[]       விதை (குறு நாவல்)           பொன் குலேந்திரனின் (கனடா)                 விதை (குறு நாவல்) பொன் குலேந்திரன் (கனடா)   © ஆசிரியர் | முதல் பதிப்பு: மே 2019     Designed by [Image]             ஆசிரியர் பார்வையில்   ஒரு வித்தியாசமான, யாதார்தமான, அறிவியல் சார்ந்த கருவைக் கொண்ட ஒரு குறு நாவலை எழுத வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை நான் சில வாரங்களாகச் சிந்தித்தப் போது எனக்கு மிகவும் நெருங்கிய கனேடிய வெள்ளை இனக் குடும்பம், என் வீட்டுக்கு வந்தார்கள் அவர்களோடு அவர்களின் மகள் சேராவும் வந்திருந்தாள். அவளின் தோற்றம் அவளின் தந்தை போல் இருந்தது. படு சுட்டியான பெண் குழந்தை. அவளுக்கு இரண்டு வயது இருக்கும். அங்கும் இங்கும் ஓடித் திரிந்தாள். நான் கேட்ட கேள்விகளுக்கு பட் பட் என்று பதில் சொன்னாள். அந்த குழந்தையின் சிரிப்பில் ஒரு கவர்ச்சி .எனக்குத் தெரியும் அந்த குழந்தையின் தாய் சில்வியாவுக்கு மூன்று தடவை கருச்சிதைவு நடந்தது என்று. டாக்டர் அவளுக்குச் சொல்லி போட்டார் அவளின் கருப்பையில் சிசு தங்காது என்று ,டாக்டரின் ஆலோசனைப் படி ஒரு வாடகைத் தாய் மூலம் அவர்களின் மரபணு உள்ள குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதை அறிந்தார்கள் . சேரா அவர்களுக்கு வாடகைத் தாய் வழி மூலம் பிறந்தாள் சில்வியாவிடம் அவளின் வாடகைத் தாய் அனுபவம் பற்றி விசாரித்து அறிந்தேன். அவள் அதன் விபரத்தைச் சுருக்கமா எனக்கு சொன்னாள். அதுவே “ விதை” என்ற தலைப்பில் என் கற்பனையில் விதையிட்டு, துளிர்விட்டு, வளர்ந்து இந்த குறு நாவல் ரூபத்தில் உருவாகியது .இந்த குறு நால், அறிவியல், குடும்பம், தாயன்பு ஆகியவை கலந்த கதை . இது நடப்பது மிக அருமை. மலடி என்ற சமூக குற்றச்சாட்டில் இருந்து மீள இந்த வைத்திய முறை பெரிதும் உதவும். மேற்றகத்திய நாடுகளில் இந்த வைத்திய முறையைச் சட்டமும் அனுமதித்துள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெறுவதைச் சட்டம் அனுமதித்துள்ளது அதை வைத்து ஏஜென்சி மூலம் நீரகம் . ஈரல் . கண் போன்றவை வியாபாரம் செய்வது போல், வறுமை நிமித்தம் வாடகைத் தாய் வியாபாரம் நடக்கிறது இந்த கதையை இலங்கை சூழலில எழுதி உள்ளேன். கதையில் வரும் பெயர்கள் எவரையும் குறிப்பிடுவதில்லை. முற்றிலும் புனைவு ****     உள்ளடக்கம்   1      நாச்சிமார் கோவிலடி தங்கராசு 2      தங்கமணி 3      வள்ளியம்மாள் 4      திருமணம் 5      கருச்சிதைவு 6      வாடகைத் தாய் 7      சத்திர சிகிச்சை 8      வாரிசு பிறந்தது 9      தாயன்பு   அத்தியாயம் 1 நாச்சிமார் கோவிலடி தங்கராசு   யாழ்ப்பாணத்தை ஆரிய மன்னர் அட்சி செய்த காலத்தில நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சேவை செய்ய பூமாலை கட்டி விக்ரகத்தை அலங்கரிப்பவர்கள், சிவிகை தூக்குபவர்கள், நாதஸ்வரம் வித்துவான்கள் தட்டார் எனும் விஸ்வப்பிரம்மகுல சிற்பிகள். வண்ணார், சவரத் தொழில் செய்பவர்கள் . கோவில் பண்டாரிகள் (பொக்கிஷத்தார்) உணவு தயாரிக்கும் சமையல்காரர், மர வேலை செய்யும் தச்சர் போன்ற பல தொழில் செய்பவர்களைத் தென் இந்தியாவில் இருந்து வரவழைத்தனர் அவர்கள் வெவ்வேறு ஊர்களில் கூட்டமாய் வாழ்ந்தனர் அந்த ஊர் பெயரும் வீதியும் அநேகமாகத் தொழில் சார்ந்ததாக இருந்தது உதாரணத்துக்கு தட்டார் தெரு , வண்ணார் பண்ணை, சிவியார் தெரு, கொல்லன் கலட்டி. செடி தெரு பறங்கி தெரு ,தச்சன் தோப்பு, பண்டாரக் குளம் போன்றவையாகும் . இவற்றின் பெயர்கள் இப்பொதுபெரும் பாலும் மாறினாலும் இன்னும் சிலர் பழைய சாதி பேர்களை வைத்தே பேசுவதுண்டு. கடவுள் சிலைகளையும் ஆபரணங்களையும் கையால் உருவாக்கும் கலையில் சிறந்தவர்களான தட்டார் என்ற விஸ்வப்பிரம்மகுல சிற்பிகள் வாழ்ந்த இடம் நாச்சிமார் கோவிலடி. இக் கோவிலை பொதுவாக வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் என்றும் அழைப்பர் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகரின் வடக்கே, வண்ணார்பண்ணை என்ற ஊரில் காங்கேசன்துறை வீதியும் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியாகிய பொன் இராமநாதன் வீதியும் இணைகின்ற இடத்திலே அமைந்திருக்கின்றது. ஆரம்பக் காலத்தில் மருத மரத்தடியில் ஆரம்பித்த தேவதை வழிபாடு, பெரு வளர்ச்சியடைந்து, நாளடைவில் ஆகம வழிபாட்டைக் கொண்ட கோயிலாக மாற்றமடைந்து உள்ளது. இந்த ஆலயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே “நாச்சிமார் கோவில்” எனச் சிறப்பாக அழைக்கப்பட்டது. நாச்சிமார் கோவில் கி.பி 1870 ம் ஆண்டு, விஸ்வப்பிரம்மகுல சிற்பியாகிய கந்தர் என்பவரால் கல்லினால் கட்டப்பட்டதாக 1898 இல் யாழ்ப்பாண அரச அதிபரினால் வெளியிடப்பட்ட ஆலயங்கள் பற்றிய ஒரு அரசாங்கக் குறிப்பேட்டிலே காணப்படுகிறது. நாச்சிமார் கோவில் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதையொன்று இப்பிரதேச மக்களிடையே பேச்சுவழக்கில் காணப்படுகிறது. ஆதிகாலத்தில் இப்பகுதியில் இருந்தகுளத்தைச் சுற்றி நாவல் மரங்களும், மருத மரங்களும் சுற்றுப்புறங்களில் வயல்வெளிகளும் நிறைந்த மிகச்செழிப்பான பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. இப்பகுதியில் சிவப்பிராமணர்களான விஸ்வப்பிரம்மகுல மக்களே மிகவும் செறிந்து வாழ்ந்தனர். பிரபல நகை வியாபாரி தங்கத்துரை, நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் தங்கத்தில் நகை செய்யும் கலையை தன் தந்தை நவரத்தினத்திடம் கற்றவர். நவரத்தினத்தின் தந்தை மாணிக்கரத்தினம் இராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.   பல திருமணங்களுக்கு பொன்னுருக்கி, தாலி செய்து முள் முருக்கை மரத்தில் கன்னிக் கால் நட்ட பெருமை தங்கத்துரையைச் சேரும். அவர் செய்த தாலியை அணிந்து திருமணம் செய்த பெண்கள் குழந்தை செல்வகங்களோடு சுமங்கலிகளாகச் சீரும் சிறப்புடன் வாழ்ந்தார்கள். அதனால் தங்கத்துரையிடம் பொன்னுருக்கி தாலி செய்ய யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து வந்தார்கள். தனக்கு உதவிக்கு தங்கத்துரை தன் இனத்தவர்கள் இருவரை வேலைக்கு வைத்திருந்தார். நகை செய்யக் கொடுத்த தங்கத்தில் கலவை இல்லாமல் நகை செய்து கொடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றவர் தங்கத்துரை காலப் போக்கில் யாழ்ப்பாணத்தில் பொற் கொல்லரின் உறைவிடமாக விளங்கும் கன்னாதிட்டியில் ஒரு நகைக்கடையை ஆரம்பித்து வியாபாரத்தில் வெற்றியும் பெற்றார் . அதன் பின் ஒரு முஸ்லீம் மாணிக்ககல் வியாபாரி ஒருவரின் தொடர்பினால் கொழும்பில் “நாச்சியார் தங்கம் ஹவுஸ்” என்ற பெயரில் ஒரு நகைக் கடையை புறக் கோட்டையில் உள்ள சீஸ்ட்ரீட்(Sea Street) யில் ஆரம்பித்து பெரும் செல்வந்தர் ஆனார் . தன் மாமன் மகள் லட்சுமியைத் திருமணம் செய்த பின் அவரின் வணிகம் விரிவடைந்து ஒரு கீழக்கரை முஸ்லீமுடன் இணைந்து துபாயில் ஒரு நகைக் கடையை தங்கத்துரை ஆரம்பித்தார் அதைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் ஒரு கடைக்கு உரிமையாளர் ஆனார். தங்கத்துரைக்குக் கொழும்பில் இரண்டு வீடுகள் இருந்தன ஒன்று கறுவாக்காடு கொழும்பு 7 யில் உள்ள பார்ன்ஸ் (Barnes Place) பிலேசிலும், மற்றது வெள்ளவத்தை இராமகிரிஷ்ணா வீதியிலும் இருந்தன . அதோடு மஸ்கெலியாவில் 100எக்கார் தேயிலைத் தோட்டத்தில் பங்கும் இருந்தது,எவ்வளவு செல்வம் இருந்தும் தங்கத்துரை எளிமையைக் கடைப் பிடிப்பவர். முருக பக்தர் .