சொல்லிக் கொண்டிருக்கும் பண்புள்ளவர்கள் தாம் உண்மை யான சிவபக்தர்கள் ஆவார்கள். இவர்கள் எத்துன்பத்துக்கும் இரையாகாமல் இன்புற்று வாழும் இயல்புள்ளவர்கள். இந்த உண்மையைச் சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு பதிகத்தில் வைத்துப் பாடியிருக்கின்றார். அந்தப் பாடலின் பொருளைக் காண்போம்: இவ்வுலகிலே எனக்கு வேறு எந்தப் பற்றும் இல்லை; எந்த ஆசையும் இல்லை. உன்னுடைய பாதத்தையே நான் என்னுள் ளத்திலே பற்றி நின்றேன். அதையே எப்பொழுதும், எக்காரியத் தைச் செய்யும் போதும் எண்ணிக் கொண்டே இருக்கின்றேன். இந்தப் பண்பை நான் அடைந்தபிறகு தான், இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்த பயனைப் பெற்றேன். உண்மையான மனிதப் பிறப்பாளன் ஆனேன்; இனி மீண்டும் இவ்வுலகிலே பிறந்து இறந்து தொல்லைப்படாத சிறந்த தன்மையும் பெற்றேன். சிறந்த கரையூரிலே, பாண்டிக்கொடுமுடி என்னும் கோயி லிலே எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே; கற்றவர்கள் கண்டு வணங்கி வாழ்த்தும்படி அமர்ந்திருக்கின்றவனே; நல்ல தவக்கோலத்துடன் விளங்குகின்றவனே; உன்னை நான் மறந்து விட்டாலும் எனது நாக்கு உன்னை மறந்துவிடாது. அது தானாகவே எப்பொழுதும் நமசிவாய என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கும். இவ்வாறு சுந்தர மூர்த்தி நாயனார், தமது பக்திப் பெருக்கை, சிவபிரானை என்றும் மறவாமல் இருக்கும் இயல்பை எடுத்துரைத்தார். இப்பொருள் அமைந்த பாடல் நம் உள்ளத்தை உருக்கும் உயர்ந்த பாடல். இதோ அப்பாடல்: மற்றுப் பற்றுஎனக்கு இன்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்; பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன், கற்றவர் தொழுது ஏத்தும்சீர்க் கரையூரில் பாண்டிக் கொடுமுடி நற்றவ! உன்னை நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சி வாயவே இது திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகத்தில் முதல் பாட்டு. இப்பகுதியில் உள்ள ஏனைய எட்டுப் பாடல்களும், உன்னை, நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றுதான் முடிகின்றன. இந்தப் பாண்டிக் கொடுமுடிப் பதிகப் பாடல்கள், சுந்தர மூர்த்தி நாயனாரின் பண்பை விளக்கமாக எடுத்துக் காட்டு கின்றன. இதைப்போலவே, திருஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் நமசிவாய மந்திரத்தின் பெருமையைப் பாடியிருக்கின்றனர். தான் மறந்தாலும், தனது நாக்கு இத்தொடரை மறவாமலிருக்கும்படி உருப்போட்டிருப்பவர்களின் உள்ளம் உறுதியானது. அவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். தாம் கொண்ட கொள்கையிலே நிலைத்து நிற்பார்கள். இவ்வுண்மையை மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே மூவர்களும் இதைப்பற்றிப் பாடியிருக்கின்றனர். எல்லா மக்களும், தம்மைப் போலவே ஏதேனும் ஒரு கொள் கையிலே உறுதியாக நின்று உய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மையைச் சொல்லியிருக்கின்றனர். புலவர்களுக்கு அறிவுரை பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் பெரிய மனிதர்களையே அண்டியே வாழ்ந்தார்கள்; அவர்களைப் புகழ்ந்து பாடினர்; அவர்கள் மனமுவந்து கொடுக்கும் பொருள் களைப் பெற்று வாழ்ந்தனர். பிறரைப் புகழ்வதென்றால் உண்மை யை மட்டும் உரைத்தால் போதாது; அது புகழாது; அவர் களிடம் இல்லாத பண்புகளையும் இருப்பனவாகக் சொல்லித் தான் ஆக வேண்டும். இதுதான் புகழ்வது என்ற வரிசையிலே சேரும். பல புலவர்கள் இப்படித்தான் பெரிய மனிதர்களைப் புகழ்ந்து பாடி வாழ்ந்தனர். சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பழம் புலவர்களின் வரலாறு நன்றாகத் தெரியும். நாயன்மார்களிலே சுந்தரர் ஒரு சரித்திராசிரி யராகவும் விளங்குகிறார். இதற்கு அவருடைய திருத்தொண்டத் தொகைப் பாட்டே போதுமான உதாரணமாகும். கொடுக்கும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடினாலும் குற்றம் இல்லை. புகழ்வதற்குத் தகுந்த பலன் கிடைக்கக்கூடும். தம்மைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்குப் பொருள் கொடுத்து ஆதரித்த கொடை வள்ளல்கள் பண்டைக்காலத்தில் இருந்தனர். இவர் களிலே குறுநில மன்னர்களும் உண்டு; முடி அரசர்களும் உண்டு. இவர்களைப் பாடிய புலவர்கள் வறுமையை விரட்டியடித்து வாழ்ந்து வந்தனர். சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலே, தமிழகத்திலே, புலவர்களைப் போற்றும் கொடை வள்ளல்கள் குறைந்து போய் விட்டனர். ஆயினும் புலவர்கள் பலர் விடாக் கண்டர்களாய், பணம் படைத்தோரைப் பாடித் திரிந்தனர். அவர்கள் பாடலுக்குத் தகுந்த பலன் பெறாமல் வாடி அலைந்தனர். தமது பாடலுக்குப் பயனாக அல்லலையும், அவமானத்தையும் தாம் பெற்றனர். அவர்கள் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக ஓடிக் கொண்டி ருந்தது. புலவர்களின் இந்த நிலையைக் கண்ட சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு அறிவுரை கூறும் முறையிலே ஒரு பதிகத்தைப் பாடியிருக்கின்றார். வீணாக மக்களை புகழ்ந்து பாடித்திரிய வேண்டாம். இதனால் நீங்கள் நினைக்கும் பயனைப் பெற முடியாது. ஒருக் கால் கொடை வள்ளல்கள் உங்களை ஆதரித்து உதவினாலும், அவ்வுதவி இம்மைக்குத்தான் பயன் தரும். அவர்களைப் பாடுவ தால் மறுமைப் பயனை அடையவே முடியாது. இறைவனைப் பாடினால் இருமைப் பயனும் பெறுவீர்கள் என்று வலியுறுத்தி யிருக்கின்றார் அப்பதிகத்தில். இது திருப்புகலூரைப் பற்றிப் பாடிய பதிகமாகும். சுந்தரர் சிவபெருமான் திருவருளாலேயே, கணிகையர் குலத்தில் பிறந்த பரவையாரை மணந்தார். அவர் சிவபெரு மானைப் பாடியே சங்கிலியார் என்னும் மற்றொரு மாதையும் மணந்தார். இவர்களுடன் சேர்ந்து இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய பொன்னையும் பொருளையும் சிவபெருமான் அருளினாலேயே அடைந்தார். சிவபெருமானைச் செந்தமிழால் பாடிப் பரவியதன் மூலம், சுந்தரர் தாம் பெற்ற இன்பத்தைப் பிற புலவர்களுக்கும் எடுத்துரைக்கின்றார். தான் பெற்ற அனுபவத்தை அவர் ஏனைய புலவர்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறார். தன்னைப் போல் பிறரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே அவர் விருப்பம். இதுதான் அன்பர்கள் - அடியார்கள் என்பவர் களின் எண்ணமாகும்; பண்பாகும். அவர் பாடுவதைப் பார்ப்போம். செல்வந்தர்களிலே பலர் பொய்ப் பெருமைக்கு ஆசைப் பட்டவர்கள். அவர்கள், தம்மைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டும்; பாட வேண்டும்; என்று விரும்புவார்கள். அவர்கள் புகழ்ச்சியை விரும்புகின்றவர்கள் என்பதை அறிந்தவர்கள், அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். எப்படிப் புகழ்ந்து பாடினாலும் சரி, அப் பாடலைப் பெறத், தமக்குத் தகுதியுண்டு என்று எண்ணிக் கொள்வார்கள். பாடி வந்த புலவர்கள் தமது விருப்பத்தைத் தெரிவித் தாலும், தமக்குத் தேவையானவை இவை என்று விண்ணப் பித்துக் கொண்டாலும் கேட்டுக் கொண்டாலும் பொறுமை யுடன் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். வேறு ஒருவரையும் அண்டாமல், அவர்களையே அண்டி நின்றாலும், அத்தொண்டர்க்குப் போதுமான உதவியைப் புரிய மாட்டார்கள். பணம் படைத்தவர்கள் இத்தகைய பண்புள்ள வர்கள். ஆதலால் இத்தகைய பொய்ம்மையாளரைப் பாடாதீர் கள். புலவர்களே நீங்கள் இவ்வீணர்களைப் புகழ்ந்து பாடி ஏமாற வேண்டாம். இவர்களைப் பாடுவதில்லை என்று உறுதி கொள்ளுங்கள். திருப்புகலூரிலே கோயில் கொண்டருளி யிருக்கும் எந்தையாகிய சிவபெருமானைப் பாடுங்கள். உங்களுக்குப் பலன் கிடைப்பது நிச்சயம். அந்தப் பலன்தான் என்ன? என்று கேட்டீர்களா? இதோ சொல்லுகிறேன் கேளுங்கள். புகலூர் எந்தையைப் பாடுவதனால், இம்மையிலும் இன்பம் உண்டு; பசியார உண்பதற்குச் சோறும் கிடைக்கும்; உடுத்துக் கொள்ள நல்ல உடையும் கிடைக்கும். எப்போதும் இறைவனைத் தொழலாம். இம்மையிலே உங்களை நாடிவரும் துன்பம் எல்லாம் தொலைந்து போகும். இவற்றைவிட இவ் வுலகிலேவேறு என்னதான் வேண்டும்? இறந்த பின்னும் உங்களுக்குப் பெரிய நன்மையுண்டாகும், எமலோகத்தை அடைந்து துன்பப்பட வேண்டியதில்லை. சுவர்க்கலோகத்தையடைந்து, புண்ணியம் உள்ள மட்டும் இன் பந்துய்த்து, மீண்டும் பிறக்க வேண்டிய துன்பமும் இல்லை. எப்பொழுதும் அழியாத - நிலையான - இன்பம் நிறைந்த சிவலோகத்தை ஆளலாம். இதில் சிறிதும் சந்தேகப்பட இடமே இல்லை. ஆதலால் மக்களைப் பாடாதீர்கள்; மகாதேவனைப் பாடுங்கள்! என் அனுபவத்தை உங்களுக்குச் சொன்னேன். நானும் ஒரு புலவன்தான்; உங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான்; ஆதலால் தமிழ்ப் புலவர்களே! கவிஞர்களே! நான் சொல்வதை அலட்சியம் பண்ணாதீர்கள்!! இவ்வாறு அருமையாகவும், தெளிவாகவும் பாடியிருக்கின் றார் சுந்தரர். இதோ அந்த அரிய தமிழ்க் கவிதையைப் பாருங்கள். தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும், சார்விலும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின்! புலவீர்காள்; இம்மையே தரும், சோறும், கூறையும்; எத்தலாம்இடர் கெடலும் ஆம்; அம்மையேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. இதுவே புகலூர்ப் பதிகத்தின் முதல் பாட்டு. இதனை அடுத்துள்ள ஒன்பது பாடல்களிலும் இவ்வுண்மையை வலியுறுத்திப் பாடியிருக்கின்றார். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்த்தால் போதும். மிடுக்குஇலாதானை வீமனே, விறல்விசயனே வில்லுக்கு இவன் என்றும், கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை. வீரமற்றவனைப் பார்த்து வீமனே என்று பாடினாலும் சரி, வில்வீரனாகிய அருச்சுனன் இவன்தான் என்று பாடினா லும் சரி, கொடாத கண்டனைப் பார்த்துக் கொடையிலே இவன் தான் பாரி என்று பாடினாலும் சரி, கொடுக்க மாட்டார்கள். நரைகள் போந்து மெய்தளர்ந்து மூத்து நடுங்கி நிற்கும்இக் கிழவனை வரைகள்போல்திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை. மயிர் முழுவதும் நரைத்து, உடல் தளர்ந்து முதுமை யடைந்து, உடல் நடுங்குகின்ற ஒரு கிழவனைப் பார்த்து, மலை போன்ற திரண்ட தோளையுடைய வாலிப வீரனே என்று வாழ்த்திப் பாடினாலும் கொடுக்க மாட்டார்கள். வஞ்ச நெஞ்சனை, மாசழக்கனை, பாவியை, வழக்கு இல்லியைப் பஞ்ச துட்டனைச் சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை. உள்ளத்தில் வஞ்சகம் நிறைந்தவன், பெரிய குற்றங் களையே செய்து கொண்டிருப்பவன். பாவமே தொழிலாகக் கொண்டவன். அறுத்த கைக்குச் சுண்ணாம்பும் வழங்காதவன், பஞ்சமா பாதகங்களையே செய்து கொண்டிருக்கும் துஷ்டன், இப்படிப்பட்டவனைப் பார்த்து சாதுவே என்று புகழ்ந்து பாடினாலும் கொடுக்க மாட்டான். கற்றிலாதானைக் கற்று நல்லனே! காமதேவனை ஒக்குமே! முற்றுஇலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பர் இலை. கல்வியறிவே இல்லாத தற்குறி; அவனைப் பார்த்து, கற்று நல்ல பண்புடன் வாழ்கின்றவனே; அழகிலே மன்மதனைப் போன்றவனே; என்று பாடினாலும் சரி; முழுவதும் அறிவில் லாதவனைப் பார்த்து, எல்லாம் உணர்ந்த அறிவாளியே என்று பாடினாலும் சரி, அவர்கள் பொருள் கொடுக்க மாட்டார்கள். இவ்வாறு மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதால் புலவர் களுக்குப் பயன் கிடைக்காது என்று கூறியிருக்கிறார் சுந்தர மூர்த்தி நாயனார். இந்தத் திருப்புகலூர்ப் பதிகப் பாடல்கள், மக்களைப் புகழ்ந்து பாடித்திரியும் - வீணர்களைப் புகழ்ந்து பாடி அலையும் தமிழ்ப் புலவர்களுக்கென்றே பாடப்பட்டதுபோல் காணப் படுகின்றது. இப்பதிகத்தால், சுந்தரமூர்த்தி நாயனாரின் உலக அறிவையும், சரித்திர ஞானத்தையும் நாம் காண முடிகின்றது. இப்பாடல்கள் புலவர்களுக்குச் சிறந்த ஒப்பற்ற அறிவுரைகள். ஆழ்வார்கள் அருள்மொழி (1959) முன்னுரை நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவன் அல்லன்; மத பக்தனும் அல்லன்; நான் எந்த மதத்தைப் பின்பற்று கிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆனால், உண்மை - அன்பு - ஒழுக்கம் - அறிவு - சமத்துவம் இவற்றை விரும்புகிறேன். யாரிடத்திலும் எத்தகைய பேதமும் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே என் கருத்து. என் கருத்திற்கிசைந்த எவரையும் போற்றுவது எனது பண்பு. கருத்திற்கு இசையாத வரைத் தூற்ற மாட்டேன்; அவரை விட்டு விலகி நிற்பேன்; இதுவும் எனது குணம். இத்தகைய நான், பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருப்போர் பாடல்களைப் போற்றுகின்றேன்; படிக்கின்றேன்; சுவைக்கின்றேன். இதற்குக் காரணம், என் கொள்கையை ஒட்டிய கருத்துக்களை அப்பாடல்களிலே காண்கின்றேன். பக்திப் பாடல்களைப் படிப்போர் அந்தப் பாடல்களைப் பாடிய பக்தர்களின் அன்புள்ளத்தைக் காணலாம்; அருள் மனத்தை அறியலாம்; ஏனையோர்பால் அவர்கள் காட்டும் இரக்கத்தைப் பார்க்கலாம். சிறப்பாக, ஆழ்வார்களின் அருந்தமிழ்ப் பாடல்கள் படிப் போர் உள்ளத்தைக் கவரும் பண்புடையவை; கருத்தில் மட்டும் அன்று; தமிழ் நடையிலும் சிறந்தவை; இனிய தமிழில் அமைந் தவை. பக்தி என்பது ஒரு மூட நம்பிக்கை என்று கூறுவோரும், ஆழ்வார்கள் பாடல்களைப் படிக்கும்போது, அப்பாடல்களின் இனிமையை அனுபவிக்காமல் இருக்கமாட்டார்கள். ஆனால் சிறிதளவாவது தமிழறிவும், தமிழ்ப்பற்றும் வேண்டும்; இவை உள்ளவர்களால் தான் எந்தத் தமிழ்ப் பாடல்களையும் சுவைக்க முடியும். கி.பி.7-ஆம் நூற்றாண்டிலிருந்து, 9-ஆம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்.. பிரபந்தத்தில் இடம் பெற்றிருக்கும் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். அவர்கள் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டர் அடிப்பொடி ஆழ்வார், பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் என்பவர்கள். ஆண்டாள், அல்லது நாச்சியார் என வழங்கும் பெண்மணி ஒருவரின் அரிய பாடல்களும் பிரபந்தத்தில் சிறந்து விளங்குவது குறிப்பிடத் தக்கது. இந்தப் பன்னிரண்டு அடியார்களின் பாடல் களைப் பிரபந்தத்தில் படிக்கலாம். இவற்றுள், திருப்பாண் ஆழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய இருவர் பாடல்களைப் பற்றி இந்நூலுள் குறிப்பிட வில்லை. அமலன் ஆதிப்பிரான் என்று தொடங்கும் பத்துப் பாடல்கள் திருப்பாணாழ்வாரால் பாடப்பட்டவை; திருமாலின் தோற்றத்தை வர்ணிப்பவை; சிறந்த பாடல்கள். கண்ணினுள் சிறுதாம்பினால் என்று தொடங்கும் பதினொரு பாடல்கள் மதுரகவியாழ்வாரால் பாடப் பட்டவை; நம்மாழ்வாரின் பெருமையைப் பாடுவன. தேவுமற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வத்தை அறியேன். அந்தத் திருக்குருகூர் நம்பி பாடிய பாடல்களின் இனிய புகழைப் பாடித் திரிவதே எனக்கு இன்பமாகும் என்பது மதுரகவி யாழ்வார் வாக்கு. இதனால் அவர் நம்மாழ்வாரிடம் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காணலாம். இந்நூலிலே, திருப்பாண் ஆழ்வார், மதுரகவியாழ்வார் இவர்கள் பாடல்களைத் தவிர ஏனைய பத்து பக்தர்களின் பாடல்களின் அருமை - இனிமை - விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆழ்வாரைப் பற்றியும், அவர்கள் கவியைப் பற்றியும் தனித்தனியே எழுதப் பட்டிருக்கின்றன. ஆழ்வார்களின் பாடல்கள் நமக்ககுப் பல உண்மைகளை அறிவிக்கின்றன. கி.பி. 7 - ஆம் நூற்றாண்டு முதல், 9-ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களை அவைகளில் காணலாம். தமிழிலே வடசொற்கள் கலந்தால் தமிழின் இனிமை கெட்டுப் போகும்; தமிழின் தனித்தன்மை அழிந்து போகும்; என்போர் உண்டு. மற்ற எந்த மொழியின் மீதும் வெறுப்புக் கொள்ளாமல் வடமொழியின் மீது மட்டும் காய்ந்து விழும் தமிழர்கள் உண்டு. இவர்களுக்கு ஆழ்வார்களின் பாடல்கள் நல்ல அறிவுரை புகட்டும் என்று நம்புகின்றேன். ஆழ்வார்களின் அருட் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. அதனால் தமிழின் இனிமை கெட்டுப் போய் விடவில்லை. தமிழின் தன்மை தேய்ந்துவிட வில்லை. தமிழிலே புகுந்த வடசொற்கள் தமிழ் மயமாகவே ஆகிவிட்டன. தமிழோடு கலந்து தமிழின் இனிமையைப் பெற்று விட்டன. வளருந்தமிழ், பிறமொழிச் சொற்களை - தன்னுடன் தொடர்புள்ள பிறமொழிச் சொற்களை - மணப்பது இயற்கை. இந்த உண்மையை உணராதவர்களே பிற மொழிக் கலப்பை வெறுப்பார்கள். இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை, சிங்கப்பூர், தமிழ் முரசுப் பத்திரிகையில் வெளிவந்தவை; தமிழர் அருள்நெறித்தொடர் என்னும் தலைப்பில், மெய் கண்டான் என்னும் புனை பெயருடன் என்னால் எழுதப் பட்டவை; இப்பொழுது சில திருத்தங்களுடன் புத்தக உருவில் வெளிவருகின்றன. அருள்நெறித் தொடர் என்னும் வரிசையிலே ஆழ்வார்கள் அருள்மொழி என்னும் இம் முதற் புத்தகம் வெளிவருகின்றது. இதனை அடுத்து, இவ்வரிசையில், வேறு பல புத்தகங்கள் வெளிவரும். நான் வைணவனும் அல்லன்; வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவனும் அல்லன். ஆதலால், இந்நூல் கட்டுரைகளை அந்நோக்கத்துடன் படிப்போர் பல தவறுகளைக் காணலாம். நான் தமிழ் அறிந்தவன்; தமிழைச் சுவைப்பவன்; படிப்பவன்; பாராட்டுகிறவன். ஆதலால் ஆழ்வார்கள் பாடல்களைப் படிக்கும் போது என் உள்ளம் மகிழ்ச்சியடைகின்றது. அவைகளின் பொருளும், தமிழ்ச் சுவையும் என் உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றன. யான் அடையும் இந்த இன்பத்தைத் தமிழ் அறிந்த ஏனை யோரும் அடைய வேண்டும் என்பதே என் ஆசை. சாமி.சிதம்பரன் 1 பெரியாழ்வார் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலில் அமைந் திருக்கும் பாடல்கள் பெரியாழ்வார் பாடல்களே. இறைவனுக்குப் பல்லாண்டு பாடிய பெரியார் இவர். பல்லாண்டு, திருமொழி என்ற இரண்டு பகுதிகளாக இவருடைய பாடல்கள்அமைந்திருக்கின்றன. பெரியாழ்வார், கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்தவர். அவர் காலத்திலே வைணவ மதம் செழித்திருந்தது. தமிழ் மொழியிலே வைணவம் பற்றிய இலக்கியங்களும், சைவம் பற்றிய இலக்கியங்களும் பிறந்து கொண்டிருந்தன. பெரியாழ்வார் கண்ணனுடைய திருவிளையாடல்களில் ஈடுபட்டவர்; கண்ணனுடைய பால லீலைகளைப் பற்றிப் பாடிப் பாடி மகிழ்ச்சி யடைகின்றார். பிற்காலத்திலே பிறந்த - பிள்ளை விளையாட்டைப் பற்றிக் கூறும், பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்துக்குப் பெரியாழ்வார் பாடல்களே அடிப்படை; மூலகாரணம் என்று சொல்லிவிடலாம். பெரியாழ்வார் பாடல்களிலே இராமாயணத்தைக் காணலாம்; இராமயாணக் கதைக் குறிப்புக்களைக் காணலாம். இராமாவதாரத்திலும் இவர் மிகவும் ஈடுபாடு உள்ளவர். பெரியாழ்வார் பாடல்கள் இனிய ஓசை அமைந்தவை; கருத்துக்கள் நிறைந்தவை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேன்போல் இனிப்பவை. இவர் பாடல்களிலே, பிள்ளைகளின் விளையாட்டு - அவர்கள் மனப்பான்மை - குழந்தைக் குறும்பு - அவர்களுடைய நடை உடை பாவனைகள் இவைகளைக் காணலாம். தாய் பிள்ளைகளிடம் காட்டும் தணியாத அன்பு; தாயுள்ளம்; தாயின் தியாகம் இவைகளையும் காணலாம். பெரியாழ்வார் பாடல்களில் இயற்கை எழில்கள் பல வற்றைக் காணலாம்; உலகப் போக்கைக் காணலாம்; பக்தியின் பெருமையைப் பார்க்கலாம்; உலக ஆசையில் ஈடுபட்டு மயங்கித் திரியும் மக்கள் விடுதலை பெறுவதற்கான அறிவுரை கள் பலவற்றைக் காணலாம். பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் பரவி யிருந்த பக்தி மார்க்கத்தைப் பற்றியும்; மக்கள் மனப்பான் மையைப் பற்றியும், அறிவதற்கு அவர் பாடல்கள் துணை செய்யும். குழந்தைக்குப் பெயர் வைத்தல் தமிழ் நாட்டிலே மக்களுக்கு வழங்கும் பெயர்கள் பெரும் பாலும் தெய்வப் பெயர்களாகவே வழங்குகின்றன. தாங்கள் வழிபடும் தெய்வங்களின் பெயர்களைத் தங்கள் மக்களுக்கு வைத்து வழங்குவது தமிழ் நாட்டின் தொன்று தொட்ட வழக்கம். இந்தியா முழுவதும் பெரும்பாலும் இந்த வழக்கம் தான் இருந்து வருகிறது. இராமன், கண்ணன், சிவகுரு, சிவானந்தம், சுப்பிர மணியன், தியாகராஜன், நடராஜன், காசிநாதன், இராமநாதன், இராமலிங்கம் என்பன போன்ற பெயர்களை ஆண்களுக்கு வைத்து அழைக்கின்றனர். சரசுவதி, இலட்சுமி, பார்வதி போன்ற தெய்வப் பெயர்களைப் பெண்களுக்கு வைத்து வழங்குகின்றனர். இந்தப் பெயர்கள் வேறு வேறு மொழிகளிலே வேறு வேறு உருவில் வழங்குகின்றன. வீரப்பன், மாடசாமி, வீரம்மாள், முனியப்பன், முனியாண்டி, முனியம்மாள், கருப்பண்ணன், கருப்பாயி, காத்தான், சாத்தான், மாரியப்பன், மாரியாத்தாள், காளியாத்தாள் என்பவை போன்ற சிறு தெய்வப் பெயர்களும் சாதாரண மக்களிடையே வழங்கி வருகின்றன. தமிழ் நாட்டிலே தெய்வ பக்தி தலைதூக்கிய காலத்தில் இவ்வழக்கம் ஏற்பட்டது. தெய்வத்தை மறத்தல் கூடாது; தெய்வத்தின் நினைப்பு மக்கள் மனத்திலே எப்பொழுதும் இருக்க வேண்டும்; தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள்தாம் தீங்கு செய்ய அஞ்சுவார்கள்; அறநெறியைப் பின்பற்றி நடப்பார்கள்; தெய்வம் இல்லாத ஊரில் - கோயில் இல்லாத ஊரில் குடி யிருக்கவும் கூடாது என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பி வந்தனர். அக் காலத்தில்தான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தெய்வப் பெயர்களைத் தேடி வைத்தனர். இந்நிலை ஏற்பட்ட காலத்தைக் கணக்கிட முடியாது. எத்தனை தெய்வங்கள் உண்டோ அத்தனை தெய்வங் களின் பெயர்களையும் மக்களுக்கு வைத்து வழங்கியிருக்கின்றனர். இதன் பிறகு தங்கள் பாட்டன் பூட்டன் பெயர்களை ஆண் களுக்கும், பாட்டி பூட்டி பெயர்களைப் பெண்களுக்கும் வைத்து வழங்கும் வழக்கம் தோன்றியது. முன்னோர் பெயர் களும் தெய்வப் பெயர்களாகவே இருந்தன. ஆதலால் முன்னோர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைத்தாலும் அவையும் தெய்வப் பெயர்களாகவே இருந்தன. முன்னோர் களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பது என்ற வழக்கம் ஏற்பட்டபின் பிள்ளை களுக்கு என்ன பெயர் வைப்பது என்று ஆலோசிக்க வேண்டிய வேலை குறைந்தது. பக்தர்கள் தெய்வப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பதையே பெரிதும் பாராட்டினர். இதனைப் பெரியாழ்வார் பாடல் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. மானிட சாதியில் தோன்றிற்றுஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேர்இட்டால் மறுமைக் கில்லை வான்உடை மாதவா! கோவிந்தா! என்று அழைத் தக்கால் நான்உடை நாரணன்தம் அன்னை நரகம் புகாள். மானிட சாதியிலே பிறந்த ஒரு மானிட சாதிக்கு, அந்த மனிதர்களின் பெயரையே வைத்தால் அதனால் பயனில்லை. மறுமையிலே எந்த நன்மையையும் பெறமுடியாது. ஆதலால் கடவுள் திருப்பெயராகிய மாதவன், கோவிந்தன் என்ற பெயரை வையுங்கள். இப்பெயரை வைத்தால் அக்குழந்தையை அழைக்கும் போது, மாதவா! கோவிந்தா! என்றுதான் அக்குழந்தையைப் பெற்ற அன்னை அடிக்கடி அழைப்பாள். இதனால் என்னை ஆளுடைய நாரணனைப் பெற்ற அன்னை நரகத்தை அடைய மாட்டாள்! என்று பாடுகின்றார்; குழந்தைகளுக்குத் தெய்வங் களின் பெயர்களை வைக்கும்படி கூறுகின்றார். மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுஅங்கு எண்ணம் ஒன்று எண்ணியிருக்கும் ஏழை மனிசர்காள்! கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின்! நாரணன் தம்அன்னை நரகம் புகாள் என்று மேலும் இதை வலியுறுத்திக் கூறுகின்றார்; இவ்வாறு பத்துப் பாடல்கள் பாடியிருக்கின்றார். மண்ணிலே பிறந்து முடிவில் மண்ணிலே மறைந்து போகும் மானிடப் பெயர்களை வைக்கின்றீர். இப்படிப் பெயர் வைத்து இவ்வுலக வாழ்வைப் பற்றிய எண்ணம் ஒன்றையே கொண்டிருக் கிறீர்கள். இப்படி வாழ்கின்ற அறிவற்ற மனிதர்களே, கண்ணுக்கும் மனத்திற்கும் இனிமை தரும் கருமுகில் வண்ணனாகிய திருமாலின் பெயரையே விரும்பி வையுங்கள். நாரணனை யீன்றெடுத்த அன்னை அப்பெயரை அடிக்கடி சொல்லி அழைப்பதனால் நரகத்தை அடைய மாட்டாள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தெய்வப் பெயர் களை வைத்தால் அப்பெயர்களையே சொல்லி அழைப்பார்கள்; தங்கள் பிள்ளைகளை, முருகா! வேலா! இராமா! கோபாலா! சந்திரகேசரா! கோவிந்தா! சிவசாமி! கைலைநாதா! சக்கர பாணி! சாரங்கபாணி! என்று அழைப்பதனால் அடிக்கடி தெய்வங்களின் பெயர்களை உச்சரிப்போர் ஆகின்றனர்; இதனால் தெய்வங் களைப் போற்றிய பலனைப் பெறுகின்றனர். இதுவே ஆழ்வாரின் அரிய கருத்தாகும். ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழகத்தில் தோன்றித் தெய்வ பக்தியை வளர்த்தனர். அவர்களுக்குப் பிறகுதான் குந்தைகளுக்குத் தெய்வப் பெயர் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்று சிலர் கூறுவார்கள். ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திற்கு முன் மக்களுக்குரிய பெயர்கள் எல்லாம் இயற்கைப் பெயர்களாகவே யிருந்தன. அவற்றிலும் பல பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருந்தன என்றும் கூறுவார்கள். இக்கூற்றை அப்படியே உணர்மையென்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆர்வார்கள் நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே மக்களுக்குத் தெய்வங்களின் பெயர்களை வைத்து அழைக்கும் வழக்கம் தமிழகத்திலேயே நிலவியிருந்தது. இயற்கைப் பொருள் களின் பெயர்களை வைக்கும் வழக்கமும் இருந்தது. காரணம் கருதிப் பெயரிட்டு அழைக்கும் வழக்கமும் இருந்தது. பண்டைத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை நன்றாக விளங்கும். அரிசில் கிழார் - அரிசில் என்னும் ஊரினர்; ஆலத்தூர் கிழார் - ஆலத்தூர் என்னும் ஊரினர்; ஆவூர் கிழார் - ஆவூர் என்னும் ஊரினர்; இடைக்காடனர் - இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர்; இடைக்குன்றூர் கிழார் - இடைக்குன்றூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இப்பெயர்கள் அனைத்தும் அவர்கள் வாழ்ந்த ஊர்களின் அடியாகப் பிறந்தவை. இவர் களின் இயற்பெயர்கள் வேறாக இருக்கலாம். பொன் வாணிகனார். இவர் பொன் வியாபாரம் செய்த தனால் இப்பெயர் பெற்றார். ஓரேர் உழவர் இவர் ஓர் ஏரை வைத்துக்கொண்டு உழவுத் தொழில் செய்து வாழ்ந்தவர். நெட்டிமையார். நீண்ட இமையை உடையவர்; ஆதலால் இப்பெயர் பெற்றார். நெடுங்கழுத்துப் பரணர். பரணர் என்பது இயற்பெயர். இவர் கழுத்து நீளம். ஆதலால் நெடுங்கழுத்துப் பரணர் என்று பெயர் பெற்றார். அறுவை வாணிகன் இளவேட்டனார். வேட்டனார் என்பது இயற்பெயர். துணி வியாபாரம் செய்து வந்தமையால் அறுவை வாணிகன் என்று பெயர் பெற்றார். பெரும்கண்ணனார். பெரிய கண்களை உடையவர் ஆதலின் இப்பெயர் பெற்றார். ஐயூர் முடவனார், இவர் வாழ்ந்த ஊர் ஐயூர். முடவர். ஆதலின் ஐயூர் முடவர் என்று பெயர் பெற்றார். நரிவெரூஉத் தலையார் என்பது ஒருவர் பெயர். இவர் தலையை நரி கண்டால் அஞ்சும். அல்லது நரியின் தலையைப் போல அஞ்சத் தகுந்த தலையையுடையவர். இப்பெயர்கள் எல்லாம் காரணத்தோடு வழங்கும் பெயர்கள். இயற்பெயரோடு காரணம் கலந்த பெயர்களும் சேர்ந்து வழங்குகின்றன. சாத்தனார் என்பது தெய்வப் பெயர். சாத்தன் என்பது பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்ற தெய்வம். தமிழர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த தெய்வம். இன்று மலையாளத் தில்தான் சாத்தன் என்னும் தெய்வத்தை சாதா என்னும் பெயருடன் பல மக்கள் வழங்குகின்றனர். சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் நாட்டில் பலர் வாழ்ந் திருக்கின்றனர். மாசாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் என்று வழங்கப்பட்டனர். பெண்களுக்கும் இப்பெயரிட்டு வழங்கி வந்தனர். ஒக்கூர் மாசாத்தியார் என்பது இதற்கு உதாரணம். மதுரைக் குமரனார், வேம்பற்றூர்க் குமரனார், உறையூர்ச் சிறு கந்தனார் முதலிய பெயர்கள் முருகன் பெயரைக் கொண்டவை. குமரன் என்பது முருகன் பெயர். கந்தன் என்பது முருகன் பெயர். சோழன் நல்லுருத்திரன், விரியூர் நக்கனார், உத்திரங் கண்ணனார், பேயார், பேரெயின் முறுவலார் என்ற பெயர்கள் எல்லாம் சிவபெருமான் பெயர்களை அடிப்படை யாகக் கொண்டவை. பெருஞ் சதுக்கத்துப் பூதனாதனார்; சதுக்கபூதம் என்னும் தெய்வத்தின் பெயர் கொண்டது. பெருந்தேவனார்; தெய்வப் பெயர். பூதன் தேவனார்; இதுவும் தெய்வப் பெயர். பிரமனார், பதுமனார் - இவை பிரமதேவன் பெயர்கள். மருத்துவன் தாமோதரனார். தாமோதரன் என்பது திருமாலின் பெயர். இவ்வாறு தெய்வப் பெயர்களைக் கொண்ட மக்கள் பலர் பண்டைத் தமிழகத்திலே வாழந்தனர். இவற்றால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே, மக்களுக்குத் தெய்வங் களின் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு என்பதைக் காணலாம். இவ்வழக்கம் தமிழர்களின் பண்டை வழக்கம். இது தமிழரின் அருள்நெறியை விளக்குவதாகும். இவ்வழக்கத்தையே ஆழ்வார்களும் பின்பற்றினர். தாயின் தியாகம் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது தமிழ்ப் பழமொழி. ஈன்ற தாய்க்குத் தன் குழவியின் மேல் எல்லையற்ற அன்புண்டு. அதுதான் இரத்தபாசம். விலங்கு, பறவை முதலியவையும் தாம் ஈன்ற குழவிகளை இன்பத்தோடு ஊட்டி வளர்க்கின்றன. ஆகவே தாயன்புக்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது. தகப்பன் இன்னார் என்று தெரியாமல், தவறான நெறியிலே பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களும் அவைகள் பால் அன்பு காட்டுவதைக் காணலாம். தாம் உயிர் வாழ விரும்பாவிட்டாலும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு உயிர் வாழ்வதைப் பார்க்கின்றோம். தாம் பெற்ற பிள்ளைக்காகத் தம்முடைய உணவு, உடை, உறக்கம் முதலிய இன்பங்களைத் துறக்கும் தாய்மார்கள் எத்தனையோ பேர். தான் துன்புற்றாலும் தான் பெற்ற மக்கள் துன்பத்திலே துடிக்கக்கூடாது என்று எண்ணுவதுதான் உண்மைத் தாயுள்ளம். பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்ற மற்றொரு பழமொழியும் உண்டு. ஈன்ற பிள்ளைகள் இரக்க மற்றவர்களா யிருக்கலாம். தம்மை வளர்ப்பதற்குத் தாய் செய்த தியாகங்களை மறந்தவர்களாயிருக்கலாம்; அல்லது அறியாத வர்களா யிருக்கலாம். தம் உள்ளத்திற்கும் உடலுக்கும் இன்பந் தரும் மனைவியே தாயைக் காட்டிலும் சிறந்தவள் என்று எண்ணக் கூடியவர்களா யிருக்கலாம். பெற்ற தாயைப் பேணாமல், தம்முடைய இன்ப வாழ்விலே மிதந்து கொண்டிருப்பவர்களா யிருக்கலாம். இவர்களையும் வெறுக்கமாட்டாள் ஈன்றெடுத்த அன்னை. உண்மையான தாயாயிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளின் பெரும்புகழைக் கண்டு பெருமைதான் படுவார்கள்; அவர் களுடைய இன்ப வாழ்வைக் கண்டு