[]   புத்துரைகள்  பணியா. பிரசன்னா   askprasanna@gmail     மின்னூல் வெளியீடு :  FreeTamilEbooks.com    அட்டைப்படம், மின்னூலாக்கம் :   பிரசன்னா udpmprasanna@gmail.com    உரிமை :   Creative Commons Attribution - ShareAlike 4.0 International License.     பொருளடக்கம் புத்துரைகள்:  நன்றிகள்:  எழிலுரை:  நூலுரை: 1) அறிவுக்குக் கேள்விகள் ஏழு-நேர்காணல்  முதலாவது கேள்வி: நீங்கள் தமிழ்வழிக் கல்வி கற்றவராயிற்றே, எப்படி மென்பொருள் நிறுவன நேர்காணலை எதிர்கொண்டீர்கள்?  கேள்வி 2: தொழில் மறைசெயல் என்று சொல்லக்கூடிய Job Secret பற்றிச் சொல்லுங்கள்.  கேள்வி 3: நீங்கள் அயல் நாடு சென்று வந்துள்ளீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள். நம் நாடு வல்லரசு ஆகும் வாய்ப்புள்ளதா?  கேள்வி 4: புதியதாய் குழுத்தலைவர் ஆகியுள்ளீர்கள்.பணி எப்படியுள்ளது?  கேள்வி 5: ஊதியம் அதிகம் கிடைப்பதற்காக அடிக்கடி நிறுவனத்தை மாற்றும் ஆட்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  கேள்வி 6: சோதனைக்கு (testing software) எந்த மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்?  கேள்வி  7: புதிதாய் வருபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?  2) ஒரு செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை - கணினிப் பட்டறிவு  3) தொல்லை கொடுத்த நண்பரும், தொலைந்து போன கடவுச்சொல்லும் முன்னுரை  4) நான் சொல்லட்டுமா?  5) உவத்தல் என்றால் கெட்ட வார்த்தையா?  6) கணினிச்சிரிப்புகள்  7) வேந்தனும், வீரையும்  8) கணினிச்சிரிப்புகள்  9) பாரதி புரட்சிக்கவிஞனா இல்லை ஆரிய நச்சா? - நாணயம்  10) தமிழறிவோம்  11) பழமொழி   i) நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்   ii) பந்திக்கு முந்து படைக்குப் பிந்து - பழமொழி விளக்கம்  12) தமிழில் புதிய திரட்டி:  13) யம் சர்வர் (வழங்கி)  14) வாகை  சூடிய  வாமணி  -  எழுத்தாளர்  வா.மணிகண்டனுடன்  ஒரு நேர்காணல்  அறக்கட்டளை எண்ணம் எப்படி வந்தது?  “நிசப்தம் அறக்கட்டளைக்கு வெள்ள நிவாரண நிதி அறுபது இலகரங்கள் வந்திருக்கே. ஆனந்த விகடன் நம்பிக்கை மனிதர்கள் வரிசையில வந்திருக்கிங்க‌ எப்படி இருக்கு இந்த சேதி?  எப்படி எழுதுகிறீர்கள்?  எழுத்தின் எதிர்காலம் எப்படி?  தமிழ் கம்ப்யூட்டர் போன்ற தொழிற்நுட்ப இதழ்கள் படிப்பதுண்டா?  நூல் ஆசிரியர் அறிமுக உரை  நூலாசிரியரின் பிற நூல்கள்:    புத்துரைகள்:   இந்நூலானது என்னைத் தமிழ் பால் ஈர்க்கச்செய்ய‌ தமிழ்ப்பால் கொடுத்த மறைந்த ஐயா ஆண்டியப்பன் அவர்களுக்குக் காணிக்கை. நன்றிகள்:     எல்லாம் வல்ல இறைவனுக்கும், தமிழுக்கும் முதல் நன்றிகள்.  எழிலுரை சிறப்பாகவும், அட்டைப்படம் வண்ணமயமாகவும் அமைத்துக் கொடுத்த அருமைத்தம்பிமீ. வேல். பிரசன்னாவிற்கு சிறப்பு நன்றிகள். எனது கட்டுரைகள் ஏற்கனவே வெளிவந்த தமிழ் கம்ப்யூட்டர் பதிப்பகத்தாருக்கும், வலைப்பதிவுதந்த கூகுள் நிறுவனத்திற்கும் கைகூப்பிய நன்றிகள். விலையில்லா தமிழ் பிடிஎஃப் (FreeTamilEbooks) தரும் தளத்தாருக்கும் உள்ளத்துப்பள்ளத்து நன்றிகள். இன்னும் இந்நூல் சிறப்புற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.   அன்புடன், உங்களவன், பணியா. பிரசன்னா. எம்.எஸ்.