நேர்மையானவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது கோவிலுக்கு மனைவியோடு போவது அவர் வழக்கம். ஈழப் போரில் பாதிப்படைந்த சிறுவர்களுக்கு ஒரு அனாதை இல்லம் முல்லைத்தீவில் நடத்தி வந்தார் , தங்கத்துரைக்கும் லட்சுமிக்கும் பிறந்தவள் ஒரே மகள் தங்கமணி. அவள் தான் உலகம் தங்கத்துரை தம்பதிகளுக்கு . தங்கமணியைச் செல்லமாக மணி என்று பெற்றோரும் இனத்தவர்களும் அழைப்பார்கள்.   ****   அத்தியாயம் 2 தங்கமணி   தங்கத்துரை குடும்பத்துக்கும் தங்கத்துக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்தது தங்கத்துரை குடும்பத்துக்குப் பூராடம் 2-ம் பாதத்தில் மகள் தங்கமணி பிறந்தாள். அவளின் ஜாதகத்தை ஊர் சதாசிவம் சாஸ்திரியிடம் காட்டி கேட்டபோது அவர் பூராடம் 2-ம் பாதத்தில் பெண் பிறந்ததால் த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சாலச் சிறந்தது என்றார். அதோடு உங்கள் மகளுக்கு எழில் செவ்வாய் இருப்பதால் பொருத்தமான சாதகம் உள்ள மாப்பிள்ளையைப் பார்த்துச் செய்து வையுங்கள் அப்படி இருந்து அவள் வயிற்றில் கரு தங்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. கோவிலுக்குச் சென்று இவள் பெயரில் மாதம் ஒரு முறை அருச்சினை செய்யுங்கள். சில வேலை தோஷம் நீங்கலாம்” என்றார் சாஸ்திரியார்:” என் மகள் படித்து படம் பெறுவாளா”? லட்சுமி கேட்டாள்... “முயற்சித்தால் பட்டம் பெறுவாள். சில சமயம் காதல் திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்ல இவளுக்கு பூமரங்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும் ஆனால் ல் உங்கள் மகள் நடும் விதைகள் முளை விட்டு வளருமா என்பது சந்தேகம்”: என்றார சதாசிவம் சாஸ்திரி. கலந்து ஆலோசித்து மகளுக்குத் தங்கமணி என்ற பெயர் தங்கத்துரை தம்பதிகள். வைத்தனர் தங்கமணி சுமரான அழகி. ஐந்தடி எட்டு அங்குலம் உயரம். நீண்ட கூந்தல். மெல்லிய உடல். பெற்றோரை எதிர்த்துப் பேச மாட்டாள். பிலவர் வீதியில்(Flower road) உள்ள லேடீஸ் கல்லூரியில் பெற்றோர் அவளைப் படிப்பித்தனர் கல்லூரிக்கு காரில் போய் வந்தாள் அவளின் பொழுது போக்கு வீட்டில் உள்ள தொட்டத்தில் மலர்ச்செடிகளை வளர்ப்பது. கர்நாடக இசை கேட்பதும் தெரிந்தெடுத்த தமிழ் சினிமா படங்களை மட்டுமே பார்ப்பாள் ஏ லேவலுக்கு மேல் தொடர்ந்து படிக்க தங்கமணிக்கு விருப்பமில்லை . தந்தை நடத்தும் அனாதைப் பிள்ளைகள் இல்லத்துக்கு அவள் ஒரு போதும் சென்றதில்லை . தான் தெரிந்து எடுத்த பணக்கார உயர் மட்டத்து மாணவிகளோடு மட்டுமே அவள் பழகினாள். பதின்ரெண்டு வயதில் தங்கமணி ருது வானதும் இனத்தவர்களையும் நண்பர்களையும் அழைத்து சிறப்பாக்கக் கொழும்பு 7 பார்ன்ஸ் பிலேகில் உள்ள தங்களின் தங்கப் பவனத்தில் பூப்பு நீராட்டு விழா தங்கத்துரை தம்பதிகள் நடத்தினார்கள். குடும்பத்தில் அவள் ஒருத்தி மட்டுமே பிள்ளை என்பதால் கேட்டதெல்லாம் அவளுக்குக் கிடைத்தது. பூந்தோட்டம் செய்வதில் அவளுக்கு ஆர்வம். ஆனால் அவள் நடும் செடிகள் வளர்வதில்லை . விதைகள் நட்டால் துளிர் விட்டுவளராது. அது அவளுக்கு பெரும் கவலை தன் பெற்றோருக்குச் சொல்லி கவலைப் பட்டாள். தன் விரல்கள் பசுமை இல்லாத விரல்கள் என்று சொல்லி குறைபடுவாள் . தனக்கு ஒரு பொமினேரியன் நாய் குட்டி வேண்டும் என்று கேட்டதால் அதிக விலை கொடுத்து ஒரு குட்டியை வாங்கி கொடுத்கார் . அனால் அந்த குட்டி மூன்று மாதங்களுக்குள் இறந்து விட்டது. தங்கத்துரை அவரின் மஸ்கெலிய தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய வள்ளியம்மாவின் கணவன் இராமையா என்பவனை தங்கமணிக்கு உதவிக்குத் தோட்டக்காரனாக நியமித்தார் . அவன் நட்ட விதைகள் செடிகள் எல்லாம் வேகமாக வளர்ந்தன. தங்கமணி விதைகள் நாடுவதில்லை காரணம் அவை அனேகமாக முளை விடுவதில்லை பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய கனவு மற்றும் இலட்சியமாக இருக்கும் ஒரு விஷயம் தாய்மை என்பது தான். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் ஒரு உயிரைச் சுமந்து, அதை இவ்வுலகில் நல்ல முறையில் பெற்று எடுத்து, வளர்த்து. ஆளாக்கி ஊர் மெச்ச குழந்தை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.   இந்த முழு ஆசையும் நிறைவேற அடித்தளமாக இருப்பது குழந்தை கருத்தரிப்பு மற்றும் பிறப்பு. பெண் ஆனவள் தனக்குள் ஒரு உயிரைச் சுமந்து பெற்று எடுத்து வளர்க்க, கரு முதலில் உருவாக வேண்டும். ஆனால், பூமியில் பிறந்த எல்லா பெண்களும் இந்த வரத்தைப் பெறுவதில்லை; பல பெண்களுக்கு ஒரு குழந்தையைக் கருத்தரிக்க முடியாத நிலை, சிலருக்கு கரு உருவாகி வயிற்றில் தங்காத நிலை போன்ற சூழல்கள் ஏற்படுகின்றன. பெண்கள் கருத்தரிக்க அடிப்படை விஷயமாக இருப்பது மாதவிடாய் தான்; மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அது பெண்களின் கருத்தரிக்கும் நிகழ்வை பாதிக்கலாம். பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற நிலைகளின் காரணமாகக் கருத்தரிப்பு ஏற்படுவதில் பிரச்சனை மற்றும் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். கருப்பையில் பிரச்சனை! பெண்களின் கருப்பையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ, வலி, கட்டி, வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலோ, கருப்பையின் சுவர்களிலிருந்து உதிரப்போக்கு நிகழ்ந்தாலோ அது அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாவதில்லை. மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, வயிற்றில் தொடர்ந்த வலி மற்றும் கருப்பையில் பிரச்சனையிலிருந்தால் அதன் விளைவு மாதவிடாய் சுழற்சியில் தென்படும். இந்த மாதிரியான காரணிகள் பெண்களின் கருத்தரிப்பைத் தடுக்கும் காரணங்களாக விளங்குகின்றன. இந்த பிரச்சினைகள் தங்கமணிக்கு ஏற்பட்டு பல தடவைகள் குடும்ப டாக்டரிடம் சென்று இருக்கிறாள். அவளை பரிசோதனைக்கு உட்படுத்த டாக்டரை பார்த்தபோது தங்கமணியின் கருப்பையில் சிறுசிறு கட்டிகள் இருப்பதாய் கண்டு அவற்றை நீக்கினார், கருத்தரித்தால் பிரச்சனை வரலாம் என் எச்சரித்து அனுப்பினார் ****   அத்தியாயம் 3 வள்ளியம்மாள்   தங்கபவனத்தில் தங்கத்துரையின் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள் மஸ்கெலிய தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள். அவளுடைய தந்தை அந்த தோட்டத்துக் கண்காணி சின்னசாமி. தங்கத்துரைக்கு மிகவும் வேண்டப் பட்டவன் சின்னசாமி. வள்ளியம்மாள் பிறந்தது ஹட்டனில் அங்குள்ள பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரைபடித்தவள். இருபது வயதில் தன் மாமன் மகன் இராமையாவை திருமணம் செய்தாள். இராமையா மஸ்கேலிய தேயிலைத் தோட்டத்தில் மெக்கானிக்காக சில வருடங்கள் வேலை செய்தவன். திருமணத்தின் பின் வள்ளியம்மாள் கூடவே அவளின் கணவன் இராமையாவும் தங்கபவனத்தில் அவுட் ஹௌசில் வாழ்ந்தனர். இராமையா, வீட்டில் உள்ள தோட்டத்தைக் கவனிப்பதோடு தங்கத்துரை குடும்பத்துக்குக் கடைக்குப் போய் சாமன்களும் வாங்கி வருவான். அவனுக்கு கார் ஓட்டத் தெரிந்த படியால் தங்கத்துரைக்கு தேவைப் பட்ட நேரம் அவரின் பென்ஸ் காரின் டிரைவராகவும் வேலை