உள்ளத்தில் உவகைதான் அடைவார்கள். தம்முடைய வறுமையையோ துன்பத்தையோ சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். தாம் பெற்ற பிள்ளைகள் தம்மை வெறுத்தாலும், அவர்களுடைய பெருமையைப் பற்றி - பெருவாழ்வைப் பற்றிப் பிறரிடம் சொல்லிக் காட்டிப் பெருமித மடைவார்கள். மக்களிடம் மாறாத பேரன்பு தாய்மார்களிடம் தவழ்ந்து கொண்டே யிருக்கும். தம் பிள்ளைகள் உண்டு மகிழ்ந்து உரம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத் தமது நாச்சுவையைத் துறப்பார்கள்; வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வளம்பெற வளர்ப்பார்கள். எதிர்ப்பலனை எண்ணாமல் தம் இன்பத்தைத் துறப்பதே தியாகம். இத்தகைய தியாகத்தைத் தாய்மார்கள்தாம் செய்வார்கள். ஆகையால் அன்னையை முதல் தெய்வமாகக் கூறினர் முன்னோர்கள். வைத்த நெய்யும், காய்ந்த பாலும், வடிதயிறும், நறுவெண்ணெயும் இத்த னையும் பெற்றறியேன் எம்பிரான்! நீ பிறந்த பின்னை; எத்த னையும் செய்யப் பெற்றாய்; ஏதும் செய்யேன் கதம்படாதே! முத்த னைய முறுவல் செய்து, மூக்குறிஞ்சி, முலை உணாயே! என்பது பெரியாழ்வார் பாட்டு. இச்செய்யுள் தாயின் தியாகத்தை அப்படியே எடுத்துக் கண்முன்னே காட்டுகின்றது. கண்ணனை, அவள் தாய் பாலுண்ணப் பரிந்தழைக்கின்றாள். இந்தக் கருத்தை வைத்து இயற்றப்பட்ட இனிய செய்யுள் இது. இந்தச் செய்யுளின் முதல் இரண்டடிகளில் உள்ள தியாகம் குறிப்பிடத்தக்கது. அவை தாயின் தியாகத்தை நம் கண்முன்னே அள்ளி வைக்கின்றன. எம்பிரானே! கண்ணனே! நீ பிறந்த பிறகு, நான் எனக் கென்று எதையும் செய்து கொள்ளவில்லை. நான் வாழ்வதே எனக்காக அன்று; உனக்காகவே உயிர் வாழ்கின் றேன். காய்ச்சி வைத்த நெய்யும், நன்றாகக் காய்ந்த பாலும், வடித்தெடுத்த தயிரும், நல்ல வெண்ணெயும், இவ்வளவையும் நீ பிறந்த பின் நான் பெற்றதேயில்லை. சுவைத்து உண்டேதே யில்லை. இவற்றை யெல்லாம் உனக்கே உரிமையாக்கி விட்டேன். இப்பொருள்தான் முதல் இரண்டடிகளிலே அமைந் திருக்கின்றது. இது தாயின் தியாகத்தைக் குறிக்கின்றது. மேலும் தாயின் உள்ளன்பை வெளிப்படுத்துகின்றன ஏனைய இரண்டடிகள். எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே! என்பது மூன்றாவது அடி. நீ எத்தனையோ குறும்புகளைக் செய்தாய். கோபம் வரக்கூடிய குறும்புத் தனங் களை விளையாட்டு என்னும் பெயரால் செய்துவிட்டாய் நீ. செய்த குறும்புத்தனங்களுக்காக உன்னைக் கோபித்துக் கொள்ள மாட்டேன். தண்டிக்கமாட்டேன். ஆதலால் நீ என்னிடம் கோபங்காட்டாதே. என்னிடம் வா; உன்னுடைய குறும்புத் தனங்களையெல்லாம் மறந்துவிட்டேன். இக்கருத்துடையதே மூன்றாவது அடி. குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தைக் கண்டால் உண்மைத் தாயுள்ளம் படைத்தவர்கள் கோபிக்கமாட்டார்கள்; என்பிள்ளை இத்தகைய விளையாட்டை எங்கே கற்றுக் கொண்டான்? எப்படிக் கற்றுக்கொண்டான்? என்று நினைத்து நினைத்து நெஞ்சம் மகிழுவார்கள்; பிள்ளைகளைத் தட்டிக்கொடுப்பார்கள்; தூக்கி எடுத்து முத்தம் கொடுத்து இன்புறுவார்கள். இந்த இயற்கையை இப்பாட்டின் மூன்றாமடி எடுத்துக் காட்டுகிறதன்றோ? நான்காவதடி அன்னையின் அன்பு முழுவதையும் அப்படியே வெளித் தள்ளிவிடுகின்றது. முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உணாயே இவ்வடியின் அழகையும் பொருளையும் பாருங்கள். பிள்ளைகள் பல்லைக் காட்டிச் சிரிக்குமாயின் தாயின் உள்ளத்திலே எவ்வளவு துக்கம் நிரம்பியிருந்தாலும் அவ்வளவும் வற்றிப்போகும்; அவள் உள்ளத்திலே சினம் பொங்கி வடிந்தாலும் அவ்வளவும் சுண்டிப்போகும். பெற்ற பிள்ளையின் புன் சிரிப்பும், வெடிச்சிரிப்பும் பெற்றவர்களை அப்படியே அடிமையாக்கி விடும். ஆதலால்தான் முத்தைப் போன்ற பற்களைக் காட்டி முறுவல் செய்யும்படி கேட்கின்றாள் அன்னை. மூக்கொழுகும் குழந்தைகளைக் கண்டால் மற்றவர்கள் அருவருப்படைவது வழக்கந்தான். அக்குழந்தையைத் தூக்கு வதற்கு மற்றவர்கள் மனம் விரும்பமாட்டார்கள். மூக்குச்சளி நம் மேல் ஒட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிச் சற்று எட்டித்தான் நிற்பார்கள். ஈன்ற தாய்க்கு மூக்கொழுகும் பிள்ளைகளிடம் சிறிதும் அருவருப்புத் தோன்றாது. குழந்தைகளின் மூக்குச் சளியைச் சிந்துவதிலே ஒரு குதூகலம்; அதைத் துடைத்துத் துப்புரவு செய்வதிலே ஒரு தனி மகிழ்ச்சி. அன்பின் மிகுதியால், குழந்தை களின் மூக்கைத் துடைக்காமலே அப்படியே வாரி எடுத்துக் கொண்டு மார்போடு அணைத்துக் கொள்ளுவார்கள்; பால் கொடுத்துப் பரவசமாவார்கள். குழந்தை தன் மூக்கையும் உறிஞ்சிக் கொண்டு, பாலையும் உறிஞ்சுவதைக் கண்டு அன்னை யின் உள்ளத்திலே தேனாறு பாயும். இந்த இயற்கையைத் தான் மூக்குறிஞ்சி முலை உணாயே என்ற தொடர் குறிக்கின்றது. மற்றொரு அரிய பாடலிலும் தாயன்பை வெளியிடுகிறார் ஆழ்வார். வெய்யிலிலே திரிந்துவரும் பிள்ளையைக் கண்டால் தாய் துணுக்குறுவாள்; துடித்துப் போவாள். வெய்யிலிலே வழி நடப்போர் குடையையும் செருப்பையும் துணையாகக் கொள்ளுவது வழக்கம். மேலே வெய்யில், மழை தாக்காம லிருப்பதற்குக் குடை; கீழே கல்லும் முள்ளும் உறுத்தாமல் இருப்பதற்கும், சூடு தாக்காமல் இருப்பதற்கும் செருப்பு. இவை இரண்டு மில்லாமல் வெய்யிலிலே சென்றால் வேதனைப் படாதவர்கள் யார்? குடையும் செருப்பும் இல்லாமல் வெய்யிலிலே அலைந்து திரிந்தால் பாதங்கள் சிவந்து வெதும்பிப் போகும். சூட்டால் கண்கள் கோவைப் பழம்போல் சிவந்துவிடும். இந்தக் கோலத்துடன் மைந்தனைக் கண்டால் பெற்றவள் மனம் பெரும் பாடு படாமல் இருக்குமா? கடிஆர் பொழில்அணி வேங்கடவா! கரும்பொர்ஏறே! நீஉகக்கும் குடையும், செருப்பும், குழலும், தருவிக்கக் கொள்ளாதே போனாய்! மாலே! கடியவெம் கான்இடைக் கன்றின் பின்போன சிறுகுட்டச் செங்கமல அடியும் வெதும்பி, உன்கண்கள் சிவந்தாய்! அசைந்திட்டாய்! நீ எம்பிரான். பெரியாழ்வாரின் இந்தப் பாடலும் தாயின் உள்ளன்பை வெளிப் படுத்தும் வகையிலே பாடியதாகும். கன்றுகுளை மேய்க்கச் சென்ற கண்ணன் ஒருநாள் குடை, செருப்பு, புல்லாங்குழல் இவற்றை எடுத்துக் கொள்ளாமல் போய்விட்டான். தாய் அவற்றைக் கொண்டுவந்து கொடுப்ப தற்குமுன் அவசரமாகப் புறப்படடுப் போய்விட்டான். பின்னர் மாலையில் அவன் திரும்பி வரும்போது அவன் கோலத்தைக் கண்டு இவ்வாறு கூறுகின்றாள். இந்தக் கருத்தை வைத்துப் பாடியதுதான் இப்பாடல். மலர்களின் மணம் கமழும் சோலைகள் நிறைந்த திருவேங்கடத்தானே! கருமை நிறம் உள்ள போர்க்காளையே? நீ விரும்புகின்ற குடையையும், செருப்பையும், புல்லாங் குழலையும், வரவழைத்துக் கொடுத்தேன். நீ அவற்றை எடுத்துக் கொள்ளாமல் போய்விட்டாய். நீ அவற்றை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டாய். திருமாலே! இவை இல்லாமல் கடுமையான சூடுள்ள காட்டிலே கன்றின் பின்னே சென்ற சிறிய குட்டை வடிவானவனே! செங்கமலம் போன்ற உன்னடியும் வெதும்பிற்று. உன் கண்களும் சிவந்தன! நீ தளர்ச்சி யடைந்துவிட்டாய்! எம்பிரனாகிய நீ இப்படி வருந்தினாய். தாயின் உள்ளன்பையும், தியாகத்தையும் இவ்வாறு தமிழர்கள் பாராட்டிப் பேசும் பாடல்கள் பல உள்ளன. குழந்தைக் குறும்பு தன் பிள்ளையைப் பற்றிக் குறை சொல்வதை எந்த அன்னையும் பொறுக்கமாட்டாள். உன் பிள்ளை மிகவும் நல்லவன்; கெட்டிக்காரன்; திறமைசாலி; எல்லோரிடமும் இனிமையுடன் பழகும் பண்புள்ளவன்; குறும்புத்தனமே செய்ய மாட்டான் என்று சொன்னால் போதும். அவனை ஈன்ற தாய் அகமகிழ்ச்சி அடைவாள். என் அருமைப் புதல்வன் இப்பெயர் எடுப்பது என் தவப்பயனே யாகும் என்று இன்பமடைவாள். உன் மகன் மகா கில்லாடி; மிகவும் குறும்புக்காரன்; அவன் உருப்படமாட்டான்; பெரியவனாக வளர்ந்தாலும் யோக்கியனாக வாழமாட்டான். உன் பெயரைச் சந்தி சிரிக்க வைக்கவே அவன் பிறந்திருக்கிறான். எப்படித்தான் இப்பிள்ளையைக் கட்டிக்காத்து வளர்க்கிறாயோ என்று கேட்டுவிட்டால் போதும். பெற்ற மனம் தவிக்கும். என் மகன் இப்படியா கெட்ட பெயர் வாங்க வேண்டும் என்று ஏங்கித் தவிப்பாள் அன்னை. சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் வைத்த பாசம் காரணமாக அவர்கள் செய்யும் குறும்புத் தனங்களைக் கண்டிக்கக்கூட மாட்டார்கள். தங்கள் பிள்ளைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக் குதூகலம் அடைவார்கள். பிள்ளைகளின் அடாத செயல்களை - அறிவற்ற செயல்களைச் சாமர்த்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள். நான் பெற்ற செல்வம் - என் கண்மணி இவ்வளவு கெட்டிக்காரத்தனத்தை எங்கே கற்றுக்கொண்டதோ என்று புகழ்வார்கள். இத்தகைய தாய்மார்கள் குழந்தை வளர்ப்பை அறியாத வர்கள். சிறுவயதிலிருந்தே குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டும். அவர்கள் செய்கைகளைக் கவனித்துத் திருத்தவேண்டும்; நல்ல சொற்களைப் பேசக் கற்றுத்தர வேண்டும்; அன்போடும் அடக்கத்தோடும் பழகக் கற்றுக் கொடுக்கவேண்டும். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்னும் பழமொழி பொய்யன்று; ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? ஆதலால் அறிவுடைய அன்னைமார்கள் தங்கள் பிள்ளைகளை இளம் பருவமுதலே இன்னுரை புகன்று, நன்னெறியிலே நடக்கும்படி பழக்குவது நலமாகும். இன்னும் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி யாராவது குறை சொல்லிவிட்டால் போதும். உடனே சேலையை இழுத்துக் கட்டிக்கொண்டு குறை சொன்னவர் களிடம் சண்டைக்குக் கிளம்பிவிடுவார்கள். என் பிள்ளை அப்படிச் செய்யாது; அது தங்கக் கம்பி யல்லவா? வேண்டு மென்றே குற்றம் சொல்லுகிறாய். என் பிள்ளையைக் கண்டால் உனக்குப் பொறாமை; வயிற்றெரிச்சல். ஆதலால் தான் இல்லாததையும் பொல்லாததையும் என் பிள்ளையின் மேல் ஏற்றிச் சொல்லு கின்றாய் என்று எரிந்துவிழும் தாய்மார்களும் உண்டு. இத்தகைய தாய்மார்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் சுத்த உதவாக்கரைகளாகத் தான் உலகத்தில் திரிவார்கள். தன் பிள்ளையின் குணத்தை ஐயமறத் தெரிந்து கொண்டி ருப்பது ஒரு நல்ல தாயின் கடமை. இந்தத் தாய், தன் பிள்ளையின் துடுக்குத்தனத்தைப் பற்றிப் பிறர் கூறினால் அதற்காகக் கோபங் கொள்ளமாட்டாள்; தன் பிள்ளையைத் தான் கண்டிப்பாள்; நயமான மொழிகளால் அவனைத் திருத்துவாள்; மீண்டும் அவன் அக்குற்றத்தைச் செய்யவிடாமல் தடுப்பாள். இதுவே அன்னையின் கடமையாகும். இந்த உண்மையைப் பெரியாழ்வார் திருமொழியில், இரண்டாம் பத்து, ஒன்பதாம் திருமொழிப் பாடல்களிலே காணலாம். அந்தத் திருமொழியில் உள்ள பத்துப் பாடல்களும் படிப்போர் உள்ளத்தைக் கவரும் பாடல்கள். தமிழரின் குழந்தை வளர்ப்பு முறையை எடுத்துக் காட்டும் இனிய செய்யுட்கள், அவற்றுள் இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம். ஆயமகள் ஒருத்தி; கறந்த பாலைப் பானையிலே ஊற்றினாள்; காய்ச்சுவதற்காக அடுப்பில் ஏற்றினாள். அவள் அன்னை மேலண்டை வீட்டுக்கு நெருப்பு வாங்கப் போயிருந் தாள். சென்றவள் கொஞ்ச நேரம் அங்கே ஊர் வம்பு பேசிக் கொண்டிருந்துவிட்டாள். அச்சமயத்தில் கண்ணன் அந்த வீட்டில் புகுந்தான்; பாலை ஊற்றிக் குடித்துவிட்டு வெளியில் வந்து நின்றான். இதைக் கண்ட வீட்டுக்காரி, யசோதாவிடம் - கண்ணனுடைய வளர்ப்புத் தாயிடம் இச்செய்தியைக் கூறினாள். இதை உணர்த்தும் பாடல் கீர்வருவது: பாலைக் கறந்து அடுப்புஏற வைத்துப் பல்வளையாள் என்மகள் இருப்ப; மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப்பொழுது அங்கே பேசிநின்றேன்; சாளக் கிராமம் உடையநம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் ஆலைக் கரும்பின் மொழிஅனைய அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்! இவ்வாறு தன் மகன் செய்த துடுக்குத்தனத்தைக் கேட்ட யசோதைக்கு உள்ளுக்குள்ளே வருத்தந்தான்; அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் தன் மகனைக் கண்டிக்கத் தொடங் கினாள். எவ்வளவு நயமான வார்த்தைகளால் கண்ணனைக் கண்டிக்கிறாள் - எவ்வளவு இனிமையாகப் புத்தி புகட்டுகிறாள் என்பதைப் பாருங்கள்; மகனே, வருவாய்! இங்கே வருக! நான் வரமாட்டேன் என்று சொல்லாதே! இங்கே வா! அசல் விட்டால் உன்மேல் ஏதேனும் குறை சொல்லி, ஏதேனும் பழிபேசுவதை நான் கேட்கப் பொறுக்கமாட்டேன். எப்பொழுதும் குதூகலமாக விளையாடும் என் குமாரனே! மலையைக் குடையாகப் பிடித்தவனே! குடக் கூத்து ஆடிய கூத்தனே! வேதங்களில் கூறப்படும் மெய்ப் பொருளே! என் அன்புக்குரிய வேங்கடேசா! அறிவு உள்ளவனே! இங்கே வா என் செல்வமே! என்று அருமையாக அழைத்தாள் யசோதை. இப்பொருளுடைய இனிய பாடல் கீழ் வருவது: போதர்கண்டாய்; இங்கே போதர்கண்டாய்; போதரேன் என்னாதே போதர்கண்டாய்! ஏதேனும் சொல்லி அசல்அகத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன்; கோது கலம் உடைக் குட்டனேயோ! குன்று எடுத்தாய்! குடம்ஆடு கூத்தா! வேதப் பொருளே!என் வேங்கடவா! வித்தகனே இங்கே போதராயே! இந்த இனிய பாடல் அன்புள்ள அன்னையின் உள்ளத்தை அப்படியே படம்பித்துக் காட்டுகின்றது. ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் என்ற வரிகளிலே அன்னையின் மனப்பண்பைக் காணலாம். பிள்ளை களைப் பெற்றெடுத்த எந்த அன்னையிடமும் இத்தகைய மனப்பான்மை உண்டு. தன் பிள்ளையின்மேல் அசல் வீட்டார் ஏதேனும் குற்றம் சொல்லவும், அப்பிள்ளையின்மேல் ஏதேனும் பழிசுமத்திப் பேசவும் எந்தத் தாய்தான் பொறுத்துக் கொண்டிருப்பாள்? கண்ணன் அயல் வீட்டிலே புகுந்து பாலையெடுத்துக் குடித்துவிட்டான் என்பது உண்மைதான்! அது குற்றமும் கூட. அதைக் கேட்டுங்கூட யசோதைக்குக் கண்ணன்மீது கோபம் வரவில்லை. அவளுடைய தாயுள்ளம் அந்தக் குற்றத்தைக் கேட்டவுடன் தாங்கமுடியாமல் தவித்தது. அந்தத் தவிப்புத் தான் இந்தச் சொற்களாக வெளிவந்தன. குற்றஞ் செய்த பிள்ளைகளைக் கடிந்து கூப்பிட்டால் அருகில் வருவதற்கு அஞ்சும். குழந்தைகளிடம் வெறுப்பும் கடுமையும் காட்டுவதனால் அவர்களைத் திருத்த முடியாது. குற்றம் புரிந்த குழந்தைகளையும் அன்போடு அருகில் அழைத்துக் கொள்ளவேண்டும். நயமான மொழிகளால் அவர்கள் செய்த குற்றங்களை எடுத்துக்காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் எளிதிலே அவர்களைத் திருத்தி விடலாம். ஆதலால் இரண்டு வரிகளிலே கண்ணனைப் புகழ்ந்து பேசி அழைக்கின்றாள் யசோதை. கோதுகலம்... போதராயே என்னும் பின்னிரண்டு அடிகளும் குழந்தைகளை அருமையாக அழைக்கும் முறையைக் காட்டியது. மீண்டும் மேலே காட்டிய பாடல்களைப் படித்துப் பாருங்கள். பல உண்மைகளும், நயமும் தமிழர் அருள் நெறியும் விளங்கும். கூட்டுறவால் குணம் வெள்ளை நிறம் தூய்மையானது, பரிசுத்தமானது. அதிலே எந்த நிறத்தை ஏற்றினாலும் அப்படியே பிடித்துக் கொள்ளும். வெள்ளைத் தாளிலே எந்த மையினாலும் எழுதலாம். எந்த மையினால் எழுதினாலும் எடுத்துக்காட்டும். கருப்புத் தாளிலே வெள்ளை மையால் மட்டும்தான் எழுதலாம். வேறு எந்த மையினால் எழுதினாலும் எடுத்துக் காட்டாது. வெள்ளைத் துணியை எந்தச் சாயத்திலும் நனைத்தெடுக் கலாம்: இன்ன சாயந்தான் ஏற்கும்; இன்ன சாயம் ஏற்காது என்பது வெள்ளைத் துணிக்கு இல்லை. இந்த உதாரணங்கள் தூய மனம் உள்ள மக்களுக்கும் பொருந்தும். அப்பழுக்கற்ற உள்ளத்திலே எந்தக் கொள்கை யையும் ஏற்றிவிடலாம். இளைஞர்களின் உள்ளந்தான் அப் பழுக்கற்ற உள்ளம்; தூயசிந்தை. ஆரம்பத்தில் அவர்கள் மனத்தில் என்னென்ன எண்ணங்கள் வேரூன்றுகின்றனவோ அவ்வெண்ணங்கள் அவர்களுடைய ஆயுள் முழுதும் தொடர்ந்து வளரும். ஆகையால் இளமைப் பருவத்திலே குழந்தைகளுக்கு நல்ல பயிற்சி அளிக்கவேண்டும்; நல்லொழுக்கம் வளரும் முறையிலே அவர்களை வளர்க்கவேண்டும்; அவர்கள் உள்ளத்திலே நல்ல சிந்தனைகள் - இரக்கமுள்ள எண்ணங்கள் - தோன்றும்படி போதனை செய்ய வேண்டும். அவர்களைச் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், ஆண்மை யுள்ளவர்களாகவும், அச்சம் அற்றவர்களாகவும், உழைப்புக்குப் பின்வாங்காதவர்களாகவும் விளங்கும் படி வளர்க்க வேண்டும். இதுவே அறிஞர்கள் கொள்கை. பெரும்பாலான மக்களுடைய எண்ணங்களும், செய்கை களும், அவர்களுடைய சுற்றுப்புறச் சார்பைப் பொறுத்தே உருவாகின்றன. இந்த உண்மையை என்றும் மறுக்க முடியாது. பிறப்பைப் பொறுத்து - தாய் தந்தையரைப் பொறுத்துக் குணங்கள் அமைவதாகக் கூறுவோர் உண்டு. ஆனால் இக்கூற்று வழக்கத்திற்கு - அனுபவத்திற்கு அத்துவராமல் இருப்பதைக் காணலாம். உலக நிலையை - மக்கள் நிலையை - உற்றுக் காண்போர் இவ்வுண்மையை அறிவார்கள். மக்களுடைய சூழ்நிலையைப் பொறுத்தே - அவர்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தைப் பொறுத்தே - அவர்களுடைய தன்மைகளும் செயல்களும் மாறுபடுகின்றன என்பதை முன்னோர்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர், இறைவன் பால் அன்பு செலுத்தியவர்கள் அனைவரும், நல்லார் இணக்கம் வேண்டும்; அடியார்களுடன் கூடிவாழும் குணம் வேண்டும்; அடியார்க்குத் தொண்டியற்றும் செயல்வேண்டும் என்றெல்லாம் வேண்டியிருக்கின்றனர்; பாடி இருக்கின்றனர். அன்பும் நல்லொழுக்கமும், பரந்த ஞானமும் பொருந்திய பெரியோர் களுடன் பழகினால் தங்களுக்கும் அக்குணங்கள் அமையும் என்பதற்காகவே இவ்வாறு வேண்டினர். எப்பொழுதும் நல்லவர்களைக் காண்பதுதான் நலம்; நல்லவர்களுடைய சொல்லைக் கேட்டு அதன்படி நடப்பது தான் நலம். நல்லவர்களுடைய குணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுதான் நலம்; எப்பொழுதும் அவர் களுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பு என்ற கருத்தமைந்த பாட்டைப் பள்ளிக்கூடத்திலே படித்திருக்கின்றோம். இதைப் போலவே, கெட்டவர்களைக் காண்பதினாலும் தீமை உண்டாகிறது; கெட்டவர்களின் சொல்லைக் கேட்ப தினாலும் தீமை யடைகிறோம். கெட்டவர்களின் குணங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசினால்கூட தீமையைத் தான் அடைவோம். தீயாரோடு சேர்ந்து வாழ்ந்தால் உறுதியாகத் தீமையைத்தான் பெறுவோம். இக்கருத்துள்ள பாட்டையும் பள்ளிக்கூடத்திலே படித்திருக்கிறோம். சூழ்நிலையால் - சுற்றுப்புறச் சேர்க்கையால் - மக்கள் குணம் அமைகின்றது என்ற உண்மையை உணர்ந்துதான் இத்தகைய பாடல்களைப் பாடி வைத்திருக்கின்றனர். இந்த உண்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற அருள்நெறி கண்ட தமிழன்பர்களும் விளக்கியிருக்கின்றனர். இவ்வுண்மையை விளக்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாட்டு ஒன்று உண்டு. அப்பாடல் திருமாலிருஞ்சோலையில் உள்ள திருமாலைப் பற்றிப் பாடியது. திருமாலிருஞ்சோலை என்பது அழகர் மலை. அப்பாடல் கீழ்வருமாறு: உனக்குப் பணிசெய் திருக்கும்தவம் உடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கைநின்சாயை அழிவு கண்டாய்! புனத்தினை கிள்ளிப் புதுஅவி காட்டிஉன் பொன்அடி வாழ்கஎன்று இனக்குறவர் புதியது உண்ணும் எழில்மால் இரும்சோலை எந்தாய்! இதுவே அவ்வழகிய பாடல். இப்பாடலிலே திருமாலிருஞ் சோலை மலையிலே வாழும் குறவர்களின் இயல்பு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. குன்றிலே வாழும் குறவர்கள் கொடுந்தொழில் புரிவதற்கு அஞ்சமாட்டார்கள். வேட்டையாடி வயிறு வளர்ப்பதே அவர்கள் வேலை. நாகரிகத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு. ஆயினும் திருமாலிருஞ்சோலையில் வாழும் குறவர்கள் திருமால்பால் அன்பு உள்ளவர்கள். திருமாலிருஞ்சோலை மலையிலே வாழும் தெய்வம் திருமால். திருமாலைப் பலர் நாள்தோறும் வந்து வந்து வணங்கிப் போகின்றனர். இதைக் காணும் குறவர்கள் தங்கள் குலதெய்வமாகிய முருகனை மறந்துவிட்டனர். திருமாலையே வணங்குகின்றனர். அவர்கள் பயிர் செய்த தினையின் கதிரைக் கிள்ளிச் சமைக்கும்போது - அதை அவிக்கும்போது அதைத் திருமாலுக்குப் படைத்த பின்பே உண்ணுகின்றனர். திருமால் வாழும் மலையில் வாழ்வதால்தான் அக்குறவர்கள்பால் இத்தகைய குணம் குடிகொண்டது. இக்கருத்தையே இப்பாடல் வலியுறுத்துகின்றது. அவரவர் வாழும் இடத்திற்குத் தகுந்தபடி - அவர்களுடன் பழகும் மக்களின் குணத்தையொட்டி - அவர்கள் அடிக்கடி பார்க்கும் செயல்களையொட்டிக் குணமும் செயலும் மாறுபடு கின்றன என்ற உண்மையை பெரியாழ்வாருடைய இந்த அரிய செய்யுளும் எடுத்துக் காட்டுகின்றது. மேற்காட்டிய பாசுரத்தின் பொருள் கீழ் வருவது: புனத்திலே விளைந்த தினைக்கதிர்களைக் கிள்ளி யெடுத்து அவற்றைப் புது ஆவியிலே காட்டி வதக்கி எடுத்து, உன் பொன் போன்ற அடிகள் வாழ்க என்று கூறி வணங்கி, அதன் பிறகே கூட்டமான குறவர்கள் அந்தப் புதிய தினையை உண்பார்கள். இத்தகைய அழகான - பெரிய திருமாலிருஞ் சோலையிலே இருக்கின்ற எந்தையே! உனக்குத் தொண்டு புரிந்து வாழும் தவத்தைப் பெற்ற நான், இனிமேற் சென்று வேறு ஒருவனை வணங்கி, அவன் கடைத்தலையிலே நிற்க மாட்டேன், அப்படி நிற்பேனாயின், என்னிடம் சேர்ந்துள்ள நினது அருள் அழிந்துபோவதற்கே இடமாகும். இதை நீ அறிவாய்! நானும் அறிவேன். ஆதலால் உன்னையன்றி இனி ஒருவரையும் நாடேன். இப்பொருள் பொருந்தியதே மேலே காட்டிய ஆழ்வார் பாசுரம். இப்பாடலிலே குறவர்களின் குணத்தையும், செயலையும் ஆழ்வார் குறித்திருப்பது உலகப் போக்கின் உண்மையை உரைப் பதாகும். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களைப் பொறுத்தே - நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ மாறுகின்றனர்!; இது ஆழ்வார் அறிந்த உண்மை. 2 ஆண்டாள் ஆண்டாளுக்கு, சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற பெயரும் உண்டு. இவரும் பெரியாழ்வாரும் ஒரு காலத்தவர்கள். பெரியாழ் வாரின் திருமகள்தான் ஆண்டாள். பெரியாழ்வாரின் வளர்ப்புப் பெண்தான் ஆண்டாள். இவருடைய பாடல்களும், பெரியாழ்வார் பாடல்களைப் போலவே பக்திச் சுவை சொட்டும் பாடல்கள். ஆண்டாள் அருளிச் செய்த பாடல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று இரண்டு தலைப்பிலே அமைந் திருக்கின்றன. திருப்பாவை, இன்றும் மார்கழி மாதம் காலைப் பொழுதிலே வைணவர்களால் பாராயணம் செய்யப்படுகின்றது. ஆண்டாள் பாடல்களிலே இயற்கை நிகழ்ச்சிகளைக் காணலாம். திருப்பாவையிலே காணப்படும் காலைப் பொழுது நிகழ்ச்சிகள் இயற்கையானவை. ஆண்டாள், திருமாலையே காதலனாகக் கொண்டவள். ஒரு காதலி, தன் கணவனைக் காணத் துடிக்கும் தன்மையை இவர் பாடல்களிலே காணலாம். பழந்தமிழ் முறையைத் தழுவிய அகப்பொருள் துறைப் பாடல்கள் ஆண்டாள் பாடல்களிலே அமைந்து கிடக்கின்றன. பெண்களின் மனப்பான்மை; காதல் கொண்ட மகளிரின் உள்ளம்; கற்புடை மகளிரின் இயல்பு; மங்கையரின் கடமை; ஒழுக்கம் இவைகளையெல்லாம் ஆண்டாள் பாடல்களிலே படிக்கலாம். நாச்சியார் திருமொழியிலே மாயவனை மணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவு என்று பத்துப் பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்களின் மூலம், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்திலே சைவர்களும், வைணவர்களும் எத்தகைய திருமணச் சடங்குகளைச் செய்து வந்தனர் என்பதைக் காணலாம். அக்காலத்தில் நடைபெற்ற திருமணச் சடங்கு முறையை இப்பாடல்களில் படிக்கலாம். தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் பலவற்றை ஆண்டாள் பாடல்களின் மூலம் அறியலாம். இனிமை, தெளிவு, எளிமை வாய்ந்தவை ஆண்டாளின் பாடல்கள். இறுதியில் அரங்கநாதரே ஆண்டாளை அழைத்தார்; தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார்; அவள் விரும்பிய படியே காதலியாக ஏற்றுக்கொண்டார் என்பது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் இனிய தமிழ்ப் பாடல்களிலே இவ் வுண்மை தவழ்கின்றது. இத்தகைய ஆண்டாள் அருந்தமிழ்ப் பாடல்கள் தமிழர்கள் பெற்ற வற்றாத இலக்கியச் செல்வமாகும். நல்லவர் குறிக்கோள் நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றம் இல்லை - இது நாம் இளமையில் படித்த பாடம். பலர் இந்தப் பாடத்தை மறந்து விடுகின்றனர். இளமையிலே நல்ல நீதிகளைப் போதிப்பதே முதுமையில் மறவாமல் இருப்பதற்காகத்தான். ஆனால் என்ன காரணத்தாலோ இதுபோன்ற சில உண்மைகளைப் பிற்காலத்தில் மறந்துவிடுகின்றனர். மக்கள் வாழ்க்கையிலே சில சிக்கல்கள் தொடர்ந்து வருவதற்கு முதன்மைக் காரணம் ஒன்றுண்டு. மறந்து விட வேண்டியவற்றை மறப்பதில்லை; நினைவில் வைத்துக் கொண்டு தொல்லைப்படுவது. நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டி யவற்றை மறந்து விடுவது; நினைவில் வைத்துக்கொண்டிருப்ப தில்லை. இந்தக் காரணத்தால் மக்கள் அடிக்கடி வேதனைக்கு ஆளாகி வீணாக வருந்துகின்றனர். இந்த உண்மை ஒரு தனி மனிதனுக்கும், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். நாடு நன்றாக வாழவேண்டும்; நாட்டிலே செல்வம் கொழித்திருக்க வேண்டும். மக்கள் மகிழ்ச்சியுடன் உலவித் திரியவேண்டும்; பஞ்சமோ, பிணியோ நாட்டில் பரவியிருக்கக் கூடாது. இந்த நிலையிலேயிருக்கும் நாட்டில்தான் அமைதியும் மகிழ்ச்சியும் குலவியிருக்கும். ஒவ்வொரு தனி மனிதரும் உள்ளத்துயரம் ஒழிந்து உவயுடன் வாழலாம். இந்த உண்மை யைச் சிறு பருவத்திலேயே மக்கள் மனத்திலே உறுதி யாகப் பதிய வைக்கத்தான் நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை என்ற முதுமொழியைக் கூறி வைத்தனர். நாடு நலிவடையும்போது எந்தத் தனி மனிதனும் இன்பத்துடன் வாழ்ந்துவிட முடியாது. அவன் எவ்வளவு தான் வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவற்றின் முழுப்பலனையும் அவன் அடைய முடியாது. அமைதியற்ற வாழ்க்கையிலே அவன் அல்லற்படத்தான் செய்வான். இன்பத்தை இழந்து தவிக்கும் கூட்டத்தார் அவனுக்கு இன்னல்களை உண்டாக்க எண்ணாமல் இருக்கமாட்டார்கள். ஆகையால்தான் நாடு நன்றாக வாழவேண்டும், அதற்காக உழைக்க வேண்டும், இது மக்கள் கடமை என்று தேசப்பற்றை இளமையிலேயே ஊட்டி வந்தனர். இத்தகைய நாட்டன்பு பண்டைத் தமிழகத்தில் பரந்து கிடந்தது; மக்களிடம் அன்பு பாராட்டும் அனைவரிடமும் குடிகொண்டிருந்தது. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் - இந்த நாட்டன்பைப் பற்றிப் பாடி வந்தனர். வள்ளல்கள் - கொடையாளிகள் - என்று புகழ்பட வாழ்ந்தவர்கள் எல்லாம் நாடு நன்றாகச் செழித்து வாழவேண்டும் என்று கருத்துடன் தான் மக்களிடம் கருணை காட்டிவந்தனர்; வீரர்களும் இக்கருத்துடன் தான் அன்னியர்களால் நாட்டுச் செல்வம் நாசம் ஆகாதபடி பாதுகாத்து வந்தனர். இவர்களைத் தவிர இறைவன்பால் அன்பு செலுத்திய பக்தர்களும் நாடு நன்றாக வாழ வேண்டும் என்றே விரும்பினர். இதற்காகவே அல்லும் பகலும் ஆண்டவனை வேண்டி வந்தனர். இவர்களுடைய எண்ணத்தையும் செயலையும் அவர்கள் பாடிய பாடல்களிலே காணலாம். ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற அருந்தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் நாடு நன்றாக வளம் பெற்று வாழ வேண்டும்; உலகம் அமைதியுடன் செழித்து உயர்ந்து வாழ வேண்டும் என்றே ஆண்டவனை எண்ணிப் போற்றி உருக்கமுடன் பாடினார்கள். இப்படிப் பாடிய பாடல்கள் பல உள்ளன. இதற்கு உதாரணமாக ஆண்டாள் திருப்பாசுரம் ஒன்றைக் காண்போம். ஓங்கி உளகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால், தீங்கின்றி நாடெல்லாம், திங்கள்மும் மாரிபெய்து, ஓங்கு பெரும்செந்நெல் ஊடு கயல் உகள, பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்பெரும் பசுக்கள், நீங்காத பெரும்செல்வம் நிறைந்தேல்ஓர் எம்பாவாய் இது ஆண்டாள் அருளிய திருப்பாவையின் மூன்றாவது செய்யுள். இச்செய்யுளில் அமைந்துள்ள பொருளைச் சிந்தித்துப் பார்த்தால், உண்மையான பக்தர்களின் உள்ளக் கருத்தைக் காணமுடியும். மார்கழி மாதத்தைத் தமிழ்நாட்டிலே பீடை மாதம் என்று கூறுவர். ஆதலால் அம்மாதத்தில் விடியற்காலத்திலே சைவர் களும் வைணவர்களும் இறைவனை வணங்குவார்கள்; பஜனை பண்ணிக்கொண்டு வீதிவலம் வருவார்கள். பெண்களும் காலை யிலேயே குளித்து முழுகிவிடுவார்கள்; வீட்டையும் விடியற் காலத்திலேயே கூட்டிப் பெருக்கிக் கோலமிட்டுச் சுத்தமாக வைத்திருப்பார்கள். இரவில்கூட தாசரி என்னும் வைணவப் பாடகர்களும், ஆண்டி என்னம் சைவப் பாடகர்களும், பாடல்கள் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார்கள். மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொன்னாலும் அம்மாதம்தான் மங்களகரமாகக் காட்சியளிக்கும். வைணவர்கள் போற்றும் வைகுந்த ஏகாதசி; சைவர்கள் போற்றும் திருவாதிரை நாள் மார்கழி மாதத்தில் தான். அந்த மாதத்திலே தமிழ்நாட்டில் எங்கும் சங்கு முழங்கும்; சேமக்கல ஒலி காதைத் தொளைக்கும். இம்மாதத்தின் இறுதியிலே பொங்கற் புதுநாள். உழவர்கள் போற்றிக் கொண்டாடும் உன்னதமான நாள் அது. மார்கழி மாதத்திலே வைணவ பக்தர்கள் விடியற்காலத் திலே குளித்து முழுகிவிட்டுத் திருப்பாவை ஓதுவார்கள். திருப்பா வையில் உள்ள முப்பது பாடல்களையும் ஓதிய பிறகுதான் வேறு வேலை பார்ப்பார்கள். இதைப் போலவே சைவ பக்தர்கள் திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையை ஓதுவார்கள். மேலே காட்டிய திருப்பாவையின் பொருளைப் பார்த்தால் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த பக்தர்களின் உள்ளக் கருத்தை உணர முடியும். ஆதலால் அதன் பொருளைக் காண்போம். உயர்ந்து வளர்ந்து இந்த உலகை ஓரடியால் அளந்த உத்தமன் திருமால். அவனுடைய பெயரைச் சொல்லிப் பக்தியுடன் பாடி நாங்கள் நமது விளையாட்டுப் பதுமைக்கு அலங்கரிப்போம். நாமும் குதூகலத்துடன் நீராடுவோம். இப்படிச் செய்வோமானால் இதனால் உண்டாகும் நன்மையைக் கேளுங்கள். நாடு முழுதும் எந்தத் தீங்குமில்லாமல் வாழும். மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் தண்ணீர்த் தட்டே ஏற்படாது. செந்நெற் பயிர்கள் செழித்து வளரும். அந்தப் பயிர் வளர்ந்திருக்கும் வயல்களிலே - அந்நெற் பயிருக்கு இடையிலே கயல் மீன்கள் துள்ளித்திரியும். அந்த வயல்களிலே மலர்ந் திருக்கும் அழகான குவளை மலர்களிலே புள்ளிகளையுடைய வண்டுகள் தேனை அருந்திவிட்டு ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருக்கும். மக்களும் எவ்விதக் கவலையும் இல்லாமல் வீட்டிலிருந்துகொண்டு தங்கள் பசுக்களைக் கறப்பார்கள். அவை நன்றாகக் கொழுத்திருப்பதால் அவற்றின் மடியிலே பால் மிகுதியாக இருக்கும். அதனால், அவற்றின் முலைக்காம்புகளில் நன்றாகப் பால் சுரந்திருக்கும். அம்முலைக் காம்புகளைப் பற்றி இழுத்துக் குடம் நிறையப் பால் கறப்பார்கள்.