சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற் பாகம் கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 044-24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 1 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 528 = 536 படிகள் : 1000 விலை : உரு. 335/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்தர் வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்தர் வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற் பாகம் முன்னுரை 3 1. நமது தாய்நாடு 5 2. கோப்பெருஞ் சோழன் 8 3. வஞ்சகன் வஞ்சிக்கப் படுவான் 12 4. ஆசிரியர் அன்பு 16 5. பட்டினத்து அடிகள் 19 6. கிருட்டிண தேவராயர் 23 7. எறும்புகள் 26 8. சுவாமியாரின் கதை 30 9. இராமாநுஜர் 34 10. சிறு கதைகள் நான்கு 39 11. ஐவகை உலோகங்கள் 43 12. மெய்ப்பொருள் நாயனார் 48 13. தேகப் பயிற்சி 51 14. ஒட்டக்கூத்தர் 54 15. உண்மை உயர்வளிக்கும் 60 16. இயற்கைப் பொருள்களின் உதவி 64 17. தீயார் சொற் கேட்டல் தீது 67 18. உக்கிர குமார பாண்டியன் 72 19. நமது கடமை 76 20. உலகத் தோற்றம் 81 முதற் செய்யுட் பாடம் 84 முதற்செய்யுட் பாடக் குறிப்புரை 104 கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் முன்னுரை 113 1. கல்வி 115 2. மாமனாக வந்து வழக்குரைத்த வரலாறு 119 3. நினைப்பும் செய்கையும் 123 4. திருமழிசை யாழ்வார் 126 5. பருவக்காற்றும் பயனும் 131 6. அமர்நீதி நாயனார் 134 7. தமிழ்மொழி 138 8. கம்பரும் சோழனும் 142 9. தொழிற் கல்வி 145 10. பேகன் வள்ளல் 149 11. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை 153 12. பொய்யும் மெய்யாகும் 155 13. புத்தர் பெருமான் 157 14. மலைகள் 163 15. அனுமார் பிறப்பு 166 16. இளைப்பாறுதல் 170 17. ஆசை அல்லல் விளைக்கும் 174 18. ஜராசந்தன் 177 19. உண்மை கூறல் 181 20. பாபரும், விடாமுயற்சியும் 184 21. தயிரும் மோரும் 188 22. கண்ணன் உருக்மணியை மணத்தல் 191 23. ஆறுகளின் தோற்றமும் பயனும் 196 24. ஆதிமந்தியார் 200 25. மனங்குழம்பிய மாணவன் 202 இரண்டாம் செய்யுட்பாடம் 209 இரண்டாம் செய்யுட்பாடக் குறிப்புரை 235 கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் முன்னுரை 245 1. கடவுள் 247 2. மகேந்திரப் பல்லவன் 250 3. உயிருள்ள பொருள்களும், உயிரில்லாத பொருள்களும் 254 4. நக்கீரனார் 258 5. நகர வாழ்க்கை 262 6. ஆபுத்திரன் 266 7. பண்டைத் தமிழகமும், மக்களும் 269 8. அப்பூதியடிகள் நாயனார் வரலாறு 273 9. அறம் 277 10. ஆபுத்திரன் (பாகம் 2) 281 11. திருவள்ளுவர் 285 12. திருமங்கை யாழ்வார் 289 13. கடல் 295 14. ஆபுத்திரன் (பாகம் 3) 299 15. ஒற்றுமை வாழ்வு 303 16. வாலி வீடுபெற்ற வரலாறு முதற் பாகம் 307 17. நாட்டு வாழ்க்கை 312 18. கௌரி 315 19. தமிழ் மொழி 319 20. வாலி வீடுபெற்ற வரலாறு இரண்டாம் பாகம். 326 21. இயேசுநாதரின் வரலாறும் ஊழியமும் 332 மூன்றாம் செய்யுட் பாடம் 338 மூன்றாம் செய்யுட் பாடக் குறிப்புரை 364 தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் முன்னுரை 375 இன்ப நெறி 377 1. செல்வமும் நாடும் 379 2. ஆபிரகாம் லிங்கன் 388 3. முருகவேள் கண்ட காட்சி 394 4. முயற்சியின் முதன்மை 404 5. மனக்காட்சிகளும் இலக்ஷியங்களும் 410 6. கன்பூஷிய 415 7. நிலாப்பாடம் 421 8. உழவின் உயர்வு 430 9. தமிழ்ப்பெருமை 440 10. இந்திய நாட்டின் பெருங்கிழவர் 447 நான்காம் செய்யுட் பாடம் 456 நான்காம் செய்யுட்பாடக் குறிப்புரை 504 கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற் பாகம் (1929) முன்னுரை செந்தமிழ்ச் செல்வர்காள்! ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதற்கருவி தாய் மொழி வளர்ச்சியே என்பதை எல்லா அறிஞர்களும் அறிந்து அதற்காக முன்னின்று உழைத்தும் வருகின்றனர். தாய் மொழி வளர வேண்டுமாயின், அதன் மீது மக்கள் அனைவருக்கும் பற்றுண்டாதல் வேண்டும். அப்பற்றும் இளஞ்சிறார்கள் மாட்டுக் காணப்பெறுமாயின் அது பிற்காலத்தில் நாட்டுக்குப் பெரும் பயனளிக்கும் என்பது யாவரும் அறிந்ததொன்றாகும். இளஞ்சிறார்களுக்குத் தாய்மொழிப் பற்றுண்டாக வேண்டு மாயின், கல்வி பயிற்றும் கணக்காயர்களாலும், மாணவர்களுக் கமைக்கும் பாடச் சுவடிகளாலுமே யுண்டாதல் வேண்டும். மேற்கூறிய பயனை மாணவர்கள் பெற வேண்டுமென்னும் எண்ணத்தின் பேரிலேயே கதாவாசக பாடமும், செய்யுட் பாடமும் என்னும் பெயருடன் ஆறு, ஏழு, எட்டாவது வகுப்புக் களுக்குத் தக்கவாறு மூன்று சுவடிகளை எழுதியுள்ளேன். ஆதலால் இச்சுவடி களிலுள்ள பாடங்கள் பெரும்பாலும் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகளாகவும், மாணவர்கள் இன்றியமையாதனவாயறிந்து கொள்ளவேண்டிய நல்லறிவு புகட்டுங் கட்டுரைகளாகவுமே எழுதப்பட்டிருக்கின்றன. சிலர், பலவகையான செய்திகள் கலந்துவரவேண்டுமென்று கூறும் கொள்கைக்கிணங்க, நிலநூல், உடல் நல நூல். இயற்கைப் பொருள் நூல் இவைகளின் சார்பான பாடங்கள் சிலவும் ஒவ்வொரு புத்தகத்திலும் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இச்சுவடிகளுடன், ஒவ்வொரு வகுப்பிற்கும் தக்கவாறு இனிய, எளிய செய்யுட் பாடங்களும் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உயர்தர நடுத்தரக் கல்விச்சாலைத் தலைமையாசிரியர்களும், தமிழாசிரியர் களும், அரசியலாரும் இச்சுவடிகளை ஆதரித்துத் தங்கள் தங்கள் பள்ளிக் கூடங்களிற் பாடங்களாக அமைத்து இவைபோன்ற பணியில் எம்மை ஊக்குமாறு வேண்டு கின்றோம். இராஜாமடம், இங்ஙனம் தஞ்சைஜில்லா, 1.5.28 சாமி - சிதம்பரன் கல்வி இவ்வுலகத்திற் பலவகையான உயிர்ப் பிராணிகள் வாழ் கின்றன. அவற்றில் மனிதர்களாகிய நாம் மற்றைய உயிர்ப் பிராணிகளைவிட அறிவில் உயர்ந்து விளங்குகின்றோம். மிருகங் களைப் பாருங்கள்! அவைகள் பண்டை நாளிலிருந்து ஒரே வகையான வாழ்க்கையையே கொண்டிருக்கின்றன. பறவைகளும் அவ்வாறே இருக்கின்றன. நாமும் உலகத்திற் றோன்றிய காலத்தில் மிருகங்களைப் போலவே உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில்லாமலும், இருக்க இடமில்லாமலும், மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம். வரவர நமது அறிவு பெருகி இப்பொழுதுள்ள நிலைமையை அடைந்திருக்கின்றோம். முற்காலத்தில் எல்லா வேலைகளையும் மனிதர்களே உடலை வருத்திச் செய்து கொண்டு வந்தனர். இக்காலத்திலோ எல்லா வேலைகளையும் இயந்திரங்களைக் கொண்டே செய்கின்றோம், அதற்குக் காரணம் அறிவின் மிகுதியேயாகும். அறிவென்பது எல்லோரிடத்திலும் இருக்கின்றது. கடவுள் அனைவரையும் தமது பிள்ளைகளாகக்கொண்டிருக்கின்றார். ஆதலின் எல்லோருக்கும் ஒருவிதமாகவே அறிவைக் கொடுத் திருக்கின்றார். ஆயினும், சிலர் இவ்வுலகில் மிகுந்த அறிவுடை யவராக விளங்கிச் செய்தற்கரிய செயல்களை யெல்லாஞ் செய்கின்றனர். சிலரோ மிருகங்களைப் போல உண்ணுவதும் உறங்குவதுமாகவே இருக்கின்றனர். அதற்குக் காரணம் யாதெனில், தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளாமையேயாகும். ஒரு நிலத்திற் பயிர் செய்வோமாயின், காலந் தவறாது தண்ணீர் பாய்ச்சிக் களையெடுத்துக் காப்பாற்றினால் தான் அப்பயிர் ஓங்கி வளர்ந்து பலன் தரும். அதுபோல நமது அறிவை வளர்க்க வேண்டுமாயின் கல்வியென்னுந் தண்ணீரைப் பாய்ச்சி, அறியாமையாகிய களையைப் பிடுங்கி எறிதல் வேண்டும். அப்பொழுதுதான் நாமும் எல்லோராலும் கொண்டாடப் பெற்று உலகத்திற்கு நன்மை செய்யுந் தன்மையுடையவராவோம். கல்வியே அறிவை வளர்க்கும் கருவியாதலால் கல்வியை அனை வரும் அசட்டை செய்யாமற் கற்க வேண்டும். கற்றவர்களுக்குத்தான் உலகத்தில் நடைபெறும் செய்திகளெல்லாம் தெரியும். கல்லாதவர்கள் உலக நிகழ்ச்சிகளை அறிய முடியாத வராய்க் கிணற்றுத் தவளைபோல் வாழ்வார். இதனாற் பெரியோர் கற்றவர் கள்தான் கண்களையுடையவர் களென்றும்;கல்லாதவர்கள் கண்களை யுடைய வராயிருப்பினும் கண்ணில்லாதவர்களே யாவார்களென்றும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள். ஒருவன் தனது தலைமயிரைப் பலவாறு அழகுபெற வைத்துக் கொண்டிருந்தாலும், நல்ல விலையுயர்ந்த பட்டு நூலாடைகளையும், பருத்தி நூலாடைகளையும், உடுத்தியிருந் தாலும், காதிற் கடுக்கன், கழுத்தில் பொற்கலன், கைகளில் மோதிரம் முதலிய அணிகலன்களை அணிந்திருந்தாலும், அவை யெல்லாம் அழகுடையனவாகா. கல்வியைக் கற்றிருப்பானாயின் அதுவே சிறந்த ஆபரணமாகும். கல்வியைக் கற்றவனுக்கு மேற் கூறிய ஆபரணங்கள் வேண்டிய கட்டாயமில்லை. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் மாறாதது போற் கற்றவன் எங்கே இருப்பினும் எப்படி இருப்பினும் அவன் மதிப்புக் குறையாது. கடல் பெரிதாயிருப்பினும் அதன் நீரை மக்கள் ஒருவரும் பயன்படுத்திக் கொள்வதில்லை. கிணற்றிலுள்ள நீர் குறைவா யிருப்பினும் நல்ல நீராயிருக்குமாயின் அதனை யாவரும் விரும்பி உண்ணுகின்றனர். அதுபோல, உயர்ந்த குலமென்று சொல்லப் படும் குலத்திற் பிறந்தானாயினும் கல்லாதவனா யிருப்பின் அவனை ஒருவரும் விரும்ப மாட்டார்கள். தாழ்ந்தகுலத்திற் பிறந்தானாயினும் கல்வி கற்றிருப்பானாயின் அவனை யாவரும் போற்றுவர். பிறப்பினாலே உயர்வு தாழ்வில்லை. ஒழுக்கத் தினாலும் அறிவினாலுமே ஒருவனை உயர்ந்தவனென்றும் தாழ்ந்தவனென்றும் கூறுவர் ஆன்றோர். ஆதலாற் கல்வி கற்று ஒழுக்கமுடனிருப்பவனே உயர்ந்தவனாவான். அவன் குலமே உயர்ந்த குலமாகும். ஓரறையில் தூசு நிறைந்திருந்தால் கூட்டுக்கோலால் அவற்றைக் கூட்டவேண்டும். அப்பொழுதுதான் தூசுகள் போகும். ஒரு துணியில் அழுக்குப் பிடித்திருந்தால் அழுக்கு விட்டுத் தூய்மையாகும். அதுபோலக் கல்வியைக் கற்றால் தான் நமது அறியாமையைப் போக்கிக்கொள்ள முடியும். இருண்ட வீட்டிலுள்ள பொருள்களைக் காணவேண்டுமாயின் வெளிச்சங் கொண்டு பார்க்கவேண்டும். அப்பொழுது தான் எல்லா வற்றையும் பார்க்க முடியும். அதுபோல நமது நிலையை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் கல்வியாகிய விளக்கைக் கையில் ஏந்திக்கொள்ள வேண்டும். ஆண்பாலர் பெண்பாலர் அனைவரும் கல்வியைக்கற்றல் வேண்டும். முதலில் நாம் நமது தாய்மொழியையே பயிலுதல் வேண்டும். ஏனெனில் நாம் பிறந்தது முதல் பேசிக் கொண்டே வருகின்றோமாதலின் அதைக் கற்பது மிகவுமெளிதாகும். தாய் மொழியிற்போதுமான பயிற்சியடைந்த பின்னரே வேற்று மொழியையுங் கற்கவேண்டும். தாய் மொழியைப் படிக்காமல் பிறமொழிகளை மட்டும் படித்தல் தாயைப் பட்டினி போட்டு விட்டுத் தானதருமஞ் செய்வதை யொக்கும். நம்மால் எவ்வளவு மொழிகளைக் கற்க முடியுமோ அவ்வளவு மொழிகளையும் கற்கவேண்டும். ஒரு மொழியை மாத்திரம் படித்தவர்களைவிடப் பல மொழிகளைக்கற்றவர் சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள். ஆதலால் நாமும் நம்மால் இயன்ற வரையிலும் அன்னிய மொழிகளையும் விடாமற் பயில வேண்டும். நாம் நமக்குக் கல்வி பயிற்றும் ஆசிரியரிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய தாய் தந்தையர் நமக்குத் தேடிக்கொடுக்கும் செல்வம் நிலையற்றதாகும். ஆனால் ஆசிரியர் கொடுக்கும் கல்வியோ என்றென்றும் அழியாமல் நம்மிடத்தி லேயே நிலைத்திருக்கும். அத்தகைய நிலைத்த பொருளைக் கொடுக்கும் ஆசிரியரை நாம் போற்ற வேண்டாமா? நம்மை யாவரும் கற்றவரென்றும், அறிவுடையவரென்றும் கொண்டாடு வதற்குக் காரணமா யிருப்பவர் நமது ஆசிரியரேயாவர். ஆதலால் நாம் அவருக்கு என்றும் மறவா நன்றிசெலுத்தவேண்டும். ஆசிரியன் அன்பைப் பெற்றிருக்கும் மாணவன் மந்த புத்தியுடைய வனாயிருப்பினும், விரைவிற் கூரிய அறிவுடையவனாவான். ஆசிரியரின் வெறுப்பைப் பெற்றவன் கூரிய புத்தியுடையவனா யினும் விரைவில் மந்தபுத்தி உடையவனாவான். விரைவில் கல்வியில் தேர்ச்சிபெறவேண்டுமாயின், படித்த பாடங்களை மறவாமற் காப்பாற்றவேண்டும். தன்னுடன் படிக்கும் மாணாக்கர்களுடன் அடிக்கடி போய்த் தனக்குத் தெரியாதவனவற்றைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தெரியாதனவற்றைத் தான் அறிந்திருந்தால் அவர் களுக்குக் கூறவேண்டும். ஐயுற்ற பாடங்களை ஆசிரியரிடம் சென்று கேட்டுக் கொள்ளுதல் வேண்டும். ஆசிரியர் பாடஞ் சொல்லும்போது வேறு பொருள்களில் நினைவைச் செலுத்தாமல் பாடத்திலேயே கருத்தைப் பதிக்கவேண்டும். பாடம் முடிந்தபின் ஆசிரியர் கூறியவற்றை நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். படிக்கும்போது மனத்தை வேறு பொருள்களில் செலுத்தாமற் பாடத்திலேயே செலுத்திப் படிப்போமாயின் விரைவிற் படிக்கலாம். படித்ததும் மறக்காமல் நினைவிலிருக்கும். காலையில் எழுந்து படித்தல் வேண்டும். காலையிற் படிக்கும் படிப்பு எப்பொழுதும் நினைவிலிருக்கும். மேற்கூறிய முறைகளைக் கைக்கொண்டு படிப்போமாயின் விரைவில் நன்றாய்ப் படித்த வராவோம். கல்வியைக் கற்பதுமட்டில் போதாது. கற்றதன்படி நடக்க முயலவேண்டும். அதுதான் நல்லொழுக்கமாகும் தாய் தந்தையரிடம் பணிவுடன் நடந்துகொள்ளுதல், ஆசிரியரிடம் வணக்கமோடிருத்தல், தெய்வத்தை வணங்குதல், பெரியோர் களுக்குக் கீழ்ப்படிதல், பொய் கூறாமை, திருடாமை, கெட்ட பொருள்களைக் கைக்கொள்ளாமை முதலியனவே நல்லொழுக் கங்களாம். ஆகையால் நாமனைவருங்கல்வியிற் கருத்தூன்றி யவர்களாகவும் கற்றதன்படி நடப்பவர்களாகவுமிருக்க முயல வேண்டும். மாமனாக வந்து வழக்குரைத்த வரலாறு நான் மாடக்கூடல் வளநகரில் வணிக மக்கள் குடியிற் பிறந்து, நிறைந்த செல்வம் படைத்த தனபதி என்னும் பெயருடையவனொருவனிருந்தான். அருந்ததியை யொத்த கற்பும், இலக்குமியனைய, அழகுடைய சுசீலையென்பவள் அவனில்லாக் கிழத்தியாவாள். இவ்விருவரும் பல ஆண்டுகளாக மைந்தற்பேறின்றிக் கவல்கொண்டிருக்கும் நாளில், தனபதி தனது தங்கை மகனாகிய மருமகனை மகனாகக் கொண்டு, மகிழ்ச்சி யுடன் மனைவிகையிற் கொடுத்தான். அவளுந் தொழுது அம்மகனை ஏற்றுப் புனைவன புனைந்து போற்றிப் பொலிவுற அம்மகனை வளர்த்து வந்தாள். தனபதி மகப் பேறில்லாவதனாயினும் மனைவியின் மீது வைத்திருந்த ஆசைமயக்கால் தங்கையுடன் ஒவ்வொரு நாளுஞ் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். ஒரு நாள், அவன் தங்கை வெகுண்டு, பிள்ளைப்பேறில்லாத பாவியே! நீ யென்னருமை மகனாலன்றோ இம்மை மறுமைகளாகிய இருமை இன்பங் களையும் பெறப்போகின்றாய்! உனக்கேன் செருக்கு? என்று கூறினள். தளபதி பெரிதும் நாணமடைந்து, அடுத்த பிறவியிலாயினும் மக்கட் செல்வத்தைப் பெறக்கூடிய தவஞ் செய்வேன் என்று தனக்குள் எண்ணங்கொண்டு, தனது பெருஞ் செல்வங்களையெல்லாம் மருமகனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் மனைவியுடந் தவத்தை நாடிக் காட்டை அடைந்தான். பின்பு தனபதி வாராமலிருப்பதுகண்டு, அவன் தாயத்தார்கள், தனபதியின் விளைநிலம், அடிமை, பைம்பூண், வெறுக்கை, பசுக்கள் முதலிய செல்வங்களை யெல்லாம் வலிமையினாற் கவர்ந்துகொண்டனர். தனபதியின் தங்கை, மகனுடன் சிறகிழந்த பறவைபோல வருந்தித், துணைசெய்வார் யாருமில்லாமையாற் சொக்கலிங்கப் பெருமான் கோயிலை யடைந்தாள். அக் கோயிலிலுள்ள சுந்தரநாதன் பாதங்களை வணங்கி, யாருக்குந் தந்தையுந் தாயுமாக இருக்கின்ற தம்பிரானே! நீரே எங்கட்கும் தந்தையுந் தாயுமாக இருந்து காப்பாற்ற வேண்டுகிறேன். எனது மகனை, எனது முன்னோன், தனக்கு மைந்தனின்மையால் ஊராரறியுமாறு மகனாகக் கொண்டான். அவ்வுரிமையால் அவனுடைய நிலம், பொன், மலை முதலிய செல்வங்களை மருமகனுக்கே கொடுத்துவிட்டுக் காட்டை அடைந்தான். அச் செல்வங்களை இப்பொழுது அவனுடைய தாய மாக்கள் வலிந்து பிடுங்கிக்கொண்டனர். நானோ ஒருத்தியாக விருக்கிறேன். எனக்கு இவ் ஒரே மகன்தானுளன். இவனுமுலக அறிவுபெறாச் சிறுவன். வேறு துணையுமில்லேன். எல்லா விடங்களிலும் நிறைந்திருக்கும் ஓ இறைவனே! என் குறையைத் தீர்க்க மாட்டாயோ? என்று புலம்பிப் பூமியில் வீழ்ந்தாள். அவள் அப்படியே துயரத்தினாற் சிறிது தூங்கினாள். அப்பொழுதே சோமசுந்தரக்கடவுள் கனவிற்றோன்றி, அன்புடையாய்! நீ அஞ்சற்க, பொழுது விடிந்தபின், அரசனிடம் உன் வழக்கைக் கூறி அவனாணையின் படி, அப்பங்காளிகளனைவரையும் நீதி மன்றத்திற் கழைத்துவா. அப்பொழுது யாம் அங்குவந்து யாவரு மொப்புமாறு வழக்கை முடிவுசெய்து உன் துயரைப் போக்கு கின்றோம் என்று கூறி மறைந்தார். பின்னர் அம்மாதும் கடவுளைப் பணிந்து மைந்தனுடன் மனைக்குச் சென்றாள். மறுநாள் பொழுது புலர்ந்தபின் தனபதியின் தங்கை எழுந்து, நீராடிவிட்டுச் சுந்தரன் கோயிலை அடைந்து, அவரை வணங்கிவிட்டு, அரண்மனையடைந்து, அரசனிடந் தனது வழக்கைக் கூறி அரசனாணைப்படி தாயத்தாரிருக்கு மிட மடைந்து, அவர்களனைவருங் கேட்குமாறு என் மகனுக்குரிய பொருளை வலிதிற் கவர்ந்து கொண்டவர்களே! அரசசபைக்கு வந்து, வழக்குரைத்து, ஆன்றோர்கள் முடிவு செய்வதன்படி நடவுங்கள். அதற்குள் உங்கள் சமையல் வீடுகளில் நெருப்பு மூட்டாதீர்கள்! வேறிடங்களுக்குப் போக ஓரடிகூடவைக்காதீர்கள்! அரசன்மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன், என்றாள். உடனே அவர்களனை வரும் அவளை அடித்துத் துரத்தினார்கள். அவள் மீண்டும் அரசனை யடைந்து நடந்த செய்திகளைக்கூற, அரசன் பலகாவலர் களை அனுப்பி அவர்களை அழைத்து வருமாறு கூறினான். அவள் அக் காவலர்களுடன் வந்து அத்தாயத்தார்களை அழைத்துக் கொண்டு, மைந்தனுடனரசசபை அடைந்தாள். இதற்குள் சோமசுந்தரக்கடவுள் தனதுருவை மறைத்துத் தனபதியின் வடிவத்துடன் புறப்பட்டு, அரசவையைக் குறுகினார். சபையிலுள்ளா ரனைவருங் கேட்குமாறு, இவ்வூரில் அரசனில் லையோ? பெரியோர்களில்லையோ? அரசன் செங்கோல் கொடுங்கோலாயிற்றோ? நூல்களிற் கூறப்படுந் தெய்வமு மில்லையோ? உறுதியான தருமமு மொளித்ததோ? என்று கூறிக்கொண்டே அவைக்குட் புகுந்தார். அவர் வரவைக் கண்டதும் வஞ்சகமுள்ள தாயத்தார் களனைவரும் மனவலி யிழந்து, நமது பொய் வெளிப் பட்டுவிடுமே என்று அஞ்சி வருந்திக் கொண்டிருந்தனர். மாமனாகவந்த சிவபெருமான் மருமகனையுந் தங்கையையுந் தழுவிக்கொண்டு யாவருங்கேட்க வாய்விட்டழுதார். தங்கையும் மருமகனும் அவரடிகளில் வீழ்ந்தழுது வணங்க அவர்களைத் தமது கைகளாலெடுத்துக் கண்ணீரைத் துடைத்து மருகனைப் பார்த்து அழத் தொடங்கினார். ஐம்படையாபரணத்தை மார்பிற் காணேன்! சிறு சிலம்புகளை அடிகளிற் காணேன். மார்பில் மதாணிகாணேன். முகத்தின் மீதசையுஞ் சுட்டியைக் காணேன். ஒளிபொருந்தும் குழைகளைக்காணேன்! வெற்றுட லையோ காண்கின்றேன். அந்தோ! குழந்தையின் நகைகளைக் கூடவா இத்தாயத்தார்கள் கவர்ந்து கொள்ள வேண்டும்? என்று கூறிப் புலம்பியபின், தானே அவர்களுக்குத் தேறுதல் கூறவெண்ணி மருமகனையுந் தங்கையையும், பார்த்து, நீங்கள் வருந்தாதீர்கள்! நமது பொருள், நட்பினரிடம் வஞ்சகஞ் செய்து சேர்த்த தன்று. நம்பினோர் பொருளை நமதென்று கவர்ந்து கொண்டதன்று. சிறிதும் அறஞ்செய்யா தீட்டிய பொருளன்று. அளவுக்கு மீறிய வட்டி வாங்கிச் சேமித்த பொருளன்று நமது பொருள். தருமநெறியிற் றொகுத்ததாகும். ஆதலால் நம்பொருள் பிறரால் கவரப்படாதது. நம்மிடமே மீண்டு வந்து விடுவதைக் காண்பீர்கள் என்று கூறினார். பின்னர்த் தனபதி வடிவங்கொண்ட சிவபெருமான் மதுரை நாயகனை நோக்கித் தலைமேற் கைகூப்பித்தொழுது, வணிகருருவங் கொண்டு மாணிக்கம் விற்ற எங்குல தெய்வமே! எமது வழக்கைப் பெரியோர்களிடம் நேர்மையாகத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். என்று வணங்கி, அங்கிருந்த தாயத்தாரை நோக்கி, உங்கள் வழக்கைக் கூறுங்கள் பார்ப்போம் என்றார். அவர்கள் கூறினார்கள். அவையிலிருந்த முதியோர்கள் இருபாலார் வழக்கையுங் கேட்டுப் பொருள்களனைத்துந் தனபதியின் மருகனுக்கே உரியது என்று முடிவு கூறினர். அப்பொழுது தாயத்தார்களிற் சிலர், தனபதியாரைப் பார்த்து, இவர் அந்தத் தனபதியாரல்லர்; வேறொருவர் தனபதியார் போல வந்திருக்கின்றார். என்று கூறினர். அதற்குத் தனபதியார் கைபுடைத்துச் சிரித்து, ஒவ்வொரு வருடைய குடியின் பெயர், பட்டப்பெயர், அவர்களுக்கு உள்ள காணிகள், தந்தைபெயர், தாய் பெயர், மாமன் பெயர், மாமி பெயர், தாயத்தார் பெயர், அவர்களைப் பெற்றோர் பெயர், மைந்தர் பெயர், உடன் பிறந்தார் பெயர், மனைவியார் பெயர், சுற்றத்தார் பெயர், அவர்கள் குணங்கள், செய்கைகள் ஆகிய அனைத்தையு முறைதவறாமற் கூறினர். அதுகேட்ட ஆன்றோர்களனைவரும் இவர்தான் தனபதி என்பதிற் கையமில்லையென்று கூறித் தாயத்தார்களை நோக்கி, நீங்கள் கைப்பற்றிய செல்வங்களனைத் தையுங் கொடுத்துவிடுங்கள் என்று கட்டளையிட்டனர். தாயத்தார்களும் நாமின்னு மிங்கிருந்தால் அரச தண்டனை கிடைத்தாலுங் கிடைக்குமென்றஞ்சி, வீடுசென்று திரும்புகின்றே னென்றும், குளக்கரைக்குச் சென்று வருகின்றேனென்றுங் கூறியும் கூறாமலும் ஒவ்வொருவரா யகன்றனர். பின்னர்த் தனபதியார், தாயத்தாரிடமிருந்து பெற்ற செல்வங்களை யெல்லாம் மருகனுக்கென்று முறி எழுதி வைத்து விட்டு மறைந்தார். தனபதியார் திடீரென்று மறைந்தது கண்டு யாவரும் வியப்புற்றனர். அரசனும் மகிழ்ந்து சிவபெருமான் மாமனாக வந்து வழக்குரைக்கும் பேறு பெற்ற வணிகச் சிறுவனை வாழ்த்திச் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலையும் புதுப்பித்தான். நினைப்பும் செய்கையும் நாம் செய்து முடிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் முதற் காரணமாக இருப்பது நெஞ்சிலுண்டாகும் நினைப்பாகும். விதையின்றி முளையுண்டாகாதவாறு போல நினைவு தோன்றாமல் எச்செயலும் நிறைவேறாததாகும். நம்மைப் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனும் நினைப் பொன்றினா லேயே எல்லாவற்றையும் செய்கின்றானென்று நூல்கள் நுவல் கின்றன. அவன் எண்ணிய எண்ணத்தின் வழியே எல்லாம் நடை பெறுகின்றன. அக்கடவுள் எல்லாம் வல்ல பேரறிஞராகையால் செய்கையின்றி நினைவொன்றினால் எவற்றையும் ஆற்றுகின்றார். அவர் படைப்புக்குள் அடங்கிய நாம் சிற்றறிஞராகையால், அதாவது பிறர் அறிவிக்க அறியும் அறிவுடையராகையால் நினைப்பின்படி இடைவிடாது முயன்று செய்து முடிக்கும் நிலையிலிருக்கிறோம். நினைப்பின் வலிமை பெருகிவிட்டால் பின்னர் அதன்படி இயற்றுவது நமக்கு எளிதேயாகும். நாம் எப்பொழுதும் ஏதாவது நினைப்புடையவர் களாகத்தானிருக்கின்றோம். ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப, கோடியும் அல்ல பல. என்ற திருக்குறளுக்கு ஒவ்வொருவரும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றோம். இப்பொழுது ஒரு நினைப்பு, அடுத்த நேரத்தில் வேறு நினைப்பு. இங்ஙனம் நாம் நினைக்கும் நினைப்புக்களுக்கும், போடும் திட்டங்களுக்கும் அளவில்லை. இருந்தும் இத்தகைய நினைப்பு களால் யாதொரு பயனும் அடைவதில்லை இத்தகைய நினைப்பை நினைப்பென்று கூறவியலாது. நலம் பயக்கத்தக்க ஒரு செய்கையைச் செய்து முடிக்கவேண்டுமென்ற எண்ணமில்லா திருப்பது பெரும் பாவமாகும். தனக்கு அழிவுண்டாகாதிருக்க விரும்புகின்றவன் - ஏதேனும் ஒரு பெரிய நல்வினையை நிறை வேற்றவேண்டுமெனச் சிந்திப்பவனா யிருத்தல் வேண்டும். நான் எனது வாழ்நாளில் இந்நற்செயலைச் செய்து முடிப்பேன் என்னும் உறுதியான நினைப்பில்லாதவன் வாழ்க்கை இன்பங்களை அடைய முடியாதவனாவான். அவன் பலவழியாலும் துன்புறுவான். மனநோயையும் பெறுவான். உடற்பிணியையுமடைவான். அவனை அச்சமும், இரங்கலும் பிடித்துத் துன்புறுத்தும் . அச்சம், துன்பம், புலம்பல் இவைகள் யாரிடம் காணப்படுகின்றனவோ அவர்கள் பலமற்றவர்களென்றறி யலாம். அச்சமின்மை துன்பமின்மை, புலம்பலின்மை இவையே பலத்தின் அறிகுறியாகும். இவைகள் நெஞ்சாண்மையைத் தரக் கூடியன நெஞ்சாண்மை யற்றவன் எத்துணை வலிய உடலைப் பெற்றிருந்தானாயினும் அவ்உடற் பலம் பயனற்ற பலமேயாகும். நெஞ்சாண்மையற்ற ஒருவனுக்கு ஒருநாளும் எண்ணிய செயல் கைகூடி வருவதில்லை. எவற்றினும், தோல்வியும், ஏமாற்றமும் அவமானமுமே உண்டாகும். ஆகவே நினைப்பின் பயனை அடைவதற்கு நெஞ்சாண்மையே சிறந்த கருவியென்பதை ஒவ்வொருவரும் மறத்தலொண்ணாது. ஒருவன் தனக்கும், நாட்டிற்கும் நலம் தரக்கூடிய யாதானு மோர் நற்செயலைத் தன் எண்ணத்திற்கொள்ள வேண்டும். அவ்வண்ணம் மாறாத - பிறராலும் மாற்றமுடியாத - உறுதியான - எண்ணமாக வேண்டும். அதன் பின்னர் அதைச் செய்து முடிக்க முயலலாம். அம்முயற்சி நேர்மையான முயற்சியாக இருக்க வேண்டும். வேறுவழிகளிற் சென்று வீணாகத் துன்புறாமல், செயல் நிறைவேறக்கூடிய சீரிய நெறியிற் சென்று முயலுதலே நன்றாகும். தமது எண்ணங்களுக்கெல்லாம் தாம் செய்து முடிக்க வேண்டிய செயலையே உயிர் நிலையாகக் கொள்ள வேண்டும். எண்ணும் எண்ணங்கள் யாவும் நிறைவேற்ற உறுதிகொண்டி ருக்கும் செய்கையின் சார்புடையதா யிருத்தல் வேண்டும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவமென் பதிழுக்கு. என்பது தமிழ் மறையாகும். இச்செயலை நம்மாற் செய்யமுடியும். இச்செயல் நம்மால் முடிக்க இயலாதது என்பதைப் பற்றி முன்னரே தனக்குத்தானே எண்ணித் தீர்மானித்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு எண்ணித் துணிந்த எச்செயலும் பழுதாகாது. அச்செயல் தமது ஆற்றலுக்கு மிஞ்சியதாயினும் அதனைக் குறைவின்றிச் செய்து முடிப்பதில் தமது முழு முயற்சியையும் செலுத்துவதனால் எப்படியும் நிறைவேறுவது திண்ணம். நமது வாழ்நாளில் நமக்குப் பகையா யிருப்பன ஐயமும், அச்சமுமே யாகும். நாம் எண்ணும் பெருங் காரியங்களை யெல்லாஞ் செய்ய முடியாமற் றடுப்பன இவை களே. நமக்குத் துணை செய்வன தேற்றமும், ஆண்மையுமே யாகும். தேற்றத்தையும் ஆண்மையையுந் துணைக்கொண்டு எண்ணிய முயற்சியிற் புகுவோமாயின் நம்மெண்ணம் எளிதில் நிறைவேறும். ஆகையால் தேற்றம், ஆண்மை என்னும் இருவீரர் களையும் நாம் நமது கூட்டாளிகளாகக் கொண்டு, ஐயம், அச்சம் என்னும் நமது பெரும் பகைவர்களை அணுகவிடாது கொன்றழிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். உடல் வலிமையற்ற ஒருவன் உடல் வலிமை இல்லையே என்ற கவலையினால் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந் திருப்ப தையும், படுத்திருப்பதையுமே தொழிலாகக் கொண்டிருப் பானாயின் அவன் பலமடைந்து நிலத்தில் நிலவுவதெப்பொழுது? சிறிது சிறிதாகவேனும் உடற்பயிற்சி செய்தும் கொழுப்புள்ள உணவை உண்டும் உடல் வலிமையடைய வேண்டு மல்லவா? அதுபோல ஒருவன் தனக்கு ஆற்றல் போதாதென்று வாளாவிருந்தால் அவன் மக்கட் பிறவி எடுத்ததன் பயனை எங்ஙனமடைவான்? முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை, இன்மை புகுத்திவிடும் என்ற பொய்யாமொழியை மனத்திற் கொண்டு, ஒரு நற்செயலைப் பற்றி உறுதியாக வெண்ணியும் பின்னர் அதைச்செய்தும் முடிக்க இடைவிடாது முயலவேண்டும். வருந்தி அழைத்தால் வாராத தொன்றுமில்லை அல்லவா? நண்பர்களே! நாமும் இளமை முதற்கொண்டே இம் முறையைக் கையாளவேண்டும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். ஆகை யால் இப்பொழுது முதலே நாம் செய்யத் தொடங்கும் செயல் களை முயற்சியுடனும் ஆண்மையுடனும் செய்து முடிக்கப் பயிற்சி பெறவேண்டும். இப்பயிற்சி நாம் பெரியவர்களான பின்னரும் நமக்குப் பெருந்துணை புரியக்கூடும். நம்மனத்தி லெழும் பலப்பல எண்ணங்களுக்கும் இடங்கொடாமல் நன்மை தரத்தக்க எண்ணங்களுக்கே இடந் தந்து அவ்வெண்ணங்களைச் சோரவிடாது நிறைவேறும்படிச் செய்ய முயல்வோமாக. திருமழிசை யாழ்வார் திருமழிசை என்னும் நகரத்தில் பார்க்கவ ரென்னும் முனிவர் தீர்க்க சத்திரமென்னும் வேள்வி ஒன்றியற்றித் திருமாலை வணங்கினார். பின்னரும் அவரையே நோக்கி அந்நகரிலேயே அரியதவம் தோற்றுக்கொண்டிருந்தார். அதைக் கண்டு அழுக்காறுற்ற விண்ணவர்கள் அவர் தவத்தை அழிப்பதற்குப் பலவாறு முயன்று மியலவில்லை. இறுதியாகக் கனகாங்கி என்னும் அரம்பையமாது அவரைத் தன் வயப்படுத்தித் தவத்தை நிறுத்தினாள். அக்காலத்தில் அப்பார்க் கவமுனிவருக்கும் கனகாங்கிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அது, கால் கைகள் ஒன்றுமின்றிப் பிண்டவடிவ மாயிருந்தமையின் அதனை அடுத்திருந்த பிரப்பங்காட்டின் மையத்தில் எறிந்து விட்டுச் சென்றனர். அக்குழவி திருமாலின் ஆழிப்படையின் அமைப்பாதலால், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஜெகந்நாதப் பெருமாள் இலக்குமியுடன் அக்குழந்தை கிடக்கு மிடத்தையுற்று அதற்கு எல்லா உறுப்புக்களும் நிரம்பச் செய்து பசியின்றி யிருக்குமாறுந் திருவருள் புரிந்தகன்றார். அகன்றும் அக்குழந்தை திருமாலின் மீது பக்தி கொண்டு அவர் பிரிவுக்காற்றாமல் அழுது கொண்டிருந்தது. அவ்வமயம் பிரம்பறுக்கப் போந்த திருவாளன் என்னும் வேளாளனொருவன் அக்குழந்தையின் அழுகுரலைச் செவி மடுத்துக் குழந்தை கிடக்குமிடத்தை அடைந்தான். அழுது கொண்டு கிடக்கும் அழகிய குழந்தையைக் கண்டான். நெடு நாட்களாகப் பிள்ளையின்றி வருந்துந் தனக்குக் கடவுளே அப்பிள்ளையைக் கொடுத்திருக்கின்றா ரென்றெண்ணி மகிழ்ச்சி யடைந்தான். உடனே அக்குழந்தையைக் காதலுடன் கட்டி யணைத்தெடுத்துக்கொண்டு, தனதில்லம் புகுந்து, மனைவி கையிற் கொடுத்துக் குழந்தை கிடைத்த வரலாற்றையுங் கூறினான். அக்குழந்தையும் பாலின்றிச் சோறின்றிப் பருகு நீரின்றி மேலாக வளர்ந்து, வந்தது, அக்குழந்தையை யாவரும் திருமழிசை யாழ்வா ரென்றழைத்தனர். ஆழ்வாரின் புகழ் எங்கும் பரந்தது. அவ்வூரிலுள்ள மூப்பு மிக்க வேளாளரொருவர். ஆழ்வாரின் பெருமையைக் கேள்வியுற்றுத் தானும் தன் மனைவியும் அவரை வணங்க விரும்பி, ஆவின் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு, ஆழ்வாரையடைந்து வணங்கி, அப்பாலைப் பருகுமாறு வேண்டினார். ஆழ்வாரும் அம்முதியோரின் அன்பிற்கு மகிழ்ந்து அதனை அருந்தினார். இவ்வாறே ஒவ்வொரு நாளுந் தவறாமல் நிகழ்ந்தது. அந்நாளில் ஒருநாள் ஆழ்வார் அம்முதிய கணவன் மனைவிகளுக்குப் பிள்ளையில்லாக் குறையை உணர்ந்து, அதனை அகற்றத் திருவுளங்கொண்டு, தான் அருந்திய பாலின் மிகுதியைப் பருகுமாறு அவர்களுக் களித்தார். அதனைப் பருகவே அம்முதியவர்களிருவரும் கண்டோர் வியப்பத்தக்க இளம் பருவமுடையவராகக் காணப்பட்டனர். பின்னர் அவ் விருவர்களுக்கும் ஓராண்மகவு பிறந்தது. அம்மகவுக்குக் கணி கண்ணன் என்று பெயரிட்டு ஆழ்வார் திருமுன் கொண்டு வந்துவிடக் கணிகண்ணரும் ஆழ்வாரின் திருவருளினால் எல்லாக்கலைகளையு முணர்ந்து, திருமால் வணக்கத்திலும் ஒரு தலை சிறந்தவராக விளங்கினார். திருமழிசை யாழ்வார் ஒவ்வொரு மத நூல்களையும் ஆராய்ந்து அந்தந்த மதங்களிலுமிருந்துகொண்டு, அந்தந்த மதங்களிலும் நூல்களைச் செய்திருக்கிறார். சைவ மதத்திலுஞ் சிவவாக்கிய ரென்னும் பெயருடனிருந்து சிவ வாக்கியம் என்னும் நூலொன்றைச் செய்திருக்கின்றார். இறுதியாகப் பேயாழ் வாரிடம் உபதேசம் பெற்றுத் திருமழிசையில் சில்லாண்டுகளாக இருந்து வாழ்ந்திருந்தார். ஒருநாள் திருமழிசையில் ஆழ்வார் திருமாலைப் போற்றிக் கொண்டிருக்கும்போது, சுக்கிரகாரன் என்னுஞ் சித்தனொருவன் தனது வலிமையால் ஒரு புலியை ஊர்தியாக் கொண்டு விசும்பாறாகச் சென்று கொண்டிருந்தான். அவ்வூர்தி ஆழ்வா ருறையுளுக்கு நேராக வந்தவுடன் அவரது தவப்பெருமையால் மேற்செல்ல மாட்டாமல் தடைபட்டு நின்றது. அதுகண்ட சுக்கிரகாரன் கீழிறங்கி ஆழ்வாரைக் கண்ணுற்று, வியப்பெய்தி, அவரது நோன்பை ஆராய நினைத்தான். உடனே, ஒ முனிவரே! நீருடுத்திருக்குங் கந்தைத் துணியைக் களைந்தெறிந்துவிட்டு இப்பட்டாடையை அணிந்து கொள்ளும் என்று ஒரு அழகிய ஆடையை உண்டாக்கித் தந்தான். ஆழ்வார் அதனை ஏற்காமல் தமது நினைப்பின் வலிமையினாலேயே மாணிக்கமனைய கவசமொன்றைத் தோற்றுவித்தார். அதனைப் பார்த்து நாண மடைந்த சித்தன், தனது கழுத்திலிருந்த மணி மாலையைக் கழற்றி, இதனைத் தவமாலையாகக் கொள்ளுமென்று கூறிக் கொடுத் தான். ஆழ்வார் அதனையு மேற்காமல், தமது கழுத்திற்கிடந்த துளசிமணி மாலையையும், தாமரைமணி மாலையையும் நவரத்தினக் கோவைகளாக விளங்கக் காட்டினார். இச்செயல் களைக் கண்ட சித்தன், தங்களைவிடப் பெரியோர் உலகில் ஒருவருமிலர் என்று கூறி வணங்கிப் போனான். பின்னரும் ஆழ்வார் அவ்விடத்திலேயே யோகு செய்து கொண்டிருந்தார். அக்காலத்திற் கொங்கணச்சித்தன் என்னும் இரசவாதி ஒருவனிருந்தான். அவன் இரும்பு முதலிய உலோக வகைகளை உயரிய பொன்னாக்கவல்ல திறமை பெற்றவன். அவன் திருமழிசை யாழ்வாரின் கீர்த்தியையறிந்து அவரிட மணுகினான். இரும்பைப் பொன்னாக்கவல்லதோர் இரச உருண்டையை அவருக்குக்காட்டி, அதன் மாட்சியை மொழிந்து, இதனை நுமக்களிக்கின்றேன், பெற்று மகிழ்மின் என்றான். ஆழ்வார் அதனைப் பெறாமல், தமது ஆக்கையினின்றுந் திரட்டிய அழுக் குருண்டையை அவன்கையிற் கொடுத்து, இவ்வுருண்டை, கற்களையெல்லாம் பொன்னாக்குந் தகையது, இதனைக்கொண்டு நீ மேன்மையடைக என்று புகன்றார். கொங்கணச் சித்தனும் அதைப் பெற்று, அவர் கூறியது உண்மையாவென்பதை ஆராய்ந் தறிந்து உண்மையாகவே இருக்கக் கண்டு, அச்சமுற்று ஆழ்வாரை வணங்கி அவரருள் பெற்றுச் சென்றான். பிறகு திருமழிசை யாழ்வார் வேறோரிடஞ் சென்று, மலை முழையிற் சிலகாலந் தவமாற்றிய பின், முதலாழ்வார்களாகிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மூவருடனுங் கூடித் தலயாத்திரை செய்தார். கடைசியாகத் திருக்கச்சிப் பதியை அடைந்து, திருவெஃகாவி லுறைந்து, ஆண்டுள்ள திருமாலை வணங்கிக் கொண்டிருந்தார். இவர் திருக்கச்சி யிலிருப்பதை உணர்ந்த கணிகண்ணரும் ஆண்டடைந்து ஆழ்வாருக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தார். அந்நாளில் மிகவும் ஆண்டு முதிர்ந்த கிழவி யொருத்தி ஆழ்வாரிடம் அன்பு மலிந்து அவருள்ள விடத்தைத் தூய்மைசெய்யும் பணியை மேற் கொண்டிருந்தாள். அவள் ஒரு நாள் ஆழ்வாரின் திருவருளால் இளமை எய்தினாள். அந்நகரத்தை யாண்டு வந்த பல்லவ மன்னன் ஒருநாள் அம்மங்கையைக்கண்ணுற்று அவளை மணஞ்செய்து கொண்டான். அவளுடைய மங்கைப்பருவம் மாறாதிருப்பதையும், தனது இளமைப்பருவம் வரவரக்குறைந்து வருவதையுங் கண்டு, அவள் மங்கையான வரலாற்றை அறிந்து, தானுமவ்வாறாக வெண்ணிக் கணிகண்ணரின் வருகையை எதிர்நோக்கி இருந்தான். மறுநாள் கணிகண்ணர் வந்தபோது அவரை வணங்கித் தனதரண் மனைக்குத் திருமழிசை யாழ்வாரை யழைத்துவருமாறு வேண்டினான். அவர் ஆழ்வாரையழைத்து வர வியலாதென்று புகலத்தானே ஆழ்வாரை அடைந்து வணங்குவதாகவும், அது போது தனக்கு என்றும் மாறா விளமைப் பருவத்தை வாங்கித்தர வேண்டுமென்றும் வேண்டினான். அதற்குக் கணிகண்ணர் ஒருப்பட்டாரிலர். பின்னர் அரசன் செய்வகை அறியாமல் மனம் வாடியிருந்தான். அமைச்சர்கள் தமது மன்னனின் வாட்டத்தைக்கண்டு நடந்த செய்தியை உணர்ந்து, அரசே! கணிகண்ணர் உம் மீது ஒரு பாடல் பாடுவாராயின் நீர் இளமைப்பருவத்தைப் பெறுதல் கூடும். அவர் திருவருட்செல்வம் வாய்க்கப் பெற்றவர் என்று தேறுதல் கூறினார்கள். அரசன் மறுநாள் கணி கண்ணரைச் சந்தித்துத்தன் மீது பாடல்பாடித்தன்னை இளைஞனாக்குமாறு மன்றாடினான். அதற்குக் கணி கண்ணர், நான் எப்பொழுதும் எமது பெருமானைப் பாடுவேனேயன்றி மக்களைப் புகழ்ந்து பாடேன், என்று மறுத்தார். அரசன் அவர்மீது சினங்கொண்டு அவ்வாறாயின் நீர் எனதூரையே விட்டகலுதல் வேண்டும் என்று கூறினான். உடனே கணிகண்ணர், திருமழிசை யாழ்வாரை அடைந்து வணங்கி, அரசனுக்கும் தனக்கும் நடந்த நிகழ்ச்சிகளைப் புகன்று அந்நகரத்தை விட்டு நீங்குவதாகக் கூறினார். ஆழ்வார், அவ்வாறாயின் யானும் உன்பின் வருகின்றேன் என்று கூறி இறைவன் திருமுன்னர் அடைந்து, கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் - துணிவுடைய செந்நாப் புலவன்யான் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள். என்று வேண்டத் திருமாலுந் தனது பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் புறப்பட்டார். மூவரும் அந் நகரை விட்டகன்று அடுத்த ஊரிற் போய்த் தங்கினர். அப்போது, கச்சிநகரில் மற்றைய கோயில்களிலிருந்து திருமால்களும் நீங்கிப்போயினர். யாவரும் நீங்கவே சூரியனுந் தோன்றாமல் அந்நகரம் இருள் சூழ்ந்திருந்தது. அதனால் ஆங்கு வசித்து வந்த மக்களனைவருந் துன்புற்றனர். இதனையுணர்ந்த பல்லவன் மிகவுந் துன்புற்று அமைச்சருடன் கூடி, ஆழ்வாருறைவிடந்தேடி, அவரையடைந்து, தான் செய்த பிழையை மன்னித்து மீண்டும் நகரத்தை அடைந் தருளுமாறு வேண்டிக் கொண்டான். ஆழ்வாரும் மனமிரங்கித் திருமாலை முன்னிலையாக் கொண்டு, கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவன் யான் போக்கொழிந்தேன் - நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள். என்று முதற் பாடிய செய்யுளையே மாற்றிப் பாடினார். உடனே இறைவனு மெழுந்தருள, அனைவருங் கச்சிப்பதியை அடைந்து முன்போல வீற்றிருந்தனர். திருவெஃகாவில் முன்பு வலக்கையைக் கீழாக வைத்திருந்த திருமால், திருமழிசை யாழ்வார் பெருமையை விளக்குவதற்காக இடது திருக்கை கீழே கிடக்கப்படுத் தருளினார். பின்பு ஆழ்வார் பலதிருப்பதிகளைப் பணிந்து கொண்டு இறுதியில் கும்பகோணத்தை யடைந்து அங்குள்ள இறைவனை வணங்கிச் சிலநாளிருந்து, அந்நகரில் பரமபதமுற்றார். இவருக்குப் பக்திசாரர் என்ற மற்றொரு பெயரும் வழங்கும். இவர் பாடிய நூல்கள், திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியவை. இவையிரண்டும் நாலாயிரதிவ்யப் பிரபந்தத்திலிருக்கின்றன. இவரிருந்த காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று கூறுகின்றனர். பருவக்காற்றும் பயனும் ஒரு நாடு வளம் பெறுதற்கு முதற்காரணமாயிருப்பது தண்ணீராகும். அத்தண்ணீரை மழையொன்றினாலேயே பெறக் கூடும். மழையில்லாவிட்டால் எந்த நாட்டிலும் விளைவுப் பொருள் குன்றி மக்கள் அனைவரும் பசியினால் துன்புற நேரும். மழைபெய்வதற்குக்காரணமாயிருப்பது காற்றாகும். காற்றில்லாத இடம் ஒன்றுமில்லை. எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் போல் காற்றும் எந்த இடத்திலும் இருக்கின்றது. கல்லிலு மிருக்கின்றது. நீரிலு மிருக்கின்றது. நெருப்பிலுமிருக்கின்றது. மண்ணிலு மிருக்கின்றது. ஆனால் சில சமயங்களில் காற்று வீசாமலிருப்பதுபோலக் காணப்படுகின்றது. சில சமயங்களிற் காற்று விரைந்து வீசுவதைக் காண்கிறோம். இவற்றிற்குக் காரணம் சூரிய வெப்பமேயாகும். சூரிய வெப்பம் மிகுந்திருந்தாற் காற்றும் விரைந்து வீசும். குறைந்திருந்தாற் காற்று குறைந்து வீசும். சூரிய வெப்பத்தினாற் பூமி சூடேறுகிறது. பூமியின் சூட்டினால் அதன் மேலுள்ள காற்றுக் கனங் குறைந்து வானத்தின் மீது சென்று விடுகின்றது. அந்த இடத்தை நிரப்புவதற்குக் கடலின் மீதுள்ள காற்று நிலத்தின் மீது வீசுகின்றது. கடலின்மீதுள்ள காற்று வெப்பமுறுவதில்லை. ஏனெனிற் கடல் எப்போதும் குளிர்ந்திருப்பதால் காற்றும் குளிர்ந்திருக்கும். சில மாதங்களில் சூரியனைத் தென்றிசையிற் காணலாம்; சில மாதங்களில் வடதிசையிற் காணலாம். சூரியன் நேராகவும் காணப்படும். சூரியன் நேராகக் காணப்படும் காலத்தைத்தான் கோடைகாலமென்று கூறுவது. அக்காலங்களில் மழை பெய்வ தில்லை. வெப்பம் மிகுந்திருக்கும். அதற்குக் காரணம் யாதெனில் சூரியனுடைய சூடு நேராகப் பூமியிற் படுகிறது. அதனால் பூமியின் மீதுள்ள புற்பூண்டுகள் கருகிவிடுகின்றன. சித்திரை, வைகாசி (ஏப்பிரல், மே) மாதங்களில் இங்கும் அங்கும் சிறிது சிறிது மழை பெய்வதைக் காணலாம். அப்பொழுது சூரியன் வடக்குத் திசையில் தோன்றுவதே அதற்குக் காரணமாகும். இந்தியாவிற்கும், சைனாவிற்கும், இந்து சைனாவிற்கும் பருவக்காற்று நிலங்கள் என்று பெயர். இவற்றுள் இந்தியாவில் வீசும் பருவக்காற்றை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்றற்குத் தென்மேற்குக் காற்றென்றும், மற்றொன்றற்கு வடகிழக்குக் காற்றென்றும் பெயர். தென்மேற்குக் காற்று, ஆனி, ஆடி, ஆவணி (ஜுன், ஜூலை, ஆகட்) மாதங்களில் தென்மேற்குத் திக்கிலிருந்து வருகிறது. அக்காலத்தில் இந்தியாவில் பெரும்பாகமான இடங்களில் மழை பெய்கிறது. அதனால் தென்மேற்குக் காற்றை மழைக்காற் றென்றும், ஈரக்காற்றென்றும், மேகக் காற்றென்றுங் கூறுவதுண்டு. இக்காற்று இந்தியக்கடலினின்றும் வருவதால் அதில்நீராவி வடிவமான கரிய மேகங்களிருக்கின்றன. இதனால் இக்காற்று மலையுச்சியை அடைந்தவுடன் நீர்த்துளிகளாக மாறுதலடைந்து மழைபெய்கின்றது. தென்மேற்குக் காற்று வீசும்போது மேலைத் தீர வெளியிலும் கங்கைச் சமவெளியிலும் மிகுதியாக மழை பெய்யும். வடகிழக்குக் காற்று இந்தியாவின் வடதிசையிலிருந்து வீசுகிறது. இக்காற்று வடக்கிலுள்ள பூமியிலிருந்து வீசுவதால் வெப்பமுள்ளதாகவேயிருக்கும். இக்காற்று புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) மாதங் களில் வீசுகிறது. வடகிழக்குக் காற்று வீசும்போது கிழக்குத் தீரவெளியில் சென்னை மாகாணத்தில் மழை அதிகமாகப் பெய்கிறது. குளிரும் மிகுந்திருக்கிறது. அதற்குக் காரணம், சென்னை மாகாணத்திற்கு வரும் வடகிழக்குக் காற்று வங்காளக்குடாக்கடலின் வழியாக வருவதேயாகும். சூரியன் எவ்வளவு மிகுதியாக வடக்கே செல்லுகிறதோ அவ்வளவு மிகுதியாகத் தென்மேற்குக் காற்றும் விரைந்து வீசும். ஏனெனில் வடக்கில் நிலத்தின் மீதுள்ள காற்று வெப்பமடைந்து மேலெழும்பிச் செல்வதால் தென்மேற்குக் காற்று அவ்விடத்தை நிரப்புவதற்கு விரைந்தோடுகின்றது. இக்காற்று கடலிலிருந்து பூமியின்மீது வீசுவதால் இதனை முன்செல்லும் காற்றென்று கூறலாம். சூரியன் எத்துணை தூரம் அதிகமாகத் தென்றிசைக்குச் செல்லுகிறதோ அதற்கேற்ப வடகிழக்குக் காற்றும் தென்றிசைக்கு விரைந்து வீசும். இக்காற்று பெரும்பாலும் நிலத்திலிருந்து நீருக்குப் போவதால் இதனைப் பின் செல்லும் காற்றென்று கூறுவாரும் உண்டு. இந்தியாவின் தென்பகுதி குறுகலாகத் தெற்கு நோக்கி நீண்டிருப்பதால் தென்னிந்தியாவின் கிழக்கிலும், மேற்கிலும் கடல் சூழ்ந்திருக்கின்றது. தென்னிந்தியாவின் கீழ்த்திசைக் கடலுக்கு வங்காளக் சூடாக் கடலென்றும், மேற்றிசைக் கடலுக்கு அராபிக் கடலென்றும் பெயர். இந்தியப் பெருங் கடலிலிருந்து வீசும் தென்மேற்குப் பருவக்காற்று, இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒன்று அராபிக்கடல் வழியாக இந்தியாவின் மேற்பாகத்திலும், மற்றொன்று வங்காள வளைகடல் வழியாக இந்தியாவின் கீழ்ப்பாகத்திலும் வீசுகின்றது. அராபிக் கடல் வழியாகச் செல்லும் காற்று மிகுதியாகப் பம்பாய் மாகாணத்தில் வீசுவதால் அதற்குப் பம்பாய்க்காற் றென்றும் பெயர். இக்காற்றினால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கங்களிலும், விந்திய மலைப்பக்கங்களிலும், சாத்திபூரா, மலை, மத்திய மாகாணங்களிம் மழை பெய்கிறது. வங்காளக் கடல் வழியாகச் செல்லும் தென்மேற்குப் பருவக்காற்று வங்காளத்தில் மிகுதியாக வீசுவதால் அதனை வங்காளக் காற்றென்று கூறுவார்கள். இக்காற்றினால், யோமா மலையிலும், அதன் பக்கங்களிலும், காசிக் குன்றுகளிலும், அவற்றின் பக்கங்களிலும், மழையைக் கொடுக்கிறது. இக்காற்றில் ஒருபாகம் அஸாம் மாகாணத்திற்குச் சென்று அங்கும் மழை பெய்கிறது. இந்தியாவின் வடதிசையில் மிகவுயர்ந்த இமயமலை தடுத்துக்கொண்டு நிற்பதால் தென்மேற்குக் காற்று இந்தியாவிற்கு வடக்கே செல்ல முடியாமல் தடைபட்டுப் பீகார் மாகாணத்துக்கும், ஐக்கிய மாகாணங்களுக்கும் மழையைத் தருகின்றது. பனிவரையின் தென்பக்கங்களில் மிகுந்த மழை பொழிவதற்கும் இதுவே காரணமாகும். ஆகவே தென்மேற்குப் பருவக்காற்றினாலும், வடமேற்குப் பருவக் காற்றினாலும் இந்தியா பெரும் பயனை அடைகின்றது. இதனால் இந்தியாவில் மழை பெய்வதற்குக் காரணம் பருவக் காற்றென்பது நன்கு விளங்கும். அமர்நீதி நாயனார் நீர்வளம் நிலவளஞ் செறிந்த சோணாட்டிற் பழையாறை என்னுந் திருப்பதிற் செல்வப்பொருள் நிறைந்த வணிக குலத்தினர் பலர் வதிந்தனர். அக்குலத்தின் பெருமை விளங்க அமர்நீதியார் என்ற பெரியார் ஒருவர் தோன்றினார். அவர் பொன்னும் முத்தும் நன்மணிகளும் பூந்துகில் முதலா எல்லாச் செல்வங்களு மெய்தியிருந்தார். அவர் எப்பொழுதும் சிவபிரான் திருவடிகளையே வணங்கிக் கொண்டிருப்பார். அவரடியார் களுக்கு உணவளித்துக் கந்தைகீளுடை கோவணம் முதலியன கருத்தறிந்து உதவிச் செல்வம் பெற்றதின் பயனை அடைந்திருக்குஞ் சிறப்புடையவர். அவர் திருநல்லூரை யடைந்து சிவபிரான் திருவிழாவை விருப்புடன் வணங்கி அடியார்கள் அமுது செய்வதற்குத் திருமடஞ் சமைத்துச் சுற்றமுந் தாமும் வாழ்ந்திருந்தார். ஒவ்வொருநாளும் மடத்திற்கு வரும் அன்பர்களனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தபோழ்து, அவரது திருத்தொண்டின் பெருமையை விளக்கப் பரமசிவன் ஒரு நாள், தனது சிவந்த சடைகளை மறைத்து, முடிந்த சிகையும், நெற்றியில் வெண்ணீறும், மான்றோலமைந்த வெண்புரி நூலும், கையிற் பவித்திரமும், முஞ்சியும் கோவணமு மணிந்து பார்ப்பனப் பிரமசாரி வடிவுடன் புறப்பட்டார். கையிற் கொண்டிருந்த தண்டின்மீது இருகோவணங்களும், திருநீற்றுப் பையுந் தருப்பையுங்கொண்டு அழகுற நடந்து அமர்நீதி நாயனார் திருமடத்தைக் குறுகினார். அவரைக் கண்டவுடன் அமர்நீதி நாயனார் மனத்தினு முகமிக மலர்ந்து விரைந்தெதிர்சென்று வணங்கி நீவிர் இங்கு வருவதற்கு அடியேன் ஆற்றிய தவமென்னோ என்று கூறினர். அவ்வன்பரைக் கண்ணுதற்கரந்தோன் நோக்கி இங்குறும் அடியார்களுக் கன்புடன் உணவளித்து உடைகோவணங்களு மளிக்குஞ்செய்தி அறிந்து உம்மைக் காணவந்தோம் என்றார். நாயனாரும் வணங்கி உணவு கொண்டருளுமாறு வேண்ட, உடனே அப்பிரமசாரியும் உணவு கொள்ள இசைந்து நீராடக் காவிரிக்குப் புறப்பட்டார். புறப்பட்டவர், தன் கைத்தண்டிலிருந்த கோவணமொன்றை அவிழ்த்து, நாயனார் கையிற்கொடுத்து, மழை வந்து நனைத்துவிடுமாயின் வேறு கோவணமில்லை. ஆகையால் இதனை நீர் பத்திரமாக வைத்திருக்கவேண்டும். இது மிகுந்த பெருமையுள்ளதாகும். கெட்டுப் போனால் இதைப் போல் வேறு கிடைக்காது என்று கூறிச் சென்றார். நாயனார் அக்கோவணத்தைக்கைக்கொண்டு குளித்து விரைவி லெழுந்தருளுங்கள் என்று கூறி, அக்கோவணத்தை, அடியார்களுக் களிக்கும், கந்தை கீளுடை கோவணங்கள் வைத்திருக்குமிடத்தில் வைக்காமல் வேறொரு தனிஇடத்திற் சேமித்து வைத்தார். நீராடச் சென்ற சிவபிரான் நாயனாரிடங் கொடுத்த கோவணத்தை மறையுமாறு செய்து விட்டு மழை பொழியச் செய்து அதில் நனைந்துகொண்டு திருமடத்தை அடைந்தார். நாயனாரும் அதிக மேன்மையின் அறுசுவைத் திருவமுதாக்கி மறையோரை எதிர்சென்றிறைஞ்சினார். வேதியர் நீரில் நனைந்த ஈரத்தை மாற்றுதற்கு நான் முன் கொடுத்து வைத்த கோவணத்தைக் கொண்டு வாரும், கைத்தண்டின் மேலிருக்குங் கோவணம் மிகவும் ஈரமாக இருக்கின்றது என்று கூறினார். உடனே நாயனார் கோவணம் வைத்த இடத்திற்குச் சென்று அதனைத் தேட அகப்படாமை கண்டு நெஞ்சந்திகைத்தார். அடியார்களுக்காக வேறாக வைத்திருக்குங் கோவணங்களோடு கலந்துவிட்டதோ வென்று அவைகளிலும் தேடினார். எல்லா விடங்களிலும் தேடினார். அங்ஙனந் தேடியுங் கண்டிலர். ஒன்றுந் தோன்றாதவராக விடர்கூர்ந்தார். மனைவியாருஞ் சுற்றத்தாரும் மனம் வருந்தினர். பின்னர்க் கறைமிடற்றோ னணிவதற்கு மற்றொரு புதிய கோவணத்தைக் கைக்கொண்டு, அத்தர் முன்பு சென்று வணங்கி, அடிகாள்! நீர் தந்த கோவணத்தை வைத்தவிடத்தில் யான் கண்டிலேன். மற்றவர்களும் வேறிடத்தில் ஒளித்தார்களில்லை. நானும் ஒளித்திலேன். இத்தகைய அதிசயம் வேறெதுங் கண்டிலேன். ஆதலால் வேறு நல்லதோர் கோவணங் கொண்டுவந்தேன். இது துணியிற் கிழித்த கோவணமன்று. தனியாக நெய்தமைத்தது. ஈரக் கோவணத்தைக் களைந்துவிட்டு இதனை யேற்று எனது பிழையைப் பொறுக்க வேண்டுகிறேன் என்று வணங்கினார். அதுகேட்ட இறைவன் அமர்நீதியாரே மிகவும் நன்று நும் செய்கை! உம்மிடம் கோவணங் கொடுத்து ஒருநாள்கூடக் கழியவில்லை. நான் வைத்த கோவணத்தை நீர் கைக்கொண்டு அதற் கெதிராக வேறு கோவணங் கொடுக்கத் துணிந்தீர். நன்றாய் வாணிகஞ்செய்யவும் பயின்றிருக்கின்றீர் என்று வெகுண்டார். நாயனார் நடுநடுங்கி அவரடிகளில் வீழ்ந்து ஐயனே! தங்கள் பணியின் படி நடக்கக் காத்திருக்கின்றேன். வேறு நல்ல பட்டாடைகள் மணிகள் முதலியவற்றைக் கொண்டருள வேண்டு கின்றேன் என்று மன்றாடினார். அதற்கிறைவர் கோபந்தணிந் தவர் போல நடித்து, மணியும் பொன்னும் நமக்கெதற்காக வேண்டும்? எமது கோவணத்தின் நிறையுள்ள கோவணங் கொடுத்தாற் போதுமானதாகும், என்று கூறிக் கைத்தண்டி லிருந்த மற்றொரு கோவணத்தை எடுத்து, இதுவும் நீர் போக்கிய கோவணமும் ஒத்த தன்மையுடையன. இதனளவிற் கிசைந்த கோவணங்கொடுப்பீர் என்று கூறிக்கொடுத்தார். உடனே அமர்நீதி நாயனார் மகிழ்ச்சி மிக்கூர்ந்து அதனை ஒரு தட்டிலும், தன் கையில் வைத்திருந்த புதிய கோவணத்தை ஒரு தட்டிலுமிட்டார். இறைவன் கோவணமிருந்த தட்டுக்கீழும், புதிய கோவணமுள்ள தட்டு மேலும் நின்றன. அதுகண்டு தன்னிடமிருந்த கோவணங்களனைத்தையும் வைத்தார். அப் பொழுதும் மேலெழும்பிற்றிலது. நாயனார் மிகவும் வியப்புற்றுத் தம்பாலிருந்த துணிமூட்டைகள் பட்டாடைகளனைத்தையும் கொணர்ந்து வைத்தும் அவையெல்லா மிறைவன் கோவணத்திற் கெதிராகவில்லை. நாயனார் பிறைமுடியோனைப்பணிந்து மடத்திலிருந்த துணிகளையெல்லாமிட்டும் நுமது கோவணத் திற்குச் சரியான நிறையாகவில்லை. ஆகையால் எனது பொன்மணி முதலிய பொருள்களையு மிடுதற்கு விடைதரவேண்டும். என்று விரும்பினார். அதற்கும் இறைவ ரொருப்பட்டார். அப்பொழுதே தன்னிடமிருந்த பொன் வெள்ளி முதலிய எல்லா உலோகங் களாலான பொருள்களையுங் கொணர்ந்து துலையிலிட இறைவன் கோவணமிருந்த தட்டுச் சிறிதுமே லெழுந்து நின்றது. ஆயினும் இரண்டும் ஒத்துவரவில்லை. துலையிடுவதற்கு வேறு பொருளுமில்லை. கடைசியாகத் தாமும் மனைவியுஞ் சிறுவனுஞ் துலையிலேறத் துணிந்து கங்கை முடியோன் கழல் பணிந்து தமது விருப்பினை அறிவிக்க அதற்கும் சிவபெருமான் இசைந்தனர். பின்னர் நாயனார். இழைத்த வன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் எனிற் பெருந்துலை நேர் நிற்க என்று கூறித் திருநல்லூர் இறைவனை வணங்கி, அஞ்செழுத்து மறையை அன்புடனோதித் தானும் மனைவியுஞ் சிறுவனுந் தட்டி லேறினார். உடனே இருதட்டும் ஒத்துநின்றன. சிவபெருமான் திருவருளும், அமர்நீதி நாயனார் திருத்தொண்டும் ஒத்து நின்றமை கண்ட விண்ணோர் மலர் மாரி பெய்து மகிழ்ந்தனர். மண்ணோர் புகழ்ந்து வணங்கி வாழ்த்தினர். இதற்கிடையில் அங்கிருந்த பரமசிவப் பார்ப்பனப் பிரமசாரி மறைந்து விசும்பில் தானும் இடப்பாகத்தையலும் ஆனேற்றின் மீது தோன்றி, அமர்நீதியார்க்கும், அவர் மனைவியார்க்கும், மகனார்க்குங் காட்சி அளித்தார். அவர்கள் கயிலையம்பெருமான் திருவுருவைக் கண்டு துலையின் மீதிருந்தவாறே போற்றினர். அவர்களுக் கிறைவன் அழியா வான்பதங் கொடுத்து மறைந்தருளினார். சிவனடியார் திருத்தொண்டில் வழாது நின்று உறுதி யுடனாற்றிய இவ்வடியார் பெரும்புகழ் இன்றளவும் நிலைத்து நிற்பதாயிற்று. இவர் வரலாற்றைச் சேக்கிழார் நாயனார் இயற்றிய பெரிய புராணத்திற் பரக்கக் காணலாம். தமிழ்மொழி நாம்பேசும் மொழி தமிழ்மொழியாகும். தமிழ்மொழி பேசுவோரைத் தமிழர் என்று பிறமொழி புகல்வோர் அழைப் பார்கள். ஒவ்வொருநாடும், மேன்மையடைவதற்குக் காரணம் அவ்வந்நாட்டின் மொழிகளேயாகும். ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்துகொள்ளுதற்குக் கருவியா யிருப்பது மொழியேயாகும் ஆதலால் உயர்வடைய வேண்டும் என்று முயல்கின்ற எவரும் முதல்முதல் தங்கள் மொழியை வளப்படுத்த வேண்டும். இந்நாளில் ஆங்கிலேயர் செல்வத்திலும், அரசி யலிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்குதற்குக் காரணம் அவர்கள் தங்கள் ஆங்கில மொழியையாண்டும் பரப்பியதனால் தான் என்பதுதிண்ணம், நமது மொழியின் பெருமையை நாம் அறிந்து கொள்வோமாயின் அதனை உயரிய நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்னும் அவா நம்மைத் தூண்டா நிற்கும். ஆதலால் அதன் உயரிய தன்மையை இங்ஙனம் சிறிது கூறுவோம். நமது மொழி உலகந்தோன்றிய நாள்முதல் இருந்து வருகின்றதென்பது அறிஞர் சிலரின் எண்ணமாகும். இவ்வுலகில் எண்ணிறந்த மொழிகள் இருக்கின்றன. இன்னும் சிலமொழிகள் எழுத்துகளின்றி மக்கள் பேசும் அளவிலேயே உள்ளன. சில மொழிகள் நூலளவேயன்றி உலகவழக்கில் இல்லை. நமது தமிழ் மொழியோ நூலளவிலும், பேச்சளவிலும் குறையாமல் பலகோடி ஆண்டுகளாக நீடுநிற்கின்றது. நமது தமிழ்மொழியை நூல்களில் கன்னித் தமிழ் என்று கூறியிருக்கின்றனர். இக் கன்னித்தமிழ் என்னும் சொல்லே தமிழ்மொழி என்றும் ஒரு தன்மையுடன் நிலைத்துநிற்பது, என்னும் பொருளை விளக்குவது காண்க. சிலர் உலக வழக்கத்தில் இல்லாத சில மொழிகளைத் தெய்வ மொழியென்று கூறுவர். அவர்கள் எவ்வாறு கூறினும் சரியே. இக்காலத்தில்தான் தோன்றியதென்று ஒருவராலும் கூறவொண்ணாத நமது தமிழ்மொழி இன்றளவும் தனது இலக்கணத்தினின்றும் சிறிதும் வழுவாமல் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் நிலைத்து நிற்கும் உண்மையை அறிந்தோர் உலக வழக்கில் இல்லாத வேற்றுமொழியைத் தெய்வமொழி என்று கழற ஒருப்படுவரோ? நமது தமிழ்மொழி பிறமொழியின் உதவியின்றியே இயங்கவல்லது. மற்றைய மொழிகளுக்கு இவ்வாறியங்கும் ஆற்றல் இல்லை. நமது தமிழ்மொழி பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருக்கின்றது. அவற்றுள் முக்கியமானவை கன்னடமொழி, தெலுங்குமொழி, மலையாளமொழி, துளுவ மொழி முதலியவைகள். இதனை கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீறிளமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்பதனால் அறியலாம். நமதுமொழி கேட்பதற்கு மிகவும் இனிமையாயிருக்கும். உதாரணமாக, ஒரு ஆங்கிலேயனிடத்தில், நமது மொழிப் பாடல் ஒன்றையும், பிறமொழிப்பாடல் ஒன்றையும், கூறினால் அவன் நமது மொழிப்பாடலே இனிமையுடையதென்று கூறுவதைக்காணலாம். தமிழ் என்னும் சொல்லிற்கே இனிமை என்பது பொருளாகும். இதனைச் செந்திறத்தமிழோசை வட சொல்லாகி என்ற வாக்காலுமறியலாம். நமது மொழி இனிமை யாயிருப்பதற்குக் காரணம் இதில் கடினமாக உச்சரிக்கக்கூடிய எழுத்துக்கள் இல்லாமையேயாகும். எல்லா எழுத்துக்களும் இயற்கையாக உச்சரிக்கக் கூடியனவாகவே இருக்கின்றன. அதனால்நமது மொழியை இயற்கை மொழி என்றும் கூறுகின்றனர். நமதுமொழியில் ஐந்திலக்கணங்கள் உள்ளன. அவை எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்பன. மற்றைய மொழிகளில் ஐந்திலக்கணங்கள் இல்லை. தமிழில் உள்ள பொருளிலக்கணம் மிகவும் சிறந்ததாகும். இது அகப்பொருள், புறப்பொருள், என இருவகைப்படும். இவையே தமிழ் மொழியின் மாண்பிற்குச் சிறந்த கருவியாயிருக்கின்றது. அகப்பொருளால் தமிழர்களின் மணமுறை. கொழுநன் மனைவிகள் ஒழுகவேண்டிய முறை, இல்லறம் நடத்த வேண்டியமுறை, முதலியவற்றை அறிந்து கொள்ளவியலும், புறப்பொருளில் அரசர்களுக்குள் நடைபெறும் போர்முறைகளையும், அரசியல் முறைகளையும் அறிந்துகொள்ளலாம். உலகவாழ்க்கைக்குரிய செய்கைகள் அனைத்தையும் பொருளிலக்கணத்தால் நன்கு உணரலாம். தமிழ் மொழியில் அகத்தியரென்றும் தமிழ் முனிவரால் முதல் முதல் இலக்கணஞ் செய்யப்பெற்றது. அவர் செய்த நூலுக்கு அகத்தியம் என்றே பெயர். அந்நூலில், ஐந்திலக்கணங் களும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அந் நூலில்லை. அந்நூலின் நூற்பாக்கள் சிலவே, பழைய உரைகளில் காணப்படுகின்றன. அகத்தியர் காலத்தில் முதற் சங்கம் இருந்தது. அது தமிழ் மூவேந்தர்களில் ஒருவராகிய பாண்டிய மன்னர் களின் ஆதரவில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் பரமசிவன் என்று பழைய தமிழ் நூல்கள் கூறுகின்றன. அதில் அகத்தியர் முதலில் 4449 புலவர்களிருந்து தமிழாராய்ந்து பல நூல்களை வெளியிட்டனர். அகத்தியர் மாணாக்கர் பன்னிரு வராவர். அவர்களில் முதன்மையானவர் தொல்காப்பியர். அவர் தமது ஆசிரியர் அகத்தியரின் நூலைப் பின்பற்றி ஓரிலக்கணம் செய்திருக்கின்றார். அதற்குத் தொல்காப்பியமென்றுபெயர். அந்நூலிலும், ஐந்திலக்கணங்களும் கூறப்பட்டிருக்கின்றன. அந்நூலிலும், பொருளதிகாரத்தாலேயே நமது பண்டைய வழக்க ஒழுக்கங்களை அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. தொல்காப்பியர் காலத்தில் இடைச்சங்க மிருந்தது. இதற்கும் பரமசிவனே தலைவராக இருந்தனராம். பாண்டியனே இதனை யும் புரந்து வந்தான். இதில் அகத்தியர் தொல்காப்பியருள்ளிட்ட 449 புலவர்கள் இருந்து தமிழாராய்ந்து பல நூல்களை வெளி யிட்டனர். இந்த இருசங்கங்களும் கடலில் மூழ்கிய தமிழகத்தில் இருந்தனவென்று பழைய நூல்களாலும், உரைகளாலும் தெரிகின்றது. பிறகு மூன்றாஞ்சங்கம் இப்பொழுதுள்ள தென்மதுரையில் பாண்டிய மன்னர் சார்பில் நடைபெற்றது. அதில் 49 புலவர் களிருந்து தமிழாராய்ந்தனர். இப்பொழுது நமக்குக் கிடைக்கும் பழைய நூல்களிற் பெரும் பாலானவை மூன்றாஞ் சங்ககாலத்திற் றோன்றியன வேயாகும். அச்சங்கம் ஏறக்குறைய இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்ததென்று வரலாற்று ஆராய்சியாளர் கணக்கிட்டுக் கூறுகின்றனர். தமிழ்மொழியிற் பல மதங்களைப் பற்றியும் கூறும் நூல்க ளெல்லா மிருக்கின்றன. தமிழுக்கே உரிய சைவ சித்தாந்தக் கலைகளில் தலைசிறந்தனவாகிய, சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலிய நூல்களில் உள்ள நுணுக்கங்கள் எம்மொழி களிலும் காணப் பெறாததாகும். வேதாந்தக் கலைகள் பலவும், சைனமத நூல்கள் பலவும், புத்தமத நூல்கள் பலவும், வைணவமத நூல்கள் பலவும், சைவமத நூல்கள் பலவும், கிறித்துவமத நூல்கள் பலவும், முகம்மதியமத நூல்கள் பலவும் தமிழிலிருக்கின்றன. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, கம்பராமாயணம் முதலிய நூல்களில் உள்ள சொல்லமைதி பொருளமைதிகளை வேறு எந்த மொழிகளிலும் காணு தற்கியலாத தொன்றாகும். திருக்குறள் முதலிய நீதி நூல்கள் தமிழின் பெருமைக்குச் சிறந்த காரணமாக விருக்கின்றன. இத்தகைய சிறந்த மொழியினைத் தாய்மொழியாக உடைய நாம் செய்யவேண்டிய கடமை அம்மொழியை அன்புடன் கற்று மேன்மை யடைவதேயாகும். கம்பரும் சோழனும் ஒருநாள் மாலைப்பொழுதிற் கம்பருங் குலோத்துங்கச் சோழனும் ஒரு பூஞ்சோலையிலுலவிக் கொண்டிருந்தனர். அதுபோது தென்றற் காற்று மெதுவாக வீசிற்று. அச்சோலை யிலுள்ள குயில்கள் கூவின. கிளிகள் ஒன்றுக்கொன்று இனிமை யாக உரையாடிக்கொண்டிருந்தன. மயில்கள் மகிழ்ச்சியினாலாடிக் கொண்டிருந்தன. பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் கண்டு களித்து இருவரும் தத்தம் மனத்திற் பல செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது சோழன் தன் மனத்திலொருவித செருக் குற்றவனாகிக் கம்பரைப் பார்த்து, புலவரே இவ்வுலகமெல்லாம் என் கீழடங்கி யிருக்கிறதன்றோ வென்று கேட்டான். உடனே கம்பர் ஆம் உலகம் உமக்குள்ளடக்கம். நீர் எமக்குள்ளடக்கம் என்று அரசன் பெருநாணமடையும்படி விடையளித்தார். அரசன் ஒன்றும் எதிர்மொழி கூற வியலாதவனாகத் தலை குனிந்தவாறே தனதரண்மயை யுற்றான். அரண்மனையை யுற்ற அரசன் தனது படுக்கையறைக்குட்சென்று, ஒருவரிடமும் ஒன்றுங் கூறாமற் படுத்துக்கொண்டு, கம்பர் கூறிய மொழியையே எண்ணியெண்ணி, மனம்நைந்தான். அவன், கம்பரோ நாம் கொடுக்கும் பொருளைக் கொண்டு உயிர் வாழ்கின்றார். நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நாம் அவரை யாதரிப்ப தால் தான் எல்லோரு மவருக்குக் கீழ்ப்படிந்து வணக்கஞ் செய்கிறார்கள். நாமோ ஓரரசன். அவரொரு வறிஞர். இங்ஙன மிருந்தும் நமது மொழியைச் சிறிது மதிக்காமல், நம்மையுந் தனக்கு மேற்பட்டவனாக வெண்ணாமல் அடிமையென்று கூறினாரே. என்று பலவாறு சிந்தித்து வருந்திக்கொண்டிருந்தான். இரவுநேர மிகவாகியும் வேலைக்காரர் அரசனை வெளியிற் காணாமையால் உணவு கொள்ளும் பொருட்டு அவனைத் தேடிக் கடைசியிற் படுக்கையறையி லிருப்பதை யறிந்து அவன் மனைவிக்குத் தெரிவித்தனர். சோழன் மனைவி, அரசன் படுக்கை யறையையடைந்து உணவு கொள்ளும்பொருட்டு எழுப்பினாள். எவ்வளவு எழுப்பியு மெழுந்திருக்கவில்லை. பின்னர் அவனது காமக் கிழத்தியாகிய பொன்னியென்பவளையழைத்தெழுப்புமா றேவினாள். அவளுந் தன்னாலியன்றவரையிலு மெழுப்பினாள். அரசன் உரையாடவு மில்லை; எழுந்திருக்கவுமில்லை. பின்னர்ப் பொன்னி தனது திறமையா லெழுப்பி, மனத்துயரடைந்திருப்பதற்குக் காரண மென்னை யென வினவினாள். அரசனும் மாலையிற் பூஞ்சோலையில் நடந்த செய்தியைக் கூறினான். அதைக்கேட்ட பொன்னி, அரசனை நோக்கி அரசே! இதற்குத்தானா நீங்கள் இத்தகைய துயரமுறுதல் வேண்டும்? அக்கம்பரை நாளைக்கு எனக்கடிமை யாக்கிக்கொண்டு வருகிறேன். தங்களடிமையாகிய வெனக்குக் கம்பரை யடிமையாக்கி விடுவேனாயின் அவர் செருக்கடங்கி விடுமன்றோ! அவ்வாறு செய்வது முடியாத செயலன்று. தாசிபொன்னிக்குக் கம்ப னடிமை என்று அவரெழுதிய அடிமையோலையை உங்களிடந் தருகின்றேன். நீங்கள் சிறிதும் வருந்த வேண்டாம் என்று கூறி அரசன் துயரைத் தணித்து உணவுகொள்ளுமாறு செய்து விட்டுச் சென்றாள். அப்பொழுதே பொன்னி கம்பரில்லத்தை யடைந்தாள். அவளைக் கண்ட கம்பர். அரசன் மனைவியென்னு முறை பற்றி முகமன் கூறி, இவ்விருளில் என்னைத் தேடிவந்த காரண மென்ன?என்று கேட்டார். பொன்னி நான் தங்களிடம் ஒரு வரங் கேட்க வந்துளேன். மறுக்காம லளிப்பதாயிற் கூறுகின்றேன் என்றாள். கம்பரும் என்னாலளிக்கக் கூடியதாயின் எதுவாயினுமாறாமற்றருகின்றேன் கூறுக வென்றார். பொன்னி புலவர் பெருமானே நான் கேட்கும் வரம் பெரிய தொரு வரமன்று. தாசி பொன்னிக்குக் கம்பனடிமை யென்றெழுத் தால் வேண்டும். இதுவே நான் விரும்பும் வரமாகும் என்றாள். கம்பர், இது அரசன் சூழ்ச்சி யென்பதை யறிந்தாராயினுஞ் சிறிதுங் காலந்தாழ்க்காமல் அவ்வாறே யெழுதிக் கையொப்ப மிட்டுப் பொன்னியின் கையில் கொடுத்துவிட்டார். அவளும் அதைப்பெற்றுத் தன்னெண்ண முற்றுப் பெற்றமைக்கு மகிழ்ந்து, தனதில்லஞ் சென்று விடிந்தபின் அதைஅரசனிடங் கொடுத்து விட்டாள். மறுநாள் அரசவை கூடியபோது அமைச்சர்களும், பொதுமக்களும், கம்பரும் மற்றைய புலவர்களும் வீற்றிருந்தனர். அதுபோது அரசனும் என்றுமில்லாத முகப்பொலிவுடன் தன்தரியணைமீது அமர்ந்திருந்தான். கையில் ஓரோலைத் துண்டை யெடுத்துத் தானே படித்துத் தானே புன் சிரிப்புக் கொண்டான். அதனைப் பார்த்தனைவரும் அரசன் மகிழ்ச்சிக்குரிய செய்தியை யறிய விரும்பினர். அதனை, யரசனை யடுத்திருந்த முதலமைச்சனெழுந்து அரசனுக்கறிவித்தான். உடனே யரசன் கம்பரை யழைத்து அவ்வோலையை யவரிடங் கொடுத்துப் படிக்குமாறு வேண்டினான். அவரும் உரத்த குரலில் தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை, இங்ஙனம் கம்பர், என்றெழுதி யிருந்ததைப் படித்தார். அதைக் கேட்டு அரசன் முதலிய அனைவருங்கைபுடைத்துக் கல்லென்று நகைத்தனர். கம்பர் சபையை நோக்கி, சபையோர்களே! நீங்கள் எதற்காக இதைக்கேட்டவுடன் நகைக்கவேண்டும்! நீங்கள் நகைத்தது உங்கள் அறிவின்மையைக் காட்டுகின்றதேயன்றி வேறொன்றையுங் காட்டவில்லை. இதன் உண்மைப் பொருளை யறிந்தீர்களானால் நீங்கள் நகைக்கமாட்டீர்கள். நமது அரசர் பெருமானும் நகைக்கமாட்டார். இதன் பொருளைக் கூறுகின்றேன் கேளுங்கள். தா - தாயாகிய, சி - ஸ்ரீ பொன்னிக்கு - இலக்குமி தேவிக்கு, கம்பன் அடிமை - கம்பனடிமை பூண்டவன். என்பதாகும். தாய் என்பது தாவெனக் கடைகுறைந்து நின்றது. உலகத்தையீன்ற எம்மன்னையாகிய இலக்குமி தேவிக்கு அடிமை யாயிருப்பதில் என்ன தாழ்விருக்கின்றது? என்று கூறினார். இதைக்கேட்ட அவையோ ரனைவரும் வெட்கித் தலை குனிந்தனர். அரசனுடைய மகிழ்ச்சியுஞ் செருக்கு மிருந்தவிடந் தெரியாம லோடின. உடனே அரசன் சினமுற்று, போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில் தூற்றினுந் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள் கூற்றினும் பாவலர் கொடிய ராவரே என்று கூறினான். கம்பரும் அரசன் குறிப்பையறிந்து மேலொன்றுங் கூறாமலிருந்துவிட்டார். தொழிற் கல்வி கல்வியை இம்மைக் கல்வி மறுமைக்கல்வி யென இருவகை யாகப் பிரிக்கலாம். இவற்றுள் மறுமைக்கல்வி இம்மைக்கும் பயன்படுவதாகும். மறுமையினு மின்பம் பயப்பதாகும். அது, அறிவு வளரவேண்டிய பல நூல்களையுங் கற்று நல்லன இவை, தீயன இவையெனப் பகுத்துணர்ந்து தீயனவற்றை யொழித்து நல்லனவற்றைக் கைக்கொண்டு நடப்பதாகும். இத்தகைய நூற் கல்வி மக்களாய்ப் பிறந்த அனைவருக்கு மின்றியமையாது வேண்டப்படுவதாகும். இம்மைக் கல்வியென்பது, இவ்வுலகிற் பலருடனும் உண்டு. உறவாடிக் களித்து வாழ்தற்குரிய பொருளைத் தேடுந் தொழிற்கல்வியாகும். இந்நாளில் தொழிற்கல்வி யொன்றும் பயிலாதவர் களுந் தொழில்செய்து பொருளீட்டி உயிர் வாழ்கின்றனரே; ஆதலால் தொழிற்கல்வி அவ்வளவு இன்றியமையாததாவென்று கேட்கலாம். அதற்குக் கூறும் விடையாவது மக்கள் ஒவ்வொரு வரும் தன் மதிப்பிற்குக் குறைவின்றி வாழக் கடமைப் பட்டிருக்கின்றனர். மானங்கெடவரின் வாழாமை முன்னினிதே என்று ஒரு புலவர் கூறியவாறு மானத்திற்கு அழிவின்றி வாழ்தல் வேண்டும். அதுதான் சீரிய வாழ்க்கையாகும். தொழிலின்றிப் பிறர் ஏவும் பணிகளைக் கேட்டு வாழும் வாழ்க்கை அடிமை வாழ்க்கையாகும். தம்மையாள்வோர் ஒவ்வோரமயங்களிற் கூறுங் கடுஞ்சொற்களையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். வயிறு வளர்க்கவேண்டி மானமென்பதை அறவே விட்டொழிக்க வேண்டும். ஏதேனுமொரு தொழிலைப்ப யின்றிருப் போமாயின் பிறரை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நாமே உரிமையுடன் தொழில் புரிந்து உயிர் வாழலாம். ஆகவே தொழிலின்றி வெறுங்கல்வி பயின்று அடிமை வேலைசெய்து உயிர்வாழும் வாழ்க்கை சிறந்த தன்றென்பதை ஒவ்வொருவரும் மனத்திற் பதிக்க வேண்டும். நமது நாட்டிற் பண்டைக்காலந்தொட்டு யாவராலும் பெருமையாகப் போற்றப்பட்டும் ஆற்றப்பட்டும் வந்த தொழில் உழவுத் தொழிலாகும். தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது என்பது நமது முன்னோரின் கொள்கை. ஓதுவா ரெல்லாம் உழுவார் தலைக்கடையில் என்பது நீண்டநாளைய பழமொழி. இத்தொழில் சுருங்கினால் நாட்டில் எல்லாச் சிறப்புஞ் சுருங்கிவிடும். அன்னமொடுங்கினால் ஐம்புலனொடுங்கு மன்றோ? உணவின்றி என்னதான் செய்ய வியலும்? மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி இவையனைத்தும் பசி வந்திடப் பறந்துபோமன்றோ? பசிநோயை யொழிப்பதற்கு உழவுத்தொழிலே சிறந்ததாகும். இக்காலத்தில் இந்தியராகிய நாம் வறிஞராய்த் துன்புறுதற்குக் காரணம் உழவுத்தொழிலிற் கருத்தைச் செலுத்தா திருப்பதேயாகும். ஆதலால் இனியேனும் உழவுத்தொழிலை வளர்ப்பதற்குப் பாடுபடவேண்டும். உத்தமமான அத்தொழிலைச் செய்வதற்குக் கற்றவர்கள் முற்படவேண்டும். அப்பொழுதுதான் நம்நாடு செல்வவளத்திற் சிறந்துதிகழும். உழவுத்தொழிலுக்கு அடுத்ததாக வைத்தெண்ணத்தகுஞ் சிறந்த தூயதொழில் நெசவுத் தொழிலாகும். உழவுத் தொழிலால் உயிர் வாழ்வதற்குரிய உணவுப்பொருளைப் பெற்று உண்டு உடலை வளர்க்கிறோம். அவ்வுடலை மானமுடன் வளர்ப்பதற்கு ஆடை இன்றியமையாததாகும். ஆண்பாலோ ராயினும், பெண்பாலோ ராயினும் ஆடையின்றி வாழ வெண்ணுமோ? ஆடையில்லாதிருப்போமாயின் நமக்கும் விலங்கினங்களுக்கும் வேறு பாடென்ன? மக்களின் நாகரிகத்தைக் காட்டுங் கருவிகளில் தலைசிறந்தது ஆடையொன்றே என்பதை எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் யார் தான் மறுப்பார்? நம்நாட்டில் இத்தொழிலை எளிதாகச் செய்தல் கூடும். ஏனெனில் நாம் பருத்திக்கு அயல் நாட்டினரை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நம் நாட்டிலேயே ஏராளமான பருத்தி விளைகின்றது. விளைந்தும் நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அயல் நாட்டினருக்கே குறைந்த விலைக்கு விற்று விடுகின்றோம். அயல் நாட்டினர், நமது நாட்டுப் பருத்தியைப் பல்லாயிரங் கல்லுகளுக் கப்பாற் கொண்டு போய், நூலாக்கி ஆடையாக நெய்து நம்மிடமே கொண்டு வந்து மிகுந்த விலைக்கு விற்கின்றனர். நாமும் அவ்வழியில் நமது பொருளை அயல் நாட்டினருக்குக் கொடுத்து வறிஞராகின்றோம். இது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழுவார் செயலையும், வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கழுவார் செயலையும் ஒத்திருக் கின்றதன்றோ? நமது முன்னோர்கள் அத்தொழிலை மிகவும் போற்றி வளர்த்தனர். ஒவ்வொருவீட்டுப் பெண்மக்களும் பண்டை நாளில் ஓய்வு நேரங்களில் நூல் நூற்றுக்கொண்டிருந்தனர். இத்தொழில் எல்லாவிடத்திலும் ஒவ்வொரு வீட்டுத் தொழிலாகவும் நடந்து வந்தது. நமது காலத்திலோ நூற்குந் தொழிலும் நெய்யுந் தொழிலும் நாளுக்கு நாள் அழிவெய்துவதாயிற்று. நமது தெய்வப் புலவராகிய திருவள்ளுவரே நெசவுத்தொழில் புரிந்தாரென்றால் அத்தொழிலின் பெருமையையும் தூய்மையையும் என்னென்று புகல்வது? இனிமேலாயினும் நம் நாட்டினர் நெசவுத் தொழிலிற் பெருநோக்கங்கொண்டு அதனைப் போற்றவும், போற்றும் படி வற்புறுத்தவும் முற்பட வேண்டும். இனி மூன்றாவதாகக் கருதவேண்டிய தொழில் வாணிப மாகும். வாணிப வளர்ச்சியுள்ள நாடே எந்த நாட்டினுஞ் சிறந்த செல்வமுடையதாக இருக்கும். ஆங்கிலேய அரசாங்கம் மேன்மை யடைந்தற்கு வாணிபமேபொருட்டாகும். வாணிபத்தின் திறல் கொண்டே பல நாடுகளையும் ஆங்கிலேயர்கள் தமதாட்சித் குட்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் முதலியநாடுகள் சிறப்பெய்தி யிருப்பதற்குக் காரணம் வாணிபமேயாகும். அந்நாட்டினர்கள் கப்பல் வாணிபத்திற்சிறந்து விளங்குகின்றார்கள். `திரைகடலோடியுந் திரவியந்தேடு என்ற முதுமொழியை செலுத்தாமலிருக் கின்றோம். மேனாடுகளனைத்தும் அநாகரிக நிலையிலிருந்த காலத்தில் நாம் நாகரிகமுடையவர்களாயிருந்திருக்கின்றோம். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கும், கிரேக்கர் நாட்டிற்கும் கடல் வழியாக வாணிபம் நடந்திருப்பதாக நமது பழைய நூல்களிலிருந்து விளங்குகின்றது. கைத்தொழில்கள் பலவும் நமது நாட்டிற் பெருகியிருந்தன. ஆகையாற்றான் அக்காலத்தில் நாம் சிறந்திருந்தோம். இனிமேலாயினும் வாணிபத்துறையி லீடுபட்டுழைக்க முற்படுவோமாக. பற்றும் நமது நாட்டுத் தொழில்களாகிய தச்சுவேலை, கொல்லுவேலை, தட்டாரவேலை; கன்னாரவேலை முதலியவை களிலுங் கவனஞ் செலுத்தவேண்டும். புதிய கைத்தொழில் களாகிய, தீக்குச்சி செய்தல், காகிதஞ் செய்தல், சவுக்காரஞ் செய்தல், கண்ணாடி செய்தல், எழுதுகோல் செய்தல், வாசனைப் பொருள்கள் செய்தல் போன்ற தொழில்களை யெல்லாம் நாம் மேலும் வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் வறுமையிலிருந்து விலகி நம் நாடு முன்னேற்ற மடையும். இக்காலத்திற் கல்வி கற்பவர்களனைவருந் தொழில் செய்வதிற் கருத்தில்லாதவர்களாக அடிமை வேலைக்கென்றே கல்வி கற்பதனாற்றான் தொழில்கள் வளர்ச்சியடையவில்லை. பெரும்பாலும் கல்லாதவர்களே கைத்தொழில் செய்து உயிர் வாழ்கின்றனர். அதனால் கைத்தொழில்களுக்கு நமது நாட்டிற் பெருமதிப்பு மில்லை. கற்றவர்கள் இத்துறைகளிலிறங்குவார் களாயின் அத்தொழில்களுக்குப் பெருமதிப்பும் வளர்ச்சியும் உண்டாவது திண்ணம். ஆகையால் நாமனைவரும் தொழிற் கல்வியிற் கருத்தூன்றிக் கற்று, நமது நாட்டின் முன்னேற்றத்திற் குழைக்க முயல்வோமாக. பேகன் வள்ளல் எவர் எப்பொருளை வேண்டினும் இல்லை யென்னா மலளிக்கும் இயல்புடையோர்க்கு வள்ளல் என்று பெயர். இத்தகைய வள்ளல்களால் நாடு அடைந்த நன்மைகள் அளவற்றன. வள்ளல்களாலேயே ஒவ்வொரு நாடுகளும் சீரும் சிறப்புமெய்தி நீடுவாழும் நிலையை யடையும். இத்தகைய வள்ளல்கள் எந்தக் குடியிலும் தோன்றுவார்கள். அரசர் குடியிற்பிறந்த வள்ளல்கள் பலர். குறுநில மன்னர் குடியிற் பிறந்த வள்ளல்கள் பலர். மற்றைய செல்வக் குடியிற் பிறந்த வள்ளல்கள் பலர். இவர்கள் தம்மை யடைந்த வறியோர்க்கு வேண்டுவன அளித்து, அவர்கள் வறுமைப்பிணியைப் போக்குவதோ டன்றி, நாட்டின் கலைவளர்ச்சியிலும் கருத்துடையவர்களா யிருந்திருக் கின்றார்கள். நாட்டில் உள்ள புலவர்களையும், அவர்களியற்றும் நூல்களையும் போற்றுவாராயின். அதனாலேயே இக்காலத்தில் நாம் நமது தாய்ப்பாஷையாகிய பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பெற்று, அவற்றின் இன்சுவைப் பொருளைக் கற்று மகிழ்கின்றோம். இத்தகைய வள்ளல்கள் நம் நாட்டில் எண்ணிறந்தோர் இருந்தனராயினும் அவர்களில் தற்காலத்தில் சிறப்புடையவர் களாக - நூல்கள் வழியாக - அறியப்படுவோர் எழுவராவர். இவ்வெழுவரைக் கடையெழுவள்ளல் என்று கூறுவார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் கடைசிக் காலத்திலிருந்த வள்ளல்கள் என்று கூறப்படுவதனாலேயே இவர்கட்கு முன்னரும் பல வள்ளல்கள் நந்தமிழ் நாட்டில் வாழ்ந்தனரென்பதை யறியலாம். கடை யெழுவள்ளல்கள், பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்போராவர். இவ்வெழுவர்கள் வரலாற்றையும் பண்டைத் தமிழ் நூல்களால் அறியலாம். இவர்களுள் பேகன் என்ற வள்ளலின் வரலாறு மட்டில் இப்பாடத்திற் கூறுவோம். பேகன் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தான். இவன் பிறந்த குடியும், வாழ்ந்த இடமும் இன்னதென்று தேற்றமாகத் தெரியவில்லை. ஆயினும் பழைய தமிழ் நூற் சான்றுகளைக்கொண்டு, பொதினி என்னும் ஊரையும் ஆங்குள்ள மலையையும் ஆண்டு வந்த, ஆவியின் குடியிற் பிறந்தவனென்று அறியக்கிடக்கின்றது. பொதினி யென்பது இக்காலத்தில் பழநி யென்று வழங்கும் முருகன் திரு நகரமாகும். இவன் வாழ்ந்த நகரத்தை நல்லூரென்று கூறுவர். இவன் மலைநிலை மக்களுக்குத் தலைவனாக வீற்றிருந்தான். இவன் கற்ற புலவர்கள் பலரையும் ஆதரித்து வந்தான். வேண்டுவார்க்கு வேண்டுவதைஈந்து, விரிந்த புகழ் பெற்றிருந் தான். தனது பகைவர்களை யெல்லாம் வென்று வெற்றிமாலை தரித்த வீரன். ஆன்றோர் மகிழும் அரிய நற்குணங்கள் பலவும் அமையப் பெற்றவன். இவன் பெருமையைப் புகழ்ந்து கபிலர், பரணர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் முதலிய பல பெரும் புலவர்கள் பாடியிருக்கின்றனர். ஒருநாள் மாலைக்காலத்தில் பேகன் தனது பரிவாரத்துடன் ஒரு பொழிலில் உலவிக்கொண்டிருந்தான். அது போது ஒரு பெரிய மரத்தின் உச்சியிலுள்ள கிளையில், அழகிய மயிலொன்று தனது சிறகை விரித்து ஆடிக்கொண்டும் கூவிக்கொண்டு மிருந்தது. அவ்வமயம் இயற்கையிலேயே குளிரும் மிகுந்திருந்தது. அப்போது மயில் ஆடுவதையும் கூவுவதையும் கண்ணுற்ற பேகன் ஓ இம்மயில் குளிர் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றது போலும்! என்னிடமோ நல்ல போர்வையொன்றிருக்கிறது. ஆதலால் நான் எத்தகைய குளிரையுந் தாங்குவேன். இம் மஞ்ஞைக்கோ போர்வை யொன்றுமில்லை. ஆதலால் இது எவ்வாறு இக் குளிர் நோயைத் தாங்கிக்கொள்ளும்! இதனிடம் அழகிய தோகையிருப்பினும் அது இப்பெருங் குளிரைத் தடுக்க முடியுமோ? அன்றியும் விரைந்தோடுவதற்கேற்ற வலிய கால்களு மில்லை. தனக்குற்ற துயரைத் தாங்கத் தக்க உடல் வலிமையு மில்லை. தன் துன்பத்தைப் பிறரிடங்கூறி மாற்றிக்கொள்ளும் சொல் வலிமையுமில்லை. இவையெல்லாம் அமையப் பெற்ற மக்களினத்திற் பிறந்த யான் இம்மயிலின் துன்பத்தைப் போக்க முற்படாமலிருப்பது நேர்மையாகுமோ? என்று பலவாறு எண்ணிய பின், தானணிந்திருந்த போர்வையை அம்மயிலுக் களிக்கத் தீர்மானித்துப் போர்வையை அம்மயில் வீற்றிருந்த மரத்தின்மீது ஒரு கிளையில் பதனமாக வைத்துவிட்டுத் தனதகத்தை யடைந்தான். இவ்வொரு நிகழ்ச்சியினாலேயே அவன் கொடைப் பெருமை வெளிப் படையாக விளங்குகின்றது. கொடைத் தன்மையை மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவார்கள். ஒருவர் அடையுந் துயரைக் குறிப்பாலாறிந்து, யாதொரு பயனுங் கருதாது அவர் துயரை யகற்றுவது முதற்கொடையாகும். ஒருவர் தம் துயரைக் கூறியவுடன் அதனைப் போக்கி, அவரை மகிழ்ச்சி செய்வது இரண்டாந்தரக் கொடையாகும். ஒருவர் தன்னைப் புகழ அதற்கு மகிழ்ந்து புகழ்ந்தோர்க்கு வேண்டுவன கொடுப்பது மூன்றாந்தரக் கொடையாகும். நமது தமிழ் வள்ளலாகிய பேகனுடைய கொடை, இவ்மூவகையினும் மேம்பட்ட தொன்றாகும். மக்கட் குழுவினுங் கீழான பறவை இனத்தைச் சேர்ந்த மயிலின் துயரைத் தானே விரைந்து சென்று போக்கிய பெருமையை என்னென்று கூறுவது? இப் பேகன் அறிவுடையவர்களின் மொழிகளைக் கேட்டு அவற்றின் வழி யொழுகிய நல்லோனாவன். இதனை மற்றொரு நிகழ்ச்சியாலறியக் கிடக்கின்றது. இவன் மனைவியின் பெயர் கண்ணகி யென்பது. இவள் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு வழிபாடியற்றி வந்தாள். தன் காதலுனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைத்தையும் சிறிதுங் குறைபாடின்றிச் செய்யுங் குணமுடையவள். ஒத்த குடியும், ஒத்த நலனும், ஒத்த இளமையுமுடையவள். பின்றூங்கி முன்னெழும் பெருங்குண மமைந்த கற்புக்கரசி. இத்தகைய கற்புத்தன்மைவாய்ந்த கண்ணகியும், பேகனும் ஒன்றுபட்ட மனமுடையவர்களாய் இல்லறத்தார் ஆற்ற வேண்டிய, சுற்றங்காத்தல், விருந்தினரோம்பல், வறியோரைப் பேணல், துறந்தோர்ப் போற்றல் முதலியவைகளை வழுவின்றி நடத்தி வருவாராயினர். இவ்வாறிருக்கும் நாளில் ஒருநாள் இருவருக்கும் சிறிது மனமாறுதல் ஏற்படவே பேகன் அவளைத் தாய்வீடு போகுமாறு விடையளித்து வழியனுப்பினன். இஃதிவ்வாறிருக்க, ஒருநாள் பரணர் என்னும் புலவர் பெருமான் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அங்கே வாழ்ந்திருந்த கண்ணகி, அப் புலவரைக்கண்டு ஓடி வந்து அவரடிகளில் வீழ்ந்து வணங்கினாள். புலவர் கண்ணகியைக் கண்டவுடன், அவளது மாற்றாத அழுக்குடையிலும், நீராடாது உணவின்றி வாடிக்கிடக்கும் உடலினாலும், சீவி முடிக்காக் கூந்தலினாலும் இன்னாரென்றறியமுடியாதவராயினர். மீண்டும் உற்று நோக்கவே பேகனுடைய மனையாளென்றறிந்து மனம் வருந்தினார். அம்மங்கையால் பேகன் செய்தியறிந்து, அவனிடஞ் சென்று, பாடல் பாடிக் கண்ணகியை அழைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். பேகனும் புலவர் மொழிக்கு மறுமொழி புகலாமற் கண்ணகியை மீட்டு மழைத்துக்கொண்டு வந்து, முன்னிருந்த அன்பிற் குறையாமல் அவளுடன் கூடி வாழ்ந்தான். இன்றும் இவன் புகழ் நிலைத்து நிற்பதற்கு இவன்செய்த அறமேகாரண மாகும். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை அநாகரிக நாட்டில், மதியிலார் வாழ்கின்றவூரில் அன்பிலார் குடியில் ஒரு பெண் பிறந்தாள். அவள் மூன்றடி உயரமும், ஆறடிச் சுற்றளவுமுள்ள உடலைப் பெற்றிருந்தாள். அவள் தலை பனங்காயை யொத்துச் சிறிதாகவும், கால்கள் அரையரையடி நீளமுமிருந்தன. கண்கள் எலுமிச்சங் கனிகளை யொத்திருந்தன. அவளைப் பெற்ற, தாய் தந்தையர்களுங் கூட அவளிடம் அன்புபாராட்டுவதில்லை. அவளைக் கண்டால் சிறுகுழந்தைகளெல்லோரும் அஞ்சி நடுநடுங்கி யோடி மறைந்து கொள்ளுவார்கள். ஆனால் அவள் களங்கமற்ற மனமுடையவள். அன்பு நிறைந்தவள். கடவுளைப் போற்றுபவள். கல்லுங் கரைந் துருகப் பாடுவாள். பாடினும் அப்பாடலை மக்களொருவருங் கேட்பதில்லை. அவள் தோட்டங்களிற் சென்று அழகாகப் பாடிக் கொண்டிருப்பாள். அவள் பாடலைக் காக்கை, பருந்து, கழுகு, குயில், கிளி, பூவை, மயில், புறா முதலிய பறவைகளும், மாடு, ஆடு, குதிரை, கழுதை, யானை, பூனை, புலி, கரடி, சிங்கம், நரி, ஓநாய், நாய், மான் முதலிய விலங்கினங்களுங் கூடிக்கேட்டுக் களிப்படையும். மரங்களுஞ் செடிகளும் கற்களுங்கூட அவள் பாடலுக் குருகும். மக்கள் ஒருவருமவளுடன் உரையாடுவதில்லை. அவளும் ஒருவருடனும் பேசுவதில்லை. அவளுக்கு மணஞ்செய்து கொள்ளவேண்டுமென்னும் ஆசை இருந்தது. அதனாலவள் அடிக்கடிக்கடவுளை நினைத்து வருந்துவாள். தன் குறையைக் கூறிப் பாடுவாள். தான் உலகிற் பிறந்து ஒருவித இன்பமும் பெறவில்லையேயென்று வருந்துவாள். இவ்வாறெண்ணி ஒரு நாள் தோட்டத்திற் பாடிக்கொண்டிருக்கும்போது. கூடியிருந்த விலங்குக் கூட்டத்தின் நடுவில் ஒருருவமிருந்தது. அவ்வுருவமும் ஏறக்குறைய அவளை யொத்ததாகவே இருந்தது. பாடி முடித்த வுடன் அந்த உருவம் அவளண்டையிலணுகிப் பெண்ணே! நான் உன் பாட்டிற்கு மிகவு மகிழ்ந்தேன். நாமிருவரும் மணம்புரிந்து கொள்ளுவோமா என்று கேட்டது. இதுவரை தன்னோடு ஒருவருமே பேசப் பெறாதவள் இப்பொழுது ஓருருவந் தன்னோடு பேசியதற்காக மிகவுங் களித்தாள். அவ்வுருவம் ஓராண்வடிவமான தென்பதை யறிந்து மிகவும் மனமகிழ்ந்தாள். உடனே இருவரும் என்னைப் போல நீ, உன்னைப் போல நான், எனக்குமுனக்கு மிசைந்த பொருத்தமென்னபொருத்தமோ? என்று கூறி மணஞ் செய்துகொண்டு காட்டை யடைந்தனர். அப்போது ஒரு முனிவர் எதிர்ப்பட அவரை இருவரும் வணங்க, அவர் இவர்களுருவைக்கண்டு வியப்புமிரக்கமு மெய்தி அழகிய உருவத்தைக் கொடுத்தார். பிறகு அவர்கள் நாட்டையடைய யாவருங் கண்டு ஆச்சரியமடைந்து திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது உண்மையே என்று கூறி மகிழ்ந்தனர். பொய்யும் மெய்யாகும் பல நூற்றாண்டுகளுக்கு முன் உறையூரில் அரசாண்ட சோழ மன்னனொருவன் துறவிகளை மிகவும் அன்போடு போற்றி வந்தான். அவனுக்கு ஒரு பெண்ணிருந்தாள். அவளுந் துறவிகள்பால் மிகவும் அன்பு பூண்டிருந்தாள். அப்பெண்ணை ஒரு துறவிக்கே மணஞ்செய்து கொடுக்க வேண்டுமென்று அரசன் எண்ணியிருந்தான். ஒருநாள் திருடனொருவன் திருடும் பொருட்டு, அரண்மனைக்கு அந்திப் பொழுதிலேயே வந்து ஒரு புறத்தில் மறைந்திருந்தான். நள்ளிரவாகியும் அரசனுமரசியுந் தூங்காமற் பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அரசன் நமது பெண்ணை யாராவது ஒரு துறவிக்கு மணஞ்செய்து கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். நாளை நமது பணியாட் களைக் காவிரிக் கரைக்கனுப்பி நல்ல சன்னியாசி ஒருவரை அழைத்துவரச் செய்யவேண்டும் என்று தன் மனைவியிடங் கூறினான். சரி என்று அவன் மனைவியும் அவன் கூறியவாறு ஒப்புக்கொண்டாள். இதைச் செவிமடுத்த திருடன் நாம் அரசன் பெண்ணை மணம் புரிந்துகொள்ளும் பேற்றைப் பெறினும் பெறலாம். கண்டாரிகழத்தக்க இத்தீய திருட்டுத் தொழிலைக் கொண்டு உயிர் வாழ்கின்ற பெருந்துன்பம் நீங்கிவிடும். எல்லோரும் கொண்டாடுமாறு பெருஞ்செல்வனாக வீற்றிருக்க இப்பொழுதே சென்று துறவிவேடந் தரித்துக் கொள்ளுகிறேன் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறிச் சென்றான். சென்று, காதிலும் கழுத்திலும் மார்பிலும் கரங்களிலு முருத்திராக்க மணிகளைப் பூண்டு உடம்பெருங்குந் திருநீறு தரித்துக் கோவணத்துடன் காவிரிக் கரையில் சன்னியாசிகளிருக்கு மிடத்திற் சென்று, தானும் ஒருபாலமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு யோகஞ் செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தான். மறுநாட்காலையில் அரசன் சில பணியாட்களை அழைத்துச்சென்று, யாரேனும் ஒரு நல்ல சந்நியாசி ஒருவரைத் தன் மகளுக்கு மணமகனாக அழைத்து வருமாறு கட்டளை யிட்டான். அவர்களுங் காவிரிக்கரையை அடைந்து ஒவ்வொரு துறவியையுங் கூப்பிட்டனர். ஒருவனும் அரசன் மகளை மணம் புரிந்துகொள்ள உடன்படவில்லை. கடைசியாக நமது திருட்டுப் பரதேசியிடஞ்சென்று அழைத்தனர். திருட்டுப் பரதேசிக்கு அரசன் மகளை மணம் புரிந்துகொள்ள நிறைந்த ஆவலிருந்த தேனும், திடீரென்று, ஒப்பிவிட்டால் நமது வேடம் வெளியாகி விடுமோ வென்றெண்ணி யாதுங் கூறாது மௌனத்திலிருந்தான். உடனே வேலைக்காரர்கள் அரசனிடம் வந்து ஒருவருமுடன் படவில்லை. ஆனால், இளைய சாமியாரொருவரிருக்கின்றார். அவரொரு சமைய மிசைந்தாலு மிசைவார் என்று கூறினார்கள். அப்பொழுதே அரசன் புறப்பட்டுத் திருட்டுச் சாமியாரிடஞ் சென்று, தன் மகளை மணஞ்செய்து கொள்ளுமாறு வேண்டினான். அரசனுடைய வேண்டுகோளைக் கேட்ட திருடன் நாம் போலித் துறவியாக இருக்கும்போதே அரசன் நம்மைப் பணியும் பெருமை கிடைத்ததே! உண்மைத் துறவியாக விருப்போமானால் இன்னு மெத்தகைய பெருமைதான் கிடைக்காது என்றெண்ணி உண்மைத் துறவியாக விருக்கத் தீர்மானித்து, அரசன் வேண்டு கோளை மறுத்து அன்றுமுதல் உண்மையிலேயே நல்லொழுக்க முடையவனாக இருந்து, இறுதியிலிறைவன் திருவடிப் பேறடைந்தான். அவன் புகழும் உலகில் விளங்கி நின்றது. புத்தர் பெருமான் ஒவ்வொரு நாட்டிலும் அறவழிகள் குலைந்தும், மக்களனை வருந் தீயநெறியிற் செல்லுங் காலத்திற் பல பெரியோர்கள் பிறந்து மக்களை நல்வழிப் படுத்துவார்கள். அவ்வாறு உலகினர்க்கு நன்மை புகட்டி அவர்களை நன்னெறியிற் புகுத்திய பெரியோர் நமது நாட்டிலும் பிறநாடுகளிலும் மிகப்பலரிருந் தனர். அத்தகையோர்களில் நமது இந்திய நாட்டிற் பிறந்த புத்தரும் ஒருவராவர். அவர் பிறந்த காலத்தில் நம்நாட்டு மக்கள் நன்மை இன்னதென்றுந் தீமை இன்னதென்றும் பகுத்துணரும் ஆற்றலில்லாதவர்களாக உயிர்க்கொலை முதலிய தீச் செயல் களைச் செய்து வந்தனர். மக்கள் வாழ்க்கையில் ஒருவர்க்கொருவர் உயர்வு தாழ்வு பாராட்டிக்கொண்டு உயர்ந்தோரென்று சொல்லிக் கொள்பவர்கள் தாழ்ந்தோரென்று சொல்லப்படு வோர்களுக்கு மிகவுந் தீங்கிழைத்து வந்தனர். உலக மக்கள் பலருந் துன்புற்றனர். அவர்களுடைய துன்பங்களை யெல்லாம் போக்கவே புத்தர் பெருமான் பிறந்துழைத்தார். அத்தகைய பெரியாரின் வரலாற்றையும், அவர் கூறிய அறவுரைகளையும் அறிந்து கொள்ள வேண்டுவது இந்தியராய்ப் பிறந்தோரின் முக்கிய கடமையாகும். ஆதலால் அவர் வரலாற்றையுங் கொள் கைகளையு மிப்பாடத்திற் கூறுகின்றோம். வடஇந்தியாவிலுள்ள உத்தரகோசல நாட்டில் உரோகிணி யாற்றங் கரையிற் கபிலவது என்னும் அழகும் பெருமையு மமைந்த நகரமொன்றுண்டு அந்நகரிற் சுத்தோதனன் என்னு மன்னன் அரசு புரிந்திருந்தான். அவன் மனைவியின் பெயர் மாயாதேவி யென்பது அவர்களுக்கு மக்கட்பே றில்லாமையாற் கடவுளை நினைந்து பற்பல நோன்புகளை யாற்றிவந்தனர். பலவாண்டுகள் கடந்தபின் மாயாவதி கருவாய்த்து ஓராண்மகவை ஈன்றாள். அம்மகவு பிறந்த ஆண்டு. கி.மு. 557 ஆகும். மைந்தன் பிறந்ததை யறிந்த சுத்தோதனன் அளவற்ற களிப்படைந்து ஏழைகள் பலர்க்கும் வேண்டிய பொருள்களையெல்லாம் வழங்கினான். தெய்வதக் கோட்டங்களுக்கெல்லாந் திருவிழா நடத்துமாறு பணித்தான். மகனுடைய மலர் முகத்தைக் கண்டு கவலை யொழிந்து இன்பமீக் கூர்ந்தான். அரண்மனையிலுள்ள அமைச்சர் முதலானவர்களும் அரசனுடைய மகிழ்ச்சியைத் தமது மகிழ்ச்சியாகக்கொண்டு இன்புற்றனர். நகரமாந்தருந்த தங்கள் வீடுகளிற் குழந்தை பிறந்தது போலெண்ணிக்கொண்டு, ஆடல் பாடல்கள் நடத்தி ஆதுலர்க்கு விருந்திட்டு மகிழ்ந்திருந்தனர். நாடு முழுவதும் நன்னிமித்தங்கள் பல தோன்றின. அவைகளைக் கண்டு அறிஞர் அனைவரும் அகமகிழ்ந்திருந்தனர். உடனே அரசன் சோதிடம் வல்லாரை அழைத்துக் குழந்தைக்குக் காலபலன் கூறக் கட்டளையிட, அவர்களுமக் குழந்தையின் சாதகத்தை ஆராய்ந்து, இக்குழந்தை உலகமெல்லாங் கொண்டாடத் தக்க சான்றோராகுமென்றும், ஆனால் அரசியலை நடத்தாதென்றும், துறவியாகுமென்றும். பிறந்த ஏழாம் நாள் குழந்தையின் தாயாரிறந்து விடுவாளென்றுங் கூறினர். அவர்கள் கூறியவாறே அக்குழந்தை பிறந்த ஏழாம் நாள் தாயார் உயிர் துறந்தார். பின்னர்ச் சுத்தோதனன், அம்மைந்தனுக்குச் சித்தார்த்த னென்று பெயரிட்டு மிக அருமையாக வளர்த்தான். சித்தார்த்தார் துறவறத்தைப் பின்பற்றுவாரென்று சோதிடர் கூறியிருந் தமையால் அவரை வெளியில் மிகவாக உலவவிடு வதில்லை. ஏனெனில் உலகில் மக்களடையுந் துன்பங்களைக் காணாதவராக இருக்க வேண்டும் மென்பதற்காகவே அவ்வாறு செய்திருந்தான். உலக வாழ்க்கை மிகவும் இன்பமுடையதே என்றெண்ணுமாறு அவருக்கெனத் தனியாக ஒரு பூந்தோட்டமும், அதிலொரு மாளிகையு மமைத்து இன்ப வாழ்வுக்குரிய பொருள்களையும், பணிவிடை செய்வதற்குப் பெண்மக்களையும், ஆண்மக்களையும் ஏற்படுத்தி இருந்தான். சித்தார்த்தருக்கு வயதும் பதினெட்டா யிற்று. தந்தை அவருக்குத் திருமணம் புரிவிக்க எண்ணிக் கொண்டிருக்குங்கால் அடுத்த நாட்டு மன்னன் மகள் யசோதரை என்பவள், அழகிலுங் குணத்திலுஞ் சிறந்தவளெனக் கேள்வியுற்று அம்மங்கையை மணம் புரிவித்தான். சித்தார்த்தர் அம்மங்கை யுடன் கூடி மகிழ்ந்திருக்கும் நாளிலும் ஒவ்வோரமயங்களில் உலகத்தைப் பற்றியும், உலக வாழ்க்கையைப் பற்றியுஞ் சிந்தித்துக் கொண்டே ஆழ்ந்த ஆராய்ச்சியி லமர்ந்திருப்பார். சித்தார்த்தரின் மனப்பாங்கை அறிந்த அவர் தந்தையாகிய சுத்தோதனன், அடிக்கடி பல ஆடல்பாடல்களை அவர் முன்னிலையில் நடத்தி அவருடைய மனத்தை வேறு வழியில் திருப்புவதற்கு முயன்று கொண்டிருந்தான். சித்தார்த்தருக்கும் யசோதரைக்குமாக ஓராண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த செய்தி கேட்டு, அரசனும் நகரமாந்தரும், மிக்க மகிழ்ச்சியடைந்து விழாக்கள் செய்தனர். ஆனால் சித்தார்த்தர் மட்டிலும் உலக வாழ்க்கையின் மறைபொருளை அறியவேண்டு மென்பதிலேயே கருத்தைச் செலுத்தியிருந்தார். பல காரணங்களால் மக்கள் வாழ்க்கையிற்றுன்பமிருக் கின்ற தென்பதை யுணர்ந்து, அதனுண்மையைக் கண்டறியும் பொருட்டு, நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஓர் பரியின் மீதேறிப் புறப்பட்டார். நகர வீதியில் வரும்போது, முதல் முதலில் ஒருகிழவன் நடக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டு நடந்து வருவதைக் கண்டார். அடுத்தாற்போல் ஒரு பிணத்தைச் சிலர் சுமந்து செல்வதைக் கண்டார். பிறகு பற்பலபிணியாளர் களைப் பார்த்தார். பின்னர் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் பேசிக் கொள்ளும் துக்கமான செய்திகளையுங் கேட்டார். இவற்றையெல்லாங் கண்டவுடன் மக்கள் வாழ்க்கையின் நிலையை அறிந்தார். அதனாற் கரைகடந்த கவலையிலாழ்ந்தார். தனதரண்மனையை அடைந்தபின் தான்பார்த்தவற்றைப் பற்றியே நினைத்து நினைத்துப் பெரு மூர்ச்சுயிர்த்தார். இரவுப் பொழுதும் வந்தது. அரண்மனையிலுள்ள யாவரும் உண்டு படுத்துறங்கி விட்டனர். சித்தார்த்தர் மட்டுந் தனியே உட்கார்ந்து ஆராய்ந்து, உண்மை யறிவு பெறும் பொருட்டுப் பெண்டு பிள்ளை உற்றாருறவினர் நாடு நகர மாளிகை செல்வங்களைத் துறந்து செல்வதென்று முடிவு செய்தார். தன் மனைவியும், மகவும் படுத்துறங்கு மிடத்தை யடைந்தார். குழந்தை யைக் கையினாலெடுத்து ஒரு முறை பார்த்துப் போகலாமென் றெண்ணினார். குழந்தையைத் தொட்டால் எங்கே உலகத் தொடக்கு நம்மைப் பிடித்துக் கொள்ளுகிறதோ வென்றஞ்சினார். இச்சமயத்தில் மனைவி விழித்தாளாயின் செல்ல முடியாதே என்று நடுங்கினார். ஆகையால் குழந்தையைத் தொடாமற் சிறிது நின்று, மனைவியையுங் குழந்தையையும் பார்த்துவிட்டு, ஒரு குதிரையின் மீதேறிக்கொண்டு, விரைவாகச் சென்று, ஓராற்றங்கரையை அடைந்தார். அங்கேயே தானிவர்ந்து வந்த குதிரையை விட்டு விட்டுக் கால் நடையாகவே நடந்து முதலில் வைசாலி என்னும் நகரத்தை யடைந்தார். அந்நகரி லிருந்த பல கலைகளிலுந் தேர்ந்த பிராமண பண்டித தொருவரைச் சேர்ந்து, அவருக்கு மாணாக்கராகிச் சாத்திர நுட்பங்களையெல்லாம் விரைவிற் கற்றறிந்தார். பின்னர், மகத நாடு சென்று ஆங்கு அரசாங்கப் பண்டிதராயிருந்த ஒருவரையடைந்து, அவரிடமும் பலகலைகளின் நுணுக்கங்களைப் படித் தறிந்தார். பிறகு கல்வியென்னும் பயிற்சியால் இன்பமுறுதற்குரிய வழியா தென்றறிந்து தவநெறியிற் செல்வாராயினர். இதற்குள், அவருக்கு மாணாக்கர்கள் பலர்தோன்றி அவரை விடாமற் பின்பற்றிக்கொண்டிருந்தனர். சித்தார்த்தர் தவம் புரிவதற்கு ஓரிடத்தை ஆராய்ந்து, கயாவினருகிலுள்ள ஒரு காட்டை யடைந்து அல்லும் பகலும் ஊணுறக்கமின்றித் தவஞ்செய்யத் தொடங்கினார். சிலநாட்கள் நெருப்பில் நின்று கொண்டும், சிலநாட்கள் நீரில் நின்று கொண்டும் இவ்வகையாக ஆறாண்டுகள் வரை விடாமுயற்சியுடன் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தார். இவ்வாறிருக்கும் நாளிலொரு நாள், உடம்பு வாடியமையால் நிற்குமாற்ற லற்றவராய் மூச்சற்றுக் கீழே விழுந்து, பின்பு தெளிந் தெழுந்து, தவத்தினாற் பயனொன் றுமில்லை என்பதை யறிந்து அதனைத் துறந்தார். இதற்குள் அவருடைய மாணாக்கரா யிருந்தவர்கள் அவரை விட்டு நீங்கினர். ஆயினுஞ் சித்தார்த்தர் தமது முயற்சியிற் சிறிதுங் குன்றினாரிலர். எவ்வாறேனும் மக்களின் துன்பமகலும் வழியைக்காணுவேன் என்று உறுதி செய்து கொண்டு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார். சித்தார்த்தர் பல விடங்களிலுஞ் சுற்றித் திரிந்து இறுதியில் நைரஞ்சரை என்னும் ஆற்றங்கரையை யணுகி ஓரரச மரத்தின் கீழுட்கார்ந்து உண்மையை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவருக்கு மெய்யறிவு பிறந்தது. அன்று முதல்வருக்குப் புத்தரென்ற பெயருண்டாயிற்று. புத்தருக்கு மெய்யறிவு பிறந்தது. அரசமரத்தினடியாதலா லம்மரத்தைப் பௌத்தர்கள் மகாபோதியென வழங்குகின்றனர். அப்பொழுதே புத்தர் தாங்கண்ட மெய்ம்மையை உலகினர்க்குணர்த்த வேண்டு மென்று முடிவு செய்து கொண்டு புறப்பட்டார். அவர் பல வூர்களுக்கும் நகரங்களுக்குஞ்சென்று, தாங் கண்ட உண்மைகளைச் செல்வர்களுக்கும், வறிஞர்களுக்கும், உயர்ந்த வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் போதித்தார். முதலில் அவர் தன்னலப் பேய்பிடித்தவர்களாலும், மூடக் கொள்கை யுடையவர்களாலும் பெருந் துன்பங்களுக் காட்பட்டாராயினும். மிக விரைவில் அவரைப் பின்பற்றுவோர் மிகப் பலராயினர் அக்காலத்தில் பெயர் பெற்ற மன்னனாக இருந்த மகதநாட்டுப் பிம்பிசாரப் பெருமன்னனும் அவரைத் தனது நாட்டிற் கழைத்து, அவர் தம் அறவுரைகளைக் கேட்டு அவர் கொள்கையை மேற்கொண்டான். பிறகு அவருடைய கொள்கைகள் எங்கும் பரவலாயின. இவ்வாறு பலவாண்டுகள் மக்களூழியஞ்செய்து விட்டுத் தாம் பிறந்த நாட்டையுற்றுத் தமது குடும்பத்தாருக்கும், குடி களுக்குந் தமது கொள்கைகளைப் போதித்தார். அவர்களனை வரும் அவர் வழிப்பட்டனர். அவரது மனைவி யசோதரையும், மைந்தன் இராகுலனும் அவரிடம் உண்மையறிந்து, தமது பொருள்களையெல்லாம் வறியோர்களுக் களித்துவிட்டுப் புத்தருக்கு மாணவராயினர். புத்தர் நாடு நகரங்களெல்லாஞ் சுற்றித் தமது கொள்கைகளைப் பரவச்செய்து 80 வது வயதில் மண்ணுலகை விட்டகன்றார். உலகில் ஜீவகாருண்யத்தை நிலை நிறுத்தியது புத்தருடைய அறவுரைகளேயாகும். அவர் தெய்வங்களின் பெயர்களைக் கூறி உயிர்களைப் பலிகொடுக்கும் மூடக்கொள்கைகளைக் கண்டித்தார். சுவர்க்கம் பெறலாமென் றெண்ணி உயிர்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகளையெல்லாம் கண்டித்தார். உலகிற் பிறப்பது பெருந்துன்ப மென்றும், பிறவாமலிருப்பதே பேரின்ப மென்றும், பிறப்பைத் தருவது உலகப் பற்றென்றும், அதனைத் துறந்தால் பிறவாத பேரின்பத்தைப் பெறலாமென்றுங் கூறினார். உலகிற் பிறந்தவர்கள், நன்னம்பிக்கை, நல்லறிவு, நல்லெண்ணம், நற்செய்கை, நல்வாழ்க்கை, உயிரிரக்கம், உண்மைகூறல், வறியார்க்கீதல், பசி தவிர்த்தல் முதலியவை களைக் கைக்கொண்டொழுக வேண்டு மென்று போதித்தார். அவர் போதித்த மற்றொரு உயரிய கொள்கை, மக்களனை வரும் பிறப்பினாலொன்றே; அவர்களுள் உயர்வு தாழ்வில்லை; எல்லா மக்களும் ஒரே சமூகத்தினராக வாழவேண்டும் என்பனவாகும். அவர் கடவுளைப்பற்றி யொன்றுங் கூறவில்லை; என்றாலும் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க பொது அறங்களை ஆராய்ந்து கூறினார். புத்தர் துறவறச் சங்கமொன்றை நிலைநாட்டினார். அச்சங்கத்தில் வகுப்பு வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பெண்களுஞ் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். ஒவ்வொரு வரும் தத்தம் முயற்சியினாலேயே முத்தி பெறலாமென்பது புத்தருடைய கொள்கை. அத்துறவறச் சங்கத்தைச் சார்ந்த துறவிகளனைவரும் அவர்களுடைய மதக் கொள்கைகளைப் பரவச் செய்வதிலேயே இடைவிடா துழைத்தனர். அவர்கள் இந்திய நாடு முழுவதும், சைனா, இலங்கை, திபேத்து முதலிய நாடுகளிலும் புத்த மகத்தைப் பரப்பினர். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் புத்தமதம் உலகிற் செழித்திருந்தது. அம்மதக் கொள்கைகள், உலகிற்குப் பெருநலம் பயக்கத்தக்க உண்மையான, உயர்ந்த கருத்துக் களாகுமென்பது அறிஞர்களின் துணிபாகும். மலைகள் உலகத்தில் உயர்வாகக் காணப்படுவன மலைகளேயாகும். நமது தேசத்தில் பரந்த நிலத்தை மலைகள் தமது உறைவிடமாகக் கொண்டிருக்கின்றன. சிலர், ‘வீணாக அடைத்துக் கொண்டிருக்கும் அம்மலைகளால் யாது பயன்? என்று கருதலாம். அவ்வாறு எண்ணுவது அறியாமையாகும். கடவுளால் ஆக்கப்பட்ட பொருள்களில் பயன்படாதன ஒன்றேனுமில்லை என்பது திண்ணம். உலகமக்கள், உயிர்வாழ்வதற்கு இன்றி யமையாத கருவியாயிருப்பன மலைகளே என்பதைக் கீழ்வரும் காரணங்களால் அறியலாம். பலவகையான விளைவுப் பொருள்கள் தோன்றுவதற்குப் பொருட்டாயிருப்பது நீரொன்றேயாகும். நீரின்றேல் உலகமேது? மக்கள் எங்கிருப்பார்? எல்லாம் அழிந்தொழியுமன்றோ? இதனைத் திருவள்ளுவரும் நீரின்றமையாதுலகு என்று கூறியிருக்கின்றார். அந்நீர் தானும் மழையினால் உண்டாகின்றதென்பதை நாமறிவோம். ஆகவே மழையே நீருக்கு முதற்காரணமாக விருக்கின்றது. இதனை மழையின்றி மானிலத்தார்க்கில்லை என்ற ஆன்றோர் வாக்கால் அறியலாம். அம்மழையைப் பெய்விப் பதற்குக் காரணமாயிருந்து வருவது மலைகளே என்பதை இனி நாம் அறிந்து கொள்வோம். மலைகள் மிக உயர்ந்திருப்பதால் அவைகள் நீரையுண்டு விண்ணேறிப் படரும் மேகங்களைத் தடுக்கின்றன. அதனால் மேகங்கள் மலையுச்சியிலேயே தங்கி மழையைப் பெய்கின்றன. அம்மழையே மலையினின்றும் ஆறுகளாக நிலத்தில் வந்து வீழ்கின்றன. தென்னிந்தியாவின் பெருமைக்குக் காரணமா யிருக்கும் காவிரி முதலிய ஆறுகள் எங்கிருந் துண்டாகி வருகின்றன? மலைகளிலிருந்தன்றோ? மலைகளிலிருந்து பிறந்து வரும் பேராறுகளினின்றும் பல சிற்றாறுகள் பிரிந்து, நாடுகளிற் பரவி, ஆங்காங்கே விளைவுப்பொருள்களை உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கின்றன. இப்பொழுதும் மற்றை இடங் களைவிட மலையிலும், மலையைச் சார்ந்த இடங்களிலும், எப்பொழுதும் அதிகமாக மழை பெய்வதைக் காணலாம். மலையிற் பலவிதமான பொருள்களும் உண்டாகின்றன. அவை மாந்தர்களுக்கு மிகவும் உதவியுள்ளனவாக இருக்கின்றன. மிளகு, ஏலக்காய், காப்பிக்கொட்டை முதலிய விலையுயர்ந்த பொருள்களை மலைகள் நமக்குத் தருகின்றன. அன்றியும் மிகப்பெரிய மரங்கள் மலைகளிலுண்டாகின்றன. அவைகளே நாம் வாழ்வதற்குப் பலவகையான கட்டிடங்களை அமைப்பதற் குதவுகின்றன. அளவற்ற மருந்துப் பொருள்களை மலைகள் நமக்களிக்கின்றன. மலைகளிற் பல வகையான மருந்துப் பொருள்கள் நிரம்பியிருப்பதனால் மலைக்காற்று நமது உடம்புக்கு மிகவும் நலத்தைக் கொடுக்கும். மலைப்பாங்கில் உறைபவர்கள் எக்காலும் நல்ல உடம்பு படைத்தவர்களாகக் காணலாம். நம்மைவிட அவர்கள் மிகுந்த பல சாலிகளாயு மிருப்பார்கள். மலை சிறந்ததென்பதை நமது பண்டைத்தமிழ் இலக்கியங் களாலும் அறியலாம். மலையைப்பற்றி நமது தமிழ்ப் புலவர்கள் உள்ளதை உள்ளவாறே அமைத்துக் கூறியிருக்கும் பாடல் பல உள்ளன. பத்துப் பாட்டெனும் நூலில் மலைபடுகடாம் என்றொரு பாட்டிருக்கின்றது. அதைப் படித்தால் நமது முன்னோர்கள் மலையின் உயர்வையும், பயனையும் எவ்வாறு அறிந்திருக் கின்றார்கள் என்பது விளங்கும். நம்மவர்கள் மலையைக் கடவுட்டன்மை யுடையதாகக் கொண்டாடுவார்கள். நாம் வணங்குகின்ற கடவுளர்களும் மலையையே தமக்குச் சிறந்த உறைவிடமாகக் கொண்டிருக்கின்றார்கள். சிவபெருமானைக் கயிலைமலையில் வாழ்வதாக நமது நூல்கள் கூறுகின்றன. முருகன் என்னும் தமிழ்க்கடவுளை மலைநிலத்துத் தெய்வமாக நமது முன்னோர்கள் அமைத்திருக்கின்றார்கள். இப்பொழுதும் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள, பழநிமலை, திருப்பரங் குன்றம், குன்றக்குடி முதலியவற்றை மக்கள் மிகவும் கொண்டாடிச் சென்று வணங்கி வருகின்றார்கள். திருமாலும் மலையைச் சிறப்பாகக் கொண்டிருப்பதாக, நமது கலைகள் நவில்கின்றன. அதற்கு உதாரணமாக, திருவேங்கடம், அழகர்மலை முதலிய தலங்களை மக்கள் மிகவும் போற்றிப் புகழ்வதைக் காணுகின்றோம். திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ளவரைகளைச் சிவபெருமானுக் குச்சிறந்ததாக வெண்ணிமக்கள் சென்று வழிபாடாற்றுகின்றனர். மேற்கூறிய வற்றால் மலையை நம்மவர்கள் தெய்வத்தன்மை பொருந்திய தாகக் கொண்டாடினார்கள்; கொண்டாடுகின்றார்கள் என்பது விளங்கும். இன்னும் பல மக்கள் மலைகளில் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு அம்மலையே தாய் போலிருந்து கிழங்கு, காய், கனி, முதலிய உணவுப் பொருள்களை ஊட்டிப் புரக்கின்றன. மலை யில் வாழ்கின்ற மக்கள் நோயற்ற உடம்பையுடையவர்களாகவும், களங்கமற்ற மனமுடையவர்களாகவும் இருக்கின்றார்கள். மலையைப் பார்த்தால் நம் மனதிற்கு ஒருவித இன்ப முண்டாகும். இதற்குக் காரணம் பலவிதமாகக் காணப்படும் கற்பாறைகளும், வானத்தை யளாவும் மரங்களும், பலவகையான கொடிகளும், பலவகையான செடிகளும், தெளிந்த தூய்மையான அருவி களுமே யாகும். பண்டை நாளிற் பல அரசர்கள் மலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்களென்று சரித்திரங்களால் அறிகின்றோம். இப்பொழுதும் கோடைகாலத்தில் செல்வர் களும் அரசியல் அதிகாரிகளும், நீலகிரி, கோடைக்கானல் போன்ற பெரிய மலைகளிற் சென்று வசிக்கின்றார்கள். மலைகள் கோடைகாலத்தில் மிகவும் குளிர்ச்சியைத் தந்துகொண்டிருக்கும். மலைகள் மனிதர்களுக்கு உதவி செய்வதுமல்லாமல், பலவாறான விலங்குகளுக்கும் உதவி செய்கின்றன. யானைகள், குதிரைகள், மாடுகள், குரங்குகள், கரடிகள், புலிகள், ஓநாய்கள், நரிகள் போன்ற பலவகையான உயிர்கள் வாழ்வதற்கும் இடமா யிருக்கின்றன. சில மலைகளில் அநேக இடங்களில் சிறிதாகவும் பெரிதாகவும் பல சுரங்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து பலவகையான உலோகங்களை வெட்டி யெடுக்கின்றார்கள். இவ்வாறு மலைகள் பல வகையிலும் நாட்டிற்கு உதவி செய்வனவாகவே இருக்கின்றன. நமது இந்தியாவின் வடக்கில் இருக்கின்ற இமயமலை நமது நாட்டில் பகைவர்கள் நுழையாதபடி ஒரு கோட்டைச் சுவர்போல் நின்று காப்பாற்றுகின்ற தென்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் இனிமேலா யினும் நாம் மலைகளைக்காணும் போது அவற்றை உற்று நோக்கிமன மகிழ்ச்சியடைய முயல்வோமாக. அனுமார் பிறப்பு காற்றுக் கடவுளுக்கும், அஞ்சனா தேவிக்கும் யாரினும் பெருவலிமை யுடைய புதல்வரொருவர் பிறந்தார். பிறந்த பொழுதே அப்பிள்ளையின் பெருவலியறிந்ததாயுந் தந்தையுஞ் சிந்தையுள் மகிழ்ச்சியடைந்தார் வன்னெஞ்சம் வாய்ந்த அரக்கர் களனைவரும் தங்கள் வாழ்நாளிற் குறைவு பட்டனரென்று வானவர்கள் மகிழ்ந்து நடனமாடினர். அனுமார் பிறந்தவுடன் அன்னையினடி பணிந்து தாயே! நான் பெரும்பசி யுடையவனாக உள்ளேன். எனக்கிரையாது என்று கேட்டார். சோலையிற் பழுத்திருக்குஞ் சிவந்த கனி வகைகளே உனக்கிரையாகும். நான் சென்று கனிகள் பறித்து வருகின்றேன் என்று கூறி அஞ்சனாதேவி பழங்கள் கொண்டுவர வனத்தை யடைந்தாள். அப்பொழுது பரிதி கிழக்குத்திசையிற் றோன்றியது அதன் நிறஞ் சிவந்திருந்ததைக் கண்ட அனுமார், நம்மன்னை கூறிய கனிகளிலிது வொன்றாகுமென் றெண்ணி அதன்மேற் பாய்ந்தார் அனுமார். அருக்கன் மீது பாய்வதைக் கண்ட வானவர்களும் முனிவர்களும் வியப்பெய்தி காற்றின் விரைவும், கருடப் பறவையின் விரைவு மிவனிடத் திருப்பதாக என்று கூறினர். பிறந்தபோதே இவன் ஆதித்தன்மிசைத் தாவும் ஆற்றலுடையவனாயின், வளர்ந்தபின் பகைவர்களெல்லா மிவன்கையி லென்னபாடு படுவரோ? என்றும் பேசிக் கொண்டனர். அனுமார் சூரியன்மீது பாய்வதைப் பார்த்த காற்றுக் கடவுள் சூரியன் கதிர்கள் சுடாதிருப்பதாக; என் மைந்தன் மீது நிலாக் கதிர்களைப் போல் படுக என்று கூறினான். அனுமார் விரைவாகத் தன்மீது பாய்ந்து கௌவியதைக் கண்ட சூரியன் சினமின்றி இவனொரு குழந்தையென மனமிரங்கி, காதல என்றழைத்தான், அன்று இராகு சூரியனைப் பற்றுகின்ற நாளாகையால் அவனுஞ் சூரியனை ஒருபுறம் பிடித்திருந்தான். அனுமார் சூரியன் மீது தாவியவுடன் இராகு அஞ்சு நடுங்கி, விண்ணவர் தலைவனாகிய இந்திரனிடஞ் சென்று அரசே! சூரிய சந்திரர்களை விழுங்குவதற்கு, முன்னமே எமக்கு விதித்திருக்கின்றாய். இப்பொழுது முறை தவறி யாரோ வேற்றா னொருவன் புகுந்து ஆதவனைப் பற்றிக்கொண்டு இன்னும் விட்டானில்லை. இஃது முறையாகுமா? என்று கூறினான். இதைக் கேட்ட வாசவன் கண்கள் சிவந்து, வெள்ளி மலையை யொத்த ஐராவதத்தின் மீதேறிக்கொண்டு, இராகுவையுமழைத்துக் கொண்டு, பரிதியின் பக்கத்தில் வந்து நின்று, இராகுவைப் பார்த்து நீ பரிதியைப் பற்றிக்கொள் என்று கட்டளையிட்டான். உடனே இராகு பரிதியைப் பற்றுவதற்கெண்ணி அதனருகிற் சென்றான். இராகுவைக் கண்ட மாருதி இதுவுமொரு பழமென் றெண்ணி அவன் மீது குதித்துப் பிடித்தார். அவன் அச்சமுற்று அலறிக் கொண்டோடி இந்திரன் கால்களில் வீழ்ந்தான். இந்திரன் ஏறியிருந்த ஐராவதத்தின் நெற்றியிற் சிவந்த குங்குமப் பொட்டுப் பெரிதாயிருந்தது. அனுமார் அதை நோக்கி இதுவொரு பெரிய பழமாகுமென்றெண்ணி ஐராவதத்தின் நெற்றிக்கு நேராகத்தா வினார். அதைக்கண்டு இந்திரன் சினம் பெருகித் தனது குலிசப் படையை யெறிந்தான். அப்படை அனுமார் மீது தாக்கவே அவருந் தற்செயலற்றுத் தரணியிற் சோர்ந்து வீழ்ந்தார். அனுமார் சோர்ந்து வீழ்ந்தவுடன், பவனக்கடவுள் வாசவன் மேற்சீறி மூவுலகங்களையுமிகைப்பிற்குள் கெடுத்து விடுகின்றேனென்று கூறிக் குழந்தையை யெடுத்துக்கொண்டு, உலகிலியங்காமல் ஒரு குகைக்குட்சென்றடங்கினான். உலகிற் சிறிதும் காற்றோட்ட மில்லை. உலகினரனைவரும் மூச்சுவிட முடியாதவர்களாய்ச் சோர்ந்து வீழ்ந்தனர். மக்கள் மலநீர்க் கழிவு மில்லாதவர்களாகப் பெருவயிற்றுடனும் பேருடம்புடனுந் தோன்றினார்கள். யாவருஞ் செயலற்று அசையா திருந்தமையால் யோகஞ் செய்வாரை யொத்திருந்தனர். மூவுலகத்தினரு மிவ்வாறு துன்புறுவதைக் கண்டதேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், விஞ்சையர்கள் மற்றுமுள்ள துறக்க வாசிகள், வாயுவின் சினத்தினால் மகோதரராகியுள்ளோர் யாவருமொன்றுகூடி நான்முகனை யடைந்து முறையிடத் தொடங்கினர். பிதாமகனே! வாதராயன் மைந்தனாகிய அனுமானை, அமரர்கோன் தனது வச்சிரப்படையாற்றாக் கினமையாற் சோர்ந்தது வீழ்ந்து மாய்ந்தனன். அதனாற் காற்றோன் கடுஞ்சினமடைந்து உலகிலியங்காம லிருக்கின்றான். உலகத்தோர், சாலைப்போல வயிறு பெருத்துப் பூதம் போலக் கிடந்து புரண்டு துன்புறுகின்றனர். எங்கள் தலைவனே! இப் பொழுதே அவர்கள் துன்பத்தைப் போக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். உடனே நான்முகன், இந்திரன் முதலிய தேவர்கள் தன்னைச் சூழுமாறு, அனுமாரைப் பிழைக்கச் செய்து வாயுவை மகிழும்படி செய்வதாக வாயு விருக்குமிடத்தையுற்றான். வாயுவும் அனுமாரை மடியில் வைத்துக்கொண்டு அவருக்கு நேர்ந்த துன்பத்தை நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருப்பதைக் கண்டான். நான்முகன் வருகையைக் கண்ட வாயு மிக்க மனத்துயருட னெழுந்து வந்து அவனை வணங்கினான். நான் முகனுந் தனது கரங்களா லவனை யெடுத்து அஞ்சற்க, உனது மைந்தன் உயிர்பெற் றெழுவான் என்றியம்பி, அனுமாரின் உடம்பைத் தனது கையாற் றடவினான். தடவலும், வாடிய பயிர் மழைத்துளி விழுந்தவுடன் தளிர்த்துத் தலை நிமிர்ந் தெழுவது போல் அனுமாரும் உயிர்பெற்றெழுந்து நின்றார். மனத்து யரிலாழ்ந்திருந்த காற்றரசனும் உளங்களித் துலக முழுதும் பாய்ந்து வீசினான். உலகிலுள்ள உயிர்களெல்லாஞ் சோர்வு நீங்கி முன்னரே போல் இன்பமடைந்தன. தேவர்களனைவரு மகிழ்ந்து அனுமாரை நோக்கி வரங்கள் பலவளித்தனர். இந்திரன், தானடித்ததனா லுண்டான வடு நீங்குகவென்றும், அனுமானென்ற பெயர் வழங்கிடுகவென்றும், உலக முள்ளளவு மழியாப்புகழுடன் வாழ்க வென்றும், வரமளித் தான். சூரியன். எனது கதிரில் நூற்றிலொருபங்குனக் குண்டாகுக. எல்லாக் கலைகளையுமுணரத்தக்க ஆற்றலுண்டாகுக. நானே உனக்குக் கலைகளையும் போதிக்கின்றேன் என்ற வரங்களை ஈந்தான். வருணன் போர்க்களத்தில் எனது பாசத்தாலுன்னைக் கட்டினால் மரணமில்லாதிருப்பதாக என்றும், எமன், எனது தண்டத்தால் உனதாவி நீங்காதிருப்பதாக என்றும், குபேரன் எனது கதாயுதத்தால் உன துயிர் நீங்காதிருக்கக் கடவது என்றும், சிவபெருமான், எனது சூலத்தால் உனதுயிரகலா திருக்கக் கடவது என்றும், பிரமன், எனது பிரமதண்டத் தாலுனக்குச் சாவுண்டாகா திருப்பதாக. இறவாத வாழ்நாளு முண்டாவதாக என்றும், திருமால். தனது படைகளால் அழிவுண்டாகா திருக்க வென்றும், விசுவகன்மா, தேவர்களுடைய எந்தப்படைகளாலு மிவன் போர்க்களத்தில் மடியா திருப்பானாக என்றும் இவ்வாறு வரங்களை யளித்தார்கள். மற்றுமுள்ள தேவர்களும் முனிவர்களும் அளவற்ற வரங்கள் அளித்தனர். பிறகு நான்முகன் காற்றரசை நோக்கி உனது மைந்தன் வையத்தில் வாழ்வார்க்கும், வானில் வாழ்வார்க்குந் துன்பஞ் செய்யு மிராவணனுடைய இலங்கை நகரத்தை யெரியூட்டுவான். சூரியகுல மன்னனாகிய இராமன் மனமுவக்குமாறு அரக்கர் குலத்தை நாசஞ்செய்து, இராமனுடைய பேரருளால் பிரமபதத் தையும் பெறுவான் என்று கூறினன். பிறகு நான்முகன் முதலிய தேவர்களும், மற்றை முனிவர்களுந் தத்த முறைவிடத்தைச் சார்ந்தனர். இவ்வரங்களைப் பெற்ற அனுமார் மிகவு மகிழ்ச்சியுஞ் செருக்கு மடைந்தார். தன்னைப்போற் பலமுடையவர்கள் உலகி லொருவருமில்லை யென்பதை உணர்ந்தார். தனக்கு எவ்வழி யினாலுஞ் சாவில்லை யென்பதையு மறிந்தார். உடனே முனிவர் வாழ்கின்ற இடங்களை அடைந்து அவர்கள் வேள்விக்கென்று தேடி வைத்திருக்கின்ற, தயிர், பால், நெய் முதலியவைகளைக் குடித்தும் மரவுரிகளை யுடுத்துக் கொண்டும், யாகத்திற்கென வைத்திருக்குந் துடுப்புகளை எடுத்துக் கொண்டும் சென்று விடுவார். இச்செயல்களைக் கண்டு முனிவர்கள் சினந்து இவன் உன்மத்தனாகக் கடவது என்று சாபமிட்டான். அவரும் ஒன்றுந் தோன்றாதவராக அடங்கி யொடுங்கித் திரிந்துகொண்டிருந்தனர். பின்னர் அவராற் பல செயல்கள் நடை பெறவேண்டியிருப்பதால் முன்னிட்ட சாபத்தை நீக்கித் தன் பலந்தனக்குந் தெரியா திருக்கக் கடவது என்று சபித்தனர். அதுமுதல் அனுமார் மிகவுஞ் சாந்தமுடையவராக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, வாலியினால் அவன் தம்பி சுக்கிரீவன் துன்புறுத்தப் பட்டுத் தனியாக மதங்க வனத்தில் வாழ்கின்ற நாளில் அவனுடனுறைந்து வந்தார். இராமருக்கும், சுக்கிரீவனுக்கும் நட்புண்டாகிச் சுக்கிரீ வனைக் கிட்கிந்தைக்கு அரசனாகும் படியுஞ் செய்தார். அனுமார் எல்லாக் கலைகளையும் ஒரே நாளிற் சூரியன் பாற் கற்றுணர்ந்தார். இவர்தான் இராமாயணப் போரில் இராமருக்கு மிகவுந் துணை செய்தவர். இன்றும் இவர் இந்துக் களால் தெய்வமாகக் கொண்டாடப் பெறுவதைக் காண்கிறோம். இவர் வரலாற்றை இராமபிரானுக்கு அகத்திய முனிவர் கூறினார். இவ்வரலாறு ஒட்டக்கூத்தரியற்றிய இராமாயணம் உத்தரகாண்டத்திற் கூறப்படுகிறது. இளைப்பாறுதல் நமது யாக்கை ஒரு நீராவிப் பொறியைப் போன்றதாகும். நீராவிப் பொறிக்குள் இயங்கத்தக்க உறுப்புக்கள் பலவும், நிறுத்தத் தக்க உறுப்புகள் பலவும், அமைந்திருப்பன போல் நமதுடலிலும் இருக்கின்றன. இக்காலத்துப் பொறிகள் யாவும் மக்கள் தமதறி வின் மிகுதியாற் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களாலேயே நடத்தப் பெறுகின்றன. ஆனால் நமது உடற் பொறியோ ஆண்டவனா லாக்கப் பெற்று நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு இயந்திரம் இடைவிடாது ஓடிக்கொண்டே யிருக்குமாயின், அதிலுள்ள உறுப்புக்கள் பலவுங் கெட்டு விரைவிலழிந்து விடும். ஆகையால் இயந்திரங்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். அடிக்கடி அழுக்கைப் போக்கி எண்ணெ யிட்டு நன்னிலையில் அவைகளை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அவை நீண்ட நாளுழைக்கும். அதுபோலவே தான் நமதுடலுமிருக்கின்றது. நமதுடம்பிலுள்ள ஒவ்வோருறுப்பும் அளவு கடந்த வேலை செய்யுமாயின் சோர்வடைவதைக் கண்கூடாகக் காணலாம். நாம் ஒரு பொருளையே உற்றுப் பார்ப்போமாயின், சிறிது நேரஞ் சென்றபின், கண் வலி எடுக்கிறது, கண்ணீர் கலங்குகிறது, கூசுகிறது, இவை கண்ணின் சோர்வைக் காட்டு மடை யாளங்களாகும். ஏதேனுமொரு பொருளை மென்று தின்போமாயின் நேரங் கடந்தவுடன் வாய் வலியெடுக்கிறது, நாக்கிற்குச் சுவையறியும் வன்மை குறைகின்றன. இது, வாயின் சோர்வைக் காட்டுவதாகும். விரைவாகவும், நீண்ட தூரமும் நடப்போமாயின், கால்கள் சோர்வடைகின்றன. நிற்பதற்குக்கூட வலியற்றனவாகின்றன. உடலில் வெயர்வை காணுகிறது. ஒருவித சோர்வு முண்டாகிறது இவை உடம்பின் சோர்வையுங் கால்களின் சோர்வையுங் காட்டு வனவாகும். கைகளுக்கும் அளவற்ற வேலையைத் தருவோமாயின் அவைகளும் சோர்வடைகின்றன. ஆகையால் எல்லா உறுப்புக் களுக்கும் வேலை செய்வதினாற் சோர்வையடையுந் தன்மையுண்டு. வெளியிற் காணப்பெறும் உறுப்புகளேயன்றி உடலினுள்ளிருக்கு முறுப்புக்களும் அளவுகடந்த வேலையினாற் சோர்வடைவதுண்டு. மிகக் கடினமான உணவுகளை உண்டோமாயினும், அல்லது அளவுக்கு மீறிய வுணவை உண்டோமாயின், சோர்வும் கனைப்பு முண்டாகின்றன. அதற்குக் காரணம் உடலுள்ளிருக்கும் செரிமானக் கருவிகள் மிகுந்த பொருளைச் செரிமானஞ் செய்ய வியலாமல் வருந்துவதே யாகும். இதுமட்டோ, மிக்க சிந்தனை செய்வோ மாயினும், மிகுதி யாகப்படிப்போமாயினும் மயக்கமுஞ் சோர்வு மடைகின்றோம். அளவற்ற மகிழ்ச்சியினாலும், அளவற்ற துக்கத்தினாலேயும் உயிர்துறக்கவும் நேரிடுகின்றது. இவ்வாறு அளவுகடந்த வேலை யினால் எல்லா உறுப்புகளுஞ் சலிப்படைவதைக் காண்கின்றோம். ஆகவே அவைகளுக்கெல்லாம் உரிய காலங்களில் ஓய்வு கொடுத்துக் காப்பாற்றினால்தான் நாமிவ்வுலகில் நீண்டநாள் நோயற்ற வாழ்வு வாழமுடியும். எல்லா மக்களும் பகற் காலங்களில் உழைக்கின்றனர். இராக்காலங்களி லுறங்குகின்றனர். பறவைகளும் விலங்குகளுமிரவில் ஓய்வடைந்திருக்கின்றன. சில பறவைகள் பகலில் ஓய்வும் இரவில் உழைப்புமுடையனவா யிருக்கின்றன. மரஞ் செடிகொடிகளாகிய நிலையியற் பொருள்களும் இரவிலுறங்கு கின்றன. உயிர்ப்பொருள்களின் நன்மைக்கென்றே கடவுள் இரவைப் படைத்திருக்கின்றார். ஓய்வெடுத்துக் கொள்ளுவதற்குத் தகுந்த நேரம் இரவே யாகும். நிலையியற் பொருள்களும் இயங்கியற் பொருள்களும் இராப்பொழுதில் தான் வளர்ச்சி அடைகின்றன. நாம் பகல் நேரங்களிற் படிப்பதினாலும் விளையாடுவதினாலும், வேலை செய்வதினாலும், உண்டாகிய களைப்பை இரவிற் போக்கிக் கொள்ளுதல் வேண்டும். அதற்குத் தக்க மருந்து தூக்கமே யாகும். தூங்கும்போது ஒவ் வோருறுப்புக்களும் ஓய்வு பெற்றிருக்கின்றன. அதனால் தூங்கி விழித்தவுடன் புதிய உணர்ச்சியும், புதிய ஊக்கமுமுண்டாகும். பகல் நேரங்களிற் கூட மிகுந்த அயர்வு ஏற்படும்போது சிறிது தூங்கி விழிப்போமாயின் சோர்வு நீங்கி ஊக்கமுடையராவோம். அளவு கடந்து தூங்குவோ மாயினும் நோய்வாய்ப்பட நேர்ந்துவிடும். எதனையும் அளவோடு செய்தல்வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தூங்குவதற்கு முன்னர் நாம் கைக்கொள்ள வேண்டியன சிலவுள. உண்டவுடன் உறங்குதல் கூடாது. உணவு செரிமான மாகிய பின்னரே உறங்கப் புகவேண்டும். உண்டபின் நூறடி யுலாவ வேண்டுமென்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூறுவது உணவு செரிக்கும் பொருட்டே. உண்டவுடன் தூங்கத் தொடங்குவோமாயின் உணவு செரிக்காமல் தூக்கத்தைக் கெடுத்துவிடும். உண்டவுடன் மூளைக்கு மிகுந்த வேலையைக் கொடுத்தல் கூடாது. மூளை வேலை செய்யத் தொடங்கினால் உணவின் சாரம் உடம்பிற் சாராது. செரிமான முமாகாது. தூக்கமும் வராது. காப்பி, தேயிலை, கோக்கோ முதலியவைகளையும் உறங்குமுன் உட்கொள்ளுதல் தவறாகும். அவைகள் நரம்புகளுக் குணர்ச்சியை உண்டுபண்ணி, மனதிற்கிளர்ச்சியை யுண்டாக்கித் தூக்கத்தை அகற்றிவிடும். அது கெடுதலன்றோ? ஆகையால் இவைகளை முக்கியமாக ஒவ்வொருவருங் கவனிக்க வேண்டும். தூங்கும்போது கைக்கொள்ள வேண்டிய சிலவுள. மிகுந்த வெளிச்சத்தை வைத்துக்கொண்டு படுப்போமாயின் ஒளி கண்வழியே சென்று நரம்புகளுக்குணர்ச்சியைத் தருவதனால் நல்ல தூக்கமுண்டாகாது. ஓசைகள் ஒன்று மில்லா திருத்தல் வேண்டும். படுக்கையும் நன்றாக மெதுவாக உடம்பை உறுத்தாத தாக அமைந்திருக்க வேண்டும். இலவம் பஞ்சிற்றுயில் என்ற மூதுரை மிகவுங் கவனிக்கத்தக்கது. கை கால்களை நன்றாய் நீட்டவும் மடக்கவுங் கூடிய நல்லிடத்திற் படுக்க வேண்டும். குறுகலான இடங்களிற் படுத்துக் கை கால்களை நீட்டமடக்க முடியாமல் துன்புறுவோமாயினும் நித்திரை உண்டாகாது. எல்லாவற்றிலும் முதன்மையானது நல்ல காற்றோட்டமாகும். காற்றோட்டமில்லா விடத்திற் படுப்போமாயின் நோய்வாய்ப் படுவோம். நாம் விடும் மூச்சுக் காற்று மிகவும் நச்சுத் தன்மை பொருந்தியது. அக்காற்றை மீண்டும் உள்ளிழுப்போமாயின் பிணியடைவோம். காற்றில்லாத இடத்திற் படுப்போமாயின் நமது மூச்சுக் காற்றையே நாமிழுக்க நேரும். காற்றுள்ள இடத்திற் படுப்போமாயின், நல்லகாற்றை உட்கொள்ளுவோம். அதனால் தூக்கமும் நன்றாயுண்டாகும். உடம்புக்கு ஆரோக்கியம்; பிணியு மில்லை. மற்றுந் தூங்கவேண்டிய காலத்தில் தூங்காமலிருந்தாலும், தூங்கக்கூடாத காலத்தில் தூங்குவோமாயினும் பிணிவாய்ப் படுவோம். ஆகையாற் காலந் தவறாமல் ஒவ்வொரு செயல் களையுஞ் செய்தல் வேண்டும். சிலர் உடம்பிற்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்று கூறிக் கொண்டு எப்பொழுதும் வேலை செய்யாமல் உண்பது முறங்கு வதுமாக இருக்கின்றனர். அவ்வாறிருத்தல் மிகத் தீய செயலாகும். ஓர் இயந்திரத்தை ஓட்டாமல் வைத்திருப்போமாயின் அது விரைவிலழிவது போலவே முயற்சியில்லாத உடலும் நோயுற்று வருந்தி யழிந்துவிடும். ஆகையால் உடம்பிற்கு வேலையுங் கொடுக்கவேண்டும். ஓய்வுங் கொடுக்க வேண்டும். அவ்வாறிருந் தால் பல்லாண்டுகள் நோயின்றி வாழ்ந்து அடையவேண்டிய மக்கட்பிறப்பின் பயனையடைய முடியும். மேற்கூறிய முறைகளை மறவாமற் பழக்கத்திற்கொண்டுவர முயல்வது நமது கடமை யாகும். ஆசை அல்லல் விளைக்கும் அரசனுக்கு ஏவற்றொழில் புரியும் வேலைக்காரனொரு வனிருந்தான். அவன் ஒருநாள் மாலைப்போதில் ஊருக்குவெளியே சென்று திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு பெரிய ஆலமரமிருந்தது. அதில் ஒரு முனி வாழ்ந்து கொண்டிருந்தது. அவ்வழியே அந்த வேலைக்காரன் வரும்போது, உனக்கு ஏழுபானைகள் தங்கம் வேண்டுமா? என்றோர் ஓசை கேட்டது. வேலைக் காரன் சுற்றிச்சுற்றி நாற்றிசை களையும் நோக்கினான். ஒருவருங்கண்ணிற்குப் புலப்படவில்லை. தங்கம் என்ற மொழியைக் கேட்டவுடனேயே பேராசை கொண்ட வேலைக்காரன், எனக்கு வேண்டும் என்று விடை கூறினான். உடனே ஏழு பானைகள் தங்கத்தையும் உனதில்லத்திற் கொண்டு போய் வைத்து விட்டேன். சென்றெடுத்துக்கொள் என்ற மறுமொழியுண்டாயிற்று. அதுகேட்ட வேலைக்காரன், பேராசையும், பெருமகிழ்ச்சியும், ஐயமுங்கொண்டு உண்மை யாராயும் பொருட்டு, விரைந்து வீடு வந்துற்றான், வீட்டினுள் ஏழு தங்கப் பானைகளுமிருந்தன. ஏழு தங்கப்பானைகளையு மொவ்வொன்றாகத் திறந்து பார்க்கும்போது ஆறு பானைகளில் தங்கம் நிரம்பியும், ஒன்றிற் பாதியளவு மிருந்தது. பாதியளவு தங்கமிருக்கும் பானையையும் நிறைந்த பானையாகச் செய்துவிட வேண்டு மென்னும் விருப்பம் பெருகிற்று. அதனாலவன் தன்னிடமிருந்த பல பொருள் களையும் விற்றுத் தங்கமாக்கி அப்பானையிற் போட்டான். அப்படியும் பானை நிறையவில்லை. பின்னர் ஒவ்வொருநாளுந் தானீட்டும் பொருளையுஞ் செலவு செய்யாமல் தன் மனைவி மக்களையும் பட்டினியாகக் கிடத்தித் தானும் பட்டினிகிடந்து அப்பானையில் நிறைத்தான். அவ்வாறு செய்தும் பானை நிறைந்த பாடில்லை. பின்பு, தான் வேலை செய்துவரும் அரசன் பாற்சென்று தனக்குக் கொடுக்கும் ஊதியம் போதவில்லை யென்றும், இன்னு மிருமடங்கு கூட்டித்தர வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டான். அரசனும் அவனது வேண்டுகோட் கிணங்கி அவன் கூலியை மிகுத்துக் கொடுத்தான். வேலைக்காரன் அப் பொருளையுஞ் செலவுசெய்யாமற் பானையிலேயே நிரப்பினான். அப்பொழுதும் பானை நிரம்பியபாடில்லை. வேறு எவ்வழியிற் பொருளை ஈட்டிப் பானையை நிறையச் செய்வ தென்று ஆராய்ந்து, முடிவாக ஓய்வு நேரங்களிற் பிச்சை யெடுப்பதெனத் தீர்மானித்து அங்ஙனமே செய்தான். ஐயமேற்ற பொருளையுந் தங்கமாக்கி அக் குறைவான பானையிலிட்டும் நிரம்பவில்லை. வேலைக்காரன் இதனாற் பெருங் கவலை கொண்டான். அல்லும் பகலும் பானையை எவ்வாறு நிறையச் செய்வதென்ற கவலையிலேயே மூழ்கியிருந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சியென்பதே இல்லை. துக்கமுங் கவலையுமே குடிகொண்டிருந்தன. தங்கத்தின்பாற் கொண்ட பேராசை அவ்வாறு பங்கப் படுத்திக்கொண்டிருந்தது. இவ்வாறு பலதிங்கள் கழிந்தன. ஒருநாள் அரசன், வேலைக்காரன் முகத்தைப்பார்த்து, நீ ஏன் வருந்திய முகத்துடன் காணப்படுகின்றாய்! உனக்குக் குறைந்த கூலி கொடுக்கின்ற காலத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனையே! இப்பொழுது மிகுந்த கூலி பெற்றும் மகிழ்ச்சியின்றி இருப்பதற்குக் காரணமென்ன? என்று கேட்டான்; வேலைக்காரன் உண்மைகூற அஞ்சி, ஒன்றும் விடைகூறத் தோன்றாதவனாக, ஏதோ கூற வாயெடுப்பதும், பிறகு பேசாதிருப்பதுமாக இருந்தான். அதுகண்ட அரசன், ஏன் உள்ளதைக் கூறாது ஒளிக்கின்றனை? ஏழு தங்கப் பானைகள் உன்னிட மிருக்கின்றனவா? என்றான். உடனே வேலைக்காரன் மிகவுமஞ்சி ஆம் அரசே! என்பால் தங்கப் பானைகளிருக்குஞ் செய்தியை யொரு வருமறிய மாட்டார்களே! தங்களுக்கு எவ்வாறு தெரிந்தது என்றான். ஏழு தங்கப்பானைகளைப் பெற்றிருப்பவனெவனு மிவ்வாறு தானிருப்பான். அம்முனிவன் என்னையொருநாள் ‘ஏழு தங்கப் பானைகள் வேண்டுமா? என்று கேட்டான். நான், அது செலவு செய்யவேண்டிய பொருளா? புதைத்து வைக்கவேண்டிய பொருளா? என்று கேட்டேன். அம்முனிவன் ஒன்றும் விடை கூறா தோடிவிட்டான். அம் முனியின் பொருளை யொருவராலுங் கைக்கொண்டு செலவழிக்க இயலாது. அப்பொருளைப் பெற்றோர் உன்னைப்போலவே பேராசை மிகுந்து பெருந் துன்புறுவர். ஆதலால் உடனே அப்பொருளை அம்முனியிடமே கொடுத்துவிடு, அப்பொருள் உன்னைவிட்டு அகன்றால்தான் நீ மகிழ்ச்சியும் திருப்தியுமான மனமுடைய வனாவாய் என்று அரசன் கூறினான். அரசன் மொழிகளைக் கேட்ட வேலைக்காரன் உண்மை யறிந்து, அம்முனியிருந்த ஆலமரத்தண்டை அணுகி முனிவனே! உனது பொருள் எனக்கு வேண்டுவதில்லை. நீயே திரும்பவு மெடுத்துக்கொள் என்று கூறினான். ஆகட்டும், எடுத்துக் கொண்டேன் என்று மறுமொழி யுண்டாயிற்று. அப்பால் வேலைக்காரன் தனதில்லத்தை யடைந்து நோக்க, ஏழு தங்கப் பானைகளும் காணாமற் போயின. வேலைக்காரன் பலவாண்டு களாகத் தேடிய பொருள்களை யெல்லாம் பேராசையாற் பறிகொடுத்ததை எண்ணி யெண்ணி மனம் வருந்தினான். அன்று தான் ஆசை அல்லல் விளைக்கும்; பேராசை பெரும் தரித்திரம் என்று கூறியுள்ள பழமொழிகளின் உண்மைப் பொருளை அவன் உணர்ந்தான். ஜராசந்தன் மகதநாட்டிற் கிரிவிரச மென்னும் நகரத்தை மாரதன் என்னும் மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான். அவனுக்கு மனைவியர் இருவரிருந்தனர். அம்மன்னனுக்குப் பல ஆண்டுகளாகியும் புத்திரப் பேறின்மையால், மனம் வருந்தித் தவஞ் செய்தாயினும் புத்திரப் பேற்றை யடைவோமென்றெண்ணிக் கானகத்தை அடைந்தான். அங்கே சண்டகௌசிகனென்னும் முனிவனொருவன் ஒரு மாமரத்தின் கீழமர்ந்து தவஞ்செய்து கொண்டிருப்பதைக் கண்டு, மன்னனுக்கு வாழ்த்துக்கூறி அரசாளுஞ் செல்வம் படைத்த நீ அதனை விடுத்துத் தனியாக ஈண்டு வருவதற்குக் காரணமென்ன என்று கேட்டான். அதற்கரசன் முனிவர் பெருமானே! எத்தகைய செல்வமும் மக்கட் செல்வத்திற் கீடாமோ? மக்களின்றி வேறு எத்தகைய செல்வங்களைப் பெற்றிருந்தும் பயனென்ன? யான்மக்கட் செல்வம் பெறாத வனானேன், அச்செல்வம் பெறவேண்டியே இங்குற்றேன் என்று கூறினான். அப்பொழுது காற்று ஓங்கி வீசியதால், அவர் களிருந்த மாமரத்தி லிருந்து ஒருகனி வீழ்ந்தது. முனிவன் அதையெடுத்து மன்னனிடமளித்து அரசே! இக்கனியை உனது மனைவியிடங் கொடுத்துண்ணச் செய்! நன் மகனொருவன் தோன்றுவான் என்று கூறினான். அரசனுமதனைப் பெற்று மகிழ்ச்சியுடன் நகரத்தை அடைந்தான். மாரதமன்னன் தனதரண்மனையையடைந்து, மனைவி யரிருவரையு மழைத்து அம் மாங்கனியைக் கொடுத்துண்ணு மாறு கூறினான். இருவரும் அதனைப் பிளந்து ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொருவ ருண்டனர். ஒரு மகவு பிறக்கு மென்றளித்த ஒரு கனியை இருபிளவாகப் பிளந்து இருவருண்டமையால் மகவும் இருபிளவாகி ஒவ்வொருவர் வயிற்றிலும் ஒவ்வொரு பாதி வளர்ந்தது. பத்துத் திங்கள் சென்றபின் இருவரும் பாதிக் குழந்தையை ஈன்றனர். அரசனதனைக்கண்டு, அஞ்சித்தான் புரிந்த குற்றத்தை யுணர்ந்து, வருந்தி, அப்பாதி யுருவங்களை நகரத்திற்குப் புறத்தே வீசி யெறியக் காவலர்களுக்குக் கட்டளை யிட்டான். அவ்வாறே அவர்களு மெறிந்துவிட்டனர். அன்றிரவு, அந்நகரத் தெய்வதமாகிய ஜரை என்னும் பெயருடைய அம்மை யார், அக்குழந்தைப் பிளவுகளை யுண்ணும் பொருட்டெடுத்து ஒன்று சேர்த்தாள். குழந்தைப் பிளவுகளும் ஒன்றுபட்டுயிர் பெற்றது. பின்னர் அதனை உண்பதற்குத் துணியாதவளாக, மாரத மன்னனிட மீந்து, இம்மகனைச் சராசந்தனென்ற பெயரிட்டு வளர்த்துக்கொள் என்று கூறி மறைந்தாள். அரசனும் அவனை அன்போடு வளர்த்துச் சகல கல்விகளையும் கற்பித்துப் பிறகு தனதரசை அளித்து விண்ணவர்க்கு விருந்தானான். சராசந்தன் மிக்க பேராற்றல் வாய்ந்தவ னாதலின் இவ்வுலகமுழுதும் ஒரு குடைக்கீழ், தானே ஆளவேண்டு மென்றெண்ணி, அதன்பொருட்டு நரமேதயாகஞ் செய்ய முடிவு செய்தான். நரமேதயாக மென்பது எண்ணாயிரமுடி வேந்தர் களைப் பலிகொடுத்துச் செய்யும் வேள்வியாகும். அவ்வேள்வி யைச் செய்தா ரிதுவரை யொருவருமிலர். அத்தகைய வேள்வியை யாற்றும் பொருட்டுப் பல மன்னர் களுடனும் போர்புரிந்து அவர்களைப் பிடித்துச் சிறையிலடைத் திருந்தான். இவனால் சிறைப்பட்ட முடி மன்னர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். சராசந்தன் என்ற பெயரைக் கேட்டால் மண்ணுலகத்தா ரனைவரும் விண்ணுலகத்து அரசனான இந்திரன் முதலிய இமையவர்களும் கூட அஞ்சி நடுநடுங்கி மெய் விதிர்ப்பார்கள். சராசந்த னிவ்வாறிருக்குங் காலத்திற் பாண்டவர்கள் இந்திரப்பிரத நகரத்தை ஆண்டு வந்தனர், ஒருநாள் தருமன், தம்பியர்கள் நால்வருடனும், கண்ணனுடனும், மன்னர்களும் முனிவர்களுஞ் சூழ அரசு வீற்றிருந்தான். அப்பொழுது நாரத முனிவர் அங்குவந்தார். அவர் வருகையைக் கண்டவுடன் தருமன் எழுந்தெதிர் சென்று வணங்கி அழைத்து வந்து, ஓரிருக்கையி லமரச் செய்து முகமனுரைகள் கூறி வழி யிளைப்பையு மாற்றினான். நீர்வர யான் செய்த தவம் யாதோ வென்று போற்றினான். தம்பியர்களுந் தனித்தனியே வணங்கினர்கள். கண்ணனுங் கண்ணால் நோக்கிக் களிகூர்ந்தான். பின்னர் நாரத முனிவர் தருமனையு மவன் தம்பியரையும் நோக்கி நான் பல உலகங்களையுஞ் சுற்றிக்கொண்டு வருங்கால் காலனூரில் உங்கள் தந்தையராய பாண்டுமன்னனைக் கண்டேன். அவன் உங்களை இராசசூய யாகஞ் செய்யும்படி கூறினான். இச்செய்தியைக் கூறவே யான் வந்தேன் என்று கூறி விடை பெற்றுச் சென்றார். பின்னர்த் தருமனுந் தம்பிமாருங் கண்ணனுங்கூடி ஆராயும் போது கண்ணன் என் மனத்திலும் அவ்வெண்ணமுண்டு. ஆனால் நரமேத வேள்வி யாற்றும் பொருட்டுச் சராசந்த மன்னன் ஆயிரக்கணக்கான முடிவேந்தர்களைச் சிறை யிலடைத் திருக்கின்றான். அவனை மடித்தால் நாம் வேள்வியை நிறைவேற்ற முடியும், அவனுடன் போர்புரியமாட்டாமல் கோடிக் கணக்கான மன்னர்கள் ஒடி ஒளிந்துகொண்டிருக்கின்றனர். அவனைத் தொலைக்க வல்லார் யாரிருக்கின்றனர்? இது காறும் அவனுடன் போர்புரிந்து வெற்றிபெற்றார் ஒருவருமே இலர். உலகிற் பல மலைகளிருப்பினும் பாற்கடலைக் கடையவல்லது மந்தர மலையன்றி மற்றொன்றாலாகுமோ? அதுபோல அவனைக் கொல்லவல்லான் பீமனன்றிப் பிறரிலர். ஆதலாலவனை முதலில் முடித்தபின்னரே வேள்விக் குரிய செய்கைகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினான். கண்ணன் கூற்றைத் தருமன் முதலிய அனைவருமேற்றனர். அப்பொழுதே கண்ணனும், பீமனும், அருச்சுனனும் பார்ப்பன வடிவுகொண்டு புறப்பட்டனர். காடுகள் மலைகள் ஆறுகள் பலவற்றையுங் கடந்து இரண்டுநாளில் கிரிவிரச நகரத்தை யடைந்து அரண்மனை வாயிலைச் சேர்ந்து, காவலரை அழைத்து அந்தணர் மூவர் வந்தனர் என்று சராசந்தனிடங் கூறுமாறு சொல்ல. அவர்களும் விரைந்தோடிக் கூறினர். மன்னவனும் அம்மூவரையுமழைத்துத் தனித்தனி இருக்கைகள் அளித்து வணங்கினன். சராசந்தன் போலி அந்தணர்கள் மூவர் களையும் உற்றுநோக்கி அவர்கள் தோற்றத்தையும், தோளில் விற்குறியிருப்பதையுங் கண்டு இவர்கள் அந்தணர்களல்லர் என்றறிந்து நீங்கள் உண்மை யந்தணர்களல்லீர்! யாவர்? என்று கேட்டான். அதற்குக் கண்ணன் நாங்கள் அந்தணர்களல்ல. அரசர்களே! நான்யாதவகுலத்து மன்னனாகிய கண்ணன். இவர்கள் குருகுல மன்னனாகிய தருமனுக் கிளையவர்கள். இவர்களிலொருவன் வாயுவின் குமாரன் பீமனென்பவன், மற்றவன் இந்திரன் மதலையாகிய அருச்சுனன் என்பவன். அரசவடிவுடன் உனது நகரத்தை அணுக முடியாதாதலின், பார்ப்பனவேடம் பூண்டு உனது நகர் வளங் காணும் பொருட்டு வந்தோம் என்று கூறினான். உடனே சராசந்தன், பல நாட்களாகப் போர் முகத்தைக் காணாமல் எனது தோள்கள் தினவெடுக்கின்றன. ஆதலால் நீங்கள் என்னுடன் செருச்செய்ய வாருங்களென்றழைக்க கண்ணன், எங்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்துகொண்டு அவருடன் போர் புரியென்று கூறினான். சராசந்தன் நீ என்னுடன் போர்புரிவதற்குத் தகுதியுடையவனல்லை. முன் பதினெட்டுத் தடவை என்னுடன் சண்டை செய்து வெற்றி கொள்ள முடியாமல், மதுரா நகரத்தை விட்டோடிக் கடல் நடுவிலுள்ள, துவரைப்பதியை அடைந்தனை. வாசவன் மைந்தனோ மிகவு மிளைஞனாகக் காணப்படுகின்றான். ஆதலாலவனு மென்னுடன் போராற்றப் பொருத்த முடையவனல்லன். ஆனால் பீமன் ஒருவனே என்னுடன் பொருதத் தக்கவனாகக் காணப்படு கின்றான். அவனுடன் பொருது அவனை விண்ணுலகிற் கனுப்புகின்றேனென்று கூறினான். பீமனும் அங்ஙனமே மனது களிகூர்ந்து அவனுடன் போருக்குப் புறப்பட்டான். அப்பொழுதே சராசந்தன், தனதமைச்சர்களையுஞ் சேனைத் தலைவர்களையு மற்றைய சுற்றத்தவர்களையு மழைத்துத் தன் எண்ணத்தை அவர்களிடம் கூறித் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டுப் போர்க்களமடைந்தான். பீமனும் சராசந்தனு மந்தரமலையு விந்தியமலையு மெதிர்ந்தனபோலக் கடும்போர் புரிந்தனர். ஒருவரொருவரைக் கொல்லுதற்கு முயன்றனர். இருவருஞ் சோர்ந்தனர். இவ்வாறே பதினைந்து நாட்களிரவு பகலாகப் பெரும்போர் புரிந்தனர். பதினைந்தாம் நாள் இருவருஞ் சோர்ந்து வீழ்ந்தனர். அப்பொழுது பீமன் முதலில் எழுந்து சராசந்தனைப் பிடித்து இரணியனை நரசிம்மம் பிளந்தது போலப் பிளந்தெறிந்து ஆரவாரித்தான். பிளந்தபிளவு ஒன்றாய்ச் சேர்ந்து மீண்டும் சராசந்தன் போருக்கு வந்தான். மீண்டும் பீமன் அவனை இரண்டாகப் பிளந்து கண்ணன் காட்டிய குறிப்பின் படி தலைகீழாக மாற்றி யெறிந்தான். தலைமாடு கால்மாடாக எறிந்ததும் சராசந்தன் மாண்டான். உடனே மண்ணவரும் விண்ணவரும் பீமனைப் புகழ்ந்து கொண்டாடினர். பின்னர் பீமனும், அருச்சுனனும், சராசந்தனுடலம் ஒன்று சேர்ந்து உயிர்பெற்று வந்து போர் செய்ததன் காரணம் யாதெனக் கண்ணனைக் கேட்டனர். கண்ணன் அவன் பிறந்த வரலாற்றைக் கூறி ஐரையென்னுந் தேவியினால் பொருத்தப் பட்ட உடலாதலால் அவ்வாறு ஒன்று சேர்ந்து வந்து போர் செய்ததெனக் கூறினன். பின்னர் அவர்கள் சராசந்தனால் சிறை செய்யப்பட்டிருந்த மன்னர்களைச் சிறை நீக்கிச் சராசந்தன் மைந்தனிடம் மிகுதியான செல்வங்களை வேள்விக்காகப் பெற்றுக்கொண்டு மீண்டும் இந்திரப் பிரத மடைந்து நடந்த நிகழ்ச்சிகளைத் தருமனுக்குக் கூறினன். உண்மை கூறல் இவ்வுலகில் நம்மை அனைவரும் நல்லவர்கள் என்று கூறும்படி ஒழுகவேண்டும். அதுதான் நாம் மக்கட் பிறவி எடுத்தமைக்கு அழகாகும். அறிவுடையவரென்று எண்ணப்படுவதற் கிசைந்ததாகும். நாம் வஞ்சகமின்றி உண்மை நெறியிலொழுகுவோமாயின் நல்லவரென்று கொண்டாடப் படுவோம். அதற்கு முதலிற் கைக்கொள்ள வேண்டுவது வாய்மை யாகும். வாய்மை, உண்மை, மெய்மை, சத்தியம், என்பன ஒருபொருட் சொற்கள். வாய்மை என்ற சொல்லை எடுத்து ஆராய்வோமாயின் உண்மை கூறுவதை எவ்வளவு கட்டாயமாகக் கைப்பற்ற வேண்டுமென்பது விளங்கும். வாயின் தன்மை என்பது வாய்மை என்ற சொல்லின் பொருளாகும். ஆகவே வாயின் தன்மை உண்மை புகல்வதன்றிப் பொய்மை புகல்வதன்றென்பது நன்கு பெறப்படுகின்றது. இளங் குழந்தைகளைப் பாருங்கள், அவர்கள் கண்ணாற் கண்டதை வாயினாற் கூறுவார்களேயன்றி, சேர்த்துக் கூறவோ குறைத்துக் கூறவோ அறியமாட்டார்கள். அக்குணந் தான் வாயின் குணமாகும். நாம் பெரியவர்களான பின்னரே உலகிற் பொய் கூறவும், அதற்குச் சார்பான பிறதீய செய்கை களைச் செய்யவுந் தொடங்குகின்றோம். ஆதலால் தீய செயல்களிற் செல்லாது நல்வழியில் ஒழுகுங் கருத்துடையார் உண்மை கூறுவதைக் கைக்கொள்ளவேண்டும். சில காலங்களிற் சில சிறு பொய்களைக் கூற முற்படுவதும் இயற்கையே. ஆனால் அப்பொழுதே அதனை அறிவினாற்றடை செய்ய வேண்டும். விளையாட்டாக வேனும் முதலிற் பொய் கூறுவோமாயின் பின்னர் அதுவே வினையுமாகும். விளை யாட்டே வினையாகும் என்பது தமிழ்ப் பழமொழி யாகுமல்லவா? முதலில் ஒரு பொய்தானே என்று சொல்லத் துணிவதுந் தவறு. அவ்வொரு பொய்யைப் பிறர் நம்பச் செய்வதற்குப் பல பொய்கள் மொழிய நேரிடும். ஆதலால் ஒரு பொய்கூடக் கூறத் துணிதல் கூடாது. முதலில் நாம் பொய்யர் என்ற பெயர்பெற்று விடுவோ மாயின், பின்னர் நாம் சொல்வன வனைத்தும் பொய்யாகவே கருதப்படும். உள்ளபடியே உண்மை கூறுவோ மாயினும் அதனைப் பிறர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நமக்கு ஏற்படும் நலன்களெல்லாம் போய்விடும். மக்களுடைய கூட்டுறவைப் பெற்றால் தான் உலகில் நலமுடன் வாழமுடியும். மக்களுடைய கூட்டுறவு கிடைக்கவேண்டுமாயின் ஒருவர்க்கொருவர் பற்றுடையராதல் வேண்டும். நம்மையும் நமது மொழிகளையும் ஒருவர் நம்பாமற் செய்து கொள்வோமாயின் நமக்கு மக்களின் கூட்டுறவு எவ்வாறு கிடைக்கும்? மக்களின் கூட்டுறவையும் நன்மதிப்பையும் அடையாவிடில் நமக்கிவ்வுலகில் என்ன நலமுண்டு? ஆதலால் மக்களின் கூட்டுறவைப் பிரித்து வைக்கும் பொய்யென்னும் பகைவனையகற்றி மக்களின் கூட்டுறவை யுண்டாக்கும் உண்மையென்னும் உயர்ந்த நண்பனை நாடிப் பெற முயலவேண்டும். பண்டைய வரலாறுகளிற் பொய் சொல்லாதவர்கள் பெற்ற பெருமையைச் காண்கின்றோம். அரிச்சந்திரன் என்ற மன்னவன் வரலாற்றை யார்தான் அறியமாட்டார்? அம்மன்னன் புகழ் இன்றும் உலகில் நிலவுவதற்குக் காரணம் அவன் பொய் சொல்லாதிருந்தமையாகும். அவனைப் பொய் கூறச் செய்ய வேண்டுவதற்காக விசுவாமித்திரன் படுத்திய துன்பத்தை நினைக்கும்பொழுது நம் நெஞ்சம் நடுங்குகின்றது. நாட்டை இழந்தான், நகரை இழந்தான், நண்பரை இழந்தான், உறவினரை இழந்தான், மனைவியை இழந்தான், மகனை இழந்தான், இவற்றையெல்லாம் மீட்டும் பெறுதற்கு ஒரு பொய் கூறென்று விசுவாமித்திரன் வேண்டியும் பொய் கூற மறுத்தான். எத்தகைய துயரம் நேர்ந்தும் உண்மையை விடத் துணியாதிருந்தான். இதுதான் உண்மையினுறுதியாகும். நாமும் அரிச்சந்திரனைப் போலவே உண்மையானவர்களாக நடந்துகொள்ள வேண்டும். பொய்மை என்பது பிறர்க்குத் தீங்கு பயக்குந் தீய சொற்களேயாகும். பிறர்க்குத் தீமை பயக்காத நன்மொழி களனைத்தும் உண்மைமொழியாகும். பிறர்க்கு நாம் தீமை செய்வதால் பிறரும் நமக்குத் தீமைசெய்வது கண்கூடு. பிறருக்கு நாம் நன்மை செய்தால் பிறரும் நமக்கு நன்மை செய்வார்க ளென்பது கண்டறிந்த உண்மை. ஆகையினால் பொய்ம்மை யகற்றி மெய்ம்மை புகலுதல் மேன்மையாகும். நமது உடம்பிற் படிந்த அழுக்கை நீரினாற் கழுவித் தூய்மை செய்து கொள்ளுகிறோம். அதுபோல மனத்தினழுக்கையும் போக்கிக்கொள்ளவேண்டும். அழுக்கடைந்த மனத்தில் ஆண்டவன் எழுந்தருளி அருள்செய்யமாட்டான். நாம் குப்பை நிறைந்த இல்லத்திற் குடிபுக விரும்புவோமா? தூய்மையான வீட்டையல்லவா விரும்புவோம்? நம்மைப் போலவேதான் ஆண்டவனும் அழுக்கற்ற மனத்தையே அடைவான். மனத்தை அழுக்கின்றி வைத்திருக்க வேண்டுமாயின் உண்மை கூறவேண்டும். இதனைத் திருவள்ளுவர். புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மை யாற் காணப்படும் என்று கூறியதனா லறியலாம். உலகிலுள்ள அறங்களிற் சிறந்தது பொய்யாமையே யாகும். உண்மை கூறுதல் உயிர்த்துணையாகக் கொள்வோமாயின், அதுவே எல்லா அறங்களையும் ஆற்றிய பயனை அளிக்க வல்ல தாகும். ஆதலால் நாம் பொய் கூறுதலை அடியோடகற்றி மெய் கூறுதலிலேயே ஈடுபடவேண்டும். மெய் கூறுவதால் எத்தகைய தீமை நேரினும் அஞ்சாம லேற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய உறுதி கொள்வோமாயின் தீமையும் நம்மை அணுகாது. இம்மை மறுமை இன்பங்களை அளிக்கவல்லது உண்மையொன்றே என்பதைச் சிந்தையிற் கொள்வோமாக. பாபரும், விடாமுயற்சியும் இந்தியாவை ஆண்ட முகமதிய மன்னர்களிற் பாபர் மிகவும் புகழ்வாய்ந்த மன்னர். அவர் இளமையிலிருந்து தான் செய்த செய்கைகளை யெல்லாந் தானே வரைந்திருக்கின்றார். தன் வரலாற்றைத் தானே எழுதிய இந்திய நாட்டு மன்னர் களிலிவர் தலை சிறந்தவராவர். அவர் வீரத்திலுங் கடவுளன் பிலும், நீதியிலுஞ் சிறந்தவர். தன் முயற்சினாலேயே உயர்ந்த பதவியைப் பெற்றவர். இவர் தயாமூர் குலத்திற் பிறந்தவர். இவருடைய பெற்றோர் இவர் சிறு வயதினரா யிருக்கும்போதே இவரை நிராதரவாய் விட்டு விட்டு உயிர் துறந்தனர். பாபர் தனது பன்னிரண்டாம் ஆண்டிலேயே மத்திய ஆசியாவிலுள்ள பர்கனா நகருக்கு மன்னரானார். அவ்விளம் பருவத்திலேயே தமதரசியலைச் சிறந்த முறையில் நடத்துந் திறமைபெற்று விளங்கினார். அப்பொழுது சமர்க் கண்டென்னும் நகரத்தை ஆண்ட அவரது சிற்றப்பன் காலஞ் சென்ற செய்தி யறிந்து அதனையுந் தமதாட்சிக் குட்படுத்துதற்குப் புறப்பட்டுச் சென்றார். அதனையுங் கைப்பற்றினார். இதற்குள் பர்கனாவில் கலகம் நேர்ந்ததென்று கேள்வியுற்று அதனை யடக்கும் பொருட்டுச் சமர்க்கண்டிலிருந்து புறப்பட்டு வந்தார். வரும் வழியில் அவருக்கு உடல் நோய் கண்டு மிகவும் வருந்தலானார். நோயின் கொடுமையினால் சமர்க்கண்டுக்கும் செல்ல முடிய வில்லை; பர்கனாவுக்கும் போக முடியவில்லை. ஆகையால் வழியிற் சில மாதங்கள் தங்கினார். உடல் நலமெய்திய பின்னர், சமர்க்கண்டும், பர்கனாவும் தனதாட்சியை விட்டு அகன்று விட்டதென்று செய்தி யறிந்தார். அப்பொழுது தன்னை விட்டகன்ற இரண்டரசுகளையும் கைப்பற்று தற்குரிய ஆற்றல் அவரிடமில்லை. அதனாலவர் சில ஆண்டுகள், காடுகளிலும், மலைகளிலும் திரிந்து கொண்டி ருந்தார். ஆயினும் அவருக்கு எவ்வாறேனும் பர்கனாவையும் சமர்க்கண்டையும் கைக்கொண்டாள வேண்டு மென்னும் ஆவல் நிறைந்திருந்தது. அதற்கேற்ற முயற்சிகளையுஞ் செய்துகொண்டி ருந்தார். அம்முயற்சியின் பயனாகச் சமர்க்கண்டையும் பர்கனாவையும் மீண்டும் பிடித்துச் சில நாளாண்டார். மறுபடியும் அவைகளை இழக்க நேர்ந்தது. இவ்வமயத்தில் அவரடைந்த துன்பங்கள் மிகப் பல. அவருடைய உற்றாருறவின ரனைவரும் அவரை வெறுத்து விட்டனர், உயிர்த் தோழர்கள் சிலரே அவருடனிருந்தனர். இச்சமயத்தில் அவருடைய வாழ்க்கை நிலையற்ற வாழ்க்கையாயிருந்தது. காட்டிற் சில நாட்களும் நாட்டிற் சில நாட்களும் மலையிற் சில நாட்களுமாக ஓடித்திரிந் தார். அக்காலத்திலும் அவருடைய ஊக்கமும் முயற்சியும் அஞ்சாமையும் சிறிதுந் தளரவில்லை. எவ்வளவு முயன்றும் மீண்டும் பர்கனாவையுஞ் சமர்க்கண்டையும் பிடிக்க முடிய வில்லை. ஆதலால் அம்முயற்சியைக் கைவிட்டார். பின்னர் விடா முயற்சிகொண்டு அதன் பயனாகக் காபூலைக் கைப்பற்றி அதற்கு அரசரானார். பாபர் காபூலி லாண்டுகொண்டிருக்கும்போது, அவருடைய நோக்கம் இந்தியாவின் மீது சென்றது. இந்திய நாட்டை எவ்வாறாயினும் கைப்பற்றியாள எண்ணங் கொண்டார். அது முதல் காபூலிலிருந்தபடியே இந்தியாவின் நடவடிக்கைகளை உற்றுநோக்கி அதனைக் கைப்பற்றுதற்குரிய வழிகளையு மாராய்ந்து கொண்டிருந்தார். அக்காலத்தில் டில்லியில் ஆட்சி புரிந்த சுல்தான் திறமையற்றவராக இருந்தார். பாபர் ஆயிரத்து ஐந்நூற்று இருபத்தாறாம் ஆண்டில், டில்லியின்மீது படை யெடுத்து வந்தார். அவர் பெரிய பீரங்கிகளைக் கொண்டு போர்புரிந்தார். பாபர் டில்லி நகருக்குப் புறத்தில் போர் நடைபெறுமிடத்தில் தமது படைகள் நின்று போர் புரிவதற்காகப் பள்ளங்கள் வெட்டுவித்து நூற்றுக்கணக்கான பீரங்கி வண்டி களையும் படைகளைச் சுற்றி நிறுத்திவைத்தார். இத்தகைய யுத்த முறைமையை முதலில் இந்தியாவில் நடத்தி யவர் பாபர் மன்னர்தான். இத்தகைய போர்த் தந்திரங்கள் சுல்தானுடைய படைகளுக்குத் தெரியாது. ஒரே நாட்போரில் சுல்தானும் அவரது படைகளும் போர்க்களத்தில் வீழ்ந்தனர். பாபரும் வெற்றி முழக்கமுடன் டில்லி நகருக்குள் நுழைந்தார். அங்ககப்பட்ட உயரிய செல்வங் களைத் தனது படைகளுக்குப் பரிசாக வளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். அவரிடந் திறமை பெற்ற குதிரைவீரர்கள் பலரிருந்தனர். அவருங் குதிரையி லிருந்து போர் செய்வதில் மிகவுந் திறமை வாய்ந்த வீரர். ஆதலால் அவர்களைக்கொண்டு டில்லியைக் கைக்கொண்ட பின்னர் ஆக்ராவையும் பிடித்துக்கொண்டு அங்குந் தமதாட்சியை நிலை நிறுத்தினார். பாபர் டில்லியையும் ஆக்ராவையுங் கைக்கொண்ட செய்கையைக் காபூலி லிருந்தவர்களறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பாபருங் காபூலிலுள்ள ஒவ் வொருவருக்குந் தக்க பரிசுகள் கொடுத்துவிட்டார். ஆக்ராவில் தமக்குக் கிடைத்த செல்வங்களையும் படைகளுக்குப் பரிசாகக் கொடுத்தார் அங்கு அகப்பட்ட கோகினூர் என்ற வயிரக்கல் மிகவும் விலையேறப் பெற்றதாகும். அதனைத் தனதருமை மகனாகிய ஹுமாயூன் என்பவனுக்கு வெகுமதியாக ஈந்தார். அவ்வயிரம் இப்பொழுது இலண்டன்மாநகரில் வாழும் பெருமை தங்கிய நமது அரசச் சக்கரவர்த்தியாரின் முடியிலிருந்து துலங்குகின்றது. பின்னர் பாபர் இந்தியா முழுவதையுந் தனதாட்சிக்குட் படுத்த வேண்டு மென்னும் பேரவாக் கொண்டிருந்தார். அதற்காகப் பற்பல முகம்மதிய அரசர்களை யெல்லாம் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. இரஜபுத்திர வீரர்களையுங் கூட வெற்றி கொள்ளவேண்டும். இதற்கிடையில் அவரது படைகள் இந்நாடு வெப்பமிகுந்திருப்பதால் தாங்கள் காபூலுக்குப் போக வேண்டுமென்று கூறினர். பாபர் அவர்களுக்குத் தகுந்த இனிய மொழிகளைக் கூறி அவர்களை வசப்படுத்தி அவர்கள் நோக்கத்தை மாற்றினார். பிறகு பாபர் ஆயிரத்து ஐந்நூற்றிருபத்தேழாமாண்டு சிகிரி யென்னுமிடத்தில் மீண்டும் போர் தொடங்கினார். அப்போரில் அவருடன், பல மகம்மதிய மன்னர்களும் இரஜபுத்திர வீரர்களும் எதிர்த்தனர். அப்போரில் இரண்டு பக்கப் படைகளும் களைப் படைந்தன. இராவணன் மூலபல மென்ற ஒரு சேனையைத் தனியாக வைத்திருந்ததுபோலவே பாபரும் ஒரு சேனையைத் தனியாக வைத்திருந்தார். எதிரிகள் சோர்வடைந்திருக்குங் காலம் பார்த்து அச்சேனை களைக் கொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் இந்தியாவிற்குச் சக்கரவர்த்தியானார். அவர் சக்கரவர்த்தியானதும் ஆங்குள்ள பல மன்னர்கள் அவரது குணத்தைக் கண்டு அவருடன் ஒன்றுபட்டு வாழ்வாராயினர். இதற்குள் அவருக்கும் உடல் வலிமை குறைந்து விட்டது. ஆயிரத் தைந்நூற்று முப்பதாமாண்டில் அக்டோபர் மாதத்தில் அவருடைய மைந்தன் ஹுமாயூனுக்குப் பிணியுண்டாயிற்று. அதனாலவன் உயிருக்கே இறுதி வரும்போலிருந்துகண்டு பாபர் மிகவுந் துக்கமுற்றார். தான் வைத்திருந்த உயர்ந்த செல்வங்களை யெல்லாம் ஆண்டவன் பொருட்டுச் செலவு செய்தார். ஆண்ட வனை நோக்கி ஆண்டவனே! எனது பிள்ளையின் பிணியை எனக்களித்து அவனைக் காக்க வேண்டுகிறேன் என்று மன்றாடினார். அவ்வாறே அவர் பிணிவாய்ப்பட்டார். ஹுமாயூன் உடல் நலம் பெற்றான். பின்னர் பாபரு முயிர் நீத்தார். அவரைக் காபூலிலேயே நல்லடக்கஞ் செய்தனர். பாபர் எந்தச் செயலையும் ஆழ்ந்தெண்ணிச் செய்யும் அறிவு படைத்தவர். எடுத்த செயலை இடைவிடா முயற்சியுடன் செய்து முடிக்குந் திறமையுடையவர். யாவரிடத்திலு மினிமை யாகப் பேசி அவர்களைத் தன்னிடத்தி லீடுபடுத்தும் ஆற்றல் வாய்ந்தவர். ஆண்டவனிடத்திலும் அளவுகடந்த அன்பு பூண்டவர். இத்தகைய குணங்களவருக்கிருந் தமையாற்றான் இளமையிலேயே தனது நாடுநகரங்களை இழந்து காடுமலை களில் திரிந்தவர். இந்தியச் சக்கரவர்த்தியாக வரமுடிந்தது. அவருடைய ஆட்சியில் இந்துக்களும் முகம்மதியர்களும் ஒன்று பட்டுறைந்தனர். அவர் அரசியலில் பெருநோக்கங் கொண்டு இந்திய நாட்டைப் பிடித்தாரேயன்றி, இந்துக்களின் மதத்திற் கிடையூறு செய்யவோ, இந்துக் கோயில்களுக்குத் தீமையிழைக்க வோ பிடிக்கவில்லை. இவரைப்போலவே இன்னும்பல முகம்மதிய மன்னர்கள் இந்தியாவை நீதியுடன் ஆண்டிருக்கின்றனர். பாபரிடமிருந்து நாமறியவேண்டிய சிறந்த குணங்களில் விடாமுயற்சி ஒன்றாகும். நாமும் நமது செயல்களை விடா முயற்சியுடன் முடித்து நன்மை பெறுவோமாக. தயிரும் மோரும் நாம் உட்கொள்ளுமுணவுப் பொருள்களில் தயிரையும் மோரையு முணவுப் பொருள்களாக உட்கொள்ளுகின்றோம். எத்தன்மையுடைய தயிர் மோரை உட்கொள்ள வேண்டுமென் பதையும் அவற்றின் தன்மைகளையுமறிந்து வைத்திருப்பது மிகவும் நன்மையைத் தருமன்றோ? சிலர் புளித்த தயிரைத் தனியாக ஆவலுடன் குடிப்பதைக் காணலாம். அவ்வாறு குடிப்பது உடம்புக்கு நன்மையாகாது. ஆனால் உணவுடன் கலந்து சாப்பிடலாம். புளிப்பில்லாத தயிரும் புளிப்பில்லா மோருஞ் சிறந்ததாகும். புளிப்பில்லாத மோரைத் தனியாக அருந்துவதால் உடலுக்கு நலமுண்டு. எந்த மாதங்களிலுந் தயிரையோ மோரையோ உணவுடன் கலந்துட் கொள்வதால் சரீரத்தில் நல்ல இரத்தமும் பலமுமுண்டாகும். நன்றாயுறைந்த தயிர்தான் உட்கொள்ளுவதற் கேற்றதாகும். நன்றாயுறை யாமற் பால்மணம் வீசுந் தயிரை உட்கொண்டால் விரைவிற் செரிமானமாகாது. மிகவும் புளிப்பேறிய தயிரு முண்ணுதற்குரியதன்று. மிகவும் புளித்த தயிரைக் குடித்தால் பசியை யுண்டாக்குமாயினும், வாதநோய், பித்தநோய்களை வளரச் செய்யும். எங்கும் மிகுதியாகக் கிடைக்குந் தயிர் எருமைத்தயிரே யாகும். இதனையே மக்கள் மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். அடுத்தபடியாகப் பசுந்தயிரையும் ஆட்டுத்தயிரையும் பயன் படுத்திக் கொள்ளுகின்றனர். இனி இம்மூன்று வகையான தயிர்களி னியற்கைகளையு மாராய்ந்து அறிந்து கொள்ளுவோம். எருமைத்தயிரைச் சேர்த்துக்கொண்டே வருவோமா யின், உடலில் நல்ல இரத்தவோட்ட முண்டாகும். பித்தத்தைத் தணித்துக் குளிர்ச்சியையுங் கொடுக்கும். உடம்பு நல்ல பளபளப்பாகவும் அழகாகவுங் காணப்படும். வயிற்றுக் குள்ளிருக்குங் கொழுப்புக்களை நன்றாய் வளரச் செய்யுமாயினும் பசியை விரை விலுண்டாக்காது. உடம்பை நன்றாய்ப் பருக்கவும் கனக்கவுஞ் செய்யும். ஆகையால் எருமைத்தயிரை உட்கொள்ளுகின்றவர்கள், அதனுடன் உப்பை யாவது மிளகுப்பொடியையாவது, எலுமிச்சம் பழச்சாற்றையாவது, பச்சைக் கறிவேப்பிலையையாவது கலந்துட் கொள்வதே சிறந்ததாகும். இவ்வாறுட் கொள்ளுவதால் உடல் நலிவுமிகவுமுண்டாகும். எருமைத்தயிர், மோர், நெய் இவைகள் மிகவுங் குளிர்ச்சியைத் தருவனவாம். பசுவின் தயிரைப் பயன்படுத்தினால் உண்ணுமுணவுப் பொருள்கள் எளிதிற் செரிமானமாகும். உடலில் எரிச்சல் நோய் இருப்பினு மதனைத் தணித்து இன்பத்தை யுண்டாக்கும். புளித்த பசுவின் தயிரைத் தாராளமாக உண்ணலாம். அது உடல் வன்மையை உதவிப் பசியையு முண்டாக்கும். பசுவின் தயிர், மோர் நெய் முதலியவைகளை வெப்பத்தை அளிக்கும் பொருள்க ளென்று கூறுவர். மருந்துண் போர்களுக்கும், நோயுற்றவர் களுக்கும் பசுவின் தயிர், மோர், நெய் இவைகளே உட்கொள்ளற் குரியனவாகும். ஆட்டுத்தயிரில் ஒருவகையான மணம்வீசும். அந்நாற்றத்தைச் சிலர் வெறுக்கக்கூடும். ஆயினும் நாக்கிற்கு மிகுந்த சுவையைத் தருவது ஆட்டின் தயிரேயாகும். ஆட்டின் தயிர் வாதநோய்களையும், கவநோய்களையுந் தணிக்கும். எல்லா வற்றையும் விட உடல் நலத்தைப் பெறுவதற்கு ஆட்டின் தயிர், மோர் நெய் ஆகியவைகளே சிறந்தனவாகும். ஏனெனில், ஆடுகள் பலவகையான தழை களையே மேய்கின்றன. அவை மேய்கின்ற தழைகளிற் பல்வகையான மருந்துப் பொருள்களும் கலந்திருப்பதனால் அவைகள் நோயற்ற நல்லுடல் கொண்டு வாழ்ந்திருக் கின்றன. ஆதலாற்றான், ஆட்டுத்தயிர், மோர், நெய் முதலியவைகள் உட்கொள்ளுவதற்குரிய பொருள்களெனக் கூறப்படுகின்றது. ஆட்டின் தயிர் உடலுக்கேற்ற தட்பத்தையும் வெப்பத்தையும் தந்து நல்ல பசியைத் தக்க பருவத் திலுண்டாக்கும். மோரை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை: - கொஞ்சமாகக் கடைந்த மோர்; சிறிதுந் தண்ணீர் விடாமல் தனித் தயிரைக் கடைந்த மோர்; தனித்தயிரைக் கடைந்த மோரில் நாலிலொருபங்கு நீர் கலந்தமோர்; தனித்தயிரைக் கடைந்த மோரில் படிக்குப் படி நீரூற்றியமோர்; என நான்கு வகைப்படும். முதல்வகை மோரை உட்கொண்டால் வாதநோய், பித்தநோய் களைத் தணித்து, உடலுக்கு நல்ல மினு மினுப்பையும் நலத்தையு மளிக்கும், இரண்டாவது வகையான மோர் உடலிலுள்ள சதையை வளர்ப்பதோடு, பித்தப் பிணிகளை யகற்றிப் பசியை மிகுதிப்படுத்தும். மூன்றாவது வகையான மோரும் இரண்டாவது வகையான மோருக்குரிய இயற்கைகளை யுடையதாகும். ஆனால் உடலைப் பருக்கச் செய்யுந் தன்மை மிகுதியாகவில்லை. நான்காவது வகையான மோர் உடலுக்கு மிகுந்த நலத்தை நல்கி நீர்வேட்கையை மிகுதிப்படுத்தா மலடக்கித் தகுந்த பருவத்திற் பசியைத் தோற்றுவிக்கும். மூன்று, நான்கு நாள் வரையிலு மிருந்து புளிப்பேறிய மோர் அருந்துவதற்கு முடியாததாயிருப்பினும், மிகுந்த பித்த முள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும். அதனை அருந்தினாற் பித்தத்தை மேலோங்க விடாமல் தணிக்கும். கவநோய்க்குத் துவர்ப்புள்ள மோர் தகுந்ததாகும். பொதுவாக நோக்கினால் மோர், தயிர், நெய் இவைகள் உடலுக்கேற்ற உணவாகும். மோர், தயிர்களைத் தனியாகவும், உணவுப் பொருளோடு கலந்தும் உண்ணுவதுடன், அவைகளில் எலுமிச்சம் பழச்சாறு, பச்சைக்கறி வேப்பிலை, இஞ்சி, வெங்காய மிவைகளைக் கலந்து கடுகிட்டுத் தாளித்துண்பது நல்லது; நாக்கிற்கினிமையாகவு மிருக்கும். மோர்க்குழம்பு தயிர்க்குழம்பு முதலியவை நல்ல உணவாகும். கண்ணன் உருக்குமணியை மணத்தல் பல்வளங்களுமனமந்த விதர்ப்ப நாட்டை வீமகனென்னும் வேந்தனொருவன் ஆட்சிபுரிந்துவந்தான். அன்னவற்கு ஐந்து ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்ணு மிருந்தனர் ஆண் பிள்ளை களில் முதல்வன் பெயர் உருக்குமி என்பது. பெண்ணின் பெயர் உருக்குமணி என்பது. உருக்குமணி இளமை முதல் நற்குண நற்செய்கைகளி லீடுபட்டு யாவரும் கொண்டாடுந் தன்மை யுடையவளாயிருந்தாள். கண்டோரனைவருங் கல்வியிற் கலைமகளோ! அழகிற் செந்திருவோவென்றையுறுவர். தனது தந்தையினரண்மனைக்கு வரும் முனிவர்களிடம் அடிக்கடி பல அறிவுரைகளைக் கேட்டுணர்வாள். இத்தகைய பெண்மணி துவாரகையிலுறையுங் கண்ணனுடைய அழகையுந் திறமை யையுங் கேள்வியுற்று, அவனையே மணஞ்செய்து கொள்ள வேண்டுமெனக் கருதியிருந்தாள். இவள் தமையனாகிய உருக்குமியோ கண்ணனிடம் பகைபாராட்டிக் கொண்டும், கண்ணனது பகைஞர்களாகிய சிசுபாலன் முதலியவர்களிடம் அதிக அந்தரங்க நட்புப் பூண்டும் ஏறுமாறாக நடந்து வந்தான். இவ்வாறிருக்கும் நாளில், உருக்குமணி மணப்பருவத்தை எய்தினாள். பலநாட்டு வேந்தர்களு மவளை மணப்பதற்காக வீமகமன்னனிடம் வருவதும் போவதுமாயிருந்தனர். இறுதியில், உருக்குமணியைக் கண்ணனுக்கே மணமுடிப்பதாக வீமகன் முடிவுசெய்தான். சிசுபாலனென்பவனும் உருக்குமணியை மணஞ்செய்ய எண்ணியிருந்த மன்னவர்களி லொருவனாவான். சிசுபாலனுக்குயிர்த் துணைவனாகிய உருக்குமி, அவன் நினைப்பை நன்கறிந்தவனாதலால் தந்தையின் செயலைத் தடுத்து, உருக்கு மணியைச் சிசுபாலனுக்கே மணஞ்செய்தல் வேண்டுமெனப் புகன்றான். வீமகன் முதலில் அதற்கொருப்படவில்லை. ஆயினும் பிறகு மைந்தன் பிடிவாதத்தினால் அவன் மனக் கவலை கொண்டு மகன் மனப்படி ஒருவாறொப்புக்கொண்டிருந்தான். இச்செய்தியை உருக்குமணியுணர்ந்து, அளவற்ற தூயரக் கடலிலாழ்ந்து, பின்னொருவாறு தேறிக் கண்ணனிடந் தூதனுப்பத் தீர்மானித்தாள். உடனே தன்பா லன்புடைய அந்தணனொரு வனை யழைத்துச் சில செய்திகளைக் கூறியவற்றைக் கண்ணனிடங் கூறிவருமாறு வேண்டிக் கொண்டாள். அவனும் உருக்குமணியின் விருப்பப்படியே ஒப்புக்கொண்டு துவாரகை நகரை நாடியடைந்தான். அவ்வந்தணன் கண்ணனை அடைந்து வாழ்த்துரைகள் மொழிந்து, அரசே! விதர்ப்ப நாட்டரசன் அருமை மகளாகிய உருக்குமணியை உங்களுக்குக் கடிமணஞ் செய்வதாக முதலில் முடிவு செய்தான். உருக்குமணியும், இளமை முதலே உங்கள் பாலன்புபூண்டொழுகி வருகின்றாளாதலின் அவளுங் களிப்படைந்திருந்தாள். இறுதியாக அவளுடன் பிறந்தோனாகிய உருக்குமியின் கட்டாயத்தின்பேரில் தங்கள் மாற்றலனாகிய சிசுபாலனுக்கு வதுவை யாற்றுவதாக முடிவு செய்தனர். இம் முடிவை உணர்ந்த உருக்குமணி எண்ணிலாத் துயரமெய்தி, என்னையழைத்து நும்பால் வரவிடுத்தனள். கடிமண நாளன்று, அவள் அம்பிகைக்குப் பூசனை யாற்றும்பொருட்டு அரண்மனையை அடுத்துள்ள அம்பிகைக் கோட்டத்தை யடைந்து, வழிபாடு செய்து திரும்ப மீளுகையில், நீங்கள் எவ்வகையிலாவது கைப்பற்றிச் சென்றால் தான் உயிர்வாழ்வேனென்றும், இன்றேல் சிசுபாலனுக்கு மணமாற்று முன்னரே உயிர் துறப்பேனென்றுங் கூறினாள் என்றான். அந்தணன் மொழியைச் செவிமடுத்த கண்ணன், தானும் உருக்குமணியை மணஞ்செய்து கொள்ள வேண்டுமெனக் கருதியிருந்தானாதலின், மிகவும் மகிழ்ந்தான். கண்ணன் அந்தணனை நோக்கி எப்படியாவது உருக்குமணியை நானே மணஞ்செய்து கொள்ளுகிறேன். இம்மணத்திற்கு உருக் கிமியும், அவனுயிர்த் தோழனாகிய சிசுபாலனும் எத்துணை இடையூறுகள் செய்யினுமஞ்சேன். உலக மன்னரனைவரு மொருங்குகூடி எதிர்ப்பினு மவர்களை யெல்லா மடித்தோட்டி வெற்றி மாலைசூடுவதுடன், மணமாலையும் புனைகின்றேன். ஆகையாற் சிறிது மஞ்ச வேண்டாம் என்று யான் புகன்றதாக உருக்குமணியிடங் கூறுக என்றான். அவ்வந்தணனும் கண்ணனாற்றரப்பட்ட பரிசுகளைப்பெற்று விதர்ப்ப நாடடைந்து உருக்குமணியிடங் கண்ணபிரான் உரைத்ததைப் புகன்று, அவளளித்த செல்வங்களையும்பெற்று அகமகிழ்ந்து தனதகத்தை யுற்றான், உருக்குமணியின் செய்தி இவ்வாறிருக்க அவளுக்குஞ் சிசுபாலனுக்கும் மணஞ்செய்வதற்காக நன்னாள் குறிப்பிட்டு மணத்திற்கான செயல்களனைத்தும் நடைபெற்றன. மணமகனாகிய சிசுபாலனும் அவனுக்கன் பினராய மற்றைய நாட்டு மன்னர்களும் விதர்ப்ப நாட்டிற் குழுமியிருந்தனர் இச்செய்தியறிந்த கண்ணன், பலராமனோடு தேரேறிப் பல யாதவ வீரர்களும் படைசூழ விதர்ப்ப நாட்டை யடைந்து ஒருவரு முற்றுநோக்காத ஒரு புறத்திற் சென்று தங்கியிருந்தான். விதர்ப்ப நகரமும், மணவினையின் பொருட்டு நன்றாக அழகுசெய்யப்பட்டிருந்தது. நகரமாந்தரும், அரசன் புதல்வியின் மணத்தைக்காண ஆவலோடு ஆடையணிகளைப் புனைந்து அரண்மனையிற் குழுமியிருந்தனர். ஆனால் உருக்குமணியின் உள்ளக்கிடக்கையை உணர்ந்த ஆடவரும் பெண்டிரும். இம் மணமெவ்வாறு முடியுமோ வென்ற கவலையுடன் காலத்தை எதிர் பார்த்தவராய்க் கவலுற்றிருந்தனர். மணத்திற்கென்று குறிப்பிட்ட நன்னேரம் வந்ததுந் தோழியர்கள் உருக்குமணியை நீராட்டி, அழகுசெய்து, வீமகன் குலமுறைப்படி அம்பிகைக்குப் பூசனையாற்ற அரண்மனைக்குப் புறத்தேயுள்ள தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றனர். உருக்கு மணி, அம்பிகை கோயிலை எய்தி, அம்பிகைக் கருச்சனை முதலியன செய்து, போற்றி, எவ்வாறாயினுந்தன்னைக் கண்ண பிரான் மணஞ் செய்து கொள்ளுமாறருள்தர வேண்டுமென்று வணங்கினாள். பின்னர், பத்தினிப் பெண்களையும் வணங்கி, அவர்கள் வாழ்த்துரைகளைப் பெற்று, அம்பிகையைப் பணிந்து தோழிமாருடன் கோயிலுக்கு வெளியில் வந்தாள். அப்பொழுதவள் மனத்தில் கண்ணபிரான் ஈண்டெழுந்தருளி யிருக்கின்றனனோ, இல்லையோவென்ற பெருங்கவலையே குடிகொண்டிருந்தது. அவ்வமயத்திலருகிற் றங்கியிருந்த கண்ணன் விரைந்து உருக்குமணியின் கரத்தைப்பற்றித் தனது தேரி லேற்றிக் கொண்டு, தானும், பலபத்திரனுந் துவாரகையை நோக்கி விரைந்து சென்றார்கள். இச்செயலைச் சிசுபாலன், சராசந்தன் முதலிய வேந்தர்களனைவருங் கண்டனர். உடனே சிசுபாலன், சராசந்தன் முதலியவர்கள் அடங்கா வெகுளியுடன், படையணிந்த கையினராய்ச் சேனைகளோடு கண்ணனையும் பலராமனையும் பின்பற்றிச் சென்றனர். பெரும் படை திரண்டு வருவதைக் கண்டு உருக்குமணி, தனது காதலனாகிய கண்ணனுக் கேதேனுந் துன்பமுண்டாகுமோ வென்றஞ்சி, அவன் முகத்தை நோக்கினள். உருக்குமணியின் உள்ளத்தை உணர்ந்த கண்ணன் காதலி, நீ சிறிது மஞ்சற்க, நம்முடன் வந்திருக்கும் வீரர்கள் எதிரிகளை யெல்லாம் புறமிடச் செய்வார்கள் என்று மொழிந்தான். அப்பொழுதே பலராமன், யாதவ வீரர்களுடன், சிசுபாலன், சராசந்தன் முதலியவர்களை யெதிர்த்துப் போர் செய்து அவர்களனைவரையும் அவ்விடத்தி லேயே புறமுதுகிட்டோடும்படி செய்தான். இதைக்கண்ட உருக்குமியும் அடங்காச்சினங்கொண்டு தானும் ஓரிரதத்திலேறிக் கண்ணனைப் பின்தொடர்ந்து ஏ திருடா! ஓடாதே, நில், நில், நீ ஆண்மையுடைய வனாயிருப்பின் போர்புரிந்து உருக்குமணியைக் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல், பேடிபோல் ஆண்மைத் தனமின்றித் திருடிக் கொண்டு தேரேறி ஓடுகின்றனையே! நீ தானா அரசன்! உனது வஞ்சகத்தையும் சூதையு மின்றே ஒழிக்கின்றேன். என்னோ டெதிர்த்து நில். என்று கூறிக்கொண்டே பின்தொடர்ந்து வந்தான். கண்ணனுந் தனது தேரை நிறுத்திக்கொண்டே உருக்குமி யை நோக்கி, மைத்துனனே! நான் அஞ்சியோடவில்லை இதோ நிற்கின்றேன். உனதாண்மையைக் காட்டுவாயாக என்று கூறி நகைத்து நின்றான். உருக்குமி தனது சிலையை வளைத்துச் சரங்கள் பலவற்றைத் தொடுத்துக் கண்ணன் மீது விடுத்தான் கண்ணனுந் தனது வில்லைக் கோட்டி, அம்புகளைப் பூட்டி, உருக்குமியின் மீதோட்டி, அவன் விடுத்த கணைகளையும் வீட்டினான். மீண்டும் கண்ணன் கணைகளைவிடுத்து, உருக்குமி யின்தேர், குதிரை, பாகன் வில் முதலியவைகளை அழித்தான். உடனே உருக்குமி மிகவும் வெகுண்டு தனதுடைவாளைக் கையிலெடுத்துக் கொண்டு ஓடிவந்தான். கண்ணன் அவன் கைவாளைத் தட்டிக் கீழேவிழச் செய்து, அவனை வெட்டுதற்குத் தனதுடைவாளை எடுத்தான். அதுகண்ட உருக்குமணி மனம் பதைத்து, அண்ணனுக்காகப் பரிந்து, கண்ணன் பாதங்களில் வீழ்ந்து, உருக்குமி இழைத்த பிழைகளை மன்னித் துயிர்ப்பிச்சை யருளுமாறு வேண்டினாள். கண்ணனு மவள் விருப்பிற் கிணங்கி அவனைக் கொல்லாமல் ஒரு துணியினால் தேர்க்காலிற் கட்டினன். அது கண்ட பலராமன், உருக்குமியின் மீதிரக்கங் கொண்டு அவனை அவிழ்த்துவிடுமாறு கண்ணனிடம் வேண்டினான். கண்ணனும் அவனைக் கட்டவிழ்த்துவிட, அவன் தலைகுனிந்து நாணத்துடன் நகரத்தை அடைந்தான். இதற்குள், இச்செய்தியை யுணர்ந்த துவாரகை நகர மாந்தர்கள் மிகவுந் களிகொண்டு தங்கள், தங்கள் வீடுவாசல் களை அலங்கரிக்கத் தொடங்கினார்கள். எங்குங் கொடிகளும், வாழைகளும் கமுகுகளும் நாட்டப்பட்டிருந்தன; தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன; வீட்டுவாயில்கள் தோறும். பூரண கும்பங்களும், பொலம்பாலிகைகளும், பாவைவிளக்கும் பலவும் பரப்பிசைவைத்திருந்தனர். எல்லோருங் கண்ணன் வரவை ஆவலோ - டெதிர்பார்த் திருந்தனர். கண்ணனும் பலராமனும் வெற்றி முரசுடன் நகரத்திற் புகுந்தவுடன், மக்களனைவரும் மகிழ்ச்சியினால் அங்குமிங்குமோடி யோடி உளங்களித்தனர். பலர் கண்ணனுக்குக் காணிக்கைகள் செலுத்தினர். உருக்குமணியுங் கண்ணனும் நீடுழிவாழ்க வெனப் பெரியோர் வாழ்த்தினர். பலர் மகிழ்ச்சி மிகுதியினாற் சருக்கரை வழங்கினார்கள். கண்ணன் அரண்மனையை அடைந்ததும், உக்கிரசேனன் முதலிய பெரியோர்கள் எதிர்கொண்டு வாழ்த்தினர். பின்னர் மணத்திற்குரிய நன்னாளைக் குறிப்பிட்டு, அதனை மற்றைய மன்னவர்களுக்கு மறிவித்தார்கள். பலதேசத்தரசரும், பாண்டவர் முதலிய மன்னவர்களனைவருந் திருமண விழாவைக் காணும் பொருட்டுத் துவாரகையை அடைந்தனர். துவாரகையே வைகுந்தமாகத் துலங்கிற்று. மணத்திற்கெனத் தனியாக அமைக்கப்பட்டிருந்த மண்டவத்தில் மன்னர்களும், பெரியோர்களுஞ் சூழ்ந்திருக்க, நன்னேரத்தில், கர்க்காச்சாரியா ரென்னும் புரோகிதர் மணவினை களைச் செய்யக் கண்ணனுக்கும் உருக்கு மணிக்குந் திருமண மினிது நிறைவேறியது. வந்திருந்த பெரியோர்கள் வாழ்த்துக் கூறினார்கள். மன்னர்கள் கண்ணனுக்குப் பல பரிசுகளை வழங்கினார்கள். வந்திருந்தவர்களனைவருக்கும் குறைவில்லாத வகையில் உணவு முதலிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மணம் நிறைவேறிய பின்னர், யாவரும் மணமக்களை வாழ்த்தித் தங்கள் தங்கள் உறைவிடத்திற்குச் சென்றனர். ஆறுகளின் தோற்றமும் பயனும் பொதுவாக நாட்டிற்கும், சிறப்பாக நகரத்திற்கும், ஊருக்குஞ் சிறப்பைத் தருவது ஆறுகளேயாகும். ஆற்றங்கரையிலிருக்கும் நகரங்களும், ஊர்களுமே மக்கள் வாழ்வதற்கு மிகவுந் தகுதியுடையனவா யிருக்கும். ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் என்பது ஆன்றோர் வாக்கு. ஆறுகளின் நீரோட்டத்தின் காட்சி மனத்திற்கு மிகவு மின்பத்தை அளிக்கும். தண்ணீர் குறைந்தோடுங்கால், சிறு சிறு கூழாங்கற்களுடன், தெள்ளித் தெள்ளி யோடுவதுந் தண்ணீர் கண்ணாடிபோலத் தெளிந்துதோன்றுவதும் பார்வைக்கு மிகவு மழகாகக் காணப்படும். தண்ணீர் மெல்லெனத் தவழ்ந்தோடுங் கால் ஒருவித இனியவோசை எழுவதைக் கேட்க மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி யுண்டாகும். ஆறுகளில் வெள்ளம் பெருகி வருங்காலத்துக் காணுங் காட்சியே மிகவுஞ் சிறந்தது. அவைகள் தம திருகரைகளிலுள்ள மரங்களையுஞ் செடிகளையுங் கொடிகளையும் பெயர்த்துக் கொண்டு மிக விரைந்து செல்லும் மலை யிலுண்டாகும் பல பொருள்களையும் மலர்களையும் சுமந்துவரும். வெண்மை யான நுரைகள் கட்டி கட்டியாக மிதந்துவரும் ஆறுகளிலலைகள் மோதிக் கொண்டுஞ் சுழல்கள் தோன்றிக் கொண்டும், தண்ணீர் பேராரவார மிட்டுக் கொண்டுஞ் செல்லுவதைக் கண்டு களிக்காதவர்க ளொருவருமிரார். இத்தகைய ஆறுகள் எவ்வாறு உண்டாகின்றன வென்பதை யாராய்ந்தறிந்து கொள்ளுவோம். இப்பொழுதும் மழை பெய்யுங் கால் அந்நீர் சிறுசிறு கால்வாய் களாகச் சென்று பிறகு ஒன்றாய்க்கூடிப் பெருங் கால்வாயாகச் செல்வதைக் காணலாம். அவ்வாறோடுங் கால்வாய்கள், தண்ணீர் மண்ணை யடித்துக்கொண்டு போவதால் வரவர அகலமாவதையும் பார்த் திருக்கலாம், தண்ணீர் விரைந்து சென்றால்தான் நிலத்திலுள்ள மண்ணைக் கரைத்துச் செல்லும். மெல்லெனச் செல்லும்போது நீரோடு கலந்துள்ள மணலுங்கீழேயே படிந்துவிடும் இவ்வகை யில்தான் ஆறுகளும் கால்வாய்களும் முண்டாயிருக்கின்றன. ஆறுகள் பெரும்பாலும் மலைகளிலிருந்தே தோன்றுகின்றன. பல கால்வாய் களும் சிற்றாறுகளும் சேர்ந்தே பேராறு களாகின்றன. ஆறுகள் மலைச்சரிவு களிலிருந்து வரும்போது மிகவும் விரைந்துவரும் செங்குத்தான மலைச் சரிவு களிலிருந்து வரும் நீரோட்டங்களுக்கு அருவிகளென்று பெயர். இவ்வருவிகள் மலைப்பாறைகளை அறுத்துக்கொண்டு வரும். மலைகளின் கற்பாறைகள் மென்மையாயிருந்து, அருவிகளின் விரைவுங் கடிதாயிருப்பின் அந்நீரில் வரும் வண்டலும் மிகுந்திருக்கும். இவ்வருவிகளின் நீர்நிலத்தில் வீழ்ந்து பள்ளத்தாக்குகளின் வழியே செல்லும் போதுதான் அவற்றிற்கு ஆறுகளென்று பெயர். இந்திய நாட்டிலுண்டாகுமாறுகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவகை உறைபனியின் மிகுதியாற் பெருகி வரும் ஆறுகள். மற்றொருவகை மழைப் பெருக்கால் ஓடிவரும் ஆறுகள். பனிப்பெருக்கா லுண்டாகும் ஆறுகளை ஜீவநதிகளென்றும் உயிராறுகளென்றும் முரைப்பர். உயிராறுகளிலெக் காலத்தினுந் தண்ணீர் வற்றாமலோடிக் கொண்டிருக்கும். மழைப்பெருக் காலுண்டாகும் ஆறுகளில் மாரிக்காலத்திற்றான் பெருகிய நீரோடும். வேனிற்காலத்தில் ஊற்றுமற்று வறண்டுபோகும். பனியினாலுண்டாகும் ஆறுகள் பெரும்பாலும் பனிமலை யிலிருந்தே உண்டாகின்றன. பனிமலையென்பது இமயமலை. அத்தகைய ஆறுகளில் முதன்மையானவை கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா முதலியனவாகும். மழையினாற் பெருகிவரும் ஆறுகளிருவகைப்படும் ஒருவகை கோடை மழையாற் பெருகுவது. மற்றொருவகை மாரிக்காலமழையாற் பெருகுவது கோடைமழையாற் பெருக் கடையும் ஆறுகள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை, தபதி முதலியவைகளாகும். குளிர்காலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையிற் பெய்யும் மழையாற் பெருகி வரும் ஆறுகள், வடபெண்ணை, தென்பெண்ணை, பாலாறு முதலி யவைகளாகும். மழை பெய்தவுடன் திடீரென்று வெள்ளம் பெருகியோடும் ஆறுகளைக் காட்டாறு களென்று கூறுவர். ஆறுகளைப் பேராறுகளென்றுஞ் சிற்றாறுகளென்று மிருவகையாகவும் பிரிக்கலாம். பேராறுகளென்பது ஓரிடத்திற் பிரிந்து தன்பாற் பல சிற்றாறுகளைச் சேர்த்துக்கொண்டு, தானும் பல சிற்றாறுகளைத் தோற்றுவித்து நேரே கடலிற் சென்று கலப்பதாகும். சிற்றாறுகளென்பன பேராறுகளிற் கலப்பனவும், பேராறுகளிலிருந்து பிரிந்து செல்வனவுமாகும். ஆறுகள் மலைகளிலிருந்து பிறந்து, மலைகளிலுள்ள பாறைகளையும், நிலத்தையு மறுத்துக்கொண்டு சென்று கடலைத் தூற்றுநிலத்தை உண்டாக்குகின்றன. இதனால் நாளடைவில், நீர்ப்பாகம் நிலப்பாகமாக மாறுகின்றது. இவ்வாறுண்டான நிலங்கள் தான் சிந்துநதிச் சமவெளியும், கங்கைநதிச் சமவெளியு மாகும். சிந்து, கங்கைச் சமவெளி தோன்றுவதற்கு முன்னர் அப்பகுதி வங்காள வளை கடலையும் அராபிக்கடலையு மொன்று சேர்த்த ஒரு பெரிய நீர்த்தொடர்ச்சியான பகுதியா யிருந்ததென்றும், பனிமலையி லிருந்துவரும் ஆறுகளின் வண்டல்களினாலேயே அச்சமவெளி தோன்றிற் றென்றும் நிலநூலறிஞர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக இப் பொழுதும் சிந்து கங்கையாறுகளின் முகத்துவாரங்களில் நிலப்பகுதிகளுண்டாகிக்கொண்டே வருவதைக் காணலாம். ஆறுகளால் மக்களடையும் பயன் அளவற்றனவாகும். ஆறுகளின்றேல் நாட்டில் மிகுதியான விளைவுப்பொருள்களைக் காணவியலாது.ஆறுகள் மழையில்லாத நாடுகளுக்கு மழை பெய்யும் நாடுகளிலுள்ள நீரைக் கொண்டுவந்து பயிர்த் தொழில் வளர்க்கின்றன. மழை நீரால் விளையும், வானம் பார்த்த நிலங்களைவிட ஆற்றுநீரால் விளையும் பழனங்களே மிகுந்த பயனைத்தரும். ஆற்று நீரிலுள்ள வண்டல் வயல்களிற்படிந்து, நிலத்தை வளப்படுத்த, அதனாற் பயிர் செழித்தோங்கி நல்ல விளைவை நல்குகின்றது. ஆற்றில் வெள்ளம் பெருகி வருங்காலத்தி லிருகரைகளையு மடுத்துள்ள, படுகை நிலங்களைத் தண்ணீ ரேற்றி மறைத்துவிடுகின்றது. பின்னர் தண்ணீர் வற்றியபின் அந்நிலங்களிலேறக்குறைய அரையடி உயரம் வண்டல் படிந்திருப்பதைக் காணலாம். அவ்வாறு வண்டல் படிந்த நிலத்தில் எவ்வகைப்பயிரிடினு மவை செழித்தோங்கிச் சிறந்த பலனையளிக்கும். ஆகவே ஒருநாட்டின் செல்வப் பெருக்கிற்கு முதன்மையாக இருப்பன ஆறுகளே யாகும். ஆறுகள் குறைந்த நாடுகளில் அடிக்கடி வறுமைப்பிணி நேர்ந்து மக்களனைவரும் வாட்ட மடைவார்கள் என்பதை நாம் அனுபவத்தில் அறிந்திருக் கின்றோம். அன்றியும், ஆறுகள், மக்கள் நோயற்ற வாழ்வையடை வதற்குங் காரணமாக இருக்கின்றன. மக்களுக்குப் பிணியை உண்டாக்கத் தக்க எத்துணையோ தீய பொருள்கள் நிலத்தில் ஆங்காங்கே உண்டாகிக் கிடக்கின்றன. அப்பொருள்களின் மீது பொருந்தி வருகின்ற காற்றை யுட்கொள்ளு மாந்தர் நோயுற்றுத் துன்புறுவார்கள். மழை பெய்வதனால், அக் கெட்ட பொருள்கள், மழை நீரோடு கலந்து ஆறுகளிற் போய்ச் சேருகின்றன. ஆறு களவைகளைக் கடலிற் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகின்றன. இப்பொழுது மழையில்லாத நாட்களில் மக்களுக்குப் பலவகை யான தொற்று நோய்கள் தோன்றுவதைக் காணலாம். அதற்குக் காரணம் நிலத்திலுள்ள நாற்றப் பொருள்களானவை ஆறுகளின் வழியே கடலுக்குச் செல்லாமல் நிலத்திற் கிடப்பதும், அவற்றிற் படிந்துவருங் காற்றை மக்கள் அடிக்கடி உட்கொள்வதுமே யாகும். காவிரி, கங்கைபோன்ற பேராறுகளைப் புண்ணிய நதிகளென்று நூல்களுரைப்பதையுங், அவற்றில் நீராடினால் நன்மை பெறலாமெனக்கருதி மக்கள் நீராடுவதையுங் காண் கின்றோம். பொதுவாகப் பேராறுகளில் நீராடுவதால் உடல் நலத்தைப் பெறலாம். ஆறுகள் பலவகைத் தன்மையான நிலங்களின் வழியே வருவதனாலும், பல மலைகளினின்றுங் குன்றுகளின்றும் வருவதனாலும், பலவகையான உலோகங் களின் சாரங்களும், மருந்துப் பொருள்களும் ஆற்றுநீரிற் கலந்துள்ளன. அன்றியும் ஊற்று நீருங் கலந்துள்ளது. இக் காரணங்களால் ஆற்றுநீர் உடலிலுள்ள பிணியைப் போக்கி, நலத்தையளிக்க வல்லதாயிருக்கின்றது. ஆதலால் பேரறிவாளர்கள் நீராடுதற்கு ஆற்று நீரேஏற்றதென் றியம்புகின்றனர். ஆதிமந்தியார் சோழ மன்னர்களுக்குப் பண்டைக்காலந்தொட்டுத் தலை நகரமாய் இருந்தது காவிரிப்பூம்பட்டினம் என்னும் பண்பு மேம் பட்டுள பழவியன் மூதூர் ஆகும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் வளவன் என்னும் மன்னன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சோழ நாட்டைத் திறமையுடன் ஆட்சிபுரிந்து வந்தான். அவனுக்கு ஆதிமந்தியார் என்னும் பெண் மணி யொருத்தி இருந்தாள். அவள் அழகிலும், கல்வியிலும், திருமகளையும், கலைமகளையும் தோல்வியுறச் செய்திருந்தாள். ஆதி மந்தியார் பாடிய பாடல்கள் சில பழைய சங்க நூல் களிலிருக்கின்றன. நற்குணத்திலும், நற்செயலிலும் சிறந்து திகழ்ந்தாள். கற்பிலோ பிறர் நெஞ்சு புகாத பெருமை வாய்ந்தவள். இத்தகையவள் மண முடிக்கும் பருவத்தை எய்தினாள். கரிகால் வளவனும் தன் பெண்ணின், வனப்பை யும், பண்பையும், கல்வி யையும், நுண்ணறிவையும், நோக்கி, இவளுக்குத் தகுந்த தன்மை யாளனாகிய கணவன் யாருளன்? என்று நாடிக்கொண்டிருந்தான். ஆதிமந்தியாரின் சீர்த்தியைச் செவிமடுத்த அரசர்கள் பலர் தங்கள் தங்கள் மைந்தர்களுக்கு மணஞ்செய்து கொடுக்குமாறு வேண்டினர். இறுதியாக வஞ்சிநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டையாண்ட அத்தி என்பவன் வீரத்திற் சிறந்தவனாகவும், மற்றைய குணங்களிலும் ஆதிமந்தியாருக்கு ஒப்பானவனாகவு மிருக்கக்கண்ட அவனுக்கே அக்கற்புக்கரசியைக் கரிகாலன் மகிழ்ச்சியுடன் கடிமணம் புரிவித்தான். கரிகாலன் ஆதிமந்தியார்க்காகப் பல பட்டாடைகள், பொன்னணிகள், மணியணிகள், ஊர்திகள், தோழியர்கள், ஊர்கள் முதலிய வற்றைப் பெண்தானமாகக் கொடுத்தான். ஆதிமந்தியாரும். அத்தியும் பூவும் மணமும் உயிரும் உடலும் பொருந்தியவாறு அன்புடன் கூடிச் சிலகாலம் காவிரிப்பூம்பட்டினத்திலேயே கரிகாலன் விரும்பியவாறு உறைந்திருந்தனர். இவ்வாறிருக்கும் நாளில் ஒருநாள் இந்திரவிழாவின் கடைசி நாளில், நகரமாந்தர் அனைவரும் கடலாடச் சென்றனர். ஆதிமந்தியாரும், அத்தியும், தங்கள் ஏவலர் புடைசூழக் கடற் கரையை எய்திக் கடலாடிக்கொண்டிருந்தனர். அக்காலை ஒரு பேரலைவந்து அத்திமன்னனைக் கடலுக்குள் ஈர்த்துச் சென்றுவிட்டது. அதுகண்ட மாந்தரனைவரும் மனங்கலங்கி யாண்டும் ஓடோடித் தேடினர். அத்திமன்னனைக் காணவில்லை. ஆதிமந்தியாரோ அளவற்ற துயரமடைந்து புலம்பி நைந்து அரற்றினாள். கீழே விழுந்து புரண்டு அழுதாள். கடற்கரையில் நின்றுகொண்டு அந்தோயான் என்செய்யக் கடவேன்? கற்பு மங்கையரின் உயிர் கணவனே யன்றோ? என் உயிர் சென்றபின் உடல்மட்டு மிருந்து என்பயன்? கணவன் சென்றபின் மங்கையர்க்கு உலக வாழ்க்கையால் பயன் யாது? கணவனை இழந்த மகளிர் உயிர் வாழ்வது தகுதியோ? இனி நான் ஒரு கணமும் உயிர் வாழேன். ஒ கடற்றெய்வமே! உனக்கு நான் செய்த குற்றம் யாது? எனது கணவனைக் கொணர்ந்து கொடாயேல் இன்னே எனதுயிரை விடுவேன் என்று அரற்றி உழன்று உயிர்விடத் துணிந்தாள். இவ்வமயத்தில் அறக்கடவுளின் திருவருளால் அத்தி மன்னனை உயிருடன் கடற்றெய்வம் மற்றொரு துறையிற் கொண்டுவந்து கரையேற்றியது. அத்துறை யில் ஆதிமந்தியாரின் தோழியாகிய மருதி என்பவள் நின்றுகொண்டிருந்தாள். அவள் அத்தியைக் கண்டு ஆதிமந்தியாரின் துயரம் தணிந்ததென்று மகிழ்ந்து, அவனை அழைத்து வந்து ஆதிமந்தியாரின் பக்கல் விடுத்தாள். கணவனைக்கண்ட கற்புக்கரசியார், துயரக் கடலினின்றும், இன்பக்கடலில் தாவி, கணவனைத் தழுவி மகிழ்ந்தாள். ஆங்குள்ள அனைவரும், ஆதிமந்தியாரின் கற்பே இழந்த கணவனை மீட்டுஞ் சேர்த்ததென்று கூறி, அளவிலா ஆனந்த மடைந்தனர். அன்று முதல் ஆதிமந்தியாரின் புகழ் நாடு முழுதும் பரவி அவளை அனைவரும் கற்புத் தெய்வமாகக்கொண்டு வழிபாடாற்றினர். இவ்வரலாற்றைச் சிலப்பதிகாரம் என்னும் நூலிற் காணப்படும் பின்வரும் வரிகளாற் காணலாம். மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ வென்னக் கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள். மனங்குழம்பிய மாணவன் (ஒரு சொல்லாடல்) செல்வநாதன் - அன்ப! ஏதோ ஆழ்ந்த ஆராய்ச்சியிலிருப்பவனைப் போற் காணப்படுகின்றனையோ! எதைப் பற்றி உன் மனத்துக்குள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றாய்? இன்பநாதன் - நண்ப ! நீ கூறுவது உண்மைதான். என் உள்ளத்திலுள்ளதை நீ எவ்வாறறிந்தனை? நான் இது போது ஒரு பெருங் கவலையிலாழ்ந்து என்ன செய்வதென்றுணராமல் திகைக்கின்றேன். நல்லவேளையாக நீயும் நல்ல தருணத்தில் என்முன் வந்தாய்! செ- நாதன் - தோழ ! மனத்திலுள்ள கவலையை மறைக்க முடியுமா? அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டு முகம் என்ற பெரியார் மொழியைக் கேட்டதில்லையா? இப்பொழுது நின் மனதிற் கவலை யுண்டாவதற்கு நிமித்த மென்ன? எப்பொழுதும் நீ இன்பமாகவே காலத்தைக் கடத்தி மகிழ்ந்திருப்பாயே? இ - நாதன் - ஆம் அப்படித்தானிருப்பேன். ஆனால் நேற்றுப் பள்ளிக்கூடத்தி லிருந்து வந்ததுமுதல் தான் எனக்கு இத்தகைய கவலையுண்டாயிற்று. செ- நாதன் - எது பற்றிய கவலை? இ- நாதன் - நேற்றுமாலையில் தமிழ்வகுப்பிற் பட்டினத் தார் வரலாற்றைப் படித்தோமல்லவா? அதுமுதல் தான் என்னுள்ளத்திற் றுயரந் தோன்றியது. செ- நாதன் - ஆம்! படித்தோம். உள்ளபடி அவர் துறவின் மேன்மையை உணர்ந்தோம். அதற்கென்ன; அதனால் உனக்கு மனத்துயருண்டானதேன்? இ- நாதன் - அன்ப! அப்பெரியாரைப்போல் உண்மை யறிவு கைவரப்பெற்றுத் துறவடையவேண்டு மென்னுங் கவலையே எனக்குப் பெரிதாகிவிட்டது. அவர் கூறிய ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற பேருஞ்சத மல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி ஏகம்பனே! என்ற பாடலின் உண்மைப்பொருளை உணர்ந்தவர் யார் தான் இவ்வுலக வாழ்வைப் பெரிதென்று நினைப்பார்? இது பற்றித் தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதே துறவை மேற்கொள்ளலாமா வென்றும் நினைக்கிறேன். செ - நாதன் - அன்ப! நீ கூறுவது எனக்கு மிகவும் வியப்பைத் தருகின்றது. ஏதோ புராண வைராக்கியம் என்று கூறுவார்கள். அவ்வுறுதியை நின்பால் நேரே நான் காணு கின்றேன். இ- நாதன் - நண்ப! எனது உள்ளக்கிடக்கை முழுவதையும் இன்னும் நீ நன்றா யறிந்துகொள்ள வில்லை எனக் கருது கின்றேன். எனக்கு உண்மையிலேயே இவ் உலக வாழ்க்கையில் ஒரு சிறிதும் பற்றில்லை. மறவினைக்குக் காரணமா யிருக்கின்ற இவ்வுலக வாழ்வை நீத்தால்தான் மறுமையிலின்ப உலகை எய்தலாமெனக் கருதுகின்றேன். செ- நாதன் - அன்பா! நீ மறுமை இன்பத்தை அடை வதற்குத் தானே கவலை யுறுகின்றனை? அதனைப் பெறுவதற்குப் பரதேசி யாதலே வழியென நினைக் கின்றாயோ? இ- நாதன் - ஆம். அதிலென்ன ஐயுறவு? நரைவரும் என்றெண்ணி நல்அறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங்கு எழுந்திருப் பார். என்ற பாடலை நமது தமிழாசிரியர் கூறக் கேட்டிருக்கின்றேன். இப்பாடல் இளமைப் பருவத்திலேயே துறவை மேற்கொள்ளுதல் தான் துன்பமகற்றி இன்பமுறுதற்கு ஏற்றவழியென்றுணர்ந்த வில்லையா? செ- நாதன் - அன்ப! நீயுரைப்பதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஆயினும் இம்மை இன்பத்தை வெறுத்துத் துறவை மேற்கொண்டு மறுமை இன்பத்தைப்பெற முயல் வதைக் காட்டிலும், இல்லறத்திலேயே இருந்து இம்மை மறுமையாகிய இரண்டின்பங்களையும் ஒருங்கே பெறுவது மிகவும் எளிதன்றோ? அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவது எவன்? இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். என்ற ஆன்றோர் மொழிகளை நீ கேட்டதில்லையோ? இ - நாதன் - ஆம். கேட்டிருக்கின்றேன். அப்பாடல்கள் இல்வாழ்க்கையைத் தான் சிறப்பித்துக் கூறுகின்றன. ஆயினுந் துறவறத்தை மேற்கொண்டவர்களின் புகழ்தான் இவ்வுலகில் நீடு நிலைத்து நிற்குமென்று நினைக்கின்றேன். எடுத்துக்காட்டாக இளங்கோவடிகள், பட்டினத்து அடிகள், அப்பரடிகள் முதலி யவர்களைப் பார்! அவர்களைப் போல் புகழ் பெற்றவர்கள் வேறு யாரிருக்கின்றனர்? செ- நாதன் - அன்ப! அவர்கள் துறவிகளாயிருப்பினும் இக்காலத்திற் காணப்படுகின்ற போலித் துறவிகளைப் போன்றவர்களல்லர். உண்மையான உள்ளத் துறவிகளாயிருந்ததுடன் உலக நன்மையிலும் ஈடுபட்டிருந்தனர். ஆகையால் தான் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கின்றது. இ-நாதன் ஒ! அப்படியா! இளங்கோவடிகள், பட்டினத்து அடிகள், அப்பரடிகள், இவர்கள் உலகிற்குச் செய்த நன்மை என்ன? செ-நாதன் - நண்ப! அரசத்துறவியாகிய இளங்கோவடிகள் சிலப்பதிகார மென்னுஞ் செந்தமிழ் நூலை இயற்றி இருக்கின்றார். அதனாலவர் பெருமையை உணர்கின்றோம். பட்டினத்துப் பிள்ளையார் செல்வராயிருந்த நாளிலாற்றிய அறங்கள் பல. துறவியான பின்னரும் காலத்தை வீணிற்கடத் தாமற் பல தமிழ்ப் பிரபந்தங்களைச் செய்திருக்கின்றார். அப் பரடிகளின் பெருமையைக் காட்டு வதற்கு அவராலாக்கப்பட்ட தேவாரமிருக்கின்றது. அன்றியும் மேற்கூறிய ஆன்றோர்கள் நாட்டு மக்களுக்கு நன்மொழிகள் புகன்று அவர்கள் குற்றங்களை அகற்றித் திருந்தச் செய்திருக்கின்றார்கள். அவர்களா லாக்கப் பெற்ற நூல்களின் றேல் அவர்கள் புகழை எங்ஙனம் அறிய முடியும்? இ - நாதன் - ஆம் அறியமுடியாதுதான். ஆனால் துறவை மேற்கொள்ளாமல் உலகவாழ்க்கையி லீடுபட்டிருந்தவர்களிலும் புகழ்பெற்றவர்க ளிருக் கின்றார்களா? செ-நாதன் - ஒ! ஒருவரா; இருவரா; எத்துணையோ கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். இ- நாதன் - இருக்கின்றனரா! அப்படியானால் அவர்க ளெல்லாரும் எவ்வகையாற் புகழ்பெற்றனர்? செ- நாதன் - பலரும் பலவகையான பொதுப்பணிகளைப் புரிந்து புகழ் பெற்றிருக்கின்றனர். தமிழ்ப்புலவர்களாக விளங்கிப் புகழ்பெற்றவர் பலர். புலவர் களைப் புரந்து வந்தமையாற் புகழ்பெற்றவர் பலர். உலகமாந்தர்க்குப் பயன் படுமாறு பல அறநிலையங்களை ஏற்படுத்தினமையாற் புகழ்பெற்றவர் பலர். வீரர்களாக விளங்கி நாட்டிற்கு நன்மை செய்தமையாற் புகழ்பெற்றவர் பலர். அவர்கள் வரலாறுகளை அறியவேண்டுமாயின் பண்டைத் தமிழ் நூல்களைப் பயின்றால் தெள்ளிதின் அறியலாம். இ - நாதன் - அன்பா! அவ்வாறாயின், மறுமை இன்பத் தைத் துறவு பெறாமலேயே அடையலாமென்று கூறுகின்றாயோ? துறவறத்தை அடைந்தால் தானே யாதொரு பற்றுமின்றி இறை வனைப் போற்றி இன்பம்பெற இயலும்? அங்ஙன மின்றி இவ்வுலகினரோடு கூடியிருந்தால் எவ்வாறு இறைவனருளைப் பெறமுடியும்? செ - நாதன் - அன்ப! நாம், நம் நாட்டு மக்களுக்குச் செய்யும் ஊழியத் தினாலேயே இன்பப் பேறடையலாம். அன்பர்பணி செய்யவென்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே! என்று ஆன்றோர் கூறியிருப்பதை நீ கேட்டதில்லையா? இ- நாதன் - நண்ப! இப்பாடலை நமது தமிழாசிரியர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனாலும் அதன் பொருள் எனக்கு நன்றாய்த் தெரியாது. அன்பர் என்பவர் யார்? பணி எது? அவர்க்குப் பணிசெய்வதனால் எவ்வாறு இன்பம் பெற முடியும்? செ - நாதன் - அன்பனே! உலகில் உள்ள மக்களனைவரும் அன்பர்கள்தான். இறைவனில்லாதவிடம் எது? அவனுடைய ஆற்றல் எல்லா உயிர்களிடமும் காணப்படுகின்ற தன்றோ? ஆதலால் துன்புறு மக்களின் துயரத்தைப் போக்கி, அவர்களை இன்புறச் செய்வதே, நாமின்புறுவதற்கேற்ற வழியாகும். மற்றும், கொல்லா விரதம் குவலயம் எல்லாமோங்க எல்லார்க் கும் சொல்லுவதென் இச்சை பராபரமே. என்ற திருமொழியையும் கடைப்பிடிக்க வேண்டும். இ- நாதன் - நண்ப! அவ்வாறானால் இக்காலத்தில் எவ்வளவோ துறவிகள் தெருக்கடோறும் பிச்சையேற்றுத் திரிகின்றனரே! அவர்களெல்லாரும் உண்மைத் துறவி களல்லரா? அவர்களுக்கெல்லாம் நற்கதி கிடையாதா? செ - நாதன் - நண்ப! எல்லாத் துறவிகளையும் பொய்த் துறவிகளென்று நான் கூறவில்லை. உண்மையான துறவிகள் பலரிருக்கின்றனர். அவர்கள் வீண்பொழுது போக்காமல், நாட்டுத் தொண்டிலும், சமூகச் சீர்திருத்த ஊழியத்திலுங் காலம் போக்குவார்கள், ஆனால், பெரும்பாலான துறவிகள் தங்கள் தங்கள் வயிற்றுச் சோற்றின் பொருட்டே துறவறத்தை மேற் கொண்ட வர்களென்பதில் ஐயமில்லை என்பது உலகம் அறிந்த விஷயம். இ - நாதன் - தோழ! வயிற்றுச் சோற்றுக்காகவா துறவறத்தை மேற் கொள்ளுகின்றனர்? செ - நாதன் ! ஆம்!அதிற் கொஞ்சமும் ஐயமில்லை. சிறுபிள்ளைகளாக யிருக்கும்போதே தீயசெயல் களிலீடு பட்டுப் பெற்றோர்களுக் கடங்காமல் வெளியேறிப் பிச்சைக்காரர் களாகத் திரிகின்றவர் பலர். பெண்டு பிள்ளைகளுடன் சினந்து காவியுடையும் கண்டிகையும் பூண்டு பிச்சை யேற்கப் புறப்பட்ட துறவிகள் பலர். ஒருவேலையும் செய்யத் திறமை யற்றவர்களாய், வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு மான ஈனமின்றி ஐயம்புகும் அறிவிலிகள் பலர். இத்தகையவர்களை, எவ்வாறு உண்மைத் துறவிகளென்று கூறுவது? இவர்களால் உலகிற்குண்டாகும் நன்மைதான் என்ன? இ-நாதன் - அப்படியா! ஆனால் அவர்கள் அவ்வாறிருப்ப தால் நாட்டிற்கென்ன தீமை? செ - நாதன் - அன்ப! அவைகளாலுண்டாகும் தீமைகள் தான் அளவற்றன. அத்தகைய பிச்சைக்காரன் இருப்பது நமது நாட்டிற்கே பேரவமானமாகும். அவர்களிருப்பது நமது நாட்டிற் சோம்பேறிகள் மிகுதி என்பதைக் காட்டுகின்றது. அவர்கள் பிச்சையேற்று வயிறு வளர்ப்பதோடு நின்று விட்டாலுங் குற்றமில்லை எனக் கூறலாம். அவ்வாறின்றிப் பொய், கொலை, களவு, கள்ளுண்ணல் முதலிய தீச்செயல்களைச் செய்து ஜனச மூகத்திற்குத் தீங்கையும் இழிவையும் விளைக்கின்றார்கள். இ-நாதன் - நண்ப! நீ கூறுவது உண்மையாகத்தான் காணப்படுகின்றது. ஆனால் பிச்சைக்காரர்கள் பெருகாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? செ - நாதன் - அன்ப! அதற்கு நம்மால் மட்டும் ஒன்றுஞ் செய்ய முடியாது. நாட்டு மக்களும் அரசியலாருஞ் சேர்ந்து வேலை செய்வார்களாயின் சோம்பேறி களை ஒழிக்கலாம். ஆங்காங்கே தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலையற்றவர்\ களுக்குஞ் சோம்பேறிகளுக்கும் வேலை கொடுக்கவேண்டும். அறச்சாலைகளில் குருடர், நொண்டி, நோயாளர், கிழவர்கள் முதலியவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டும். அரசாங்கத் தாரால் பிச்சையேற்றல் கூடாதென்ற சட்டமும் செய்யப் படவேண்டும். அவ்வாறு செய்தால் இத்தகைச் சோம்பேறிகளை எல்லாம் அறவே ஒழிக்கலாம். இ- நாதன் - அன்ப! நீ இதுகாறுங் கூறிவந்ததைப் பார்த்தால் நான் துறவியாகத் துணிந்ததையுங்கூடத் தடை செய்கின்றாய் போலிருக்கிறதே! செ - நாதன் - நண்ப! நீ துறவியாவதை நான் தடை செய்யவில்லை. வேண்டுமானால் இப்பொழுது நீ துறவியாகிப் புறப்பட்டுப்போகலாம். நீயும் சோம்பேறிகளான பிச்சைக்காரர் களுடன் சேர்ந்து கொண்டு தெருத்தெருவாகச் சென்று பிச்சையேற்றுண்டு கண்டவர் நகைக்கக் காலம் போக்கலாம். இ - நாதன் - அன்பா? என்னை ஏளனஞ் செய்ய வேண்டாம். இனி நானித்தகைய நினைப்பைக் கனவிலுங் கருத மாட்டேன். ஏதோ சிறிது மனங் குழம்பியவனானேன். நல்லவேளையாக நீ வந்துசேர்ந்து எனது மனக்குழப்பத்தை மாற்றினை. உனக்கு வணக்கஞ் செலுத்துகின்றேன். மாணவர்களாயிருக்கின்ற நாம் எவ்வாறு நடந்துகொண்டால் இம்மை மறுமை இன்பங்களைப் பெறலாம்? செ - நாதன் - தோழா! நீ உண்மை உணர்ந்தமைக்காக மகிழ்ச்சி யடைகின்றேன். நாம் படிக்கும் பாடங்களிலுள்ள நன்மையான செய்திகளையும் உண்மையான செய்திகளையும் உள்ளத்திற் பதியவைத்துக்கொள்ளவேண்டும். அவற்றை நமது வாழ்நாளில் நடத்திக்காட்ட முயல வேண்டும். இளமை முதலே பொதுவூழியஞ் செய்வதில் விருப்புற்று நம்மாலியன்ற பணி களைச் செய்து வருவோமாயின் முதியோரான பின்னும் பொது நலத் தொண்டராக விளங்கலாம். உறுதியான எண்ணமும், தூய்மையான நடத்தையும், அயராத ஊக்கமுமே சிறந்த செல்வமாகும், துன்புறுவோர் எவராயினும் அவர் துயரை யகற்ற முயலவேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற ஆன்றோரு ருரைகளை அறிந்து, தனக்கென வாழாது பிறர்க்கென உலகிற்கு நன்மை செய்ய வேண்டும். இச்செயல்கள் தான் மனிதப் பிறப்பின் கடமையாகக் கடவுளுக்குச் செய்யுஞ் செயலாகும். இ - நாதன் - அன்ப! நீ கூறியவாறே நடக்க நாமும் நமது நண்பர்களும் இனி முயலுவோம். நாழிகையாயிற்று, நாம் பள்ளிக்கூடஞ் செல்வோம். இரண்டாம் செய்யுட்பாடம் 1. தனித்திருத்தாண்டகம் அப்பனீ! யம்மை நீ !! யையனும் நீ! யன்புடைய மாமனும், மாமியும் நீ! ஒப்புடைய மாதருமொண் பொருளும் நீ! யொருகுலமுஞ், சுற்றமு, மோரூரும் நீ! துய்ப்பனவு முய்ப்பனவுந் தோற்றுவாய் நீ! துணையாய் என்னெஞ்சந் துறப்பிப்பாய் நீ! இப்பொன்னீ! யிம்மணி நீ! யிம்முத்து நீ! இறைவனீ! ஏறூர்ந்த செல்வனீயே! 