செய்வான். வள்ளியம்மாளின் ஒரு மகள் செல்லம்மா மஸ்கெலிய தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்தாள். அவள் பாட்டனார் சின்னசாமி வீட்டில் வசித்தாள் தங்கமணிக்கு பூந்தோட்டம் செய்வதில் ஆர்வம் அதிகம். அது அவளின் பொழுது போக்கு. இராமையாவை அனுப்பி அதிக விலை கொடுத்து மண்ணுக்கு உரமும் பலவித ரோஜா, ஒர்கிட், போகன் வில்லா செடிகளும். கிழங்கு வகை மலர்ச் செடிகளையும் தன் வீட்டுத் தோட்டத்தில் இராமையாவின் உதவியோடு நடுவாள். அவள் விதைக்கும் விதைகளும் செடிகளும் வளர்ந்து மலர். விடுவதில்லை அது அவளுக்குப் புதிராக இருந்துது., அதனால் இராமையாவின் உதவியை நாடுவாள். அவன் எது நட்டாலும் வெகு விரைவில் முளை விட்டு வளர்ந்து மலரும். அதன் காரணத்தை தங்கமணியால் புரிந்துகொள்ள முடியவில்லை . அதை பற்றி தன் தாயிடம் அவள் குறைபட்ட பொது லட்சுமிக்குச் சாஸ்திரி சதாசிவம் சொன்னது நினைவுக்கு வந்தது . அப்போது அவர் சொன்னது போல் இவள் வயிற்றில் குழந்தை தங்காதா?. அதை மகளுக்கு லட்சுமி சொல்லவில்லை ஒர்க்கிட் செடியை வளர்க்க மிகவும் பொறுமை வேண்டும். ஒரு செடி முளைத்து பூ பூக்க, ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை ஆகும். ஒர்க்கிட் செடிகள் ஒரு நாணய அளவிலிருந்து சில நூறு கிராம் எடை வரை காணப்படுகின்றன. உலகின் மிகச் சிறிய ஒர்க்கிட், ‘பிளாடிஸ்டீல்’ என்ற இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்கள் 2 மி.மீ. அளவே இருக்கும். ஒர்க்கிட்டில் இரண்டு வகை உண்டு. சில வகை ஒர்க்கிட்கள் ஒட்டுண்ணிகளாக வளரும். கிழங்கு வகை ஒர்க்கிட்களும், பாறை மேல் வளரும் ஒர்க்கிட்களும் இறந்தவற்றிலிருந்து சத்துகளை எடுக்கும் ஒர்க்கிட் இனங்களும் உள்ளன. இவை பற்றிய நூல்களை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கமணி படித்தாள். கொழும்பு ஒர்க்கிட் கிளப்பில் அங்கதினராக் இருந்தாள். இந்த கிளப் பணக்காரப் பெண்களால் நடத்தப் படுவது லட்சுமிக்கு மகளின் போக்கு பிடிப்பதில்லை தன் கணவனின் அன்பு மகள் என்பதால் அவள் செய்யும் சில தவறுகளைப் பொறுத்துக் கொள்வாள் .சில சமயம் வள்ளியம்மாளை அவள் நடத்தும் விதம் லட்சுமிக்கு பிடியாது. சமையல் சம்பந்தப் பட்ட விசயங்களை வள்ளியம்மாவோடு தங்கமணி பேச லட்சுமி விட மாட்டாள் வள்ளியம்மாவும் சின்ன எஜமாட்டியோடு கவனமாகப் பழகினாள். தனக்கு வேண்டியதை எஜமாட்டி லட்சுமியிடம் கேட்டு வாங்கிக்கொள்வாள். லட்சுமி அவளுக்குத் தாய் போல் இருந்தாள். வருடத்துக்கு ஒரு தடவை சில நாட்கள் மஸ்கேலியா சென்று மகளோடு இருந்து வருவாள். செல்லம்மாவும் சில நாட்கள் கொழும்புக்கு வந்து தாயுடன் சில நாட்கள் நிற்பாள் . அப்போது தங்கமணி அவளோடு அதிகம் பேச மாட்டாள் வேலைக்காரி மகளோடு தனக்கு என்ன பேச்சு இருக்கிறது என்பது அவள் எண்ணம் . செல்லம்மாவும் முடிந்தளவு தங்கமணியோடு அதிகம் பேசுவதைத் தவிர்த்தாள். தங்கமணி சொல்லும் வேலையை மறுபேச்சு இல்லாமல் செய்வாள்.   *****     அத்தியாயம் 4 திருமணம்   இருபத்தியொரு வயதுடைய தங்கமணிக்குச் செவ்வாய் தோஷம் உள்ள ஒரு படித்த பையனின் ஜாதகம் கலியாணத் தரகர் சாமி கொண்டு வந்தார். சாமியிடம் எல்லா பணக்கார பெண்களின் ஜாதகங்களும் இருந்தன ஒரு நாள் சாமி ஜாதகங்கள் உள்ள தனது பையுடன் தங்கத்துரையின் வீட்டுக்குப் போனார். அவருக்குத் தெரியும் தங்கமணிக்குப் பொருத்தமான மாப்பிள்ளை ஒழுங்கு செய்தால் தங்கத்துரையிடம் நல்ல தரகுத்தொகை பெறாலாம் என்று. “வாரும் சாமி. என்ன கன காலம் உம்மை இந்த வீட்டுப் பக்கம் காணோம் ஏதாவது நல்ல செய்தியோடு வந்திருக்ககிறீர் போலத் தெரிகிறது” தங்கத்துரை சொன்னார் “ஓம் ஐயா. உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை தேடுவது பெரிய கஷ்டம், பிள்ளை தங்கமணியின் சாதகம் சரியான பாவம் கூடிய சாதகம் கண்டியளோ, அதோடு உதயத்தில் செவ்வாய் வேறு. பிறகு பொருத்தம் இல்லாத மாப்பிள்ளை பார்த்துச் செய்து வைத்தால் என்ன நடக்குமோ தெரியாது. எனக்கு ஒரு நல்ல பொருத்தமான சாதகம் ஓன்று கிடைத்திருக்கும் அதாலை தான் வந்தானான். இந்தாருங்கோ பெடியனின் படமும் விபரமும், ஜாதகமும் ” படத்தையும் விபரத்தையும் ஜாதகத்தையும் தங்கத்துரையிடம் சாமி கொடுத்தார் . படத்தையும் ஜாதகப் பொருத்தத்தை வாங்கி பார்த்துவிட்டுத் தங்கத்துரை தன் மனைவி லட்சுமியிடம் கொடுத்தார் . “பெடியனின் தோற்றம் பிழையில்லை. என் மகள் தங்கமணிக்கு முதலில்பெடியனை பிடிக்க வேண்டும் . ஜாதகம் பொருந்துதே”? “ஐயா பொருந்தம் இல்லாமல் நான் உங்களிடம் வருவேனே. பெடியன் பெற்றோருக்கு ஒரே மகன் சகோதரிகள் இல்லை, அதனாலை அவனுக்குப் பொறுப்பு இல்லை. பையனின் பெயர் தர்மலிங்கம். தர்மன் என்று கூப்பிடுவினம் நல்ல குணமான பெடியன். சிகரெட், குடிப் பழக்கம் இல்லை. கூட்டாளி மார் குறைவு குடும்பப் பொறுப்பு தெரிந்தவன் வயது இருபத்தைந்து. தகப்பன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பெடியனின் தாய் நேர்சாக இருந்தவ. தட்டார் தெரு சந்திக்கு அருகே உள்ள சிங்கம் மாஸ்டருடடைய வீட்டுக்கு பக்கத்தில் அவர்களின் வீடு இருக்கு . பெடியன் ஒரு அமெரிக்கன் கொம்பனியில் மார்கடிங் டிரெக்டராக இருக்கிறான். நல்ல சம்பளம் . சலுகைகள். வாகனமும் கொம்பனி கொடுத்திருக்கு” . சாமி சொன்ன விபரம் கேட்டுத் தங்கத்துரைக்கும் லட்சுமிக்கு இடம் பிடித்துக் கொண்டது மேலும் சாமி சொன்ன விபரத்தின் படி பெடியன் தங்கத்துரைக்குத் தூரத்துச் சொந்தம். பெடியனின் பாட்டனார் அவரை போல் வெள்ளவத்தையில் நகைக் கடை வைத்திருந்தவர். உங்கள் வீட்டு மாப்பிள்ளையாக பெடியன் இருப்பான் பெடியனின் படத்தைத் தங்கமணிக்குக் காட்டி அவளின் சம்மதத்தைப் பெற்று பெண் பார்க்கச் சரி என்றார் தங்கத்துரை **** பெண்ணைப் பார்க்கத் தர்மன் தன் பெற்றோரோடு வந்த போது கொழும்பு மகளிர் கல்லூரியில் படித்ததால் கூச்சம் இன்றி அவனோடு தங்கமணி பேசினாள். தன் பூந்தோட்டத்தைக் கொண்டு போய் தர்மனுக்குக் காட்டி அங்குப் பூத்து இருந்த மலர்ச் செடிகள் எல்லாம் தான் நட்டவை என்றாள். தனக்கு ஓர்கிட் ரோஜா செடிகள் என்றால் பிடிக்கும் என்று அச் செடிகள் பற்றிய விபரம் சொன்னாள் தர்மனின் பெற்றோருக்கும் தங்கமணியைப் பிடித்துக் கொண்டது. ஒரே மகள் என்ற படியால் தர்மலிங்கத்தின் பெற்றோர் கேட்ட சீதனத்தைக் கொடுக்க தங்கத்துரை தயங்கவில்லை. கலியாண வீட்டுச் செலவு தன் பொறுப்பு என்றார். தங்கமணியின் திருமணம் ஹில்டன் ஹோட்டலில்(Hilton Hotel) அதி விமர்சையாக நடத்தி வைத்தார் தங்கத்துரை . தங்கமணியும் தர்மனும் தேனிலவுக்குக் காஷ்மீருக்குப் ஒரு கிழமை போய் வந்தனர். தர்மன் தங்கமணி மேல் அன்பைப் பொழிந்தான் . அவளும் அவனை அத்தான் அத்தான் என்று சுற்றி வந்தானள் அவன் கேட்ட உணவை வள்ளியம்மாவை கொண்டு சமைத்து கொடுத்தாள்.. வள்ளியம்மாவின் சமையல் தர்மனுக்குப் பிடித்துக் கொண்டது அவளின் அடக்கம் ஒடுக்கமான நடத்தை அவனுக்கு அவள் மெல் மதிப்பைக் கொடுத்தது . வள்ளியம்மாவுக்கு சிங்களம் பேசத் தெரியும் என்று தெரிந்தும் அப்பம், சீனி சம்பல், பிலாக்காய் கறி கவுங், லவரியல் போன்ற சிங்கள உணவுகளை தனக்குச் செய்து தரும்படி கேட்பான் .