சி, எம்ஃபில்.,     []   எழிலுரை: அனைவருக்கும் வணக்கம்,   அன்புக்குரிய அண்ணா பணியா. பிரசன்னா அவர்கள் அனைவரிடமும் நல்ல முறையில் பழகுபவர் மற்றும் தூய நல்லுள்ளம் கொண்டவர் என்பது அவருடனான தனிப்பட்ட சில உரையாடல்கள் மூலமும் அவரது செயல்பாடுகள் மூலமும் நான் அறிந்தவையாகும். தாய் மொழி என்ற வகையில் அண்ணனின் தமிழ் பணி இயல்பானதே. ஆனால், அந்த இயல்பு இந்நாட்களில் இவர் போன்ற ஒருசிலருக்கே இருப்பது தான் வருத்தம். அவ்வகையில் அண்ணனின் பணி காலத்தின் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது எண்ணி மகிழ்கிறேன்.   "புத்துரைகள்" - இந்நூல் குறித்து சில வரிகள் :   கணினித் துறையில் அண்ணனுக்கு சளைக்காத புலமைப் பெற்ற அண்ணனின் இளவல் அறிவு அண்ணாவின் நேர்காணல் கணினி மென்பொருள் துறையில் நல்நிலையடைய விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டலாக அமையும் என்பதில் ஐயமில்லை.   மற்றொரு நேர்காணலாக எழுத்தாளர் வா.மணிகண்டன் ஐயாவினுடைய எழுத்து பயணம் குறித்து அறியமுடிகிறது. இங்கு நூலாசிரியர், எழுத்தாளர் வா.மணிகண்டனை சிறப்பித்து நற்றமிழ் பா ஒன்று எழுதியுள்ளார்.   எனக்கு,  தனிப்பட்ட முறையில் அண்ணன் பிரசன்னாவிடம் வியந்து, பிடித்தது அவரது மரபு நடையிலான நல்ல தமிழ் பாக்கள். குறிப்பாக நிரற்பா, சீற்றப்பா (இவை, இந்நூலில் இடம்பெறவில்லை) முதலிய பல வகைகள் அருமையானது. மேலும், இது அவரின் தமிழ் மீதான காதலையும் தனித்தமிழ் திறத்தையும் காட்டுகிறது.   "ஒரு செய்தியைச் சொல்வதனால் ஒன்றுமில்லை", "தொல்லை கொடுத்த நண்பரும், தொலைந்து போன கடவுச்சொல்லும்", "நான் சொல்லட்டுமா? " முதலியன வாசகர்களாகிய நமது கடந்த காலத்தை நினைவூட்டுவதாக அமையும்.   "உவத்தல்" குறித்த ஆசிரியரின் பதிவு மிகவும் அருமையானது. பல வேளைகளில் நாம் சொற்களை புரிந்து பயன்படுத்துவதில்லை என்பதை உணர்த்துவது.. இயற்கையில் தீமை என்றே ஏதும் இல்லை என்பது புலனாகிறது. அவ்வாறே, இயற்கையாகத் தோன்றிய மொழிகளிலும் தீய சொல்லென்று ஏதுமிருக்க இயலாது என்று ஆசிரியர் விளக்கியிருப்பது சிறப்பு.   "தமிழறிவோம்", "பழமொழி" ஆகியவை தமிழ் சொற்கள் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை உணர்த்தி, சொற்கள் மீதான நமது புரிதலை உயர்த்துகிறது. "பாரதி புரட்சிக்கவிஞனா இல்லை ஆரிய நச்சா?" - மாற்றுப்பார்வையாக அமைகிறது.   அண்ணன் பணியா. பிரசன்னாவின் நூல், நுட்பம் இல்லாது முழுமை பெறாது என்பதால் "யம் வழங்கி- (YUM Server)” குறித்த கட்டுரை நல்ல கலைச்சொற்களுடன் தனித்தமிழில் அமைந்துள்ளது சிறப்பு.   "கணினிச்சிரிப்புகள்" கணினி துறை சார்ந்து நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.   மொத்தத்தில் "புத்துரைகள்" கட்டுரைத் தொகுப்பானது வாசிப்போருக்கு நல்விருந்து.   இந்நூலின் வடிவமைப்பு பணி செய்ய எனக்கு வாய்ப்பளித்த பணியா. பிரசன்னா அண்ணாவிற்கு நன்றிகள் பல...   இப்படிக்கு, அன்புத்தம்பி, மீ. வேல். பிரசன்னா இளநிலை இயற்பியல்.         நூலுரை:   இந்நூலானது, நான் ஏற்கனவே எனது தமிழ் எக்காளம் வலைப்பதிவில் மற்றும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து செய்ததாகும். புத்துரைகள்; கட்டுரைகள் மட்டுமல்லாது, நேர்காணல்கள், சிறுகதை என்பவை உள்ளடங்கிய ஒரு கதம்பமாக அமைந்துள்ளது. இவைகளைப் பட்டு நான் எழுதும் பொழுது என் பட்டறிவு சுகப்பட்டமை போல் உங்கள் பட்டறிவும் சுகப்படும் என்றே எண்ணி கதம்பத்தில் இந்தப் பதினான்கு பூக்களைக் கோர்க்கிறேன். கதம்பத்தில் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாதலால், ஒவ்வொன்றிற்கும் ஒரு முன்னுரை தந்திருக்கிறேன். அது நீங்கள் படிக்குங்கால் எளிமையாகப் புரிய உறுதுணை செய்யும் என்றெண்ணிப் படைக்கிறேன்.      - பணியா. பிரசன்னா. எம்.எஸ்.சி., எம்.ஃபில்., பெங்களூரு.         1) அறிவுக்குக் கேள்விகள் ஏழு-நேர்காணல் முன்னுரை   அன்புத்தம்பி அறிவுடன் ஓர் சிறப்பு நேர்காணல். எனது வலைப்பதிவிலும், தமிழ் கம்ப்யூட்டர் இதழிலும் வெளிவந்த நேர்காணல். நேர்காணலில் அவர் சொல்லிய ஒவ்வொரு விடையும் சிறப்பானவை. அவை மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் இங்கே முதலில் தொகுத்துள்ளேன்.   -----------------------------------------------------------------------------------------------------------   [] பா.அறிவு ஆரோக்கிய இராஜேஷ்    அறிவு - பெயருக்கேற்ப சிறந்த அறிவாளி. அண்மையில் மென்பொருள் சோதனைக்  குழுத்தலைவராக (software test lead) ஆகி இருக்கும் இவருடன் ஒரு நேர்காணல்.   இவரைப் பற்றிய ஓர் எளிய‌ அறிமுகம். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை  கணினி அறிவியல் படித்து, பிலானி பிட்ஸில் முதுகலை படித்துத் தேறியவர்.     இவர்,தமிழ் கம்ப்யூட்டர் இதழ் வாசகர்களுக்காக அவ்வப்போது கணினிக்கதைகளையும், தொழிற்நுட்பச் செய்திகளையும் எழுதிவரும் பா.நி.ஆ.பிரசன்னாவின் இளவல்.   முதலாவது கேள்வி: நீங்கள் தமிழ்வழிக் கல்வி கற்றவராயிற்றே, எப்படி மென்பொருள் நிறுவன நேர்காணலை எதிர்கொண்டீர்கள்? “நல்லது. பொதுவான மாணவர்களைப் போல் நானும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை  தமிழிலேயே கல்வி கற்றேன். இளநிலைப் பாடம் படிக்கும் பொழுது சில சவால்களைச்  சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் என்னுடன் படித்த வேறு மாநில மாணவர்களோடு  தப்புத்தப்பாக  ஆங்கிலம்  பேசியே  கற்றுக்கொண்டேன்.  இதைச்  சொல்வதில்  எனக்கு  எவ்வித தயக்கமும் இல்லை. நேர்காணலின் போது எனது கணினி அறிவினையும் (computer knowledge), அலசல் திறமைகளையுமே (analytical skills) நிறுவனத்தினர் சோதித்தனர். ஆக நேர்காணல் எளிமையாகவே அமைந்தது. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் தமிழ்வழிக்கல்வி கற்றவர்களும் வெற்றியடையலாம். முன்னாள் குடியரத்தலைவர் அப்துல் கலாம் அவர்களும் கூட தமிழ்வழிக் கல்வி கற்றவர்தான்.” கேள்வி 2: தொழில் மறைசெயல் என்று சொல்லக்கூடிய Job Secret பற்றிச் சொல்லுங்கள். “பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் சமநிலை வேலை அமைவு (balanced work) இருக்காது. அதுவும் இந்தியாவில் அது இருக்கவே இருக்காது. எனவே சில நாட்கள் வேலை அதிகமாகவும், சில நேரங்களில் வேலையே இல்லாமலும் இருக்கும். பன்னாட்டு கணினி நிறுவனங்கள், கடின உழைப்பை (hardwork) விட புதுமை உழைப்பினையே (smart work) விரும்பி ஏற்றுக் கொள்கின்றன. நீங்கள் எப்போதும் புதுமையாக‌ (ஸ்மார்ட்டாக) இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் (team members) உங்களை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் நீங்கள் வேலையை இழக்க நேரிடும். எனக்குத் தெரிந்த வகையில் இதுதான் தொழில் மறைசெயல்.”  “மேலும் நிறுவனங்களில் தொடர்பாடல் திறன் (proper commuincation) மிகவும் இன்றியமையாதது.