சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 10 வள்ளுவர் காட்டிய வைதீகம் வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 10 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 248 = 256 படிகள் : 1000 விலை : உரு. 160/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை வள்ளுவர் காட்டிய வைதீகம் ஆசிரியர் முகவுரை 3 முன்னுரை 4 1. முன்னோர் கருத்து 9 2. கடவுள் 14 3. விக்கிரக வணக்கம் 16 4. ஜாதி 17 5. ஆரமம் 24 6. யாகம் 29 7. மறுபிறப்பு 31 8. நல்வினை தீவினை 33 9. ஊழ்வினை 35 10. சிரார்த்தம் 38 11. சுவர்க்கம் நரகம் 39 12. மோட்சலோகம் 41 13. பெண்கள் 43 14. புராணக் கொள்கைகள் 48 15. மாமிசமும் மதுவும் 53 16. முடிவுரை 58 வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் ஆசிரியர் முன்னுரை 65 வள்ளுவர் மாண்பு 70 முதற் பகுதி 71 1. வள்ளுவர் பெருமை 73 2. வள்ளுவர் வரலாறு 80 3. திருக்குறள் அமைப்பு 83 4. பண்டை நூல்களும் குறளும் 88 5. வள்ளுவர் காலம் 93 6. ஆரியர் தமிழர் பண்பு 97 7. வள்ளுவர் வழி 107 8. மாமிசமும், மதுவும் 114 9. இடித்துரைத்தல் 119 இரண்டாவது பகுதி 123 1. இல்லற வாழ்வு 125 2. இல்வாழ்வோர் கடமை 130 3. ஆண் பெண் சமத்துவம் 134 4. சமுதாய ஒற்றுமை 139 5. துறவறத்தின் நோக்கம் 143 6. துறவிகள் யார்? 146 மூன்றாவது பகுதி 151 1. வள்ளுவர் கால அரசியல் 153 2. ஆளத் தகுந்தவன் 156 3. குற்றம் உணர்தல் 159 4. தண்டனை, அடக்குமுறை 165 5. ஆளத் தகுதியற்றவர் 170 6. அமைச்சர்கள் 174 7. ஆட்சியும் செல்வமும் 179 8. உரிமை ஆட்சிக்கு அடிப்படை 185 9. அமைதிக்கு வழி 188 10. மானம் உள்ள வாழ்வு 192 11. செல்வத்தின் சிறப்பு 198 12. உழவனும் நிலமும் 203 13. வறுமையும் வாழ்வும் 207 14. உலகம் போற்றும் உண்மைகள் 213 நான்காவது பகுதி 220 1. காமத்துப்பால் 221 2. காதல் மணம் 226 3. கற்பு மணவாழ்வு 232 4. இலக்கியச்சுவை 239 திருக்குறள் ஆராய்ச்சி வள்ளுவர் காட்டிய வைதீகம் (1949) ஆசிரியர் முகவுரை ஒருநூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமை யளிப்பதல்ல. இதுவே எனது கருத்து. இந்த முறையில் பழய நூல்களை ஆராய்ச்சி செய்வது தான் பழங்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளுவதற்கு இடந்தரும்; சரித்திர ஆராய்ச்சிக்கும் துணை செய்யும். இன்று சிலர் திருக்குறளுக்குத் தங்கள் மனம்போனவாறு பொருள் கூறுகின்றனர். அவர் கருத்தை மாற்றிக் கூற முன் வருகின்றனர். அவ்வாசிரியர் காலத்தில் வழங்காத கொள்கை களை வழங்கிற்று என்று காட்ட முன்வருகின்றனர். இச்செயல் நடுநிலைமையான ஆராய்ச்சி முறைக்கு ஏற்றதன்று என்பதை அறிஞர்கள் உணரவேண்டும். இந்நோக்கத்துடனேயே இச்சிறு புத்தகத்தை வெளியிடு கிறேன். இந்நோக்கத்தை அறிஞர்கள் வரவேற்பார்கள் என்பதே எனது நம்பிக்கை. இந்நூலுக்கு அரிய முன்னுரை ஒன்றை அன்பர் S. ராமநாதன் அவர்கள் அளித்துள்ளார். சிந்தனைக்குரிய விஷயங்கள் பல அதில் உள்ளன. படித்து உண்மை யுணர வேண்டுகின்றேன். 1-1-1949 சென்னை சாமி. சிதம்பரன் முன்னுரை திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூல். அக்காலத்தில் தமிழர் அடைந்திருந்த நாகரிகத்தையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் சீர்திருத்தத்தை உண்டாக்க வேண்டித் திருக்குறள் ஆசிரியர் செய்த முயற்சியே குறள் நூலாக உருவமாயிற்று. பழங்காலத் திலிருந்த ஒரு அறிவாளி அவர் காலத்து மக்களிடம் அவர் கண்ட பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, அவருக்கு நல்லவை என்று தோன்றியவற்றைச் சிறப்பித்தும், கெட்டவை என்று தோன்றி யவைகளைக் கண்டித்தும் குறள் இயற்றினார். குறளாசிரியரின் சொல் வன்மையைப் பற்றியும், புத்தி நுட்பத்தைப்பற்றியும், தமது முன்னோர் என்ற முறையில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம். குறளில் வற்புறுத்தப் பட்ட பல ஒழுக்கங்கள் இன்றும், இந்த இருபதாம் நூற்றாண்டிலும், நல்லொழுக்கங்களாகவே கருதப்பட்டு வருவது தமிழ் மக்களுக்கும், தமிழ் பாஷைக்கும் பெருமை கொடுக்கத் தக்கதே. இக்காலத்தில், குறளாசிரியர் வாழ்ந்து குறைந்த பட்சம்ஒரு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாவது கழிந்த பிறகு, குறளைப் படிப்பவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் மனித சரித்திரத்தில் இந்தப் பன்னெடுங் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பல புரட்சிகளையும் மனதில் நிறுத்திப் படிக்கவேண்டும். அப்படி ஆராய்ச்சி செய்பவர்களுக்குக் குறளிலும் சில குற்றங்கள் தோன்றத்தான் செய்யும். இது இயற்கை. ஒரு ஆயிரத்து ஐந்நூறு வருஷத்தில் மனித சமூகம் எவ்வளவோ மாறுதல்களை அடைந்துவிட்டது. ஒரு பெண் இறந்த தன் கணவனின் பிணத்தோடு கொளுத்தப்படவேண்டும் என்பது ஒரு நூறுவருஷத்திற்கு முன்பு சிறந்த ஒழுக்கமென வற்புறுத்தப்பட்டது. இன்று அப்படிப் பட்ட செயலுக்கு உடந்தையாக இருப்பவர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப் படுவர். உலகத்தில் எல்லாத் தேசத்தினரும் தங்கள் பழக்கவழக்கங்களிலும், அந்தப் பழக்க வழக்கங்களுக்குக் காரணமாக உள்ள ஒழுக்கம், நன்மை, தீமை என்ற எண்ணங் களிலும், கொள்கைகளிலும், தீவிர மாறுதல்கள் செய்து கொண்டிருக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சியினாலும், போக்கு வரவு சாதனங்கள் மிகுந்தபடியாலும், பல தேசத்து மக்கள் நெருங்கிப் பழகச் சவுகரியம் ஏற்பட்ட படியாலும், மனிதர்கள் தங்கள் எண்ணங்களிலும், தேவைகளிலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் அநேக மாறுதல்களைச் செய்துகொண்டனர். ஒவ்வொரு தேசத்திலும் காலத்திற்கேற்ப அறிவாளி களினால் இயற்றப்பட்ட நூல்கள் அந்தந்தக் கால தேச மாறுபாடு களைக் குறிக்கின்றன. இங்கிலாந்தில் சாசர் காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, ஷேக்பியர் காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, பர்னார்ட்ஷா காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, இந்தக் கால வேறுபாட்டினால் சாசருடைய பெருமையோ, ஷேக்பியருடைய பெருமையோ குறைந்துவிடவில்லை. அது மாதிரியே குறள் ஆசிரியர் காலத்து உண்மையும் ஒழுக்கமும் வேறு. இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழும் தமிழரின் உண்மை ஒழுக்கம் வேறு. இந்த வேற்றுமையால் குறளாசிரியரின் பெருமை எள்ளளவும் குறைந்த பாடில்லை. குறளில் கண்டது முழுவதும் இன்றைக்கும் உண்மையாயிருக்கு மானால் குறளாசிரியர் மனிதனாயிருந்திருக்க முடியாது. தேவனா யிருந்து தீர்க்க் தரிசனம் பெற்றிருக்க வேண்டும். தெய்வீகத் தன்மையிலும்தீர்க்க தரிசனத்திலும் நம்பிக்கையில்லாமல், மனித அறிவையே பிரதானமாகக் கொண்டவர்கள் குறளாசிரியரைத் தெய்வமாக வணங்க மாட்டார்கள். ஷேக்பிரியர் போன்ற ஒரு அறிவாளி யென்றே கொண்டாடுவார்கள். குறளில் உள்ள வாக்கியங்களைப் பண்டைத் தமிழரின் நாகரித்தைப்பற்றிய ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்களே ஒழிய இன்றைய காலத்து நவீனத் தமிழரின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டியாகக் கொள்ள மாட்டார்கள். ஒரு மனிதனை மனிதனாக பாவித்தால்தான் அந்த மனிதனுடைய பெருமை அவனைச் சாரும் அவனைத் தெய்வமாக வணங்க ஆரம்பித்தால், அவனுடைய பெருமை முழுதும் அவனைச் சாராமல், ரூபமில்லாத உணர்ச்சியில்லாத தெய்வம் எனப்பட்ட ஒரு வதுவைச் சாரும் உலக மக்களுக்கு நன்மை செய்வதில் தங்களுடைய வாழ்க்கையைத் தியாகஞ் செய்த பல அறிவாளிகள் இந்த ஆபத்தில் சிக்கித் தெய்வமாக்கப்பட்டு விட்டார்கள். இவ்வித ஆபத்து திருவள்ளுவர்க்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டு துயரப்பட்ட காரணத்தாலேயே நண்பர் சிதம்பரனார் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இச்சிறு நூலை எழுதினார். சமகிருத பாஷையில் உள்ள சுருதி, மிருதிகளின் சாராம்சத்தையே குறளில் திரட்டிக் கூறப்பட்டிருக்கிறது. ஜாதிபேதம், நால்வகை ஆரம தர்மம், பெண்ணடிமை, பிறவியால் ஏற்பட்ட குல விசேஷம், சுவர்க்கம், நரகம், கர்மம், மறுபிறப்பு எனப்பட்ட கொள்கைகள் இக்காலத்துக்கு ஒவ்வா தவை. ஆனால் வள்ளுவரால் ஆமோதிக்கப்பட்டவை, இதனால் வள்ளுவரின் பெருமை குன்றாது. ஜாதிபேதம் கூடாது என்பது வள்ளுவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய கொள்கை கர்மம், மறுபிறப்பு என்னும் கொள்கைகளை விட்டு பகவான் புத்தராலேயே மீற முடியவில்லை. ரயில் வண்டியையும், ஆகாய விமானத்தையும் எப்படிக் குறளாசிரியர் எதிர்பார்க்கவில்லையோ, அப்படியே மேலே சொல்லப்பட்ட பல கொள்கைகளைப் பிற்காலத்து மக்கள் உதறித் தள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. குறளாசிரியர் மாமிச போஜனத்தையும் மதுவருந்துதலையும் கூடாவொழுக்கமெனக் கூறுகிறார். வள்ளுவர் காலத்தில் தமிழரிடம் புகையிலைப் பழக்கம் இல்லை. இருந்திருக்குமானால் சுருட்டு, சிகரெட், பீடி, மூக்குப்பொடி முதலியவைகளைக் கண்டித்து ஒரு அதிகாரமாவது எழுதியிருப்பார். நவீன உலகத்தில் இவற்றைக் கண்டிப்பவரும் உண்டு, போற்றுபவரும் உண்டு. வயிறார உண்பதற்கு ஒருவேளை உணவுக்கும் வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள் வதியும் இந்நாட்டில் மீன் மாமிசம் போன்ற சத்துள்ள மலிந்து உணவுப் பதார்த்தங்களை நீக்கினால் பஞ்சமும் நோயும் பயங்கரமாகப் பரவுமென்பதில் ஐயமில்லை. மாமிசம் நீக்கப்படாத இக்காலத்திலேயே வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக் கையில் மாமிச பகிஷ்காரம் செய்வது எங்ஙனம்? மதுவிலக்கு ஒரு தடவை அமெரிக்காவில் கையாளப் பட்டு, அதனால் கள்ள விற்பனையும் பலாத்காரக் குற்றங்களும் அதிகப்பட்டுப் பொது மக்களின் ஒழுக்கம் கெட்டுவிடுவதாக அனுபோகத்தில் கண்டுபிடித்த பிறகு கைவிடப்பட்டது. அதே மதுவிலக்குக் கொள்கை சுதந்தர இந்தியாவில் பலவிடங்களிலும் கையாளப்படுவதால், அமெரிக்காவில் அனுபோகத்தில் ஏற்பட்ட பலவித தீமைகளும் இங்கும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் நடந்தது போலவே இந்தியாவிலும் மதுவிலக்குக் கொள்கை கைவிடப்படலாம். வேதகாலத்து ஆரியர் யாகம் என்ற பெயரால் மாமிசத்தை நெருப்பிலிட்டு வாட்டி, சோமா என்னும் ஒரு மதுபானத்தை அருந்திக் களிப்புற்றனர். இவ்வித யாகமே ஆரியர்களின் முக்கிய கடமையாக வேதத்தில் பணிக்கப் பட்டிருக்கிறது. பழங்காலத்துத் தமிழ் மக்களும் வேடர்களாய்க் காட்டில் உள்ள பிராணிகளை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தைப் புசித்துக் கள்ளுண்டு களிப்பதே அவர்களின் பெருமை தங்கிய பழக்கமெனப் பழந்தமிழ். நூல்களில் காணப்படுகிறது. குறளாசிரியர் கோரிய இந்த இரண்டு சீர்திருத்தங்களும் மனித இயற்கைக்கு விரோதமா யிருப்பதால், அவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நிறைவேறவில்லை. இப்படி அனுபோகத்துக்கு ஒத்துவராததும், அனுபவித்துக் கூடாவொழுக்கமென நீக்கப்பட்டதுமான பல விஷயங்கள் குறளில் காணப்படுவதை இச்சிறிய ஆராய்ச்சி நூலின் விளக்கப் பட்டிருக்கின்றன. இவைகளிலிருந்து குறள் எனப்படுவது தெய்வ வாக்கல்ல, ஒரு உயர்ந்த அறிவுள்ள தமிழ் மகனால் எழுதப் பட்டது என்பது புலப்படுகின்றது. தெய்வ சிருஷ்டியானால் மனிதன் தன் அறிவால் அதை ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆரியவேதமும், கிறிதுவ பைபிளும், இலாமி குரானும் தெய்வ வாக்கானபடியால் அவை மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாகும். அவற்றை வைத்து வணங்கி, அவற்றில் உள்ளவைகளை அப்படியே ஒப்புக்கொள்வதுதான் மனிதன் கடமையாகும். ஆனால் குறளை அம்மாதிரித் தலைவணங்கி அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழன் குறளைக்கண்டு மிரளாமல், தன் சுய சிந்தனையால் அதனை அலசி ஆராய்ந்து பார்த்து, பழங்காலத்துத் தமிழன் என்ன என்ன எண்ணங்களை எண்ணினான், என்னென்ன பழக்கங்களைக் கையாண்டு எவ்வித வாழ்க்கை நடத்தினான், அவன் முன்னேற்றம் அடைய எந்த மாதிரியான சீர்திருத்தங்கள் வேண்டுமென்று ஆசைப்பட்டான், என்ற உண்மைகளைச் சித்திரத்தில் காண்பதைப் போலக் குறளில் கண்டு ஆனந்திப்பான். இம்முறையினாலேயே தமிழன் பண்டைப் பெருமையும், குறளாசிரியரின் உன்னத நிலைமையும் பிரகாசிக்கும். 1-1-1949 சென்னை. S. ராமநாதன் முன்னோர் கருத்து திருக்குறள் ஒரு நீதிநூல். இதை இயற்றியவர் திருவள்ளுவர். அவர் வாழ்ந்த காலத்தில் எவை எவை மக்கள் அநுசரிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்று கருதப் பட்டனவோ அவைகளை, அவர் தமது நூலில் திரட்டிக் கூறியிருக்கிறார்: எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் வேதம், உபநிஷதம், புராணம், மிருதி ஆகியவைகளில் சொல்லப்படும் எல்லா தர்மங்களும் திருக்குறளில் இருக்கின்றன. திருக்குறளில் இல்லாத விஷயங்கள் ஒன்றும் அந்த வேத உபநிஷத புராண மிருதிகளில் இல்லை. சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும் போற்றி உரைத்த பொருள்எல்லாம் - தேற்றவே முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இல். பல சாதிரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை யெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி மூன்று பகுதியாக வகுத்துக் கூறிய திருவள்ளுவரைப் போன்ற புலவர்கள் யாருமே இல்லை. செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும்பொருள் ஒன்றே. வேதத்திற்கும், திருவள்ளுவர் கூறிய திருக்குறளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப் பாரதம் சீராமகதை மனுப் பண்டைமறை நேர்வன; மற்றில்லை நிகர். எல்லா விஷயங்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும் படி சொல்லியிருக்கின்ற திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு பாரதம், ராமாயணம், மனுதர்ம சாதிரம், வேதங்கள் இவை களையே ஒத்த நூல்களாகக் கூறலாம். இவைகளைத் தவிர வேறு ஒன்றையும் திருக்குறளுக்குச் சமமாகக் கூற முடியாது. இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும் முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு உள்ள அரிதென்று அவை வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள். முற்காலத்திலே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு விஷயங்களைப் பற்றியும் விளக்கமாகக் கூறியிருக்கின்ற சமகிருத வேதத்தைப் பொது ஜனங்கள் படித்துத் தெரிந்து கொள்ள முடியாதென்பதைத் திருவள்ளுவர் உணர்ந்து, அவ்வேதத்தில் உள்ள விஷயங்களை எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி திருக்குறளாக எழுதினார். வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓத வழுக்கற்றது உலகு. வேதத்தில் கூறப்பட்ட சிறந்த விஷயங்களைத் திருவள்ளுவர் திருக்குறள் மூலம் சொல்லி யிருப்பதனால் உலகத்தாரின் ஒழுக்கம் கெடாமல் காப்பாற்றப்பட்டது. வேதப் பெருளை விரகால் விரித்து உலகோர் ஓதத் தமிழால் உரை செய்தார். வேதத்தில் உள்ள விஷயங்களை உலகத்தார் படித்துத் தெரிந்து கொள்ளும்படி, திறமையுடன் விரிவாகத் தமிழில் எழுதினார் திருவள்ளுவர். மேலே காட்டிய பாடல்கள் எல்லாம் பழந்தமிழ்ப் பாடல்கள். திருக்குறளையும் திருவள்ளுவரையும் பாராட்டிக் கூறப்பட்டவை. இவை திருவள்ளுவமாலை என்னும் நூலில் காணப்படுபவை. தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், வேதங்களின் முடிவு களைக் கூறும் உபநிஷதங்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய தேவாரங்கள் வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும் வியாச சூத்திரம், திருக்கோவையார், திருவாசகம், திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகிய இவைகள் எல்லாம் ஒரே விஷயத்தைக் கூறும் நூல்கள் என்று தெரிந்து கொள்ளுக. இப்பாட்டு அவ்வையார் பாடியதாக வழங்குகிறது. இன்றும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் இப்பாட்டைப் படித்து வருகின்றனர். இப்பாடல்களிலிருந்து திருவள்ளுவர் வேத சாதிரங்களை நன்றாகக் கற்றறிந்தவர், வடமொழியிலிருந்த வேதானுஷ்டானங் களைத் தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என்னும் ஆவலுடனேயே திருக்குறளை இயற்றினார் என்னும் உண்மையை உணரலாம். திருவள்ளுவர் முன்னோர்களின் கொள்கைக்கு மாறாக எதுவும் சொல்லவில்லை, பல நூல்களில் உள்ள விஷயங்களைப் பலருக்கும் புரியும்படி திரட்டித் தெளிவாகக் கூறியிருக்கிறார். இக்காரணத்தாலேயே இவரை இவர் காலத்துப் புலவர்கள் `தெய்வப் புலவர் என்று புகழ்ந்தனர். திருவள்ளுவர் திருக்குறளை எழுதிய காலத்தில் வடமொழி யிலே யிருப்பது போன்ற மிருதிகளும் நீதிநூல்களும் தமிழிலே இல்லை. மக்கள் இம்மாதிரிதான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று கட்டளையிடும் நூல்களுக்கு மிருதிகள் என்று பெயர். மிருதிகள் வடமொழியில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகைய மிருதிகள் தமிழிலே இல்லை. இத்தகைய காலத்தில்தான் திருக்குறள் எழுதப்பட்டது. இது மக்களுக்கு நீதி புகட்டும் முறையில் புதிதாகத் தமிழில் எழுதப்பட்டமையால் அக்காலப் புலவர்கள் திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடினர். திருவள்ளுவரைப் பிரம்ம தேவன் அவதாரம் என்றும் கூறினர். இக்காலத்தில் திராவிடர் கலாச்சாரம் வேறு ஆரியர் கலாச்சாரம் வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற சிலர் திருக்குறளில் திராவிடர் கலாச்சாரத்தைக் காணலாம்; திருக்குறள் திராவிடர் கலாசாரத்தை விளக்கும் நூல்; திருக்குறள் திராவிடர் கலாச்சாரத்தை வளர்க்க வழிகாட்டும் என்று கூறுகின்றனர். இந்தக் கூற்றுக்குத் திருக்குறளில் ஆதாரமேயில்லை. ஆரியர் என்று சொல்லப்படுகிறவர்கள், வேதம், அதை யொட்டிய புராண மிருதிகளில் எந்த ஆச்சார அனுஷ்டானங் களை விளக்கி யிருக்கிறார்களோ, அவற்றையே தமிழில் திருக்குறள் ஆசிரியர் விளக்கி யிருக்கிறார். திருக்குறளில் காணப்படும் எல்லா விஷயங் களையும் சமகிருத நூல்களாகிய வேத புராண மிருதி களிலும் காணலாம். சிலர் தமிழிலிருந்துதான் பல விஷயங்களை வடநூலார் கடன் வாங்கினர் என்கின்றனர்; சிலர் வடமொழியிலிருந்து தான் பல விஷயங்களைத் தமிழ் நூலார் கடன் வாங்கினர் என்கின்றனர். இவர்கள் கூறுவதன் உண்மை எப்படி யிருந்தாலும், இரண்டு மொழி நூல்களிலும் சொல்லப்படும் ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் ஒன்றேதான். இதற்குத் திருக்குறளே தகுந்த அத்தாட்சி. திருக்குறளில் உள்ள மொத்த பாடல்கள் 1330. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம். மொத்தம் 133 அதிகாரம். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தனித் தனித் தலைப்பெயர் உண்டு. திருக்குறள் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதி அறத்துப் பால், இரண்டாவது பகுதி பொருட் பால், மூன்றாவது பகுதி காமத்துப்பால். அறத்துப் பாலில் இல்லறவியல் துறவறவியல் என்று இரண்டு பிரிவுண்டு.இல்லறவியலில் கிரகதாரமத்தில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமைகள் சொல்லப்படுகின்றன. துறவியலில் சந்நியாச ஆரமத்தில் இருப்பவன் செய்யவேண்டிய கடமைகள் கூறப்படுகின்றன. பொருட்பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று மூன்று பிரிவுகள் உண்டு. அரசனுடைய கடமைகளைப் பற்றியும், அரசாட்சி செய்யவேண்டிய முறைகளைப்பற்றியும் கூறுவது அரசியல், அரசாட்சிக்கு வேண்டிய அங்கங்களைப் பற்றியும், அந்த அங்கங்களின் ஒழுங்கு பற்றியும் கூறப்படுவது அங்கவியல், இவைகளில் விட்டுப்போன விஷயங்களைப் பற்றிக் கூறுவது ஒழிபியல். காமத்துப்பாலில் களவியல், கற்பியல் என்று இரண்டு பிரிவு. களவியலில் வயது வந்த ஒரு ஆடவனும், வயது வந்த ஒரு பெண்ணும் இரகசியமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழும் நடப்பு முறை கூறப்படுகிறது. கற்பியலில் அவர்கள் வெளிப்படை யாக மணம் செய்துகொண்டு வாழும் முறை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு இயலிலும் பல அதிகாரங்கள் உண்டு. கிரகதன், சந்நியாசி, அரசன்,அரசனுடைய பரிவாரங்கள் இவர்களுக்கு ஆரிய சாதிரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளையே திருவள்ளுவரும் கூறியிருக்கிறார். திருவள்ளுவர் பல பாடல்களில் என்ப என்ற சொல்லை உயர்திணைப் பன்மையில் உபயோகித்திருக்கிறார். என்ப என்றால், என்பார்கள், என்று சொல்லுவார்கள் என்று பொருள். முந்திய நூலோர்கள் இவ்வாறு சொல்லுவார்கள் பெரியோர்கள் இவ்வாறு சொல்லுவார்கள் என்ற கருத்திலேயே பழய தமிழ் நூல்களில் என்ப என்னும் சொல் வழங்கப்பட்டு வருகின்றது. திருக்குறளில் என்ப என்னும் சொல் வந்திருப்பதிலிருந்தே அவர் முன்னோர் நூல்களின் கொள்கைகளைத் திரட்டிக் கூறுகிறார் என்பதில் ஐயமில்லை. திருவள்ளுவர்க்குள்ள சிறப்பெல்லாம் தமிழில் பல நூல் களின் சாரங்களையும் திரட்டி ஒழுங்குபடுத்தித் தெளிவாகக் கூறியிருப்பது ஒன்றுதான். இதேபோன்ற நூல் வேறு ஒன்றும் இவ்வளவு அழகாக சுருக்கமாகத் தமிழில் எழுதப்படவில்லை என்பது உண்மை. திருவள்ளுவர் கூறியிருப்பவைகள் வேத புராண மிருதி களின் சாரங்கள்தாம் என்பதை விளக்குவதற்குத் திருக்குறளி லிருந்தே சில பாகங்களை எடுத்துக் காட்டு கிறோம். அவற்றைப் படித்தாலே திருவள்ளுவரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். கடவுள் அகரம் முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு. (1) எழுத்துக்கள் எல்லாம் அ என்ற எழுத்தைத் தலைமையாகக் கொண்டிருக் கின்றன. அதுபோல உலகம் ஆதி பகவனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டிருக் கின்றது. கற்றதனால் ஆயபயன் என்கொல்? வால்அறிவன் நற்றாள் தொழஅர் எனின். (2) மாசற்ற அறிவுடைய கடவுளின் பாதங்களை வணங்கா ராயின், படித்தவர் களுக்கு அப் படிப்பினால் என்ன பயன்? படிப்பின் பயன் கடவுளை வணங்குதல். வேண்டுதல் வேண்டாமை யிலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. (4) ஆசையும் வெறுப்பும் அற்றவனாகிய கடவுளின் பாதங் களை அடைந்த வர்க்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறிநின்றார் நீடுவாழ்வார். (6) மெய், வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்து பொறிகளின் மூலம் உண்டாகின்ற ஐந்து வகையான ஆசைகளையும் ஒழித்த வனாகிய கடவுளின் உண்மையான ஒழுக்கம் நெறியைப் பின்பற்றி நடப்பவர்கள் நிலைத்து வாழ்வார்கள். தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (7) ஒப்பற்ற கடவுளின் பாதத்தை அடைந்தவர்கள் தாம் மனக்கவலை யில்லாமல் வாழ்வார்கள்; மற்றவர்களால் மனக்கவலை யில்லாமல் வாழ முடியாது. கோள் இல் பொறியில் குணம்இலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (9) கடவுளின் பாதத்தை வணங்காத தலை, தம்முடைய தொழிலைச் செய்யாத ஐம்பொறிகளைப் போல பயனற்றது. பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (350) ஆசையற்றவனாகிய கடவுளின்மேல் அன்பு செலுத்து வதை மாத்திரம் மனதில் வைத்துக்கொள். அந்த அன்பையும் தன் சரீரத்தின்மேல் உள்ள ஆசை நீங்குவதற்காகவே மனதில் கொள்ளுக. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்து கெடுக உலகு இயற்றியான். (1062) இவ்வுலகத்தைப் படைத்த கடவுள், மக்கள் பிச்சை யெடுத்தாவது உயிர்வாழ வேண்டுமென்று விரும்பு வானாயின், அவனும் பிச்சை யெடுப்பாரைப்போல அலைந்து ஒழிக. திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. முதல் பாட்டு அகரமுதல எழுத்தெல்லாம் என்று தொடங்குவது. கடவுள் இல்லாமல் உலகம் இல்லை என்று கூறுகிறது. உலகைப் படைத்தவர் கடவுள், அவரை வணங்குவது மக்கள் கடமை, கடவுளை வணங்குகிறவர்கள் தாம் சுகமடை வார்கள், மனக் கவலையின்றி வாழ்வார்கள், வணங்காதவர்கள் துன்பம் அடைவார்கள். என்ற விஷயங்களை மேலே எடுத்துக் காட்டிய பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். விக்கிரக வணக்கம் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும ஈண்டு. (18) மழை பொய்யாவிட்டால் இவ்வுலகில் தெய்வங்களுக்குக் கூட திருவிழாவும் பூஜையும் நடக்காது. குறிப்பிட்ட சில நாட்களில் குதூகலமாகக் கொண்டாடு வது திருவிழா; தினந்தோறும் செய்வது பூஜை. பூஜையை நித்தியம் என்றும், திருவிழாவை நைமித்திகம் என்றும் கூறுவர். தெய்வத்தைத் தினந்தோறும் பூஜை செய்யவேண்டுமானால் அதற்கென ஒரு இடம் வேண்டும். அந்தத் தெய்வத்தைக் குறிக்க ஒரு அடையாளம் வேண்டும். இந்த அடையாளம் எந்த வகையில் இருந்தாலும் அது ஒரு உருவமாகி விடுகின்றது. இந்த உருவத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொண்டாடுவதுதான் திருவிழா. திருவள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் உருவ வணக்கம் இருந்தது, திருவள்ளுவரும் அதை ஆதரித்தார் என்று இந்தக் குறளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஜாதி ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (133) தன் குலாச்சாரத்தை அனுசரிப்பதே நல்ல குடியில் பிறந்ததற்கு அடையாளம். அவ்வாசாரத்தைக் கைவிடுதல் அவனை, அவன் பிறந்த குலத்தைக் காட்டிலும்இழிந்த குலத்தில் பிறந்தவனாக, ஆக்கிவிடும். மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (134) பிராமண குலத்திலே பிறந்தவன் தன் வேதத்தை மறந்து விட்டாலும் மீண்டும் ஞாபகப் படுத்திக்கொள்ள முடியும், ஆனால் தன் குலாச்சாரத்திலிருந்து தவறி விடுவானாயின் அவன் உயர்வு கெட்டுப்போகும். பிராமணன் வேதத்தை மறந்தாலும் குலாச்சாரத்தை மறக்கக் கூடாது. இந்த இரண்டு பாடல்களிலும் ஒவ்வொருவனும் தன் தன் குல தர்மத்தைக் காப்பாற்றவேண்டும், குல தர்மத்தைக் காப்பாற்று வதுதான் பெருமை, குல தர்மத்தைக் காப்பாற்றாதவன் இழிந்த வனாவான், என்ற கருத்து அமைந்திருப்பதைக் காணலாம். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (543) பிராமணர்களின் வேதத்திற்கும், வேத தர்மங்களுக்கும் பாதுகாவலாய் நின்றது மன்னவன் செங்கோல் ஆட்சி. ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர், காவலன் காவான் எனின். (560) அரசன் சரியானபடி தேசத்தைக் காப்பாற்றா விட்டால் பசுக்களினால் வரும் பலன் குறையும்; ஆறுவகைத் தொழில்களை யுடைய பிராமணர்கள் தங்கள் வேதத்தையும், தர்மத்தையும் மறந்து விடுவார்கள். பிராமணர்களுக்குரிய ஆறுவகைத் தொழில்; வேதம் ஓதுதல்; வேதத்தைச் சொல்லிக் கொடுத்தல்; யாகம் செய்தல்; யாகம் செய்து வைத்தல்; பிறருக்குப் பொருள் கொடுத்தல்; பிறர் கொடுக்கும் பொருளை வாங்கிக் கொள்ளுதல். பிராம்மணர்களையும், வேதங்களையும், வேத ஆச்சாரங் களையும் காப்பாற்ற வேண்டியது ஒரு நல்ல அரசாட்சியின் கடமை. கொடுங்கோல் ஆட்சியில் பசுக்கள் வளர்வதில்லை; பிராமணர்கள் வேதம் ஓத மாட்டார்கள்; தங்கள் தர்மங்களையும் மறந்து விடுவார்கள். இதனால் நாட்டுக்குத் தீமையுண்டாகும். மேலே காட்டிய இரண்டு பாடல்களின் மூலம் இக்கருத்துக்களைக் காணுகின்றோம். இந்த இரு குறள்களிலும் பிராமண வருணம் ஒன்று உண்டு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், அடுத்த வருணங்களாகிய க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணங்களையும் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார். ஆனால் வெளிப்படையாக மற்ற வருணங்களைப்பற்றிச் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் குல ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று கூறுவதன் மூலம் மற்ற வருணங்களையும் ஒப்புக்கொள்ளுகிறார். வருண தர்மத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று சொல்லுவதற்கும், குல ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்கும் பொருளில் வித்தியாசம் இல்லை; சொல்லில்தான் வித்தியாசம். இல் பிறந்தார்கண் அல்லது இல்லை, இயல்பாகச் செப்பமும் நாணமும் ஒருங்கு. (951) நல்ல நடத்தையும், ஒழுக்கந் தவறி நடப்பதற்கு வெட்கப் படுதலும் பூரணமாக உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடந்தான் காணப்படும்; மற்றவர்களிடம் இக்குணம் தானாகக் காணப்படாது. ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந்தார். (952) உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கம், உண்மை, நாணம் இம்மூன்றிலிருந்தும் தவறமாட்டார்கள். நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப வாய்மைக் குடிக்கு. (953) உண்மையான உயர்ந்த குடியில் பிறந்தவர்க்குத் தன்னிடம் வரும் ஏழைகளைப் புன்சிரிப்புடன் வரவேற்றல், அவர்க்கு வேண்டியதைக், கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், தன்னிலும் கீழ்ப்பட்டவரைக் கேவலமாகப் பேசாமை இந்த நான்கு குணங்களும் உரிமையானவைகள் என்று கூறுவர். அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். (954) அளவற்ற கோடிக்கணக்கான செல்வம் கிடைப்பதா யிருந்தாலும் உயர்ந்த குடியில் பிறந்தவர் தம் ஒழுக்கம் கெடும் படியான காரியங்களைச் செய்யமாட்டார்கள். வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப் பிரிதல் இன்று. (955) கொடுப்பதற்குரிய செல்வம் குறைந்துபோன காலத்திலும் பழமையான உயர்ந்த குடியில் பிறந்தவர்களின் குணம் கெட்டுப் போகாது. சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார். (956) குற்றமற்ற குலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்கின்றோம் என்று சொல்லுபவர்கள், தரித்திரம் காரணமாகவும் தகாத காரியங்களைச் செய்யமாட்டார்கள். குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957) உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடம் உள்ள குற்றம், வானத்தில் உள்ள சந்திரனிடம் காணப்படும் கருமையைப் போல் எல்லோர்க்குந் தெரியும். ஆதலால் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கந் தவறக்கூடாது. நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். (958) ஒருவனுடைய நல்ல குணங்களுக்கிடையே, அன்பில்லாமை காரணமாக உண்டாகின்ற கொடுஞ் செயல்கள் காணப்பட்டால் அவனைப்பற்றிச் சிந்திக்கத் தோன்றாது; அவன் பிறந்த குலத்தைப் பற்றியே சந்தேகம் தோன்றும். நிலத்தில் கிடந்தமை கால்காட்டும், காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல். (959) நிலத்தின் தன்மையை அதில் முளைத்த பயிர் காட்டி விடும். உயர்ந்த குலத்தில் பிறந்தவரின் குணத்தை அவர் பேசும் சொற்கள் காட்டிவிடும். மேலே காட்டப்பட்ட பாடல்கள் குடிமை என்னும் அதிகாரத்தில் உள்ளவை. உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தாம் நல்லொழுக்க முடையவர்களாயிருப்பார்கள்; ஒழுக்கந் தவறி நடக்கமாட்டார்கள்; கெட்ட காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; கெட்டசொற்களைப் பேசமாட்டார்கள்; கீழான குலத்தில் பிறந்தவர்கள்தாம் கெட்டகாரியங்களைச் செய்வார்கள்; இக் கருத்துக்கள் மேற்காட்டிய குறள்களிலே காணப்படுகின்றன. இதனால் பிறப்பினால்தான் மக்களுக்குள் உயர்வு தாழ்வுகள் உண்டாகின்றன; நல்லொழுக்கம் தீயொழுக்கம் தோன்றுகின்றன; என்பது திருவள்ளுவர் கருத்தென்று உணரலாம். இங்கே திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கும் குடிமையென்பது ஜாதியல்ல. அதாவது பிராமண க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ஜாதிகளைக் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட ஒரு பரம்பரையைக் குடியென்றும், குலம் என்றும் குறிப்பிடுகிறார். இவர் கருத்துப்படி பிராமணர்களுக்குள் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி உண்டு; க்ஷத்திரியர்களுக்குள் உயர்ந்த குடிதாழ்ந்த குடி உண்டு; வைசியர்களுக்குள் உயர்ந்த குடி தாழ்ந்த குடி உண்டு; இதைப்போலவே சூத்திரர்களிலும் உயர்ந்த குடி தாழ்ந்த குடி உண்டு. இந்த உயர்ந்த குடி தாழ்ந்த குடி வேற்றுமைகூட பிறவியினால்தான் ஏற்படுகிறது என்பது அவர் கருத்து. ஆகவே பிறப்பினால் உயர்வு தாழ்வுடைய பல ஜாதிகள் உண்டு என்னும் கொள்கையைத் திருக்குறள் வலியுறுத்துவதைக் காணலாம். பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யால். (972) எல்லா வுயிர்களுக்கும் பிறப்பில் வேற்றுமையில்லை. ஆனால் அவரவர்கள் செய்கின்ற தொழில் வித்தியாசத்தால் உயர்வு தாழ்வு உண்டு. இக்குறள் பெருமையென்னும் அதிகாரத்திலே கூறப் பட்டள்ளது. பிறப்பிலே மக்களுக்குள் வேறுபாடில்லை என்று இதில் சொல்லப்படவில்லை. உயிர்ப் பிராணிகள் எல்லா வற்றிற்கும் பிறக்கும் இயல்பு ஒன்று; பிறப்பில்லாமல் எந்த உயிரும் வாழ்வதில்லை என்றுதான் கூறப்படுகின்றது. மக்களுக்குள் பிறப்பினால் வித்தியாசம் இல்லை; பிறப்பினால் ஜாதி உண்டாக வில்லை; என்று இக்குறளுக்குப் பொருள்கூற இடமில்லை. இக்குறளின் கருத்தைச் சிலர் சரியாகப் புரிந்துகொள்வ தில்லை. திருவள்ளுவர் மக்களுக்குள் பிறப்பினால் வித்தியாசம் இல்லை என்று கூறிவிட்டார்; அவர் ஜாதி வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளவில்லை; வருணாரம தருமத்தை ஆதரிக்க வில்லை; பிறப்பினால் வேற்றுமை யில்லையென்பதே தமிழர் நாகரிகத்தின் சின்னம்; இதுவே தமிழருடைய தனிக் கலாச்சாரம். திருவள்ளுவர் தமிழருடைய தனிப்பட்ட கலாச்சாரத்தை இக்குறளின் மூலம் எடுத்துக் காட்டி விட்டார்; என்று சிலர் கூறுகின்றனர். திருக்குறளில் பெரும் பாகத்தில் ஒப்புக்கொள்ளப் பட்ட கொள்கையை இந்த ஒரு குறளில் மறுக்கப்பட்டதாகக் கூறுவது பொருத்தமற்றது. மக்களுக்குள் பிறப்பினால் வேற்றுமையில்லை என்று அர்த்தம் பண்ணுவதா இருந்தால் இது திருவள்ளுவரால் சொல்லப்பட்டதாகக் கருதமுடியாது; இக்கருத்துடைய வேறு யாரோ ஒருவர் இக்குறளைத் திருக்குறளிலே நுழைத்ததாகத்தான் எண்ண வேண்டும். இக்குறள் திருவள்ளுவரின் வாய்மொழிதான் என்று தீர்மானித்தால் வருணபேதத்தை ஆதரிக்கும் திருவள்ளு வருடைய கருத்திற்கு விரோதமில்லாமல்தான் பொருள் கூறவேண்டும். ஆதலால் இதற்குப் பரிமேலழகர் கூறியிருக்கும் உரைதான் பொருந்தும், `பிறப்பொக்கும் என்பதற்கு அவர் சொல்லியிருக்கும் பொருளைப் பாருங்கள். வினைவயத்தால் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று, அதன் பயன் அனுபவித்தல், எல்லா வருணத் தார்க்கும் ஒத்தலின் பிறப்பு ஒக்கும். இது பரிமேலழகர் உரை. எந்த வருணத்தாரும் பூர்வவினைகாரணமாகவே பிறந்தனர். அந்த வினைப்பயனை அனுபவிக்கவே பிறந்தனர். ஆதலால் எல்லாவுயிர்களும் பிறப்பதற்குக் காரணமா யிருந்தது. முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை என்ற ஒன்றுதான். அதில் வேற்றுமை யில்லை. இதுவே பரிமேலழர் கருத்து. வருணபேதம் உண்டு என்பவர்கள் இக்கருத்திலேயே பிறப்பு ஒன்று என்று கூறுகின்றனர். பிறப்பிலேயே உயர்வு தாழ்வு உண்டு; பிறவியினால்தான் நல்லகுணம் கெட்டகுணம், உண்டாகின்றன; பிறந்த குலத்திற் குரிய தொழிலைச் செய்வதுதான் மக்கள் கடமை; என்ற விஷயங்களை, ஒழுக்கம், குடிமை, முதலிய அதிகாரங்களிலே திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இவற்றை முன்பே காட்டியிருக் கிறோம். இத்தகைய கொள்கையை யுடையவர் பிறப்பொக்கும் என்பதைப் பரிமேலழகர் கூறிய அர்த்தத்தில் தான் சொல்லி யிருக்கவேண்டும். இல்லா விட்டால் திருவள்ளுவர் மொழி முன்னுக்குப் பின் முரணானது என்ற குற்றத்திற்கு இடமாகும். பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மூன்று வருணத்திலும் பிறந்தவர்கள் பூணூல் அணிவதற்குமுன் சூத்திரர்களாகவே, எண்ணப்படுகின்றனர். பூணூல் அணிந்து, வேதம் ஓதித் தங்கள் கர்மானுஷ்டானங்களைப் பின்பற்றத் தொடங்கியபிறகுதான் பிராமணப் பெற்றோருக்குப் பிறந்தவன் பிராமணன் ஆகிறான். க்ஷத்திரியப் பெற்றோருக்குப் பிறந்தவன் க்ஷத்திரியனாகிறான், வைசியப் பெற்றோருக்குப் பிறந்தவன் வைசியன் ஆகிறான். அதுவரையிலும் இவர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பிறப்பில் வித்தியாசம் இல்லை. இந்தக்காரணத்தாலேயே இந்த மூன்று வருணத்தாருக்கும் `துவிசர் என்று பெயர். துவிசர் என்றால் இருபிறப்பாளர் என்று அர்த்தம். பரிமேலழகர் கூறியபடி இவர்கள் வினைவசத்தால் வினைப்பயனை அனுபவிக்கப் பிறந்தவர்கள். மேலே காட்டியவைகளைக்கொண்டு, திருவள்ளுவர் எந்த வகையிலும் வருணபேதத்தைக் கண்டிக்கவில்லை; வருண பேதத்தை, ஜாதி முறையை, குலாச்சாரத்தை ஒத்துக்கொள்கிறார் என்பதை அறியலாம். பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு; உயர்ந்த ஜாதியில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களால்தான் சிறந்த காரியங் களைச் செய்யமுடியும்; என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் திருவள்ளுவரின் பிறப்புக்கதை கூட எழுதப் பட்டிருக்கிறது என்று கூறலாம். திருவள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பிராமணருக்கும் பிறந்தவர். பகவன் என்பவர் வேதமோதிய சிறந்த ஒழுக்கமுடையவர்; வினைவசத்தால் புலைச்சியின் மீது மோகங்கொண்டார். அவருக்குப் பிறந்தவர்கள் இடைக்காடர், அதிகமான், ஔவை, உப்பை, உறுவை, வள்ளி, திருவள்ளுவர் முதலியவர்கள். திருவள்ளுவர் வளர்ந்தது வள்ளுவர் வீட்டில்; ஆனால் அவருடைய பிறப்பு உயர்ந்ததாக இருந்ததால் அவர் பல நூல்களையும் கற்றார்; அறிவு ஒழுக்கங்களில் உயர்ந்து விளங்கினார்; திருக்குறள் என்னும் சிறந்த நூலை எழுதினார். இது ஒரு கற்பனைக்கதை யென்பதே பலர்கருத்து. ஆனால் `உயர்ந்த பிறப்புடையவர்களின் வாயிலிருந்துதான் சிறந்த சொற்கள் தோன்றும் என்னும் திருவள்ளுவருடைய கொள்கையை ஒட்டி எழுந்ததுதான் இக்கதை. ஆரமம் இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. (41) கிரகதாரமத்தில் வாழ்கின்றவன் தமக்குரிய தர்மத்தைப் பின்பற்றி நடக்கின்ற பிரம்மச்சாரி வானப் பிரதன் சந்நியாசி ஆகிய மூன்று ஆரமத்தாருக்கும் அவர்கள் நடக்கும் நல்வழிக்கு நிலையாகத் துணை செய்பவன் ஆவான். கிரகதாரமத்தில் இருப்பவன், மற்ற மூன்று ஆரமத்தில் இருப்பவர்களுக்கும் துணைபுரிய வேண்டும். இக்குறளில் நால்வகை ஆரமம் குறிப்பிடப்படுகிறது. ஆரமத்திற்கும் வருணத்திற்கும் சம்பந்தம் உண்டு. பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய முதல் மூன்று வருணத்தாருக்குத் தான் ஆரம தர்மம் விதிக்கப் பட்டிருக்கிறது. தர்ம சாதிரங்களில் பிர்மச்சாரிக்குரிய ஒழுக்கம், கிரகதனுக்குரிய ஒழுக்கம். வானப் பிரதனுக்குரிய ஒழுக்கம், சந்நியாசிக்குரிய ஒழுக்கம் இவை இவையென்று தனித் தனியாகப் பிரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் திருவள்ளுவர் இல்லறம் துறவறம் என்ற இருபிரிவில் நால்வகை ஆரம தர்மங்களையும் அடக்கிக் கூறிவிட்டார். பெறும்அவற்றுள் யாம் அறிவது இல்லை, அறிவறிந்த மக்கள்பேறு அல்ல பிற. (61) ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுக்குள் சிறந்தது அறியவேண்டிய எல்லா விஷயங்களையும் படித்தறிந்த மக்களைப் பெறுவதுதான். இதைத் தவிர வேறு உண்டு என்று நாம் தெரிந்து சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். (62) ஒருவன் பிறரால் பழிக்கப்படாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றிருப்பானாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் துன்பம் உண்டாகாது. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். (67) தந்தை மகனுக்குச செய்யவேண்டிய கடமை, அவனைப் படித்தவர்களின் கூட்டத்தில், சிறந்தவனாகக் கொண்டாடும் படி செய்வதுதான். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய். (69) தாயானவள், தன் மகனைப்பற்றிக் கல்வியில் சிறந்தவன் ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்டால், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடஅதிக மகிழ்ச்சியை அடைவாள். கல்வி கற்று ஒழுக்கமுடையவனாக நடந்துகொள்ளுதல் மகனுடைய கடமை. மேலே காட்டிய பாடல்கள் புதல்வரைப் பெறுதல் அல்லது மக்கட்பேறு என்னும் அதிகாரத்தில் உள்ளவை. மகனுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும்; மகனை நல்லொழுக்க முடையவனாக்க வேண்டும்; மகனும் கல்வி கற்கவேண்டும்; நல்லொழுக்கங்களைப் பின்பற்றி நடக்கவேண்டும். இவை பிரம்மச்சரிய ஆரமத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை. குருகுலத்திலிருந்து கல்வி கற்றலும், குருவின் கட்டளைப் படி நடத்தலுந்தான் பிரம்மச்சாரியின் கடமை. திருவள்ளுவர் காலத்தில் இப்பொழுதிருப்பது போன்ற பள்ளிக்கூடங்ககள் இல்லை. அக்காலத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டு மானால் ஆசிரியர்களின் வீடுகளில் வைத்துத்தான் படிக்க வைக்க வேண்டும். இதுதான் குருகுலவாசம். குருவின் வீட்டிலேயே இருந்து கொண்டு கல்வி கற்பதுதான் ஒருவன் பிரம்மச்சரிய நிலையில் இருக்கும் காலமும். பிரம்மச்சரிய ஆரம தர்மம், கிரகத ஆரம தருமம், இரண்டும் இல்லறவியலில் அடங்கிக் கிடக்கின்றன. இல்லற வியலில் உள்ள புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் பிரமச்சரிய தருமம் அடங்கி விட்டது. வானப்பிரத ஆரமமும், சந்நியாச ஆரமமும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆதலால் இவ்விரண்டைப் பற்றியும் விரிவாகத் துறவறவியலில் கூறியிருக் கிறார். அவர் கூறியிருப் பவைகளில் உள்ள முக்கிய விஷயங்களைக் கவனிப்போம். வானப்பிரத, சந்நியாச ஆரமங்களில் செல்லுகிறவர்கள் பின்பற்ற வேண்டிய விரதங்களைப்பற்றியும், அவர்கள் பெற வேண்டிய அறிவைப்பற்றியும் திருவள்ளுவர் துறவறவியலில் கூறுகிறார். அருள் செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள. (241) செல்வத்தில் சிறந்த செல்வம் கருணையாகிய செல்வமே யாகும். பொருளால் வரும் செல்வம் அற்பர்களிடமும் உண்டு. வானப்பிரதர்களும், துறவிகளும் எல்லா வுயிர் களிடமும் கருணை காட்ட வேண்டும். பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி ஆங்குஇல்லை ஊன் தின்பவர்க்கு. (252) செல்வத்தைக் காப்பாற்றாதவர்களுக்கு, அச்செல்வத் தால் உண்டாகும் பயன் கிடைக்காது. அதைப்போல மாமிசம் சாப்பிடு கிறவர்களுக்கு அருளால் உண்டாகும் பயன் கிடைக்காது. மாமிசம் உண்ணாதவர்களே அருளுடையவர்களா யிருப்பார்கள். உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. (261) தவத்திற்கு உருவம் என்னவென்றால், தனக்கு வந்த துன்பங் களைப் பொறுத்துக் கொள்ளுதல்; மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமலிருத்தல். இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல். (314) தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர் வெட்கமடையும்படி அவருக்கு நன்மைசெய்து,அவர் செய்து துன்பத்தையும் மறந்து விடுதலாகும். மேற்கூறியவைகள் வானப்பிரதர்களும், துறவிகளும் பின்பற்ற வேண்டிய விரதங்கள். எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம், காட்டுதல், மாமிசம் உண்ணா திருத்தல், தவஞ் செய்தல், கோபங் கொள்ளாதிருத்தல், பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமை, உயிர்களைக் கொல்லாமை போன்ற விரதங்களை வானப் பிரதர் களும், துறவிகளும் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும் என் வற்புறுத்திக் கூறுகிறார். இவ்விரதங்கள் பெரும்பாலும் சமண சந்நியாசிகள் பின் பற்றும் விரதங் களைப்போல இருப்பதனால் திருவள்ளுவரைச் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். இது ஆராய்ச்சிக் குரிய விஷயம். கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம், போக்கும் அது விளிந்து அற்று. (332) ஒருவனிடம் பெரிய செல்வம் வந்து சேர்வது நாடகக் கொட்டகைக்கு, நாடகம் பார்ப்பதற்காக ஜனக்கூட்டம் வந்து கூடுவது போன்றதாகும். அச்செல்வம் அழிந்து விடுவது, நாடகம் முடிந்தவுடன் ஜனக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றதாகும். ஆதலால் செல்வம் நிலையற்றதென்று அறிந்துகொள்ள வேண்டும். பிறப்புஎன்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு. (358) பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்க வேண்டு மானால் மோட்சத்திற்குக் காரணமாக இருக்கின்ற உண்மைப் பொருளாகிய கடவுளை உணர்வதே அறிவாகும். ஆராவியற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா வியற்கை தரும். (370) திருப்தி யடையும் தன்மையற்ற ஆசையை, ஒருவன் விட்டு விட்டானாயின், அப்பொழுதே அந்த ஆசையின்மை அவனுக்கு மோட்சத்தைக் கொடுக்கும். ஆசை யின்மையே முக்தி பெறுவதற்கு வழியாகும். ஊழ் என்னும் அதிகாரமும் துறவறத்திலேயே கூறப் பட்டுள்ளது. இல்லறத்தைத் துறந்த வானப்பிரதர்களும், சந்நியாசிகளும், உலகச் செல்வங்கள் எல்லாம் நிலையற்றவை என்று உணரவேண்டும்; கடவுளை நம்பித் துதிக்க வேண்டும்; எப்பொருளிலும் ஆசையில்லாமைதான் முத்திக்கு வழியென்று காணவேண்டும்; தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு ஊழ்வினைதான் காரணம் என்று நம்பவேண்டும்; இவைகள் துறவிகளுக்கு வேண்டிய ஞானமாகும். துறவற இயலில் வானப்பிரதர்களும், சந்நியாசிகளும், அனுஷ்டிக்க வேண்டியன என்று கூறப்படுபவைகளும், அறிய வேண்டும் என்று கூறப்படுபவைகளும் புதியவைகள் அல்ல; முன்னோர் நூல்களில் அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தர்மத்தையே திருவள்ளுவர் கூறியிருக்கிறார். துறவறவியலில் 13 அதிகாரங்கள் உள்ளன. இவற்றுள் முதல் 10 அதிகாரங்கள் சிறப்பாக வானப் பிரதர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்களைக் கூறுகின்றன; மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்னும் மூன்று அதிகாரங்கள் துறவி களின் தர்மங்களைக் கூறுகின்றன; என்பது சில அறிஞர்களின் கொள்கை. ஆகவே, இல்லறவியல், துறவற இயல் இரண்டிலும், பிரமச்சரியம், கிரகதம், வானப்பிரதம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆரம தர்மங்களையும் திருவள்ளுவர் கூறியிருப் பதைக் காணலாம். யாகம் அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று (259) நெருப்பில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து, ஆயிரம் யாகம் செய்வதைக்காட்டிலும், ஒரு பிராணியின் உயிரைக் கொன்று தின்னாமலிருத்தல் சிறந்தது. ஆயிரம் யாகம் செய்வதால் வரும் புண்ணியத்தைவிட ஒரு உயிரைக் கொன்று தின்னாமலிருப்பதால் வரும் புண்ணியமே சிறந்தது; இதுவே இந்தப் பாடலின் கருத்து. இக்குறளில் யாகம் செய்வதால் புண்ணியம் உண்டு என்பதை மறுக்க வில்லை. யாகம் புண்ணிய காரியம் என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். யாகத்தைக் காட்டிலும் ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைப் புசியாமலிருப்பதில் அதிக புண்ணியம் உண்டு என்றுதான் கூறுகிறார். ஜாதி என்னும் பகுதியில் எடுத்துக்காட்டிய அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாம் நின்றது மன்னவன் கோல். ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர், காவலன் காவான் எனின். என்ற இரு பாடல்களிலும் திருவள்ளுவர் வேதங்களில் கூறப்படும் வேள்விகளை ஒப்புக்கொண்டிருக்கிறார். `அந்தணர் நூற்கும் என்ற பாடலில் பிராமணர்களின் வேதத்தையும், அந்த வேத சம்பந்தமான ஒழுக்கங்களையும் காப்பாற்ற வேண்டியது அரசன் கடமை என்று கூறப் படுகின்றது. `ஆபயன் குன்றும் என்ற பாடலில், அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யா விட்டால் பிராமணர்கள் தங்கள் வேதத்தையும், வேதசம்பந்தமான ஒழுக்கங்களையும் மறந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. வேதங்களில் யாகம் செய்யவேண்டும் என்று கூறப்படு கின்றது. யாகங்களின் மூலம் தேவர்களைத் திருப்தி செய்தால் தான் இவ்வுலகில் மழைபெய்யும்; பயிர்கள் வளரும்; உணவுப் பொருள்கள் கிடைக்கும்; மக்கள் பசி பட்டினியின்றி வாழ்வார்கள். இவை வேத சாதிரங்களின் கருத்து. பிராமணர்களுக்குரிய ஒழுக்கங்களில் யாகம் செய்தல் ஒன்று; யாகம் செய்துவைத்தல் ஒன்று. இவ்விரண்டு தொழில் களையும் அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும். இன்றேல் அவர்கள் பிறப்பொழுக்கம் குன்றியவர்கள் ஆவார்கள். இவைகளைச் செய்வதற்கு அரசன் உதவி செய்யவேண்டும். மேலே காட்டிய பாடல்களைக்கொண்டு திருவள்ளுவர் வேதவேள்வியை நிந்தனை செய்யவில்லை; வந்தனை செய்கிறார் என்றே கொள்ளவேண்டும். மறுபிறப்பு பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடி சேரா தார். (10) கடவுளின் பாதத்தை அடைந்தவர் பிறப்பு என்னும் பெரிய சமுத்திரத்தைத் தாண்டுவர்; கடவுளின் பாதத்தை அடை யாதவர் பிறவிக் கடலைத் தாண்டமாட்டார்கள். அடிக்கடி பிறப்பார்கள்; இறப்பார்கள். ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. (126) ஆமை தனது, கால்கள் தலை ஆகிய ஐந்தையும் தனது உடம்புக்குள் அடக்கிக் கொள்ளுவதுபோல், ஒருவன் ஒரு பிறப்பில் உடம்பு, வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்தையும் அடக்குவதற்கு வல்லமை பெறுவானாயின், அவ்வல்லமை அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு அளிக்கும். ஒரு பிறப்பில் ஒருவன் செய்த கர்மத்தின் பயன் ஏழுபிறப்பு வரையிலும் அவனைத்தொடரும் என்பது இதன்கருத்து. உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (339) ஒருவனுக்குச் சாவு ஏற்படுவது தூக்கம் வருவதைப் போன்றது; செத்த பிறகு மீண்டும் பிறப்பது தூங்கி விழிப்பதைப் போன்றது. பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு. (351) பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று நினைக் கின்ற அறியாமையால், துன்பத்தைத் தரும் மறு பிறப்பு உண்டா கின்றது. கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்று ஈண்டு வாரா நெறி. (356) தத்துவ சாதிரங்களைக் கற்று இவ்வுலகில் உண்மைப் பொருளைக் கண்டறிந்தவர்களே, மீண்டும் இவ்வுலகில் பிறவாத நெறியை அடைவர். பிறப்பு என்னும் பேதமை நீங்கச், சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு. (358) பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்கவேண்டுமானால், சிறந்த உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவுடைமை யாகும். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது வேண்டாமை வேண்ட வரும். (362) பிறவியினால் வருந் துன்பத்தை அறிந்தவன், தனக்கு ஏதேனும் நன்மைவேண்டுமென்று விரும்புவானாயின் மீண்டும் பிறக்காமலிருப்பதையே வேண்டுவான்; ஒன்றிலும் பற்றில்லாமல் இருப்பதை விரும்பினால் பிறவாமை கிடைக்கும். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. (398) ஒரு பிறப்பில் ஒருவன் படித்த கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவிசெய்யும். இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர் கொண்டனன். (1315) என் காதலியைப் பார்த்து, இப்பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்றேன். உடனே, மறுபிறப்பில் நாம் பிரிந்து விடுவோம் என்று சொல்லியதாக எண்ணிக்கொண்டாள், அவள் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. இப்பாடல்கள் எல்லாம் புனர்ஜென்மம் உண்டு என்ற கொள்கையை ஒப்புக்கொள்கின்றன, மறுபிறப்புக் கொள்கையை ஒப்புக்கொள்ளும் மற்றும் பல பாடல்களும் உண்டு. நல்வினை தீவினை இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு. (5) பிறவித் துன்பத்தை உண்டாக்கும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளின் பயனும் கடவுளின் உண்மையான புகழை விரும்பியவர்களை அடையாது. அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36) இறக்கும் சமயம் வருகின்ற அப்பொழுது பார்த்துக் கொள்ளுவோம் என்று நினைக்காமல் இப்பொழுதே செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்க. இதுதான் இறக்கும் பொழுது, இறக்காமல் உயிருடன் கூடவந்து துணை செய்வது. அறத்தாறு இதுஎன வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37) நல்வினையின் பயன் இதுதான் என்று வேறு உதாரணங் களால் விளக்கவேண்டியதில்லை. பல்லக்கைச் சுமந்து கொண்டு போகிறவனையும், அதில் ஏறிக்கொண்டு போகின்றவனையும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். முன் பிறப்பில் தீவினை செய்தவன் பல்லக்குத் தூக்குகிறான்; நல்வினை செய்தவன் பல்லக்கில் சவாரி செய்தான். இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர், பலர் நோலாதவர். (270) இவ்வுலகில் பணக்காரர்கள் சிலர்; ஏழைகள் பலர்; இதற்குக் காரணம் தவம் செய்பவர்கள் சிலர்; தவம் செய்யாதவர்கள் பலர். முன் ஜென்மத்தில் தவம் செய்தவர்கள் இப்பொழுதுள்ள பணக்காரர்கள்; முன் ஜென்மத்தில் தவம் செய்யாதவர்கள் இப்பொழுதுள்ள ஏழைகள். இக்கொள்கை தொன்றுதொட்டு வழங்கி வருவது; கர்மபலன் உண்டு, என்ற கொள்கையை ஒப்புக்கொள்ளும் எல்லா மதங்களுக்கும் உடன்பாடானது. இக்கருத்தையே பிற்காலத்தினரும் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் என்று கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும். பிறவியும் நல்வினை தீவினைகளும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. கர்மமே பிறப்பை யுண்டாக்கு கின்றது. நல்ல கர்மத்தைச் செய்து பிறந்தவர்கள் சுகமாக வாழ்கின்றனர்; கெட்ட கர்மத்தைச் செய்து பிறந்தவர்கள் கஷ்டப்படுகின்றனர். இந்தக் கருத்தை மேலே காட்டிய பாடல்கள் காட்டுகின்றன. ஊழ்வினை ஆகூழாமல் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள் போகூழாமல் தோன்றும் மடி. (371) ஒருவனுக்குச் செல்வம் சேரக்கூடிய விதியிருந்தால் அவனிடம் முயற்சிதோன்றும்; செல்வம் அழியக்கூடிய விதி யிருந்தால் அவனிடம் சோம்பல் தோன்றும். ஒருவனுடைய முயற்சிக்கும் சோம்பலுக்கும் காரணம் தலைவிதிதான். பேதை படுக்கும் இழவூழ், அறிவு அகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. (372) ஒருவனைத் துன்பந் தரக்கூடிய தலைவிதி அறிவில்லாத வனாக்கிவிடும்; நன்மை தரக்கூடிய தலைவிதி வந்தால் அவனுடைய சுருங்கிய அறிவை விரிந்த அறிவாக்கும். ஒருவனுடைய அறிவுக்கும், அறிவில்லாமைக்கும் காரணம் தலைவிதிதான். நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். (373) ஒருவன் சிறந்த பல நூல்களைப் படித்திருந்தாலும், அவனுடைய வினைவசத்தால் ஏற்பட்டுள்ள உண்மையான அறிவுதான் அவனிடம் காணப்படும். ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் கல்வியல்ல; தலை விதியே. பரியினும் ஆகாவாம் பால்அல்ல, உய்த்துச் சொரியினும் போகா தம. (376) செல்வம் தங்கக்கூடிய ஊழ்வினையில்லாவிட்டால் எவ்வளவு காப்பாற்றினாலும் அச்செல்வம் நிலைக்காது; தம்முடையதாகவே இருக்கவேண்டும் என்ற விதியிருந்தால், அச்செல்வத்தை எங்கே கொண்டுபோய்க் கொட்டினாலும் தம்மைவிட்டுப் போகாது. வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377) கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்துவைத்தவர்க்கும், தலைவிதி இவ்வளவுதான் அனுபவிக்கலாம் என்று வகுத்திருப் பதைத்தான் அனுபவிக்கலாமே தவிர அதிகமாக ஒன்றும் அனுபவிக்கமுடியாது. ஒருவன் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்திருந்தாலும் தலைவிதியின்படி அவனுக்கு ஏற்பட்ட சுகத்தைத்தான் அனுபவிக்க முடியும். நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆம்கால் அல்லல் படுது எவன். (379) நன்மைகள் உண்டாகும்போது அவற்றைச் சுகங்களாக எண்ணி அனுவிப்பவர், தீமை வரும்போது துன்பப்படுவது ஏன்? எல்லாம் வினைப்பயன் என்று நினைக்கவேண்டும். ஊழில் பெருவலி யாவுள, மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும். (380) விதியை விலக்கிக் கொள்ளுவதற்கு வேறொரு தந்திரத்தை ஆலோசித்தாலும், அத்தந்திரத்தையும் மீறிக் கொண்டு விதிதானே முன்வந்து நிற்கும்; ஆகையால் ஊழ் வினையைக் காட்டிலும் மிகவும் வலிமையுடையவை எவை? ஒன்றும் இல்லை. ஊழ்வினை தான் ஒருவனுடைய முயற்சிக்குக் காரணம்; சோம்பலுக்கும் காரணம். ஊழ்வினையினாலேயே ஒருவன் அறிவுடையவனாயிருக்கிறான்; ஒருவன் முட்டாளாயிருக்கிறான். ஊழ்வினையே ஒருவனுக்குச் செல்வத்தைக் கொடுக்கின்றது; ஒருவனைத் தரித்திரனாகவைத்திருக் கின்றது. ஊழ்வினை யினாலேயே ஒருவன் சுகம் அனுபவிக்கிறான்; ஒருவன் துக்கம் அனுபவிக்கிறான். யாரும் கர்மத்தின் பலனாகிய ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இக்கொள்கைகளை மேலே காட்டிய பாடல்களில் காணலாம். நல்வினை தீவினை இவ்விரண்டினாலும் வரும் பலனை அனுபவித்தற்கே கர்ம பலன், ஊழ்வினை, தலைவிதி என்று பெயர். நியதி, பால், முறை, உண்மை, தெய்வம் இவைகளும் ஊழ்வினையைக் குறிக்கும் சொற்கள். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை. (594) செல்வமானது சோர்வில்லாத உற்சாகத்தை உடையவன் வசிக்கும் இடத்திற்குத் தானே வழிகேட்டுக் கொண்டு போகும். முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (616) முயற்சியானது செல்வத்தை உண்டாக்கும்; முயற்சி யில்லாமை வறுமையை உண்டாக்கிவிடும். ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித் தாழாது உஞற்று பவர். (620) சோர்வின்றி இடைவிடாமல் முயற்சி செய்பவர் தலை விதியின் வலிமையைக்கூடத் தோற்கடித்து விடுவார்கள். திருவள்ளுவர் தலைவிதியில் நம்பிக்கையில்லாதவர்; முயற்சியையே முதன்மையாகக் கருதுகிறவர்; ஊழ்வினையை முயற்சியினால் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறவர்; என இப்பாடல்களைக் கொண்டு கூறுகின்றனர். ஒருவனுக்கு ஊக்கம் உண்டாவதற்கும் ஊழ்வினையே காரணம்; முயற்சி தோன்றுவதற்கும் ஊழ்வினையே காரணம்; முயற்சியில்லாமை தோன்றுவதற்கும் ஊழ்வினைதான் காரணம் என்பதைத் தெளிவாக ஊழ் என்ற அதிகாரத்தில் கூறியிருக் கிறார்; அதற்கு மாறாக கருத்தில் இப்பாடல்களைக் கூறியிருக்க முடியாது. ஆதலால் இந்த ஊக்கத்திற்கும், இந்த முயற்சிக்கும் ஊழ்வினைதான் காரணம் என்பதைத் திருவள்ளுவர் மறுக்க வில்லை. `ஊழையும் உப்பக்கம் என்னும் குறளில் `ஊழையும் என்று உம் விகுதி கொடுத்துக் கூறியிருப்பதிலிருந்தே அதைத் தோற் கடிக்க முடியாது என்ற பொருள் தொனிப்பதைக் காணலாம். ஊழில் பெருவலியாவுள? என்று கேள்வி கேட்டவர், முயற்சி அதைவிட வலிமையுடையது என்று எப்படிக் கூறுவார்? சிரார்த்தம் தென்புலத்தார், தெய்வம்,விருந்து, ஒக்கல், தான் என்று ஆக்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை. (43) பிதிர்க்கள், தேவர்கள், அதிதிகள், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும் செய்யவேண்டிய காரியங் களைத் தவறாமல் செய்வது இல்லறத்தில் இருப்பவனது கடமை. பிதிர்க்கள் தென்றிசையில் வாழ்கின்றவர்கள், தெய்வத் தன்மையுடையவர்கள்; இல்லறத்தில் உள்ளவன் செய்யும் சிரார்த்தங்களின் மூலமே அவர்கள் திருப்தியடைவார்கள். இன்றேல் அவர்கள் வருந்துவார்கள். துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (42) சந்நியாசிகளுக்கும், ஏழைகளுக்கும், இறந்தவர்களுக்கும் இல்லறத்தில் வாழ்பவன்தான் துணையாவான். சந்நியாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவளித்துக் காக்க வேண்டும்; இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்வதன் மூலம் அவர்கள் ஆன்மாவைத்திருப்தி செய்யவேண்டும். மேலே காட்டிய இரண்டு பாடல்களிலும் சிரார்த்தம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. சுவர்க்கம் நரகம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (50) இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி இல்லறத்தில் வாழ்பவன், தேவலோகத்தில் வாழ்கின்ற தேவர்களில் ஒருவனாக எண்ணப்படுவான். செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு. (86) வந்த விருந்தினர்களை உபசரித்து, இன்னும் வரும் விருந்தினர் களையும் உபசரிக்க எதிர்பார்த்திருப்பவன், இறந்தபின் தேவ லோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல விருந்தினனாக இருப்பான். செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. (101) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்கும்போது ஒருவன் முன் வந்து செய்த உதவிக்குப்பதிலாக, இவ்வுலகத்தையும், தேவலோகத்தையும் கொடுத்தாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது. அடக்கம் அமரர்உள் உய்க்கும், அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். (121) மனம், வாக்கு, காயங்கள் கெட்டவழியில் போகாமல் அடக்கிக்கொள்ளும் குணம். அக்குணமுடையவனைத் தேவலோ கத்திற்கு அனுப்பி இன்பம் அனுபவிக்கச்செய்யும். அவைகள் அடங்காமல் கெட்டவழியில் செல்லும் குணம் அக்குணம் உடையவனை நிறைந்த இருட்டுலகமாகிய நரகத்திற்குச் செலுத்திவிடும். நல்ஆறு எனினும் கொளல்தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று. (222) நன்மையடைவதற்கு வழியாகும் என்றாலும் பிறரிடம் யாசித்தல் தீமையாகும். சுவர்க்கம் அடைதல் இல்லை என்றாலும் வறியோர்க்குக் கொடுப்பதே நல்லது. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை, இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். (243) கருணை பொருந்திய மனமுடையவர்க்கு இருட்டு நிறைந்த துன்பத்தைத்தருகின்ற நரகலோகத்திற்குள் போகும் நிலைமை இல்லை. ஒருமைச் செயலாற்றும் பேதை, எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. (835) அறிவில்லாதவன், இனிவரும் பிறவிகளிலும் தான் நரகத்தில்புகுந்து அனுபவிப்பதற்கு வேண்டிய பாவங்களை ஒரு பிறப்பிலேயே செய்து முடிப்பான். மேலே காட்டிய பாடல்களில் சுவர்க்கலோகம், நரகலோகம் காணப்படுகின்றன.மேல் உலகம், வானுலகம், அமரர் வாழ்கின்ற உலகம், வானகம் என்பன சுவர்க்கலோகத்தைக் குறிப்பிடுவன. இருட்டு உலகம், துன்பந்தரும் உலகம், அளறு என்பன நரகலோ கத்தைக் குறிப்பின. சாதிரங்களில் சொல்லுகின்ற தானதர்மங்களைச் செய்பவன் சுவர்க்கத்தை அடைவான். அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பான். சாதிரங்களுக்கு விரோதமாக நடப்பவன் நரகத்தையடைவான்; துன்பங்களை அனுபவிப்பான். இது புராணீகர் கொள்கை. இதை விளக்கப் பல புராணக்கதைகள் உள்ளன. இத்தகைய புராணக்கொள்கைகளையும் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார் என்பதற்கு, சுவர்க்க, நரகங்களைப்பற்றி அவர் கூறியிருப்பதே போதுமானதாகும். மோட்சலோகம் மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். (3) தன்னை நினைப்பவர்களின் உள்ளக்கமலத்தில் சென்று வாழும் கடவுளின் சிறந்த பாதங்களை அடைந்தவர், மோட்ச உலகத்தில் நிலைத்து வாழ்வார். யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (346) நான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றை யும் ஒழிப்பவன், தேவர்களாலும் அடைய முடியாத உயர்ந்த மோட்சலோகத்தை அடைவான். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. (353) சந்தேகம் இல்லாமல் உண்மைப்பொருளை அறிந்தவர்க்கு இவ்வுலகத்தைவிட மோட்சலோகம் சமீபத்திலிருப்பதாகும். அவாவென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து. (361) எல்லாவுயிர்களுக்கும் எப்பொழுதும் நீங்காத பிறப்பைத் தருவதற்கு விதை இகபர ஆசையென்பார்கள். இகபர ஆசையற்றவர்களே மோட்சலோகத்தை அடைய முடியும். அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃதுஉண்டேல் தவாஅது மேல்மேல் வரும். (368) ஆசையற்றவர்க்குப் பிறவித்துன்பம் இல்லை; மோட்ச லோகம் உண்டு. ஆசையிருந்தால் மேலும் மேலும் தவறாமல் பிறப்பு வந்து கொண்டேயிருக்கும். ஆராஇயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். (370) முடிவில்லாத தன்மையையுடைய ஆசையை ஒழிக்கின்ற அந்த நிலையில்தான் ஒருவனுக்கு மீண்டும் பிறக்காத தன்மையுள்ள மோட்சலோகம் கிடைக்கும். மேலே காட்டிய பாடல்களில் மோட்சலோகம் சுவர்க்க லோகத்தைக் காட்டிலும் உயர்ந்தது; நிலையானது; அழியாதது என்று கூறப்படுகின்றது. காமியகர்மம் செய்பவர்கள் சுவர்க்கத்தை யடைவார்கள்; நிஷ்காம்யகர்மம் செய்பவர்களே மோட்சத்தை அடைவார்கள் என்பது தத்துவம். இதனையே திருவள்ளு வரும் விளக்கி யிருக்கிறார். இதனால் மோட்சலோகத்தைத் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார். மனிதன் அடையவேண்டிய பயன் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நான்காகும். இவற்றைத் தமிழில் அறம், பொருள், இன்பம் வீடு என்பர். இந்நால்வகைப் பொருளையும், திருவள்ளுவர் மூன்று பால்களில் அடக்கிக் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. பெண்கள் மனைத்தக்க மாண்புடையள் ஆகித், தற்கொண்டான் வளம் தக்காள் வாழ்க்கைத் துணை. (51) குடும்பவாழ்க்கைக்கு உரிய நல்ல குணங்களை உடைய வளாய், தன் கணவனுடைய செல்வத்திற்குத் தகுந்தவாறு நடந்து கொள்ளுகின்றவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள். தற்கொண்டான் வளம் என்பதனால் ஆண்களுக்குத் தான் சொத்துரிமை உண்டு; பெண்களுக்குச் சொத்துரிமை யில்லை; என்பதைத் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார். மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். (52) மனைவியிடம் குடும்பவாழ்க்கைக்குரிய நல்ல குணம் செயல்கள் இல்லாவிட்டால், அக்குடும்பம் செல்வத்தால் எவ்வளவு பெருமையுடைய தாயிருந்தாலும் பயனில்லை. இல்லது என் இல்லவள் மாண்புஆனால், உள்ளது என் இல்லவள் மாணாக் கடை. (53) ஒருவனுடைய மனைவி நல்லகுணம், நல்ல செயல்களை உடையவளாயிருந்தால் அவனுக்கு இல்லாத செல்வம் ஒன்றுமே இல்லை. எல்லாச் செல்வங்களும் உண்டு. மனைவி கெட்டவளா யிருந்தால் அவனுக்கு என்ன செல்வம் உண்டு? ஒரு செல்வமும் இல்லை. பெண்ணில் பெருந்தக்க யாஉள கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின். (54) கற்பு என்னும் வலிமையைப் பெற்றிருப்பாளாயின் அந்த மனைவியைக் காட்டிலும் ஒருவனுக்குச் சிறந்த பொருள் எவை? ஒன்றும் இல்லை. சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும், மகளிர் நிறை காக்கும் காப்பே தலை. (57) ஆண்கள் பெண்களைச் சோரம் போகாமல் சிறைக்குள் வைத்துக் காப்பாற்றும் காவல் என்ன பயனைத்தரும் பெண்கள் தங்கள் கற்பினால் தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ளுவது தான் சிறந்ததாகும். இப்பாடல்கள் வாழ்க்கைத்துணை நலம் என்னும் அதிகாரத்தில் உள்ளவை. இப்பாடலின் மூலம் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்று திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார். பெண் கல்வியை அவர் மறுக்கவில்லை. கல்வியறிவுடைய பெண்களே இல்லற தர்மங்களை அறிந்து அவற்றைச் சரிவர நடத்தமுடியும். இது முன்னோர் நூல்களுக்கும் கொள்கைகளுக்கும் முரண்பட்ட தன்று. மனைத்தக்க மாண்புடையள் ஆகி என்ற முதல் பாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை யென்று கூறுகின்றார்; பிதிர்க்கடன் செய்யும் உரிமையுடையவர்களுக்கே முன்னோர் சொத்தில் உரிமையுண்டு; இவ்வுரிமை ஆண்களுக்குத்தான். பெண்களுக்குப் பிதிர்க்கடன் செய்யும் உரிமையில்லை. ஆகையால் அவர்களுக்குப் பிறந்த இடத்துச் சொத்தில் பங்கில்லை. இதுவே நீதிசாதிரக் கொள்கை. இக்கொள்கையை மேலே காட்டிய பாடல் ஆதரிக்கின்றது. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. (55) ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும்போது, வேறு தெய்வத்தை வணங்காமல், கணவனையே வணங்கி எழுந்திருக்கின்ற ஒரு பெண் வானத்தைப் பார்த்து மழை பெய் என்றால் மழை பெய்யும். இப்பாடலும் வாழ்க்கைத்துணை நலம் என்னும் அதிகாரத்திலே உள்ளது. பெண்களுக்குக் கணவனே தெய்வம்; கணவனுக்கு அடங்கி வாழ்வதே அவர்கள் கடமை; பெண் களுக்குத் தனிச்சுதந்தரம் இல்லை; என்ற கருத்து இப்பாடலில் இருக்கிறது. மனைவிழைவார் மாண்பயன் எய்தார், வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. (901) தன்மனைவியின் மீது அன்புகொண்டு அவள் சொல்லைக் கேட்பவர்கள் சிறந்த பயனை அடைய மாட்டார்கள்; சிறந்த காரியத்தைச் செய்ய விரும்புகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கவேண்டிய விஷயமும் மனைவி யின் சொல்லைக்கேட்கும் அந்த ஒரு விஷயந்தான். இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். (905) மனைவிக்குப் பயப்படுகின்றவன் எப்பொழுதும் நல்வர் களுக்கும் நன்மை செய்யப் பயப்படுவான். பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின், நாண்உடைப் பெண்ணே பெருமை உடைத்து. (907) மனைவியின் கட்டளைப்படி காரியங்களைச் செய்து வாழ்கின்ற ஆண் தன்மையைவிட நாணத்தையுடைய பெண் தன்மையே சிறந்ததாகும். நட்டார் குறைமுடியார், நன்று ஆற்றார், நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர். (908) தன் மனைவியின் இஷ்டப்படி நடக்கின்றவர்கள் நண்பர் களின் குறைகளையும் தீர்க்க மாட்டார்கள்; நல்ல காரியங் களையும் செய்ய மாட்டார்கள். அறவினையும், ஆன்ற, பொருளும், பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். (909) மனைவியின் சொல்லைக் கேட்டு நடப்பவர்களிடம் அறம் செய்தலும், சிறந்த செல்வம் சேர்த்தலும், மற்ற இன்பங்களை அனுபவித்தலும் இல்லை. பெண்கள் சொல்லைக் கேட்பவர்கள் ஒரு காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். மனைவிக்குப் பயப்படுகின்றவனுக்கு இம்மை மறுமைப்பயன்கள் இல்லை. மனைவிக்குப் பயப்படுகின்றவன் நல்லவர்களுக்குக் கூட நன்மை செய்யமாட்டான். பெண் வார்த்தையைக் கேட்கும் ஆணைவிடப் பெண்ணே சிறந்தவள். மனைவி சொல்லைக் கேட்பவன் நண்பர்களுக்கும் உதவ மாட்டான்; நன்மையும் செய்ய மாட்டான். மனைவி சொல்லைக் கேட்டவர்கள் அறம், பொருள், இன்பங்களை அடைய மாட்டார்கள். மேலே காட்டிய ஐந்து பாடல்களிலும் இந்தக் கருத்துக்கள் அடங்கி யிருக்கின்றன. இப்பாடல்கள் `பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் உள்ளவை. அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற நான்கு பாடல்களும் பெண்கள் சொல்லை ஆண்கள் கேட்கக்கூடாது என்றே கூறுகின்றன. பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்; பெண்கள் இழி பிறப்புடையவர்கள்; அவர்கள் சுயேச்சையாக வாழ் வதற்கும், பிறர்க்குப் புத்தி சொல்வதற்கும் தகுதி யில்லாத வர்கள்; ஆகையால் அவர்களை ஆண்கள் அடக்கியே ஆளவேண்டும். இது நமது நாட்டின் புராதனக் கொள்கை. இக்கொள்கை வேத புராணமருதிகளிலும் காணப்படுவன. இதனையே திருவள்ளு வரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். திருவள்ளுவர் பெண்களைப்பற்றிக் கூறியிருக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் தமது மனைவியை நடத்திய விதத்தையும் கதையாக எழுதியிருக் கின்றனர். திருவள்ளுவர் மனைவியின் பெயர் வாசுகி. அவரை மணம் பேசும்பொழுதே திருவள்ளுவர் மணலை அவரிடம் கொடுத்துச் சமைக்கச் சொன்னார்; அவரும் மறுவார்த்தை பேசாமல் மணலைச் சமைத்தார்; அது சோறாயிற்று; அதன் பிறகே வாசுகியை மணந்தார். மணந்த பின்னும் வாசுகியைப் பல செயல்களின்மலம் கற்புடையவளா என்று சோதித்தார். ஒருநாள் பழயசோறு சாப்பிடும்போது விசிறி கொண்டு வந்து விசிறச் சொன்னார். ஒருநாள் பகல் பொழுதில், நல்ல வெளிச்சத்தில், நெசவு நெய்து கொண்டிருக்கும்போது நாடா கைதவறிக் கீழே விழுந்துவிட்டது. அதைத் தேடுவதற்கு விளக்குக் கொண்டுவரச் சொன்னார். உடனே அவர் கொண்டுவந்தார். மற்றொருநாள்கிணற்றில் தண்ணீர் முகந்து கொண்டிருக்கும் போது அவசரமாக அழைத்தார். வாசுகி இழுத்துக்கொண்டிருந்த கயிற்றை அப்படியே விட்டு விட்டு விரைந்து வந்தார். பாதிக் கிணற்றில் வந்து கொண்டிருந்த கயிறு குடத்துடன் அப்படியே நின்றுகொண்டிருந்தது. அடிசிற்கு இனியாளே! அன்புடை யாளே! படிசொல் தவறாத பாவாய்! - அடிவருடிப் பின்தூங்கி முன்னெழுந்த பேதையே! போதியோ! என்றூங்கும் என்கண் இரா. நல்ல உணவு கொடுத்தாய்! அன்புடையவளாக இருந்தாய்! என்சொல்லை ஒருநாளும் மீறி நடந்ததில்லை. நான் தூங்கியபின் நீ தூங்கினாய்! நான் விழிப்பதற்குமுன் நீ விழித்துக் கொண்டாய்! நீ இறந்துவிட்டாயே! இனி இரவில் என் கண்கள் எப்படித்தான் தூங்குமோ திருவள்ளுவரின் மனைவி வாசுகியார் இறந்தபின், திருவள்ளுவர் பாடியதாக வழங்கும் பாடல் இது. இதிலும் பெண்களைப்பற்றித் திருவள்ளுவர் கொண்ட கருத்து வலியுறுத்தப்படுகிறது. வாசுகியைப்பற்றிக் கூறும் கதைகளும், இப்பாடலும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அவைகள் திருவள்ளுவர் பெண்களைப் பற்றித் திருக்குறளில் கூறியிருக்கும் கொள்கை களுக்கு முரணானவைகள் அல்ல என்பது மாத்திரம் உண்மை. புராணக் கொள்கைகள் ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான் இந்திரனே சாலும் கரி. (25) ஐந்து புலன்களையும் அடக்கி ஆண்டவனுடைய வலிமையை விளக்குவதற்கு, பெரிய ஆகாய உலகத்தில் வசிக்கின்ற தேவர்களின் அரசனாகிய இந்திரனே போதுமான சாட்சி. தவசிகளின் வலிமைக்கு இந்திரனே சாட்சியென்பது இதன் கருத்து. இப்பாடல் சில புராணக் கதைகளை நினைப்பூட்டுகிறது. இந்திரன் வெள்ளை யானையின்மீது பவனி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது துர்வாச முனிவர், தான் மகாவிஷ்ணுவிடம் பெற்றுவந்த மலர் மாலையைக் கொண்டுவந்து இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக தனது வஜ்ராயுதத்தால் வாங்கி யானையின் தலையில் போட்டான். யானை தனது தும்பிக்கையால் அந்த மாலையை இழுத்துக் காலின்கீழ்ப் போட்டுத் தேய்த்து விட்டது. உடனே துர்வாசர் இந்திரனைப் பதவியிழந்து பரிதவிக்கும்படி சபித்தார். அவன் சாபத்திற்கு உள்ளானான். கௌதமரின் மனைவி அகலிகைமேல் இந்திரன் காதல் கொண்டான். கௌதமர் வெளியே போயிருக்கும் சமயம் பார்த்து, இந்திரன் அவரைப்போல் உருவெடுத்து அகலிகையிடம் வந்து இன்பம் அனுபவித்தான். அச்சமயம் முனிவர் வந்து விட்டார். இந்திரன் பயந்து பூனை உருவத்துடன் வெளியில் ஓடினான். முனிவர் இந்திரன் தந்திரத்தை அறிந்து அவனுடைய உடம்பு முழுவதும் ஆயிரம் பெண் குறிகள் உண்டாகக் கடவது என்று சாபம் இட்டார். பிறகு தேவர்களின் வேண்டுகோளின் பேரில் அவை பிறருக்கு ஆயிரம் கண்களாகக் காணப்படும் என்று மாற்றினார். இந்திர பதவியைப் பெறக்கூடிய அளவுக்கு இவ்வுலகில் யாரேனும் தவம் செய்துகொண்டிருந்தால், அதனை இந்திரன் உட்கார்ந்திருக்கும் வெள்ளைக் கம்பளம், தனது அசைவினால் அறிவிக்கும். ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்வோர் இந்திர பதவியை அடைவர். ஆதலால் இந்திரன் உடனே அவர்கள் தவத்தைக் கெடுக்க முயல்வான். இவை போன்ற கதைகளை இப்பாடல் நினைப் பூட்டுகின்றது. மடியிலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தரஅயது எல்லாம் ஒருங்கு. (610) சோம்பல் இல்லாத அரசன், மகாவிஷ்ணுவால் ஒரே அடியால் அளக்கப்பட்டதாகிய இவ்வுலகம் முழுவதையும் ஒரே மூச்சில் பெறுவான். மகாபலிச் சக்கரவர்த்தி யென்பவன் தன்னுடைய தபோ வலிமையால் மூன்றுலகங்களையும் அடக்கி யாண்டான். தேவர்கள் எல்லாம் அவன்கீழ் அடங்கிக் கிடந்தனர். தேவர்கள் கஷ்டம் பொறுக்க முடியாமல், மகாபலியை அடக்கும்படி மகாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டனர். அவர் வாமனாவ தாரம் எடுத்து மகாபலியிடம் போய் மூன்றடி மண்யாசகம் கேட்டார். அவனும் அளந்து எடுத்துக்கொள்ளும்படி கூறினான். உடனே அவர் விவரூபம் எடுத்துப் பூமியை ஓரடியால் அளந்தார்; ஆகாயத்தை ஓரடியால் அளந்தார். மற்றோர் அடி எங்கே என்று கேட்க, மகாபலி தன் தலையைக் குனிந்தான். அவன் தலையின்மேல் ஒரு பாதத்தை வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்திற்கு அனுப்பிவிட்டார். தேவர்கள் சுதந்தரம் அடைந்தார்கள். சந்தோஷப்பட்டார்கள். மாகவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வாமானாவதாரமும் ஒன்று. இக்கதையை மேற்கண்ட குறள் நினைப்பூட்டுகிறது. தாழ்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. (1103) தாம் ஆசைப்படும் பெண்களின் மெல்லிய தோள்களின் மேல் படிந்து தூங்குவதைவிட, மகாவிஷ்ணுவின் வைகுந்த பதவியை அடைந்து வாழ்வது சுகந்தருமா? வைகுந்தத்தை யடைந்து வாழும் பாகவதர்களுக்கு நித்திய சூரிகள் என்றுபெயர். வைகுந்தத்தை யடைந்தவர்கள் லக்ஷ்மி சமேதராய் வீற்றிருக்கும் பெருமாளை, அவர் எதிரில் உட்கார்ந்து சதாகாலமும் சேவித்துக்கொண்டே யிருப்பார்கள். இந்த வைஷ்ணவ மத தத்துவம் இப்பாடலில் இருக்கிறது. இதனால் பிர்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார். கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு. (269) தவம் செய்வதாகிய வல்லமையில் ஈடுபட்டவர்க்கு எமனிடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் காரியமும் கைகூடும். தவம் செய்தோர் எம தண்டனைக்கு ஆளாகார். கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. (326) உலகத்தாரின் உயிரைக் கவர்கின்ற கூற்றுவன் கொல்லா விரதத்தைப் பின்பற்றி வாழ்கின்றவனுடைய ஆயுளின்மேல் கணக்கு வைத்துஅதைக் கவர்வதற்காக வரமாட்டான். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால், ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். (894) திறமையுடன் காரியங்களைச் செய்து முடிக்கக் கூடியவர் களுக்கு, அத்திறமை யில்லாதார் துன்பம் செய்வது, எமனைத் தானே கையால் அழைத்துக் கொள்வதுபோல் ஆகும். பண்டு அறியேன் கூற்று என்பதனை, இனிஅறிந்தேன், பெண்தங்கையால் பேர் அமர்க்கட்டு (1083) கூற்றுவன் என்று நூல்களிலே சொல்லப்படுகிறவனை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. இப்பொழுது அறிந்தேன். அது பெண்தன்மையுடன் பெரிதாக வைக்கப்பட்ட கண்களையும் உடையது. கூற்றமோ, கண்ணோ, பிணையோ, மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து. (1085) இப்பெண்ணின் பார்வை என்னைத் துன்புறுகின்றது; ஆதலால் எமனோ? என்னைக் கவனிக்கின்றது; ஆதலால் கண்தானோ? என்னைக்கண்டு மிரளுகிறது; ஆதலால் மானோ? இந்த மூன்று தன்மையும் இவள் கண்களில் உண்டு. மக்களின் உயிரையும் உடம்பயும் வேறாகப் பிரிக்கும் கூற்றுவன் ஒருவன் உண்டு. அவனுக்கு எமன், காலன், தருமன், மறலி, என்ற வேறு பெயர்களும் உண்டு. அவனுக்குத் தனி உலகமும், தனித்தூதர்களும் உள்ளனர். அவன் பாபாத்மாக்களின் உயிரைப் பறித்துச்சென்று, பாபங்களுக்குத் தக்க தண்டனை விதிப்பான். இப்புராணக் கொள்கையை மேலே காட்டிய பாடல்கள் ஒத்துக்கொள்ளுகின்றன. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும். (167) பிறர் செல்வத்தைக்கண்டு பொறாமைப் படுகிறவனைச் சீதேவி அடக்கிவிடுவான்; மூதேவியை அவனிடம் போகும் படி வழிகாட்டிவிடுவாள். மடிஉளாள் மாமுகடி என்ப, மடியிலான் தான் உளாள் தாமரையினாள். (617) செந்தாமரை மலரில் வசிக்கின்ற சீதேவியானவள் சோம்பல் இல்லாதவனுடைய முயற்சி காரணமாக அவனிடம் தங்கியிருப்பாள்; மூதேவியானவள் சோம்பேறி யிடம் குடிபு குந்திருப்பாள். செல்வத்தைக் கொடுப்பவள் சீதேவி. தரித்திரத்தைத் தருகிறவள் மூதேவி. இருவரும் சகோதரிகள். சீதேவி இளையவள்; தங்கை. மூதேவி மூத்தவள்; அக்காள். இது புராணீகர்களின் கொள்கை. மேலே காட்டிய பாடல்களில் இக்கொள்கை காணப்படுகின்றது. அரும்செவ்வி இன்னாமுகத்தான் பெரும் செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து. (565) தன்னைப் பிறர் சந்திப்பதற்கு இடங்கொடுக்காதவனும், சந்திப்பவர்களிடம் கடுகடுத்த முகத்துடன் பேசுகின்றவனு மாகிய ஒருவனிடம் மிகுந்த செல்வம் இருந்தாலும் அதனால் யாருக்கும் உபயோகம் இல்லை. அச்செல்வம் பேயினால் காக்கப்படுவது போன்ற செல்வமாகும். உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும். (850) உலகில் உள்ளவர்கள் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒருவிஷயத்தை, இல்லையென்று சொல்லுகிற ஒருவன், இவ்வுலகத்தில் ஒரு பேயாக வைத்து எண்ணப்படுவான். மேலேகாட்டிய பாடல்களிலிருந்து பேய் பிசாசுகள் உண்டு என்று அறிகிறோம். `பொன்காத்த பூதம் எனபது பழமொழி. எங்கேனும் மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில் செல்வம் இருக்கு மானால் அதைப் பேய்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன என்பது மக்கள் நம்பிக்கை. நிலத்தில் புதையல் இருந்தாலும் அதைப் பூதம் காத்துக்கொண்டிருப்பதாக நம்புகின்றனர். பாவம்செய்த மக்கள், அகாலமரணம் அடைந்த மக்கள் பேய் பிசாசுகளாகத் திரிகிறார்கள் என்பதும் புராணிகர்களின் கொள்கை. இக்கொள்கைகளை மேற்கூறிய பாடல்கள் ஆதரிக் கின்றன. நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து. (1082) அழகுடைய அவள், நான் அவளைப் பார்க்கும்போது அவளும் என்னைப்பார்த்தல், தானே தீண்டி வருத்துவதாகிய மோகினித் தெய்வம், தன்னுடைய சேனைகளையும் சேர்த்துக் கொண்டு என்னைத் தாக்குவதைப்போல இருக்கிறது. மோகினிப்பேய் என்று ஒருவகைப்பேய் உண்டு. அது ஆடவர்களைக்கண்டு மோகம் கொள்வதுபோல் நடித்து அவர் களைத் துன்புறுத்தும். இப்பேயினால் பிடிக்கப் பட்டவர்கள் பிழைக்கமாட்டார்கள். ஒருவனைப்பார்த்து மோகிப்பதுபோலப் பாவனை செய்து ஏமாற்றுவது மோகினிப் பிசாசின் செய்கை. இக்கொள்கை சாதாரண மக்களின் நம்பிக்கை. இதையொட்டிப் பல கதைகள் கூறுவார்கள். இக்கொள்கையை மேலேயுள்ள பாடலில் காணுகின்றோம். மாமிசமும் மதுவும் திருவள்ளுவரால் புதிதாகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒன்று புலால் உண்ணாமை. மற்றொன்று கள்ளுண்ணாமை. இவ்விரண்டும் திருவள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் பரப்பப்பட்ட புதிய சீர்திருத்தக் கொள்கைகள். தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பரன் எங்ஙனம் ஆளும் அருள். (251) தன்னுடைய உடம்பு பெருப்பதற்காகத் தான் மற்றொரு உடம்பின் மாமிசத்தைச் சாப்பிடுகின்றவன் எப்படி அருளைக் கையாளுவான்? அருளுடையவனாக இருக்க மாட்டான். படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். (253) கொலைசெய்யும் ஆயுதத்தைக் கையில் கொண்டவர் களின் மனம் நல்ல காரியத்தில் செல்லாது; கொலைசெய்யும் காரியத்தையே விரும்பும்; அதுபோல ஒரு பிராணியின் உடலைச் சுவையுடன் சமைத்து உண்டவர் மனமும் மேலும் மேலும் அந்த ஊனையே விரும்புமே தவிர வே நல்ல காரியங்களில் செல்லாது. தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின், யாரும் விலை பொகுட்டால் ஊன்தருவார் இல். (256) உலகத்தார் தின்னும்பொருட்டு உயிர்களைக் கொல்லா மலிருப்பார்களானால், விலைபெறுவதற்காக உயிர்களைக் கொன்று மாமிசத்தைக் கொண்டுவந்து கொடுப்பவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். (259) கொல்லா விரத்தையும் மேற்கொண்டு மாமிசம் தின்னு வதையும் நீக்கியவனை எல்லாவுயிரும் கைகூப்பி வணங்கும். அருள் என்பது எல்லாவுயிர்களிடத்தும் பேதமில்லாமல் காட்டும் கருணையாகும். இத்தகைய கருணை மாமிசம் உண்பர் களுக்கு உண்டாகாது என்பது வள்ளுவர் கருத்து. உண்ணற்ககள்ளை, உணில், உண்க, சான்றோரால் எண்ணப்பட வேண்டாதார். (921) அறிவுடையவர் கள்ளை உண்ணக்கூடாது; உண்ண நினைப்பாராயின் அறிவுடையவர்களின் மதிப்பு, தனக்கு வேண்டாம் என்று நினைப்பவர் உண்ணட்டும். கள்ளுண்பவர் அறிவையிழப்பர்; அறிவுடையவர்களால் மதிக்கப்படமாட்டார். ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால், என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. (923) கள்ளுண்டவன் தன் தாயின் எதிரில் கூட மதிக்கப்பட மாட்டான்; மானம் இழப்பான். ஆகவே கள்ளுண்டு மயங்கியவன் சான்றோர்களின் எதிரில் எந்த நிலையை அடைவான்? களித்தறியேன் என்பது கைவிடுக, நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (928) கள்ளுண்டு அறியமாட்டேன் என்று பொய் சொல்லு வதைவிட்டு விடுக; கள்ளுண்டு களித்திருக்கும் சமயத்தில் முன்பு சொல்லிய பொய்யும் வெளிப்பட்டுவிடும். களித்தானைக் காரணம் காட்டுதல், கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. (929) கள்ளுண்டு களித்திருப்பவனுக்கு நீ கள்ளுண்ணக் கூடாது என்று காரணங்கள் காட்டி விளக்கிக் கூறுவதால் பயனில்லை. அவ்வாறு செய்வது நீருக்குள் மூழ்கி யிருப்பவனை விளக்கைக் கொண்டு தேடுதல்போல ஆகும். கள்ளுண்ணாப் போழ்தில் கனித்தானைக் காணுங்கால், உள்ளான்கொல், உண்டதன் சோர்வு. (930) கள்ளுண்பவன், கள்ளுண்ணாமல் சுயபுத்தியுடன் இருக்கும் சமயத்தில், கள்ளுண்டு மயங்கிய மற்றொருவன் செய்யும் காரியங் களைப் பார்த்தால், தான் கள்ளுண்டு மயங்கிய சமயத்தில் செய்யும் காரியங்களைப்பற்றி நினைக்காமலிருப்பானா? மது மாமிசங்கள் முன்னோர் நூல்களில் மறுக்கப்பட வில்லை. வேதங்களில், வேதகாலத்து மக்கள், மாடு, ஆடு போன்ற பலவகை மிருகங்களை வேட்டையாடியும், யாகஞ்செய்தும் உண்டனர். சோமலதையின் சாற்றைப் புனிதமாகக் கருதி உண்டு மயங்கினர். தமிழ் இலக்கியங்களிலும் திருக்குறளுக்கு முந்திய எந்த இலக்கியங்களிலும் மாமிசமும் மதுவும் விலக்கப்பட வில்லை; இவைகளை உண்பதால் பழிபாவம் வரும் என்று கூறப்படவும் இல்லை. சங்க நூல்களின் காலத்தில் இருந்த தமிழ்மக்கள் எல்லோரும் மாமிசமும் மதுவும் உண்டு மயங்கி மகிழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். துன்னல் சிதாஅர் நீக்கித், தூய கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப், பெறல் அரும் கலத்தில், பெட்டாங்கு உண்கெனப், பூக்கமழ் தேறல் வாக்குபுதரத்தர, வைகல் வைகல், கைகவி பருகி, (154-158) நீங்கள் கரிகால் பெருவளத்தானிடம் சென்றால் அவன் உங்களுடைய பலதையல்களுள்ள நைந்த துணியை அவிழ்த்து எறியும்படி செய்வான்; சுத்தமான கொட்டைக் கரை போட்ட பட்டாடை கொடுப்பான்; கிடைப்பதற்கு அருமையான பாத்திரத்தில், வேண்டிய அளவு உண்ணுங்கள் என்று சொல்லி பூமணம் வீசும் கள்ளை ஊற்றிக் கொடுக்கக் கொடுக்க, ஒவ்வொருநாளும் பெற்றுக் கைகூப்பி வணங்கிக் குடித்து மகிழ்வீர்கள். இது பொருநர் ஆற்றுப்படை. பொருநர் ஆற்றுப் படை யென்பது பத்துப் பாட்டில் ஒரு பாட்டு. இது இளஞ் சேட்சென்னி என்னும் சோழமன்னவன் புதல்வனாகிய கரிகால் பெருவளத் தான் என்னும் சோழமன்னனைப்பற்றி முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவரால் பாடப்பட்டது. வல்லோன் அட்ட பல்ஊன் கொழுங்குறை அரிசெத்து உணங்கிய பெரும்செந்நெல்லின் தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல் அரும்கடித் தீம்சுவை அமுதொடும் பிறவும் விருப்புடை மரபில் காப்புடை அடிசில் மீன்பூத்தன்ன வான்கலம் பரப்பி மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து ஆனா விருப்பில் தான்நின்று ஊட்டி (472-479) சமையல் செய்வதில் வல்லவன் சமைத்தபலவகையான இறைச்சிகளின் கொழுப்பான தசைகள், நன்றாகக் காயவைத்த சிறந்த செந்நெல்லிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அரிசியால் சமைத்த சோறு, நல்ல வாசனையும் இனிமையும் பொருந்திய தித்திப்பு உணவு, இன்னும் மற்றபண்டங்கள், விருப்பத்துடன் உண்ணக்கூடிய சிறந்த உணவு ஆகியவைகளை பெரிய வெள்ளிப் பாத்திரங்களிலே பரிமாறுவான். உங்களுடைய குழந்தைகளின் முகங்களை வரிசை வரிசையாக நோக்கி மகிழ்ச்சி அடைவான். மிகுந்த அன்புடன் தானே உணவுகளை எடுத்து அவர்கள் வாயில் ஊட்டுவான். உங்களையும் உண்ணச் செய்வான். இது பெரும்பாணாற்றுப்படை. பெரும்பாணாற்றுப் படை யென்பது பத்துப் பாட்டில் உள்ள மற்றொரு பாடல். இப்பாடல் காஞ்சியை யாண்ட மன்னவனாகிய தொண்டைமான் இளந்திரை யனைப்பற்றிக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. சிறியகள் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரியகள் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே பெரும்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயுமன்னே அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே (235 புறநா) சிறிது கள் கிடைத்தால் அதனை எங்களுக்குக் கொடுத்து விடுவான். அதிகமான கள் கிடைத்தால் அதனை நாங்கள் உண்டு பாடல்பாட, மிஞ்சியதை அவனும் மகிழ்ந்து உண்ணுவான். கொஞ்சம் சோறு கிடைத்தாலும், அதைப் பல பாத்திரங்களில் பரிமாறிப் பலருடன் உண்பான். அதிக சோறு கிடைத்தாலும் பல பாத்திரங்களில் பரிமாறிப் பலரோடும் உண்பான். எலும்பும் தசைகளும் கலந்த உணவு கிடைக்கும் இடங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுப்பான். அம்பும் வேலும் நுழைந்துவரும் போர்க்களங்களில் எல்லாம் தான் சென்று முன்னிற்பான். இப்பாடல் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் அரசனைப்பற்றி அவ்வையார் பாடியது. அவன் இறந்த போது, அவன் பெருமையைப் பற்றிக் கூறி வருந்தியது. மேலே கூறிய பாடல் பகுதிகளிலிருந்து, தமிழ் நாட்டிலும் மது மாமிசம் உண்டல் இழிவாகக் கருதப்பட வில்லை; விலக்கப் படவில்லை; என்பதை உணரலாம். புத்த மதமும், ஜைனமதமும் பரவிய காலத்தில் மாமிசம் உண்ணாமைதான் உயிர்க்கருணை அதாவது ஜீவகாருண்யம் என்னும் கொள்கை இந்தியாவில் பரவிற்று. வேகத்தை அடிப் படையாகக் கொண்ட மதங்களும் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டன. புத்த, சமண மதங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து இந்துமத ஆச்சாரியார்கள் அனைவரும், புலால் உண்ணாமையையும் மதச் சீர்திருத்தமாகக் கொண்டனர். இக் கொள்கையையே திருவள்ளுவரும் கூறினார். தமிழ் நூல்களிலே முதல் முதலில், மதுவையும் மாமிசத்தையும் கண்டித்து எழுதிய நூல் திருக்குறள்; அவைகளை முதல் முதலில் கண்டித்தவர் திருவள்ளுவர். தமிழ் நூலாராய்ச்சி யுடையவர்கள் இவ்வுண்மையை அறிவார்கள். முடிவுரை மேலே நாம் எடுத்துக் காட்டிய பகுதிகளிலிருந்து திருக்குறள் ஆசிரியரின் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வுலகத்தையும் உயிர்களையும் சிருஷ்டித்த கர்த்தா ஒருவர் உண்டு; அவரை வணங்குதல் மக்கள் கடமை. அவருக்கு உருவம் அமைத்துத் தினப்படி பூஜை செய்தல் வேண்டும். திருவிழாச் செய்தல் வேண்டும். பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு. ஒவ்வொருவரும் தமது குலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும். நால்வகை ஆரமதர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். பிராமணர்கள் தங்களுடைய ஆசாரத்தைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அவர்கள் வேதம் ஓதுவதற்கும், வேள்விகள் செய்வதற்கும் அரசன் ஆதரவு அளிக்க வேண்டும். மறுபிறப்பு உண்டு. பிறவிகள் எண்ணற்றவை. ஒவ்வொரு வரும் தம்முடைய வினைகளுக்குத் தகுந்தபடி பிறந்தது, இறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றனர். வினையின் பயனை ஒவ்வொருவரும் கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும்; விதிப்பயனை யாரும் மீறமுடியாது. குடும்பதன் பிதிர்க்களைத் திருப்தி செய்யச் சிரார்த்தம் முதலிய கர்மங்களைச் செய்யவேண்டும். நல்ல காரியங்களைச் செய்பவன் சுவர்க்கத்தை அடைவான்; அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பான். கெட்டகாரியங் களைச் செய்பவன் நகரத்தை அடைவான்; அங்குள்ள கஷ்டங்களை அனுபவிப்பான். சுவர்க்கத் தைக்காட்டிலும் மோட்சம் உயர்ந்தது. கடவுளைத் தவிர மற்ற எல்லா ஆசைகளையும் விட்டவனே மோட்சமடையமுடியும். மோட்சத்தை வேண்டுகிறவன் நிஷ்காமிய கருமங்களையே செய்யவேண்டும். பெண்கள் சுயேச்சை யற்றவர்கள். ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டும். இதுவே அவர்களுடைய தர்மம். பெண்களின் சொல்லைக் கேட்பவன் இம்மையினும் மறுமையிலும் கஷ்டப் படுவான். புராணங்களில் கூறப்படும் கதைகள், எமன், மூதேவி, சீதேவி, இந்திரன், தேவர்கள், பேய், மோகினிப் பேய் முதலி யவைகள் உண்மையானவை. இவைகள் எல்லாம் திருக்குறளில் காணப்படும் விஷயங்கள். ஆகையால் திருவள்ளுவர் கூறியிருப்பவைகள் எல்லாம் வேத புராணமிருதிகளை அனுசரித்தவை என்பது உண்மை. திருக்குறளுக்கும் மிருதிகளுக்கும் ஒரு வேற்றுமை உண்டு. மிருதிகளில் நான்கு வருணத்திற்கும் தனித் தனியாக ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன. அரச நீதியிலும் கூட ஒவ்வொரு ஜாதியினர்க்கு ஒவ்வொரு நீதி வழங்குமாறு கூறப்படுகின்றது. ஆனால் குறளில் இப் பிரிவு இல்லை. பல ஒழுக்கங்கள் எல்லோர்க்கும் பொதுவாகக் கூறப்படுகின்றன. அரச நீதியைப் பற்றிக் கூறும்போது அங்கும் ஜாதிக்கொரு நீதியாகப் பிரித்துக் கூறப்படவில்லை. எல்லா மக்களுக்கும் ஒத்த நீதி வழங்குமாறு கூறப்படுகின்றது. இது திருவள்ளுவர்க்குரிய ஒரு தனிப்பட்ட சிறப்பாகும். இதைத் தவிர அவரால் கூறப்பட்ட ஒழுக்கங்களோ, நீதிகளோ, முறைகளோ, ஒன்றும் முன்னோர் நூல்களுக்கு முரண்பட்ட தல்ல. ஒரு தனிப்பட்ட நாகரிகத்தையோ, ஒரு தனிப் பட்ட கொள்கையையோ, ஒரு தனிப்பட்ட கலாச்சாரத்தையோ விளக்குகிறது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உண்மை இவ்வாறு இருந்தாலும், ஒவ்வொரு மதத்தினரும், திருவள்ளுவரைத் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மதக்கொள்கை களைத் திருவள்ளுவர் சொல்லி யிருப்பதாகத் திருக்குறளிலிருந்தே ஆதரவும் காட்டுகின்றனர். வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும் ஆதிபகவன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான் போன்ற பெயர்களெல்லாம் அருகக் கடவுளைக் குறிக்கும் பெயர்கள். சைனர்கள் கொல்லா விரதத்தையே மிகச் சிறந்ததாகப் போற்றுபவர்கள். திருவள்ளுவரும் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறார். குறள், சைனர்களால் பாடப்பட்ட நாலடி யாரோடு ஒத்திருக்கிறது. பிற்காலத்தினர் பல பாடல் களைத் திருத்திவிட்டனர். திருத்தப்படாத பழைய குறள் பாட்டுகளில் சைனமதத் தத்துவங்களே நிறைந்திருக்கின்றன. ஆதலால் திருவள்ளுவர் சைன மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லுகின்றனர். மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், தனக் குவமை யில்லாதான். என்ற சொற்கள் புத்தரைக் குறிக்கும் சிறந்த பெயர்கள். இவைகளைத் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். புத்த மதம் தென்னாட்டில் பரவிய காலத்தில் தான் புலால் உண்ணுதல் ஜீவகாருண்யத் திற்கு விரோதம் என்ற கோட்பாடும் பரவிற்று. அதனையே திருவள்ளுவரும் புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தில் வலியுறுத்திச் சொல்லியிருக் கிறார். ஆகையால் திருவள்ளுவர் புத்த மதத்தைப் பின்பற்றியவர் தான் என்று புத்தர்கள் சொல்லுகின்றனர். கிறிதுவர்கள் திருக்குறளில் ஏசுநாதரின் உபதேசங்கள் பல அடங்கியிருக்கின்றன. திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்தவர். அவர் காலத்தில் செயின்ட் தாம போன்ற கிறிதுவ மதப்பிரச்சாரகர்கள் மயிலாப்பூரில் வந்து இறங்கினர். மற்றும் பல கிறிதுவர்கள் அவருடன் வந்தனர். அவர்களின் மூலம் திருவள்ளுவர் ஏசுவின் உபதேசங்களை அறிந்தார். அவைகளைத் திருக்குறளில் அமைத்து எழுதினார் என்று கூறுகின்றனர். பூவேறு நான்முகன் என்பது திருவாசகம். எரியாய தாமரைமேல் இயங்கினாரும் என்பது தேவாரம். ஆகையால் மலர்மிசை ஏகினான் எனத் திருவள்ளுவர் சிவ பெருமானைத் தான் குறிப்பிடுகிறார் என்று சைவர்கள் கூறுகின்றனர். திருவள்ளுவர்க்குச் சிவனடியார் உருவத்திலேயே சிலை செய்து வைத்துக் கோயில் கட்டி யிருக்கின்றனர். அவருக்கு நாயனார் என்ற சிவனடியார்க்குரிய பட்டப் பெயரும் அளித்துவிட்டனர். தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமான் என்பது திருவாய் மொழி. இக்கருத்துடையதே மலர் மிசை ஏகினான் என்பது தாமரைக் கண்ணான் உலகு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருக்குறளுக்கு உரைகண்ட பரிமேலழகர் ஒரு வைணவர். மற்றும் வைஷ்ணவ சமய நூல்களில் திருக்குறளை எடுத்தாண்டிருக்கிறார்கள். ஆகையால் திருவள்ளுவர் விஷ்ணு பக்தர் என்று சொல்லுகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் திருவள்ளுவரைத் தங்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லும்போது தங்கள் கொள்கைக்கு மாறாக அவர் சொல்லியிருப்பதை விட்டு விடுகின்றனர். தங்கள் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் குறள் களை மாத்திரம் எடுத்துக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும் இவ்வாறே திருக்குறளில் தங்களுக்கு வேண்டாதவைகளைக் கழித்து விட்டு, அல்லது அவைகள் பிறரால் சேர்க்கப்பட்டன என்று சொல்லிவிட்ட தங்களுக்கு வேண்டியவற்றை மாத்திரம் எடுத்துக் கொள்ளுவார் களானால் இன்றுள்ள குறள் முழுவடிவத்துடன் இருக்கமுடியாது. சைனர் குறள், புத்தர் குறள், சைவர் குறள், வைணவர் குறள், கிறிதுவர் குறள், திராவிடர் குறள், ஆரியர் குறள் என்று பல குறள்களாகி விடும். பிறகு திருவள்ளுவர் இயற்றிய குறள் எது என்பதிலேயே தகராறு வந்துவிடும். ஒவ்வொருவரும் தாம் தாம் கூறுவதுதான் திருவள்ளுவர் குறள் என்பார்கள். இதனால் திருவள்ளுவரின் உண்மைக் குறளை அறிய முடியாமல் மக்கள் திகைப்பார்கள். ஆகையால், இம்முறை இத்தகைய ஆராய்ச்சி முறை பாராட்டத் தகுந்ததல்ல. எல்லோர்க்கும் பொதுவான ஒரு நூலை, ஒரு கூட்டத்தார்க்கு மாத்திரம் உரியது என்று காட்ட முயற்சிப்பது, திருவள்ளுவர்க்குச் சிறப்பளிப்பதாகாது. குறளை அப்படியே வைத்து அதன் உண்மைக் கருத்தை அறிந்து கொள்வதுதான் ஆராய்ச்சிக்குச் சிறந்த சாதனமாகும். முலிம்களுக்கு வழிகாட்டும் நூல் கொரான்; கிறிதவர் களுக்கு பைபிள்; புத்தர்களுக்குத் திரிபிடகம். இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு, வேதாந்த சூத்திரத்திற்கு ஒவ்வொரு ஆச்சாரியார்கள் செய்த பாஷ்யங்கள் வழிகாட்டிகளாக இருக்கின்றன. இவைகளைப்போலத் திருக்குறளை ஒரு மதநூல் என்று கூறமுடியாது. பழையவேத புராணங்களின் சாரங்களைத் திரட்டிக்கூறும் நூலேயன்றி, ஒரு மதத்தினர்க்கோ, ஒரு வகுப்பினர்க்கோ இது வழிகாட்டும் நூலாக இருக்க முடியாது. உலகத்தார் எல்லோரும் படிக்க வேண்டிய உயர்ந்த நூல். பல உண்மைகளை விளக்கும் சிறந்த நூல். ஆராய்ச்சிக்குரிய ஓர் ஒப்பற்ற அரிய நூல். திருக்குறளை ஒருமுறை ஊன்றிப் படிப்போர் இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளலாம். வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (1956) ஆசிரியர் முன்னுரை திருக்குறள் தலைசிறந்த நூல்; திருவள்ளுவர் ஒப்பற்ற புலவர்; இது தமிழர் கருத்து மட்டும் அன்று; திருக்குறளைப் படித்த அனைவரும் இவ்வாறு கூறுகின்றனர்; ஒப்புக்கொள் கின்றனர்; பாராட்டுகின்றனர். இதற்குக் காரணம் ஒன்றேதான். திருக்குறளிலே கூறப் பட்டிருக்கும் அறங்களிலே சிலவற்றைத் தவிர மற்றவைகள் எல்லாம் அனைவர்க்கும் பொதுவானவை. எல்லாச் சமயத்தினர்க்கும், இனத்தவர்க்கும், மொழி யினருக்கும் பொதுவான கொள்கைகள் பல திருக்குறளிலே அடங்கியிருக்கின்றன. திருக்குறள் இன்ன சமயத்தினருக்கு உரியது; இன்ன இனத்தினர்க்கு உரியது; என்று கூற முடியாது. வள்ளுவர்க்கும், அவர் குறளுக்கும் தனி நாகரிகம் கற்பிப்பது, தனி இனம் கற்பிப்பது, தனிச்சமயம் கற்பிப்பது முறையன்று; இது உண்மைக்கு மாறானது. வள்ளுவர் குறள்தான் தமிழர் நாகரிகத்தைக் கூறுகின்றது; அதுவே தமிழர் சமயநூல் என்போர் உண்டு; இக்கருத்து வரவேற்கத் தக்கது; போற்றத் தக்கது. இவர்கள் கூற்று உண்மை யானால் இந்நாட்டில் ஆரியர் தமிழர் என்ற வேற்றுமைக்கே இடமில்லை. ஆரியர்கள் என்று யாரை நினைக்கிறோமோ அவர்கள் வள்ளுவர் கருத்தை மறுப்பதில்லை. அப்படியே ஒப்புக் கொள்ளு கின்றனர். ஆதலால் வள்ளுவர் குறளைக்கொண்டு நாகரிக வேற்றுமை--பண்பாடு வேற்றுமை கற்பிக்க இடம் இல்லை. வள்ளுவர் கருத்துக்கும் வடநூல்களின் கருத்துக்களுக்கும் வேற்றுமையில்லை. வள்ளுவர் கருத்தை வடமொழிப் புலவர் களும் போற்றுகின்றனர். அவருடைய கருத்துக்கள் வடநூல் களிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆதலால் வள்ளுவரைக் கருவியாகக் கொண்டு வடமொழியுடன் போர் தொடுக்க முடியாது; வேறு இனத்தாருடன் சண்டை போட முடியாது. மொழி வெறுப்பாளர் பக்கத்தில் வள்ளுவர் நிற்கமாட்டார். இன வெறுப்பாளர் பக்கத்திலும் வள்ளுவர் நிற்கமாட்டார். இன்று வள்ளுவரைப் பற்றிப் பேசுகின்றவர்களிலே சிலர் அவர் சொல்லாதவைகளை யெல்லாம் சொல்லியிருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு காரணம் வடமொழியின் மீதும் ஆரியர்கள் என்று உண்மைக்கு மாறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சிலர் மீதும் கொண்ட வெறுப்பேதான். இம்முயற்சி பயனற்ற வீண்முயற்சி; அனைவரும் கண்டு மகிழும்படி மாசற்ற நீலவானத்திலே உலவும் முழுமதி போன்ற வள்ளுவரை ஒரு கிணற்றுக்குள்ளே தள்ளி அடக்கி வைக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதுதான் இவர்களுடைய முயற்சி. படித்தவர்கள் சிலர்கூட இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதுதான் இரங்கக் தக்கது. உலகமெல்லாம் ஒப்புக்கொள்ளத் தகுந்த உயர்ந்த; நூலைச் செய்தவர் வள்ளுவர்; அவரை மொழி வெறுப்புள்ள வராகக் காட்ட முயற்சிக்கின்றனர்; இன வெறுப்புள்ளவராகக் காட்ட என்ன என்னவோ சொல்லுகின்றனர். நாகரிக வெறுப்புள்ள வராகக் காட்ட முயற்சிக்கின்றனர். இவர்கள் நிலைமைக்குப் பரிதாபப்படத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? வள்ளுவர்க்குப் பெருமை தரவேண்டும். தமிழுக்குச் சிறப்புத் தரவேண்டும். தமிழர் நாகரிகம் பண்பட்டது; உயர்ந்தது; என்று காட்ட வேண்டும் என்பது இவர்கள் கொள்கையாக இருக்கலாம். இக்கொள்கை போற்றத் தக்கது தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்கள் தமிழரின் சிறப்பைப் போற்றுகின்றனர்; தமிழரின் நாகரிகத்தைப் பாராட்டுகின்றனர். தமிழரின் பரந்த நோக்கத்தை வியக்கின்றனர். இதுபோலவே வள்ளுவரைப் படித்தவர்கள் அதன் மாண்பைப் பாராட்டுகின்றனர்; வள்ளுவரை வெறுப்பவர் யாருமே இல்லை. ஆகையால் திருக்குறளை அனைவரும் படிக்கும்படி செய்வதால் தான் இவர்கள் எண்ணம் ஈடேறும். உலக மக்கள் அனைவரும் போற்றும் ஒரு நூலை, ஒரு சமயப் பெட்டிக்குள் வைத்துப் பூட்ட முயற்சிப்பது அந்நூலுக்குப் பெருமையளிப்பது ஆகாது; இரு இனக் கூண்டுக்குள் அடக்க முயல்வதும் வள்ளுவர் மாண்பை மறைப்பதாகத் தான் ஆகும். ஒரு தனித்த நாகரிக வகைக்குள் மாட்ட முயற்சிப்பதும் வள்ளுவர் புகழுக்குத் திரை போடுவதாகத்தான் முடியும். இது வள்ளுவர்க்கோ, திருக்குறளுக்கோ, தமிழுக்கோ, பெருமை தருவதும் ஆகாது. திருக்குறளிலே