அவளும் செய்து கொடுப்பாள் , “வள்ளி நீ எங்கே சிங்களம் பேச கற்றனி” தர்மன் கேட்டான், அவன் கொழும்பில் படித்த படியால் அவனுக்கும் ஓரளவுக்குச் சிங்களம் பேசத் தெரியும் “நான் பிறந்தது ஹட்டனில். அங்கு தான படித்தேன் அதனால் சிங்களம் தெரியும்” என்றாள் வள்ளி வள்ளியின் சிபார்சினால் தர்மனும் தங்கமணியும் ஒரு கிழமை ஹாட்டனுக்கும் மஸ்கேலியாவுக்கும் சிவனொளி பாத மலைக்கும் போய் வந்தனர் மஸ்கேலியாவில் வள்ளியின் தந்தை கண்காணி சின்னசாமியையும் அவரின் மனைவியும் வள்ளியின் மகள் செல்லமாவையும் சந்தித்தனர். ****   அத்தியாயம் 5 கருச்சிதைவு   திருமணமாகி ஒரு வருடத்துக்குள் தங்கமணி கற்பமானது தங்கராசு குடும்பத்தினர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தங்களுக்குக் கொஞ்சி விளையாட ஒரு பேரனோ அல்லது பேத்தியோ கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும் இரு பக்கத்து பெற்றோர்களும் அதைச் சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை அவர்களின் மகிழ்ச்சியை அளவிட முடியாது லட்சுமி தன் மகளை தங்கள் குடும்ப டாக்டர் கேசவனிடம் கூட்டிப் போய் தங்கமணி கற்பமாக இருக்கிறாளா என்பதைக் கேட்டாள் . அவரும் சில பரிசோதனைகளுக்குப் பின் தங்கமணி கற்பமாகி விட்டாள் என உர்ஜிதப் படுத்தினார். டாக்டர் கேசவனுக்குத் தங்கமணியின் தேக நிலை பற்றி நன்கு தெரியும். பல தடவை அவள் மாதவிடாய் காலத்தில் தன் வயிற்றில் அதிக நோ இருப்பதாகவும் இரத்த ஓட்டம அதிகம் என்று அவரிடம் முறையிட்டு இருக்கிறாள். அதனால் கற்ப காலத்தில் மிக கவனமாக இருக்கும் படி டாக்டர் கேசவன் எச்சரித்து அனுப்பினார் . லட்சுமி எவ்வளவோ சொல்லியும் தோட்ட வேலை குனிந்து செய்யாமல் தங்கமணியால் இருக்க முடியவில்லை . பாரமான உரம் உள்ள பையைத் தூக்கி மண்ணுக்கு உரம் போடுவாள். அதைப் பல தடவை கவனித்த இராமையா தான் தோட்டத்தை கவனித்து கொள்வதாகச் சொல்லியும் தங்கமணி கேட்க வில்லை “அம்மா நீங்கள் வந்து தோட்டத்தைப் பார்த்தால் மட்டும் போதும். பாரம் தூக்காதீர்கள். குனிந்து வேலை செய்யாதீர்கள். இது உங்களின் முதல் பிரசவம் . அலட்சியப் படுத்தாதீர்கள்” என்று அன்பாக அவன் வேண்டியும் அவள் கேட்கவில்லை . ஒரு நாள் குனித்து மண்வேட்டியால் நிலத்தைக் கொத்தும் போது தங்கமணிக்கு கற்பமாகி நான்கு மாதத்துக்குள் கருச் சிதைவு ஏற்பட்டது , அவளின் கருப்பையைக் கழுவி சுத்தப் படுத்தினார் டாக்டர் கேசவன் . சில மாதங்களுக்குக் கருத் தரிப்பதைத் தவிர்க்கும் படி தங்கமணியை எச்சரித்து டாக்டர் கேசவன் அனுப்பினார். இந்த எச்சரிக்கையைக் கொடுத்த ஒரு வருடத்துக்குள் இரண்டாம் தடவையும் தங்கமணி கருவுற்றாள். . ஸ்கேன் செய்து பார்த்த பொது ஆண் குழந்தை என்று தெரியவந்தது., மகப் பேறுவைத்திய நிபுணர் அவளை இரு கிழமைக்கு ஒரு தடவை பரிசோதனைக்கு வந்து போகும் படி சொன்னார். அவர்கள் பயந்தது போல் ஆறு மாதத்தில் ,தங்கமணிக்கு இரத்தப் பெருக்கு அதிகரித்து இண்டாவது தடவையும் கருச் சிதைவு ஏற்பட்டது தங்கமணியின் உயர் தப்பியது அவள் செய்த கடவுள் புண்ணியம் . இனியும் கருத்தரிக்கக் கூடாது.அவளின் கருப்பையில் சிசு தங்காது . அப்படி கரு தரித்தால் தங்கமணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என் டாக்டர் எச்சரிக்கை செய்தார் தங்கத்துரை தம்பதிகளுக்கு அது அதிர்ச்சியைக் கொடுத்தது. தங்கள் சொத்துக்கு ஒரு வாரிசு பிறக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு அது பெரும் எமாற்றம். அவர்களுக்கு தங்கள் மகள் தங்கமணியின் உயிர் தான் முக்கியம். தர்மலிங்கம், அதிர்ச்சியில் இருந்தான். லட்சுமியின் ஆலோசனைப் படி தர்மலிங்கமும் தங்கமணியும் வேறு அறைகளில் இரவில் படுத்தனர் திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள் தங்கமணியும் தர்மலிங்கமும் விவாகரத்து செய்தவர்கள் போன்ற வாழ்க்கை வாழ்ந்தனர். இரவில் தர்ம லிங்கமும், இரவில் தன் அறையைப் பூட்டி பெரு மூச்சோடு தூங்கப் போய் விடுவான். தங்கமணி தனது நிலையை நினைத்து இரவில் கண்ணீர் விடுவாள், மகளின் நிலையைக் கண்டு தங்கத்துரையும் லட்சுமியும் என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.   *****   அத்தியாயம் 6 வாடகைத் தாய்   ஒரு குடும்பத்தில் கஸ்டம் வரும் போது தொடர்ந்து வரும் என்பார்கள். தங்கமணிக்குக் இரு தடவைகள் கருச்சிதைவுகள் நடந்தது அதை தொடர்ந்து இராமையாவுக்கு இருதையைப் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிகப் பட்டான் , .இதனால் வள்ளிய்ம்மா செயல் இழந்து போனாள் . விட்டில் உள்ள தோட்டத்தை கவனிக்க ஒருவரும் இல்லை. தர்மலிங்கம் தனக்குத் தெரிந்த தூரத்து உறவினரைத் தொட்டத்தை கவனிக்க நியமித்தான் . அது தங்கமணிக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை . அதனால் தங்கமணி கணவனோடு பிரச்சனை பட்டாள். மறுபுறம் தங்கள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவர்களுக்கு அவர்களுக்குத் தெரிந்த நெருங்கிய உறவினர்களின் விமர்சனங்கள் வேறு. தங்கத்துரை மனைவியும் தர்மனும் தங்கமணியும் கதிர்காமத்துக்கு யாத்திரை செய்து தங்கமணியின் வயிற்றில் மாவிளக்கு ஏற்றினார்கள் . அங்கு உள்ள காட்டுக்குள் ஒரு பெரிய மரப் பொந்துக்குள் தாடியோடு இருந்த பொந்து சாமியைத் தரிசித்தனர். “ எல்லாமே கதிர்க்காமக் கந்தன் கிருபையால் நல்ல படி நடக்கும்” என்று அவர் ஆசீர்வாதம் செய்தார் . அவர்கள் கதிர்காமத்தில் இருந்து கொழும்பு திரும்பியவுடன் லட்சுமியின் பெரியம்மாவின் மகள் டாக்டர் மாலதி இங்கிலாந்தில் இருந்து லீவில் கொழும்புக்கு வந்திருந்தாள் அவளை ஏதோ முருகன் அனுப்பியது போல் அவர்களுக்கு இருந்தது. டாக்டர் மாலதி லண்டனில் மகற்பேறு துறையில் டாக்டராக வேலை செய்பவள். தங்கமணியின் குழந்தை இல்லாத பிரச்சனையை டாக்டர் மாலதிக்கு லட்சுமி விரிவாகச் சொன்னாள். தங்கமணியின் பிரச்சனை முழுவதையும் கேட்ட மாலதி “சின்னம்மா இதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள் இந்த காலத்தில் மருத்துவத் துறையில் இது போன்ற பிரச்சனையைத் தீர்க்க வழி உண்டு. உங்கள் குடும்பத்தில் ஒரு வாரிசு நிட்சயம் கிடைக்கும். ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் ” . “நீ என்ன என் மருமகனை இன்னொரு திருமணம் செய்யச் சொல்லுகிறாயா மாலதி”? “இல்லை சின்னம்மா வாடகை தாய் முறை மூலம் உங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ கிடைக்க வழி உண்டு. இந்த வழியைப் பாவித்து இந்தியாவில் பல பெண்கள் தங்கள் கருப்பையை நீரகம் ஒன்றை கொடுப்பது போல் வாடகைக்கு விட்டு எராளமான பணம் சம்பாதிக்கிறார்கள் . இந்த முறையில் குழந்தை பெறுவது வெகுவாக முன்னேறிவிட்டது நானே லண்டனில் எனது கஷ்டமர்களுள் இருவருக்கு இந்த வழியில் ஆரோகியமான குழந்தைகளை அவர்கள் கையில் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொடுத்திருக்கிறேன் . குழந்தையின் மரபணு தம்பதிகளுடையது வாடகைத் தாயுக்கும் குழந்தையின் மரபணுவுக்கும் தொடர்பு இல்லை” “நீ என்ன மாலதி சொல்லுகிறாய்” லட்சுமி கேட்டாள். “சின்னம்மா உங்களுக்கு புரியும் விதத்தில் சொல்லப்போனால் உங்கள் சொந்த காருக்கு உங்கள் வீட்டில் பார்க் செய்ய இடம் இல்லாவிட்டால் வாடகை பார்கிங்கில் இடம் எடுத்து. பார்க் செய்து பின் எடுத்து செல்லலாம் . கார் உங்களது ஆனால் வாடகை பார்க்குக்கு காசு கொடுக்க வேண்டும்” “மாலதி இந்த சிகிச்சையை இலங்கையில் செய்யலாமா.? சட்டம் என்ன சொல்லும்”? “ஆம் சின்னம்மா