உங்களுக்கு ஒன்று தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லிவிட வேண்டும். "தெரியும், தெரியும்” என்று சொல்லிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடாது. கொடுத்த வேலையை குறிப்பிட்ட நாளுக்குள் (target date) செய்து கொடுக்க வேண்டும். Escalation என்று சொல்லக்கூடிய மேல்முறையீடுகளை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.” கேள்வி 3: நீங்கள் அயல் நாடு சென்று வந்துள்ளீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள். நம் நாடு வல்லரசு ஆகும் வாய்ப்புள்ளதா? “நான் கனடா நாட்டிற்கு மட்டுமே சென்றுள்ளேன். அங்கே மக்கள் தொகை குறைவு. பரப்பளவு அதிகம். அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாமோ வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”  “தொழில் முறையிலும், நுட்பங்களை அறிந்து கொண்டு செயல்படுத்துவதிலும் நம்மவர்கள் சளைத்தவர்கள் அல்லர். அங்கு வரும் நுட்பம் விரைவிலேயே இங்கும் வந்து விடுகிறது. அப்படி இருப்பினும் நாம் நாணயத்தின் மறுபக்கமும் பார்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.”  “நான் எதிர்மறையாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். அவர்கள் நம்மைவிட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கூடுதலாக இருக்கிறார்கள். ஒருவரின் அகவையை மற்றவர் எப்படிச் சென்று பிடிக்க முடியாதோ அது போல அவர்களைப் பிடிப்பது என்பது முயற்கொம்பே.”  “அங்கே எல்லாமே திட்டப்படி நடக்கிறது. போக்குவரத்து, வங்கிக் கணக்குத் தொடங்குதல், பேருந்தில் வரிசையில் நின்று ஏறுதல். இங்கே எல்லாமே திட்டத்தினை மீறி நடக்கிறது. அங்கு திட்டத்தை மீறினால் திட்டுக் கிடைக்கும். இங்கு திட்டத்தை மீறாவிட்டால் திட்டுக் கிடைக்கும்.”  “நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடிகள் கறுப்புப் பணமாக மாறிக் கொண்டிருப்பதாக புள்ளியியல்  தெரிவிக்கிறது. அங்கு அவ்வாறு இல்லாததால் பணத்திற்கு மதிப்பு இருக்கிறது.”  “அவர்கள் திட்டத்தில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் நம்நாடு வல்லரசாகும் என்பது திண்ணம். எடுத்துக்காட்டிற்கு அனைவரும் பேருந்தில் வரிசையில் நின்று ஏற வேண்டும். இது சாத்தியமெனில் வல்லரசும் சாத்தியமே.”   கேள்வி  4: புதியதாய் குழுத்தலைவர் ஆகியுள்ளீர்கள். பணி எப்படியுள்ளது? “இது ஆறு ஆண்டுகள் நான் உழைத்த உழைப்பிற்குக் கிடைத்த பரிசுப்பணி. குழுவில் உறுப்பினராக இருந்த போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயற்பட வேண்டும். நல்ல குழு உறுப்பினராக இருந்தால் குழுத்தலைவராக ஆவது எளிது.”  “நாம் சொல்வதைக் கேட்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் நமக்கும் கீழே ஆட்கள் இருக்கிறார்கள் என எண்ணும் போது மகிழ்ச்சியும், குழுவில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் போது பொறுப்புணர்வும், கலந்துரையாடல்களில் (meetings, discussions etc) ஈடுபடும் போது ஆளுமைப் பண்பும் அதிகரிக்கிறது.”   கேள்வி 5: ஊதியம் அதிகம் கிடைப்பதற்காக அடிக்கடி நிறுவனத்தை மாற்றும் ஆட்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “அடிக்கடி நிறுவனம் மாறுவது அவ்வளவாக சரியல்ல. இது என் பட்டறிவில் நான் கற்றுக்கொண்டது. ஒரு நிறுவனத்தில் நம்மை உறுதிப் படுத்தவே ஆறு முதல் எட்டு மாதங்கள் பிடிக்கும். அப்படியிருக்க வெவ்வேறு நிறுவனங்களை மாற்றிக் கோண்டே இருப்பது நல்லதன்று. ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணிபுரிவது அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மனதில் ஒரு உறவு போல் புரிந்து கொள்வது நலம் பயக்கும்.” என்றே நான் நினைக்கிறேன்.  “நான் விப்ரோ (Wipro) அக்சென்சர் (Accenture) நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன். உளமாறச் சொல்கிறேன். விப்ரோ எனது தாய் நாடு. அக்சென்சர் எனது சின்னம்மா.”   கேள்வி 6: சோதனைக்கு (testing software) எந்த மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்? “பொதுவாகக் கல்வி நிலையங்களில் (Education Institutions) winrunner, loadrunner பற்றிச் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றைத் திறம்படக் கற்றுக் கொண்டு, அவ்வப்போது வரும் புதிய சோதனை செய்யக்கூடிய மென்பொருட்கள் பற்றியும் தெரிந்து கொள்வது தேவையாகும். அனைத்து மென்பொருட்கள் குறித்துத் தெரியவில்லையானாலும் குறிப்பிட்ட சிலவற்றை ஆழம் வரை சென்று கற்பதே சிறந்ததாகும்.”   கேள்வி  7: புதிதாய் வருபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? “கூற விரும்புவது என்றால் அறிவுரை அல்ல; எனது கருத்து என்றே எடுத்துக் கொள்ளலாம். பணிநேரத்தில் பணியையும், ஓய்வு நேரத்தில் ஓய்வையும் செய்யுங்கள். உங்களால் முடிந்த தொழிற்நுட்ப‌ உதவியினை உங்கள் குழு உறுப்பினர்களுக்குச் செய்யுங்கள். அது உங்கள் மேலான மதிப்பினை அவர்களுக்குள் அதிகரிக்கும். எந்த வகை வெற்றியானாலும் நான் செய்தேன் என்று சொல்லாமல், எனது குழு செய்தது என்று சொல்லிப் பழகுங்கள். அது உங்களை உயரத்தில் கொண்டு போய் உட்கார வைக்கும்.”   2) ஒரு செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை - கணினிப் பட்டறிவு முன்னுரை   இக்கட்டுரையும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது.  அப்பொழுதெல்லால் ஒரு கணினி நுட்பத்தை மற்றவருக்கு யாரும் சொல்லித் தர மாட்டார்கள். இப்பொழுதும் அப்படித்தான். அதனால்தான் நாம் அனைவரும் தேடுபொறி தேடி ஓடுகிறோம். ஆனால் நுட்பமானது அதைவிட விரைவாய் காலத்தை விட்டு ஓடி விடுகிறது; அடுத்த நுட்பம் வந்து விடுகிறது. ஆதலால், ஒரு செய்தியை மற்றவருக்குச் சொல்லித் தருவதில் ஏதும் தவறில்லை என்ற கருத்தில் வந்த ஒரு புத்துரை. --------------------------------------------------------------------------------------------------------------   பொதுவாக ஒரு தொழிற்நுட்பச் செய்தியினைச்  சொல்வதற்கு சிலர் அச்சுறுகின்றனர். இது இந்நாட்களில் மட்டுமல்ல, தொன்று தொட்டே இருந்துவருகிறது. அதற்குக் காரணம் எங்கே நாம் சொல்லிவிட்டால் அடுத்தவர் முன்னேறி விடுவாரோ என்ற எண்ணம் தான். இது மிகவும் பழமையான எண்ணம். தொழிற்நுட்பத்துறை மிகவும் விரைவாக முன்னேறி வரும் இந்நாட்களில் இத்தகைய மனப்போக்குத் தேவையில்லை. எனக்கு நேர்ந்த படுதல்க‌ள் (அனுபவம்) மூலம் இதனைக் கூற விழைகிறேன். Start பொத்தான் பட்ட‌ பாடு: சரியாக பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு (2001) நான் முதுகலை கணினி அறிவியல் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது வகுப்புத் தோழன், Start பட்டனின் பெயரை Hello