உள்ள நீதிகள் எல்லாம். மக்கள் அனைவர்க்கும் பொதுவாகவே கூறப்படுகின்றன. ஒரு குறளாவது இன்ன நாட்டு மக்களுக்கு என்று குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. இதைக் கொண்டே வள்ளுவர் உலக மக்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறார் என்பதைக் காணலாம். பிற மொழியை, பிற இனத்தவரை, பிற நாட்டினரைப் பழித்துப் பேசுவது தமிழர் பண்புக்கு மாறானது;வெறுத்துப் பேசுவது தமிழர் நாகரிகம் உன்று. உலக மக்களுடன் ஒன்று பட்டு வாழவேண்டும் என்பதே தமிழர் கொள்கை, தமிழர் பண்பாட்டை வள்ளுவர் மறந்தவர் அல்லர். தமிழர் பண்புக்கு மாறான கொள்கைகளைத் திருக்குறளிலே காணமுடியாது. இப்பண்புள்ள திருக்குறளை வைத்துக் கொண்டு சிலர் வெறுக்கத் தக்கவைகளைப் பேசுவது தான் வியப்பிற்குரியது. திருவள்ளுவரின் உண்மையான கருத்துக்களை உணர்ந்தவர்கள், ஒருவரிடமும் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள்; வெறுப்பாளர் பேச்சுக்களை நம்பவும் மாட்டார்கள். உயர்ந்த இலக்கியங்களுக்கும், இலக்கியங்களைச் செய்த புலவர்களுக்கும், குறுகிய நோக்கங்களைக் கற்பிப்பது வெறுக்கத் தக்கது. இப்படிக் குறுகிய நோக்கங்களைக் கற்பித்துக் கூறுவோற் நாட்டுக்கோ, மக்களுக்கோ, மொழிக்கோ நன்மை செய்கின்றவர்கள் ஆகமாட்டார்கள் இவர்கள் கொள்கை தவறானது; இதைப் பொது மக்களுக்கு எடுத்துக் காட்டியாகவேண்டும். இலக்கியங்களின் மூலம் பரப்பப்படும் வெறுப்பு நஞ்சை, இலக்கியங்களில் உள்ள மருந்துகளைக்கொண்டே மாற்றியாக வேண்டும். இது தமிழ்ப் புலவர்களின் கடமை, மக்கள் முன்னேற்றத் தைக் கருதும் பொதுஜன இயக்கங்களின் கடமை; தமிழ் நாட்டு மக்கள், தங்களுடன் வாழ விரும்பும் அனைவரோடும் இணைந்து வாழும் இயல்புள்ளவர்கள். இந்த உண்மையைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்கு அடிக்கடி அறிஞர்கள் எடுத்துக் காட்டவும் வேண்டும். இன்று தமிழ் மக்களிடையே வெறுப்பு விதைகள் பல விதைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கியங்களில் உள்ள உண்மைப் பண்புகளை எடுத்துரைப்பதன் மூலம் அவ்வெறுப்பு விதைகளை முனையிலேயே கிள்ளியெறிந்துவிடலாம். இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டே திருக்குறளில் உள்ள உண்மைக் கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டிருக் கின்றன; திருக்குறள் உண்மையைத் தமிழர் காணவேண்டும்; திருவள்ளுவர் கருத்தைத் தமிழர் அறியவேண்டும்; தமிழ் இலக்கியத்தின் சிறப்பைத் தமிழர் உணரவேண்டும்; இந்நோக்கமே வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் பிறந்ததற்குக் காரணம். திருக்குறளைப் பற்றி ஒரு சிலர், இன்று தமிழ் நாட்டிலே பரப்பி வரும் தப்பும் தவறுமான கருத்துக்களைத் திருத்துவதற்கு இந்நூல் பயன்படும். இதுவே நமது நம்பிக்கை. இந்நம்பிக்கை வெற்றி பெறுமானால், இது தமிழர்க்கும், தமிழுக்கும் செய்த பணியாகும். இக்கருத்தைப் பெரும்பாலான தமிழர்கள் வரவேற் பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் தமிழ் மக்களுக்குக் காட்டப்படுகின்றது. உண்மையறியாத சிலர்--- உண்மையை அறிந்திருந்தாலும் அதை ஒளிக்க வேண்டும் என்று விரும்புகின்ற சிலர்--- இந் நூலாசிரியர் மேல் சீறி விழலாம்.; வசை பாடலாம். அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. உண்மையைக்கூற வேண்டும் என்பதே நமது நோக்கம். இந்நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்றாலும் போதும்; அதுவே எமக்குப் பெருமகிழ்ச்சி. இந்நூலால் வள்ளுவர் மாண்பு இன்னும் வளரும்; திருக்குறளின் கொள்கை பரவும்; தமிழின் சிறப்பு ஓங்கும்; தமிழர் பண்பாடு பாராட்டப்படும்; திருக்குறளைப் படிக்கும்படித் தமிழர்களைத் தட்டி எழுப்பும். திருக்குறளில் உள்ள எல்லாவற்றையும் இந்நூலிலே எடுத்துக் காட்டி விட்டாதாக யாரும் எண்ண வேண்டாம் சொல்லியவை சில; சொல்லாமல் விடப்பட்டவை பல திருக்குறளைப் படிப்போர்க், இது ஒரு வழி காட்டியாகப் பயன்பட்டால் போதும். இக்கருத்துடன் எழுதப்பட்ட சிறு நூல்தான் இது மக்கள் திருக்குறள் முழுவதையும் படித்து உண்மை உணரவேண்டும் என்பதே நமது ஆவல். இந்நூலில் உள்ள குற்றம் குறைகளை எப்பொழுது யார் எடுத்துக் காட்டினாலும் நன்றியறிவோடு திருத்திக் கொள்வோம். இந்நூல் நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கின்றது. முதற்பகுதியில் வள்ளுவர் பெருமை, வரலாறு, திருக்குறளின் பெருமைக்குரிய காரணங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பகுதி, அறத்துப்பாலில் உள்ள செய்யுட்களை ஆதரவாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டது. மூன்றாவது பகுதி பொருட்பாலை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டது நான்காவது பகுதி காமத்துப்பாலின் சிறப்பை விளக்குவது. இந்நூலிலேயே ஏறக்குறைய 200 குறள் வெண்பாக்கள் வருகின்றன. அவைகள் உதாரணமாக எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன. அவ்வெண் பாக்களின் பொருளும் அவ்வவ் விடங்களிலே விளக்கப்பட்டிருக்கின்றது. இந்நூலைப் படிப்போர் எண்ணத்திலே அவ்வெண்பாக்கள் பதியும் என்று நம்புகின்றோம். வள்ளுவர் நூலை வழுவறக் கற்றுண்மை கொள்ளுவதே நல்லோர் குணம். இங்ஙனம், சாமி. சிதம்பரன். வள்ளுவர் மாண்பு சமயக் கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப், பொருள் இது என்ற வள்ளுவன். - கல்லாடம் ஒன்றே பொருள் எனின்வேறு என்ப; வேறு எனின் அன்று என்ப ஆறு சமயத்தார்; - நன்றென எப்பா லவரும் இயைபவே, வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி. - கல்லாடர் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு. - பாரதியார் முதற் பகுதி இப் பகுதியிலே திருவள்ளுவரின் பெருமையைப் பற்றிக் கூறப் படுகின்றது. திருக்குறளின் பெருமை; திருவள்ளுவரைப்பற்றிய செய்திகள்; திருவள்ளுவர் காலம்; திருக்குறளின் அமைப்பு முதலிய செய்திகளைப் பற்றிப் பொது வாகக் கூறப்படுகின்றன. இச்செய்திகள் ஒன்பது தலைப்புக் களிலே எழுதப்பட்டிருக்கின்றன. வள்ளுவர் பெருமை தமிழகத்திலே வாழும் அனைவரும், இன்று திருக்குறளைத் தலை சிறந்த நூலாகப் போற்றுகின்றனர். அதன் ஆசிரியர் திருவள்ளுவரைத் தலைவணங்கி ஏற்றுகின்றனர். எல்லோரும் திருக்குறளைப் படிக்க வேண்டும்; அவர் வகுத்துள்ள நீதிகளைப் பின்பற்றி வாழவேண்டும்; வள்ளுவர் சொல்லும் அறநெறியே எல்லோராலும் ஏற்கத் தகுந்தது; என்று பலரும் கூறுகின்றனர் இன்று தமிழ் நாட்டில் எழுந்துள்ள இவ்வுணர்ச்சி எல்லோராலும் பாராட்டத் தக்கது. பல்லாண்டுகளாகத் - திருக்குறள் தோன்றிய கால முதல் --- அதன் பெருமையை அனைவரும் அறிவார்கள். திருக்குறளைப் படித்தவர்கள் அதற்கு நிகரான நூல் வேறொன்றும் இல்லை யென்று வியக்கின்றனர்; பாராட்டுகின்றனர். திருக்குறளைப் படிக்காதவர்கள் கூடத் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றிப் புகழ்ந்து வந்தனர். திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும், தமிழ்நாட்டில் கர்ண பரம்பரைக் கதைகள் பல வழங்கிவருகின்றன. நெடுங்காலமாகத் தமிழ் மக்கள் இவ்வாறு வள்ளுவரையும் குறளையும் போற்றி வந்திருக்கின்றனர். இது வள்ளுவர்க்கும் குறளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனிச் சிறப்பாகும். இன்று பொதுமக்களிடையிலே திருவள்ளுவர் நடமாடத் தொடங்கி விட்டார். பாட்டாளிகள் --- உழவர்கள் -- படித்தவர்கள் ---படிக்காதவர்கள் அனைவரும் திருக்குறளின் பொருளைத் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டு விட்டனர். இந்த அளவுக்கு இன்று திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் உணர்ச்சி வெள்ளம் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடுகின்றது தமிழகத்தில் மட்டும் அன்று; மற்றும் பல நாடுகளிலும் திருவள்ளுவர் குடியேறி நிலைத்துவிட்டார். திருக்குறளைப் பிற நாட்டு மக்களும் பெருமையாகப் போற்றி பாராட்டுகின்றனர்; மேல் நாட்டு மொழிகள் பலவற்றிலே பெயர்த் தெழுதப்பட்டிருக் கின்றது. ஆதலால் வேற்று நாட்டினரும், வேற்று மொழியினரும் அதை விரும்பிப் படிக்கின்றனர். அதன் ஆசிரியரின் அறிவைப் பாராட்டுகின்றனர். இந்திய மொழிகள் பலவற்றிலும் இப்பொழுது திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றது. உலகப் பொதுநூல் திருக்குறளை இன்று உலகப் பொது நூலாகப் போற்று கின்றனர். திருவள்ளுவர் உலக குரு என்ற அரியாசனத்தில் ஏறி வருகிறார். திருவள்ளுவர், திருக்குறனைத் தமிழர்களுக்கு மட்டும் என்று இயற்றித்தரவில்லை; உலக மக்கள் அனைவருக்கும் பொது நூலாக ஆக்கித் தந்தார்; இதனால் தமிழகமே பெரும் புகழ்பெற்றது. இவ்வாறு பல்லாண்டுகளுக்கு முன்பே புத்துலகக் கவிஞர் பாரதியார் முழங்கினார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதி முழக்கம். இச்செந்தமிழ் முழக்கம் இன்று உலகெங்கும் பரவி வருவதைப் பார்க்கின்றோம். இது தமிழர்க்குப் பெருமை; தமிழுக்குச் சிறப்பு. திருவள்ளுவரின் பெருமைக்கு- திருக்குறளின் - மாண்புக்குப் - பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் ஒரு காரணமே அதன் அத்தனை மாண்புக்கும் அடிப்படையாகும். இவ்வுண்மையை மற்றொரு புலவர் பாராட்டிப் பாடி மகிழ்ச்சி யடைகின்றார். வள்ளுவர் செய் திருக்குறளை மறுஅற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளைக் குற்றமற நன்றாகக் கற்றறிந்தவர்கள், அதன் ஒப்பற்ற சிறப்பை உணர்ந்து போற்றுவார்கள்; ஒவ் வொரு குலத்துக்கு வெவ்வேறு நீதிகளை வகுத்துக் கூறும் மநுதர்மம் போன்ற அறநூல்களை அவர்கள் சிறந்ததாக நினைக்கமாட்டார்கள் இவ்வாறு திருவள்ளுவரைப் பாராட்டிப் பாடியவர் காலஞ்சென்ற பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், இவர் மனோன்மணீயம் என்ற நாடகச் செய்யுள் நூலின் ஆசிரியர். வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் முதிர்ந்த அறிவுள்ளவர். எம்மொழியிலும், எவரிடத்திலும் வெறுப்பில்லாதவர். தான் உணர்ந்த உண்மையை - திருக்குறளிலே தான் கண்டறிந்த கருத்தை - இவ்வாறு ஒளிவு மறைவு இல்லாமல் கூறினார். திருக்குறளுக்குப் பின்னே தோன்றிய நீதி நூல்களும் வள்ளுவர் வழியைப் பின்பற்றியே எழுந்துள்ளன. மக்களுக்குப் பொதுவான நீதிகளையே கூறிச் செல்கின்றன. இது குறிப்பிடத் தக்கது. தனிச் சிறப்பு செந்தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் திருவள்ளுவர் ஆட்சி செலுத்துகிறார்; திருவள்ளுவர்க்குப் பின் பிறந்த நூல்களில் எல்லாம் அவருடைய கருத்துக்கள் புகுந்திருக்கின்றன; மொழிகள் அமைந்திருக்கின்றன. திருக்குறளின் கருத்துக்களோ, சொற் களோ, சொற்றொடர்களோ ஏறாத இனிய தமிழ் நூல்கள் ஒன்றுமே இல்லையென்று கூறிவிடலாம். திருக்குறளுக்குப் பின் பிறந்த எல்லாச் சிறந்த நூல்களிலும் இவற்றைக் காணலாம். சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் அனைவரும் திருக்குறளிலிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை அள்ளிக் கொண்டிருக் கின்றனர். அவர்கள் ஆக்கிய தமிழ்ப் பாமாலைகளிலே திருக்குறளிலிருந்து பல மலர்களைப் பறித்து வைத்துத் தொடுத்திருக்கின்றனர். இவ்வாறு திருக்குறள் கருத்தையோ சொற்றொடர்களையோ சேர்த்துத் தொடுத்தால் தான் தங்கள் பாமாலை நல்ல அழகும், நறுமணமும் பெற்று விளங்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். இக்காலத்திலும் எல்லா மதத்தினரும் - கிருதுவர்கள் - இலாமியர்களை உள்ளிட்ட அனைவரும் திருக்குறளை மறந்து விடுவதில்லை. அவர்களுக்குப் பிடித்த பகுதிகளை எடுத்துச் சேர்த்து எழுதுகின்றனர். இதற்குக் காரணம் உண்டு. திருவள்ளுவர் மதவாதிகளைப் பின்பற்றி அறநெறிகளைக் கூறவில்லை. உலக நிலைமையை ஆராய்ந்து, உண்மைகளை எடுத்து உரைக்கின்றார். உவகத்தோடு ஒட்டி வாழ, நாம் பின்பற்ற வேண்டிய அறங்கள் இன்னின்னவை என்று இயம்புகின்றார். இதுதான் அனைவரும் திருவள்ளுவரைக் கொண்டாடுவதற்குக் காரணம். இதை, சமயக்கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப், பொருள் இது என்ற வள்ளுவன். (பா. 172) என்ற கல்லாடர் கவிதையால் காணலாம். இன்றுள்ள கல்லாடம் என்னும் நூல் சைவ சமயநூல். சிவபெருமான் திருவிளை யாடல்களையும், பெருமைகளையும் போற்றும் நூல். அந்நூலே இவ்வாறு இயம்புமாயின் வள்ளுவரின் மத நடுநிலைமைக்கு வேறு என்ன தான் சான்று வேண்டும்? இலக்கிய ஆசிரியர்களை - நூலாசிரியர்களை -கவிஞர்களை - விட்டுவிடுவோம். மற்றவர்களைப் பார்ப்போம். அரசியல் வாதிகள் - சமுதாயச் சீர்திருத்தக்காரர்கள் - மத வாதிகள் - மத எதிர்ப்பாளர்கள் - பகுத்தறிவு வாதிகள் - வகுப்பு வாதிகள் - தேசீய வாதிகள் அனைவரும் வள்ளுவரை மறந்து விடுவதில்லை; திருக்குறளைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். எழுத்துக்களில் மட்டும் அன்றி; அவர்களுடைய பேச்சுகளிலும் வள்ளுவரை மேற்கோள் காட்டிக் பேசுகின்றனர். சுருங்கச் சொன்னால், திருக்குறள் கலக்காத எழுத்தும் சுவையற்றவை என்று கருதப்படுகின்றன. அவை எவ்வளவு இனிமையாக இருந்தாலும் சர்க்கரை கலக்காத பால்; அல்லது உப்பில்லாமல் சமைத்த உணவு; என்று தான் எண்ணப்படு கின்றன. எல்லாம் நிறைந்தது எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால் பரந்த பாவால் என்பயன் ? வள்ளுவனார் சுரந்த பாவை அத்துணை. இது திருவள்ளுவ மாலையில் உள்ள ஒரு வெண்பா. மதுரைத் தமிழ் நாகனார் என்னும் சங்கப் புலவர் பெயரால் உள்ளது. திருவள்ளுவ மாலையிலே திருக்குறளைப் பாராட்டிக் கூறும் 55 வெண்பாக்கள் இருக்கின்றன. அவைகள் பழ;ந் தமிழ்ப் புலவர்களின் செய்யுட்கள், அவற்றுள் ஒன்றுதான் இவ் வெண்பா. எல்லாப் பொருள்களும் இத்திருக்குறளில் இருக்கின்றன. இதில் கூறப்படாதது ஒன்றும் இல்லை. வள்ளுவரால் மனங்கனிந்து பாடப்பட்ட சுருக்கமான பாடல்களே சிறந்த பயன் தருவன. சொல்லால் பரந்த வேறு புலவர்களின் பாடல்களிலே இவ்வளவு பயனைப் பெறமுடியாது இதுவே இவ்வெண்பாவில் அமைந்துள்ள பொருள். இச் செய்யுளைக்கொண்டு திருக்குறளிலே எல்லாப் பொருளும் அடங்கிக் கிடக்கின்றன; அது ஒன்றைப் படித்தாலே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்; வேறு எந்நூலையும் படிக்க வேண்டாம். என்று உரைப்போர் உண்டு. இவர்களைப் பார்த்து இன்றுள்ள எல்லாக் குறைகளையும் திருக்குறளைக் கொண்டு தீர்த்து விட முடியுமா? என்று கேட்கலாம். இக்கேள்விக்கு விடை கூறுவது அவ்வளவு எளிதன்று. ஒரு உண்மையை மறக்காமல் நினைவிலே வைத்துக் கொண்டால் இக் கேள்வி பிறக்க வேண்டியதேயில்லை. திருவள்ளுவர் காலத்திற்கும் நமது காலத்திற்கும் நெடுந்தூரம்; இடைவெளி ஏராளம். அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் அவர் அறங்களைத் திரட்டிக் கூறியிருக்க முடியும்; அவர் காலத்திலிருந்த எல்லாப் பொருள் களைப் பற்றியும் அவர் ஆராய்ந்து சொல்லியிருக்க முடியும். இவ்வாறு தான் நாம் முடிவு கட்ட வேண்டும். இக் காலத்தில் உள்ள சமுதாய நிலைமை, அரசியல் அமைப்பு, மக்கள் மனப்பான்மை, வாழ்க்கை, திருவள்ளுர் காலத்திலிருந்து வேறு பட்டவை திருவள்ளுவர் கால நிலையையும், இக்கால நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒற்றுமையையும் காணலாம்; வேற்றுமை யையும் காணலாம். அக்கால நிலையும் இக்கால நிலையும் ஒத்திருக்கும் அமைப்புக்களுக்கே திருக்குறள் வழிகாட்டமுடியும். மாறுபட்ட நிலைமைக்கு அது வழி காட்டமுடியாது. இன்று நாம் விஞ்ஞானத் துறையிலே முன்னேறி வருகின்றோம். விஞ்ஞான உலகம் அணுசக்தி உலகமாக மாறி வருகின்றது. வள்ளுவர் காலத்திலே இன்றுள்ள விஞ்ஞானமும் இல்லை; அணுசத்தி ஆராய்ச்சியும் இல்லை. அவர் காலத்திலே உழவுத் தொழில் தான் நமது நாட்டின் தலை சிறந்த தொழில். ஏனைய தொழில்களெல்லாம் குடிசைக் கைத் தொழில்களாகவே வளர்ந்து வந்தன. வண்ணார், மருத்துவர், தச்சர், கொல்லர், கொத்தர் முதலிய தொழிலாளிகள் எல்லாம் பரம்பரைத் தொழிலாளி களாகவேயிருந்து வந்தனர். குலவிச்சை கல்லாமல் பாகம்படும் என்பது அக்காலக் கொள்கை. குலத் தொழில் தானாகவே வந்து விடும, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த நம்பிக்கை குடிகொண்டிருந்த காலம் அவர் காலம். கைத்தொழில் செய்வோர்க்குக் கல்வி வேண்டுவதில்லை என்று மக்கள் எண்ணியிருந்த காலம். ஆனால் இதைப் பற்றித் திருவள்ளுவர்க்கு மாறுபட்ட கருத்துண்டு. கல்வி அனைவர்க்கும் அவசியம் என்பதே அவர் கருத்து. உலகிலே இன்று விஞ்ஞானத்தின் துணையால் விதவித மான தொழில்கள் முன்னேறி வருகின்றன. மக்களின் கைவலி மையால் செய்யப்பட்டு வந்த தொழில்கள் பல இயந்திரங்களால் இயற்றப் பட்டு வருகின்றன. வானவூர்தியிலே சந்திரன் பக்கத்திலே சென்று படம் பிடிக்க வேண்டும் என்ற முயற்சி இன்று நடை பெறுகின்றது. இவைகளைப்பற்றியெல்லாம் திருக்குறளிலே தெரிந்து கொள்ள முடியுமா? என்றால், முடியாதுதான். இன்றுள்ள விஞ்ஞான வளர்ச்சியும், இயந்திரத் தொழில் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் எழுதப் பட்டது திருக்குறள்; ஆதலால் அக்காலத்தில் அவர் இவைகளைப் பற்றி எப்படிக் கூறியிருக்க முடியும்? எந்த இலக்கியத்தைப் பற்றி நாம் ஆராய்ந்தாலும், அந்த இலக்கியம் தோன்றி காலத்தை நாம் மறந்து விடக்கூடாது; அந்த இலக்கிய ஆசிரியர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் அவர் இயற்றிய இலக்கியம் அமைந்திருக்கும்; இது ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய முதற் பொருள். இனறுள்ள நமது எண்ணங்களை நிறைவேற்ற - குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ள - ஆயிரக்கணக்கர்ன ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஒருவர் வழிகாட்டியாக நிற்பார் என்று எண்ணுவது தவறாகும். இந்தக் கோலை ஊன்றிக் கொண்டுதான் நாம் வள்ளுவருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அவருடைய உண்மையான உள்ளத்தை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், ஆராய்ச்சியும் - முற்போக்குக் கருத்தும் - மக்களி டத்திலே அன்பும் உள்ள அறிஞர்கள், மக்கள் இன்புற்று வாழ்வதற்கான பல கருத்துக்களைத் தங்கள் நூல்களிலே சொல்லியிருப்பார்கள் அவைகள் எக்காலத்திற்கும் உதவி செய்யக்கூடிய உண்மைகளாக நிலைத்து நிற்கும். மக்கள் முன்னேறுவதற்கு வழிகாட்டும் உயர்ந்த உண்மைகளை உரைத் திருக்கும் புலவர்களே தெய்வப் புலவர்கள் என்று போற்றப்படு வார்கள்; மக்களுக்கு அறநெறியைப் போதிக்க ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று கொண்டாடப்படுவார்கள். அவதார புருஷர்கள் என்றும் எண்ணப்படுவார்கள். இத்தகைய தலைசிறந்த அறிஞர்களிலே திருவள்ளுவர் முதல் பெற்றவர்; தனக்கு நிகர் தானாகவே விளங்குகின்றவர்; இதில் எள்ளளவும் ஐயம் இல்லை. வள்ளுவர் வரலாறு திருக்குறள் என்னும் ஒப்பற்ற நூலைச் செய்த திருவள்ளு வரின் வரலாற்றை இன்றளவும் நாம் கண்டறிய முடியவில்லை. அவருடைய உண்மை வரலாற்றைக் கூறும் நூல் ஒன்றும் இல்லை. உண்மை வரலாற்றைக் உணர முடியாத காரணத்தால் யார் யாரோ, ஏதேதோ கதைகள் கட்டிவிட்டனர். அக்கதைகளை யெல்லாம் வள்ளுவர் தலையிலே சுமத்தி வைத்திருக்கின்றனர். 1. ஞானாமிர்தம் என்பது ஒரு பழைய நூல்; அகவற்பாவால் அமைந்தது. அதில் ஒரு அகவலில் யாளி - கூவல் தூண்டும் ஆதப் புலைச்சி காதல் சரணி யாகி, மேதினி இன்னிசை எழுவர்ப் பயந்தோள் ஈண்டே என்ற அடிகள் காணப்படுகின்றன. யாளி தத்தன் தனக்கு விகிர்தமாய்த், தன்னானே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த்தப் பட்ட, அறிவில்லாத ஒரு சண்டாளப் பெண்ணை, ஒரு பிராமணன் எடுத்துக் கொண்டுபோய் உத்தர பூமியில் வளர்த்து இவனுக்கே பின்னர்க் கொடுக்க; இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இந்நில உலகின் கண்ணே இனிய கீர்த்திபெற்ற கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவரை ஈங்குப் பெற்றாள் இது அவ்வரிகளுக்கு எழுதப்பட்டிருக்கும் பழைய உரை. யாளிதத்தன் என்ற அந்தணன், புலைச்சி ஒருத்தியை மனைவியாகக் கொண்டான். அவன் ஏழு மக்களைப் பெற்றாள். அவர்கள் கபிலர், அதிகமான், வள்ளி, முறுவை, அவ்வை, உப்பை என்பவர்கள். கபிலர், அதிகமான், கால்குறவர் பாவை முகில் அனைய கூந்தல் முறுவை - நிகர்இலா வள்ளுவர் அவ்வை வயல்ஊற்றுக் காட்டில் உப்பை எள்இல் எழுவர் இவர். என்று ஒரு வெண்பா வழங்குகின்றது. அதனால் வள்ளுவருடன் பிறந்த எழுவர் இன்னார் என்று அறிகின்றோம். 2. இக்கதை வேறு விதமாகவும் மாறி வழங்குகின்றது. ஆதிஎன்னும் புலைச்சிக்கும், பகவன் என்னும் அந்தணனுக்கும் மேற்கூறிய எழுவர் பிறந்தனர். ஆதியும் பகவனும் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை அப்படியே பிறந்த இடத்திலேயே விட்டுப் போய்விடுவர். இவ்வாறே ஏழு பிள்ளைகளையும் விட்டுப் போயினர். அக்குழந்தைகளைக் கண்டவர்கள் எடுத்துக்கொண்டு போய் வளர்த்தனர். இவ்வகையில் வள்ளுவரால் கண்டெடுக்கப் பட்டு வளர்ந்தவர் வள்ளுவர் என்று பெயர் பெற்றார். இக்கதை கபிலர் அகவல் என்னும் சிறு நூலிலே காணப்படுகின்றது. பகவனுக்கும் ஆதிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான கபிலரே இந்த அகவலைப் பாடினர் என்று சொல்லப்படுகின்றது. இக்கபிலர் அகவல் பிற்காலத்தது; ஆரியர் திராவிடர் வேற்றுமையைக் கிளப்பிவிடும் எண்ணத்துடன் எழுதப்பட்டது; இக்கதை மேலே காட்டிய ஞானாமிர்தத்தை அடிப்படை யாகக் கொண்ட கதையாகத்தான் இருக்கவேண்டும். 3. வள்ளுவர் என்ற பெயரைக் கொண்டு அவர் வள்ளுவர் குடியிலே பிறந்தவர் என்று மட்டுந்தான் தெரிகின்றது. அறம் பொருள் இன்பம் வீடென்னும் அந்நான்கின் திறம்தெரிந்து செப்பிய தேவை---மறந்தேயும் வள்ளுவன் என்பான். ஓர் பேதை ; அவன் வ்ய்ச் சொல் கொள்ளார் அறிவுடை யார். என்பது திருவள்ளுவமாலை. மாமூலனார் என்னும் புலவர் பெயரால் காணப்படும் வெண்பா. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அந்த நான்கின் வகைகளையெல்லாம் ஆராய்ந்து உரைத்தவர் திருவள்ளுவர்; அவரை வள்ளுவன்தானே என்று ஒருவன் மறந்து கூறுவானாயின் அவன் ஓர் அறிவற்றவன்; அவன் வாய்ச்சொல்லை அறிவுள்ளவர் ஒரு சொல்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்று கூறுகிறது இவ்வெண்பா. இதனால் திருவள்ளுவர் தமிழ் நாட்டுப் பழந் தமிழ்க் குடிகளுள் ஒன்றாகிய வள்ளுவர் குடியிலே பிறந்தவர். அல்லது வளர்ந்தவர்; வாழ்ந்தவர் என்று கொள்ளலாம். 4. திருவள்ளுவர் பிறந்த இடம், வளர்ந்த இடம், வாழ்ந்த இடம் இதுவென்று தீர்மானிக்கவும் முடியவில்லை. அவர் மயிலாப்பூரிலே வளர்ந்தார் என்பது ஒரு கதை. மயிலாப்பூரில் வள்ளுவர்க்கென்று ஒரு கோயிலும் உண்டு. இதற்குக் கபிலர் அகவல் என்னும் புது நூல் தான் ஆதரவு. உப்பக்கம் நோக்கில், உபகேசி தோள் மணந்தான் உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப? - இப்பக்கம், மாதானு பங்கி, மறுஇல் செந்நாப் போதார், புனல்கூடற்கு அச்சு வடதிசையை நோக்கினால் பின்னைப் பிராட்டியின் தோளை மணந்தவனாகிய கண்ணன் சிறந்த வடமதுரைக்கு ஆதாரமாவான் என்பர். இந்தப் பக்கத்திலே மாதானு பங்கி என்னும் குற்றமற்ற செந்தாப் போதார் ஆகிய வள்ளுவரே மலர்கள் நிரைந்த வையைப் புனல் சூழ்ந்த தென் மதுரைக்கு ஆதாரம் ஆவார். இது, நல்கூர்வேள்வியார் என்னும் புலவர் செய்யுள். இதுவும் திருவள்ளுவ மாலைப் பாட்டு. இவ்வெண்பாவினால் திருவள்ளுவர் மதுரையிலே பிறந்தவர்; என்று எண்ண இடம் உண்டு. இவ்வெண்பா, கபிலர் அகவற் கதையைப் பொய் யாக்குகின்றது. 5. சேரனூர் என்பது இப்பொழுது சோரனூர் என்று வழங்குகின்றது. இவ்வூரைச் சேர்ந்த வட்டாரத்திற்கு வள்ளுவ நாடு என்பது பழந்தமிழ்ப் பெயர். வள்ளுவர் என்னும் அரசர்கள் ஆண்டதனால் இப்பகுதிக்கு வள்ளுவ நாடு என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். திருவள்ளுவர் இந்த வள்ளுவ நாட்டில் - வள்ளுவர் குடியில் - பிறந்தவராக - வாழ்ந்தவராக இருக்கலாம் என்று எண்ணுவோரும் உண்டு. வள்ளுவநாடு இன்று மலையாளப் பகுதியில் இருக்கின்றது. திருவள்ளுவர் காலத்திலே இன்றுள்ள மலையாளப் பகுதி சேர நாடாகத்தான் இருந்தது. ஆதலால் திருவள்ளுவர் வள்ளுவ நாட்டைச் சேர்ந்தவர் என்றால் அதை மறுப்பதற்கு இடமில்லை. இது உண்மையானால் வள்ளுவர் அரச பரம்பரையில் பிறந்தவர் என்று கருதலாம். இவ்வரலாறுகளையெல்லாம் பார்த்தால், திருவள்ளுவர் எங்கே பிறந்தார்? எங்கே வாழ்ந்தார்? அவருடைய பெற்றோர்கள் யார்? என்று வரையறுத்துக் கூற இடமில்லை. திருவள்ளுவர் தமிழகத்திலே பிறந்தார்; தமிழ் நாட்டிலே வளர்ந்தார்; தமிழ் மக்களிடையிலே வாழ்ந்தார்; என்று மட்டுந்தான் சொல்ல முடியும். திருக்குறள் அமைப்பு திருக்குறளிலே ஆயிரத்து முந்நூற்றுமுப்பது குறட்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாட்டும் இரண்டு இரண்டு அடிகளைக் கொண்டது. பாடல்களில் ஒருவகைப் பாடலுக்கு வெண்பா என்று பெயர். இரண்டு அடிகள் கொண்ட வெண்பாவுக்குக் குறள் வெண்பா என்று பெயர் வந்தது. இதன் சிறப்பைக் குறிக்கத் திரு என்ற அடைமொழி சேர்ந்தது; திருக்குறள் ஆயிற்று. இதில் உள்ள அதிகாரங்கள் நூற்று முப்பத்து மூன்று. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துப் பத்து வெண்பாக்கள். ஒவ்வொரு அதிகாரத்திற்கும், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பன போன்ற தலைப்புப் பெயர் உண்டு. இந்த அதிகார அமைப்பும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துப் பத்துப் பாடல்கள் என்ற வரையறுப்பும் திருவள்ளுவரா லேயே அமைக்கப்பட்டதா என்பதில் ஐயம் உண்டு. திருவள்ளுவர் மொத்தமாகத்தான் பாடல்களைப் பாடியிருக்கவேண்டும்; உரையாசிரியர்கள் தான் அதிகாரம் வகுத்திருக்க வேண்டும்; என்று எண்ணுகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். இதற்கு நாலடியாரை உதாரணம் காட்டுவர்; பழமொழி நானூறு என்னும் நூலையும் உதாரணம் காட்டுவர். நாலடி நானூறு என்ற பெயரில் நாலடியார் பாடல்கள் மொத்தமாகத்தான் இருந்தன. அதற்கு உரை வகுத்த பதுமனார் என்னும் புலவரே நாற்பது அதிகாரங்களாகப் பிரித்தார். அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பிரித்தமைத்தார். பழமொழியும் அதிகாரப் பிரிவின்றி நானூறு பாடல்களும் மொத்தமாகத்தான் இருந்தன. பிற்காலத்தினரே அதற்கும் அதிகாரம் வகுத்தனர். இது போலத்தான் திருக்குறளும் பிற் காலத்தாரால் அதிகாரம் அதிகாரமாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பர். இது ஆராய்ச்சிக்கு உரியது. திருக்குறளுக்கு முப்பால் என்பது ஒரு பெயர். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன அம் முப்பகுதி. இவ்வாறு மூன்று பகுதியாகத் திருவள்ளுவரே இயற்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரங்கள் வகுத்தது மட்டும் பிற்காலத்தினரால் இருக்கலாம் என்போரும் உண்டு. திருவள்ளுவர் மூன்று பகுதியாகப் பிரித்துத்தான் கூறியிருப்பார் என்பதிலே ஐயம் இல்லை. திருக்குறள் முப்பால் என்ற பெயருடன் நீண்ட காலமாக வழங்கி வருகின்றது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலே முப்பால் என்ற பெயரா லேயே திருக்குறள் சுட்டப்படுகின்றது. ஆதலால் முப்பாலாகப் பிரித்துக் கூறியவர் திருவள்ளுவரே என்பதை மறுக்கமுடியாது. திருக்குறளில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களும் திருவள்ளுவரால் கூறப்பட்டிருக்க முடியாது. அலைகள் பிற்காலத்துச் சேர்க்கையாக இருக்கலாம் என்போரும் உண்டு.. முதல் மூன்று அதிகாரங்கள், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை என்பவை. கடவுளைப் பற்றி நூலின் உள்ளே பல விடங்களில் கூறப்படுகின்றது. வான் சிறப்பு நாட்டைப் பற்றிச் சொல்லுமிடத்தில் காணப்படுகின்றது; நீத்தார் பெருமை துறவறத்தைப் பற்றிக் கூறும் குறள்களில் காணப்படுகின்றது. ஆகையால் இவைகளுக்குத் தனியதிகாரங்கள் வகுத்திருக்க மாட்டார் வள்ளுவர் என்பதே இவர்கள் காட்டும் காரணம். இவைகளெல்லாம் ஆராய்ச்சிக்குரியனவே யன்றி உண்மை யென்று ஒப்புக்கொள்ளுவதற்கு இல்லை. ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறள் என்று திருவள்ளுவ மாலையில் காணப் படுகின்றது. அதிகார முறைகளும் அதில் காணப்படுகின்றன. ஆதலால், அதிகாரப் பிரிவு வள்ளுவர் பிரித்தது அன்று என்று அவ்வளவு எளிதில் தள்ளிவிட முடியாது. ஒவ்வொரு பாலிலும் இயல்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் உரையாசிரியர்களால் வகுக்கப்பட்டிருக்கலாம். இந்த அளவுக்குத் தான் நாம் ஒப்புக்கொள்ள முடியும். முதற்பால் முப்பத்தெட்டு அதிகாரங்களைக் கொண்டது. முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரம் ஆகும். அதன் பின் இருபது அதிகாரங்கள் இல்லறத்தைப் பற்றிக் கூறுகின்றன. பதின்மூன்று அதிகாரங்கள் துறவறத்தைப் பற்றிக் கூறுகின்றன. ஒரு அதிகாரம் ஊழ்வினையின் வலிமையைப் பற்றி உரைக்கின்றது. முதல் நான்கு அதிகாரங்களும் பொதுவானவை. எல்லோர்க்கும் பொதுவான செய்திகளைப் பற்றிக் கூறுவன. ஆதலால் அவற்றைப் பாயிரம் என்றனர். இல்லறத்தைப் பற்றிக் கூறும் இருபது அதிகாரங்களிலும் குடும்ப வாழ்வைப் பற்றிக் கூறப்படுகின்றது. இல்லறத்திலே இருப்பவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இல்லறம் நடத்துவோர் செய்ய வேண்டியவை, இவை யிவையென்று வள்ளுவர் கூறுவனவற்றை எல்லோரும் பின் பற்றி விட முடியாது; இன்றுள்ள சமுதாய அமைப்பு இதற்கு இடந்தராது; எல்லார்க்கும் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாச் செல்வமும் இருந்தால் தான் வள்ளுவர் காட்டும் வழியிலே நடக்க முடியும். அவர் கூறும் இல்லற தர்மங்களை அப்படியே பின்பற்ற முடியும். வள்ளுவர் காலத்திலே வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும்கூட அவர் காட்டிய இல்லற நெறியை அப்படியே பின்பற்றி நடந்திருக்க முடியாது. ஆனால், இல்லறத்திலே இருப்பவர்கள் மகிழ்ச்சிகரமான இன்ப வாழ்க்கை நடத்த வேண்டும்; பிறருக்கு உதவியுள்ளவர் களாக வாழ வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும்; மக்கள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக நடக்க வேண்டும்; என்பவை வள்ளுவர் சொல்லும் பொதுவான கருத்து. இக்கருத்தை எவரும் மறுக்க முடியாது. சிறந்த வாழ்விலே வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரையும் எண்ணச் செய்வதும், இதற்கு ஊக்க மூட்டுவதும் வள்ளுவர் கூறும் இல்லற தர்மங் களாகும்.. துறவறத்தைப் பற்றிய அதிகாரங்கள் துறவிகளுக்கு அறிவுறுத்துகின்றன. துறவிகள் எவ்வாறு வாழ வேண்டும்? இவர்கள் கடமைகள் யாவை? உண்மைத் துறவிகள் யார்? போலித் துறவிகள் யார்? இவ்வுண்மைகளை அவ்வதியகாரங் களிலே காணலாம். திருவள்ளுவர் துறவிகளுக்கு உரைத் திருக்கும் உபதேசங்களிலே பல, பொது ஜன ஊழியர்களுக்கும் பொருந்தும். இரண்டாவதான பொருட்பாலில் எழுபது அதிகாரங்கள் இருக்கின்றன. இந்தப் பொருட்பாலை அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று மூன்றாகப் பிரித்திருக்கின்றனர். இவற்றுள் அரசியல் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்டது; ஆளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய பண்பு களைப் பற்றி அறிவிப்பது; ஆளுவோர்க்குக் கூறியிருக்கும் அறங்கள் பொது மக்களுக்குக்கும் பொருந்துவனவே. அங்கவியல் முப்பத்திரண்டு அதிகாரங்களைக் கொண்டது. இவ்வியலில் ஆளுவோர்க்குத் துணைவர்கள் யாவர்? அவர் களுடைய தகுதிகள் எப்படியிருக்க வேண்டும்? என்பவைகளைப் பற்றிக் கூறுகின்றது. ஆளுவோர் மிகவும் நல்லவர்களாயிருக் கலாம். சிறந்த அறிவும் திறமையும் உள்ளவர்களாயிருக்கலாம்; ஆயினும் அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களைப் பொறுத்துத்தான் ஆட்சியிலே வெற்றி தோல்விகள் உண்டு; இந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றன இவ்வியலின் அதிகாரங்கள். இவ் வதிகாரங்களில் கூறப்படும் அறங்களும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவைகளே. ஒழிபியல் பதிமூன்று அதிகாரங்களைக் கொண்டது. அரசியலிலும் அங்க வியலிலும் சொல்லாமல் விட்டுப் போனவைகளைப் பற்றி விளம்புவது ஒழிபியல். இவ்வியலில் கூறப்படும் அறங்களும் ஆளுவோர்க்கும், பொது மக்களுக்கும் பொருந்துவனவாகும். பொருட்பாலிலே, மூன்று இயல்களாக வகுக்கப்பட்ட எழுபது அதிகாரங்களிலும் சிறந்த அரசியல் கருத்துக்களைக் காணலாம்; முற்போக்கான எண்ணங்களைக் காணலாம்; அவைகளை வள்ளுவர் எவ்வளவு நயமாகக் கூறுகிறார் என்பதை இவ்வதிகாரங்களை ஆழ்ந்து படிப்போர் அறியலாம். வள்ளுவர் வாழ்ந்த காலத்திலே அவர் ஒரு முற்போக்கான அரசியல் அறிஞர்; சிறந்த சமுதாயச் சீர்திருத்தக்காரர்; என்பதை இப் பொருட்பாலின் வழியாக அறிந்து கொள்ள முடியும். மூன்றாவதான காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங் களை கொண்டது. இதிலே களவியல், கற்பியல் என்று இரண்டு பிரிவுகள். களவியலிலே ஏழு அதிகாரங்கள்; அவைகள் பண்டைக் காலக் காதல் மணத்தைப் பற்றிக் கூறுகின்றன. காதலன், காதலிக்கிடையிலே உள்ள அன்பின் சிறப்பை இக் களவியலிலே காணலாம். களவியலிலே காணப்படும் காதல் மணமுறை இக்காலத்தில் வழக்கில் இல்லை. ஆயினும் இம்முறையின் சாரத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் மணங்கள் இன்றும் நடைபெறுகின்றன. காதல் கொண்ட ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மணந்து வாழ்வதே களவு. இதைப் பற்றி உரைப்பதே களவியல். கற்பியல் பதினெட்டு அதிகாரங்களைக் கொண்டது. ஒரு ஆணும் பெண்ணும் வெளிப்படையாக இல்லறம் நடத்துவதே கற்பாகும். களவில்லாமல் கற்பு நிகழ்வதில்லை. மணமக்கள் ஒருவரை ஒருவர் காதலித்த பிறகு தான் மணம் புரிந்து கொள்ளு வார்கள். இதுவே பண்டைத் தமிழர் கொள்கை. இன்று இது வழக்கத்தில் இல்லை. இவ்வழக்கம் ஒழிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லறத்தில் வாழும் கணவன் மனைவிகளின் சிறப்பை விளக்குவதே இந்தப் பதினெட்டு அதிகாரங்களும். காமத்துப்பால் காதலர்களின் அன்பையும் அவர்கள் மனப்பான்மையையும் எடுத்துக் காட்டுவது. பழந் தமிழர்க்ள் இல்வாழ்க்கையை எவ்வளவு இன்பமாக நடத்தி வந்தனர் என்பதைக் காண இக் காமத்துப் பால் உதவி செய்கின்றது. இது சிறந்த இலக்கியச் சுவையுடன் விளங்குகின்றது. படித்துச் சுவைப் பதற்குரிய பல பாடல்கள் இப்பாலில் அமைந்து கிடக்கின்றன. இக்காமத்துப் பால் இக்காலத்திற்கு வேண்டாதது என்று விளம்புவோர் உண்டு. இது விவாதத்திற்கு உரிய கருத்து. பழந்தமிழர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்வின் சிறப்பை அறிவதற்கு இக்காமத்துப்பால் ஒரு அளவு கோல். அறிஞர்கள் எவரும் இவ்வுண்மையை ஒப்புக் கொள்ளுவார்கள். காமத்துப் பாலைப் பற்றிய இவ்வுண்மையை இந்நூலின் இறுதியிலே காணலாம். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள். நூற்றுமுப்பத்து மூன்று அதிகாரங்கள். அதிகாரம் ஒன்றுக்குப் பத்துப் பாடல்கள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகள். அறத்துப்பாலில் முப்பத்தெட்டு அதிகாரங்கள்; பொருட்பாலில் எழுபது அதிகாரங்கள். காமத்துப்பாலில் இருபத்து ஐந்து அதிகாரங்கள். இவையே திருக்குறள் அமைப்பு. அறத்துப் பாலில் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழ் இயல் என்ற பிரிவுகள். பொருட்பாலில் அரசியல், அங்கவியல் ஒழிபியல் என்ற பிரிவுகள்; காமத்துப்பாலில் களவியல். கற்பியல் என்ற பிரிவுகள்; காணப்படுகின்றன. காமத்துப் பாலை இன்பத்துப்பால் என்றும் உரைப்பர். பண்டை நூல்களும் குறளும் திருவள்ளுவர் தெய்வப் புலமை படைத்தவர்; அவர் உரைப்பவைகள் எல்லாம் அவராலேயே ஆராய்ந்து சொல்லப் பட்டவை; எந்த நூல்களிலிருந்தும் எந்த அறங்களையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக வடமொழி நூல்களுக்கும் அவருக்கும் தொடர்பேயில்லை. வேறு எந்த இலக்கியங்களையும் அவர் பார்த்தவரும் அல்லர்; படித்தவரும் அல்லர்; என்போர் சிலர் உண்டு. இப்படிக் கூறுவது ஒரு மூட நம்பிக்கை. பழைய புலவர்கள் பலரைப்பற்றி இவ்வாறு கதை பேசுவது உண்டு. கலைமகள் நாவில் எழுதினாள்; புலவர் ஆனார். காளிதேவி வரந் தந்தாள்; கவிஞன் ஆனான்; என்ற பல கதைகள் உண்டு. கம்பனைப்பற்றி இத்தகைய கதைகள் வழங்குகின்றன. மக்களிடம் தெய்வ நம்பிக்கை மிகுதியாகக் குடி கொண்டிருந்த காலத்தில் இத்தகைய கதைகள் வழங்குகின்றன. மக்களிடம் தெய்வ நம்பிக்கை மிகுதியாகக் குடிகொண்டிருந்த காலத்தில் இத்தகைய கதைகள் பிறந்தன. தெய்வத்தின் அருளால் புலவர் ஆனார் என்றால் தான் மக்கள் அப்புலவர் எழுதிய நூல்களைப் படிப்பார்கள். இப்படி ஒரு காலத்தில் இருந்தது. இத்தகைய காலத்தில்தான் புலவர்களைப் பற்றிய கட்டுக் கதைகள் பிறந்தன. திருவள்ளு வரைப் பற்றிய கதைகூட இத்தகைய காலத்தில்தான் பிறந்திருக்க வேண்டும். நான்முகனே திருவள்ளுவராகப் பிறந்தார்; தமிழ் வேத மாகிய திருக்குறளைத் தந்தார்; என்று வழங்கும் கதையும் இத்தகைய மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கதைதான். படிக்காதபுலவர்கள்-நூலாசிரியர்கள்- ஒருவருமேயில்லை. எல்லாப் புலவர்களும் நூலாசிரியர்களும் படித்தவர்கள்தான். திருவள்ளுவர், கம்பர் போன்றவர்களின் நூல்களைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். பல நூல்களைப் படித்தவர் முன்னோர் நூல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் பெரும் புலவர்கள் அரும் பெரும் நூல்களை ஆக்குவார்கள். திருவள்ளுவரும் முன்னோர் கருத்துக்கள் பல வற்றைத் திருக்குறளிலே எடுத்துக் காட்டி யிருக்கின்றார். காமத்துப்பால் முன் னோர் முறையைப் பின்பற்றி எழுதப் பட்டதுதான். அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறப்படும் நூலே சிறந்த நூல் என்பது பழந்தமிழர் கொள்கை. இக் கொள்கையைப் பின்பற்றியே திருக்குறளிலே முப்பால்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருவள்ளுவர், பல பாடல்களிலே என்ப என்னும் சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறார். இது உயர்திணைப் பலர்பால் சொல்லாக வழங்கியிருக்கின்றது. என்ப என்னும் சொல்லுக்கு என்பார்கள், என்று சொல்லுவார்கள் என்று பொருள். முன்னைய நூலோர் இவ்வாறு மொழிவார்கள்; அறிஞர்கள் இவ்வாறு கூறுவார்கள்; புலவர்கள் இவ்வாறு புகல்வார்கள்; என்ற பொருளிலேயே என்ப என்னும் சொல் பழந்தமிழ் நூல்களிலே வழங்கப்பட்டு வருகின்றது. இச்சொல் திருக்குறளில் வழங்குவதைக் கொண்டே அவர் முன்னோர் கருத்துக்கள் பலவற்றைத் தழுவிக் கொண்டார் என்பதை அறியலாம். பண்டை நூலோர் கூறிய அறம் இது என்பதை வெளிப்படையாகவும் வள்ளுவர் வழங்கியிருக்கிறார். ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு நல்லொழுக்கத்திலே நின்று துறந்தவர்களின் பெருமை யைச் சிறப்பாகப் புகழ்ந்துரைப்பதே நூல்களின் முடிவாகும். (கு. 21) பகுத்துண்டு பல் உயி;ர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை பலருக்கும் பகுத்துக் கொடுத்துத், தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுவதே அற நூலோர் தொகுத்துக் கூறிய தர்மங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும். (கு. 322) மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று மருத்துவ நூலோரால் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று எண்ணப்பட்ட மூன்றும், அளவில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோயைத்தரும். (கு. 942) திருவள்ளுவர் பல நூல்களையும் படித்துத்தான் திருக் குறளை இயற்றினார். பல அற நூல்களிலும், வேதங்களிலும் கூறப்பட்டிருக்கும் பொருள்களை யெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருக்குறளை இயற்றினார்; என்ற கருத்துக்கள் திருவள்ளுவமாலைப் பாடல் களிலும் காணப்படுகின்றன. சாற்றிய பல்கலையும், தப்பா அருமறையும் போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே, முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பா வலரினும் இல் அறிஞர்களால் கூறப்பட்ட நூல்களும், தவறில்லாத சிறந்த வேதங்களும், வெளிப்படையாக விளங்காமல் பாதுகாத்துக் கூறியிருக்கும் பல அரும் பொருள்களையும், வெளிப்படையாக விளங்கும்படி மூன்று பகுதிகளாகப் பிரிந்துரைத்தார் திருவள்ளுவர். இவ்வாறு மொழிந்த வள்ளுவரே முதன்மையான கவிஞர் ஆவார்; இவரைப் போன்ற கவிஞரை வேறு எம்மொழிக் கவிஞர்களிலும் காணமுடியாது. இது திருவள்ளுவ மாலையில் உள்ள ஒரு பாட்டு; ஆசிரியர் நல்லந்துவனார் என்ற புலவர் பெயரால் காணப் படும் வெண்பா. வேத விழுப்பொருளை வெண்குறளால்; வள்ளுவனார் ஓத,வழுக்கற்றது உலகு, (கோவூர் கிழார்) வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர் ஓதத் தமிழால் உரை செய்தார். (செயலூர் கொடுங்செங் கண்ணனார்) இவைகளும் திருவள்ளுவ மாலையில் உள்ளவை. இவைகள் வள்ளுவர் வடமொழி நூல்களையும் அறிந்தவர் என்பதற்குச் சான்றுகள். வடநூற் கருத்துக்கள் ஒழுக்கத்தைத் துறந்த பார்ப்பனனுக்கு வேதத்தில் சொல்லிய பலன் கிடைப்பதில்லை; ஒழுக்கமுடைய பிராமணனுக்குச் சகல பலனும் குறை வின்றிக் கிடைக்கும் (மநு. 108) இக் கருத்தைத் தழுவியதே, மறப்பினும் ஒத்துக் கொளல் ஆகும் பார்ப்பான், பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பது. எல்லாப் பிராணிகளும் பிராண வாயுவை அடைந்து எவ்வாறு உயிர் வாழ்கின்றனவோ அவ்வாறே பிரம்மச்சாரி, வானப்பிரதன், சந்நியாசி இம்மூவரும் இல்லறத்தானை அண்டி வாழ்கின்றனர் (மநு 79. அத். 4) இல்வாழ்வான் என்பான் இயல்புடையப் மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்ற குறளிலே மேற்கூறிய மநுவின் கருத்தைக் காணலாம். பெண்களுக்குப் பஞ்ச மகா எக்ஞம், உபவாசம் விரதம், இவை முதலிய தருமங்கள் தனியாக இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதனாலேயே சுவர்க்கத்தில் பெருமை பெறு கிறார்கள் (155. அத். 4) தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை என்ற குறளிலே மேற்கண்ட மனுவின் கருத்து அடங்கியிருப் பதைக் காணலாம். எவன் காரியத்தின் உண்மையை அறிந்திருந்தாலும், மற்றொருவனுக்குத் தீங்கு வராமல் இருப்பதற்காக. வேறு விதமாகச் சொல்லுகிறானோ அவன் சுவர்க்க லோகத்திலிருந்து நழுவமாட்டான் என்று தேவர்கள் சொன்னதாகச் சொல்லு கிறார்கள். (மநு. 103 அத்.8) பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற குறளில் மேற்கண்ட மநு நீதியைக் காணலாம். மாதர்கள் தங்களைத் தாமே காத்துக் கொள்ள வேண்டும்; அதுவே அவர் களுக்கு நல்ல காப்பாகும்; நல்ல காவலரை வைத்து வெளியில் போக வொட்டாமல் வீட்டிலே நன்றாகத் காப்பாற்றினாலும் காக்கப்படமாட்டார்கள். (மநு 12. அத். 9). சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்; மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை இக்குறளிலே மேற்கண்ட மநுநீதி அடங்கிக் கிடக்கின்றது. இவை போன்ற வட நூற்கருத்துக்களும் திருக்குறளில் அடங்கியிருக் கின்றன. இவைகளால் வள்ளுவரை வகுப்புவாதியாக - மொழி வெறுப்பாளராகக் காட்ட முயற்சிப்போர் கூற்றுக்கள் பொருத்தம் அற்றவை; பொய்யானவை; என்பதை அறியலாம். வள்ளுவர் மொழி வெறுப்பற்றவர். வட நூற் பொருள் களையும் வட சொற்களையும் வெறுக்காதவர். மேற்காட்டியவைகளே இவ் வுண்மையை மெய்ப்பிக்கும். வள்ளுவர் காலம் வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப்பற்றிப் புலவர்களுக்குள் பல திறப்பட்ட கருத்துக்கள் உலவுகின்றன. இன்றுள்ள தமிழ் இலக்கியங்களிலே திருக்குறள்தான் முற்பட்டது. தொல்காப்பி யத்திற்கு அடுத்தது திருக்குறள் தான். ஏனைய சங்க இலக்கியங்கள் எல்லாம் திருக்குறளுக்குப் பிற்பட்டவைதாம் என்று கூறுவோர் உண்டு. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகு தான் திருக்குறள் தோன்றியிருக்கவேண்டும். பழைய இலக்கிய வரிசைகளைப் பற்றிப் பேசும்போது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று தான் உரைக்கின்றனர். பத்துப் பாட்டும் எட்டுத்தொகையுமே சங்க இலக்கியங்கள் என்று கருதப்படுகின்றன; பதினெண் கீழ்க்கணக்கு அவை களுக்குப் பிற்பட்ட காலத்தினவாகவே எண்ணப்படுகின்றன. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்று; முப்பால் என்னும் பெயருடன் இவ்வரிசையில் காணப்படுகின்றது. திருக்குறள் ஐம்பெருங் காப்பியங்களுக்கு முன்னும், சங்க நூல்களுக்குப் பின்னும் தோன்றியிருக்கவேண்டும். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில் திருக்குறளின் சொற்றொடர்கள் காணப்படுகின்றன. தெய்வம் தொழாஅள் கொழுநன்தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப்பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய் என்பது மணிமேகலை. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும் தகைமை திண்ணியதால் என்பது சிலப்பதிகாரம். இவைகள், தெய்வம் தொழாஅன் கொழுநன் தொழுது எழுவான் பெய்எனப் பெய்யும் மழை என்ற திருக்குறளைப் போற்றும் பகுதிகள். சங்க இலக்கியங்களிலே திருவள்ளுவரைப் பற்றிய குறிப்பே இல்லை. சங்க இலக்கியக் கருத்துக்கள் பலவற்றைத் திருக்குறளிலே காணலாம். முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் பழைமையான நட்புள்ளவர்கள் நஞ்சைக் கொடுப்பாரா யினும் கண்ணோட்டமுள்ளவர்கள் அதை உண்பார்கள் (நற்றிணை 355) என்பது நற்றிணைச் செய்யுள். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டதே. பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் என்னும் குறள். (நாகரிகம் - கண்ணோட்டம்.) பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்பதற்காகவே செல்வத் தைத் தொகுத்த ஆண்மையையுடைய நீ பிறர் நன்மைக்காகவே இவ்வுலகில் வாழ்வாயாக (பதிற்றுப்பத்து 38) இப்பதிற்றுப்பத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதே. பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. என்னும் திருக்குறள். செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ தீயவழியிலே பொருள் தேடுவார்க்கு, அப்பொருள் இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தைத்தான் தரும் என்பது கலித்தொகை. (14) அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல் என்பது குறள். இக்குறள் மேறகண்ட கலித்தொகைக் கருத்தைக் கொண்டதே. ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று ஈதலை விரும்பி இரந்தவர்க்கு உதவாது வாழ்வதைவிட சாதலே சிறந்ததாகும் என்பது கலித்தொகை. (61) சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை என்ற திருக்குறளிலே அக்கருத்தைக் காணலாம். இவ்வாறு சங்க கால கருத்துக்கள் பல திருக்குறளிலே அமைந்திருக்கின்றன. பழைய சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரியப் பாவிலேதான் ஆக்கப்பட்டன. முதலில் ஆசிரியப்பாவிலும், பின்னர், வஞ்சிப்பாவிலும், அதன் பின்னரே கலிப்பா, பரிபாடல், வெண்பா ஆகியவைகளிலும் நூல்கள் இயற்றினர். சங்க நூல்கள் எல்லாம் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்களிலே ஆக்கப் பட்டிருக்கின்றன. திருக்குறள் வெண்பாவினால் ஆகியது. இதுவும் சங்க நூல்களுக்குப் பிற்பட்டதே திருக்குறள் என்பதற்கு ஒரு சான்று. திருக்குறள் சங்க நூல்களுக்குப் பிற்பட்டது என்பதற்கு மற்றும் பல காரணங்கள் உண்டு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களிலே மதுவும் மாமிசமும் கடியப்படவில்லை. இவை இரண்டையும் விலக்க வேண்டும் என்று கூறப்படவும் இல்லை. சங்க இலக்கியச் செய்யுட்களில் எல்லாம் இவைகள் பாராட்டிப் பாடப்படுகின்றன. ஔவையார், கபிலர் போன்ற பெரும் புலவர்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் உண்டவர்கள். திருக்குறளிலே, இவை இரண்டும் கண்டிக்கப்படுகின்றன; விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்படுகின்றன. சங்க காலத்திலே பல தார மணம் ஆதரிக்கப்பட்டு வந்தது. திருக்குறளில் பல தார மணம் ஆதரிக்கப்படவில்லை. வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். சங்க காலத்திலே, ஆடவர்கள், பரத்தையர்களுடன் கூடி வாழ்வது குற்றமாக எண்ணப்படவில்லை. காதல் பரத்தையர் சேரிப்பரத்தையர் என்றவர்களுடன் ஆண்கள் கூடிக் குலவி வந்தனர். இவைகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. திருக்குறளில், காமத்துப்பாலில்கூட பரத்தையர்ப் பிரிவு என்று தனியதிகாரம் காணப்படவில்லை. பொருட்பாலில் வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் வேசையர் நட்பு வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. மது; மாமிசம்; பல தார மணம்; வேசையர் நட்பு இவைகள் சங்க காலத்தில் கண்டிக்கப்படவில்லை. இவைகள் ஒழுக்கக் குறைவு என்று எண்ணப்படவும் இல்லை. சங்க காலத்திற்குப் பின்னர்தான் இவைகள் கண்டிக்கப்பட்டன. ஆதலால் இவை களைப் பற்றிக் கூறும் திருக்குறள் சங்க நூல்களுக்குப்பின் தோன்றியதாகவே யிருக்கவேண்டும் இதில் ஐயமேயில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே திருக்குறளே காலத்தால் முற்பட்ட நூலாக இருக்கலாம். திருக்குறள் கி.பி. 6- ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக இருக்கலாம் என்பதே பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் கருத்து. திருவள்ளுவர் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்; என்றுகூறுவது தான் வள்ளுவர்க்குப் பெருமையென்று சிலர் எண்ணுகின்றனர். இப்படிக் கூறுவதுதான் தமிழர்க்குப் பெருமை; தமிழர் நாகரிகத்திற்கு உயர்வு; என்று கருதுகின்றனர் சிலர். ஒரு புலவர்க்குப் பெருமை ஏற்படுவது காலத்தின் பழைமையைப் பொறுத்தது அன்று; ஒரு நூலுக்கு மதிப்பு உண்டாவது மிகப் பழைமையான நூல் என்பதால் மட்டும் அன்று, பிற்காலத்திலே பிறந்த நூலானாலும், முற்காலத்திலே தோன்றிய நூலானாலும் மக்கள் வாழ்க்கையோடு இணைந்து நின்று அவர்களுக்கு வழி காட்டும் நூலே சிறந்த நூலாகும். அத்தகைய நூலை ஆக்கிய அரும்புலவரே முதற் புலவர் ஆவார். இந்த உண்மையை உள்ளத்திலே கொண்டவர்கள் திருவள்ளுவர் காலத்தைப் பற்றிக் கலக்கம் கொள்ள வேண்டியதில்லை. திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின்னே பிறந்ததா யினும் இது ஒப்பும் உவமையும் அற்ற உயர்ந்த நூல். இது போன்ற நூல் திருக்குறளுக்கு முன்னும் தோன்றியதில்லை; பின்னும் பிறந்தது இல்லை. இது அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. ஆரியர் தமிழர் பண்பு தமிழர் நாகரிகத்தை விளக்குவதே திருக்குறள்; திருக்குறள் கூறுவனவே தமிழர் பண்பு; தமிழர் கலாசாரம்; தமிழர் சமயம்; தமிழர்க்கு வழி காட்டுவன; என்று அனைவரும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது உண்மை; போற்றத்தக்கது; ஒப்புக்கொள்ளத் தக்கது; வாழ்த்தி வரவேற்கத்தக்கது. சிலர் ஆரியர் நாகரிகம் வேறு; தமிழர் நாகரிகம் வேறு; திருக்குறள் ஆரியர் நாகரிகத்தைக் கண்டிக்கிறது, தமிழர் நாகரிகத் தைப் போற்றுகின்றது; என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்றுக்குத் திருக்குறளில் இடம் உண்டா? திருவள்ளுவரிடத்திலே இத்தகைய விருப்பு வெறுப்பு உண்டோ? இவற்றை ஆராய வேண்டும். திருக்குறளை நடு நிலையிலிருந்து படிப்போர் ஆரியர் தமிழர் வேற்றுமை அவரிடம் இருப்பதாக எண்ண முடியாது. செய்யா மொழிக்கும், திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே; - செய்யா அதற்குரியர் அந்தணர்; ஆராயின், ஏனை இதற்குஉரியர் அல்லாதார் இல். ஒருவரால் செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும், திருவள்ளுவர் கூறிய பொய்யா மொழியாகிய திருக்குறளுக்கும் பொருள் ஒன்றுதான். வேதத்தைப் படிப்பதற்குரியவர் அந்தணர்; திருக்குறளைப் படிக்க உரிமையற்றவர் ஒருவருமே இல்லை; எல்லோரும் படிக்கலாம். ஆரியமும்செந்தமிழும் ஆராய்ந்து, இதனின் இது சீரியது, என்று ஒன்றைச் செப்பரிதால்; ஆரியம் வேதம் உடைத்துத்; தமிழ் திருவள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து. வடமொழியும் செந்தமிழும் சமமான மொழிகள். அவற்றை ஆராய்ந்தால், வடமொழியைக் காட்டிலும் தமிழ் சிறந்தது என்றோ, தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்றோ சொல்ல முடியாது. வடமொழியிலே வேதம் இருக்கின்றது; தமிழிலே திருவள்ளுவர் கூறிய குறள் இருக்கின்றது. இவ் வெண்பாக்கள் திருக்குறளில் கூறப்படும் கொள்கை களும், வடமொழி வேதத்தில் கூறப்படும் அறங்களும் ஒன்றே கருத்தை வலியுறுத்துகின்றன. முதன் வெண்பா வெள்ளி வீதியார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இரண்டாவது வெண்பா வண்ணக்கஞ் சாத்தனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இவர்கள் பன்னூறாண்டுகளுக்கு முன்னிருந்த புலவர்கள். அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. எழுத்துக்கள் எல்லாம் அ என்னும் எழுத்தைத் தலைமை யாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றது என்பது முதற் குறள். பின்னும் பற்று அற்றான் (350) உலகு இயற்றியான் (1062) என்று கூறப்பட்டிருக்கினறன. இவைகளால் திருவள்ளுவர் கடவுள் ஒருவர் உண்டென்று ஒப்புக் கொள்ளுகின்றார் என்பதைக் காணலாம். அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. அறநெறியிலே நின்றதன் பயன் இதுவென்று வாயினால் சொல்ல வேண்டுவதில்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்கின்றவன்; அதில் ஏறிச் செல்பவன் இவர்களிடையே கண்டு கொள்ளலாம் (கு. 37). இது நல்வினை தீவினைகளின் பயனை வலியுறுத்தும் குறள். ஊழ் வினையைப் பற்றி ஒரு தனி அதிகாரமே உண்டு. அதில் உள்ள பத்துக் குறள்களிலும் ஊழின் வலிமையை எடுத்துக் கூறுகிறார் வள்ளுவர். மறு பிறப்பு மறுபிறப்பைத் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. ஒரு பிறப்பிலே தான் கற்ற கல்வியானது ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவி செய்யும் தன்மையுள்ளது. (கு. 399) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும். ஒருவன் ஒன்றை விரும்புவதனால் மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையையே விரும்ப வேண்டும்; அந்தப் பிறவா நிலை மை ஆசையற்ற நிலையை விரும்புவதனால்தான் உண்டாகும். (கு.362) இவைகளால் மறுபிறப்பு உண்டு என்பதைக் காணலாம். சுவர்க்க நரக மோட்சம் சுவர்க்கம், நரகம் என்பவை தனித்தனி உலகங்கள். சுவர்க்கம் இன்பம் நிறைந்த உலகம்; நரகம் துன்பம் நிறைந்த உலகம். இவ்வுலகிலே நன்னெறியிலே நடப்பவர் இறந்தபின் சுவர்க்கத்தை அடைவர்; இன்பம் துய்ப்பர். இவ்வுலகிலே அறநெறியை மீறி - கடந்து - நடப்போர் இறந்தபின் நரகத்தை நண்ணுவர்; துன்புற்று நலிவார்கள். இது பண்டைக்கால நம்பிக்கை. அடக்கம் அமரர்உள் உய்க்கும்; அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். அறநெறியிலே அடங்கி நடக்கும் குணம் ஒருவனைச் சுவர்க்க மாகிய வானவர் உலகில் சேர்க்கும்; அறநெறிக்கு அடங்காத் தீயொழுக்கம். நிறைந்த இருள் என்னும் நரகத்தில் சேர்த்துவிடும் (கு.121). இக்குறள் துறக்கம் வேறு; நரகம் வேறு; இரண்டும் இவ்வுலகிற்கு அப்பால் உள்ளவை; என்ற கருத்துடையது. யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும். நான், எனது, என்னும் அகங்கார உணர்ச்சியை அழிப் பவனே தேவர் களாலும் அடையமுடியாத வீட்டுலகத்தை அடைவான். (கு.346). இக்குறளிலே வானோர்க்கும் உயர்ந்த உலகம் என்று மோட்ச லோகத்தைக் குறிப்பிடுகின்றார். உடம்பை நான் என்று நினைப்பதும், செல்வப் பொருளை என்னுடையவை என்று எண்ணுவதும் அறியாமையகும். யான், எனது, என்னும் ஆசையைத் துறந்தவர் களே ஞானிகள்: பிறவா நெறியைப் பெறுவதற்கு த் தகுதியுள்ளவர்கள். இதுவே வேதாந்த சாரம். இந்த வேதாந்த சாரத்தை இக்குறள் திரட்டி விளக்கியிருக் கின்றது. மோட்சம், முத்தி, விடுதலை என்று சொல்லப்படுவது என்றும் அழியாத நிலை. இது வானவர் வாழும் துறக்கத்தை விட மேலானது. இந்த நிலையை அடைந்தால்தான் மீண்டும் பிறவாத நிலையைப் பெறமுடியும். இது முன்னோர் கொள்கை: இக்கொள்கையிலே வள்ளுவர்க்கு உறுதியான நம்பிக்கை உண்டு. வேத ஒழுக்கம் வேதங்களையும் வேத ஒழுக்கங்களையும் வள்ளுவர் ஒப்புக் கொள்ளு கின்றார். அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய் நின்னது மன்னவன் கோல். அந்தணர்களின் வேதத்திற்கும், அறநெறிக்கும் அடிப்படை யாய் நிற்பது அரசனுடைய செங்கோலேயாகும். (கு.543). ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர், காவலன் காவான் எனின். நாடு காப்போன் முறைப்படி நாட்டைக் காக்காவிட்டால், பசுக்கள் தரும் பயன் குறையும்; அந்தணர்கள் வேதங்களை மறப்பர் (கு.560) வள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே வேதங்கள் வழங்கப் பட்டு வந்தன; வேதங்களைக் கற்றவர்கள், வேதநெறியைப் பின் பற்றியவர்கள், பரப்பியவர்கள், அந்தணர் என்று அழைக்கப் பட்டனர். இவ்வுண்மையை இக்குறள்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் , ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று, நெய் முதலிய பண்டங்களைத் தீயிலே சொரிந்து ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும், ஒரு பிராணியின் உயிரை அழித்து அதன் உடம்பை உண்ணா திருத்தல் சிறந்தது (கு.259). சிலர் இக்குறளை எடுத்துக்கூறி திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிக்கிறார்; அவர் ஆரிய நாகரிகத்தின் எதிரி; தமிழர் நாகரிகத்தைப் போற்றுகிறார்; என்று கூறுவர். இக்குறள் புலால் உண்ணாமையை வலியுறுத்துவது; வேள்வியைக் கடிவது அன்று. இது, வேள்வி செய்வதைக் காட்டிலும் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாமையே சிறந்தது என்பதைத்தான் கூறிற்று. அதைவிட இது சிறந்தது என்றால், அது கைவிடத்தக்கது என்பது பொருள் அன்று. வேத வேள்வியைவிடப் புலால் உண்ணாமை சிறந்தது. என்று கூறியதாகத் தான் கொள்ள வேண்டும். வள்ளுவர் புலால் உண்ணாமை தான் சிறந்த அறம் என்று கருதியவர். ஆதலால் அவர் காலத்தில் சிறப்பாக மக்கள் கருதி வந்த வேள்வியைவிடப் புலால் உண்ணாமையே சிறந்தது என்று எடுத்துக் காட்டினார். பிரம்மச்சரியம், கிரகதம், வானப்பிரதம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆசிரம முறையும் தமிழகத்தில் இருந்தது,. இதையும் வள்ளுவர் எடுத்துக் காட்டுகிறார்.. இல்வாழ்வான் என்பான், இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்திலே வாழ்கின்றவன் என்று சொல்லப்படு கின்றவன் அறத்தின் இயல்புடைய பிரமச்சாரி, வானப்பிரதன். சந்நியாசி ஆகிய மூவர்க்கும் நல்வழியிலே நடப்பதற்கு நிலைத்து நின்ற துணையாவான் (கு.41). இக்குறள் நால்வகை ஆரம நிலை தமிழகத்தில் இருந்தது என்பதற்கு ஆதரவு. திருவள்ளுவர் இந்த நால்வகை ஆரம நிலைகளைப் பற்றித் தனித்தனியே கூறவில்லை. இல்லறம் துறவறம் என்று இரண்டாக வகுத்துக் கொண்டார். இல்லறம் கிரகதாசிரமம்; துறவறம் சந்நியாச ஆரமம், இல்லறத்திலே பிரம்மச்சரியத்தை அடக்கினார்; துறவறத்திலே வானப்பிரதத்தை அடக்கிக் கூறினார். திருக்குறளைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். தவ ஒழுக்கம் தவம்புரிதல் தமிழர் நாகரிகம் அன்று; தவத்தைப் பற்றித் திருவள்ளுவர் கூறவில்லை; என்று உரைப்போர் உண்டு. தவம் என்று ஒரு அதிகாரமே திருக்குறளில் இருக்கின்றது, இவ் வதிகாரத்தின் வெண்பாக்களையும் படித்தவர்கள் இவ்வாறு சொல்லத் துணியார். தவம் செய்வார் தம்கருமம் செய்வார்; மற்று அல்லார் அவம் செய்வார் ஆசையுள் பட்டு. தவம் செய்கின்றவரே தாம் நன்மையடைவதற்குரிய காரியத்தைச் செய்கிறவர் ஆவார்; தவம் செய்யாதவர்கள் ஆசையுள் வீழ்ந்து தமக்குக் கேடு தேடிக் கொள்பவர் ஆவார். (கு.266) தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம் அதனை அஃது இலார் மேற்கொள்வது. தவக்கோலம், உண்மையான தவ ஒழுக்கம் உள்ளவர்க்கே ஏற்றதாகும்; உண்மையான தவம் அற்றவர், அக்கோலத்தை மேற் கொள்ளுவது வீணாகும். (கு. 262) இக்குறள்கள் தவத்தின் சிறப்பையும், உண்மைத் தவசி களே தவக்கோலம் பூணலாம் என்பதையும் எடுத்துக் காட்டின. திருவள்ளுவர், தவம், தவப்பயன் இவற்றை ஒப்புக் கொண்டவர் என்பதற்கு இவ்விரண்டு செய்யுட்களே போதும். தவம் என்பது கண்மூடித் தனித்திருப்பது அன்று; முயற்சியே தவம் ஆகும். ஆதலால் முயற்சியையே வள்ளுவர் தவம் என்ற சொல்லால் குறிக்கின்றார் என்போரும் உண்டு. இது பொருந்தாது. திருக்குறள் பொருட்பாலில் ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை என்று நான்கு அதிகாரங்கள் தனியாக இருக்கின்றன. இவற்றை மறந்தவர்களே இவ்வாறு மயங்கி உரைப்பார்கள். அந்த நான்கு அதிகாரங்களும் முயற்சியின் பெருமையையே வலியுறுத்துவன. ஆதலால் தவம் என்ற அதிகாரம் தவத்தைப் பற்றித்தான் கூறுகிறது என்பது உறுதி. தென்புலத்தார் தென்புலத்தாரைப் பிதிரர் என்பர். பிதிர்கள் முன்னோர்கள். முன்னோர்களை வணங்கும் வழக்கம். பண்டை நாகரிகம் பெற்ற பலரிடமும் இருந்தது. எகிப்தியர் நாகரிகம் பழைமை யானது; சீனர் நாகரிகம் பழைமையானது. எகிப்தியர்களும் சீனர்களும் தங்கள் முன்னோர்களை வணங்கி வந்தனர். இறந்தவர்கள் பொருட்டு நினைவுச் சின்னங்கள் அமைத்தனர். இதே வழக்கம் தமிழரிடமும் உண்டு. தமிழர்கள் இறந்தவர் களுக்குக் கல்நாட்டி வழிபட்டனர். இந்த வழக்கத்திலிருந்து தான் தென்புலத்தார் என்னும் பிதிரர்களைப் போற்றும் வழக்கம் எழுந்தது. தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை. பிதிர்க்கள், தேவர்கள், அதிதிகள், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும் செய்ய வேண்டிய காரியங் களைத் தவறாமல் செய்தல் இல்லறத்தில் வாழ்வோனது தலைமையான கடமையாகும். (கு.43) முன்னோர்களை வணங்கும் முறையிலே வேற்றுமை இருக்கலாம். அந்தந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்றபடி மாறுபட்டிருக்கலாம். ஆனால் முன்னோர்களை வணங்கும் வழக்கம். நாகரிகம் பெற்ற மக்களிடம் நிலைத்திருந்தது. இதையே வள்ளுவர் எடுத்துக் காட்டினார். இக்கருத்தைச் சங்க இலக்கியங்களிலும் காணலாம். இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுஇன்றி எய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர். இவ்வுலகத்திலே புகழுடன் வாழ்வர்; குற்றம் இன்றி மறு உலகத்தையும் பெறுவர்; பகைவர்களும் விரும்பத்தகுந்த அறிவுள்ள சிறுவர்களைப் பெற்றவர்கள். (அகம். 66) தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர் (புற. 9) தென் திசையிலே வாழும் பிதிர்களுக்கு ஆற்ற வேண்டிய அரிய கடன்களைச் செய்யும், பொன் போன்ற சிறந்த புத்திரர்கள். மேலே காட்டிய அகநானூற்றுப் பாட்டும், புறநானூற்றுப் பாட்டும் முன்னோர்கள் நல்லுலகம் பெறுவதற்காகப் புத்திரர்கள் வேண்டும் என்று விரும்பினர். புத்திரர்களும் பிதிர்களுக்காகச் சில கடன்களைச் செய்து வந்தனர் என்பதைக் காட்டுகின்றன. இவ்வுண்மையைப் பின்பற்றித்தான் வள்ளுவரும் தென்புலத் தார் என்னும் குறளை இல்லறத்தான் கடமையை வலியுறுத்து வதற்காகக் கூறியிருக்கின்றார். இத்தகைய சரித்திர உண்மையை மறந்தவர்களே தென் புலத்தார்க்கு அருங்கடன் இறுக்கும் வழக்கம் தமிழர் வழக்கம் அன்று, ஆரியர் வழக்கம்; என்று கூறுவர். இவர்கள் இக்குறளுக்கு, வள்ளுவர் கருத்துக்கும், வரலாற்று உண்மைக்கும் பொருந்தாத பொருள் கூற மண்டையை உடைத்துக் கொள்ளுவார்கள். வள்ளுவர் கருத்துப் பொருந்துமா? பொருந்தாதா? என்று முடிவு செய்வது வேறு; அவர் கருத்து என்னவென்று காண்பது வேறாகும். தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் செய்யாமல் வேறு பொருள் கூறுவது பொருந்தாது. அது தமிழர் பண்பையும் , வரலாற்று உண்மையையும் மறந்துரைக்கும் பொருளாகும். புராணங்கள் வள்ளுவர் புராணக் கொள்கைகளையும், கருத்துக்களை யும் மறக்கவில்லை, வள்ளுவர் காலத் தமிழகத்திலே புராண வரலாற்றுகள் வழங்கியிருந்தன; மக்கள் அவ்வரலாறுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தனர். ஐந்து அவித்தான் ஆற்றல் அகம்விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி (கு. 25) ஐந்து புலன்களையும் அடக்கி ஆண்டவனுடைய வலிமைக்கு பெரிய வானத்தில் வாழ்கின்ற தேவர்களின் தலைவனாகிய இந்திரனே போதுமான சாட்சி (கு. 25) இந்திரனைப் பதவியிழந்து பரிதவகிக்கும்படி துர்வாச முனிவர் சாபம் இட்டது; அவன் அகலிகை மேல் காதல் கொண்டதால் கௌதம முனிவரின் சாபம் பெற்றது; பொன்று கதைகளை இக்குறள் நினைவூட்டுகின்றது. இந்திரனைத் தென்னாட்டினர் வடநாட்டினர் அனைவரும் போற்றினர். தமிழ் நாட்டிலே இந்திரவிழா நடைபெற்று வந்த செய்தியைப் பழந்தமிழ் நூல்களிலே காணலாம். மருத நிலத் தினர்ககு இந்திரன் தெய்வம். இவைகளும் குறிப்பிடத்தக்கவை. மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு சோம்பலற்ற மன்னன், திருமாலால் ஒரே அடியால் அளக்கப்பட்டதாகிய இவ்வுலகம் முழுவதையும் ஒரே மூச்சில் பெறுவான். (கு.610) தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்? தாமரை கண்ணான் உலகு தம்மால் காதலிக்கப்படும் பெண்களின், மெல்லிய தோள் களின் மேல் படிந்து தூங்குவதைவிட, திருமாலின் வைகுந்த பதவியை அடைந்து வாழ்வது இன்பமுடையதோ (கு.1103) இவ்விரண்டு குறள்களும் திருமாலைப்பற்றிக் கூறின. முதற் குறள் திருமாலின் வாமனாதாரத்தைப் குறித்தது. இரண்டாவது குறள் திருமாலின் வைகுந்தலோகத்தின் இன்பத்தைக் கூறிற்று. கூற்றம் குதித்தலும் கைகூடும். (269) உயிர் உண்ணும் கூற்று. (326) கூற்றத்தைக் கையால் விளித்து அகற்றால் (894) பண்டு அறியேன் கூற்று என்பதனை (1083) கூற்றமோ, கண்ணோ, பிணையோ. (1085) இவைகள் கூற்றுவன் உண்டு என்பதை ஒத்துக் கொள்ளு கின்றன; மக்களின் உயிரையும் உடம்பையும் வேறாகப் பிரிப்பவன் கூற்றுவன். அவனுக்குத் தனி உலகமும் தனித்தூதர்களும் உண்டு; அவன் மறம் புரியும் மக்களின் உயிரைப் பறித்துச் செல்வான்; அவ்வுயிர்களுக்குத் தண்டனையளிப்பான். இக்கொள்கையை வள்ளுவர்கால மக்கள் நம்பி வந்தனர். அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும். பொறாமைப்படுகின்றவனைக் கண்டு, திருமகள் பொறுக் காமல் அவனைத் தன் மூத்தாளிடம் காட்டிவிட்டு நீங்குவாள். (கு. 167) மடிஉளாள் மாமுகடி என்ப, மடியிலான் தாள் உளாள் தாமரையினாள். சோம்பலிலே கருமையான மூதேவி வாழ்கின்றாள். சோம்பல் இல்லாதவன் முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள், என்று கூறுவர் அறிஞர். (கு. 617) செல்வத்தைத் தருகின்றவள் சீதேவி; வறுமையைச் சேர்ப் பவள் மூதேவி. இருவரும் உடன் பிறந்தவர்கள். இளையவள் சீதேவி - திருமகள்; மூத்தவள் மூதேவி. செய்யவள் தாமரை யினாள் - சீதேவி. தவ்வை, மாமுகடி - மூதேவி. மேலே காட்டிய இரண்டு குறள்களும் இவ்வுண்மையை உரைத்தன. பேய், அலகை, தாக்கணங்கு, என்ற பெயர்களும் திருக் குறளிலே காணப்படுகின்றன. இவைகள் வள்ளுவர் காலத்து மக்கள் பேய் பிசுசுகளின் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டும். மேலே கூறியவைகளிலிருந்த திருவள்ளுவரின் உண்மைக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவர் ஆரியர் பண்பு, தமிழர் பண்பு என்ற வேற்றுமை காணாதவர்; கடவுள் நம்பிக்கையுள்ளவர்; நல்வினை தீவினைப் பலன்களிலே நம்பிக் கையுள்ளவர்; மறுபிறப்பிலே நம்பிக்கையுள்ளவர். சுவர்க்கம்; நரகம் என்ற கொள்கையுள்ளவர்; மோட்சத்திலே நம்பிக்கை கொண்டவர். வேதங்களையும் வேதக் கொள்கைகளையும் ஒப்புக் கொண்டவர்; நால்வகை ஆரமங்களை ஒப்புக்கொள்ளு கின்றார்; தவத்திலே நம்பிக்கையுள்ளவர்; தென்புலத்தார்க்குரிய கடன்களைச் செய்யவேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டவர். புராணக் கொள்கைகளிலும் நம்பிக்கையுள்ளவர்; இவைகளை எல்லாம் திருக்குறளிலே காணக்கிடக்கின்றன. இவைகளை ஆரியர்களோ வடநூல்களோ மறக்கவில்லை. வடநூல்களிலும் இவைகள் கூறப்படுகின்றன. ஆதலால் வள்ளுவர் கூறியிருப் பனவெல்லாம் ஆரியர் தமிழர் என்ற வேற்றுமையில்லாமல் அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடியனவே. இத்தகைய பொதுக் கொள்கைகளே திருக்குறளில் காணப்படுகின்றன. பொதுவான இந்த நீதி நூலைக்கொண்டு ஆரியர் தமிழர் வேற்றுமைக்கு வழிகாட்டுவது சிறிதும் பொருந்தாது. வள்ளுவர் வழி வள்ளுவர் தம் காலத்திலிருந்து பழக்கவழக்கங்களை மறைக்கவில்லை. அவற்றைப் பலவிடங்களில் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார். இதைக்கொண்டு அவரைப் பிற்போக்காளர் என்றுமுடிவுகட்டிவிடக்கூடாது; அவரிடம் முற்போக்கான கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். அவர் வாழ்ந்த காலத்திலே உள்ள சூழ்நிலையை மாற்றவேண்டும் என்பதே அவர் கருத்து. அதை மாற்றுவதற்கு அவர் காட்டும் வழி மிகவும் சிறந்த வழி. முற்போக்குக் கருத்துள்ளவர்கள் பின்பற்றக் கூடிய வழி. திருவள்ளுவர் பழைய அறங்கள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றார். அவர் காலத்தில் இருந்து சமுதாய நிலை அப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்ப வில்லை. நாகரிகமும் அறிவும் வளர வளர சமுதாயத்திலே மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும் என்ற உண்மையை அவர் மறந்து விடவில்லை. முற்போக்காக வழியிலே மனித சமுதாயம் மாறிக்கொண்டு போக வேண்டும்; இதற்காக அறிஞர்கள் முயலவேண்டும்; என்பது அவர் கருத்து. வள்ளுவர் காலத்திலே தமிழகத்தில் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் என்னும் நால்வகை வகுப்புக்கள் இருந்தன. இந்த நால்வகை வகுப்புக்களும் தொழில் காரணமாக ஏற்பட்டமை தாம். ஆயினும் பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையும் அவர் காலத்திலே தலை தூக்கி நின்றது. மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ஓதிய வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், பார்ப்பான் தன் பிறப்புக்குரிய ஓழுக்கத்திலே தவறுவானாயின் அவன் தன் உயர்வு கெடுவான் (கு.134) இக்குறள் பார்ப்பான் பிறப்பிலே உயர்ந்தவன்; அவனுக்கென்ற பிறப்பொழுக்கம் தனியாக உண்டு; என்பவைகளை ஒப்புக் கொள்ளுகின்றது. நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப்படும் ஒருவனுடைய நல்ல குணங்களுக்கு இடையே அன்பில் லாமை காரணமாக உண்டாகின்ற கொடுஞ்செயல்கள் காணப் பட்டால், அப்பொழுது அவனைப்பற்றி மட்டும் சிந்திக்கத் தோன்றாது; அவன் பிறந்த குலத்தைப் பற்றியே ஐயந்தோன்றும் (கு. 958) நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் நிலத்தின் தன்மையை அதில் முளைத்த பயிர் காட்டி விடும்; உயர்ந்த குலத்தில் பிறந்தவரின் குணத்தை அவர் கூறும் சொற்கள் காட்டிவிடும். (கு.959) அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். அளவற்ற கோடிக்கணக்கான செல்வம் கிடைப்பதாயிருந் தாலும் உயர்ந்த குடியிலே பிறந்தவர் தம் ஒழுக்கம் கெடும் படியான செயல்களைச் செய்யமாட்டார். (கு.954) இம்மூன்று குறளும் குடிமையென்னும் அதிகாரத்தில் உள்ளவை பிறப்பில் உயர்வு உண்டு என்பதையே அவ்வதி காரத்தின் பத்துப் பாடல்களும் எடுத்துக் காட்டுகின்றன. குடிமை - உயர்ந்த குடியில் பிறந்தாரது தன்மை. குடி, குலம் என்பவை ஒரு சாதியைக் குறிப்பவையல்ல; தனிப்பட்ட குடும்பத்தைக் குறிப்பவை. அதாவது பரம்பரைக் குறிப்பனவாம். வள்ளுவர் தமது காலத்தில் நிலவியிருந்த உயர்வு தாழ்வுக் கொள்கைகளையே இவ்வாறு சொல்லியிருக்கின்றார். பிறப்பிலே உயர்வு தாழ்வு காட்டும் வழக்கம் தவறு. உண்மை யில் பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் ஏற்படுவதில்லை. இதுவே வள்ளுவர் கொள்கை. இதை அவர் தெளிவாகக் கூறுகின்றார். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும் அவ்வுயிர்கள் ஆயினும் அவ்வுயிர்கள் செய்யும் வெவ் வேறு தொழில்கள் காரணமாகப் பெருமை ஒத்திருக்காது; வெவ்வேறாக இருக்கும் (கு.912) பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற நம்பிக்கை தவறு. தொழில் காரணமாகத்தான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படு கின்றன. ஆதலால் பிறப்பினால் உயர்வுதாழ்வுகள் பாராட்டுதல் பிழை என்பதை இக்குறள் மூலம் எடுத்துக் காட்டினார். பெருமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறள் இது. தொழில் காரணமாகத்தான் வகுப்புப் பிரிவு உண்டாயிற்று; அதுவே உயர்வு தாழ்வுக்கு இடந்தந்து விட்டது; என்ற பழந்தமிழர் கருத்தை இக்குறளால் விளக்கினார் வள்ளுவர். எல்லோரும் சிறந்தவர்களாக வாழமுடியும்; உயர்ந்த குடியினராக வாழமுடியும்; உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேற்றுமையில்லாத ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த முடியும் என்பதே வள்ளுவர் நம்பிக்கை. இத்தகைய சமுதாயம் ஏற்படு வதற்கு அவர் காட்டும் வழி மிகவும் சிறந்ததாகும். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கமே பெருமையைத் தருவதால், அது உயிரைக் காட்டிலும் சிறந்ததாகக்காப்பற்றப்பட வேண்டும் (கு. 131) ஒழுக்கம் உடமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் ஒழுக்கமுடன் வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை யாகும், ஒழுக்கமின்றி வாழ்வது இழிந்த குடிபிறப்பின் தன்மை யாகி விடும் (கு.113) ஒழுக்கந் தவறாதவன் சிறந்தவன்; சமூகத்தாரால் பழிக்கப் படும் செயல்களைச் செய்யாமலிருப்பது; சமூகத்திற்குத் தீமை தரும் செயல்களை விட்டொழிப்பது; இவைகளே சிறந்த ஒழுக்கம் ஆகும். இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றும் மக்கள் சிறந்தவர்கள்; பெருமைக்குரியவர்கள். ஒழுக்கதில் தவறாதவர்கள் உயர்ந்த குடியினர் அவர்கள் எக்குடியிலே பிறந்தவராயிருப்பினும் உயர்ந்த குடியினராய் விடுவர். ஒழுக்கமற்றவர்கள் இழிந்தவர்கள். அவர்கள் உயர்ந்த குடியிலே பிறந்தவராயினும் இழிந்த குடியினராய் விடுவர். ஆதலால் மக்களிடையிலே பிறப்பினால் நிலவும் உயர்வு தாழ்வு வேற்றுமை மறைய ஒழுக்கமே சிறந்த வழி; என்று கூறினார் வள்ளுவர். அவர் காட்டும் ஒழுக்க நெறியைப் பின்பற்றினால் இன்று காணப்படும் சாதி வேற்றுமைகள் மறைந்து விடும் என்பதில் ஐயம் இல்லை. மூடநம்பிக்கை பண்டைத் தமிழ் மக்களிடம் பல நம்பிக்கைகள் குடி கொண்டிருந்தன. அந்நம்பிக்கைகள் பலவற்றை இக்காலத்திலே மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். நாம் நினைப் பதைப்போல் எதுவும் நடக்காது; எல்லாம் முன்னைய ஊழ்வினையின்படி தான் நடக்கும்; முன் பிறப்பிலே தவம் புரிந்தவர்கள் தாம் இப்பிறப்பிலே செல்வம் உள்ளவர்களாய் வாழ்கின்றனர். முற்பிறப்பிலே தவம் புரியாதவர்கள் தாம் இப்பிறப்பிலே தவம் புரியாதவர்கள் தாம் இப்பிறப்பிலே வறுமையால் வாடுகின்றனர் என்பது ஒரு மூடநம்பிக்கை. இந்த நம்பிக்கை வள்ளுவர் காலத்திலே மக்கள் மனத்திலே வேரோடி ருந்தது. இதை அவர் மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, அறியாமை என்று ஓரிடத்திலாயினும் எடுத்துரைக்கவில்லை. இந்த நம்பிக்கை உண்மையானது என்று எண்ணும்படியே உரைத்திருக்கிறார். இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்; பலர் நோவா தவர். இவ்வுலகில் வறியவர்கள் பலர்; இதற்குக் காரணம் தவம் செய்கின்றவர்கள் சிலர்; தவம் செய்யாதவர்கள் பலர் (கு.270) தவம் செய்த சிலரே செல்வர்களாகப் பிறக்கின்றனர். தவம் செய்யாத பலரே வறுமையுள்ளவர்களாகப் பிறக்கின்றனர்; என்பது தான் இக்குறளின் கருத்து. தனியுடைமைச் சமுதாயத்தில் வேரோடி யிருந்த இக் கருத்தை இக்காலத்தினர் ஏற்க முடியாது. சமதர்மத்திலே நம்பிக்கையுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் - இக்கருத்து உண்மையானால் - இவ்வுலகில் வர்க்க பேதமற்ற சமுதாயம் தோன்றவே முடியாது. முன்னேற வழி மக்கள் இந்த நம்பிக்கையிலே உறுதியாக நிற்பார்களானால் அவர்கள் முயற்சியற்ற சோம்பேறிகளாகி விடுவார்கள்; ஒரு தொழிலையும் செய்ய மாட்டார்கள்; நாட்டிலே உற்பத்தி குறையும்: உற்பத்தி குறைந்தால் பசியும் வறுமையும் வளரும். பசியும் வறுமையும் வளர்ந்தால் மக்கள் ஒழுக்க நெறியிலிருந்து ஒதுங்கி விடுவார்கள். சமுதாயக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அழிந்து போகும். இந்த உண்மையை வள்ளுவர் உணர்ந்தார். மக்களின் இரத்தத்தோடு கலந்திருக்கும் அந்த நம்பிக்கையைக் கண்டிக்காமலே அவர்கள் முன்னேறுவதற்கு வழிகாட்டி இருக்கின்றார். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை. தளராத ஊக்கம் உள்ளவனிடத்தில், செல்வம் அவன் இருக்கும் இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு, தானே சென்று சேரும்(கு.594) முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். முயற்சியே ஒருவனிடன் செல்வத்தைச் சேர்க்கும்; முயற்சி யில்லாதிருத்தல் அவனிடம் வறுமையைச் சேர்த்துவிடும்(கு. 616) இவ்விரண்டு குறள்களும், தவத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; ஊக்கமும் முயற்சியுமே செல்வத்துக்கு அடிப் படை; அவைகளே செல்வத்தைச் சேர்க்க உதவி செய்வன. என்ற உண்மையை விளக்கின. சோர்ந்து கிடக்கின்ற மக்கள் மனத்திலே உற்சாகத்தை ஊட்டுகின்றன வள்ளுவர் காலத்து மக்கள் தலைவிதியிலே, ஊழ்வினை யின் வலிமையிலே கொண்டிருந்த நம்பிக்கையை ஊழ்வினை என்னும் அதிகாரத்தால் காணலாம். அவர் காலத்து மக்கள் நம்பிக்கையை அவர் மறைத்துவிடவில்லை. அப்படியே எடுத்துக்காட்டுகிறார். ஆகுஊழால் தோன்றும் அசைவு இன்மை; கைப்பொருள் போகு ஊழால் தோன்றும் மடி செல்வம் சேர்வதற்குரிய நல்வினையினாலேயே ஒருவனிடம் முயற்சி தோன்றும். கைப்பொருள் அழியக் கூடிய தீவினை காரணமாகவே ஒருவனிடம் சோம்பல் தோன்றும் (கு. 380) முயற்சிக்குக் காரணமும் ஊழ்வினைதான்; சோம்பலுக்குக் காரணமும் ஊழ்வினைதான்; என்று அழுத்தமாகக் கூறுகிறது இக்குறள். முயற்சிக்குக் காரணமான ஊழ் ஆகூழ்; சோம் பலுக்குக் காரணமான ஊழ் போகூழ். ஊழில் பெருவலி யாவுள; மற்றொன்று சூழினும் தாம் முந்து உறும் ஊழ்வினையைவிட வலிமையுள்ளவை எவை? அதை விலக்க வேறோரு வழியை ஆராய்ந்தாலும் அந்த ஊழே தான் முன்வந்து நிற்கும் (கு.380) எவ்வளவு முயற்சி செய்தாலும் ஊழ்வினையை மாற்ற முடியாது என்று கூறுகின்றது இக்குறள். இத்தகைய நம்பிக்கை மக்கள் மனத்திலே நிலைத்து விட்டால் உலக நாகரிகமே அழிந்து போய்விடும்; மக்கள் சமுதாயத்திலே எந்த முற்போக்கையும் காணவே முடியாது. இந்த உண்மையை வள்ளுவர் உணராதவர் அன்று. ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் சோர்வில்லாமல் , முயற்சியிலே சிறிதும் குறைவில்லாமல் - உழைப்பவர் ஊழ்வினையையும் புறமிட்டு ஓடச் செய்வார்கள் (கு. 620) என்று கூறி மக்கள் உள்ளத்திலே ஊக்கத்தைப் புகுத்து கின்றார். ஊழ்வினை யென்று ஒன்று இருந்தாலும் அதை விரட்டி யடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார். வள்ளுவர் ஊழைப் பற்றி உரைத்திருக்கும் குறள் பத்து. ஆனால் அதற்கு எதிராகக் கூறியிருக்கும் செய்யுட்கள் நாற்பது, ஊழ்வினை என்ற அதிகாரத்திலே பத்துப் பாடல்களிலே ஊழின் வலிமையைப் பற்றி உரைக்கின்றார்; ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை என்ற நான்கு அதிகாரங்களிலே நாற்பது செய்யுட்களால் ஊழ்வினைக்கு அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்துகின்றார். திருவள்ளுவர் ஊழ்வினையை மறுக்கவில்லை. ஆனால் அதை எதிர்க்க வழி காட்டுகிறார். சீர்திருத்தத்திற்கு வள்ளுவர் காட்டியிருக்கும் வழி சிறந்த தாகும். அறிஞர்கள் பின்பற்றத் தக்கதுமாகும். இக்காலத்து சீர்திருத்தவாதிகளிலே பலர், சீர்திருத்தக் கொள்கைகளை மக்கள் மனங் கொள்ளும்படி வலியுறுத்துவதில்லை. சீர்திருத்து வதற்கு முட்டுக்கட்டைகளாக நிற்கும் மூட நம்பிக்கைகளைக் கண்டிப்பதில் மட்டுந்தான் கவலை காட்டுகின்றனர். மூட நம்பிக்கையுள்ளவர்களின் உள்ளத்திலே ஆத்திரம் உண்டாகும் படி அவ்வளவு கடுமையாகத் தாக்குகின்றனர்; அவர்களையும் அறிவற்றவர்கள் என்று வசைபாடுகின்றனர். இவ்வாறு மூடநம்பிக்கைகளையும், அந்நம்பிக்கை யுள்ளவர்களையும் தாக்குவதுதான் சீர்திருத்தத்திற்குக் காட்டும் வழியென்று நம்புகின்றனர். வள்ளுவர் கருத்தை ஆராய்ந்தால் அவர் ஒரு சீர்திருத்த வாதி என்பது விளங்கும். ஆனால் அவருக்கும் இன்றைய சீர்திருத்த வாதிகளுக்கும் ஒரு வேற்றுமையுண்டு. நீங்கள் முன்னேறுவதற்கான வழிகள் இவை; நீங்கள் செய்யாமல் விடவேண்டியவை இவை என்று மக்களிடம் நயமாக எடுத்துரைக்கின்றார். இதுவே வள்ளுவர் முறை. உங்கள் நம்பிக்கை மூடத்தனமானது; அதை விட்டொழியுங்கள்; விட அஞ்சுவீர்களானால் நீங்கள் கோழைகள்; மூடர்கள், என்று திட்டுவதோடு இன்றைய சீர்திருத்த வாதிகளுக்கும் உள்ள வேற்றுமை. வள்ளுவர் காட்டும் சீர்திருத்த வழியே சிறந்ததாகும். அவ்வழியைப் பின்பற்றினால்தான் சீர்திருத்தத் துறையிலே வெற்றி கிடைக்கும். மாமிசமும், மதுவும் பண்டைத் தமிழர்கள் புலால் உணவை வெறுக்கவில்லை; மது அருந்துவதை மறுக்கவும் இல்லை. பண்டை இலக்கியங் களிலே இவைகள் நிறைந்து கிடக்கின்றன, பழந் தமிழ்நாட்டு வள்ளல்கள், புலவர்கள், பொதுமக்கள் பெரும்பாலும் மாமிசமும், மதுவும் அருந்தியவர்கள் தாம். இவற்றைக் கைவிட்ட ஒரு சிலரும் இருந்தனர். மாமிசம் உண்போர் இரக்கம் அற்றவர்கள்; அருளற்றவர்கள்; என்ற கொள்கை பழந்தமிழ் நாட்டில், இல்லை. வள்ளுவர் காலத்திலே மாமிசத்தையும், மதுவையும் வெறுக்கும் கொள்கை தமிழகத்திலே பரவத் தொடங்கியது என்று கூறலாம். வள்ளுவரும், இவற்றை ஓரளவு ஒப்புக் கொண்டவர்தான். ஆனால் அவர் இவை யிரண்டைப் பற்றியும் பிரசாரம் செய்யும் முறை குறிப்பிடத் தக்கது. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதின்ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்? தன்னுடைய உடம்பைப் பெருக்க வைப்பதற்காக, மற்றொரு உயிரின் உடம்பை உண்பவன் எப்படி அருள் உடையவனாக வாழ முடியும்? (கு. 251) பொருள் ஆட்சி போற்றாதாற்க்கு இல்லை; அருள் ஆட்சி ஆங்கு இல்லை ஊன்தின் பவர்க்கு பொருளால் பயன்பெறுதல் பொருளைப் பாதுகாக்கா தவர்களுக்கு இல்லை; அதுபோல் ஊன் உண்பாருக்கு அருளால் பயன் அடைதல் இல்லை (கு.252) பகைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காதுஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் கொல்லும் ஆயுதத்தைக் கையிலே கொண்டவர் உள்ளம் போல், நல்ல அருள்நெறியிலே செல்லாது; மற்றோர் உயிரின் உடம்பைச் சுவையுடன் உண்டவர் மனம் (கு.253) இந்த மூன்று குறள்களும் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளவை; இதில் முதற் குறளில் புலால் உணவு உடம்புக்கு வலிமை தரும் உணவு என்பதை வள்ளுவர் ஒத்துக் கொள்கிறார். தன் ஊன் பெருக்கற்கு என்று சொல்லியிருப்பதே இதை விளக்கும். மாமிசம் உண்பவர்களுக்கு இரக்கம் இராது; அவர்கள் எண்ணம் நல்வழியிலே செல்லாது; புலால் உண்ணா தவர்களே இரக்கம் உள்ளவர்கள்; நல்ல நடத்தையிலே வாழ வேண்டும் என்னும் உள்ளம் உடையவர்களாயிருப்பர்; நல்ல காரியங்களையும் செய்வார்கள். இதுவே புலால் உண்ணக் கூடாது என்பதற்கு வள்ளுவர் கூறும்ம முதல் காரணம். யாருக்குப் புலால் கூடாது? வள்ளுவர் சொல்லி விட்டார் என்பதற்காக இக்காரணம் சரியென்று சொல்லிவிட முடியாது. பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி, மாமிசம் உண்டவர்கள் எல்லாம் கொடியவர் களாயிருந்தார்கள் கொடியவர்களாயிருக்கின்றார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் எல்லாம் அருள் நிரம்யிவர்களாயிருந்தார்கள்; இருக்கின்றார்கள் என்று சொல்லிவிட முடியாது. பண்டைத் தமிழகத்தில் இருந்த வள்ளல்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் அருந்தியவர்கள் தாம்; ஔவையார், கபிலர் போன்ற அருந் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் உண்டாவர்கள் தாம்; இவர்கள் எல்லாரும் இரக்கம் அற்றவர்கள் அல்லர்; ஒழுக்கங் கெட்டவர்களளும் அல்லர். நமது நாட்டில் உள்ள அறநிலையங்கள் எல்லாம் மாமிசம் உண்ணாதவர்களால் தான் நிறுவப்பட்டன என்று சொல்ல முடியுமா? மாமிச உணவைக் கொண்டு ஒரு மனிதன் ஒழுக்கம் உள்ளவனா? ஒழுக்கம் அற்றவனா? இரக்கம் உள்ளவனா? இரக்கம் அற்றவனா? என்று முடிவு செய்வது தவறு. ஒரு மனிதனுடைய ஒழுக்கமும், மனப்பண்பும், அவனுடைய கல்வி யையும், அறிவையும், அவன் கொண்ட கொள்கையையும் பொறுத்தே அமைகின்றன. எல்லாம் அறிந்த வள்ளுவர் இந்த உண்மையை அறியா தவரா? அறிந்திருந்தால் ஏன் மாமிச உணவை வெறுத்துப் பேச வேண்டும்? என்று கேட்கலாம், அவர் இவ்வுண்மையை அறிந்தவர் தான். அதனால் தான் புலால் மறுத்தலை, இல்லற தர்மங்களைப் பற்றி உரைக்கும் இடத்திலே சொல்லவில்லை. துறவறத்தைப் பற்றிச் சொல்லும்போது கூறுகிறார். துறவிகள் ஐம்புலன்களை அடக்கவேண்டும்; புலன் ஆசை களுக்கு இடந்தரக் கூடாது; ஆதலால் கொழுப்புள்ள உணவு களை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். துறவிகள் கொழுத்திருப்பார்களானால் ஒழுக்க நெறியிலே நிற்பது கடினம். அவர்கள் உடற் கொழுப்பு அவர்களைத் தீயநெறியிலே தள்ளி விடும். அதனால், துறவறத்திற்கு மாறான இரக்கம் அற்றசெய்கை களிலும் ஈடுபட்டு விடுவார்கள். இதனால் தான் துறவிகள் புலால் புசிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர். இவ்வுண்மையை உணராதவர்களே திருவள்ளுவர் புலால் புசிப்பதே கூடாது என்று கூறுகின்றார் என்று சொல்லுவார்கள். மதுவின் தீமை அடுத்தது மதுபானம். மதுபானத்தால் அறிவு மயங்கு வார்கள். அறிவு மயக்கத்தால் அடாத செயல்களை யெல்லாம் செய்வார்கள். ஆதலால் மதுபானம் கூடாது என்பதே வள்ளுவர் கொள்கை. கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்திலே இதை விளக்கிக் கூறியிருக்கின்றார். 1. கள்ளின்மேல் ஆசைகொண்டு வாழ்பவர்களுக்கு எந் நாளும் அவர்களுடைய பகைவர்கள் பயப்படமாட்டார்கள். கள் உண்போர் தம் புகழையும் இழந்துவிடுவர். 2. அறிவுள்ளவர் கள்ளுண்ணக்கூடாது; சான்றோர்களால் மதிக்கப்படுவதை விரும்பாதவர்கள் வேண்டுமானால் கள்ளை உண்ணலாம். 3. கள்ளுண்டு மயங்குதல் தாயின் முன்பும் துன்பந்தரும் (தாயும் அவனை வெறுப்பாள்); அப்படியானால் சான்றோர் முன்பு அச்செயல் எப்படியாகும்? 4. கள் உண்ணல் என்று சொல்லப்படும் விரும்பாத பெரிய குற்றவாளிகை, நாணம் என்னும் நல்லவள் பார்ப்பதறகு அஞ்சு வாள்; புறங்காட்டி நிற்பாள். 5. பொருளைக் கொடுத்துத், தன் உடம்பை மறக்கச் செய்யும் கள்ளை உட்கொள்ளுவது, நற்செயலை அறியாத மூடத்தனமாகும். 6. தூங்கினவர் செத்தவரைப் போல் காணப்படுவார்; வேறாகக் காணப்பட மாட்டார். அதுபோலக் கள் உண்பவர் எந்நாளும் நஞ்சுண்பவர் போல் ஆவார். 7. கள்ளை மறைந்து உண்டு அறிவு மயங்குகின்றவர், உள்ளூரில் வாழ்கின்றவர்களால், அவருடைய ரகசியம் உய்த்துணரப்பட்டு எந்நாளும் இகழ்ந்து நகைக்கப்படுவர். 8. கள் உண்பவன், கள் உண்டு அறியேன் என்று கூறுவதைக் கைவிட வேண்டும்; கள்ளுண்டு மயங்கியிருக்கும் போது அவன் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் குற்றமும் வெளிப்படும். 9. கள்ளுண்டு மயங்கியிருப்பவனைக் காரணம் காட்டித் திருத்தமுடியாது. அவனைத் திருத்த முயல்வது நீருள் மூழ்கி யிருப்பவனைத் தீவத்தி விளக்கால் தேடுவது போலாம். 10. கள்ளுண்டவன், கள் உண்ணாத சமயத்தில் கள்ளுண்டு மயங்கியிருப்பவனைக் காணும்போது, கள்ளுண்டதனால் வந்த தளர்ச்சியை நினைக்கமாட்டானா? இவைகளே வள்ளுவர், கள் உண்ணாமையைப் பற்றிக் கூறியிருப்பவை. இதைப்பற்றிப் பொருட்பாலில் கூறியிருக் கின்றார். இவ்வொழுக்கம், அரசியல் வாதிகளுக்கும் பொதுப் பணி புரிவோர்க்கும், சாலச் சிறந்தது என்பதே வள்ளுவர் கருத்து. ஆளும் பதவியிலே அமர்ந்திருப்போர்க்குக் கள் உண்ணாமையே சிறந்த ஒழுக்கம்; அவர்கள் எதிரிகளிடம் ஏமாறாமல் இருக்கவேண்டுமானால் பொது மக்களால் பழிக்கப் படாமலிருக்கவேண்டுமானால் கள்ளுண்ணாமலிருக்க வேண்டும். இவ்வாறு கூறுவத்ன் மூலம்பொது மக்களுக்கும் கள்ளால் வரும் தீமையை எடுத்துக் காட்டுகின்றார். கள் அறிவையிழக்கச் செய்கிறது. ஆதலால் அதைக் கைவிடவேண்டும். இதுவே அவர் கருத்து. கள்ளுண்ணாமையைப்பற்றி அவர் கூறியிருக்கும் முறை தான் வியக்கத்தக்கது. கள்ளுண்டலின் தீமையைக் கள்ளுண் போனுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்; அப்பொழுதுதான் அவன் கள்ளின் இழிவை அறிவான்; அதைக் கைவிடுவான் என்று தெளிவாகக் கூறுகின்றார். கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு இதுவே கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் உள்ள இறுதிக் குறள். இக்குறள் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகின்றது. மக்கள் ஒன்றைத் தீமையென்று உணர்ந்தால்தான் அதைக் கைவிடுவார்கள். ஆதலால் மதுபானத்தில் வரும் தீமையையும் இழிவையும் அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். அப் பொழுதுதான் மதுவருந்தும் பழக்கம் மக்களிடையிலிருந்து மறையும். மதுவருந்தக்கூடாது என்று சட்டம் செய்வது; அருந்து வோர்க்கு அனுமதி யளிப்பது; என்ற சட்டமுறையால் மதுவைத் தடுத்துவிடமுடியாது. சட்டத்தால் தடுக்க முயற்சிப்பதைவிட, பிரசாரத்தாலேயே மதுவருந்துவதைக் தடுக்க முடியும். மது அருந்துவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். இந்த உண்மையை வள்ளுவர் குறள் எடுத்துக் காட்டுகின்றது. மாமிச உணவைப்பற்றியும், மதுவைப்பற்றியும் வள்ளுவர் கூறியிருக்கும் முறையைக்கொண்டு பார்த்தால் இவை இரண்டு பழக்கங்களும் அவர் காலத்தில் தமிழகத்திலே மிகுதியாகத்தான் இருந்தன. ஆகையால் இவை இரண்டையும் வெறுக்கும் அவர் இவைகளை வன்மையாகக் கண்டிக்க முடியவில்லை. மாமிச உணவு துறவிகளுக்குக் கூடாது; மதுபானம் அரசியலிலே ஈடுபட்டோர்க்குக் கூடாது என்று கூறுவதன் மூலமே பொது மக்களுக்கும் இவற்றைப் பற்றி எடுத்துரைத்தார். இவையிரண்டும் பழந் தமிழர் ஒழுக்கத்திற்கு மாறானவை தான். ஆயினும் வள்ளுவர் காலத்திலிருந்த அறிஞர்கள் இவற்றைத் தீமைகள் என்று எண்ணினர் வள்ளுவரும் அவர்கள் கருத்தை ஆதாரித் தார். காலத்திற்கேற்ப பழக்கவழக்கங்கள் மாறுபடுவது தவறல்ல என்பதும வள்ளுவர் கொள்கை. மது, மாமிசத்தைப் பற்றிய வள்ளுவர் கொள்கை உலகோர் அனைவரும் ஒப்புக்கொள்ளும் கொள்கையென்று சொல்லிவிட முடியாது. இவற்றைப் பற்றி உலக மக்களிடம் கருத்து வேற்றுமை உண்டு. இடித்துரைத்தல் கொடுமைகளைக் கண்டால் கோபங் கொள்ளுவது பெரி யோர் இயற்கை. கூடா ஒழுக்கங்களை அவர்கள் வன்மையாகக் கண்டித்துக் கூறுவார்கள். அடாத செயல்களிலே மக்கள் ஈடுபட்டு அல்லலுக்கு ஆளாகக் கூடாது என்பதே அவர்கள் கருத்து. ஆகையால் அறநூல்களை இயற்றிய அறிஞர்கள் அனைவரும், தீச் செயல்களைக் கடுமையாகத் தாக்கி எழுதி யிருக்கின்றனர். உலக மக்கள் அனைவரும் சிறந்த வாழ வேண்டும். துன்பத்திலே ஆழ்ந்துவிடக் கூடாது; இன்புற்று வாழ வேண்டும் என்பதே அறிஞர்களின் உறுதியான கொள்கை. இவர்கள் மக்கள் அறியாமையால் தீ நெறிகளிலே தலையிடும்போது அதைத் தடுக்காமல் இருக்க மாட்டார்கள். தவறான வழியிலே செல்லும் மக்களைஅவ்வழியிலே செல்லாமல் தடுப்பதே நமது கடமை; இதுவே மக்களிடம் காட்டும் அன்பிற்கு அடையாளம்; மனம்போன போக்கிலே மக்களை நடக்க விடுவது அவர்களைக் கேட்டுக்கு இரையாக்கும்படி காட்டிக்கொடுப்பதேயாகும் என்பதே இவர்கள் கொள்கையாகும். திருவள்ளுவர் உலகத்தாரிடம் அன்பு பாராட்டும் அறிஞர்; அலக மக்களிடம் நட்புக் கொண்டவர்; உலக மக்கள் அனைவரும் உயர்ந்த வாழ்வு நடத்தவேண்டும் என்னும் உள்ளம் படைத்தவர். இந்த நோக்கத்துடனேயே திருக்குறளை இயற்றினார். நகுதற் பொருட்டு அன்று நட்டல்; மிகுதிக்கண் மேற் சென்று இடித்தற் பொருட்டு ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் வேடிக்கையாகப் பேசி நகைப்பதற்காக அன்று; நண்பர் வரம்புமீறிச் செல்லும் போது முன் சென்று கடிந்துரைத்து அவர் செய்கையைத் தடுப்பதற்காகத்தான் (கு.784) ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் எதற்காக என்பதைப்பற்றி இக்குறளிலே தெளிவாகக் கூறி விட்டார். உலக மக்களிடம் அன்பு பூண்ட அவர் இக்குறளின் கருத்தைத் தானும் பின்பற்றிச் செல்லுகின்றார். தீமைகளைக் காணும்போது திருவள்ளுவர் உள்ளம் குமுறு கின்றது. அவர் மனம் வேதனையடைகின்றது. பொறுமையிழக் கின்றார். தீமை செய்யும் மக்களைக் கடுஞ்சொற்களால் திட்டு கின்றார். திருவள்ளுவர் ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகின்றார் என்று நாம் எண்ணும்படி சில குறட்பாக்கள் அமைந்திருக் கின்றன. அறிவின்றி அடாத காரியங்களைச் செய்கின்றவர்களை அதட்டி நிறுத்தினால் தான் அவர்கள் அடங்குவார்கள். இந்த உண்மையை எண்ணித்தான் வள்ளுவர் சில பாடல்களை வசை கூறும் முறையிலே அமைத்திருக்கின்றார். இது அவருடைய கருணை உள்ளத்தையே காட்டுவதாகும். இத்தகைய செய்யுட்கள் சிலவற்றைக் கீழே காணலாம். அவைகளால் வள்ளுவர் உள்ளத்தின் உயர்வைக் காணலாம். உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார், அறிவிலா தார் பல நூல்களைக் கற்றிருந்தாலும் உயர்ந்தவர்களுடன் இணைந்து நடக்கக் கற்றுக் கொள்ளாதவர் அறிவற்றவர் (கு.140) இக்குறள் உயர்ந்த அறிவுள்ளவர்களுடன் ஒத்துப் போகா தவர் அறிவற்றவர் என்று திட்டுகின்றது. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். தீ நெறியிலே நிற்கின்றவர் எல்லோருள்ளும் மற்றொருவன் வீட்டு வாசலிலே அவன் மனைவியை விரும்பி நிற்கின்றவரைப் போல மறையர் வேறு ஒருவரும் இல்லை.. (கு.142 ) இக்குறள் பிறர் மனைவியை விரும்புகின்றவனை பெரிய மடையன் என்று கூறுகின்றது. பயன்இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்; மக்கள் பதடி எனல் எப்பொழுதும் பயனற்ற வீண் சொற்களையே பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பவனை மனிதன் என்று சொல்லற்க; மனிதர்களுக்குள் பதர் என்று சொல்லுக (கு.196) இக்குறள் வீண்சொற்கள் பேசிப் பொழுது போக்கு கின்றவனைப் பயன் அற்ற பதர் என்று கடிந்துரைக்கின்றது. உளர் என்னும் மாத்திரையர் அவ்வால், பயவாக் களர் அனையர் கல்லா தவர் கல்வி கற்காதவர்கள் மனித உருவில் இருக்கின்றனர் என்ற அளவில் தான் எண்ணப்படுவர்கள்; இதைத் தவிர அவர்களால் ஒரு பயனும் இல்லை; அவர்கள் ஒன்றுக்கும் உதவாத களர் நிலத்தைப் போன்றவர்கள் (கு.406) இக்குறள் கல்வி கற்காதவரைக் களர்நிலம் போன்றவர் என்று இழித்துரைக்கின்றது. செவியில் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள், அவியினும் வாழினும் என்? செவிகளால் நுகரும் இன்பத்தை அறியாமல், வாயால் நுகரும் இன்பத்தை மட்டும் உணரும் விலங்குகளைப் போன்ற வர்கள் இவ்வுலகிலே செத்தால்தான் என்ன? வாழ்ந்தால் என்ன? அவர்களால் யாருக்கும் எப்பயனும் இல்லை (கு.420) இக்குறள் நல்லறங்களைக் கேட்டு அவ்வழியிலே நடக்காமல், வீணில் உண்டு உறங்கும் மக்களை விலங்குகள்--மிருகங்கள்---மாக்கள் என்று திட்டுகிறது. ஓதிஉணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் அடங்காப் பேதையில், பேதையார் இல் நூல்களைப் படித்து அவற்றின் கருத்தை அறிந்திருப்பான். அக்கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவான். ஆனால் தான் அக்கருத்துக்களுக்கு அடங்கி நடக்கமாட்டான். இத்தகைய அறிவற்றவனைக் காட்டிலும் பேதைகள் வேறு யாருமே யில்லை. (கு.834) கற்றறிந்தவன் கல்விக்குக் தகுந்தபடி நடவானாயின் அவன் அறிவற்றவன், அவனைக்காட்டிலும் அறிவற்றவர் வேறில்லை என்று குற்றஞ்சாற்றுகிறது இக்குறள். ஏவவும் செய்கலான், தான்தேரான், அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய். அறிவுள்ளவர் சொல்வதையும் கேட்கமாட்டான்; தானும் அறிந்து செய்யமாட்டான்; இத்தகைய ஒரு உயிர், அவன் உடம்பைவிட்டு ஒழியும் வரையிலும், அவன் ஒரு நோய் போன்றவன். (கு.848) சொல்லறிவோ, சொந்த அறிவோ இல்லாதவன் மனிதனே அல்லன்; அவன் அவனைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஒரு நோய் போன்றவன்; என்று இகழ்ந்துரைக்கின்றது இக்குறள் உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான், வையத்து அலகையா வைக்கப் படும் உயர்ந்தோர் உண்டு என்று சொல்வதை, இல்லையென்று மறுப்பவன் மனிதனாக எண்ணப்பட மாட்டான். இவ்வுலகில் உலவும் ஒரு பேயாக எண்ண்ப்படுவான் (கு.850) உயர்ந்தோர் கூறும் உண்மைகளை மறுப்பவன் மனிதன் அல்லன்; மக்களுக்கு அச்சம் தரும் பேயாவான்; என்று இழித்துரைக்கின்றது இக்குறள். தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. மக்கள் உயர்வுக்குரிய நிலையிலிருந்து தாழ்ந்தபோது அவர்கள் தலையிலிருந்து விழுந்து இழிவுற்ற மயிரைப் போலக் கருதப்படுவர் (கு.974) மக்கள் தம் உயர்வுக்குக் காரணமான நிலையைக்காத்துக் கொள்ள வேண்டும்; காத்துக்கொள்ளாமல் கீழ்நிலையை அடைவார்களானால் அவர்கள் ஒருவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்; தலையிலிருந்து எடுக்கப்பட்ட மயிரைப்போலத் தான் கருதப்படுவார்கள்; என்று கடுமையாகக் கூறுகிறது இக்குறள். தீமை செய்கின்றவர்களை - நெறிதவறி நடப்பவர்களை அறிவற்றவர்களை - இவ்வாறு கண்டித்துக் கூறும் செய்யுட்கள் இன்னும் பல உண்டு. உதாரணத்திற்காக மட்டும் இங்கே சில பாடல்கள் காட்டப்பட்டிருக்கின்றன. திருவள்ளுவர் தீமையை வெறுப்பவர்; தீமையிலே சிக்கித் திகைக்கும் மக்களுக்கும் இடித்துப் புத்தி புகட்டுகின்றவர்; மக்கள் அனைவரும் நன்னெறியிலே நடந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்னும் மனப் பண்பு உள்ளவர். இவ்வுண்மையை மேலே காட்டிய செய்யுட்கள் விளக்குகின்றன. இரண்டாவது பகுதி இப் பகுதியில் கூறப்படுகின்றவை, அறத்துப் பாலில் காணப்படும் குறள்களை அடிப்படையாகக் கொண்டவை. இல்லறத்தைப் பற்றி வள்ளுவர் கொண்ட கருத்துக்களும், துற வறத்தைப் பற்றி அவர் கொண்ட கருத்துக்களும் ஆறு தலைப்புக்களில் விளக்கிக் கூறப்படுகின்றன. இவைகளில் இல்வாழ்வோர் கடமை, துறவிகளின் கடமை இவை களைத் தெளிவாகக் காணலாம். இல்லற வாழ்வு எல்லோர்க்கும் இன்பம் வாழப் பிறந்தவர்கள் மக்கள். இவ்வுலகத்திலே இன் பத்துடன் வாழ்வதற்கு எல்லா மக்களுக்கும் இன்ப வாழ்வைப் பெறுவதற்கே எந்நாளும் முயற்சி செய்ய வேண்டும்; இன்ப வாழ்வுக்கு முட்டுக்கட்டைகளாக நின்று தடுப்பவை எவை யானாலும் சரி, அவைகளை அடியோடு களைந்தெறிய வேண்டும். முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொணடு அவற்றை நிறைவேற்ற முயல வேண்டியது மக்கள் கடமை. இதுவே எக்காலத்திலும் அறிஞர்களால் ஆதரிக்கப்பட்டு வந்த கொள்கை. மக்கட் பிறவி துன்பத்திற்கு இடமானது; பாபத்தின் காரணமாகவே மக்களாகப் பிறந்திருக்கின்றனர்; மக்கள் பிறவி யிலே இன்பத்திற்கு இடமே இல்லை; முன்செய்த வினையே இப்பிறவிக்குக் காரணம்; தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கும்; ஆதலால் ஒவ்வொருவரும் உழைப்பதை மட்டுமே கடமையாகக் கொள்ள வேண்டும்; உழைப்பின் பலனைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது; என்று கூறுகின்றனர் சிலர். இக்கூற்று தனியுடைமைச் சமுதாயத்தின் உயிர் நாடியாகும். இக்கொள்கை யிலே மக்களுக்கு நம்பிக்கையிருந்தால் தான் தனியுடைமைச் சமுதாயம் நிலைத்து நிற்க முடியும். பகுத்தறிவு வாதிகள் - முற்போக்கு வாதிகள் - மனித சமுதாயத்தின் நல்வாழ்வை விரும்புவோர் இக்கொள்கையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வள்ளுவர் காலத்தில் இக்கருத்து நிலைத்திருந்தது; வள்ளுவர் இக்கருத்தை வெளிப்படையாக மறுக்கவில்லை. ஆனால் இக்கருத்தை அப்படியே ஒப்புக்கொண்டவர் என்று சொல்ல முடியாது. அவர் தமக்கே உரிய பாணியில் இக் கருத்துக்கு மாறாக உரைக்கின்றார். மக்கள் இவ்வுலகிவே இன்பத்துடன் வாழ முடியும்; வாழ்வதற்கு முயலவேண்டும். என்பதை மிக நயமாக வலியுறுத்துகிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் இவ்வுலகிலே வாழ வேண்டிய முறைப்படி அறநெறியிலே நின்று வாழ்கின்றவன் சிறந்தவன்; வானுலகில் உள்ள தெய்வத் தை மக்கள் எவ்வளவு உயர்வாக மதிக்கின்றார்களோ அவ்வளவு உயர்வாக அவன் இவ்வுலகிலே மதிக்கப்படுவான். (கு.50) இக்குறளின் கருத்துப்படி மக்கள் அனைவரும் இவ்வுலகிலே வாழவேண்டுமானால் இன்றுள்ள சமுதாய அமைப்பு இதற்கு இடம் தராது. செல்வமும் வசதியும் படைத்த சிலர் தாம் இவ்வாறு வாழ முடியும். இல்லாதவர், உள்ளவர், சுரண்டு கிறவர், சுரண்டப்படுகிறவர், ஏமாறுகின்றவர், ஏமாற்றப்படு கின்றவர் என்ற வேற்றுமைகள் வேரோடியிருக்கும் சமுதாயமே இன்றைய சமுதாயம். இச்சமுதாயத்திலே திருக்குறளுக்கு இலக்கியமாக எல்லோரும் எப்படி வாழ முடியும்? இதுபோன்ற கருத்துள்ள குறட்பாக்கள் நமக்கு உணர்ச்சி யை ஊட்டுகின்றன. அறிவும், செல்வமும், நல்ல நடத்தையும், அன்பும், ஒற்றுமையும் கொழிக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகின்றன. கணவன் மனைவி மணம் புரிந்துகொண்டு குடும்பமாக வாழ்வதே இந்த இல்லறம். இனிது நடைபெற வேண்டுமானால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒற்றுமையிருக்க வேண்டும். உள்ளத்திலே நடத்தையிலே பண்பிலே அவர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்; ஒன்றுபட்ட தம்பதிகளின் வாழ்விலே தன் இன்பம் தழைக்கும். அமைதியை விரும்பும் கணவனும், ஆடம்பரத்தை விரும்பும் மனைவியும் ஒன்றுபட்டு வாழ முடியாது; குறைந்த வருமான முள்ள கணவனும், ஊதாரித்தனத்திலே ஊன்றி நிற்கும் மனைவி யும் ஒன்றுபட்டு வாழமுடியாது; நற்குணங்கள் நிரம்பிய நங்கை யும், துர்க்குணங்கள் நிறைந்த கணவனும் சேர்ந்து வாழமுடியாது. இத்தகையவர்கள் ஒன்றாக்க் கூடி வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்க்கை போலி வாழ்க்கைத்தான். இன்பமற்ற இருண்ட வாழ்வாகத்தான் இருக்கும். வள்ளுவர் கூறும் அறிவுரைகளாவ் இவ்வுண்மையை உணரலாம். மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை மனைவியிடம் இல்லறத்திற்கேற்ற சிறந்த குணங்கள் அமைந்திருக்க வேண்டும்; அவற்றுடன் குடும்ப வரவு செலவைக் கவனிக்கும் திறமையும் இருக்க வேண்டும்; கணவனுடைய வருமானத்தை அறிந்து அதற்குத் தகுந்தவாறு செலவு செய்யக் கூடிய அறிவும் வேண்டும்; அவளே சிறந்த மனைவி. (கு. 