1 குலம்பொல்லேன், குணம்பொல்லேன், குறியும்பொல்லேன், குற்றமே பெரிதுடையேன், கோலமாய நலம் பொல்லேன், நான்பொல்லேன், ஞானியல்லேன், நல்லோரோ டிசைந்திலேன், நடுவேநின்ற விலங்கல்லேன், விலங்கல்லா தொழிந்தேனல்லேன், வெறுப்பனவு மிகப்பெரிதும் பேசவல்லேன், இலம்பொல்லேன், இரப்பதே யீயமாட்டேன், என்செய்வேன் தோன்றினேன் ஏழையேனே! 2 சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க் கேகாந்தர் அல்லராகில் அங்கமெல்லாங் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே! 3 -அப்பர் சுவாமிகள். 2. பெருமாள் திருமொழி ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே! 4 கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்! எம்பெருமான், ஈசன், எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்குந் தவமுடையே னாவேனே! 5 மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்! தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் அன்னனயை பொற்குவடாம் அருந்தவத்தோன் ஆவேனே! 6 செடியாய வல்வினைகள் தீர்க்குந் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல், அடியாரும் வானவரும் அரம்பையருங் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே! 7 -குலசேகரப் பெருமாள் 3. தமிழ்த் தாய் வணக்கம் தமிழெனுஞ் சொல்லே இனிமையாம் பொருளைத் தருமென உரைத்தனர் ஆன்றோர் அமிழ்துறழ் மொழியாம் உனைப்பயின் றிடினே அளவிலா இன்பமே அளிப்பாய்! இமிழ்திரை வரைப்பில் வாழுநாள் யாவும் இசையொடு கழிந்திடப் புரிவாய்! கமழ்குண மில்லாக் கயவனேன் உன்னைக் கருத்தினில் இருத்தினென் களித்தே. 8 இந்நில வரைப்பில் முதன்முதற் றோன்றி என்றுமே அழிவுறா தியங்கும் கன்னிநற் றமிழாம் அன்னையே! உன்றன் கவினதை முற்றவும் அடியேன் உன்னியே உரைக்குந் திறத்தினன் அல்லேன்; ஒருதனிப் பெருந்திருத் தாயே! சென்னியே வணங்கிச் சிந்தையிற் கொண்டேன்; சிறப்புறு செந்தமிழ் மொழியே! 9 துன்றிய சுவைசேர் பொருள்பல தோற்றுந் துகளிலாத் தமிழ்மொழி யுனையே! என்றுமே போற்ற இனித்திடும் அமுதே! இலக்கணச் செறிவுடைத் திருவே! நன்றதாம் மொழிகள் பற்பல வற்றை நல்கிய நாயக மொழியே! உன்றனைப் பயின்றே யுன்பணி யாற்றி உளமகிழ் பூத்திட அருள்வாய்! 10 எம்மதத் தோரும், எந்நிலத் தினரும், இனிதெனப் புகழ்ந்திடுந், தூய செம்மொழி யாய திருக்குறள் முதலாம் செழுங்கலை பலவமைந் தொளிர்வோய்! அம்மையே! உன்றன் வனப்பினை அறிந்தோர் அந்நிய மொழிதனைப் போற்றி இம்மையில் அடிமை வாழ்க்கையில் வாழ்ந்தே இருப்பதற் கொருப்படு வாரோ? 11 ஒளிநிறை மணியே! உறுசுவை அமுதே! உளம்புகுந் தென்பெலாம் உருக்கும் தெளிதமிழ்த் தாயே! தென்னவர் சோழர் சேரருந் தினந்தினங் கூடிக் களிமகிழ் கூருங் கருத்துறு விளக்கே! காசறு கருணையாம் உருவே! எளியனேன் உன்னை இறைஞ்சினன் பெரிதும் இன்பம் நீ எனக் கருள்வாயே! 12 - சாமி. சிதம்பரனார். 4. நீதி வெண்பா ஈக்கு விடந்தலையில் எய்தும், இரும் தேட்கு வாய்ந்த விடம் கொடுக்கில் வாழுமே - நோக்கரிய பைங்கண்ணர வுக்குவிடம் பல்அளவே துர்ச்சனருக்கு அங்கம் முழுதும் விடமே ஆம். 13 மந்திரமுந், தேவும், மருந்தும், குருவருளும், தந்திரமும், ஞானந் தருமுறையும், - யந்திரமும், மெய்யென்னில் மெய்யாய் விளங்குமே; மேதினியில் பொய்யென்னில் பொய்யாகிப் போம் 14 தன்னை அளித்தான், தமையன் மனை, குருவின் பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனையைப் பெற்றாள், இவர் ஐவர் பேசில் எவர்க்கும் ஈற்றாயர் என்றே நவில். 15 இன்னல் தரும்பொருளை ஈட்டுதலுந் துன்பமே; பின்னதனைப் பேணுதலுந் துன்பமே - அன்னது அழித்தலுந் துன்பமே; அந்தோ! பிறர்பால் இழத்தலுந் துன்பமே ஆம். 16 கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும், நூல் வல்லான் ஒருவனையே மானுவரோ - அல் ஆரும் எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர் வெண்ணிலா ஆமோ விளம்பு! 17 5. நான்மணிக்கடிகை. கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும்; மான்வயிற்றின் ஒள்அரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்? நல்லார் பிறக்குங் குடி. 18 நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும்; குளத்துக் கணி யென்ப தாமரை; பெண்மை நலத்துக் கணியென்ப நாணம்; தனக்கணி தான்செல் உலகத் தறம். 19 மழை இன்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் தவமிலார் இல்வழிஇல்லை; தவமும் அரசியல் இல்வழி இல்லை; அரசியலும் இல்வாழ்வார் இல்வழி இல். கண்ணில் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை; மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை; ஈன்றாளின் எண்ணக் கடவுளும் இல். 21 மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்; - மனக்கினிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் ஓதில் புகழ்சால் உணர்வு. 22 -விளம்பி நாகனார். 6. நாலடியார் ஈகை இல்லா விடத்தும் இயைந்த அளவினால் உள்ள இடம்போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு. 23 முன்னரே சாம்நாள், முனிதக்க மூப்புள, பின்னரும் பீடு அழிக்கும் நோயுள, - கொன்னே, பரவன்மின்! பற்றன்மின்! பாத்துண்மின்! யாதும் கரவன் மின்! கைத்துண்டாம் போழ்து. 24 நடுக்குற்றுத் தன்சேர்ந்தார் துன்பந் துடையார்; கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் விளையுலந்தக் கால். 25 இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்! - உம்மைக் கொடா தவர்என்பர் குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பின் அவர். 26 மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையாது எனினும் இரவாமை ஈதல் இரட்டி உறும். 27 நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் இடுகொட்டுள் ஏற்றைப் பனை 28 பெயல்பான் மழைபெய்யாக் கண்ணும், உலகம் செயற்பால செய்யா விடினும், - கயல்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யும் ஆறு? 29 ஏற்றகை மாற்றாமை என்னானுந் தாம்வரையார் ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன்; - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல் பொலிகடல் என்னும் பெயர்த்து. 30 இறப்பச் சிறிது என்னாது இல் என்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க! - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். 31 கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல். 32 சமண முனிவர்கள். 7. குமரேச சதகம் வணிகர் இயல்பு கொண்டபடி போலும், விலை பேசி லாபம், சிறிது கூடிவர நயம் உரைப்பார்; கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம், வாராதபடி குறுகவே செலவு செய்வார்; அண்டப் புரட்டார்தாம் முறிதந்து பொன்அடகு வைக்கினும் கடன்ஈந்திடார்; மருவு நாணய முளோர் கேட்டனுப் புகினும் அவர் வார்த்தையில் எல்லாங் கொடுப்பார்; கண்டெழுது பற்றுவர வினின், மயிர் பிளந்தே கணக்கில் அணு வாகிலும் விடார்; காசு வீணிற்செலவி டார்; உசித மானதில் கனதிரவி யங்கள் விடுவார்; மண்டலகத் தூடுகன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண்! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே! 33 (தாமழியினும் குணம் அழியாதவை) தங்கமா னதுதழலின் நின்றுருகி மறுகினும் தன்ஒளி மழுங்கிடாது; சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமோ தன் மணங் குன்றிடாது; பொங்குமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமோ பொலி வெண்மை குறைவுறாது; போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும் பொருந்துசுவை போய்விடாது; துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும் துலங்குகுணம் ஒளியாது; பின் தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூயநிறை தவறாகுமோ? மங்களகல் யாணிகுற மங்கைசுர குஞ்சரியை மருவுதிண் புயவாசனே! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே! 34 அற்பர் வாழ்வால் குணம் வேறுபடுதல் அற்பர்க்கு வாழ்வுசற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவுந் தோன்றிடாது; அண்டிநின் றே, நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக் கேறிடாது; முற்பட்ச மானபேர் வருகினும் வாருமென மொழியவும் வாய்வராது; மோதியே வாதப் பிடிப்புவந் ததுபோல முன்காலை அகல வைப்பார்; விற்பன மிகுத்த பெரியோர், செய்தி சொன்னாலும் வெடு வெடுத்து ஏசிநிற்பர்; விருதா மகத்துவப் பேயது சவுக்கடி விழும் போது தீருமென்பார்; மற்புயந் தனில்நீப மாலையணி லோலனே! மார்பனே வடிவேலவா! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே! நல்லினஞ்சேர் பயன் சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல தருவும் அவ் வாசனைதரும்; தங்கமக மேருவை அடுத்திங் காக்கையும் சாயல் பொன் மயமே தரும்; பந்தமிகு பாலுடன் விளாவிய தணீரெலாம் பால்போல் நிறங் கொடுக்கும்; படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப் படியே குணங் கொடுக்கும்; அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில் அடுத்ததும் பசுமை யாகும்; ஆனபெரியோர்களொடு சகவாச மதுசெயில் அவர்கள் குணம் வருமென்பர்காண்! மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி மருக! மெஞ்ஞான முருகா! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே! பெரியோர்சொற் கேட்டவர் தந்தைதாய் வாக்யபரி பாலனஞ் செய்தவன் தசரத குமார ராமன்; தமையனருள் வாக்யபரி பாலனஞ் செய்தவர் தருமனுக் கிளைய நால்வர்; சிந்தையில் உணர்ந்துகுரு வாக்யபரி பாலனஞ் செய்தவன் அரிச்சந்திரன்; தேசியென் றோர்க்கில்லை யெனாவாக்யபரி பாலனஞ் செய்தவன் தானகன்னன்; நிந்தைதவிர் வாக்யபரி பாலனஞ் செய்தவன் நீள்பெல மிகுத்த அநுமான்; நிறையுடன் பத்தாவின் வாக்யபரி பாலனம் நிலத்தினில் நளாயனி செய்தாள் மந்தைவழி கோயில்குள முங்குலவு தும்பிமுகன் மகிழ்தர உவந்த துணைவா! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே! (கைப்பலனாமவை) பருவத்தி லேபெற்ற சேயும், புரட்டாசி பாதிசம்பா நடுகையும், பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே பயிர்கொண்டு வருகரும்பும், கருணையொடு மிக்கநா ணயமுளோர் கையினில் கடன்இட்டு வைத்தமுதலும், காலமது நேரில் தனக்கு உறுதி யாகமுன் கற்றுணர்ந்திடு கல்வியும், விருதுஅர சரைக்கண்டு பழகிய சினேகமும் விவேகிகட்கு உபகாரமாம்; வீணல்ல இவையெலாம் கைப்பலன் தாகஅபி விர்த்தியாய் வரும் என்பர்காண்! மருஉலா வியநீய மாலையும் தண்தரள மாலையும் புனை மார்பனே! மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே! 38 குருபாத தாசர். 8. தனிப்பாடல் ஒருத்திவீட்டிற் சாப்பிட்டதை நிந்தித்துப் பாடியது நீச்சாற் பெருத்திடு காவேரியாற்றை நிலைநிறுத்திச் சாய்ச்சாள் இலைக்கறிச் சாற்றையெல்லாம்; அதுதானுமன்றிக் காய்ச்சாப் புளியும்நற் கல்லுடன் சோறும் கலந்து வைத்த ஆச்சாளை யான்மற வேன்; மறந்தால்மனம் ஆற்றிடுமோ? 38 ஓரிடைப் பெண் நீர்கலந்த மோரைக் கொடுத்தபோது பாடியது கார் என்று பேர்படைத்தாய்! ககனத் துறும்போது; நீர் என்று பேர்படைத்தாய்! நெடுந்தரையில் வந்ததன்பின்; தார் ஒன்று நீள்குழலார் ஆய்ச்சியர்கை தனையடைந்து, மோர் என்று பேர்படைத்தாய்! முப்பேரும் பெற்றாயே! 40 இசைபாட அறியாத ஒருகிழத்தாசியை நிந்தித்துப் பாடியது இந்துமுடிக்கும் சடையாளர் இருக்கும் தொண்டை வளநாட்டில் சிந்துபடிக்கக் கவிபடிக்கத் தெரியாமடவாய்! உன்றனுக்குக் கெந்தப்பொடி ஏன்? பூமுடி ஏன்? கிழமாய் நரைத்து முகம்திரைத்தும் இந்த முறுக்கேன்? வீறாப்பேன் எடுப்பேன் உன்னைக் கெடுப்பேனே! 41 சிவனை நிந்தையாகப் போற்றியது வில்லால் அடிக்கச், செருப்பால் உதைக்க வெகுண்டொருவன் கல்லால் எறியப், பிரம்பால் அடிக்கஇக் காசினியில், அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்கோர் அன்னைபிதா இல்லாத தாழ்வல்லவோ? இங்ஙனே எளிதானதுவே! 42 காளமேகப் புலவர் 9. நளவெண்பா கலிநீங்கு காண்டம் (நளன் அயோத்தி நகரடைதல்) முன்னீர், மடவார் முறுவல் திரள்குவிப்ப நன்னீர், அயோத்தி நகர் அடைந்தான் - ; பொன்னீர் முருகு உடைக்கும் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி அருகுஉடைக்கும் நல்நாட்டு அரசு. 43 மான்தேர்த் தொழிற்கும், மடைத்தொழிற்கும் மின்கோன் என்று ஊன்தேய்க்கும் வேலான் உயர்நறவத் - தேன்தோய்க்கும் தார்வேந்தர்க்கு என்வரவுதான் உரைமின்! என்றுரைத்தான், தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று. 44 அம்மொழியைத் தூதர் அரசர்க்கு அறிவிக்கச் செம்மொழியாத் தேர்ந்து அதனைச் சிந்தித்தே, - இம்மொழிக்குத் தக்கானை இங்கே தருமின்! என உரைப்ப, மிக்கானும் சென்றான் விரைந்து 45 பொய்யுடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித் தன் செய்ய முகமலர்ந்து, தேர்வேந்தன், - ஐயா! நீ! எத்தொழிலின் மிக்கனை கொல்? யாதுன் பெயர்? என்றான் கைத்தொழிலின் மிக்கானைக் கண்டு. 46 அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய்ச் செந்நெல் விளைக்கும் திருநாடர் - மன்ன மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லென்யான் என்றான் கொடைத் தொழிலின் மிக்கான் குறித்து, 47 நளனைத்தேடப் புரோகிதனை விடல் என்னை இரும்கானில் நீத்த இகல்வேந்தன் தன்னை, நீ ! நாடுகெனத், தண்கோதை, - மின்னுப் புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த உரை பகர்வ தானாள் உவந்து. 48 கார்இருளில் பாழ்மண்ட பத்தேதன் காதலியைச் சோர்துயிலில் நீத்தல் துணிவன்றோ? - தேர்வேந்தர்க்கு, என்றறைந்தால் நேர்நின்று எதிர்மாற்றம் தந்தாரைச் சென்றறிந்து வா! வென்றாள் தேர்ந்து. 49 புரோகிதன் நளனைத் தேடல் மின்னாடு மால்வரையும், வேலையும், வேலைசூழ் நன்னாடும், கானகமும், நாடினான்; - மன்னு கடம் தாழ் களியானைக் காவலனைத் தேடி அடைந்தான் அயோத்தி நகர். 50 கானகத்துக் காதலியைக் கார் இருளிற் கைவிட்டுப் போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தான் என்று சாற்றினான் அந்தஉரை தார்வேந்தன் தன் செவியில் ஏற்றினான், வந்தான், எதிர். 51 நளன் மொழி ஒண்தொடி தன்னை உறக்கத்தே நீத்ததூஉம், பண்டை விதியின் பயனே காண்! - தண் தரளப் பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெல்வனத்தே நீத்தான் என்று ஐயுறேல்! நீ! 52 தமயந்தி புரோகிதனைக் கேட்டல் எங்கன் உறைந்தனைகொல்? எத்திசைபோய் நாடினை கொல்? கங்கைவள நாட்டார்தம் காவலனை, - அங்குத் தலைப்பட்ட வாறுண்டோ? சாற்றென்றாள், கண்ணீர் அலைப்பட்ட மார்பினாள் ஆங்கு 53 புரோகிதன் கூறுதல் வாக்கினால் மன்னவனை ஒப்பான்; மறித்தொருகால் ஆக்கையே நோக்கின் அவன் அல்லன்; - பூக்கமழும் கூந்தலாய்! மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான், ஏந்துநூல் மார்பன் எடுத்து. 54 அயோத்தி யரசனுக்குத் தமயந்தியின் இரண்டாம் சுயம்வரந் தெரிவித்தல் மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை பூண்டாள் என்று அந்தண! நீபோய் உரைத்தால், - நீண்ட கொடைவேந்தற்கு இத்தூரம் தேர்க்கோலம் கொள்வான் படைவேந்தன் என்றாள் பரிந்து. 55 எங்கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரமென்று அங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய் அந்நாளும் நாளை அளவென்றான்; அந்தணன் போய்த் தென் ஆளும் தாரானைச் சேர்ந்து. 56 வேத மொழிவாணன், மீண்டு சுயம்பரத்தைக் காதலித்தாள் வீமன்தன் காதலி என்று - ஓதினான்; என்னசெய்கோ மற்றிதனுக் கென்றான் இகல்சீறும் மின்செய்த வேலான் விரைந்து. 57 நளன் கூறுவது குறையாத கற்பினாள்; கொண்டானுக்கு அல்லால் இறவாத ஏந்திழையாள்; இன்று - பறிபீறி நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா! சொல்லப்படுமோ இச் சொல். 58 அயோத்தி அரசன் சிந்தித்தல் என்மேல் எறிகின்ற மாலை எழில் நளன்தன் முன்னே விழுந்ததுகாண்! முன்னாளில்; - அன்னதற்குக் காரணந்தான் ஈதன்றோ என்றான் கடாம்சொரியும் வாரணந்தான் அன்னான் மதித்து. 59 நளன் சிந்தித்தல் முன்னை வினையால் முடிந்ததோ! மொய்குழலாள் என்னைத்தான் காண இசைந்ததோ! - தன் மரபுக்கு ஒவ்வாத வார்த்தை உலகத்து உரைப்பட்டது எவ்வாறு கொல்லோ? இது. 60 நளன் இருதுபன்னனுக்குத் தேரோட்டுதல் காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன், மற்று அவன்தன் ஏவல் முடிப்பன் இனி என்று - மாவைக் குலத்தேரில் பூட்டினான், கோதையர்தம் கூந்தல் மலர்த்தேன் துளிக்குந்தார் மன். 61 ஒற்றைத் தனிஆழித் தேரென்ன ஓடுவதுஓர் கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன்! - மற்றிதற்கே போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென்று அளிமுரலத் தீம்தேறல் வாக்குந்தார்ச் சேய். 62 முந்தை வினைகுறுக மூவா மயல் கொண்டான் சிந்தையினுங் கடுகச் சென்றதே! - சந்த விரைத் தார்குன்றா மெல்ஓதி தன்செயலைத் தன்மனத்தே தேர்கின்றான் ஊர்கின்ற தேர். 63 மேல் ஆடை வீழ்ந்தது எடுவென்றான், அவ்வளவில் நாலாறு காதம் நடந்ததே! - தோலாமை மேல்கொண்டான் ஏறிவர, வெம்மைக் கலிச்சூதின் மால் கொண்டான் போல்கொண் மா. 64 இத்தாழ் பணையில் இரும்தான்றிக் காய்எண்ணில் பத்தா யிரங்கோடி பார்! என்ன, - உய்த்து அதன்பால் தேர் நிறுத்தி எண்ணினான், தேவர் சவைநடுவே தார் நிறுத்தும் தோள்வேந்தன் தான். 65 ஏரடிப்பார் கோலெடுப்ப இன்தேன் தொடைபீறிக் காரடுத்த சோலைக் கடல்நாடன், -தேர் அடுத்த, மாத்தொழிலும் இத்தொழிலும் மாற்றுதியோ என்றுரைத்தான் தேர்த்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து. 66 கலி நளனைவிட்டு நீங்குதல் வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான், தண்தார் புனைசந் திரன் சுவர்க்கி - கொண்டாடும் பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே காவலன்பால் நின்ற கலி. 67 புகழேந்தியார் 10. திருவிளையாடல் மாமனாக வந்து வழக்குரைத்த படலம் கன்னிநான் மாடக்கூடற் கடிநகர் வணிக மாக்கள் தன்னின்மா நிதிக்கோன் அன்னான் தனபதி யென்னும் பேரான், மன்னினான், அனையான் கற்பின் மடவரால் சுசீலை என்பாள், பொன்னின் நாள்முளரிச்சேக்கைப் புண்ணியத் திருவின் அன்னாள். 68 என் இவர் தமக்கு மைந்தற் ற்றை இருக்கும் நாளில், தனபதி மருகன் தன்னைத் தகவுசால் மகவாக் கொண்டு, மனமகிழ் சிறப்பால் நல்க, மனைவியும் தொழுது வாங்கிப், புனைவன புனைந்து போற்றிப், பொலிவுறவளர்த்துக்கொண்டாள். 69 தனபதி மகப்பேறு அற்றான் ஆயினும், தணவாக் காதல் மனைவிமேல் வைத்த ஆசை மயக்கினால், வருந்தி ஈன்ற தனையனை மகவாத் தந்த தங்கைமேல், தீராப் பூசல் வினை விளைத்தொழுக, ஓர்நாள் இளையளும் வெகுண்டுசொல்வாள். 70 பெருமிதம் உனக்கேன் பிள்ளைப் பேறற்ற பாவி! நீ என் அருமைநன் மகனால் அன்றோ இருமையும் அடைவாய்? என்னப், பெரிதும்நாண் அடைந்து, மேலைக் காயினும் பிள்ளைப்பேறு தருதவம் புரிவேன்; என்னாத் தனபதி தவமேற் செல்வான் 71 தன்பெரும செல்வம் எல்லாம் மருமகன் தனக்கே ஆக்கி, அன்புகொள் மனைவியோடும் அருந்தவ நெறியிற் சென்றான் பின்பவன் வரவு தாழ்ப்ப, மருமகன் பெற்ற எல்லாம், வன்பினால் வழக்குப் பேசி, வௌவினார் தாய மாக்கள். 72 விளைநிலன், அடிமை, மைப்பூண், வெறுக்கை, நன் பசுக்கள், ஏனை வளனும், மாற்றவர்கைக் கொள்ள, வன்சிறை இழந்த புள்போல் தளர் உறு, மகனும், தாயும், சார்பு இலாத் தம்மனோர்க்கு, ஒர் களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே! சரணம்! என்னா. 73 வந்து, வான் அகடு போழ்ந்த, மணிமுடி விமானக் கோயில் சுந்தர நாதன் பாதத் துணைதொழுது இறைஞ்சி, யார்க்கும் தந்தையும், தாயும், ஆகும் தம்பிரான்! நீரே! எங்கட்கு எந்தையும், யாயும், என்னா, இரங்கி நின்று, இனையசொல்வாள். 74 என்மகன் தன்னை, மைந்தன் இன்மையால், எவரும் காணத் தன்மகன் ஆகக் கொண்டு, தகுதியால், அன்றே, காணி, பொன், மானை, பிறவும், நல்கிப் போயினான் என்முன்; இப்பால், வன்மையால் தாயமாக்கள் அவையெலாம் வௌவிக் கொண்டார். 75 திருத்திரான், ஒருத்திக்கு இந்த திருமகன், இவனும் தேரும் கருத்திலாச் சிறியன், வேறு களைகணும் காணேன்! ஐய! அருத்திசால் அறவோர் தேறும் அருட்பெரும் கடலே! எங்கும் இருத்தி நீ! அறியாய் கொல்லோ! என்று பார் படிய வீழ்ந்தாள். 76 மாறுகொள் வழக்குதீர்க்க வல்லவர் அருளினாலே, சீறுகொள் வடிவேல் கண்ணாள், சிறுதுயில் அடைந்தாள்; மெய்யில் ஊறுகொள் கரணம் ஐந்தும் உற்றறி கனவில், கங்கை ஆறுகொள் சடையார், வேதச் செல்வராய், அடுத்துச் சொல்வார். 77 புலந்தபின், தாயத்தோரைப் புரவலன் ஆணையாற்றால், வலம்தரு மன்றத்து ஏற்றி மறித்தனை இருத்தி! யாம் போந்து, அலம்தரும் அறிவால் மூத்தோர் அனைவரும் இசைய, அந்தச் சலம்தரு வழக்குத் தீர்த்துத் தருகுவம்; போதி! என்றார். 78 சென்றவள், கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து, வெள்ளி மன்றவன் கோயில் வாயில் வந்து வந்தனைசெய்து, அம்பொன் குன்றவன் உரைத்த ஆற்றால், கொடுமைசால் வழக்குப் பூட்டி, வென்றவர் இருக்கை எய்தி, விளம்புவாள் பலரும் கேட்ப. 79 அட்டில்வாய் நெருப்பிடேல்! ஓர் அடியிடேல்! அறத்தாறு அன்றி பட்டிமை வழக்கால் வென்று போகொட்டேன்! பலரும் கேட்க இட்டனன்; அரசன் ஆணை! அறத்தவிசு ஏறி, ஆன்றோர் ஒட்டியபடிகேட்டு, எங்கள் உரிப்பொருள் தந்து போமின்! 80 என்றனள் மறித்த லோடும், இழுக்குரை ஆடி, வைது, வன்திறல் வலியார் தள்ளி அடித்தனர்; மைந்தனோடும் சென்றனள்முறையோ என்னாத் திருந்து அறத் தவிசினோர்முன் நின்றுரை ஆடினான்; கேட்டு அறிந்தனர் நீதி நூலோர் 81 அறத்தவிசு இருப்போர் ஏவல் ஆடவ ரோடும் போந்து, மறித்து அவைக் களத்திற் கூட்டி வந்தனள்; வந்த எல்லை, அறக்கொடி பாகர், வெள்ளி அம்பல வாணர் தாம், அத் திறத்தன பதியே என்னத் திருஉருக்கொண்டு செல்வார். 82 அரசன்இங் கில்லை கொல்லோ! ஆன்றவர் இல்லை கொல்லோ!குரைகழல்வேந்தன் செங்கோல் கொடியதோ! கோதஇல் நூல்கள் உரைசெய்யும் தெய்வந்தானும் இல்லை கொல்! உறுதியான 83 தருமம்எங்கு ஒளித்த தோகொல்! என்றுஅறத் தவிசில்சார்வார். தனபதி வரவு நோக்கி, வஞ்சனைத் தாயத்தார்கள் இனைவுஉறும் மனத்தார் ஆகி, விம்மிதம் எய்தி, வெல்லும் மனவலி இழந்து, பண்டு வழக்குஅலா வழக்கால் வென்ற வினைநினைந்து, உள்ளம் அச்சம் நாணினால் விழுங்கப்பட்டார். 84 குடங்கையின் நெடும்கண் ணாளும், குமரனும், வணிகர் தாளில் தடங்கண்ணீர் ஆட்ட வீழ்ந்தார், தடக்கையால் எடுத்துப்புல்லி மடங்கல்ஏறு அனையார் தாமும், மற்றவர் தமைத், தம் கண்ணீர் நெடுங்கடல் வெள்ளத்து ஆழ்த்திக், குமரனை நேர்ந்து நைவார். 85 ஐம்படை மார்பில்காணேன்! சிறுசிலம்பு அடியில் காணேன்! மொய்ம்பிடைமதாணிகாணேன்! முகத்து அசைசுட்டிகாணேன்! மின்படு குழைகள் காணேன்! வெற்றுடல் கண்டேன் அப்பா! என்பெறும் என்று பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார்! என்னா. 86 அனைவரும் இரங்க வாய்விட்டு அழுதவர், இளையாள் தன்னைத்,தனையனைக், கண்ணீர் மாற்றித், தடக்கையால் முதுகுதைவந்து, இளையன்மின்! என்முன் வேறொன்று எண்ணன்மின்! எண்ணாவஞ்ச விளைஞர், வல் வழக்குச் சோர்ந்து விடுவது காண்மின்! என்னா. 87 நட்பிடை லஞ்சம் செய்தும், நம்பினார்க்கு ஊன் மாறாட்டத்து உட்படக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு இம்மியும் உதவாராயும், வட்டியின் மிதப்பக்கூறி வாங்கியும், சிலர் போல் ஈட்டப் பட்டதோ? அறத்தாறு ஈட்டும் நம்பொருள் படுமோ? என்னா. 88 மங்கல மாடம் ஒங்கும் மதுரைநா யகனை நோக்கிச், செங்கரம் சிரமேற் கூப்பி, மாணிக்கம் தேற்றி விற்கும் எங்குல வணிகர் ஏறே! எம்மனோர் வழக்கை இந்தப் புங்கவர் இடனாத் தீர்த்துத் தருகெனப் புலம்பி ஆர்த்தார். 89 ஆவலித்து அழுத கள்வர், வஞ்சரை வெகுண்டு நோக்கிக் காவலன் செங்கோல் நுண்ணூல் கட்டிய தருமத் தட்டில், நாவெனும் துலைநா விட்,டெம் வழக்கையும், நமராய் வந்த மேவலர் வழக்குந், தூக்கித், தெரிகென விதந்து சொன்னார். 90 நரைமுது புலியன்னான் சொல்கேட்டலும், நடுங்கிச், சான்றோர், இருவர் சொல்வழக்கும் மேற்கொண்டு அநுவதித்து இரண்டு நோக்கித் தெரிவழி, இழுக்கு ஞாதி வழக்கெனச் செப்பக் கேட்டு, வெருவினர், தாயத் தார்கள், வலியரின் வேறு சொல்வார். 91 தவல் அரும் சிறப்பின் ஆன்ற தனபதி வணிகர் அல்லர் இவர் என, அவையம் கேட்ப இருகையும் புடைத்து நக்குக், கவளமான் உரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் கோமான், அவர் அவர் குடிப்பேர், பட்டம், காணி, மற்று அனைத்தும் கூறும். 92 தந்தைதாய், மாமன், மாமி, தாயத்தார், அவரை ஈன்றார், மைந்தர்கள், உடன் பிறந்தார், மனைவியர், கிளைஞர் மற்றும் அந்தம்இல் குணங்கள், செய்கை ஆதிய அடையாளங்கள் முந்தையின் வழுவாவண்ணம் முறையினால் மொழிந்தான் முன்னோன். 93 அனையது கேட்ட ஆன்றோர் அனைவரும் நோக்கி, அந்தத் தனபதி வணிகர் தாமே இவர்; எனச் சாற்ற லோடும் மனவலித் தாயத் தார், தம் வழக்கு இழுக்கு அடைந்தது ஈது நனைவழி வேம்பன் தேரில், தண்டிக்கும், நம்மை யென்னா. 94 இல்லினுக்கு ஏகி மீள்வன் யான் என்றும், குளத்திற்கு ஏகி ஒல்லையில் வருவேன் என்றும், ஒவ்வொரு வார்த்தை இட்டு, வல்எழு அனைய, தோளார் அனைவரும், வன்கால் தள்ளச் செல்லெழுமுகில்போல், கூட்டம் சிதைந்தனர் ஒளித்துப் போனார். 95 அனையவர் போக, நின்ற அறன்நவில் மன்றத்து உள்ளோர், தனபதி வணிகர் தந்த தனம்எலாம், தத்து மைந்தற்கு என, மனை எழுதி வாங்கி ஈந்தனர்; ஈந்த எல்லை, மனம்மொழி கடந்த நாய்கர் மறைந்து தம் கோயில் புக்கார். 96 பரஞ்சோதி முனிவர் 11. மதியிலா மறையோன் ஆசிரியப்பா ஒசையும், பொருளும் ஒருங்குடன் நிறைந்தே கற்பவர் மனத்தைக் கனிவுறச் செய்யும் என்றும் குறையா இளமை வாய்ந்தொளிர் செந்தமிழ் மொழி வளர் சீர்சோ ணாட்டில் பற்பல வளங்களும் பொற்புடன் அமைந்த பாரோர் புகழ்திரு ஆரூர் நகரில், எப்பொருள் காணினும் அப்பொருள் மீதே ஐயமும் ஆசையும் கொள்ளும் ஓர் அந்தணன் வாழ்ந்தனன்; வறுமை மிக்குளன். அவனே, உறவினர் வாழும் ஓர் ஊர்க்கு ஏக புறப்பா டுற்றுப் போயினன், வழியில் களைப்பு மீதூர்ந்து கண்கள் இருளவே நெறிமருங்கு இருந்த நீண்டது ஒர் ஆல மரத்தின் நிழலை அடைந்தனன் மகிழ்ந்தான் அம்மரம் தன்னில் அஞ்சா நெஞ்சுடைப் பெருமுனி ஒன்று, வருவோர் தமக்கு எலாம் இடுக்கண் பலவிளைத்து இன்புடன் வாழ்ந்ததால். அவ்வர லாற்றை அறிந்திடா அந்தணன் உண்ணும் நீர் வேண்டும் எனவிருப்பு உற்றனன். அவன் மனங்களிக்க அங்கொரு தடாகம் தாமரை மலர்ந்து தண்எனத் தோன்ற அந்தணன் அதன்நீர் அள்ளிப் பருகினன். பின்னரும் ஆசைப் பெருக்குடை மறையோன் உண்ணுதற்கு உணவும் உற்றிடும் ஆயின் நன்றாம் என்றே நின்றனன் நினைத்தான் அந்தக் கணமே அவ்விடந் தன்னில் பலவகைக் கறிகளும், பண்ணிய வகைகளும், உண்டிட உண்டிட உருசிமீக் காணும் குழம்புடன் இரச வகைகளும், குறை விலாச் சோறும் கிடைக்கச் சுகமுடன் அயின்றனன். உண்டபின் அவனும் உறுகளைப்பு ஆற்ற, அழகியபடுக்கை ஒன்று அகப்படும் ஆயின் நன்றென நாவால் நவின்றனன். ஆண்டே மிகமிளிர் கட்டிலும் மெத்தையும் எழுந்த. கண்டனன் வேதியன், கருதினன் பலப்பல. என்மனம் தன்னில் எண்ணிய அனைத்தும் இங்கு உண்டாய; எவரையும் காணேன். யாவரே இவற்றை மேவிடச் செய்தோர்? தேவர்கள் செயலோ! திருவருள் செயலோ! அரக்கர்கள் செயலோ! அறிந்திலேன் ஒன்றும் ஒகோ! இங்குள ஒருபெரும் ஆலில் புன்தொழில் பூதம் பொருந்துமோ? என்றே, எண்ணும் முன்னே, கண்ணுறு வோர்கள் நெஞ்சம் நடுக்குறும் நீண்டபேர் வயிறும், குறுகிய கால்களும் குறைவுஇலாக் கரங்களும், ககனம் தொடஉயர் கருநிற உடலும், இரத்த விழிகளும் பெருத்தபேழ் வாயும், தடித்தொளிர் பற்களும், வெடித்திடு சொற்களும், சுருட்டை மயிரும் உளதுஓர் முரட்டுப் பூதம் தோன்றப், புந்திநைந்து அரற்றினன். அந்தோ! இம்முனி அடியனைத் தூக்கி ஒருவா யாக உண்ணுமோ! என்றே நினைப்பதன் முன்னர், நின்ற அப்பூதம் அன்னவன் தன்னை விழுங்கி அகன்றதால், ஆதலால், நாமும் அளவிலா ஆசை கொள்ளுதல் தீதாம். அன்றியும் கொஞ்சமும் அச்சம் எனுங்குணம் அடையாது இருத்தலும் இவ்வுலகு அதனில் இன்புடன் வாழும் செவ்விய நெறி, எனச் சிந்தையில் பதித்தே எவ்வம்இல் வாழ்க்கையை எய்துதும் யாமே. 97 சாமி - சிதம்பரனார். 12. பாரதம் கடோற்கசன் தூது எதிர் எதிர் கொற்றவன் வாயிலின் நின்றவர், யார்? என எய்துதலும், அதிர்முர சக்கொடி யோன், அர வக்கொடி அரசன் இடைப்பகர்வான், முதிர உரைத்ததுஓர் மொழியுளது; அச்சொல் மொழிந்திட வந்தனன்யான்; எதிர் அறு வெற்றி அரிக்கொடி யோன் மகன்; என்றனன் விக்ரமனே. 98 அம்மொழி, தீஉரு மேறென, நீடவை அரசர் செவிப்பட ஓர் செம்மொழி அற்றவன் மொழிவழி சென்றொரு சிறிதும் மதித்தரு ளான், நும்மொழி விட்டொரு மெய்ம்மொழி கேண்ம்! என நோதகு நெஞ்சின னும், வெம்மொழி வித்தக! எம்மொழி நுந்தைதன் மெய்ம்மொழி? என்றனனே. 99 தன்திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திர தன் றனை, வாள் வென்றிகொள் காவலர் காவல் மிகுப்பினும், வெயிலவன் வீழ்வதன் முன் கொன்றிடு வேன்! அது தப்பில், அருங்கனல் ஊடு குதித்திடு வேன்! என்று மொழிந்தனன் வாழ்கயி லாயமும் எய்தினன் வில் விசயன். 100 வஞ்சனை யால், அம ரில்பகை தன்னை மலைப்பது பாதகம் என்று அஞ்சினான்; ஆதலின், நீ அறியும்படி ஐயன்விடுத் தனனால் எஞ்சினன் நாளைஉன் மைத்துனன் என்றுகொள்! என்றனன், வல்திறல் கூர் நெஞ்சினில் வேறொரு சஞ்சலம் அற்ற நிசா சரன்மா மருகன். 101 மன்மைந்தர் பலரொடும் போய் மறித்தொருவர் மீளாமல் மலைந்துவீழ, என்மைந்தன் இறந்திடவும், யாதொன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான்; தன்மைந்தன் இறந்தனனாம்! தான்தழலின் மூழ்குவனாம்! சபதம் கூறி, வின்மைந்தின் மிகுந்தவருக்கு அழுதிரங்கி அரற்றுவது வீரம் தானோ! 102 பயந்து இரவின் நடுங்கி, அரன் பருப்பதம் புக்கு, அவன் கொடுத்த படையும்வாங்கி வயத்துஇரதம் மால்சடவ வந்து எதிர்தோன் றுவன் ஆகின், மகரமோதும் கயத்து, இரவி விழுவதன்முன், கையறுதன் புதல்வனைப்போல் களத்தில்மாளச், செயத்திரதன் கொடும்கணையில் தான் படுதல் உறுதி! எனச் சாற்றுவாயே! 103 என்னினும்பார் தனக்குஉரியன், சிலைத்தொழிலில் சிலைக் குருவாய் எவரும் போற்றும் மன்னினுந்தான் மிகவலியன், தண்டெடுத்தால் உந்தையினும் வலியன், சால உன்னினும்தோள் உரன்உடையன், மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ? தன்னினும் போர்க்கு எளியவனோ? சயத்திரதன் தான்? என்று சாற்றுவாயோ! 104 ஆளை ஆள் நிலைஅறிவது அல்ல, மற்று அறிபவர் யார்? அணிந்த போரில் நாளை யார் வெல்வர் எனத் தெரியுமோ? என நவின்று நகைத்தான் மன்னோ! பாளைவாய் நெடும் கமுகின் மிடறு ஒடியக், குலைத்தெங்கின் பழங்கள் வீழ, வாளைபாய் குருநாடும் எந்நாடும் முழுதாளும் மன்னர் கோமான். 105 தார்அரசன் மகன், துச்சா தனன்மகன், சல்லியன் மகன், வேல் சகுனி யென்னும் போர்அரசன் மகன், முதலா எத்தனைபேர் பட்டாலும் பெரியது அன்றோ! பார், அரசுஆ ளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன், ஒருவன் பட்டான் ஆகில், ஆர்அரசுக்கு இனிஉரியார்? அந்தோ! என்று உரைத்தான் மற்று அங்கர் கோமான். 106 அங்கிருந்து சயத்திரதன் ஆவி கவர்ந் திடுவல், என ஆண்மை கூறிப் பங்குஇருந்த உமாபதிபால், பணிந்துவரம் பெறச்சென்றான் பார்த்தன் ஆகில், கொங்கு இருந்த தாராய்! நின் குடைநிழற்கீழ் இதுகாலம் கூட்டம் கூடி, இங்கிருந்த ஏழையரேம் என்செயமற்று இருக்கின்றேம்? என்று சொன்னான். 107 இவன் மொழிந்த இகழ் உரைகேட்டு, இடும்பன்மரு மகன் வெகுளுற்று, என்சொன் னாலும், அவனி தலம் முழுதும்இனி அரசாள நினைந் திருந்தீர்! அறி விலீர்காள்! சிவன் எரிசெய் புரம்போலும் பாடி வீடு அழல் ஊட்டிச், சேனையாவும் பவனன் மகன் மகன் என்னும் பரிசு அறியத் தொலைத் தீடு படுத்துவேனே. 108 தசைகுருதி மிசை ஒழுகத் தனித்தனியே எதிர்த்தவரைத் தலைகள் சிந்த, விசையன்வர வேண்டுமோ? மற்றுள்ளார் திரண்டுவர வேண்டுமோ தான்? நிசை புலரும் முனம், முனைந்து நீறாக்கி விடுகுவன், எம் நிருபன் சொன்ன அசைவில் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன்; அறிகிலீரே! 109 இருவர் எதிர் எதிர் தம்மில் இகல் பொருதல் உலகு இயற்கை; யாரும் கூடிப் பருவம் உறாத் தனிக்குதலைப் பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர்! ஒருவன் நெடும் தேர் அழிக்க, ஒருவன் மலர்க் கை துணிக்க ஒருவன் பின்னைப் பொருவன்என அறைகூவிப் பொன்றுவித்தான்; இதுகொண்டோ புகல்கின்றீரே! 110 வரைக்கு உவமை பெறும்தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி, உரைக்கும்மொழி கேட்டிருந்த உரகம் அணி கொடிவேந்தன் உருத்து நோக்கி, இருக்கும் எழில் அவைக்குஏற்ப இயம்பாமல் தன்மதத்தால் இயம்புகின்ற, அரக்கிமகன் உடன்ஒன்றுங் கழரேல்! என் றனன் இருந்த அரசர் யார்க்கும். 111 அந்த உரைமீண்டு அவன் கேட்டு, ஆங்கவனை நகைத்து உரைப்பான்; அரக்கரேனும் சிந்தனையில் விரகுஎண்ணார்! செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா! வெம்திறல் கூர் துணைவருக்கும் விடம் அருத்தார்; நிரைக்கழுவில் வீழச் சொல்லார்; உந்துபுனல் இடைப்புதையார்; ஓர் ஊரில் இருப்பு அகற்றார்; உரையும் தப்பார். 112 செழுந்தழல்வாழ் மனைக்கொளுவார்; செய்ந்நன்றி கொன்றறியார்; தீங்குபூணார்; அழுந்துமனத்து அழுக்குஉறார்; அச்சமும் அற்று அருள்இன்றிப் பொய்ச்சூது ஆடார்; கொழுந்தியரைத் துகில் உரியார்; கொடும் கானம் அடைவித்துக் கொல்ல எண்ணார்; எழுந்த அமரில் முதுகிடார்; இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான். 113 தேன்இடறிப் பாண்முரலும் செழும்தாம விசயன் உடன் செருவில் வந்தால், மானிடரில் பொரவல்லார் சிலர் உண்டோ? தெரியாது! வான் உளோரில் கோன்இடையுற்று, அருகுஇருந்த திறல்வேந்தர் காத்திடினும், குறித்தவீரன் தான்இடர்உற்று உயிர்அழிகை தப்பாது; என்பதும் உரைத்துத் தனயன் மீண்டான். 114 வில்லிபுத்தூர் ஆழ்வார். இரண்டாம் செய்யுட்பாடக் குறிப்புரை 1. தனித்திருத்தாண்டகம் 1. ஐயன் - தலைவன். துய்ப்பன - அனுபவிப்பன, உய்ப்பன - செலவிடுவன. ஏறு ஊர்ந்த - காளையிலேறிய 2. குறி - தோற்றம். 3. சங்கநிதி - சங்கு வடிவமாக இருக்கின்ற ஒரு செல்வம். பதுமநிதி - தாமரை வடிவமாக விருக்கின்ற ஒரு செல்வம். மங்குவார் - கெடுவார். தொழுநோய் - குட்டநோய். கங்கை வார் சடை கரந்தார்க்கு - கங்கையை நீண்ட சடையில் வைத்தவர்க்கு. 2. பெருமாள் திருமொழி 4. ஆனாத - கெடாத. தன்சூழ தன்னைச் சுற்றியிருக்கும்படி. 5. கம்ப மதயானை - கட்டுத் தறியையுடைய மதங்கொண்ட யானை. தம்பகமாய் - தூணாக 6. ஆதரியேன் - விரும்பேன். தென்ன - ஒலிக்குறிப்பு. அன்னைய - அதனையொத்த. குவடு - மலைச்சிகரம். 7. செடி - பாவம். 3. தமிழ்த்தாய் வணக்கம் 8. ஆன்றோர் - பெரியோர். அமிழ்து உறழ் - அமுதத்தை ஒத்த. இமிழ்திரை வரைப்பில் - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகில். கமழ்குணம் - விளங்குகின்ற சற்குணம். 9. வளர்ப்பு - எல்லை; கவின் - அழகு 10. இலக்கணச் செறிவுடை - இலக்கணம் நிறைந்த. நாயக மொழியே - முதன்மையான மொழியே. 12. உறுசுவை - மிகுந்த இனிமையை உடைய. களிமகிழ் கூரும். - அளவற்ற மகிழ்ச்சி யடையும். கருத்துஉறு விளக்கே - மனத்தில் மிகுந்து நிற்கின்ற அறிவாகிய விளக்கே. காசுஅறு - குற்றமில்லாத. இறைஞ்சினேன் - வணங்கினேன். 4. நீதிவெண்பா 13. இரும் - பெரிய பைம்கண் - பசுமையான கண்ணை யுடைய. 14. ஞானம் தருமுறை - உபதேசஞ் செய்கின்ற முறை. யந்திரம் - மந்திர எழுத்துக்களைச் சுற்றிக் கிழிக்குங் கோடு. 15. பன்னி - மனைவி. 17. காதலித்து - அன்புகொண்டு, மானுவரோ -ஒப்புவாரோ; அல் ஆரும் - இரவில் விளங்கும். மீன் - நட்சத்திரம். இலகிடினும் - விளங்கினாலும். 5. நான்மணிக் கடிகை 18. வயிற்றில் - நடுவில். நல்ஆள் - நல்லவர். 19. அணி - அழகு, பெண்மை - நலம் - கற்புடைமை 21. துன்னிய கேளிர் - நெருங்கிய உறவினர். ஒண்மையவாய் - சிறந்தனவாய்; சான்ற - நிறைந்த. 22. மனைக்கு - இல்லத்திற்கு. விளக்கம் - ஒளி. ஈண்டுச் சிறப்பென்னும் பொருட்டாய் நின்றது. தகைசால் - பெருமைக் குணம் நிறைந்த; உணர்வு - பகுத்தறிவு. 6. நாலடியார் 23. கொடையொடுபட்ட - கொடுத்தலாகிய தொழிலோடு கூடிய. ஆண்டைக் கதவு - அவ்வுலகிலுள்ள துறக்கத்தின் கதவு. 24. முனிதக்க - வெறுக்கத் தக்க. பீடு - பெருமை; பரவன் மின் - புகழ்ந்து கொண்டிராதீர்கள். பற்றன்மின் - சேர்த்து வைத்திராதீர்கள். பாத்துண்மின் - எல்லோருக் கும் பிரித்துக் கொடுத்து உண்ணுங்கள். கரவன்மின் - ஒளிக்காதீர்கள். 25. ஈண்டுங்கால் ஈண்டும் - சேரும்காற் சேரும். மிடுக்கு - வலிமை; உலந்தக்கால் - நீங்கியபோது. 26. உண்மின் - உண்ணுங்கள். குண்டு - ஆழம். அடாஅ - சமைக்காத, கெடாஅ அடாஅ என்பன உயிரளபெடை. 27. உறுமாறு - சேரும்படி. 28. வேதிகை - திண்ணை. சுற்றுக்கோள் புக்க - சுற்றிக் கொண்டிருக்கின்ற விடத்திற் புகுந்த. நச்ச - விரும்ப. ஏற்றைப் பனை - ஆண் பனை. 29. பெயல் பான் - பெய்யுந் தன்மையையுடைய, புன்னை கடியும் - புன்னையின் மணத்தை அகற்றுகின்ற. சேர்ப்ப - கடற்கரைச் சோலையை யுடையவனே! 30. வரையார் - இல்லையென்றியம்பாமல். ஆற்றாதார்க்கு - வறிஞர்க்கு. பொலிகடன் - கொழுத்த கடன். 31. இறப்ப - மிகவும். முறை புதவின் - முறையே கடை வாயில்கள் தோறும், கடிஞை - பிச்சைக்கலம். 32. கடிப்பு - முரசடிக்குந்தடி. 7. குமரேச சதகம் 33. முறி - உடன்படிக்கை எழுதிக்கொடுத்தல். திருப்புல் வயல். முருகனுக்குச் சிறந்த ஒரு மலையமைந்த தலம். 34. மறுகினும் - கலங்கினாலும். குறடு - கட்டை. துங்கம் - தூயது. நிறை - ஒழுக்கம். 35. நீபமாலை - கடப்பமலர் மாலை. 37. தேகிஎன்றோர்க்கு - பிக்ஷாந்தேகி என்று பிச்சை வாங்குவோர்க்கு, தான கன்னன் - கொடையிற் சிறந்த கர்ணன், தும்பிமுகன் - யானை முகத்தையுடைய விநாயகன். 38. தண்தரளமாலை - குளிர்ந்த முத்துமாலை. 8. தனிப்பாடல் 39. சாய்ச்சாள் - ஊற்றினாள். இலைக்கறிச் சாற்றை யெல்லாம் - கீரைக் குழம்பு முழுவதையும். ஆச்சாளை - ஆத்தாளை. தகரத்துக்குச் சகரம் போலியாக வந்தது. 40. கார் - மேகம்; ககனம் - வானம்; தார் ஒன்று - மாலை பொருந்திய. 41. இந்து - சந்திரன். மடவாய் - பெண்ணே. கெந்தப்பொடி - வாசனைச் சுண்ணம். வீறாப்பு - கருவம். 42. வில்லால் அடித்தவன் அருச்சுனன். செருப்பால் உதைத்தவர் கண்ணப்ப நாயனார், கல்லால் எறிந்தவர் சாக்கிய நாயனார். பிரம்பால் அடித்தவன் அரிமர்த்தன பாண்டியன். 9. நளவெண்பா 43. முன்னீர் - கடல். மடவார் முறுவல் திரள் - பெண்கள் பற்களைப் போன்ற முத்தின் குவியலை. பொன் ஈர் - அழகிய குளிர்ந்த; முருகு - தேன். மொய்ம்மலர் - நெருங்கிய மலர். 44. மான் - குதிரை. மடைத் தொழில் - சோறாக்குந் தொழில். மடை - சோறு, ஊன் - ஆகுபெயராக உடலுக்கு ஆயிற்று. 45. அரசற்கு - இருது பன்னனுக்கு செம்மொழி - உண்மை மொழி. 47. அலர்வழியும் தேறல் - மலரினின் றோடும் தேன். 48. கோதை - தமயந்தி, மின்னுப்புரை - மின்னலை யொத்த. கதிர் - ஒளி. 49. துயிலில் - தூக்கத்தில், எதிர்மாற்றம் - எதிர்மொழி. 50. மின்ஆடு - மின்னல் ஒளிர்கின்ற. மால்வரை - பெரிய மலை, கடம்தாழ் - மதநீர் ஒழுகுகின்ற. 52. தணதரளம் பூ தாமம் வெண்குடையான் - குளிர்ச்சி யுள்ள முத்து மாலையையும், பூமாலையையும், வெண் கொற்றக் குடையையும் உடைய நளன். 53. தலைப்பட்டவாறுண்டோ - எதிர்ப்பட்டதுண்டோ? 54. ஏந்துநூல் மார்பன் - நூல் ஏந்தும் மார்பையுடையவன் என மாற்றிப் புரோகிதன் என்று பொருள் கொள்க. 56. தென் ஆளும் தாரான் - வண்டுகள். மொய்க்கின்ற மாலையை யணிந்த இருதுபன்னன். 57. இகல் - பகை. சீறும் - கோபிக்கும். மின்செய்த - ஒளி வீசுகின்ற. 58. இறவாத - கற்புத்தன்மை தவறாத. பறி - மீன் பிடிக்குங் கருவி. பருவரால் - பெரிய வரால் மீன். 59. கடாம் சொரியும் வாரணம் - மதநீரைச் சிந்துகின்ற யானை. 62. கொற்றம் - வெற்றி. பொம் - வண்டுகளின் ஒலிக்குறிப்பு. அளி - வண்டு. முரல - ஒலியிட, தீம்தேறல் வாக்கும் - இனியதேனை ஊற்றுகின்ற. 63. மூவாமயல் - நீங்காத மயக்கம். தேர்கின்றான் - ஆராய் கின்றவன்; நளன். 64. தோலாமை மேல்கொண்டான் - தோற்காமையைப் பூண்டவன்; வெற்றி யுடையவன்; இருதுபன்னன். வெம்மை கலிசூதின்மால் கொண்டான் - கொடுமை யைச் செய்கின்ற கலியின் சூதினால் மயக்குற்றவன். கலி -சனி. 65. பணை - கிளை. அதன்பால் தேர் உய்த்து நிறுத்தி - அதன் பால் தேரைச் செலுத்தி நிறுத்தி. தேவர் சவை நடுவே தார் நிறுத்தும் தோள் வேந்தன் - நளன்; தேவர்கள் கூடிய சபையின் நடுவில் மணமாலையைப் பெற்றுத்தன் புகழை நிலைநிறுத்தும் தோளையுடைய மன்னன், இது சுயம்வரகாலத்து நடந்த நிகழ்ச்சியைக் குறித்தது. 66. இன்தேன் தொடை - இனிய தேனடை ; கார் அடுத்த - மழை பெய்த. 67. சந்திரன் சுவர்க்கி - இவன் மள்ளுவநாட்டு மன்னன். புகழேந்தியாரைப் புரந்து வந்தவன். திருவிளையாடல் 10. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் 68. கன்னி - அழகிய. மாநிதிக்கோன் - குபேரன். முளரி- தாமரை. சேக்கை - ஆசனம். 69. தகவுசால் - பெருமை நிறைந்த. 70. தணவாக்காதல் - நீங்காத அன்பு. 71. பெருமிதம் - இறுமாப்பு. இருமை - இம்மை, மறுமை. 72. வன்பினால் - வலிமையால், தாயமாக்கள் - தனபதியின் தாயாதிகள். 73. வெறுக்கை - பொன். வளன் - செல்வம். களைகண் - பற்றுக்கோடு; அதாவது துணை. 74. வான் அகடு - ஆகாயத்தின் நடுவிடத்தை. போழ்ந்த - பிளந்த. 75. தகுதியால் - மகன் என்னும் முறையினால். காணி - விளைநிலம். 76. தேரும் கருத்து இலாச் சிறியன் - உலகநடையை அறியும் அறிவு பெறாத சிறுவன். அருத்திசால் அறவோர் - அன்பு நிறைந்த பெரியோர். பார் - பூமி. 77. ஊறுகொள் - அமைந்திருக்கின்ற, ஐந்து கரணம் - சப்தம், பரிசம், ரூபம். ரசம், கந்தம். அவை ஒலி, உணர்ச்சி, உருவம், சுவை, நாற்றம் என்பன. 78. புலந்தபின் - விடிந்தபின். அலம் தரும் - அமைதியைத் தருகின்ற. சலம் - துன்பம். 80. அட்டில்வாய் - சமையல் வீட்டில். பட்டிமை வழக்கு - கெடுவழக்கு. அறத்தவிசு - நீதிமன்றம். ஒட்டியபடி - முடிவுசெய்தபடி. 82. ஏவல் ஆடவர் - வேலைக்காரர்கள். அறக்கொடி - உமாதேவி. 84. இனைவு உறும் - வருந்துகின்ற. விம்மிதம் - வியப்பு. 85. மடங்கல் ஏறு - ஆண் சிங்கம். நேர்ந்து - பார்த்து. 86. ஐம்படை - திருமாலின் ஆயுதங்களாகிய சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு ஐந்தையும் பொன்னாற்செய்த அணிகலன், இதனைக் குழந்தைகளுக் கிடுவது மரபு. மொய்ம்பு - தோள். மதாணி - ஆபரணம், சுட்டி - நெற்றிச்சுட்டி என்னும் ஆபரணம். 87. தைவந்து - தடவி, இனையன்மின் - வருந்தாதீர்கள்! 88. ஊன் மாறாட்டத்து உடபட - உடல் நடுக்கமடையும்படி, ஊன்- உடலுக்கு ஆகுபெயர். 90. ஆவலித்து - வாய்விட்டு, நுண்நூல் - நீதிநூல். துலைநா - தராசு முள். நமராய் - நம்முடையது என்பவராய்; மேவலர் - பகைவர் ; தூக்கி - ஆராய்ந்து விதந்து - நன்றாக. 91. நரைமுது புலி - வயதேறிய கிழப்புலி. அநுவதித்து- மீண்டுங் கேட்டு. ஞாதி - தாயத்தார். 92. தவல் அரும் - குற்றம் இல்லாத, நக்கு - சிரித்து. மான்- யானை. 94. நனைவழி வேம்பன் - தேன் வழிகின்ற வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியன். 95. ஒல்லையில் - விரைவில், இட்டு - கூறி வல் எழு - வலியதூண். வன்கால் - வலிய காற்று. செல் எழுமுகில் போல் - செல்லுதற்கெழுந்த மேகக் கூட்டம் போல்; காற்றினாற் கலைக்கப்பட்ட மேகத்தைப்போல. 96. அறன் நவில்மன்றம் - நீதிவழங்கும் மன்றம். தத்து வமைந்தன் - சுவீகாரப் பிள்ளை. மனை - முறியோலை. நாய்கர் - வணிகர். வணிகரை நாய்கர் என்பது திசைச் சொல். 97. நெறிமருங்கு - வழியின் பக்கத்தில், இடுக்கண் - துன்பம். பண்ணிய வகைகள் - பலகார வகைகள். அயின்றனன் - உண்டான். உறுகளைப்பு ஆற்ற - உண்டான களையை நீக்க. ஆண்டே - அப்பொழுதே மிளிர் - பளபளப்பான. பேர் - பெரிய. ககனம் - வானம். பேழ்வாயும் - பிளந்த வாயும், புந்திநைந்து - மனம் பதைத்து. அரற்றினன் - அலறினான். எவ்வம் இல்வாழ்க்கை - குற்றம் இல்லாத வாழ்க்கை; அதாவது இன்ப வாழ்க்கை. 12. பாரதம். கடோற்கசன் தூது 98. முதிர உரைத்தது - அறிவு நிரம்பக் கூறியது. அரிக் கொடியோன் - சிங்கக் கொடியை உடையவன். வீமன். 99. தீ உரும் ஏறு என - கொடிய இடியோசையைப்போல். செம்மொழி அற்றவன் - உண்மைமொழி யில்லாதவன்; கேண்ம் - கேளும் மகரக் குறுக்கம். 100. வெயிலவன் வீழ்வதன் முன் - சூரியன் மறைவதன் முன். 101. மலைப்பது - போர் செய்வது. ஐயன் - தலைவன்; கருமன், மைத்துனன் - செயத்திரதன்; இவன் துரியோதனனுடைய மைத்துனன். வல்திறல் கூர் - வலிமையும் திறமையும் மிகுந்த. நிசாசரன் - அரக்கன். 102. வில்மைந்தில் - வில் வலிமையில். 103. பயத்து - பயந்து; வலித்தல் விகாரம், வயத்து இரதம் - வெற்றியுள்ள தேர். மால் கடவ - கண்ணன் செலுத்த. மகரம் மோதும் கயத்து - சுறாமீன் மோதுகின்ற கடலில், கையறு - செயலற்ற. 106. அங்கர் கோமான் - அங்க நாட்டினர்க்குத் தலைவன்; கன்னன். 107. ஆவி - உயிர். ஆண்மைகூறி - சபதங்கூறி, கொங்கு - வாசனை. 108. பாடிவீடு - படைகள் வசிக்குமிடம். பவனன் மகன் - வாயுவின் மகன்; அவன் மகன் வீமன்; அவன் மகன் கடோற் கசன். பரிசு - தன்மை. 109. நிசை - இரவு; புலரும் முனம் - விடியும் முன்னர். வசைவு இல்மொழி - குற்றமில்லாத மொழி, உடற்றல் - போர் செய்தல். 110. அறைகூவி - சத்தமிட்டு. 111. உரகம் - பாம்பு. உருத்து - கோபித்து, கழறேல் - சொல்லாதீர். 112. விரகு - வஞ்சகம், செருமுகம் - போர்முனை. நிரை - வரிசை. கழு - கூரிய இரும்புமுள், உந்து புனல் - ஓடுகின்ற நீர்; இது கங்கையைக் குறித்தது. 113. கொளுவார் - கொளுத்தார். அடிகளுக்கே; ஈண்டு நகைச்சுவையை உணர்த்தி நின்றது. 114. தேன் இடறி - தேனை யுண்டுதடுமாறி. பாண் - இசை. தாமம் - மாலை. கோன் - தலைவன்; இந்திரன். இடை உற்று - நடுவில் வந்து. தனயன் - கடோற்கசன். கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் (1931) முன்னுரை செந்தமிழ்ச் செல்வர்காள்! ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதற்கருவி தாய் மொழி வளர்ச்சியே என்பதை எல்லா அறிஞர்களும் அறிந்து அதற்காக முன்னின்று உழைத்தும் வருகின்றனர். தாய் மொழி வளர வேண்டுமாயின், அதன் மீது மக்கள் அனைவருக்கும் பற்றுண்டாதல் வேண்டும் அப்பற்றும் இளஞ்கிறார்கள் மாட்டுக் காணப்பெறுமாயின் அது பிற்காலத்தில் நாட்டுக்குப் பெரும் பயனளிக்கும் என்பது யாவரும் அறிந்ததொன்றாகும் இளஞ் சிறார்களுக்குத் தாய்மொழிப் பற்றுண்டாக வேண்டுமாயின், கல்வி பயிற்றும் கணக்காயர்களாலும், மாணவர்களுக் கமைக்கும் பாடச் சுவடிகளாலுமே யுண்டாதல் வேண்டும். மேற்கூறிய பயனை மாணவர்கள் பெற வேண்டுமென்னும் எண்ணத்தின் பேரிலேயே கதாவாசக பாடமும், செய்யுட் பாடமும் என்னும் பெயருடன் ஆறு, ஏழு, எட்டாவது வகுப்புக்களுக்குத் தக்கவாறு மூன்று சுவடிகளை எழுதியுள்ளேன். ஆதலால் இச்சுவடிகளிலுள்ள பாடங்கள் பெரும்பாலும் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகளாகவும், மாணவர்கள் இன்றியமையாதனவாயறிந்து கொள்ளவேண்டிய நல்லறிவு புகட்டுங் கட்டுரைகளாகவுமே எழுதப்பட்டிருக்கின்றன. சிலர், பலவகையான செய்திகள் கலந்துவரவேண்டு மென்று கூறும் கொள்கைக்கிணங்க, நிலநூல், உடல் நல நூல். இயற்கைப் பொருள் நூல் இவைகளின் சார்பான பாடங்கள் சிலவும் ஒவ்வொரு புத்தகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இச்சுவடிகளுடன், ஒவ்வொரு வகுப்பிற்கும் தக்கவாறு இனிய, எளிய செய்யுட் பாடங்களும் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உயர்தர நடுத்தரக் கல்விச்சாலைத் தலைமையாசிரியர்களும், தமிழாசிரியர் களும், அரசியலாரும் இச்சுவடிகளை ஆதரித்துத் தங்கள் தங்கள் பள்ளிக்கூடங் களிற் பாடங்களாக அமைத்து இவைபோன்ற பணியில் எம்மை ஊக்குமாறு வேண்டு கின்றோ ம். இராஜாமடம், இங்ஙனம் தஞ்சைஜில்லா, 1.5.28 சாமி - சிதம்பரன் கடவுள் நாம் அனைவரும் இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிப்ப தற்கு முதல்வன் ஒருவன் உளனென்றும், அவன் தான் கடவுள் என்றும் நம்புகின்றோம். கடவுள் இல்லை யென்றியம்புவார் நம்மில் ஒருவரும் இலர். கடவுள் என்னந் தமிழ்ச் சொல்லிற்கு எல்லாப் பொருளையும் கடந்து நின்றவர் என்பது பொருளாகும். (பண்டைத்தமிழ் நூல்களில் கடவுளுக்குக் கந்தழி என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. கந்தழி என்பதற்குப் பற்றுக்கோடற்றது என்று பொருள்) இவ்வுலகில் மக்களால் செய்ய இயலாத பல அதிசயங்கள் நடைபெறுகின்றன. மக்களால் உண்டாக்க ஒண்ணாத பல பொருள்கள் காணப்படுகின்றன. மக்கள் ஆட்சிக்கு அடங்காத ஆதவன், சந்திரன், பூமி முதலிய இயற்கைப் பொருள்கள் காலந் தவறாமல் சுற்றுகின்றன. இவ்வகையான பெருஞ் செயல்கள் நடைபெறு வதற்குத் தலைவர் யாரோ அவரைத்தான் கடவுள் என்று கருதுகின்றோம். அக்கடவுளுக்கு உருவம் இன்னதென எவராலும் இயம்பவொண்ணாது. அவர் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றார். ஆனால் அக்கடவுளையே ஒவ்வொரு கொள்கையினரும் வேறு வேறு பெயரினால் அழைக்கின்றனர். கடவுளைத்தொழுது நற்பேறு பெறுதற்கு நெறிபுகலும் பெரியார்களும் பலபல வகையாகப் பகர்கின்றனர். சைவ சமயத்தினர்கள், சிவபெருமானைப் போற்றினால்தான் ஈறிலா இன்பம் பெறலாமெனக் கூறுகின்றனர். வைணவர்கள் திருமால் ஒருவரே ஒப்பற்ற கடவுள் என உரைக்கின்றனர். முகம்மதியர்கள் தங்கள் கடவுளை அல்லாவெனும் பெயரால் அழைக்கின்றனர். கிறிதவர் ஒருவன் பாவங்களை அகற்றி நற்பேற்றை நல்கும் ஆற்றலுடையவர் இயேசு நாதரே என்று அறைகின்றனர். புத்தர்கள் புத்தர்பெருமான் அறவுரைகளைப் பின்பற்றி யொழுகு தலே அழிவிலின்பம் அடைதற்கு வழியென்று புகல்கின்றனர். இங்ஙனம் பலர் பலவாறு கூறினும் இறுதியில் எல்லாம் ஒரே கடவுளையடைதற்குக் கூறும் வழிகள்தான். கடவுளை யார் யார் எந்தெந்த உருவமாக எண்ணுகின்றனரோ அவரவர்களுக்கு அந்தந்த உருவத்துடன் அடைந்து கடவுள் அவரவருக்கு அருள் தருகின்றனர். உலகில் உறையும் மற்றைய உயிர்களைவிட மாந்தர் உயர்ந்தவர்கள் என்று யாவரும் கூறுகின்றனர். அதற்கு முதல் யாதென ஆராயுங்கால் அறிவுதான் என்பது எளிதில் விளங்கும். நன்மை இன்னதென்றும் தீமை இன்னதென்றும் அறியும் சிறப்பறிவைக் கடவுள் நமக்கு அளித்திருக்கின்றார். அவ்வறிவின் பயன் கடவுளை வணங்குவதாகும். உலகில் உள்ள மக்களில் சிலர் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், பிணியுடையவர் களாகவும் பிறந்து வருந்துவதைக் காண்கின்றோம். அவர்கள் அவ்வாறு பிறந்துழல்வதன் காரணம் அவர்கள் முற்பிறவிகளிற் புரிந்த மறமேயாகும். சிலர், நிறைந்த கல்வியுடைவர்களாகவும், அளவற்ற செல்வமுடையவர்களாகவும், எந்நாளும் இன்பம் நுகருகின்றவர்களாகவும் இருக்கக் காண்கின்றோம்; அவர்கள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம் முற்பிறவிகளில் செய்த அறச்செயல் களேயாகும். ஆதலால் இன்பத்தை அவாவி நிற்கும் அனைவரும் அறச் செயல்களையே ஆற்ற வேண்டும். அவையே கடவுளுக்கு விருப்பமானவை யாகும்; அவையே கடவுள் திருவருளைப் பெறுவதற்குத் தக்க நெறி. கடவுள் நம் கண்ணிற்குப் புலப்படாதவராக இருக்கிறார் என்று எண்ணு கின்றோம். அங்ஙனம் எண்ணுவது சரியன்று. அவர் இல்லாத இடம் ஒன்று மில்லாமையாலும், எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கின்றமையாலும், நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் கடவுள்தான். ஆதலால் நாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாகுமாறு நடந்து கொள்ள வேண்டுமாயின் அவரால் படைக்கப்பெற்ற உயிர்களுக்கு உதவி புரிந்து அவை களை மகிழ்வூட்ட வேண்டும். நம்போன்ற மக்கள் துன்புறுங்கால் அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும். இச்செயல்கள்தான் கடவுளுக்கு விருப்பமானவை. தன்னுயிர் போல மன்னுயிரை எண்ணி உதவி புரியாதவன் கடவுளின் திருநாமங்களையே அடிக்கடி கூறிப் போற்றுவானாயினும் அவன் கடவுளுக்கு விருப்பமுடையவனாகான். ஒருவன் கடவுள் பெயரைக் கனவிலுங் கருதாதவனாயினும், பிற உயிர்கள் மீது கண்ணோட்டங் கொண்டு காப்பாற்றுவானாயின் அவனே கடவுளுக்கு மிகவும் விருப்பமுடையவனாவான். பெரியோர்கள் பலரால் ஆராய்ந்து கண்டறிந்த இவ்வுண்மையை ஒருவரும் மறத்தலாவது புறக்கணித் தலாவது ஒண்ணாது. ஒவ்வொருவரும் கடவுள் மகிழ்வதற்குரிய செய்கைகளைச் செய்வதுடன் தத்தம் மதத்திற்குரிய கடவுளை மனமொழி மெய்களால் தொழுதல் வேண்டும். ஆனால் சிலர் தம் மதத்திற் குரிய கடவுளை வணங்காவிடினும், பிறர் மதத்திற்குரிய கடவுளைத் தூற்றுவதில் சிறிதுந் தவறாதவர்களாயிருக்கின்றனர். அங்ஙன மிருத்தல் நன்றாகாது, ஏனெனில், ஒரேகடவுள் யார் யார் எவ்வெவ்வாறு நினைக்கின்றனரோ அவ்வவ்வாறு சென்று நின்று காட்சி கொடுக்கின்றமையால், எல்லாக் கடவுளரும் ஒரே கடவுள் தான் என்றறிய வேண்டும். ஆகையால் பிறர் கடவுளையே நாம் இகழ்ந்தவராவோம். அதனால் நமக்குப் பெரும் பாவம் உண்டாகும் என்பதை உணர்ந்து அவரவர் மதத்திற்குரிய கடவுளைப் போற்றி மன்னுயிர்களுக்கும் உதவி புரிந்து, இறுதியில் அழியாத பேரின்ப வீடு பேற்றையும் அடை வதற்கு யாவரும் முயற்சிப்போமாக. மகேந்திரப் பல்லவன் நந்தமிழ் நாட்டிற் காஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டையும், சிலகாலங்களிற் சோழ கொங்கு நாடுகளையும் தன் குடைக்கீழ் ஆண்ட அரசர்கள் பல்லவ குலத்தினர் ஆவார்கள். இப்பழந்தமிழ்க் குடியினராகிய பல்லவர்களின் ஆட்சி ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் வரையிலுந் தென்னிந்தியாவில் இருந்தது. அவர்கள் காலத்தில் நம் நாட்டிற்குக் கிடைத்த நன்மைகள் அளவற்றன. சித்திரத் தொழில்கள் சிறந்து விளங்கின. மதக்கலைகள் தோன்றி வளர்ந்தன. தமிழ் இலக்கியங்களும், வடமொழி இலக்கியங்களும் எண்ணிறந்த வாறு வளர்வதாயின. அப்பல்லவ மன்னர்களில் மகேந்திரப் பல்லவன் என்பவன் ஒருவன். இவன் பல்லவ மன்னர்களுக்குள் மிகவும் புகழ்பெற்ற மன்னன். இவன் சிம்ம விஷ்ணுவென்னும் மன்னவன் மகன். இவன் அரசாட்சி புரிந்த காலம் கி.பி. அறுநூறுமுதல் அறுநூற்று முப்பது வரையிலாகும். அக்காலத்தில் வட இந்தியாவில் வாதாவி என்னும் ஊரில் புளகேசி என்னும் பெயருடைய சாளுக்கிய மன்னன் ஒருவனிருந்தான். இவன் சிறந்த வீரமுடையவன். பல போர்களில் வெற்றி பெற்றவன். இவன் நருமதை நதிக்கு வடக்கின் கண்ணுள்ள இந்திய நாடு முழுவதையுங் கைப்பற்றி ஆண்டுவந்த ஸ்ரீஹர்ஷன் என்னும் மன்னவனைப் போரில் தோற்கச் செய்து அவன் நாடுகளனைத்தையுந் தன்னாட்சிக் குள்ளாக்கினான். புளகேசி மன்னன் வடநாடு முழுவதையுங் கைப்பற்றிய பேராசையாலும், தானே வீரனென்னும் இறுமாப்பினாலுந் தென்னாட்டையும் பிடித்துக் கொள்ள வெண்ணித் தனது பெரும் படைகளுடன் தெற்கு நோக்கிப் போரியற்றுதற்கு வந்தான். புளகேசியின் வருகையைக்கண்ட மகேந்திரப் பல்லவன் அவனை எதிர்க்காமல் விட்டுவிட்டான். அவனுந் தமிழ் நாடு சென்று வெற்றிகொண்டு மீண்டு வடக்கு நோக்கிச் செல்லும்போது, மகேந்திரப் பல்லவன் காஞ்சி நகரத்திற் கருகில் அவனுடன் எதிர்த்துப் போர்புரிந்து தோற்கச் செய்து வெற்றி வீரனாக விளங்கினான். பின்னர் மகேந்திரப் பல்லவன் ஆட்சி பெசவாடாவிற்குத் தெற்கிலுள்ள தெலுங்கு நாடுகளிலும் தொண்டைநாடு முழுவதும், சோழ நாடு முழுவதும் கொங்கு நாட்டில் ஒரு பகுதியிலும் மிகப்பெரிதெனப் பல்கி நிலை பெறுவதாயிற்று. மகேந்திரப் பல்லவன் முதலில் சைன மதத்தில் மிகவும் ஆழ்ந்த அன்புடையவனாக இருந்தான். இவன் காலத்திலிருந் தவர்தான். திருநாவுக்கரச ரென்னும் சைவ சமய ஆசிரியர். இவர் முதலிற் சைவமதத்திற் பிறந்து, சைன மத நூல்களைப் பயின்று அம்மதமே உயர்ந்ததென்று நம்பி அதனை மேற்கொண்டு தருமசேனர் என்னும் பெயருடன் விளங்கினார். பின்னர், சிவபெருமான் திருவருளாற் சைவமதத்தின் உண்மையை அறிந்து மீண்டும் சைவமதத்தை அடைந்து சொல்லின் வேந்தராகச் சிறந்து விளங்கினார். இவர் சைவமதத்தை அடைந்தபோது சைனமதப் பெரியார்க ளெல்லோரும் இவர் மீது சினங்கொண்டு, இவரை ஒறுக்குமாறு மகேந்திரப் பல்லவனிடஞ் சென்று முறையிட்டனர். அவனும் நாவுக்கரசரைப் பலவாறு துன்புறுத் தினான். அத்துன்பங்களை நினைத்தாலும் நெஞ்சம் நடுக்கமுறும். நாவுக்கரசர் அவற்றையெல்லாம் தன் மனவுறுதியால் அகற்றி வெற்றி பெற்றார். இறுதியில் மகேந்திரன் நாவுக்கரசரின் பெருமையை அறிந்து அவருடைய அறிவுரையைப் பெற்றுச் சைவமதத்தி லீடுபட்டான். மகேந்திரப் பல்லவன் காலத்திற்கு முன்னர் நந்தமிழ் நாட்டில் இப்பொழுதுள்ளது போன்ற பெருங் கற்கோயில் களில்லை யென்று சில ஆராய்ச்சி வல்லார் எழுதியிருக்கின்றனர். மகேந்திரன் காலத்திற்கு முன்னிருந்த கோயில்கள் பெரும்பாலும் செங்கற்களாலும் மண்ணினாலும் ஆக்கப் பெற்றுக் கிடுகு வேய்ந்தனவா யிருந்தன. மகேந்திரப்பல்லவன் காலமுதல் தான் மலை களிற்றோண்டிய கோயில்களும் கருங்கற்களால் கட்டிய கோயில்களும் ஏற்பட்டனவென்று தெரிகின்றது. இவனாற் கட்டப்பட்ட பல கோயில்கள் இன்னும் நம் நாட்டி லிருக்கின்றன. இவன் முதன் முதற் கட்டிய கோயில் அக்காலத்திற் பாடலிபுரமென்னும் பெயருடனிருந்த திருப்பாதிரிப் புலியூரில் குணதரவீச்சுர மென்னுங் கோயிலென்று சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணத்தால் அறியக்கிடக்கின்றது. இவன் காலத்தில் நமது நாட்டிற் சிற்பவேலை சிறந்து விளங்கிற்று. அதனை இன்றும் இவன் காலத்திற் கட்டிய கோயில்களைக் கொண்டு நன்கறியலாம். இவனாற் கட்டப் பெற்ற கோயில்களிலமைந்துள்ள சிற்பத் திறத்தைப் பிற் காலத்துக் கோயில்கள் ஒன்றிலுங் காணவியலாது. இவன் காலத்திலுண்டான கல்வெட்டுக்களும் பல விருக்கின்றன. அவைகளால் இவனுடைய பெரும் புகழையும் வெற்றித் திறத்தையும் தெற்றெனத் தெளிந்து கொள்ள முடிகின்றது. மகேந்திரப் பல்லவன் காலத்தில்தான் தமிழ்நாட்டில் வடமொழிக்கும் பெருமை யுண்டாவதாயிற்று. ஏனெனில் இவன் சைனமதத்தைத் தழுவி யிருந்தமையாலும், அம் மதத்திற்குரிய நூல்கன் பெரும்பாலும் வடமொழி யிலேயே ஆக்கப்பட்டிருந்தமையாலும், அம்மொழிப் புலவர்களை மிகவும் போற்றி வந்தான். அம்மொழியிலுள்ள பல கலைகளைத் தமிழிற் பெயர்த் தெழுதவும் உதவி புரிந்தான். இவனும் வடமொழியும் பயின்று அதிலும் சிறந்த புலமை அடைந்திருந்தான். தாய் மொழியாகிய தமிழ் மொழியிலுந் தேர்ச்சியும் அன்பும் பொருந்தியிருந்தான். இவன் இருமொழியையும் ஒப்பவெண்ணி அவற்றை ஒருங்கே வளர்த்து வந்த மன்னர்களிற் சிறந்தவனாவான். இவன் காலத்திற்றான் தேவாரம் தமிழ்நாட்டில் மிகவும் பரவியாவராலும் பெருமையாகப் பாராட்டப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது. மற்றும் சில சிறந்த தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் இவனால் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவன் நாடகங்களிலும் சங்கீதத்திலும் மிகவும் ஆவலுள்ளவன். இவன் காலத்தில் அக்கலைகளும் செழிப்படைந்திருந்தன. இவன் வடமொழியிற் சில நூல்கள் செய்திருப்பதாகவுங் கூறுகின்றனர். இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் வடமொழிக் கல்வெட்டுக்களாகவே இருக்கின்றன. பெரும்பாலும் பல்லவர்களால் காணப்பெற்ற கல்வெட்டுக்கள் பலவும் வடமொழிக் கல்வெட்டுக்களே, இதைக்கொண்டு பல்லவர்களைத் தமிழர்களல்லவென்றும், அவர்கள் தாய்மொழி தமிழ்மொழி யன்றென்றும், வடநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற் குடியேறியவர்களென்றும் கூறுவாருமுளர். ஆயினும் அக்கொள் கையை உண்மையென்று நம்புதற்கில்லை. பல்லவர் என்னுஞ் சொல் தூய செந்தமிழ்ச் சொல்லாதலாலும், பல்லவம், மணி பல்லவம் என்னுஞ் சொற்கள் பல, தமிழ் மொழியிலிருத்தலாலும், பல்லவர் என்ற பட்டப்பெயர் இருத்தலாலும், இவர்கள் பண்டைத் தமிழர்களென்றே அறியக்கிடக்கின்றது. இவன் தமிழ் மன்னனாயிருந்தால் ஏன் கல்வெட்டுக்களை யெல்லாம் தமிழ் மொழியில் வெட்டக்கூடாது? வட மொழியில் வெட்டியது எதற்கு? என்று கேட்கலாம். அதற்குத் தகுந்த விடையுண்டு. அஃதாவது, இவன் ஆட்சிக்குள் தெலுங்கு நாடும் அடங்கியிருந்தது. தெலுங்கர்கள் வடமொழிப் பயிற்சி யுடையவர்களாயிருந்தார்கள். தமிழ் நாட்டிலும் சைனமதம் பரவியிருந்த காரணத்தால் வடமொழிப் பயிற்சி மலிந்திருந்தது. ஆகவே தமிழ் நாட்டையுந் தெலுங்கு நாட்டையும் ஆளுதற்குப் பொதுமொழியாக வடமொழியைக் கொண்டானென்று கூறுவதே தகுந்த விடையாகுமென்று உய்த்துணரலாம். இம்மன்னவன் அரசாட்சியில் நாட்டிற் செல்வமும், கல்வியும், நிரம்பி இருந்தன வென்பதை யறியலாம். குடிகள் அனைவரும், துன்பமின்றியும், கலக மின்றியும், ஒற்றுமையுடன் உறைந்து வந்தனர். நாட்டில் கடவுளன்பும் அறமும் நியம முதலிய ஒழுக்கங்களும் சிறந்திருந்தன. உயிருள்ள பொருள்களும், உயிரில்லாத பொருள்களும் இந்நிலவுலகின் கண்ணுள்ள எல்லாப் பொருள்களையும், உயிருள்ளன வென்றும், உயிரில்லாதனவென்றும் இருவகையாகப் பிரிக்கலாம். நாம் ஒரு பிராணியையோ அல்லது ஒரு பொருளையோ பார்த்தவுடனே இது உயிருள்ளது, இது உயிரற்றதென்று எளிதிற் கூறிவிடுகின்றோம். ஆனால் அவைகளின் குணவேறு பாடுகளை அறியாதவர்களாகின்றோம். உயிருள்ளனவற்றிற்கும் உயிரில்லாதன வற்றிற்கு முள்ள வேறுபாடுகளை நாம் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. உயிர் நூல் ஆசிரியர்கள் இதனைக் குறித்து மிகுந்தோர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்பாடத்தில் இதனைப்பற்றி நாம் சிறிது உற்று நோக்குவோம். பறவை, மிருகம், எறும்பு முதலியவற்றை நாம் உயிருள்ள பிராணிகளென்று நினைக்கின்றோம். எக்காரணம் பற்றி இவை களை நாம் உயிருள்ள பிராணிகளென்று நினைக்கின்றோம்? இவ்வினாவிற்கு எளிதில் விடை யளித்தல் முடியாது. பொதுவாக இவைகள் அங்குமிங்கும் நடமாடுவதால் நாம் இவைகளை உயிருள்ள பிராணிகளென்று சொல்லுகின்றோம். ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத் திற்கு நகர்ந்து செல்வது தான் உயிருள்ள பிராணிகளின் சிறந்த குணமென்று நினைத்தல் கூடாது. பல உயிருள்ள பிராணிகள் ஒரே இடத்திலிருந்து கொண்டு வாழ்கின்றன. உதாரணமாகப் பவழம் உண்டாக்கும் பிராணியை நாம் எடுத்துக் கொள்வோம். இப்பிராணி நாம் எடுத்துக் கொள்வோம். இப்பிராணி கடற்பாறை களின் மேல் ஒட்டிக் கொண்டு வாழ்கின்றது. மற்ற உயிருள்ள பிராணிகளுக்குள்ள தன்மைக ளெல்லாம் இதற்கும் பொருந்தியிருக்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகர்ந்து செல்லுந் தன்மையின்மை பற்றி இப்பிராணியை நாம் உயிரற்றதென்று நினைத்தல் கூடாது. மரம், செடி, கொடி முதலியவைகளும் நகருந்தன்மையற்றவைகளே. ஆதலால் இவைகளை உயிரற்றவை என்று சொல்வது அத்துணைப் பொருத்தமான தென்று துணியமுடியாது. உயிரில்லாதவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகர்ந்து செல்லா. நகர்ந்து செல்லுந்தன்மை இயற்கையாகவே அவைகளுக்கில்லை. அவைகளை ஓரிடத்தில் வைத்தால் எவ்வளவு காலமானாலும் அவைகள் அந்த இடத்திலேயே கிடக்கின்றன. அவைகள் உருவத்தில் தாமாகவே மாறுபாடடையா, உதாரண மாக நாம் ஒரு சிறு கூழாங்கல்லை (சிறிய கல்) எடுத்துக் கொள்வோம். இக்கல்லை ஓரிடத்திற்கிடத்தி வைத்தால் நீண்ட நாட்கள் வரையில் அதில் ஒருவித மாறுபாட்டையும் நாம் காணமாட்டோம். உடைத்தாலன்றி அதனுடைய உருவத்தில் ஒருவித மாறுபாடும் ஏற்படுவதில்லை. அது தானாகவே வளர்ந்து உருவத்தில் பருமனடைவதுமில்லை. கடல்நீரை ஒர் பாத்தியில் விட்டுக் கட்டிவைத்தால் நாளடைவில் அது சூரிய வெப்பத்தினால் ஆவியாகி மேலே செல்லுகிறது. கடல்நீரிற் கரைந்துள்ள உப்புக் கற்கள் மாத்திரந் தங்குகின்றன. சிலர் இந்த உப்புக்கற்கள் வளர்க்கின்றவென்று கூறுகிறார்கள். உண்மையில் அவைகள் ஒருவித வளர்ச்சியையும் அடைவதில்லை. கடல்நீரிற் கரைந்துள்ள உப்பு என்னும் பொருள் நீர் வற்ற வற்ற மேலே படிந்து உப்புக்கற்கள் தங்களுடைய உருவத்திற் சிறு மாறுதலடைகின்றன. பல சிறிய துண்டுகள் ஒன்றாகச் சேர்வதால் அவைகள் உருவத்தில் மாறுதலடைகின்றதே தவிர வளர்ச்சி யென்பது கிடையா. ஆனால் உயிருள்ளவைகள் உணவையுண்டு தங்களு டைய அளவில் மாறுபட்டு வளர்ந்து கொண்டேயிருக்கும். உயிர்ப்பிராணிகள் உட் கொள்ளும் ஆகாரம் உடலிலுள் பொருள்களோடு சேரும்படியாக மாறுதலடை கின்றன. உட்கொள்ளும் ஆகாரத்தைத் தேகத்திலுள்ள பொருள்களோடு சேரும்படியாக மாற்றுந்தன்மை உயிர்ப்பிராணிகளுக்கு உண்டு. உயிர்ப்பிராணிகள் தம்மினத்தை யுண்டுபண்ணும், உயிரற்றவைகளுக்கு இத்தன்மை கிடையாது. ஆகவே நாம் உயிருள்ளவைகளுக்கும் உயிரில்லாதவை களுக்கு முள்ள மாறு பாடுகளைச் சிறிது கவனிப்போம். உயிருள்ளவைகள் ஆகாரத்தை யுட்கொண்டு அதின்பயன் தங்கள் யாக்கையிலுள்ள பொருள் களோடு கலக்கும்படி செய்விக்கும். உயிருள்ளவைகளுக்கு உடல் வளர்ச்சியுண்டு. அவைகள் இனவிருத்தி யுண்டுபண்ணும். உயிரில்லாதவைகள் உணவை உண்பதில்லை. அவைகள் உருவத்தில் மாறுபாடடையா. அவைகளுக்கு வளர்ச்சி முதலியன எவையும் இல்லை. அவைகள் இனவிருத்தியும் உண்டு பண்ணுவ தில்லை. மரம், புல், பூண்டு இவைகள் நகராமல் ஒரேயிடத்தில் தங்கியிருந்தாலும் அவைகள் உணவை யுட்கொண்டு வளர்கின்றனர். அவைகள் இனப் பெருக்கமுஞ் செய்கின்றன. ஆதலால் மரம், புல், பூண்டு முதலியவைகளுக்கு உயிருண் டென்றே கூறவேண்டும். அவைகள் ஓரிடத்திலேயே இருத்தல் பற்றி நாம் அவைகளை நிலையியற் பொருளென்கின்றோம். நடமாடும் ஓர் பிராணிக்கும் ஒர் மரத்திற்கும் உறுப்புக்களிலும், அவைகள் உட்கொள்ளும் உணவுகளிலும் பல வித மாறுபாடுகள் உள்ளன. நிலத்திலும் நீரிலும் கண்களுக்குத் தெரியாத மிகுந்த சிறிய அளவுள்ள பிராணிகளும் செடிகளும் வாழ்கின்றன. இவைகளைப் பூதக் கண்ணாடியின் மூலம், ஆராய்ந்து பார்த்தால் செடிகளுக்கும் பிராணிகளுக்கும் வேறு பாடிருப்பதாகத் தெரியாது. பொதுவாக இவற்றை யெல்லாம் உயிருள்ள பிராணிகளென்று கூறவேண்டுமே யன்றிப் பிராணிகள் செடிகள் என்ற வேறு பெயர்களை வைத்தல் கூடாது. உயிர் நூல் ஆராய்ச்சியில் தேர்ந்தவர்கள் பிராணிகள் மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலிய உயிருள்ளவை யனைத்தும் வாழ்வதற்கு ஆதியாக இருப்பது ஒரே பொருள் என்று கருதுகின்றார்கள். இதற்குத்தான் உயிர் அணு (Prot Plasm) என்று பெயர். இது உயிருள்ளவற்றிலிருந்து கொண்டு பல மாறுபாடுகளை உண்டாக்குகின்றது. இந்த உயிர் அணு இல்லா விட்டால் பிராணிகளாவது செடிகளாவது உயிருடனிருக்க முடியா. மரம், புல், பூண்டு, செடி, கொடி முதலியவைகளுக்கும் பிராணிகளுக்கும் உயிரிருப்பினும் பலவகையில் ஒன்றற் கொன்று மாறுபாடடைந்திருக்கின்றன. பிராணிகள் தங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத் தாங்களே செய்து கொள்ள முடியாது. அவைகள் சேர்த்து வைக்கப்பட்ட ஆகாரத்தையே உட்கொள்ளுகின்றன. மரம் செடி கொடிகளோ தங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத் தாங்களே செய்து கொள்ளுகின்றன. தாவரங்கள் தங்கள் ஆகாரத்தை யுண்டுபண்ணிக் கொள்வதற்குத் தண்ணீர், உப்பு, கரியமிலவாயு இவைகள் இன்றியமையாதவைகளா யிருக்கின்றன. செடி கொடிகளுக்குப் பூமியிலிருந்தும் ஆகாயத்தி லிருந்தும் மேற்கூறிய பொருள்கள் கிடைக்கின்றன. செடிகள் இவைகளைப் பெற்றுச் சூரிய வொளியின் உதவியாலும் தங்களுக்குக் கிடைத்துள்ள பசுமை நிறத்தாலும் இவைகளை உணவுப் பொருளாக மாற்றி யுட்கொள்ளுகின்றன. செடிகள் உணவுப் பொருள்களைப் பெற முக்கிய உதவியாயிருப்பது பசுமை நிறமே. இப்பசுமை நிறம் பிராணிகளின் உடலிற் பொருந்தி யிருக்கவில்லை. ஆகவே பிராணிகள் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தாங்களே செய்துகொள்ள முடியாதவைகளாய் இருக்கின்றன. கால்வாய், குளம், குட்டை முதலியவைகளில் கண்ணுக்குத் தெரியாத சில பிராணிகள் வசிக்கின்றன. இவைகளை உயிர்நூல் ஆராய்ச்சியாளர்கள் அமீபா (Amoeba) என்கிறார்கள். இவைகள் தானாகவே நகர்ந்து செல்லும். சில வேளைகளில் இவைகளில் ஒவ்வொன்றும் பிரிந்து இரண்டு தனிப் பிராணி களாக ஆகிவிடும். ஆதலாற்றான் குட்டைகளில் இவை மிகுதியும் காணப்படுகின்றன. இவைகள் வேறு பிராணிகளையாவது செடிகளையாவது உணவாகக் கொள்ளும். இவைகளிடத்தில் பசுமைப் பொருள் இல்லாததால் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தாங்களே செய்துகொள்ள இயலாதவைகளாக இருக்கின்றன. பிள்ளைகளே! சிலர் செடி கொடிகளுக்கு உயிர் இல்லை என்று தவறாக எண்ணுகிறார்கள். நம்மைப் போலவும் பிராணிகளைப் போலவும் அவைகள் உயிருடன் வாழ்கின்றன. தங்களினத்தையும் பெருக்குகின்றன. தாவரநூல் ஆராய்ச்சியில் மிக்க வல்லவராகிய ஸர். ஜே.ஸி. போ Sor, J.C. Bose என்பவர் மரம் செடி கொடி முதலிய தாவரஜாதிகளும் மனிதர்களும் போலவே சுவாசித்துக் கொண்டும் பேசிக் கொண்டு மிருப்ப தாகக் கண்டுபிடித்திருக்கின்றார். நக்கீரனார் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர், மதுரை நகரத்தில் ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. அதனைக் கடைச்சங்கமென்று கூறுவார்கள். அச்சங்கத்தில் நாற்பத் தொன்பது தமிழ்ப்புலவர்கள் வீற்றிருந்து தமிழ் மொழியை ஆராய்ந்தனர். அவர்கள் பல நூல்களும், பல தனிப்பாடல்களும் இயற்றி வெளியிட்டிருக்கின்றார்கள். அப்புலவர்களில் தலைசிறந்து விளங்கியவர் நக்கீரனார் என்பவர். இவருக்குக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்ற பெயர் வழங்கும் இப்பெயரால் இவருடைய தந்தையார் ஒரு ஆசிரியராக இருந்தார் என்றறியக் கிடக்கின்றது. இவருடைய வரலாற்று நிகழ்ச்சிகளாலும், இவரியற்றிய நூல்களாலும், இவர் பாடிய பாடல்களாலும், இவர் பண்டைத் தமிழ்க்குடியிற் பிறந்த தமிழ்மகனார் என்று அறியக்கிடக்கின்றது. அவருடைய வரலாற்றை இவரியற்றிய நூல்களாலும், திருப்புகழ், கல்லாடம், தொல்காப்பியவுரை, திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல், திருப்பரங்கிரிப் புராணம், சீகாளத்திப் புராணம் முதலிய நூல்களாலும் அறியலாம். சங்கப்புலவர்களில் இவரே சிறந்த புலவராக விளங்கினார். மற்றைய புலவர்களனைவரும் நக்கீரனார் கல்வித்திறமைக்கும், உண்மையை ஒளிக்காமல் யாரிடமும் அச்சமின்றி வழக்காடும் வல்லமைக்கும் அவரை மிகவும் மேலாகக் கொண்டாடினர். சங்க நூல்களில் சான்றுபற்றிப் புலவர்களுக்குள் தலைமை பெற்றவர் இவரென்றே கூறலாம். இவருடைய கல்வியின் பெருமையையும், யாருக்கும் அஞ்சாமல் உண்மையை உள்ளவாறு எடுத்துரைக்கும் வீரத்தை யும் காட்டுதற்கு ஒரு வரலாறு வழங்குகின்றது. அவ்வரலாறு பின்வருமாறு காண்க. மதுரை நகரத்துப் பாண்டிய மன்னர்களில் வங்கிய சூடாமணி என்பவன் சொக்கலிங்கப் பெருமான் மீது அன்புகொண்டு அப்பெருமானுக்குப் பூசனையாற்ற மலர்ச் சோலைகளை மிகவும் உண்டாக்கி வந்தான். சண்பக மலர்களா லேயே இறைவனை எப்பொழுதும் வழி பாடாற்றி வந்தமையால், அவனுக்குச் சண்பகமாறன் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. ஒரு நாள் சண்பகமாறனும் அவன் மனைவியும் பூஞ்சோலையில் உலவிக்கொண்டிருந்தனர். அதுபோது தென்றற்காற்று மெல் லெனவீசிற்று. அதில் ஒரு சிறந்த மணமுண்டாயிற்று. அதை யறிந்த மாறன் இம்மணம் யாண்டிருந்து தோன்றிய தென்றுற்று நோக்கினான். அம்மணம் தன் மனைவியின் கூந்தலிலிருந்து போதருவதைக்கண்டு மிகவும் வியப்பெய்தினான். உடனே பாண்டியன் மனத்தில், கூந்தலுக்கு நறுமணம் இயற்கையோ அன்றிச் செயற்கையோ வென்று ஐயந் தோன்றிற்று. சண்பகமாறன் அவ்வையத்தை யகற்றிக் கொள்ளும் பொருட்டு ஆயிரம் பொன்னடங்கிய கிழீயொன்றைத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் வைத்துத் தன்மனக்கருத்தைச் செய்யுள் மூலமாக வெளியிடு வோர் யாராயிருப்பினும் அக்கிழியைத் தமக்கென எடுத்துக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்தான். அவ்வாலவாயின்கண் தருமி என்னும் பெயர் வாய்ந்த ஆதிசைவன் ஒருவனிருந்தான். அவன் சைவசமய நூல்களையும்; சைவாகமங்களையும் நன்கு பயின்று, பயின்றதற்கேற்ற ஒழுக்கழும் உடையவனாயிருந்தான். பிரமச்சரிய விரதத்தையும் வழுவின்றி மேற்கொண்டிருந்தான். அன்னவனுக்குத் தாயுமில்லை, தந்தையு மில்லை, உற்றுழியுதவுதற்கு நெருங்கிய உறவினருமிலர். இந்நிலையில், அத்தருமி மணஞ்செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிது நடத்த வேண்டுமெனக் கருதியிருந்தான். அவன் பாண்டியன் செய்திருந்த விளம்பரத்தை அறிந்தவுடன் சொக்கலிங்கப்பெருமான் திருமுன்னையடைந்து தனது குறையையும், ஆவலையும் உரைத்து முறையிட்டு, ஆயிரம் பொன்னடங்கிய அப்பொற்கிழியைத் தனக்கு அருளுமாறு வேண்டிக்கொண்டான் ஏழைப்பங்காளனாகிய இறைவன் தருமியின் வேண்டுகோளுக் கிரங்கி, கொங்குதேர் வாழ்க்கை என்னும் பாடலைப் பாடிக் கொடுத்துச் சங்கப் புலவர்களிடமும், பாண்டிய மன்னனிடமும் அதனைக்காட்டிய பொன் முடிப்பைக் கைக்கொள்ளுமாறு கூறி விடுத்தனர். உடனே தருமி அப்பாடலை எழுதிக்கொண்டுவந்து சங்கப் புலவர்களிடம் காட்டினன். அவர்களுமிக்க மகிழ்ச்சியடைந்து தருமியைக் கொண்டாடினர். பின்னர் தருமி பாண்டியனிடஞ் சென்று அப்பாடலைக்காட்ட அவனும் தன் கருத்திற்கு அப்பாடற்பொருள் ஒத்திருத்தல் கண்டு களித்துப் பொன்முடிப்பை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளை யிட்டான். தருமி அளவுகடந்த களிப்புடன் சங்க மண்டபத்தைச் சார்ந்து பொன்முடிப்பை எடுக்கும் போது, நக்கீரனார் அவனைத் தடுத்து, நீ கூறிய பாடலிற் சொற்குற்றமில்லையேனும் பொருட் குற்றமுள்ளது. அதற்கு விடை கூறிய பின்னர் முடிப்பை எடுத்துக் கொள்க என்று கூறினார். தருமி அக்குற்றம் யாதென்று கேட்க, நக்கீரர் கூந்தலுக்குச் செயற்கைவாசனையன்றி இயற்கை வாசனையேது? என்று கேட்டார். தருமி இவ்வினாவிற்குத் தகுந்த விடையிறுக்க வியலாதவனாய் மீண்டும் சொக்கலிங்கப் பெருமான் கோட்டத்தை அணுகி, நடந்த செய்தியைப் புகன்று, வணங்கி நின்றான். உடனே இறைவனும் தன்னை ஒரு புலவர் போலப் புனைந்து கொண்டு தருமியுடன் சங்கமண்டபத்தைச் சேர்ந்தார். இதற்குள் பாண்டியனும் அமைச்சர்களும், மற்றுமுள்ள அறிஞர் களும் சங்க மண்டபத்தில் வந்து குழுமியிருந்தனர். சொக்கநாதப் புலவர் சங்கப் புலவர்களை நோக்கி, நாம் கூறிய பாடலிற் பிழை கூறியவர் யாவர்? எப்பிழையுளது? என்று வினாவினார். அக்கணமே நக்கீரனார் முன் வந்து நாம் தாம் நுமது செய்யுளிற் குறை கூறினோம். கூந்தலுக்குச் செயற்கை மணமன்றி இயற்கை மணமேது? கூந்தலுக்கு இயற்கை மண மிருப்பதாகப் பாடியிருப்பதால் நுமது பாடல் பொருட்பிழை யுடையதாயிற்று என்றார். சிவபெருமான் தேவமாதர்கள் குழலில் இயற்கைமண மில்லையா? என்றார். நக்கீரர், தேவ மாதர்கள் கூந்தலிலும் இயற்கை மணம் இல்லை. சிவபெருமான், பத்தினிப் பெண்கள் கூந்தலில் இயற்கை மணமில்லையா? என்று கேட்க நக்கீரர் அவர்கள் கூந்தலிலும் இயற்கை மணமில்லை என்றார். சிவபெருமான், நீர் வழிபாடாற்றும் அங்கயற்கண்ணம்மை கூந்தலில் இயற்கை மணமில்லையா? என்று கேட்க நக்கீரனார், அதற்கும் இல்லையென்றே விடை யிறுத்தார் உடனே சிவபெருமான், தன்னை இன்னாரென்று காட்டும் பொருட்டு நெற்றிக்கண்ணைக் காட்டினார். அப்பொழுதும் நக்கீரனார் அஞ்சாமல் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறினார். உடனே பரமசிவன் சினமுற்று அவரைப் பொற்றாமரைக் தடாகத்தில் விழுமாறு செய்துவிட்டார். மற்றைய புலவர்களெல்லோரும் நக்கீரைக் கரையேற்றுமாறு பரமசிவனை வேண்டிக் கொண்டனர். அவரும் நக்கீரனாரின் அஞ்சாமைக்கு வியந்து அவரைக் கரை யேறுமாறு அனுக்கிரகஞ் செய்தார். இக்கதையினால் நக்கீரனாரின் உயர்வு வெளிப்படுகின்றது. நக்கீரனாரின் பெருமையை விளக்குவதற்காக இது போன்ற இன்னும் பல கதைகள் வழங்குகின்றன. நக்கீரனார் இயற்றிய நூல்கள் பல. அவைகளாவன, பத்துப் பாட்டில் முதற் பாட்டாக விளங்கும் திருமுருகாற்றுப் படை இவரால் இயற்றப் பெற்றது. இது சொற்சுவையும் பொருட் சுவையுஞ் செறிந்து கற்போர் நெஞ்சத்தைக் காமுறச் செய்யும் சிறப்பு வாய்ந்தது. அப்பாட்டில் உள்ள நெடுநல்வாடையென்னும் சீரிய நூலும் இவரியற்றியதேயாகும். பண்டைத் தமிழ்ப் பெருங் கடவுளாகிய முருகனையே இவர் வழிபடு கடவுளாகக் கொண்டவர் என்பதை இவரியற்றிய திருமுருகாற்றுப் படையால் தெளியலாம். இன்னும் இவரியற்றியனவாக நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவற்றிற் சிற்சில செய்யுட்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் இவரியற்றியதாகக் காணப்படுகின்றது. பதினோராந் திருமுறையென்னும் சைவத் திருமுறையிற் பத்துப் பிரபந்தங்கள் இவர் செய்ததாகக் காணப்படுகின்றன. அவை நக்கீரரால் இயற்றியனவென்பதற்குத் தக்க சான்றுகள் காணக்கூடாமையால் அவை இவரால் இயற்றியன அல்லவென்று ஒரு சாரார் கூறுவர். இப்புலவர் செய்யுள் நூலையன்றி உரை நூல்களியற்றுவதிலும் தலைசிறந்து விளங்கினார். இவரியற்றியனவாக விளங்கும் உரைநூல் இறையனாரகப்பொருள் உரை ஒன்றேயாகும் இறை யனாரகப்பொருள் உரையைப் பற்றிப் புகழாதார் ஒரு வரும் இல. அதுபோன்ற தலைசிறந்த உரைநடை நூல் முற்காலத்திலும் இல்லை; இக்காலத்திலும் தோன்றவில்லை. தமிழ் நாட்டின்கண் தமிழ் மக்களாய்ப் பிறந்த ஒவ்வொரு வரும் நக்கீரனார் இயற்றிய நூல்களைப் படிக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். நகர வாழ்க்கை நகரம் என்பது மக்கள் மிகுதியாக வாழ்ந்துவரும் பெரிய ஊருக்குப் பெயர். இக்காலத்தில் உள்ள நகரங்களைப் போன்ற அத்துணைப்பெரிய நகரங்கள் பண்டைக் காலத்தில் நமது நாட்டில் இருந்ததில்லையென ஊகிக்க இடமுண்டு. பண்டைக் காலத்தில் நாட்டில், அதாவது கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் பழக்க வழக்கங்களும் ஏற்றத் தாழ்வின்றி ஒரு தன்மையாகவே இருந்தன. கல்வியிலும், அறிவிலும், ஒழுக்கத்திலும், உடை களிலும், அணிகளிலும் வேற்றுமையில்லை. ஆனால் இந்நாளிலே ஒருவரைக் கண்டவுடனேயோ, அவருடைய மொழிகளைக் கண்டவுடனேயோ அவரை நகரத்தில் வாழ்கின்றவர், அல்லது கிராமத்தில் வாழ்கின்றவர் என்று எளிதில் இயம்பிடலாம். இவ்வாறு நகரத்திற்கும் நாட்டிற்கும் வேறுபாடு மலிந்து கிடக்கின்ற. இந்த நிலையில் பலர் நகர வாழ்க்கை சிறந்ததா? நாட்டு வாழ்க்கை சிறந்ததா? என்று சொற்போர் புரிவதைக் காணலால், இது ஒரு இன்றியமையாத செய்தியாகும். இதுபற்றி விரிவாக எழுதத் தொடங்கினால் அது ஒரு பெருங்காவியமாக முடியும். ஆகையால் நகர வாழ்க்கையில் உண்டாகும் நன்மை தீமைகளைப் பற்றி இப்பாடத்திலும், கிராம வாழ்க்கையில் தோன்றும் நன்மை தீமைகளைப்பற்றி அடுத்த பாடத்திலும் சுருங்கக் கூறி முடிப்போம். மக்கட்பிறவி பெற்ற ஒவ்வொருவரும், உண்ணுவதோடும், உடுப்பதோடும், உறங்குவதோடும், மாடு குதிரை முதலிய விலங்கினங்களைப் போல் அல்லும் பகலும் அனவரதமும் வினையாற்றுவதோடும் பொழுதை யோட்டாமல், அறிவு மேலும் மேலும் வளர்வதற்குரிய செய்கையிலேயே பொழுது போக்கும் கடப்பா டுடையவராயுளர். பல நல்ல பொருள்களைச் செவிமடுப்பதும், அரிய செயல்களைக் கண்குளிரக்காண்பதும், சீரிய பெருந் தொழில்களை மேற்கொள்ளுவதும் அறிவு பெருகு வதற்குச் சிறந்தவழியாகும். மேற்கூறிய வழிகளை நகர வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் எளிதிற் பெறுவார்கள். நகரத்தில் வாழ்வோர் பலப்பல புது மனிதர்களுடன் ஒவ்வொரு நாளும் பழக நேரிடுவதனால் பலப்பல புதுச் செய்திகளை அறிவார்கள். செவியைப் படைத்தபயன் செவியின் வழியாகப் பல இனிய இசையையும் கேட்டலேயாகும். கண்ணைப் படைத்த பயன் மனத்திற்கு இனிமையை யளிக்குந் தரத்தவாய இன்பக் காட்சிகளைக் காண்டலேயாகும் இனிய செய்திகளையும், இன்பக் காட்சிகளையும், கேட்டற்கும், காண்டற்கும் வசதியான இடம் நகரமே யென்பதை யாவரும் அறிவோம். ஆனால் தீயசெய்திகளைக் கேட்பதற்கும் கொடிய காட்சிகளைக் காண்ப தற்கும் வசதியில்லை யென்று தவறாக எண்ணிவிடுதல் கூடாது. நன்மையைவிடத் தீமை மிகுந்திருப்பதை நகர வாழ்க்கையில் பழக்கமுடையவர்களால் கேட்டறியலாம். கற்றவர்கள் கற்றவர்களுடனும் மற்றவர்களுடனும் பழகுதல் வேண்டும். கற்றவர்களுடன் பயிலாமல் மற்றாருடன் மட்டில் சேர்ந்திருப்பார்களாயின், அன்னவரும் மற்றாரைப் போன்றே நாளடைவில் ஆகிவிடுவர். மற்றும் கற்றவர்கள் தங்கள் அறிவை வளமுறச் செய்து கொள்ளுதற்குரிய சுவடி நிலையங்களில், இலவசப் படிப்பகங்களும் நகரங்களில் இருக்கின்றன. உடல் நலத்தைப் பெருக்கிக் கொள்ளுவதற்கு வேண்டிய எந்தப் பொருள்களையும் எளிதிற் பெறலாம். நகரத்தில் உள்ளவர்கள் சோம்பர் இன்றி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டிருப்பதைக் காணவே நமக்கும் சோம்பரின்றி ஒருவிதமான உள்ளக் கிளர்ச்சி தோன்றும். திறமையற்றவனும், வெள்ளை மனதுடையவனு மாகிய ஒருவன் நகர வாழ்க்கையை மேற்கொள்ளுவானாயின் திறமையுடையவனாகவும், ஆழ்ந்த மனமுடையவனாகவும் ஆகலாம். வேலையில்லாமல் சோற்றிற்குத் துன்புறும் ஏழை மாந்தர்கட்கு நகர வாழ்க்கை ஒருவகையில் சிறந்ததென்று யாவரும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். நகரங்களில் பலவகையான தொழிற்சாலைகள் இருப்பதனால் அவைகளிற் சென்று கூலிக் குழைத்தாயினும் வயிறு வளர்க்கலாம். இது நோக்கியே கெட்டும் பட்டணம் சேர் என்னும் பழமொழி நமது நாட்டில் பயின்று வருகின்றது. நகர வாழ்க்கையில் உள்ளவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்கு மற்றவர் கையைப் பொருட் படுத்தாதவராயிருந்தால் அவர் மனத்துயரின்றி மகிழுடன் வாழலாம். நகர வாழ்க்கையினால் மற்றொரு சிறந்த நன்மையும் உண்டு. அதுதான் சகோதரத்துவம் என்று வடமொழிச் சொல்லாற் கூறும் உடன்பிறப்புத் தன்மையாகும். பல சாதியினருடனும், பல மதத்தினருடனும் அடிக்கடி உறவாட நேருவதால், சாதி வேற்றுமை பாராட்டும் தீயகுணமும், மதவேற்றுமை பாராட்டும் கெட்ட தன்மையும் அகலுகின்றன. பண்டைக்கால முதல் நம்மை விடாமல் பின்பற்றி வருவதும், கற்றவர்களையும், அறிவுடையவர் களையும், உலக நாகரிகத்தில் ஈடுபட்டவர்களையும், சிற்சில வேளைகளில் மயங்கச்செய்து, தன் வயமாக்கி நடத்தும் குருட்டு நம்பிக்கையாகிய பேய் என்னும் பேதமை வழக்கம் சிதைந்து ஒழிவதற்கும் இது சிறந்த வழியாகும். மேற்கூறிய பல நன்மைகளைக் கருதியே அறிவுடைய வர்களும், ஐம்புலன்களாலும் இன்பம் அடைதல் கருதிப் பணக்காரர்களும், வயிற்றுப் பிழைப்பைக் கருதி ஏழைமாந்தர் களும் நகத்தை அடைகின்றனர். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பது நாமறிந்த பழமொழி. நோயுடையானொருவன், எத்தகைய பெருஞ்சிறப்புக் களை எய்தியவனாயினும், அவற்றால் அவனுக்குப் பயன் சிறிதும் இல்லை. நோயுற்ற கோடீசுவரனின் வாழ்க்கையைவிட, வறுமைப் பிணியால் பிணிப்புண்டு உழலும் வறிஞன் ஒருவனுடைய நோயற்ற வாழ்க்கையே எவ்வகையிலும் சீரியதாம். நகர வாழ்க்கையில் வாழ்கின்றவர்களிற் பெரும் பாலோர், அகலாத உடல் நோயாலும், அடிக்கடி நேரும் பிணியாலும் கவல்கதைக் காணலாம். இதனாற்றான், நகரங்களில், மேனாட்டு மருத்துவச் சாலைகளும், கீழ்நாட்டு மருத்துவச் சாலைகளும், மேனாட்டு மருத்துவ முறையறிந்த நாட்டு மருத்துவர்கள் கூட்டமும், கீழ்நாட்டு மருத்துவ முறையறிந்த நாட்டு மருத்துவர் குழுவும் மிகுந்திருப்பதைத் காணலாம். நகரங்களிற் பலவகையான இயந்திர ஊர்திகளும், நெற் பொறிகளும், மாப்பொறிகளும், இடைவிடாமல் இயங்குவதால் எழும்புகையும், சிறு துகளும், மக்களுடைய செவி, வாய், கண், மூக்கு, மயிர்த்துளை முதலியவற்றின் வழியே உட்புகுந்து பல கெட்ட நோய்களை உண்டாக்குகின்றன. அன்றியும், ஆங்காங்கே சாக்கடை நீர் தேங்கிக் கிடப்பதால் அதினின்றும் கொசு முதலிய பெருந்துன்பத்துக் காளாக்கும் சிறிய நச்சுப்பூச்சிகள் பல தோன்றி நகரெங்கும் பரவி இருக்கின்றன. அவைகளோ பிறரிடம் உள்ள பிணிகளையும் பிறபொருள்களில் உள்ளகெடுதிகளையும் நம்மிடம் சேர்த்துப் பல தொத்துநோய்களை உண்டாக்கு கின்றன. மனிதனுக்குக் காற்றும் நீரும் மிகவும் முக்கியமானதாகும். நகரங்களிலோ நகர ஊழியர்களின் முயற்சியால் நல்ல நீர் கிடைக்கும்படியான வசதிகள் செய்யப்பட்டிருப்பினும், நல்ல காற்றுக்கிடையாது. நகரத்தை விடுத்து வெளியிற் சென்றால் நல்லகாற்றைப் பெறலாம். உள்ளேயே உறைந்திருந்தால் நச்சுக் காற்றைத்தான் பெறமுடியும். நச்சுக்காற்றை உட்கொள்ளுவ தனாலும் பலவித நோய்களுக்கு ஆளாகநேரும். இவைபோன்ற பல காரணங்களால் நகரவாழ்க்கை உடல் நலத்திற்கு எந்த வகையாலும் ஏற்றதன்றென்பதை அறியலாம். இதுகாறும் நகரவாழ்க்கையில் உளவாகும் நலம் சிலவற்றையும், தீமை சிலவற்றையும் கூறினோம். கூறிய இவற்றைக் கொண்டு, மாந்தர்க்கு நகரவாழ்க்கை சிறந்ததா சிறந்ததல்லவா என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். ஆபுத்திரன் காசியம்பதியில் அபஞ்சிகனென்னும் பெயருடைய ஓரந்தணனிருந்தான். எல்லாவுயிர்கள் மாட்டும் இரக்கங்கொண்டு தன்னாலியன்ற உதவியையும் புரிந்து வந்தானாதலின் அவனை எல்லோரும் உண்மை அந்தணனென உரைத்துக் கொண்டாடினர். பல கலைகளையுங் கற்று அதற்கேற்ப ஒழுகும் நலலோனாகிய அவனுக்கொரு மனைவி இருந்தாள். அவள் பெயர் சாலி என்பது அன்னவள் பால் கற்பென்பது சிறிது மில்லை. தீய நடக்கை அவளிடம் மிகவும் காணப்பட்டது. அதனால் அவளுடன் கூடி இல்லறம் நடத்த அவ்வந்தணன் ஒருப்படாமல் அவளைக் கடிந்து நீக்கினான். உடனே அவள் மனங்கலங்கி அவ்வந்தணன் அடிகளில் வீழ்ந்து ஐயோ! இனி யான் யாது செய்வேன், என்னைக் காப்பாற்று கின்றவர் வேறு யாரிருக்கின்றனர், சிறியோர்செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடமையன்றோ? எங்ஙனமாவது எனது குற்றத்தை மன்னித்து என்னைக் காப்பாற்ற வேண்டுகின்றேன். என்று கூறிப்புலம்பினாள். அதைக்கேட்ட அபஞ்சிகன் என்னும் அவ்வந்தணன், இரக்கங்கொண்ட சிந்தை யுடையவனாய், தீயொழுக்கமுடைய ஏ பெண்ணே! நீ செய்த குற்றம் நீங்கவேண்டுமாயின், தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்குச் சென்று நீராடிவருதல் வேண்டும். அப்பொழுதுதான் உன்னைப்பற்றிய பழி அகலும். ஆதலால் நீ காலந்தாழ்த்தாமல் உடனே சென்று வருக. சென்று வந்தால் உன்னை மீண்டும் இல்லாளாக ஏற்றுக்கொள்வேன் என்றான். உடனே அந்நங்கையும் கன்னியாகுமரியில் நீராடு வதற்குப் புறப்பட்டு, வழிச்செல்வோர்களுடன் கூடிக்கொண்டு, தமிழ் நாட்டையடைந்து, குமரிநீராடித் திரும்பினாள், அப் பொழுது அச்சாலி நிறைந்த சூலுடையவளாக இருந்தமையால், ஒருதோட்டத்திற் கருவுயிர்த்தாள். கருவுயிர்த்த அக் குழந்தை ஆணாக இருந்தும் அதனை அவள் சிறிதும் இரக்கங்கொண்டு நோக்காதவளாய்க் கன்மனத்துடன் அக்குழந்தையை அவ் விடத்திலேயே வைத்துவிட்ட கன்றாள். அப் பச்சிளங் குழவி பால்பெறாது பசியினால் வருந்தி அழுதது. அதனை அண்மையிற் புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு கண்டது. உடனே விலங்கினத்தைச் சேர்ந்த அப்பசுவிற்கு இரக்கம் உண்டாயிற்று. தமிழ் நாட்டிற்றோன்றிய அப்பசுவிற்கே அவ்வளவு இரக்கமிருக்குமாயின், அக்காலத்துத் தமிழ் மக்கள் எத்துணை இரக்கமுடையவராக இருந்திருத்தல் வேண்டும்? இரக்கங்கொண்ட அப்பசு, ஓடி வந்து, நாவால் நக்கிக் குழந்தையின் வாயில், தன் மடியில் உள்ள பாலைச் சொரிந்தது. குழந்தையும் அதனை அருந்திப் பசியடங்கி மகிழ்ச்சியோடு விளையாடிற்று. இவ்வாறு ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, ஏழு நாட்கள் வரையிலும் அக்குழந்தையை அப்புண்ணிய ஆவே புரந்து வந்தது. இவ்வாறிருக்கும் அமயம் வயனங்கோடென்னும் ஊரில் உள்ள பூதி என்னும் பெயருடைய அந்தணன் ஒருவன் வேற்றூர் செல்வதற்காகத் தன் மனைவியுடன் அந்நெறியே வந்தனன். அதுகாலை அக்குழந்தை அழுதது. அக்குழந்தைக்குப் பசிக்குப் பால் கிடைப்பினும், தூக்கியெடுத்து முத்தங்கொடுத்துப் புரப்பவர் இல்லாமையால், உடம்பின் வலியைப் பொறுக்க முடியவில்லை; அதனாற்றான் அழுதது. இக்குரல் அவ்வந்தணன் செவியில் விழுந்தது. உடனே குழந்தையின் அழுகுரல் கேட் கின்றதே என்றெண்ணி, அவ்விடத்திலேயே நின்று, சுற்றிலும் நோக்கினான். ஒரு தோட்டத்திற் பசுவொன்று நின்றுகொண்டி ருப்பதையும் குழந்தை கண்ணீர் விட்டுக் கதறுவதையுங் கண்ணுற்றான். உடனே விரைந்து, அக்காவினுள் நுழைந்து, குழந்தையைக் காதலுடன் கைகளால் தழுவி யெடுத்து, உச்சி மோந்து, முத்தமிட்டு, உள்ள மகிழ்ந்தான். அந்தோ இவ்வழகிய குழவியைப் பெற்றவள் மனம் கல்லோ! இரும்போ! மண்ணோ! அறியேன். இப்பசுவிற்கிருக்கும் அறிவுகூட அப்பெண் பேய்க் கில்லாத தென்னே? எவ்வாறு மனந்துணிந்து இக்குழவியை இங்ஙனே கிடத்திச் சென்றாளோ? அல்லது நமது நற்பேறுதான் இங்ஙனம் வாய்த்ததோ? நமக்குப் பிள்ளையில்லை என்பதை உணர்ந்த கடவுள்தான் இம்மகவை அளித்தாரோ? என்றெண்ணி மனங்களித்து, அம்மகவை எடுத்துத் தன் மனைவியிட மளித்தான். அவளும் அன்பு மிக்கவளாய், மார்பிலணைத்து மகிழ்ந்து, பாலூட்டித் தாலாட்டிப் பாராட்டித் தூக்கி முத்தமிட்டாள். பின்னர் இருவரும் தங்கள் உரிமையூரை யுற்று மிக்க காதலுடன் அப்பிள்ளையை வளர்த்து வந்தனர். அக்குழந்தைக்குத் தக்க பருவம் வந்தபின் அந்தணர் குலத்திற்குரிய உபநயனம் முதலிய சடங்குகளையெல்லா மாற்றிக் கல்வி கற்றுக்கொடுத்தான் அம்மகன் ஒருமுறை சொல்லிய பொருளை யுடனே மனத்திற்கொள்ளும் ஆற்றலுடையவனாகவும், படிக்குங் காலத்திலேயே பிறருக்குரிய ஐய விபரீதங்களை அகற்றும் வன்மையுடையவனாகவும் உள்ளதைக்கண்டு அவன் தந்தையாகிய பூதி வியப்படைந்தான். சிறிது காலத்திற்குள் எல்லா நூல்களையுங் கற்று முடித்துவிட்டான். அக்கல்வியின் பயன் என்னவென்பதை அவளாராய்கின்ற காலத்தில் உயிர்க் கருணையே கல்வியின் பயனென்பதை யுணர்ந்தான். அவன் இளமைப் பருவத்திலேயே சிற்றுயிர்களுக்கு யாதானுமொரு துன்பந் தோன்றிலும் அதைக் கண்ணுறுவானாயின் மனம் பொறுக்கமாட்டான்; கண்ணீர் விட்டழுவான். அவ்வுயிரின் துயரைப்போக்க முயல்வான். மக்களிடத்திலும் வேற்றுமை பாராட்டாதவனாய், ஏழைகளைக் கண்டால், மிக்க இரக்கம் பூண்டு, அவர்களுக்குத் தொண்டுபுரிவான் இச்செயலைக்கண்ட அறிவுடையோர் அனைவரும் அவனைக் கொண்டாடினர். அதனால் அவன் சிறிதும் செருக்கடைவதில்லை. பூதி என்பவன பசுவினிடமிருந் தெடுத்துவந்து வளர்த்தமையால் இவனை யெல்லோரும் ஆபுத்திரனென்று பெயரிட்டழைத் தனர். அதுவே இவனுக்குப் பெயராக வழங்கிவிட்டது. பண்டைத் தமிழகம், மக்களும் இப்பூமிக்கு நானிலம் என்ற தமிழ்பெயர் வழங்கி வருகின்றது. இதன் பொருள் நான்கு வகையான நிலம் என்பதே யாகும். பண்டைக் காலத்து நிலநூலார் நம் தமிழ் நாட்டை நால்வகையாகப் பகுத்து வழங்குகின்றனர். மலையையும் மலையைச் சார்ந்த நிலத்தையும் குறிஞ்சியென்றும், காட்டையும் காட்டைச் சார்ந்த இடத்தையும் முல்லையென்றும், வயலையும் வயல் சார்ந்த இடத்தையும் மருதமென்றும், கடலையும் கடல் சார்ந்த இடத்தையும் நெய்தலென்றும் வழங்கிவந்தனர். பிற்காலத்தினர் பாலையையும் பாலை சார்ந்த இடத்தையும் பாலை நிலம் என்று கூறி ஐந்து நிலமாகக் கொண்டனர். குறிஞ்சி நிலத்தில் வாழும் ஆண்மக்களுக்குக் குறவர், கானவர், பொருப்பர், வெற்பர் சிலம்பர் என்று பெயர். பெண் மக்களுக்குக் குறத்தியர், கொடிச்சியர் என்று பெயர். அந் நிலத்தில் தலைமை பெற்றிருப்பவர்களுக்குப் பொருப்பன், சிலம்பன், வெற்பன் என்றும், தலைமைபெற்ற பெண்மக்களுக்குக் குறத்தி, கொடிச்சி என்றும் வழங்குவதும் உண்டு, அம்மக்கள் அந்நிலத்துத் தெய்வமாகிய முருகக் கடவுளை வணங்கி வந்தனர். அந்நிலத்தில் கிளி மயில் முதலிய புட்களும், புலி, கரடி, யானை, சிங்கம் ஆகிய விலங்குகளும் மிகுதியாக வாழும். ஆங்குள்ள ஊர் களுக்குச் சிறுகுடி என்று பெயர். அருவி நீரும் சுனை நீரும் நிலைகளாகும். வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, காந்தட்பூ இவைகள் அந்நிலத்திற் காணப்படும் மலர்களாகும். சந்தனமரம், தேக்கு மரம், அகில்மரம், அசோகமரம், நாகமரம், மூங்கில்மரம் இவைகள் அந்நிலத்தில் மிகுதியாக வளரும் மரங்களாகும். அவர்கள் விழாநாட்களில் அடிக்கும் பறைக்குத் தொண்டகப்பறை என்றும், வாசிக்கும் யாழிற்குக் குறிஞ்சியாழென்றும், பாடும் பண்ணிற்குக் குறிஞ்சிப் பண்ணென்றும் பெயர். வெறியாட்டயர்தல், மலை நெல்விதைத்தல், தினைப்புனங்காத்தல், தேனழித்தெடுத்தல், கிழங்ககழ்ந்தெடுத்தல், அருவி நீர் திளைத்தல், சுனை நீராடல் இவைகள் குறிஞ்சி நிலமக்கள் பொழுது போக் காகக் கொள்ளும் தொழில்களாம். அவர்கள் உணவாகக் கொள்வன மலைநெல், மூங்கிலரிசி, தினை, கிழங்கு வகைகள் தேன் முதலியன. அவர்கள் வாழ்க்கையே நோயற்ற சீரிய வாழ்க்கையாகும். முல்லை நிலத்தில் வாழும் ஆண்மக்களை இடையர், ஆயர் பொதுவர். கோவலர் என்றும், பெண்மக்களை இடைச்சியர், ஆய்ச்சியர் என்றும் அழைப்பது வழக்கம் அந்நிலத்தில் தலைமை பெற்றிருப்போர்க்குக் குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி என்று பெயர். அவர்கள் அந்நிலத்துத் தெய்வமாகிய நெடியோனை வணங்கி வந்தனர். காட்டுக்கோழி அந்நிலத்தின் புள்ளாகும், மான், முயல், பசுமாடு, காளைமாடு, எருமைமாடு, ஆடு இவைகள் அந்நிலத்தில் வாழும் விலங்குகளாகும், ஊர் களைப்பாடி என்று வழங்குவார்கள். குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ. பிடவம்பூ முதலிய மலர்கள் அந்நிலத்தில் மிகுதி யாகக் காணப்படும். கொன்றை மரம், காயாமரம், குருந்தமரம் இவைகள் அந்நிலத்தில் மிகுதியாக வளர்ந்திருக்கும் மரங்களாகும். அவர்கள் விழாக் காலங்களில் அடிக்கும் பறைக்கு ஏறங்கோட் பறையென்றும், வாசிக்கும் யாழிற்கு முல்லை யாழென்றும், பாடும் பண்ணிற்குச் சாதாரி என்றும் பெயர். குறுஞ்சுனை கான்யாறு இவைகள் அங்குள்ள நீர் நிலைகளாகும். சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களைகட்டல், அவற்றை யரிதல், கடாவிடுதல், கொன்றைக்குழலூதல், ஆடுமாடுகள் மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடல், கான் யாறாடல் இவைகள் முல்லை நிலமக்களின் தொழிலாகும். வரகு, சாமை, காராமணி, தயிர், மோர், பால், நெய் இவைகள் அவர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருளாகும் அவர்களும் நோயற்ற வாழ்க்கையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தார்கள். மருத நிலத்தில் வாழும் ஆண்மக்களுக்கு உழவரென்றும், பெண்மக்களுக்கு உழத்திய ரென்றும், தலைமை பெற்றோர்க்கு ஊரன் மகிழ்நன் என்றும், கிழத்தி, மனைவி என்றும் பெயர். அவர்கள் அந்நிலத்துத் தெய்வமாகிய வேந்தனை வணங்கி வந்தனர். அந்நிலத்தில் மகன்றில், கொய்யடிநாரை, சம்பங் கோழி, நாரை, அன்னம், பெருநாரை, குருகு, தாராமுதலிய பறவைகளும், எருமை, நீர் நாய் முதலிய மிருகங்களும் வாழ்ந்து வரும். ஆங்குள்ள ஊர்களுக்குப்பேரூர், மூதூர் என்று பெயர். யாற்று நீர், கிணற்று நீர், குளத்துநீர் இவைகள் நீர் நிலைகளாகும். தாமரைப்பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ இவைகள் அந்நிலத்தில் காணப்படும் மலர்களாகும். அந்நிலத்தில் காஞ்சிமரம், வஞ்சிமரம், மருதமரம் இவைகள் மிகுதியாக வளர்ந்திருக்கும். அவர்கள் அடிக்கும் பறைக்கு நெல்லரி கிணையென்றும், மணமுழ வென்றும், வாசிக்கும் யாழிற்கு மருதயாழென்றும், பாடும் பண்ணிற்கு மருதப் பண்ணென்றும் பெயர். மருதநில மக்கள், விழாச் செய்தல், வயற்களைகட்டல், நெல்லரிதல், கடாவிடுதல், குளங்கடைதல், புதுநீராடல் இவைகளைத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முதன்மையான உணவுப் பொருள் செந்நெல்லரிசி, வெண்ணெல்லரிசி ஆகிய இவை களாகும். அவர்கள் எப்பொழுதும் நோயற்றவர்களாகவும் மகிழ்ச்சியான இன்பவாழ்க்கையை உடையவர்களாகவும் இருந்தார்கள். நெய்தல் நிலத்தில் வாழும் மக்களுக்கு நுளையர், பரதர், அளவர், நுளைச்சியர், பாத்தியர், அளத்தியர் என்று பெயர். அந்நிலத்துத் தலைமைபெற்ற மக்களைச் சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுளைச்சி என்று வழங்குவார்கள். பாக்கம், பட்டினம் என்பன அந்நிலத்தூர்களின் பெயராகும். அந்நிலத்தில் வாழும் புள் கடற்காகமும், விலங்கு சுறாமீனும் ஆகும். உவர்நீர்க்கேணி, கவர்நீர்க்கடல் இவை அங்குள்ள நீர் நிலைகளின் பெயர். நெய்தற்பூ, தாழம்பூ, கடன் முள்ளிப்பூ ஆகிய மலர்களும், கண்டல், புன்னை, ஞாழல் ஆகிய மரங்களும் அந்நிலத்தில் மிகுதியாகக் காணப்படும். ஆங்குள்ள மக்கள் அடிக்கும் பறைக்கு மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை யென்றும், வாசிக்கும் யாழிற்கு விளரியாழென்றும், பாடும் பண்ணிற்குச் செவ்வழிப் பண்ணென்றும் பெயர். நெய்தநிலமக்கள் மீன் பிடித்தல், உப்புண்டாக்கல், அவைவிற்றல், மீனுணக்கல், அவற்றை உண்ண வரும் பறவைகளை யோப்புதல், கடலாடல் ஆகிய தொழில் களைப் புரிவார்கள். அம் மக்கள் மீனையும் உப்பு விற்றதனாற் பெறும் பொருள்களையும் உணவாகக் கொண்டு நோயற்றவர் களாக இன்ப வாழ்க்கையில் வாழ்ந்திருந்தனர். பாலை நிலத்தில் வாழும் மக்களுக்கு எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர் என்றும், அந்நிலத்துத் தலைமை பெற்றோர்க்கு விடலை, காளை, மீளி எயிற்றி என்றும் பெயர். அவர்கள் கன்னி என்னும் பெண் தெய்வத்தை வணங்கிவந்தனர். பாலைநிலத்தூர்களுக்குக் குறும்பென்று கூறுவார்கள் ஆங்கு புறா, பருந்து, எருவை, கழுகு என்னும் சிறைகளும், செந்நாய் என்னும் விலங்கும் வாழ்ந் திருக்கும். குராம்பூ மராம்பூ என்னும் மலர்களும், உழிஞைமரம், பாலைமரம், ஒமைமரம், இருப்பைமரம் முதலிய மரங்களும் சிறப்பாகக் காணப்படும். அவர்கள் அடிக்கும் பறைக்குத் துடி என்றும் வாசிக்கும் யாழிற்குப் பாலையாழென்றும், பாடுமிசைக்குப் பஞ்சுரம் என்றும் பெயர். நீரில்லாக் குழிகளும், நீர் வறண்ட கிணறுகளும் ஆங்குள்ள நீர்நிலைகளாகும். அவராற்றுந் தொழில்கள் போர் புரிதலும், பகற்சூறை யாடுதலுமாம், வழிச்செல்வோரை அடித்துப் பறித்த பொருள்களையும், பிற ஊர்களிற் சென்று கொள்ளைகொண்ட பொருள்களையுமே உணவாகக் கொள்வார்கள். பாலைநிலமென்பது தனியான நிலமன்று. முல்லை நிலத்திலும் குறிஞ்சி நிலத்திலும் வளம் குன்றிய காலத்தில் ஆங்காங்கே பாலைநிலம் உண்டாகும். ஆகவே மிகவும் நாகரிகமற்றவர்கள் தான் பாலை நில மக்களாயிருந்தனர். அவர்கள் வயிற்றுக் கொடுமையால் தீய தொழில் களை யாற்றி வந்தனர். பாலைநிலமல்லாத மற்றைய நானிலத்து மாந்தர்களுக்குள் யாதொரு வேற்றுமையும் இருந்ததில்லை. அவர்கள் ஒருவர்க்கொருவர் உறவினர்களாகவும், பெண் கொடுத்தல் கொள்ளல் செய்பவர்களாகவும் செய்பவர் மிகவும் நாகரிகமுடையவர்களாகவும் வாழ்ந்து வந்தனர், பிற்காலத்தில்தான் ஒவ்வொருவரும் அவரவர்தொழில் காரண மாக வேறு வேறு சாதியினராக மாறிப் பின்னர்ப் பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் கொள்கை நிலைபெறுவதாயிற்று. அப்பூதியடிகள் நாயனார் வரலாறு தென் கயிலாயமென்று வழங்கும் திருவையாற்றிற்கு அருகில் திங்களூரென்னும் ஒரு திருப்பதியுண்டு. அப்பதியில் அந்தணர் குடியில் அப்பூதியடிகள் என்னும் பெரியார் ஒருவர் பிறந்திருந்தார். அவர் இளமையிலிருந்தே சிவபெருமான் மாட்டும், அவனடியார், பாலும் ஆழ்ந்த அன்பு கொண்டு தொண்டாற்றுவாராயினர். அவர் திருநாவுக்கரசு நாயனாரின் பெருமையைச் செவிமடுத்த பின்னர் அவர் பால் அளவுகடந்த அன்பு பூண்டு எப்பொழுதும் அவரையே மனத்திலெண்ணி வழிபடுவாராயினர். அவர் இல்லின் கண்ணுள்ள ஆக்களுக்கும், மேதிகளுக்கும், தமது மக்களுக்கும், மற்றும் தனக்குரிய பொருள்களுக்கும் திருநாவுக்கரசரென்னும் பெயரையே இட்டு வழங்கி வந்தார். அவர் செய்யும் அறங்கள் அனைத்தையும் திருநாவுக்கரசரின் திருப்பெயரால் ஆதுலர்க் கன்னமிடும் மடங்களும் அறநீர்ச் சாலைகளும் அமைத்திருந்தார். இவரிவ்வாறிருக்க, திருநாவுக்கரசர் ஒவ்வொரு சிவத் தலங்களுக்குஞ் சென்று சிவபெருமானை வணங்கிப் பதிகம் பாடி வருகின்றவர், திருப்பழனமென்னுந் தலத்தினும் போந்து இறை வனை வணங்கித் திங்களூரின் வழியாக வந்து கொண்டிருந்தார். அதுபோது வழியில் அப்பூதியடிகளாலமைக்கப் பட்டிருந்த தண்ணீர்ப் பந்தரை யடைந்து அப்பந்தரின் சிறப்பையும் அமுதம் போன்ற தண்ணீரையும் கண்டு வியப்புற்றார். அப்பந்தரில் எம்மருங்கும், அழகாகத் திருநாவுக்கரசு என்று எழுதப்பட்டிருப் பதைக் கண்டு மிகவும் அதிசயமுற்று ஆங்குள்ளாரை நோக்கி இப்பந்தரை இப்பெயரிட்டு இங்கமைத்தவர் யாரென்று வினவினார். அப்பூதியடிகளின் செயலை யறிந்தவர்கள் இதனைச் செய்தவர் அப்பூதியடிகளாவார். இதுபோலவே இன்னும் பல தண்ணீர்ப் பந்தர்களும், மடங்களும், சோலைகளும், குளங்களும் இப்பெயராலேயே அமைத்திருக்கின்றார் என்று கூறினார்கள். அதுகேட்ட நாவுக்கரசர் இவ்வாறு செய்வதன் கருத்து யாதாயிருக்கலா மென்றெண்ணிப் பின்னும் அவர்களை நோக்கி, அவ் அப்பூதியடிகள் யாண்டுள்ளார் என்று வினாவினார். அதற்கவர்கள். அவ்வந்தணர் இப்பழம் பதியாகிய திங்களூரில் வாழ்கின்றவர்தான், இப்பொழுது தான் அன்னவர் இங்கிருந்து இல்லஞ் சென்றார். அவரகமும் துலைவிலில்லை, சமீபத்தில் தானுள்ளது, இதுதான் மார்க்கம் என்று புகன்றனர். உடனே நாவுக்கரசர் அவ்வந்தணர் பெருமானைக் காணவேண்டித் திங்களூரையடைந்து அப்பூதியடிகளார் மனையகத்தை யடைந்தார். மனையினகத்திலிருந்த அப்பூதி யடிகள் சிவனடியாரொருவர் வாயிற் கடைத்தலையை யணுகினாரென்று கேட்டதும் விரைந்து வெளியில்வந்து வாகீசர் திருவடிகளை வணங்க, வாகீசரும் அப்பூதியடிகளின் திருவடிகளை வணங்க இருவரும் களிகூர்ந்தனர். பின்னர் அப்பூதியடிகளார், சிவவேடப்பொலிவழகும், சிவபெருமான் பால் இடையறாப் பேரன்புமுடைய தாங்கள் இங்கெழுந்தருள எத்துணைநாள் எத்தனைய தவத்தை நோற்றேனோவென்று கூறினார். நாவுக்கரசர் அன்பரே! அடியேன் திருப்பழனத் திறைவனை வணங்கிவரும் வழியில் நீரமைத்திருக்கும் அறநீர்ச் சாலையைக் கண்டேன். நீர் செய்திருக்கும் அத்தகைய அறங்கள் பலவற்றைப் பற்றியும் கேள்வியுற்று நும் பாலணுகினேன். சிவபெருமானடியார் பொருட்டு நீரமைத்திருக்கும் அறநிலையங்களில் நும்பெயரை எழுதாமற் பிறிதொருவர் பெயரை எழுதவேண்டிய காரணம் யாதோ? என்று கேட்டார். அது கேட்ட அப்பூதியடிகள் திருநாவுக்கரசு நாயனாரின் பெருமையை நீர் அறிந்திலீர்போலும். சிவபிரானிடம் தான் கொண்டிருந்த உறுதியான அன்பினால் சமணர்கள் மொழி கேட்டு மன்னவன் ஆற்றிய கொடுஞ்செயல் அனைத்தையும் ஒழித்தார். சிவபெருமானுக்குச் செய்யும் திருந்தொண்டின் வலிமையால் பல திருவிளையாடல்களை ஆற்றிய அப்பெரியார் பெயரை எழுதுவதற்குத் தடையென்னை? அவர் பெருமையை யறியாதார் இவ்வுலகில் யாருளர்?அங்ஙனமிருக்கச் சிவவேடத் துடனிருக்கும் நீர் இவ்வாறு கேட்கின்றீர்! நீர் யார்? உமது ஊர் யாது? என்று சிறிது சினத்துடன் கேட்டார், அப்பூதியடிகள் நவின்ற இவ்வாசகங்களைக் கேட்ட திருநாவுக்கரசர் அவர் தன்பாற்கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பிற்கு வியந்து அவரை நோக்கி அன்புமிக்க ஐயீர்! சமண சமயத்திலிருந்த சூலை நோயினருளாற் சைவமதத்தை யடைந்தவன் அடியேன் தான் என்று கூறினார். உடனே அப்பூதியடிகளார் கைகள் தலை மேற்குவியக் கண்கள் ஆநந்தவருவி சொரிய மயிர்க்கூர்ச்செறிய உரைகுழற அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார். நாவுக்கரசரும் வணங்கினார். அப்பூதியடிகளார் களிப்புக் கடலில் மூழ்கியவ ராய், ஆடியும், பாடியும், ஓடியும், மகிழ்ந்தும், நாவுக்கரசர் வந்திருக்குஞ் செய்தியை அனைவருக்குங்கூறி மனைவி மக்கள் சுற்றத்தார். யாவரையும் அழைத்து நாவுக்கரசரை வணங்குமாறு செய்தார். பின்னர் நாவுக்கரசரை வீட்டினுளழைத்துச் சென்று ஆசனத்திருத்தி முகமன்கூறித் தமதில்லில் உணவு கொள்ள வேண்டுமென விண்ணப்பித்துக்கொள்ள நாவுக்கரசரு மதற் கிசைந்தார். அப்பூதியடிகள் தமது மனைவியாரிடம் நாயனார் அமுது செய்ய இசைந்தது கூற அவ்வம்மையாரும் அளவற்ற அன்புடன் அறுசுவைப் போனகமாக்கி வாக்கின் வேந்த ருண்பதற்கு வாழை யிலே கொணருதற்குத் தங்கள் முதற் குமாரனை விடுத்தனர். அன்னவன் தாய்தந்தையர் சொல்லைத் தலைமேற்றாங்கி வாழைத்தோட்டத்தில் நுழைந்து ஒரு பெரிய வாழையிலிருந்த குருத்திலையை அறுத்தான். அவ்வமயம் அதிலிருந்த கொடிய நாகமொன்று அம்மைந்தன் கரத்தில் தீண்டிச் சுற்றிக் கொண்டது. உடனே அவன் அப்பாம்பை உதறிவீழ்த்தி விடந் தலைக்கேறு முன்னர், இக்குருத்தை வீட்டிற்கொண்டுபோய்க் கொடுக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் விரைந்தோடிவந்து தன் தாயாரிடம் அவ்விலையைக் கொடுத்துவிட்டுக் கீழே வீழ்ந்துஉயிர் நீத்தான். அதுகண்ட தாய்தந்தையர்கள் மைந்தனை உற்று நோக்கி அரவு தீண்டியதனால் இறந்தானென்றறிந்து, இச்செய்தி பிறரறிந்தால் நமது நாவுக்கரசர் உணவு கொள்ளுதற்கு இடையூறாக முடியுமென்றெண்ணி, அம்மைந்தனை ஒரு பாயாற் சூழ்ந்து ஒருவருங் காணா வோர்புறத்து மறைத்து வைத்தனர். பின்னர் அப்பூதியடிகள் நாயனாரை அணுகி உணவுகொள்ள எழுந்தருளுமாறு வேண்ட அவரும் எழுந்துவர அவர் கால்களை நீரால் விளக்கி ஓராசனத்தேற்றினர். இலையில் உணவு பரிமாறு முன்னர் நாவுக்கரசர் அப்பூதியடிகளுக்கும் திருநீறு தரும்போது மூத்தகுமாரனைக் காணாதவராய் உமது முதல் மைந்தன் யாண்டுளான் அவனுக்கும் நீறளிக்க விரும்புகின்றேனென்றார். அதற்கப்பூதியடிகள் ஒன்றும் விடைகூற வியலாதவராய் அவன் இப்பொழுது ஈண்டைக்குதவான் என்று கூறி மனமயங்கினார். அதனைக் குறிப்பாலறிந்த நாயனார் உமது நெஞ்சந் துன்புறுவது போல் எனதுள்ளமுந் துன்புறுகின்றது, உண்மையைக் கூறி யருளும் என்றார். அதற்கு அப்பூதியடிகள் நாம் மைந்தனிறந்த செய்தியைக் கூறினால் இவர் உணவு கொள்ள மாட்டார் என்றெண்ணி உண்மை கூற அஞ்சினாரேனும் பெரியாரிடம் பொய் புகலுதல் பெருங் குற்றமாகுமென்று கருதி நிகழ்ந்த செய்தியை மொழிந்தார். உடனே வாகீசமுனிவர், நீர்புரிந்த செயல் நன்று! என்று கூறி மைந்தனை மறைத்து வைத்திருக்கு மிடத்தை யுற்றுப் பிணத்தை நோக்கிச் சிவபிரானை வேண்டிப் பதிகம்பாட மைந்தன் உயிர்பெற்றெழுந்து அவர்திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அவரும் திரு நீறளித்து வாழ்த்தினார். இது கண்ட ஆங்குள்ளாரனைவரும் சிவனடியாரின் பெருமையை அறிந்து நாவுக்கரசரைப் போற்றினார்கள். ஆனால் அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் பெரியார் உணவுகொள்ளுதற்குத் தம் மைந்தன் சிறிது இடையூறாய் இருந்தானென்றெண்ணி வருந்தினர். அவர்கள் வாட்டத்தைக் கண்ட சொல்லின் மன்னர் மீண்டும் அமுது செய்யுங் குறிப்புடனிருந்தார். உடனே அப்பூதியடிகள் உணவுக்கு வேண்டிய அனைத்தையும் ஆக்கிப் பூமியைத் திருத்தி விளக்கிட்டுக் குருத்திலையைப் பரப்பிக் கறிவகைகளைப் பரிமாறிச் சொல்லின் மன்னரையணுகி உணவுட்கொள்ள எழுந்துவருமாறு வேண்டினார். அவரும் எழுந்து சென்று அப்பூதியடிகளை நோக்கி நீவீரும் நும் புதல்வர்களும் இங்கிருந் துண்ணுங்களென்று கூற அவர்களும் நாயனார் பக்கத்தி லமர்ந்தார். அப்பூதியடிகளின் மனைவியார் உணவு பரிமாறத் திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் அவர் புதல்வர்கள் அனைவரும் சிவபிரான் திருவருளை எண்ணியமுது செய்தனர். திருநாவுக்கரசர் பின்னும் பலநாட்களங்கேயே அளவளாவி யிருந்து பின்னர்த் திருப்பழனஞ் சென்று இறைவனை வணங்கி அப்பூதியடிகள் நாயனாரையுஞ் சிறப்பித்துப் பதிகம் பாடி மேலும் சிவத்தலங் களை வணங்கச் சென்றார். அப்பூதியடிகளும் திருநாவுக்கர சருடைய பெருமை பொருந்திய பாதத்தையே வணங்கியிருந்து இறுதியில் வீடு பெற்றார். அறம் அறமெனினும் தருமமெனினும் ஈகையெனினும் ஒக்கும். இவ்வறம் நமது நாட்டிற்குப் புதியதொன்றன்று. நம் முன்னோர்கள் மக்களாய்ப் பிறந்தவர்கள் அடையவேண்டியன அறம் பொருள் இன்பம் வீடென நான்காக வகுத்தனர். அவற்றில் முதலில் அறத்தை வைத்து வழங்குவதால் அதனை உயிர்க்குறுதியெனச் சிறந்த பொருளாகக் கொண்டனரென்றறிகின்றோம். நம் பண்டைய மக்கள் இவ்வறத்தை முறைமையுடன் ஒழுங்காக நிகழ்த்தினார். ஆனால் பிற்காலத்தில் இவ்வறத்தைத் தவறான நெறியி லியற்றினமையால் நாட்டிற் பல தீமைகளும் நிகழ்வதாயின. திருவள்ளுவர் அறம் யாதெனக் கூறுங்கால் வறியார்க்கொன்றீவதேயீகை என்று கூறுகின்றார். இதுதான் தலைசிறந்த அறமெனப்படுவதாகும். ஒருவேலையுஞ் செய்வதற்குத் தகுதியில்லாதவர்களுக்கும், பிணியுற்றவர்களுக்கும், நொண்டி களுக்கும், முடவர்களுக்கும், குருடர்களுக்கும், புரப்பாரின்றி வருந்துவோர் களுக்கும் உதவுவதே சிறந்த அறம், பிற்காலத்தில் இக்கொள்கை மறைந்து வேலைசெய்யுந்திறமை யுடையவர்களுக்கும், பொருளீட்டுந் திறமை யுடையவர்களுக்கும் அறஞ் செய்யத் தொடங்கியதனாற்றான் நம் நாட்டில் சோம்பேறிகள் மிகுந்து நாடும் கீழ்நிலை யடைந்தது. நம் நாட்டில் இப்பொழுதும் பல நூற்றுக்கணக்கான அறநிலையங்க ளிருக்கின்றன. அவைகளிற் பலருக்கு உணவிடுகின்றார்கள். இவ்வறநிலையங் களெல்லாம் பண்டைநாளில் வறிஞர்களுக்கே மிகவும் உதவியுடையனவாக விருந்தன. ஆனால் இக்காலத்தில் அவைகள் பெரும்பாலும் ஏழைகளுக்குப் பயன் படுவதில்லை. திறமையுடைய சிலரே அவற்றின் பொருளை ஆண்டனுபவிக் கின்றனர். அவற்றை ஏழைகளுக்குப் பயன்படு மாறு செய்தலே சிறந்த அறமாகும். பசியினால் அல்லற் படுவோர்களுக்கு அன்னமிடுதல் எல்லாவற்றினும் சிறந்த அறமென நூல்களிற் கூறப்படுகின்றன. இது மிகவும் சிறந்த அறமென்பதில் ஐயமில்லை. நாட்டிற் சில காலத்திற் பெரும் பஞ்சம் உண்டாவதனாற் பலமக்கள் பசியினால் துன்புறுவதைக் காணலாம். அக்காலத்தில் தான் ஏழைகளுக்குதவி செய்ய முற்படவேண்டும். அக்காலத்தில் மக்களுக்கு இரு வகையாக உதவிசெய்யலாம். வேலையொன்றும் செய்ய இயலாதவர்களுக்கு இலவசமாக உணவளித்தலோடு, வேலை செய்யக்கூடியவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். அதனால் வேலைக்காரர்கள் நலமடைவதுடன் மேற்கொண்ட வேலை களை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்கலாம். நாம் ஒருவருக்குச் செய்யும் உதவி அவர் வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய அறம் யாதென்பதைத் தெரிந்துகொள்வோம். ஒருவருக்குக் கொடுக்குமுணவு அவருக்கெப்பொழுது முதவி செய்வதில்லை. அன்றிப் பொருள் கொடுப்போமாயின் அப்பொருள் செலவானபின் அவர் மீண்டும் பொருளின்றித் துன்புறநேரும். அன்றி ஆடைகளை வழங்குவோமாயின் அவ்வாடை கிழிந்தபின் வேறு ஆடைகளுக்காகத் துன்புறுமாறு நேரும். ஆகவே இத்தகைய அறம் அத்துணைச்சிறந்த நிலையுள்ள அறமென்று கூறவொண்ணாது. நிலைத்ததும், வாழ்நாள் முழுவதும் உதவி செய்யக்கூடியதும், உயிர்க்குறுதி பயப்பதுமாகிய சிறந்த அறம் மக்களை விலங்கினின்றும் உயர்த்திய கல்வியே ஆகும். மேல்நாட்டினரும் கல்வியையே சிறந்த அறமாகக் கொண்டு வளர்த்து வருகின்றனர். கிறிதவ மதக்கோயில்கள் இருக்கு மிடத்தை நோக்குங்கள். அதற்கருகில் ஒரு பள்ளிக்கூடமும் வைத்திருக்கின்றார்கள். கிறிதவர்கள் மதத்தின் பெயரால் செலவழிப்பதெல்லாம் கல்விக்காகவே செலவிடுகின்றனர். ஆங்காங்கே ஏழை மக்களுக்கு உண்டிச் சாலை களமைத்து அவற்றில் ஏழை இளங்குழந்தைகளைச் சேர்த்து உலக வாழ்க்கைக்குரிய கல்வியையும், மதக் கல்வியையும் பயிற்று வித்துத் தங்கள் மதத்தையும் கல்வியையும் பரவச் செய்கின்றனர். அவர்கள் செய்யும் அறத்திற்கு ஈடான அறம் வேறொன்றுமே இல்லையென்பது திண்ணம். அறஞ்செய்வதற்குப் பொருளே கருவியாகும். ஆயினும் மற்றவகையிலும் அறஞ்செய்யலாம். மனத்தாலும், அறஞ்செய்யலாம். மொழியாலும் அறஞ் செய்யலாம், மெய்யினாலும், அறஞ்செய்யலாம். அயலாருடைய செல்வம், பெருமை நலம் முதலியவற்றைக் கண்டு பொறாமை கொள்ளுதலும், உள் ளொன்று வைத்துப் புறமொன்று கூறுதலும், தன்னை உயர்வாகப் பிறரைத் தாழ்வாக வெண்ணுதலும், ஆகிய இன்னோரன்ன செயல்கள் மனத்திலணுகாமற் காப்பாற்றுதல் மனத்தாலாற்றும் அறமாகும். யாரிடமும் இனிய மொழிகளைப் புகலுதலும், கடுஞ்சொற்களை அறவே யொழித்தலும் வருந்துவோர்க்கேற்ப இனிய கூறி மகிழ் வித்தலும், தீய நெறியிற் செல்வார்க்கு நன்னெறி காட்டும் மொழிகளைப் புகன்று அவர்களைக் காப்பாற்றுதலும், ஆகிய இன்னோரன்ன செயல்கள் மொழியினாற் செய்யும் அறமாகும். தனதுடலுழைப்பால் பிறருக்கு எவ்வளவு உதவி செய்ய இயலுமோ அவ்வளவுஞ் செய்தல் மெய்யாலியற்றும் அறமாகும். அறத்திலும், பயன் கருதாது செய்யும் அறமே சிறந்ததாகும். தன்னுடைய பெயர் உலகத்தாருக்குத் தெரிய வேண்டுமென்றோ, தான் இறந்த பின்னும் தன் பெயர் இவ்வுலகில் நிலைத்திருக்க வேண்டுமென்றோ, தன்னை யாவரும் பெருங் கொடையாளி, வள்ளலென்று புகழ வேண்டுமென்றோ எண்ணிச் செய்வது சிறந்த அறமாகாது. இம்மையில் செய்யும் அறம் மறுமையில் உதவும் என்று எண்ணிச் செய்யும் அறங்கூடச் சிறந்ததன்று. அவ்வாறு செய்யும் செயல் வாணிபம் செய் வதையே யொக்கும். அறஞ் செய்வோர்களுக்கு எடுத்துக் காட்டாக மேகத்தைக் கூறுவார்கள். ஏனெனில் மேகம் மழையைப் பொழிந்து விளைவுப் பொருள்களை விளையச் செய்கின்றது. அதனால் மக்கள் ஜீவித்திருந்து பெரும் நன்மையை அடைகின்றார்கள். ஆனால் அம்மேகம் தான் செய்த உதவிக்கெதிருதவியை மக்களிடமிருந்து விரும்புவ தில்லை. மக்களால் மேகத்திற் கெதிருதவிதா னென்ன செய்ய முடியும்? ஆகவே மேகத்தைப்போல அறஞ்செய்வோரே வள்ளலென்று கூறத் தகுந்த தகுதி யுடையவர்களாவார்கள். தாம் இன்பமுறும் பொருட்டே ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலை மேற்கொள்ளுகின்றனர். ஒருவன் எளிதில் இன்பமுறுதற்குவழி அறஞ் செய்தலே யாகும். பிறசெய்கைகளால் இன்பம் உண்டாகாது. பிற செயல்களால் வரும் பயன் முதலில் இன்பம் போலத் தோன்றினும், பின்னர் அது துன்பமாகவே காணப்படும். அன்றி இம்மையில் இன்பமாகத் தோன்றலாம்; மறுமைக்குத் துன்பத்தைத் தருதலும் கூடும். புகழும் உண்டாகாது. இதனைத் திருவள்ளுவர் கூறிய, அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்ற திருக்குறளடியால் அறியக் கிடக்கின்றது. அறஞ்செய்வதிற் கருத்துடையவர்கள் இன்று செய்வோம், நாளைச் செய்வோம், மறுநாள் செய்வோம் என்று எண்ணியிருத்தல் கூடாது. நம் வாழ்க்கை நிலையற்றதாகும். இன்றைக் கிருப்பவரை நாளைக் கிருப்பாரென்று எண்ணுதற்கு இடமில்லை. எப்போதேனும் காலன் நம்பால் நம் உயிரைக்கவர வருவான். அப்போது அந்தக் கூற்றுவனைப் போற்றினாலும் போகான். பொருள் கொடுத்தாலும் போகமாட்டான். அன்றியும் நமது இளமையும் செல்வமும் நிலை யற்றவை. ஆதலால் எப்பொழுதும் அறத்தைச் செய்துகொண்டே யிருத்தல் வேண்டும். நாம் இறக்கும் போது நமக்குத் துணையாக வரும்பொருள் பாவ புண்ணியம் இரண்டே யன்றி வேறில்லை. ஆதலால் நம்முயிர்க்குத் துணையாகக் கூடிய அறத்தை நம்மாலியன்ற வரையிலும் முறையோடியற்றி மேன்மை யடைய முயலவேண்டும். இப் பொழுது நம்மால் அறஞ்செய்ய வியலாவிடினும் அதில் விருப்ப முடையோரா யிருப்போமாயின் பிற்காலத்திலாயினு மதனை யாற்றக்கூடிய தன்மையை யுடையவராவோம் என்பது திண்ணம். இதனை நமது மூதாட்டியாகிய ஔவையாரும் அறஞ்செய விரும்பு என்று கூறி யிருப்பதனாலறியலாம். ஆபுத்திரன் (பாகம் 2) ஆபுத்திரன் வாழ்கின்ற அந்தணர் சேரியிலுள்ள வைதீகப் பிராமணர்களனைவரும் ஒன்று சேர்ந்து அடிக்கடி யாகம் புரிவது வழக்கம். யாகங்களிற் பலவகை யுண்டு. அவைகளிற் பசுவை வெட்டி யாகம் புரிவது ஒருவகை. அதனையே அச்சேரியிலுள்ள அந்தணர்கள் மிகுதியாகச் செய்துவந்தனர். இச்செயல் ஆபுத்திரனுக்கு மிக்க மனத்துயரை விளைத்தது. அதைத் தடுப்பதற்குத் தன்னால் இயன்றவரையிலும் முயன்றான். பல பெரியோர்களையுங் கண்டு உயிர்க்கொலை புரிவதற்கு இடமாகிய யாகங் கூடாதெனப்புத்தர் உபதேசங்களைக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. ஆபுத்திரன் எப்படியாயினும் உயிர்க் கொலையை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அவ்வமயம் ஒருநாள் ஓரந்தணன்வீட்டில் யாகமொன்றை நடத்துவதற்காகக் கோடுகளிற் பூமாலையைப் புனைந்த ஒரு பசுவைப் பிணித்திருக்கக் கண்டான். அப் பசு வேடர்கள் கையிற் சிக்கிய மான் போலவும், பாம்பின் வாயிலகப் பட்ட தேரைபோலவும், கீரி கையிற் சிக்கிய பாம்புபோலவும், பல்லியின் வாயிலகப்பட்ட தேள்போலவும், பூனையாற் பிடியுண்ட கிளிபோலவும். குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலைபோலவும் மிக அலமந்து வருந்திற்று. அது தருணம் தெருவின் வழியே சென்று கொண்டிருந்த ஆபுத்திரனைக் கண்டவுடன் அப்பசு மிகவும் கூச்சலிட்டுக் கதறியது. ஆபுத்திரன் மிகவும் நெஞ்சமிளகினவனாக எப்படியாயினும் இவ்வாவைப் புரப்பது எனது கடமையாகும், ஆதலால் இன்றிர விலாயினும் இப்பசுவைத் திருடிக் கொண்டு போய் எங்கேயா யினும் விட்டுவருவேன் இதன் உயிரைக் காப்பாற்றுவதால் நமக்குப்புகழும் புண்ணியமும் உண்டேயன்றித் திருடியபழி யுண்டாகாது என்றெண்ணிக்கொண்டு ஆண்டே ஒரு மருங்கில் யாருங் காணாதவாறு மறைந்திருந்தான். பொழுதும் அடங்கிற்று இருட்டும் வந்து சூழ்ந்தது. எல்லோரும் உணவு கொண்டபின் உறங்கிவிட்டனர். ஆபுத்திரன் இதுதான் தக்க காலமென்றெண்ணி, மெல்ல அவ்வில்லத்திற் புகுந்து, அப்பசுவைக் கட்டினின்றும் அவிழ்த்துக் கையிற் பிடித்துக் கொண்டே வெளியில் வந்து ஊரில் உள்ள எவரும் அறியாதவாறு ஊருக்கு வெளியே கொண்டு சென்றனன். பின்னர்த் தூக்கத்தினின்றும் விழித்த அந்தணர்சிலர், பசுவின் குரலைக் கேட்காதவராய், அது பிணித்திருந்த இடத்தைப் பார்த்தனர். பசு காணப்படவில்லை. ஓ ஓ! பசுவைக் கள்வன் கவர்ந்து சென்றான் எனக் கூச்சலிட்டனர். அக்கூச் சலால் எல்லோரும் விழித்தெழுந்து நாலா பக்கங்களிலுந் துருவினர். வேள்விப் பசுவைக் கள்வன் கவர்ந்தது ஒரு கெட்ட அறிகுறி யென்பார்சிலர். சிலர் அக்கள்வனைப் பிடித்துக் கொல்லுதல் வேண்டுமெனக் கூறுவார். சிலர் அக்கள்வன் அகப்பட்டால் அவன் கைகளை ஒடித்துவிடுவேன் என்பார். சிலர் அப்பசுவைப் பார்த்துக்கைக்கொள்ளுவதற்கு முதலாக இருந்த அவன் கண்களை நெருப்பினாற் சுட்டுவிடுவேன் என்பார். இங்ஙனம் பலரும் பலவாறு கூறிக்கொண்டே பசுவும் ஆபுத்திரனும் சென்ற அடிச்சுவடுகளைக் கண்டு, அவற்றின் வழியே தொடர்ந்து, ஊருக்குப் புறத்திற் புக்கனர். ஆங்கே ஆபுத்திரன் பசுவைக் கரத்திற் பற்றிக்கொண்டு போவதைக் கண்டு, அனைவரும், திருடன் அகப்பட்டான், திருடன் அகப் பட்டான் என்று கூவிக்கொண்டு, மிக விரைவாக ஓடிவந்து, அவனையும் பசுவையும் பற்றிக்கொண்டனர். அந்தணர்கள் கையிலகப்பட்ட ஆபுத்திரன் மனங்கலங்கிற்று. ஒன்றும் விடைகூற இயலாதவனாய் விழித்துக் கொண்டிருப்பதை அந்தணர்கள் கண்டு ஏ மடையா! வேதங்களை யெல்லாம் கற்றறிந்த நீ இந்தத் திருட்டுச் செயலைச் செய்யத் துணிந்தது எத்துணை அறிவற்ற செயலாகும்? அந்தணரால் வளர்க்கப் பெற்று அவர்களுடனே கூட்டுறவு வைத்துக் கொண்டிருந்த உனக்கு யாகப்பசுவைத் திருடுதல் குற்றமென்று தோன்றாத காரணம் என்னை? என்று இங்ஙனம் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வாயில் வந்த பழிச் சொற்களைக் கூறினர். அவ்வந்தணர் களுடன் வந்திருந்த யாகத்தின் ஆசிரியன் கடுஞ்சினங் கொண்ட வனாகித் தன் கையில் வைத்திருந்த குறுந்தடி ஒன்றினால் ஆபுத்திரனை ஒறுக்கத் தொடங்கினன். இதனைப் பக்கத்தில் நின்றிருந்த பசு பார்த்து, நம்மைக் காப்பாற்றிய இக்கருணை வள்ளலை இப்பாழும் பார்ப்பனர்கள் ஒறுத்தல் எவ்வளவோ கொடுஞ்செயல் என்றெண்ணிச் சினங்கொண்டு, ஒரு தாவாகத் தாவி, அந்த வேள்வியாசிரியன் பெருவயிற்றைத் தன் கொம்பினால் குத்திக்கிழித்து விட்டுக்காட்டிற்குள் ஓடிவிட்டது. வேள்வியாசிரியன் ஐயோ வென ஒசையிட்டு அலறிக் கொண்டு கீழே வீழ்ந்துவிட்டான். பின்னர் ஆபுத்திரன் அவ்வந்தணர்களை நோக்கி, ஏ அந்தணர்களே! அறிவுடையவர்களென்று செருக்கி நிற்கின்றவர் களே! சற்றுப் பொறுமையுடன் எனது உரையைக் கேளுங்கள். எனது கேள்விக்குத் தக்கபடி விடை கூறுங்கள்! என்று பகன்று விடு நில மருங்கிற் படுபுல்லார்ந்து நெடு நில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்த நாள் தொட்டுஞ் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சொடு அருள் சுரந்தூட்டும் இதனொடும் வந்த செற்றம் என்னை? என்று கேட்டான். அவ்வந்தணர்கள் ஏ பேதாய், அறிவின்றி நீ இங்ஙனம் கேட் கின்றனையே? வேதங்களைக் கற்ற நீ வேள்வியின் சிறப்பை ஏன் மறந்தனை? நல்ல ஆண்மகனுக்குப் பிறந்தவனாக இருந்தால் இவ்வாறான வினாவை எழுப்பி இருக்கமாட்டாய். வேள்விப் பசுவைக் கவர்ந்திருக்கவு மாட்டாய்! ஆவின் மகனானமை யாற்றான் இங்ஙனம் கூறினை! உனது இழிபிறப்பின் குணத்தைக் காட்டி விட்டனையே! என்றிங்ஙனம் கடிந்துரைத்தனர். இக்கொடுஞ் சொற்களைக் செவிமடுத்த ஆபுத்திரன் அவ்வந்தணர்களை நோக்கி, ஏ அந்தணர்களே! என்னை ஆவின் மகனென இழித்துக் கூறத் தொடங்கினீர்! நுமது குல முதல்வர்கள் என்று கூறிக்கொள்ளும் முனிவர்களின் பிறப்பைச் சிறிதும் எண்ணாத காரணம் என்னை? அசலன் என்ற முனிவன் யார்? பசுவுக்குப் பிறந்தவனன்றோ? சிருங்கி என்ற முனிவன் மான்வயிற்றிற் பிறந்தவனன்றோ? விரிஞ்சி என்ற முனிவன் புலிக்குப் பிறந்தவன் அன்றோ? இவர்களை யெல்லாம் உயர்ந்த முனிவர்களென்று வணங்கும்போது யானெவ்வாறு பிறப்பினா லிழிந்தவனாவேன்? ஒருவனுக்கு உயர்வுந் தாழ்வும் வருதற்குக் காரணம் அவனுடைய அறிவேயன்றிப் பிறப்புத்தானென்று புகலல் பெரும் பேதமை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா. செய்தொழில் வேற்றுமையால் என்னுந் தமிழ் மறைச் சொல்லை மறந்தனிரோ? என்று இங்ஙனம் அந்தணரனை வருந் திடுக்கிடுமாறு கேட்டான். இவன் வினாக்களுக்குத் தக்க விடையிறுக்க அறியாதவர்களாய் ஒருவரையொருவர் நோக்கி நோக்கி விழித்துக்கொண்டு நின்றனர். அவர்களில் ஓரந்தணர் முன்வந்து, இவன் பசுவுக்குப் பிறந்தவனல்லன். இவனது பூர்விகம் முற்றும் நான் நன்குணர்வேன். இவன் வரலாற்றை நான் கூறுகின்றேன் கேளுங்கள் அதாவது; நான் முன்னொருநாள், கன்னியா குமரியில் முறைப்படி நீராடிவிட்டு வரும் ஒரு பார்ப்பினியைக் கண்டு, உன் பெயர் யாது? உன் ஊர் யாது? நீ ஈண்டுவந்த பொருட்டென்னை? எனக்கேட்டனன். உடனே அவள் என்பெயர் சாலி, தீயொழுக்கத்தால் நேர்ந்த மறத்தைக் கடியும் பொருட்டும் கன்னியாகுமரியில் நீராடிவரும் வழியிற் கொற்கை நகருக்கு அப்பால், காதவழி தூரத்தில் உள்ள இடையர் சேரியில், ஒரு தோட்டத்தில், ஆண்குழந்தை யொன்றைப் பெற்றுச் சிறிதும் இரக்கமின்றி அக்குழந்தையை அவ்விடத்திலே எறிந்துவிட்டுச் செல்கின்றேன். இத்தகைய இரக்கமில்லாக் கொடுஞ் செயலைப் புரிந்த எனக்கு நற்பேறு கிடைத்தலுமுண்டோ? என்று மனம் நொந்து அழுதாற்றினாள். அவள் பெற்ற மகன் தான் இவன். இதுகாறும் இவன் வரலாற்றைக் கூறாமல் ஒளித்து வைத்திருந்தேன் இப்பொழுது தக்க பருவம் நேர்ந்தமையாற் கூறினேன். இனி இவனைத் தீண்டுதல் கூடாது. இவன் நற்பிறப் புள்ளவனன்று, என்று பகர்ந்தார், உடனே ஆபுத்திரன் - திலோத்தமை என்னும் தேவதாசியின் பிள்ளைகளைப் பெரிய முனிவர்களென்று கொண்டாடுகின்ற நீங்கள். சாலியையும் சாலியின் மகனாகிய என்னையும் குறை கூறத் தொடங் கினீர்களே! நன்று, நன்று! என்று கூறிக் கைகொட்டி நகைத்தான். இவற்றைக் கேட்டிருந்த, ஆபுத்திரனை வளர்த்த தாதையாகிய பூதி யென்னும் அந்தணன் மற்றைய அந்தணர்களின் கொடுஞ் செயலுக்கஞ்சித் தன் இல்லத்திற்கு இனிவருதல் கூடாதெனக் கூறி ஆபுத்திரனை விடுத்தனன். திருவள்ளுவர் இவ்வுலகம் எக்காலத்திலும் பெரியோர்களின் கட்டளைப்படி நடைபெறு வதாகும். இதனை வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரிய வழக்கிற் கிழுக்குமுண்டோ? என்ற ஆன்றோர் மொழியால் அறியலாம். பெரியோரின் நல்லுரை களை மறந்து மக்கள் தீயநெறியிற் செல்லும்போது எல்லாம் வல்ல இரக்கமுள்ள அன்பின் வடிவமான இறைவன் தனது அருளை நிறைந்து ஒரு பெரியாரை மண்ணுலகிற்கு அனுப்புவார். அப்பெரியாரே மறைந்து கிடக்கும் அறங்களை எடுத்துக்கூறி மக்களை நல்வழியிலுய்த்து உலகை உய்யச் செய்வார். இக்கொள்கை பெரும்பாலான மதத்தினராலும், பல நாட்டினராலும் ஒப்புக்கொண்டதாகும். மேல் நாட்டில் அறந் தலைசாய்ந்து மறம் மேலோங்கி நின்ற காலத்திற்றான். இயேசு கிறிது தோன்றி அறவுரைகளைக் கூறி மக்களை நல்வழிப் படுத்தினார். அரபி நாட்டு மக்கள், மூடபக்தியிலாழ்ந்து விக்கிரக ஆராதனையின் மூலமாக மிகுந்த உயிர்க்கொலை புரிவதில் ஈடுபட்டுக் கிடந்தனர். அதுகாலை முகம்மது நபி தோன்றி உயிர்க்கொலையை ஒழிப்பதற்காகவே விக்கிரக ஆராதனை கூடாதென்னும் தமது கொள்கையை நிலைநாட்டி மக்களை அறவழியிற் செலுத்தினார். இந்திய நாட்டிற் பலர் யாகமே வீடுபேறளிக்குமென நம்பி, அதன் தொடர்பாக அளவு கடந்த உயிர்க்கொலை புரிந்துவந்தனர். அக்காலத்திற்றான் எல்லாம் வல்ல இறைவன் புத்தரை இவ்வுலகிற் கனுப்பி, உயிர்க்கொலைக்குக் காரணமாகிய வேள்வி முதலியவற்றையும், உயர்ந்தவர், தாழ்ந்தவர், என்னும், சாதி வேறுபாடுகளையும் தகர்த்தெறியும்படி உரைத்த புத்த மதம் என்னும் உயரியமதம் நிலைத்தது. நீடுநின்றது. ஆருகத சமயப் பெரியாரும் உயிராக்கத்தையே நிலைநிறுத்தப் பாடுபட்டார். பின்னர் சைனர், புத்தர்களின் கொள்கை மறைந்து, பாவந்தலை யெடுக்குங்காலத்தில்தான், தமிழ்நாட்டில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி, அன்பு மதங்களாகிய சைவ வைணவ மதங்களை ஓங்கச் செய்தனர். மேற்கூரிய வாற்றல் பெரியோர்கள் தோன்று வதற்கு ஒருவாறு காரணம் தெரிந்து கொண்டோம். மேற் கூறியன அனைத்தும் பல அறிஞர்களால் உண்மையென ஒப்புக் கொள்ளப்பட்டனவாகும். இனி பண்டைக் காலத்தில் நமது தமிழகத்திற் றோன்றிய ஒரு பெரியாரின் மாட்சியைத் தெரிந்து கொள்வோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நமது தமிழ் நாட்டில் அறவழி அடைபட்டு மறவழி திறந்துகிடந்தது. மக்கள் அனைவரும் அவ்வழியே சென்று சீர்குலைந்து வருந்தினர். இதனைப் பெருங் கருணைத் தடங்கடலாகிய கடவுள் கண்டார். மக்கள் பால் மனவிரக்கங் கொண்டார். உடனே ஒரு பெரியாரைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்தார். அவருடைய மாண்பை யாரால் தான் அறுதியிட்டுக் கூறவியலும்? அப்பெரியார் பிறந்தமையினாற்றான் நமது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமையுண்டாயிற்று. இவர்தான் தமிழ்மறை முதல்வரும், பொய்யா மொழியாரும் ஆகிய திருவள்ளுவர் என்னும் பெருந்தகையாராவர். இவர் புகழை, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதமிழ் நாடு என்ற பெரியார் மொழியாலும் அறியலாம். இத்தகைய பெரியார் ஓதாதுணர்ந்த உத்தமராவர். இதனை, தானே முழுதுணர்ந்துதண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்கு ஊழின் உரைத்தார்க்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழி! உல கென்னாற்றும் மற்று, என்ற நக்கீரனாரின் பாடலால் அறியலாம். இத்தகைய திருவருட் செல்வம் பெற்ற பெரியார் தோன்றிய நமது தமிழகத்தின் பெருமை என்னே! தமிழ்மொழியின் மாண்பு என்னே! தமிழர் களின் கீர்த்தி என்னே! நமது நாட்டுப் பெரியாராகிய திருவள்ளுவர்பால் எந்நாட்டுப் பெரியார் கண்ணும் காணப்பெறாத ஒரு சிறப்பு நிலைத்து நிற்கின்றது. இதுகாறும் இவ்வுலகில் எண்ணத் தொலையா ஆன்றோர்கள் பலர்தோன்றி மறைந்தனர். அவர்கள் புகன்ற அறவுரைகளும் மிகப்பல. ஆனால் ஒவ்வொரு பெரியாரின் அறவுரைகளையும், ஒவ்வொரு கூட்டத்தினரே போற்றிக் கொண்டாடுகின்றனர். எல்லா நாட்டினராலும், எல்லா மொழி யினராலும், எல்லா மதத்தினராலும் போற்றற் கேற்ற பெரியார் நமது வள்ளுவரையன்றி இவ்வுலகிற் பிறர் இலர் என்றே துணிந்து கூறலாம். ஏனெனில், இவர் இன்ன மதத்தைச் சார்ந்தவரென இதுவரையிலும் ஒருவராலும் வரையறுத்துக் கூறமுடியவில்லை. திருக்குறளையும் முகம்மதியர் வேதத்தையும் ஒருசேர வைத்து ஆராய்வோர் திருவள்ளுவர் முகம்மதியரோ வென்று ஐயுறுவர். திருக்குறளையும் சைனபௌத்தர் கொள்கைகளையும் உடன் வைத்து ஆராய்வோர் திருவள்ளுவர் சைனரோ? புத்தரோ? என்று ஐயமடைவார். வைணவர்களனைவரும் திருவள்ளுவர் தங்கள் மதத்தினரென்றே கூறி நிலைநிறுத்தப் பெரிதும் முயல்கின்றனர். சைவசமயத்தினரோ அவர் சைவசித்தாந்தியே என்று கூறி மடிகட்டி நின்று வாதாடுகின்றனர். இங்ஙனம் ஒவ்வொரு மதத்தினரும் திருவள்ளுவரைத் தங்கள் மதத்தின ரென்று கூறிக்கொள்வதிற் பெருமை யுளதென்று நினைப்பார் களாயின் அன்னவர்தம் மாண்பை யாரால் அளவிட்டுக் கூறமுடியும்? நமது திருக்குறளென்னும் தெய்வச் செந்தமிழ் மறையில் மக்கள் அறியவேண்டிய எல்லாப் பொருள்களைப் பற்றியும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். பொய்யாமொழியில் இல்லாத பொருள் வேறு எம்மொழியிலும், எந்நூலிலும் காணப்பெறா, திருமால் தமது குறள் வடிவால் உலக முழுவதையும் இரண்டடி யால் அளந்தார். ஆனால் நமது பெரியாரோ தமது இரண்டடிப் பாடல்களால் உலகமக்கள் நினைக்கின்ற அனைத்துப் பொருளையும் அளந்து கூறியிருக்கின்றார். இவைகளைக் கீழ்வரும் பாடலாற் காணலாம். எல்லாப் பொருளும் இதன்பா லுளவிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லாற் பரந்தாபா வால்என் பயன்வள் ளுவனார் சுரந்தபா வையத் துணை (மதுரைத் தமிழ் நாகனார்) மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின் வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாமளந்தார் ஓர்ந்து (பாணர்) இப்பெரியார் தோன்றிப் பல நூற்றாண்டுகளாகியும், சில ஆண்டுகளுக்குமுன் வரையிலும் இவர் புகழ் தமிழகத்தையன்றி மற்றைய நாடுகளிற் பரவாமலி ருந்தது. சிலபதிற்றாண்டு களாகத்தான் இவர் பெருமை அயல் நாடுகளிலும் பரவியிருக்கின்றது. இன்னும் சில ஆண்டுகளில் உலகினர் எல்லோர்க்கும் திருவள்ளுவரே வழிகாட்டியாக விளங்குவாரென்பது திண்ணம். இதுவரையிலும் ஏறக்குறைய பதினான்கு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு அம்மொழியாளர்களால் போற்றிப் பயிலப்படுமாயின் அந்நூலின் பெருமைக்கு அளவுண்டோ? எந்த நூலையும் தம்மொழியிலிருந்தே பிறர்எடுத்துக் கொண்டாரென்று கூறி நிற்கும் வடமொழியுங் கூட அண்மையில் தான் நமது திருக்குறளைத் தனதாக ஆக்கிக்கொண்டது. தமிழர்க்குரிய மறை திருக்குறளே யானால் அதன் ஆசிரியராகிய திருவள்ளுவரைக் கடவுளாகக் கொண்டு போற்றி வழிபாடாற்றுதல் தமிழர் கடமையன்றோ? திருவள்ளுவர் நூலைக் கற்று அவ்வாறு ஒழுகுவதில் தமிழர் எப்பொழுது முந்துகின்றனரோ அப்பொழுது தான் தமிழ்நாடு முன்னேற்ற மடையும். ஆதலால் நாமனைவரும், வேறு எந்த நூலைக் கற்பினும், கல்லாவிடினும் தமிழ் நாட்டிற் பிறந்த ஒவ்வொரு வரும் திருக்குறளைக் கற்பது கடமையெனக் கருதி அதனைப் பயின்று மேன்மைபெற முயலுவோமாக. திருமங்கை யாழ்வார் சோழ மண்டலத்தில், திருமங்கை என்ற நாட்டில், திருவாலி திருநகரி என்ற ஊருக்கு அருகில் திருக்குறையலூர் என்று ஓர் புண்ணியத் திருப்பதியுண்டு, அவ்வூரில் ஏறக்குறைய ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன்னே சோழ மன்னன் சேனைத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் தமிழ்ப்பழங் குடிகளில் ஒன்றாகிய கள்ளர் குடியிற் பிறந்தவன். அவனுக்குத் தமிழ்மொழி தலைசிறந்தோங்கவும், தமிழ்நாடு தலைசிறந் தோங்கவும், வைணவமதம் விளக்கமுறவும், திருமால் திருவருளுடன் ஒருவர் பிறந்தார். அவர் பிறந்தவுடன் நாட்டிற் பல நன்னிமித் தங்கள் தோன்றின. ஆன்றோர்கள் யாரோ பெரியார் பிறந்திருக் கின்றார் என்பதை யுணர்ந்து உவகை அடைந்தனர். பிறந்தவர் நீல நிறமாக இருப்பதைக் கண்டு, அவர் தந்தை, அவருக்கு நீல னென்றே பெயரிட்டான். இவர் தமது குடிக்கேற்ப இளமையிலேயே கலைகளிலும் படைக் கலங்களிலும் பயின்று தேர்ச்சியுற்றார் இவரது திறமையை அறிந்த சோழ மன்னன், இவரைத் தனது படைத்தலைவராகக் கொள்ள விரும்பினான். அரசன் அவாவின்படியே அவனிடம் படைத்தலைவராக அமர்ந்தார். கொற்றவனுக்குப் பகைஞருடன் போர் நேருங்காலங்களிற் படைகளை நடத்திச் சென்று, எதிரிகளுடன் இளைக்காது நின்று பொருது அவர்களைப் புறமிடச்செய்து பல தடவை வெற்றி கொண்டமையால் பரகாலன் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றார். இவரது ஆற்றலையறிந்த அபயன் என்னும் சோழன், இவரைத் திருமங்கை நாட்டிற்கு மன்னனாக்கி முடிசூட்டினான். அதுமுதல் இவருக்குத் திருமங்கை மன்னன் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவ்வாறு குறுநிலத் தலைவரான இப்பெரியார் தனது அரசியலைச் செம்மையாக நடைபெறச் செய்ததனால் குடிமக்கள் அனைவராலும் கொண்டாடப்பெற்றார். இவர் இசையிலும், நாடகத்திலும் மிக்க வேட்கை யுடையவராதலின், ஒழிந்த நேரங் களில் பெண்கள் இசைப்பாடலைக் கேட்டலையும், நடனம்புரி தலைக் காணுதலையும் காலப்போக்காகக் கொண்டிருந்தார். இவ்வாறிருக்கையில் அந்நாட்டில் திருவெள்ளக்குள மென்ற ஊரில் உள்ள தாமரைத் தடாகமொன்றில், ஒரு நாள் விண்ணுலக மாதர் பலர் போந்து நீர் விளையாடினர். அவர்களில் ஒருத்தி, மானிட வடிவங்கொண்டு குமுதமலரைக் கொய்து கொண்டிருந்தாள். மற்றைய பெண்மக்கள் தங்கள் விளையாட்டு முடிந்ததும், தங்கள் உலகத்தை யடைந்தனர். மானிட வடிவங் கொண்டு, குமுதமலர் கொய்தவள் மட்டில் தனியாகத் தங்கி விட்டார். அதுகாலை ஆங்குற்ற வைணவ மருத்துவன் ஒருவன் அப்பெண்ணை நோக்கி, அவள் வரலாற்றை வினவினான், அவளும் தனது வரலாற்றைக்கூறித் தன்னைப் புரந்தருளவேண்டும் என வேண்டினாள். வேறு மக்கட்பேறில்லாத அம் மருத்துவனும் மனமகிழ்ச்சியுடன், அவனைத் தன்னிலத்திற்கு அழைத்துச் சென்று, மளையாளிடம் ஒப்புவித்துக் குமுதவல்லி யெனப் பெயர் வைத்து, அன்புடன் வளர்த்துவந்தான். அவளும் மணப்பருவத்தை அடைந்தாள். அப்பொழுது, அக்குமுதவல்லியினது அழகையும், அறிவுடைமையையும், நற்பண்புகளையும் திருமங்கை மன்னர் ஒற்றர்களால் அறிந்தார். உடனே அவளை மணஞ்செய்து கோடற்கு விரும்பி, அரசியற் காரியங்களை யெல்லாம் அப்படி யப்படியே விட்டுவிட்டுத், திருவெள்ளக்குளத்தை யடைந்து, அம்மருத்துவன் வீட்டையுற்றார். அவனும் இவரை இன்னா ரெனத் தெரிந்துகொண்டு, தக்கவாறு சிறப்புச் செய்தான். அம் மருத்துவனும் திருமங்கை மன்னரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஆண்டுற்ற குமுதவல்லியைத் திருமங்கை கோமான் கண்டு, அவள் வரலாற்றைக் கேட்டுத் தெளிந்தபின் அவளைத் தனக்கு மணஞ்செய்துதருமாறு அம்மருத்துவனை வேண்டிக் கொண்டார். இவர் விருப்பத்தை மருத்துவன் தனதில்லாளுக்கு அறிவித்து, அவள் ஒருப்பாட்டையும் பெற்றபின் கன்னி காதானஞ் செய்யத் தொடங்கினன். அது காலைக் குமுதவல்லி குறுக்கிட்டு, வைணவ சமயத்திற்குரிய தீட்சை பெற்றவர்க்கே யன்றி மற்றையோர்க்கு யான் வாழ்க்கைப் படேன் என்று கூறிவிட்டாள். உடனே திருமங்கை மன்னர், திருநறையூருக்குச் சென்று, நம்பி என்னும் திருப்பெயரையுடைய பெருமானிடத்துத் தீட்சை பெற்றுக்கொண்டு திருவெள்ளக் குளத்தை அடைந்து குமுதவல்லியை மணம்புரிந்து கொள்ளுமாறு வேண்டினார். மீண்டும் அம்மங்கையர்க்கரசி நீர் ஓராண்டு வரையிலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அன்புடன் உணவளித்து அவர்கள் உண்டு மிகுந்த மிச்சிலையும், அவர் அடிகளைக் கழுவிய நீரையும் உண்ணுவதாக உறுதி கூறினாற்றான் உம்மை மணம்புரிந்து கொள்வேன். இன்றேல் நுமக்கு இல்லாளாக மாட்டேன் என்று கூறினாள். திருமங்கை மன்னர் அவளிடத்துக் கொண்டிருக்கும் காதல் மிகுதியால் அதற்கும் கட்டுப்பட்டு உறுதி கூறினார். அதன்பின் இருவர்க்கும் திருமணம் மிக்கசிறப்பாக நடைபெற்றது. பின்னர் பரகாலர் தமது செல்வங்களை எல்லாம், திருமாலுக்கும், திருமாலினடியார்கட்குமே செலவிட்டு வந்ததனால் சென்னி மன்னனுக்குச் சேரவேண்டிய திறைசேர வில்லை. இஃதறிந்த மன்னன் சினங்கொண்டு கப்பம் வாங்கி வரும் பொருட்டு ஏவலரை அனுப்பினான். அவர்கள் வந்து திறை கேட்டபோதெல்லாம், காலையிற்றருவேன், நடுப்பகலில் அளிப்பேன், மாலையிற் கொடுப்பேன், நாளையீவேன், மறுநாள் வரவிடுப்பேன், என்றிங்ஙனம் கூறி நாளைக் கடத்திவந்தார். இதுகண்ட சோழமன்னன், மிகவும் சீற்றங் கொண்டு தனது தானைத் தலைவனை யழைத்து திறைகொடுக்காது திருமங்கை மன்னனைப் பிணித்துக்கொணர்க என்று பணித்தான். அவன் அரசன் பணியைத் தலைமேற்கொண்டு சேனைகளுடன் பரகாலரை வளைத்துக்கொண்டு பொருதான். பரகாலருஞ் சற்றுங் கலங்காமல் தமது ஆடன்மா என்னும் பரியின்மீது இவர்ந்து வந்து தமது சேனையுடன் கூடிச் சோழமன்னன் சோழமன்னன் சேனையுடனும், சேனைத்தலைவனுடனும் எதிர்த்துப் போர்புரிந்து, புறமிட்டோடச் செய்து வெற்றிபெற்றார். இச் செயலை அறிந்த சென்னி, தானே சேனைகளை நடத்திக் கொண்டு வந்து திருமங்கை மன்னருடன் போர்புரிய, அவர் சோழன் படைகளை யெல்லாம் போரகத்து மடியச் செய்து அரசனைமட்டிற் கொல்லாமல் தனியாக நிறுத்தினார். அதுகண்ட சோழமன்னன், இவரை வலிமையால் அடக்க வொண்ணாது, தந்திரத்தினால்தான் அடக்கவேண்டுமென வெண்ணிப் பரகாலரை யணுகி, இனி நாம் இருவரும் ஒற்றுமை யாக உறைவோம். உமது ஆற்றலையறிந்து கொள்ளுதற்காகவே உம்முடன் போர்செய்தோம்; நமது கப்பத்தை விரைவிற் செலுத்திவிடும் என்று கூறி ஒரு அமைச்சனை அவரிடம் வைத்துவிட் டகன்றனன். அவ்வமைச்சன் இவரைத் தனது சூழ்ச்சியின் திறமையால் பகுதிப்பொருள் வாங்கும் பொருட்டுத் திருமங்கையாழ்வாரை ஒரு கோயிலின்கண் அடைத்துவிட்டான். திருமங்கை மன்னர் மூன்று நாட்கள் வரையிலும் அக்கோயிலகத்தில் உணவில்லாமல் வாடிக்கிடந்தார். மூன்றாம் நாள் கச்சிப்பதிலுள்ள பேரருளாளப்பெருமாள் இவரது கனவிற்றேன்றி, நீ நமது காஞ்சி அடைந்தால் பொருள் தருகின்றோம் என்று கூறி மறைந்தார். இதனைப் பரகாலர் அமைச்சனுக் கறிவிக்க, அமைச்சன் அவரைச் சேனைகள் புடைசூழக் காவலுடன் கச்சிக்குக் கொண்டுவந்தான். அவர் கச்சியிற் பல விடங்களிலும் சென்று பார்த்தும் பொருள் கிடையாமையால் இனி என் செய்வேன் எனறு உணர்வழிந்து வீழ்ந்தார். உடனே பேரருளாளப் பெருமாள் மீண்டுங் கனவிற் றோன்றி வேகவதி யாற்றங்கரையில் பொருளுள்ள விடத்தைச் சுட்டி மறைந்தார். பின்னர் ஆங்குற்றுப் பொருளை எடுத்து அரசனுக்குச் சேரவேண்டிய பகுதியைச் செலுத்தி, மிகுந்ததை முன்போன்று நன்னெறியிற் செலவிட்டு வந்தார். பின்பு அமைச்சன் அப்பொருளைச் சோழ மன்னனிடம் கொண்டு சேர்த்து, நடந்த வரலாற்றை நவின்றான். அதுகேட்ட சோழன், அச்சமும் அதிசயமும் அடைந்து, திருமங்கை மன்னரை அழைத்துப் பெருஞ்சிறப்புச்செய்து கொண்டாடித் தனது பிழைகளை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டான். பிறகு அவரிடமிருந்து வாங்கிய பொருளைத் தான் அனுபவித்தால் தக்கதன்றென வெண்ணி அப்பொருள் எல்லாவற்றையும் சர்வவியாபகசாட்சாத் காரமான திருமாலடியார்களுக்கே செலவுசெய்தான். திருமங்கை மன்னர் தன்னிடமிருந்த பொருள் முழுவதும் செலவானபின், திருமாலடியார்களுக்கு உதவப் பொருளின்மை யாலும், பொருளீட்டுதற்கு வேறு வழியொன்றுந் தோன்றாமை யாலும், நீர்மேல் நடப்பான், நிழலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரையுந் துணைவராகக்கொண்டு, வழிப்பறி செய்து பொருளீட்டித் தனது தொண்டை விடாது நடத்திவந்தார். வைணவ அடியார்கன் பொருட்டே இவர் வழிக்கொள்ளையை நடத்திவருவதனால், திருமால் இவர் மீது வெறுப்படையாமல், அன்பு கொண்டு அருள் செய்யக் கருதித்தானும் திருமகளும், மணமகனும் மணமகளும் போலப் பார்ப்பன வடிவத்துடன் பொற்பணிகளைப் பூண்டுகொண்டு வழிநடந்து வந்தார். அதுபோது திருமணங்கொல்லை என்ற ஊரில் அரசமரத்தினடியிற் பதுங்கியிருந்த திருமங்கை மன்னரும், அவரது கூட்டத்தாரும், தங்களுக்குரிய படைக்கலங்களுடன் ஓடி வந்து மணமக்களை வளைத்துக்கொண்டனர். மணமக்கள் அணிந்துள்ள அணிகளையெல்லாம் கைக் கொண்டபின் மணமகனாகிய திருமால் காலில் அணிந்திருந்த மோதிரம் ஒன்றைக்கழற்ற இயலாமையால் அதனைத் திருமங்கை மன்னர் தமது பற்களாலே கடித்திழுத்தார். அதனைக் கண்ட திருமால் இவருக்குக் கலியன் என்று ஒரு பெயரைக் கொடுத்தார். பின்னர், தம் கைக்கொண்ட பொருளை யெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி வைத்திருந்ததை எடுக்க, அது மலைபோல் அசைக்க முடியாமல் ஒரே நிலையிலிருந்தது. அது கண்ட கலியர் சினங் கொண்டு தனது வாளைக் கையிலேந்திக் கொண்டு அந்தணனை நோக்கி, நீ தான் மூட்டையை எடுக்கவியலாதவாறு ஏதோ மந்திரஞ் செய்து விட்டாய். ஆதலால் அம்மறை மொழியை எனக்குக் கூறாவிடின் உன்னை உயிருடன் விடேன் என்று அச்சுறுத்தினார். அப்பொழுது திருமால் அவரை அருகிலழைத்து, இதுதான் செய்த மந்திரம் என்று சொல்லிப் பிறவித்துயரைக் கடியத்தக்க எட்டெழுத்தைக் கூறியருளினார். திருமங்கை மன்னரும் உண்மை யுணர்ந்து திருமாலைப் போற்ற, அவர் கருடப் புள்ளின் மீது தனது உண்மை வடிவத்துடன் தோன்றி அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். அது முதல் திருமாலின் மீது பாடல் பாடும் ஆற்றலுடைய வராய் அன்புததும்பி வாடினேன் வாடி வருந்தினேன் என்று தொடங்கிப் பாடி, நாளடைவில் பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு நூல்களையும் பாடித் திருமங்கை யாழ்வார் என்னும் சிறப்புப் பெயரையும் பெற்றார். பின்னர் இவர் பதரிகாச்சிரமம், சாளக்கிராமம், நைமிசாரணியம் முதலிய வட நாட்டுத் தலங்களையும், திருவேங்கடம், திருநின்றவூர், திருவல்லிக்கேணி, திருக்கடன் மல்லை, திருச் சித்திரக்கூடம் முதலிய தென்னாட்டுத் திருப்பதி களையும் வணங்கிக் கொண்டு சீர்காழியை யடைந்தார். அங்கிருந்து ஞானசம்பந்தப் பெருமானுடன் நட்புக்கொண்டு ஆழ்வாரும், நாயனாரும் அளவளாவிய பின், ஆழ்வார் திருவரங் கத்தை யடைந்து வணங்கினார். திருமங்கை யாழ்வாரைத் திருவரங்கப் பெருமான் மிக்க மகிழ்ச்சியுடன் நோக்கி நீ நமக்கு விமானம், மண்டபம், கோபுரம், திருக்கோயிற் சுற்று முதலியன அமைப்பாய் என்று அருளிச் செய்தார். திருமங்கையாழ்வார் உடனே அப்பணியை நிறைவேற்ற வெண்ணித் தமது அமைச்சர்களுடன் ஆராய்ந்தார். திருநாகையில் புத்தர்கள் கோயிலில் ஒரு பொன்னுருவம் இருப்பதைக் கொண்டுவந்து, அதனை அழித்து அப்பொருளைக் கொண்டு, தமது திருப்பணியை நிறைவேற்றலாம் எனத் தீர்மானித்துப் பொன்னுருவத்தைக் கவரும் பொருட்டுத் தமது தோழர் களுடன் பரகாலர் நாகையை யடைந்தார். மிகுந்த வேலைத் திறமையுடன் சமைக்கப் பெற்றிருந்த புத்தர் கோயிலை யணுகி, அதனுட் புகுதற்குச் சுற்றிச் சுற்றி யலைந்தும் யாண்டும் வாயிலின் மையைக் கண்டு, மனம் வருந்திக் கோயில் உச்சியை நோக்கினர். அங்கே ஒரு சக்கரம் இடைவிடாமல் மிகவிரைவுடன் சுழன்று கொண்டிருந்தது. திருமங்கையாழ்வார் அதனைச் சுழலாமல் நிறுத்துவதற்குத் தக்கவழி யாதென ஆராய்ந்து, வாழைத் தண்டுகளைக் கொணர்ந்து, சக்கரத்திற் கொடுத்துக் கொண்டேவர, அதனிடத்தில் உள்ள நூல்களால் சிக்குண்டு சக்கரம் நின்றுவிட்டது. உடனே ஒரு ஆளை உள் நுழையச் செய்து புத்தருருவத்தை வெளியிற்கொண்டு வருமாறு கூறினார். உட்சென்றவர் அங்கிருந்த உருவத்தைத் தூக்கச் சென்றபோது அது மந்திரவண்மையில் அக்கோயில் முழுதும் குதித்துக் குதித்து ஓடியதால் பிடிக்க முடியவில்லை. அச்செய்தி யறிந்த ஆழ்வார் கோயிலினுள் அசுத்தஞ் செய்யுமாறு குறிப்பிக்க அங்ஙனமே அவ்விடத்தை அசுத்தஞ் செய்தான். செய்தவுடன் அவ்வுருவம் அரற்றிக்கொண்டுபடியின் மீது வீழ்ந்தது. பின்னர் அதனை எடுத்துவந்து உருக்கிப் பொன்னை விற்று, அப்பொருளைக் கொண்டு திருமால் கூறிய திருப்பணிகளை நிறைவேற்றினார். திருமாலின் மீதுள்ள அன்பு மேலீட்டால் மற்றுஞ்சில பிரபந்தங் களையும் இயற்றியருளினார். திருமங்கையாழ்வார் அதன்பின்பு சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் உள்ள வைணவத் திருப்பதிகளையெல்லாம் கண்டு வணங்கி இறுதியில் திருக்குறுங்குடியில் தாமும் குமுதவல்லியாரும் துறவியாக யோகஞ்செய்து கொண்டிருந்து, தமது நூற்றைந்தாவ தாண்டில், திருமாலின் திருவடி நிழலை யடைந்தார். இவருடைய பாடல் அனைத்தும் கன்னெஞ்சையும் கனியச் செய்யுந் தன்மையுள்ளன. அவற்றை முழுதும் நாலாயிரப் பிரபந்தமென்னும் வைணவத் தமிழ் மறையிற் காணலாம். கடல் உலகில் பல நீர் நிலைகளிருக்கின்றன. அவைகளிற் பெரிதாகவும், என்றும் நீர் வற்றாமலும் இருப்பது கடல் ஒன்றே யென்பதை எல்லோரும் அறிவோம். அக்கடலைக் காணுதற்கு விரும்பாதவர்கள் யாருமிலர். கடலினின்று வீசும் குளிர்ந்த காற்று உடலுக்கு மிக்க நலத்தை விளைவிக்கும். ஒன்றன் பின்னொன்றாக அலைகள் கரையில் வந்து மோதுவதையும், அவ்வலைகளினூடே பல உயிர்ப் பொருள்கள் மீண்டு செல்வதையும் காண மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கும். புயற்காற்று வீசும் போது அலைகள் மிக விரைவாகவும், பெரியதாகவும் வருவதைப் பார்ப்பவர்க்கும் அச்சம் உண்டாகும். கடலில் அலை மிகுதியாக, வீசும் போது பெருந்திரளான மக்கட் கூட்டத்தில் எவ்வாறு ஓவெனும் இரைச்சல் கேட்குமோ அவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும். இரவில் பகலிருப்பதைவிட மிகுதியாக ஓசை யிருக்கும். மழைக்காலத்தில் மற்றைக் காலங்களைக் காட்டிலும் கடல் ஒலி அதிகமாயிருக்கும். இவற்றையெல்லாம் கடற்கரையில் இருந்து நோக்குவோர் நன்கறியலாம். கடற்கரையில் உட்கார்ந்து கடலை நோக்கிக்கொண்டே யிருந்தாலும் மனத்திற்கு மிக்க ஒரு மகிழ்ச்சியுண்டாகும். நாம் ஒரு பொருளைக் கேட்பினும் அல்லது நேரிற் காணினும் அவற்றிலுள்ள உண்மைகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நாம் கேட்டபொருளையும் பார்த்த பொருளை யும் பற்றி ஒன்றுந் தெரிந்து கொள்ளாமல் விடுதல் நமது அறிவு வளர்வதற்கு ஏற்றதாகாது. மேனாட்டாரிற் பலர் நம்மைவிடச் சிறந்த அறிவாளரா யிருப்பதற்குக் காரணம் அவர்கள் காணும் பொருள்களைப் பற்றியும், கேட்கும் பொருள்களைப் பற்றியும் ஐயமின்றி அறிந்துகொள்ளுகின்றனர். நாம் அவ்வாறு செய்வ தில்லை. ஆகையாற்றான் நாம் கல்வி, கைத்தொழில், வாணிபம், அரசியல் முதலியவற்றில் மேல்நாட்டாரை விடத் தாழ்ந்திருக் கின்றோம். நாமும் அவர்களைப்போல் உண்மையுணர்வதற்கு முயல்வோமாயின் நமது அறிவும் வளர்ச்சியடைந்து பெருமை யடைவோம். ஆதலால் இப்பொழுது நாம் கேள்விப்படுகின்ற கடலைப்பற்றி சில பொருள்களை அறிந்து கொள்வோம். கடலைப்பற்றி நாம் அறியவேண்டிய இன்றியமையாத பொருள் நான்கு அவை ஆழிய கடல் நீரின் நிறம், கடல் நீரின் சுவை, கடல் நீரின் தட்பவெப்பம், கடலில் தோன்றும் அலைகள் என்பன அவை பற்றி அறிஞர்கள் கூறுவதை உற்று நோக்குங்கள். கடலின் நிறம்; சிற்சில இடங்களில் வேறாகக் காணப் படினும் பெரும்பாலும் நீலங்கலந்த பசுமை நிறமே என்பதை யாவரும் கண்டறியலாம். பகற்காலத்தி லிவ்வாறு தோன்றினும் இராக் காலத்தில் வெள்ளித் தகட்டின் ஒளியைப்போற் காணப்படும். இவ்வாறு காணப்படும். இவ்வாறு காணப்படு வதற்குக் காரணம் நீரில் உள்ள ஒருவகையான பொருளே யென்று இயற்கையாராய்ச்சி வல்லுநர் கூறுகின்றனர். கடல் நீரின் சுவை கைப்பும், கரிப்பும் உடையதாக விருக்கின்றது. சில இடங்களிற் கைப்பும் கரிப்பும் குறைந்து காணப்படும். கடலின் கைப்பிற்குக் காரணம் அதில் அழுகிக் கிடக்கும், புல், செடி முதலியவைகளும், இறந்த உயிர்க் கூட்டங்களுமே எனக் கருதுகின்றனர். கடலின் உப்பின் சுவை யின்றேல் நீர் கெடாமலிராது. ஆதலில் அந்நீரை நாற்றமின்றி வைப்பதற்கே உப்பின் சுவையைக் கடலிற் கடவுள் அமைத்திருக் கின்றார் என்று கூறுகின்றனர். கடல் நீரின் தட்ப வெப்பம், காலையிலும் மாலையிலும், வெளிக் காற்றின் தட்ப வெப்பத்தைப் பெரும்பாலும் ஒத்தே இருக்கும்; நடுப் பகலில், காற்றைவிடக் கடல் நீர் தண்மை யுடையதாயிருக்கும் என்றும்; நள்ளிரவில் கடல்நீர் காற்றை விட மிகவும் வெப்பம் உடையதாய் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கடலில் அலைகள் தோன்றுவது, அக்கடல் நீரில் மோதும் காற்றினால் தான். ஆறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும், காணப்படும் அலைகளைவிடக் கடல் அலைகள் பெரிதாக இருக்கின்றன. அதற்குக் காரணம் கடல் மிக்க ஆழமாகவும் மிக்க அகலமாகவும் இருப்பது தான். இனி, இக்கடல் இவ்வளவு பெரிதாக இருந்தும், அதன் நீர் ஒருவருக்கும் பயன்பட வில்லையே! வீணாக அதனை ஏன் கடவுள் படைத்தார் என்றும் எண்ணலாம். கடவுளால் படைக்கப் பெற்ற ஒவ்வொரு பொருளும் பயன்படக் கூடியனவே யன்றிப் பயனில்லாதன ஒன்றையும் அவர் உண்டாக்க மாட்டார்; நம்மைப்போல் வீண் செயல்களைக் கடவுள் ஒருபோதும் செய்யமாட்டார் என்பதை யாவரும் கருத்திற் பதித்தல் வேண்டும். ஆதலால் கடவுளால் உண்டாகும் பயனைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குத் தரை மார்க்கமாய்ச் செல்லுதல் முடியாது. ஏனெனில் இடை யிடையே பாலைவனங்களும், மலைகளும் தடுத்துக் கொண்டிருக்கின்றன. கடல் இருப்பதனால், நம் நாட்டினர் பிறநாடுகளுக்குச் செல்லவும், பிற நாட்டினர் நம் நாட்டிற்கு எளிதில் வரவும் முடிகின்றது. இப்போக்குவரத்தால் நம் நாட்டிலில்லாத பல பொருள்களை அயல் நாடுகளிலிருந்து வருவித்துக் கொள்ளுகின்றோம். அயல் நாட்டில் இல்லாத வற்றை நம் நாட்டிலிருந்து அனுப்புகின்றோம். அன்றியும் கடல் தனது அண்மையில் உள்ள நாடுகளுக்குக் கோடை காலத்தில் குளிர்ச்சியையும், மழைக் காலத்தில் வெப்பத்தையும் கொடுக் கின்றது. கடலில் உண்டாகும் பல பொருள்கள் மக்களுக்குப் பயன்படுகின்றன. முத்து, பலவித மணிகள் முதலிய விலை உயர்ந்த பொருள்களையும் கடல் தருகின்றது. கடல் இன்றேல் இப்பொழுது இருப்பது போல் பல தேயத்தினரும் ஒன்று கூடி உறவாடுதல் இயலாததாகும். மற்றும் கடல் இன்றேல் உலகத்து மக்கள் நோயின்றி உயிர் வாழ்தல் ஒண்ணாது. கடலை உலகத்தைக் காப்பாற்றும் ஒரு மருத்துவன் என்றே கூறலாம். உலகத்தில் உண்டாகின்ற பலவித கெட்ட பொருட்களையெல்லாம் கடல் தான் ஏற்றுக் கொண்டு, அவற்றின் கெடுதியைப் போக்குகின்றது. எவ்வளவு கெட்ட பொருள்களைக் கடல் ஏற்றுக்கொண்டாலும் அதன் நீர் கெடாமலிருப்பதற்குக் காரணம் அதனிடத்துள்ள உப்புச் சுவையே யாகும். நாம் உண்ணும் ஒவ்வொரு பொருளிலும் உப்புக் கலக்கின்றோம். உப்பின்றி இருக்கும் பொருள்களை உண்ணுவதற்கு நாம் மிகுதியாக விரும்புவதில்லை. உலகத்துப் பொருள்களிற் சுவையுள்ள பொருள் உப்பேயாகும். அது மனிதர்களின் உணவுக்குரிய இன்றியமையாப் பொருள்களில் ஒன்றாக இருக்கின்றது. அப்பொருளைக் கொடுக்கின்றது கடலேயன்றோ? மற்றும் மழையின்றேல் மாநிலத்தார் உயிர் வாழ முடியாது. மழை பெய்தால்தான் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கிப் பல தானிய வகைகளைப் பயிர் மூலமாகப் பெற்று உணவாகக் கொண்டு உயிர் வாழலாம். மழையின்றேல் உணவுப் பொருள் குறைந்து உலகத்தில் பஞ்சமும் பிணியும் தோன்றி மக்களைத் துன்புறுத்தும். ஆதலால் உலக நன்மைக்குக் காரணம் மழையே யன்றிப் பிறிதொன்றில்லை. அம்மழையைப்பெய்யும் மேகம் கடலிலிருந்துதான் உண்டாகிப் பெய்கின்றது. ஆதலால் கடல் இன்றேல் மேகமும் இல்லை; மழையும் இல்லை; என்பதை யாவரும் அறியவேண்டும். மக்களுக்கு இவ்வாறு பல நன்மை களைச் செய்யும் கடலைப் படைத்துத் தந்த கடவுளை நாம் மனமாரப் போற்றி வாயார வாழ்த்தக் கடமைப் பட்டிருக் கின்றோம். ஆபுத்திரன் (பாகம் 3) ஆபுத்திரனை, அவனை வளர்த்த தந்தையாகிய பூதி தன்னில்லத்திற்கு இனி வருதல் கூடாதென விலக்கிய பின்னர் அவனைப் பேணுவார் ஒருவருமில்லாமையால் அவன் தெருக்க டோறும் புகுந்து ஐயமெடுக்கத் தொடங்கினான், அவ்வூரிலுள்ள அந்தணச் சிறுவர்களனைவரும் அவனைக் காணும்போதெல்லாம், ஆ கவர் கள்வன், ஆ கவர் கள்வன் என்றறைந்து, அன்னான் ஐயக்கலத்திற் கல்லிடத் தொடங்கினார்கள். அதனால் ஆபுத்திரன் மனந் துன்புற்றவனாக நாம் இனி இவ்வூரில் உறைதல் நேரிதன்றென வெண்ணிக் கொடை வள்ளல்களும், செல்வம் நிறைந்தவர்களும் வாழும் தென் மதுரையை யுற்று ஆண்டு ஐயமெடுத்துக்கொண்டு வந்து அச்சோற்றை, காணார், கேளார், கால்முடப்பட்டோர் பேணுநர் இல்லோர், பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக!........ என்றழைத்து அவர்களுக்கெல்லா முணவூட்டி மிகுந்தவுணவைத் தானும் உண்டு மகிழ்ந்திருந்தான். ஒவ்வொரு நாளும் பிச்சை யெடுத் தறஞ்செய்துண்ட பின் இரவில் அப்பிச்சைக் கலனைத் தலையணையாகக் கொண்டு கலைவாணியின் கோட்டத்தில் துயில் கொண்டு காலத்தைக் கழித்திருந்தான். ஆபுத்திரன் இங்ஙனம் காலங்கடத்தி வருகையில் ஒரு நாள் நள்ளிரவிற் சிந்தாதேவியின் கோயிலில் துயின்று கொண்டிருக்கும் பொழுது, சில மக்கள் அவனை எழுப்பி எங்களைப் பசி துன்புறுத்துகின்றது. இவ்வமயம் உண்வளித்தால்தான் எங்கள் துன்ப மொழியும் என்று கூறினர். அதைக்கேட்ட ஆபுத்திரன், பசியைக் களைதற்கு வேறுவழி யொன்றுந் தோன்றாதவனாக, அந்தோ! இந்நள்ளிரவில் யான் யாண்டுச் சென்று உணவு கொண்டு வருவேன்! ஊரிலுள்ளவர்கள் யாவரும் உறங்கி யிருப்பார்களே! இவர்கள் துன்பத்தைக் காண என் மனம் பதறுகின்றதே என் செய்வேன், ஏ அறக்கடவுளே! வினைக்குக் கருணையுளதாயின் இப்பொழுதே இவர்கள் துயரைப் போக்க எண்ணமாட்டாயா? என்றிங்ஙனங் கூறிக் கண்ணீர் விடடழு தான். இவன் துயரை அறிந்த அக்கோட்டத்திலுள்ள கலைவாணி தோன்றி ஏ ஆபுத்திர! நீ மனங்கவலற்க! இனி எந்த நேரத்தில் யார் வந்து உணவு கேட்பினுந் தடையின்றிக் கொடுக்குந் தன்மை யுடையவனாகுக. இதோ இருக்கின்ற இக் கலனை எடுத்துக் கொள்ளுக, இப்பாத்திரத்தில் எப்பொழுதும் சோறு நிறைந் திருக்கும். எடுக்க எடுக்கக் குறையாது. இவ்வுலகமெல்லாம் வறுமையடைந்தாலும் இப்பாத்திரம் வறுமை அடையாது. இப்பாத்திரத்தின் பெயர் அமுதசுரபி என்று கூறி ஒரு கலனைக் கொடுத்து மறைந்தனள். ஆபுத்திரனும் மிக்க மகிழ்ச்சியுடை யவனாய் அதனைப் பெற்றுக்கொண்டு சிந்தாதேவி செழுங்கலைநியமத்து நந்தாவிளக்கே நாமிசைப்பாவாய்! வானோர் தலைவி! மன்னோர் முதல்வி! ஏனோர் உற்ற இடர்களைவாய்! என்று போற்றிப் பசியினால் துன்புற்றிருந்தவர்களுக்கு உணவளித்து மகிழ்வடைந்தான். அன்று முதல் ஆபுத்திரன் தன்னிடம் வந்தவர்கள் யாவருக் கும் இல்லை யென்றியம்பாது இனிய உணவை யீதலையே கடமையாகக் கொண்டிருந்தான். உணவின் பொருட்டு மக்கள் எவ்வமயத்திலும் அவனைச் சூழ்ந்திருப்பார்கள். விலங்குக் கூட்டங்கள் அவனை விடாது சூழ்ந்திருந்தன. பறவைக் கூட்டங் களும் அவனை விட்டகலாமற் சுற்றிக்கொண்டிருந்தன. இவ்வாறிருக்குங் காலத்தில் விண்ணுலகாளும் இந்திரன் தனது பாண்டுகம் பளத்தின் நடுக்கத்தால் ஆபுத்திரனுடைய அறத்தின் பெருமையை யுணர்ந்தான். உடனே ஒரு வேதிய உருவத்துடன் தென்மதுரையை யுற்று, ஆபுத்திரன் அணுகி, யான் தேவேந்திரன், உனது புண்ணியத்தின் மிகுதியை வியந்து வரங் கொடுத்தற்காக வந்தேன். உனக்கு வேண்டிய வரம் யா தென்று கேட்டான். அதற்கு ஆபுத்திரன் விலாவெலும் பொடியும் வண்ணஞ் சிரித்து அறஞ் செய்யும் மக்களும், வருந்துவோர் துயர்போக்கி அவரைப் பேணுகின்றவர்களும், நல்ல தவத்தைப் புரிகின்றவர் களும், ஆசையை யறுக்க முயலும் அறிவினர்களும் இல்லாத விண்ணுலகிற் கிறைவனாகிய வெற்றி பொருந்திய மன்னவனே! உனதுலகத்திற் புகுந்தடை கின்ற இன்பத்தை யான் விரும்பவில்லை. வருந்தி வருகின்றவர்களுடைய பெரும் பசியை ஒழிப்பதனால் மகிழ்ச்சியடைகின்ற அவர்கள் இனிய முகத்தைக் காணுதலொன்றே எனக்குப் பேரின்பமாகும். அப்பேரின்பத்தைத் தந்து கொண்டிருக்கும் இப்பாத்திர மொன்றே எனக்குப் போதிய தாகும். வேறுயாதொரு வரமும் எனக்கு வேண்டற்பாலதன்று வந்த வழியைப் பார்த்துக் கொண்டே நினது உலகை நீ யடையலாம் என்று இந்திரனைச் சிறிதும் மதியாது கூறினான். அதுகேட்ட வாசவன், கடுங்கோப முற்றவனாகத் தன்னுலகை யெய்தி, உடனே மழையைப் பெய்வித்து நாட்டைச் செழிக்கச் செய்தான். நாடு செழித்து வேண்டிய விளைபொருள்கள் மிகுந்ததனால் பசியால் வருந்து கின்றவரிலராயினர். ஆபுத்திரனை அணுகி உணவை வாங்கியுட் கொள்ள ஒருவரும் வரவில்லை, ஆபுத்திரன் ஒவ்வோ ரகந்தோறு மடைந்து உணவுவேண்டுமா உணவு வேண்டுமா என்று கேட்பான் வீட்டில் உள்ளவர்கள் செல்வச் செருக்கால் அவளைச் சிறிதும் மதியாதவராய் இகழ்வார்கள். இதனால் ஆபுத்திரன் அந்தோ! வறியவர் உடையவராயினும் ஈத்துவக்கும் இன்பத்தை நான் இழந்தேனே என்று மனம் நைந்திருந்தான். இக்காலத்திற் சாவகநாட்டிற் பெரும் பஞ்சம் நேர்ந்து அதனாற் பலமக்கள் உயிர் துறந்தனர். எஞ்சிய மக்களும் இன்னலுழந்தனர். இச்செய்தியை, ஆபுத்திரன் ஒருநாள் மிக்க மனக்கலக்கமுடன் தனியே செல்லும்போழ்து கப்பலிற் வந்த சிலர் அவனைக்கண்டு கூறினர். உடனே குருடன் கண்பெற்றாற் போன்று, மனமகிழ்ந்து மரக்கலமேறிச் சாவக நாட்டிற்குச் சென்றனன். போகும் நெறியிற் சுழற் காற்றுண்டானதால் மரக்கலம் மணிபல்லத் தீவி லொருநாள் தங்கிற்று. ஆபுத்திரனுங் கப்பலிலிருந்த மற்றைய மாந்தர்களும் அத்தீவிலிறங்கி இளைப் பாற்றிக் கொண்டார்கள். மறுநாள் விடியற்காலையில் மரக்கலம் சாவகநாட்டை நோக்கிச் செல்லத் தொடங்கும் போது எல்லா மக்களும் கப்பலில் ஏறினார்கள்; ஆபுத்திரன் மட்டில் அயர்ந்து தூங்கி விட்டான்; கப்பலோட்டி, ஆபுத்திரனும் கப்பலில் ஏறிவிட்டானென எண்ணிக்கொண்டு கப்பலைச் செலுத்திச் சென்றுவிட்டான். பின்னர் ஆபுத்திரன் விழித்தெழுந்தான். தீவின் நாற்றிசைகளிலும் ஓடினான். மரக்கலம் யாண்டுளதென நாடினான். தன்கண்ணிற்குப் படாமையால்வாடினான். ஐயோ! யான் மட்டில் இத்தீவிற்றனித் துறைவதால் யாது பயன்? பலருக்கு மிடையறா துணவளிக்கு மிக் கலனிருந்துதானென்ன? எனதொரு வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காகவிக்கலத்தை நான் வைத்திருத்தல் தகுமோ? ஒருவருக்கு முதவிசெய்ய வியலாத நான் ஈண்டுத் தனித்திருப்பதும் நேரிதன்று, இனிநான் நமது உடன் பிறப்பாளர்களாகிய மக்கள் வசதியுடங்களை யடையவு மியலாது. ஆதலால் இவ்வுடலை ஒழித்துவிட்டு மக்களுக்குதவிபுரியும் பண்புடையவனாக வேறிடத்திற் பிறப்பதே தக்கநெறியென வோர்ந்தான். தான் வைத்திருந்த வற்றாத வுணவுடைய அமுத சுரபியைத் தொழுது, ஆங்கிருந்த கோமுகி யென்னும் பொய்கையில் நீ ஆண்டிற் கொருமுறை தோன்றுவாயாக, எல்லாவுயிர் களை யும் ஒரு பெற்றித்தாக உணர்ந்து மிக்க இரக்கமுடன் அறஞ் செய்தலையே மேற் கொண்டவர் வருவாராயின் அவர் கையிற் புகுவாயாக என்று கூறி விடுத்தான். பின்னர் ஆபுத்திரன் உணவுகொள்ளாமல் பட்டினிகிடந்து வருந்தித் தனது ஆருயிரை, மறுபிறவியில் எல்லா உயிரையும் புரக்கும் தன்மை யுடையவனாகப் பிறத்தல் வேண்டுமென வெண்ணித் துறந்தான். அன்பர்களே! இவ்வாபுத்திரன் உயரிய நோக்கத்தை நினையுங்கள். பிறருக்கு உதவிசெய்யாமல் வாழ்வதினும் சாவது மேன்மை யென்ற மேலான கொள்கை நிலவி யிருந்ததனாற்றான் நாம் இன்றும் அவன் பெருமையைப் பற்றிப் பேசுகின்றோம். புகழ்கின்றோம்! இதனால் மக்களாய்ப் பிறந்தார் ஒவ்வொருவரும் வறியோர்க்குத் தன்னாலியன்ற வரையிலும் உதவி செய்யவேண்டும் என்ற நீதியை அறிந்து கொள்ளுகின்றோம். ஒற்றுமை வாழ்வு உலகத்தில் ஒரு பொருளேனும் தனித்து வாழ்வதைக் காணவியலாது. உயர்திணைப் பொருள்களிலுள்ள ஒவ்வோரினங் களும் அஃறிணைப் பொருள்களிலுள்ள ஒவ்வோரினங்களும் கூட்டங் கூட்டமாக ஒன்றுபட் டுறைவதைக் கண்கூடாகக் காணலாம். ஒருமரம் தனித்து நிற்குமாயின் அஃதவ்வளவு செழிப்புடையதாக வளராது. பெருங்காற்று வீசுங்கால் அம்மரத்தின் வாழ்க்கைக்குத் தீங்கு நேருவதையுங் காணலாம். மரங்கள் நிறைந்த தோட்டங்களிலும் மரங்கள் வளர்ந்த தோட்டங்களிலும் உள்ள மரங்கள் மிகவும் செழிப்புற்று வளர்ந் திருப்பதையும், காற்று முதலியவற்றால் அழிவுற திருப்பதையுங் காணலாம். எறும்புபோன்ற தரையில் வாழும் சிற்றுயிர்த் தொகுதிகளும் கூட்டங் கூட்டமாகவும் ஒன்றற்கொன்று உதவி யுடையன வாகவும் உயிர் வாழ்கின்றன. பறவைகளில் காக்கையை எடுத்துக்கொள்வோம். அவைகள் தங்களினத்தில் வைத்திருக்கும் அன்பும் ஒற்றுமையும் மிகவும் வியத்தற் குரியதாகும். ஒரு காக்கை ஏதேனும் உணவுப் பொருளைக் காணின் தன் இனங்களனைத் தையுங் கூவி யழைத்து ஒன்றுகூடி மகிழ்ந்துண்ணுகின்றது. ஒரு காக்கைக்கு ஏதேனுந் துயரம் நேரினும் பல காகங்கள் ஒன்று பட்டுத் துக்கிக்கின்றன. மக்கட் பிறவியினும் தாழ்வுடையதாகக் கருதப்படும் காக்கையின்பால் இத்துணைச் சிறந்த குணம் அமைந்திருப்பது நம்மால் உற்று நோக்குதற்குரிய தொன்றன்றோ? மற்றும் கானிலுறையும் விலங்குகளும் குழுக்கொண்டு வாழ் வதைக் காணலாம். மக்கட் பிறப்பை விடத் தாழ்ந்த பிறப்புடைய தென்று கூறப்படும் மேற்கண்ட உயிர்ப்பொருள்களின் பால் ஒற்றுமையும் உதவுந் தன்மையும் இருக்கும் போது மாந்தர்களாகிய நம்மிடமும் உடற்பிறப்புத் தன்மையும், ஒருவர்க்கொருவர் உதவுந் தன்மையும் அமைந்திருத்தல் அவசியமாக வேண்டுமன்றோ? மக்களனைவரும் தங்கள் தங்கள் குடும்பத்துடனும் உறவினருடனும் ஒத்துறைவதைக் காணுகின்றோம். பிறருடன் ஒத்துவாழும் குணம் ஒவ்வொருவர் கண்ணும் இயற்கையிலேயே பொருந்தி யிருக்கின்றது. அக்குணம் இயற்கையிலேயே அமையா தவர்களாயின், ஒருவரும் தங்கள் தாய் தந்தையர்களுக்கும், உடன்பிறந்தார்களுக்கும், மனைவி மக்களுக்கும் சிறிதும் உதவியுடையவர்களா யிரார்கள். மக்களிடம் பிறப்பிலேயே படிந்துள்ள ஒற்றுமைத் தன்மையாகிய குணத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயலுதல் வேண்டும். எவ்வாறு நமது தந்தை தாய் உடன் பிறந்தார் மனைவி மக்கள் நண்பர் முதலியவர்களை நேசிக்கின்றோமோ அவ்வாறே நமது சுற்றத்தினரையும் நமது இனத்தினரையும் நேசிக்கவேண்டும். இப்படி நேசிக்கின்ற இக்குணம் வளர்ந்த பின்னர், மற்ற இனத்தினர்களையும் நாம் ஒன்றாக எண்ணுதல் வேண்டும். ஆனால் சாதி யொழுக்கங்களாலும், சமய வொழுக்கங் களாலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னுங் கொள்கை நம்மிடை நெடு நாட்களாகப் படிந்து கிடக்கின்றது. அக்கொள்கையை நாளடைவில் விட்டொழிக்க முயலவேண்டும். நாட்டில் உள்ள மக்களனைவரும் ஒரே தந்தையின் புதல்வரை யொப்பார்கள். இதை ஒரு எடுத்துக்காட்டால் நோக்குவோம்; எந்தச் சாதியினரும், எந்த மதத்தினரும் கடவுளை வணங்கும் போது, அப்பனே என்று கூறுகின்றனர். எல்லா மக்களும் தந்தையே என்று கடவுளை அழைக்கும் போது அவரால் படைக்கப் பெற்ற நாம் மட்டிலும் ஏன் வேற்றுமை பாராட்டிவாழ்தல் வேண்டும். நம்முடைய மதங்களும் நமக்கு அன்பையே போதிக்கின்றன. ஆகவே நாமும் ஒருவர்க்கொருவர் அன்புடையவர்களாகவும், ஒற்றுமை யுடையவர்களாகவும், உதவி யுடையவர்களாகவும் கூடி வாழுதற்கே முயலவேண்டும். மக்கள் ஒருவர்க்கொருவர் உதவியின்றித் தனித்து வாழ்தல் இயலாத தொன்றாகும். நாம் இவ்வுலகில் சிறப்புப்பெற்று உயிர் வாழ்வதற்குப் பலபொருள்கள் வேண்டியிருக்கின்றன. நமக்கு வேண்டிய அப்பொருள்கள் முழுவதையும் நாமே செய்து கொள்வது முடியாததாகும். பலப் பல பொருள்களைப் பற்பலர் உண்டாக்குகின்றனர். நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு முதற் காரணமாகிய பருத்தியைப் பயிரிடுவோர் சிலர். அதனை நூலாகச் செய்பவர் சிலர். பின்னர் ஆடையாக ஆக்குவோர் சிலர். இங்ஙனமே நாம் உண்ணும் விளைவுப் பொருள்களை யுண்டாக்குவோர் சிலர். அதனை உணவாக ஆக்கித்தருவோர் சிலர். இங்ஙனமே நமதுடல் நன்மைக்கு வேண்டிய பலபொருள் களும் பலரால் செய்யப்படுகின்றன. ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்துவரும் தொழில்களைச் செய்யமாட்டோ மென்று நிறுத்தி விடுவார்களாயின் உலகமே நடைபெறுவ தெங்ஙனம்! நமதுடலை நன்கு பேணவேண்டுமாயின் உடலிலுள்ள உறுப்புக்களனைத்தும் ஒன்றுபட்டுழைக்கவேண்டும். நமது உறுப்புக்கள் ஒன்றோடொன்று கலகம் விளைத்துக்கொண்டு தத்தம் வினையை ஆற்றாதிருக்குமாயின் நாம் எந்நிலையை யடைவோம்? நமது உயிர் வாழ்க்கைக்கே இடையூறுண்டாகி விடுமன்றோ? அதுபோலவே இந்நாட்டில் நல்வாழ்வு நிலவ வேண்டுமாயினும், பெருமை வளரவேண்டுமாயினும், நாட்டின் உறுப்பினராகிய எல்லா மதத்தினரும், எல்லாச் சாதியினரும் ஒன்றுபட்டுழைக்க வேண்டு மல்லவா? மற்றைய நாட்டினர்களைவிட இந்திய நாட்டில் வசிக்கின்ற நாம், கல்வியிலும், ஒழுக்கத்திலும், செல்வத்திலும், தாழ்ந்த நிலையிலிருக்கின்றோம். மற்றைய நாட்டினரோ மிகவும் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் பால் உள்ள ஒற்றுமைத் தன்மையேயாகும். மற்றைய நாடுகளிலும் நமது நாட்டிலிருப்பது போலவே வகுப்பு வேறு பாடுகளும் சமய வேறுபாடுகளும் இருக்கின்றன. இருப்பினும் அவைகளால் யாதொரு கொடுமைகளும் நிகழ்வதில்லை. நாட்டு முன்னேற்றத் திற்கான செயல்களில் அவர்கள் தங்கள் வேற்றுமைகளை விட்டொழித்து ஒன்றுபட்டுழைக்கின்றனர். ஒரு மதத்தினர் மாறுபட்ட மதத்தினரென்பதற்காகப் பிறர்க்குக் கொடுமை இழைப்பதில்லை. ஒரு வகுப்பினர், வேறு வகுப்பினரென் றெண்ணிப் பிறவகுப்பினருக்குத் தீங்கு புரிவதில்லை. மக்கள் வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும்படி வாழ்கின்றனர். ஆதலாற்றான் பிறநாட்டினர் நம்மினும் உயரிய நிலையைப் பெற்றிருக்கின்றனர். நமது நாடோ பிறநாடுகளெல்லாம் தாழ்ந்த நிலையி லிருந்த நாளில் மிகவும் சிறந்த நாகரிக நிலையிலிருந்ததாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். நமது பழங்கதைகளும் நவில் கின்றன. பண்டைக் காலத்தில் நாமும் சாதிவேற்றுமை, கொள்கை வேற்றுமை பாராட்டா திருந்ததனாலேயே அத்தகைய உயரிய நிலையிலுறைந் திருந்தோம். ஆனால் இடையில் நம் நாட்டிலுண்டான சாதிப் பூசல்களாலும், சமயப் பூசல்களாலும் நம்பாலிருந்த உயர்வும் ஒற்றுமையும் குலைந்து, இப்போழ்துள்ள தாழ்ந்த நிலைக் காளாகியுள்ளோம். ஆகவே, நாம் மீண்டும் பண்டைய உயரிய நிலையையடைய வேண்டுமாயின் சமூக ஒற்றுமையை நாம் நாட்டில் வளர்க்க முயல வேண்டும். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று கூறுவது நமது நாட்டுப் பழமொழிகளில் ஒன்று. அதன் கருத்து இளமையில் உண்டாகின்ற பழக்க ஒழுக்கங்களே முதுமையிலும் நிலைத்திருக்கு மென்பதாம். ஆகவே இளைஞர்களாகிய நாம் நமக்குள் சகோதரத் தன்மை யுண்டாகுமாறு நடந்து கொள்ள வேண்டும். நமக்குள் எப்பொழுதும் சகோதரத்தன்மை நிலைத் திருப்பதற்கு முதற் கருவியாக நம்மிடம் அமைந்திருக்க வேண்டியது பொறுமைக் குணமேயாகும். அஃதாவது பிறர் செய்யும் தவறுகளுக்காக அவரைக் கடிந்தகற்றுதல் கூடாது பிறர் ஏதேனுந் தவறிழைக்கக் காணுவோமாயின் அத்தகையவரை யணுகி அவர் பிழையை அவரே யுணருமாறு செய்தல் வேண்டும். ஒருவர் தாம் செய்தது தவறென்பதை உணர்வாராயின் அவர் மீண்டும் அதுபோன்ற செய்கைகளில் ஈடுபடமாட்டார்களென்பது திண்ணம். ஆதலால் நாம் பிறரைச் சீர்திருத்தி நம்மைப் போலாக்க முயலவேண்டும். ஒருவர் பொறை இருவர் நட்பு என்பது பழமொழி. ஆகவே பொறுமைக் குணம் நம்மிடம் நிலவவேண்டுவது மிகவும் இன்றியமையாததாகும். இளமை முதற்கொண்டே இக்குணத்தைப் பயிற்சிக்குக். கொண்டுவருவோ மாயின் பெரியவரான பின்னரும் பொறுமைக் குணமுடையவ ராகவும், யாவரையும் பகைக்காது நண்பராகக் கொள்ளுந் தன்மையுடையவராகவு மிருப்போம். ஒற்றுமைத் தன்மை வளர் வதற்குப் பொறுமைத் தன்மை ஒரு சிறந்த கருவியாகுமென்பதை நாம் ஒவ்வொருவரும் நமது மனத்தில அமைத்துக்கொண்டு, அவ்வாறு நடந்து, ஒற்றுமைத் தன்மையை உலகில் நிலை நிறுத்த முயல்வோமாக. வாலி வீடுபெற்ற வரலாறு முதற் பாகம் இராமரும் இலக்குமணருஞ் சீதாபிராட்டியாரைத் தேடித் தென்றிசைக்குச் சென்றபோது, அனுமாரால் வாலியின் பின்னவனாகிய சுக்ரீவனுக்கும் இராமருக்கும் நட்புண்டாயிற்று. சுக்ரீவன் தனது குறைபாடுகளையும் வாலி தனக்கிழைத்த இன்னல் களையு மொழிந்து வருந்தியபோது இராமபிரான் வாலியை மடித்துக் கிட்கிந்தையைச் சுக்ரீவனுக்குத் தருவதாக உறுதி மொழி கூறி அப்பொழுதே சுக்ரீவனுக்குக் கிட்கிந்தையை அளித்ததாகப் புகன்றார். இராமர் தான் கொடுத்த உறுதி மொழியை முற்றுவிக்கும் பொருட்டுத் தம்பியுடனும், அனுமார், சுக்ரீவன் முதலிய மற்றைய வானர வீரர்களுடனும் புறப்பட்டுக் கிட்கிந்தையை அணுகினார். அவ்விடத்தில் இராமர் சுக்ரீவனை விளித்து, நீ உனது முன்னோனாகிய வாலியை அழைத்துப் போர்புரி. யான் கரந்து நின்று என் அம்பினா லன்னவனை மாய்த்து விடுகின்றேன் என்றனர். உடனே சுக்ரீவன் இடியும் அஞ்சுமா றார்த்து. அடா வாலி! என்னுடன் வந்து போ ரெதிர்ந்தாயாயின் இன்னே யுன்னை யடர்ப்பேன் என்று வீர முழக்கஞ் செய்த வொலி விண்ணுளோரையும் மண்ணுளோரையுந் திடுக்கிடச் செய்தது. அதுகாலை யிடந்துடிப்ப வுறங்கிக்கொண்டிருந்தவாலி, தன்செவித் துளைக்கண், கடகரியின் முழக்கத்தை வாளரி தனது செவித்தலத் தேற்பது போலக் கேட்டனன், உடனே உருத்தனன். தனதிளவல் போராற்றப் போந்தனனென மனத்தி லெண்ணினன், சிரித்தனன். அச்சிரிப்பு ஈரேழுலகங்களையுங் கிடுகிடுக்கச் செய்தது. ஊழிக் காலத்திற் கடல் கிளர்ந்தெழுவதுபோ லெழுந்தனன். எழுந்த விரைவால் அவனிருந்த கிட்கிந்தை மலையு மழுந்தியது. வந்தனென். வந்தனென் என்று மொழிந்த வாசகம் எண்டிசை களுங்கேட்டன. அதனாற் சந்திரன் முதலிய தாரகைகளுஞ் சிந்தின. அவ்வமயம் வாலியின் மனையாளாகிய தாரை, அவன் கண்களிலிருந்து வருந் தீப்பொறிகளாற் கூந்தல் தீயுமாறு வாலியைக் கிட்டி இதுபோது போரியற்றப் புகுதல் நேரிதன்று எனத் தடுத்தாள். வாலி நீ என்னைத் தடைசெய்யாதே. பாற் கடலைக் கடைந்து அமுதம்பெற் றுண்டது போல என்னைப் போர்க்கழைத்தவனை மடித்து உயிர் குடித்து மீள்கின்றேன் என்றான். தாரை காதல! பல முறை நும்முடன் போரெதிர்ந்து புறமிட்டோடியவன் இது போது பொரவந்த காரணம் முன்னிருந் ததைக்காட்டிலுமிக்க வாற்றல் படைத்ததாலன்று; தக்கதுணை கொண்டமையாற்றான் அச்சமின்றி உம்முடனெதிர்க்க வந்தான். என்றாள். வாலி காதலி! நீ மனங் கவலற்க. மூன்றுலகத்தவரு மொன்றுகூடி வந்து என்னை எதிர்ப்பினும் அவர்கள் தோல்வி யுறுவார்கள். அதற்குத்தக்க சான்றுகள் பலவுள. மந்தரநெடு வரையை மத்தாகவும், வாசுகியைக் கடைகயிறாகவும், ஆழியானை யடைகல்லாகவும் சந்திரனைத் தூணாகவுங்கொண்டு இந்திரன் முதலிய அமரர்களு மேனையோர்களும் பாற்கடலைக் கடையப் பெருமுயற்சி செய்தனர். வானவர்கள் வாசுகியைப்பற்றி வலிக்கவும் மந்தரமலையை யசைக்கவும் வலியிலராய் அயர்வுற்றனர். அதை நோக்கிய யான் சிறிதுந் தயக்கமின்றிப் பாற்கடலைத் தயிர்கடைவதெனக் கடைந்து விசும்பினர்க் கமுதளித்த செயல் மறக்கக்கூடிய தொன்றோ? ஒவ்வொரு சண்டையிலும் அமரரும் அவுணரும் எனக்குத் தோற்றோடினவர்கள். கூற்றுவனும் என்பெயர் சொல்லக் குலைவான். ஆகவே என் மாற்றானுக்குத் துணையாகி வந்து என்னை யெதிர்ப்பவர் யாருளர்? சில அறிவிலிகள் என்னை யெதிர்ப்பாராயின் அவர்கள் பெற்றுள வரத்திலும் ஆற்றலிலும் பாதி யென்னைச் சேரும். அவ்வாறாயின் என்னை வெற்றிகொள்வ தெங்ஙனம்? என்று புகன்றான். தாரை மன்னவ! இராமனென்பவன், சுக்ரீவனுக்கு உயிர் நட்புடைய வனாம். அவனே உன்னுயிரைக் கோடற்கு வந்தனனென்று நமதன்பர் சிலர் கூறினர். அதுபற்றியே தற்போது யானுங்களைத் தடுக்கின்றேன் என்றுரைத்தாள். உடனே வாலி தாரையைச் சினந்து நோக்கி, பேதாய்! பெண் தன்மையாலறியாது கூறுகின்றாய்! இருவினைப் பாகு பாடுணராமல் வருந்துகின்ற உலகிற்கு அறவழியைக் காட்டவந்த இராமன் மீது வீண்பழி சுமத்துகின்றாய்! இருமை இன்பங் களையு மளிக்கவல்ல இராமனுக்கு என்னைக் கொல்வதால் வரும் பெருமை யாது? என்னைக் கொல்வதால் அவன் பெறும் பயன்தா னென்னை? உயிர்களுக்கு நலஞ்செய்கின்ற அறமே தீமை புரியுமோ? சிற்றன்னையாகிய கைகேயியின் ஏவலின்படி உவகையுடன் தனக்குரிய நாட்டைப் பரதனுக் களித்த ஐயனைப் போற்றாமல் இத்தகைய குற்றங் கூறினையே! இராமனை யெல்லா வுலகங்களுங் கூடி யெதிர்ப்பினும் அவனுக்கு, அவன், வில்லொன்றே போதிய துணையாகும். பிறிதொருதுணை வேண்டற்பாலதோ? இத்தகையவன் புன்றொழிற் குரங்கொடு நட்புக் கொள்வனோ? தம்பியரல்லது தனக்கு வேறுயிர் இவ் வுலகிலில்லை யென்றெண்ணி யிருப்பவன், எம்பியும் யானும் எதிர்ந்தபோரில் அம்புவிடத் துணிவனோ? நீ சிறிது பொறுத்திரு! சுக்ரீவனுயிரை அழித்து, அவனுக்குத் துணைவந்த வரையுங் கலங்கச் செய்து, விரைவில் வருகின்றேன் என்று கூறிப் புறப்பட்டான். தாரை அவனைத்தடுத்து மறுமொழி கூற அஞ்சி ஒருபுற மொதுங்கி நின்றாள். வாலி கடுஞ்சினத்துடன், கீழ்கடலிற் றோன்றிய பரிதியென்ன அரண்மனையினின்றும் வெளியேறி வந்து சுக்ரீவன் நிற்குமிடத்தை நோக்கினான். சுக்ரீவனும் வாலியைக் காண இருவருஞ் சினமூண்டு பேராரவாரம் புரிந்தனர். மறைந்து நின்று அவ்விருவர் களையும் நோக்கிய இராமர் தம்பியைப் பார்த்து தம்பீ! இவர்களுடம்பை யுற்றுப்பார்! எந்தக்கடலும், எந்தமேகமும், எந்தக் காற்றும், எந்த ஊழித்தீயும், எந்த மலையும் இவர்களுக் கொப்பாகுமா? என்றார். அதற்கிளைய பெருமாள் ஐயனே! இச்சுக்ரீவன் தன் முன்னோனின் வாணாளைக் கொள்ளுதற்குக் தானே கூற்றுவனைக் கொணர்ந்தான். குரங்கின் தன்மையால் உடன்பிறந்தானுக்குச் செய்யுந் தீங்கைப் பற்றிச் சிந்தித்திலன். அறத்தாறு கெடும்படி, அறிவின்றி வினைபுரிவார்களைத் தேற்றுதல் செவ்விதாமோ? தன் மூத்தோனைக் கொல்ல முன்வந்த இவன் வேற்றார்கள் திறத்தெங்ஙனம் நடந்து கொள்வனோ? என்றான். இராமன் தம்பீ! விலங்கி னொழுக்கத்திலறத்தை வைத்து நோக்குதல் கூடுமோ? பின்பிறந்தாரனைவரும் பாரதனை யொத்திருப்பரோ? மெய்ம்மை நெறிபற்றி யொழுகுவோர் சிலர்; பொய்ம்மை நெறிபற்றி யொழுகுவோர் பலரென்ப துண்மை. தத்தமுரிமையைப் பெறுதற்கு முயலும் வகையிற் பழிவருமே யென் றஞ்சுவார் யாறுளார்? என்றிவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தனர். இவ்வமயத்தில் வாலியுஞ் சுக்ரீவனும் போர்புரியத் தொடங்கினர். குன்றுடன் குன்றெதிர்ந்தது போலவும் கோளரி யுடன் கோளரி பொருவதுபோலவும் நின்றும், திரிந்தும், குயவன் ஆழியெனச் சுற்றியுங் கடும்போர் விளைத்தனர். மார்போடு மார்புரைந்தும், தோளோடு தோள் மோதியும், தாளோடு தாளுதைத்தும், கையோடு கைப்பற்றியுஞ் செய்த போரைக் கண்ட இராமரு மிளைய பெருமானும் இறும்பூதெய்தினர். ஒருவரை யொருவர் கடித்ததனா லுண்டான செந்நீர் எண்டிசை களும் வீசியதால் உலகமே செவ்வானம்போற் சிவந்தது. அவர்கள் மண்ணகத்திலுள்ள மலைகளையு மரங்களையும் மற்றுங் கண்ட பொருள்களையுங் கைகளாற் பற்றி ஒருவர்மே லொருவர் சாடுதலால் அவைகள் விண்ணகத்தையு மெட்டி மறைத்தன; சிற்சில மீண்டு வந்து கடலில் வீழ்ந்து அதனையுங் கலக்கின. இவ்வாறிருவருங் கடுஞ்சினத்துடன் போர் புரியும் போது, வாலி ஆற்றல் மிகுந்து, சுக்ரீவனை, வேழத்தைச் சிங்கந் தொலைப்பதுபோல நகங்களினாலுங் கரங்களினாலும் குத்திக் குலைகுலையச் செய்தான். சுக்ரீவன் அதனை யாற்றாதவனாய் இராமபிரானை அடைந்து உள்ளங் கலங்கி வணங்கினான். இராமர் சுக்கிரீவ! அஞ்சேல்! நுங்களிருவருக்கும் வேற்றுமை காண முடியாமையால் வாலியின் மீது அம்பெய்யாமலிருந்தேன். இக்கொடிப் பூவை மிலைந்து சென்று மீண்டும் போர் செய். வாலியை விண்ணுலகுக்குப் போக்கு கின்றேன் என்றார். அவ்வாறே சுக்ரீவனுங் கொடிப் பூவையணிந்துசென்று மீண்டும் வாலியுடன் போர் தொடங்கினான். அப்பொழுது வாலி, சினமிகுந்து, சுக்ரீவனை யெடுத்துப் பாரிலெற்றி மடிக்கவெண்ணி, இடுப்பிலொருகரமும், கழுத்தி லொரு கரமுங் கொண்டு தூக்கிக் கீழே அடிப்பதற் கோங்கினான். அப்பொழுதே புதரில் மறைந்து நின்ற இராமர் வில்லைக் குனித்து அம்பைப் பூட்டி வாலியின் மேலெய்தார். அம்பு சென்று வாலியின் மார்பிற் பாய்தலும் அவன் சுக்ரீவனைக் கொல்லு முயற்சியிற் றவறி, கலக்கமுற்றுக் கீழே வீழ்ந்தான். ஆயினும் இராமர் விடுத்த கணையை, மார்பைத் துளைத்துப் பின்புறஞ் செல்லுதற்கு முன், தன்கைகளாற் பற்றி எடுப்பதற்குப் பெரு முயற்சி செய்தும் இயலவில்லை. தேவர் தான் இக்கணையை விடுத்தனரோ வென்றையுறுவான். இத்தகைய கணையை என்மீது விடுதற்கு அவர்களுக் காற்றலுண்டோவென்று நினைப்பான். இது திருமாலின் நேமிப்படையோ! அன்றி நீலகண்டன் சூலப்படையோ! அன்றி முருகன்றன் வேற்படையோ! அல்லது இந்திரன் குலிசப் படையோ! அப்படைகளும் என் மார்பைத் துளைக்கு மாற்றலுடையன வல்லவே என்று கருதிப் புழுக்க முறுவான். இந்த நிலையில் வாலியின் மருமத்திலிருந்து சோரி பெருகுவதைச் சுக்ரீவன் கண்டு உடன் பிறப்பென்னும் பாசத்தாற் பிணிப்புண்டு கண்ணீர் சொரிதரச் சோர்ந்து வீழ்ந்தான். வாலி எவ்வாறாயினு மிவ்வாளியைப் பறிப்பேனென்று, மிக்க வலிமையுடன் அதனைப்பற்றி யிழுத்தும் இயலவில்லை; அவ்வாளியிற பொறித்துள பெயரையாயினு மறிவோமென் றெண்ணி நோக்க அதில் இராமன் என்னும் பெயரிருக்கக் கண்டான். உடனே வாலி இல்லறத்தைத் துறந்த இராமன், குரங்கின் பொருட்டு வில்லறத்தைத் துறந்தான். இதனால் அறந்தவறா சூரியகுலத்திற்குப் பழியுண்டாயிற்றே எண்றெண்ணி நகையும் நாணமுங் கொண்டான்; அந்தோ! இராமனும் இவ்வாறு புல்லியரைப்போன்று முறை திறம்பினனே என்று கூறினான். இச்சமயத்தில் ஸ்ரீராமரும் இளையபெருமாளும் வாலியின் கண் முன் தோன்றினார்கள். நாட்டு வாழ்க்கை முன்னொரு பாடத்தில் நகர வாழ்வின் நன்மை தீமைகளை அறிந்தோம். இப்பாடத்தில் நாட்டு வாழ்க்கையால் உண்டாகும் நன்மை, தீமைகளை அறிவோம். நாட்டு வாழ்க்கை என்பதற்குக் கிராமவாசம் என்று பொருள். நாட்டில் வாழும் மாந்தர் கள்ளங் கபடறியாத நன்மக்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று மொழியும் தன்மை அவர்களிடம் காணப்படாது. வஞ்சகத் திற்கும் அவர்கட்கும் நீண்ட தூரம். ஏமாற்றும் செய்கை அவர்களிடம் எட்டியும் நோக்காது. வளைந்ததெல்லாம் கொக் கென்பார்கள். வெளுத்ததெல்லாம் பாலென்பார்கள். இந்திய நாட்டினர்க்கே சிறப்பாயுரிய கடவுளன்பு அவர்கள் மாட்டு நிலைத்திருக்கும். விருந்தினரை யோம்பும் சிறந்த குணம் விளங்கி நிற்கும். அறத்தில் பெரிதும் நம்பிக்கையுடைவராயிருந்து இயன்றவாறு ஆற்றுவர். மேற்கூறிய குணங்கள் கிராமாந்தர மக்களில் பெரும்பாலானவரிடம் உள்ளவைகள். தான்றோன்றித் தம்பிரான்கள் சிலரும் இருப்பார்கள். அவர்கள் சிலரேயாதலால் அதைக்கொண்டு நாட்டு வாழ்க்கைத் தீதென்று கூறுதல் கூடாது. பழைய குருட்டு நம்பிக்கைகளும், சாதி சமயக் கட்டுப்பாடுகளும் கிராமாந்தரங்களிற்றான் தங்கள் அரசைச் செலுத்துகின்றன. நாட்டில் வாழ்வோர், தானென்ற இறுமாப்பில்லாதவர்கள்; ஆதலால், பெரியோர்களையும், கற்றவர்களையும் காணுமிடத்து அவர்கள், அன்பும் அச்சமுங் கொண்டு வேண்டும் உதவிகளைச் செய்யப் பின்வாங்க மாட்டார்கள். வெளிச்சிறப்புக்களை நோக்கி, ஈடுபடும் தன்மை அவர்கள் பால் உண்டு. உண்மைத் தன்மையையும், பொய்ம்மைக் குணத்தையும், பகுத்தறியும் ஆற்றல் அவர்கள் மாட்டுச் சிறிது குறைந்தேதான் இருக்கும். நகர வாசத்தில் இருப்பவர்கள் சிலரும், நகர வாழ்க்கையே மேன்மையென்று கனவு காண்பவர் சிலரும் நாட்டைப் பட்டிக் காடென்றும் நாட்டு வாழ்க்கையிலுள்ளவர்களைப் பட்டிக் காட்டுப் பாமர ஜனங்கள் என்றும் ஏளனஞ் செய்வதுண்டு. அவ்வாறு ஏளனஞ் செய்வோர் சிறிது ஆய்ந்தோய்ந்து சிந்தித்துப்பின்னர் பேசத் தொடங்குவார்களாயின், தாம் செய்வது தவறென்பதை உணர்ந்து கொள்வார்கள். எரிவதை இழுத்துவிட்டால் கொதிப்பது நின்றுவிடும் என்ற பழமொழி கூறுவதுண்டு. உணவில்லாமல் ஒரு மனிதனும் உயிர் வாழ வொண்ணாது. உணவுப் பொருள்களைத் தருவது நாடுகளே யன்றி நகரங்கள் அல்ல. தானிய வகைகளும், காய்கறி வகைகளும், நாட்டுப்புறங்களிலிருந்தே நகரங்களுக்குச் செல்லுகின்றன. அப்பொருள்களை உண்டுதான் நகரமக்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையைச் செலுத்துகின்றார்கள். பயிரிடுங் காலங்களில் கிராமாந்தரங்களை அடைந்து அங்கு வாழும் மக்களைக் காண் போமாயின் அவர்களின் விடா முயற்சியையும், உழைப்பையும், காணலாம். தாங்கள் விளைபுலங்களில் வேலை செய்யும்போது கடுமையான சூரிய வெப்பத்தையும் கடுமையான மாரியையும், பொருட்படுத்த மாட்டார்கள். நாட்டுமக்கள் உழைப்பின்றேல் உலகமே துன்பத்தில் உழன்றுகொண்டிருக்குமென்பது திண்ணம். மாந்தர்களால் பிடித்து வளர்க்கப்பட்டு நாடுநகரங்களில் வாழும் விலங்குகளைவிட, காடுகளிலும், மலைகளிலும், தன் விருப்பப்படி ஓடித்திரியும் விலங்குகளுக்கு மனோதைரியமும், உடல்வலியும் மிகுதியென்பது யாவரும் கண்ட உண்மை யாகும். அதுபோலவே, நகரங்களில் வாழ்கின்ற மக்களை விட நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு, மனவலிமையும், உடல் வலியும், நோயற்றவாழ்வும் மிகுதியாக உண்டு. நாட்டில் வாழ் கின்றவர்களிற் பெரும்பாலோர் கல்வியற்றவர்கள். அதனால் அவர்களுக்கு எத்தொழிலையும், எளிதில் முடிக்கும் வகை தெரியாமல் எப்பொழுதும் செய்து கொண்டு வந்த பண்டைய முறைப்படியே மிகவும் இடருடன் செய்து முடிப்பர். நாட்டு மக்களிடை இன்னும் நாகரிகம் பரவவில்லை. அதற்குக் காரணம் கற்றவர்களேயன்றி மற்றவர்களல்லர். கற்றவர்கள் அனைவரும், நாட்டு வாழ்க்கையை வெறுத்து, நகரவாழ்க்கையை மேற் கொண்டு, தந்நலத்தைப் பெருக்குவதிலேயே கண்ணுங்கருத்து முடையவர்களாய் இருப்பதனாற்றான் நாட்டுப்புறங்கள் தாழ்ந்த நிலையிலிருக்கின்றன. உடல் நலத்திற்கும், நாட்டின் முற்போக் கிற்கும் நாட்டு வாழ்க்கை சிறந்ததாதலால் நாட்டுப்புறங்களை இனியேனும் நகரமாந்தர்கள் சீர்திருத்தம் செய்யவேண்டியது இன்றியமையாத கடமையாகும். கற்றறிந்தவர்கள் நாட்டுப்புறங்களிலிருந்து கொண்டு அங்குள்ள மக்களைக் கல்வியில் ஊக்கங்கொள்ளுமாறும், அரசியற் செய்திகளை அறியுமாறும், உலக முற்போக்கை உணருமாறும் செய்துகொண்டிருப்பார்களாயின் அதைவிடச் சீரிய நாட்டுத்தொண்டு வேறொன்றில்லை. நாட்டுப் புறங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒற்றுமையுடையவர்களாயிரார். ஒருவர்க்கொருவர் கலகம் விளைத்துக் கொண்டிருப்பர். நமது நகரநீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகள் அனைத்தும் நாட்டுப்புறங்களிலிருந்து வந்தனவாகவே காணப்படும். எந்தச் சிறு கிராமத்திலும் கட்சிகள் இருப்பதைக் காணலாம். கட்சிகள் இல்லாமல் ஒற்றுமையுடன் உறையும் கிராமங்கள் சிலவேதான் காணப்படும். கிராமங்களில் ஒற்றுமையில்லாம லிருப்பதற்குக் காரணம் கல்வியின்மையே யாகும். கல்வியுடையவர்கள் நாட்டுப் புறங்களில் வாழ்ந்துகொண்டு அம்மக்களிடை ஒற்றுமையை நிலவச்செய்து நாட்டு வளத்தைப் பெருக்க வேண்டுவது மிகவும் அவசியமாகும். நாட்டில் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை ஆடம்பரமற்ற சீரிய வாழ்க்கையாகும். நகர வாழ்க்கையில் ஆகும். செலவைக் காட்டிலும், நாட்டு வாழ்க்கையில் குறைந்த செலவேயாகும். நாட்டு வாழ்க்கையை வெறுத்து நகர வாழ்க்கையை விரும்பிய எத்தனையோ செல்வவான்களின் குடும்பங்கள் சீரழிந்துபோன வரலாறுகளைக் கேட்டிருக்கலாம். நாட்டு வாழ்க்கையிலேயே நிலைத்திருக்கும் குடும்பங்களிற் பெரும்பாலானவை மேலும் மேலும் செல்வத்தாற்சிறந்து திகழ்வதையுங் காணலாம். நகர வாழ்க்கையில் நன்மையுந் தீமையும் கலந்து காணப்படுவதைப் போல் நாட்டு வாழ்க்கையில் இல்லை. நாட்டு வாழ்க்கையில் நன்மையுண்டே யன்றித் தீமையில்லை யென்பதை மிகவும் நன்றாய் ஆராய்ந்தறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகவே இளைஞர்களாகிய நாமும், கல்வியைக் கற்ற பின்னர் நாட்டின் வளப்பமே உலகமுன்னேற்றத்திற்குச் சீரிய வழி என்னும் மேலான கொள்கையை உடையவர்களாய் நாட்டுப்புறங்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கவேண்டும். அவ்வாறு செய்தால் தான் நாம், நாட்டிற்கு ஊழியம் புரிந்தவர் களாகவும் கடவுளுக்குத் தொண்டு செய்தவர்களாகவும் அரசனுக்கு அன்பு செலுத்தியவர்களாகவும், ஆவோம். பண்டைக் காலத்தில் நமது