அப்பசுக்கள் பால் கொடுக்கும் வள்ளல்களாக விளங்கும். இவ்வாறு என்றும் குறையாத செல்வம் நாட்டிலே நிறைந்திரக்கும். ஆதலால் எம் தோழியே! பாவை போன்ற எம் தோழியே! நாம் உலகளந்த உத்தமன் பேர்பாடி நீராடுவோம்! இதுவே மேலே காட்டிய ஆண்டாள் திருப்பாவையில் அமைந்திருக்கும் பொருள். இதிலே சிறு பெண்கள் - பதுமையை வைத்துக்கொண்டு அலங்கரித்து விளையாடுகின்ற விளை யாட்டுப் பெண்கள் - எந்த நோக்கத்துடன் இறைவனைப் போற்றி நீராடுகின்றனர் என்பதைக் காணலாம். நாடெங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை என்ற தத்து வத்தையே இச்செய்யுள் வலியுறுத்துகின்றது: இந்த இனிமைப் பாடலை நாம் மறக்காமல் இருந்தால் நமது வாழ்வு இன்னும் எவ்வளவோ உயர்ந்திருக்குமல்லவா? பெண்கள்பால் அன்பு பெண்ணைப் பழித்துரைப்போர் பலர் உண்டு. பெண் களால்தான் மக்கள் ஒழுக்கம் கெடுகின்றது; அவர்களால் தான் ஆண்கள் அவதிப்படுகின்றனர். அவர்கள் நோக்கமும், நடத்தையுமே ஆடவர்களின் உள்ளத்தை அலைகடலாக்கி விடுகின்றன. பெண்ணுருவம் என்பது ஆண்களின் உள்ளத்தை மயக்கும் வஞ்சனைப் பிண்டம்; அவர்களே ஆலகால நஞ்சம்; உள்ளத்தைச் சிதறடிக்கும் புயல் காற்று என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர். சிறந்த அறிஞர்கள் - ஞானிகள் - துறவிகள் - பக்தி நிறைந்தவர்கள் - என்பவர்களிலேகூடச் சிலர் இவ்வாறு எழுதி வைத்திருக்கின்றனர். இவை உண்மையென்று ஒத்துக் கொள்ளக் கூடியவையல்ல. தங்கள் சிந்தையைச் சிதறவிடாமல் காத்துக் கொள்ளும் திறமற்றவர்களின் புலம்பல்தான் இவை. காம உணர்ச்சியை அடக்க முடியாத கவிஞர்களின் கையறு நிலைச் செய்யுட்கள் தாம் இவை. உணர்ச்சி யென்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது; ஆண்களைப் போன்ற அடக்க முடியாத உணர்ச்சி யுள்ளவர்கள் பெண்களிலும் உண்டு. ஆனால் அவர்கள் ஆண் களைப்போலப் பிலாக்கணம் பாடமாட்டார்கள். உள்ளத்திலே அடக்கி வைத்திருப்பார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களுக்கிருப்பது போன்ற சர்வாதிகாரம் பெண்களுக்கு இருந்திருந்தால், அவர் களும் தங்கள் உணர்ச்சியை வெளியிட்டிருப்பார்கள். பெண் களைப் பற்றி ஆண்கள் பாடியிருப்பது போலவே பெண்களும் ஆண்களைப் பற்றியும் பாடியிருப்பார்கள். இத்தகைய பாடல்கள் எழும்பாமலிருப்பதற்குக் காரணம் பெண்களின் அகத்திலே நிலைத்து நிற்கும் அழுத்தந்தான். இதை நிறையென்று கூடச் சொல்லிவிடலாம். பெண்ணாசை யைக் கட்டுப்படுத்த முடியாத சிலர் பெண்களை இழித்துப் பேசினாலும், பண்டைத் தமிழர் பெண்களிடம் மரியாதையும் - மதிப்பும் காட்டியிருக்கின்றனர். அவர்களுடைய அன்பையும் உழைப்பையும், தியாகத்தையும் போற்றுகின்றனர். பெண்கள் சமுதாயத்தை நாட்டுச் சமுதாயமாக இல்லாமல், வீட்டுச் சமுதாயமாக மாற்றியபின், அவர்களிடம் அன்பாகவே நடந்து கொண்டிருக்கின்றனர். பெண்களிடம் இரக்கம் காட்டவேண்டும்; அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதனால் வாழ்க்கையிலே இன்பம் பெறமுடியாது; பெண்ணை இழித்துப் பேசுகிறவன் இங்கிதம் அறியாதவன்; பெண்ணை அடித்துத் துன்புறுத்துகிறவன் அறிவற்ற கோழை; பெண்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்ளுகிறவன் மனிதத்தன்மை யற்றவன் இதுவே பெரும் பாலான அறிஞர் களின் கொள்கை. பெண்களிடம் தமிழர்கள் கொண்டிருக்கும் மதிப்பைப் பழந்தமிழ் நூல்களிலே காணலாம். தமிழர்கள் தாம் வணங்கும் தெய்வங்களையெல்லாம் ஆணும் பெண்ணுமாகவே வைத்து வணங்கி வந்தனர்: வணங்கி வருகின்றனர். ஆண்கள் இல்லா விட்டாலும் உலகம் இல்லை. பெண்கள் இல்லாவிட்டாலும் உலகம் இல்லை. பெண்கள் இல்லாவிட்டாலும் உலகம் இல்லை. இரண்டும் சமநிலையில் இருந்தால்தான் உலகம்உ ண்டு; உலக வாழ்வு உண்டு; உலக வாழ்விலே இன்பம் வளரும். இந்த உண்யைத் தமிழர்கள் எந்நாளும் மறந்தவர்கள் அல்லர். இவ்வுலகத்தில் உள்ள சிறந்த மதங்கள் எல்லாம் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றன; சிறந்த அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இவ்வுண்மையைப் பலரும் பின்பற்றி வருவதனால் தான் இவ்வுலகம் வாழ்ந்து வருகின்றது; வளர்ந்து வருகின்றது. பெண்ணுக்குத் தீங்கிழைப்பவனை யாரும் மதிப்பதில்லை. பெண் குற்றவாளியாயிருந்தாலும்கூட அவளைக் கடிந்து கொள்வதில்லை. அவளுக்குத் தீங்கிழைத்த ஆணையே வெறுக் கின்றனர். இது இன்று எல்லா நாடுகளிலும் உள்ள இயற்கை உண்மை. பெண்ணிடம் இரக்கம் காட்டுவது தான் ஆண்கள் கடமையென்று நம்பிய பண்புதான் இன்றளவும் மாறாமல் இருந்து வருகின்றது. இந்தப் பண்பிலே தமிழர்கள் தலை சிறந்தவர்கள், இதற்கு உதாரணமாக ஆண்டாள் செய்யுள் ஒன்றைக் காண்போம்; மதயானை போல்எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்! பாம்புஅணையான் வார்த்தை என்னே! கதியென்றும் தான்ஆவான்; கருதாதுஓர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும் சொல் வையத்தார் மதியாரே. இது ஆண்டாள் என்னும் நாச்சியார் திருமொழியிலே ஒரு செய்யுள்; உள்ளத்தைக் கவரும் உருக்கமான இனிய செய்யுள். நாச்சியார், திருமாலையே தம் காதலனாகக் கொண்டவர்; திருவேங்கடத்தில் உள்ள தம் காதலனாகிய திருமாலைக் குறித்துப் பாடுகின்றார்; தம் காதலனைப் பிரிந்து தனித்திருக்கும் நாச்சியார் வடக்கிலிருந்து வரும் மேகங்களைப் பார்த்து இவ்வாறு பாடுகின்றார். தம் காதலனை நினைந்து வருந்தியிருக்கிறார் நாச்சியார். வானத்தை அண்ணாந்து பார்த்தார். வடக்கிலிருந்து மேகங்கள் விரைந்து வந்துகொண்டிருந்தன. தமிழ்நாட்டின் வடவெல்லை யில்தான் திருவேங்கடம் இருக்கின்றது. வந்த மேகங்களைத் திருவேங்கடத்திலிருந்து வருவதாகவே உறுதியாக நினைத்துக் கொண்டார். உடனே அவற்றை நோக்கிக் கேட்கின்றார்: மதங் கொண்ட யானைகளைப்போல வானத்திலே தோன்றி முழுங்கிக்கொண்டு வரும் பெரிய மேகங்களே! வேங்கடத்தையே இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றவர் களே! பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட திருமால் சொல்லிய வார்த்தை ஏதேனும் உண்டா? அவன் ஒருவனே எனக்குப் புகலிடமாக இருக்கின்றான்; அவனைத் தவிர எனக்கு வேறொரு கதியும் - புகலிடமும் இல்லை. இதைக் கருதியாவது அவன் என்னிடம் சொல்லும்படி ஒரு வார்த்தையும் சொல்லவில்லையா? நான் இப்பொழுது வாடுகின்றேன்; வதை படுகின்றேன்; அவன் அருள் பெறாமல் வாடி வதங்குகின்றேன். எனது நிலையை உலகத்தார் கண்டால் அவனைப் பழிக்க மாட்டார்களா? திருவேங்கடத்தான் இவ்வாறு இவளை வதைக்கின்றான் என்று தான் பேசுவார்கள். இச்சொல் பிறந்தால் அது திருவேங்கடத் தானுக்குத்தான் பழியாகும். ஒரு பெண்ணை வதை செய்தான் என்ற பழிப்புக்கு இடமாகும். இப்பழிப்புக்கு இடமானால் அவனை வையத்தார் மதிக்க மாட்டார்கள் என்று கூறிப் புலம்புகின்றாள் நாச்சியார். இச்செய்யுளிலே ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் என்ற தொடர்தான் குறிப்பிடத்தக்கது; தமிழர்களின் அருள் நெறியை உணர்த்துவது. திருவேங்கடத் தான், என்னிடம் சொல்லும் படி உங்களிடம் ஒன்றும் உரையாதிருந்தனாயின், அது அவனுக்குகே பழியுண்டாக்கும். தன்னையே நம்பியிருக்கும் ஒரு பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் பிறந்துவிடும். இதைவிட வேறு பழிச்சொல் என்ன வேண்டும் என்று கூறியிருக்கின்றார். இதன் மூலம் தமிழர்கள் பெண்கள்பால் கொண்டிருந்த அருள் அறத்தைக் கண்டறியலாம். பண்டைக் காலத்தை விட, பக்தி மார்க்கம் பரவிய காலத்திலே, பெண்கள் உரிமை மதிக்கப் பட்டது; அவர்கள் போற்றப்பட்டனர் என்ற உண்மையை உணரலாம். இச்செய்யுளின் சிறந்த பொருள், சொல்லமைப்பு, உவமை நயம் முதலியன நம் சிந்தையைக் கொள்ளை கொள்ளு கின்றன. படிக்கப் படிக்கச் சுவை தரும் பழந்தமிழ்த் தேனுக்கு இச்செய்யுள் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அருளும் அன்பும் அன்புக்கு எடுத்துக்காட்டாகக் காதலன் - காதலியிடையே நிகழும் அன்பைத்தான் கூறுவார்கள். ஏனென்றால் எல்லா வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் இந்த அன்பு தான் அடிப்படை. ஆண் பெண் இருவர் கருத்தும் ஒன்றுபட்டு இன்ப வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பிறகுதான் தனித் தனிக் குடும்ப வாழ்க்கை பிறந்தது. அதன் பிறகுதான் ஒவ்வொரு குடும்பத்தினரும் வீடு வாசல்கள் தேடிக் கொண்டனர்; சொத்துச் சுதந்தரங்கள் அமைத்துக் கொண்டனர்; சமுதாயப் பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்; அரசியலை அமைத்துக்கொண்டனர். ஆகவே நாகரிகம் பிறப்பதற்கே அடிப்படையாக நின்றது, ஆண் பெண்கள்பால் பிறந்த ஒன்றுபட்ட அன்புதான் என்பதில் ஐயமில்லை. தமிழகத்திலே பக்தி மார்க்கம் தலைதூக்கிய காலத்தில் கூட, ஆண் பெண் அன்பை அவர்கள் மறந்து விடவில்லை. தாங்கள் வணங்கும் கடவுளை நாயகனாகவும், தங்களை நாயகியாகவும் வைத்துப் பாடினார்கள். நாயகன் நாயகி பாவத்தில் பாடியிருக்கும் பக்திப் பாடல்கள் இன்றும் உள்ளத்தை உருக்குகின்றன. அன்பர்களின் உண்மை யான உள்ளன்பை எடுத்துக்காட்டுகின்றன. ஆழ்வார்கள், நாயன்மார்கள் அனைவரும் கணவன் மனைவி முறையிலே கடவுளிடம் அன்பு காட்டும் இந்த முறையைக் கைவிட்டு விடவில்லை. கடவுளிடம் அன்பு செலுத்திய பெண்களிலே பலர் கடவுளையே காதலனாகக் கொண்டு பாடியிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக நாச்சியார் என்னும் ஆண்டாளின் அமுத மொழிகளை எடுத்துக்காட்டலாம். நாச்சியார் திருமாலையே கணவனாக - காதலனாகக் கொண்டு கனிந்து பாடிய பாடல்கள், படிப்பவர் யாராயினும் அவர்களின் உள்ளத்தைக் கனியச் செய்தே தீரும். தம் குறையைக் குயிலிடம் கூறுவதாக அமைந்துள்ள நாச்சியார் திருமொழிகள் சிறந்தவை. குயிலைப் பார்த்துப் பாடுவதாக அமைந்தவை அப்பாடல்கள். குயிலே நீ கூவுக; என் உள்ளத்தை விட்டு அகலாத திருமாலை வரக் கூவுக; என் முன்னே வந்த காட்சி தரும்படி கூவுக என்று வேண்டுகின்றார் நாச்சியார். அவர் பாடியுள்ள ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சித்திரம் தீட்டலாம். அவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் அமைந்திரக்கும் தீந்தமிழ்ப் பாடல்கள் அவை. அவற்றுள் ஒரு பாடல் ஓவியத்தைக் கீழே காணுங்கள்; என் காதலன், முழங்குகின்ற வெண்மையான சங்கத்தை இடது கையிலே கொண்டவன். அவன் யாதொரு குற்றமும் இல்லாதவன். அவன் தன் உருவை எனக்கு நேரடியாகக் காட்டவில்லை. மறைத்துக் கொண்டான். எப்படியோ என் உள்ளத்திலே புகுந்து விட்டான். அவன் எப்படி வந்து புகுந்தான் என்பதையான் அறியேன். என் உள்ளத்தே புகுந்தவன் சும்மா இருக்கின்றானா? இல்லை. என்னைத் துன்புறுத்துகின்றான். துன்புறுத்துவதோடு இரக்கமின்றி விட்டுவிடவும் இல்லை. ஒவ்வொரு நாளும் எனக்குப் புதிய உயிரைத் தந்து என்னை இன்பத்திலும் துன்பத்திலும் கூத்தாடச் செய்கின்றான். ஏ அழகிய குயிலே, தேன் சிந்துகின்ற செண்பக மலரைக் கோதித் தேனையுண்டு களிக்கின்ற குயிலே, அக்களிப்பின் மிகுதியினால் உன்னை மறந்து இசைபாடி இன்புறும் குயிலே! மெதுவாக இருந்து குதலை மொழிகளைக் கூறியும், கூறாமலும் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். என் உள்ளத்தே என் கண் காணாமல் புகுந்துள்ள திருவேங்கடத்தானை என் கண் எதிரே வந்து காட்சியளிக்கும்படி கூவுக. இதுதான் நான் உன்னை வேண்டும் வேண்டுகோள். வெள்ளை விளிசங்கு இடம்கையில் கொண்ட விமலன் எனக்குஉருக் காட்டான் உள்ளம் புகுந்துஎனை நைவித்து, நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்; கள்அவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்துஇசை பாடும் குயிலே! மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது,என் வேங்கட வன்வரக் கூவாய்! இச்செய்யுளிலே அன்புள்ளவர் தம் அன்புக்குரிய வரை என்றும் மறக்கமாட்டார்கள்; உள்ளத்திலேயே எப்பொழுதும் எண்ணிக்கொண்டே இருப்பார்கள் என்ற உண்மை காணப் படுகின்றது. இதுபோலவே மற்றொரு பாட்டில் ஆண்டாள் தன் அன்பின் மிகுதியை வெளி யிடுவதையும் காணலாம். அப்பாட லின் பொருளும் பாடலும் கிழ்வருவதாகும்: என் காதலனை எண்ணி எண்ணி எனது எலும்பு முழுவதும் உருகிவிட்டது; வேல் போன்ற என்னுடைய கண்கள் இமையோடு இமை பொருந்தவில்லை; உறங்கவேயில்லை. இவ்வாறு பல நாட்களாகத் துன்பக் கடலிலே கிடந்து தவிக்கின்றேன். அக்கடலிலிருந்து கரையேற வேண்டுமானால் வைகுந்த வாசன் என்னும் தோணியைப் பெற்றால்தான் முடியும். அந்தத் தோணியைப் பெற முடியாமல் வருந்திச் சோர்ந்து கிடக்கின்றேன். குயிலே உனக்கு நான் விளக்கமாக என் துன்பத்தை விரித்துக் கூறவேண்டியதில்லை. அன்புடையாரை - காதலரைப் பிரிந்துறைவதனால் வரும் துன்பம் இத்தகையது என்பது உனக்கே தெரியும். நீ பல தடவை அத்தகைய பிரிவுத் துன்பத்தை அனுபவித்திருப்பாய். ஆதலால் தான் என் துயரத்தை நான் விரித்துரைக்க விரும்பவில்லை. நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். எனது துன்பத்தை - காதலனைப் பிரிந் திருக்கும் எனது துன்பத்தை - நீக்குவதற்குநீ உதவி புரியவேண்டும். பொன்போன்ற நிறத்தையுடைய கருடனைக் கொடியிலே கொண்ட அந்தப் புண்ணியவானைக் காணாமல் வாடி வருந்துகின்றேன். அவனை என்னிடம் வருமாறு உன் இனிய குரலால் கூவுக. இதுதான் நான் உன்னிடம் வேண்டிக்கொள்ளும் விண்ணப்பம். இவ்வாறு உள்ளங் கனிந்து பாடுகின்றார் நாச்சியார். இப்பாடலைப் படியுங்கள். என்புஉருகி இனவேல் நெடும்கண்கள் இமை பொருந் தா;பல நாளும் துன்பக் கடல்புக்கு, வைகுந்தன் என்பதுஓர் தோணி பெறாதுஉழல் கின்றேன்; அன்புடை யாரைப் பிரிவுறு நோய் அதுநீயும் அறிதி குயிலே! பொன்புரைமேனி கருடக் கொடிஉடைப் புண்ணிய னைவரக் கூவாய்! இச்செய்யுளில் உள்ள அன்புடையாரைப் பிரிவுறு நோய் அது நீயும் அறிதி குயிலே என்ற தொடர் ஆழ்ந்த பொருள் அமைந்துள்ளது. துன்பத்தின் கொடுமையை அறிந்தவர்கள் தான் துன்புறுவோர்க்கு உதவி செய்வார்கள்; துன்பத்தை அறியாமல் இன்பமாகவே வாழ்க்கை நடத்துவோர்க்கு மற்றவர்கள் துன்பத்தை உணர முடியாது. கீழ்நிலையிலிருந்து துன்பம் இன்னதென்று கண்டறிந்தவர்களே மேல் நிலையிலிருந்தாலும் துன்புறுவோரிடம் கருணை காட்ட மறக்க மாட்டார்கள். துன்புற்றவர்களே துன்பத்தின் கொடுமையை நன்றாக அறிவார்கள். ஆதலால் துன்புறுவோர்க்குத் துணை செய்யாமல் பதுங்கமாட்டார்கள். துன்பத்தின் கொடுமையை அறிந்தவர்களிடம் முறையிட்டுக் கொண்டால் துன்பத்திற்குப் பரிகாரம் கிடைக்கும். துன்பத்தின் தன்மையை உணராதவர்களிடம் முறையிட்டுக் கொள்ளுவ தனால் ஒரு பயனும் இல்லை. இந்த உண்மையை பிரிவுறு நோய் அது நீயும் அறிகுயிலே என்ற அடியிலே அமைத்துக் கூறிவிட்டார் நாச்சியார். காமனைப் பணிந்த கன்னியர் பண்டைத் தமிழ்ப் பெண்களிடம் பல சிறந்த பழக்கங்கள் உண்டு. அப்பழக்கங்களிலே பல, இப்பொழுது மறைந்து வருகின்றன. பழைய பழக்க வழக்கங்கள் மறைவதும், புதிய பழக்க வழக்கங்கள் தோன்றுவதும் இயற்கை. வளர்ந்து வரும் மனித சமுதாயத்திலே இத்தகைய மாற்றங்கள் உண்டாவது தடுக்க முடியாதது. இந்த இயற்கை யைத் தடுத்தால் அது தடைப்படாது. இதைத் தடுப்பதற்கான கருவிகள் - முட்டுக்கட்டைகள் ஒன்றும் இல்லை. பழைய பழக்க வழக்கங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளுவது, அக்கால மக்களின் நாகரிகத்தை அறிவதற் காகத்தான்; அவர்கள் நாகரிகத்தோடு இணைந்து நடந்த பண்பாட்டைத் தெரிந்து கொள்ளுவதற்காகத்தான். பழந்தமிழ்ப் பெண்கள், மணமானபின், கணவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் வணங்குவதில்லை. கடிமணம் புரிந்துகொண்ட பெண்களுக்குக் கணவனே கண்ட தெய்வ மாவான். அவன் எண்ணப்படி நடப்பதே கற்புள்ள மங்கையர் கடமை. அவன் தவறு செய்வானாயின் அதைப் பொறுமை யோடு திருத்தவதே அறிவுள்ள மனைவியின் கடமை. மனைவியின் இக்கடமையைப் பற்றிப் பண்டைய நீதி நூல்கள் எல்லாம் வலியுறுத்துகின்றன. மனைவியின் கடமை யென்று பண்டைக்க காலத்தில் வலியுறுத்தும் பல காரியங்களை இக்காலத்தில் எல்லாப் பெண்களும் பின்பற்ற முடியாது. வேறு வெளி வேலைகள் இல்லாமல், குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்த்துக் கொண்டு வீட்டிலேயே வாழும் மனைவிமார்கள் தாம் பின்பற்ற முடியும். கணவனைப்போலவே கல்வி கற்ற மனைவி, அவனைப் போலவே அரசாங்கத்திலோ, வேறிடத்திலோ அலுவல் பார்க்கின்றாள்; அல்லது காதலனோடு இணைந்து பொது ஊழியத்திலே இறங்கி ஓயாமல் ஒழியாமல் உழைக்கின்றாள். இத்தகைய ஒரு மனைவி, பண்டைக் காலப் பெண்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடக்க அவளுடைய சூழ்நிலை இடந்த ராது. இதனால் இக்காலச் சூழ்நிலைக் கேற்ப அவள் தனது நிலையை மாற்றியமைத்துக் கொள்வதிலே தவறில்லை. பண்டைக்காலப் பெண்கள் நிலைமை இக்கால நிலைமைக்கு முற்றிலும் மாறுபட்டது. அவர்கள், அரசியல் அலுவல்களிலோ வேறு வெளி வேலைகளிலோ தலையிடுவ தில்லை. அவற்றை யெல்லாம் ஆண்களே செய்து வந்தனர். ஆகையால் பெண்கள் பெரும்பாலும் வீட்டுக் காரியங்களிலே கருத்தைச் செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர். வெளியிலே அலைந்து திரிந்து வீட்டுக்கு வரும் கணவன்மார் களின் உள்ளம் மகிழ அவர் களுக்கு உதவி செய்வதே கடமை என்று கொண்டனர். கணவனுடைய கருத்துக் கிணங்க நடந்துகொள்ளும் மனைவியுள்ள குடும்பத்தில்தான் குதூகலம் நிரம்பி வளரும். மனைவியின் புன்சிரிப்பையும் இன்சொல்லையும் பணிவிடை யையும் பெற்ற கணவனே பொதுக் காரியங்களில் உள்ளக் கவலையின்றி உழைப்பான்; ஊக்கத்துடன் காரியங்களைச் செய்வான். இதற்காகவே தான் கற்புள்ள மங்கைக்குக் கணவனே தெய்வம் என்று கட்டளையிட்டனர். கணவனுக்குச் செய்யும் பணிவிடையே கடவுளுக்குச் செய்யும் தொண்டென்று கூறி வைத்தனர். இதற்கு ஏற்பவே கன்னிப் பெண்களும் பயிற்று விக்கப்பட்டனர். சிறு பெண்களுக்கு விளையாட்டுக் காலத்திலேயே குடும்ப உணர்ச்சியை ஊட்டி வந்தனர். சிறுமிகளும் விளையாடும் போது பிற்காலத்தில் தாங்கள் நல்ல கணவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்னும் ஆசையை அவர்கள் உள்ளத்திலே வளர்ந்து வந்தனர். இளமைப் பருவத்திலே நம் உள்ளத்திலே வளரும் ஆசைகள், முதுமைப் பருவத்திலே பலன் தராமல் போக மாட்டா. வயது வந்தபின் என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று இளமைப் பருவத்திலே எண்ணுகின்றோ மோ, அவற்றைச் செய்யவேண்டியதற்கான முயற்சி நம் உள்ளத்திலே வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இவ்வளர்ச்சி யின் காரணமாகப் பல எண்ணங்களிலே வெற்றி பெறுவோம். இளமையிலே எண்ணி யிருந்த நினைப்பைச் சொல்லிலும், செயலிலும், காட்டக் கூடிய வாய்ப்பைப் பெறாமல் போக மாட்டோம். இந்த உண்மையைப் பலர் தங்கள் அனுபவத்தி லிருந்து அறியலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பை வளர்ப்பவன் - இரு வர்க்கும் இணைபிரியாமல் முடிபோடுகின்றவன் - இருவரையும் இன்ப வாழ்க்கையிலே வாழும்படி அழைத்தச் செல்பவன் காமன் என்னும் தெய்வம் என்று உரைத்தனர் முன்னோர். ஆண் பெண்களைச் சேர்த்து ஒன்றாக்குவது காமம்! அதாவது காதல்; இதுதான் அன்பு. இந்தக் காமத்தையே காமன் என்று ஆண்பால் சொல்லாக்கித் தெய்வமாக்கினர். ஆகவே காதல் என்பது தெய்வம்; அன்பு என்பது தெய்வம். இந்த உண்மையைக் காமம் என்னும் சொல்லிருந்து பிறந்த காமன் என்னும் சொல்லே நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றது. பண்டைத் தமிழகத்திலே கன்னிப் பெண்கள் இந்த அன்புத் தெய்வமாகிய காமனை வணங்கி வந்தனர். தமக்கு நல்ல கணவனைத் தரவேண்டும்; தம் மனதுக்கு ஒத்த மணாளனை அளிக்கவேண்டும்; என்றும் இணை பிரியாமலிருந்து அன்பு பாராட்டும் அழகிய காதலனை அளிக்கவேண்டும் என்பதே அவர்கள் காமனை வணங்கியதன் கருத்தாகும். பெண்கள் எவ்வளவு நற்பண்புள்ளவர்களாயிருந்தாலும், அவர்களுடைய காதலர்கள் கொடியவர்களாயிருந்தால் இல்லறம் இனிது நடைபெறாது. மூடர்களாகவும், முரடர் களாகவும் உள்ள கணவன்மார்களைத் திருத்துவது கடினம். அறிவற்ற ஆடவர் களை அறநெறியிலே ஓட்டிச் செல்வது எளிதில் ஆகாத காரியம். ஆகையால்தான் கன்னிப் பெண்கள் நல்ல கணவனைத் தரவேண்டும் என்று காமனை வணங்கி வந்தனர். இந்த உண்மை யைப் பல தமிழ் நூல்களிலே காணலாம். நாச்சியார் - ஆண்டாள் திருமொழியிலே இந்த வழக்கத்தை எடுத்துக் கூறும் பாடல்கள் காணப்படுகின்றன. அப்பாடல் களிலே கன்னிப் பெண்கள் எவ்விதம் காமனை வணங்கி வந்தனர் என்ற முறையையும் காணலாம். அந்த முறை தமிழ் நாட்டுப் பழக்கத்தையும் நாகரிகத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. வெள்ளை நுண்மணல் கொண்டு தெருஅணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறை படிந்து, முள்ளும் இல்லாச் சுள்ளி எரிமடுத்து, முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா. என்பது நாச்சியார் திருமொழி. வெள்ளை மணலால் தெருவை அழகு செய்தேன்; விடிவதற்கு முன்பே சென்று நீர்த்துறையிலே மூழ்கினேன்; முள்ளில்லலாத சுற்றிகளால் தீமூட்டி வேள்வி செய்தேன். இவ்வாறு முயன்று உன்னை நினைத்து நோன்பு நோற்கின்றேன் காமதேவனே என்பதே இவ்வடிகளிலே உள்ள பொருள். பண்டைக் காலத்திலே பழமணலை மாற்றிப் புது மணல் பரப்புவதுதான். தெருவை அழகு செய்யும் முறை. காமனை வணங்கும் பெண்கள் தெருவை இவ்வாறு அலங்கரிப்பார்கள்; விடியற் காலத்திலே நீராடுவார்கள்; தீ மூட்டிக் காமனை வணங்குவார்கள். காமனை எப்படி வணங்குகின்றனர்; எதற்காக வணங்கு கின்றனர். இந்த உண்மையை நாச்சியார் திருமொழி ஒன்று எடுத்துக்காட்டுகின்றது. காய்உடை நெல்லொடு கரும்புஅமைத்து கட்டிஅரிசி அவல்அமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்! தேயம்முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கை களால்என்னைத் தீண்டும் வண்ணம் சாய்உடை வயிறும் என்தட முலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. பசுங்காயையுடைய நெல்லோடு கரும்பையும் வைப்பேன்; வெல்லக் கட்டியோடு சேர்ந்த அவலையும் வைப்பேன்; உண்மை ஒழுக்கம் உள்ள வேதியர்கள் கூறும் மந்திரங்களைச் சொல்லி மன்மதனே உன்னை வணங்குகின்றேன் என்று முதல் இரண்டடிகளிலே மன்மதனை வணங்கும் விதத்தை உரைத்தார் நாச்சியார். நெல்லும், கரும்பும், வெல்லமும், அரிசியும், அவலும் தமிழ் நாட்டுப் பண்டங்கள். இவற்றைத் தமிழர்கள் தாங்கள் வழிபடும் கடவுளர்க்கு வைத்து வணங்கி வந்தனர். இந்த வழக்கத்தைக் குறித்தன இவ்வடிகள். ஏன் வணங்குகின்றேன் என்பதை அடுத்த இரண்டு அடி களிலே குறிப்பிடுகின்றார் நாச்சியார். இவ்வுலகத்தை முன்பு ஒரே அடியால் அளந்த திரிவிக் கிரமன் தோன்ற வேண்டும். அவன் தனது அழகிய கைகளால் என்னை அணைத்துக்கொள்ள வேண்டும். என்னுடைய அழகிய வயிறும், பெரிய தனங்களும் இவ்வுலகில் பெரும் புகழ் பெற வேண்டும். இத்தகைய பெருமையை நீ எனக்குத் தரவேண்டும். இதுவே ஆண்டாளின் வேண்டுகோள். திருமாலை எனக்குக் காதலனாக அளிக்கவேண்டும் என்று மன்மதனை வேண்டுகின்றாள். இது பண்டைத் தமிழகத்துக் கன்னிப் பெண்களின் பண் பாட்டை எடுத்துக்காட்டுகின்றது. பண்டைத் தமிழ்க் கன்னியர்கள் இளமையிலே கொண்டி ருந்த இத்தகைய நல்லெண்ணந்தான் அவர்களை மங்கைப் பருவத்திலே நல்ல மனைவிமார்களாக வாழச் செய்தது. 3 குலசேகர ஆழ்வார் இவரைக் குலசேகரப் பெருமாள் என்று அழைப்பர். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்னும் தலைப்பிலே திவ்வியப் பிரபந்தத்தில் அமைந்திருக்கின்றன. இவர் சேர மன்னர்: மண்ணாளும் செல்வத்தைவிட, விண்ணவர் பெருமான் விஷ்ணுவின்பால் செய்யும் பக்தியே இன்பந்தரும் என்ற கொள்கையுடையவர். குலசேகரப் பெருமாள் பாடல்கள் நூற்றைந்துதான். அந் நூற்றைந்து பாடல்கள் மங்காத சுடர் விளக்கை - வற்றாத சுவைச் சுனையூற்றாக - தெவிட்டாத தேனாக - விளங்குகின்றன. குலசேகர ஆர்வார் பாடல்களிலே, ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் என்று தொடங்கும் பாடல்கள்: தருதுயரம் தடாயேல்உன் சரண் அல்லால் சரண்இல்லை என்று தொடங்கும் பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இவை யிரண்டும் முறையே திருவேங்கடமலையில் பிறத்தலை விரும்பி யும், விற்றுவக் கோட்டம்மான் விஷயமாகவும் பாடியவை. தமிழின் இனிமையைக் காண இவ்விரு திருமொழிகளையும் படித்தாலே போதுமானதாகும். குலசேகரப் பெருமாள் இராமாவதாரத்திலே மிகவும் ஈடுபட்டவர்; இராமாயணக் கதையையே பத்துப் பாடல்களில் சுருக்கிப் பாடியிருக்கின்றார். கௌசலையார் இராமபிரானைத் தாலாட்டுவதாக இவர் பாடியிருக்கும் பாடல்கள் படிப்போர் - பாடுவோர் மனத்தைக் கனிவிப்பன. கண்ணனைப் பற்றியும் பாடியிருக்கின்றார். குலசேகரப் பெருமாள் திருமொழியிலே இயற்கை வர்ணனையைக் காணலாம். பல அறிவுரைகளைக் காணலாம். மக்கள் துன்பமின்றி இன்புற்று வாழ்வதற்கான அருள்மொழிகளை அறியலாம். இவர் வடமொழியிலும் தேர்ச்சியுள்ளவர்; முகுந்த மாலை என்னும் பிரபந்தம் ஒன்றை வடமொழியிலே பாடியிருக்கின்றார். மன்னர் குலத்திலே பிறந்தவர்; ஆயினும், திருமாலின் பால் இடையறாத அன்பு பூண்டவர்; திருமால் அடியவர்கள்பால் ஆராத பக்தி கொண்டவர்; தமிழையும், வடமொழியையும் ஒப்பக் கருதிய உத்தமர்; இரு மொழிகளும் கலந்து வரும் இனிய தமிழ்ப் பாசுரங்களை உள்ளம் உருகிப் பாடி மகிழ்ந்தவர். அம்தமிழ் இன்பப் பாவினை, அவ்வடமொழியை என்பது பெருமாள் திருமொழி. இதனால் இவர் தமிழின் இனிமையிலே எவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்பதை அறியலாம். குலசேகர ஆழ்வார் கி.பி. 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலே வாழ்ந்தவர். இக்காலத்திலே இராமாயணம் தமிழகத்தில் மிகவும் பெருமை பெற்று விளங்கியது. இவ்வுண்மையை இவருடைய பாடல்கள் உணர்த்துகின்றன. மலைநாட்டுப் பெருமாள் குலசேகரப் பெருமாள் திருவேங்கட மலையைப் பற்றிப் பாடியிருக்கும் பாடல்கள் மிகவும் இனிமையானவை. இப் பாடல்கள் சைவரோ, வைணவரோ, சமணரோ, பௌத்தரோ, கிறிதுவரோ, முலிமோ யார் படித்தாலும், அவர்கள் உள்ளத்தைப் பரவசமாக்கும். திருவேங்கட மலையின் மேல், திருமாலின் மேல் அவர்களுக்கு அன்பில்லாம லிருக்கலாம்; பக்தியில்லாமலிருக்கலாம்; ஆனால் அந்தப் பாடல்களில் அமைந்துள்ள சொல்நயம் அவர்கள் உள்ளத்தை உருக்காமல் போகாது. நாத்திகராயினும் அந்தப் பாடல்களின் நயத்தைப் பாராட்டாமலிருக்க மாட்டார்கள். தமிழின் இனிமையைச் சுவைப்பவர்கள் இப்பாடல்களைச் சுவைக் காமல் இருக்க மாட்டார்கள். நாம் இங்கே கூறுவது குலசேகரப் பெருமாளின் கருத்தைப் பற்றி அன்று. அவர் பாடல்களிலே வழிந்தோடும் இனிய தமிழ்த்தேனைப் பற்றியதேயாகும். ஆழ்வார் திருவேங்கடமலையிலேயே வாழ விரும்புகிறார். தம்முடைய அரச செல்வம் இன்பந் தருவதாயினும் அதை அவர் விரும்பவில்லை. அரசபோகம்; அரசுக்குரிய அதிகாரம்; அரசுக்குரிய பெருமை எல்லாம் நிலையற்றவை; இன்பந்தரா தவை; என்பதே அவர் கருத்து. இறைவனும் தாமும் ஒன்றாகி, இறைவனை விட்டுப் பிரியாமலிருந்து, அவனைக் கண்டு களிப்பதிலே பொழுதுபோக்குவதுதான் அழியாத இன்பம் என்பது ஆழ்வார் கருத்து. திருவேங்கடம் என்னும் திருப்பதியில் உள்ள திருமாலின் மேல் அன்புள்ளங் கொண்டு அவர் பாடியிருக்கும் செய்யுட்கள் மேலே காட்டிய கருத்தையே விளக்குகின்றன. கருத்திலே, வைணவ மதத்தை ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு மாறுபாடிருக் கலாம். ஆயினும் அப்பாடல்களிலே சொட்டும் தேன்துளிகளை யாரும் சுவைக்காமலிருக்க முடியாது. ஊனேறு செல்வத்து உடல்பிறவி யான்வேண்டேன் ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத்திறம் அல்லால்; கூனேறு சங்கம் இடத்தான்தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. இந்தப் பாட்டைத் திருப்பித் திருப்பிப் படியுங்கள். இதன் சுவை உள்ளம் முழுவதையும் இனிக்கும்படி செய்து விடும். இதன் பொருள் கீழ்வருவது: ஏழு காளைகளையும் வென்றவனாகிய திருமாலின் அடிமையை மேற்கொண்டு வாழும் தன்மையைத் தவிர, ஊன் பொருந்திய உடம்பைக் கொண்ட இப்பிறவியிலே, செல்வத்திலே மூழ்கி இன்புற்று வாழ்வதையும் நான் விரும்பமாட்டேன். இம்மனிதப் பிறவியிலே அடையும் இன்பத்தை விட, வளைவான சங்கை இடக்கரத்திலே உடைய திருமாலின், திருவேங்கடமலையிலே உள்ள கோனேரி என்னும் தடாகத்திலே வாழ்கின்ற நாரையாகப் பிறப்பதையே விரும்புகின்றேன் என்பதே இதன் பொருள். நான் மிகுந்த செல்வமுள்ள குடியிலே மனிதனாகப் பிறந்து வேறு இடத்திலே வாழ்ந்து இன்பம் அடைவதை விரும்பவில்லை. அதைவிடத் தாழ்வான - இழிவான பிறவி யென்று கருதப்படும் நாரையாகப் பிறந்து - உனது திருவேங்கட மலையில் உள்ள கோனேரிக் குளத்திலே வாழும் நாரை களுடன் கலந்து வாழ்ந்து எப்பொழுதும் உன்னையும் உனது திருவேங்கட மலையையும் விட்டு நீங்காமல் இருப்பதையே விரும்புகிறேன் என்பதே ஆழ்வார் உரையின் கருத்து. இதற்கு அடுத்த பாட்டும் இதே இனிமையுடன் விளங்கு கின்றது. அந்தப் பாட்டையும் படியுங்கள். ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. நான் குன்றாத செல்வத்துடன், தேவருலக மங்கையர் என்னைச் சூழ்ந்து கொள்ள, வானுலகை யாளும் செல்வச் சிறப்பையும், மண்ணுலக ஆட்சியையும் விரும்பேன். தேன் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவேங்கடத்துச் சுனையில் மீனாகப் பிறக்கும் பேற்றையே விரும்புகின்றேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். குடும்பத்திலே குதூகலம் இன்று குடும்பக் கட்டுப்பாடு என்னும் பெயரால், குழந்தை பெறாமல் இருக்க வேண்டும் என்று விளம்பரம் செய்யப் படுகின்றது. கருத்தடைமுயற்சிகள் செய்யப்படுகின்றன; கருத்தடை முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. குழந்தைகளை அளவாகப் பெறவேண்டும்; கருத்தரிப் பதைத் தடைசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவதற்குப்பல காரணங்கள் உண்டு. சிறப்பாக ஒரு காரணத்தைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றனர். பண்டங்கள் - உணவுப் பண்டங்கள் - உற்பத்தியை விடக் குழந்தைகளின் உற்பத்தி வளர்ந்து வருகின்றது. இவ்வாறே வளர்ந்துவர விட்டுவிட்டால், உலகத்திலே மக்கள் தொகை அளவுக்குமேல் பெருகிவிட்டால், பற்றாக்குறையால் பஞ்சம் உண்டாகும்; பஞ்சம் உண்டானால் அமைதியான வாழ்க்கை வாழ முடியாது. ஆகையால் மக்கள் தொகை பெருகு வதைத் தடுத்து விட்டால் அமைதிக் குலைவைத் தடுக்கலாம்; இதுவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முதன்மையான குறிக்கோள். மக்கள் தொகை பெருகுவதைத் தடுக்கவேண்டுமா? கூடாதா? மக்கள் தொகை பெருகினால், இன்றுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் உதவி கொண்டு சமாளிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விகளையெல்லாம் எழுப்பிக் கொண்டு, அவற்றுக்குச் சமாதானங்கள் கூற வேண்டியதில்லை. இது நீண்டநாள் வழக்கிட்டு - விவாதித்து - ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டிய செய்தி. பிள்ளைப் பேற்றைத் தடுக்க வேண்டும் என்று சொல்லு கின்றவர்கள் அளவோடு பிள்ளை பெற வேண்டும் என்றுதான் சொல்லுகின்றனர்; பிள்ளையே பெறக் கூடாது என்று சொல்ல வில்லை. இது குறிப்பிடத் தக்கது. பிள்ளைப் பேற்றை அடியோடு தடுத்துவிட்டால் உலகமே விரைவில் அழிந்து போகும்; உலகில் மக்களே இல்லாமற் போய்விடுவார்கள். அன்றியும் குடும்ப வாழ்க்கையில் இன்பமும் இருக்காது. கணவனையும், மனைவியையும், அவர்கள் தம் உடலின்ப உணர்ச்சியை மறந்த பின்னும் பிரியவிடாமல் ஒன்றாகப் பிணைத்து வைப்பது, பிள்ளைப்பேறாகும். தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காகத் தங்களைத் தியாகஞ் செய்யாத பெற்றோர்கள் இல்லை. ஆகவே குடும்ப வாழ்க்கை முறை வளர்வதற்குப் பிள்ளைப்பேற்றைச் சிறந்த கருவியாக வைத்திருக் கின்றனர். குழந்தைகளால் பெற்றோர்கள் அடையும் இன்பம் பல. ஈவு இரக்கம் அற்றவர்கள் உள்ளத்திலே, அவர்கள் ஈன்றெடுத்த குழவிகள் அன்பையும், அருளையும் வளர்த்து விடுகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தளர் நடையைக் கண்டு தாங்காத மகிழ்ச்சியடைவர்; அவர்கள் மழலை மொழி களைக் கேட்டு மனங்களிப்பார்கள்; அவர்கள் உடம்பைத் தழுவி முத்தமிட்டு ஆனந்தக் கடலில் திளைப்பார்கள்: அவர்கள் சிறுகையால் பிசைந்த உணவின் மீதியை அமிழ்தம் போல் சுவைத்து உண்பார்கள். குந்தைகளை ஈன்றோர் இவ்வா றெல்லாம் குதூகலம் அடைவார்கள். தங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டும் பெற்றோர்கள், மற்றக் குழந்தைகளிடமும் அன்பு காட்டத் தவறமாட்டார்கள். கல் நெஞ்சையும் கனியச் செய்யும் தன்மை குழந்தைகளுக்கு உண்டு. இந்த உண்மைகளையெல்லாம் நமது முன்னோர்கள் ஆண்டு அனுபவித்துக் கூறியிருக்கின்றனர். கடந்த ஞானியும் கடப்பரோ தம் மக்கள்மேல் காதல் என்று புகழேந்தியார் கூறினார். திருவள்ளுவர், மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றவர் சொல் கேட்டல் இன்பம், செவிக்கு என்றார். குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பம்; அவர்களுடைய மழலைச் சொற்களைக் கேட்டல் காதுக்கு இன்பம் என்பதே வள்ளுவர் வாய் மொழியின் கருத்து. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் என்பதும் திருக்குறள். தம் மக்களின் சிறிய கையால் பிசையப்பட்ட உணவு பெற்றோர்க்கு அமுதத்தைக் காட்டினும் இனிய சுவையைத் தருவதாக இருக்குமாம். குழந்தைகளால் பெற்றோர் அடையும் இத்தகைய இன்பங் களைப் பற்றிக் குலசேகரப் பெருமாள் - குலசேகர ஆழ்வார் அருமையாகப் பாடியிருக்கின்றார். கண்ணனுடைய குழந்தைப் பருவ விளையாட்டைப் பற்றிய அவர் பாடலிலே வள்ளுவர் கருத்துக்கள் அமைந்து கிடக்கின்றன. திருக்குறள் கூறும் உண்மையைக் கண்ணன் விளையாட்டிலே அமைத்துப் பாடியிருக்கின்றார். அச்செந்தமிழ்ப் பாடல்கள் படிப்பவர்களின் சிந்தையைக் கனிவிக்காமல் போகமாட்டா. கண்ணனைப் பெற்றெடுத்தவள் தேவகி; ஆனால் அவனை வளர்த்தவள் யசோதை. கண்ணனுடைய இளமைப் பருவ விளையாட்டினால் பிறந்த இன்பங்களை யெல்லாம் கண்டு அனுபவித்தவள் யசோதை. கண்ணனனைப் பெற்றெடுத்த தேவகி அவனை வளர்க்க முடியவில்லை; அவனுடைய பாலலீலை களைப் பார்த்து மகிழக்கூடிய வாய்ப்பைப் பெறவில்லை. இது கண்ணனைப் பற்றிய கதை நமக்குக் கூறுவது. கண்ணனைப் பெற்றெடுத்த தாயாகிய தேவகி, அவனுடைய பாலலீலைகளைப் பார்த்து மகிழும் பாக்கியத்தைப் பெற வில்லையே என்று வருந்துவது போலப் பாடியிருக்கிறார் ஆழ்வார்; தம்மைத் தேவகியாகவே வைத்துக்கொண்டு - தாம் தேவகியாகவே இருந்துகொண்டு, தம்மகன் கண்ணனைப் பற்றி வருந்திப் பாடுகின்றார் குலசேகரப்பெருமாள். தண்அம் தாமரைக் கண்ணனே! கண்ணா தவழ்ந்து எழுந்து தளர்ந்து ஓர்நடையால் மண்ணில் செம்பொடி ஆடிவந்து என்தன் மார்பில் மன்னிடப் பெற்றிலேன்! அந்தோ! t©z¢ br«áW ifÉuš mid¤J« thÇ thŒbfh©l moáÈ‹ Ģᚠc©z¥ bg‰¿ny‹ X!கெடு வினையேன்; என்னை என்செயப் பெற்றதுஎம் மோயே! இதுதான் அந்த இனிய செந்தமிழ்ச் செய்யுள். உண்மை யான தேவகியின் உள்ளத்தை அப்படியே எடுத்துரைக்கின்றது இச்செய்யுள். ஆழ்வார் தம்மை உண்மையான தேவகியாகவே ஆக்கிக்கொண்டு கண்ணனை எண்ணிப் பாடியதால் தான் இப்பாட்டில் உருக்கமும் இனிமையும், கருத்தோட்டமும் நிரம்பி வழிகின்றன. குளிர்ந்த அழகிய தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனே! கண்ணனே! நிலத்திலே தவழ்ந்து எழுந்து தள்ளாடி நடந்துசென்று, மண்ணிலே படிந்த நல்ல புழுதிகளை உடம்பு முழுவதும் பூசிக் கொண்ட அந்த அழுக்கோடு என் மார்பிலே வந்து அணைத்துக் கொள்ளுகின்ற பாக்கியத்தை நான் பெறாமல் போய் விட்டேன். ஐயோ! இதுமட்டுமா? நீ உணவுண்ணும்போது உனது அழகிய சிவந்த விரல்கள் எல்லாவற்றையும் சேர்ந்து அந்த உணவை அள்ளுவாய்! அதைக் கீழும் மேலும் சிந்தும்படி உன் வாயிலே வைத்துக்கொள்ளுவாய். போட்டுவைத்த உணவு முழுவதையும் உண்ணாமல் கையினால் அளைந்து மீதம் வைத்து விடுவாய். அந்த மீதத்தை எடுத்து அமிழ்தத்தைக் காட்டிலும் இனிமை யாகச் சுவைத்து உண்ணும் பேற்றையும் பெறமுடியாமல் போய் விட்டேன். ஓ! நான் தீவினையையுடையவள்; என்னை என் அன்னை எதற்காகத்தான் ஈன்றெடுத்தாளோ அறியேன் இதுவே இப் பைந்தமிழ்ப் பாடலில் அடங்கியிருக்கும் பொருள். இச்செய்யுளிலே, மார்பிடம் மன்னிடப் பெற்றிலேன் என்பதில் மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்ற கருத்தைக் காண்கிறோம். அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் என்பதில் அமிழ்தினும் ஆற்ற இனிதே என்ற குறளின் கருத்து அமைந்து கிடப்பதைக் காண்கிறோம். இத்தகைய செய்யுள் இன்பத்தை அனுபவித்தவர்கள் - இயற்கை இன்பத்தைக் கண்டறிந்தவர்கள் - அடியோடு பிள்ளைப் பேற்றையே ஒழிப்பதற்கு ஒருப்படுவார்களா? குழந்தைக் குணங்கள் நாம் என்ன செய்தாலும் அதைத் திருப்பிச் செய்வதற்குக் குரங்குகள் ஆசைப்படும்; திருப்பியும் செய்யும். குரங்குகளின் இந்த இயற்கை மனிதர்களிடமும் உண்டு. இதைக் கொண்டு தான் மனிதர்கள் குரங்குகளின் பரம்பரையிலே பிறந்தவர்கள்; குரங்குகள் தாம் மக்களின் மூதாதையர் என்று கூறுகின்றார் களோ? என்னவோ? மனிதர்கள் குரங்கின் பரம்பரையில் பிறந்தவர்களா? அல்லது புராணங்கள் சொல்வதுபோல - மதநூல்கள் கூறுவது போல - ஆண்டவனால் முழுமனித உருவத்துடன் படைக்கப் பட்டவர்களா? என்ற ஆராய்ச்சி இப்பொழுது நமக்கு வேண்டாம். மனிதர்களின் சில தன்மைகள் குரங்குகளிடம் காணப் படுகின்றன. குரங்குகளின் சில குணங்கள் மனிதர்களிடமும் காணப்படுகின்றன; இவை மட்டும் மறுக்க முடியாத உண்மை. குரங்குகள் எப்படி நாம் செய்ததைத் திருப்பிச் செய்ய விரும்புகின்றனவோ, அப்படியே குழந்தைகளும் விரும்பு கின்றன. பெரியவர்கள் என்ன செய்தாலும் அதைத் தாமும் செய்ய விரும்புவதே சுறுசுறுப்புள்ள குழந்தைகளின் தன்மை. மண்டுப் பிள்ளைகள் தாம் சும்மா உறங்கிக் கிடக்கும். பெரியவர்கள் படித்துக்கொண்டிருந்தால் குழந்தைகளும் படிக்க விரும்பும். அவையும் தங்கள் கையில் அகப்பட்ட புத்தகத்தை முகத்துக்கு நேரே விரிந்து வைத்துக்கொண்டு முணுமுணு என்று ஏதோ சொல்லும். தந்தை கையைக் கட்டிக் கொண்டு - கும்பிட்டுக் கொண்டு - கடவுளைத் தியானம் செய்வது போல் இருந்தால் குழந்தைகளும் அப்படியே செய்யும். தந்தை கையைப் பின்புறத்திலே கட்டிக்கொண்டு வீட்டுக்குள் நடைபோட்டால் நடக்கத் தெரிந்த குழந்தைகளும் அவ்வாறே நடைபோடுவார்கள். பெரியவர்கள் எது செய்தாலும் அதை உடனே செய்யத் தூண்டுவதே குழந்தையுள்ளமாகும். ஆண்களுடன் எப்பொழுதும் பழகும் குழந்தைகள் ஆண்கள் செய்வனவற்றை யெல்லாம் செய்து பார்ப்பார்கள். பெண்களுடன் பழகும் குழந்தைகள் பெண்கள் செய்வனவற்றை யெல்லாம் செய்வார்கள். பெண்கள் அடுப்படியிலே உட்கார்ந்து சமைக்கத் தொடங் கினால் ஆண் குழந்தைகளானாலும் சரி, பெண்குழந்தை களானாலும் சரி அவர்களும் சமையல் வேலையிலே கலந்து கொள்ளுவார்கள். பெண்கள் எதையாவது முறத்தில் கொட்டிப் புடைப்பதைப் பார்த்தால் குழந்தைகளும் சும்மா இருக்க மாட்டார்கள். தாமும் புடைப்பதற்குப் புகுந்து முறத்தில் இருக்கும் பண்டத்தை வாரி இறைத்து விடுவார்கள். பெண்கள் கூட்டுவதைப் பார்த்தால், குழந்தைகள் தாமும் விளக்குமாற்றை எடுத்துக்கொண்டு கூட்டத் தொடங்கி விடுவார்கள். நடக்கக் கற்றுக்கொண்ட குழந்தைகளிடம் இத்தகைய தன்மைகள் இருப்பதைக் காண்கிறோம். குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும்போதும், அவர் களுடன் பேசுகின்றவர்கள் எப்படிப் பேசுகின்றார்களோ அப்படிப் பேசக் கற்றுக்கொள்ளுகின்றனர். நல்ல வார்த்தை களைப் பேசினால் நல்ல வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளு கின்றனர். கெட்ட சொற்களைப் பேசினால் கெட்ட சொற் களைக் கற்றுக்கொள்கின்றனர். ஏறத்தாழ இரண்டாவது வயதிலிருந்து 10-ஆவது வயது வரையிலும் குழந்தைகளிடம் இக்குணம் குடிகொண்டிருக்கும். இக்காலத்தில்தான் அவர்கள் அறிவு வளர்ச்சியடைகின்றது. அவர்கள் உலகச் செய்திகள் பலவற்றையும் புரிந்து கொள்ளு கின்றனர். குழந்தைகள் இளம் பருவத்திலே கற்றுக்கொண்ட செயல் களை எளிதிலே விட்டு விடுவதில்லை. பேசத் தெரிந்து கொண்ட பேச்சுக்களையும் எளிதில் மறந்து விடுவதில்லை; இளம்பருவ ஒழுக்கமும் பேச்சும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகையால்தான் குழந்தைகளை இளம் பருவத்திலிருந்தே நல்ல முறையிலே வளர்க்க வேண்டுமென்று கூறுகின்றனர். தாய்தந்தையர்கள் கூடா ஒழுக்கமுள்ளவர்களாயிருந்தால் குழந்தைகளும் கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ளுகின்றனர். தாய் தந்தையர்கள் செய்வதுபோல், பேசுவதுபோல் தாமும் செய்ய, பேசக் கற்றுக்கொள்ளுகின்றன. குழந்தைகள் கெட்டுப் போவது பெற்றோர்களின் செய்கையாலே தான்; இயற்கையிலே குழந்தை களிடம் கெட்ட குணங்கள் அமைவதில்லை. குழந்தைகளின் உள்ளம் வெள்ளைச் சுவர் போன்றது. வெள்ளைச் சுவரிலே எந்த நிறத்தையும் அப்பிவிடலாம்; அது போலக் - குழந்தைகளின் தூய உள்ளத்திலே எந்தக் கருத்தையும் புகுத்திவிடலாம். ஆகையால் பிற்காலப் பயிர்களாகிய பிள்ளை களை வளர்ப்போர் மிகவும் கருத்துடன் வளர்க்க வேண்டும். பிள்ளைவளர்க்கும் கலையைக் கற்றுக் கொண்டு வளர்க்க வேண்டும். குழந்தைகளின் இயற்கையை அறிந்தவர்கள் வளர்ப்பிலே கண்ணும் கருத்துமாகத்தான் இருப்பார்கள். பிறர் செய்வதைச் செய்வதுதான் குழந்தைகளின் இயற்கை யென்பதைப் பல செய்யுட்கள் சுவையுடன் கூறியிருக்கின்றன; சிறப்பாகப் பிள்ளைத் தமிழ் என்ற இலக்கியங்களிலே குழந்தை களின் இயல்பைப் பற்றிக் காணலாம். குழந்தைகளின் விளையாட்டுப் பருவத்தைப் பற்றி அழகு பொருந்தப் பாடுவதே பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தமாகும். ஆழ்வார்களுடைய பாடல்களிலே பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் பலவற்றைக் காணலாம். கண்ணனைப் பற்றிப் பாடி யிருக்கும் ஆழ்வார்கள் அவனுடைய பிள்ளை விளையாட்டைப் பற்றியே கனிந்து கனிந்து பாடியிருக்கின்றனர். அத்தகைய பாடல்களிலே குலசேகரப் பெருமாள் பாடல் ஒன்றைக் காண்போம். பிள்ளைப் பருவத்தின் இயற்கைத் தன்மையை எடுத்தியம்பும் அப்பாடல் நம் உள்ளத்தை உருக்கும் தன்மை யுள்ளது. கெண்டை ஒண்கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்துத் தயிர்கடையக் கண்டு, ஒல்லை, நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு, வண்டுஅமர் பூம்குழல் தாழ்ந்து உலாவ, வான்முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப, தண்தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோ தரா! மெய் அறிவன் நானே. என்பது பெருமாள் திருமொழி; குலசேகர ஆழ்வார் பாசுரம். இச்செய்யுளிலே குழந்தையின் இயற்கைத்தன்மை அப்படியே படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஓவியந் தீட்டும் எவரும் இப்பாடலுக்கு ஒரு வண்ணப்படம் வரைந்துவிடலாம். கீழ்கண்ட வீட்டிலே இருப்பவள்; கெண்டை மீன் போன்ற கண்களையுடையவள்; இளமைப் பருவமும் உள்ளவள். அவள் தயிர் கடைந்துகொண்டிருந்தாள். அதைக் கண்டான் கண்ணன். உடனே நானும் தயிர் கடைவேன் என்று சொல்லிக் கொண்டு திருட்டு முழிமுழித்துக் கொண்டு உள்ளே புகுந்தான். அப்பெண் கடைந்துகொண்டிருந்த மத்தையும், கயிற்றையும் தானும் பிடித்துக்கொண்டான். குழந்தையின் செயலை அவள் தடுக்கவில்லை. இளம்பிள்ளைகளின் விளையாட்டிலே இன்பம் உறுதல் எவருக்கும் இயல்பன்றோ. அவளும் விட்டுக் கொடுத் தாள். கண்ணனுடைய வண்டுகள் பொருந்திய மலர் அணிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்து அசைந்தது; அவனுடைய ஒளி பொருந்திய முகத்திலே வேர்வைத் துளிகள் முகிழ்ந்தன; கை வேலை செய்வதற்கு ஏற்ப அவனுடைய செவ்வாய் துடித்தது. இவ்வாறு தயிர் கடைந்தான் கண்ணன். இந்தத் தோற்றத்தைத்தான் ஆழ்வார் தமது அருந் தமிழிலே பாடியிருக்கின்றார். தாமோதரா நீ இவ்வாறு தயிர் கடைந்ததன் உண்மையை நான் அறிவேன்என்று கூறினார். அந்த உண்மையைக் காணும் வேலை நமக்கு வேண்டாம். பெரியோர்கள் பேச்சையும், செயலையும் பின்பற்றுவது குழந்தை களின் இயல்பு என்பதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு. ஆகையால் குழந்தைகளைக் கருத்துடன் வளர்ப்பது மக்கள் கடமையாகும் என்று அருளுடன் அறிவுறுத்துகின்றார் ஆழ்வார். அன்புக்கு உவமைகள் குலசேகரப் பெருமாளின் செந்தமிழ்ப் பாசுரங்கள் படிப்போர் உள்ளத்தைக் குழைவிப்பன. பிரபந்தத்தில் உள்ள அவருடைய அரிய தமிழ்க் கவிதைகளிலே அன்பு சொட்டும்; அழகிய உவமைகள் உள்ளத்தைக் கவ்விக் கொள்ளும். தெரிந்த ஒன்றை எடுத்துக்காட்டி, அதன்மூலம் தெரியாத ஒன்றை விளக்குவதுதான் உவமையின் இலக்கணம். இதற்காகவே உவமை கூறும் வழக்கம் உண்டாயிற்று. குலசேகரப் பெருமாளின் திருமொழிகளிலே இத்தகைய இனிய உவமைகளைக் காணலாம்; எளிய உவமைகளைப் பார்க்கலாம்; நன்றாகப் புரியும்படியான உவமைகளைப் படிக்கலாம். இறைவனே! என் தீவினை எனக்குத் தருகின்ற துன்பத்தை நீதான் தவிர்க்க வேண்டும். உன் பாதங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. மணம் நிறைந்த பூஞ்சோலை சூழ்ந்த விற்றுவக் கோட்டில் உள்ள தலைவனே! பகையை வளர்க்கும் கோபத் தால், பெற்ற தாய் வேண்டாமென்று வெறுத்து விட்டாலும் கூட குழந்தை தாயை வெறுக்காது. தாயின் அன்பு கிடைக்க வில்லையே என்று எண்ணி எண்ணி ஏங்கும்; அழும். யானும் அக்குழந்தையைப் போலவே நீ அருளாவிட்டாலும் உன்னை நினைத்து ஏங்குகின்றேன். தருதுயரம் தடாயேல்,உன் சரண்அல்லால் சரண்இல்லை; விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட்டு அம்மானே; அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழும்குழவி அதுவேபோன்று இருந்தேனே! இச்செய்யுளிலே தாயிடம் குழந்தை கொண்டிருக்கும் அன்பு குறிப்பிடப்பட்டது. தாய் வெறுத்தாலும், குழந்தை வெறுப்பதில்லை. தாய்மையும் தவறி விடுவதில்லையென்ற உண்மை எடுத்துரைக்கப்பட்டது. மற்றொரு பாசுரத்தில் கற்புடை மங்கையின் குணம் விளக்கப்படுகின்றது. காதலன் - கணவன் - கொடியவனாயிருக்கலாம். பிறர் இகழத்தக்க செயல்களைச் செய்கின்றவனாக இருக்கலாம். அவன் மனைவி நல்ல கற்புடையவளாயிருந்தால் அவனைக் கைவிட மாட்டாள்; அவனைத் தவிர வேறொரு ஆடவனை அறியமாட்டாள்; இகழத் தக்க கொடும் செயல்களைச் செய்யினும் கணவனையே தெய்வம் என்று போற்றுவாள். இதுவே பழந்தமிழ் மகளிரின் இயல்பு. வானை முட்டும் மதில் சூழ்ந்த விற்றுவக் கோட்டில் உள்ள தலைவனே! என்னை நீ ஆட்கொண்டு காப்பாற்றாவிட்டாலும், உன்னுடைய ஓசையிடும் வீரக் கழலையுடைய அடிகளைப் பற்றியே எப்பொழுதும் போற்றிக் கொண்டிருப்பேன். தன் காதலனைப் போற்றும் கற்புடை மகளைப் போலவே நான் வாழ்வேன். கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல், விண்தோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட்டு அம்மானே! கொண்டுஆளாய் ஆகிலும்உன் குரைகழலே கூறுவனே! இச்செய்யுளில் தன் கணவன் விரும்பத் தகாதவனா யிருந்தாலும், கற்புடைத் தமிழ் மகள் - நற்குடிப் பிறந்த மகள் - அவனை விரும்பியே வாழ்வாள்; வெறுக்க மாட்டாள்; அது போல; நீ எனக்கு நன்மை புரியாவிட்டாலும், நான் உன்னைப் போற்றாமல் இருக்க மாட்டேன் என்று கூறுகின்றார் ஆழ்வார். இதன் மேலும் ஆழ்வார் கூறும் உவமை அருமையானது. ஒரு மருத்துவரிடம் நோயாளி காட்டும் அன்பைக் கூறுகிறார்; தம் அன்புக்கு இதை உவமை காட்டுகின்றார். நோய் வந்த காலத்தில், மருத்துவர் செய்யும் வைத்தியம் நோயாளிக்குப் பிடிக்காமலிருக்கலாம். தன் உடலில் ஏற்பட்ட கட்டியை வைத்தியர் கத்தி கொண்டு அறுக்கலாம்; அறுக்கும் போது நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவு தாங்க முடியாம லிருக்கும். பண்டைக் காலத்தில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. நோயாளி வலி பொறுக்க முடியாமல் ஐயோ! அப்பா! என்று அலறும்படிதான் புண்ணை அறுப்பார்கள்; பிறகு அப்புண்ணைத் தீயால் சுட்டு மருந்து வைத்துக் காட்டு வார்கள். அப்பொழுது நோயாளி படுந்துன்பத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆனால் நோய் குணமானபின் அந்த நோயாளி தனக்கு மருத்துவம் செய்த மருத்துவரை மறந்துவிடுவதில்லை; அவர் மருத்துவம் புரியாவிட்டால் தன்னால் உயிர் வாழ முடியாது; அப்பொழுதே இறந்துபோயிருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கும். இவ்வெண்ணத்தால் அம்மருத்துவரிடம் அன்பு காட்டுவார். இது இயற்கை. இந்த உண்மையான இயற்கை நிகழ்ச்சியை ஒரு செய்யுளிலே அமைத்துப் பாடுகிறார் ஆழ்வார். விற்றுவக்கோட்டிலுள்ள தலைவனே! புண்ணைவாளால் அறுத்துச் சுட்டாலும் சரி. அந்த மருத்துவன்பால் யாரும் வெறுப்புக் காட்ட மாட்டார்கள். நோயாளன் தன் நோய் நீங்கிய பின்னும் சரி, நோயுள்ள காலத்திலும் சரி, அந்த மருத்துவனிடம் நீங்காத அன்பு காட்டுவான். அதைப் போலவே நானும் உன்னிடம் நீங்காத காதல் கொண்டிருக் கிறேன். உன்னுடைய மாயத் திருவிளையாடல்களால் ஒழிவில்லாத துன்பத்தைத் தந்தாலும்சரி, உன்னை நான் மறக்க மாட்டேன். உனக்கே நான் அடிமையாவேன்; உனது அருளையே நான் எதிர்பார்த்து நிற்பேன்; உனக்கேத்தான் நான் அடியவனா யிருப்பேன் என்று கூறுகிறது அச்செய்யுள். வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால் மீளாத் துயர்தரினும் விற்றுவக் கோட்டு அம்மாநீ! ஆளா உனதுஅருளே பார்ப்பன் அடியேனே. இப்பாட்டிலே மேலே காட்டிய உண்மையைக் காணலாம். ஆழ்வார் கூறும் அரிய உவமானத்தைக் காண்பதற்கு மற்றொரு செய்யுளும் உண்டு. அதிலே தாமரையை உவமை யாகக் கூறுகிறார். சூரியனுடைய கதிர் வெப்பமானது சுடக் கூடியது. மனிதர் களால் கூடச் சூரிய வெப்பத்தைத் தாங்க முடியாது. மரம் செடி கொடிகள் சூரிய வெப்பம் தாங்க முடியாமல் வாடி வதங்கிப் போகின்றன. ஆனால் மெல்லிய இதழ்களையுடைய தாமரை சூரியனுக்கு அஞ்சுவதில்லை; வெயிலுக்கு வாடுவ தில்லை; குவிந்து போவதில்லை. சூரியனைக் கண்டால் மலர்ந்து ஒளிவீசு கின்றது. இந்த நிகழ்ச்சியைத் தன் அன்புக்கு உவமையாக உரைக்கின்றார் குலசேகர ஆழ்வார். சிவந்த நெருப்பைப்போல வந்து தீய்த்தாலும் சரி, செந்தாமரை கொடிய கதிரவனைக் கண்டால் மலராமல் இருப்பதில்லை. குளிர்ச்சியைத் தரும் சந்திரனைக் கண்டால் மலர்வதில்லை. சூட்டைத் தரும் சூரியனைக் கண்டால்தான் மலர்கின்றது. விற்றுவக் கோட்டில் உள்ள தலைவனே! நீ என் துன்பத்தை ஒழிக்காவிட்டாலும் சரி, உன்னுடைய அளவற்ற புகழைக் கேட்டால்தான் - பாடினால்தான் - என் உள்ளங் கனியும்; குழையும். வேறு யாருடைய புகழைக் கேட்டாலும் யான் மனங்கனிய மாட்டேன். brªjHny tªJmHiy¢ brŒâoD«, br§fky« mªju«nr® bt«fânuh‰F mšyhš myuhthš; bt«Ja® å£lhÉoD«, ɉWt¡nfh£L m«kh!உன் அந்தம்இல் சீர்க்கு அல்லால் அகம்குழைய மாட்டேனே. இதுவே அப்பாடல். மேலே காட்டிய உவமானங்கள் எல்லாம் எளியவை; யாரும் காணக்கூடியவை. தாயிடம் குழந்தை காட்டும் அன்பு, கணவனிடம் கற்புடை மனைவி காட்டும் காதல், மருத்துவனிடம் நோயாளி வைக்கும் பிரியம், சூரியனிடம் தாமரை காட்டும் தன்மை இவை இங்கே எடுத்துக்காட்டப் பட்டன. இவை போன்ற இன்னும் பல சிறந்த உவமைகளை ஆழ்வார் செய்யுட்களிலே காணலாம். அன்பை உவமைகளால் விளக்கும் இப்பாடல்கள் நம் உள்ளத்தைக் கனியச் செய்யும் இனிய செய்யுட்கள். 4 திருமழிசை ஆழ்வார் திருமழிசை ஆழ்வாரைத் திருமழிசைப் பிரான் என்று அழைப்பர். இவர் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலே வாழ்ந்தவர். திருமழிசை ஆழ்வார் ஆரம்பத்தில் நாத்திகராயிருந்தார்; பின்னர் பௌத்த மதத்தவரா யிருந்தார்; அதன் பின் சமண மதத்தவரானார்; அதன்பின் மாயாவாதம் என்று சொல்லும் வேதாந்த மதத்தையும் மேற்கொண்டார்; பின்னர் சைவ சமயத்திலே பற்றுக் கொண்டு சிவவாக்கியர் என்னும் பெயர் கொண்டிருந்தார்; சிவபக்தியுடன் வாழ்ந்தார்; சிவவாக்கியம் என்னும் சந்தப் பாடல்களையும் பாடினார். இவர் சிவவாக்கியர் என்னம் பெயருடன், சிவபக்தராய்த் தனித்து வாழ்ந்திருக்கும்போது முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இவரிடம் வந்தார். பேயாழ்வாருக்கும் சிவவாக் கியருக்கும் சைவ வைணவ வழக்கு நடைபெற்றது. சிவவாக்கியர் தோல்வியடைந்து பேயாழ்வாரிடம் உபதேசம் பெற்று வைணவரானார். இது திருமழிசை ஆழ்வாரைப்பற்றி வழங்கும் வரலாறு. இவருடைய வரலாற்றைக் கொண்டு, இவர் காலத்திலே தமிழகத்திலே, நாத்திகம், சமணம், புத்தம், சைவம், வைணவம் முதலிய பல மதங்கள் இருந்தன என்பதைக் காணலாம். திருமழிசைப்பிரான், ஆரம்பத்தில் பல மதங்களில் புகுந்து அவைகளின் உண்மைகளை உணர்ந்தவர். இறுதியாக வைணவமே சிறந்தது என்று துணிந்து அம்மதத்தை மேற்கொண்டவர். திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள, திருச்சந்த விருத்தம் இவர் இயற்றியது. நான்முகன் திருவந்தாதி என்னும் பிரபந்தமும் இவரால் இயற்றப்பட்டது. இவருடைய சந்தப் பாடல்களும், சித்தர்களுள் ஒருவராகிய சிவவாக்கியர் பாடல்களும சந்தத்தில் ஒத்துவருகின்றன. இதனால், சிவவாக்கியராக இருந்த சித்தரே, சைவத்தைத் துறந்தார்; வைணவராக ஆனார்; திருமழிசை ஆழ்வார் என்று பெயர் பூண்டார் என்று கூறுகின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை யென்று அறிவதற்குப் போதுமான சரித்திரச் சான்றுகள் இல்லை. ஆழ்வார் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி. சிவவாக்கியரோ, கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்த வராகக் கருதப்படுகிறார். ஆதலால் சந்தப் பாடல்களின் ஒற்றுமையைக் கொண்டு இருவரையும் ஒருவராக முடிச்சுப் போடுவது பொருத்தமற்றதாகும். திருமழிசையாழ்வார் பாடல்கள் உலக நிலையாமையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. திருமழிசை யாழ்வார் பாடல்கள் எளிய சந்தம் அமைந்த இனிய பாடல்கள். திருச்சந்த விருத்தம் படிக்கப் படிக்க இனிமையும், சிறந்த பொருளும் ஊற்றெடுத்து ஓடும்படி அமைந் திருக்கின்றன. இவர் பாடியுள்ள நான்முகன் திருவந்தாதி முழுவதும் வெண்பாவால் இயன்றது. இவருடைய பாடல்களிலே சிறந்த பல இயற்கைக் காட்சி களைக் காணலாம். சமரசக் கருத்தைக் காணலாம். ஆயினும் இவருடைய பாடல்களிலே சிவபிரானைத் தாழ்த்திக் கூறியிருக்கும் பகுதிகளும் உண்டு. உண்மை உணர்வின் பயன் திருமழிசை ஆழ்வார் பல மதங்களையும் ஆராய்ந்தவர்; பல மதங்களையும் பின்பற்றியவர்; இறுதிக் காலத்தில்தான் வைணவத்தில் அன்புகொண்டு வைணவ அன்பரானார். இது ஒன்றே மற்ற ஆழ்வார்களைவிட வீரவைணவராக இருக்கக் காரணமாக இருக்க முடியும். இதுவே வைணவமும், வைணவர் வணங்கும் திருமாலுமே உயர்ந்தவை என்ற கருத்து இவர் உள்ளத்திலே உரம் பெற்றிருக்கக் காரணம் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய முதிர்ந்த வைணவ பக்தர் பாடல்களிலும் இறைவன் ஒருவனே என்ற உண்மை பொதிந்து கிடப்பதைக் காணலாம். திருமழிசை ஆழ்வார் எல்லாம் திருமால் மயமே, என்று தான் எண்ணுகின்றார். திருமாலே இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களாகவும் இருக்கின்றார்; இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும் திருமாலிடமே பிறக்கின்றன; இறுதியில் அவரிடமே அடங்குகின்றன. இக்கருத்தை ஆழ்வார் பல செய்யுட்களில் இயம்புகின்றார். சமரச எண்ணங்கொண்டவர் அனைவரும் கடவுள் ஒருவரே என்றுதான் கொள்ளுகின்றனர். உலகில் உள்ள அனைத்தும் கடவுளே; உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் இறைவனாலேயே நிகழ்த்தப்படுகின்றன; அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பதே ஞானிகளின் கொள்கை; எண்ணம்; உபதேசம். கடவுளிடம் களங்கமற்ற அன்பு கொண்டவர்கள் எந்த மதத்தவராயிருந்தாலும் இந்த உண்மையை மறுப்பதில்லை. ஆனால், அந்தக் கடவுளுக்குப் பெயர் சொல்லத் தொடங்கும் போதுதான் ஒவ்வொருவரும் வெவ்வேறு பெயர்களைச் சொல்லுகின்றனர். இதனால் தான் உண்மை தெரியாதவர்கள் குழப்பம் அடைகின்றனர்; பல்வேறு கடவுள்கள் இருப்பதாகக் கருதுகின்றனர். பழுத்த சிவனடியார்கள், சிவபிரானே முழுமுதற் கடவுள்; அவரே நாம் பார்க்கின்ற - கேட்கின்ற - அத்தனை தெய்வங் களாகவும் காட்சியளிக்கிறார் என்பார்கள். இதைப் போலவே தான் கிறிதுவர், இலாமியர் முதலியவர்களும் கூறுகின்றனர். கடவுள் உண்டென்று நம்பும் மதத்தினர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்லுவார்கள். இதே இயற்கை உண்மையை நாம் திருமழிசை ஆழ்வாரி டத்திலும் காணலாம். பிரபந்தத்தில் திருச்சந்த விருத்தத்திலே அவர் குறித்தள்ள உண்மையைக் காண்போம். இறைவனிடத்திலே எல்லாம் பிறக்கின்றன; இறைவனிடத் திலேயே எல்லாம் அடங்குகின்றன என்பதை ஓர் அழகான உவமானத்தினால் விளக்கிக் கூறியிருக்கின்றார் திருமழிசை ஆழ்வார். அலைகளோடு கூடிய வெண்மையான கடல் தானாகவே அலைகளை உண்டாக்கிக் கொள்ளும் தன்மையுள்ளது. தன்னிடத்திலேயே அலைகளை உண்டாக்கிப் பொங்கி, மேல் எழுகின்ற கடல் தானாகவே அடங்கிவிடுகின்றது; பொங்கி எழுந்த அலைகள் அக்கடலிலேயே அடங்கி விடுகின்றன. இதைப் போலவே ஓ இறைவனே; உன்னிடத்திலே பிறந்து, இறந்து, நிலையாக நிற்கின்ற தாவரங்களும், அலைந்து திரிகின்ற சங்கமங்களும், மீண்டும் நின்னிடத்திலேயே மறைகின்றன. இத்தகைய சிறந்த தன்மை உன்னிடம் இருக்கின்றது. தன்னுள்ளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல் தன்னுள்ளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல், நின்னுள்ளே பிறந்துஇறந்து நிற்பவும் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே. இதுவே மேலே கண்ட கருத்துள்ள பாடல். எல்லாம் கடவுளே என்ற உண்மையை உரைக்கும் பாடல் இதுவாகும். இதே கருத்தை மற்றொரு செய்யுளிலும் காணலாம். இந்த உலகத்தை நீயே படைக்கின்றாய்; பின்னர் இவ்வுலகத்தை நீயே உனக்குள் மறைத்து வைத்திருக்கின்றாய்; மீண்டும் இவ்வுலகைப் படைத்து, நீ இவ்வுலகிலேயே பிறந்து பல திருவிளையாடல்களைப் புரிகின்றாய். நீ குறிப்பிட்ட இன்ன இடத்தில்தான் இருக்கின்றாய் என்று சொல்ல முடியாது; எவ்விடத்திலும் இருக்கின்றாய். இவ்வுலகம் உன்னுடன் ஒன்று பட்டு நிற்க, நீ இவ்வுலகைவிட்டு வேறாகவும் நிற்கின்றாய். ஆதலால் இவ்வுலகிலே உன்னுடைய நிலைமை யைப் பற்றி நினைக்க - ஆராய - வல்லவர்கள் யார்தான்? ஒருவரும் இல்லை இவ்வாறு கூறுகிறது அச்செய்யுள். எல்லாம் வல்லவன் இறை வனே; அவ்விறைவன் ஒருவன்தான் என்ற உண்மையையே இச்செய்யுளும் உரைக்கின்றது. உலகு தன்னை நீபடைத்தி; உள்ஒடுக்கி வைத்தி;மீண்டு உலகு தன்னுளே பிறத்தி; ஓர்இடத்தை அல்லை; ஆல் உலகு நின்னொடு ஒன்றிநிற்க வேறுநிற்றி ஆதலால், உலகின் நின்னைஉள்ள சூழல் யாவர் உள்ளவல்லரே! இறைவன் ஒருவனேதான் என்பதே அறிஞர் கண்ட முடிவு. தமிழர் கொண்ட கொள்கை. வேறு வேறு மதக்கொள்கை களைத் தழுவியவர்களாயினும், உண்மையைக் கண்டறிந் தவர்கள் கடவுள் ஒருவர் தான் என்பதை மறுக்கவில்லை. மற்ற மதங்களை இழித்துப் பேசும் அளவுக்கு மதப்பற்றுக் கொண்டவர்களும், ஒருவனே தேவன் என்ற உண்மையை ஒளிக்கவில்லை. இந்த உண்மையை எல்லா மதத்தினரும் உணர்ந்தால், மதச் சண்டை களுக்கு இடம் இல்லை. அருள் உள்ளம் மகனுக்குத் தந்தை புத்தி கூறுகிறான்; இன்னபடி செய்; இன்னபடி செய்யாதே என்று அடிக்கடி எடுத்துச் சொல்லு கின்றான்; முதலில் மகனிடம் கோபங்காட்டாமல் இனிமை யாக எடுத்துச் சொல்லுகின்றான். குழந்தாய்! நீ செய்யும் வேலையால் பயன் இல்லை; அது உனக்கும் நன்மை தராது; பிறருக்கும் நன்மை தராது; உன்னை யாரும் நல்ல பையன் என்று சொல்லமாட்டார்கள். ஆகையால் நீ இப்பொழுது செய்யும் வேலையை விட்டுவிட்டு; மறந்துவிடு. வேறு நல்ல செயலைச் செய்! உன் நன்மைக்காகத் தான் நான் இதைச் சொல்லுகிறேன். நீ நன்றாக இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி; நீ நல்ல பெயர் எடுத்தால்தான் எனக்கு இன்பம். உன்மேல் உள்ள அன்பால்தான் இப்படிச் சொல்லு கிறேன்! அருமைக் குழந்தாய்! என் கண்ணே! என் சொல்லைத் தட்டாதே என்று இப்படி அடிக்கடி அறிவுரை கூறுகின்றான். மகன் காதில் இது ஏறவில்லை. தந்தை சொல்லைப் பொருட்படுத்தாமல் தன் மனம் போன போக்கில் காரியங் களைச் செய்கின்றான்; துடுக்குப் பிள்ளைகளுடன் கூடிக் கொண்டு துள்ளித் திரிகின்றான். அப்பொழுது என்ன செய்வான் தந்தை! மகன்மீது வைத்த அன்பு காரணமாக - அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்னும் ஆசை காரண மாகக் கோபங் கொள்வானா? மாட்டானா? கண்டிப்பாக மகன்மேல் அவனக்குக் கோபந்தான் வரும். கோபம் வந்தால் அப்பொழுது மகனைப்பார்த்து என்ன சொல்வான்? எப்படிப் பேசுவான்? அடமடப்பயலே? அறிவு கெட்ட கழுதையே! உனக்கு எத்தனை நாள்தான் நான் புத்தி சொல்லுவது? கண்டிப்பாகச் சொல்லுகீறேன். இனி நீ அந்த வேலையில் இறங்கக்கூடாது. அந்தப் பயல்களுடன் சேரக்கூடாது. சேர்ந்தால் உதைப்பேன்; கன்னத்தைப் பெயர்த்து விடுவேன்; பல்லை உதிர்த்து விடுவேன் என்று கடுமையாகத் தன் மகனைக் கண்டிப்பான் தந்தை. இப்படிக் கண்டித்த பின்னும் மகன் மீறி நடப்பானாயின் அடிக்கவும் செய்வான். இந்தக் கண்டிப்பும், அடியும், அன்பின் காரணமாக எழுவன; நல்லெண்ணத்தின் அடிப்படையிலே எழுவன. உலக மக்களைத் திருத்த நினைக்கும் அறிஞர்களும் தந்தை போன்றவர்கள் தாம். தந்தை தன் மகனுக்கு நயத்திலும் பயத்திலும் புத்தி புகட்டுவது போலவே இவர்களும் உலகினர்க்கு அறிவுரை கூறுவார்கள். இந்த உண்மையைப் பல பெரியார் களின் வாய் மொழிகளிலே காணலாம். திருமழிசை ஆழ்வார் உலகமக்களுக்குக் கூறும் அறிவுரையைப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். அவர் திருமாலிடம் அன்புகாட்டி அவரை வழிபடு தெய்வமாகக் கொண்டு மனச்சாந்தி பெற்றார்; தம்மைப் போலவே உலக மக்கள் அனைவரும் திருமாலை வழிபட்டு மனச்சாந்தி அடைய வேண்டும் என்று விரும்புகின்றார். இவ்விருப்பத்தை வெளியிடும் முறையிலேயே அவர் பாடியிருக்கும் செய்யுள் ஒன்று கீழ்வருவது: இன்று சாதல், நின்று சாதல் அன்றி, யாரும் வையகத்து ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும், நீசா என்கொலோ அன்று யிர ளந்த பாத போதை ஒன்றி வானின்மேல் சென்று சென்று தேவ ராயிருக் கிலாத வண்ணமே! இச்செய்யுளிலே ஆழ்வார் உலக இயற்கையை எடுத்துரைக் கின்றார். பிறந்தோர் அனைவரும் இறப்பது உறுதி; இன்றோ அல்லது நாளையோ, உயிருடன் இருக்கும் மக்கள், இறந்துதான் போகின்றார்கள். இந்த உண்மையைக் கண்ணால் கண்டவர்கள் கூட, இறந்த பின் நலம் பெறுவதற்கான வழியைத் தேடிக் கொள்ளாமல் திண்டாடுகிறவர்களைப் பார்த்துப் பரிதாபப் படுகிறார் ஆழ்வார்; அவர்கள் நல்வழியை நாடவில்லையே என்று ஆத்திரப்படுகின்றார்; அவர்கள் நீசர் என்று வைகின்றார். இவ்வசவு வெறுப்பிலிருந்து விளைந்ததன்று; அன்பிலிருந்து முளைத்த வசவாகும். தந்தை தன் மகனைத் திருத்துவதற்குக் கடுஞ்சொல் கூறுவது போல உலக மக்கள் உய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் வைகின்றார். இன்று இறத்தல்; அல்லது இன்று இறக்காமல் நின்று நாளை இறத்தல் என்பது உண்மையாகும். இதைத்தவிர இவ்வுலகில் யாரும் நிலைத்து நின்று வாழ்வதில்லை. இவ் வுண்மையைக் கண்ணாரக் கண்டுங் கூட நீசத்தன்மை யுள்ளவர் கள், அன்று இவ்வுலகத்தை ஓரடியால் அளந்தவனுடைய பாதமலரை நெஞ்சத்தில் நினைக்காமல் இருக்கின்றனர்; அவன் பாதமலரை நினைப்பதன் மூலம் வானுலகத்தை அடைந்து தேவர்களோடு சேர்ந்து வாழாமல் இருக்கின்றனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணந்தான் என்னவோ அறியேன். இதுவே, இச்செய்யுளின் பொருள். திருமாலின் பாதமலர் களை எண்ணி வணங்குவோர் தேவலோகத்தை பெறுவர்; இது திண்ணம் என்று நம்புகின்றார் ஆழ்வார். தம்மைப் போலவே மற்றவர்களும் இன்பம் உறவேண்டும் என்பதே அவர் ஆசை. ஆதலால்தான் திருமாலின் பாதங்களை நினைக்காமலிருப் போரை நீசர் என்று தாக்கியிருக்கின்றார். மற்றொரு செய்யுளிலே, திருமாலைக் காணும் வழி எப்படி என்று கூறுகின்றார்; அன்பினால் தான் அவனைக் காண முடியும்; வேறு வழியிலே காணமுடியாது என்று கூறுகின்றார். புன்புல வழிஅடைத்து, அரக்குஇலச் சினைசெய்து, நன்புல வழிதிறந்து ஞானநற் சுடர்கொளீஇ என்பில் எள்கி, நெஞ்சுஉருகி, உள்கனிந்து எழுந்துஓர் அன்பில் அன்றி, ஆழியானை யாவர்காண வல்லரே! உள்ளம் பல பக்கங்களிலும் ஓடுந்தன்மையுள்ளது; நல்வழி யிலும் செல்லும்; தீநெறியிலும் ஓடும். ஆதலால் அற்ப நிலையிலே செல்லும் வழியை அடைத்துவிட வேண்டும். அவ்வழியை நன்றாக மூடி அரக்கு முத்திரை வைத்துவிட வேண்டும். நல்ல நிலையை அடையும் வழியைத் திறந்துவிட்டு விட வேண்டும்; அறிவென்னும் விளக்கைக் கொளுத்தி அறியாமை என்னும் இருட்டை விரட்டியடிக்க வேண்டும் எலும்பு தளர்ந்து மனம் உருகி, உள்ளமுழுவதும் கனிந்து எழுந்ததாகிய ஒப்பற்ற அன்பினால் தான் ஆழியானை - திருமாலைக் காணமுடியும்; இவ்வழியைத் தவிர வேறு வழியினால் அவனைக் காணமுடியாது; அன்பற்ற மற்றவர்கள் திருமாலைக் காணமுடியாது. இதனையே மேலே கூறிய செய்யுளில் உரைக்கின்றார் ஆழ்வார். உள்ளம் கனிந்த அன்புள்ளவர்களிடமே தான் இறைவன் இருப்பான்; உள்ளக் கனிவற்றவர்கள் பால் அவன் அணுக மாட்டான் என்ற உண்மையையும் இதன்மூலம் உணரலாம். இன்றுசாதல் நின்று சாதல் என்ற செய்யுளிலே, இறைவன் அடியை எண்ணாதவர்கள் நீசர்கள் என்று வெறுத்தார்; புன்புல வழியடைத்து என்ற பாசுரத்தினால் வழி எது என்பதை அறுதி யிட்டு உரைத்தார். முதலிலே, திருமாலை வணங்காதாரைக் கடிந்துரைத்தார்; தந்தை எனக்கு அடங்காத பிள்ளையை வைவது போல வைதார். பின்னர், தந்தை அப்பிள்ளைக்கு அறிவுரை கூறி அன்பைக் காட்டுவதுபோல இறைவனை அணுகி இன்புறும் வழியையும் உரைத்தார். இதுதான் தம்மைப்போல் ஏனையோரும் இன்புற்று வாழவேண்டும் என்று விரும்பும் இரக்கமனம் படைத்தவர்களின் இயல்பு! ஆன்றோர் பின்பற்றிய அருள்நெறி. 