சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 6 பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 6 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 344 = 352 படிகள் : 1000 விலை : உரு. 220/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வை யுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் முன்னுரை 3 1. நூலின் விளக்கம் 7 2. திருமுருகாற்றுப்படை 17 3. பொருநர் ஆற்றுப்படை 34 4. சிறுபாணாற்றுப்படை 46 5. பெரும்பாணாற்றுப்படை 60 6. முல்லைப்பாட்டு 73 7. மதுரைக்காஞ்சி 82 8. நெடுநல்வாடை 101 9. குறிஞ்சிப்பாட்டு 111 10. பட்டினப்பாலை 123 11. மலைபடுகடாம் 137 தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு 153 எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் முன்னுரை 161 1. எட்டுத்தொகை நூல்கள் 165 2. ஐங்குறு நூறு 179 3. குறுந்தொகை 197 4. நற்றிணை 211 5. அகநானூறு 225 6. கலித்தொகை 247 7. பரிபாடல் 274 8. பதிற்றுப்பத்து 297 9. புறநானூறு 317 பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் (1956) முன்னுரை சில நூல்களைச் சங்க நூல்கள் என்று சொல்லுகின்றோம். சங்க நூல்கள் யாவை? பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை சங்க இலக்கியங்கள். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய பதினெட்டு நூல்களை யும் மேற்கணக்கு நூல்கள் என்பர். இப்பதினெட்டும் சங்க இலக் கியங்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். கீழ்க்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்கள் அன்று; சங்க காலத் திற்குப் பிற்பட்டவை என்போர் பலர். பண்டைக் காலத்திலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன; அவை ஒன்றன்பின் ஒன்றாக இருந்து மறைந்தன. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறினர். முச்சங்க வரலாறு இறையனார் அகப்பொருள் உரையிலே காணப்படுகின்றது. அகத்தியனார் முதல் 549 புலவர்கள் முதற்சங்கத்திலே யிருந்தனர். இவர்களை உள்ளிட்ட 4449 புலவர்கள் அக்காலத் தில் செய்யுள் இயற்றினர். அவர்கள் பாடியன பரிபாடல், முதுநாரை, முகுகுருகு, களரியாவிரை போன்றவை. இச்சங்கம் 4440 ஆண்டுகள் இருந்தது. காய்சினவழுதி முதல் 89 பாண்டியர் கள் இச்சங்கத்தை ஆதரித்து வந்தனர். இச்சங்கம் இருந்த இடம் கடல் கொண்ட மதுரை. இச்சங்கத்தார்க்கு இலக்கணம் அகத் தியம். இடைச்சங்கப் புலவர்கள் அகத்தியனார், தொல்காப்பி யனார் முதலிய 59பேர். அக்காலத்தில் 3700 புலவர்கள் பாடினர். கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் முதலியவை அவர்கள் பாடியவை. இலக்கணம் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவை. இச் சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை 59 பாண்டியர்கள். இது இருந்த இடம் கபாடபுரம்; இதுவும் கடல்கொண்ட பாண்டிய நாட்டில் இருந்தது. கடைச்சங்கத்திலே சிறு மேதாவியார் முதலிய 49 புலவர்கள் இருந்தனர். கவிபாடியவர் 449 பேர். நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புற நானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து வரி, சிற்றிசை, பேரிசை முதலியவை இவர்களால் பாடப் பட்டவை. இச்சங்கத்தார்க்கு இலக்கணம் அகத்தியமும், தொல் காப்பியமும். இச்சங்கம், 1850 ஆண்டுகள் நடைபெற்றது. முடத் திருமாறன் முதல் 49 பாண்டியர்கள் இச்சங்கத்தின் ஆதரவாளர் கள். இச்சங்கம் இருந்தது இன்றுள்ள மதுரை மாநகரம். இதுவே இறையனார் அகப்பொருள் உரையிலே காணப் படும் முச்சங்க வரலாற்றுச் சுருக்கம். இதைக் கட்டுக்கதை என் போரும் உண்டு; முச்சங்கங்கள் இருந்ததில்லை என்போரும் உண்டு. இது கட்டுக்கதையோ வரலாறோ எப்படியாவது இருக் கட்டும். முச்சங்கங்கள் பற்றிய கதை ஆயிரக்கணக்கான ஆண்டு களாகத் தமிழகத்தில் வழங்கி வருகின்றது. சங்ககால நூல்கள் எல்லாவற்றையும் முச்சங்க வரலாறு குறிப்பிடவில்லை. சில நூல்களின் பெயரைச் சொல்லி இத் தொடக்கத்தன என்றே கூறப்பட்டிருக்கின்றது. முச்சங்க வரலாற்றில் சொல்லப்படாத பல நூல்களும் சங்க காலத்தில் வழங்கின என்று தெரிகின்றது. பத்துப்பாட்டின் பெயரும் முச்சங்க வரலாற்றில் காணப்படவில்லை. ஆதலால் இது சங்கநூல் அன்று எனத் தீர்மானித்துவிட முடியாது. நூலின் அமைப்பு, அதன் செய்யுள் நடை, நூலாசிரியர் காலம், நூலில் காணும் செய்திகள் இவை களைக் கொண்டே ஒரு நூலின் காலத்தைக் கணக்கிட வேண்டும். இவ்வாறு கணக்கிட்டே பத்துப்பாட்டைச் சங்க கால இலக்கியம் என்று தீர்மானித் திருக்கின்றனர். பத்துப்பாட்டைப் பாடிய புலவர்கள் கடைச்சங்க காலப் புலவர்கள். அக்காலத்திலே ஆசிரியப்பாவில்தான் பெரும் பாலும் நூல்கள் செய்யப்பட்டன. அதில் கூறப்படும் செய்தி களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்துச் செய்திகள். ஆகையால் பத்துப்பாட்டு கடைச்சங்ககால நூல் என்பதிலே ஐயம் இல்லை. கடைச்சங்க காலத்தை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்பர். பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூல்களும் சங்க நூல்கள் என்பதில் ஆருக்கும் ஐயம் இல்லை. எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் கடைச்சங்கத்தைப் பற்றிய குறிப்பிலே காணப்படு கின்றன. பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும் என்னும் இந்நூல் பத்துப்பாட்டைப் பற்றிக் கூறுவதாகும். பத்துப்பாட்டுக் காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலைமை, தமிழர்களின் வாழ்க்கை நிலைமை, அரசியல் நிலைமை, சமுதாய நிலைமை, பழக்க - வழக்கங்கள், சிறந்த பண்புகள், ஆகியவைகளை எடுத்துக் காட்டு வதே இந்நூலின் நோக்கம். பண்டைத் தமிழர்களைப் பற்றி இன்று யார் யாரோ என்ன என்னவோ பேசியும் எழுதியும் வருகின்றனர். தமிழர் நாகரிகத்தைப் பற்றிக் கூட்டியும் குறைத்தும் கூறுகின்றனர் சிலர். இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுவதில் உள்ள உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பழந்தமிழ் நூல்களைப் பார்த்தாக வேண்டும். தமிழர்களின் உண்மைப் பண்பாட்டை உணர இவைகளைத் தவிர வேறு சரியான சான்றுகள் இல்லை. நமது பழைய நாகரிகம் உயர்ந்ததாயினும் சரி, தாழ்ந்த தாயினும் சரி, அதனை அப்படியே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது பழைய வரலாறு நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்காது. முன்னேற்றம் என்பது தடுக்க முடியாதது; காலப்போக்கை ஒட்டியது. நமது பழைய நாகரிகத்தை நாம் அறிந்துகொள்வதனால் நமது முன்னேற்றம் இன்னும் விரைந்து வளரும். ஆதலால் இந்நூலிலே பத்துப்பாட்டுக் காலத்துச் செய்திகள் பல அப்படியே எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்களின் பண்பாட்டை அறிய இந்நூல் உதவுவது உறுதி. இந்த நம்பிக்கை யுடனேயே இந்நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் இந்நூலை வரவேற்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடுதான் இந்நூல் வெளிவருகின்றது. இதில் உள்ள குற்றங் குறைகளை அறிஞர்கள் எடுத்துக் காட்டுவார்களானால் அவை நன்றி அறிவோடு திருத்திக் கொள்ளப்பெறும். சவுராஷ்டிர நகர் சாமி. சிதம்பரன் சென்னை- 24 1 நூலின் விளக்கம் பத்துப்பாட்டின் பெருமை பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத் தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஒரு ஒளிவிளக்கு. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்ககால இலக்கியங்கள். இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற. பொருந்தாத உவமைகளைப் பார்க்கமுடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பது போல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம். பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவிய மன்று; கண்ணாற் கண்ட காட்சிகளை அப்படியே அழகாக எழுதியிருக்கும் சொல் ஓவியமாகும். இந்நூலின் அருமை - பெருமைகளை அறிந்து சுவைத்தவர் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. அவர் இந்நூலின் பெருமையைத் தான் அறிந்தவாறே எடுத்துக் காட்டியிருக்கின்றார். பத்துப்பாட்டு போன்ற நூல்களிலே மனம் வைத்தவர்கள், எப்படி வேண்டுமானாலும் பொருள் பண் ணக்கூடிய இலக்கணமற்ற வெறும் கற்பனை நூல்களிலே கருத்தையிழப்பார்களா? என்று கேட்கிறார். இக்கேள்வியின் வழியாகவே பழந்தமிழ்ப் பத்துப்பாட்டின் பெருமையை நமக்கு எடுத்துக்காட்டிவிட்டார். பத்துப்பாட்டாதி மனம் பற்றினால் பற்றுவரோ எத்துணையும் பொருட்கு இசையும் இலக்கணமில் கற்பனையே. இதுவே பேராசிரியர் சுந்தரம்பிள்ளை வாசகம். பத்துப்பாட்டு இத்தகைய சிறப்புடன் பாராட்டப்படுவதற் குக் காரணம் உண்டு. அப்பாடல்களை எழுதிய பழந்தமிழ்ப் புலவர்கள் பிற்காலத்துப் புலவர்களைப் போன்ற கிணற்றுத் தவளைகள் அல்லர். அவர்கள் வீட்டிற்குள்ளோ, வெளித் திண்ணையிலோ உட்கார்ந்துகொண்டு சிந்தனை செய்து மட்டும் அச்செய்யுட்களை எழுதவில்லை. அவர்கள் நாடெங்கும் நடந்து திரிந்தவர்கள்; காடுகளிலும் மலைகளிலும் கால் கடுக்க நடந்தவர்கள்; சிற்றூர்களையும், பேரூர்களையும், ஆறுகளையும், கடலையும் பார்த்துப் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டவர்கள். ஆதலால் அவர்கள் பார்த்த இயற்கைப் பொருள்களைப்பற்றி- அவர்கள் பழகிய மக்களைப்பற்றி- அவர்கள் தாமே அனுபவித்த இன்ப - துன்பங் களைப்பற்றி அப்படியே எழுதியிருக்கின்றனர். ஆதலால்தான் பத்துப்பாட்டு, பொருளறிந்து படிப்போர் மனதைக் கவர்கின்றது. பத்துப்பாட்டின் நடை கொஞ்சம் கடினமானதுதான்; கற்றறிந்த பண்டிதர்களுக்குக்கூட பத்துப்பாட்டென்றால் சிறிது பயந்தான். தமிழ் கற்க விரும்பிவரும் ஒருவரைத் தமிழின் பக்கமே அணுகுவதற்கு அஞ்சி ஓடும்படி பத்துப்பாட்டைக் கொண்டு விரட்டி விடலாம், `மலைபடுகடாம் படியுங்கள். நல்ல தமிழ்ப் பயிற்சி பெறலாம் என்று சொன்னால்போதும்; தமிழ் கற்க வந் தவர் வேர்த்து விதிர்த்துப்போய் விடுவார். அப்பப்பா நமக்கு வேண்டாம் இந்தத் தமிழ் என்று ஓட்டம் பிடித்துவிடுவார். பத்துப்பாட்டிலே பல சொற்கள், பல சொற்றொடர்கள் மலைபடுகடாம் என்பது போலத்தான் கடபுடாவென்று அமைந் திருக்கின்றன. இந்நூல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அக்காலத்தே தமிழ் கற்றோர் பலராலும் படித்துச் சுவைக்கக் கூடிய நிலையில் இருந்திருக்கலாம். இன்று அப்படி யில்லை. அந்நூலின் அருமை - பெருமைகளைப் புலவர்கள் எடுத்துக்காட்டினால்தான் மற்றவர்கள் சுவைத்து மகிழ முடியும். வழக்கிழந்த பல சொற்களைப் பத்துப்பாட்டிலே காணலாம். பண்டைத் தமிழ்ப் புலவர்களின் திறமையைக் காணப் பத்துப்பாட்டு ஒன்றே போதும். இயற்கைப் பொருள்களைப் பற்றி, இயற்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி எழுதலாம் என்ப தற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தை நமக்கு விளக்கிக் காட்டும் ஒரு சொற் சித்திரம். அக்காலத்து மக்களின் நாகரிகத்தை நமக்குக் காட்டு வதற்காக நம்மை அழைத்துச் செல்லும் ஒரு நல்ல பூஞ்சோலை. பத்துப்பாட்டால் விளங்குவன இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்தில் உணவுப் பஞ்சம் இல்லை. மலைகளிலே, காடுகளிலே காயும் கனியும் கிழங்கும் மதுவும் ஏராளமாகக் கிடைத்துவந்தன. மலைச் சாரல்களிலும் ஆற்றோரங்களிலும் தினை, வரகு, நெல் முதலிய உணவுப் பண்டங்கள் அளவுக்குமேல் விளைந்தன. கடலோரங் களிலே உப்பும் மீனும் கணக்கின்றிக் கிடந்தன. மக்கள் தானியங் களையும், காய்கறிகளையும், ஆடு, பன்றி, மான், உடும்பு, கோழி, மீன் முதலியவற்றையும் மகிழ்ச்சியுடன் சமைத்துச் சாப்பிட்ட னர். பால், தயிர், மது முதலியவைகளையும் அருந்தி மகிழ்ச்சி யடைந்தனர். விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள். ஏழை மக்களும் தம்மிடம் வந்த விருந்தினர்க்குத் தாம் உண்ணும் உண வைத் தந்து உபசரிப்பார்கள். பருத்தி விளைவுக்குப் பஞ்சம் இல்லை. கொட்டைக் கரை போட்ட பட்டாடைகளையும், பருத்தியாடைகளையும் நெய் தனர். மென்மையும் வழவழப்பும் உள்ள ஆடைகள் நெய்யப் பட்டன. வானை முட்டும் பெரிய மாளிகைகள் இருந்தன; கோட்டை கொத்தளங்கள் இருந்தன; நடுத்தர மக்கள் வாழ்வதற்கான ஒரு கட்டு, இரண்டு கட்டு வீடுகள் இருந்தன; வறியோர் வாழும் சிறு குடிசைகளும் இருந்தன. சங்கீதம், நடனம் முதலிய கலைகள் வளர்ந்திருந்தன; சங் கீதக் கருவிகள் எல்லாம் தமிழ்நாட்டிலேயே செய்யப்பட்டன. மக்கள் ஏறிச் செல்வதற்கான ஊர்திகள் பல இருந்தன. பண்டங்களை ஏற்றிச் செல்வதற்கான வண்டிகள் இருந்தன. கடலிலே பிரயாணம் செய்யக் கப்பல்கள் இருந்தன; தோணிகள் இருந்தன. சிற்பத்தொழில் சிறந்திருந்தது; ஓவியத்தொழில் உயர்ந் திருந்தது. பொன், வெள்ளி, மாணிக்கம், முத்து போன்ற செல்வங்கள் இருந்தன; இவைகளால் அணிகலன்கள் செய்து அழகுக்காக அணிந்துகொண்டனர். பொன், வெள்ளிகளால் பாத்திரங்களும் செய்தார்கள். இரும்பு, செம்பு, கலவை உலோகமான முறி முதலியவை களாலும் கருவிகள் செய்தனர். மரத்தினால் நல்ல வேலைப்பாட மைந்த பண்டங்கள் செய்தனர். உள்நாட்டு வாணிகமும், வெளிநாட்டு வாணிகமும் உயர்ந் திருந்தன. இந்நாட்டு பண்டங்கள் பல அந்நிய நாடுகளுக்குக் கடல் வழியாகச் சென்றன. அந்நிய நாட்டுப் பண்டங்களும் இந்நாட்டுக்கு வந்து இறக்குமதியாயின. பிறமொழி பேசுவோர், பிற நாட்டினர், இந்நாட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தனர். பிற நாட்டினரோ டும், பிறமொழியினரோடும் தமிழர்கள் தாராளமாகப் பழகினர். அவர்களும் தமிழர்களுடன் ஒன்றுபட்டுக் கலந்து பழகினார்கள். பிறநாட்டினர் மீது வெறுப்போ, பிறமொழியின் மீது வெறுப் போ அக்காலத்தில் இல்லை. தமிழகத்திலே நல்ல அரசுகள் நிலைபெற்றிருந்தன. அந்த அரசுகளின் தலைவர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்கள். ஆயி னும் அவர்கள் குடிகளின் நன்மையையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்கள் எதிர்த்தோர்க்கு எமன் களாகவும், அண்டினோர்க்கு அருமைத் தோழர்களாகவும் விளங்கினர். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் புகலிடமாக இருந்தனர்; கலைகளையும், கவிதைகளையும் வளர்ப்பதற்குத் துணை செய்தனர். அக்காலத்திலே தமிழ்நாட்டிலே பல கோயில்கள் இருந்தன. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர். சிவபெருமான், திருமால், பலதேவன், முருகன், காளி முதலிய தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன. இன்னும் பல சில்லறைத் தெய்வங்களும் தமிழகத்தில் வாழ்ந்தன. ஆனால் விநாயகர் மட்டும் காணப்படவில்லை. அக்காலத்திலே விக்கிரக வணக்கம் உண்டு. இறந்த வீரர் களுக்குக் கல்நட்டு அவர்களைத் தெய்வம் போல் வணங்கி வந்தனர். தமிழகத்திலே சமண மதம், பவுத்தமதம், வேதமதம் ஆகி யவை பரவியிருந்தன. வேத முனிவர்கள், வேத அந்தணர்கள், சமண சந்நியாசிகள், பவுத்தத் துறவிகள் தங்கள் தங்கள் கொள் கைகளைப் பற்றி மக்களுக்கு விரிவுரையாற்றிவந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளிகள் என்று பெயர். இவர் களுக்குள் எத்தகைய சண்டை சச்சரவுகளும் இல்லை. அக்காலத் தமிழகத்தில் மதங்கள் பல இருந்தன. ஆனால் மதச் சண்டையோ மதவெறுப்போ மக்களிடம் இல்லை. மறையோதும் அந்தணர்கள் தமிழ்நாட்டிலே மகிழ்ந்து வாழ்ந்தனர்; தெய்வங்களைப் பற்றிய புராண வரலாறுகள் தமிழர்க்குத் தெரிந்திருந்தன. வேள்விகள் நடைபெற்றன; தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் கொண்டாடினர். திருவிழாக் காலங்களிலே தெளிந்த அறிஞர்கள் பலர் கூடுவார்கள். அரும் பொருள்களைப் பற்றி அவர்கள் விவாதிப்பார்கள். தமிழர்களிடையிலே பல வகுப்புப் பிரிவுகள் இருந்தன. அப்பிரிவுகள் அவர்கள் செய்யும் தொழில்பற்றியும், வாழும் இடம்பற்றியும் தோன்றியவை. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், வலைஞர், எயினர், கானவர், ஆயர், மறவர், உழவர் போன்ற பிரிவுகள் அவை. இசை, நாடகம் போன்ற கலைகளையே தொழிலாகக் கொண்ட பொருநர், பாணர், கூத்தர் முதலியவர்கள் இருந்தனர்; இவர்கள் செல்வர்களிடம் சென்று ஆடிப்பாடி அவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்று உயிர்வாழ்ந்தனர். இவர்கள் கலைஞர்களாயிருந்தும் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகவே வாழ்ந்தனர். இவை போன்ற பிரிவுகள் இருந்தும் அவர்களிடம் உயர்வு தாழ்வோ, வகுப்புச் சண்டைகளோ தலை காட்ட வில்லை. அனைவரும் ஒன்றுபட்டு அன்புடன் வாழ்ந்தனர். சின்னஞ்சிறிய தமிழ் நாட்டில் முடிமன்னர்கள் பலர் அர சாண்டனர்; குறுநில வேந்தர்கள் பலர் கோலோச்சினர். அடிக் கடி இவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டேயி ருந்தன. நாடுபிடிக்கும் பேராசையால் அவர்களுக்குள் சண்டை நடைபெறவில்லை. வீரத்தையும் புகழையும் விரும்பியே சண்டை போட்டனர். அடங்காதாரை அடக்குவதற்காகச் சமர்புரிந்தனர். குடிமக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். அப்பொழுது நாட்டை ஆண்டவர்கள் முடிமன்னர்களும் நிலத்தலைவர்களுந்தான். குறுநில மன்னர்கள், வள்ளல்கள் என்று பெயர் பெற்றவர்கள் அனைவரும் பெரு நிலத் தலைவர்களேயாவர். செல்வம் செழித்திருந்த அக்காலத்திலும் இந்நாட்டிலே ஏழைகள் பலர் இருந்தனர். உணவு, உடை, வாழ்விடம் இல் லாமல் வருந்தித் திரிந்த வறிஞர்கள் பலர் இருந்தனர். உயர்ந்த மாட மாளிகைகளிலே உல்லாசமாகப் பொழுதுபோக்கும் நிலப் பிரபுக்களும் இருந்தனர். கற்றவர்கள் சிலர்; கல்லாதவர்கள் பலர். ஆனால் அனைவரிடமும் மனிதத் தன்மை குடிகொண்டிருந்தது. அன்பு, நல்லொழுக்கம், மானம், மரியாதை, மற்றவர்க்கு உதவி செய்தல், நம்பிக்கைக்கு உரியராதல் ஆகியவை மனிதத் தன்மைக்கு அடையாளங்கள். இத்தகைய பழந்தமிழ் நாட்டைப் பத்துப் பாட்டிலே காணலாம். பத்துப்பாட்டு இவ்வளவு சிறப்புடைய பத்துப்பாட்டு என்பது சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று. இது ஒரு தொகை நூல். அதாவது பத்துப்பாடல்களை ஒன்றாகச் சேர்த்துத் தொகுக்கப்பட்ட தொரு நூல். திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன அவை. முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. என்ற வெண்பாவினால் இதைக் காணலாம். இப்பாட்டில் உள்ள வரிசைப்படியே பத்துப் பாடல்களும் அமைக்கப்பட்டிருக் கின்றன. இவற்றுள் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள் என்னும் பெயரில் அமைந்திருக்கின்றன. அவை திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பவை. திருமுருகாற்றுப் படைக்குப் புலவர் ஆற்றுப்படை என்பது மற்றொரு பெயர். மலைபடுகடாம் என்பதற்குக் கூத்தர் ஆற்றுப்படை என்பது மற்றொரு பெயர். பத்துப்பாட்டைப் பாடிய புலவர்கள் எண்மர். அவர்கள் நக்கீரனார், முடத்தாமக்கண்ணியார், நத்தத்தனார், உருத்திரங் கண்ணனார், நப்பூதனார், மாங்குடி மருதனார், கபிலர், கௌசி கனார் என்பவர்கள். இவர்களில் நக்கீரனாரும், உருத்திரங் கண்ணனாரும் இரண்டிரண்டு பாடல்களை இயற்றியிருக்கின் றனர். மற்றவர்கள் பாடியது ஒவ்வொன்றே. பாடப்பட்டவர்கள் அறுவர். அவர்கள் முருகன், சோழன் கரிகாற் பெருவளத்தான், பாண்டியன் நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன், ஒய்மானாட்டு நல்லியக் கோடன், நன்னன் சேய் நன்னன் என்பவர்கள். முருகனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது திருமுருகாற்றுப் படை. கரிகாற்பெருவளத்தானைப் பற்றிய பாடல்கள் இரண்டு; அவை, பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டுக்கள் இரண்டு; அவை மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை என்பவை. இளந்திரையனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது பெரும்பாண் ஆற்றுப்படை. நல்லியக்கோடனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது சிறுபாண் ஆற்றுப்படை. நன்னனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது மலைபடு கடாம். முல்லைத்திணையைப் பற்றியும், குறிஞ்சித் திணையைப் பற்றியும் பாடியவை ஒவ்வொன்று; அவை முல்லைப்பாட்டு; குறிஞ்சிப்பாட்டு. ஆகவே பத்துப்பாட்டைப் பாடிய புலவர்கள் எண்மர்; பாடப்பட்ட தலைவர்கள் அறுவர். இவர்களுடைய வரலாறு களை அந்தந்தப் பாட்டின் ஆராய்ச்சிகளிலே காணலாம். ஒவ்வொன்றும் ஒரே பாட்டு பத்துப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு தனிநூல். ஒரேபாட்டில் ஒருநூல். தமிழ்ச் செய்யுளின் பெருமையை அறியாதார்க்கு அது வியப்பைத் தரலாம். ஒரே பாடலில் ஒரு நூலா என்று கேட்கத் தோன்றலாம். ஒரே பாட்டால் ஒரு நூலை இயற்றுவது தமிழுக்குரிய தனிச்சிறப்பில் ஒன்று. ஒரு பாடலை ஆயிரம் அடிகள் வரையிலும் ஆக்கலாம் என்பது தமிழ் இலக்கணம். இவ்வாறு எழுதப்படும் செய்யுளுக்கு ஆசிரியப்பா அல்லது அகவற்பா என்று பெயர். ஆசிரியப்பாவை மூன்று அடிகளுக்குக் குறையாமல் ஆயிரம் அடிகளுக்கு மேற்படாமல் எத்தனை அடிகளில் வேண்டுமானா லும் எழுதலாம். ஆசிரியப் பாட்டின் அளவிற்கெல்லை ஆயிரம் ஆகும்; இழிவு மூன்றடியே (தொல். செய் 150) வஞ்சிப்பா என்னும் பாடலையும் இந்த அளவில் இயற்றலாம் என்பது உரையாசிரி யர்கள் கொள்கை. இவ்விலக்கணம் பற்றியே பத்துப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பாட்டும் எழுதப்பட்டிருக்கின்றன. திருமுருகாற்றுப் படையின் அடிகள்- 317, பொருநர் ஆற்றுப்படையின் அடிகள்- 248, சிறுபாண் ஆற்றுப்படையின் அடிகள் - 269, பெரும்பாண் ஆற்றுப்படையின் அடிகள்- 500, முல்லைப்பாட்டின் அடிகள்- 103, மதுரைக் காஞ்சியின் அடிகள்- 782, குறிஞ்சிப்பாட்டின் அடிகள்- 261, பட்டினப் பாலையின் அடிகள்- 301, மலைபடுகடாத் தின் அடிகள்- 583. பத்துப்பாட்டுள் உருவாற் சிறியது முல்லைப்பாட்டு; பெரியது மதுரைக் காஞ்சி; நடுத்தரமானவை பெரும்பாண் ஆற்றுப்படையும், மலைபடுகடாமும். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் உரைநடையிலே நூல்கள் எழுதவில்லை; செய்யுளிலேயே நூல்களைச் செய்தனர். இதற்குக் காரணம் உண்டு. உரைநடையில் எழுதினால் உருவில் பெரிதாகி விடும். செய்யுளில் சுருக்கமாக எழுதலாம். இக்காலத்தில் ஆயிரக் கணக்கான நூல்களைச் சில மணி நேரத்தில் அச்சிட்டுக் குவித்து விடலாம். இத்தகைய வசதி பண்டைக்காலத்தில் இல்லை. எல்லாவற்றையும் எழுத்தாணியால் பனையோலையிலே எழுதி யாகவேண்டும். ஆகையால்தான் குறைந்த சொற்களிலே நிறைந்த செய்திகளை அமைத்தெழுதும் முறையை அறிந்து எழுதினர். இதற்காகவே ஆசிரியப்பாவைப் பயன்படுத்தி வந்தனர். பண்டைத் தமிழ் நூல்கள் பாடல் உருவில் தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. உரைநடையை அப்படியே உள் ளத்தில் வைத்துக்கொள்ள முடியாது. பாடல்களை அப்படியே மனத்துள் பாடமாக வைத்துக்கொள்ளலாம். இந்நோக்கத் தோடும் பழந்தமிழ்ப் புலவர்கள் பாடல்களிலேயே நூல்களை எழுதினார்கள். தமிழ்ப் பாடல்களிலே பலவகையுண்டு. அவற்றுள் முதன் மையானவை ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்பவை. இவைகளை ஒட்டிய இனப்பாக்கள் பல. இந்த நான்கு முதற்பாக்களில் தலைமையானது ஆசிரியப்பா. ஒரு புலவன் தன் உள்ளத்திலே எண்ணியதைக் குறுக்காமல் சிதைக்காமல் அப்படியே உரைநடைபோல் எடுத்துக்காட்டுவதற்கு ஏற்ற பாடல் ஆசிரியப்பா ஒன்றுதான்; இதற்கு அடுத்தது வஞ்சிப்பா. ஆசிரியம் வஞ்சி வெண்பாக்கலியென நாலியற்று என்ப பாவகை விரியே (தொல். செய். 101) இவ்வாறு பாவகையைப் பற்றிக் கூறும் சூத்திரத்திலே ஆசிரியப்பாவை முதலில் வைத்தார் தொல்காப்பியர். ஆசிரியப்பாவின் இச்சிறப்பை அறியாத பிற்காலத்து ஆசிரியர்கள், இம் முறையை மாற்றினர்; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று கூறினர். நூலெழுதுவதற்கு ஏற்றதாக ஆசிரியப்பா அமைந்திருப்ப தனாலேயே சங்ககால நூல்கள் பலவும் ஆசிரியப்பாவிலே அமைந்திருக்கின்றன. சங்ககாலத்திற்குப் பின்னால் எழுந்த சிலப் பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற நூல்களும் ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டன. பத்துப்பாட்டு ஆசிரியர்கள் தாங்கள் எண்ணிய செய்தி களை, பார்த்த நிகழ்ச்சிகளை கேட்போர்க்கு விளங்கும்படி தெளிவாகச் சொல்லுவதற்காகவே ஆசிரியப்பாவிலே தங்கள் பாடல்களைப் பாடினர். உரையாசிரியர் பத்துப்பாட்டுக்கு உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க் கினியர் உரையெழுதியிருக்கிறார். தொல்காப்பியத்துக்கும் சங்க நூல்கள் பலவற்றுக்கும் இவர் உரையெழுதியுள்ளார். இவரு டைய உரை கிடைக்காவிட்டால் நாம் பத்துப்பாட்டின் பொருளைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் இவர் நூலாசிரியர் கருத்தைஒட்டி உரை கூறமாட்டார். தன் கருத்தைப் பாட்டிலே புகுத்தி உரையெழுதுவார். பாட்டுக்கு நேராகப் பொருள் சொல்லும் வழக்கமும் இவரிடம் இல்லை. பதங்களை மாற்றியமைப்பார். ஐந்தாவது அடிக்கும் ஐம்பதாவது அடிக்கும் எண்பதாவது அடிக்கும் முடிச்சு போடுவார். ஒரு பாட்டில் உள்ள சொற்களையும், அடிகளையும் அப்படியே கலைத்துக் குலுக்கிக் கொட்டிவிடுவார். பிறகு தன் விருப்பப்படி சொற்றொடர்களையும், சொற்களையும் பொறுக்கி அமைத்துப் பொருள் கூறுவார். இது இவருடைய வழக்கம். பத்துப்பாட்டுக் கும் சீவகசிந்தாமணிக்கும் இந்தப் பாணியில்தான் உரையெழுதி யிருக்கின்றார். நூலாசிரியரின் கருத்தைக் காட்டிலும் இன்னும் சிறந்த கருத்தைக் காட்டவேண்டும் என்பதே இவருடைய நோக்கம். இவருடைய உரை மிகச் சிறந்ததென்பதில் ஐயமில்லை. இவ்வுரையின்றேல் பல சொற்களுக்குப் பொருள் தெரிந்து கொள்ளமுடியாது; பண்டைப் பழக்க-வழக்கங்கள் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடியாது. இன்று பத்துப்பாட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளப் பயன்படுவது நச்சினார்க்கினியர் உரை ஒன்றே. பத்துப்பாட்டின் ஒவ்வொரு பாட்டுக்கும் பாட்டைச் சிதைக்காமல், அடிகளை மாற்றாமல் அப்படியே ஆற்றோட்ட மாக வைத்தே பொருள் சொல்லமுடியும். இவ்வாறு மறை மலையடிகள் பட்டினப்பாலைக்கும், முல்லைப்பாட்டிற்கும் உரையெழுதியிருக்கின்றார்; அவைகள் சிறந்த ஆராய்ச்சியுரை. அதே முறையில் மற்ற பாடல்களுக்கும் அறிஞர்கள் உரையெழுது வார்களானால் பத்துப்பாட்டின் பெருமை இன்னும் பலமடங்கு உயரும். இந்நூலின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், நச்சினார்க் கினியர் உரைமுடிந்தவுடன் பலவும் ஒன்றும் ஆகிய வெண்பாக் கள் காணப்படுகின்றன. அவைகளுக்கு உரையில்லை. அந்த வெண்பாக்கள் அந்தந்தப் பாடலின் கருத்தைத் தழுவியே எழுதப் பட்டிருக்கின்றன. அவை பத்துப்பாட்டின் ஆசிரியர்களால் பாடப்பட்டவைகளாக இருந்தால் அவைகளுக்கும் நச்சினார்க் கினியர் உரையெழுதாமல் விட்டிருக்கமாட்டார். திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப் படை முடிவில் 3, சிறுபாணாற்றுப் படை முடிவில் 21, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக்காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப் படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1. ஆக 25 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவைகளை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச் சேர்த்திருக்கவேண்டும். இவ்வாராய்ச்சி பத்துப்பாட்டின் ஒவ்வொரு தனித்தனிப் பாட்டைப் பற்றி யும் ஆராய்ந்து தனித்தனியாக எழுதப்பட்டதே இவ்வாராய்ச்சி. இலக்கியக் கண்ணோட்டத்துடன் பழந்தமிழ்ப் பாட்டின் சொற் சுவை பொருட்சுவைகளைப் பாராட்டிப் பேசும்முறையில் எழுதப்படவில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் வரையப் பட்டது. பழைய தமிழகத்தில் நிலவியிருந்த நாகரிகம் யாது? அக்காலத்தில் அரசு, வாணிகம், வளம் இவைகள் எப்படி யிருந்தன? பழந்தமிழ் மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் யாவை? இவைகளைத் தெரிந்துகொள்ளும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. இத்தகைய ஆராய்ச்சி இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்த தமிழ் நாட்டைப்பற்றித் தெரிந்து கொள்ளு வதற்கு ஓரளவாவது துணைசெய்யக்கூடும் என்பது உறுதி. 2 திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை பத்துப்பாட்டிலே முதற்பாட்டு திருமுருகாற்றுப்படை. ஆசிரியப்பாவால் ஆகியது. 317 அடிகளைக்கொண்டது. இதற்குப் புலவர் ஆற்றுப்படையென்ற மற்றொரு பெயரும் உண்டு. திருமுருகாற்றுப்படை. திரு- முருகு- ஆற்றுப்படை. திரு- அழகிய; முருகு- முருகனிடம்; ஆற்றுப்படை- வழிப்படுத்துவது. முருகனிடம் செல்வதற்கு வழிசொல்லிப் போகவிடுவது என்பதே இதன் முடிந்த பொருள். ஆற்றுப்படை என்பது சங்ககாலப் புலவர்கள் செய்த நூல் வகைகளில் ஒன்று. பரிசுபெற்றுவந்த ஒருவன், பரிசுபெற நாடிச்செல்லும் மற்றொருவனுக்கு வழிசொல்லி அனுப்புவது. இதுவே ஆற்றுப்படை. முன்னுள்ள நூல் விளக்கத்திலும் இது கூறப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் உள்ள ஏனைய ஆற்றுப்படைகளை விட இத்திருமுருகாற்றுப்படை சிறிது வேறுபாடுள்ளது. ஏனைய ஆற்றுப்படைகள் மக்கள்மேற் பாடப்பட்டவை; இது தெய்வத் தின்மேல் பாடப்பட்டது. அவைகள் இம்மையின்பத்திற்கான பொருள் வேண்டிப் புலவர்களால் பாடப்பட்டவை. இது மறுமை இன்பத்திற்கான அருள் வேண்டி அறிஞரால் பாடப் பட்டது. முருகனை வணங்கி அவன் அருள்பெற்று வந்தான் ஒரு புலவன். அவன் வரும் வழியிலே முருகன் அருளைத் தேடிச் செல் லும் மற்றொருவனைக் கண்டான். அவனுக்கு முருகன் இருக்கும் இடங்கள், அவ்விடங்களுக்குச் செல்லும் வழிகள் இவைகளை எடுத்துக் கூறினான். அவனை முருகனிடம் வழிப்படுத்தினான். இவ்வாறு ஒருவனை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதே இத்திரு முருகாற்றுப்படை. ஆசிரியர் இதன் ஆசிரியர் நக்கீரர். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது இவருடைய முழுப்பெயர். பத்துப்பாட்டுள் இவர் பாடியவை இரண்டு பாடல்கள். ஒன்று திருமுருகாற்றுப் படை; மற்றொன்று நெடுநல்வாடை. நக்கீரரைப் பற்றி வழங்கும் வரலாறுகள் பல. கடைச்சங்கப் புலவர்களிலே இவர் தலைசிறந்தவர்; கவிஞர்களின் தலைவரா கப் புகழ்பெற்றிருந்தார். `நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று கூறிச் சிவபெருமானை எதிர்த்து வழக்காடினார் இவ்வாறு ஒரு வரலாறு இவரைப்பற்றி வழங்குகின்றது. தமிழ்மகன் உண்மையை உரைக்க ஒருபொழுதும் பின் வாங்கமாட்டான். உண்மையை உரைப்பதன் மூலம் எத்தகைய இன்னல் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் துணிந்து நிற்பான் இவ்வுண்மையை விளக்கவே இவ்வரலாறு வழங்கப்படுகின்றது. நக்கீரர் மதுரையிலே வாழ்ந்தவர்; தமிழ்நாட்டு அந்தணர். சங்கறுப்பதெங்கள் குலம் என்று இவர் பாடியதாக வழங்கும் ஒரு பாடலால் இவர் சங்கறுக்கும் பார்ப்பார் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கொள்ளலாம். சங்கறுக்கும் தொழில் செய்யும் பார்ப்பாரை வேள்வி செய்யாத பார்ப்பார் என்று கூறுவர். வேளாப் பார்ப்பான் என்று கூறும் அகநானூற்றால் இதனை அறியலாம். நக்கீரர் தந்தையார் மதுரையிலே ஆசிரியத் தொழில் செய்து வந்தார். அவர் சிறந்த ஆசிரியர்; நூலாராய்ச்சியிலே திறமையுள்ளவர். ஆதலால் கணக்காயர் என்ற காரணப் பெயரே அவருடைய இயற்பெயராக வழங்கிவிட்டது. கணக்கு-நூல், ஆயர் - ஆராய்கின்றவர். கணக்காயர் - உபாத்தியாயர். நக்கீரருடைய பாடல்கள் சங்கநூல்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன. அகநானூற்றிலே பதினேழு; குறுந்தொகை யிலே எட்டு; நற்றிணையிலே ஏழு; புறநானூற்றிலே மூன்று; பத்துப்பாட்டிலே இரண்டு இவர் பாடியன. இறையனார் அகப்பொருளுக்கு உண்மையுரை கண்டவர் இவர் என்று சொல்லப்படுகிறார். பதினோராந்திருமுறையிலே நக்கீரனாரின் பெயரால் பத்துப் பிரபந்தங்கள் காணப்படுகின்றன. திருப்புகழ், கல்லாடம், திருவிளையாடற் புராணங்கள், திருப்பரங்கிரிப் புராணம், சீகாளத்திப் புராணம் ஆகியவைகளிலே இவருடைய வரலாற்றுக் குறிப்பைக் காணலாம். திருப்பரங்குன்றத்திலே நக்கீரரின் உருவச் சிலை ஒன்றுண்டு. மதுரையில் மேலமாசி வீதியில் நக்கீரருக்கு ஒரு கோயில் உண்டு. நக்கீரர் நல்ல தெய்வபக்தியுள்ளவர்; பொது மக்களால் போற்றப்பட்ட ஒரு பெரும் புலவர். ஆதலால் இவரைப் பற்றி எத்துணையோ கதைகள் வழங்குகின்றனர்; தெய்வமாக எண்ணி ஏற்றிக் கொண்டாடுகின்றனர். `சங்க நூல்களிலே உள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் வேறு; பதினோராந்திருமுறையிலே உள்ள பிரபந்தங்களைப் பாடிய நக்கீரர் வேறு. பதினோராந்திருமுறை நக்கீரரே புராணங் களிலே வழங்கப்படும் வரலாறுகளுக்கு இலக்கானவர் என்று கூறுவர். சங்ககாலத்து நக்கீரனாரின் பெயரால் வேறொரு பெரும்புலவர் பதினோராந்திருமுறைப் பிரபந்தங்களைப் பாடியிருக்கலாம்; நக்கீரனாரின் சிறப்புகருதி அவரைப் பற்றிப் பல வரலாறுகளைப் புனைந்திருக்கலாம் என்று எண்ண இட முண்டு. இத்தகைய பாராட்டுதலுக்குரிய பெரும் புலவராகிய நக்கீரனாரின் பெருமைக்கு இத்திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்பாட்டாக அமைந்திருப்பதே போதுமான சான்றாகும். பாட்டின் அமைப்பு வீடு பெறவிரும்பிய அறிஞன் ஒருவனுக்கு, அதைப் பெறு வதற்கான வழிமுறைகளை அறிந்தவன் ஒருவன் முருகனிடம் போகும்படி மொழிகின்றான். இம்முறையில் பாடப்பட்டிருப்பதே இத்திருமுருகாற்றுப்படை. இந்நூலில் ஆறு பகுதிகள் அமைந்திருக்கின்றன. அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவிநன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்பவை. முருகன் திருப்பரங்குன்றத்தில் விருப்புடன் வாழ்கின்றான்; திருச்சீரலைவாயில் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் புரிகின்றான்; திருவாவிநன்குடியிலே பக்தர்கள் பலரும் குழுமி முருகனை வழிபடுகின்றனர்; திருவேரகத்தில் அருமறை தெளிந்த அந்தணர்கள் முருகனை வணங்குகின்றனர்; முருகன் அருள் விரும்பும் அன்பர்கள் பலரும் குன்றுகள் தோறும் சென்று வழிபாடு செய்கின்றனர்; பழமுதிர் சோலையிலே பலவிடங் களிலே பலருங்காணத் தலைவனாக வீற்றிருக்கின்றான் முருகன். இப்படி முருகன் ஆறு இடங்களிலே அமர்ந்து அன்பர்களுக்கு அருள்புரிவதைக் கூறுகிறது இப்பாட்டு. இந்த ஆறு இடங்களை யும் ஆறுபடைவீடுகள் என்பர். திருப்பரங்குன்றம் என்பது மதுரைக்கு மேற்கில் உள்ளது. பாண்டிய மன்னன் ஒவ்வொருநாளும் பரங்குன்றுக்கு வந்து முருகனை வழிபடுவான் என்று பரிபாடலில் காணப்படுகின்றது. மதுரையின் தெய்வீகத்தைவிடப் பரங்குன்றின் தெய்வீகம் பழமையானது என்று ஊகிக்க இடமுண்டு. திருச்சீரலைவாய் என்பது திருச்செந்தூர். இதுவும் பரங் குன்றைப் போலவே பழமையான திருப்பதி. திருவாவின்நன்குடி என்பது பழனி. இதுவும் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. திருவேரகம் என்பது தஞ்சை வட்டாரத்தில் காவிரிக் கரையில் உள்ள சுவாமிமலை என்று கூறுகின்றனர் இக்காலத் தினர். திருவேரகம் மலைநாட்டில் உள்ள ஓர் திருப்பதி என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். திருவேரகத்தைப் பற்றிய பகுதியில் காவிரியாற்றைப் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. சுவாமிமலையும் இயற்கைமலை அன்று; கட்டுமலை. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் என்பது சிலப்பதிகாரம் குன்றக்குரவையில் உள்ளது. இதில் வெண்குன்றம் என்பதற்குச் சுவாமி மலை என்று பொருள் கூறு கின்றார் அரும்பதவுரை ஆசிரியர். இதனாலும் சுவாமிமலை வேறு, ஏரகம் என்பது வேறு என்று அறியலாம். ஆதலால் நச்சினார்க்கினியர் நவில்வதே உண்மையாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. ஆகையால் திருவேரகம் எதுவென்று உறுதியாகக் கூற முடியவில்லை. குன்றுதோறாடல் என்பது இயற்கைவளமும் எழிலும் நிறைந்த மலைகள். முருகன் குறிஞ்சிநிலத் தெய்வம். குறிஞ்சிநிலம் மலையும் மலைசார்ந்த நிலமும். ஆகையால் மலைகளெல்லாம் முருகனுக்குரிய இடம். பழமுதிர்ச்சோலை அழகர்மலை யென்பர். சேண்நின்று இழும் என இழிதரும் அருவிப் பழமுதிர்சோலை மலைகிழவோனே. . . . வானத்திலிருந்து இழும் என்ற ஓசையுடன் வீழ்கின்ற அருவியை யுடைய பழங்கள் முற்றியிருக்கின்ற சோலைகள் நிறைந்த மலையின் தலைவனே என்பது திருமுருகாற்றுப்படையின் இறுதியடிகள்; பழமுதிர்சோலை மலையைக் குறிக்கும் வரிகள். இதில் குறிப்பிட்டிருக்கும் அருவி அழகர்மலையில் உள்ள சிலம்பாற்றைக் குறிப்பிடுவது. ஆகையால் பழமுதிர்சோலை மலையென்பது அழகர்மலைதான் என்று கூறுகின்றனர். பழமுதிர்சோலை மலையென்பது அழகர் மலைதானா என்பது ஆராய்ந்து முடிவு செய்யப்படவேண்டிய செய்தி. பரங் குன்றம் முருகன் திருப்பதியாக இருந்தகாலத்திலேயே அழகர் மலை திருமாலிருஞ்சோலை என்ற பெயருடன் சிறந்த திருமால் திருப்பதியாக விளங்கியிருந்தது. இவ்வுண்மையைப் பரிபாட லால் காணலாம். பரிபாடல் சங்கநூல்களாகிய எட்டுத்தொகை நூல்களிலே ஒன்று. அந்நூலில் திருமால், செவ்வேள் ஆகியவர்களைப் பற்றிய பாடல்களும், வைகையைப் பற்றிய பாடல்களும் காணப்படு கின்றன. இவற்றுள் செவ்வேளைப் பற்றிய பாடல்கள் திருப்பரங்குன் றத்தையும் அங்குள்ள முருகனைப் பற்றியுமே பாடு கின்றன. முரு கனைப் பற்றிய ஒரு பாடல் மட்டும் எந்த இடத்தையும் குறிப்பிட வில்லை. திருமாலைப் பற்றிய பாடல்களிலே ஒன்று திருமாலிருஞ் சோலையைப் பற்றிப் புகழ்ந்து பாடுகின்றது. நீண்ட நெடுங்கால மாகத் திருமால் அம்மலையிலே வீற்றிருக்கின்றார். அவரை வணங்கி வழிபடுவோருக்கு அவர் நல்லுலகத்தை அளிக்கின்றார். திருமாலிருஞ் சோலைமலை திருமால் வீற்றிருப்பதனாலே மலை களிலே சிறந்த மலையாக விளங்குகின்றது. என்று கூறுகிறது அப்பாடல். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் கடைச்சங்க காலத்து நூல்கள். பத்துப்பாட்டில் உள்ளது திருமுருகாற்றுப்படை. எட்டுத்தொகையில் உள்ளது பரிபாடல். ஆகவே திருமுரு காற்றுப் படையும், பரிபாடலும் ஏறக்குறைய ஒரே காலத்து நூல்கள். பரிபாடலில் அழகர்மலை திருமாலிருஞ்சோலையா கவே காணப்படுகின்றது. முருகன் திருப்பதி என்பதற்கான அறி குறிகள் காணப்படவில்லை. ஆகையால் பழமுதிர்சோலைமலை யென்பது அழகர்மலையென்று முடிவு செய்வதற்குப் போது மான ஆதரவில்லை. அழகர்மலை பழமுதிர்சோலைமலை என்ற பெயரில் முருகன் திருப்பதியாகவும் இருந்திருக்கலாம். அதுவே திருமாலி ருஞ்சோலைமலை என்ற பெயரில் திருமால் திருப்பதியாகவும் இருந்திருக்கலாம் என்போரும் உண்டு. இவர்கள் கூறுவது பொருத்தமாக இருக்கின்றது. இதற்குப் பழைய நூல்களின் ஆதரவு ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால் மாமனும், மருமகனும் ஒரு மலையிலே வீற்றிருப் பதைப் பண்டைப் புலவர்கள் பாடாமல் விட்டிருக்க மாட்டார்கள். தெய்வங்கள் திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்களை இந்நூலிலே காணலாம். பாம்பு இறக்கும்படி கொல்லுகின்ற புள்; பலகோடுகளை யுடைய சிறகுள்ள புள்; இத்தகைய கருடப்புள்ளைக் கொடியாக உயர்த்தியவர் திருமால். பாம்புபடப்புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்அணி நீள்கொடிச் செல்வன் என்பது திருமாலைக் குறித்து வரும் அடிகள். (150-151) வெண்மையான காளையுருவெழுதிய கொடியை வலப் பக்கத்தில் உயர்த்தியவன்; பலரும் புகழும் வலிமையான தோளை யுடையவன்; இடப்பாகத்தில் உமையை வைத்துக்கொண்டிருப் பவன்; இமையாத மூன்று கண்களையுடையவன்; திரிபுரத்தை அழித்த வலிமையுடையவன். வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன் இது சிவபெருமானைக் குறிக்கும் அடிகள். (151-154) ஆயிரங்கண்களையுடையவன்; நூறு என்னும் பல வேள்விகளைச் செய்தவன்; பகைவர்களைக் கொன்றழித்து வெற்றிபெறக்கூடியது - நான்கு தந்தங்களையுடையது- அழகிய நடையை உடையது- தொங்குகின்ற பெரிய கையையுடையது- ஆகிய யானையின் பிடரியிலே உயர்த்தியிருக்கின்ற அம்பாரி யில் ஏறிச்செல்லும் செல்வத்திலே சிறந்தவன். நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து, நூறுபல் வேள்விமுற்றிய, வென்றடு கொற்றத்து ஈரிரண்டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந்தடக்கை, உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் இது இந்திரனைக் குறித்து வந்த அடிகள். (155- 159) தாமரை மலரில் பெற்றெடுக்கப்பட்டவன்; அழியாத ஊழிதோறும் படைத்தற்றொழிலைச் செய்பவன்; நான்கு முகங் களையுடையவன். தாமரை பயந்ததாவின் ஊழி நான்முக ஒருவன் இவை நான்முகனைக் குறிக்கும் அடிகள். (164-165) இன்னும் ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் ஆகிய தேவர்களும் காணப்படுகின்றனர். மேலும் தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்பு ருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாயவாசிகள், போக பூமியோர் என்ற பதினெண்கணங்களும் காணப்படுகின்றனர். புராணங்களிலே காணப்படும் எல்லாத் தெய்வங்களும் திருமுருகாற்றுப் படையிலே காணப்படுகின்றன. ஆனால் விநாய கர் மட்டும் காணப்படவில்லை. கோவில்கள் சங்க காலத்திலே இன்றிருப்பது போன்ற பெரும் பெரும் கோவில்கள் இல்லை. சிறு சிறு கோவில்களே இருந்தன. அக் காலத்து மக்கள் எங்கும் தெய்வமிருப்பதாக நம்பினர். ஆகையால் அவர்கள் இயற்கை வனப்பமைந்த எல்லாவிடங்களிலும் தெய்வத்தை வணங்கி வழிபட்டனர். அருவ வழிபாடும் உண்டு; உருவ வழிபாடும் உண்டு. தமிழர்கள் முருகனைக் காட்டிலே வைத்து வணங்கினர்; சோலைகளிலே வைத்து வணங்கினர்; ஆற்றின் நடுவிலே அமைந்த அரங்கங்களிலே அவனை வணங்கினர்; ஆற்றங்கரைகளிலே -குளத்தங்கரைகளிலே முருகனைப் பூசித்தனர்; முச்சந்தி, நாற் சந்தி, ஐஞ்சந்திகளிலும் அவனை வணங்கினர்; புதிதாகப் பூத்த கடம்ப மரத்திலே முருகனைக்கண்டு வணங்கினர், மரத்தடியிலும், அம்பலத்திலும், மரக்கட்டைகளிலும் முருகனை வணங்கினர். காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும், குளனும், வேறுபல் வைப்பும், சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும், மன்றமும், பொதியிலும், கந்துடை நிலையினும் முருகனைக் கண்டு வணங்கினர் என்று கூறும் பகுதியால் முருகனை எல்லா விடங்களிலும் வணங்கினர் என்பதைக் காணலாம். (223- 226) உருவ வணக்கம் உருவ வணக்கம் தமிழ்நாட்டிலேதான் தோன்றியிருக்க வேண்டும். சங்க நூல்களில் எல்லாம் உருவ வணக்கம் காணப்படு கின்றது. தமிழர்களின் பழைய நாகரிகத்திலிருந்தே உருவ வணக் கம் உதித்தது என்று சொல்ல இடமுண்டு. பண்டைத் தமிழர்கள் போரிலே மாண்ட வீரர்களைப் போற்றினர். அவர்களுக்காகக் கல் நட்டு விழா செய்தனர்; அவர் களுடைய புகழைப் பாடினர். வீரர்களுக்காகக் கல் நட்டு விழா செய்யும் முறையைத் தொல்காப்பியத்திலே காணலாம். வீரர் களுக்கு உருவமைத்து அவர்கள் வெற்றியைக் கொண்டாடி வணங்கியது போலவே கடவுளர்களுக்கும் கற்சிலைகள் செய்து வைத்து வணங்கினர். கடைச்சங்க காலத்தில் இவ்வழக்கம் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தது. தமிழர்கள் சிற்பக்கலையிலே சிறந்து நின்றமைக்கு இவ்வுருவ வணக்கம் ஒரு காரணமாகும். இது குறிப் பிடத்தக்கது. பண்டைத் தமிழர் முருகனை ஆறு முகமும், பன்னிரண்டு கையும் உடைய உருவமாகச் செய்து வைத்து வணங்கினர். இதைத் திருமுருகாற்றுப் படையிலே காணலாம். முருகனுடைய உருவம் அவனைப் பற்றிப் புராணத்திலே கூறும் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டது. புராண வரலாற்றைக் கொண்டே முருகனுடைய உருவமைத்தனர். ஓவியம் தீட்டினர். முருகன் திருஉருவைப் பற்றி நக்கீரர் அழகாகப் பாடியிருக்கின்றார். ஒரு முகம் சூரியனைப் போல ஒளி வீசிக்கொண்டிருக் கின்றது; ஒரு முகம் தன்னை வணங்கும் அன்பர்களுக்கு வரங் கொடுத்துக் கொண்டிருக்கின்றது; ஒரு முகம் அந்தணர்களின் வேள்விகளைப் பாதுகாக்கின்றது: ஒரு முகம் உண்மையறிவை உணர்த்திக் கொண்டிருக்கின்றது; ஒரு முகம் அன்பர்களின் பகை வர்களை அழித்து அவர்களுக்குப் போரிலே வெற்றியைத் தருகின்றது; ஒரு முகம் வள்ளியுடன் மகிழ்ந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கின்றது. பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத்தன்றே, ஒருமுகம் மந்திர விதியின் மரபுரி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுறநாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே, ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவு கொள்நெஞ்சமொடு களம்வேட்டன்றே, ஒருமுகம், குறவர்மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே முருகனையுடைய ஆறுமுகங்களும் செய்யும் செயல்கள் இவை.(92- 102) வானத்தில் திரியும் முனிவர்களைத் தாங்குகின்றது ஒரு கை; இடையிலே ஊன்றியிருக்கின்றது ஒரு கை; அழகிய ஆடையையணிந்த துடையின் மேல் கிடக்கின்றது ஒரு கை; அங்குசத்தை ஏந்திக்கொண்டிருக்கின்றது ஒரு கை; ஒரு கை கேடகத்தை ஏந்தியிருக்கின்றது; ஒரு கை வேலைச் சுழற்றிக் கொண்டிருக் கின்றது; ஒரு கை மார்புக்கு நேரே ஞானக் குறிப் புடன் விளங்குகின்றது; ஒரு கை மார்பிலணிந்த மாலையோடு சேர்ந்து கிடக்கின்றது; ஒரு கை கொடியுடன் மேலே சுழலும்; ஒரு கை மணிகளை ஆட்டி ஒலிக்கச் செய்கின்றது; ஒரு கை மேகத்தைப் பிடித்து மழையைப் பெய்விக்கின்றது; ஒரு கை தேவ மகளிர்க்கு மணமாலை சூட்டி மகிழ்ச்சி அடைகின்றது. விண்செலன் மரபின் ஐயர்க்கேந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை; அங்குசம் கடாவ ஒருகை; இருகை ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒருகை மார்பொடு விளங்க; ஒருகை தாரொடு பொலிய; ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப; ஒருகை பாடுஇன் படுமணி இரட்ட; ஒருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய; ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைசூட்ட முருகனுடைய பன்னிரு கரங்களும் செய்யும் செயல்களை இவ்வடிகள் குறித்தன. (107-118) இவைகளால் முருகன் ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய அழகிய உருவமாகச் செய்து வணங்கப்பட் டான் என்பதைக் காணலாம். வழிபாட்டுமுறை பண்டைத் தமிழர்களிடம் தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிட்டு வணங்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் மலர்களிட் டும் தெய்வங்களை வணங்கினர்; இரத்தங் கலந்த அரிசியைப் பலியாக வைத்தும் வணங்கினர். சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும், ஆடறுத்தும், கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும், ஊர்கள்தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்கள் செய்வர். சிறுதினை மலரொடு விரைஇ, மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ, ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் மிகுந்த வலிமை பொருந்திய பெரிய கால்களையுடைய கொழுத்த ஆட்டுக் கடாவை வெட்டுவார்கள். அதன் குருதி யுடன்தூய வெள்ளையான அரிசியைக் கலந்து பலிகளாகப் பண்ணுவார்கள். அவைகளைப் பிரப்பங் கூடைகளிலே வைத்து முருகனைப் பூசிப்பார்கள் (218-220) மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து, *பல் பிரப்பு இரீஇ இவைகள் உயிர்ப்பலியிட்டு முருகனை வழிபட்ட செய்தியைக் கூறுகின்றன. முருகனுக்கு ஆடு வெட்டிப் பூசை போடுதல் அக்கால வழக்கம். (232- 234) புராண வரலாறுகள் சங்க காலத்திலே தமிழகத்திலே புராண வரலாறுகள் பல வழங்கி வந்தன. மாபுராணம், பூதபுராணம் என்பவை இடைச் சங்க காலத்தில் இருந்த நூல்கள். ஆகவே கடைச்சங்க காலத்தில் புராண வரலாறுகள் தமிழ்நாட்டில் பெரு வழக்காக இருந்தன என்பதில் ஐயமில்லை. முனிவர்களைப் பற்றியும், கடவுளர்களைப் பற்றியும் மொழிவனவே புராணங்கள். புராணம்- புராதனமான வரலாறு. புராதனம்- பழமை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்கள் புராணங்களிலே நம்பிக்கை வைத்திருந்தனர். இதற்குத் திருமுருகாற்றுப்படை சான்றாகும். புராண முருகனைப் பற்றியே இந்நூல் போற்றிப் புகழ்கின்றது. கந்தபுராண வரலாற்றுப் பகுதிகளை இந்நூலிலே காணலாம். பரமசிவன் பார்வதியை மணந்தபோது, தேவர்கள் பரம சிவனிடம் ஒரு வரங்கேட்டனர். பார்வதியுடன் கூடி பிள்ளை பெறக்கூடாது என்பதே அவ்வரம். பரமசிவனும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கினார். பிறகு சிவனார் தனது விந்துவை இந்திரன் கையிலே கொடுத்தார். அவனால் அதன் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை. அவன் அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன் என்னும் ஏழு முனிவர்களிடமும் அந்த விந்துவைக் கொடுத்துவிட்டான். அவர்களும் அதன் வெப்பத்தைப் பொறுக்க முடியாமல் அக்கினி குண்டத்திலே அதைப் போட்டுவிட்டனர். வெப்பந் தணிந்தபின் அதனை எடுத்தனர்; தங்கள் பத்தினிகளிடம் கொடுத்தனர். அவர்களில் வசிட்டர் மனைவியான அருந்ததியைத் தவிர ஏனைய அறுவரும் அதனை அருந்தினர்; உடனே கருவுயிர்த்தனர். அறுவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அந்த ஆறு குழந்தைகளும் இமயமலையிலே உள்ள சரவணப் பொய்கையிலே விடப் பட்டன. அவைகளைப் பார்வதி ஒன்றாக வாரியெடுத்தாள். ஆறும் ஒன்றாகி ஆறுமுகம் பன்னிரண்டு கையுமுடைய முருகனாகக் காட்சியளித்தது. இவ்வரலாறு திருமுருகாற்றுப்படையிலே காணப்படுகின்றது. வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களுள் ஒருவனாகிய தீ தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதனை உண்ட முனிவர்களின் மனைவிகளாகிய அறுவரும் பெற்றெடுத்த ஆறு உருவங்களாக அமைந்த செல்வனே! கல்லால மரத்தின்கீழ் வீற்றி ருந்த சிவபெருமானுடைய புதல்வனே! பெரிய மலையாகிய இமையவரையின் மகளான பார்வதியின் புதல்வனே! ஐவருள் ஒருவன் அம்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர்செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! (254-257) இதனால் மேலே காட்டிய வரலாற்றைக் காணலாம். உலகிலே பழமையான குளிர்ந்த கடல்நீர் கலங்கும்படி உள்ளே நுழைந்து போய், அசுரர்களின் தலைவனாகிய சூரபத் மனைக் கொன்ற ஒளிபொருந்திய வேல், இலைவடிவான நீண்ட வேல். பார்முதிர் பனிக்கடல் கலங்க, உள்புக்குச் சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் இது சுப்பிரமணியர் சூரபதுமனைக் கொன்ற வரலாற்றைக் குறிப்பது. அசுரர்களின் நல்ல வெற்றி அழிந்து போகும்படி, தொங்கு கின்ற பூங்கொத்து களையுடைய மாமரத்தை அடியோடு சாய்த்த, குற்றமற்ற வெற்றியையும் கிடைத்தற்கரிய நல்ல புகழையும் கொண்ட, சிவந்த வேலையுடைய முருகன். அவுணர் நல்வலம் அடங்கக், கவிழ்இணர் மாமுதல் தடிந்த, மறுஇல் கொற்றத்து எய்யாநல் இசைச் செவ்வேல் சேஎய் (59-61) `ஒரு அசுரன் மாமரவடிவாய் மறைந்து நின்றான். அவன் தேவர்களின் பலத்திலே பாதியைக் கவர்ந்து கொண்டிருந்தான். அந்த மாமரத்தை முருகன் தனது வேற்படையால் அடியோடு வீழ்த்தினான் என்ற புராண வரலாற்றை இதனாற் காணலாம். சூரனுடைய சுற்றத்தாரை அடியோடு தொலைத்த பேராற்றல் உடையவனே! போரிலே சிறந்த வீரனே! சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந! இது முருகன் அசுரர் குலத்தை அழித்த செய்தியைக் குறிக் கின்றது. கிரவுஞ்சமென்னும் மலையை அழித்தவனே! அழியாத வெற்றியையுடை யவனே! உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தின் தலைவனே! குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! இது முருகன் கிரவுஞ்ச மலையைத் தன் வேலால் வீழ்த்திய வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. (226-227) குறவர் குலத்திலே பிறந்த அழகியபெண்- கொடி போன்ற இடையினள்- இளமைப் பருவமுடையவள்- ஆகிய வள்ளியுடன் மகிழ்ந்திருக்கும் ஒருமுகம். ஒருமுகம் குறவர் மடமகள், கொடிபோல் நுசுப்பின் மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே இது முருகன் வள்ளியை மணந்தான் என்பதைக் குறித்தது. (100- 102) மங்கையர் கணவா! (264) வள்ளிதெய்வானையென்னும் மங்கையர்களின் கணவனே! இது முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவி யர்கள் உண்டு என்பதைக் காட்டும். இவைகளால் முருகனைப் பற்றிய புராண வரலாறுகளைக் காணலாம். கண்ணுதல் கல்லாலின் கீழேயமர்ந்து கனகாதியோகியர்க்கு ஞானோபதேசம் செய்தார். அவர் திரிபுரத்தை எரித்தார். இந்திரன் கௌதமர் சாபத்தினால் ஆயிரம் கண்களைப் பெற்றான். அவன் நூறு யாகங்களைச் செய்து இந்திர பதவி பெற்றான். இவைபோன்ற புராணக்கதைக் குறிப்புகளும் காணப்படு கின்றன. முனிவர்கள் முனிவர் என்பது தமிழ்ச்சொல். கோபிப்பவர், வெறுப்பவர் என்பது இதன் பொருள். இவர்கள் தீமைகளை வெறுப்பவர்கள். உலக ஆசைகளை உதறித் தள்ளுகிறவர்கள். மக்கள் நன்மைக்கு மாறானவைகளை வெறுப்பவர்கள். இத்தகைய முனிவர்கள்- உயர்ந்தவர்கள்- பலர் பத்துப்பாட்டுக் காலத்திலே தமிழ் நாட்டிலே வாழ்ந்திருந்தனர். அவர்களுடைய தோற்றத்தையும் தன்மையையும் நக்கீரர் அப்படியே ஓவியம்போல் எழுதிக் காட்டி யுள்ளார். மரவுரியை உடையாக உடுத்தியவர்கள்; அழகான வலம் புரிச் சங்குபோலத் தூக்கிமுடித்த வெண்மையான நரைத்த முடி யையுடையவர்கள்; குற்றமற்றுக் காணப்படும் காட்சியினர்; மான் றோலைப் பூண்டவர்கள்; சதையற்ற மார்பிலே அக்கக்காக எலும்புகள் காணப்படும் ஆக்கையினர்; பன்னாட்கள் உண்ணா விரதம் இருப்பவர்கள்; பகைமையும், சினமும் நீங்கிய சிந்தையினர்; அனைத்தும் கற்றவர்களைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள்; கற்றவர்களுக்கு எல்லையாகத் தாமே நின்று காட்சியளிப்பவர்கள்; ஆசையையும் கோபத்தையும் அடியோடு விட்டொழித்த அறிஞர்கள்; துன்பத்தை உணராத துறவிகள்; மாசற்ற மதியுடை முனிவர்கள். சீரை தைஇய உடுக்கையர்; சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர்; மாசுஅற இமைக்கும் உருவினர்; மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந் தியங்கும் யாக்கையர்; நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்; இகழொடு செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்; காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர் (126-137) இவ்வடிகள் முனிவர்களை நம் முன்னே நிறுத்திக்காட்டுகின்றன. அந்தணரும் வேள்வியும் கடைச்சங்க காலத்திற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன் னரே தமிழ்நாட்டில் அந்தணர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதங்கற்றவர்கள்; வேள்விகளும் செய்தனர். வட மொழி வேதக் கொள்கைகள் தமிழ்நாட்டிலே பரவியிருந்தன. வடவர்- தமிழர் என்ற வேறுபாடு காணப்படவில்லை. தமிழர் நாகரிகம் - வடவர் நாகரிகம் என்ற வேற்றுமையின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்டன. ஒருமுகம், மந்திரத்தையுடைய வேதத்தில் விளம்பும் முறை தவறாதபடி அந்தணர்கள் செய்யும் வேள்வியை நினைத் துக்கொண்டிருக்கும். ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே (94-96) இதனால், தமிழ்நாட்டிலே அந்தணர்கள் வேத முறைப்படி வேள்விகளைச் செய்து வந்தனர் என்பதைக் காணலாம். அந்தணர்க்குரிய அறுவகைத் தொழில்களையும் தவறா மல் செய்பவர்கள்; தாய்மரபும் சிறந்தது, தந்தை மரபும் சிறந்தது என்று புகழ்ந்து பேசக்கூடிய குடியிலே பிறந்தவர்கள்; நாற்பத் தெட்டாண்டு பிரமச்சரிய விரதங் காத்தவர்கள்; எப்பொழுதும் நல்லறங்களைப் பிறர்க்குரைத்துத் தாமும் அவ்வறங்களைப் பின் பற்றுகிறவர்கள்; முத்தீ வளர்த்துத் தமது நித்திய கடன்களைச் செய்பவர்கள்; இரு பிறப்பாளர் என்னும் அந்தணர்கள்; கடவுளை வழிபடுங்காலமறிந்து தோத்திரம் செய்பவர்கள்; ஒன் பது நூல்களைக் கொண்ட முப்புரி நூலணிந்தவர்கள்; ஈர ஆடையை உடுத்தியவர்கள்; உச்சியிலே வைத்துக் கூப்பிய கையை உடை யவர்கள்; முருகனைப் புகழ்ந்து - ஆறெழுத்து மந்தி ரத்தை உச்சரித்து - நறுமலரால் அவனை வணங்குகின்றனர். இவர்களுடைய வழிபாட்டை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகன் ஏரகத்திலே எழுந்தருளியிருக்கின்றான். இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது, இருவர்ச் சுட்டிய, பல்வேறு தொல்குடி, அறுநான்கு இரட்டி, இளமை நல்லியாண்டு ஆறினில் கழிப்பிய, அறன் நவில் கொள்கை மூன்றுவகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர், பொழுதறிந்து நுவல, ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண், புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி நாவியன் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது வந்து, ஏரகத்துறை தலும் உரியன் (177-189) தமிழ்நாட்டில் வாழ்ந்த அந்தணர்களைப் பற்றி இதனாற் காணலாம். அவர்கள் வேதமோதி, வேள்வி செய்து, கடவுளை வழிபட்டனர் என்பதையும் இவ்வடிகள் விளக்குகின்றன. தெய்வ நம்பிக்கை பண்டைத் தமிழர்களிலே பெரும்பாலோர் தெய்வ நம்பிக் கையுள்ளவர்கள். அறிவு நிரம்பிய புலவர்களும், பெரியோர் களும் தெய்வங்களை வணங்கி வந்தனர். பொதுமக்களும் தெய்வங்களைப் போற்றி வழிபட்டு வந்தனர். தெய்வ வழிபாட்டால் எண்ணிய காரியங்களிலே எளிதில் வெற்றி பெறலாம் என்று நம்பினர். வேண்டுவார் வேண்டியன வற்றை அளிக்கும் ஆற்றல் தெய்வத் திற்கு உண்டு என்று உறுதியாக எண்ணினர். துன்புற்றவர்களின் துயரங்களைப் போக்கும்; அவர்களை இன்புற்று வாழச் செய்யும். இத்தகைய ஆற்றலும் அருளும் உடையது தெய்வம் என்று நம்பினர். இந்நம்பிக்கை பண்டைத் தமிழரிடம் இயற்கையாகவே குடிபுகுந்தது. இவ்வுண் மையைத் திருமுருகாற்றுப்படையிலே காணலாம். வானத்தை முட்டிய உயர்ந்த மலைகள் அமைந்த குறிஞ்சி நிலத்தின் தலைவனே! பலரும் புகழ்வதற்குரிய சிறந்த மொழிகளைக் கூறும் புலவர்களின் தலைவனே! மிகச் சிறந்த பெருமையும் உயர்ந்த பெயருமுடைய முருகனே! விரும்புவோர்க்குவேண்டியவற்றையளிக்கும்புகழும்பெயரும்உடையவனே! வருந்துவோர்க்கு வேண்டுவன கொடுக்கும் பொன்னா பரணங்களைப் பூண்ட செந்நிறமுடையவனே! விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெறல் மரபின் பெரும் பெயர்முருக! நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேராள! அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்! இதனால் தமிழர்கள் கொண்டிருந்த தெய்வ நம்பிக்கையைக் காணலாம். (267- 271) நூலின் சிறப்பு சங்ககாலத்திலே தமிழ்நாட்டிலே வணங்கப்பட்டு வந்த தெய்வங்கள் இவை யிவை என்பதை இந்நூலால் அறியலாம். தெய்வங்களைப் பற்றிய வரலாறுகளையும், அவ்வரலாறு கூறும் நூல் களையும் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். தமிழ்நாட்டிலே அந்தணர் முதலிய பல வகுப்பினர் இருந்தனர். தமிழர்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்கினர். தமிழ்நாட்டில் வேதங்கள் ஓதப்பட்டன; வேள்விகள் நடை பெற்றன. தமிழ் மக்கள் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் செய்து கொண்டாடினர். தமிழ்நாட்டில் உருவ வணக்கமும் இருந்தது; அருவ வணக்கமும் இருந்தது. மக்கள் பல தெய்வங்களை வணங்கினாலும், அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை. தெய்வ வணக்கம் காரணமாக அவர்களிடையிலே பிரிவினை கள் ஏற்படவில்லை. இவ்வுண்மைகளைத் திருமுருகாற்றுப்படையால் அறியலாம். இந்நூல் சிறந்ததொரு இலக்கியம். பழந்தமிழர் நாகரிகத்தின் ஒரு பகுதியை அறிவதற்கான கருவி. முருகனிடம் அன்புடையவர்கள் இந்நூலைப் பாராயணம் செய்து பரவச மடைகின்றனர். (3) பொருநர் ஆற்றுப்படை பெயர்க்காரணம் பத்துப்பாட்டுள் இரண்டாவது பாட்டு பொருநர் ஆற்றுப் படை. 248 வரிகளைக் கொண்ட ஒரே பாட்டு. ஆசிரியப்பாவால் அமைந்தது. பொருநர் ஆற்றுப்படை என்றால் பொருநரை ஆற்றுப் படுத்துவது என்பது பொருள். ஒரு பொருநன் மற்றொரு பொரு நனுக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தல். புகழ்ந்து பாடுவோர்க்குப் பொருநர் என்று பெயர். கூத்தருக் கும் பொருநர் என்ற பெயருண்டு. பொருநர்- அதாவது புகழ்ந்து பாடுவோர் மூவகைப் படுவர். அவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்பவர்கள். இங்கே குறிக்கப்படும் பொருநர் போர்க்களம் பாடுவோர். ஆசிரியர் இதன் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார். இவர் இந் நூலைத் தவிர வேறு நூல்களோ, பாடல்களோ பாடியதாகத் தெரியவில்லை. இவர் வரலாற்றை அறிவதற்கும் வழியில்லை. இவர் கரிகாற் சோழனைப் பற்றிப் பாராட்டிப் பாடுகிறார்; பொன்னியின் பெருமையைப் பற்றிப் புகழ்ந்திருக்கிறார்; சோழ நாட்டின் இயற்கைவளத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக் கிறார். இவைகளால் இவர் சோழ நாட்டில் வாழ்ந்தவர்; கரிகாற் சோழன் ஆதரவு பெற்று வாழ்ந்தவர்; அரும்பெரும் தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் இவர் வரலாறு தெரிகின்றது. பாட்டின் தலைவன் இது சோழன் கரிகாலனைப் பற்றிப் புகழ்ந்து பாடிய பாட்டு. கரிகாலனுடைய கொடைத்தன்மை; வீரத்தன்மை; அரசியல் மேன்மை; பெரும்புகழ் இவைகளை இந்நூலிலே காணலாம். ஏழை மக்களின் வாழ்க்கைநிலை; சோழநாட்டு மக்கள் செய்துவந்த தொழில்கள்; சோணாட்டிலே இப்புலவர் காலத்தில் வளர்ந்திருந்த கலைகள்; சோழநாடு சுரந்த இயற்கைச் செல்வங்கள்; வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரியின் பெருமை இவைகளை இப்பொருநர் ஆற்றுப்படையிலே காணலாம். சோழன் கரிகால்வளவன், கரிகாற் பெருவளத்தான், கரிகாலன் என்பன கரிகாலனைப் பற்றி வழங்கும் பெயர்கள். இவனுடைய தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம். சோழநாடு இவனுடைய நாடு. தமிழ் இலக்கியங்களிலே இவனைப் பற்றி வழங்கும் வரலாறுகள் பல. இவனுடைய கால் நெருப்பில் பட்டுக் கரிந்து போய்விட்டது. ஆதலால் கரிகாலன் என்று பெயர் பெற்றான் என்பர். சோழமன்னன் சந்ததியற்றுப் போனான். உடனே மக்களும், அமைச்சரும் சேர்ந்து பார்த்திபனைத் தேடிக் கொண்டுவரப் பட்டத்து யானையை அலங்கரித்து அனுப்பினர். அந்த யானை அரசகுமாரனைப் போன்ற ஒரு சிறுவனைத் தன் முதுகில் தூக்கிக்கொண்டு வந்தது. அவனையே கரிகாலன் என்று அழைத்தனர். அரியணையேற்றி அரசனாக்கினர். யானையின் வழியே வந்தவன் ஆதலால் கரிகாலன் என்ற பெயர் பெற்றான் என்று கூறுவர். கரி- யானை. இவன் இமயம் வரையிலும் படையெடுத்துச் சென்றவன். இடைவழியிலே தன்னை எதிர்த்த எல்லா அரசர்களையும் வென்றவன். இமயத்திலே புலிமுத்திரை பொறித்துத் தன் புகழை நிலைநாட்டியவன். பாட்டின் அமைப்பு பொருநன் ஒருவன். அவன் வறுமைப்பிணியால் வாடி உள்ளமும் உடலும் சோர்ந்தான். தன் மனைவியாகிய பாடினி யுடன் வள்ளல்கள் வாழும் இடம் தேடிப் புறப்பட்டான்; வழி நடந்தான். வழிநடந்து வழிநடந்து அவனும் இளைத்தான்; அவன் மனைவியும் சோர்ந்தாள். இருவரும் ஒரு மரநிழலிலே இளைப்பாறத் தங்கினர். வழிநடந்த களைப்பு தீரப் பாடினி தன் யாழை வாசித்து இனிய கானம் பொழிந்தாள். இச்சமயத்தில் கரிகாற்சோழனிடம் பரிசுபெற்று வந்த பொருநன் ஒருவன் அவர்களைக் கண்டான்; அவர்களை அணு கினான்; அவர்கள் வறுமை தீர்ந்து தன்னைப்போல் வாழ்வடைய வழி கூறினான். பொருநனே, நானும் உன்னைப்போல் வறுமையால் வாடினேன். கரிகாற்சோழனிடம் போனேன். அவனைப் புகழ்ந்து பாடினேன். அவன் என்னை அன்புடன் வரவேற்றான்; புத்தாடை யளித்தான்; வழிநடை வருத்தந் தீர இனியபானந் தந்தான்; நன்றாய் உறங்குவதற்கும் ஓய்வுபெறுவதற்கும் இடம் கொடுத் தான்; நல்ல கொழுப்பும் இனிமையுமுள்ள விருந்தளித்தான். இவ்வாறு என்னையும், என்னுடன் சேர்ந்தவர்களையும் பல நாட்கள் எக்கவலைக்கும் இடமின்றி உபசரித்தான். இறுதியில் அவனிடம் விடைபெற்று வீடு திரும்பினோம். அப்பொழுது களிறுகளையும், பிடிகளையும் கன்றுகளுடன் பரிசளித்தான். வறுமை நோய் எங்களை எக்காலத்திலும் எட்டிப் பிடிக்காதபடி ஏராளமான ஊர்திகளை உதவினான். ஆடைகள், அணிகலன்கள் அனைத்தும் அளித்தான். பொருநனே! நீயும் உன் சுற்றத்துடன் அந்தக் கரிகாலனிடம் போ. அவனைப் புகழ்ந்துபாடு. உன் குறைதீர உனக்குப் பரிசளிப் பான். நீயும் வறியோர்க்குப் பரிசு வழங்கும் அளவுக்கு உனக்கு எண்ணற்ற செல்வங்களையும், நிலங்களையும் வழங்குவான். இவ்வாறு கரிகாலனிடம் பரிசுபெற்று வந்த பொருநன் கூறினான். பரிசுபெறாத பொருநனுக்கு வறுமை நீங்க வழிகாட்டி னான். காவிரிப்பூம் பட்டினத்திற்குப் போகும்படியான வழி களைச் சொல்லி இவனை அனுப்பி வைத்தான். இந்த முறையிலேயே இப்பாடல் அமைந்திருக்கிறது. ஒரு பொருநன் மற் றொரு பொருநனுக்குக் கரிகாற் சோழனுடைய பெருமையை எடுத்துச் சொல்லு வதுபோல் இயற்றப்பட்டதே இப்பாடல். இதுவே பொருநர் ஆற்றுப்படையின் போக்கு. பரிசிலர் பண்டைக்காலத்தில் பொருநர்கள் பரிசுபெற வள்ளல் களைத் தேடிச் செல்லும்போது தாங்கள் மட்டும் தனித்துப் போவதில்லை. தங்கள் மனைவி - மக்களையும் உடன் கூட்டிச் செல்வர். பொருநர்களின் மனைவிமார்களும் யாழ் வாசிப்பதிலும், இன்னிசை பாடுவதிலும் வல்லவர்களாயிருந்தனர். இதனால் தான் அவர்களைப் பாடினி என்று அழைத்தனர். பெண்மயிலைப் போன்ற பாடினி சாதிலிங்கத்தை உருக்கி வார்த்தாற்போன்ற செந்நிலத்தே நடந்து சிந்தை கலங்கினாள். சுக்காங்கற்கள் உறுத்தி அவள் கால்களிலே கொப்புளங்கள் தோன்றின; மரல் என்னும் பழத்தைப் போல் உள்ளே நீர் மொக் குளித்த அந்தக் கொப்புளங்கள் அவள் நடையைத் தடுத்தன. பாடுவோரின் பாட்டுக்கேற்ப நடைபோடும் யானைகள் வாழும் அந்தக் காட்டிலே அவள் நடக்க முடியாமல் நின்றுவிட்டாள். இலையுதிர்ந்த ஒரு மரத்தின் அடியிலே வலை விரித்தது போன்ற நிழலிலே உட்கார்ந்தாள். காடுறை தெய்வத்தை வணங்கிய பிறகு அவள் பாடத் தொடங்கினாள். என்று கூறும் பகுதியால், பெண்களும் வள்ளல்களிடம் பரிசு பெறச் சென்ற செய்தியைக் காணலாம். வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி அரக்கு உருக்கன்ன செந்நிலன் ஒதுங்கலின், பரற்பகையுழந்த நோயொடு சிவணி, மரல் பழுத்து அன்ன மறுகுநீர் மொக்குள் நண்பகல் அந்தி நடையிடை விலங்கலின், பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி பாடின பாணிக் கேற்ப நாடொறும் களிறு வழங்கு அதர்க்கானத்து அல்கி, இலையில் மராஅத்த எவ்வம் தாங்கி வலை வலந்தன்ன மெல்நிழல் மருங்கில், காடுறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை. (42- 52) இவ்வடிகளால் மேலே கூறிய செய்தியைக் காணலாம். இவ் வடிகள், பொருநனுடன் போந்த அவன் மனைவி பாடினியைப் பற்றியவை. இசையின் சிறப்பு கரிகாற்சோழன் காலத்திலே தமிழ் நாட்டிலே இசைக் கலை மிகவும் உயர்ந்த நிலையிலிருந்தது. இசைக்கலைக்கேற்ற கருவிகளும் இருந்தன. அக்கருவி களைச் செய்யுந் திறமையும் பெற்றிருந்தனர். இசைக் கலையில் மயங்காதார் எவரும் இல்லை. பாடினி யின் பாட்டிற்குத் தகுந்தவாறு யானையும் நடைபோடும் என்பதை மேலே கண்டோம். வழிப்பறி செய்யும் கள்வர்கள்கூட கானத்தைக் காதிலே கேட்பார்களாயின் தங்கள் செயலை மறப் பார்களாம். இசையிலே மனத்தைப் பறிகொடுத்து மகிழ்வார் களாம். மணமகளை அலங்கரித்தது போன்ற பாலையாழ்; யாழுக் குரிய தெய்வம் தன்னிடத்திலேயிருக்கின்ற எல்லா இலக்கணங்களும் அமைந்த தோற்றத்தை யுடைய பாலையாழ்; இத்தகைய பாலையாழின் ஓசையைக் கேட்டவுடன் வழிப்பறி செய்யும் கள்வர்களும் தங்கள் ஆயுதத்தைக் கைவிடுவார்கள்; அவர்கள் இரக்கமற்ற உள்ளத்திலே இரக்கத்தையுண்டாக்கும்; அவர்கள் செய்கையிலே மாறுதலையுண்டாக்கும். இத்தகைய குற்றமற்ற பாலை யாழ் என்று பாலை யாழைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மணங்கமழ் மாதரை மண்ணி அன்ன, அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி, ஆறலைக் கள்வர் படைவிட அருளின் மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை; (19-22) இவ்வடிகள் யாழின் பெருமையையும், அதில் பிறக்கும் இசையின் உயர்வையும் எடுத்துக்காட்டுகின்றன. இசை, மக்கள் மனத்தை மாற்ற வல்லது; அதனால் நன்மை பல உண்டு. இசை, கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றும்; கல்நெஞ்சினரைக் கனியும் நெஞ்சினராக்கும். இசையின் மூலம் மக்களுக்குப் பல நன்னெறிகளைப் போதிக்கலாம். இவ்வாறு நம்பினர் பண்டைத்தமிழ் மக்கள். இவ்வுண்மையை நமக்கும் பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். நெசவுத் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் நெசவுத்தொழில் சிறந்திருந்தது. தமிழர்கள் பருத்தி நூல் நெச விலும், பட்டு நூல் நெசவிலும் தலைசிறந்திருந்தனர். இவ் வுண்மையைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் காணலாம். இப்பொருநர் ஆற்றுப்படையும் நெசவுத்தொழிலின் சிறப்பை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. கண்ணால் காணமுடியாத அவ்வளவு மெல்லிய நூலால் நெய்யப்பட்டது; அழகான பூவேலைகள் செய்யப்பட்டது; பாம்பின் தோலைப் போல அவ்வளவு மென்மையும், வழவழப் பும், பளபளப்பும் அமைந்தது; இத்தகைய மெல்லிய துணி. என்று அக்காலத்தில் நெய்யப்பட்ட துணியைப் பற்றிக் கூறப்பட் டுள்ளது. நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை. (82-83) என்ற அடிகளால் இதனைக் காணலாம். துணிக்கு அறுவை என்று பெயர். அறுவை- அறுக்கப்படுவது; நீளமாக நெய்து துண்டாக்கப்படுவது. துணி- துணிக்கப்படுவது. அதாவது துண்டாக்கப்படுவது. அக்காலத்துத் தமிழர்கள் அழகிய பட்டாடைகள் நெய் தனர். பணம் படைத்தவர்கள் பட்டாடைகள் அணிந்தனர். பளிச் சென்று தெரியும் கரை போட்ட பட்டாடைகளைத் தரித்துக் கொள்வதிலே அவர்களுக்கு ஆவலுண்டு. ஆதலால் கண்கவரும் வனப்புடைய கரைபோட்ட ஆடைகளை நெய்வதிலே தமிழர் கள் தேர்ந்திருந்தனர். கொட்டைக் கரைய பட்டுடை நல்கி (155) கொட்டைக் கரை போட்ட பட்டாடை கொடுத்து என்ற அடியினால் இதனை அறியலாம். மெல்லிய நூல் நூற்றலும், அழகிய கரை போட்ட ஆடைகளை நெய்வதும் தமிழர்களின் சிறந்த கலைகளாயிருந்தன. வறியோர் பண்டைத் தமிழகத்திலே செல்வம் செழித்திருந்தது; இயற்கை வளங்கள் ஏராளமாக நிரம்பியிருந்தன; கலைகள் வளர்ச்சியடைந்திருந்தன; வள்ளல்கள் பலர் வாழ்ந்திருந்தனர்; அவர்கள் கலைகளின் வளர்ச்சிக்கும், கல்விப் பெருக்கத்திற்கும் ஊன்றுகோலாயிருந்தனர். சங்க இலக்கியங்களிலே இந்த உண்மைகளைக் காணுகின்றோம். ஆனால் வறியோர் பலர் வாழ்ந்து வந்தனர். கலைஞர் களும், கவிஞர்களுங்கூட வறுமைக் கனலால் வாடி வதங்கினர் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இவர் கள் நிலமும், செல்வமும் படைத்த வள்ளல்களின் ஆதரவு பெற்றுத்தான் வாழவேண்டிய நிலையிலிருந்தனர். உயர்ந்த ஆடைகள் நெய்த அக்காலத்தில் உடையில்லாமல் வருந்தினோர் பலர்; உறைவதற்கு ஏற்ற இடமில்லாமல் ஊரூராக இடந்தேடி அலைந்தோர் பலர்; உணவுக்காகச் செல்வம் படைத்தவர்களிடம் சென்று கையேந்தி நின்றவர்கள் பலர். இத்தகைய ஏழைத்தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்கள்தாம் இன்று நமக்கு இலக்கியச் செல்வங்களாக இருக்கின்றன. ஏழையரின் கிழிந்த உடையைப் பற்றிப் பொருநர் ஆற்றுப் படையில் எழுதியிருக்கும் சித்திரமே இவ்வுண்மையை நன்றாக விளக்கிக்காட்டும். ஈரும்பேனும் கூடிக் குடியிருந்து அரசாட்சி செய்வது; வேர்வையால் நனைந்து நாற்றமடிப்பது; வேறு நூல் கள் நுழைந்திருக்கின்ற தையல் போட்ட கிழிந்த கந்தை என்று வறிஞர்களின் கந்தைத் துணியை வர்ணிக்கின்றார். ஈரும் பேனும் இருந்து இறை கூடி, வேரொடு நனைந்து, வேற்றிழை நுழைந்த துன்னல் சிதார் (80-82) கந்தையுடையின் படத்தை அப்படியே இவ்வடிகளில் காணுகின்றோம். இவ்வுடைகளையணிந்த வறிஞர்களையும் நம் கண்முன்னே அப்படியே காட்டுகிறார் முடத்தாமக்கண்ணியார். விருந்து புரத்தல் மதுவிலக்கும் புலால் மறுத்தலும் பண்டைத் தமிழகத்தில் இல்லை. சங்க இலக்கியங்களில் இவை இரண்டும் மணம் வீசிக் கொண்டு கிடப்பதைக் காணலாம். பழந்தமிழர் மதுவையும், மாமிசத்தையும் சிறந்த உணவாகக் கொண்டனர். வசதிபடைத் தவர்கள் தம்மிடம் வந்த விருந்தினர்க்கு முதலில் மதுபானம் கொடுத்து மகிழச் செய்வர். மதுவுண்டு களைப்பாறிய பின்னரே நல்ல மாமிசங்களோடு கூடிய விருந்தளிப்பர். இது இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர் வழக்கம். நல்ல நகைகளை அணிந்த மகளிர்; இனிமை தரும் புன் சிரிப்புடன் விளங்கும் மகளிர்; ஒளிகெடாத பொற்கிண்ணத் திலே பல தடவை மதுவை நிரம்ப ஊற்றித் தருவார்கள். அவர் கள் கொடுக்கக் கொடுக்க நாங்கள் அதனை வாங்கி வழி நடந்து போன வருத்தந் தீர உண்டோம். மதுவருந்திய மயக்கத்துடன் நின்றோம் என்று மதுவின் இன்பத்தைப் பற்றிக் கூறுகிறார். இழையணி வனப்பின் இன்னகை மகளிர், போக்கு இல் பொலங்கலம் நிறையப், பல்கால் வாக்குபு தரத்தர, வருத்தம் வீட ஆர உண்டு பேரஞர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை. (85-89) நகைகளணிந்த அழகுடைய மகளிர் பொற்கிண்ணத்திலே மதுவை ஊற்றிக் கொடுப்பார் என்றதனால் அக்காலத்துச் செல் வர்களின் வாழ்க்கை நிலைமையையும் அறியலாம். மாமிசத்தை வேக வைத்தும் தின்றனர்; சுட்டும் தின்றனர். வெந்தது வேவிறைச்சி; சுட்டது சூட்டிறைச்சி. செம்மறியாட்டுக் கறியைச் சிறந்ததாக எண்ணினர். செம்மறியாட்டுக்கறியிலும் அதன் தொடைக்கறியைச் சிறந்த சத்தும் கொழுப்புமுடைய தாகக் கருதினர். வந்த விருந்தினருக்குச் செம்மறியாட்டுக் கறி சமைத்துப் போடுவார்கள். அருகம்புல்லை மேய்ந்து கொழுத்திருக்கின்ற செம்மறி யாட்டின் மாமிசத்தை வேக வைப்பர். அதன் தொடையின் மேற் பாகத்துக் கறியை எடுத்துக் கொடுத்து விழுங்கச் சொல்லி வற் புறுத்துவர். இரும்புச் சட்டத்திலே கோத்துத் தீயிலே சுட்டெடுத்த நல்ல கொழுத்த ஊன்; அதன் நல்ல துண்டை வாயிலே போட்டுக் கொள்வோம். சூடு பொறுக்காமல் அந்தத் துண்டத் தை இந்தக் கடைவாய்க்கும், அந்தக் கடைவாய்க்கும் தள்ளித் தள்ளித் தின்போம். ஊன் தின்றது போதும் என்று வெறுத்தால் வேறு வேறு வகையாகச் செய்யப்பட்ட பலகாரங்களைக் கொடுப்பர்; எம்மை அங்கேயே தங்கும்படி செய்வர் என்று புலால் உணவின் சுவையைப் புகழ்ந்துள்ளனர். துராஅய் துற்றிய துறவை அம்புழுக்கின் பாராரை வேவைப் பருகு எனத் தண்டி; காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி; அவை அவை முனிகுவம் எனினே, சுவைய வேறுபல் உருவின் விரகுதந்து இரீஉ ( 103- 108) இவ்வடிகளின் பொருளே மேலே கூறப்பட்டது. இதனால் மாமிச உணவை எவ்வளவு இன்சுவை உணவாகக் கொண்டிருந் தனர் தமிழர் என்பதைக் காணலாம். மாமிச உணவைத் தவிர நல்ல காய்கறிகளைச் சமைக்கவும் அறிந்திருந் தனர்; நல்ல தானியங்களைச் சமைக்கவும் கற்றிருந் தனர். கடினமற்ற அரிசி; முழு அரிசி. இத்தகைய அரிசியால் ஆக்கப்பட்ட சோறு; விரல்போல் நிமிர்ந்து தனித்தனியாகச் சேர்ந்திருக்கின்ற சோறு. அதைப் பால் விட்டுச் சமைத்த பொரிக் கறிகளோடும், புளிக்கறிகளோடும் மிகுதியாகத் தின்போம். முரவை போகிய முரியா அரிசி, விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல். பால்வறைக் கருணை காடியின் மிதப்ப அயின்ற காலை. (113-116) இந்த அடிகளால் பழந்தமிழர் சைவ உணவு சமைத்த முறையைக் காணலாம். ஆகவே பண்டைத்தமிழர்கள் மதுவருந்தினர்; மாமிசம் உண்டனர்; மரக்கறிகளும் சாப்பிட்டனர். இவைகளை விருந்தி னர்க்கும் இட்டு மகிழ்ந்தனர். பண்டைத் தமிழர்களின் விருந் தோம்பும் பண்பாட்டையும் இவைகளின் மூலம் காணலாம். காக்கைக்குச் சோறு உண்பதற்கு முன் காக்கைக்குச் சோறிடுவது தமிழரின் பண்டை வழக்கம். இன்னும் இவ்வழக்கத்தைப் பின்பற்றும் தமிழர் பலர் உண்டு. விரத நாட்களில் காக்கைக்குச் சோறிட்ட பிறகுதான் சாப்பிடுவது என்ற வழக்கத்தைப் பலர் பின்பற்றி வரு கின்றனர். தமிழர்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றியதற்கு நல்ல தோர் காரணம் உண்டென்று கூறுவர். தாம் உண்ணப்போகும் உணவில் ஏதேனும் நஞ்சு கலந்திருக்கிறதா என்று ஆராய்வதற் காகவே இப்பழக்கம் கையாளப்பட்டதாகச் சொல்லுகின்றனர். உயரமற்ற தென்னை மரங்கள் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த சோலை; அந்தத் தென்னந்தோப்பின் வாசலில் நெற்குதிர் நிற்குன்ற குடிசை; அந்தக் குடிசையிலே குடியிருப்போர் இரத்தங் கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அந்தப் பலியைக் கருங்காக்கைகள் உண்டன. தாழ் தாழைத் தண்டலைக் கூடு கெழீஇய குடி வயினால், செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை (181-184) இவ்வடிகள் தமிழரின் பழைய வழக்கம் ஒன்றை எடுத்துக் காட்டுகின்றன. பண்டமாற்று ஒரு பண்டத்தைக் கொடுத்து, அதற்கு மாறாக மற்றொரு பண்டத்தை வாங்கிக்கொள்ளுவதுதான் பண்டைக்கால வாணிக முறை. தமிழ்நாட்டிலும் இந்த முறைதான் இருந்து வந்தது. இதனாலேயே வாணிகத்துக்குப் பண்டமாற்று என்ற பெயர் வைத்தனர். இம்முறையைப் பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் அழகாகக் கூறியுள்ளார். தேனையும், நெய்யையும், கிழங்கையும் கொடுத்தவர்கள் அவைகளுக்கு மாறாக மீன், நெய், மது இவைகளை வாங்கிக் கொண்டு போகின்றனர். தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர். மீன் நெய்யொடு, நறவு மறுகவும் (214-215) இனிய கரும்பு, அவல் ஆகியவைகளைக் கொடுத்தவர்கள் அவைகளுக்கு மாறாக மான் இறைச்சியையும் கள்ளையும் வாங்கிக்கொண்டு போகின்றனர். தீம் கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் (216- 217) இவைகளால் பண்டமாற்று என்றால் இன்னதென்று அறிந்து கொள்ளலாம். கரிகாலன் பெருமை கரிகாற்சோழன் உலகத்தை ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்டவன்; குடி மக்களின்பால் குறையாத அன்பு கொண்டவன்; அறங்கூறும் நூல்களை அறிந்து அம்முறையைப் பின்பற்றி ஆட்சிபுரிந்தவன்; பகைவர்களை வெல்லும் வேற்படையை யுடைய சிறந்த வீரன் இவ்வாறு அவனுடைய ஆட்சியைப் பற்றி யும், ஆண்மையைப் பற்றியும் இந்நூலாசிரியர் பாராட்டுகிறார். ஒரு குடையான் ஒன்று கூறப் பெரிதாண்ட பெருங் கேண்மை, அறனொடு புணர்ந்த திறன்அறி செங்கோல், அன்னோன் வாழி, வெல்வேற் குரிசில் (228-231) இதுவே அந்தப் பாராட்டுரை. இவன் நடு நிலைமை தவறாமல் நீதி வழங்குவோன் என்பதற்கு உதாரணமாக இவன் வரலாற்றுக் குறிப்பொன்றை இந் நூல் சுட்டிக்காட்டுகின்றது. முதியோர் இருவர்க்குள் முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் முரண்பாட்டைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடிய வில்லை. கரிகாலனிடம் வழக்குரைத்து நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். அவனால் தங்கள் வழக்கை ஆராய்ந்து உண்மை உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் அறிந்தான் கரிகாலன். அவர்களுடைய வழக்கை மற்றொரு வயது முதிர்ந்த அறநூல் அறிந்தவரிடம் மாற்று வதாகக் கூறினான். பின்னர் தானே முதியவனைப் போல நரைமுடியும் தாடியுமுடையவனாய் வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டான். இருவரும் ஒப்புக்கொள்ளும் படி நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை முதியோர், அவைபுகு பொழுதில் தம் பகைமுரண் செலவும் (188) என்ற அடியினால் குறிப்பிடுகிறது இந்நூல். இதனால் பண்டைத் தமிழ் மன்னர்களின் நீதியையும், நேர்மையையும் காணலாம். கரிகாலன் யானையால் கொண்டு வரப்பட்டுப் பட்டம் சூட்டப்பட்டவன் என்ற கதை இந்நூலால் மறுக்கப்படுகிறது. பொருநர் ஆற்றுப்படையிலே குறிக்கப்படும் கரிகாலன் அந்தக் கதைக்குரியவன் அல்லன். இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன்; தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே அரசனாகும் உரிமையுடன் பிறந்தவன். முருகனைப் போன்ற ஆற்றலும் அழகும் உடையவன் என்று கூறுகிறது. இதனை, உருவப் பஃறேர் இளையோன் சிறுவன், முருகன் சீற்றத்து உருகெழு குரிசில், தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி (130-132) என்ற அடிகளால் அறியலாம். இக்கரிகாற்சோழன், வெண்ணி என்ற இடத்திலே சேரனை யும், பாண்டியனையும் போரிலே தோற்கடித்தான்; வெற்றி மாலை சூடினான். இச்செய்தியையும் இவனுடைய வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளம்புகிறது இந்நூல். காவிரியின் சிறப்பு சோழ நாட்டிற்குக் காவிரிநாடு, பொன்னி நாடு என்ற பெயர்கள் உண்டு. காவிரி நதி பாய்வதால் காவிரி நாடு. காவிரிக் குப் பொன்னி என்று மற்றொரு பெயர். ஆதலால் பொன்னி நதி பாய்வதால் பொன்னிநாடு. காவிரியாற்றுப் பாய்ச்சல்தான் சோணாடு சோறுடைத்து என்று சொல்லும்படி செய்வது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சோழநாட்டில் ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததாகக் கூறுகிறது இந்நூல். ஒரு வேலி என்பது ஆறு ஏக்கரும் மூன்றில் இரண்டு பாக ஏக்கரும் கொண்டது. ஒரு கலம் என்பது 24படி கொண்டது. இவ்வாறு வேலி ஆயிரம் விளைந்ததற்குக் காரணம் காவிரியாறுதான் என்று கூறுகிறார் இந்நூலாசிரியர். செந்நெல்லைக் கொண்டிருக்கின்ற நிலம்; வேலி ஒன்றுக்கு ஆயிரம் கலம் விளையும்படியுள்ள நிலம்; காவிரியால் காப்பாற்றப்படும் சோழநாட்டில் உள்ள நிலம். சாலி நெல்லின் சிறைகொள், வேலி ஆயிரம் விளையுட்டாகக், காவிரி புரக்கும் நாடு (246-248) என்பதனால் இவ்வுண்மையைக் காணலாம். வேலிக்கு ஆயிரம் கலம் விளைந்ததென்பது புனைந்துரை யன்று; உண்மை யுரையாகும். ஒரு ஏக்கருக்கு 150 கலம் விளைந்த தாகக் கூறுகிறது. இன்றும் சோழ நாட்டில் ஏக்கர் ஒன்றுக்கு 150 கலம் விளையக்கூடிய பகுதிகள் இருக் கின்றன. இதற்குக் குறைந்து விளையும் பகுதிகளிலும் நிலத்தைப் பண்படுத் தினால் இந்த அளவு விளைவிக்க முடியும். இன்னும் பல செய்திகள் பண்டைத்தமிழர் நாகரிகம் பலவற்றை இந்தப் பொருநர் ஆற்றுப்படையிலே பார்க்கலாம். பண்டைத் தமிழர்கள் பொன்னால் அழகிய நகைகள் செய்து அணிந்தனர். செல்வர்கள் வீட்டிலே பொன்னாற் செய்த பாத்திரங்கள் இருந்தன. இசை பாடுவோர் முதலில் தெய்வத்தை வாழ்த்திய பிறகு தான் பாடத் தொடங்குவார்கள். மறுபிறப்பிலே நம்பிக்கையுண்டு; இம்மையிலே செய்த தவம் மறுமையிலே பயன்தரும் என்று நம்பினர். விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது அவருடன் ஏழடி நடந்து சென்று அன்புரை புகன்று அனுப்பிவைப்பர். உழவுத்தொழில் மிகச் சிறந்த முறையிலே நடைபெற்று வந்தது. இவைபோன்ற இன்னும்பல செய்திகளும் பொருநர் ஆற்றுப் படையிலே காணப்படுகின்றன. சிறப்பாகக் கரிகாற் சோழனுடைய பெருமையையும், அவன் ஆண்ட சோழ நாட்டின் சிறப்பையும் எடுத்துக்காட்டுவதே இந்நூலின் நோக்கம். பழந் தமிழ்க் கவியின் பண்பறிந்தோர்க்கு இந்நூலின் சொற்சுவையும் பொருட்சுவையும் இன்பம் சுரக்கும். 