நாட்டிற்றோன்றி வாழ்ந்திருந்த பெரியோர்களும், புலவர் களும், பெரும்பாலும் நாட்டு வாழ்க்கையையே சிறந்ததாகக் கொண்டிருந்தார்கள் என்பதை என்றும் மறவாமல் நாம் சிந்தையிற் பதிய வைத்துக்கொள்வோமாக. கௌரி தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களுள் ஒருவராகிய பாண்டியமன்னர் களுக்குத் தலைநகரம் தென்மதுரையாகும். அந்நகரத்தில் விக்கிரமபாண்டியன் அரசாண்டு வந்தகாலத்தில் விரூபாக்கன் என்னும் அந்தணன் ஒருவன் கற்பில் வடமீனனைய சுபவிரதை என்னும் பெண்மணியுடன் கூடி இல்லறத்தை இனிது நடத்திவந்தான். கொழுநன் மனைவிகளிருவரும் ஒற்றுமையுடன், இல்லறத்தார் ஆற்றவேண்டிய அறங்களனைத்தையும் குறையாது நிறைவேற்றிக் கொண்டிருந் தார்கள்; போதிய செல்வங்களையும் பெற்றிருந்தனர். அதனோடு சிவபிரான் திருவருளுக்கும் இலக்காக இருந்தனர். இருந்தும் மக்கட்பேறு என்னும் செல்வ மட்டிலுமில்லை, அதனாலவர்களிருவரும், பல நோன்புகளை மேற்கொண்டனர்; பல அறங்களை இயற்றினர், அல்லும்பகலும் இடைவிடாமல், அங்கயற்கணம்மை யையும், சொக்கநாதரையும் போற்றிப் புகழ்ந்தனர். இவற்றின் பயனாக நீண்டநாள் சென்றபின் சுபவிரதை இறைவனருளால் கருவாய்க்கப் பெற்று, நல்லநாளில் ஒரு பெண்மகளை ஈன்றாள். அம்மகவுக்குக் கௌரி என்று திருநாமமிட்டு மிக்க அன்புடனும் ஆதரவுடனும் இருமுது குரவரும் வளர்த்து வந்தனர். கௌரிக்கும் ஐந்தாண்டு நிரம்பியது. அப்போது கௌரி யானவள், பிறவிப் பிணியைத் தவிர்த்து அழிவிலின்பமாகிய வீடுபேற்றைப்பெற எண்ணியவளாய்த் தன்தந்தையை நோக்கி, அன்புடன் வணங்கி, எந்தையே! இப்பிறவித்துயரை ஒழித்து இறைவன் திருவடிப்பேற்றை எய்துதற்கேற்ற மறை மொழியாது? அதனை அடியேற்குக் கூறியருளவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். இது கேட்ட விருபாக்கன், தனது திருச்செல்வியின் அறிவைவியந்து, அவளுக்கு உமாதேவியின் திருமறையைக் கற்பித்தான். அவ்வம்மையும் உமாதேவியின் திருமறையை, எப்பொழுதும் அச்சத்துடனும், அன்புடனும், நாத்தழும் பேறுமாறு ஓதிவந்தாள். விரூபாக்கன் கௌரி தேவியை, பிற மச்சரிய விரதத்தை மேற்கொண்டவனாகவும், நல்லகுடியிற் பிறந்தவனாகவும், வேதங்களைத் துரிசற ஓதினவனாகவும், நல்லொழுக்க முடையனவனாகவும், சிவபக்தியுடைய வனாகவும் உள்ள ஒருவனுக்கே மணஞ்செய்து கொடுத்தல் வேண்டும். அத்தகைய மணமகன் வரும்நாள் எந்நாளோ என்று தன்மனத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தான். விரூபாக்கன் இவ்வாறிருக்கும் நாளில் கௌரிக்கும் எட்டாவதாண்டு நிறைவெய்தியது. மணம் செய்யும் காலமும் கிட்டியது. ஒருநாள் அயலூரில் உள்ள ஒரு வைணவப் பிரமசாரி ஒருவன் ஐயமேற்கும் பொருட்டு ஆங்குற்றான். அவனுக்கு விரூபாக்கன் தன் பெண்ணை மணம்புரிவிப்பதாகக் கூறி அவன் கையில் நீர்வார்த்தான். இதுகண்ட விரூபாக்கன் மனைவி, சுற்றத்தார் முதலியவர்கள் மனந்தளர்ந்து, ஊர், குலம், மரபு, கல்வி, ஒழுக்கம் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளாமல் மறுகில் பிச்சை யேற்றுவந்த ஓரந்தணனுக்குத் தன் மகளை மணஞ்செய்து கொடுக்கத் துணிந்தனனே! இதற்கு என்செயக் கடவோம் என்று கலக்க மெய்தினர். பின்னர் அவன் வரலாற்றை உசாவியறிந்து இவன் நமது குடிக்கு ஒப்பானவனே. ஆயினும் வைணவன் என்னும் குற்றம் ஒன்றே யுளது. மணம் செய்து கொடுப்பதாகக் கரத்தில் நீரூற்றி உறுதிசெய்து கொடுத்தபின் என்னசெய்வது? மணஞ்செய்து கொடுப்பதுதான் முறை யாகும் என்று நினைத்து மணத்திற் கிசைந்தனர் இசைந்தபின்பு விரூபாக்கன் வேதமுறைப்படித் தீயின் முன்பாகத் தன் பெண்ணைப் பொற்பணிகளாற் புனைவித்து அவ்வைணவப் பார்ப்பனனுக்கு மணஞ்செய்து தந்தான். பின் பற்பல வரிசைகள் செய்து கௌரியை மணமகனோடும் அவனுடைய உரிமையூரை அணுகுமாறு செய்தான். வைணவப் பிராமணன் கௌரியுடன் தனது இல்லத்தில் நுழையும்போது, அவனுடைய அன்னை தந்தையர், கௌரியையும், அவளுடைய சைவப் பொலிவையும், சிவசிந்தனையையும் கண்டனர். அதனால் மிகவும் வெறுப்பும் பொறாமையும் எய்தினர். அவளுடன் ஒருபொழுதாயினும் இனியவுரை புகலுவதில்லை எப்போதும், அவளைக் கடிந்துபேசித் தங்களுடன் ஒன்று சேர்க்காமல் அவளை வேறாக ஒதுக்கிவைத்தே ஒழுகுவாராயினர். இவ்வாறிருக்கும்போது ஒருநாள் கௌரியை மட்டிலும் தனியாகவிட்டுவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு அனைவரும் வேற்றூருக்குச் சென்றுவிட்டனர். அப்போது கௌரி பலநாட் களாகச் சிவனடியார்களைக் காணப்பெறாமையால் மிகவும் வருந்தி, சிவபெருமானிடத்து அன்பில்லாத மனமே இரும்பாகும்; சிவனடியாருக்குத் தொண்டியற்றாத உடலே மரமாகும்; ஐம்புலன்களையும் சிவனிடத்துச் செலுத்தாத உருவமே பாவை யாகும்; எவ்வுயிர்களுக்கும் உறுதிகளாயுள்ளவை இம்மை மறுமை இன்பங்களே; அவற்றை அளிக்கவல்லவர் எங்கும் நிறைந்த முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானே யாவர்; அவர் சிந்தை, சொல், செயல் ஆய மூன்றினாலும் போற்றும் அன்பரை விட்டு அகலாமல் உறைந்து அருள்செய்பவர்; அவ் அடியார்களுக்கு அருள்புரியும் பொருட்டுச் சிவபெருமான் கொண்டிருக்கும் வடிவம் அடியார் வடிவ மன்றோ? என்று இவ்வாறு சிந்தித்துக்கொண்டு வாடி இருந்தாள். அதுகாலை அன்பர்க்கிரங்கும் இரக்க வடிவினானாகிய சிவபெருமான். ஒரு கிழப்பிராமண வடிவங்கொண்டு, திரு நீறணிந்து, தலையினும், காதுகளிலும், கைகளிலும், கழுத்திலும், தோள்களிலும், மார்பிலும் அக்கமணிகளைப் பூண்டு, ஒரு கையிற் பொத்தகமும், குடையும் கொண்டு, ஒரு கையினால் தண்டூன்றிக் கொண்டு, தளர்ந்த கோவணமும், தோளாடையும், தலை நடுக்கமும், வளைந்த உடலும் உடையவராய்த் தளர்ந்த நடையுடன் கௌரியின் உறைவிடத்தை அடைந்தார். அவர் பலநாள் உணவின்றிப் பசியால் வருந்தினவர் போலவும் தோன்றினார். அவரைக் கண்ட கௌரி எதிரோடி வணங்கி இன்சொற் கூறி அழைத்து, ஒரு ஆசனத்திருத்தி அடிகாள்! தங்களை இங்கே காணப்பெறுதற்கு அடியேன் யாது தவம் நோற்றேனோ? என்று கூறி நின்றான். அக்கிழப் பிராமணர், நான் பசியால் வருந்து கிறேன். உணவு கொடுத்தல் வேண்டும் என்று கூறினார். கௌரி எனது மாமனும் மாமியும் வீட்டைப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்களே! என் செய்வேன் என்று மிகவும் கலங்கி மொழிந்தாள். அதற்குக் கிழ வேதியர் நீ உன் கரத்தினால் பூட்டைத் தொடுமுன் திறந்துகொள்ளும், வேண்டிய பொருள்களை எடுத்துச் சமைப்பாயாக என்றார். அவ்வாறே கௌரி வீட்டைத் திறந்து சமையலுக்கு வேண்டிய பொருள்களைக் கைக்கொண்டு அட்டிலகம் புகுந்து அறுசுவையுடன் அமுது செய்து வெளிப் போந்து கிழப்பூசுரரை நோக்கி எம்பெருமானே! உணவு கொள்ள எழுந்தருளவேண்டும் என்று கூறினாள். அவரும் திருவமுது செய்ய எழுந்தார். உடனே, கௌரி, தண்ணீரினால் அவரது திருவடிகளைக் கழுவி, அவரை வீட்டினுள் அழைத்துச் சென்று ஆசனத்திலமரச் செய்து, இலையில் சோறு, கறி முதலியவற்றை இட்டு, மலர்களால் அருச்சித்துத் தூப தீபங்காட்டி, சாஷ்டாங்கமாக வணங்கி, இன்சொற் புகன்று உணவு கொள்ளு மாறு வேண்டினாள். கிழப்பிராமணர் அமுது செய்த பின்னர் தமது சிவவேடத் தையும் தளர்ந்த கிழவடிவத்தையும் மறைத்து, பதினாறாட்டைப் பருவமும், மன்மத வடிவமும் அமைந்த காளை வடிவங் கொண்டிருந்தார். அதுகண்ட கௌரி அஞ்சி நடுநடுங்கி உடல் வெயர்த்துக் கைகளை நெரித்து, நாணி புறம் ஒதுங்கி நின்றாள். இவ்வமயத்தில் மணத்தினிமித்தம் அயலூருக்குச் சென்றிருந்த வைணவர்கள் வீட்டில் வந்து நுழைந்தனர். உடனே காளை வடிவினராகிய சிவபிரான் அழகிய சிறு குழந்தை வடிவங் கொண்டு, காற்பொரு விரலை வாயில் வைத்துச் சுவைத்து, அழுதுகொண்டு ஆடையின்றிக் கிடந்தார். கௌரியின் மாமனும் மாமியும் குழந்தையைக் கண்டு, அதன் பால் இரக்கங் கொள்ளாதவர்களாய் இக்குழந்தை ஏது? இங்குவரக் காரணம் யாது? என்று கேட்டனர். கௌரி தத்தனுடைய மனைவி இக்குழந்தையைச் சிறிது பார்த்துக் கொள் என்று வைத்து விட்டுப் போனாள் என்று கூறினாள். அதுகேட்ட மாமனும் மாமியும் மிகவும் சினந்து சிவபெருமான் மாட்டு அன்புடைய தத்தன் குழந்தையின் மீது நீ அன்புடையவளாய் இருக்கின்றாய் ஆதலால் நீ எங்கள் வீட்டில் இராதே, வெளியிற் போ என்று கூறி இரக்கமின்றிக் குழந்தையுடன் அவளை வீட்டைவிட்டு வெளியில் தூரத்தினார்கள். தந்தையும் தாயுமற்ற தனிக் குழவியைக் கையிலேந்தி, மறுகில் உற்ற கௌரி, சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து மன நொந்தாள். உமாதேவியின் திருமறையையும் சிந்தையிற் போற்றினாள். போற்றுதலும் கௌரியின் கையில் அழுது கொண்டிருந்த குழந்தையாகிய சிவபெருமான் ஆகாயத்திற் சென்று, இடப வாகனத்தின் மீதிருந்து காட்சி கொடுத்தார். உமாதேவியின் மந்திரத்தை மொழிந்த கௌரியை அனைவரும் காணுமாறு உமாதேவி வடிவமாக்கித் தமது இடப்பாக்கத்திற் கொண்டருளினார். தேவர்கள் மலர்மழை சிந்துமாறு சிவபெருமான் தமது உலகையடைந்தார். மண்ணுலக மாந்தரும் மகிழ்ந்து இறும்பூதடைந்தனர். இதுகண்ட வைணவர்கள் தாங்கள் செய்தது தவறென உணர்ந்து அன்று முதல் சிவபெருமானும் திருமாலும் ஒன்றேயன்றி வேறன்றெனக் கருதி வாழ்ந்தனர். தமிழ் மொழி உலகில் வாழும் மற்றையவுயிர்களைவிட மக்கள் உயரிய நிலை அடைந் திருப்பதற்கும், மக்கட் பிறவி உயர்ந்ததென்று கூறுவதற்கும் பொருட்டாயிருப்பது மொழியேயாகும். மொழி யின்றேல் ஒருவர் மனத்திற் றோன்றுங் கருத்தைப் பிறரறிவ தெங்ஙனம்? மொழியினாலேயே நாம் நமது கருத்தைப் பிறர்க் குரைக்கின்றோம். மொழியினாலேயே மக்களனைவரும் ஒன்று பட்டுறைய முடி கிறது நமது முன்னோர்களின் மாண்பையும், அவர்கள் புரிந்த சீரிய செயல் களையும் நாமறிந்தின்புறுதற்குக் காரணம் மொழியேயன்றோ? மொழியின்றேல் கலைகள் இல்லை. ஒரு நாட்டின் சிறப்பை விளக்குவதும், அந்நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுவதும் மொழியேயாகும். ஒவ்வொரு நாட்டினர்க்குந் தாய்மொழியென்ப தொன்றுண்டு, தாய்மொழியென்பது அவர்கள் பிறந்த நாள் தொட்டுப்பேசி வருமொழியே. நமது தாய்மார்கள் நம்மை எந்த மொழியினாற் சீராட்டித், தாலாட்டிப், பாலூட்டி வளர்த் தார்களே அதுவே நம் தாய்மொழியாகும். நாம் பல மொழிகளை நன்கு பயின்று அழகுறப் பேசுந் திறமை வாய்ந்திருப்பினுங் கருத்துக்களைச் சிந்திக்கு மொழியெதுவோ அதுவே தாய் மொழியாகும். நாம் உண்ணும்போதும் உறங்கும் போதும், குழந்தைகளுடன் கொஞ்சும்போதும், பேசும் மொழியே தாய்மொழியாகும். கனவிலும் நனவிலுங் காணுமொழியே தாய்மொழியாகும். தமிழ் நாட்டு மக்களாகிய நமது தாய்மொழி, தமிழ்மொழி என்பதை நாமறிந்திருக்கின்றோம். எல்லா நன்மைக்குங் காரணமாக இருப்பது தாய்மொழி யாதலின் அதனைப் போற்றுதல் அம்மொழியாளர்களின் கடமையாகும். ஒரு மொழியின் மாட்சியை அறிவோமாயின் அதனை முன்னிலு மிகுதியாகப் போற்ற முற்படுவோம். ஆதலால் நமது தாய்மொழி யாகிய தமிழ்மொழியின் பெருமையை அறிந்துகொள்வோம். இவ்வுலகில் எண்ணிறந்த மொழிகள் நிலவுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பற்பல மொழிகள் வளர்கின்றன. அம் மொழிகளிற் பண்டைக் காலந்தொட்டு வழங்கிவரும் மொழிகள் சில இடையிடையே தோன்றி வழங்குவனபல. காலத்தால் முற்பட்டமொழிக்குப் பெருமை மிகுதி உண்டு. பல மொழிகளையும்பற்றி ஆராய்ந்த வல்லுநர்கள் அம்மொழிகள் தோன்றிய காலத்தையுங் கணக்கிட்டுக் கூறுகின்றனர். நமது தமிழ்மொழியை அது இன்னகாலத்திற்றோன்றியதென்று கூறுவா ரொருவருமிலர்; வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டதாக விருக்கின்றது. நமது நாட்டுப் பழந்தமிழ் நூல்களிலெல்லாம் முதுதமிழ் என்று வழங்கப் படுகின்றது. நமது தமிழ்மொழி மிகப் பழங்காலத்து மொழியென்பதை மறுப்பா ரொருவருமிலர். தென்னி ந்தியாவே உலகிற் பழமையான நாடென்றும், முதல் முதல் மக்கள் தோன்றிய விடந் தென்னிந்தி யாவென்றுங் கூறும் அயல்நாட்டு வரலாற்றுக்காரர்களு மிருக்கின்றனர். அவர்கள் கூறுந் தென்னாடு குமரிமுனைக்குந் தெற்கிலிருந்து பூமி நடுக்கத் தாற் கடலிலழுந்திய தமிழகத்தையே யாகும். தென்றிசையிற் கடலாற் கொள்ளப்பட்ட நிலத்தை மேனாட்டினர் லெமூரியாக் கண்டமென்று கூறுகின்றனர். நமது பண்டைத் தமிழ் நூல்களில் தமிழகமென்று கூறப்படு கின்றது. அந்நாடு பண்டைத்தமிழ் மூவேந்தர்களி லொருவனாகிய பாண்டியன் ஆட்சியிலடங்கி யிருந்ததாகவுந் தெரிகின்றது. இவ்வரலாறுகளனைத்தும் உண்மை யென்று ஒப்புக்கொள்ளும் போது, உலகில் முதலிற்றோன்றிய மொழி தமிழ் மொழியே என்பதையு மொப்புக்கொள்ள வேண்டும். எது எப்படியாயினும் தமிழ்மொழி காலத்திற் கடங்காப் பண்டைய மொழி என்பது உள்ளங்கை நெல்லியென யாவர்க்கும் ஒப்பமுடிந்ததொரு முடிபாகும். மொழிகளைத் தனிமொழி என்றுங் கிளை மொழி என்று மிருபிரிவாகப் பிரிக்கலாம். தனிமொழி என்பது தானே இயற்கை யாகத் தோன்றி, மற்றொரு மொழியின் உதவி வேண்டப்படாமல் வழங்குவதாகும். கிளைமொழி என்பது ஒரு மொழியிற் பிறந்து பல மொழிகளின் உதவிகொண்டு வழங்குவதாகும். நமது தமிழ்மொழி மற்றைய மொழிச் சொற்களின் உதவியின்றி வழங்கக்கூடியது. பண்டைத் தமிழ் நூல்களில் வடமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழ் நூல்களிருக்கின்றன. இஞ்ஞான் றெழுதப் பெறும் உரைநடை நூல்களிற் பல, வடமொழி கலவாத் தனித் தமிழில் எழுதப்பட்டு நிலவுகின்றன. தமிழ்மொழி எந்தக் காலத்திலும் பிறமொழியின் உதவியை நாடியதில்லை. ஆனாலிடைப்பட்ட காலத்தில் தமிழ்மொழியில் வடமொழிச் செற்கள் விரவலாயின. வடமொழிப் பற்றுடையவர்களும் அயல்மொழியைப் பேணுபவர்களுந் தமிழ்மொழியைப் பயின்று அதிற் பல நூல்களும் உரைகளுமெழுதப் புகுந்த காலத்திற்றான் வடமொழிச் சொற்கள் மிகுதியாகத் தமிழ் மொழியிற் கலக் கலாயின. இதைக்கொண்டு சிலர் தமிழ் தனிமொழியன்றென்று கூறவு முன்வந்தனர். தமிழ் தனிமொழியே என்பதை மேனாட்டா ராய்ச்சி வல்லுநர் பலரும், தமிழறிஞர் பலரும் பலபடி ஆராய்ந்து ஒப்புக்கொண்டிருக்கின்றனர். தமிழினின்றும் பிறந்த கிளைமொழிகள், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவென்னும் நான்கு மொழிகளுமாம். அம்மொழிகளை ஆராய்வோமாயின் அவைகளிற் பல தமிழ்ச் சொற்கள் சிதைந்து வழங்குவதைக் காணலாம். அம்மொழி களிலுள்ள தமிழ்ச் சொற்களையெல்லாங்களைந்து விட்டால் அம்மொழிகள் வழங்கு மாற்றலற்றுவிடும். இப்பொழுது யாவராலுங் கொண்டாடப்பெறும் ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம்; அதிலுள்ள; தத்தீன் மொழிகளையும், கிரீக்கு வார்த்தைகளையும், வடமொழிச் சொற்களையும் மற்றும் பல மொழிகளின் சொற்களையுங்களைந்து விட்டால் அம்மொழியும் வழங்கு மாற்ற லற்றதாகிவிடும். இத்தகைய குறைபாடுகள் தமிழ்மொழிக் கில்லை. ஆதலாற்றான் நம் தமிழ் மொழியைத் தானே தனித்தியங்குங் கடவுளுக்கொப்பாகப் புகல்கின்றனர். பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம் பொருள்முன், இருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலை யாளமுந் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. என்ற மனோன்மணிய ஆசிரியரின் பாடல் மிகவுஞ் சிந்திக் கத்தக்க தொன்றாகும். ஒருமொழி மிகவும் பெருமையாகப் போற்றப்பட வேண்டு மாயின் அது நூல் வழக்கிலும் இருத்தல்வேண்டும். உலக வழக்கிலுமிருத்தல் வேண்டும். நமது மொழி பண்டைக் கால முதல் மக்களாற் பேசப்பட்டும் வந்தது. நூல்கள் வடிவாக எழுதப்பட்டும் வந்தது. தமிழைப்போலவே தனிமொழிகள், பழைய மொழிகள் என்று சொல்லத்தக்க அராபி, ஆரியம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கு, சீனம் முதலிய மொழிகளெல்லாம் உலக வழக்கிறந்தொழிந்தன. நூல் வழக்கில் மட்டில் நிலவு கின்றன. வரிவடிவின்றி ஒலி வடிவில் மட்டிலும் வழங்கும் மொழிகள் பலவிருக்கின்றன. இவையன்றி இரண்டுமின்றி இறந்த மொழிகளும் பல. மற்றையமொழிகள் உலகவழக்கிலிருந் தகன்றமைக்கும், நமதுமொழி என்று மகலாதிருப்பதற்கும், அவைகளின் ஒலியே காரணமாகும். தமிழ்மொழியின் ஒலி இயல்பாகப் பிறந்த இனிய ஒலியாகும். இதனைச் செந்திறத்த தமிழோசை என்றதனாலு மறியலாம். எடுத்துக் காட்டாகச் சிறு குழந்தைகள் முதலிற் பேசப்பழகுகின்ற, அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, அய்யா, கால், கை, கண், காது, பல், வாய், நா முதலிய சொற்களையும் இவற்றிற்கொத்தமற்றைய மொழிச் சொற்களையும் பாருங்கள், மற்றைய மொழிகளைவிடத் தமிழ்மொழியே இயற்கை ஒலியுடைய தென்பதை நுணுகி யாய்ந்தால் அறியலாம். அன்றியுந் தமிழ்மொழிக்குள்ள இலக்கணவமைதி மற்றெந்த மொழிகளுக்கு மில்லாத தொன்றாம். இலக்கணம் இயற்கையை ஒட்டியதாகவே அமைந்திருக்கின்றது. பண்டைக் காலமுதல் தமிழ்மொழியிலக்கண மாறுபாடின்றி, வழங்கிவருகின்றது. ஏறக்குறைய நாலாயிரத்தைஞ்ஞுறாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியத்திற் கூறப்படும் இலக்கணத்தில் இயல்பாக இக்காலத்தில் நாம் பேசுவதும், எழுதுவதும் போல் அமைந்திருக்கின்றன வென்றால் நமது மொழியின் இலக்கணப் பெருமையை ஒருபடித்து வரையறைப்படுத்தி என்னென்று கூறுவது? கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோடமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. என்ற பரஞ்சோதியார் பாடல் ஈண்டறியத் தக்கதாகும். தமிழ்மொழி பண்டைநாளில் தலை, இடை, கடை யென்ற முச் சங்கங் களாலும் வளர்க்கப்பட்டதாகும். தமிழ் நாட்டு மன்னர்களாற் போற்றப்பட்டதாகும். இறைவனருள் பெற்ற முனிவர்களாலும் ஆளப்பட்டதாகும். இறைவனாலேயே காக்கப்பட்டதாகும். ஆகவே தெய்வமொழி என்பது நமது செந்தமிழ் மொழியே என்பது பலவகைச் சான்றுகள் பற்றியும் தேறப்படும். நமது பண்டைத் தமிழ் நூல்களே இன்று நமது பெருமையை விளக்கிக்கொண்டு நிற்கின்றன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களை ஆராய்வோமாயின், அக் காலத்தில் நாம் அரசியலில் எவ்வாறிருந்தோ மென்பதையும் வாணிகத் துறையிலும், தொழிற்றுறைகளிலும், எத்தகைய மேம்பாடுற்றிருந்தோ மென்பதையும், நமது வாழ்க்கைகளை எந்த முறையில் நடத்தினோ மென்பதையுந் தெளிவாக அறியலாம். பதினெண்கீழ்க்கணக்கு நுல்கள் பெரும்பாலும் மக்கள் கைக் கொண்டொழுக வேண்டிய அறங்களைக் கூறிச் செல்கின்றன. அவற்றுள் தலைசிறந்து திகழுந்திருக்குறளின் பெருமையை அறியாதார் யாருளர்? மேனாட்டறிஞர் இதன் பெருமைகள் சிறப்பறிந்து போற்றுகின்றனர். ஐம்பெருங் காப்பியங்களென்ற நூல்களை ஆராய்வோமாயின், அவற்றுள் செந்தமிழ்ச் சுவையை யுண்டு மகிழ்வோம். பண்டைத் தமிழ் நூல்கள் உலக இயல்பை ஒட்டி எழுதப் பெற்ற சீரிய செந்தமிழ் நூல்களாகும், பண்டைச் செந்தமிழ் நூல்களில், மலைகளையுங், காடுகளையும், நாடு களையும், கடல்களையும், ஆறுகளையும் இன்னும் மற்றொவ் வொன்றையும் நேரே கண்டறிந்த இயற்கைப் புலவர்களாலேயே பண்டைக் காலத்தில் புனைந்துரையன்றி நூல்கள் எழுதப் பெற்று வந்தன. இனி வீட்டு நூல்களாக விளங்கும், தேவார, திருவாசக நாலாயிரப் பிரபந்த நூல்களின் பெருமையை யாரே கூற வல்லார்? கன்னெஞ்சையுங் கனிவித்துக் கடவுள் திருவடியிற் கருத்தூன்றச் செய்யும் அவற்றையொத்த அரிய நூல்கள் வேறு எம்மொழி யிலேனு முண்டோ? தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்டபாலை யழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக் கதலினைத் திறந்ததுங் கன்னித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். என்ற பாடல் தமிழ்மறைகளின் பெருமையைக் காட்டும் பொருட்டாகவே எழுந்ததாகும். இனிப் பிற்காலத்தில் பலபுராணங்கள் தோன்றுவனவாயின. அவைகள் பெரும்பாலும், மதவளர்ச்சி கருதி எழுதப்பட்டனவே யன்றி மொழிவளர்ச்சிகருதி எழுதப்பட்டனவல்ல. அவைகளும் பெரும்பாலும், வடமொழியிலிருந் தெழுதப் பட்டனவாகும். அக்காலத்திற்றான் வடமொழிச்சொற்கள் தமிழிற் கலக்கலாயின. அவைகளிலுங் கூடத் தமிழ்மொழியின் வளங்களைப் பரக்கக் காணலாம். இவ்வாறு எத்துறையிலுஞ் சிறந்து விளங்கும் நமது மொழி இஞ்ஞான்று நம்மாற் புறக்கணிக்கப் படுகின்றது. வயிற்றுப் பிழைப்பொன்றையே குறிக்கொண்டு தாய்மொழிப் பணியை மறந்திருக்கின்றோம். நமது மொழியை நாம் வளர்க்காத வரையிலும் நாம் தாழ்ந்த நிலையில்தானிருக்க நேருமென்பது ஆன்றோர் துணிபு. மொழிவளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முதற்படியாகும் என்பதை நாமின்னும் அறியாமலிருக்கின்றோம். ஆங்கிலேயர்கள் தம தாட்சியை உலகின் பல பாகங்களிலும் கடலிலும் நிறுவி இருப்பதற்குக் காரணம், அவர்கள் மொழியே யாகும். அவர்கள் ஆட்சி நடைபெறும் நாடுகளிலெல்லாம் அவர்கள் மொழியும் ஆட்சி செலுத்துகின்றது. ஆங்கிலேயர் களில் யாரேனுந் தாய்மொழியைக் கல்லாமற் பிறமொழியைக் கற்போருளரோ? தம்மொழியை முதலிற் பயின்றே பிறகு மற்றைய மொழிகளையும் பயிலப் புகுகின்றனர். நாமோ அவ்வாறில்லை. நமது மொழியை அடியோடு அலட்சிய மாயெண்ணிக் கைவிட்டு விடுகின்றோம். நாம் நீண்டநாள் கற்றுங் கல்வியில் தேர்ச்சி பெறாமலிருப் பதற்குக் காரணந் தாய்மொழிப் பயிற்சியின்மையேயாகும். எளிதிற் பயிலக்கூடியது தாய்மொழி. ஆதலால் அதனை முதற்கண்கற்று அறிவை வளப்படுத்திக்கொண்டபின் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம். கற்குங் காலமுங் குறையும். பொருட் செலவுஞ் சுருங்கும். ஆதலால் நாம் இனி நமது தாய்மொழியாந் தெய்வச் செந்தமிழ் மொழியை அன்புடன் கற்று மேன்மையையடைய முயலவேண்டும். நமது மொழியைப் புறக்கணித்தொழுகு வோர்க்கும் இதன் பெருமையை எடுத்துக் கூறிக் கற்குமாறு செய்யவேண்டும். பற்பல ஆராய்ச்சி நூல்களுந்தற்கால உலகினுக்கு வேண்டிய கலைகளும் வெளிவரச் செய்தல் வேண்டும். தமிழ் மொழி என்றசொல்லைக் கேட்டவுடன் நம் நெஞ்சங் குளிர வேண்டும். அன்பு மீதூரவேண்டும். அப்பொழுது தான் நாம் உண்மையான தாய்மொழித் தொண்டராக விளங்குவோம். தாய்மொழியை முதன்மையாகக் கருத்தூன்றிப் பயின்ற பின்னரே மற்றைய மொழிகளிற் கருத்தூன்றிக் கற்க முற்பட வேண்டும். இதனால் மற்றைய மொழிகளைக் கல்லாதிருக்க வேண்டுமென்பது கருத்தன்று. இம்மைக்குப் பயனளிக்கும் அரசாங்க மொழியையும் நாம் ஒவ்வொருவருங் கற்க வேண்டுவது முதன்மையாகும். இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்க வல்ல தாய்மொழியைக் கருத்தூன்றிக் கற்க வேண்டுவது எவற்றினு முதன்மையான கடமையாகும். வாலி வீடுபெற்ற வரலாறு இரண்டாம் பாகம். இராமபிரான் விடுத்த கணையால் வருந்தும் வாலியினெதிரே இராமர் வில்லுடன் வெளிப்பட்டு நின்றார். வில்லுடனெதிர் நின்ற அவரை நோக்கி வாலி கூறத் தொடங்கினான். உண்மையையும் மரபின் பெருமையையும் காத்து உயிர் துறந்த வள்ளலின் மைந்தனே! பரதனுக்கு முன் பிறந்தவனே! என்ன நினைத்தாய்! என்ன செய்தாய்! இரக்கத்தையும் நட்பையும் அறத்தையுந் தழுவி நின்றவனே! பிறர் தீமை செய்யாதவாறு காத்துத் தான் மட்டிலுந் தீமை செய்தால் அது தீமையாகாதோ? சித்திரத்திலு மெழுத வொண்ணா வுருவமுடையவனே! அரச நீதி என்பது உன்குலத்திற்கு உரிமையான தொன்றன்றோ? உனதுயிரைச் - சனகன் மகளாகிய அன்னப் பேடு போன்றவளை - அமிழ்துடன் பிறந்த தேவியைப் பிரிந்தவுடன் மனமயக்கங்கொண்டு இத் தகைய செய்கையைச் செய்யத் துணிந்தனையோ! அரக்கர் ஒர் தீமைசெய்து நீங்குவாராயின் அதன் பொருட்டு வேறொரு குரங்கரசைக் கொல்லுமாறு உங்கள் அரசநீதியில் கூறப்படு கின்றதோ! அப்பா! இராமனே! உனதிரக்கத்தை எங்குகுத்தாய்! என்பால் எப்பிழை கண்டாய்! நீயே நிந்தையைத் தாங்கத் துணிந்தால் புகழைத் தாங்குவார் யார்? மெலியவர்கள்தான், ஒழுக்கமாகவும் பெருந்தன்மையாகவும் நடந்துகொள்ள வேண்டுமோ, வலியோர் அறந் தவறி நடந்தால் அவர்களுக்குப் பழியில்லையோ? புகழ்தானுண்டோ? ஒருவர் துணையையும் விரும்பாத கொற்றவனே! பெற்ற தாதை கொடுத்த செல்வத்தை உன் தம்பிக் களித்துக் காட்டை யடைந்தாய். அதனால் நாட்டி லொரு கருமஞ் செய்தாய். இங்கே என் தம்பிக்கு என தரசைக் கொடுத்துக் காட்டிலொரு கருமஞ் செய்தாய். இதை விட உனக்குக் கருமம் வேறென்ன வேண்டும்? உடன் பிறந்தா திருவர், போர்செய்யுங் காலையில் நீ ஒளிந்துநின்று ஒருவர் மேலம் பெய்தல் அறமாகுமோ? வேறொருவனுக்குத் துணையாக வந்த நீ ஆண்மையுடன் எதிர்நின்று என்னுடன் போர் புரியாமல் ஒளித்து நின்று அம்பெய்துவிட்டு ஒரு வீரனைப்போல் என்னெதிரில் வந்து நிற்கின்றாயே! நூலியற்கையுந் துறந்தாய்! உன் குலத்தினர் இயற்கையையுந் துறந்தாய்! இராமனே! நீ வாலியைக் கொன்றாயல்லை! யாவர்க்கும் பொதுவாய் நின்ற அரச நீதியைக் கொன்றவனானாய்! என்று கடுஞ்சினத்துடன் கூறினான். உடனே இராமர் வாலியைக் கொன்றது முறைதானென் பதற்குக் காரணங் கூறத் தொடங்கினார். ஓ! வாலியே! நீ! துந்துபியென்பவனைக் கொல்லும் பொருட்டுப் பிலத்தினுட் புகுந்து பல நாட்களாக மீளவில்லை. அதுகண்ட உன் தம்பி தானும் பிலத்துட் சென்றிறப்பதாகக் கூறிப்பிலத்தினுட் புகும் போது உன் குலமுதியோர்கள் அவனைத்தடுத்து அரசாளுமாறு கூறினர். சுக்ரீவனதற்கு ஒருப்படாமல் என் முன்னவனைக் கொன்றவனைக் கொன்றுயானு மிறப்பேனே யன்றி யரசாள மாட்டேனென்று கூறினன். அப்பொழுது படைத்தலைவர் களும் அமைச்சர்களும் தேறுதல் கூறி, வற்புறுத்தி, அவனைக் கிட்கிந்தைக் கரசனாகமுடி புனைவித்தனர். பின்னர் நீ பிலத்தி லிருந்து மீண்டுவந்தவுடன் சுக்கிரீவன் உன்னை வணங்கி நடந்தசெய்தியைக் கூறி யரசாட்சியை உன்பாற் கொடுத்தான். குற்றமில்லாத அவன் தன்மையை யுணர்ந்தும் அவன் மீது மகிழாமற்சினங்கொண்டு கொல்லத் தொடங்கினை. அவன் உனக்காற்றாமல் உன்னையே சரணடைந்தும போற்றாது இகழ்ந் தனை. அவன் உயிர் பிழைக்கவேண்டி நாற்றிசைகளிலும் ஓடியும் விடாது தொடர்ந்து சென்றனை! வன்னியின் சாபத்தினால் நீ போகக்கூடாத மலையின் மீது சுக்ரீவன் சென்றதனால் அவனைக் கொல்லாது விடுத்தனை. பிறகு அவன் மனைவியையும் நீ கைப்பற்றிக் கொண்டாய்! இரக்கமென்று சொல்லப்படுவதும், குடிப்பிறப்பென்று சொல்லப்படுவதும், வீரமென்று சொல்லப் படுவதும், உண்மை ஒழுக்கமென்று சொல்லப்படுவதும், பிறன்மனையைக் கவர்ந்து கொள்வதுதானோ? நாம் வலிமை யுடையோ மென்றெண்ணி வீரத்தன்மை மாறுபட நடத்தலும், மனத்தைத் தீனெறியிற் செலுத்ததலும், எளியரை வருத்துதலும், அறநெறியைக் குலைத்தலும், பிறர்மனைவியர் மாட்டுப் பிழைசெய்தலும், அறிவுடையோர்க் கழகாமோ? அறத்தின் தகைமையையும், அது தவறினால், இம்மை மறுமையிற் பெரும் பயனையும், ஆராய்ந்தனையா? ஆராய்ந் தாயாயின் உன் தம்பியின் ஆரூயிர்த் தேவியைக் கவர்ந்து கொள்வையோ? இத்தகைய தீவினைகளை நீ செய்தமையாலும், சுக்ரீவன் எனதாருயிர்த்துணைவனாதலாலும் உன்னைக் கொன்றேன். பகைவராயினும் எளியர் என்று கூறுவாராயின் அவர்க்குற்ற தீதுதீர்ப்பது கடமையாகும் என்று இராமர் கூறி முடித்தார். அதற்கு வாலி ஐயனே! நான் சுக்ரீவன் காதலியைக் கவர்ந்தே னென்பதைப் பெருங்குற்றமாகக் கூறுகின்றாய்! உங்கள் குலத்தில் நடைபெறும் மணமுறைகளும், ஆண்களுக்கும் பெண் களுக்கு மமைந்த கற்புமுறைகளும் எங்கள் குலத்தினர்க்கில்லை. எங்களுக்கு மணமென்பதில்லை. அவரவர்கள் விருப்பம்போல நடந்து கொள்ளலாம். இம்முறைப்படி நான் செய்தது குற்றமாகாது இதனையறியாமலென்னைக் கொன்றமையால் நீயே தீ திழைத்தனை என்றான். உடனே இராமபிரான் வாலியே! நீ தேவர் குடியிற் றோன்றி அறநெறிகளை எல்லாமாராய்ந் திருக்கின்றனை யாதலால் விலங்காகாய்! அறத்தையறிவது அறிவேயன்றி உடலன்று. அறிவிற்சிறந்த நீ, பிழை புரியலாமோ? தன் காலை ஒருமுதலை பிடித்துக்கொள்ள அதற்காற்றாமல் ஆதி மூலமே என்றழைத்து வீடுபெற்ற விலங்கை விலங்கென்று கூறவொண்ணு மோ? சீதையை விடுவிக்கும் பொருட்டு இராவணனுடன் போர்புரிந்திறந்த என் சிறிய தந்தையைக் கழுசரசனென்று கூறலாகுமோ? நன்று தீதறியாமல் நல்லறிவின்றி வாழ்வதன்றோ விலங்காகும்? மனிதனாயிலும் பகுத்தறியுந் தன்மையற்றால் அவன் விலங்கன்றோ? நீ யறியாத நன்னெறிகள் ஒன்றுமில்லை என்பதை உன் சொற்களே உணர்த்துகின்றனவே! நீ எப்படி விலங்காவாய்! தக்கஇன்ன தகாதன இன்னவென்(று) ஒக்கவுன்னல ராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே மனுவின்நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே. என்ற நீதியையு முணர்ந்திருக்கின்றாய். காலனைக் கடிந்த நீலகண்டன்பால் இடைவிடா அன்பு பூண்டிருக்கின்றாய்! எக்குலத்தினராயிலும், யாவராயினும் அவராற்றும் வினையினால் மேன்மையுங் கீழ்மையு முண்டாகுமே யன்றிப் பிறப்பினாலில்லை என்பதை அறிந்திருக்கின்றாய்! அறிந்தும் இல்லறமுறையைக் கெடுத்தனையே! என்று கூறினார். அதற்கு வாலி ஐயனே! நீ கூறியவனைத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றேன். என்னைக் கொல்லுதற்குப் போந்த நீ செருக்களத்தில் நேரேநின்று கணை தொடுக்காமல் வேடர்கள் விலங்குகளை மறைந்து நின்று கொல்வது போல் மறைந்தும் அம்பெய்தனையே! இதுபோர் முறையாகுமோ? வீரமாகுமா? அறிவுடையோர்க் கேற்றதாகுமா? என்றான். அப்பொழுது இளைய பெருமாள் முன்வந்து இராம பிரான், ஆற்றேன் என்றடைந்தவர்களைக் காக்குங் கருத்துடை யவர். முன்னமே உன் தம்பிக்கு, முறை தவறி நடந்த வாலியைத் தென்புறத்திற் கனுப்புவேன் என்று உறுதி கூறியுள்ளார். அவர் செருக்களத்திற் றோன்றும் போது நீயும் அடைக்கலம் புகுந்தால் என்ன செய்யக்கூடும்? ஆதலாற்றான் மறைந்து நின்று கொன்றார் என்று கூறினார். பின்னர் வாலி நல்லறிவு வரப்பெற்று, இராமபிரானை வணங்கி, ஐயனே! நான் கூறிய மொழிகளைப் பொறுத்தருள் வாய்! குரங்கின் தன்மையாற் பலவாறு பிதற்றினேன். அவற்றை மனத்திற் கொள்ளாமல் என் பிறவி நோய்க்கு மருந்தளித்துப் புரந்தருளுவாய்! ஏவுகூர் வாளியால் எய்துநா யடியனேன் ஆவிபோம் வேலைவாய் அறிவுதந் தருளினாய் மூவர் நீ முதல்வனீ முற்று நீ மற்று நீ பாவ நீ தரும நீ பகையு நீ யுறவு நீ. புரமெலாம் எரி செய்தோன் முதலினோர் பொருவிலா வரமெலாம் உருவியென் வசையிலா வலிமைசால் உரமெலாம் உருவி என் உயிரெலாம் நுகருநின் சரமலாற் பிறிதுவே றுளதரோ தருமமே. என்று வேண்டிக் கொண்டான். பின்னும் இராமரைப் பார்த்து, ஐயனே! நான் தம்பிக்குத் துன்பம் செய்தேனாயினும், அவன் என்னை அழைத்து வந்து எனக்கு வீட்டரசைக் கொடுத்தான். அவன் எனது வெற்றரசை மேற்கொண்டான். நான் உன்பால் வேண்டும் வரமொன்றுளது. சுக்கிரீவன் எப்பொழுதாவது குடிமயக்காற் றீவினை புரிந்தாலும் அதைப் பொறுத்து அவனைக் காப்பாற்ற வேண்டும். என்மீது விடுத்த பகழியை அவன்மீது செலுத்தாதிருக்கவேண்டும். இன்னுமொன்று நின்பால் வேண்டிக் கொள்கின்றேன். என் தம்பியை உன் தம்பிமார்கள், தன்முன்ன வனைக் கொல்வித்தவனென்று இகழாதிருக்கச் செய்வாயாக. சீதையைத் தூக்கிச் சென்ற அரக்கனை எனது வாலாற் கட்டிக் கொணர்ந்து என் வலிமையைக் காட்டும் பேற்றை நான் அடைந்திலேன். ஆயினும் இதோ நிற்கும் அனுமான் எதையுஞ் செய்யுந் திறமுடையவன். இவ்வனுமானை நினது கரத்திலிருக்கும் வில்லாக நினைத்துக்கொள். என் தம்பியை நின்றம்பியாக வெண்ணிக்கொள். இவர்களைவிடச் சிறந்த துணைவர் உனக்கு வேறிலர். இவர்களைக் கொண்டு சீதையை நாடி யடைந்து நலமுறுவாயாக என்று இராகவனைப் பன்முறை பணிந்து வேண்டிக்கொண்டான். பிறகு, வாலி, சுக்கிரீவனை யழைத்து, குழந்தாய்! நீவருந் தற்க. மறைகளாலும் முனிவர்களாலுந் தேடரிய இறைவனே இராமனாக வந்திருக்கின்றான். அவனுடைய ஆற்றலுக்கு என்னைக் கொன்றதொன்றே ஏற்ற சான்றாகும். அவனுக்கு ஏவல் செய்வாரடையும் பெருமையை யாரே அளவிட்டுக் கூறவல்லார்? இராமன் பணியைத் தலைமேற்றாங்கி நடந்து இருமை யின்பங்களையும் பெறுவாய்! அரசியலினாற் செருக்குறாமற் காலம் நேர்ந்துழி இராமன்பொருட்டு உயிரையுங் கொடு! அவனுக்குக் குற்றேவல் புரிந்து நீடுவாழ்வாயாக என்று கூறி, இராமபிரானை நோக்கி மன்னவர்க் கரசன் மைந்தனே! இச்சுக்கீரிவனும் எனது சுற்றமும் உன்னடைக்கலமாவர் என்று புகன்று வணங்கினான். மீண்டும் சுக்கீரிவனைப் பார்த்து நினது மகன் அங்கதனை அழைத்துவா என, அவன் சென்று அப் பொழுதே அங்கதனைக் கொணர்ந்தான். அங்கதன் தந்தையின் நிலையைக் கண்டுநெஞ்சந்துடித்து, சிந்தையாற் செய்கையால் ஒர் தீவினை செய்திலாதாய், நொந்தனை அதுதானிற்க நின்முகம் நோக்கிக் கூற்றம் வந்ததே அன்றோ அஞ்சாது ஆரதன் வலியைத் தீர்ப்பார்.எந்தையே எந்தையே இவ்வெழுதிரை வளாகத்தியார்க்கும், பஞ்சின் மெல்லடியாள் பாகன் பாதுக மல்ல யாவும் அஞ்சலித் தறியாச் செங்கை யானையாய் அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் உன்னால் இன்னமுதீந்த நீயோ துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின்யார் சொல்லற்பாலார் என்று புலம்பினன். அவனை வாலி மார்புறத்தழுவி எவ்வுலகத் தினர்க்கும் பிறப்பும் இறப்பும் இயற்கையாகும். நான் செய்த தவத்தின் பயனாக இராமனே நேரிலுற்று வீடளித்தான். ஆதலால் உனது துயரந் தணிதி! இராமபிரானைப் பணிந்துகொள். எனது யிரைக் கொன்றவனென்றெண்ணாதே. உன்னுயிர் நலம்பெறும் வழியைத்தேடு, இராமபிரானுக்குப் போர் நேருங் காலத்து அவனது மலரடி பணிந்து உதவிசெய்து வாழ்வாயாக என்று , கூறி, இராமபிரானை நோக்கி இம்மைந்தனுமுனது கையடையாவான் என்று கூற அங்கதனும் இரவிகுலவீரர் பாதங்களை வணங்கினன். வில் வீரருந் தமது வாட்படையை யவனிடமீந்து இதனைத் தாங்குக என்று பணித்தருளினர். அங்ஙனமே அவனுந் தாங்கிநின்றனன். பிறகு வாலி, தனதுகையிற் பிடித்திருந்த கணையை நழுவவிட்டு வீடுபெற்றான். அக்கணையும் மார்பிற்றங்காது அப்புறஞ்சென்று, மேலெழும்பி வான் கங்கையிற் படிந்து மீண்டு, இராமபிரான் அம்புக்கூட்டையடைந்தது, விண்ணகத்திருந்து வானவர்கள் மலர்மாரி பொழிந்தனர். இயேசுநாதரின் வரலாறும் ஊழியமும் உரோம அரசாங்கத்திற்குட்பட்ட பலதீனாவிலுள்ள எருசலேம் பட்டினத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏரோதென்னும் யூதமன்ன னொருவன் அரசாண்டுவந்தான். அந்நாட்டிலுள்ள நாசரெத்தெனும் நகரில் மரியம்மாள் என்னும் பெயருடைய ஒரு பெண் மணி இருந்தாள். ஒருநாள் கடவுள் தூதன் அவளிடம் போந்து அவளை வாழ்த்தி நீ ஒரு ஆண்மகவைப் பெறுவாய். அதற்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் கடவுளுடைய பிள்ளை யென்று கூறப்படுவார் என்று கூறி மறைந்தான். அன்று முதல் மரியம்மை கருக் கொண்டாள். இவ்வம்மையை யோசேப் என்பவனுக்கு மணஞ்செய்ய முடிவுசெய்யப்பட்டி ருந்தது. யோசேப்பு, மரியம்மாள் கருக்கொண்டிருக் கின்ற செய்தியைச் செவிமடுத்து, மணஞ்செய்துகொள்ள ஒருப்படாதவனானான். ஆனால் கடவுள் தூதன் அவனிட மணுகி மரியம்மை இறைவனருளால் கருக்கொண்டி ருக் கின்றாளாதலின், நீ அவளை ஐயுறாது மணஞ்செய்து கொள்க என்றுரைத்துச் சென்றான். யோசேப்பும் அவளைத்தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். மரியம்மையாரின் கருவுயிர்ப்புக் காலத்தில், அந்நாட்டில் மக்கட் கணக்கெடுக்குமாறு அரசாங்கத்தார் முயன்றதால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் உரிமையூரையடைய வேண்டு வதாயிற்று. ஆதலால் யோசேப்பும் மரியம்மையாளும் அவர்கள் பழைய ஊராகிய பெத்லகேமுக்குச் சென்றனர். அவர்கள் மிகவும் வறிஞர்களாதலின் உறைவதற்கிடனின்று ஒருசத்திரத்தின் மாட்டுக்கொட்டகையில் வதிந்தனர். அக்காலத்தில் மரியம்மாள் கருவுயிர்த்தாள். மரியம்மையாள் பிள்ளைபெற்ற காலத்தில் அவ்வூருக்குப் புறத்தில் ஆட்டு மந்தைகளைக் காத்திருந்த இடையர்களைப் பேரொளி சூழ்ந்து கொண்டதைக் கண்டு மிகவும் வெருவினர். அப்பொழுது கடவுள் தூதர்கள் தோன்றி இடையர்களே நீங்கள் சிறிதும் அஞ்சற்க. இன்று தலைவராகிய இயேசுநாதர் தாவீதியின் ஊரிற் பிறந்திருக்கின்றார். சத்திரத்தின் மாட்டுத் தொழுவத்தில் கிழிந்த துணியைச் சுற்றிக் குழந்தையைக் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே அடையாளமாகும் எனப்புகன்று மறைந்தனர். அப்பொழுதே இடையர்கள் நகரினுட்புகுந்து பிள்ளையைக் கண்ணுற்று இச்செய்தியை எல்லோருக்கும் இயம்பினர். அப்பொழுது பலதீனாவின் கீழ்திசை நாட்டிலிருந்த மூன்று வானக் கலைஞர்கள், வானத்திலொரு புதிய விண்மீனைக் கண்டு, இது யூதருக்கு மன்னராகப் பிறந்திருப்பவரைக் காட்டு வதெனக் கடவுளருளாலுணர்ந்து, பொன் முதலிய காணிக்கை களை எடுத்துக்கொண்டு அப்பிள்ளையைப் பணிந்து கொள்ளும் பொருட்டு நாடிப் புறப்பட்டனர். அவ்விண்மீன், அவர்கள் முன் நகர்ந்து செல்ல அதைப் பின்பற்றிச் சென்று எருசலேமிலுள்ள யூதமன்னனையடைந்து யூதருக்கு அரசர் பிறந்திருக்கின்றாரா வென்றுசாவினர். உடனே ஏரோதும் மன்னன், யூதஅறிஞர்களை அழைத்து யூதர்களுக்கரசர் பிறப்பதைப் பற்றிக் கேட்டான். அவர்கள் வேதத்தை யாராய்ந்து நோக்கி, யூதர்களுக்கு மன்னர் பெத்லகேமில் ஒரு கன்னிகையின் வயிற்றிற் பிறப்பார். என்று சொல்லியிருப்பதாகக் கூறினார்கள். அதையறிந்த கீழ்திசைக் கலைஞர் மூவரும் பெத்ல கேமுக்குப் புறப்பட்டனர். அப்பொழுது ஏரோது அக்கலைஞர் களை நோக்கி ஐயா! நீங்கள் அப்பிள்ளையைக் கண்டு பணிந்த பின் எனக்கும் அக்குழந்தையின் உறைவிடத்தை அறிவித்துச் சொல்லுங்கள். யானும் அதைப் பணிந்து கொள்ளுவேன் என்று கூறினான். ஆனால் இவ்வாறு கூறியது உண்மையன்று, அக் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொலைசெய்வதற்குக் கூறிய வஞ்சக மொழியாகும். பிறகு அக்கீழ்திசைக் கலைஞர்கள் மூவரும், வான்மீன் வழிகாட்டப் பெத்லகேம் நகரத்தை நண்ணி அது சத்திரததின் மாட்டுத் தொழுவத் தெதிரில் வந்து நின்ற அடையாளத்தைக்கண்டு, இயேசுவை அறிந்து, பணிந்து கொண்டு, கடவுளின் முன்னறிவிப்பின்படி, அவர்கள் ஏரோது மன்னனுக்கு இச்செய்தியை அறிவிக்காமல் வேறு வழியாகத் தமது நாடடைந்தனர். யோசேப்பும் மரியம்மாளும் யூதர்முறைப்படி மகவுக் காற்றவேண்டிய கடன்களையாற்றிப் பெயரிடும் பொருட்டு எட்டாம் நாளிற் கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே இயேசுவைக்கண்ட பின்னரே உலகைத் துறப்பதென்று கடவுளால் வரம் பெற்றிருந்த சிமியோன் என்பவன், இயேசுநாதர் கோயிலுக்குப் போதருஞ்செய்தி யுணர்ந்து, தானுமங்குற்றுக் குழந்தையைக் கையிலேந்தி புகழ்ந்துபாடி, இனி, தான் மனவமைதியுடன் இறப்பதாக இயம்பி அகன்றான். பிறகு அம்மகவுக்குக் கோயிலிற் செய்யவேண்டிய கடன்களைச் செய்து, இறைவன் தூத னியம்பியவாறே இயேசு எனப்பெயரிட்டனர். இயேசு என்பதற்குத் தமது மக்களின் பாவங்களை நீக்கி மன்னிப்பவர் என்பது பொருள். பிறகு யோசேப்பும், மரியம்மையாளும் தாங்கள் நீங்கி வந்த நாசரெத் நகரத்திற்குப் புறப்பட்டனர். அப்பொழுது தேவதூதன், யோசேப்பின் முன்வந்து, ஏரோது இயேசுவைக் கொல்லும் பொருட்டுத் தேடிக்கொண்டிருப்பதால் அங்குச் செல்ல வேண்டா மென்றும், எகிப்துக்குப் போகுமாறுங் கூறிச்சென்றான். அவ் வாறே யோசேப்பும் மரியம்மையாளும் இயேசுநாதருடன், எகிப்தையடைந்து சிலநாள் வாழ்ந்து, ஏரோதிறந்த பின் நாசரெத்தை நண்ணினர். இயேசுநாதர், அவ்வூரில் தம் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டு நாளுக்கு நாள் அறிவிலும், கடவுளன்பிலும் முதிர்ச்சி அடைந்தார். அவர் தமது பன்னிரண்டா மாண்டில் தம் இருமுது குரவருடன், பகா பண்டிகையைக் கொண்டாடும் பொருட்டு எருசலேமுக்குச் சென்றார். அங்கே பேரறிஞர்களின் நடுவில மர்ந்து, கடவுளைப் பற்றிச் சொற்போர் புரிந்து, அனைவரும் அதிசய மடையுமாறு, அவர்களின் வினாக்களுக்கு விடை யிறுத்தார். பண்டிகை முடிந்தபின் யாவருந் தங்களூருக்குப் புறப்பட்டனர். யோசேப்பும் மரியம்மையாளும், இயேசுநாதர் தம்பின் வருவதாகக் கருதிக் கொண்டு, யாவருடனுஞ் சேர்ந்து நீண்டதூரஞ் சென்றனர். பின்பு பிள்ளையைப் பார்க்க அவர் காணப்படவில்லை. உடனே நாசரெத்தில் சென்று தேடிப் பார்த்தனர்; அங்கும் காணப்படவில்லை. ஆதலாலவர்கள் பலவிடத்தும் தேடிவிட்டு எருசலேமை அடைந்தார்கள். யோசேப்பும் மரியம்மையாளும், எருசலேமை யடைந்து நோக்கியபோது இயேசுநாதர் அறிஞர்களிடம் வழக்கிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அவரை அழைத்துத் தாங்கள் அவரைக் காணாமற் கவலுற்று நாடியதை நவின்றனர். அதற்கு இயேசுநாதர் ஏன் என்னை நாடினீர்கள்? நான் என் தந்தைக்குத் தகுந்தவைகளை யாற்ற வேண்டுமென்பதை யறியீர்களோ? என்று மொழிந்தார். பின்னர் அவர்களுடன் நாசரெத்தை யடைந்து பெற்றோர்களுக்கடங்கி நடந்து கடவுளன்பிற் சிறந்த யூதர்களின் முறைப்படி முப்பதாண்டுகளுக்குமேல், மக்களூழியம் புரியத் தொடங்கினார். இயேசுநாதரிவ்வாறு மூன்றைரை யாண்டுகள் மக்களூழியஞ் செய்து, முப்பத்து மூன்றரை யாண்டுகள் நிரம்பியபின், கி.பி . முப்பத்து மூன்றாம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் நாளிற் சிலுவையில் இறந்தார். இயேசுநாதர் மக்களை நல்வழிப் படுத்துவதற்கான அறவுரை பலவற்றைக் கூறியிருக்கின்றார், அவர் கூறியனவற்றுள் இன்றியமையாதன சிலவற்றை மாத்திரம் கீழே காணலாம். அவையாவன:- கடவுளை உருவ முடையவராகக் கருதி வணங்காமல் அருவமுடையவராக அறிந்து வணங்கவேண்டும் கடவுள் எங்கு மிருக்கிறார். ஆதலால் அவர் இவ்விடத்தில் தானிருக்கிறாரென்று கருதி அவரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குட்படுத்தாமல் எல்லா விடங்களிலும், எல்லாக் காலங்களிலும் அவரை வணங்க வேண்டும். தம் வலதுகை செய்வதை இடதுகை அறியாவண்ணம், அவ்வளவு மறைவாக - பிறர் புகழ இடங்கொடாமல், எதிர்மாறு கருதாமல் அறம்புரிய வேண்டும் மனத் தூய்மை யுள்ளவர் கடவுளைக் காணுவர் தன்பால் அன்பு செலுத்துகின்றவர்களிடத்தில் மட்டிலும் அன்பு பாராட்டு வதாற் பயனில்லை; தனது பகைவர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் கடவுள்பாற் தமக்குரிய அன்பைக் காட்டுவதற்கான வேடத்தைப் புனைதல் கூடாது ஒருவன் நோன்பைப் பிறரறிதல் கூடாது செல்வப் பொருள்களாற் கடவுளுக்குத் தனது கடமையை யாற்ற வொண்ணாது; தூய்மையான வுள்ளமே கடவுளுக்குக் கொடுக்குங் காணிக்கை யாகும். ஒருவன், தனக்கு, மற்றவர் எதைச் செய்யவேண்டுமென்று விரும்பு கின்றானோ, அதையே அவனும் மற்றவர்களுக்குச் செய்தல் வேண்டும். ஒருவன் தன் குற்றத்தைக் கடவுள் மன்னிக்கவேண்டுமென்று விரும்பினால், தானும் பிறர் குற்றத்தை மன்னிக்க வேண்டும். ஒருவன் உடம்பிலுள்ள அழுக்கும், உட்கொள்ளும் எந்த உணவும் அவனைத் தீண்டாதவனாகச் செய்யமாட்டா; அவனுள்ளத்திலிருந் துண்டாகும் சினம். பகை, பொய், வசைமாரி, பொருளாசை, காமம் முதலியவைகளே அவனைத் தீட்டுடையவனாக்கும். மனிதன் மனிதனாகவே கடவுளால் படைக்கப்பட்டான். இவ்வாறு இயேசுநாதர் மக்களுக்குக் கூறிய அறவுரை அளவற்றன. அவர் இரவு முழுதுந் தனித்திருந்து இறைவனைப் போற்றுவார்; பகல் முழுவதும் பொதுமக்களுக்கு உண்மையுரைகளைக் கூறுவார். அவர், நோயாளிகளின் பிணியைப் போக்கியும், பேய்பிடித்தவர்களின் பேயை யோட்டியும் இறந்தவர் களை யெழுப்பியும் நன்மை புரிந்து வந்தார். அவர் தன்னுடனுறையவும், தான் போகச் சொல்லுமிடங்களுக்குச் செல்லவும், தான் உலகத்தை நீத்தபின் தன்னைப்போல் மக்களுக்கு அறவுரைகளைக் கூறவும், தான் புரிந்த நற்செயல் களைச் செய்யவும், உலக முழுவதுந் தனது கொள்கையைப் பரவச் செய்யவும் இன்னோரன்ன காரியங்களுக்கு மாணவர்கள் பன்னிருவரைத் தெரிந்தெடுத்து அவர்களுக்குத் தனதாற்றலை அளித்தார். இயேசுநாதர் தனக்குண்டாகப் போகும் இறப்பைப் பற்றியும், இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைப்பற்றியும் அடிக்கடி தனது மாணவர்களிடந் தனித்துக் கூறிக் கொண்டி ருப்பார். அவர் யூதர்களுடைய கொள்கைகளை மறுத்தரைத் தமையால் அவர்களுடைய வெறுப்புக்குரியவராகிச் சிலுவையி லறையப்பட் டுயிர் துறக்க நேர்ந்தது. அவர் உலகமக்களுக்காற்றிய ஊழியத்திற்காகவே உயிர் நீத்தார் அவரிறந்தவுடன், அவ்வுடலை அர்மத்திய ஊரானாகிய யோசேப் என்பவனெடுத்தடக்கஞ் செய்தான். அவர் இறந்த மூன்றாம்நாள் உயிர்த்தெழுவதாய்க் கூறியிருந்தமையால், அவருடைய மாணவர்கள் அவருடலைத் திருடிக் கொண்டு போய் வைத்துக்கொண்டு, உயிர்த்தெழுந்த தாக உரைப்பார்களென்று அவர் தம் பகைவர்கள் கருதினர். அதனாலவர்கள் அவருடைய கல்லறையின் மிசை ஒரு பெருங்கல்லைப் புரட்டிவைத் தடையாளமு மிட்டனர். பிறகு மூன்றாம் நாள் இயேசுவின் மாணவர்களவரது கல்லறையை அடைந்தபோது அங்கு அடையாளமிட்டு வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருந்தது. அக்கல்லறையின் மீது இரு தேவதூதர்கள் உட்கார்ந்து கொண்டு இயேசு உயிரோடெழுந் தாரென்று உரைத்தார்கள். இயேசுவும் அவர்கள் முன் தோன்றினார். பின்னும் அவர் நாற்பது நாட்களிவ் வுலகிலிருந்து தமது மாணவர்களுக்குக் கடவுளைப்பற்றி பல மறைபொருள் களைக் கூறியருளினார். அவர் தனது மாணவர்கள் மூவருடன் உரையாடிக் கொண்டிருக்கையிலொருமேகம் இறங்கிவந்து அவரை ஏந்திக்கொண்டு மேலுலகஞ் சென்றது. பிள்ளைகளே! இயேசுநாதர் இவ்வுலகிற் பிறந்து மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காக உழைத்த உழைப்பையும், அடைந்த துன்பங்களையும், அதனாலேயே அவர் உயிர் துறக்க நேர்ந்ததையுஞ் சிந்தித்துப் பாருங்கள்! சிந்திப்போமாயின், நாமும் மக்கட் பிறவி எடுத்ததின் பயனாய் மக்களின் முன்னேற்றத் திற்காக உழைத்துக்கடவுளருளைப் பெறுவதற்கு முயல்கின்றவ ராவோம். மூன்றாம் செய்யுட் பாடம் 1. கடவுள் வணக்கம் ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட ஒளியாகி, வெளியாகி, உருவும் ஆகி, நன்றாகித், தீதாகி, மற்றும் ஆகி, நாசமுடன் உற்பத்தி நண்ணா தாகி, இன்றாகி, நாளையும் ஆய், மேலும் ஆன எந்தையே! எம்மானே! என்றென் றேங்கிக், கன்றாகிக், கதறினர்க்குச் சேதா ஆகிக் கடிதினில் வந்து அருள்கூரும் கருணைவிண்ணே! 1 அருள் பழுத்த பழச்சுவையே! கரும்பே! தேனே! ஆர் அமிர்தே! என் கண்ணே! அரியவான பொருள் அனைத்தும் தரும்பொருளே! கருணைநீங்காப் பூரணமாய் நின்றஒன்றே! புனித வாழ்வே! கருதரிய கருத்ததனுள் கருத்தாய் மேவிக் காலமுந் தேசமும் வகுத்துக் கருவிஆதி விரிவினையும் கூட்டிஉயிர்த் திரளை ஆட்டும் விழுப்பொருள்ளே! யான்சொலும் விண்ணப்பம் கேளே. 2 நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம் நித்தம்வர உங்களைஇந் நிலைக்கே வைத்தார் ஆரே? அங்கு அவர் பெருமை என்னே! என்பேன்; அடிக்கின்ற காற்றே! நீ! யாராலேதான் பேராதே சுழல்கின்றாய்? என்பேன்; வந்து பெய்கின்ற முகில்காள்! எம்பெருமான் உம்போல் தாராள மாக்கருணை பொழியச் செய்யும் சாதகம் என்னே! சுருதிச் சாற்றும் என்பேன். 3 உரைஇறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி ஒலிக்கின்ற கடலே! இவ்வுலகம் சூழக் கரையின்றி உன்னைவைத்தார் யாரே? என்பேன்; கானகத்தில் பைங்கிளிகாள்! கமலம் மேவும் வரிசிறைவண் டினங்காள்! ஓதிமங்காள்! தூது மார்க்கம் அன்றோ நீங்கள், இது வரையிலேயும் பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு பேசியதுண் டோ? ஒருகால் பேசும் என்பேன். 4 தேவர்தொழும் வாதவூர்த் தேவே! என்பேன்; திருமூலத் தேவே! இச்சகத்தோர் முத்திக்கு ஆவல்உறச் சிவவென்வாக் குடனே வந்த அரசே! சும் மாவிருந்துன் அருளைச் சாரப் பூவுலகில் வளர் அருண கிரியே! மற்றைப் புண்ணியர் கா ளோ! என்பேன்; புரையொன்றில்லா ஓவியம்போல் அசைவறவும் தானே நிற்பேன், ஓதரிய துயர்கெடவே உரைக்கும் முன்னே. 5 தாயுமானார். 2. தமிழ்த்தாய் சீரொடு நிலவும் செந்தமிழ்த் தாய்! உன் செழுங்கலைத் தேனினைக் குடித்தோர், பாரினில் இயற்கைப் பண்பிலா தொழிந்த மொழிவிடம் பருகுவர் தாமோ? பேர்சுவை அமுதே! கருணையின் பெருக்கே! பேசிடும் பலமொழி பெற்றோய்! ஆர்வமோ டுன்னைப் பயின்றுனக் கான பணிகளை ஆற்றிட அருளே! 6 குலங்குல மாக நீதியை வகுத்துக் கூறிடும் கலைகளை மதித்தல் நலம்நிறை திருவள் ளுவர்மொழி உணர்ந்தோர் தம்மிடை நண்ணிடு மோதான்? பலபெரும் இயற்கை வளங்களைப் புகலும் பண்டமிழ்க் கலைபயில் எவரும் கலப்பிலாப் பொய்கள் புகன்றிடும் நூலைக் கனவிலும் கருதுவர் தாமோ! 7 இவ்வுல கதனில் இன்பவாழ் வடைதற்கு ஏற்றநல் நெறிகளை இயம்பும், செவ்விய நலஞ்சேர் செந்தமிழ் மொழியைச் சீர்பெறச் செய்திடல் வேண்டின், பல்வகைப் புதிய கலைகளை எல்லாம் பண்புற ஆக்கிடல் வேண்டும்; ஒல்வகை அறிஞர் ஆய்வுரை நூல்கள் உதவிட முன்வரல் வேண்டும். 8 செந்தமிழ் எனவே மொழிந்திடும் காலைச் சிந்தை யோடு உடலும் உருகிடப் புந்தியிற் புதிய எழுச்சியும் தோன்றல் பொருஅரும் அன்பினின் குணமே. இந்தநல் உலகம் எங்கணும் தமிழின் இசைதனைப் பரப்பிடல் வேண்டும்; மைந்தர்கள் மாதர் மகிழ்வொடும் பயின்று மாசற வாழ்ந்திடல் வேண்டும். 9 மொழிவளம் அதுவே மக்களின் வளம்ஆம் என்றதோர் முதுமொழி அதனைக் கழிபெரும் கருத்தொடு உணர்ந்து அதற்கு ஆன வகையினைப் புரிந்திடல் தாமே இழிதரு நிலையில் இருந்திடும் தமிழர் இன்புறற்கு உரியதோர் செயலாம்; ஒழிவற இன்னே தாய்மொழி வளத்திற்கு உழைத்திட ஊக்கமோடு எழுமின்! 10 சிந்தையை உருக்கும் சிலப்பதி காரம், செழுமணி மேகலை, வளம்சேர் செந்தமிழ்ச் சிந்தா மணி, புகழ்க் கம்பர் செப்பிய சுவைமிகு பாடல், நந்தமிழ் நாட்டின் பழம்நிலை நவிற்றும் நல்லதொல் காப்பிய நூலும் முந்துறப் பெற்றும் மூடராய் உறைதல் முதுக்குறை வுடைமையும் ஆமோ! 11 தமிழர்கள் வீரம் விளக்கிடும் புறநா னுறெனும் தாவறு நூலும், கமழ்புகழ் சேரர் மாண்புரை பதிற்றுப் பத்தெனும் காசறுகலையும், அமிழ்துறழ் தொகைநூல் ஆவன பலவும், அமைந்தொளிர் நந்தமிழ்த் தாயை இமிழ் கடல் வரைப்பின் எங்கணும் பரப்ப எழும்புவீர்! எழும்புவீர்!! இன்னே! 12 திசையெலாம் சங்கம் அமைத்திட எழுமின்! தென்மொழிப் புலவர்கன் பெயரால் வசைஇலாத் திறல்சேர் வீரர்கள் பெயரால், வாய்மைசேர் வள்ளல்கள் பெயரால், இசைநிறை சோழர் பாண்டியர் சேரர் இவர்திருப் பெயர்களால் எங்கும் நசையுடன் கூடிப் போற்றுமின்! களித்தே! நற்புகழ்த் தமிழ்க்குடிப் பிறந்தீர்! 13 சாமி, சிதம்பரனார். 3. பழமொழி வீங்குதோள் செம்பியன் சீற்றம், விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு முடியும் திறத்தால் முயலஆம்; கூர்அம்பு அடி இழுப்பின் இல்லை அரண். 14 பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா ஈர்ஐம் பதின்மரும் போர்எதிர்ந்து ஐவரோடு ஏதிலர் ஆகி இமைவிண் டார்; ஆதலால் காதலரோடு ஆடார் கவறு. 15 அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைகள் எனப்பட்டார் - நல்ல வினைமரபின் மற்றதனை நீக்க; அதுவே மனைமரம் ஆய மருந்து. 16 ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை, அந்நாடு, வேற்றுநாடு ஆகா, தமவேஆம், ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல். 17 உணற்குஇனிய இந்நீர் பிறிதுழி இல்என்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்; - கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலில் கேட்டலே நன்று. 18 எனைப்பலவே ஆயினும் சேய்த்தாய் பெறலில் தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே; இனக்கலை தேன்கிழிக்கும் எற்கல்சூழ் வெற்ப! பனைப்பதித்து உண்ணார் பழம். 19 நாடி நமர்என்று நன்கு புரந்தாரைக் கேடு பிறரொடு சூழ்தல், கிளர்மணி நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாம் இருந்த கோடு குறைத்து விடல். 20 சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக் கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை இல். 21 அகலம்உடைய அறிவுடையார் நாப்பண், புகல்அறியார் புக்குஅவர் தாமே, - இகலினால் வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ பாண்சேரிப் பற்கிழிக்கும் ஆறு. 22 தம்குற்றம் நீக்கலர் ஆகிப், பிறர்குற்றம் எங்கெங்கும் தீர்த்தற்கு இடைபுகுதல் - எங்கும் வியன்உலகில் வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல். 23 முன்றுறையரையனார் 4. திருக்குறள் 24. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்; ஆகுல நீர, பிற. 25. தந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல். 26. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன்மகனைச் சான்றோன், எனக் கேட்ட தாய். 27. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி; இவன் தந்தை என்நோற்றான் கொல்? எனும் சொல். 28. இனிய உளவாக இன்னாத கூறல்; கனி இருப்பக் காய்கவர்ந் தவறு. 29. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப்பெரிது. 30. பயன்தூக்கார் செய்த உதவி, நயன் தூக்கின், நன்மை கடலில் பெரிது. 31. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்; மலையினும் மாணப் பெரிது. 32. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்; மக்கட் பதடி எனல். 33. வறியார்க்கொன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீர துடைத்து. 34. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக; உலகியற்றி யான். 35. மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் பழித்தது ஒழித்து விடின். 36. வாய்மை எனப்படுவது யாதெனின், யாதொன்றும் தீமை இலாத சொலல். 37. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர்செகுத்து, உண்ணாமை நன்று. 38. தன்உயிர் நீப்பினும் செய்யற்க; தான் பிறிது இன்உயிர் நீக்கும் வினை. 39. எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 40. அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என் உடையரேனும் இலர். 41. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. 42. தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும். 43. உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார் உடையது உடையரோ? மற்று. திருவள்ளுவர். 5. மீனாட்சி யம்மை குறம் குறத்தி தனது முன்னோர் பெருமை கூறல் பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடி என் பாட்டி, பூமகள், மா யவன்மார்பில் பொலிவள்என்று சொன்னாள்; மற்றவள்பெண் களில், எங்கள் பெரிதாய், கலைமான், மலரயனார் திருநாவில் வாழ்வள் என்று சொன்னாள். பெற்றஎங்கள் நற்றாயும், சுந்தரி,இந் திரன்தோள் பெறும்என்றாள், பின்எங்கள் சிறியதாய், அம்மே! சொற்றகுறிக் களவிலை; எம் கன்னிமார் அறியச் சொன்னேன்; பொய் அலநாங்கள் சொன்னது சொன்னதுவே. 44 தன்பெருமை கூறல் முன் ஒருநாள் அம்மைதடா தகைபிறந்த நாளின், முகக்குறிகண் டிவள்உலகம் முழுதாளும் என்றேன்; பின்ஒருநாள் கைக்குறிபார்த் தம்மை! உனக் கெங்கள் பிஞ்ஞகர்தாம் மணவாளப் பிள்ளையென்று சொன்னேன்; அன்னை அவள் மெய்க்குறிகள் அனைத்தையும்பார்த் துனக்கோர் ஆண்பிள்ளை உண்டுபிறந் தரசாளும் என்றேன்; சொன்னகுறி எல்லாம்என் சொற்படியே பலிக்கும்; தொகுத்துநீ நினைத்தகுறி இனிச்சொலக்கேள் அம்மே! 45 குறிசொல்லும் முறையைக் கூறுதல் குங்குமம்சந் தனக்குழம்பில் குழைத்துத்தரை மெழுகிக், கோலம்இட்டுக் குங்கிலியக் கொழும்புகையும் காட்டிச், செங்கனக நவமணிகள் திசைநான்கும் பரப்பித், தென்மேலை மூலைதனில் பிள்ளையாரும் வைத்துப், பொங்குநறு மலர்அருகோ டைங்கரர்க்குச் சாத்திப், புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்து, மங்கையருக் கரசி எங்கள் அங்கயற்கண் அமுதை, மனத்துள்வைத்து, நினைத்தகுறி, இனிச்சொலக்கேள் அம்மே! 46 முந்நாழி, முச்சிறங்கை, நெல்அளந்து கொடுவா! முறத்தில்ஒரு படிநெல்லைஎன் முன்னேவை அம்மே! இந்நாழி நெல்லையும்முக் கூறுசெய்தோர் கூற்றை, இரட்டைபட எண்ணினபோ தொற்றைப்பட்ட தம்மே! உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந் துதித்தார்; உனக்கினி, எண் ணினகருமம், நினைப்பினில் கைகூடும், என் ஆணை; எங்கள் குலக் கன்னிமார் அறிய, எக்குறிதப் பினுந், தப்பா திக்குறிகாண்! அம்மே! 47 குறிசொல்லுதல் கொண்டுவா! அம்மே! கைகொண்டுவா! அம்மே! கொழும் கனகம் நவமணிகள் அளைந்திடும்உன் கையே! வண்டுலவும் மலர்கொய்ய வருந்திடும்உன் கையே! வருந்தினர்க்கு நவநிதியம் சொரிந்திடும்உன் கையே! புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடும்உன் கையே! புழுகுறுநெய்ச் சொக்கர்புயந் தழுவிடும்உன் கையே! அண்டர்தம்நா யகிஎங்கள் மதுரை நாயகியை அங்கயற்கண் நாயகியைக் கும்பிடும்உன் கையே! 48 அம்மே! நின் செங்கையநின் மார்பினிவ்வைத் ததுதான், அபிடேகச் சொக்கர்உனை அணைவர்என்ற குறிகாண்! இம்மேலைத் திசையினிற்கை எடுத்ததுவும் அவர்தான், இன்றந்திப் பொழுதினில்வந் தெய்துவர்என் றதுகாண்! கைம்மேற்கை கட்டியதும், தப்பாமல் உனக்குக் கைகூடும், நீ நினைத்த காரியம்என் றது காண்! செம்மேனி மணிவயிற்றில் கைவைத்த தினிநீ! சிறுவர்பதி னறுவரையும் பெறுவை என்ற தம்மே! 49 குமரகுருபரர். 6. தனிப் பாடல்கள் விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்; விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்; அரையதனில், பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. 50 விருந்தினர்க்கு உதவி செய்ய எண்ணியவன் தன் மனைவியால் அடைந்த துன்பத்தைப் பாடியது. இருந்து முகந்திருத்தி, ஈரொடு, பேன் வாங்கி, விருந்துவந்த தென்று விளம்ப, - வருந்திமிக ஆடினாள். பாடினாள், ஆடிப் பழ முறத்தால் சாடினாள், ஓடோடத் தான். 51 ஈகையில்லாத கேடன் என்பவனை இகழ்ந்து பாடியது. பாடல் பெறானே! பலர்நச்ச வாழானே! நாடறிய நல்மணங்கள் நாடானே! - சேடன் இவன் வாழும் வாழ்க்கை, இரும் கடல்சூழ்பாரில் கவிழ்ந்தென்? மலர்ந்தென்ன? சாண்! 52 மூர்க்கனைத் திருத்த முடியாதெனப் பாடியது. ஆலைப் பலாவாக்க லாமோ? அருஞ்சுணங்கன் வாலை நிமிர்க்க வசமாமோ? - நீலநிறக் காக்கைதனைப் பேசுவிக்க லாமோ? கருணைஇலா மூர்க்கனைச்சீர் ஆக்கலா மோ? 53 அவ்வையார் நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின் ஆட்டுக் கிரண்டுகால் ஆனாலும், - நாட்டமுள்ள சீர்மேவு தில்லைச் சிவனே! இவ்வாட்டைவிட்டுப் போமோ சொல் லாய்அப் புலி? 54 ஆடெடுத்த தில்லை அநவரதத் தாண்டவனை, மாடெடுத்துப் போவதென்ன மாயமோ? - நீடும் உயர் வானத்தார் போற்றுகின்ற வண்மைச் சிதம்பரத்துத் தானத்தார் பார்த்திருக்கத்தான். 55 தில்லைக்குள் வாழும் சிதம்பரரே! உம்மைச் செப்பவென்றால், அல்லற் பிழைப்பே பிழைந்திருந் தீர்! முப்பு ராதிகளை வில்லைத் தொடுத் தெய்ய மாட்டாம லேயந்த வேளைதனில் பல்லைத் திறந்துவீட்டீர்! இதுவோநும் படைத்திறமே? 56 காளமேகப்புலவர் 7. கற்பரசி மந்தியார் ஆதவன் தரையில் படித்திடா தோங்கும் அழகிய சோலைகள் நிறைந்த, மாதவர் வதியும் வஞ்சியாம் தூய மாநகர் தனைப்புரந் திடுவோன், தாதலர் மாலை அணிந்தான் மார்பன், தண்தமிழ் மொழிபயின் றுயர்ந்தோன், காதலோ டெவர்க்கும் நன்மையே புரியும் காவலன், அத்தியாம் பெயரோன். 57 அன்னவன் தானும், அவனியை அருளோ டொருகுடை நிழலின் ஆக்கி நன்னரே ஆண்ட, நாவலர் புகழும் நற்குண வள்ளலாம் கரிகால் மன்னவன் பெற்ற, மலர்மகள் அனைய, மந்தியை மணமுடித் தன்பாய்த் துன்னினன், மதனும் இரதியும் எனவே துரிசற வாழ்ந்தனர் அவரே. 58 வளவனாம் கரிகால் மன்னவன் நாட்டில், வாய்ந்தவண் கலார்எனும் நகரில், களமர்கள் செல்வப் பெருக்குடன் வாழக், கனம், மழை பொழிந்திடு மாறே, உளமகிழ் வுடனே இந்திர விழாவை ஒப்பற நடத்திடுங் காலைத் தளவநன் மூரல் மந்தியும், தகைமாண் அத்தியும், வந்தனர் ஆங்கே 59 வந்தவர் அந்த மாநகர் வாழ்வார் தம்மொடு மகிழ்வொடு குலவிச் சந்ததம் இன்பப் பரவையிற் சார்ந்தார்; இந்திரற்கு ஆற்றிடும் விழவின் அந்தமாம் நாளில், அந்நகர் மாந்தர் அலைகடல் ஆடிடும் ; இந்தமா நிலத்தில் இந்த இருவரும் நீடுவாழ்ந்தேபொருட்டே, மைந்தரும் மாதர் தம்முடன் சென்றார்; மன்னனும் மந்தியோ டுற்றான். 60 முத்துடன் சங்கு பவளம்இப் பொருளை, முன்னினார் தமக்குவந் தளிக்கக், கத்துடன் திரைகள், கரையினுக் கோடி வந்திடும் காட்சியைக் காணின், உத்தமக் கொடையோர், உறுதுயர் வறிஞர் உறைவிடங் களைக்குறித் தேகி நித்தலும் அவரைப் புரந்திடுந் தூய செயலினை நிகர்த்திடும் மன்னோ! 61 பெரும் பொருள் படைத்த மேலவர் பலரைப் பேணுறும் அச்செயல் போலக், கருநிறக் கடலும், பலவுயிர்த் தொகையைக் காத்திடும் பரிசினைக் கண்டே, திருமகள் அனைய மந்தியும், திறல்சேர் அத்தியும், ஆழியிற் புகுந்தார்; அரும்விளை யாடல் புரிந்தனர்; வந்தோர் அனைவரும் அங்ஙனம் அயர்ந்தார் . 62 இவ்வகை அவர்கள் நீர்விளையாடும் எல்லையில், எழுந்தபேர் அலையால், செவ்விய புகழ்சேர் அத்திமன் கடலுட் சென்றனன்; மந்தியாள் கண்டு கொவ்வைஅம் கனிவாய் திறந்துஅமுது அரற்றும் குரலினைக் கேட்டஅம் மாந்தர், எவ்வித தீமை எதிர்ந்தது? என்று, அவளை யாவரும் சூழ்ந்தனர் கேட்டார். 63 நீனிறத்திரைகள் ஓய்வுறாது அடிக்கும் நிலைபெறும் கடல்எனும் கூற்றே! கானல்அம் கைதை மலர்நறாக் கமழும் கரையுடை மாபெரும் அலையே! மேனலம் அளிக்கும், என் பெரும் கொழுநன் மேனியை எங்கொளித் தனையோ? தூநலம் இழந்த அடியனேன் துயரைத் தொலைத்திட எண்ணுறுவாயோ! 64 இனியே அடியேன் எதுவே புரிவேன்? நனிமாண் மொழியே நவில், ஆர் உயிர்என் தனிநா யகனைக் கவர்ந்தாய்! தமியேன் துனியே ஒழித்து, என் துணையே தருவாய்! 65 மதியே வரவே மகிழும் கடலே! துதியே செயும்என் துயரே அறிந்தே, கதியே ஆம்என் கணவன் தனையே மதியே மகிழத் தருவாய்! திரையே! 66 மீனே முதலாம் உயிரே பலவே தானே வாழிடம் ஆவாய் கடலே! நானே இனிஎன் புரிவேன்! நலமார்! கோனே ஒழிந்தான்! கொணர்வாய் இனிதே! 67 நீயே! உலகம் யாவும் உயவே தாயே ஆய மழையே தருவாய்! நாயேன் மனமே மகிழும் வகையே ஆயே! கணவன் தனையே அருளே! 68 என்றவள் புலம்பக் கேட்ட யாவரும் வருந்தி மாழ்கித், துன்றினர்; திசைகள்தோறும் துருவினர், அவனைக்காணார் கன்றினை இழந்த ஆப்போல் கலங்குறும் மந்தியார்க்கு, நன்றதாம் உறைகள் தம்மை நவின்றனர் தேற்றிநின்றார் 69 இன்னணம் மந்திவாட, இருங்கடல் அதனை நோக்கி, என்னயாம் செய்தோம்! இந்தக்கற்புடை இறைவி சிந்தைக்கு இன்னலை இழைத்தோம்! என்றே, இரங்கி, அக்கடலும் அத்தி மன்னனைத்திரைக் கையாலே மகிழ்வுடன் கொணர்ந்ததன்றே 70 ஆங்கவன் தன்னைக் கண்ட ஆயிழை மருதி என்பாள், ஓங்கிய மகிழ்ச்சி கூற, அத்தியை ஒடிக் கூட்டி, ஏங்குறும் மந்தி யாள்முன் இன்பமே தோன்ற வந்தாள் பாங்குறை பலரும்பார்த்து மகிழ்ந்தனர் வாழ்த்தி நின்றார் 71 மந்தியார் கற்பை யாரே? மதித்திடற் குரியர் என்பார். செந்திரு அனையாள் சிந்தை மகிழ்வுடன் வாழ்க! என்பார் சந்ததம் இன்பம் ஆர்க! என்றவர் சாற்றி நின்றார். 72 சாமி, சிதம்பரனார். அரிச்சந்திரன் கதை (பாகவதம்.) சத்திய விரதன் சேய், திரி சங்கு சதுமறை வசிட்டனால் கான் போய்ச், சித்தம் நொந்து இகழும் பூரியன் ஆகிச் செய்தவக் கோசிகன் அருளால், கொத்தலர் பசும் பொன் தருநிழல் குறுகக், குறுகல்என்று அமரர் ஆங்கு ஒழிப்ப, வில்தக வீழும் காலை, அம் முனிவன் விண்மிசை நிறுவினன் வெகுண்டான். 73 கோசிகன் அருளால் இன்னமும் விண்மேல் குலவுதல் யாவரும் காணத் தேசொடும் உலவுகின்றனன்; அன்னோன் சேய், அரிச் சந்திரன் ஆமால்; ஆசறும் அன்னோன் நிமித்தமாய் முன்னம் அருந்தவ முனிவசிட் டனுக்கும். மாசில்கோ சிகற்கும் வந்தது சீற்றம், வானவர் உளமதி சயிப்ப. 74 ஆடல்வேல்அரிச் சந்திரன் என்று சொல் அரசன், வாடியே மகவு இல்லனாய் வைக்கும்அந் நாள்வாய், நாடியாழ் இசை நவிற்றுறும் நாரதன் நண்ணிப், பாடுவார் புனற்கு இறையை, நீபணிகனெப் பணிந்தான். 75 வருணன் வந்தொரு மைந்தனை வழங்குவன்; வழங்கும் பொருவின் மைந்தன் நற்பசுவென மகம்புரி வாய்கொல் அரச! என்றவன் இயைந்தபின் அருள்புரிந்து அகன்றான்; உரைசெய் வண்ணம் அவ்வேந்தனும் ஒரு மகவுயிர்த்தான். 76 சகம்உவப்புறத் தங்கு. அங்கு உதித்தசேய் தனக்கு, புகழ்சிறப்புற ரோகிதன் எனப்பெயர் புரிந்தான்; மகம் விரைந்துசெய்! மகவொரு பசுவென; வருணன் அகம் மகிழ்ந்துவந் துரைசெய, அரசனும் அறைவான். 77 சிறுவன், இன்னமும் தெரிதர மழலைஅம் செவ்வாய் முறுவல் தோற்றிலன்; மொழிந்திடில் பன்முளைத் திலதால்! குறுகில் அப்பசுப் புனிதம்ஆம் குணம்உறா தென்றான்; எறிதடம் திரைப் புனற்கிறை ஏகினன், இசைந்தே! 78 முத்தம் ஆமென மூரல்செவ் வாய்முளைத் ததன்பின், தத்துநீர்க்கிறை மகம்புரிவாய் எனச் சாற்ற, மத்தயானை அம் மன்னன், அம் மைந்தனுக் கின்னம் பத்தியாகான் குருத்தில பல்விழுந் தென்றான். 79 உந்துநீர்க்கிறை, மகஞ்செய்! முன் உரைத்தவாறு, என்று வந்தபோழ்தெலாம், இவ்வகை மன்னவன் சேய்பால் சிந்தைகூரும் வேணவாவினால் செப்பினன்; சிறுவன் அந்தவாறு அறிந்து, ஏகினன்; அடவியின்! அடைந்தான். 80 வனத்துமைந்தனும் நடந்தனன், தவஞ்செய்வான் மனத்து நினைத்து; மன்னவன் உரைத்தனன் அன்று நீர்க்குஇறையோன் சினத்து, மற்றவன் அகட்டிடைச் செழும்புனல் நிறைப்பக், கனத்திருந்தது மகோதரப் பெயர்கது வினனால். 81 காட்டின் உற்றபின், கான்முளை சில்பகல் கழித்து, வாட்டம் உற்று அரிச் சந்திரன் வருந்துதல் கேளா, வீட்டி உற்றவெம் பிணிதணிக் கினும்மிக நன்று! நாட்டின் உற்று அவன் காண்குவல்! யான் என நடந்தான். 82 தாதைபால் செலும் தநயனை இந்திரன் தகையாப், பூதலத்திடைப் புனிதநீர் படிகுதி! படிந்தால் ஏதம் நீங்கி, நீ! விழைந்தன எய்துதி! என்றான்; காதலம்மைந்தனும் அன்னவா புரிந்துசெல் காலை. 83 உரைசெய் நான்மறை உரிசிகன் உயிர்த்தமைந் தர்களில், அரிய சீர் நாடு மைந்தனை அரும்பொருள் கொடுத்து, விரைவினிற்கொடு, தாதைமுன் விடுத்தனன்; தாதை புருடமேதமங்கு இயற்றினன்; போக்கினன் பிணியே. 84 ஆசிரியப்பப் புலவர் 9. மனுச்சோழன் வரலாறு (பெரிய புராணம்) நிலம கட்கழ கார்திரு நீள்நுதல் திலகம் ஒப்பது; செம்பியர் வாழ்பதி; மலர்மகட்குவண் தாமரை போன்மலர்ந்து, அலகில் சீர்த்திரு ஆரூர் விளங்குமால்! 85 அன்ன தொல்நக ருக்கரசு ஆயினான்; துன்னும் வெம்கதி ரோன்வழித் தோன்றினான்; மன்னு சீரந பாயன் வழிமுதல்; மின்னு மாமணிப் பூண்மனு வேந்தனே. 86 அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமல் புல்லி, மறம்கடிந்து, அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில், சிறந்தநல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின்மைந்தன் பிறந்தனன், உலகம் போற்றப், பேர்அரிக் குருளை அன்னான் 87 அளவில்தொல் கலைகள் முற்றி, அரும்பெறல் தந்தை மிக்க உளமகிழ் காதல் கூர, ஓங்கிய குணத்தால் நீடி, இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி, வளர்இளம் பரிதி போன்றுவாழும்நாள், ஒருநாள், மைந்தன் . 88 திங்கள்வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்று, மங்குல்தோய் மாட வீதி மன்இளங் குமரர் சூழக், கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமங் குலவு தோளான், பொங்கிய தானைசூழத், தேர்மிசைப் பொலிந்து போந்தான். 89 தனிப்பெருந் தருமம் தான்ஓர் தயாவின்றித் தானை மன்னன் பனிப்பில்சிந் தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன மனித்தர், தன் வரவுகாணா வண்ணம், ஓர் வண்ண நல்ஆன் புனிற்றிளங் கன்று, துள்ளிப் போந்தது, அம் மறுகின் ஊடே. 90 அம்புனிற்று ஆவின் கன்று, ஒர் அபாயத்தின் ஊடு போகிச் செம்பொனின் தேர்க்கால்மீது விசையினால் செல்லப்பட்டு அங்கு உம்பரின் அடையக் கண்டங்கு, அருகுதாய் அலமந்து ஓடி, வெம்பிடும், அலறும், சோரும், மெய்ந்நடுக்கு உற்று வீழும் 91 மற்றதுகண்டு, மைந்தன், வந்தது இங்கு அபாயம் என்று, சொற்றடு மாறி, நெஞ்சில் துயர் உழந்து, அறிவ ழிந்து, பெற்றமும் கன்றும் இன்றென் உணர்வெனும் பெருமைமாளச் செற்ற; வென் செய்கேன்! என்று, தேரினின்று இழிந்துவீழ்ந்தான் 92 அலறுபேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும், நிறமிசைக் கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்; மலர்தலை உலகம் காக்கும், மனுவெனும், எம்கோ மானுக்கு உலகில்இப் பழிவந்து எய்தப் பிறந்தவாறு ஒருவன்! என்றான். 93 வந்தஇப் பழியை மாற்றும் வகையினை, மறைநூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில், எந்தை, ஈது அறியாமுன்னம், இயற்றுவன்! என்று, மைந்தன் சிந்தைவெம் துயரம் தீர்ப்பான், திருமறை யவர்முன் சென்றான். 94 தன்னுயிர்க் கன்று வீயத், தளர்ந்த, ஆ, தரியாது ஆகி, முன்நெருப்பு உயிர்த்து, விம்மி, முகத்தினில் கண்ணீர் வார, மன்னுயிர் காக்கும் செங்கோல் மனுவின்பொற் கோயில் வாயில் பொன் அணிமணியைச், சென்று கோட்டினால் புடைத்தது அன்றே 95 ஆங்கது கேட்ட வேந்தன், அரிஅணை இழிந்து போந்து, பூங்கொடி வாயில் நண்ணக், காவலர் எதிரே போற்றி, ஈங்கிதோர் பசுவந்து எய்தி, இறவை நின் கொற்ற வாயில் தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது; என்று சொன்னார். 96 மன்னவன் அதனைக் கேளா, வருந்திய பசுவை நோக்கி, என்னிதற்கு உற்றது! என்றென்று, அமைச்சரை இகழ்ந்து நோக்க, முன்னுற நிகழ்ந்த வெல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித் தொல்நெறி யமைச்சன், மன்னன் தாளிணை தொழுது சொல்வான். 97 வளவ!நின் புதல்வன், ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல்ஏறி, அளவில்தேர்த் தானை சூழ, அரசுலாம் தெருவில் போங்கால், இளையஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்த தாகத்; தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததுஇத் தன்மை; என்றான். 98 மன்னுயிர் புரந்து, வையம் பொதுக்கடிந்து, அறத்தின் நீடும் என்நெறி நன்றால்! என்னும்; என் செய்தால் தீரும்? என்னும்; தன்இளம் கன்று காணத் தாய்முகம் கண்டு சோரும்; அந்நிலை அரசன் உற்ற துயரம், ஒர் அளவிற்று அன்றால். 99 மந்திரிகள் அதுகண்டு, மன்னவனை அடிவணங்கிச், சிந்தைதளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றால்; கொந்தலர்த்தார் மைந்தனை, முன் கோவதைசெய் தார்க்கு, மறை அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம் என்றார். 100 வழக்கென்று நீர்மொழிந்தால், மற்றதுதான், வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்தலறும் கோவுறுநோய் மருந்தாமோ? இழக்கின்றேன் மைந்தனை, என்று எல்லீரும் சொல்லியஇச் சழக்கின்று நான்இயைந்தால், தருமந்தான் சலியாதோ? 101 மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத், தான் அதனுக்கு இடையூறு, தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு படைத்திறத்தால், கள்வரால், உயிர்தம்மால், ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறம்காப்பான் அல்லனோ? 102 என்றரசன் இகழ்ந்துரைப்ப, எதிர்நின்ற மதியமைச்சர், நின்றநெறி உலகின்கண், இதுபோல், முன் நிகழ்ந்ததால்! பொன்றுவித்தல் மரபன்று; மறைமொழிந்த அறம்புரிதல் தொன்றுதொடு நெறி அன்றோ? தொல்நிலம்கா வல! என்றார். 103 அவ்வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம்நோக்கி மெய்வண்ணம் தெரிந்துணர்ந்த மனுவெனும் திறல் வேந்தன் இவ்வண்ணம் பழுதுஉரைத்தீர்! என்று, எரியின் இடைத்தோய்ந்த செவ்வண்ணக் கமலம்போல் முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான். 104 அவ்வுரையில் வருநெறிகள் அவைநிற்க, அறநெறியின் செவ்வியஉண் மைத்திறம்நீர் சிந்தைசெயாதுஉரைக்கின்றீர் எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாம்இடரால் செவ்வுயிர்த்துக், கதறி, மணி எறிந்துவிழுந் ததுவிளம்பீர்? 105 எனமொழிந்து, மற்றிதனுக்கு இனிஇதுவே செயல், இவ்ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன், வருந்தும் இது தனதுறுபேர் இடர், யானும் தாங்குவதே கருமம்! என்றார் அனகன் அரும் பொருள் துணிந்தான்; அமைச்சரும் அஞ்சினர் அகன் 106 மன்னவன்; தன் மைந்தனைஅங்கு அழைத்தொரு, மந்திரிதன்னை முன்இவனை அவ்வீதி முரண்தேர்க்கால் ஊர்க! என; அன்னவனும் அதுசெயாது அகன்று, தன்ஆர்உயிர்துறப்ப, தன்னுடைய குலமகளைத் தான்கொண்டு மறுகணைந்தான். 107 ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான்என் பதும்உணரான்; தருமந்தன் வழிச்செல்கை கடன், என்று, தன்மைந்தன் மருமம்தன் தேர்ஆழி உற, ஊர்ந்தான்; மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ? தான் 108 தண்ணளி, வெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது, மண்ணவர், கண்மழைபொழிந்தார்! வானவர் பூமழை, சொரிந்தார்! அண்ணல்அவன் கண்எதிரே, அணிவீதி, மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப்பெருமான் 109 சடைமருங்கில் இளம்பிறையும், தனிவிழிக்கும் திருநுதலும்; இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம் புடைநெருங்கும் பெருமையும், முன் கண்டரசன் போற்றிசைப்ப விடைமருவுப் பெருமானும் விறல் வேந்தற்கு அருள்கொடுத்தான். 110 அந்நிலை உயிர்பிரிந்த ஆன்கன்றும், அவ்வரசன் மன்உரிமைத் தனிக்கன்றும், மந்திரியும் உடன் எழலும், இன்னபரிசு ஆனான் என்று அறிந்திலன்வேந்தனும், யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ? 111 அடிபணிந்த திருமகனை, ஆகம்உற எடுத்தணைத்து, நெடிதுமகிழ்ந்து, அருந்துயரம் நீங்கினான் நிலவேந்தன்; மடிசுரந்து பொழிதீம்பால், வருங்கன்று மகிழ்ந்துண்டு, படிநனைய வரும்பசுவும் பருவரல் நீங் கியதன்றே! 112 பொன் தயங்கும் மதில்ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான், வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச் சென்றருளும் பெரும்கருணைத் திறங்கண்டு, தன்அடியார்க்கு என்றும் எளி வரும்பெருமை ஏழுலகும் எடுத்தேத்தும். 113 சேக்கிழார். 10. அனுமானும் இராவணனும் (கம்ப ராமாயணம்) இராவணனைக் கண்டு அனுமான் சிந்தித்தல் கொல்லலாம் வலத்தனும் அல்லன்! கொற்றமும் வெல்லலாம் தரத்தனும் அல்லன்! மேலைநான் அல்லெலாம் திரண்டன நிறத்தன், ஆற்றலை வெல்லெலாம்; இராமனாற் பிறரும் வெல்வரோ? 114 என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன் தன்னையும் வெலற்கு அரிது எனக்கும்; தாக்கினால், அன்னவே காலங்கள் கழியும்; ஆதலால், துன்னரும் செருத்தொழில் தொடங்கல் தூயதோ? 115 ஏழுயர் உலகங்கள் யாவும் இன்புறப் பாழ்இவன் புயங்களோடு அரக்கன் பஃறலைப் பூழியில் புரட்டல், என் பூணிப்பாம், என ஊழியான் விளம்பிய உரையும் ஒன்றுண்டால், 116 இங்கொரு திங்களே இருப்பல் யான்; என, அங்கண் நாயகன் தனது ஆணை கூறிய மங்கையும் இன்னுயிர் துறத்தல் வாய்மையால்; பொங்குவெம் செருவிடைப் பொழுது போக்கினால். 117 இவ்வாறு தனக்குளெண்ணிய மாருதியைக்கண்டு இராவணன் கூறியது. நேமியோ! குலிசியோ! நெடும் கணிச்சியோ! தாமரைக் கிழவனோ! தறுகண் பஃறலைப் பூமிதாங்கு ஒருவனோ! பொருது முற்றுற நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்? 118 நின்று இசைத்து உயிர்கவர் நீலக் காலனோ! குன்று இசைத்து அயில்உற எறிந்த கொற்றனோ! தென்திசைக் கிழவனோ! திசைநின்று ஆட்சியர் என்றிசைக் கின்றவர் யாருள் யாவன்? நீ! 119 ஆரைநீ! இங்கு எய்து காரணம்? ஆர் உனை விடுத்தவர்! அறிய ஆணையால் சோர்விலை சொல்லுதி! என்னச் சொல்லினான், வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான். 120 அனுமான் கூறுதல் சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்னஅப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்; அல்லிஅம் கமலமே அனைய செங்கண், ஒர் வில்லிதன் தூதன்யான்; இலங்கை மேயினேன். 121 ஈட்டிய வலியும், மேனாள் இயற்றிய தவமும் யாணர் கூட்டிய படையும், தேவர் கொடுத்தநல் வரமும், கோட்பும் தீட்டிய பிறவும், எய்தித் திருத்திய வாழ்வும் எல்லாம் நீட்டிய பகழி ஒன்றால் முதலொடுநீக்க நின்றான். 122 தேவரும் பிறரும் அல்லன், திசைக்களிறு அல்லன், திக்கில் காவலர் அல்லன், ஈசன் கைலைஅம் கிரியும் அல்லன், மூவரும் அல்லன், மற்றை முனிவரும் அல்லன், எல்லைப் பூவலயத்தை யாண்ட புரவலன் புதல்வன் போலாம். 123 அன்னவற்கு அடிமை செய்வேன்! நாமம் அனுமன் என்பேன் நன்னுதல் தன்னைத்தேடி நாற்பெருந் திசையும்போந்த மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி தன்மகன், அவன்தன் தூதன், வந்தனன்! தனியேன்! என்றான். 124 இராவணன் கூறுதல் என்றலும், இலங்கை வேந்தன், எயிற்றினம், எழிலி நாப்பண் மின்திரிந் தென்ன நக்கு, வாலிசேய் விடுத்த தூத! வன்திறல் ஆய வாலி வலியன்கொல்? அரசின் வாழ்க்கை நன்றுகொல்? என்னலோடும், நாயகன் தூதன் நக்கான். 125 அனுமான் கூறுதல் அஞ்சலை! அரக்க! பார்விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே வெஞ்சின வாலி மீளான்; வாலும்போய் விளிந்து அன்றே; அஞ்சன மேனி யான்தன் அடுகணை ஒன்றால் மாழ்கித் துஞ்சினன்; எங்கள் வேந்தன் சூரியன்தோன்றல் என்றான் 126 இராவணன் கூறுதல் என்னுடை ஈட்டி னால்,அவ் வாலியை எறுழ்வாய் அம்பால் இன்உயிர் உண்டது?இப்போது யாண்டையான் இராமன் என்பான்; அன்னவன் தேவி தன்னை அங்கதன் நாடல் உற்ற தன்மையை உரைசெய் கென்னச், சமிரணன் தனயன் சொல்வான். 127 அநுமான் கூறுதல் தேவியை நாடி வந்த செங்கணாற்கு, எங்கள் கோமான் ஆவிஒன் றாகநாட்டான் அரும் துயர் துடைத்தி! என்ன; ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் உரிமை யோடும், கோவியல் செல்வம் முன்னே கொடுத்து, வாலியையும் கொன்றான். 128 ஆயவன் தன்னொடு ஆண்டோர் திங்கள் ஓர் நான்கும்வைகி, மேயவெம் சேனை சூழ வீற்றினி திருந்தவீரன், போயினிர் நாடும் என்னப், போந்தனம், புகுந்தது ஈதென்று, ஏயவன் தூதன் சொன்னான்; இராவணன் இதனைச் சொன்னான். 129 இராவணன் சொல்லுதல். உம்குலத் தலைவன் தன்னொடு ஒப்பிலா உயர்ச்சியோனை, வெம்கொலை அம்பில் கொன்றாற்கு ஆள்தொழில் மேற்கொண்டீரேல் எங்கு உலப்புறும் நும்சீர்த்தி? நும்மொடும் இயைந்த தன்றால்! மங்குலில் பொலிந்த ஞாலம் மாதுமை யுடைத்து! மாதோ. 130 தம்முனைக் கொல்வித்து, அன்னாற் கொன்றவர்க்கு அன்புசான்றே உம்மினத் தலைவன் ஏவ, யாதுஎனக்கு உணர்த்தல் உற்றது? எம்முனைத் தூது வந்தாய்! இகல்புரி தன்மை என்னை? நும்மினைக் கொல்லேம் நெஞ்சம் அஞ்சலை! நுவறி என்றான்! 131 11. அங்கதன் தூது (கம்பராமாயணம்) அயில்கள் தந்து எரிய நோக்கும் அரக்கரைக் கடக்க, ஆழித் துயில் கடந்து, அயோத்தி வேந்தன் சொற்கட வாத தூதன், வெயில்கடந் திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட எயில்கடந்து, இலங்கை எய்தி, அரக்கனது இருக்கை புக்கான் 132 அழுகின்ற கண்ணர் ஆகி, அநுமன் கொல்! என அஞ்சித் தொழுகின்ற சுற்றம், சுற்றும் சொல்லிய துறைகள் தோறும் மொழிகின்ற வீரன் வார்த்தை முகந்தொறும் செவியின் மூழ்க, எழுகின்ற சேனை நோக்கி வியந்து இருந்தானைக் கண்டான். 133 அங்கதன் தனக்குள் நினைத்தல் இன்று இவன் தன்னை எய்தி நோக்கினேற்கு, எதிர்த்த போரில் வென்ற, என் தாதை மார்பில் வில்லின்மேற் கணை ஒன்று ஏவிக், கொன்றவன் தானே வந்தான் என்றுடன் குறிப்பின் அல்லால், ஒன்றிவன் தன்னை வெல்ல வல்லரோ உயிர்க்கு நல்லார். 134 நெடுந்தகை விடுத்த தூதன் இவைஇவை நிரம்ப எண்ணிக், கடும் கனல் விடமும் கூற்றும் கலந்துகால் கரமும் காட்டி விடும் சுடர் மகுடம் மின்ன விரிகடல் இருந்தது என்ன, கொடுந்தொழில்மடங்கல் அன்னான் எதிர்சென்று, குறுகி, நின்றான். 135 இராவணன் கூறுதல் நின்றவன் தன்னை, அன்னான்நெருப்பெழ நிமிரப்பார்த்து, இங்கு இன்று இவண்வந்த நீயார்? எய்திய கருமம் என்னை? கொன்றுஇவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய வென்றான்; வன்திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான். 136 பூதநாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப்பூமேல் சீதை நாயகன், வேறுள்ள தெய்வநா யகன், நீ செப்பும் வேத நாயகன், மேல்நின்ற விதிக்கு நாயகன் தான்விட்ட தூதன் யான், பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்! என்றான். 137 கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து நேமி சங்கமும் தரித்தமால், மற்று இந்நகர் தன்னைச் சாரார்; அங்கவர் தம்மை அன்றி, மனிதனுக் காக, அஞ்சாது இங்கு வந்து, இதனைச் சொன்ன தூதன்நீ! யாவன் என்றான். 138 இந்திரன் செம்மல், பண்டுஓர் இராவணன் என்பான் தன்னைச் சுந்தரத் தோள்க ளோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்; தேவர் உண்ண மந்தரக் கிரியால் வேலை கலக்கினான் மைந்தன்; என்றான். 139 உந்தையென் துணைவன் அன்றே! ஓங்கறஞ் சான்றும் உண்டால் நிந்தனை யிதன்மேல் உண்டே? நீ அவன் தூதன் ஆதல்; தந்தனன் நினக்கு யானே வானரத் தலைமை; தாழா வந்தனை! நன்று செய்தாய்! என்னுடை மைந்த! என்றான். 140 தாதையைக் கொன்றான் பின்னே தலைசுமந்து இருகை நாற்றிப் பேதையன் என்ன வாழ்ந்தாய், என்பதுஓர் பிழையும் தீர்ந்தாய் சீதையைப் பெற்றேன், உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்! ஏதெனக்கு அரியது? என்றான் இறுதிநூற்கு எல்லைகண்டான். 141 அந்நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை; உன்அரசு உனக்குத் தந்தேன்! ஆளுதி ஊழிக் காலம்! பொன்அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய, மன்னவன் ஆக, யானே சூட்டுவன் மகுடம்! என்றான். 142 அங்கதன் கூறுதல் அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கைதாக்கித், துங்கவன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான்; இங்குநின் றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி, நுங்கள் பால்நின்றும், எம்பால் போந்தனன் உம்பிஎன்றான் 143 வாய்தரத் தக்க சொல்லி, என்னைஉன் வசம்செய் வாயேல்; ஆய்தரத் தக்க தன்றோ, தூதுவந்து அரசது ஆள்கை, நீதரக்கொள்வேன்யானே இதற்கினி நிகர்வேறு எண்ணின் நாய்தரக் கொள்ளும் சீயம் நல்லரசு, என்று நக்கான். 144 இராவணன் சொல்லுதல் அடுவனே! என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், அந்தோ! தொடுவனே குரங்கைச் சீறிச் சுடர்ப்படை, என்று தோன்றா, நடுவனே செய்யத்தக்க நாள்உலந் தார்க்குத் தூத! படுவதே துணிந்தாய் ஆயின் வந்தது பகர்தி! என்றான். 145 கூவிஇன்று என்னை, நீ போய்த் தன்குலம் முழுதும் கொல்லும் பாவியை எய்தி, அஞ்சி அரண்புக்குப் பதுங்கினானைத், தேவியைவிடுக! அன்றேல் செருக்களத்து எதிர்ந்துதன்கண் ஆவியை விடுக! என்றான், அருள் இனம் விடுகிலாதான். 146 ஏந்திழை தன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர் தம்மை ஏற்றிச் சாந்தெனப் புதல்வன் தன்னைத் தரையிடைத் தேய்த்துத்தன்ஊர் காந்தெரி மடுத்துத், தானும் காணவே கடலைத் தாவிப் போந்தபின் வந்தி லாதான் இனிப்பொரும் போரும் உண்டோ? 147 இராவணன் செய்கை சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல்லுயிர் முற்றும் உண்பது போலும் முனிவினான், பற்றுமின்! கடிதின் நெடும் பார்மிசை எற்று மின்! என, நால்வரை ஏவினான். 148 அங்கதன் செயல் ஏவி னான் பிடித் தாரை எடுத்தெழத் தாவி னான், அவர் தந்தலை போயறக் கூறி னான் அவன் கோபுர வாயிலில், போமின்! போமின்!! புறத்தென்று போயினான். 149 அந்தரத் திடை யார்த்தெழுந் தானவன் சிந்து ரத்தம் துதைந்தெழும் செச்சையான், இந்து விண்ணின் றிழிந்துள தாம் என, வந்து வீரன் அடியின் வணங்கினான். 150 அங்கதன் இராமனை யடைதல் உற்ற போதவன் உள்ளக்கருத் தெலாம் கொற்ற வீரன் உணர்த்தென்று கூறலும், முற்ற ஓதிஎன்? மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி ஆசையறான் என்றான். 151 கம்பர். மூன்றாம் செய்யுட் பாடக் குறிப்புரை 1. கடவுள் வணக்கம் 1. நண்ணாதாகி - அடையாதாகி; சேதா - நல்ல பசு. 2. கருவி - அகக்கருவி; புறக்கருவிகள். அகக்கருவிகள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம், புறக்கருவிகள், மெய், வாய், கண், மூக்கு, செவி; உயிர்த்திரள் - உயிர்க்கூட்டம். 3. கோடாவண்ணம் - தவறாதபடி, முகில்காள் - மேகங்களே! சாதகம் - வழி, சாற்றும் - சொல்லுங்கள்! 4. உரை இறந்து - சொல்லுக்கு அடங்காது. வரிசிறை - கோடுகள் உள்ள சிறகுகளையுடைய. ஒதிமம் - அன்னம். 5. புரை ஒன்று இல்லா - குற்றம் ஒன்றுமில்லாத. ஓவியம் போல் - சித்திரம் போல். 2. தமிழ்த் தாய் 6. பேர்சுவை - மிக்க இளிமையுடைய; இயற்கைப் பண்பு - இயற்கையான குணம்; இயற்கையான குணமாவது; இனிய எளிய ஒசை; பணிகளை ஆற்றிட - தொண்டுகள் செய்ய. 7. குலம் குலமாக நீதியை வகுத்துக் கூறிடும் கலைகள்; மனுநூல் முதலிய வடமொழி மிருதிநூல்கள். பண் தமிழ் இசையோடு கூடிய தமிழ். 8. ஒல்வகை - முடிந்தவகையினால்; ஆய்வு உரை - ஆராய்ச்சியுரை. 9. எழுச்சி - ஊக்கம், அதாவது கிளர்ச்சி, பொரு அரும் - ஒப்பில்லாத. 10. கழிபெரும் கருத்தோடு - மிகுந்த அறிவுடன்; இழிதரு நிலையில் - தாழ்ந்த நிலையில்; ஒழிவு அற - தாமத மின்றி; இன்னே - இப்பொழுதே. 11. நவிற்றும் - கூறும். முந்துற - நெடுங் காலமாக. முதுக் குறைவுடைமை - அறிவுடைமை. 12. தாவறு - குற்றமில்லாத; கமழ்புகழ் - புகழ் கமழ் எனமாற்றிப் புகழ் வீசுகின்ற, என்று பொருள் கொள்க. காசு அறு - குற்றமற்ற; அமிழ்து உறழ் - அமுதத்தை ஒத்த. தொகைநூல் - குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, நற்றிணை முதலிய எட்டுத் தொகையைச் சேர்ந்த நூல்கள். இமிழ் கடல் - ஒலியுள்ள கடல். வரைப்பில் - உலகத்தில். 13. வசை - குற்றம், இசை - பலராலும் புகலப்படும் பெருமை நசையுடன் - அன்புடன் 3. பழமொழி 14. வீங்குதோள் - பெரியதோள். செம்பியன் - சோழன் - இவன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பி யன். விறல் - வலிய. தூங்கும் - அசைகின்ற, எயில் - மதில். அரண் - காவல், இங்கு மார்பிலணியும் கவசத்தைக் குறித்தது. 15. தாயமா - உரிமையாக. ஏதிலர் - பகைவர். விண்டார் - வேறுபட்டுப் பிரிந்தார். காதலரோடு - அன்புடையவர் களுடன், 16. நல்லவினைமரபின் - நல்ல செய்கையினால். மணை மரம் - வீட்டுமரம். 17. ஆற்றவும் - மிகவும். ஆற்றுணா - வழிச்சோறு, அதாவது கட்டுச்சோறு. 18. பிறிது உழி - வேறிடத்தில், கணக்கினை - நூலை. முற்றப் பகலும் - முழுநாளும். 19. சேய்த்தா - நாட்கள் சென்று. அணிக்கோடல் - சமீபத்திற் கொள்ளுதல், கலை - ஆண் குரங்கு, தேன் கிழிக்கும் - தேன் அடைகளை உடைக்கின்ற, ஏற்கல், எல்கள் - ஒளி பொருந்திய பாராங்கற்கள், வெற்ப - மலையை உடையவனே! 20. நமர் - நம்முடையவர், புரந்தாரை - காப்பாற்றியவர்களுக்கு, கிளா - ஒளி, நீடு - பெரிய, கோடு - கிளை, குறைத்துவிடல் - வெட்டி விடுதல். 21. கைகரப்ப - ஒளித்துவைக்க. கறவை - பசு. ஊர்ந்தானை - தேரைச் செலுத்திக் கொன்ற மகனை. தந்தையும் - தந்தையாகிய சோழனும். முறைமை - நீதிசெய்தல். 22. நாப்பண் - நடுவில் புகல்; அறியார் - சொல்லுதற்கு அறியாதவர். இகலினால் - பகைமையினால். பாணசேரி - இசையில் வல்ல பாணர்கள் சேர்ந்திருக்கு மிடம். பற்கிழிக்குமாறு - வாயைப் பிளந்து கொண்டு பாடு கின்றது போலும். பல், வாய்க்கு ஆகுபெயர். 23. வளி - வாதநோய். 4. திருக்குறள் 24. ஆகுலநீர - ஆரவாரமான தன்மையுடையன. 27. என் நோற்றான் கொல் - என்ன தவத்தைச் செய்தானோ 28. இன்னாத - கடிய சொற்களை. கவர்ந்தற்று - பறித்துக் கொண்டதை ஒக்கும். 30. தூக்கர் - ஆராயாதவராய். நயம் - மேன்மை 31. நிலையில் திரியாது - தன் நிலையிலிருந்து தவறாமல், தோற்றம் - காட்சி. 32. பாராட்டுவானை - பலகாலும் சொல்லுகின்றவனை. மகன் எனல் - மகன் என்று சொல்லற்க, பதடி எனல் - பதர் என்று சொல்லுக. 33. குறி எதிர்ப்பை - குறிக்கப்பட்ட எதிர்காலப் பயனைக் கருதிய; நீரது - தன்மையை 34. பரந்து கெடுக - வருந்திக் கெடுவானாக. உலகியற்றியான் - உலகைப் படைத்த கடவுள். 35. மழித்தல் - தலையை மழுங்கச் சிரைத்துக் கொள்ளுதல். நீட்டல் - நீளமாக வளர்த்துக் கொள்ளுதல். 37. அவி -யாகத்திற்போடும் நெய் முதலிய பொருள்கள், வேட்டலின் - யாகம் செய்வதைவிட, சொத்து - கொன்று. 38. நீப்பினும் - நீக்கினாலும் பிறிது - மற்றவைகளின், இன் உயிர் - இனிய உயிர். 42. தேரான் தெளியவும் - ஆராயாமல் நம்புதலும், தெளிந் தான் - ஆராய்ந்து தெளியப்பட்டவன், இடும்பை - துன்பம். 43. உடையர் - செல்வம் உடையர். 5. மீனாட்சியம்மை குறம். 44. பூமன் - இலக்குமி, பொலிவன் - விளங்குவான், கலைமான் - சரசுவதி, மலர் அபனார் - தாமரை மலரில் உள்ள நான் முகன், சுந்தரி - இந்திராணி, கன்னிமார் - கன்னித் தெய்வங்கள். 45. தடாதகை - மலையத்துவச பாண்டியன் மகள், பிஞ்ஞகர் - பரமசிவன். 46. செம் கனகம் - சிவந்த பொன், நவ மணிகள் - ஒன்பது வகை இரத்தினங்கள், பொங்கு - மிகுந்த, புழுகு நெய் - வாசனையுள்ள நெய், நாழி - படி, அம் கயல்கண் அமுதை - மீனாட்சியம்மையை. 47. சிறங்கை - கையளவு, உன்னாமுன் - நினைப்பதற்கு முன் 48. அளைந்திடும் - பிசைந்திடும், புண்டரிகம் - தாமரை, புழுகுச் நறுநெய் சொக்கர், என்பது சொக்கநாதரின் பெயர். 6. தனிப்பாடல்கள் 50. விரகர் - புகழ் பாடுவோர் 52. பலர் நச்ச - பலர் விரும்ப, இரும் - பெரிய. 53. நின் ஆட்டுக்கு - நினது ஆட்டுக்கென்றும், நினது ஆடலுக்கு என்றும் இருபொருள், அப்புலி - அந்தப்புலி என்றும் அம்புலி என்பது வலித்தல் விசாரம் பெற்றுச் சந்திரன் என்றும் பொருள்படும். 55. ஆடெடுத்த - ஆடு திருடிய வென்றும், ஆடுதலைத் தொடங்கிய வென்றும் இருபொருள்படும். அநவரதம் - எப்பொழுதும். 7. கற்பரசி மந்தியார் 57. மாதவர் வதியும் - தவசிகள் வாழ்கின்ற, தாது அலர் - மகரந்தங்கள் விரிகின்ற. 58. துன்னினன் - இருந்தனன், துரிசு அற - குற்றமற, 59. வளவன் - சோழன், வண் - வளப்பமுள்ள, களமர்கள் - உளவர்கள், கனம் - மேகம், ஒப்பற - சிறப்பாக, தளவம் நல்முரல் - முல்லை அரும்பைப் போன்ற நல்ல பற்கள், தகைமாண் - பெருமை நிறைந்த. 60. பரவையில் - கடலில் 61. முன்னினார் தமக்கு - நினைத்து வந்தவர்களுக்கு, கத்துடன் - ஓசையுடன். 62. பரிசினை - இயல்பை, அயர்ந்தார் - செய்தார். 63. அத்திமன் - அத்தியரசன், கொவ்வை அம்கனிவாய் - அழகிய கொவ்வைக் கனிபோன்ற வாய், எதிர்ந்தது - உண்டாயிற்று. 64. கானல் - கடற்கரை சோலை, கைதை - தாழை, நறா -தேன், தூ நலம் - மேலான நன்மையை. 65. நனிமாண்மொழியே - மிகவும் பெருமையான மொழி களை, துனியே - துயரை. 66. கதியே ஆம் - துணையே ஆகின்ற. 68. உயவே - பிழைக்கவே, ஆயே - தாயே. 69. மாழ்கி - மயங்கி, துன்றினர் - நெருங்கினர், துருவினர் - தேடினர். 71. மருதி - மந்திரியாரின் தோழியின் பெயர், பாங்கு உறை பக்கத்தில் உள்ள. 72. செந்திரு அணையாள் - இலக்குமியை ஒத்தவள், ஆர்க - அனுபவிக்க 8. அரிச்சந்திரன் கதை. 73. பூரியன் - புலையன், கோசிகன் - விசுவாமித்திரன், கொத்தலர் - மலர்கள் கொத்தாக மலர்ந்திருக்கினற, தருநிழல் குறுக கற்பகத் தருவின் நிழலையுடைய இந்திர வுலகையடைய, ஒழிப்ப - தள்ள, வில் தக - ஒளி நீங்க. 74. தேசொடும் உலவுகின்றனன்- ஒளியோடு இருக்கின்றான், (திரிசங்கு நட்சத்திரம்) ஆசறும் - குற்றமற்ற, சீற்றம் - கோபம். 75. ஆடல்வேல் - பகைவர்களை ஆடச்செய்கின்ற வேல், பாடுவார் புனற்கு இறையை - வருணனை. 76. பொரு இல் - ஒப்பில்லாத, உயிர்த்தான் - பெற்றான். 77. மகவு ஒரு பசுவென - பிள்ளையைப் பசுவாகக் கொண்டு 78 குறுகில் - ஆராய்ந்தால், எறிதடம் - வீசுகின்ற ஆழமான 79. நன்குருத்தில - நன்றாக முளைக்கவில்லை. 80. உந்து - ஓடுகின்ற, சிந்தை கூரும் - மனத்திற் கொண்ட, வேணவாவினால் - மிகுந்த ஆசையால், சிறுவன் - ரோகிதன். 81. அகட்டிடை - வயிற்றில், கதுவினன் - பிடித்தனன். 82. கான்முளை - மைந்தன், கேளா - கேட்டு, வீட்டி - துன்பப்படுத்தி. 83. தகையா - தடுத்து, ஏதம் - குற்றம், அன்னவா - அப்படியே 84. இரிசிகன் - இரிசிக முனிவன், புருடமேதம் - நரமேத யாகம். 9. மனுச்சோழன் வரலாறு 85. நுதல் - நெற்றி, செம்பியர் - சோழர் 86. கதிரோன் வழித் தோன்றினான் - சூரியன் மரபில் பிறந்தவன்; சோழரைச் சூரியகுல மன்னரெனச் சொல்லுதல் மரபு, அநபாய சோழன் வழிமுதல் - அநபாய சோழனுடைய முன்னோன். 87. புல்லி - தழுவி, மறம் - பாவம், பேர் அரிக் குருளை - பெரிய சிங்கக்குட்டி. 88. முற்றி - நிரம்பி, பரிதி - சூரியன். 89. மங்குல் - மேகம், கொங்கு - வாசனை, தானை - சேனை 90. தயாவின்றி - இரக்கமின்றி, பனிப்புஇல் - நடுக்க மில்லாத, வண்ண நல் ஆன் - அழகிய நல்லபசு, புனிற்று இளங்கன்று - அண்மையிற் பிறந்த இளங்கன்று. 91. உம்பரின் அடைய- விண்ணையுற; இறக்க. அலமந்து - வருந்தி. 92. பெற்றம் - பசு, செற்ற - கொன்ற 95. வீய - இறக்க, உயிர்த்து - மூச்சுவிட்டு, விம்மி - வருந்தி, வார - ஒழுக, புடைத்தது - அடித்தது. 96. துளக்கியது - அசைத்தது. 