5 தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் வாழ்ந்த காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இவருடைய இயற்பெயர் விப்பிர நாராயணர் என்பது. வடமொழியும், தமிழ் மொழியும் கற்றறிந்தவர்; திருமாலிடம் மிகுந்த பக்தியுடையவராய், அவருக்குப் பணி புரிந்து வந்தவரா யினும், கொஞ்ச நாள் காம பரவசராய்க் கணிகையின் நட்புக் கொண்டிருந்தார். பின்னர், திருமால் அருளால், நன்ஞானம் பெற்றார்; திருமாலின் தொண்டர்களுக்குப் பணி செய்து மகிழ்ந்தார்; அதனால் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் என்ற பெயரையும் பெற்றார். திருமாலை, திருப்பள்ளி எழுச்சி - இரண்டு பிரபந்தங்களும் இவரால் இயற்றப் பெற்றவை. வைணவமே உயர்ந்த சமயம்; திருமாலே முதற்பெருங் கடவுள் என்ற உறுதியுள்ளவர். இவர் காலத்தில் தமிழகத்தில் சமண சமயமும், புத்த சமயமும் இருந்தன. அவைகளை - சமண, புத்த மதங்களை இவர் வெறுத்தார். புலை அறமாகின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலை அறம் கற்றமாந்தர் காண்பரோ? கேட்பரோதாம் என்பது இவர் திருவாக்கு. இதனால் இவருடைய புத்த - சமண - மத வெறுப்பை அறியலாம். இது திருமாலையிலே காணப்படும் பாடல். இவருடைய திருமாலையிலே, பல நீதி மொழிகளைக் காணலாம். ஒழுக்கத்தின் சிறப்பை இவர் எடுத்துரைப்பதைப் பார்க்கலாம். மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைத் தெளிவாக எடுத்துரைப்பதைப் படிக்கலாம். தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் காலைப்பொழுதின் இயற்கையை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன. காலைப் பொழுதில் நடக்கும் நிகழ்ச்சிகளை யெல்லாம் அழகாக அமைத்துப் பாடியிருக்கின்றார். இவர் சீரங்கத்தில், அரங்கநாதனுக்குப் பணி புரிந்து வாழ்ந்தவர். தொண்டர் அடிப்பொடி ஆழ்வாருடைய பாடல்கள் 55 தான் பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அப்பாடல்கள் அவருடைய கருத்தையும் ஒழுக்கத்தையும் விளக்கி நிற்கின்றன. சிறந்த இனிய எளிய பாடல்கள். படிப்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்தும் பண்புள்ளவை. திருமாலையின் பாடல்கள் 45; திருப்பள்ளி எழுச்சியின் பாடல்கள் 10. இவை இரண்டுமே ஆழ்வாரின் அரிய பாடல்கள். மாசற்ற மனம் பக்தி மார்க்கம் பரவியபின் பலர் அதையே சிறந்ததாக நம்பினர்; அறநெறியைவிட - ஒழுக்கத்தை விட அன்பு நெறியான பக்தி மார்க்கமே உயர்ந்ததென்று நினைத்தனர். பிற்காலத்திலே சிலர், பக்தியினால் எல்லாப் பாவங்களையும் போக்கிவிடலாம் என்று எண்ணினார்கள். ஆண்டவனை எண்ணி ஆடிப் பாடினால் செய்த பாவங்கள் அனைத்தும் சிதைந்து போய்விடும் என்று சிலர் நம்பினார்கள். அறிந்து செய்த பாவமானாலும் சரி, அறியாமல் செய்த பாவமானாலும் சரி, கடவுள் பெயரைச் சொன்னால் போதும், அப்பாவம் பறந்துவிடும் என்று கருதினர். இத்தகைய நம்பிக்கை காரணமாகப் பக்தர்களிடத்திலும் கூடா ஒழுக்கங்கள் தோன்றின. பௌத்தர்களும் சமணர்களும் ஒழுக்கத்தையே முதன்மை யாகக் கொண்டனர். ஆகையினால் அவர்களுடைய ஒழுக்க நெறிகளை எதிர்த்த சைவ, வைணவர்கள் பக்தி மார்க்கத்தைப் பரப்பினர். ஆண்டவனிடம் அன்பு பாராட்டாதவன் எத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றினாலும் பயன் இல்லை; எத்தகைய பாவத்தையும் இறைவனை எண்ணி உருகும் பக்தி வெள்ளத்தால் தான் துடைத்துக் கழுவித் தூய்மையாக்க முடியும் என்ற கொள்கையைப் பரப்பி வந்தனர். ஆயினும் அவர்கள் ஒழுக்கத்தை வலியுறுத்தாமல் விட்டு விடவும் இல்லை, உள்ளத்திலே ஒழுக்கம் இருக்கவேண்டும். குற்றமற்ற மனம் வேண்டும். புறத்திலும் புனிதத் தன்மை வேண்டும். உடம்பையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று உபதேசம் செய்யத் தவறவில்லை. பக்தி மார்க்கத்தை வலியுறுத்தும் அறிஞர்களிலே பலர் ஒழுக்கம் இன்றேல் பக்தியால் பயன் இல்லை, உள்ளம் தூய்மையாக இல்லையானால் இறைவனைக் காணமுடியாது. தூய மனத்திலே தான் ஆண்டவன் அமர்ந்திருப்பான்! மாசு நிறைந்த மனத்திலே அவன் நுழைவதற்கு மனங்கொள்ளவே மாட்டான் என்று வலியுறுத்தியும் வந்திருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாகப் பல பெரியார்களின் பாடல்களைக் கூறலாம். இப்பெரியார்களிலே தொண்டடிரப்பொடி ஆழ்வாரும் ஒருவர். பேசிற்றே பேசல்அல்லால் பெருமைஒன்று உணரல் ஆகாது; ஆசற்றார் தங்கட்குஅல்லால் அறியல்ஆவானும் அல்லன்; மாசற்றார் மனத்துள்ளானை வணங்கிநாம் இருப்பது அல்லால் பேசத்தான் ஆவதுஉண்டோ பேதைநெஞ்சே நீசொல்வாய். என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாட்டு. இச் செய்யுளிலே குற்றமற்றவர்களால்தான் இறைவனைக் காண முடியும்; மாசற்றவர் மனத்துள்ளேதான் ஆண்டவன் அமர்ந் திருப்பான் என்ற கருத்தை வெளியிடுகின்றார். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டி ருக்கத்தான் முடியும்; அவனுடைய பெருமை ஒன்றையும் உணரமுடியாது; அவனை - அவ்விறைவனை எல்லோராலும் தெரிந்துகொள்ள முடியாது! உள்ளத்தினாலும், உடம்பினாலும், சொல்லினாலும் குற்றமிழைக்காத வர்களால்தான் அவனை அறிய முடியும்; மற்றவர்களால் அவனை அறிய முடியாது. யாரிடம் குற்றமற்ற உள்ளமிருந் தாலும் அவ்வுள்ளத்திலே அவன் தங்கியிருப்பான். அத்தகைய வனை வணங்குவதுதான் நமது கடமை. இப்படி வணங்கு வதைத் தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் பெருமை முழுவதையும் பேசுவதற்கும் நமக்கு நாக்கில்லை. அத்தகை நாவன்மை நமக்கில்லை. ஆதலால் அறிவற்ற மனமே நீ என்னதான் செய்யப் போகின்றாய்? சொல்வாயாக. இதுவே செய்யுளின் பொருள். பக்தி மட்டும் போதாது. ஒழுக்கமற்ற அன்பு, வெறும் நடிப்பாகத்தான் முடியும்; ஒழுக்கத்துடன் கூடிய அன்புதான் - பக்திதான் - உயர்ந்ததாகும்; இக்கருத்தையே ஆழ்வார் இச்செய்யுளின் மூலம் வெளியிட்டார். இதே கருத்தை - ஒழுக்கத்துடன் கூடிய பக்தியே சிறந்தது என்பதை மற்றொரு திருப்பாட்டிலும் காணலாம். மனத்தில்ஓர் தூய்மையில்லை; வாயில்ஓர் இன்சொல் இல்லை; சினத்தினால் செற்றம்நோக்கித் தீவிளி விளிவன் வாளா; புனத்துழாய் மாலை யானே! பொன்னிசூழ் திருவரங்கா! எனக்குஇனிக் கதிஎன் சொல்வாய்! என்னைஆ ளுடையகோவே. இதுவும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடலேதான். இப்பாடலின் பொருளைப் பாருங்கள். மனத்திலே பரிசுத்தமும் இல்லை; மனம் மாசடைந்து கிடக்கின்றது. வாயிலிருந்து ஓர் இனிய சொல்கூடப் புறப்படுவ தில்லை; வாயில் இருந்து புறப்படும் சொற்கள் எல்லாம் கடுமையுள்ளதாகவே இருக்கின்றன. கோபத்தினால், பகைமை உணர்ச்சியுடன்தான் ஒவ்வொரு வரையும் பார்க் கின்றேன். அதனால் தீமையான சாவினாலேயே சாகின்றேன்; இவ்வாறு வீணாகிப் போய்க்கொண்டிருக்கின்றேன். காட்டிலே விளைந்த துளசிமாலையை அணிந்தவனே! காவிரியாற்றால் சூழப்பட்ட திருவரங்கத்தில் வாழ்கின்றவனே! எனக்கு இனி என்னதான் கதி? அதை நீதான் சொல்ல வேண்டும்; என்னை ஆளுகின்ற தலைவனே. உள்ளம் தூய்மையாக இருந்தால்தான் வாயில் இனிய சொற்கள் ஊறும். உள்ளத்திலே மாசு படிந்திருந்தால் வாயில் வரும் சொற்களும் இனிமையற்றனவாகத்தான் இருக்கும். இந்த உண்மையை மனத்தில்ஓர் தூய்மையில்லை; வாயில் ஓர் இன்சொல் இல்லை என்ற முதல் வரியால் காணலாம். உள்ளமும் தூய்மையற்றது; சொல்லும் கடுஞ்சொல்; இந்நிலையில் அவர்களிடம் கோபம் குடிகொள்ளாமல் வேறு என்னதான் குடிகொள்ளும்? எப்பொழுதும் கோபத்துடன் இருப்பவர்களுக்கு நண்பர்களும் இருக்கமாட்டார்கள். அவர்கள் யாருடனாவது பகைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். இத்தகையவர்கள் அமைதியுடன் வாழமாட்டார்கள்; கொடுமை யாகச் சாவார்கள்; துன்பப்பட்டுத்தான் சாவார்கள்; யாருக்கும் பயன்படாமல், தனக்கும் பயன்படாமல் வீணாகத் தான் சாவார்கள். இந்தஉண்மையையே சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா என்ற இரண்டாவது வரி எடுத்துக்காட்டுகின்றது. மேலே காட்டிய பாடல்கள் இரண்டிலும் ஒழுக்கம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். குற்றமற்ற உள்ளம்; இனிய சொற்கள்; யாரிடமும் பகைமை கொள்ளாத வாழ்வு. இவையே சிறந்த ஒழுக்கத்திற்கு அடிப்படை. இத்தகைய நல்ல நடத்தை யுள்ளவர்கள் தான் சிறந்த பக்தர்களாகவும் இருக்க முடியும். இந்த உண்மையை மறந்து - அல்லது மறைத்து விட்டு - பக்தி ஒன்றே போதுமானதாகும். நடத்தையைப் பற்றி கவலை யில்லை. பக்தியினால் எல்லாப் பாவங்களையும் போக்கி விடலாம் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். ஒழுக்கத்துடன் கூடிய பக்திதான் சிறந்ததாகும். இவ்வுண்மையைத் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தெளிவாக எடுத்துரைத்தார். சாதிகள் அழியும் அன்புக்குச் சாதியில்லை; மதம் இல்லை; இனம் இல்லை; நிறம் இல்லை; நாட்டு வேற்றுமையுமில்லை. இந்த உண்மையை இன்று கண்கூடாகக் காண்கிறோம். சிறப்பாக, ஆண் - பெண் உறவுகளிலே இத்தகைய நடவடிக்கையைக் காண்கிறோம். அன்பு எதையும் - எந்த உயர்வு தாழ்வுகளையும் போக்கி விடும்; சமநிலையை ஏற்படுத்திவிடும். இவ்வுண்மையை முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். இதனால் தான் பக்திமார்க் கத்தைப் பவரச் செய்த அடியார்கள் அனைவரும் சாதிபேதம், பாராட்டுவதை வெறுத்தனர். ஒரு கடவுளை வழிபடும் அனை வரும் ஒரே குலத்தினர் என்று கூறினர்; ஒரு மதத்தைச் சேர்ந்த எல்லோரும் ஒரே இனத்தினர் என்று உரைத்தனர்; மதத்தின் மூலம் - கடவுளை வழிபடும் வாயிலாக - மனித சமூகத்தை ஒன்றாக இணைக்க முயன்றனர். ஒவ்வொரு மதத்தலைவர்களும், தங்கள் மதமே உண்மை மதம் என்று நம்பினர்; தங்கள் மதத்தையே உலகோர் அனைவரும் பின்பற்றுவார்கள் என்று உறுதிகொண்டனர். அதனால்தான் அவர்கள் உலக மக்கள் ஒன்றுபடவேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை வணங்குவோர் எல்லோரும் ஒன்றே என்று சமயம் வாய்த்தபோதெல்லாம் விடாமல் பாடி வந்தனர்; சொல்லி வந்தனர்; தங்கள் செயலிலும் செய்துகாட்டி வந்தனர். இந்தத் துறையிலே சாதியைத் தகர்க்க அவர்கள் செய்த முயற்சி பலன் தந்ததா? தரவில்லையா? என்பது வேறு செய்தி. ஆனால், மக்கள் அனைவரும் பேதமின்றி ஒரே குலமாக வாழவேண்டும் என்பதே அவர்கள் கருத்து. இதற்காக அவர்கள் பணிபுரிந்தனர்; பாடு பட்டனர்; என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவ்வுண்மையைத் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் வலியுறுத்திக் கூறுகிறார்; அவருடைய அருந்தமிழ்ச் செய்யுட் களில் எல்லாம் எடுத்துக்காட்டியிருக்கிறார். திருமால் தேவர்களுக்கு எட்டாதவன்; அவர்களாலும் அறியப்படாதவன்; தேவதேவன் ஆவான். இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். தேவர்களும் காணமுடியாத தேவனே என்று உள்ளம் கனிந்து போற்றினால் போதும். தேன் சிந்துகின்ற துளசி மாலையைத் தரித்த தலையை யுடையவனே என்று பக்தி பரவசத்துடன் போற்றினாலும் போதும். இப்படிக் கூறிப் போற்றுகின்றவர்கள் யாராயிருந்தாலும் சரி; அவர்கள் எப்பொழுதும் தீய செயல்களையே செய்து கொண்டு திரியும் கெட்டவர்களானாலும் சரி; அவர்கள் உயர்ந்தவர்கள்; உத்தமர்கள்; எல்லாப் பாவங்களையும் கழுவிய பரிசுத்தமானவர்கள். அவர்களைவிடத் தூயதன்மை யுள்ளவர்கள் வேறு யாரும் இல்லை. இத்தகைய உத்தம அடியார்கள் தாங்கள் உண்ட மீதமானவற்றை - எச்சில் உணவைக் கொடுத்தால் போதும், அந்த எச்சில் உணவு - மீத உணவே - புனிதமானது. அதை நாம் உட்கொண்டால் நாமும் பரிசுத்தர் ஆவோம்; புனிதம் அடைவோம். இவ்வாறு உள்ளம் உருகிப் பாடுகின்றார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். அப்பாடல் படிக்கப்படிக்க இனிமை தருவது; அப்பாடலின் கருத்து, சாதிபேதம் ஒழிய வேண்டும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. அந்தச் செய்யுள் கீழ்வருவது; ‘th‹csh® m¿ašMfh thdth’ v‹g® M»š, ‘nj‹cyh« Jsgkhiy¢ br‹ÅahŒ! என்பர் ஆகில் ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரர்கள் ஏனும், போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே ஆழ்வார் காலத்திலே அவர் கொள்கையை ஒப்புக் கொள்ளா தவர்களும் சிலர் இருந்தனர். தன்னலம் எப்பொழுதும் நீதிக்கு முட்டுக்கட்டையாகவே நிற்கும்; அறத்திற்கு எதிர் நின்று தடுக்கும் குட்டிச்சுவரகாவே நிற்கும். அறம் இன்னது, மறம் இன்னது என்று பகுத்துக்காணும் அறிவு தன்னலத்திற்கு இல்லை. தம்முடைய நன்மையே நோக்கம்; அதற்காகவே பலர் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சிலர் நினைத்தனர்; நினைக்கின்றனர். சாதியிலே, மதத்திலே, சமுதாயத்திலே எல்லாவற்றிலும் தலைவராக இருந்த - இருக்கின்ற சிலரிடம் இவ்வெண்ணம் உண்டு. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் காலத்தில், பார்ப்பனர் களிலே பலர் சாதி வேற்றுமையைப் பாராட்டிவந்தனர். ஆண்டவன் முன்னிலையில் அனைவரும் ஒன்று என்ற உண்மை அவர்கள் உள்ளத்திலே குடியேறவில்லை. பழக்க வழக்கங்கள் காரணமாகச் சாதி வேற்றுமையையும் ஓர் ஆசாரமாக - ஒழுக்க மாக - தூய நடத்தையாக அவர்களிலே பலர் எண்ணினர். ஆதலால் சாதி வேற்றுமை பாராட்டுதலும் ஒழுக்கந்தான் என்று அவர்கள் கூறினர்; அதற்குக் கேடு சூழ்வது ஒழுக்க நெறியைச் சிதைப்பதாகும் என்று சொல்லி வந்தனர். இத்தகைய வேதியர்களைப் பார்த்து ஒரு செய்யுளைப் பாடியிருக்கின்றார் ஆழ்வார்; அவர்களை நேர் நோக்கிச் சொல்லுகின்றார். குற்றமற்ற நல்ல நடத்தையை உடையவர்களே! பலகலை களையும், நான்கு மறைகளையும் நன்றாகக் கற்றுணர்ந்தவர் களே! உங்களுக்கு ஓர் உண்மையை உரைக்கின்றேன், கேளுங்கள். நீங்கள் நினைக்கின்றபடி அவர்கள் இழிகுலத்தவர் களானாலும் சரி. அவர்கள் எமது அன்பர்களாயிருந்தால் அவர்களை நீங்கள் வணங்குகங்கள்; சாதி இழிவைக் கருதி வணங்காமல் ஒதுக்கவேண்டாம்; விலக்க வேண்டாம்; வெறுக்க வேண்டாம். வணங்குவதோடு மட்டும் நிற்க வேண்டாம். அவர் களுக்கு வேண்டுவனவற்றைக் கொடுங்கள்; அவர்களிடமிருந்து அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது அவர்களுடன் கொள்வினை கொடுப்பினை செய்து கொண்டு ஒரு சாதியினராய் ஆகிவிடுங்கள். என்று இவ்வாறு கூறி, நின் அடியார்களையும் நின்னுடன் ஒத்தவர்களாக எண்ணி வணங்கும்படி அருள் செய்தனை. மதில் சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ள எம் தலைவனே இது உனது பெருங்கருணைத் திறமாகும். இக்கருத்தமைத்துப் பாடியிருக்கும் பாடல் தமிழர் ஒவ் வொருவர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டிய பாடலாகும். அப்பாடல்தான் கீழ்வருவது: பழுதுஇலா ஒழுகல்ஆற்றுப் பலசதுப் பேதிமார்கள்; இழிகுலத் தவர்கள்ஏனும், எம்அடி யார்கள்ஆகில் தொழுமின்நீர். கொடுமின்! கொண்மின்! என்றுநின் னோடுஒக்க வழிபட அருளினாய்போல்; மதில்திரு அரங்கத் தானே. இச்செய்யுளிலே உள்ள கொடுமின்! கொண்மின்! என்ற தொடர்தான் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு கடவுளை வழிபடுவோர் ஒரே இனத்தினர்; அவர்கள் கொள்வினை கொடுப்பினை செய்துகொள்ளும் வழக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால் சாதிவேற்றுமை எளிதில் ஒழிந்துவிடும் என்ற உண்மையை எடுத்துக் காட்டிக் கலப்புமணம் புரிந்துகொள்ளும்படி ஆழ்வார் பன்னூறு ஆண்டு களுக்கு முன்பே எடுத்துரைத்தார். இதனால் கலப்புமணம் சாதியை ஒழிப்பதற்குப் பெருந்துணை புரியும் என்பது ஆழ்வார் கருத்து என்பதைக் காணலாம். மேலே காட்டிய பாடல்களில் ஒன்று சமபந்தி உணவை வலியுறுத்திற்று; மற்றொன்று கலப்புமணத்தை எடுத்துரைத்தது. இவ்விரண்டு பாசுரங்களும், தமிழர் அருள்நெறியை உணர்த்துவன. 6 திருமங்கை ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலே வாழ்ந்தவர். வீரர் குடியிலே பிறந்தவர். இவருடைய தந்தை சோழ மன்னரின் தளபதிகளுள் ஒருவராக இருந்தவர். திவ்வியப் பிரபந்தத்தில், நம்மாழ்வாரைப்போலவே அதிக எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடியிருப்பவர் திருமங்கை யாழ்வார்தான். இவருக்குப் பரகாலன், கலியன், திருமங்கை மன்னன் என்ற பெயர்களும் உண்டு. திருமாலிடம் இணையற்ற பக்தி பூண்டவர்; பாகவதர் களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை அரும்பணியாகக் கொண்டவர்; இதனாலேயே வறுமையடைந்தவர். திருமங்கை ஆழ்வார், பலநூல்களையும் கற்றறிந்தவர்; இவருடைய பாடல்களிலே பழந்தமிழ் நூற்கருத்துக்கள் பலவற்றைப் பார்க்கலாம். இவருடைய பாடல்கள் அனைத்தும் சிறந்த செந்தமிழ் நடையிலே அமைந்தவை. திருமங்கை ஆழ்வார் பாடல்களிலே தமிழகத்துச் சரித்திரச் குறிப்புக்கள் பலவற்றைக் காணலாம். அவர் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை அவர் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார். இவருடைய பாடல்களின் பெரும் பகுதி பெரிய திருமொழி என்னும் தலைப்பிலே காணப்படுகின்றது இப்பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து எண்பத்து நான்கு என்று ஒரு தனிச் செய்யுளில் காணப்படுகின்றது. இப்பெரிய திருமொழியைத் தவிர, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியவைகளும் இவருடைய கவிதைகள். மடல் என்னும் பிரபந்தம் முதல் முதலில் இவரால் இயற்றப்பட்டதென்பதே பலர் கருத்து. ஆழ்வாரின் பாடல்கள் அனைத்தும் நம் உள்ளத்தைக் கவரும் உயர்ந்த பாடல்களாக விளங்குகின்றன. செந்தமிழின் சிறப்பையும் இனிமையையும் காட்டும் சிறந்த பாடல்களாகத் திகழ்கின்றன. திருமங்கை ஆழ்வாருக்குத் தனிச்சிறப்பு ஒன்று உண்டு. இவர்தான் சீரங்கம் கோயிலின் சுற்றுச்சுவர் கட்டியவர்; கோயில் திருப்பணி செய்தவர் என்றும் கூறுகின்றனர். திருமாலின்மேல் மனம் கனிவிக்கும் பாடல்களைப் பாடிப் பரவினார்; திருமாலின் அடியார்களுக்கு அன்னமிடுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்; திருமாலின் பெரிய கோயிலாகிய சீரங்கத்தில் திருப்பணியும் செய்தார். இம்மூன்று காரியங் களையும் செய்த பெரியார் திருமங்கை ஆழ்வார் ஆவார். மங்கை மன்னன் தமிழ் திருமங்கை ஆழ்வார் பாடல்கள் மிகவும் அன்பு சொட்டும் பாடல்கள்; அழகு தவழும் செய்யுட்கள்; படிப்போர் உள்ளத்தைக் கனிவிக்கும் பண்பு நிறைந்த பாடல்கள். திருமங்கை மன்னன் பாடல்களிலே வரலாற்று உண்மைகள் பலவற்றைக் காணலாம்; அறநெறிகள் பலவற்றை அறியலாம்; பழந்தமிழர் பண்பாடுகள் பலவற்றைப் பார்க்கலாம். அவைகள் செம்பாகமான செந்தமிழ்ப் பாடல்கள். வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் என்று தொடங்கும் முதற் பாட்டே நமது உள்ளத்தை உருக்கும் தன்மை பொருந்தியது. மன்னனின் முதல் பத்துப் பாடல்களும் எட்டெழுத்தின் பெருமையை எடுத்துரைப்பன. ஓம் நமோ நாராயணாய என்பதே எட்டெழுத்து மந்திரம். இதைப் பெரும் பேறளிக்கும் மந்திரம் என்று வைணவர்கள் பாராட்டுவார்கள். திருமங்கை மன்னன், முதலில் திருமால் அன்பிலே ஈடுபட வில்லை. உலக இன்பத்திலேயே மிகுதியாகத் திளைத்திருந்தார். பக்தியையும், ஒழுக்கத்தையும் மறந்த பல பணிகளிலே ஈடுபட்டி ருந்தார். எட்டெழுத்து மந்திரத்தை அறிந்து திருமால் அன்பில் மூழ்கியபின்பே அவர் புனிதரானார். உண்மைப் புலவரானார்; அடியாரானார்; அன்பு மயமாகவே ஆகிவிட்டார். தன்னுடைய நிலையை அவர் முதற்பத்திலேயே எடுத்துச் சொல்லி விடுகின்றார். நான் நன்மையை நாடினேன். அதன் மூலம் இன்பத்தை விரும்பினேன். நன்மை வேண்டுமானால் நன்மை செய்ய வேண்டும்; நல்லொழுக்கத்தைப் பின்பற்றவேண்டும் என்ற உண்மையை எண்ணாமல் போனேன். எனக்கு நன்மை வேண்டும் என்பதற்காக எப்பொழுதும் தீமைகளையே செய்து கொண்டு திரிந்தேன். பெண்களின் உருவத்தையே எப்பொழுதும் அழகோவிய மாக எண்ணினேன்; அவர்களைக் காண்பதும் கட்டித் தழுவுவதுமே இன்பம் என்று கருதினேன். அவர்களுடன் எப்பொழுதும் கூடிவாழ்வதே குறைவற்ற இன்பம்; செல்வம்; என்று நினைத்தேன் அவ்வாறே செய்தேன். ஆனால் நான் அடைந்த பயனோ வேறு; இன்பத்திற்கு மாறாகத் துன்பங்களையும் தொல்லைகளையுமே நுகர்ந்தேன். நான் அடைந்த வேதனைகளுக்கு அளவேயில்லை. அவற்றைப் பற்றி நான் ஒன்றும் உரைப்பதற்கு இல்லை. ஊமையன் கண்ட கனவைப்போல அந்த நிகழ்ச்சிகளை என் உள்ளத்திலே அடக்கிக் கொண்டு புழுங்கிச் சாக வேண்டிதுதான். அந்த நாட்கள் அனைத்தும் ஊமையன் கண்ட கனவைக் காட்டிலும் பயனற்ற வையாக ஒழிந்துபோய்விட்டன. இப்போதுதான் உண்மையை உணர்ந்து கொண்டேன். அந்த உண்மையை உரைக்கிறேன் கேளுங்கள். மன்மதனுக்கு - காமனுக்கு அவர்தான் தந்தை; நமது தலைவராக இருப்பவர்; தம்மை நினைத்தவர்கள் - சரணமாக அடைந்தவர்கள் - யாராயினும் அவர்களின் உள்ளத்திலே குடியாக இருப்பவர்; நான் தீவினையில் இருந்து கடைத் தேறுவதற்கு அவருடைய பெயரைக் கண்டறிந்தேன். அப்பெயர் நாராயணா என்னும் பெயர்தான் என்று பாடுகின்றார். அப்பாடலைப் பாருங்கள், படியுங்கள். சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி, ஊமனார் கண்ட கனவினும் பழுதாய் ஒழிந்தன, கழிந்த அந்நாள்கள் காமனார் தாதை, நம்முடை அடிகள், தம்அடைந்தார் மனத்து இருப்பார், நாமம்நான் உய்ய நான்கண்டு கொண்டேன், நாராயணா என்னும் நாமம். இதே பத்தின் மற்றொரு செய்யுளிலே அந்தப் பெயரை நம்புவதனால் - உச்சரிப்பதனால் - உறுதியாக உள்ளத்தால் நினைப்பதனால் கிடைக்கும் பயனை எடுத்துரைக்கிறார் மன்னர். நம்பிக்கை வீண்போகாது; நம்பிக்கையாலும் பிடிவாதத் தாலும் வெற்றிபெற முடியும். எடுத்த செயலை இனிது நிறை வேற்ற முடியும்; இக்கருத்தும் மங்கை மன்னரின் செய்யுளிலே அடங்கிக் கிடக்கின்றது. வைணவர்கள் அனைவரும் அறிந்த பாடல் அது; அன்புடன் பக்திச்சுவை சொட்டும்படி அடிக்கடி பாடிப் பாடி மனமுருகும் பாடல் அதுவாகும். நாலாயிரப் பிரபந்தப் பாடல்களிலே இந்தப் பாடலைத் தலைசிறந்ததாகப் போற்றிப் பாடி வருகின்றனர். இப்பாசுரத்தை முதலில் படிப்போம்; அதன் பின் அதன் அரும் பொருளைக் காண்போம். குலம்தரும்; செல்வம் தந்திடும்; அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரும் செய்யும்; நீள்விசும் அருளும்; அருளோடு பெருநிலம் அளிக்கும் வலம்தரும்; மற்றும் தந்திடும்; பெற்றதாயினும் ஆயின செய்யும்; நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்; நாராய ணாஎன்னும் நாமம். இதுவே அச்சிறந்த பாடல். இதன் பொருள் எளிதிலே விளங்கக்கூடியதுதான். ஆயினும் அதைக் கொஞ்சம் விளக்க மாகப் புரிந்து கொண்டால் நலம். இதற்காகவே அதைச் சிறிது விளக்கிச் சொல்லுகின்றோம். இழிந்த குடியிலே பிறந்தாலும் தாம் பிறந்த குடியை உயர்ந்த குடியாக்கும்; இம்மைக்குரிய செல்வத்தையும் கொடுக்கும்; மறுமைக்கும் வழிகாட்டும் ஞானச் செல்வத்தையும் தாராள மாகத் தரும். அடியவர்கள் அடைகின்ற துன்பங்கள் எல்லாவற்றையும் அழித்துவிடும்; அத்துன்பங்கள் நிலைத்து நிற்காமல் முடிவு பெறும்படி செய்யும். பெரிய இன்பம் நிறைந்த வானுலகத்தையும் அளிக்கும். மிகுந்த அருளுடன் பெரிய நிலவுலக இன்பத்தையும் நிரந்தர மாகக் கொடுக்கும். நாம் நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும். மற்றும் நன்மைகள் - இன்பத்தைத் தருவன - எவை எவை என்று எண்ணுகின்றோமோ அவற்றை யெல்லாம் அளிக்கும். நாம் வெறுத்தாலும், நமது அன்னை நம்மை வெறுக்க மாட்டாள்; நாம் செய்யும் பிழைகளை யெல்லாம் பொருட் படுத்தமாட்டாள்; நம்முடைய வளர்ச்சி ஒன்றையே குறியாய்க் கொண்டு நமக்கு நன்மையையே செய்துவருவாள். அவளைக் காட்டிலும் நமக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வோர் வேறு யாருமில்லை; அவளைப்போலவே நன்மை தரும். அத்தகைய நன்மைதரும் சொல்லை எப்பொழுதும் மறக்காமல் சொல்வதற்கு நான் தெரிந்துகொண்டேன். அது தான் நாராயணா என்னும் பெருமை நிறைந்த பெயராகும். இதுவே இச்செய்யுளின் விளக்கம். இச்செய்யுளை ஒரு முறை திரும்பப் படித்தால் போதும்; நம்மை அறியாமலேநம் உள்ளத்திலே ஒரு வித உணர்ச்சி பிறப்பதைக் காணலாம். இதுதான் செந்தமிழ்ப் பாடலுக்குள்ள சிறந்ததொரு தன்மை. இதனால்தான் தெய்வத் தமிழ் என்று அறிஞர்கள் தமிழ் மொழியைப் போற்றுகின்றனர் போலும். கூறையும் சோறும் மானத்தைக் காக்க உடை; உயிரைப் பாதுகாக்க - அல்லது உடம்பைப் பாதுகாக்க உணவு. இவை இரண்டும் மக்களுக்கு வேண்டுவன. இவற்றை வெறுப்போர் எவரும் இலர். எல்லோரும் இந்த இரண்டுக்குத் தான் பாடுபடுகின்றனர். சோறும் துணியும் கிடைத்தால் போதும் என்று அமைதி அடைவோர் எத்தனையோ பேர் உண்டு. இவையிரண்டும் இருந்தால் எங்கேயாவது மரத்தடியிலாவது படுத்துறங்கலாம் என்று நினைப்போர் உண்டு. சமணர்களிலே ஒரு பிரிவினர் உண்டு; அவர்களுக்குத் திகம்பரர்கள் என்று பெயர்; அதாவது திக்கையே ஆடையாகக் கொண்டவர்கள் திகம்பரர்கள். வெளிப்படையாகச் சொல்லப் போனால் ஆடையில்லாமல் அம்மணமாக இருப்பவர்கள். இந்தத் திகம்பரசாமியர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் உணவும் உடையும் இன்றியமையாதவை. உடையே விரும்பாத இந்தத் திகம்பரர்கள்கூட உணவை வெறுப்பதில்லை. அவர் களுக்கும் உணவு தேவையாகத்தான் இருக்கின்றது. உலகப் பற்றே இல்லாதவர்கள்; ஆசையை முற்றுந் துறந்தவர்கள்; தவத்தையே உயிராகக் கொண்ட முனிவர் குழாங்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் கூட உணவை வெறுப்பதில்லை. காயோ, சருகோ, பழமோ, கிழங்கோ, விதைகளோ உண்டு நீர் அருந்தி வாழத்தான் விரும்பினார்கள்; அவர்கள் பருத்தி நூல் ஆடையோ, பட்டு நூல் ஆடையோ, அணியாவிட்டால் கூட மரவுரியை ஆடையாகத்தான் கொண்டார்கள். இவ்வாறு கதைகளிலே, புராணங்களிலே, இதிகாசங்களிலே படித்திருக்கின்றோம். எல்லாவுயிர்களுக்கும் உணவு இன்றியமையாதது; மக்களுக்கு உணவோடு கூடிய உடையும் இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டும் எல்லோர்க்கும் தாராளமாகக் கிடைக்குமானால் மனித சமுதாயத்திலே சாந்தி நிலவும் என்பதிலே ஐயம் இல்லை. உலகிலே இன்று குடிகொண்டிருக்கும் அமைதியின்மை அடியோடு அழிய வேண்டுமானால், உணவுப் பஞ்சம் ஒழிய வேண்டும்; உடைப்பஞ்சம் மறையவ்ணடும். இவை இரண்டின் பஞ்சமும் போகவேண்டும் என்று சொல்லுவதை விட, இவை இரண்டும் எல்லா மக்களுக்கும் தட்டுப்பாடில் லாமல் தாரளமாகக் கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் - சாந்தி - சமாதானம் - அமைதி நிலவும். உலகிலே உணவு இல்லாமல் இல்லை. சில நாடுகளில் அந்நாட்டு மக்களின் தேவைக்குமேல் அதிகமான உணவுப் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பண்டங்கள் அந்நாட்டு மக்களின் தேவைக்குப் போதுமானவையாக இல்லை. சில நாடுகளில் மக்களுடைய தேவைக்குப் போதுமான அளவு உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அவை மக்களுக்குப் போதுமான அளவு பங்கிட்டுக் கொடுக்கப்படுவ தில்லை. இவ்விதமான மூன்று நிலையும் மாறி எல்லோர்க்கும் போதுமான அளவு உணவு கிடைக்கும் படியான நிலைமை ஏற்பட வேண்டும். எல்லோரும் போதுமான அளவு உண்டு, உடுத்துவாழ வேண்டும். இதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் வழிசெய்ய வேண்டும். இச்செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் அரசாங்கம்தான் உண்மையில் சிறந்த அரசாங்கமாகும். மக்கள் அனைவரும் உணவும் உடையும் பெறவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அமைதியுடன் வாழமுடியும் என்பதை நமது நாட்டு - தமிழ்நாட்டுப் பேரறிஞர்கள் பாடி வைத்திருக்கின்றனர். உலகப் பற்றை விடுத்து - இறைவனிடம் அன்பு செலுத்தும் அடியார்கள் என்பவர்களும் உணவும் உடையும் வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியிருக்கின்றனர். அவ்வாறு பாடியிருக்கும் பெரியார்களில் திருமங்கை ஆழ்வாரும் ஒருவர். பசித்தவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்; அவர்கள் இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று எண்ணிப் பார்க்கர்மல் பசிக் கொடுமையைப் போக்கிக் கொள்ள எதையும் செய்யத் துணிவார்கள். சோற்றுக்கும் துணிக்கும் கவலையில்லாமல் வாழ்கின்ற வர்கள் நேர்மை தவறமாட்டார்கள்; கீழ்த்தரமான காரியங் களைச் செய்யத் துணியமாட்டார்கள்; எதையும் ஆய்ந்து ஓய்ந்துதான் செய்யத் தொடங்குவார்கள். இந்த உண்மையை உள்ளத்திற்கொண்டுதான் முற்றத் துறந்த முனிவர் குழாங்களும் உணவும் உடையும் அவசியம் என்று எண்ணினர். beoahnd!