51.) இவ்வாறு மனைவியின் இலக்கணத்தைக் கூறினார் வள்ளுவர். மனைவிக்குச் சிறந்த குணங்கள் வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகின்றார். மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் இல்வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல பண்புகள் மனைவியிடம் இல்லாவிட்டால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புக்களை உடையவாயினும் பயன் இல்லை. (கு.52.) இக்குறளிலே இல்வாழ்வு சிறந்து விளங்குவதற்கு மனைவி யின் நல்ல குணங்களே அடிப்படை என்று வலியுறுத்தினார். இதற்கு அடுத்த குறளிலே இதை இன்னும் அழுத்தம் திருத்த மாகக் கூறுகின்றார். இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால்; உள்ளதுஎன் இல்லவள் மாணாக் கடை. மனைவி, சிறந்த குணங்களை உடையவளாக இருந்தால் அவளைப் பெற்ற கணவனுக்கு இல்லாத செல்வம் ஒன்றுமே யில்லை; மனைவி மாசுள்ளவளானால், அவளைப் பெற்ற கணவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தால் தான் என்ன? அவன் வாழ்விலே மகிழ்ச்சியும் இல்லை; இன்பமும் இல்லை. (கு.53) இச்செய்யுட்கள் வாழ்க்கைத்துணை நலம் என்ற அதி காரத்தில் உள்ளவை. மனைவிக்கு வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியே இப்பத்துப் பாடல்களிலும் கூறப்படுகின்றன. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவான் பெய்எனப் பெய்யும் மழை வேறு தெய்வத்தை வணங்காமல், தன் கணவனையே தெய்வமாக வணங்கி, அவன் விழித்து எழுவதற்குமுன் தான் பிழித்து எழுகின்றவளே சிறந்த மனைவி; அவள் வானத்தைப் பார்த்து மழை பெய் என்று சொன்னால் பெய்யும். (கு.55) இக்குறளும் வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகார கத்தில் உள்ளதுதான். திருவள்ளுவர் காலத்தில் பெண்ணுக்கு உரிமையில்லை. அவர்கள் ஆண்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டி யவர்களாகத்தான் இருந்தனர். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்; என்ற கொள்கை நிலை பெற்றிருந்த காலம் அது. ஆதலால் மனைனிவக்கு வேண்டிய சிறந்த குணங் களை மட்டும் வலியுறுத்திக் கூறினார். மனைவியின் மாண்மைக் கூறுவதற்கு வாழ்க்கைத் துணை நலம் என்று ஒரு தனி அதிகாரம் வகுத்திருப்பதைப் போல கணவன் மாண்பைக் கூறத் தனி அதிகாரம் ஒன்றும் கூறப்பட வில்லை. இல்லதென் காதலன் மாணாக்கடை என்று ஒரு குறள் கூடச் சொல்லப்படவில்லை. ஆதலால் வள்ளுவர் ஆண் பெண் சமத்துவத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆணுக்குப் பெண் அடங்கி வாழ வேண்டும் என்பதே அவர் கொள்கை. இக்கொள்கை பெண்ணுக்குப் பெருமையளிப்பது ஆகாது என்று இவ்வாறு கூறுவோர் உண்டு. இக் கருத்து தவறானது. வாழக்கைத் துணை நலம் என்னும் அதிகாரம் சிறப்பாகப் பெண்களுக்குக் கூறப் பட்டிருப்பது போல, பிறன் இல் விழையாமை, வரைவின மகளிர், என்னும் அதிகாரங்கள் ஆண்களுக்காகக் கூறப்பட்டிருக்கின்றன. ஏனைய இல்லறவியல் அதிகாரங்கள் பெரும்பாலும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய அறங்களையே கூறுகின்றன. இவைகளை ஆழ்ந்து சிந்தித்தால் பெண்ணுக்கு வேண்டும் கட்டுப்பாடுகளும், நடத்தை களும் ஆணுக்கும் வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தென் பதைக் காணலாம். பெண்களுக்குள்ள பொறுப்புக்களைவிட ஆண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார். கணவனும் மனைவியும் ஒத்துவாழ்வதே சிறந்த வாழ்வு. அவர்கள் இவ்வுலகில் இன்பமுடன் வாழ முயல வேண்டும; அதுவே உயர்ந்த வாழ்வாகும் என்பதே இல்லறத்தைப் பற்றி வள்ளுவர் கொண்ட கருத்தாகும். வள்ளுவர் கூறும் இவ்வுண்மையை நாம் இன்றும் கண் கூடாகக் காணலாம். நல்ல வருமானம் உண்டு; குறைவில்லாத செல்வம் உண்டு; வாழ்வதற்கான இட வசதியுண்டு. இவ்வள விருந்தும் கணவன் மனைவிகளுக்குள், ஒற்றுமையின்றேல் அவர்கள் வாழ்க்கையிலே இன்பம் இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். வீடு வாசல் ஒன்றும் இல்லை; பகல் முழுதும் வேலை செய்தால் தான் இரவிலே உணவுண்டு. ஒரு நான் வேலைக்குப் போகாவிட்டால் அன்று முழுவதும் பட்டினி தான். மறு நாளும் பட்டினி தான். அவர்கள் வறுமையின் எல்லைவரையிலும் சென்றவர்கள். ஆனால் அத்தம்பதிகளிடம் மன ஒற்றுமையுண்டு. இருவரும் இணைபிரியாத காதலர்கள். இவர்கள் வாழ்க்கை யிலே சண்டை சச்சரவில்லாமல் ஒற்றுமையாக வாழ்வதைக் காண்கிறோம். ஆகையால் காதலன் காதலிகளுக்கிடையே உள்ள அன்புதான் இன்பம் ஊற்றெடுக்கும் இல்வாழ்க்கைக்கு அடிப்படையாகும். இல்வாழ்வோர் கடமை அனைவரிடத்திலும் அன்புடன் பழகுதல்; புதிதாக வரும் விருந்தினர்க்கு உணவிட்டு உதவி செய்தல்; எப்பொழுதும் இனிய சொற்களையே இயம்புவது; பிறர் செய்த நன்றியை மறவாமல் மனத்தில் வைத்திருப்பது; நீதிக்கு மாறாக நடக்காமல் நடுநிலை மையிலே நடப்பது; கெட்ட வழியிலே செல்லாமல் நல்ல வழியிலே அடங்கி நடப்பது; எந்த நெருக்கடி நேர்ந்தாலும் நல்லொழுக்கத்தைக் கைவிடாமல் வாழ்வது; பிறர் புரியும் தீமைகளைப் பொறுத்துக் கொள்வது; பிறர் வாழ்வைக் கண்டு பொறாமைப் படாமல், தாம் முன்னேறுவதற்கு முயல்வது; மற்றவர்களை அவர்கள் இல்லாத இடத்திலே பழித்துப் பேசாமல் இருப்பது; தீமைகளைக் கண்டு அஞ்சி அவைகளைச் செய்யாமல் இருப்பது; பலர்க்கும் உதவி செய்வதன் பெருமையை அறிந்து அவ்வழியிலே நடப்பது; வறியோர்க்கு உதவி செய்து அவர்கள் துன்பத்தைத் தீர்ப்பது; எல்லோரும் புகழும்படி சிறந்த செயல் களைச் செய்து வாழ்வது; இவைகள் எல்லாம் இல்லறத்தில் உள்ளோர் செய்யவேண்டியவை; பின்பற்ற வேண்டியவை. இவைகள் ஆண்களும் பெண்களும் பின்பற்ற வேண்டியவைகள். ஆயினும் வள்ளுவர் இவற்றை ஆண்களுக்குக் கூறுவது போலவே சொல்லுகிறார். இல்லாதவர் பின்பற்றுவது எப்படி? இல்லறத்தில் இருப்போர் இயற்றவேண்டிய கடமை களில் குறிப்பாகச் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை இல்லறத்திலே வாழ்கின்றவன், துறவிகளுக்கும் உணவின்றி வருந்தும் வறியோர்களுக்கும், ஆதரவின்றி இறந்தவர்களுக்கும் துணையாவான். (கு.42) தென் புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை. முன்னோர்கள் (பிதிரர்) தெய்வம், விருந்தினர் (அதிதிகள்) சுற்றத்தார், தான், என்னும் இந்த ஐந்து இடத்தில் உள்ளவர் களையும், அறநெறிப்படி காப்பாற்றுவது இல்வாழ்விலே இருப்பவனுடைய தலை சிறந்த கடமையாகும் (கு.43) இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு இல்லறத்திலே இருந்து செல்வங்களைப் பாதுகாத்து இல்லறம் நடத்துவதெல்லாம், விருந்தினரைப் பாதுகாத்து, அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டே யாகும் (கு.81) இல்லறத்தார்க்குச் சொல்லப்படும் இம்மூன்று குறள் களையும் நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இக்குறள் களின் கூற்றை அறங்களை - இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் இன்று பின்பற்றி நடக்க முடியுமா? இந் நாட்டு மக்கள் இதற்கேற்ற வாழ்க்கை வசதி பெற்று வாழ்கின்றார்களா? இடமும், பொருளும் இருந்தால் தான் துறவிகளுக்குத் துணை செய்ய முடியும்; வறுமையுள்ளவர்களுக்கு வழங்க முடியும். இறந்தவர்களுக்கு ஆவன செய்ய முடியும். முன்னோர்களை வழிபடுவதற்கும், தெய்வத்தைப் பணி வதற்கும், விருந்தினரைப் பேணுவதற்கும், சுற்றத்தாரைப் பாதுகாப்பதற்கும், தன்னைத் தான் காத்துக் கொள்ளுவதற்கும் பொருளும் இடமும் வேண்டும். இவைகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? வறியவர்கள் அன்றாட வாழ்க்கையை ஒட்டுவதற்கு முடியாமல் அவதிப்படுகின்றனர். மக்கள் சமுதாயத்தில் பெரும் பாலோர் வறியவர்கள்தாம். இவர்கள் விருந்தினரைப் பேணுவது எப்படி? வள்ளுவர் காலத்திலே வறியவர்கள் வாழ்ந்தனர்; தந்நலங் கருதாத துறவிகள் இருந்தனர்; ஆதரவற்று அலைவோரும் இருந்தனர்; இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இல்லறத் தார்க்குரியது என்பதே முன்னோர் கொள்கை. இக்கொள்கை யையே வள்ளுவரும் ஒப்புக்கொண்டு உரைத்தார். கல்வியைப்பற்றி மக்களுக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதைப்பற்றி வள்ளுவர் கூறுவது இக்காலத்திற்கு ஏற்றதாக இருக்க முடியாது. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை அவனை அறிவுள்ளவர்கள் நிறைந்த சபையிலே முதலிடத்தில் அமரும் படி கல்வி கற்பித்தலாகும் (கு.67) இல்லறத்தில் வாழ்வோன் தன் மகனுக்குச் செய்ய வேண்டிய முதற் கடமை இதுவென்று குறிப்பிடுகிறார். சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே. என்பது புறநானூறு. இக் கொள்கையைப் பின்பற்றியதே இக்குறளும். வள்ளுவர் காலத்திலே இன்றிருப்பது போன்ற தனித்தனிப் பள்ளிக்கூடங்கள் இல்லை. தனிப்பட்ட ஆசிரியர்கள் தயவிலே தான் மக்கள் கல்வி கற்க வேண்டும். தந்தை தன் மகனை ஆசிரியர் வாழும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர் இருக்கும் இடம் தொலை தூரமாகவும் இருக்கலாம். தன் மகனை ஆசிரியரிடம் அனுப்பி வைக்கும் பொறுப்பைத் தந்தை ஏற்றால் தான் மகன் கல்வி பயில முடியும். இது அக்காலநிலை. இன்றைய நிலை வேறு; அனைவரும் எளிதிலே கல்வி கற்க முடியும். அரசாங்கமே மக்களுக்குக் கல்வி பயிற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. எல்லா மக்களுக்கும் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்பதே உண்மையான மக்கள் அரசாங்கங்களின் கொள்கையாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியைக் கற்பிக்கும் கடமை அரசாங்கத்தைச் சேர்ந்தது என்பதை மறுப்பவர் எவரும் இல்லை. இன்று இக் கொள்கை நடைமுறையில் இல்லாவிட்டாலும், பிற்காலத்தில் நடைமுறைக்கு வரத்தான் போகிறது. இன்றுள்ள நிலைமையிலே வள்ளுவர் கூறும் இக் கொள்கையை ஒவ்வொரு தந்தையும் பின்பற்ற முடியாது. எல்லாத் தந்தைமார்களுக்கும், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையுண்டு. நல்ல வருமானமும், நிலைத்த செல்வமும் உடையவர்களே இப்பொழுது தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகிறது. இவைகள் இல்லா தவர்களால் என்ன செய்ய முடியும்? தந்தைகயாக இருப்பவன் தன் மகனைப் படிக்க வைப்பதே மகனுக்குச் செய்யும் முதற் கடமை என்ற வள்ளுவர் குறளை மனத்திலே மறவாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இதை மறவாத ஒவ்வொரு தந்தையும் மகனைப் படிக்க வைக்கவே முயற்சி செய்வான். இப்படி ஒவ்வொருவரும் முயற்சி செய்வார் களானால் வெற்றி காண்பார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒன்றுபட்டு வற்புறுத்துவார்களானால் நிறை வேறாமற் போகாது. இத்தகைய சிறந்த கடமைகளை வலியுறுத்துகிறார் வள்ளுவர். ஆண் பெண் சமத்துவம் மனைவி சொற்கேட்டல் திருவள்ளுவர் ஆண் பெண் சமத்துவத்தை விரும்ப வில்லை; பெண்ணை இழிவாகவே எண்ணுகின்றார்; என்று கூறுவோர் உண்டு. பொருட்பாலிலே பெண் வழிச் சேறல் என்ற ஒரு அதிகாரம் உண்டு. அதில் உள்ள பத்துக் குறள்களும் பெண் களுக்கு ஆண்கள் அடிமைப்படக் கூடாது என்று வலியுறுத்து கின்றன. அவர்கள் சொல்லுவதுதான் சரியென்று நம்பி நடப்பவன் வாழ்விலே வெற்றிபெற மாட்டான் என்று இயம்புகின்றன. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை, எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, ஒருவனுக்கு எப்பொழுதும் நல்லவர்கள் கூட்டத்தில் இருக்கும் போது நாணத்தையே உண்டாக்கும் (கு.903) இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் தன் மனைவிக்கு அஞ்சுகின்றவன் நல்லவர்களுக்கு நன்மை செய்வதற்குக் கூட எந்நாளும் அஞ்சுவான். (கு.905) அறவினையும், ஆன்ற பொருளும், பிறவினையும் பெண் ஏவல் செய்வார்கண் இல் அறத்தைச் செய்தலும், சிறந்த செல்வத்தைச் சேர்த்தலும் இவ்விரண்டின் வேறான செயல்களும் தம் மனைவியின் ஏவலைச் செய்வாரிடம் இல்லை.”(கு.909) இவ்வாறே பத்துக் குறள்களிலும் ஆண் மகன் தனக்கென்று ஒரு கொள்கையும் இல்லாமல் பெண்ணடிமையாவதை வெறுத்துக் கூறப்படுகின்றன. பெண் வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் கூறப்படுவன ஆண் மகனுக்கு உரைக்கும் அறிவுரைகள். பெண்ணைப் பழிப்பது அன்று. இவ்வதிகாரம் பொருட்பாலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் பற்றியும், பொதுச் செய்திகளைப் பற்றியும் சொல்லுவதே பொருட்பால் அரசி யலிலும், பொதுக் காரியங்களிலும் பெண்கள் ஆலோசனை கூறத் தகுதியற்றவர்கள் என்பதே வள்ளுவர் கருத்தாகக் கொள்ள வேண்டும். வள்ளுவர் காலத்திலே பெண்கள் கல்வி கற்காதவர்களா யிருந்தனர்; இல்லறத்திற்குரிய கடமைகளைச் செய்வதற்கே அவர்களுக்கு நேரம் இருந்தது; அரசியலிலோ, பொதுக் காரியங் களிலோ அவர்கள் தலையிடுவதில்லை. ஆகையால்தான் அரசி யலைப் பற்றியோ, பொதுப் பணிகளைப் பற்றியோ ஆலோசனை கூறும் திறமை அவர்களுக்கு இல்லை. இக்காரணங்களால் தான் கணவன் தன் மனைவியின் சொல்லுக்கு அடிமையாகக்கூடாது. பெண்ணை இழிவு படுத்தினார் என்று உரைப்பது தவறாகும். பெண்ணடிமை பண்டைத் தமிழ் நூலாசிரியர்களிலே பெண்கள் நிலையை உயர்த்துவதற்கு வழி கோலியவர்களில் திருவள்ளுவரே தலைமையானவர். அறத்துப் பாலையும், ஏனைய பால்களையும் ஆழ்ந்து படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர். திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழர் சமுதாய நிலை எப்படி யிருந்தது? இல்லறத்திலே வாழ்ந்தவர்கள் எப்படி வாழ்ந்தனர்? சிறப்பாக ஆண்களும் பெண்களும் எத்தகைய உரிமையைப் பெற்றிருந்தனர்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருவள்ளுவர் ஆண் பெண் உரிமைகளைப் பற்றி என்ன கூறுகின்றார் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவைகளைக் கண்டறிந்தால் வள்ளுவரின் முற்போக்கான கருத்தை அறியலாம். வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சிக்காரர் என்று கூடச் சொல்ல முடியும். வள்ளுவர் காலத்திலும், அவர் காலத்துக்கு முன்னும் இந்நாட்டில் பெண்கள் அடக்கப்பட்டுத்தான் கிடந்தனர். ஆண் களுக்குத்தான் எல்லா உரிமைகளும் இருந்தன. பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் இன்பக்கருவிகளாகத்தான் கருதப் பட்டார்கள். பெண்களுக்குத் தான் கற்பு வேண்டும் என்பதைப் பற்றிக் கவலை காட்டியவர்களே இல்லை. இந்நிலைமை தோன்றியதற்குக் காரணம் பெண்கள் வீட்டிலே அடக்கப்பட்டுக் கிடந்தார்கள். ஆண்களே இல்லறத்தை நடத்துவதற்கு வேண்டிய பண்டங்களைத் தேடக்கூடிய உரிமை பெற்றிருந்தார்கள். செல்வம் தேடுவதும், சிறப்பாக இல்லறத்தை நடத்துவதற்கு உதவுவதும், ஆண்களின் பொறுப்பாக இருந்தது. இந்த நிலை ஏற்பட்ட பிறகு தான் பெண்கள் உரிமையிழந்த அடிமைகள் ஆனார்கள்; ஆண்கள் அவர்களை ஆளும் தலைவரானார்கள். ஒரு ஆண்மகன் பல பெண்களை மணந்து கொள்ளலாம்; மணந்து கொண்ட மனைவியைத் தவிர வேறு பல பெண் களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்; இவர் களைத் தவிர பரத்தையர், கணிகையர், வரைவின் மகளிர், விலை மாதர், பொது மகளிர் என்ற பெயர்களைக் கொண்ட வேசையர்களுடன் கூடியும் வாழலாம்; பெண்கள் மட்டும் ஒருவனைப் பற்றி ஓர் அகத்திலே யிருந்துதான் வாழ வேண்டும். இது வள்ளுவர்க்கு முன்னிருந்த சமுதாயம் அமைப்பு. இந்த நாகரிகத்தைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். மனைவிமார்கள் காதற் கிழத்தியர்; வைப்பாட்டிமார்கள் காதற் பரத்தையர்; வேசையர்கள் சேரிப் பரத்தையர்; என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. சமநீதி ஆண்களின் இத்தகைய அநீதியான செய்லகளை வள்ளுவர் ஆதரிக்கவில்லை. ஒருவன் பல பெண்களை மணப்பது கூட வள்ளுவர் விரும்பாத செய்தி. வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் மனைவியைக் குறித்து வரும்சொற்கள் ஒருமையில் தான் இருக்கின்றன. மாண்புடையாள்; வளத்தக் காள்; இல்லாள்; இல்லவள்; பெண்ணின்; தொழுது எழுவாள்; பெண்; புகழ் மிகுநத இல்; மனை; என்ற சொற்களே அப் பாடல்களில் வருகின்றன. இவைகள் ஒருமைச் சொற்கள், இதனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே வள்ளுவர் கருத்தென்று தெரியலாம். வரைவின் மகளிர் என்ற அதிகாரம் பொருட்பாலில் அமைந்திருக்கின்றது. இவ்வதிகாரம், அறத்துப் பாலில் இல்லற வியலில் அமைந்திருந்தால் மிகவும் பொருத்தமாகும். இவ் வதிகாரத்திலே ஆண்கள் பரத்தையருடன் கூடி மகிழ்வதைக் கண்டிக்கிறார். ஆண்களுக்கு அறிவுரை கூறும் முறையில் தான் இவ்வதிகாரத்தில் உள்ள குறள்கள் அமைந்திருக்கின்றன; அதிகார முறையில் அறிவுறுத்துவனவாக இல்லை. வள்ளுவர் காலத்தில் இருந்த நிலைமையைக் கருதியே அவர் இவ்வாறு கூறினார். அன்பின் விழையார், பொருள் விழையும் ஆய்தொடியார் இன்சொல், இழுக்குத் தரும். வேசையர்கள் அன்பினால் விரும்பமாட்டார்கள்; பொருள் காரணமாகவே அப்பொதுமகளிர் விரும்புவார்கள்; அவர்கள் பேசும் இனிய மொழிகளால் நன்மையில்லை; துன்பந் தான் உண்டாகும் (கு.91) பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇ அற்று. பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யன் போடு கூடிய தழுவல், ஒரு இருட்டு அறையிலே ஒரு அநாதைப் பிணத்தைத் தழுவிக்கொண்டதைப் போல ஆகும் (கு.813) வரைவுஇலா மாண் இழையார் மெல்தோள், புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. யாரையும் மணந்து கொள்ளாத பொது மகளிரின் மெல்லிய தோள்கள், பெருமையற்ற அற்பர்கள் விழுந்து முழுகிக் கிடக்கின்ற நரகமாகும் (கு. 919) வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் உள்ள பத்து வெண் பாக்களும் இவ்வாறே அறிவுரை கூறுகின்றன, (வரைவு இல்மகளிர் - வரைவின் மகளிர்; மணமாகாத மாதர்கள்.) ஆண்களுக்கும் கற்பு அறத்துப்பாலில் இல்லறவியலில் உள்ள பிறனில் பிழை யாமை என்னும் அதிகாரமும் குறிப்பிடத்தக்கது. பெண்ணைப் போலவே ஆண் மகனும் கற்பு நெறியைப் பின்பற்ற வேண்டும்; விபசாரம் செய்யும் பெண்களை உலகத்தார் எள்ளி நகைப்பது போலவே விபசாரம் செய்யும் ஆண்களையும் அவமதிப்பார்கள். இதுவே இவ்வதிகாரத்தின் திரண்ட பொருள். பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் இகவா ஆம், இல் இறப்பான் கண் பகை, பாவம், அச்சம், பழி என்று சொல்லப்படும் இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடம் நெறி தவறி நடப்ப வனை விட்டு நீங்கமாட்டா; அவனோடு எப்பொழுது நிலைத்து நிற்கும் (கு.146) அறன் இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன் இயலாள் பெண்மை நயவா தவன் அறத்தின் வழியிலே நின்று இல்வாழ்க்கை நடத்து கின்றவன் யார் என்றால் பிறன் மனைவியின் பெண் தன்மையை விரும்பாதவனேயாவான் (கு.150) இவ்வாறே பிறனில் விழையாமையில் உள்ள பத்து வெண் பாக்களிலும் அறிவுரை காணப்படுகின்றன. தன் கணவனைத் தவிர வேறு ஆடவனை விரும்பாத பெண்ணே கற்புள்ளவன்; அதுபோலத் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை விரும்பாத ஆண் மகனே ஒழுக்கம் உள்ளவன்; கற்புள்ளவன்; என்று கூறுவதே இவ்வதிகாரத்தின் கருத்தாகும். ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ என்று பாரதியார் கேட்கின்றார். இது வள்ளுவர் கருத்தின் விளக்கம் என்றால் அதில் தவறில்லை. பலதார மணத்திற்கு எதிராக ஏகதார மணத்தைக் குறிப்பாக உரைத்தல், வரைவில் மகளிர் கூட்டுறவை வெறுத்தல், பிறனில் விழையாமையை வலியுறுத்தல், பரத்தையிற் பிரிவு கூறப்படாமை இவைகள் எல்லாம் வள்ளுவரின் முற்போக்கான கொள்கையைக் காட்டும். முன்னோர் முறைக்கு மாறாக ஏகதார மணத்தைக் குறிப்பதும் வேசியர் உறவை வெறுத்திருப்பதும் அக்காலத்திலே வள்ளுவர் காட்டிய புதிய வழியாகும். ஆணுக் கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற அநீதியை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பெண் இனத்தை அவர் இழிவான எண்ணவில்லை; பெருமையாகவே போற்றுகின்றார். கணவனது வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்ய அறிந்திருக்க வேண்டும் மனைவி என்று வள்ளுவர் கூறியிருக் கின்றார். வளத்தக்காள் என்ற சொற்றொடரால் இதைக் குறிக்கின்றார். இதனால் பெண்களுக்குக் கல்வியறிவு வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தாகும். கல்வியைப்பற்றி அவர் கூறும் கருத்துக்களும், ஆண் களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகவே அமைந்திருக்கின்றன. இவைகள் எல்லாம் வள்ளுவர் பெண்களிடம் கொண்ட மதிப்பையே காட்டும்; அவர் ஆணும் பெண்ணும் சமம் என்று கருதுகிறார் என்பதையே காட்டும். சமுதாய ஒற்றுமை மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான பல கருத்துக்களையும் திருக்குறளிலே காணலாம். வள்ளுவர் காலத்திலே மக்கள் தனித்தனிக் குடும்பங்களாகச் சிறந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சண்டைச் சச்சரவுகள் உண்டாகாமலிருக்க வேண்டும்; அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழவேண்டும். அவர்களுக்குள் தொடர்பு இருக்க வேண்டும். அன்பும் அமைதியும் சமுதாயத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இந்நிலைமை யுண்டாக வேண்டு மானால், ஒவ்வொருவரிடமும் அன்பு, விருந்தோம்பல், செய்நன்றி மறவாமை, அடக்கம், ஒழுக்கம், பொறுமை, இன் சொல் முதலிய பண்புகள் வளர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கின்றார் வள்ளுவர். செய்நன்றி அறிதல் செய்நன்றி அறிதல் என்பதைப்பற்றி மட்டும் சிறிது ஆராய்ந்தால் போதும். சமுதாய ஒற்றுமைக்கு மக்கள் இனம் முன்னேற இவ்வுணர்ச்சி எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். ஒருவர் செய்த நன்றிக்காக அவரை வணங்குவதோ, அல்லது அவரையே நினைத்துக் கொண்டிருப்பதோ மட்டும் செய்ந் நன்றி அறிதல் ஆகாது. பிறர் நமக்குச் செய்த நன்மையைப் போல நாமும் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும்; இந்த எண்ணம் உணர்ச்சி பிறக்க வேண்டும். இதுதான் செய்ந்நன்றி மறவாமையின் பலனாகும். நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று. ஒருவர் செய்த நன்றியை மறந்து விடுவது நன்மையாகாது; ஒருவர் செய்த தீமையை அவர் செய்த அன்றே மறந்து விடுவது தான் நல்லது (கு108) கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் முன்பு நமக்கு நன்மை செய்தவர். பின்பு நம்மைக் கொல் வதைப் போன்ற தீமையைச் செய்தாராயினும் அவர் முன்செய்த ஒரு நன்மைமையை நினைத்தாலே அவர் செய்த தீமை மறந்து போகும். (கு.110) இவைகளைப் போலவே செய்ந்நன்றியறிதலின் சிறப்பைப் பற்றி அவ்வதிகாரத்தில் உள்ள பத்து வெண்பாக்களும் கூறு கின்றன. நாம் துன்புற்றபோது நமக்குப் பிறர் செய்த நன்றியை என்றும் மறத்தல் கூடாது. மறவாமல் மனத்தில் வைத்திருந்தால் தான் பிறர் துன்புறும்போது நாமும் அவர் துன்பத்தைக் களைய முந்துவோம். இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது. செய்ந்நன்றி மறவாத பண்பு ஒவ்வொரு மனிதனிடமும் குடி கொண்டிருக்குமானால் சாதி, மதப் பூசல்களுக்கு இடமில்லை; சமுதாயத்தில் சண்டை சச்சரவுகளும் நிலைத்திருக்கமாட்டா. பிறர் செய்த நன்மையை மறந்து விட்டுப் பிறர் செய்த தீமையை மட்டும் மனத்திலே வைத்திருப்பதனால் தீமைதான் விளையும். நமக்குத் தீமை செய்தோர்க்கு நாமும் தீமை செய்வதற் கான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்போம். சமயம் கிடைத்தபோது பழிக்குப் பழிவாங்கத்தான் தோன்றும். இதனால் பகைமை தான் வளரும். எதிரிகள் பக்கம் பலர்; நமது பக்கம் பலர்; இவ்வாறு பிளவுபட்டு நிற்போம். இத்தகைய பிளவுக்கு மக்கள் ஆளாவார்களானால் சமுதாயத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க முடியாது. ஆகையால்தான் செய்ந் நன்றி மறவாமையை வலியுறுத்தி யிருக்கின்றார் வள்ளுவர். பிறனில் விழையாமை மக்கள் நாகரிக மில்லாதவர்களாக வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறையும் இருந்த தில்லை. ஆண் பெண்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர்; கும்பல் கும்பலாக வாழ்ந்தனர். தாய், மகள்; தந்தை, மகள்; அண்ணன், தங்கை; மக்கள் வாழ்ந்து வந்த காலம் ஒன்றுண்டு. அக்காலத்தில் மண வாழ்க்கை முறையே அவர்களுக்குத் தெரியாது. மக்கள் நாகரிகப் படியிலே அடிவைத்து ஏறத்தொடங்கிய பிறகுதான் அவர்களிடம் மண வாழ்க்கை முறை தோன்றியது. கணவன் மனைவி என்ற கட்டுப்பாடும் பிறந்தது. தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறையும் ஏற்பட்டது. ஆனால் சமுதாய ஒற்றுமையைக் கருதி ஒன்றை மட்டும் அவர்கள் கண்டிப்பான அறமாக அமைத்தனர்; அவ்விதியைப் பின்பற்றியும் வந்தனர்; பின்பற்ற வேண்டும் என்று ஆண் மக்களை வற்புறுத்தினர். ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்ட ஒருத்தியை மற்றொருவன் விரும்பக்கூடாது என்பதே அக் கட்டுப்பாடு நீதி நூல்களில் எல்லாம் இக்கட்டுபாட்டை வலியுறுத்தி யிருக்கின்றனர். இதுவே சிறந்த ஒழுக்கம் - அறம் - நீதி என்றெல்லாம் எழுதியிருக்கின்றனர். இக்கட்டுப்பாட்டை மீறுகின்றவன் உயிருடன் இருக்கும்போது பழிக்கப்படுவான்; இறந்த பின்னும் நரகத்தை அடைவான் என்று பயமுறுத்தியும் இருக்கின்றனர். ஒருவன் மனைவியை மற்றொருவன் விரும்புவது சமூகத் துரோகமாகும்; கள்ள நட்புக் கொண்டிருப்பது சமுதாயக் கட்டுப்பாட்டுக்கு உலை வைப்பதாகும். இதனால் ஒரு குடும் பத்துக்கும், மற்றொரு குடும்பத்துக்கும் பகைமை உண்டாகும், இந்தத் தனிப் பகைமை சமுதாயக் கலகமாகவும் மாறிவிடும். ஆகையால்தான் பெண்களுக்குக் கற்பைக் கடமையாக்கியது போல், ஆண் மக்களுக்குப் பிறனில் விழையாமையைக் கடமை யாக்கினார் வள்ளுவர். பசிக்கொடுமை சமுதாயக் கட்டுப்பாடு ஒழுங்காக நடைபெறு வேண்டு மானால் மக்கள் பட்டினியால் பரிதவிக்கக் கூடாது. பட்டினிப் பட்டாளம் நாட்டிலே பெருகுமாயின் பல நல்ல செயல்க ளெல்லாம் நாசமாகிவிடும். பட்டினியால் வாடும் மக்கள் தமது உயிரைக் காத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிவார்கள் நீதி, நல்லொழுக்கம், அன்பு, பொறுமை முதலிய பண்புகளுக் கெல்லாம் ஆபத்து வந்துவிடும். சமுதாய ஒற்றுமைக்கு இடமே இராது ஆதலால் மக்களைப் பட்டினியில்லாமல் பாதுகாப்பது இல்லறத்தான் கடமை என்று கூறினார் வள்ளுவர். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி. வறியோரை வதைக்கும் பசியைப் போக்கும் சிறந்த செயலே செல்வம் பெற்ற ஒருவன் அச்செல்வத்தைச் சேர்த்துவைக்கும் இடமாகும் (கு226) பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது தான் பெற்ற உணவைப் பலரோடு பகுத்துண்ணும் செய் கையிலே பழகியவனை, பசியென்னும் தீயநோய் ஒருபொழுதும் தீண்டுவதில்லை (கு.227) இவ்வாறு ஈகையென்னும் அதிகாரத்திலே கூறுகின்றார். இதுவும் மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டுவதேயாகும் சிலர் அளவுக்குமேல் உண்ணுகின்றனர்; பலர் பட்டினி கிடந்து மடிகின்றனர்; இத்தகைய சமுதாயத்திலே ஒற்றுமை எப்படி நிலைத்திருக்கும். ஆதலால்தான் வறியோர்க்கு உணவளிக்க வேண்டியதே வளம் பெற்றவர் கடமை என்று வலியுறுத்தியிருக் கின்றார் வள்ளுவர். வள்ளுவர் காலத்திலே மக்கட் சமுதாயத்திலே செல்வரும் இருந்தனர்; வறியவர்களும் இருந்தனர். முன்பிறப்பில் நல்வினை களைச் செய்தவர்கள் இப்பிறப்பில் செல்வர்களாக வாழ் கின்றனர்; முற்பிறப்பில் தீவினை செய்தவர்கள் இப்பிறப்பில் வறியவர்களாய்ப் பிறந்து வாடுகின்றனர். என்ற நம்பிக்கை மக்களிடம் ஊன்றியிருந்தது. ஆதலால் உள்ளவர்கள், இல்லா தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அறத்தைத்தான் அவரால் வற்புறுத்த முடிந்தது. செய்ந்நன்றி அறிதல், பிறன் இல் விழையாமை, ஈகை முதலியவைகளை வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகின்றார். இதற்குக் காரணம் சமூகக் கட்டுப்பாடு அழியாது நிலைத்திருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. எல்லா மக்களும் இல்லற வாழ்விலே இன்புற்று வாழவேண்டும்; மக்கள் சமுதாயம் ஒன்று பட்டு வாழ வேண்டும்; முன்னேற்ற பாதையிலே முனைந்து செல்ல வேண்டும்; என்ற உறுதியான கருத்துள்ளவர் வள்ளுவர் இக்கருத்துக்கு ஆதரவான அறநெறிகளையெல்லாம் இல்லறவியலிலே எடுததுக் கூறியிருக் கின்றார் அவர். இல்லறவி யலைத் துருவிப் படிப்போர் இவ்வுண்மைகளைத் காணலாம். துறவறத்தின் நோக்கம் இல்லறம் தோன்றி நிலைத்த நெடுங்காலத்திற்குப் பின்பு தான் துறவறம் தோன்றிற்று. இவ்வுலகிலே இன்பம் இல்லை. இறந்தபின் நாம் அடையும் உலகம் வேறு அவ்வுலகிலே இன்பம் நுகர வேண்டுமானால் இவ்வுலக இன்பத்தைத் துறக்கவேண்டும்; இவ்வுலக இன்பத்தை வெறுத்து இறைவனை நோக்கி தவம்புரிய வேண்டும். தவந்தான் அடுத்த பிறவியிலே செல்வத்தைத்தரும்; செல்வராகப் பிறந்து சிறந்த இன்பங்களைச் சுவைக்கலாம் இப்பொழுது செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழ் கின்றவர்கள் எல்லாம் சென்ற பிறவியிலே சிறந்த தவத்தைச் செய்தவர்கள்; தவம் செய்யாதவர்களே இன்று வறியவர்களாய் வாழ்கின்றனர். ஆதலால் துறவு பூண்டு தவம்புரிய வேண்டும். இதுவே துறவறத்தைப் பற்றிப் பிற்காலத்தினர் கொண்ட கருத்தாகும். துறவை வலியுறுத்தும் பிற்காலத்து நூல்கள் எல்லாம் இக்கருத்தைத்தான் கொண்டிருக்கின்றன. வள்ளுவர் கூறும் துறவறமும் பெரும்பாலும் இக்கருத்துக்களையே தாங்கி நிற்கின்றது. ஆனால் பண்டைக் காலத்து மக்கள் துறவறத்தைப் பற்றிக்கொண்டிருந்த கருத்து வேறானது. மனைவி மக்களைத் துறந்து காட்டிலோ மலையிலோ சென்று தனித்துறையும் துறவற வாழ்க்கை பண்டைக்காலத்தில் இல்லை. காம உணர்ச்சி மறைந்து போன கடைசிக்காலத்தில் தான் - இல்லற இன்பத்தைப் பரிபூரணமாக அனுபவித்த பிறகு தான்? துறவறத்தை மேற்கொள்வர். கணவனும் மனைவியும் தம்மைப் பாதுகாக்கும் மக்களோடும், நன்நெறியிலே ஒழுகும் சுற்றத்தாரோடும் சேர்ந்து வாழ்ந்து சிறந்த செயல்களைச் செய்வார்கள்; இது தான் இல்வாழ்க்கையின் பிறகு பின்பற்றப் படும் துறவற வாழ்வு. காமம் சான்ற கடைக்கோள் காலை, ஏமம் சான்ற மக்களளொடு துவன்றி. அறம்புரி சுற்றமொடு, கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்பது தொல்காப்பியம் (தொல், பொருள் புறத்திணை.51) இதுவே பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்த துறவொழுக்கம். இதனால், தந்தலந் துறந்து, பிறர் நன்மைக்காகப் பணி செய்யும் தூய வாழ்வே துறவறம் என்பதைக் காணலாம். திருவள்ளுவர் கூறுவது இத்தகைய துறவறம் அன்று. துறவறத்தைவிட இல்லறமே சிறந்தது என்ற கருத்துள்ளவர் வள்ளுவர். ஆதலால் தான் முதலில் இல்லறத்தைப் பற்றிக் கூறினார். இல்லறத்தை ஒழுங்காக நடத்தினால் போதும்; துறவறத்தால் அடையும் பயனையும் இல்லறத்திலேயே பெற்று விடலாம்; என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். இல்லறத்தார் நன்றாக வாழ்ந்தால்தான் துறவிகளும் வாழமுடியும் என்பதே வள்ளுவர் கருத்து. இக் கருத்துக்களையெல்லாம் இல்லறவியலிலே காணலாம். வள்ளுவர் காலத்திலே இந்நாட்டில் எத்தனையோ மூட நம்பிக்கைகள் வலுப்பெற்றிருந்தன. அவைகள் அவர் காலத்திற்கு முன்பே தோன்றியவை; தலைமுறை தலைமுறையாகவே மக்கள் மனதில் படிந்திருப்பவை. அவற்றுள் பலவற்றைக் கடந்து செல்ல வள்ளுவர் வழிகாட்டியிருக்கின்றார். ஆயினும் சில மூடநம்பிக் கைகளுடன் அவரால் எதிர்த்துப் போராட முடியவில்லை. அவைகள் சிலவற்றில் அவருக்கே நம்பிக்கை உண்டென்றும் உரைத்துவிடலாம். இதற்கு எடுத்துக்காட்டாகத் துறவறத்தில் வள்ளுவர்க்கிருந்த நம்பிக்கையைக் கூறலாம். ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும் எண்ணின், தவத்தாள் வரும் தமக்குத் தீமைசெய்யும் பகைவரை அழிப்பதும், தமக்கு நன்மை செய்யும் நண்பரை உயர்த்துவதும், நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும் (கு.164) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் தான் வேண்டிய நன்மைகளையெல்லாம் வேண்டியவாறே பெறமுடியும்; ஆதலால் செய்யத்தக்க தவத்தை இவ்வுலகிலே செய்ய வேண்டும் (கு. 265) கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு தவம் செய்வதால் அடையக்கூடிய வல்லமையைப் பெற்ற வர்களுக்கு எமன் கையில் அகப்படாமல் தப்பித்துக் கெண்டும் உயிர் வாழ முடியும் (கு .269) தவம் என்ற அதிகாரத்தில் உள்ள இவ்வெண்பாக்கள் தவத்தின் பெருமையைக் கூறுகின்றன. தவத்தினால் யாரையும் வெல்லலாம் உயர்வாக வாழலாம்; விரும்பிய இன்பங்களை யெல்லாம் பெறலாம். இறக்காமலும் உயிர் வாழலாம்; என்ற நம்பிக்கைகளைப் போதிக்கின்றன. வள்ளுவர் காலத்திலே, இக்கருத்துக்களை நம்பியவர்கள் பலர் தமிழகத்தில் வாழ்ந்தனர் இவ்வுலகிலே இன்ப வாழ்வு பெற முடியாமல் வாடித் திரிந்தவர்களின் நெஞ்சிலே தவத்தைப் பற்றிய கருத்துக்கள் ஒரு நம்பிக்கையை ஊட்டின; தவத்தால் நமது துன்பங்களைத் தொலைப்போம் இப்பிறப்பில் இன்பம் இல்லாவிட்டாலும் மறு பிறப்பிலாயினும் இன்பத்தை எய்து வோம்; இனிது வாழ்வோம்; என்ற எண்ணத்தை எழுப்பின. ஆயினும் இல்லறத்திற்கு அடுத்தபடிதான் துறவறம் என்பதை அவர் சொல்லத்தவறவில்லை. துறவிகள் யார்? ஒருகாலத்திலே துறவிகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் ஆண்டவன் அருளைப் பெற்றவர்கள் என்று மக்கள் நம்பிவந்தனர். உலகம் உய்யவேண்டும் என்னும் உள்ளங் கொண்டவர்கள்; அவர்களுடைய தவ வலிமையாலும் வேண்டு கோளாலுந்தான் மழை பெய்கின்றது; நிலம் விளைகின்றது நாடு செழிக்கின்றது; மக்கள் நோய் நொடியில்லாமல் வாழ்கின்றனர்; என்று பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள்; நம்பினார்கள். ஆகையால் துறவிகளை ஆதரிக்க வேண்டியது - அவர்களுக்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் பாதுகாக்கவேண்டியது இல்லத் தாரின் கடமையென்று எண்ணி வந்தனர். தந்தலம் கருதாமல் பொது நன்மைக்கு உழைத்தவர்களும்; உலக இன்பத்தை நுகரும் ஆசையைத் துறந்து, ஆத்ம சாந்தியின் பொருட்டு, இறைவனை எண்ணித் துறவிகளும் தவம் புரியும் துறவிகளும் இருந்தனர். போலித் துறவிகள் அக்காலத்தில் துறவிகளுக்கிருந்த செல்வாக்கைச் சில சோம்பேறிகளும், வஞ்சகர்களும் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். உழைத்து உயிர்வாழ்வதை விட்டுத் துறவி வேடம் பூண்டு பொதுமக்களை ஏமாற்றி வாழத் தொடங்கினர். இத்தகைய நிலை வள்ளுவர் காலத்திலே தோன்றிவிட்டது. ஆதலால் அவர் போலித் துறவிகளின் வஞ்சக வேடத்தைக் கண்டிக்கின்றார். தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம்அதனை அஃதுஇலார் மேற்கொள்வது தவக்கோலம் உண்மையான தவம்புரிவோர்க்கே பொருத்த மானதாகும். உண்மையான தவத்திலே ஈடுபடாதவர்கள் அந்தத் தவக்கோலத்தை மேற்கொண்டிருப்பது வீணாகும் (கு 262) போலித் துறவிகள் இன்னார் என்பதை இக்குறளால் வெளிப்படுத்தினார். துறவிக்கோலம் தரித்தவர்களையெல்லாம் உண்மையான துறவிகள் என்று நம்பிவிட வேண்டாம். அவர் களுடைய சொற்களை நம்பிச் செல்வத்தையிழந்து ஏமாற வேண்டாம்; போலித் துறவிகளை பொய்கோலம் பூண்டவர் களை - சமுதாயத்தை விட்டு விரட்டியடியுங்கள் என்று இக்குறளால் அறிவுறுத்தினார் வள்ளுவர். நெஞ்சில் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் மனத்தில் உள்ள ஆசைகளைத் துறக்கமாட்டார்கள். துறந்தாரைப் போல் வஞ்சகமாக நடிப்பார்கள். இவர்களைப் போல் இரக்கம் அற்றவர்கள் வேறு எவருமே இல்லை .”(கு.178) மனத்தது மாசாக, மாண்டார் நீராடி, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் உள்ளத்திலே ஆசை, கோபம், அறியாமை என்னும் குற்றங்கள் நிரம்பியிருக்கும்; வெளியிலே குற்றமற்ற பெருமை யுள்ளவர்களைப்போல் நடிப்பார்கள்; நீராடித் தவவேடத்திலே மறைந்து வாழ்வார்கள்; இத்தகைய மக்கள் பலர் உண்டு. (கு.278) இவைகளும் போலித் துறவிகள் யார் என்பதைக் காட்டு கின்றன. உள்ளத்திலே ஊறும் எல்லாப் பற்றுக்களையும் எடுத்து வீசியவர்கள் தாம் உண்மைத் துறவிகள்; உள்ளத்திலே ஆசையை வைத்துக் கொண்டு ஆசையற்றவர்களைப் போல் நடிப்பவர்கள் வஞ்சகர்கள்; தந்நலத்திற்காகவே துறவி வேடம் கொண்டவர்கள். அவர்கள் இரக்கம் அற்றவர்கள்; கல்நெஞ்சம் படைத்தவர்கள். அவர்கள் மனத்திலே மாசு படிந்திருக்கும்; கெட்ட எண்ணங்கள் நிரம்பியிருக்கும்; நல்லவர்களைப் போலவே நீராடி வேடம் பூண்டிருப்பார்கள் வேடத்தைக் கண்டு மயங்கி விட வேண்டாம். இக்கருத்துக்களை இக்குறள்களிலே காணுகின்றோம். உண்மைத் துறவு உண்மைத் துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் இவை யென்பதையும் வள்ளுவர் விரித்தக் கூறியிருக்கின்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் உடம்பைக் கொழுக்க வைக்கும் புலால் போன்ற உணவுகளை நீக்கி விடுதல்; தவம் புரிதல்; தீயொழுக்கங்களைத் துறத்தல்; பிறர் பொருளைக் களவாடாமல் இருத்தல்; உண்மையுரைத்தல்; சினத்தைவிட்டு விடுதல்; யாருக்கும் துனபம் செய்யாமை; பிற உயிர்களைக் கொலை செய்யாமல் வாழ்தல்; உலக இன்பம் நிலையற்றது என்பதை ஆராய்ந்து காணல்; ஆசையை அடியோடு விட்டு விடுதல்; இன்று நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக் கெல்லாம் முன செய்த வினையே காரணம் என்று நம்புதல்; இவைகள் எல்லாம் துறவிகளில் ஒழுக்கங்கள் என்று உரைக் கின்றார் வள்ளுவர். மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வர்க்கு இல்என்ப தன் உயிர் அஞ்சும் வினை உலகிலே வாழ்கின்ற மற்ற உயிர்களைப் பாதுகாத்து, அருள் உள்ளவராய் - அவ்வுயிர்களிடத்தில் இரக்கம் உள்ளவ ராய் - வாழ்கின்றவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; தன் உயிர்க்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகின்ற நிலை ஏற்படவே இடமில்லை; இவர்கள் ஏனையோர் இன்புற்று வாழும் பொருட்டுத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைப்பார்கள். (கு.244) உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு தனக்கு வந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுவது; ஏனைய உயிர்களுக்கு எவ்வகையான துன்பங்களையும் செய்யாம லிருப்பது; அவ்வளவே தவத்தின் உருவமாகும். (கு.216) உண்மையான தவம் - துறவிகள் பின்பற்ற வேண்டிய தவம் தவத்திற்கு அடிப்படையான ஒழுக்கம் - எவையென்பதை இக்குறளால் காணலாம். இந்த இரண்டு குறள்களின் கருத்துக்களுக்கு இலக்கியமாக இருப்பவர்கள் சந்நியாசியாக இருந்தாலும் சரி குடும்பத்தினரா யிருந்தாலும் சரி திணித்து நின்று பொதுப்பணி புரிகின்றவர் களாயினும் சரி, அவர்களே உண்மையான துறவிகள். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் உலகத்தார் வெறுத்துப் பழிக்கும் கெட்ட நடத்தைகளை விட்டு விட்டால் போதும்; அதுவே உயர்ந்த ஒழுக்கமாகும்; தலையை மழுங்க மொட்டையடித்துக் கொள்ளுதல் - அல்லது தலைமயிரை நீட்டி வளர்த்துச் சடையாக்கிக் கொள்ளுதல் -போன்ற வெளி வேடங்கள் வேண்டுவதில்லை. (கு.280) இக்குறளும் துறவிகளுக்கு வேண்டியது தூய்மையான மனமும் நடத்தையுமேதாம்; புறக்கோலங்களால் பயன் இல்லை; என்று விளக்கிற்று. துறவிகளின் கடமை பொறுமையே உண்மைத் துறவிகளின் பண்பு - பொறுமை யற்றவர்கள் துறவிகளாகமாட்டார்கள். அவர்கள் துறவி வேடம் கொண்டிருந்தாலும் பயன் இல்லை. இது வள்ளுவர் கருத்து. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் நமக்குத் துன்பம் செய்தவர்களுக்கு அளிக்கும் தண்டனை யாவது, அவர்கள் வெட்கித் தலை குனியும்படி நன்மை செய்து, அவர்கள் செய்த தீமையை மறந்து விடுவதாகும். (கு.314) துறவிகளுக்கு இக்குணம் இன்றியமையாதது என்பதே வள்ளுவர் கருத்து. பொறுமைக் குணம் பூண்டவர்களிடம்தான் இந்த உயர்ந்த பண்பைக் காணமுடியும். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மைகளையே செய்யா விட்டால், நற்குணங்களும் அறிவும் நம்பியிருப்பதால் என்ன பயன்? ஒன்றுமில்லை (கு.987) இவ்வாறு பொருட்பாலில் சான்றாண்மை என்னும் அதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் சிறந்த பண்பாட்டுக்கு இந்த இரண்டு செய்யுட்களும் எடுத்துக்காட்டாக நிற்கின்றன. இக்குறளுரை யைப் பின்பற்றி நடக்கும் மக்கள் மனிதப் பண்பின் உச்சியிலே நிற்பவர்கள். அடித்தவரைத் திருப்பித் தாக்கவேண்டும் என்ற ஆத்திரந் தான் வரும்; திட்டியவரை எதிர்த்துத் திட்டத்தான் தோன்றும். இதுவே மனித இயற்கை. இந்த இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளுவதற்கு நெஞ்சிலே உரம் வேண்டும் பொறுமை வேண்டும்; அறிவும் ஆண்மையும் வேண்டும். வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் திருப்பிக் காட்டு என்று ஏசுநாதர் கூறினார். அதற்கு மேல் ஒரு படி அதிகமாக ஏறிவிட்டார் வள்ளுவர்; துன்பம் செய்தவனுக்கு நன்மையும் செய், என்று கூறுகிறார்; அவன் செய்த துன்பத்தை யும் மறந்துவிடு, என்று உரைக்கின்றார். மனித இயற்கைக்கு மீறிய இத்தகைய பொறுமையும் -பண்பும் உள்ளவர்களே உண்மையான துறவிகள்; இவர்களே சான்றோர்கள்; எல்லா நற்குணங்களும் அறிவும் நிரம்பியவர்கள்; என்று வள்ளுவர் கூறினார். மக்களிடையிலே பகைமை வளராதிருக்க வள்ளுவர் காட்டும் இவ்வழியே சிறந்த வழியாகும். துன்பம் செய்தவனுக்கு நன்மை செய்தால் அவன் வெட்கமடைவான். இந்த நல்ல மனிதருக்கு இப்படிக் கொடுமை செய்தோமே என்று எண்ணி உள்ளம் வருந்துவான்; அவன் மனமே அவனைச் சுடும். இது உண்மைதான். வள்ளுவர் காலத்திலிருந்த மக்களிடம் இத்தகைய பண்பு இருந்தது ஆதலால் அவர் இதை வலியுறுத்தினார். இக்காலத்து மக்களிடம் இப்பண்பு உண்டா? வள்ளுவர் சொல்லியபடி துன்பம் செய்தவர்க்கு நன்மை செய்வதனால் பயன் உண்டா? அவர்கள் திருந்துவார்களா? என்பவை ஆராய்ந்து பார்க்க வேண்டியவைகளே. இதுவரையிலும் கூறியவைகளைக் கொண்டு போலித் துறவிகள் யார்? உண்மைத் துறவிகள் யார்? துறவிகளின் கடமை என்ன? என்பவைகளைக் காணலாம். வள்ளுவர் காலத்தில் துறவிகள் எப்படியிருந்தனர்? எப்படி வாழ்ந்தனர்? என்பதையும் அறியலாம். மூன்றாவது பகுதி இப்பகுதியிலே பொருட்பாலில் உள்ள செய்தி களைப்பற்றிக் கூறப்படுகின்றன. வள்ளுவர் கால அரசியல், அரசாளத் தக்கவர்கள், ஆளத்தகாதவர்கள் முதலியவைகளைப் பற்றி வள்ளுவர் கருத்து விளக்கப் படுகின்றன. அமைச்சர் திறம், அரசாட்சிக்கு வேண்டிய செல்வத்தைச் சேர்க்கும் வழி ஆகியவை களைப் பற்றியும், உழவர்கள் உரிமை, மக்கள் சிறந்து வாழ்வதற்கான வழி முதலியவைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இவை போன்றவைகளைப் பற்றி வள்ளுவர் கொண்டிருக்கும் கருத்தைப் பதின்மூன்று தலைப்புகளில் விளக்கப்பட்டிருக்கின்றது. வள்ளுவர் கால அரசியல் திருவள்ளுவர் காலத்தில் மக்கள் ஆட்சி இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தாம் நாட்டை ஆளவேண்டும் என்ற கொள்கை அக்காலத்தில் இல்லை. அவருக்கு முன்னும் இக்கொள்கை இல்லை. அரசனைத் தெய்வத்தின் அவதாரமாக நம்பியிருந்த காலந்தான் அது. அக்காலத்தில் அரசர்களுக்குத்தான் எல்லா அதிகாரங் களும் இருந்தன. அவர்கள் பரம்பரையாக ஆளும் உரிமை பெற்றவர்கள்; ஆளப் பிறந்த குடியினரே அரசாட்சி புரிந்து வந்தனர். தந்தையின் அரசுரிமை மகனுக்கு என்பதே அக்காலக் கொள்கை. திருவள்ளுவரும் இக்கொள்கையை ஒப்புக்கொண்ட வர்தான்; இந்த அடிப்படையின் மேல்தான் அரசியல் நீதிகளைக் கூறுகின்றார். ஆயினும் மக்கள் கருத்துக்கு மாறாக நடக்கும் மன்னவன் ஆளத்தகுதியற்றவன்; அவன் ஆட்சி நிலைக்காது; அந்த ஆட்சி யை மக்கள் மதிக்க மாட்டார்கள் இது வள்ளுவர் கருத்து. இக் கருத்தை அவர் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார். படை,குடி,கூழ், அமைச்சு, நட்பு,அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுப் படையெடுப்பை எதிர்க்கவும் போதுமான படைகள் ஆட்சிக்கு அடங்கி நடக்கும் குடிமக்கள்; நாட்டிற்குப் போதுமான உணவு அறிவும் திறமையும் உள்ள அமைச்சர்கள் பக்கத்து நாடுகளுடன் நட்பு; நாட்டில் அந்நியர் நுழையாதபடி தடுக்கும், காடு, மலை போன்ற இயற்கை அரண்கள்; இந்த ஆறு உறுப்புக்களையும் கொண்டிருப்பவனே அரசர்க்குள் ஆண் சிங்கம் போன்றவன் (கு.81) முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் நீதிமுறை செய்து குடிகளைக் காக்கும் அரசன், பிறப் பினால் மனிதனாக இருந்தாலும், செய்கையால் மக்களுக்குக் கடவுள் ஆவான் என்று சிறப்பித்துத் தனியாக வைத்து மதிக்கப்படுவான் (388). மடியிலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தா அயது எவ்வாம் ஒருங்கு சோம்பல் இல்லாத அரசன், திருமால் ஓரடியால் அளந்த இம் மண்ணுலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக பெறுவான் (கு.610) இக்குறள்கள் தனி மனிதனுடைய ஆட்சியையே எடுத்துக் காட்டுகின்றன. ஆளப்பிறந்த அரசனுக்கு வேண்டிய தகுதி களையே அறிவிக்கின்றன. அரசன் தன் ஆட்சி நிலைப்பதற்கான சரியான பாது காப்புக்களைத் தேடிக் கொள்ளவேண்டும். ஒழுங்குமுறை தவறாமல் குடிகளைக் காப்பற்ற வேண்டும். குடிகளைக் காப்பதற்கு அரசன்தான் பொறுப்பாளி. சோம்பல் இல்லாத மன்னவன் மாநில முழுவதையும் ஆள்வான். இக்கருத்துக்களையே மேலே காட்டிய செய்யுட்கள் கூறின; வள்ளுவர் தன் காலத்துக்கு முன்னிருந்த அரசு முறையை ஒப்புக் கொண்டுதான் இவ்வாறு சொன்னார். அரசன் தான் ஆளப்பிறந்தவன்; அவன் தெய்வீகத் தன்மையுள்ளவன்; என்ற முன்னோர் கருத்தை அவர் மறுக்க வில்லை. ஆளும் உரிமை பெற்றவன் அரசனாயிருந்தாலும் அவன் குடிமக்களின் மனங்கோணாமல் நடக்கவெண்டும். சர்வாதி காரியாக இல்லாமல் அறிஞர்களின் ஆலோசனைப் படி நடக்க வேண்டும; கடுமையான அடக்கு முறைகளைக் கையாளக் கூடாது; குடிமக்களால் தாங்கமுடியாத வரிச்சுமைகளை அவர்கள் தலையிலே சுமத்தக்கூடாது. கொடுங்கோலன் என்று மக்கள் பழிக்கும்படி ஆட்சி புரியக் கூடாது, குடிமக்களின் நல்வாழ்வைக் கருதி ஆட்சி புரியாத அரசன் ஆட்சிபீடத்தி லிருந்து மக்களால் விரட்டியடிக்கப்படுவான்; அவன் ஆளு வதற்குத் தகுதியற்றவன்; அவனுடைய ஆட்சியிலே நாடு நிலைத்து நிற்காது; இவ்வுண்மைகளைத் தெளிவாகக் கூறியிருக்கின்றார் வள்ளுவர். அரசனுக்கென்று வள்ளுவர் வகுத்துச் சொல்லி யிருக்கும் அறம் புகட்டும் நீதி - ஆளுவோர் அனைவர்க்கும் பொருந்தும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செலுத்து வோர்க்கும் பொருந்தும். முடிவேந்தர்களுக்கு வள்ளுவர் சொல்லும் அறம் இன்றைய குடியாட்சிக்கும் ஏற்றதாயிருப்பது வியத்தற்குரியது திருக்குறள் ஒரு உயிர் உள்ள இலக்கியமாக இயங்குவதற்கு இத்தகைய சிறந்த கருத்துக்களே அடிப்படையாகும். ஆளத் தகுந்தவன் பொருளாதாரத்திலே வலுப்பெற்றிருக்கும் அரசாங்கத் தான் வலிமையுள்ள அரசாங்கமாகும். செல்வமற்ற அரசாங்கம் விரைவில் சீர்குலைந்துவிடும். அது பேரரசு ஆயினும் செல்வம் நிறைந்த சிற்றரசின் செல்வாக்குக் கட்டுப்பட்டுவிடும். முடி யாட்சி மறைந்து குடியாட்சி தோன்றி நிலைத்து வரும் இந்நாளிலும் பணப்பஞ்சம் இல்லாத நாடுகளே வல்லரசுகளாக வாழ்கின்றன. பணமற்ற நாடுகள், பணமுள்ள நாடுகளிடம் உதவிபெறும் பல்லைக் காட்டிக் கெஞ்சுகின்றன வள்ளுவர் காலத்திலும் இந்நிலைதான் இருந்தது இந்த உண்மையை வள்ளுவர் மறந்துவிடவில்லை. ஒரு நாட்டை ஆளுவோனுக்கு அரசாங்கத்தின் செல்வத் தைப் பாதுகாக்கும் திறமை வேண்டும்; அரசாங்கத்திற்குப் பொருள் வரும்வழிகளைக் கண்டு பிடிக்கும் வரிவாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளிலே வருமானந் தேடக் கூடிய அறிவும் ஆற்றலும் வேண்டும். பல துறைகளிலும் கிடைக்கும் வருமானத்தைப் பாழா காமல் ஒன்று சேர்க்க வேண்டும்; அப்பொருள்களைச் சிதற விடக்கூடாது; அவைகளை ஓரிடத்திலே கொண்டுவந்து சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளைச் செலவு செய்யும் வகையறிந்து செலவு செய்ய வேண்டும்; தாம் என்று வீண் வழிகளிலே அள்ளி யிறைத்து விடக்கூடாது. மக்களுக்குப் பயன் தரும் திட்டங்களை வகுத்து, திறமையுள்ளவர்களைக் கொண்டு அத்திட்டங்கள் வெற்றிபெறும் வகையிலே செலவு செய்ய வேண்டும்; இத்தகைய திறமையுள்ளவனே அரசன் ஆவான் என்று சொல்லுகிறார். இயற்றலும் ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், வந்த பொருள்களை ஒன்று சேர்த்தலும், ஒன்று சேர்த்த பொருளைக் காப்பற்றுதலும், காப்பாற்றிய பொருளைத் திட்டமிட்டுச் செலவு செய்தலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன் ஆவான் (கு.385) அரசனுக்கு உரைக்கப்பட்டிருக்கும் இத்தகுதி ஆளுவோர் அனைவர்க்கும் வேண்டியதாகும். சக்கரம் இல்லாமல் வண்டி ஓடாது; செல்வம் இல்லாமல் அரசாங்கள் நடக்காது. இந்த உண்மை முக்காலத்துக்கும் பொருந்தும். செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு தன் காது கைக்கும்படி குறை கூறும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் குணமுள்ள அரசனுடைய குடை நிழலிலேதான் உலகம் நிலைத்து நிற்கும் (கு.389) ஆளும் உரிமை படைத்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பொறுமை வேண்டும்; மக்கள் சொல்லும் குறைகளைக் கண்டு சீறி விழக் கூடாது; அவர்கள் சொல்லும் குற்றம் குறைகளை உற்றுக் கேட்க வேண்டும், பொதுமக்களையே நீதிபதிகளாக எண்ணி அவர்கள் எடுத்துரைக்கும் குறைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும். அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானவைகளாயிருந்தால் அவைகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மக்கள் கருத்தறிந்து ஆளுவோனே நாட்டுக்கு மன்னவனாவான். இதுவும் எக்காலத்திற்கும் ஏற்ற கருத்தாகும். கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி வறியோர்க்குக் கொடுத்தல், அவதிப்படுகின்றவர்கள் பால் அன்பு காட்டுதல், நீதி தவறாமல் ஆட்சி புரிதல், குடிமக்களுக்கு எவ்வித இன்னலும் நேராமல் பாதுகாத்தல், இந்த நான்கு பண்புகளும் அரசனுக்கு அமைந்திருக்க வேண்டும்; அவனே அரசர்களுக்கு விளக்குப் போன்றவன். (கு.390) இக்குறள் ஆளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய பண்பு களை வலியுறுத்தியது. ஆளுகின்றவர்களுக்குக் கல்வி அறிவு அவசியம். கல்வி யில்லாதவன் உருவத்திலே மனிதனாயிருக்கலாம்; ஆனால் அவன் மனிதன் அல்லன்; விலங்கு போன்றவன் கல்வியில்லா தவனால் பல சிறந்த செயல்களைச் செய்ய முடியாது. கல்வி மட்டும் போதாது; கற்றவர்களிடமிருந்து பல அரும் பொருள் களைக் கேட்டும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். கல்வியும், கேள்வியும் ஆளுவோர், ஆளப்படுவோர் அனைவர்க்கும் வேண்டியனவாம். இதைக் கல்வி, கல்லாமை, கேள்வி என்ற மூன்று அதிகாரங்களிலே முப்பது குறள்களிலே வலியுறுத்தி யிருக்கின்றார் வள்ளுவர். அன்றைய முடியாட்சியிலேயே ஆளு கின்றவனுக்குக் கல்வி கேள்விகள் அவசியமானவை என்று வள்ளுவர் சொல்லியிருப்பது குறிப்பிடத் தக்கது. எவ்வது உறைவது உலகம்; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, அவ்வாறு தானும் உலகத்தோடு பொருந்தி நடப்பதே அறிவாகும். (கு.426) ஆளுவோர்க்கு உலக நடப்பை உணர்ந்து கொள்ளும் அறிவு வேண்டும். உலக நடப்போடு இணைந்து நடக்கும் திறமை வேண்டும்; உலகப் போக்கை எதிர்த்து நிற்கும் எந்த அரசும் வாழ முடியாது. உலகப் போக்கு என்பது உலக மக்கள் பெரும்பாலோரின் எண்ணமும், கருத்துமேயாகும் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் தாம் என்று சாதிக்கும் பிடிவாதம் சர்வாதிகார மனப்பான்மை யுள்ளவர்களிடந்தான் இருக்கும். மக்கள் கருத்தை மதித்து நடப்பவர்கள் உலகமக் களின் கருத்தை ஒட்டித்தான் நடப்பார்கள். எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவது ஓர்நோய் வரக்கூடிய