4 சிறுபாணாற்றுப்படை பாணர் வரலாறு இது பத்துப்பாட்டுள் மூன்றாவது பாட்டு; 269 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் ஆகியது. பாணரைஆற்றுப்படுத்துவது பாண் ஆற்றுப்படை; பாணருக்கு வழிகூறி அவ்வழியிலே போகவிடுவது என்பதே இதன் பொருள். பாண்- யாழ். பாண் வாசிப்பவர் பாணர். பாண் வாசிக்கும் பெண் பாணினி. பாண்- இசை, பண்ணைப் பாடுவோர் பாணர் என்றும் கூறுவர். பழந்தமிழ் நாட்டிலே பாணர் என்று ஒரு வகுப்பினர் இருந் தனர். பாண் வாசிக்கும் தொழில் காரணமாக இவர்களைப் பாணர் என்றழைத்தனர். பொருநர், பாணர், கூத்தர் என்பவர்கள் ஒரே வகுப்பினராக இருந்திருக்க வேண்டும். இவ்வகுப்பினரைச் சேர்ந்த பெண்களுக்குப் பாடினி, பாணினி விறலி என்ற பெயர்கள் உண்டு. பாணருள் மூவகையினர் உண்டு. அவர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என்பவர்கள். சங்கீதம் பாடுவோர் இசைப்பாணர். யாழ் வாசிப்போர் யாழ்ப்பாணர். பிச்சை ஏற்றுப் பிழைப்போர் மண்டைப்பாணர். பாணர், பொருநர், கூத்தர் முதலியவர்கள் தமக்குப் பரி சளிப்போரைப் புகழ்ந்து பாடுவார்கள். சங்கீதம், நடனம், பல் வகை வாத்தியங்களை வாசித்தல் போன்ற கலைகளிலே கைதேர்ந் தவர்கள். இவர்கள் அரசர்கள், சிற்றரசர்கள், நிலத்தலைவர் களின் குடும்ப நண்பர்கள். கணவனுக்கும் மனைவிக்கும் ஊடல். உண்டான சமயங்களில் அவர்களுக்கிடையிலே தூதர்களாய் நின்று சமாதானம் செய்து வைப்பார்கள். பண்டைத் தமிழகத்தில் விலைமாதர், கணிகையர், வரைவின் மகளிர் (மணம் செய்துகொள்ளாத பெண்கள்) என்று வழங்கும் வேசையர்கள் இருந்தனர். இவர்கள் விபசாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் மேற்கூறிய கலைஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. பாண் ஆற்றுப்படைகள் பத்துப்பாட்டுள் இரண்டு பாணாற்றுப் படைகள் இருக்கின்றன. ஒன்று சிறுபாண் ஆற்றுப்படை; மற்றொன்று பெரும்பாண் ஆற்றுப்படை . ஒன்று அளவிலே சிறியது; குறைந்த அடிகளை உடையது. அதனால் சிறுபாண் ஆற்றுப்படை என்று பெயர்பெற்றது. மற்றொன்று அளவிலே பெரியது; நிறைந்த அடிகளை உடையது. ஆதலால் பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் பெற்றது. சிறிய யாழை வாசிப்போர் சிறுபாணர்; பெரியயாழை வாசிப்போர் பெரும்பாணர். சிறுபாணரை ஆற்றுப்படுத்தியது சிறுபாண் ஆற்றுப்படை; பெரிய பாணரை ஆற்றுப்படுத்தியது பெரும்பாண் ஆற்றுப்படை என்றும் கூறலாம். இதற்கும் ஆதரவு உண்டு. ஆசிரியர் இந்தச் சிறுபாண் ஆற்றுப்படையின் ஆசிரியர் நத்தத்தனார். இவர் நல்லூர் என்னும் ஊரிலே பிறந்தவர்; அல்லது வாழ்ந்தவர். நல்லூர் என்பது இடைகழி நாட்டிலே உள்ள ஓர் ஊர். இடைகழி நாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கில் உள்ளது. உப்பங்கழிகளுக்கு இடையில் உள்ள நாடு இடைகழி நாடு. இது தொண்டைநாட்டின் ஒரு பகுதி. இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று இப்புலவர் பெயர் நீளமாக வழங்கப்படு கின்றது. இப்பெயரைக் கொண்டே இவர் வரலாற்றை ஊகிக்க முடிகின்றது. பாட்டின் தலைவன் இந்நூல் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்பவன் மேல் பாடப்பட்டது. இவன் கடையெழு வள்ளல்களுக்குப் பிற்காலத் தில் இருந்தவன். அவர்களைப் போன்ற சிறந்த கொடையாளி. ஓவியர் குடியிலே பிறந்தவன். ஓய்மான் நாடு திண்டிவனத்தை உள்ளிட்ட- தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவனுடைய ஆட்சிக்குள் மாவிலங்கை, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்ற நகரங்கள் அடங்கியிருந்தன. மாவிலங்கை இவனது தலைநகரம். நல்லியக்கோடன், ஓய்மான் நல்லியக் கோடன் என்றும் இவன் பெயர் வழங்கும். சேரநாட்டின் செல்வம், பாண்டிய நாட்டின் பெருமை, சோழநாட்டின் செழிப்பு, கடையெழு வள்ளல்களின் வரலாறு, நல்லியக்கோடன் ஆண்மை, கொடை ஆகியவைகளை இந் நூலிலே பார்க்கலாம். தமிழ் நாட்டின் வளத்தையும், தமிழர் களின் சிறப்பையும், நாகரிகத்தையும் இந்நூலிலே நன்கு காணலாம். பாட்டின் அமைப்பு நல்லியக்கோடனிடம் பரிசு பெற்ற பாணன் ஒருவன் பாலைநிலத்தின் வழியே வந்துகொண்டிருந்தான். வரும் வழியிலே மற்றொரு பாணனைப் பார்த்தான். அவன் பரிசு தரும் வள்ளலைத்தேடி வழிநடந்து வந்தான். அவனுடன் அவன் மனைவி மக்களும் வந்தனர். அவர்கள் வழிநடை வருத்தந் தீர ஒரு மரநிழலிலே தங்கியிருந்தனர். பரிசு பெற்றுவந்த பாணன் பரிசு தேடிவந்த பாணனை நெருங்கினான். அவனும் தன்னைப்போல வறுமையின்றி வாழவேண்டும் என்று எண்ணினான். அவனுக்கு நல்லியக்கோடனுடைய நற்பண்புகளையெல்லாம் நவின்றான். நல்லியக்கோடனுடைய நாடு சேரநாட்டைக் காட்டினும் செல்வம் நிறைந்தது; பாண்டிய நாட்டைக் காட்டிலும் பலவகை வளங்கள் கொழிப்பது; சோழ நாட்டைக் காட்டிலும் செழிப்பு டையது. அவன் ஆளுகைக்குட்பட்ட நகரங்களும் செல்வத்திலே சிறந்து நிற்பவை; அந்நகரங்களிலே வாழ்வோரும் விருந்தினரை விரும்பிப் போற்றுவார்கள். நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களைப் போன்ற கொடையாளி. அவனிடம் போய் அவனைப் புகழ்ந்து பாடுவாயானால் உன் வறுமை தீரச் செல்வங்களை வாரி வாரி வழங்குவான் இவ்வாறு பரிசில் பெற்ற பாணன், பரிசில் பெறாத பாணனிடம் கூறினான். நல்லியக்கோடன் வீற்றிருக்கும் தலைநகரை அடைவதற் கான வழியையும் சொன்னான். இந்த முறையில் இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நூலைப் பாடிய புலவர் நத்தத்தனார் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றித்திரிந்தவராக இருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத் தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார் இவ்வாசிரியர். இந்நூலைப் படிப்போர் இவ்வுண்மையை ஒப்புக் கொள்வார்கள். சேர நாட்டின் சிறப்பு இந்நூல் தோன்றிய காலத்திலே சேரநாடு செல்வம் கொழிக்கும் சிறந்த நாடாக இருந்தது. அந்த நாட்டின் இயற்கை வளத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் இவ்வுண்மையை விளக்கு கிறார் இவ்வாசிரியர். பெரிய வாயையுடைய எருமை, கொழுத்த மீன்கள் காலடியிலேபட்டு நசுங்கும்படி வயலிலே இறங்கி நடந்தது. செழித்த இதழ்களையுடைய செங்கழுநீர் மலர்களை மேய்ந்தது. பின்னர் அசைபோட்டுக்கொண்டு கரையேறிற்று. பசுமையான மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கின்ற ஒரு பலாமரத்தின் நிழலை அடைந்தது; அங்கே முளைத்திருக்கின்ற மஞ்சளின் மெல்லிய இலைகள் மயிர்நிறைந்த அந்த எருமையின் முதுகைத் தடவிக்கொடுத்தன. அந்த எருமையும் முதிர்ச்சியடையாத புதிய தேன்மணம் கமழும் அந்தச் செங்கழுநீர் மலர்களை மென்றுகொண்டே அசைந்து காட்டுமல்லிகைகள் நிறைந்த படுக்கையிலே படுத்துக் கொண்டது. இவ்வாறு ஒரு எருமையின் செயலை எடுத்துக்காட்டுவதன் வாயிலாகச் சேர நாட்டின் நீர் வளத்தையும், நில வளத்தையும் விளக்கிக் காட்டுகின்றார். எருமை போன்ற விலங்குகளே இவ் வளவு மகிழ்ச்சியுடன் வாழும்போது அந்நாட்டிலே நிலைத்து வாழும் மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை, பைங்கறி நிவந்த பலவின் நீழல், மஞ்சள் மெல் இலை மயிர்ப்புறம் தைவர, விளையா இளங்கள் நாற மெல்குபு பெயராக் குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46) என்ற அடிகள் இவ்வுண்மையைக் காட்டுகின்றன. இந்தச் சேர நாட்டைப் பற்றிச் சொல்லும்போது சேரன் செங்குட்டுவன் என்ற வீரனைப் பற்றியும் விளம்பியிருக்கின்றார். வடதிசையிலே உள்ள இமயமலையிலே வளைவான தனது வில் முத்திரையைப் பொறித்தவன்; உலக்கை போன்ற திரண்ட வலிமையான தோள்களை உடையவன்: தேர்ப்படை களையுடைய செங்குட்டுவன் என்று சொல்லுகிறார். வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த எழுஉறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் (48-49) என்ற அடிகளால் இதனைக் காணலாம். சிலப்பதிகாரச் செங்குட்டுவனும் இவனும் ஒன்று என்று கூறுவதற்கான சான்று இதில் இல்லை. சிலப்பதிகாரச் செங் குட்டுவன் கண்ணகியின் உருவச் சிலைக்கான கல் கொண்டுவரவே வடநாடு நோக்கிச் சென்றான்; தன்னை யிகழ்ந்த வடவர்களுடன் போர் புரிந்தான். இவ்வாறு சிலப்பதிகாரம் சொல்லுகிறது. இப் பாட்டில் சேரன் செங்குட்டுவனைப் பற்றிக் கூறும் இடத்திலும், மதுரைக் காஞ்சியில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிப் பேசுமிடத்திலும் சிலப்பதிகார மணம் சிறிதும் வீசவேயில்லை. இது குறிப்பிடத்தக்கது. பாண்டிய நாட்டின் பெருமை இதற்கு அடுத்தாற்போல் பாண்டிய நாட்டின் பெருமை யைப் பற்றிப் பாடுகிறார். அக்காலத்திலே கொற்கை நகரம் பாண்டிய நாட்டின் துறைமுகப்பட்டினம். மதுரை நகரம் பாண்டிய நாட்டின் தலைநகரம். இவ்விரண்டு நகரங்களின் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார் இவ்வாசிரியர். கொற்கையின் செல்வம் முத்தும் உப்புமாகும். பாண்டிய நாட்டின் பழஞ்செல்வம் முத்து என்பதைப் பல இலக்கியங் களிலும் காணலாம். பாண்டிய நாட்டின் முத்து பிற நாடுகளுக் கும் ஏற்றுமதியாகியிருக்கின்றது. கொற்கையிலே உப்பு வாணிகர்கள் வண்டியிலே உப்பை ஏற்றிக்கொண்டு வியாபாரத்துக்குப் புறப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மனைவி மக்களுடன் செல்கின்றனர். வெளியூருக்கு வியாபாரத்திற்குப் போகும்போது குடும்பத்துடன் புறப்படுவது அக்கால வழக்கம். வலிமையான எருமைக் கடாவைப் பூட்டிய வண்டியிலே உப்பை ஏற்றிக்கொண்டு போகின்றனர் உப்பு வாணிகர். அவர்கள் வண்டியின் சக்கரச் சுவட்டின் வழியே குழந்தைகளைப் போன்ற குரங்குகளும் தொடர்ந்து வந்தன. அந்த உப்பு வாணிகரின் பெண்கள் தங்கள் பற்களைப்போல் ஒளி வீசும் முத்துக்களை, கிளிஞ்சல்கள் முத்துக்களை மூடியிருப்பதுபோல் தங்கள் மடிகளிலே மறைத்து வைத்திருக்கின்றனர். அவர்கள் தங்கும் இடங்களிலே நீண்ட கூந்தலையும், சிறிய இடையையும் உடைய பெண்களின் புதல்வர்களுடன் அந்தக் குரங்குகள் கிலுகிலு என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கூறுவதன் மூலம் கொற்கையின் செல்வம் முத்தும் உப்பும் என்பதைக் காட்டுகிறார். நோன் பகட்டு உமணர் ஒழுகை யொடு வந்த மகாஅர் அன்ன மந்தி, மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம், வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித், தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி யாடும் (55- 61) இவ்வடிகள் மேலே சொல்லிய செய்தியை விளக்குவன. மதுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது செந்தமிழ் மொழி நிலைத்து நின்று வளர்வது; மிகுந்த பழம்பெருமை வாய்ந்தது; மகிழ்ச்சி மிகுந்திருக்கின்ற மக்கள் வாழும் தெருக்களையுடையது; இத்தகைய சிறப்புடையது மதுரையம்பதி என்று பாடியுள் ளார். இதனை தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனை மறுகின் மதுரை ( 66- 67) என்பதனால் காணலாம். தமிழ்ச் சங்கம் நிலைபெற்று நின்று தமிழ் வளர்த்தது மதுரையம்பதி என்ற கருத்தும் இவ்வடிகளிலே காணக்கிடக் கின்றது. மதுரையின் பெருமைக்குத் தமிழ் நிலைபெற்றிருப்பதைச் சிறப்பாக எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சோழ நாட்டின் செழிப்பு அடுத்தபடியாகச் சோழ நாட்டின் சிறப்பைக் கூறும் போது அது நீர்வளங் குன்றாத நாடு என்று குறிப்பிடுகின்றார். சோழ நாட்டில் வயல்களிலே தாமரைகள் பூத்திருக்கின்றன; அத் தாமரைகளிலே வண்டுகள் தங்கள் பெடைகளைத் தழுவிக் கொண்டு சீகாமரம் என்னும் பண்ணைப் பாடிக் கொண்டிருக் கின்றன என்று கூறுகின்றார். அழகிய முகம்போல் மலர்ந்திருக்கின்றன தெய்வத் தாம ரைகள். உள்ளங்கையிலே சாதிலிங்கம் படிந்தாற்போல் சிவந்த இதழ்கள் அமைந்த செம்பொன் ஆசனமாக அத்தாமரைகள் விளங்குகின்றன. அந்த ஆசனங்களிலே அழகிய தும்பிகள் தாங்கள் விரும்பும் அழகிய பெடை வண்டுகளைத் தழுவிச் சிறகுகளை அடித்துக் கொண்டு சீகாமரம் என்னும் பண்ணைப் பாடிக்கொண்டிருக்கும். இத்தகைய குளிர்ந்த - குறையாத செல்வ முடைய- கிழக்குத் திசையில் உள்ள சோழனாடு என்று சோழ நாட்டைக் குறிப்பிடுகிறார். இதனை, திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை ஆசில் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன சேயிதழ் பொதிந்த செம்பொன் கொட்டை, ஏம இன்துணை தழீஇ இறகுளர்ந்து காமர் தும்பி காமரம் செப்பும் தண்பணை தழீஇய தளரா இருக்கைக் குணபுலம் (73-79) என்ற அடிகளிலே காணலாம். இந்நூல் தோன்றிய காலத்திலே உறையூர் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது. உறையூரைப் பற்றி இவர் குறிப்பிடும் போது, ஓடாப்பூட்கை உறந்தை (83) என்று தீட்டியிருக்கிறார். பகைவர்களுக்குத் தோற்று ஓடாத வலிமை வாய்ந்த உறையூர் என்பது இதன் பொருள். இதனால் சோழர் தலைநகரின் சிறப்பையும் சோழமன்னரின் வீரத்தையும் காணலாம். நல்லியக்கோடனுடைய நாட்டிலே எண்ணற்ற செல்வங்கள் இருந்தன; வளமிகுந்த சேர, பாண்டிய, சோழ நாட்டைக் காட்டிலும் வற்றாத செல்வங்கள் குவிந்திருந்தன; ஓய்மானாடே உயர்ந்த செல்வமுடைய நாடு என்பதைக் குறிக்கவே முடியுடை வேந்தர்கள் மூவர் நாட்டையும் புகழ்ந்து பாடினார் இவ்வாசிரியர். கடையெழு வள்ளல்கள் இதன் பிறகு கடையெழுவள்ளல்களின் வரலாற்றுக் குறிப்பை நத்தத்தனார் எடுத்துக் கூறியிருக்கும் இயல்பு பாராட்டத்தக்கது. ஒவ்வொரு வள்ளலும் செய்த தன்னலங் கருதாச் செயலைச் சுட்டிக்காட்டி அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதனை 84-வது அடி முதல் 111-வது அடி வரையில் உள்ள 28 வரிகளிலே காணலாம். கடையெழு வள்ளல்களின் வரலாற்றைக் காண்பதற்கு நல்லூர் நத்தத்தனார் கொடுத்திருக்கும் குறிப்பே பெரிதும் துணை செய்வதாகும். அக்குறிப்புக்கள் கீழே வருவன:- பேகன் மழை வளமுடைய மலையின் பக்கத்திலே கானமயி லொன்று கலாபத்தை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் குளிர் தாங்காமல் நடுங்குகின்றது என்று எண்ணி னான். உடனே தனது போர்வையை அதன் மீது போர்த்தினான். இவன் நல்ல வலிமை வாய்ந்தவன். ஆவியர் குடியிலே பிறந்தவன். பேகன் என்னும் பெயருடையவன். வானம் வாய்த்த வளமலைக் கவாஅன், கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய, அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், பெருங்கல் நாடன் பேகனும் (84-87) பாரி வண்டுகள் உண்ணும்படி நல்ல மலர்களின் மூலம் தேனைச் சிந்திக்கொண்டிருக்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழி யிலே - சிறிய மலர்களையுடைய முல்லைக்கொடியொன்று பற்றிப்படரக் கொழு கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன், தான் ஏறிவந்த பெரிய தேரினை அம் முல்லைக்கொடி படரும்படி அதன் அருகிலே நிறுத்தி வைத்தான். இவன் விளங்குகின்ற வெண்மையான அருவிகளையுடைய பறம்பு மலையின் தலைவன்; பாரியென்னும் பெயருடையவன். சுரும்புண நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய, பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல், பறம்பின் கோமான் பாரியும் (87-91) காரி உலகம் வியக்கும்படி - ஒலிக்கின்ற மணிகளையும், வெண் மையான பிடரி மயிரினையும் உடைய குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்களுக்கு இல்லையென்னாமல் ஈந்தவன். நெருப்பைப்போல் சுடர் விடுகின்ற- பகைவர்களுக்குப் பயங்கரமாகக் காணப்படுகின்ற- நீண்ட வேற் படையை உடையவன்; வீரக்கழலையும், தோள் வளையத்தையும் அணிந்தவன்; நீண்ட கையை உடையவன் காரி என்பவன். கறங்குமணி வால் உளைப் புரவியொடு வையகம் மருள. ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த, அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல். கழல் தொடித் தடக்கைக் காரியும் (91-95) ஆய் ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று தனக்குக் கொடுத்த ஓர் அரிய ஆடையைக் கல்லாலின் கீழமர்ந்த சிவ பெருமானுக்கு அளித்தான்; பக்தியுடன் கொடுத்தான். இவன் வில்லைச் சுமந்தவன்; வலிமையான தோள்களையுடையவன். அத்தோள்களிலே சந்தனத்தை அணிந்திருப்பவன். இரவலர்கள் பால் எப்பொழுதும் அன்புடன் நன்மொழிகளையே நவில்பவன். ஆய் என்னும் பெயருடையவன். நிழல் திகழ் நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வர்க்கு அமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள், ஆர்வ நன்மொழி ஆயும் (95-99) அதிகமான் பூமணம் கமழ்கின்ற பெரிய மலைச்சாரலிலே பொருந்தி யிருந்த நெல்லி மரத்திலே கிடைத்தது அமுதத்தைப் போல சாவாமையைத் தரும் இனிய நெல்லிக்கனி. அதனைத் தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டியாகிய ஔவைக்களித்தான். இவன் பகைவர்களிடம் வலிமையைக் காட்டுவான்; சினத்தைச் செலுத்துவான். ஒளி விடுகின்ற நீண்ட வேற்படையை உடைய வன்; ஓசையிடும் கடல் போன்ற பெரிய சேனையை வைத்திருப் பவன். அதிகமான் என்னும் பெயருடையவன். மால் வரைக் கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி, அமிழ்துவிளை தீம்கனி ஔவைக்கு ஈந்த, உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல், அரவக் கடல் தானை அதிகனும் (99-103) நள்ளி தன்னிடம் உள்ள பொருளை ஒளிக்க மாட்டான்; தன்பால் அன்பு காட்டுவோர் அனைவரும் மகிழும்படி செய்வான்; வறி யோர்களுக்கு அவர்கள் இல்வாழ்வை இனிது நடத்துவதற்கான எல்லாச் செல்வங்களையும் கொடுப்பான். இவன் போர் முனை யிலே வெற்றி பெறும் ஆற்றலுள்ளவன். நீண்ட கைகளையுடைய வன். இடைவிடாத மழைத்துளி- எப்பொழுதும் வீசிக் கொண்டி ருக்கும் காற்று- உயர்ந்த சிகரங்கள்- இவைகள் அமைந்த குளிர்ந்த மலை நாட்டின் தலைவன். நள்ளியென்னும் பெயர் பெற்றவன். கரவாது நட்டோர் உவப்ப, நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக்கைத் துளிமழை பொழியும், வளிதுஞ்சு நெடுங்கோட்டு, நளிமலை நாடன் நள்ளியும் (103-107) ஓரி நெருங்கிய கிளைகள்- பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்கள்- இளமையும் முதிர்ச்சியும் உடையவை- இத்தகைய சுர புன்னை மரங்களும் சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாடு. இந் நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாகக் கொடுத்தவன். காரி யென்னும் குதிரையையுடைய மலையமான் திருமுடிக்காரியுடன் போர் செய்தவன். ஓரியென்னும் குதிரையை உடையவன்; ஓரி என்னும் பெயரைக் கொண்டவன். நளிசினை நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக் குறும் பொறை நன்னாடு கோடியர்க் கீந்த, காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக்குதிரை ஓரியும் (107-111) இவை கடையெழு வள்ளல்களின் வரலாற்றுக் குறிப்பு. இவ் வள்ளல்கள் எழுவரும் சமமானவர்கள்; ஏற்றத் தாழ்வில்லாத வர்கள். இதனை ஒவ்வொருவரைப் பற்றியும் நந்நான்கு வரிகளால் பாடியிருப்பதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். இந்த ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையை இவர் களுக்குப் பின் நல்லியக்கோடன் ஒருவனே தாங்கி நடத்தி வந்தான். இதைக் குறிப்பிடுவதற்கே கடையெழு வள்ளல்களின் வரலாற்றுக் குறிப்பை வரிசைப்படுத்திக் கூறினார் இந் நூலாசிரியர். இந்த வள்ளல்கள் அனைவரும் பெருநிலத் தலைவர்கள். குறுநில மன்னர்கள் அல்லது சிற்றரசர்கள் என்று அழைக்கப் பட்டோர் அனைவரும் பெருநிலத் தலைவர்கள். அவர்கள் தாம் வளமுடையோராகவும், வள்ளல்களாகவும் வாழ்ந்து வந்தனர். வறுமை தமிழ்நாட்டிலே வள்ளல்களும், நல்லியக்கோடன் போன்ற கொடையாளிகளும் வாழ்ந்த காலத்திலும் தமிழ் மக்கள் பலர் வறுமையால் வாடினர். உண்ணற்கு உணவின்றிப் பட்டினியால் பரிதவித்தனர். தழைகளையும் கீரைகளையும் வேகவைத்து உண்டு பசி வேதனையைத் தணித்துக்கொண்டனர். இந்த நிலையை அப்படியே சித்தரித்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர். பசியினால் வருந்தி வாடுகின்றவள்; மெல்லிய இடையை உடையவள்; வளையலை அணிந்தவள்; கிணை வாசிப்போன் மனைவி. அவள் வீட்டிலே உணவை ஆக்குவதற்கு ஒரு பண்டமும் இல்லை. குப்பையிலே பயிரான வேளைக் கீரையைக் கூர்மையான நகத்தினால் கிள்ளியெடுத்தாள்; உப்பில்லாமல் வேகவைத்தாள். அறியாதவர்கள் அதைப் பார்த்தால் பரிகசிப்பார்களே என்று நாணமடைந்தாள். ஆதலால் வாயிற் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டாள்; உள்ளே நிறைந்த சுற்றமுடன் உட்கார்ந்து அதனை உண்டாள். இவ்வாறு ஒரு ஏழைக் குடும் பத்தின் நிலைமையை எடுத்துக் கூறியிருக்கிறார். ஒல்கு பசியுழந்த ஒடுங்கு நுண்மருங்குல் வளைக்கைக் கிணைமகள், வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை, மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து, இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் (135-139) இந்த அடிகள் அந்தக் குடும்பத்தின் நிலையைக் காட்டு கின்றன. ஒரு குடும்பப் பெண்ணின் உயர்ந்த பண்பையும் இவ்வடிகள் காட்டுகின்றன. உணவு வகை அக்காலத்தில் பெரும்பாலான தமிழ்மக்கள் எத்தகைய உணவுகளை உண்டு உயிர் வாழ்ந்தனர் என்பதை இந்நூலிலே காணலாம் நெய்தல் நிலத்திலே வாழ்வோர் மீன் உணவையே மிகுதி யாக உட்கொள்வார்கள். காய்ந்த குழல்மீனைச் சுட்ட உணவை ஒவ்வோரிடத்திலும் பெறுவீர்கள். வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் (163) வறல் குழல் என்பது குழல்மீன் கருவாடு. காய்ந்த மீனுக்குக் கருவாடு என்று பெயர். வேடர்குலப் பெண்கள் புளிக்கறி செய்வார்கள்; சோறும் சமைப்பார்கள்; வேட்டையாடிக் கொண்டுவந்த ஆமான் முதலியவற்றையும் சமைப்பார்கள்; இவற்றையே விருந்தினர்க்கும் இட்டு உபசரிப்பார்கள். எயிற்றியரால் சமைக்கப்பட்ட இனிய புளிக்கறியையும், விரும்பத்தக்க சோற்றையும் ஆமானுடைய சூட்டிறைச்சியையும், மாந்தளிர் போன்ற மேனியை உடைய - வளையலையணிந்த -உமது பெண்களும் நீங்களும் பெறுவீர்கள். எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு தேமா மேனிச் சில்வளை ஆயமொடு, ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் (175-77) உழவர்குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக் குவார்கள். வயல்களிலே பிடித்த நண்டையும் கொல்லையிலே காய்த்த பீர்க்கங்காயையும் சேர்த்துச் சமைப்பார்கள். தாமும் உண்பர்; விருந்தினருக்கும் இடுவர். வைரம் பாய்ந்த உலக்கையின் இரும்புப் பூணால் குற்றி யெடுத்த சிறந்த வெண்மையான சோறு; கிளைத்த கால்களை யுடைய நண்டோடு பீர்க்கங்காயையும் சேர்த்துச் சமைத்த கறி; இவைகளைப் பெற்று உண்பீர்கள். இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர். இவைகளால் வலைஞர், வேடர், உழவர் ஆகியோர் உண்ணும் உணவு வகைகளைக் காணலாம். (193-195) நல்லியக்கோடன் பெருமை இவன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கும் புலவர்க் கும், அருமறை பயின்ற அந்தணர்களுக்கும் எப்பொழுதும் காட்சி தருவான். அவர்கள் வேண்டுவனவற்றை விருப்புடன் கொடுப் பான். இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தேயிருக்கும். இதனை, பொருநர்க்காயினும் புலவர்க்காயினும் அருமறை நாவின் அந்தணர்க்காயினும் கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன அடையா வாயிலவன் என்ற அடிகளால் அறியலாம். (203-206) இவன் அறிஞர்களைக் கண்டபோது அன்புடன் கைகுவித்து வணங்குவான். இதனை, முதுவோர்க்கு முகிழ்த்த கையினை (231) அறிஞர்க்குக் குவித்த கையினையுடையவனாய்க் காட்சி தருவாய்! என்பதனால் காணலாம். இவன் உழவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் காத்து வந்தான். அவர்கள் வறுமையால் வாடாமல் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால்தான் உணவுப் பொருள் உற்பத்தி குறையாது என்ற உண்மையை உணர்ந்திருந்தான். இதை, ஏரோர்க்கு நிழன்ற கோலினை (233) உழவர்க்கு நன்மையைச் செய்யும் செங்கோலையுடையவன் நீ என்றதனால் அறியலாம். இன்னும் பல இந்தச் சிறுபாணாற்றுப்படையின் மூலம் இன்னும் பல உண்மைகள் நமக்குத் தெரிகின்றன. இந்நூலாசிரியர் காலத்தில் தமிழ்நாட்டில் சிவன் கோயில் கள் இருந்தன. சிவபெருமான் கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி நால்வர்க்கு ஞானோபதேசம் செய்தார். இச்செய்தி தமிழ்நாட்டில் வழங்கிவந்தது. ஆய் என்னும் வள்ளலின் வரலாற்றுக் குறிப்பைக் கொண்டும், ஆலமர்செல்வன் என்ற தொடரைக் கொண்டும் இவ்வுண்மையைக் காணலாம். தமிழ்நாட்டிலே நான்மறை பயின்ற அந்தணர்கள் வாழ்ந் தார்கள்; அவர்கள் நிலப்பிரபுக்களின் ஆதரவிலே வாழ்ந்து வந்தனர். அரசர்களுடைய ஆதரவிலும் வாழ்ந்தனர். அருமறை நாவின் அந்தணர் என்ற தொடரால் இதைக் காணலாம். அந்தணர், அருகா அரும்கடி வியனகர் (187) என்ற தொடரும் இதை விளக்கும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் இந்நூலாசிரியர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தன. இன்னும் பல வகுப்புப் பிரிவுகளும் இருந்தன. இமயமலையைச் சிவபெருமான் வாழும் கைலாயமலை என்று தமிழர்கள் நம்பியிருந்தனர். கடவுண்மால்வரை என்று இமயமலையைக் குறித்திருப்பதன் மூலம் இதை அறியலாம். தமிழ்நாட்டிலே பல சிறந்த தொழில்களும், கலைகளும் வளர்ந்திருந்தன. இவைபோன்ற இன்னும் பல உண்மைகள் இந் நூலிலே உண்டு. 5 பெரும்பாணாற்றுப்படை பெயர்க்காரணம் இது, பத்துப்பாட்டுள் நான்காவது பாட்டு. 500 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது. சிறுபாண் ஆற்றுப் படையைக் காட்டிலும் இது பெரியது. பாணரை ஆற்றுப் படுத்தியது என்பது பொருள். பெரும்பாணரை- அதாவது பெரியயாழ் வாசிக்கும் பாணரை ஆற்றுப்படுத்தியது என்று கூறினும் பொருந்தும். ஆசிரியர் இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர். கண்ணனார் என்பது இவருடைய இயற்கைப் பெயர். இவர் தந்தையின் பெயர் உருத்திரன்; அல்லது உருத்திரனார். இவர் கடியலூரில் பிறந்தவராகவோ அல்லது வாழ்ந்தவராகவோ இருக்கவேண்டும். ஆதலால் இவருடைய தந்தைப் பெயரையும் ஊர்ப்பெயரையும் சேர்த்து இவரைக் கடியலூர் உருத்திரங்கண் ணனார் என்று அழைத்தனர். பத்துப்பாட்டுள் இரண்டு பாட்டுக்கள் இவரால் பாடப் பட்டவை. இந்நூல் ஒன்று; ஒன்பதாம் பாட்டாகிய பட்டினப் பாலை ஒன்று. இவர் பொதுமக்களுடன் நன்றாகக் கலந்து பழகியவர்; அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் தேர்ந்து தெளிந்தவர். பாலைநில மக்கள், குறிஞ்சிநில மக்கள், முல்லைநில மக்கள், மருதநில மக்கள், நெய்தல்நில மக்கள் இவர்களுடைய தொழில் களைப் பற்றியும் உணவு வகைகளைப் பற்றியும் படம் பிடித்தது போல் பாடியுள்ளார். இவர் பாடியிருக்கும் செய்திகள் எல்லாம் அனுபவித்தறிந்த உண்மைகள். பாட்டின் தலைவன் இது தொண்டைமான் இளந்திரையன் மீது பாடப்பட்டது. இவன் தொண்டை நாட்டை ஆண்டவன். இவனது தலை நகரம் காஞ்சிபுரம். இவன் பெயரை இளந்திரையன் என்றும், திரையன் என்றும் வழங்குவர். திரை என்பது கடலுக்கு ஒரு பெயர். திரை - அலை. திரையை உடையது திரை. திரையன் என்பது காரணப்பெயர். திரை வழியாக வந்தவன்; அல்லது திரைகடல் ஓடுவதிலே தேர்ச்சி பெற்றவன். இந்த இளந்திரையன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக வாழ்ந்தான்; சிறந்த செந்தமிழ்ப் புலவனாகவும் விளங்கினான். நற்றிணையில் இவனால் பாடப்பட்ட மூன்று பாடல்கள் உண்டு; புறநானூற்றிலும் ஒரு பாடல் உண்டு. இளந்திரையம் என்ற நூல் ஒன்றையும் அவன் இயற்றியதாகத் தெரிகின்றது. நூலின் அமைப்பு வறுமையால் வாடிய பாணன் ஒருவன் காஞ்சிக்குச் சென்றான். இளந்திரையனைப் புகழ்ந்து பாடினான். அவனிடம் பரிசில் பெற்றான்; வறுமை நீங்கினான். அவன் தனது ஊருக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியிலே, வறுமையால் வருந்தி வள்ளல்களைத் தேடிச் செல்லும் மற்றொரு பாணனைப் பார்த் தான்; அவனுடைய ஏழ்மை நிலைக்கு இரங்கினான். உடனே அவனிடம் அணுகி, அவனுடைய வறுமையொழிந்து வாழ்வு பெற வழி கூறினான். இரவலனே! நான் இளந்திரையனிடம் சென்று பரிசு பெற்று வறுமை தீர்ந்தேன். நீயும் காஞ்சியிலே வாழும் அந்தக் காவலனிடம் போ. வழியிலே உனக்கு எந்த ஆபத்தும் உண்டா காது. அச்சமின்றி வழிநடந்து போகலாம். போகும் இடமெல் லாம் உனக்குத் தாராளமாக உணவு கிடைக்கும். தொண்டை நாட்டில் உள்ள எயினர்களும், ஆயர்களும், உழவர்களும், வலை ஞர்களும், பார்ப்பார்களும், நெய்தல் நிலத்து மக்களும் உன்னை வரவேற்று விருந்தளிப்பார்கள். வழிநடை வருத்தந் தோன்றாமல் காஞ்சி நகரத்தை அடையலாம். இளந்திரையனைக் கண்டு அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடுக. பாடினால் உனது வறுமை நீங்கச் செல்வங்களை வாரி வாரி வழங்குவான்; புத்தாடைகள் தருவான்; இன்சுவை உணவளிப்பான்; உன் பெண்டிர்களுக்குப் பொன்னாபரணங் களைப் பூணக் கொடுப்பான்; தேர்களையும், குதிரைகளையும் பரிசளிப்பான். இவ்வாறு பரிசு பெற்று வந்த பாணன், பரிசு தேடிச் செல்லும் பாணனுக்குச் சொல்லி அவனுக்கு வழிகாட்டி அனுப்பி வைத்தான். இதுவே இந்நூலின் அமைப்பு. இந்த முறையிலே இது பாடப்பட்டுள்ளது. எயிற்றியர் உணவு வெண்மையான பற்களையுடைய வேடர்குலப் பெண்கள் எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற மென்மையான புல்லரிசி யைத் தேடிச் சேர்ப்பார்கள். மான்களைக் கட்டியிருக்கின்ற விளாமரத்தின் அடியிலே- அகழ்ந்திருக்கின்ற உரலிலே- அந்த நெல்லைச் சொரிவார்கள். சிறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் அதைக் குற்றிக் கொழித்தெடுப்பார்கள். ஆழமான கிணற்றிலே கொஞ்சமாக ஊறியிருக்கின்ற உவர் நீரை முகர்ந்து- பழைய வெறும் பானையிலே ஊற்றி- அடுப்பிலே உலை வைப்பார்கள். குற்றியெடுத்த புல்லரிசியை உலையிலிட்டு- அடுப்பு அணையாத படி எரித்துச் சமைத்துச் சோறாக்குவார்கள். அச்சோற்றை உப்புக் கண்டத்தின் துணைகொண்டு உண்பார்கள். வந்த விருந் தினர்க்கும் இவ்வுணவைக் கொடுத்து உபசரிப்பார்கள். நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர். பார்வை யாத்த பறைதாள் விளவின் நீழல் முன்றில் நிலவுரல் பெய்து, குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடும் கிணற்று வல்லூற்று உவரி தோண்டித், தொல்லை முரவு வாய்க் குழிசி அடுப்பேற்றி ஆறாது அட்ட வாடூன் புழுக்கல் (94- 100) இவ்வடிகளால் தனித்திருக்கும் வேடப் பெண்களின் உணவைக் காணலாம். புல்லரிசியும், உப்புக் கண்டமுமே அவர் களுக்கு எப்பொழுதும் கிடைக்கும் உணவு என்று அறியலாம். எயினர் உணவு விற்பிடித்து வேட்டையாடி வாழும் வேடர்களின் உணவு, ஏழை எயிற்றியர்களின் உணவைக் காட்டிலும் ஏற்றமுள்ளது. அவர்கள் உண்ணும் சோறு மேட்டு நிலத்திலே விளைந்த செந்நெற் சோறு. அது, களர் நிலத்திலே வளர்ந்திருக்கும் ஈச்சமரத்தின் விதையைப் போலக் கொழுத்துக் காணப்படும். அச்சோற்றை நாய்களால் பிடித்துக் கொண்டுவந்த உடும்புப் பொரியலுடன் ஒன்று சேர்த்து உண்பர். இவ்வுணவையே விருந் தினர்க்கும் வேண்டுமளவு கொடுப்பர். கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின். களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி, ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்து வயின்தொறும் பெறுகுவிர். (129-133) உழவர் உணவு தொண்டை மண்டலத்திலே நெல் விளைவு குறைவு. புன் செய்ப் பயிர்கள்தாம் மிகுதி. அங்குள்ள உழவர்கள் பெரும் பாலும் புன்செய்ப் பயிர் செய் பவர்கள். அவர்களுடைய உணவும் பெரும்பாலும் புன்செய்த் தானியங்களாகவே இருக்கும். வரகரிசிச் சோற்றை புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து, பெருகிய சோற்றை அவ்வுழவர்கள் உண்டு வந்தனர். இதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர். நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி, புகர் இணர் வேங்கை வீகண்டன்ன அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று, இன்சுவை மூரல் பெறுகுவிர் (192-196) ஏழை உழவர்களின் இயற்கையான உணவு இதுதான் என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன. வரகும் அவரையும் புன்செய்த் தானியங்கள். இந்த உழவர்கள் தாழ்ந்த வகுப்பினர்.; வேளாளர்கள் அல்லர். ஆயர் உணவு முல்லை நில மக்களாகிய இடையர்கள் ஆடு-மாடுகளாகிய செல்வம் படைத்தவர்கள். ஆயினும் அவர்களுடைய உணவும் புன்செய்த் தானியங்கள்தாம். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும், பாலும் அவர்கள் உட்கொள்ளும் உணவாகும். இவ்வுணவையே விருந்தினர்க்கும் இடுவார்கள். இதனை, மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் (166- 168) என்பதனால் அறியலாம். செல்வர் உணவு மற்ற நிலத்து மக்களைக் காட்டிலும் நீர்வளம், நிலவளம் பொருந்திய மருத நிலத்து மக்கள் செல்வமுள்ளவர்கள். வறுமை யறியாதவர்கள்; பசியால் வாடாதவர்கள். மருதநிலப் பகுதியிலே பெரியபெரிய ஊர்களும் உண்டு. இக்காலத்தில் கிராமப் பகுதி களில் வாழும் மக்களைவிட நகரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் உயர்தரமான வாழ்க்கை நடத்துகின்றனர். இதுபோலவேதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இருந்தது. பசியையும் வறுமையையும் அறியாத- பெருங்குடி மக்கள் வாழ்கின்ற- செல்வம் நிறைந்த - பெரிய ஊரிலே தங்கினால் சிறந்த உணவைப் பெறுவீர்கள். ஊக்கமுடன் உழைக்கும் உழைப்பாளர் களால் ஈட்டப்பட்ட வெண்மையான நெற்சோறு கிடைக்கும். அதனுடன் வீட்டிலே வளர்ந்த பெட்டைக்கோழியின் பொரிய லும் கிடைக்கும். இதனை, தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை மல்லல் பேரூர் மடியின், மடியா வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி, மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் (253- 256) என்பதனால் அறியலாம். பார்ப்பார் உணவு பார்ப்பார் வீட்டிற்குச் சென்றால் கிடைக்கும் உணவு இன் னது என்று இவ்வாசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இக் காலத்தைப் போலவே அக்காலத்திலும் அவர்கள் இனிமையான அறுசுவை உணவை ஆக்கி உண்டனர் புலால் புசிக்கமாட்டார் கள். காய்கறி உணவுகளையே உண்டனர். இங்கே கூறப்படும் பார்ப்பார் தமிழ்நாட்டிலேயே பிறந்தவர்கள்; தமிழர் குடியிலே தோன்றியவர்கள். தமிழர்களிலே கல்வியும், அறிவும், தனக்கென வாழாத் தன்மையும், மக்களுக்கு நல்வழிகாட்டும் மாண்பும் பெற்றவர்களே அந்தணர்கள் என்றும், பார்ப்பார்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். இத்தகைய பார்ப்பாரே இந்நூலாசிரியரால் குறிக்கப்பட்டவர் கள் என்று கொள்ளலாம். பார்ப்பார் வாழ்கின்ற இடத்திற்குப் போனால் அருந்ததி யைப் போன்ற கற்புடைய பார்ப்பனப் பெண்களால் சமைக்கப் பட்ட பாற்சோறு, பருப்புச்சோறு முதலியவற்றைப் பெறுவீர்கள். இராஜான்னம் என்று பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோறு கிடைக்கும். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும் கறி வேப்பிலையும் கலந்து, பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியல் கிடைக்கும். நல்ல வடுமாங்காய் கிடைக்கும். இன்னும் தயிர்சாதம், மாங்காய்ச் சாதம், புளியஞ்சாதம் போன்ற பலவகையான சித்திரான்னங்களும் கிடைக்கும் என்று கூறி யுள்ளார் இவ்வாசிரியர். இதனை, மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின் பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறு மீன்புரையும் கற்பின் நறுநுதல் வளைக்கை மகடூஉ வயினறிந்து அட்ட, சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதாநறுமோர் வெண்ணெயின், மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து, கஞ்சக நறுமுறி அளைஈப் பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் வகைப்படப் பெறுகுவிர் (301- 310) இவ்வடிகளால் பார்ப்பார் உணவைக் காணலாம். அக் காலத்துப் பார்ப்பார் எல்லோருடனும் இனிது கூடிப் பழகினர். வகுப்பு வேற்றுமை பாராட்டவில்லை. தமது இல்லத்துக்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உணவிடும் உத்தமர்களா யிருந்தனர். வேளாளர் உணவு சொந்த நிலமுள்ள உழவர்களான வேளாளர்கள் வீட்டுக் குச் சென்றால் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பதை இவ் வாசிரியர் அழகுபடக் கூறியிருக்கின்றார். இனிப்பான சுளைகள் நிறைந்த பெரிய பலாப்பழம் கிடைக்கும். நல்ல இன்சுவை இளநீர் கிடைக்கும். யானைக் கொம்புகளைப் போன்ற தோற்றமுடன் வளைந்து, குலையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள் கிடைக்கும். நல்ல பனைநுங்கு கிடைக்கும். இன்னும்பல இனிய பண்டங்களும் கிடைக்கும். சேப்பம் இலையுடன், முற்றிய நல்ல கிழங்குகளும் கிடைக்கும். இவைகள் எல்லாம் உழவர்கள் - அதாவது சொந்த நிலமுள்ள வேளாளர்கள் வீட்டிலே கிடைக்கும் உணவுப்பண்டங்கள். தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம், வீழ்இல் தாழைக் குழவித் தீம் நீர்க் கவைமுலை இரும்பிடிக் கவுண்மருப் பேய்க்கும் குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் திரள்அறைப் பெண்ணை நுங்கொடு, பிறவும் தீம்பல் தாரம் முனையிற் சேம்பின் முளைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர் (355- 362) இதனால் வேளாளர்களின் வாழ்க்கை நிலையையும், அவர்கள் சைவர்களாக வாழ்ந்தனர் என்பதையும் காணலாம். இவர்கள் உழுவித்துண்ணும் வேளாளர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நில மற்ற உழவர்கள் இருந்தனர்; நிலமுள்ள உழவர்கள் இருந்தனர். நிலமற்ற உழவர்கள் தாழ்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். நிலமுள்ள உழவர்கள் வேளாளர் என்னும் உயர்ந்த வகுப்பின ராகக் கருதப்பட்டனர். இவ்விரு வகுப்பினரும் ஒழுக்கத்திலும், நாகரிகத்திலும், பழக்க - வழக்கங்களிலும் மாறுபட்டிருந்தனர். உழவரைப் பற்றியும், வேளாளரைப் பற்றியும் இந்நூலாசிரியர் தனித்தனியே கூறியிருப் பதைக் கொண்டு இவ்வுண்மையை உணரலாம். மாளிகைகளும் இல்லங்களும் இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் நகரங்களிலே உயர்ந்த மாளிகைகள் இருந்தன. அவைகளிலே செல்வமுள்ளவர் கள் வாழ்ந்து வந்தனர். ஏழைகள் சிற்றூர்களிலே சிறு வீடுகளிலே இருந்தனர்; அவர்களுடைய வீடுகள் சிறு குடிசைகளாகவே இருந்தன. நடுத்தரமான மக்கள் பெரிய வீடுகளாயில்லா விட்டாலும் நல்ல வசதியான வீடுகளிலே குடியிருந்தனர். இத்தகைய காட்சி களை நம் கண்ணெதிரிலே தோன்றும்படி எழுதிக் காட்டுகிறார் இந்நூலாசிரியர். மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின் (322) மாடிகள் வானை முட்டி ஓங்கியிருக்கின்ற மணல் நிறைந்த வீதி. விண்பொர நிவந்த வேயா மாடத்து (348) வானத்தோடு போர் செய்வதுபோல் உயர்ந்திருக்கின்ற- கூரையற்ற மேல் வீடுள்ள- மாளிகைகள். இவைகளால் அக்காலத்தில் உயர்ந்த மாடி வீடுகள் இருந் தனவென்பதை அறியலாம். அழியாமல் பல காலம் நிலைத்திருக்கின்ற நெற்கூடு உயர்ந்திருக்கும் நல்ல வீடு. தச்சனால் செய்யப்பட்ட சிறுதேரை உருட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், விளையாட்டால் சோர்வடைந்தனர். அவர்கள் தங்கள் சோர்வு தீரச் செவிலித்தா யாரைத் தழுவிக்கொண்டு பாலருந்தினர். பாலருந்தினபடியே படுக்கையிலே தூங்குகின்றனர். இத்தகைய நல்ல வீடு. இவ்வாறு செல்வமுடை யவர்களின் வீட்டைப் பற்றிக் கூறியிருக்கிறார். இதனை, குமரி மூத்த கூடோங்கும் நல்இல், தச்சச் சிறார் நச்சப் புனைந்த ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர், தளர்நடை வருத்தம் வீட, அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்து, அமளித் துஞ்சும் அழகுடை நல்இல். (247-252) நடுத்தரமான வாழ்க்கை நடத்தும் செல்வர்களின் இல்லம் இவ்வாறு இருந்தது. பார்ப்பார் இல்லத்தைப் பற்றியும் இந்நூலா சிரியர் குறித்திருக்கின்றார். பந்தல்களிலே பசுங்கன்றுகள் கட்டப்பட்டிருக்கும் நல்ல வீடுகள். அவைகள் பசுஞ்சாணியால் மெழுகப்பட்டுக் கோயில் களைப் போலக் காட்சியளிக்கும். வீட்டிலே வாழும் கோழி களும் நாய்களும் அங்கேயில்லை. கிளிகளைப்போலே வேதங் களை உரத்துப் படித்துக் கொண்டிருப்பார்கள். வேதத்தைக் காக்கும் அந்தணர்கள் வாழும் இடம் இவ்வாறு காணப்படும். செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர்ப் பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர், மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது, வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும், மறைகாப்பாளர் உறைபதி (297- 301) இவ்வாறு பார்ப்பார் வாழுமிடத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இவர்களும் நடுத்தர மக்களைப்போலவே வாழ்க்கை நடத்தி வந்தனர். குடிசைகள் சிறிய ஊர். அதிலே பல சின்னஞ்சிறு குடிசைகள். அந்தக் குடிசைகளின் கூரைகள் வைக்கோலால் வேயப்பட்டவை. அந்த வைக்கோல் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து கருமை நிற மாகிவிட்டது. இதனால் எந்தக் குடிசையைப் பார்த்தாலும் கருமை நிறமாகவே காட்சிதருகின்றது. இக்காட்சி மழைக்காலத் திலே வானத்திலே உலாவும் கருமேகங்களைப் போலக் காணப் படுகின்றது. பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர் (190-191) இவ்வாறு காணப்படுவன உழவர்களின் சிறு குடிசைகள். மூங்கிலைப்பரப்பி, அதன்மேல் வெண்மையான கிளை களை வைத்து, தாழை நாரால் கட்டப்பட்டு, மேலே தருப்பைப் புல்லால் வேயப்பட்டிருக்கின்றன. அவைகள் தாழ்மையான சிறிய குடிசைகள். அக்குடிசைகளின் முற்றங்களிலே மீன் பிடிக்கும் பறிகள் இருக்கின்றன. வேழம் நிரைத்து, வெண்கோடு விரைஇத், தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில் (263 - 265) இவ்வாறு வலைஞர்களின் குடிசையைக் காட்டுகிறார். இவைகளால் அக்காலத்துத் தமிழகத்து மக்களின் நிலையை அறியலாம். தமிழ் மக்கள் செல்வர், வறியர், நடுத்தர மானவர்கள் என்று மூன்று பிரிவினராக இருந்தனர். இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் சமுதாயத்தில் இந்த முப்பிரிவுகள் தோன்றிவிட்டன. வெஃகாவும் காஞ்சியும் காஞ்சி மாநகர் மிகப்பழமையான நகரம். பல மதங்கள் வாழ்ந்த இடம். பல அறிஞர்கள் சேர்ந்திருந்து பல அரும் பொருள்பற்றி ஆராய்ச்சி செய்த இடம். மதத் தலைவர்கள் பலர் வாழ்ந்த இடம், சைவம், வைணவம், புத்தம், சமணம் போன்ற மதங்களின் உறைவிடம். இம்மதக் கோயில்களும், மடங்களும் அந்நகரிலே இருந்தன. ஒரு காலத்திலே காஞ்சி மாநகரம் தென்னாட்டின்- தமிழ்நாட்டின்- பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது. இக்காஞ்சியின் சிறப்பை இந்நூலாசிரியர் விளக்கியிருக் கின்றார். இந்நூலாசிரியர் காலத்திலேயே அது பெரிய நகரமாக இருந்தது; செல்வங் கொழிக்கும் சிறந்த நகரமாக இருந்தது. காஞ்சி நகரத்தைச் சேர்ந்த திருவெஃகாவென்பது திருமால் திருப்பதி. இந்நூலாசிரியர் காலத்திலேயே அது சிறந்த திருமால் திருப்பதியாக இருந்தது. திருவெஃகாவிலே திருமால் பள்ளிகொண்ட கோலத்தி லேயிருக்கின்றார். காந்தள் மலர்கள் பூத்திருக்கின்ற மலையின் பக்கத்திலே ஆண்யானையொன்று படுத்திருப்பதுபோல் பாம் பைப் படுக்கையாகக் கொண்ட திருமால் அவ்விடத்திலே பள்ளி கொண்டிருக்கிறார். காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் பாம்பு அணைப்பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் (342-343) என்று திருமால் அங்கு அமர்ந்திருக்கும் நிலையைக் குறிப்பிடு கின்றது. மேலும் அத்திருவெஃகாவின் இயற்கைச் சிறப்பையும், அங் குள்ள இறைவனைப் பணிய வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது இந்நூல். சுவர்க்கம் எளிதில் அடையக்கூடியது அன்று; தவம் புரிந் தோர்தான் அதைப் பெறமுடியும். அந்தத் துறக்கத்தைப்போன்ற இன்பந்தரும் நீர்த்துறை அங்குண்டு. அத்துறையில் என்றும் வற்றாமல் புதுநீர் வந்து கொண்டேயிருக்கும். அந்த நீரிலும், துறையிலும் மணமும் நிறமும் பொருந்திய மலர்கள் மிகுதியாகக் காணப்படும். இளவேனிற்காலத்தின் இன்பத்தை நுகர்வதற்காக அங்கே பலர் கூடியிருப்பார்கள். நீங்களும் அவர்களோடு அமர்ந்து இளைப்பாறுங்கள். பின்னர் அங்குள்ள சிறந்த வல்லமையுள்ள கடவுளாகிய திருமாலை வாழ்த்தி வணங்குங்கள். சிறிது உங்களுடைய கரிய தண்டமைந்த இனிய இசையைத் தரும் யாழை வாசித்துவிட்டுச் செல்லுங்கள். பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபின் பூமலி பெருந்துறைச் செவ்வி கொள்பவரோடு அசைஇ, அவ்வயின் அரும்திறல் கடவுள் வாழ்த்திச், சிறிதுநும் கருங்கோட்டு இன்இயம் இயக்கினிர் கழிமின் (388-392) இவ்வாறு திருவெஃகாவின் சிறப்பைக் குறிப்பிட்டது. பழமையான காஞ்சி நகரத்தைப்பற்றிப் பெரும் பாணாற்றுப் படை பாராட்டிக் கூறுகின்றது. தொண்டை நாட்டுத் தலை நகரத்தின் சிறப்பை இதனால் காணலாம். காஞ்சி நகரத்திலே பல சோலைகள் இருக்கின்றன. அச் சோலைகளிலே குரங்குகள் பலவுண்டு. யானைப்பாகர்கள் யானைகளுக்கு நெய் கலந்த சோற்றுக்கவளத்தை வைக்கின்றனர். யானைகள் அவைகளைத் தங்கள் காலிலே போட்டு மிதிக்கின்றன. பாகர்கள் ஏமாந்திருக்கும் சமயம் பார்த்துக் குரங்குகள் அக் கவளங்களைக் கவர்ந்துகொண்டு சோலைக்குள் ஓடிவிடுகின்றன. காஞ்சி நகரத்தின் தெருக்களிலே எப்பொழுதும் தேர்கள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. அதனால் தெருக்கள் பள்ளமும் படுகுழியுமாகக் காணப்படுகின்றன. போரிலே தோல்வியறியாத வலிமையுள்ளவர்கள், பெரும் புகழையே தங்களுடைய குடும்பத்தின் அடிப்படையாகக் கொண்டவர்கள், இத்தகைய வீரக்குடியினர் பலர் அந்நகரிலே வாழ்கின்றனர். இல்லோர்க்கு வழங்குவதும், சிறந்த கொள்கையும் உடைய வர்கள். எப்பொழுதும் அறம் புரிந்துகொண்டேயிருக்கின்றனர். இவர்கள் செய்கைக்குத் தடையில்லாதிருக்கும் பொருட்டு அந்த நகரத்தின் கோட்டைவாயில் என்றும் அடைக்கப்படுவதேயில்லை. அந்த நகரம் திருமாலின் கொப்பூழிலே தோன்றி நான் முகனைப் பெற்றெடுத்த தாமரை மலரைப்போலப் பழமை யானது; அழகு பொருந்தியது. செங்கற்களால் சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவர் எழுப்பப் பட்டிருக்கும் பெரிய நகரம் அது. ஈக்கள் பலாப்பழத்தின் இனிமைக்காக அதைச் சூழ்ந்து மொய்ப்பது போல, மக்கள் பலரும் அந்நகரத்தின் சிறப்பைக்காண அங்கே குழுமியிருப்பர். இவ்வுலகில் உள்ள பலரும் வணங்கும்படியான பெருமை யுள்ள நகரம். அந்நகரத்திலே பல திருவிழாக்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அது மிகவும் பழமையான புகழ்பெற்ற நகரம். இந்த நகரத்திலே திரையன் அரசு வீற்றிருக் கின்றான். அவன் நூற்றுவரை வென்ற பாண்டவர்களைப் போலப் பகை வர்களை யெல்லாம் வென்றான். தன்னை அண்டினவர்களை யெல்லாம் ஆதரிக்கின்ற வள்ளலாக வாழ்கின்றான். இவ்வாறு காஞ்சி நகரத்தின் பெருமையைக் கூறுகின்றது, இந்நூல். இதனை 393 முதல் 420 வரையில் உள்ள அடிகளிலே காணலாம். இளந்திரையன் பெருமை இப்பாட்டின் தலைவனாகிய தொண்டைமான் இளந் திரையனுடைய சிறப்பையும், அவனுடைய அரசாட்சியின் மேன்மையையும் ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் அழகாகப் பாடியிருக்கின்றார். அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன் (36- 37) அதர்மத்தை ஒழித்து தர்மத்தைச் செய்வதற்குத் துணை புரிகின்றவன்; கூர்மையான வேற்படையை உடைய இளந்தி ரையன். முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி, இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக் கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன் ( 443- 447) நீதிமுறையை வேண்டி வந்தோர்க்கும், தங்கள் குறை தீர்த்தலை வேண்டி வந்தோர்க்கும் அவர்கள் வேண்டுகின்றவை களை வேண்டுகின்றபடியே கொடுப் பவன். நடுநிலையிலிருந்து உண்மையை உணரும் உயர்ந்த அறிவுடையவன். இல்லார்க்கும் புலவர்க்கும் எப்பொழுதும் கொடையளி செய்பவன். சோர்வற்ற உள்ளமுடையவன். கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள்- அறிஞர்கள் - நண்பர்கள்- உறவினர்கள்- ஆகிய சுற்றத்தார்களை உடையவன். இத்தகைய பண்புள்ளவன் இளந்திரையன். அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்; உருமும் உரறாது அரவும் தப்பாது, காட்டு மாவும் உறுகண் செய்யா ( 39 - 43) அந்த இளந்திரையனுடைய ஆட்சிக்குள்ளிருக்கும் அகன்ற காட்டிலே எவருக்கும் எத்தகைய அச்சமும் இல்லை. எவரும் எந் நேரத்திலும் எவ்வழி யிலும் நடந்து செல்லலாம் வழிநடப் போரை மறித்து, அவர்கள் அலறும்படி அடித்து, அவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை கொள்வதையே உழவுத் தொழில் போலக் கொண்டிருக்கும் கொடியவர்கள் அவனுடைய நாட்டில் இல்லை. இடியும் இடித்து வீழ்ந்து கொடுமை செய்யாது. நச்சுப்பாம்பும் பிறரைக் கடிக்காது. காட்டுவிலங்கும் துன்பம் செய்யாது. இவ்வாறு அவனது அரசின் மேன்மையைப் பற்றிக் கூறியுள்ளார். நல்லாட்சி நிலவும் நாட்டின் இயல்பை இதனால் அறியலாம். இன்னும் பல அக்காலத்தில் உப்புப்பொதிகள் ஏற்றிய வண்டியை உமணப்பெண்களே ஓட்டிக் கொண்டு போவார்கள். வாணிகர்கள் தம்மைத்தாமே காத்துக்கொள்ளும் வீரர்களா யிருந்தனர். அவர்கள் முத்து, மாணிக்கம் முதலியவற்றை விற்பனை செய்யப் போகும்போது வாள் முதலிய படைக்கலங் களையும் பாதுகாப்புக்காக எடுத்துக்கொண்டு போவார்கள். மிளகு மூட்டைகளைக் கழுதைகளின்மேல் ஏற்றிச் சென்று விற்பனை செய்வார்கள். இடையர்குலப் பெண்கள் நெய்யைக் கொண்டுபோய் விற்பனை செய்வார்கள். அந்த நெய்யின் விலைக்குப் பதிலாகப் பால்தரும் எருமையை வாங்கிக் கொண்டு வருவார்கள். கப்பல்கள் திசைமாறாமல் கரையைக் கண்டுபிடிப்பதற் காகக் கலன்கரை விளக்கங்கள் இருந்தன. தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் மேல்நாட்டுக் குதிரை களும் வடநாட்டுப் பண்டங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. மேல்நாட்டுக் குதிரைகள் என்பன கிரேக்க தேசத்துக் குதிரைகள். அரசர்கள் பாலாவி போன்ற மெல்லிய ஆடைகளை அணிந்தனர். பரிசிலர்க் கும் அத்தகைய ஆடைகளை அளித்தனர். முருகனைப் பற்றிய வரலாறு- கந்தபுராணம்- தமிழ்நாட்டிலே பரவியிருந்தது. இமயத்தைப் பற்றியும், கங்கை நதியைப் பற்றியும் தமிழர்கள் பெருமையாக மதித்து வந்தனர். தமிழகத்திலே தச்சுத்தொழில், இரும்புத்தொழில், உழவுத் தொழில், நாடகம், இசை போன்ற கலைகள் வளர்ந்திருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், உழவர், வலையர், வேடர், பாணர் போன்ற பல பிரிவுகள் தமிழ் மக்களுக்குள்ளே இருந்தன. இருப்பினும் அவர்கள் பிறப்பிலே உயர்வு தாழ்வுகள் பாராட்டிக் கொள்ளவேயில்லை. உள்ளவர்கள் - இல்லாதவர்கள் என்ற வேற்றுமை பண்டைத் தமிழகத்தில் இருந்தது. இன்னும் இவைபோன்ற பல அரிய செய்திகளை இந்தப் பெரும்பாணாற்றுப் படையிலே காணலாம். தமிழர் நாகரிகத்தையும், வரலாற்றையும் காண இப் பாட்டு பெருந்துணை செய்யும். பத்துப்பாட்டுள் இது ஒரு சிறந்த பாட்டு. 6 முல்லைப்பாட்டு முல்லைத்திணை பத்துப்பாட்டுள் இது ஐந்தாவது பாட்டு. மிகவும் சுருக்க மானது இந்த முல்லைப்பாட்டுதான். இதன் அடிகள் 103. ஆசிரியப்பாவால் ஆகியது. முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லுவது முல்லைப் பாட்டு. பிரிந்துசென்ற தலைவன் வரும் வரையிலும் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் முல்லையொழுக்கம். இந்த முல்லைத்திணையையே கற்பொழுக்கம் என்று சொல்லுவர். தலைமகளிடம், மாரிக்காலத்தில் வருவேன் என்று சொல்லிப் பிரிந்து சென்றான் தலைமகன். மாரிக்காலமும் வந்துவிட்டது. தலைமகனைக் காண வில்லை. தலைவி வருந்து கின்றாள். வருந்துகின்ற தலைவிக்கு அவளுடைய தோழி, செவி லித்தாய் முதலியவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். தலைவியும் தன் காதலன் சொன்ன சொல்லைத் தவறமாட்டான் என்று எண்ணி அவன் வரும் வரையிலும் பொறுத்திருக்கிறாள். பிரிந்துசென்ற தலைமகன் மாரிக்காலம் வந்ததைக் கண்டு தலைமகளுக்குத் தந்த வாக்குறுதியை எண்ணுகின்றான். தலைவி யைச் சந்திக்கவேண்டும் என்று துடிக்கின்றான். தலைவியைச் சந்தித்து அவளுடன் கலந்து மகிழ்ந்து இல்லறம் நடத்த விரைந்து வருகின்றான். இத்தகைய நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவதே முல் லைத்திணையாம். ஆசிரியர் இந்த முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனார். இவர் காவிரிப்பூம் பட்டினத்திலே பிறந்தவரோ, அல்லது வாழ்ந்த வரோ தெரியவில்லை. இவர் தந்தையார் பொன் வாணிகம் செய்தவர். அவர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வராக இருக்க வேண்டும். பொன் வாணிகனார் என்பதே இவர் தந்தை யாரின் பெயர். காரணப்பெயர். இயற்பெயர் தெரியவில்லை. காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்பது இந்நூலாசிரியருடைய முழுப் பெயர். இப்பெயர்தான் மேற்சொல்லியவாறு எண்ண இடந்தருகின்றது. இவர் இயற்றிய நூல் இது ஒன்றே. இவர் பெயரால் வேறு நூல்களோ பாடல்களோ கிடைக்கவில்லை. இந்த நூல் யாரைக் குறித்தும் பாடப்பட்டதன்று. இந்தப் பாடலிலே அகத் திணையும் அடக்கம்; புறத்திணையும் அடக்கம். தலைவி தலைவனைப் பிரிந்து தனித்திருப்பதைப் பற்றிக் கூறுவது அகத்திணை; இது முல்லைத்திணையைச் சேர்ந்தது. போர்க்களத்தைப் பற்றியும், தலைவன் பாசறையிலே இருப்பதைப் பற்றியும் கூறுவது புறத்திணை. அகவொழுக்கம், புறவொழுக்கம் ஆகிய இரண்டு ஒழுக்கங்களைப் பற்றியும் இப் பாடலில் கூறப்பட்டிருந்தாலும் முதலில் அகவொழுக்கமாகிய முல்லைத் திணையைப் பற்றியே சொல்லப்படுகின்றது. ஆதலால் தான் இதற்கு முல்லைப்பாட்டென்று பெயர் வைக்கப்பட்டது என்று கருதலாம். பாட்டின் அமைப்பு ஒரு வேந்தன் பகைவருடன் போர் செய்யும் பொருட்டுத் தன் காதலியை விட்டுப் பிரிந்து போகிறான். போகும்போது மாரிக்காலத்தில் மறக்காமல் வந்து விடுவேன் என்று உறுதி மொழியுரைத்துச் செல்லுகின்றான். கார்காலம் வந்துவிட்டது. ஆனால் காதலன் திரும்ப வில்லை. தலைவி காதலனை எண்ணிக் கலங்குகின்றாள். அவளு டைய அவதியைக் கண்ட அன்னைமார்கள், திருமால் கோயிலுக் குச் சென்று வணங்கி வரம் கேட்டனர். அச்சமயம் வருந்துகின்ற கன்றுகளைப் பார்த்து தாய்ப்பசுக்கள் விரைவில் வந்துவிடும் என்று ஒரு ஆயர்குலப்பெண் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். அச்சொல், வணங்கி வரங்கேட்டுக் கொண்டிருந்த அன்னையர் காதிலே விழுந்தது. அவர்கள் அதை நல்ல சகுனமாகக் கருதினர். உடனே தலைவியிடம் வந்து காதலன் வந்துவிடுவான், கலங் காதே என்று ஆறுதல் மொழிகள் கூறினர். தலைவியும் கண்ணீர் விட்டுக்கொண்டு கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். போரின் மேற்சென்ற அரசன் பகைவர்களை வென்று பாடி வீடு அமைத்தான். அந்தப் பாடி வீட்டிலே கூடாரங்கள் பல இருந்தன. அவைகளின் நடுவிலே அரசனுக்கொரு தனிக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அரசன் தனது கூடாரத்தில் படுக்கையிலே படுத்துக் கொண்டிருக்கின்றான். பெண்கள், மெய்க் காப்பாளர், யவனர், ஊமையர்களான மிலேச்சர் முதலியோர் மன்னன் கூடாரத்தைக் காத்து நிற்கின்றனர். அரசனோ நடந்த போரைப் பற்றி எண்ணிக் கொண்டும் நடக்க வேண்டிய போருக்குத் திட்டமிட்டுக் கொண்டும் படுத் திருக்கின்றான். தலைமகளோ தன் பக்கத்தில் தலைமகன் இல்லாமையால் ஏங்கிக் கிடக் கின்றாள். ஆயினும் கணவன் சொல்லை நம்பித் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு உயிர்வாழ்கின்றாள். அவளுடைய உடல் இளைத்து விட்டது; அணிந்த வளையல்கள் கழன்று விடுகின்றன; ஆடை குலைகின்றது. அவள் பக்கத்திலே விளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது. தலைவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மட்டும் தளர வில்லை. இச்சமயத்தில் போருக்குச் சென்ற தலைவன் வெற்றி முழக்கத்துடன் திரும்பி வருகின்றான். அவன் வருகின்ற தேரின் ஆரவாரம் சோர்ந்து கிடந்த தலைவிக்கு மகிழ்ச்சியை ஊட்டு கின்றது. இதுவே இந்தப் பாட்டின் அமைப்பாகும். இந்தப் பாடலின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில்- தமிழ்மக்களிடையில்- குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம். அவற்றை ஆராய்வோம். முல்லை நிலத் தெய்வம் ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் ஒவ்வொரு தெய்வம் உண்டு. முல்லைக்குத் திருமால் தெய்வம். குறிஞ்சிக்கு முருகன் தெய்வம். மருதத்திற்கு வேந்தன் தெய்வம். நெய்தலுக்கு வருணன் தெய்வம். பாலைக்குத் தனித்தெய்வம் இல்லை. பாலை தனி நிலமன்று . நான்கு நிலங்களிலும் மழை வளங்குறைந்தால்- நீர்வளம் பாழ்பாட்டால் - ஒன்றும் விளையாத வறண்ட நிலமாக மாறினால்- அது பாலை நிலமாகும். எந்த நிலத்தில் பாலை நிலம் தோன்றுகிறதோ அந்த நிலத்தின் தெய்வமே அந்தப் பாலைக் கும் தெய்வம். இதுவே தொல்காப்பியம் கூறுவது. பிற்காலத்தார் பாலையைத் தனி நிலமாக்கி அதற்குக் காளியைத் தெய்வமாகக் கற்பனை செய்தனர். இந்நூலாசிரியர் முதலிலே மழை பெய்யும் மாலைக்காலத் தைக் குறிப்பிடு கின்றார். கடலிலிருந்து புறப்பட்டு - மலையிலே போய்த் தங்கி- வானத்திலே தோன்றி- மழை பெய்யும் மேகத் தைத் திருமாலுக்கு ஒப்பிட்டு உரைக்கின்றார். அந்த மேகத்தை, மாபலிச் சக்கரவர்த்தி தாரை வார்த்த தண்ணீர் கையிலே பட்டவுடன் உயர்ந்து வளர்ந்த திருமாலைப் போன்ற மேகம் என்று உவமானத்துடன் உரைக்கின்றார். தண்ணீர் கையிலே பட்டவுடன் உயர்ந்து வளர்ந்த திருமாலைப் போல மேகங்கள் காட்சி தருகின்றன. அவைகள் ஓசையமைந்த குளிர்ந்த கடல் நீரைப் பருகின. வெற்றியுடன் புறப்பட்டன. மலைகளை உறைவிடமாகக் கொண்டு தங்கின. பின்பு அந்த மேகங்கள் விரைவாக வானத்தின் வழியே சென்றன. பெரிய மழையைப் பொழிந்தன. இத்தகைய நிலையற்ற மாலைக் காலம். இதனை, நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன்ஏர்பு கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை ( 3- 6) என்ற அடிகளால் அறியலாம். முல்லை நிலத்தின் தெய்வமாகிய திருமாலை முதலில் இவ்வாறு உவமைப் பொருளில் வைத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது. பிரார்த்தனையும் சகுனமும் தங்களுக்கு நேர்ந்த துன்பத்தைத் தவிர்க்கும்படி வழிபடு தெய்வத்தை வணங்கி வேண்டிக் கொள்ளும் வழக்கம் சங்க காலத் தமிழர்களிடம் இருந்தது. நெல்லையும் மலரையும் தெய் வத்தின் முன்னே சொரிந்து நின்று வணங்கி வரம் கேட்பார்கள். இப்பொழுதும் நாம் ஒரு காரியத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்போது மணியோசை கேட்டால்- நாய் சிலுப் பினால்- பல்லி சொன்னால்- கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்று நம்புகின்றோம். தெருவோடு எவரேனும் வெற்றி என்று சொல்லிக் கொண்டுபோனால் அதைத் தெய்வ வாக்காகக் கருது கின்றோம்; நாம் பேசிக்கொண்டிருக்கும்- அல்லது நினைத்துக் கொண்டிருக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்று நம்பு கின்றோம். இதுபோன்ற வணக்கத்திலும் சகுனத்திலும் பழந் தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்தது. இதை முல்லைப்பாட்டிலே சொல்லியிருக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அறியலாம். மாரிக்காலம் வந்துவிட்டது. தலைவனைக் காணவில்லை. மனம் வெதும்பியிருக்கின்றாள் தலைவி. அதைக் கண்ட அவளு டைய செவிலித்தாய், கைத்தாய் முதலியவர்கள் ஊருக்குப் புறத் தேயுள்ள திருமாலின் கோயிலுக்குப் போனார்கள். நாழியிலே கொண்டுபோன நெல்லையும் புதிய முல்லை மலர்களையும் கலந்து தூவி மாயோனிடம் நல்வாக்கு கேட்டு நின்றனர். இச்சமயத்திலே சிறிய தாம்பிற் பிணித்திருக்கும் இளங் கன்றுகள் தங்கள் தாய்ப்பசுக்களைக் காணாமல் வருந்துகின்றன. அக்கன்றுகளின் துயரைக் கண்ட ஆயர்மகள், பிடரியிலே கைகளை வைத்துக்கொண்டு அக்கன்றுகளுக்கு ஆறுதல் கூறினாள். கோல் பிடித்த கோவலர்கள் பின்னேவர இப்பொழுதே உங்கள் தாய்மார்கள் வந்துவிடுவார்கள் என்று கூறினாள். இச் சொற்களைத் திருமாலை வணங்கி நின்ற தாயர்கள் கேட்டனர். உடனே மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து நாங்கள் நன்மொழி கேட்டு வந்தோம். போருக்குப் போன உன் காதலன் வெற்றியுடன் விரைந்து வருவான். பகைவர்களிடம் திறை பெற்றுத் திரும்பி வருவான். நீ வருந்தாமலிரு என்று கூறினர். அருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை இன வண்டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்குசுவல் அமைத்த கையார் கைய கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது, நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய்! (7-21) இவ்வடிகளால் மேலே காட்டிய நிகழ்ச்சியைக் காணலாம். இவ்வாறு நற்சொற் கேட்டலை விரிச்சி என்று கூறும் தொல் காப்பியம். யானைப்பாகர்கள் யானைப்பாகர்கள் யானையை அடக்கப் பயன்படுத்தும் பரிபாஷைகள் வடமொழிச்சொற்கள். அந்த வடமொழிச் சொற் களை அவர்கள் படித்துத் தெரிந்து கொண்டவர்கள் அல்லர். செவியாரலாகக் கேட்டுத் தெரிந்துகொண்டவை. இன்றும் யானைப்பாகர்களின் நிலைமை இதுதான். இவ்வுண்மையை ஒரு யானையின் செயலைப் பற்றியும், பாகர்கள் அந்த யானையை அடக்குவதைப் பற்றியும் கூறுவதன் மூலம் எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர். காவல்காத்து நின்ற - கன்னத்தின் வழியே மதநீர் ஒழுகு கின்ற- சிறு கண்களையுடைய யானை ஒன்று. அது நீண்ட கரும் பையும், நெற்கதிரையும், வயலிலே விளைந்த அதிமதுரத் தழை யையும் உணவாகப் போட்டும் அவைகளை உண்ணவில்லை. அவைகளைக் கையால் எடுத்து தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டு, கையிலே வைத்திருந்தபடியே நின்றது. அதைக் கண்ட யானைப்பாகர்களாகிய இளைஞர்கள் அங்குசத்தைக் கொண்டு, செவியாரலாகக் கேட்ட வடமொழிகளைக் கூறி- அதட்டி அந்த யானையை உண்ணும்படி செய்தனர். காவல்நின்ற தேம்படு கவுள சிறுகண் யானை, ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல்விளை யின்குளகு உண்ணாது, நுதல் துடைத்து- அயில் நுனை மருப்பின் தன் கையிடைக் கொண்டெனக் கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப. (30-36) இவ்வடிகளால் மேலே கூறிய நிகழ்ச்சியைக் காணலாம். பாசறையில் பெண்கள் பெண்கள் பாசறைக்குச் செல்லும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தது. அரசன் போருக்குப் போகும்போது அவர் களையும் அழைத்துச் செல்வான். அப் பெண்கள் இராக் காலத்திலே அரசனுடைய படுக்கையறையைப் பாதுகாக்கும் காவலர்களுக்குத் துணை செய்வார்கள். விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். அவர்கள் தற்பாதுகாப்புக்காக வாளாயுதம் வைத்திருப்பார்கள். இவ்வாறு பெண்கள் போர்க் களத்திலே ஆண்களுக்கு உதவிசெய்து வந்தார்கள். சிறிய வளையல்களை முன்கையிலே அணிந்திருக்கின்றனர். அவர் களுடைய தலைமயிர் அவிழ்ந்து முதுகிலே கிடக்கின்றது. இரவைப் பகலாக்கக் கூடிய அவ்வளவு ஒளி பொருந்திய வாளை இடுப்பிலே தொங்க விட்டிருக் கின்றனர். இத்தகைய வீரப் பெண்கள் எண்ணெய் சிந்துகின்ற குழாய் வடிவமான நீண்ட பந்தத்தைக் கொளுத்திக்கொண்டு திரிகின்றனர். பாவையின் கையிலே எரி கின்ற விளக்கு அணையும்போதெல்லாம் அவைகளை மீண்டும் கொளுத்து கின்றனர். குறுந்தொடி முன்கைக், கூந்தல் அம் சிறுபுறத்து, இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக், கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட. (45-49) இதனால் பண்டைக் காலத்தில் பெண்களும் போர்க்களம் புகுந்தனர்; வாள்யுத்தம் செய்யும் வல்லமையும் பெற்றிருந்தனர் என்று அறியலாம். அந்நிய நாட்டினர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டில் அந்நிய நாட்டினர் பலர் குடிபுகுந்திருந்தனர். அவர்கள் வாணி கர்களாகவும் வாழ்ந்தனர்; அரசர்களிடம் பணியாட்களாகவும் வேலை புரிந்துவந்தனர். கிரேக்க நாட்டு மக்களுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் தொடர்பிருந்தது. இச்செய்திகளைச் சங்க இலக்கி யங்களிலே காண்கின்றோம். கிரேக்க நாட்டினரைத் தமிழர்கள் யவனர் என்ற பெயரால் அழைத்தனர். பாசறையிலே அரசனுக்குக் காவலாயிருந்த யவனரைப் பற்றி முல்லைப் பாட்டாசிரியர் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். சட்டையணிந்தவர்கள்; கண்டோர் நெஞ்சிலே கலக் கத்தை உண்டாக்கும் தோற்றமுடையவர்கள்; ஆற்றல் அமைந்த ஆக்கையினர்; ஆருக்கும் அஞ்சாத ஆண்மையுடைய கன்னெஞ்சர். மெய்ப்பை புக்க, வெருவருந் தோற்றத்து, வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்; (60-61) இது யவனரைப் பற்றிய குறிப்பு. அக்காலத்தில் அரசர்கள் தமது அந்தப்புரத்தில் அந்நிய நாட்டு ஊமையர்களையே காவலாக வைத்திருப்பார்கள். அந்தப் புர இரகசியங்கள் வெளிப்படாமலிருப்பதற்காகவே இப்படிச் செய்வர். இத்தகைய அந்நிய நாட்டினரை மிலேச்சர் என்னும் பெயரால் அழைத்தனர். உடம்பில் உள்ள கண், கை, கால் முதலிய உறுப்புக்களின் மூலமாகவே தம் உள்ளக்கருத்தை உரைப்பார்கள்; வாயாற் பேசும் வல்லமையற்றவர்கள்; சட்டை போட்டவர்கள்; அந்நிய நாட்டினர்; பக்கத்திலே காவலாக நிற்கின்றனர். உடம்பின் உரைக்கும், உரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழையராக (65-66) இவ்வடிகள் மேலே கூறிய செய்தியை விளக்குவன. யவனர், மிலேச்சர் ஆகியோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர் என்பதை இவ்வாறு கூறுகிறது முல்லைப்பாட்டு. மாரிக்காலத்து மலர்கள் மாரிக்காலத்திலே, கானகத்திலே கண்ணைக் கவரும்படி பூத்திருக்கும் மலர்கள் பல. அவைகளைக் காண்போம். செறியிலைக் காயா அஞ்சனம் மலர நிறைந்த இலைகளையுடைய காசாஞ்செடிகள் மையைப் போல மலர்ந்திருக்கின்றன. முறியிணர்க் கொன்றை நன்பொன் கால தளிரையும் பூங்கொத்துக்களையுமுடைய கொன்றை நல்ல பொன்னைச் சொரிந்தது. (கொன்றை மலரின் நிறமும் பொன் னிறமும் ஒன்று) கோடல் குவிமுகை அங்கை அவிழ வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் உள்ளங் கையைப் போல மலர்ந்தன. தோடார் தோன்றி குருதி பூப்ப நிறைந்திருக்கின்ற தோன்றிச் செடிகள் இரத்தம் போலப் பூத்திருக்கின்றன. இவ்வாறு மாரிக்காலத்திலே பூத்திருக்கும் மலர்களைப் பற்றிக் கூறுகிறது முல்லைப்பாட்டு. இன்னும் சில தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை யென்னும் நால் வகைப் படைகள் அக்காலத்தில் இருந்தன. பாவை விளக்குகள் இருந்தன. பாவை விளக்கு என்பது ஒரு பெண் இரு கையையும் இணைத்துக் குவித்து ஏந்திக்கொண்டு நிற்பதுபோல் செய்யப்பட்ட பதுமை. அந்த ஏந்திய கையிலே எண்ணெய் ஊற்றித் திரியிட்டுக் கொளுத்தி வைப்பார்கள். இதை இக்காலத்தில் இலக்குமி விளக்கென்றும் கூறுவர். பல அடுக்குகளையுடைய மாளிகைகள் அக்காலத்தில் கட்டப்பட்டிருந்தன. இத்தகைய அரிய பல செய்திகளை இந்தச் சின்னஞ்சிறு நூலிலே காணலாம். 7 மதுரைக்காஞ்சி காஞ்சித்திணை இது பத்துப்பாட்டுள் ஆறாவது பாட்டு. எல்லாப் பாட்டுக் களையும்விட இதுவே பெரியது. 782 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது. மதுரையை ஆண்ட மன்னனுக்குக் காஞ்சித் திணையைப் பற்றிக் கூறியது மதுரைக்காஞ்சி. காஞ்சி யென்பது புறத்திணையுள் ஒருதிணை. புறத்திணை- புறவொழுக்கம். உலக இன்பம், செல்வம், இளமை, யாக்கை எல்லாம் நியில்லாதவை; ஆதலால் உயிருள்ள போது உயர்ந்த நன்னெறியில் நடந்து இன்புற்று வாழ்வதே மக்கள் கடமை என்ற உண்மையை எடுத்துக்காட்டுவதே காஞ்சித்திணை. பொதுவாக உலகமும், உலக இன்பமும் அழிந்து விடக் கூடியவை என்பதை அறிவிப்பதே காஞ்சித் திணை. ஆசிரியர் இந்நூலாசிரியர் மாங்குடி மருதனார்; இவர் மிகச்சிறந்த புலவர். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அவைக்களத்துப் புலவர்கள் அனைவருக்கும் தலைவராய் விளங்கியவர். பாண்டியன் நெடுஞ்செழியனால் பாராட்டப்பட்டவர். மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் மாங்குடி மருதன் என்னும் மாபெரும் புலவரைத் தலை வராகக் கொண்ட புலவர்கள்; பலரும் பாராட்டும்படி உலக முள்ளளவும் நிலைத்திருக்கின்ற புகழ்பெற்ற புலவர்கள் என்ற புறநானூற்றுப் பாடலால் இவர் பெருமையை அறியலாம். இவர் செய்த நூல் மதுரைக்காஞ்சி ஒன்றுதான். அக நானூற்றிலே ஒரு பாட்டு, குறுந்தொகையில் மூன்றுபாடல்கள், நற்றிணையில் இரண்டுபாடல்கள், புறநானூற்றிலே ஆறு பாடல்கள், இவர் பாடியவை. திருவள்ளுவமாலையிலும் இவர் பெயரால் ஒரு பாட்டு உண்டு. மதுரைக்காஞ்சி ஒன்றே இவருடைய புலமைத் திறத்தை விளக்கப் போது மானதாகும். பாண்டியர் ஆண்ட பண்டைத் தமிழ் மதுரையை- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த மதுரையை- அப்படியே படமாக எழுதிக் காட்டு வதைப் போல இந்நூலிலே எடுத்துக் கூறியிருக்கின்றார். பாட்டின் தலைவன் இந்நூல் பாண்டியன் நெடுஞ்செழியன்மேல் பாடப் பட்டது. தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்; நெடுஞ்செழியன்; பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர்களால் இவன் குறிக்கப்படுகிறான். இப்பாண்டியன், யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை என்ற சேரமன்னனுடன் தலையாலங்கானம் என்ற இடத்திலே போர் செய்தான்; அவனை வென்று சிறைப் படுத்தினான். இவனை எதிர்த்த மற்றும்பல மன்னர் களையும் வென்றான். இதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர் பெற்றான். சிலப்பதிகாரத்திற் குறிக்கப்படும் பாண்டியன் நெடுஞ் செழியனும் இவனும் ஒருவனே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் இந்த மதுரைக்காஞ்சியில் சிலப்பதிகாரத்தைப் பற்றிய பேச்சு ஓரிடத்திலேனும் காணப்படவேயில்லை. இது குறிப்பிடத் தக்கது. இந்த நெடுஞ்செழியன் தமிழ்ப்புலவன். புறநானூற்றில் உள்ள 72வது பாடல் இவன் பெயரில் உள்ளது. இப் பாண்டியனைப் பற்றி மாங்குடி மருதனார், குடபுலவி யனார், கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர்கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று ஒருவன் குறிக்கப்படுகின்றான். அவனும் இவனும் ஒருவன்தானா என்பது ஆராயத்தக்கது. பாட்டின் அமைப்பு பாண்டியன் நெடுஞ்செழியன் தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன். இணையற்ற வீரன். போர்செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்து வந்தவன். நால்வகைப் படைகளையும் நல்லமுறையிலே பெருக்கி வைத் திருந்தான். செல் வச்செருக்கால் உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்து விடக் கூடியவை என்பதை மறந்திருந்தான். இவனுடைய உற்ற நண்பர் மாங்குடி மருதனார்; உலக நிலையாமையை இவனுக்கு உணர்த்த எண்ணினார். அவனைப் பார்த்து முதலில் அவன் முன் னோர்களின் அரசியல் நேர்மை யை எடுத்துக்காட்டினார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டி னார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் போற்றினார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துச் சொன்னார். இவ்வளவையும் எடுத்துக்காட்டியபிறகு, பாண்டியனே! உன்னைப்போலவே இவ்வுலகிலே எண்ணற்ற மன்னர்கள் வீரர் களாக- செல்வமுடையவர்களாக - கொடையாளிகளாகச் சிறந்து வாழ்ந்தனர். அவர்களுடைய எண்ணிக்கை கடல்துறையிலே அலைகள் கொண்டுவந்து குவிக்கும் மணலைக்காட்டினும் பல. அவர்களெல்லாம் புகழுடன் வாழ்ந்தனர்; முடிவிலே மாநிலத் தைவிட்டு மறைந்து போயினர் என்று நிலையாமையை எடுத் துக்காட்டினார். இதன்பின் பாண்டிய நாட்டின் இயற்கை வளத்தைப் பாராட்டினார். அந்நாட்டிலே அமைந்துள்ள மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் ஆகிய ஐந்திணைகளின் ஆக்கங்களை யும் அழகாகப் பாடினார். அதன்பின் வையையாற்றின் வளத்தைப் புகழ்ந்தார். வையையின் தென்பால் அமைந்துள்ள மதுரை நகரத்தின் மாண்பைப் பாராட்டினார். அந்நகரத்தில் நடைபெறும் பல வகையான நிகழ்ச்சிகள், வாணிகம், தொழில்கள் எல்லா வற்றையும் எடுத்துக்காட்டிப் புகழ்ந்தார். நெடுஞ்செழியனுடைய நேர்மையான ஆட்சிமுறையை விளக்க நினைத்தார்; அதற்கு ஆதரவாக மதுரையில் இருந்த நீதி மன்றத்தின் சிறப்பைக் கூறினார். வணிகர்களின் நடுநிலையைப் பற்றி நாவாரப் புகழ்ந்தார். மதுரை நகரில் வாழும் மக்களுடைய சிறந்த வாழ்க்கையைப் பற்றியும் சொன்னார். இறுதியில் உன் காதல் மகளிருடன் கலந்து உண்டு மகிழ்ந்து வாழ்க என்று நெடுஞ்செழியனை வாழ்த்தினார். இந்த முறையிலேயே இந்நூலை அமைத்துப் பாடியிருக் கிறார் ஆசிரியர் மாங்குடி மருதனார். இந்நூலைப் பொருளறிந்து படிப்போர் இதன் சொற்சுவை, பொருட் சுவைகளை நுகர்ந்து இன்புறுவார்கள். பழந்தமிழ் மதுரையில் சுற்றித் திரிவது போலவே கனவு காண்பார்கள். தமிழ் மன்னர்கள் தனியதிகாரம் படைத்தவர்களே பண்டைத் தமிழ் மன்னர் கள். ஆயினும் அவர்கள், குடிகளின் குறையற்ற வாழ்வே தங்களு டைய நல்வாழ்வென நம்பினர். நாட்டிலே செல்வம் செழிக்க- உணவுப் பொருள்கள் ஏராளமாக உற்பத்தியாக- குடிமக்களுடன் ஒத்துழைப்பதே தங்கள் முதற் கடமையெனக் கொண்டிருந்தனர். பாண்டியர்களின் ஆட்சிப் பெருமையைக் கூறும்போது இந் நூலாசிரியர் இக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார். வற்றாமல் வானமழை பொழிந்தது. உழவுத் தொழில் ஓங்கி வளர்ந்தது; எல்லாத் திசைகளும் செழித்திருந்தன; விதைத்த ஒரே விதையிலே ஆயிரக்கணக் கான தானியங்கள் விளைந்தன; விளைநிலங்களும், மரங்களும் ஏராளமான பயனைத் தந்து சிறந்தன; மக்கள் பசியும் நோயும் இல்லாமல் அழகுடன் மகிழ்ந்து வாழ்ந்தனர். இவ்வாறு பாண்டிய மன்னர்களின் அரசியல் சிறப்பால் பாண்டிய நாடு சிறந் திருந்ததைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே கூறப்படுகின்றது. இதனை, மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்கத், தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய, நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த, நோயிகந்து நோக்கு விளங்க (10-13) என்ற அடிகளால் காணலாம். தமிழ் மன்னர்கள் தங்கள் எதிரிகளுடன்தான் போர் செய் வார்கள். அவர்கள் அகந்தையை அழிப்பார்கள். செல்வத்தைக் கொள்ளை கொள்ளுவார்கள். எதிரி களுக்குத் துணையாக இருக்கும் எல்லாவற்றையும் கல்லி எறிவார்கள். தங்கள் எதிரிகள் நாட்டுக் குடிமக்களுக்கு எவ்வித இன்னலும் இழைக்க மாட்டார்கள். தங்கள் ஆட்சிக்குள்ளான எதிரிகள் நாட்டையும் தங்களுடைய நாட்டைப்போலவே சீர்திருத்திப் பாதுகாப்பார்கள். பகைவர்களின் உள்நாடுகளிலே புகுந்து அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளவைகளையெல்லாம் பிடித்துக் கொள்ளு வாய்; பிடித்துக் கொண்ட அந்தப் பகைவர்களுடைய நாடு களிலே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய். அந்நாடுகள் மேன்மை யடைய வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்வாய். இத்தகைய சிறப்பும் போர்த்திறமும் பொருந்திய பெருமையுடையவனே. அகநாடு புக்கு அவர் அருப்பம் வௌவி, யாண்டுபல கழிய வேண்டுபுலத்து இறுத்து, மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில் (149-151) இப்பகுதி மேலே கூறிய செய்தியை விளக்கும். தமிழ் மன்னர்கள் அழிப்பு வேலை மட்டும் செய்பவர்கள் அல்லர்; ஆக்க வேலை செய்வதிலும் அறிவைச் செலுத்தினர். ஏற்றுமதி - இறக்குமதி வாணிகம் இந்நூல் தோன்றுவதற்கு முன்னிருந்தே பாண்டிய நாட்டுப் பொருள்கள் பலவேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிறப்பாக முத்து, சங்கு வளையல்கள், பலவகையான தானியங்கள், இனிய புளி, வெண்மையான உப்பு, காய்ந்த மீன்கள் ஆகியவை கப்பல்களின் மூலம் அனுப்பப்பட்டன. இந்நாட்டிலே அந்நிய நாட்டுக் குதிரைகள் வந்து இறங்கின. முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம், அரம்போழ்ந்து அறுத்த கண்ணேர் இலங்குவளைப் பரதர் தந்த பல்வேறு கூலம், இரும்கழிச் செறுவில் தீம்புளி, வெள்ளுப்புப் பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல், விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் வைகல் தோறும் வழி வழி சிறப்ப (315-324) நெய்தல் நிலத்தைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு பாடி இருக்கின்றார். இதனால் பாண்டிய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நடந்த கடற்கரை வியாபாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுகின்றோம். வையை நதி அக்காலத்து வையை நதி இக்காலத்து வையையைப் போல வருநீரின்றி வறண்டு கிடக்கவில்லை. வற்றாத நீர்ப் பெருக்குடன் காட்சியளித்தது. அதன் கரைகளில் உள்ள கோங்கு முதலிய மரங்களின் மலர்கள் வையை வெள்ளத்திலே உதிர்ந்து மாலைபோல மிதந்து செல்லுகின்றன. வையைத் துறைகளிலே பல பூந்தோட்டங்கள் உண்டு. அவைகளிலே பாணர்கள் குடி யிருந்து வருகின்றனர். இவ்வாறு வையையைப் பற்றிக் கூறு கின்றது. இதனை, தாதுசூழ் கோங்கின் பூ மலர்தா அய்க் கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல், அவிர் அறல் வையைத் துறைதுறை தோறும், பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி, அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் (338-342) இவ்வடிகள் வையையின் நீர்வளத்தைக் காட்டுகின்றன. மதுரை மாநகர் மதுரை நகரைச் சுற்றிலும் ஆழமான அகழியிருந்தது. அது கீழே மண்ணுள்ள வரையிலும் தோண்டப்பட்டிருந்தது. நீர் நிரம் பியிருந்தது. வானத்தைக் தொடும் படி உயர்ந்த மதில் மதுரை யைச் சுற்றியிருந்தது. அந்த மதிலின் மேல் நகரப் பாதுகாவலுக் காகப் பல படைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோட்டை மதிலின் வாயில் பழமையானது. யாராலும் அசைக்க முடியாத வலிமை யுடையது. அந்த வாயிலின் நிலையிலே- அதாவது வாசற்காலிலே காவல் தெய்வம் குடிகொண்டிருந்தது. அதன் கதவுகள் வலிமையானவை. இடுக் கில்லாமல் இணைத்துச் செய்யப்பட்டவை. கதவைச் சரளமாகத் திறப்பதற்கும் பூட்டு வதற்கும் அடிக்கடி எண்ணெய் பூசுவர். அதனால் அக்கதவுகள் கருமை நிறமுடன் காட்சியளித்தன. கோட்டை வாசலுக்கு மேலே உயர்ந்த மாடி இருந்தது. வானத்திற் செல்லும் மேகங்கள் வந்து படியும்படியான அவ் வளவு உயரமான மாடி அது. வையை ஆற்றிலே எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டே யிருப்பது போல் அக்கோட்டை வாயிலின் வழியே மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். மற்றும் பல ஊர்திகளும், விலங்குகளும் போய் வந்து கொண்டி ருந்தன. மதுரையின் வெளிப்புறத்தோற்றம் இவ்வாறு இருந்தது. நகருக்குள்ளே பல பெரிய வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கூடம், தாழ்வாரம், சமையற்கட்டு, விருந்தினர் அறை, படுக்கையறை போன்ற பல பகுதிகள் இருந்தன. அந்த வீடுகள் ஆகாயத்தை அளாவியிருந்தன. நல்ல காற்று வீசும்படியான பல சாளரங்களும் அந்த வீடுகளிலே அமைக்கப்பட்டிருந்தன. அந்நகரின் வீதிகள் அகலமானவை; நீளமானவை. அவை களின் தோற்றம் உயர்ந்த இருகரைகளுக்கும் இடையிலே வெள்ளம் பெருகியோடும் ஆறுகளைப் போல் காணப்படுகின்றன. இவ்வாறு மதுரை நகரத்தின் வெளிப்புறத் தோற்றத் தையும், உட்புறத் தோற்றத்தையும் இவ்வாசிரியர் எழுதிக் காட்டுகிறார். மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின், விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை, தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை, நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் மழையொடு மலையின் நிவந்த மாடமொடு, வையை யன்ன வழக்குடை வாயில் (351-356) இவ்வடிகள் மதுரையின் புறநகர்த் தோற்றத்தைக் காட்டுவன. வகைபெற எழுந்து வானம் மூழ்கிச், சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல், யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு ( 357-359) இவ்வடிகள் மதுரையின் அகநகர்த் தோற்றத்தை அப்படியே காட்டுகின்றன. கொடிகள் பண்டைக்காலத்தில் கொடிகளையே விளம்பரக் கருவி களாகக் கொண்டி ருந்தனர். இதனை இந்நூலினாலும், பட்டினப் பாலையாலும் காணலாம். இந் நூலிலே விழாக்கொடி, வெற்றிக் கொடி, வியாபாரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை நகரிலே பறந்து கொண்டிருந்தன என்று கூறப்படுகின்றது. கோயில்களிலே திருவிழாக்கள் நடத்தியபோது கட்டிய பல வகையான கொடிகள் பறக்கின்றன. அரசனுடைய தளபதிகள் அவன் ஆணை பெற்றுச் சென்று அடங்காதவர் களுடன் போர் செய்கின்றனர்; அவர்களுடைய கோட்டைகளைப் பிடிக்கின்றனர்; அவ்வாறு பிடிக்குந்தோறும் அவ்வெற்றிகளைக் காட்டுவதற்காகப் பல கொடிகள் பறக்க விடப்படுகின்றன. அரசன் கடல்போன்ற தனது சேனையுடன் சென்று- எதிரிகளின் யானைப் படைகளை ஓட்டி - வெற்றி பெற்றதற்கு அடையாளமாகக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. உயர்ந்த மதுபானம் கிடைக்கும் இடத்தை அறிவிக்கும் கொடி பறந்து கொண்டிருக்கின்றது. இவைபோன்ற இன்னும் பல கொடிகள் பறந்து கொண்டி ருக்கின்றன. இக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் தோற்றம் பெரிய மலையிலிருந்து வீழும் அருவி நீரைப் போலக் காணப் படுகின்றது. சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி; வேறுபல் பெயர் ஆர எயில் கொளக்கொள நாள் தோறெடுத்த நலம்பெறு புனைகொடி; நீர் ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு புலவுப்படக் கொன்று மிடைதோல் ஓட்டிப் புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி; கள்ளின் களிநவில் கொடியொடு பல்வேறு குழூஉக்கொடிப் பதாகை நிலைஇப் பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க (366- 374) இவ்வாறு கூறி மதுரையிலே பறக்கின்ற கொடிகளை நம் கண் முன்னே காட்டுகிறார். கோவில்கள் மதுரை நகரிலே இப்பொழுதும் சிறப்பாக விளங்குவது சொக்கநாதர் கோவில். இப்பொழுதிருப்பதுபோலவே இந் நூலாசிரியர் காலத்திலும் சிவன்கோயில் சிறந்து விளங்கிற்று. மற்றும் பல தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன. பஞ்ச பூதங்களால் இவ்வுலகைப் படைத்த- மழுப்படை யையுடைய பரம சிவனைத் தலைவனாகக் கொண்டவர்கள்; குற்றமற்ற ஒளியை யுடையவர்கள்; வாடாத மலர்மாலையையும், இமையாத கண்களையும் உடையவர்கள்; மணம் வீசும் மது-மாமி சங்களைப் பலியாகக் கொள்ளும் அஞ்சத்தக்க பெரிய தெய்வங் கள்; அவர்களுக்குத் தவறாமல் உயிர்ப்பலி கொடுப்பதற்காக அந்திக்கால விழாவுக்குரிய வாத்தியங்கள் முழங்கின. நீரும் நிலனும் தீயும் வளியும் ஆக விசும்போடு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக, மாசற விளங்கிய சூழ் சுடர், வாடாப் பூவின், இமையா நாட்டத்து, நாற்ற உணவின், உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபின் உயிர்ப்பலி கொடுமார் அந்தி விழவில் தூரியம் கறங்க. (453- 460) இந்த அடிகளால் மதுரையிலே பல தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்ததையும், அவைகளுக்கு மாலைக் காலத்திலே தவறாமல் பூசைகள் நடைபெற்று வந்தன என்பதையும் காணலாம். பள்ளிகள் பள்ளி என்ற சொல் இக்காலத்தில் பள்ளிக்கூடத்தைக் குறித்து வழங்கு கின்றது. பண்டைக்காலத்தில் இச்சொல் சமண முனிவர்கள், புத்த சந்நியாசிகள் வாழும் இடங்களையே குறித்தது. அவர்கள் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து கொண்டு, தங்களைக் காண வருவோர்க்கு அறவுரைகளைப் போதித்து வந்தனர். இவ்வாறு போதனை நடைபெற்ற இடத் தைப் பள்ளிகள் என்று வழங்கியதனால் பிற்காலத்தில் கல்வி போதிக்கும் பாடசாலைகளையும் பள்ளிகள், பள்ளிக் கூடங்கள் என்ற பெயரால் வழங்கினர். மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பவுத்தர் பள்ளிகள் இருந்தன; சமணர் பள்ளிகள் இருந்தன. அவைகளிலே பவுத்தத் துறவிகளும், சமணத்துறவிகளும் வாழ்ந் தனர். அவர்கள் தங்கள் மத தர்மங்களைப் போதித்து வந்தனர். அக்காலத்திலே மதுரையிலே பவுத்த- சமணப் பள்ளி களைப் போல அந்தணர்பள்ளி இருந்ததாகவும் இவ்வாசிரியர் கூறுகிறார். இது ஒரு புதிய செய்தி. சமணத் துறவிகளைப் போல, பவுத்தத் துறவிகளைப்போல, தமிழ்நாட்டு அந்தணர்களிலும் துறவிகள் இருந்தார்கள்; அவர்கள் வேத வேதாந்தங்களைப் போதித்து வந்தார்கள் என்ற உண்மையை இதன் மூலம் காணலாம். சிறந்த வேதங்களைப் பொருள் விளங்கும்படி பாடு வார்கள். மற்றவர்கள் பின்பற்றும்படி சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். அறிவிலும், ஒழுக்கத்திலும் அவர்களுக்கு இணை யாக இவ்வுலகில் வேறு யாரையும் சொல்ல முடியாது. அவர் களுக்கு இணை அவர்களேதாம். உயர்ந்த உலகத்தை இங்கிருந்த படியே பெறக்கூடிய சிறந்த அறநெறியைத் தவறாமல் மேற் கொண்டவர்கள். எல்லோர்பாலும் இரக்கங் காட்டும் இளகிய நெஞ்சம் படைத்தவர்கள். மலையை மாளிகையாகச் செய்தது போன்ற பள்ளியிலே இவர்கள் வாழ்கின்றனர். இதுவே அந்தணர்பள்ளி. சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச்சீர் எய்திய ஒழுக்க மொடு புணர்ந்து நிலம்அமர் வையத்து ஒருதாம் ஆகி, உயர்நிலை உலகம் இவணின்று எய்தும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின், பெரியோர் மேஎய் இனிதின் உறையும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும், (468- 474) இவ்வடிகள் அந்தணர் பள்ளியைப் பற்றியும், அதிலே வாழ்ந்த அந்தணர் களின் உயர்வைப் பற்றியும் அறிவிக்கின்றன. சமணர்களும், பவுத்தர்களும் துறவு பூண்டு பொதுப்பணி புரிந்ததுபோலவே தமிழ்நாட்டு அந்தணர்களும் துறவுபூண்டு பொதுப்பணி புரிந்துவந்தனர் என்பதை இவ்வடிகள் விளக்கு கின்றன. சைவர், வைணவர், சமணர், பவுத்தர் போன்ற பல மதத்தினர் அக்காலத்தில் மதுரையில் வாழ்ந்தனர். ஆயினும் அவர்கள் சண்டை சச்சரவின்றி ஒன்றுபட்டி ருந்தனர். மத வெறுப்பும் மதவெறியும் மதச்சண்டையும் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னே தமிழ்நாட்டில் தலை காட்டியதில்லை. இவ்வுண்மையை இந்நூலின் மூலம் உணரலாம். அறங்கூறு அவையம் நீதிமன்றத்திற்கு அறங்கூறு அவையம் என்பது பழந்தமிழ்ப் பெயர். பண்டைத் தமிழர் நீதியிலே நேர்மை காட்டினர். பண்டைக் காலத்தில் நீதி வழங்கிய முறைக்கும், இக்காலத்தில் நீதி வழங்கும் முறைக்கும் வேற்றுமை உண்டு. அக்காலத்தில் உண்மையைக் கண்டறிந்து தீர்ப்பு கூறினர். இக்காலத்தில் சட்டவரம்பு கடவாமல் தீர்ப்பு கூறுகின்றனர். உண்மையில் ஒருவன் கொலைகாரனாக இருக்கலாம். அவன் கொலை செய்தான் என்பதற்கான சாட்சியங்கள் இன்றேல் அவனைத் தண்டிக்க முடியாது. உண்மையில் ஒருவன் குற்றமற்றவனாயிருக்கலாம். அவன் கொலை செய்ததை நேரே பார்த்ததாகக் கூறும் சாட்சிகள் இருந்தால் அவனைத் தூக்கிலே போட்டுவிடலாம். இக்காலத்தில் சட்டமே நீதி; அக்காலத்தில் உண்மையே நீதி. நீதிபதிகளைப் பற்றி இவ்வாசிரியர் கூறியிருப்பதைக் கொண்டு இதனை அறியலாம். பயத்தையும், துன்பத்தையும், ஆசையையும் விட்டவர்கள்; ஒரு பக்கத் தாரிடம் கோபமும், மற்றொரு பக்கத்தாரிடம் மகிழ்ச்சியும் காட்டாமல், தம் உள்ளத்தை நடுநிலையிலே நிறுத்திக் கொண்டவர்கள்; துலாக்கோலைப் போல் நடுநிலையிலே நிற்பவர்கள்; சிறந்த ஒழுக்கமுடையவர்கள்; இத்தகையவர்கள் நீதிபதிகளாக வீற்றிருந்து நீதி வழங்குகின்ற அறங்கூறு அவையம். அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச், செற்றமும் உவகையும் செய்யாது காத்து, ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச், சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும் (489-492) இவ்வாறு கூறி நீதிபதிகளின் நேர்மையைக் காட்டியிருக்கிறார். அறங்கூறு அவையம் - அறத்தின் வழி நின்று நீதி கூறுகின்ற சபை. இது நீதிமன்றம். வணிகர்கள் அக்காலத்து வணிகர்கள் அறநெறி தவறாதவர்கள்; நன்னெறியிலே நடப்பவர்கள். வாங்குவதை அதிகமாக வாங்கிக் கொண்டு, கொடுப்பதைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். அவர்களுடைய பரந்த- உயர்ந்த- சிறந்த இல்லத்திலே சிறுசிறு குன்றுகளைப்போலே, பல வகையான பண்டங்கள் குவிந்து கிடக்கும். உணவுப் பண்டங்கள் நிறைந்திருக்கும். மலைகளி லிருந்தும், நிலத்திலிருந்தும், நீரிலிருந்தும், பிற இடங்களிலி ருந்தும் பலவகையான இரத்தினங்களையும் முத்துக்களையும், பொன்னையும் பெற்றுக் கொள்ளுவார்கள். அவைகளுக்கு ஈடாகப் பல நாடுகளிலிருந்தும் கொண்டு வந்து குவித்திருக்கின்ற சிறந்த பல பண்டங்களைக் கொடுப்பார்கள். இத்தகைய சிறந்த வணிகர் பலர் மதுரை நகரிலே வாழ்ந்தனர். அறவழி பிழையாது ஆற்றின் ஒழுகிக், குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன பருந்திருந்து உவக்கும் பன்மாண் இல்லில், பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவினி, மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும். (500- 506) இவ்வடிகள் வணிகர்களின் நேர்மையையும் வளத்தையும் காட்டுகின்றன. தொழிலாளர்கள் மதுரை நகரிலே பலவகைத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அத்தொழிலாளர் கள் யார் யார் என்பதை அறிந்தால், அக் காலத்தில் தமிழர்கள் எத்தகைய நாகரிகம் படைத்திருந்தனர்; மதுரை நகரம் எவ்வளவு சிறப்புடன் விளங்கிற்று என்பதைக் காணலாம். அறுத்த சங்கை வளையல் முதலிய அணிகலன்களாகக் கடைபவர்கள் இருந்தனர். இரத்தினங்களிலே துளையிட்டு அவைகளை மாலை யாகக் கோத்துக் கொடுப்போர் இருந்தனர். புடம் போட்டெடுத்த பொன்னால் நல்ல ஆபரணங் களைச் செய்யும் தட்டார்கள் இருந்தனர். புடவைகளை விலை கூறி விற்கும் வியாபாரிகள் இருந்தனர். செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் செம்பு வியாபாரிகள் இருந்தனர். புதிய உடைகளிலே பூவேலை செய்து கொடுப்போர் இருந்தனர். மலர்களையும், புகைக்கக்கூடிய அகில், சந்தனம் முதலிய தூள்களையும் ஆராய்ந்தெடுத்து விற்பனை செய்வோர் வாழ்ந்தனர். எதையும் பார்த்தது பார்த்தபடியே எழுதக்கூடிய- நுண்ணிய அறிவு படைத்த- சித்திரக்காரர்கள் இருந்தனர். கோடுபோழ் கடைநரும், திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடர்இழை புனைநரும், பொன்உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும், செம்புநிறை கொண்மரும், வம்புநிறை முடிநரும் பூவும் புகையும் ஆயும் மாக்களும், எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி, நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் (611- 618) இவ்வடிகள் மதுரையிலிருந்த பலவகைத் தொழிலாளர் களைக் காட்டு கின்றன. விலைமகளிர் மதுரை நகரத்தில் விலைமகளிர் பலர் இருந்தனர். பழந்தமிழ்நாட்டில் விபசாரமும் நிலைத்திருந்தது. செல்வக் குடியினரே விபசாரம் நிலைத்திருப்பதற்குக் காரணமா யிருந்தனர். பழங்காலத்தில் பெண்ணுரிமையில்லை. பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். ஆண்கள் பல மனைவி யரை மணந்து கொள்ளலாம். விலைமாதர்கள் வீட்டுக்கும் போய் வரலாம். இது தவறாக எண்ணப்படவில்லை. இதனா லேயே விலைமாதர் அல்லது கணிகையர், பரத்தையர் என்று சொல்லக்கூடிய ஒரு வகுப்பினர் இருந்தனர். ஆயினும் அறிஞர்கள் விபசாரத்தைக் கண்டித்து வந்தனர். இந்நூலாசிரியரும் மதுரையில் விலைமாதர்கள் வாழ்ந்தனர் என்று சொல்லுவதோடு விட்டுவிடவில்லை. அவர்களின் இயல்பை எடுத்துக்காட்டிப் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லுகின்றார். விலைமாதர்கள் மழைக்காலத்திலே மலர்ந்திருக்கும் புதரைப் போலத் தலைநிறையப் பூச்சூடியிருப்பார்கள். வந்த வரை மார்பிலே வடுப்படும்படி அழுந்தத் தழுவிக்கொள்ளு வார்கள். வஞ்சகமான பல பொய் மொழிகளைப் பேசி, வந்தவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவார்கள். தம் உண்மை உள்ளத்தைக் காட்டமாட்டார்கள்; ஒளிப்பார்கள். வெளியூர்க்காரராயினும் சரி, உள்ளூர்க்காரராயினும் சரி, தம்முடைய அழகை விரும்பி வந்த வாலிபர்கள் பலரின் செல்வங்கள் முழுவதையும் பறித்துக் கொள்ளுவார்கள். பின்னர் வண்டுகள் ஒரு மலரில் உள்ள தேனை உண்ட பின் அந்த மலரை விட்டுவிட்டுத் தேனுள்ள வேறு மலரை நாடிச் செல்லுவது போல, தம்மைப் புணர்ந்தவர்களின் நெஞ்சம் வருந்தும்படி தூக்கத்திலேயே அவர்களை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இதுவே விலைமாதர்களின் இயல்பு என்று காட்டுகிறார். இதனை, கொண்டல் மலர்ப்புதன் மானப் பூவேய்ந்து நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி, மாயப்பொய் பல கூட்டிக், கவவுக் கரந்து, சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மானப், புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து (568-575) என்ற அடிகளால் அறியலாம். விலைமாதர்கள் இசை, நடனம் முதலிய கலைகளில் தேர்ந்திருந்தனர். தம்மைக் கண்ட இளைஞர்கள் மயங்கும்படி அலங்கரித்துக் கொள்ளும் திறமையுடையவர்களாயிருந்தனர். தெய்வலோகத்துப் பெண்களைப் போலக் காட்சியளித்தனர். இத்தகைய பரத்தையர்களை, வெற்றி கொண்ட வேந்தன் பகைவர் நாட்டிலிருந்து சிறைப்பிடித்து வருவதும் உண்டு. இப்படிச் சிறைப்பிடிக்கப்பட்டு வந்த மகளிர்க்குக் கொண்டி மகளிர் என்ற பெயர் வழங்குவதும் உண்டு. இக்கொண்டி மகளிரைப் பற்றியும் மாங்குடி மருதனார் குறிப்பிட்டிருக்கின்றார். நல்ல விளக்கு வெளிச்சத்திலே பல பெண்களுடன் நெருங்கி நிற்பார்கள். நீல நிறமுள்ள வானத்திலே நின்று விளையாடும் தெய்வ மகளிரைப் போலக் காணப்படுவார்கள். தம்மைக் காணும் இளைஞர்களின் நெஞ்சத்தைக் கலக்கி விடுவார்கள். இத்தகைய கொண்டி மகளிர் யாழோடு இசைந்து நின்ற மத்தளத்திற்கு ஏற்ப மகிழ்ந்து நடனமாடுவார்கள். ஆழமான நீர்த்துறையில் உள்ள மணல் திட்டுக்குப் போவார்கள். அங்கேயுள்ள மரக்கொம்புகளின் தளிர்களைக் கொய்வார்கள். நீர் நிறைந்த மலர்களுடன் நீண்டதாகத் தொடுத்த குவளை மலர் மாலையைப் பாதம் வரையிலும் தொங்கும்படி அணிந்து கொள்வார்கள். நறுமணம் வீசும் வீடுகள்தோறும் சென்று இளைஞர்களுடன் விளையாடுவார்கள். ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி, நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவர் மகளிர் மானக், கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉம், கொண்டி மகளிர் யாம நல்யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடிக், குண்டு நீர்ப் பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென்தளிர்க் கொழுங் கொம்பு கொழுதி, நீர்நனை மேவர நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி, மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயர (580- 589) இவ்வடிகளிலே விலைமாதர்களின் திறமையையும் அவர்கள் செயலையும் விளக்கியிருப்பதைக் காணலாம். கள்வரும் காப்பாரும் இந்நூலாசிரியர்கள் காலத்திலே பாண்டியநாடு செல்வங் கொழிக்கும் சிறந்த நாடாகத்தான் இருந்தது. மதுரையும் எல்லாச் செல்வங்களும் நிறைந்த எழில் நகராகத்தான் திகழ்ந்தது. ஆனால் அந்நகரத்திலே வறுமை காரணமாகத் திருடிப் பிழைக்கும் கள்வர்களும் இருந்தனர். அத்திருடர்களைப் பிடிக்கும் காவலர் களும் இருந்தனர். திருடர்கள் களவுத் தொழிலை ஒரு கலையாகக் கற்றிருந் தனர். காவலர் களும் கள்வர்களின் சூழ்ச்சிகளை அறிவிக்கும் களவு நூலைக் கற்றிருந்தனர். அக்காலக் கள்வர்கள் இருட்டிலே தம்மை யாரும் காணா மல் இருப்பதற்காக யானைத்தோலைப்போன்ற நிறமுடைய கருஞ்சட்டையணிந்திருப்பர். கல்லானாலும் மரமானாலும் அவற்றைத் துண்டு செய் கின்ற கூர்மையான வாளை வைத்திருப்பார்கள்; காலிலே செருப் பணிந்திருப்பார்கள்; சிறிய பிடியுள்ள கூர்மையான கத்தியைத் துடையில் மறைத்திருப்பார்கள்; பூவேலைகள் செய்யப்பட்ட நீல நிறக் கச்சையை இடையிலே அணிந்திருப்பார்கள். மெல்லிய நூலேணியைப் பல சுற்றுக்களாக இடையிலே சுற்றியிருப்பார் கள்; நிலத்தைத் தோண்டிக் கவ்விப் பிடித்துக்கொள்ளும்படியான வளைவு உளியை அந்த நூலேணியுடன் பிணைத்திருப்பார்கள். செல்வர்கள் வீட்டிலே புகுந்து உயர்ந்த ஆபரணங்களைத் திருட விரும்பி நகரிலே திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார் கண்ணிலும் படாமல் தப்பித்துக் கொள்ளும் திறமையுள்ளவர்கள். இவ்வாறு அக்காலக் கள்வரின் உருவத்தை அப்படியே சித்தரித்துக் காட்டுகிறார். இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு, கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர், தொடுதோல் அடியர், குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச், சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல் நிறம்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்; மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர், நிலன் அகழ் உளியர்; கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் இவ்வடிகள் கள்வர்களின் தோற்றத்தை நம்முன் காட்டு கின்றன. இதற்கு அடுத்தாற்போல் ஊரைக் காக்கும் காவலரைப் படம் பிடித்துக் காட்டுகிறார். மதுரை நகரைக் காக்கும் காவலர்கள் கள்வர்கள் பதுங்கி யிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக இரவு முழுவதும் விழித்துக்கொண்டே திரிகின்றனர். களிற்றைப் பிடிக்க மறைந்து திரியும் புலியைப்போல் அவர்கள் தூங்காமல் இருப்பார்கள். அவர்கள் அச்சமற்றவர்கள். களவுநூல் அறிந்தோர்களால் புகழப்பட்ட அறிவும் வல்லமையும் அமைந்தவர்கள். ஊர் காக்கும் நூலைக் கற்று, அந்த முறையைத் தவறாமல் பின்பற்றி நடக்கும் தேர்ந்த அறிவுடைய ஊர்காப்பாளர் கள். இவ்வாறு காவலர் திறமையை எடுத்துக்காட்டுகிறார். ஒடுக்கம் ஒற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர், அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி ஊர்காப்பாளர். (642- 647) இவ்வடிகள் கள்வரைப் பிடிக்க அலையும் காவலரைக் காட்டுகின்றன. அன்னசாலைகள் மதுரையிலே ஏழைகளுக்கு உணவளிக்கும் அன்னசாலை கள் இருந்தன. அந்த அன்னசாலைக்குத் தேன்மணம் கமழும் பலாச்சுளைகள், பலவகைப்பட்ட மாம்பழங்கள், பலவகையான காய்கறிகள், வாழைப்பழம், மழையினால் கொடிகளிலே அழகாக முளைத்திருக்கின்ற இளங்கீரை, அமுதம் போன்ற இனிமையான பல்வகைப் பட்டைச்சாதம், சுவையுடையது என்று கொண்டாடும்படி செய்யப்பட்ட புலவுச்சோறு, பூமியிலே விளைந்து முற்றிய கிழங்கு ஆகியவைகளைக் கொண்டு வருவார்கள். அங்கே காத்திருக்கும் வறிஞர்களுக்கு அளிப்பார்கள். சேறு நாற்றமும் பலவின் சுளையும், வேறுபடக் கவினிய தேமாங் கனியும், பல்வேறு உருவிற் காயும், பழனும் கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி மென்பிணி அவிழ்ந்த குறுமுறி அடகும் அமிர்து இயன்றன்ன தீஞ்சோற்றுக் கடியும், புகழ்படப் பண்ணிய பேர் ஊன்சோறும், கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும், இன்சோறு தருநர் பல்வயின் நுகர (527-535) இவ்வடிகளால் மதுரைநகரிலே பிறரிடம் பிச்சையேற்றுண்ணும் வறியர்களும் வாழ்ந்தனர்; அவர்களுக்கு அன்னமளிக்கும் செல்வர் களும் வாழ்ந்தனர் என்பதைக் காணலாம். வாழ்க்கையின்பம் மறுவுலக வாழ்க்கை பற்றி நேரே கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. மதநூல்களும், புராணங்களும்தான், மாண்ட பின்னும் நன்மை - தீமைகளைத் தரும் உலகம் உண்டென்று கூறு கின்றன. அவற்றை நம்புவோர் பலர்; நம்பாதோர் சிலர். எவரும் இவ்வுலக இன்பத்தை வெறுப்பதில்லை. எல்லா மக்களும் இவ்வுலகில் இனிது வாழவே விரும்புகின்றனர். இவ் வாறு வாழ விரும்பும் உரிமை எவர்க்கும் உண்டு. பண்டைத் தமிழர்கள் இவ்வுலகில் துன்பமின்றி இன்புற்று வாழ்வதை வெறுக்கவில்லை. எல்லோரும் இன்புற்று இனிது வாழ வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். இக்கொள்கையை இந்நூலின் இறுதியிலே பாண்டியனுக்கு வாழ்த்து கூறும் வழியாக வலியுறுத்திக் கூறியுள்ளார் இவ்வாசிரியர். இது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அளவோடு நீ அடைந்திருக்கும் வாழ்நாளை இனி வீணாக்காதே! நகைகளை அணிந்த நல்ல மகளிர் பொன்கலத் திலே மணம்வீசும் நல்ல மதுவை ஊற்றித்தர அதனை அருந்தி மகிழ்ந்து அவர்களுடன் எந்நாளும் இனிதுவாழ்க என்று வாழ்த் தியிருக்கிறார். இதனை இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம்கமழ் தேறல் மடுப்ப, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்து நீ பெற்ற நல்ஊழியையே (779 - 782) என்ற அடிகளால் காணலாம். இவ்வடிகள் இப்பாட்டின் இறுதியில் உள்ளவை. இன்னும் பல செய்திகள் மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய நெடுஞ்செழியன் இமயமுதல் குமரிவரையில் உள்ள பரதகண்ட முழுவதையும் ஆண்டான் என்று இந்நூல் கூறுகிறது. தெற்கே தென்குமரியும், வடக்கே இமயமலையும், கிழக்கே கடலும், மேற்கே கடலும் எல்லையாக உடைய நாட்டினர் அனைவரும் உன்னுடன் கொண்ட பழைய நட்பினைச் சொல்லி உன் ஏவலைச் செய்து வருகின்றனர். எப்பொழுதும் வெற்றி யுடனே இணைந்து வாழ்கின்றாய். அரசர்களுக்கெல்லாம் அரசனாக விளங்குகின்றாய் என்று நெடுஞ்செழியன் பாராட்டப் படுகின்றான். இதனை தென்குமரி, வடபெருங்கல், குண, குட கடலா எல்லைத் தொன்று மொழிந்து தொழில்கேட்ப, வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர்தம் கோன் ஆகுவை (70-74) என்ற அடிகளால் அறியலாம். வடபெருங்கல் என்பதை வடவேங்கடம் என்று பொருள் கொண்டு தமிழ்நாடு முழுவதையும் ஆண்டனன் என்று சொல் லுவாரும் உண்டு. வடபெருங்கல் என்ற சொற்றொடர் குறிப் பிடத்தக்கது. இச்சொல் இமயமலையைக் குறிப்பதேயாகும். அக்காலத்தில் நிலவளம் மிகச்சிறந்திருந்தது. பயிர் வளர்ந் திருக்கும் வயலிலே யானை புகுந்தால் அந்தப் பயிரின் உயரம் யானையின் உருவத்தை மறைத்துவிடுமாம். இதனை, களிறு மாய்க்கும் கதிர்க் கழனி (247) என்பதனால் அறியலாம். மலையாளிகளுக்கு ஓணம் பண்டிகையென்பது ஒரு தேசியத் திருவிழா. புத்தாண்டு விழாவைப்போலக் கொண்டாடு கின்றனர். இது திருமாலைக் கொண்டாடும் பண்டிகை. இப் பண்டிகையை அக்காலத்தில் தமிழ்நாட்டினரும் கொண்டாடி வந்தனர். கூட்டமான அவுணரை வெற்றிகொண்ட அழகிய மாலையை அணிந்த திருமாலுக்குரிய திருவோண நன்னாள். கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் (590-591) என்ற அடிகள் இதைத் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் மலையாளமொழி தனிமொழியாக இல்லை; மலையாளிகள் தனி இனத்தினராகவும் இல்லை. இன்றுள்ள மலையாளிகளின் முன்னோர் அன்று தமிழராகவே இருந்தனர். இன்றுள்ள மலை யாளம் அன்று சேரநாடாக இருந்தது என்று எண்ண இது இடந்தருகின்றது. அந்தணர்கள் விடியற்காலத்திலே எழுந்து வேதங்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள். ஓதல் அந்தணர் வேதம் பாட (656) அறிஞர்கள் கூடி பல செய்திகளைப் பற்றி ஒருவரொடு ஒருவர் விவாதிப்பார்கள்; இவ்வாறு விவாதிக்கும் ஓசை கேட்டுக் கொண்டேயிருக்கும். விழுமியோர் குழீஇ விழவுகொள் கம்பலை (525-526) மதுரை நகரிலே நாளங்காடி, அல்லங்காடி என்று இரண்டு வகையான வாணிகம் செய்யும் இடங்கள் இருந்தன. நாள் அங்காடி- பகலில் வாணிகம் நடைபெறும் இடம். அல் அங்காடி- இரவில் வாணிகம் நடக்கும் இடம். மக்கள் விரும்பும் பலவகையான பண்டங்களையும் மலர் களையும் வீடுகள்தோறும் கொண்டுபோய்ப் பெண்கள் விற் பனை செய்வார்கள். தச்சுத்தொழில், இரும்புத்தொழில், நெசவுத்தொழில், சிற்பத்தொழில், ஓவியத்தொழில், உழவுத்தொழில் போன்ற பல தொழில்கள் உயர்ந்த நிலையிலிருந்தன. தொழில் காரணமாக அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் முதலிய பல பிரிவுகள் இருந்தன. ஆயினும் அவர்கள் எவ்வித வேற்றுமையும் இன்றி ஒன்றுபட்டு ஒரே குலமாக வாழ்ந்தனர். இவைபோன்ற இன்னும் பல செய்திகளை இந் நூலிலே காணலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் நாட்டின் பெருமையை யும் தமிழர்கள் பண்பாட்டையும் அறிய இந் நூல் ஒரு சிறந்த கருவி. 8 நெடுநல்வாடை பெயர்க்காரணம் இது பத்துப்பாட்டுள் ஏழாவது பாட்டு. 188 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பா வால் ஆகியது. நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல வாடைக்காற்று என்பது பொருள். வாடை- குளிர்காற்று. வடக்கிலிருந்து வீசுவது வாடைக்காற்று; தெற்கிலிருந்து வீசுவது தென்றற் காற்று; கொண்டல்- கீழ்க்காற்று; கோடை - மேல்காற்று. மழைக் காலத்தில்தான் வாடைக்காற்று வீசும். யாரும் குளிர் காற்றை விரும்புவதில்லை. மக்களும் வெறுப்பர்; விலங்கு களும் பறவைகளும் வெறுக்கும். மழையும் குளிரும் உள்ள காலத்தில் மக்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் மனச் சோர்வடைவர். குளிருக்கு அடக்க மான இடம் பார்த்து அடைந்து கிடப்பர். ஏனைய உயிர்களும் இப்படித்தான்; அவைகள் குளிர் பொறுக்காமல் எங்கேனும் சந்து பொந்து களிலே பதுங்கிக் கிடக்கும். இப்படிப்பட்ட வாடைக்கு நல்வாடை என்று பெயர் கொடுத்துள்ளார் இவ்வாசிரியர். கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் காதலிக்கு இக்குளிர் காலம் நீண்டதாகத் தோன்றுகிறது. முடிவற்றதாகக் காணப்படு கிறது. காதலியைப் பிரிந்து போர்க்களத்திலே புகுந்து கடமை யாற்றும் காதலனுக்கு வெற்றி கிடைக்கிறது. அவன் சோர்ந்து கிடக்காமல் சுறுசுறுப்புடன் பாசறையிலே சுற்றித் திரிகின்றான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் வைத்துத்தான் இந் நூலுக்கு நெடுநல் வாடையென்ற பெயரை இந்நூலாசிரியர் அமைத்தார். காதலிக்கு நீண்டதாகவும், காதலனுக்கு வெற்றியைத் தருவதாகவும் உள்ள வாடைக் காற்றை நெடுநல்வாடையென்று கூறியது பொருத்தமான பெயர். ஆசிரியர் இந்நூலின் ஆசிரியர் நக்கீரனார். மதுரைக் கணக்காயனார் மகனார் என்னும் தமிழ்ப்புலவர் இவரேதான். பத்துப்பாட்டின் முதற்பாட்டாகிய திருமுருகாற்றுப் படையின் ஆசிரியரும் இவரே தான். திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சிலே இவரது வரலாற்றுக் குறிப்பு கூறப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, முருகனைத் தலைவனாக வைத்துப் பாடப்பட்டது. இந்நூல் ஒரு அரசனைத் தலைவனாக வைத்துப் பாடப்பட்டது. நக்கீரனாரின் சிறப்பைப்பற்றி- புலமையைப்பற்றி - நாம் சொல்லவேண்டியதில்லை. நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று சொல்லிப் பரமசிவனாருடன் வழக்காடினார் என்று இவரைப்பற்றி வழங்கும் வரலாறு ஒன்றே இவர் பெருமைக்குப் போதுமானதாகும். பாட்டின் தலைவன் நெடுநல்வாடையின் தலைவனும் பாண்டியன் நெடுஞ் செழியனேதான். மதுரைக்காஞ்சியின் தலைவனாகிய நெடுஞ் செழியனும் இவனும் ஒருவனே. இந்நூலிலே எவ்விடத்தும் நெடுஞ்செழியனுடைய பெயர் சுட்டப்பட வில்லை. மதுரைநகரைப் பற்றிக்கூட வெளிப்படை யாகக் கூறப்படவில்லை. அரசனுடைய தளபதியைக் குறிக்கும்போது வேம்பு தலை யாத்த, நோன்காழ் எஃகமொடு முன்னோன் (176-177) என்று கூறுகிறார் இவ்வாசிரியர். வேப்பமலர் மாலையைத் தலையிலே தரித்துக்கொண்டிருக்கிறவன்; வலிமையான காம்பினையுடைய வேற்படையொடு விளங்கும் படைத்தலைவன் என்பதே இதன் பொருள். படைத்தலைவன் வேப்பமலர் மாலையை அணிந்திருந் தான் என்பதனால் இப்பாட்டில் குறிக்கப்படும் அரசன் பாண்டி யனேதான். இப்பாட்டின் இறுதியிலே வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே என்று முடிகின்றது. மன்னர் பலரொடு பகைத்துப் போர் செய்த போர்க்களத் தொழில் என்பது இதன் பொருள். பாண்டியன் நெடுஞ்செழியன் பல மன்னர்களைப் போரிலே வெற்றி கொண்டவன். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் ஏழுமன்னர்களையும் போரிலே புறமுதுகிட்டோடும்படி செய்தவன். தலையாலங்கானம் என்ற இடத்திலே இந்த எழுவ ருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். இவனால் வெல்லப்பட்ட எழுவருள் சேர மன்னன் சிறைபிடிக்கப்பட்டான். இச்சேர மன்னன்தான் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன். பலரொடு முரணிய பாசறைத் தொழில் என்பதில் உள்ள பலர் என்பது இவன் பகைவர்களான எழுவரையும் குறித்தது. பாசறை என்பது தலையாலங்கானத்துப் போர்க் களத்தைக் குறித்தது. பத்துப்பாட்டின் உரையாசிரியரான நச்சினார்க் கினியர் பலர் என்பதற்கும் பாசறை என்பதற்கும் இவ்வாறே பொருள் கொண்டார். ஆகவே வேம்பு தலையாத்த என்னும் குறிப்பைக் கொண்டும், பலரொடு முரணிய பாசறை என்ற குறிப்பைக் கொண்டும் நெடுநல்வாடையின் தலைவன் பாண்டியன் நெடுஞ் செழியன்தான் என்று தெரிந்து கொள்ளலாம். பாட்டின் அமைப்பு விடாமல் மழை கொட்டுகிறது; சீறிச்சீறி வாடைக் காற்று வீசுகின்றது; இடையர்கள் தங்கள் ஆடுமாடுகளை மேட்டு நிலத்தை நோக்கி ஓட்டிக்கொண்டு ஓடுகின்றனர். மரம், செடி, கொடிகள் மழையால் வாட்டந் தீர்ந்து வளர் கின்றன. நகரத்தின் வீதிகளிலே குடிகாரர்களைத் தவிர வேறு யாரும் நடமாட வில்லை. பெண்கள், சிறு சண்பகப்பூ மலர்வதைக் கண்டுதான் அந்தி நேரம் வந்து விட்டது என்று அறிந்து கொள்ளுகின்றனர். வீடு களில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒழுங்காக நடை பெறவில்லை. எல்லோரும் வாடையால் நடுங்கிக் கிடக்கின்றனர். போருக்குப் போன மன்னன் திரும்பி வராமையால், அந்தப்புரத்திலே அரசன் மனைவி கட்டிலிலே வருந்திக் கிடக்கின்றாள். ஏவல் மகளிர் எவ்வளவுதான் சமா தானம் கூறினாலும் அவள் உள்ளத்திலே சாந்தி பிறக்கவில்லை. இந்நிலையிலே ஒருத்தி தெய்வத்தை வேண்டிக் கொள்ளுகின்றாள். வேந்தன் போரை முடித்து வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்பது அவளுடைய வேண்டுகோள். இந்த முறையிலே இப்பாடலை அமைத்துப் பாடியிருக் கின்றார் ஆசிரியர் நக்கீரர். இப்பாட்டிலே மழைக்காலத்தின் இயற்கையையும், தமிழர் நாகரிகத்தை யும் காணலாம். புதுவீடு கட்டுதல் தமிழர்கள் புதுவீடு கட்டத் தொடங்கும்போது நல்ல நாள் பார்த்து அடிப்படை போடுவார்கள். அப்பொழுது தெய்வத்தை வணங்குவார்கள்; பூசிப்பார்கள். கட்ட வேண்டிய மனையை நல்ல நேரத்திலே நூல் பிடித்துச் சதுரிப்பார்கள். எங்கெங்கே கடைக்கால் எடுக்க வேண்டும் என்று அடையாளமிடுவார்கள். இவ்வழக்கம் இன்றும் உண்டு. மிகுந்த பணம் போட்டுக் கட்டும் பெரிய கட்டிடங்களுக்குக் கட்டிடக் கலை யிலே வல்ல எஞ்சினியர்கள் திட்டம் போட்டுக் கொடுக்கின்றனர்; அவர்களுடைய மேற்பார்வையிலே கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதைப்போலவே பண்டைத் தமிழகத்திலே கட்டிடக் கலையைக் கற்றறிந்த நிபுணர்கள் இருந்தனர். அவர்கள்தாம் பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்கள். அவர்கள் மனையைச் சதுரிக்கும்போது திசை களை வணங்குவார்கள்; தெய்வத்திற்குப் பலி கொடுப்பார்கள். இச்செய்தி இந்த நெடுநல்வாடையிலே காணப்படுகிறது. கதிரவன் ஒரு பக்கத்திலும் சாயாமல் உச்சியிலே நிற்கும் நடுப்பகலில்தான் மனையைச் சதுரிக்கத் தொடங்குவார்கள். மனையடி சாத்திரங்களைக் கற்றறிந்த அவர்கள் கூர்மையாக ஆராய்ந்து- கயிறுபிடித்து- மனையைச் சதுரிப்பார்கள். திசை களையும் வணங்கித் தெய்வத்தையும் வேண்டிக்கொண்டு மன்னர்கள் வாழ்வதற்குத் தக்கபடி மனையிலே பல பகுதிகள் இருக்கும்படி அமைப்பார்கள் என்று கூறுகிறார் நக்கீரர். இதனை, ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து, நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டுத், தேஎங் கொண்டு, தெய்வம் நோக்கிப், பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து (75-78) என்ற அடிகளைக் கொண்டு அறியலாம். கோட்டை வாயில் இக்காலத்திலும் பழமையான நகரங்கள் பலவற்றிலே பண் டைக்காலக் கோட்டை வாயில்களைப் பார்க்கின்றோம். அவை கள் அகலமாகவும், உயரமாக வும் அமைந்திருக்கின்றன. கோட் டைவாயில்களுக்கு மேலே கோபுரம் கட்டும் வழக்கம் இல்லை. வாயிலின் மேற்பாகத்தை மாட வீடுகளாக அமைத்திருக் கின்றனர். இதுவே கோட்டை வாசலின் அமைப்பாகும். பண்டைக் காலத்தில் அரண்மனையைச் சுற்றிய கோட்டை வாயில் எப்படி அமைக்கப் பட்டது என்பதை இந்த நெடுநல்வாடையிலே காணலாம். இரட்டைக்கதவுகள்; நல்ல வேலைப்பாடமைந்தவை; உட்புறம் தாழ் போடும் படி செய்யப்பட்டவை; வேலைத்திறம் மிகுந்த தச்சனால் நன்றாக இணைத்து இடுக்கில்லாமல் செய்யப்பட்டவை. வாசல்கால் உயரமாக இருக்கும்; அது வெண்சிறு கடுகும், எண்ணெயும் பூசி வணங்குகின்ற தெய்வ உருவத்தைக் கொண்டதாக இருக்கும். வெற்றிக்கு அடையாளமாக உயர்த்தி யிருக்கின்ற கொடியுடன் யானைகள் தாராளமாக நுழைந்து போகும்படியான உயரமுள்ள வாசல். குன்றிலே குடைந்து தொளையிட்டது போலக் காணப்படும் வாசல் என்று இவ்வாறு அரண்மனைக் கோட்டை வாசலைக் காட்டுகின்றது இந்நூல். தாழொடு குயின்ற போரமை புணர்ப்பின் கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து, ஐயன் அப்பிய நெய்யணி நெடுநிலை, வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுகக் குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாசல் (84-88) இவ்வடிகள் கோட்டை வாசலின் அமைப்பைக் காட்டுகின்றன. அரசனுடைய அந்தப்புரம் அரசனும் அரசியும் தனித்துறையும் பகுதிக்கு அந்தப்புரம் என்று பெயர். அரண்மனையின் அந்தப்புரக் கட்டிடங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்வாசிரியர் விளக்கி யிருக்கின்றார். அந்தப்புரத்திலே அரசனைத் தவிர வேறு ஆடவர்கள் போக முடியாது. அணைந்த விளக்கைக்கூட அரசன் தான் கொளுத்த வேண்டும் இத்தகைய தனித்த அந்தப்புரக் கட்டிடங்களைப் பார்த்தால் நாம் வியப்படைவோம். அந்தப்புரக் கட்டிடங்கள் மலைகளைப்போல உயர்ந்த தோற்றமுடையன. மலைகளின் மேல் மழைக் காலத்து இந்திரவில் ஒளிவிடும் காட்சியைப்போல், அக்கட்டிடங்களின் உச்சியிலே பல நிறமுள்ள கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. பலவிடங்களிலும் வெள்ளியைப்போல விளங்கும் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கின்றது. நீல மணியைப் போன்ற கருமையும் திரட்சியும் உடைய வலிமையான கருங்கற்றூண்கள் நிறுத் தப்பட்டிருக்கின்றன; அவைகள் செம்பினாற் செய்யப்பட்டது போன்று உறுதியானவை. சுவர்களிலே சித்திர வேலைப்பாடு களும் அமைந்திருக்கின்றன. அழகிய பல மலர்கள் பூத்த கொடி களும் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த அந்தப்புரத்திற்குக் `கருவில் என்று பெயர். இவ்வாறு காணத்தக்க இனிமையும் அழகும் அமைந்து விளங்கியது அந்த நல்ல இல்லம் வரைகண் டன்ன தோன்றல, வரைசேர்பு வில்கிடந்தன்ன கொடிய, பல்வயின் வெள்ளியன்ன விளங்கும் சுதையுரீஇ மணிகண்டன்ன மாத்திரள் திண்காழ்ச், செம்பு இயன்றன்ன செய்வுரு நெடும்சுவர் உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக் கருவொடு பெயரிய காண்பின் நல்இல் (108- 114) இவ்வடிகள் அந்தப்புரத்தை நமக்குக் காட்டுகின்றன. கருவில் என்ற பெயரையே பிற்காலத்தினர் கர்ப்பக்கிரகம் என்ற பெயரால் அழைத்தனர். போர்க்களத்திலே மன்னர்கள் பண்டைத் தமிழ் மன்னர்கள் போர்க்களத்திலே நேரடி யாகப் பங்கு கொண்டார்கள். இக்காலத்தில், போர்வெறியர்கள் கூலிப்படையை எதிரிகளின் மேல் ஏவிவிடுவதைப்போல் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் பாசறையிலே தங்கியிருக் கும்போது போரிலே அடிபட்ட வீரர்கள் ஒவ்வொருவரையும் நேரே போய்ப் பார்ப்பார்கள். அடிபட்டு வருந்தும் அவர் களுக்கு ஆறுதல்மொழி புகல்வார்கள். போர் வீரர்களுடன் அன்புடன் நண்பர்களாகப் பழகுவார்கள். இது பண்டைத்தமிழ் மன்னர்களின் தன்மை. விளக்கு வெளிச்சத்திலே- வேப்பம்பூ மாலையணிந்து வேலாயுதத்தையும் ஏந்தியிருக்கின்ற படைத்தலைவன்- காயம் பட்ட வீரர்களை வரிசை வரிசையாகக் காட்டுகின்றான். மன்னன் அவர்களைப் பார்த்து ஆறுதல் மொழிகளைக் கூறிக்கொண்டு வருகின்றான். இச்சமயத்தில் மழையும் பெய்துகொண்டேயிருக் கிறது. மணி பூண்டிருக்கும் யானை- அலங்காரம் களையப்படாத குதிரை- இவைகள் சேற்று நிலத்திலே நின்றுகொண்டு தம்மீது விழுந்த மழைத்துளிகளை உதறுகின்றன. அந்த நீர்த்துளிகள் அரசன் மேல் தெறிக்கின்றன. அரசன் தன் தோளிலே அணிந் திருக்கும் அழகிய துகில் வாடைக் காற்றால் நழுவி விழு கின்றது. அதனை இடது பக்கத்திலே அணைத்துப் பிடித்துக் கொண்டான். வாளைத் தோளிலே கட்டித் தொங்கவிட்டிருக்கின்ற வலிமை பொருந்திய வீரஇளைஞன் ஒருவனுடைய தோள்மீது கையைப் போட்டுக்கொண்டான். மகிழ்ச்சியுடன் மற்றொரு வீரன், தவ்தவ் வென்ற ஓசையுடன் விழும் மழைத்துளி மன்னன் மேல் படாமல் மறைக்கும்படி வெண்கொற்றக்குடையைப் பிடித்துக்கொண்டு வந்தான். மன்னன் இவ்வாறு நள்ளிரவிலே கூடப் பள்ளி கொள்ளாமல் சிலருடன் சேர்ந்து பாசறையில் சுற்றிக் கொண்டி ருந்தான். வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப், பின்னர் மணி புறத்திட்ட மாத்தாட் பிடியொடு பருமம் களையாப் பாய்பரிக் கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப், புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ, வாள்தோட் கோத்த வன்கட் காளை சுவல்மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப, நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் (176-187) இவ்வடிகள் தமிழ் மன்னன் பாண்டியன் செயலைப் பாராட்டிக் கூறுகின்றன. போர்வீரர்களை எப்படி உற்சாக மூட்டுவது என்ற கலையைத் தமிழரசர்கள் நன்றாக அறிந் திருந்தனர் என்பதை இதனால் அறியலாம். குடியர்கள் மாரிக்காலத்திலே குடியர்கள் பாடுதான் கொண்டாட்டம். குடிகாரர்கள் குளிரால் நடுங்கமாட்டார்கள்; குடிவெறியால் ஆனந்தமாகக் கூத்தாடுவார்கள். இன்னும் குளிர்ப்பிரதேசத்திலே வாழ்கின்றவர்கள் குடியை ஒரு போகப் பொருளாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். குடிவெறியர்கள் மாரிக் காலத்தில் எப்படித் திரிகின்றார்கள் என்பதை நக்கீரர் நன்றாக எடுத்துக் காட்டியிருக்கின்றார். முறுக்கேறிய உடல்வலிமை படைத்தவர்கள்; அறிவற்ற வர்கள். அவர்கள் வண்டுகள் மொய்க்கின்ற கள்ளைக் குடித்தார் கள்; கள்ளின் வெறியால் களிப்பு மிகுந்தார்கள். அதனால் அவர் கள் மழைத்துளியைப் பொருட்படுத்தவில்லை; நேரத்தையும் பொருட்படுத்தவில்லை. இரண்டு முனையையுடைய ஒரே துணி யுடன் அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தார்கள். முடலை யாக்கை முழுவலி மாக்கள், வண்டுமூசு தேறல்மாந்தி, மகிழ்சிறந்து துவலை நுண்டுளிபேணார் பகலிறந்து, இருகோட்டு அறுவையர், வேண்டுவயின் திரிதர (32-35) இவ்வடிகளிலே குடியர்களின் செயலைக் குறிப்பிட்டிருப் பதைக் காணலாம். இவ்வாறு குடித்துவிட்டுத் திரிகின்றவர்களை மாக்கள் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள். விளக்குகள் பண்டைக்காலத்தில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டுக் கொளுத்தும் விளக்கு களே இருந்தன. இந்த விளக்குகள் இரும்பினால் செய்யப்பட்டன; மண்ணாலும் செய்யப்பட்டன; செம்பினாலும் செய்யப்பட்டன. பல கிளைகளையுடைய விளக்கு களும் இருந்தன. யவனர்களால் செய்யப்பட்ட பாவை விளக்குகள் இருந்தன. அவ்விளக்குகளைத் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் தமிழ் நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்ததென்று தெரிகிறது. யவனரால் செய்யப்பட்டது; வேலைப்பாடு அமைந்தது; பெண்ணுருவாகச் செய்யப்பட்டது. அதன் கையில் ஏந்தியிருக் கின்ற அகலில் நிரம்பிய எண்ணெய் ஊற்றினர். பருமையான திரியைப் போட்டு அதனைக் கொளுத்தினர். அந்தத் திரி ஒளியுடன் தலை நிமிர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றது. என்று இவ்வாறு யவனரால் செய்யப்பட்ட பாவை விளக்கைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனை, யவனர் இயற்றிய வினைமாண் பாவை, கையேந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து, பரூஉத்திரி கொளீஇய, குரூஉத்தலை நிமிர்எரி; (101- 103) என்ற அடிகள் காட்டும். இன்னும் பல செய்திகள் இந்நூலின் மூலம் இன்னும் பல பழக்கவழக்கங்களைக் காணலாம். இடையர்கள் மழைக்காலத்து வெள்ளத்தைக் கண்டு வெறுக்கின்றனர். தங்கள் ஆடு - மாடுகளை வெள்ளம் வராத மேட்டு நிலத்தை நோக்கி ஓட்டிக் கொண்டு போகின்றனர். மிகவும் துக்கத்துடனேயே அவர்கள் வேறிடத்திற்குப் போகின்றனர். தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிவதிலே அவ்வளவு வருத்தம் அடைகின்றனர். இதனை, ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர், ஏறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப், புலம் பெயர் புலம்பொடு கலங்கி (3-5) என்ற அடிகள் காட்டுகின்றன. பெண்கள் மாலைக் காலத்திலே விளக்கேற்றி வைப்பார்கள்; நெல்லையும் மலரையும் தூவி அவ்விளக்கொளியை வணங் குவார்கள். இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ, நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது (42-43) என்ற அடிகள் இச்செய்தியைக் காட்டுகின்றன. அக்காலத்தில் சந்தனக் கற்கள் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. வடவர் தந்த வான்கேழ் வட்டம் (51) என்பதனால் இதனை அறியலாம். வான்கேழ் வட்டம் என்பது சந்தனக்கல். கோடைக் காலத்தில் குளிர்ந்த தண்ணீரைக் குடிக்க விரும்புவோர் வாய் குறுகலான மண்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கின்றனர். இதைப்போன்ற மண்கூஜாக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் தமிழ்நாட்டில் செய்யப் பட்டன. கோடை நாளில் அவைகளில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொண்டு அருந்துவார்கள். இந்த மண் கூஜாவை தொகுவாய்க் கன்னல் (65) என்ற தொடரால் காணலாம். தொகுவாய்க் கன்னல்- சிறிய வாயையுடைய நீர்ப்பாண்டம். யானைத் தந்தத்தால் கட்டில்கள் செய்வார்கள். நாற்பது வயது முடிந்து தாமே இறந்துபோன யானைகளின் தந்தங்களைக் கொண்டு கட்டிலின் கால்களைச் செய்வார்கள். அந்தக் கட்டில் களிலே பலவிதமான சித்திர வேலைப்பாடுகளும் செய்திருப்பர். கட்டிலின் மேற்புறத்தில் கட்டியிருக்கும் துணியிலே சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருப்பதுபோன்ற சித்திரம் தீட்டியிருப்பார்கள். இந்நூல் செய்த காலத்திலே இவைபோன்ற பல தொழில்கள் வளர்ச்சி யடைந்திருந்தன. இவைபோன்ற பல செய்திகளையும், தமிழர்களின் சிறந்த நாகரிகங்களையும் இந்நூலிலே காணலாம். நக்கீரரின் சிறந்த புலமைக்கு இந்நூல் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சித்திணை இது பத்துப்பாட்டுள் எட்டாவது பாட்டு. இதன் அடிகள் 261. இதுவும் ஆசிரியப்பாவால் ஆகியதே. குறிஞ்சித்திணையைப் பற்றிச் சொல்லுவது குறிஞ்சிப் பாட்டு. மலையும், மலையைச் சேர்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மக்கள் பின்பற்றி வந்த ஒழுக்கத்தை இப்பாட்டு விரித்துக் கூறுகின்றது. மலைப்பாங்கிலே, அதாவது குறிஞ்சி நிலத்திலே மணப் பருவமுள்ள ஒருவனும் ஒருத்தியும் முதன் முதலில் சந்திப்பார் கள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்வர்; கள்ளத் தனமாக வாழ்க்கை நடத்துவர். இதுவே குறிஞ்சி ஒழுக்கமாகும். ஆசிரியர் இந்நூலை இயற்றியவர் கபிலர் என்னும் பெரும்புலவர். இவர் தமிழ்நாட்டு அந்தணர் மரபைச் சேர்ந்தவர். இவர் பறம்பின் தலைவன்- கடையெழுவள்ளல்களில் ஒருவன்- மூவேந்தர் களும் கண்டு பொறாமை கொண்ட புகழுள்ளவன் - பாரி என்பவனுடைய உயிர்த்தோழர். பாரி உயிரோடிருக்கும் வரையிலும் அவனோடு இணைபிரியாமல் வாழ்ந்து வந்தார். மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பாரி இறந்தான். அதன் பிறகு அவனுடைய மகளிர் இருவரையும் நல்ல இடத்திலே மணம் செய்து கொடுப்பதற்காக அரும்பாடுபட்டார். பாரிக்கும் இவருக்கும் இருந்த தொடர்பைப் பற்றிப் புறநானூற்றுப் பாடல் களிலே காணலாம். சங்க நூல்களிலே இவருடைய பாடல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களிலே இவருடைய பாடல்கள் பல உள்ளன. இவைகளிலே பெரும்பாலான பாடல் கள் குறிஞ்சித்திணையைப் பற்றியே கூறுகின்றன. ஐங்குறுநூற்றிலே குறிஞ்சியைப் பற்றிய நூறு பாடல்கள் இவர் இயற்றியவை. கலித்தொகையிலே குறிஞ்சிக்கலி இவர் பாடியது. பதிற்றுப்பத்திலே ஏழாம்பத்து இவரால் பாடப் பட்டது. இந்தக் குறிஞ்சிப் பாட்டு இவர் தந்த செல்வம். மலையைப் பற்றி - மலைவளத்தைப் பற்றி- மலைநாட்டு மக்களாகிய குறிஞ்சிநில மக்களின் பழக்க வழக்கப் பண்பாடு களைப் பற்றிப் பாடுவதிலே இவருக்கு நிகர் யாருமில்லை. இவர் குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்தவர்; குறிஞ்சி நிலமாகிய பறம்பு மலையிலே பாரியுடன் பலகாலம் இருந்தவர். ஆகையால் இவர் தாம் நன்றாகக் கண்டறிந்த குறிஞ்சித்திணையைப் பற்றியே ஏராளமாகப் பாடியிருக்கின்றார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பதும் இவர் பெயரால் காணப்படுகின்றது. பிற்காலத்திலே கபிலரைப்பற்றி வழங்கும் கதைகள் பல. இக்கபிலரைத் திருவள்ளுவ நாயனாருடன் பிறந்தவர் என்றும் கூறுவர். கபிலதேவ நாயனார் என்பவரையும் இவரையும் இணைத்து முடி போடுவர். ஆரியர் - திராவிடர் வேற்றுமைக்கு அடிகோலும் கபில அகவல் என்றும் ஒரு சிறுநூலையும் இவர் தலையிலே சுமத்துவர். இவைகளுக்கும் சங்கநூல் பாடல்களைப் பாடிய கபிலருக்கும் சம்பந்தமில்லை. பாரியின் உயிர்த் தோழனாக - புலன் அழுக்கற்ற அந்தணாளனாகப் புகழ்பெற்று வாழ்ந்த கபிலர் வேறு; பிற்காலத்துக் கதைகளுக்கான கபிலர் வேறு. பாட்டின் தலைவன் இக்குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகதத்தன் மீது பாடப்பட்டது என்று கூறுகின்றனர். ஆரிய அரசன் பிரகதத் தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டிற்கு மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று. என்று நச்சினார்க்கினியர் உரையின் முடிவிலே காணப்படு கின்றது. ஆரிய அரசன் பிரகதத்தன் மீது பாடப்பட்டது என்பதற்கு இதைத் தவிர வேறொரு சான்றும் கிடைக்க வில்லை. குறிஞ்சிப்பாட்டின் அடிகளிலே ஆரிய அரசனைப் பற்றியோ, பிரகதத்தனைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுக மாகவோ ஒரு அடியோ, ஒரு சொல்லோ காணப்படவில்லை. இந்த ஆரிய அரசன் யார்? இவன் இருந்த இடம் எது? இவன் செய்த காரியம் என்ன? என்பவைகளைப் பற்றிய வரலாறு ஒன்று மேயில்லை. ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் என்ற ஒரு அரசன் பெயர் குறுந்தொகையிலே காணப்படுகின்றது. குறுந்தொகை யின் 184 வது பாட்டு இவனால் பாடப்பட்டது. இவன் தமிழ்ப்புலவனாகவும், தமிழ்ச் செய்யுளியற்றும் திறமையுள்ள வனாகவும் இருந்திருக்கின்றான். பாண்டிய நாட்டில் திருக் குற்றாலத்தையுள்ளிட்ட ஒரு பகுதி ஆரிய நாடென்ற பெயருடன் இருந்ததாகத் தெரிகின்றது. எக்காலத்திலோ தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரோடு கலந்துவிட்டனர். தமிழ்ச் சுவையறிந்து தமிழ் வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதற்குக் குறுந் தொகையின் 184வது பாட்டும், ஆரிய அரசன் பிரகதத்தனைக் குறிஞ்சிப்பாட்டின் தலைவன் என்று கூறப்படும் கதையும் சான்றுகளாம். இந்தக் குறிஞ்சிப்பாட்டு எந்தத் தனி மனிதனைக் குறித்தும் பாடப்பட்டதன்று; குறிஞ்சித்திணையைப் பற்றி விளக்கமாகப் பாடவேண்டும் என்னும் வேட்கையுடன் கபிலர் தாமே கனிந்து பாடிய கவிச் செல்வமாகும். குறிஞ்சிப்பாட்டைப் பற்றி இவ்வாறு முடிவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். நூலின் அமைப்பு குறிஞ்சி நில ஒழுக்கத்தை அழகுற அமைத்துக் காட்டு வதிலே இந்நூலுக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது. ஒரு நிகழ்ச்சியை- அந்த நிகழ்ச்சியில் உள்ள கருத்தை- கற்போர் உள்ளத்தைக் கவரும்படி எழுதிக்காட்டும் சிறுகதை போல அமைந்திருக்கிறது இந்நூல். இந்த நூலின் மூல பாடத்தைப் பொருளறிந்து படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். குறிஞ்சி நிலத் தலைவனுடைய மகள் ஒருத்தி. இவள்தான் தலைவி; மணப்பருவமடைந்த மங்கை. அவளுடைய தோழி ஒருத்தி; தலைவியின் செவிலித்தாய் ஒருத்தி. இவர்களுள் தோழி, தலைவியைப் பற்றி செவிலித்தாயிடம் சொல்லுவதுபோல அமைக்கப்பட்டது இப்பாட்டு. தலைவி உள்ளம் வருந்தியிருக்கின்றாள். அவள் உடலும் நாளுக்குநாள் நலிவடைகின்றது. இதைப்பார்த்த செவிலித்தாய், குறி சொல்வோரிடமெல்லாம் தன் மகளுடைய நோய்க்குக் காரணம் கேட்கின்றாள். பல தெய்வங்களுக்கும் பலியிட்டுத் தன் மகளின் நோய் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். இதைக்கண்ட தோழி, செவிலித் தாயைப் பார்த்துக் கூறு கிறாள்: அன்னையே! தலைவியின் நோய்க்குக் காரணம் காணாமல் நீயும் வருந்துகின்றாய். தலைவியும் தன் உள்ளத்து யரை உரைக்க முடியாமல் மூடிக்கொண்டிருக்கிறாள். நான் தலைவியைக் கேட்டேன். உன் உள்ளத்திலேயிருப்பதை ஒளிக்காமல் சொல் என்று வற்புறுத்தினேன். `என் காதல் மணத்தைப் பற்றி வெளியிடுவதனால் நமது குடிக்குப் பழி ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். என் பெற்றோர் என் காதலனுக்கு என்னை ஊரார் அறிய மணம் புரிந்து கொடுக்காவிட்டாலும், மறுபிறப்பிலேனும் அவரும் நானும் ஒன்றுபட்டு இன்புறுவோம் என்று எண்ணுகின்றேன் எனக் கூறிக் கண்கலங்கினாள் தலைவி. `நானும் உண்மையைச் சொல்ல அஞ்சுகின்றேன். ஆயினும் உங்கள் சம்மதமில்லாமல் நாங்கள் முடிவு செய்த காரியத்தைப் பற்றி இப்பொழுது தெளிவாகத் தெரிவித்துவிட விரும்புகின் றேன். எங்கள் மேல் கோபங்கொள்ளவேண்டாம். தினைப்புனம் காப்பதற்கு எங்களை நீதான் அனுப்பி வைத்தாய். நாங்களும் தினைக்கதிர்களைப் பறவைகள் பாழ் பண்ணாமல் பாதுகாத்துக் கொண்டி ருந்தோம். ஒரு நாள் உச்சிப் பொழுதில் நல்ல மழை பெய்தது. பறவைகள் தங்கள் இருப்பிடங் களுக்குப் பறந்து போய் அடங்கிவிட்டன. இச்சமயத்தில் நாங்கள் அருவி நீரில் ஆடினோம். அக மகிழ்ந்து பாடினோம். பல மலர்களைத் தேடிப்பறித்து மலைப் பாறையிலே குவித்தோம். கிளிகளைத் துரத்தும் சொற்களை உரத்துச் சொல்லிக் கொண்டே மலர்களைத் தொடுத்தோம். தலைகளிலே தரித்துக்கொண்டோம். ஒரு அசோக மரத்து நிழலிலே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். இச்சமயத்தில் கண்கவரும் வனப்பினன்- கட்டிளைஞன்- ஒருவன் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அவன் கையிலே வில்லும் கனைகளும் இருந்தன. அவனுடன் வேட்டை நாய்களும் தொடர்ந்து வந்தன. அந்த வேட்டை நாய்கள் எங்களை வளைத்துக் கொண்டன. நாங்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டு விரைந்து நடந்தோம். உடனே அவன் இனிய சொற்களால் எங்களை அழைத்தான். நாங்களும் நின்றுவிட்டோம். எங்களுடைய கூந்தலைப் புகழ்ந்தான். `இவ்விடத்திலே நான் ஒன்றைக் காணாமற் போட்டுவிட்டேன். அதை நீங்கள் கண்டீர்களா என்று கேட்டான். நாங்கள் ஒன்றும் புரியாமல் சும்மா நின்றோம். ‘காணாமற் போட்டதைத் தேடித் தராவிட்டாலும் என்னுடன் ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா? என்று கேட்டுக்கொண்டு நின்றான். இச்சமயத்தில் கானவர்களால் விரட்டப்பட்ட யானை யொன்று எங்களை நோக்கி ஓடி வந்தது. நாங்கள் பயந்து விட்டோம். எங்கள் நாணத்தையும் துறந்தோம். மயில்போல் நடு நடுங்கி அந்தக் காளையிடம் நெருங்கி நின்றோம். அருள் கனிந்த அவ்விளைஞன் அந்த யானையின் மேல் அம்பெய்தான்; அது வலியழிந்து வந்த வழியைப் பார்த்து ஓடிப் போயிற்று. நாங்கள் நடுக்கத்துடன் அவனைச் சுற்றி நின்று கொண்டி ருந்தோம். அப்பொழுது அவன் தலைவியைப் பார்த்து `நீ பயப் படாதே, உன் அழகை நான் அனுபவிப்பேன் என்று கூறினான். அவள் நெற்றியைத் துடைத்தான். என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். இச்சமயத்தில் நாங்கள் அந்த இடத்தை விட்டு நீங்க வழி பார்த்தோம். அவன் எங்களைப் போக விடவில்லை. தலை மகளைத் தன் மார்புடன் தழுவிக் கொண்டான். `உன்னை என்னுடைய இல்லக்கிழத்தியாக ஏற்றுக்கொள்ளுவேன் என்றான். `உன்னைப் பிரியமாட்டேன் என்று மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறினான்; அந்த மலையின் இனிய அருவி நீரை அள்ளி அருந்தி ஆணையிட்டான். இதற்குள்ளே மாலைக் காலம் வந்துவிட்டது. `இன்னும் சில நாட்களில் உம் சுற்றத்தார் சம்மதம் பெற்றுத் திருமணம் செய்துகொள்வோம்; அதுவரையிலும் மனங்கலங்காமல் பொறுத்திருங்கள் என்று ஆறுதல் மொழிகள் கூறினான். பிறகு எங்களுடன் துணையாக வந்து எங்களை ஊருணிக் கரையிலே விட்டுச் சென்றான். அவன் நள்ளிரவிலே வந்து போய்க் கொண்டிருக்கின்றான். தலைவியின் தழுவுதலை அவன் பெறமுடியாவிட்டாலும், தவறாமல் வருகின்றான். அவன் நல்லொழுக்கமுள்ளவன்; செல்வ மிக்க நற்குடியில் பிறந்தவன். அவன் இவ்வாறு இராப்போதிலே வந்து போதல் நன்றன்று; மணந்து கொண்டு மனையறம் புரிதலே நன்று என்று தலைவி கவலைப்படுகின்றாள். அவன் இராப்போதிலே காடு களையும் நீர் நிலைகளையும் கடந்து வரவேண்டும். காடுகளிலே கொல்லும் விலங்குகள் குடிகொண்டிருக்கும். நீர் நிலைகளிலே முதலைகள் உண்டு. வழியிலே பேய் - பிசாசுகளும் உண்டு. இந்த ஆபத்துக்களையெல்லாம் தாண்டி அவர் இரவிலே வருகின்றாரே என்று எண்ணிக் கண்ணீர் விடுகின்றாள். இதுதான் அவளுடைய நோய் இவ்வாறு செவிலித் தாயிடம் தோழி கூறினாள். இது தான் இப்பாட்டிலே காணப்படும் நிகழ்ச்சி. இவ்விதம் சொல்லிச் செல்வதே இந்நூலின் அமைப்பாகும். தெய்வ நம்பிக்கை சங்க காலத்திலே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை குடி கொண்டிருந்தது. நோய் நீங்கத் தெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். சொன்ன சொல்லை நிறை வேற்றுவேன் என்று தெய்வத்தின் முன்னே ஆணையிடுவார்கள். மலர்களையும் வாசனைப் பொருள்களையும் கொண்டு தெய்வத்தை வணங்குவார்கள். பிரார்த்தனை செய்தும், வணங்கியும், பல மலர்களைச் சிந்தியும், பல்வேறு உருவங்களுடன் விளங்குகின்ற கடவுளை வேண்டுகின்றாய். தூபங்காட்டியும் வாசனைப் பொருள்களைப் போட்டும் துன்பமடைந்து, இவள் நோய் இன்னதென்று தெரியாமல் திகைக்கின்றாய் பரவியும், தொழுதும் விரவுமலர் தூயும், வேறுபல் உருவின் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று எய்யா மையலை நீயும் வருத்துதி (5-8) இவ்வடிகளால் தெய்வத்தை வணங்கிப் பிரார்த்திக்கும் வழக்கத்தைக் காணலாம். காதல் கொண்ட தலைவன் காதலியிடம் நான் உன்னை மணந்து இல்லறம் நடத்துவேன் என்று உறுதி கூறுகின்றான். அப்பொழுது அவன் மலையின் மேல் உள்ள கடவுளை வாழ்த்தி வணங்குகின்றான். `தலைவன் இப்பொழுது நம்மை விட்டுப் பிரிவான் என்று எண்ணித் தலைவி வருந்தும்படி அவளுக்கு உறுதிமொழியுரைத்தான். உண்மையைச் சொல்லி அவளைத் தேற்றினான். பின்னர் அழகிய மலையிலிருந்து வரும் இனிய அருவிநீரை அள்ளிப் பருகினான் என்று கூறப்பட்டிருப்பதைக் கொண்டு தெய்வத்தின் முன்னே நின்று ஆணையிடும் வழக்கம் அக்காலத்தில் உண்டென்று அறியலாம். மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, அம்தீம் தண்ணீர் குடித்தலின் (209- 211) இவ்வடிகள்இவ்வழக்கத்தைக் காட்டுகின்றன. ஒழுக்கத்தின் உயர்வு ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. அதனைக் காத்துக்கொள்ளு தல் ஒவ்வொரு வருடைய கடமையும் ஆகும். கெட்டுப்போன ஒழுக்கத்தைத் திரும்பப் பெற முடியாது. இதனை உதாரணத் துடன் விளக்கிக் கூறுகின்றது இந்நூல். முத்து, இரத்தினம், பொன் இவைகளால் இழைக்கப் பட்ட அணிகலன் எவ்வளவு கெட்டுப்போனாலும் மீண்டும் அதனைச் சீர் செய்து கொள்ளலாம். ஆனால் நல்ல தன்மையும், பெருமையும், நல்லொழுக்கமும் நாசமடைந்து விட்டால், அந்த நாசத்தைத் திருத்தி மீண்டும் புகழ்பெற முடியாது. குற்றமற்ற அறிவுள்ள பெரியோர்களாலும் இந்நிலையை அடைய முடியாது. இவ்வாறு முன்னோர்களான அறிஞர்கள் மொழிந்தனர். முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நோவருங் குறைய கலங்கெடிற் புணரும். சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளியவென்னார், தொன்மருங்கு அறிஞர் (13-18) இவ்வடிகளால் ஒழுக்கத்தை எவ்வளவு உயர்வாகத் தமிழர்கள் மதித்தனர் என்பதைக் காணலாம். சமாதானம் செய்வோர் நிலை சண்டைபிடிப்பது எளிது. சும்மாயிருப்பதுகூட எளிது தான். ஆனால் சண்டை போட்டுக் கொள்ளும் இருவருக்குள் சமாதானத்தைப் புகுத்துவது மிகவும் கடினமான வேலை. இரு வரிடமும் அவர்கள் மனம் நோகாமல், அவர்களுடைய சினம் தணியும் வகையிலே பேசவேண்டும். இனிமையாகவும், திறமை யாகவும் பேசினால்தான் மாறுபட்ட இருவரைச் சமாதானம் செய்துவைக்க முடியும். சமாதானம் செய்துவைப்பதில் அனுபவம் உடையோர்க்கு இவ்வுண்மை தெரியும். மும்முரமாகப் போர் புரிந்துகொண்டிருக்கின்ற இரண்டு பேரரசர்களுக்கிடை யிலே புகுந்து அவர்களைச் சமாதானம் பண்ணி வைக்க முயலும் அறிஞர் களைப்போல இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல (27-28) என்று கூறிச் சமாதானம் செய்து வைப்பதில் உள்ள சங்கடத்தை விளக்கியிருக் கிறார் இவ்வாசிரியர். மறுபிறப்பிலே நம்பிக்கை மீண்டும் பிறப்புண்டு; இவ்வுலகத்தைத் தவிர இன்ப - துன்பங்களை அனுப விக்கக்கூடிய வேறு உலகங்களும் உண்டு. இத்தகைய நம்பிக்கை பழங்காலத் தமிழர்களிடம் இருந்தது. காதலன் தனக்கு வாக்களித்தபடி மணந்துகொள்ள வராததைக் கண்ட காதலி இப்பொழுது நம்மை அவர் மணந்து கொள்ளாவிட்டாலும் மறு உலகத்திலாயினும் அவரைக்கூடி இன்புறும் வாழ்வு கிடைப்பதாக என்று சொல்லி வருந்துகின் றாள். இதைக் கூறுவதன் மூலம் மறு பிறப்புக் கொள்கையை வலி யுறுத்துகின்றார். அவர் முறைப்படி என்னை மணந்துகொள்ள வராவிட் டாலும் என் மனம் சமாதானம் அடையும்படி, இறந்தபின் செல்லும் மறு உலகத்திலாவது அவரோடு இணைபிரியாதிருக்கும் நன்மை கிடைக்கட்டும் என்று சொல்லிக் கண் கலங்கினாள்; சோர்வடைந்தாள்; தாங்க முடியாத துன்பத்துடன் தேம்பி அழுதாள். ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்குஎன, மான்அமர் நோக்கம் கலங்கிக் கையற்று, ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் (23-26) இவ்வடிகளால் மேலே சொல்லிய கருத்தைக் காணலாம். பயமும் நாணமும் எவ்வளவு நாணமுடையவர்களும் பயம் வந்தபோது நாணத்தைத் துறந்து விடுவார்கள். தம்முடைய உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் தோன்றியபோது எப்படியேனும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் எதையும் செய்வார்கள். இது இவ்வாசிரியர் கருத்து. இக்கருத்து உண்மை யானது. இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கிக் காட்டுகிறார். தலைவியும் அவளுடைய தோழிகளும் நின்றுகொண்டி ருக்கின்றனர். எதிரில் ஓர் இளைஞன். அவன் அவர்களிடம் ஏதோ கேட்கின்றான். அவர்கள் நாணத்தால் பேசாமல் ஒதுங்கி நிற்கின்றனர். இச்சமயத்தில் ஓர் யானை மூர்க்கத்தனமுடன் அப் பெண்களை நோக்கி ஓடி வருகின்றது. உடனே அவர்கள் அஞ்சி நடுங்கி நாணத்தை மறந்து அந்த ஆடவனிடம் ஓடி வந்து நெருங்கி நின்றனர். இவ்வாறு சொல்லி பயத்தால் நாணம் பறந்து விடும் என்ற உண்மையைக் காட்டுகிறார். மதங்கொண்ட யானை ஒன்று மழைக்காலத்து இடியைப் போல் பிளிறிற்று. பெரிய கையை நிலத்திலே மோதிக் கோபத் தைக் காட்டிற்று. மதச் செருக்குடன் மரங்களைப் பெயர்த்தது. கூற்றுவனைப்போல எங்களை நோக்கி ஓடிவந்தது. நாங்கள் தப்பிப்போக வழியறியாமல் திடீரென்று எங்கள் கைவளையல் கள் ஒலிக்கும்படி, நாணத்தையும் மறந்து நடுநடுங்கும் நெஞ்சத் துடன் விரைந்து ஓடினோம். அந்தக் கட்டிளைஞனிடம் சேர்ந் தோம். அச்சமுற்ற மயிலைப்போல் நடுங்கி நின்றோம். கார்ப்பெயல் உருமில் பிளிறிச், சீர்த்தக இரும்பிணர்த் தடக்கை யிருநிலம் சேர்த்திச் சினந்திகழ் கடாஅம், செருக்கி மரம்கொல்பு, மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, உய்விடம் அறியேமாகி, ஒய்யெனத் திருந்துகோல் எல்வளை தெழிப்ப, நாணுமறந்து, விதுப்புறு மனத்தேம் விரைந்தவன் பொருந்திச் சூர்உறு மஞ்ஞையின் நடுங்க (162-169) இவ்வடிகளால் மேலே சொல்லிய உண்மையைக் காணலாம். புலமைத்திறம் இயற்கைப் பொருள்களையும், இயற்கை நிகழ்ச்சிகளையும் அப்படியே படம்போல் எழுதிக்காட்டுவதில் இவ்வாசிரியர் வல்லவர். இவர் காட்டியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளை வைத்துப் பல படங்கள் தீட்டலாம். மலையிலிருந்து கீழே விழும் அருவி நீரை ஆடைக்கு ஒப் பிடுகிறார். உயர்ந்த மலையுச்சியிலிருந்து விழுகின்ற தெளிந்த நீர் வெண்மையாக விளங்குகின்ற ஆடையைப் போல் காணப்படு கின்றது. அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெண்ணீர் அவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி (54-55) நாய்களின் தோற்றத்தைப்பற்றியும் அவைகளின் செயலைப் பற்றியும் அப்படியே படம் எழுதிக் காட்டுகின்றார். பகைவர்களைப் புறமிட்டு ஓடச்செய்த- பலவாகிய வேற் படைகளையுடைய- இளைஞர்களைப்போல - மிகுந்த கோபமும் கர்வமும் கொண்டவை. நெருங் கினால் கோபிக்கும் குணமுடையவை. வாள்போல் கூர்மையான பற்களையும் கூர்மையான நகங் களையும் உடைய நாய்கள். பகை புறங்கண்ட பல்வேல் இளைஞரின் உரவுச்சினம் செருக்கித், துன்னுதொறும் வெகுளும் முளைவாள் எயிற்ற, வள்ளுகிர் ஞமலி (129- 131) இவைகளால் நாய்களின் தோற்றத்தைக் காணலாம். மாலைக்கால நிகழ்ச்சியைப்பற்றி இவர் கூறியிருப்பது மனதைக் கவரும். மான்கணம் மரம் முதல் தெவிட்ட மான் கூட்டம் மரத்தின் அடியிலே படுத்துக்கொண்டு அசைபோடுகின்றன. ஆன் கணம் கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதர பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் குரலை உடையன வாய் அவைகள் தங்கும் மன்றுகளிலே நிறையப்புகுந்தன. ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில் ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவ ஒலிக்கின்ற கொம்பு போன்ற வளைந்த வாயையுடைய அன்றிற் பறவை, உயர்ந்த பெரிய பனை மரத்தின் பெரிய மடலுக் குள் இருந்துகொண்டு தன் பெடையை அழைத்தது. பாம்பு மணி உமிழ பாம்புகள் தம்மிடத்தே உள்ள இரத்தினத்தைக் கக்கி வைத்து அந்த வெளிச்சத் திலே இரை தேடின. பல்வயின் கோவலர் ஆம்பல்அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற பல விடங்களிலும் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணை இனிய குழலிலே தெளிவாகக் கேட்கும்படி எழுப்பினர். ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட அல்லியின் அழகிய இதழ்கள் விரிந்தன; அதாவது அல்லிகள் மலர்ந்தன. வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி அந்தி அந்தணர் அயர செல்வம் நிறைந்த மனைகளிலே உள்ள வளையலை அணிந்த பெண்கள் விளக்கேற்றி மாலைக்கடன்களைச் செய்தனர். அந்தணர்களும் மாலைக்கடன் களை ஆற்றினர். இவைகள் 217 முதல் 228 வரையுள்ள அடிகள். இவ்வாறு மாலைக்கால நிகழ்ச்சியை எடுத்துக்காட்டியிருக்கிறார் இப்புலவர். இன்னும் சில செய்திகள் இன்னும் பல அரிய செய்திகளையும் இந்நூலிலே காணலாம். கடவுள் ஒருவரே. அவரே பல உருவங்களுடன், பல தெய் வங்களாகக் காட்சி தருகின்றார். வேறு பல் உருவின் கடவுள் (6) பண்டைக்காலத்தில் கழைக்கூத்தாடிகள் இருந்தனர். பெண்களும் கழைக் கூத்தாடுவதோடு, ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்குமாக இழுத்துக் கட்டப் பட்ட நீண்ட கயிற்றிலே நின்று ஆடுவார்கள். அவர்கள் ஆட்டத்திற்குத் தக்கவாறு வாத்தியங்கள் வாசிக்கப்படும். அரிக்கூட்டு இன்னியங் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியில் (193-194) இக்காலத்தில் அரிசியும், நெய்யும், மாமிசமும் கலந்து சமைப்பது போன்ற புலவுச்சோறு அக்காலத்திலும் சமைக்கப் பட்டது. பைந்நினம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில் (204) என்பதனால் இதை அறியலாம். தொண்ணூற்றொன்பது வகையான மலர்களின் பெயரை இவ்வாசிரியர் குறித்திருக்கின்றார். இவை காந்தட்பூ முதல் மலை எருக்குவரையில் உள்ள தொண்ணூற்றொன்பது மலர்கள். இவைகளில் பல மலர்களை நாம் இக்காலத்தில் கண்டறிய முடியாது. இத்தகைய பல செய்திகளையும், தமிழர்களின் பழக்க வழக்கங்களையும் இந்நூலிலே காணலாம். 10 பட்டினப்பாலை பெயர்க்காரணம் பத்துப்பாட்டுள் இது ஒன்பதாவது பாட்டு. 301 அடி களைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது. பட்டினப்பாலை- பட்டினத்தைப் பற்றிச் சொல்லுவது; பாலைத்திணையைப் பற்றிக் கூறுவது. பட்டினம் என்பது கடற் கரையில் உள்ள ஊர்களைக் குறிக்கும். இந்தப் பட்டினம் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறித்தது. இக்காலத்தில் பட்டினம் என்றால் சென்னையைச் சுட்டுவதுபோல் அக்காலத்தில் பட்டினம் என்றால் காவிரிப்பூம்பட்டினத்தைச் சுட்டிற்று. காதலன் காதலியைவிட்டுப் பிரிவதைப்பற்றியும் பிரிந்து போவதற்கான காரணத்தைப்பற்றியும் சொல்லுவது பாலைத் திணை. கணவனும் மனைவியும் இல்லறம் நடத்துகின்றனர். இல் லறத்தை இனிது நடத்துவதற்காகப் பொருள்தேடும் பொருட்டு மனைவியைப் பிரிந்து தனியாக வேற்றூர்க்கோ வேற்று நாட்டுக் கோ போக நினைக்கிறான் கணவன். அவன் எண்ணத்தை மனைவி அறிந்தாள்; கணவன் பிரிவுக்காக நெஞ்சங் கலங்கினாள். அதைக் கண்ட கணவன் எவ்வளவுதான் செல்வம் கிடைப்ப தாயினும் இவளைப் பிரியமாட்டேன் என்று தனக்குள் உறுதி செய்துகொள்கிறான். பின்னர் பிரிந்து செல்வதற்காக, இப் பொழுது அவளுக்குச் சமாதானம் கூறிப் பிரயாணத்தை நிறுத்தி வைக்கிறான். இதைப்பற்றிக் கூறுவதே பாலைத் திணையாகும். காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் தலைநகரம். கடல் துறைமுகம். சோழர் தலைநகரங்களிலே சிறந்தவை காவிரிப்பூம் பட்டினமும், உறையூருமாகும். சோழ மன்னர்களில் சிலர் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்; சிலர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். சங்க இலக்கியங்களிலே இந்த இருநகரங்களைப் பற்றியும் காணலாம். ஆசிரியர் இந்நூலைப் பாடிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பத்துப் பாட்டுள் நான்காவது பாட்டாகிய பெரும் பாண் ஆற்றுப்படையைப் பாடியவரும் இவரேதான். இவரது வரலாற்றைப் பெரும்பாண் ஆற்றுப்படையாராய்ச்சியிலே காணலாம். பாட்டின் தலைவன் இது சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பாடப்பட்டது. இப்பாடலைக் கரிகாற்பெருவளத்தான் கேட்டு இன்பமும் மகிழ்ச்சியும் அடைந்தான். உருத்திரங் கண்ணனாரின் உயர்ந்த புலமையைப் புகழ்ந்தான்; அவருக்கு அவர் வறுமை நீங்கப் பதினாறு நூறாயிரம் பொன்னைப் பரிசளித்தான். இச்செய்தியைக் கலிங்கத்துப்பரணியிலே காணலாம். தழூவு செந்தமிழ்ப் பரிசில் பாணர்பொன் பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப்பாலை கொண்டதும் என்பது கலிங்கத்துப்பரணிப்பாட்டு. பொருநர் ஆற்றுப்படையென்னும் இரண்டாவது பாட்டும் இக்கரிகாலன் மீது பாடப்பட்டதுதான். அந்நூலாசிரியராகிய முடத்தாமக்கண்ணியார் காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்பை விரிவாக விளக்கவில்லை. சுருக்கமாகத்தான் சொல்லியி ருக்கிறார். ஆனால் கரிகாலனுடைய வீரம், கொடை, ஆட்சி இவைகளைப் பற்றிப் பலவாறு பாராட்டியிருக்கிறார். இந்நூலாசிரியர் உருத்திரங்கண்ணனாரோ காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்பைப் பற்றி விரிவாக விளம்பியிருக்கின்றார். கரிகாலனுடைய பெருமையைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருக்கின்றார். கரிகாற்சோழனுடைய வரலாறு பொருநர் ஆற்றுப்படை ஆராய்ச்சியிலே கூறப்பட்டுள்ளது. பாட்டின் அமைப்பு இந்நூலாசிரியராகிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் தன் காதலியுடன் இல்லறம் நடத்தும்போது வறுமையால் வருந் தினார். தன் வறுமை நீங்கப் பரிசு பெறும்பொருட்டுக் கரிகால் வளவனிடம் போக நினைத்தார். அவர் கருத்தை அறிந்த அவர் மனைவி அவரைப் பிரிந்திருக்கவேண்டுமே என்றெண்ணி வருந் தினாள். அவளுடைய வருத்தந்தீர நான் காவிரிப்பூம் பட்டினத்தையே பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பிரிந்து செல்லமாட்டேன் என்று அப்பொழுது தன் உள்ளத்தை நோக்கி உரைத்தார். இந்த முறையிலே இப்பாடலைப் பாடியிருக் கின்றார் புலவர். காவிரிப்பூம் பட்டினத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கியவர் முதலிலே காவிரியாற்றின் பெருமையைக் கூறுகின்றார். பிறகு சோழ நாட்டின் வளத்தைப் பாடுகின்றார். அதன்பின் காவிரிப்பூம் பட்டினத்தின் புறநகர்ப்பகுதிகள், காவிரித் துறையின் பெருமை, நகருக்குள் இரவிலும் பகலிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள், வாணிகம், கொடிகள், வாழும் மக்கள், செல்வச் சிறப்பு, மன்னன் கரிகாற்சோழனுடைய ஆண்மை, வீரம், கொடை, ஆட்சி இவைகளையெல்லாம் வரிசையாக எடுத்துக்காட்டியிருக்கின்றார். இதுவே இப்பாடலின் அமைப்பாகும். இம்முறையிலே பாடப்பட்ட இந்நூலை ஒரு சமயத்தில் கரிகால்வளவனிடம் காட்டியபோதுதான் அவன் புலவரைப் புகழ்ந்து பரிசளித்தான். காவிரியின் பெருமை காவிரி என்றும் வற்றாத ஜீவநதி. காவிரியாற்றால்தான் சோழ நாட்டிலே செல்வம் கொழித்திருக்கின்றது; கரும்பும் நெல்லும் கழனிகளிலே வளர்ந்திருக்கின்றன. இவ்வுண்மைகளை இந்நூல் எடுத்துக் காட்டுகின்றது. மழை வறண்ட காலத்திலும் காவிரியாற்றின் நீர் வற்றாது. அது மேற்குமலை யிலே பிறந்து கிழக்குக் கடலோடு கலப்பது; தண்ணீரை வயல்களிலே நிரப்பிப் பொன்கொழிக்கச் செய்வது. இன்று காவிரியின் நிலை தமிழர்களுக்குக் கவலைதரும் செய்தி. எண்ணி எண்ணி வருந்துவது தவிர வேறென்ன செய்வது. வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய, கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் (5-7) சோழ நாட்டிலே என்றும் விளைந்து கொண்டிருக்கின்ற பரந்த வயல்கள் இருக்கின்றன. அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் கொட்டில்கள் பல இருக்கின்றன. அக்கொட்டில் களிலிருந்து வரும் தீப்புகையினால் பக்கத்து வயல்களிலே மலர்ந்திருக்கின்ற நெய்தற் பூக்கள் வனப்புக்கெட்டு வாடுகின்றன. விளைவுஅறா வியன் கழனிக் கார்க் கரும்பின் கமழ் ஆலைத், தீத்தெறுவில் கவின்வாடி நீர்ச்செருவின் நீள் நெய்தல் பூச்சாம்பும் புலத்து ஆங்கண் (8-12) இவற்றைக் கொண்டு சோழ நாட்டின் நீர்வளத்திற்கும் நில வளத்திற்கும் காரணம் காவிரியாறே என்பதைக் காணலாம். செல்வச் சிறப்பு சோழ நாட்டிலே செல்வக் குடியினர் பலர் சிறந்து வாழ்ந்தனர். அவர்கள் பெரிய வீடுகளிலே குடியிருந்தனர். அவர்களிடம் நெல்லும் பொன்னும் நிறைய இருந்தன. வறுமை யறியாமல் வாழ்க்கை நடத்தி வந்தனர். இச்செய்தியை ஒரு நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் காட்டுகிறார் இவ்வாசிரியர். பெரிய வீட்டின் அகலமான முற்றத்திலே நெல்லைக் காய வைத்திருந்தனர். அந்த நெல்லுக்கு இளம் பெண்கள் காவலாக இருந்தனர். அவர்களுடைய நெற்றி அழகானது; உள்ளமும் பார்வையும் கபடமற்றவை. நல்ல அணிகலன்களைப் பூண்டிருந் தனர். காய்கின்ற நெல்லைக் கொத்த வரும் கோழிகளைத் தம் காதிலே தரித்திருக்கும் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டினர்; அக்குழைகள் முற்றத்திலே சிதறிக் கிடக்கின்றன. பொன்னணியைக் காலிலே அணிந்த சிறுவர்கள் உருட்டிச் செல்லும் மூன்று சக்கர வண்டியை அவைகள் தடுக்கின்றன. அகனகர் வியன் முற்றத்துச், சுடர்நுதல் மட நோக்கின் நேர்இழை மகளிர், உணங்குஉணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்கால் கனங்குழை, பொற்கால் புதல்வர் புரவியின்று உருட்டும் முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும் (20-25) இதனால் சோழ நாட்டிலே பல செல்வக் குடியினர் வாழ்ந்தனர் என்பதைக் காணலாம். அன்னசாலைகள் இத்தகைய செல்வம் சிறந்த சோழ நாட்டிலே உணவின்றித் தவிக்கும் வறிஞர்களும் வாழ்ந்தனர். அந்த வறிஞர்களுக்குச் செல்வமுடையவர்கள் உணவளித்துக் காப்பாற்றி வந்தனர். பலர்க்கும் அன்னமிடும் அறக்கூழ்ச் சாலைகள் பல காவிரிப்பூம் பட்டினத்திலே இருந்தன. இவ்வுலகிலே புகழுடன் வாழ வேண்டும்; இறந்த பின் நற்கதியைப் பெறவேண்டும் என்று விரும்பிய செல்வர்கள் இந்த அறக்கூழ்ச் சாலைகளை நடத்தி வந்தார்கள். இவ்வுலகிலே புகழ் நிலைக்கக் கூடிய சொற்கள் பெருகவும், மறுமையிலே இன்புறுவதற்கான அறம் பெருகி நிலைக்கவும் எண்ணியவர்கள் பெரிய சமையல் வீடுகளிலே ஏராளமாகச் சோற்றையாக்கினர். வந்தோர்க்கெல்லாம் அள்ளி வழங்கு கின்றனர். அச் சோற்றை வடித்த சத்துள்ள கஞ்சி ஆற்றைப் போலே தெருவிலே ஓடுகின்றது. புகழ் நிலைஇய மொழிவளர, அறன் நிலைஇய அகன்அட்டில், சோறு வாக்கிய கொழுங் கஞ்சி, யாறு போலப் பரந்து ஒழுகி (42 - 45) என்பதனால் இச்செய்தியைக் காணலாம். இவ்வாறு அறங்கருதிச் சோறிடும் இடங்களுக்கு அறக்கூழ்ச்சாலை என்பது பழந்தமிழ்ப் பெயர். பிற்காலத்திலே இவைகளைத்தான் அன்னசத்திரம், தருமசத்திரம் என்ற பெயர்களால் வழங்கினர். கூழ் என்பது உணவின் பொதுப் பெயர். அறக் கூழ்ச்சாலை- தருமத்திற்கு உணவிடும் இடம். சுங்கம் இக்காலத்திலிருப்பதைப் போலவே பண்டைக் காலத்திலும் இறக்குமதிப் பொருள்களுக்கும், ஏற்றுமதிப் பண்டங்களுக்கும் அரசாங்கம் வரி விதித்து வந்தது. இவ்வரிக்கு உல்கு, சுங்கம் என்ற பெயர்கள் வழங்கின. இத்தகைய வரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானம். காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் துறையிலே இறங்கும் பண்டங்களுக்கும் சுங்க வரியுண்டு. ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களுக்கும் சுங்க வரியுண்டு. நிலத்திலிருந்து வந்த பண்டங்களும், நீர் வழியாக வந்த பண்டங்களும் முதலில் சுங்கச் சாவடிக்குள்அனுப்பப்படும்; அவைகள்சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப் படும்; பரிசோதிக்கப்பட்டதற்கு அடையாளமாகச் சோழனுடைய புலி முத்திரை யிடப்படும். பண்டத்தின் நிறைக்கும் அளவுக்கும் ஏற்ப வரி வாங்கப்படும். பிறநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பண்டங்களை நிலத்திலே இறக்கவும், உள்நாட்டிலிருந்து தரைமார்க்கமாக வந்த பண்டங்களைப் பிறநாடு களுக்கு அனுப்புவதற்காகக் கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றவும் அளவற்ற பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. அவைகள் எல்லையில்லாமல் வந்து நிறைந்து கிடக்கின் றன. நல்ல பாதுகாப்பையும் சிறந்த காவலையும் உடைய சுங்கச் சாவடியிலே அவைகளின் மேல் புலி முத்திரை பொறித்து வெளி யிலே அனுப்புகின்றனர். நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப் பல பண்டம் வரம்பறியாமை வந்தீண்டி அரும்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல் அணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி (129-135) இதனால் சுங்கவரி விதிக்கப்பட்டு வந்ததைக் காணலாம். பண்டங்கள் பாழடை யாமலும், திருட்டுப்போகாமலும் சுங்கச் சாவடியிலே பாதுகாக்கப்பட்டன. குவிந்திருக்கும் பண்டங்கள் வியாபாரத்திற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலே பல பண்டங்கள் வந்து குவிந் திருக்கின்றன. அவை உள்நாட்டி லிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்தவை. அப்பண்டங்களைப் பற்றி இந்நூலிலே விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் வேற்று நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாக வந்திருக் கின்றன. அவைகள் உயரமானவை; விரைந்து ஓடும் தன்மை யுடையவை. காலின் வந்த கரும்கறி மூடையும் நிலத்தின் வழியே வண்டிகளில் கொண்டுவரப்பட்ட கரிய மிளகு மூட்டைகள். வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் இமயமலையிலே பிறந்த சிறந்த மாணிக்கங்கள்; உயர்ந்த பொன் வகைகள். குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் மேற்குத் தொடர்ச்சி மலையிலே விளைந்த சந்தனக் கட்டைகள், அகிற்கட்டைகள். தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் தெற்குக் கடலிலே விளைந்த முத்துக்கள்; கீழைக்கடலிலே தோன்றிய பவழங்கள். கங்கை வாரியும் காவிரிப் பயனும் கங்கைநதி பாயும் நிலங்களிலே விளைந்த செல்வங்கள்; காவிரி யாற்றுப் பாய்ச்சலால் விளைந்த செல்வங்கள். ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் இலங்கையிலிருந்து வந்த உணவுப்பொருள்கள்; பர்மாவிலிருந்து வந்த பலவகையான செல்வங்கள். அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு இன்னும் பல அருமையான பண்டங்களும் மிகுதியான பண்டங் களும் பூமி தாங்க முடியாமல் நிறைந்து, செல்வங்கள் செழித்துக் கிடக்கின்ற பெரிய வீதிகள். இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளிலே குவிந்து கிடக்கும் செல்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகள் 185-193 வரையில் உள்ளவை. வணிகர் நேர்மை காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்ந்த வணிகர்கள் மிகவும் நேர்மையுள்ள வர்கள். பிறர் பொருளைப் பறிக்க வேண்டும் என்ற பேராசையில்லாதவர்கள். நடு நிலையிலே நின்று வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் விற்பனை செய்யும் பண்டங்களின் கொள்முதல் விலையையும், இலாபத்தையும் வெளிப்படை யாகக் கூறுவார்கள். இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் களின் பெருமையைக் கூறித் தமிழ்நாட்டு வணிகர்களின் உயர்வை விளக்கியிருக்கின்றார். நீண்ட நுகத்தடியிலே தைத்திருக்கும் நடு ஆணிபோல நடுநிலையிலே நிற்கும் நல்ல உள்ளமுடையவர்கள். பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவார்கள். தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒரு தன்மையாகவே நினைப்பார்கள். பொருளை வாங்குவோரிடம் அளவுக்கு மேல் அதிகமாக வாங்கி விடமாட்டார்கள். தாங்கள் கொடுக்கும் பண்டத்தையும் குறைத்துக் கொடுக்க மாட்டார்கள். பல பண்டங்களையும் அவ்வ வற்றின் நியாயமான விலையைக் கூறி விற்பனை செய்வார்கள். நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக், கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் (206-212) இவ்வடிகள் அக்கால வணிகர்களின் நேர்மையை விளக்கு கின்றன. வேளாளர் சிறப்பு காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்திலே வேளாளர்கள் பலர் செல்வமுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் புலால் உண்ணாதவர்கள். சிறந்த ஒழுக்கமுடையவர்கள். இவர்கள் உழுவித்துண்ணும் வேளாளர்களாக இருந்திருக்கக்கூடும். பெரிய நிலத் தலைவர்கள் இவர்கள். கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் பலி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் புகழைப் பரவச் செய்வார்கள்; வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக் கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள். கொலை கடிந்தும், களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், நல்ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும், பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை கொடுமேழி நசை உழவர் (199- 205) இவ்வடிகள் காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்ந்த வேளாளர்களின் சிறப்பை யும், செல்வத்தையும், ஒழுக்கத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன. வலைஞர்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையிலே வாழும் பரதவர்கள் ஓய்வு நாளிலே எப்படிப் பொழுதுபோக்குகிறார்கள் என்பதை இவ்வாசிரியர் எடுத்துக் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. முழுமதி நாளிலே, அதாவது பௌர்ணமியிலே கடலிலே கொந்தளிப் பிருக்கும். ஆதலால் அந்நாளில் பரதவர்கள் மீன் பிடிக்கக் கடல்மேற் போக மாட்டார்கள். ஓய்ந்திருந்து உல்லாசமாகப் பொழுதுபோக்குவார்கள். அவர்கள் எவ்வளவு இன்பமாகப் பொழுது போக்குகிறார்கள் என்பதை அப்படியே படத்தில் பார்ப்பதுபோல் இந்நூலிலே காணலாம். சினைகொண்ட சுறாமீன் கொம்பை நடுவார்கள். அதிலே கடல்தெய்வம் வாழ்வதாகக் கருதுவார்கள். அதற்குத் தாழை மலரைச் சூட்டுவார்கள். பனங்கள்ளை நன்றாக வேண்டு மட்டும் குடிப்பார்கள். பரந்து கிடக்கும் தலைமயிரையுடைய செம் படவர்கள் கடல் மீது மீன்பிடிக்கப் போகமாட்டார்கள். தமது பெண்டிர்களுடன் விரும்பிய பலவற்றை உண்பார்கள். முழுமதி நாளிலே இவ்வாறு விளையாடுவார்கள். சினைச்சுறவின் கோடு நட்டு, மனைச் சேர்த்திய வல்லணங்கினான் மடல்தாழை மலர் மலைந்தும், பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும் புன்தலை இரும்பரதவர் பைந்தழை மாமகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது உவவு மடிந்து உண்டாடியும் (86-93) இவ்வடிகளின் மூலம் வலைஞர்களின் வாழ்க்கையைக் காணலாம். கொடிகள் கொடிகளின் அடையாளத்தைக் கொண்டே பல இடங்களையும், பல வகை யான நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளுவது பண்டைக்கால வழக்கம். இக் காலத்திலே விளம்பரப் பலகையைப் பயன்படுத்துகிறோம். அக்காலத்திலே இதற்குப் பதிலாகக் கொடிகளையே பயன்படுத்தி வந்தனர். மதுரைக் காஞ்சியிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பட்டினப்பாலையிலும் இச்செய்தி குறிப்பிடப் பட்டிருக்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலே எங்கு பார்த்தாலும் பல வகையான கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அவைகள் வெவ்வேறு உருவங்களுடையவை. திரு விழாவைக் குறிக்கும் கொடிகள்; அறிஞர்களின் சபைகளைக் குறிக்கும் கொடிகள்; வியாபாரங்களைக் குறிக்கும் கொடிகள்; இன்னும் பலதிறப் பட்ட கொடிகள் பறந்து கொண்டிருந்தன. மலர் அணிந்த கோயில் வாசலிலே பலரும் தொழும்படி தெய்வத்தை, ஆவாகனம் செய்து கொடியேற்றப்பட்டிருக்கின்றது. மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர்அணி வாயில் பலர்தொழு கொடியும் (159- 160) இது எப்பொழுதும் கோயிலில் கட்டப்பட்டுப் பறந்து கொண்டிருக்கும் கொடி. திருவிழாக்களைத் தெரிவிப்பதற்காக அரிசிப் பலியிட்டு வணங்கி, நீண்ட மரச் சட்டங்களில் கொடியைக் கட்டி உயரத் திலே பறக்கும்படி நாட்டி யிருக்கின்றனர். அவை வெள்ளைத் துணியாலான கொடிகள்; கரும்பு பூத்தது போலக் காணப் படுகின்றன. நெருக்கமாகவும் பறந்து கொண்டிருக்கின்றன. வருபுனல் தந்த வெண்மணல் கான்யாற்று உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக் கூழுடைக் கொடு மஞ்சிகைத் தாழுடைத் தண்பணியத்து வால் அரிசிப் பலி சிதறிப் பாகு உகுத்த பசு மெழுக்கில், காழ் ஊன்றிய கவிகிடுகின் மேலூன்றிய துகிற் கொடியும் (161-168) இவை திருவிழாவுக்கு ஏற்றப்பட்டிருக்கும் கொடிகளாகும். கல்வி கேள்விகளிலே வல்லவர்கள்; முன்னையோர் முறை யினின்றும் வழுவாதவர்கள்; நல்ல ஆசிரியர்கள்; நாங்கள் எதை யும் விவாதிக்க வல்லோம். உண்மையை நிலை நாட்டப் பின் வாங்க மாட்டோம். எவரும் எங்களுடன் வழக்கிடலாம் என்பதை அறிவிக்கக் கொடிகளை நாட்டியிருக்கின்றனர். பட்டி மன்றங்களிலே இக்கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. பல் கேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லா சிரியர், உறழ்குறித்து எடுத்த உருகெழு கொடியும் (169-171) இது அறிஞர் சபைக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் கொடி. பட்டிமன்றம் - விவாதசபை. கட்டுத்தறியை அசைக்கின்ற யானைகளைப் போல, காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே பல கப்பல்கள் நங் கூரம் பாய்ச்சி அசைந்து கொண்டு கிடக்கின்றன. அக்கப்பல்களின் பாய்மரங்களின் மேல் கொடிகள் பறந்து கொண்டிருக் கின்றன. வெளில் இளக்கும் களிறு போலத், தீம்புகார்த் திரை முன்துறை தாங்கு நாவாய்த் துவன்றிருக்கை மிசைக் கூம்பின் அசைக் கொடியும் (172-175) இவ்வடிகள் கப்பல்களின் மேல் கட்டப்பட்டிருக்கும் கொடிகளைக் குறிக்கின்றன. மீனையும் இறைச்சியையும் துண்டுகளாக்கி, அவற்றை நெய்யிலே பொரிக்கின்ற ஓசை நிறைந்த முற்றம். இந்த முற்றத் திலே பலரும் புகும்படியான வாசற்படியிலே மணலைக் குவித்து மலரைச் சிந்தி, கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறி விக்கும் கொடியைக் கட்டியிருக்கின்றனர். மீன்தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலிமுன்றின், மணல்குவைஇ மலர் சிதறிப் பலர் புகுமனைப் பலிப்புதவின் நறவுநொடைக் கொடியோடு (176-180) இது கள் விற்பனை செய்யும் இடத்தை அறிவிக்கும் கொடி. இன்னும், பல வெவ்வேறு கொடிகளும் கலந்து காணப் படுகின்றன. அவைகள் பல்வேறு வடிவங்களாக அமைந்தவை. சூரியனுடைய கதிரும் நகரத்தில் நுழைய முடியாதபடி அக் கொடிகள் நெருங்கியிருக்கின்றன; நிழல் செய்து கொண்டி ருக்கின்றன. பிறபிறவும் நனி விரைஇப், பல்வேறு உருவின் பதாகை நீழல் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின் (181- 183) இவ்வாறு அந்நகரத்திலே பறந்து கொண்டிருக்கும் கொடி வகைகளைப்பற்றிக் கூறுகிறது பட்டினப்பாலை. 159 முதல் 183 வரையில் உள்ள அடிகள் மேலே காட்டப்பட்டவை. கோயில் வாசலிலே ஏற்றப்பட்டுள்ள கொடி, திருவிழாவுக்காக ஏற்றப் பட்டிருக்கும் கொடி, பட்டிமண்டபத்திலே பறக்கும் கொடி, கப்பல்களிலே பறந்து கொண்டிருக்கும் கொடி, கள்ளுக்கடை வாசலிலே கட்டப்பட்டிருக்கும் கொடி ஆகியவைகளை மட்டும் குறிப்பிட்டுக் கூறப்பட்டது. மற்றும் எண்ணற்ற கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன என்றும் பொதுவாகக் கூறப் பட்டுள்ளது. பலநாட்டினரும் மொழியினரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டினர் வேறுபல நாட்டினருடன் வாணிகம் செய்து வந்தனர். வேறுபல மொழியினருடனும் பழகிவந்தனர். வேறுபல நாட்டினரும், மொழியினரும் தமிழ்நாட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந் தனர். தமிழ்நாட்டினரும் அவர்களும் மொழிவெறுப்பு, இன வெறுப்பு இல்லாமல் ஒன்றாக அன்புடன் பழகினர். இவ் வுண்மையை இந்நூலிலே காணலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் சிறப்பையும் கருதி அங்கே பல நாட்டினர் வந்து குழுமி இருக்கின்றனர்; பல மொழியினர் வந்து கூடியிருக் கின்றனர். அவர்கள் காவிரிப்பூம் பட்டினத்து மக்களோடு ஒன்றுபட்டுக் கலந்து வாழ்கின்றனர். இத்தகைய அழியாத சிறப்புடையது காவிரிப்பூம்பட்டினம். மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் (216- 218) இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்குகின்றன. செல்வமும், செழிப்பும் நிறைந்த நாட்டிலே பலநாட்டினர் வந்து குடியேறுவது இயற்கை. இன்னும் பல செய்திகள் இவைபோன்ற இன்னும் பல செய்திகளையும், இரண்டா யிரம் ஆண்டு களுக்கு முன்னே தமிழர்களிடம் இருந்த நாகரிகத்தையும் இந்நூலிலே காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற ஏரிகள் இருந்தன. அவைகளிலே மூழ்கிக் காமனை வணங்கும் பெண்கள் தங்கள் கணவருடன் இம்மையிலும் மறுமையிலும் இன்புறுவர். இதனை இருகாமத்து இணையேரி (391) என்ற குறிப்பால் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே அமணர் பள்ளிகளும், பவுத்தர் பள்ளிகளும் இருந்தன. சடைமுடி தரித்த முனிவர்கள் இருந்தனர். அவர்கள் வேத விதிப்படி வேள்விகள் செய்துகொண்டிருந்தனர். சுவர்க்கம் என்பது அறம்செய்தோர் அடையும் ஒரு தனியுலகம் என்ற நம்பிக்கையிருந்தது. கப்பல்களுக்குக் கரையை அறிவிக்கும் கலன்கரை விளக்குகள் இருந்தன. பகைவர் நாட்டுப் பெண்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவரும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் ஆடல் - பாடல்களை அறிந்த அரண்மனைப் பணிப்பெண் களையே சிறைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்குக் கொண்டி மகளிர் என்று பெயர். உருவ வணக்கம் தமிழகத்திலே எங்கும் பரவியிருந்தது. தூணிலே தெய்வ மிருப்பதாக எண்ணி வணங்குவர். அதற்குக் கந்திற் பாவை என்று பெயர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலே போதுமான உணவுப் பொருள் உற்பத்தியாயிற்று. அந்நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு உணவுப் பொருள்கள் வந்து கொண்டி ருந்தன. கரிகாற்சோழன் வெளிநாட்டினரை ஒடுக்கினான். வட நாட்டு மன்னர்களை வாட்டினான். குடநாட்டு வேந்தனை வென்றான். பாண்டியனுடைய படைபலத்தை அழித்தான். இடைய மன்னர்களின் பரம்பரையைப் பாழாக்கினான். இருங் கோவேள் என்னும் அரசனுடைய சுற்றத்தாரை அடியோடு அழித்தான். இந்த வரலாற்றுக் குறிப்புக்கள் இந்நூலில் காணப் படுகின்றன. கரிகாற்சோழன் வெறும் யுத்தவெறியனாக- போர் வீரனாக மட்டும் இல்லை. அவன் தனது ஆட்சிக் காலத்தில் காடுகளை அழித்து நாட்டின் பரப்பை விசாலப்படுத்தினான். குளங்களை வெட்டி நீரைத் தேக்கி நிலங்களுக்குப் பாயச் செய்து உழவுத் தொழில் பெருகச் செய்தான். நாடகம், சங்கீதம் போன்ற கலைகளும் மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்குப் போதுமான பல தொழில்களும் வளர்ச்சியடைந் திருந்தன. இவைகளையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையிலே படித்தறியலாம். 11 மலைபடுகடாம் பெயர்க்காரணம் இதுவே பத்துப்பாட்டின் இறுதிப்பாட்டு. 583 அடிகளைக் கொண்டது. ஆசிரியப் பாவால் ஆகியது. மதுரைக் காஞ்சிக்கு அடுத்து இதுதான் பெரிய பாட்டு; பத்துப் பாட்டின் பத்தாவது பாட்டு. மலைபடுகடாம்- மலையிலே தோன்றும் ஓசை. மக்கள் வாழும் மலையிலே பலவகையான ஓசைகள் உண்டு. அவற்றுள் சிறப்பாக இருபது வகையான ஓசைகளைப் பற்றி இப்பாடலிலே சொல்லப்படுகிறது. ஆகையால் இந்நூலுக்கு மலைபடுகடாம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் கூத்தர் ஆற்றுப்படை என்ற மற்றொரு பெயரும் உண்டு. கூத்தருக்கு வழிசொல்லி அனுப்பும் முறையிலே இந்நூல் பாடப்பட்டிருக்கின்றது. திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப் படைகள் எந்த முறையில் பாடப்பட்டுள்ளனவோ அந்த முறை யிலேயே இந்த நூலும் அமைந்திருக்கின்றது. ஆசிரியர் இந்நூலாசிரியர் கௌசிகனார் என்பவர். பெருங்கௌசி கனார் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவருடைய ஊர் பெருங்குன்றூர். இவ்வூர் பாண்டிய நாட்டில் உள்ள இரணிய முட்டம் என்ற பகுதியைச் சேர்ந்தது. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்பது முழுப் பெயர். இப்பெயரே இவர் ஊரையும் நாட்டையும் விளக்குகின்றது. இவர் சிறந்த புலவர். காடு, மலை முதலியவைகளின் இயற்கை வளங்களை அறிந்தவர். அவ்விடங்களில் எல்லாம் சுற்றித் திரிந்து அங்குள்ள நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் கண்டறிந்தவர். இவ்வுண்மையை இவருடைய மலைபடுகடாம் எடுத்துக்காட்டுகிறது. காட்டு வழிகளிலே, மலை வழிகளிலே, ஊர்ப் புறங்களிலே பல நாட்கள் அலைந்து திரிந்து அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் நேரே கண்டறிந்த ஒரு புலவரால்தான் மலைபடுகடாம் போன்ற ஒரு நூலைப் பாட முடியும். இந்நூலைப் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர். பாட்டின் தலைவன் இப்பாட்டின் தலைவன் நன்னன் என்பவன். இவன் வேளிர் குலத்தலைவன். இவனுக்கு இன்னும் பல பெயர்கள் உண்டு; நன்னன் வேண்மான், வேள் நன்னன், சேய் நன்னன், பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள்நன்னன் சேய்நன்னன் என்பன அப்பெயர்கள். வேளிர் என்பவர்கள் குறுநில மன்னர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; பெருநிலத் தலைவர்கள். இவன் சிறந்த வீரன்; கொடைவள்ளல்; விருந்தினர்க்கும் இரவலர்க்கும் வேண்டுவன கொடுக்கும் இயல்புடையவன். வற்றாத வளங்கள் பலவற்றை யுடையவன். இவனைப் போலவே இவனுடைய முன்னோர்களும் வீரர்களாகவும் கொடை வள்ளல்களாகவும் வாழ்ந்தனர். தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகிய பல்குன்றக் கோட்டம் என்பது இவனுடைய நாடு. திருவண்ணாமலையைச் சேர்ந்த சுற்றுப்புறப் பகுதியே இந்தப் பல்குன்றக்கோட்டம். கல்வெட்டுகளிலிருந்து இவ்வாறு ஊகிக்க இடம் உண்டு. திருவண்ணாமலையின் சுற்றுப்புற ஊர்களிலே பல குன்றுகள் நிறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. செங்கண்மா என்பது இவனுடைய தலைநகரம்; திருவண்ணா மலைக்கு மேற்கே பன்னிரண்டாவது கல்லில் உள்ளது இவ்வூர். இன்று செங்கமா அல்லது செங்கம் என்று வழங்கப்படுகின்றது. இது பழமையான ஊர். இவ்வூர் பண்டைக் காலத்தில் கோட்டை கொத்தளங்கள் அமைந்த ஒரு பெரிய நகரமாக இருந்தது என்பதற்கான அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. இதுவே நன்னனுடைய செங்கண்மா நகரமாகும். எல்லா வளங்களையும் ஏராளமாகக் கொடுக்கும் நவிர மலையென்பது நன்னனுக்குச் சொந்தமான மலை. இங்கே காரி யுண்டிக் கடவுள் வீற்றிருப்பதாகக் கூறுகிறது இந்நூல். காரியுண்டிக் கடவுள் சிவபெருமான். கருமையான நஞ்சை உணவாகக் கொண்ட கடவுள். இப்பொழுது இந்நவிரமலையைத் திரி சூலமலை யென்றும் பர்வதமலையென்றும் அழைக்கின்றனர். காரியுண்டிக் கடவுளைக் காளகண்டேசுவரர் என்று கூறுகின்றனர். பல் குன்ற நாட்டிற் பாயும் ஆற்றைச் சேயாறு என்று சொல்லுகிறது மலைபடுகடாம். சேய் - முருகன், சேயாறு- முருகனாறு. இப்பொழுது இவ் வாற்றைச் சண்முகநதி என்று கூறுகின்றனர். இந்நதி செங்கம் என்ற ஊரை அடுத்துச் செல்லுகின்றது. பாட்டின் அமைப்பு ஒரு கூத்தன் நன்னனிடம் போய்ப் பரிசு பெற்று வருகின்றான். அவன் வரும் வழியிலே பரிசு கொடுப்போரைத் தேடிச் செல்லும் மற்றொரு கூத்தனைக் கண்டான். பரிசு தேடிச்செல்லும் கூத்தன் தன் சுற்றமாகிய பாணர்களுடனும், விறலியர்களுடனும், இசைக்கருவிகளுடனும் ஒரு மர நிழலிலே அமர்ந் திருந்தான். அவனைக் கண்டு பரிசு பெற்று வந்த பாணன், தான் பரிசு பெற்று வந்த வரலாற்றைச் சொல்லுகிறான். நன்னனிடம் போவதற்கான வழிகளைச் சொல்லி அனுப்புகிறான். அவன் கடந்து செல்ல வேண்டிய குன்று வழியைப் பற்றிக் கூறும்போது, அந்த வழியில் உள்ள இயற்கை வளங்கள், நடந்து போவதில் உள்ள இடையூறுகள், மலையிலே தங்கிச் செல்ல வேண்டிய இடங்கள், மலைவாசிகளின் வாழ்க்கை, அவர்கள் நன்னனைத் தேடிச் செல்வோர்க்குத் தரும் உணவுகள் முதலிய வற்றைக் கூறுகிறான். இதைப்போலவே காட்டு வழியைப்பற்றியும் எடுத்துச் சொல்லுகின்றான். நீர்வளம் மிகுந்த ஊர்களைப்பற்றியும் உரைக்கின்றான். இவ்வழிகளையெல்லாம் கடந்து நன்னனுடைய நகரை யடைந்து அவனைப் புகழ்ந்து பாடினால், அவன் அந்தப் புகழ்ச்சியைப் பெரிதாக எண்ணாமல் அவர்களுக்கு நல்ல விருந்தளிப்பான்; எத்தனை நாட்கள் தங்கியிருந்தாலும் முதல் நாளைப்போலவே அத்தனை நாட்களும் உபசரிப்பான். நல்ல மது- மாமிசம்- மரக்கறிவகைகள்- தயிர்- பழம் முதலியவைகளைக் கொடுப்பான். ஊருக்குப் புறப்படும்போது ஆடை, அணிகள், தேர், குதிரை, யானை முதலிய செல்வங் களைப் பரிசளிப்பான். இச்செய்திகளை வரிசையாகச் சொல்லுகிறது இப்பாட்டு. இதுவே மலைபடு கடாம் என்னும் இந்நூலின் அமைப்பாகும். இந்நூல் இயற்றிய காலத்தில் செங்கண்மா நகருக்குப் போகச் சரியான சாலையில்லை. மலை, காடு, புதர், நீர்நிலைகள் இவைகளையெல்லாம் ஒற்றை யடிப் பாதைகள் மூலம்தான் கடந்து செல்லவேண்டும். பெரும்பாலும் தமிழ் நாட்டில் இந்த நிலைதான் இருந்தது. இப்பொழுது இருப்பதுபோன்ற நல்ல சாலைகளோ, ஆறுகளுக்குப் பாலங்களோ இல்லை. இதை இந்நூலால் காணலாம். ஏனைய ஆற்றுப் படைகளாலும் அறியலாம். மலையிற்கேட்கும் ஓசைகள் இந்நூலின் பெயருக்கே காரணமாக இருக்கும் ஓசைகள் எவை எவை என்பதைப் பார்ப்போம். 1. ஆண்குரங்கு பெரிய பலாப்பழத்தைத் தோண்டுகின்றது. அப்பழத்திலிருந்து தேன் ஊற்றுகின்றது. அதன் நறுமணம் எல்லாத் திசைகளிலும் வீசுகின்றது. தேவமாதர்கள் இத்தேனுடன் கலந்து வீசும் அருவியின் இன்பத்தை நுகர்கின்றனர். அவர்கள் விரைந்து வீழும் அவ்வருவியைக் கையால் ஏந்திக்கொண்டு அதிலே நீராடுகின்றனர். அதனால் உண்டான ஓசை உங்கள் வாத்தியங்களைப் போல் ஒலிக்கின்றது. கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின் மலைமுழுதும் கமழும் மாதிரந் தோறும் அருவி நுகரும் வானர மகளிர் வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் தெரியிமிழ் கொண்டநும் இயம்போல் இன்னிசை (292-296) 2. தன் இனத்தைப் பிரிந்து வந்த ஆண் யானையைத் தினைப்புனத்தை அழிக்காதபடி பிடிப்பதற்காகப்- பரணிமேல் வீற்றிருக்கின்ற குறவர்கள் சங்கநாதம் செய்து ஆரவாரம் புரிகின்றனர். இலங்குஏந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல் விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் புலம்புக்கு உண்ணும் புரிவிளைப் பூசல் (297-299) 3. குகைக்குள்ளே பதுங்கியிருக்கும் முள்ளம்பன்றி தன் கூரிய முட்களை வெளியிலிருக்கும் கானவர்களின் மேல் வீசுகிறது. அதனால் கானவர் காயம்பட்டு அழுகின்றனர். சேயலைப் பள்ளி எஃகுறு முள்ளின் எய்தெற விழுக்கிய கானவர் அழுகை (300- 301) 4. கொடிச்சியர்கள் தங்கள் கணவர்களின் மார்பிலே புலிகள் பாய்ந்து கீறிய புண் ஆறவேண்டும் என்று பாடிக் கொண்டிருக்கின்றனர். கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார், காப்பென அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் (302-304) 5. முதல் முதலிலே பூத்த வேங்கை மலரைப் பறிப்பதற் காகப் பெண்கள் கூடிக்கொண்டு புலி புலி என்று ஆரவாரிக்கும் கூச்சல். தலைநாட் பூத்த பொன்இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல் (305- 306) 6. கன்று போடும் பருவமுள்ள பெண் யானையை அதன் துணையான வலிமையுள்ள ஆண் யானை பாதுகாத்து அழைத்துக்கொண்டு போயிற்று. அப் பொழுது ஒரு புலி பாய்ந்து அப்பெண் யானையைக் கொன்றுவிட்டது. அது கண்ட ஆண்யானை தன் சுற்றமுடன் மலை அதிரும்படி இடியோசை போல் கதறுகின்றது. கன்றறைப் பட்ட கயந்தலை மடப்பிடி வலிக்கு வரம்பாகிய கணவன் ஓம்பலின், ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்கு குரல் (307- 310) 7. மந்தியொன்று, கெட்டியாக வயிற்றைப் பிடித்துக் கொள்ளத் தெரியாத தன் குட்டியைத் தானும் கையாற் பிடித்துக் கொள்ள மறந்து விட்டது. அதனால் அக்குட்டி ஆழ்ந்த மலைப்பிளவிலே விழுந்து மாண்டுவிட்டது. அதைக்கண்ட மந்தி தன் சுற்றமுடன் கூடிக் கூச்சலிட்டு அழுகின்றது. கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு, முறிமே யாக்கைக் கிளையோடு தோவன்றி சிறுமை யுற்ற களையாப் பூசல். (311- 314) 8. குரங்கும் ஏற முடியாமல் கைவிட்ட மலையுச்சியிலே கண்ணேணி வழியாகக் கானவர்கள் ஏறிச் சென்றனர். அங்குள்ள தேன் அடையிலிருந்து தேனைக் கைக்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிக்கின்றனர். கலை, கையற்ற காண்பின் நெடுவரை, நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப், பெரும்பயன் தொகுத்த தேங்கள் கொள்ளை. (315- 317) 9. குறுநில மன்னர்களின் பாதுகாவல்களை அழித்துக் கானவர்கள் ஆரவாரம் புரிகின்றனர். அரும்குறும்பு எறிந்த கானவர் உவகை (318) 10. குறவர்கள், தம் அரசனுக்குப் புதிய திறையாகக் கொடுக்கத் தகுந்த தென்றுகருதிப் புதிய தேனைச் சேமித்தனர். அந்த மகிழ்ச்சியால் அவர்கள் தங்கள் மகளிருடன் மான்தோல் போர்த்த சிறுபறை முழங்கும்படி மலையுச்சியிலே குரவைக் கூத்தாடுகின்றனர். திருந்து வேலண்ணற்கு விருந்துஇறை சாலும்என, நறவு நாள் செய்த குறவர், தம் பெண்டிரோடு மான்தோல் சிறுபறை கறங்கக் கல்லென வான்தோய் மீமிசை அயரும் குரவை. (319- 322) 11. நல்ல அழகுள்ள தேர் ஓடிவரும்போது கேட்கும் ஓசையைப் போல, ஆற்று வெள்ளம் மலைப் பிளவுகளிலே விழும்போது ஓசை கேட்கின்றது. நல்எழில் நெடுந்தேர் இயவு வந்தென்ன கல்யாறு ஒலிக்கும் விடர்முழங்கு இரங்கிசை (323- 324) 12. பெரிய நீர்ச் சுழலிலே மாட்டிக்கொண்ட யானையை, அதன் கோபத்தைத் தணித்து, அதைக் கட்டுத்தறியிலே கட்டு வதற்காகப் பாகர்கள் யானை மொழியிலே பேசுகின்றனர். அவ்வோசை கேட்கின்றது. நெடுஞ்சுழிப் பட்ட கருங்கண் வேழத்து, உரவுச்சினம் தணித்துப் பெருவெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர் ஓதை (325- 327) 13. தினைப்புனத்திலே கிளியோட்டும் பெண்கள் மூங்கில் தட்டையை அடித்துக் கிளிகளை விரட்டுகின்றனர்; அவர்கள் குரலோசை கேட்கின்றது. ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும், கிளிகடி மகளிர் விளிபடு பூசல். (328- 329) 14. கிடையிலிருந்து பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த காட்டுப் பசுவின் காளையும், இடையரும் குறவரும் கண்டு ஆரவாரம் செய்யும்படி ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு போர் செய்கின்றன. இனத்தில் தீர்ந்த துளங்குஇமில் நல்லேறு, மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை, மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக் கோவலர் குறவரொடு ஒருங்கியைந்து ஆர்ப்ப (330- 333) 15. முல்லைப் புதர்களும், குறிஞ்சிப் புதர்களும் நாசமாகும் படி எருமைக் கடாக்கள் ஒன்றோடொன்று போர் செய்து கொண்டிருக்கின்றன. வள் இதழ்க் குவளையும் குறிஞ்சியும் குழைய, நல்ஏறு பொரூஉம் கல்என் கம்பலை. (334- 335) 16. சிறுவர்கள் தாங்கள் தின்று மிஞ்சிய பலாச்சுளை களைப் பரப்பினர். அவைகளின் கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணைத்துத் காந்தள் மடலால் அடித்து அதன் மேல் ஓட்டுகின்றனர். காந்தள் துடுப்பின் கமழ்மடல் ஓச்சி வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுபடும் மிச்சில் காழ்பயன் கொண்மார், கன்றுகடாஅ வுறுக்கும் மகாஅர் ஓதை (336-339) 17. மேகத்தைப் போல் காணப்படும் கொட்டகைகளிலே, மூங்கிலைப் போன்ற கரும்பைப் பிளக்கும்படி உடைத்து ஆலையிலே ஆட்டுகின்றனர். மழைகண் டன்ன ஆலைதொறும், ஞெரேர் எனக் கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் (340-341) 18. தினையைக் குற்றுகின்ற மகளிர் இசைபாடிக்கொண்டு குற்றுகின்றனர். தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும் (342) 19. சேம்பு, மஞ்சள் இவைகளைப் பன்றிகள் பாழ் பண்ணாமல் காவல் காக்கின்றனர். அவர்கள் பன்றிகளை விரட்டுவதற்காகப் பறையடிக்கின்றனர். சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையும் (343- 344) 20. இவ்வோசைகளின் காரணமாக எழுந்த மலையின் எதிர்ஒலியும் கேட்கிறது. குன்றகச் சிலம்பும் இவ்வாறு இருபது வகையான ஓசைகளைக் குறிப்பிடுகிறார் இவ்வாசிரியர். இவ்வோசைகளே மலைபடுகடாம் ஆகும். அதாவது மலையில் தோன்றும் ஓசைகள் ஆகும். இங்கே எடுத்துக்காட்டிய செய்யுள்கள் 292 முதல் 345 வரையில் உள்ள அடிகள். இவ்வோசைகளை விரிவாக எடுத்துக்காட்டியதன் மூலம் மலையின் இயற்கை வளங்களும், அங்கு வாழும் மக்கள் செயல்களும் விளக்கப்பட்டன. கானவர் வாழ்க்கை கானவர் என்போர் மலைச்சாரலிலே காட்டில் வாழ் வோர்; குறிஞ்சி நில மக்கள். இவர்களை முல்லை நிலத்து மக்கள் என்றும் கூறுவர். இவர்களுடைய வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இவ்வாசிரியர். மணம் செய்யும் வீட்டைப்போலப் பல பண்டங்களும் நிறைந்து வாசனை வீசுகின்ற மலையின் பக்கத்திலே வாழ்வார்கள். அவர்கள் நிறைய தேன் வைத்திருக்கின்றனர்; கிழங்குகள் வைத்திருக்கின்றனர்; வட்டிலில், அதாவது தட்டத்தில் நிறைய மாமிசத்தை நிரப்பி வைத்திருக்கின்றனர். அவர்கள் சிறிய கண்களையுடைய பன்றிகளை வேட்டையாடுவார்கள். அவை களின் மாமிசங்களிலே கெட்டுப்போனவற்றை எடுத்து எறிந்து விடுவார்கள். நல்ல மாமிசத்தை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். அதைத் தங்களால் கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்களிலே மாட்டிக் காவடிபோலத் தூக்கிக்கொண்டு வருவார்கள். மணஇல் கமழும் மாமலைச் சாரல் தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர், சிறுகண் பன்றிப் பழுதுளிப் போக்கிப் பொருதுதொலை யானைக் கோடு சீராகத் தூவொடு மலிந்த காய கானவர் (151- 155) இவ்வடிகள் கானவர் வாழ்க்கையைக் காட்டுகின்றன. அவர்கள் இயற்கையாகக் கிடைக்கும் தேனையும் கிழங்கையும் உண்டனர். தங்கள் முயற்சியாற்பெற்ற பன்றிக்கறியையும், மாமிசங்களையும் உண்டு வாழ்ந்தனர். விரும்தோம்பல் தமிழர்கள் விரும்தோம்பலில் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அவர்கள் தம் வீடு தேடி வந்தோர் யாவராயினும் அவர்களை உபசரிக்காமல் விடமாட்டார்கள். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை விருந்தினர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழ்நாட்டில் வாழ்ந்த எல்லா மக்களிடமும் இக்குணம் உண்டு. இது தமிழர்களின் பரம்பரைக் குணம். தமிழர்களின் இப்பண்பாட்டை இந் நூலாசிரியர் விரிவாகக் கூறியிருக்கின்றார். சிற்றூர்களைச் சேரும்போது நாங்கள் நன்னனுடைய கூத்தர்கள் என்று சொன்னால் போதும். உங்களுடைய வீட்டிற்குள் போவதுபோலவே அவர்களுடைய வீட்டுக்குள் நுழையலாம். உறவினர்களைப் போலவே உங்களுடன் அவர்கள் ஒன்றுபடுவார்கள். நீங்கள் நீண்ட வழியைக் கடந்த துன்பந்தீர உங்களுக்கு இனிய மொழிகளைக் கூறுவார்கள். நெய்யிலே வெந்த மாமிசத்தின் பொரியலையும் சிறிய தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள். மான விறல்வேள் வயிரியம் எனினே நும்மில் போல நில்லாது புக்குக், கிழவிர் போலக் கேளாது கெழீஇச் சேட்புலம் அகல இனிய கூறிப் பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையோடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர் (164- 169) இவ்வடிகள் சிற்றூர் மக்களின்சிறப்பை விளக்குகின்றன. காட்டிலே கோவலர் இருக்கையை அடைவீர்களானால் வேறிடங்களிலே மேய்ந்துவந்த சங்குபோன்ற வெண்மையான பசுக்களின் பாலை ஆயர் மகளிர் தந்து உபசரிப்பர். அதனை அருந்தி உங்கள் வழிநடை வருத்தம் தீர்ந்து புதிய பலத்தைப் பெறுவீர்கள். வேறுபுலம் படர்ந்த ஏறுடை யினத்த, வளைஆன் தீம்பால், மிளைசூழ் கோவலர் வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின், பலம்பெறு நசையொடு பதிவயின் தீர்ந்தநும் புலம்புசேண் அகலப், புதுவிர் ஆகுவிர் (408- 412) இவ்வடிகள் ஆயர்களின் அன்பான விருந்தோம்பலை விளக்குகின்றன. கல்லென்ற ஓசைநிறைந்த வழியிலே- கடலைப்போல் இரைந்துகொண்டிருக்கும் பல ஆடுகள் நிறைந்த மந்தையுள்ள இடத்திலே- இரவில் நீங்கள் புகுவீர்களானால் பாலையும், பாற்சோற்றையும் பெறுவீர்கள். அந்த ஆட்டிடையர்கள் தங்களுக்காக வைத்திருக்கும் அவற்றை உங்களுக்கு அளிப்பார்கள். கல்லென் கடத்திடைக், கடலின் இரைக்கும் பல்யாட்டு இனநிரை, எல்லினர் புகினே, பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் (415- 417) இவ்வடிகளும் இடையர்களின் விருந்தோம்பலை விளக்கிக் காட்டுகின்றன. சிவந்த வேங்கை மலரைப்போன்ற அவரை விதை, மூங்கில் அரிசி, மேட்டு நிலத்தே விளைந்த நெல்லரிசி இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவை, நீங்கள் வழிநடந்து போன வருத்தம் தீரும்படி புல் வேய்ந்த சிறிய குடிசைகளிலே பெறுவீர்கள். அங்கேயே நீங்கள் தங்குவீர்களானால் பொற்றுகள் போன்ற அரிசியால் வெண்மை மாறும்படி சமைத்த சோற்றைக் குளிர்ந்த நெய்யோடு கலந்து ஒவ்வொருநாளும் பெறுவீர்கள். செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன வேய்கொள் அரிசி, மிதவை சொரிந்த சுவல்விளை நெல்லின், அவரையும் புளிங்கூழ், அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட, அகலுள் ஆங்கண் கழிமிடைந்து இயற்றிய புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவீர், பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை, தண்என் உள்ளிழுது உள்ளீ டாக அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் (434- 443) இவ்வடிகள் மருத நிலத்திலே வாழும் ஏழைகள் உணவைக் காட்டுகின்றன. கோரைகள் வளர்ந்திருக்கும் வயல்களிலே வலைஞர்களால் பிடித்துக்கொண்டு வரப்பட்ட வாளைமீன்- தூண்டிலின் மூலம் பிடித்த யானையின் கையைப் போன்ற பெரிய வரால்மீன் - துடிக்கண் போன்ற இறைச்சித் துண்டு- இவைகளைப் பழங்குடி மகளிர் கொடுப்பார்கள். நண்டுகள் திரிகின்ற வயற்கரையிலே மலைபோலக் குவிந்திருக்கின்ற போரை அடித்தும், வயலிலே அறுத்தும் உழவர்கள் கொண்டு வந்த நெல்லால் ஆகிய அரிசிச் சோற்றையும் அளிப்பார்கள். விளங்குகின்ற பானையிலே ஊற்றி வைத்திருக்கின்ற மதுவையும் கொடுப்பார்கள். இவைகளைக் காலைப்பொழுதிலே எந்தக் களத்திற்குப் போனாலும் பெறுவீர்கள். கண்புமலி பழனம் கமழத் துழைஇ வலையோர் தந்த இரும்சுவல் வாளை, நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில் பிடிக்கை அன்ன செங்கண் வராஅல் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப் பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் ஞெண்டாடு செறுவில் தாய்க்கண் வைத்த விலங்கல் அன்ன போர்முதல் தொலைஇ வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்கு தசும்புவாக்கிய பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர். (454-464) இவ்வடிகள் உழுதொழில் செய்து வாழும் தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்க்கையை விளக்குகின்றன. இத்தகைய பழந்தமிழர்களே இன்று தாழ்த்தப்பட்ட சமூகமாக நமது நாட்டிலே வாழ்கின்றனர். இவைகள், சிற்றூர்களிலே வாழும் மக்கள், ஆயர்கள், மருத நிலத்திலே வாழும் மக்கள், உழவர்கள் ஆகியோர் வாழ்க்கை யையும், அவர்களுடைய விருந்தோம்பும் சிறப்பையும் குறிக்கின்றன. தமிழ் மக்கள் விருந்தோம்பும் பண்பாட்டிலே சிறந்தவர்கள் என்பதற்கு இவைகளே சான்றாம். பாம்புக்கு வணக்கம் நாகப்பாம்பை வணங்கும் வழக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்தது. நாகத்தையே வழிபடு தெய்வமாகக் கொண்ட ஒரு வகுப்பினர் தமிழ்நாட்டிலே வாழ்ந்தனர். அவர்களைத்தான் நாகர்கள் என்ற பெயரால் அழைத்தனர். இந்த நாகர்கள் வாழ்ந்த இடங்களைத்தான் நாகப்பட்டினம், நாகர்கோயில் என்கிற பெயர்களால் அழைத் திருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு கூட்டத்தாரிடமிருந்த இப்பழக்கம் நாளடைவில் தமிழ் மக்கள் பலரிடமும் பரவி விட்டது. சிறப்பாகப் பெண்கள்தாம் நாகத்தை வணங்கும் வழக்கத்தை மிகுதியாகப் பின்பற்றினர். இதற்கு இந்நூல் ஆதரவளிக்கின்றது. நீங்கள் போகும் வழியிலே பாம்புகள் மறைந்து பதுங்கிக் கிடக்கும் பள்ளங்கள் உண்டு. அவற்றைக் கவனித்து மரத்தின் மேல் ஏறிப் பாருங்கள். விறலியர் அந்தப் பாம்புகளைக் கையால் வணங்கி வேண்டிக் கொள்ளும்படி செய்யுங்கள். பாம்பற்ற நல்ல வழியிலே நடந்து வலப் பக்கத்து வழியிலே போங்கள். கரந்து பாம்புஒடுங்கும் பயம்பு மாருளவே, குறிக்கொண்டு மரங்கொட்டி நோக்கிச் செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச, வறிதுநெறி யொரீஇ வலம்செயாக் கழிமின் (199- 202) செங்கண்மா நகர் இந்நூலாசிரியர் காலத்திலே செங்கண்மா நகரம் எவ்வளவு சிறப்புடன் விளங்கிற்று என்பதை இந்நூலிலே காணலாம். நன்னனுடைய செங்கண்மா நகரம் சேயாற்றங் கரையில் உள்ளது. அந்நகரிலே செல்வத்திற்குக் குறைவில்லை. சுற்றிலும் உயர்ந்த மதில் சூழ்ந்தது அந்நகரம். பரம்பரையாக அந்த ஊரிலேயே வாழ்கின்ற பழங்குடி மக்கள் இருக்கின்றனர். பெரிய கடைவீதிகள் உண்டு. தெருக்கள் ஆற்றைப் போலக் காணப்படு கின்றன. பகைவர்கள் அஞ்சும்படியான சிறிய தெருக்களில் கூட திருவிழாக்காலத்தைப்போல- கடலின் ஓசை போல- மேகத்தின் ஒளிபோல- இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மலை யென்று சொல்லும்படியும், மழையென்று சொல்லும்படியும் உயர்ந்த மாளிகைகள் பல உள்ளன. அன்புடன் விரும்பி வசிப்பதற்கேற்ற குளிர்ந்த சோலைகளிலே வண்டுகள் இசை பாடிக்கொண்டிருக்கும். இத்தகைய பழமையான வெற்றி பொருந்திய அந்நகரம் தூரத்தில் இல்லை. சேயாற்றின் நிதியந் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின் பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து யாறுஎனக் கிடந்த தெருவில், சாறுஎன இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் கடலெனக் கார்என ஒலிக்கும் சும்மையொடு, மலையென மழையென மாடம் ஓங்கித் துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும் பனிவார் காவில் பல்வண்டு இமிரும், நனிசேய்த் தன்றுஅவன் பழவிறல் மூதூர். (476- 486) நன்னன் பெருமை இப்பாட்டின் தலைவனாகிய நன்னன் சிறந்த வீரன். புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தான். தன்னை இகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்கு வான். புகழ்வோர்க்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்து விடுவான். அவனுடைய அவைக் களத்திலே சிறந்த கல்வியும் அறிவுமுடைய பலர் குழுமியிருந்தனர். இவ்வாறு நன்னனுடைய நற்பண்புகளைக் கூறுகிறது இந்நூல். அழியாத நல்லபுகழ் உலகுள்ள வரையிலும் நிலைத் திருக்கும்படி பகைவர்கள் பலரையும் தோல்வியுறச் செய்தவன். அப்பகைவர்கள் திறையாகத் தந்த அருங்கலன்களையெல்லாம் புலவர்களுக்கு மாரியைப்போல் மகிழ்ந்து சொரிவான். தன்னையிகழ்வோரை அடிமைப்படுத்தும் ஆற்றலுடையவன். புகழ்வோருக்குத் தன் அரசாட்சியின் செல்வமுழுவதையும் கொடுத்து விடுவான்; கொடுத்தும் அவன் ஆசை அடங்காமல், பருவகாலத்தில் மழைபெய்த மேகம் மீண்டும் மழைபெய்து கொண்டேயிருப்பதுபோல, அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருப்பான். இதுதான் அவன் சபையில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி. நல்லோரும், கற்றறிந்த நாவலரும் அவன் சபையிலே நிறைந்திருப்பார்கள். அவர்கள், கல்வியிலே வல்லவர்கள். தங்கள் திறமையை வெளிக்காட்டாமல் மறைத்து வந்தாலும், அவர்கள் திறமையைக் கண்டறிந்து வெளிப்படும்படி சொல்லிக் காட்டுவார்கள். அவர்களை நல்லமுறையிலே நடத்துவார்கள். நன்ன னைப்போலவேஅவனுடையசுற்றத்தாரும்நல்லவர்கள்; ஒழுக்கமுடையவர்கள். தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப் பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன்ஈகை மாரியும், இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தூத்துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும்அவன் நாள்மகிழ் இருக்கையும் நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதின் இயக்கும்,அவன் சுற்றத்து ஒழுக்கமும் (70-80) இவ்வடிகள் நன்னனுடைய சிறப்பை விளக்குகின்றன. பழங்காலத்து நிலத் தலைவர்கள் பொதுமக்களிடம் எத்தகைய மதிப்புப் பெற்று வாழ்ந்தனர் என்பதை யும் இதனாற் காணலாம். உவமைகள் ஒவ்வொன்றையும் உவமைகாட்டி விளக்குவதிலே இவ்வாசிரியர் மிகவும் சிறந்தவர். சிறந்த புலமையும் சிந்தனா சக்தியும் உடையவர்களால்தான் பொருத்த மான உவமை களைத் தேர்ந்தெடுத்துக் கூற முடியும். இவர் காட்டும் உவமை களிலே சிலவற்றைமட்டும் பார்ப்போம். மேதிஅன்ன கருங்கல் இயவு எருமைகளைப்போலக் கருங்கற்கள் குண்டு குண்டாகக்கிடக்கின்ற வழி. கருங்கல்லுக்கு எருமை உவமானம். காழ்மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென. ஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோயத் துறுகல் சுற்றிய சோலை வாழை (129- 131) காம்பையுடையவேல் யானையின் முகத்திலே குத்தியிருப்பதுபோல, வாழையின் மலர்கள் மலையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. மலையை யானையாகவும் வாழைப்பூவை வேற்கம்பாகவும் உவமிக்கப்பட்டுள்ளன. படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் எடுத்து நிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி (15-16) சமமாகப் பரப்பிவைத்திருப்பது போன்ற பாறையின் பக்கத்திலே செங்குத்தான உயரமான வழி காணப்படுகின்றது. அதைப் பார்த்தால் குறுகலான ஒரு நீண்ட வழியை அப்படியே எடுத்துச் செங்குத்தாக நிறுத்தியிருப்பதுபோல் தோன்றுகிறது. தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின், மீமிசை நல்யாறு கடற்படர்ந்தா அங்கு யாம்அவ ணின்று வருதும் (51-53) மலர்கள் நிறைந்து, கரையை மோதிக்கொண்டு மலையின் மீதிருந்து கடலுக்கு வீழ்ந்தோடும் நல்ல ஆறுபோல நாம் அந்த நன்னனிடமிருந்து வருகின்றோம். இவ்வாறு பரிசு பெற்றுவந்த பாணன் சொல்லுகின்றான். தன்னை ஆறாகவும், தான் பெற்ற பரிசுப்பொருள்களை அந்த ஆற்றுவெள்ளம் அடித்துக் கொண்டு வரும் பொருள்களாகவும், அந்த நன்னனைப் பல வளங்களும் நிரம்பிய மலையாகவும் உவமித்துக் காட்டுகிறார். இவைபோன்ற பல சிறந்த உவமைகளைக் காணலாம். பழக்கவழக்கங்கள் பழந்தமிழர்களிடம் குடிகொண்டிருந்த பழக்க வழக்கங் களை இந்நூலிலே காணலாம். போரிலே மாண்ட வீரர்களின் நினைவுக்குறியாக மரத்தடியிலே அவர்கள் பெயர் பொறித்த கற்களை நட்டு வைத்திருப்பார்கள். மக்கள் அக்கற்களை வணங்குவார்கள். கூத்தர், பாணர், பொருநர் முதலியோர் பாடுவதற்கோ ஆடுவதற்கோ தொடங்குமுன் தெய்வத்தை வணங்குவார்கள். ஓரிடத்திற்குப் புறப்படும்முன் பறவைச் சகுனம் பார்க்கும் வழக்கம் உண்டு. மூங்கிற் குழாயிலே மதுவை அடைத்து வைத்திருந்து பக்குவப்படுத்தி அருந்துவார்கள். எருமைத் தயிரையும் மூங்கிற் குழாயிலே வைத்திருக்கும் வழக்கம் உண்டு. இசைக் கருவிகளுக்கு உறையிட்டுப் பத்திரமாகப் பாது காத்து வைப்பார்கள். சக்கரத்திலே மண்ணைப் பிடித்து வைத்துப் பாத்திரங்கள் செய்யும் குயவர் கள் பழந்தமிழ்நாட்டில் இருந்தனர். மண் பாண்டத்தொழில் தமிழ்நாட்டின் பழமையான தொழில். உலோகங்களை உருக்கிப் பாத்திரங்களை செய்யும் தொழில் வளர்ந்தி ருந்தது. தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி (தாளம்) என்னும் நால்வகை இசைக்கருவிகளையும் செய்தனர். உடலைவிட்டு உயிரைத் தனியாகப் பிரித்துக்கொண்டு போகும் தெய்வம் ஒன்று உண்டு என்று நம்பினர். இதற்குக் கூற்றுவன் என்று பெயர் கூறினர். இன்னும் பல தெய்வ வணக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. தேவர்கள் அமுதம் வேண்டிக் கடல்கடைந்தது; பரமசிவன் நஞ்சுண்டது ஆகிய வரலாறுகள் தமிழ்நாட்டிலே வழங்கி யிருந்தன. இவைபோன்ற இன்னும் பல செய்திகளையும் பழந்தமிழர் நாகரிகத்தையும் இந்த மலைபடுகடாம் நமக்குக் கூறுகின்றது. தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்பதாண்டு காலத்தைத் தமிழனுக்கும் தமிழுக்கும் அர்ப் பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணிகளிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர். பிற்காலத்தில் பொதுஉடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர். தமிழ் மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும், கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறவேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். 1920 முதல் 1961 வரையுள்ள நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட புனைப் பெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொண்டாற்றியவர். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோபகாரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத் தாளராகவும் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றியவர்; பத்திரிகைத் துறையில் நாட்டம்கொண்டு அறிவுக்கொடி என்னும் பத்திரிகையை - 1936ல் - கும்பகோணத்தி லிருந்து ஈராண்டுக்காலம் நடத்தி மகிழ்ந்தவர். தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். மேலும் `திராவிடன் நாளேடு, தமிழரசி, தாருல் இலாம், சாந்தி, தொழிலரசு, தமிழ்ப்பொழில், செந்தாமரை, சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, `தமிழ்முரசு நாளேடு, பொன்னி, செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி, புதுஉலகம், கவிதா மண்டலம், புதுவை முரசு, நகரத்தூதன், சண்ட மாருதம், பார்க்கவகுலமித்திரன், சுயமரியாதை, போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தவர். இவ்விதழ்களில் மெய்கண்டான், கதைக் காதலன், குருலூ, எ.சி.பரன், மிடர் திங்கர், சாமி.சி. இடிமுழக்கம், காலக்கவி, வாமிஜி, வம்பன், அரட்டை, சிகாமணி, நாதிகன், பொறுப்புள்ளவன், விளக்கொளி, கண்ணாடி, தமிழன், சல்லடை சலிப்பு, அரசியல்வாதி, மெய்யன் என்னும் 20க்கும் மேற்பட்ட புனைப் பெயர்களில் எழுதி உள்ளார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடிவாழையென வந்த தமிழ்ப் புலவர் கூட்டத்தின் வழித்தோன்றல். பழமைக்கும் - புதுமைக்கும் பாலமாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்தவர். தமிழ் இலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் விருப்பு - வெறுப்புக்கு இடம் கொடாமல் சமதர்ம உணர்வு தழுவத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆராய்ச்சியாளர். சங்க இலக்கியங் களைச் சாதாரணமானவர்களும் அறியும்படி செய்த தமிழறிஞர். படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல் - ஆரவாரத்தை நீக்கி அடக்கமாக வாழ்ந்து - மக்களுக்காக எழுதவேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சிக் காலத்திற்கு ஏற்பத் தம்மைப் பொருத்திக் கொண்டவர். தொல்காப்பியர் காலத் தமிழன் முதல் பாரதி - பாரதிதாசன் காலத் தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த கடகம் என்னும் அழகிய சிற்றூரில் வீரபத்திர மலையமான் என்னும் சைவப் பெருநிலக் கிழாரின் பேரனாகவும் சாமிநாத மலையமான் - கமலாம்மாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின் செல்வ மகனாகவும் - சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளில் (1.12.1900) சாமி. சிதம்பரனார் பிறந்தார். கிராமப் பள்ளிகளிலும், மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். தஞ்சையில் தமிழ்ப்பெரும் புலவராக விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர்.வெங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் மாணவராக இருந்து கல்விகற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். முறையாகப் பயின்று 1923-ஆம் ஆண்டில் பண்டிதர்ப் பட்டம், வித்வான் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டுக் காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப்பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உட்பட எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் தமிழ் ஐயாக்களுக்கு நன்மதிப்புக் கிடைப்பது அரிது. ஆனால் சிதம்பரனாரோ, மாணவர்களுக்கு நூல்கள் பல எழுதியும் புதுமுறையில் அவர் களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நன்மதிப்புக்கிலக் காகினார். இலக்கணத்தை எளிய - இனிய முறையில் கற்பித்தார். சீர்திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார். பள்ளியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரே ஆவார். பெரியார் ஈ.வெ.ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு குடியரசு எழுத்தாளரானார். பெரியார் முதன் முதலாக மலாயா சென்றபோது சாமி. சிதம்பரனாரும் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப்பட்ட அக்காலத்தில் - சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமி. சிதம்பரனார் கும்பகோணத்தில் பிரபல நீதிக்கட்சிக்காரராக விளங்கிய திரு.ஏ.குப்புசாமிப் பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை, சமூகத்தையும், சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சாமி. சிதம்பரனார் இளமையிலேயே - பள்ளி மாணவராக இருந்த காலத்திலேயே - எதையும் புரிந்துகொண்டு எளிமையாக விளக்கி எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். தமது 21-ஆம் வயதிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல் வடிவத்தில் வெளிவராமல், எழுதியபடியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிநயம் வாய்ந்தவை. 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சேரும். பத்துப் புத்தகங்கள்வரை எழுதியுள்ளார். அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாடப் புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் 1934,35,36 ஆகிய ஆண்டுகளில் பாடப் புத்தகமாக வைத்தது. பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக - மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும், முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவர் 41ஆம் வயதிலேயே ஆசிரியர் பணியி லிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு தாம் விரும்பிய முழு நேர எழுத்துத்துறையில் ஈடுபட்டார். சாமி. சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர். முதலில் தமிழ்ப் பண்டிதர், நீதிக் கட்சிக்காரர், தீவிர சுயமரியாதைக்காரர், திராவிடக் கழகக்காரர், அதன் பின்னர் காங்கிரகாரர், சமதர்மவாதி. 1949,50-இல் பொது உடைமை இயக்கம் நெருப்புக் குளியலுக்கு ஆளானபோது அதனிடம் நட்புப் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர். விட்ட இடத்தில் தொடுவதைப் போல, தமிழ்ப் புலவராக வாழ்க்கையைத் தொடங்கிய சாமி. சிதம்பரனார் 1948-இல் சென்னைக்கு வந்து பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத் துடன் விளக்கும் சங்க இலக்கியங்களின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் சாமி. சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தாம் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன - இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆகிய வற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தொடக்ககால முதலே குறிப் பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றி உள்ளார். சென்னை மகாஜன சபை சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள்வரை பொறுப்புள்ள தலைவராக விளங்கினார். சாமி. சிதம்பரனார் 1948-லிருந்து 1961 வரை உள்ள காலத்தில் இலக்கியத் துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. தமிழகத்தின் மிகச் சிறந்த புலவர்களான கம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பெரும் புலவர்களின் படைப்புக்களையும் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆகியவற்றையும், சீத்தலைச் சாத்தனாரின் செந்தமிழ்க் காப்பியமான மணிமேகலையையும், குறுந்தொகைப் பெருஞ் செல்வம், நற்றிணைக் காட்சிகள், பழமொழி நானூறு, புகழேந்தியின் புலமை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் பொருள்விளக்கம், இவை போன்ற சாமி. சிதம்பரனார் எழுதிய நூல்களைவிட அவர் எழுத நினைத்த நூல்கள் ஏராளம், ஏராளம். இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும் உணர்ந்து கற்றுப் பயன்பெறத்தக்க வகையில் தமக்கே உரிய எளிய - இனிய நடையில் அவற்றின் அடிப்படையை ஆய்ந்து தமிழகத்திற்கு அறிவித்துள்ளார். சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர். சாமி. சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள் ஆய்வுக் கண்ணோட்டம் உடையனவாய் விளங்குகின்றன. சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர்களே சிறந்த நூல்களை ஆக்க முடியும். அத்தகைய நேரமும், வசதியும் தமிழ் அறிஞர் சாமி. சிதம்பரனார் தம் வாழ்நாளில் பெற்று இருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள்நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதி வெளியிட்டு உள்ளார்கள். அதுதவிர, மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பன்னிரண்டாயிரம் பாடல்கள் உடைய கம்பராமாயணத்தி லிருந்து, இலக்கியத்தரம் அதிகம் வாய்ந்த நாலாயிரம் (4000) பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஆறு காண்டங்களும் கொண்ட கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளார். 1924 முதல் 1940 வரை பதினாறு ஆண்டுகள் தமிழாசிரிய ராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும், 1924 முதல் 1948 வரை இருபத்து நான்கு ஆண்டுகள் அரசியல் சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவு களிலும் பணியாற்றியும் வந்த சாமி. சிதம்பரனார் 1948-க்குப் பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர், தமிழ்முரசு நாளேட்டின் மூன்று பகுதி களுக்கு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடையறாமல் எழுதி அனுப்பி வந்தார். பாராட்டுதல்கள் குவிந்தன. இவரது புகழும் பெருமையும் பரவின. இதனால் இன்பமும் மனநிறைவும் பெற்று மெய்மறந்து உழைத்தார். இப்பணி தான் பிற்காலத்தில் தமக்கு நிலையான புகழ் தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். தமிழ்ப் பெரும்புலவர் - தமிழ் ஆராய்ச்சியாளர் - தமிழ் இலக்கியத் திறனாய் வாளர் - தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் - தமிழ்ப் பாவலர் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய சாமி. சிதம்பரனார் அவர்கள் 17.01.1961-இல் இயற்கை எய்தினார். தமிழ்ப் பேரறிஞர் சீர்திருத்தச் செம்மல் சாமி.சிதம்பரனார் புகழ் வாழ்க! வாழ்க!! ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதுஒன்று இல். எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் (1957) முன்னுரை எட்டுத் தொகையும், தமிழர் பண்பாடும் என்பது எட்டுத் தொகை நூல்களைப் பற்றிக் கூறுவது. எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு எட்டுத்தொகை. அவை இன்னின்னவை என்பதை எட்டுத்தொகை நூல்கள் என்ற தலைப்பிலே காணலாம். எட்டுத் தொகை நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம்; எட்டுப் புத்தகங்கள் எழுதலாம்; பலர் எழுதியும் இருக்கின்றனர். எட்டுத்தொகை நூல்களைப் பற்றி எழுதியிருப்போர் அந்நூல்களின் அருமை பெருமைகளை ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர். அந்நூல்களிலே அமைந்தி ருக்கும் சொல் நயம், பொருள் நயம், இயற்கைக் காட்சி, உவமைச் சிறப்பு, செய்யுள் அமைதி முதலியவைகளை எடுத்துக் காட்டி எழுதியிருக்கின்றனர். அந்நூல் பாடல்களின் ஆசிரியர்களான பழம் புலவர்களின் மாண்பையும், அந்நூல்களின் மூலம் அறியக் கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தையும் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர். பண்டைத் தமிழர்களின் உண்மை வரலாற்றை உணர வேண்டும் என்பதுதான் இந்நூலை எழுதியதன் நோக்கம். பண்டைத் தமிழர்களின் சமுதாய வாழ்வு, அரசியல் முறை, குடும்ப வாழ்வு, பழக்க வழக்கப் பண்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பவை இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. எட்டு நூல் களிலும் அமைந்துள்ள இக்கருத்துக்கள் சுருக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. இன்று, பண்டைத் தமிழ் நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்; அவைகளைப் படித்தறிய வேண்டும் என்னும் ஆர்வம் தமிழகத்திலே பெருகி வருகின்றது. இத்தகைய ஆர்வம் உள்ளவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களின் உண்மைக் கருத்துக்களை எடுத்துக் காட்ட வேண்டும். அவர்களுடைய தமிழ் இலக்கிய தாகத்தைத் தீர்க்க வேண்டும். ஒரு சிலர் இந்த உண்மையை மறந்துவிடுகின்றனர். இன்றைய சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்ற கொள்கைகள் எவையெவை என்று தாம் எண்ணுகின்றனரோ, அவைகள் எல்லாம் தமிழ் இலக்கியங்களிலே இருக்கின்றன என்று சொல்ல முன்வருகின்றனர்; எழுதியும் தீர்த்துவிடுகின்றனர். இப்படிச் சொல்லுவோரையும் எழுதுவோரையும் பார்த்து ஐயா நீங்கள் எண்ணுவதற்கு மாறான கொள்கைகளும் பழந்தமிழ் நூல்களிலே காணப்படு கின்றனவே? என்று கேட்டால் போதும் அவர்களிடம் சீற்றம் பிறந்துவிடுகின்றது. உடனே அவர்கள் அவைகள் எல்லாம் இடைக்காலத்திலே நுழைந்தவை. தமிழர் களின் பகைவர்களால் புகுத்தப்பட்டவை என்று ஒரே போடு போட்டு விடு கின்றனர். இது சரியான சமாதானம் ஆகாது. ஆரியர் - தமிழர் என்ற வேற்றுமையைக் கிளப்பும் ஒரு கும்பல் தங்கள் வெறுப்புக் கிளர்ச்சிக்குத் தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பயன்படுத்திக் கொள்ளுகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதநாட்டுப் பண்பாட்டில் வேற்றுமை இல்லை என்பதற்கான ஆதரவுகள் நிறைந்திருப்பதை இக்கும்பல் மறைத்துவிடுகின்றது. தெய்வங்கள், தெய்வ வணக்க முறைகள், இல்லற தர்மம், அரசியல் நீதி, சமுதாய உயர்வு - தாழ்வு, இவ்வுலக - மறு உலக வாழ்வு பற்றிய உண்மைகள், போர் முறைகள், புராணங்கள், வேதம், வேள்வி, தவம், தவப்பயன், பொது நீதி ஆகியவை பற்றிய கருத்துக்கள் எல்லாம் பாரதநாடு முழுவதும் ஒரேவிதமாகவே பரவியிருந்தன. பண்டைத் தமிழ் நூல்களிலே இவைகளைப் பற்றி காணப்படும் கொள்கைகளுக்கும் வடமொழி நூல்களின் கொள்கைகளுக்கும் முரண்பாடில்லை. செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரதி, நமது நாட்டின் ஒன்றுபட்ட பண்பாட்டைப் பற்றி உணர்ந்திருப்பது உண்மையாகும். இவ்வுண்மையை மறந்து அல்லது மறைத்து பழந்தமிழர்கள் புலால் அருந்தாதவர்கள்; மதுபானம் செய்யாதவர்கள்; ஆரியர்கள்தாம் இப்பழக்கவழக்கங் களைத் தமிழர்களிடம் புகுத்தினார்கள் என்று சொல்லுகின்றவர்கள் கூட உண்டு. இது மிகவும் வேடிக்கையான வாதம். தமிழ் நூல்களைப் படிக்காதவர்களை ஏமாற்றும் வாதம். பழந்தமிழ் நூல்களில் இவைகள் வெறுக்கப்படவில்லை. ஔவையார், கபிலர் போன்ற புலவர்கள் எல்லாம் மாமிசத்தையும் மதுவையும் சிறந்த உணவாகப் பாராட்டியிருக்கின்றனர். வடமொழியின் மேலும், வடவர் மேலும் வெறுப்பு கொண்டவர்கள் வாய்க்கு வந்தவாறு பேசுகின்றனர்; எழுது கின்றனர். வகுப்பு வேற்றுமை ஆரியர் நுழைப்பு; மதம் ஆரியர் புகுத்தல்; தெய்வங்கள் வடவர் கற்பனை; மோட்ச - நரகம் ஆரியர்கள் சூழ்ச்சி; புண்ணிய - பாவம் அவர்கள் ஏற்படுத்தியவை என்றெல்லாம் சொல்லி விடுகின்றனர். பழந்தமிழ் நூல்களை நடுநிலையிலிருந்து காண்பவர்கள் வெறுப்பாளர்கள் கக்கும் வீணுரைகளைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். உண்மைகளை உணர்வார்கள். இக்கால நிலைமைக்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு முன்னேற வழி காண்பார்கள். வெறுப்பு பயன் தராது; விருப்பே எதற்கும் துணை செய்யும். தமிழ் வளர, தமிழர் முன்னேற விருப்பத்துடன் உழைக்க வேண்டும். பிற மொழிகளையும் பிற மக்களையும் வெறுப்பதனால் எப்பயனும் இல்லை. இதுவே பழந்தமிழர் பண்பாடு. இத்தகைய சிறந்த பண் பாட்டைத் தமிழர்கள் பின்பற்ற வேண்டும். இந் நோக்கத்துடனேயே பழந்தமிழர்களின் பண்பாட்டை எடுத்துக் காட்டும் வகையில் இந்நூல் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலை வெளியிட முன்வந்த பிரசுரத்தாருக்கு எனது நன்றி. சௌராஷ்டிர நகர். சாமி. சிதம்பரன் சென்னை-24. 10.2.57 எட்டுத்தொகை நூல்கள் எட்டு நூல்கள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கடைச்சங்க நூல்கள். எட்டு நூல்கள் கொண்ட ஒரு தொகுப்புக்கு எட்டுத் தொகை யென்று பெயர். இந்த எட்டுத்தொகை நூல்கள் ஒவ்வொன்றும் பல புலவர்களின் பாடல்களைக் கொண்டவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை அந்த எட்டு நூல்களின் பெயர்கள். நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்குபரி பாடல், கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு, அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை இவ் வெண்பா எட்டுத்தொகை நூல்கள் இவைகள் என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு பழைய வெண்பா. நற்றிணையிலே நானூற்றொரு பாடல்கள் இருக்கின்றன. அதன் முதற்பாட்டு கடவுள் வாழ்த்துப் பாடல். அது பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றும் இல்லை. இக் காலத்தில் எழுதப்பட்ட உரையே கிடைக்கின்றது. இது பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் என்னும் புலவரால் எழுதப்பட்ட உரை. குறுந்தொகையிலே நானூற்றிரண்டு பாடல்கள் இருக்கின்றன. இதன் முதற் பாட்டு கடவுள் வாழ்த்துப் பாடல். இதைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந் தேவனார். குறுந்தொகையிலே கடவுள் வாழ்த்தைச் சேர்க்காமல் நானூறு பாடல்கள் இருந்திருக்கலாம். நந்றிணை நானூறு அகநானூறு புறநானூறு என்பவைகளைப் போலவே குறுந்தொகையும் நானூறு பாடல்களைக் கொண்ட தாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல் கூடியிருப்பது பிற்காலத்துச் சேர்க்கையாக இருக்கலாம். குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரையெழுதினார். அவரால் உரை யெழுதாமல் விடப்பட்ட இருபது பாடல் களுக்கு நச்சினார்க்கினியர் உரையெழு தினார். இந்த இருவர் உரைகளும் இப்பொழுது கிடைக்கவில்லை. இக்காலத்தில் சௌரிப்பெருமாள் அரங்கன் என்னும் புலவர் உரையெழுதி யுள்ளார். மகா மகோபாத்தியாய சாமிநாதய்யர் அவர்களும் உரையெழுதியிருக்கின்றார். அய்யர் அவர்களின் உரை சிறந்தது. ஐங்குறுநூறு ஐந்நூறு பாடல்களைக் கொண்டது. கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து ஐந்நூற்றொரு பாடல்கள். இந்தக் கடவுள் வாழ்த்தும் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் தான் பாடப்பட்டது. இந்நூலுக்கு விளக்கமான பழைய உரை ஒன்றும் இல்லை. குறிப்புரை போன்ற ஒரு உரையுண்டு. இக் காலத்திலே ஔவை துரைசாமிப் பிள்ளை என்னும் புலவர் இந்நூலுக்கு உரை வகுத்துள்ளார். பதிற்றுப்பத்து நூறு பாடல்களைக் கொண்டதொரு நூல். பத்து சேரமன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டவை. ஒவ்வொரு சேரமன்னன் மீதும் பத்துப் பத்துப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டவை. பதிற்றுப்பத்திலே இன்று எட்டுப் பத்துக்கள்தாம் இருக்கின்றன. எண்பது பாடல்களே உண்டு. முதற்பத்தும் இல்லை; பத்தாம் பத்தும் இல்லை. இதற்குப் பழைய அரும்பதவுரை ஒன்றுண்டு. அவ்வுரையாசிரியர் யார் என்று தெரியவில்லை. பரிபாடலில் இருபத்து நான்கு பாடல்கள் இருக்கின்றன. சிதைந்த சில பாடற் பகுதிகளும் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்திலே எழுபது பரிபாடல்கள் இருந்தனவாம். இதற்குப் பழைய உரை ஒன்றுண்டு. அது பரிமேலழகர் உரை. கலித்தொகை நூற்றைம்பது கலிப்பாடல்களைக் கொண்டது. கற்றறிந்தார் ஏத்தும் கலி என்பது இந்நூலுக்கு ஏற்ற பாராட்டுரை. கடவுள் வாழ்த்துப் பாடலும் இந்நூலோடு சேர்ந்தது. இந்நூலின் ஐந்தாவது பகுதியாகிய நெய்தற்கலியைப் பாடிய ஆசிரியரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி யுள்ளார். இவரேதான் இந்நூலைத் தொகுத்தவர். இந்நூலுக்கு நச்சினார்க்கினியரின் உரையுண்டு. அகநானூறு நானூற்றொரு பாடல்களைக் கொண்டது. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து; பாரதம் பாடிய பெருந்தேவனா ரால் பாடப்பட்டது. இந்நூலுக்குப் பழைய அரும்பதவுரை ஒன்றுண்டு. முதல் தொண்ணூறு பாடல்களுக்கே அவ்வுரை கிடைத்திருக்கின்றது. இந்நூலைப் பதிப்பித்த ராஜகோபாலாச் சார்யன் என்பவர் எழுபது பாடல்களுக்கு உரையெழுதியிருக் கின்றார். நாவலர் நாட்டார் அவர்களும் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து ஒரு உரை எழுதி யுள்ளனர். புறநானூற்றில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து முந்நூற்றுத் தொண்ணூற் றெட்டுப் பாடல்கள் அடங்கியிருக்கின்றன. கடவுள் வாழ்த்துப்பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. கடவுள் வாழ்த்தில்லாமல் நானூறு பாடல்கள் இருந்திருக்க வேண்டும். மூன்று பாடல்கள் கிடைக்கவில்லை. இந் நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. சிறந்த உரை. அவ்வுரை நூல் முழுவதற்கும் கிடைக்கவில்லை. முதல் இருநூற்று அறுபத்தாறு பாடல்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது. இந்நூலுக்கு இந்நாளில் ஔவை துரைசாமிப் பிள்ளை எழுதிய உரை ஒன்றுண்டு. இந்த எட்டு நூல்களைப்பற்றிய வரலாறுகள், அவற்றின் ஆசிரியர்கள், அந் நூல்களைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் ஆகியவைகள் ஒவ்வொரு நூலின் முதலிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றை விரிவாக அங்கே காணலாம். செய்யுளமைப்பு இந்த எட்டுத் தொகை நூல்களிலே நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய ஆறு நூல்களும் ஆசிரியப் பாக்களால் அமைந்தவை. சங்க நூல்களிலே பெரும்பாலானவை ஆசிரியப் பாக்களால் அமைந் தவை என்பதற்கு இவைகளே போதும். பண்டைத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களால் இயற்றப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் என்னும் நூலின் விளக்கத்திலே எழுதப்பட்டுள்ளது. பரிபாடல் என்பது ஒருகைப் பாட்டு. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களின் உறுப்புகளும் கலந்து வருவது. இத்தகைய பாடல்களின் தொகுப்பே பரிபாடல். இது இசையுடன் பாடக் கூடியது. கலிப்பா என்பது நால்வகைப் பாடல்களில் ஒன்று. இதையும் பல இசைகளில் பாடலாம். ஒரு செய்தியைத் தொகுத்தும் விரித்தும் சுருக்கியும் கூறுவதற்கேற்ற பகுதிகளைக் கொண்ட பாடல் கலிப்பாடல். இத்தகைய பாடல்களின் தொகுப்பே கலித்தொகை. ஆகவே எட்டுத்தொகை நூல்களிலே ஆசிரியப்பா, பரிபாடல், கலிப்பா ஆகிய மூன்று வகைப் பாடல்களே அமைந் திருக்கின்றன. நூல்கள் நுவல்வன இந்த எட்டுத்தொகை நூல்கள் அகப்பொருட் செய்தி களைப் பற்றியும், புறப்பொருட் செய்திகளைப் பற்றியும் கூறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகிய ஆறு நூல்களும் அகப் பொருளைப் பற்றியவை. பதிற்றுப்பத்து, புறநானூறு இரண்டும் புறப்பொருளைப் பற்றிக் கூறுவன. அகப் பொருளைப் பற்றிக் கூறும் நூல்களிலே பண்டைத் தமிழ் மக்களின் மணவாழ்வு, சமுதாய வாழ்வுகளைப்பற்றி அறியலாம். அவர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களைப் பற்றியும் காணலாம். புறப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்களிலே பண்டைத் தமிழ் மக்களின் சமுதாய அமைப்பு, அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகிய பலவற்றையும் கண்டறியலாம். தனி நூல்கள் ஏன்? நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை என்னும் ஆறு அகப்பொருள் நூல் களிலே பரிபாடலும், கலித்தொகையும் பாடல் வகையால் வேறுபட்டவை. அவைகள் தனித்தனி நூல்களாக அமைந் திருப்பது பொருந்தும். ஐங்குறுநூறு ஐந்து புலவர்களால் பாடப் பட்டவை. ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு நூறு பாடல்களைத் தனித்தனியே பாடியிருக்கின்றனர். ஆதலால் அந்நாலும் தனி நூலாக அமைந்திருப்பதும் ஏற்றதே. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு மூன்றும் ஒரே வகைப் பாடல்களால் ஆனவை; ஒரு பொருளைப் பற்றியே கூறுவன. இவைகளை ஏன் தனித்தனி நூல்களாக அமைக்கவேண்டும்? மூன்றையும் ஒரே நூலாக அமைத்திருந்தால் என்ன? இவ் வையங்கள் எழுவது இயற்கை. பாடல்களின் சுருக்கம் - பெருக்கம் கருதியே மூன்று தனித்தனி நூல்களாக அமைத்தனர். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு மூன்றையும் ஒன்று சேர்த்தால் ஆயிரத்து இருநூறு பாடல்களாகும். படிப்போர்க்குச் சலிப்பு தோன்றும்; அன்றியும் சிறிய பாடல்களும் பெரிய பாடல்களும் கலந்து மேடு பள்ளங்களைப் போலக் காணப்படும். ஆகையால்தான் ஒரே செய்தியைப் பற்றிக் கூறும் ஒரே வகையான பாடல்களை மூன்று நூல்களாகப் பிரித்தனர் என்று கொள்ளலாம். நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரையில் உள்ள பாடல்களை ஒன்றாகத் தொகுத்துக் குறுந்தொகையாக்கினர். ஒன்பது அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள் வரையில் அமைந்த ஆசிரியப்பாக்களைத் தொகுத்து நந்றிணையாக்கினர். பதின்மூன்று அடி முதல் முப்பத்தோரு அடிகள் வரையில் அமைந்த ஆசிரியப்பாக்களைத் தொகுத்து அகநானூறாக்கினர். இந்த அகநானூற்றுக்கு நெடுந்தொகையென்ற மற்றொரு பெயரும் உண்டு. இவ்வாறு செய்யுட்களின் நீளம், குறுக்கம் கருதியே தனித்தனி நூல்களாக் கினர் என்பதில் ஐயமில்லை. ஐங்குறுநூறு மூன்று அடிமுதல் ஆறு அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாக்களின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அகப்பொருள் அகப்பொருள் என்பது மனத்தால் சுவைத்து மகிழ்ச்சி யடைவது. சொற்களால் வெளிப்படையாக விளம்பமுடியாமல் உள்ளத்தால் சுவைத்து இன்புறுவது. ஆண் - பெண் இருவரும் சேர்ந்து அடையும் இன்பத்தையே அகப்பொருள் என்று கூறினர். இத்தகைய இன்பத்திற்குக் காரணமாக நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லுவதே அகப்பொருளாகும். அகப்பொருளை அகத்திணை என்றும் கூறுவர். திணை - ஒழுக்கம். அகத்திணை-உள்ளத்திலே நிகழும் ஒழுக்கம். இந்த அகத்திணையை ஏழு பகுதியாகப் பிரித்துக் கூறியிருக்கின்றனர். அவை குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, நெய்தல்திணை, மருதத்திணை, கைக்கிளைத்திணை, பெருந்திணை என்பவை. இவற்றுள் முதலில் உள்ள ஐந்து திணைகளும் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்து வகை நிலங்களிலும் நடைபெறுவன. கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் தனி நிலம் இல்லை. மலையும் மலைச்சாரலும் குறிஞ்சி நிலம். இங்குதான் காதலர் இருவர் சந்தித்துக் கருத்திலே ஒன்றுபடுவர். இதற்குக் குறிஞ்சியொழுக்கம் - குறிஞ்சித்திணை என்று பெயர். இக் காதலர்கள் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்ளும் வரையிலும் அடிக்கடி சந்திப்பார்கள். அவர்கள் இரவிலும், பகலிலும் குறித்த இடத்திலே கூடுவார்கள். பாலையென்பது வறண்ட நிலம். காதலன் தன் காதலியை மணப்பதற்கு பொருட்டுப் பிரிந்துபோவான். இதுவே பாலை ஒழுக்கம்; பாலைத்திணை. காடும் காட்டையடுத்த நிலமும் முல்லை நிலம். பிரிந்து சென்ற கணவன் திரும்பும் வரையிலும் மனைவி பொறுத்துக் கொண்டிருப்பாள். கணவனைப் பற்றி யாரேனும் பழிச்சொற் கூறினாலும் கடிவாள்; மறுத்துரைப்பாள். கணவன் பிரிந்து சென்றதனால் உண்டான உள்ளத் துயரத்தை அடக்கிக் கொண்டி ருப்பாள். இதுவே கற்புடைக் காரிகையின் குணம். இத்தகைய நிகழ்ச்சிகளைக் கூறுவதே முல்லையொழுக்கம்; முல்லைத்திணை. கடற்கரையும் அதை அடுத்துள்ள பகுதிகளும் நெய்தல் நிலம். மனைவி பிரிந்து சென்ற கணவனை நினைத்து வருந்துவாள். தன் துக்கத்தை வாய்விட்டுக் கூறுவாள். அவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்குவாள். அவன் பிரிந்து போவதற்கு முன் சொல்லிய உறுதிமொழிகளை எண்ணியும், உரைத்தும், பழித்தும் வருந்துவாள். இவ்வாறு மனைவி தன் வேதனையை வெளிப்படை யாகக் காட்டுதல் நெய்தல் ஒழுக்கம்; நெய்தல் திணை. இவ்வளவும் அன்பால் நிகழ்வன. ஊரும் ஊரைச்சேர்ந்த பகுதியும் மருத நிலம். இங்கே காதலனும் காதலியும் இணைந்து நின்று புத்திரப்பேறு முதலிய செல்வங்களைப் பெற்று குறைவின்றிக் குடும்பம் நடத்துவர். இல்லற தர்மங்களையெல்லாம் இனிது நிறைவேற்றுவர். கணவன் பரத்தையர் வீடுகளுக்குச் சென்று வருவதால் காதலன் - காதலி களுக்குள் பிணக்கு ஏற்படும். காதலனுடைய கூடா வொழுக் கத்தைக் காதலி கண்டிப்பாள். இவர்களுடைய ஊடல்கள் பாணர்களாலும், விருந்தினர்களாலும், புதல்வர்களாலும் நீங்கும். இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூறுவது மருத ஒழுக்கம்; மருதத்திணை. இந்த ஐந்திணை ஒழுக்கத்திற்கும் அன்போடு கூடிய ஐவகை ஒழுக்கம் என்று பெயர். இதனை அன்பின் அகனைந்திணை என்று கூறினர். கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். பெருந்திணையென்பது பொருந்தாக்காமம். இவை இரண்டும் சிறந்தனவல்ல. கூடாவொழுக்கம் என்று கூடச் சொல்லிவிடலாம். இவற்றைப் பின்னே காணலாம். குறிஞ்சித்திணைப் பாடல்களிலே மலைநிலத்து மக்களின் பழக்கவழக்கங் கள், மலைக்காட்சிகள் மலைவளங்கள் மலை நிலத்து மக்களின் அன்றாட நடவடிக்கைகள் ஆகியவைகளை அறியலாம். பாலைத்திணைப் பாடல்களிலே பாலைநிலத்து மக்களின் வாழ்க்கை, அந்த நிலத்தின் தோற்றம், அங்குள்ள விலங்குகள், பறவைகள் படும் பாடு, அவ்வழிச் செல்வோர் அடையும் அல்லல் ஆகியவைகளை அறியலாம். முல்லைத்திணைப் பாடல்களிலே முல்லைநில மக்களின் வாழ்க்கை முறைகள், காடுகளின் காட்சி, அவைகள் தரும் செல்வம், கார்காலத்தின் இயற்கை ஆகியவைகளைக் காணலாம். நெய்தல் திணைப் பாடல்களிலே நெய்தல்நில மக்களின் வாழ்க்கை, கடற்காட்சி, கடற்கரையின் இயற்கைத் தோற்றம், கடலாற் கிடைக்கும் வளங்கள் ஆகியவைகளைக் காணலாம். மருதத்திணைப் பாடல்களிலே உழவர்களின் வாழ்க்கை முறைகள், பல வகைப்பட்ட வகுப்பினர்கள் செய்து வந்த தொழில்கள், நீர்வளமுற்ற நிலப்பகுதி களின் இயற்கை வளம், உழவுத் தொழிலின் உயர்வு, நகரங்களின் காட்சி, ஊர்களின் அமைப்பு, பலதிறப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறியலாம். இவைபோன்ற பல செய்திகள் அகப்பொருள் நூல்களிலே கூறப்படுகின்றன. புறப்பொருள் கண்ணாற் கண்டு வாயால் விளக்கிச் சொல்லக்கூடிய செய்திகள் அனைத்தும் புறப்பொருளிலே அடங்கும். அரசர்களுடைய போர்முறை, அவர்களுடைய ஆட்சியின் பெருமை, அவர்களுடைய வீரம், கொடை, புகழ், வரலாறு ஆகியவைகள் எல்லாம் புறப்பொருளில் அடங்கும். வாணிகம், கைத் தொழில், நீதி ஆகியவைகளும் புறத்திணைச் செய்திகளே. புறத்திணை நூல் களிலே அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோர் வரலாறுகளையும் அறியலாம். அகத்திணையை ஏழு திணைகளாக அமைத்திருப்பது போலவே புறத் திணையையும் ஏழு திணைகளாக அமைந்திருக் கின்றனர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பவை. போர் செய்யக்கருதிய வேந்தன் எதிரியின் பசுமந்தையைக் கவர்வது; கவர்ந்த பசுமந்தையை எதிரி மீட்டுக் கொள்வது; இவை வெட்சித்திணை. ஒரு மன்னன் தன் பகைவனுடைய நாட்டின் மேல் படையெடுத்துச் செல்லுதல்; பகைவன் அவனை எதிர்த்துப் போர்செய்தல்; வஞ்சித்திணை. பகைவனுடைய கோட்டைமதிலை வளைத்துக் கொள்ளுவது; கோட்டைக் குள்ளிருக்கும் மன்னன் தன் கோட்டை மதிலைக் கைவிடாமல் காப்பாற்றுவது; உழிஞைத்திணை. தன்மேல் படையெடுத்து வந்த அரசனுடன் எதிர்த்துப் போர் செய்து அவனை அழிப்பது தும்பைத்திணை. இது தற்பாதுகாப்புப் போராகும். பகைவருடன் போர் செய்து வெற்றி பெறுவது வாகைத் திணையாகும். உலக நிலையாமையை எடுத்துக் கூறுவது; நன்னெறியிலே நடக்கும்படி அறிவுறுத்துவது; காஞ்சித்திணை. ஒருவனுடைய ஒழுக்கம், வீரம், புகழ், கொடை முதலிய வற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணை; தெய்வங்களின் மேற்பாடுவதும் பாடாண்திணையுள் அடங்கும். இவ்வாறு மக்களுடைய வாழ்க்கையை அகவாழ்வு, புறவாழ்வு என்று இரண்டு வகையுள் அடக்கியிருக்கின்றனர் தமிழ் நூலோர். அகவாழ்வைப் பற்றிய செய்திகளை அகப்பொருள் என்றும் புறவாழ்வைப் பற்றிய செய்திகளைப் புறப் பொருள் என்றும் கூறுவர். தமிழ் மக்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைக் கூறுவது அகப்பொருள்; தமிழ் மக்களின் பொது வாழ்வைப் பற்றிய செய்திகளையெல்லாம் கூறுவது புறப்பொருள் என்று பொதுவாக கூறிவிடலாம். கூடாவொழுக்கம் அகப்பொருட் பாடல்களிலே பரத்தையிற் பிரிவைப் பற்றி விரிவாகக் கூறப் பட்டிருக்கின்றன. மருதத்திணைப் பாடல்களிலே இதைப்பற்றி விளக்கமாகக் காணலாம். காதலன் பரத்தையர்கள் சேரியில் தங்கியிருக்கின்றான்; பரத்தையர்களுடன் கூடி நீராடுகின்றான்; தன் வீட்டில் உள்ள நகைகளைப் பரத்தையர்களுக்குக் கொண்டு போய்க் கொடுக் கின்றான்; பரத்தையர் அவனைத் தேடிக் கொண்டு அவன் மனைவி வாழும் வீட்டுக்கே வந்துவிடுகின்றனர். இவைபோன்ற பல செய்திகள் கூறப்படுகின்றன. மருத நிலந்தான் செல்வங் கொழிக்கும் சிறந்த நிலம்; அரசும் வாணிகமும் தொழில்களும் ஒழுங்காக நடைபெறும் நாகரிகம் நிறைந்த நிலம். இந்த நிலத்தில் வாழ்ந்த செல்வக்குடி மக்களே இந்தக் கூடா ஒழுக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இந்தச் செல்வக் குடியினர் பெருநிலக்கிழவர்கள். இவர் களுடைய இன்ப வாழ்க்கைக்காகவே பரத்தையர் - விலைமாதர் என்ற பெண்கள் ஒரு தனிப்பிரி வாக இருந்தனர். இவர்கள் வாழும் இடத்திற்குப் பரத்தையர் சேரி என்று பெயர். பரத்தையர்களிலே காதற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என்று இருவகை யினர் இருந்தனர். ஒருவனையே தன் காதலனாகக் கொண்டு, அவனுடைய வைப்பாட்டியாக வாழ்பவர் காதற் பரத்தையர். யார் வந்தாலும் பொருள் பெற்றுக் கொண்டு அவர்களுடன் கூடியிருப்பவர் சேரிப்பரத்தையர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் விபச்சாரம் வெளிப்படையாக நடைபெற்று வந்தது. மருதத் திணைப் பாடல்கள் இவ் வுண்மையைக் காட்டுகின்றன. இவ்வொழுக்கத்தை அறிஞர்களும் வெறுத்திருக்கின்றனர்; பெண்களும் வெறுத்திருக்கின்றனர். இதனை ஒரு பரிபாடற் பாட்டு மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. குலமகள் ஒருத்தி விலைமகளை வைவதாக அமைந்திருக்கிறது அப்பகுதி. அமர்காமம் மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை; பெண்மைப் பொதுமை; பிணையிலி; ஐம்புலத்தைத் துற்றுவ துற்றும் துணையிதழ் வாய்த்தொட்டி; முற்றும் நறுநறா மொய்புனல் அட்டிக், காரிகைநீர் ஏர்வயல், காமக்களி நாஞ்சில், மூரி தவிர முடுக்கும், முதுசாடி (பா 20) விரும்பும் காமத்தை வஞ்சனைகளோடும் பொய் களோடும் சேர்த்துக் கொடுத்து ஆண்களை மயக்குகின்ற விலைமாதே! பெண்களின் உயர்ந்த தன்மையைப் பின்பற்றாமல் காமுகர்க்குப் பொதுமகளாய் வாழும் தன்மையைப் பின்பற்றிய வளே! துணைவன் இல்லாமல் வாழ்கின்றவளே! ஆடவர்கள் விரும்பும் ஐம்புல இன்பங்களையும் அனுபவிக்கும் அளவுக்கு அனுபவிக்கக் கொடுக்கும் இரண்டு இதழ்களோடு கூடிய வாயையுடைய பன்றித் தொட்டியே! நிறைய நல்ல கள்ளாகிய நீரைப் பாய்ச்சி-பெண்தன்மையாகிய அழகிய வயலிலே-காமக் களிப்பு என்னும் கலப்பையினால் கற்பென்னும் வலிமை அழியும்படி உழுகின்ற பழைய சாலே! இதனால் விலைமகள் எவ்வளவு வெறுக்கப்பட்டாள் என்பதைக் காணலாம். ஆகையால் பரத்தையிற் பிரிவு என்பது கூடாவொழுக்கம் என்பதில் ஐயமில்லை. கைக்கிளை என்பது காமம் இன்னதென்று அறியாத ஒரு இளம்பெண்ணிடம் ஒருவன் கொள்ளும் காதல். இதனை ஒருதலைக் காமம் என்பர். இதுவும் கூடா வொழுக்கமேதான். பெருந்திணை யென்பது பொருந்தாக் காமம். தன்னுடன் வாழச் சம்மத மில்லாத பெண்ணுடன் பலவந்தமாக வாழ்க்கை நடத்தல்; வயது முதிர்ந்தோன் இளம்பெண்ணுடன் வாழ ஆசைப் படுதல்; நோயாளி அழகிய பெண்ணுடன் பல வந்தமாக வாழ முயலுதல்; தன்னை மணக்க விரும்பாத பெண்ணைப் பலவந்த மாக மணக்க முயற்சித்தல் இவை போன்ற பொருத்தமற்ற வாழ்க்கை பெருந் திணையாகும். இதுவும் கூடா வொழுக்கத்தையே சேரும். பண்டைத் தமிழர்களிடம் இத்தகைய கூடா ஒழுக்கங் களும் இருந்தன என்பதையே இவைகள் காட்டுகின்றன. சில உண்மைகள் எட்டுத்தொகை நூல்களிலிருந்து நமக்கு வியப்பைத் தரும் சில உண்மைகள் தெரிகின்றன. சேர நாட்டிலே ஒரு பகுதி இன்று கேரளம் என்ற தனி நாடாக விளங்குகிறது. சேர நாட்டிலே வாழ்ந்த தமிழ் மக்களிலே பலர் இன்று கேரளீயர் அல்லது மலையாளிகள் என்ற தனித் தேசிய இனமாக வாழுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மலையாளம் என்ற தனி மொழியோ, மலையாளிகள் என்ற தனித் தேசிய இனமோ தனியாக இருந்ததில்லை. இன்றுள்ள கேரளநாடு அன்று மலைநாடு, சேரநாடு என்ற பெயர்களுடன் விளங்கியிருந்தது இவ்வுண்மை யைப் பதிற்றுப்பத்தின் மூலமும், ஏனைய எட்டுத்தொகை நூல்களின் மூலமும் பத்துப்பாட்டின் மூலமும் காணலாம். இன்று திருப்பதி, திருவேங்கடம் என்று வழங்கப்படும் வேங்கடம் தமிழகத்தில் வடவெல்லை. வேங்கடத்திற்கு அப்பால் உள்ள வடபகுதியை வேற்று மொழி வழங்கும் நாடு என்று எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன. அங்கு வழங்கிய மொழி வடுகு என்றும், அங்கு வாழ்ந்த மக்கள் வடுகர் என்றும் கூறுகின்றனர். அந்த வடுகர்களுக்கும் தமிழர்களுக்கும் போர்கள் நடைபெற்றிருக் கின்றன. தமிழர்கள் பொருள் தேடுவதற்காக வேங்கடத்தைத் தாண்டி வடுகர் நாட்டின் வழியாகச் செல்வார்கள். அவர்கள் செல்லும் வழி நீர்வளமற்ற பாலைவனம்; வறண்ட காட்டுவழி. அவர்களுக்கு வடுகர்களால் பல ஆபத்துக்கள் உண்டாகும். இச் செய்தி அகநானூற்றில் காணப்படுகின்றது. வேங்கடம் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தது. தொண்டையர்-திரையர்-என்ற தொண்டை மண்டல வேந்தர்களே வேங்கடத்தை ஆண்டு வந்தனர். வேங்கடம் நீர்வளம் நிறைந்தது; பல விளைவுப் பொருள் களையுடையது; நல்ல செல்வங்களைச் சுரப்பது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வேங்கடமலைக்குத் திருவேங்கடம் என்ற பெயரோ, திருப்பதி என்ற பெயரோ காணப்படவில்லை. வேங்கடம் என்று தான் காணப்படுகின்றது. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் வேங்கடத்தைப் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. ஒரு பாடலில் மட்டும் விழவுடை விழுச்சீர் வேங்கடம் (அகம் 61 ) என்ற தொடர் காணப்படுகின்றது. விழாவையுடைய மிகச் சிறந்த வேங்கடம் என்பதே இதன் பொருள். சங்க நூல்களிலே, கொல்லி மலையைப் பற்றிய பாடல் களிலே கொல்லிப் பாவை என்னும் தெய்வம் குறிப்பிடப்பட்டுள்ளது. அழகர் மலை-அதாவது திருமாலிருஞ்சோலை மலையைப்பற்றிப் பாடும்போது திருமாலைப்பற்றிக் குறிப் பிட்டுள்ளனர். பரங்குன்றத்தைப் பாடும்போது முருகனைப்பற்றிக் கூறியுள்ளனர். நன்னனுடைய நவிர மலையைப் பற்றிப் பாடும் போது காரியுண்டிக் கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் ஒரு ஊரைப்பற்றியோ ஒரு மலையைப் பற்றியோ குறிப்பிடும்போது அவற்றில் அக்காலத்தி லிருந்த சிறப்பைப்பற்றிச் சொல்லாமல் விடமாட்டார்கள். வேங்கடமலையைப்பற்றிய பாடல்களிலே அது ஒரு திருமால் திருப்பதி என்று குறிக்கப்படவில்லை. இன்றிருப்பதுபோல் அது ஒரு சிறந்த திருப்பதியாக இருந்திருந்தால் அதைப்பற்றிச் சொல்லியேயிருப் பார்கள். ஆதலால் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு வேங்கடம் இன்றிருப்பது போன்ற புகழ்பெற்ற திருப்பதியாக இல்லை என்றுதான் எண்ண வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுகு என்பது தனி மொழியாக வழங்கி வந்திருக்கின்றது. வடுகர் வாழ்ந்த நாட்டை மொழிபெயர்தே எம் என்று அகநானூற்றுப் பாடல்கள் குறிக்கின்றன. வேற்றுமொழி வழங்கும் நாடு என்பதே இதன் பொருள். அகநானூற்றுப் பாடல்களைப் படிப்போர் தெலுங்கு தனி மொழியன்று; தமிழிலிருந்து பிறந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியுரையை ஒப்புக்கொள்ளப் பின்வாங்குவர். இவ் வாராய்ச்சி உண்மையாக இருக்க முடியுமா என்ற ஐயம் எழாமற் போகாது. பரிபாடலிலே திருப்பரங்குன்றத்தைப் பற்றியும் பாடப் பட்டிருக்கின்றன. பரிபாடற்காலமும் திருமுருகாற்றுப்படைக் காலமும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். திருமுருகாற்றுப்படையிலே காணப்படும் பழமுதிர் சோலை என்பதை அழகர் மலை என்று கூறுகின்றனர் சிலர். இவ்வாறு கூறுவதற்கான ஆதரவு சங்க நூல்களில் காணப்படவில்லை. திருமுருகாற்றுப் படை தோன்றிய காலத்திலேயே அழகர் மலை திருமாலிருஞ்சோலை என்ற பெயரில் புகழ்பெற்ற திருமால் திருப்பதியாக விளங்கியிருக்கின்றது. இதற்குப் பரிபாடலே உதாரணமாகும். வரலாற்றுண்மைகள் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, நாகரிக வளர்ச்சி, தமிழ்நாட்டு வேந்தர் களின் வரலாறு, புலவர்கள் வரலாறு, தமிழ்நாட்டிலிருந்த பழைய நகரங்களின் வரலாறு இவைகள் இன்னும் சரியாக எழுதப்படவில்லை. இவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு எட்டுத்தொகை நூல்களும், பத்துப் பாட்டும் உதவி செய்கின்றன. அகநானூற்றிலும், புறநானூற்றிலும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்திலும் உண்டு. அவைகளையெல்லாம் ஆராய்ந்து வரிசைப்படுத்தி எழுதினால் பண்டைத்தமிழக வரலாறுகள் பலவற்றை அறிந்துகொள்ளலாம். பண்டைப் பழக்கவழக்கங்கள் எட்டுத்தொகை நூல்களைக் கொண்டு ஆரியர் நாகரிகம் இன்னது; தமிழர் நாகரிகம் இன்னது என்று பிரித்துக் காண முடியாது. அவைகளிலே காணப்படும் பழக்க வழக்கங்களைத் தமிழ்நாட்டுப் பழக்கவழக்கங்கள், தமிழருடைய பழக்க வழக்கங்கள் என்றுதான் கொள்ளவேண்டும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் வகுப்புப் பிரிவுகள் காணப்படு கின்றன. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் குடிப்பெயர்கள் காணப்படுகின்றன. குன்றவர், பரதவர், ஆயர், மறவர், உழவர் முதலிய ஐவகை நிலத்து மக்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சிவபெருமான், திருமால், முருகன், பலராமன் போன்ற பலவகையான கடவுள் வணக்கங்கள் காணப்படுகின்றன. இன்னும் பலவகைப்பட்ட தெய்வ வணக்கங்களும் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் தெய்வ நம்பிக்கை யுடையவர்களாகவே வாழ்ந்தனர். தெய்வங்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டி ருந்தன. திருவிழாக்கள் நடத்தினர். பலியிட்டுத் தெய்வங்களை வணங்கினர். நோய் நீங்க வேண்டுமென்றும், தாங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டுமென்றும் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்து கொண்டனர். மழை பெய்வதற்கும் பெய்யும் மழையை நிறுத்துவதற்கும் தெய்வங்களை வேண்டிக்கொண்டனர். பாவ புண்ணியங்கள் உண்டு; மோட்சம், சுவர்க்கம், நரகம் முதலியவைகள் உண்டு; மறுபிறப்பு உண்டு; ஊழ்வினை யுண்டு; தவம் புரிவதனாலேயே நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கைகள் தமிழரிடம் குடிகொண்டிருந்தன. பிதிர்க்கடன் செய்வதற்குப் புதல்வர்ப் பேறு வேண்டும் என்றும் நம்பினர். வடமொழி தமிழகத்திலே வழங்கியிருந்தது. வடமொழி வேதங்கள் ஓதப்பட்டு வந்தன. தமிழ் மன்னர்கள் வேத வேள்வி களை ஆதரித்து வந்தனர். இராமாயண, பாரத வரலாறுகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. இந்த எட்டுத்தொகை நூல்களிலும் இவை களைக் காணலாம். தமிழர்களுக்கு இவ்வரலாறுகள் தெரிந்திருந்தன. இவைகளைப் பற்றி அவர்கள் பேசிவந்தனர். திருமால், சிவபெருமான், செவ்வேள் ஆகிய கடவுளர்களைப் பற்றிய புராண வரலாறுகள் தமிழ்நாட்டிலே வழங்கி வந்தன. பண்டைத்தமிழ்ப் புலவர்கள் வடநூல்களையும், வடநூற் கருத்துக்களையும் வெறுக்கவில்லை. அவைகளைப் பாராட்டினர். அக்கருத்துக்களைத் தங்கள் பாடல்களிலே அமைத்துப் பாடி வந்தனர். தமிழர்கள் அந்நிய நாட்டினரையோ, அந்நிய மொழி யினரையோ வெறுக்கவில்லை. அவர்களுடன் ஒன்றுபட்டுப் பழகி வந்தனர். மொழி வெறுப்பு, இன வெறுப்பு இரண்டும் பண்டைத் தமிழர்களிடம் தலைகாட்டியதேயில்லை. இவ்வாறு வாழ்ந்த தமிழர்கள் உயர்வாகத்தான் வாழ்ந்தார்கள்; வாழ்க்கை யிலே வழுக்கி வீழ்ந்துவிடவில்லை. இவ்வுலக வாழ்க்கையிலே இன்புற்று வாழ் வதே மக்கள் கடமை யென்று கருதினர். இவ்வுலகில் நன்னெறியைப் பின்பற்றி இன்புற்று வாழ்பவனே மறுவுலகிலும் இன்புற்று வாழ்வர் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். அவர்கள் சிறந்த வீரர்களாக - வள்ளல்களாக - அறிஞர்களாக - கலைஞர்களாக - புலவர்களாக வாழ்ந்து வந்தனர். இவ்வுண்மைகளையெல்லாம் எட்டுத் தொகை நூல்களிலே காணலாம். நூல் வரிசை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்கள். இவ்வரிசையே எட்டுத்தொகை நூல்கள் இன்னவை என்று சொல்லும் வெண்பாவில் அமைந்திருக் கின்றது. இவ்வரிசை, நூல்களின் சிறப்பையோ, அமைப்பையோ கருதி வைக்கப்பட்டதன்று. எட்டு நூல்களின் பெயர்களையும் ஒரு வெண்பாவில் சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் அவ்வெண்பா எழுதப்பட்டிருக்கின்றது. இந்நூலில் அவ்வெண்பாவின் வரிசையைப் பின்பற்ற வில்லை. பொருள் கருதியும், பாடல்களின் சுருக்கம், பெருக்கம் கருதியும் வேறு வரிசையில் இந்நூலில் அமைக்கப்பட்டிருக் கின்றது. அவ்வரிசையாவது; 1. ஐங்குறுநூறு, 2. குறுந்தொகை,3. நற்றிணை, 4. அகநானூறு, 5. கலித்தொகை, 6. பரிபாடல், 7. பதிற்றுப்பத்து, 8. புறநானூறு இதுவே இந்நூலில் அமைந்திருக்கும் வரிசை முறை. நூல் முழுவதையும் படித்தால் தமிழர் நாகரிகத்தின் தன்மையைக் கண்டறியலாம்; பழந்தமிழர்களின் பண்பைக் காணலாம். 2 ஐங்குறு நூறு நூலின் வரலாறு ஐந்து நூறு பாடல்களைக் கொண்ட நூல் ஐங்குறுநூறு. இந்நூலிலே ஐந்நூறு பாடல்கள் உண்டு. கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று தனி. அது பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. அதையும் சேர்த்து இப்பொழுதுதான் பாடல் களின் எண்ணிக்கை ஐந்நூற்றொன்று. இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் நூறு நூறு பாடல்கள் உண்டு. இந்தப் பாடல்கள் அனைத்தும் குறுகிய பாடல்கள்; மூன்றடி முதல் ஆறடி வரையில் அமைந்தவை. ஆகையால்தான் இந்நூலுக்கு ஐங்குறுநூறு என்று பெயர் வைத்தனர். இந்த ஐந்து பகுதிகளும் தனித்தனியே ஐந்து புலவர்களால் பாடப்பட்டவை. முதல் நூறு மருதத்திணையைப் பற்றிக் கூறுவது; இரண்டாவது நூறு நெய்தல் திணையைப் பற்றிச் சொல்லுவது; மூன்றாவது நூறு குறிஞ்சித் திணையைக் குறித்துக் கூறுவது; நான்காவது நூறு பாலைத் திணையைப் பற்றிப் பாடுவது; ஐந்தாவது நூறு முல்லைத் திணையைப் பற்றி மொழிவது. ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பத்திலும் பத்துப் பத்துப் பாட்டுகள். எட்டுத்தொகை நூல்களைச் சேர்ந்த அகப்பொருள் பற்றிய இலக்கியங்களிலே ஐங்குறுநூறு மிகவும் அழகான பாடல் களைக் கொண்டது. சிறிய பாடல்கள்; அரிய இலக்கியச்சுவை நிறைந்தவை; படிப்பதற்கு இனிமையானவை; எளிதிற் பொருள் விளங்கக் கூடியவை. இந்நூலைப்போல ஒவ்வொரு திணையைப் பற்றிய பாடல் களையும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரித்து முறைப் படுத்திப் பாடப்பட்ட நூல் வேறு ஒன்றுமில்லை. ஐந்து சிறந்த சிறு நூல்கள் சேர்ந்த ஒரு நூல்தான் இந்த ஐங்குறுநூறு. ஐந்தும் அகப்பொருட் செய்திகளைக் கூறுவதால் ஒரே நூலாக்கப்பட்டது. புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் புலவர் இந்த ஐந்து நூறு பாடல்களையும் ஒன்றாகத் தொகுத்தார். ஒரே புத்தகமாக்கினார். ஐங்குறுநூறு என்று பெயர் கொடுத்தார். இவர் கடைச் சங்கப் புலவர்களிலே ஒருவர். கூடலூர் என்னும் ஊரிலே பிறந்தவர். வேளாளர் குடியிலே தோன்றியவர். கிழார் என்பது வேளாளர்க்குரிய குடிப்பெயர். புலத்துறை முற்றிய என்பது இவருடைய திறமையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். அறிவுத் துறையிலே நிரம்பியவர் என்பதே இதன் பொருள். இந்த நூலைத் தொகுக்கும்படி செய்தவன் சேர மன்னன் ஒருவன். அவன் பெயர் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பது. இவனுடைய புகழ் தமிழ் நூல்களிலே பரந்து கிடக்கின்றது. இவன் சிறந்த வீரன். கொடைவள்ளல். இந்த இரும்பொறையும் கூடலூர் கிழாரும் நண்பர்கள். இந்த மன்னனுடைய உதவியினால் இந்நூலைத் தொகுத்தார் கூடலூர் கிழார். நூலாசிரியர்கள் முதல் நூறு மருதத்திணை. இதைப் பாடியவர் ஓரம் போகியார் என்னும் புலவர். இவரும் கடைச்சங்கப் புலவர்களிலே ஒருவர். இந்த நூறு பாடல்களைத் தவிர இன்னும் பத்துப் பாடல் களை இவர் பாடியிருக்கின்றார். அவைகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அகநானூற்றிலே இரண்டு, குறுந்தொகையிலே ஐந்து, நற்றிணையிலே இரண்டு, புறநானூற்றிலே ஒன்று இவருடைய பெயரால் காணப்படும் பாடல்களாகும். இவருடைய அகப்பொருட் பாடல்களிலே பெரும் பாலானவை மருதத்திணையைப் பற்றியவை ஆகையால் இவர் மருத நிலத்திலே வாழ்ந்தவர்; மருத நில மக்களின் பழக்க வழக்கங்களை நன்றாக அறிந்தவர் என்று தெளியலாம். இவர் சேர, சோழ, பாண்டியர்களாகிய மும்மன்னர்களைப் பற்றியும் தமது பாடல்களிலே குறிப்பிட்டிருக்கின்றார். இரண்டாவது நூறு நெய்தல் திணை. இதைப் பாடிய புலவர் அம்மூவனார். மூவனார் என்பதும் கிழார் என்பது போலவே குடிப்பெயராகும். மூவனார் என்பதும் மூப்பனார் என்பதும் ஒரே பெயர். அம்-மூவனார் அழகிய மூவனார். இவரும் கடைச்சங்க காலப் புலவர்களிலே ஒருவர். இந்த நெய்தல் திணையைத் தவிர இன்னும் இருபத்தேழு பாடல்கள் சங்க நூல்களிலே இவர் பெயரால் காணப்படுகின்றன. அகநானூற்றில் ஆறு, குறுந்தொகையிலே பதினொன்று, நற்றினையிலே பத்து இவர் பாடியவை. இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நெய்தல் திணையைப் பற்றியே கூறுகின்றன. இதனால் இவர் நெய்தல் நிலமக்களுடன் பழகியவர்; அவர்களுடைய பழக்க வழக்கங்களை நன்றாக அறிந்தவர் என்று கருதலாம். இவர் சேரன், பாண்டியன், மலையமான் திருமுடிக்காரி ஆகிய அரசர்களின் ஆதரவு பெற்றவர். மூன்றாவது நூறு குறிஞ்சித்திணை. இதைப் பாடிய புலவர் கபிலர். இவர் பாரி என்னும் வள்ளலின் ஆருயிர் நண்பர். அவனுடனேயே நீண்ட நாள் ஒன்றாக வாழ்ந்தவர். இவருடைய வாழ்நாளில் பெரும்பகுதி மலை நிலத்திலேயே கழிந்தது. மலை நிலமக்களின் வாழ்க்கை நிலைமைகளை நன்றாகக் கண்டறிந்தவர். குறிஞ்சியைப் பற்றிப் பாடுவதிலே வல்லவர். இவருடைய பாடல்கள் சங்க நூல்களிலே நிறைந்திருக் கின்றன. அகநானூற்றிலே பதினெட்டு, குறுந்தொகையிலே இருபத்தொன்பது, நற்றிணையிலே இருபது, புறநானூற்றிலே இருபத்தெட்டு இவருடைய பாடல்கள். கலித்தொகையிலே குறிஞ்சிக்கலி, பத்துப்பாட்டிலே குறிஞ்சிப் பாட்டு, பதிற்றுப் பத்திலே ஏழாம்பத்து ஆகியவைகளும் இவரால் இயற்றப் பட்டவை. இவருடைய அகத்திணைப் பாடல்கள் பெரும்பாலும் குறிஞ்சித்திணையைப் பற்றியே கூறுகின்றன. இவருடைய வரலாற்றைப் பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் என்பதில் விரிவாகக் காணலாம். நான்காவது நூறு பாலைத்திணை. இதைப் பாடியவர் ஓதலாந்தையார் என்னும் புலவர். ஆதன்தந்தையார் என்ற பெயர் ஆந்தையார் என்று மருவியதாகக் கூறுவர். இவர் ஆதன் தந்தையார் என்ற காரணப் பெயரையுடையவரா? அல்லது ஆந்தையர் என்ற இயற்பெயரையே உடையவரா? இது ஆராயத் தக்கது. ஓதல் ஆந்தையார் என்பதற்கு ஓதுவதையே தொழிலாகக் கொண்ட ஆந்தையார் என்பது பொருள். இவரும் கடைச்சங்கப் புலவர்களிலே ஒருவர். குறுந் தொகையிலே இவருடைய பெயரால் மூன்று பாடல்கள் காணப் படுகின்றன. அவற்றுள் இரண்டு பாலைத் திணையைப் பற்றிய பாடல்கள். இவர் பாலை நிலத்து மக்களின் பண்பாடுகளை நன்றாக அறிந்தவர். பாலையைப் பற்றிப் பாடுவதிலே வல்லவர். இந்த ஐங்குறுநூற்றின் பாலைத்திணைப் பாடல்களே இவருடைய ஆற்றலை விளக்கும். ஐந்தாவது நூறு முல்லைத்திணை. இதைப் பாடிய புலவர் பேயனார் என்பவர். இவரும் கடைச் சங்கப் புலவர்களிலே ஒருவர். அகநானூற்றிலே ஒரு பாட்டு, குறுந்தொகையிலே நான்கு பாடல்கள் இவர் பெயரால் காணப்படுகின்றன. அந்த அகநானூற்றுப் பாட்டும், குறுந்தொகைப் பாடல்களிலே இரண்டும் முல்லைத்திணையைப் பற்றியவை ஆகையால் முல்லை நிலமக்களின் பழக்க வழக்கங்களை நன்றாக அறிந்தவர். அந்நில மக்களுடன் பழகியவர்; முல்லையைப் பாடுவதிலே வல்லவர் என்று அறியலாம். இவர் பெயர் பேயன், பேயார், பேயனார் என்று வழங்கு கின்றது. பேயன் என்பது சிவபெருமானுக்குரிய பெயர்களில் ஒன்று. பேய்கள் வாழும் சுடுகாட்டில் இருப்பவன். பேய்களைப் படைகளாகக் கொண்டவன். ஆகையால் பேயன் என்று சிவனை அழைப்பர். இத்தகைய சிவபெருமான் பெயரையே இப்புலவரும் புனைந்திருந்தார் என்று கருதலாம். ஓரம்போகியார், அம் மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் இந்த ஐந்து புலவர்களின் பாடல்கள் அடங்கிய நூலே ஐங்குறுநூறாகும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதிலே ஐங்குறுநூற்றுப் பாடல்கள் மிகவும் சிறந்தவை. ஒவ்வொரு நிலங்களின் இயற்கையைப் பற்றிய அப் பாடல்கள் கூறுவதைக் காண்போம். மருதம் மருத நிலம் நீர்வளமும் நிலவளமும் உடையது. நீர்வளம் நிறைந்த ஊர்களும், ஊர்களைச் சார்ந்த இடங்களுமே மருத நிலம். கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசிகளையும் பெரும் புனல்ஊர (பா. 65) `கரும்பு நட்டுப் பயிர்செய்திருக்கின்ற பாத்தியிலே செழித்து வளர்ந்திருக் கின்ற அல்லி மலர்கள் வண்டுகளின் பசியைப் போக்குகின்றன. இத்தகைய நீர்வளம் பொருந்திய ஊரையுடையவனே. கருங்கோட்டு எருமை செங்கண்பு னிற்றாக் காதல் குழுவிக்கு ஊறுமுலை மடுக்கும் (பா. 92) `வலிமையான கொம்புகளையுடைய எருமை, சிவந்த கண்களையுடைய பசுவின் இளங்கன்றுக்குப் பால் ஊறுகின்ற தன் மடியை ஊட்டக் கொடுக்கும். மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை (பா. 33) `மருதமரங்கள் உயர்ந்து பருத்து வளர்ந்திருக்கின்றன - மலர்ந்த பூக்கள் வீழ்ந்துகிடக்கின்றன - பெரிய நீர்த்துறை: இவைகள் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகளை எடுத்துக் காட்டுகின்றன. அல்லி மலர்களிலே வண்டுகள் அமர்ந்து தேனுண்டு பசி நீங்கும். எருமை பசுங் கன்றுக்குப் பாலூட்டும். மருத மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. மலர்கள் சிந்திக்கிடக்கின்ற நீர்த்துறைகள் பல காணப்படுகின்றன. இவைகள் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள். நெய்தல் கடற்கரையும், கடற்கரையைச் சார்ந்த நிலமும் நெய்தல் நிலமாகும். புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழுதுறை (பா. 110) புன்னை மரங்கள் பொன்னிறமுடைய மலர்களைப் பூத்திருக்கின்ற ஒளி நிறைந்த கடல் துறை: எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக் குருகு உறங்கும் துறை (பா. 144) `மணல் மேட்டிலே, சுரபுன்னையின் மலர்கள் வீழ்ந்து கிடக்கும் புதரிலே தனியாக நாரை உட்கார்ந்து உறங்குகின்றது. இத்தகைய நீர்த்துறை. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணம் துறை (பா. 164) `பெரிய கடற்கரையிலே வாழ்வதாகிய சிறிய வெண்காக்கை நீண்ட உப்பங்கழியின் பக்கத்திலே உட்கார்ந்து அயிரை மீனைப் பிடித்துத் தின்னும். இத்தகைய குளிர்ந்த அழகிய கடல்துறை. இப்பாடல்கள் நெய்தல் நிலத்தின் இயற்கைத் தோற்றத்தைக் காட்டுகின்றன. குறிஞ்சி மலையும் மலைச்சாரலும் குறிஞ்சி நிலமாகும். குன்றக் குறவன்புல் வேய்குரம்பை மன்றாடு இளமழை மறைக்கும் (பா. 252) `மலையிலே வாழ்கின்ற குறவனுடைய புல்வேய்ந்த சிறிய குடிசையை வானத்திலே எப்பொழுதும் அசைந்து கொண்டிருக் கின்ற மேகங்கள் மறைக்கும். குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை தேம்கமழ் சிலம்பின் வரையகம் கமழும் (பா. 253) `மலையில் வாழும் குறவன் புகைக்கின்ற சந்தனத்தின் நல்ல புகை தேன்மணம் கமழும் மலை முழுவதும் நறுமணம் வீசும். கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் (பா. 296) `குறமகள் காவல் காக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனம். இவைகள் குறிஞ்சி நிலத்தின் இயற்கைத் தோற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன. பாலை சூரிய வெப்பத்தால் வறண்டு கிடக்கும் நிலம் பாலை நிலமாகும். கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய வானீர்ப் பத்தல் யானை வவ்வும் கல்அதர் (பா. 304) `சூதுவாதறியாத இடையர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் கோலின் துணைக்கொண்டு தோண்டிய ஆழமான நீர்க்குழியை யானைகள் தாம் தண்ணீர் குடிப்பதற்காகக் கவர்ந்து கொள்ளும். இத்தகைய கற்கள் நிறைந்த வழி. சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக் கொலைவில் எயினர் (பா. 363) `வலிய வில்லுக்கேற்ற அம்பினையும், அழுக்கடைந்த செந்நிற ஆடையையும், வழிப்போக்கரைக் கொல்லும் வில்லையும் உடைய வேடர்கள். இவர்கள் பாலை நிலத்திலே வாழ்பவர்கள். கணமா தொலைச்சித் தன்ஐயர் தந்த நிணவூண் வல்சிப் படுபுள் ஒப்பும் நலமான எயிற்றி (பா. 365) கூட்டமான விலங்குகளை அழித்துத் தன் தந்தையர் கொண்டு வந்த மாமிசத்தையும் மூங்கில் அரிசியையும் கவர வருகின்ற பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கின்ற நல்ல அழகுடைய எயிற்றி. இவைகள் பாலைநிலத்தின் தோற்றத்தையும் அங்குள்ள மக்களின் தொழில்களையும் காட்டுகின்றன. முல்லை காடும் காட்டைச் சேர்ந்த நிலமும் முல்லைநிலமாகும். காட்டுப்புறங்களிலே மழை வளம் குறையாது. காயா, கொன்றை, நெய்தல், முல்லை, போதவிழ் தளவமொடு, பிடவுஅலர்ந்து கன்னிப் பூ வணிகொண் டன்றால் புறவே. (பா. 412) `காசாம்பூ, கொன்றைப்பூ, நெய்தற்பூ, முல்லைப்பூ, இதழ் விரிந்த மல்லிகைப்பூ, பிடவம்பூ இவைகளெல்லாம் மலர்ந்து அழகு பெற்றதனால், பூவை அணிந்து கொண்டு விளங்குகிறது காடு. குருந்தம் கண்ணிக் கோவலர் பெருந் தன்நிலைய பாக்கமும் உடைத்தே (பா. 439) `குருந்த மலர்மாலையைப் பூண்ட இடையர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழும் பாக்கம் என்னும் ஊரும் அந்த முல்லை நிலத்திலே உண்டு. அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும் வெம்குரல் புள்ளினம் ஒலிப்ப. உதுக்காண் கார் தொடங் கின்றால் (பா. 453) `பள்ளங்களில் எல்லாம் தவளைகள் கத்த, மேடுகள் தோறும் விரும்பத்தக்க பறவைகள் ஒலிக்க, அதோ பார், மழைக்காலம் தொடங்கிவிட்டது. இவை முல்லை நிலத்தின் இயல்பை எடுத்துக் காட்டு கின்றன. தமிழர் கொள்கை `ஒவ்வொரு குடும்பமும் வறுமையின்றி நன்றாக வாழ வேண்டும். எல்லாக் குடும்பங்களிலும் உணவுப் பொருள்களும் ஏனைய செல்வங்களும் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லற தர்மம் இனிது நடைபெற்று எல்லோரும் இன்புற வேண்டும். நாட்டிலே விளைவுப் பொருள் பெருகவேண்டும். உழவுக்கும், மக்கள் அருந்துவதற்கான பாலுக்கும் பயன்படும் மாடுகள் செழித்திருக்க வேண்டும், மக்கள் நோயின்றிப் பசியின்றி மகிழ்ந்து வாழ வேண்டும். இவை பண்டைத் தமிழ் மக்களின் கொள்கை. இக் கொள்கையைச் சில ஐங்குறுநூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன. நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க என வேட்டோளே யாயே (பா. 1) `நெல் முதலிய பல தானியங்களும் சிறந்திருப்பதாக; பொன் மிகவும் நிறைந்திருப்பதாக என்று விரும்பினாள் எமது தலைவி. விளைக வயலே; வருக இரவலர். என வேட்டோளே யாயே. (பா. 2) `வயல்களிலே தானியங்கள் நன்றாக விளையட்டும்; இரவலர்கள் உதவி வேண்டி ஏராளமாக வரட்டும் என்று விரும்பினாள் எம் தலைவி. பால்பல ஊறுக; பகடுபல சிறக்க; என வேட்டோளே யாயே. (பா. 3) `பால் தரும் பசுக்களெல்லாம் நிறைய பாலைச் சுரப்பதாக; உழுவதற்கேற்ற காளைகள் பலவாகப் பெருகுவதாக என்று விரும்பினாள் எம் தலைவி. பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக; என வேட்டோளே யாயே. (பா. 5) எல்லா மக்களும் பசியின்றி வாழ்வார்களாக, மக்களை வருத்தும் நோய் தூரத்தில் ஓடுவதாக என்று விரும்பினான் எமது தலைவி. மாரிவாய்க்க; வளம்பல சிறக்க என வேட்டோளே யாளே. (பா. 10) `தவறாமல் மழை பெய்வதாக; அதனால் செல்வம் மிகவும் சிறப்பதாக என்று விரும்பினாள் எமது தலைவி. இவைகள், ஒரு இல்லக்கிழத்தி தன்னுடைய வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்று விரும்புகிறாள் என்பதைக் கூறும் பாடல்கள். நாம் நல்ல செல்வக் குடும்பங்களிலே வாழ்க்கைப் படவேண்டும்; வறுமை யின்றி இல்லறத்தில் இன்புற்று வாழ வேண்டும். இவை பெண்களின் விருப்பம். இவ் விருப்பத்தைக் காட்டும் பாடல்கள் இவை. அரசியல் கருத்து அரசன் வெற்றியுடன் வாழவேண்டும். குடிமக்கள் குறை களை நீக்குவதே அரசாட்சியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். இக்கொள்கையுள்ள ஆட்சியை மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இத்தகைய அரசால்தான் நாட்டிலே நல்லறங்கள் நடைபெறும்; அமைதி நிலவும்; மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இதுவே பழந்தமிழர் கருத்து. மருதத்திணையின் முதற் பத்துப் பாடல்களின் முதல்வரி ஒவ்வொன்றும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. அவ்வடிகள் ஆதன் அவினி என்னும் சேர மன்னனை வாழ்த்துவதாக அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது. வாழி ஆதன்! வாழி அவினி! பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக! என வேட்டோளே யாயே. (பா. 4) `ஆதன் அவினி என்னும் மன்னன் வாழ்க! அவனுடைய பகைவர்கள் போரிலே அடிபட்டு வீழ்ந்துமாண்ட இடத்திலே புல் முளைத்துப் போகட்டும். நாட்டின் நன்மையைக் கருதிப் பார்ப்பார்கள் வேதங்களை ஓதுவார்களாக; என்று விரும்பினாள் அன்னை. வாழி ஆதன், வாழி அவினி; வேந்து பகை தணிக! யாண்டு பலநந்துக என வேட்டோளே யாயே. (பா. 6) `ஆதன் அவினி வாழ்க! அரசனுடைய பகைவர்கள் அவன் அடிக்கீழ்ப் பணிந்து கிடப்பார்களாக. அரசன் பல்லாண்டு சிறந்து வாழ்க! என்று விரும்பினாள் அன்னை. வாழி ஆதன், வாழி அவினி; அறம் நனிசிறக்க! அல்லது கெடுக! என வேட்டோளே யாயே. (பா. 7) `ஆதன் அவினி வாழ்க! அறங்களெல்லாம் சிறந்து வளர்க. அதர்மங் களெல்லாம் ஒழிக! என்று விரும்பினாள் அன்னை. வாழி ஆதன், வாழி அவினி; அரசு முறை செய்க! களவு இல்லாகுக! என வேட்டோளே யாயே. (பா. 8) `ஆதன் அவினி வாழ்க! அரசன் அறநூல் நெறிகளை அறிந்து ஆட்சி புரிக. நாட்டில் திருட்டு நடைபெறாமலிருப்பதாக! என்று விரும்பினாள் அன்னை. பண்டைத் தமிழ் மக்கள் சிறந்த அரசாட்சியை விரும்பினர்; நல்லாட்சியை ஆதரித்து வந்தனர் என்பதை இவைகளாற் காணலாம். இவைகள் மருதத்திணைப் பாடல்கள். மருத நிலத்திலே தான் முதல் முதல் நாகரிகம் தோன்றி வளர்ந்தது. நல்ல அரசமுறை ஏற்பட்டது. அதன் பிறகு தான் மற்ற நிலங்களிலே நாகரிகம் பரவிற்று. நீர்வளமும் நிலவளமும் உள்ள இடத்திலேதான் நாகரிகம் வளர்ச்சியடையும். இந்த வரலாற்றுண்மையையும் இந்த ஐங்குறுநூற்றுப் பாடல்களால் அறியலாம். உயிர்களின் இயல்பு பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தாம் உண்மையென்று உணர்ந்தவற்றையே பாடல்களில் அமைத்துப் பாடுவர். பொய் புனையும் வழக்கம் அவர்களிடம் இல்லை. அவர்கள் பல சிற்றுயிர்களின் இயல்புகளைக்கூட அறிந்திருந்தனர். அவர் களுடைய பாடல்களிலே இவ்வுண்மையைக் காணலாம. தாய் சாப்பிறக்கும் புள்ளிக் கலவனொடு பிள்ளை தின்னும் முதலைத்து அவன்ஊர் (பா. 24) கருவீன்ற நண்டு சாகும்; தன் குட்டியைத் தானே தின்னும் முதலையை உடையது அவன் ஊர் என்று கூறுகின்றன இவ்வடிகள். தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை (பா. 41) இதுவும் முதலை தானீன்ற பிள்ளையைத் தானே தின்னும் என்னும் செய்தியைக் கூறுகின்றது. செந்நெல் அம் செறுவில் கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண் அளைச் செல்லும். (பா. 27) `செந்நெல் விளைந்திருக்கின்ற அழகிய வயலிலே உள்ள நெற்கதிர்களை நண்டுகள் பற்றிக்கொண்டு குளிர்ந்த தன்னுடைய மண் வளைக்குள்ளே புகும். இதனால் நண்டுகள் நெற்கதிர் களை நறுக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டது. மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் (பா. 298) மழை வருவதை முன்கூட்டியே அறிந்து மயில்கள் ஆடுகின்ற மலை. இதனால் மழையின் வரவை அறியும் சக்தி மயிலுக்கு உண்டு என்று கூறப்பட்டது. சிற்றுயிர்களைப் பற்றிய இத்தகைய செய்திகளை இந்நூலிலே காணலாம். அன்னையின் அன்பு களவு மணத்திலே ஈடுபட்டிருந்தாள் ஒரு பெண். அவள் தன் காதலனுடன் புறப்பட்டு அவனூர்க்குப் போய்விட்டாள். இச்செய்தியை அறிந்த அவள் தாய் வருந்தினாள். ஆயினும் அவள் மகளுடைய செய்கையை வெறுக்கவில்லை; பாராட்டினாள். உழவர்கள் அடிக்கின்ற பறைக்குத் தக்கவாறு மயில்கள் ஆடிக்கொண்டிருக் கின்ற-உயர்ந்த பெரிய மலையிலே படிந்திருக் கின்ற-மேகங்கள் புறப்பட்டு மழையைப் பெய்யட்டும். அந்தப் பாலைவனம் இனிய குளிர்ந்த வழியாகக் கடவது. இதுதான் அறநெறி யென்று தேர்ந்த எனது-பிறை போன்ற நெந்றியுடைய சிறுமி சென்ற பாலைவனம் இவ்வாறு இனியதாகுக. மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும், உயர் நெடும் குன்றம், படுமழை தலைஇச், கரம், நனி இனிய வாகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்த, என் பிறை நுதற் குறுமகள் போகிய சுரனே (பா. 371) இதனால் அக்காலத்திலே கருத்தொருமித்த காதலர்கள் இருவர் தங்கள் விருப்பப்படி மணம் புரிந்து கொண்டதைக் காணலாம். இத்தகைய மணத்தை அக்காலத்து மக்கள் ஆதரித்து வந்தனர். இருவரும் ஒன்று சேர்ந்து போன பிறகுதான் அவர்கள் மணம் புரிந்துகொண்ட செய்தி ஊரார்க்கு வெளிப்பட்டது. ஊரார் அறியாமல் அவர்கள் மணவாழ்வு நடத்தி வந்தது களவு மணம்; ஊரார் அறியும்படி இருவரும் ஒன்று சேர்ந்து போனது கற்பு மணம். இப்படிச் சென்ற தம்பதிகள் தன்வீட்டுக்குத் திரும்பி வரவேண்டும் என்று தாய் வேண்டிக்கொள்ளுவாள். காக்கையே நீயும் நின் சுற்றமும் அருந்தும்படி பச்சை மாமிசமும் பசுமை யான கொழுப்பும் கலந்த அரிசியைப் பொற்பாத்திரத்திலே தருகின்றேன். பகைவர் மேல் கொடிய கோபத்தைக் காட்டுகிறவன்-வெற்றி பெறும் வேற்படையை யுடையவன்-காளை போன்றவன் ஆகிய அவனுடன், அழகிய கூந்தலையுடைய என் மகளையும் வீட்டுக்கு வந்து சேரும்படி கரைந்து அழைப்பாயாக. மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை! அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி, பொலம்புனை கலத்தில் தருகு வென்மாதோ! வெம்சின விறல் வேல் காளையொடு, அம்சில் ஓதியை, வரக் கரைந்தீமே (பா. 391) காக்கையைப் பார்த்து தாய் இவ்வாறு வேண்டிக் கொள்ளு கின்றாள். களவு மணம் பெற்றோர்களாலும், உற்றார்களாலும் ஆதரிக்கப்பட்டுக் கற்பு மணமானதை இப்பாடலால் அறியலாம். உள்ளத்தை உரைத்தல் மற்றவர்களின் உள்ளத்தில் நிகழும் எண்ணங்களை அப்படியே எடுத்துக் காட்டுவதில் சங்ககாலத்துப் புலவர்கள் மிகவும் திறமையுடையவர்கள். அவர்கள் சொல்லுவது இயற்கை யாகவும் இருக்கும். ஒரு பெண் தான் காதலித்த கணவனுடன் போய் விட்டாள். பெற்றதாய் அவள் பிரிவைத் தாங்கமாட்டாமல் வருந்தினாள். வருந்தியவள் வசை மொழியும் கூறத் தொடங் கினாள். அவள் தன் பெண்ணைப் பற்றி வசைகூறவில்லை. அவளைக் கூட்டிச் சென்ற ஆண்மகனைப் பற்றியும் வசை கூறவில்லை. பிறகு யாரை வெறுக்கின்றாள் என்பதுதான் இங்கே உற்றுணர வேண்டியதாகும். நான் என் அருமை மகளைப் பிரிந்து வருந்துவதைப் போல என் மகளை அழைத்துப் போனவனுடைய தாயும் வருந்துவாளாக என்பதே அவளுடைய வசைமொழி. இவ்வாறு நினைப்பதும் சொல்வதும் பெண்களின் இயற்கை. புலியினிடம் அகப்படாமல் தப்பிப் பிழைத்த கலைமான், தன் பெண் மானைத் தன்னிடம் வருமாறு ஆண் குரலால் அழைக்கின்ற காட்சியையுடையது பாலை நிலம். புதுமையும் வலிமையும் பொருந்திய வில்லையுடைய வாலிபன் என் மகளை அவ்வழியே அழைத்துக்கொண்டு போனான். அதை நினைக்குந் தோறும் என் கண்கள் நீரைச் சிந்துகின்றன. அவனுடைய தாயும் என்னைப் போலவே தன் மகனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்தி வருந்தும் துன்பத்தை அடைவாளாக. நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக! புலிக்கோள் பிழைத்த கவைக் கோட்டு முதுகலை, மான்பிணை அணைதர, ஆண்குரல் விளிக்கும், வெம்சுரம், என்மகள் உய்த்த வம்புஅமை வல்வில் விடலை தாயே! (பா. 373) இப்பாடல் துக்கமடைந்த ஒரு பெண்ணின் உள்ளத்தை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது. அன்பே அடிப்படை காதலனையும் காதலியையும் ஒன்றாகப் பிணைத்து வைப்பது அன்புதான். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு கொள்ளாவிட்டால் இன்பமுற மாட்டார்கள். அவர்களுடைய இல்லறமும் நல்லறமாக நடவாது. அன்பிருந்தால்தான் அவர் களில் ஒருவர் தவறு செய்தாலும் மற்றவர் அத்தவற்றைப் பொறுத்துக் கொள்ளுவர். இவ்வுண்மை அகப் பொருள் நூல்கள் பலவற்றிலும் காணப்படு கின்றது. பரத்தை வீட்டுக்குச் சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகவும் கோபத்துடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது. அன்பே இதற்குக் காரணம். வாழ்க தோழியே! நான் இன்று, நெறி தவறியவனைக் கண்டவுடன் கோபித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவனை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க வேண்டுமென்றும் எழுந்து சென்றேன். பின்னர் அவனுடைய பழைய அன்பை நினைத்து அவனிடம் இரக்கம் கொண்டு திரும்பிவிட்டேன். அம்ம வாழி தோழி! யான் இன்று அறன் இலாளன் கண்ட பொழுதில் சினவுவென் தகைக்குவென், சென்றெனென்; பின்நினைந்து இரங்கிப் பெயர் தந்தனனே. (பா. 118) இப்பாடல் காதலி கணவனிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. பண்டைத் தமிழ்ப் பெண்களின் சிறந்த குணத்தை இப்பாடல் மூலம் காணலாம். ஆண்கள் பரத்தையர்கள் வீடுகளுக்குப் போகும் குணமுடை யவர்களா யிருந்தாலும் இல்லாளிடம் எப்பொழுதும் அன்புடன் தான் இருந்தனர். இவ் வுண்மையைக் காட்டும் பாடல்கள் பல உண்டு. சிறந்த செல்வப் பொருளைத் தேடுவதிலே ஆவல் கொண்டு உன்னைத் துறந்து மலைப்பாதைகளிலே பிரிந்து சென்றேன். சென்றபோது அவ்வழிகள் மாளாத நீண்ட வழிகளாக இருந்தன. அதன் பின் அழகிய ஆபரணங்களையுடைய உன்னை நினைத்துக் கொண்டு நான் திரும்பி வந்தேன். திரும்பி வரும்போது பாலை நிலத்திலே உள்ள அவ்வழிகள் மிகவும் அண்மையாக இருந்தன. அரும்பொருள் வேட்கையம் ஆகி, நின்துறந்து பெரும்கல் அதரிடைப் பிரிந்த காலைத், தவநனி நெடிய வாயின; இனியே அணியிழை உள்ளி யாம் வருதலின் அணிய வாயின சுரத்திடை ஆறே (பா. 359) இது பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்பிய பின் தன் அன்பை வெளியிட்டுக் கூறியது. இப்பாடல் காதலன் தன் காதலியிடம் கொண்டிருந்த அன்பை விளக்கிக் காட்டுகிறது. கணவனும் மனைவியும் என்றும் இணைபிரியாத அன்புடை யவர்களாக வாழ்ந்தால்தான் இல்லறம் சிறக்கும். அவர்களும் இன்பமடைவார்கள். இவ்வுண்மையை மேலே காட்டிய இரண்டு பாடல்களும் விளக்கி நின்றன. சிறந்த ஊர்கள் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தி லிருந்த சிறந்த ஊர்கள் பலவற்றைத் தங்கள் பாடல்களிலே குறிப்பிட்டிருக்கின்றனர். ஐங்குறுநூற்றிலும் இத்தகைய பாடல்கள் பலவற்றைக் காணலாம். வேனிலா யினும் தண்புனல் ஒழுகும் தேனூர் (பா. 54) கோடைக்காலமானாலும் குளிர்ந்த நீர் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் தேனூர். கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும் தேர்வண் கோமான் தேனூர் (பா. 55) கரும்பைப் பிழிந்து சாறெடுக்கின்ற எந்திரங்கள் மதங் கொண்ட யானை களின் பிளிற்றலை அடக்கும்படி பேரோசை யுடன் முழங்கிக் கொண்டிருக்கின்ற-தேரினையும் வண்மையையும் உடைய பாண்டிய மன்னனது தேனூர். ஆம்பல் அம் செறுவின் தேனூர் (பா. 58) அல்லிகள் மலர்ந்திருக்கின்ற அழகிய வயல்களையுடைய தேனூர். இவ்வாறு தேனூரின் சிறப்பும், வளமும் கூறப்படுகின்றன. இன்று மதுரை மாவட்டத்தில் இது ஒரு சிற்றூர். பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா வெல் போர்ச் சோழர் ஆமூர் (பா. 56) கதிரவன் தன்மையைக் கொண்டிருக்கின்ற விளக்குகளுடன்- இரவுப் பொழுது என்பதையே அறிய முடியாத-போரிலே வெற்றியுடைய சோழர்களது ஆமூர். இது ஆமூரின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. கைவண் விரான் இருப்பை (பா. 58) வள்ளலாகிய விரான் என்பவனுடைய இருப்பை. இது விரான் என்பவன் வாழ்ந்த இருப்பை என்னும் ஊரைக் குறிப்பிடுகின்றது. நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் (பா. 61) நல்ல மாமரத்திலே பழுத்து முதிர்ந்த இனிய பழம் ஆழமான நீர் நிறைந்த குளத்திலே திடீர் என்று விழுகின்ற சோலையும், நீர்வளமும் பொருந்திய-வள்ளலாகிய மத்தியென்பவனுடைய-கழார் என்னும் ஊர். இது மத்தியென்னும் வள்ளல் வாழ்ந்த கழார் என்னும் ஊரைக் குறிப்பிடு கின்றது. மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார் இவ்வாறு தேனூர், ஆமூர், இருப்பை, கழார் என்னும் ஊர்களைக் குறிப்பிட்டுள்ளார். திரையிமிழ் இன்னிசை அளைஇ, அயலது முழவிமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும் தொண்டி. (பா. 171) அலையிலிருந்து பிறக்கும் இனிய ஓசையுடன் கலந்து, அதன் பக்கத்திலேயே மத்தளத்திலிருந்து பிறந்த இனிய ஓசை வீதிகள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கும் தொண்டி நகர். செங்கோல் செங்குட்டுவன் தொண்டி (பா. 178) நேர்மையுடன் அரசாளும் செங்குட்டுவனுடைய தொண்டி நகரம். சேரமன்னர்களின் துறைமுக நகரமாகிய தொண்டியின் சிறப்பை இப்பாடல் களால் காணலாம். நெய்தல் திணையில் தொண்டிப்பத்து என்ற பெயரில் பத்துப் பாடல்கள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அலங்கிதழ் நெய்தற் கொற்கை முன்துறை இலங்கு முத்து (பா. 185) அசைகின்ற இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கையின் கடல்துறையிலே விளங்குகின்ற முத்துக்கள். இது கொற்கையின் சிறப்பையும், பாண்டிய நாட்டின் செல்வத்தையும் விளக்குகின்றது. இவ்வாறு நெய்தல் திணையைப்பற்றிப் பாடியிருக்கும் அம்மூவனார் சேரர் களின் தொண்டியையும் பாண்டியர்களின் கொற்கையையும் பாராட்டிப் பாடியிருக் கின்றார். அரும் தொழில் தகட்டூர் (பா. 445) சிறந்த தொழில்கள் நடைபெறுகின்ற தகட்டூர். இது, முல்லைத் திணையைப் பாடிய பேயனார் பாடியது. இவர் காலத்திலே தகட்டூர் என்பது பல தொழில்கள் நடைபெற்ற பெரிய நகரமாக இருந்தது என்பதைக் காணலாம். அந்தணர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலே அந்தணர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேத நெறியைப் பின்பற்றி வாழ்ந்தனர்; நாட்டின் நன்மையைக் கருதி எப்பொழுதும் வேதம் ஓதுவார்கள். பகைவர் புல்லார்க பார்ப்பார் ஓதுக (பா. 4) பகைவர்கள்மாண்டவிடம்புல்முளைத்துப்போக.பார்ப்பார்வேதங்களைஓதுக. அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம்புரி கொள்கை அந்தணிர் (பா. 387) அறம்புரியும் வழிகளைக் கூறுகின்ற, சிறந்த வேதங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நாவினையும் நூல்களிற் கூறப்படும் நல்லொழுக்கங்களைப் பின்பற்றும் கொள்கை யையும் உடைய அந்தணர்களே. இவற்றால் அக்காலத்திலிருந்த அந்தணர்களின் சிறப்பையும் செயலையும் காணலாம். பழக்க வழக்கங்கள் பண்டைக்காலப் பழக்கவழக்கங்கள் சிலவற்றை ஐங்குறுநூற்றுப் பாடல் களிலே காணலாம். பாலைவனத்திலே மறவர்களின் அம்பால் மாண்டவர் களுக்கு அவர்கள் பெயர் பொறித்த கல்லை நினைவுக்குறியாக நட்டு வைப்பார்கள். விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் (பா. 352) குறிதவறாமல் அம்புவிடும் மறவர்களின் வில்லம்பால் அடிபட்டு மாண்டவர் களின் பெயர் பொறித்த நடுகல். பண்டைக்காலத்தில் பொற் சங்கிலியால் யானையைக் கட்டி வைத்திருக்கும் அளவு பெருநிதி படைத்தவர்களும் தமிழ்நாட்டிலிருந்தனர். செல்வர், யானை பிணித்த பொன்புனை கயிற்றின் (பா. 356) செல்வர்கள் யானையைக் கட்டியிருக்கின்ற பொன்னாற் செய்யப்பட்ட கயிற்றைப்போல. கற்புக்கு அருந்ததியையே உவமையாகக் கூறி வந்தனர். இருண்டுதோன்றும் விசும்பின் உயர்நிலை உலகத்து அருந்ததி யனைய கற்பின் (பா. 242) இருண்டு காணப்படும் வானத்திலே எல்லோரும் காண வாழும் அருந்ததி யைப் போன்ற கற்பினையுடையவள். பண்டைக்காலத்திலே பார்ப்பனர்கள் குடுமி வைத்திருப் பார்கள். அவர்கள் தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கும் குடுமிதான் வைத்திருப்பார்கள். நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே (பா. 202) நம்மூரிலே உள்ள பார்ப்பனப் பிள்ளையைப்போல நம்முடைய தலை வனாகிய மலைநாடன் ஏறிவரும் குதிரையும் குடுமித்தலையை உடையதாகக் காணப்படுகிறது. சிறிய பாடல்களால் ஆன இந்த ஐங்குறுநூற்றிலே இவை போன்ற பல பழக்க வழக்கங்களையும்காணலாம்.அரியசொல்நயமும்,பொருள் சிறப்பும் வாய்ந்தவை இந்நூற் பாடல்கள். இந்நூலைப் படிப்போர் இவ்வுண்மையை அறிவார்கள். 3 குறுந்தொகை வரலாறு குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. நாலடி முதல் எட்டடி வரையில் உள்ள பாடல்களே இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. குறுந்தொகையிலே காணப்படும் பாடல்கள் நானூற்றிரண்டு. ஒன்று கடவுள் வாழ்த்துப் பாடல். கடவுள் வாழ்த்துப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இந்நூலில் உள்ள எல்லாப் பாடல்களும் இருநூற்றைந்து புலவர்களால் பாடப்பட்டவை. இவற்றுள் ஆசிரியர்கள் பெயர் காணாப் பாடல்கள் பத்து. ஒவ்வொரு பாடலின் கீழும் அதைப் பாடிய ஆசிரியர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் இறுதியிலே இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிஞர் இருநூற்றைவர். இத்தொகை நாலடி சிற்றெல்லையாகவும், எட்டடி பேரெல்லை யாகவும் தொகுக்கப்பட்டது என்ற குறிப்பு காணப்படுகின்றது. இதனால் இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்று தெரிகின்றது. இவரைப்பற்றிய வரலாறு வேறு ஒன்றும் தெரிய வில்லை. கோ என்பதனால் இவர் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். இது அகப்பொருளைப் பற்றிக் கூறும் நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணை யொழுக்கம் பற்றிய பாடல்களே தொகுக்கப்பட்டிருக்கின்றன. எந்த முறையும் வரிசையும் இன்றி எல்லாத் துறைப் பாடல்களும் கலந்து கிடக்கின்றன. குறுந்தொகையின் சிறப்பு குறுந்தொகையின் பாடல்கள் மிகச் சிறந்தவை. சிறிய பாடல்களாயினும் அரிய செய்திகள் நிறைந்தவை. இதற்கு இந்நூலின் இரண்டாவது பாடலே ஓர் எடுத்துக்காட்டு. கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ! பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல் செறிஎயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே? மலர்களிலே உள்ள தேனைத் தேடிக் குடிக்கும் வாழ்க்கை யினையும், அழகிய சிறகுகளையும் உடைய வண்டே! அன்பு காரணமாக ஒரு பக்கமாகப் பேசாமல் கண்ணாற் கண்டதையே உண்மையாகச் சொல். நெருங்கிய நட்பு-மயில் போன்ற தோற்றம்-நெருங்கிய வெண்மையான பற்கள் இவைகளைக் கொண்ட இந்த மாதரசியின் கூந்தலைக் காட்டினும் நீ அறிந்த மலர்களில் நறுமண முடையது வேறு ஏதேனும் உண்டோ? இதுவே அப்பாடலின் பொருள். இது இரண்டாவது பாட்டு. இதைப் பாடிய புலவர் இறையனார் என்பவர். இது ஒரு காதலன் தன் காதலியைப் பாராட்டிச் சொல்லியது. தன் காதலியின் தலைமயிரைக் காட்டினும் நறுமணமுடையது வேறு ஒன்றுமில்லையென்று உரைத்தது. நலம் பாராட்டல் என்னும் பகுதியைச் சேர்ந்தது இப்பாடல். இப்பாடலைப்பற்றி வழங்கும் கதை ஒன்றுண்டு. பாண்டிய மன்னன் ஒரு நாள் தன் மனைவியுடன் சோலையில் வீற்றிருந்தான்; உல்லாசமாகப் பொழுது போக்கினான். அவன் மனைவியின் கூந்தலிலிருந்து நறுமணம் வந்தது. அது அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. அந்த மணத்திற்கு எந்த மலரின் மணமும் ஈடாகாது என்று எண்ணினான். தன் காதல் மிகுதியால், அந்த நறுமணம் அவள் கூந்தலின் இயற்கை மணம் என்று நினைத்தான். தன் கருத்தை அமைத்துப் பாடுவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்ப தென்று முடிவு செய்தான். தன் முடிவை அனைவருக்கும் அறிவித்தான். ஆயிரம் பொன்னடங்கிய முடிப்பைச் சங்க மண்டபத்திலே கட்டித் தொங்கவிட்டான். தருமி என்பவன் மதுரைக் கோவிலின் அர்ச்சகன். தனக்கு அப் பொன்முடிப்பு கிடைக்கவேண்டுமென்று சொக்கநாதரை வேண்டிக்கொண்டான். மறுநாள் அவன் பூசைக்குப் போன போது சொக்கநாதர் பீடத்திற்கு அடியிலே இப்பாடல் ஒரு ஓலையில் எழுதப்பட்டுக் கிடந்து. தருமி இப்பாடலை எடுத்துக் கொண்டு வந்து சங்கத்தார் முன்னிலையிலே படித்தான். இப்பாடலின் கருத்தே தன் கருத்தென்று பாண்டியன் ஒப்புக் கொண்டான். புலவர்களும் பாடலைப் பாராட்டினர். தருமிக்குப் பொற்கிழி பரிசாயிற்று. தருமி பொற்கிழியை எடுக்கச் செல்லும்போது நக்கீரர் தடுத்தார். பாட்டிலே சொற்குற்றம் இல்லை; ஆனால் பொருட் குற்றம் உண்டு. கூந்தலுக்கு செயற்கை மணந்தான் உண்டு. இயற்கை மணம் இல்லை என்று கூறினார். தருமியால் இதற்குத் தக்க விடையிறுக்க முடியவில்லை; தடுமாறினான். இறைவனை வேண்டினான். பின்னர் சொக்க நாதரே ஒரு புலவர் போல வந்து நக்கீரருடன் வாதிட்டார். கற்புடைய மகளிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்றார். அதை மறுத்தார் நக்கீரர். அப்பொழுது சொக்கநாதர் தன் நெற்றிக் கண்ணைக் காட்டினார். அதற்கும் நக்கீரர் அஞ்ச வில்லை. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று வாதிட்டார். உடனே சிவபெருமான் சினங்கொண்டார். நக்கீரரைப் பொற்றாமரையிலே விழச் செய்தார். அதன் பிறகு அவர் சொக்கநாதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இவ் வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்திலே காணலாம். இப்பாடலே இக்கதைக்கு ஆதாரம். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றந்தான். என்று வழங்கும் பழமொழிக்கு இந்தக் குறுந்தொகைப் பாட்டே அடிப்படை. கற்புடை மகளிரின் கூந்தல் இயற்கை மணமுடையது என்ற கருத்து இப்பாடலில் காணப்படவில்லை. இந்த விவாதத் திற்கான பொருளும் இப்பாடலில் இல்லை. இப்பாடலின் சிறப்பு நோக்கியே இத்தகைய கதை எழுந்தது என்றுதான் கொள்ள வேண்டும். இக்கதையும் இப்பாடலும் குறுந்தொகைப் பாடல் களின் பெருமையை விளக்குவன. இல்லறம் சங்க நூல்கள் எல்லாம் இல்லற வாழ்க்கையைத்தான் ஏற்றமுடையதாகக் கூறுகின்றன. அகப் பொருள் பற்றிக் கூறும் நூல்கள் அனைத்தும் இல்லறத்தைப் பாராட்டிக் கூறுவனவே. நாட்டிலே நல்ல அமைதியும் அரசியலும் இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ முடியும். பண்டைத் தமிழர்கள் தனித்தனிக் குடும்பமாகச் சிறந்து வாழ்ந்து வந்தனர். இல்வாழ்க்கையைத் திறமையுடன் நடத்த வேண்டிய முறைப்படி நடத்தினால் அதைக் காட்டிலும் இனிய வாழ்வு வேறு உண்டோ? மனையுறை வாழ்க்கை வல்லியாங்கு மருவின் இனியவும் உளவோ? (பா. 322) என்ற அடிகள் இவ்வுண்மையைக் காட்டும். இக் கருத்தே அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன் என்று திருக்குறளிலே அமைந்து கிடப்பதைக் காணலாம். இந்த இல்லறம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் காதலனும் காதலியும் கருத்தொருமித்தவர்களாக வாழ வேண்டும். இத் தம்பதிகள்தாம் இல்லறத்திலே இன்பங் காண்பர். இதுவே பழந்தமிழர் கருத்து. தொழில் செய்து பொருளீட்டும் காதலனுக்கு, காதலி தான் வாழ்க்கையிலே உற்சாகமூட்டும் உயிர். இதைப்போலவே இல்லத்திலே இருந்து கடமையைச் செய்யும் காதலிக்கு காதலனே இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டும் உயிர். நமது காதலர்தான் இவ்வுண்மையை நமக்குரைத்தார். ஆதலால் தோழியே நீ வருந்தாதே. அவர் இப்பொழுது பிரிந்து செல்ல மாட்டார். அவராகவே தம் பிரயாணத்தை நிறுத்தி விடுவார். வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல் மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்என நமக்குரைத் தோரும் தாமே அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே. (பா. 135) கணவன் பொருள்தேடப் பிரிந்து செல்வான் என்று எண்ணிய தலைவிக்கு அவள் தோழி இவ்வாறு சமாதானம் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல். இல்லறத்தில் உள்ள தம்பதிகள் ஒருமனப்பட்டு வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடல் உதாரணம். உண்மைக் காதலி உண்மையான மனைவி கணவன் செய்யும் சிறுபிழைகளுக் கெல்லாம் கடுங்கோபங் கொள்ள மாட்டாள். கணவன் செய்வது நன்மையாயினும், தீமையாயினும் அவைகளைப் பொறுத்துக் கொள்ளுவாள். காதலன் செய்யும் நன்மையைக் கண்டு மகிழ்வாள். தீமையைக் கண்டு பொறுமையிழக்காமல் அவனைத் திருத்த முயல்வாள். இதுவே ஒரு நல்ல மனைவியின் கடமை. சங்க இலக்கிய காலத்தில் பெண்ணுக்கு உரிமையில்லை. கணவனுக்குக் கட்டுப்பட்டவள்தான் மனைவி. கணவன் கொடுமைப்படுத்தினாலும் அவனுடன் கூடியிருந்துதான் அவள் வாழவேண்டும். இவளே உண்மையான மனைவி என்ற கொள்கைதான் குடிகொண்டிருந்தது. நெய்தல் நிலத் தலைவனே, தாய் கோபத்துடன் அடிக்கும் போதுகூடக் குழந்தைக்கு வேறு வார்த்தை சொல்லத் தெரியாது. அம்மா அம்மா என்று சொல்லித்தான் அழும். அதைப்போல நீ துன்பம் செய்தாலும் சரி, அல்லது நன்மை செய்தாலும் சரி, உன்னுடைய பாதுகாப்பாகிய எல்லைக்குள் அடங்கினவள்தான் என் தோழியாகிய உன் மனைவி. ஏனென்றால் குழந்தையின் துயரைப் போக்குகிறவள் தாயைத் தவிர வேறில்லை. அதுபோல என் தோழியின் துயரைப் போக்குகிறவர் உன்னைத் தவிர வேறில்லை. நீ ஒருவனே அவளுக்குத் துணை. உரவு நீர்ச்சேர்ப்ப! தாய்உடன்று அலைக்குங் காலையும் வாய்விட்டு அன்னாய் என்னும் குழவிபோல, இன்னா செயினும், இனிது தலை அளிப்பினும். நின் வரைப்பினள் என் தோழி; தன்உறு விழுமம் களைஞரோ இலளே. (பா. 397) ஒரு தோழி தன் தலைவியைப் பற்றித் தலைவனிடம் கூறுவதுபோலப் பாடப்பட்டது இப்பாடல். இதனால் அக் காலத்துக் கணவன் - மனைவிகளின் தொடர்பைக் காணலாம். மகப்பேறு இல்லறத்தில் வாழ்வோர்க்கு புத்திரப்பேறு ஒரு சிறந்த செல்வமாகக் கருதப்பட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வளவு கடுமையான சச்சரவு நேர்ந்தாலும் குழந்தை களிருந்தால் அச்சச்சரவு தலைதூக்காது. அவ்விருவர்க்கும் குழந்தைகளே சமாதானத் தூதர்களாய் நிற்கும். அவர்களுடைய பிணக்கு விரைவில் மறையும். இக் கருத்தமைந்த பாடல் ஒன்று காணப்படுகின்றது. வெளியே சென்றிருக்கும் கணவன்மேல் மனைவி கடுங்கோபத்துடன் இருக்கின்றாள். கணவனும் இதைத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு தந்திரம் செய்தான். `நாம் நேரே அவளிடம் போனால் அவள் நம்முடன் பேசமாட்டாள் என்று நினைத்தே அவன் அத் தந்திரத்தைக் கையாண்டான். பேசாமல் வீட்டுக்குள் புகுந்தான் அவன். கட்டிலிலே உறங்கும் புதல்வனை அணைத்துக் கொண்டு படுத்துவிட்டான். அதைக்கண்ட மனைவி, தானும் கட்டிலில் ஏறித் தன் கணவனுடைய முதுகுப் புறத்தை அணைத்துக்கொண்டு படுத்து விட்டாள். இவ்வளவோடு அவர்கள் பிணக்கு தீர்ந்துவிட்டது. காண்பாய் பாணனே! தலைவன் செய்த காரியம் தகுதி யுடையதுதான். மாலைக்காலம்; நல்ல நிலவு வீசுகின்றது. குள்ளமான கால்களையுடைய கட்டில். அதன்மேல் தூய்மையான மெல்லிய படுக்கை. அப்படுக்கையில் புதல்வன் படுத்திருக் கின்றான். வெற்றியையுடைய தலைவன் மெதுவாக நடந்துவந்தான். அந்தப் படுக்கையிலே ஏறினான். படுத்துக் கொண்டிருக்கும் யானையைப்போல மூச்சுவிட்டுக்கொண்டு புதல்வனைத் தழுவிக் கொண்டு படுத்தான். புதல்வனுடைய தாயும் அப்படுக்கையில் ஏறினாள். கணவனுடைய முதுகுப்புறத்தைத் தழுவிக்கொண்டு படுத்தாள். கண்டிசின் பாண பண்புடைத் தம்ம! மாலைவிரிந்த பசுவெண் ணிலவில் குறும்கால் கட்டில் நறும்பூம் சேக்கைப் பள்ளி யானையின் உயிரா அசைஇப் புதல்வன் தழீஇனன் விறலவன்; புதல்வன்தாய் அவன்புறம் கவைஇ யினளே (பா. 359) கணவன் - மனைவிகளுக்குள் ஒற்றுமை நிலவப் புத்திரப் பேறு ஒரு சாதனம் என்ற கருத்து இப்பாட்டில் அமைந்திருப்பதைக் காணலாம். பெண்களின் இயல்பு தம் செயல்களைக் கணவன்மார்கள் பாராட்டவேண்டும் என்றே பெண்கள் விரும்புவார்கள். அவர்கள் மெய் வருந்திச் செய்திருக்கும் செயல்களைப் பழித்தால்-வெறுத்தால் வேதனை யடைவார்கள். புகழ்ந்தால்தான்-பாராட்டினால் தான் அவர்கள் மனம் சாந்தியடையும். இது பெண்களின் இயற்கை. தன் சமையலைக் கணவன் பாராட்டினால் அதற்காக மகிழ்ச்சியடையாத மனைவியேயில்லை; குற்றங் கூறினால் கோபங்கொள்ளாத மனைவியும் இல்லை. இந்த இயற்கையை இன்றும் குடும்பங்களிலே காணலாம். இவ் வியற்கையை ஒரு குறுந்தொகைப் பாட்டு தெரிவிக்கின்றது. ஒரு பெண் புளித்த தயிரைத் தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்தாள். அப்போது அவள் உடுத்தி யிருந்த துவைத்த ஆடை அவிழ்ந்துவிட்டது. தன் கையைக் கழுவாமலே அந்த ஆடையை உடுத்திக் கொண்டாள். அடிப்பிடிக்காமல் அடிக்கடி கலக்கிவிட்டுக்கொண்டே இனிய புளிக்கறி செய்தாள். அதை எண்ணெயிலே பொரித்துக் கொட்டினாள். `குய் என்ற ஓசை யுடன் எழுந்த அந்தப் புகை அவளுடைய குவளை மலர் போன்ற கண்களை மறைத்தது. கணவனுக்கு உணவிடும்போது அவள் வருந்திச் சமைத்த புளிக்கறியைப் பரிமாறினாள். `கறி மிகவும் நன்றாயிருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு அவன் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான். அதைக் கண்டு அவளுடைய முகம் மகிழ்ச்சி யடைந்தது. முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக், குவளை உண்கண் குய்ப்புகை கமழத், தான் துழந்துஅட்ட தீம்புளிப் பாகர், இனிது எனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. (பா. 167) இதுவே பெண்களின் இயற்கைத் தன்மையை எடுத்துக் காட்டும் பாடல். முயற்சியும் செல்வமும் செல்வம் இல்லாவிட்டால் இல்லறத்தை இனிது நடத்த முடியாது. ஒவ் வொருவரும் தாமே வருந்தி உழைத்துப் பொருள் தேட வேண்டும். அந்தப் பொருளால் தாமும் இன்புறவேண்டும்; பிறருக்கும் உதவவேண்டும். இக்கருத்துக் களைப் பாலைத் திணைப் பாடல்களிலே காணலாம். முன்னோர் தேடிவைத்திருக்கும் செல்வத்தைச் செலவழித்துக் கொண்டி ருப்போர் செல்வம் உள்ளவர் என்று சொல்லப்படமாட்டார். அவர் வறுமைக்கு ஆளாவார். வறியவர் களின் இல்வாழ்வு பிச்சையெடுத்து வாழ்வதைக் காட்டிலும் இழிவான வாழ்வு. இவ்வாறு முன்னோர்கள் சொல்லியிருப்பதை நமக்குத் தெளிவாகத் தெரியும்படி விளக்கிய பிறகுதான் அவர் பொருள்தேடப் புறப்பட்டுப் போனார். அவர் வாழ்க. என்றும் எமனைப்போலத் திரிந்து கொண்டிருக்கின்ற-கொல்லுகின்ற வேற்படையையுடைய மறவர்கள், வழியிலே ஒளிந்திருந்து வழிச் செல்வோரைக் கொன்று பொருள் பறிப்பார்கள். முடை நாற்றத்தை விரும்பும் பருந்துகள், அப்பிணங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். இத்தகைய பழமையான துன்பத்தையுடையது அந்த நீரற்ற வழி. இவ்வழியாகத்தான் அவர் பொருள் தேடப் போயிருக்கின்றார். உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர், இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு, எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச், சென்றனர்; வாழி, தோழி! என்றும் கூற்றத் தன்ன, கொலைவேல் மறவர், ஆற்றிருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படுமுடைப், பருந்து பார்த்திருக்கும் நெடுமூது இடைய நீரில் ஆறே (பா. 283) இப்பாடல் பொருள்தேடப் போயிருக்கும் தன் காதலனைப் பற்றித் தன் தோழியிடம் ஒரு தலைவி கூறுவதுபோலப் பாடப் பட்டது. இது ஒவ்வொருவரும் தமது முயற்சியினாலேயே பொருளீட்டி வாழவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துவ தாகும். இதுவே பண்டைத் தமிழர் கொள்கை. இப்பாடலில் பாலைநில மக்கள் வறுமை காரணமாகக் கொலையும் களவும் செய்து உயிர் வாழ்கின்றனர் என்ற செய்தி கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. வறுமை, கொலையிலும் களவிலும்கூடக் குதிக்கத் தூண்டும் என்பதையும் இதனால் அறியலாம். காதல் மணம் ஒரு பெண்; ஒரு ஆண். இருவரும் உருவத்திலும் பருவத்திலும் ஒத்தவர்கள். ஒரு மலைச்சாரலிலே சந்திக்கின்றனர். இருவரும் ஒருவர்மீது ஒருவர் அன்பு கொண்டு காதலனும் காதலியுமாக ஆகிவிடுகின்றனர். இச்சமயத்தில் காதலன் தன்னைக் கைவிட்டு விடுவானோ என்று கருதிக் கவலையடைகின்றாள் காதலி. அவள் உள்ளக் குறிப்பை உணர்ந்தான் காதலன். உடனே அவளுடைய மனக்கவலை மறையும்படி ஆறுதலும் உறுதி மொழியும் கூறுகின்றான். என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் எத்தகைய சம்பந்தமுடையவரோ யாம் அறியோம். என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவுடையவர்களோ இதையும் நாம் அறியோம். நானும் நீயும் இதற்குமுன் எவ் விடத்தில் சந்தித்திருக்கின்றோம்? ஓரிடத்திலும் சந்தித்ததில்லை. அப்படியிருந்தும் செம்மையான நல்ல நிலத்திலே பெய்த மழை நீர் போல அன்புடைய நமது நெஞ்சம் இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்டன. ஆகையால், நமக்குள் இனிப் பிரிவு ஏற்படும் என்று அஞ்சாதே. யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (பா. 40) இது சாதிபேதமற்ற காதல் மணம் நடைபெற்ற செய்தியைக் குறிக்கும் பாடல். காதலர்களின் பெற்றோர்கள் இருவரும் ஒரு குலத்தினர் அல்லர். எத்தகைய உறவினருமல்லர். காதலன், காதலி இருவரும் அதற்குமுன் ஒருவரையொருவர் கண்டவர் களும் அல்லர். அப்படியிருந்தும் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. களவு மணம் புரிந்துகொண்டனர். இதையே தெய்வீகக் காதல் என்பர். காதலர் உறுதி இவ்வாறு மணம் புரிந்துகொண்ட காதலர்கள் என்றும் பிரியாமல் இணைந்திருந்து இல்லறம் நடத்துவர். எக் காரணத் தைக் கொண்டும் அவர்கள் பிரியமாட்டார்கள். இத்தகைய உறுதி ஆண், பெண் இருவரிடமும் இருந்தது. நிலத்தைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டினும் பரந்தது; கடலைக் காட்டினும் பெரிய அளவுடையது; மலைச் சாரலிலே வலிமையான கிளைகளை யுடைய குறிஞ்சியின் மலர்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்ற மலை நாட்டை யுடைய தலைவனிடம் நான் கொண்டிருக்கும் நட்பு அத்தகையது. இவ்வாறு காதல் மணம் புரிந்துகொண்ட ஒருத்தி சொல்லுவதாக அமைந்திருக்கின்றது ஒரு பாடல். நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆர் அளவின்றே; சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (பா. 3) இதுவே காதலியின் உறுதியுள்ளத்தை உணர்த்தும் அப்பாடல். வெற்றியில் மகிழ்ச்சி செய்யத் தொடங்கிய செயல் சிறியதாயினும் சரி, பெரியதாயினும் சரி, அதில் வெற்றி பெற வேண்டுமென்றே எல்லோரும் விரும்புவர். வெற்றி யடைந்தால் மகிழ்ச்சி; தோல்வி யடைந்தால் துக்கம். இதுவே மக்களின் இயற்கை. உழைப்பது மக்கள் கடமை; பலனைப் பற்றிக் கவலைப் படக்கூடாது என்று சொல்வோர் உளர். இது வெறும் வாய் வேதாந்தம். வயிற்றுப்பசி ஒன்றைத் தவிர வேறு உணர்ச்சியேயில்லாத மனித உருப் படைத்தவர்கள் இவ்வாறு உழைக்கலாம். பலன் கருதாமல் உழைத்தால்தான் பரமபதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் இவ்வாறு உழைக்கலாம். இவர் களுடைய உழைப்பிலும் கூடப் பரமபதம் என்ற குறிக்கோள் உண்டு. வாழ வேண்டும் என்ற கருத்துடையவர்கள் யாரும் கணக்குப் பார்க்காமல் உழைக்க மாட்டார்கள்; முயற்சி செய்ய மாட்டார்கள். இந்த உண்மையை ஒரு பாடல் விளக்கிக் காட்டுகின்றது. மிகுந்த இருள் சிதையும்படி மின்னி-குளிர்ச்சியாக வீழ்கின்ற மழைத் துளிகள் இனிமையாகச் சிந்தி-முறையாகக் குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற முரச வாத்தியத்தைப் போல் முழங்கி-இடியிடித்து-மழை பெய்து-இனி நீ வாழ்வாயாக பெரியமேகமே. `நாமோ செய்யத் தொடங்கிய வினையை வெற்றியுடன் முடித்துவிட்டோம் என்ற பெருமையுள்ள மனத்துடன், இவளுடன் சேர்ந்து, குவளையாகிய சிறிய இதழ்களையுடைய மலர் மணம் வீசும் தூய மெல்லிய கூந்தலையுடைய இவளது மெல்லிய படுக்கையிலே மகிழ்ந்திருக்கிறோம் இப்பொருள மைந்த பாடலே கீழ் வருவது. தாழ் இருள் துமிய மின்னித், தண்என வீழ்உறை இனிய சிதறி, ஊழியின் கடிப்பிகு முரசின் முழங்கி, இடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான்! யாமே செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு. இவளின் மேவல மாகிக், குவளைக் `குறுந்தாள் நாள் மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல் அணையேமே (பா. 270) இது, பொருளீட்டுவதற்குச் சென்ற ஒரு தலைவன் தன் காரியத்திலே வெற்றி பெற்று வந்தான். வந்த பின் தன் மனைவியுடன் கூடி மகிழ்ந்திருந்தான். அப்பொழுது அவன் சொல்லியது போலப் பாடப்பட்டது. உண்மையும் நீதியும் உண்மை நிகழ்ச்சிகளையும், நீதிகளையும் விளக்கும் பாடல் கள் பலவற்றைக் குறுந்தொகையிலே காணலாம். அகத்திணைப் பாடல்களிலே இவைகளை இணைத்துப் பாடுவது பழந்தமிழ்ப் புலவர்களின் வழக்கம். துக்கம் உள்ளவர்களுக்குத் தூக்கம் வராது. கவலை யுள்ளவர்களுக்குக் கண்ணுறக்கம் எப்படி வரும்? கவலை யற்றவர்கள் தாம் அமைதியாக அயர்ந்து தூங்க முடியும். இந்த உண்மையைக் கூறுகிறது ஒரு குறுந்தொகைப் பாட்டு. பிரிந்து சென்ற காதலனை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் சொல்லுவது போலப் பாடப்பட்ட பாட்டு அது. நள் என்னும் ஓசையுடன் இருந்தது நடு இரவு. எல்லா மக்களும் பேச்சடங்கி நன்றாக உறங்கிவிட்டனர். பெரிய உலகில் உள்ள மக்கள் அனைவருமே வெறுப்பின்றி நன்றாக உறங்கு கின்றனர். ஓர் நாள் மட்டுந்தான் இன்னும் உறங்காமலிருக் கின்றேன். நள் என்று அன்றே யாமம்; சொல் அவிந்து இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்; ஒர்யான் மன்ற துஞ்சா தேனே. (பா. 6) பொருளிலே ஆசைகொண்டவர்கள் வேறு எதனாலும் இன்பம் அடையமாட்டார்கள். செல்வத்தைச் சேர்த்து குவித்து வைத்துப் பார்ப்பதிலேயே பரமானந்தம் அடைவார்கள். பொருள் சேர்க்க அவர்கள் அல்லும் பகலும் அலைந்து திரிவார்கள். பொருளாசை பிடித்தவர்களின் வாழ்க்கையை உற்று நோக்கு வார்க்கு இவ்வுண்மை புலப்படும். செல்வத்திலே ஆசைகொண்டு அதைத் தேடப் புறப்பட்டுப் போனவர்கள். எல்லா இன்பங்களையும் அனுபவிக்கக் கூடிய இளமைப்பருவம் வீணாகக் கழிக்கின்றதே என்றுகூடக் கவலைப் படமாட்டார்கள். இளமைபாரார் வளம் நசைஇச் சென்றோர் (பா. 126) செல்வமுடையவனே இவ்வுலகில் எல்லா இன்பங்களையும் எய்த முடியும். இல்லாதவனுக்கு இவ்வுலகில் இன்பமில்லை. இல்லாதவன் இன்பத்தையடைய விரும்புவ தனால் பயனும் இல்லை. அவன் விருப்பம் நிறைவேறாது. அவ் விருப்பம் அவனுக்குத் துன்பத்தைத்தான் உண்டாக்கும். பொருளில்லாத வறியவன் இன்பத்தை அடைய ஆசைப் பட்டதைப் போல, ஆகாத காரியத்திலே ஆசை வைத்தாய் மனமே. இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே (பா. 120) பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பமும், தாமே அனுப வித்து மகிழும் இன்பமும் செல்வமற்றவர்களுக்கு இல்லை. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல். (பா. 63) காரணப் பெயர் பெயர்கள் காரணப் பெயர், இடுகுறிப்பெயர் என்று இரண்டு வகைப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் ஏற்பட்ட பெயர் காரணப் பெயர். காரணமில்லாமல் வைக்கப்பட்ட பெயர் இடுகுறிப் பெயர். சங்ககாலத் தமிழர்களிடம் இந்த இரண்டு வழக்கங்களும் இருந்தன. பாட்டனார் பெயரை மக்களுக்கு வைத்து வழங்கினர்: தெய்வங்களின் பெயர்களையும் மக்களுக்கு வைத்தனர். இவைகள் இடுகுறிப் பெயர்கள். குறுந்தொகையிலே பல புலவர்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகக் காணப்படுகின்றன. அவர்களுடைய பாடல்களில் அமைந்திருக்கும் சொற்றொடர்களே அவர்கள் பெயர்களாக அமைந்திருக்கின்றன. செம்புலப் பெயல் நீரார் என்பது ஒரு புலவர் பெயர். இவருடைய செய்யுளில் செம்புலப் பெயல் நீர்போல (பா. 40) என்ற சொற்றொடர் காணப்படுகின்றது. அணிலாடு முன்றிலார் என்பவர் ஒரு புலவர். அணிலாடு முன்றில் (பா. 41) என்னும் தொடர் இவர் செய்யுளில் காணப் படுகின்றது. நெடு வெண்ணிலவினார் என்பவர் ஒரு புலவர். நெடு வெண்ணிலவே (பா. 47) என்ற தொடர் இவர் பாடலில் காணப் படுகின்றது. மீனெறி தூண்டிலார் என்பவர் ஒரு புலவர். மீனெறி தூண்டிலின் (பா. 54) என்ற தொடர் இவருடைய பாடலில் காணப்படுகின்றது. விட்ட குதிரையார் என்பவர் ஒரு புலவர். விட்ட குதிரை (பா. 74) என்ற தொடர் இவருடைய பாடலில் காணப்படுகின்றது. காலறி கடிகையார் என்பவர் ஒரு புலவர். காலறி கடிகை (பா. 267) என்ற சொற்றொடர் இவருடைய பாடலிலே காணப்படுகின்றது. ஓரில் பிச்சையார் என்பவர் ஒரு புவலர். ஓரில் பிச்சை (பா. 277) என்ற தொடர் இவருடைய பாடலில் காணப்படுகின்றது. குப்பைக்கோழியார் என்பவர் ஒரு புலவர். குப்பைக் கோழி (பா. 305) என்ற தொடர் இவருடைய செய்யுளிலே காணப்படுகின்றது. இவ்வாறு பல பெயர்கள் குறுந்தொகையிலும் மற்றும் பல சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கும் தலைவி இப்பிறப்பில் அவன் அன்பு கிடைக்காவிட்டாலும் மறு பிறப்பிலாவது அவனைக் கணவனாக அடைவேன் என்று வேண்டிக் கொள்ளுவாள். `பழைய மரத்திலே தெய்வம் வாழும். அது பயப்படத் தகுந்த தெய்வம்; கொடியோரைத் துன்புறுத்தும். என்று நம்பினர். `கொல்லிமலையிலே பயங்கரமான பெரிய கண்களை யுடைய தெய்வம் உண்டு. அம் மலையின் மேற்குப் பாகத்திலே வணங்குவோர்க்கு நன்மை தரும். கொல்லிப் பாவை யென்னும் தெய்வமும் உண்டு. என்று நம்பினர். செல்வர்கள் தங்கள் குழந்தைகளின் கால்களிலே, தவளை வாயைப்போல காணப்படும் பொன்னாற் செய்த கிண் கிணிகளைப் போட்டிருப்பார்கள். அறிவுடையவர்கள் பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள். மக்கள் காடுகாள் என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர். அது சூலத்தைக் கையிலே வைத்திருக்கும் பெண் தெய்வம். சூலி என்ற பெயரும் அதற்குண்டு. அத்தெய்வத்தை வேண்டிக் கொள்ளு வோர் கையிலே நூலால் காப்பு கட்டிக் கொள்ளுவார்கள். கூரையின் மேலிருந்து காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பினர். நோய் தீரத் தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளு வார்கள். அதற்குப் பூசை போடுவார்கள். பெண்களைப் பேய் பிடிப்பதுண்டு என்று நம்பினர். குறக்குடிப் பெண்கள் குறி சொல்லுவார்கள். பெண்கள் உலக்கையால் தினையைக் குற்றும்போது பிறரைப் பழித்துப் பாடிக்கொண்டே குற்றுவார்கள். குழந்தைகள் சிறு தேர் (வண்டிகள்) இழுத்து விளை யாடுவார்கள். பெண்கள் துணங்கைக் கூத்தென்னும் ஒருவகைக் கூத்தாடி மகிழ்வார்கள். சிறு குழந்தைகளுக்குப் புலிப்பல்லால் செய்த தாலியை நகையாகப் போடுவார்கள். சிறு பெண்கள் மணல் வீடு கட்டி விளையாடுவார்கள். துணிக்குக் கஞ்சி போடும் வழக்கம் பண்டைக்காலத்திலும் உண்டு. இவ்வுலகில் அறஞ் செய்யாதவர்க்கு இறந்த பின் நல்ல கதியில்லையென்று நம்பினர். இவைபோன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பழந்தமிழர்களிடம் குடிகொண்டிருந்தன. இவற்றைக் குறுந்தொகைப் பாடல்களால் அறியலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வளமும் புகழும் பெற்றிருந்த நகரங்கள், வறியோர்க்கு உதவி செய்து புகழ் பெற்ற வள்ளல்களின் பெயர்கள், ஆற்றலிற் சிறந்த அரசர்களின் பெயர்கள் ஆகியவைகளையும் இந்நூலிலே காணலாம். பண்டைத் தமிழர்களின் வாழ்க்கைச் சிறப்பையும். சில சரித்திரக் குறிப்புகளையும் தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் துணை செய்யும். 4 நற்றிணை நூல் வரலாறு நல்ல ஒழுக்கமாகிய அகத்திணையைப் பற்றிக் கூறும் நூல் நற்றிணை. நல்+திணை=நற்றிணை. திணை-ஒழுக்கம்; நற்றிணை-நல்லொழுக்கம். எட்டுத்தொகையைச் சேர்ந்த அகத்திணை நூல்களிலே இது ஒரு சிறந்த நூல். நற்றிணை என்ற பெயரைக் கொண்டே இதன் சிறப்பை உணரலாம். திணை என்ற பெயரிலே தமிழிலே பல நூல்கள் உண்டு. அவைகள் திணைமாலை நூற்றைம்பது, திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை அறுபது (கைந்நிலை), ஐந்திணை எழுபது என்பவை. இந்த ஐந்தும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்தவை. நற்றிணை ஒரு தொகை நூல். ஒருவரால் பாடப்பட்ட தன்று; பலரால் பாடப் பட்ட பாடல்களின் தொகுதி. குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்தினை ஒழுக்கங் களைப் பற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. குறுந்தொகையைப் போலவே இந்நூலிலும் எல்லாத் திணைப் பாடல்களும் கலந்து கிடக்கின்றன. இந்நூலில் நானூறு பாடல்கள் இருக்கின்றன. கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்று. இது பாரதம் பாடிய பெருந்தே வனாரால் பாடப்பட்டது. நானூறு பாடல் களிலே ஆசிரியர்கள் பெயர் தெரியாத பாடல்கள் ஐம்பத்தொன்று. 175 புலவர்களின் பாடல்கள் இந்நூலிலே அடங்கியிருக்கின்றன. நற்றிணையில் தொகுக்கப் பட்டுள்ள பாடல்கள் ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரையில் உள்ளவை. இந்த நானூறு பாடல்களையும் ஒன்றாகத் தொகுத்தவன் ஓர் பாண்டிய மன்னன். பன்னாடு தந்த மாறன்வழுதி என்பது அவன் பெயர். அவனைப்பற்றிய வேறு வரலாறுகள் விளங்க வில்லை. இந்நூலில் தொண்ணூற்றெட்டாவது பாடல்கள் உக்கிரப் பெருவழுதி என்பவனால் பாடப்பட்டது. தொண்ணூற்றேழு, முந்நூற்றொன்று ஆகிய இரண்டு பாடல்கள் மாறன்வழுதி என்பவனால் பாடப்பட்டவை. இந்த உக்கிரப் பெருவழுதி யும், மாறன்வழுதியும் ஒருவனா அல்லது வெவ்வேறா என்பது ஆராயத்தக்கது. உக்கிரப் பெருவழுதி என்பவன் கடைச்சங்க காலத்திலிருந்தவன் என்று கூறப்படும் பாண்டிய மன்னன். ஐவகை நிலங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களின் சிறந்த ஒழுக்கங்கள் பலவற்றை இந்நூலிலே காணலாம். தமிழர்களின் சிறந்த பண்பாடு, தமிழ்ப் பெண்களின் கற்பொழுக்கம், ஆண்களின் அசையாத அன்பு, தமிழர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கை இவைகள் பற்றி இந்நூல் விளக்கமாகக் கூறும். தமிழ்ப் புலவர் களின் சிறந்த இயற்கையான கற்பனைகளையும்,ண கவியின்பத்தையும் இந்நூலிலே கண்டு களிக்கலாம். உயிர்கள் மேல் இரக்கம் எல்லா உயிர்களிடமும் இரக்கங்காட்டுவது பண்டைத் தமிழர்களின் பரம்பரைக் குணம். காரணமில்லாமல் எவ்வுயிர்க்கும் இன்னலிழைக்க மாட்டார்கள். சிற்றுயிர்களுக்குக்கூடச் சிறுமை புரியமாட்டார்கள். இந்த உண்மையை ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கிக் காட்டுகிறது ஒரு பாட்டு. ஒரு தலைவன் தேரின்மேல் ஏறிக்கொண்டு வருகின்றான். அத் தேர் கடற்கரையின் வழியே வந்துகொண்டிருக்கின்றது. கடற்கரையிலே நண்டுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. தேரோட்டிவரும் பாகன், தேர்ச் சக்கரத்திலே அந்த நண்டுகள் அகப்பட்டு நசுங்காதபடி கவனத்துடன் தேரை ஓட்டிக்கொண்டு வரு கின்றான். இச்சமயத்திலே அவனுடைய செய்கைக்கு உதவியாக நிலவும் தோன்றியது. இந்நிகழ்ச்சியின் வழியாகத் தமிழர்களின் உயிர்க்கருணையை வெளியிடுகிறது ஒரு பாட்டு. அலைகள் மோதுகின்ற-ஒளிபொருந்திய மணல் நிறைந்த-கடற்கரை; அந்தக் கரையிலே சக்கரங்களின் அடியிலே நண்டுகள் அகப்பட்டுக்கொள்ளாதபடி பாதுகாத்துக் கொண்டே தேர்ப் பாகன் குதிரைகளின் வாரைப் பிடித்து இழுத்துக் கவனத்துடன் தேரை ஓட்டினான். இச்சமயத்தில் அக்கடற்கரையில் நிலவும் புறப்பட்டது. புணரி பொருத பூமணல் அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர நிலவு விரிந்தன்றால் கானலானே (பா. 11) துன்பம் களைதல் தமிழர்கள் பிறர்படும் துன்பத்தைக் கண்டால் பொறுக்க மாட்டார்கள். உடனே அவர்களுக்கு உதவி செய்ய முந்துவர். இதுவே சிறந்த மனிதத்தன்மை. இத் தன்மை ஒவ்வொரு மனிதரிடமும் குடிகொண்டிருந்தால் மனித சமுதாயத்தில் துன்பமே தலைகாட்டாது; ஒற்றுமையும் இன்பமும் ஒன்றாகக் கைகோர்த்து நடனமாடும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். இத்தகைய அருங்குணம் மக்களுக்கு வேண்டும் என்பதை அறிவுறுத்தும் அரிய கவிகள் பலவற்றை இயற்றியிருக்கின்றனர். ஒரு மனிதனுடைய சிறந்த செல்வம் எது என்பதை ஒரு நற்றிணைப்பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. தமிழரின் சிறந்த பண்பாட்டை விளக்குகின்றது அப்பாடல் அதிகார தோரணையிலே பேசுவதும், விரைந்து செல்லும் வாகனங்களிலே ஏறிச் செல்வதும் செல்வம் அன்று; நாம் செய்த செயலின் நல்ல பயனையே சான்றோர் செல்வம் என்று சாற்றுவர். தன்னைக் கண்டவர்களின் துன்பம், தன்னைக் கண்டவுடனே அஞ்சி ஓடும்படியான தன்மையுடன், அவர்களிடம் இரக்கம் காட்டுவதாகிய செல்வமே சிறந்த அழியாத செல்வமாகும். நெடிய மொழிதலும், கடிய ஊர்தலும் செல்வம் அன்று; தம்செய் வினைப்பயனே சான்றோர் செல்வம் என்பது; சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம், செல்வம் என்பதுவே. (பா. 210) விருந்தினர்ப் பேணல் விருந்தோம்புதலில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள். தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றிலும் தமிழர்களின் இச்சிறந்த பண்பைக் காணலாம். இல்லறத்திலே வாழ்வோர்க்குரிய கடமை களில் விருந்துபுரத்தல் என்பதைச் சிறந்த கடமையாக அற நூல்கள் குறிக்கின்றன. இந்த அற நூல்களின் முறையையே பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்தனர். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் நினைக்கின்றனர். உறவினர் வேறு; விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். புதியவர்கள் எவராயினும் சரி, எந்நாட்டினராயினும் சரி, எம்மொழியினரா யினும் சரி, அவர்களை வரவேற்று உபசரிப்பது தமிழர் பண்பு. இந்த சிறந்த பண்புதான் தமிழர்களை அடிமையாக்கி விட்டது என்று கூறுவோரும் உண்டு. பகைவர்களை விருந்தினர் களாக வரவேற்கும் முறை தமிழர்களிடம் இருந்ததில்லை. தமிழர்கள் பகைவர்களுக்கு ஒருபொழுதும் தலை வணங்க மாட்டார்கள். அவர்களை அடித்து விரட்டுவார்கள். உதவி தேடிவந்தவர்களையே விருந்தினராக ஏற்று உள்ளன்புடன் உபசரிப்பார்கள். வள்ளல்கள் வரலாறுகளிலும், மன்னர்கள் வரலாறுகளிலும் இவ்வுண்மையைக் காணலாம். ஆகையால் விருந்தோம்பும் குணந்தான் தமிழரை அடிமையாக்கிற்று என்று சொல்லுவது பொருந்தாது. ஒரு இனத்தாரின் சிறந்த பண்பாட்டை விளக்குவது அவர்களுடைய விருந்தோம்பல் குணமேயாகும். நற்றிணையிலே, பல பாடல் களிலே தமிழர்களின் இச் சிறந்த பண்பாட்டைக் காணலாம். எனக்கும் என் கணவனுக்கும் ஊடலே உண்டாவதில்லை என்று ஒரு பெண் சொல்லுகிறாள். ஊடல் உண்டாகாமைக்கு அவள் கூறும் காரணந்தான் வியப்பைத் தருகின்றது. `என்னுடைய நல்ல வீட்டிலே ஏராளமான விருந்தினர்கள் எப்பொழுதும் தங்கியிருக்கின்றனர். அவர்களை உபசரிப்பதி லேயே எங்கள் நேரம் கழிகின்றது. ஓய்வேயில்லை. ஆகையால் ஊடல் தோன்றுவதற்கே இடமில்லை. நன்மனை நனிவிருந்து அயரும் கைதூவின்மையின், எய்தாம் ஆறே. (பா. 280) கணவனுடன் ஊடியிருக்கின்றாள் ஒரு மனைவி. அவள் அடுக்களையிலே சமைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் முகத்திலே மகிழ்ச்சியில்லை; சினத்தால் சிவந்திருக்கின்றது. இப்பொழுது என் வீட்டிற்கு விருந்தினர்கள் வருக. விருந்தினரைக் கண்டால் இவளுடைய சிவந்த முகம் மாறும். முகத்திலே புன்சிரிப்பு காணப்படும். நாமும் அம்முகத்தைக் கண்டு மகிழலாம். இவளுடைய ஊடலும் ஓடி மறைந்துவிடும் என்று ஏங்குகின்றான் கணவன். இந்நிகழ்ச்சியைக் குறிக்கின்றது மற்றொரு பாடல். `புகையிலே மூழ்கி விழிக்கின்ற கண்களையுடையவள். அழகுடன் பிறை போன்ற நெற்றியிலே தோன்றிய சிறிய பல வியர்வைத் துளிகளை அழகிய புடைவையின் முந்தானையால் துடைத்துக் கொண்டாள். நம்முடன் கோபித்துக் கொண்டு சமையற்கட்டிலே சமைத்துக் கொண்டிருக்கின்றாள். அழகிய சிறந்த குணங்களையுடைய எனது மனைவியின் நிலைமையிது. இந்தச் சமயத்தில் எமது இல்லத்திற்கு விருந்தினர்கள் வருவார் களாக. அப்பொழுதுதான் அவளுடைய முகத்தின் சிவப்பு மாறும். சிறிய முட்கள் போன்ற பற்கள் தோன்றும்படி புன்சிரிப்பு காட்டும் அவள் முகத்தைக் காணலாம். புகை யுண்டு அமர்த்த கண்ணள், தகைபெற பிறை நுதற் பொறித்த சிறுநுண் பல்வியர் அம்துகில் தலையின் துடையினள், நப்புலந்து அட்டிலோளே; அம்மா அரிவை! எமக்கே வருகதில் விருந்தே; சிவப்பு ஆன்று, சிறிய முள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண்கம்மே (பா. 120) இதனால் விருந்தினரைக் கண்டால் முகமலர்ந்து வரவேற்கும் தமிழர்களின் சிறந்த பண்பைக் காணலாம். நாகரிகம் நாகரிகம் என்ற சொல்லுக்குத் தமிழிலே ஒரு தனிச் சிறப்புண்டு. நாகரிகம் இப்பொழுது நாகரீகம் என்று நீண்டு விட்டது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற பொருளில் இச்சொல் இப்பொழுது வழங்குகின்றது. நகரங்களில் தோன்றி வளரும் நடையுடை பாவனைகளை நாகரீகம் என்ற சொல்லால் இப்பொழுது குறிக்கின்றனர். நகர ரீதியாகத் தோன்றியது நாகரீகம் என்று கூறிவிடுகின்றனர். பண்டை இலக்கியங்களிலே நாகரிகம் - கண்ணோட்டம் என்ற பொருளில் வழங்கி வந்திருக்கின்றது. கண்ணோட்டம் - இரக்கமுடைமை; அன்பின் மிகுதியால் தோன்றும் இரக்கம்; தாட்சண்யம்; கருணை. முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர். (பா. 355) `மிகுந்த கண்ணோட்டமுடையவர்கள், பழைமையான நட்பு கொண்டவர்கள் கொடுத்தாலும்கூட, அவர்கள் கொடுக்கும் நஞ்சையும் உண்பார்கள். இதில் நாகரிகர் என்ற சொல் கண்ணோட்டம் உடையவர்கள், கருணை யுள்ளவர்கள் இரக்கமுடையவர்கள், தாட்சண்யம் உள்ளவர்கள் என்ற பொருளில் வந்திருப்பதைக் காணலாம். நட்பு பாராட்டுதல், இரக்கங் காட்டுதல், பொறுமை காட்டுதல், அன்பு காட்டுதல், குற்றங்களை பொறுத்து மன்னித்தல் இவை போன்ற சிறந்த பொருளைக் கொண்டதே இந்த நாகரிகம் என்ற சொல். இரக்கமுடையவர் களிடந்தான் இச் சிறந்த தன்மைகள் காணப்படும். பண்டைத் தமிழர்கள் இத்தகைய நாகரிகமுள்ளவர்களாக வாழ்ந்தனர். பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். `விரும்பத்தக்க கண்ணோட்டத்தை வேண்டுகிறவர்கள், நட்பாயினார் தமது உணவிலே நஞ்சை ஊற்ற, கண்டும், அதனை வெறுக்காமல் உண்டு, அவரோடு நட்பாகவேயிருப்பர். இக் குறளிலும் நாகரிகம் என்ற சொல் கண்ணோட்டம் என்ற பொருளில் வந்திருப்பதைக் காணலாம். மேலே கண்ட நற்றிணைப் பாடலைப் பின்பற்றியதே இக்குறள். பெண்ணின் பெருமை மானமுள்ள குலத்திலே பிறந்த பெண்கள், தம் வீட்டுக் குறைகளைப் பிறர் அறிவதற்கு இடங் கொடுக்கமாட்டார்கள். வறுமையால் எவ்வளவுதான் வாடி வதங்கினாலும் பெருமையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சி யடைவார்களேயன்றி இரவற் சோற்றுக்கு ஏங்கி நிற்கமாட்டார்கள். அவர்கள் குடும்பம் வறுமையடைந்ததைக் கண்டு அவர்களுடைய தந்தையர் அன்புடன் உணவுப் பொருள்களை அனுப்பி வைத்தால் அவைகளைக் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது சிறந்த அறிவும் ஒழுக்கமும் நிறைந்த குடித்தனப் பெண் களின் குணமாகும். `சிறந்த அறிவையும், அறநெறியையும் எங்கே கற்றுக் கொண்டாளோ? அவளைக் கொண்ட கணவனுடைய குடும்பம் வறுமையடைந்துவிட்டது என்பதை அறிந்து, அக்குடும்பத்திற்கு அவள் தந்தை அனுப்பி வைத்த உணவுப் பொருளைக்கூடப் பெரிதாகக் கருதமாட்டாள். அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்? கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள். (பா. 11) கற்பின் சிறப்பு திண்மை, நிறை என்ற சொற்கள் கற்பைக் குறிப்பன. திண்மை-மனோவலிமை. நிறை-நிறைந்த குணங்கள். காதலனுடன் இன்ப - துன்பங்களிலே ஒன்றுபட்டுக் கலந்து வாழும் திண்மை-மனோவலிமை - மன உறுதி. பெண்களுக்கு வேண்டும். மனமே மாதர்க்கு அணிகலம். தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதோடு தங்கள் காதலரையும் பிறர் பழிக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும். இதுவே சிறந்த குணம்-நிறை-ஆகும். தமிழ்ப் பெண்கள் இத்தகைய திண்மையும், நிறையும் பொருந்திய கற்புடையவர்களாக இருந்தனர். இவ்வுண்மையை விளக்கும் பாடல்கள் நற்றிணையிலே பல உண்டு. கணவன் பிரிவினால் உள்ளத்திலே கவலை தோன்றுவது இயற்கை. அக்கவலையை வெளியிலே காட்டாமல் மறைத்துக் கொள்ளுவதே கற்பின் மாண்பாகும். கணவன் எப்பொழுது வருவானோ என்ற கவலை படிந்த முகத்துடன் கன்னத்திலே கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருத்தல் கற்புடைய மங்கைக்கு அழகன்று. அப்படியிருந்தால் அவள் கணவனைப் பற்றித்தான் ஊரார் பழித்துரைப்பார்கள். இப் பெண்ணை இப்படித் தனித்திருந்து தவிக்கும்படி விட்டுப் பிரிந்து போகலாமா அவன்? இரக்கமுள்ள வனாயிருந்தால் இப்படிப் போவானா? இவளை விட அவன் தேடிப் போயிருக்கும் செல்வம் அவ்வளவு உயர்ந்ததா? என்று பார்ப்போர் பழித்துப் பேசுவார்கள். ஆனால் கணவனுக்கு இத்தகைய பழிப்பு உண்டாகாமல் பாதுகாத்துக் கொள்ளு கின்றவளே சிறந்த கற்புடையவள். இக்கருத்தை ஒரு செய்யுளிலே காணலாம். `கணவனைப் பிரிந்து ஒரு தனியிடத்திலிருந்து வருந்தினாலும் சரி, தனது அருமையான உயிரே போவதாயினும் சரி, சிறந்த ஆபரணங்களையணிந்த கற்புடைய மகள் தன் துன்பத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். (மறைத்துக் கொள்ளாவிட்டால்) குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவன் நாணமடையும்படி, பகைவரால் இகழப்படும் பழி அவன்மீது அமரும். துறந்து ஓர் தேஎத்து இருந்து நனிவருந்தி ஆருயிர் அழிவதா யினும், நேர்இழை கரத்தல் வேண்டு மால்மற்றே; பரப்புநீர்த் தண்ணந் துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. (பா. 382) ஆண்கள் கற்பு பண்டைத் தமிழர்கள் பலதார மணம் புரிந்து வந்தனர். அவர்கள் பல மனைவியர்களை மணந்து கொள்வதோடு மட்டும் நிற்கவில்லை; செல்வமுடையவர்களும், சிறந்த வீரர்களும் பரத்தையர்களுடனும் சேர்ந்து வாழ்ந்தனர். இதற்காகவே பரத்தையர் சேரி என்ற இடங்களும் இருந்தன. கணவன் கணிகையர் வீட்டுக்குச் சென்று வந்ததை அறிந்தால் காதலி வருந்துவாள்; ஊடல் கொள்வாள். இச்செய்தி மருதத்திணைப் பாடல்களிலே கூறப்படுகின்றன. ஆண்களுக்கு இப்படித் தவறு செய்யும் உரிமை இருந்த காலத்தில் கூட அவர்களிலே பலர் கட்டின மனைவிமார்களிடம் காதலும் கற்பும் உடையவர்களாகவே நடந்துகொண்டனர். ஒரு நற்றிணைப் பாட்டு இச் செய்தியை எடுத்துக்காட்டுகின்றது. என் காதலியை என் உள்ளத்தை விட்டுப் பிரிக்கவே முடியாது. அவள் எப்பொழுதும் என் நெஞ்சத்திலேயே குடி கொண்டிருப்பாள். என்று ஒருவன் சொல்வதாக அமைந்துள்ளது அப்பாடல். `காற்று மோதியடித்தாலும் சரி கடுமையாக இடியிடித்தாலும் சரி; இன்னும் எண்ணற்ற இடையூறுகள் நேர்ந்தாலும் சரி; இந்தப் பெரிய நிலமே கிடுகிடென்று நடுங்கினாலும் சரிதான்; மிகவும் அழகிய தோற்றத்தையுடையவள்; அழியாத இயற்கை வனப்புடைய பதுமை போன்றவள்; என் உள்ளத்தை விட்டுப் போய்விட மாட்டாள்; என்றும் நிலைத்திருப்பாள். கால் பொருது இருப்பினும், கதழ் உறை சிதறினும் உரும் உடன்று எறியினும், ஊறுபல தோன்றினம், பெருநிலம் கிளரினும், திருநல உருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள் என் நெஞ்சத் தாலனே. (பா. 