கடி ஆர்கலி நம்பீ! நின்னையே நினைந்து இங்கு இருப்பேன், கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலைப் பிழைத்து குடிபோந்து உன்அடிக் கீழ்வந்து புகுந்தேன்; கூறை, சோறுஇவை தந்துஎனக்கு அருளி அடியே னைப்பணி ஆண்டுகொள் எந்தாய்! அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே! இது திருமங்கை மன்னன் பாட்டு; திருமங்கை மன்னன் துணிக்கும் சோற்றுக்கும் திண்டாடினவர் அல்லர். அவருக்கு உடைப் பஞ்சமோ, உணவுப் பஞ்சமோ ஏற்பட்டது என்று கூறமுடியாது. ஆயினும், அவர் எனக்குக் கூறையும் சோறும் கொடுத்து என்னைப் பணி கொள்வாய் என்று திருமாலை நோக்கி வேண்டிக்கொள்ளுகின்றார். இதன் கருத்து மக்கள் அனைவர்க்கும் கூறையும் சோறும் வேண்டும் என்பதுதான். உணவுக்கும், உடைக்கும் திண்டாடித் தெருவில் நிற்கும் ஏழை மக்களின் வாழ்க்கையைக் கண்டுதான் அவர் இவ்வாறு பாடியிருக்கின்றார். உடையும் உணவும் பெறாத மக்களிடையிலே நிலவும் ஒழுக்கக் கேடுகளைக் கண்டுதான் ஆழ்வார் இவ்வாறு ஆண்டவனிடம் வரங் கேட்கின்றார். உலகை ஓரடியால் அளப்பதற்காக நீண்ட உருக்கொண் டவனே; சிறந்த பாற்கடலிலே பள்ளிகொண்டிருக்கும் நம்பியே! எப்பொழுதும் உன்னையே எண்ணிக் கொண்டிருக்கிறேன் நான். இத்தகைய என்னை, காவல் பொருந்திய காளையர் களாகிய ஐம்புலன்களும் புகுந்து என்னைக் காத்த அந்தக் காவலிலிருந்து தப்பித்து வந்தேன். (ஐம்புலன்களின் இச்சைப்படி செல்லாமல் தப்பித்தேன்.) அந்த ஐம்புலக் காவலர்கள் இருக்கும் இடத்தை விட்டுக் குடிபெயர்ந்து, உன் பாதத்தின் கீழேயே குடியேறினேன். ஆதலால் இன்றியமையாத உடை, சோறு இவற்றை எனக்குக் கொடுத்தருள்வாய். யான் வேறு நெறியிலே செல்லாமல் உனக்குப் பணி செய்யும்படி என்னை ஆட்கொள்வாயாக எந்தையே! திருவழுந்தூரின் மேற்றிசையிலே வாழும் எம் தலைவனே! இதுதான் மேலே காட்டிய பாட்டின் பொருளாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பண்டைத் தமிழ் மக்களின் தத்துவம் இச்செய்யுளிலே அமைந்து கிடக்கின்றது. இவ்வாறு உலக மக்களின் நல்வாழ்வை நாடுவதே தமிழர்களின் அருள் நெறியாகும். 7 முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவருக்கும் முதலாழ்வார்கள் என்று பெயர். இவர்கள் ஆழ்வார்களிலே காலத்தால் முற்பட்டவர்கள். மூவரும் ஒரே காலத்தினர். இவர்கள் இருந்த காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இடைக்காலம். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலே பிறந்தவர். பூதத் தாழ்வார் திருக்கடன் மல்லை என்னும் மகாபலிபுரத்திலே பிறந்தவர். பேயாழ்வார் சென்னை திருவல்லிக்கேணியிலே பிறந்தவர். மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததாகக் கதையுண்டு. பொய்கையாழ்வார் பாடியது முதல் திருவந்தாதி. பூதத்தாழ்வார் பாடியது இரண்டாந் திருவந்தாதி. பேயாழ்வார் பாடியது மூன்றாந் திருவந்தாதி. இவ்வந்தாதிகள் மூன்றும் வெண்பாக்களால் ஆகியவை. ஒவ்வொன்றும் நூறு நூறு வெண்பாக்களைக் கொண்டவை. முதலாழ்வார்களின் பாடல்கள் - வெண்பாக்கள் அனைத்தும், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்ற நேரிசை வெண்பாக்களாகவே அமைந்திருக்கின்றன. படிக்கப் படிக்க இனிக்கும் பைந்தமிழ் வெண்பாக்கள். முதலாழ்வார்களின் அந்தாதிகளிலே இயற்கையே இறைவன் என்ற உண்மையைக் காணலாம். அருளே இறைவன்; அன்பே இறைவன்; அறிவே இறைவன் என்ற உயர்ந்த கருத்துக்களைக் காணலாம். அரியும் அரனும் ஒன்று என்ற உண்மையை இவர்கள் பாடல்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. எல்லாம் ஒன்றே என்ற சமரசக் கருத்தை இவர்கள் வலியுறுத்திப் பாடியிருக் கின்றனர். முதலாழ்வார்கள் காலத்திலே சைவ வைஷ்ணவ வேற்றுமை - வெறுப்புணர்ச்சி - வளர்ந்திருக்கவில்லை. ஒரே கடவுள்தான் அரியாகவும் காட்சியளிக்கிறார்; அரனாகவும் காட்சியளிக் கிறார் என்ற நம்பிக்கையே பக்தர்களிடம் குடி கொண்டிருந்தது. முதலாழ்வார்களின் பாடல்கள் பல இவ்வுண்மையைக் காட்டுகின்றன. முதலாழ்வார்களின் பாடல்கள் தமிழின் சிறப்பையும், தமிழரின் பெருமையையும் எடுத்துக்காட்டுகின்றன; முதலாழ் வார்களின் பாடல்களிலே தமிழின் இனிமையையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு களிக்கலாம். நல்வாழ்க்கை முயற்சியால் வாழ்கின்றவனே சிறந்தவன்; உழைப்பைக் கொண்டு வாழ்கின்றவனே உயர்ந்தவன். உழைத்து வாழ்கின்ற வனை ஒருவரும் ஒன்றும் செய்யமுடியாது; அவன் யாருக்கும் அஞ்சி நடுங்க வேண்டியதில்லை; உழைப்பே அவனுக்கு உற்ற துணை. உடல் உழைப்பும் இல்லை; உள்ளத்தில் ஓட்டமும் இல்லை. உடலும் உறக்கத்தை விரும்புகின்றது; உள்ளமு ம் ஒன்றையும் எண்ணாமல் உடல் சுகத்தின் இன்பத்தை மட்டும் நாடிச் செல் கின்றது. எப்பொழுதும் உண்பதும் உறங்குவதும் தவிர வேறு வேலையில்லை. இப்படிப்பட்டவர்களே சோம்பர் என்பவர்கள். இவர்கள் தாம் சுத்த உதவாக்கரைப் பேர்வழிகள். இந்த உதவாக்கரைப் பேர்வழிகளின் வாழ்க்கை நேர்மை யான வாழ்க்கையாகவும் இருக்கமுடியாது. முன்னோர் தேடி வைத்த செல்வம் இருந்தால் அவற்றால் உண்டு கொழுத் திருப்பர்; அது தீர்ந்தபின்னர் அல்லலுக்குத் தான் ஆளாவார்கள். பாழும் வயிறு இருக்கின்றதே அது சும்மாவிடாது. ஆளை அவதிப்படுத்திக்கொண்டுதான் இருக்கும். எதையாவது கொண்டுவந்து என் குழியிலே கொட்டு என்று தொல்லைப் படுத்திக்கொண்டு இருக்கும். இந்த வயிறு படுத்தும் பாட்டால் அந்தச் சோம்பேறிகள் எதையாவது செய்துதான் தீரவேண்டும். உடலாலும் உள்ளத் தாலும் உழைத்துப் பழகாத அவர்கள் என்ன தான் செய்வார்கள்? பிறர் உழைப்பைக் கொள்ளை கொள்ளத்தான் எண்ணுவார்கள்; பிறர் உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எப்படி யாவது கவரத்தான் கருதுவார்கள். இதை எப்படிச் செய்யலாம் என்பதிலே அவர்கள் மனம் கொஞ்சம் சுறுசுறுப்புக் காட்டத்தான் செய்யும். இப்படிப் பிறர் உழைப்பால் சேர்த்த பொருளைக் கவர்ந்து வாழ்க்கை நடத்த விரும்புவோர் வெறுக்கத் தக்க மனிதர்கள். இவர்களால் மனித சமுதாயத்திற்கு நன்மையில்லை; தீமைதான் தோன்றும்; பெருகும். நல்லவரோடு நட்புக்கொள்வதுதான் சிறந்தது. நல்லவர்கள் பிறர் கெட்டுப்போவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்; கெட்ட வழியிலே நடப்பவர்களை - நடப்பதற்கு முந்துகின்ற வர்களைத் தடுத்து நல்வழியிலே செலுத்தத் துணிவார்கள். ஆகையால்தான் நல்லார் நட்பு வேண்டும் என்று அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். நல்லவர் தொடர்பு இல்லாமல் கீழாரோடு நட்புச் செய்தால் கடைத்தேற முடியாது. கீழோர் என்பவர்கள் கெட்ட குணம் நிறைந்தவர்கள்; கூடா ஒழுக்கம் உள்ளவர்கள்; பிறருடைய இன்பத்தைப் பற்றியோ, துன்பத்தைப் பற்றியோ, சிறிதும் கவலை கொள்ளாதவர்கள்; தாம் மட்டும் உண்டு உறங்கி உடலை வளர்த்தால் போதும் என்று நினைப்பவர்கள். இத்தகைய கீழ்த் தரமானவர்களுடன் நட்புச் செய்தால், இந்தக் கிழ்த் தரமான புத்திதான் உண்டாகும். ஆதலால் கீழ்த்தரமான மக்களுடன் இணைந்து நட்புக்கொண்டு - தொடர்பு வைத்துக்கொண்டு வாழக்கூடாது என்று முன்னோர்கள் மொழிந்திருக்கின்றனர். உயர்ந்த தன்மையுள்ள உத்தமர்கள் நட்பைத் தேடிப் பிடிக்க வேண்டும். அவர்களுடன் பழக வேண்டும். பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல், நம்மிடம் நல்ல குணங்கள் இல்லாமல் இருந்தாலும் நாளடைவில் நாமும் நல்லவராவோம். நல்லவர்கள் என்பவர்கள் யார்? தமக்காகவே வாழ்க்கை நடத்துகின்றவர்களைப் பற்றி யாரும் பொருட்படுத்துவ தில்லை; ஊர் வம்பு நமக்கேன்; ஊருக்காக உழைப்பதில் என்ன புண்ணியம்; நாம் உண்டு; நமது வேலையுண்டு; ஒரு வம்பும் நமக்கு வேண்டாம் என்று இருப்பவர்கள் பலர் உண்டு. இவர்கள் கெட்டவர்கள் அல்லர். நல்லவர்கள் என்று கொண்டாடத் தக்கவர்களும் அல்லர். இவர்களைப் பற்றி யாரும் எதுவும் பேசமாட்டார்கள். பிறருக்குத் தீங்கு செய்பவர்களைக் கெட்டவர்கள் என்று உலகம் தூற்றாமல் போகாது. தந்நலம் ஒன்றையே கருதி மற்றவர் களின் வாழ்விலே கைவைப்பவர்களை அறிஞர்கள் வெறுப் பார்கள்; அனைவரும் தூற்றுவார்கள். நாமும் வாழவேண்டும்; நம்மைப்போல் ஏனை யோரும் வாழவேண்டும். ஏனையோரும் இன்புற்று வாழ நம்மால் இயன்ற பணியைச் செய்யவேண்டும்; என்ற எண்ணத்துடன் உழைப்பவர் களே உயர்ந்தவர்கள்; உத்தமர்கள்; மனிதருள் மாணிக்கமென்று போற்றத்தக்கவர்கள். இத்தகைய உத்தமர்களுடன் உறவுகொண்டு வாழ்வது தான் சிறந்த வாழ்வு; தீங்கற்ற தூய வாழ்வுக்கு இத்தகைய உறவுதான் வழிகாட்டும். ஆகையால் நேர்மையாக வாழ விரும்புவோர், உயர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வதைத்தான் விரும்புவார்கள். பிறர் பொருளை விரும்பாமல் - கீழாரோடு சேராமல் - உயர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றவர்கள் ஆனாலும் அவர்கள் உள்ளத்திலே தெய்வ நம்பிக்கை குடிகொண்டிருக்கு மானால் அது இன்னும் பெருமையளிக்கும். பொன்மலர் மணம் பெற்றுப் பொலிவதுபோல் ஆகும். உள்ளம் உலக பாசத்தில் மயங்கிக் கோணல் வழியில் செல்லத் தொடங்கினால், அப்பொழுது அத்தெய்வபக்தி குறுக்கிட்டுத் தடைசெய்யும் உண்மையான தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் கூடா ஒழுக்கத்தை நாடமாட்டார்கள். நல்ல நெறியிலே வாழ்க்கை நடத்தத்தான் விரும்புவார்கள். ஆதலால் தெய்வ நம்பிக்கையும் இன்றியமை யாதது என்று இயம்பினர். இந்த உண்மையைப் பொய்கையாழ்வார் பாட்டு ஒன்று உணர்த்துகின்றது. தன்னுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்று கூறும முறையிலே, உலகினர் இப்படித்தான், வாழ வேண்டும் என்னும் கருத்தை வெளியிட்டுள்ளார். நயவேன் பிறர்பொருளை; நள்ளேன் கீழாரோடு; உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; - வியவேன் திருமாலை அல்லது தெய்வம்என்று ஏத்தேன்; வருமாறுஎம் நம்மேல் வினை? இதுவே பொய்கையாழ்வார் பாட்டு. பிறர் பொருளை விரும்பமாட்டேன்; கீழான தன்மை யுள்ளவர்களுடன் நட்புக்கொள்ளமாட்டேன்; உயர்ந்தவரோடு சேர்ந்து வாழ்வேனே அல்லாமல் மற்றவர்களோடு சேரமாட்டேன். திருமாலைத் தவிர வேறு தெய்வத்தைத் தெய்வம் என்று புகழமாட்டேன்; வணங்கமாட்டேன். ஆதலால் நம்மை நாடிப் பிறப்பு இறப்புத் துன்பத்தைத் தரும் வினை இனி வரமுடியாது. இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வத்தின் மேல் உறுதியான நம்பிக்கை வேண்டும். அது தான் நல்ல நம்பிக்கையும் சிறந்த பக்தியும் ஆகும். இந்த உண்மையை உரைப் பதே திருமாலைத் தவிர வேறு தெய்வத்தைப் புகழமாட்டேன் என்னும் கருத்து. திருமாலின்மேல் இத்தகைய உறுதியான அன்பு கொண்டு ஆழ்வார் பிறதெய்வத்தை வெறுப்பவர் அல்லர் என்பதை அவருடைய பாடலிலே காணலாம். அரியும் சிவனும் ஒன்று என்பதே அவர் கருத்து. அரியை வணங்குவோர் அரனை வெறுக்கவேண்டாம். அரனை வணங்கு வோர் அரியைப் பழிக்கவேண்டாம். அரியைப் பழித்தால் அரனைப் பழித்ததாகவே ஆகும்; அரனைப் பழித்தால் அரியைப் பழித்ததாகவே முடியும். ஆதலால் தெய்வ வெறுப்பு வேண்டாம் என்னும் கருத்துள்ளவர் பொய்கையாழ்வார். இதனை ஏற்றான்,புள் ஊர்ந்தான், எயில் எரித்தான், மார்விடந்தான், நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றுஒருபால் மங்கையான், பூமகளான், வார்சடையான், நீள்முடியான், கங்கையான், நீள்கழலான் காப்பு. என்ற வெண்பாவால் காணலாம். ஏற்றான், எயில் எரித்தான், நின்றான், கூற்று ஒருபால் மங்கையான், வார்சடையான், கங்கையான் என்பன சிவபிரானைக் குறிப்பன புள்ஊர்ந்தான், மார்விடந்தான், நிழல்மணி வண்ணத் தான், பூமகளான், நீள்முடியான், நீள் கழலான் என்பவை திருமாலைக் குறிப்பவை. ஆழ்வாரின் சமரச நோக்கத்தைக் காட்டும் பாடல் இது. மேலே காட்டிய பாடல்களில் பொய்கையாழ்வாரின் உறுதியான உள்ளன்பைக் காணலாம். மத வெறுப்போ, தெய்வ வெறுப்போ இல்லாத சமரச மனோபாவத்தைக் காணலாம். ஒரு தெய்வத்தின்பால் உறுதியான பக்தி கொண்டவர் களிலே பலர் பிறர் தெய்வத்தை இகழ்வதையே காண்கிறோம். உண்மையான பக்தியுள்ளவர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். தெய்வத்தை வணங்குவோர், தெய்வ நிந்தனை செய்வது அறிவுடைமை ஆகாது. இந்த உண்மையைப் பொய்கையாழ்வார் பாடல்கள் காட்டுகின்றன. தமிழும் தமிழரும் தமிழுக்கு அடைமொழிகள் பல உண்டு. செந்தமிழ், பைந்தமிழ், கன்னித் தமிழ், வண்தமிழ், ஒண்தமிழ், தென் தமிழ், தெய்வத்தமிழ், இன்தமிழ் என்று பலப்பல சிறப்புச் சொற்களைச் சேர்ந்து வழங்குகின்றனர். தமிழை மூன்று பிரிவாகப் பிரித்து இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் என்பதைக் குறிக்க முத்தமிழ் என்றும் வழங்குவர். ஆழ்வார்களிலே - முதலாழ்வார்களிலே ஒருவரான பூதத்தாழ்வார், தமிழுக்கு இன்னும் சிறப்பான அடைமொழி கொடுத்து அழைக்கின்றார். பூதத்தாழ்வாருக்குத் தமிழ் மொழி யில் உள்ள ஆர்வம் அளவு கடந்தது. தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது; தமிழால்தான் கடைத்தேற முடியும்; கற்றவர் அறிவை நேர்மையான நெறியிலே செலுத்தும் தன்மை தமிழுக்குத்தான் உண்டு என்பது ஆழ்வாரின் நம்பிக்கை. ஆதலால் தமிழை ஞானத் தமிழ் என்று மற்றொரு பெயரிட்டு அழைக்கின்றார் அவர். அவர் தமிழைப் புகழ்ந்து பேசுவதோடு மட்டும் நிற்க வில்லை. தமிழன் சிறந்தவன் என்ற கருத்தும் கொண்டவர். தமிழை மொழியாகப் படைத்திருக்கும் காரணத்தால் தமிழைத் தாய்மொழியாகப் படிக்கும் மொழியாகப் பெற்றிருக்கும் காரணத்தால் தமிழன் சிறந்தவனா? அல்லது இயற்கையிலேயே நீண்டகாலப் பண்பாடுகளைப் பெற்றிருப்பதன் காரணத்தால் தமிழன் சிறந்தவனா? என்பதைப் பற்றி ஆராய்வதற்குத் தலையிட வேண்டாம். எக்காரணத்தாலோ தமிழன் சிறந்த பண்பாடுள்ளவன்; தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலேயே ஒரு பெருமையுண்டு என்று எண்ணுகிறார் பூதத்தாழ்வார். தமிழ் மொழியை ஞானத் தமிழ் என்று அழைத்திருப்பதும், தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்வதும் தமிழர்க்குப் பெருமை தருவதொரு செய்தி. நம் முன்னோர்கள், தமிழ் மொழியிடத்தும், தமிழரிடத்தும் எவ்வளவு மதிப்பும் அன்பும் வைத்திருந்தார்கள் என்பதை விளக்குவதாகும். பூதத்தாழ்வார் செய்யுட்கள், பிரபந்தத்திலே இரண்டாந் திருவந்தாதி என்ற பெயரில் அமைந்திருக்கின்றன. அவ்வந் தாதியின் முதல் வெண்பாவிலேயே தமிழின் பெருமையைச் சொல்லியிருக்கின்றார். அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக, இன்புஉருகு சிந்தை இடுதிரியா, - நன்புஉருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு; ஞானத் தமிழ்புரிந்த நான். ஞானத்தை - அறிவை - பெருக்கும், தமிழை விரும்பிய நான், அறிவாகிய சுடர்விளக்கு ஒன்றைக் கொளுத்தினேன். அந்தச் சுடர் விளக்கை எப்படி ஏற்றினேன் தெரியுமா? அன்பையே அகலாக - எண்ணெய், திரி முதலியவற்றைத் தாங்கும் கருவியாக அமைத்தேன்; அன்பின் முதிர்ச்சியான ஆசையையே நெய்யாகக் கொண்டேன்; எம்பெருமானை எண்ணி இன்பத்தால் உருகுகின்ற உள்ளத்தையே எண்ணெயில் இட்ட திரியாகக் கொண்டேன். இவ்வாறு தகழி, நெய், திரி முதலியவற்றைச் சேர்த்து, நன்றாக மனம்உ ருகி ஞான ஒளியாகிய விளக்கைத் திருமாலுக்காக ஏற்றினேன். இதுவே இப்பாடலில் அமைந்த பொருள் இத்தகைய ஞானச் சுடர் விளக்கேற்றும் இயல்பை அளித்தது தமிழ்தான் என்று சொல்கிறார்; தமிழ் மொழியை நான் அறிந்திரா விட்டால், படித்திராவிட்டால் எனக்கு அறிவு வளர்ந்திருக் காது; ஞானச்சுடர் விளக்கை என்னால் ஏற்றியிருக்க முடியாது என்பதே ஆழ்வார் கருத்து. ஞானத் தமிழ்புரிந்த நான் என்ற தொடரிலே இக்கருத்து அமைந்திருப்பதைக் காணலாம். ஞானத்தைத் தரும் தமிழாலேயே நான் இந்த ஞானத்தைப் பெற்றேன் என்று ஆழ்வார் மனமார - வாயாரக் கூறிக் களிக்கின்றார். முதற் செய்யுளிலே இந்த உண்மையை அவர் உரைத்திருப்பதால் தமிழ்தான் அவருக்கு ஞானத்தைத் தந்தது; தமிழால் தான் அவர் திருமாலை வணங்கும் பேறு பெற்றார் - அறிவு பெற்றார் என்ற உண்மையைக் காணலாம். யானே தவம்செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவம்உடையேன்; எமபெருமான் - யானே இரும்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்; பெருந்தமிழன் நல்லேன் பெரிது என்பது இரண்டாம் திருவந்தாதியின் 74-ஆவது பாட்டு. ஞானத் தமிழை விரும்பினேன் என்று முதல் வெண்பாவில் கூறியதையும், இவ்வெண்பாவையும் இணைத்துப் பார்த்தால் தமிழின் சிறப்பும், தமிழன் பெருமையும் விளங்கும். யானே பெரிது; பெருந் தமிழன்; நல்லேன்; எம்பெருமான் யானே தவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவம் உடையேன்; இரும்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் என்று பதங்களைச் சிறிது மாற்றிப் பொருள் கொண்டால் இப்பாட்டின் சிறப்பு விளங்கும். நானே மிகவும் சிறந்த தமிழன், தமிழனாயிருப்பதனால் நல்லவனும் ஆனேன்; எம்பெருமானே! யானே சிறந்த தவத்தைச் செய்தவன் ஆனேன்! ஏழ்பிறப்பிலும் எப்பொழுதும் நான்தான் எல்லோரையும் விடச் சிறந்த தவத்தை உடைய வனாக இருக் கின்றேன். சிறந்த - பெரிய தமிழிலே நல்ல பாமாலை உன் இரண்டு பாதங்களிலும் சூடும்படி கூறினேன் - இதுவே இப்பாடலின் பொருள். யானே பெரிது பெருந் தமிழன்; நல்லேன் என்று ஆழ்வார் கூறுவது நம் உள்ளத்தைத் தொடுகின்றது. தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவதிலே ஆழ்வார் எவ்வளவு பெருமிதம் அடைகிறார் என்பது தான் சிந்திக்கத்தக்கது. தமிழர்கள் பலர் இருக்கலாம்; பலரும் தம்மைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் யானே மிகவும் சிறந்த தமிழன்; நல்ல தமிழன் என்று எல்லோரும் சொல்லிக் கொள்ள முடியுமா? என்பது தான் சிந்திக்கத்தக்கது. தமிழர்க்குரிய பண்பாடுகளைப் பெற்றவர்கள்தாம் சிறந்த தமிழர்களாக இருக்க முடியும். தமிழர் பண்பாட்டை மறந்தவர்கள் பெயருக்குத்தான் தமிழர்களாயிருக்க முடியும்; உண்மைத் தமிழர்களாய் இருக்க முடியாது. தமிழர் பண்பாடு என்பது உடையிலோ உணவிலோ அடங்கியிருக்கவில்லை; பண்பிலே - செயலிலேதான் அடங்கி யிருக்கின்றது; பிறர் துன்பத்தைப் போக்க முயலுதல், நட்புப் பாராட்டல், மக்கள் முன்னேற்றத்தோடு தான் தம் முன்னேற்றமும் அடங்கியிருக்கின்றது என்ற உண்மையை உணர்தல், மக்கள் சமுதாயம் பசியும் பிணியும், பகையும் இன்றி ஒன்றுபட்டுவாழ உழைத்தல் இவையே பழந்தமிழர் பண்பாடாகும். இப்பண்பாடுகளுடன், தமிழை விரும்பிப்போற்றிக் கற்றிருக்க வேண்டும். தமிழர் பண்பாட்டையும், தமிழ் மொழி யையும் உணர்ந்திருப்பவர்களே மிகச் சிறந்த தமிழர்களாக நல்ல தமிழர்களாக இருக்க முடியும் என்பதே ஆழ்வாரின் பாடல்கள் நமக்குப் போதிக்கும் பாடம். மேலே நாம் எடுத்துக்காட்டிய இரண்டு வெண்பாக்களை யும் படிப்போர், அவற்றின் கருத்துணர்வோர் - இந்த முடிவுக்குத் தான் வரக்கூடும், இதில் ஐயம் இல்லை. இப்பாடல்கள் மறைமுகமாக மற்றவர்களுக்கும் அறிவுரை கள் கூறுகின்றன. தமிழை விரும்பிப் படியுங்கள்; அறிவு பெறலாம்; தமிழர் பண்பை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழலாம். நல்ல தமிழர்களாகவும் வாழலாம் என்பவை தாம் அவ்வறிவுரைகள். ஆழ்வாரின் இந்த அறிவுரைகள் தமிழர் களால் போற்றவும், பாராட்டவும், பின்பற்றவும் தக்கவையாகும். நல்லோர்க்கு எல்லாம் ஒன்றே உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் - பரந்த நோக்கம் உள்ளவர்கள் யாரிடமும் வெறுப்புக் காட்டமாட்டார்கள்; எந்த மதத்தினரிடமும், எந்த மொழியினரிடமும், இனத்தினரிடமும் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள்; எல்லோரையும் மக்களாகக் கருதி அன்பு பாராட்டுவார்கள். இதுதான் உயர்ந்த மனிதப் பண்பாகும். இத்தகைய உயர்ந்த பண்புள்ளவர்கள் ஒரு சிலரைத் தான் காண முடியும்; இவர்கள் கோடியில் ஒருவராகத்தான் இருப்பார்கள். இத்தகைய ஒப்பற்ற உயர்ந்த மனிதர்கள் பண்டும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். இவர்கள் இன்ன நாட்டில் தான் இருப்பார்கள்; இன்ன நாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதும் இல்லை. எல்லா நாட்டிலும் இருந்தார்கள்; இருக் கின்றார்கள்; இருப்பார்கள். மனிதருக்குள் மாணிக்கம் என்று பாராட்டப்படுவோர் இவர்கள்தாம். இத்தகைய மாண்புள்ள மனிதர்கள் தாம் உண்மையான கடவுள் அன்பர்களும் ஆவார்கள். எல்லா மக்களையும் நேசிப்பவர்கள் - எல்லா மக்களுக்கும் வேற்றுமை பாராட்டாமல் நன்மை செய்கின்றவர்கள் நாத்திகராகக்கூட இருக்கலாம்; கடவுளைப் பற்றிய சிந்தையே இல்லாதவர் களாகக்கூட இருக்கலாம். மத நம்பிக்கை அற்றவர்களாகக்கூட இருக்கலாம். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் அன்புகொண்டு, மக்களுக்குப் பணிபுரியும் இவர்கள்தாம் உண்மையான கடவுளன்பர்கள்; உண்மையான மத ஒழுக்கம் உள்ளவர்கள். எந்த மதக் கொள்கை யை எடுத்துக்கொண்டாலும், மக்கட் பணி செய்பவர்களை மதத்திற்கு மாறானவர்கள் என்று விலக்குவதில்லை. மக்கட் பணியே கடவுள் தொண்டு என்பதை ஒப்புக் கொள்ளாத மதங்கள் ஒன்றுமேயில்லை. உண்மையான அன்புள்ளவர்கள் - மனித குலத்தை நேசிப்பவர்கள் மக்களிடம் எக்காரணங்களாலும் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். இதுபோலவே உண்மையான கடவுள் பக்தர்களும் - கடவுள் அடியார்களும் எக்கடவுளையும் வெறுக்க மாட்டார்கள்; பழிக்க மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாக் கடவுளும் ஒரு கடவுளின் உருவாகவே தோன்றும். எத் தெய்வத்தைக் கண்டாலும் அதை எம்பிரான் உருவமென்றே எண்ணுவார்கள். உண்மையான கடவுள் அன்பர்கள் எல்லாக் கடவுளையும் ஒரே கடவுள் என்று எண்ணுவது போலவே, உண்மையான மத பக்தர்களும் ஏனைய மதங்களைப் பழிக்கமாட்டார்கள்; ஏனைய மதத்தினரை வீண் வம்புக்கு இழுக்கமாட்டார்கள். எம்மதமும் சம்மதம் எனக் கருதுகின்றவர்களே உண்மையான மதவாதிகள்; மத தத்துவத்தை - உண்மையை - உணர்ந்தவர்கள் ஆவார்கள். எல்லாத் தெய்வங்களும் ஒன்று என எண்ணும் குணம் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை; எல்லா மதங்களும் உண்மையான அடிப்படைக் கருத்தில் ஒன்றுதான் என்று நினைக்கும் தன்மையும் அவ்வளவு எளிதில் வந்து விடுவ தில்லை. மிகவும் பண்பட்ட பக்தர்கள் கடவுளை வணங்குவ தோடுதான் நிற்பார்கள்; வேறு கடவுளை நிந்தனை செய்வதில் இறங்க மாட்டார்கள். மிகவும் பண்பட்ட மதவாதிகள் தமது மதக்கொள் கைகளைப் பின்பற்றுவதோடு நிற்பார்கள்; பிறமத வெறுப்புக் குழியில் இறங்கமாட்டார்கள். இந்த உண்மையான பண்பாட்டைச் சிறந்த பக்தர்கள் பலரிடம் காணலாம்; முதலாழ்வார்களில் ஒருவராகிய பேயாழ்வார் இத்தகைய உயர்ந்த பண்பாடுள்ளவர். அவர் வைணவ பக்தியிலே சிறந்தவர். திருமாலை வழிபடு தெய்வமாகக் கொண்டவர். ஆயினும், சிவபெருமானையும் திருமாலையும் அவர் ஒன்றாகவே காண்கிறார். அவருடைய கண்களுக்குத் திருமால் உருவம் சிவன் உருவமாகவும் காணப்படுகின்றது. இதுதான் உண்மையான கடவுள் அன்பு என்பது. தாழ்சடையும், நீள்முடியும், ஒள்மழுவும், சக்கரமும், சூழ்அரவும், பொன்நாணும் தோன்றுமால்; - சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து. இது நாலாயிரப் பிரபந்தத்தில், இயற்பா மூன்றாம் திருவந்தாதியிலுள்ள பாட்டு, வெண்பா. பேயாழ்வார் தூய்மையான உள்ளத்துடன், அன்பு கலந்த நெஞ்சுடன் தம் ஞானக் கண்களால் திருமாலைப் பார்க்கின்றார். திருமாலின் தலையிலே தொங்கும் சடைகள் காணப் படுகின்றன. கையிலே ஒளிபொருந்திய மழுப்படை காணப்படு கின்றது. சக்கராயுதமும் காணப்படுகின்றது. கை, இடை முதலிய அவயவங்களிலே பாம்புகள் சுற்றப்பட்டிருப்பது காணப் படுகின்றன. இடையிலே பொன்னாலாகிய கயிறு சுற்றப் பட்டிருப்பது காணப்படுகின்றது. ஆதலால் சுற்றிலும் அருவிகள் திரண்டு பாய்கின்ற திருமலையாகிய வேங்கட மலையில் வாழும் எம் தந்தைக்குச் சிவன், திருமால் என்னும் இரண்டு உருவும் ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. இதுவே ஆழ்வார் கண்களுக்குத் தெரியும் திருமால் வடிவம். தாழ்சடை சிவபிரானைக் காட்டும்; நீள்முடி திருமாலைக் காட்டும்; மழுப்படை சிவனைக் காட்டும்; சக்கராயுதம் திருமாலைக் காட்டும்; பாம்பு அணிகள் சிவனைக் காட்டும்; பொன்கயிறு திருமாலைக் காட்டும். இதுதான் உண்மையான கடவுளன்பர்கள் இறைவனைக் காணும் காட்சியாகும். இத்தகைய அன்புள்ளங்கொண்ட ஆழ்வார் அந்த இறைவன் அருளைப் பெறுவதற்கு வழியும் கூறுகின்றார். இறைவனைக் காணவேண்டும் என்பதிலே உண்மையான நம்பிக்கையும், உறுதியும், பணியும் இருந்தால் போதும்; அங்கு இங்கு என்று அலைய வேண்டுவதில்லை. மலையிலே ஏறிக் கண்மூடித் தவம் புரிய வேண்டாம்; நீரிலே மூழ்கி நின்றும் தவம் செய்ய வேண்டாம்; நெருப்பிலே நின்றும் தவம் புரிய வேண்டாம். இவை எல்லாம் வீண் முயற்சி. இறைவனைக் காணவேண்டுமானால் - அவன் அருளைப் பெற வேண்டுமானால் திருவெஃகா வென்னும் தலத்தை அடையுங்கள். அங்கு யோக நித்திரை செய்யும் எம்பிரானை மலரிட்டு அருச்சனை செய்து பணியுங்கள். இப்படி உண்மை யன்புடன், உறுதி உள்ளத்துடன் பணிந்து நிற்பீர்களாயின், எந்தத் தீவினைகளும் உங்களை அணுகமாட்டா; எல்லாம் பறந்தோடிவிடும் என்று கூறுகின்றார். பொருப்புஇடையே நின்றும், புனல்குளித்தும், ஐந்து நெருப்புஇடையே நிற்கவும் நீர்வேண்டா - விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கை தொழுதால் அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. என்பது ஆழ்வார் காட்டும் வழி. இவ்வெண்பாவில் உள்ள மெய்ம்மலர் தூய்க் கைதொழுதால் என்ற தொடர்தான் கருத்தூன்றிக் காணக்கூடியது. சும்மா வெறும் மதிப்புக்காக நானும் ஒரு பக்தன் தான் என்பதைப் பிறருக்குக் காட்டுவதற்காக மலர் தூவிப் பணிவதிலே பயன் இல்லை. உண்மை அன்பு கொண்டு மலர் தூவிப் பணிய வேண்டும். அப்பொழுது தான் உள்ளத்தில் உறுதி நிலைக்கும். பக்தி ததும்பும். உள்ளத்தில் உறுதியும், பக்தியும், நம்பிக்கையும் நிறைந்து நின்றால் எந்தத் தீவினைதான் நம்மை அணுக முடியும்? உள்ளத்திலே உறுதியும், பக்தியும், நம்பிக்கையும் உள்ளவர் கள் எந்தத் தீவினைகளுக்கும் அஞ்சமாட்டார்கள். ஆதலால் அவர்களைத் தீவினைகள் அணுகவே மாட்டா. பயந்தவனைத் தான் பலரும் பயமுறுத்துவார்கள்; அஞ்சாதவனை யாரும் அச்சுறுத்த முன் வரமாட்டார்கள் ஆதலால் தான் உண்மையும், உறுதியும், அன்பும் பணிவும் வேண்டும் என்று கூறுகின்றார் ஆர்வார். திருமாலைச் சிவனுருவாகவும், காணும் திருமால் வடிவ மாகவும் ஆழ்வார் வணங்கச் சொல்லுகிறார்; உண்மையுடன் மலர் தூவிப் பணியச் சொல்லுகின்றார். இப்படிப் பணிந்தால் போதும்; இறைவன் அருளைப் பெறலாம். வேறு எத்தகைய கடுமையான தவங்களும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறுகின்றார். அன்பினால் - உண்மை அன்பினால் இறைவன் அருளைப் பெறலாம் என்ற தத்துவத்தை ஆழ்வார் இவ்வாறு விளக்கி யுள்ளார். அழியாத உண்மை அக்கரைக்கு இக்கரை பச்சை என்று ஒரு பழமொழி உண்டு. எட்டத்தில் நின்று பார்த்தால் பச்சைப்பசேல் என்று காணப்படும்; கிட்டத்தில் போனால் போதுமான பசுமை யிராது. நாம் முன்பு இருந்த இடமே இதைவிடப் பசுமை யானது, ஆதலால் அங்கேயே திரும்பிவிடலாம் என்று தோன்றும். இவ்வாறு மேய்ச்சல் மாடுகள் நினைக்குமாம். இந்தப் பழமொழி புல்மேயும் மாடுகளைப் பற்றியது. கிடைத்த புல்லை மேயாமல், இன்னும் புல் அடர்ந்த இடம் எங்கேயிருக்கின்றது என்று தேடித் திரியும் மாடுகள் வயிறார மேய்வதில்லை. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு என்பது போல, எட்டத்தில் தெரியும் பச்சையைக் கண்டு இங்கும் அங்கும் அலைந்து திரிந்துகொண்டுதான் பொழுது போக்கும். சில பட்டிமாடுகள் இப்படித் திரிவதுண்டு. இதைப் போலவே மனிதர்களிலும் சிலர் உண்டு. ஒரு கொள்கையில் நிலைத்து நிற்கமாட்டார்கள்; ஒரு இடத்திலே நிலைத்து வாழமாட்டார்கள்; ஒரு காரியத்தைத் தொடர்ந்து நடத்தமாட்டார்கள். இன்றைக்கொரு கொள்கை; நாளைக்கு ஒரு கொள்கை. இன்றைக்கொரு இடம்; நாளைக்கொரு இடம். இன்றைக்கொரு வேலை; நாளைக்கொரு வேலை. இப்படி அலைவார்கள். இவ்வாறு நிலையற்றவர்களாய் அலைகின்றவர்கள் ஒன்றிலாவது வெற்றி பெறமாட்டார்கள்; ஒரு சமயத்திலாவது அமைதியும் அடையமாட்டார்கள். இவர்கள் வாழ்க்கை எப்பொழுதும் பரபரப்பு கொண்ட வாழ்வாகத்தான் இருக்கும். மதத்திலேகூட இப்படி மாறிக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. இன்றைக்கு இந்து மதம்தான் சிறந்தது என்பார்கள்; இந்துமத நுணுக்கங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப் பார்கள். அடுத்த வாரத்தில் கிறிது வராகக் காட்சியளிப் பார்கள்; ஏசுவைப் பின்பற்றினால்தான் பரலோகம் கிடைக்கும்; நாம் செய்யும் பாவங்களையெல்லாம் ஏசுநாதரிடம் முறை யிட்டால்தான் அவை ஒழியும் என்பார்கள். அடுத்த வாரத்தில் முலிம் உருவத்தில் தோன்றுவார்கள். மூடநம்பிக்கைக்கு இடமில்லாத கொள்கைகளைக் கொண்டது இலாம் மதந்தான். ஆண்டவன் அருளைப் பெறவேண்டு மானால் இலாமிய தருமங்களைப் பின்பற்றுவதுதான் சிறந்தது என்பார்கள். பின்னர் புத்தராவார்கள், சைனராவார்கள். இம்மாதிரி மதங்களில் ஒன்றிலும் நிலைத்து நில்லாமல் அலையும் மனிதர்கள் சிலர் உண்டு. இவர்களும் எக்காலத்திலும் மனச்சாந்தி அடைய மாட்டார்கள். எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சரி, எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் சரி, அந்த மதத்திலே - மதக் கொள்கைகளிலே நம்பிக்கை வேண்டும். எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் சரி, அந்தத் தெய்வத்தின் பால் உறுதியான நம்பிக்கை வேண்டும்; இப்படியிருப்பவர்கள்தாம் உண்மையான பக்தர்கள் ஆவார்கள். இந்த உண்மையைப் பேயாழ்வார் ஒரு வெண்பாவில் விளக்கிச் சொல்லுகின்றார். அதுநன்று, இதுதீது என்று ஐயப்படாதே, மதுநின்ற தண்துழாய் மார்வன் - பொதுநின்ற பொன்அம் கழலே தொழுமின்! முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து. உங்கள் உள்ளத்திலே ஐயம் கொள்ளவேண்டாம்; அது நல்லது; இது கெட்டது; ஆதலால் இதைவிட்டு அதைப் பற்று வோம் என்று எண்ணவேண்டாம்; எது நல்லது, எது கெட்டது என்ற சந்தேகங்கள் எல்லாம் வேண்டவே வேண்டாம். தேன் சிந்துகின்ற குளிர்ந்த அழகிய துளசிமாலையை அணிந்த மார்பையுடைய திருமால் எல்லோர்க்கும் பொதுவாக நின்றவன். அவனுடைய அழகான பாதங்களை வணங்குங்கள். இவ்வாறு திருமாலைத் தொழ நினைத்தீர்களானால் போதும்; உடனே உங்கள் வினைகள் எல்லாம் நீங்கள் தொழுவதற்கு முன்பே ஓடிப்போய்விடும்; மீண்டும் உங்களைத் தொடவே மாட்டா; முடிவாக விலகிப் போய்விடும். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இது ஒன்றைப் பற்றி உறுதியாக வாழவேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்தியது. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் சரி, அந்தத் தெய்வத்தினிடம் அசையாத அன்பு வைத்திருப்பவர்கள் சிறந்தவர்கள்; உயர்ந்தவர்கள்; உத்தமர்கள் என்பதில் ஐயமில்லை. பேயாழ்வார் தாம் கண்ட அனுபவத்தையே இவ்வாறு பிறருக்கு எடுத்துரைத்தார். இக்கருத்தை மற்றொரு திருவெண்பாவிலும் வலியுறுத்து கின்றார் ஆழ்வார். தெய்வத்தை வணங்கும் போதே உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள். எந்தத் தெய்வத்தை வணங்கினால் நாம் நன்மையடையலாம் என்று எண்ணிப் பாருங்கள்; எந்தத் தெய்வத்தை வணங்கினால் மனச்சாந்தி யுடன் வாழ முடியும் என்பதை ஆராய்ந்து பாருங்கள். இவ்வாறு ஆராய்ந்து - எண்ணித் துணிந்துவிட்டால் அதன்பின் எத்தகைய மாறுதலும் ஏற்படாது. நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏமாந்து ஒரு கொள் கையை மேற்கொள்ளுவதால்தான் அது நிலையாக நிற்பதில்லை. பகுத்தறிவென்பது ஓர் ஒளி விளக்கு (டார்ச்சு லைட்டு) இருட்டில் எதையும் காண முடியாது. வெளிச்சத்தில் எல்லா வற்றையும் காண முடியும் .வெளிச்சமும் நல்ல ஒளி பொருந்திய வெளிச்சமாயிருந்தால் பண்டங்களை நன்றாகக் காணலாம். அந்த வெளிச்சத்திலே நல்ல பண்டங்கள் இவை, கெட்ட பண்டங்கள் இவை என்பதைக் கண்டறியலாம். ஆதலால்தான் பகுத்தறிவென்னும் ஒளி விளக்கைக் கொண்டு உண்மையை உணர்ந்தபின், அதைக் கொள்ளவோ அல்லது தள்ளவோ செய்யவேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார். பேயாழ்வார் தமது அநுபவத்தை அறிவிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பெரியோர்கள் - ஞானிகள் - தவச்செல்வர்கள் - எப்பொழுதும் தாம் கண்ட அனுபவத்தைத்தான் உரைப்பார்கள். தமக்குத் தெரிந்தவற்றை - அவை நன்மை தருவனவா யிருந்தால் அவற்றைப் பிறர்க்கும் உரைப்பதே பெரியோர் இயல்பு. இது, பேயாழ்வார் தம் அனுபவத்தை உரைக்கும் பாட்டு. உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்குஏற்றி வைத்து,அவனை நாடி வலைப்படுத்தேன்; - மெத்தனவே நின்றான் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்துப் பொன்றாமை மாயன் புகுந்து. உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கு ஏற்றி வைத்து, அவனை நாடி வலைப்படுத்தேன். மெத்தெனவே மாயன் என் நெஞ்சத்துப் புகுந்து பொன்றாமை நின்றான்; இருந்தான்; கிடந்தான் என்று பதங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பதமாற்றம் செய்து பொருள் கொண்டால் தெளிவாக இச்செய்யுளின் கருத்தைக் காணலாம். முதலில் பகுத்தறிவு - அதாவது ஆராய்ந்து காணும் அறிவு என்னும் ஒளி நிறைந்த விளக்கை ஏற்றி வைத்தேன். இவ்விளக்கைக் கொண்டு நான் வணங்க வேண்டிய - விரும்பிய - ஆசைப்பட்ட - தெய்வத்தைத் தேடினேன்; திருமால்தான் என் எண்ணங்களை நிறைவேற்றும் இன்பத் தெய்வம் என்று அறிந்தேன்; அவன்தான் மாசற்றவன்; எல்லா அறிவும் ஆற்றலும் நிறைந்தவன் என்று துணிந்தேன். ஆதலால் அவனை எனது அன்பு வலையிலே மாட்டி என் வயமாக்கிக் கொண்டேன். அன்பு வலையில் சிக்கியவர்கள் யாராயிருந்தாலும் சரி, கழற்றிக்கொண்டு போகமுடியாது. வலை வீசியவன் விருப்பப்படி நடந்துதான் ஆக வேண்டுமல்லவா? அந்த மாயன் - திருமால் - மாயாஜாலங்களிலே வல்லவனாயினும் பக்தி வலையிலிருந்து அவனால் தப்பித்துக் கொண்டு போகமுடியவில்லை. ஆதலால், அந்த மாயன் மெதுவாக என் உள்ளத்திலே புகுந்தான். என்றும் அறியாமல் எனது உள்ளத்தையே உறை விடமாகக் கொண்டுவிட்டான். அவன் நிற்கும் இடமும் என் உள்ளந்தான்; உட்கார்ந்திருக்கும் இடமும் என் உள்ளந்தான்; படுத்திருக்கும் இடமும் என் உள்ளந்தான். இதுதான் இப்பாடலில் உள்ள பொருள். எனது பகுத்தறிவு என்னும் ஒளிவிளக்கால் ஆராய்ந்தெடுக்கப் பட்டவன் அந்த மாயன்; ஆதலால் நானும் அவனை விட்டுவிட மாட்டேன்; மறக்கமாட்டேன்; அவனும் என்னை விட்டுப் போகமுடியாது; என் உள்ளத்தையே கோவிலாகக் கொண்டு விட்டான் என்ற கருத்தைத் தெளிவாகக் கூறினார் ஆழ்வார். இவ்வாறு கூறியதன் மூலம், மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்துகின்றார். நீங்களும் எதையும் உங்கள் சிந்தையால் பகுத்தறிந்து அலசி ஆராய்ந்து அதன்பின் முடிவுக்கு வாருங்கள். அவ்வாறு செய்யப்படும் முடிவுதான் மாறாத முடிவாக இருக்கும்; மாற்றப்படாத முடிவாக இருக்கும்; உறுதியான முடிவாக இருக்கும்; உண்மையான, அழியாத முடிவாக இருக்கும். இவ் வுண்மையையே உலகுக்கு உணர்த்தினார் பேயாழ்வார். 8 நம்மாழ்வார் நம்மாழ்வார், கி.பி.9-ஆம் நூற்றாண்டிலேயிருந்தவர். மாறன், சடகோபன், வகுளாபரணர், பராங்குசன் என்ற பெயர் களும் இவருக்கு உண்டு. மதுரகவி ஆழ்வார் இவருடைய மாணவர். நம்மாழ்வாருடைய பாடல்களிலே திருவாய்மொழி அனைவராலும் போற்றப்படுவது; பிரபந்தத்திலே நாலாந் திருவாயிரமாகத் திகழ்வது. இவரால் பாடப்பட்டவை, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவைகள். நம்மாழ்வார் பாடல்களிலே திருவிருத்தம் ருக்வேத சாரமாகும்; திருவாசிரியம் யஜுர் வேத சாரமாகும்; பெரிய திருவந்தாதி அதர்வணவேத சாரமாகும்; திருவாய்மொழி சாம வேத தத்துவங்களை வெளியிடுவதாகும். இதுவே வைணவர் களின் கொள்கை. நம்மாழ்வார் பாடல்கள் பெரும்பாலும் அகப்பொருள் துறையைத் தழுவியவை. திருமாலைத் தலைவ ராகக் கொண்டு, ஆழ்வார் தலைவியாக நின்று பாடப்பட்டவை. ஆழ்வார் தான் - தலைவியாக - நற்றாயாக - செவிலியாக - தோழியாக நின்று தலைவியின் காதலை வெளியிட்டுப் பாடி யிருக்கின்றார். ஆழ்வாரின் பாடல்களிலே சிறந்த வேதாந்தக் கருத்துக் களைக் காணலாம்; உயர்ந்த அறிவுரைகளைக் காணலாம்; இயற்கைக் காட்சிகளைக் காணலாம்; நல்ல உவமை உருவகங் களையும் காணலாம்; சமரச சன்மார்க்கக் கருத்துக்களையும் காணலாம். நம்மாழ்வார் பாடல்கள் இலக்கியச் சுவை மிகுந்தவை; பழந்தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்பவை; படிக்கப் படிக்க இனிமையும், கருத்தும் வற்றாமல் ஊற்றெடுக்கும் வளம் பொருந்தியவை; வைணவர், வைணவர் அல்லாதார் அனைவரும் படித்துச் சுவைக்கும் பண்புள்ளவை. நம்மாழ்வாரைப் போற்றாத வைணவர்கள் இல்லை. வைணவத் தத்துவங்களைச் சிறப்பாக வெளியிடுவன நம்மாழ்வார் பாடல்கள் என்றே கருதுகின்றனர். நம்மாழ்வார்மீது சடகோபர் அந்தாதி என்னும் பெயரில் கம்பர் ஒரு பிரபந்தம் இயற்றினார் என்பது வரலாறு. இது ஒன்றே நம்மாழ்வார் பெருமையைக் குறிக்கப் போதுமான தாகும். தூயமனத்தோர் தொழில் நல்லவர்க்கு எல்லாம் நன்மையாகவே காணப்படும். கெட்டவர்க்கு எல்லாம் கெட்டவையாகவே காணப்படும். நல்லவர்கள் பிறரையும் நல்லவர்களாகவே நினைப்பார்கள். கெட்டவர்கள் பிறரையும் கெட்டவர்களாகவே எண்ணுவார் கள். தம்மைப்போலவே மற்றவரைப் பற்றியும் நினைப்பது பொதுவாக மனிதர்களின் இயல்பு. கடவுளிடம் உணமையான அன்புகொண்டவர்கள் எப்பொருளையும் இகழமாட்டார்கள்; வெறுக்க மாட்டார்கள்; தூற்றமாட்டார்கள். எல்லா மனிதர்களையும் கடவுளின் மக்களாகவே கருதுவார்கள்; அவர்களிடம் சகோதரத்தன்மை பாராட்டுவார்கள். இவ்வுலகில் உள்ள மக்கள் - உயிர்ப்பிராணிகள் - உயிர் இல்லாதவை அனைத்தும் ஆண்டவன் படைப்பென்று நம்பினால் ஆரைத்தான் வெறுக்க முடியும்? ஆரைத்தான் கீழோராக எண்ணி அவமதிக்கமுடியும்? எல்லோரையும் இறைவன் உருவமாக எண்ணத்தானே தோன்றும். ஞானிகளுடைய பாடல் களிலே - நடத்தைகளிலே இந்த உண்மையை நாம் காணலாம். இந்த உண்மையை வலியுறுத்தும் திருவாய்மொழி ஒன்றைக் காணலாம். திரியும் காற்றோடு, அகல்விசும்பு, திணிந்தமண், கிடந்தகடல், எரியும் தீயோடு, இருசுடர், த்ய்வம் மற்றும்மற்றும் முற்றுமாய் கரிய மேனியன், செய்யதாமரைக் கண்ணன், கண்ணன், விண்ணோர்இறை, சுரியும்புல் கரும்குஞ்சி எங்கள் சுடர்முடி அண்ணல் தோற்றமே இது ஆறாந் திருவாய்மொழியில் உள்ள ஒரு பாசுரம். இதில் இவ்வுலகமே இறைவன் உருவம் என்று கூறியிருப்பதைக் காணலாம். சுரியும்பல் கரும்குஞ்சி எங்கள் சுடர்முடி அண்ணல் தோற்றமே என்பதை முதலில் வைத்துப் பொருளைப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இப்பாடலின்கண் அமைந்துள்ள உண்மைப் பொருள் முழுவதும் விளங்கும். சுருண்ட நிறைந்த கருமையான தலைமயிரையும் ஒளி வீசும் முடியையும் அணிந்த எங்கள் தலைவனுடைய தோற்றத் தைக் கூறுகிறேன். கேளுங்கள். உலவுகின்ற காற்றின் உருவாக இருப்பவன் அவன் தான்! அகலமானவானமாகக் காட்சி அளிப்பவனும் அவன்தான்; செறிந்த நிலமாக இருப்பவனும் அவன்தான்; பரந்துகிடக்கும கடல் உருவாக இருப்பவனும் அவன்தான்; எரிகின்ற தீயாக இருப்பவனும் அவன்தான்; சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளாக இருப்பவனும் அவனேதான்; தெய்வமாக இருப்பவனும் அவனேதான். அவன் தான் மற்ற மற்ற பொருள்களாகக் காணப்படுகின்றான்; எல்லாப் பொருள்களாகவும் இருக்கின்றான்; அவனேதான் கருமையான மேனியை உடையவன்; செந்தாமரை போன்ற கண்ணையுடை யவன்; கண்ணனாக இருப்பவன்; தேவர்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவன். இப்பாடல் ஆழ்வாரின் உறுதியான - உண்மையான பக்தியை உணர்த்துகின்றது. உள்ளத்திலே எப்பொழுதும் இறைவன் நினைப்பாகவே இருப்பவர்களுக்கு எல்லாம் இறைவன் உருவாகவே காணப்படும் என்ற உண்மையை இப் பாடல் உணர்த்துவதைக் காணலாம். இவ்வாறு எல்லாப் பொருளிலும் இறைவனைக் காணும் ஆழ்வார், அதனால் தான் பெற்ற இன்பத்தை மற்றொரு செய்யுளிலே எடுத்துரைக் கின்றார். தூய மனம் உள்ளவர்கள் - பரந்த மனம் படைத்தவர்கள் - கருணை உள்ளம் உடையவர்கள் - தம்மைப் போலவே பிறரும் இன்பம் எய்தவேண்டுமென்றே எண்ணுவார்கள். யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் என்பது பிற்காலத்துச் சான்றோர் திருமொழி. முற்காலத்து முதியோர்களும் மூதறிஞர்களும் இக்கருத்தைத் தான் பின்பற்றிவந்தனர்; சொல்லியும் பாடியும் வந்தனர். இந்த உண்மையையும் நம்மாழ்வார் பாடலில் காணலாம். எழுமைக்கும் எனது ஆவிக்குஇன் அமுதத்தினை எனதுஆர்உயிர் கெழுமிய கதிர்ச் சோதியை, மணிவண்ணனைக் குடக்கூத்தனை, விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல்கனியினை தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே. தான்கண்ட உண்மையை இப்பாடலிலே ஆழ்வார் அழகிய சொல் மலர்களால் தொடுத்துக் காட்டியிருக்கின்றார். இப் பாசுரத்தில் பொதிந்திருக்கும் பொருளைக் காண்போம்: யான் அந்த மணிவண்ணனை விடாமல் உள்ளத்திலே இருத்திக் கொண்டேன். ஆதலால், நான் எத்தனை பிறவி எடுத்தாலும் அவன் என்னைவிட்டு நீங்கமாட்டான்; எனது உயிருக்கு இனிய அமுதாகவே இருந்து இன்பந்தருவான். அவன் தனியாக நிற்கவில்லை; எனது அரிய உயிரோடு உயிராகக் கலந்துவிட்டான். கதிரவனைப் போன்ற பெரிய சோதியாக இருப்பவன் அவன்; கரிய மாணிக்கம் போன்ற நிறமுள்ளவன்; குடத்தின்மேல் ஏறிநின்று கூத்தாடியவன். சிறந்த தேவர்கள், முனிவர்கள் அனைவரும் தங்கள் உள்ளத்தே மறவாது வைத்து இன்புறுவார்கள். அவர்கள் என்னை எண்ணி எண்ணி இன்புறும் கரும்பாக இருப்பவன்; இனிய கனியாகவும் இருப்பவன். இப்படிப்பட்ட கண்ணனை - கோவிந்தனை - கரியமாலை - நீங்கள் நம்புங்கள்; வணங்குங்கள். ஆனால் வணங்கும்போது உங்கள் உள்ளத்திலே எத்தகைய குற்றங்களும் இருத்தல் கூடாது; மாசற்ற மனமுள்ளவர்களாய் - தூய உள்ளம் படைத்தவராய் - அந்த இறைவனைத்தவிர வேறு எந்த நினைப்பும் இல்லாதவராய் வணங்குங்கள்; இதுதான் அவனை வணங்கும்போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு; முறை; நியதி. இந்த முறையிலே நீங்கள் தொழுவீர்களானால், உங்கள் துன்பம் எல்லாம் உடனே ஒழியும்; சிறிதுநேரம்கூட நிற்காமல் ஓடிப்போய்விடும்; நீங்கள் இன்புற்று வாழலாம். இதுதான் மேலே கண்ட பாசுரத்தின் பொருள். முதற் பாசுரம், இறைவன் எந்தெந்த உருவாக இருக்கிறான் என்பதைக் கூறியது. அவனை எந்தெந்த உருவங்களிலே காண்கிறேன் என்று ஆழ்வார் அப்பாசுரத்தில் எடுத்துரைத்தார். இரண்டாவது பாசுரத்தால் அந்த இறைவனால் தான் அடைந்த இன்பத்தை எடுத்துரைத்தார். நீங்களும் தூய மனத்துடன் இறைவனை வணங்குங்கள்! உங்கள் துன்பங்கள் எல்லாம் தொலையும் என்று கூறினார். இவ்விரண்டு பாடல்களையும் காணும்போது ஓர் உண்மை நமக்குப் புலனாகும். தூய உள்ளம் படைத்தவர்கள் எதையும் மறைத்துவைக்க மாட்டார்கள். உண்மையான பக்தியுள்ளவர்கள் எல்லோரும் இன்புற்று வாழத்தான் நினைப்பார்கள். இதுதான் தமிழர் பண்பாடு. தமிழர்களின் அருள் நெறியாகும். கூடிவாழும் இயல்புதான் மனித இயல்பாகும். கூடாமல் தனித்து நெல்லிக்காய்கள்போலச் சிதறுண்டு வாழ்வது மனிதப் பண்பு ஆகாது. இன்று மனித சமூகம், சாதியால், மதத்தால், கொள்கை, வேற்றுமையால் பிளவுண்டு கிடப்பதைக் காண்கிறோம் இவை காரணமாகப் பல நாடுகள் கூட்டுறவு இல்லாமல் கெடுபிடிப் போர் நடத்துவதையும் காண்கிறோம். மனிதத் தன்மையின் சிறப்பை அறிந்தவர்கள், இவ்வித வேற்றுமைகளுக்குச் சிறிதும் இடந்தரவே மாட்டார்கள்; பிளவு சக்திகளை விரட்டியடிக்கத் தான் முயல்வார்கள். மற்றவற்றைவிட மனிதர்களைப் பிரிப்பதிலே மதம் ஒரு பெரிய மதிலாக இருப்பதைக் காண்கிறோம். மதம் காரணமாக உலகிலே எத்தனையோ கொடுமையான போர்கள் நடந்தன வென்று வரலாற்றிலே படிக்கின்றோம். இன்றும் கூட மதத்தால் மக்களிடம் வெறுப்பு உணர்ச்சியைக் கிளப்பி விடும் வீணர்கள் சிலர் இருப்பதைக் காண்கின்றோம். இவர்கள் உண்மையான மதப் பற்றுள்ளவர்கள் அல்லர்; போலி மதத்தினர் ஆவர். மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் குள்ளநரிகளாவார்கள். உண்மையான மதம் மக்களுக்குள் அன்பையும் - கூட்டுறவையும் - ஒற்றுமையையும் உண்டாக்கத்தான் சொல்லு கின்றது. ஒருவரையும் வெறுக்கும்படி சொல்ல வில்லை. மத உண்மைகளைக் கற்றவர்கள் இதை மறக்கமாட்டார்கள். மதத்தை வளர்க்க முயன்ற - மத உண்மைகளை மக்களிடம் பரப்ப முயன்ற - பக்திநெறியிலே மக்களைச் செலுத்த முயன்ற நமது முன்னோர்கள் பெரும்பாலும் இக்கருத்துள்ளவர்கள் தாம். அவர்கள் மனித சமூகத்தின் பால் மாறாத கருணை உள்ளவர்கள். ஆதலால் தம்மைப் போல எல்லா மக்களும் இன்பம் உறவேண்டும் என்று, தாங்கள் கண்டறிந்த உணமை களை மறைக்காமல் பாடி வைத்திருக்கின்றனர். மேலே காட்டிய நம்மாழ்வார் பாசுரங்கள் இந்த உண்மையை உணர்த்தும் கருவிகளாக நிற்பதைக் காண்கின்றோம். அன்பர்கள் அனைவரும் ஒன்றே பிறப்பினால் வேற்றுமை பாராட்டும் முறை பண்டைக் கால மக்களிடம் இருந்ததில்லை. பண்டைக்கால மக்கள் தங்களுக்குள் எவ்வித வேற்றுமையும் இன்றி ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள்; ஒன்றாகத்தான் உழைத்தார்கள்; கிடைத்தவற்றை ஒன்றாகத்தான் பங்கிட்டுக் கொண்டு உண்டார்கள்; ஒன்றாகத் தான் கூடி வாழ்ந்தார்கள். இத்தகைய ஒன்றுபட்டு வாழ்ந்த மக்களிடம் நாளடைவில் தனித்து வாழும் வாழ்க்கைமுறை தோன்றிற்று. தனித் தனிக் குடும்ப வாழ்வு நடத்தத் தொடங்கின; மக்கள், தொழில்களையும் தனித்தனியே பிரித்துக் கொண்டு செய்து வந்தனர். மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் வகையில் செய்யப்படும் தொழில்கள் எல்லாம் ஒரே தரம் உள்ளவை தாம். ஆனால், அவரவர்கள் திறமைக்கேற்பச் சிலர் எளிமையான தொழில் களைச் செய்து வந்தனர்; சிலர் நுட்பமான தொழில்களைச் செய்து வந்தனர்; சிலர் அறிவை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டாத, உடல் உழைப்பால் நிறைவேற்றக் கூடிய தொழில் களைச் செய்து வந்தனர்; சிலர் தம் நுண்ணறிவைக் கொண்டு, உடல் உழைப்பு மிகுதியாக வேண்டப்படாத தொழில்களைச் செய்து வந்தனர். இத்தகைய தொழில் பிரிவுகள் காரணமாகத் தான் மக்களிடமும் பல பிரிவுகள் பிறந்தன. சில தொழில்கள் உயர்ந்தனவாகக் கருதப்பட்டன. சில தொழில்கள் மட்டமானவை; எல்லாரும் செய்யக் கூடிய எளிய தொழில்கள் என்று கருதப்பட்டன. உயர்ந்த தொழில்களைச் செய்வோர் உயர்ந்தவர்கள்; மட்டமான தொழில்களைச் செய்வோர் மட்டமானவர்கள்; அதாவது தாழ்ந்தவர்கள் என்று எண்ணப்பட்டனர். மக்களிடம், தொழில் காரணமாகத் தோன்றிய இந்த உயர்வு தாழ்வுகளே பல பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டன. பிறவியிலே உயர்வு தாழ்வுகளையும் உண்டாக்கிவிட்டன நாளடைவில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற கொள்கையும் புகுந்துவிட்டது. பண்டைக் காலத்தில், இயற்கையில் எந்த நாட்டு மக்களிடமும் பிரிவினைகள் இருந்தன என்று சொல்லமுடியாது. ஆனால், மக்கள் சமுதாயத்தில் இருந்த அறிஞர்கள், மனிதத் தன்மை அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைத்தவர்கள் சாதிப் பிரிவை ஒப்புக்கொள்ளவில்லை. சாதிப் பிரிவு வளரக்கூடாது என்றே எண்ணினர். வளர்ந்து வரும் சாதிப் பிரிவை வளரவிடாமல் தலைதட்ட வேண்டும் என்பதில் கவலை காட்டினர். சாதிப் பிரிவைத் தடுப்பதற்கு - அழிப்பதற்கு - அவர்கள் கைக் கொண்ட வழிகள் பல. இந்தத் துறையிலே, சாதி வேற்றுமையை ஒழித்து மக்களை ஒரு சமூகத்தவராக வாழச்செய்ய வேண்டும் என்னும் முயற்சி யிலே சமயத் தலைவர்களும் உழைத்திருக்கின்றனர்; மதபோதகர் களும் பாடுபட்டிருக்கின்றனர்; அன்பு மதத்தைப் பரப்பிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்றவர்களும் பணியாற்றி யிருக்கின்றனர். ஒழுக்கத்தையே மதமாகக் கொண்ட - சைன, பௌத்தர்களும் பாடுபட்டிருக்கின்றனர். சமயத் தலைவர்கள், ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் சோதரர்கள்; அவர்களுக்குள் எந்தவித வேற்றுமை யும் இல்லை; உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வேற்றுமை பாராட்டப்படுமானால் அது கண்டிக்கத் தக்கது. செல்வர், வறியர் என்று பிரிவினை செய்வதும் ஒப்புக்கொள்ளத் தக்கதன்று. எல்லோரும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்; இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை பேரும் ஒன்று தான்என்று கூறிவந்தனர். இவ்வாறு கூறுவதன்மூலம் ஒவ்வொரு சமயத் தலைவர் களும் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர்களிடம் புகுந்திருந்த சாதி வேற்றுமையைத் தரைமட்டமாக்க முயற்சித்தனர். இந்த முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது வேறு கேள்வி. மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதிலே சமயத் தலைவர்களிடம் கருத்து வேற்றுமை யில்லை. எல்லாச் சமயத் தலைவர்களும் தங்கள் சமயத்தைப் பொறுத்த வரையிலும் இக்கருத்தை மாறுபாடில்லாமல் பின்பற்றி வந்தனர் என்பதில் ஐயமில்லை. இவ்வுண்மைகளை நம்மாழ்வார் பாடல்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. நம்பனை, ஞாலம் படைத்த வனைத்திரு மார்பனை உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வுஅரி யான்தன்னை; கும்பி நரகர்கள் ஏத்துவ ரேனும் அவர்கண்டீர் எம்பல் பிறப்பிடை தோறும்எம் தொழுகுலம் தாங்களே. என்பது நம்மாழ்வார் பாடல். எத்துணைப் பாவம் புரிந்தவர் களாயிருந்தாலும் சரி, அவர்கள் திருமாலைப் பணிந்து போற்று வார்களாயின், அவர்களே எமது தெய்வம் என்று கூறுகின்றது இப்பாடல். இதன் பொருளைக் கண்டு இன்புறுவோம். எல்லா உயர் குணங்களும் அடைந்தவனை, இவ்வுலகத் தைப் படைத்துக் காத்து அழிப்பவனை, இலக்குமி வாழ்கின்ற மார்பை உடையவனை, தேவர் உலகில் உள்ள தேவர்கள் அனைவராலும் உணரமுடியாத ஒப்பற்றவனை, சாக்கடை போன்ற நரகத்திலே பாவத்தால் பலகாலங் கிடக்கின்ற பாவிகள் வணங்கினாலும் சரி, அவர்கள் எமது வழிபடு தெய்வங்கள்; இப்பிறப்பில் மட்டுமன்று, யாம் எடுக்கும் பல பிறப்புகளிலும் இத்தகைய அன்பர்கள் எமது வழிபடு தெய்வங்களாக இருப்பார்கள் என்பதே இப்பாடலின் பொருள். இதே உண்மையை இதற்கு அடுத்த செய்யுளிலே இன்னும் தெளிவாகக் கூறுகின்றார் ஆழ்வார். உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்ற சொல்லைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற சாதிகள் நான்கு உண்டு; அவை: அந்தணர், அரசர், வணிகர், உழைப்பாளர்கள் அல்லது வேளாளர்கள் என்பவை. இவற்றைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பெயரிட்டும் அழைப்பர். இந்நால் வகைப்பட்ட சாதிகளைவிட மிகவும் இழிந்த சாதியானாலும் சரி; சிறிதும் நன்மை என்பதையே அறியாதவர்களாயிருந் தாலும் சரி; கொடுமையான செய்கைகளை இரக்கமில்லாமல் செய்யும் சண்டாளர்களைக் காட்டிலும் சண்டாளர்களா யிருந்தாலும் சரி; அவர்கள் வெற்றிக்கு அடையாளமாகச் சக்கராயுதத்தை ஏந்தியிருக்கின்றவனை - மிக்க பெருமை யுள்ளவனை - நீலமணி போன்ற நிறம் பொருந்தியவனை நம்ப வேண்டும். நம்பி அவனுக்கு நாம் அடிமையானோம் என்று உறுதிகொள்ள வேண்டு; அவனும் தாமும் ஒன்றாகிவிட வேண்டும். இப்படித் திருமாலுக்கு அன்பு பூண்ட அடியார்க்கு அடியார் - அந்த அடியார்க்கு அடியாரின் அடியார் - யாராயிருந்தாலும் சரி அவர்களே எம் தலைவராவார்; எம்மால் வணங்கப்படும் அடியார் ஆவார் என்று கூறுகின்றார் ஆழ்வார். குலம்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ்இழிந்து எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகினும் வளம்தாங்கு சக்கரத்து அண்ணல்மணி வண்ணற்கு ஆள்என்றுஉள் கலந்தார் அடியார் தம்அடி யார்எம் அடிகளே. இச்சிறந்த பாடலின் பண்பை அறிந்த எந்தத் தமிழரும் மக்களிடம் வேற்றுமை பாராட்டமாட்டார்கள். ஆழ்வாரின் இப்பாடல், வைணவர்கள் யாராயிருந்தாலும் சரி. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள்; வேறுபாடு இல்லாதவர்கள் என்ற உண்மையை உணர்த்துகின்றன. இத்தகைய கருத்தை எல்லா மதாச்சாரியார்களும் - சமயத் தலைவர்களும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்; அவரவர்களின் பாடல்களிலும் போதனைகளிலும் புகன்றிருக்கின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் முதலில் தங்கள் சமயத் தலைவர்கள் கூறியிருக்கும் உண்மைகளையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக்கொண்டால், முதலில் அவர்களுக்குள் ஒற்றுமை யுண்டாகும். அதன்பின், அவ்வொற்றுமை பலருள்ளும் பரவி மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மரம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை. நினைப்பு ஒன்றே நம்மாழ்வார் திருமால் திருவடிகளைக் காண விழைகின்றார். அந்த ஆவல் அவரை வேறொன்றையும் நினைக்க விடவில்லை. திருமால் திருவடிகளைக் காண்பது எப்போது என்ற கவலை தான் அவரைப் பிடித்து ஆட்டுகின்றது. எப்பொழுதும் இதைப் பற்றியே எண்ணித் தவிக்கும் அவர் இதயத்திலிருந்து இனிய தமிழ்ப்பாடல்கள் வெளிவருகின்றன. திருவேங்கடத்தில் உள்ள திருமாலை எண்ணியே அவர் புலம்புகின்றார்; பாடுகின்றார்; அரற்றுகின்றார்; வேண்டு கின்றார். இவ்வுலகம் முழுவதையும் உண்ட பெரிய வாயை உடை யவனே! என்றும் அழியாத கீர்த்தியையுடைய தலைவனே! என்றும் மங்காமல் பிரகாசிக்கும் சுடர்பொருந்திய ஒளியாக இருக்கின்றவனே! எல்லோரையும்விட உயர்ந்த நீண்டவனே! அடியேனுடைய அரிய உயிராக இருப்பவனே! இவ்வுலகத்துக் கே திலகமாக விளங்குகின்ற திருவேங்கடத்தை இடமாகக் கொண்டிருக்கின்றவனே! எமது தலைவனே! வழிவழியாகப் பழமையாக உனக்கு அடிமையாக இருக்கின்ற நான் உன்னுடைய பாதங்களைச் சேரும் வழியைக் கூறுவாயாக இந்த உதவியை எனக்கு நீ அருளமாட்டாயா? என்று பாடுகின்றார். உலகம் உண்ட பெருவாயா! உவப்பில் கீர்த்தி அம்மானே! நிலவும் சுடாசூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆர்உயிரே! திலகம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெரு மானே! குலதொல் அடியேன் உன்பாதம் கூடும் ஆறு கூறாயே! இந்தப் பாடல் படிக்கப் படிக்க இனிமை தருவது. நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி என்பதற்கு, விளங்குகின்ற சந்திர சூரியர் களாகிய சுடர்கள் சுற்றிவந்து வணங்கும் ஒளி வடிவானவனே என்றும் பொருள் கூறலாம். திருவேங்கட மலையின் சிறப்பை இப்பாடலில் எடுத்துக் காட்டுகின்றார் ஆழ்வார். இவ்வுலகுக்கே ஒரு திலகமாக விளங்குகிறது திருவேங்கடமலை என்று கூறுகின்றார். இதனால் ஆழ்வார் திருவேங்கடத்தின்மீது கொண்டிருந்த ஈடுபாட்டை உணரலாம். ஆழ்வாரின் அன்பு மிகுதியை விளக்கும் மற்றொரு பாடலையும் காண்போம். நிறங்கள் எல்லாம் தோற்று மிரண்டு எதிர்நிற்காமல் ஓடு கின்ற அவ்வளவு அழகு பொருந்திய மேகநிறத்தை யுடையவனே! மாயங்கள் பலவற்றிலே வல்ல தலைவனே! என் உள்ளத்திலே புகுந்து நிலைத்து நின்று, தீமைகளை யெல்லாம் போக்கிக் கசப்பை ஒழித்துத் தித்திக்கின்ற அமுதே! வெறும் தித்திப்பாக மட்டும் இல்லாமல் இறவாமல் - நோயின்றி - நல்வாழ்வு வாழச் செய்யும் அமுதாகவும் இருக்கின்றாய்! தேவர்கள் அனைவர்க்கும் தலைவனாக இருக்கின்றவனே! நீ வாழும் திருவேங்கடமலை மிகச் சிறந்த இயற்கை வளம் நிறைந்தது; தெளிவான நல்ல அருவி நீர் ஓடிக் கொண் டிருப்பது. அந்த அருவி நீரிலே இரத்தினம், பொன், முத்துக்கள் முதலிய செல்வங்கள் வந்து வீழ்ந்து ஒதுங்குகின்றன. இத்தகைய இயற்கை வளமுள்ள திருவேங்கட மலையில் வீற்றிருக் கின்றவனே! பெருமையில் சிறந்தவனே! உனது பாதங்களை அடை வதற்கு அடியேனுக்கு அருள் செய்வாயாக; எத்தகைய தடையும் இல்லாமல் அது ஆ ஆ! ஆகட்டும் ஆகட்டும் என்று கூறி அருள்க, என்று மனம் உருகிப் பாடுகின்றார். வண்ணம் மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே! தெள்நல் அருவி மணி, பொன், முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே! m© zny!