இந்த சிகிச்சையை இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் செய்யலாம். எனக்குத் தெரிந்த ஒரு சிங்கள பெண் டாக்டர் செய்கிறா . ஆனால் கொஞ்சம் பணம் செலவாகும் . வாடகைத் தாயாக வர ஒப்புக்கொள்வதற்கு பெரும் தொகையான பணம் ஒரு பெண் கேட்பாள்”. “எவ்வளவு மட்டில் கேட்பாள் “? “எனக்குத் தெரிந்தமட்டில் இந்தியாவில் வாடகைத் தாயாகச் செயல் பட இந்திய ரூபாய் 2 மில்லியன் ஆகும், இது பரிசோதனை ஆஸ்பத்திரி செலவு உட்பட., இலங்கை ரூபாயின் படிசுமார் 4 மில்லியன் ஆகும். இந்த தொகை செல்வந்தரான சித்தப்பாவுக்கு இது பெரிய காசு இல்லை நீங்களும் சித்தப்பாவும் தர்மனும் ஆலோசித்து முடிவு சொல்லுங்கள். தங்கமணியின் ஒப்புதல் அவசியம் தேவை. பிறக்கும் குழந்தையின் பெற்றோர் தர்மனும் தங்கமணியும் என்பதால் அவர்களுக்குச் சட்டச் சிக்கல் வராமல் செய்ய வேண்டும் .” “நல்லது மாலதி எனக்கு ஒரு கிழமை தா, நான் எல்லோரோடும் பேசி உனக்கு முடிவு சொல்கிறேன் ஒரு கிழமைக்குப் பின் டாக்டர் மாலதி தங்கத்துரை குடும்பத்தின் முடிவை மாலதி கேட்டாள், அவர்கள் சிகிச்சைக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள். “வாடகைத் தாயைத் தெரிவு செய்வது உங்கள் குடும்பப் பொறுப்பு சின்னம்மா” என்றாள் மாலதி ****     அத்தியாயம் 7 சத்திர சிகிச்சை   தங்கமணி . தர்மலிங்கம் . லட்சுமி, தங்கத்துரை ஆகிய நால்வரையும் டாக்டர் மாலதி தனக்குத் தெரிந்த தெரிந்த வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் மருத்துவ முறையில் பல குழந்ததைகளை குடும்பகளுக்கு பெற்றுக் கொடுத்த அனுபவம் உள்ள டாக்டர் திருமதி ஹெமலதா அமரசேகராவை கின்சி வீதியில்(Kynsey Road) உள்ள கிலினிக்கில் சந்தித்து பேசஅழைத்துச் சென்றாள். ஏற்கனவே இரு குடும்பங்கள் டாக்டரை சந்திக்க காத்திருந்தனர் ஹேமலதாவும் மாலதியும் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள. .சினேகிதிகள் . முதலில் வந்திருந்த குடும்பகளோடு பேசி முடித்த பின் ஹேமலதா தன் அறையில் இருந்து வெளியே வந்து மாலதியை கண்டவுடன் “மாலு, எப்படி நீ லண்டனில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு வந்தனி”? ஹேமலதா மாலதியை கேட்டாள். மாலதியை ஹெமாலதா மாலு என்று உரிமையோடு கூப்பிடுவாள். ஹெமலதாவை லதா என்று செல்லமாக மாலதி கூப்பிடுவாள். லதாவின் பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள். ஹெமலதாவின் கணவன் அமரசேகர யுனி லிவர் கொம்பனியில் உயர் பதவியில் இருப்பவர் .லதா கண்டியைச் சேர்ந்தவள். ஹெமலதாவின் பெற்றோர் வீட்டுக்கு பல தடவை மாலதி போய் இருக்கிறாள். தன் சின்னம்மா லட்சுமி குடும்பத்தையும் தர்மலிங்கம் குடும்பத்தையும் மாலதி ஹெமலதாவுக்கு அறிமுக படுத்தவும் அவர்கள் பிள்ளை இல்லா பிரச்சனைப் பற்றி பேசவும் டாக்டரின் அறைக்குள் எல்லோரும் சென்றனர். “லதா நான் உன்னோடு ஏற்கனவே ஒரு தம்பதிகளை பற்றி பேசினேனே. அது இந்த தர்மலிங்கம் தம்பதிகள் பற்றியது தான் இதோ. இருக்கிறாவே இவ பெயர் தங்கமணி. எனக்கு சகோதரி முறை அவவுக்கு பக்கத்தில் இருப்பவர் தங்கமணி.யின் கணவன் தர்மன் என்ற தர்மலிங்கம். என் சின்னமாவின் மகள் தங்கமணி இரு முறை கருத்தரித்து கருச் சிதைவு ஏற்பட்டது அவளின் கருப்பையில் சிறு கட்டிகள்(Polyps) இருந்து ஆப்ரேஷன் செய்து நீக்கப்பட்டது . இவளுக்கு இப்போ வயது இருபத்தையிந்து. கணவனுக்கு முப்பது வயது. இரு முறை கரு சிதைந்ததால் அவளின் கருவில் குழந்தை தங்காது, என்பதால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வருங்கலத்தில் அவர்களின் சொத்துக்கு உரிமையாக ஒரு வாரிசு இல்லை. அதுக்கு நீ உதவ வேண்டும்: “இவ கருத்தரிக்காமல் இருப்பது நல்லமுடிவு. கருத்தரித்தால் பிரச்சனைகள் ஏற்றபடாலாம் “ டாக்டர் லதா சொன்னாள் தங்கத்துரையை லதாவுக்கு மாலதி சுட்டிக் காட்டி “இவர் என் சித்தப்பா தங்கத்துரை. கொழும்பில் பிரபல நகை வியாபாரி. இவருக்கு செல்வத்துக்கு குறைவில்லை கொழும்பில் இரணடு வீடு மஸ்கெலியாவில் ஒரு பெரிய தேயிலை தோட்டத்தில் பங்கு. துபாய் . சிங்கப்பூரில் நகை கடைகள் .தங்கமணி இவர்களுக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே. தர்மன் குடும்பத்துக்கு அவசியம் ஒருகுழந்தை வேண்டும் அதுக்கு லதா நீ தான் உதவ வேண்டும் . அவர்களுக்கு நான் ஏற்றகனவே மருத்துவ முறையில் குழந்தை கிடைக்க வழி செய்யலாம் எனச் சொன்னேன் ஆனால் அவர்கள் உன்னிடம் வாடகை தாய் வைத்திய முறை பற்றி சில கேள்விகள் கேட்க விரும்புகிறார்கள் . நீ அந்த மருத்துவ செயல் மூலம் பல குடும்பங்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் கிடைக்க நீ உதவி இருக்கிறாய், அதனால் . அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தால் நல்லது அதன் பின் அவர்கள் முடிவு எடுக்கட்டும் “. “மிஸ்டர் அண்ட் மிசிஸ் தர்மன் வாடகை தாய் மருத்துவ முறையில் என்ன சந்தேகம் உங்களுக்கு உண்டு”? டாக்டர் லதா கேட்டாள். “எங்களுக்கு இந்த வைத்திய முறைப்படி குழந்தை பெறும் முறையை சுருக்கமாக சொல்முடியுமா டாக்டர் ? இதில் எங்கள் இருவரினதும் பங்குஎன்ன ? தர்மன் கேட்டான் . “ வாடகைத் தாயை பாவித்து கரு தரித்து குழந்தையை பெறுவது ஆங்கிலத்தில் சரோகசி (surrogacy) என்பர் உம்முடைய விந்துவையும் உமது மனைவியின் கருவில் இருந்து வெளிவரும் முட்டையையும் ஒரு பரிசோதனைக் குழாயுக்குள் ஓன்று சேர விட்டு, சில நாட்களில் கரு உருவாகியவுடன் நீங்கள் நியமிக்கும் வாடகைத் தாயின் கருப்பையுக்குள் உருவாகிய கருவை மாற்றுவோம் அதன் பின் பின் கரு அந்த வாடகை தாயின் கருப்பையில் வளரந்து சுமார் 38 முதல் 40வாரங்களில் சிசுவாக வெளி வரும். பலவகை காரணிகள் வாடகை தாய் செயல்முறையின் நீளத்தை பாதிக்கின்றன, ஆனால் பொதுவாக நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு மருத்துவ ரீதியான தகுதியுள்ள வாடகை தாயை கண்டுபிடித்து, பரிசோதனை குழாயுக்குள் உருவாக்கிய கருவை வாடகை தாயின் கருப்பையுக்குள் மாற்ற வேண்டும். பிறக்கும் குழந்தை உங்கள் இருவரின் மரபணுவை கொண்டதாக இருக்கும் அதில் சந்தேகம் இல்லை. ஒரு வாடகை தாயை தெரிந்து எடுக்கும் முடிவை நடைமுறைப்படுத்துவது முதல் படியாகும் இது அவ்வளவு இலகுவல்ல. பல மாதங்கள் எடுக்கும் . நல்ல அரோக்கியமான 35 முதல் 45 வயதுள்ள, ஏற்கனவே பிள்ளைகளை பெற்ற கருப்பையில் பிரச்கனை இல்லாத பெண்ணாக இருந்தால் நல்லது. அதுவும் கன்சர் போன்ற மாற்ற முடியாத ஆபத்தான நோய்கள் அந்த வாடகை தாயுக்கு இருக்கக் கூடாது இலகுவில் ஒரு வாடகைத் தாயை இந்தியாவில் தேர்ந்து எடுக்கலாம். இலங்கையிலும் அந்த வசதி உண்டு. அதிக செலவாகும், தெரிந்து எடுத்த வாடகைத் தாய் தகுதிவாய்ந்தவளா என்பதை தீர்மானிக்க பல பரிசோதனைகள் நாங்கள் மேற்கொள்வோம். வாடகைத் தாயை தேர்ந்து எடுப்பதுக்கு சில நிறுவனங்கள் உதவுவது உண்டு . சட்ட தொடர்புள்ள விசயங்களை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் அதற்கு அவர்கள் கொமிசன் எடுப்பார்கள் . இதுவே முதல் படி. இது ஒரு பெரிய முடிவு. “அதன் பின் என்ன நடக்கும்”? தங்கமணி கேட்டாள் “ஒரு வாடகத் தாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, மருத்துவ செயல்முறை உண்மையிலேயே தொடங்குகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதும், மருத்துவ நடைமுறைக்கு வாடகை தாயை தயார்படுத்து ஆரம்பிக்கப்படும். இது ஒரு வெற்றிகரமாக கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காக எந்த உடல் ரீதியற்ற தன்மையையும், மனநல சுகாதார பிரச்சினையையும் கவனமாக பரிசோதிக்படுகிறது . உடல் மற்றும் மன தயாரிப்பு பகுதி வாடகை தாய் மருத்துவ செயல்முறையில் ஒரு பெரிய பகுதியாகும். “அது என்ன மனநிலை தயாரிப்பு டாக்டர்”? தங்கமணி கேட்டாள். மனநிலை தயாரிப்பு வாடகைத் தாயுக்கு மட்டுமல்ல உங்கள் இருவருக்கும் தான் . அது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கலாம் , நீங்கள் மூவரும் இயற்கைகு எதிராக முறையில் ஒரு குழந்தை உருவாக்கப் போகுறீர்கள். உங்கள் மூவருக்கும் ஒரு தேவை உண்டு. வாடகைத் தாய் பலர் ஏழைகள் . அவர்களுக்கு பணம் அவசியம் தேவை. சிலர் தமது ஒரு நீரகம், ஈரலின் ஒரு பகுதி , கண் போன்றவற்றை பிறருக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் இது அவர்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். தாம் செய்வதை தமது மதம்.,சமூகம் ஏற்குமா என அவர்கள் சிந்திப்பது உண்டு. பின் விளைவுகளை பற்றி யோசிப்பார்கள் மன அழுத்தம் இந்த சிகிச்சையில் ஈடுபடுவோருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் வாடகை கருப்பையின் சூழலில் உள்ள அபாயங்களை முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இந்த வழிமுறை மூலம் குழந்தையை பெற போதிய ஆதரவு மூவருக்கும் வேண்டும்.” “எங்களுகுத் தெரிந்த பெண் ஒருத்தியை தேர்ந்து எடுப்பது நல்லத டாக்டர் “ லட்சுமி கேட்டாள். ”தெரிந்த தேக ஆரோக்கியம் உள்ள ஒருவராக இருப்பின்மிக நல்லது. உங்களுக்கு தெரியுமா குடும்பத்தில் ஒருவர் நீரகம் ஒன்றை தானம் செய்வார்கள், உங்கள் பெற்றோர்களிடமிருந்தும், நீங்கள் தெரிந்து எடுக்கும் வாடகை தாயின் நெருங்கிய குடும்பத்தினருடனும் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பெரும் ஆதரவு மிக முக்கியமானது. இந்த ஆதரவு ஒரு தனிநபரின் மன ஆரோக்கியம் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. “வேறு என்ன தேவை டாக்டர் ”? தர்மன் கேட்டான் “ அடுத்தது உடல் தயாரிப்புஉங்கள் மனநலத்திறன் மட்டுமல்ல உங்கள் மூவரின் உடல் ஆரோக்கியமும்முக்கியம் . வாடகைத் தாய் முடிந்தவரை ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு, சீரான உணவை பராமரிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் அனைத்து தேவையான வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் உடலின் செயல்பாட்டை ஒழுங்காக பராமரிக்கவும் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்கவும் உதவுகின்றன. கர்ப்பம் முழுவதும் ஊட்டச்சத்து மற்றும் சமநிலையுடன் முழுமையானது, ஆனால் கர்ப்பத்திற்கு முன்னும், குழந்தைக்கு அவர்களின் உடலை தயார் செய்வதற்கும் தேவையன உணவை உட்கொள்ள வேண்டும். உங்கள் உடல் முழுவதையும் ஆரோக்கியமாகவும், தயாரிப்பதாகவும் உறுதி செய்ய உடல் இயங்க பரிந்துரைக்கப்படுகிறது “நானும் வாடகை தாயும் மருத்துகள் எடுக்க வேண்டுமா டாக்டர்”? தங்கமணி கேட்டாள் டாக்டர் லதா சிரித்தபடி “ மருந்துகள் இல்லாத வைத்தியமா? மருந்துகள் கூட இந்த வைத்திய முறைக்கு ஒரு பெரிய பகுதியாக உள்ளது. கர்ப்பம் முடிந்தவரை மென்மையாகவும் குறைபாடற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய கர்ப்ப காலத்திற்கு முன்பும், வெவ்வேறு மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, ஒரு இயற்கை கர்ப்பத்தின் ஹார்மோன்கள் தூண்டுவதற்கு பல்வேறு மருந்துகளை வழங்குவதால், அதன் உடல் சரியான ஹார்மோன்கள் உற்பத்தி செய்ய ஆரம்பிக்க முடியும்” “ டாக்டர் எனது கருப்பையில் இருந்து முட்டையை எப்படி எடுப்பீர்கள் “ தங்கமணி கேட்டாள் “முட்டை முதிர்ச்சி அடைந்தவுடன், அவை ஊசி மூலம் பெறுவோம். . தேவையான அளவு முட்டைகளை மீட்டெடுத்தவுடன், அவர்கள் ஒரு நாளுக்கு நெருங்கிய கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். சராசரியாக இந்த குறுகிய செயல்முறை முடிக்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும். அடுத்து, கருத்தரித்தல் நேரம் ஆகும். பெண்ணின் முட்டை பெறுவதற்கு முன்னர்,ஆணின் விந்து ஒவ்வொரு முட்டையுடனும் சேகரிக்கப்பட்டு இணைக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்குப் பிறகு, கருத்தரித்தல் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க முட்டை மிகவும் நெருக்கமாக ஆராயப்படுகிறது. கருத்தரித்தல் வெற்றிகரமாக நடந்தது என்றால், அவர்கள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கருப்பைக்குள் செலுத்தப்பட வேண்டும் அல்லது சராசரியாக 3 -4 நாட்களுக்கு ஒரு கருவியாக ஐந்து நாட்களை எடுக்கும்போது, கருவுற்றிருக்கும் குழாய் வழியாக பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். “அதன் பிறகு என்ன நடக்கும் டாக்டர்”? தர்மன் கேட்டான்   “அடைகாக்கும் 5 நாட்களுக்குப் பிறகு எம்பிரோ பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒரு மெல்லிய மற்றும் நெகிழ்வான வடிகுழாயைக் கொண்ட ஒரு சிரிஞ்சி கருப்பையில் கருப்பையை இடமாற்றுகிறது. இது ஒரு விரைவான மற்றும் வலியற்ற செயல்முறை ஆகும். வேகமான செயல்முறை என்றாலும், வாடகை தாய் இந்த கருவுறுதல் மருத்துவத்தில் ஓய்வெடுக்க வேண்டும்.” டாக்டர் லதா சொன்னார் “செயல்முறைக்குப் பிறகு”? “செயல்முறை முடிந்தவுடன், வாடகை தாய் தொடர்ச்சியாக மருத்துவரின் பராமரிப்பில் இருக்க வேண்டும், தேவையான வைட்டமின்களை எடுத்து இரத்த பரிசோதனைகள் பெற வேண்டும். வழக்கமான பரிசோதனைகள் மற்றும் கவனிப்பு ஆகியவை சுரோககி செயல்முறைக்கு அவசியமானவை, எந்த கர்ப்பத்தைப் போலவும், வாடகை தாயுக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமானவையாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. கர்ப்பம் முழுவதும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளும்” “ வாடகை தாய் தீர்மானித்தவுடன் உங்களை அவளோடு வந்து சந்திப்போம் .” லட்சுமி சொன்னாள் ”ஒரு கேள்வி. நீங்கள் வாடகைத் தாயைத் தேர்ந்து எடுத்து விட்டீர்களா,? அல்லது இந்தியாவுக்கு செல்ல யோசித்து இருக்கிறீர்களா”? “இந்தியாவுக்கு வாடகைத் தாய் ஒருத்தியை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மிகவும் தெரிந்த, எங்கள் வீட்டில் பல வருடங்கள் வேலை செய்யும் வள்ளியம்மா என்ற பெண்ணுடன் இதை பற்றி நானும் ஏன் கணவரும் ஏற்கனவே பேசி இருக்கிறோம். அவளின் கணவருக்கு பை பாஸ் சிகிச்சை அவசியம் தேவைப் படுகிறது. அவளின் நிலை எனக்குத் தெரியும்.அவளுக்கு தங்கமணிக்கு வாடகைத் தாயாக இருக்க முழு சம்மதம். என்றாலும் என் சித்தி மகன் வரதராஜா பிரபல வக்கீல். அவரைக் கொண்டு வாடகைத் தாய் ஒப்பந்தம் எழுதினால் போச்சு” லட்சுமி சொன்னாள்.   ”அவளுக்கு பிள்ளைகள் உண்டா “? ”ஒரு 16 வயதில் பெண் குழந்தை ஓன்று உண்டு. நல்ல தேக ஆரோக்கியமானவள் வள்ளியம்மா அவளுக்கு வயது நாற்பத்தி ஐந்து வயது இருக்கும் அவளின் கணவரும் எங்களோடு தான் இருக்கிறான் ” தங்கத்துரை சொன்னார்.. “நம்பிக்கை உள்ள உங்களுக்கு தெரிந்தவர் ஒருவரை வாடகைத் தாயாக நியமிப்பது மிகவும் நல்லது. சட்ட பிரச்சனைகள் பின்பு வராது” டாக்டர் லதா சொன்னார் “டாக்டர் அதுவல்லாமல் நாங்கள் அவளுக்கு வாடகை தாயாக செயல்பட கொடுக்கும் பணம் அவளின் கணவரின் இருதைய ஒப்பரெசன் செலவுக்கு உதவப் போவது மட்டுமல்ல அவளின் ஒரு மகளின் திருமணத்துக்கும் உதவும” தங்கத்துரை சொன்னார் “உங்கள் கேஸ் சற்று வித்தியாசமானது. உங்கள் சிந்தனை மனிதம் நிறைந்தது, நன்கு தெரிந்த பெண் ஒருத்தி வாடகை தாயாகக் கிடைப்பது மிக அரிது.. அந்த வள்ளியம்மாவை நான் சந்திக்க வேண்டும் .அவுக்கு ஆங்கிலம் தெரியுமா “? ”ஒரளவுக்குத் தெரியும் அவளுக்கு சிங்களம் தெரியும் மஸ்கெலியாவில் பிறந்து வளர்ந்தவள் ஆச்சே”: லட்சுமி சொன்னாள் “ அப்போ அது மிகவும் நல்லது ஒரு நாள் நீங்கள் நால்வரும் அவளைக் கூட்டி வாருங்கள் நான் அவளோடு பேச வேண்டும்” என்றாள் டாக்டர் லதா. "செய்கிறோம் டாக்டர்” தங்கத்துரை சொன்னார். *****   அத்தியாயம் 8 வாரிசு பிறந்தது   ஒரு வருடத்தில் ,மூல நட்சத்திரத்தில் கொழு கொழுவென்று ஒரு ஆண் குழந்தையை வள்ளியம்மா பெற்றெடுத்தாள்.. சுக பிரசவம் நடந்த அன்று அவளுக்கு ஓரு நற் செய்தி அவளுக்கு சென்னையில் இருந்து வந்தது. அப்பலோ வைத்தியசாலையில் இருந்து இராமையாவின் இருதைய சிகிச்சசை வெற்ற்றிகரமாக முடிந்தது என் மகள் செல்லம்மா அறிவித்தாள் வள்ளியம்மா உடனே தங்கத்துரையை கை கூப்பி வணங்கி “ ஐயா உங்கள் நிதி உதவியால் என் புருசனின் உயர் பிழைத்தது என் தாலி காப்பாற்றப் பட்டது ” என்றாள் வள்ளியம்மா கண்களில் கண்ணீர் மல்க. “வள்ளியம்மா நீ என் குடும்பத்துக்கு செய்த உதவியை விட எங்கள் குடுமபம் உனக்கு செய்த உதவி பெரிதல்ல , உன்னால் எங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரிசு கிடைத்திருக்கு” என்றார் பணிவுடன் தங்கத்துரை மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை தங்கத்துரையின் சொத்துக்கு வாரிசாக இருந்து அரசாளப் போகிறான் அது சுக பிரசவம் என்றே சொல்லலாம். குழந்தையை பார்த்தவுடன் தங்கமணி லட்சுமியை பார்த்து “அம்மா குழந்தையின் கண்கள் என் கண்கள் போல் இருகிறது.. என் அத்தானை . போன்று நீண்ட கைவிரல்கள்” . தங்கமணிக்கு குழந்தையை கண்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி. குறைந்தது ஐந்து தடவை குழந்தைக்கு முத்தம் கொடுத்து இருப்பாள்அது அவளுக்கு எதிர்பாராத அனுபவம். “தங்கமணி அடிக்கடி குழந்தையை கொஞ்சாதே உன்னில் உள்ள கிருமிகள் குழந்தைக்கு போய் வருத்தத்தைக் கொண்டு வரும். ஒவ்வொரு தடவையும் குழந்தையை தூக்க முன் உன் கைகளை கழுவிய பின் தூக்கு.” தாய் லட்சுமி மகளுக்கு சொன்னாள். “சரி அம்மா அப்படியே செய்கிறேன்” தங்கமணி தாயுக்கு பதில் சொன்னாள். தங்கமணியும், தர்மனும் வள்ளியம்மாவை பார்த்து “வள்ளியம்மா எங்களுக்கு ஒரு மகனை பெற்றுகொடுத்ததுக்கு நன்றி. என் கருப் பையில் விதைக்க முடியாத விதை உன் கருவில் விதைத்து, வளர்ந்து, ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே இந்த உலகுக்கு வந்துள்ளது. இனி இவன் எங்கள் மகன் மட்டுமல்ல நீ பெற்ற பிள்ளை கூட” என்றாள் தங்கமணி . தங்கத்துரையும் லட்சுமியும் தங்கள் குடும்பத்தில் ஒரு வாரிசு பிறந்தது என்று பூரிப்படைந்தனர் . டாக்டர் மாலதிக்கும், டாக்டர் ஹெமலதாதவுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். “ஐயா மருத்துவ செலவு பில் உங்களுக்கு இரு நாட்களில் வரும். நீங்கள் அதை ஒரு கிழமைக்குள் கட்டலாம”: டாக்டர் ஹேமலதா சிரித்த படியே சொன்னாள் ’ “என் சினேகிதி லதா தன் பிஸ்னசில் மிகவும் கவனம் அதோடு தன் வாடிக்கையாளர்கள் மனத் திருப்திக்கு ஏற்றவாறு எடுத்த காரியத்தை செய்து முடிப்பாள். என் சினேகிதி நல்ல கைராசிக்காரி” என்றாள் மாலதி. “குழந்தையும் வாடகைத் தாயும் என் கவனிப்பில் இரு வாரங்கள் இருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு சில பரிசோதனைகள் செய்யவேண்டும் அதோடு வாடகை தாய் தன் உடலலைக் கவனித்துக் கொள்ள வேண்டும்:” காரணம் குழந்தைக்கு குறிந்தது மூன்று மாதம் தாய் பால் புகட்ட வேண்டும்” என்றாள் டாக்டர் ஹேமலதா “டாக்டர் நான் என் மகனக்கு தாய் பால் கொடுக்கமுடியுமா” தங்கமணி கேட்டாள் “முடியும் அதை பற்றி நீரும் நானும் தனியாகப் பேசுவோம்” இதுக்கு சில மேம்பட்ட தயாரிப்பு தேவைப்படும், தாய்ப்பால் வாடகை தாய் மூலம் பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் தன முட்டையை கொடுத்த தாய் பால் கொடுப்பது பிற பிறப்புரிமையைப் பராமரிப்பதில் இருந்து வேறுபட்டதல்ல. உங்கள் குழந்தையின் பிறப்புக்கு ஒரு மாதத்திற்கு முன், உங்கள் மருத்துவர் ஹார்மோன்கள் (பொதுவாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்) பரிந்துரைக்க முடியும். இந்த ஹார்மோன்களின் "தந்திரம்" உங்கள் உடலை நினைக்கும்படி கர்ப்பமாக நிலையியல் வைத்திருக்கும், இது பால் உற்பத்தியின் முன்னோடியாகுடாக்டர் லதா சொன்னாள் “அது பிரச்னை இல்லை. டாக்டர் வள்ளியம்மா எங்கள் குடும்பத்தில் ஒருத்தி அவளும் புருசனும் எங்களின் அவுட் ஹௌசில் வாழ்கிறார்கள். வள்ளியம்மா எங்களுக்கு பல வருடங்கள் அறிமுகமானவள் அவளின் உடல் நலத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் ”லட்சுமி சொன்னாள் “டாக்டர் எங்கள் அறையில் குழந்தைக்கு தொட்டில் மற்றும் தேவையான பொருட்கள் ரெடி. குழந்தையை தங்கமணி அல்லது என் மாமி கவனித்துக் கொள்வார்கள். இன்னும் சில நாட்களில் சாத்திரியாரோடு கலந்து ஆலோசித்து குழந்தைக்கு பெயர் வைப்போம்” : என்றான் தர்மன். “என் மகள் தங்கமணிக்கு குழந்தை வளர்த்து அனுபவம் இல்லை அதனால் நான் அதை கவனித்துக் கொள்கிறேன். டாக்டர் குழந்தைக்கு போலியோ குக்கல், சின்னம்மை. மணல் வாரி அம்மை போன்ற நோய்களக்குகு தடுப்பு ஊசி கொடுக்க உங்களிடம் கூட்டி வருவோம்” என்றாள் லட்சுமி குழந்தை பிறந்த இரு நாட்களின் பின் குழந்தையையும் வள்ளியம்மாவையும் வீட்டுக்கு செல்ல டாக்டர் அனுமதித்தார். வீட்டுக்கு போனபின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவுக்கு ஆயித்தம் நடந்தது . மூல நட்சத்திரத்தில் பிறந்த படியால் ம, மா, மி , மு ஆகிய சொற்களில் ஆரம்பிக்கும் பெயராக சாஸ்திரி வைக்கச் சொன்னார் தங்கமணி உடனே” அம்மா எனக்கு என் மகனுக்கு முத்துராசா என்ற பெயர் வைக்க விருப்பம்” என்றாள். அவள் குழ்ந்தையை பெற்றுக் கொடுத்த வள்ளியம்மாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லலை . லட்சுமிக்கும் தங்கத்துரைகும் மகள் செய்தது பிடிக்கவில்லை உடனே லட்சுமி வள்ளியம்மாவை பார்த்து. வள்ளி உனக்கு முத்துராசா என்ற பெயர் பிடித்திருக்கா”? என்று கேட்டாள். “ அம்மா நீங்கள் எந்த பெயர் வைத்தாலும் எனக்கு பிடிக்கும் இனி இவன் உங்கள் குழந்தை. நான் “ராசா” என்று கூப்பிடுவேன்” என்றாள் புன்முறுவளோடு "அவன் இனி எங்கள் வீட்டின் முத்து” என்றாள் தங்கமணி. குழந்தையினாலோ அல்லது குழந்தைப் பெற்றத் தாயினாலோ இறைவனுக்குத் தீட்டு ஏற்படுவதில்லை குழந்தைப் பிறந்த பதினாறாம் நாள் பெயர் சூட்டு விழா வைக்க தீர்மானித்தனர் தங்கத்துரை குடும்பம். **** அன்று காலை தங்கத்துரை குடும்பத்தோடு முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பியவுடன் உற்றார் உறவினர், நண்பர்களுக்கென வீட்டில் கூட்டு வழிபாட்டினை வீட்டின் நடுக்கூடத்திலே முருகனின் திருவுருவப் படத்தினை, ஒரு பீடத்தில் இருத்திக். தங்கத்துரை இக்கூட்டு வழிபாட்டினை முன்நின்று நடத்தினார். குழந்தைக்கு திருநீறு அணிவித்தப் பிறகு குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பெயர் சூட்டும் வைபவத்தை தொடங்குவார்கள். நன்கு அழகு செய்யப்பட்டத் தொட்டிலிலே குழந்தையின் தாயைச் சார்ந்த பாட்டியும் குழந்தையின் தந்தையைச் சார்ந்த பாட்டியும் ஒரு சேரக் குழந்தையைத் தொட்டிலில்இட்டார்கள் . குழந்தையைத் தொட்டிலில் இட்ட அவர்கள், குழந்தையின் பெயரை முத்துராசா என்று மூன்று முறை உரக்கச் சொல்லி அழைத்துத் திருநீற்றினை அணிவித்துத் தொட்டிலை மெல்ல அசைத்துத் தாலாட்டுப் பாடினார்கள் . பெயர் சூட்டும் விழா முடிந்த்தும் சனண்முகாஸ் உணவகத்தில் இருந்து எல்லோருக்கும் பகல் மரக்கறி போசனம் பகிரப் படட்து. பலர் குழந்தைக்கு தங்க நகைகள் பரிசாக் கொடுத்தனர்.   *****   அத்தியாயம் 9 தாயன்பு   வள்ளியம்மாவின் கருவில் உருவாகிப் பிறந்த ஆண் குழந்தை தோற்றத்தில் தங்கமணி போல் இருந்தது. அவளின் நிறம், கண்கள். அது அவளுக்குத் திருப்தியைக் கொடுத்தது. வள்ளியம்மாவுக்கு தான் கொடுத்த வாக்குறுதியின் படி இராமையாவின் இருதய சிகிச்சை தேவையான முழு செலவையும் தங்கத்துரை கொடுத்தார். அதோடு வள்ளியம்மமாவின் மகள் செல்லம்மாவின் திருணத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தார். வள்ளியம்மா அதை எதிர் பார்க்கவில்லை. பிறந்த குழந்தைக்கு தாய்ப் பால் மூன்று மாதம் வரை வள்ளியமா கொடுத்தாள் குழந்தை அவளோடு படுத்தது. விளையாடியது தங்கமணி அறைக்கு ஆட்சேபிக்க வில்லை. தங்கமணியும் தர்மனும்அடிக்கடி குழந்தையை தம் அறைக்குத் தூக்கிச் சென்று விளையாடுவார்கள், குழந்தைக்கு அட்சரக் கூட்டுச் சங்கிலி போட்டனர். கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை தட்டி காது குத்தினார்கள் . எல்லா சடங்குகளிளும் வள்ளியம்மாவும் இராமையாவும் , பங்கு கொண்டார்கள் . வள்ளியம்மாவுக்கு தன்னை அறியாமலே முத்துராசா மேல் ஒரு பாசம் உருவாகியது. அவனுக்கு உணவு ஊட்டி விடுவாள். அவானோடு சேர்ந்து விளையாடுவாள். அவனுக்கு உடலுக்கு ஏதும் என்றால் அவள் பதறப் போவாள். குழந்தையின் பெயரை தர்மலிங்கம் முத்துராசா என்று பதிவு செய்தனர் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்து குழந்தை பிறந்த ஜாதகத்தை சாஸ்திரியிடம் காட்டி அவர் சொன்னபடி குழந்தைக்கு வைத்த பெயர் முத்துராசா. வீட்டில் குழந்தையை முத்து என்று செல்லமாக் அழைத்தனர் அந்த குழந்தை தங்கத்துரையின் குடும்பத்துக்கு ஒரு முத்தாகத் திகழ்ந்தான். அவன் பிறந்த காலமோ என்னவோ தர்மலிங்கத்துகு பதவி உயர்வு பெற்று நிறுவனத்தின் உப தலலைவரானான். தங்கத்துரை தனக்குள் ஒரு திட்டம் போட்டிருந்தார் காலப்போக்கில் முத்து வளர்ந்ததும் தன் வணிகத்தை அவன் கையில் கொடுப்பது என்று. அதையே லட்சுமி விரும்பினாள் முத்து பேரன் பேத்தியின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான். தங்கமணிக்கு தன் மகன் முத்தோடு வள்ளியம்மையும் இராமையாவும் நெருங்கிப் பழகுவது அவ்வளவுக்குத் திருப்தி இல்லை தன் மனதில் உள்ளதை தாய் லட்சுமிக்குச் சொல்லி முறையிட்டாள். “அம்மா என் மகன் முத்துவை தன் மகன் போல் வள்ளியம்மை நடத்துவது எனக்கு அவ்வளவுக்கு பிடிக்கவில்லை.அவளின் மகள் செல்லம்மா இங்கு வரும் போது தம்பி முத்து என்று சொல்லி அவனோடு விளையாடுவதைக் கண்டேன். என் மகன் முத்து அவளின் தம்பி இல்லை . எனது கருப்பையில் என் முட்டையிலும் என் கணவர் தர்மனின் விந்துவிலும் உருவாகியவன் என் மகன் முத்து. அவன் உடலில் எங்கள் இருவரினதும் மரபணுக்கள் இருக்கிறது. அம்மா இதை நீங்கள் வள்ளியம்மாவுக்கு சொல்லி அவளை என் மகன் முத்துவோடு நெருங்கிப் பழகுவதை நிறுத்தங்கள் . என் மகனுக்கு அவன் எப்படி உருவானவன் என்பதை மட்டும் என் மகனுக்குச் சொல்லி விடாதீர்கள். அதனால் பிரச்சனை வரலாம் ” தங்கமணி தாயுக்கு ஆதங்கத்துடன் சொன்னாள் “ மணி உனக்கு தாயன்பு என்பது என்ன வென்று தெரியாது. உன்னைக் கஷ்டப் பட்டுப் பெற்று எடுத்து, பாலூட்டி வளர்த்த எனக்கு அதன் உணர்வு தெரியும். எதையும் எதிர்பார்க்காமலும் கேட்காமலே கொடுப்பது தான் தாயின் அன்பு. எல்லா அன்புகளிலும் மேலானது. உன் மகன் வள்ளியம்மாவின் கருப்பையில் வளரும் போது, பசிக்கும் போது, அவன் கொடுத்த உதையை அவள் உணர்ந்து இருப்பாள் . அவன் வளர தேவையான உணவை வள்ளியம்மா கொடுத்தவள். நீ அல்ல . உன் கருப்பையில் வளர முடியாத உன் விதையை தன் கருப்பையில் விதைத்து தன்னையே பல மாதங்கள் வதைத்துப் பெற்றெடுத்து உன் கையில் தந்தவள் வள்ளியம்மா. முத்துவிடம் இருந்து அவன் வளர்ந்ததும் எதையும் எதிர்பார்க்கவில்லை அவன் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவும் அவள் எதிர்பார்க்கவில்லை அவள் இறந்ததும் அவள் உடலுக்கு முத்து கொள்ளி வைக்கப் போவதில்லை. அதைச் செய்ய அவளின் அக்கா மகன் வேலுச்சாமி இருக்கிறான் . அதை அவள் எனக்கு ஒரு சமயம் சொல்லியும் இருக்கிறாள். ஓன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள் தங்கமணி , உனது கருப்பையைல் குழந்தை தங்கமுடியாது என்று டாக்டர் சொன்னதும் நீ எவ்வளவு துடி துடித்துப் போனாய் என்று எனக்கும் உன் அப்பாவுக்கும் ,உன் அத்தான் தர்மனுக்கும் தெரியும் . நல்ல காலம் என் பெரிய்ம்மாவின் மகள் டாக்டர் மாலதி உன் பிரச்சனையைத் தீர்க்க வழி சொன்னாள் . உன் குழந்தையை சுமக்கும் அறிமுகம் தெரியாத வாடகைத் தாய் ஒருத்தியை ஏஜென்சி மூலம் அதிக பணம் கொடுத்து இந்தியாவில் ஒழுங்கு செய்திருக்கலாம். அதனால் பின் வரும் சட்ட விளைவுகளும் பிரச்சனைகளும் எமக்குத் தெரியாது. அந்த பெண் வயிற்றில் வளர்ந்து பிறந்த குழந்தையைப் பணயமாக வைத்துத் தொடர்ந்து எங்களிடம் அவள் பணம் கேட்கலாம் அல்லவா. ஆனால் அந்த நிலை உனக்கு ஏற்படவில்லை. அந்த இந்திய வாடகைத் தாய் எப்படிப் பட்டவள் என்று எமக்குத் தெரியாது. எங்களோடு எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகப் பல வருடங்கள் இருக்கும் வள்ளியம்மா உன் குழந்ததைக்கு வாடகைத் தாயாக இருக்கச் சம்மதித்தது நீ எடுத்த நல்ல முடிவு . அதோடு நாம் வள்ளியம்மாவுக்கு கொடுத்த பணம் இராமையாவின் உயிரைக் காப்பாற்றியது .வள்ளியம்மா தன்னை வாடகைத் தாயாகச் செயல் படச் சம்மதித்தது வணிகம் நோக்கத்தோடு இல்லை. தன் புருசன் உயிரைக் காப்பாற்றவும், உன் கவலையைப் போக்கவுமே அவள் சம்மதித்தாள் . அதை உன் மனதில் வைத்துக் கொள். முத்து உனதும் உன் கணவரினதும் மகன் என்பது மருத்தவ சட்ட ரீதியான உண்மை. அவன் இரத்தத்தில் ஓடுவது உங்கள் இருவரினதும் மரபணு என்று எனக்கும் உன் அப்பாவுக்கும் தெரியும் நீ அதை சொல்லிக் காட்டத் தேவையில்லை.” என்றாள் லட்சுமி சற்று சற்றுஉரத்த குரலில்   தங்கமணி தாய் சந்தை கேட்டு சிந்தித்தாள். தான் தாவுக்குச் சொன்னது தவறு என்பதை உணர்ந்தாள் தன் மகன் முத்துராசா பிறக்க வள்ளியம்மாவின் பங்கும் இருந்தது என்பது அவளுக்குப் புரிந்தது “அம்மா என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் வள்ளியம்மாவை எனது அக்காவாகக் கருதிப் பழகுகிறேன். அவ என் மகனின் பெரியம்மாவாக இருக்கட்டும் அதை என் அத்தானுக்கு நான் எடுத்துச் சொல்லுகிறேன்” தங்கமணி சொன்னாள். அறையில் இருந்து முத்து சிரிக்கும் குரல் கேட்டது.     *****