201) பொருந்திய மணம் இப்பொழுதிருப்பது போலப் பண்டைத் தமிழகத்தில் மக்களுள் பிறப்பினால் பேதம் பாராட்டும் வழக்கமில்லை. ஆனால், உள்ளவர். இல்லாதவர் - அதாவது செல்வர், வறியர் என்ற வேற்றுமைகள் இருந்தன. இதனால் ஒத்த செல்வமும், ஒத்த அழகும், ஒத்த பருவமும் உடையவர்களுக்குள் நடைபெறும் காதல் திருமணங்கள்தாம் சிறந்த திருமணங்கள் என்று கருதப்பட்டு வந்தன. இத்தகைய ஒற்றுமை யுடையவர்களுக்குள் ஏற்படும் காதல்தான், நிலைத்து நிற்கும் காதல் என்றும் நினைத்து வந்தனர். ஒத்த திருவும், உருவும், பருவமும் உடையவர்களின் வாழ்க் கையிலே ஒற்றுமையும் இன்பமும் தவழ்ந்து விளையாடுவதைக் கண்கூடாகக் காணலாம். ஏறுமாறாக இணைக்கப்பட்டிருக்கும் தம்பதிகளுக்குள் அடிக்கடி பிணக்கும் குழப்பமும் சுழன்றடிப் பதைக் காண்கிறோம். காதலனும் காதலியும் சம நிலையிலிருந் தால்தான் அவர்கள் இல்லறத்திலே இன்பங்காண்பார்கள். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இதனை ஒரு பாட்டு விளக்கிக் கூறுகின்றது. நாகரிகம் வளர்ந்திருக்கும் மருத நிலத்துச் செல்வன் ஒருவன். மருத நிலத்தைக் காட்டினும் சிறிது பின் தங்கிய நாகரிகமுள்ள நெய்தல் நிலத்துப் பெண் ஒருத்தியைக் காதலிக் கின்றான். அவனுடைய காதலுக்கு நெய்தல் நில மங்கையின் தோழி தடை போடுகின்றாள். பணக்காரன் மகனாகிய நீ, ஏழை மகளாகிய என் தலைவியைக் காதலிப்பது பொருந்தாது. என் தலைவிக்கு ஏற்ற கணவன் எங்கள் குலத்திலேயே கிடைப்பான். ஆகையால் நீ அவளிடம் அணுகாதே என்று தடுக்கின்றாள். இக் கருத்துடன் காணப்படுகின்றது ஒருபாட்டு. இவள் கடற்கரையிலே உள்ள அழகிய சிற்றூரிலே, சிறு குடியிலே பிறந்தவள்; நீல நிறம் பொருந்திய பெரிய கடல் கலங்கும்படி கடற்குள்ளே புகுந்து மீன்பிடித்து வாழும் பரதவர் குலத்துப் பெண். நீயோ நீண்ட கொடிகள் பறந்து கொண்டிருக் கின்ற - பாதுகாப்பமைந்த - பழமையான நகரத்திலே-விரைந்து தேரேறிச் செல்லும் செல்வர் குடியிலே பிறந்தவன்; உன் பெற்றோர்க்கு நீ ஒரே காதற்புதல்வன். `காழுப்புள்ள சுறாமீன் துண்டுகளைக் காய வைத்து விட்டு - அவைகளைத் தின்ன வரும் பறவைகளை ஓட்டிக் கொண்டிருக்கும் எங்களுக்கு உன்னால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? எங்களிடம் புலால் நாற்றம் வீசுகிறது. எம்மிடம் நெருங்காதே; எட்டி நில். கடல் நீரால் விளையும் உப்பு, மீன் முதலிய எமது சிறிய செல்வமுடைய நல்ல வாழ்க்கைக்கும் பெரிய செல்வமுடையது உனது வாழ்க்கைக்கும் பொருந்துமோ? பொருந்தாது. எமது குலத்திலேயே எமது தலைவிக்கேற்ற உயர்ந்த வாலிபன் உண்டு. ஆகையால் நீர் போகலாம். இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் எறி பரதவர் மகளே; நீயே, நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வர்க் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ; புலவு நாறுதும்; செல நின்றீமோ; பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ! அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்தே. (பா. 45) இல்லறத்திலே என்றும் இன்பமும் ஒற்றுமையும் இணைந் திருக்கக்கூடிய பொருத்தமுள்ள திருமணம் இன்னதுதான் என்று இப்பாடல் குறிப்பதைக் காணலாம். குலமகளிரிடம் ஒழுக்கக் கேடுகள் உண்டாவதற்குக் காரணம் பொருந்தா மணமேயாகும். காதல் என்ற பெயரால் காமவெறி கொண்டு பொருந்தா மணம் செய்துகொள்வதனால்தான் விவாக முறிவுகளும் ஏற்படுகின்றன. பரத்தையர் இயல்பு பரத்தையர் - கணிகையர் - விலைமாதர்கள் என்பவர் களோடு கூடிக்குலவும் பழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது உண்மைதான். ஆயினும் அதனை அறிஞர்களும், குலமகளிரும் ஆதரிக்கவில்லை; ஆகாத செயல் என்றே வெறுத்து வந்தனர். பரத்தையர் கூட்டுறவால் ஏற்படும் பழியையும் அவ்வப்போது எடுத்துக்காட்டி அறிவுறுத்தி வந்தனர். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இவ்வுண்மையை அறிய ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம். பரத்தை வீட்டிலே தங்கிவிட்டு வந்தான் ஒரு தலைவன். அவனைப் பார்த்துத் தலைவியின் தோழி புத்திமதி சொல்லுகின்றாள். இம் முறையில் அமைந்திருக்கின்றது ஒரு பாடல். புதிய வருவாய்களையுடைய ஊரின் தலைவனே உன்னுடைய-சிறந்த ஆபரணங்களையணிந்த-காதல் மகளிரை எமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து நீ அவர்களைத் தழுவிக்கொண்டு வாழ்ந்தாலும், பிறர் செல்வத்தையே பெரிதாக விரும்பும் அவர்களுடைய அற்ப மனத்திலே உண்மைக் காதல் பிறப்பது அரிது; அவர்களும், பசுமையான வளையல்களை யணிந்த - உனது மனைவிமார்களுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து நன்மை நிறைந்த கற்புடன்-எம்மைப் போன்ற கற்புடை மகளிர் என்ற பெருமையுடன்-வாழ்தல் அதைக் காட்டிலும் அரிதாகும். யாணர் ஊர, நின்மாண் இழை மகளிரை எம்மனைத் தந்துநீ தழீஇயினும், அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே; அவரும் பைந்தொடி மகளிரொடு, சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம் பாடுஆதல் அதனினும் அரிதே. (பா. 330) இப்பாடலில் அமைந்திருக்கும் சிறந்த கருத்து பாராட்டற் குரியது. விலைமகளிரிடம் உண்மையான காதலை எதிர்பார்க்க முடியாது; அவர்கள் குலமகளிருடன் கூடி ஒத்து வாழமாட்டார்கள். ஒத்து வாழ்ந்தாலும் குலமகளிரைப் போல் குழந்தைகளைப் பெற்றுக் கற்புடன் வாழமாட்டார்கள். ஆதலால் அவர்கள் தொடர்பு வேண்டாம் இத்தகைய உயர்ந்த உபதேசம் இப் பாடலில் அமைந்திருக்கின்றது. வரலாறுகள் பழைய வரலாறுகள் பல நற்றிணைப் பாடல்களிலே காணப்படுகின்றன. அகத்திணைப் பாடல்களிலே பழைய நகரங்களையும் ஊர்களையும் மலைகளையும், வீரர்களையும் உவமையாக அமைத்துப் பாடுவது பண்டைத் தமிழ்ப் புலவர் களின் வழக்கம். அகத்திணை நூல்கள் பலவற்றிலும் இதைக் காணலாம். ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமா உண்ணி (பா. 216) பகைவன் செய்த கொடுமை உள்ளத்தைத் துன்புறுத்த, தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட திருமாவுண்ணி. இது கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போலக் காணப்படுகின்றது. நற்றிணைப் பாடல்கள் சிலப்பதிகார காலத்திற்கு முற்பட்டவை. ஆதலால் இது சிலப்பதிகாரக் கண்ணகியைக் குறிப்பதாகாது. கண்ணகி வரலாறு போன்ற ஒரு கதை சிலப்பதிகார காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வழங்கி யிருந்தது என்பதையே இது குறிக்கின்றது. இப்பாடல் சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றியது; நற்றிணையில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம் என்று சொல்வோரும் உண்டு. மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஓரி என்பவனைக் கொன்றான். (பா. 320) மேகத்தைப் போன்ற சிறந்த வள்ளலாகிய ஓரி என்னும் வள்ளலுக்குச் சொந்தமானது கொல்லிமலை. (பா. 265) கொல்லிமலையிலே அருவியுண்டு; சிறந்த பல செல்வங்கள் உண்டு. தெய்வத்தால் காக்கப்படுவது அம்மலை. அந்த மலையின் மேற்குப் பகுதியிலே எப்பொழுதும் அழியாமல் வாழ்கின்ற கொல்லிப் பாவை என்னும் தெய்வம் உண்டு. (பா. 201) ஆய் ஆண்டிரன் என்னும் வள்ளல், தன்னிடம் இரவலர்கள் எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் யானைகளையும், செல்வங்களையும் பரிசளிப் பான். இதற்காகவே எண்ணற்ற யானை களைச் சேர்த்து வைத்திருப்பான். (பா. 237) ஆர்க்காடு பண்டைக் காலத்திலே சோழ மன்னர் ஆட்சியிலே யிருந்தது. (பா. 227) இருப்பை என்னும் ஊர் நீர் வளம் நிறைந்தது. பகைவர் களை அடக்கிய ஒரு சிறந்த வீரனுடைய ஊர் அது. (பா. 260) குன்றூர் என்பது ஒரு சிறந்த ஊர். பழமையான வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள் அவ்வூரிலே வாழ்ந்தனர். (பா. 280) ஊனூர் என்பது ஒரு சிறந்த ஊர். அவ்வூரிலே பாணர் களையெல்லாம் பாதுகாத்து வந்த வள்ளல் ஒருவன் வாழ்ந்தான். அவன் போரிலே சிறந்த வீரன். (பா. 300) முள்ளூர் என்பது சிறந்த புகழுடைய நகரம். அந்நகரிலே ஆரியர்கள் நிறைந்திருந்தனர். (பா. 170) நன்னன் என்பவன் ஒரு சிறந்த வள்ளல். அவன் கொண்கான நாட்டிலே வாழ்ந்தவன். வளமுடைய பல குன்றுகள் அவனுக்குச் சொந்தமாக இருந்தன. (பா. 391) பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் தலையாலங் கானம் என்ற ஊரிலே பகைவர்கள் அஞ்சும்படி அமர்ந்திருந்தான். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். (பா. 387) சோழன் ஒருவன் குட்டுவன் என்னும் சேரனுடைய நகரத்தை அழித்தான். பகலிலே அந்நகரத்தைத் தீயினால் சுட்டெரித்தான். இவை போன்ற பல வரலாற்றுக் குறிப்புகள் நற்றிணையிலே காணப்படு கின்றன. நீதிமொழிகள் வயதேறியவர்கள் வாலிபராகலாம்; முதிர்ந்தோர் இளைஞராகலாம்; கிழவி குமரியாகலாம்; இதற்கு மருந்துண்டு; காயகற்பம் உண்டு என்று இன்றும் சிலர் நம்புகின்றனர். இதற்காக மருந்தும் செய்து விற்பனை செய்கின்றனர். இம் மருந்துகள் பற்றி விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. இவ் விளம்பரங்களைக் கண்டு பலர் ஏமாறுகின்றனர். முதியவர்கள் இளமையடைய முடியாது; வாழ்நாள் இவ்வளவுதான் என்று எந்தச் சோதிடத்தாலும் அறியமுடியாது என்ற உண்மையை உரைக்கின்றது ஒரு செய்யுள். முதியவர்கள் எவ்வளவு வருந்தி முயன்றாலும் மீண்டும் இளமைப் பருவத்தை அடையமாட்டார்கள்; வாழ்நாளின் வகையை இவ்வளவு நாள்தான் என்று அறிந்து கூறுகின்றவர் களும் இல்லை. முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை. (பா. 344) ஒவ்வொரு நாளும் இளமைப் பருவமும் இளமைப் பருவத்தால் அடையும் இன்பமும் விரைவாகக் கழிந்து கொண்டேயிருக்கின்றன. எய்த அம்பின் நிழலைப் போல் அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வைகல் தோறும் இளமையும் இன்பமும் எய்கணை நிழலிற் கழியும் (பா. 46) இதனால் இன்பமும், இளமையும் நிலைத்தவையல்ல என்பதைக் காணலாம். அவை நிலைத்தவை என்று எண்ணி யிருப்போர்க்குக் கூறிய அறிவுரை இது. பழக்க வழக்கங்கள் பண்டைத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் பல நற்றிணைப் பாடல்களிலே காணப்படுகின்றன. தை மாதத்திலே குளிர்ந்த நீர் நிறைந்த குளங்களிலே பெண்கள் நீராடுவார்கள். இது பொங்கல் நாளைக் குறித்ததாக இருக்கலாம். தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள். (பா. 80) பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்பார்கள். பிள்ளைகளுக்குப் பாட்டன் பெயரை வைப்பது பண்டைத் தமிழர்களின் வழக்கமாகும். தன் மகள் கள்ளக்காதலில் ஈடுபட்டிருப்பதை அன்னை அறிந்தால் கடுஞ் சினம் கொள்வாள். அவளைக் கோலால் அடித்துக் கண்டிப்பாள். தலைமகளின் காதல் நோயை அறியாத அன்னை அவளுக்கு உண்மை யாகவே ஏதோ நோய் வந்துவிட்டதாக நம்புவாள். அந்நோய் நீங்க முருகனுக்குப் பூசைபோடுவாள். அப்பொழுது வெறியாடும் வேலன் முன்னிலையில் தலைவியின் கூந்தலில் உள்ள மலரை எடுத்துப் போட்டுத் தலைமகளின் நோய் தீரவேண்டும் என்று வேண்டிக் கெள்வாள். மக்கள்மேல் தெய்வ ஆவேசம் வந்து ஆடுவது உண்டு. இதற்கே வெறியாட்டு என்று பெயர். பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு என்ற நம்பிக்கை பழந்தமிழர்களிடம் இருந்தது. தமிழ்நாட்டிலே மலைகளிலே தவசிகள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் நீண்ட சடைகளை வளர்த்திருந்தனர். நீராட மாட்டார்கள். அழுக்கடைந்த உடம்புடன் தவம் புரிந்து கொண்டி ருப்பார்கள். பாணர் சேரிகளில் எப்பொழுதும் இசை முழக்கம் கேட்டுக் கொண்டே யிருக்கும். இவை போன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களையும் காணலாம். பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைக் காண நற்றிணைப் பாடல்கள் பேருதவி புரியும். ஐந்திணை ஒழுக்கங் களை நல்ல முறையிலே நவிலும் நூல் நற்றிணையாகும். 5 அகநானூறு நூல் வரலாறு அகப் பொருளைப் பற்றிக் கூறுவது. நானூறு பாடல் களைக் கொண்டது; ஆதலால் அகநானூறு என்று பெயர் பெற்றது. இந்நூலில் நானூறு பாடல்களும் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் கூடி நானூற்றொரு பாடல்கள் இருக்கின்றன. அகநானூற்றுப் பாடல்கள் ஐந்திணை யொழுக்கங்களை விரிவாக எடுத்து விளம்புகின்றன. இச்சிறப்புக் கருதியே அகம் என்ற பெயரை-அகப்பொருள் என்று பொருள்படும் பொதுப் பெயரை - இந்த நானூறு பாடல்களுடன் இணைத்தனர். அகநானூறு என்று சிறப்பாகப் பெயரிட்டனர். இந்த நூலுக்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அகநானூறாகிய நெடுந்தொகையின் பாடல்கள் பதின் மூன்று அடிகளுக்குக் குறையாமலும், முப்பத்தொரு அடிகளுக்கு மேற்படாமலும் உள்ளவை. அகநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் நூற்று நாற்பத்தைந்து புலவர்களால் பாடப்பட்டவை. இந்த நானூறு பாடல்களிலே இருநூறு பாடல்கள் பாலைத்திணை பற்றியவை. எண்பது பாடல்கள் குறிஞ்சித் திணை பற்றியவை. நாற்பது பாடல்கள் மருதத்திணை பற்றியவை. மற்றொரு நாற்பது பாடல்கள் முல்லைத்திணை பற்றியவை. மற்றொரு நாற்பது பாடல்கள் நெய்தல் திணை பற்றியவை. இந்நூலின் தொகுப்பிலே ஒரு அழகுண்டு; ஒவ்வொரு பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரித்துப் பார்த்தால்தான் அவ் வழகு தெரியும். ஒரு பத்துப் பாடல்களை எடுத்துக் கொண்டால் ஒற்றை எண்ணுள்ள பாடல்கள் எல்லாம் பாலைத்திணை. 1,3,5,7,9 ஆகிய எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் பாலைத்திணை பற்றியவை. இரண்டாவது பாட்டும் எட்டாவது பாட்டும் குறிஞ்சித்திணை பற்றியவை. நான்காவது பாட்டு முல்லைத்திணை. ஆறாவது பாட்டு மருதத்திணை. பத்தாவது பாட்டு நெய்தல் திணை. இந்த நூல் மூன்று பகுதியாக அமைந்திருக்கின்றது. முதற் பகுதி களிற்றியானை நிரை; இரண்டாவது பகுதி மணிமிடை பவளம்; மூன்றாம் பகுதி நித்திலக்கோவை. இப்பிரிவு பாட்டின் பொருள் கருதிப் பிரிக்கப்படவில்லை. செய்யுளின் நடை நயங்கருதி இப்படிப் பிரிக்கப்பட்டிருக்கலாம். இந்த நடை நயத்தின் வேறுபாடு களை நம்மால் அறியமுடிய வில்லை. நுண்மாண் நுழைபுலமுடையோரே நுனித்தறியக்கூடும். களிற்றியானை நிரை; ஆண் யானை வரிசை. ஆண் யானை களைப் போலக் கம்பீரமாக அசைந்து செல்லும் பாடல்களுக்கு இப்பெயரை அமைத்திருக்கலாம். மணிமிடை பவளம்; மாணிக்கத்தோடு தொடுக்கப்பட்ட பவளம். மாணிக்கம் போன்ற சொற்களும் பவளம் போன்ற மொழிகளும் கலந்த பாடல்களை மணிமிடை பவளம் என்ற வரிசையிலே தொகுத்திருக்கலாம். நித்திலக்கோவை; முத்துமாலை. முத்துப்போன்ற ஒரே வகையான சொற் களால் அமைந்த பாடல்களை நித்திலக் கோவை என்ற வரிசையிலே சேர்த்தி ருக்கலாம். முதல் நூற்றிருபது பாடல்கள் களிற்றியானை நிறை; நூற்று இருபத்தொன்று முதல் முந்நூறு முடிய உள்ள நூற்றெண்பது பாடல்கள் மணிமிடை பவளம்; முந் நூற்று ஒன்று முதல் நானூறு வரையில் உள்ள நூறு பாடல்கள் நித்திலக்கோவை. தொகுப்பாசிரியர் இந்த நானூறு பாடல்களையும் ஒரே நூலாகத் தொகுத்தவர் உருத்திரசன்மர் என்னும் புலவர். மதுரை உப்பூரி குடிகிழான் மகனார் உருத்திரசன்மர் என்பது இவருடைய முழுப்பெயர். இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரனார் செய்த உரையே சிறந்த உரையென்று தீர்ப்பு கூறியவர் இவர்தான். இவர் முருகனுடைய அவதாரம். ஊமை. ஐந்து வயதிலேயே நுண்ணறிவு படைத்த அருந்தமிழ்ப் புலவராய் விளங்கினார். ஊமையாயினும் காது கேட்கும். இறையனார் அகப்பொருளுக்குப் பல புலவர்கள் உரை யெழுதியிருந்தனர். அவர்கள் உரை ஒவ்வொன்றையும் படித்துக் காட்டும்போது நக்கீரர் உரைக்குத் தான் தலையசைத்துப் புன்முறுவல் காட்டினாராம். இவ்வாறு இவரைப்பற்றிய வரலாறு ஒன்று வழங்குகின்றது. உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியனே இந்நூலைத் தொகுக்கும்படி செய்தவன். இவன் கடைச் சங்கத்தைக் காப்பாற்றி வந்தவன். இவனும் சிறந்த தமிழ்ப் புலவன். அகநானூற்றின் இருபத்தாறாவது பாடல் இவன் பெயரில் உள்ளது. இந்நூலின் சிறப்பு அகநானூற்றுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்நூற்பாடல்கள் ஐவகை நிலங் களின் இயற்கைத் தோற்றங்களை அழகுற எடுத்துக் காட்டுவதோடு நின்று விடவில்லை; ஐவகை நிலத்து மக்களின் ஒழுக்கங்களைப் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி சுவையுடன் சொல்லுவதோடு நின்றுவிடவில்லை; தமிழ்நாட்டின் பழைய வரலாறுகள் பலவற்றை எடுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழர் வரலாறுகளை அறிவதற்கு அவைகள் பெரிதும் உதவும். மூவேந்தர்களின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களுடைய வீரச் செயல்கள், அவர்களுடைய படைத்தலைவர்களின் பெருமைகள் இவைகள் பல பாடல் களிலே காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலே வாழ்ந்த வள்ளல்களிலே சிலருடைய பெயர்கள், அவர்களுடைய பெருமைகள், தமிழ்நாட்டிலே வாழ்ந்த வீரர் களிலே சிலருடைய பெயர்கள், அவர்கள் புரிந்த போர்கள் முதலியன பல பாடல்களிலே காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலே சிறந்திருந்த நகரங்கள், ஊர்கள், கடல் துறைமுகங்கள் ஆகியவை பல பாடல்களிலே காணப்படுகின்றன. பல ஆறுகளையும், மலைகளையும் காணலாம். இவைகள் எல்லாம் வரலாறுகளாக நேரடியாகக் கூறப்பட வில்லை. உவ மானங்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. உவமை கூறும் முறையிலே தமிழர்களின் வீரம், கொடை முதலியவற்றைக் குறிக்கின்றனர். சிறந்த நகரங்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் ஆகியவைகளையும் குறிப்பிட்டிருக்கின்றனர். இது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் திறமையைக் காட்டுவதோடு, அவர்கள் தமிழகத்தின் மீது கொண்டிருந்த பேரன்பையும் விளக்கும். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல் களிலேயும் இம் முறையிலே உவமைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஆயினும் அகநானூற்றில் கூறப் படும் அளவு அவைகள் விரிவாக இல்லை. இதுவே இந்நூலின் தனிச் சிறப்பாகும். ஐவகை நிலங்களின் தன்மை, அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள், அந்நிலங்களின் இயற்கைத் தோற்றம் ஆகியவைகளை அகநானூற்றுப் பாடல்களிலே விளக்கமாகக் காணலாம். காதல் மணம் முன் பின் அறியாத ஒரு ஆணும் பெண்ணும் திடீரென்று ஒருவரோடு ஒருவர் சந்திக்கின்றனர். இருவரும் மணமாகாதவர்கள். ஒத்த பருவமும், ஒத்த உருவமும், ஒத்த நிலைமையும் உடை யவர்கள் இருவர் கண்களும் ஒன்றுபடுகின்றன. உள்ளத்தாலும் ஒன்றுபடுகின்றனர். பின்னர் இருவரும் இரவிலும் பகலிலும் அடிக்கடி சந்தித்து அகமகிழ்கின்றனர். இவர்களுடைய சந்திப்புக்குத் தோழி துணை செய்வாள். இந்த நிகழ்ச்சிக்குக் களவுமணம் என்று பெயர். இதுவே காதல் மணமாகும். இது குறிஞ்சித்திணை. அதாவது குறிஞ்சி சில ஒழுக்கம். இக்களவு மணத்தின் அடிப் படையான முதற் சந்திப்பைப்பற்றி ஒரு அகநானூற்றுப் பாட்டு அழகாக உரைக்கின்றது: பூக்கள் நிறைந்த மலைச் சாரலிலே என் தோழிமார்களுடன் வேங்கை மலர் கொய்வதற்காகப் போனோம். `புலி புலி என்று ஆரவாரித்துக் கொண்டே வேங்கை மலரைப் பறித்துக் கொண்டி ருந்தோம். இந்த ஓசையைக் கேட்டவுடன் கண்களைப் போன்ற ஒளி பொருந்திய செங்கழுநீர் மலர்களை ஊசியின் துணைகொண்டு கோத்துச் செய்யப்பட்ட மாலையைத் தோளிலே அணிந்தவன்; தலையின் பக்கத்திலே செம்மலர் மாலையை அணிந்தவன்; மார்பிலே செஞ்சந்தனம் பூசியவன்; வரிந்து கட்டிய வில்லிலே ஒரு அம்பைத் தொடுத்தவன், `நீங்கள் சொல்லிய புலி யாது? அப்புலி எத்திசையிலே சென்றது? என்று கேட்டுக்கொண்டே எங்கள் எதிரில் வந்து நின்றான். அவனைக் கண்டு நாங்கள் நாணமடைந்தோம். நாங்கள் ஒருவர் பின் ஒருவராக எங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றோம். அவன் எங்கள் நிலையைக் கண்டு மிகவும் அன்புடன் `ஐவகையாகக் கூந்தலை அழகு செய்து முடித்துக் கொள்ளும், கருமையும் குளிர்ச்சியும் பொருந்திய தலை மயிரை உடையவர் களே! அழகிய நெற்றியை உடையவர்களே! அழகுள்ளவர்களே! உங்கள் வாயினால் பொய் சொல்வதும் உண்டோ? என்று கேட்டான். பின்னர் மெதுவாக-குதிரையை மெதுவாகச் செலுத்தும் தேரையுடையவன்-எங்களை நேரே பார்த்தான். உன் மகளுடைய மையுண்ட கண்களைப் பல முறை நோக்கினான்; அவளும் நோக்கினாள். பிறகு அந்த மலை நாட்டின் தலைவன் போய் விட்டான். மலிபூஞ்சாரல் என்தோழி மாரோடு ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப் புலிபுலி யென்னும் பூசல் தோன்ற; ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசிபோகிய சூழ்செய் மாலையன், பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு யாதோ மாற்றம்; மாதிறம் படர்என, வினவி நிற்றந்தோனே, அவன் கண்டு எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி நாணி நின்றெனெம் ஆகப், பேணி ஐவகை வகுத்த கூந்தல், ஆய்நுதல் மையீர் ஓதி மடவீர்! நும்வாய்ப் பொய்யும் உளவோ என்றனன்; பையெனப் பரிமுடுகு தவிர்த்ததேரன் எதிர் மறுத்து, நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் சென்றோன் மன்ற அக்குன்று கிழவோனே. (பா. 48) இதுவே அப்பாடலாகும். தலைவனும் தலைவியும் சந்தித்ததைப்பற்றித் தோழி செவிலித்தாய்க்குக் கூறியது போலப் பாடப்பட்டது இப்பாட்டு. கற்பு மணம் இப்படிக் களவு மணம் புரிந்துகொண்ட தம்பதிகள் விரைவில் கற்பு மணம் செய்துகொள்ளுவார்கள். தலைவன் பெண்ணின் பெற்றோரின் சம்மதம் பெற்று அவளை மணந்து கொள்வான். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தலைவன் அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய்விடுவான். பின்பு தலைவனும் தலைவியும் வெளிப்படையாக வாழ்ந்து இல்லறம் நடத்துவர். களவின்றிக் காதலனும் காதலியும் வெளிப்படையாக ஒன்று சேர்ந்து வாழ்வதே கற்பு மணமாகும். ஒரு தலைவனும் தலைவியும் களவு மண வாழ்க்கையிலே காலங் கடத்துகின்றனர். இச்செய்தியை ஊரார் அல்லது தலைவியின் பெற்றோர்-உணர்வதற்கு முன்பே கற்புமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது தலைவி யின் ஆவல். ஆனால் தலைவன் தவணை சொல்லிக் காலங்கடத்திக் கொண்டே போனான். அப்பொழுது தோழி, ஊரார் அறிய மணம் புரிந்து கொள்ளும்படி தலைவனிடம் வலியுறுத்துகின்றாள். இம்முறையில் அமைந்துள்ளது ஒரு பாட்டு. நீ ஒருநாள் வராமல் நின்றுவிட்டாலும் என் தோழி உயிர் வாழமாட்டாள். அவளுடைய தோளைத் தழுவிக் கொண்டு பிரியாமல் வாழ்வதிலே நீயும் ஆவலுடையவன். எவ்வளவுதான் அளவு கடந்த காதலர்களாயினும் சரி, அறிவுடையோர், பிறர் பழிக்கும்படி அடைகின்ற இன்பத்தை விரும்பமாட்டார்கள். ஆதலால் வானளாவிய மலையையுடையவனே நீ மணம் செய்வதற்குத் தடையென்ன? நாள் இடைப்படின் என்தோழி வாழாள்; தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; கழியக் காதலராயினும், சான்றோர் பழியொடு வருஉம் இன்பம் வெஃகார்; வரையின் எவனோ வான்தோய் வெற்ப? (பா. 112) இல்லற வாழ்க்கை கற்புமணம் புரிந்து வாழும் காதலர்கள் வாழ்விலே என்றும் இன்பத்தென்றல் வீசும். அவர்கள் கருத்தொருமித்து வாழ்ந்து இல்லறத்திற்குரிய கடமைகள் அனைத்தையும் தவறாது நடத்துவர். இதுவே பண்டைத்தமிழர்களின் இயல்பு. இதனைப் பல பாடல்களிலே காணலாம். ஒருவன் தன் காதலியுடன் ஒன்றுபட்டு இன்புற்று வாழ்கின்றான். அப் பொழுது அவன் பொருள் தேடப் புறப்பட ஆயத்தமானான். அச்சமயத்தில் அவன் காதலியின் தோற்றத்தைக் கண்டான்; தான் பொருள் தேடச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டான். இச்செய்தியைக் கூறுகிறது ஒரு பாட்டு. கற்கள் நிறைந்த வலிய நிலமாகிய பயனற்ற பாலை வனத்தைக் கடந்து பொருள் தேடச் செல்ல நினைப்பீராயின், அது அறமாகாது. முன்னோர் மொழிந்த பழமையான சொல்லும் இதுவேயாகும்;. என்று இப்படிச் சொல்லுகிற வளைப் போல என் எதிரில் வந்து நின்றாள். இக்கருத்தைக் குறிப்பால் காட்டி-முகத்தால் மொழிகின்ற வளாய்-சித்திரத்தைப் போல-உள்ளத்திலே என் பிரிவாகிய ஒன்றையே நினைத்து-ஒதுங்கி நின்றாள். கண்ணின் கருமணியை மறைத்த-நடுக்கந்தரும்-நீர் நிறைந்த கண்களுடன், மார்பிலே அணைத்துக்கொண்டிருந்த புதல் வனுடைய மெல்லிய தலையிலே உள்ள-நல்ல நீரிலே தோன்றிய-தொடுத்த-செங்கழுநீர் மாலையை முகர்ந்து பெருமூச்சுவிட்டாள். அப்பொழுது அச்சிறந்த மலர் தன் அழகிய உருவிழந்து-அழகு சிதைந்த நிலையைக் கண்டோம்; உடனே புறப்பாட்டை நிறுத்தினோம். பரல் முரம்பாகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு அன்றுஎன மொழிந்த தொன்றுபடு கிளவி அன்னவாக எண்ணுநள் போல; முன்னம் காட்டிய முகத்தின் உரையா. ஓவச் செய்தியின் ஒன்றுநினைந்து ஒற்றிப்; பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே. (5) ஒரு தலைவன் தானே தன் நெஞ்சுடன் கூறிக்கொண்டதாக அமைந்துள்ளது இப்பாட்டு. பண்டைக்காலத்தில் காதலர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்ந்தனர், அவர்களுடைய இல்லற வாழ்வு எவ்வளவு சிறந்திருந்தது என்பதை இப்பாடலால் அறியலாம். காதலர் பிணைப்பு கணவன் நலத்திலே கருத்துடையவளாயிருப்பவளே கற்புடைய மனைவி. கணவன் பிரிந்து போயிருக்கும் பொழுதும் அவனிடம் வெறுப்படைய மாட்டாள். அவன் கருதிச் சென்ற காரியத்திலே வெற்றி பெற்று விரைவில் திரும்ப வேண்டும் என்று விரும்புவாள். தன் கணவன் மேல் எவரும் எப்பழியும் சுமத்த இடந்தர மாட்டாள். எப்பொழுதும் விழாக்கள் நடந்துகொண்டிருப்பதும், பகைவர்களுக்குப் பயமூட்டக் கூடியதுமான இப்பழமையான ஊரிலே வாழ்வோர் அனைவரும் குற்றமற்றவர்கள். ஆனால் சேரியில் வாழும் பரத்தையரோ பலரையும் புறம் பேசும் பண்பினர்; பழிக்கத்தக்க ஒழுக்கமுடையவர்கள்; கொடுஞ்சொல் கூறும் குணத்தினர். அவர்கள் என்னை இகழ்ந்து பேசினாலும் பேசட்டும். நுண்மையான வேலைப்பாடமைந்த ஆபரணங்களை அணிந்த - எருமை என்பவனது குடநாட்டைப் போன்ற - என்னுடைய நல்ல அழகு தொலைந்தாலும் தொலையட்டும். பொருள்தேடப் போயிருக்கும் காதலர் என்றும் நோயின்றி இனிது வாழ்க. அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப் பழியிலர்; ஆயினும் பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெம்சொல் சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; நுண்பூண் எருமை குடநாட்டன்ன என் ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் நோயிலராக நம் காதலர். (பா. 115) இதனால் மனைவியின் உள்ளன்பைக் காணலாம். தனக்கு எது நேர்ந்தாலும், தன் கணவன் இனிது வாழ வேண்டும் என்று விரும்புகின்றாள். இதுவே அன்புள்ள மனைவியின் அருங்குண மாகும். பிரிந்து சென்ற கணவன் தன் வினையிலே வெற்றி பெற்றான். காதலியிடம் தான் திரும்பி வருவதாக வாக்களித்த கார்காலமும் வந்துவிட்டது. தனித்திருக்கும் காதலியைக் கண்டு அவள் கவலையை விரட்ட வேண்டும் என்னும் ஆவல் அவனைத் தள்ளுகிறது. அவன் தேரின் மேல் ஏறி விரைந்து வந்து கொண்டி ருக்கின்றான். அப்பொழுது அவன் தன் தேர்ப்பாகனிடம் விரைவாகத் தேரை ஓட்டும்படி கூறுகின்றான். குதிரைகளைப் பற்றிய நூல்களைக் கற்றறிந்த பாகனே! விரைவாக ஓட்டு. பகைவர்க்குப் பயங்கொடுக்கும் நமது பழமையான ஊரிலே நீண்ட கொடிகள் அசைந்து பறந்து கொண்டிருக்கும்; வானை அளவிய மதில் சூழ்ந்திருக்கும்; நள்ளிரவிலே காவல்காப்போர் நாட்டியிருக்கின்ற விளக்குகள் வானத்து நட்சத்திரங்களைப் போல ஒளி வீசிக்கொண்டிருக்கும் சிறந்த பாதுகாவலை யுடைய நகரம். இத்தகைய அழகிய நகரிலே அடக்கமுடன் இருப்பவள்; குற்றமற்ற அருந்ததி போன்ற கற்புடையவள்; இரேகை படர்ந்த சிறந்த குளிர்ந்த கண்களையுடையவள் மூங்கிலைப்போன்ற அழகிய தோள்களையுடையவள்; தெய்வ மாதைப் போன்றவள்; என் காதலியான அரிவை இத்தகையவள்; அவள் மகிழ்ச்சியடை யும்படி சென்று காண்போம் என்பது இந்நூலின் 114வது பாடல். இப்பாடல் காதலனுடைய பிரியாத பேரன்பைக் காட்டு கின்றது. அவன் உடல் பிரிந்து போயிருந்தாலும் உள்ளம் அவளுடன் இணைந்தே யிருந்தது என்பதைக் காணலாம். இவ்விரண்டு பாடல்களாலும் காதலன் - காதலிகளின் பிணைப்பின் பெருமையை உணரலாம். திருமணச் சடங்குகள் பண்டைத் தமிழகத்தில் ஆணும் பெண்ணும் தனியே சந்திப்பர். அன்பைப் பரிமாறிக் கொள்ளுவர். வாழ்க்கை உடன் படிக்கை செய்துகொள்ளுவர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் வாழ்ந்து இன்புறுவர். நாளாவட்டத்தில் இம்முறை யினால் சில குற்றங்கள் தலை காட்டத் தொடங்கின. ஆடவர் களிலே சிலர் வாக்குறுதியை மீறினர். காதல் மணம் புரிந்த மகளிரைக் கைவிட்டு வேறு பெண்ணை மணம்புரிந்தனர். அவர்கள் ஒழுக்கம் களவொழுக்கமாக இருந்ததால் நான் அந்தப் பெண்ணுடன் வாழவில்லை; அவளை மணம்புரிந்து கொள்ளுவ தாகவும் வாக்களிக்கவில்லை என்று பொய் சொல்லவும் தொடங்கினர். இந்நிலைமை ஏற்பட்ட பிறகுதான் பெரியோர்கள் திருமணத்திற்கான சடங்குகள் சிலவற்றை உண்டாக்கினர். பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்ற தொல்காப்பியச் சூத்திரம் இவ்வுண்மையைக் காட்டும். ஐயர்-தலைவர். இது சமுதாயத் தலைவர்களைக் குறிக்கும். சமுதாயத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட திருமணச் சடங்குகள் யாவை என்பதை இரண்டு அகநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. நல்லநாள்; குளிர்ந்த பந்தல்; பந்தலிலே புதுமணல் பரப்பப் பட்டிருந்தது. பூமாலைகள் புனைந்து தொங்கி கொண்டிருந்தன. இரவு கழிந்தது; காலை நேரம் வந்தது. கல்யாணப் பந்தலிலே வரிசை வரிசையாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வயதேறிய நல்ல பெண்கள் தம் தலையிலே தண்ணீர் குடத்தை ஏந்தி நின்றனர். அந்த நீர்க்குடங்களை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிக் கொடுத் தனர். பிள்ளை பெற்ற நான்கு மாதர்கள் அந்த நீர்க் குடங்களை வாங்கி மணமகளை நீராட்டினர். நீராட்டும்போது `இவள் கற்பு தவறாமல் கணவனுடைய அன்புக் குரியவளாய் ஆகுக என வாழ்த்தினர். பின்னர், பெற்றோர் மணமகளை வாழ்த்தி, மணமகனிடம் கொடுத்தனர். அதன்பின் சுற்றத்தார் விருந்துண்டு மகிழ்ந்தனர். திருமணத்தன்றே கணவனும் மனைவியும் தனித்திருந்து வாழ்க்கை நடத்தினர். இதுவே அகநானூற்றின் 86-வது பாடலிலே கூறப்பட்டி ருக்கும் திருமண முறை. 136-வது பாடலிலும் இதே கருத்துதான் காணப்படுகின்றது. ஆரம்பகாலத் திருமணச் சடங்கிலே புரோகிதம் இல்லை; மந்திரம் இல்லை; அக்கினி வளர்ப்பும் இல்லை; தாலி கட்டப்பட்டதாகவும் தெரியவில்லை. மாதர்களே முன்னின்று மணவினைகளை நடத்தி வைத்தனர். பிற்காலத்தில் தாலிகட்டும் வழக்கம் உண்டாயிற்று. புலிப்பல்லைத் தாலியாகக் கட்டினர். அகநானூற்றிலே இதைக் காணலாம். இதன் பின் வேத விதிப்படி மணம் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது. கடைச்சங்க காலத்திற்கு முன்பே வேத விதிப்படி மணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டது. கலித்தொகையிலே இதைக் காணலாம். பிற்காலத்தில் வேத முறைத் திருமணமே பெரு வழக்காயிற்று. இதனைச் சிலப்பதிகாரத்தால் அறிகின்றோம். கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த மணம் வேதமுறை மணம்; காதல் மணம் அன்று. பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படி-தங்கள் செல்வ நிலைமைக்கு ஏற்றபடி செய்து வைத்த திருமணம். தமிழர்களின் திருமணம் படிப்படியாக மாறுதல் அடைந்து வந்திருப்பதைப் பண்டை இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. முதலில், அநாகரிக காலத்தில் வரைமுறையற்ற வாழ்க்கை; பின்னர் காதல் களவு மணம்; அதன்பின் கற்பு மணம்; பிறகு சடங்கு மணம்; பின்னர் தாலி மணம்; பின்னர் வேதமணம். இவ்வாறு மாறிக்கொண்டே வந்திருக்கின்றது. புத்திரப் பேறு புத்திரன் என்பது வடமொழிச் சொல். புத் என்னும் நரகத்தை நீக்குகிறவன் என்று பொருள். இதே பொருளமைந்த சொல் தமிழில் இல்லை. பிள்ளை, பெண், மகன், மகள், மக்கள், சிறுவர், செல்வன், செல்வி, காதலன், காதலி, கான்முளை, வழித்தோன்றல் இவைகள் மக்களைக் குறிக்கும் சொற்கள். இச்சொற்களிலே புத்திரன், புத்திரி என்ற சொற்களில் உள்ள பொருள் இல்லை. புத்திரன் செய்யும் சடங்குகளால்தான் பிதிர்க்கள் இன்பமடைய முடியும் என்பது புராணக் கொள்கை. இக் கொள்கை பழங்காலச் சீன மக்களிடங்கூட இருந்ததாகச் சொல்லுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரிடமும் இக்கொள்கை பரவியி ருந்தது. சங்க காலத் தமிழர் கள் இக்கொள்கையிலே நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை அகநானூற்றிலே காணலாம்; புறநானூற்றிலும் காணலாம்; திருக்குறளிலும் காணலாம். பகைவர்களும் விரும்பத் தகுந்த சிறந்த அறிவினையுடைய மக்களைப் பெற்றெடுத்த நல்லோர்கள் இவ்வுலகத்திலும் புகழுடன் வாழ்வார்கள்; குற்றமில்லாமல் மறுவுலக இன்பத்தையும் அடைவார்கள். இவ்வாறு பலரும் கூறிய பழைய வார்த்தைகள் எல்லாம் உண்மையாக இருப்பதைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துப, செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம். (பா. 66) இப்பாடல் பிள்ளையில்லார்க்குப் புண்ணியலோகம் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுவதைக் காணலாம். புதல்வன் என்ற சொல் அகநானூற்றிலே பல பாடல்களிலே வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. செல்வத்தின் சிறப்பு இல்லறம் இனிது நடைபெறச் செல்வம் வேண்டும். செல்வத்தைத் தேடும்பொருட்டே தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். பாலைத்திணைப் பாடல்களிலே இக்கருத்தைக் காணலாம். கற்புமணம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்துங் காலத்திலும் காதலன் பொருள் தேடப் புறப்பட்டுப் போவான். களவு மணம் நிகழுங் காலத்திலும் பொருள் தேடிக் கொண்டு வந்த பின் மணம் செய்து கொள்ளுகிறேன் என்று தலைவிக்கு உறுதிமொழியளித்துவிட்டுப் பிரிந்து போவான். இதற்கு வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் என்று பெயர். செல்வம் இல்லாவிட்டால் இல்லறத்தை நன்றாக நடத்த முடியாது; இல்லற தர்மங்களை நிறைவேற்ற முடியாது. இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலும் இதனைக் காணலாம். அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும். (பா. 155) `பாவங்களைச் செய்யாமல் அறத்தைப் பின்பற்றி நடக்கும் வாழ்க்கையும், ஒரு பொழுதும் பிறனுடைய வீட்டு வாசற் படியிலே போய் நின்று இரக்காத செல்வமும் ஆகிய இரண்டும் பொருளால்தான் உண்டாகும். உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார் நன்றுபுரி காட்சியர் சென்றனர். (பா. 245) `உயிரினும் சிறந்த உயர்ந்த செல்வத்தைத் தேடிக்கொண்டு வரும் பொருட்டு, நன்மை செய்யும் அறிவுடையவர் சென்றார். இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர் புலம்பில் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அரும் பொருள். (பா. 389) `பொருளை விரும்பி இரப்பவர்கள் ஏந்திய கைகளிலே நிறையும்படி, புரப்பவர்கள் துன்பமற்ற உள்ளத்துடன் புதிய பொருள்களைக் கொடுத்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான அரிய செல்வம். வறுமையின் கொடுமை `வறுமையால் வாடுவோர்க்கு வாழ்க்கையிலே இன்பம் இல்லை. அவர்கள் உற்றார், உறவினர், நண்பர்களாலும் வெறுக்கப் படுவார்கள். பொருளற்றவர்கள் இவ்வுலகிலே புழுவாய்த் துடித்துத்தான் சாகவேண்டும். ஆதலால் பொருளீட்டும் முயற்சி ஒவ்வொருவர்க்கும் வேண்டும்; என்ற உறுதியான கொள்கை தமிழர்களிடம் இருந்தது. தம் நயந்து உறைவோர்த் தாங்கித், தாம்நயந்து இன்அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோரே. (பா. 151) `வறியவர்களால் தம்மை விரும்பி வாழும் சுற்றத்தினரைக் காப்பாற்ற முடியாது; தாம் விரும்பி-நல்ல அன்பு காட்டுகின்ற-நட்பினருடன் இன்புற்றுக் கலந்து வாழவும் முடியாது. நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல. (பா. 279) `வறியோர்க்கு நண்பர்கள் இல்லை. அவர்களுடைய உறவினர்களின் துன்பத்தை அவர்களால் களையவும் முடியாது. அவர்கள் விரோதிகள் செல்வச் செருக்கால் இகழ்வார்கள். இவ்வறியவர்கள் இவற்றையெல்லாம் கண்டு, தாங்கள் வாழும் இடத்தில் நிலைத்து வாழ விரும்பமாட்டார்கள். இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும், அருள் நன்கு உடையர் ஆயினும், ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் யானும் அறிவென். (பா. 335) `துன்பவிருள் பொதிந்த நெஞ்சமுடைய ஏழைகளின் துயரத்தைப் போக்க வேண்டும் என்ற இரக்கமுடையவர் களானாலும், பொருள் இல்லாவிட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? பொருள் இன்றேல் ஏழைகளின் மனத்துயரை மாற்றவே முடியாது. இவ்வுண்மையை நானும் அறிவேன். வறுமையின் இயல்பை எடுத்துக்காட்டும் இத்தகைய பாடல்கள் பல அகநானூற்றிலே காணப்படுகின்றன. நீதியுரைகள் மக்கள் பின்பற்றவேண்டிய அறவுரைகள் பலவற்றை அகநானூற்றுப் பாடல்களிலே காணலாம். இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம். (பா. 53) `இல்லையென்று சொல்லிக்கொண்டு வந்து இரந்தோர்க்குத் தன்னால் முடிந்ததை இல்லையென்று சொல்லி மறைப்பதற்குத் துணிவில்லாத வலிமையற்ற நெஞ்சம். `இல்லாதவர்க்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். இதுவே மனிதத்தன்மை. என்ற கருத்தை வலியுறுத்து கின்றது இது. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒரூ உம் நயனில் மாக்கள். (பா. 71) `செல்வம் நிறைந்திருக்கும் காலத்தில் நட்பு செய்வர். செல்வம் குறைந்துவிட்டால், செல்வம் நிறைந்திருக்கும் வேறு மனிதரைத் தேடும் பொருட்டுப் பிரிவர். செல்வம் குறைந்தவர் களால் தனக்குப் பயனில்லை என்று கருதி அவருடைய பழைய தொடர்பை விட்டுவிடுவர். இவர்கள் நன்றியறிவற்ற விலங்குகள். ஒருவர்க்குச் செல்வமுள்ள காலத்தில் அவருடைய உதவி பெற்று வாழ்வதும், அவர் செல்வத்தை இழந்து வறுமைக் காளானபோது அவரை விட்டுப்பிரிதலும் நன்றிகெட்ட தன்மை என்பதை இதனாற் காணலாம். இன்பமும், இடும்பையும், புணர்வும், பிரிவும் நன்பகல் அமையமும், இரவும் போல வேறுவேறு இயலவாகி மாறு எதிர்ந்து உள. (பா. 327) `இன்பமும் துன்பமும், கூடுதலும் பிரிதலும், பகலும் இரவும் போன்றவை. இரண்டும் வேறு வேறு தன்மை யுடையனவாய் மாறி மாறி வருவன. இவ்வுண்மையைக் கண்டறிந்தவர்கள் இன்பத்தால் செருக்கடைய மாட்டார்கள். துன்பத்தால் உள்ளம் சோர்ந்து துடிக்கமாட்டார்கள். இராமாயண பாரதம் சங்ககாலத் தமிழர்கள் இராமாயணத்தைப் பற்றி அறிந்திருந்தனர். இராமாயணக் கதை தமிழ் நாட்டிலே பரவி யிருந்தது. பாரதக் கதையும் தமிழர்களுக்குத் தெரிந்ததுதான். இவற்றைச் சங்க நூல்கள் பலவற்றில் காணலாம். அகநானூற்றிலே இராமாயணத்தைப்பற்றிய குறிப்பும் பாரதத்தைப்பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன. வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை, வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம். (பா. 70) வெல்லுகின்ற வேற்படையையுடைய பாண்டியனது பழமையான தனுக்கோடியிலே-முழங்கிக் கொண்டிருக்கின்ற பெரிய கடலின் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் கடல்துறையிலே-வெல்லுகின்ற போர்த்திறமையையுடைய இராமன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டி ருந்தபோது பறவைகளின் ஓசையை அடக்கிய பல விழுது களையுடைய ஆலமரம். இராமன் இலங்கைக்குப் போகும்போது தனுக்கோடியில் ஒரு ஆலமரத்தின் கீழ்த் தங்கினான். வானர வீரர்களுடன் அமர்ந்து இலங்கையைப்பற்றிய செய்திகளை ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவ்வால மரத்தின் மேலிருந்த பறவைகள் கூச்சலிட்டன. அந்தக் கூச்சலை அடக்கியபின் ஆலோசனை புரிந்தனர். இந்த இராமாயணக் கதையை இவ்வடிகள் நினைப்பூட்டுகின்றன. இராமாயணத்தில் உள்ள சிறு நிகழ்ச்சிகள் கூட தமிழகத்திலே பரவியிருந்தன என்பதை இதனால் அறியலாம். முதியர்ப்பேணிய உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை. (பா. 233) `தன் முன்னோரின் வீரத்தையும் கொடையையும், பேணிப் பாதுகாத்த உதியஞ் சேரலாதன், பாரத யுத்தத்திலே இரு பக்கத்துப் படைகளுக்கும் நிறைய சோறு போட்டகாலத்தில். இது பாரதப் போரையும், பாரதப் போரிலே இரு பக்கத்துப் படைகளுக்கும் சோறிட்ட சேரமான் பெருஞ்சோற்று உதியலாதனையும் குறித்தது. திருவேங்கடம் திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையே பண்டைத் தமிழகத்தின் வடவெல்லை. பண்டைத்தமிழ் நூல்கள் எல்லா வற்றிலும் இதைக் காணலாம். அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலே வேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படு கின்றன. வேங்கடத்திற்கு அப்பால் உள்ள நாடு வேற்றுமொழி வழங்கும்நாடு. அங்கு வாழ்வோர் வடுகர். அவர்கள் வழங்கும் மொழி வடுகு. இச்செய்திகளை அகநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்; (பா. 211) குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கட வரைக்கு அப்பால் வேற்றுமொழி வழங்கும் நாட்டில் இருப்பாராயினும். இதனால் வேங்கடமலை வரையிலுந்தான் தமிழ்நாடு; அதற்கு அப்பால் உள்ளது வேற்றுமொழி வழங்கும் நாடு என்பதைக் காணலாம். வினைநவில் யானை விறல்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள்ளருவி வேங்கடத்து உம்பர், ..................... .................................... ................ வடுகர் தேஎத்து, நிழல்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல் அவிர் அரும்சுரம் நெடிய என்னாது அகறல் ஆய்ந்தனர். (பா. 243) போர்த் தொழிலிலே சிறந்ததென்று பேசப்படும் யானைப் படை-வெற்றிகொள்ளும் போர்த்திறமை-இவைகளையுடைய தொண்டையர்களின் ஆட்சிக்குட்பட்டது. கூட்டமாக மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும் மிகவுயர்ந்த சிகரத்தை யுடையது; உயர்ந்த வெண்மையான அருவியை உடையது. இத்தகைய வேங்கடமலைக்கு அப்பால் உள்ள வடுகர் வாழும் தேசத்திலே நிழலற்ற நீரற்ற-நீண்ட வழியான-நெருப்பு மயமான-நடப்பதற்கு அரிய பாலைவனத்தை நீண்ட தூரம் என்று நினைக்காமல் கடந்து bசல்வதற்குvண்ணினார்.‘வேங்கடமலை பண்டைக் காலத்தில் தொண்டை நாட்டு மன்னர்களின் ஆட்சியிலேயிருந்தது. அதற்கு அப்பால் உள்ள நாடு வடுகுமொழி வழங்கும் நாடு. வடுகு மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழி. என்ற உண்மை களை அகநானூற்றால் அறியலாம். இன்று வேங்கடம் திருமாலின் திருப்பதியாக விளங்கு கின்றது. ஆழ்வார்களும் மற்றும் பல அறிஞர்களும் அதன் பெருமையைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். அகநானூற்றுப் பாடல்களிலே வேங்கடம் திருமால் எழுந்தருளியிருக்கும் திருப்பதி என்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை. மலையின் செல்வமும் செழிப்புந்தான் பாராட்டப்பட்டிருக்கின்றன. புறநானூற்றிலும் நான்கு பாடல்களில் வேங்கடவரையைப் பற்றிக் காணப்படுகின்றது. அப்பாடல்களிலும் அது ஒரு திருமால் திருப்பதி என்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை. ஆகை யால், சங்க காலத்திலே வேங்கடமலை தெய்வம் குடிகொண்ட திருவேங்கடமாகவோ, திருப்பதியாகவோ விளங்கவில்லை என்று எண்ண இடந்தருகின்றது. ஆரியர்கள் வடநாட்டினரை ஆரியர்கள் என்ற பெயரால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அகநானூற்றிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டு மன்னர்களுக்கும், வடநாட்டு மன்னர் களுக்கும் சங்க காலத்திற்கு முன்பே பல போர்கள் நடந்திருக் கின்றன. தமிழர்களும் வடநாட்டின் மேல் படையெடுத்திருக் கின்றனர்; ஆரியர்களும் தமிழ்நாட்டின்மேல் படையெடுத் திருக்கின்றனர். ஆரியர்-தமிழர் போராட்டங்களுக்கு இனவெறியோ, மதவெறியோ, கலாசார வெறியோ காரணங்கள் அல்ல. தமிழ் நாட்டு மன்னர்கள்-சேர, சோழ, பாண்டியர்கள்-அடிக்கடி தங்களுக்குள் போரிட்டு வந்தனர். இவர்கள் போரிட்டுக் கொள் வதற்கு என்ன காரணமோ, அதே காரணந்தான் தமிழரையும் ஆரியரையும் சண்டையிடச் செய்தது. சேர, சோழ, பாண்டியர்கள் கலாசாரத்தில் எப்படி ஒன்றுபட்டிருந்தனரோ, அதைப் போலத் தான் அக்காலத்தில் ஆரியரும் தமிழரும் கலாசாரத்தில் ஒன்று பட்டிருந்தனர். ஆரியர் பொன்படு நெடுவரை (பா. 398) ஆரியர்களின் பொன் விளைகின்ற உயர்ந்த இமயமலை. ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி (பா. 396) ஆரியப் படைகள் அலறும்படி தாக்கி-பெரும் புகழும் பழமையும் வாய்ந்த இமயமலையிலே-வளைந்த வில் முத்திரை யைப் பொறித்து-தன்னை எதிர்த்த கோபமுடைய வடநாட்டு மன்னர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட சேரனது வஞ்சிமா நகர். இவைகளால் வடநாட்டினரை ஆரியர்கள் என்று கூறியிருப் பதையும், தமிழ் மன்னர்கள் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதையும் காணலாம். மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின்; (பா. 336) மழையைப் போன்ற அம்புகளையும், மேகத்தைப் போன்ற கேடகங்களையும் உடைய சோழமன்னர்களின்-விற்படையோர் நிறைந்த சிற்றூர்கள் சூழ்ந்த-வல்லத்தின் புறத்திலே, காவற் காட்டிலே தோற்று ஓடிப்போன ஆரியர்களின் படையைப்போல. ஆரியர் படைகள், தஞ்சையின் பக்கத்திலே உள்ள வல்லம் வரையிலும் படையெடுத்து வந்த செய்தியை அறியலாம். இந்தப் படையெடுப்பு, வடநாட்டிலிருந்து வந்த ஆரியர் படையெடுப்பா? அல்லது தமிழ் நாட்டிலே நிலைபெற்றிருந்த ஆரியர்களின் படையெடுப்பா? என்பது ஆராயத் தக்கது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலே ஆரிய அரசன் பிரகதத்தன் என்பவன் ஒருவன் ஏதோ ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தான் என்று அறிகின்றோம். திருநெல்வேலிச் சீமையிலே திருக்குற்றாலத்தை யுள்ளிட்ட ஒரு பகுதிக்கு ஆரிய நாடு என்ற பெயர் வழங்கியிருக்கின்றது. திருக் குற்றாலத்தைப் பற்றிய நூல்களிலே இதைக் காணலாம். ஆரியங்கா, ஆரியக்குடி, ஆரியரூர், ஆரியப்படையூர், ஆரியன் குப்பம் என்ற பெயர் கொண்ட இடங்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. ஆரியக்குடி அரியக்குடி என்றும், ஆரியரூர் அரியலூர் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றன. இவைகள் இன்னும் சிந்திக்கத்தக்க செய்திகள். வரலாறுகள் கோசர்கள் என்பவர்கள் போர் செய்வதிலே சிறந்தவர்கள். அவர்களுடைய செல்வங் கொழிக்கும் நகரம் செல்லூருக்கும் கிழக்கில் உள்ளது. (பா. 90) கோசர்கள் துளூவ நாட்டை ஆண்டவர்கள். (பா. 15) புல்லி யென்பவன் மழவர் நாட்டைத் தனக்குப் பணியச் செய்தான். வடவேங்கடத்தை ஆண்டவன். (பா. 61) பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்ற இடத்திலே எழுவரைப் போரிலே வென்றான். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்போர் அவ்வெழுவர். (பா. 36) கரிகாற் சோழன், வெண்ணி என்ற இடத்திலே பதினோரு வேளிர்களையும், தன்னை எதிர்த்த மற்ற மன்னர்களையும் போரிலே வென்றான். (பா. 246) வெண்ணிப் போர்க்களத்திலே, கரிகால் வளவனுடன் போரிட்ட சேரலாதன் தோல்வியடைந்தான். (பா. 55) காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்து அரசாண்ட பொலம் பூட்கிள்ளி என்னும் சோழன், கோசர்களின் பெரிய போர்ப் படையை வென்று அவர்கள் ஆண்ட நிலத்தைத் தான் ஆள விரும்பினான். (பா. 205) இளம் பெரும் சென்னி யென்னும் சோழன், வடுகருடன் போர்செய்தான்; அவர்களுடைய கோட்டையை நொறுக்கினான்; அவர்களைக் கொன்று வெற்றி பெற்றான். (பா. 375) காரியென்பவன் கோவலூரின் தலைவன்; பெரிய தேரை யுடையவன்; பெண்ணையென்னும் பேராற்றுத் துறையின் தலைவன். (பா. 35) காரியென்பவன் வில் யுத்தத்திலே சிறந்த ஓரியைக் கொன்றான். அவனுடைய கொல்லி மலையைச் சேர மன்னர்க்குக் கொடுத்தான். (பா. 209) சேரலாதன் என்னும் அரசன் கடற்படையை யுடையவன்; இமயமலையிலே விற்பொறியைப் பொறித்தவன்; மாந்தை என்னும் இடத்திலே பகைவர்கள் பணிந்து கொடுத்த திறைப் பொருள்களைப் பெற்றவன். (பா. 127) பாரியென்னும் வள்ளல் பறம்பு மலையின் தலைவன். அம்மலையை மூவேந்தர்களும் முற்றுகையிட்டனர். அப்பொழுது கபிலரின் ஆலோசனைப்படி அம்மலை யிலே விளைந்த நெல்லைக்கொண்டே உயிர் வாழ்ந்தான். மூவேந்தர்களுடனும் எதிர்த்துப் போர்செய்து அவர்களை விரட்டியடித்தான். (பா. 78) பிட்டன் என்பவன் சேர மன்னனுடைய படைத் தலைவன்; சிறந்த கொடைவள்ளல். (பா. 143) யவனர்களுடைய கப்பல்கள், சேரமன்னர்க்கு உரிமையான சுள்ளியாற்றின் வழியே பொன்னைக் கொண்டு வரும்; திரும்பும் போது மிளகை ஏற்றிக் கொண்டு திரும்பும். இத்தகைய வளம் பொருந்தியது முசிறி என்னும் நகரம். (பா. 149) இந்த முசிறி, பாண்டியனது துறைமுகப் பட்டினம் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. (பா. 57) மன்னர் குலத்தை வேரறுக்க முயன்றவன் பரசுராமன். அவனுடைய படை மழுப்படை. அவன் செல்லூர் என்ற இடத்திலே மிகவும் முயன்று ஒரு வேள்வியைச் செய்து முடித்தான். (பா. 220) ஆதி மந்தியும். அவள் கணவன் ஆட்டனத்தியும் காவிரியின் சங்கமுகத் துறையிலே நீராடினர். அப்பொழுது ஆட்டனத்தி கடலிலே மூழ்கிவிட்டான். ஆதிமந்திய பலவிடங்களிலும் அவனைத் தேடி அலைந்தாள். அவளும் கடலிலே மூழ்கத் துணிந்தாள். இவ்வரலாறு பல பாடல்களிலே காணப்படு கின்றது. இன்னும் நன்னன்வேண்மான், பேகன், அதிகன், ஆய் அண்டிரன் போன்ற பல வள்ளல்களைப் பற்றியும், வீரர்களைப் பற்றியும் குறிப்பிடும் பாடல்கள் பலவுண்டு. மதுரை, கொற்கை, வஞ்சிமாநகர், தொண்டி, உறந்தை, காவிரிப்பூம்பட்டினம், கருவூர், முசிறி, திருச்சிராப்பள்ளி, குடந்தை, பொறையாறு, அள்ளூர், முள்ளூர், ஆமூர், சிறுகுடி, பரங்குன்றம், அலைவாய், தனுக்கோடி முதலிய ஊர்களை இந்நூல் பாடல்களிலே காணலாம். பொதியமலை, வேங்கடமலை, சிறுமலை, திருச்சிராப் பள்ளிமலை, கொல்லி மலை போன்ற பல மலைகளைக் குறிக்கும் பாடல்களும் இந்நூலில் உண்டு. காவிரி, பெண்ணை, வையை, பொருறை, முள்ளி, ஆன் பொருநை போன்ற பல ஆறுகளின் பெயர்களும் அகநானூற்றுப் பாடல்களிலே காணப்படுகின்றன. சூரபன்மனைக் கொன்ற-வேலாயுதத்தையுடைய-முருகன் வீற்றிருக்கின்ற திருப்பரங்குன்றம்; நல்லந்துவன் என்னும் புலவரால் பாடப்பட்ட திருப்பரங் குன்றம் என்று பரங்குன்றைப் பாராட்டுகிறது ஒரு பாடல். (பா. 59) இவை போன்ற இன்னும் பல வரலாற்றுக் குறிப்புகளை இந்த அகநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியலாம். பழக்க வழக்கங்கள் சங்ககாலத் தமிழ் மக்களிடையிலேயிருந்த பல பழக்க வழக்கங்களையும் இந்நூற் பாடல்களிலே காணலாம். யாழை இசைக்கத் தொடங்கும்போது முதலிலே கடவுளை வாழ்த்துவர். பிறகுதான் முறையாக யாழிசைப்பர். (பா. 14) புலிப்பல்லைப் பொன்னோடு சேர்த்துக் கட்டிய தாலியை அணிவார்கள்.(பா. 7) பார்ப்பனர்களிலே யாகஞ் செய்யாத பார்ப்பனர்கள் என்று ஒரு வகுப்பினர் இருந்தனர். சங்குகளை அறுத்து வளையல்கள் செய்வது அவர்கள் தொழில். (பா. 24) வழி நடப்போர் கட்டுச் சோறு கட்டி எடுத்துச் செல்வர்; அந்தக் கட்டுச்சோற்று மூட்டையைக் கழியிலே கோத்துத் தோளிலே வைத்துக்கொண்டு நடப்பார்கள். இதனால் அதற்குத் தோட்பதன் என்று பெயர். பதன்-உணவு. (பா. 79) `இம்மையிலே நன்மை செய்வதனால் தீமையில்லை; நன்மைதான் கிடைக்கும். என்பது ஒரு பழமொழி. (பா. 101) உறந்தையிலே, காவிரிக் கரையிலே பங்குனி மாதத்திலே விழா நடைபெறும். (பா. 137) கார்த்திகையிலே, உரோகிணியும் சந்திரனும் சேரும் நடு இரவிலே வீதிகள் தோறும் விளக்கேற்றி வைப்பார்கள். மலர் மாலைகளைக் கட்டித் தொங்க விடுவார்கள். பலரும் கூடித் திருவிழாக் கொண்டாடுவார்கள் (இது கார்த்திகை விழா). (பா. 141) பெண்கள் மாலைக்காலத்திலே பிறையை வணங்குவார்கள். (பா. 239) வேப்பமரத்திலே தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பினர். (பா. 309) நள்ளிரவே பேய்கள் நடமாடும் நேரம் என்று நம்பினர். (பா. 311) போர்க்களத்திலே மாண்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டுவார்கள். அக்கல்லிலே அவர்களுடைய பெயரையும், பெருமையையும் எழுதி வைப்பார்கள். (பா. 67) பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு என்று நம்பினர். தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்கினர். ஊழ்வினையிலே நம்பிக்கை வைத்திருந்தனர். இவைபோன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களை இந் நூலிலே காணலாம். அகநானூற்றுப் பாடல்கள் வெறும் அகப்பொருள் ஒழுக்கத்தை மட்டும் சொல்லவில்லை; அகப்பொருளோடு புறப் பொருட் செய்திகளையும் இணைத்துக் கூறுகின்றன. ஆகையால் தமிழ்நாட்டின் பண்டை நாகரிகத்தைக் காண்பதற்கும், தமிழக வரலாற்றை அறிவதற்கும் இந்நூல் சிறந்ததொரு கருவியாகும். கலித்தொகை நூல் வரலாறு கலித்தொகை-கலிப்பாக்களின் தொகுப்பு. கலிப்பா-கலிப்பாட்டு. ஆசிரியப் பாவைப்போல் கலிப்பாவும் சொல்லக் கருதிய பொருள்களை விளக்கமாகச் சொல்லுவதற்கு ஏற்ற பாட்டு. அகப்பொருட் செய்திகளை அழகாகக் கூறுவதற்குத் தகுந்தது கலிப்பா என்பது முன்னோர் கொள்கை. கலிப்பாடல்களை இசையுடன் பாடலாம். ஒரே பாடலைப் பல இசைகளிலே இணைத்துப் பாட முடியும். சொல்லத் தொடங்கிய பொருளைத் தொகுத்துக் கூறலாம்; விரித்துரைக் கலாம்; சுருக்கிச் சொல்லலாம். இத்தகைய சிறந்த பாடல்களின் தொகுப்புக்கே கலித்தொகையென்று பெயர் கொடுத்தனர். இக்கலித்தொகை, அமைப்பிலே ஐங்குறுநூற்றைப் போன்றது; ஐந்து பகுதிகள் அடங்கியிருக்கின்றன. ஐந்தும், ஐந்து தனித்தனிப் புலவர்களால் பாடப்பட்டவை. பாலைக் கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தற் கலி இவை களே அந்த ஐந்து பகுதிகள். பாலையொழுக்கத்தைப் பற்றிப் பாடியது பாலைக்கலி. இதிலே தலைவன் பொருள் தேடப் பிரிவது, தலைவன் பிரிவை நினைத்துத் தலைவி வருந்துவது, செல்வத்தின் சிறப்பு, அதன் இன்றியமையாமை ஆகிய செய்திகள் சொல்லப் படுகின்றன. குறிஞ்சி ஒழுக்கத்தைப்பற்றிக் கூறுவது குறிஞ்சிக் கலி. தலைவனும் தலைவியும் சந்தித்தல், காதல் மணம் புரிந்து கொள்ளுதல், இரவிலும் பகலிலும் அவர்கள் ஒருவரை யொருவர் சந்தித்தல், அவர்கள் கற்பு மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்வு நடத்த முயற்சித்தல் இவை போன்ற காதல் நிகழ்ச்சிகளை இந்தக் குறிஞ்சிக் கலியிலே காணலாம். மருதநில ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது மருதக்கலி. கணவன் மனைவி யின் காதல் வாழ்வு, அவர்கள் புதல்வரைப் பெற்று இன்புறுதல், கணவனுடைய கூடா ஒழுக்கம் காரணமாக மனைவிக்கு ஏற்படும் ஊடல், மனைவியின் ஊடல் நீங்குதல், காதலர் இருவர் கருத்தொருமித்து இல்லறம் நடத்துதல் இவைபோன்ற செய்திகளை மருதக் கலியிலே காணலாம். முல்லையொழுக்கத்தைப் பற்றி மொழிவது முல்லைக் கலி. முல்லைநில மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய தொழில், விளையாட்டு, அந்நிலத்துப் பெண்களின் சிறந்த மனப்பான்மை, உயர்ந்த குணம் இவைகளையெல்லாம் முல்லைக்கலியிலே காணலாம். நெய்தல் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது நெய்தல்கலி. கணவனைப் பிரிந் திருக்கும் மனைவியின் நிலைமை, கணவன் பிரிவு காரணமாக அவள் உள்ளத் திலே தோன்றும் எண்ணங்கள், அவள் தன் துன்பத்தைப் பற்றியும் , கணவன் பிரிவைப் பற்றியும் வாய்விட்டுக் கூறுதல், இவை போன்ற செய்திகளை நெய்தற் கலியிலே காணலாம். இவ்வாறு காதல் வாழ்வு சம்பந்தமான ஐந்திணை ஒழுக்கங் களைப் பற்றியும் கூறுவதே கலித்தொகை. இவைகளுடன் கைக்கிளையைப் பற்றிய பாடல்கள் சிலவும், பெருந்திணையைப் பற்றிய பாடல்கள் சிலவும் காணப்படுகின்றன. ஒருமனப்பட்டு மணம்புரிந்து கொண்ட காதலர்களின் வாழ்க்கையைப் பற்றியவை ஐந்திணை ஒழுக்கங்கள். காதல் இன்னதென்று கண்டறிய முடியாத இளம்பெண்மேல் ஒருவன் கொள்ளும் காமம் கைக்கிளையாகும். பொருத்தமற்ற ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காமம் பெருந்திணையாகும்; தன்னை விரும்பாத ஒருத்தி மீது ஒருவன் கொள்ளும் காமமும் பெருந்திணை; தன்னை விரும்பாத ஒருவன் மீது ஒருத்தி கொள்ளும் காமமும் பெருந்திணையாகும். கலித்தொகையிலேயுள்ள பெரும்பாலான பாடல்கள் ஐந்திணை யொழுக்கத்தைப் பற்றியவை; சில பாடல்களே கைக்கிளை-பெருந்திணை பற்றியவை. ஆசிரியர்கள் பாலைக்கலி; இதுவே கலித்தொகையின் முதற் பகுதி. இதில் முப்பத்தைந்து பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் பெருங் கடுங்கோ. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பது இவருடைய முழுப்பெயர். இவர் வரலாறு முழுவதும் தெரியவில்லை. இவர் சேரர் பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்கலாம். இவர் ஒரு இளவரசர். இவர் பெயரைக் கொண்டு இவ்வாறு எண்ண இடந்தருகின்றது. இவருடைய சிறந்த புலமையை இவருடைய பாலைக் கலிப்பாடல்களே எடுத்துக் காட்டும். அகநானூற்றிலே பன்னிரண்டு பாடல்கள், குறுந்தொகையிலே பத்துப் பாடல்கள், நற்றிணையிலே பத்துப்பாடல்கள், புறநானூற்றிலே ஒரு பாட்டு இவர் பாடியவை. இவருடைய அகநானூற்றுப் பாடல்கள் குறுந்தொகைப் பாடல்கள், நற்றிணைப் பாடல்கள் பெரும்பாலும் பாலைத் திணையைப் பற்றிய பாடல்களே யாகும். பாலை நிலத்தின் இயற்கை, பாலையொழுக்கம் இவைகளைப் பற்றிப் பாடுவதிலே இவர் சிறந்தவர் என்பதை இவருடைய பாடல்களே காட்டு கின்றன. இவருடைய பெயருக்கு முன்னுள்ள பாலைபாடிய என்ற பட்டமும் இவருடைய ஆற்றலை அறிவிப்பதாகும். குறிஞ்சிக்கலி: இது கலித்தொகையின் இரண்டாவது பகுதி. இதில் இருபத் தொன்பது பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் கபிலர். இவர் தமிழ்நாட்டு அந்தணர் மரபைச் சேர்ந்தவர். கடையெழு வள்ளல்களில் ஒருவன்-பறம்பு மலைத் தலைவன்-பாரியின் உயிர்த்தோழர். பாரி உயிர் வாழும் வரையிலும் அவனுடனேயே உறைந்திருந்தார். பாரி இறந்த பின் அவனுடைய பெண்களை நல்வாழ்விலே வாழ வைப்பதற்காகப் பெரும்பாடு பட்டார். சங்க நூல்களிலே இவருடைய பாடல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அகநானூற்றிலே பதினெட்டுப் பாடல்கள் இவர் பாடியவை; குறுந்தொகையிலே இருபத்தொன்பது பாடல்கள் இவர் இயற்றியவை. நற்றிணையிலே இருபது பாடல்கள் இவர் செய்தவை. இப்பாடல்கள் பெரும்பாலும் குறிஞ்சித்திணையைப் பற்றிய பாடல்களேயாகும். ஐங்குறுநூற்றிலே உள்ள குறிஞ்சித்திணையைப் பற்றிய நூறு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. பத்துப்பாட்டில் உள்ள குறிஞ்சிப் பாட்டும் இவருடை யதே. பதிற்றுப்பத்திலே ஏழாம் பத்தும், புறநானூற்றிலே இருபத்தெட்டுப் பாடல் களும் இவரால் பாடப்பட்டவை. இவருடைய அகப்பொருட் பாடல்களிலே பெரும் பாலானவை குறிஞ்சித் திணை பற்றியவை. இதனால் இவர் குறிஞ்சித்திணையைப் பற்றிப் பாடுவதிலே தலைசிறந்த புலவர் என்பதைக் காணலாம். இவருடைய பாடல்களிலே இந்தக் குறிஞ்சிக்கலியே சிறந்த சொற்பொருட்கோவை. மருதக்கலி; இது கலித்தொகையின் மூன்றாவது பகுதி. இதில் முப்பத்தைந்து பாடல்கள் உண்டு. இதைப் பாடியவர் இளநாகனார் என்னும் புலவர். மதுரை மருதன் இளநாகனார் என்பது இவருடைய முழுப்பெயர். இவருடைய ஊர் மதுரை; தந்தை பெயர் மருதன்; ஆதலால் மதுரை, மருதன் என்ற சொற்களையும் இளநாகனார் என்ற பெயருடன் சேர்த்து வழங்கினர். இவர் காலத்திலே நாகனார் என்ற பெயருடைய புலவர்கள் வேறு சிலரும் இருந்தனர்; ஆதலால் இவரை இளநாகனார் என்று அழைத்தனர். சங்க நூல்கள் பலவற்றிலும் இவருடைய பாடல்கள் காணப்படுகின்றன. அகநானூற்றிலே இருபத்து மூன்று பாடல்கள், குறுந்தொகையிலே நான்கு பாடல்கள், நற்றிணையிலே பன்னிரண்டு பாடல்கள், புறநானூற்றிலே ஐந்து பாடல்கள் இவர் பாடியவை. இறையனார் அகப்பொருளுக்கு உரை கண்டவர் களிலே இவரும் ஒருவர் என்று சொல்லப்படுகின்றார். எல்லாத்திசைகளைப் பற்றியும் இவர் பாடியிருக்கின்றார். மருதக்கலிப் பாடல்கள் இவருடைய அறிவாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். முல்லைக்கலி : இது கலித்தொகையின் நான்காவது பகுதி. இதில் பதினேழு பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் பெயர் உருத்திரன். இவருடைய முழுப்பெயர் சோழன் நல் உருத்திரன் என்பது. இவர் பெயரைக்கொண்டு இவரைச் சோழர் குடியிலே பிறந்தவர் என்று எண்ணலாம். இப்புலவர் பாண்டிய நாட்டிலே வாழ்ந்தவர் என்று தெரிகின்றது. இவர் பாண்டிய மன்னன் ஆதவு பெற்று வாழ்ந்த ஒரு அருந்தமிழ்ப் புலவர். இவருடைய பாடல்களிலே பாண்டிய நாட்டின் பெருமைதான் காணப்படுகின்றது. இவர் பாடியவை இந்த முல்லைக்கலிப் பாடல்கள் மட்டுந் தான். சங்க நூல்களிலே இவர் பெயரால் வேறு பாடல்கள் ஒன்றுமே காணப்படவில்லை. அகப்பொருள் பற்றிய பாடல்களிலே இந்த முல்லைக் கலியின் போக்கே ஒரு தனிப் போக்காகும். முல்லைத் திணையைப் பற்றிப் பாடியுள்ள வேறு எப்புலவரும் இந்த முறையைப் பின் பற்றவில்லை. முல்லை நில மக்களின் ஒழுக்கத்தைப் புதிய முறையிலே அழகாக அமைத்துப் பாடியிருக்கின்றார் இப்புலவர். ஏறுதழுவுதல், அல்லது கொல்லேறு தழுவுதல் என்னும் துறையையே விரிவாகக் கூறுகிறது முல்லைக் கலி. இப்பொழுதும் தமிழ்நாட்டிலே-தென் பகுதிகளிலே மஞ்சுவிரட்டு என்று சொல்லப்படும் மாடு பிடிக்கும் விழாக்கள் நடைபெறுகின்றன. அவ்விழாக்களைப் பார்த்தவர்கள் இந்த முல்லைத்திணைப் பாடல்களைப் படிப்பார்களானால் அவற்றை அப்படியே மனக்கண்ணால் காண்பார்கள். உருத்திரனாரின் புலமைத் திறத்திற்கு இந்த முல்லைக் கலியொன்றே போதுமானதாகும். தமிழ் உள்ள வரையிலும் இவருடைய புகழும் குன்றாது. நெய்தற்கலி: இது கலித்தொகையின் ஐந்தாவது பகுதி. இதில் முப்பத்து மூன்று பாடல்கள் உண்டு. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் அந்துவனார் என்பது. இவருடைய முழுப்பெயர் மதுரை ஆசிரியர் நல்லந்துவனார். இவர் மதுரை யிலே வாழ்ந்தவர். பலராலும் சிறந்த ஆசிரியராக மதிக்கப்பட்டவர். ஆதலால், மதுரை, ஆசிரியர் என்ற அடை மொழிகள் இவர் பெயருடன் இணைந்திருக் கின்றன. `நல் என்னும் சிறப்புச் சொல் இவருடைய பெயருடன் சேர்ந்து நின்று இவருடைய பெருமையை விளக்குகின்றது. அகநானூற்றிலே ஒரு பாட்டு, நற்றிணையிலே ஒரு பாட்டு, பரிபாடலிலே நான்கு பாடல்கள் இவர் பாடியவை. இக் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலும் இவரால் பாடப்பட்டதே. கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரேதான். ஒரு அகநானூற்றுப் பாடல் இவரைப் பாராட்டிக் கூறியிருக்கின்றது. இதனை அகநானூற்று ஆராய்ச்சியிலே காணலாம். நல்லந்துவனாரின் சிறந்த புலமையை இந்த நெய்தற்கலிப் பாடல் களிலே காணலாம். நூலின் சிறப்பு கலித்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறு கதையைப் போல அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு படம் அமைத்து அப்பாடல் கருத்தை விளக்கலாம். காதலனுக்கும் காதலிக்கும் நடைபெறும் உரை யாடல், தலைமகளுக்கும் தோழிக்கும் நடைபெறும் உரையாடல், தோழிக்கும் நற்றாய்க்கும் நடைபெறும் உரையாடல், தலைவன் தன் தோழனிடம் பேசுவது, தோழி தலைவியுடன் பேசுவது இவை போன்ற பகுதிகள் எல்லாம் மிகவும் சுவையுடன் எழுதப் பட்டிருக்கின்றன. கைக்கிளைத்திணை, பெருந்திணைப் பாடல்களிலே நகைச்சுவையைக் காணலாம். பாலைவனக் காட்சி, அங்கே வாழ்வோரின் வாழ்க்கை நிலை; மலைக் காட்சி, அங்கு வாழும் மக்களின் செயல்கள்; மருத நிலத்தின் இயற்கை வளம், அங்குள்ள மக்களின் நாகரிகம், அவர்களுடைய உயர்தரமான இல்லற வாழ்வு; முல்லை நிலத்து மக்களின் பொழுதுபோக்கு, அவர்களுடைய வாழ்க்கை, அந்த நிலத்தின் இயற்கைக் காட்சி; நெய்தல் நிலத்தின் தோற்றம், அந் நில மக்களின் வாழ்க்கை இவைகளையெல்லாம் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி கூறுவதிலே கலித்தொகைப் பாடல் களுக்கு இணையாக வேறு எப்பாடல்களையும் எடுத்துக் காட்ட முடியாது. அரசியல் முறைகள், நல்ல சிறந்த அறவுரைகள், செல்வச் சிறப்பு, பாரத, ராமாயண வரலாறுகள், பல புராண வரலாறுகள் இவைகள் எல்லாம் உவமானங் களாக எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன. தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் பலவற்றைக் கலித்தொகைப் பாடல்கள் கூறுகின்றன. படிப்போர் சலிப்படையாமல் ஊக்கத்துடன் படிக்கும் வகையிலே அழகாகவும், இனிமையாகவும் உவமான உவமேயங் களுடன் செய்திகளை எடுத்துக்கூறும் சிறந்த பாடல்கள் கலித்தொகைப் பாடல்களாகும். இதன் சிறப்பைக் கருதியே கற்றறிந்தார் ஏத்தும் கலி என்று இந்நூலைப் பாராட்டிக் கூறியிருக்கின்றனர். இப் பாராட்டுதல் மிகையானதன்று; உண்மையும் தகுதியும் பொருந்திய பாராட்டுரை. கலித்தொகைப் பாடல்கள் யார் மீதும் பாடப்படவில்லை. கலித்தொகை ஆசிரியர்கள் தாங்களே மனங்கனிந்து பாடியவை. அவர்கள் உள்ளத்திலே ஊக்கந் தோன்றிய போது ஊறி வடிந்த கவிப்பெருக்கு. அவர்களாகவே அகமகிழ்ந்து கோத்த நவமணிக் கோவைகள். இவையே அவைகள் கற்றறிந்தார் நெஞ்சைக் கவரும் பாடல்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணமாகும். சுவையுடன் சொல்லுதல் படிப்பவர் உள்ளத்திலே பதியும்படி சொல்லுவதிலே கலித்தொகை ஆசிரியர் கள் மிகச் சிறந்த கவிஞர்கள். இவ் வுண்மையைச் சில உதாரணங்களால் காணலாம். ஒரு தலைவி, தான் காதலிக்கும் தலைவர் யார் என்பதைத் தன் தோழியிடம் சொல்லுகின்றாள். கலித் தொகையின் 51-வது பாட்டு இது; குறிஞ்சிக் கலியில் உள்ளது. ஒளியுள்ள வளையலை அணிந்திருக்கும் தோழியே! நான் விரும்பும் காதலன் யார் தெரியுமா? முன்பு, நாம் தெருவிலே சிறிய மணல் வீடு கட்டி விளை யாடும்போது அந்த மணல் வீட்டைத் தன் காலால் கலைப்பான்; பின்புறமாக வந்து நம் தலையில் தரித்திருக்கும் மாலையை அறுப்பான்; நாம் விளையாடும் பந்தையும் தூக்கிக்கொண்டு ஓடிவிடுவான்; இப்படியெல்லாம் நாம் வருந்தும்படி குறும்புத்தனம் செய்யும் அந்தச் சிறிய பட்டிப் பையனைத்தான் உனக்குத் தெரியுமே. முன்னொரு நாள் அவன் செய்த குறும்புத்தனத்தைக் கேள். நானும் என் தாயும் வீட்டுக்குள்ளிருந்தோம். அப்பொழுது அவன் வந்து `தண்ணீர்த்தாகம். குடிக்க நீர் வேண்டும். தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான். `ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்தவளே! பொன் தகட்டாலே செய்த செம்பிலே குடிநீரைக் கொண்டு போ. அவன் தாகந்தணியத் தண்ணீரை அருந்தச் செய்து வா என்றாள் என் அன்னை. நானும் என்னை மறந்தேன். தங்கச் செம்பிலே தண்ணீரை எடுத்துக்கொண்டு போனேன். அவன் தாகத்தைத் தணிக்கும் ஆவலுடன் சென்றேன். அவன் என்னைக் கண்டவுடன் வளையலையணிந்த என் முன் கையைப் பற்றிக்கொண்டான். கையை நெரித்தான். நான் அரண்டு போனேன். `அம்மா இவன் செய்வதைப் பார் என்று கத்திவிட்டேன். அன்னையும் `என்ன என்ன என்று அலறிக்கொண்டு ஓடிவந்தாள். உடனே என்னை நான் சமாளித்துக்கொண்டேன். `ஒன்றுமில்லை. உண்ணும் நீரால் விக்கினான் என்று ஒருபோடு போட்டேன். அவன் செய்த குறும்புத்தனத்தை மறைத்துவிட்டேன். உடனே என் அன்னையும் அவன்மீது பரிவுகொண்டாள்; அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். அவனோ, என்னைக் கொல்லுகின்றவனைப் போல தன் கடைக்கண்ணாலே பார்த்தான்; தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். இவ்வாறு செய்தான் அந்தத் திருட்டுப் பையன். சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில் நாம்ஆடும் மணல் சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி; மேல்ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே, உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு அன்னை அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்! உண்ணுநீர் ஊட்டிவா என்றால்; என யானும் தன்னை யறியாது சென்றேன், மற்றுஎன்னை வளைமுன் கைபற்றி நலியத், தெருமந்திட்டு, அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்! என்றேனா; அன்னை அலறிப் படர்தரத், தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா; அன்னையும் தன்னைப் புறம்புஅழித்து நீவ, மற்றுஎன்னைக் கடைக் கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன். (பா. 51) இப் பாடலில் குறிக்கப்பட்டிருக்கும் காதலன் - காதலிகள் இருவரும் விளை யாட்டுப் பருவமுதல் ஒன்றாகப் பழகியவர்கள். இவர்கள் பருவமடைந்த பின் பிரியாத் துணைவர்களாயினர். மற்றொரு பாடல். அதில் சொல்லப்படும் செய்தி மிகவும் வேடிக்கையானது; நகைக்சுவை பொருந்தியது. இது, கலித்தொகையின் 65-வது பாடல்; குறிஞ்சிக் கலி. தலைவனும், தலைவியும் களவு மணத்திலே காலங்கடத்தி வருகின்றனர். ஒருநாள் இரவு; தலைவன் குறித்த இடத்திலே தலைவி போய் நிற்கின்றாள். அச்சமயம் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நேர்ந்தது. அந்த வேடிக்கையைப் பற்றித் தலைவி தன் தோழியிடம் கூறுகின்றாள். இந்த முறையில் அமைந்தது அந்தப் பாடல். தோழியே! `நமது சேரியிலே, கருங்குட்டத்தான்; கால் கை குறைந்தவன்; ஒரு பார்ப்பான் மறைந்து திரிகின்றான். அவனிடம் அகப்படாமல் பாதுகாத்துக்கொள். என்று நீ கூறியிருக்கிறாய் அல்லவா? ஒருநாள் இரவு அவனிடம் நான் அகப்பட்டுக் கொண்டு பட்டபாட்டைக் கேள்! எல்லாருந் தூங்குகின்ற நள்ளிரவிலே, துணியால் போர்த்திக் கொண்டு, தலைவன் குறிப்பிட்ட இடத்திலே போய் நின்று கொண்டிருந்தேன். அந்த மொட்டைத் தலைக் கருங்குட்டப் பார்ப்பான் என்னைப் பார்த்துவிட்டான். ஏதோ உளறினான். பணிந்தான். நேரமிலா நேரத்திலே இங்கு நின்ற நீர் யார்? என்றான். வைக்கோலைக் கண்ட எருமை மாட்டைப்போல் என் பக்கத்திலேயே நின்றுவிட்டான். அதோடு அவன் சும்மா இருந்தானா? `பெண்ணே, வெற்றிலைபாக்கு போட்டுக்கொள் என்றான். தன் பாக்குப் பையை அவிழ்த்தான். வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்தான். நான் இவ்வளவுக்கும் ஒன்றும் வாய் பேசவில்லை; வாளா நின்றேன். உடனே அவன் சிறிது எட்டி விலகினான். `நீ சிறுமி, என் கையில் அகப் பட்டாய். நான் இவ்வூர் ஆண் பிசாசுகளிலே ஒருவன். என்னை நீ துன்புறுத்தினால் இவ்வூரார் உனக்குப் பலி கொடுக் காமல் பண்ணிவிடுவேன் என்று ஏதோ உளறிக் கொட்டினான். அவன் என்னை ஏதோ ஓர் தேவதையென்று நினைத்துக் கொண்டான்; பயந்து போனான். இவ்வுண்மையை நான் உணர்ந்து கொண்டேன். உடனே தாமத மில்லாமல் ஒரு கை மணலை அள்ளினேன்; அவன்மேல் வீசினேன். அவன் அரண்டு கூச்சல் போடத் தொடங்கிவிட்டான். இம்மாதிரி அவனால் இரவுக் குறியிலே, நகைப்புக் கிடமான ஒரு காரியம் நடந்துவிட்டது. இப் பாடலால் ஒரு பெண் தனது மவுனத்தால் எதிரியை நடுங்கச் செய்து தப்பித்துக்கொண்ட செய்தியைக் காணலாம். இவை போன்ற பாடல்கள் இன்னும் பல உண்டு. உவமைகள் கலித்தொகையிலே கூறப்படும் உவமைகள் மிகவும் தெளி வாக இருக்கும். கேட்போர் நெஞ்சத்தில் குடிகொள்ளுவதாக இருக்கும். உவமானங்களை எப்படித் தேர்ந்தெடுத்துத் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு அவைகள் வழிகாட்டுவன. களவு மணத்திலே ஈடுபட்டு வாழ்ந்தாள் ஒருத்தி. அவள் தன் காதலனுடன் சேர்ந்து, தன் பெற்றோர்க்குச் சொல்லாமல் அவனூர்க்குப் போய்விட்டாள். அவளைக் காணாமல் வருந்திய செவிலித்தாய் அவளைத் தேடிக்கொண்டு புறப் பட்டாள். அவள் போகும் வழியிலே சில முனிவர்கள் எதிர்ப்பட்டனர். என் மகளும், மற்றொருத்தியின் மகனும் இவ்வழியே போனதைப் பார்த்தீர்களா? என்று அவர்களிடம் கேட்டாள். நாங்கள் அவர்களைப் பார்த்தோம் என்று அவர்கள் கூறினர். அவளுக்கு ஆறுதல் மொழிகளும் புகன்றனர். பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. கலவைச் சந்தனம், அதைப் பூசிக்கொள்ளுவோர்க்குத் தான் நறுமணம் நல்கும். அது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அதனால் என்ன பயன்? நினைத்துப் பார்த்தால் உன் மகளும் உனக்கு அப்படித்தான். சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. சிறந்த வெண்மையான முத்துக்கள், அணிபவர்களுக்குத் தான் அழகைத் தரும். அவை தண்ணீரிலே பிறந்தாலும், அவை களால் தண்ணீருக்கு என்ன பயன்? ஆராய்ந்து பார்த்தால் உமது மகளும் உமக்கு அப்படித்தான். ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. ஏழு நரம்புகளையுடைய இனிய இசைக் கருவி (யாழ்), அதை வாசிப்பவர்க்குத்தான் இன்பந்தரும். யாழிலே இசை பிறந்தாலும் அந்த இசையால் யாழுக்கு என்ன பயன்? எண்ணிப் பார்த்தால் உமது மகளும் உமக்கு அப்படித்தான். இவை அந்த முனிவர், மகளைப் பிரிந்து வருந்திய செவிலித் தாய்க்குக் கூறிய ஆறுதல் மொழிகள். இது கலித்தொகையின் 9-வது பாடல். பாலைக்கலி. பகற் காலத்திற்கும் மாலைக் காலத்திற்கும் கலித் தொகையிலே காட்டப் பட்டிருக்கும் உவமைகள் உள்ளத்தைக் கவர்வன. இவைகளை நெய்தற்கலிப் பாடல்களிலே காணலாம். இங்கே ஒரு உதாரணம் போதும். உறவும், உண்மையும், நல்ல நடுநிலைமையும் இவனிடத்திலே பிறந்து வளர்ந்தன; இப்பொழுது இவைகள் மறைந்தன. இவ்வாறு உலகத்தார் துக்கப் படும்படி மன்னன் மறைந்தான்; உயர்ந்த செயல்களையே மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து, குற்றங்களைக் களைந்து நன்றாக அரசாண்ட மன்னன் மறைந் தான். அவன் நல்ல செங்கோலரசும் மாண்டது. இதைப்போல நிறைந்த கதிர்களை யுடைய சூரியன் மறைந்தான்; பகற்பொழுதும் கழிந்தது. படிக்காமல் வயது முதிர்ந்தவன், இரக்கமற்ற நெஞ்ச முடையவன். அவன் உள்ளத்தைப் போல அடர்ந்த இருள் பரவுவதற்குக் காரணமான மாலைக்காலம் வந்தது. தனித்திருப் போர்க்குத் துன்பத்தையும் மயக்கத்தையும் தரும் மாலைக்காலம் அது. நயனும், வாய்மையும், நன்னர் நடுவும் இவனில் தோன்றிய; இவையென இரங்கப் புரைதவ நாடிப், பொய் தபுத்து இனிதாண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல் நிரைகதிர்க் கனலி பாடொடு பகல் செலக்; கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் புல்இருள் பரத்தரூஉம் புலம்புகொள் மருள்மாலை. பகற் பொழுதைச் சிறந்த அரசுக்கும், மாலைப்பொழுதை இரக்கமற்றவன் நெஞ்சத்திற்கும் ஒப்பாக்கியிருப்பதை இப்பாடலிலே காணலாம். இது கலித் தொகையின் 130-வது பாட்டு. நெய்தற்கலி. அரசியல் குடிமக்களுக்கு குறையுண்டாகாமல் பாதுகாக்க வேண்டும். இத்தகைய ஆட்சியே சிறந்த அரசாட்சி. இந்த நல்லாட்சியை எவரும் அசைத்து அழித்துவிட முடியாது. இத்தகைய நல்லாட்சி நடைபெறும் நாட்டில்தான் அமைதியும் இன்பமும் குடி கொண்டிருக்கும். செல்வம் கொழித்திருக்கும். எல்லா மக்களும் வறுமையின்றி வாழ்க்கை நடத்துவர். பண்டைத் தமிழர்கள் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். ஆதலால் அவர்கள் அரசியலிலே கண்ணும் கருத்துமாக இருந்தனர். சங்க இலக்கியப் பாடல்கள் எல்லாவற்றிலும் இக்கருத்தைக் காணலாம். கலித்தொகைப் பாடல்கள் பலவற்றிலே செங்கோல் ஆட்சி சிறப்பித்துக் கூறப்படுகின்றது. கொடுங்கோலாட்சியின் கொடுமை விளக்கப்படுகின்றது. அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகிக் கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியன் நீழல் உலகுபோல், உலறிய உயர் மர வெஞ்சுரம்; (பா. 10) குடி மக்கள் துன்புற்று அலறும்படி-அறமற்ற வழியிலே அவர்களிடம் பொருளை விரும்பி-கொலைக்கஞ்சாமல் ஆளும் அதிகாரிகளைக் கொண்டு-கொடுங்கோலாட்சி புரியும் மன்ன வனுடைய நாடு பாழாகும். அதுபோல உலர்ந்து போன - உயர்ந்த - மரங்களையுடைய பாலைவனம் காணப்படுகின்றது. குடி மக்களிடம் அளவுக்குமீறி வரி வாங்கி அறங்கொல்லும் அதிகார வர்க்கத்தாலும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத் தலைவராலும் நாடு பாழாகும் என்பதை இதனால் அறியலாம். முறை தளர்த்த மன்னவன் கீழ்க் குடிபோலக் கலங்குபு (பா. 34) நீதிமுறைகளிலே சோர்வடைந்த மன்னவன் ஆட்சியிலே வாழ்கின்ற குடி களைப் போலக் கலக்கமடைந்து. நீதியற்ற ஆட்சியிலே வாழுங் குடிகளுக்கு அமைதியில்லை; அல்லற்படு வார்கள்; இதனை இவ்வரி விளக்குகின்றது. தன்னுயிர் போலத் தழீஇ உலகத்து மன்னுயிர் காக்கும் மன்னன் (பா. 143) “தன்னுயிரைப் போலவே உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் எண்ணிப் பாதுகாக்கின்ற மன்னவன். இதனால் ஒரு அரசனுடைய முதற்கடமை இன்னதென்று கூறப்பட்டது. தனது நாட்டில் வாழும் உயிர்களையெல்லாம் தன்னுயிரைப் போலவே எண்ணிப் பாதுகாப்பவனே மக்களால் மதிக்கப்படும் மன்னவன்; அரசியல் தலைவன். என்ற உண்மை விளக்கப்பட்டது. செல்வத்தின் சிறப்பு இம்மையிலே இன்பமடையச் செல்வமே ஏற்ற கருவி. மறுமைக்கான நல்லறங்களைச் செய்வதற்கும் செல்வமே சிறந்த துணை. ஆதலால் பொருளீட்டும் முயற்சியிலே ஒவ்வொரு ஆடவனும் ஈடுபடவேண்டும். இது பழந்தமிழர் கொள்கை. தேட்டம் என்பது செல்வத்திற்கு ஒரு பெயர். ஈட்டம் என்பதும் அதன் பெயர். தேடப்படுவது தேட்டம்; ஈட்டப்படுவது ஈட்டம். அரிதாய அறன் எய்தி அருளியோர்க் களித்தலும் பெரியதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும். (பா. 11) பொருளே சிறந்த அறத்தை அடையச் செய்யும்; அருளுடையோர்க்கு அளிக்கும்படி செய்யும்; தனது பெரிய பகைவர்களை வென்று முறியடிக்கச் செய்யும்; தனது எதிரிகளை அழிக்கச் செய்யும்; அன்பு நிறைந்த காதலுடன் இல்லற வாழ்க்கை யிலே இன்புற்று வாழவும் செய்யும். செல்வமுடையவரே இவ்வுலகிலே சிறந்து வாழ்வர். செல்வமற்றவர்களின் வாழ்விலே இன்பமில்லை; அவர்களால் நல்லறங்களை நடத்த முடியாது! என்பதை இதனால் காணலாம். பொருளாதார உயர்வு தாழ்வுள்ள சமுதாயத்தில் இத்தகைய உணர்ச்சி மக்கள் மனத்திலே படிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் முன்னேற முடியும். மடியிலான் செல்வம் போல் மரம்நந்த (பா. 35) சோம்பல் இல்லாதவனிடம் செல்வம் பெருகியிருப்பதைப் போல் மரங்களிலே மலர்கள் பூத்திருந்தன. இது முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தைக் காட்டு கின்றது. செல்வ நிலையாமை செல்வத்திற்குக் காரணம் முயற்சி மட்டும் அன்று. பழவினையும் செல்வம் சேருவதற்குக் காரணமாகும். இக்கருத்தும் பழந்தமிழர்களிடம் குடிகொண்டி ருந்தது. செல்வம் நிலையுள்ளது; அழியாதது என்று நம்பி அதைச் சேர்ப்பதிலே காலங்கடத்துவது அறியாமை. செல்வம் நிலை யற்றது. வரும்; போகும். ஆதலால் செல்வமுள்ளபோதே நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதுவும் பழந்தமிழர் கொள்கை. இதை வலியுறுத்தவே செல்வம் நிலையற்றது என்பதைப் பற்றிப் பல நூல்களிலும் பாடியிருக்கின்றனர். மரீஇத் தாம்கொண்டாரைக் கொண்டாக்காற் போலாது பிரியும்கால் பிறர் எள்ளப் பீடின்றிப் புறமாறும்,திரு. (பா. 8) செல்வமானது தான் சேர்ந்தவரைப் பெருமைக்கு ஆளாக்கும். அவரை விட்டுப்பிரியும்போது, சேர்ந்த காலத்தைப் போல் இல்லாமல், அவரை மற்றவர்கள் பார்த்து `ஏழை, வறியவர் என்று பரிகசிக்கும்படி பெருமையின்றி வேறிடத்துக்குப் போய்விடும். கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கில் பெயர்பு பெயர்பு உறையும். (பா. 21) பொருள், தனக்கு உரியவர் இன்னார்தான் என்று கருதி ஒருவரிடத்திலே நிலைத்திராது. நல்வினையுடையவர்களிட மெல்லாம் மாறிமாறிச் சென்று தங்கும். இவைகள் செல்வம் நிலையற்றது என்பதைக் காட்டுவன. முயற்சி மட்டும் செல்வத்திற்கு காரணம் அன்று; பழவினையும் செல்வத்திற்குக் காரணம் என்ற கருத்தையும் இவைகள் காட்டும். நீதி மொழிகள் மக்களுக்கு அறிவு புகட்டும் நீதிமொழிகள் பலவற்றைக் கலித்தொகையிலே காணலாம். அவைகள் சிறந்த அறிவுரைகள். உணர்வோர் உள்ளத்திலே ஓடாமல் ஊன்றி நிற்கக் கூடியவைகள். செம்மையின் இகந்துஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ! (பா. 14) ஒழுங்கு தவறிய நெறியிலே பொருள் சேர்ப்பவரிடம் அப்பொருள் நிலைத்திராது. இம்மையிலும் பகையாகி நின்று துன்பந்தரும்; மறுமையிலும் பகையாகி நின்று துயர் விளைக்கும். கிளை அழிய வாழ்பவன் ஆக்கம்போல், புல்லென்று வளையானா நெகிழ்பு ஓடும்தோள். (பா. 