உன்அடிசேர அடியேற்கு ஆஆ என்னாயே! இந்த இரண்டு பாடல்களிலும் காணப்படும் அரிய உண்மைகள் வியக்கத்தக்கவை. முதல் பாடலிலே உலகம் உண்ட பெருவாயா என்றும், நெடியாய் என்றும் திருமாலின் பரந்த பெரிய தோற்றத்தைக் குறிப்பிட்டார். இவற்றால் திருமால் எங்கும் பரந்தவன்; எல்லாவற்றிலும் பெரியவன்; இந்த உலகத் தையே தன் வாயால் விழுங்கும் அவ்வளவு பெரிய உருவம் உள்ளவன் என்பதை எடுத்துக் காட்டினார். அடுத்த பாட்டிலே, அவ்வளவு பெரிய திருமால் - இறைவன் அடியார்க்கு எளியன் என்பதை உணர்த்தினார். எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்ற தொடர் இந்த உண்மையை உணர்த்துகின்றது. உலகத்தையே உண்ணும் பெருவாயை யுடைய அவன், போற்றுவோர் எண்ணத்திலும் புகுந்து நிற்பான்; அவ்வளவு நுண்ணியனாகவும் ஆகி விடுவான். நுண்ணிய வடிவில் அடியார் - அன்பர் - உள்ளத்தில் புகுந்து நிற்கும் அவன், இனிமையான சுவையுள்ள அமுதமாக நிற்பான். அமுதம் உடலுக்கு வலிமை தருவது; சாவாமல் வாழ வைப்பது; சுவையையும் உடையது; இத்தகைய அமுதுதான் இறைவன் என்று கூறுவது வியக்கத்தக்கது. தித்திக்கும் அமுது, என்று இறைவனைக் கூறுவதன் மூலம் மற்றொரு கருத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். சுவை உள்ள உணவை விரும்புவது மனித இயற்கை; உடலுக்கு நன்மைதரும் உணவை - நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கும் உணவைத் தேடியுண்பது அறிவுள்ள வர்களின் தன்மை. திருமால் இத்தகைய உணவு போன்றவன். ஆதலால் அவனை மனத்திலே மறவாமல் இருத்துங்கள். என்ற அறிவுரையும் இச்செய்யுளில் அடங்கி யிருக்கின்றது. மேலே காட்டிய இரண்டு பாடல்களும் இனிய செந்தமிழ்ப் பாடல்கள். நம் உள்ளத்திலே திருவேங்கட மலையைப் பற்றிய எண்ணத்தை எழுப்பும் பாடல்கள்; திருவேங்கட மலையை மறக்காமல் நிலைக்க வைக்கும் பாடல்கள். இவை இரண்டு மாத்திரம் என்ன? நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாடல்கள் அத்தனையும் இத்தகைய இனிய சுவை நிறைந்தவைதாம்; இன்பத் தேன் சொட்டும் இனிய தமிழ்ப் பாடல்கள்தாம். மனிதரைப் பாடேன் புலமை படைத்தவர்கள் பண்டைக் காலத்தில் வறுமையால் வாடினர். அவர்கள் தங்கள் வறுமையைத் தீர்த்துக் கொள்ளச் செல்வர்களைப் புகழ்ந்து பாடினார்கள்; புகழுக்கு ஆசைப் பட்ட செல்வர்கள் கொடுக்கும் நன்கொடைகளைப் பெற்று உயிர் வாழ்ந்தனர். இவ்வாறு வாழ்க்கை நடத்திய ஏழைப் புலவர்கள் வரலாறுகள் பலவற்றைக் கேட்டிருக்கின்றோம்; படித்திருக் கின்றோம். மனிதரைப் பாடி வயிறு வளர்த்த புலவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, மனிதரைப் பாடுவதில்லை என்று உறுதி கொண்ட புலவர்களும் இருந்திருக்கின்றனர். எல்லாம் வல்ல இறைவன் அருள் நமக்கு உண்டு; அவனைப் பாடுவதே நமது கடன்; நம்மைக் காப்பது அவன் கடன்; பணத்துக்காக மனிதரைப் பாடி மாநிலத்தில் திரிவது அறிவீனம் என்று நம்பிய புலவர் களும் இருக்கின்றனர். இத்தகைய புலவர்கள் - எப்பொழுதும் இறைவனை ஏத்திப் பாடும் புலவர்கள், பக்தர்களாக - அடியார்களாக - அவதார புருடர்களாகக் கூட மதிக்கப்பட்டனர். இவர்கள் ஏனைய புலவர்களைவிடப் பெரியவர்களாக மக்களால் மதித்துப் போற்றிக் கொண்டாடப்பட்டனர். இவர்கள்தாம் இன்று ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும், ஞானிகளாகவும், யோகிகளாகவும், அவதார புருடர்களாகவும் விளங்குகின்றனர். வறுமைப் பிணி வந்தால், அதைத் தாங்கும் சக்தி சிலருக்குத் தான் உண்டு. வறுமையின் வசப்பட்டு, தன்னிலை யிழந்து திரிவதுதான் மனித இயற்கை. இந்த இயற்கைச் சூழலில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுவோர், உண்மையில் உரம் படைத்த நெஞ்சுடையவர்கள் என்பதில் ஐயம் இல்லை. எந்தத் தொல்லை வந்தாலும் மனிதரைப் பற்றிப் பாடுவதில்லை; இறைவனைப் பற்றித்தான் பாடுவேன் என்ற உறுதி கொண்டவர்களை நெஞ்சுரங் கொண்ட வீரர்கள் வரிசையிலேதான் வைக்கவேண்டும்; இவர்கள் உண்மை ஞானிகள் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. நம்மாழ்வார் பெரிய ஞானி; ஒப்பற்ற திருமால் அடியார். அவர் எந்த மனிதரைப் பற்றியும் பாடவில்லை; மனிதரைப் பற்றிப் பாடுவதில்லை என்னும் உறுதி கொண்டவர்; திருமாலையே எண்ணி எண்ணி உள்ளம் உருகி உருகித் தீந்தமிழ்க் கவித்தேனைச் சொரிந்தவர். அவருடைய உள்ளத் துறுதியைக் காட்டும் பாடல்கள் பல உண்டு. சொன்னால் விரோதம்இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்நாவில் இன்கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்; தென்னா தெனாவென்று வண்டுமுரல் திருவேங் கடத்து என்ஆனை என் அப்பன் எம்பெருமான் உளன் ஆகவே என்பது அவர் பாடிய பாடல்களிலே ஒன்று. இப்பாடலின் பொருளைப் பார்த்தால் ஆழ்வாரின் உண்மையுள்ளத்தை உணர்ந்து கொள்ளலாம். இப்பாடலுக்குப் பொருள் காணும் போது, கீழ்வருமாறு அடிகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் பொருள் விளங்கும். சொன்னால் விரோதம் இது; ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ! தென்னா தெனா என்று வண்டுமுரல் திருவேங் கடத்து, என் ஆனை, என் அப்பன் எம்பெருமான் உளன். ஆகவே, என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் என்று மாற்றிக்கொண்டு, படித்தால் பொருள் இனிது விளங்கும். இப்பாடலின் பொருளைக் காண்போம். சொல்லப்போனால் இச்செய்தி பலருடைய விரோதத் தைத்தான் உண்டாக்கும். ஆனாலும் உண்மையைச் சொல்லு கிறேன். கேளுங்கள். தென்னா தெனாவென்ற ஒலியுடன் வண்டுகள் இசைபாடிப் பெருமான் புகழைத் தெரிவித்துக் கொண்டிருபபது திருவேங்கடமலை. அந்த வளம் பொருந்திய மலையிலே, எனது ஆன்மாவாக இருப்பவன், என் அப்பனாக இருப்பவன், எமது தலைவனாக இருப்பவன், நிலைத்து வாழ்கின்றான்; அவன் இருக்கும்போது, எனது நாவிலிருந்து எழுகின்ற இனிய செந்தமிழ்க் கவியை, நான் வேறு ஒருவருக்கும் அர்ப்பணிக்க மாட்டேன்; எப்பொழுதும் அவனுக்கேதான் கொடுப்பேன். அவனையேதான் பாடுவேன்! இப்பாடலால் ஆழ்வாருடைய நெஞ்சுரத்தைக் காணலாம். இதற்கு அடுத்த பாசுரத்திலே மானிடரைப் பாடுவதால் பயன் இல்லை என்று தெளிவாகக் கூறுகின்றார். எந்தையாகிய திருமால் இருக்கும்போது - அவனே நாம் வேண்டுவனவற்றை யெல்லாம் கொடுக்கும் கருணை படைத்தவன்; ஆற்றல் அமைந்தவன்; அப்படியிருக்க அவனை விட்டுத் திமிர் பிடித்த மனிதர்களைப் பாடித் திரிவதில் என்ன பயன்? என்று கேள்வி யாகக் கேட்டுள்ளார். அப்பாடல் கீழ்வருவது: உளன்ஆகவே எண்ணித் தன்னை ஒன்றாகத்தன் செல்வத்தை வளன்ஆக மதிக்கும்இம் மானி டத்தைக் கவிபாடிஎன்? குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே உளன்ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே இக்கவிக்கும் பொருள்கொள்ளும்போது இதன் அடிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் உள்ள, குளன் ஆர் என்று தொடங்குவது முதல், இரண்டடிகளை முதலில் வைத்துப் பொருள் கொண்டால் இனிது விளங்கும் இதன் பொருளைக் காண்போம். குளங்கள் நிறைந்த, வயல்கள் சூழ்ந்த, கண்ணன் வாழும் திருக்குறுங்குடியிலே மெய்யாகவே வாழ்கின்றவனாகிய எந்தை; எந்தையாகிய பெருமையை உடையவன். இவன் இருக்கவும் இவனைப் பாடாமல் விட்டு மனிதரைப் பாடுவதில் பயன் இல்லை. மனிதனுக்குரிய அறியாமையுடையவன், தன்னை என்றும் நினைத்து வாழ்கின்றவனாக நினைத்துக் கொள்ளுவான்; அதாவது தனக்குச் சாவு உண்டென்பதை மறந்துவிடுவான்; தன்னையே சிறந்தவனாக எண்ணிச் செருக்கடைந்திருப்பான்; தன் செல்வத்தையே உயர்ந்த வளமுள்ள செல்வமாக எண்ணிக் கொண்டிருப்பான்; செல்வம் ஓரிடத்தில் நிலைத்திருக்காது; கைமாறிவரும் தன்மையுள்ளது என்ற உண்மையை உணர மாட்டான். இத்தகைய மானிடத்தை - மானிட உருவம் உள்ளவனைப் பற்றிக் கவி பாடுவதனால் என்ன பயன்? ஒரு பயனும் கிட்டாது; இப்படிப் பாடித் திரிவது வீண்முயற்சி என்பதே இப்பாடலின் பொருள். மேலே காட்டிய இரண்டு பாடல்களிலும் அமைந்திருக்கும் கருத்து உண்மையும் சிறப்பும் அமைந்ததாகும். முதல் செய்யுளில், தன்னுடைய நிலையை எடுத்து உரைத்தார். நான் திருமாலைத் தவிர வேறு யாரையும் பாடுவதில்லை என்ற உறுதி உள்ளத்தை எடுத்துக் கூறினார். இரண்டாவது பாடலில் தான் திருமாலையே பாடுவதன் மூலம் அடைந்த இன்பத்தைப் பிறர்க்கும் எடுத்துரைத்தார். மனிதரைப் பாடுவதால் பயன் இல்லை; இறைவனைப் பாடுவதனால்தான் இன்பம் கிடைக்கும். ஆதலால் இறை வனையே பாடுங்கள் என்று அறிவுரை கூறினார். இத்தகைய கருத்துள்ள, இவ்விரண்டு பாடல்களும், மக்களுக்கு அறிவுரை சொல்லும் அருள்நெறிப் பாடல்கள் ஆகும். அரச வாழ்வும் நிலையல்ல பண்டைக்காலத்திலே அரசர்கள்தாம் மக்களுக்குள் சிறந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள். அவர்கள்தாம் எல்லாச் செல்வங்களையும் உடையவர்கள்; எல்லா இன்பங்களையும் துய்க்கக் கூடியவர்கள்; மக்கள் அனைவராலும் போற்றத் தக்கவர்கள்; அவர்கள் பிறவியிலேயே திருவுடையவர்கள் என்றெல்லாம் கொண்டாடப் பட்டார்கள். மக்களிலே பெறக்கூடிய பெரும்பேறு அரச வாழ்வைத் தவிர வேறில்லை; இவ்வுலகிலே மக்கள் அடையக் கூடிய பெரிய பதவி அரச பதவிதான் என்று எண்ணப்பட்டு வந்தது ஆனால் இந்தக் காலத்தில் இந்த நிலை மாறி விட்டது. அரசர் பதவிக்கு அவ்வளவு மதிப்பில்லை; அரசர்கள் என்பதற்காக யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை. மக்களோடு மக்களாகப் பழகும் மன்னர்கள் மட்டும்தான் மதிக்கப்படு கின்றனர். மக்கள் நலத்திற்காக உழைக்கும் மன்னர்கள்தாம் மக்கள் தலைவராக மதிக்கப்படுகின்றனர். மன்னர்களைக் காட்டிலும் மக்களால் மிகப் பெருமையாக மதிக்கப்படும் தலைவர்கள் உண்டு. அவர்கள் மன்னர்களுக்கு மேலாக மதிக்கப் படுகின்றனர் இன்னும் சில ஆண்டுகள் சென்றால் மன்னர்கள் என்பவர்கள் இருப்பார்களா? என்பதுகூடச் சந்தேகந்தான். கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மன்னர்கள் எல்லாம் தாமே மன்னர் பதவியை விட்டு விலகிக்கொள்ளக் கூடிய காலம் வரத்தான் போகிறது. நமக்கு வேண்டாம் இந்தத் தொல்லை பிடித்த மன்னர் பதவி; மக்களால் மதிக்கப்படும் அறிவும் திறமையும் உள்ளவர்களே நாட்டை ஆளட்டும் என்று மன்னர்களே சொல்லி விடக்கூடிய காலம் வரும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் பண்டைக் காலத்திலே - நூற்றைம்பது ஆண்டு களுக்கு முன்னேகூட மன்னர் எதற்கு? என்ற ஐயம் மக்கள் மனத்திலே பிறந்திருக்க முடியாது. மன்னர்கள் தாம் தெய்வ உருவம் பெற்றவர்கள்; அவர்கள் நாடாள்வதற்காகவே பிறந்தவர்கள் என்ற எண்ணந்தான் மக்களிடம் குடிகொண்டி ருந்தது. இந்த உண்மையைப் பண்டை நூல்களிலே காணு கின்றோம். உலக முழுதும் இந்தக் கொள்கைதான் இருந்தது இத்தகைய கொள்கை வேரூன்றியிருந்த காலத்தில் அறிஞர்கள் உண்மையை மறந்துவிடவில்லை. மன்னர் பதவி நிரந்தரமானது அன்று; அழியாதது அன்று; மன்னர் சுகபோக வாழ்வு அழியாத பொதியமோ, இமயமோ அல்ல; அதற்கும் ஆபத்து உண்டு. மன்னர்கள் வாழ்விழந்து பிச்சைக்காரர்கள் ஆகக்கூடிய காலமும் வரும் என்றுதான் எண்ணினர் இன்ப வாழ்வுக்கு என்றும் அழிவில்லை என்று சொல்லி விட்டால் போதும். இன்ப வாழ்வுக்கான வசதிகளைப் பெற்றிருப் போர் பிறர் நன்மையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவே மாட்டார்கள். தம் இன்ப வாழ்வுக்கான வசதிகளைத் தேடுவ திலேயே காலம் போக்குவார்கள். நல்வழி இது; கெட்ட நெறி இது என்றுகூட எண்ணிப்பார்க்கமாட்டார்கள்; எப்படியாவது இன்ப வாழ்வுக்கான வசதிகள் கிடைத்தால் போதும் என்று எண்ணிவிடுவார்கள்; எதையும் செய்யத் துணிவார்கள். ஆகையால் அழிக்கமுடியாத தெய்வாம்சம் பொருந்திய அரசவாழ்வும் நிலையற்றது என்று பாடல்களிலே பாடி வைத்தார்கள்; அறநூல்களிலே சொல்லிவைத்தார்கள். யானை எருத்தம் பொலியக் குடைநிழல்கிழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினைஉலப்ப வேறாகி, வீழ்வர்;தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள என்பது நாலடிப் பாட்டு. யானையின் கழுத்திலேறி அமர்ந்து குடைநிழலின் கீழ்ச்சென்ற வேந்தர்கள் - சேனைக்குத் தலைவராய்ச் சென்ற வேந்தர்கள், தீவினையின் பயன் வந்தபோது அரச செல்வத்தை இழப்பார்கள். தமது அன்புக்குரிய மனைவியைக்கூட மாற்றான் கவர்ந்துகொள்ளும்படி வீழ்ச்சியடைவார்கள் என்று கூறிற்று மேலே காட்டிய நாலடிப் பாட்டு எதற்காக இதைச் சொல்லவேண்டும்? செல்வம் நிலை யுள்ளது; அதிகாரம் அழியாதது; அரசபோகத்தில் என்றும் வாழலாம் என்று இறுமாந்திருப்போரைப் பார்த்து உண்மை யை உரைப்பதற்கு. செல்வத்தை நம்பி ஏமாறாதே; செல்வம் இருக்கும்போதே நல்காரியங்களைச் செய்; செல்வத்தால் செருக்கடையாதே; செருக்கு வந்துவிட்டால் - தலைக்கனம் ஏறிவிட்டால் - மண்டைக் கர்வம் பிறந்து விட்டால் - அறிவுக்கண் குருட்டுக் கண்ணாகிவிடும்; நல்வினை இது; தீவினை இது என்பதைக் கண்டறிய முடியாது ஆகையால் எவ்வளவு பெரிய செல்வ வாழ்வும் நிலைக்காது என்பதைத் தெரிந்துகொள் என்று அறிவுறுத்துவதற்காகவே இச்செய்யுள் சொல்லப்பட்டது இந்த நாலடிச் செய்யுளின் கருத்தை நம்மாழ்வார் பாடலில் காணலாம். நம்மாழ்வாரும் அரச செல்வம் நிலையற்றது என்ற உண்மையை எடுத்துரைக்கின்றார். அரச வாழ்வு ஆண்டி வாழ்வாக மாறும் என்பது நிச்சயம். ஆதலால் விரைவில் திருமாலை நினையுங்கள்; அவர் பாதங்களைப் பணியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார் அடிசேர் முடியின ராகி அரசர்கள் தாம்தொழ, இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர், பொடிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்குஎன கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ. என்பதுதான் ஆழ்வார் பாடல். இந்தப் பாடலையும், மேலே காட்டிய நாலடியார் பாட்டையும் ஒத்துப் பாருங்கள். கருத்து பெரும்பாலும் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம். நாலடியார் பாட்டு செல்வம் நிலையற்றது. ஆதலால் செல்வம் இருக்கும்போதே அறம் புரியுங்கள் என்று சொல்லு கின்றது. ஆழ்வாரோ செல்வம் நிலையற்றது; ஆதலால் அழியாத செல்வத்தைப் பெறுங்கள்; அழியாத செல்வம் கண்ணன் கழல்களை எப்பொழுதும் நினைத்துப் பணிவதுதான், பாடுவது தான் என்று கூறுகிறார். நாலடியார் சமணர் செய்த நூல்; சமணர்கள் பக்தி நெறியைப் போற்றுகிறவர்கள் அல்லர்; அறநெறி ஒன்றே சிறந்தது என்று எண்ணியவர்கள்; ஆதலால் நாலாடியார் அறம்புரியத் தூண்டுகிறது. ஆழ்வார்கள் காலம் பக்தி மார்க்கம் பரவின காலம்; பக்தியினால் முக்திபெறலாம்; எல்லாப் பாவங்களையும் கழுவிக் கொள்ளலாம். பக்தியினால்தான் துன்பக் கடலிலிருந்து தப்பித்துக் கரையேற முடியும் என்ற நம்பிக்கை நிலைத்திருந்த காலத்தில் பிறந்தது ஆழ்வார் பாட்டு. ஆகையால்தான் அது அரச செல்வம் நிலையற்றது; பக்திச் செல்வந்தான் நிலையுள்ளது என்று கூறுகின்றது. அரசர்களுக்கு அரசர்; பல அரசர்கள் தங்கள் முடிகள் அடிகளிலே படும்படி வீழ்ந்து வணங்குகின்றனர். இப்படி மன்னர்களால் வணங்கப்படும் மன்னாதி மன்னர்கள்; இவர் களுடைய செல்வத்திற்கோ அளவில்லை. வீர முரசு, தியாக முரசு, நியாய முரசு என்னும் மும்முரசுகளும் இவர்களுடைய அரண்மனை வாசலிலே எப்பொழுதும் முழங்கிக் கொண்டிருக் கின்றன. வீரத்திலே சிறந்தவர்கள் என்பதைத் தெரிவிப்பதற்காக அடிக்கப்படுவது வீர முரசு. இல்லாதவர்களுக்கு உதவி செய்யட்டும்; ஏழை - வறியவர்கள் - வந்து வேண்டியவற்றைப் பெற்றுக்கொண்டு போங்கள் என்பதற்காக அடிக்கப்படுவது தியாக முரசு. யாராயிருந்தாலும் சமதி வழங்கப்படும் என்பதை அறிவிப்பதற்காக அடிக்கப்படுவது நியாய முரசு. இவ்வாறு மும்முரசும் எப்பொழுதும் முழங்கும்படி அரசாண்ட மன்னர்களும் அழிந்து போவார்கள்; மண்ணோடு மண்ணாகி புழுதியாகப் போய்விடுவார்கள். இது உறுதி. ஆதலால் உடனே விரைவாகக் கண்ணனுடைய பாதங்களை நினையுங்கள்; மணம் பொருந்திய துளசி மாலையை முடியிலே அணிந்த கண்ணன் பாதங்களை நினையுங்கள்! இது தான் ஆழ்வார் பாடலில் அமைந்திருக்கும் பொருள். அழியாத செல்வம் என்று எண்ணும் அரச செல்வமும் அழிந்து விடும். ஆதலால் திருமாலை நினையுங்கள் என்று வலியுறுத்திக் கூறியது இப்பாட்டு. மனிதன் செல்வத்திலே மயங்கி, இறுமாந்துவிடக்கூடாது; நல்ல செயல்களைச் செய்து வாழவேண்டும் என்பதற்காகவே நம்மாழ்வார் செல்வ நிலையாமையைப் பற்றி இவ்வாறு பாடியிருக்கின்றார். மக்களுக்கு அறிவுறுத்தும் இப்பாடல் தமிழர் அருள்நெறியாகும். அன்பும் காதலும் ஒன்றே காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றேதான். காதல் நிறைவேறினால் இன்பம் உண்டு, நிறைவேறா விட்டால் துன்பந்தான். இதைப் போலவே பக்தியால் இறைவன் அருளைப் பெற்றால் இன்பம் உண்டு. இறைவன் அருள் இல்லா விட்டால் துன்பமேதான். ஆதலால்தான் தமிழ்ச் சான்றோர்கள் காதலையும் பக்தியையும் இணைத்துப் பாடியிருக்கின்றனர். நம்மாழ்வார் தம்மை ஒரு பெண்ணாக எண்ணிக் கொள்ளு கிறார்; பகவானிடம் காதல் கொள்ளுகிறார்; பகவான் தம் காதலை நிறைவேற்றவில்லையே என்று வருந்திப் பாடுகின்றார். அவருடைய காதல்பாட்டுக்கள் அவர் இறைவனிடம் - திருமாலிடம் - எவ்வளவு ஆழ்ந்த அன்பு பூண்டவர் என்பதைக் காட்டுகின்றன. கால் கைகளை அசைக்க முடியாமல், இட்ட கால் இட்டபடியே இருக்கும்; வைத்த கை வைத்தபடியே இருக்கும்; எழுந்து நிற்கும்; வாய் பேசமுடியாமல் மயங்கி நிற்கும்; கை கூப்பி வணங்கி நிற்கும். காதல் என்றால் அவ்வளவு எளிதானது அன்று; துன்பந்தான். துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டால் தான் காதலிலே வெற்றி காணமுடியும் என்று கூறி மூச்சுத் திணறும்; கடல்போன்ற நிறமுடைய திருமாலே! நீ மிகவும் கடுமையானவன் என்று சொல்லும்; வட்டமான கூர்மை பொருந்திய சக்கரப்படையை வலக்கரத்தில் ஏந்தி இருப்பவனே என்று சொல்லும்; வந்து என் காதலை நிறைவேற்றி என் துன்பத்தை ஓட்டுவாயாக என்று சொல்லித் திகைத்து நிற்கும். நல்லவனே! செழித்த காவிரி சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ள திருமாலே! இவள் பங்கில் நீ என்ன நன்மைதான் செய்தாய்? என்று உள்ளம் குழைந்து பாடுகின்றார் நம்மாழ்வார். காதலுற்ற ஒரு பெண் கணவனை நினைந்து பாடுவது போன்றது இப்பாடல். இந்தப் பாடலைப் படித்து இன்புறுவோம். இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்து வாய்மயங்கும்; கைகூப்பும்; கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்; கடல்வண்ணாக கடியைகாண் என்னும் வட்டவாய் நேமி வலம்கையா என்னும்; வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்; இட்டனே! செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத்து என்சிந்தித் தாயே. இப்பாடல் ஏழாம் பத்து, இரண்டாம் திருவாய் மொழியில் உள்ளது. பாடப் பாட நம் உள்ளத்தை உருக்கும் தன்மையுள்ள பாசுரம். இவ்வாறு வருந்தியும் கூடத் திருமாலின் அருள் இன்னும் கிட்டவில்லை. காதல் வெற்றி பெறவில்லை. மீண்டும் அத்திரு மாலை எண்ணிப் புலம்புகிறாள் தலைவி. துன்புற்றவர்களின் துயரைத் துடைக்கும் இயல்பு உன் குணம் அல்லவா? எத்தனையோ பேர்களின் இன்னல்களை இதற்கு முன் ஓட்டி யிருக்கின்றவன் அல்லவா நீ? இத்தகைய நீ என்னுடைய காதலை - உன்னையே சரணமாக அடைந்த என்னுடைய காதல் துன்பத்தை - இன்னும் ஏன் ஓட்டவில்லை? என்று கேட்டுப் புலம்புகிறாள் தலைவி. இவ்வாறு காதல் கொண்ட தலைவி கதறுவதாகப் பாடுகின்றார் நம்மாழ்வார். திருமாலின் உருவத்தை - பண்புகளை நினைத்துப் பார்ப்பாள்; அவன் அருள் இன்னும் வரவில்லையே என்று திகைப்படைவாள்; சிறுபொழுது தெளிவுடன் இருப்பாள்; கை கூப்பி வணங்குவாள்; உடனே திருவரங்கத்தில் வாழ்கின்றவனே என்று வாய்விட்டுக் கூறுவாள்; மீண்டும் வணங்குவாள்; அப்பொழுதே தனது குளிர்ந்த கண்களிலே நீர் பெருகும்படி வந்து அருள் செய்வாய் என்று பல தடவை சொல்லிச் சொல்லி மயங்குவாள்; உடனே அந்தி நேரத்திலே - பகலும் அல்லாத இரவும் அல்லாத நேரத்திலே - பிரகலாதனைக் காக்கும் பொருட்டு - அவன் உன்னிடம் கொண்டிருந்த அன்பை நிறை வேற்றும் பொருட்டு இரணியனுடைய உடம்பைப் பிளந்த பெருமானே! என் துயரத்தைத் தீர்க்கக்கூடாதா? என்பாள். அலை வீசும் பாற்கடலைக் கடந்து தேவர்களுக்கு அமுதம் அளித்து அவர்களைக் காப்பாற்றிய கருணைக் கடவுளே, ஆரா அமுதனே, என் துயரைக் களைய முன்வரலாகாதா? உன்னை நேரே கண்டு, உன் பாதங்களை அடைவதையே உறுதியாகக் கொண்டிருக்கிறேன். இத்தகைய பெண்ணை ஏன் வீணாக மயங்கி வருந்தும்படி செய்கின்றனை என்று பாடுகிறார் ஆழ்வார். சிந்திக்கும்; திகைக்கும்; தேறும் கைகூப்பும்; திருவரங்கத்து உள்ளாய் என்னும்; வந்திக்கும்; ஆங்கே மழைக்கண் நீர்மல்க வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்; அந்திப் போதுஅவுணன் உடல்இடந் தானே! அலைகடல் கடைந்த ஆரமுதே! சந்தித்துஉன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே என்பதே அந்த அருமைப் பாசுரம்; இதுவும் ஏழாம் பத்து இரண்டாம் திருவாய் மொழியில் உள்ள பாட்டு. இப்பாடலில் இனிமையும் எளிமையும் அமைந்திருப்பதைக் காணலாம். இதற்கு அடுத்த பாட்டிலே மற்றோர் உண்மையைக் குறித் துள்ளார் ஆழ்வார். நானாக உன்னைக் காதலிக்கவில்லை; என் காதல் வலிந்து வந்த காதல் அன்று. நீதான் என்னைக் காதலிக்கும்படி செய்தாய். என் உள்ளத்திலே காதலை எழுப்பியவன் - வளர்த்தவன் நீயேதான். உனது உருவத்தால் - அழகால் - செயல்களால் - பண்புகளால் என்னை மையல் செய்தாய்; என் உள்ளத்திலே காதலை எழுப்பினாய்; என் உள்ளத்தை நீயே கவர்ந்து கொண்டாய்; ஆதலால், இப்பொழுது என்னை இவ்வாறு வருந்தவிடுவது ஒழுங்குதானா? அறந்தானா? முறைதானா? என்று கேட்பது போலப் பாடுகிறார். மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்று கேட்கின்றார். என் உள்ளத்திலே காதல் விதையை விதைத்த நீ தான், என்னைக் காக்க வேண்டும். என் காதலை நிறைவேற்ற வேண்டும் என்று இவ்வாறு வேண்டிக் கொள்ளுவது மிகவும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். இவ்வாறே அன்பும் காதலும் ஆழ்வார் பாடல்களிலே ஒன்றாக உறவாடுகின்றன. அருள் நோக்கி அழுதல் ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையில் நிகழும் அன்பைத்தான் சிறந்த அன்பாகக் கொண்டனர் தமிழர்கள். இவ்வன்புக்குத்தான் காதல் என்று பெயர்; காமம் என்று பெயர். இவ்வன்புதான் என்றும் நிலைத்திருக்கும் அன்பு; பிரியாத அன்பு; பிரிக்கமுடியாத அன்பு. அன்புக்கு எடுத்துக்காட்டாக கணவன் - மனைவி அன்பைத்தான் அன்று முதல் இன்று வரையிலும் புலவர்கள் கூறிப் போற்றிவருகின்றனர். தமிழர்களின் இந்தப் பரம்பரைப் பண்பாடு கடவுளுக்கும் பக்தர்களுக்கும் உள்ள தொடர்பிலும் புகுந்துவிட்டது. கடவுளைத் தலைவனாகவும் தன்னை மனைவியாகவும் வைத்துப் பாடும் வழக்கத்தைப் பக்தர்கள் பின்பற்றினர். இதை நாயக நாயகி முறைப் பக்தி என்பர். இந்த முறையைப் பக்திப் பாடல்கள் எல்லாவற்றிலும் பார்க்கலாம். தேவார, திருவாசகங் களிலும், பிரபந்தங்களிலும் இத்தகைய பாடல்கள் மிகுதியாகக் காணப் படுகின்றன. சிறப்பாக, பிரபந்தத்திலே நம்மாழ்வார் பாடல்கள் பெரும்பாலும் நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்டவை தாம். பழந்தமிழ் அகப்பொருள் இலக்கணத் துறைகளை நம்மாழ்வார் பாடல்களிலே காணலாம். நம்மாழ்வார் பாடல்களின் பெரும்பகுதி திருவாய் மொழி என்ற சிறப்புப் பெயர்பெற்றுப் பிரபந்தத்தில் விளங்குகின்றது. மணிவாசகர் பாடல் தமிழில் திருவாசகம் என்ற சிறப்புப் பெயருடன் விளங்குகின்றது. திருவாய் மொழி என்பதும் திருவாசகம் என்பதும் ஒரே பொருள் உடைய சொற்றொடர்கள் தாம். ஆகவே திருவாய் மொழி என்னும் பெயரே நம்மாழ்வார் பாடலின் மாண்பை விளக்கப் போதுமானதாகும். சைவர்களும் சரி, வைணவர்களும் சரி பொதுவாகத் தமிழ்ப் புலவர்கள் அனைவருமே திருவாய்மொழியை மிகுதி யாகப் பாராட்டுகின்றனர். இதற்குக் காரணம் பாடலின் இனிமை மட்டும் அன்று; அது பழந்தமிழ்ப் பண்பாட்டை அடிப்படை யாகக் கொண்டிருப்பதுதான் என்பதில் ஐயமில்லை. வைணவ மதத்தை விரிவாக எடுத்துரைக்கின்றன நம்மாழ்வார் பாடல்கள். இதுவும் அப்பாடல்களின் மாண்புக்குக் காரணமாகும். தனித்திருக்கும் காதலி, காதலன் வரவைக் காணாமல் வருந்துவது போன்ற பாடல்கள் பலவுண்டு. அத்தகைய பாட்டுக் களில் இரண்டொன்றைக் காண்போம் திருமாலின்மேல் காதல் கொண்ட தலைவி ஒருத்தி தனித் திருக்கின்றாள். இரவு நேரம்; உறக்கம் வரவில்லை. பொழுதும் விடியவில்லை பொழுது விரைவில் விடிவதாகவும் தெரிய வில்லை. இந்த நிலையில் வருந்தி வாடியிருக்கும் அவள் தன் நெஞ்சத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது ஒரு செய்யுள். நெஞ்சமே நீயும் எனக்குத் துணையாக இல்லை; என்னை விட்டு என் காதலனிடம் போய் விடுகின்றாய். இந்த இரவோ விடியவில்லை; நாழிகை நீண்டு கொண்டே போகின்றது; ஊழிக்காலம் போல நீண்டுகொண்டே போகின்றது; பகைவர் களைச் சினந்து அழிக்கும் கடுமையான வில்லையுடைய என் தலைவனாகிய காகுத்தனும் வரவில்லை; செத்துத் தொலைந் தாலாவது இத்துயரம் ஒழிந்துவிடும் என்றால், சாவதற்கும் வழியறியேன் தீவினையுடைய நான் இப்படிப் பெண்ணாகப் பிறந்து வாடுகின்றேன் என்று பாடுகின்றாள்; வருந்துகின்றாள். இப்பொருளமைந்த பாடல் கீழ்வருமாறு: நீயும் பாங்கல்லைகாண், நெஞ்சமே! நீள்இரவும் ஓயும் பொழுதின்றி, ஊழியால் நீண்டதால்; காயும் கடுஞ்சிலைஎன் காகுத்தன் வாரானால்; மாயும் வகைஅறியேன்; வல்வினையேன் பெண்பிறந்தே நம்மாழ்வார் இறைவனைக் காணுவதில் உள்ள ஆர்வத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார் .இறைவனைக் காணாமல், தான் தனித்து வருந்தும் ஏக்கத்தை இந்த அன்பு கனிந்த பாடலால் வெளியிட்டுள்ளார். இதற்கு அடுத்த பாடலும் இக்கருத்துடையதுதான். அதன் போக்கு இன்னும் உயர்ந்து நிற்கின்றது. நான் படும் துன்பத்தைக் கண்டுதான் சூரியன் மறைந்தான். சூரியன் குணம் சுடுவதுதான்; இயற்கையிலே நெருப்பாக இருக் கின்றவன். எல்லாரையும் சுடுவதுதான் அவனது இயற்கை. அவனிடமிருந்து குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அத்தகைய சூரியனே என் நிலையைக் கண்டு பரிதபித்துப் பார்க்க முடியாமல் மனம் உருகி மறைந்துவிட்டான். ஆனால் எல்லாவுயிர்களுக்கும் அன்னையும் அத்தனுமா யிருப்பவன்; பெருங்கருணைக்கடல்; சர்வதயாபரன்; எல்லா வற்றையும் காணக்கூடிய பெரிய கண்களையுடையவன். என்னிடம் இரக்கம் காட்டவில்லை. எப்பொழுதும் அவனையே எண்ணி வருந்துகின்ற - அவனைக் காணுவதற்கே தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்ற - என்னிடம் அவன் கருணை காட்டவில்லை. வந்து என் துக்கத்தை - தனிமையைப் போக்க வில்லை. என் உள்ளத்துயரை ஒழிக்கின்றவர் வேறு யார்தான் உண்டு. நான் அவரைத் தவிர வேறு யாரையும் நினைக்கவும் இல்லை; சரணாகதியாகக் கொள்ளவும் இல்லை ஆதலால் அவரைத் தவிர வேறு யாராலும் என் துன்பத்தைப் போக்க முடியாது என்று ஒரு தலைவி புலம்புவது போல அமைந்திருப்பது இந்தப் பாடல். இப்பாடல் கீழ்வருமாறு: பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்; இம்மண் அளந்த கண்பெரிய செவ்வாய் எம்கார் ஏறுவா ரானால்; எண்பெரிய சிந்தை நோய்தீர்ப்பார் ஆர்என்னையே இப்பாசுரம், ஆழ்ந்த கருத்தமைந்த அருந்தமிழ்ச் செய்யுள். இதன் சொல்லினிமையும், பொருள் இனிமையும், நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மையுள்ளவை. பெண்ணாகப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரிய துன்பத்தைக் காணப் பொறுக்கமாட்டேன் என்று கதிரவன் உள்ளம் கனிந்தான். ஆதலால் அவன் வராமல் மறைந்தான் இவ்வுலகத்தையே ஓரடியால் அளந்தவன்; பெரிய கண்களை உடையவன்; சிவந்த வாயை உடையவன்; எமது கருமையான காளை போன்றவன் வந்து எனக்குத் தேறுதல் கூறவில்லை. என் உள்ளத்திலே அடைந்து கிடக்கின்ற எண்ணத் தகுந்த பெரிய துன்பத்தைத் தீர்த்து என்னைச் சமாதானப் படுத்தவல்லவர்கள் வேறு யார்? இதுதான் இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். இப்பாடலும் இரவிலே, தலைவனை நினைத்துத் தனித் திருக்கும் ஒரு தலைவி வருந்துவது போலவே அமைந்த பாடல். ஆழ்வார் தம்மைத் தலைவியாகவும் திருமாலைத் தலைவனாகவும் வைத்துக் கொண்டு பாடிய பாடல். நாயகன் நாயகி முறையில் வைத்துப் பாடும் பாடல்களிலே எவ்வளவு அன்பும், பொருட்செறிவும் அமைந்திருக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு பாடல்களே போதுமான எடுத்துக் காட்டுக்களாகும். நாரை விடு தூது நம்மாழ்வார் பாடிய நற்றமிழ்ப் பாடல்கள் படிப்போர் உள்ளத்தைப் பரவசம் ஆக்குகின்றன. திருமாலைக் காதலனாகக் கொள்ளுகிறார். தம்மைக் காதலியாக ஆக்கிக்கொள்ளுகிறார். இவ்வாறு நாயகன் - நாயகி பாவத்தில் அவருடைய பாடல்கள் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்புத்தான் அவர்கள் பாடல்கள் தேனினும் சிறந்த தீஞ்சுவையுடன் விளங்கு வதற்குக் காரணமாகும். திருவாய்மொழியிலே, ஆறாம் பத்தின் முதல் திருவாய் மொழியில் அமைந்திருக்கும் பதினொரு பாடல்களும் படித்துச் சுவைத்து இன்புறத்தக்கவை. அப்பாடல்கள் பறவைகளைத் திருமாலிடம் தூது விடுவது போல் அமைத்துப் பாடப்ப ட்டவை. தம் காதலைக் காதலனாகிய திருமாலுக்குப் பறவை களின் மூலம் அறிவிப்பவை. எந்தெந்தப் பறவைகளை ஆழ்வார் தூது விடுகிறார் என்பதை அதிலே காணலாம். நாரைகளைத் தூது அனுப்பினார்; பொதுவான பறவைக் கூட்டங்களைத் தூது விடுகிறார்; அன்னப் பறவைகளிடம் தம் காதலைக் கூறித் தூது செல்ல வேண்டுகிறார்; குயில்களிடம் தம் குறைகளைக் கூறித் தூது செல்ல வேண்டுகிறார்; நாகணவாய்ப் பறவையிடம், தம் காதலை நவின்று நாயகனிடம் சென்று தூதுரைக்க வேண்டு கிறார்; மலர்களிலே தேனை நாடித் திரியும் வண்டுகளைப் பார்த்துத் தூது செல்ல வேண்டுகிறார். இவ்வாறு நாரைகள், பறவைகள், அன்னங்கள், குயில்கள், கிளி, நாகணவாய்ப்புள், வண்டுகள் முதலியவற்றைப் பார்த்து அவர் பாடிய பாடல்களே இந்த ஆறாம் பத்தின் முதல் திருமொழியாகும். திருவண்வண்டூர் என்னும் தலம் - திருப்பதி - கேரள நாட்டில் உள்ளது அவ்வூரில் குடிகொண்டிருக்கும் திருமாலிடமே, நம்மாழ்வார் தூதனுப்புகின்றார். இப்பாடல்களில் உள்ள முதல் இரண்டு பாடல்களும் நாரையைத் தூதுவிடுவதாக அமைந் திருக்கின்றன. ஓ நாரைக் கூட்டங்களே! நாள்தோறும், பொலிவு பெற்ற நீரோடையிலே வந்து இரை தேடிக்கொண்டிருக்கும் நாரைக் கூட்டங்களே! அருள் கூர்ந்து என்னுடைய வேண்டுகோளைக் கேளுங்கள்; என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள். வயல் களிலே செந்நெற்பயிர் செழித்து வளர்ந்திருக்கும் அழகிய வளப்பம் பொருந்திய வண்டூருக்குச் செல்லுங்கள். அங்குச் செல்வதனால் உங்கள் உணவுக்கு எந்தப் பஞ்சமும் ஏற்படாது. இங்கு உங்களுக்கு இரை அளிக்கும் நீரோடையிருப்பது போல அங்கு நீர்வளம் நிறைந்த வயல்கள் இருக்கின்றன. அவற்றிலே உங்களுக்கு வேண்டிய உணவுகள் தாராளமாகக் கிடைக்கும். ஆதலால் என்பால் இரக்கம் கொண்டு திருவண்வண்டூருக்குப் பறந்து செல்லுங்கள். அங்கே கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானைக் காணுங்கள்; அவன் எப்படியிருப்பான் என்ற அடையாளத் தையும் சொல்லுகிறேன் கேளுங்கள். அவன் கையிலே சக்கராயுதம் இருக்கும்; தன்னை நினைப்போரின் துன்பத்தை - பகையை - கவலையை - அறுத்துத் தொலைப்பதற்காகவே அவன் சக்கரப் படையுடன் விளங்குவான். அவன் கருமுகில் போன்றவன்தான். ஆனால் அவன் வாய் கனிபோல் - கொவ்வைக் கனிபோல் - செம்மையாகக் காணப்படும். இதுதான் என் தலைவனுடைய தோற்றம்; அடையாளம்; உருவம். இத்தகைய பெருமானைக் காணுங்கள். கைகூப்பி வணங்குங்கள். தீவினை காரணமாக, அவனைக் காணாமல் வருந்து கின்ற என் துன்பத்தை - நான் அவன்மீது கொண்ட காதலை - அவனிடம் கூறுங்கள். இதுதான் எனது வேண்டு கோளாகும். இவ்வாறு அந்த முதற் பாசுரம் பேசுகிறது. இதோ அப் பாசுரத்தைப் படியுங்கள். அதன் சுவையை நுகருங்கள்: வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்! செய்கொள் செந்நெல் உயர்திருவண் வண்டூர் உறையும் கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. இப்பாடலின் பொருளே மேலே எடுத்துக்காட்டப்பட்டது. நம் உள்ளம் உருக்கும் உயர்ந்த பாடல் இது. இதனை அடுத்துள்ள பாடலும் நாரைவீடு தூதுதான். அதன் பொருளையும் காண்போம். பெரிய நாரையே! நீ மட்டும் வருந்தாமல் மகிழ்ந்து வாழ்கின்றாய்! உனது காதலுக்குரிய மெல்லிய பெடையை விட்டுப் பிரியாமல் உறைகின்றாய். உன் பெடையுடன் சேர்ந்து இரை தேடித் தின்றுகொண்டிருக்கின்றாய். உன் காதலியைப் போல, நானும் என் காதலனைக் கலந்து - சேர்ந்து - துன்பம் இன்றி வாழ நீ துணை செய்யமாட்டாயா? துணை செய்வாய் என்றே நம்புகின்றேன். இந்த நம்பிக்கையுடனேயே என் குறையை உன்னிடம் கூறுகின்றேன். எப்பொழுதும் வேள்வியும், வேள்வியிலே வேத ஒலியும் முழங்கிக் கொண்டிருப்பது திருவண்வண்டூர். அங்கு மிகவும் குளிர்ச்சி குடிகொண்டிருக்கும். நீர்வளம் நிறைந்த சிறந்த ஊர் அதுவாகும். அவ்வூரில்தான் எனது நாதன் - எனது காதலன் - வீற்றிருக்கின்றான். அவன் இந்த உலகம் முழுவதையும் உண்டவன்; அவனிடம் இந்த உலகமே அடக்கம். அத்தகைய பெருமானைக் காண்பாயாக; அவன் பாதங்களைப் பணிவாயாக; அவனைக் காணாமல் - அவனை எப்பொழுது அடைவோம் என்ற ஆவலுடன் - நான் அடையும் துன்பத்தை அவனிடம் பணிவாகச் சொல்லுவாயாக: இந்த உதவியை நீ எனக்கு நிச்சயமாகச் செய்வாய் என்ற நம்பிக்கையுடன் தான் உன்னிடம் உரைக் கின்றேன். பெண்ணுடன் - காதலியுடன் - மனைவியுடன் - சேர்ந்து வாழும் நீ மனம் இரங்கி இச் செயலைச் செய்வாய் என்ற நம்பிக்கையுடன் தான் உன்னை வேண்டிக்கொள்ளுகின்றேன். ஆதலால் இப்பொழுதே புறப்பட்டு, திருவண்வண்டூருக்குப் போக வேண்டு கின்றேன். இச்செய்தியையே இரண்டாம் பாட்டு எடுத்துரைக்கின்றது. அந்த இரண்டாம் பாடல் கீழ்வருவது: காதல்மென் பெடையோடுஉடன் மேயும்கருநாராய்! வேதவேள்வி ஒலிமுழங்கும் தண்திருவண் வண்டூர் நாதன்; ஞாலம்எல்லாம் உண்டநம் பெருமானைக் கண்டு பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே. முதல் பாடலிலே கைகள் கூப்பிச் சொல்லீர் என்று வேண்டினார்; கைகூப்பி வணக்கத்துடன் என் காதல் தன்மையைச் சொல்லுங்கள் என்று நாரையை வேண்டிக் கொண்டார். இரண்டாவது பாசுரத்தில் உங்கள் சொல்லை அவர் காது கொடுத்துக் கேட்காவிட்டால் மீண்டும் கூறுங்கள். அவர் பாதங்களைப் பணிந்து பணிவுடன் கூறுங்கள் என்று வேண்டினார். பணியீர் என்பதற்குப் பணிவுடன் சொல்லுங்கள் என்பதே பொருள். இவ்வாறு இனிமையும், பொருட்செறிவும் நிரம்பியிருக்கும் நம்மாழ்வார் பாடல்கள் அனைத்தும் அருந்தமிழ்ச் செல்வமாகும்.