துன்பத்தை முன்னறிந்து தடுத்துக் கொள்ளும் அறிவு ஆளுவோர்க்கு வேண்டும்; இவ்வறிவு உள்ளவர்களுக்கு அவர்கள் அஞ்சி நடுங்கும்படி வரக்கூடிய துன்பம் ஒன்றுமே யில்லை (கு.429) இக்குறளும் ஆளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய அறிவைப் பற்றி உரைத்தது. பொருளாதார அறிவு, ஆளுந் திறமை, பொறுமை, கல்வி கேள்விகள், உலகத்தோடு ஒட்டி ஒழுகும் பண்பு இவைகள் ஆளுவோர்க்கு வேண்டிய தகுதிகள். ஆளுவோர் மன்னர் களாயினும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாயினும் சரி இத்தகுதிகளைப் படைத்தவர்கள் அரசாளத் தகுந்தவர்கள். குடி மக்களால் மதிக்கத் தகுந்தவர்கள். இவ்வுண்மைகளே வள்ளுவர் கருத்து இவற்றை மேலே காட்டிய குறட்பாக்கள் விளக்கின. குற்றம் உணர்தல் பலர் தம் குற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; தம்மிடம் குற்றங்கள் உண்டா என்றுஎண்ணிப் பார்ப்பது கூட இல்லை. தம்மைப்பற்றி, யாரேனும் குறை கூறினால் பொறுக்க மாட்டார்கள்; அவர்கள் மேல் காய்ந்து விழுவார். தம்மைப் பற்றிக் குறை சொல்லுவதற்கான காரணம் உண்டா இல்லையா என்று சிந்திக்கவே மாட்டார்கள். இதுவே பல மக்களிடம் காணப்படும் பண்பு. பிறரிடம் குற்றம் காண்பது எளிது; அக்குற்றத்தை எடுத்துச் சொல்லுவதும் எளிது. தன் குற்றத்தை மறந்து பிறர் குற்றம் காண்பதே பெரும்பாலான மக்கள் இயற்கை. மருந்துக்குக்கூட நல்ல குணம் இல்லாதவர்களும் பிறரைப் பழிப்பதற்குப் பின் வாங்குவதில்லை. முதலில் தன்னிடம் உள்ள குற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; அக் குற்றத்தை விட்டொழிக்க வேண்டும். தம்மால் எக்குற்றமும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுகின்றவர்களே சிறந்த மனிதர்கள்; உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்கள்; தெளிந்த அறிவுள்ளவர்கள். ஆட்சி பீடத்திலே அமர்ந்திருப்பவர்கள் யாராயினும் அவர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டிகளாக விளங்க வேண்டும்; நல்ல வழியிலே நடந்து கொள்ள வேண்டும் தாம் செய்வனவற்றை நன்றாக ஆராய்ந்து செய்ய வேண்டும்; அவர்கள் குற்றமற்ற காரியங்களையே செய்பவர்களாயிருந்தால் அவர்களை யாரும் பழிக்க மாட்டார்கள். பொதுப் பணியிலே ஈடுபட்டிருப்போர் - பொது மக்களை நடத்திச் செல்லும் தலைவர்களாக விளங்குவோர்- அசிரியர்கள் - எழுத்தாளர்கள் - கலைஞர்கள் - கவிஞர்கள் அனைவரும் தூய நெறியிலே நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் தம்மிடம் குற்றங்குறைகள் சொல்வதற்கு இடமின்றிச் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் மக்களால் புகழப்படுவார்கள் அவர்கள் சொற்களுக்குச் செல்வாக்குண்டாகும். மற்றவர்களைக் காட்டிலும் அரசியல் கட்சித் தலைவர் களுக்கு பொதுப் பணியிலே ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு - தம்மிடம் குறையில்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலை சிறந்த கடமையாகும். இவ்வுண்மையை வள்ளுவர் பல அதிகாரங்களிலே வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கின்பின் என் குற்றம் ஆகும் இறைக்கு முதலில் தன் குற்றத்தைக் கண்டறிந்து அதைக் களைந்து, பின்னர்ப் பிறருடைய குற்றங்களைக் கண்டறிய வல்லவனா யிருந்தால் அந்த அரசனிடம் எந்தக் குற்றந்தான் உண்டாகும்? ஒரு குற்றமும் அணுகாது. (கு.346) இக்குறள் எல்லா மக்கள் மனத்திலும் பதிந்திருக்க வேண்டிய குறள். இதைப் பின்பற்றி நடப்போர் எவரும், எதிலும் வெற்றி பெறுவார்கள். இவறலும் மாண்பு இறந்த மானமும், மாணா உவகையும் ஏதம் இறைக்கு கருமித்தனமும், பெருமையற்ற மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் அரசனாக இருப்பவனுக்கு ஏற்றவையல்ல; குற்றங் களாகும் (கு.432) ஆளுவோர் நல்ல காரியங்களைச் செய்வதில் கஞ்சத்தனம் காட்டுதல் தவறு; ஆட்சியை நடத்தி வைப்போர் பொறுப் புள்ள உத்தியோகதர்கள்; அவர்களிடம் கருமித்தனம் காட்டினால் காரியங்கள் மெதுவாகத் தான் நடக்கும். பெருமையற்ற செயல்களை உயர்வாக நினைத்துச் செருக்கடையக் கூடாது. தாம் செய்த சிறிய செயல்களை வைத்துக் கொண்டு, பெரிய காரியங்களை யெல்லாம் சாதித்து விட்டதாகச் சொல்லி மகிழ்ச்சிடையக் கூடாது. இவ்வறங்களை யெல்லாம் எடுத்துக் காட்டிற்றுஇக்குறள். வியவற்க எஞ்ஞான்றும் தன்னை ; நயவற்க நன்றி பயவா வினை. எக்காலத்திலும் தன்னைக் தானே உயர்வாக எண்ணிப் புகழ்ந்து கொள்ளக்கூடாது; நன்மை தராத செயல்களை நெஞ்சத்தால் நினைத்தலும் கூடாது (கு.439) இதுவும் எல்லோர் உள்ளத்திலும் எப்பொழுதும் ஒளி விட்டுக் கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த குறள். தற்புகழ்ச்சி யற்றவர்களே தன் குற்றத்தைக் காண முடியும். தம்மைத் தாமே பெரிதாகப் பாராட்டிக் கொண்டிருப்பவர்களால் தம் குற்றத்தை உணர முடியாது. உணரமாட்டார்கள். இவ்வுண்மையே இக் குறள் உரைத்தது. இவர்களைப் பிறர் எளிதிலே ஏமாற்றி விடலாம். இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். இடித்துப் புத்தி புகட்டும் பெரியோரைத் துணை கொள்ளாத அரசன் பாதுகாப்பு அற்றவன்; அவனைக் கெடுக்கப் பகைவர் வேண்டுவதில்லை; அவனாகவே அழிந்து போவான். (கு.448) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் அல்லல் படுப்பஊதூம் இல். நல்ல இனத்தோடு சேர்ந்திருப்பதைவிடச் சிறந்த துணை யும் இல்லை; தீய இனத்தோடு சேர்ந்திருப்பதைவிடத் துன்பப் படுத்தும் பகையும் இல்லை. (கு.460) பெரியார்களைத் துணையாகக் கொள்ளுவது; தீயோர் கூட்டுறவின்றி நல்லவர்களுடன் சேர்ந்து வாழ்வது; இவைகளே குற்றம் புரியாமல் வாழ்வதற்கான வழி. இவ்வுண்மையையே மேலே காட்டிய வெண்பாக்கள் விளக்கின. தான் குற்றவாளியாகக் கூடாது என்பதிலே கவலையுள்ள வர்கள் எப்பொழுதும் நல்ல அறிஞர்களையே துணையாகக் கொண்டிருப்பார்கள்; தவறு செய்யும் போது சிறிதும் பின் வாங்காமல் அதைக் கண்டித்துப் புத்தி புகட்டுகின்றவர்களின் நட்பைக் கைவிட மாட்டார்கள். அன்றியும் நன்னெறியில் நடக்கும் கூட்டத்துடனேயே என்றும் இணைந்து வாழ்வார்கள்; கெட்டவர்களுடன் - தீமை செய்கின்றவர்களிடம் - ஒரு பொழுதும் தொடர்பு வைத்துக் கொள்ளவே மாட்டார்கள். எந்தச் செயலையும் ஆத்திரப்பட்டு ஆராயாமல் செய்யக் கூடாது. பொறுமையுடன் ஆராய்ந்த பின்பே எச்செயலையும் தொடங்க வேண்டும். இவ்வாறு எண்ணித் துணிகின்றவர்கள் தாம் தொட்ட காரியத்திலே வெற்றி பெறுவார்கள். ஒரு அரசாங்கம் பொது மக்கள் நன்மைக்கான பெரிய காரியங்களைச் செய்யத் தொடங்கும்போது திடீர் என்று தொடங்கி விடக்கூடாது. அத்துறைகளிலே தேர்ந்த அறிஞர் களைக் கொண்டு ஆராய்ச்சி நடத்த வேண்டும்; அதன் பின், அவற்றை எப்படிச் செய்வது? எவ்வளவு செலவில் செய்வது? என்று திட்டமிட வேண்டும். இவ்வாறு திட்ட மிட்ட பின் பொது மக்களின் ஆதரவையும் பெறவேண்டும். இப்படிச் செய்யப்படும் காரியங்கள் தான் வெற்றி பெறும். இம்முறைதான் ஆளுவோர் தம்மிடம் குற்றங்குறைகள் உண்டாகாமல் பாது காத்துக் கொள்ளும் சிறந்த முறையாகும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. செய்ய தகுந்த செயலையும், அதைச் செய்து முடிக்கு வழித் துறைகளையும், ஆராய்ந்த பிறகு தான் அதைச் செய்யத் துணிய வேண்டும்; காரியத்தை தொடங்கி விடுவோம்; தொடங்கிய பின் அதைப் பற்றி எண்ணிப் பார்ப்போம்; என்று தொடங்குவது குற்றமாகும். (கு.407) ஆராயாமல் அவசரப்பட்டு ஒரு காரியத்தைத் தொடங்கு வது பெருங்குற்றம்; அதனால் பொருட்கேடு தான் உண்டாகும்; காரியமும் கை கூடுவது அரிது; என்ற கருத்துள்ளதே இக்குறள். ஒவ்வொரு அரசாங்க மாளிகையின் முகப்பினும் எழுதி வைக்க வேண்டிய குறள்களில் இது ஒன்று. காதன்மை கந்தா, அறிவு அறியார்த்தேறுதல் பேதைமை எல்லாந்தரும். அறிய வேண்டியவைகளை அறியாதவர்களை அன்புடை மை காரணமாக காரியம் செய்தற்கு ஏற்றவர் என்று நம்பித் தெளிவது தவறு; அவ்வாறு தெளிவது, அறியாமையால் வரும் துன்பம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் கொடுக்கும். (கு.507) இக்குறளும் குறிப்பிடத் தகுந்த சிறந்த குறள். ஆளுவோர் வகுக்கும் திட்டங்கள் வெற்றி பெறவேண்டுமானால், அத் திட்டங்களை நிறைவேற்றும் அறிவும் திறமையும் நேர்மையும் உள்ளவர்களிடமே அவைகளை ஒப்படைக்க வேண்டும். இப்படி யில்லாமல், ஆளுவோரிடம் அன்புள்ளவர்கள் - ஆளுவோர் கட்சியை ஆதரிப்பவர்கள் - ஆளுவோருக்கு உறவினர்கள் - என்ற காரணம் பற்றிச் சிறந்த திட்டங்களை நிறைவேற்றும்படி அறிவும், திறமையும் அற்றவர்களிடம் ஒப்படைப்பது தவறு; இப்படி ஒப்படைக்கப்படும் திட்டங்கள் பாழாகும். ஆளுவோர் மக்களு டைய ஆத்திரத்திற்கும் - பழிப்புக்கும் உள்ளவார்கள். தகுதியையும், திறமையையும் அடிப்படையாக் கொள்ளாமல், சாதி, மத இனங்களை அடிப்படையாகக் கொண்டு சலுகை வழங்குவது தவறு. இத்தகைய ஆட்சியிலே அளவற்ற ஊழல்கள் மலிந்துவிடும்; அரசாங்கத் திட்டங்கள் வெற்றியுடன் நடைபெற மாட்டா; இக்கருத்தும் மேற்கண்ட குறளிலே அடங்கியிருக் கின்றது. வினைக்குரிமை நாடிய பின்றை, அவனை அதற்கு உரியன் ஆகச்செயல். ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்குத் தகுதியுடையவன் என்று ஆராய்ந்து தெரிந்தெடுக்கப்பட்டபின், அவனை அத் தொழிலுக்கு உரியவனாக்கி, அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடவேண்டும். (கு.518) ஆட்சியாளர் அறிந்திருக்க வேண்டிய உண்மைகளிலே இக்குறளும் ஒன்றாகும். உத்தியோகதர்கள் ஒவ்வொரு வரையும், தங்கள் பொறுப்பை உணரும்படி செய்ய வேண்டியது ஆளுவோர் கடமை. ஒரு திட்டம் வெற்றியுடன் முடியவேண்டுமானால், முதலில் அத்திட்டத்தை நடத்துவதற்குத் தகுதியும் திறமையும் உள்ள வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவரிடம் அத்திட்டத்தை நடத்தும் பொறுப்பு முழுவதையும் ஒப்படைக்க வேண்டும். அத்திட்டத்தின் வெற்றி தோல்விக்கு அவரையே முழுப் பொறுப் பாளியாக்கிவிடவேண்டும். இவ்வாறு செய்து விட்டால் அவர் ஊக்கமுடன் உழைப்பார். திட்டத்தை வெற்றியுடன் முடித்துப் பொது மக்கள் பாராட்டைப் பெறவேண்டும் என்ற ஆவலுடன் வேலை செய்வார். அறிஞர்களின் ஆலோசனைகளையும், பொது மக்கள் ஒத்துழைப்பையும் பெற்றுத் தன் பொறுப்பை நிறை வேற்றுவார். இவ்வுண்மையைக் கூறுவதே மேற் காட்டிய குறள். தம் குற்றத்தைத் தாமே உணர்தல்; தற்புகழ்ச்சியின்மை; அறிவுள்ளவர்களையும், நல்லவர்களையும் துணையாகக் கொள்ளுவது; எந்தக் காரியங்களையும் எண்ணிப் பார்த்தபின் செய்வது; தன் வலிமை, காலம், இடம் இவைகளை அறிந்து ஒரு காரியத்தைச் செய்தல்; தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் பொறுப்பை ஒப்புவித்தல்; அவர்களிடம் பொறுப்பு முழு வதையும் சுமத்துதல்; இவைகள் ஆளுவோர் பின் பற்ற வேண்டிய சிறந்த கடமைகள்; தம்மைப்பற்றிப் பிறர் குறை சொல்ல இடமில்லாமல் நடந்துகொள்ளும் முறை; தாமும் குற்றங் குறைகளுக்கு ஆளாகாமல் வாழும் வழி. தண்டனை, அடக்குமுறை குடிகளைக் கொடுமைப்படுத்தும் அரசாங்கம் குலைந்து விடும்; மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காத ஆட்சி மறைந்து விடும். குடி அரசோ முடி அரசோ பொது மக்கள் விருப்பத்தின்படி ஆட்சி புரியுமானால் அந்த ஆட்சி நிலைத்து நிற்கும். அதை யாரும் அசைத்து விட முடியாது. படைபலம் மட்டும் வெற்றி தராது; மக்களுடைய ஒத்து ழைப்பே சிறந்த படைபலம்; குடிமக்களின் கூட்டுறவு இருந்தால் தான் நிலைத்து நின்று ஆளமுடியும். இவ்வுண்மையை ஒவ்வொரு அரசும் உணர்ந்திருக்க வேண்டும். குற்றம் இழைப்பவர்களைத் தண்டிப்பது அரசாங்கத்தின் கடமை; அது கொடுங்கோன்மையன்று; செங்கோன்மையாகும். ஆனால் உண்மையான குற்றவாளிகளைத் தான் தண்டிக்க வேண்டும். குடிகளின் குறைகளுக்குச் செவி சாய்க்காமல், அடக்கு முறையால் குறை கூறுவோர்களை அடக்கி வைக்கக் கூடாது. அடக்கு முறையைத் துணையாகக் கொண்டு வாழ நினைக்கும் ஆட்சி அழிந்தே போகும். அது எத்தகைய வலிமை படைத்த வல்லரசாயினும் குடிமக்களின் வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் முன்னிற்க முடியாது. குடி தழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடி தழீஇ நிற்கும் உலகு. குடி மக்களின் கருத்தைத் தழுவி, அவர்களை அன்புடன் அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற மன்னனு டைய அடியிலே உலகம் வாழும். (கு.544) வேல் அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்; அதுஉம் கோடாது எனின். அரசனுக்கு வெற்றி தருவது படைபலம் அன்று; அவனு டைய ஆட்சி முறைதான் அவனுக்கு வெற்றிதரும்; அவ்வாட்சி கொடுங்கோல் ஆட்சியாக இல்லாதிருக்குமானால்தான் அவன் வெற்றி பெறுவான்.”(கு.546) ஒரு நேர்மையுள்ள அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதை இவைகள் எடுத்துக் காட்டின. இவ்வாறு ஆளும், ஆட்சி, வள்ளுவர் காட்டும் இவ்வழிதான் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் வழியாகும். தண்டனை வேறு, அடக்கு முறை வேறு. உண்மையான குற்றவாளிகளை ஒடுக்குவது - ஒறுப்பது தண்டனை, நீதிக்கு - நேர்மைக்கு - உண்மைக்கு - உரிமைக்குப் போராடுகின்றவர்களை ஒடுக்குவது அடக்குமுறை இவ்விரண்டைப் பற்றியும் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியிருக்கின்றார். இவற்றை விளக்கும் அதிகாரங்கள் மூன்று அவை, செங் கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை என்பன. செங்கோன்மை - நீதியுடன் ஆளுவது; கொடுங்கோன்மை - நீதிக்கு முரணாக ஆளுவது; வெரு வந்த செய்யாமை - அஞ்சத் தக்க செயல்களைச் செய்யாமை. இம்மூன்று அதிகாரங்களிலும் உள்ள முப்பது வெண்பாக்களிலே தண்டனை என்பது என்ன? அடக்கு முறையாவது யாது? என்பவைகளைக் காணலாம். இம்மூன்று அதிகாரங்களில் செங்கோன்மையில் தண்டனையைப் பற்றி அறியலாம்; அடக்கு முறையைப் பற்றி கொடுங்கோன் மையிலும், வெருவந்த செய்யாமையிலும் காணலாம். ஒரு நல்ல அரசாங்கம் அது தன் குடி மக்களின் வாழ் வையே குறிக்கோளாகக் கொண்டது. மக்களுடைய குறை களைக் கண்டறிந்து அவைகளைப் போக்குவதற்கே அல்லும் பகலும் பாடுபடுகின்றது. எல்லாத் துறைகளிலும் நாடு முன்னேற வேண்டும் என்பதே அந்த ஆட்சியின் நோக்கம். அதற்கான பல திட்டங்களை வகுத்திருக்கின்றது. அவைகளை வெற்றியுடன் நிறைவேற்ற முயற்சியுடன் முனைந்து வேலை செய்கின்றது. இத்தகைய அரசாங்கத்தின் திட்டங்களைச் சிதைப்பதற்கு முயற்சிப்பவர்கள் குற்றவாளிகள்; இவர்கள் பொது மக்களுக்கும் துரோகம் பண்ண முயற்சிப்பவர்கள். அமைதியாக வாழும் குடி மக்களை அவதிக்கு ஆளாக முயற்சிப்பவர்களும் குற்றவாளிகளே. இவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டியதுதான். குடிபுறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று; வேந்தன் தொழில். குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காப்பற்ற வேண்டும்; தானும் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது; அவர்களில் யாரேனும் குற்றவாளிகள் இருப்பார்களாயின் அவர்களைத் தண்டித்துக் குற்றத்தை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் அரசனுக்குப் பழி உண்டாகாது. இது அரசன் கடமை. (கு.549). கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர். கொலை செய்வதுபோன்ற கொடுமை செய்கின்றவர்களை அரசன் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல் தவறு அன்று அது, பயிரைக் காப்பாற்ற, அதன் இடையிலே முளைத்த களையைப் பிடுங்கி எறிவது போன்ற செயலாகும். (கு.550) கொலையைப் போன்ற கொடுமை செய்கின்ற குற்றவாளி களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது தவறன்று என்ற கருத்தையே இக்குறள் வலியுறுத்துகின்றது. பண்டைக் காலத்தில் சிறு குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதித்து வந்தனர். கடுந்தண்டனைகளால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதே முன்னோர் கொள்கை. திருட்டுக்குக் கொலைத் தண்டனை விதிக்கும் வழக்கம் உண்டென்பதை கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று என்று சிலப்பதிகாரம் கூறுவதால் காணலாம். கடன் வாங்கினவன் தான் கடன் வாங்கவில்லை என்று பொய் சொன்னால் அவனைப் பாம்பை அடைத்து வைத்திருக்கும் குடத்திலே கைவிடும்படி கூறுவர். இது பண்டைக் காலத் தண்டனை முறை என்ற நூல்களிலே காணப்படுகின்றன. பாம்புள்ள குடத்திலே கைவிட்டால் பாம்பு சும்மா இருக்குமா? ஆகையால் இத்தகைய தண்டனைக்குப் பயந்து கடன் வாங்கி னோர் வாங்கவில்லையென்று பொய் சொல்ல மாட்டார்கள். ஆகையால் இக்குறள் கொலைத் தண்டனை விதிப்பதை ஆதரிப்பதாகவே கொள்ள வேண்டும். சமூகத்திலே குற்றவாளிகள் பெருகாமலிருப்பதற்கு இத் தகைய தண்டனைகளை எந்த அரசாங்கமும் கையாளலாம். குற்றங்களை தடுப்பதற்கும் கடுமையான தண்டனை வேண்டும். குற்றவாளிகளைத் திருத்துவதற்கும் கடுமையான தண்டனை வேண்டும் இதற்கான சட்டங்களும் நீதி மன்றங்களும் நாட்டில் அமைந்திருக்க வேண்டும். இது வள்ளுவர்க்கு உடன்பாடான கருத்தாகும். ஒரு நல்ல அரசாங்கத்திலே அடக்கு முறைக்கு வேலையே கிடையாது. அடக்குமுறையைக் கையாள வேண்டிய அவசியமே ஏற்படாது. அதிகாரத் திற்கும் - தந்நலத்துக்கும்- ஆசைப் பட்டவர்கள் ஆளும் ஆட்சியிலேதான் அடக்கு முறைப் பேய் தலைவிரித்தாடும் அந்த அடக்கு முறைப் பேய் சிலகாலம் மக்களைத் துன்புறுத்தலாம்; இறுதியில் அதை அவிழ்த்துவிட்ட ஆட்சியே அதற்கு இரையாகிவிடும். இதுவே வரலாறு கண்ட உண்மை. நாடோறும் நாடி முறைசெய்ய மன்னவன் நாடொறும் நாடு கெடும், ஒவ்வொறு நாளும் தன் ஆட்சியிலே விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நீதிமுறை செய்யாத மன்னவன் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகத் தன் நாட்டை இழந்துவிடுவான். (கு..553) கொடுங்கோல் அரசாங்கம் நீதி வேண்டும், என்று முறை யிடுவோரை அடக்கத்தான் முன்வரும்; இதனால் குடிமக்கள் வெறுப்படைவர். அந்த அரசாங்கத்தை ஒழிக்கவே ஒன்று கூடி முயற்சிப்பார்கள். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. அடக்குமுறையால் அல்லற்ப்பட்டு அந்த அல்லலைத் தாங்க முடியாமல் குடிமக்கள் அழுது சிந்திய கண்ணீரே அரசாங்கத்தின் செல்வத்தைச் சிதைக்கும் ஆயுதமாகும். கடிதுஒச்சி மெல்லஎறிக, நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டு பவர். நெடுங்காலம் ஆளும் பதவியிலே வீற்றிருக்க விரும்பு கின்றவர் அதிகமாகத் தண்டிப்பதுபோலக் காட்டிக் குறைவாகத் தண்டிக்க வேண்டும். (கு.562) கடுமொழியும், கையிகந்த தண்டமும், வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். கடுமையான சொல்லும் அளவுக்கு மீறிய தண்டனையும், அரசனுடைய அடக்குமுறை வலிமையைத் தேய்க்கும் அரமாகும். (கு.567.) இம்மூன்று குறள்களும் அடக்குமுறையின் கொடுமையை விளக்கின. அதிகாரச் செருக்குள்ளவர்கள் பொது மக்களை ஆட்டுமந்தைகளாக மதிக்கலாம். அதிகார வெறியால் அவர் களை அடக்கியான நினைக்க இத்தகையவர்களின் ஆட்சிதான் கொடுங்கோல் ஆட்சி. அதிகாரத்தைக் கொண்டும், ஆயுத பலத்தைக் கொண்டும் மக்களை அடக்க நினைப்பவர்கள் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது; விரைவில் மண்ணைத்தான் கவ்வுவார்கள். கொடுங்கோல் அரசாங்கம் கொஞ்சம் நாட்களுக்குத் தான் குடிமக்களை அடக்கி வைக்க முடியும்; குடிமக்களும் ஒன்றும் செய்ய முடியாமல் சில நாட்கள் அடங்கியிருக்கலாம். ஆனால் அடியோடு அடங்கிவிடமாட்டார்கள். இக்கொடுங்கோல் ஆட்சி என்றுதான் ஒழியுமோ என அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள்; கண்ணீர் வடிப்பார்கள். அவர்கள் ஏக்கமும் கண்ணீரும் வீண் போகமாட்டா. நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும். ஆட்சிக்கு எதிராக்கும். கொடுங்கோலாட்சிக்குக் குழிதோண்டிவிடும். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. அது குற்றமாகாது. ஆட்சியில் உள்ள குறைகளை எடுத்துக் காட்டுவோரை அடக்குவது தகாது. அவர்களை அடக்குவது அடக்குமுறையாகும். கொடிய அடக்குமுறை ஆட்சி கொடுங் கோல் ஆட்சியேயாகும். இதுவே வள்ளுவர் கருத்து. இக்கருத்தை மேலே கூறியவற்றைக் கொண்டு உணரலாம். ஆளத் தகுதியற்றவர் ஆளுவோருக்கு நெஞ்சிலே இரக்கம் வேண்டும்; துன்புறுவோரைக் கண்டால் மனம் இளக வேண்டும். இந்த இரக்கத்திற்கே கண்ணோட்டம் என்று பெயர். இதையே தாட்சண்யம் என்பர். கண்ணோட்டத்தைத் தான் தயவு தாட்சண்யம் என்று இக்காலத்தில் வழங்குகின்றோம். கடமை தவறாமை தயவு தாட்சண்யம் காரணமாகத் தம் கடமையை மறந்து விடக்கூடாது; கைவிட்டு விடக்கூடாது. தயவு தாட்சண்யம் காரணமாக - கடமையைக் கைகழுவி விடுகின்றவர்கள் நாடாளத் தகுதியற்றவர்கள். கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு தம் கடமையாகிய காரியங்களிலே குறைவு நேராமல் கண்ணோட்டம் காட்டவும் வல்லவர்களுக்கே, இவ்வுலகம் உரிமையுள்ளதாகும். (கு.578) கடமை தவறு கின்றவர்களும், கண்ணோட்டம் அற்றவர் களுக்கும் நாடாளத் தகுதியற்றவர்களாவர்; என்று இக்குறள் கூறுவதைக் காணலாம். நாட்டின் நடப்பறிதல் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் ஆளுவோர் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பல நிகழ்ச்சிகளையும் தாம் நேரே போய்ப் பார்த்தறிய முடியாவிட்டாலும் ஒற்றர் களைக் கொண்டு உணர்ந்து கொள்ள வேண்டும. இக்காலத்தில் சி. ஐ. டி. என்னும் இரகியப் போலீசார் நாட்டின் நடப்புகளை அரசாங்கத்துக்கு அறிவித்து வருகின்றனர். இதுபோல் பண்டைக் காலத்தில் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்துக்கு அறிவித்து வந்தவர்களுக்கு ஒற்றர்கள் என்று பெயர். இந்த ஒற்றர்கள் மிகவும் நேர்மையுள்ளவர்களாயிருக்க . வேண்டும். நாட்டுக்குக் கேடு சூழ்பவர்கள் யாராயிருந்தாலும் சரி, தம் நண்பர்களாயிருந்தாலும், உறவினர்களாயிருந்தாலும் அவர்களைப் பற்றி ஆளுவோர்க்கு அறிவிக்க வேண்டும. இத் தகைய நேர்மைக் குணம் உள்ளவர்களே ஒற்றர் வேலைக்குத் தகுதியுள்ளவர்கள் என்பது வள்ளுவர் கருத்து. ஆளுவோர் ஒரு ஒற்றன் உரைப்பதை அப்படியே நம்பி விடக்கூடாது. அந்த ஒற்றன் உரைக்கும் செய்தி உண்மையா என்பதைப்பற்றி மற்றொரு ஒற்றனைக் கொண்டு ஆராயவேண்டும். அதன் பிறகுதான் நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஒரு ஒற்றன் சொல்வதை மட்டும் உண்மையென்று நம்பி நடவடிக்கை எடுப்பது தவறாகும். இப்படிச் செய்கின்றவர்கள் நாட்டை ஆளுவதற்குத் தகுதி அற்றவர்கள். ஒற்றுஒற்றித் தந்த பொருளையும், மற்று ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். ஒரு ஒற்றன் உளவறிந்து தெரிவித்த செய்தியையும், மற்றொரு ஒற்றனால் உண்மைதானா என்று தெரிந்துவரச் செய்து இருவர் கூற்றும் ஒன்றாக இருந்தால் தான் அதை உண்மையென்று கொள்ளவேண்டும் (கு.589) இந்த முறையைப் பின்பற்றாத எந்த அரசாங்கமும் நேர்மை யான அரசாங்கமாயிருக்க முடியாது. இரகசியப் போலீசார் கூறுவனவெல்லாம் உண்மையென்று நம்பும் அரசாங்கம். அதிகாரம் செலுத்தும் ஆட்சியாகத்தான் இருக்கும்; உண்மை உணர்த்து நீதி செலுத்தும் ஆட்சியாக இருக்கமுடியாது. ஆளுவோர்க்கு உள்ளத்திலே ஊக்கம் வேண்டும். ஊக்கம் அற்றவர்களால் ஒன்றையும் செய்ய முடியாது. ஊக்கமே உடல் வலிமையைத் தரும்; நெஞ்சுரத்தையும் அளிக்கும். எடுத்துக் கொண்ட செயல்களைச் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாகச் செய்யும் திறமை ஆளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டும். காலந் தாழ்த்தாமல் காரியங்களை நடத்துகின்றவர்களால் எந்தத் திட்டத்தையும் எளிதில் நிறைவேற்ற முடியும். ஆட்சிக்கு எதிராகக் கிளம்பும் தவறான செய்திகளை உடனே மறுக்க வேண்டும்; தவறு இருந்தால் காலந் தாழ்த்தாமல் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். உடனடியாகச் செய்ய வேண்டியவைகளைப் பிறகு செய்து முடிக்கலாம் என்று தள்ளி வைப்பவர் ஆளத் தகுதியற்றவர்கள். இத்தகையவர்கள் ஆட்சியிலே இடம் பெற்றிருந்தால் அந்த ஆட்சி மக்களுக்குப் பயன்படாது. இவ்வுண்மைகளை, ஊக்கம், மடியின்மை என்னும் இரண்டு அதிகாரங்களிலும் உள்ள இருபது குறள்களிலும் காணலாம். நன்மை செய்யுந் துணிவு நாட்டுக்கு நன்மை தரத்தகுந்த செயல்களை துணிந்து செய்யும் முயற்சியுள்ளவர்களே ஆளத் தகுந்தவர்கள். இவ்வளவு பெரிய காரியத்தை நாம் எப்படிச் செய்வது என்று அஞ்சு கின்றவர்கள் - தயங்குகின்றவர்கள் - சோர்வடைகின்றவர்கள் -நாடாளத் தகுதியற்றவர்கள். அவர்களால் எந்த நல்ல காரியத் தையும் செய்து முடிக்க இயலாது. அஞ்சாமல் - சோர்வடை யாமல் - ஒன்றைச் செய்து முடிக்கும் துணிவுக்கே முயற்சியென்று பெயர். இதையே ஆள்வினையுடைமை என்று கூறுகிறார் வள்ளுவர். தான் செய்யும் தொழிலைத் தனக்கு கட்டுப்பட்டதாகச் செய்துகொள்ளும் தன்மையே ஆள்வினை உடைமை. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் இக்காரியம் செய்வதற்கு அருமையானது என்று சோர்வடை யாமலிருக்கவேண்டும்; அருமை என்று எண்ணும் காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற பெருமையை முயற்சியே உண்டாக்கும் முயற்சியற்றவர்கள் எதையும் செய்யத் தகுதியற்றவர்கள் என்பதை இக்குறளால் காணலாம். துன்பத்தைக் கண்டு துடை நடுங்குகிறவர்கள் கோழைகள். எத்தனை தொல்லைகள் வந்தாலும் நெஞ்சத்துடிக்காமலிருப் பவர்களே துணிவுள்ளவர்கள். இவர்களால் தான் துன்பங்களை எதிர்த்துப் போராட முடியும்; அவைகளை விரட்டியடிக்க முடியும். இப்பண்பை இடுக்கண் அழியாமை என்று கூறுகிறார் வள்ளுவர். துன்பத்தைக் கண்டு உள்ளம் தளராமலிருப்பதே இடுக்கண் அழியாமை. இடுக்கண் - துன்பம். அழியாமை -வருந்தாமை. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் அடுக்கு அடுக்காகத துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், அவைகளைக் கண்டு கலங்காதவனே சிறந்தவன்; அவன் அடைந்த துன்பம் அவனை ஒன்றும் செய்யாது. அத்துன்பமே துன்பத்திற்கு ஆளாகி அவனை விட்டு ஓடும் (கு.629) இதனால், வந்த துன்பத்தை விரட்டியடிக்க வழியறியாமல் ஏங்கியிருப்பவன் அரசாளத் தகுதியற்றவன் என்பதை அறியலாம். இரக்கம் அற்றவர்கள்; நாட்டிலே நிகழும் உண்மை நிகழ்ச்சியை உணர்ந்து கொள்ளாதவர்கள்; நன்மை தரும் பெரிய காரியங்களைத் துணிந்து செய்யும் ஆண்மையற்றவர்கள் துன்பத்தைக் கண்டால் உள்ளந் துடித்துச் சோர்வடை கின்றவர்கள்; இவர்கள் எல்லாம் நாடாளத் தகுதியற்றவர்கள். இவ்வுண்மையை வள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் அமைச்சர் கள்தாம். மந்திரிகள்தாம் அரசாட்சியை நடத்துவதிலே முதலிடம் வகிப்பவர்கள். முடி அரசிலும் குடி அரசிலும் அமைச்சர் களுக்குத் தான் பொறுப்பு அதிகம். அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பது பண்டைப் பழமொழி. முடியரசுகள் நிலைத்திருந்த காலத்தில் இருந்த பழமொழி, அமைச்சர்கள் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்ற புதுமொழிதான் இக்காலத்திற்கு ஏற்றதாகும். எந்த விதமான அரசு தோன்றினாலும் அதில் மந்திரிகளுக்கு இடம் உண்டு; அவர்களே நாட்டின் நன்மை தீமைகளுக்குப் பொறுப்புள்ளவர்களாயிருப்பர். மந்திரிகள் மதியற்றவர்களா யிருந்தால் - நடுவு நிலைமை அற்றவர்களாயிருந்தால் - வெறுப்பு விருப்புக்கு அடிமைபட்டவர்களாயிருந்தால் - அவர்கள் ஆளும் நாடு உருப்படாது சிறந்த நிர்வாகம் அந்த நாட்டிலே நடக்காது. தகுதியற்ற அமைச்சர்களால் - நாட்டின் உரிமைக்குக் கூட ஆபத்து வரலாம். ஆதலால் சிறந்த அமைச்சர்களத் தேர்ந் தெடுப்பதே அறிவுள்ள குடிமக்களின் கடமை; பொறுப்புள்ள அரசன் கடமையும் ஆகும். அமைச்சர் திறம் அமைச்சர்கள் யார்? அவர்களுடைய கடமை என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்கவேண்டும்? இவை களைப் பற்றி வள்ளுவர் நூறு குறட்பாக்களிலே குறிப்பிடு கின்றார். பத்து அதிகாரங்கள் அமைச்சர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. திருக்குறளிலே மற்றப் பகுதிகளைப் படிக்கா விட்டாலும், இப் பகுதியையாவது நமது நாட்டு மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டும். சிறப்பாக அரசியல் வாதிகள் அனைவரும் இப்பகுதியைப் படித்தறிய வேண்டும். நமது நாட்டிலே மந்திரிப் பதவி வகிப்போர் - மந்திரிப் பதவிக்கு வரவிரும்புவோர் அனைவரும் இந்த நூறு குறள் வெண்பாக் களையும் மனப்பாடம் பண்ணியிருக்க வேண்டும். இவற்றின் கருத்தை மறவாமலிருப்பவர்களாயின் அவர்கள் எக்காலத்திலும் தவறு செய்யமாட்டார்கள். மக்களால் மதிக்கப்படும் சிறந்த அமைச்சர்களாகத் திகழ்வார்கள். தெரிதலும், தேர்ந்து செயலும். ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு நாட்டின் முன்னேற்றத்திற்கான காரியங்களை ஆராய்ந்து கண்டு பிடித்தல், இக்காரியங்கள் வெற்றி பெறுவதற்கான வழி வகைகளை ஆராய்ந்து அவைகளைத் தொடங்கிச் செய்தல், தான் உண்மையென்று கண்ட கருத்தைத் துணிவுடன் சொல்லுதல், இவைகளிலே வல்லவன்தான் அமைச்சன் ஆவான் (கு.634) இத்தகைய அறிவும் ஆற்றலும் அமைச்சர்களுக்கு வேண்டும். தெளிவில்லாமல் இன்றைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு; மறுநாள் ஒரு பேச்சு; என்று பேசுகிறவர்கள் அமைச்சர்கள் அல்லர்; அவர்கள் பொதுமக்களின் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன் நிற்பவை நல்ல நூல் அறிவும் நுண்ணறிவும் உள்ளவர்க்கு, அவர் களால் கண்டுபிடிக்க முடியாமல், அவர்கள் முன் நிற்கும் நுட்பமான செய்திகள் எவை உண்டு? (கு.636) நல்ல கல்விப் பயிற்சியும், நுண்ணறிவும் படைத்தவர்களே மிகவும் சிக்கலான பெரிய காரியங்களில் எல்லாம் ஆழமாக எண்ணிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரமுடியும். கல்வியறிவும், நுண்ணறிவும் இல்லாதவர்கள் சிக்கலான காரியங்கள் வரும் போது திண்டாடுவார்கள்; திகைப்பார்கள். காரியத்தையும் கெடுத்து விடுவார்கள். ஆதலால் அறிவும் கல்வியும் இல்லா தவர்கள் அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள். ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு லாபமும், நட்டமும் சொல்கின்ற சொல்லின் மூலம் வருவதனால், தன்னுடைய சொல்லில் தவறு உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும் (கு.42) இது அமைச்சர்க்குரைத்த சிறந்ததோர் அறிவுரையாகும் இடுக்கண் படினும் இளிவந்த செய்யார், நடுக்கு அற்ற காட்சி அவர் எது வந்தாலும் கலங்காமல் காரியம் செய்யும் அறிவுள்ள வர்கள், தாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் மாட்டிக் கொண் டாலும் நிதானம் தவறமாட்டார்கள்; தம் துன்பத்தை நீக்கிக் கொள்ளுவதற்காக இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள் (கு.654.) எக்காலத்திலும் நேர்மையும் நிதானமும் இழக்காதவர்களே அமைச்சர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள். வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்; மற்றைய எல்லாம் பிற ஒரு தொழிலை உறுதியுடன் நின்று செய்து முடிக்கும் தன்மையென்று சொல்லப்படுவது ஒருவன் நெஞ்சுறுதியே யாகும்; மற்றவை யெல்லாம் வேறானவை (கு.661.) எடுத்துக்கொண்ட செயலை உறுதியுடன் நின்று நிறை வேற்றும் வலிமை அமைச்சர்களுக்கு இன்றியமையாதது. இவர் களால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். உள்ளத்திலே உரம் - உறுதி - வலிமை உள்ளவர்களால்தான் எடுத்துக்கொண்ட செயலை வெற்றியுடன் நிறைவேற்ற முடியும். ஆதலால் மந்திரி களுக்கு மன உறுதி வேண்டும் என்று இக்குறள் கூறிற்று. எதிரிகளை அடக்கல் நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் நண்பர்களுக்கு நல்ல உதவி செய்வதைக் காட்டிலும் பகைவர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளுதலே மிகவும் விரைவில் செய்ய வேண்டிய வேலையாகும் (கு.679.) இது ஒரு சிறந்த அரசியல் நுட்பத்தை விளக்கும் குறள். பகைவர்களுடன் சண்டை போடுவதைவிட அவர்களைச் சமாதானமாகச் சேர்த்துக்கொள்ளுவதே நலம். இப்படிச் செய்வதன் மூலம் போரைத் தடுக்க முடியும். சண்டை போடுவது எளிது; சமாதானத்தைப் பாதுகாப்பதுதான் அரிது. காரியத் தையும் விட்டுக் கொடுக்காமல் பகைவர்களையும் சமாதானப் படுத்துவதென்றால் அதற்கேற்ற திறமையும் தந்திரமும் வேண்டும். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது, அதைப்பற்றி இரண்டு நாடுகளும் கலந்து பேசி முடிவு காணவேண்டும். இப்படிக் கலந்து பேசினால் நல்ல முடிவைக் காணலாம். இப்படிக் கலந்து பேசுகின்றவர்களுக்குத் தூதர்கள் என்று பெயர். இக்காலத்தில் வெளிநாட்டு மந்திரிகள் என்று ஒவ்வொரு அரசாங்கத்திலும் தூதர்கள் இருந்தனர். இவர் களும் மந்திரி சபையில் அங்கம் வகித்து வந்தனர் வெளிநாட்டு மந்திரிகளையே அக்காலத்தில் தூதர்கள் என்று அழைத்தனர். இவர்கள் திறமை எப்படியிருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பத்துக் குறள்களிலே உரைக்கின்றார் வள்ளுவர். அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவுஉடையான் செல்க வினைக்கு இயற்கையான நுண் அறிவு, கண்டவர்களைத் கவரத்தக்க தோற்றம். நல்ல ஆராய்ச்சியுள்ள இம்மூன்றும் நிறைந்திருப்பவனே தூதுரைக்கும் வேலைக்குப் போக வேண்டும்(கு.688) தூய்மை, துணைமை, துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழி உரைப்பான் பண்பு நல்ல நடத்தை, உற்ற துணைவர்கள், நல்ல துணிச்சல் இம்மூன்றும் வாய்ந்திருப்பதே தூதுரைப்பவனுக்குச் சிறந்த பண்பாகும் (கு.688) இவைகள் அமைச்சர்களுக்கு எத்தகைய, திறமையும் அறிவும் பண்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தின. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு; நூலொடுஎன் நுண்அவை அஞ்சு பவர்க்கு அஞ்சாத வீரர்களைத் தவிர மற்றவர்களுடன் வாளுடன் என்ன தொடர்பு? நுண்ணறிவுள்ளவர்கள் கூடியிருக்கும் அவை யிலே, பேச அஞ்சுகின்றவர்களுக்கு நூல்களுடன் தொடர் பிருந்தும் என்ன பயன்? (.726). அமைச்சர்கள் படித்திருந்தால் மட்டும் போதாது ; சிறந்த அறிஞர்கள் -நிபுணர்கள்- கூடியிருக்கும் கூட்டத்திலே துணிந்து பேசும் திறமை வேண்டும். எல்லாத் துறைகளைப் பற்றியும் அடிப் படியான அறிவாவது இருந்தால்தான் அறிஞர்கள் கூட்டத்திலே அமைச்சர்களால் பேச முடியும். ஆகையால் பல துறைகளைப் பற்றிய நுண்ணறிவும் அமைச்சர்களுக்கு அவசியமானதாகும். நாட்டின் முனனேற்றத்திற்கான நல்ல திட்டங்களை வகுக்கும் திறமை நூலோடு கூடிய நுண்ணறிவு; தளராத மன உறுதி; பகைவர்களை வசமாக்கிக் கொண்டு சமாதானத்தை காப்பாற்றும் திறமை; தூய ஒழுக்கம் பலகலைகளிலும் தேர்ச்சி; இவைகள் எல்லாம் அமைச்சர்களுக்கு வேண்டிய தகுதிகள். இவைகளைப் பற்றி வள்ளுவர் விரிவாக சொல்லியிருக்கின்றார். அமைச்சர்களைப் பற்றி சொல்லும் பத்து அதிகாரங்களிலும் இவற்றைப் படித்தறியலாம். ஆட்சியும் செல்வமும் செல்வத்திலே சிறந்த நாடுதான் வளம்பெற்ற நாடாகும்; பலவகை வளங்களும் நிறைந்திருக்கும் நாட்டிலேதான் அமைதி யும் இன்பமும் குடி கொண்டிருக்கும்; மக்கள் ஒற்றுமையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக வாழ்வார்கள். செல்வம் நிலை யற்றது; செல்வத்தால் துன்பமேயன்றி இன்பம் இல்லை; என்பது அரசியலுக்குப் பொருந்தாத பேச்சு. இது சோம்பேறிகளின் பேச்சு; உலக வாழ்க்கையில் சலிப்புக் கொண்டவர்களின் வார்த்தை. எந்தத் தனிப்பட்ட குடும்பமும் செவ்த்தால்தான் நல் வாழ்வு வாழ முடியும். எந்த ஆட்சியும் பணபலம் இருந்தால் தான் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும். இவ்வுண் மையைத் திருவள்ளுவர் விளக்கமாக சொல்லியிருக்கின்றார். இயற்கை வளம் தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருள்களும், சிறந்த அறிஞர்களும், நிறைந்த செல்வம் உள்ளவர்களும் சேர்ந்திருப்பது தான் உயர்ந்த நாடாகும். (கு.731.) விளைபொருள்கள் இல்லாத நாடுகள் பஞ்சத்தால் பரிதவிக்கும். விவசாயத்தை வளர்த்து விளைபொருள்களைப் பெருக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை. நாட்டின் வளத்தைப் பெருக்க அறிஞர்களின் ஆலோ சனையும், உதவியும் அவசியமாகும். ஒவ்வொரு துறையிலும் தேர்ந்த நிபுணர்கள் தேசத்தின் செல்வமாவார்கள் விவசாயம், கைத்தொழில், கட்டிடக் கலை முதலியவைகளிலே ஆராய்ச்சியும் அனுபவமும் உள்ளவர்களால் தான் அவைகளை வளர்க்க முடியும். ஏனைய கலைகளில் தேர்ந்தவர்களும் ஏராளமாக இருக்க வேண்டும். வள்ளுவர் காலத்திலே செல்வம் உள்ளவர்கள், ஏழைகள் என்ற வேற்றுமை தமிழகத்திலே வலுப்பெற்றிருந்தது. அவர் காலத்திற்கு முன்பே அவ்வேற்றுமை வேரூன்றி இருந்தது. அக்காலத்துச் செல்வர்கள் சமுதாயத்திலே மிகவும் செல்வாக் குடன் இருந்தனர். அவர்கள் செல்வம் பலவகைப்பட்டவை. ஆடு, மாடு விளை நிலங்கள் சிறந்த செல்வங்களாக எண்ணப் பட்டன; இவைகளிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் வாழ்க்கையை வளம்படுத்தி வந்தன. இத்தகைய செல்வம் படைத்தவர்கள் ஏழைகள் பலர்க்கும் உதவி செய்து வந்தனர்; இல்லாதவர்களுக்கு உதவி புரிவது தங்கள் கடமை என்று கருதி வந்தனர் இவர்கள் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரித்து வந்தனர். இவர்களுடைய ஆதரவாலேயே இன்பக் கலைகள் பல வளர்ந்தன. ஆகையால் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குச் செல்வம் படைத்தவர்களும் அவசியமானவர்கள் என்று எண்ணினார் வள்ளுவர். இக்கருத்தமைந்ததே மேலே காட்டிய குறள். தேசத் துரோகிகள் பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்துஅலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு. பலவகை மாறுபட்ட கருத்துக்களையுடைய சுயநலக் கும்பல்களும், நாட்டை நாசமாக்கும் உள்நாட்டு விரோதிகளும், வேந்தனைக் துன்புறுத்தும் கொலைகாரக் குறுநில மன்னர் களும் இல்லாத நாடே சிறந்த நாடாகும் (கு.735) பலவகையான கருத்து வேற்றுமைகளைக் கொண்ட சிறு கும்பல்களால் நாட்டுக்கு நன்மையில்லை இத்தகைய நாட்டிலே ஆக்கவேலைகள் அமைதியுடன் நடைபெற மாட்டா நாட்டின் நலத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் கட்சிகள் இருக்கலாம். நாட்டு மக்களின் வாழ்வைப் பற்றிக் கவலைப் படாமல், தங்கள் நலத்தையே நாடுவோர் உண்டு. தங்களுக்குப் பெருமையும், புகழும் செல்வமும் தேடி கொள்ளுவதற்கே பொதுப் பணியாளர் என்று நடிப்போர் உண்டு. இவர்கள் அரசியல் போர்வையிலே, சமுதாயப் போர்வையிலே, மதப் போர்வையிலே இனப் போர்வையிலே, மொழிப் போர்வை யிலே புகுந்து கொண்டு நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைப்பார்கள். இக்கும்பல்களால் நாட்டுக்கு நலம் இல்லை. இக் கும்பல்கள் வளர்வதற்கு இடந்தரக் கூடாது. இவர்களுக்கு அடுத்தபடி நாட்டை நாசம் பண்ணுகின்ற வர்கள்; தேசீயப் பற்று இல்லாதவர்கள்,. இவர்கள் நாட்டைப் பற்றி நாட்டு மக்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட மாட்டார்கள்; எப்படியேனும் தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் இவர்கள் சமயம் வரும்போது நாட்டின் உரிமையைப் பலி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். தேசீயச் செல்வத்தை வளர்ப்பதற்குத் துணைசெய்ய மாட்டார்கள்; தேசீயத் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பாகவே யிருப்பார்கள்; இவர்கள் எல்லாம் உள் நாட்டுப் பகைவர்கள். இவர்களாலும் நாட்டின் செல்வம் நாசமாகும். இவர்களுக்கு அடுத்தபடி நாட்டின் முனனேற்றதிற்கு முட்டுக்கட்டைகளாக இருப்பவர்கள் குறு நில மன்னர்கள்; சிற்றரசர்கள்; நிலப் பிரபுக்கள் இவர்களுக்கும் நாட்டுப் பற்று இருக்க முடியாது. இவர்கள் தங்கள் ஆடம்பர இன்ப வாழ்வுக்காக எதையும் செய்வார்கள். எந்த நாட்டில் குறுநில மன்னர்கள் ஏராளமாக இருக்கின்றார்களோ அந்த நாட்டை அந்நியர்கள் கைக்கொள்வது எளிது. இதற்கு நமது நாட்டு வரலாறே, உதாரணம். பல சிற்றரசுகள் நமது நாட்டிலே நிலை பெற்றிருந்த காலத்தில்தான் அந்நியர்கள் சண்டை போடாமலே இந்நாட்டை எளிதிலே கைப்பற்றிக் கொண்டனர் நமது நாட்டு மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அந்நியர்களை வரவேற்றனர்; அவர்கள் ஆள இடங்கொடுத் தனர். இதனாலேயே இந்நாடு பல நூற்றாண்டுகள் அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு கிடந்தது. சுயநலமுள்ள கும்பல்கள் உள்நாட்டுக் துரோகிகள், குறுநில மன்னர்கள் இவர்களால்தான் ஒரு நாட்டின் செல்வம் கெடும் என்பதற்கு நமது நாட்டு வரலாறே உதாரணமாக விளங்குகின்றது. இவ்வுண்மையை மேலே காட்டிய குறள். விளக்கி நின்றது. இக்குறள் எக்காலத்திற்கும் ஏற்றது. உயிரோட்டம் உள்ள சிறந்த குறள்களிலே இதுவும் ஒன்றாகும். பாதுகாப்பு எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் நல் ஆள் உடையது அரண். நாட்டு மக்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் உடையதாய், ஆபத்துக் காலத்திலே உதவி செய்யக்கூடிய சிறந்த வீரர்களை உடையதே ஒரு நாட்டுக்குப் பாதுகாப்பாகும் (கு.746) வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் நாட்டிலே நிரம்பியிருக்க வேண்டும். மக்கள், தங்கள் நாட்டைப் பெற்ற தாயினும் பெரிதும் சிறந்ததாக நேசிக்க வேண்டும். நாட்டின் உரிமைக்கு ஆபத்து வரும்போது அனைவரும் தங்கள் கருத்து வேற்றுமைகளை விலக்கி வைத்துவிடடு ஒன்றுபடவேண்டும். அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று ஆபத்தை விரட்டியடிக்க வேண்டும். இத்தகைய மக்களைக் கொண்ட நாடு தான் சிறந்த நாடு. இந்த நாட்டில் தான் செல்வம் செழித்தோங்கும். நாட்டின் செல்வம் குறையாமல் பெருகுவதற்கான அடிப் படை இன்னதென்பதை இக்குறளால் விளக்கினார் வள்ளுவர். அரசாங்கம் குடிகளிடமிருந்து வரி வாங்குவது தப்பல்ல, எந்த அரசாங்கத்திலும் வரி வாங்கும் முறை இருந்துதான் தீரும். ஆனால் உண்மையான பொதுநல அரசாங்கம் வரி கொடுக்கும் வல்லமை யுள்ளவர்களிடமிருந்து தான் வரி வாங்கும். வரி கொடுக்க வல்லமையற்றவர்களிடம், இவர்களைக் கசக்கிப் பிழிந்து பொருள் பறிக்காது. மக்கள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் வரியை அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய அரசாங்கமே மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சியாக நிலைத்து வாழ முடியும். இதுவே வள்ளுவர் கருத்து. இக்கருத்தை விளக்கும் குறள் கீழ் வருவது. அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல். இரக்கத்தோடும், அன்போடும், இணைந்து வராத செல் வத்தின் சேமிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது; தள்ளிவிட வேண்டும் (755). மக்கள் மனம் உவந்து கொடுக்கும் செல்வமே சிறந்தது; மன வேதனையுடன் கொடுக்கும் வரியை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிடுவதே நலம்; இதுவே மக்கள் நல அரசாங்கத்தின் கடமை. இக்கருத்தையே வள்ளுவர் இக்குறளால் விளக்கிக் காட்டினார். குடிமக்களிடம் கொடுமையாக வரி வாங்கினால், அவர்கள் அரசாட்சியிடம் வெறுப்புக் காட்டுவர் அவ்வெறுப்பு வளர்ந்தால் அரசாட்சிக்கு ஆபத்து. பொதுமக்களின் வெறுப்பு நாட்டுப் பாதுகாப்பை மெலிவடையச் செய்யும். ஒரு நாட்டின் செல்வம் சிதைவுபடாமல் இருக்கவேண்டு மானால், அந் நாட்டிலே போதுமான படைபலமும் இருக்க வேண்டும். இதுவும் வள்ளுவர் கொள்கை. படைப்பெருக்கம், வலித்து மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்காக அன்று, மற்றொரு நாட்டுக்கு அடிமைப்படாமல் உரிமையுடன் வாழ் வதற்காகத்தான் படை பலம். அந்நியர் நம் நாட்டிலே புகுந்து, நமது நாட்ட வளங்களைக் கொள்ளையிடாமலிருப்பதற்காகவே படை பலம் வேண்டும். அப்படையின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக உரைத்திருக்கின்றார் வள்ளுவர். மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு. வீரம், மானம், சிறந்த நெறியிலே நடக்கும் தன்மை, தலைவருடைய நம்பிக்கைக்கு உரியதாயிருத்தல், இந்த நான்கு தன்மைகளும் ஒரு படைக்குரிய சிறந்த பண்பாகும் (கு.766) இதுவே மேலே குறித்த கருத்தை விளக்கும் குறள். இத் தகைய சிறந்த - நாட்டுப் பற்றுள்ள - நம்பிக்கைக்குரிய படைகளைக் கொண்ட நாட்டின் செல்வமும் சிதையாது; சிறந்து வளரும். செல்வந் தேடும் வழி அரசாங்கத்தின் செலவுக்கு வேண்டிய பொருளை எந் தெந்தத் துறைகளின் மூலம் தேடவேண்டும் என்பதையும் வள்ளுவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உறுபொருளும், உல்குபொருளும், தன்ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். குடிகளிடமிருந்து வருகின்ற வரிப்பொருள்; அந்நிய நாட்டு பண்டங்கள் நமது நாட்டுக்கு வியாபாரத்திற்காக வரும்போது, அவைகளின் மேல் விதிக்கப்படும் சுங்க வரியின் வாயிலாகக் கிடைக்கும் பொருள்; தனது ஆட்சிக்கு விரோதமாயிருப்பவர் களை அழித்து அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருள்; இவைகளே அரசனுடைய பொருளாகும் (கு.756). இந்த மூன்று துறைகளிலும் கிடைக்கும் வருமானம் போதா விட்டால், மேலும் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். அவைகளின் மூலம் புதிய வருமானங் களைத் தேட வேண்டும். இதனை இயற்றலும் ஈட்டலும் (கு.385) என்னும் குறளால் கூறினார் வள்ளுவர். இது ஆளத்தகுந்தவன் என்னும் பகுதியிலே விளக்கப்பட்டுள்ளது. பொருள் தேடும் வழியைக் காட்டும் இடத்திலும் இக் கருத்தை வலியுறுத்துகின்றார் வள்ளுவர். செய்க பொருளைச்; செருநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனில் கூரியது இல். பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து அப்பொருளைச் சேர்க்க வேண்டும், ஏனென்றால், பகைவர்களின் செருக்கை அறுத்துச் சிதைக்கின்ற வாள் அதுதான். அதை விடக் கூர்மை யான படைவேறு ஒன்றும் இல்லை (கு.759). இதுவே மேலே காட்டிய கருத்தைக் கொண்ட குறள் வெண்பா. ஒரு நாடு செல்வத்திலே சிறந்து விளங்கவேண்டுமானால் அந்நாட்டிலே விவசாயம் சிறந்திருக்கவேண்டும். பல துறை களிலும் தேர்ந்த அறிஞர்கள் அந்நாட்டிலே இருக்கவேண்டும்; நாட்டின் முன்னேற்றத்திலே கவலையுள்ள செல்வர்களும் வாழ வேண்டும்; தந்நலத்தையே நோக்கமாகக் கொண்ட தலைவர் களால் நடத்தப்படும் இயக்கங்கள் நாட்டுக்கு ஆபத்தானவை; உள்நாட்டுப் பகைவர்களாலும் நாட்டு வளம் நாசமாகும்; சிற்றரசர்களாலும் நாட்டின் உரிமை பறிபோகும்; எல்லா வளங்களும் நாட்டிலே நிரம்பியிருக்கவேண்டும்; நாட்டைப் பாதுகாக்கும் தேசப் பற்றுள்ள வீரர்கள் நாட்டிலே நிறைந்திருக்க வேண்டும்; மக்கள் மனம் உவந்து கொடுக்கும் பொருளையே ஆட்சியாளர் வரியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்; சிறந்த பண்பமைந்த படையுள்ள நாட்டில் தான் அமைதி நிலவும்; செல்வம் பெருகும். மக்கள் மனங் கோணாமல் கொடுக்கும் வரி; சுங்க வரி; பகைவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருள்; இவைகளே அரசாங்கத்தின் வருமானம். இவ்வரு மானம் போதாவிட்டால் வேறு வகைகளில் வருமானத்தைத் தேடிக்கொள்ளவேண்டும். இவைகளே அரசாங்கத்திற்கு வருமானந் தேடற்குரிய வழிகள் என்று கூறியிருக்கின்றார். வள்ளுவர் காலத்திலே ஆட்சியாளர் இம்முறையைப் பின்பற்றியே செல்வம் சேர்த்து ஆட்சி நடத்தினர் என்று கொள்ளலாம்; மக்கள் மனந்துடிக்கும்படி அவர்கள் தலையிலே வரிசைச் சுமத்தி கொடுமைப்படுத்தும் கொள்ளை வள்ளுவர் காலத்தில் இல்லை. இக்கொள்கையை அவர் ஒப்புக் கொள்ளவும் இல்லை. இவ்வுண்மையே மேலே காட்டிய குறள் வெண்பாக் களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். உரிமை ஆட்சிக்கு அடிப்படை உறவுக்கு உரியவர் ஒவ்வொரு அரசாங்கமும் தம்முடன் ஒத்த கொள்கை யினருடன் உறவு கொண்டிருக்கவேண்டும். ஏறக்குறைய ஒன்று பட்ட கொள்கையினருடன் கொண்டிருக்கும் உறவுதான் நிலைத்துநிற்கும்; உதவியாக இருக்கும். தன் எதிரிகளுடன் வைத்துக் கொண்டிருக்கும் தொடர்பு நீடித்திருக்காது, எதிரி களுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நட்பு, தன் கொள்கை களை உறுதியுடன் பின்பற்றி நடப்பதற்கு இடையூறாகவே இருக்கும். அரசியல்வாதிகள் - நாட்டை ஆளுவோர் - அறிந்து கொள்ளவேண்டிய அரும் பொருள்களில் இது ஒன்று. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் நட்புக் கொள்ளுவதற்குப் பழைய தொடர்பும், பழக்கமும் வேண்டாம்; ஒன்றுபட்ட உணர்ச்சியே நட்பு உண்டாவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். (கு.85) நட்பிற்கு வீற்றிருக்கை யாதுஎனின், கொட்பு இன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை நட்புக்குரிய சிறந்த நிலை யாதென்றால், என்றும் வேறு பாடு இல்லாமல், முடியும்போதெல்லாம், உதவிபுரிந்து தாங்கும் நிலைமையாகும். (கு.889) இந்த இரண்டு குறள்களும் யாரை நட்பாகக் கொள்ள வேண்டும்; உறவு கொள்கின்றவர்களின் பண்பு எப்படியிருக்க வேண்டும்; எப்படிப்பட்ட அரசாங்கங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு ஒத்து வாழ வேண்டும்? என்பவைகளை உணர்த்தின. நமக்கும் அவர்களுக்கும் நீண்ட காலத்தொடர்பும் பழக்கமும் உண்டு; கொள்கையிலே வேறுபட்டிருந்தாலும், அவர்களுடைய உறவைக் கைவிடக்கூடாது. நம் நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் பழந்தொடர்பு யாதும் இல்லை; கொள்கை யிலே நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம் என்பதற்காக அவர்களுடன் நாம் புதிய உறவு கொள்வது பொருந்தாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் சிலர் உண்டு. இவர்கள் நேர்மையான அரசியல்வாதிகள் அல்லர் என்பதை மேற்காட்டிய குறளால் காணலாம். கைவிடத் தக்கவர் மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈந்தும் ஒருவுக ஒப்பு இலார் நட்பு. குற்றமற்றவர்களுடனேயே நட்புக்கொள்ள வேண்டும்; தம்முடன் ஒத்த பண்பும், கொள்கையும் இல்லாதவர்களுடன் கொண்ட நட்பை, அவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்தாவது துண்டித்துககொள்ள வேண்டும் (கு.800). தெரியாத்தனமாகத் தம்முடன் முரண்பட்டவர்களுடன் உறவு கொண்டு விடலாம்; அந்த உறவை நீடித்து வைத்துக் கொண்டிருத்தல் தவறு. அந்த நட்பை விரைவில் அறுத்துக் கொள்வதே நலம்; விரைவில் அந்த நட்பைக் கைவிட முடியா விட்டால் - நாம் விட்டாலும் அவர்கள் நம்மைவிட்டு விலகாமல் இருந்தால் - அவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத் தாவது விலகிக்கொள்ள வேண்டும்; இதுதான் அறிவுடைமை; உரிமை ஆட்சி நிலைத்து நிற்பதற்கு அடிப்படையாகும். கனவிலும் இன்னாது மன்னோ, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு செயல் வேறு; சொல் வேறு; என்று இருபபவர்களுடன் கொள்ளும் நட்பு, நனவில் மட்டும் அன்று கனவிலும் துன்பந் தருவது. (கு.819) தம்முடன் ஒத்த செயலும் சொல்லும் இல்லாதவர்களுடன் கொள்ளும் நட்பு எவ்வளவு இன்னல் விளைவிக்கும் என்பதை இதனால் காணலாம். பகைநட்பாம் காலம் வருங்கால் முகும்நட்டு அகம்நட்பு ஒரீஇ விடல். பகைவர் நண்பராகும் சமயம் வந்தால், அவர்களுடன் முகத்தளவில் நட்புக்கொண்டு, உள்ளத்திலே நட்பில்லாமல் இருந்து, காலம் வாய்க்கும் போது அந்த நட்பையும் கைவிட வேண்டும். சில சமயங்களில் கால நிலையைக் கருதி - உலக நிலையைக் கருதி பகைவர்களுடனும் கூட்டுச்சேரக் கூடிய காலம் வரலாம். அம்மாதியான சமயம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அப்பகைவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பவைகளை வள்ளுவர் இக்குறளின் மூலம் மிகவும் அழகாக வலியுறுத்தியிருக்கின்றார். இக் குறளிலே அடங்கியிருக்கும் அரசியல் நுட்பம் அறிஞர் களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகும். பகைவர் எக் காலத்திலும் நம்முடன் ஒத்த நட்பினராக இருக்கமாட்டார்கள்; தங்கள் காரியத்தின் பொருட்டு மட்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி நடிப்பார்கள்; நாமும் அவர்களைப் போலவே நடித்தால் தான் அவர்களால் நாம் ஏமாற்றப்படமாட்டோம். பிற நாடுகளுடன் உறவுகொள்ளும் அரசியல் அறிஞர்கள் இவ்வுண் மையை மறத்தல் கூடாது. ஒத்த கொள்கையினருடன் தான் உறவு கொள்ள வேண்டும்; உண்மையில் உதவி செய்கின்றவர்களுடன் கொள்ளும் நட்புத்தான் நிலைத்து நிற்கும். குற்றமற்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். குற்றம் உள்ளவர்களிடம் நட்புக் கொண்டு விட்டால் எவ்வகையிலாவது அதைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட கொள்கையற்றவர்களிடம் கொள்ளும் உறவு கனவிலும் துன்பந்தரும். பகைவரோடு உறவு கொள்ள நேர்ந்தால் அவர்களைப் போலவே நாமும் அவர் களுடன் பழக வேண்டும். இம்முறையில் மற்றவர்களுடன் உறவு கொண்டிருக்கும் ஆட்சிதான் நிலைத்து நிற்கும். இவைகளே ஆட்சி நிலைப்பதற்கு அடிப்படையானவை. இக்கருத்துக்களையே வள்ளுவர் வலியுறுத்தி யிருக்கின்றார். அரசினர்க்கு உரைத்த இவ்வுரைகள் தனிப்பட்ட மக்களுக்கும் பொருந்தும். அமைதிக்கு வழி அமைதி நிலவும் நாட்டிலேதான் அனைவரும் அல்லற் படாமல் வாழ முடியும். அறிவுள்ளவர்களால் ஆளப்படும் ஆட்சியே அமைதிக்குக் கேடில்லாமல் நடந்து கொள்ளும். உள்நாட்டிலே சமாதானம் நிலவக் குடிமக்களுடன் ஒத்துழைக்கும். வெளிநாட்டு அரசாங்கங்களோடும் சமாதான உடன்படிக்கைகள் செய்துகொள்ளும். ஆழ்ந்த சிந்தனையும், பொறுமையும், சர்வ தேசக் கண்ணோட்டமும் உள்ளவர்களால் ஆளப்படும் நாடு எப்பொழுதும் அமைதிக்கு ஆபத்தில்லாமல் நடந்து கொள்ளும். பகையால் தீமை தன்னுடன் விரோதங் கொண்டிருப்பவர்களைச் சமாதான முறையிலேயே சரிப்படுத்த வேண்டும். அவர்களுடன் பகைத்துப் போர் செய்து அழித்து விடலாம் என்று எண்ணாவது அறிவுள்ளோர்க்கு அழகன்று. இப்படி எண்ணுவது போர் வெறிப்பிடித்தவர்களின் தன்மை; இதனால் நன்மை உண்டா காது; உலகத்திலே அமைதி நிலவாது; என்று கூறுகிறார் வள்ளுவர். இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை, தவலும், கெடலும் நணித்து. பகைமை கொள்ளுவதால் எதிரியை வெல்லுவது இனியது என்று நினைக்கின்றவனுடைய வாழ்க்கையிலே தவறும், கெடுதி யும் விரைவில் உண்டாகும். (கு.856) இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான் ஆம் நன்னயம் என்னும் செருக்கு. பகையால் துன்பங்கள் எல்லாம் தொடரும்; நட்புக் கொள்ளு வதால் நல்ல நீதியாகிய உயர்ந்த நிலைமை தோன்றும். (கு.860) யாருடனும் திடீரென்று பகைத்துக் கொள்ளுவதால் தீமைதான் ஏற்படும். பகையில்லாமல் பலருடன் நட்பினராய் வாழ்வதே நலமமாகும்; என்று இவ்விரண்டு குறள்களும் இயம்பின. அமைதிக்காகப் போர் நமது பக்கத்திலேயே வாழ்கின்றனர்; எவ்வளவு சொல்லி யும் அவர்கள் நலமுடன் சமாதானத்துடன் வாழ விரும்ப வில்லை. காலங்கிடைத்தால் நம்மைக் காலைவாரிவிடவே விரும்புகின்றனர்; இதற்கான பருவத்தை எதிர்நோக்கியிருக் கின்றனர். இவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் திட்டமாக வரையறுத்துக் கூறுகின்றார். கொடுத்தும் கொளல்வேண்டும்; மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. தன் அண்டையிலேயே இருந்துகொண்டு எப்பொழுதும் தீமைகளையே செய்து கொண்டிருப்பவனுடைய பகையை விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்ள வேண்டும். (கு.867) இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் கை கொள்ளும் காழ்த்த இடத்து. முள்ளுடைய மரத்தை முற்றவிடக்கூடாது; இளமரமாக இருக்கும்போதே வெட்டி வீழ்த்திவிட வேண்டும்; அம்மரம் முற்றி முதிர்ந்துவிட்டால் அதை வெட்டுகின்றவர்களின் கையையே அது வருத்தும்.”(கு.879) இவ்விரண்டு வெண்பாக்களும், தம்மை அடுத்து நிற்கும் பகைவர்களை எப்படியாவது அழித்தால்தான் சமாதானத்துடன் வாழமுடியும் என்பதை வலியுறுத்தினார். எவ்வகையிலும் சமாதானத்துக்குக் கட்டுப்படாமல் - இணங்காமல் - நமக்கு இடையூறு விளைவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பகைவர்களை வேறு என்ன தான் செய்ய முடியும்? இத்தகைய தீராப்பகைவர்கள் உள் நாட்டினராயினும் சரி, வெளி நாட்டின ராயினும் சரி அவர்கள் ஆபத்தானவர்கள். இவ்வுண்மையை எடுத்துரைத்தார் வள்ளுவர். வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. வாளைப்போல் வெளிப்படையாக விரோதிகளாக இருப்பவர்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. உறவினர்களைப் போலே நடித்து, உள்ளத்திலே பகை கொண்டிருக்கும் வஞ்சகர் களின் தொடர்புக்குத் தான் அஞ்ச வேண்டும் (கு.883) உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந்து அற்று. உள்ளத்திலே ஒற்றுமை இல்லாதவர்களுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிலே பாம்புடன்ஒன்று கூடி வாழ்வது போன்றதாகும். (கு.890) நட்பினர்களைப் போல நடிக்கும் வஞ்சகப் பகைவர்களை அழிக்க வேண்டும்; அப்பொழுதுதான் ஒரு நாடோ ஒரு மனிதனோ சமாதானமாக வாழ முடியும்; இவ்வுண்மையை இவ்விரண்டு குறள்களும் எடுத்துக் காட்டின. மேலே காட்டிய, 867, 879, 882, 890 ஆகிய நான்கு வெண் பாக்களால் மற்றொரு உண்மையையும் உணரலாம். சமாதானத் தை நிலைநாட்டும் நோக்கத்துடன் சண்டை பிடிப்பதும் தவறன்று என்பதே அந்த உண்மை. பகையை வளர விட்டால் சண்டையின் அடிப்படையும் வளர்ந்துகொண்டே போகும். ஆதலால் சமாதனத்திற்கு இணங்காத பகைமைப் பூண்டுகளை முளையிலே கிள்ளிவிடுதல் நலம். இது சமாதானம் வளர்வதற்கு வழி. இதுவே வள்ளுவர் கருத்து என்பதில் ஐயம் இல்லை. வல்லவர் கூட்டுறவு அமைதியை நிலை நாட்ட முயல வேண்டுவதே ஒரு அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும். எந்த வழியிலும் சமாதானத்திற்குச் சம்மதிக்காமல், சண்டைக்கே ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் பகைவர்களை அழிப்பதே அரச நீதி. இதற்கேற்ற அறிவும் ஆற்றலும் ஆளுவோரிடம் அமைந்திருக்க வேண்டும். இவ்வறிவையும் ஆற்றலையும் அடைய வேண்டு மானால் எந்த அரசாங்கமும் தன்னைவிட வலுவுள்ள அரசாங் கத்துடன் உறவு கொண்டிருக்கவேண்டும். அறிஞர்களின் கூட்டத்தையும் தனக்கு வழிகாட்டுவோராக அணைத்துக் கொண்டிருக்க வேண்டும். இவ்வுண்மையைப் பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் காணலாம். இவ் வதிகாரத்தில் உள்ள பத்துப் பாடல்களும் இவ்வுண்மையை எடுத்துக்காட்டுகின்றன. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. தம்மைக்காட்டிலும் எல்லாவற்றிலும் பெரியவர்களா யிருப்பவர்களை உறவினராகக் கொண்டு வாழ்வது ஆற்றல் எல்லாவற்றிலும் சிறந்த ஆற்றலாகும்.”(கு.144) சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் ஆராய்ந்து அறிவுரை கூறும் அறிஞர்களையே உலகம் கண்ணாகக் கொண்டு வாழ்கின்றது ஆதலால் ஆராய்ந்து அறிவுரை கூறும் அறிஞர்களையே அரசன் தேர்ந்தெடுத்து நட்பாகக் கொளள வேண்டும். (கு.445) நம்மைக் காட்டிலும் சிறந்த வல்லரசுகளுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்; அறிஞர்களை துணையாக் கொண்டி ருக்கவேண்டும்; என்ற உண்மைகளை இவ்விரண்டு குறள் வெண்பாக்களும் எடுத்துக்காட்டின. தானாகவே யாருடனும் பகை கொள்ளக்கூடாது. பகைமை யால் துன்பங்கள் தாம் தொடரும். நட்பால் நன்மையுண்டாகும். தீராத பகைவர்களுடன் வெளிப்படையாகப் பகைமை கொள்ளலாம். அப்பகையை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். நேரடியான பகைவர்க்குத் தான் பயப்படவேண்டும். பகைவருடன் உறவு கொண்டு வாழ்வது பாம்புடன் சேர்ந்து வாழ்வது போன்றதாகும். தம்மைப் பகைவர்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால் வல்லரசுகளுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்; அறிஞர்களின் துணையையும் பெற்றியிருக்க வேண்டும். இவைகள் சண்டையுண்டாக்காமல் சமாதானத்தை அமைதியை நிலை நிறுத்தும் வழிகள். சமாதானம் ஓங்க வள்ளுவர் இக்கருத்துக்களையே கூறியிருக்கின்றார். மானம் உள்ள வாழ்வு வள்ளுவர் உயர்ந்த குடி தாழ்ந்த குடி என்ற பிரிவை ஒப்புக்கொள்கிறார். உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தங்கள் குடிப்பெருமைக்குக் குறைவு வராமல் ஒழுகவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். குடிப்பிறப்பினால் உயர்வு உண்டு; அந்த உயர்வை எவ்வகையிலும் காத்துக்கொள்ள வேண்டியதே குடிப்பிறந்தார்க்கு அவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும். அவ்வறிவுரைகளைப் பின்பற்றி வாழ்வோர் சிறந்த மனிதர்களாக மதிக்கப்படுவார்கள். அவர்களே பண்பாடுள்ள மக்கள் என்று பாராட்டப்படுவார்கள். ஒழுக்கமே மானம் மக்கள் தாம் பிறந்த குடும்பத்தின் பெருமைக்கு இழுக்கு வராதபடி காத்துக்கொள்ள வேண்டும், குடிப்பெருமை குன்றும் படி நடந்துகொள்ளக்கூடாது. உயிரினும் சிறந்தது மானம். மானத்திற்கு பங்கம் உண்டாகும் படி நடந்து கொள்ளக்கூடாது. எவ்வளவு தான் இன்பம் வருவ தாயினும், நன்மை தருவதாயினும், இலாபம் கிடைப்பதாயினும் மானத்தை விட்டுவடக்கூடாது. பெருமையுடன் வாழ்தல் வேண்டும். பிறர் இழிவாக ஏளனமமாகப் பழித்துப் பேசும்படி வாழ்வது வாழ்க்கையன்று. பல சிறந்த பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும்; அப்பண்புகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். பண்பற்ற மனிதன் பலராலும் பழிக்கப்படுவான். யாரிடத்தும் நல்ல தன்மையுடன் நடந்து கொள்க. தீமை செய்வோர்க்கும் நன்மை செய்ய வேண்டும். பிறர் செய்த தீமைகளை மறந்துவிட வேண்டும. இவைகளே பண்பின் பயன் ஆகும். இத்தகைய பண்புகள் மக்களுக்கு இன்றியமையாதவை. குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்னும் அதிகாரங்களிலே இவைகளைப் பற்றி விரிவாகச் சொல்லுகிறார் வள்ளுவர். 50 குறள்களிலே இந்த அறிவுரைகள் கூறப்படுகின்றன. மற்றவர்கள் மதிக்கும்படி மானத்துடன் மனிதத் தன்மையுடன் வாழ்வது எப்படி என்பதை இந்த 50 குறள் களையும் படித்தவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஒழுக்கமும், வாய்மையும்; நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப் பிறந்தார். உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் சிறந்த ஒழுக்கம், உண்மை, நாணம் இம்மூன்று பண்புகளையும் கைவிடாமல் வாழ்வார்கள். (கு.952) ஒழுக்கங் கெட்ட மக்களை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். வாய்மையற்றவர்களை - உண்மையில்லாதவர்களை ஒருவரும் நம்பமாட்டார்கள். தீமை செய்வதற்கு நாணாதவர்கள் பலருடைய நகைப்புக்கும் பழிகளுக்கும் ஆளாவார்கள். தீமை செய்கின்றவர் களை எல்லோரும் வெறுப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பகைவர்கள் தோன்றிக்கொண்டே யிருப்பார்கள். அவர்களால் மன அமைதியுடன் வாழ்க்கை நடத்த முடியாது. ஆகையால் தான் உயர் குடியிலே பிறந்தவர்கள் ஒழுக்கம், வாய்மை, நாணம் இம் மூன்றையும் கைவிட மாட்டார்கள் என்று கூறினார். நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்குஙட வகை என்ப வாய்மைக் குடிக்கு. உண்மையான உயர்ந்த குடியிலே பிறந்தவர்களுக்கு, முக மலர்ச்சி, ஈகை இன்சொல், பிறரைப் பழித்துப் பேசாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பார்கள். (கு.353.) யாரிடமும் நகை முகங் காட்டிப் பேசுவதே நல்ல பண்பு, முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு பேசுகின்றவர்கள் மற்றவர்கள் நட்பைப் பெற முடியாது. இல்லாதார்க்கு ஈயும் குணம் வேண்டும. உள்ளதை ஒளிக்காமல் உதவி செய்ய வேண்டும். எவரிடமும் இனிமையாகப் பேசவேண்டும்; யாரிடமும் எரிந்து விழக் கூடாது. கடுஞ் சொற்கள் காரியத்தைக் கெடுத்துவிடும்; இனிய சொற்களே நன்மையைத் தரும்; ஈடுபட்ட செயல்களில் வெற்றியை உண்டாக்கும். எவரையும் இகழக் கூடாது; பழிக்கக் கூடாது. பிறரைப் பழிப்பவன் தானும் பழிக்கு ஆளாவான். ஆகையால் இந்த நான்கு குணங்களையும் சிறந்த பண்புகள் என்று குறித்தார் வள்ளுவர். குடிப்பிறந் தார்கண் விளங்கும் குற்றம், விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. உயர்ந்த குடியிலே பிறந்தவர்களிடத்தில் உண்டாகும் குற்றத்தை மறைத்துவிட முடியாது. அது வானத்தில் சந்திரனிடம் காணப்படும் களங்கம்போலப் பலருங் காணும்படி உயர்ந்து தோன்றும். (கு.577.) குற்றம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள வர்கள் எது செய்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்; வியப்படையவும் மாட்டார்கள். குற்றம் புரிவதே அவர்கள் தொழில் என்று பொருட்படுத்தாமல் விடுவார்கள். ஆனால் குற்றம் செய்வதற்கு அஞ்சும் உயர் குடியிலே பிறந்தவர்கள் குற்றம் புரிந்தால் அதைப்பற்றி அனைவரும் உரையாடத் தொடங்கி விடுவார்கள். ஆகையால் குடிப் பெருமையைப் காப்பாற்றிக்கொள்ள விரும்புவோர் குற்றங் களில் மாட்டிக் கொள்ளாமல் மிகவும் கருத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குடிப் பிறந்தார்க்குக் கூறும் இவ் அறவுரைகள் அனைவர்க்கும் பொருந்துவனவாம். மானத்துடன் வாழும் வழி மானம் உயிரினும் சிறந்தது என்பது தமிழர் துணிவு. மானம் என்பது தனது நிலைமைக்குத் தாழ்வு வராமல் வாழ்வது. தாழ்வு வருமானால் உயிரைத் துறந்தாவது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மானங்கெடாமல் வாழ்வதற்கு வள்ளுவர் காட்டும் வழி, மிகச்சிறந்தது. குடிப் பிறந்தார், ஏழை, பணக்காரர் அனைவரும் மானத்துடன் வாழ வழி சொல்லி யிருக்கின்றார் அவர். பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. செல்வம் நிரம்பியிருக்கும் போது தலைக்கனம் கொள்ளக் கூடாது; எல்லோரிடமும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்; சிறிய வறுமை உண்டான போது பணிதல் கூடாது; செல்வம் உள்ளவர்கள் போலத் தலை குனியாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்(கு.963). செல்வச் செருக்கால் அடக்கமின்றி நடப்பவர்களுக்குப் பெருமையில்லை. இலாபமும் இல்லை. அவர்களுக்குப் பகை வர்கள் பெருகுவார்கள். அப்பகைவர்கள் அச் செல்வர்களின் செருக்கை அடக்கவும் அவமானப் படுத்தவும் காலம் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். செல்வர்களிடம் சிறு தவறு நேர்ந் தாலும் போதும்; அதை வைத்துக்கொண்டே அவர்கள் மானத்தை வாங்கி விடுவார்கள் ஆகையால் செல்வம் படைத்தவர்கள் அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வறியவர்கள் எள்ளி இகழ்ந்து பேசுதல் இயல்பு. ஏழைப் பேச்சு அம்பலம் ஏறாது; ஏழை யென்றால் மோழையும் பாயும். ஆகை யால் செல்வம் அற்றவர்கள் மானம் கெடாமல் வாழவேண்டு மானால் செல்வம் உள்ளவர்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். இவ்வுண்மையை உரைத்தது இக்குறள். தலையின் இழிந்த மயிர் அணையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. மக்கள் தமது உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டால் அவர்கள் தலையினின்றும் கீழே விழுந்த மயிரைப்போல் ஆவார்கள். (964) தலையிலிருக்கும் வரையிலுந்தான் மயிருக்கு மதிப்பு. தலையிலிருந்து கீழே விழுந்துவிட்ட மயிருக்கு மதிப்பில்லை. அதைத் தொட்டால் தீட்டு; அது கால் கைகளில் பட்டால் சுகக்கேடு; என்று வெறுப்பது இயல்பு. இதைப் போலத்தான் நல்ல நிலையிலிருந்து கெட்டுப்போனவர்களும் மதிக்கப்படுவார்கள். இவ்வுண்மையைக் கூறியதே இந்தக் குறள் வெண்பா. ஒருவர்க்குப் பெருமையும், சிறுமையும், பிறப்பால் உண்டா வதில்லை; அவர் செய்யும் தொழிலால் வரும் என்பதே வள்ளுவர் கருத்து. சிறந்த தொழில்களைச் செய்வோர் உயர்குடியினர் இழிந்த தொழில்களைச் செய்வோர் தாழ்ந்த குடியினர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; பிறப்பிலே வேற்றுமையில்லை. ஆனால் அவைகள் செய்யும் தொழில் வேறுபாடுகள் காரணமாகப் பெருமை மட்டும் ஒத்திராது; வெவ்வேறாக இருக்கும் (கு.972) இதன் மூலம் பெருமைபெற்று வாழ்வதற்கான வழியையும் காட்டினார். சிறந்த தொழில்களைச் செய்து வாழ்வதற்கு பெருமையுடன் வாழ்வதற்கு வழியாகும். இதுவே வள்ளுவர் கருத்து. பணியும்ஆம் என்றும் பெருமை; சிறுமை அணியும்ஆம் தன்னை வியந்து. எக்காலத்திலும் பணிந்து நடப்பதே பெருமையின் பண் பாகும். தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளுவதே சிறுமையின் தன்மையாகும் (கு.978) பெருமையின் தன்மை இன்னது; சிறுமையின் தன்மை இன்னது; என்பதை இக்குறள் விளக்கியுரைத்தது. அடக்கமும் பொறுமையுமே பெருமையின் பண்பு. அடங்காமையும் செருக்குமே சிறுமையின் பண்பு.. மனிதத் தன்மை நற்குணங்களைப் பின்பற்றி நடக்கும் தன்மைக்குச் சான்றாண்மை என்றுபெயர். சால்பு - நல்ல பண்புகள் ஆண்மை - அவற்றை ஆள்வது பண்பாடுள்ள மக்களுக்குச் சான்றாண்மைக் குணம் இன்றியமையாதது. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலை அல்லார் கண்ணும் கொளல். உயர்ந்த குணங்களுக்கு உரைகல் யாதென்றால், தன் தோல்வியை தனக்கு ஒப்பில்லாத தாழ்ந்தவரிடத்திலும் ஒப்புக் கொள்ளுவதாகும்(கு.986) இக்குறள் உயர்ந்த பண்பாடுள்ள மக்களின் ஒப்பற்ற பண்பு இதுவென்று உரைக்கிறது. யாரும் தமது தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஒரு காரியத்திலே தாம் தோற்று விட்டாலும் ஏதேதோ சமாதானம் சொல்லித் தாம் தோற்க வில்லையென்றே சாதிப்பார்கள். இது எல்லா மக்களிடமும் உள்ள இயற்கைக் குணம்; இக்குணத்தை மாற்றிக் கொண்டவர் களே சான்றோர்கள். தம்மைவிடத் தாழ்ந்தவர்களாயிருந்தாலும் அவர்களிடமும் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளுவதே உயர்ந்த பண்பு. இப்பண்பு வேண்டும் என்று வலியுறுத்து கின்றது இக்குறள், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு . துன்பங்களைச் செய்தவர்க்கும், நல்ல உதவிகளைச் செய்யா விட்டால் சான்றோரின் சார்பால் பயன் தான் என்ன?”(கு.987) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். என்று துறவிகளுக்குக் கூறிய இப்பண்பைச் சான்றாண் மையிலும் மேற்காட்டிய குறளால் வலியுறுத்தினார் துன்பம் புரிவோர்க்கும் நன்மை புரிவதுதான் உலகிலே குற்றங்கள் வளராமல் இருப்பதற்கு வழி என்பது வள்ளுவர் கொள்ளை, ஆதலால் அறிவும் பண்பும் நிறைந்த சான்றோர்கள் இந்த அறத்தைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார். மக்களுக்கு நல்லொழுக்கம் வேண்டும்; அவர்கள் உண்மை யைப் பின்பற்றி வாழவேண்டும்; தீமைகள் செய்வதற்கு நாண வேண்டும். பிறர் விரும்பும்படியான பேச்சும் நடத்தையும் வேண்டும். குடிப்பெருமைக்குக் குறைவுண்டாகாத வழியிலே நடந்து கொள்ள வேண்டும். மானத்தைப் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எல்லாரிடமும் பணிவுடன் நடந்து கொள்ளுவதே மானம் கெடாமல் வாழும் வழி. நம் நிலையைக் காத்துக் கொள்ள வேண்டும். சிறந்த தொழிலைச் செய்து உயர்வாக வாழவேண்டும். தமது தோல்வியை மனமார ஒப்புக் கொள்ள வேண்டும். தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும். இவைகள் எல்லாம் சிறந்த பண்பாடுகளாகும். இப்பண்பாடு களை உடையவர்களே உயர்ந்த மனிதர்கள். அரம்போலும் கூர்மைய ரேனும், மரம்போல்வார் மக்கட் பண்பு இல்லாதவர். அரம் போலக் கூர்மையான அறிவு படைத்தவராயினும் மக்களுக்குரிய தன்மையற்றவராயிருந்தால் அவர்களால் யாருக்கும் எப்பயனும் இல்லை; மரத்தைப் போன்றவர்களே அவர்கள். (கு.997) இக்குறளிலே மனிதத்தன்மை யற்றவர்களை மரத்திற்கு ஒப்பிட்டார் வள்ளுவர். தம் குடுமபத்தின் பெருமையைக் காத்துக்கொள்ள வேண்டும்; மானத்தைப் போற்ற வேண்டும்; பெருமையுடன் வாழ வேண்டும்; சிறந்த பண்புகளைக் கை விடாமல் வாழவேண்டும். இவ்வாறு வாழ்வதே மனிதத்தன்மை. மக்கள் மதிப்புடன் வாழும் வழி; மானம் உள்ள சிறந்த வாழ்வு. செல்வத்தின் சிறப்பு வள்ளுவர் செல்வம் சேர்ப்பதை மறுக்கவில்லை. வள்ளுவர் காலத்திலே ஏழைகளும் செல்வர்களும் நாட்டில் இருந்தார்கள். பொருள் சேர்ப்பது பாவம் என்றால் அதை ஒருவரும் நம்ப மாட்டார்கள். இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள சமுதாயத்திலே செல்வம் இல்லாதவர்கள் சிறுமைப்பட வேண்டியதுதான். இது வள்ளுவர் அறிந்த உண்மை. செல்வம் உள்ளவரே இவ்வுலகத்தில் இன்பம் பெற்று வாழ முடியும். வறியவர்களின் வாழ்க்கையிலே இன்பம் இல்லை. ஆதலால் ஒவ்வொருவரும் ஊக்கமுடன் பொருளீட்டி வாழ வேண்டும். இதுவே வள்ளுவர் கருத்து. அருள்இலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் இல்லாதது போல, உயிர்களிடம் இரக்கம் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லை. (கு. 247). இரக்கத்தின் சிறப்பைச் சொல்ல வந்த இக்குறளிலே செல்வத்தின் பெருமையும் எடுத்துக் காட்டப்பட்டது. இதனால் செல்வம் படைத்தவர்கள் தாம் இன்பமுடன் வாழ முடியும் என்ற உண்மையைக் காணலாம். இன்பத்துக்குக் கருவியாகிய பொருளை எப்படிச் சேர்ப்பது, அதை எப்படிப் செலவிடுவது? எப்படித் துய்பபது, என்பவைகளைப் பற்றி வள்ளுவர் சொல்லுவது குறிப்பிடத் தக்கது. அது மக்கள் கருத்துச் செலுத்த வேண்டிய சிறந்த வழி. பிறர் குடியைக் கெடுத்துச் சேர்க்கும் செல்வம் நிலைக் காது; அச்செல்வத்தால் இன்பம் நுகரவும் முடியாது. அறநெறி யிலே தேடும் செல்வந்தான் நிலைக்கும்; இன்பம் தரும்; இது வள்ளுவர் கருத்தாகும். ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. பெற்றதாய் பசித்திருப்பதைக் கண்டு வருந்துவானாயினும், அறிஞர்களால் பழிக்கத் தகுந்த இழி தொழிலைச் செய்து பொருள் சேர்க்கக்கூடாது. (கு.606). பழிமலைந்து எய்திய ஆக்கதின், சான்றோர் கழிநல் குரவே தலை. பிறர் பழிக்கத்தக்க ஈனச் செயல்களைச் செய்து பெற்ற செல்வத்தை விட, அறிவுள்ளளோர் பழிக்காதவாறு , மிகுந்த வறுமையில் வாழ்வதே சிறந்தது. (கு.608) இந்த இரண்டு குறளும், நல்வழியிலே செல்வம் சேர்ப்பதே மக்கள் கடமை என்பதை வலியுறுத்தின. அறநெறியிலே சேர்க்கப்படும் செல்வமும், குவித்து வைத்து அழகு பார்ப்பதற்கு அன்று, அல்லது தான் மட்டும் உண்டு சுவைத்து உறங்குவதற்கு அன்று. அச்செல்வத்தை அவனும் நுகரவேண்டும்; வறியோர்க்கு உதவவேண்டும். இதுவே செல்வம் படைத்தவன் கடமையாகும். ஊர்உணி நீர்நிறைந்து அற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு. உலக நடையை விரும்பி நடக்கும் சிறந்த அறிவுள்ள வனிடம் சேர்ந்த செல்வம் எல்லோர்க்கும் பயன்படும்; அது ஊராரால் தண்ணீர் எடுத்து உண்ணப்படும் ஒரு குளத்திலே நீர் நிரம்பியிருப்பது போன்றதாகும் (கு.216) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன் உடையான் கண்படின். உதவி செய்யும் பண்புள்ளவனிடம் செல்வம் சேர்ந்திருக்கு மாயின், அதனால் அனைவர்க்கும் பயன் உண்டு. அது, பயன் தரத்தக்க மரம் ஒன்று நடுவூருள் பழுத்துக் குலுங்கி யிருப்பது போன்றதாகும்(கு.216) மருந்துஆகித் தப்பா மரத்து அற்றால், செல்வம் பொருந்தகையால் கண் படின். பிறர் துன்பங் கண்டு இரங்கும் பெருந்தன்னையுள்ள வனிடம் செல்வம் சேர்ந்திருக்குமாயின், அதனால் நன்மை யுண்டு. அது எல்லா உறுப்புக்களும் மருந்துக்குப் பயன்படும் ஒரு மரத்தைப் போன்றதாகும்(கு.217) இந்த மூன்று வெண்பாக்களும், செல்வத்தைச் சேர்த்த வர்கள். அச்செல்வத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக் காட்டின. ஏறக்குறைய இம்மூன்றும் ஒரே கருத்துள்ளவை தான். செல்வம் படைத்தவன் அச்செல்வம் தனக்கே உரியதென்று கருதுவதை வள்ளுவர் ஒப்புக்கொள்ள வில்லை. செல்வமுள்ளவன் தன்னை அச்செல்வத்தின் தரும கார்த்தாவாகவே நினைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத் தர்ம கர்த்தாக்களைப் போல் இல்லாமல் உண்மையான -ஒழுங்கான - தர்மகர்த்தாவாக நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய பொது நோக்குள்ளவர்களிடத்திலே செல்வம் சேர்ந்திருப்பதனால் நன்மையுண்டு; தீமையில்லை; என்பது வள்ளுவர் கொள்கை. பயனற்ற செல்வம் ஒருவன் பொதுமக்களுக்குப் பயன்படாமல், தனக்காகவே செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பானாயின், அச்செல்வம் பயன் அற்றது; அச்செல்வத்தை வைத்திருப்பவன் செல்வம் உள்ளவனும் அல்லன்; இவ்வாறு அடித்துப் பேசுகிறார் வள்ளுவர். கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கி கோடி உண்டாயினும் இல். இல்லார்க்குக் கொடுத்து உதவுவதும், தாமும் நுகர்வதும் ஆகிய செய்கை அற்றவர்களிடம் கோடிக்கணக்காக அடுக்கப் பட்ட செல்வம் இருப்பினும் பயன் இல்லை (கு.1005) செல்வம் செலவு செய்வதற்கே உரியது அதை வீணாகச் சேமித்து வைப்பதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை. இன்பம் நுகர்வதற்கே செல்வம் வேண்டும். செல்வத்தால் நாமும் இன்புற வேண்டும். பிறரையும் இன்புறுத்த வேண்டும். இவ் வுண்மையை விளக்கிற்று இக்குறள். சேர்த்து வைக்கும் செல்வம் செலவு செய்யப்படாவிட்டால் பயன் இல்லை; என்பதோடு மட்டும் விட்டு விடவில்லை. அச் செல்வம் கேடுதரும் நஞ்சுக்கு ஒப்பாகும் என்றும் உரைக் கின்றார். நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம் பழுத்தற்று. வறியவர்களால் விரும்பப்படாதவன் செல்வம், நடுவூரிலே நச்சு மரம் ஒன்று பழுத்திருப்பதைப் போல ஆகும் (கு.1008.) நல்வழியிலே செலவு செய்யப்படாமல் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் செல்வம், எப்படியாவது செலவழிந்துதான் தீரும். கருமி, தனது செல்வத்தைக் கட்டுக் காவலுடன் வைத்திருக்கலாம். அவன் வாழ்நாளில் அச் செல்வத்தை ஈ எறும்பு கூடத் தொடாமல் காத்துக் கொண்டிருக்கலாம். அவனுக்குப் பின்னர் அச் செல்வம் மற்றொருவன் கையில் மாட்டுமாயின் அவன் கண்ட கண்ட வழிகளில் எல்லாம் அச் செல்வத்தை வாரியிறைப்பான். தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை; உரையும் இல்லை; முயன்று தேடியவன் தான் முதற் பொருளைப் பாதுகாப்பான், தேடாதவன் எளிதிலே பெற்ற செல்வத்தை எண்ணிய படி யெல்லாம் ஊதித் தள்ளுவான். அச்செல்வம் பொது மக்களுக்குத் தீங்கு பயக்கும் வழியிலே செலவாகுமானால் அதில் வியப் பில்லை. ஆதலாவ் தான் செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை நச்சுக்கனி நல்கும் மரத்திற்கு ஒப்பிட்டார் வள்ளுவர். கருமிகளில் செல்வத்தைப் பறிமுதல் செய்யலாம். அது தவறன்று என்பதே வள்ளுவர் கருத்து. செல்வத்திலேயே சிந்தை யைப் பறிகொடுத்தவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள், அவர்கள் செருக்கிலே மூழ்கிச் சிறுமைகள் பலவற்றையும் துணிந்து செய்வார்கள். பொது மக்களால் கயவர், கீழ்மக்கள், என்று பழிக்கப் படுவார்கள், இத்தகைய செல்வர்களின் பொருளை வலிதிலே பறிமுதல் செய்யலாம். ஈர்ங்கை விதிரார் கயவர்; கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு. கயவர், தம் கன்னத்தை இடித்து உடைக்கும் வளைந்த கையை உடையவர் அல்லாதவர்க்கு, சாப்பிட்ட எச்சில் கையைக் கூட உதறமாட்டார் (கு.1077). சொல்ல பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். நெருங்கிக் குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்பு போல் நெருக்கி நசுக்கிப் பிழிந்தால் தான் கீழ் மக்கள் பயன்படுவர் (கு.1078) இந்த இரண்டு குறள்களும் சிறந்த கருத்துள்ளவை. நாட்டுக்குப் பயன்படாமல் தீமை செய்வோர்களின் செல்வத் தைப் பறிமுதல் செய்யலாம். அவர்கள் நடத்தும் தொழில்களைத் தேச உடமையாக்கலாம்; இவ்வாறு பொருள் கொள்ளுவதற்கும் இடந்தருகின்றன. இவ்வுலக வாழ்விலே இன்புறுவதற்குப் பொருட் செல்வம் வேண்டும். அப்பொருளை நல்வழியிலே சேர்க்க வேண்டும். நல்வழியிலே சேர்த்த செல்வம் பலர்க்கும் பயன்படவேண்டும். பொருள் படைத்தவன் அப்பொருளுக்குத் தர்மகர்த்தாவைப் போலிருந்து அதைப் பலர்க்கும் பயன்படும் வழியிலே செல வழிக்க வேண்டும். கருமித்தனம் உள்ளவனுடைய செல்வம் நஞ்சுக்கனி போன்றது. ஆதலால் கயவர்கள் செல்வத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யுமானால் அது குற்றம் அன்று. இவைகள் செல்வத்தைப் பற்றி வள்ளுவர் கொண்ட கருத்துக்கள். உழவனும் நிலமும் வள்ளுவர் காலத்திற்கு முன்பே பெருநிலத் தவைர்கள் இந் நாட்டிலே வாழ்ந்து வந்தனர். உழவனுக்கே நிலத்தில் உரிமை என்ற நிலைமை மாறி விட்டது. உழுவோர், உழுவித்துண்போர் என்ற முறை வந்து விட்டது. உழுவோர் விவசாயிகள். உழுவித் துண்போர் நிலத் தலைவர்கள். இதற்குச் சங்க இலக்கியங்களே சான்று. சிற்றரசர்களும், வள்ளல்களும் பெரும்பாலும் நிலத் தலைவர்களாகவே யிருந்தனர். அவர்கள் ஆதரவிலே புலவர்கள் வாழ்ந்தனர்; கலைஞர்கள் வாழ்ந்தனர்; கலைகள் வளர்ந்தன. வள்ளுவர் காலத்திலே உழவர்களை நசுக்கிப் பிழியும் நிலக் கிழவர்களும் இருந்தனர். நிலமெல்லாம் ஒரு சிலர் கையிலே அடங்கி விட்டால் உழுவோர்பாடு திண்டாட்டந்தான் என்பதை வள்ளுவர் கண்டறிந்தார். ஆகையால் நிலம் உழவனுக்கே உரிமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினார். இதனை உழவு என்னும் அதிகாரத்திலே தெளிவாகச் சொல்லி விட்டார். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை. உலகம் பலவேறு தொழில்களிலே சுழன்று கொண்டிருந் தாலும், இறுதியில் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழும். அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே உயர்ந்த தொழிலாகும். (கு.1031.) இவ்வாறு முதலில் உழவித் தொழிலே உயர்ந்த தொழில்-சிறந்த தொழில் - அவசியமான தொழில் - என்று குறித்தார். உழவுத் தொழிலே உலகை உயிருடன் வாழ வைக்கும் தொழில். உழவுத் தொழில் குறைந்தால் - விளைவுப் பொருள்கள் குறைந் தால் - உலகம் வாழ முடியாது. வேறு எத் தொழில்களும் நடைபெறமாட்டா; உணவின்றி மக்கள் பட்டினி கிடக்க நேர்ந்தால் உலகம் பாழாகும். இது என்றும் உள்ள உண்மை. இதைத்தான் வள்ளுவர் எடுத்துக் காட்டினார். இதன் பின் மூன்று குறள்களிலே நிலம் உழுபவனுக்கே உரிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிடுகிறார். ஒரு காலத்திலே நிலம் யாருக்கும் சொந்தமில்லை; பொதுவாக இருந்தது. நிலத்திலே பயிர் செய்தவர்கள் பலன் பெற்று வந்தனர். பின்னர் உழவர்கள் தம்மால் உழுது பயிர் செய்வதற்கு முடிந்ந அளவு நிலத்தைத் தமக்கே உரிமையாக வைத்துக் கொண்டனர். இதன் பின்னர் வலுத்தவர்கள் சிலர் பரந்த நிலப்பகுதியைத் தம்முடைய தாக்கிக் கொண்டனர். உழவர்களைக் கொண்டு வேலை வாங்கினர். அவர்களுக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதத்தைத் தாமே எடுத்துக் கொண்டனர். இந்தக் கால கட்டத்தில்தான் உழுதுண்போர், உழுவித்து உண்போர் என்று பிரிவு ஏற்பட்டது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். உழவுத்தொழில் செய்து அதனால் கிடைக்கும் உணவை உண்டு வாழ்கின்ற மக்களே உரிமையுடன் வாழ்கின்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பிறரைத் தொழுது, அவர் கொடுக்கும் உணவை வாங்கி உண்டு அவர் பின்னே அலையும் அடிமைகள் ஆவார். (கு.1033). இது உழவுத் தொழிலே அடிமையற்ற சுதந்தரமுள்ள தொழில் என்பதை உணர்த்திற்று. நிலம் உழவனுக்குச் சொந்த மானால் தான் இச்சுதந்திரம் உண்டு. செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும். நிலத்திற்கு உரியவன், தான் பயிர் செய்த நிலத்தை நிலத்தில் உள்ள பயிரை - நாள் தோறும் சென்று பார்க்காமலிருந்தால், அந்த நிலம் நல்ல பயனைத் தராது; தலைவன் பிரிவால் வருந்தியிருக்கும் மனைவியைப் போல அவனை வெறுக்கும்; அவனோடு பிணங்கி விடும். (கு.1039). இக்குறளும் பயிர் செய்பவனுக்கே நிலம் உரிமையுள்ளது என்ற கருத்தைக் கொண்டது. நேரிடையாக நிலத்திலே உழுகின்றவன் ஓரளவு நிலத்தைத்தான் உழமுடியும். அவன்தான் நாள்தோறும் அந்நிலத்தைப் போய்ப் பார்த்துப் பயிருக்குச் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கவும் முடியும். நூற்றுக்கணக்கான கல்லுகளுக்கு அப்பால் இருப்பவன் நிலம் தனக்கென்று உரிமை கொண்டாடுவானாயின் அவன் நாள்தோறும் நிலத்தைப் பார்ப்பது எப்படி? பார்க்கவே முடியாது. தம் ஆற்றலுக்கு மீறிய நிலத்தை வளைத்துக் கொணடிருக்கும் உழுவித்துண்போரும் ஒவ்வொரு நாளும் பயிரிட்ட நிலத்தைத் தாமே சென்று பார்க்க முடியாது. ஆதலால் நிலத்தை நேரடியாக உழுது பயிர் செய்கின்ற உழவனுக்குக் கூறிய குறள் தான் இது. இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும். எம்மிடம் ஒன்றும் இல்லையே; என் செய்வது என்று எண்ணிக்கொண்டு சோம்பி யிருப்பாரைக் கண்டால் நிலம் என்னும் பெண் மகள் சிரிப்பாள். (கு.1040). நிலத்திலே பாடுபடுகின்றவன் வறுமையால் வாட வேண்டிய தில்லை; பாடுபட்டால் பலன் உண்டு; இந்த உண்மையை இச்சோம்பேறி அறியவில்லையே; என்று நினைத்து நிலமகள் சிரிப்பாளாம். ஒருவன் மற்றொருவனுடைய நிலத்திலே பாடுபட்டால் அவன் பாட்டுக்கேற்ற பலனைப் பெறமுடியாது. யாருக்கும் உரிமையற்ற பொது நிலத்திலோ, அல்லது தனக்கு உரிமையுள்ள நிலத்திலோ பாடுபட்டால் தான் பலன் முழுவதை யும் பெற முடியும். இவ்வுண்மை இக் குறளிலே அடங்கியிருக் கின்றது. நில உரிமை பற்றிய திருவள்ளுவரின் இக்கருத்துப் புரட்சி கரமானது. நிலத்தலைமை வேரோடியிருந்தகாலத்திலே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். வள்ளுவருடைய இக்கருத்தை உலகம் என்றும் போற்றும். இன்றும் அறிஞர்கள் இக் கருத்தையே ஒப்புக்கொள்ளுகின்றனர். உழவனுக்கு நிலத்திலே உரிமையிருந்தால் தான் அவன் ஊக்கத்துடன் உழைப்பா; உற்பத்தியைப் பெருக்குவான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறிய இக்கருத்து - அவருக்கு முன்னிருந்த முறையை எதிர்த்துக் கூறிய கருத்து- அவர் காலத்திலிருந்த முறைக்கு முரணாகக் கூறிய கருத்து. இன்று உலக மக்கள் போற்றும் உயர்ந்த கொள்கையாக விளங்கு கின்றது. வள்ளுவர் காலத்திலே ஒருவர் ஆதிக்கத்திலும் இல்லாத உழுநிலங்களும் ஏராளமாக இருந்தன. அவைகளிலே யார் வேண்டுமானாலும் பயிர் செய்து பலன் பெறலாம். தமிழ கத்திலே இந்த நிலைமை இருந்தது. இச்செய்தியை மேற்கண்ட குறள்களால் அறியலாம். உழவுத் தொழிலே சிறந்த தொழில். உழுகின்றவன் ஒவ்வொரு நாளும் நிலத்தை நேரில் போய் காணவேண்டும. அடிமையற்ற தொழில் உழவுத் தொழில்தான். நிலம் உழவனுக்கு உரிமையாக இருக்க வேண்டும். இவைகளே வள்ளுவர் கொள்கை என்பதை அறியலாம். வறுமையும் வாழ்வும் வள்ளுவர் காலத்திலே இந்த நாட்டிலே வறுமையால் வாடும் மக்கள் வாழ்ந்தனர்; செல்வத்தால் இன்புற்று மகிழும் மக்களும் வாழ்ந்தனர். அவர் காலத்துச் சமுதாயம் ஏற்றத் தாழ் வுள்ள சமுதாயந்தான், சமுயத்திலே பலர் துன்புறு வதையும், சிலர் மட்டும் இன்புறுவதையும் அவர் விரும்பவில்லை. மக்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதே கருத்து. வறுமையின் கொடுமையை எவ்வளவு விரித்துரைக்க முடியுமோ அவ்வளவு விரித்து விளக்கி யிருக்கின்றார். வறுமை யால் வருந்துவோர்க்குச் செல்வம் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டியது கடமை என்பதையும் வலியுறுத்தி யிருக்கின்றார். இல்லாதவர்கள் - உள்ளவர்களிடம் போய்ப் பொருள் கேட்பது-இரப்பது - குற்றம் அன்று என்றும் கூறினார். இதன் பிறகு எந்த மனிதனும் பிறரிடம் ஏதொன்றையும் இரக்கக்கூடாது. இரப் பதைப் போல இழிவானது வேறொன்றும் இல்லை. இரப்பது மனிதத் தன்மையே அன்று; ஒருவன் பிச்சையெடுத்துத்தான் வாழ வேண்டும் என்பது தலைவிதி அன்று; இவ்வாறு எந்த மனிதனையும் கடவுள் படைக்க வில்லை; என்று ஆணித்தர மாகக் கூறி யிருக்கின்றார் வள்ளுவர். வறுமைக் கொடுமை கொடுக்கும் சமுதாயம், வாங்கும் சமுதாயம் என்று வேற்று மை இருப்பதை வள்ளுவர் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த உண்மையை நல்குரவு, இரவு, இரவச்சம் என்ற மூன்று அதிகாரங்களில் முப்பது குறள்களால் விளக்கியிருக்கின்றார். வறுமையைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்வர்களின் உள்ளம் உருகாமல் போகாது. இன்மையின் இன்னாதது யாதுஎனின்? இன்மையின் இன்மையே இன்னா தது. வறுமையைப் போலத் துன்பமுள்ளது வேறு யாதென் றால், வறுமையைப் போன்ற துன்பம் உள்ளது வறுமையே தான். (கு.1041) இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். வறுமையென்று சொல்லப்படும் ஒரு பாவி ஒருவனிடம் அணுகும்போது, அவனுடைய மறுமையின்பமும் இம்மையின் பமும் இல்லாமல் அழியும்படி வரும். நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. ஒருவன் நெருப்பின் மத்தியிலே இருந்து தூங்குவதற்கும் முடியும். ஆனால் வறுமையிலே வாழும்போது எவ்விதத்திலும் கண்மூடி உறங்கமுடியாது.”(கு.1049) இவற்றை விட வேறு விளக்கமான முறையிலே வறுமை யைச் சித்தரிக்க முடியாது. வறுமையைப்போல் துன்பம் தரக் கூடியது வேறு எதுவுமேயில்லை. எல்லாத் துன்பங்களுக்கும் அதுதான் ஊற்றுக்கேணி. வறுமை நோய்க்கு ஆளானவன் இம்மையிலே எந்த இன்பத்தையும் பெறமாட்டான். அவன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தால் வருந்துவான். இது கண் கூடான காட்சி. வறியவன் தன் வயிற்றுப் பாட்டைத் தணித்துக் கொள்ள எதுவும் செய்வான். நாம் செய்வது நன்மையா? தீமையா? நீதியா? அநீதியா? என்று எண்ணிப் பார்க்கமாட்டான்; இவ்வாறு எண்ணிப் பார்க்கும் பொறுமையோ,அறிவோ அவனிடம் இராது. ஆதலால் நெறியில்லா நெறியிலே சென்று அடாத செயல்களைச் செய்வான். அவனுக்கு மறுமையின்பமும் இல்லை. இம்மையின்பமும் இல்லை; இத்தகைய கொடுமையுள்ளது வறுமை. வறுமைக்கு ஆளானவன் என்றும் கவலையால் கவ்வப் பட்டுக் கலங்கித் திரிவான். உயிர் வாழ்வதற்கு உணவு அடிப் படை; மானத்தை காக்க உடை முதன்மை; உடல் நலம்பெற உறைவிடம் வேண்டும். இவை மூன்றும் வறுமையுள்ளோர்க்குக் கிடைப்பதில்லை. இவை மூன்றுக்கும் கவலைப்படுவோர்க்கு மன அமைதி ஏது? உள்ளத்திலே அமைதி யில்லாவிட்டால் உறக்கம் எப்படி வரும்? நெருப்பின் மத்தியிலே இருப்போர் உறங்கினாலும் உறங்கலாம். வறுமையில் பிணிப்புண்டிருப்போர் உறங்கவே முடியாது. இக்கருத்துக்களை மேலே காட்டிய குறள்கள் எடுத்துக் காட்டின. வறுமையுள்ளவர்கள் எல்லோரும் மானமுடன் வாழ முடியாது. உயிர் வாழ விரும்பும் வறியவர்களின் பிறரிடம் பிச்சை கேட்கத்தான் செய்வார்கள். உயிரை வைத்துக் கொள்ள ஏதாவது செய்து தீரவேண்டும். அல்லவா? இரப்பதை வள்ளுவர் விரும்ப வில்லை. ஆயினும் வறுமையால் இரப்போரை அவர் தடுக்கவும் இல்லை. கண்டவர்களிடமெல்லாம் கையேந்தி நிற்க வேண்டாம். கருணைநிரம்பியவர்களிடம் இரக்கலாம்; பொருள் பெறலாம் என்று கூறுகின்றார். இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின் அவர் பழி; தம்பழி அன்று. இரக்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரந்து பொருள் பெறுக். அவர் இல்லையென்று மறைப்பார். ஆனால் அது அவருடைய குற்றமாகும். இரந்தவர் தம் குற்றமன்று. (கு.1051) இன்பம் ஒருவற்கு இரத்தல்; இரந்தவை துன்பம் உறாஅ வரின். தான் இரந்து கேட்ட பொருள, தன் மனம் துன்புறாதபடி எளிதிலே கிடைக்குமானால் ஒருவனுக்கு இரத்தலும் இன்ப மாகும். (கு.1052) இரத்தலும் ஈதலே போலும், கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு தன்னிடம் இருப்பதை இரப்போர்க்கு ஈயாமல் ஒளித்துக் கொள்ளுவதைப் பற்றிக் கனவில் கூட நினைக்காதவர்கள் உண்டு; அவர்களிடம் சென்று ஒன்றை இரத்தல் இரத்தலா காது; அது ஈவதைப் போலவே இன்பந் தரும். (கு.1054) இந்த மூன்று குறள்களும் இரத்தலால் இழிவில்லை என்று கூறின. ஈகைக் குணம் படைத்தவரிடம் இரக்கலாம். ஈயாதாரிடம் இரப்பதுதான் குற்றம். வேண்டிய பொருள் எளிதிலே கிடைக்கு மானால் இரப்பதிலும் ஒரு இன்பம் உண்டு. ஒளிக்காமல் உள்ளம் கனிந்து, உதவும் உத்தமர்களிடம் இரப்பதே நலம். இதனால் துன்பம் இல்லை.. அது கொடுப்பதைப் போன்ற இன்பத்தையே தரும். இக்கருத்துக்களே மேலே காட்டிய மூன்று குறள்களிலும் கூறப்பட்டவை. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம்; இரந்துகோள் மேவார் இலாக் கடை. வறுமையால் இரந்து பொருளைப் பெற்றுக் கொள்ளா தவர் இல்லாவிட்டால் கொடுக்கின்றவர்களிடத்தில் எப்படிப் புகழ் உண்டாகும்? (கு.1059) இரக்கின்றவர்கள் இல்லாவிட்டால் கொடுக்கின்றவர்கள் என்ற புகழ், செல்வர்களுக்கு இல்லை. செல்வர்களின் புகழ் வளர்வதற்காகவே இரப்பவர்கள் இருக்க வேண்டும்; இக் கருத்தை இக்குறள் வெளியிடுகின்றது. இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள சமுதா யத்தில் ஈவோரும், இரப்போரும் இருந்துதான் தீர்வர். இவ் வுண்மையை மேலே காட்டிய குறள் வெண்பாக்கள் விளக்கின. எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தியிருக்கும் சமுதாயத்தில் தான் ஈவோர் இரப்போர் என்ற பிரிவினர் இருக்கமாட்டார்கள். இக்கருத்தையே வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார். இரத்தலின் இழிவு வள்ளுவரின் உண்மைக் கருத்தை இரவச்சம் என்ற அதிகாரத்திலே காணலாம். இரவு அச்சம் - இரப்பதற்கு அஞ்ச வேண்டும். அவ்வதிகாரத்தில் உள்ள பத்து வெண்பாக்களையும் நுணுகிப் படிப்போர் இரத்தலைப் போல் இழிவில்லை என்பதைக் காண்பார்கள். கரவாது உவந்துஈயும்கண் அன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். உள்ளத்தை ஒளிக்காமல் மகிழ்ச்சியோடு கொடுத்து உதவுகின்ற கண்போல சிறந்தவரிடத்திலும், ஒன்னை இரந்து வாங்கிக் கொள்ளாமல் இருப்பது கோடி மடங்கு நல்லதாகும் (கு.1071) இது இரவைப் பற்றிக் கூறியிருப்பதற்கு நேர் முரண் பட்ட கருத்துள்ளக் குறள். இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலக இயற்றியான். இவ்வுலகில் சில மக்களை இரந்தும் உயிர் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பினால், இத்தகைய உலகைப் படைத்த கடவுள், அந்த இரவலரைப் போலவே எங்கும் அலைந்து அழிக (கு.1062) உலகைப் படைத்தவன் யாரையும் பிச்சையெடுத்து வாழும்படி படைக்கவில்லை. பிச்சையெடுப்பது தலைவிதி என்று சொல்லுவது புரட்டு மக்கள் அறியாமையால் கோழைத் தனத்தால் - சோம்பேறித்தனத்தால் தான் பிச்சையெடுக்கின்றனர். இவ்வுண்மையை அறிவித்தது இக்குறள். ஆவிற்கு நீர்என்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளி வந்தது இல். பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று இரந்து கேட்டாலும் இழிவு தான். அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது வேறொன்றும் இல்லை (கு.1066). ஆபத்திற்குப் பாபம் இல்லை என்பர். பசு தண்ணீர் இல்லாமல் தவித்தாலும் சரி, அதன் பொருட்டு இரத்தலும் கூடாது. அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தன் முயற்சியா லேயே தண்ணீரைத் தேடித் தரவேண்டும். தரும காரியத்திற்காக யாசிப்பதில் குற்றமில்லை என்று கருதிப் பிறரிடம் இரப்பதும் குற்றமேயாம். அது இழிவுக்கே இடமாகும். இதை வலியுறுத்தியது இக்குறள். இரப்பதை எவ்வளவு வன்மையாக எதிர்க்கிறார் என்பதை இக்குறளால் காணலாம். தெண்ணீர் அடுப்புற்கை ஆயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல். தெளிந்த நீர் போல் சமைத்த கூழாயிருந்தாலும் சரி, தன் முயற்சியால் கிடைத்த அவ்வுணவை உண்பதைவிட இனிய உணவு வேறு ஒன்றும் இல்லை. (கு.1065) தன் முயற்சியால் வாழ்வதே உயர்ந்த வாழ்வு; அறுசுவை உண்டிக்கு வழியின்றி வெறும் கூழை உண்டாலும் அதுவே சிறந்த வாழ்வு; எவருடைய இகழ்ச்சிக்கும் ஆளாகாத மானமுள்ள வாழ்வு; என்பதை இக்குறள் வலியுறுத்தியது. நல்குரவு (வறுமை) இரவு என்ற இரண்டு அதிகாரங் களிலும் உள்ள கருத்துக்கள் வள்ளுவர் காலத்தில், தமிழர் சமுதாயம் இருந்த நிலையைக் காட்டுகின்றன. ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தில் - இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள சமுதாயத்தில் - கொடுப்போரும் கொள்வோரும் இல்லாம லிருக்க முடியாது; இருந்தே தீர்வார்கள்; இவ்வுண்மையை அவ்வதிகாரங்கள் விளக்கின. இரவச்சம் என்ற அதிகாரம், கொள்வோரும் கொடுப் பாரும் இல்லாத சமுதாயத்தையே - வேற்றுமையற்ற ஒன்று பட்ட சமுதாயத்தையே - வள்ளுவர் விரும்புகின்றார் என்பதை விளக்கிற்று. வள்ளுவரின் இக் கருத்து இன்று உலகமெங்கும் பரந்து வளர்ந்து வருவதைக் காண்கின்றோம். உலகம் போற்றும் உண்மைகள் எந்நாட்டினரும், எக்காலத்திலும் போற்றக்கூடிய பல உண்மைகளை உரைப்பவர்களே உயர்ந்த புலவர்கள். ஒரு நாட்டில் உள்ள உயர்ந்த அறிஞர்களின் கருத்து. பல நாட்டு அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்திருப்பது இயற்கை. இச் சிறப்பைத் திருவள்ளுவரிடம் காணலாம். அறிவுக்கு மதிப்பு அறிவுக்குப் பெருமை யளித்த புலவர்களிலே வள்ளுவர் தலை சிறந்தவர். அறிவைப் பற்றி அவர் கூறியிருப்பதே அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்லர் என்பதைக் குறிக்கும். சில நம்பிக்கைகளை அடிப்படைகளாகக் கொண்டதே மதம். வள்ளுவர் நம்பிக்கையை முதன்மையாகக் கொள்ளவில்லை. அறிவையே முதன்மையாகக் கொண்டிருக்கிறார். அறிவையே முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப் பொருளை அப்படியே நம்பிவிடாமல், அதன் உண்மைப் பொருளை உணர்வதே அறிவாகும். (கு.423) நன்மை தீமைகளைப் பகுத்தறிவும் அறிவு வேண்டும்; உண்மை பொய்மைகளத் கண்டுணரும் அறிவு வேண்டும். இத்தன்மையுள்ளவர்களே அறிவுள்ளவர்கள். இவ்வுண்மையை எடுத்துரைத்தது இக்குறள். எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருள் எத்தன்மையுள்ளதாய்த் தோன்றினாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை உணர்வதே உணர் வாகும். (355) முதற் குறள் அரசியலில் ஈடுபட்டோர்க்குக் கூறப்பட்டது. இரண்டாவது குறள் துறவிகளுக்குக் கூறப்பட்டது. இவ்விரண்டு குறள்களின் கருத்துக்களும் வெவ்வேறு. ஒன்று, பிறர் கூறுவதில் உள்ள உண்மைகளைக் கண்டறிவது. (423) மற்றொன்று கண்ணால் காணும் பொருள்களின் தன்மைகளைக் கண்டறிவது. இவ்விரண்டு தன்மைகளும் உடையவர்களே அறிஞர்கள். எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறு உலகத் தோடு ஒட்டி வாழ்வதே அறிவாகும். (கு.456) உலகத்தைப் பகைத்துக் கொள்பவன் வாழ முடியாது. உலகத்தோடு ஒத்து நடக்காதவன் யாராயிருந்தாலும் ஒதுக்கப் படுவான். எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. தான் சொல்லுவனவற்றை, எளிய பொருளாகக், கேட் போர் உள்ளத்திலே பதியும்படி உரைத்துப், பிறர் வாயிலிருந்து வரும் அரிய பொருளைத் தான் அறிந்து கொள்வதே அறிவாகும். (424) அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவில்லார் அஃது அறிவில்லாதவர். எதிர்கால நிகழ்ச்சிகளை அறிகின்றவர்களே அறிவுடை யவர்கள்; அவைகளை அறிந்துகெள்ள முடியாதவர்கள் அறிவற்றவர்கள்.”(கு.427) இவைகள் அறிவுடைமையின் இன்றியமையாமையைப் பற்றி எடுத்துரைத்தன. அறிவுடைமை என்று ஒரு தனி அதிகாரமும் உண்டு. அதில் உள்ள பத்து வெண்பாக்களும் ஒவ்வொருவரும் உள்ளத்திலே பதியவைத்துக் கொள்ள வேண்டியவை. கல்வியின் கருத்து கல்வியின் அவசியத்தை வள்ளுவர் வலியுறுத்தும் முறை சிறந்தது. கல்வியினால் மனித சமுதாயத்தில் உள்ள உயர்வு தாழ்வுகளை ஒழிக்க முடியும் என்று கூறுகின்றார். கண் உடையார் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு புண்உடையார் கல்லா தவர். கற்றவர்களே உண்மையிலே காணக் கூடிய கண்களை உடையவர்கள் என்று கூறப்படுவர். கல்லாதவர்களின் முகத்திலே உள்ள கண்கள் பார்வை மங்காமல் இருந்தாலும் அவைகள் கண்கள் அல்ல; வெறும் புண்கள் தாம்.”(கு.393) யாதானும் நாடுஆம்ஆல் ஊர்ஆம்ஆல் என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு கல்வி கற்றவனுக்கு எந்நாடும் தன்னாடு தான்; எவ்வூரும் தன்னூர்தான்; இவ்வாறாயின் ஒருவன் தான் சாகும் வரையிலும் கல்வி கற்காமலிருப்பது ஏன்? (கு.397) இந்த இரண்டு குறள்களும் ஆழ்ந்த கருத்துள்ளவை கல்வி கற்றவர்கள் தாம் உண்மைகளைக் காண முடியும். இன்று கண்ணெதிரே நடக்கும் நிகழ்ச்சிகளை மட்டும் அல்ல; வேற்று நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் காண முடியும். கடந்த காலத்தில் உலகில் நடந்த நிகழ்ச்சிகளையும் கற்றவர்கள் காண்பர். இன்று நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் எண்ணி உணர்வர். அன்றியும் கற்றவர்களால் தான் உலக ஒற்றுமை உண்டாக முடியும். கற்றவர்கள் எவ்வினத்தவராயினும், எல்லா இனத்தின ராலும் எல்லா நாட்டினராலும் போற்றப்படுவார்கள். இந்த உண்மைகளை மேற் காட்டிய குறள்கள் விளக்கின. தீமையிலும் நன்மை கேட்டினும் உண்டு ஓர் உறுதி; கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல். கேடு வந்தால் அதனாலும் ஒரு நன்மையுண்டு. அக்கேடு யார் நமக்கு உண்மையான நட்பினர்கள் என்பதை நீட்டி அளந்து பார்க்கும் ஓர் அளவுகோலாகும்.”