34) சுற்றத்தார் துன்புறும்படி தான் மட்டும் இன்புற்று வாழ்கின்றவனுடைய செல்வம்போல் என் தோள் இளைத்து அதில் உள்ள வளை கழன்று ஓடிவிடு கின்றது. சுற்றத்தாரைப் பேணாதான் செல்வம் நிலைக்காது; திடீரென்று மறைந்து விடும். இதுவே இவ்வடிகள் கருத்து. அஞ்சுவது அஞ்சா அறனிலி யல்லன், என் நெஞ்சம் பிணிக் கொண்டவன். (பா. 42) என் நெஞ்சத்திலே குடிகொண்டிருப்பவன் அஞ்சத் தகுந்த அக்கிரமங்களை அஞ்சாமல் செய்யத் துணியும் அறமற்றவன் அல்லன். நீதியும் நேர்மையுமற்ற செயல்கள் அஞ்சத்தக்கவை; அவைகளைச் செய்யாமலிருப்பதே அறமாகும். இக் கருத்தை வலியுறுத்துகின்றது இப்பகுதி. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்ற திருக்குறளை இக்கலித்தொகை நினைவுக்குக் கொண்டு வருவதைக் காணலாம். ஈதல் இரந்தார்க்கு ஒன்றுஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று. (பா. 61) ஈகையை விரும்பி வந்து, தம்மிடம் இரப்பவர்க்கு ஒன்றும் உதவாமல் உயிர் வாழ்வதைவிடச் சாவதே நலம். வறுமையால் வாட்டமுற்று வந்து இரப்போர்க்கு உதவி செய்யவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது இது. சாதலின் இன்னாததுஇல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை என்ற திருக்குறளின் கருத்தும் இக் கலித்தொகையும் ஒத்திருப்பதைக் காணலாம். தமக்கினி தென்று வலிதில் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று. (பா. 62) தமக்கு நன்மையுண்டு என்பதற்காகப் பிறர்க்கு வலிந்து துன்பஞ்செய்தல் நன்றன்று. தன் நன்மைக்காக-இன்பத்துக்காக-பிறர்க்குத் தீங்கிழைத்தல் தவறு. இதுவே இதன் கருத்து. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்; அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை; அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை; முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்; பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல். (பா. 133) 1. இல்லோர்க்கு உதவி செய்வதே உண்மையான உதவி. 2. நண்பர்களை விட்டுப் பிரியாமலிருத்தலே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய குணம். 3. உலகப் போக்கை உணர்ந்து அதற்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டியதே சிறந்த மனிதத்தன்மை. 4. தன்னைச் சேர்ந்தவர்களை வெறுக்காமல் காப்பாற்றுவதே அன்பு. 5. அறிவற்றோர் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை. 6. தான் கூறிய சொல்லை மாற்றாமல் அதன்படி நடந்து கொள்ளுவதே உறவு. 7. இரகசியத்தைப் பிறர் அறியாமல் காப்பாற்றும் குணந்தான் சிறந்த குணம். 8. குற்றம் புரிந்தவர்களைத் தயவு தாட்சயண்யமின்றித் தண்டிப்பதுதான் நீதிமுறை. 9.பகைவரை வெல்லும் வாய்ப்பு வரும்வரையிலும். பொறுத்துக் கொண்டி ருப்பதுதான் உண்மையான பொறுமை. இந்த ஒன்பது அறவுரைகளும் அரிய மாணிக்கங்கள்; ஒவ்வொருவரும் வாழ்க்கையிலே பின்பற்ற வேண்டியவை. பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க் கெல்லாம் கடன். (பா. 139) பிறர்க்கு உண்டான துன்பத்தையும் தமக்கு நேர்ந்த துன்பமாக எண்ணிப் பாதுகாப்பது; அறநெறியை அறிந்து நடத்தல் இவை அறிஞர்களின் கடமை. அறிஞர்களின் கடமை இன்னதென்பதைக் குறிப்பிடு கின்றது இது. இவை போன்ற இன்னும் பல சிறந்த அறவுரை களைக் காணலாம். கூடா நட்பு தந்நலம் ஒன்றையே குறிக்கொண்டு நட்பினராக நடிப்பவர்கள் உண்மையான நண்பர்கள் அல்லர். அவர்கள் தங்களுக்கு நன்மை கிடைக்கும் வரையிலுந்தான் நண்பர்களாக நடிப்பர். தந்நலம் நிலைவேறாதபோது நட்பைக் கைவிடுவர். இத்தகையவர்களுடன் நட்புகொள்ளுதல் கூடாது. நண்பருக்கு உதவி செய்தல் தன் கடமை என்று நினைக் கின்றவர்களுடன் ஏற்படும் தொடர்புதான் இடையிலே அறுந்து போகாது; என்றும் பிணைந்து நிற்கும். நண்பர் இருவரும் இத்தகைய எண்ணமுடையவர்களாயிருந்தால் அவர் களுடைய நட்புக்கு எப்பொழுதும் முடிவேயில்லை. சிறப்புசெய்து உழையராப் புகழ்பு ஏற்றி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல். நண்பர் தமது பக்கத்திலே இருக்கும்போது அவரைக் கொண்டாடுவார்கள்; புகழ்ந்து போற்றுவார்கள். அவர்கள் அப்பாற் போனபின் அவர்களைப் பழித்துப் பேசுவார்கள். இவர்கள் அற்பர்கள். செல்வத்துள் சேர்ந்தவர் வளன்உண்டு, மற்றவர் ஓல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்புபோல், ஒருவர் செல்வமுள்ளவராயிருக்கும் காலத்தில் அவருடன் ஒன்றாக உறைந்திருப்பார்கள்; அவர்களுடைய செல்வத்தைச் சுரண்டித் தின்பார்கள். அவர் வளமிழந்து வறுமையுற்ற காலத்தில் ஒரு சிறிதும் உதவி செய்யமாட்டார்கள். இவர்கள் அறிவிலிகள். பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து, அம்மறை பிரிந்தக்கால் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்புபோல். ஒன்றுபட்ட நண்பராயிருக்கும்போது நண்பருடைய இரகசியங்களை யெல்லாம் தெரிந்துகொள்ளுவார்கள். நட்பு முறிந்து அவர்களை விட்டுப் பிரிந்த பின், தாம் அறிந்த இரகசியங் களைப் பிறரிடம் வெளியிடுவார்கள். இவர்கள் பெருந்தன்மை யற்றவர்கள்; அற்பர்கள். இவர்களுடைய நட்பு ஆபத்தானது. புறங்கூறுவோன், தன்னலமே குறிக்கோளாக உடையவன், இரகசியத்தை வெளியிடுவோன்; இவர்கள் நண்பர்களாகக் கொள்ளுவதற்குத் தகுதியற்றவர்கள். அவர்களுடன் கொள்ளும் நட்பு கூடா நட்பாகும். இக் கருத்தை மேலே காட்டிய பாடற் பகுதிகளிலே காணலாம். இது கலித்தொகையின் இருபத்தைந் தாவது பாட்டு. மனச்சாட்சி குற்றமுளார் நெஞ்சு குறுகுறுக்கும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. வேண்டுமென்றே குற்றமிழைப்பவர்களின் உள்ளத்திலே ஒரு சிறிதும் அமைதியிராது. நேர்மையின்றித் தாம் செய்த குற்றத்தை நினைத்து நினைத்து நெஞ்சம் நைவார்கள். சந்தர்ப்பவசத்தால், மனமறிந்து செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடிக்கொண்டாலொழிய அவர்கள் மனத்திலே அமைதி ஏற்படாது. இது அறிஞர்கள் கண்டறிந்த உண்மையாகும். கண்டவர் இல்என உலகத்துள் உணராதார், தங்காது, தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை. (பா. 125) அறிவற்றவர்கள், தாம் செய்யும் தீங்குகளைக் கண்டவர்கள் உலகத்திலே ஒருவரும் இல்லையென்று கருதித் தடங்கல் இல்லாமல் - பெருந்தன்மையும் இல்லாமல் - தீமைகளைச் செய்வார்கள். அவ்வாறு தாம் செய்யும் தீமைகளுக்குள்ளே, மனமறிந்து செய்த கொடுமைகளை எவ்வளவுதான் பிறர் அறியாமல் மறைத்தாலும் அவைகள் மறைந்துவிடா. அக் கொடுமைகளை அவர்கள் நினைக்கும்போது அவர்கள் மனம் குழம்பும். அவர்களுடைய கொடுமையை மெய்ப்பிக்க அவர்களுடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நெருங்கிய சாட்சி வேறு ஒன்றுமில்லை. பிறர் அறியாமல் ஒருவர் குற்றஞ் செய்யலாம். ஆனால் அவர் மனம் அவர் செய்த குற்றத்தை மறக்காது. ஆதலால் அவருக்கு மனவேதனை தோன்றுவது இயற்கை. கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் என்பது உலக வழக்கு. கடன் கொடுப்பது கொடுக்கல்; அதைத் திருப்பி வாங்குதல் வாங்கல். பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் முறை ஏற்பட்ட பிறகுதான் கொடுக்கல் வாங்கல் என்ற இந்தச் சொற்றொடர் பிறந்திருக்கக் கூடும். பண்டைக் காலத்திலே பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பொருள் வேண்டியவர்கள் தமக்கு வேண்டிய பொருளை, உள்ளவர் களிடம் கடனாக வாங்கிக் கொள்ளுவார்கள். பிறகு கொடுத்து விடுவார்கள். இப்படி வாங்கும் கடனுக்குத் `தனுசு என்று பெயர். கடன் வாங்கும்போது முகமலர்ச்சியுடன் வாங்குவார்கள். அக் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது வாங்கும்போதிருந்த முகமலர்ச்சியை அவர்களிடம் காண முடியாது. இதை இன்றும் கடன் வாங்குவோரிடம் காணலாம். கடன் கொடுத்தவர்களுக்கும் கடன் வாங்கினவர்களுக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் காண்கின்றோம். வாங்கும்போது மகிழ்ச்சியடைதலும், கொடுக்கும் போது வருத்தமடைதலும் மக்கள் இயற்கையென்றுதான் கொள்ளவேண்டும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட பண்டைக்கால மக்களிடமும் இக்குணம் இருந்ததாகத்தான் தெரிகின்றது. உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல் பண்டும்இவ் வுலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே. (பா. 22) உண்பதற்காக வாங்கும் கடனைப் பெற, முறையோடு கூறி இரக்கும்போது காணப்படும் முகமும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது காணப்படும் முகமும் வேறு வேறாகக் காணப்படுதல் பண்டைக் காலத்திலும் இயல்பாகும். இந்த இயல்பு இன்றும் உண்டு. இது புதியதன்று; பழமை தொட்டுத் தொடர்ந்தே வருகின்றது. இதனால் கடன் வாங்குவோர் நிலையைக் கண்டறியலாம். கற்புடை மகளிர் பெண்களின் கற்பைப் பற்றிக் கலித்தொகைப் பாடல்கள் பலவற்றிலே காணலாம். சங்க இலக்கியங்களிலே பெண்களுக்கு மட்டுந்தான் கற்பு வலியுறுத்தப்படுகின்றது. பெண்கள் மட்டுந்தான் -ஆடவர்களை மணம் புரிந்துகொண்ட மனைவிமார்கள் மட்டுந்தான்-கட்டுப்பட்டு வாழ வேண்டும்; கற்புடையவர்களாய் வாழவேண்டும் என்று கருதினர். ஆண்களுக்கு எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் மனம் போனபடி திரியலாம். ஆண்கள் பல பெண்களை மணந்தனர். பரத்தையர்களுடனும் கூடிக் களித்தனர். இது இக்காலத்திற்கு ஏலாத ஒழுக்கம். வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள். (பா. 2) அருந்ததியைப் போல எல்லோரும் தொழுது போற்றும் படி விளங்குகின்ற கற்பினை யுடையவள். என் தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.(பா. 39) என் தோழியினிடம், அரிய மழையைத் தருவிக்கும்படி வேண்டிக் கொண்டாலும் அதைப் பெய்யும்படி செய்யும் பெருமையுடையவள். `தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள். பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளில் இக் கருத்தமைந் திருப்பதைக் காணலாம். விரிநீர் உடுக்கை உலகம் பெறினும். அருநெறி ஆயர் மகளிர்க்கு, இருமணம் கூடுதல்இல் இயல்பன்றே. (பா. 114) இவ்வுலகமே பரிசாகக் கிடைத்தாலும் சிறந்த ஒழுக்கத்தை யுடைய ஆயர்குலப் பெண்கள் முதலில் காதலித்த கணவனைக் கைவிட்டு, மற்றொரு வனை மணத்தலாகிய இருமணம் புரிந்து கொள்ளுதல் அவர்கள் குடிப்பிறப்பின் தன்மையன்று. பெண்கள் அருந்ததியைப்போல் பிறர் நெஞ்சு புகாதவர் களாயிருக்க வேண்டும்; மழையைப் பெய்யச் செய்யும் தெய்வீக சக்தி படைத்திருக்க வேண்டும்; முதலில் காதலித்த கணவனைக் கைவிட்டு மற்றொருவனை மணம் புரிந்து கொள்ளுதல் கூடாது. இவைகளே பெண்களின் கடமை; கற்புடைமை. இவ்வாறு பண்டைத் தழிழர்கள் கருதினர். வேதம், வேள்வி, அந்தணர் சங்ககாலத்திலும் அதற்கு முன்னும் வேதங்களைப் படிக்கும் அந்தணர்களும். வேள்வி செய்யும் அந்தணர்களும் தமிழ்நாட்டிலே வாழ்ந்தனர். அவர்கள் தமிழர்களாகவே வாழ்ந்தனர். தந்நலந் துறந்து, எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்வதற்கான நற்செயல்களிலே ஈடுபட்டு வாழ்ந்தவர்களைத் தமிழர்கள் `அந்தணர்கள் என்று அழைத்தனர். கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என்நெஞ்சு. (பா. 36) வேத நூற் கேள்விகளையுடைய அந்தணர்கள் செய்யும் வேள்வியிலிருந்து எழும்பும் புகையைப் போல, என் நெஞ்சத்தி லிருந்து பெருமூச்சு எழுந்துவரும். அந்தி அந்தணர் எதிர்கொள. (பா. 199) அந்தணர்கள் தாம் செய்யும் தொழில்களைச் செய்து அந்திக்காலத்தை எதிர்கொள்ள. முக்கோல் கொள் அந்தணர் முதுமொழி நினைவார். (பா. 126) முக்கோலைக் கொண்ட அந்தணர்கள், மாலைக் காலத்திலே முதுமொழியான மந்திரத்தை நினைத்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவைகளால் தமிழ்நாட்டிலே வாழ்ந்த அந்தணர்கள் வேதம் படித்தனர், வேள்விகள் புரிந்தனர் என்பதை அறியலாம். காதல்கொள் வதுவைநாள்; கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மானோக்கின் மடந்தைதன் துணையாக ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான்போல் (பா. 69) காதல் கொள்கின்ற திருமண நாளிலே, ஆடையால் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கின்ற - அழகுடைய - மான் போன்ற பார்வையையுடைய பெண்ணைத் தன் துணையாகக் கொண்ட-வேதமோதிய அந்தணன் அவளுடன் தீயை வலஞ் செய்வான். இதனால், அந்தணர்கள் அக்கினி சாட்சியாக மணம் புரிந்துகெண்டனர் என்பதைக் காணலாம். அந்தணப் பெண்கள், திருமணக் காலத்தில் ஆடையினால் முகத்தை மூடியிருப்பர் என்பதையும் அறியலாம். இது அந்தணர் திருமண முறையைக் குறிக்கும். இராமாயண - பாரதம் சங்ககாலத்திலே இராமாயண - பாரத வரலாறுகள் தமிழ் நாட்டிலே பரவியிருந்தன; அவ் வரலாறுகளில் உள்ள பல நிகழ்ச்சிகளையும் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். இவ்வுண்மை சங்க நூல்கள் பலவற்றில் காணப்படுவது போலவே கலித்தொகை யிலும் காணப்படுகின்றது. இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக, ஐயிருதலையின் அரக்கர் கோமான், தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுந்து, அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல. (பா. 38) இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கயிலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது பத்துத் தலைகளை யுடைய, அரக்கர் தலைவனாகிய இராவணன், காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான். அவனால் அம்மலையைப் பெயர்த்தெடுக்க முடியவில்லை. மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டு வருந்தினான். இப்பாடற் பகுதி இராமாயணக் கதையைக் குறிப்பிடுகின்றது. வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள், முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தாராக, கைபுனை அரக்கில்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு (பா. 25) விளக்கமுற்ற நாடு என்பதற்குச் சரியான வடமொழிப் பெயர் கொண்ட முகத்தையுடையவன் (திருதராஷ்டிரன்); அவன் பெற்ற மக்களிலே மூத்தவன் துரியோதனன்; அவனுடைய சூழ்ச்சி யினால் உலகம் புகழும் பாண்டவர்கள் உள்ளே இருக்கும்போதே அழகாகச் செய்யப்பட்ட அரக்கு மாளிகையைத் தீப்பற்றிச் சூழ்ந்துகொண்டது; அதுபோல. விளக்கமுற்ற நாடு-திருதராஷ்டிரம். இது பாண்டவர்களை அரக்கு மாளிகை யிலே வைத்துத் தீயிட்ட பாரத வரலாற்றைக் குறிக்கின்றது. நூற்றுவர்தலைவனைக் குறங்கு அறத்திடுவான்போல். (பா. 52) நூற்றுவர் தலைவனாகிய துரியோதனனுடைய துடையை அறுக்கின்ற பீமனைப்போல. துரியோதனனுடைய துடையை அறுத்து, அந்த இரத்தத் தினால் பாஞ்சாலி யின் கூந்தலை முடிக்கச் செய்வேன் என்று கூறிய பீமனுடைய சபதத்தையும், பாரதப் போரிலே அவன் அவ்வாறு செய்ததையும் குறிப்பிடுகின்றது இப்பாடற் பகுதி. நூற்றுவர் மடங்க வரிபுனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் தொழூஉ (பா. 104) துரியோதனாதியராகிய நூற்றுவரும் அழியும்படி வரிந்து கட்டப்பட்ட வலிமையான வில்லையுடைய பாண்டவர்கள் போர் செய்து முடித்த போர்க்களத்தைப் போலக் காணப் பட்டது, போர்க் காளைகள் நிறைந்த தொழுவம். இது பாரதப்போர் நடைபெற்ற யுத்தகளத்தைக் குறித்தது இவ்வாறு இராமாயண, பாரத வரலாறுகள் உவமைகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன. புராணங்கள், தெய்வங்கள் பல புராண வரலாறுகளும், தெய்வங்களும் கலித் தொகைப் பாடல்களிலே காணப்படுகின்றன. பரமசிவன் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவுணர்களின் திரிபுரத்தை எரித்தார். (பா. 2,38,150) எருமையின் மேல் ஏறி வந்த எமனைப் பரமசிவன் தன் சூலப்படையால் பிளந்து கொன்றார். இது மார்க்கண்டேயர் வரலாற்றை நினைவூட்டுகின்றது. (பா. 103) திருமால் வாமன உருவமாக வந்து மாபலியிடம் மூன்றடி மண் தானமாகப் பெற்றார். உடனே திருவிக்கிரம அவதாரம் எடுத்து உலகம் மூன்றையும் ஓரடியால் அளந்தார். (பா. 124) கண்ணணைக் கொல்லுவதற்கு ஒரு அசுரன் குதிரை வடிவமாக வந்தான்; கம்சனால் ஏவப்பட்டவன். அக்குதிரையின் வாயைப் பிளந்து அவ்வசுரனைக் கொன்றான் கண்ணன். (பா. 103) கண்ணன் தன்னை எதிர்த்துப் போர் புரிந்த மல்லரை மாளச் செய்தான். பகைவர்கள் யானையின் மேல் ஏறி வந்து கண்ணணை எதிர்த்தனர். அந்த யானையின் நெற்றியிலே சக்கராயுதத்தை அழுந்தும்படி வீசி அப்பகைவர்களைப் பயந்தோடும்படி செய்தான். (பா.134) இவைகள் கலித்தொகையிலே காணப்படும் புராண வரலாறுகள். மன்மதன்; அவனுக்கு மீன்கொடியுண்டு பரமசிவன்; அவருடைய கொடி காளைக்கொடி. பார்வதி யுடன் வீற்றிருப்பார் . அவர் கொன்றை மலர் மாலையணிந்தவர். உடையாகப் புலித்தோலைப் புனைந்தவர்; கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் கூத்துக்களை ஆடியவர். திருமால் சக்கரப்படையை உடையவர்; மார்பிலே இலக்கு மியை ஏற்றிருப்பவர்: வலம்புரிச் சங்கத்தை ஏந்தியிருப்பவர். பிரமதேவன்; அவனுடைய தொழில் படைப்புத் தொழில். பலராமன்; அவனுடைய படை கலப்பை. இன்னும் கண்ணன், கூற்றுவன், காளி, முருகன், இந்திரன் முதலிய தெய்வங்களும் காணப்படுகின்றன. மாடு பிடித்தல் முல்லை நிலத்து மக்கள் சிறந்த வீரர்களாயிருந்தனர். அந்நிலத்துப் பெண்கள் வீரர்களைத்தான் மணம்புரிந்து கொள்ளு வார்கள். கொல்லேறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டு. பந்தயத்திற்கென்று வளர்க்கப்பட்ட காளைகளை அவிழ்த்து விரட்டுவார்கள். அக்காளைகளை அடக்கிப் பிடிக்கின்றவர்களே பெண்களால் பாராட்டப்படுவார்கள். அவ்வீரர்களையே அந்நிலத்து மாதர்கள் மணந்து கொள்ளுவார்கள். இது பழந்தமிழ் நாட்டு வழக்கம். இதனை முல்லைக் கலியிலே காணலாம். கொல்லேறு தழுவுதல் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான செயல். ஆயினும் அச்செய்கையில் வெற்றி பெறுகின்றவனையே ஆயர்குலப் பெண்கள் ஆண்மகனாக மதிப்பர். இல்லறத்தை இனிது நடத்துவதற்கு ஏற்றவனாக எண்ணுவர். எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர். (பா. 102) காளைகள் கட்டுக்கடங்காமல் ஓடின. அதனால் தூசி யெழுந்தது; வானத்தை மறைத்தது. பல வீரர்கள் அக்காளை களை மடக்கினர். அவைகளின் முட்டல்களைத் தங்கள் மார்பிலே ஏற்றனர். அக்காளைகளிற் பல கொம்புகளுடன் தலை கவிழ்ந்தன. அக்காட்சியைக் கண்ட பலர் கலக்கமுற்றனர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள்-அவைகளைப் பிடிக்கும் வீரர்கள்-அந்நிகழ்ச்சியைக் காணும் பொதுமக்கள் ஆகிய இக்காட்சிகளை இச்சொல்லோ வியத்திலே காணுகின்றோம். தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு. (பா. 103) காளைகளை அடைத்திருக்கும் வட்டாரத்திற்குள்ளே, அவைகளைப் பிடிப்பதற்காக விரும்பி விரும்பி உள்ளே புகுந்த இடையர்களைத் தெரிந்து தெரிந்து காளைகள் தங்கள் கொம்பு களால் குத்தின. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள் (பா. 103) கொல்லுகின்ற காளையின் கொம்பைப் பிடித்து அடக்க அஞ்சுகின்றவன் கோழை. ஆயர் மகள் அவனை இப்பிறப்பில் மணம் புரிந்துகொள்ள விரும்பமாட்டாள்; மறு பிறப்பில் மணக்கவும் விரும்பமாட்டாள். ஆயர்களின் செல்வம் ஆடு - மாடுகள். அவைகளை அடக்கி யாளும் திறமை அவர்களுக்கு வேண்டும். இத்திறமை அவர்களுக்கு உண்டு என்பதை மெய்ப்பிப்பதற்காகவே இவ்வழக்கம் அவர் களிடம் ஏற்பட்டது என்று எண்ணலாம். காளைகள் காளைகளின் இலக்கணத்தைக் கலித்தொகையிலே காணலாம். காளை களிலே ஐந்து வகையுண்டு. அவை காரி, வெள்ளை, குரால், புகர், சேய் என்பன. காரி-கறுப்புக்காளை, வெள்ளை-வெள்ளைக்காளை, குரால்-மயிலைக்காளை, புகர்-புள்ளிக்காளை, சேய்-சிவப்புக்காளை. அவைகளின் தோற்றங் கருதி இவ்வாறு ஐவகையாகப் பிரித்தனர். வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்கும், சுரிநெற்றிக் காரியும் திருமால் தன் வாயில் வைத்து ஊதுகின்ற வலம்புரிச் சங்கினைப்போல், தெளிவாக விளங்கும் வெண்மையான நெற்றியையுடைய கறுப்புக் காளையும். ஒரு குழையவன் மார்பில் ஒண்தார்போல், ஒளிமிகப் பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும் பலராமனுடைய மார்பிலே நீண்டு தொங்குகின்ற சிவந்த மலர் மாலையைப் போல, ஒளியுடன் அழகாக அமைந்திருக் கின்ற சிவந்த கோட்டையுடைய வெள்ளைக்காளையும். பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற்றணி போல, இரும்பிணா எருத்தின் ஏந்திமில் குராலும். சிவபெருமானுடைய அழகிய கழுத்திலே காணப்படும் கருமையணியைப் போல, கழுத்திலே கருமையும் உயர்ந்த திமிலையும் உடைய மயிலைக் காளையும். அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரங் கண்ஏய்க்கும், கணங்கொள் பல் பொறிக், கடுஞ்சினப் புகரும். பகைவர்களை வருத்துந் தன்மையையுடைய வச்சிரா யுதத்தைக் கொண்ட இந்திரன் உடம்பிலே ஆயிரங்கண்கள் அமைந்திருப்பதைப்போல், கூட்டமான பல புள்ளிகளையுடைய சினமுள்ள புள்ளிக் காளையும். வேல்வலானுடைத் தாழ்ந்து விளங்கு வெண்துகிலேய்ப்ப, வாலிது கிளர்ந்த வெண்காற் சேயும். வேற் படையோனான செவ்வேளினிடம் தாழ்ந்து கிடக்கின்ற வெண்மையான உடையைப் போல, தூய்மையாகக் காணப்படும் வெண்மையான கால்களையுடைய சிவப்புக் காளையும். காளைகளின் இலக்கணம் இவை. மூன்று பாடல்களில் காளைகளின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலே எடுத்துக் காட்டிய பாடற் பகுதிகள் 105-வது பாட்டிலே காணப்படுவன. காளைகளுக்குக் காட்டப்பட்டிருக்கும் உவமைகள் குறிப்பிடத் தக்கவை. இவ்வைந்து பகுதிகளையும் வைத்துக்கொண்டு ஐந்து வண்ணப் படங்கள் வரையலாம். பழக்க வழக்கங்கள் கலித்தொகையிலே பண்டைத் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களைக் காணலாம். பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு; பெண்களுக்கு இடது கண் துடித்தால் அதனால் நன்மையுண்டு. (பா. 11) தவத்திலே தமிழ் மக்களுக்கு நம்பிக்கையுண்டு. முன் பிறப்பிலே தவஞ்செய்தவர்கள் இப்பிறவியில் எல்லா இன்பங் களையும் நுகர்ந்திருப்பார்கள். மறு பிறப்பிலே நம்பிக்கையுண்டு. (பா. 30) பொய் சாட்சி சொன்னவன் ஒரு மரத்தின் கீழ் இருப்பானாயின் அந்த மரம் பற்றியெரிந்துவிடும். (பா. 34) மலையிலே வாழ்வோர் அறமல்லன செய்தால், வள்ளிக்கிழங்கு நிலத்திலே ஆழமாக ஊன்றிப் பருக்காது; தேன் பூச்சிகளும் அடை கட்டாது; தினைக்கதிர்கள் நன்றாகக் கதிர் விட்டுப் பயன் தராது; மழை பெய்யாது. (பா. 39) பகலிலே-நனவிற் செய்த காரியங்களைப் பற்றி இரவிலே கனவு காண்பர். (பா. 49) கனவிலே கண்ட செய்திகள் நனவிலே பலிப்பதும் உண்டு. (பா. 128) இவ்வுலகிலே ஒழுக்கத்துடன் வாழ்ந்து, குடிகளையும் குறையின்றிக் காப்பாற்றிய மன்னவன், இறுதியிலே சுவர்க்கத்தை யடைந்து இன்பந்துய்ப்பான். (பா. 118) அரசர்க்கு மூன்று வகையான முரசங்கள் உண்டு. அவை வீர முரசு, தியாக முரசு, நீதி முரசு என்பன. (பா. 132) நோய் வந்தால் அதனை நீக்கி உயிர் போகாமல் காப்பாற்றும் திறமை மருத்துவர்களுக்கு உண்டு. (பா. 137) சந்திரனை இராகு என்னும் பாம்பு பிடித்துக் கொள்ளு வதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. (பா. 140) தை மாதத்திலே நீராடி நோன்பிருக்கும் வழக்கம் பெண் களிடம் உண்டு. (பா. 59) அந்தணர்கள் அக்கினி சாட்சியாக மணம் புரிந்து வந்தனர். (பா. 69) போர்க்காலத்தில், போர் நடைபெறும் இடத்தில் வாழும் குடிகள் அவ்விடத்தை விட்டு வேறிடங்களுக்குக் குடியேறி விடுவார்கள். போர் முடிந்த பின் மீண்டும் தங்கள் பழைய இடத்திற்கு குடியேறுவார்கள். (பா. 78) இவை போன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களை இந்நூலிலே காணலாம். கற்றறிந்தார் போற்றும் கலித்தொகை யிலே தீந்தமிழ்த் தேனை நுகரலாம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறந்த செய்திகளைக் காணலாம். 7 பரிபாடல் பரிபாடலின் சிறப்பு பரிபாட்டுக்களைத் தொகுத்த நூலுக்கு பரிபாடல் என்று பெயர். கலிப் பாடல்களைத் தொகுத்த நூலுக்குக் கலித்தொகை என்று பெயரிட்டனர். இதுபோலவே பரிபாடலுக்குப் பெயர் சூட்டினர். பரிபாடல் என்பது ஒருவகைப் பாட்டு. பரிபாடல் என்பது பாட்டினால் பெயர் பெற்றது. பரிபாட்டில் பல வகைப் பாடல்களின் பகுதிகளையும் பார்க்கலாம். ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களும் கலந்த ஒருவகைப் பாடலே பரிபாடல். இருபத்தைந்து அடிகள் முதல் நானூறு அடிகள் வரையில் இப்பாடலைப் பாடலாம். பரிந்து வருதல் பரிபாடல். பரிந்து வருதல்-ஏற்றுக் கொண்டு வருதல். பரிதல்-ஏற்றல், தாங்குதல். அதாவது நால்வகைப் பாடல் உறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டு வருதல். பரிபாடலில் அகப்பொருட் செய்திகளும் காணப்படுகின்றன; புறப்பொருட் செய்திகளும் காணப்படுகின்றன. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கில் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, நீர் விளையாட்டு என்னும் பொருள்களைப் பற்றிக் கூறுவது பரிபாடல் இது பேராசிரியர் பேச்சு. தெய்வ வாழ்த்து உள்பட காமப்பொருள் குறித்து உலகியலைப் பற்றிக் கூறுவது பரிபாடல் இது நச்சினார்க் கினியர் நவின்றது. தெய்வமும் காமமும் பொருளாகக் கொண்டு வருவது பரிபாடல் இது யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் மொழி. இவைகளால் பரிபாடற் பாட்டுக்கள் புறப்பொருட் செய்திகளையும் புகல்கின்றன, அகப்பொருட் செய்திகளையும் அறிவிக்கின்றன, என்று அறியலாம். நாலாயிரப் பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா முதலியவை சங்க காலத்திற்குப் பின்னே தோன்றியவை. கடவுளிடம் அன்பு செலுத்தத் தூண்டும் கவிதைகள் இவைகள். சங்க காலத்திலே பரிபாடல்களே தெய்வபக்தியைத் தூண்டும் தீந்தமிழ்ச் செய்யுட்களாக நிலவிவந்தன. கடவுளர் பெயர்கள், அவர்களுடைய திருவிளையாடல்கள் பற்றியே பிற்காலத்துப் பக்திப் பாடல்களில் காணப்படுகின்றன. இடையிடையே சில அறவுரைகளும் உண்டு; மத வெறுப்புக் களும் காணப்படுகின்றன. ஒரு சில ஆசிரியர்களே தங்கள் காலத்திலிருந்த மக்களின் பழக்க வழக்கங்களையும், நாட்டின் நிலைமைகளையும் இணைத்துப் பாடியிருக்கின்றனர். சங்க காலத்துப் பக்திப் பாடல்களாகிய பரிபாடல்களிலே பழைய நாகரிகங்களைப் பார்க்கலாம்; அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் காணலாம்; தமிழர்களின் பண்பாடுகளை அறியலாம். இவைகள் பிற்காலப் பக்திப் பாடல்களுக்கும், முற்காலப் பக்திப் பாடல்களுக்கும் உள்ள வேற்றுமை. பரிபாடல்கள் அனைத்தும் பண்ணுடன் கூடியவை. இசைப் பாடல்கள். இயற்றமிழும் இசைத்தமிழும் கலந்த பாடல்கள். பாலையாழ், நோநிறம், காந்தாரம் என்ற பண்கள் பரிபாடல் களிலே காணப்படுகின்றன. இப்பண்களை அறிந்து பாடுவோர் இக் காலத்தில் இல்லை. கடைச் சங்க காலத்திலே எழுபது பரிபாடல்கள் இருந்தன. திருமாலைப்பற்றி எட்டு; முருகனைப் பற்றி முப்பத்தொன்று; காடுகிழாளைப்பற்றி ஒன்று; வையையைப் பற்றி இருபத்தாறு; மதுரையைப்பற்றி நான்கு. ஆக எழுபது பாடல்கள். பரிபாடலிலே திருமாலைப் பற்றியும், முருகனைப் பற்றியும், காடுகிழாளைப் பற்றியும் தனித்தனியே வணக்கப் பாடல்கள் பாடியிருக்கின்றனர். ஆனால் சிவபெருமானைப் பற்றிய வணக்கப் பாடல்கள் தனியாக இல்லை. ஆயினும் பல பாடல்களிலே சிவபெருமானைப் பற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன. ஆசிரியர்கள் இப்பொழுதுள்ள பரிபாடலில் இருபத்து நான்கு பாடல்களே காணப்படு கின்றன. சிதைந்து போன சில பாடற் பகுதிகளும் உண்டு. இந்த இருபத்து நான்கு பாடல்களில் திருமாலைப்பற்றியவை ஏழு; முருகனைப் பற்றியவை எட்டு; வையையாற்றைப் பற்றியவை ஒன்பது. சிதைந்த பாடற் பகுதி களிலே மதுரை யைப் பற்றிக் கூறும் பகுதிகள் குறிப்பிடத் தக்கவை. இவற்றுள் 1, 22, 23, 24 ஆகிய நான்கு பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. சிதைந்த பாடல்களைச் செய்தவர்களின் பெயரும் தெரியவில்லை. ஏனைய இருபது பாடல்களையும் பதின்மூன்று புலவர்கள் பாடியிருக்கின்றனர். இந்நூலின் இரண்டாவது பாடலை இயற்றியவர் கீரந்தையார். இது திருமால் வாழ்த்து. மூன்று, நான்கு, ஐந்து ஆகிய மூன்று பாடல்களும் கடுவன் இளவெயினனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டவை. மூன்றும், நான்கும் திருமாலைப் பற்றியவை; ஐந்து முருகனைப் பற்றியது. ஆறு, எட்டு, பதினொன்று, இருபது ஆகிய நான்கு பாடல் களும் ஆசிரியர் நல்லந்துவனார் என்பவரால் பாடப்பட்டவை. எட்டாவது பாடல் முருகனைப் பற்றியது. ஏனைய மூன்றும் வையையாற்றைப் பாடியன. இவர் வரலாற்றைக் கலித்தொகைக் குறிப்பிலே காணலாம். ஏழாவது பாட்டு மையோடக்கோவனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இது வையையைப் பற்றியது. ஒன்பது, பதினெட்டு ஆகிய இரண்டு பாடல்களும் குன்றம்பூதனார் என்பவரால் பாடப்பட்டவை. இவையிரண்டும் முருகனைப் பற்றியவை. பத்தாவது பாடல் கரும்பிள்ளை நப்பூதனார் என்பவரால் பாடப்பட்டது. இது வையையைப் பற்றியது. பன்னிரண்டாவது பாடல் நல்வழுதியார் என்பவர் பாட்டு. இதுவும் வையையைப் பற்றியது. பதிமூன்றாம் பாடல் நல்லெழுனியார் என்பவரால் பாடப்பட்டது. இது திருமாலைப் பற்றியது. பதினான்காவது பாடலை இயற்றியவர் கேசவனார் என்பவர். இது முருகனைப் பற்றியது. பதினைந்தாம் பாடலின் ஆசிரியர் இளம்பெரு வழுதியார். இது திருமாலைப் பற்றியது. பதினாறு, பதினேழு ஆகிய இரண்டு பாடல்களும் நல்லழுசியார் என்பவரால் பாடப்பட்டவை. பதினாறு வையை நதியைப் பற்றியது; பதினேழு முருகனைப் பற்றியது. பத்தொன்பதாவது பாடலை இயற்றியவர் நப்பண்ணனார். இது முருகனைப் பற்றியது. இருபத்தொன்றாவது பாடலின் ஆசிரியர் நல்லச்சுதனார் என்பவர். இது முருகனைக் குறித்தது. இந்தப் பாடல்களுக்கு பத்து ஆசிரியர்கள் இசை வகுத்துள்ளனர். கண்ண கனார், கண்ணனாகனார், கேசவனார், நந்நாகனார் (நம்நாகனார்), நல்லச்சுதனார், நன்னாகனார், (நல்நாகனார்), நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார், மருத்து வனல்லச்சுதனார் என்பவர்கள் அப்பதின்மர். இவர்கள் சிறந்த இசைப் புலவர்கள் என்று எண்ணப்படுகின்றனர். திருமால் திருமாலைப்பற்றிய ஏழு பாடல்களிலே 1,2,3,4,13 ஆகிய ஐந்து பாடல்கள் பொதுவானவை. திருமாலைக் குறித்துப் பாடப்பட்டவை. எந்தந்த திருப்பதியை யும் குறித்துப் பாடப் பட்டவை அல்ல. திருமாலே முதற் பெருங்கடவுள்; எங்கும் நிறைந்தவர்; எல்லாமாயிருப்பவர் என்று பரத்துவங் கூறுகின்றன. இப் பாடல்களிலே திருமாலின் பெருமையைக் காணலாம். அழல்புரை குழை, கொழு நிழல்தரும் பலசினை ஆலமும், கடம்பும், நல்யாற்று நடுவும், கால்வழக்கு அறுநிலைக் குன்றமும், பிறவும் அவ்வவை மேவிய வேறுவேறு பெயரோடு எவ்வ யினோயும் நீயே (பா. 4. வரி 66-70) தீயைப் போன்ற தளிர்களையுடையதும், குளிர்ந்த நிழலைத் தரக் கூடியதும், பல கிளைகளைக் கொண்டதுமான ஆல மரத்திலும், கடம்ப மரத்திலும், நல்ல ஆற்றின் நடுவிலும், காற்று உள்ளே புகமுடியாத வலிமையான தன்மையுள்ள குன்றுகளிலும், மற்றவிடங்களிலும், அவ்வகைகளிலே வெவ்வேறு பெயர்களுடன் எல்லாவிடங்களிலும் நீயே வாழ்கின்றாய். திருமாலே பலவிடங்களிலும், பல தெய்வங்களாகக் காட்சி தருகின்றார். ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ! (பா. 1. வரி 43,44) ஐந்து தலைகளையும், உயர்ந்த தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த ஆற்றலையும், வலிமையையும் உடைய சிவபெருமானும் நீ. உலகங்கள் ஒடுங்கும் இடமும் நீ! திருமாலே சிவபெருமானா கவும் காட்சியளிக்கின்றார். தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீயென மொழியு மால் அந்தணர் அருமறை (பா. 3. வரி 13-14) தாமரைப் பூவிலே பிறந்த நான்முகனும், அவனுடைய தந்தையும் நீயென்றே அந்தணர்களின் அரிய வேதங்கள் அறை கின்றன. திருமாலே நான்முகனாகவும் காட்சியளிக்கின்றார். திருமாலே எல்லாப் பொருள்களிலும் இருக்கின்றார்; எல்லாப் பொருள்களாகவும் இருக்கின்றார். எல்லாத் தெய்வங் களாகவும், எல்லா இடங்களிலும் இருக்கின்றார். அவரே மும்மூர்த்திகளாகக் காட்சியளிக்கின்றார். திருமாலைப் பற்றிய பாடல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. திருமாலிருங்குன்றம் உலகில் உள்ள குன்றங்களிலே திருமாலிருங்குன்றமே சிறந்தது. இதற்குக் காரணம் இக்குன்றம் திருமாலைத் தன்மேல் தாங்கிக்கொண்டிருப்பதுதான் இவ்வாறு கூறுகின்றது பரிபாடல். திருமாலிருங்குன்றம் - அழகர் மலை. புலவர்களால் ஆராய்ந்து கூறி, உயர்ந்தனவென்று பாடப்பட்ட பெரிய குன்றுகள் பல உண்டென்றால், ஆம்! உண்மையாகவே பல குன்றுகள் உண்டு. அத்தகைய சிறந்த பல குன்றுகளிலே, நிலத்தில் வாழ்கின்றவர்களின் பசியைத் தணித்து, நிறைந்த பயன்களையெல்லாம் நிலையாகச் சுரந்து கொண்டி ருக்கும் குன்றுகள் சிலவேயாம். அச் சில குன்றுகளிலும், தெய்வங்கள் விரும்புகின்ற மலர் நிறைந்த தடாகங்களையும், மேகங்கள் படிந்திருக்கின்ற உச்சியையும் உடைய குன்றுகள் சிலவேயாம். இத்தகைய குன்றுகள் சிலவற்றிலும் சிறந்த குன்று எதுவென்றால், ஒலிக்கின்ற கடலையும் கடற்கரைச் சோலை யையும் போன்றது; பொருந்திய சொல்லும் அதன் பொருளும் போன்றது; எல்லா அழகும் இன்பமும் நிறைந்தது; வேறு வேறு உருவாக நின்று ஒரே தொழிலைச் செய்கின்ற கண்ணனையும், அவன் முன்னோனையும் தாங்கி நிற்பது; நீண்ட காலமாக நிலைத்திருப்பது; உயர்ந்த பெரிய குன்றம்; இதுவே சிறந்த குன்றமாகும். புலவர் ஆய்பு உரைத்த புனைநெடுங் குன்றம் பலவெனின் ஆங்கவை பலவே; பலவினும் நிலவரை ஆற்றி, நிறைபயன் ஒருங்குடன் நின்றுபெற நிகழும் குன்றவை சிலவே; சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும் மலரகன் மார்பின், மைபடி குடுமிய குலவரை சிலவே, குலவரை சிலவினும் சிறந்தது, கல்லறைகடலும் கானலும் போலவும், புல்லிய சொல்லும் பொருளும் போலவும், எல்லாம் வேறுவேறுஉருவின் ஒருதொழில் இருவர்த் தாங்கும் நீள்நிலை ஓங்கிருங் குன்றம். (பா. 15. வரி 4-14) இதனால் திருமாலிருங்குன்றத்தின் இயற்கை வளத்தையும் சிறப்பையும் காணலாம். சிலம்பாற்றைத் தரித்திருக்கின்ற-சிறந்த அழகமைந்த சோலைகள் நிறைந்த-தொடர்ந்த புகழ் மொழிகளையுடைய திருமாலிருங்குன்றம். சிலம்பாறணிந்த சீர்கெழு திருவின் சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம் (பா. 15. வரி 22-23) திருமாலிருங்குன்றத்தில் உள்ள சிலம்பாறு, அக்குன்றத்தின் இயற்கையழகு, சோலைகள், அக்குன்றின் பழம் புகழ் ஆகியவை களை இப்பகுதியாற் காணலாம். சிலம்பு-மலை. சிலம்பாறு - மலையிலிருந்து ஓடிவரும் ஆறு. இதனை வடமொழியாளர் நூபுரகங்கையென்று மொழி பெயர்த்தனர். நூபுரம்-காலில் அணியும் சிலம்பு. திருமாலிருங் குன்றம் மிகப் பழங்காலத்திலிருந்தே திருமால் வாழும் திருப்பதி யாகவே இருந்து வருகின்றது. சிலர் சொல்வது போல, `அது ஒரு காலத்தில் முருகவேள் குன்றாக இருந்தது; பின்னால் திருமால் குன்றாக மாறியது என்பதற்குச் சங்க இலக்கியங்களிலே ஆதரவில்லை. திருமுருகாற்றுப்படையிலே உள்ள பழமுதிர்சோலையைத் திருமாலிருஞ்சோலையென்று கூறுகின்றனர் சிலர். அந்தத் திருமுருகாற்றுப்படையும், இந்தப் பரிபாடற் பாட்டும் கடைச் சங்க காலத்துப் பாடல்கள்; ஏறக்குறைய ஒரே காலத்தவை. திருமுருகாற்றுப்படை தோன்றிய காலத்தில் திருமாலிருஞ் சோலை வைணவத் திருப்பதியாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆதலால் பழமுதிர்சோலையென்பது திருமாலிருஞ் சோலையெனல் பொருந்தாது. இதனைப் பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் என்னும் நூலிலும் காணலாம். இருந்தையூர் பரிபாடலின் இருபத்து மூன்றாவது பாட்டு இருந்தையூரில் உள்ள திருமாலைப் பாடியது. கடைச்சங்க காலத்திலே இது ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கவேண்டும். பரிபாடற் பாட்டி லிருந்து இவ்வுண்மை விளங்குகின்றது. இருந்தையூரையடுத்து வளமுடைய மலையுண்டு; அவ்வூரில் சிறந்த தடாகம் உண்டு; அவ்வூரில் திருவிழா நடைபெறும். நகரைச் சுற்றிலும் கழனிகள் உண்டு; அக்கழனிகளில் உழவுத் தொழில் நடைபெற்றது. அந்நகரத்தில் கற்றறிந்த புகழ் பெற்ற அந்தணர்கள் வாழ்ந்தனர். பல பண்டங்களையும் விற்பனை செய்யும் வணிகர் தெருவுண்டு. உழவர்களின் வீதியுண்டு. இச்செய்திகள் இப்பாடலில் காணப்படுகின்றன. திருமால் கரிய நிறமுடையவர்; பாற்கடலிலே ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டிருக்கின்றார். அவருடைய கொடி கருடக் கொடி, பனைக்கொடி, கலப்பைக்கொடி. யானைக்கொடிகளும் அவருக்குண்டு. தேவர்களைக் காக்கும் பொருட்டு அவர் அசுரர் களுடன் போர் செய்தார்; பற்பல அவதாரங்கள் எடுத்தார். திருமால் தனது உந்தித்தாமரையிலிருந்து நான்முகனைப் படைத்தார். பன்றியாக அவதாரம் எடுத்தார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது மோகினியாக வந்தார். பிரகலாதனைக் காக்கும் பொருட்டு நரசிம்மாவதாரம் எடுத்தார். கண்ணனாகவும், பலராமனாகவும் பிறந்தார். இச்செய்திகளும் இந்த இருபத்து மூன்றாவது பாடலில் காணப்படுகின்றன. இருந்தையூரின் தோற்றம், திருமாலின் பெருமை இரண்டையும் இப்பாடலில் காணலாம். இப்பாடல் டாக்டர் உ.வே.சா. அவர்கள் பதிப்பில் பின் சேர்க்கையில் முதலாவது பாடலாக உள்ளது. திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலே இப்பொழுதுள்ள திருப்பரங்குன்றம் தண்பரங்குன்றாகக் காட்சியளித்தது. குன்றின்மேல் குளிர்ச்சி தரும் மரங்கள் இருந்தன. இனிய அருவி நீர் இடையறாமல் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர்ச் சுனையிருந்தது; அதிலே ஆடவரும் பெண்டிரும் நீர் விளையாடினர். முருகன் முருகனைப் பற்றிய பாடல்கள் செவ்வேள் என்ற தலைப்பில் உள்ளன. 5,81,9,14,17,18,19,21 ஆகிய எட்டுப் பாடல்கள் முருகனைப்பற்றியவை. இவற்றுள் ஐந்தாவது பாடல் மட்டும் பொதுப்பாட்டு. எந்த இடத்தையும் குறிக்காமல் பொதுவாக முருகனுடைய புகழைப் பாடுகின்றது. ஏனைய ஏழு பாடல்களும் திருப்பரங்குன்றத்தைப் பாடியவை. ஐந்தாவது பாட்டிலே முருகனுடைய பிறப்பு கூறப்படுகிறது. அது கந்தபுராண வரலாற்றிலிருந்து சிறிது மாறுபட்டுள்ளது. தண்பரங்குன்றிலே முருகனை வழிபடுவதற்காக எப்பொழுதும் ஆண்களும் பெண்களும் குழுமியிருக்கின்றனர். செவ்வேளைப் பலர் சேவித்துக் கொண்டேயிருக்கின்றனர். இவற்றைப் பரிபாடலின் 21வது பாடலிலே விரிவாகக் காணலாம். `பரங்குன்றம் இமயத்தைப் போன்றது. அங்குள்ள சுனை இமயத்தில் உள்ள சரவணப் பொய்கையைப் போன்றது. என்று பரிபாடலில் காணப்படுகின்றது. இவ்வாறு திருப்பரங்குன்றம் பல பாடல்களிலே பாராட்டப்பட்டிருக்கின்றது. பரிபாடற் பாட்டிலே காணப்படும் திருப்பரங்குன்றின் இயற்கை வளத்தை இன்று காணமுடியவில்லை. வையையாறு ஒன்பது பாடல்கள் வையையாற்றின் பெருமையைப் பாடுகின்றன. அவை 6,7,10,11,12,16,20,22,24 ஆகிய எண்ணுள்ள பாடல்கள். ஒவ்வொரு பாடலும் மலையிலே பிறந்து வரும் வையை என்று தொடங்குவது குறிப்பிடத் தகுந்தது. வையை வெள்ளத்திலே பல மலர்கள் மிதந்து வருகின்றன; சந்தனம் முதலிய நறுமணப் பண்டங்களை அவ்வெள்ளம் அடித்துக்கொண்டு வருகின்றது. வையையிலே வெள்ளம் வந்துவிட்டது என்பதைக் கேட்டவுடன் மதுரை நகர மக்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றனர்; ஆண்களும் பெண்களும் அகமகிழ்ச்சியுடன் ஆற்றிலே நீராடுகின்றனர். இச்செய்தி களைப் பற்றித்தான் எல்லாப் பாடல்களும் இனிய நிகழ்ச்சிகள் பலவற்றுடன் இணைத்துக் கூறுகின்றன. வையை நதியிலே மக்கள் புகுந்து நீராடுந் துறையை திருமருத முன்துறை என்பர். திருமருத முன்துறை (பா 7. வரி 31) திருமருத நீர்ப்பூந்துறை (பா. 11. வரி 80) என்று பரிபாடல்கள் கூறுகின்றன. இன்று வையை நதி கடலோடு கலக்கவில்லை. இடை யிலேயே நின்றுவிடுகின்றது. பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில் வையை நதி மலையிலே பிறந்து கடலிலே வீழ்ந்தது. வையைமடுத்தாற் கடரென (பா. 20.வரி 42) - வையை கடலிலே கலந்தது போல என்று உவமையாகக் காட்டப் பட்டுள்ளது. நுரையுடன் மதகுதோறும் இழிதருபுனல் கரைபுரளிய செலும், மறிகடல் புகும் அளவு அளவு இயல் இசை, சிறை தணிவின்று வெள்ளமிகை, (பரிபாடல் திரட்டு - 24) நுரையுடனே மதகுகள் வழியாக வருகின்ற வெள்ளம் கரைபுரண்டு போகின்றது. அலை வீசும் கடலிலே போய்ச்சேரும் அளவும் தாளம், பாட்டு, இசைகளைப் போன்ற ஓசைகளை எழுப்பிக்கொண்டு ஓடுகின்றது. அணைகளைக் கண்டு தணிந்து நிற்காமல் அவைகளை அடித்துக்கொண்டு ஓடுகின்றது. இத்தகைய மிகுந்த வெள்ளத்தையுடையது வைகையாறு இதனாலும் வையை கடலொடு கலந்ததைக் காணலாம். வைகையின் கரைகள் வளமுற்றிருந்தன. அவைகளைக் கண்டவர்கள், அவைகள் வள்ளல் தன்மையிலே சிறந்த பாண்டிய மன்னனுடைய கொடையைப் போல இருக்கின்றன என்பர். மேகங்கள் படிகின்ற மலையிலே தோன்றிய மிளகு, சந்தனம், வெண்ணெய்க்காகக் கடையும் தயிரைப் போன்ற நுரை, இன்னும் பல பண்டங்கள் ஆகியவைகளை வைகை வெள்ளம் தன் இருகரைகளிலும் குவித்துக்கொண்டே ஓடுகின்றது. கரையே கைவண் தோன்றல் ஈகைபோன்ம் என; மைபடு சிலம்பிற் கறியொடும், சாந்தொடும், நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும் எவ்வயினானும் மீதுமீது அழியும். (பா. 16. வரி 1 - 4) இதனால் வைகை வெள்ளத்தின் சிறப்பைக் காணலாம். அன்னப் பேடை போன்ற பெண்கள் மெதுவாகச் செல்லும் குதிரைகளின் மேல் ஏறி வந்தனர்; பெண்யானைகளின் மேலும் ஏறி வந்தனர். ஆண்கள் விரைந்து செல்லும் குதிரை களின் மேல் ஏறிப் பாய்ந்து வந்தனர். ஆண் யானைகளின் மேல் அமர்ந்து வந்தனர். நல்ல ஓசை தரும் மணி புனைந்த பெரிய தேர்களின் மேல் ஏறியமர்ந்து, விரைந்து செல்லும்படி குதிரை களைத் தார்க்குச்சியால் குத்தியோட்டினர். இவ்வாறு ஆண்களும் பெண்களும் வெள்ளத்தைக் காணும் வேட்கையுடன் விரைந்து வந்து கூடினர். நீராடுவோர் கூட்டமும் ஒவ்வொரிடத்திலும் நிறைந்தது; வெள்ளத்தை வேடிக்கை பார்ப்போர் கூட்டமும் கரையிலே நிரம்பிற்று.; வெள்ளமும் பெருகிக் கரை புரண்டு ஓடிற்று. மடமா மிசையோர் பிடிமேல் அன்னப் பெரும் பெடை அனையோர்; கடுமா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும், வடி மாமணி நெடுந்தேர் மாமுள் பாய்க்குநரும், விரைபு விரைபு, மிகை மிகை யீண்டி ஆடல் தலைத் தலை சிறப்பக், கூடல் உரைதர வந்தன்று வையை நீர்; வையைக் கரைதர வந்தன்று காண்பவர் ஈட்டம், நிவந்தது நீத்தம் கரைமேலா (பா. 12. வரி 26-34) வையைப் பெருக்கைக் காண மதுரை மக்களுக்கிருந்த ஆர்வம், அவர்கள் வையைக் கரையிலே வந்து கூடியது, வையை வெள்ளப்பெருக்கு ஆகியவைகளை இதனாற் காணலாம். ஆற்றங்கரைப் பேச்சு பெண்கள் பலர் கூடினால் அவர்கள் சும்மாவிருக்க மாட்டார்கள். ஏதேனும் வம்பு பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்களுடைய குற்றங்களைப் பற்றிச் சிந்தனை செய்யமாட்டார்கள். பிறர் குற்றங்களை எடுத்துக் காட்டிப் பழிப்பதிலே பின்வாங்க மாட்டார்கள். பெண்களிடம்-வேறு வேலையில்லாமல் சோம்பேறித்தனமாகப் பொழுது போக்கும் பெண்களிடம்-இச்செயலை இன்றும் காணலாம். இதனை ஒரு பரிபாடல் எடுத்துக்காட்டுகின்றது `தோழியே அவளுக்கு வெட்கமில்லையோ! தன் கணவன் நலமற்ற பரத்தையின் இன்பத்தை நுகர்ந்தான்; தன்னைக் கைவிட்டான் என்று ஊடியிருந்தாள் ஒரு குலமகள். அவள் இப்பொழுது இந்தப் புது வெள்ளத்திலே, பெரிய யானையின் முதுகின் மேல் உள்ள அம்பாரியில் தன் கணவனோடு ஏறியிருக் கின்றாள். அவள் நாணமற்றவளோ? என்று பேசுகின்றனர் சில பெண்கள். கூட்டத்துக்குள்ளே நின்றுகொண்டிருக்கும் ஒருவன் பெண் களின் மார்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட பெண்கள், `உறுதியற்ற ஓட்டை மணமுடையவன்; ஆண்மையற்றவன். என்று இழித்துரைத்தனர். ஒருத்தி தன் ஆடை அணிகள் நெகிழ்ந்ததையும் அறிய வில்லை. பிறர் சொல்லுவதையும் கவனிக்கவில்லை. தன் நிறம் மாறுபட்டாள்; வழியோடு சென்ற காதலனிடம் தன் நெஞ்சைப் பறிகொடுத்தாள். இதைக் கண்ட பெண்கள் சிலர் `இப்படி அன்பை வெளிப்படுத்தினால் கற்பு அழிந்துவிடாதா? அந்த அன்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாமா? என்று உரையாடினர். ஒருவன் தன் காதலி அணிந்திருக்கின்ற முத்து மாலையைப் பார்த்தான்; அவளுடைய நெருங்கிய மார்பையும் பார்த்தான். அவனைக் கண்டு அப்பெண் நாணமடையாமல் நின்றாள். இந் நிகழ்ச்சியைக் கண்டு பரிகசித்தனர் சில பெண்கள். நாணாள்கொல் தோழி! நயனில் பரத்தையின் தோள்நலம் உண்டுதுறந்தான் என ஒருத்தி யாணர் மலிபுனல் நீத்தத்து இரும்பிடி சேணவெரிநில் சிறந்தானோடு ஏறினாள் நாணுக்கு உறைவிலள் நங்கை மற்று என்மரும்; கோட்டியுள் கொம்பர் குவிமுலை நோக்குவோன் ஒட்டைமனவன், உரமிலி என்மரும்; சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள், நிறந்திரிந்தாள், நெஞ்சத்தை நீத்தாள் நெறிசெல்வான்பின், நிறை அஞ்சிக் கழியாமோ அன்புற்றால் என்மரும்; பூணாரம் நோக்கிப் புணர்முலை பார்த்தான் உவன், நாணாள் அவனை இந்நாரிகை என்மரும் (பா. 12) வைகை வெள்ளத்தைக் காணுவதற்காகக் கூடிய பெண்கள் வம்புரைகள் பேசிக்கொண்டு நின்றதைக் குறித்தன இவ்வடிகள். பரமசிவன் பரமசிவனைப்பற்றிய தனிப்பாடல் பரிபாட்டில் இல்லை. ஆயினும் அவரைப்பற்றிய வரலாற்றைக் காணலாம். அவர் திரிபுரத்தை எரித்த வரலாறு சுட்டப்படுகின்றது. பரமசிவனைப் பார்ப்பான் என்றும், நான்முகனை அந்தணன் என்றும் பரிபாடல் பாட்டு கூறுகின்றது. நான்முகன் ஓட்டும் முறையறிந்து குதிரைகளை ஓட்ட - வேதங்களாகிய குதிரைகளைப் பூட்டிய - உலகமாகிய தேரிலே ஏறிச்சென்றான். வாசுகி யென்னும் நாகத்தை நாணாகவும் - மேருமலையை வில்லாகவும் கொண்டு சென்றான். மூன்று வகையான பலமுள்ள மதில்களையுடைய திரிபுரத்தை, ஒப்பற்ற அக்கினியாகிய அம்பினால் சிதையும்படி அழித்தான். இதனால் எண் திசைகளும் வெந்தன. இவ்வாறு செய்தவன் தேவர்கள் செய்த வேள்வியின் அவிர்ப் பாகத்தையுண்டவன்; பசிய கண்களையுடையவன்; பார்ப்பானாகிய பரமசிவன். ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ, வேதமாபூண், வையத்தேர் ஊர்ந்து, நாகம் நாணா, மலை வில்லாக மூவகை ஆர்எயில் ஓர் அழல் அம்பின் முனிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம்உண்ட பைம்கண் பார்ப்பான் (பா. 5) இதனால் சிவபெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். கடவுள் வணக்கம் சங்க காலத்து மக்களிடம் கடவுள் நம்பிக்கை குடிகொண் டிருந்தது. அவர்கள் பலவகையான தெய்வங்களை வணங்கி வந்தனர். இவைகளைச் சங்க நூல்கள் எல்லாவற்றிலும் காணலாம். கடவுளை வணங்குவோரில் இருவகையினர் இருந்தனர். தாம் கருதிய காரியம் கைகூட வேண்டும் என்ற எண்ணத்துடன் வணங்குவோர் ஒருவகை யினர்; எப்பயனும் கருதாமல், இறை வனை வணங்குவது கடமை என்ற கருத்துடன் வணங்குவோர் ஒருவகை. இவ்விரண்டு செய்திகளும் பரிபாடலிலே காணப்படு கின்றன. என் வயிற்றிலே கர்ப்பந் தரிக்க வேண்டும் என்று சில பெண்கள் வேண்டிக்கொள்ளுகின்றனர். எம் கணவருக்குச் சிறந்த செல்வங்கள் கிடைக்க வேண்டுமென்று சொல்லிச் சில பெண்கள் வணங்குகின்றனர். வியக்கத்தக்க போரிலே எம் கணவருக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்று வழிபடுகின்றனர் சில பெண்கள். கருவயிறு உறுகெனக் கடம்படுவோரும், செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும், ஐயமர் அடுகென அருச்சிப்போரும் (பா. 8) பரங்குன்றத்திலே பெண்கள் இவ்வாறு முருகனிடம் வரங்கேட்டுப் பணி கின்றனர். ஏதேனும் ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் பெரும்பாலும் பெண்கள் தெய்வ வழிபாடு செய்வார்கள்; அவர்களுடைய வேண்டு கோளும் விருப்பமும் அவர்களுடைய குடும்ப நலத்தைக் குறித்த தாகவே யிருக்கும். மேலே காட்டிய பரிபாடலால் இவ்வுண்மை விளங்குகின்றது. கடம்பமலர் மாலையை அணிந்த முருகனே! யாம் உன்னிடம் இரந்து கேட்பவை பண்டங்களுமல்ல; பொன்னுமல்ல; இன்பமும் அல்ல.உன்னிடம் நாங்கள் வேண்டுகின்றவை உன்னுடைய அருள்; அறநெறியைப் பின்பற்றி யொழுகும் சிந்தை இவைகளேதாம். யாஅம் இரப்பவை பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும், உருள் இணர்க்கடம்பின் ஒலிதாரோயே! (பா. 5) அன்பு செலுத்தி, நல்லொழுக்கத்திலே நின்று, நன்மை பெறும்படி அருள் செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் கடவுளை வேண்டுவார்கள். இதனை இவ்வரிகள் காட்டுகின்றன. உன்னுடைய பாதங்களை வணங்கினோம்; பலதடவை அடுத்தடுத்து வணங்கினோம்; வாழ்த்தினோம். முன்னே நாங்கள் செய்த தவத்தின் பயனால் இன்னும், மேலும் மேலும் இவ்வாறு வணங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை. நின்னடி தொழுதனெம் பன்மாண் அடுக்க இறைஞ்சினெம், வாழ்த்தினெம் முன்னும் முன்னும் யாம் செய் தவப்பயத்தால்; இன்னும் இன்னும் எம் காமம் இதுவே. (பா. 13. வரி 61-64) இது திருமாலைப் பற்றிய பாடல். திருமாலின் எதிரிலிருந்து சேவித்துக் கொண்டிருக்கும் நிலையே ஆன்மா அடைய வேண்டிய பயன் என்னும் வைணவமதத் தத்துவம் இவ்வடி களிலே அடங்கிக் கிடக்கின்றது. கடவுளை மறுப்போர் சங்க காலத்திலே தமிழ்நாட்டிலே கடவுள் நம்பிக்கையற்ற வர்களும் இருந்தனர். மறுபிறப்பு உண்டென்போரும் இருந்தனர்; மறுபிறப்பு இல்லை யென்போரும் இருந்தனர். மறுபிறப்பு இல்லையென்போர் நாத்திகராகக் கருதப்பட்டனர். ஏனைய உயிர்களை வெறுக்கும் இரக்கமற்றவர்கள்; அடங்காச் சினமுடையவர்கள்; அறநெறியைப் போற்றாத பெருமையற்றவர்கள்; கூடா வொழுக்கத்தால் நிலைகுலைந் தவர்கள்; மறுபிறப்பு இல்லையென்று சொல்லுகின்ற அறி வற்றவர்கள்; இவர்கள்தாம் உனது அடிநிழலை அடைந்து வணங்கமாட்டார்கள். செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும், சேரா அறத்துச் சீரில்லோரும். அழிதவப் படிவத்து அயரியோரும் மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார் நின்னிழல். (பா. 5 வரி 73-77) இது செவ்வேளைப்பற்றிய பாட்டு. கடவுளை வணங் காதார் கருணை யற்றோர்; ஒழுக்கமற்றோர்; அறிவற்றோர் என்று கூறுகிறது இப்பாட்டு. ஆத்திக - நாத்திகச் சண்டை சங்க காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தது என்பதை இது விளக்கும். அந்தணர்கள் சங்ககாலத்திலே வடமொழி வேதங்கள் தமிழ்நாட்டிலே வழங்கி வந்தன. அவற்றைப் படித்த அந்தணர்கள் பலர் தமிழ் நாட்டிலே வாழ்ந்தனர். அவர்கள் அறிவாளிகளாகக் கருதப் பட்டனர். வேத வேள்விகளும் தமிழ்நாட்டிலே நடைபெற்றன. இவைகளைப் பல பாடல்களிலே காணலாம். மதுரையிலே வாழும் மக்கள் விடியற்காலையிலே விழித் தெழுவார்கள். அவர்கள் அந்தணர்களின் வேத முழக்கத்தைக் கேட்டு விழித்தெழுவார்கள். சேரனுடைய வஞ்சிமா நகரத்தில் உள்ள மக்களும், சோழனுடைய உறையூரில் உள்ள மக்களும் கோழியின் கூவுதலைக் கேட்டுத்தான் விழித்தெழுவார்கள். ஆகையால் வேத வொலியையுடைய மதுரையே சிறந்த நகரம். இது மதுரையைப் பற்றிய ஒரு பரிபாடற் பகுதியிற் காணப் படுவது. நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியான் எழாது எம்பேரூர் துயிலே. அந்தணர்களை விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என்று இருவகை யினராகக் கூறுகின்றது பரிபாடல் (பா. 11) .விரிநூல் அந்தணர் என்போர் விரிவான வேதங்களையும் ஏனைய நூல்களையும் கற்றவர்கள்; அறவொழுக்கமுடையோர்; அறச் செயல்களை முன்னின்று ஆற்றுவோர். புரிநூல் அந்தணர் என்போர் அந்தணர்க்கு அடையாளமான பூணூலை மட்டும் அணிந்திருப்போர்; யாசகம் வாங்குவோர். இதனை. விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப (பா. 11) என்ற அடிகளால் காணலாம். பொலங்கலம் - பொற் பாண்டம். அந்தணர்கள் இருபிறப்பாளர்கள்; இரண்டு பெயர்களை யுடையவர்கள். இரக்கமுள்ள நெஞ்சம் படைத்தவர்கள். ஒப்பற்ற புகழையுடையவர்கள். என்று பாராட்டிக் கூறுகிறது பரிபாட்டு. இதனை, இரு பிறப்பு, இரு பெயர், ஈரநெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர் (பா. 14) இவைகள் தமிழ்நாட்டிலே வாழ்ந்த அந்தணர்களைப் பற்றிக் கூறியவை. அந்தணர் ஆசாரம் சங்க காலத்திலே தமிழ்நாட்டிலே அகவொழுக்கமுடைய அந்தணர் பலர் வாழ்ந்தனர். அவர்களிலே பலர் புறவொழுக் கத்தைப் போற்றுவோராகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் உடம்பை அழுக்கின்றித் தூய்மையாக வைத்துக் கொள்ளு வார்கள். அழுக்கு நீரிலே குளிக்க மாட்டார்கள். சுத்தமான தண்ணீரிலேதான் குளிப்பார்கள். பிறர் உடம்பிலே பட்ட தண்ணீர் தம்மேல் பட்டால் அதை ஆசாரக் குறைவாக நினைப் பார்கள். இச்செய்தியைப் பரிபாடல் கூறுகின்றது. ஆற்று வெள்ளத்திலே நுரை மிதந்து வருகின்றது. அந்நுரையின்மேல் ஈக்கள் மொய்க்கின்றன. நீராட வந்த அந்தணர்கள் அக்காட்சியைக் கண்டனர். `ஈக்கள் மொய்க்கின்றன. காய்ச்சிய மதுவைச் சுமந்து கொண்டு வருகின்றது இந்த ஆறு. என்று நினைத்துப் பார்ப்பார்கள் அவ்வாற்றில் குளிக்கவில்லை. ஈப்பாய் அடு நறாக்கொண்டது இவ்யாறு என பார்ப்பார் ஒழிந்தார் படிவு `ஆண்கள் - பெண்கள் பலர் இவ்வாற்றிலே நீராடுகின்றனர். அவர்கள் தம்மேல் பூசியிருக்கின்ற வாசனைப் பொருள்களைக் கழுவிவிட்டனர். அந்த வாசனை யைத் தூவிக்கொண்டு வருகின்றது இந்தயாறு. என்று கருதி அந்தணர்கள் குளிக்கவில்லை. மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று அந்தணர் தோயலர் ஆறு வையை நீருடன் தேன் கலந்து வருகின்றது. இதனால் தண்ணீரில் தெளி வில்லை. கலங்கலும் வழு வழுப்பும் கலந்திருக்கின்றன. என்று ஐயர்கள் அந்த ஆற்றுநீரில் வாய் கொப்பளிக்க மாட்டார்கள். வையைதேம் மேவ வழு வழுப் புற்றென ஐயர் வாய் பூசுறார் ஆறு இச்செய்திகள் வையையைப்பற்றிப் பாடும் இருபத்து நான்காவது பாட்டிலே காணப்படுகின்றன. இப்பாடலும் டாக்டர். உ.வே.சா. பதிப்பில் பிற்சேர்க்கையில் உள்ளது. வேதங்களை விரும்பும் அந்தணர்கள் மணங் கமழும் வையையாற்று நீரைக் கண்டு மருண்டனர். ஆண்களும் பெண்களும் தாங்கள் பூசியிருந்த வாசனைப் பொருள்களைக் கழுவியதனால் கலங்கி வருகின்ற நீரைக் கண்டு ஒதுங்கினர். நாறுபு நிகழும் யாறு கண்டழிந்து வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழைப் புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு இது வையையைப் பற்றிய ஆறாவது பாட்டில் காணப்படும் செய்தி. இவைகளால் தமிழ்நாட்டிலே வாழ்ந்த அந்தணர்கள் உள்ளும், புறமும் ஒழுக்கமுடையவர்களாய் வாழ்ந்தனர் என்பதைக் காணலாம். மொழி வெறுப்பில்லை சங்க காலத்துப் புலவர்களிடம் மொழி வெறுப்பில்லை. பிறமொழிப் பயிற்சி தமிழ்மொழி வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்பதே அவர்கள் எண்ணம். சங்கப் புலவர்களிலே பலர் வடமொழிப் பயிற்சியுடையவர்கள். அவர்களுடைய பாடல்களிலே வடமொழிப் பொருள்களும், சொற்களும் கலந்திருப்பதே இதற்குச் சான்றாகும். தாமரை மலரிலே பிறந்த நான்முகனும், அவனுடைய தந்தையும் நீதான் என்று கூறும் அந்தணர்களின் அரியவேதம் தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை. (பா. 3 வரி 13-14) தவறாமல் பிறந்து தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாளையும் போன்றது உன்னுடைய வாய்மை. உன்னுடைய சிறந்த பொறுமைக்கு எது ஒப்பாகுமென்று தேடினால் பெரிய நிலமே ஒப்பென்று காணமுடியும். எல்லோர்க்கும் ஒரு தன்மை யாகச் செய்யும் உன்னுடைய அருள், நீர் நிரம்பிய மேகத்தைப் போன்றதாகும். இவை நாவன்மையுடைய அந்தணர்களின் அரிய வேதங்களிலே கூறப்படும் பொருள். வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த நோன்மை, நாடின் இருநிலம்; யாவர்க்கும் சாயல் நினது வான்நிறை; என்னும் நாவல் அந்தணர் நான்மறைப் பொருளே. (பா. 2. வரி 54-57) இவைகள், சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் வேதப் பொருள் களை அறிந்திருந்தனர்; அவைகளைத் தங்கள் செய்யுட்களிலே அமைத்துப் பாடினர் என்பதற்குச் சான்றுகள். திதி, தருமன், மாயை, பிருங்கலாதன், மாதிரம், அவியாராதனை, சிரம், காரணம், கதி, சலதாரி, மார்க்கம், சனம், சரணம், யாத்திரை, சோபனம், அர்ச்சனை; இவை போன்ற பல வடசொற்கள் பரிபாடற் செய்யுட்களிலே கலந்து கிடக்கின்றன. பண்டைத் தமிழர்கள் வடமொழியையோ, வடமொழிச் சொற்களையோ, வடநூற் கருத்துக்களையோ வெறுக்கவில்லை; அவைகளைத் தமிழ் நூல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை மேலே காட்டியவைகளைக் கொண்டு அறியலாம். கலைப் போட்டி கலைஞர்களுக்குள் போட்டி ஏற்பட்டால் கலை வளரும். ஒவ்வொரு கலைஞரும் தம்மைச் சிறந்தவராகக் காட்டிக்கொள்ள ஆசைப்படுவர்; தாங்கள் பயின்ற கலையிலே மேலும் மேலும் முன்னேற முனைவர். இது இயற்கை. கலை வளர்ச்சியின் பொருட்டுச் சங்க காலத்திலே கலைஞர் களுக்குள் போட்டிகள் நடைபெற்று வந்தன. நடனமாடுவோர், பாடல் இசைப்போர், சூதாடுவோர் போன்றவர்கள், தாங்களே சிறந்தவர்கள் என்ற புகழை நிலைநாட்ட மற்றவர்களுடன் போட்டியிடுவார்கள்; தங்கள் திறமையை வெளிப்படுத்து வார்கள். இத்தகைய கலைப் போட்டிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கக் கொடி கட்டியிருப்பர். ஆடல் பயின்றாரை அவ்வாடல் பயின்றோர் போட்டியிட்டு வெல்லவும், பாடல் கற்றவர்களை அப்பாடல்களைப் பயின்ற பாணர்கள் வெல்லவும், சூதாட்டத்திலே வல்லவர்களை அச் சூதாட்டத்திலே தேர்ந்தவர்கள் தங்கள் திறமையைக் காட்டி வெல்லவும், இவையல்லாத மற்றைய கல்விகளிலே வல்லவர்களை அக் கல்விகளிலே சிறந்தவர்கள் வாதித்து வெல்லவும் கொடி கட்டப்பட்டிருந்தது. புகழுடைய நல்ல புது நீர் நிறைந்த தடாகம் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்திலே இந்தக் கொடி பறந்து கொண்டிருந்தது. ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும், பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், வல்லாரை வல்லார் செறுப்பவும், அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனல் தடாகம் ஏற்ற தண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று (பா. 9 வரி 72-78) திருப்பரங்குன்றத்திலே இவ்வாறு கலைப்போட்டிகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அக்காலத்திலே கலைஞர்களிடையிலே போட்டிகள் நடைபெற்றுக் கலைகள் வளர்ச்சியடைந்ததைக் காணலாம். ஓவியங்கள் ஓவியக்கலை ஒரு சிறந்த கலை. அதன் மூலம் மக்களுக்குப் பல உண்மை களை உணர்த்த முடியும். ஓவியங்களின் வாயிலாக மக்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க முடியும்; சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கல்விப் பயிற்சியும் கொடுக்க முடியும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆகையால் அவர்கள் ஓவியக் கலையை வளர்த்து வந்தனர். இன்றும் பல கோயில்களிலே, மண்டபங்களிலே பல ஓவியங்கள் தீட்டியிருப்பதைக் காண்கின்றோம். அவ்வோவி யங்கள் பெரும்பாலும் புராண வரலாறுகளைக் குறிப்பனவாகவே யிருக்கின்றன. பண்டைக் காலத்திலும், மக்கள்கூடும் கோயில் மண்டபங்களிலே ஓவியந்தீட்டி வைக்கும் வழக்கம் இருந்தது. அக்காலத்து ஓவியங்களிலே தெய்வங்களைப் பற்றிய வரலாறு களை நினைவூட்டும் ஓவியங்களும் இருந்தன; மக்களுக்கு அறிவூட்டும் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்களும் இருந்தன; நல்லொழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை விளக்கும் ஓவியங்களும் எழுதப்பட்டிருந்தன. இவ்வுண்மையைப் பரிபாடலிலே பார்க்கலாம். சூரியனுடன் சேர்ந்து வருகின்ற சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை சக்கரவாள கிரியைச் சுற்றிவருவதைப் போல் எழுதப் பட்டுள்ள கிரகங்களின் காட்சியைக் காண்பர். அக்காட்சியிலே ஈடுபட்டு நிற்பார்கள் சிலர். இரதியையும் மன்மதனையும் இணை பிரியாத நிலையிலே அமைத்து எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர். கணவனுடன் சேர்ந்து செல்லும் பெண்கள் அதைக் கண்டவுடன் `இவள்தான் இரதியா? இவன்தான் மன்மதனா? என்று கேட்பர். கணவன்மார்கள் `ஆம் என்று அக்கேள்விக்கு விடையளிப்பர். அகலிகையின் வரலாற்றை விளக்கி எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர். `இவன் இந்திரனாகிய பூனை; இவள் அகலிகை. அகலிகையைக் கற்பழித்த இந்திரன், வெளியில் வரும் சமயத்தில் சென்ற கவுதமன் சினங்கொண்டதனால் அகலிகை கல்லுருப் பெற்ற விதம் இது. என்று அந்த ஓவியத்தைப் பார்த்து உரையாடுகின்றனர். இத்தகைய பலவகையான ஓவியங்கள் நிறைந்த மண்டபத்தை யடைந் தவர்கள் அவைகளைக் குறித்துக் கேள்விகள் கேட்டனர். அக்கேள்வி களுக்கு விடையும் அளித்தனர். என்றூழ் உறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்; இரதி காமன் இவள் இவன் எனாஅ விரகியர் வினவ வினா இறுப்போரும்; இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன், சினன் உறக் கல்லுரு ஒன்றியபடி இதுஎன்று உரைசெய்வோரும்; இன்ன பல பல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும், சுட்டறி வுறுத்தவும் (பா. 19. வரி 46-54) இது செவ்வேளைப் பாடும் பாடல். பரங்குன்றத்தில் உள்ள சித்திர மண்டபத்தின் சிறப்பைக் கூறியிருக்கின்றது. சங்க காலத்திலே ஓவியக்கலை உயர்ந்த நிலையிலிருந்தது; அது மக்களுக்கு நல்லொழுக்கம், உலக ஞானம், தெய்வ பக்தி இவை களைப் போதிக்கப் பயன்பட்டு வந்தது என்று அறிகின்றோம். கூடலும் குன்றமும் பரிபாடற் காலத்திலே பரங்குன்றமும் மதுரையைப் போன்ற சிறந்த நகரமாக விளங்கிற்று. பலரும் மகிழ்ந்து வாழும் பரந்த நகரமாகவும் இருந்தது. இவ்விரண்டு நகரங்களும் செல்வச் சிறப்பில் ஒன்றுபட்டிருந்தது போலவே, தெய்வீகப் பெருமை யிலும் ஒன்றுபட்டிருந்தன. இவ்வுண்மையை ஒரு பரிபாட்டின் பாடற் பகுதியிலே காணலாம். இல்லோர்க்கு உதவி செய்யும் வள்ளல்களை ஏற்றிக் கொண்டாடும்; ஏற்பவர்களைக் கண்டாலும் இகழாது மகிழ்ந்து வரவேற்று வாழ்வளிக்கும். இத்தகைய செல்வச் சிறப்புடைய அழகிய மதுரையிலும், செவ்வேள் குடியிருக்கும் பரங்குன்றத் திலும் வாழ்கின்றவர்களே உண்மையில் வாழ்கின்றவர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களே தேவர்கள் வாழும் துறக்கத்தையடைந்து இன்பந்துய்ப்பார்கள். இவர்களைத் தவிர மற்ற நகரங்களிலே வாழ்கின்றவர்கள் துறக்கத்தையடைய மாட்டார்கள். ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்துஉவக்கும் சேய்மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும், வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார் போவார் ஆர் புத்தேள் உலகு! இதனால் மதுரை, பரங்குன்று ஆகியவைகளின் செல்வச் சிறப்பையும், தெய்வீகத் தன்மையையும் காணலாம். அறிவிலும் சரி, சண்டையிலும் சரி, போரிட்டுத் தோல்வி யடையாத கூடல் மா நகரம். புலத்தினும், போரினும் போர்தோலாக் கூடல் (பா. 19) ஒப்பற்ற அறிவாளிகள் நிறைந்த மதுரை; தோல்வியடை யாத போர் வீரர்கள் நிரம்பிய மதுரை; இவை இரண்டிலும் வெற்றி பெற்று விளங்கும் மதுரை என்று மதுரையின் பெருமையை விளக்கிற்று இது. பழக்க வழக்கங்கள் சங்ககாலத் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களைப் பரிபாடலிலே காணலாம். நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை, நூறு, ஆயிரம், பதினாயிரம், லட்சம், கோடி என்பவை களைப்போல் எண்களைக் குறித்து வந்தன. அவை ஒவ்வொன்றும் குறிக்கும் எண்கள் யாவை என்பதை இக் காலத்தில் அறிய முடியவில்லை. (பா. 2) சங்க காலத்தில் மதுவிலக்கு இல்லை. மக்கள் தாராளமாக மதுவருந்தி மகிழ்ந்தனர். செல்வர் வீட்டுப் பெண்கள் நீராடிய பின் மதுவருந்துவது வழக்கம் (பா. 7) நடனமாடும் பெண்களுக்கு மதுவருந்தும் வழக்கம் உண்டு. (பா. 21) உறுதிமொழி கூறும்போது ஆணையிட்டுக் கூறும் வழக்கம் உண்டு. ஆணையிடும்போது, `தோட்டத்தின்மேல் ஆணை, மலையின் மேல் ஆணை, பார்ப்போர்மேல் ஆணை, முருகன் மேல் ஆணை என்று பலவாறாக ஆணையிட்டு உறுதி கூறுவார்கள். (பா. 8) தெய்வபக்தியுள்ளவர்கள் ஒன்றாகக் கூடுவர்; வாத்தியங் களுடன் தோத்திரப் பாடல்கள் பாடுவர். இக்காலத்தில் பஜனை செய்வதுபோல் அக்காலத்திலும் இவ்வாறு பஜனை செய்து வந்தனர். (பா. 8) அக்காலத்து மக்கள் குதிரை, யானை, கோவேறு கழுதை, மாட்டு வண்டி, குதிரை வண்டி, பல்லக்கு இவைகளை வாகனங் களாகப் பயன்படுத்தி வந்தனர். (பா. 10) புண்ணிய நீராடுவோர் பொன்னாற் செய்த சங்கு, நண்டு, இரால் மீன், வாளை மீன் இவைகளைத் தண்ணீரிலே இறைப் பார்கள். (பா. 10) ஒருவன் தான் காதலித்த பெண்ணைச் சமாதான முறையில் அடைய முடியாவிட்டால் படைதிரட்டிக் கொண்டு போவான். அப்பெண்ணைச் சிறை யெடுத்துச் செல்வான். பெண்ணின் சுற்றத்தார் இதனை அறிந்தால் அவர்களும் படை திரட்டிச் சென்று இடைவழியிலே அவனை மறித்துச் சண்டை செய்வார்கள். (பா. 11) மார்கழி மாதத் திருவாதிரை நாளிலே சிவபெருமானுக்குத் திருவிழாச் செய்வர். வேதங்களைப் பயின்ற அந்தணர்கள் அவ்விழாவைத் தொடங்கி நடத்துவார்கள். (பா. 11) பண்டைக் காலத்தில் ஆறுகளிலே அணைகட்டி நீரைத் தேக்கி, விளை நிலங்களுக்குப் பாய்ச்சினர். அந்த அணைகள் கருங்கற் பாறையைப் போல உறுதியாகக் கட்டப்பட்டிருந்தன. பாறைப் பரப்பின் பரந்த சிறை (பா. 12) என்ற அடியினால் இதனை உணரலாம். அக்காலத்துப் பெண்கள் காதிலே குழை வடிவாகச் செய்த பொன்னா பரணங்களை அணிவர். அவைகள் காதிலே தொங்கிக் கொண்டிருக்கும். அவ் வாபரணங்கள் நெருப்பிலே காய்ச்சிச் செய்யப்பட்டவை. சிறந்த வேலைப் பாடமைந்தவை. சுடு நீர் வினைக் குழை (பா. 12) என்ற வரி இவ்வுண்மையை உணர்த்தும். உடைகளிலே நூலால் பூ வேலை செய்து அணிந்து கொள்ளுவார்கள். துகில் சேர் மலர் போன்ம் (பா. 12) என்பது இதை உணர்த்தும். சிறந்த அறங்களைச் செய்வோர் அதன் பயனை நுகர்வதற் காகச் சுவர்க்கத்தை அடைவார்கள். (பா. 19) கணவன் பரத்தையர் வீட்டுக்குச் சென்று வரும் கூடா ஒழுக்க முடையவனாயினும் கற்புடை மகளிர் அவனை விலக்க மாட்டார்கள். அவனுடன் சேர்ந்து வாழ்வதே அவர்கள் இயல்பு. ஆண்கள் செய்யும் அநீதிகளையும் பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அவர்களுக்கு பெண்கள் அடங்கித்தான் வாழவேண்டும் என்ற கொள்கை அக்காலத்தில் வேரூன்றி யிருந்தது. (பா. 20) பண்டைக் காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியுண்டு அதற்கு நிழல் காண் மண்டிலம் (பா. 21) என்று பெயர். பரிபாடலைப் படிப்போர் இவைபோன்ற பல செய்தி களைக் காணலாம். பரிபாடலைப் பிற்கால நூல் என்று கூறுவோர் உண்டு. பரிபாடற் பாட்டுக்களில் புராணக் கதைகள் இருக்கின்றன; தெய்வங்களைப் பற்றிய வணக்கப் பாடல்கள் இருக்கின்றன; வேதம், வேள்வி, அந்தணர்கள் பற்றிக் கூறப்படுகின்றன; வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. ஆகை யால் அது பிற்கால நூலாகத்தான் இருக்கவேண்டும். என்பர். இது பொருந்தாக் கூற்று. வடமொழி வெறுப்பால் எழுந்த பேச்சு. பரிபாடலைப் பிற்கால நூல் என்பதற்குக் கூறும் காரணங்கள் சங்க நூல்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பரிபாடலிற் கூறப்படும் செய்திகள் பத்துப்பாட்டிலும் காணப் படுகின்றன. ஏனைய எட்டுத் தொகை நூல்களிலும் காணப்படு கின்றன. இவ்வுண்மையை உணர்ந்தோர் பரிபாடலைச் சங்க கால நூல் அன்றென்று சொல்ல மாட்டார்கள். பரிபாடல் பிற்கால நூலாக இருந்தால் அது எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியாது என்பதையும் இவர்கள் உணர வேண்டும். 8 பதிற்றுப்பத்து நூல் வரலாறு பத்துப் பாடல்கள் அடங்கிய பத்து நூல்களின் தொகுதிக்குப் பதிற்றுப்பத்து என்று பெயர். பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு நூலைப் பதிகம் என்றும், நூறு பாடல்கள் கொண்ட ஒரு நூலைச் சதகம் என்றும் பிற்காலத்தார் கூறுவர். பிற்காலத்தார் கொள்கைப்படி பத்துப் பதிகங்களைக் கொண்டது பதிற்றுப்பத்து என்று கூறிவிடலாம். பதிற்றுப்பத்து நூறு பாடல்களைக் கொண்டது. இன்று இந்நூலில் எண்பது பாடல்கள்தாம் இருக்கின்றன. இப்பொழுது இந் நூலிலே முதற்பத்தும் இல்லை; இறுதிப்பத்தும் இல்லை. இப்பொழுது இருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து வரையில் உள்ள எட்டே பத்துக்கள்தாம். ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேர மன்னரைப் பற்றிப் பாடப்பட்டவை. முதற்பத்து எந்தச் சேரனைப் பற்றிப் பாடப் பட்டது? அதைப் பாடிய புலவர் யார்? பத்தாம்பத்து எந்தச் சேரனைப் பற்றி பாடப்பட்டது? அதைப் பாடிய புலவர் யார்? இச் செய்திகள் தெரியவில்லை. இப்பொழுது எஞ்சியுள்ள எட்டுப்பத்துக்களும் தனித் தனியே எட்டுச் சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டவை. இந்த எட்டும், எட்டுத் தனித்தனிப் புலவர்களால் பாடப்பட்டவை. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்ற பெயரால் ஒரு உரை நடைச் செய்யுள் உண்டு. அதிலே அந்தப் பத்துப் பாடல்களின் தலைவனாகிய சேரனுடைய பெருமையும், வரலாறும் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்நூலில் உள்ள பதிகங்கள் நூலாசிரியர்களால் நுவலப் பட்டிருக்குமாயின், இந்நூலுக்குப் பதிற்றுப்பத்து என்ற பெயரே ஏற்பட்டிருக்க முடியாது. ஆதலால், அப்பதிகங்கள் பிற்காலத்தா ரால் உரையாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இது, புறப்பொருள் பற்றிய நூல். சேர மன்னர்களின் பெருமையைச் சிறப்பித்துரைப்பது. அவர்களுடைய வீரம், கொடை, அரசியல் நேர்மை ஆகிய அனைத்தையும் இந்நூற் பாடல்களிலே காணலாம். பண்டைத் தமிழர்களின் கொள்கை, நாகரிகம் இவற்றை இப்பாடல்களில் பார்க்கலாம். பண்டைத்தமிழ் மூவேந்தர்களிலே சேர மன்னர்களே சிறந்த வீரர்கள். அவர்கள் கொடி, விற்கொடியாக அமைந் திருப்பதே இவ்வுண்மையை விளக்கும். பாண்டியர் கொடி மீன்; சோழர் கொடி புலி; சேரர் கொடி வில். பாண்டிய மன்னர்களிலே நெடுஞ்செழியன் ஒருவனே மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்னும் இரு நூல்களுக்குத் தலைவன். சோழ மன்னர்களிலே கரிகாற் சோழன் ஒருவனே பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை என்னும் இரு நூல் களுக்கும் தலைவன். பாண்டிய மன்னர்களிலே பல வீரர்கள் இருந்தனர்; சோழ மன்னர்களிலே பல வீரர்கள் இருந்தனர். அவர்கள் பல புலவர்களால் பாடப்பட்டவர்கள். அவர்கள்மேல் பாடப்பட்ட பாடல்கள் பல உண்டு; ஆனால் அவர்கள்மேல் பாடப்பட்ட தனித்தனி நூல்கள் இல்லை. சேர மன்னர்களிலே பத்து மன்னர்கள் தனித்தனி நூல்களுக்குத் தலைவர்களாக இருக்கின்றனர். இதுவே சோழ, பாண்டியர்களைவிடச் சேரர்கள் சிறந்த வீரர்கள் என்பதை விளக்கிக் காட்டும். இரண்டாம் பத்து இதைப் பாடிய புலவர் குமட்டூர்கண்ணனார். இவரால் இயற்றப்பட்டது இந்த ஒரே நூல்தான். இந்த இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க் கண்ணனாரின் தமிழ்ப் புலமை யைப் பெரிதும் பாராட்டினான். இப்பாடல்களுக்காக உம்பற்காடு என்னும் பகுதியைச் சேர்ந்த ஐந்நூறு ஊர்களைப் பிரமதேயமாகக் கொடுத்தான். தென்னாட்டு வருமானத்தில் ஒரு பகுதியை முப்பத்தெட்டு ஆண்டுகள் வரை யிலும் கொடுத்துவந்தான். இச் செய்தி இப்பத்தின் பதிகத்தின் இறுதியிலே காணப்படுகின்றது. இந்த இமயவரம்பன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந் தான். குமட்டூர்க் கண்ணனார் பிரமதேயம் பெற்றார் என்று கூறப்படுவதால் இப்புலவர் அந்தணர் வகுப்பினர் என்று அறியலாம். பிரமதேயம்-அந்தணர்க்கு அளிக்கும் பூதானம். இமயவரம்பன் - இமயமலையை எல்லையாக உடையவன். இம் மன்னவன் இமய முதல் குமரி வரையுள்ள பாரதநாடு முழுவதையும் ஆண்டவன். இதனாலேயே நெடுஞ்சேரலாதன் என்ற பெயருக்கு முன்னால் `இமய வரம்பன் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். மூன்றாம் பத்து இந்நூலாசிரியர் பாலைக் கௌதமனார். இவர் பாடிய நூல் இந்த மூன்றாம் பத்து ஒன்றேதான். இப்பாடல்களைப் பெற்றவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய இளவல். இவன் வாழ்ந்த ஆண்டுகள் இருபத்து நான்கு. இந்நூலைப் பாடிய கௌதமனாரைப் பார்த்து நீர் விரும்பியதைப் பெற்றுக் கொள்ளுக என்றான் குட்டுவன். நானும் என் மனைவியும் சுவர்க்கம் புகவேண்டும் என்று வேண்டிக் கொண்டார் புலவர். உடனே மன்னவன் அறிவுடைய அந்தணர்கள் பலரை அழைத்தான். பெரிய வேள்விகளைச் செய்வித்தான். ஒன்பது வேள்விகள் முடிந்தன. பத்தாவது வேள்வி நடைபெறும்போது புலவரும் அவர் மனைவியும் காணாமற் போய்விட்டனர். அவர்கள் உடம்போடு சுவர்க்கம் புகுந்துவிட்டனர். இச்செய்தி இந்நூற் பதிகத்தின் இறுதியிலே காணப்படுகின்றது. பாலைக் கவுதமனார் அந்தணர்; இம்மன்னவன் அந்தணர்பால் அன்புடையவன். என்பதை இதனாற் காணலாம். ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி (பா. 24) வேதம் ஓதுதல், யாகம் செய்தல், இவைகளைப் பிறர்க்குச் செய்வித்தல், கொடுத்தல், கொடுப்பதை வாங்கிக்கொள்ளுதல் என்னும் ஆறு தொழில்களையும் பின்பற்றி நடக்கும் அந்தணர் களின் சொற்படி நடந்து. இந்தப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் மறை பயின்ற அந்தணர்களிடம் பெருமதிப்புடையவன்; அவர்களுக்கு வேண்டுவன கொடுப்பவன்; அவர்கள் சொற்படி நடப்பவன். இவன் காலத்திலே சேர நாட்டிலே வேதமும், வேத ஒழுக்கமும் விரிந்த செல்வாக்குப் பெற்றிருந்தன. வேதியர்கள் பாராட்டப் பட்டனர். நான்காம் பத்து இதை இயற்றியவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இவரால் பாடப்பட்டது இந்நூல் ஒன்றேதான். இவருடைய ஊர் காப்பியாறு; இவர் பெயர் காப்பியனார். இந்த நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்பவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனுடைய புதல்வன். இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்திருந்தான். காப்பியனார் இந்நூலுக்காகப் பெற்ற பரிசு நாற்பது நூறாயிரம் பொன்; களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆண்ட நாட்டிலே ஒரு பாகத்தையும் பெற்றார். ஐந்தாம் பத்து இந் நூலாசிரியர் பரணர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் இப்பத்தின் தலைவன். பரணர், கபிலரைப் போன்ற சிறந்த புலவர். கபிலபரணர், என்ற சொற்றொடர் இலக்கணங்களிலே உம்மைத் தொகைக்கு உதாரணம். கபிலரும் பரணரும் ஒரு காலத்துப் புவலர்கள்; சிறந்த நட்பினர்கள் என்று எண்ணலாம். பரணருடைய பாடல்கள் சங்க நூல்களிலே பலவுண்டு. அகநானூற்றிலே முப்பத்து நான்கு பாடல்கள்; குறுந்தொகையில் பதினாறு பாடல்கள்; நற்றிணையில் பன்னிரண்டு பாடல்கள்; புறநானூற்றிலே பதின்மூன்று பாடல்கள் இவர் பாடியவை. பரணர் இந்தப் பத்துப் பாடல்களுக்கும் உம்பற்காட்டு வரி என்னும் நிலத்தையும், செங்குட்டுவனுடைய மகனாகிய குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்ற பெயர் குறிப்பிடத்தக்கது. கடல் பிறக்கோட்டிய என்பதற்குக் கடற் படையைப் பின்னடையச் செய்த என்பது பொருள். இவன் கடற் போரிலே வல்லவன்; பெரிய கடற்படை இவனிடம் இருந்தது. இவன் வாழ்ந்திருந்த காலம் இருபத்து நான்கு ஆண்டுகள். கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமய மாகத், தென்னம் குமரியொடு ஆயிடை, அரசர் முரசுடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ (பா. 43) சிவபெருமான் வாழ்கின்ற பெரிய இமயமலையை வடக்குத் திசையின் எல்லையாகக் கொண்டனை; தெற்கே குமரி முனையை எல்லையாகக் கொண்டனை. இவைகளுக்கு இடையிலே உள்ள அரசர்களுடைய பல நாடு களையும் அவைகளின் பழமையான அழகு சிதையும்படி அமர் புரிந்து அழித்தாய்; போரிலே வெற்றி பெறக்கூடிய பெரிய சேனைகளையுடைய செங்குட்டுவனே. இம் மன்னவன் ஒப்பற்ற வீரன்; இமய முதல் குமரி வரை யுள்ள நாட்டை ஆண்டவன். தன்னை எதிர்த்த மன்னர்களின் நாடுகளையெல்லாம் நாசமாக்கினான். இவ்வுண்மையை இவ்வடிகள் காட்டின. பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பின் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் (பா. 46) கடல் கலங்கும்படி வேலாயுதத்தை வீசியவன்; சுருண்டு விழுகின்ற அலை களையுடைய ஆழமான கடலிலே பகைவர் படைகளைப் புறமிட்டோடச் செய்தவன்; வெற்றி பொருந்திய புகழையுடைய குட்டுவன். இந்தக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனையே சிலப்பதிகாரச் செங்குட்டுவன் என்று நம்புகின்றனர் பலர். இப்பத்தின் பதிகத்திலே, கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி ஆரிய அண்ணலை வீட்டி என்ற அடிகளை இவர்கள் ஆதரவாகக் கொள்வர். பரணர் பாடியுள்ள பத்துப் பாடல்களில் ஒன்றிலேனும் இக்குறிப்பு காணப்படவில்லை. ஆதலால் பதிகம் பாடிய உரையாசிரியர் சிலப்பதிகாரத்தை நினைவில் வைத்துக் கொண்டு, சிலப்பதி காரச் செங்குட்டுவனும் இவனும் ஒருவனே என்று எண்ணி இவ்வாறு எழுதியிருக்கலாம். அல்லது இப்பத்து சிலப்பதிகார நிகழ்ச்சிக்கு முன்னரே பாடியதாக இருக்கலாம். ஆறாம் பத்து இதன் ஆசிரியர் காக்கைபாடினி நச்செள்ளையார் என்பவர். இவர் பெண் புலவர். இது ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் மேல் பாடப்பட்டது. வானவரம்பன் என்றும் இவன் பெயர் வழங்கும். இவன் முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்திருந் தான். இந்தப் பத்துப் பாடல்களுக்காக நச்செள்ளையார் நல்ல பரிசு பெற்றார். ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் இவர் பெற்ற பரிசு. அரசனுக்கு அண்மையில் வீற்றிருக்கும் பெருமையும் அடைந்தார். இப்புலவர் இந்நூலைத் தவிர குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலையும், புறநானூற்றில் உள்ள ஒரு பாடலையும் பாடியுள்ளார். வாரார் ஆயினும், இரவலர் வேண்டித் தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல். (பா. 55) “இரவலர்கள் தாமாகவே உன்னிடம் வராவிட்டாலும் அவர்களைத் தேடிச் செல்வாய்; தேரிலே ஏற்றிக்கொண்டு வருவாய்; இன்சுவை உணவை அவர் களுக்கு அளிப்பாய்: உள்ளன்பு நிறைந்த சொற்களை அவர்களிடம் உரைப்பாய்; புகழ் நிறைந்த தோன்றலே! இவன் சிறந்த வள்ளல்; ஈத்துவக்கும் இன்பமே பெரிதென எண்ணி வாழ்ந்தான். ஏழாம்பத்து இதன் ஆசிரியர் கபிலர். இந்நூலின் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இன்றுள்ள சங்க நூல்களிலே கபிலரால் பாடப்பட்டிருக்கும் பாடல்கள் பல. இவருடைய வரலாற்றைக் கலித்தொகைப் பகுதியிலே காணலாம். இப்பத்துப் பாடல்களுக்குப் பரிசாகக் கபிலர் நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றார். நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று, கண்ணுக்கெட்டிய அளவுள்ள நாட்டையும் பெற்றார். சேரன், தானே அக்குன்றின்மேல் ஏறி நின்றான்; தன் கண்ணுக்கு எட்டிய பரப்புள்ள நாட்டைப் பாவலர்க்குப் பரிசாக அளித்தான். இம் மன்னவன் இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்திருந்தான். பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே! (பா. 63) பார்ப்பார்களைத் தவிரமற்றவர்களை நீ பணிந்து அறிய மாட்டாய்! இம் மன்னன் கற்றவர்களையும், அறிஞர்களையும், நல்லொழுக்க முடையவர்களையும் போற்றிப் புரந்து வந்தான். இவன் காலத்திலே பார்ப்பார்கள் நல்லறிஞர்களாகச் சிறந்து விளங்கினார்கள். படு பிணம் பிறங்க நூறிப், பகைவர் கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே! (பா. 69) “வீழ்ந்து கிடக்கும் பிணங்களே காட்சியளிக்கும்படி போர்க் களத்திலே பகைவர்களை நொறுக்கித் தள்ளுவாய்; பகைவர் களால் கெட்டுப்போன குடிகளை நல் வாழ்விலே வாழும்படி பழக்கிய வெற்றியையுடைய வேந்தனே! இவன் காரணமின்றி எந்நாட்டின் மீதும் படையெடுக்க மாட்டான். தன்னுடைய குடிமக்களின் குறைகளைப் போக்காத கொடுங்கோல் மன்னர்களின்மேல்தான் படையெடுப்பான். அந்தக் கொடுங்கோலர்களை வீழ்த்துவான்; அவர்கள் நாட்டுக் குடிமக்களை நல்வாழ்விலே வாழ வைப்பான். இது தமிழரசர்களின் சிறந்த பண்பாடு. இப்பண்பாட்டை இம் மன்னவன் பின்பற்றி வந்தான். இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகள் விளக்கி நின்றன. எட்டாம் பத்து இதன் ஆசிரியர் அரிசில் கிழார். இப்பத்தின் தலைவன் பெருஞ் சேரல் இரும்பொறை. அரிசில் கிழார் இப்பத்தைத் தவிர இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கின்றார். இவருடைய பாடல்கள் குறுந்தொகையிலே ஒன்றும், புறநானூற்றிலே ஏழும் காணப் படுகின்றன. அரிசில் கிழார் இப் பத்துப் பாடல்களுக்காக ஒன்பது நூறாயிரம் பொற்காசு பெற்றார்; அரசனுடைய சிம்மாசனத்தை யும்-அரசாட்சியையும் பரிசாகப் பெற்றார். தான் பரிசு பெற்ற அரசாட்சியை மீண்டும் அரசனிடமே ஒப்புவித்தார்; தான் அமைச்சராய் இருந்து அரசனுக்கு உதவி செய்தார். பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவன் பதினேழாண்டுகள் வாழ்ந்தான். உயிர் போற்றலையே செருவத்தானே; கொடை போற்றலையே இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி. (பா. 