97. முதிர்ந்த - நிறைந்த, தொல் நெறி - பழமையான மரபையுடைய. 98. அரசு உலாம் - அரசர்கள் வாழும், விளைத்தது -செய்தது. 99. பொதுக்கடிந்து - பொதுமை நீக்கி; தனக்கே உரிமை யாகக்கொண்டு, என்நெறி - எனது அரசியல் நெறி. 100. கொந்து - கொத்து, கோ - பசு 101. சழக்கு - குற்றம் 102. பரிசனம் - அமைச்சர் முதலிய சுற்றத்தார், ஊனம் மிகும் - குற்றம் மிகுந்த. 103. பொன்றுவித்தல் - கொல்லுதல். 104. முகம் புலர்ந்து - முகம் வெறுத்து. 106. அனகன் - குற்றமில்லாத சோழன் 107. முரண் - வலிமை, மறுகு - வீதி. 111. மன் உரிமைத் தனிக்கன்றும் - அரசுரிமைக்குரிய ஒப்பற்ற இளங்குமரனும். 112. ஆகம் - மார்பு. படி - பூமி, பருவரல் - துன்பம். 10. அநுமானும், இராவணனும். 114. கொல்லல் ஆம் வலத்தனும் - என்னைக் கொல்லும் ஆற்றலுடையவனும், வெல்லலாம் தரத்தனும் - நம்மால் வெல்லுந் தன்மையுடையவனும். 115. அன்னவே - அவ்வகையிலேயே. 116. பஃறலை - பல்தலை; பல தலைகள், பூழி - புழுதி, பூணிப்பு - மேற்கோள்; அதாவது சபதம். 118. நேமி - சக்கரத்தையுடைய திருமால், குலிசி - வச்சிரா யுதத்தையுடைய இந்திரன். கணிச்சி - மழுப்படையை யுடைய சிவன். தாமரைக்கிழவன் - நான்முகன், தறுகண் - அஞ்சாமை, கரந்து - மறைந்து. 119. குன்று இசைத்து - கிரவுஞ்சம் என்னும் மலையைக் குறிவைத்து, அயில் - வேல். 122. யாணர் - புதுமை. கோட்பும் - கொள்கையும்; அதாவது எண்ணமும், பகழி - அம்பு, முதலொடு - அடியோடு. 125. எயிற்றினம் - பல்வரிசை, எழிலி - மேகம், நாப்பண் - நடுவில், நக்கு - சிரித்து, நக்கான், சிரித்தான். 127. ஈட்டினால் - காரணத்தால், எறுழ்வாய் - வலிய முனையைடைய, சமிரணன் - காற்று. 128. ஓவியர்க்கு - சித்திரக்காரர்களுக்கு 129. ஆண்டு ஒர் - அங்கே ஒரு, ஏ, அசை, அவன் - இராமன். 130. மங்குலில் - மேகத்தினால், அதாவது மழையினால், மாதுமை - அதிசயம். 131. இகல்புரி - சண்டைசெய்த, நுவறி - சொல்வாய். 11. அங்கதன் தூது 132. தூதன் - தூதனாகிய அங்கதன், வெயில் - சூரியன். 137. பணித்த மாற்றம் - கூறிய உரைகளை 139. செம்மல் - மைந்தன், தூங்க - தொங்கும்படி, சிந்துரக்கிரிகள் - யானைகள் வாழ்கின்ற மலைகள். 141. நாற்றி - கட்டி 143. துளங்க - நடுங்க, உம்பி - உன் தம்பியாகிய வீடணன். 144. சீயம் - சிங்கம். 145. நடுவனே செய்யத்தக்க - எமன் கொல்லுதலைச் செய்யத் தக்க, உலர்ந்தார்க்கு - மடிந்தவர்க்கு. 147. புதல்வன் தன்னை - அட்சய குமாரனை. 150. துதைந்து எழும் - அதிகமாக எழுகின்ற, செச்சையான் - செஞ்சாந்தை யுடையவன், இந்து - சந்திரன். தமிழ்ப்பாடத் தொகை நான்காம் பாகம் (1931) முன்னுரை நமது மாணவர்கள் கல்வியை ஆவலுடனும் ஊக்கத்துடனும் கற்பதற்கு முதற்காரணம் பாடபுத்தகங்களேயாகும். இரண்டாவது அப்பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள் ஆவார்கள். ஆதலாற் புதிய முறையில் பல பாடபுத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டியது இன்றியமையாத தொன்று; என்று கல்வித்துறை யில் உழைத்துவரும் பலர் கருதுகின்றனர். இக்கருத்துடனேயே, தமிழ்ப்பாடத்தொகை என்னும் பெயருடன் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் தரங்களுக்கு ஏற்ப (I,II,III, IV, and V, Forms) முறையே முதற்பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம்பாகம், நான்காம் பாகம், ஐந்தாம் பாகம் என ஐந்து புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும், உரைநடைப் பாடங்களும், செய்யுட் பாடங்களும் செய்யுட் பாடங்களுக்குக் குறிப்புரைகளும் உள்ளன. இப்புத்தகங்கள் தற்காலத்தில் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் பாடமுறையை ஒட்டியும், இளம்பருவத்திலேயே மாணவர்களுக்குத் தமிழன்பும், கல்வியில் ஊக்கமும் பரந்த நோக்கமும், சிறந்த கொள்கையும், மிகுந்த அறிவும் உணர்த்திட வேண்டுமென்னும் நோக்கத்துடனும் எழுதப்பட்டன. இவற்றுள் உடல்நூல், உயிர்நூல், அறிவுநூல், ஒழுக்கநூல் வரலாற்று நூல், நிலநூல், பொருள்நூல், வானநூல் என பலவகையான பாடங்களும், பொது அறிவை ஊட்ட கட்டுரை களும் நல்ல தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இளம்பருவத்தில் வெறும் நீதிகளை மட்டிலும் வலியுறுத்தும் செய்யுட்பாடங்களையே பயிற்றுவிப்பதைக் காட்டிலும், நீதிச் செய்யுட்களுடன் கதைச் செய்யுட் களையும் கலந்து போதிப்பது அவர்கட்குக் கல்வியில் மிகவும் ஊக்கம் ஊட்டுவதாகும். ஆதலால், இப்புத்தகங்கள் எல்லா வற்றிலும் நீதிச்செய்யுட்களும் கதைப்பாடல்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இப்புத்தகங்களில் என்னால் எழுதப்பட்ட உரைநடைப் பாடங்களும், செய்யுட்பாடங்களும், S.S.L.C. பரீக்ஷைக்குப் பல்கலைக் கழகத்தாரால் தொகுக்கப் பெறும் தமிழ்ப்பாட முறையைப் பின்பற்றிப், பல நூல்களிலிருந்து தொகுத்த அறிஞர்களால் எழுதப்பட்ட பாடங்களும் அடங்கியுள்ளன. இப்புத்தகங்களுக்குத் தங்களுடைய சிறந்த உரைநடைப் பாடங்களைக் கொடுத்துதவிய அறிஞர்களுக்கு எனது நன்றியறிதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என்னால் எழுதப்படும் பல புத்தகங்களையும் மனமுவந்து வெளியிட்டு வரும், திருவாளர் இ.மா. கோபாலகிருஷ்ணக்கோனார், அவர்களுக்கு நன்றி பாராட்டுவதுடன், இப்புத்தகங்களை ஏற்று என்னை இத்தகைய முயற்சியில் ஊக்கப்படுத்துமாறு கல்வித்துறையில் உள்ள எல்லோரையும் வேண்டிக் கொள்ளகின்றேன். இராஜாமடம் இங்ஙனம் 1.3.30 சாமி - சிதம்பரன் இன்ப நெறி செல்வக் கல்வியிற் சிந்தையைச் செலுத்திப் பல்வகைக் கலைகளும் பளகறப் பயில்வோம்! பிறநா டுறைவோர் பெருஞ்செயல் அனைத்தையும் திறமுடன் ஆய்ந்து பலநலம் தெளிவோம்! செயற்கைப் பொருள்கள் செய்வகை அறிய இயற்கையின் மாண்புகள் எல்லாம் உணர்வோம்! இது என் தாய் நிலம்; இவர் என் சோதரர்; இது என் தாய்மொழி எனமனங் கொள்வோம்! மன்னுயிர் யாவும் நன்னிலை வாழ்வுறப் பன்னலம் இயற்றப் பரிவுடன் புகுவோம்! ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை எனும் மொழியை உண்மையாக் கொள்ளுதும்! உயரிய ஒழுக்கமும், வண்மையும், பொறையும், வளர்பேர் அன்பும், ஒற்றுமை உணர்ச்சியும், உலகியல் அறியும் பெற்றிமை, வீரம், பெருமை, உரிமை ஆயவை பிறவும் அடைந்து இவ் உலகில் தூயபேரின்பம் துய்க்குவம் மகிழ்ந்தே. சாமி. சிதம்பரனார். செல்வமும் நாடும் இல்லானை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாருஞ் சிறப்புச்செய்வர். கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன்றிருக்குமாயின் எல்லாருஞ் சென்று எதிர்கொள்வார். செல் வத்திற்கு இருக்கும் மாண்பு வேறு எப்பொருட்கும் இல்லை. செல்வம் யாரிடம் இருக்கின்றதோ அவரிடமே இன்பம் உறைந்து நிறைகின்றது. செல்வமில்லாதார் மக்கட்பிறப்பெடுத்ததன் பயனை நுகரமுடியாதவராவர். செல்வம் உடையவர்க்குச் செல்வாக்கில்லாத இடமில்லை. எந்த ஊரினும் அவர் ஆட்சி செலுத்தலாம்; எந்த நாட்டிலும் அவர்பெருமை எய்தலாம். அரசர்களுடைய நட்பையும் எளிதாகப் பெறுவார்கள்; ஆன்றோர்களின் கூட்டுறைவையு மடைவார்கள். செல்வம் என்று சொல்லப்படுவது பொன் மாத்திரம் அன்று; வெள்ளி மாத்திரம் அன்று. ஒருவர் கையிலிருந்து ஒருவர் கைக்கு மாறக்கூடிய எப்பொருளும் செல்வமாகும். மக்களுடைய வாழ்க்கைக்குத் துணை செய்வன எவையும் செல்வமாகும்; இம்முறையிற் பார்க்கும்போது, கனிகளில் இருந்து வெட்டி யெடுக்கின்ற உலோக வகைகள் யாவும் செல்வந்தான். நிலத்திற் பயிர் செய்து விளையச் செய்கின்ற தானிய வகைகள் யாவும் செல்வந்தான். நிலத்தைப் பயிர் செய்வதற்கும், நமக்குப் பால் முதலிய உணவைத் தருவதற்கும் காரணமாகவிருக்கின்ற ஆடு மாடுகளும் செல்வந்தான். மனிதன் தன்னுடைய உடல் உழைப்பால் ஈட்டுவன முழுவதும் செல்வந்தான்; தன் அறிவின் வலிமையால் புதிதாகக் கண்டு பிடிக்கக்கூடியவைகள், மக்களுடைய இன்ப வாழ்க்கைக்குத் துணை போகுமாயின் அவையும் செல்வந்தான். இயற்கையாக யாண்டும் காணப்படுகின்ற பொருள்களைச் செல்வமென்று கூறவொண்ணாது. காற்றை நாம் எங்கும் எளிதிற் காணுகின்றோம்; அதனை நமது முயற்சியின்றியே அனுபவிக்கின்றோம். நீரும் அப்படியே. ஆகையால் இவைகள் செல்வமெனக் கூறப்படா. ஆனால் நிலம் மட்டும் அப்படியன்று; பாடுபட்டால் தான் அதனிடமிருந்து பயன்பெற வியலும். இன்பம் தூய்க்க வேண்டுமென்று நினைக்கின்ற எந்நாட்டினரும் செல்வப் பொருளை உண்டாக்குவதிற் கருத்துச் செலுத்த வேண்டும்; செல்வமுள்ள நாடு தான் நாடுகளிற் சிறந்து முன்னணியில் நிற்கும்; சுதந்திர வாழ்க்கையில் வாழ முடியும்; செல்வம் அற்ற நாடு அடிமை வாழ்க்கையில் தான் வாழவேண்டும்; இன்பமற்ற வாழ்க்கையில் தான் இருத்தல் வேண்டும்; ஆதலின் நாட்டின் நலத்தின் பொருட்டுச் செல்வப் பொருளை ஈட்ட வேண்டுமென்ற கவலை ஒவ்வொரு ஆண்பெண்களிடத்தும் இருத்தல் வேண்டும். செல்வம் உலகப்பற்றுக்குக் காரணமென்றும், பற்றுள்ளம் வந்துவிட்டால், உலக வேலைகளிலேயே காலங் கழிக்க நேரிடுமென்றும், அதனால் பிறவா நெறியாகிய முத்திபெற இயலாதென்றும் கூறிச் செல்வத்தைக் கண்டவாறு தூற்றிப் பேசியவர்கள் நமது நாட்டிற் பலருளர். பெரும்பாலும் தத்துவ ஞானிகளெனத் திகழ்ந்தோர் அனைவரும் மதத்தலைவர்களென விளங்கியவர்கள் அனைவரும்- செல்வத்தை வெறுத்துக் கூறியவர்களே. செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று என்று கூறினார் ஒருவர். இன்னல் தரும் பொருள் என்று புகன்றார் ஒருவர். செல்வஞ் சகடக்கால் போலவரும் என்று மொழிந்தார் ஒருவர். இடைக் காலத் திற்றோன்றிய புலவர்கள் இவ்வாறு செல்வத்தை இழித்துக் கூறினார்களே யன்றிப் பண்டைக்கால அறிஞர்கள் செல்வத்தைப் புகழ்ந்தே கூறினர். அவர் கூற்றையும் சிறிது நோக்குவோம். வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்பது நாலடி. பொருளிலார்க்கு இவ்வுலம் இல்லாகியாங்கு என்று வள்ளுவர் மொழிகின்றார். திரைகடலோடியும் திரவியந் தேடு என்பது நாம் இளமையிற் படித்த பாடம். சீரைத்தேடின் ஏரைத்தேடு என்பதுஞ் செல்வத்தைச் சேர்க்கும்படி கூறுவதே. கைவினை கரவேல் என்ற கூற்றும் செல்வப் பொருள் பற்றி எழுந்ததே. ஆதலால் முன்னோர்கள் செல்வத்தை அறவே உலகத்திற்கே வேண்டாமென வெறுத்தவர்கள் அல்லர். பண்டை நாளில் நமது நாட்டில் செல்வம் செழித்திருந்ததனால் தான் நாம் இன்று கணக்கற்ற ஓவியங்களைக் கண்ணாற் காணுகின்றோம். காவியங்களைப் பார்க்கின்றோம். காலஞ் சென்ற புலவர்களுடன் கலந்து உரையாடுகின்றோம். அவர்களுடைய உள்ளக் கருத்தைத் தெள்ளிதில் அறிகின்றோம். இன்றேல் பண்டைக் காலத்திய பழக்க வழக்கங்களை நாம் அறிந்து கொள்வதெப்படி? இப்பொழுது யாண்டும் பரவியிருக்கின்ற அயல்நாட்டாரை நோக்குங்கள்! அவர்கள் சென்றவிட மெல்லாம் சிறப்படை வதற்குக் காரணம் செல்வமன்றோ? அவர்கள் அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்த செல்வங்கள் எத்துணை? இன்று காணப்படுகின்ற மின்சார சக்தியாகிய செல்வத்தைக்கண்டு பிடித்த பேரறிவை என்னென்று கூறுவது? மின்சார சக்தியால் நமக்குக் கிடைக்கும் பெருநலங்களை யாரே அளந்தறிய வல்லார்? இரவைப் பகலாக்குகின்றனர்; பேசாத அஃறிணைப் பொருளைப் பேசச் செய்கின்றனர்; இயங்காத நிலையியற் பொருளை இயங்கச் செய்கின்றனர்; வேண்டிய பருவத்தில் வானத்தையும் வழங்கச் செய்கின்றனர்; இறந்த வரையும் உயிர் பெற்றெழச்செய்கின்றனர். பல்லாயிரம் கல்லுகளுக்கப் பால் நடக்கும் செய்திகளை இருந்த இடத்திலிருந்தே பார்க்கின்றோம்; கேட்கின்றோம். இன்னும் மின்சாரத்தால் எத்துணை அதிசயங்கள் நிகழப் போகின்றன வோ! மின்சார சக்தியை விடச் சிறந்த சக்தியையும் கண்டுபிடிக்க அறிஞர்கள் முயன்று வருகின்றனர். இங்ஙனம் பிறநாட்டினர், உலக வாழ்க் கையை எளிதாக நடத்தி, இன்பமுறுதற்கான கருவிகளாகிய செல்வங்களை நாடுவதில் அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர். செல்வம் நிறைந்த நாட்டில், கொலை நிகழாது; களவு நடைபெறாது; நோய்கள் உண்டாக மாட்டா; அரசியற் போராட்டங்கள் நடைபெறா; உள்நாட்டுக் கலகங்கள் ஒரு சிறிதும் உண்டாகா. இப்பொழுது நமது நாடிருக்கும் நிலையைச் சிறிது கண்ணெடுத்துப் பாருங்கள்! உண்ண உணவின்றியும், உடை யின்றியும், இருக்க இடமின்றியும் கொடிய நோய் வாய்ப்பட்டு மடிவோர் எத்துணையர்? நமது நாட்டில் எந்தத் திசையை உற்று நோக்கினாலும், அழுகுரலும். கவலைப் பேச்சும், தூக்குக்குறி களும் காணப்படுகின்றனவேயன்றி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் காணப்படவில்லையே? எந்தத்திசைகளிலும் சாதிப்போராட்டங் களும், சமயப் பிணக்குகளும், வீறு கொண்டு நடம் புரிகின்றன வேயன்றி அன்பும் ஒற்றுமையும் நடமாட வில்லையே? உய்த்து நோக்கினால் இவற்றிற்கெல்லாம் காரணம் பொருளாதார நிலை யென்பதை யார் தான் உணர மாட்டார்? வருந்தி யழைத்தால் வராதனவில்லை. முயற்சி திருவினை யாக்கும் உழைப்பால் முடியாத செயல் உலகில் ஒன்றுமில்லை. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. ஆக்கப்படுவதனால் தான் ஆக்கமெனப் பெயர் பெற்றது. தேடப் படுவதனால் தேட்டம் எனப்பெயர் பெற்றது. தேடாமலிருந்தால் செல்வம் வந்து சேராது. நம் முன்னோர்களால் தேடிவைத்துள்ள செல்வமும் தானே சென்றுவிடும். வருவது தானே வரும்; போவது தானே போகும்; என்று வாளா மடிந்திருப்பதால் யாதொரு பயனுமில்லை.செல்வம் என்பது பிறப்பினால் உண்டாவது இல்லை. மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் என்பதை அடியோடு மறந்து விடவேண்டும். இஃது ஔவையால் சொல்லியிருக்கமுடியாது. யாரோ கவி புனையத் தெரிந்த சோம்பேறிப் புலவர் ஒருவர் சொல்லியிருக்க வேண்டும். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் என்றும் ஊக்கமது கைவிடேல் என்றும் உணர்த்தியவர் மேற்கண்ட, முயற்சியை அழிக்கும் மொழியைக் கூறியிருக்க முடியுமா? ஆகையால் முயற்சியால் பொருளீட்ட முயல்வது நாட்டினரின் கடமையாகும். கொலம்ப அமெரிக்கா கண்டத்தைக்கண்டு பிடித்தது முயற்சியினாலன்றோ? காடு அடர்ந்த அந்நாட்டைப் பொன்விளையும் பூமியாகச் செய்தது அன்னவரின் முயற்சியன்றோ? முயற்சியினால் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட நாடுகள் எத்துணை? தீவுகள் எத்துணை? முயற்சி யென்னும் காரணத் தாலன்றோ இன்று ஆங்கில ஆட்சியைச் சூரியன் மறையாத ஆட்சி என்று சொல்லப்படுகின்றது. நமது நாட்டினரும் உழைப்பினாலும் முயற்சியினாலும் செல்வப்பொருளை ஈட்டப் புகவேண்டும். நீர் வளமும் நிலவளமும் பொருந்திய நமது நாட்டில் - இந்தியா பொன்விளையும் பூமி என்று பெயர் பெற்ற நமது நாட்டில் உழைப்பில்லாத காரணம் ஒன்றினாலேயே செல்வ வளங்குன்றியிருக்கின்றது. எல்லா வற்றையும் விட இன்றியமையாத உயர்ந்த செல்வம் தானிய வகைகளே யாகும். தானிய வகைகளை மிகுதிப்படுத்துவதில் நாம் முயலுவதில்லை. அமெரிக்கா முதலிய நாடுகளில், புதிய முறையில் நிலத்தைப் பண்படுத்தியும், புதிய எருக்களை இட்டும், நீரில்லாவிடில் மின்சாரத்தால் மழையை வருவித்தும் பயிர் செய்து ஏராளமான பலனை அடைகின்றனர். நமது நாட்டுப் பயிர்த்தொழிலில் யாரும் எண்ணஞ் செலுத்தாமையால் வரவரக் கீழடைந்து வருகின்றது. குடி உயரக்கோல் உயரும் தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது நெற்பயிர்விளை பருவத்தே பயிர் செய் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை என்ற பொன் மொழிகள் மறக்கப்பட்டு விட்டன. கற்றார் உழவிற் கருத்துச் செலுத்துவதில்லை. அவர்கள் அடிமை வாழ் வாகிய உத்தியோகஞ் செய்வதையே பெருமை என எண்ணு கின்றனர். கற்றவர் கூட்டம் நாட்டுப்புறங்களிலிருந்து பயிர்த் தொழிலை வளர்ப்பதற்கான வழியில் உழைக்காமல், தன்னலத்தையும், தற்பெருமையையும் குறிக்கோளாகக் கொண்டு நகர்ப் புறங்களையடைந்து விடுகின்றது. கல்வியில் தேர்ச்சிபெறாத ஏழை மக்களே பயிர்த்தொழிலை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நமது நாட்டிற் செல்வம் வளர்வதெங்ஙனம்? கைத்தொழில் மூலம் பண்டங்கள் செய்வதனாலும் நாட்டுச் செல்வம் வளர்ச்சி யடையும். பண்டைக்காலத்தில் நமது வாழக்கைக்கு வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் நாமே செய்து கொண்டிருந்தோம். இக் காலத்திலோ நாம் நம் வாழ்க் கைக்கு வேண்டிய எந்தப் பொருளுக்கும் வேற்று நாட்டினரையே எதிர்பார்த்து நிற்கின்றோம். மர வேலை, இரும்பு வேலை, கல் வேலை, சித்திரவேலை, நெசவுத் தொழில் முதலிய தொழில்கள் நமது நாட்டிற் சில பாகங்களில் நடைபெற்றுவரினும், அவைகள் போதிய அளவு வளர்ச்சியடைவதில்லை. காரணம் கற்றவர்கள் அவற்றிற் கருத்தூன்றாமையே யாகும். இனி வாணிகத்துறையை எடுத்துக்கொள்ளுவோம். நாட்டின் செல்வ வளத்திற்குச் சிறந்த தொழில் வாணிகமே யாகும். மேல் நாடுகள் செல்வத்திற் சிறந்து திகழ்வதற்குக் காரணம் வாணிகத்தில் அவர்கள் உயர்வுற்று விளங்குவதே யாகும். நமது நாட்டுச் செல்வங்களை யெல்லாம் வாணிகத்தின் வழியாகவே அயல்நாட்டினர் கொள்ளைகொண்டு செல் கின்றனர். நமது நாட்டினரும் வாணிகம் புரிகின்றனர் என்றாலும், அயல் நாட்டினரைப் போலக் கூட்டுறவு முறையில் வாணிகம் புரியும் பழக்கம் இன்னும் நம்மிடம் உண்டாகவில்லை. கூட்டுறவு முறை வாணிகத்தால் தான் ஏராளமான ஊதியத்தைப் பெற முடியும்; வாணிகத்தையும் பெருக்க முடியும். ஆகவே நாட்டுச் செல்வத்திற்கு முதற்காரணமாயிருப்பன, விவசாயம், கைத்தொழில், வாணிகம் என்பவைகள் என்பதை எந்த நாடும் மறந்துவிடுதல் கூடாது. கற்றவர்கள் அனைவரும் சுதந்தர வாழ்க்கையை விரும்பவேண்டும். பிறரிடம் கைகட்டி வாய் புதைத்து உடல் நடுங்கி நின்று, வெள்ளாடையுடுத்துத் தனக்குக் கீழ்ப்பட்டவர்கள் மீது தன் முழுஅதிகாரத்தையுஞ் செலுத்தி உத்தியோகஞ் செய்து பிழைக்கும் மானமற்ற செயலை வெறுக்க வேண்டும். அயல் நாட்டினர் முன்னேற்றம் எய்திய காரணங்களைக் கண்டறிந்து, நாமும் அவர்களுடைய சீரிய செயல்களைப் பின் பற்றிச் செல்வம் வளர்வதற்கான துறையிற் சென்று பணிபுரிதல் வேண்டும். அனைவரும் செல்வத்தைச்சேர்க்க முயலவேண்டும் என்றதனால், ஈத்துணைக்காலும் ஈயாதவனாயிருந்து பிறருக்கு இன்னல் விளைத்தாவது பொருள் சேர்ப்பது நேர்மையாகாது. மற்றவரை ஏமாற்றிச் சேர்க்கும் பொருளும், துன்புறுத்தியீட்டும் பொருளும், நிலைத்திராது. உடலுழைப்பால் வருந்தும் ஏழை மக்களின் துயரத்தைக் கண்ணெடுத்துப்பாராமல், அவர்கள் வயிறெரியப் பொருள் சேர்த்தலும் கூடாது. பிறருக்குத் தீமை நேராத வழியில் உழைத்துப் பொருள் சேர்ப்பதே முறையாகும். அறநெறியில் உழைத்துப் பொருள் சேர்க்கின்ற ஒவ்வொரு வரும் சிக்கனமாகச் செலவு செய்து கொள்ளவும், தமது ஊதியத்தில் ஒரு பகுதியை மிகுத்து வைக்கவும் முயலவேண்டும். வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யக்கூடாது. வளவனாயினும் அளவறிந்தழித்துண் தமது ஊழியத்திற்குத் தக்க வகையில், உணவிற்குச் செலவு இவ்வளவென்றும், சில்லறைச் செலவு இவ்வளவென்றும், ஒவ்வொரு வகைக்கும் ஒரு கணக்கு வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு கணக்கு வைத்துக் கொண்டு செலவு செய்தால் அளவுக்கு மிஞ்சிய செலவாகாது. ஆன முதலில் அதிகம் செலவானால், மானம் அழிந்து மதிகெட்டு, போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஆக வேண்டும் என்று சொல்லும் அறிவு மொழி ஒவ்வொருவர் மனத்தும் படிந்திருக்க வேண்டும். ஒரேயடியாக மலைபோலச் செல்வத்தைக் குவித்துவிட வேண்டும் என்று பேராசை கொள்வது தவறு. பேராசை பெரு நட்டம். சிறிது சிறிதாக உடைத்தால் மலையையும் அழித்து விடலாம். கூடை கூடையாக மண்ணெடுத்து உயர்த்திக் கொட்டினால் இமயமலையைக் காட்டிலும் பெரிதாக உயர்த்தி விடலாம். ஒவ்வொன்றாக எண்ணித் தான் நூறாக வேண்டுமே யன்றி, ஒரே யடியாக நூறு ஆவதில்லை. ஆகையால் ஒரு பைசா தானே என்று புறக்கணித்தல் கூடாது. காணிக்குள்ளது தானே கோடிக்கு செல்வத்தைப் பயனுள்ள வழியில் செலவு செய்தல் வேண்டும். நமது நாட்டுச் செல்வங்கள் பெரும்பாலும் பயனில்லாத துறையிலேயே செல வழிகின்றன. பயனற்ற செலவுகள் இந்துக்களின் சமூகத்தில் தான் மிகுதி. வாழ்க்கை நடத்துவதற்கு ஆணும் பெண்ணும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் மணம் என்பதற்கு ஏராளமான பொருளைச் செலவழிக்கின்றனர். நடுத்தரமான செல்வமுடைய ஒரு குடியில், நாலு பெண்களும், நாலு பிள்ளைகளும் இருந்து விட்டால், அவர்கள் மணச்சடங்குகளில் அக்குடும்பச் செல்வம் முழுவதும் செலவாகிவிடுவதைக் காண்கின்றோம். இதைப் போலவே இறப்பு முதலிய செயல்களிலும் ஏராளமாகச் செலவு செய்கின்றனர். பயனற்ற பண்டிகை நாட்கள் பலவற்றைக் கொண்டாடும் வகையில் ஏராளமாகச் செலவு செய்கின்றனர். இன்னும், சுகாதார முறையைப் பின் பற்றாத காரணத்தால் நோயடைந்தவர்கள், நோய் தீருவதற்கு மருத்துவர்க்கும் மருந்திற்கும் பொருள் கொடுப்பதுடன் நில்லாமல், வீட்டுத் தெய்வங்களுக்கும், ஊர்த்தெய்வங்களுக்கும், நாட்டுத் தெய்வங்களுக்கும் வேண்டிக் கொள்ளும் வகையில் கணக்கற்ற பொருள்களைச் செலவு செய் கின்றனர். இச்செலவுகள் யாவும் ஒவ்வொரு தனிக் குடும்பத்தின ரால் செலவழிக்கப்படுவதாயினும், அதனால் நாட்டின் செல்வம் குன்றுவதென்பதில் ஐயமில்லை. குடும்பங்களின் செல்வமே குவலயத்தின் செல்வமாகும். இனி அறம் என்ற பெயரால் நமது நாட்டில் ஏராளமான பொருள்கள் பயனின்றி அழிகின்றன. அறம் என்பதை வேண்டாம் என்று நாம் கூறவில்லை. அறம் நாட்டின் குடி மக்களுக்குப் பயன்படக்கூடியதாக இருத்தல் வேண்டு மென்பதே நமது கருத்தாகும். ஆனால் இதுகாறும் நமது நாட்டில் நடைபெற்று வந்த அறத்தால் நாட்டின் நன்மை சிறிதாவது வளர்ந்ததா? என்பதைச் சிறிது சிந்தித்துப்பார்த்தால் உண்மைவிளங்கும். பழமையான செயல்கள் என்றும், முன்னோர்கள் மொழிந்தன வென்றும், சொல்லிப் பயனற்ற செயல்களைப் பாராட்டுவதில் என்ன நன்மை இருக்கிறது? நமது நாட்டின் செல்வங்கள், மதத்தின் பெயரால் கோயில் களுக்கும், அவைகளுக்கு நடத்தும் திருவிழாக்களுக்கும் ஏராளமாகச் செலவழி கின்றன. அந்தச் செலவினால் நாட்டிற்கோ மக்களுக்கோ கடுகளவாவது பயனுண்டு என்று கூறமுடியாது. பலவூர் மக்களும் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதே பலனாக முடிகின்றது. அன்னதானத்திற்சிறந்தது நமது நாடு. அந்த வகையில் செலவழியும் பொருள் மிகப்பல. அதனால் வேலை செய்யாமல், ஊரில் பிச்சை யேற்று வயிறு வளர்க்கும் சோம் பேறிக் கூட்டம் பெருகுகின்றதேயன்றி வேறென்ன பயன்? பசித்தவர்க்கு உணவிட வேண்டியது ஒவ்வொரு மகனுடைய முதற்கடமையே. தன் வீடு தேடி வரும் புதியவர்க்கும், சுற்றத் தார்க்கும் உணவிடுதலை யாருங்குறை கூறவில்லை. வேலை செய்யாது ஏமாற்றி வயிறு வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு அன்னமிட்டுக் காப்பாற்றுவதை அறமென்று கருதும் அறிவற்ற செயலைத்தான் நாம் குறை கூறுகின்றோம். வேலை செய்யத் திறமையற்ற ஏழைமக்களைக் காப்பாற்ற வேண்டியது தான் நாட்டினரின் கடமை. அறங்கருதிச் செலவு செய்யும் பொருளைக் கல்வியின் பொருட்டுச் செலவிட முன் வரவேண்டும். வயிற்றிற்கு உணவு கிடையாமல் வருந்தித்திரியும் ஏழை மக்களுக்கு, உண்டி, உடை, உறையுள் அளித்துக் கல்வி கைத்தொழில் முதலியவை களைப் பயிலுமாறு செய்தல் வேண்டும். பல் வகையான பண்டங் களையும் நமது நாட்டிலேயே செய்து கொள்ளுவதற்குரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதிற் செலவு செய்தல் வேண்டும். வேலையற்றுத் திரிந்து கொண்டிருக்கும் ஏழை மாந்தர்களை வேலை செய்யுமாறு வற்புறுத்த வேண்டும். இவையே நாட்டின் செல்வப் பெருக்கிற்கு ஏற்ற வழியாகும். இன்னும் நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிலும் வருவாய்க்கு வழியில்லாமல் ஏராளமான செல்வங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. பெண்மக்களும், ஆண் மக்களில் கூடச் சிலரும், கல்லிழைத்த கலன்களும், பொற்பணிகளும், தரித்துக் கொள்ளும் வழக்கம் நமது நாட்டில் தான் மிகுதியாக விருக்கின்றது. இந்த வகையில், வருவாய்க்கு வழியில்லாமல், ஒவ்வோரில்லங்களிலும் அடங்கிக் கிடக்கும் பொருள்களை முற்றும் கணக்கிட்டுக் கூறமுடியாதென்றே மொழியலாம். ஒவ்வொரு செல்வர்களுடைய மனைகளிலும், அரசர்களுடைய அகங்களிலும், கோடிக்கணக்கான பொருள்கள் இவ்வகையில் புதைந்து கிடக்கின்றன. இப்பொருள்களால் அக்குடும்பத்தினர்க்குத் தான் பயனுண்டா? அல்லது நாட்டினர்க்குத்தான் உதவியுண்டா? ஆதலால் மேற்கூறிய செய்திகளையெல்லாம் நாம் கூர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும். நாட்டின் செல்வத்தை வளர்க்கக்கூடிய வகையில் நாம் பயிற்சி பெறவேண்டும். நமது நாட்டுக்கலைகளில் செல்வத்தைப்பற்றிக் கூறும் தனிக்கலைகள் இல்லை. மேல் நாட்டுக் கலைகளில் பொருளாதாரக் கலையென்பது (Economica) ஒரு தனிக்கலையாகும். அக்கலை மக்கள் ஒவ்வொரு வரும் தன்னலத்தைக் கருதிப் பொருள் சேமிக்க வேண்டுமென்று கூறவில்லை. நாட்டில் எவ்வாறு செல்வத்தை வளர்ப்பது என்பதைப்பற்றியே எடுத்துக் கூறுகின்றது. அத்தகைய கலை களை நாமும் பயில வேண்டும். நம்முடைய குடும்ப நலத்திற்குத் தான் பொருள் சேமிக்க வேண்டுமெனக் கருதுதல் தவறாகும். நாம் சேமிக்கும் பொருளும், செலவிடும் பொருளும், நமக்கும் சமூகத்திற்கும் பயன்பட வேண்டும். நாடொன்றும் வாழக் கேடொன்றும் இல்லை என்பது முன்னோர் மொழி. தன்னலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஒருவரை ஒருவர் வஞ்சித்தும், ஏமாற்றியும் பொருளீட்டும் தீச்செயலை அகற்றி அறவழியிற் பொருளீட்டி அப்பொருளை நாட்டிற்குப் பயன் படக்கூடிய துறையில் செலவிட முயல்வதே நாட்டின் நலங்கருதும் எவருடைய கடமையும் ஆகும். என்பதை ஒருவரும் மறந்து விடுதல் கூடாதென்பதை யாண்டும் பறை சாற்றவேண்டும். சாமி சிதம்பரனார். ஆபிரகாம் லிங்கன் ஆபிரகாம் லிங்கன் என்பவர் அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் பதினோராம் குடி அரசின் தலைவராயிருந்தவர். இவர் கெண்டசி என்னும் நகருக்கு அண்மையில் உள்ள ஹார்ட்டின் என்ற மாகாணத்தில் 1809 - ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் 12- ஆம் நாளில் பிறந்தார். இவர் தம் குடும்பத்தினர் 1688 - ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து ஐக்கிய மாகாணங்களின் ஒரு பாகத்தில் குடியேறி வறுமையினாற் பல இடங்களில் அலைந்து இறுதியாக ஹார்ட்டின் என்ற மாகாணத்தில் நிலைகொண்டனர். இம் மாகாணம் காடடர்ந்த நிலப்பாகமாயிருந்தமையால் மக்கள் குடியேறி வாழ்வதற்கும் பயிர் செய்வதற்கும் தகுதியற்ற தாயிருந்தது. ஆகையால் லிங்கன் குடும்பத்தினர் மிகவும் வருந்தி நிலத்தைப் பண்படுத்திச் சிறுகுடிசை யமைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். அவருடைய இளமைப் பருவம் குடிசைகள் கட்டுவதிலும் உழுது பயிரிடுவதிலும் உணவின் பொருட்டுப் பறவைகளை வேட்டையாடிக்கொண்டு வருவதிலும் கழிந்தது. எனினும் மாந்தர்க்கு நன்மைதரக்கூடிய செயல்களை அறிய வேண்டு மென்னும் அவா ஒவ்வொரு நாளும் அவரிடம் வளர்ந்து கொண்டிருந்தது. லிங்கனும் அவருடைய சகோதரியும், தங்கள் உறைவிடத்திற்கு எட்டு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்று வந்தனர். அப்பள்ளிக் கூடத்தில் அவர்கள் அதிக நாள் படிக்கவில்லை. அதற்குக் காரணம் வறுமையின் கொடுமையே. ஆபிரகாம் லிங்கன் அப்பள்ளிக்கூடத்தை விட்டு நீங்கிய பின் குடும்ப வேலைகளையே செய்து வந்தார். ஆயினும் கல்வி கற்க வேண்டுமென்னும் ஆவலும் ஊக்கமும் உடையவரா யிருந்தமையால் குடும்பப்பணிகளை முடித்த பின் படிப்பதிலேயே காலம் போக்கி வந்தார். அவருக்குப் படிப்பதற்கு விளக்கும் கிடைப்பதில்லை. எனினும் தரையிற் படுத்துக்கொண்டு அடுப்புத்தீயின் வெளிச்சத்திற் படிப்பார். கரும்பலகை, எழுது கோல், தான் முதலியன கிடைக்காமையால் மரக்குடிசையின் சுவரைக் கரும்பலகையாகவும் அடுப்புக்கரியை எழுது கோலாகவும் பயன்படுத்திக் கொள்ளுவார். படிப்பதற்குப் புத்தகங்கள் கிடைக் காமையால் கிடைத்த புத்தகங்களையெல்லாம் செவ்வையாகப் பயில்வார். விடியற்காலையில் துயிலெழுந்தவுடன் மரங்களிடையே தோன்றும் சூரிய வொளியில் படிப்பார். ஆபிரகாம் லிங்கனுடைய இளமைப் பருவத்திலேயே அவருடைய தாயார் இறந்து விட்டார். பிறகு அன்பும் இரக்கமும் நிறைந்த தனது மாற்றாந்தாயின் உதவியினால் பனியன் என்பவனால் எழுதப்பட்ட திருயாத்திரைக்காரன் சரிதம் (Buniyan’s Pilgrims’ Progress) என்னும் நூலையும் ஈசாப் கட்டுக்கதைகள் என்னும் நூலையும் படித்து முடித்தார். அவர் காலையில் படித்து முடித்த வுடன் சிறிது உணவு உட்கொண்டு, வயல்களுக்குச் சென்று வேலை செய்து வருவார். வேலை செய்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் நேரத்திலும் ராபின்சன் குருசோ என்னும் புத்தகத்தை மிகவும் விருப்பத்துடன் படித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் இளமை வயதிலேயே நினைவு வலிமையும், நுண்ணறிவும், ஈகைத்தன்மையும், அன்பும், தளராத ஊக்கமும், உழைப்பும், நோயற்ற யாக்கையும் பெற்று விளங்கினார். தக்க வயது வந்தபின் பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக 1825 - ஆம் ஆண்டு முதல் 1832 - ஆம் ஆண்டுவரை வாணிகத்தில் ஈடுபட்டும் வணிகர்களுக்குப் பொறுப்புள்ள வேலைக்காரராக இருந்தார். அவர் எப்பொழுதும் தமது வேலையில் உண்மையாகவும் நீதியாகவும் நடந்து வந்தார். வாணிகத்தில் ஈடுபட்டிருந்த காலத்திலும் ஓய்வு நேரங்களை வீணாக்காமல், ஜார்ஜ் வாஷிங்டன் பெஞ்சமின் பிராங்கிலின் என்பவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், ரோமராச்சியத்தின் தேய்வும் வீழ்ச்சியும் என்று கிப்பன் எழுதிய சரித்திரத்தையும் செகப்பிரியர் நாடகங்களையும் மற்றும் பல நூல்களையும் படித்து முடித்தார். தாம் படித்த நூல்களின் கருத்துக்களைத் தொகுத்துத் தினசரிப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். இக்காலத்தில் லிங்கன் வேலை பார்த்துவந்த வணிகருடைய வாணிகம் முறிந்துபோகவே அவர் ஒன்றும் வேலையில்லாதவராக இருந்தார். இச்சமயத்தில் சிவப்பு இந்தியர் கூட்டத்தை அடக்குவதற்கு அரசாங்கத்தாரால் அனுப்பப்பட்ட சேனைக்கு ஆபிரகாம் லிங்கன் தலைவராக ஏற்படுத்தப்பட்டார். அதில் அவர் தன்னுடைய வீரச் செயல்களைக் காட்டினார். அப்பொழுது தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிவப்பு இந்தியன் ஒருவனை எதிரிகளிட மிருந்து காப்பாற்றி அவனுடைய தேசத்திற்கு அனுப்பினார். பிறகு 1833 - ஆம் ஆண்டில் ஆபிரகாம் லிங்கன் தபால் அதிகாரியாக ஏற்படுத்தப்பட்டார். அப்பொழுதும் அவர் தன்னுடைய ஓய்வு நேரங்களிற் படிப்பதும், தன்பால் வருவோர்க்குக் கடிதம் எழுதிக்கொடுப்பதும், கல்லாதவர்களுக்குக் கல்வி பயிற்று விப்பதும், பற்பல செய்திகளைக்கூறி அவர்களுடைய அறிவை வளர்ப்பதும் ஆகிய இன்னோரன்ன பல செயல்களைச் செய்து வந்தார். லிங்கன் இவ்வாறு வேலை பார்த்து வரும்போது ஒரு நாள் குளிரில் ஒரு வறிஞன் நல்ல செருப்பும் உடையும் இல்லாமல் மிகவும் துயரத்துடன் ஒரு கட்டையைப் பிளந்து கொண்டிருந் தான். அதைக்கண்டு லிங்கன் அவனிடம் அணுகி, இக்கட்டை யைப் பிளந்தால் அதனால் உனக்குக் கிடைக்கும் பயன் யாது? என்று கேட்டார். அதற்கு அவ்வறிஞன் இதைப் பிளந்தால் எனக்கு ஒரு டாலர் கிடைக்கும் அதைக்கொண்டு புதிய செருப்பு வாங்கிக் கொள்வேன் என்றான். உடனே அவர் அவனிட மிருந்து கோடரியை வாங்கி அக்கட்டையைப் பிளந்து அவனுக்கு ஒரு டாலர் கிடைக்கும்படி செய்தாராம். இது அவருடைய இரக்கத் தன்மையைக்காட்டுதற்கோர் எடுத்துக்காட்டாகும். 1832- ஆம் ஆண்டில் ஆபிரகாம்லிங்கனை அவர் வாழ்ந்து வந்த இல்லினாய் (Illinoi) என்ற ஊரின் நகரசபை உறுப்பினராக்க மக்கள் முயன்றனர். அப்பொழுது மக்களின் முயற்சி வெற்றி பெற்று நகரசபை உறுப்பினரானார். அதுமுதல் தாய்நாட்டின் முன்னேற்றங்கருதி அரசியலில் மிகுதியாகத் தலையிட்டுத் தொண்டாற்றினார். பின்பு 1837 - ஆம் ஆண்டில் சட்டங்களைப்படித்து வழக்கறிஞர் தொழிலை (Lawyer) மேற்கொண்டார். அவருடைய நன்னடக்கையாலும், கொடைக் குணத்தினாலும், ஊக்கத் தினாலும், வாய் வன்மையாலும் பேரறிவினாலும் பொதுமக்கள் விரும்பும் தலைவரானார். பின்னர் 1842 - ஆம் ஆண்டு நவம்பரில் மி மேரிடாட் என்னும் பெண்மணியை மணந்து இல்லறம் நடத்தும் நாளில் இல்லினாய் என்ற மாகாணத்துச் சட்டசபையின் உறுப்பினரானார் அக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், ஆபிரிக்காவில் உள்ள நீக்கிரோ என்னும் வகுப்பினரைப்பிடித்துக் கொணர்ந்து ஆடுமாடுகளை விற்பது போல அவர்களை அடிமையாக விற்று வந்தனர். இக்கொடிய வழக்கம் இங்கிலாந்தி லிருந்து ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற் குடியேறிய சில நாட்களுக்குப் பின்னரே ஏற்பட்டது. இத்தகைய அடிமை வாணிகம் ஒவ்வொரு நகரின் சந்தைகளிலும் நடைபெற்றது. விலைக்கு வாங்கப்படுகின்ற நீக்கிரோவர்களை மனிதத் தன்மையின்றி மிகவும் கொடூரமாக நடத்தி வந்தனர். ஒருநாள் ஆபிரகாம் லிங்கன் வாணிகத்தின் பொருட்டு நியூஆர்லியன் என்ற நகருக்குச் சென்றிருந்தபோது அங்கு நீக்கிரோவரை விற்கும் கடையையும், ஒரு நீக்கிரோ இளம் பெண்ணை அங்குமிங்கும் ஓடுமாறு துன்புறுத்தியதையும் கண்டார். அப்பொழுது மிகவும் மனம் இளகி எவ்வாற்றா லேனும் இத்தகைய அடிமை வியாபாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமெனத் தனக்குள் முடிவு செய்து கொண்டார். மக்களுக்குள் பிறப்பினாலும், நிறத்தினாலும் உயர்வு தாழ்வு இருத்தல் கூடாதென்னும் எண்ணம் அவர் மனத்தில் வேரூன்றி வளரத் தொடங்கியது. ஆபிரகாம் லிங்கன் 1846 - ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின் பொதுவான சட்டசபை (House of Representatives) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்காலத்தில் அடிமைப்படுத்துவதே கூடாதெனக்கூறிய வட பாகத்தினர்க்கும் அடிமைப்படுத்துதல் வேண்டுமெனப் பிடிவாதம் செய்த தெற்குப் பகுதியினர்க்கும் பகையுண்டாயிற்று. சிலர் தென்மா காணங்களில் அடிமை வாணிகத்தைத் தடையின்றிச் செய்யலாம் என்றும், எல்லா மாகாணங்களுக்கும் சம்பந்தமுடைய பொதுச் செய்திகளில் ஒவ்வொரு மாகாணமும் தத்தம் விருப்பம் போலச் செய்து கொள்ளலாம் என்றும் கூறி வந்தனர். ஆனால் லிங்கன் இக்கொள்கையை மறுத்து 1775 ஆம் ஆண்டில் செய்யப் பட்டிருக்கும் அரசியல் திட்டத்திற்கு மாறுபட்டதெனக்கூறிப் பொது மக்கள் உணருமாறு உறுதியோடும், ஊக்கத்தோடும் விரிவுரைகள் செய்து வந்தார். பின்னர் 1853 - ஆம் ஆண்டில் குடியரசின் உதவித் தலைவராகத் (Vice President of U.S.A) தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது அவர் உள்ளத்தில் தோன்றியதை உரைப்பதற்கான உரிமையை நமது குடியரசு நமக்கு அளித்திருக்கும் வரையிலும் இப்பரந்த உலகில் கதிரவன் ஒளி வீசும் வரையிலும், மழை பெய்யும் வரையிலும், காற்று அடிக்கும் வரையிலும் எத்தகை யவனும் அடிமைப்படுத்தப்படக் கூடாது என்னும் செய்தியை வலியுறுத்துவேன் என்று கூறினார். பின்னர் அடிமை வாணிகத்தை ஒழிப்பதா நிலைநாட்டுவதா என்பது பற்றி வட பாகத்தினர்க்கும், தென்பாகத்தினர்க்கும் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் லிங்கன் வடபாகத்தினர் கட்சியை ஆதரித்தார். டக்ள என்பவர் தென்பாகத்துக் கட்சியை ஆதரித்து வந்தார். லிங்கன் 1858 ஆம் ஆண்டில் அதிகார சபை (Senate) யின் உறுப்பினராக ஏற்படுத்தப்பட்டார். 1860 - ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பொறுப்புள்ளதாகிய குடியரசுத் தலைமைப்பதவியை ஏற்றுக் கொண்டவுடன் உண்மை ஒரு பொழுதும் ஒருவராலும் வெல்லப் படமாட்டாது. மாந்தர்க்கு உரியவைகளில் சுதந்தரமே முதன்மை யானது. சுதந்தரமே உயர்ந்தது. சுதந்தரமே இன்றியமையாதது என்று கூறினார். ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவர் ஆனவுடன அடிமை வியாபாரத்தை நிலைநாட்டுவதை முதன்மை எண்ணமாகக் கொண்ட தென்பாகத்தினர் தங்கள் உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு ஜெப்பர்சன் டேவி என்பவரைத் தலைவராகக் கொண்டு போர்புரிய முன் வந்தனர். லிங்கன் சமாதானம் செய்து கொள்ள முயன்றும் பயன்பெறாதவரானார். இறுதியில் போர் தொடங்கியதில் முதலில் வடபகுதியினர் தோல்வி யடைந்தன ரேனும் வரவர வடபகுதியினரே வெற்றி பெற்றனர். லிங்கன், போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுதே 1863- ஆம் ஆண்டில் ஆண்மையுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள அடிமைகள் அனைவருக்கும் சுதந்தரம் கொடுத்து விட்டதாக வெளிப் படுத்தினார். அதனால் நாற்பது இலட்சம் மக்கள் விடுதலை பெற்று ஆபிரகாம் லிங்கனுக்கு உதவியாக இருந்து கெட்டிபர்க் என்னும் இடத்தில் தென்பாகத்தினரைத் தோற்கச் செய்தனர். அப்போரில் மடிந்த வடபகுதியினரைச் சேர்ந்த வீரர்களை அடக்கஞ் செய்யும்போது நமது லிங்கன் நம் வீரர்கள் மக்களின் அடிமைத்தன்மையை ஒழிப்பதற்காக இவ்வுலகத்திற் செய்த வீரச் செயல்களை ஒரு பொழுதும் மறக்க மாட்டார்கள். இவ்வீரர்கள் இத்துணை வெற்றி பெற்றாலும், இன்னும் நிறைவேறாத கொள்கைகளை நிறைவேற்றும் பொருட்டு நாம் நம்மையே தத்தம் செய்ய வேண்டும். விண்ணகம் உற்ற வீரர்கள் செயலைப் பின்பற்றி இரட்டித்த ஊக்கத்தோடும் அன்போடும் அவர்கள் விட்டுவைத்த பெருஞ்செயலை நிறை வேற்ற வேண்டும். அவர்கள் தங்கள் உயிரை வீணாகக் கொடுக்க வில்லை என்பதைக்காட்டும் பொருட்டு நாம் உறுதியுடன் நின்று குடிஅரசைக் குடிகளுக்காகப் புத்துயிர் பெற்றிருக்குமாறு செய்ய வேண்டும் என்று ஒரு விரிவுரை நிகழ்த்தினார். இப்போருக்குப் பிறகு கலகம் அடங்கிற்று. தென்னாட்டினர் அடக்கப்பட்டனர். லிங்கன் கொள்கை நிறைவேறியது. இரண்டாம் முறையும் இவரே குடிஅரசின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் நாள் இவருடைய வெற்றியைப்பாராட்டும் பொருட்டு ஒரு நாடகம் நடத்தப்பட்டது. அந்நாடகத்திற்கு இவர் தம் சுற்றத்தினர் அமைச்சர் முதலியவர்களுடன் சென்று நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒர் வன்னெஞ்சக் கொலைஞன் பின் புறமாக மறைந்துவந்து இவரைச் சுட்டுக்கொன்றான். ஆயினும் இந்த உண்மை நாட்டுத் தொண்டரின் புகழ் இன்றளவும் அழியாது நின்று நிலவுகின்றது. என்றும் அழியாது நிலை நிற்கும். C. இருதயம் M.A.L.T. முருகவேள் கண்ட காட்சி நான் சிற்றூரில் இருந்த பொழுது ஒரு பார்ப்பன இளைஞன் எனக்குச் சிறந்த நண்பனாயினான். இவ்விளைஞன் பார்வைக்கு நல்ல தோற்றம் உடையனாயும், சிறு குழந்தையைப் போல் இனிய இயல்புடையனாயும், இசை பாடுவதில் வல்ல வனாயும் இருந்தனன். இவனுடைய அமைந்த தன்மையும் இசைபாடும் வன்மையும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. எனக்கு அப்போது இருபது ஆண்டு; அவ்விளைஞனுக்குப் பதினெட்டு ஆண்டு இருக்கும். அவனும் எனக்குத் தமிழ்க்கல்வியிலுள்ள திறமையினையும் எனது நல்ல தன்மையினையுங்கண்டு விரும்பி என்னை மிக நேசித்தான். இவ்வாறு எமக்குள் என்றும் நெகிழப் பெறாத மனநெருக்கம் உண்டாவதாயிற்று. ஒருநாளைக் கொருநாள் எமக்குள் அன்பு முதிர்ச்சிகொண்டு விளங்கிற்று ஒருவரை யொருவர் ஒர் இமைப்பொழுது பிரிந்திருப்பினும், அவ்வொரு பொழுதும் ஓர் ஆண்டு போல் தோன்றும். நாங்கள் இருவேமும் செல்வர் ஒருவர் இல்லத்தின் கண் இனிது விருந்தோம்பப் பெற்றிருந்தேமாதலால் நாள் முழுவதும் பிரியாமல் ஓரிடத்தில் ஒருங்கிருந்து பல நற்பொருள்கள் பேசி அளவளாய்க்கொண்ட நாட்கழிப்பேமாயினேம். சிலநேரம் அவ்விளைஞன் தாயுமானசுவாமிகள் பாடல்கள், கடவுள் பால் அன்பு மிகுவிக்கும் தெலுங்குப்பண்கள் முதலியவற்றைக் குயில் போல் மனங்குழையப்பாடி என்னை மகிழ்விப்பான்; நான் அவனுக்குச் சிலபொழுது திருவிளையாடற் புராணச் செய்யுட் களுக்கு உரை விரித்துச் சொல்லித் தமிழினருமை பெருமையினை நன்கு விளக்குவேன். அவனுந் தமிழின் இனிமையினை மிகவியந்து தமிழ்ப்பாட்டுகளுக்கு உரை கேட்டலில் மிகவும் விழைவு கொண்டான். நானோ அவன் பாடும் இனிய ஓசையில் அறிவு இழுப்புண்டு அவ்விசை முறை அறிதலில் நிரம்பக் கருத்தூன்றி னேன். இங்ஙனம் எமக்குள் விளைந்த நட்பின் கெழுதகைமை எமக்குப் பேரின்பந் தருவதாயிற்று. ஆ! நட்பின் விழுப்பத்தை நினைக்குந்தோறும் மக்கள் எய்தும் பேறுகளுள் இதனினுஞ் சிறந்தது பிறிதொன்று உண்டுகொல்! உண்டு கொல்!! என்று என் நெஞ்சம் உருகாநின்றது. என் நண்பன் விடியற்காலையில் நாலரை அல்லது ஐந்து மணிக்கெல்லாம் விழித்து எழுந்திடுவான்; எனக்கு அவ்வளவு காலையில் எழுந்திருத்தல் இயலாது. நல்ல புலரிக் காலையிலே தான் எனக்கு அயர்ந்த உறக்கம் வருவது வழக்கம். இவ்வழகத் தினை நீக்க வேண்டுமெனப் பலகால் முயன்றும், அஃதெனக்குக் கைகூடிற்றில்லை. ஆகவே, ஞாயிறு தோன்றிய பின் ஏழு அல்லது ஏழரைமணிக்கு எழுந்தால் மட்டும் என் அறிவு தெளிவாயும் உடம்பு சுறுசுறுப்பாயும் இருக்கும். என் பக்கத்தே படுத்திருந்து விடியற்காலையில் வெள்ளென எழுந்து விடும் என் நண்பன் என்னை எழுப்பாமல் நானே எழுந்திரும் வரையில் என் பக்கத்திலிருந்து இனிய இசை மிழற்றிக் கொண்டிருப்பான். அவ் விசையைக்கேட்டதும் எனக்கு உறக்கம் கலைந்துவிடும். எவ்வாறு நான் அயர்ந்து உறங்குவேனாயினும், சிறியதோர் அரவந் தோன்றுமாயின் உடனே உறக்கம் நீங்கி விழிப்பேன். விழித்துக் கொண்டாலும் படுக்கையினின்றும் எழுவதற்கு அரைமணி நேரஞ்செல்லும். இங்ஙனம் நான் விடியற்காலையில் எழுந்து விடும்படி என் நண்பன் செய்த வழி மிகவும் வியக்கற்பாலது. இவ்வாறு நாடோறும் என்னை வருத்தாமல் வைகறையிலெழுப்பிக் கொண்டு ஊர்ப்புறத்தே என்னை அழைத்துச்செல்வான். சிற்றூர்க்குப் புறம்பேயுள்ள நில இயற்கை காண்போருள்ளத்து ஒரு வகைப்பட்ட மனவெழுச்சியினைத் தோற்றுவிக்கும் இயல்புடையதாய் விளங்குகின்றது. பசிய இலைப் போர்வை மேற்கொண்டு பருத்துயர்ந்து அடர்ந்த புளியமரத்தோப்புகள் இடையிடையே இருக்கின்றன. அத்தோப்புகளை அடுத்துச் சிறு சிறு குன்றுகளும் உயர்ந்த மலைகளுந் தோன்றுகின்றன. ஒரோவோர் இடங்களில் வாழைத் தோட்டங்களும் வெள்ள வெளியான இடங்களும் இருக்கின்றன. அருவி யோட்டங்களாயினுங் கான்யாறுகளாயினும் அங்கில்லை. நாற் சதுரமாக வெட்டப்பட்டுக் கசங்களென்று சொல்லப் படுங்குளங்களும் இறை கேணிகளும் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன. நிலஞ் சுக்கான் கற்கள் நிறைந்து கரடு முருடாயிருக்கின்றது. வேனிற்காலத்தில் நிலம் மிக வறண்டு புற்பூண்டுகள் கரிந்து போகின்றன. கற்பாறையுள்ள இடங்களில் அகழ்ந்த நீர்நிலைகளில் மட்டும் தண்ணீர் வற்றாமல் நிரம்பி யிருக்கும். இறை கேணிகள் அகலமாயும் நாற்கோணமாயும் வெட்டப்பட்டு ஆழமாயிருக்கின்றன; அவற்றிற் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருத்தலால், நீர் அருந்துவோருந் தலை முழுகு வோரும் இறங்குவதற்கு எளிதாயிருக்கின்றன; இரும்பினாற் செய்த இறைகளைப் பூட்டையிற் கட்டி மாடுகள் இழுக்கும் முறையாற் குடித்தனக்காரர் நாடோறுங் காலையில் வாழைத் தோட்டங்களுக்கு நீர் இறைத்து வருகின்றமையின் நீர் மிகவும் தெளிவாயிருக்கின்றது. வள்ளிக்கிழங்கு கருணைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகின்ற கொல்லைகளுக்கு இக்கேணி களினின்று இறைக்கப்படும் நீர் தான் பாய்கின்றது. வாழைத் தோட்டங்கள், புளியமரத் தோப்புகள், கிழங்குகள் பயிரிடப் படுங் கொல்லைகள் இருக்குமிடம் ஊர்க்குப்புறம் பேயாதலால், அங்கெல்லாம் மக்கள் பெரும்பாலும் வழங்குவதிலர்; அதனால், அவ்விடங்கள் தனித்திருந்து தனியே பொழுது போக்காய் வருவார்க்கும் பெரியதொரு மனமகிழ்ச்சியினை விளைக்கும். இவ்விடங்களின் பக்கத்தேயுள்ள சிறு குன்றுகளும் மலைகளும் ஓசையில்லாவிடங்களிற் பெருமையுடன் றோன்றுதலாற் காண்பவர்க்கு ஆழ்ந்து அறியும் நுட்ப வுணர்ச்சியினைத் தோற்றுவிக் கின்றன. இங்ஙனம் இளைஞருள்ளத்து இன்பம் பயக்குந் தன்மையதா யுள்ள சிற்றூர்ப்புறத்தே என் ஆருயிர்த்தோழனான அவ்விளைஞனும் நானும் விடியற்காலையில் உலாவித்திரிதல் வழக்கம். யாருமில்லா அவ்விடங்களில் நாங்கள் உலக வியற்கை யினைப்பற்றிப் பேசிக்கொண்டு செல்லுகையில் வானம்பாடிப் புட்கள் புளியமரக் கிளைகளிலிருந்து கொண்டு இசைபாடும்; நாகணவாய்ப்பறவைகள் கொல்லைகளில் விதைகளைப் பொறுக்கித் தின்று கொண்டு தொகுதி தொகுதியாயிருக்கும்; மீன்குத்திப் பறவைகள் கசங்களிலும் கேணிகளிலும் சடுதியில் விழுந்து அயிரைமீனைக் கௌவிக்கொண்டு செல்லும். இவற்றைப் பார்த்து மகிழ்ந்து கொண்டே ஒருநாள் ஒரு சிறு குன்றின்மேல் ஏறியிருந்து நாயுருவி வேராற் பற்றுலக்கிக் கொண்டிருக்கும் போது, எமக்கு எதிரே கிழக்கில் ஞாயிறு நெருப்புத்திரளை போல் தகதகவென்று கிளம்பிற்று. இறைவனாற் படைக்கப்பட்ட உலக வியற்கையின் நலங்களைத் தெரிந்துகொள்ள மாட்டா தவர்க்கு அவற்றைப் பொதிந்து சருக்கத்திலே காட்டி அறிவுறுத்தும் பொருட்டு இறைவன் மேலே தூக்கிய பொற்குடம் போல்வதென்று ஞாயிற்றினைக் குறித்துப் பேசினேன். அதனைக் கேட்ட என் நண்பன் அது பொருத்தமேயாம்; ஏனெனில், ஞாயிறு விளங்காத இராக்காலத்தே இருள்கவிந்து கண்ணறிவை மழுக்கி மக்கள் மனவறிவையுங் குறுக்கி விடுகின்றது. விரிந்த மன இருளை நீக்குவது சுருங்கித்தோன்றும் அறிவொளியேயாம் என்பதை இனிது விளக்குதற்கன்றே, எல்லாம்வல்ல இறைவன் ஞாயிறு என்று சொல்லப்படும் ஒரு சிறு பொற்குடத்தே ஒளியாகிய அமிழ்தத்தை நிரப்பி அதனை வான்மேற்றூக்க அதனுட் பொதிந்த அமிழ்த கதிர்களோ விரிந்த இருண்மேற் பல்லாயிரங் கணைகள் போற் பாய்ந்து அவற்றைச் சின்ன பின்னமாயழித்து நமக்குக் கட்புலனை விளக்கி மனவறிவையும் ஓங்கச் செய்கின்றது. கட்புலனுக்குக் குறுகித்தோன்றும் ஞாயிறு ஒன்று தானே நமது அறிவைப் பெருக்கிவிடுமாயின், இறைவன் திருவருள் நம் மனவறி விற்றோன்றுங்கால் நம் அறியாமை முழுதும் விலகுமென்பது சொல்லவும் வேண்டுமோ? கண்ணறிவு இல்லையாயின் இறைவன் அமைத்த படைப்பின் வியத்தகும் அமைப்புகளை நாங் கண்டு களிப்பதெங்ஙனம்? அக்கண்ணறிவிருந்தும், அதனை விளக்கும் ஞாயிறில்லை யாயின் உலகவியற்கையில் அமைந்த நலங்களை நாமறிந்து நினைந்து மகிழ்தல் இயலுமோ? இல்லை! இல்லை!! ஆ! ஞாயிற்றின் பெருமை அளப்பரிது! என்று விரித்துக்கூறினான். இவ்வாறு என் இனிய நண்பன் பேசி முடித்த வளவில் என் விழிகள் கிறுகிறென்று சுழலத்தொடங்கின; என்னைச் குழவிருந்த பொருள்களெல்லாம் சடுதியிற் சுற்றுவனவாயின; சூறைக்காற்றின் இடையிலகப்பட்ட பஞ்சுபோல் ஒரு நிலையின்றி நான் இருந்தபடியே என் உடம்பும் ஆடி நின்றது; உடனே என் அறிவு கலக்கமடைந்து விழித்தகண் விழித்த படியே நிற்ப மரம் போலிருந்தேன். இங்ஙனம் யான் திரிபுற்று இருந்தபோது என்னருகே இருந்த நண்பனை யான் காணேனாயினேன். காணேனாக, அவன் நானறியாமல் எங்குச் சென்றான் என்றறிய என்னுள்ளம் விழைந்தது; அவனை அழைக்க முயன்றேன், நாவோ எழவில்லை; கையினால் தட்ட முயன்றேன், கைகள் பொருந்தவில்லை; எழுந்து போய்த் தேடலாமென்று, எழப் புகுந்தேன்; கால்கள் இசையவில்லை; இவ்வாறு அசைவற்ற மரம்போல் உடம்பின் இயக்கமின்றி அறிவு கலங்கியிருந்தபோது சடுதியில் என் உணர்வில் ஒரு தெளிவுண்டாயிற்று, உடனே, ஒரு நொடிக்குள் என்னைச் சூழவிருந்த பொருள்கள் சுற்ற, என்னறிவு கலங்கியது; என் நண்பனைக் காணேன்; எழுந்து செல்வதற்குங் கைகொட்டுவதற்கும் என் உறுப்புக்கள் சிறிதும் இசையவில்லை; ஆ! இஃதென்னே மக்கள் வாழ்க்கை எவ்வளவு நிலையில்லாத தாயிருக்கின்றது! அது வான்நிழல் போலவும் உயிர்நிலை கனவுபோலவுந் தோன்றுகின்றன! என்று பலவாறு எண்ணலா யினேன். இங்ஙனம் நான் எண்ணிக்கொண்டிருக்கையில் எனக்கு மிகவுந் தொலைவில் இல்லாத ஒரு மலைக்குவட்டின் மேல் என் பார்வை விழுந்தது; அம்மலைக்குவட்டின் மேல் ஒருவர் இடை யனுக்குரிய ஆடையிட்டுக் கையிற் புல்லாங்குழல் வைத்துக் கொண்டு தோன்றக்கண்டேன். நான் அவரைப் பார்த்தவுடனே அவர் அப்புல்லாங்குழலைத் தம் இதழிற் பொருந்த வைத்து ஊதப்புகுந்தனர். வேனிற்காலத்து நண்பகலில் மணல் வெளியில் நடந்து இளைத்து வந்தான் ஒருவன். ஓர் இளமரக்காவிற் புகுந்து மரநிழலில் உள்ள நீர் ஊற்றில் தலை முழுகி மகிழ்ந்தாற்போல், அவ்வேய்ங்குழல் ஓசை என்செவியிற் புகுந்ததும் என் உடம் பெங்கும் ஒரு வகையான சிலிர்சிலிர்ப்பு உண்டாயிற்று; பலவகைப்பட்ட பண்கள் பண்னி இசைக்கப்படும் அவ்வோசை யின் சுவை வற்றக்காய்ச்சிய கன்னற்பாகுபோற் தித்தித்து ஏறஏற என் நெஞ்சம் நெகிழ்ந்து உருகிற்று; அது போல்வது நான் கேட்டதே இல்லை; அதன் இளிமையினை உரைக்குந் தரமும் என்னிடத்தில்லை. இம்மைப்பிறவியிற் பல நல்வினைகளைச் செய்து அந்நல்வினை முதிர்ச்சியாற் பேரின்பம் நுகருதற் பொருட்டுத் துறக்க நாடு செல்வோர் தாம் முன்றுய்த்த துன்பங்கள் மறந்தொழிய, இடையிடையே அரம்பைமாதர் தம் பேரெழில் நலத்திற்குப் பொருந்தப் பலவகைப்பட்ட வியத்தகும் இசைக் கருவிகளால் மிழற்றுந் தீவிய ஓசை தானோ இஃதென்று நினைந்தேன். அதனை நினைந்து நினைந்து என் மனங்கரைந்தது. எனக்கு முன்னே தோன்றிய அம்மலையின் மேல் ஒரு முனிவனது ஆவி உண்டென்றும், அஃது அவ்வழியே செல்வோர்க்கு இனிய இசைபாடுவதன்றிக் கட்புலனாக நேரே யாருக்குந் தோன்றுவதில்லை யென்றும் பலமுறை சொல்லக் கேட்டிருக்கின்றேன். இங்ஙனம் அஃது அவ்வேய்ங்குழலோசை யினால் என் அறிவைக் களிப்புறச் செய்து ஊதிக்கொண்டிருக் கையில், அதனோடு உரை யாடினால் எவ்வளவு நன்றாயிருக்கு மென்று எண்ணி அதனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; அப்போது அஃது என்னை நோக்கித் தன் அருகே வரும்படி கைகாட்டி அழைத்தது. பெரியோரைக்கண்டாற் றோன்றும் அடக்க ஒடுக்கத்துடன் நானும் அதன் அருகிற் சென்று, அஃது இசைத்த வேய்ங்குழலிசையினால் என் மனம் உருகுண்டு அதன் அடியில் வீழ்ந்து அழுதேன். அவ்வாவி என்னை இரக்கத்துடன் நோக்கி முறுவலித்து, என்னிடத்து மிக்க பழக்கமுடையது போல் நல்லுரைகூறித் தனதருகிற் சென்றபோது எனக்கிருந்த எல்லா அச்சத்தினையும் உடனே வெருட்டிவிட்டது. அஃது நிலத்தினின்றும் என்னை எடுத்து என் கையைப் பிடித்துக் கொண்டு முருகவேள், தனித்திருந்து பேசிய காலையில் நீ சொன்னவற்றை யெல்லாங் கேட்டேன், என்னுடன் வா என்றது. அதன் பின், அஃது அம்மலையடுக்கில் மிக உயர்ந்த தொரு முகட்டிற்கு என்னை நடத்திக்கொண்டு சென்று, அம் முகட்டின் உச்சியில் என்னை இருத்திக் கீழ்ப்பால் நோக்கி அங்கு உனக்குத் தோன்றுவதை எனக்குச்சொல் என்றது. அதற்கு, அதோ ஒரு பெரும் பள்ளத்தாக்கும் அதிற்பெரிய வெள்ளஞ் சுருண்டு ஒழுகுவதுங் காண்கின்றேன் என்றேன். நீ பார்க்கின்ற அப்பள்ளத்தாக்குத் துன்பவேலி யென்றும், அதிற் சுருண்டு ஓடுகின்ற பெருவெள்ளங் காலமென்றும் பெரிய நீர்ப்பெருக்கில் ஒரு பகுதியா மென்றுங் கூறிற்று. ‘நான் பார்க்கின்ற அவ்வெள்ளப் பெருக்கு ஒரு புறத்தில் திணிந்த ஒர் இருளினின்றுந் தோன்றி மற்றொரு பக்கத்தில் அவ்வாறே திணிந்த இருளிற் சென்று மறைந்து போவதற்கு ஏது என்னை? என்று வினவினேன். ஞாயிற்றினால் வரையறுக்கப்படுங் காலத்தின் ஒரு பகுதியே அவ்வெள்ளப்பெருக்கெனவும், உலகத்தின் தொடக்கமே அஃது அவ்விருளினின்றுந்தோன்றுவது, அதன் முடிவே மற்றொரு பக்கத்தில், மறைவதெனவும் அறிவாயாக என்றது. மேலும், இருபுறத்தும் இருளான் வரம்பறுக்கப்படும் அவ்வெள்ளப் பெருக்கினை நன்றாய் ஆய்ந்து நோக்கி, அதண்கண் உனக்குத் தோன்றுவதை எனக்குச் சொல் என்று மீட்டும் வினைவிற்று, காலப் பெருக்கின் நடுவிற் கட்டப்பட்டிருக்கும் ஒரு பாலம் எனக்குத் தோன்றுகின்றது என்றேன். நீ காண்கின்ற அப்பாலம் மக்கள் வாணாள் என்றறிவாயாக, அதனை உற்று நோக்கிப்பார் என்றது. அவ்வாறே நான் அதனை மிக்க அமைதியோடும் நோக்குகின்ற வளவிலே அப்பாலத்தில் எழுபது முழுமையான கண்களும், உடைந்து நொறுங்கிப்போன சில கண்களுமிருந்தன; அக்கண்கள் எல்லாஞ் சேர்ந்து மொத்தம் நூறு உள்ளன. அக்கண்களை நான் ஒவ்வொன்றாய் எண்ணிக் கொண்டிருக்கும் போது அம்முனிவனது ஆவி, முதன் முதல் அப்பாலத்திற்கு ஆயிரங்கண்கள் இருந்தனவாகப் பெரியதொரு வெள்ளம் பெருகிவந்து ஒழிந்தவற்றை அடித்துக்கொண்டு போய்விட்ட மையால், இப்போது நீ பார்க்கின்ற நிலைமையில் அப்பாலம் பழுதாக இருக்கின்ற தென மொழிந்தது. இன்னும் அதன் மேல் என்னென்ன பார்க்கின்றாய் எனக்குச்சொல் எனக்கேட்டது. எண்ணிறந்த மக்கள் அதன்மேற் போய்க்கொண்டிருப்பதும், கரியவானம் அதன் இரண்டு முனை யிலுந் தொங்கவிட்டாற் போல் இருப்பதுங் காண்கின்றேன் என்றேன். இன்னும் அதனை மிக உற்று நோக்க, அங்ஙனஞ் செல்வோரிற் பலர் அப்பாலத்தின் கீழ் ஓடும் பெரிய வெள்ளத்தில் இடையிடையே விழுந்து அமிழ்தலுங் கண்டேன்; என்றேன். இன்னும் அதனை ஆய்கின்ற அளவிலே, அப்பாலத்தின் இடை யிடையே மறைவாய்ப் பொருத்தப்பட்ட எண்ணிறந்த கள்ளக்கதவுகளையுங் கண்டு கொண்டேன்; அக்கள்ளக்கதவுகளின் மேல் அவ்வழிச் செல்வோர் மிதித்த வுடனே அவற்றின் ஊடு கீழ்விழுந்து அவர் காணாமற் போதலும் நன்கு புலனாயிற்று. அப்பாலத்தின் முனையில் தொங்குங் கரியவானத்தைக் கிழித்துக்கொண்டு மக்கட்டொகுதிகள் அதன் கட்புகும்பொழுது அவர் தொகை தொகையாய் விழுந்தொழியும் படி நுழைவாயிலில் அப்படுகுழிகள் மிக நெருக்கமாகப் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. பாலத்தின் நடுவிற் போகப் போக மக்களின் தொகை சுருங்கிவிட்டது; பழுதாகாமல் முழுமை யாயிருந்த கண்களின் முனையிற் செல்லச் செல்ல அவர்களது தொகை மிகுதிப்பட்டு நெருக்குண்டது. பழுதுபட்ட கண்கள் மேல், நொண்டி நொண்டி நடந்தோர் ஒரு சிலர் காணப் பட்டாராயினும் இவர்களின் தொகை மிகக் குறைந்ததொன்றாயிருந்தது; இவர் தாமும் நெடுவழி நடந்து வந்தமையால் முற்றுங் களைப்படைந்து ஒருவர் பின் ஒருவராய் விழுந்து விட்டனர். இங்ஙனம் புதுமையாய்த் தோன்றிய அக்கட்டிடத்தினையும், அதிற் காணப்பட்ட பலவேறு பொருள்களையும் பற்றி எழுந்த நினைவில் எனக்குச் சில நேரங் கழிந்தது. கொண்டாட் டமும் மகிழ்ச்சியும் உடையராய்ச் செல்கையில் இடையே பலர் சடுதியில் விழுந்தொழிதலையும், அங்ஙனம் அவர் விழும் போது தப்பிக்கொள்வதற்குத் தம் பக்கத்தேயுள்ள ஏதேனும் ஒன்றை விரைந்து பிடித்தலையுங் காண்கையில் என் நெஞ்சம் ஆறாத்து யரத்தால் நிரம்பிற்று. சிலர் ஆழ்ந்த நினைவோடும் நிமிர்ந்து வானை நோக்கிக்கொண்டிருந்த நிலையில், அந்நினைவின் இடையே தெற்றுப்பட்டு விழுந்து மறைந்து போயினர். வேறு பலர் தமக்கெதிரில் மினுமினு வென்று எழுந்தாடும் நீர்க்குமிழி களைப் பிடிக்க முயன்று அவற்றின் பின் மிகு முயற்சியோடும் ஓடினர்; அங்ஙனங் கிட்ட ஓடி அவற்றைப் பற்றிக் கொள்வோம் என்று அவர்கள் நினைந்தவுடனே கால்வழுக்கி வீழ்ந்து அமிழ்ந்து போயினர். இங்ஙனம் எல்லாங் குழப்பமாயிருப்பதற்கு நடுவே சிலர் கையிற் கொடுவாளும் வேறு சிலர் அரிவாளும் ஏந்திக் கொண்டு பாலத்தின் மேல் அங்குமிங்கும் ஓடி அக்கள்ளக் கதவில்லா வழியிலே வந்து கொண்டிருப்போர் பலரைத் தள்ளிச் சென்று அக்கள்ளக் கதவிலே புகுத்தினர்; அங்ஙனம் அவர் வலிவுசெய்து தள்ளாவிட்டால் அம்மக்கள் பிழைத்துப் போயிருப்பர் ஐயகோ! துயரமிகுந்த அத்தோற்றத்தைப் பார்த்து அதன்மேல் யான் நினைவு அழுந்தப் பெற்றிருத்தலைக்கண்ட அம் முனிவனாவி, இத்துணை நாழிகை அதனைப்பற்றி நினைந்தது போது மென்று சொல்லி, இனி அப்பாலத்தைப் பார்ப்பதை விடுத்து, இன்னும் நீ யறியாத தேதேனுங் காண்பையாயின் அதனை எனக்குச்சொல் என்றது. அதன்பின் நான் மேல் நோக்குதலும் அப்பாலத்திற்குமேற் பறவைக்கூட்டங்கள் ஓவாது வட்டமிட்டுச் சுழலலும், இடைக்கிடையே அதன் மீது வந்திருத்தலும் யாது கருத்துப்பற்றி? கழுகு, எருவை, அண்டங் காக்கை, கடற்காக்கை முதலியனவும் மற்றைய பறைவையினங் களும் இயற்கை முளைத்த சிறுவர் பலரும் இடையிலுள்ள கண்களின் மேல் தொகை தொகையாயிருப்பதுங் காண்கின்றேன் என்றேன். அதற்கு அவ்வாவி இவைகள் தாம் பொறாமை, பேரவா, மடமை, சோர்வு, காமம் என்பனவும், இன்னும் மக்கள் வாழ்க்கையினைத் துன்புறுத்துகின்ற மற்றைக் கவலைகளும் விழைவுகளும் ஆம் என்று விடை பகர்ந்தது. இவ்வாறு சொல்லியபோது நான் பெருமூச்சு எறிந்து, ஐயோ! ஆடவன் வீணே படைக்கப்பட்டான்! அவன் துன்பத்திற்கும் சாவுக்கும் இரையாய் ஒழிகின்றனனே! வாணாளெல்லாம் வருத்தமுறுகின்றான், கூற்றுவனால் இறுதியில் விழுங்கப்படு கின்றான்! என்றுரைத்தேன். உடனே அம்முனிவனாவி என்னைப் பார்த்து இரங்கித் துன்பந் தருதன் மாலைத்தாம் அக்காட்சியினைக்காணுதல் ஒழிக என்று கட்டளையிட்டது. என்றும் நிலையுதலுடைய பேரின்பத்தை எய்தற் பொருட்டுச் செல்லுங்கால் ஆண் மகன் முதலிலடையுந் துன்ப நிலைமை யினை இனி நினையாதே; தன்னகத்தே விழுந்த மக்களைச் சுமந்து கொண்டு அப்பெருக்கு மற்றொரு பக்கத்தேயுள்ள இருட் செறிவிற் சென்று ஒருமிக்கும் இடத்தில் நின் பார்வையினைச் செலுத்துக என்றது. அது கட்டளையிட்டவண்ணமே அம் முகமாய் என் பார்வையைச் செலுத்தினேன். அந் நல்ல ஆவி என் பார்வைக்கு முன்னை இயல்பினும் மேம்பட்ட வலிவைத் தந்ததோ, அன்றி என் கட்பார்வை நுழையாதபடி திணிந்து கிடந்த அவ்விருட்குழாத்தைக் கலைத்துவிட்டதோ அறியேன்; ஏனெனிற், சேய்மைக் கண் உள்ள அம் மற்றொரு முனையில் அந்தப் படுகர் திறப்புண்டு பெரியதொரு கடல் போல் விரிந்திருக்கக்கண்டேன்; அப்படுகரின் நடுவே பெரியதொரு வைரக்கற்பாறை நெடுக ஊடறுத்து ஓடி அதனை இரண்டு ஒத்த கூறாக்கிற்று; அதன் ஒரு பாகத்தில் புயல்கள் மிகச் செறிந் திருந்தமையால் அதன் கண் நானொன்றுங் காணக்கூட வில்லை; ஆயினும், மற்றொரு பாகத்தின் வெளியோ பழங்களும் மலர்களும் நிரம்பிய தீவுகள் இடையிடையேயுள்ள அகன்ற கடல் போலவும், ஆயிரக்கணக்கான சிறு குடாக்கள் இடை யொழுகும் நிலம் போலவுந் தோன்றிற்று. அங்குள்ள மக்கள் சிறந்த புதிய ஆடை உடுத்தும், தலையில் நறுமலர் மாலை சூடியும், மரச்செறிவுகளின் நடுவே புகுந்தும், நீர் ஊற்றுகளின் கரைமருங்கிற் பள்ளிகொண்டும், கொழுவிய மலர்த்தனிமங் களில் உறங்கியும் இன்பந்துய்த்தலைக் கண்டேன்; பறவைகள் மிழற்றும் இசையும், அருவிவீழ் ஓசையும், மக்கள் குரல் ஒலியும், இசைக் கருவிகளினின்று எழும் ஆர்ப்பும் விரவிய கலவைப் பண்ணுங்கேட்டேன். அவ்வளவு இனியதோர் இடத்தைக் காண்டலுங் களிப்பினால் துளும்பு வேனாயினேன். அத்தகைய வளப்பமான இடத்திற்குப் பறந்து செல்லக் கழுகின் இறக்கைகள் எனக்கு வேண்டுமென்று விழைந்தேன்; ஒவ்வொரு நொடியும் அப்பாலத்தின் கட்டிறக்கப்படுகின்ற சாக்காடு வாயிலாகவன்றி அதன்கட் புகுதல் முடியாதென்று அம்முனிவனாவி கூறிற்று. நின் பார்வை எட்டு மட்டும் அக்கடலிற் புள்ளி புள்ளியாய்த் தோன்றிப் பச்சென்று புத்தம் புதியனவாய் விளங்கும் அத்தீவுகள் கடற்கரை எக்கர் நுண்மணலினும் பலவாயிருக்கின்றன; நீ இங்கே காண்கின்ற இவற்றிற்கும் அப்புறத்தே நின்கட்புலனுக்கும் எண்ணத்திற்கும் எட்டாத நெடுந்தொலைவிற் பல்லாயிரக் கணக்கான தீவுகள் இருக்கின்றன. தாந்தாம் மேற்கொண்ட நல்வினையை அறம் வழுவாது நன்கு முடித்தோர் தரத்திற்கு ஏற்ப இத்தீவுகள் பகுத்துக் கொடுக்கப்பட்டு மற்று அவர்க்கு இன்ப உறையுளாய்ப் பயன்படுகின்றன; அவைகள் தம் பால் உறைவோர் இன்பநுகர்ச்சிக்கும் அறிவின் ஏற்றத்திற்கும் இணங்கப் பல திறப்பட்ட இன்பங்கள் செழுமை பெறக் கொண்டு விளங்குகின்றன. தம் பால் உறைவோர் வசதிக்கு இசைந்ததொரு துறக்க நாடு போல் ஒவ்வொரு தீவும் நலந்திருத்தப்பட்டிருக்கின்றது. ஒ முருகவேளே! இச்செம்மையான விடுதிகள் மிக வருந்தியும் பெறற்பாலனவல்லவா? இப்பெற்றித்தான இன்பவிடுதியைப் பெறுதற்கு நினக்கு ஏற்றகாலங்கள் வாய்க்கும் உயிர் வாழ்நாள் துன்பமுடையதென்றுந் தோன்றுமா? அத்தகைய இன்பவுறை யுளுக்கு உன்னைக்கொண்டு போகும் அச்சாக்காடு அஞ்சிக் கடியற்பாலதோ? அழிதன் மாலைத்தன்றாய் என்றும் நிலையுதலுடையவொரு பேரின்பம் இவற்கென்று பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்போது ஆடவன் வீணே படைக்கப்பட்டான் என்று நினையாதே என்று மேலும் விரித்துரைத்தது. நானும் அவ்வினிய தீவுகளை உரைவரம் பறியாப் பெருகிய மகிழ்ச்சி யுடன் உவந்து நோக்கினேன். கடைசியாக நான் அதனைப் பார்த்து, வைரப்பாறைக்கு அப் பக்கத்தேயுள்ள கடலைக்கவிந்து விளங்குங் கரியபுயல்களிற் புதைபட்டிருக்கும் மறைபொருள் களையும் ஒரு சிறிது விளக்கியருளல் வேண்டும் என்று இரந்து கேட்டேன். அதற்கு அம்முனிவனாவி ஏதும் மறுமொழி தந்திலது; உடனே நான் இரண்டாமுறையும் அதனைக் கேட்பதற்கு அதன் முகமாய்த் திரும்பியபோது அதனைக் கண்டிலேன்; மறுபடியும் என்னெதிரே கீழ்ப்பாற்றோன்றிய அக் காட்சியினைப் பார்ப்பதற்குயான் திரும்பியபோது, இத்துணைநேரம் எனது நினைவைக் கவர்ந்த அக்காட்சியும் புலப்படவில்லை; சுருண்டு ஓடும் நீர்ப்பெருக்குங் கட்பாலத்திற்கும் கொழுந்தீவுகளுக்கும் வேறாகச் சிற்றூர்ப் புறத்துள்ள நீண்ட மலைச்சாரலும், அதன் கண் ஆட்டு மந்தையும் ஆனிரையும் செழும்புல் மேய்தலும், அவற்றை மேய்க்கும் இடையர் மரநிழல்களிற் சாய்ந்திருந்து கதை பேசுதலுங் கண்டேன். உடனே அறிவு தெளிந்து என் நண்பன் எங்கே என்று புறம் திரும்புதலும் அவன் என் பக்கத்தே என்னைக் கவன்று நோக்கிக் கொண்டிருந்தான். ‘இவ்வளவு நேரம் என்னை விடுத்து நீ எங்கு சென்றாய்? என்று மருண்டு வினாவினேன். அதற்கு அவன் நான் எங்குஞ் செல்லவில்லை, நீ சடுதியில் மயங்கிப் படுத்தமையால் நின்பக்கத்தே வருத்தமுற்றிருந்தேன் என்றான். அதன்மேல் நான் கண்டனவெல்லாங் கனவெனத்துணிந்து நிகழ்ந்தன யாவும் விரித்துக்கூறி இருவேமும் மகிழ்ந்தளவளாய் இல்லஞ் சென்றோம். மறைமலை அடிகள். முயற்சியின் முதன்மை இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்த்தொகைகளும், இன்புற்று வாழ்வதற்குரிய பல்வகைப் பொருள்களும் இயற்கையாகவே தோன்றியிருக்கின்றன. இருப்பினும், எவ்வுயிர்க்கும் எத்துணைச் சிறு பொருளும் முயற்சியின்றிக் கிட்டுவது அருமையாகும். எறும்பு, தேனீ, அனைய சிற்றுயிர்களும் மெய்வருந்தி விடா முயற்சியுடன் உழைக்கின்றனவென்பது வெளிப்படையான செய்தி. மக்கட்பிறவி பெற்றவன், எல்லா உயிர்த்தொகைகளினும், தானே மேம்பட்டவனென்றும், பகுத்தறிவென்னும் சிறப்பறிவை யுடையவனென்றும், தனக்குமற்றைய உயிர்க்கூட்டங்கள் எல்லாம் தொண்டாற்ற வேண்டும் என்றும் வீணே இறுமாந்து வாளா முயற்சியின் மடிந்திருப்பானாயின் அன்னவனால் எத்துணைச் சிறுவினையையும் முற்றுப் பெற முடிக்க வியலாது. நாம் பெற்றிருக்கும் மாண்புள்ள மக்கட் பிறவியின் பயனை இறை நேரமும் வீண் போக்காமல் விரைவில் எய்துவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்னும் படிப்பினையை உணர்த்தும் பொருட்டே, காலம் கடிதிற் கழிந்து கொண்டிருக்கின்றது. அதைக்காட்டுவதற்குக்கண் கூடான அறிகுறிகள் பல அமைந் திருக்கின்றன. நாடோறும் பகலவன் தோன்றுவதனாலும், மறை வதனாலும், இரவும், பகலும், இடையீடின்றி மாறி மாறித்தோன்றி, காலங்கழிந்து கொண்டிருப்பதையாவரும் நன்கறியலாம். இவ்வாறு நிகழுங் காலக்கழிவைக் கருத்தூன்றி ஆராயுங்கால், நமது வாணாளும் வீணே சென்று கொண்டிக்கிற தென்பதையும், ஆதலால் சிறிய நேரத்தையும் பயனின்றிச் செலவிடுதல் கூடாதென்பதையும் குறிப்பிக்கவில்லையா? காலை, நடுப்பகல், மாலை, இரவு, நள்ளிருள், வைகறை என்னும் கால - வேறுபாடுகளினாலும், வாரம், திங்கள், ஆண்டு என்னும் காலக்கணக்குகளினாலும், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும், பருவகால மாறுபாடு களினாலும், காலச்சக்கரம் என்பது இடைவிடாமற் சுழன்று கொண்டிருப்பது கண் கூடன்றோ? இக்கருத்தை அமைத்து தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் என்று கூறும் நாலடிச்செய்யுள் உற்றுநோக்கத் தக்கதாகும். இவ்வாறு நமது வாழ்நாள் அழிந்தொழிவதைப் பல்லாற்றானும் இயற்கை நிகழ்ச்சிகள் உணர்த்திக்கொண்டிருந்ததும், நாம் முயற்சியின்றி மடிமையுற்று வாழ்நாளைப் பயனின்றிக் கடத்துவது நேர்மையாகுமா? ஒருவனுக்கு இன்பவாழ்க்கைக்குரிய எல்லாச் செல்வங் களும் குறை வின்றிக் குழுமியிருப்பினும், அவன் முயற்சியற்ற சோம்பேறியாயிருந்தால் அச்செல்வங்களால் ஒரு சிறிதும் பயனடையமாட்டான். செல்வமற்ற வறியவனா யிருப்பினும் உள்ளக்கிளர்ச்சியையும் விடாமுயற்சியையும் உடையவனா யிருந்தால் அவன் எண்ணிய இன்பங்களை எளிதில் எய்துவான். இவ்வுண்மையை முற்ற உணர்த்தும் பொருட்டே, ஆசிரியர் திருவள்ளுவர் தமது திருக்குறளில் ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினை யுடைமை, இடுக்கண் அழியாமை என்னும் நான்கு அதிகாரங்களையும் அடுத்தடுத்து அமைத்து வைத்திருக்கின்றார். ஊக்கம் உடைமை என்பது, மனம் மெலிதலின்றி வினை செய்தற் கண் கிளர்ச்சியுடைத்தாதல். மடியின்மை என்பது கருதியன செய்யுங்காற் சோம்புதல் இல்லாமை. ஆள்வினை உடைமை என்பது இடைவிடாத மெய்ம்முயற்சி யுடையனாதல். இடுக்கண் அழியாமை என்பது வினையின் கண் முயல்வான் தெய்வத்தானாக, பொருளின்மையானாக, மெய்வருத்தத் தானாகத் தனக்கு இடுக்கண் வந்துழி அதற்கு மனங்கலங்காமை இவ்வாறு ஒரே பொருளை உடன்பாட்டினாலும், எதிர் மறையினாலும், வலியுறுத்திக் கூறியதை நோக்கும்போது முயற்சி மக்களுக்கு இன்றியமையாத கருவி என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்ளலாம். உடல் உழைப்பின்றிக் கவலையற்றுச் சுவையுள்ள உணவுண்டு உறையும் செல்வர்களும், கால் நடையாக உலவி வருதல், குதிரை யூர்ந்து செல்லுதல், விளையாடுதல் முதலிய வினைகளை ஆற்றாராயின், அவர் அருந்திய உணவு செரிமானமாகாமற் பிணியுற்றுச் சிறுமை யடைவார்கள். முயற்சியின்றேல் நமது உயிரும் உடலும் ஒன்றுபட்டிருத்தலே அருமையாகும். இவற்றை யெல்லாம் நுனித்துணர்வோமாயின் முயற்சியுடைமை நமது உடலியல்பிற்கும், மனவியல்பிற்கும், இன்றியமையாததென்பதும், முயற்சியின்மை நமது இயற்கைக்கு மாறான தென்பதும் வெள்ளென விளங்கும். ஒரு வினையையும் இயற்றாமல் சும்மாவிருக்கின்ற திறம் அரிதென்பதை எவரும் தமது நடை முறையில் உணர்ந்திருக்கின்றனர். இதனை உணர்ந்தவர்களுக்குத் தொழிலின்றிச் சோம்புற்று மடிந்திருப்பது மக்கட்ன்மைக்கு மாறானதென்று விளங்காமற் போகாது. தளராத ஊக்கமும் விடாமுயற்சியும் இருந்தால், மகனால் செய்து முடிக்க இயலாத வினை எவையும் இல்லை. விடாமுயற்சியையுடைய நெப்போலியன் என்னும் உண்மை வீரன் முடியாது என்பது அறிவில்லாதவர் களின் மொழி என்று உலகினர்க்குப் பறைசாற்றிப் பகர்ந்தான். கிரேக்க நாட்டின் பழைய வரலாற்றைப் பயின்றறிந்த எவரும், டெமாதெனி என்னும் பேரறிஞரின் மாண்பை உணர்ந்திருப் பார்கள். சொற்பெருக்காற்றுவதில் அவருக்கு ஈடான ஆற்றலுடை யவர்கள் எவருமில்லை. அவர் அத்துணைப் பெருமையுற்றதற்குக் காரணம் விடாமுயற்சியே யாகும். கலிதிரேட என்னும் பெருநாவலர் ஒருவர் மக்கள் வியக்குமாறு போற்றலுடன் விரிவுரையாற்றி வந்தார். அவரை மாந்தர் அனைவரும் புகழ்ந்து கொண்டாடினர். அதைக்கண்டு வியப்புற்று டெமாதெனி தாமும் அவரைப் போன்ற சொற்பெருக்காளராக வேண்டுமென விரும்பி விரிவுரை செய்யத் தலைப்பட்டார். முதல் முதல் அவர் விரிவுரை புரியத் தொடங்கிய போது, ஒருவரும் அவரையும், அவர் கூறும் சொற்பெருக்கையும் பொருட்படுத்தாமல் கைபுடைத்து எள்ளி நகைத்தனர். இவ்வாறு தனக்கு நேர்ந்த மானக்கேட்டை மனத்தில் எண்ணி நனிமிக நைந்தார். ஆயினும் உள்ளத்தளர்ச்சியுறாமல் ஊக்கங்கொண்டு தமது குறைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றிக்கொள்ளுவதற்கு முயற்சிசெய்யத் தொடங்கினார். டெமாதெனி இயற்கையிலேயே தெற்றுவாயையுடை யவர். அவர் கூறும் சொற்களின் உச்சரிப்புக் கேட்போர்க்கு இன்பமின்றி வெறுப்பையுண்டாக்கும். மூச்சடக்கி இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசும் ஆற்றல் அவர்பால் இல்லை. உரை யாடுங்கால், சொற்றொடர்களின் இடையிடையே சிறிதுநேரம் நிறுத்தி நிறுத்திப் பேசக்கூடியவராயிருந்தார். சொற்பெருக் காளர்க்கு வேண்டிய இயல்புகளில் ஒன்றையேனும் அவர் அடைந் திருக்கவில்லை. ஆயினும், தான் நிகரற்ற சொற்பெருக்காளராக வேண்டுமென்னும் அவா அவர் மனத்திற் குடிகொண்டிருந்தது. அவ்வெண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு அவர் செய்த முயற்சிகள் அளவற்றனவாகும். அவர், தெற்றுவாயை அகற்றிக் கொள்ளும் பொருட்டுக் கூழாங் கற்களை வாயில் அடக்கிக் கொண்டு கடற்கரையிலமர்ந்து உரத்த குரலுடன் சிறந்த நூல் களைப் படித்துக் கொண்டிருப்பார். அதனோடு அந்நூல்களில் உள்ள உயர்ந்த பகுதிகளை மனப்பாடஞ்செய்து கடலை நோக்கிப் பெருங்குரலுடன் ஒப்பித்தும் வந்தார். கூழாங் கற்களை வாயிலடக்கிக்கொண்டு பேசி வந்தமையால், தெற்றுவாய் திருத்தமடைந்து, உரையாடுதற்குக் கருவியாயுள்ள நரம்புகள் யாவும் செப்பமுற்றுச் செவ்வையாகப் பேசக்கூடியவரானார். கிரேக்க நாட்டில், அக்காலத்தில் வெட்டவெளியில் கோடிக்கணக்கான மாந்தர் குழுமிய இடத்தில், அனைவருக்கும் கேட்குமாறு சொற்பெருக்கிடுவது வழக்கமாயிருந்தது. ஆதலால் டெமாதெனி ஓங்கிய குரலுடன், கடலோதைக்கு மேற்பட்டுத் தன் குரல் தன் செவியில் தெளிவாகப் புகும்படி பேசிப் பயின்றது பிற்காலத்தில் பெரும் பயனை அளித்தது. அவர் வெட்ட வெளியில் எண்ணிறந்த மக்களிடையில் இனிமையாகப் பேசிப் பெரும்புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தது முன் பழகிக் கொண்ட பழக்கமேயாகும். அவருடைய மூச்சுப்பை மெலிந்திருந்தமையால் தான் தொடர்ச்சியாகப் பேசுவதற்கு வன்மையற்றவராய் வாக்கியங் களின் இடையில் நிறுத்தி நிறுத்திப் பேசக்கூடியவராக இருந்தார். இக்குற்றத்தை நீக்கிக்கொள்ளும் பொருட்டு அவர் புரிந்த முயற்சி வியக்கத்தகுந்த அவ்வளவு அருமையானதாகும். அவர், ஏறிச்செல்லுவதற்கு இயலாத உயரியமலைகளின் மீது ஏறியும் இறங்கியும் பழகி வந்தார். இச்செயலால் அவருடைய மூச்சுப்பை மெலிவகன்று வலிவுபெற்றது. பிறகு பெரிய சொற்றொடர்களைத் தங்கு தடையின்றி நன்றாகக்கூறி முடிக்க வல்லவராயினார். அன்றியும் அவர், விரிவுரை செய்வோர்க்கு இன்றிய மையாமல் இருக்க வேண்டிய அவிநயங்களிலும் மிகவும் வெறுக்கத்தக்க அவிநயங்களைக் கொண்டிருந்தார். இத்தகைய விகாரத்தோற்றங்களை அகற்றிக் கொள்ளுவதற்குச் செய்த முயற்சியும் வியக்கத்தகுந்ததே. அவர், தமது இல்லத்தில் ஒரு நிலைக் கண்ணாடியின் முன்னின்றுகொண்டு தானே விரிவுரை செய்வார். அப்பொழுது அவரிடம் வெறுக்கத்தகுந்த தோற்ற முள்ள அவிநயங்கள் எவை எவை இருக்கின்றன வென்பதை அக்கண்ணாடியே எடுத்துக் காட்டிற்று. பேசும் போது நெளித்து நெளித்துத் தோளைக்குலுக்குவதாகிய ஒரு கெட்ட வழக்கம் அவர் பால் மிகுதியாக இருந்தது. அஃது ஆற்றவும் வனப்பற்ற செய்கை என்பதை அவருக்கு முன் ஆசானைப் போல் அமைந் திருந்த கண்ணாடி பன்முறையும் இடித்திடித்து இயம்பியும், அப்பழக்கம் அவரை விட்டு அகன்ற பாடில்லை. அதற்காகத் தாம் விரிவுரை யாற்றும் போது தமதுபுயத்திற்கு நேராக ஈட்டியொன்றை நாலவிட்டிருந்தார். தாம் எப்பொழுதாவது நினைப்பின்றித் தோளை உயர்த்திக் குலுக்குங்கால், கூர்மையான அவ்வீட்டியின் முனை தோளிற் பாய்ந்து செந்நீர் சிந்துமாறு புண்படுத்தி வந்தது. இத்தகைய முயற்சியால் தோளைக் குலுக்கும் தீப்பழக்கத்தைம் விட்டொழித்தார். நீண்ட நாட்கள் வரையிலும் அவருடைய புயங்களில் ஈட்டியால் நேர்ந்த படுகாயங்கள் அழியாமல் நிலவியிருந்தன. இனிமையாகவும், மேற்கோள்களுடனும் சொற்பெருக்கிட வேண்டுமாயின் பண்டைப் பேரறிஞர்களின் பெருநூல்களை யெல்லாம் பயிலவேண்டும். அந்நூல் களின் உண்மைப் பொருள்களை உய்த்துணர்ந்து அவற்றை உள்ளத்தில் உறைய வைத்திருக்க வேண்டும் இவ்வுண்மையை உணர்ந்த டெமாதெனி பண்டைய இலக்கியங்களை அயர்விலா ஊக்கத்துடன் பயில் வதற்குத் தலைப்பட்டார். இவ்வாறு நூல் பயிலத் தலைப்பட்ட போது, தன் மனம், வேறுவகையிற் செல்லாமல் கற்பதிலேயே நிலை நிற்பதற்காக நிலவறை ஒன்றை உண்டாக்கிச் கொண்டு மன அமைதியுடன் அதற்குள்ளிருந்து படித்தார். சில மாதங்களுக்கு வேறு வினையின் பொருட்டு வெளியே செல்லாமல் அகத்திலு றைந்து அமைதியுடன் படிப்பதற்கு அருமையான சூழ்ச்சி ஒன்று செய்தார். அவர் தன்னுடைய முகத்தையும், தலையையும், காண்போர்க்கு அழகற்றுத் தோன்றும்படி, பாதியளவில் மயிர்நீக்கிக்கொண்டார். இதனால் எத்தகைய இன்றியமையாத வேலையாயினும், வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுவதற்கு இயலாதவரானார். இவ்வாறு சில திங்கள் வாழ்ந்து கல்வியில் மட்டிலும் கருத்தூன்றிக் கற்றுப் பேரறிவு பெற்றார். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை என்னும் திருக்குறளுக்கு இலக்காக அவர் விரும்பியவாறு சொற்பெருக்கில் வல்லவரானார். சொல்லாற்றலில் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகில் இல்லையென்று உரைக்கும் படியான பெரும்புகழையும் பெற்றார். மக்கள் பலரும் மகிழ்ந்து கொண்டாடும்படியான சொற் பெருக்காளராக வேண்டுமென விரும்புவார் அனைவரும், டெமாதெனி அவர்களின் வரலாற்றை உய்த்துணர்வது உயர்வடைவதற்கு உற்ற நெறியாகும். ஒரு வினையைத் தொடங்குங்கால் எத்துணை இடையூறுகள் நேர்ந்தாலும், அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அவையனைத்தும் நமது நன்மைக் காகவே எழுந்தனவென்ற எண்ணத்தைக் கொள்ள வேண்டும். முன் வருந்தீமை பின் வரும் நன்மைக்கு அறிகுறி யென்பதை மனத்திற்கொண்டு சிறிதும் அசை வின்றி எடுத்துக் கொண்ட செயலில் இடைவிடாமல் முயல்வதுதான் ஆண்மை யுள்ள செய்கையாகும். இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு என்னும் அருமைத்திருக்குறளில், ஒருவன் தனக்கு நேருந் துன்பத்தைக் கண்டு தளர்ச்சியடையாமல், இன்பத்திற்கு அறிகுறி எனக்கொண்டு முயற்சியை விடாமலிப்பானாயின், அவனுக்குப் பகைவர்களும் நன்கு மதிக்கத்தக்க மாண்புண்டாகும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் மேலே படித்த டெமா தெனி வரலாற்றையும் இத்திருக்குறளையும் ஒப்பிட்டு உணர் வோமாயின், இச்செய்யுளின் உயர்வும் உண்மையும் புலப்படும். நாம் நமது நாட்டு வரலாறுகளையும், பிறநாட்டு வரலாறுகளையும் ஆராய்ந்து உணர்வோமானால், ஊக்கமும் உழைப்பும் உடையவர்களே உலகிற்சிறந்து விளங்கியிருக்கின்றார் களென் பதை அறியலாம். ஊக்கமும் முயற்சியுமே இவ்வுலகில் எண்ணற்ற மக்களை அஞ்சாத வீரர்களாகவும், அறிஞர்களாகவும், அரசியல் அறிஞர்களாகவும் ஆக்கியிருக்கின்றன வென்பதை ஒவ்வொரு வரும் உய்த்துணர வேண்டும். சாமி.சிதம்பரனார் மனக்காட்சிகளும் இலக்ஷியங்களும் மனக்காட்சியாளர் உலகத்தின் இரக்ஷகர் ஆவார். மனக் காட்சியாவது விழித்துக்கொண்டு பல நல்ல காரியங்களை நினைத்துக் கண்டு கொண்டிருத்தல். தூல உலகம் சூக்ஷ்ம உலகத்தை ஆதாரமாகக் கொண்டிருத்தல் போன்று, மனிதர் பாவங்களையும் இழிவான செயல்களையும் செய்யும் போதும் கஷ்டங்களை அநுபவிக்கும் போதும், தம்மைச் சேர்ந்த மனக் காட்சியாளருடைய அழகிய மனக்காட்சிகளால் போஷிக்கப் படுகின்றனர். மனித சமூகம் தனது மனக்காட்சியாளரை மறத்தல் முடியாது; அஃது அவருடைய மனோலக்ஷியங்கள் மங்கிப்போகவும் அழிந்து போகவும் விடுதல் முடியாது; அஃது அம்மனோலக்ஷி யங்களில் வாழ்கின்றது; அவை ஒரு காலத்தில் பிரத்தியக்ஷத்தில் காணவும் அறியவும் தக்க உண்மைகள் என்று அஃது அறியும். இசைவாணரும், சித்திரவோடாவிகளும், ஓவியரும், கவிவாணரும், சமயாசாரியர்களும், சாதுக்களுமே மறு உலகத்தைக் கட்டுகிறவர்கள்; மோக்ஷஉலகை நிருமிப்பவர்கள். அவர்கள் வாழ்ந்திருந்தனாலேயே இவ்வுலகம் செவ்வி பெற்றிருக் கின்றது. அவர்கள் இல்லாத பக்ஷத்தில் உழைத்து வருந்தும் மனித சமூகம் அழிந்து போயிருக்கும். எவன் தன் ஹிருதயத்தில் ஒர் உயர்ந்த லக்ஷியமாகிய காட்சியைப் பேணிவருகிறானோ, அவன் அதனை ஒரு காலத்தில் பிரத்தியக்ஷத்தில் காண்பான். கொலம்ப என்பவர் வேறோர் உலகக்காட்சியைத் தம் மனத்தில் பேணிவந்தார்; அவர் அதனைக் கண்டுபிடித்தார்; கோப்பர் நிக்க என்பவர் பல உலகங்களுடைய காட்சியையும் ஒரு பெரிய பிரபஞ்சத்தினுடைய காட்சியையும் தம்மனத்தில் ஓம்பிவந்தார்; அவர் அவற்றைக் கண்டார். புத்தர் மாசற்ற அழகும் மன எம்மியமுமுள்ள ஒரு மோக்ஷஉலகத்தின் காட்சியைத் தமது மனத்தில் பார்த்து வந்தார்; அவர் அதனுள் பிரவேசித்தார். உங்கள் மனக்காட்சிகளைப் பேணுங்கள்; உங்கள் மனோலக்ஷியங்களை ஓம்புங்கள்; உங்கள் மனத்தில் உண்டா கின்ற ரமிப்பையும், உங்கள் தூய நினைப்புக்களை அலங்கரிக்கும் அன்பையும் பரிபாலியுங்கள்; ஏனெனில், எல்லா இன்ப நிலைமை களும், எல்லா மோக்ஷசாதனங்களும் அவற்றினின்று வெளிப் பட்டு வளராநிற்கும்; நீங்கள் அவற்றை உண்மையாகப் போற்றி வருவீர்களாயின், முடிவில் உங்கள் உலகத்தை அவற்றாலே நிருமித்துக்கொள்ளலாம். அவாவுதலே அடைதலாம்; நாடுதலே நிறைவேற்றுதலாம். மனிதனது மிக இழந்த அவாக்கள் முற்றும் நிறைவேறுதலாயிருக்க, அவனது மிக உயர்ந்த விருப்பங்கள் ஆதரணையில்லாமையால் பலன்களை அடையாமல் வீண்போதலுண்டா? தெய்வ நியதி அத்தகைய நிகழ்ச்சிக்கு இடங்கொடாது; அத்தகைய நிலைமை ஒரு பொழுதும் நேராது; அழுத பிள்ளை பால் குடிக்கும் உங்கள் மனத்தில் உயர்ந்த காட்சிகளைக் காணுங்கள்; நீங்கள் கண்டதே காட்சி, பெற்றதே பேறு. இப்போது நீங்கள் காணும் காட்சியே இனி நீங்கள் பெறும் பேற்றுக்கு உறுதி; நீங்கள் கொண்டிருக்கும் மனோ லக்ஷியமே முடிவில் கைவல்லிய மாகும். எப்படிப்பட்ட மகாசித்தியும் முதலில் சில காலம் ஒரு மனக்காட்சியாகத்தான் இருந்தது. பெரிய ஆலமரம் சிறிய வித்தில் உறங்கியிருக்கின்றது; பறவை தனது முட்டைக்குள் காத்திருக்கின்றது; ஆன்மாவின் மிக மேலான மனக்காட்சியில் விழிப்புண்டாக்கும் ஓர் தேவதூதன் நடமாடுகிறான். அப்பிரத் யக்ஷமான மனக்காட்சிகள் பிரத்யக்ஷ முத்திகளின் வித்துக்கள். உங்கள் நிலைமைகள் பொருத்தமில்லாதனவாய் இருக்கலாம்; ஆனால், நீங்கள் ஒரு மனோலக்ஷியத்தை வைத்துக் கொண்டு அதனை அடைதற்கு முயன்றால் அந்நிலைமைகள் அங்ஙனமே நீடித்திரா. அகத்தில் இயக்கம் உண்டாயிருக்கப் புறத்தில் நிலைபேற உண்டோ? அசௌக்கியமுள்ள ஒரு தொழிற் சாலையில் நீடித்த நேரம் வேலை செய்து, வித்யாப்பியாச மில்லாமல், ஆசார உபசாரங்கள் அறியாமல், வறுமையாலும் உழைப்பாலும் மிகவருந்தும் பாலியன் ஒருவன் இதோ இருக்கிறான். அவன் தனது நிலைமையைப் பார்க்கினும் மேலான நிலைமையைத் தனது மனத்தில் கண்டு வருகிறான்; அவன் அறிவு, நாகரிகம், அருள், அழகு முதலியவற்றைப் பற்றி நினைக் கிறான். மனத்தில் ஒருவித வாழ்க்கையை லக்ஷியமாகக் கொண்டு மனோரதம் செய்து வருகிறான்; அதிகப்படி சுதந்தரமும் மேலான நோக்கமும் பொருந்திய காட்சி அவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது; அவன் சூத்திரம் அவனைச் செயலின் கண் தூண்டுகிறது; அவனுக்கு ஒழிவான சுவல்ப காலத்தையும் மீதியான கொஞ்சம் பொருளையும் கொண்டு, வெளிப்படாமல் மறைந்து கிடந்த தன் சக்திகளை விர்த்தி செய்து வருகிறான். அத்தொழிற்சாலை அவனுக்குப் போதாத விதத்தில் அவன் மனம் வெகு விரைவில் மாறி வருகின்றது. அவ்விடம் அவன் மனநிலைக்கு மாறாகிவிட்டமையால், அவன் மனநிலைக்கேற்ற சந்தர்ப்பங்கள் வாய்க்குமளவில் அவன் அச்சாலையை உதறிக் கொண்டு வந்துவிடுகிறான். இந்தப்பாலியன் சில வருஷங்களுக்குப் பின் நல்ல காத்ரபுருஷனாயிருப்பதைக் காண்கிறோம். அவன் மனத்தின் சில சக்திகளைத் தன் வசப்படுத்தி அவற்றை நிகரற்ற வல்லமையுடன் கையாள்வதால், அவனுக்கு உலக முழுவதும் செல்வாக்கு உண்டாயிருப்பதை நாம் பார்க்கிறோம். இப்பொழுது பாரதூரமான காரியங்களுக்கு அவன் சூத்திரதாரியாயிருக்கிறான். இதோ பாருங்கள்! அவன் நாவசைந்தால் நாடசைகின்றது. அவன் ஏதோ சொல்லுகிறான். அவ்வளவிலே எத்தனையோ பேருடைய வாழ்க்கைகள் மாறுதலடைகின்றன. அவன் என்ன சொல்லுகிறானென்று ஆண்களும் பெண்களும் அவாவோடு கேட்கிறார்கள். கேட்டுத் தங்கள் ஒழுக்கங்களைச் சீர்திருத்து கிறார்கள்; மத்தியமாயுள்ள சூரியன் ஆதாரமாகப் பலகோளங்கள் சூழ்ந்துவருவது போல, அவன் ஆதாரமாக எண்ணில்லாத காரிய கர்த்தர்கள் அவனைச் சூழ்ந்து வருகின்றார்கள். அவனுக்குப் பாலியத்தில் தோன்றிய மனக்காட்சி இப்பொழுது பிரத்தியக்ஷ அநுபவமாக இருக்கிறது; அவன் தனது மனோலக்ஷியத்தோடு ஐக்கியமாகியிருக்கிறான். இதனை வாசிக்கிற வாலிபர்களே! நீங்களும் உங்கள் ஹிருதயத்தில் காணும் காட்சி (வீண் விருப்பம் அன்று) உயர்ந்த தாயிருப்பினும், தாழ்ந்ததாயிருப்பினும், அல்லது அவ்விரண்டின் கலப்பாயிருப்பினும், அதனைப் பிரத்தயிக்ஷத்தில் அநுபவிப் பீர்கள்; ஏனெனில், நீங்கள் எதனை அந்தரங்கத்தில் அதிகமாக நேசிக்கிறீர்களோ, அஃது உங்களைத் தன்னிடமாக இழுக்கின்றது. உங்கள் சொந்த நினைப்புக்களின் சரியான பலன்களே நீங்கள் கைகாணும் பலன்கள். நீங்கள் எதனைத் தேடுகிறீர்களோ, அதனைப் பெறுவீர்கள். அதற்கு அதிகமாகவுங் கிடைக்காது, குறைவாகவுங் கிடைக்காது. உங்கள் தற்கால நிலைமை எஃதா யினுஞ்சரி, உங்கள் நினைப்புக்களும் உங்கள் மனக்காட்சியும், உங்கள் மனோலக்ஷியமும் உயர்ந்தால் நீங்களும் உயர்வீர்கள்; அவை தாழ்ந்தால் தாழ்வீர்கள்; அவை எவ்விதம் உள்ளனவோ அவ்விதமே இருப்பீர்கள். உங்களை ஆளும் அவா சிறியதாயின், நீங்களும் அதற்கேற்றபடி பெரியார் ஆவீர்கள். டாண்டன் கிரக்காம் டேன் என்பவர் அலங்கரித்துச் சொல்லியபடி நீங்கள் லேக்கராய்க் கணக்குகள் எழுதிக்கொண்டிருக்கலாம்; திடீரென ஒருநாள் எழுந்து, உங்கள் மனோலக்ஷியங்களுக்குத் தடையாக நீடித்த காலம் தோன்றிக்கொண்டிருந்த உங்கள் அறையை விட்டு வெளியே செல்வீர்கள்; அவ்விடத்தில் உங்கள் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சித்தமாயிருக்கும் அநேகரைக் காண்பீர்கள்- இன்னமும் உங்கள் காதில் எழுதுகோலும், உங்கள் விரல்களில் மைக்கறையும் இருக்கலாம் - உங்கள் மனத்தின் ஆவேசமான ஞானத்தைத் தாரை தாரையாகப் பொழிவீர்கள். நீங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கலாம்; நீங்கள் ஆடுமேய்க்கும் சத்தத்தோடும், திறந்த வாயோடும் நகரத்துக்குச் செல்ல, உங்கள் ஆவேசம் உங்களை ஒரு சித்திர ஓடாவியிடம் தள்ளிக்கொண்டு போகலாம், சிலநாளானபின் சித்திரவோடாவி உங்களைப் பார்த்து நான் இனிமேல் உங்களுக்குக் கற்பிக்க வேண்டுவது ஒன்றுமில்லை என்று கூறலாம். சமீபகாலத்தில் ஆடுகளை ஓட்டிக்கொண்டிருந்தபொழுது பெருங் காரியங் களை மனோரதித் திருந்த நீங்கள் இப்பொழுது சித்திர ஓடாவியாகிவிட்டீர்கள். கம்மியத் தொழில் செய்திருந்த நீங்கள் இவ்வுலகத்தைச் சீர்திருத்துமாறு உங்கள் வாளையும் இழைப் புளியையும் ஒழித்து விடுவீர்கள். ஆலோசனையில்லாதவர்களும் பாமரர்களும் சோம்பர் களும் சங்கதிகளைக் கவனிக்காமல் அவைகளின் வெளிப் படையான காரியங்களை மாத்திரம் பார்த்து யோகமென்றும், அதிர்ஷ்ட மென்றும், தற்செயலென்றும் பேசிக் கொள்வதுண்டு. ஒருவன் பணக்காரனாகிறதைப் பார்த்து, இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி! என்கின்றனர். மற்றொருவன் புத்திசாலியா யிருக்கிறதைப் பார்த்து, இவனுக்கு எவ்வளவு நல்ல பாக்கியம் கிடைத்திருக்கிறது! என்று வியந்துரைக்கின்றனர். வேறொருவனது மஹனீய குணத்தையும் விரிந்த செல்வாக்கையும் பார்த்து, இவனுக்கு ஒவ்வொரு வழியிலும் எப்படித் தற்செயலாக உதவிகள் நேரிடுகின்றன! என்கின்றனர். இவர் தமது அநுபவங் களைப் பெறுதற்கு விருப்பத்தோடு பட்டிருக்கிற கஷ்டங்களையும், அடைந்திருக்கிற தவறுதல்களையும், செய்திருக்கிற போராட்டங் களையும் அவர் பார்க்கின்றிலர்; இவர் ஹிருதயத்தின் காட்சியைப் பிரத்தியக்ஷத்தில் கொண்டு வருதற்கும், இவருடைய மார்க்கங் களில் கடக்க முடியாதனவாகத் தோன்றிய இடையூறுகளை நீக்குதற்கும் இவர் செய்திருக்கிற பரித்தியாகங்களையும், துணிகர மான முயற்சிகளையும், இவர் கொண்டிருந்த கொள்கைகளையும் பற்றி அவர்கள் ஒன்றும் அறியார்கள். இவரது கஷ்டங்களையும் கவலைகளையும் அறியாது, இவரது சுகத்தையும் சாந்தியையும் மாத்திரம் பார்த்து, அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் என்று கூறுகின்றார்கள்; இவரது நீண்ட பிரயாசையான யாத்திரையைப் பாராது, இவர் சேர்ந்திருக்கும் இடத்தை மாத்திரம் பார்த்து, அதனை நல்ல யோகம் என்று சொல்கின்றார்கள்; இவர் செய்த முயற்சிகளைக் கவனியாது, இவர் பெற்றுள்ள பலனை மாத்திரம் பார்த்து, அதனைத் தற்செயல் என்கின்றார்கள். மனிதரது சகல காரியங்களிலும் முயற்சிகளும் உண்டு; பலன்களும் உண்டு. முயற்சி எவ்வளவு; பலனும் அவ்வளவே. காலமென்றாவது, அதிர்ஷ்டமென்றாவது, ஒன்றில்லை. பேறு களும், சகதிகளும், உலகவுடைமைகளும், அறிவுடைமைகளும், மோக்ஷவுடைமைகளும் முயற்சியின் பலன்கள்; அவை முற்றுப் பெற்ற நினைப்புக்கள்; செய்து முடித்த காரியங்கள்; அநுபவித்த மனக்காட்சிகள். உங்கள் மனத்தில் நீங்கள் போற்றிவரும் காட்சியோ உங்கள் ஹிருதயத்தில் உன்னதமாயிருக்கும் இலக்ஷியமோ உங்கள் வாழ்க்கையை ஆக்கிக் கொள்ள முதற்கருவியாகும்; இதுவே உங்களுக்கு அநுபவசித்தியாகும். வ.உ. சிதம்பரம் பிள்ளை. கன்பூஷிய ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலத்தில் பற்பல பெயர்கள் தோன்றி அந்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத் திருக்கின்றனர். நாட்டில் உள்ள மக்களனைவரும், ஒற்றுமை யடைந்து இன்பமாகவாழவேண்டுமென்று உழைத்தவர்களைத் தான் உண்மையான பெரியோர்களென்றுரைக்கலாம். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ச் சீனதேசத்தில் ஒரு பெரியார் பிறந்தார். இவருடையகொள்கைகளும், புகழும் இன்றளவும் சீனநாட்டில் நின்று நிலவுகின்றன. இவர் பால் இன்றும் சீன நாட்டு மாந்தர், அன்பும் பத்தியுமுடையராக வாழ்கின்றனர். அவருடைய வரலாற்றையும், கொள்கைகளையும் இப்பாடத்திற் சுருக்கமாக அறிந்து கொள்ளுவோம். சீனநாட்டிற் சகல்லியாங்குகை என்ற பெயருடைய அறிஞர் ஒருவர் உறைந்தார். இவர் கல்வியிலும், எடுத்த செயலை இனிது நிறைவேற்றுந் திறமையிலும் சிறந்து விளங்கினார். சகல்லியாங்குகை அரசாங்க வேலைபிலமர்ந்து தமது வேலைக் குரிய கடமைகளைச் செவ்வனே செய்து அரசாங்கத்தாராலும், நாட்டு மக்களாலும் நன் மதிப்புப்பெற்று விளங்கினார். இவருக்கு முதல் மனைவியின் பாற் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். இவருக்கு வயதும் எழுபது நிறைந்தது. நிறைந்தும், கட்டமைந்த ஆக்கையுடையவராகவும், உலக இன்பத்தில் ஆவலுடையவராகவு மிருந்தார். அதனால் மீண்டும் மணஞ்செய்து கொள்ள வேண்டு மென்னும் ஆவல் கொண்டார். தனது எழுபதாவது ஆண்டில், நற்குண நற்செய்கைகளும், அழகும் அமைந்த பதினேழாண்டு மங்கையொருத்தியை மணம் புரிந்து கொண்டார். பிறகு அவருக்கும் அம்மங்கைக்கும் ஓராண் குழந்தை பிறந்தது. எழுபது ஆண்டு நிறைந்த சகல்வியாங்குகைக்கும், பதினேழாண்டு நிரம்பிய மங்கைக்கும் பிறந்தவர் தான் பிற் காலத்தில் சீனவேதத்தின் ஆசிரியராக விளங்கிய பெரியராவர். அவர் பெயர் கன்பூஷன் என்பது. கன்பூஷருக்கு ஆண்டு மூன்றாகும் போது அவர் தந்தை மண்ணை விட்டகன்றார். கன்பூஷர் தந்தையை இழப்பினும், தமது தாயினால் மிகவும் அருமையாக வளர்க்கப்பட்டார். தந்தை பொருள் ஈட்டி வைத்திருந்தமையால் கல்வி கற்க வசதியிருந்தது அவரும் அக்காலத்தில் வழங்கிய கல்வியைப் பயின்று சிறந்த அறிவினராக விளக்கினார்; தமது தந்தையைப் போலவே செயல் செய்யுந் திறமையுடையவராகவும் திகழ்ந்தார். கன்பூஷர், வரலாற்று அறிவிலும், சட்ட அறிவிலும், சங்கீத உணர்ச்சியிலும் சிறந்தவர். இவர் திறமையைக் கேள்வியுற்ற அந்நாட்டரசன், அவரை அழைத்து அரசாங்க வேலையில் வைத்துக் கொண்டான். இவர் தமது வேலையைத் திறமை யோடும், நேர்மையோடும் செய்து வந்தார். இடையிடையே கிடைத்த ஓய்வு நேரங்களில் உலகம் விடுதலையடைவதற்கான நெறிகளைச் சிந்திப்பதையே கடமையாகக் கொண்டிருந்தார். கன்பூஷர் தனது பத்தொன்பதாம் ஆண்டில் நங்கை யொருத்தியை மணம் புரிந்துகொண்டு இல்லறத்தை இனிது நடத்தினார். அவருக்கு ஆண்டு இருபத்து நான்கு ஆகும் போது அவர் தம் அருமை அன்னையார் உயிர் துறந்தார். அதனால் அவரெய்திய மனத்துயரத்திற் களவில்லை. சிறு பருவத்தி லிருந்து தந்தையும் தாயுமாக இருந்து தன்னை வளர்த்த அருமைத் தாயைப் பிரிந்தால் வருந்தாதார் யாருளர்? மக்களுக்கு உதவி செய்பவர்களிற்றாயைவிடச் சிறந்தார் யாருளர்? இதனாலன்றோ தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை என்று அறிஞர் கூறினர். அவர் தம் தாய் துஞ்சிய தூயரால் மனம்புழுங்கி மூன்றாண்டுகள் ஒருவருடனும் உரையாடாமல் தனித்து வாழ்ந்தார். பிறகு உலக வியற்கையை எண்ணி ஒருவாறு தேறி, மீண்டும் தமது அரசியல் வேலைகளைத் திறமையாகச் செய்து கொண்டிருந்தார். பின்னர் அப்பொழுதிருந்த லூர என்னும் வேந்தன் கன்பூஷருடைய அறிவின் பெருமையையும், ஆற்றலையும் உணர்ந்து அவரை ஒரு ஜில்லாவுக்குத் தலைமை அதிகாரியாக ஆக்கினான். அவர் அவ் வேலையைத் திறமையுடன் செய்வதைக் கண்டு அரசன் அவரை அமைச்சராகவே, ஆக்கிக்கொண்டான். அக்காலத்தில் அந்நாட்டில் திருடர்களும் தீயவர்களும் மிகுந் திருந்தனர். அதனால் நாட்டினர் எப்பொழுதும் ஒற்றுமை யுடனும், மகிழ்ச்சியுடனும் உறைவதற்கியலா மலி ருந்தனர். அமைச்சரான கன்பூஷர் நாட்டின் சீர்கேடான நிலையைக் கண்ணுற்றுத் திருட்டையும், தீயசெய்கைகளையும் நாட்டில் நிலவாதவாறு விலக்கி ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் உலவச்செய்தார். இதனால் இவர் புகழ் நாடெங்கும் பரவிற்று. இவருடைய முதுமைப் பருவத்தில், இவர் மீது பொறாமை கொண்டவர்களின் சூழ்ச்சியினால் மந்திரிப் பதவியினின்றும் தள்ளப்பட்டார். இவரும் தாம் பதவி இழந்ததைப் பற்றி ஒரு சிறிதும் துனியுறாமல் நாட்டிலுறையும் மக்களை நல்வழிப்படுத்துவதற்கான துறையிலிறங்கித் தொண்டாற்றப் புகுந்தார். இவர் துறவிக்கோலம் பூண்டு தன்னலமென்பதைச் சிறிதும் சிந்தியாமல் நாடெங்குஞ் சென்று தமது கொள்கைகளைப் போதித்தார். உண்பதற்கு உணவும், உடுத்துவதற்குத் தக்க ஆடையும் இன்றியே இவர் தமது பணியையாற்றி வந்தார். அக்காலத்தில் இவருக்குப் பகைவர்களும் பலரிருந்தனர். இவர் அமைச்சராக உறைந்து அரசியல் நடத்திய காலத்தில் இவரால் ஒறுக்கப்பட்ட கொடியவர்கள் இவர் துறவியாகத் திரிகின்ற போது இவரைக் கொல்லுவதற்கு முயன்றனர். இருமுறை அவர்களாற் கொல்லப்படாமல் உயிர் தப்பினார். இவர் தம் வாழ்நாளில் நடத்திய செயல்கள் யாவும் இயற்கைக்கு இயைந்ததாகவும், அறிவிற்கும் நாட்டின் நன்மைக்கும், வாழ்க்கையின் சிறப்பிற்கும் ஏற்றனவாகவுமே இருக்கும். ஒருநாள் ஒரு குடியானவன் கன்பூஷரையடைந்து பெரியீர்? என் மகன் தன் கடமைகளை நிறைவேற்றாது திரிகின்றான்; அவனைக் கண்டித்து நன்னெறியிலுய்க்க வேண்டும் என வேண்டினான். கன்பூஷனரும், அக்குடியானவன் வேண்டு கோளை ஏற்று, அவன் மகனை அழைத்துத் தண்டித்து அறிவுரை கூறியபின் அக்குடியானவனையும் தன் மகனுக்குக் கல்வி பயிற்றுவிக்காமைக்காகத் தண்டித்தார். அக்குடியானவன் தன் மகனுக்கு இளமையிலேயே கல்வி பயிற்றுவித்து அவனை அறிவுடையவனாகச் செய்திருப்பானாயின் அம்மகன் தன் கடமையைச் செய்யத் தவற மாட்டானன்றோ? ஒருநாள் கன்பூஷர் இல்லாத போழ்து அவரது இல்லம் தீப்பிடித்துக் கொண்டது. அதனைப் பலர் கூடி அணைத்தனர். சிலர் அவரிடஞ்சென்று வீடு தீப்பற்றி எரிந்ததையும் அணைத்த தையும் கூற அவர் உடனே அணைக்கச் சென்றவர்கள் எவரேனும் தீயினால் துன்புற்றனரோ? என்று வினவினார். இவர் துறவியாகச் சுற்றிக்கொண்டிருந்த காலத்திற் சீன நாட்டிற் சிற்றரசர்களின் ஆட்சியே சிறந்து நின்றது. அவர்கள் நாட்டின் நன்மையை எட்டுணையுங் கருதாது தன்னலத்தையே குறிக்கொண்டு கொடுங்கோல்முறை செய்தனர். அதனால் நாட்டிலுள்ளார் பலர், பிறநாடுகளுக்குச்சென்று குடியேறினர். அக்காலத்திலொருநாள் கன்பூஷர் தனது மாணவர்களுடன் ஒரு கானிடையிற் சென்று கொண்டிருந்தார். அவ்வடவியில், ஒரு மங்கை ஆறாத்துயரத்துடன் அழுது கொண்டிருந்தாள். கன்பூஷர், அவளண்டையுற்று, நங்காய்! நீ ஏனிங்ஙனம் நலிந்து அரற்றுகின்றனை? என்றார், அதற்கு அந்நங்கையார், பெரியீர்! எந்தை இக்காட்டிலேயேபுலியின் வாய்ப்பட்டிறந்தார். என் கொழுநனும் புலியாற் கொல்லப்பட்டு மடிந்தார். என் செல்வச் சிறுவனும் அங்ஙனமே ஆருயிர் நீத்தான்; அதனால் தான் அழுதுகொண்டி ருக்கின்றேன் என்றாள். அதற்குக் கன்பூஷர் அவ்வாறாயின் நீ ஏன் இக்கொடுங்கானில் வாழ்தல் வேண்டும்? நாடுற்று நலமுடன் வாழலாகாதா? என்றார். அதற்கு அப்பெண் பெரியீர்! இங்குப் புலி முதலிய கொடு விலங்குகளிருப்பினும், கொடுங்கோல் வேந்தர்களில்லை. ஆதலால் நாட்டைவிட இதுவே சிறந்த இடம் என்று கூறினாள். கன்பூஷர் எப்பொழுதும் ஆடம்பரமற்றவராகவே காணப்படுவார். அவரைக் கண்ணுறுவோர். உரையாடுவதற்கும் ஆற்றலற்றவரென்றே எண்ணுவர். ஆனால் எந்த அவைக் களத்திலும் அஞ்சாது நின்று பேச வல்லவர். எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க உயரிய செய்திகளைக் கல்லாரும் உணர்ந்து மனத்தமைக்குமாறு தெளிவாகக் கூறுந் திறமையுடையவர். விரைவாகவும் இனிமையாகவும் பேசும் இயல்புடை யவர். இவர் ஒருபொழுதும் செந்நிற உடைகளையும் கறுப்புடை களையு முடுத்துவதில்லை. எப்பொழுதும் ஒரே நிறமுடைய உடையினையே அணிந்திருப்பார். இவருக்கு எப்பொழுதும் இஞ்சியின் மீதும் இனிப்புப் பண்டங்களின் மீதும், அரிசியுணவின் மீதும் காய்கனிகளின் மீதும் ஆவல் மிகுதி. ஆதலால் அவற்றையே இவர் மிகவும் விருப்பத்துடன் அருந்துவார். கன்பூஷர் அடிக்கடி நாட்டினர்க்குக் கூறிய அறிவுரைகளிற் சிலவற்றைக் கீழே காண்போம். ஒரு நாட்டில் ஒற்றுமை நிலவியிருக்க வேண்டுமாயின், எல்லா மக்களும் கல்வியறிவு பெற்றிருப்பது மட்டிலும் போதாது. ஒவ்வொருவரிடமும் அஞ்சாமையும் வீரமும் நிறைந்திருக்க வேண்டும் இளைஞர்கள் தம் பெற்றோரைப் போற்ற வேண்டும். அறிஞர்களுடன் உண்மையன்புடன் பழகி அவர்களின் நட்பைப் பெறவேண்டும். ஒழுக்கமே சிறந்த வலிமையாகும். அதனையே இளைஞர்கள் மேற்கொண்டொழுக வேண்டும். நுகத்தடியற்ற வண்டியையும், கடிவாளமற்ற பரியையுஞ் செலுத்த முடியாததுபோல ஊக்கமில்லாதிருப்பவன் முன்னேற்றமடையமாட்டான். அறிவுடைமை என்பது உலகமக்கள் முன்னேற்ற முறுவதற்கான கடமைகளை யாற்றுவதும், மறுவுலகைப்பற்றிக் கவலையுறாம லிருப்பதுமே யாகும். ஒழுக்கமென்பது நிகழவிருக்கும் நன்மை தீமைகளை யுணர்ந்து தனது கடமைகளைத் தவறாது புரிந்து வெற்றி பெறுதலேயாகும். மனத் தூய்மையும் பிறர்க்குத் தன் கடமைகளை ஆற்றுதலுமே முத்தியென்று மொழியப்படும். உண்மையுடன் ஒவ்வாத வாழ்க்கை வாழ்க்கையாகாது. அன்பு, அறம், பொறுமை இவற்றைப் பெற்றிருந்தும் உலக மக்களைச் சீர்திருத்துந் துறையிலிறங்குவதற்கு ஆற்றலற்றவனா யிருப்பின் அவன் சிறந்தவனாகான். என்ற இவைபோன்ற கொள்கைகளையே கன்பூஷர் பொது மக்களுக்குக் கூறிவந்தார். இவர் எப்பொழுதும் மலர்ந்த முகத்துடனேயே காணப்படுவார். அவர் அடிக்கடி தன்னைப் பற்றித் தானே குற்றஞ் சாட்டிக் கொள்ளுவார். அவர் எப்பொழுதும் மக்கட் பிறவியின் முன்னிலையைப் பற்றியும், இறந்தபின் வரும் நிலையைப்பற்றியும் உரையாடுவதேயில்லை. துறக்கம் நிரயம் முதலியவற்றைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. யாரேனும் அவரிடமணுகிக் கடவுள்நிலையைப்பற்றி வினவினால் அது நம்மால் அறியக்கூடாத செய்தியாகும் என்று அஞ்சா துரைக்கும் ஆண்மை வாய்ந்தவர். இசைக்கலை, மக்களை உலக இன்பத்திலேயே பெரிதும் ஈடுபடச்செய்து பேராசையும் துன்பத் தையும் விளைக்கக் கூடியதென்பது அவருடைய கொள்கை. ஒவ்வொருவரும் தம் தம் சீரிய செய்கைகளினாலேயே சிறப்படைய வேண்டுமென்பது அவரது துணிவாகும். இப்பெரியார் நாட்டுமக்களால் மிகவும் மதிக்கப் பெற்றுச் சிறந்திருந்த காலத்தில் உயிர் விட்டார். அவர் இறந்ததைப்பற்றிச் சீனநாடு முழுதும் துன்பக்கடலில் மூழ்கிற்று. இன்னும் இப் பெரியாருடைய கல்லறை சாண்டங்க ஜில்லாவில் கியூபென் என்னுமிடத்தி லிருக்கின்றது. அதனை நாட்டு மக்கள் கோயிலாகக் கொண்டு வணங்கி வருகின்றனர். அவருடைய அறிவுகளை இன்றும் சீனமக்கள் வேதமாகக் கொள்கின்றனர். சாமி சிதம்பரனார் நிலாப்பாடம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளையும், அவர் தம் அருமை மாணவர்களும் இந்தப் பங்குனித்திங்கள் வளர்பிறையில், ஒருவாரமாக மாலையில் விண்ணாற்றங் கரைக்குப்போய் எட்டு மணிக்குத்தான் வீடுவந்து சேர்கின்றார்கள். சுந்தரம் பிள்ளை தன்பெயரைப்போலவே இனிய குணமும் அழகும் உடையவர். அவர் தம் இனிய குணமும், கனிபோன்ற பேச்சும் அவருடைய கூர்மையான அறிவையும், நிறைந்த கல்வியையும், பொன்மலர் மணம் பெற்றது போலச் சிறப்பிக்கின்றன. ஒரு நாளும் தவிராமல், மாலைக்காலத்தே, தங்கள் பந்தினையும், கிற்றுணவினை யும் விட்டு விட்டு, அலுப்புச்சலிப்பு அடைதலின்றி, மலர்ந்த முகத்துடன் அவர் பின் போய் வரும் பல சிறுவர்கள் செயலே அவர் தம்பெருமைக்கு ஒரு அடையாளமாகும். விண்ணாற்றுக்கு மாலையில் இரண்டு மூன்று நாழிகைப் பொழுதிருக்கப் போய்ச்சேரும் இவர்கள் வெளியே போய் வந்து, கால் கை முகங் கழுவிக்கொண்டு, தண்ணீர் இறைக்கும் இடத்திற்கு (Pumping Station) நேரேயுள்ள மணல் மேட்டில் வந்து சேர்வார்கள். ஒன்றரை நாழிகைக்கு மேல், பிள்ளைகள் தங்கள் மனம்போல் ஊற்றுத் தோண்டியும், கோயில் கோபுரங் கட்டியும். பலீங் கிடுகிடு ஆடியும், உப்புக் கோடு மருவியும் விளையாடிக் கொண்டிருக்க, ஆசிரியரோ, நீராடி, மாற்றுடையுடுத்துத் திருநீறு அணிந்து, ஓரிடத்தமர்ந்து, கடவுளைத் தொழுது கொண்டிருப்பர். பின்னர், ஆசிரியர் மாணவர் பக்கம் திரும்பவே, அவர்களும் விளையாட்டினை நிறுத்தி, மீண்டும் முகம் கைகால்களைக் கழுவித் திருநீறணிந்து, இறைவனையும் ஆசிரியரையும் தொழுது கொண்டு, தங்கள் ஆசிரியரை அணுகி உட்கார்ந்துகொள் வார்கள். சுந்தரம் பிள்ளையும் அவர் தம் மாணவர்களும், தாயும் சேய்களும் போல நெருங்கி யுட்கார்ந்திருக்கும் அழகினையும், அம்மாணவர்கள் அவர் தம் அருமை முகத்தினைத் தேவர்களைப் போல இமையாது பார்த்துக்கொண்டிருக்கும் எழிலினையும் ஒரு முறையாவது பார்த்து மகிழாதவர்கள் அடுத்த சித்திரை நிலாவிலாவது பார்த்து மகிழ்தல்வேண்டும். முற்காலத்தில், நளன் தன் மனவி மக்களோடு, நற்காலம் பெற்று மீண்டும் தன்நகரத்திற்கு வந்தபோது, அந்த நகரத்துமக்கள், மேகத்தைக்காணாதிருந்து கண்ட மயிலெனவும், கண்ணைப் பெறாதிருந்து பெற்றமுகமெனவும், நீரைப்பெறாது வாடியிருந்து பெற்ற பயிறெனவும் மிக மிக மகிழ்ந்தார்கள். என்ற பொருளில் புகழேந்திப் புலவர் பெருமான், கார் பெற்ற தோகையோ! கண்பெற்ற வாண்முகமோ! நீர் பெற்றுயர்ந்த நிறைபுலமோ! - பார்பெற்று மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகர்க்(கு) ஏதோ வுரைப்பன் எதிர். என்று பாடியுள்ளார் அல்லவா? சுந்தரம் பிள்ளை இனிய முகத்தை அவர் மாணவர் பார்த்திருக்கும் இக்காட்சிக்கும், அப்புலவரது அழகிய அடிகளையே வைத்துக்கொண்டு, கார் பெற்ற தோகையோ! கண்பெற்ற வாண்முகமோ நீர்பெற்றுயர்ந்த நிறைபுலமோ! - ஏர் பெற்ற சுந்தரனார் அன்பொழுகும் தூமுகத்தை அன்னவர் தம் மைந்தரனார் பெற்றிருக்கும் மாண்பு. என்று பாடி முடிப்பது பொருந்துவதே யாகும்; பொய்ப் புகழ்ச்சியாகாது. நிலாப்பாடம் தொடங்கி ஒரு வாரம் ஆகிய பின், முன்மதி நாள் வந்தது. ஆசிரியர் தம் மாணவர்களைப் பார்த்து, என் அருமைச் சிறுவர்களே! இன்றைய மதியைப் பாருங்கள்! என்று தொடங்கி ஏதோ சொல்லப் போகுமுன், ஒரு மாணவன் தன் மகிழ்ச்சியை அடக்க முடியாமல், ஐயா! இன்று மிக அழகாக இருக்கிறது என்றான். ஆசிரியர் தலையை அசைத்துக் கொண்டு, ஆம், சோமு! நான் சொல்ல நினைத்ததும் அதுவே என்று கூறி, எங்கே பார்ப்போம்! இந்த இனிமையை எடுத்துக் காட்டும் ஒரு பாட்டினை யாரேனும் கூறுங்கள் என்ன, மாணவர்கள் சற்று நேரம் எண்ணிப்பார்த்தார்கள். கண்ணப்பன் துள்ளி எழுந்து மண்டி போட்டுக் கொண்டு, ஐயா! எனக்குத் தெரிந்து விட்டது, எனக்குத் தெரிந்து விட்டது, அங்கண் விசும்பில் அகனிலாக் காண்பினிதே என்று கூறினான். ஆசிரியர் கெட்டிக்காரன்! என்று கூறி, அப்பாட்டின் அழகினைப் பாருங்கள்! திங்கள் பொதுவாக மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும், இன்று போல முழுத்திங்கள் தரும் மகிழ்ச்சி தான் மிகப்பெரிது, என்பதை இனியவை நாற்பது பாடிய பூதஞ்சேந்தனார் என்னும் புலவர் அகல் நிலாக் காண்பு இனிது என்று எடுத்துக்காட்டியுள்ளார். இதுபோலவே, அவ்வடியிலுள்ள மற்றோர் சிறப்பினை உற்று நோக்கிக் கூறுங்கள் என்றார். சற்றுநேரம் எண்ணிய பின், மாணிக்கம், ஆசிரியர் முகத்தினைப் பார்க்க, ஆசிரியர், சொல் பார்ப்போம் என்றனர். அகல் நிலா மிகுந்த மகிழ்ச்சி தருவதாக விருந்தாலும், வானம் மப்புமாசின்றி இருத்தல் வேண்டும். அப்போது தான் மிக இனிமையாக இருக்கும். இதனாலே தான் அங்கண் விசும்பில் அகனிலா என்று கூறியிருக்கிறார் என்றான். மாணவர்கள் எல்லோரும் மாணிக்கத்தின் உரையைக்கேட்டு வியந்தார்கள். ஆசிரியர் மகிழ்ந்தார். பின்னர் ஆசிரியர், நல்லது மாணவர்களே! இன்று முழுமதி யானதால், முழு மதியைப்பற்றி சிலவற்றை முதலில் தெரிந்து கொள்ளுவோம். மற்றைய நிலா நாட்களில் இல்லாமல், இன்றைக்கு மட்டும் நடக்கக்கூடிய செயல்களைச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார், முருகையன், ஐயா! நான் சொல்லுகிறேன். இன்றைக்குத்தான் கிரகணம் உண்டாகும் என்றனன். ஆசிரியர், ஆம், இன்னொன்று உண்டு. அதுவோ, இன்றைக்குத்தான் கடல் மிகுதியாகப் பொங்குவது, அது இருக்கட்டும். முதலில் கிரகணம் என்பது யாது? அது எப்படி உண்டாகிறது? என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். கிரகணம் என்ற வடமொழிக்குப் பற்றுதல் அதாவது பிடித்தல் என்று பொருள். இராகு என்னும் பெயருடையதோர் பாம்பும் கேது என்னும் பெயருடையதோர் பாம்பும் ஞாயிற்றினையுந் திங்களையும் பிடித்துக்கொள்ளும், பிறகு விட்டு விடும் என்பது நமது முன்னோர் கொள்கை. ஆனால், உண்மையில் அத்தகைய பாம்புகளும் இல்லை. அவை பிடிப்பதும் இல்லை. பூமி சூரியனைச் சுற்றுவதும், புவியை மதியம் சுற்றுவதும் நீங்கள் படித்திருக்கிறீர்களே. இவ்வாறு சுற்றிக்கொண்டு வரும் போது, ஏதோ ஒரு காலம், சூரியனுக்கும், அதன் ஒளியை முழுதும் பெற்றுப் பூமிக்குத் திரும்பித் தந்து கொண்டிருக்கும் முழுமதிக்கும் நடுவில், பூமியின் ஒருகோடி வருவது உண்டு. இப்படி வரும்போது பூமி மறைப்பதால் சூரியன் ஒளியை இழக்கும் மதியின் பகுதியையே சந்திர கிரகணம் சூரியனுக்கும் அதன் ஒளியைப் பெற்றுக் கொண்டிருக்கும் பூமிக்கும் நடுவில், பூமியைச் சுற்றிவரும் சந்திரன் எப்போதாவது வந்து விடும். அப்போது சந்திரனால் மறைக்கப்படும் சூரியனின் பகுதிக்குத்தான் சூரியகிரகணம் என்று பேர் என்று கூறி, அதனை நன்கு விளங்கச்செய்ய ஒரு மாணவனை, இருவர்களைப் பூமி போலவும் சந்திரன் போலவும் சுற்றி வரச்செய்து விளக்கிக் காட்டினார். பிறகு அவர், இவ்வுண்மையை நமது முன்னோர்கள் முற்றும் உணரவில்லையென்று திட்டமாகச் சொல்லுதலும் இயலாது. அவர்கள் இராகு வினையும், கேதுவினையும் சாயா கிரகங்கள் என்று கூறியிருக்கின்றார்கள். சாயா கிரகங்கள் என்றால் நிழலாகிய கிரகங்கள் என்பது தான் பொருள். இத்தகைய நிழல்களையே இராகு கேது என்று பெயர் வைத்து இரு கிரகங்களாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எண்ணக்கூடும். இது எப்படியாவது இருக்கட்டும். இனி, நமது அருமைத்தமிழ் நூல்களில் இந்தப் பாம்பு கோளைப் (கிரகணத்தைப்) பற்றி ஏதேனும் நீதி கூறிய பாட்டு உளதாயின் எடுத்துக்காட்டுங்கள் என்றார். வழக்கம் போற்சற்று எண்ணியபின், கண்ணப்பனே ஒருபுடை பாம்பு கொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் திங்கள்போல் செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப் பிறந்தார். என்னும் நாலடியாரின் பாட்டினைக் கூறினான். ஆசிரியர் நம் கண்ணப்பனுக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது, என்று கூறி, இந்தப் பாட்டில் திங்களின் எந்தச் செயல் பாராட்டப் படுகிறது? மணிவண்ணா! நீ சொல் என்ன, அவன் திங்கள் தனக்கு ஒரு தீங்கு வந்திருந்தாலும் அதனைப் பாராட்டாமல் பிறர்க்குச் செய்யும் நன்மையைச் செய்து கொண்டிருக்கும் என்றனன். ஆசிரியர் நல்லது இப் பாட்டின் பின் இரண்டடியின் பொருள் என்ன என்று பார்ப்போம். சோமு! நீ சொல்! பின் அடிகள் யாருடைய செயலை எடுத்துக்காட்டுகின்றன? என்ன சோமு உயர்ந்த குடிப்பிறந்தார் செயலைக் காட்டுகின்றது என்றான். ஆசிரியர், ஆம் உயர்ந்த குடிப்பிறந்தாரின் சிறந்த செயல் ஒன்றைத்தான். அது யாது? மணிவண்ணா நீ கூறு என்ன, மணிவண்ணன் ஒப்பரவு செய்தல் என்றான். ஆம், அதன் பொருள் என்னவென்று ஆசிரியர் மீண்டும் கேட்க, அதாவது உலக நடையை ஒட்டிய தன்கடமையைச் செய்தல் என்றான். ஆசிரியர் நன்று, குடிப்பிறந் தார்க்கும் மற்றவர்க்கும் உள்ள வேறுபாடு ஒன்று இதில் குறிக்கப் பெற்றுள்ளது. அதனை, மாணிக்கம்! நீ கூறமுடியுமா? என்ன, மாணிக்கம் எண்ணிப் பார்த்துத் தெரியவில்லை ஐயா! என்றனன். நல்லது நான் கூறுகின்றேன்; வேறு ஒன்றுமில்லை. குடிப் பிறந்தார் போல், மற்றவர்களும் தங்கள் கடமைகளை ஏதோ ஒருவாறு செய்து வருவதும் உண்டு. ஆனால், பொருள் வளங் குறைந்தால் மற்றவர் தங்கள் கடமைகளைக் கை நழுவவிட்டு விடுவார்கள். குடிப்பிறந்தாரோ வருந்தி நிற்கும் வறுமை நிலையிலும் தங்கள் கடமைகளை எவ்வாறாயினும் செய்து தான் வருவார்கள் என்பது தான். இந்தப் பகுதியின் பொருளாவது - சொல்லமை; வறுமை, செவ்வன நேர் நிற்பினும் - நன்றாக நிலைபெற்று நின்றாலும், ஒப்புரவிற்கு - உலக நடையறிந்து செய்யுங் கடமைகளுக்கும், குடிப்பிறந்தார் - உயர் குடிப் பிறந்தவர்கள், ஒல்கார் - பின் வாங்கார் என்பதாகும் என்று கூறி வந்தவர், நல்லது மாணவர்களே! மதியம், எப்போதோ வரும் இந்தப் பாம்புகோளின் காலத்தில் தன் வருத்தம் பாராட்டாமல் உலகிற்கு நன்மை செய்தல் புதிதன்று அக்குணம் அதற்கு என்று இயற்கையாகவுள்ளது. தன்னிடத்தில் எப்போதுமிருக்கும் களங்கமாகிய கறையினையும் போக்கிக் கொள்ள முயலாமல் உலகத்து இருளைப் போக்கிக் கொண்டிருக்கும் என்று ஒரு பாட்டிற் படித்திருக்கின்றீர்கள் அல்லவா? அந்தப்பாட்டை நடராசன்! நீ கூறு என்றார். உடனே நடராசன், தம் குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகின் நிறை யிருளை நீக்குமேல் நின்று, என்ற நன்னெறிப் பாட்டினைக் கூறினன். ஆசிரியர், நல்லது, இந்தப் பாட்டும் முன் பாட்டைப் போன்ற ஒரு நீதியைக் காட்டு வதே யாகும். இப்பாட்டின் பின்னடிகளின் பொருள் எளிதாகத் தெரிகின்றதல்லவா? விழுமியோர் - மேலோர், தம்குறை - தமது துன்பங்கள், தீர்வு உள்ளார் - நீக்கிக் கொள்ளுதலை நினையாராய், பிறர்க்கு உறும் = மற்றவர்களுக்கு வரும், வெம்குறை = கொடிய துன்பங்களை, தீர்க்கிற்பார் = நீக்கி விடுவார்கள் என்பது முதற்பகுதியின் பொருள் என்று கூறி முடித்தார். அதன் மேல் மாணிக்கம், ஐயா! கறையென்று பாட்டில் வந்திருக்கிறதே, அதை, ஔவை என்று சொல்லுகின்றார்களே, அதன் உண்மை என்னவென்று கேட்டான். ஆசிரியர், நல்ல கேள்வி! இந்தக் களங்கத்தினைக் கறை என்றும், ஔவை என்றும், மான் என்றும், முயல் என்றும் நம்மவர் கூறி வருகின்றார்கள். பாட்டிகள் கதை சொல்லும் போது - பண்டைக் காலத்தேவானம் தலையில் இடிக்கக்கூடிய அவ்வளவு அண்மையில் இருந்தது; கூட்டிக் கொண்டிருந்த ஒரு கிழவி நிமிர்ந்தபோது அவ்வானத்தில் இடிபட்டதனால் வருத்தமுற்று அவ்வானைத் தன் விளக்கு மாற்றினால் அடித்து எட்டு வண்டி நூலுக்கும் எட்டாமற்போ! பத்து வண்டி நூலுக்கும் பற்றாமற்போ என்று வைதாள்; உடனே அவ்வானம் அவளையும் தூக்கிக் கொண்டு போய் விட்டது. அவளே அம்புலியில் நூல் நூற்றுக்கொண்டிருக்கின்றாள் என்று கூறக்கேள்விப் பட்டிருப்பீர்கள். இம்மாதிரியான பாட்டிக் கதைகளும், அவற்றில் நம்பிக்கையும் நம் நாட்டில் மட்டும் உள்ளனவென நீங்கள் நினைக்க வேண்டாம்; ஆராய்ச்சிமிக்க ஐரோப்பாக் கண்டத்தில் தான் இவை அதிகம். இந்தக் களங்கத்தைப் பற்றி அங்கே வழங்கும் பாட்டிக் கதையொன்றுண்டு. அது பண்டைக் காலத்தில் ஒருவரும் ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வுற்றிருக்கத் தக்க ஞாயிற்றுக் கிழமையில் ஒரு விறகு வெட்டி யானவன் மற்றை நாட்களைப் போலவே விறகு வெட்டிக்கட்டி முதுகில் சுமந்து கொண்டுவந்தான். ஒரு தெய்வம் அவன் முன் தோன்றி, இன்று ஞாயிறு அன்றோ! நீ இப்படி வேலைசெய்தல் தகுமா? என்று கேட்க, இவ்விறகு வெட்டி இந்த உலகில் ஞாயிறானாலும் அந்த உலகில் திங்களானாலும் எனக்கென்ன என்று கூற, அதுகேட்டு முனிந்த அத்தேவன் அவனைத் திங்களுலகிற்கு அனுப்பிவிட்டான். அது முதல் அவ்விறகு வெட்டி தன்விறகுக் கட்டை முதுகில் ஏந்திக் கொண்டு அங்கிருக் கிறான் என்பதாகும். இப்படியே முயல், மான் முதலியவைகட்கும் கதைகள் கூறப்படலாம். இவ்வாறு உலக வழக்கில் மட்டுமன்று, நூல் வழக்கிலும் இந்தக் களங்கத்தினை முயல், மான் என்றெல்லாம் பெயர் வைத்து நீதி கூறியப் பாட்டுக்களை நீங்கள் யடித்திருக்காமே, உடற்குவரும் என்று தொடங்கும் நன்னெறிப் பாட்டினைக் கூறுங்கள் என்ன, முருகையன் முந்தி, உடற்கு வருமிடர் நெஞ் சோங்குபரத் துற்றோர் அடுக்கு மொருகோடி யாக - நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பணிமொழியாய்! அஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான். என்று கூறினான். ஆசிரியர் இதில் மதியில் உள்ளமான் உலகத்துப்புலியை அஞ்சாது என்று கூறியிருப்பதைப் பார்த்தீர்களா? திங்களை அடைந்ததனால் மான் எப்படி உலகத்துப் புலியை அஞ்சாதோ அதுபோலத் தங்கள் நெஞ்சினை உயர்ந்த பரம் பொருளாகிய கடவுளிடத்தே சேர்த்தவர்கள், அதாவது எப்போதும் கடவுளையே நினைத்திருப்பவர்கள் தங்கள் தங்கள் உடம்பிற்கு வரும் துன்பங்கள் கோடிக்கணக்காக ஆனாலும், அவற்றிற்கு அஞ்சமாட்டார்கள் என்ற கருத்தைச் சிவப்பிரகாச அடிகள் இந்த நன்னெறிப் பாட்டில் - ஓங்குபரத்து உற்றோர், உடம்பிற்கு வரும் இடர் அடுக்கும் ஒருகோடியாக நடுக்கமுறார் - என்று எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் பார்த்தீர்களா? இவ்வாறே, இக்களங்கத்தை முயலென்று வைத்துக் கூறும் நாலடியாரின் பாட்டொன்று உண்டு. அது தான் ஒண்கதிர் வாண் மதியம் என்று தொடங்கும் பாட்டு. அதனை யாரேனும் கூற முடியுமா? என்று கேட்டார். கண்ணப்பன், ஒண் கதிர் வாண் மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலுந் தொழப்படுஉம்; குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின்; என்றான். ஆசிரியர், ஆம், ஆம் முருகையா! முதலிரண்டடியின் கருத்தினைக் கூறு என்ன, திங்களைச் சேர்ந்திருத்தலால் முயலும் தொழப்படும் என்றான். ஆசிரியர், நல்லது மணிவண்ணா! பின்னிரண்டடியின் கருத்தினை நீ கூறு என்ன, அவன் பெருமையிற் குறைந்தவர்களும் ஒரு குன்றைப் போன்று நிறைந்த பெருமை யுடையவர்களைச் சேர்ந்தால், தாங்களும் பெருமை யுறுவார்கள் என்பதாகும் என்றான். ஆசிரியர் நன்று கூறினாய் என்றார். பின்னர் ஆசிரியர், இம்மறுவை (களங்கத்தை) உவமை யாகக் கொண்டு எழுந்த இன்னும் ஒரு நீதிப்பாட்டு நினைவில் வருகின்றது. அது நமது தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் கூறிய திருக்குறளாகும். அதன் கருத்து, உயர்ந்த குடியிற் பிறந்த வரிடத்து உள்ளதாகும் குற்றம் சிறிதாயினும், அது மதியினிடத்துக் காணும் மறுப்போலப் பெரிதாக யாவர்க்கும் காணப்படும் என்பதாகும். அக்குறள் - குடிப்பிறந்தார் கண் விளங்கும் குற்றம், விசும்பின் - மதிக்கண் மறுப்போல் உயர்ந்து என்றாகும். ஆகவே, உயர்ந்தகுடியிற் பிறந்தோர் - சான்றோர் - தங்கள் ஒழுக்கத்திலா கட்டும், சொல்லிலாகட்டும், எண்ணத்திலா கட்டும், சிறிதும், குறையில்லாதவாறு மிகுந்த கருத்துடன் நடந்துகொள்ளுதல் வேண்டும். சான்றோரைத் திங்களோடு ஒப்பிட்டுக் கூறும் பாட்டுக்கள் பல ஒரு பாட்டு மட்டும் திங்களை விடச் சான்றோர்! சிறந்தவர் என்று கூறுகின்றது. அது கூறுங் காரணம் - மதிக்குக் களங்கம் உண்டு. ஆனால், சான்றோருக்கோ களங்கம் சிறிதும் இராது என்பதாகும். நான் கூறிய அளவில், அப்பாட்டு இன்னதென உங்கட்கு விளக்கியிருக்கலாம் அதுவே `அங்கண் விசும்பின் அகனிலாப்பாரிக்கும் என்று தொடங்கும் நாலடிப் பாட்டு என்ன, நடராசன் அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வார் ஒருமா சுறின். என்று கூறி முடித்தான். பின்னர், ஆசிரியர், களங்கம் உண்மையில் ஔவையும் அன்று, விறகு வெட்டியும் அன்று, முயலுமன்று, மாலுமன்று. சூரியன் ஒளி மதியில் பாயும்போது அங்குள்ள சில இடங்களிற் படுவதில்லை. ஆழ்ந்த பள்ளத்தாக்குகள், மலைத்திறப்புக்கள், மலையின் சரிவுகள் முதலிய இடங்கள் இவ்வாறு சூரிய ஒளி படாமல் இருண்டிருக்கின்றன. இந்த இருட்டே நமக்கு மறுவாகக் காணப்படுகின்றது என்று விளக்கினார். அதன் பின்னர், இன்றைய தினம் தான் கடல் மிகுந்து பொங்குவது என்று முதலில் கூறி, விட்டு விட்டோமல்லவா? அதை இப்போது எடுத்துக்கொள்ளுவோம். கடல் பொங்குவது பற்றிச் சிறந்த நீதி அமைத்துப் பாடிய நன்னெறிப்பாட்டினைக் கலியாண சுந்தரம் நீ கூறு என்ன, கலியாணசுந்தரம் சிறிது நேரத்திற்குள், இன் சொலா லன்றி யிருநீர் விய னுலகம் வன் சொலா லென்றும் மகிழாதே - பொன்செய் அதிர் வளையாய்! பொங்காது அழற்கதிரால் தண்ணென் கதிர் வரவாற் பொங்கும் கடல். என்று கூறினான். மாணவர்களே! இன்சொலின் இனிமை இந்தப் பாட்டில் எவ்வளவு இனிமையாகக் கூறப்பட்டிருக்கிறது பாருங்கள்! உலகம் இனிய சொல்லுக்கு வசப்பட்டு நடத்தலும், வன்சொல்லுக்கு வசப்படாமையும், கடலானது மிகச்சுடும் சூரிய வெப்பத்திற்குப் பொங்காது, மதியின் குளிர்ச்சிக்குப் பொங்கும் உவமையால் எடுத்துக்காட்டிய திறமை எந்த மொழியிலுள்ள எந்தப் புலவருக்குப் எய்திலது. நல்லது, கடல் பொங்குவதன் உண்மை என்ன என்று பார்க்கவேண்டாமா? என்ன, மாணவர்கள் ஆம் ஐயா! அதனைக் கூறுங்கள் என்றார்கள். ஆசிரியர், மாணவர்களே! இந்த உலகிற்கும், மதிக்கும் மற்றக் கோளங்கள் (கிரகங்கள்) மீன்கள் (நட்சத்திரங்கள்) ஆகிய எல்லாவற்றிற்கும் ஒன்றை ஒன்று பற்றி இழுத்தல் என்கிற ஒர் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றல் சேய்மை அண்மைகளுக்கு ஒத்தயடி, ஒரு காலத்தில் அதிகப்படும்; ஒரு காலத்தில் குறையும். மதியானது பூமிக்கு அண்மையில் வருங் காலை பூமியை வேகமாக இழுக்கின்றது. பூமி, நீர்ப்பாகமும், நிலப்பாகமும் என இரண்டு வகைப்படும் அல்லவா? நிலப்பாகத்தை விட நீர்ப்பாகம் எளிதில் இழுக்கப் படலால் நீர்நிலத்தைவிட மேலே எழும்பி விடுகின்றது என்றார். கண்ணப்பன், அப்படியானால் திங்கள் இந்த உலகைச்சுற்றி வருவதால் அது நெருங்க வருகிற இடங்களில்லாம் கடலும் பொங்கிக்கொண்டே போகுமோ என்ன, ஆசிரியர், கண்ணப்பன், நுண்ணறிவை மெச்சி, ஆம் அப்படியே தான் என்று கூறி, மணலில் கோடிட்டு விளக்கிக்காட்டினார். இதனோடு இன்றைப் பாடத்தை முடித்துக் கடவுள் வாழ்த்தும் தமிழ்த் தெய்வவாழ்த்தும் கூறி வீட்டுக்குப் புறப்பட்டார்கள். சு. வேங்கடாசலம் பிள்ளை உழவின் உயர்வு இவ்வுலகில் நாம் உயிர் வாழ்ந்திருப்பதற்கு முதற்காரண மாக இருப்பது உணவே யாகும். உணவின்றி யார் தான் உயிர் வாழ இயலும்? உண்டி சுருங்கினால் உடலழியும். அன்ன மொடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும். ஒரு நாள் உணவை ஒழி யென்றால் ஒழியாய் என்று ஒரு அறிஞர் கூறுவது உற்று நோக்கத் தக்கதாகும். நாலு நாளைக்கு உணவின்றிப் பட்டினி போட்டுவிட்டால் நடப்பதற்கும் இயலாது; நாவசைத்து உரையாடுதற்கும் முடியாது. கண்ணிருண்டு, காது செவிடுபட்டு, வாயுலர்ந்து வலிகுன்ற நேருமன்றோ? எரிவதை இழுத்துவிட்டால் கொதிப்பது நிற்கவேண்டியது தானே? உலகத்தில் உள்ள மக்களிற் பெரும்பாலார், அல்லும் பகலும் அரும்பாடு பட்டு உழைப்பது பாழும் வயிற்றின் கொடுமையாலன்றோ? மக்களிடம் பசிப்பிணி என்னும் ஒரு தன்மை இல்லாவிட்டால் யாரை யார் பொருட் படுத்து வார்கள்? அறிவு வளர்ச்சி ஏது? நாகரிக முதிர்ச்சி எங்கிருந்து தோன்றும்? மக்கள் என் முயற்சி செய்யவேண்டும்? மாநிலத்தில் நிகழ்ந்துவரும் எல்லாச் செயல்களும் வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு எழுந்த செயல்களே என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. உணவை வேண்டாமென அடியோடு உதறித் தள்ளியவர் யார்? அரசன் முதல் ஆண்டி வரை உயிர் வாழ்வது உண வினாலன்றோ? இவ்வுலகப்பற்று இறையும் இல்லேம். அழியாத பேரின்ப வீட்டைப்பெறப் பெருமுயற்சி செய்கிறோம் என்று புகன்று கானகங்களிலோ, வரைகளிலோ புகுந்து தவம் நோற்கும் துறவிகளும் உணவின்றி உயிர் வாழ்தல் இல்லை. பசி நோய் பற்றிவிட்டால் அவர்கள் மேற்கொண்ட நோன்பும் பறந்துவிடும். அவர்கள் நம்மைப் போலச் செயற்கைச்சுவை யுள்ள உணவுகளை உண்ணாவிடினும் இயற்கைச்சுவை யமைந்த காய், கனி, விதை, கிழங்கு தேன் முதலியவற்றை உண்டு உறைந்ததாகத் தானே கதைகளிற் படிக்கின்றோம்! இக்காலத்தில் நமது நாட்டில் தலைவிரித்துத் தாண்டவம் புரியும், வகுப்புப் பூசல்களும், மதப்போராட்டங்களும், உள் நாட்டுக் கலகங்களும், வேலை இல்லாத் திண்டாட்டங்களும் பண்டைக்காலத்தில் மிகுதியாக இல்லை. இக்காலத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிற் போட்டி மிகுதியாக இருக்கின்றது. போதிய உணவுப்பொருள்கள் இல்லாமையால் தான் இத்தகைய இரங்கத்தக்க செயல்கள் நிகழ்கின்றன. பண்டைக் காலத்தில், மக்களிடம் மூடப்பழக்க வழக்கங்கள் மிகுந்திருந்தாலும், ஒருவர்க் கொருவர் அடிமையாயிருக்குந் தன்மை நிலவியிருந்தாலும் நாட்டில் ஒரு வகையான அமைதி யிருந்தது. அதற்குக் காரணம், குறைவின்றி எல்லா மக்களுக்கும் வயிறார உணவு கிடைத்த தேயாகும். இந்நாளிலோ, கோடிக்கணக்கான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதானும் கிடைக்கப்பெறாமல், பசிப்பிணியால் கண்டதையும் கடியதையும் தின்று கொடும்பிணி வாய்ப்பட்டு உழல்வோர் எண்ணற்றவர். சிறிது கண் திறந்து நமது நாட்டின் நான்கு திசைகளையும் உற்று நோக்குவார் இவ் வுண்மையை உணராமற் போகார். நாடெங்கும் வர வர நல்லொழுக்கங்குன்றித் தீயொழுக்கம் தலையெடுத்து வருகின்றது. திருட்டும் பொய்யும், சூதும், பொறா மையும், ஒருவரை யொருவர் ஏமாற்றுதலும் ஆகிய குற்றங்கள் எங்கும் இயல்பாக நடைபெறுகின்றன. இவ்வாறாவதற்குக் காரணம் உணவுப் பொருளின் குறைவேயன்றிப் பிறிதொன்று அன்று உணவின்றி வறுமைப்பிணியால் வாடும் மாந்தர், தங்கள் வயிற்றுப் பாட்டை நீக்கிக்கொள்ளும் பொருட்டுத் தீயசெயல் களை ஆற்றுவதற்குத் துணிகின்றனர். உணவுப்பொருள் கிடைக்காமையால், உண்ணத்தகாத உயிர்ப்பிராணிகளை உண்டதாகவும், தாய்மார்கள் தங்கள் குழந்தைகுட்டிகளைக் கொன்று தின்றதாகவும் வரலாறுகளிற் படித்திருக்கின்றோம். இந்நிகழ்ச்சிகள் பொய்யல்ல. சில சமயங்களில் இவ்வாறு நிகழ்ந்திருக்கின்றன. உணவுப் பொருளை மிகுதிப்படுத்த வேண்டுமாயின் உழவுத் தொழிலை உயர்வடையச் செய்ய வேண்டும். உழவுத் தொழிலில் எண்ணஞ் செலுத்தாமல் வேறு தொழில்களை ஆற்றினும் பயனில்லை. முதன் முதல் நமது நாட்டில் தான் உழவுத் தொழில் தோன்றிற்று. ஆனால் இப்பொழுது அத் தொழில் நமது நாட்டில் தான் மிகுதியும் குன்றியிருக்கின்றது. நம் முன்னோரும் உழவுத்தொழிலையே இன்றியமையாத தொழிலாகக் கொண்டனர். நெற்பயிர் விளை என்றும், அஃகம் சுருக்கேல் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றனர். உலகில் உள்ள தொழில்கள் எவற்றினும் சிறந்தது. உழவுத் தொழிலே. அத்தொழில் புரிபவன் பிறர்க்கு அடிமை யானவனன்று. பிறருடைய இரக்கத்தை எதிர்பார்க்கவேண்டியதில்லை. உழவுத் தொழில் ஆற்றும் குடியானவனுடைய கையையே உலகத்தார் அனைவரும் எதிர்பார்க்க வேண்டும். பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழல் அவர் என்பது திருக்குறள். உழுதற்றொழிலால் நெல் விளையக் கூடிய நாட்டையுடைய மன்னர்கள் பல வேந்தர்களுடைய நாடுகளை யும் தமது குடையின் கீழ்க்காண்பர் என்பது மேற் கூறியதன் பொருள். ஆகவே நாட்டிற்கும் அரசியலுக்கும் உழவுத்தொழில் எத்தனை இன்றியமையாத தென்பது விளங்குகின்றதன்றோ? பண்டைக்காலத்தைக் காட்டினும் இக்காலத்தில் அறிவும் நாகரிகமும் மிகுதி யென்பதில் ஐயமில்லை. ஒவ்வொருவர் மனத்திலும், உரிமை யுணர்ச்சி உறைந்திருக்கின்றது. பெரும்பாலான மக்கள் உரிமைப்பேச்சும் பேசுகின்றனர். ஆனால், எண்ணத்தைப் போலவும், பேச்சைப் போலவும் செய்கை யில்லை. நினைப்பும், சொல்லும், செயலும் வேறுவேறாகவே இருக்கின்றன. உரிமைப் பேச்சுப் பேசுகின்ற பலரும் பிறரிடம் கைகட்டி வாய் புதைத்து நின்று உயிர்வாழ விரும்புகின்றனரே யன்றி உரிமைத் தொழில் புரிந்து உயிர்வாழ விரும்புகின்றனரில்லை. உரிமையுடன் வாழத்தக்கதொழில் உழவே யென்பதை உணர் கின்றாரில்லை. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின் செல் பவர் போனகம் என்பது தான் உழந்து உண்டல் ஓதுவான் எல்லாம் உழுவான் தலைக்கடையில் என்னும் உயர்மொழிகளின் உண்மைப் பொருள்களைப் உய்த்துணர்ந் தவர்கள் உழவுத்தொழிலை இழிவு என எண்ணு வரோ? மான ஈனமின்றிப் பிறர்க்கு அடிமையாக விருந்து, தனது உள்ளக்கிடைக்கைகளை வெளியிடுவதற்கும் உரிமையின்றி உத்தியோகஞ்செய்து பிழைப்பதும் ஒரு பிழைப்போ? அடிமை வாழ்வின் மூலம் எத்துணைக் கோடி பொன் தான் வந்து குவிந்தாலும், அதனால் நல்ல ஆடையணிகளைக் கண்டோர் வியக்குமாறு ஆடம்பரமாக அணிந்து கொண்டாலும், கால் நடையை அறவே விட்ட கற்றி உயர்ந்த ஊர்திகளில் இவர்ந்து சென்றாலும், இன்னும் உடல்நலத்திற்கேற்ற இன்பங்கள் எவற்றை நுகர்ந்தாலும், அவை எல்லாம் தன்னை வைத்து வேலை வாங்குவோன், சில சமயங்களிற் கடிந்து கூறும் சொற்களைச் செவிமடுத்தவுடன் இன்பமாகத் தோன்றாதான் அனுபவித்த இன்பமெல்லாம், தீப்பற்றிய பஞ்சுப் பொதி ஆகிவிடும். வறுமையில் எவ்வளவுதான் வாடிக்கிடந்தாலும், உரிமையுடன் உயிர் வாழ்வதற்கு ஒப்பு வேறான்றுமில்லை. இத்தகைய உயர்வான உழவுத் தொழில் முதல் முதல் எவ்வாறு உண்டான தென்பதைப்பற்றிச் சிறிது சிந்திபோம். இத்தொழில் இன்று அல்லது நேற்று ஏற்பட்ட தொழிலன்று. வரலாற்றுக் காலத்திற்கு எட்டாத மிகப்பழங்காலத்திலேயே எழுந்ததாகும். பண்டைக் காலத்தில் மக்கட்டொகுதியின் எண்ணிக்கை குறைந்திருந்த நாளில், இயற்கையாகக் கானகங்களிற் றோன்றிய காய், கனி, கிழங்கு வகைகளை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்தனர். வர வர மக்கட் கூட்டமும், அவர் தம் அறிவும், நாகரிகமும் பெருக்கமடைந்தன. மக்களின் எண்ணிக்கை மிகுதிப் படவே, இயற்கையாக உண்டான உணவுப் பொருள்கள் ஒவ்வொரு வரும் வயிறார உண்ணுவதற்குப் போதவில்லை. ஆகையால் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்யத் தொடங்கினர். முதலிற் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில், வெறும் நிலத்தில் விதைகளைத் தெளித்துத் தண்ணீர் பாய்ச்சி, அதனாற் கிடைக்கும் குறைந்த பலனைப் பெற்று வந்தனர். பின்னர், நிலத்தைக் கிளறிய பின் விதைகளை விதைத்தால், பயிர்கள் செழிப்பாக வளர்ந்து மிகுதியான பலனைத் தருமெனக் கண்டறிந்தனர். அதனாற் கவட்டைக் கொம்புகளைக் கொண்டு நிலத்தைக் கைகளினாலேயே உழத் தொடங்கினார்கள். அதன் பிறகு கவட்டைக் கொம்புகளில் மாடுகளைப் பிணைத்து ஒட்டுவதன் மூலம், நிலத்தை நன்றாக அழுந்த உழப்பயின்றனர். இத்தகைய கவட்டைக் கொப்பிலிருந்து தான் இப்போது கையாளப்படுகிற கலப்பை உண்டாயிற்று. நமது நாட்டுக் குடியானவர்கள், பண்டைக்காலத்தில் ஏற்பட்ட மேற்கூறிய வகையான கலப்பையைத் தான் இன்றளவும் கையாண்டு வருகின்றனர். எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக உழுது சூரியவெப்பத்தினாலும், காற்றினாலும் புழுதியை நன்றாய் உலர வைக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு மண்வளம் பெறும். இவ்வாறு செய்தால் மிகுதியாக எருவிட வேண்டுவதில்லை. தொடிப் புழுதி கஃசா உணக்கில் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். என்பது திருக்குறள். நிலத்தினை உழுகின்றவன், ஒரு பலப்புழுதியை கஃசு என்னும் குறைந்த அளவாகும் படி நன்றாகக்காயவைத்துப் பிறகு நீர்பாய்ச்சிப் பயிர் செய்வானாயின், அந்நிலத்திற்கு ஒரு பிடி அளவு எருக்கூட இடவேண்டாமலே, அதில் உள்ள பயிர் நன்றாகப் பணைத்து வளர்ந்து பலன் தரும் என்பது நம்மவரால் உணரப்பட்ட செய்தியே. இவ்வுண்மையை மேல் நாட்டினர் நன்குணர்ந்து நிலத்தை ஆழ உழுதற்கான இரும்புக் கலப்பை களையும் மற்றும் பலவகையான கருவிகளையும் கண்டு பிடித்து, மாடு, குதிரை முதலியவைகளைக் கொண்டும், இயந்திரங்களைக் கொண்டும், நன்றாக உழுகின்றனர். ஒவ்வோராண்டிலும், உழு தொழிலை வளர்ப்பதற்கான புதிய புதிய கருவிகளையும், முறைகளையும் எரு வகைகளையும் கண்டு பிடித்துக் கொண்டே வருகின்றனர். உழைப்பு உறுதி பயக்கும். பாடுபட்டால் தான் பலன் பெறலாம். நிலத்தை எவ்வளவுக்கெவ்வளவு பண்படுத்து கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பயனை எய்தலாம். சப்பான், அமெரிக்கா, செருமனி முதலிய நாட்டில் உறைகின்றவர்கள் உழுவுத்தொழிலால் நம்மைவிட ஏற்றமான பலனைப் பெறு கின்றனர். அதற்குக் காரணம், அவர்களுடைய உழைப்பும் முயற்சியுமே யாகும். எவ்வாறு நாம், சமூக, மதச்சார்பான பொருளற்ற பழக்க வழக்கங்களில் இன்னுந்திருத்தம் அடையாமல் ஈடுபட்டுக் கிடந்து இன்னல் உழக்கின்றோமோ அதைப் போலவே பயிர்த்தொழிலிலும் பழமையைக் கைவிடாமலிருக்கின்றோம். பயனற்ற பழையனவற்றைக் கழித்து நன்மை பயக்கும் புதியனவற்றை மேற்கொள்ளுந் தன்மை இன்னும் நமது நாட்டிற் பரவவில்லை. பழஞ் செயல்களாற் பயனில்லாவிடினும், அவை இக்கால நாகரிக வளர்ச்சிக்கு ஏற்காதவையாயினும், அவையிற்றைத் தெய்வத் தன்மையுடையனவென்று எண்ணிக் கொண்டிருக்கும் பகுத்தறி வற்ற தன்மை இன்னும் நம்மை விட்டகலவில்லை. இத்தன்மை நம்மிடம் படிந்திருக்கும் வரையிலும், நாம் எந்தத்தொழிலிலும் முன்னேற்றமடைவது முயற்கொம்பு தான். நாம் பயிர்த்தொழிலில் வளர்ச்சியடையாமலிருப்பதற்குக் காரணம் கற்றவர்கள் அத்தொழிலிற்கருத்தூன்றாமையே யாகும். நிலக்கிழவர்களின் பிள்ளைகளும், கல்வி பயின்றபின் பயிர்த் தொழிலை இழிந்ததெனக் கருதி விட்டுவிட்டு வேறுவினைகளிற் புகுந்து விடுகின்றனர். பணக்காரர்களும் நிலங்களைக் கண் காணிப்பதில்லை. வேலைக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கிடைக்கும் வருவாயைக் கொண்டும், மேலும் செலவிற்குப் போதாவிடிற் கடன் வாங்கிக் கொண்டும், தம் மனத்திற் கிசைந்த இன்பங்களை நுகர்ந்து, நாட்டின் நிலையைச் சிறிதும் உணராமல் ஆடம்பரத்துடன் வீண்காலங் கடத்துகின்றனர். ஆதலால் படிப்பற்ற ஏழைக் குடியானவர்களாலேயே பயிர்த் தொழில் நிகழ்ந்து வருகின்றது. அந்தோ! அவர்களால் என்ன செய்யக்கூடும்? பழைய வழக்கப்படி கலப்பையில் மாடுகளைப் பூட்டித் தாற்றுக்கோல் கொண்டு ஓட்டி உழுது, கையிற் கிடைத்த சாணி, தழை முதலிய எருக்களையிட்டுப் பயிர் செய்வதையன்றி வேறு எதைத் தான் அறிவார்கள்? மற்றைய நாடுகளிற் பயிர்த்தொழில் செழித்தோங்கு வதற்குக் காரணம், கற்றவர்களும், அத்தொழிலிற் கருத்தூன்றி வளர்ச்சியடையச் செய்வதேயாகும். மற்றைய நாடுகளிற் பொதுவாக எவ்வினைகளும் கற்றவர்களால் நடத்தப் படுகின்றன ஆதலாற்றான் ஒரு காலத்தில் நம்மைவிடத் தாழ்நிலையில் வாழ்ந்த வேற்று நாட்டினர் இதுபோது நம்மினும் மிக்க உயரிய நிலையை எய்தியிருக்கின்றனர். பயிர்த்தொழில் என்பது ஒரு கைத்தொழிலா அல்லது ஒரு கலையா என்பதை ஆராய்வேமாயின் அது எல்லாக் கலை களையும் உட்படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு தொழில் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். இரசாயனக்கலை (Chemistry) இயற்கைப் பூதங்களைப் பற்றிய கலை (Physics) நிலையியற் பொருட்கலை (Botany) உயிர்ப்பிராணிகளைப் பற்றி உரைக்கும் நூல் (zoology) நில நூல் (Geography) நுண்ணுயிர் நூல் (Bacteriology) முதலிய பல வகையான கலைகளின் உதவி உழவுத் தொழிலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். நமது நாட்டினர் உழவுத் தொழிலைக் கல்விப் பயிற்சியின்றி நடத்தக் கூடுமெனக் கருதியிருக்கின்றனர். மேற்கூறிய கலைகளைக் கற்காத வரை யிலும் உழவுத்தொழிலை உயர்வடையச் செய்ய ஒண்ணாது. இவ்வுண்மையை மேனாட்டினர் பல்லாண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து, தம் நாடுகளிற் பயிர்த்தொழிற் பள்ளிகளை நிறுவி யிருக்கின்றார்கள். அவைகளின் மூலம், பயிர்த் தொழிலைச் செம்மைபெற வளர்ப்பதற்கான கலைகளை யெல்லாம் பயிற்று விக்கின்றனர். கல்வியறிவுடன் உழவுத்தொழிலாற்றும் மேல் நாட்டினர், நிலங்களின் பாகுபாடுகளைப் பகுத்துணர்ந்து, இன்னின்ன நிலங்களில் இன்னின்ன பயிர்கள் நன்றாக வளருமென்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போலப் பயிர் செய்து மிக்க விளையுளைப் பெறுகின்றனர். பருவத்தே பயிர் செய் என்றபடி ஒவ்வொரு தானியங்களையும் தக்க பருவகாலத்தில் பயிர் செய்கின்றனர். பயிர்களுக்குத் தக்க மழை, காற்று முதலியவைகள் இல்லாமற் சில காலங்களில் நோய் காணுவதும் உண்டு. அவர்கள் அந்நோய் வகைகளைக் கண்டறிந்து தக்க மருந்து வகைகளால் அவற்றை நீக்கிப் பயிர்களுக்கு அழிவு நேராமற் பேணுகின்றனர். பயிர் செய்வதற்கு உழுதலைக் காட்டினும், எருவிடுதல் நன்று. எரு விடுதலைக்காட்டினும் களையெடுத்தல் நன்று, களையெடுத் தலைக்காட்டினும், நீர் கால் யாத்தல் நன்று. நீர் கால்யாத்தலைக்காட்டினும் அதற்கு நீராலும், நீரின்மையாலும், பூச்சிகளாலும் சிதைவு நேராமற் காப்பாற்றுதல் நன்று என்பது ஆன்றோர் கொள்கை. இதனை ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றுஅதன் காப்பு. என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இவ்வாறு இப்பொழுதும் நமது நாட்டில் நடைபெற்று வருகின்றது. ஆனால் ஒரு வகையில் மட்டிலும் பின்னிற்கின்றோம். அஃதாவது பிறநாட்டினர், மிகுந்த பயனை யளிக்கவல்ல புதிய புதிய எருவகைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன் படுத்துகின்றனர். நாம் இவ்வகையிற் கருத்தைப் பதிப்பதில்லை. நமது நாட்டிற் சில பாகங்களில், ஆற்றுப்பாய்ச்சல்களைக் கொண்டு பயிர் செய்கின்றனர். சில பாகங்களில், வான்துளியை எதிர்பார்த்தே உழவுத்தொழில் ஆற்றவேண்டியிருக்கின்றது. புன்செய்ப் பயிர்கள் மட்டிலும் செய்யப்படுகின்ற சில இடங்களில் கிணற்று நீரை இறைத்துப் பயிர் செய்கின்றனர். ஆற்றுப்பாகங்களில் நீர் வறண்டுவிட்டாலும் வானவாரிப் பகுதிகளில் மழை பொய்த்துவிட்டாலும் பயிர்த்தொழில் குன்றிவிடும். கிணற்றுநீரைக் கொண்டு பயிர்செய்வோர், ஆள் களைக் கொண்டு நீரிறைத்தும், மாடு கட்டி ஓட்டுகின்ற கபிலை ஏற்றங்களைக் கொண்டு நீர் இறைத்தும் பயிர் செய்கின்றனர். ஆனாற் பிற நாட்டினரோ தண்ணீர் இறைக்க வேண்டுமாயின், நீர் இறைக்கும் பொறிகளைக் கொண்டு மிகுதியான நீரை இறைத்துக்கொள்ளுகின்றனர். மழையில்லாவிட்டால், மின் சாரத்தின் வலிமையால் மழையையும் வருவித்துக் கொள்ளு கின்றனர். இத்தகைய செய்திகளை நமது நாட்டுக் குடியானவர்கள் ஒரு சிறிதும் உணராதவர்களாயும் உணர விரும்பாதவர்களாயு மிருக்கின்றனர். குறையாத மழை பெய்ய வேண்டுமாயின் மலைகளும் மரங்களும் நிறைந்திருக்கவேண்டும். நமது நாட்டில் மழை வளத்திற்குப் போதிய அளவு மலைகள் நிரம்பியிருக்கின்றன. அதனாலேயே வற்றாத பேராறுகள் பல நமது நாட்டில் ஓடுகின்றன. பருவமழைகளும் பெய்கின்றன. மழையின் பொருட்டே நமது முன்னோர்கள் காடுகளை மிகுதியாக வளர்ந்திருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் நம்மவர்கள் காடுகளை அழிப்பதில் தலை யிட்டிருக்கின்றார்களேயன்றி வளர்ப்பதிற்றலையிட வில்லை. நமது நாட்டிற் காடுகள் குறைந்து வருவதனாலேயே மலைகளற்ற பகுதிகளில் வர வர மழையும் குறைவாகப் பெய்கின்றது. அமெரிக்கா முதலிய நாட்டினர் இவ்வுண்மையை உணர்ந்து மழையின் பொருட்டுக் காடுகளைப் பயிராக்கி வருகின்றனர். நமது நாட்டிற் பயிர்த்தொழில் புரியும் மக்கள் பெரும் பாலும் கிராமாந்தரங்களிலேயே வாழ்கின்றனர் நமது கிராமாந் தரங்களின் நிலையோ சொல்லத்தரமன்று. இப்பொழுது தான் சிறிய புதிய நாகரிக அலை வீசத் தொடங்கியிருக்கின்றது. கிராமவாசிகள் உலகத்தில் நடைபெறும் நாகரிக நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அறியமாட்டார்கள். அவர்கள் பழைய கொள்கை களிற் பற்றும், புதிய கொள்கைகளில் வெறுப்பும் உடையவர் களாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களிடம் கல்வி பரவாமையேயாகும். நமது நாட்டிலும் குடியானவர்களுக்கு அறிவூட்டும் பொருட்டு, அரசாங்கத்தாரால், பயிர்த்தொழிற் கல்லூரிகளும், பயிர்த்தொழிற் பண்ணைகளும் நடத்தப்பட்டுவருகின்றன. இருந்தும் அவற்றின் பெரும் பயனைக் கிராமவாசிகள் சிறிதும் உணரவில்லை. கற்றவர்களும், செல்வர்களும், கிராமவாழ்க்கையை விரும்பாமல், தந்நலங்குறிக்கொண்டு நகர்ப்புறங்களை நண்ணுகின்றர். இத்தகைய தீய வழக்கமும், மனப்பான்மையும் அடியோடு ஒழிதல் வேண்டும். கல்வியுடையவர்களும் செல்வமுடையவர் களும், நாட்டுப் புறங்களில் உறைந்து உழவுத் தொழிலை உயர்வடையச் செய்வதற்கு முயலவேண்டும். அன்றியும் நமது நாட்டு விவசாயிகள் மிகவும் இரங்கத் தக்க தாழ்நிலையிலிருக்கின்றனர். அல்லும் பகலும் நெற்றி வியர்வை நிலத்திற் சிந்தும்படி வேலை செய்யும் ஏழை விவசாயிகளிற் பலர் வயிறார உண்ணுதற்கு உணவின்றிப் பசியினால் வாடுகின்றனர். கோடிக்கணக்கானவர்கள் உறைவதற்கு உரிமை யிடமின்றி அல்லல் அடைகின்றர். வேலையற்ற சோம்பேறிக ளெல்லாம் இன்பவாழ்க்கையில் உறைந்திருக்கவும், இடைவிடாது வேலை செய்யும் விவசாயிகளில் எண்ணற்றவர்கள் இன்னலுழக்கும் இத்தகைய நிலைமை வேறு எந்நாட்டிலிருக்கின்றது? உழைக்கின்ற மக்கள் தான் நமது நாட்டில் கொடுமைப்படுகின்றவர்களாயிருக்கின்றார்கள்; இந்நிலையில் எங்ஙனம் உழவுத்தொழில் வளர்ச்சியடையும்? விவசாயிகளின் வறுமைத் துன்பத்தை ஒழித்தாலன்றி பயிர்த்தொழில் செழிப்படையச் செய்ய இயலாதென்பது திண்ணம். விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவுவதற்காக, அரசாங்கத்தாரின் முயற்சியால் கிராமக் கூட்டுறவு நாணயச் சங்கங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. விவசாயத்தை வளம் படுத்துவதற்கொன்று அவைகளிற் கடன் வாங்குவோர் அரியர். கடன் வாங்கும் விவசாயிகள் அனைவரும் தங்கள் குடும்பச் செலவுக்காகத் தான் கடன் வாங்குகின்றனர். நமது நாட்டினர் இன்னும் கூட்டுறவு நாணயச் சங்கங்களின் பெரும் பயனை உணர்ந்து கொள்ளாமலிருக்கின்றனர். பண்டைக்காலத்தை விட இக்காலத்தில் மக்கள் எண்ணிக் கையில் மிகுதிப்பட்டிருக்கின்றனர். ஒவ்வோராண்டிலும் மக்களின் தொகை வளர்ந்து கொண்டே வருகின்றது. மக்கட் கூட்டம் வளர்வதற்குத் தக்கவாறு பயிர்த் தொழிலும் வளர்ந்து கொண்டு வந்தால் தான் உணவுப் பொருளுக்குக் குறைவுண்டாகாது. வர வர விளை நிலங்கள் மிகுதியாகிக் கொண்டு தான் வருகின்றன. தானியங்களும் ஏராளமாகத் தான் விளைகின்றன. எனினும் மக்களின் பெருக்கத்திற்குத் தக்கவாறு அவை மிகுதிப்பட வில்லை. அன்றியும் நமது நாட்டில் விளைகின்ற விளைவுப் பொருள்களை நமது நாட்டின் நிலையை உற்றுநோக்காமல் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றோம். இக்காரணங் களாலேயே நமது நாட்டு மக்கள் பலர் பட்டினி கிடந்து பரிதவிக்கின்றனர். குறைவற்ற இயற்கை வளம் வாய்க்கப்பெற்ற நமது நாட்டினர் பட்டினி கிடக்கின்றார் என்று சொல்லுவதே மிகவும் மானக்கேடான செய்தியா யிருக் கிறதல்லவா? நமது நாட்டினர் இன்னும் உணர்ச்சியின்றி வாளாமடிந் திராமல் உழவுத்தொழிலை உயர்வுறச் செய்வதிற் கருத்தைச் செலுத்த வேண்டும். இன்னும் பயிர் செய்யப்படாமல் கிடக்கின்ற நிலங்களை யெல்லாம் பயிரிடுவதற்கு ஏற்றதாகப் பண்படுத்தவேண்டும். நீர்வள மற்ற பாகங்களுக்கு, அண்மையில் உள்ள ஆற்றுநீர் பாயும்படியான வசதியிருக்குமாயின், அதற்கேற்ற ஆறுகளையும் வாய்க்கால்களையும் வெட்டிவிட்டு நீர் பாயும் படி செய்தல். நீரைத்தேக்கி வைத்துக் கொள்ளுவதற்காக அணைக்கட்டுகளும் கட்டப்படவேண்டும். ஒவ்வொரு கிராமங் களிலும் குடியானவர்களின் சங்கங்களை நிறுவி, அதன் மூலம் பயிர்த்தொழிலை ஓங்கச் செய்வதற்குரிய முறைகளை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். கிராமவாசிகளுக்குள் ஒற்றுமையையும், சிக்கனமுறையையும் வளர்க்கவேண்டும். கிராமப்பள்ளிக் கூடங்களில் எல்லாம் விவசாயத் தொழிலைப்பற்றிப் போதிக்கவேண்டும். இவ்வாறு செய்வோமாயின் நாமும் பிறநாட்டினரைப்போல உழவுத்தொழிலில் மேன்மை எய்தலாம். சாமி.சிதம்பரனார் தமிழ்ப்பெருமை அறிவு நூல்களைக்கற்றுத் துறைபோகிய பேரறிஞர்கள் என்று உலகம் கொண்டாடும் மேல் நாட்டார், விலங்கினங்களைப்போன்று மிலேச்சர்களாய்க் காட்டிடங்களிலும் மலைச்சாரல்களிலும் திரிந்த நாட்களில் தமிழர்கள் கல்வி, அறிவு ஒழுக்கங் களிற் சிறந்து, மிக உயரிய நாகரிகநிலையில் நின்றனர்; என்பது சரித்திர ஆராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். அந்நாளில் தமிழ் வேந்தர்களின் ஆட்சி, வடவேங்கடம் தென்குமரி என்னும் எல்லையுள் அடங்காது வடக்கே இமயம் வரையிற் சென்று நிலவியது. தமிழ் நாட்டு வணிகர்கள் கடல் வழியே எட்டாத் தூரஞ் சென்று உரோமாபுரி சீனம் முதலிய நாடுகளில் வர்த்தகஞ் செய்து எட்டி என்ற பட்டம் பெற்றனர். சிற்பம், சித்திரம் முதலிய தொழில்களும், படைக்கலம் இயற்றல், மரக்கலங் கட்டல் ஆகிய தொழில்களும், மலிந்து சிறந்தன. பட்டினும் மயிரினும், பருத்தி நூலினும், பாலாவியன்ன மெல்லிய கலிங்கங்கள் இயற்றப் பெற்றன. ஒப்புயர்வற்ற நீதிநூல்களும், இலக்கிய இலக்கண நூல்களும், மற்றும் பலவித கலைகளும் தோன்றி விளங்கின. தெய்வப்புலவர்கள் பலர் கெழுமிய சங்கங்கள் சிறந்தோங்கின. அரசனும் குடிகளும் அஞ்சாமை, ஈகை, துணிவு, ஊக்கம், கல்வி, ஒழுக்கம் உயர்நடை முதலிய உடையராய் வளங்கள் பலவும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர். தொல்காப்பியம் என்ற இலக்கண நூலும் திருக்குறள் என்னும் நீதி நூலும், அவர்களிடைத் தோன்றுமெனின் அன்னாரது நாகரிகத்தின் உயர்நிலையை நீங்களே உய்த்துணரலாகும். இவை நிகழ்ந்தன இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் என்னலாம். இதனையே தலைக்காலம் என்னலாம். இச்சங்கத்தின் பின் போந்த 415 ஆண்டுகளை இடைக் காலம் என்னலாகும். இக்காலத்தில் புத்த சமண சமயங்கள் இந்நாட்டில் தலையெடுத்துப் பரவவும், சைவ வைணவ சமயங்கள் வலிகுன்றி நிலை குலையவும் தொடங்கின. அதன்றியும், வட நாட்டில் ஆரிய மன்னரின் தலையெடுப்பும் யவனர், மகமதியர் முதலிய புறநாட்டினரின் படையெடுப்பும் வாய்த்தன. இந் நிகழ்ச்சிகளால் தமிழரின் செல்வாக்கு, தமது தாயகத்தின் எல்லைக்குள் சுருங்க நேர்ந்த தெனினும் தமிழ் வளர்ச்சி சிறிதும் குன்றவில்லை. அன்னார் பழைய நாகரிகமும் சிதையவில்லை. அக்காலத்தில் சைவ வைணவ சமயங்களை நிலைநாட்டு தற்கெனச் சமயகுரவர்கள் தோன்றினர். அவர்கள் இயற்றிய தமிழ் மறைகளான சைவ வைணவத் திருமுறைகள் யாவரும் போற்றும் மாண்பினையுடையன. அப்பெரியோர்களின் பாடல் பெற்ற பெருமையால் விளங்குந் திருக்கோயில்கள் தமிழ்நாடு முற்றும் நிலவி நிற்கின்றன. இக்காலத்தில் வெளிப்போந்த தமிழ் நூல்கள் பெரும்பாலும் சமயச்சார் புள்ளனவாதலால் இதைச் சமய காலம் என்னலாகும். இதன் பின் தொடரும் காலத்தைக் கடைக்காலம் என்று கூறலாம். தமிழ் நாட்டு முடியுடை மூவேந்தர்களும், வேற்றுப்புலவரசர் களும், ஒருவரோடொருவர் போர்புரியத் தமிழ் நாடெங்கும் குழப்பம் மலிந்தது. இக்காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாதெனச் சரித்திர ஆதரவால் முடிவுகாணப் போதிய சான்றுகள் இன்னும் நமக்குக் கிட்டவில்லை. நமது நாட்டின் இலக்கியங்களில் காணப்பெறும் சரித்திரக்குறிப்புக் களாலும், கல்வெட்டு, பட்டயம் முதலிய சான்றுகளாலும் கிடைக்கும் துணுக்குகளை ஆதரவாகக் கொண்டு ஆராய்ச்சி யாளர் சரித்திரப்பகுதிகளை எழுதத்தலைப் பட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிடும் கொள்கைகள் அனைவரும் ஒப்ப முடிந்தவை யல்ல. கி.பி.1400 முதல் 1800 வரையுள்ள முற்பகுதியில் தமிழ் நாட்டு அரசர் வலிகுன்றினாலும் புலவர்களைப் போற்றித் தமிழைப் புரந்து வந்தனர். ஆனால் கி.பி. 1800 ஆண்டின் பின் தமிழ் மொழி சிறிது சிறிதாக ஒளி மழுங்கி நிலை குலையவும் ஆங்கிலம், ஆரியம் முதலிய அன்னிய மொழிகள் வலி பெற்று வளர்ந்தோங்கவும் தொடங்கின. பண்டைத் தமிழ்ப் பெருமக்களின் கல்வித் திறனையும், உயர் நடையையும், அருஞ் செயல் களையும் நம்காலத்தவர்களின் தமிழறிவின்மையையும், இழித கவையும், வலி இன்மையையும் ஒத்துநோக்கின், நாம் அன்னாரது வழித்தோன்றலோ எனும் ஐயம் நிகழ்கின்றது. முற்காலத்தில் நூல்கள் எழுதி வெளியிடுவது மிகவும் அரிய தொரு செயலாம். இந்நாளிலோ ஆயிரக்கணக்கான பிரதிகளை நொடிப்பொழுதில் பதிப்பிக்கும் அச்சுப் பொறிகள் நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. உயர்ந்த தமிழிலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், சமயநூல்கள், ஆகியவற்றைக் கற்போரும், கொள்வோரும், கொடுப்போரும், மிகவும் அருகிப் போயினர். கல்லூரிகளும், படிப்பிடங்களும், நூல் நிலையங்களும், ஊர் தோறும் நிறுவப்பட்டுள்ளன. ஆங்கெல்லாம் அன்னிய நாடுகளின் மேம்பாடும், அன்னிய மொழிப் பயிற்சியும், அயல் நாட்டிற்குரியார் சரிதங்களும் நமது நாட்டிற்குப் பொருந்தா ஒழுக்கங்களும் கற்பிக்கப்படுகின்றன. நமது தமிழ்ப் பெரியாரின் சரிதங்கள், தமிழரின் சமய சாதனங்கள், ஒழுக்கங்கள், தமிழ் நூல்கள் கல்வி நிலையங்களினின்றும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நமது சிறுவர்களுக்கு நெடுங்கணக்குப் பயிலும் வகை உயிர் முதல் மெய்யீறாக என்பதனை முறைபிறழவைத்து டகர ரகங்களில் தொடங்கி மனம் போன வழியில் பயிற்றுவிக்கிறார்கள். இளைஞர்கள், பாலென அருந்தும்படி மிக எளிய நடையிலும், நினைவிற் பதிக்கும் முறையிலும் தமிழ் மூதாட்டியார் அழகுடன் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நீதிநூல்கள் பாலர்களுக்குக் கற்பிக்கப் படுவதில்லை. நல்லொழுக்கமும் சமயப்பற்றும் இளம் பருவத்தே சிறுவர்கள் மனத்திற் பதிய வேண்டுமென்னும் கொள்கைகள் மாறி, மரம், செடி, கொடி, நாய், நரி, பூனை ஆகிய தாவர சங்கமப் பொருள் களை உற்று நோக்கவும், அவிநயப்பாட்டுக்களெனப்படும் பொருட் பொலிவில்லாத பாக்களை ஆங்கில முறையிற் பாடவும் செய்கிறார்கள். இலக்கியமென மதிக்கத் தகாதனவும், இழிதகவான சுவைகளை ஊட்டு வனவுமான நவீனம் என்னும் கதைகள் வசனபாடமாக நியமிக்கப்படுகின்றன. அதுவன்றிப் புது முறையில் எழுதப்படும் வசன நூல்கள், இலக்கணவனப்பு இல்லாதும் தமிழ் முறைக்கு முரண்படவும் இயற்றப்பெறுகின்றன. தமிழ் நூற் கழகத்தார் அம்முறையில் எழுதப் பெறும் வசன நூல்களை அரசியலார் ஆதரவு பெற்ற கல்லூரிகளுக்கு ஏற்றவை என ஒப்புகிறார்கள். அன்னிய மொழிகள் தமிழில் கலத்தல் கூடாது என்பது எமது கருத்தன்று. ஒரு மொழிக்குரிய சொல் மற்றொரு மொழியில் விரவிப் பயில நேர்ந்தால், தான் புகுந்த மொழியின் தத்துவத்திற்கு ஏற்ப, தன் உருத்திரிந்து கலந்தாலன்றி அக்கலவை ஒருவகை இன்பமும் தரமாட்டாது. இதுவே இலக்கண வரம்புள்ள மொழிகளின் இயல்பாகும். ஆங்கில மொழியிற் பிறமொழிகள் புகுந்த அளவு வேறு எந்த மொழியிலும் புகவில்லை என்பது துணிவு. ஆனால் அவ்வாறு பிறமொழிகள் புகும்போது தம் உருக்கரந்து, ஆங்கிலச் சட்டையிட்டு, ஆங்கில மொழியின் இலக்கணம் வரம்பிற்குட்பட்டு, ஆங்கில உருவில் விரவிப் பயிலுகின்றன. அற்றேல் அம்மொழி கொச்சை மொழி யெனக்கற்றோர் அவையில் விலக்கப்பெறும். இற்றைநாளில் தமிழ் நூல்கள் எழுதப் புகுந்த ஆசிரியர்கள் பிறமொழிகளை அப்படியே எடுத்து ஆள்கின்றார்கள். பிறமொழி களுக்குரிய எழுத்துக்களைத் தமிழில் எழுதுகின்றார்கள். காட்சி, மாட்சி முதலிய தனித்தமிழ் மொழிகளைக் காக்ஷி, மாக்ஷி, என எழுதுகின்றனர். இது தமிழ் மொழியின் இயலுக்கு ஏலாதென எவரேனும் சொன்னால், அன்னார் பிற மொழியின் பால் வெறுப்புள்ளவரெனப் புறம் பேசித் திரிகின்றார்கள். தேம்பாவணி என்னும் இலக்கியநூல் இயற்றிய இத்தாலி தேசத்துப் பெரும் புலவர் தம்முடைய நடை, உடை, பெயர் முதலியவற்றைத் தமிழுலகின் முறைக்கேற்ப அமைத்துக் கொண்டதன்றித் தமது நூலைச் செந்தமிழ் நடையில் இயற்றினரன்றோ? கம்பநாடர் வடமொழியில் வெறுப்புள்ளவரா? இவர்கள் போன்ற பெரும் புலவர்கள் இயற்றிய நூல்களில் அன்னிய மொழிகள் வர வில்லையா? வடமொழிக் கலப்பு மலிந்திருக்கும் இராமாயணம் போன்ற நூல்களை ஆங்கிலப் புலவர்கள் தமது புதுமுறையில் திருத்தி எழுதினால் அவற்றின் உருக்குலைந்து பாவின் வனப் பழிந்து யாப்பும் கெட்டொழியும் அன்றோ? அயல்நாட்டு மொழிகளில் காணும் புதிய ஒலிக்குறிகளைத் (எழுத்துக்களை) தமிழில் எடுத்தாளத் தலைப்பட்டால் தமிழ் நெடுங்கணக்கு ஆண்டு தோறும் நீண்டு வளரும். இது உலகில் உள்ள எந்த மொழியாளரும் ஏற்காத முறையாகும். என்றாலும், ஆங்கிலம் தேறிய தமிழ்ப் புலவர்களும், ஒன்றும் தேறாத வேறு புலவர் களும், இம்முறையிற் பல தமிழ் நூல்கள் எழுதி வெளியிட்டும் அரசியலாரின் நூற் கழகங்களில் ஒப்பம் பெற்று இந்நூல்களைக் கல்லூரிகளில் படிப்படியாகப் பாடப் புத்தகங்களாக வைத்தும், இப்பிழை மலிந்த நூற் பயிற்சியில் மாணவர்களைத் தேறச் செய்தும் இற்றை நாளில் தமிழ் வளர்க்கப்படுகிறது. தமிழ்ப் பயிர் கெடாது காப்பதற்கென நமது பெரியார் இயற்றி வைத்த இலக்கண வேலி கெட்டொழிந்து தமிழ் வளர்ச்சி இவ்வாறு ஆகும் எனில், இன்னும் சில நாளில் தமிழ் முழுதும் உருமாரித் தன் பெற்றிமைகள் அறவே ஒழிந்து கொச்சை மொழியாகி விடும் என்பதில் ஐயமின்று. நமது முன்னோர்கள் தமது உயிர், பொருள் ஆகிய வற்றைக்கொடுத்தும் பழந் தமிழ் நூல்களாகிய அரும் பொருளை உயிரினும் ஓம்பிப் பொன்னே போற் போற்றிவந்து நம்மிடம் சேர்த்துளார்கள். பல அரிய நூல்களைத் தமிழ் முறை பிறழாது தாமே இயற்றியுள்ளார்கள். தமது ஒழுக்கம் குன்றாது தமிழரின் நாகரிகத்தையும், சமயப்பற்றினையும் பாதுகாத்து வந்தார்கள். அருள் நிறைந்த ஆங்கில ஆட்சியில் ஒவ்வொருவரும் தமது உரிமைகளைக் காத்துக் கொள்ளப் போதிய ஏதுக்கள் இருப்பினும் ஒரு நூறு ஆண்டுகளுக்குள் தமிழும் தமிழரும் நிலை திரிந்து தளர் வெய்தியதுபெருவியப்பைத் தரும். பல்கலைக் கழகத்தினின்றும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் கலைவல்லுநரின் தொகை ஆயிரத்தின் மேலதாயினும் அவர்கள் கற்ற கலைகள் பிற்றை நாளில் பயன் படாது விழலுக்கிறைத்த நீராகின்றன. தாம் கற்ற நூலின் உண்மை முடிவுகளைக் கல்லா மாக்களுக்கு அறிவிக்கும் திறனற்ற மூங்கையராய் நிற்கிறார்கள். கல்வி யதிகாரிகளாயிருந்து கல்வி முறையை வகுத்துக் கொடுக்கும் கலைவாணர்களும் தமிழ்ப் பயிற்சி சிறிதும் இன்றிப்பிறமொழி போற்றும் பண்புடையவராய்த் திகழ்கின்றனர். மாணவரும் அப்பெற்றியே அடைகின்றனர். இந்நிலையை அடைந்ததன் காரணம் ஆட்சி நிலைகளில் உள்ள நம்மவர்களுக்குத் தமிழ்ப் பற்றில்லாமையே ஆகும் என்று தீர்மானிக்கலாம். நமது அயல் நாட்டினராகிய சப்பானியர் ஐம்பது ஆண்டு களில் வேறு நாட்டினரும் ஒப்பமதிக்கும்படி முன்னேற்றம் அடைந்திருப்பது உய்த்துணரற் பாலது. மேனாட்டு அறிவு நூல்கள் அனைத்தையும் பரிவுடன் கற்று அவற்றைத் தம் மொழி யில் ஆக்கித் தாய்மொழியைப் போற்றியதே அவர்கள் மேதக வடைந்ததன் முதற் காரணமாகும். வங்காளிகள், மகாராட்டிரர், தெலுங்கர், ஆதிய நமது நாட்டவர் கூட, தாய்மொழி புரத்தலில் கருத்துடையவராய்க் காணப்படுகின்றனர். அவர்கள் மொழிப் பற்று யாவரும் பாராட்டத்தக்கது. தமிழரோ மொழிப்பற்றாகிய எவ்வகைப் பற்றுமின்றித் தம்முடைய குலநலமும், மொழி நலமும் இழந்து, நிலை தளர்ந்து, வீணராய் ஏக்கற்று நிற்கின்றார். பிறநாட்டவரின் ஆசாரங்கள் எத்துணை இழிதகவுள்ளவா யினும், நமது உடலுக்கோ, உயிருக்கோ எட்டுணையும் நன்மை பயப்பவையன்றெனினும், தலைக்கோலஞ் செய்தல், உண்ணல், உடுத்தல் முதலிய பற்றியெல்லாம் அன்னாரது பழக்க வழக்கங் களைக் கைக் கொள்ளுகின்றோம். பல்லாயிர மைல்கள் கடல் கடந்து வந்து நமது நாட்டிற் குடியேறித் திரளான பொருட் களைச் செலவிட்டு ஆலயங்களும், அவற்றைச் சார்ந்த கல்லூரிகளும், தொழிற் சாலைகளும், உறைவிடங்களும் நிறுவி நன்னடை, சமய ஒழுக்கம், கல்வி முதலியவற்றை இளைஞர்கட்கு உதவிவரும் பாதிரிமார்களின் ஊக்கம், முயற்சி முதலியவற்றைப் பார்த்துப் பயனடைபவர் நம்மவரில் யாவருளர்? நமது மடங்களில் அதிபர்கள் இத்துறைகளில் உழைப்பது தமது கடன் என இன்னும் எண்ண வில்லை. நம்மவரிற் கற்றறிந்த கலைவாணர் களும், அரசியற்றலைவர்களும், ஆங்கிலம் முதலிய அயல்மொழி களைப் போற்றி வளர்க்கத் தலைப்பட்டது போலவே, தேச முன்னேற்றத்திற்கென உழைத்து வரும் சனத்தலைவர்களும் வேற்று மொழியைப் போற்றுதலே கருமம் என முயல்கின்றனர். ஆகவே தமிழும், தமிழரும் உயர்நிலையடைய வேண்டுமென நினைப்பவர் அரசியலாட்சியாளரையாதல், நம்மவர்களில் ஆங்கிலம் கற்று மேனிலையடைந்தவர்களை யாதல், திருமடங் களின் தலைவர்களையாதல், சனத்தலைவர்களையாதல், எதிர் நோக்கி யிருத்தலால் சாலவும் பெரும் பயனைப் பெறமாட்டார். இந்நிலையில் தமிழ் விளக்கேற்றி நமது நாட்டில் விரிந்து பரவும் புறவிருட் படலங்களை அகற்ற வேண்டுமெனும் பெரு நோக்குடன் பல தமிழ்ச் சங்கங்கள் ஆங்காங்குத் தோன்றித் திகழ்வது நோக்கித் தமிழன்பர்கள் மகிழ் வெய்துவர். தமிழ்க் குடிப்பிறந்த ஒவ்வொருவரும் கற்றவர் முதல் கல்லாதவர் ஈறாக அனைவரும் இச்சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து தன்னால் இயன்றது திளைத்துணைப் பொருளாயினும் அதனை உதவியும் தன் ஆற்றலுக்கு ஏற்றதொண்டுகள் புரிந்தும், சங்கங்களைப் புரத்தல் கடனாகும். சங்கங்கள் இயற்ற வேண்டிய கருமம் பலவுள. இதுகாறும் ஏற்பட்டுள்ள சங்கங்களுள் பெருங் கூட்டங்கள் சேர்த்து, தமிழ்ப் புலவர்களைக்கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துவித்து ஆண்டு விழாக்களைச் சிறக்க நடத்துவன பெரும் பாலன. சில சங்கங்களினின்றும் தமிழ்ப் பத்திரிகைகளும் வெளி வருகின்றன. பொருள்வளம் குன்றியிருத்தலால் அவைகளால் மிகுபயன் விளையவில்லை. தமிழின் இயலும் இலக்கண வனப்பும் சிதையாது காத்தல் நமது முதல் கருமமாதல் பற்றிச் செவ்விய முறையில் எழுதப்பெறும் நூல்களை இயற்றுதல் வேண்டும். புதுமுறையில் எழுதி வெளிவரும் நூல்களை ஆதரிக்கவும் வேண்டும். தமிழ் நாட்டின் பழைய சரித்திரம், தமிழ் மன்னர், தமிழ்ப் பெரியார், தமிழ்ப்புலவர் ஆகியவர்களின் வீரம், செயல், கல்வி, முதலிய திறங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், அறிவு நூற்கள், படிப்போர் மனத்தில் நல்லொழுக்கம், சமயப்பற்று, நற்பழக்கம் முதலியவற்றைப் பதிக்கும் தன்மை வாய்ந்த நவீன கதைகள் நாடகங்கள் ஆகிய நூல்களைத் தகுதியுள்ள புலவர்களைக் கொண்டு திருத்த முற எழுதி வெளியிட வேண்டும். ஆங்கிலக் கல்லூரிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்கப் பெறும் பாடங்களில் ஆங்கிலம் ஒழிந்த ஏனைய பாடங்களை மாணவர்கள் தமிழில் கற்குமாறு செவ்விய தமிழ் நூல்கள் இயற்றவேண்டும். இம்முறையில் வெளிவரும் நூல்களைக் கற்பிக்க வசதிகள் யாவும் வாய்ந்த ஆங்கிலக் கல்லூரிகள் ஒவ்வொரு சங்கத்தின் சார்பிலும் நிறுவுதல் வேண்டும். மாணவர்களுக்கு உண்டி உறைவிடம் கொடுத்து, படிப்பிடம், விளையாட்டிடம் முதலியனவும் அமைத்துத் தரல் வேண்டும். அவர்களுக்குச் சிறந்த தமிழ்ப்புலமையும், சமய ஒழுக்கமும், உயர்நடையும், பரந்த அறிவும், விரிந்த நோக்கமும், தொழிற்பயிற்சியும், அமையும்படி பயிற்றல் வேண்டும். இத்தகைய பாடசாலைகள் மிகப்பலவாக உண்டானால் அன்றி அரசியலார் ஆதரவில் நடைபெறும் கல்லூரிகளினால் விளையும் தீமைகளைத் தடுத்தல் அரிதாகும். த.வே. உமாமகேசுவரம் பிள்ளை. இந்திய நாட்டின் பெருங்கிழவர் நீண்ட நாட்களாக அடிமை வாழ்வில் வாழ்ந்துவந்த நமது இந்திய மக்களுக்குச் சுதந்தரம் என்ற நினைப்புத் தோன்றும்படி செய்த முதற்பெரியார் காலஞ்சென்ற தாதா பாய் நெளரோஜீ என்ற ஆன்றோராவர். இவர் 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் நாளன்று புரோகிதத் தொழிலை மேற்கொண்ட ஒரு பார்சிக்குடியில் பிறந்தார்; இவர் எல்பின்டோன் கல்லூரியில் போதகராகவும், பிறகு வாணிகராகவும் இருந்தார். இந்தியாவின் முன்னேற்றத்தின் பொருட்டு ஆங்கிலநாடுசென்றும், பாராளுமன்றத்தில் உறுப்பினராயிருந்தும், பற்பல சங்கங்களை உண்டாக்கியும் தொண்டாற்றி வந்தார். இவரால் உண்டாக்கப் பட்ட சங்கங்களும், கல்வி நிலையங்களும் இன்றும் நின்று நிலவுகின்றன. இவருக்கு இந்தியாவின் முதிர்ந்த பெரியார் என்ற பெயர் நாடெங்கும் வழங்குகின்றது. இவர் 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் நாளன்று தனது 92 ஆம் ஆண்டில் புகழுடம்பை நிலை நிறுத்திப் பொய்யுடம்பை நீத்தார். முயற்சி திருவினையாக்கும் என்பது என்றும் மாறுபடாத மெய்மை என்பதை இவராலேயே வரையப்பெற்ற வரலாற்றால் நன்குணரலாம். ஆதலால் அதனைக் கிழே தருகின்றோம். நான் இளம்பருவத்தினனாக இருந்த நாளில் என்மனத்தில் குடிகொண்ட எண்ணங்களில் இன்னும் ஒன்று மறவா மலிருக்கின்றது. அஃதாவது, எனது தந்தை எனது நான்காம் ஆண்டிலேயே, இறந்துவிட்டார். அப்பொழுது என் மீது அன்பு காட்டிய நண்பர்கள் பலர்; அவர்களைப் போலவே சந்திரனும் என் மீது அன்பு காட்டினான் என்பதே. நான் இல்லத்தின் முன்றிலை யடைந்தாலும், புறங்கடையை அடைந்தாலும் சந்திரனும் என்னுடன் கூட வருபவன் போலவே காணப்பட்டான். பிறர் என் மீது இரக்கங்கொண்டு அன்பு காட்டியது அப்பொழுது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது; அதைப்போலவே இப்பொழுதும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது இளம் பருவத்தில் என்னிடமிருந்த மற்றொரு செய்தியை நான் மறந்துவிட்டேன். ஆயினும் எனது அன்னை கூறியதைக்கொண்டு புகல்கின்றேன். என்னைப் போன்ற இளம் பிள்ளைகள் யாரேனும் என்னை நோக்கி இடக்கரான மொழிகள் உரைத்தால் நீ கூறும் தீயமொழிகள் உனது வாயில் தான் இருக்கும் என்று கூறுவேனாம். இளம்பருவத்தில் எனக்கு இந்தியப்பந்தாட்டத்தில் ஆவல் மிகுதி. யானும் எனது தோழர்களும், வெயிலின் கொடுமையையும் பொருட் படுத்தாமல் மெய்மறந்து விளையாடுவோம். பள்ளிக்கூடத்தில், நடுப்பகல் சிற்றுண்டிக்காக ஓய்வு கொடுக்கின்ற அரைமணி நேரத்தில் கூட யானும் நண்பர்களும் வெட்ட வெளியிற் பந்தாடுவது வழக்கம். நான் பெருக்கல் வாய்ப்பாட்டிலும், மனக்கணக்கிலும் வல்லவனாக இருப்பேன். பார்ப்பவர் கண்ணிற்கினிய சிவந்த மேனிச் சிறுவனாகவும் இருப்பேன். ஆதலால், நான்முதலிற் கல்வி பயின்ற பள்ளிக்கூடங்களின் பொறுப்பாளர்கள், வந்தவர் களுக்கெல்லாம் என்னை ஒருகண்காட்சிப் பொருள் போலக் காட்டுவார்கள். சிறந்த நாட்களில் பள்ளி மாணவர்கள் அனைவரும் சாலையின் இருபுறங்களிலும் நிரலாக நிறுத்தப்படுவார்கள். ஊராரும் பிறரும் குழுமிச் சூழ்ந்து நிற்பர். அது போதுயானும் என்னையை சிறார்கள் சிலரும் மிகவும் ஊக்கமுடன் மனக்கணக்குப் போடுவோம். நாங்கள் தடையின்றி விரைவாகத் தவறின்றிக்கூறும் விடைகளைக் கேட்டு மக்கள் அனைவரும் கைபுடைத்து மகிழ்வர். நான் சிவந்த நிறம் உள்ளவனாகவும், அழகிய உறுப்புக் களையுடையவனாகவும் இருந்ததால், என்னைத் திருமணம், ஊர்வலம் முதலிய விழா நாட்களில் ஆங்கிலச் சேனைத் தலைவன், கப்பற்படைத்தலைவன், இந்திய மன்னன் இவர்களைப் போல உடையுடுத்தி அலங்காரமாக அழைத்துப் போவார்கள். இவ்வாறு புனைந்து காட்டப்பெற்றபோது என்னை எனது ஆர்வமுள்ள பெற்றோர்களும், நண்பர்களும் என் அருமைத்து ரையே இவன் என்று மகிழ்ந்து கூறுவர். அப்பொழுது நான், எனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆங்கில நாட்டிற்கடத்து வேன் என்றாவது, அவர்களைப் போன்று உடையுடுத்துவேன் என்றாவது கனவில் கூடக் கருதியதில்லை. பிற்காலத்தில் அரசாட்சித் தொழில் நிலையத்தைத் (Imperial Institute) திறந்து வைக்கும் பொருட்டு எழுந்தருளிய விக்டோரியா மகாராணியாரை வரவேற்பவர்களில் ஒருவனாக யானும் சென்றிருந்தேன். அப்பொழுது நான் ஆங்கில அரச சபைக்குரிய உடையைத் தரித்திருந்ததால், இளமைப் பருவத்தில், நான் அணிந்திருந்த உடைகளும், மணங்களிலும், ஊர்வலங் களிலும் சென்ற நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன; இளமையில் அரசசபையைச் சேர்ந்தவனைப் போலப் பொய்யாகப் புனைந் திருந்தேன்; இப்பொழுதோ உண்மையாகவே அரசசபையாரைச் சேர்ந்தவனாக உள்ளேன் என்பதைச் சிந்தித்து மகிழ்ந்தேன். அவ்வெண்ணம் இன்னும் என் உள்ளத்தைவிட்டு ஒளிக்கவில்லை. நான் சிறுவயதினனாயிருக்குங்கால், எனது இனத்தினர் பலர்க்கும், ஷானமா என்னும் பாரசிக காவியத்தைக் குஜராத்தி மொழியில் படித்துக் காட்டி மகிழ்ச்சியடைவேன். ஷானமாவை நான் அடிக்கடி படித்ததனால் என் இயற்கைப் பண்பு ஒன்று பட்டுச் செம்மையடைந்தது. சிறு செய்திகளிலிருக்கும் பல இன்றியமையாத நன்மைகள் உண்டாகின்றன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பம்பாய் நகரத்தில் நாட்டுக்கல்விச்சங்கம் என்று ஒரு சங்கம் நிறுவப் பட்டது. அச்சங்கத்தார், ஆங்கிலத்தையும், நாட்டுமொழியையும் கற்பிப்பதற்காகத் தனித்தனியே இரு கல்விக்கூடங்க உண்டாக்கினர். எனக்குத் தாய்மொழியைப் பயிற்றுவித்த திண்ணைப்பள்ளிக்கூடக் கணக்காயருக்கு அச்சங்கத்தின் வரலாறு மிகுதியாகத் தெரியாது. ஆயினும், அப்பள்ளிகள், அரசாங்கத்தாரின் ஆதரவின்பேரில் தோன்றியதென்பதை மட்டிலும் அவர் அறிவார். அதனால் அவர் தனது மகனை அப்பள்ளிக்கு அனுப்பினார். எனது அன்னையின் பால் அப்பள்ளிக் கூடத்தின் உயர்வை உரைத்து என்னையும் ஆங்கனுப்புமாறு செய்தார்; எனது வாழ்நாளில் நிகழ்ந்த எல்லாச் செயல்களுக்கும் இதுவே அடிப்படையாயிற்று. அப்பொழுது கல்விபயிலும் மாணவர் யாதொன்றும் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. இலவசமாகவே கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. வேறு எத்தகைய செலவுமில்லை. இக்காலத்தில் உள்ளது போல் அப்பொழுது சம்பளம் கொடுக்க வேண்டுமென்ற கட்டாய மிருந்தால் என் தாயாரால் எனக்குச் சம்பளம் கொடுக்கவும் இயலாது; என்னைப் பள்ளிக்கு அனுப்பியிருக்கவும் முடியாது. இந்தக் காரணத்தால் நான், நாட்டில் உள்ள அனைவர்க்கும், இலவசமாகக் கல்வி புகட்ட வேண்டும் என்று எப்பொழுதும் பரபரப்புடன் பரிந்து பேசுபவன் ஆகிவிட்டேன். வறியவர்களின் பிள்ளைகளாயினுஞ் சரி, செல்வர்களின் மக்களாயினும் சரி, ஒவ்வொருவரும், தங்கள் அறிவுக்கு எட்டியவரையிலும் கல்வி யைப் பெறக்கூடிய வசதி நாட்டில் உண்டாகவேண்டும் என்பது எனது கொள்கை. எனது பதினைந்தாவது வயது முதல் என் உயிர் நல்லறிவு பெற்று, தூய நெறியை நாடத்தொடங்கியது நான் ஒரு நாள் சாலையினூடே சென்று கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்தவுடன் இனி ஒருக்காலும் இழிமொழிகள் உரைப்பதில்லையென எனக்குள் முடிவு செய்து கொண்டேன். அந்நிகழ்ச்சி நேற்று நடந்ததைப்போல இன்னும் என் உள்ளத்தில் உறைகின்றது அன்றுதொட்டு எனது கல்விப் பயிற்சி வளர்ந்தேறு வளர்ந்தேற நான் இன்ன செயல்களைச் செய்வதென்றும், இன்ன செயல்களைப் புரிவதில்லையென்றும், பல சூளுறவுகள் செய்து கொண்டேன். அந்த உறுதியான முடிவுகளைத் தவறாமல் காப்பாற்ற வந்தேன் என்று என்னால் சொல்லக்கூடும். நான் சிறுபிள்ளையாயிருந்த பொழுது, ஒவ்வொரு நாளும் இரவில் உணவுகொள்ளுமுன் இனவொழுக்கப்படி சிறிது மதுபானஞ் செய்வது வழக்கம். ஒரு நாள் மனையகத்தில் மதவில் லாமையால் எதிரிலிருந்த கடைக்குச் சென்று மதுவருந்துமாறு என் வீட்டார் என்னை அனுப்பினர். அன்று மதுக்கடைக்குச் சென்றதனால் எனக்குண்டான நாணத்தையும், அவமான உணர்ச்சியையும் எந்நாளும் மறவேன்; அப்பொழுது என் நிலைமை போதும் போதும் என்றாகிவிட்டது. அதன் பின்னர் ஒரு நாளும் நான் சாராயக்கடையில் கால் வைத்ததே இல்லை. நான் சேர்ந்த கல்விச்சாலையில் இரு ஐரோப்பிய ஆசிரியர் களிருந்தனர். ஒருவர் இலக்கியத்தையும், மற்றவர் கணிதக் கலையையும் போதித்து வந்தனர். அவர்களுக்குள் ஏதோமன வேறுபாடு தோன்றிய காரணத்தால், பள்ளி மாணவர்கள் எல்லோரையும் இருபகுதியாக வகுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவுக்குத் தனித்தனியே ஆசிரியராய் அமர்ந்து அவர்களே எல்லாக் கலைகளையும் பயிற்றத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் மிகவும் கண்டிப்புள்ள போதகர்; மற்றவர் அதற்கு முற்றிலும் மாறானவர். நான் பின்னவரின் பிரிவிலேயே சேர்க்கப்பட்டேன். அவர் தமது மாணவர்களை அவர்களுடைய விருப்பப்படியே விட்டு விடுவர். ஆயினும் நான் வீண் காலப் போக்கை விரும்பாமல் எவ்வகையிலாவது சுறுசுறுப்புடன் இருக்க விழைந்தேன். பாடங்களைப் பற்றிய கண்டிப்புச் சிறிதும் இன்மையால் வேறு வேலையிற் கருத்தைச் செலுத்தத்தொடங் கினேன். எனக்கு மிகுந்த நினைப்பாற்றல் உண்டு. ஒரு முறை கேட்ட கதையை மொழிக்கு மொழி அணுத்துணையும் தவறாது மனப்பாடமாய்க் கூறுவேன்; எனக்கு எண்ணிறந்த கதைகளும் தெரியும். ஆகவே பள்ளிக்கூட நேரத்தில் பெரும் பகுதியைக் கேட்போர் வியப்பெய்தும்படி என் தோழர்களுக்குக் கதை சொல்லும் வழியிற் கடத்தினேன். பள்ளிக்கூடத்திற் கண்டிப் பில்லாமையால், நானும் தோழர்களும் ஒருவருடைய அனுமதி யையும் பெறாமல், பள்ளிக்கூட நேரத்திலும் வெளியிற் சென்று வினையாட்டயர்வோம். இவ்வாறு ஓராண்டு முழுதும் கல்வி யில்லாமல் வீணே கழிந்தது. கதையும் விளையாட்டுமாகக் கழிந்த அக்காலத்திலும் எனக்குச் சிறிது நன்மையே உண்டாயிற்று. கதை சொல்லும் ஆற்றலாலும், விளையாட்டிற் பெற்றிருந்த திறமை யினாலும் நான் சிறார்களுக்குத் தலைவனானேன். அத்தகைய தலைமைப்பதவியால் நான் தன்னடக்கத்தையும் ஆண்மையையும் எய்தினேன். பள்ளிக்கூடத் தேர்ச்சியில், நான் எதிர்பார்த்திருந்த பரிசிலை குறுக்குக் கணக்கு வாய்ப்பாட்டை (Ready Reckoner) உருப்போட்டிருந்த எனது தோழமை மாணவன் ஒருவன் பெற்றது என் நினைவிலிருக்கிறது. ஆயினும் அவன், பரிசளிக்கும் அமயத்தில், புத்தகத்தில் இல்லாத சில கணக்குக் கேள்விகளைக் கேட்டபோது அவைகளுக்கு விடை புகல அறியாமல் தத்தளித்தான். அப்பொழுது பிள்ளைகளின் வரிசையில் நின்றிருந்து நான் இது தான் தகக காலமெனக்கருதி முன்னோடி வந்து அவ்வினாக்களுக்கு ஏற்றவாறு விடையளித்தேன். அப்பொழுது அக்கூட்டத்திலிருந்த ஆங்கிலக் கனவான் ஒருவர் உடனே எனக்கு ஒரு பரிசளித்தார்; அவ்வமயத்தில் அங்கு வந்திருந்த நாடுகளைச் சுற்றிப்பார்த்து வருபவளாகிய பாடன் துரைசானி என்பவள் தான் எழுதிய மேல் இந்தியா என்னும் நூலில் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக் கின்றாள். எனது இளம் பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இவ்வளவோடு நிறுத்துகின்றேன். தாய்மொழியும், ஆங்கிலமும் கற்பிக்கும் பள்ளிக்கூடப் படிப்பு நிறைவேறிய பின் நான் எல்பின்டோன் கல்லூரியை அடைந்தேன். என் பேறு நன்றாயிருந்தமையால் மற்றைப் பள்ளிக்கூடங்களைப்போல அங்கும் சம்பளம் இல்லை. ஆனால் படிப்பில் முதன்மையாய் விளங்கி உதவிச்சம்பளம் (Scholar Ship) பெறுபவரே அக்கல்லூரியிற் சேரலாம் என்றிருந்தது. நல்ல வேளையாக அதுசமயம் அத்தகைய நன்கொடையொன்று எனக்குக் கிடைத்தது. இக்காலத்தில் நான் கற்ற நூல்களில் என்னுடைய நடத்தையையும், பிற்கால வாழ்வையும் ஒழுங்குபடுத்தியவை பிர்டௌசி என்பவரால் குஜராத்தி மொழியில் இயற்றப்பட்ட ஷானமா என்னும் புத்தகமும், சொராட்ரியர்களின் கடமைகள் என்னும் புத்தகமும் ஆகும். நான் அவைகளிலிருந்து உணர்ந்துகொண்ட அரும் பொருள்கள் சிந்தை, சொல், செயல் ஆகியவைகள் எந்நாளும் தூய்மையாக இருக்க வேண்டுமென்பதே. ஆனால் நான் ஆங்கில இலக்கியங்களிலேயே மிகவும் ஈடுபட்டுப் படித்துச் சிந்தை களித்தேன். வாட் என்பவரால் இயற்றப்பட்ட மனப்பயிற்சி என்னும் நூல் எனது உரைநடையையும், மனப்பாங்கையும் ஒழுங்கு படுத்திற்று. பொருள் விளங்குதற்குப் போதிய சொற்களையன்றிப் பயனற்ற சொற் களைத் தொடுப்பதில்லை. எண்ணுவதும், பேசுவதும், எழுதுவதும் எப்பொழுதும் தெளிவாக இருக்கவேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டேன். ஆரவாரமான அலங்காரங்களைப் பேசுவதிலும், எழுதுவதிலும் அடியோடு அகற்றிவிட்டேன். கல்விப்பயிற்சி மிகுதிப்பட மிகுதிப்பட எனது மன உணர்ச்சி யும் வளர்ந்து பலவழிகளிலும் பரவத்தொடங்கிற்று, ஏழையாகப் பிறந்த நான் ஏழைகளின் வரிப்பணத்தினாலேயே படித்தேன் என்பதை உணர்ந்தேன். கல்விப்பயிற்சியும், அதனால் பெற்ற நன்மைகளும், நாட்டு மக்களின் வரிப்பணத்தினாலேயே கிடைத்தமையால், அந்நன்றியை மறவாது அவர்களுக்காக இயன்றவரையிலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் குடிகொண்டது. என் வாழ்நாள் முழுவதையும், பொதுஜனங்களுக்குப் பணியாற்றுவதிலேயே கழிக்க வேண்டுமெனக் கருதினேன். இவ்வெண்ணம் என் மனத்தில் கருக் கொள்ளும் காலத்தில் கிளர்க்சன் எழுதிய அடிமைகள் வியாபாரம் என்னும் நூலையும், ஹௌவார்டு என்ற பெருங்கொடையாளரின் வாழ்க்கை வரலாற்றையும் நான் படித்தேன். உடனே என் மனத்திற்றோன்றிய எண்ணத்தை உறுதி செய்து கொண்டேன். காலம் வாய்த்தபோதெல்லாப் பொது மக்களுக்குத் தொண்டு புரிவதையே என் உயிர் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டேன். நான் எல்பின்டோன் கல்லூரியில் முதன்மையான மாணவனாக விளங்கிய காலத்தில் கல்விச்சங்கத் தலைவராயிருந்த (Board of Education) சர். எர்க்கின் பெரி என்பவர் என் மீது மிகுந்த நல்லெண்ணங்கொண்டவராய்ச் சட்டக் கல்வி பயில்வதற்காக என்னை இங்கிலாந்திற்கு அனுப்ப விரும்பினர். அதற்கு ஏற்படும் செலவில் பாதியை என் இனத்தினர் சேர்த்துக்கொடுத்தால் மற்ற பாதியைத் தாம் தமது கையிலிருந்து தருவ தாகக் கூறினார். என் இனத்தினர், நான் இங்கிலாந்து சென்றால் ஆங்குள்ள கிறித்தவமத போதகர்களின் வலையிற் சிக்கிக் கிறித்தவனாகி விடுவேன் என்று அஞ்சியதனால் அவ்வெண்ணம் நிறைவேற வில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது, அங்கே இந்திய சபையின் உறுப்பினராயிருந்த சர். எர்க்கின் பெரியைக் கண்டேன் அப்பொழுது அவர் நீ சட்டம் பயின்று நியாயவாதி யாயிருந் தால் பொது நன்மைக்காக எவ்வளவு உழைத்திருக்க முடியுமோ அதைவிட மிகுதியாகவே இப்பொழுது உனது வாழ்நாள் நாட்டுத் தொண்டில் கழித்து வருகின்றது. ஆதலால் முதலில் எண்ணிய எண்ணம் நிறைவேறாமற்போனதும் நலமாகவே முடிந்தது என்று கூறினார். உயிர் வாழ்க்கையின் பொருட்டு யாதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ளும் காலம் கிட்டிவிட்டது. அரசாங்க வேலையில் அமராமல் மெதுவாகத் தப்பித்துக்கொண்டேன். பம்பாய்க் கல்வி இலாக்காவின் காரியதரிசி என் மீது அன்பு கொண்டு, அரசாங்கக் காரியதரிசிகள் காரியாலயத்தில் (Secretariate) எனக்கு ஒரு உத்தியோகம் வாங்கிக்கொடுத்தார். இதை நான் பெரும் பேறாகவே கருதினேன். ஆயினும் நல்ல வேளையாகச் சில காரணங்களால் அவ்வேலையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவ்வாறு தவறியதும் எனது பெரும் பேறுதான். இன்றேல் அரசாங்கத்தில் ஒரு கீழ்த்தர வேலைக்காரனாகவே இருந்து என் வாழ்நாள் முழுவதையும் கழிக்க நேர்ந்திருக்கும். பின்னர் 1855 ஆம் ஆண்டில், நானும் மற்றிரு நண்பர்களும், முதல் முதல் இலண்டன் மாநகரில் காமா அன்ட் கம்பெனி என்னும் ஒரு விபாபார நிலையத்தை ஏற்படுத்துவதற்காக இங்கிலாந்திற்குச் சென்றோம். அதற்கு முந்திய ஆறு ஏழு ஆண்டுகளிலும், பழக்க வழக்க சம்பந்தமாகவும், கல்வி போதிக்கும் முறைகளிலும், அரசியல் சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பல வகையான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று இடை யறாமல் உழைத்தேன். அக்காலமே எனது வாழ்நாளின் சிறந்த பகுதியாகும். நானும், கல்லூரியை விட்டுப் புதிதாக வெளியேறிய இளைஞர்கள் சிலரும், பெண் கல்விக்காகவும், பொதுக்கூட்டங்களிலும், பொதுச்சபைகளிலும், பெண் மக்களும் ஆண்மக்களும் வேறுபாடின்றிக் கூடலாம் என்னும் உரிமைக்காகவும், குழந்தைகளுக்கேற்ற பள்ளிக்கூடங்களை அமைப்பதற்காகவும், மாணவர்கள் நன்மையின் பொருட்டுச் சுவடி நிலையங்கள் உண்டாக்கவும், கலைப்பயிற்சிக் கழகங்கள் அமைக்கவும், தாய் மொழியின் வழியே அறிவைப் பரவச்செய்யும் சங்கங்களை ஏற்படுத்தவும், பார்சி வகுப்பினரைச் சீர்திருத்தவும், குழந்தை மணத்தைத் தடுக்கவும், விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யவும் பார்சி மதத்தைச் சீர்திருத்தம் செய்யவும், இன்னும் இவை போன்ற பொது நலங்களைப்புரியவும், ஆராய்ச்சி செய்வதிலும், சங்கங்கள் அமைப்பதிலும் இடைவிடாமல் உழைத்தோம். அப்போது எங்களுக்குச் சிலவற்றிற்குப் பெரியோர் களுடைய ஆதரவு மிகுந்தது. சிலவற்றிற்கு சர் எர்க்கின்பெரி, ஆசிரியப் பாட்டன் முதலியவர்களுடைய நன் மதிப்பையும், ஆதரவையும் பெற்றிருந்தோம். எல்பின்டோன் கல்லூரியில் நாங்கள் பயின்ற ஆங்கிலக் கல்வியின் முதற்பயன் இவைகளாகும். என் வாழ்நாளின் அந்தப் பகுதியை இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது என் நெஞ்சம் மகிழ்வடைந்து, செருக்குறுகின்றது. பொதுமக்களுக்குப் புரிய வேண்டிய கடமையை ஆற்றியதால் என் மனம் பூரிப்படைகின்றது. என் இளமைப்பருவத்தைச் சேர்ந்த அந்த நாட்கள் என் மனத்திற்கினிய நாட்களாகும். நினைக்க நினைக்க மகிழ்ச்சியைத் தரும் நாட் களாகும். நான் என் அருமைக் கலைத்தாயான எல்பின்டோன் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றதே என் வாழ்நாளின் முற்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளில் சிறந்ததாகும். இவ்விந்திய நாட்டில் முதல் முதல், எல்பின்டோன் போதகர் என்ற பட்டத்துடன் ஆசிரியப் பதவி பெற்றவன் நானே. அதுவே எனக்கு எல்லாப் பட்டங்களிலும் அருமையானது; எல்லாப் பெருமைகளிலும் உயர்ந்த பெருமை. இன்றும் என் தோழர் களிலும், மாணவர்களிலும் பலர் என்னைத் தாதாபாய் போதகர் என்றே அழைக்கின்றனர். நான் இளமைப்பருவத்தில் விதைத்த விதைகள், என்தாய் நாட்டாரின் அன்பும் நன்மதிப்புமாக வளர்ந்து அளவற்ற பயனை உதவியிருக்கின்றன. என்னை மக்களனைவரும், இந்தியாவின் பெருங்கிழவர் என்று அழைப்பதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி யுறுகின்றேன். அவ்வாறு மகிழ்ச்சியுறுதல் தற்பெருமையாகுமோ? இவ்வாறு மக்களனைவரும் என்னை அழைப்பது எனது நாட்டினரின், நன்றியறிதலையும், பெருந்தன்மையையும் அன்பு மிகுதியையும் தெளிவாக விளக்குகின்றதே யன்றி வேறன்று. நான் அப்பெயருக்குத் தகுதியுடைய வனாயினும், ஆகாவிடினும், அது என் வாழ்க்கையில் நான் பெறக்கூடிய பரிசுகளிற் சிறந்த பரிசாகும். ஒருகாலத்தில் எனது நண்பர்களில் ஒருவர், நீ மறுபடியும் இளைஞனாகி முன் போல உன் வாழ்நாளைக் கடத்த விரும்புகிறாயா? என்று வினவினார். அதற்கு நான் ஆம்; நான் பலமுறை செயல்கள் நிறைவேறாமல் ஏமாற்ற மடைந்ததும், இடுக்கண் உற்றும், மனம் வருந்தியிருக்கின்றேன்; என்பது உண்மை. அவை முழுவதையும் மீண்டும் கையாண்டு வாழ விரும்புகின்றேன் என்று மொழிந்தேன். இவ்வளவோடு எனது வரலாற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆயினும் இறுதியில் என்னை ஈன்றாளைப் பற்றிச் சிறிது கூறவேண்டும். அவளைப்பற்றி முடிவில் மொழிகின்றேன் என்றாலும் அவள் தான் எல்லாவற்றிற்கும் முதன்மை யானவள். நான் ஒரே பிள்ளை; என் தந்தையும் எனக்கு நான்காம் ஆண்டு நிகழும்போது இறந்து விட்டார். ஆயினும், என் அன்னை எங்கள் குலமுறைப்படி மறு மணம் புரிந்து கொள்ளாமல் அவளாகவே மனமுவந்து விதவையாக இருந்து என் மீது மிகவும் அன்பு கொண்டவளாய் எனது முன்னேற்றத்திற்காகப் பரிந்து உழைத்து வந்தாள். அவள் தனது உடன்பிறந்தானுடைய உதவியைக் கொண்டு எனக்காகப் பாடுபட்டாள். எனது தாய் எழுதப்படிக்கத் தெரியாதவளாயிருந்தாலும், என் மீது மிகவும் அன்புடையவளாயிருந்தாலும் மிகவும் அறிவுடையவள். நான் மனம் போன போக்கிற் சென்று தீயொழுக்கத்தை மேற்கொள்ளாவண்ணம் தன் கைக்குள் வைத்துக் காப்பாற்றி வந்தாள். அக்கம் பக்கத்தில் உறைவோர் அவளுடைய அறிவு நிறைந்த ஆலோசனையைக் கேட்பதற்காக வருவார்கள். பொது மக்களின் எண்ணத்திற்கு மாறாக, நான் பெண் கல்விக்காவும், ஆசாரச் சீர்திருத்தத்திற்காகவும் உழைத்த போது என் தாயார் எனக்குப் பேருதவி புரிந்தாள். நான் இத்தகைய உயர்நிலை எய்தியதற்குக்காரணம் என அன்னையே ஆவாள். சாமி.சிதம்பரனார் தமிழ்ப்பாடத்தொகை நான்காம் பாகம் 1. திருக்குறள் 1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. 2. கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை 3. நுணங்கிய கேள்வியர் அல்லார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது. 4. செவியில் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? 5. எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 6. எண் பொருள வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. 7. அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். 8. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாச் கொள்வர் பழிநாணு வார். 9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை. 10. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. 11. பல்லார் பகைகொளலில் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். 12. எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. 13. வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல். 14. உடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். 15. அருவினை என்ப உளவோ? கருவியால் காலம் அறிந்து செயின். 16. ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து, 17. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா; எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். 18. குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல். 19. தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயறவும் தீரா இடும்பை தரும். 20. அன்பு, அறிவு, தேற்றம், அலாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 21. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல். 22. காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும் அன்ன நீ ரார்க்கே உள. 23. வான் நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி. 24. குடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. 25. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண் ணீரன்றே? செல்வத்தைத் தேய்க்கும் படை. திருவள்ளுவனார். 2. நாலடியார் 26. காவா (து) ஒருவன் தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்(து) அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந் (து) அமைந்த சொல்லார் கறுத்து. 27. அறிவ (து) அறிந் (து) அடங்கி அஞ்சுவ (து) அஞ்சி உறுவ (து) உலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. 28. வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஒழுக்கம் ஒருவன் கண் உண்டாயின் ஆற்றும் துணையும் பொறுக்க; பொறான் ஆயின் தூற்றாதே தூர விடல். 29. காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனில் பலராவர்; - ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர். 30. வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் எய்தும்; நடுவண(து) எய்தாதான் எய்தும் உலைப் (பெய் (து) அடுவது போலும் துயர். 31. இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால்; தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடின்றால்; எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. 32. வைப்புழிக் கோட்படா; வாய்த் (து) ஈயில் கேடில்லை; மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்; எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்றல்ல பிற. 33. நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல் அளவு அல்லால்பொருள் இல்லைத்; - தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம். 34. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தில் கரும்பு தின்(று) அற்றே; - குருத்திற்கு) எதிர்செலத் தின்றன்ன தகைத்தரோ என்றும் மதுரம் இலாளர் தொடர்பு. 35. யானை அனையவர் நண்பு ஒரீஇ, அனையார் கேண்மை கெழிஇக் கொளல் வேண்டும்; - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்; எறிந்தவேல் மெய்யதா வால் குழைக்கும் நாய். 36. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. 37. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் (து) அற்றே; இரா அ (து) உரைப்பினும் நாய் குரைத் (து) அற்று. 38. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர் வஞ்சி; மற்றைய ராவார் பகவர்; பனையின் மேல் வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி. 39. என தென (து) என்றிருக்கும் ஏழை பொருளை, என தென (து) என்றிருப்பன் யானும்; - தனதாயில், தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான் யானும் அதனை அது. 40. நீரினும் நுண்ணிது நெய் யென்பர் நெய்யினும் யாரும் அறிவர் புகை நுட்பம்; - தேரின், நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. 41. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த (து) உண்ணாதுஇறக்கும்; - இடம் உடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின். 42. கரவாத திண் அன்பில் கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; - இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகு மால்! என் கொலோ கொள்ளுங் கால் கொள்வார் குறிப்பு? 43. கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் ; - மற்றதனை நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். 44. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்து, அகம் எல்லாம்நிறைப்பினும், - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே, பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. 45. தாமேயும் இன்புறார்; தக்கார்க்கும் நன்றாற்றார்; ஏமஞ்சார் நன் னெறியுஞ் சேர்கலார்; - தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார். சமண முனிவர்கள் 3. அரசநீதி 46. பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம் கோல்வளையாமற் காத்துன குடைநிழல் துஞ்சநோக்கி, நூல்விளைந்தனைய நுண்சொல் புலவரோடு அறத்தை ஓம்பின், மேல்விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்! 47. வாய்ப்படும் கேடும் இன்றாம வரிசையின் அறிந்துநாளும் காய்த்தநெல் வளமதீற்றில்; களிறுதான் கழனிமேபின் வாய்ப்படல் இன்றிப்பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின் நீத்தநீர் ஞாலம் எல்லாம் நிதிநின்று சுரக்கும் அன்றே 48. நெல்உயிர் மாந்தர்க் கெல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பில்; புல்லுயிர் புகைந்து பொங்கும் முழங்கழல் இலங்கு வாட்கை மல்லல்அம் களிற்று மாலை வெண்குடை மன்னர்; கண்டாய் நல்லுயிர் ஞாலந் தன்னுள நாமவேல் நம்பி என்றான் 49. ஆர்வலஞ், சூழ்ந்த ஆழி அலைமணித் தேரை வல்லான் நேர்நிலத் தூரு மாயின் நீடுபல் காலஞ் செல்லும். ஊர்வலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முரிந்துவீழும்; தார்நிலம் மார்ப! வேந்தர் தன்மையும் அன்ன தாமே; 50. காய்ந்தெறி கடுங்கல் தன்கைக் கவுட்கொண்ட களிறுபோல, ஆய்ந்தறி வுடையர் ஆகி, அருளொடு வெகுளி மாற்றி வேந்தர்தாம் விழைய எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய் நாந்தக உழவர் ஏறே! நன்பொருள் ஆவதென்றான் 51. குடி பழியாமை ஓம்பில், கொற்றவேல் மன்னர் மற்றுன் அடிவழிப் படுவர்; கண்டாய்! அரும்புகழ் கெடுதல் அஞ்சி நொடியல் ஒர் எழுத்தும் பொய்யை; நுண்கலை நீத்தம் நீந்திக் கொடிஎடுத் தவர்க்கு நல்கு! கொழித்துணர் குமர! என்றான் திருத்தக்க தேவர். 4. முதுவேனிற் காலம் குசேலோ பாக்கியானம் 52. மண்கொதிப்ப, அறல் கொதிப்ப, வளிகொதிப்ப, எண்ணுவார் எண் கொதிப்ப, நறுநீழல் இயை மனைவிட்(டு) அகலார்க்கும் கண்கொதிப்பக், கரங்கொதிப்பக், கால்கொதிப்பக், கற்பகஞ்சார் விண்கொதிப்ப, அவ்வேனில் வெம்பருவம் மேவியதால். 53. குலவுதனை விழுங்குவகை கொண்ட கோட்கினமாகி, இலகாவ நாடனைத்தும் இது சமயம் எனப், பரிதி பலகதிரும் புகுந்துடற்றப் பண்ணிய செவ்வழி போலும் நிலமகள் தன் உடல் வெடிப்ப நேர் தோன்றும் பெருங்கமர்கள் 54. நலக்கதிர்செய் நம்பகையை நான் மறையோர் இதுகொண்டே விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாதைப் பகையும் எனப் புலத்தமைத்துக் கவர்ந்தான்போல் பொய்கை குளம் கால்நதிமுன் நிலத்தமைத்த நீரெல்லாம் நெடும்பரிதி கவர்ந்தணணால். 55. தெள்ளுபுனல் நசைமிக்குத் திரிமருப்பின் இரலையெலாம் நள்ளரிய பேய்த்தேரின் பின் தொடர்ந்து நலிந்திடுமால்; வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் பின் எள்ளுவது மைப்பிணியோர் தொடர்ந்து தொடர்ந் - திளைப்பது போல். 56. காலோடை வாவிகுளம் முதலாய கணக்கிலவன் மேலோடும் புனல் வதப்ப, அவற்றுறைமென் பறவைகள், நற் பாலான ஒருவனிடம் பற்றியினி துண்ட கிளை ஏலாத்துன் பவனுறுங்கால் இரிவதென இரிந்தனவால். 57. வரவிகாள்! சூளங்காள்! நீர்வற்றினீர் முன்னளித்த மேவியஇன் சுவைப்புனலால்வீங்கினேம் இதுபொழுது; பாவிய அப்புனல் அளிப்பேம் பற்றும்; எனக் கால்வதுபோல் பூவியன் மக்களுடம்பு பொங்குவெயர் நீர்காலும். 58. வாங்குகடல் அகம்புகுந்து வடவைவதி வதையறிந்தாம்; ஓங்குகடல் சுவற்றவென உலகுரைத்தல் அதுபொய்யோ தேங்கிய இப்பருவத்தால் செறிவெப்பிற் காற்றாமை ஆங்குகுளிர் இடந்தேடி அஞ்சிஒளித் ததுபோலும் வல்லூர் தேவராஜபிள்ளை. 5. பாண்டிய நாட்டுச்சிறப்பு திருவிளையாடல் 59. இடித்து வாய் திறந் (து) ஒல்லென, எல்ஒளி மழுங்கத் தடித்து வாள்புடை விதிர்த்துநின் (று) இந்திர சாபம் பிடித்து; நீள்அம்பு கோடைமேற் பெய்து, வெம்பெரும்போர் முடித்தும் நாம் என வருதல்போல் மொய்த்தன கொண்மூ 60. கல்லெனக் கரைந்து வீழும் கடும்புனற் குழவி, கானத்து ஒல்லெனத் தவழ்ந்து, தீம்பால் உண்டொரீஇத், திண்டோள் மள்ளர் செல்வெனத் தெழிக்கும் பம்பைத்தீங்குரல் செவிவாய்த்தேக்கி, மெல்லெனக் காலிற்போகிப், பணைதொறும் விளையாட்டெய்தி, 61. பன்மலர் மாலை வேய்ந்து, பால் நுரைப்போர்வை போர்த்துத், தென்மலைத் தேய்ந்த சாந்தம் மான்மதச் சேறு பூசிப், பொன்மணி ஆரந்தாங்கிப், பொருநையாங் கன்னி முந்நீர்த் தன்மகிழ் கிழவன்ஆகந் தழீ இக்கொடு கலந்ததன்றே 62. வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி, அரைபடும் அகிலும் சாந்தும் அப்பி, இன் அமுதம் ஊட்டி, கரைபடு மருதம் என்னும் கன்னியைப் பருவம்நோக்கித் திரைபடுபொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கும்மாதோ 63. பலநிற மணிகோத் தென்னப் பன்னிற ஏறுபூட்டி, அலமுக இரும்பு தேய ஆள்வினைக் கருங்கால் மள்ளர் நிலமகள் உடலங்கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச் சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி இமைக்கும் மன்னோ 64. ஊறுசெய் படைவாய் தேயஉழுநரும், நீர்கால்யாத்துச் சேறுசெய்குநரும், தெய்வம் தொழுது தீஞ்செந்நெல்வீசி நாறுசெய் குநரும், பேர்த்து நடவுசெய் குநரும், தெவ்வின் மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக்கு நரும் ஆனார் 65. பட்பகை யாகும் தீஞ்சொல் கடைசியர் பவளச் செவ்வாய்க்கு உட்பகை ஆம்பல் என்றும், ஒள்நறுங் குவளை நிலம் கட்பகைஆகும் என்றும், கமலம்நன் முகத்துக் கென்றும் திட்பகை ஆகும் என்றும், செறுதல்போல் களைதல் செய்வார். 