(கு.796.) தீமையைக் கண்டு கலங்க வேண்டாம். அச்சமயத்தில் அஞ்சாமலிருந்தது உண்மையான நண்பர்கள் யார்; உண்மை யான உறவினர்கள் யார்? என்பதைக் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். இக்குறளின் கருத்தை ஒப்புக் கொள்ளாத மக்கள் உலகில் இல்லை. வெண்மை எனப்படுவது யாதுஎனின், ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. அறியாமை என்று பழித்துக் கூறப்படுவது யாதென்றால், நாம் சிறந்த அறிவுள்ளோம் என்று தம்மைத் தாமே மதிக்கும் செருக்காம். (கு.844) இத்தகைய செருக்குள்ளவர்கள் எவர் சொல்லையும் கேட்க மாட்டார்கள்; எதையும் எண்ணிப் பார்க்க மாட்டார்கள். இவர்களுக்கு எவரும் உதவி செய்யவும் மாட்டார்கள்; செருக்கே இவர்களைச் சீர்குலைத்து விடும். இவ்வுண்மையை உலகில் உள்ள அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். நோயற்ற வாழ்வு வயித்தியர்களுக்கு மருத்துவர்களுக்கு வள்ளுவர் காட்டும் வழி எந்நாட்டினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் மறக்காமல் அவற்றைப் பின்பற்றி நடந்தால் போதும்; எல்லோரும் நோயற்ற வாழ்வு வாழ முடியும். மருந்து எனவேண்டா ஆம்யாக்கைக்கு: அருந்தியது அற்றது போற்றி உணின். முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து, பிறகு அளவோடு உண்டால் உடம்புக்கு மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டுவ தில்லை. (கு.942). அற்றால் அளவறிந்து உண்க; அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு. உண்ட உணவு செரித்த பின், செரிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும். இதுவே உடம்பைப் பெற்றவன் அதை நீண்ட காலம் வைத்துக் காப்பாற்றும் வழி. (கு.943) இவ்விரண்டு குறள்களும், பொது மக்கள் பிணியின்றி வாழ வழி கூறின. நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். முதலில் நோய் இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்; பின்னர் அந்த நோய்வந்த காரணத்தைக் கண்டறிய வேண்டும்; பிறகு அந் நோயைத் தீர்க்கும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் நோயாளியின் உடல் நிலைக்குத் தக்கவாறு - நோயின் வன்மை மென்மைக்குத் தக்கவாறு வைத்தியம் பண்ண வேண்டும். (கு.948). உற்றான் அளவும், பிணி அளவும், காலமும் கற்றான் கருதிச் செயல். மருத்துவ நூலைக் கற்றவன், நோயாளியின் அளவையும், நோயின் அளவையும், மருத்துவம் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து வயித்தியம் செய்ய வேண்டும்(கு.949) இவை இரண்டு குறள்களும் மருத்துவர்களுக்கு அறிவுரை கூறின. இவைகள் கூறும் அறிவுரையை மறுக்கும் மருத்துவர்கள் எந் நாட்டிலும் இல்லை. உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்என்று அப்பால் நால்கூற்றே மருந்து, மருத்துவ முறையாவது நோயாளி மறைக்காமல், மருத்து வனிடம் சொல்ல வேண்டும்; மருத்துவர் கூறுகின்றபடி நடந்து கொள்ள வேண்டும்; மருந்துண்ண வேண்டும். மருத்துவன் அனுபவமும் அறிவும் அமைந்தவனாயிருக்க வேண்டும். மருந்து நோய்க்கேற்றதாவும், நோயாளி விரும்பி உண்ணக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நோயாளியின் பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறவன் கருத்துடன் இருக்க வேண்டும்; காலாகாலத்தில் மருந்து கொடுக்க வேண்டும்; பத்தியந் தவறாமல் நோயாளியைப் பாதுகாக்க வேண்டும். இத்தகைய அமைப்பே சிறந்த மருத்துவ முறையாகும். இவ்வாறு மருத்துவத்தைப் பற்றி வள்ளுவர் சொல்லி யிருக்கும் உண்மைகள் எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றன வாயிருக்கின்றன. வியாபாரம் வாணிகம் செய்வார்க்கு வாணிகம்; பேணிப் பிறவும் தம்போல் செயின். பிறர் பொருளையும் தம் பொருளைப் போல் பாதுகாத்துச் செய்தால் வாணிகம் செய்வார்க்கு அதுவே சிறந்த வாணிகமாம். (கு.120) உள்நாட்டு வணிகர்க்கும் வெளிநாட்டு வணிகர்க்கும் நேர்மையே அடிப்படை. திருட்டுப் புரட்டுச் செய்யும் அடிப் படை. திருட்டுப் புரட்டுச் செய்யும் வணிகர்களின் வியாபாரம் நீண்ட நாளைக்கு ஓடாது. அவர்கள் மோசடி வெளிப்பட்ட பின் வியாபாரம் படுத்துப்போகும். நேர்மையுள்ள வியாபாரம் எப் பொழுதும் படுக்காது. மேலும் மேலும் வளர்ந்து பெருகும். இவ்வுண்மையை உரைத்தது இக்குறள். பேச்சுத் திறமை சொல்வன்மை ஒரு கலையாகும். இக்காலத்தில் இக்கலை பொது மக்களிடம் செல்வாக்குப் பெற்று வருகின்றது. எக்காலத் திலும் சொல் வன்மை படைத்தவனுக்கு மனித சமுதாயத்திலே மதிப்புண்டு இதைப் பற்றி வள்ளுவர் சொல்வன்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. ஆவதற்கும் அழிவதற்கும் சொல்தான் காரணம்; ஆதலால் ஒவ்வொருவரும் தம் சொல்லிலே தவறு உண்டாகாமல் காத்துக் கொள்ள வேண்டும் (கு.642). எதையும் திறம்படச் சொல்லத் தெரியாதவன். காரியத் திலே வெற்றியடையமாட்டான். அவன் மற்றவர்களால் ஏமாற்றப் படுவான். உண்மையிலே - அவனுக்குக் கிடைக்கவேண்டிய வெற்றி கூடத் தோல்வியாக முடிந்துவிடும். இது மறுக்க முடியாத உண்மை. விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். தான் சொல்லக் கருதியவற்றை அனைவர்க்கும் புரியும்படி தொடர்ச்சியாகக் கூறும் வல்லமை யுள்ளவர்களைப் பெற்றால், இவ்வுலகம் விரைவில் அவர் கூறும் வழியிலே நிற்கும்(கு.648) இக்குறள் பேச்சிலே வல்லவர்களால் இவ்வுலகத்தையே அடக்கி ஆள முடியும் என்று கூறிற்று. எத்தகைய பேச்சுத் திறமையுள்ளவர்கள் மக்களால் மதிக்கப்படுவார் என்பதை மற்றொரு குறள் தெளிவாக எடுத்துரைக்கின்றது. பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர். நிலைத்து நிற்கும் குற்றமற்ற சில சொற்களைக் கூறுவதற்கு அறியாதவர்களே, பல சொற்களைப் பேசுவதற்கு விரும்புவார்கள். (கு.649) பேச்சாளர்கள் எப்பொழுதும் இக் குறளை மனதிலே மறவாமல் வைத்துக் கொள்ளுவார்களானால் அவர்கள் சிறந்த பேச்சாளர்களாக மதிக்கப்படுவார்கள். இந்தப் பேச்சு வன்மை சொற்பொழிவாற்றுவோருக்கும் பொருந்தும். இது உலகம் ஒப்புக்கொள்ளும் கருத்து. மேலே சொல்லப்பட்டவைகள் எல்லாம் எக்காலத்திலும் மாறாமல் நிற்கும் உண்மைகள். அவைகள் எந்நாட்டினராலும் எவ்வினத்தினராலும், எம்மொழியினராலும் ஒப்புக் கொள்ளத் தக்க உண்மைகள். இவை போன்ற உலகம் போற்றும் உண்மைகள் திருக்குறளிலே நிறைந்திருக்கின்றன. இதனாலேயே வள்ளுவர் இன்று உலகப் புலவர் என்று போற்றப்படுகிறார். நான்காவது பகுதி திருக்குறளின் மூன்றாவதான காமத்துப்பாலைப் பற்றி இப்பகுதியிலே கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் குடும்ப வாழ்க்கையை விளக்கும் ஒரு பகுதியே காமத்துப்பால். காதலனும் காதலியும் கருத்தொருமித்தவர்களாய் வாழ்வதிலேதான் இன்பம் உண்டு என்பதை எடுத்துக் காட்டுவதே காமத்துப்பால். நான்கு தலைப்புகளிலே இப்பகுதி யைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. காமத்துப்பால் காமத்துப்பால் என்பது வள்ளுவர் வைத்த பெயர். இதை இக்காலத்தில் சிலர் இன்பத்துப்பால் என்று பெயரிட்டிருக் கின்றனர். காமம் என்பதற்கு இன்பம் என்பது பொருள். இப் பொருளிலேயே இன்பத்துப்பால் என்று சொல்லுகின்றனர். வள்ளுவர் வைத்த காமத்துப்பால் என்ற தொடரை இன்பத்துப் பால் என்று மாற்றி வழங்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. காமம் என்னும் சொல் காமம் என்னும் சொல் வடமொழியிலும் உண்டு; தமிழ் மொழியிலும் உண்டு. காமம் வடசொல்லா? தமிழ்ச்சொல்லா? என்ற ஆராய்ச்சியிலே தலையிடவேண்டாம். காமம் வடசொல் என்று எண்ணுகிறவர்களே, அதற்குப் பதிலாக இன்பம் என்ற சொல்லை வழங்குகின்றனர் இச்சொல் தமிழிலேயே பண்டுதொட்டு வழங்கி வருகின்றது. இலக்கிய வழக்கிலே இருந்து வருகின்றது. ஆதலால்தான் வள்ளுவர் காமத்துப்பால் என்று பெயர் வைத்தார். மக்கள் அடையவேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு என்பர். இந்த நான்கு உறுதிப் பொருள்களையும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். அவ்வுறுதிப் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவை கலப்பற்ற தமிழ்சொற்கள் இவ் வுறுதிப் பொருள்களை வடமொழியிலேயே புருஷார்த்தங்கள் என்பர். இவற்றை தர்மம், அதர்மம், காமம், மோட்சம் என்பர். தமிழ் நூல்களில் எல்லாம் பெரும்பாலும் பெண்ணுடன் சேர்ந்து வாழும் இன்பத்தையே காமம் என்னும் சொல் குறித்து வழங்கு கின்றது. இன்பம் என்பதும் இப்பொருள் உடையதுதான். பிற்காலத்தில் மதக்கொள்கைகளும், மத நம்பிக்கைகளும் வளர்ந்த காலத்தில் இன்பத்தை இரண்டாகப் பிரித்தனர். பேரின்பம், சிற்றின்பம் என்பதே அப்பிரிவு, பேரின்பம் - பெரிய இன்பம்; அழியாமல் நிலைத்து நிற்கும் இன்பம். சிற்றின்பம்-சிறு இன்பம்; அழிந்து விடக்கூடியது, பெண் இன்பமும், இவ்வுலகில் நுகரும் ஏனைய இன்பங்களும் சிற்றின்பம்; பேரின்பம் இறந்த பின் எய்தும் அழியாத இன்பம். தொல்காப்பியத்திலே பெண்ணின்பத்தைக் குறிப்பிடும் போது காமக்கூட்டம் (தொல்.கள.சூ.1) என்றே குறிப்பிட்டுள்ளது. காமக்கூட்டம் என்பதற்றுப் புணர்தலும் புணர்தல் நிமத்தமும் என்று உரை கூறுகின்றார். நச்சினார்க்கினியர். திருக்குறளில் உள்ள காமத்துப் பாலும் இதைப் பற்றிதான் சொல்லுகின்றது. காதலர்களுக்குள்ள அன்பு; அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது; ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான காரணங்கள் இவைகளைப் பற்றியே காமத்துப்பாலில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. முன்னோர் முறையைப் பின்பற்றியே இப்பகுதிக்கு காமத்துப்பால் என்று பெயரிட்டார் வள்ளுவர். காமத்துப் பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை இருபத்தைந்து இவற்றுள் களவைப் பற்றிக் கூறுவது ஏழு அதிகாரங்கள்; எழுபது வெண்பாக்கள். கற்பைப் பற்றி உரைப்பது பதினெட்டு அதிகாரங்கள்; நூற்றெண்பது வெண்பாக்கள். இந்த இருபத்தைந்து அதிகாரங்களிலும் வள்ளுவர் காமம் என்ற சொல்லையே கையாண்டிருக்கின்றார். களவியலில் பன்னிரண்டு சொற்கள், கற்பியலில் இருபத்தைந்து சொற்கள் காணப்படுகின்றன. ஆகவே காமத்துப்பாலில், காமம் என்ற சொல் 37 இடங்களில் வருகின்றது. காமம் உழந்து; காமுற்றார்; காமக் கடும்புனல்; கடல் அன்ன காமம்; காமநோய்; காமக்கனிச்சி; மலரினும் மெல்லிது காமம்; இவ்வாறு காமம் என்னும் சொல் பயின்று வருகின்றது. ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின். ஊடுவதே காமத்திற்குச் சிறந்த இன்பமாகும்; மீண்டும் கூடித் தழுவிக் கொள்ளுவதே அந்த ஊடலுக்கு இன்பமாகும். (கு.1330) இதுவே காமத்துப்பாலின் இறுதி வெண்பா; திருக்குறளின் இறுதி வெண்பாவும் இதுதான். காமம் என்னும் சொல் இச் செய்யுளிலும் அமைந்திருக்கின்றது. தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்பது. இறுதி எழுத்து ன என்பது. அகர முதல என்று தொடங்கும் முதற் குறளில் முதல் எழுத்து அ அமைந் திருக்கின்றது. இந்த இறுதிக் குறளிலே ன் என்ற இறுதியெழுத்து அமைந்திருக்கின்றது. இந்த இறுதி குறளிலே ன் என்ற இறுதி யெழுத்து அமைந்திருக்கிறது. இது வியத்தற்குரியது. இக்காலத்திலே காமம் என்ற சொல் அவ்வளவு நல்ல பொருளிலே வழங்கவில்லை. நூல் வழக்கிலே வழங்குவது போல உலக வழக்கில் இல்லை. காலத்திற்கேற்றவாறு சொற் களின் பொருள் வேறுபட்டு வழங்குவது இயல்பு. காமாந்தகாரன். காமவெறி பிடித்தவன்; காமத்திற்குக் கண் இல்லை; காமத்தால் அலைகின்றான்; இத்தொடர்கள் மக்களின் இழி குணத்தை உணர்த்துகின்றன பெண்ணாசையால் பித்துப் பிடித்து அலை கின்றவனையே இவ்வாறு பழித்துப் பேசுகின்றனர். காதல் வயப்பட்டான்; இன்பத்தில் இச்சை கொண்டான்; அன்பிற்கு அடிமைப்பட்டான்; காதலியைக் கண்டு இன்புற்றான்; காதலனைக் கண்டு இன்பம் எய்தினாள்; என்று கூறுவதை யாரும் அவ்வளவு இழிவாக எண்ணுவதில்லை. இலக்கிய வழக்குப் போலவே கருதப்படுகின்றது. காதல், காமம் இன்பம், என்னும் மூன்று மொழிகளும் ஒரே பொருளுடைய சொற்கள் தாம் ஆயினும் இக்காலத்தினர் சிலர் காமம் என்பதை இடக்கர்ச் சொல்லாக எண்ணுகின்றனர். ஆதலால் காமத்தை வடசொல் என்று கருதியும், இடக்கர்ச் சொல் என்று எண்ணியுமே சிலர் காமத்துப்பாலை இன்பத்துப்பால் என்று மாற்றிக் கூறுகின்றனர். காலத்திற்கேற்றவாறு இவ்வாறு மாற்றிக் கொள்வதிலே தவறில் லைதான். ஆயினும் வள்ளுவர் வைத்த பெயரை வழங்குவது தான் சிறந்தது. வள்ளுவர் காலத்திலே காமம் என்ற சொல் இடக்கர்ச் சொல்லாக எண்ணப்படவில்லை. இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் இச்சொல் தண்ணீர்பட்ட பாடாகவே வழங்கி வந்தது. ஆதலால் தான் வள்ளுவர் இச்சொல்லைத் தமது வெண்பாக்களிலே தாராளமாக இயங்க வைத்தார். காமத்துப்பால் ஏன்? வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் பாட வேண்டும? அதிலே என்ன இருக்கின்றது? அறம் இருக்கின்றதா? அரசியல் இருக் கின்றதா? பொருளீட்டும் வழி இருக்கின்றதா? ஒருவனும் ஒருத்தி யும் மணந்து வாழும் களவைப் பற்றிக் கூறுவதால் யாருக்கு என்ன பயன்? கற்பு மனத்தைப் பற்றி விரிந்துரைப்பதால் தான் என்ன பயன்? இவைகளுக்காக இருபைத்தைந்து அதிகாரங்கள் ஏன்? என்று கேட்போர் உண்டு. இவர்கள் தமிழ் நூல் முறையை அறியாதவர்கள்; தமிழர் பண்பாட்டின் பெருமையை உணரா தவர்கள். தமிழர் பண்பாட்டின் சிறப்பைக் களவும் கற்புமே எடுத்துக்காட்டுகின்றன. இதற்காகவே வள்ளுவர் காமத்துப் பாலைக் கூறினார் தமிழ்ச் செய்யுட்கள் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருள்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியன என்று தொல்காப்பியம் உரைக்கின்றது. அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருட்களும் உரிய என்ப அந்த நிலையில் உள்ள செய்யுட்கள், அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருள்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியன என்பர். (தொல்,பொருள்,செய். 106) முப்பொருள் அமைந்த செய்யுட்களே சிறந்த கவிதைகள்; முப்பொருள்களைப் பற்றியும் மொழியும் நூல்களே உயர்ந்த நூல்கள்; இதுவே தமிழ்ச் சான்றோர்களின் கொள்கை. திருக்குறளுக்குச் சிறந்த உரை வகுத்த பரிமேலழகரும், அறம், பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறுவனவே தமிழ் நூல்கள் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்டப் பொருள் நான்கு; அவை அறம், பொருள், இன்பம் வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலையமைத்து; ஆதலின் துறவறமாகிய காரண வகையால் கூறப்படுவது அல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின் நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம். இது பரிமேலழகர் கூற்று. நூல்களால் இவ் வுலக வாழ்வைப் பற்றித்தான் நேரடியாகக் கூறமுடியும்; இவ்வுலக நிகழ்ச்சிகளைப் பற்றித்தான் இன்சுவை ததும்ப எடுத்துரைக்க முடியும். இதுவே பரிமேலழகரின் கருத்தாகும். அறம் பொருள் இன்பங்களைப் பற்றி எடுத்துரைக்கும் இலக்கியங்களே சிறந்த இலக்கியங்கள்; இவைகளே முற்ற முடிந்த முழுநூல்கள். அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்து, நன்னெறியிலே பொருளீட்டி, இன்பம் நுகர்வதே இவ்வுலகில் மக்கள் அடையும் பயன். ஆதலால் அறத்தைப் பற்றியும் பொருளைப் பற்றியும் சொல்லிவிட்டு இன்பத்தைப் பற்றி சொல்லாமல் விடுவது பேராசிரியர் - பேரறிஞர் - முதலாசிரியர்--தெய்வப் புலவர் என்பவர்க்கு ஏற்றதாகாது. ஆதலால் இன்பத்தை விளக்கும் காமத்துப்பாலையும் கூறி முடித்தார் வள்ளுவர். தமிழிலே நூல் இயற்றியவர் வள்ளுவர். தமிழ் நூல் மரபை மறந்துவிடவில்லை; மறைத்துவிடவும் இல்லை. தமிழ்நூல் முறைப்படியே தமது நூலைச் செய்தார். பிற்காலத்தில் நூல் இயற்றுவோருக்கும் இதன் மூலம் வழிகாட்டினார். தமிழ் நூல்கள் எப்படி இயற்றப்பட வேண்டும் என்பதற்குத் திருக்குறள் ஒரு வழிகாட்டியாக நிற்கின்றது. காமத்துப்பாலிலே, வள்ளுவர் தமது காலத்து நிலைக்கேற்பச் சிறிது மாற்றம் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காதல் மணம் பண்டைத் தமிழகத்தில் காதல் மணமே நடைபெற்று வந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தாமே ஒருவரை ஒருவர் காதலித்து மணம் புரிந்து கொண்டனர். இவர்களுடைய காதலிலே - மணத்திலே - சாதியோ, மதமோ, குறுக்கிடுவதில்லை; நாள் நட்சத்திரங்கள் கூடத் தடை செய்வதில்லை. மணமாகாத ஆடவன் ஒருவன், மணமாகாத மங்கை ஒருத்தியைக் கண்டு காதலிப்பான் அவளும் அவன் மீது அன்பு கொள்ளுவாள். இருவர் உள்ளத்திலும் தோன்றும் இக் காதல் அவர்களை ஒன்றாக பிணைக்கும்; கணவன் மனைவிகளாக ஆக்கிவிடும். இக்காதலும் ஊழ்வினையாலேயே உண்டாகும்; அவர்கள் இருவரும் கணவன் மனைவிகளாக வேண்டும் என்ற தலைவிதி - ஊழ்வினை - முன்வினை இருந்தால்தான் அவர் களுக்குள் காதல் பிறக்கும். ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே. இருவரும் ஒரு நிலத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக் கலாம்; அல்லது வேறு வேறு நிலத்தில் வாழ்கின்றவர்களாகவும் இருக்கலாம்; அவர்களுடைய உயிர்களோடு ஒன்று பட்டு உயர்ந்து நிற்கின்ற வினையின் கட்டளைப்படி பிறப்பால்--பருவத்தால் - உருவத்தால் - குணத்தால் ஒத்த ஒரு தலைவனும், தலைவியும் சந்திப்பர்; தலைவன் தலைவியை விட உயர்ந்த வனாயினும் குற்றம் இல்லை இதுவும் தொல்காப்பியக் களவியல் சூத்திரம். பூர்வ வினை காரணமாகவே தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காண்பர்; காதல் கொள்வர்; களவு மண வாழ்வை மேற் கொள்வர்; என்று கூறிற்று. தெய்வச் செயலை அழிக்க முடியாது. ஆதலால் காதல் கொண்ட தம்பதிகள் எக்காலத்திலும் பிரியாமல் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே காதலுக்குக் காரணம் வாழ்வினை தான் என்றார் தொல்காப்பியர். வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. மணந்து கொள்ளும் முறையைக் களவுப் புணர்ச்சி வெளிப் பட்ட பின் மணந்து கொள்ளுதல், களவுப் புணர்ச்சி வெளிப்படு வதற்கு முன்பே மணந்துகொள்ளுதல் ஆகிய இரண்டு வகை என்பர் இதுவும் தொல்காப்பியத் களவியல் சூத்திரம், முதலில் ஆணும் பெண்ணும் தாமே சந்தித்து உறவு கொள்ளுவதற்கு முன் திருமணம் நடைபெறுவதில்லை என்பதை இதனால் காணலாம். திருவள்ளுவர் காலத்திலே இம்முறையிலே சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும் அவர் முன்னோர் முறையைச் சொல்லாமல் விட்டுவிடவில்லை. காதலர்கள் சந்திப்பு களவு மணத் தம்பதிகளின் காதல்; இணைபிரியா அன்பு; உறுதி; இவைகளைப்பற்றி வள்ளுவர் களவியலில் விளக்கு கின்றார். குலத்தாலும் நலத்தாலும் சிறந்த ஆண்மகன் ஒருவன்; அவன் மணமாகாத கட்டிளைஞன்; ஒரு மலைச்சாரலிலே பூத்துக் குலுங்கும் மலர்க்கொடி போன்ற ஒரு மங்கையைக் கண்டான். கண்டதும் வியப்புற்றான். அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனம் குழை மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு, இத்தோற்றம் இக் காடுறை தெய்வமோ! அல்லது சிறந்ததொரு மயிலோ! அல்லது கனமான குழையை அணிந்த பெண்தானோ! யார் என்று தெளிய முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது. (கு.1081) இவ்வாறு எண்ணிக் கொண்டான். அவன் தோற்றத்தை உற்று நோக்கியபின் அவள் இம்மண்ணுலக மங்கைதான் என்று தெளிந்தான். அவள் அழகிலே மயங்கினான்; அவள் பார்வை யிலே நெஞ்சத்தைப் பறி கொடுத்தான். இவன் அவளைப் பார்த்துக் காதல் கொண்டது போலவே அவளும் இவனைக் கண்டாள்; காதல் கொண்டாள். அவள் குறிப்பை இவன் கண்டறிந்தான். நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் நான் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணி வணங்கினாள்; அது இருவரிடமும் உள்ள அன்புப் பயிர் வளர அவள் பாய்ச்சிய நீராகும் (கு.1093) யான் நோக்கும்காலை நிலம் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும். நான் பார்க்கும்போது அவள் நிலத்தை நோக்கித் தலை குனிவாள்; நான் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ச்சியடைகின்றாள் (கு.1094) தலைவியின் இக்குறிப்பை உணர்ந்த பின்னரே தலைவனு டைய காதல் மிகுந்தது. அவளும் தன்மேல் காதல் கொண்டாள் என்று அறிந்த பிறகு தான் அவன் அவளை மணக்க எண்ணங் கொண்டான். இது வள்ளுவர் காலத்திலும் அவர் காலத்துக்கு முன்னும் தமிழகத்திலிருந்து ஆடவர்களின் ஒழுக்கச் சிறப்பை உணர்த்துகின்றது. மனப்பூர்வமாகத் தன்னை காதலிக்காத பெண்ணைத் தானும் காதலிப்பதில்லை இதுவே பண்டைத் தமிழ் மகன் பண்பு. இவ்விரண்டு வெண்பாக்களுமே இதற்குச் சான்று. அதன் பின் அந்த இருவரும் ஒருவரை ஒருவர் நேரே பார்த்தனர். ஒருவர் கண்களை மற்றொருவர் கண்கள் சந்தித்தன. இருவர் கண்களும் ஒன்றுபட்டுவிட்டன. அவ்வளவுதான்; அவர்கள் வாய்ச்சொற்களைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் குடி புகுந்துவிட்டனர். உடம்பு இரண்டும், உணர்ச்சி ஒன்றும் ஆயினர். கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. கண்களோடு கண்கள் பார்வைல் ஒன்றுபடுமாயின் பின்பு வாய்ச்சொற்கள் ஒரு பயனும் இல்லாமல் போய்விடு கின்றன(கு1100) என்ற குறளால் இவ்வுண்மையை உணர்த்தினார். இப்படி ஒன்றுபட்ட உள்ளமுடைய இருவரும் காதலன் காதலிகளாயினர்; கணவன் மனைவிகளாக ஆகிவிட்டனர். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். அத்தழுவுதலால் இருவரும் இன்புற்றனர் அந்த இன்பத்தை அவன் மனமாரச் சுவைத்தான். வாயாரப் பாராட்டியும் கூறினான். ஒற்றுமை வாழ்வு கண்டு,கேட்டு, உண்டு,உயிர்த்து, உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடிக் கண்ணே உள. கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், தொட்டும் அடையும் ஐம்புல இன்பங்களும், ஒளியுள்ள வளையல்களை அணிந்த இவளிடத்திலே இருக்கின்றன. (கு.1101) இவளைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; இவள் மொழி களைக் கேட்பது காதுக்கு இன்பம்; இவளை முத்தமிடுவது வாய்க்கு இன்பம்; இவளை முகர்வது மூக்குக்கு இன்பம்; இவள் உடலைத் தொட்டுப் பழகுவது உடலுக்கு இன்பம். இவளால் நான் ஐம்புலன்களாலும் இன்பம் நுகர்ந்தேன்; என்று இவ்வாறு பாராட்டிப் பேசினான். காதலன் தன் காதலியால் பெற்ற இன்பத்தைப் பாராட்டிப் புகழ்வதைப் பற்றி மூன்று அதிகாரங்களிலே இருபத்தைந்து வெண்பாக்களிலே விளக்கி யிருக்கிறார் வள்ளுவர். புணர்ச்சி மகிழ்தல்; நலம்புனைந்து உரைத்தல்; காதற் சிறப்பு உரைத்தல்; என்பவைகளே அவ்வதிகாரங்கள். இவற்றுள் புணர்ச்சி மகிழ்தல் என்பது காதலன் தன் காதலியிடம் நுகர்ந்த இன்பத்தை எண்ணி மகிழ்வது. அவன் அடைந்த இன்பம் வாயால் சொல்ல முடியாதது; சொற்களில் அடங்காதது; எண்ணி எண்ணித்தான் இன்புற முடியும். இவ்வுண்மையையே புணர்ச்சி மகிழ்தலில் கூறினார். நலம்புனைந்து உரைத்தல் என்னும் அதிகாரத்திலே காதலன் தன் காதலியின் அழகையும், பண்பையும் பாராட்டிப் புகழ்கின்றான். அவளுடைய ஒவ்வொரு அவயங்களுக்கும் உவமை சொல்லி மகிழ்ச்சி யடைகின்றான். காதல் சிறப்பு உரைத்தல் என்னும் அகிரத்திலே முதல் ஐந்து வெண்பாக்கள் காதலன் கூற்று. அடுத்து ஐந்து வெண் பாக்கள் காதலியின் கூற்று காதலன் கூற்றாக இருபத்தைந்து வெண்பாக்களைக் கூறிக், காதலியின் கூற்றாக ஐந்து வெண்பாக் களை மட்டும் அமைத்திருப்பது சிந்தனைக்கு உரியது. தமிழ் நாட்டுப் பெண்களின் நாணத்தையும், அடக்கத்தை யும், பண்பையும் காட்டவே இவ்வாறு அமைத்தார் வள்ளுவர். காதல் துறையிலே பெண்கள் ஆண்களை விட அடக்கம் உள்ள வர்கள்; அதைப் பற்றி ஆண்களைப் போல் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். தங்கள் உள்ளத்தில் எவ்வளவு காதல் உணர்ச்சியிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்ளும் பண்பு பெண்களுக்குத்தான் உண்டு. இவ்வுண்மையை வள்ளுவர் செய்யுட்கள் உணர்த்துகின்றன. பண்டைத் தமிழ் மக்கள் கொண்ட காதல், என்றும் பிரியாதது; யாராலும் பிரிக்க முடியாது. அது உடம்பையும் உயிரையும் போன்றது; உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படியோ அப்படிப்பட்டது உடம்பும் உயிரும் ஒன்று பட்டிருந்தால் தான் மனித உருவத்துடன் இயங்க முடியும். அதுபோலக் காதலனும் காதலியும் பிரியாமலிருந்தால்தான் அவர்கள் உயிர் வாழ்வார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே வாழ்வார்கள். இப்படி வாழ்வதுதான் உண்மை யான காதல் வாழ்க்கை. இதுவே முன்னோர் கொள்கை. இதுதான் வள்ளுவர் கொள்கையும். உடம்பொடு உயிர் இடைஎன்ன, மற்றுஅன்ன மடந்தையொடு எம்இடை நட்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ, அத்தகையதே. இந்த மடந்தைக்கும் எமக்கும் உள்ள தொடர்பு. (கு.1112) இது காதலனே சொல்வதாக அமைந்த வெண்பா. இதனால் களவு மணம் புரிந்து கொண்ட காதலன் காதலிகளின் உறுதியைக் காணலாம். ஒருவரும் அறியாமல் - பெற்றோர், உற்றார், உறவினர் அறியாமல் - மறைவிலே மணம் புரிந்து கொண்ட தம்பதிகள் பின்னர் வெளிப்படையாக மணந்து கொள்ளுவார்கள், காதலன் தான் கைப்பிடித்த மங்கையை மணந்து கொள்ளுவதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அவ்விடையூறுகளுக்கு அவன் அஞ்சமாட்டான். மடலேறுதல் என்னும் காரியத்தைச் செய்து அவளை அடைந்தே தீருவான். அப்படியும் அவளை மனைவியாகப் பெற முடியாவிட்டால் மாண்டு போவான்; காதலன் இறந்த செய்தி கேட்டால் காதலியும் இறப்பாள் காதலன் உறுதிக்கும், காதலியின் கற்புக்கும் இது எடுத்துக்காட்டு. பனமட்டைகளால் குதிரை வடிவாக ஒரு உருவம் செய்யப் படும். அதன்மேல் காதலன் உட்கார்ந்து கொள்ளுவான். தான் காதலித்த பெண்ணின் படத்தை எழுதிக் கையிலே பிடித்துக் கொள்ளுவான். அவன் ஏறியிருக்கும் பனைமடற் குதிரையின் பனைமடல்களின் கருத்துக்கள் அவன் உடம்பைக் கிழித்துப் புண்படுத்தும், இதைக்கண்ட ஊரார், அவன் காதலித்த பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைப்பர். இன்றேல் அவன் ஒரு மலை உச்சியிலேறிக் கீழே விழுந்து மாளுவான். இது கேட்டு அவள் காதலியும் மடிவாள். இவ்வாறு மடலேறும் வழக்கம் ஆண் மக்களிடம் மாத்திரந்தான் உண்டு; பெண் மக்களிடம் இல்லை; என்று கூறுகிறார் வள்ளுவர். கடல்அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின பெரும் தக்கது இல். கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடல் ஏறுவதைப் பற்றி எண்ணாத பெண் பிறவியைப் போலப் பெருமையுள்ள பிறவி வேறு இல்லை (கு.1137) இக்குறளால் பெண்ணின் பெருமையைக் கூறினார் வள்ளுவர். ஆண் மகன் தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளு வதற்கு எதையும் செய்வான். மானம் அவமானம் என்று பார்க்க மாட்டான். நாணத்தைத் துறப்பான்; பலர் பார்த்து நகைப் பார்கள் என்று எண்ணாமல் மடலேறுவான். இதை நாணுத் துறவுரைத்தல் என்னும் அதிகாரத்திலே கூறினார் வள்ளுவர். வள்ளுவர் காலத்திலே ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலே தோன்றிய காதல், என்றும் நிலைத்திருக்கும் காதல், அது வெறும் காம உணர்ச்சியை - உடல் இன்பத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டது அன்று. இருவர் உள்ளமும் வாழ்வும் என்றும் பிரியாமல் இயங்கும்; இத்தகைய பிரியாக் காதலே ஏற்றமுடையது; ஆண் பெண் கூட்டுறவு வாழ்விலே அன்பும், இன்பமும் வற்றாமல் வளர்வதற்கு வழிகாட்டுவதாகும். இல்லறத்தை இனிது நடத்துவதற்கு அடிப்படையான காதல் இது தான். இவ்வுண்மைகளைக் காமத்துப் பாலில் களவியலில் உள்ள முதல் ஏழு அதிகாரங்களால் அறியலாம். கற்பு மணவாழ்வு காதலனும் காதலியும் சேர்ந்து இல்லறம் நடத்துவதே கற்பு மணவாழ்வு. அவர்கள் இருவரும் கணவனும் மனைவியும் என்பதை ஊரார் உணர்ந்து கொள்ளுவதே கற்புமணம். களவு மணத்திற்குப் பிறகுதான் இந்தக் கற்பு மணவாழ்வு நடைபெறும்.. அவர்களுடைய களவொழுக்கம் ஊரார்க்குத் தெரியும் முன்பே அவர்கள் கற்பு மணத் தம்பதிகளாகி விடலாம். அவர்கள் களவு வெளிப்பட்ட பின்பும் கற்புமணத் கற்புமணத் தம்பதிகளா கலாம்? பெண்கள் தங்கள் களவு வாழ்க்கை நீடித்திருப்பதை விரும்புவதில்லை; அது அம்பலமாவதற்கு முன்பே கற்பு மணம் நடந்து விட வேண்டும் என்றே விரும்பினர். களவிலும் பிரிவு உண்டு. கற்பிலும் பிரிவுண்டு. கனவிலே, தன் காதலியை மணந்து கொள்ளுவதற்காகக் காதலன் பொருள் தேடப் போவான். அப்பொழுது காதலி தன் காதலன் இன்னும் வந்து தன்னை மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தி யிருப்பாள். மணம் புரிந்துகொண்ட பின்னும் கணவன் பொருள் தேடப்பிரிந்து செல்வான். அப்பொழுதும் மனைவி, கணவன் வரவை எதிர்பார்த்து வருந்தியிருப்பாள். திருவள்ளுவர் மணந்த பின் காதலன் பிரிந்து செல்லும் பிரிவைப் பற்றியே குறிப்பிடு கின்றார். கற்பியலிலே அமைந்திருக்கும் பதினெட்டு அதிகாரங்களில் பதினைந்து அதிகாரங்கள் பெரும்பாலும் பிரிவைப் பற்றியே உரைக்கின்றன. ஐந்து அதிகாரங்கள் தாம் அவர்கள் சேர்ந்து வாழும் நிலையைப் பற்றிக் கூறுகின்றன; அவ்வதிகாரங்களும், காதலன் காதலிகளுக்குள் நிகழும் ஊடலைப் பற்றியும், கூடலைப் பற்றியுமே கூறுகின்றன. அன்பின் சிறப்பு பிரிவைப் பற்றிக் கூறும் பகுதிகளில் காதலியின் துன்பமே விளக்கப்படுகின்றது. சிறுபான்மையே கணவன் துயரம் கூறப்படுகின்றது. காதலன் பிரிவால் பெரும்பாலும் பெண்கள் தாம் மிகுதியாக வருந்துவார்கள். ஆண்களுக்கு அவ்வளவு துயரம் இருப்பதில்லை; இந்த இயற்கை உண்மையைக் கற்பியல் அதிகாரங்கள் காட்டுகின்றன. செல்லாமை உண்டேல் எனக்குஉரை, மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. நீ என்னை விட்டுப் பிரிந்து செல்லாமலிருப்பதானால் அதைப் பற்றி எனக்குச் சொல். இதல்லாமல் பிரிந்து சென்று விரைவில் வருவதைப் பற்றிக் கூறுவதானால் நீ வருமவரையிலும் உயிரோடு வாழ்கின்றவர்களிடம் சொல் (கு.1157) பொருள் தேடப் பிரிந்து போக முடிவு செய்தான் தலைவன். அவன் தன் கருத்தைத் தலைவியிடம் உரைத்தான். அப்பொழுது அவள் வெடுக்கென்று இவ்வாறு பதில் இறுத் தாள். இதனால் அவள் தன் கணவன் மேல் கொண்டிருந்த அன்பின் மிகுதியை அறியலாம். பொருள் தேடப் பிரிதல் என்னும் அகத்துறையைக் கொண்டு நாம் மற்றொரு உண்மையையும் உணரலாம். தந்தை யின் செல்வம் மகனுக்குரியது என்னும் கொள்கை வலுப்படாத காலத்தில்தான் பொருள் தேடப் போதல் என்னும் வழக்கம் இருந்தது. ஒவ்வொரு மக்களும் உழைத்துப் பொருள் தேடி உயிர் வாழ வேண்டும் என்ற கொள்கை நிலைத்திருந்த காலம் அது ஆதலால்தான், காதலன் தன் காதலியை மணப்பதற்கு முன்போ, மணந்தோ பின்போ பொருள் தேடச் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான். பொருள் தேடுவதற்காக என்று இல்லாமல் நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போர்க்களத்திற்குச் செல்வதும் பிரிவு என்னும் பகுதியிலே அடங்கும். காதலன் பிரிந்திருக்கும்போது காதலி அடையும் துன்பத் தைப் பற்றி வள்ளுவர் எடுத்துரைப்பன அப்படியே இயற்கையாக அமைந்திருக்கின்றன. பெண்களின் மனப்பான்மையை நன்றாக உணர்ந்தவரே அவர்கள் மனப் பண்பை அப்படியே சொல்ல முடியும். வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். தம்மால் விரும்பப்படும் காதலரின் இன் சொல்லை எப்பொழுதும் கேட்டு இணைந்து வாழ்வதே இன்பமாகும்; இப்படியில்லாமல் அவர்கள் பிரிந்து வாழ்வார்களானால் அவர்களைப்போல கடுஞ் சித்தம் கொண்டவர்கள் இவ்வுலகில் ஒருவரும் இல்லை. (கு.1198) காதலியானாலும் சரி, காதலன் ஆயினும் சரி, அவர்கள் தனித்திருந்து வாழ்வார்களானால் அவர்கள் நெஞ்சம் கல் நெஞ்சமாகத்தான் இருக்க வேண்டும். உண்மைக் காதலர்கள் பிரிவைப் பொறுக்க மாட்டார்கள். இவ்வுண்மையைக் கூறிற்று இக்குறள். சில நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டிக் காதலன் காதலி களின் அன்பின் சிறப்பை விளக்குகிறார் வள்ளுவர் அந்நிகழ்ச்சி கள் பண்டைத் தமிழ் மக்களின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் காட்டுகின்றன. இந்நம்பிக்கை வள்ளுவர் காலத்திலும் தமிழகத்தில் இருந்தன. காதலன் பிரிந்து போய்விட்டான் காதலி எப்பொழுதும் அவனைப் பற்றியே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அந்நாளில் ஒரு சமயம் அவளுக்குத் தும்மல் எழுந்தது. ஆனால் அத் தும்மல் வெளிப்படவில்லை. தும்மல் வருவது போன்ற உணர்ச்சி தோன்றி உடனே மறைந்துவிட்டது. அப்பொழுது அவன் கூறியதாக அமைந்திருக்கிறது ஒரு குறள். நினைப்பவர் போன்று நினையார்கொல்; தும்மல் சினைப்பது போன்று கெடும். அவர் என்னைப் பற்றி நினைப்பதுபோலக் காட்டிப் பிறகு நினைக்காமல் விட்டு விட்டார்போல் தெரிகின்றது. தும்மல் வருவதுபோல் காணப்பட்டுப் பிறகு மறைந்துவிட்டது.”(கு.1203) இக்குறளால் காதலியின் அன்பைக் காணலாம். தும்மலுக் குக் காரணம் உண்டென்பது முன்னோர் நம்பிக்கை. நம்மைப் பற்றி யாரேனும் உறளவினர்கள் நினைத்தால் தான் தும்மல் வரும் என்று நம்பினர். நீர்க்கோவையால் எழும் தும்மல் இதற்கு விலக்கு உண்ணும்போதும், சும்மா இருக்கும் போதும் வரும் தும்மலைப்பற்றியே இவ்வாறு எண்ணுகின்றனர். கனவிலும் காதலர்கள் ஒருவரை ஒருவர் மறப்பதில்லை. கனவிலேயும் ஒருவரை ஒருவர் கண்ணால் காண்பார்கள். நனவிலே நடந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் கனவிலும் அனுபவிப் பார்கள். இத்தகைய மறவாத அன்பினராயிருந்தனர் காதலர்கள். நனவினால் நல்காதவரைக் கனவினால் காண்டலின் உண்டு என் உயிர். நனவிலே வந்து என்னிடம் அன்பு காட்டாதவரைக் கனவிலே காண்கிறேன் அதனால்தான் என் உயிர் நிலைத்து நிற்கின்றது (கு.1213) காதலி, கனவிலும் தன் காதலனை மறக்கவில்லை என்ற உண்மையை உரைத்தது இக்குறள். காதலனுக்கும் இத்தன்மை உண்டு. நினைவுதான் கனவுக்குக் காரணம் என்பதையும் இக் குறளால் காணலாம். இவ்விரண்டு குறட்பாக்களும், கணவனைப் பிரிந்திருக்கும் காதலியின் தவிப்பையும் அன்பையும் அறிவித்தன. ஊடலுக்குக் காரணம் காதலனும் காதலியும் சேர்ந்திருக்கும்பொழுது அவர் களுக்குள் ஊடல் தோன்றுகிறது. முதலில் ஊடுகின்றவன் மனைவி தான். கணவனுடைய நடத்தை காரணமாகத்தான் மனைவியின் பால் ஊடல் உண்டாகின்றது. ஊடல் தோன்று வதற்கு முதல் காரணம். தன் காதலன், தன்னைத்தவிர பிற பெண்களையும் விரும்புகிறான் என்பதுதான். வள்ளுவர் பல தார மணத்தையோ, பரத்தையரோடு உறவு வைத்துக் கொள்ளுவதையோ விரும்பவில்லை. ஆயினும், அவர் காலத்திலே தமிழகத்திலே பலதார மணமும் இருந்தது. பரத்தை யரை நாடித் திரியும் வழக்கமும் ஆண்களிடம் இருந்தது. இதைக் காமத்துப்பாலிலே காணலாம். இவற்றை அவர் விரும்பா விட்டாலும் வழக்கத்தை மறைக்காமல் கூறவேண்டியதாயிற்று. பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்; நண்ணேன் பரத்த நின்மார்பு. பரத்தமையுள்ளவனே பெண் தண்மையுள்ளவர்கள் எல்லோரும் தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றனர்; ஆதலால் உன் மார்பைக் பொருந்தமாட்டேன். (கு. 1311) தன் கணவன் பரத்தையர் நேசமுள்ளவன் என்று எண்ணிய காதலி சினத்துடன் கூறியது இது. இதனால் பரத்தையரை நேசிக்கும் தன்மை வள்ளுவர் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது என்பதைக் காணலாம். காதலி ஊடியிருக்கிறாள்; அவள் வாய்திறந்து ஒன்றும் பேசவில்லை. அவளைப் பேசவைப்பதற்குக் கணவன் ஒரு தந்திரம் செய்தான். அன்புள்ளவர் தும்மினால், அண்டையிலிருப்பவர் நீடு வாழ்க என்று வாழ்த்த வேண்டும்; அதன் மூலம் ஊடல் நீங்கவேண்டும் என்று எண்ணினான். உடனே ஒரு பொய்த் தும்மல் போட்டான். காதலியும் நீடு வாழ்க என்று வாழ்த்தினாள். ஊடலும் ஒழிந்தது. இருவரும் கூடி மகிழ்ந்தனர். ஊடி இருந்தேமாத் தும்மினார், யாம் தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. யாம் அவரோடு பிணங்கியிருந்தோம். அப்பொழுது பொய்யாகத் தும்மினார். நாம் அவரை நீடு வாழ்க என்று வாழ்த்துவோம் என்று எண்ணி இப்படித் தும்மினார்(கு.1312) இந்த நிகழ்ச்சியைக் காதலியே சொல்வதாக அமைந்திருக் கின்றது இக்குறள். பெண் மனம் பொருள் தேடப் போயிருந்த காதலன் திரும்பி வந்தான். காதலி அவனைக் கண்டு அகமகிழ்ந்தாள். நகை முகத்துடன் வரவேற்றாள். அவனும் உளம் களித்தான். தன் அன்பை வெளிப் படுத்த நான் சென்ற இடத்தில் உன்னைத்தான் நினைத்தேன் என்றான். உடனே அவளுக்கு ஆத்திரம் வந்து விட்டது. ஏன் என்னை மறந்தீர்? மறந்தால் தானே மீண்டும் நினைக்க வேண்டும்? என்று ஊடினாள். அவனைத் தழுவிக்கொள்ள வந்தவள் தழுவிக்கொள்ளாமல் அப்படியே நின்று விட்டாள். இதைக் கண்ட காதலன் திகைத்துப் போனான். உள்ளினேன் என்றேன் மற்றுஎன்மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்க வள் பிரிந்த காலத்தில் உன்னை நினைத்தேன் என்றேன். மறந்தால் அன்றோ நினைக்க வேண்டும்? மறப்பதற்குக் காரணம் என்ன? என்று சொல்லி என்னைத் தழுவிக் கொள்ளாமல் ஊடினாள். ( கு.1311)) ஒரு சமயத்தில் காதலனுக்குத் தும்மல் வந்நது. அப்பொழுது காதலியும் அவனுடன் இருக்கிறாள். அவன் தன் தும்மலை அடக்கிக் கொண்டான். அதைக் கண்டதும் காதலி வாய்விட்டு அழுதுவிட்டாள். நான் என்ன குற்றம் செய்தேன் ஏன் அழுகின்றாய்? என்றான் அவன். உன்மீது அன்புள்ள வேறு யாரோ உம்மை நினைக்கிறார். அதனால் தான் தும்மல் எழுந்தது. அதை யாம் அறியாமல் மறைக்க வேண்டும் என்பதற்காகவே வந்த தும்மலை அடக்கி விட்டீர் என்றாள் அவள். இச்செய்தி யைக் காதலனே சொல்லுவதாக அமைந்திருக்கிறது ஒரு குறள். தும்முச் செறுப்ப அழுதாள்; நுமர்உளல் எம்மை மறைத் திரோ? என்று அவள் ஊடலுக்கு அஞ்சி நான் தும்மலை அடக்கினேன்; உம்மைச் சேர்ந்தவர் உம்மை நினைப்பதை நான் அறியாமல் மறைக்கின்றீரோ என்று கேட்டு அழுதாள். (கு.1318) ஒரு சமயம் காதலன், தன் காதலியுடன் அன்புடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன், காதல் மிகுதியால் சில சொற்களைக் கூறினான். இப்பிறப்பிலே நாம் பிரியமாட்டோம். இருவரும் ஓருயிரும் ஈருடம்புமாக இணைந்து வாழ்வோம். நம்மை யாரும் பிரித்துவிட முடியாது என்று அன்பு தோன்றக் கூறினான். உடனே காதலியின் கண்களிலே நீர் நிரம்பிவிட்டது. அவள் கண்கள் கலங்கியதைக் கண்டவுடன் அவன் உண்மையினை உணர்ந்து கொண்டான் மறு பிறப்பிலே பிரிந்து விடுவோமோ என்று நினைத்தே அவள் கலங்கினாள்; என்பதே அவன் அறிந்த உண்மை. தன் சொல்லில் உள்ள குற்றத்தை உணர்ந்து அவன் வருந்தினான். இந்த நிகழ்ச்சியை அவனே சொல்லுவதாக அமைந்திருக்கின்றது ஒரு குறள். இம்மைப் பிறப்பில்பிரியலம், என்றேனாக், கண்நிறை நீர் கொண் டனள். இப்பிறப்பில் நாம் பிரியமாட்டோம் என்றேன் உடனே மறு பிறப்பில் பிரிவோமோ என்று எண்ணித் தன் கண்கள் நிறைய நீரைக் கொண்டாள். (கு.1315) இக்குறள் மனைவி தன் காதலன் மேல் கொண்டிருந்த பேரன்பை விளக்குகின்றது. கற்பியலில் உள்ள 180 வெண்பாக்களும் இவ்வாறே காதலன் காதலிகளிடையே அன்பின் மிகுதியையே விளக்குகின்றன. காதலன் காதலிகளுக்கிடையே பிரிக்க முடியாத அன்பு நிலவினால் தான் இல்லறம் இனிது நடைபெறும்; ஆணும் பெண்ணும் மகிழ்ந்து வாழ்வதற்கு அன்பும், காதலுமே அடிப்படை; இந்த உண்மையையே காமத்துப்பாலில் விரித்து விளக்கினார் வள்ளுவர். திருக்குறளின் காமத்துப்பால் ஒரு நாடகம்போல் அமைந் திருக்கின்றது. இதை ஒரு நாடகமாக நடத்திக் காட்ட முடியும். கணவன் மனைவிகளாக வாழ முடிவு செய்து கொண்ட வர்கள் என்றும் பிரியாது வாழவேண்டும்; என்றும் அன்புடன் வாழவேண்டும்; அன்பே இன்பம் அடைவதற்கு வழி. காதலி ஊடினாலும், பிணங்கினாலும், அவளைச் சமாதானப்படுத்துவது காதலன் கடமை; தொட்டதற்கெல்லாம் முணுக்கென்று கோபம் வருவது பெண்கள் இயல்பு; ஆதலால் கணவன்தான் பொறுத்துப் போக வேண்டும் இந்த உண்மைகளை யெல்லாம் காமத்துப்பாலிலே காணலாம். இவ்வுண்மைகளை உணர்த்த வேண்டும் என்னும் கருத்துடன்தான் வள்ளுவர் காமத்துப்பாலை 250 குறட்பாக்களில் விளக்கமாகச் சொல்லியிருக்கின்றார். இலக்கியச்சுவை வள்ளுவரின் இலக்கியத் திறமையைத் திருக்குறளிலே எல்லாப் பகுதிகளிலும் காணலாம். சிறப்பாகக் காமத்துப் பாலிலே கருத்தைக் கவரும் செய்யுட்கள் பல அமைந்து கிடைக் கின்றன. படிப்போர் சிந்தையிலே பதியவேண்டுமானால் சிறந்த உவமைகளுடன் கூறவேண்டும். பண்டைத் தமிழ்ப்புலவர்கள் நல்ல உவமைகள் காட்டிப் பொருளை விளக்குவதிலே வல்லவர்கள். இச்சிறப்பை வள்ளுவரிடம் மிகுதியாகக் காணலாம். ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா போன்ற பாடல்களில், நினைத்த பொருளை அப்படியே அழகுபடச் சொல்ல முடியும். அவைகள் பல அடிகளைக் கொண்டவை; விஷயத்திற்குத் தக்கவாறு அடிகளைக் குறைத்து கொள்ளலாம்; வளர்த்துக் கொள்ளலாம். குறள் வெண்பாவுக்கோ இரண்டடிகள் என்பது தான் இலக்கணம். இரண்டடிப்பாக்கள் என்று சொல்லும் கணக்குக்கூட சரியானதன்று; உண்மையாகப் பார்த்தால் ஒன்றே முக்கால் அடிகளைக் கொண்டதுதான் குறள் வெண்பா. இத்தகைய குறள் பெண்பாவிலே அரிய பொருளை, இனிய சுவையுடன், சொல்வதென்றால் அதற்குப் பெரும் புலமை வேண்டும். ஒப்பற்ற உயர்ந்த கவிதா சக்தியும், புலமையும் பொருந்தியவர்களால்தான் இலக்கியச் சுவை அமையும்படி குறள் வெண்பாக்களை இயற்ற முடியும். இதை மறவாமல் திருக்குறள் வெண்பாக்களைப் படித்தால் அவற்றின் அருமை பெருமைகளை அறியலாம். இன்பத்தின் சிறப்பு தம்இல் இருந்து தமதுபாத்து உண்டுஅற்றால் அம்மா அரிவை முயக்கு. தமது வீட்டிலே இருந்துகொண்டு; தாம் தேடிய உணவைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டது போல் இருக்கின்றது அழகிய மாமை நிறமுள்ள இப்பெண்ணைத் தழுவுதல். (கு.1107) தன் காதலியைத் தழுவி மகிழ்ந்த கணவன், தான் பெற்ற இன்பத்தைப் பற்றி இவ்வாறு கூறினான். அவன் தான்பெற்ற இன்பத்தை மறைக்காமல் வாய்விட்டுக் கூறினான்; அவன் காதலி வாய்விட்டுக் கூறவில்லை; ஆயினும் அவனைப் போலவே தான் அவளும் மகிழ்ந்தாள். பிறர் வீட்டிலே இருந்துகொண்டு பிறர் உழைப்பால் வரும் உணவைத் தாம் மட்டும் பெற்று உண்பதிலே இன்பம் இல்லை. அவ்வுணவு எவ்வளவு சுவையுள்ளதானாலும் அதனால் மனத்துக்கு மகிழ்ச்சியில்லை. தமது வீட்டிலேயே இருந்துகொண்டு தாம் தேடிய உணவைப் பிறருக்கும் கொடுத்துத் தாமும் உண்பதிலே தான் இன்பம் உண்டு. இதைப் போலவே, தாமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் உற்று, மணம் புரிந்து, மணம் ஒருமித்து வாழும் தம்பதிகளின் வாழ்க்கையிலேதான் இன்பம் உண்டு. இந்த உண்மையை இக்குறள் விளக்கி நின்றது. இன்பம் இன்னதென்று சொல்லும்போது, எப்படி வாழ வேண்டும்? என்ற வழியையும் காட்டியது இக்குறள். உவமை நயம் மதியும் மடந்தை முகனும் அறியா பதியில் கலங்கிய மீன். சந்திரனையும், இப்பெண்ணின் முகத்தையும், இது சந்திரன், இது முகம் என்று அறிய முடியாமல் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் தமது நிலையில் தடுமாறின.”(1116) முகம் சந்திரனைப்போல இருந்தது என்பதை இவ்வாறு இனிமையாகக் கூறினார். சந்திரன் பக்கத்திலே இருக்கவேண்டிய நட்சத்திரங்களுக்கு எது சந்திரன், எது பெண்ணின் முகம் என்று அடையாளம் தெரியவில்லை. சந்திரனும் இவள் முகமும் ஒன்று போலவே இருக்கின்றன என்பதே இக்குறளில் உள்ள நயம். காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். காமம் என்னும் கடும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணேன்; அதனால் நள்ளிரவிலும் நான் தூங்க வில்லை; தனியாக விழித்திருக்கின்றேன். (கு.1167) கணவனைப் பிரிந்த துன்பத்தால் வருந்தும் காதலி கூறியது இது. பகல் முழுவதும் துன்ப வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந் தாள். மாலைக் காலத்திலே காதலன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் பகலிலே அவ்வெள்ளத்திலே நீந்திக்கொண்டி ருந்தாள். கணவனைக் காண்பதுதான் அவள் ஏறும் கரையாகும். பகல் முழுதும் அந்தக் காம வெள்ளத்திலே நீந்தியும் மாலை யிலே கணவனாகிய கரையைக் காண முடியவில்லை; இரவிலும் காண முடியவில்லை. நள்ளிரவு வந்துங்கூடக் காண முடிய வில்லை. அப்பொழுதுதான் அவள் இவ்வாறு வருந்திக் கூறினாள். இதிலே காமத்தைப் பெரிய வெள்ளமாகவும், காதலனை அவ்வெள்ளத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் கரையாகவும் உருவகம் செய்யப்பட்டது. வாழ்வார்க்கு வானம்பயந்து அற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. தம்மை விரும்பும் மகளிர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, வானம், தன்னை எதிர்பார்த்து உயிர் வாழ்வார்க்கு மழை பெய்ததுபோல் ஆகும் (கு.1192) காதலனைப் பிரித்து வருந்தும் காதலியின் நிலையை இக்குறள் எடுத்துக் காட்டுகின்றது. மழையை எதிர்பார்த்து வாழ்கின்றவர்கள், மழை பெய்யாவிட்டால் உள்ளம் வருந்து வார்கள்; அவர்கள் எதிர்பார்த்த மழை வந்து விட்டால் மகிழ்ச்சிப் பெருக்கால் இன்பம் அடைவடார்கள். கணவன் அன்பையே எதிர்பார்த்து வாழும் பெண்கள் அவன் அன்பு காட்டாவிட்டால் அவதிப்படுவார்கள். அவன், பிரியாமல் உடனிருந்து அன்பு காட்டினால் அகம் மகிழ்வார்கள். கணவன் மழை, காதலி மழையை நம்பியிருப்போர் ஆவாள். துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி, விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து என் காதலர் நான் தூங்கும்போது கனவில் வந்து, என் தோள்மேல் உள்ளவராகி, விழிக்குபோது விரைந்து என் நெஞ்சத்துள் புகுந்திருப்பவர் ஆகிவிடுகின்றார். (கு.1218) காதலனை பிரிந்திருக்கும் காதலி, தான் கண்ட கனவை இவ்வாறு உரைத்தாள். அவள் பகற் பொழுதிலே கணவனைக் காணாமல் வருந்தினாள். அப்பொழுது அவள், காதலனோடு கூடியிருந்த போது நுகர்ந்த இன்பத்தை எண்ணி எண்ணி ஏங்கினாள். இரவிலே தூங்கப் படுத்தாள்; உறக்கம் வரலில்லை. கண்ணை மூடினால் கனவுதான் வருகின்றது. அக்கனவிலே அவள் கணவனுடன் சேர்ந்திருந்தபோது அடைந்த இன்பத்தையே காண்கிறாள். காதலன் தன்னுடன் இருப்பதாகவே நினைக் கிறாள், திடீரென்று விழித்துப்பார்த்தாள்; காதலனைக் காணவில்லை. தனித்துதான் இருக்கிறாள். அந்த நிலையைத்தான் அவள் இவ்வாறு எடுத்துரைத்தாள், நினைவுதான் கனவுக்குக் காரணம் என்பதையும் இக்குறள் காட்டுகின்றது. காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி மாலை மலரும் இந்நோய். இந்தக் காம நோயாகிய பூ காலைப் பொழுதிலே அரும் பாகத் தோன்றி பகல் முழுவதும் மலரும் பக்குவம் உள்ள பெரிய மொட்டாகி, மாலைப் பொழுதில் மலரும்.”(கு.1227) இக்குறள் காமத்தை ஒரு மலராக உருவகித்துக் கூறியிருக் கின்றது. காம உணர்ச்சியுள்ளவர்கள் மாலைக் காலத்திலும் இரவிலும் தான் அவ்வுணர்ச்சியால் வருந்துவர்; அவர்கள் உணர்ச்சி வெளிபடும் காலம் மாலையே. காலையிலே அரும்பாக இருக்கும்போது மணமில்லை; பகல் முழுவதும் மொட்டாக முற்றும்போதும் மணமில்லை; மாலைக் காலத்திலேயே மலர்ந் தால்தான் மணம் வீசும்; இது மலரின் தன்மை. காமமும் காலையிலே உள்ளத்தில் மட்டுந்தான் இருக்கும். பகல் முழுதும் அவ்வுணர்ச்சி வளர்ந்து கொண்டே யிருக்கும்; மாலை நேரத்தில் தான் வெளிப்படும் இவ்வாறு மலரையும் காமத்தையும் ஒப்பிட்டிருப்பது நம் உள்ளத்தைக் கவர்கின்றது. பெண்ணின் பெருமை புலப்பல் எனச் சென்றேன், புல்லினேன், நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு அவர் வந்த பொழுது ஊடுவேன் என்று எண்ணிச் சென்றேன், எனது நெஞ்சம் அவருடன் ஒன்றுபடுவதைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டேன் (கு.1259) இக்குறள் ஒரு பெண்ணின் உண்மையான அன்பை எடுத்துக் காட்டிற்று. காதலன் பிரிந்திருந்த போது அவள் கடுங்கோபம் கொண்டிருந்தாள். அவன் வரட்டும்; அவனை என்ன செய்கிறேன் பார்; அவனோடு பேச மாட்டேன். அவன் ஏதாவது பேசினால் சண்டை போடுவேன். என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இச்சமயத்தில் திடீரென்று காதலன் வந்தான். அவன் மீது சீறி விழுவது என்றே அவனிடம் போனாள். அவனைக் கண்டவுடன் அவள் உள்ளம் கனிந்து விட்டது. அது அவனிடம் ஓடிவிட்டது. அவன் சினமெல்லாம் இருந்த இடம் தெரியவில்லை; ஆவலுடன் ஓடி அவனைத் தழுவிக் கொண்டாள். உண்மையான அன்பும் கற்பும் நிறைந்த மகளிர் இயல்பு இதுதான். அலந்தாரை அல்லல்நோய் செய்துஅற்றால், தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் தம்முடன் ஊடியவரை நீக்கித் தழுவாமலிருப்பது, முன்பே துன்புற்று வருந்தியவரை மேலும் துன்ப நோயால் வருந்துவது போலாம்.”(கு.1303) காதலனும், காதலியும் தமக்குள் பிணங்கியிருக்கின்றனர். அப்பிணக்கத்தால் அவர்கள் இருவரும் இன்பத்திலிருந்து விலகியிருக்கின்றனர். துன்புற்றவரை மேலும் மேலும் துன்புறச் செய்வது தவறு; அது பெருங்கொடுமையாகும். பிணங்கியிருப்ப வரைத் தழுவிக் கொள்ளாவிட்டால், பிணக்கம் மேலும் மேலும் வளரும். அதனால் துன்பந்தான் உண்டாகும் இவ்வுண்மையை இருவர் உள்ளத்திலும் அப்பொழுது பிறக்கின்றது. கருத்திலே ஒன்றுபட்ட காதலர்களிடந்தான் இத்தகைய எண்ணம் பிறக்கும். இந்த உண்மையை அடக்கிக் கொண்டிருக்கின்றது இக்குறள். வருந்துகிறவர்களை மேலும் வருந்தும்படி செய்யக் கூடாது என்ற அறமும் இதில் அடங்கியிருக்கின்றது. நவில்தொறும் நூல் நயம்போலும், பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு சிறந்த நூல் கற்ககற்க இன்பம் தருவதுபோல், நற்குணம் உள்ளவர்களின் நட்பு பழகப் பழக இன்பந்தரும் (கு.783) இது பொருட்பாலில் நட்பு என்னும் அதிகாரத்தில் உள்ள குறள். குறளில் எல்லாப் பகுதிகளிலும், இலக்கியச் சுவையுள்ள பாடல்கள் நிறைந்திருக்கின்றன என்பதற்கு இது ஒன்றே போதும். இக்குறள் நட்பின் தன்மையை விளக்கியதோடு, ஒரு சிறந்த இலக்கியம் எப்படியிருக்கும் என்பதையும் எடுத்துரைத்தது. இங்கே எடுத்துக்காட்டிய இச்சில குறள்களைக் கொண்டே வள்ளுவர் செய்யுட்களின் இலக்கிய வளத்தைக் காணலாம். நீதிநூல்கள் எல்லாம் பெரும்பாலும் சட்ட நூல்கள் போன்றவை. நம் நாட்டிலே பண்டைக் காலத்தில் நடைமுறை யில் இருந்த மிருதிகள் எல்லாம் சட்டங்கள்தாம்; அவை களிலே இலக்கிய இன்பத்தைக் காணமுடியாது. வள்ளுவர் குறளும் மிருதி போன்றதுதான். ஆனால் எல்லா மக்களும், சாதி, மத, மொழி, நாடு என்ற பேதம் இன்றிப் பின்பற்றக்கூடிய அறங்களையே அவர் தொகுத்துக் கூறினார். அற நூலாயினும் அதைச் சிறந்த இலக்கியமாக - இலக்கியச் சுவை நிறைந்ததாக அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இதனால்தான் திருக்குறள் சொற்சுவை பொருட் சுவை நிறைந்த ஒப்பற்ற இலக்கியமாக அறிஞர்களால் போற்றப்படுகின்றது. சாமி.சிதம்பரனார் படைப்புகள் தொகுதி - 1 1. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற்பாகம் 1929 2. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் 1929 3. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் 1931 4. தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் 1938 தொகுதி - 2 1. தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1939 தொகுதி - 3 1. அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) 1944 2. அணைந்த விளக்கு (அரசியல் சமூக சீர்திருத்த நாடகம்) 1948 தொகுதி - 4 1. திருக்குறள் பொருள் விளக்கம் 1959 தொகுதி - 5 1. நாலடியார் பாட்டும் உரையும் 1959 2. நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) 1960 தொகுதி - 6 1. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் 1956 2. எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் 1957 தொகுதி - 7 1. கம்பன் கண்ட தமிழகம் 1955 2. பதிணென்கீழ்க் கணக்கும் தமிழர் வாழ்வும் 1957 தொகுதி - 8 1. சிலப்பதிகாரத் தமிழகம் 1958 2. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு 1960 தொகுதி - 9 1. இலக்கியச் சோலை (புறநானூறு) 1958 2. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1967 தொகுதி - 10 1. வள்ளுவர் காட்டிய வைதீகம் 1949 2. வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் 1956 தொகுதி - 11 1. பெண்மக்கள் பெருமை (அ) மாதர் சுதந்திரம் 1929 2. காரல் ஹென்றி மார்க் 1937 3. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் 1940 4. முன்சீப் வேதநாயகம் பிள்ளை 1955 தொகுதி - 12 1. சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல்கள் 1929 2. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு 1935 3. உமர்கய்யாம் 1946 4. சிந்தனைச் செய்யுள் 1956 5. சாமி சிதம்பரனார் புதுக்குறள் 1960 6. அறிவு (கவிதை) 1964 தொகுதி - 13 1. தேவாரத் திருமொழிகள் 1959 2. ஆழ்வார்கள் அருள்மொழி 1959 தொகுதி - 14 1. வடலூரார் வாய்மொழி 1959 2. சங்கப் புலவர் சன்மார்க்கம் 1960 3. பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை 1963 தொகுதி - 15 1. அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் 1960 2. மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் 1961 தொகுதி - 16 1. புதிய தமிழகம் 1952 2. வளரும் தமிழ் 1954 3. தொல்காப்பியத் தமிழர் 1956 தொகுதி - 17 1. பழந்தமிழர் அரசியல் 1959 2. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் 1960 3. தமிழர் வீரம் 1964 தொகுதி - 18 1. சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் 1960 2. இலக்கியம் என்றால் என்ன? 1, 2 1963 3. சிறுகதைச் சோலை (தொகுப்பு) 1964 தொகுதி - 19 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 20 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 21 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955 தொகுதி - 22 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955