79) போரிலே உன் உயிரைப் பொருட்படுத்த மாட்டாய்; இரவலர்க்கு ஈவதிலே என்றும் எக்கணக்கும் பார்க்கமாட்டாய்; பெரியோர்களைப் போற்றுவாய்; சிறியோர் செய்யும் பிழை களைப் பொறுத்துக் கொண்டு அவர்களைக் காப்பாற்றுவாய். இம் மன்னவன் ஒப்பற்ற வீரன்; சிறந்த கொடை வள்ளல்; உயர்ந்த குணக்குன்று என்னும் உண்மையை இதனாற் காணலாம். காவிரி மண்டிய சேய்விரி வனப்பின் புகார்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை! கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய! (பா. 78) காவிரியாற்றின் நீரால் நிறைந்த - மிகச் சிறந்த அழகை யுடைய-காவிரிப்பூம் பட்டினத்தின் செல்வனே! பாண்டியர்களின் காவலனே! கொல்லிமலையின் தலைவனே! வெற்றிக்கொடி பறக்கும் தேரையுடைய தலைவனே! இப் பெருஞ்சேரல் இரும்பொறை சிறந்த வீரன். சோழர் களையும் பாண்டியர்களையும் போரிலே வென்றான். சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் தன்கீழ் அடக்கியாண்டான். தகடூரின் தலைவனான அதிகமான் நெடுமான் அஞ்சியை இப் பெருஞ்சேரல் போரிலே வென்றான்; தகடூரையும் தகர்த்தான். இச்செய்தியும் இவனைப் பற்றிய பாடலிலே காணப்படுகின்றது. `தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பெயரே இவ்வுண்மையை எடுத்துக் காட்டும். தகடூர் என்பது இன்று தருமபுரி என்று வழங்குகின்றது. ஒன்பதாம் பத்து இதன் ஆசிரியர் பெருங்குன்றூர்க்கிழார். இப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறை. பெருங்குன்றூர்க்கிழார் இப்பத்தைத் தவிர இன்னுஞ் சில பாடல்களையும் பாடியிருக்கின்றார். அகநானூற்றில் ஒன்று; குறுந்தொகையில் ஒன்று; நற்றிணையில் நான்கு; புறநானூற்றில் ஐந்து இவர் பெயரால் காணப்படும் பாடல்கள். இளஞ்சேரல் இரும்பொறை இப்பத்துக்காக, இப்புலவர்க்கு அளித்த பரிசுகள் ஏராளம். முப்பத்திரண்டாயிரம் பொற் காசுகள், பல வீடுகள், சில ஊர்கள், நல்ல நிலங்கள், அரிய ஆபரணங்கள். இவைகள் இவன் தந்த பரிசுகள். இச் சேரன் சிறந்த கொடையாளி; வீரன்; தெய்வ பக்தியுடையவன். இவன் பதினாறு ஆண்டுகள் பாரிலே வாழ்ந்தான். இம் மன்னவன் நிறைந்த செல்வமுடையவன். புகழ்வோர்க்கு வாரி வாரி வழங்குபவன். ஏராளமான படைகளையுடையவன். இவ்வேந்தனுடைய இரக்கம், நிறைந்த குணம், சிறந்த செல்வம், உறவினரைக் காக்கும் உயர்ந்த பண்பு ஆகியவைகளை இப்பத்திலே காணலாம். இவ்வாறே பதிற்றுப்பத்திலே உள்ள ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேர மன்னனைப் பற்றிப் பாராட்டிப் பாடப்பட்டது. அச் சேர மன்னர்களின் வரலாறுகள் அனைத்தையும் இந் நூலால் அறிவதற்கில்லை. ஆயினும், அவர்கள் வரலாறுகளைக் காண்பதற்குப் பல சான்றுகளை இந்நூலிலே காணலாம். இனி இப் பதிற்றுப்பத்திலே காணப்படும் சிறந்த செய்திகள் சிலவற்றைக் காண்போம். ஆட்சியின் அருமை பண்டைத் தமிழ் வேந்தர்கள் தங்கள் நாட்டைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி வந்தனர். அவர்கள் தமக்கென வாழ வில்லை; குடி மக்களின் குறை போக்கவே வாழ்ந்தனர். குடிமக்களும் மன்னனைத் தங்களைக் காக்கும் கட வுளாகவே மதித்தனர். குடிகளின் அன்பையும், ஆதரவையும் பெற்ற மன்னர்களே பகைவர் களைப் போரிலே வென்றனர்; வீரர்களாகச் சிறந்து விளங்கினர். நின்கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுதேத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி நோயிலை ஆகியர் நீயே! (பா. 89) உன்னுடைய ஆட்சி செம்மையுடன் சீர்பெற்று விளங்கு கின்றது. ஆதலால் நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் உன்னைக் கொண்டாடும்படி வாழ்வாயாக! இவ்வுலகில் உயர்ந்த நிலையில் உள்ள அறிஞர்கள் உன்னைப் புகழும்படி வாழ்வாயாக! வேந்தனுக்குரிய கடமைகளை விடாமல் செய்து வாழ்வாயாக! போரிலே வெற்றியடைந்து புகழ்பெற்று வாழ்வாயாக! என்றும் நோயின்றி நிலைத்து வாழ்க! பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சி தனியதிகார ஆட்சிதான். ஆயினும் அது குடிமக்களால் கொண்டாடப்படும் ஆட்சியாக இருந்தது; அவர்கள் விரும்பும் ஆட்சியாக இருந்தது. மழைவேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசியிகந்து ஒரீஇப் பூத்தன்று, பெருமநீ காத்த நாடே (பா. 13) மழை வேண்டிய இடங்களிலே தாராளமாக மழை பெய் கின்றது. மக்களை நலிவுறுத்தும் நோய்கள் நாட்டிலேயில்லை; பசியும் இல்லை. நீ ஆளும் நாட்டில் செல்வம் கொழித்துச் சிறந்திருக்கின்றது. ஒரு நா எந்த நிலைமையில் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது இது. பிணியும் வறுமையும் பீடிக்காமல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதே நல்லாட்சியின் கடமை என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. பிறர்க்கென வாழ்க! பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே (பா. 38) பலருக்கும் பகுத்துக் கொடுப்பதற்கென்றே செல்வத்தைத் தொகுத்து வைத்திருக்கின்றவன்; ஆண்மையை உடையவன்; என்றும் பிறர் நன்மைக்காக நீ வாழ்வாயாக. இதுவே நன்மை பெறும் வழியாகும். மின் இழை விறலியர் நின்மறம் பாட, இரவலர் புன்கண்தீர, நாள்தொறும் உரைசால் நன்கலம் வரைவில வீசி, அனையை ஆகல்மாறே; எனையதூஉம் உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவணின்று இருநில மருங்கின் நெடிது மன்னியரோ! (பா. 54) ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த பாடகிகள் உன் வீரத்தை உயர்த்திப் பாட-இரப்போர்களின் வறுமைத் துன்பந்தீர-ஒவ்வொரு நாளும் சிறந்த நல்ல ஆபரணங்களை அளவில்லாமல் கொடுப்பாயாக; அவ்வழியிலே சிறந்து நிற்பாயாக. எப்படி யானாலும் வானத்திலேயுள்ள துறக்கத்திற்குச் செல்லாமல் இங்கேயே நின்று இவ்வுலகிலே நீண்ட காலம் நிலைத்து வாழ்வாயாக! தொகுத்த பொருளைப் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்க; வறியோர்க்கு வழங்குக. துறக்கத்திற்குப் போக வேண்டாம்; இக்காரியங்களைச் செய்து இவ்வுலகிலேயே வாழ்க. என்று அரசர்க்கு அறிவுரை கூறுவதை இவ்வடிகளால் அறியலாம். தான் தேடிய செல்வத்தைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்ணவேண்டும். வருந்தும் உயிர்கள் பலவற்றையும் காப்பாற்ற வேண்டும்; இவைகளே அறநூலோர் தொகுத்துக் கூறியிருக்கும் அறங்களுக்குள்ளே தலைசிறந்தது. பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று திருக்குறள் கூறுகின்றது. இத்திருக்குறள் மேலே காட்டிய பதிற்றுப்பத்துப் பகுதிகளின் திரட்சியேயாகும். வேள்வியும் விருந்தும் பண்டைத் தமிழ் மன்னர் வேத வேள்விகளை ஆதரித்து வந்தனர். தெய்வங்களுக்கு விருந்தளிப்பது வேத வேள்வி; மக்களுக்கு உணவளிப்பது விருந்து. இவைகள் இரண்டும் அதாவது வேள்வியும் விருந்தும் ஒன்றே என்பது அவர்கள் கொள்கை. சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி; அவை துணையாக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி; உருகெழு மரபின் கடவுட்பேணியர், கொண்ட தீயின் சுடர் ஏழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி. சொல்லிலக்கண நூல், பொருள் இலக்கண நூல், சோதிட நூல், வேத நூல், அடங்கிய உள்ளம் என்ற ஐந்தையும் போற்றிப் பாதுகாத்தவர்கள்; அவைகளின் துணையால் எவ்வுயிர்க்கும் தீமை செய்யாமல் வாழ்கின்ற சிறந்த கொள்கையை யுடையவர்கள்; சூரியனைப்போல் தவறாத உயர்ந்த உண்மை மொழியை உடை யவர்கள்; இத்தகைய அந்தணர்கள், சிறந்த முறையிலே தேவர்களைப் பாது காப்பதற்காக மேற்கொண்ட வேள்வித் தீயின் நெருப்பு உயர்ந்து எரியுந்தோறும் அது எல்லோரும் விரும்பும் உண்மையை விளக்குவதன் பொருட்டு அவ்வாறு பரவி நிற்கின்றது. இத்தகைய புகழ் பெற்றது வேள்வி. இதனால் வேள்வி செய்யும் அந்தணர்களின் அறிவையும் ஒழுக்கத்தையும் அறியலாம். வருநர் வரையார், வார வேண்டி விருந்துகண் மாறாது உணீஇய, பாசவர் ஊனத்தழித்த வான்நிணக் கொழும்குறை குய்யிடுதோறும் ஆனாது ஆர்ப்பக்; கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி வருகின்றவர்களைத் தடுக்காமல் அன்புடன் உண்டு செல்லும்படி வேண்டிக் கொள்ளுகின்றனர். விருந்தினர்கள் திரும்பிப் போகாமல் இருந்து உண்ணும் பொருட்டும், ஆட்டு வாணிகர் இறைச்சி வெட்டும் கருவியினால் வெட்டியெடுத்த சிறந்த மாமிசத்தைக் குய்யென்ற ஓசையுடன் பொரித்து எடுக் கின்றனர். இவ்வாறு நகரின் நடுவிலே சமைக்கின்ற அவ்வேள்வி யிலிருந்து கடலொலிபோலச் சமைக்கின்ற ஓசையெழுந்தது. விருந்தினர்க்குச் செய்யும் சமையலை வேள்வி-அதாவது அடுநெய்ஆவுதி என்று குறிப்பதை இதனால் காணலாம். மேற்காட்டிய பகுதிகள் பதிற்றுப்பத்தின் இருபத்தோராவது பாட்டில் உள்ளவை. அந்தணர் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் சமையலும் ஆவுதி-அதாவது வேள்வி என்று ஒரே பெயரால் சுட்டப்படுகின்றன. பண்டைத் தமிழ் வேந்தர்கள் வேள்வியையும், விருந்தையும் ஒரு தன்மையாகவே உணர்ந்தனர் என்பதற்கு இதுவே சான்றாகும். நன்னடத்தை பண்டைத் தமிழர்கள் நல்லொழுக்கத்திலே நாட்டமுடை யவர்கள். உயிரினும் சிறந்தது ஒழுக்கமே என்ற உண்மையை உணர்ந்திருந்தனர். அற நெறிக்கு மாறான செயல்களால் நன்மையில்லை. ஆதலால் அறநெறிக்குத் தடையாக நிற்கும் அனைத்தையும் அறிந்து அவற்றைப் பின்பற்றாமல் பாதுகாத்து வந்தனர். சினனே, காமம், கழி கண்ணோட்டம் அச்சம், பொய்ச் சொல், அன்புமிக உடைமை, தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும். (பா. 22) பொருளற்ற கோபம், காமவெறி, அளவுக்கு மீறிய தயவு, பகைவர்களுக்குப் பயப்படுதல், பொய் கூறல், பொருளின் மேல் பேராசை, நன்மைகளை நாசம் பண்ணுதல், கடுஞ்சொற் கூறல் இவைகளும், இவைகளைப் போன்ற குணங்களும் இவ்வுலகிலே அறநெறியிலே செல்லும் வண்டிக்கு, அது செல்லுகின்ற வழியிலே போடப்படும் முட்டுக்கட்டைகளாகும். சிறப்பாக மன்னர்களும், பொதுவாக மக்களும் பண்டைக் காலத்தில் இவ்வாறு நல்லறத்தைப் பாதுகாப்பதில் கவலை கொண்டிருந்தனர். மனிதத்தன்மை தன் வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவன் மனிதன் அல்லன்; தன்னலத்தின் பொருட்டே அல்லும் பகலும் பாடுபடுபவன் அறிவுடையவன் அல்லன்; அவன் அறிவுடை யோரால் மதிக்கப்பட மாட்டான். மனிதன் என்றால் இரக்கத்தன்மை வேண்டும்; குற்றங் களைப் பொறுத்துக் கொள்ளும் குணம் வேண்டும்; விட்டுக் கொடுக்கும் இணக்கம் வேண்டும்; உறுதியும், ஆண்மையும் உள்ளத்திலே நிலைத்திருக்க வேண்டும். இவைகள் மனிதத் தன்மையுள்ளவனிடம் மாறாமல் அமைந்திருக்க வேண்டிய குணங்கள். நட்டோர்க் கல்லது கண் அஞ்சலையே. (பா. 63) நண்பர்களிடந்தான் கண்ணோட்டங் காட்டுவாய்; மற்றவர் களிடம் இரக்கமின்றி நடந்து கொள்ள அஞ்சமாட்டாய். நிலம் திறம் பெயரும் காலை யாயினும் கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே (பா. 63) நிலம் தனது வலிமை குன்றும் காலத்தில்கூட சொல்லிய சொல்லுக்கு மாறாக நடக்கும் பொய்யொழுக்கத்தை நீ மேற் கொள்ள மாட்டாய். நட்டோர்களிடம் விட்டுக் கொடுக்கும் குணமும், உரைத்த மொழியைக் காப்பாற்றும் உறுதியும் உயர்ந்த மனிதத்தன்மை என்பதை இவைகளால் காணலாம். அமைதியால் ஆக்கம் அமைதி நிலையிலிருக்கும் நாட்டில்தான் ஆக்கவேலைகள் நடைபெறும். சண்டைக் காலத்தில் நாடு செழிப்படையாது. மக்கள் பலர் போரில் ஈடுபடுவர்; நாட்டின் செல்வம் போரால் நாசமடையும். சமாதானக் காலத்தில்தான் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. அச்சமின்றி அனைவரும் நாட்டின் நன்மைக்காக உழைக்க முடியும். இந்த உண்மையை ஒரு பதிற்றுப் பத்துப் பாடல் எடுத்துரைக்கின்றது. திருவுடைத்தம்ம! பெரு விறல் பகைவர்; பைங்கண் யானைப்புணர் நிரை துமிய உரந்துரந்து எறிந்த, கறையடி கழற்கால், கடுமா மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து விளைவு முட்டுறாது புலம்பா உறையும், நீ தொழில் ஆற்றிலின் (பா. 28) உன்னுடைய நாடு செல்வத்தை மிகுதியாகக் கொண்டிருக் கின்றது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? மிகுந்த வலிமை யுடையவர்கள் உன் பகைவர்கள்; உன்னுடைய வீரர்களோ பகைவர்களுடைய பசுமையான கண்களையுடைய யானைப் படைகள் அழியும்படி வலிமையுடன் படைக் கலங்களை வீசும் ஆற்றலுடையவர்கள். அவர்கள் இரத்தக் கறை படிந்த அடி களையும், வீரக்கழல் புனைந்த பாதங்களையும் உடையவர்கள்; விரைந்து பாயும் குதிரை வீரர்கள். அவர்கள் சினத்துடன் அம்பு தொடுப்பதை மறந்திருந்தனர்; நாட்டைப் பாதுகாக்கின்றனர். உழவர்கள் பாடுபடுவதனால் விளைவு குறையவில்லை. துன்பமற்ற இடமாக இருக்கின்றது உனது நாடு. நீ உனது அரசாட்சியை நன்றாக நடத்துவதனால்தான் இவ்வாறு உனது நாட்டிலே அமைதி நிலவுகின்றது. சண்டையிலே தலையிடாமல் சமாதானத்துடன் வாழும் நாட்டிலே உணவுப் பஞ்சம் உண்டாகாது; விளைவு குன்றாது; பயிர்த்தொழில் நன்றாக நடைபெறும் என்ற உண்மையை இதனால் அறியலாம். உழவின் உயர்வு உழவுத் தொழில் உயர்ந்து விளங்கும் நாடே பஞ்சத்திலே வீழ்ந்து பரிதவிக்காது; அந்நாட்டிலே வாழ்வோர் இன்புறுவர்; அந்த நாடே செல்வத்தில் சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். கருவி வானம் தண்டளி சொரிந்தெனப் பல்விதை உழவிற் சில் ஏராளர், பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி, இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடு கிழவோனே (பா. 76) கூட்டமாகிய மேகங்கள் மழை பெய்தவுடன், பலவிதமான விதைகளையும் வைத்திருக்கின்ற உழவிலே சிறந்த உழவர்கள், தங்கள் வேலையை ஊக்கத்துடன் செய்கின்றனர்; குளிர்ந்த நீர்த்துறையை அடைகின்றனர்; அழகான பகன்றைப் பூமாலை களை ஆடைகளைப் போல அணிகின்றனர்; விளைந்து விளங்குகின்ற கதிர்களிலிருந்து அழகிய தானிய மணிகளைப் பெறுகின்றனர். இத்தகைய வளமுடைய பெரிய நாட்டின் தலைவனே!ஒரு நாட்டின் உயர்வுக்கு உழவுத் தொழிலே காரணம் என்பதை இதனாற் காணலாம். தவத்தில் நம்பிக்கை கடைச் சங்க காலத்துத் தமிழர்களுக்குத் தவத்திலே நம்பிக்கையுண்டு. சென்ற பிறப்பில் தவம் புரிந்தவர்களே இப் பிறப்பில் செல்வத்திலே சிறந்து வாழ்கின்றனர்; ஒழுக்கத்தால் உயர்ந்து விளங்குகின்றனர். செல்வமுள்ள குடியிலே பிறந்திருப் பதற்கு முன் செய்த தவந்தான் காரணம்; வறிய குடியிலே பிறந்து வாடுவதற்குக் காரணம் தவமின்மைதான். இத்தகைய நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் பரவியிருந்தது. வறியோர்க்கும் செல்வர்க்கும் வம்பும், சண்டையும் ஏற்படாமலிருக்க இந் நம்பிக்கை உதவி புரிந்தது. இல்லா தவர்கள், உள்ளவர்கள் என்ற பிரிவு நிலைத்திருக்கும் சமுதாயத்திலே சமாதானம் நிலைத்திருப்பதற்கு முற்பிறப்பும், தவமும், தலைவிதியும் துணைசெய்து வந்தன. வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும். தெய்வமும், யாவதும் தவமுடையோர்க்கு (பா.74) கொடுக்குந்தன்மை - சிறந்த குணங்கள் - செல்வம் - புத்திரப்பேறு - தெய்வபக்தி - எல்லாம் தவமுடையோர்க்கே கிடைக்கும் தவத்திலே - தவப் பயனிலே தமிழர்கள் எவ்வளவு அழுத்த மான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இதனாற் காணலாம். இக்கருத்தைத் தழுவியேதான் பிற்காலத்திலும் மேலைத் தவத்தளவேயாகுமாம் தான் பெற்ற செல்வம் என்பது போன்ற பாடல்கள் எழுந்தன. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர், பலர் நோலா தார் என்ற குறளும் இக்கருத்துடையதே. பாரதம் பதிற்றுப்பத்திலே ஒரு பாட்டில் பாரதக்கதை குறிப்பிடப் பட்டுள்ளது. கடைச் சங்க காலத்தில் பாரத வரலாறு தமிழ் நாட்டிலே பரவியிருந்தது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் பெருந்தேவனார் என்பவர் பாரத வரலாற்றைத் தமிழிலே பாடியிருக்கின்றார். இதனால் இப்புலவருக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று பெயர். இராமாயண வரலாறு தமிழிலே எழுதப்படுவதற்கு முன்பே பாரத வரலாறு தமிழிலே எழுதப்பட்டுவிட்டது. போர்தலை மிகுந்த ஈரைம்பதின்மரொடு துப்புத்துறை போகிய, துணிவுடைய யாண்மை, அக்குரன் அனைய, கைவண்மை யையே! (பா.14) போரிலே ஈடுபடுவதற்கு முன்னின்ற நூற்றுவரோடு சமாதானம் பேசு வதற்காகத் தூது சென்றவன்; உளவு காண் பதிலே உயர்ந்தவன்; ஆண்மையும் துணிவும் அமைந்தவன்; அக்குரன் என்னும் பெயருடையவன்; சிறந்த கொடைவள்ளல். அவனைப் போன்ற கொடைவள்ளல் நீ! இது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறிக்கும் பாட்டு. இதிலே பாரத வரலாறு குறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம். சேரமான் பெருஞ்சோற்று உதியலாதன் என்பவன் சேரமன்னர்களிலே சிறந்தவன். இவன் பாரதப்போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் தனியரசாட்சி செய்தவன். இவன் பாண்டவர் சேனைக்கும், கவுரவர் சேனைக்கும் அவர்கள் அடித்துக் கொண்டு மாளும்வரையிலும் சோறு போட்டவன். இவ்வரலாறு புறநானூற்றிலே காணப்படுகின்றது. இப்பெருஞ் சோற்று உதியலாதனைப் பற்றிய பாடல் பதிற்றுப்பத்திலே காணப்படவில்லை. பதிற்றுப்பத்திலே நமக்குக் கிடைக்காத முதற்பத்தோ அல்லது பத்தாம் பத்தோ இவனைக் குறித்துப் பாடியதாக இருந்தாலும் இருக்கலாம். தெய்வங்கள் முருகன், திருமால், சிவபிரான் முதலிய தெய்வங்களின் பெயர்கள் பதிற்றுப்பத்திலே காணப்படுகின்றன. சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடும்சின விறல் வேள். (பா.11) அச்சத்தைத் தரும் சூரனுடைய மாமரத்தை அடியோடு அழித்த முருகன்; பெரிய புகழையும், கடுமையான சினத்தையும், வெற்றியையும் உடைய முருகன் இது முருகனுடைய வரலாற்றை நினைவூட்டுகின்றது. பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி, வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக், கண்பொரு திகிரி, கமழ்குரல் துழா அய், அலங்கற் செல்வன் சேவடிபரவி, நெஞ்சு மலி உவகையர், துஞ்சுபதிப் பெயரை. (பா.31) பசுமையான கொடிகளிலே நீலோற்பலங்கள் மலர்ந்திருக் கின்றன. குளிர்ந்த நீர்த்துறையிலே குளித்தபின், வண்டுகள் மொய்க்கின்ற அழகிய மலர்மாலை யையும், திருமகள் வாழ்கின்ற மார்பினையும், கண்ணைப் பறிக்கும் ஒளியை யுடைய சக்கரா யுதத்தையும், மணம் வீசும் கொத்தான துளசி மாலையையும் உடைய திருவனந்தபுரத்துத் திருமாலை வணங்கி, மனத்திலே மகிழ்ச்சி நிறைந்தவராய்த் தாங்கள் வாழும் ஊர்க்குச் செல்வர் இது திருவனந்தபுரத்தில் உள்ள திருமாலைக் குறித்து வந்தது. கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை (பா.43) பரமசிவன் நிலைத்து வாழ்கின்ற மலை; மிக உயர்ந்த இமயமலை. இது இமயத்தையும் சிவபெருமானையும் குறித்தது. இன்னும் கடவுள், கடவுளர் என்ற பெயர்களால் தெய்வங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன. கடைச்சங்க காலத்திலும், அதற்கு முன்னும் தமிழ் மக்கள் பற்பல தெய்வங்களைப் பரவி வந்தனர் என்பதைப் பதிற்றுப்பத்திலே காணலாம். பழக்க வழக்கங்கள் பண்டைக் காலத் தமிழகத்திலிருந்த பழக்க வழக்கங்கள் பலவற்றை இப்பதிற்றுப்பத்தின் மூலம் காணலாம். சேரமன்னர்கள் புலவர்களைப் போற்றிப் புரந்து வந்தனர்; தமிழ் மொழியை யும், தமிழ் இலக்கியங்களையும் பாதுகாத்தனர்; வளர்த்தனர். ஆடல், பாடல் முதலிய கலைகளை வளர்த்தனர்; அக்கலைகளைச் சுவைப்பதையும், அக் கலைஞர்களைக் காப்பாற்றுவதையும் பொழுது போக்காகவும் கடமையாக வும் கொண்டிருந்தனர். கலையை வளர்ப்பதிலே கலைஞர்களுக்கு ஊக்க மளித்தனர். இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பலவற்றிலே காணலாம். வடநாட்டு மக்கள்ஆரியர்கள்; இமயமலையிலே ஆரியர்கள் நிறைந்திருக் கின்றனர் என்று தமிழர்கள் எண்ணினர். ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் என்பது இதனை விளக்கும். (பா.11) மாமிசம் உண்பதும் மதுவருந்துவதும் பாபம் என்று பண்டைத் தமிழர்கள் கருதியதில்லை. மாமிசங் கலந்த நெற்சோற் றையும் மதுவையும் உண்டு பசி தீர்ந்து வாழ்ந்தனர். (பா. 12,18,90) பட்டாடைகள் நெய்து அணிந்தனர் நூலாக்கலிங்கம் என்பது பட்டாடை. நூலாக் கலிங்கம் - நூற்காத நூலாற் செய்யப்பட்ட ஆடை. பட்டு நூல் தானே உண்டாவது; கையினால் நூற்ற நூலன்று. (பா.12) உணவு தானிய வியாபாரிகளிடம் உயர்ந்த செல்வங்கள் உண்டு. அவர்கள் தம் கீழுள்ள குடிமக்களை அன்புடன் ஆதரித்து வந்தனர். அவர்கள் வியாபாரிகளாக மட்டும் இல்லை; பெரிய நிலத் தலைவர்களாகவும் இருந்தனர். (பா.13) வேற்படைக்கு உறைபோட்டு வைத்திருப்பார்கள். போருக்குப் புறப்படும் போது தானியங்களோடு தினையையும், இரத்தத்தையும் போர்முரசுக்குத் தூவிப் பலியிடுவார்கள். இதன் பிறகுதான் அம் முரசை இடம் பெயர்த்து எடுத்து வைத்துக் குச்சியினால் அடிப்பார்கள் (பா.19) சங்க காலத் தமிழர்கள் வான நூல் அறிவு பெற்றிருந்தனர். கிரகங்களின் மாறுபாட்டால் மழை பெய்யும்; சிறப்பாக வெள்ளி யென்னும் கிரகம் மற்றைய கிரகங்களுடன் பொருந்தி நிற்பதைப் பொறுத்தே மழை பெய்யும். (பா.24, 69) இன்று பெரியாறு என்று வழங்கப்படுவது பதிற்றுப்பத்திலே பேரியாறு என்று வழங்கப்படுகின்றது. அவ்வாறு என்றும் வற்றாத நீர்ப் பெருக்குடையது. கோடை நீடித்தாலும், மலை காய்ந்தாலும், அருவி நீரேயில்லாமல் வறண்டாலும் பேரியாற்றிலே தண்ணீர் குறையாது; கரை புரண்டோடும். (பா.28) பண்டைத் தமிழ் மன்னர்கள் தாமே போர்க்களத்திலே புகுவார்கள். எதிரிகளுடன் நேர் நின்று போர்புரிவார்கள். (பா. 34) போரிலே வீரர்களுக்கு ஏற்பட்ட பெரும்புண்ணை ஊசியும் நூலும் கொண்டு தைத்து, மருந்திட்டு ஆற்றுவார்கள். போர்க் களத்திலே புண்பட்டவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வந்தது. (பா.42) போரிலே வெற்றிபெற்று வந்த வீரர்களுக்கு மலர்மாலை யிட்டு மரியாதை செய்வார்கள். வீரர்களுக்குப் போடும் மலர் மாலைகளிலே இஞ்சியையும் கோர்த்துக் கட்டியிருப்பார்கள். அவர்கள் அருந்துவதற்கு நல்ல மதுவையும் அளிப்பார்கள். அவ்வீரர்கள் மலர் மாலையில் உள்ள இஞ்சியைக் கடித்துக் கொண்டு மதுவை அருந்தி மகிழ்வார்கள். (பா.42) தமிழ் மன்னர்கள் போரினால் பகைவர் நாட்டிலிருந்து கொண்டுவந்த செல்வங்களைத் தங்கள் நன்மைக்குப் பயன் படுத்திக் கொள்ளமாட்டார்கள். அச்செல்வங்கள் எவ்வளவு சிறந்தனவாயினும் அவைகளை இரவலர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். (பா.44) நல்ல ஆபரணங்களையும் செல்வங்களையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இவைகளைச் சேமித்து வைத்திருக்கும் இடத்திற்குப் பந்தர் என்று பெயர். (பா.55) வீடுகளில் நல்ல சித்திர வேலைப்பாடுகள் அமைந்திருக்கும். அரிய வேலைப்பாடுகளுடனேயே வீடுகளை அமைப்பார்கள். ஓவத்தன்ன வினைபுனை நல்இல் - சித்திரத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல வீடு என்பதனால் இவ்வுண்மையை உணரலாம். (பா.61) கள் விற்பனை செய்யும் இடத்தை அறிவிப்பதற்கு அடையாள மாகக் கொடி கட்டியிருப்பார்கள். அக்கொடியிலே கட்கொடி என்பதற்கான அடையாளம் இருக்கும். (பா.68) அரசர்கள் தங்கள் பகைவர்களின் பட்டத்து யானைகளைக் கொல்வர்; அவைகளின் தந்தங்களால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் அமர்ந்திருப்பர். இதனால், தந்த வேலைகளிலே தமிழர்கள் தேர்ச்சி பெற்றிருந்ததையும் அறியலாம். (பா.79) பகைவரை எதிர்த்துப் போர் செய்ய முடியாதவர்கள் தம்மைக் காப்பாற்றும்படி தெய்வத்தை வேண்டிக் கொள்ளுவார்கள். (பா.82) மதங்கொண்ட யானையை அடக்குவதற்காக அதனுடன் பெண் யானையைச் சேரவிடுவார்கள். (பா.82) இவைபோன்ற இன்னும் பல பழக்கவழக்கங்களையும், செய்திகளையும் பதிற்றுப்பத்திலே காணலாம். இப்பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஒரே காலத்தில் பாடப் பட்டவையல்ல; பல காலத்தில், பல சேர மன்னர்களைக் குறித்துப் பல புலவர்களால் பாடப்பட்டவை என்று நம்பு கின்றனர். ஆனால் இப்பாடல்களின் போக்கு அவ்வாறு காணப்படவில்லை. ஒருவரால் பாடியது போலவே காணப்படுகின்றது. ஏனைய சங்க நூற்பாடல்களைப்போல் அவ்வளவு சுவையுடைய பாடல்கள் அல்ல என்று கருது கின்றனர் சிலர். இன்று வழக்கில் இல்லாத பல பழந்தமிழ்ச் சொற்களை இந்நூற்பாடல்களிலே பார்க்கலாம். தமிழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நூல் பெருந்துணை செய்யும். 9 புறநானூறு நூல் வரலாறு புறப்பொருளைப் பற்றிப் புகலும் நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு கண்ணால் பார்த்தறியும்படி, வாயினால் கூறும்படி வெளிப்படையாக நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாம் புறப்பொருள். அரசியல், வாணிகம், வரலாறுகள், அறவுரைகள், போர் நிகழ்ச்சிகள், சமுதாயப் பழக்கவழக்கங்கள் ஆகிய பலவற்றைப் பற்றி உரைப்பனவெல்லாம் புறப்பொருள். புறநானூற்றிலே கடவுள் வாழ்த்தைச் சேர்த்து 398 பாடல்கள் இருக்கின்றன. கடவுள் வாழ்த்துப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. அகநானூற்றிலே கடவுள் வாழ்த்தைச் சேர்க்காமல் நானூறு பாடல்கள்; குறுந்தொகையிலேயும் கடவுள் வாழ்த்தைக் கழித்து நானூறு பாடல்கள்; ஐங்குறு நூற்றிலே கடவுள் வாழ்த்தை நீக்கி ஐந்நூறு பாடல்கள். ஆதலால் புறநானூற்றிலும் கடவுள் வாழ்த்தைக் கழித்து நானூறு பாடல்கள் இருந்திருக்க வேண்டும். கடவுள் வாழ்த்தைக் கழித்தால் புறநானூற்றில் இப்பொழுதுள்ள பாடல்கள் 397 தான். ஒரு பாடல் மறைந்துவிட்டது; 267, 268 ஆகிய இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்துடன் புறநானூற்றிலே இப்பொழுதுள்ள 398 பாடல்களிலே 45 பாடல்கள் சிதைத்திருக்கின்றன. இவை களிற் சில பாடல்களிலே சில வரிகள் இல்லை; சில பாடல்களிலே இடையிடையே சில சொற்கள் இல்லை. இன்று இந்நூலிலிருந்து சிதையாமல் நமக்குக் கிடைக்கும் பாடல்கள் 353தான். மற்ற தொகை நூல்களைப் போல புறநானூறும் பல புலவர்களின் பாடல்களைத் தொகுத்து அமைத்த ஒரு நூல். தனித்தனிப் புலவர்களால் தனித்தனி மக்கள்மேல் பாடப் பட்டவைகள்தாம் இந்நூலின் பாடல்கள். யாரையும் குறித்துப் பாடாமல் பொது நீதிகளைக் குறித்துப் பாடியிருக்கும் சில பாடல்களும் உண்டு. ஆசிரியர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் 157க்கு மேற்பட்டவர்கள். 129 பேர் பாட்டுடைத் தலைவர்கள். இப்பொழுதுள்ள 398 பாடல்களில் 14 பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலைப் பாடிய புலவர்கள் ஒருகாலத்தினர் அல்லர்; ஒரு குலத்தினர் அல்லர்; ஒரு சமயத்தினர் அல்லர்; ஒரு கொள் கையினர் அல்லர். அவர்கள் பலவேறுபட்ட காலத்தவர்கள்; பல வேறுபட்ட குலத்தவர்கள்; பலவேறுபட்ட சமயத்தினர்; பல வேறுபட்ட கொள்கையினர். தலை, இடை, கடையென்னும் முச்சங்கப் புலவர்களின் பாடல்களும் இந்நூலிலே அடங்கியிருக்கின்றன. புலவர்களிலே அரசர்கள் உண்டு; குறுநில மன்னர்கள் உண்டு; ஔவையார், காக்கை பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, பாரிமகளிர், மாற் பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார் போன்ற பெண்மணிகளும் உண்டு. பாடப்பட்டவர்களிலே முடியுடை மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள் பலரும் உண்டு. பாடினவர்களைப்போலவே பாடப்பட்டவர்களும் பல காலத்திலே வாழ்ந்தவர்கள்; பல வகுப்பைச் சேர்ந்தவர்கள்; பலதிறப்பட்ட கொள்கைகளையுடையவர்கள். இப்பாடல்களைத் தொகுத்தவர் பெயரும் தெரியவில்லை; இவைகளைத் தொகுக்கும்படி செய்தவர் பெயரும் தெரியவில்லை. நூலின் சிறப்பு இந்நூல் தமிழிலக்கியத்தின் அணையா விளக்கு; பழங்காலக் கருவூலம்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுச் சேமிப்பு. எட்டுத் தொகையுள் இதற்கிணையானது ஏதொன்றும் இல்லை. எத்தகைய புகழுக்கும் ஏற்றது புறநானூறு. ஏனைய நூல்களைக் காட்டினும் இந்நூலால் பழந்தமிழர் களின் வாழ்க்கை வரலாறுகள் பலவற்றையறியலாம். இந்நூல் நமக்குக் கிடைத்திராவிட்டால் தமிழர் பெருமையை- வரலாற்றை - பண்பாட்டை- நாம் இன்று அறிந்திருக்கும் அளவுக்கு வேறு எந்த நூலாலும் அறிந்துகொள்ள முடியாது. இந்நூற் பாட்டுக்களிலே பெரும்பாலானவை வறுமை யையே வாழ்க்கையாகக் கொண்ட பல புலவர்களால் பாடப் பட்டவை; தங்கள் வறுமையைத் தீர்க்கும் வள்ளல்களைப் பாராட்டிப் பாடப்பட்டவை அவை. ஆகையால் அவர்களுடைய பாடல்களிலே பல உண்மைகளையும் மக்கட் பண்பையும் காணலாம். தமிழர்களின் சிறந்த சமுதாய வாழ்வு, விருந்தோம்பற் சிறப்பு, உயர்ந்த ஒழுக்கம், உறுதியான கொள்கை, தந் நலமற்ற தியாகம், தலைநிமிர்ந்த தன்மான வீரவாழ்வு இவைகளை யெல்லாம் இந்நூலால் அறியலாம். பண்டைத் தமிழர் வரலாற்று நூல் என்று புறநானூற்றைக் கூறுவது பொருந்தும். தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு, வீரம், புலமை இவைகளைப் பற்றியும் புறநானூற்றுப் பாடல்கள் புகல்கின்றன. தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த புலமை, ஒருவருக்கும் அஞ்சாமல் உண்மையை எடுத்துரைக்கும் உரம் இவைகளுக்கு இந்நூற் பாடல்கள் எடுத்துக்காட்டாம். இந்நூலின் சிறப்புக்கு உதாரணமாகச் சில செய்திகளைக் காண்போம். தமிழர் பண்பாடு பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக் கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய உயர்ந்த - பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். எல்லா ஊர்களும் எம்முடைய சொந்த ஊர்கள்; எல்லா மக்களும் எம்முடைய உறவினர்கள். எம்முடைய நன்மையும் தீமையும் பிறரால் வருவன அல்ல; யாம் இன்புறுவதும் துன்புறுவதும்கூட அவை போலத்தான். சாவு ஒரு அதிசயமன்று (இயற்கை). ஆகையால் இவ்வுலக வாழ்வு இனிமையானது என்று மகிழவுமாட்டோம்; வெஞ்சினத்தால் இவ்வாழ்வு துன்பமுடையது என்று வெறுக்கவு மாட்டோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே (பா.162) இது கணியன்பூங்குன்றனார் பாட்டு. இதுவே தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்கப் போதுமானதாகும். ஊர் என்றாலும் ஒன்றுதான்; ஊர்களைக் கொண்ட நாடு என்றாலும் ஒன்றுதான். ஆதலால் யாதும் ஊரே என்ற தொடரில் யாதும் நாடே என்ற கருத்தும் அடங்கியிருப்பதை அறியலாம். யாதானும் நாடாமால், ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற குறளும் புறநானூற்றுப் பாடலின் கருத்தை விளக்குவதுதான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இந்தப் புறநானூற்று வரியின் உண்மைக் கருத்தை உலக மக்கள் பின்பற்றி ஒழுகுவார்களானால் இவ்வுலகில் எத்தகைய குழப்பமும் ஏற்படாது. உலகத்தை உருக்குலைக்கும் போர் வெறி ஒழிய வேண்டுமானால்-இன வெறி மறைய வேண்டுமானால்- சாதி வெறி சாகவேண்டுமானால்- மதவெறி மாளவேண்டுமானால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழி உலக முழுவதும் பரவவேண்டும். இது உலக சமாதானத்தை நிலை நாட்டும் உயர்ந்த குறிக்கோளுடைய ஒப்பற்ற மொழி. தீமையும் நன்மையும் பிறரால் வருவனவல்ல; இன்புறுதலும் துன்புறுதலுங்கூட இவை போலத்தான். நம்முடைய அறிவுத் திறமை, நடத்தை காரணமாகத்தான் இவைகள் நம்மையடை கின்றன. இவ்வுண்மையை உணர்ந்திருப்பவர்கள் எவரிடமும் வெறுப்புக் காட்டமாட்டார்கள்; எவரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்; எவருக்கும் இன்னலிழைக்கவும் மாட்டார்கள். அனைவரிடமும் நண்பர்களாக - உறவினர்களாக அன்புடன் பழகுவார்கள். இறப்பின் உண்மையை மறக்காதவர்கள், இன்பத்தைத் தான் மட்டும் அனுபவிக்கவேண்டுமென்ற ஆசை கொண்டு அண்டையில் உள்ளவர்களைச் சுரண்டமாட்டார்கள்; அடிமைப் படுத்த மாட்டார்கள். உலக வாழ்வால் வரும் இன்பம் நிலையான தன்று என்று நினைப்பவர்கள், எல்லோரும் இன்புறவேண்டு மென்று எண்ணுவார்கள். இதற்காக ஊக்கத்துடன் உழைப்பார்கள். இவ்வுண்மைகளை உணர்த்துவதே சாதலும் புதுவதன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே என்ற அடிகள். யாதும் ஊரே என்று தொடங்கும் இது போன்ற சிறந்த கருத்துள்ள செந்தமிழ்ச் செய்யுளை வேறு எந்த நூலிலும் காணமுடியாது. அரசியல் நல்ல அரசியல் இல்லாவிட்டால் எந்த நாடும் நாசமடை யும். நல்ல அரசியல் அமைப்புள்ள நாட்டில்தான் மக்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள்; மக்களுடைய வாழ்க்கைத்தரமும் உயர்ந்திருக்கும். இந்நாடே செல்வங் கொழிக்கும் சிறந்த நாடாக விளங்கும். இன்ப வாழ்வுக்கு உதவும் எல்லாப் பண்டங்களும் விளையும் இணையற்ற நாடாகத் திகழும். மக்கள் சாதி-மத-இன வெறிகளினால் மாறுபட்டுப் போராட மாட்டார்கள்; மனிதத் தன்மையுடன் ஒன்றுபட்டு வாழ்வார்கள். இவ்வுண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டுத் தமிழர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தனர். அரசன் தன்னுடைய நன்மைக்காக- இன்பத்துக்காக ஆள்பவனல்லன்; நாட்டின் நன்மைக்காக வாழ்பவன்; குடிமக்களின் குறைகளைப் போக்குவதற்காக வாழ்பவன் என்ற கொள்கையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழர்கள் வலியுறுத்திவந்தனர். குடிமக்களுக்காகத்தான் அரசு; குடி மக்களின் ஊழியன்தான் மன்னவன் என்ற கருத்து நிலைத்திருந்தது. இதனால்தான் பண்டைத் தமிழ் மன்னர்கள் அநீதிக்கு அஞ்சினர்; குடி மக்களின் எண்ணப்படி கோலோச்சினர்; நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர். உலகத்துக்கு உயிர் அரசுதான் என்பது பழந்தமிழர் கருத்து. உலகத்திற்கு நெல்லும் உயிர் அன்று; தண்ணீரும் உயிர் அன்று; இப்பரந்த உலகம் மன்னனைத்தான் உயிராகக் கொண்டி ருக்கின்றது. ஆகையால் நான்தான் இவ்வுலகத்திற்கு உயிர் என்று அறிந்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வது வேற் படைகள் மிகுந்த சேனைகளையுடைய அரசன் கடமையாகும். நெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிர்அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால். யான்உயிர் என்பது அறிகை வேல் மிகுதானை வேந்தற்குக் கடனே (பா. 186) இப்பாடல் அரசியலின் முதன்மையையும், அரசனுடைய கடமையையும் கூறிற்று. இது மோசிகீரனார் என்னும் புலவர் பாட்டு. இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் நகைப்புகூட வரலாம். உணவும் தண்ணீரும் இன்றேல் உயிர்வாழ முடியாது. இவ்வுண்மையை மறுத்து, அவைகள் மக்களுடைய உயிரைக் காப்பனவல்ல; மன்னன்தான் மக்களுடைய உயிரைக் காப்பவன் என்று நவில்வது நகைப்புக்கிடமல்லவா? மன்னவனே மாநிலத்தின் உயிர் என்ற கருத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் இச்செய்யுளின் சிறந்த கருத்து நமது சிந்தையைக் கொள்ளை கொள்ளும். மோசிகீரனார் அவர் காலத்தையொட்டி மன்னவனே மாநிலத்தின் உயிர் என்று உரைத்தார். நாம் இக்காலத்தை ஒட்டி அரசாட்சியே மக்களின் உயிர் என்று மாற்றிக் கொண்டால் போதும். இக்காலத்துக்கும் இப்பாட்டின் கருத்து ஏற்றதாகும். நாட்டின் முன்னேற்றத்தை - மக்களின் நல்வாழ்வைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசாங்கம் உள்ள நாட்டிலே வறுமைதான் குடிகொண்டு வாழும். நாட்டிலே நீர்ப் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உணவுப் பொருள் ஏராளமாக விளைவதற்கு வழி செய்ய வேண்டும். உழவர்க்கு ஊக்கமூட்ட வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான கைத்தொழிற் பண்டங் களைப் பெருக்குவதிலும் கவலை செலுத்த வேண்டும். இவைகளை அரசாட்சியினால்தான் ஆற்றமுடியும். இவ்வுண்மைகளை அடக்கிக் கொண்டிருப்பதே மேலே காட்டிய பாடல். ஆட்சியின் அடிப்படை ஆட்சி அலங்கோலமாகாமல் நிலைத்திருப்பதற்கான அடிப்படையை ஆளுவோர் அறிந்திருக்க வேண்டும். அந்த அடிப்படைக்கு ஆட்டமில்லாமல் நடந்து கொள்வோருடைய ஆட்சிதான் அழியாமல் நிலைத்திருக்கும். அவ்வாட்சியைத் தான் மக்கள் மதிப்பார்கள்; ஆதரிப்பார்கள். அனைவரையும் ஒன்றாகக் கருதி-விருப்பு வெறுப்பின்றி- சமநீதி வழங்கும் அறநெறியைப் பின்பற்றுவதே ஆட்சியின் அடிப்படை. இந்த அடிப்படையை மறந்துவிட்டு அதிகாரச் செருக்கால்-படை பலத்தால் - மக்களை அடக்கி ஆளமுடியாது. ஆயுத பலத்தால் மக்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று நினைப்பவர்கள் அரசின் அடிப்படையை அறியா தவர்கள். இவ்வுண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டினால் உணரலாம். அரசாட்சியின் வெற்றி படைபலத்திலேயில்லை. கடுமையான கோபத்துடன் எதிரிகளைக் கொன்று குவிக்கின்ற யானைப் படைகள் இருந்தால்தான் என்ன? விரைந்து பாயக் கூடிய குதிரைப்படைகள் குவிந்திருந்தால்தான் என்ன? நீண்ட கொடிகள் பறக்கின்ற உயர்ந்த தேர்ப்படைகள் திரண்டிருந்தால் தான் என்ன? கலங்காத நெஞ்சமும், புகழும் உடைய காலாட் படைகள் கணக்கின்றியிருந்தால்தான் என்ன? இவைகள் அரசாட்சியின் அடிப்படைகள் அல்ல. இவற்றால் ஆட்சிக்கு வெற்றியில்லை. அரசாட்சியின் வெற்றி, சிறந்த அறநெறியைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும், நெடும்கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகல்மறவரும் என நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (பா.55) இது, மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் பாட்டு. இதிலே பொதிந்துள்ள உயர்ந்த உண்மையை ஆளுவோர் உள்ளத்திலே மறக்காமல் வைப்பார்களானால், அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படைபலத்தைப் பெருக்க மாட்டார்கள்; நாட்டை நாசமாக்கும் நவீன போர்க்கருவிகளைச் செய்வதிலே பணத்தைப் பாழாக்க மாட்டார்கள்; அறிவையும் வீணாக்க மாட்டார்கள். படைபலம் வெற்றி தராது; மக்களின் ஆதரவே ஆட்சியை நிலை நிறுத்தும் அடிப்படை என்ற உண்மையை உணர்வார்கள். வரிக்கொடுமை அளவுக்குமேல் தாங்க முடியாத வரிகளை மக்கள் தலையிலே சுமத்தும் அரசாங்கம் நிலைத்து நிற்க முடியாது. அவ்வரசு வெறுப்படைந்த மக்களால் வீழ்த்தப்படும். குடிமக் களின் கொடுக்கும் வல்லமைக்குத் தகுந்த அளவுதான் வரி விதிக்கலாம். அரசாங்கச் செலவுக்கு வருமானம் போதாவிட்டால் மக்கள் மனங் குமுறாத வழியில்-மக்கள் தலையில் நேரடியாக வரிச்சுமை ஏறாதவகையில் வருமானத்திற்கு வழிதேட வேண்டும். இது திறமையுள்ள அரசாங்கத்தின் கடமை. விளைந்த நெல்லைச் சேதமில்லாமல் அறுத்துக் கவளம் கவளமாக உட்கொண்டால், ஒரு மாவுக்குக் குறைந்த நிலத்திலே விளைந்த நெல்லும் பல நாட்களுக்கு உணவாகும். நூறு வயல்களிலே நன்றாக நெல் விளைந்திருந்தாலும், ஒரு யானை அவ்வயல்களிலே தனியாக இறங்கி அந்நெல்லை உண்ணத் தொடங்கினால் அவ்வளவும் பாழாகும். அதன் வாயிலே போகும் நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டுச் சேதமாகும் நெல்லே மிகுதியாக இருக்கும். அறிவுடைய மன்னவன் வரி விதிக்கும் முறையை அறிந்து குறைவாக வரி விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவனுடைய நாட்டிலே கோடிக்கணக்கான செல்வம் குவிந்து சிறந்திருக்கும். அந்த நாடு செல்வப் பெருக்குடைய சிறந்த நாடாக விளங்கும். மன்னவனும் மதியற்றவன்; அவனைச் சூழ்ந்த அதிகாரவர்க்கத்தினரும் அறிவுரை கூறுவோர் அல்லர். அவன் விரும்பியதற்கு ஆமாம் போடுபவர்கள். அன்பின்றிக் குடிமக்களிடம் பொருள் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்கள். இத்தகைய அரசன், யானை புகுந்த புலம் போன்றவன். அவனும் உண்டு வாழமாட்டான்; அவனுடைய நாடும் நாசமாகும். காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறு செறுவாயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடியாத்து நாடு பெரிது நத்தும்; மெல்லியன் கிழவனாகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடுமே. (பா.184) இதைப் பாடிய புலவர் பிசிராந்தையார் என்பவர். இவர் சிறந்த அரசியல் வல்லுநர். இதனை இப்பாடலால் அறியலாம். இப்பாடலின் கருத்து எந்தக் காலத்திலும் அழியாமல் நிற்கும் அரும் பொருள். மக்களுக்காக வாழும் அரசாங்கம் எதுவும் இவ்வுண்மையை மறக்க முடியாது; மதிக்காமற் புறக்கணிக்கவும் முடியாது. சிறந்த ஆட்சி ஒரு சிறந்த ஆட்சி எவ்வாறு செயற்படவேண்டுமென்பதை மற்றொரு பாட்டு தெளிவாகத் தெரிவிக்கின்றது. அந்தப் பாடலைப் பாடியவரும் அரசியல் அறிஞரான பிசிராந்தையார் தான். பிசிராந்தையாரின் வரலாறே பெரிதும் வியக்கத்தக்க நிகழ்ச்சியைக் கொண்டது. இவர் பழந்தமிழ்ப் பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் ஊரிலே பெருமையுடன் வாழ்ந்தவர். உறையூரிலே இருந்து அரசாண்ட கோப்பெருஞ்சோழனோடு ஓருயிரும் ஈருடலுமாக இணைந்த நட்புள்ளவர். ஆந்தையாரும் சோழனும் ஆருயிர் நட்பினர் என்பதைத் தமிழ்நாட்டினர் அனைவரும் அறிவர். இருவரும் உயிரோடு உறைந்த வரையிலும் ஒருவரை யொருவர் நேரே பார்த்துப் பழகியவர்கள் அல்லர். ஆந்தையார் பெயரைச் சொல்லிக்கொண்டு யார் வந்தாலுஞ் சரி, அவர்களை அன்புடன் வரவேற்பான் சோழன்; அவர்களுக்கு வேண்டி யவற்றை விருப்பத்துடன் அளிப்பான். இக்குணத்திலே கோடாதவன் கோப்பெருஞ் சோழன். கோப்பெருஞ் சோழன் பெயரைக் கூறிக்கொண்டு எவர் வந்தாலுஞ் சரி, அவர்களை அன்புடன் உபசரிப்பார் ஆந்தையார். சோழன் மண்ணுலுகை விட்டு மறைந்த செய்தியை அறிந்த ஆந்தையார் அவன் இறந்த இடத்தை அடைந்தார். தாமும் உயிர்விட்டார். இத்தகைய இணையற்ற நட்பினராக வாழ்ந்தனர் இவ்விருவரும். பிசிராந்தையார் வயது முதிர்ந்த பெருங்கிழவர். அவர் காலத்தில் அவர் பெருமை தமிழ்நாட்டினர் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரைக் கண்களால் கண்டவர் சிலர். அவருடைய பெரும் புலமையைப் பற்றிக் காதுகளாற் கேட்டவர் பலர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள், அவர் தாடியும் தலை மயிரும் நரைத்த தள்ளாத கிழவராயிருப்பார் என்று எண்ணியிருந்தனர். இப்படி எண்ணியிருந்தவர்களிலே சிலர் ஒருநாள் அவரைச் சந்தித்தனர். அவர்கள் எண்ணியிருந்தபடி பிசிராந்தையார் தடியூன்றி நடக்கும் தள்ளாத கிழவராகக் காணப்படவில்லை. அவர் தலைமயிரும் தாடியும் கருகருவென நாகப்பழத்தின் நிறம் போல் நன்றாகக் காட்சியளித்தன. அவர்கள் வியப்புற்றனர். தங்களுக்குண்டான வியப்பை அவரிடமே அறிவித்தனர். உங்கள் வயது பலவாயிற்றே! இன்னும் ஏன் உங்கள் தலைமயிர் நரைக்கவில்லை? ...ன? என்று கேட்டேவிட்டனர். இக்கேள்விக்கு ஆந்தையார் அளித்த விடை தான் இந்தப் பாட்டு. உங்கள் வயது பலவாகியும் இன்னும் நரையில்லாமலிருக் கின்றீர்களே! இது எப்படி முடிந்தது? என்று கேட்பீர்களானால் காரணங் கூறுகிறேன் கேளுங்கள்! என் மனைவி சிறந்த குணங் களையுடையவள். என் மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் மேற்பார்வையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என் உள்ளம் போல் ஒத்துழைக்கின்றனர். எனது நாட்டு மன்னவனும் குடிகளுக்குக் கொடுமை செய்யாமல் காப்பாற்றுகின்றான். நான் வாழும் ஊரிலே அறிவும் அடக்கமும் உள்ள ஆன்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் சிறந்த கொள்கையை உடையவர்கள். இதனால்தான் நான் கவலையின்றி, நரை திரையின்றி நன்றாக வாழ்கின்றேன் என்று பட்டென்று பதில் கொடுத்தார். யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. (பா.191) இதுவே அப்பாடல். உயர்ந்த நாடென்றால் அந்த நாட்டிலே உறைவோர் அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும். தொழிலாளி- முதலாளி சச்சரவுகள் தோன்றுவதற்கு இடமில்லாமலிருக்க வேண்டும். அறிஞர்களின் ஆதரவைக் கொண்டு அரசாட்சி நடைபெற வேண்டும். எத்தகைய அநீதிக்கும் அரசாட்சி இடந்தரக் கூடாது. நாட்டைப் பட்டினியும் நோயும் சூழ்ந்து பயமுறுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இத்தகைய நாட்டில் உள்ளவர்கள்தாம் உள்ளத்திலே ஒரு கவலையுமின்றி-உடல் உரமுடன்- நரை திரையின்றி நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள். இவ்வுண்மையை இப்பாடல் வலியுறுத்துவதைக் காணலாம். இத்தகைய அரசுதான் - நாடுதான் ஒரு எடுத்துக்காட்டான அரசாகும்; நாடாகும். தமிழர் வீரம் தமிழர்களின் ஒப்பற்ற வீரத்தைப் பற்றி உரைக்கும் பாடல்கள் பலவுண்டு. வீரம் என்றால் இளைத்தவர்களை வீணாக இன்னலுக்கு ஆளாக்கித் தான் மட்டும் இன்புற்று வாழ்வதன்று; மற்றவர்களைக் காட்டிலும் தான் ஆற்றலுடையவன் என்பதை அறிவித்துக் கொள்ளுவதன்று. தான் கொண்ட கொள்கையிலே உறுதியுடன் நிற்றல்; தான் செய்யத் தொடங்கிய செயல்களை முட்டுக் கட்டைகளுக்கு அஞ்சாமல் முயற்சியுடன் செய்து முடித்தல்; தன் மானத்திற்கு இழுக்கு வராமல் தன் செயலிலே வெற்றியடைதல்; தன்னைக் காரணமின்றித் தாழ்த்திப் பேசுவோர் நாணும்படி அவர்கள் செருக்கைச் சிதைத்தல். இவைகளே வீரத்தின் இயல்பு. இத்தகைய சிறந்த வீரமுடையவர்களே இந்நாட்டுத் தமிழ் மன்னர்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் பாட்டு ஒன்றே இவ்வுண்மையை விளக்கப் போதுமான தாகும். இவன் வீரத்திலே மிகுந்த வேந்தன் மட்டும் அன்று; செந்தமிழ் புலவனாகவும் சிறந்திருந்தான். படை பலத்தால் என்னை இகழ்ந்துரைத்த வேந்தர் களுடன் வீரப்போர் புரிவேன்; அவர்கள் சேனைகள் சிதையத் தாக்குவேன். அவர்களுடைய முரசுகளுடன் அவர்களையும் சிறை பிடிப்பேன். இப்படிச் செய்யேனாயின், என் குடை நிழலிலே இருப்பவர்கள் தாங்கள் போய்த் தாங்குவதற்கு வேறு இடங்காணாமல் எமது அரசன் கொடுங்கோலன் என்று என்னைத் தூற்றும் கொடியவனாவேன். உலகம் உள்ளவரையிலும் மாறாத புகழுடைய மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட புலவர்கள் என்னுடைய நாட்டைப் புகழ்ந்து பாடாமல் புறக்கணிப்பார்களாக. இரக் கின்றவர்களுக்கு எதையும் கொடுக்க முடியாத வறுமையையும் யான் எய்துவேனாக. உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேனாயின், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது கொடியன் எம் இறை எனக் கண்ணீர்ப்பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என்நிலவரை; புரப்போர் புன்கண்கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே. (பா. 72) இந்தப் பாட்டிலே நெடுஞ்செழியனுடைய வீரமும், நேர் மையும், புலவர்களுடைய பெருமையும் காணப்படுகின்றன. பகைவர்க்குப் பணிகின்றவன் வீரமுடைய வேந்தன் அல்லன். குடிகளைக் கொடுமைப்படுத்துகீன்றவன் ஒரு கோழை. புலவர்கள் வீரனையே விரும்புவார்கள்; அவனுடைய நாட்டையே பாராட்டிப் பாடுவார்கள். கோழையைக் கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள். இவ்வுண்மை இப்பாடலிலே பொதிந்திருப்பதைக் காணலாம். இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சேர மன்னன்; ஒப்பற்ற வீரன். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் அவனைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார். பகைவர்களுடைய கோட்டை அவர்களிடம் இருக்கும் போதே, அதைப் பிறர்க்குத் தானமாகத் தந்து விடுவாய் அந்தக் கோட்டை உங்களுடையது; எடுத்துக் கொள்ளுங்கள் என்று உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குக் கொடுக்கும் பண்புடைய வள்ளல் நீ. ஒன்னார் ஆர்எயில்அவர்கட்டாகவும்நுமதுஎனப் பாண்கடன்இறுக்கும்வள்ளியோய்!! (பா. 203) இப்பகுதி அந்த இளஞ்சேட் சென்னியின் வீரத்தை விளக்கும். இவ்வீரமும் தன்னலமற்ற ஆண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். எதிரியின் கோட்டையைத் தன் வசமாக்குவதற்கு முன்பே அதை மற்றொருவர்க்குக் கொடுப்பதென்றால், இதற்கு எத்தகைய நெஞ்சுரம் வேண்டும்? எதிரியை வெல்வது உறுதியென்பதில் எவ்வளவு நம்பிக்கை வேண்டும்? தோல்வி மனப்பான்மையே தமிழனிடம் இருந்ததில்லை என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணமாகும். இச்செய்யுளின் கருத்தைக் கம்பன் தன் காவியத்தில் ஓரிடத்தில் புகுத்தி யிருப்பது புகழத் தகுந்தது. இன்னும் இராம-இராவணப் போர் தொடங்க வில்லை; இலங்கை இராவணன்வசத்திலேயே இருக்கின்றது. இந்நிலையிலே விபீஷணன் இராமனைச் சரணடைகின்றான்.; உடனே இராமன் இலங்கை அரசு உன்னுடையதே என்று உறுதிமொழியளித்தான்; அவனை இலங்கை மன்னனாக வைத்து முடிசூட்டினான். வெற்றியிலே நம்பிக்கையுள்ள வீரன் இராமன் என்பதை விளக்கவே இக்கதையமைப்பு. புறநானூற்றை படித்த கம்பனுடைய கற்பனை இது. இவ்வாறு தமிழ் மன்னர்களின் அருமையான ஆண்மையைவிளக்கும்அழகியபடல்கள்பலவுண்டு.அறப் போர் தகுந்த காரணமின்றிப் பண்டைத் தமிழ் மன்னர்கள் போரிலே தலை யிடமாட்டார்கள். தங்கள் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் வேந்தர்களின் மேல் போர் தொடுப்பார்கள். சேனைகளின் பெருக்கால் செருக்கடைந்து தங்களைப் பழிக்கும் மன்னர்கள் மேல் படையெடுப்பார்கள். அக்காலத்திலே போரால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தேற்படு வதில்லை. படைகளும் பண்டங்களும் தாம் போர்க்களத்திலே பாழாகும். பொது மக்களுக்கு அறிவித்த பின்னரே போர் தொடங்குவார்கள். போர் செய்வதிலும் அவர்கள் அறநெறியைப் போற்றி வந்தனர். பசுக்களே! பசுவின் தன்மையுடைய பார்ப்பனர்களே! பெண்களே! நோயாளிகளே! பிதிர்காலத்தில் வாழ்கின்றவர் களுக்கான சிறந்த கடமைகளைச் செய்யும் பொன்போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களே! எமது அம்பை விரைவிலே விடப்போகின்றோம்; ஆகையால் உங்கள் உயிருக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்லுங்கள். இவ்வாறு அறநெறியைக் கூறும் கொள்கையை உடையவன் நீ! சிறந்த வீரத்தையும் உடையவன் நீ! பகைவர்களைக் கொல்லும் யானையின் மீது பறந்துகொண்டிருக்கும் கொடி, வானத்திலே நிழலைச் செய்யும்படியான சிறப்புடைய எமது மன்னனே! குடுமி என்னும் பெயர் கொண்ட வனே! நீ வாழ்க! ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅதீரும் எம்அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின், என அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எம்கோ! வாழிய குடுமி! (பா. 9) இப்பாடல் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி என்பவனைக் குறித்த பாட்டு. இதைப் பாடிய புலவர் நெட்டிமையார் என்பவர். இதனால் பண்டைத் தமிழ் மன்னர்கள் கொடுமை யான போரிலும் அறநெறியைக் குலைக்கவில்லை என்பதை அறியலாம். புலவர் பெருமை பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் ஆதரவால் வாழ்ந்தவர்கள்; பெருநிலக் கிழவர்களாகிய வள்ளல்களைப்பாடி, அவர்கள் வழங்கிய பொருள்களைக் கொண்டு வறுமைதீர்ந்து வாழ்ந்தார்கள். ஆயினும் அவர்கள் தங்கள் அறிவை, நேர்மையுள்ளத்தை யாருக்கும் அடகு வைத்து விடவில்லை; உண்மையென்று கண்டதை உரைப்பதற்கு அஞ்சிய தில்லை. தன்மானத்துடனேயே தங்கள் வாழ்வை நடத்தி வந்தனர். இவ்வுண்மையை விளக்கும் பாடல்கள் பல புறநானூற்றிலேயுண்டு. சிறந்த உயர்ந்த தந்தங்களையுடைய ஆண் யானைகள் கிடைப்பதாயி ருந்தாலும் அன்பின்றிக் கிடைக்கும் அப்பரிசிலை வாங்கிக்கொள்ளமாட்டேன்; நீ மனமுவந்து-மகிழ்ச்சியோடு கொடுப்பாயானால் சிறிய குன்றிமணியளவுள்ள பொருளையும் பெற்றுக்கொள்வேன். கூர்மையான வேலையுடைய குமணனே, இவ்வுண்மையை நீ உணர்ந்து கொள். உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்! உவந்து நீ இன்புற விடுதியாயின், சிறிது குன்றியும் கொள்வல், கூர்வேல் குமண! (பா. 159) இது பெருஞ்சித்திரனார் என்பவர் குமணனைப் பற்றிப் பாடியுள்ள ஒரு பாடலின் பகுதி. இச் செய்யுளில் புலவர்களின் பெருமிதமும் தன்மான உணர்ச்சியும் ததும்பிக் கிடப்பதைக் காணலாம். மதுரைக் குமரனார் என்பவர் ஒரு புலவர். இவர் பெருந் திருமாவளவன் என்னும் சோழனிடம் பரிசு பெறச் சென்றார். அவன் இவரை உடனே வரவேற்றுப் பரிசில் தரவில்லை; சிறிது காலங் கடத்தினான். அதைப் பொறாத புலவர் அவன் முகத்தில் அறைந்ததுபோல் பாடினார். யாம் மிகப் பெரிய துன்பத்தையடைந்தாலும் சிறிதும் மதியற்றவர்களின் செல்வத்தை மதிக்கமாட்டோம். நல்லறி வாளர்களின் வறுமையையே வள முடையதாக மதிப்போம். மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்; நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும் பெரும உவந்து நனிபெரிதே! (பா. 197) இதுவே அந்த மதுரைக் குமரனார் பாடல். பெருந்தலைச் சாத்தனார் என்பவர் மற்றொரு புலவர். இவர் கடியநெடு வேட்டுவன் என்னும் குறுநில மன்னனிடம் பரிசில் வேண்டிச் சென்றார். அவன் காலங்கடத்தினான். உடனே புலவர், அவன் வெட்கித் தலைகுனியும்படி தன் பெருந்தன்மை யைக் கூறிவிட்டுத் திரும்பினார். நிறைந்த செல்வமுடைய மூவேந்தர்களாகட்டும், அவர்கள் எம்மிடம் அன்பில்லாமல்-மதிப்பில்லாமல் எவ்வளவு பொருளைக் கொடுத்தாலும் அதை நாம் ஏற்க மாட்டோம். முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே! (பா. 205) இதுவே அந்தப் பெருந்தலைச் சாத்தனாரின் பாடல். இவ்வாறு தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த தன்மையைக் காட்டும் பாடல்கள் பல புற நானூற்றிலேயுண்டு. சமாதான முயற்சி நாட்டிலே அமைதி நிலவ வேண்டும் என்பதே அறிஞர்கள் விருப்பம்; அவர்கள் அமைதிக்காகவே பாடுபடுவார்கள். பழந்தமிழ்ப் புலவர்களிலே பலர் வறுமையிலே கிடந்து வாடினவர்கள்தாம். ஆயினும் அவர்கள், மன்னர்கள் சண்டை சச்சரவின்றி ஒன்றுபட்டு வாழ்வதற்குப் பாடுபட்டு வந்தனர். இந்த உண்மையை விளக்கும் பாடல்கள் இந்நூலிலே பலவுண்டு. பெருந்திருமாவளவன் என்னும் சோழனும் பெருவழுதி யென்னும் பாண்டியனும் ஒரு சமயத்தில் ஓரிடத்திலே ஒன்றாக வீற்றிருந்தனர்; ஒருவரோடு ஒருவர் அன்புடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். இக்காட்சியைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் என்னும் புலவர் கண்டார். உள்ளத்திலே உவகையடைந்தார். தன் மனத்திலெழுந்த மகிழ்ச்சியை அம்மன்னர்களிடமே கூறிவிட்டார். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; இன்றிருப்பதுபோல் என்றும் இணைந்து ஒன்றுபட்டிருங்கள். நீங்கள் ஒன்று பட்டிருந்தால் இந்த உலக முழுவதும் உங்கள் கையில்தானிருக்கும். இது உண்மை; பொய்யன்று. ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதீர்! இரு வீரும் உடன்நிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பௌவம் உடுத்த இப்பயங்கெழு மாநிலம் கை அகப்படுவது பொய்யாகாதே (பா. 58) அண்டை நாடுகளுக்குள் சண்டை கூடாது; சமாதானம் நிலவவேண்டும். அப்பொழுதுதான் நாட்டை நாசமாக்கும் விரோதிகள் தலை தூக்கமாட்டார்கள். இக்கருத்து இப்பாடலில் இருப்பதைக் காணலாம். அதியமான் நெடுமான் அஞ்சி யென்பவன் தகடூரை ஆண்ட ஒரு சிற்றரசன். பெரிய கொடை வள்ளல். தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஆருயிர் நண்பன். அவன் புகழைக் கண்டு பொறாமை கொண்ட தொண்டைமான், அதியமானுடன் போர் செய்ய எண்ணினான். இதற்காக ஆயத்தஞ் செய்து கொண்டிருந் தான். இதனை அறிந்த அதியமான், ஔவையாரிடம் இச் செய்தியை உரைத்தான். ஔவையார் போர் நிகழாமல் தடுக்கும் பொருட்டுச் சமாதானத் தூதராகத் தொண்டைமானிடம் தூது போனார். தொண்டைமான் ஔவையாரை அன்புடன் வரவேற்றான். தன் படைக்கலச்சாலைக்கு அழைத்துச் சென்றான்; தான் திரட்டி வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டினான். அவனுடைய படைக் கலங்களைப் பார்த்த ஔவையார் அவனிடம் கீழ்வருமாறு கூறினார். உன்னுடைய இப்படைக்கலங்கள் மயிற் பீலி அணியப் பட்டு, மாலை சூடப்பட்டு, எண்ணெய் தடவப்பட்டு, நல்ல பாதுகாப்பான பெரிய இடத்திலே வைக்கப் பட்டிருக்கின்றன. என்னுடைய தலைவனாகிய அதியமானோ, செல்வம் உள்ள போது எல்லோர்க்கும் இனிய உணவளிப்பான்; இல்லாதபோது உள்ளதைப் பங்கிட்டு எல்லோருடனும் சேர்ந்திருந்து உண்ணுவான். அவன் ஏழைகளின் கூட்டத்திற்குத் தலைவன். அவனுடைய கூர்மையான வேற்படைகள் உன்னுடைய படை களைப் போல இல்லை. அவைகள் பகைவர்களைக் குத்தியதனால் பக்கமும் நுனியும் சிதைந்துவிட்டன. இப்பொழுது அவைகள் கொல்லனுடைய உலைக்களத்திலே மீண்டும் சீர் செய்வதற்காகப் போட்டுக் கிடக்கின்றன. இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக், கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றுஇல மாதோ; என்றும் உண்டாயின் பதங்கொடுத்து இல்ஆயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே (பா. 95) இதுவே ஔவையார் கூறிய அறிவுரைப் பாட்டு. அதியமான் சண்டை செய்வதிலே சமர்த்தன்; உனக்குப் போர்ப் பழக்கம் இல்லை. அவன் குடி மக்களின் ஆதரவைப் பெற்றவன்; உனக்குப் பொதுமக்கள் ஆதரவில்லை. ஆகையால் நீ போரில் இறங்கினால் தோல்வியடைவாய் என்ற கருத்தை இப் பாடலிலே காணலாம். சண்டையைக் காட்டிலும் சமாதானமே நாட்டுக்கு நலந்தரும்; மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வையளிக்கும் என்பது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் கருத்து. இக்கருத்தை வலியுறுத்த அவர்கள் முயன்றனர். புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலே இவ்வுண்மை காணப்படுகின்றது. மேலே காட்டிய உதாரணங்களே இதற்குப் போதுமானவை. உழவின் உயர்வு உணவுப் பஞ்சம் தாண்டவமாடும் நாட்டில் ஒரு சிறிதும் சமாதான வாழ்வு நிலைத்திராது. உணவுப் பொருள்களின் விளைவு பெருகினால்தான் பட்டினிக் கொடுமையும் பஞ்சமும் பறந்தோடும். உணவுப் பண்டங்களைப் பெருக்குவோர் உழவர்கள். உழவர்கள் ஒரு துயருமின்றி உரிமையுடன் வாழ்ந்தால்தான் உணவுப் பண்டங்கள் பெருகும். இந்த உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் உழவர்களிடம் உள்ளன்பு காட்டினர்; உற்பத்தியைப் பெருக்கினர்; நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்தனர். இவ்வுண்மையை இந்நூற் பாடல்களிலே காணலாம். ஏரைப் பாதுகாக்கும் உழவர்களைப் பாதுகாத்து, இதன் மூலம் உனது நாட்டுக் குடிமக்களையெல்லாம் பசிக்காளாகாமல் பாதுகாப்பாயானால் உன் பகைவர் களெல்லாம் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். உன் பாதத்தை வணங்குவார்கள். பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடி புறந்தருகுவை யாயின், நின் அடிபுறந் தருகுவர் அடங்காதோரே. (பா.35) வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர், கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னனுக்குச் சொல்லிய அறிவுரையிலே இவ்வுண்மையை விளக்கி யிருக்கின்றார். நீர்ப்பாசன வசதியைப் பெருக்கினால்தான் நிலம் வளப்படும்; உழவர்களும் ஊக்கமுடன் உழைத்து உற்பத்தியைப் பெருக்குவார்கள். நீர்ப்பாசன வசதியற்ற நாட்டிலே உற்பத்தி பெருக முடியாது. ஆதலால் அரசாங்கத்தின் முதற் கடமை நாட்டிலே நல்ல நீர்ப்பாசன வசதிகளை ஏற்படச் செய்வதுதான். இவ்வுண்மையை எடுத்துக்காட்டுகின்றது ஒரு செய்யுள். உண்ணும் நீரின்றேல் உடம்புகள் அழியும். உடம்புகளுக்கு உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தோராவர். உணவால் வாழ்வது உடம்பு; அது உணவையே முதன்மையாகக் கொண்டி ருக்கின்றது. உணவென்று சொல்லப்படுவது நிலமும் நீருந்தான். ஆகையால் நீரையும் நிலத்தையும் ஒன்று சேரும்படி இணைத்து வைப்பவர்களே, இவ்வுலகிலே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் ஆவார்கள். நீர்இன்று அமையா யாக்கைக் கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப்படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே. (பா. 18) உழவுத் தொழில் ஓங்கி வளர்வதற்கு நல்ல நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. இவ்வுண்மையை இப்பாட்டு வலியுறுத்துகின்றது. குடபுலவியனார் என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு எடுத்துக் காட்டிய உண்மை இதுவாகும். பழந்தமிழ்ப் புலவர்கள், உழவுத் தொழில் சுருங்கக்கூடாது; அத்தொழில் ஓங்கி வளரவேண்டும் என்பதிலே எவ்வளவு கவலை கொண்டிருந்தனர் என்பதை இன்னும் பல பாடல்களிலும் காணலாம். உலக இன்பம் இவ்வுலக வாழ்வு இன்னல் நிறைந்தது; அவனியிலே பிறந்த மக்கள் அனைவரும் துன்பத்தைத்தான் அடைவார்கள். இவ்வுலக வாழ்வை வெறுத்தால்தான் இன்ப வாழ்வை எய்த முடியும். என்று உரைப்போர் பலருண்டு இவர்கள் இவ்வுலக வாழ்வை இன்ப வாழ்வாகச் செய்ய முடியும் என்பதிலே நம்பிக்கை யிழந்தவர்கள். ஆகையால்தான் இவ்வுலகம் நிலை யற்றது. இவ் வுலக இன்பமும் நிலையற்றது என்று வேதாந்தம் பேசுகின்றனர். பண்டைத்தமிழர்கள் இவ்வுலக வாழ்வை வெறுக்கவில்லை; உலக வாழ்க்கையிலே இன்பம் உண்டு என்பதை ஒப்புக் கொண்டி ருந்தனர். உயர்ந்த இன்ப வாழ்விலே வாழ்ந்தனர். இந்த உண்மையை ஒரு பாடல் கலங்கரை விளக்குபோல் காட்டுகின்றது. எந்த முறையில் வாழ்ந்தால் எல்லா மக்களும் இன்புற்று வாழலாம் என்பதையும் அப்பாடல் நமக்கு எடுத்துரைக்கின்றது. இவ்வுலகிலே இன்பம் உண்டு. தேவாமிர்தம் கிடைத் தாலும் சுவையான உணவென்று அதைத் தனித்திருந்து உண்ண மாட்டார்கள் (பலருக்கு பங்கிட்டுக் கொடுத்து உண்பார்கள்). யாரையும் வேற்றுமை காரணமாக வெறுக்க மாட்டார்கள். தூங்குமூஞ்சிகளாகவும் இருக்க மாட்டார்கள். அறிஞர்கள் செய்வதற்கு அஞ்சும் தகாத செயல்களைத் தாமும் செய்ய மாட்டார்கள். புகழ் தரக்கூடிய நற்செயல்களை உயிரைக் கொடுத்தும் நிறைவேற்றுவார்கள். இந்த உலகமே ஊதியமாகக் கிடைப்பதாயிருந்தாலும் பழிக்கத் தகுந்த செயல்களைச் செய்ய மாட்டார்கள். ஒருபொழுதும் சோர்ந்து கிடக்கமாட்டார்கள். இத்தகைய இனிய தன்மையுடையவர்களும், தமது நன்மைக் கென்று முயலாமல் என்றும் பிறர் நன்மைக்காகவே முயல்பவர் களும் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆதலால் இவ்வுலகிலே இன்பம் உண்டு. உண்டால் அம்ம! இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர், துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன் தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே (பா. 182) இது கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டியன் பாட்டு. இப்பாடல் கூறுகிறபடி ஒவ்வொரு மனிதனும் நடந்தால் இவ்வுலக வாழ்க்கையை எவர்தான் வெறுக்க முடியும்? எல்லோரும் இன்புற்றிருக்க வழிகாட்டும் இப்பாடலின் அருமையே அருமை. வறுமையற்ற வாழ்வு இவ்வுலகிலே எல்லோர்க்கும் இன்புற்று வாழ்வதற்கான எல்லாச் செல்வங்களும் அமைந்திருக்க வேண்டும். இரப்போர், ஈவோர் என்ற பாகுபாடு மறைய வேண்டும். கொடுப்பது உயர்ந்த செயல்தான். ஆனால் இரப்பதைக் காட்டிலும் இழிந்த செயல் ஏதொன்றுமில்லை. எனக்கு வேண்டாம்; நீ கொடுப்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறுவது ஈவதைக் காட்டிலும் எத்துணையோ மடங்கு உயர்ந்தது. கொடுப்போரும் கொள்வோருமற்ற சமுதாய அமைப்புதான் உன்னதமானது. இத்தகைய சமுதாய அமைப்புள்ள உலகில்தான் மக்களுக்கு இன்ப வாழ்வுண்டு. பண்டைத் தமிழ் மக்கள் இவ்வுண்மையை உணர்ந்திருந்தனர். இதனை ஒரு புறநானூற்றுப் பாட்டு எடுத்துக் காட்டுகின்றது. வறுமையால் வாடுகின்றேன்; எனக்கு ஏதேனும் கொடு என்று பல்லைக்காட்டி இரப்பது இழிவானது. இவ்வாறு இரப்போர்க்கு இல்லையென்று உரைப்பது இரப்பதைக் காட்டினும் இழிவானது. வறியோரைக் கண்டால் அவர்கள் வாய்விட்டுக் கேட்காமலே அவர்க்கு வேண்டுவன கொடுத்தலே உயர்ந்த குணம். அப்படிக் கொடுக்கும்போது அதற்கு எதிராக, நீங்கள் கொடுப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுப்பது அதைக் காட்டிலும் உயர்ந்த குணம். ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. (பா. 204) வறுமையற்ற வாழ்விலே மக்கள் அனைவரும் வாழ வேண்டும்; கொள்வோரும் கொடுப்போருமற்ற ஒரு சமுதாய வாழ்வு இவ்வுலகிலே தோன்ற வேண்டும்; இல்லார் - உடையார் என்ற பேதமற்ற சமுதாயமாக இவ்வுலக மக்கள் வாழவேண்டும். எல்லோரும் எல்லாச் செல்வமும் எய்தி, இன்ப வெள்ளத்தில் மிதக்க வேண்டும். இதுவே பண்டைத் தமிழறிஞர்களின் கருத்து என்பதை இப்பாடல் விளக்குகின்றது. இக்கருத்தைத்தான் கொள் வாரிலாமையால் கொடுப்பாரு மில்லை என்று கூறுகிறான் கம்பன். அறிவுரைகள் சிறந்த அறிவுரைகள், நீதிமொழிகள் பலவற்றை இந்நூற் பாடல்களிலே காணலாம். நன்றி மறப்பது நன்றன்று என்பது தமிழர்களின் தலை சிறந்த கொள்கை. பிறர் தமக்குச் செய்த நன்றியை மறக்காதவனே மற்றவர்க்கு நன்றி செய்ய முன்வருவான். இதற்காகவே நன்றியறி தலைப் பற்றி அறநூல்கள் எல்லாம் வலியுறுத்திக் கூறுகின்றன; நன்றி மறப்பதை மிகவும் கடிந்து கூறுகின்றன. பசுவினுடைய பால் தரும் முலையை அறுத்த அறமற்ற வர்க்கும், சிறந்த நகைகளை அணிந்த பெண்களின் கருவைச் சிதைத்தோர்க்கும், பார்ப்பார்க்குத் தீமைசெய்த கொடுமை யாளர்க்கும் அவர்களுடைய குற்றங்களுக்கேற்ற பிராயச் சித்தங்கள் உள்ளன; இவ்வுலகமே அழிவதாயினும், ஒருவன் செய்த நன்றியை மறந்தோர்க்கு அத்தீமையிலிருந்து தப்பிக்க வழியில்லை. இவ்வுண்மையை அறநூல்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும், மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உள; என நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தியில், என அறம் பாடிற்றே (பா. 34) இச்செய்யுள், நன்றி மறவாமை மனிதனுடைய கடமை என்பதை எடுத்துரைக்கின்றது. உலகிலே எல்லோராலும் எல்லாக் காரியங்களையும் இயற்ற முடியாது. பொதுவாக நல்ல செயல்களைச் செய்ய எல்லோராலும் முடியாது. அருஞ் செயல்களை ஆற்றுவோர் ஒரு சிலர்தான். உயர்ந்த உள்ளமும், நுட்ப அறிவும், சிறந்த ஆற்றலும் உள்ளவர்கள்தாம் உயர்ந்த செயல்களை உறுதியுடன் செய்து முடிப்பார்கள். தீமை செய்வது எளிது; எல்லாராலும் இயலும். ஒரு பண்டத்தை உருவாக்குவது அரிது; உருவான பண்டத்தை உடைத்தெறிவது எளிது. ஆகையால், ஒருவனால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாமல் இருப்பானாயின் அவனைச் சிறந்தவன் என்று சொல்லி விடலாம். இவ்வுண்மையை மக்கள் உணர்ந்து தீமை செய்யத் துணியாம லிருக்க வேண்டும். என்று உரைக்கின்றது ஒரு செய்யுள். நன்மை செய்வதற்கு முடியாதவர்களாயிருந்தாலும் தீமை செய்வதை நிறுத்திவிடுங்கள். இதுதான் எல்லாரும் மகிழ்ச்சி யடையத் தகுந்த இனிய குணம். அன்றியும் உங்களை நல்ல நெறியிலே செலுத்தும் வழியும் அதுதான். நல்ல செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லோரும் உவப்பது; அன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே. (பா. 195) தீமை செய்யாமல் அடங்கியிருப்பதே, நன்மை செய் வதற்குத் தூண்டும் கருவி என்ற கருத்து இப்பாடலில் அடங்கி யிருக்கின்றது. தியாகிகள் பலன் கருதிப் பணிசெய்வோர் தியாகிகள் அல்லர்; உள்ளத்திலே தந்நலமின்றி உலக நன்மைக்காக உழைப்பவர்களே தியாகிகள். வெறுப்பு விருப்பின்றி நன்மையிலே நாட்டம் செலுத்தி ஓயாமல் உழைப்பவர்களே உண்மைத் தியாகிகள். கொடை அறம், பிறர்க்கு உதவுதல் என்பவைகளைப் பண்டைத் தமிழர்கள் தமது கடமையெனக் கருதி வந்தனர். அவர்க்கு இன்னது செய்தால், நமக்கு இன்னபலன் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் செய்யும் உதவி அறமாகாது; கொடை யாகாது. இதுவே முன்னோர் கொள்கை. இக்கொள்கையுடன் பிறரைப் பேணி வாழ்ந்தவர்களையே வள்ளல்கள், கொடை யாளிகள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். பாரி பாரி என்று பலவாறு புகழ்ந்து அவன் ஒருவனையே கொண்டாடுவர் நாவன்மை படைத்த புலவர்கள். இவ்வுலகைக் காப்பாற்றுவோன் பாரி ஒருவன் மட்டும் அல்லன்; இவ்வுலகைக் காப்பாற்றுவதற்கு மழையும் உண்டு. பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே! (பா. 10) இது பாரி என்னும் வள்ளலைப்பற்றிக் கபிலர் பாடிய பாட்டு. மழையினால் உலகம் நன்மையடைகின்றது.; உலகத்தால் மழை ஒரு பயனையும் பெறுவதில்லை. இதைப் போலவே பாரியின் கொடையினால் மக்கள் நன்மையடைகின்றனர்; மக்களிடமிருந்து அவன் எப்பயனையும் பெறுவதில்லை. இக் கருத்துடையது இச் செய்யுள். இதே கருத்தை முடமோசியார் என்னும் மற்றொரு புலவரும் கூறியிருக்கின்றார். ஆய் என்னும் வள்ளலைப் பற்றிய பாடல் அது. இப்பொழுது நாம் பிறருக்குச் செய்யும் உதவி பிறகு நமக்கு நன்மையளிக்கும் என்ற கருதி அற வாணிகம் செய்பவன் அல்லன் ஆய். `பெரியோர்களும் அறிவுடையவர்களும் பின்பற்றிய வழியை நாமும் பின்பற்ற வேண்டும்; இதுவே நமது கடமை என்று எண்ணி அவ்வழியைப் பின்பற்றி நடக்கின்றான். இதுவே அவன் கொடையின் பெருமை; அவன் கொள்கையு மாகும். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வாணிகன் ஆய்அலன்; பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே (பா. 133) பிறர்க்கு உதவி செய்வது ஒவ்வொருவர்க்கும் உரிய கடமையென்ற கருத்தை வலியுறுத்துவது இச் செய்யுள். மக்கள் கடமையையும், உண்மையான தியாகம் இன்னதென்பதையும் உணர்த்தும் செய்யுட்கள் இன்னும் பல உண்டு. பாரதம், இராமாயணம் பண்டைத் தமிழகத்திலே பாரத வரலாறும், இராமாயண வரலாறும் பரவியிருந்தன. மக்கள் அவ்வரலாறுகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்து வந்தனர். தமிழ்ப் புலவர்களும் தங்கள் பாடல் களிலே அவ்வரலாறுகளைக் குறிப்பிட்டுப் பாடி வந்தனர். அவ்வரலாறுகளைச் சில நிகழ்ச்சிகளுக்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டி வந்தனர். புறநானூற்றிலும் பாரதக் கதையைக் குறிக்கும் பாடலும், இராமாயணக் கதையைக் குறிக்கும் பாடலும் உண்டு. அசைகின்ற பிடரி மயிரைக் கொண்ட குதிரைகளை யுடைய பாண்டவர்கள் ஐவரோடு சினந்து, நாட்டைத் தன் வசமாக்கிக் கொண்ட-அழகிய தும்பை மலர் மாலையைத் தரித்த-கௌரவர் நூற்றுவரும் போர் செய்து, இருவர் சேனைகளும் போர்க்களத்திலே மடியும் வரையிலும் மிகுந்த சோற்றுணவை அவ்விருவர் சேனைகளுக்கும் கொடுத்தவனே. அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மரும், பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (பா. 2) சேரமான் பெருஞ்சோற்று உதியலாதனைப் பற்றி முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் பாடிய பாட்டிலே இவ்வரிகள் காணப்படுகின்றன. பாரதப் போர்க்களத்தில் உதியலாதன் என்னும் சேர மன்னன் பாண்டவர், கௌரவர் ஆகிய இருபக்கத்துப் படைகளுக்கும் உணவளித்தான். இதனால் இவனுக்குப் பெருஞ்சோற்று உதியலாதன் என்ற பெயர் வழங்கிற்று. இராமன் சீதையுடன் காட்டுக்கு வந்தான்; சீதையை இராவணன் சிறை யெடுத்துச் சென்றான்; அப்பொழுது சீதை தனது ஆபரணங்களைக் கழற்றி எறிந்தாள்; அவைகளைக் குரங்குகள் கண்டு வியந்தன என்ற கதையை ஒரு புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. விரைந்து செல்லும் தேரையுடைய இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை, வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து போனான். அந்நாளில் அச் சீதையால் கழற்றி எறியப்பட்டு நிலத்திலே கிடந்து ஒளி வீசிய ஆபரணங்களைச் சிவந்த முகங்களையுடைய குரங்குகளின் பெரிய கூட்டங்கள் கண்டன. கடுந்தேறர் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலம் சேர் மதர் அணி கண்ட, குரங்கின் செம் முகப் பெருங் கிளை (பா. 378) இது இராமாயண வரலாற்றைக் குறிக்கும் பாடல். தமிழ் நாட்டிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமாயண -பாரத வரலாறுகள் பரவியிருந்தன என்பதற்கு இவைகளே சான்றாகும். வரலாறுகள் புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டு தமிழ்நாட்டு வள்ளல்களின் வரலாறுகளை வரையலாம்; ஔவை, கபிலர் போன்ற புவர்களின் வரலாறு களைப் புனையலாம். இவர்களுடைய வரலாறுகளை வரிசைப்படுத்தி வரைவதற் கான பாடல்கள் பல காணப்படுகின்றன. இப்பொழுது வழங்கும் கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் புறநானூற்றுப் பாடல்களின் ஆதரவைக் கொண்ட வைகள்தாம். குமணன் வரலாறு புறநானூற்றிலிருந்து பிறந்தது; நட்புக்கு நல்ல உதாரணமாகக் காட்டப்படும் பிசிராந்தையார்-கோப்பெருஞ் சோழன் வரலாற்றுக்கும் புறநானூற்றுப் பாடல்களே அடிப்படை. இன்று தமிழ்நாட்டிலே வழங்கிவரும் புலவர்கள் வரலாறு களிலே பெரும்பான்மையானவை கற்பனைகள் நிறைந்தவை; கர்ன பரம்பரைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டவை. ஔவையார் வரலாறு ஒன்றே இதற்குப் போதுமான உதாரணம். புறநானூற்றுப் பாடல்களை வைத்துக்கொண்டு உண்மையான ஔவையார் வரலாற்றை வரையமுடியும்; சங்ககால ஔவையாரின் சரித்திரத்தைத் தீட்டமுடியும். இதுபோல் இன்னும் பல புலவர்கள்-மன்னர்கள்-வீரர்கள்-வள்ளல்கள் வரலாறுகளையும் வரைய முடியும். தெய்வங்கள் பண்டைத் தமிழ்நாட்டு மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர். அவர்கள் வணங்கிய தெய்வங்களுக்குக் கோயில்களும் இருந்தன. பணியியர் அத்தை நின் குடையே முனிவர் முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே. (பா. 6) முனிவர்களால் வணங்கப்படும் சிவபெருமானது கோயிலை வலம் வரும் பொருட்டு உன்னுடைய குடை தாழ்க. அரசர்கள் கோயிலை வலமாகச் சுற்றி வரும்போது குடைபிடித்திருக்க மாட்டார்கள். ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றரும் கணிச்சி மணிமிடற் றோனும்; கடல் வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெம் நாஞ்சில் பனைக் கொடியோனும்; மண்ணுறு திருமணி புரையும் மேனி விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்; மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்; (பா. 56) காளையை வெற்றிக் கொடியாக உயர்த்தியவன்; தீயைப் போல் ஒளி வீசும் சடையையுடையவன்; மாற்றமுடியாத மழுப் படையையுடையவன்; நீலமணி போன்ற கழுத்தை யுடையவன்; சிவபெருமான். கடலிலே வளரும் வலம்புரிச் சங்குபோன்ற வெண்மையான மேனியன்; பகைவர்களைக் கொல்லும் கொடுமையான கலப்பைப் படையையுடையவன்; பனை எழுதிய கொடியையுடையவன்; பலராமன். கழுவப்பட்ட அழகிய நிலமேனி போன்ற மேனியன்; மேலே உயர்த்திய கருடக் கொடியை உடையவன்; வெற்றியிலே என்றும் விருப்பமுடையோன்; திருமால். மணி நிறமுள்ள மயிலைக் கொடியாக உயர்த்தியவன்; வீழாத வெற்றியையுடையவன்; பிணி முகம் என்னும் மயிலை வாகனமாக உடையவன்; ஒளி பொருந்திய செந்நிறமுள்ளவன்; முருகன். சிவன், திருமால், முருகன், பலராமன் என்னும் இந்நான்கு தெய்வங்களும் இச்செய்யுளில் காணப்படுகின்றன. இந்நான்கு தெய்வங்களும் தமிழகத்திலே சிறப்பாக வணங்கப்பட்டன. நம்பிக்கைகள் பலவகையான நம்பிக்கைகள் பண்டைத் தமிழர்களிடம் குடிகொண்டிருந்தன. அவைகளிற் சில கீழ்வருவன:- இம்மையிலே செய்த நன்மைக்கு மறுமையிலே பலன் கிடைக்கும். நன்மை செய்தவன் சுவர்க்கம் புகுந்து இன்பந்துய்ப்பான்; தீமை செய்தவன் நரகத்தையடைந்து துன்புறுவான். நல்ல நாட்கள், தீய நாட்கள் உண்டு.பறவைகள் பறப்பதைக் கண்டு நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது உண்டு. பார்ப்பார்க்குத் தானம் கொடுப்பதால் புண்ணியம் உண்டு; யாகம் செய்வதால் துறக்கம் பெறலாம். மக்களைத் தெய்வங்கள் பிடித்து ஆட்டும்; பேய் பிசாசுகள் உண்டு; ஆலமரங்களிலும், மலைகளிலும் தெய்வங்கள் வாழும். தென்புலத்தார் என்னும் பிதிரர்களுக்கான கடன்களைச் செய்யப் புத்திரப் பேறு வேண்டும்; புத்திரர்கள் செய்யும் சடங்குகளினால் பிதிரர்கள் நன்மை பெறுகின்றனர். எதிரிகளை விரட்டியடித்து நாட்டைப் பாதுகாப்பதற் காகப் பிள்ளைப் பேறு வேண்டும். இவை போன்ற பல நம்பிக்கைகள் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்தன. பழக்க வழக்கங்கள் பண்டைத் தமிழர்கள் கள்ளையும், புலாலையும் கடிந்து ஒதுக்கவில்லை; இவைகளைச் சிறந்த உணவாக ஏற்றுக் கொண்டனர். ஔவையார், கபிலர் போன்ற சிறந்த புலவர்க ளெல்லாம் மாமிசமும் மதுவும் உண்டு மகிழ்ந்தனர். பெண்களும் மதுவருந்தினர். அரசர்கள் பகை மன்னர்களிடமிருந்து பெறும் திறைப் பொருள்களைத் தம் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்; பரிசிலர்க்குக் கொடுத்துவிடுவார்கள். இதைப் போலவே பகைவர்களின் கோட்டைகளிலே கொள்ளையடித்த பண்டங்களையும் இரவலர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். போர்க் காலத்தில் பல கொடுமைகள் நடைபெறும்; பண்டங்களுக்குப் படுசேதம் உண்டாகும். எதிரியின் ஊர்களை எரியிட்டுக் கொளுத்துவார்கள். பயிர் செய்திருக்கும் வயல்களிலே குதிரைகளை ஓட்டிப் பாழ் பண்ணுவார்கள். கழனிகளிலே விளைந்திருக்கும் தானியங்களைக் கொள்ளையிடுவார்கள். விரோதிகளின் நாட்டையும் கோட்டை கொத்தளங்களையும் தரைமட்ட மாக்குவார்கள். அவ்விடங்களிலே கழுதை பூட்டிய ஏரால் உழுது வரகு, கொள் முதலியவற்றை விதைப்பார்கள். வெற்றிபெற்ற வேந்தர்கள் தோல்வியடைந்த மன்னர்களின் முடியினால் வீரகண்டாமணி செய்து கால்களிலே அணிந்து கொள்ளுவார்கள். பகையரசர்களுடைய பட்டத்து யானையின் நெற்றிப்பட்டயத்தை அழித்து, அந்தப் பொன்னால் தாமரை மலர்களைச் செய்வார்கள். அவைகளைத் தம்மைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குப் பரிசாகக் கொடுப்பார்கள். பெண்கள், மாண்ட கணவனுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் பழந்தமிழ்நாட்டில் உண்டு. தாமரைக் குளத்திலே நீராடப் புகுவதுபோல, கற்புடைப் பெண்கள் கணவனுடைய ஈமத்தீயிலே புகுந்து மடிவார்கள். கணவனையிழந்த பெண்கள் தலைமயிரைக் களைந்து விடுவார்கள். நகைகள் பூணமாட்டார்கள். எள்ளும் புளியும் சேர்த்துச் சமைத்த வேளைக் கீரையை உண்பார்கள். பாயின்றிக் கரடு முரடான நிலத்திலே படுப்பார்கள். கணவனையிழந்த கற்புடைப் பெண்டிர். தம் கணவர் மேலுலகத்தில் நன்மை பெறும்படி வேண்டிக் கொள்ளுவார்கள். அவர் பொருட்டு உணவை வைத்துப் படைப்பதற்காக முறம் அளவுள்ள சிறிய இடத்தைச் சாணத்தால் மெழுகுவார்கள். மெழுகிய இடத்தில் உணவை வைத்துப் படைப்பார்கள். குறவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டு மழைபெய்ய வேண்டிக் கொள்ளுவார்கள். அதனால் மழை பெய்யும். பெருமழை பெய்தால் அதை நிறுத்துவதற்கும் தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்குவார்கள்; மழையும் நின்றுவிடும். தமிழ்நாட்டிலே வேதம் பயின்ற அந்தணர்கள் இருந்தனர். அவர்கள் வேந்தர்களின் ஆதரவு பெற்று வேள்விகளைச் செய்து வந்தனர். தமிழ் மன்னர்கள் வேதங்களையும் வேள்விகளையும் அந்தணர்களையும் ஆதரித்து வந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்களிடம் உயர்ந்த குலம் - தாழ்ந்த குலம், உயர்ந்த குடி - தாழ்ந்த குடி என்ற வேற்றுமைகள் தோன்றிவிட்டன. நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன் என்பதனால் இதனை அறியலாம். இது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் குலங்களைக் குறித்தது. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை என்பதனால் நால்வகைக் குடிப்பிரிவுகள் இருந்தன என்பதைக் காணலாம். இவர்களைத் தவிர இன்னும் பல பிரிவினரும் தமிழ்நாட்டிலேயிருந்தனர். கல்வியினால் உயர்வு - தாழ்வுகள் ஒழிந்து போகும்; மக்களுக்குள் ஒற்றுமை உண்டாகும். ஆகையால் அனைவரும் எப்படியாவது-யாரிடமாவது கல்வி கற்கவேண்டும் என்று கூறி வந்தனர். தமிழ்ப் புலவர்களை மன்னர்களும் செல்வர்களும் மதித்து வந்தனர். அவர்களும் அரசர்களுக்கும், பொது மக்களுக்கும் அறிவுரை கூறி வந்தனர். மன்னர்கள் தவறு செய்யத் தொடங் கினால் தமிழ்ப் புலவர்கள் அதைத் தடுப்பார்கள்; அவர்களை நன்னெறியிலே நடக்கும்படி செய்வார்கள். தமிழ்ப் புலவர்கள் சிறந்த அரசியல் அறிவு படைத்தவர்களாக இருந்தனர். இவை போன்ற இன்னும் பல சிறந்த செய்திகளை இந்நூலிலே காணலாம். சங்க நூலாகிய எட்டுத் தொகையிலே இயம்பும் பல உண்மைகள் இந்நூலிலே எடுத்துக் காட்டப்பட்டன. அந்த நூல்களைப் படிப்போர் இன்னும் பல அரிய செய்திகளைக் காண்பர். பழந்தமிழர் பண்பாட்டை அறிவதற்கு இவ்வெட்டுத் தொகை நூல்கள் நமக்குப் பெரிதும் உதவி செய்கின்றன.