66. கொடும்பிறை வடிவிற்செய்த கூனிரும்பு அங்கைவாங்கி, முடங்குகால் வரிவண்டு ஆர்ப்பமுள் அரைக்கமலம் நிலம் அடங்கவெண் சாலிசெந்நெல்வேறுவே(று) துரிந் (து) ஈடாக்கி. நெடும்கனத்(து) அம்பொன் குன்றநிரைஎனப் பெரும்போர் செய்தார் 67. அகிலும் ஆரமும் தழல்மடுத்(து) அகழ்ந்தெறிந் (து), அழல்கால் துகிரும் ஆரமும் தொட்டெறிந் (து), ஐவனம் தூவிப் புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி, இகலில் வான்பயிர் ஓம்புவ எயினர்தம் சீரூர். 68. கருவி வான்சொரி மணிகளும், கழைசொரி மணியும், அருவி கான்றபல் மணிகளும், அகன்றலை நாகத்(து) இரவி கான்ற செம்மணிகளும், புனங்கவர் இனமான் குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்தெறி கவண்கல். பரஞ்சோதி முனிவர். 6. கொங்குநாட்டுச்சிறப்பு வில்லிபாரதத்தின் பாயிரம் 69. நாணிரைத் தநேக தாரகா கணமாம் நவமணி யுடன்நவ விதங்கொள் கோணிரைத் திரேழ் புவனமும் வலஞ்செய் கொற்ற நேமியின்வரு கொண்டல், வாணிரைத் திரவி விதிர்ப்பபோல் மின்னி வான் முக(டு) உறநெடும் பளிக்குத் தூணிரைப் பனபோல் நந்திமால் வரையின் சூழலில் தாரைகொண் டதுவே. (1) 70. வம்பறா மலரும் செம்பொனும் மணியும் மருங்கெலாம் நெருங்கும் அக் குன்றில், உம்பரூ டெழப்பார் அளவும்நின் றோங்கி உள்ளுறத் துள்ளிவீழ் அருவி அம்புரா சியைமால் மந்தரஞ் சுழற்றி அமுதெழக் கடைந்த நாள் அதற்குத் தம்பமா மதியை அதனுடன் பெயர்த்துச் சார்த்திவைத் தென்னலாம் தகைத்தே 71. வெண்ணெயே கமழும் பவளவாய் விமலன் மெய்யெனக் கருதி, மெல்லியலார் கண்ணையே அனைய நெடுங்கடல் முகந்து, ககனமும் திசைகளும் விழுங்கிப், பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பாடிப் பழைநா டனைத்தையும் ஒருதன் பெண்ணையே, கொண்டு போகம்உய்த் திடுமால் புயலெனும் பெயருடைப் பெரியோன், 72. அவ்வைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி, அருந்தமிழ் அறிவினால் சிறந்து, பௌவநீர் ஆடைத் தரணிமான் மார்பில் பயிலும்உத் தரியமும் போன்று, மெய்வரால் கெண்டை வாலைசேல் மலங்கு முதலிய சனம்எதிர் கொள்ளத் தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத் திருமுனைப் பாடி நன் னாடவேறு 73. அந்தத் திருநாட் டந்தநதி அமுதம் பெருகி இருகரையும் சந்தத் துடன்கார் அகில்கமழத் தடங்கா வகஞ்சூழ் தடநிறைப்பக் கந்தக் குவளை மேய்பகட்டின் காலால் நெரிந்து கதிர்முத்தம் சிந்தச் சிந்தக் கொழுமுனைக்கு முன்னேர் உழுவ செய்ச்சங்கம் 74. கொழுநீர் மதுஉண் கடைசியர்தம் குழைதோய் விழியின் எழுநிழலைக் கழுநீர் மலர் என் றொருபகலும் காலால் மயக்கிக் களைதுவைப்பார்; முழுநீர் ஊடு தமது நிழல் முழுதுங் கண்டு தொழுதிறைஞ்சிச் செழுநீர் அரமங் கையர் என்று திகைப்பார்; நகைப்பார்; செறுவெல்லாம் 75. கரும்பும் கமுகும் தலைதெரியாக் கழனிச் செந்நெற் களையாகி அரும்புங் குவளை நறுமலர்த்தேன் ஆறாய் எங்குஞ் சேறாக விரும்புஞ் சுருதி இசைகேட்டு வேலைக் கழிக்கா னலங்கைதை கரும்புந் தும்பி களுமருந்த மாறா தென்றுஞ் சோறிடுமால். வரந்தருவார் 7. காட்டின் காட்சி 76. விண்நெறிப் படரும் கொண்டலின் கூட்டம் விருப்புடன் படிந்திடும் ஆறு, கண்ணிடம் கொண்டு பரந்துடன், செழித்தே உயர்ந்திடும் காவினின் மாண்பை எண்ணிடின் மனமும் யாக்கையும் தழைக்கும் இயப்பினால் அதன் வளந் தன்னைப் பண்ணுற மொழியப் பாவலர் தமக்கே ஆயிடும் பாரினில் இனிதே. 77. கனைகடற் புவியில் பொருந்துறும் பொருள்கள், கருதுவார் மனத்துடன், யாக்கை, அனையவை யாவும் அருந்துவர் அடைய வெதுப்பிடும் ஆதவன் ஒளியும் நனைமணங் கமழும் நணுகா தாகிடும்; அன்றியும் ஆங்கே மனையெனக் கொண்டு வாழ்ந்திடும் பறவைத் தொகுதியும் நுழைந்து சென்றிடுமால்! 78 ஆற்றலும், அறிவும், ஆண்மையும், பொறையும், அமைந்துறை ஆன்றவர் யாரும் ஏற்றமே வரினும் இழிதக வுறினும் ஒரு நிலை உறைவதை எய்ப்ப; காற்றடித் திடினும், மழைபொழிந் திடினும், கடுவெயில் எறிப்பினும் கானம் மாற்றம் ஒன்றின்றி ஒருநிலை உறைய மரமெலாம் தழைத்தன செறிந்தே. 79. வருக்கைமா முதலாம் மரங்களின் கனிகள் வழியெலாம் செறிந்திருந் திடுமால்; நெருக்குறு பசியால் வாடுவோர் தமக்கு எதிர் நலம் சிறிதுமே நினையாது உருக்குடன் உணவை உதவிடும் கொடையார் தமக்கிணை உரைத்திடும் படியே தருக்களும் கனிகள் தந்தவர்க் கின்பம் தழைத்திட ஆற்றிடும் அன்றே. 80. தன்னலங் கருதா அறிவுடை மாந்தர் தரணியில் மறைந்துறைந் திடினும் அன்னவர் மேன்மை அனைவரும் அறியப் பரந்திடும் தன்மை போல்; ஆங்கே மன்னிய மலர்கள் புதர்களிற் கரந்தே இருப்பினும், நறுமணம் யாண்டும் துன்னியே எவர்க்கும் மகிழ்ச்சியை விளைக்கும் தோமறு காவகம் அதுவே. 81. சாதியின் பிணக்கால் மதஞ்செயும் சழங்கால் மற்றவர் சலிப்புறப் புரியும் நீதியில் மாக்கள் தமைஇகழ்ந் திட்டே; நிலவுறும் எவ்வுயிர்த் திரளும் பேதமில் வாழ்வில் உறைந்திடற் கிடனாய்ப் பிறங்கிடும் அவ்வனக் காட்சி ஓதுநல் அறிஞர் உளத்தினில் வியப்பை உயர்ந்திடச் செய்திடும் மாதோ! 82. பற்பல பறவைக் குலங்களும் கூடிப் பாட்டயர்ந் திருக்கும் அங்கொருபால்; அற்புத விலங்கின் குழவிகள் எல்லாம் அகக்களிப்புடன் விளையாடும்; முற்படுங் காற்றால் அலைந்திடுந் தருக்கள் முழங்கிடும் போரொலி, மாந்தர் நற்பெரும் பண்டம் மாற்றிடக் குழுமும் சந்தையை நிகர்த்திடும் நன்றே. சாமி, சிதம்பரனார். 8. கானல் வரி சிலப்பதிகாரம் 83. மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய்; வாழி! காவேரி! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்; வாழி! காவேரி! 84. பூவர் சோலை மயில் ஆலப், புரிந்து குயில்கள் இசை பாடக், காமர் மாலை அருகசைய, நடந்தாய்; வாழி! காவேரி! காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன் நாம வேலின் திறங் கண்டே அறிந்தேன்; வாழி! காவேரி! 85. வாழி! அவன் தன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி! காவேரி! ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிரோம்பும் ஆழி யாள்வான் பால் வெய்யோன் அருளே வாழி! காவேரி! வேறு 86. புணர்துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி, இணர்த்தையும் பூங்கானல் என்னையும் நோக்கி, உணர்வொழியப் போன ஒலிதிரை நீர்ச் சேர்ப்பன் வணர்சுரி ஐம்பாலோய்! வண்ணம் உணரேனால்! 87. தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான்தேரும், எம்மை நினையாது விட்டாரோ? விட்டகல்க? அம்மென இணர அடும்புகாள்! அன்னங்காள்! நம்மை மறந்தாரை நான் மறக்கமாட்டே மால்! 88. புன்கண் கூர் மாலைப் புலம்பும் என் கண்ணே போல் துன்பம் உழைவாய்! துயிலப் பெறுதியால்! இன்கள்வாய் நெய்தால்நீ! எய்தும் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ? 89. புள்ளியல்மான் தேர்ஆழி போன வழியெல்லாம் தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்; மற்று என்செய்கோ! தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடீங்கு உள்ளாரோடு உள்ளாய்! உணராய்! மற்றுஎன் செய்கோ! 90. நேர்ந்தநம் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே! பூந்தண் பொழிலே! புணர்ந்தாடும் அன்னமே! ஈர்ந்தண் துறையே! இதுதகா தென்னீரே. வேறு 91. நேர்ந்தகம் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே! பூந்தண் பொழிலே! புணர்ந்தாடும் அன்னமே! ஈர்ந்தண் துறையே! இதுதகா தென்னீரே. வேறு 91. நன்னிலத் திலத்தின் பூண் அணிந்து, நலஞ்சார் பவளக் கலைஉடுத்துச், செந்நெற் பழனக் கழனி தொறும் திரை உலாவு கடற் சேர்ப்ப! புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப் புண்கள் என்னைக் காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ! 92. வாரித் தாள நகைசெய்து, வண்செம் பவள வாய்மலர்ந்து, சேரிப் பரதர் வலைமுன்றில் திரை உலாவு கடற் சேர்ப்ப! மாரிப் பீர்த்து அவர் வண்ணம் மடவாள் கொள்ளக், கடவுள் வரைந்து ஆர்இக் கொடுமை செய்தார்? என்று அன்னை அறியின் என் செய்கோ! 93. புலவுற் றிரங்கி யதுநீங்கப் பொழில் தண்டலையில் புகுந்துதிர்ந்த கலவைச் செம்மல் மணங்கமழத் திரை உலாவு கடற் சேர்ப்ப! பலவுற்று ஒருநோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ! வேறு 94. இளையிருள் பரந்ததுவே! எற்செய்வான் மறைந்தனனே! களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே! தளை அவிழ் மலர்க்குழலாய் தணர்ந்தார் நாட்டு உளதாங்கொல்? வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருண்மாலை. 95. கதிரவன் மறைந்தனனே! காரிருள் பரந்ததுவே! எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே! புதுமதிபுரை முகத்தாய்! போனார் நாட்டு உளதாங்கொல்? மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள்மாலை. இளங்கோ அடிகள். 9. அருட்பா 96. ஆ! வா! வென் றெனையாட்கொண்டு அருளியதெள் அமுதே அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே சாவாத வரம் எனக்குத் தந்தபெருந் தகையே! தயாநிதியே! சிற்சபையில் தனித்த பெரும்பதியே! ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும் பேர் அன்பே! உள்ளபடி என் அறிவின் உள்ளபெருஞ் சுகமே! நீவாவென் மொழிகள் எலாம் நிலைத்த பயன்பெறவே நித்திரைதீர்ந்தேன் இரவு நீங்கிவிடிந் ததுவே. 97. ஆராலும் அறிந்துகொளற்கு அரியபெரும் பொருளே! அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! காராலும், கனலாலும், காற்றாலும், ககனக் கலையாலும் கதிராலும், கடலாலும், கடல்சூழ் பாராலும், படையாலும், பிறவாலும், தடுக்கப் படுதல் இலாத் தனிவடிவம் எனக்களித்தபதியே! சீராலும், குணத்தாலும், சிறந்தவர்சேர் ஞான சித்திபுரத் தமுதே! என் நித்திரை தீர்ந்ததுவே. 98. ஆதி அந்தம் தோற்றாத அரும்பெருஞ் சோதியனே! அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே! ஊதியந்தந்துஎனையாட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே! இந்தச் சாதி, யிந்தமதம், எனுவாய்ச் சழக்கை யெலாந்தவிர்த்த சத்தியனே! உண்கின்றேன் சத்தியத்தெள் அமுதே 99. அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சையெலாம் அளித்த அம்மே! என அப்பா! என் ஐயா! என் அரசே! துச்சஉல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே! உச்சநிலை நடுவிளங்கும் ஒரு தலைமைப் பதியே! உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே! இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும் எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையும்தந் தனையே! 100. அன்புடைய என் அறிவே! அருளுடைய பொருளே! அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! துன்புடைய உலகர் எலாம் சுகம் உடையர் ஆகத் துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க, இன்புடைய போருள் இங்கு எனைப்பொருள் செய்து அளித்த என் அமுதே! என் உறவே! எனக்கினிய துணையே! என்புடை நீ இருக்கின்றாய்! உன்புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன்! இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே 101. அடுக்கியபேர் அண்டமெலாம் அணுக்கள் என விரித்த அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! நடுக்கியவென் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா ஞான அமுது அளித்துலகில் நாட்டியபேர் அறிவே! இடுக்கியகைப் பிள்ளை என இருந்த சிறி யேனுக்கு எல்லாஞ்செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே! முடுக்கிய அஞ்ஞானாந்த காரமெலாம் தவிர்ந்த முத்தர் உளத்தே முளைத்த கத்தபரஞ் சுடரே! 102. ஆங்காரந் தவிர்த்தவருள் ஓங்காநின் றவனே! அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! ஓங்கார நிலைகாட்டி, அதன்மேல் உற்று ஒளிரும் ஒருநிலையும் காட்டி, அப்பால் உயர்ந்த தனிநிலையில் பாங்காக எத்திஎந்தப் பதத்தலைவ ராலும் படைக்கஒண்ணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே! தூங்காது பெருஞ்சுகமே சுகித்திட இவ்வுலகைச் சுத்த சன்மார்க்கம் தனிலே வைத்தருள்க விரைந்தே! 103. ஆடகப் பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும் அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என்னுளத்தே எழுதுவித்த என் உரிமைப் பதியே! பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப் பயன்பெறநல் அருள் அளித்த பரம்பரனே! மாயைக் காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த கருணையனே! சிற்சபையில் கனிந்தநறும் கனியே. 104. அடியாதென் றறிந்துகொளற்கு அரும்பெரிய நிலையே! அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! முடியாதென் றறிந்திடற்கு முடியாதென்றுணர்ந்தோர், மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே! கடியாத பெருங்கருணைக் கருத்தே! என் கருத்தில் கனிந்து கனிந்து இனிக்கின்ற கனியே! என் களிப்பே மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே! மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே! 105. அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே! அம்மே! என் அப்பா! என் ஐயா! என் அரசே! மனந்தரு வாதனை தவிர்ந்தோர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே! என் வாட்டம் எலாம் தவிர்த்தே இனந்தழுவி என் உளத்தே இருந்துயிரில் கலந்து, என் எண்ணம் எலாம் களித்தளித்த என் உரிமைப்பதியே! சினம் தவிர்ந்துஎவ் உலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே! இராமலிங்க சுவாமி 10. இந்திரசித்து இறந்தபோது மண்டோதரி புலம்பல் கம்பராமாயணம் 106. தலையின் மேற் சுமந்த கையள், தழலின் மேல் மிதிக்கின் றாள்போல் நிலையின் மேல் மிதிக்குந் தாளன், நேசத்தால் நிறைந்த நெஞ்சள் கொலையின் மேற் குறித்த வேடன் கூர்ங்களை உயிரைக் கொள்ள மலையின் மேல் மயில் வீழ்ந் தென்ன மைந்தன் மேல் மறுகி வீழ்ந்தாள். 107. உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; உயிரிலள் கொல்லோ என்னப் பெயர்த்திலள் யாக்கை; ஒன்றும் பேசலள்; விம்மி யாதும் வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல அயர்த்திலள்; அரிதில் தேறி வாய்திறந்து அரற்றல் உற்றாள். 108. கலையினால் திங்கள் என்ன வளர்க்கின்ற காலத்தே உன் சிலையினால் அரியை வெல்லக் காண்பதோர் தவமும் செய்தேன். தலையிலா ஆக்கை காண எத்தவம் செய்தேன்; அந்தோ! நிலையிலா வாழ்வை இன்னும் நினைவெனோ நினைவில் லாதேன். 109. அய்யனே அழகனே! என் அரும்பெறல் அமிழ்தே! ஆழிக் கய்யனே! மழுவனே! என் றவர் வலி கடந்த கால மொய்யனே! முளரி யன்ன நின்முகங் கண்டி லாதேன் உய்வனே? உலகம் மூன்றுக் கொருவனே! செருவ லோனே! 110. தாளரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில் கோளரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி மாட முன்றலின் முறையின் ஓடி மீளரு விளையாட்டு இன்னும் காண்பெனோ? விதியி லாதேன். 111. அம்புலி! அம்ம! வா! வென்று அழைத்தலும், அவிர்வெண் திங்கள் இம்பர்வந் தானை, அஞ்சல் எனவிரு கரத்தில் ஏந்தி வம்புறு மறுவைப் பற்றி முயல்என வாங்கும் வண்ணம் எம்பெருங் களிறே! காண ஏசற்றேன் எழுந்தி ராயே! 112. முக்கணான் முதலி னோரை உலகொரு மூன்றி னோடும் புக்கபோர் எல்லாம் வென்று நின்றவென் புதல்வன் போலாம் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன்; வான மேரு உக்கிட அணுஒன் றோடி உதைத்தது போலும் அம்மா! 113. பஞ்செரி உற்ற தென்ன அரக்கர்தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்ட தில்லை! அஞ்சினேன்! அஞ்சினேன்! இச் சீதை என்று அமிழ்தாற் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத் தகையன் அன்றோ? கம்பர் 11. நளவெண்பா நளன் தமயந்தியைப் பிரிதல் 114. காரிகை தன் வெந்துயரம் காணாமல் நீத்தந்தக் கூரிருளில் போவான் குறித்தெழுந்து - நேரே இருவர்க்கும் ஓருயிர்போல் எய்தியதோர் ஆடை அரிதற்கு அவன் நினைந்தான் ஆங்கு. 115. எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன் கண்ணியதை அறிந்து காய் கலியும் - பண்ணினுக்குக் கேளான தேமொழியை நீக்கக் கிளர் ஒளிசேர் வாளாய் மருங்கிருந்தான் வந்து. 116. ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக முற்றும் தன் அன்பை முதலோடும் - பற்றி அரிந்தான்; அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில் தெரிந்தான்; இருந்தான்; திகைத்து. 117. போயொருகால் மீளும்; புகுந்தொருகால் மீண்டேகும்; ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல் கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம். 118. தீக்கா னகத்துறையும் தெய்வங்காள்! வீமன்தன் கோக்கா கலியைக் குறிக்கொண்டின்! - நீங்காத காதல் அன்பு மிக்காளைக் காரிருளில் கைவிட்டு இன்று ஏதிலன் போல் போகின்றேன் யான் 119. தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி மேருவரைத் தோளான் விரவார்போல் - கூர்இருளில் செங்கா னகஞ்சிதையத் தேவியைவிட்டு ஏகினான் வெங்கா னகந்தனிலே வேந்து. தமயந்தி நளனைக்காணாது வருந்துதல் 120. நீல மளவே நெகிழ நிரைமுகத்தின் கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே எங்குற்றாய். என்னா இனவளைக்கை நீட்டினாள் அங்குத் தான் காணாது அயர்ந்து. 121. உடுத்த துகில் அரிந்தது ஒள் தொடியாள் கண்டு, மடுத்த துயிலான் மறுகி - அடுத்தடுத்து மன்னே! என அழைப்பாள் மற்றும் அவனைக்காணாது என்னே யீஃது என்னென்று எழுந்து. 122. வெய்ய தரைஎன்னும் மெல் அமளியைத் தடவிக் கையரிக்கொண்டு அவ்விடத்துங் காணாமல் - ஐயகோ! என்னப் போய் வீழ்ந்தாள் இனமேதி மென்கரும்பைத் தின்னப்போம் நாடன் திரு. 123. அழல்வெஞ் சிலைவேடன் அம்புருவ ஆற்றாது உழலும் களிமயில்போல் ஓடிக் - குழல்வண்டு எழுந்தோட வீழ்ந்தாள் இருகுழைமேல் கண்ணீர்க் கொழுந்தோட வீமன் கொடி. 124. வான் முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல் தானும் சூழலும் தனிவீழ்ந்தாள் - ஏனம் குளம்பால் மணிகிளைக்கும் குண்டுநீர் நாடன் இளம்பாவை கைதலைமேல் இட்டு. 125. தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேர்ஏறி வாவென்று அழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம். 126. வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன் தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி காட்டுவான் போல்இருள் போய்க்கைவாங் கக்கானூடே நீட்டுவான் செங்கரத்தை நின்று 127. செய்தபிழை ஏதென்னும்; தேர்வேந்தே என்றழைக்கும் எய்து துயர்க்கரை காணேன் என்னும்; - பையலே என் என்னாது என் என்னும் இக்கானின் விட்டேகும் மன்என்னா வாடும் மயர்ந்து. 128. அல்வியந்தார் மார்பன் அடித்தா மரை அவள்தன் நல்லுயிரும் ஆசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள் வேந்தனே! என்னா விழுந்தாள் விழிவேலை சாய்ந்த நீர் வெள்ளத்தே தான். 129. வெறித்த இளமான்காள்! மென்மயில்காள் இந்த நெறிக்கண் நெடிதூழி வாழ்வீர்! - பிரித்தெம்மைப் போனாரைக் காட்டுதிரோ? என்னாப் புலம்பினாள் வானாடர் பெற்றிலா மான். புகழேந்தியார். 12. நைடதம் நளனும் தமயந்தியும் ஒன்று சேர்தல் 130. விண்டமென்மலர் நறவினை விளரிஅம் சுரும்பர் உண்டு துஞ்சுதார் நிடதர்கோன் தேர்கடிது ஒட்டி மண்டு தீம்புனல் அகழிசூழ் மாமதிற் குடுமிக் கொண்டல் கண்படு குண்டின புரத்தில்வந்தடைந்தான் 131. சில்லி அம்தடம் தேர்வரு கம்பலை கேளா, ஒல்லை இத்திறம் தேர்விட நளன் அலாது ஒருவர் வல்லரோ? வெனமனத்திடை எண்ணிமற்று அனையோன் அல்லனேல்உயிர் துறப்பன் என்று உன்னினள் அணங்கே 132. மருவு பாகனைத் தேரொடும் வாயிலின் நிறுவி, இருது பன்னன் அவ் வீமன் மாட்டு ஏகலும் எதிராப், புரிய யாவையும் புரிந்து, பல் காவதம் போக்கி உருவப் பூணினாய் வந்தமை எவன் கொல்? என்று உரைத்தான். 133. ஈங்கடைந்தது மன்னநிற் காணிய; எனலும், வீங்கு தோளினான் இனியநன் மொழிபல விளம்பிப் பாங்குளார் தமை உறையுள் ஒன்றமைக் கெனப்பணிப்ப ஆங்குவிண்ணவர்நகரினும் விழுமிதொன்று அமைத்தார். 134. இருது பன்னன், வேந்து அருளினால் அவ்வயின் எய்தி அரசர் யாவரும் தொக்கிலர் ஆய்வளைப் பணைத்தோள் விரைசெய்கோதை தன் சுயம்வரம் என்னவேதியன் முன் உரைசெய் மாற்றம் மற்று என்கொல்? என்று அயிர்த்தனன் உறைந்தான் 135. சாந்தம் மெய்யணி தமயந்தி, தோழியை நோக்கிப் பேரந்த மன்னவன் பொற்றடந் தேரிடைப் பிணித்த கூந்தன் மாவிடு சாரதி கொற்றவேல் நளனாம். வேந்தனோ? என உணர்ந்திவண் வருகென விடுத்தாள். 136. கொங்கு வாய்மடுத்து இனவண்டு கூட்டுணும் கூந்தல் திங்கள் வாண்முகத் தெரிவைதன் ஏவலில் திறம்பா மங்கை எய்தி, மற்று யாவன்? நீ எத்தொழில் வல்லை? இங்கு வந்தவாறு என்? என வாகுவன் இசைப்பான். 137. விரிமலர்க்குழல் தமயந்தி சுயம்வரம் வேட்ட இருது பன்னன்மான் தேர்விடும் வாகுவன் என்பேர்; புரிவல் வெந்தழல் இன்றியும் மடைத்தொழில்; புனல் அற்று உருகு பாலையில் தீம்புனல் தருவல்; என்று உரைத்தான். 138. இன்ன விஞ்சைகள் நளன் அலாது அறிகுநர் இல்லை; அன்னவன் தரக் கொண்டனை போலும்; அவ் அரசன் மன்னி வாழ்வது எந்நகர்வயின்? வகுத்துரை! என்றாள் பொன் அவாஞ்சுணங்கு அரும்பிய மெய்யடைப்பூவை. 139. மேய விஞ்சையோர் நளனொடும் கற்றிலன்; விறல்வேல் சேய் அனான்இனிது உறைவதுஇவ் விடம்எனத் தெருளேன்; தூய கற்பினார் காதலர் துறப்பினும் மற்றோர் நாயகற் பெற நினைவர்கொலோ? என நவின்றான். 140. இன்ன கூறலும், மடவரல் கதும்என ஏகி, மின் அனாள் உடன் கேட்டன யாவையும் விளம்பி, அன்னவன் தனது உருவலான் மொழிகுவது அனைத்தும் முன்னின் நம் இறை மொழிவதே போன்ம்என மொழிந்தாள். 141. மொழிதல் கேட்டலும், மொய்குழல், வாலரி உதவி, அழல் இலாது இவை அடுவதுகாண்டி என்று அறையக், குழைகொள் வாண்முகக் கொம்பனாள் அவனுழைக் குறுகி, இழை கொள் பூண்அணி சொற்றவாறு இசைத்தனள்ஈந்தாள். 142. ஈந்த வால்அரிப் பெய்த பொற் குழிசி தீஇன்றி ஆய்ந்த கேள்வியான் தொடுதலும் அடிசிலாய் அமைய, வேய்நத் பூங்குழல் கண்டுபோய் வியப்புடன் குறுகாச் சாய்ந்த நுண்ணிடைத் தமயந்தி தன்னொடு மொழிந்தாள். 143. அழலும் நீரும் இன்று அமிழ்தெனஅடுதொழில்கேட்டுக் குழையும் நெஞ்சினள், இன்னுயிர்க் கொழுநன் என்றெண்ணி, விழைவி னோடுதன் மக்களை அவனுழை விடுத்தாள்; மழலைமென்மொழி மக்களும் மன்னன் மாட்டு அடைந்தார். 144. அடைந்த மக்களைக் காண்டலும் அழவிடு மெழுகின் உடைந்தது உள்ளம்; நீர் உற்றிருந்து ஒழுகின நெடுங்கண்; தொடர்ந்த மும்மலம் முருக்கி, வெம்பவக்கடல் தொலையக் கடந்து ளோர்களும், கடப்பரோ? மக்கள் மேற் காதல். 145. மழலை மென்மொழி மக்களைக் காண்டலும், மன்னன் அழுது துன்புறல், ஆய்வளைத் தோழிகண்டு ஏகித் தொழுது சொற்றலும், கொழுநன்ஆம் என்பது துணிந்து முழுவல் அன்புடைத் தாயொடு தந்தைபால் மொழிந்தாள். 146. மழைத் தடங்கணாள் மன்னவன் பணியினால் வேந்தை அழைத்து வம்என ஆய்வளைத் தோழியை விடுப்பக், குழைத்த பூங்குடி அன்னவள் வாகுகற் குறுகித் தழைத்த காதலால் வருகென மன்னனும் சார்ந்தான். 147. மறுவில் கற்பினள் மானவேல் மன்னவன் வரலும் குறைவில் அன்பினன்; பிழையிலள்; கண்படை கொள்வாள்; இறையும் நீர்ப்பரு மனைவியை இருள்படு கானில் அறன் இழுக்குறா நளன் அலது யாவரே அகல்வார்? 148. என்று கண் கணீர் இடையறாது ஒழுகிட மாசு துன்று மேனியும் துனிபடும் ஆடையும் ஆகி நின்ற மாதினை நோக்கினன்; நெட்டுயிர்ப்பு எறிந்து குன்று இரண்டென வீங்குதோள் கொற்றவன் கூறும். 149. அலர் அணிப்பகம் கொடிஅனாய்! அரை இருட்போதில் கலி வயத்தனாய்க் காட்டிடை நீத்தனன் நின்னை; நலியும் வெங்கலி தணந்த பின் நண்ணினன் நின்பால்; மெலியல்! மீட்டும் ஒர் சுயம்வரம் வேட்டதென்? என்றான். 150. நிடதர் கோவினை அயோத்தியின் நேடினன் கண்டேன் படர் உறேல்என வந்தொரு மறையவன் பகரக் கடிதின் எய்துவான் மணவினை இழைத்தனன்; கருத்தில் அடியனேன் தனை ஐயுறேல் எனமொழிந்து அழுதாள். 151. முன்னை நல்உருக் காட்டென முற்றிழை மொழியப் பன்னகத் திறை உதவிய பூந்துகில் பரிவால் மன்னர் ஏறனான் புனைதலும் மாணுரு வெய்திக் கன்னல் வேளினும் கவினலம் கனிந்திட நின்றான். 152. நின்ற மன்னனை நிரைவளைக் கைம்மலர் கூப்பி மன்றல் அம்குழல் மடவரால் வணங்கினள் நிற்படு வென்றி வேலுடை விதர்ப்பர்கோன் விளைந்தமை கேட்டுத் துன்று தன்கிளை மன்னவர் சூழ்வரப் புகுந்தான். அதிவீரராம பாண்டியன். 13. மனோன் மணீயம் மனோன்மணியின் கன்னிமாடத்தில் ஜீவகன், மனோன் மணி, செவிலி, முதலியவர்கள் இருக்கின்றனர். அப்பொழுது சுந்தரமுனிவர் வருகிறார். ஜீவகன் (முனிவரைப் பார்த்து) 153. வணங்குதும் உன்றன் மணம்கமழ் சேவடி இருந்த தருளுதி எம் இறைவ! பரிந்து நீ வந்தது எம் பாக்கியப் பயனே சுந்தர முனிவர் 154. தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். ஏதோ மனோன்மணி! ஓதாய் வேறு பாடாய் நீ விளங்கு மாறே. மனோன்மணி 155 கருணையே உருவாய் வரு முனீசுரரே எல்லாம் அறியும் உம்பால் சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. செவிலி (மனோன்மணியை நோக்கி) 156. கரும்பே; யாங்கள் விரும்பும் கனியே! முனிவர் பாலும் நீ ஒளிப்பையேல் இனி இங்கு யார்வயின் உரைப்பாய்! ஐயா! இது என்? செவிலி (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகலனாக்கொள் தேசிக வடிவே! செப்புமாறு அறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்று இரா முதலாத் தோற்றும் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை; நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டும் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே இருப்பள்; தனியே சிரிப்பள்; விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த்து அழுவள்; இங்ஙனம் இருக்கில் எங்ஙனம் ஆமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி இதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியாளாயின் எவருடன் இனிமேல் இசைப்பள்? தவஉரு வாய்வரு தனிமுதற் சுடரே! சுந்தர முனிவர் (ஜீவகனை நோக்கி) 157. குழவிப் பருவம் நழுவும் காலை களிமிகு கன்னியர் உளமும் வாக்கும் புளியம் பழமும் தோடும் போலாம் காதல் வெள்ளம் கதித்துப் பரந்து மாதர்! உள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச்சு எறியில், எண்ணம் எங்ஙனம் நண்ணும் நாவினை! தாதா அன்பு போதா தாகும் காலம் கன்னியர்க்கு உளதெனும் பெற்றி சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் படர்கொடி பருவம் அணையில் நட்ட இடமது துறந்து நல் இன்பம் எய்த அருகுள தருவை அவாவும். அடையின் முருகவிழ் முகையும் சுவைதரு கனியும் அகமகிழ்ந்து அளித்து மிகவளர்ந்து ஓங்கும் இலையெனில் நலமிழந்து ஒல்கும். அதனால் நிசிதவேல் அரசா டவியில் உசிதமாம் ஒருதரு விரைந்து நீ உணரே ஜீவகன் 158. எங்குல குருவே! இயம்பியது ஒவ்வும். எங்குளது இக்கொடிக்கு இசைந்த பொங்கு எழில் பொலியும் புரையறு தருவே? சுந்தர முனிவர் 159. உலகுள மற்றை அரசெலாம் நலமில் கள்ளியும் கருவேல் காடுமாய் ஒழிய, ஜகமெலாம் தங்க நிழலது பரப்பித் தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை இலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து, புகழ்மணம் கமழும் குணம்பல பூத்து, துணிவரும் உயிர்க்குள துன்பந் துடைப்பான் கனியுங் கருணையே கனிவாய்க் காய்த்து, தருமநாடு எனும் ஒரு நாமங்கொள், திருவாழ் கோடாம் சேரதேசத்துப் புருடோத்தமன் எனும் பொருவிலாப் புருடன் நீங்கில் இல்லை நினது பூங்கொடி படரப் பாங்காந் தருவே. ஜீவகன் 160. நல்லது, தேவரீர் சொல்லியபடியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே சுந்தர முனிவர் 161. யோசனை வேண்டியதன்று, நடேசன் என்றுளன் ஒருவன், ஏவில், சென்று அவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. ஜீவகன் 162. கெடலறு சூழ்ச்சிக் குடிலனோடு உசாவி சுந்தர முனிவர் (ஜீவகன் மேற்கூறியதை முடிப்பதற்குள்) அரஹர குருபர கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற பாவையை நீயே! காவாய் பசுபதே! (என்று சொல்லிக்கொண்டு சுந்தரமுனிவர் போய்விட்டார்.) ஜீவகன் 163. தொழுதோம்; தொழுதோம். செவிலி அவ் அறைக்கு எழுதுங் கருவிகள் கொணராப் பழுதிலாக் குடிலற்கு உணர்த்துவம் பரிந்தே. சுந்தரம் பிள்ளை. M.A., 14. மூர்க்க நாயனார் புராணம் பெரியபுராணம் 164. மன்னிப் பெருகும் பெருந்தொண்டை வளநா டதனில், வயல் பரப்பும் கன்னித் திலவெண் திரைப்பாலி நதியின் வடபால், நலங்கொள் பதி அன்னப் பெடைகள் புடை வாவி அலர்புக் காட அரங்கினிடை மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவிற் காடும் வேற்காடு. 165. செம்பொற் புரிசைத் திருவேற்கா (டு) அமர்ந்த செய்ய சடைக்கற்றை நம்பர்க்(கு), உம்பர்க்(கு) அமுதளித்து நஞ்சை அமுது செய்தவருக்(கு). இம்பர்த் தலத்தில் வழியடிமை என்றுங் குன்றா இயல்பில் வருந் தம்பற் றுடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்துள்ளார். 166. கோதின் மரபில் பிறந்துவளர்ந் (து) அறிவு கொண்ட நாள் தொடங்கி, ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருளென்(று) அறிந்தரனார் காதல் அடியார்க்(கு) அமுதாக்கி அமுது செய்யக் கண்டுண்ணும் நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார், 167. தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து மேய அடியார் தமைப்போற்றி விருப்பால் அமுது செய்வித்தே, ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி, அன்பு மிக எயுமாறு நாடோறும் இனைய பணிசெய்(து) இன்புற்றார். 168. இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள, முன்னம் உடைமை யான பொருள் முழுதும் மாள, அடிமையுடன் மன்னு காணி ஆனநிலம் மற்றும் உள்ள திறம் விற்றே அன்னம் அளித்து மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார். 169. அங்கண் அவ்வூர் தமக்கொரு பற்(று) அடியார் தங்கட் கமுதாக்க எங்குங் காணா வகை தோன்ற, இலம்பா டெய்தி, இருந்தயர்வார் தங்கும் வகையால் தாம் முன்பு கற்ற தன்மை நற்சூதால் பொங்கு பொருளாக்கவும், அங்குப் பொருவார் இன்மையினிற் போவார். 170. பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமருந் தானங்கள் உற்ற அன்பால் சென்றெய்தி, உருகும் உள்ளத்தொடும் பணிந்து, கற்ற சூதால் நியதியாம் கடனும் முடித்தே கருதார் ஊர் செற்ற சிலையார் திருக்குடந்தை அடைந்தார் வந்து சிலநாளில். வேறு 171. இருளாரு மணிகண்டர் அடியார்க்கின் அமுதளிக்கப் பொருளாயம் எய்துதற்குப் புகழ்க்குடந்தை அம்பலத்தே உருளாயச் சூதாடி உறுபொருள்வென் றனநம்பர் அருளாகவே கொண்டங் கமுதுசெய்வித் தின்புறுவார். 172. முற்சூது தாம்தோற்று முதற்பணையம் அவர்கொள்ளப் பிற்சூது பலமுறையும் வென்றுபெரும் பொருளாக்கிச், சொற்சூதால் மறுத்தாரைச் சுரிகையுரு விக்குத்தி; நற்சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நானிலத்தில். 173. சூதினில்வென் றெய்துபொருள் துரிசற்ற நல்லுணர்வில் தீதகல வமுதாக்கு வார்கொள்ளத் தாம் தீண்டார் காதலுடன் அடியார்கள் அமுதுசெயக் கடைப்பந்தி ஏதமிலா வகைதாமும் அமுதுசெய்தங்(கு) இருக்கும் நான். 174. நாதன்றன் அடியார்க்கு நல்லடிசில் நாள்தோறும் ஆதரவி னால்அமுது செய்வித்து அங்கருளாலே ஏதங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற் பின் பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம்புக்கார். சேக்கிழார் 15. திரௌபதி மணம் வில்லிபாரதம் 175. வில்லாண் மையினால் வெங்கருப்பு வில்லோன் தனக்கே நிகர் என்னப் பல்லார் புகழும் பான்மையினால் பதினெண் புவிக்கும் பதியாய எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன்அமுதச் சொல்லாய்! நல்லாய்! மென்பூவாய்! தோகாய்! பாவாய்! திரௌபதியே! 176. இவரில் தனது தோள்வலியால் அரியே றன்ன வெழுந்திருந்தத் தவரில் புரிநாண் உறவேற்றித் தழல்கால் முனைவெஞ் சாயகத்தால் பவரில் செறிய நிரைத்துருளும் பல்வாய்த் திகிரிப் பயில் இலக்கைக் கவரிற் செழுந்தார் புனைந்தவனைக் கைக்கொண் டிடுநீ! கடி தென்றார். வேறு 177. முத்தநாகைப் பவளவிதழ்க் குளிர்வெண் திங்கள் முகத்தாளைக் கைத்தாயர் மொழிந்த காலைச், சித்திரமொத் துணர்வழிந்து தத்தம் பைம்பொன் திகழ்அரியா சனத்திருந்தார் சிற்சில வேந்தர்; அத்தனுவின் பெருமையையும் இலக்கத் துள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி எத்தனை எத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்றெழுந்திருந்தார் யானை போல்வார் 178. தனுவெடுத்து நாண்பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரைத் தடுத்து, வேதப் பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்விப் பார்ப்பனமாக் களினிடையே பாண்டு மைந்தர் அனுவுருக்கொண் டுருமாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோ டருளிக்செய்தான் மனுமுறைக்கு வரம்பராகி வருத்தம் வீட மாநில மீது அவதரித்த வாசுதேவன். 179. பலரும் உடன் அகங்கரித்து மேருசார் அப் பாரவரி சிலையின்நிலை பார்த்து மீண்டார்; பலரும் ஒரு கையிற்பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனைக் குறித்து மனம் பதைக்கப்போனார். பலரும்மலர்க் கைப்படுத்திப் பெயர்க்க மாட்டார் பணைத்தோள் நொந் தமையும்எனப் பயந்து நின்றார்; பலரும் எடுத் தணிமணி நாண் பூட்ட வாராப் பரிசொடுமற் றதன்வலிகை பகர்ந்தே விட்டார். 180. வல்லியம்போல் நடந்துதனு விருகை யாலும் வாரிஎடுத் தெதிர்நிறுத்தி, மல்லல் வாகுச் சல்லியனும் நாணேற்ற முடியா தந்தத் தனுவுடனே தன்தனுவும் தகர வீழ்ந்தான்; வில்லியரின் முன்னெண்ணத் தக்க வின்மை வேந்தடுபோர்ச் சராசந்தன் வில்வேதத்தில் சொல்லியவா றெடுத்தூன்றி மற்றைக் கையால் தொல்வலி நாணியும்எடுத்துத் தோளும் சோர்ந்தான். 181. பூகதனா கியவன்றே பகைவர் எல்லாம் போற்றவளர்ந் துலகாளப் புனைந்த மௌலி மாகதனும் வில்லெடுத்து வரிநாண் வில்லின் மார்பளவும் போக்கினான்; வன்போர் நீலன் சாகதன் என் றவைதுதிக்க நெடுநாண் கொற்றத் தனுவொரு சாண் எனக்கொணர்ந்தான்; சாணேயல்ல ஏகதனு நால்விரல் ஒன் றுரைக்க நாணி வீக்கினான் வலம்புரித்தார் வேந்தர் வேந்தே. 182. கலைவருத்தம் அறக்கற்ற கன்னன் என்னும் கழற்காளை, அரன் இருந்த கயிலை என்னும் மலைவருத்தம் அறஎடுத்த நிருதன் என்ன மன் அவையின் வலியுடனே வந்து தோன்றி, நிலைவருத்தம் அறநின்று, பரிய கோல நீள்வரி நாண் மயிர்க்கிடைக்கீழ் நின்றதென்ன சிலை வருத்தம் அறவளைத்து வளைந்த வண்ணச் சிலைக்கால்தன் முடித்தலையைச் சிந்த வீழ்ந்தான். 183. அரவநெடுங் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும்அங் கொருதனுவுக்கு ஆற்றார் ஆகி உரவுமெலிந் தெழின்மாழ்கிச், செயல்வேறின்றி, உள்ளம் அழிந் திருந்ததற் பின், உரும்ஏறென்னக் கரவுடன் அந் தணர்நாப்பண் இருந்த கொற்றக் கருமுகில்வா கனன்புதல்வன், கரிய மேனி இரவிகுலச் சிறுவனைப்போல் எழுந்து மன்றல் இளங்கொடிதம் முனைநோக்கி இயம்பினானே. 184. மன்மரபில் பிறந்திருதோள் வலியால் இந்த மண்ணாளும் அவர்க்கன்றி மறைநூல் வாணர் தொன்மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையில்? இளந்தோகை; என்னத் தன்மரபுக் கணிதிலகம் ஆன வீரன், தகவன்றோ? மன்றலுக்குத் தாழ்வோ? என்றான். வில்மரபில் சிறந்தநெடு வில்லை ஈசன் மேருகிரி எடுத்ததென விரைவில் கொண்டான். 185. கிளர்மகுட வயவேந்தர் நாண்கள் எல்லாம் கீழாகத், தனிநெடுநாண் கிளர ஏற்றித், தளர்வறுசா யகம் தொடுத்துக், கற்றோர் யாரும் தனுநூலுக் காசிரியன் தானே யென்ன, உளர்திகிரிச் சுழல்இலக்கை அவையோர் தங்கள் ஊக்கமுடன் விழ எய்தான் உரவுத் தோளான்; வளரும்அருந் தவவேள்வி முனிவர் ஆர்த்தார்; வாசநறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார். 186. தாம் சாரற்கு அரியதனு வளைத்தான் என்று தரணிபர்தம் முகங்கருகத், தனுவி னோடும் பூஞ்சாரல் மணிநீல கிரிபோல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம்என் றெண்ணி பாஞ்சாலர் பதிகன்னி இருதன் செங்கண் பங்கயத்தால் பாங்காகப் பரிந்து நோக்கித், தேஞ்சார நறுங்கழுநீர்ச் செய்ய தாமம் செம்மணிகால் அருவிஎனச் சேர்த்தினாளே. 187. அந்தர துந்துபி முழங்கச், சங்கம் ஆர்ப்ப, ஆனக துந்துபி முதல்வன் ஆதியாக வந்திருந்த பேரவையை மதியான் ஆகி, மாலையிடு பசுஞ்செம்பொன் மாலையோடும் சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர்த் தான் வளைத்த தடஞ்சிலைகைத் தலத்தில் ஏந்தி, இந்திர சூனுவும் எழுந்தாங்கு ஏக லுற்றான் இருபுறமுந் துணைவர் வர இணையிலாதான். 188. பார்ப்பான்வந் தொரு கோடி அரசைக் சேரப் பரிவித்துப் பாஞ்சாலன் பயந்த தெய்வச் சீர்ப்பாவை தனைவலியால் கொண்டு போகச் செயலின்றி இருந்தீர்; என் செய்தீர்; என்று வேர்ப்பாடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன்கழற, வெகுண்டு மேல் மேல் ஆர்ப்பாகக் கொதித்தெழிந்த(து) உகாந்த காலத்(து) ஆர்க்கும்மக ராலயம்போல் அரசர் ஈட்டம். 189. முருத்துவாள் நகைத்துவர்வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்திஅமர் முருக்குமாறு மருத்துவான் திருமகனும், மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார்; மறையோர் உள்ளார் உருத்துவாய் மடித்தெழுந்து கோகு தட்டிட்டு ஊன்றியதண் டெதிர்ஒச்சி உடன்ற வேந்தர் கருத்துவார் தகதெருக்கொண்(டு) ஒட ஓடிக் கையுரங்காட் டினர் தளர்த்த கனலே அன்னார். 190. மிகைத்தமுனி வார்முலைந்த உறுதி நோக்கி, வென்றெடுத்த லில்தடக்கை விசயன் சற்றே நகைத்து நகைத்து, அவர் அவரை விலக்கி, என் முன் நமன்வரினும் பிளப்பல்; என நவிலா நின்றான்; புகைத்தகனல் விழிக்கன்னன் தருக்கால் எள்ளிப் பூசுரன் என்று அவமதித்துப் புனைவில் வாங்கி உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒருகணையால் உடன்பிளந்தான் உரும் ஏறு ஒப்பான். 191. குன்றால்மெய் வகுத்தனைய வீமன் தன் மேல் கொல் இயல்செய் சல்லியனைக் குத்தி வீழ்த்திக், கன்றால் முன் விளவெறிந்த கண்ணன்என்னக் கால்முடியோடு உறவளைத்து வான்மேல் வீசி, நின்றான்; மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சொடிந்தான்; இருவரும்முன் நில்லார் ஆகி வென்றாலும் தோற்றாலும் வசையே வெம்போர் வேதியரோடு உடற்றல்என மீண்டு போனார். 192. வண்ணநூல் முனிவர் அல்லர்; மருத்துவான் மருத்து நல்கும் அண்ணல் அம் குமரர் ஆம்; என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் கண்ணனால் விலக்கப் பட்டுக் கடிநகர் தோறுந் தங்கள் எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ. 193. அன்றிலக் கெய்த கோவும், துணைவரும் ஆன வெம்போர் வென்றுகொற் றவையோ டொக்கும் மின்னிடைப் பொன்னும் தாமும் சென்றுமட் கலஞ்செய் கம்மி செழுமனை முன்றில் எய்தி, இன்றுபெற் றனம்ஓர் ஐயம்; என்னசெய்வ திதனை என்றார். 194. உள்ளிருந்(து) அன்னை, மைந்தர் உரைத்தசொல் கேட்டுத் தேவர் தெள்ளமுது என்ன, மக்காள்! சேரநீர் அருந்தும் என்னாப் புள்ளினம் ஒடுங்கும் மாலைப் பொழுதிவள் புறம்பர் எய்திக் கள்ளவிழ் கூந்த லாளைக் கரும்பென விரும்பிக் கண்டாள். 195. என் நினைந்து என்சொன்னேன்! மற்று என் செய்தேன்? என்று சோரும் அன்னையை வணங்கி, நின்சொல் ஆரணப் படியதாகும்; நின்நினைவு அன்றால்! எங்கள் நெஞ்சிலும் நினைவுண்டு; என்றான் தன் நிகர் இலாத கேள்வி சான்றசீர்த் தருமன் என்பான். 196. பார்அனைத் தினும்தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும் வீரனைப் பயந்த பாவை விதிவழி இதுவென் றெண்ணி மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்தக் காரிருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள். 197. பொற்றொடிக் கனக மாலைப் பொலங்குழைப் பூவை தன்னைப் பெற்ற பூபதிஅவ் வீரர் பெருமித வாய்மை எல்லாம் ஒற்றரால் உணர்ந்து, நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி மற்றைநாள் வந்து கொற்ற வாண்மனை கொண்டு புக்கான். வில்லிபுத்தூரார். 16. கையடைப்படலம். கம்பராமாயணம் 198. நனைவரு கற்பக நாட்டு நன்னகர் அனைவரும் அணைதர அயிர்க்கும்; சிந்தையால் நினையவும் அரியது; விசும்பின் நீண்டதோர் புனைமணி மண்டபம் பொலிய எய்தியே, 199. தூயமெல் அரியணை பொலிந்து தோன்றினான்; சேயிரு விசும்பிடைந் திரியும் சாரணர் நாயகன் இவன்கொல்? என்று அயிர்த்து நாட்டம் ஒர் ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கவே. 200. மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர் அடங்கலும் உலகும் வேறு அமைத்துத், தேவரோடு இடங்கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டெனாத் தொடங்கிய கோசிக முனிவன் தோன்றினான். வேறு 201. வந்துமுனி எய்துதலும் மார்பில்அணி ஆரம், அந்தர நிலத்திரவி அஞ்சஒளி விஞ்சக், கந்தமல ரில்கடவுள் தன் வரவு காணும் இந்திரன் எனக்கடிது எழுந்தடி பணிந்தான். 202. பணிந்துமணி செற்றுபு, குயிற்றி, அவிர் பைம்பொன் அணிந்ததவி சிட்டு, இனிது அருத்தியொடு இருத்தி, இணைந்த கமலச்சரண் அருச்சனைசெய்து, இன்றே துணிந்ததுஎம் வினைத்தொடர்பு எனத்தொழுது சொல்லும். 203. நிலஞ்செய்தவம் என்றுணரின் அன்று; நெடியோய் என் நலஞ்செய்வினை உண்டெனினும் அன்று; நகர் நீ யான் வலஞ்செய்து வணங்கஎளி வந்த இது முந்தெம் குலஞ்செய்தவம் என்றினிது கூறமுனி கூறும். 204. என்அனைய முனிவர்களும் இமையவரும் இடையூறொன்று உடையர் ஆனால், பல்நகமும், நகுவெள்ளிப் பனிவரையும் பாற்கடலும், பதும பீடத் தன்னகரும், கற்பகநாட்டு அணிநகரும் மணிமாட அயோத்தி என்னும் பொன்னகரும் அல்லாது புகலுண்டோ? இகல் கடந்த புலவு வேலோய்; 205. இன்தளிர்க்கற் பகநறுந்தேன் இடைதுளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து, நின்தளிக்கும் தனிக்குடையின் நிழல் ஒதுங்கிக் குறைஇரந்து நிற்ப நோக்கிக், குன்றளிக்கும் குலமணித்தோட் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு, அன்றளித்த அரசன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச! என்றான். 206. உரைசெய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்தில் ஒருவராலும் கரைசெய்ய அரியதொரு பேருவகைக் கடல்பெருகக் கரங்கள் கூப்பி அரசெய்தி இருந்த பயன் எய்தினன்; மற்று இனிச் செய்வதருளு கென்று முரசெய்து கடைத்தலையான் முன் மொழியப் பின்மொழியும் முனிவன் ஆங்கே. 207. தருவனத்துள் யான்இயற்றும் தவவேள்விக்கு இடையூறாய்த் தவஞ்செய் வோசை வெருவரச்சென் றடைகாம வெகுளி என நிருதரிடை விலக்கா வண்ணம் செருமுகத்துக் காத்தி; யென நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத்தந் திடுதி; யென உயிர் ஈர்க்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான். 208. எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுத லோடும், உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த, ஆருயிர் நின்று ஊசல் ஆடக், கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடுந்துயரம் கால வேலான். 209. தொடையூற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கிப் படையூற்றம் இலன்சிறியன்; இவன் பெரியோய்; பணியிதுவேல் பனிநீர்க் கங்கை புடையூற்றும் சடையானும் புரந்தரனும் வெகுண்டெழுந்து புகுந்து செய்யும் இடையூற்றுக் கிடையூறாய் யான் காப்பன் பெருவேள்விக் கெழுக; வென்றான். 210. என்றனன்; என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்தமுனி; இறுதிக் காலம் அன்றென ஆம் என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும் நின்றனவும் திரிந்தன; மீ நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச் சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன போய்த் திசைகள் எல்லாம். வேறு 211. கறுத்த மாமுனி கருத்தை உன்னி, நீ பொறுத்தி! என்றவன் புகன்று நின்மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்து நாள் மறுத்தியோ? எனா வசிட்டன் கூறுவான். 212. பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் மொய்கொள் வேலையை முடுகு மாறுபோல் ஐயநின்மகற்கு அளவில் விஞ்சைவந்து எய்து காலம் இன்று எதிர்ந்த தென்னவே. 213. குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன் திருவின் கேள்வனைக் கொணர்மின்! சென்றென வருக! என்றனன்; என்னலோடும் வந்து அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான். 214. வந்த நம்பியைத் தம்பி தன்னொடு முந்தை நான் மறை முனிக்குக் காட்டி, நல் தந்தை நீ! தனித் தாயும் நீ! இவர்க்கு; எந்தை தந்தனன்; இயைந்த செய்கென்றான். 215. கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தைமுந்து எடுத்த சீற்றம்விட்டு, இனிதுவாழ்த்தி, மேல் அடுத்த வேள்விபோய் முடித்தும் நாமெனா நடத்தல் மேயினான்; நவைக்கண் நீங்கினான். 216. வென்றி வாள்புடை விசித்து, மெய்ம்மைபோல் என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு குன்று போன்றுயர் தோளில் கொற்றவில் ஒன்று தாங்கினான்; உலகம் தாங்கினான். 217. அன்ன தம்பியும் தானும் ஐயனாம் மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் எனச் சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல், மொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினார்; 218. வரங்கள் மாசறத் தவஞ்செய்தோர்கள் வாழ் புரங்கள் நேரிலா நகரம் நீங்கிப்போய் அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னநின்று இரங்கு வார்புனல் சரயு எய்தினார். 219. கரும்பு கால்பொரக் கழனி வார்ந்ததேன் வரம்பு மீறிடும் மருத வேலிவாய் அரும்பு மூரலார் அம்மெல் ஓதிபோல் சுரும்பு வாழ்வதோர் சோலை நண்ணினார். கம்பர். 17. நலமுற்ற நங்கை 220. அலைகடல் உலகம் போற்றும் அரசர்தம் மடம் என்ஊரில் நிலையுடன் வாழ்ந்த செல்வன்; நிகரிலாப்பெருமை வாய்ந்தோன் பலகலை பயின்று தூய பண்டித முத்து ராம நலமுறுமுதல்வன் ஆன நவநிதிச்செல்வன் வாழ்ந்தான். 221. அன்னவற் கருமை யானஆண்மகன் ஒருவன் உள்ளான் பொன்னென அழகு மிக்க புத்திரி ஒருத்தி உள்ளாள் இன்னவர் தாமும் கல்வி பயின்றினி திருந்த நாளில் கன்னியை மணம் முடிக்கக் கருதினன் தந்தை தானே. 222. ஆங்கில மொழியிற் பீ.ஏ. ஆனநற் பட்டம் பெற்றும், ஓங்கிய தமிழை ஆய்ந்தும், உயர்குணம் நிரம்பப் பெற்ற தீங்கிலாச் செல்வ நாதன் திருமிகு தந்தை தன்பால் நீங்கலா அன்பு கொண்டு நிலையுடன் வாழ்ந்து வந்தான். 223. மைந்தனாம் செல்வ நாதன், மகிதலத் துறையும் மக்கள் சிந்தையில் துயரம் இன்றிச் சீரிய வாழ்க்கை வாழ, இந்தநல் நிலத்திற் கற்றோர்பலருடன் இணைந்து நின்றே, புந்தியிற்கிளர்ச்சியோடும் உழைப்பதே பொருளாக் கொண்டான். 224. இன்னவன், தனது தந்தைஎண்ணிய செயலைத்தேர்ந்து, துன்னுநற்றாதை சார்பில் துயருடன் போந்துநின்றே என்னருந் தங்கை யான எழில்மிகு கமல வல்லிக் கன்னியைஇளமையாண்டிற் கடிமணம்முடித்தல் ஆமோ? 225. நம்முடைக் கமல வல்லி நங்கையின் ஆண்டோ பத்து; செம்மை சேர்தமிழை நன்கு செவ்வனே பயின்றிருப்பாள்; கொம்மைகொள் உலக வாழ்வைக் குறைவற உணர மாட்டாள் தம்மையே மண முடித்தல் தருமமும் தகவும் ஆமோ? 226. பெட்புறு செல்வனான பேர்பெறு கந்த சாமிக்(கு) இப்பொழு தாகும் ஆண்டுநாற்பதாம்; இதுவும் அன்றி, முற்பெறு மனையாள் தன்னைமுடிந்திடப் புரிந்ததீயோன் தப்பிதம் அற்ற நங்கை தனை அவற் கீதல் நன்றோ! 227. என்றுதன்புதல்வன் சொன்னஇன்மொழி கேட்டதந்தை நன்றுதீ(து) உணரான் ஆகி நலம் உறு மகளை நோக்கி இன்றுநீமொழிந்த வார்த்தையான் அறியாத(து) அன்று, துன்றிய பழமை தன்னை விட்டிடத் துணிதல் ஆமோ? 228. சீர்பெறு கந்தசாமிச் செல்வன் நம் சுற்றம் ஆவான்; பேர்பெறு குலத்தால் மிக்கோன் பெட்புறற்குரியன் மேலும். ஏர்பெறும் அவனை அன்றி எவர்நமக் கிருக்கின்றார்கள்? தார்குழல் தனைய வற்கே தந்திடல் முறைமை ஆமால். 229. இனையன தந்தை கூற இன்மொழிச் செல்வநாதன் மனமிக வருந்தி அந்தோ பழைமையை மனத்திற்கொண்டே இனுங்கொடுநெறியிற் சேறல் ஏற்குமோ? எந்தாய்! இந்தப் புனலுடைய புவியில் தூய புதுமுறை புகுதல் நன்றால்! 230. நம்முடைச் செல்வியாய நற்குணக் கமல வல்லி அம்மையின் குணத்திற்கேற்ற அழகுளான்! தன்னைத்தேடி, செம்மைசேர் பருவம் வந்த பின்னரே மணத்தைச் செய்தல் இம்மையில் நமக்கும் நன்மை, ஏந்திழை அவட்கும் நன்றால்! 231. செந்தமிழ்க் கல்விதன்னைப் பயின்றிடும் அவளும்செவ்வே முந்திய கல்வி கற்று மூதறி வுடையள் ஆவள்; சிந்தையில் விரும்பும் அன்னாட் கேற்றநற் செல்வன் தன்னைச் சொந்தமாய் மணம்புரிந்து சுகங்கொள விடுதல் நன்றால்! வேறு 232. தனையன் மொழி செவிமடுத்த தந்தையவன் மிகச்சினந்தே, உனையெங்கண் குறைமொழிவேன்? உன் உணர்வே மாறியதால் வினைபுரியும் ஆங்கிலமாம் வித்தைதனைப் பயின்றமையால்; நினைபழைமை வழக்கமதை நிந்தனை செய்துறைகின்றாய்! 233. ஓதரிய கலைகள் பல உணர்ந்தாலும் பெண் பாலார் பேதையர்கள் ஆவ ரெனும் பெருமொழியை உணராயோ? ஆதலினால் அன்னவரைத் தந்தை தாய் அவர் தாமே தீதகல வரன் தேடி மணம் புரிதல் திருவாமால்! 234. என்றுரைத்த தந்தையர்க்கே எத்துணையோ அறிவுரைகள் நன்றுரைத்தும், மனத்தமைக்கா இயல்பதனை நாடிமகன் இன்றிவர் தம் நினைவின்வழி செயல் புரிதல் நிச்சயமால்! பின்றைநாம் எண்ணும் நெறி சென்றிடுதல் பெற்றியதே. 235. என்றெண்ணி மைந்தனவன் எதிர்உரைகள் மொழியாமல் துன்றுதுயர் உடனிருக்கத்துனியுண ராத் தாதையவன் தன்னகத்தில் எண்ணியபோல், தன்மகளை, முற்குறித்த நன்னயமில் முது கந்த சாமிக்கே நல்கினனால். 236. மணமகனாம் கந்தசாமி ஐந்தாண்டு மாண்டதற்பின் தணந்தனன் இவ் வுலகதனைத்; தையலவள் தனியானாள்; உணர்வறியா வினைபுரிந்த குரவர்களும் உயிர் நீத்தார்; துணைவருடன் உயர்செல்வ நாதனுமே துயருழந்தான். 237. அன்னவன்றான் செய்வதொன்றை அறியாமல் மனமாழ்க; மன்னியசீர் துணைவரெலாம் மதிமொழிகள் பலபுகன்று, நன்னனவன் துயரகற்றி, நலிகமல வல்லியையே பின்னரும்ஓர் மணம் புரிந்து கொடுக்கும் வகை பேசினால் 238. நண்பருரை தனைக்கேட்ட நற்செல்வ நாதனவன் பண்மொழிகொள் மங்கையர்கள் பலமுறைகள் மணங்கோடல் மண் தலத்தில் ஒவ்வாத செய்கையென மதித்திடுவார்; எண்ணுமிதை முடித்திடினும் சுற்றத்தார் எள்ளுவரால். 239. உலைவாயை மூடிடினும் ஊர்வாயை மூடவொண்ணா நிலையான பழிநமக்கே நேருமென அஞ்சுகின்றேன்; சிலைநுதல்என தங்கையவள் சிறுமைதனைக் கண்டழிவேன்! அலைகடல்வாய்த் துரும்பினைப்போல் ஆயினனே என்புரிவேன்? வேறு 240. நனிதுயர் உழக்கும் செல்வ நாதனை, நண்பர் எல்லாம் இனியன கூறித் தேற்றி, எதற்குநீ அஞ்சல் வேண்டும்? தனிநலம் மிகவும் நாடும் ஆண்களே, தமக்கு வேறு, பனிமொழி யார்க்கு வேறு நீதிகள் பண்ணி வைத்தார். 241. ஆதலால் தன்ன லத்திற் காக்கிய கலைகள் கூறும் தீதுளமொழிக்கும், அந்தத் தீமொழி நெறியைப் போற்றும் மாதலத்தவர்கள் சொற்கும், மயங்குதல் அறிவேஅன்றால் ஏதுமதகன் முற்போக்கெய்துதற்குரித்தும் அன்றால். 242. நம்முடைக் கமல வல்லி நன்மணம் புரிந்துகொள்ளச் சம்மதம் உடையள் ஆயின், சற்குணத் தவளே, ஏற்ற செம்மலைத் தேர்ந்து கொள்ள விடுவதே செய்கை என்றார் தம்மைநேர் அற்றசெல்வ நாதனும் தக்க தென்றான். 243. சீருள செல்வநாதன் தங்கையை அழைத்து, நங்காய்! ஏர்பெறு நினக்கு மீண்டும்மணங்கொளும் எண்ணம் ஆயின், ஆர்வத்தின் படியே செய்க! அதற்குள உதவி யாவும் பேருறப் புரிவேன்! என்று பேசினான் மகிழ்ச்சி கொண்டே. 244. அம்மொழிகேட்ட நங்கை, அன்புடன் இளமைதொட்டே தம்முடைஉயிர்கள் ஒன்றாய்த்தாங்குடல் இரண்டாய்க் காண, செம்மையிற் பழகி வந்த சிவப்பிர காசன் என்னும் உண்மையோன் தன் மீதுள்ளகாதலை உணர்த்தினாளால். 245. செங்குணம் மிகுந்த மேன்மைச்சிவப்பிரகாசன் தானும், இங்கிதக் கமல வல்லி ஏந்திழை யவளைக், காதல் தங்கிய மனத்தினோடு தன்றுணை யாகக் கொள்ளப் பொங்கிய எண்ணம் உள்ளான் என்பதை உணர்ந்த போதே. 246. நன்மதிச் செல்வ நாதன் நண்பர்கள் உடனே கூடி, அன்புடைக் கமல வல்லி அம்மையை, அழகு மிக்க தன்னுடைத் துணைவன் தக்க சிவப்பிரகாச னுக்கே இன்புடன் மண முடித்தே வைத்தனன் எவருங் காண. 247. அன்புடனே மணம்புரிந்த அன்னவர்கள் இருவோரும், கன்மனத்தைக் கனிவிக்கும் காதலரை ஈன்றெடுத்தும், மன்பதையாம் வறிஞர்களின் துயரகற்றி மனமகிழ்ந்தும் இன்பமுடன் இவ்வுலகிற் பன்னாட்கள் இருந்தனரால். 248. குருட்டெண்ணம் உடையவர்கள் குறை கூறிவசை மொழிந்தார் தெருட்டெண்ணம் உடையவர்கள் தேங்குமகிழ் கொண்டனரால் பொருட்டொன்று மில்லாத பழஞ்செயலைப் புகழ்ந்திருந்தால் இருட்டகற்றி முன்னேற்றம் எய்துவதும் எவ்வகையோ? வேறு 249. அறைத்தவிக்கதையால் நாமும் அறிந்திடும் அறம்யாதென்னின், பிறந்திடு பெண்கள் தம்மை இளமையிற் றானே பேசி திறங்குறைமுதியோர்கட்கு மணஞ்செயல் தீதேயாகும்; அறமுறை அன்றால் அஃதும்; அச்செயல் அகற்றல் வேண்டும், 250. கணவனை யிழந்த பெண்கள் கருத்தினுக் கேற்றவாறே மணமதை மீண்டுஞ் செய்தல்மதிநிறை அறமே யாகும்; குணம்நிறை காளை மார்கள் கொஞ்சமும் அஞ்சி டாமல் துணிவுடன் இவற்றை யாற்றத் துரிதமொடு எழுதல் நன்றே. சாமி சிதம்பரனார். செய்யுட்பாடக் குறிப்புரை திருக்குறள் 1. செவிச்செல்வம். - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிவதாகியசெல்வம். 2. கேட்க - கேட்டு அறிந்துகொள்க. அஃது - அக்கேள்வி, ஒற்கத்தின் - தளர்ச்சிவந்த காலத்தில், ஊற்றாம் துணை- ஊன்று கோல் போன்ற துணையாகும். ஊற்று வலித்தல் விகாரம். 3. நுணங்கிய - நுட்பமான. வணங்கிய வாயினர் - பணிவுடைய மொழியினர். வாய் இடவாகுபெயர். 4. செவியில் சுவை உணரா - செவியால் உணரப்படும் சுவைகளை உணராத. அவியினும் - இறப்பினும். 5. யார் யார் வாய்க்கேட்பினும் - உயர்ந்தவரிடம் கேட் பினும் தாழ்ந்தவரிடம் கேட்பினும். மெய்ப்பொருள் - உண்மைப் பொருள். 6. எண்பொருளவாக. கேட்பார்க்கு எளிய பொருளாக இருக்குமாறு செல - அவர்மனத்திற்பதியும் படி, நுண் பொருள் - அரிய பொருள் 8. தினைத்துணை - தினை அளவு. பனைத்துணை - பனை அளவு. பழி நாணுவார் - குற்றத்திற்கு அஞ்சுவார். 9. வியவற்க - புகழ்ந்து கொள்ளாதிருக்க, நன்றிபயவா - நன்மையைத்தராத. நயவற்க - விரும்பாதொழிக. 10. தமரா - நெருங்கியவராகக்கொண்டு, ஒழுகுதல் - அவர் வழி நின்று ஒழுகுதல். 11. பத்து அடுத்த - பதின்மடங்கான, நல்லார் - பெரியோர் தொடர்கைவிடல் - நட்பைக் கொள்ளாதிருத்தல். 12. எண்ணி - செய்யத்தக்க வழியை அறிந்து, துணிக - தொடங்குக. இழுக்கு - குற்றம். 13. வினைவலி. தான்செய்யத் தொடங்கிய காரியத்தின் வலிமை, மாற்றான்வலி, - பகைவன் வலிமை. துணைவலி - தமக்கும் பகைவர்க்கும் உள்ள பக்கபலம், தூக்கி - ஆராய்ந்து. 14. உடைத்தம் வலி அறியார் - தம்முடையவலியை உணராதவராகி. ஊக்கத்தின் ஊக்கி - மன எழுச்சி யினால் தம்மைவிட வலியாரோடு பகைத்து. முரிந்தார் - கெட்டவர்கள். 15. அருவினை - அரிய செயல். கருவியால் - சாதனங்களால். 16. ஊக்கம் உடையான் - வலி மிகுதி உடையவன். ஒடுக்கம் - அடங்கியிருத்தல். பொருதகர் - போர் செய்கின்ற ஆட்டுக்கடா. 17. எஞ்சாமை எண்ணி - ஒன்றுவிடாமல் ஆராய்ந்து, இடத்தால் செயின் - இடம் அறிந்து செய்தால். 18. நாடி - ஆராய்ந்து, மிகைநாடி - மிகுந்தது இன்ன தென்பதை உணர்ந்து. மிக்க - மிகுதிப்பட குணத்தைக் கொண்டு, கொளல் - அறிந்துகொள்க. 19. தேரான் தெளிவும் - ஆராயாதவனாகத் தெளிதலும், தீரா - நீங்காத இடும்பை - துன்பம். 20. தேற்றம் - காரியஞ்செய்தலில் கலங்காத தன்மை, அவா இன்மை - பேராசையின்மை. 21. இதனை இதனால் - இச்செயலை இக்கருவியால், அதனை - அச்செயலை, விடல் - விடுக. 22. கரவா - ஒளிக்காமல், கரைந்து - தமது இனத்தை யெல்லாம் கூறி அழைத்து, நீரார்க்கே - தன்மை உடையவர்களுக்கே. 23. உலகு எல்லாம் - உயிர்கள் யாவும், வான்நோக்கி - மழையை எதிர்பார்த்து, கோல் - செங்கோல் (அதாவது உலகத்துயிர்கள் இன்பமடையுமாறு ஆட்சி செலுத்துவது. உலகு, வான் - ஆகுபெயர்கள். 24. குடிதழீஇ - குடிகளின் அபிப்பிராயத்தைத் தழுவி, அடிதழீஇ - நடையைப் பின்பற்றி (ஒழுக்கம்) தழீஇ என்பன இன்னிசை அளபெடைகள். 25. அல்லல் - துன்பம், ஆற்றாது - துயரம் பொறுக்க முடியாமல், தேய்க்கும் - அழிக்கும், படை - கருவி. 2. நாலடியார் 26. ஒருவன் தன் வாய் காவாது என மாற்றுக சொல் - தீச்சொல். ஓவாது - இடைவிடாமல், ஆய்ந்து - நூல் களை ஆராய்ந்து, அமைந்த - நிறைந்த கறுத்து - கோபித்து. 27. அறிவது - அறிய வேண்டியவற்றை, உறுவது - செய்ய வேண்டியவற்றை, பெறுவதனால் -கிடைத்ததைக் கொண்டு, அரிது - இல்லை, அறிவது, அஞ்சுவது, உறுவது - சாதி ஒருமை 28. தேற்றா ஒழுக்கம் - அறியாச்செயல், ஆற்றும் துணையும் - கூடியவரையிலும், தூற்றாதே - அவனுடைய செயலை வெளியிற் கூறாமல், தூரவிடல் - நீக்கிவிடுக. விடல் - வியங்கோள்வினைமுற்று. 29. கால் ஆடுபோழ்தில் நடமாட்டம் உள்ளகாலத்தில் (செல்வம் உள்ள காலத்தைக் குறித்தது) கழி - மிகுந்த. மீனில் - நட்சத்திரங்களைவிட ஏலா - தகாத. தொடர்பு உடையேம் - உறவுடையேம். 30. வடு - குற்றம், மன்னிய மூன்றின் - நிலைத்த மூன்றுள், மூன்று - அறம், பொருள் இன்பம். உலைப்பெய்து அடுவது போலும் துயர் - கொல்லன் உலையில் இட்டுக் காய்ச்சுவது போன்ற துன்பம். 31. விளக்கும் - புகழால் விளங்கச்செய்யும், தாம் உளர் ஆக்கேடு இன்று - தாம் உயிரோடு வாழும் அளவும் அழிதல் இல்லை. மம்மர் - மயக்கநோய். 32. வைப்புழி - வைத்த இடத்திலிருந்து, செறின் - கோபித்தால். எச்சம் - செல்வம். (எஞ்சிநிற்பது எச்சம்) செய்வன - தேடி வைப்பன, விச்சை - கல்வி. 33. பொருள் இல்லை - நல்ல குலம் தீயகுலம் என்பவற்றிற்கு அர்த்தமில்லை. தவம் - நல்லொழுக்கம், ஆள் வினை - முயற்சி. 34. கேண்மை - நட்பு, குருத்தில் - நுனியிலிருந்து, குருத்திற்கு எதிர்செல - அடியிலிருந்து, மதுரம் இல் ஆளர் - இனியகுணம் இல்லாதவர்கள். 35. ஒரீஇ - நீக்கி. கெழீஇ - தழுவி. மெய்யதா - உடம் பிலிருக்கும் போது, வால் குழைக்கும் - வாலை ஆட்டும், ஒரீஇ, இன்னிசை அளபெடை. கெழீஇ, சொல்லிசை அளபெடை. 36. அணியர் - நெருங்கியவர். துணையும் - அளவும். என் ஆம் - என்ன பயன்? சேய்த்தானும் - தூரத்திலிருந் தாலும், செய் - வயல். 37. நீண்ட - வளர்ந்த. இடைப்புக்கு - கூட்டத்தில் புகுந்து, மெல்ல பேசாமல் இரா அது - உயிரளபெடை 39. ஏழை - அறிவில்லாதவன். தானும் - அப்பொருளை உடையவனும், பயன் துவ்வான் - பயனை அனுபவிக்க மாட்டான். 40. நுட்பம் - மென்மை, நிரப்பு இடும்பையாளன். வறுமைத் துன்பம் உடையவன். பூழை - துவாரம். 41. கடம்ஆ- காட்டுப்பசுவை. (அல்லது யானையை) வேங்கை - பெரும் புலி மானம் அழுங்க - தன் மதிப்புக் குறையும் படி. 42. கரவாத - உதவிசெய்வதை ஒளிக்காத. கண்ணும் - இடத்திலும், உள்ளுங்கால் - நினைக்கும்போதே, கொள்வார் குறிப்பு - ஏற்றுக்கொள்கிறவர்களுடைய கொள்கை. 43. கணக்காயர் - ஆசிரியர் ஒர் சூத்திரம் - ஒரு பாடல். புல் அறிவு - அறிவின்மை. 44. சால- மிகுதியாக, உய்த்து - கொண்டு வந்து, போற்றும் - காப்பாற்றும், தேற்றும் - பிறர்க்குத் தெரிவிக்கும். 45. ஏமம் சார்- வாழ்க்கைப் பாதுகாப்பான, ஆக்கத்துள் - செல்வத்துள், தூங்கி - மயங்கி இருந்து. அவத்தம் - வீண். 3. அரச நீதி 46. பால்வளை - வெண்மையான சங்கு. வளாகம் - உலகம், துஞ்ச - வாழ. நூல்விளைந்தனைய - நூல்களிலிருந் துண்டாகும் பொருளைப் போன்ற, ஓம்பின் - காப்பாற்றினால். 47. வாய்ப்படும் - உண்டாகும், தீற்றில் - ஊற்றினால், பொன்றும் - அழியும். கொள்ளின் - காப்பாற்றுதலை மேற்கொள்ளின். நீத்தம் வெள்ளம். நின்று -அழியாமல், சுரக்கும் - பெருக்கும். 48. செப்பில் மாந்தர்க்கெல்லாம் நெல் உயிர் நீர் உயிர் இரண்டும், இலக்கு வாட்கை மல்லம் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் புல் உயிர் புகைந்து பொங்கும் முழங்கழல், எனமாற்றிப் பொருள் கொள்க. மன் - மன்னரால், புல் உயிர் கரிந்து - புற்களின் உயிர்கள் கரிந்து. பொங்கும் முழங்கு அழல் - மிகும் செழித்த நெருப்பு இவற்றால் அரசன் கோல் கொடுங் கோலாயின் விளைவு மில்லை மழையுமில்லை என்பது உணர்த்தப்பட்டது. 49. ஆர்வலஞ் சூழ்ந்த - ஒளி மிகுதியாகச்சுற்றிய, ஊரு மாயின் செலுத்துமாயின், தோற்றாது - அறியாமல், தார்நிலம் - மாலைக்கு, இடமான நிலம். 50. கவுள் கொண்ட - கன்னத்தில் கொண்ட, களிறுபோல - தன் மனத்தில் அடக்கிவைத்துக்கொண்டு சமயம் பார்த்திருப்பதைப் போல. வெகுளி - கோபம், மாற்றி - மறைத்து, விழைய - விரும்புவன. வெளிப்படார் - வெளிக்காட்டமாட்டார். நாந்தக உழவர் - வாள்வீரர். 51. குடிபழியாமை - குடிகள் வெறுக்காதவாறு, ஓம்பில் - அரசியற்றினால். நொடியல் - கூறற்க. 4. குசேலோபாக்கியானம் 52. அறல் - நீர். வளி - காற்று - எண் - நெஞ்சம் , நறுநீழல் இயைமனை - நல்லநிழல் அமைந்த வீடு, கற்பகம் சார் - கற்பகமரங்கள் அமைந்த. 53. கோட்கு இனமாகி - இராகு என்னும் கிரகத்திற்கு இனமாகி. இலகு - விளங்குகின்ற. பரிதி - சூரியன், உடற்ற - வருத்த. பெரும் கமர்கள் - பெரிய வெடிப்புக்கள். 54. இது கொண்டே - இந்த நீரைக்கொண்ட புலத்து அமைத்து - மனத்து அமைத்து. 55. புனல் நசை- நீர் வேட்கை, திரிமருப்பின் இரலை யெலாம்- திரிகின்ற மருப்பினையுடைய மான்கள் எல்லாம். நலிந்திடும் - வருந்தும். 56. நற்பால் ஆன - நல்ல தன்மை உடையவனான. பற்றி - பொருள்பற்றி. கிளை - சுற்றம், இரிவது என - நீங்குவதைப்போல. 57. வீங்கினேம் - நிரம்பினேம். கால்வது போல் - கக்கு வதைப் போல. பூ இயல் - பூவின் தன்மையையுடைய. 58. வாங்கு - வளைந்த. வடவை - வடவைத்தீ. சுவற்ற - வற்றச் செய்ய. 5. பாண்டி நாட்டுச் சிறப்பு (திருவிளையாடல்) 59. ஒல் ஒலிக்குறிப்பு, எல்ஒளி - சூரியஒளி, தடித்து - மின்னல், விதிர்ந்து - கட்டி, சாபம் - வில். அம்பு - மழைத்தாரை, கொண்மூ - மேகம். 60. கல் - ஒலிக்குறிப்பு கரைந்து ஓசையிட்டு, உண்டு ஒரீஇ - உண்டு நீங்கிச். செல் எனத் தெழிக்கும் - மேகம் முழங்குவதைப் போல அடிக்கின்ற, தேக்கி - உண்டு. காலில் - வாய்க்காலில். பனை - வயல். 61. வேய்ந்து - தறித்து, சாந்தம் - சந்தனம், மான்மதம் - கதூரி, ஆரம்-முத்து. பொருகை - தாமிரபரணி, முந்நீர் -கடல், ஆகம் - மார்பு. 62. வரைபடு - மலையில் உண்டாகின்ற. 63. ஏறு - எருதுகள். அலமுக இரும்பு - கலப்பையின் முனையில் உள்ள இரும்பு. (கொழு) ஆள்வினை - முயற்சி, கரும் கால் - வலிய கால், மள்ளர் - உழவர். நிமிர்ந்த - தோன்றிய, சோரிச்சலம் - இரத்த நீர், நிவந்த - தோன்றிய, செங்கேழ்த்தழல்மணி - சிவந்த ஒளியாகிய நிழலையுடைய மணி, இமைக்கும் - பிரகாசிக்கும். 64. ஊறுசெய் - நிலத்தைக்கிளைக்கின்ற, கால்யாத்து - வாய்க்காலின் வழியே கொண்டுவந்து கட்டி, தெவ்வின் மாறு செய்- பகையைப்போல் வேற்றுமை செய்கின்ற, களைகட்டு - களையெடுத்து, ஓம்பி - பயிரைக்காப்பாற்றி. 65. பண் - இசை, ஆம்பல் - அல்லி, குவளை நீலம் - குவளையும், நீலோற்பலமும், கமலம் - தாமரை செறுதல் போல் - கோபிப்பதைப் போல. 66. கொடும் - வளைந்த, கூன்இரும்பு - அரிவாள். வரிவண்டு - வரிகளையுடைய வண்டுகள். ஆர்ப்ப - ஆரவாரிக்க. சாலி - நெற்பயிர் ஈடாக்கி - ஒன்றுசேர்த்து, அம்பொன் குன்றம் நிரைஎன - அழகிய பொன்மலைவருகையைப் போல. 67. அகில் - அகிற்கட்டைகளையும். ஆரமும் - சந்தனமரங் களையும். மடுத்து - மூட்டி, துகிர் - பவளம், ஆரம் - முத்து, ஜவனம் - மலைநெல். புகரின் மால்கரி - முகத்திற் புள்ளிகளையுடைய பெரிய யானைகளின். 68. கருவி - தொகுதியான, வான் - மேகம். கழை - கரும்பு; கான்ற - கக்கிய. நாகத்து - ஆகாயத்தில் உள்ள புனம்எவர் - தினைப்புனத்தை மேய்கின்ற. கொடிச்சியர் - குறமகளிர். 6. கொங்குநாட்டுச் சிறப்பு வில்லிபாரதத்தின் பாயிரம் 69. நாள் நிரைத்து - ஒளி பரப்பி, தாரகாகணம் - நட்சத்திரக் கூட்டம். நவவிதங்கொள் - ஒன்பது விதமான, கோள் - கிரகம், கொற்ற நேமியின் - வெற்றியுள்ள சக்கராயுதத் தையுடைய திருமாலைப்போல, கொண்டல் - மேகம், வாள் நிரைத்து - ஒளி வீசி, இரவி - சூரியன், வான்முகடு - வான்உச்சி, தாரை - மழைத்தாரை. 70. வம்புஅறா - வாசனை நீங்காத உம்பர் ஊடுஎழ - ஆகாயத்தில் உயர்ந்தெழு, அம்புராசி - கடல். தம்பமா - தூணாக. 71. ககனம் - ஆகாயம், பண்ணை - வயல்கள், போகம் உய்த்திடும் - இன்பம் அனுபவிக்கும்படி செய்யும். 72. பௌவம் - கடல், உத்தரியம் - மேலாடை 73. சந்தம் - சந்தனம், தடம்காவகம் சூழ்தடம் - பெரிய சோலைகள் சூழ்ந்த தடாகம், கந்தம் - வாசனை, பகட்டின் - எருமைக் கடாவின், செய் - வயல். 74. கடைசியர் - உழத்தியர். ஒரு பகலும் - பகல் முழுதும், செறு - வயல். 75. தலைதெரியா - வேறுபாடு தெரியாத. வேலைக்கழிக் கானல் அம்கைதை - கடற்கழிகளின் அண்மையில் உள்ள கடற்கரைச் சோலையில் வளர்ந்திருக்கும் தாழைகள். 7. காட்டின் காட்சி 76. விண்நெறி - ஆகாய வழியே. படரும் - செல்லும். கொண்டல் - மேகம், படிதல் - தாங்குதல் கண்ணிடம் கொண்டு - அகன்று. பண்ணுற - இசையுடன். 77. கனைகடல் - ஒலிக்கின்ற கடல் நனை - தேன், தொகுதி - கூட்டம். 78. ஏற்றம் - உயர்வு, இழிதகவு -தாழ்வு, ஏய்ப்ப - போல, மாற்றம் - வேறுபாடு, செறிந்து - நெருங்கி 79. வருக்கை - பலா மா - மாமரம். உருக்குடன் - இரக்க முடன், தந்து அவர்க்கு - கொடுத்து அவ்வேழைகளுக்கு. 80. மன்னிய - பொருந்திய நறுமணம் - நல்ல வாசனை. துன்னி - நிறைந்து. தோம் அறு - குற்றம் இல்லாத. 81. சழக்கு - குற்றம், பிறங்கிடும் - விளங்கும். 82. குலம் - கூட்டம், முற்படும் - முதன்மையாக வீசிக் கொண்டிருக்கும், பண்டம் மாற்றிட - வாணிகம் புரிய. 8. கானல் வரி (சிலப்பதிகாரம்) 83. மணிப்பூ - அழகியபூ, ஒல்கி - ஒதுங்கி. 84. பூஅர் - மலர்கள் நிறைந்த, அர்- குறுக்கல் விகாரம், ஆல - ஆட, புரிந்து - விரும்பி. காமர் - அழகிய 85. ஊழி உய்க்கும் பேருதவி - ஊழிக்காலம் வரையிலும் காப்பாற்றுகின்ற பெரிய உதவி. உயிர் ஓம்பும் - உயிர்களைக் காப்பாற்றுகின்ற; ஆழி ஆள்வான் - ஆக்ஞா சக்கரத்தை ஆள்கின்ற; பகல் வெய்யோன் - சூரியன், (சோழனைக் குறித்தது, சோழன் சூரியகுல மன்னன் என்பது மரபாதலின்.) 86. ஆடும் - வினையாடுகின்ற. பொறி - புள்ளி, அலவன் - நண்டு. இணர்த்தையும் - பூங்கொத்துக்கள் நிறைந்து, பூம்கானல் - பொலிவுபெற்ற கடற்கரைச்சோலை. வணர்சுரி - வளைந்து சுருங்கிய, ஐம்பால் - கூந்தல் 87. மான் தேரும் - குதிரை கட்டிய தேரும். அடும்பு - ஒரு வகையான கொடி. 88. புன்கண்கூர் - சிறுமை நிறைந்த, எய்தும் - காணும்; வன்கணார் - இரக்கம் இல்லாதவர். 89. புன்இயல் மான் - புள்ளின் இயல்பையுடைய குதிரை. எம்மோடு ஈங்கு உள்ளாரோடு - எம்மோடு இங்கு இருக்கின்ற அயலாருடன், உள்ளாய் - நீயும் பழிகூறும் படி நிற்கின்றாய். 90. நேர்ந்த - நம்மோடு அமைந்த நேமி சக்கரத்தையுடைய, ஈர்ந்தண் - ஈரமான குளிர்ந்த ஈரம், மகரக்குறுக்கம். 91. நித்திலம் - முத்து. பொதும்பர் - சோலை. மகரத்திண் கொடியோன் - மீன் கொடியை உடைய மன்மதன், என் செய்கோ - என் செய்வேன். 92. வாரி - கடல், தரளம் - முத்து, பீரத்து அலர்வண்ணம் - பீர்க்கம்பூவின் நிறத்தை, கடவுள் வரைந்து - கடவுளரை வழிபட்டு. 93. புலவுற்று இரங்கியது - புலால் நாற்றம் அடைந்து வருந்தியது. கலவைச் செம்மல் - பலவும் கலந்த பழம்பூ, பல உற்று - பல துன்பமுற்று, ஒரு நோய் துணியாத - இன்ன நோய் என்று துணிய முடியாத. படர்நோய் - நினைப்பு நோய், அலவுற்று - வருந்தி, 94. இளைஇருள் - இனைய இருள். அஃதாவது அந்திக் காலம். எல் செய்வான் - ஒளிதருகின்றவன்; சூரியன், களைவரும் - நீக்கமுடியாத, பொழீஇ உகுத்தன -பொழிந்து சிந்தின. பொழி, மிகுதியைக் காட்டிற்று. தளை அவிழ் - முறுக்கு அவிழ்கின்ற, தணந்தார் - நீங்கினார். 95. எதிர்மலர் - எதிர்த்துக் கட்டப்பட்ட மலர், புரை- ஒத்த உண்கண் - மையுண்ட கண், எவ்வம் நீர் - துன்ப நீரை. 9. திருஅருட்பா 96. ஆ - ஆச்சரியத்தை உணர்த்திற்று, சித்சபை - அறிவாகிய இடத்தில், ஓவாது - இடைவிடாமல். நீ வாவு என் மொழிகள் - நீ விரும்புகின்ற எனது மொழிகள். 97. ககனம் - வானம், கலை - சந்திரன், கதிர் - சூரியன். 98. ஊதியம் - பலன், எனும் - என்று பேசுகின்ற, வாய்ச் சழக்கை ஏலாம் - வாய்க்குற்றத்தை யெல்லாம், சத்தியன் - உண்மை உருவானவன். 99. இச்சை எலாம் - விரும்பியவற்றை எல்லாம். துச்சம் - அற்பம். ஆசாரத்துடுக்கு - பழக்க வழக்கக் கொடுமைகள், சித்த சிகாமணியே - அறிவில் முனைத்து நிற்கின்றவனே. உச்சநிலை நடு - புருவத்தின் நடுவில், உலவாத - குறையாத. 100. சன்மார்க்கம் வழங்க - சமரச சன்மார்க்கத்தைப் போதிக்க. என்புடை - என்னிடத்தில். 101. ஞானஅமுது - அறிவமுது. இடுக்கிய - தூக்கிவைத்திருக் கின்ற. முடுக்கிய அஞ்ஞான அந்த காரம். தீயவழியிற் செலுத்திய அறியாமையாகிய இருட்டு. முத்தர் - சீவன் முத்தர் (மன உறுதியுடையவர்கள்) 102. ஆங்காரம் - மமதை, சித்தியை - வல்லமையை. சுகித்திட- அனுபவிக்க. 103. பாடகம் - காலில் அணியும் ஆபரணம், மாயை -மயக்கம். 104. கடியாத - நீங்காத, மடியாத - அழியாத 105. அனந்தம் - அளவற்ற. வாதனை - துன்பம். வயங்குகின்ற - விளங்குகின்ற, வாட்டம் - வருத்தம். 10. இந்திரசித்து இறந்தபோது மண்டோதரி புலம்பல் 106. நிலையின் மேல் - பூமியின் மீது. நேசத்தால் - அன்பினால், மறுகி - கலங்கி. 107. உயிர்த்திலள் - மூச்சில்லாதவளானாள். வியர்த்திலள் - வியர்வையும் இல்லாதவளானாள் - சோர்வு இல்லாத வளாய் - மயக்கம் நீங்கினவளாய், தேறி - தெளிந்து. 108. அரியை - இந்திரனை, நினைவு அல்லாதேன் - அறிவில்லாதவளாகிய யான். 109. ஆழிக்கையன் - திருமால்; மழுவன் - சிவன் காலனைப் போன்ற பலமுடையவன். முளரி - தாமரை மலர். உய்வனே - பிழைப்பனோ? ஏகாரம் வினாப்பொருளில் வந்தது. செரு வல்லோனே - யுத்தத்தில் வல்லவனே. 110. அரிச்சதங்கை - பால் கற்கள் அமைந்த சதங்கை. கோள் அரி - வலிய சிங்கம், பொருத்தி - சண்டையிடச்செய்து. 111. அவிர் வெண்திங்கள் - ஒளி விளங்குகின்ற வெண்மை யான சந்திரன். இம்பர் - இங்கே. வம்புறு - வீணாகப் பொருந்தியுள்ள. வாங்கும் - இழுக்கும், ஏசற்றேன் - துக்கத்துடன் நின்றேன். 112. உக்கிட - சிந்தும்படி. அம்மா! ஆச்சரியத்தை உணர்த்தி நின்றது. 113. பஞ்சு எரி உற்றது என்ன - பஞ்சு நெருப்பிற் பட்டதைப் போல, பாவை - கடல், விளந்தது - இறந்தது. 11. நளவெண்பா 114. காரிகைதன் - அழகு மிக்க தமயந்தியின், நீத்து - நீக்கி, கூர்இருள் - மிகுந்த இருள், போவான் - போவதற்கு. குறித்து எழுந்து - நினைத்து எழுந்து. 115. இகல் - வலிமை. கண்ணியதை - நினைத்ததை காய் கலியும் - வருந்துகின்ற சனியும், கேள்ஆன - உறவான. தேம்மொழியை - இனிய மொழியை உடைய தமயந்தியை, மருங்கு - பக்கத்தில். 116. முதலோடும் - அடியோடும், பற்றி - பிடித்து. திகைத்து - மயங்கி. 117. புகுந்து - மறுபடியும் வந்து, மீண்டு - மறுபடியும், கொணர்ந்த - கறந்து கொண்டுவந்து, அடுபாலின் - காய்ச்சிய பாலின், தோயல் - தயிரை, காலன் வடிவாய வேலான் - யமன் வடிவமாகிய வேலை உடையவன். 118. கோக்காதலியை - சிறந்த மகளை. குறிக்கொண்மின் - மனம் பொருந்திக் காப்பாற்றுங்கள். காதல் அன்பு - ஆசையும் அன்பும். ஏதிலன் போல் - அயலானைப் போல. 119. தாரு - கற்பகத்தரு. விரவார் போல் - பகைவரைப் போல. செங்கால்நகஞ்சிதைய - சிவந்த கால்களில் உள்ள நகங்கள் சிதையும் படி. இருட்டில் கற்களில் கால் இடறுவதால் நகங்கள் சிதைகின்றன. 120. நீலம் அளவேநெகிழ - நீலமலர் போன்ற கண்கள் சிறிதளவு திறக்க. நிரைமுத்தின் - வரிசையான முத்துக்களையுடைய, கோல மலரின் கொடி இடையாள் - அழகிய மலரின் கொடியைப் போன்ற இடையை யுடையவள். அயர்ந்து - சோர்ந்து. 121. ஒளிதொடியாள் - ஒளிபொருந்திய பொன் வளையலை அணிந்த தமயந்தி. மடுத்த துயிலான் மறுகி - கொண்டநித்திரையினால் மனங்கலங்கி. 122. அமளி - படுக்கை. கையரிக்கொண்டு -தேடி, இனமேதி - கூட்டமாகிய எருமைகள். 123. வெஞ்சிலைவேடன் அழல்அம்பு உருவ - கொடிய வில்லையுடைய வேடனது கொதிக்கின்ற அம்பு தைக்க, குழை - காதணி. 124. முகில் கூந்தலுக்கும், மின்னல் தமயந்திக்கும் உவமை. ஏனம் - பன்றிகள், குண்டு நீர் - ஆழமான நீர் நிலை களையுடைய. 125. வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக்கொண்டு, வாவு பரித்தேர் - தாவுகின்ற குதிரைகள் பூட்டிய தேர், குலம் - கூட்டம். 126. தான் அம்மடந்தைக்கு - தான் அத்தமயந்திக்கு, தார் வேந்தன் - மாலையை அணிந்த வேந்தனாகிய நளன் கைவாங்க - ஒளிக்க. கான் ஊடே - காட்டின் நடுவே. 127. பையவே - மெதுவாக, என் என்னாது என்-என்னஎன்று கேளாதது என்ன காரணத்தால், என்னாதது என்பது தொகுத்தல் விகாரம் பெற்றது. வாடும் - வருந்தும், மயர்ந்து - மயங்கி. 128. நாறுதலும் - தோன்றுதலும். மல் உறுதோள் - மல்யுத்தத்தில் வலிமை மிக்கதோள், விழிவேலை - கண்ணாகியகடலிலிருந்து, சாய்ந்த - கவிழ்ந்த. 129. வெறித்த - பயந்து வெறித்துப் பார்க்கின்ற, நெடிது ஊழி - நீண்டகாலமாக, வானாடர் - தேவலோகத்தினரால், பெற்றிலா - அடையமுடியாது. 12. நைடதம் நளனும் தமயந்தியும் ஒன்றுசேர்தல் 130. விண்ட - மலர்ந்த, விளரி - ஒருவகையான பண். தூஞ்சு - தூக்குகின்ற, மண்டு - நிறைந்த தீம் - இனிய. குடுமி - உச்சி - கொண்டல் - மேகம், கண்படு - தூங்குகின்ற. குண்டின புரம் - வீமனுடைய தலைநகரம். வீமன் தமயந்தியின் தந்தை. 131. சில்லி - தேர்ச்சக்கரம். கம்பலை - ஓசை. கேளா - கேட்டு செய்யா என்னும் எச்சம். ஒல்லை - விரைவு. இததிறம் - இவ்விதம், அணங்கு - தமயந்தி, 132. மருவு பாகனை - தன்னோடு சேர்ந்துவந்த பாகனாகிய யானை. இருது பன்னன் - அயோத்தி மன்னன். எதிரா - எதிர் கொண்டு வந்து. புரிவ - செய்யத்தக்க உபசாரங்கள். போக்கி - நடத்தி. என்கொல் - என்ன காரணம்? 133. பாங்கு உளார் - பக்கத்தில் உள்ளவர். பணிப்ப - கட்டளையிட, விழுமிது ஒன்று - சிறந்ததாகிய ஒன்றை. 134. அவ்வயின் - அவ்விடத்தில், ஆய்வளை - ஆராய்ந்து அணிந்தவளை யலையும், மாற்றம் - சொல். அயிர்த்தனன் - சந்தேகித்து, முற்று எச்சமாயிற்று. 135. சாந்தம் - சந்தனம். போந்த - வந்த. கூந்தல்மா - பிடரி மயிரையுடைய குதிரை. 136. கொங்கு - தேன். திறம்பா - தவறாமல், எய்தி - நளன் இருக்கும் இடத்தை அடைந்து, வந்த ஆறு - வந்தகாரணம். 137. வேட்ட - விரும்பிய, மடைத்தொழில் - சமையல் வேலை. 138. மன்னிவாழ்வது - நிலைத்து வாழ்வது, பொன் அலாம் சுணங்கு - பொன்போன்ற மேல். 139. ஓர் நளனொடும் - ஒரு நளனிடத்திலும், சேய் அனான்- முருகனை ஒத்தவன். தெருளேன் - அறியேன். 140. மடவரல் - தோழியானவள். கதும் என- திடீர் என்று கதும், விரைவைக் குறித்தது. மின் அனாள் உடன் - தமயந்தியுடன், தனது உரு அலான் - தன்னுடைய உருவு இல்லாதவன். அதாவது மாறு உருவம் கொண்டவன். முன்னின் - ஆராய்ந்தால். 141. வால் அரி - வெண்மையான அரிசி. அடுவது - சமைப்பதை. குழைகொள் - குழையை அணிந்த காதை யுடையவளும். வாள் முகம் - ஒளிபொருந்திய முகத்தை யுடையவளும் ஆகிய கொம்பு அனாள் - பூங்கொம்பு போன்றவள், குறுகி - அடைந்து. இழைகொள் பூண் அணி - இழைப்புத் தொழிலைக்கொண்ட ஆபரணங்களை யணிந்திருக்கின்ற தமயந்தி. 142. குழிசி - பானை. அடிசில் - சாதம். குறுகா - அடைந்து. 143. குழையும் - உருகும். விழைவினோடு - ஆசையோடு, மாட்டு - பக்கம், மாடு மாட்டென இரட்டிற்று. 144. தொடர்ந்த - பற்றிய, மும்மலம் - ஆணவம், மாயை. காமியம் என்னும் மூன்று மலங்கள். பவக்கடல் - பிறவிக் கடல். 145. முழுவல் அன்புடை - நிறைந்த வலிய அன்புடைய. 146. வம் - வாரும், வாரும் என்பது வம்மெனத் திரிந்தது. குழைத்த - தளர்ந்த. தழைத்த - நிறைந்த. காதலால் - அன்புடன். 147. அன்பினள் - அன்புடையவளை. பிழையிலள் - குற்றம் இல்லாதவளை. கண்படை கொள்வாள் - தூங்குகின்ற வளை. இறையும் - சிறிதும். 148. மாசு துன்று - அழுக்கு நிறைந்த, நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு, உயிர்ப்பு -மூச்சு. 149. நரியும் - துன்புறுத்தும். தணந்தபின் - நீங்கிய பின். மெலியல் - வருந்தற்க. வேட்டது என் - விரும்பிய காரணம் யாது? 150. நிடதர்கோ - நளன். நேடினன் - தேடினன். படர் உறேல் - வருத்தம் அடையாதே 151. முன்னை - பழைய. பல்நகத்து இறை - பாம்பு அரசன், மாண்உரு - அழகிய உரு. வேள் - மன்மதன். கவின்நலம் - மிகுந்த அழகு. கனிந்திட -தோன்றிட 152. மன்றல் - வாசனை. விதர்ப்பர்கோன் - வீமன். விளைந்தமை - நடந்த நிகழ்ச்சிகளை. துன்று - நெருங்கிய. 13. மனோன்மணீயம் 153. சேவடி - சிவந்த அடி. பரிந்து - அன்புடன் 154. மனோன்மணி, அண்மைவிளி. ஏதோ - உனக்கு என்ன- 155. ஆர்வம் - அன்பு. மேனியும் மண்ணாள் - உடல் குளியாள். படியாள் - பாடமாட்டாள். பணி - ஆபரணம். பணியாள் - சொல்ல மாட்டாள். மெய்விதிர்த்து - உடம்புநடுங்கி. பேணி - எமது கேள்வியை மதித்து. 157. உளமும் வாக்கும் - மனமும் சொல்லும், தோடு - மேலோடு. அணையில் - வந்தால், அவாவும் - அடைவதற்கு விரும்பும் முருகு அவிழ் - வாசனை வீசுகின்ற. ஒல்கும் - சுருங்கும். நிசிதவேல்- கூர்மையான வேலையுடைய. அரசஅடவியில் - அரசர்களாகிய காட்டில். ஒரு தரு - ஒரு விருட்சத்தை. 158. எழில் பொழியும் - அழகு விளங்குகின்ற, புரை அறு - குற்றம் அற்ற. 159. தொலைவு இலா - அழிவில்லாத, துன்னலர் - பகைவர். துனிவரும் - துன்பமடைகின்ற. 160. நடேசன் - நடராஜன், இவன் ஜீவகனுடைய நன்மையில் கண்ணும் கருத்து மாக உடையவன். மன்றல் - திருமணம். 14. மூர்க்க நாயனார் புராணம் (பெரிய புராணம்) 164. மன்னி - நிலைத்து. நல்நித்திலம் வயல்பரப்பும் திரைப் பாலி என மாற்றி நல்ல முத்துக்களை வயல்களிற் பரப்புகின்ற அலைகளையுடைய பாலி யாறு எனப் பொருள் கொள்க; புடைவாவி பக்கத்துத் தடாகம். 165. புரிசை - மதில். இயல்பில் வரும் தம்பற்று உடைய - இயல்பாக வருதலையே தமக்குப்பற்றுக் கோடாக உடைய. 166. கோதில் மரபில் - குற்றமில்லாதவழி. (வழி என்பது ஈண்டுகுலத்தைக் குறித்தது. அமுது செய்யக்கண்டு - அவர்கள் அமுதுசெய்ததைப் பார்த்த பிறகு. நியதி - ஒழுக்கம். 167. அடிசில் - சோறு. கன்னல் சுவையின் கறிகள் - சர்க்கரை போன்ற சுவையினையுடைய கறிகள். விருப்பால் - அன்புடன். வேண்டும்படியால் - விரும்பியபடியே. ஏயுமாறு - பொருந்தும்படி. 168. மாள- அழிய. திறம் - வகை. ஆரா - அன்புஅடங்காத 169. தமக்கு ஒரு பற்று - தமக்கு ஒப்பற்றபற்றுடைய. இலம்பாடு - வறுமை அயர்வார் - வருந்துவார். பொங்கு - மிகுந்த பொருள் ஆக்கவும் - பொருள் - சேர்க்கவும். 170. பெற்றம் - காளை. பலிக்கு - பிச்சைக்கு, கருதார் - பகைவர். திருக்குடந்றதை - கும்பகோணம். 171. பொருள் ஆயம் - பொருளிலாபம். அம்பலம் - பலர் கூடும் சந்தி. உறுபொருள் - கிடைக்கின்ற பொருள். 172. முதற்பணயம் - முதலில் வைத்த பந்தயம், சுரிகை - வாள் 173. துரிசு அற்ற - குற்றம் அற்ற. ஏதம் இலா - குற்றம் இல்லாத. இடை யொற்றும் ஈறும் தொக்கன. 174. ஆடுவார் - நடனம் புரிகின்றவராகிய பரமசிவன். 15. திரௌபதி மணம் 175. வில் ஆண்மையினால் - வில் வலிமையால். வெம் கருப்பு வில்லோன் - விரும்பத்தக்க கரும்பு வில்லையுடையவன். பான்மை - தன்மை. புலி - தேசம். தேகாய் பாவாய் அன்மொழித்தொகைகள். 176. அரி ஏறு அன்ன - ஆண் சிம்மம்போல. தவரில் - வில்லில். புரி நாண் - முறுக்குள்ள நாணியை. வெம் சாயகத்தால் - கொடிய அம்பினால் பவரில் செறிய - கொடியில் நெருங்கும் படி பல்வாய்த் திகிரி - பல பல வாய்களையுடைய சக்கரத்தின் மீது. பயில் இலக்கை - இருக்கின்ற இலட்சியத்தை. கவரில் - கவர்ந்தால். 177. கைத்தாயர் - வளர்ந்த தாயர்; தோழிமார்கள். அரியாசனம் - சிம்மாசனம். தனு - வில். அருமை - கஷ்டம். ஆண்மை கூறி - வீரம் பேசி. 178. கிளரா நின்ற - கிளர்ச்சி செய்த. அனு உருக்கொண்டு - (பார்ப்பனரை ஒத்த உருக்கொண்டு, அலாயுதன் - கலப்பையை ஆயுதமாக உடைய பலராமன், வீட - நீங்க. 179. மேருசார் அப்பார வரிசிலை - மேரு மலையைப் போன்ற அந்தப் பெரிய கட்டமைந்தலில். பணைத்தோள் - பெரிய தோள். பரிசு - தன்மை. 180. வல்லியம் - புலி. மல்லல்வாகு - வலிமையுள்ள புயத்தை யுடைய. தன் தனு - தனது உடம்பு, தகர - சிதைய. 181. பூகதன் ஆகிய அன்றே - பூமியில் பிறந்த அன்றே மௌலி - கிரீடம். மாகதன் - மகதநாட்டு மன்னன் சராசந்தன். சாகதன் - வீரன். ஏகதனு - ஒப்பற்ற வில். வலம்புரிந்தார் - நந்தியா வட்ட மலர் மாலை. 182. கலை - விற்கலையை. கழல் காளை - வீரகண்டாமணி அணிந்த காளைபோன்ற வீரன். நிருதன் - இராவணன். 183. உரவு மெலிந்து - வலிமை குறைந்து. எழில் மாழ்கி - அழகு குறைந்து. உள்ளம் அழிந்து - மனம் வருந்தி. உரும் ஏறு - இடி ஏறு. கருமுகில் வாகனன் - மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன். இரவிகுலச் சிறுவன் - இராமன். 185. நாண்கள் - நாணங்கள் (மானம்) தனு நூல் - வில் வித்தையை உணர்த்தும் கலை. உளர்திகிரிச்சுழல் இலக்கை - சுற்றுகின்ற சக்கரத்திற்கு மேல் சுழலுகின்ற இலட்சியத்தை. 186. இவன் அவனே போன்ம் - இவன் தான் அருச்சுனன் போலும். பாங்காக - பக்கமாக. பரிந்து - அன்புகூர்ந்து. தேர்சார - இனிமையான சாரத்தையுடைய, தாமம் - மாலை. 188. வேர்ப்பாடு நுதல் சிவந்த விழியன் ஆகி - வேர்வை தோன்றிய நெற்றியும், சிவந்த கண்ணையும் உடைய வனாகிய. கழற - கோபத்தோடு சொல்ல. மகாஆலையம் - கடல். 189. முருத்து வாள் நகை - மயில் இறகின் அடியைப்போன்ற ஒளி பொருந்திய பல். முருக்குமாறு - செய்யுமாறு. மருத்துவான் திருமகன் - அருச்சுனன். மருத்தின் செல்வமைந்தன் - பீமனை. உருத்து - கோபித்து. கோகு - உச்சிக்குடுமி. ஓச்சி - வீசி. முருந்து முருத்து என வலித்தல் விகாரம் பெற்றது. 190. மிகைத்த - கூட்டமான. பகழி - பாணம். உகைத்தான் - செலுத்தினான். உரனும் - வலிமையுடைய அருச்சுனனும். 193. கொற்றவை - வீரலெட்சுமி. கம்மி - குயவன். ஐயம் - பிச்சை. 194. சேரநீர் அருந்தும் - ஒன்று கூடி நீங்கள் உண்ணுங்கள். புறம்பர் -வெளியில் கள்அவிழ் - தேன் சிந்துகின்ற மலரை அணிந்த. 195. ஆரணப்படியது ஆகும் - வேதமொழியாகும். 196. நாமம் - பெயர். பார்த்தன் - அருச்சுனன். கங்குல் - இரவு 197. கனகமாலை - பொன்மாலை. பூபதி - பாஞ்சாலமன்னன். 16. கையடைப் படலம் 198. நனை வரு - அம்புகள் தோன்றுகின்ற. அணைதர - வந்து சேர. புனைமணி, மணிபுனை எனமாற்றி மணிகளாற் செய்யப்பட்ட எனப்பொருள் கூறுக. 199. பொலிந்து - விளங்கி. சாரணர் - தேவதூதர். நாயகன் - தங்கள் தலைவனாகிய இந்திரன். நாட்டம் - கண். 200. மடங்கல் - சிம்மம். மொய்பினான் - வலிமையை உடையவன். கோசிகன் - விசுவாமித்திரன். 201. அந்தரநிலத்து - ஆகாயத்தில் உள்ள, இரவி - சூரியன் விஞ்ச - மிக. கந்தமலரில் கடவுள் - தாமரை வாழும் நான் முகன். 202. செற்றுபு - நெருங்க. குயிற்றி - பதித்து. அவிர் - விளங்குகின்ற. அருத்தியொடு - அன்புடன். இணைந்த - இரண்டாகப் பொருந்திய. துணிந்தது - அறுந்தது. 203. நலஞ்செய்வினை - நல்வினை, உண்டு எனினும் - உண்டு என்று சொல்லினும் அன்று - அதுவும் அன்று. நான் வலஞ் செய்து. வணங்க நகர் நீ எளிவந்த இது என்றுமாற்றிப் பொருள் கொள்ளுக. நகர் நீ எளிவந்த இது - நகரில் நீ எளிதாக வந்த இச்செய்தி, 204. பல் நகமும் நகும் - பல மலைகளையும் பார்த்துச் சிரிக்கின்ற, பணிவரை - இமயமலை. பதுமபீடத்தன் - தாமரை ஆசனத்தை யுடையவன்; நான்முகன் புகல் - சரண்புகும் இடம். இகல் கடந்த - பகைவரை வென்ற. புல - புலால் நாற்றம். 205. துளிக்கும் - சிந்துகின்ற. நின்தளிக்கும் - உன்னடைய குளிர்ந்த குன்று அளிக்கும் - குன்றைப்போலக் காணப்படும். 206. அவன் முகம் நோக்கி - கோசிகன் முகத்தைப் பார்த்து, கரை செய்ய - தடுக்க. முரசு எய்து கடைத்தலையான் - முரசவாத்தியங்கள் எய்தியிருக்கின்ற வாயிலை உடையவன். 207. தரு- மரங்கள். வெருவர - அஞ்சும்படி நிருதர் - அரக்கர்கள். செருமுகத்து - போர்முகத்தில். உயிர் ஈர்க்கும் - உயிரை இழுக்கும். உளைய - வருந்துமாறு. 208. மருமத்தின் - மார்பின், புண்ணில் ஆம் - புண்ணில் உண்டா கின்ற பெரும் மழையில் - பெரிய துவாரத்தில். உள் நிலாவிய - உள்ளே விசாலித்த, உந்த - தள்ள. பெற்று - கண்களைப் பெற்று. 209. தொடை ஊற்றின் - தொடையின் ஊற்றைப்போல தொடை - தேன்கூடு. படை ஊற்றம் இவன் - படைக் கலப்பயிற்சி இல்லாதவன். பனிநீர் - குளிர்ந்த நீராகிய. 210. முனிவு - கோபம். வெயில் சுரந்தது - சூரிய வெப்பமும் மறைந்தது. நின்றனவும் - நிலை இயற் பொருள்களும். மீ நிவந்த கொழுங்கடைப்புருவம் - மேலே உயர்ந்தன வாகிய செழித்த புருவம். 211. கறுத்த - கோபித்து எழுந்த. உறுத்தல் ஆகலாஉறுதி - பிறரால் சேர்த்தற்கு முடியாத நன்மை, மறுத்தியோ - தடுக்கின்றாயோ. 212. மொய்கொள் - உயிர்க் கூட்டங்களைக் கொண்டிருக் கின்ற வேலையை - கடலை. முடுகு மாறுபோல் - அடையுந்தன்மையைப் போல. விஞ்சை - வித்தை. எதிர்ந்தது - நேர்ந்தது. 213. திருவின் கேள்வனை - இராமனை. உம்பரான் - மேலானவன். 214. எந்தை - எந்தையே! விளி. 215. எடுத்த - மிகுந்த. சீற்றம் - கோபம் நவைக்கண் நீங்கினான் - குற்றத்தினின்று நீங்கியவனாகிய கோசிகன். 216. புடை விசித்து - பக்கத்தில் கட்டிட. தூணி - அம்புக் கூடு. யாத்து - முதுகிற் கட்டி. 217. அன்னதம்பியும் - அதைப்போலவே கோலங்கொண்ட இலக்குவனும், தானும் - இராமனும். வழிக்கொண்டால் என - வழிப் பிரயாணம் செய்யத் தொடங்கியதைப் போல, சாயை - நிழல். 218. வரங்கள் - வேண்டுகோள்கள். மாசு அற - குற்றமில்லா திருக்குமாறு. புரங்கள் - பதவிகள். நகரம் - அயோத்தி. அரங்கு - நாடகமேடை இரங்கு - ஒலிக்கின்ற. வார்புனல் - மிகுந்த நீர். 219. கால்பொர - காற்று அடிக்க அதனால் கழனி - வயலில். வார்ந்த - ஒழுகிய மூரல் - பல், ஓதி - கூந்தல். சுரும்பு - வண்டுகள். 17. நலமுற்ற நங்கை 220. அரசர்தம் மடம் - இராஜா மடம். நிகர் இலா- ஒப்பில்லாத. நவநிதிச் செல்வன் - குபேரனைப்போன்ற தனவான். 221. பொன் என - இலக்குமியைப்போல. 223. மகிதலத்து - உலகத்தில். சீரிய - சிறந்த. இணைந்து - சேர்ந்து கிளர்ச்சி - ஊக்கம். 224. தேர்ந்து - அறிந்து. இளமை ஆண்டில் - இளமைப் பருவத்தில். 225. கொம்மை - அழகு. தகவு - தகுதி. 226. பெட்புறு - விரும்புகின்ற. முடிந்திட - இறுக்கும்படி. புரிந்த- கொடுமை புரிந்த. 229. இனும் கொடுநெறியிற் சேறல் - இன்னும் தீய நெறியில் செல்லுதல். ஏற்குமோ - தகுமோ. தூய - நன்மையான. 230. செம்மை சேர் பருவம் - நன்மையான பருவம், மணஞ் செய்துகொள்ளத் தக்க வயது, இம்மையில் - இவ்வுலகில். 231. செவ்வே - நன்றாக. முந்திய - பழமையான. சொந்தமாய் - தன் விருப்பப்படி 232. தனயன் - மைந்தன். எங்ஙன் - எவ்வாறு. வினைபுரியும். தீய செயல்களைச் செய்யும். நினை - மறவாமல் நினைக்கத்தகுந்த. 233. பெருமொழி -பெருவழக்கமான பழமொழி. வரன் - கணவன். திருஆம் - நன்மையாகும். 234. பின்றை - இவர்களுக்குப் பிறகு. பெற்றியது - நன்மை. 235. துன்றுதுயர் - நெருங்கிய துன்பம், துனி உணரா - பிறர் துன்பத்தை உணராத. முது கந்தசாமிக்கே - வயதான கந்தசாமிக்கு. நல்கினனால் - கொடுத்தான். ஆல் -அசை. 236. மாண்டதற்பின் - கழிந்த பிறகு, தணந்தனன் - நீங்கினான். உணர்வு அறியா - அறிவில்லாத. குரவர்கள் - தாய் தந்தையர்கள். துணைவருடன் - நண்பர்களுடன். 237. மனமாழ்க - மனம் வருந்த. மதிமொழிகள் -அறிவுரைகள். நலி கமலவல்லியை - வருந்துகின்ற கமலவல்லியை. 238. மணங்கோடல் - மணஞ்செய்து கொள்ளுதல், மதித்திடு வார். நினைப்பார்கள். எள்ளுவர் - இகழ்வார்கள். 239. மூடஒண்ணா - மூடமுடியாது. சிலைநுதல் - வில்போன்ற புருவத்தையுடைய. சிறுமை - துன்பம். 240. துயர் உழக்கும் - துயரத்தால் வருந்தும். 241. கலைகள் - சாத்திரங்கள். மாதலத்தவர்கள் - உலகத்தார். ஏதம் அது அகன்று - துன்பம் நீங்கி. முற்போக்கு - முன்னேற்றம். 242. ஏற்ற செம்மலை - தகுந்த கணவனை, தேர்ந்துகொள்ள -தெரிந்துகொள்ள. செய்கை - நல்ல செய்கை. 243. ஆர்வத்தின்படியே - விருப்பப்படியே. 244. இங்கிதம் - இனிய குணங்கள். பொங்கிய - நிறைந்த. 245. காதலர் - புத்திரர்கள். 246. தெருட்டு எண்ணம் - தெளிந்த அறிவுடைய எண்ணம் தேங்கு - மிகுந்த. பொருட்டு - காரணம், இருட்டு அகன்றி - அறியாமை நெறிகளை நீக்கி. 247. திறம் குறை - வலிமை குறைந்த. 248. மதிநிறை அறம் - அறிவு நிறைந்த தருமம் காளைமார்கள் - வாலிபர்கள். ஆற்ற - செய்ய. துரிதமொடு - விரைவில். சாமி.சிதம்பரனார் படைப்புகள் தொகுதி - 1 1. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற்பாகம் 1929 2. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் 1929 3. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் 1929 4. தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் 1931 தொகுதி - 2 1. தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1939 தொகுதி - 3 1. அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) 1944 2. அணைந்த விளக்கு (அரசியல் சமூக சீர்திருத்த நாடகம்) 1948 தொகுதி - 4 1. திருக்குறள் பொருள் விளக்கம் 1959 தொகுதி - 5 1. நாலடியார் பாட்டும் உரையும் 1959 2. நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) 1960 தொகுதி - 6 1. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் 1956 2. எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் 1957 தொகுதி - 7 1. கம்பன் கண்ட தமிழகம் 1955 2. பதிணென்கீழ்க் கணக்கும் தமிழர் வாழ்வும் 1957 தொகுதி - 8 1. சிலப்பதிகாரத் தமிழகம் 1958 2. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு 1960 தொகுதி - 9 1. இலக்கியச் சோலை (புறநானூறு) 1958 2. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1967 தொகுதி - 10 1. வள்ளுவர் காட்டிய வைதீகம் 1949 2. வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் 1956 தொகுதி - 11 1. பெண்மக்கள் பெருமை (அ) மாதர் சுதந்திரம் 1929 2. காரல் ஹென்றி மார்க் 1937 3. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் 1940 4. முன்சீப் வேதநாயகம் பிள்ளை 1955 தொகுதி - 12 1. சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல்கள் 1929 2. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு 1935 3. உமர்கய்யாம் 1946 4. சிந்தனைச் செய்யுள் 1956 5. சாமி சிதம்பரனார் புதுக்குறள் 1960 6. அறிவு (கவிதை) 1964 தொகுதி - 13 1. தேவாரத் திருமொழிகள் 1959 2. ஆழ்வார்கள் அருள்மொழி 1959 தொகுதி - 14 1. வடலூரார் வாய்மொழி 1959 2. சங்கப் புலவர் சன்மார்க்கம் 1960 3. பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை 1963 தொகுதி - 15 1. அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் 1960 2. மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் 1961 தொகுதி - 16 1. புதிய தமிழகம் 1952 2. வளரும் தமிழ் 1954 3. தொல்காப்பியத் தமிழர் 1956 தொகுதி - 17 1. பழந்தமிழர் அரசியல் 1959 2. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் 1960 3. தமிழர் வீரம் 1964 தொகுதி - 18 1. சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் 1960 2. இலக்கியம் என்றால் என்ன? 1, 2 1963 3. சிறுகதைச் சோலை (தொகுப்பு) 1964 தொகுதி - 19 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 20 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 21 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955 தொகுதி - 22 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955