என்று மாற்றி வைத்திருந்தான். அதை ஒரு பெருமையாக அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தான். ஆனால் அதை மாற்றும் வழி முறையினைக் கூறவில்லை. அதை அவனே கண்டறிந்தது போல் பொத்திப்பொத்தி வைத்திருந்தான். []   அந்த வழிமுறையினை வேறு சில நண்பர்கள் மூலம் நான் ஒரு மாதத்திற்குள்ளாகத் தெரிந்து கொண்டேன். அப்பொழுதெல்லாம் start பட்டனை மாற்றுவதற்கு மென்பொருட்கள் இல்லை. Edit கட்டளை மூலமே explorer.exe கோப்பினை ஹெக்ஸா டெசிமல் எடிட் செய்து மாற்ற வேண்டும். நான் அவனை விட ஒரு படி மேலே போய் Prasanna’sStuff (15 எழுத்துக்கள்) கொண்டு Start பட்டனை வடிவமைத்திருந்தேன். அப்பொழுது அது அவ்வளவு பெரிய செய்தி. அதன் பிறகு தமிழ் கம்ப்யூட்டர் இதழில் Start பட்டனை மாற்றும் முறை வெளியானது. பிறகு சில ஆண்டுகளிலேயே விசுவல் பேசிக் கொண்டு Start பட்டனை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும் நிரல் கிடைத்தது. அதன் பிறகு ஏன் Start பட்டனை மாற்ற வேண்டும், அது அப்படியே இருந்து விட்டுப் போகிறது என்று Start பட்டனை பலமுறை மாற்றியவர்கள் தெரிவித்தார்கள். விண்டோஸ் 7ல் Start பட்டனுக்கு மாற்றாக ஐக்கான் மட்டுமே இருக்கிறது. விண்டோஸ் 8 பீட்டா பதிப்பில் Start பட்டனே இல்லை. இன்று யூடியுபில் Start பொத்தானை மாற்றுவது எப்படி என்ற காணொளி மூலம் எளிதில் கற்று Start பொத்தானை மாற்றலாம். அப்படியிருந்தும், இன்று யாரும் பட்டனை மாற்ற விரும்புவதில்லை. பதினொரு ஆண்டுகளுக்கு முன் என் வகுப்புத் தோழன் செய்ததை நினைத்தால், இபோது எனக்கு நகைப்புத்தான் வருகிறது.   குப்பைத் தொட்டி (ரீசைக்கிள் பின்) பட்ட‌ பாடு: []   அதே வகுப்புத் தோழன் சில நாட்கள் கழித்து எப்படி குப்பைத் தொட்டியின் (Recyle Bin) பெயரை மாற்றுவது என்று கூறினான். அது Start பொத்தானை மாற்றுவதை விட எளியதுதான். Regedit செய்து மாற்ற வேண்டும். மாற்றம் செய்யும் பொழுது வேறு ஏதேனும் தவறாக நிகழ்ந்தால் regedit ஐ இழக்க நேரிடும். ஆக மிகவும் கண்ணுங்கருத்துமாகச் செயல்பட வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கும் மூன்றாம் நிலை மென்பொருள் (Third-Party tool) இலவசமாக இணையத்தில் கிடைத்ததாக நினைவு. விண்டோஸ் ஏழில் வலது சொடுக்கில் எளிமையாக குப்பைத் தொட்டியின் (Recyle Bin) பெயரை மாற்றுவது கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொது யாருமே குப்பைத் தொட்டியின் பெயரினை மாற்ற விரும்புவதில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். HTML (Hyper Text Markup Language): []   முன்பு இந்த நிரல் மொழிக்கும் பல டேகுகளை (Tag) மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய இணையப்பக்கம் தயாரிக்க மணிக்கணக்கில் HTML நிரல் எழுத வேண்டும்.  இதனையும் எனது வகுப்புத் தோழன் எனக்குச் சொல்லிக்கொடுக்க மறுத்தான். பிறகு விரைவாகக் நான் பிற வகுப்புத் தோழர்களின் உதவியோடு இரண்டே நாட்களில் HTML நிரல் மொழியினைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, Microsoft Frontpage editor மூலம் தானாகவே நிரல் செய்யும் முறையினையும் (automatic html page creation) கற்றுக் கொண்டேன். இன்று HTML நிரல் மொழி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இருக்கிறது. இணையம் மிக விரைவாக இயங்கும் வகையில், HTML5.0, AJAX நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தப் பட்டறிவின் மூலம் அறியப்படுவது, ஒரு தொழிற்நுட்பச் செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை. ஏனெனில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. ஒன்றைச் சொல்லாமலே வைத்திருப்பதனால் நாமோ, அல்லது  நமது கண்டுபிடிப்போ தான் காலாவதியாகி (out-dated) விடும். எது எப்படியிருப்பினும், எனக்குச் சொல்லித்தர மறுத்ததனால் நானே முயற்சி செய்து நுட்பங்களைத் தெரிந்து கொண்டதற்கு எனது நண்பனுக்கு நன்றி கூறவே விரும்புகிறேன். அவன் இப்பொழுது ஃபின்லாந்தில் வசித்து வருகிறான். அக்சென்ஷரில் (Accenture) பணிபுரிகிறான்.   3) தொல்லை கொடுத்த நண்பரும், தொலைந்து போன கடவுச்சொல்லும் முன்னுரை கடவுச்சொல் எவ்வளவு முதன்மையானது, அதைத் தொலைக்கக்கூடாது என்பதைப் பற்றிய ஒரு புத்துரை. நகைச்சுவையாய் எழுத வேண்டும் என்று நினைத்துத் தொடங்கி சிறிதளவு நகைச்சுவையுடன் முற்றுப் பெற்ற புத்துரை. ஒரு நல்ல படுதலைத் தரும் என்று நம்புகிறேன்.   எனக்கு நண்பர் ஒருவர் உண்டு. அவரிடம் தொழிற்நுட்பம் தொடர்பாகச் சில மாறுபட்ட வழக்கங்கள் உண்டு.  1.       எது எதற்காகப் பயன்படுகிறது என்பது கூடத் தெரியாமல், நிறைய இலவச இணையக் கணக்குகளைத் தொடங்குவது.  2.       அனைத்திற்கும் எளிய கடவுச்சொல் கொடுப்பது. எ.கா: xyz789  3.       அனைத்திற்கும் ஒரே கடவுச்சொல் கொடுப்பது.  4.       கடவுச்சொல்லை யாருக்கும் சொல்லாமல் இருப்பது. ஆனால் அனைத்துக் கணக்குகளுக்கும், ஒரே கடவுச்சொல் கொடுத்துள்ளேன் என்பதை அனைவருக்கும் சொல்வது.  இதையெல்லாம் நண்பரிடம் கண்ட நான், இது போன்றெல்லாம் செய்யாதீர்கள். சில இணையதளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கொடுத்த அந்தக் கணக்கிற்குரிய கடவுச்சொல்லை, உங்கள் மின்னஞ்சலை உடைக்கப் பயன்படுத்திக் (crack) கொள்வார்கள். என்று சொல்லிய பின், நண்பர் என்னைப்பார்த்து குறுநகை செய்வார். நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எனது கணக்கை யார் பயன்படுத்துவார்கள்? என்று வினவுவார்.  “ஒங்களுக்குப் பட்டாத்தான் தெரியுமையா...” என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு அதைப்பற்றிய பேச்சையே நிறுத்திவிட்டேன்.  திடீரென்று ஒரு நாள் அவரது ஜிமெயில் கணக்கு உடைக்கப்பட்டது. கடவுச்சொல்லும் மாற்றப்பட்டு விட்டது.  நண்பருக்கு நான் இது பற்றியெல்லாம் நான் சொன்னமையால், நான் தான் அவரது கணக்கினை உடைத்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் வந்து நிலைமையை விளக்கினார்.  ஐயா எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதையெல்லாம் விடுத்து நான் இதைச் செய்வேனா என்றதும், நண்பர் என்னை நம்ப மறுத்துவிட்டார்.  எல்லாவற்றிற்கும் ஒரே கடவுச்சொல் கொடுத்திருந்ததை உடனே மாற்றுங்கள் அல்லது அதையும் இணையக்கயவர்கள் உடைத்து விடுவார்கள் என்றதும், அச்சம் மேலிட்டவராய், இணையத்தில் உலாவச் சென்றார். மற்ற கணக்குகளை எல்லாம் மாற்றியமைத்தவர், மீண்டும் மீண்டும் முயற்சித்தும், ஜிமெயில் கணக்கினை மட்டும் திரும்பப் பெற இயலவில்லை என்று அழாத குறையாக என்னிடம் வந்து சொன்னார்.  இதற்கு ஜிமெயிலே வழிவகை செய்கிறது. நீங்கள் தொலைத்த கணக்கின் பயனர் பெயரைக் கொடுத்தால் அது உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க உதவுகிறது என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரது கடவுச்சொல்லை எங்கள் அலுவலக இணைய இணைப்பிலேயே மாற்றிக் கொடுத்தேன்.  []   எனினும், அவரது முந்தைய மின்னஞ்சல்கள் இணையக் கயவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இதையறிந்ததும் நண்பர் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது.  இப்பொழுதேல்லாம் நண்பர் வேவ்வேறு கடவுச்சொற்கள் கொடுக்கிறார். தேவையற்ற இணையக் கணக்குகளைத் தொடங்குவதை நிறுத்திவிட்டார்.  கடவுச்சொல் முதன்மை (importance) கருதி நண்பர் அமைதிகாக்கிறார். எங்கள் குழுவிலே, கடவுச்சொல் பற்றி பேச்சு எழுந்தாலே, காதத் தொலைவு சென்று விடுகிறார்.  என்ன செய்வது? கண் கெட்டபின் கதிரவன் வணக்கம் கிட்டுமா?    4) நான் சொல்லட்டுமா?    முன்னுரை  வினாவும் நானே விடையும் நானே என்று தமிழ் கப்யூட்டர் இதழில் வெளிவந்த பதிவு. எழுத்தாளர்களை ஊக்குவிக்க ஆசிரியரின் முயற்சி. வினாவைக் கேட்டு விடையை எழுதுவதில் ஓர் பெரிய வசதி, நமக்குத் தெரிந்த கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொள்ளலாம். :) அவ்வகையில் நானே கேட்டு எழுதி வெளிவந்த எனது பதிவு. -------------------------------------------------------------------------------------------------------   நான் சொல்லட்டுமா ?  Cellphone Internet மூலம் கம்ப்யூட்டருக்கு shareware மென்பொருட்களைப் பதிவிறக்கம் செய்ய முடியுமா?  - ஆர். முத்துச்சாமி. புஞ்சை புளியம்பட்டி. முத்துச்சாமி இந்த கணினி யுகத்தில் எல்லாம் சாத்தியம்  தான். உங்களிடம் எந்த வகைக் கைபேசி உள்ளது என்பதை குறிப்பிடவில்லை . GPRS Enabled Hand Phone என்று வைத்துக் கொண்டால் Instant GPRS Connectivity அல்லது Monthy GPRS Connectivity இரு வழிகளில் இணைப்புப் பெறலாம். Instant GPRS Airtel Connection ல் Rs.20/day. Monthly GPRS Rs.375/-க்கு கிடைக்கிறது.  விருப்பம் போல் பயன்படுத்தலாம். Handphone Drivers  install பண்ணி விட்டு, இணைப்பினை ஏற்படுத்திக்  கொள்ளலாம். 3 வழிகளில் இணைப்பினை ஏற்படுத்தலாம்.  1. Bluetooth Connectivity 2. Infrared Connectivity 3. Data Cable Connectivity இதில் Data Cable Connectivity நம்பகத்தன்மை அதிகம் பெற்றது. Airtel Instant Connection எனில் GPRS என தட்டச்சு செய்து 567 என்ற எண்ணுக்கும், Airtel Monthly Connection எனில் MO என தட்டச்சு செய்து 567 என்ற எண்ணுக்கும் அனுப்பி இணைப்பினைப் பெறலாம். மேலும் தகவலறிய http://www.airtel.com இணையதளத்தினை அணுகவும்.   Recycle Bin லிருந்து Delete செய்த fileஐ திரும்பப்பெற இயலுமா?  இரா. சதீஷ்குமார், சாக்காங்குடி. சாதாரணமாக Recycle Bin லிருந்து அழித்த கோப்புக்களைத் திரும்பப்பெற இயலாது. எனினும் Third Party Software PC Inspector File Recovery பயன்படுத்தி  அழிந்த கோப்புக்களைத் திரும்பப்பெறலாம். இது போன்ற கோப்புகள் இணையத்தில் மிகுதியாகக் கிடைக்கின்றன. மேலும் தகவல்களுக்கு http://www.convar.de,   Illustration 1: PC Inspector File Recovery http://www.download.com தளங்களை அணுகவும். இதில் Condition Good என்று இருப்பின் கோப்பினை 100% திரும்பப்பெறலாம். Condition Poor இருப்பின் கோப்பினை 50% முதல் 100% வரை திரும்பப்பெறலாம். கோப்பளவு எவ்வளவு இருந்தாலும் திரும்பக்கிடைக்கும். இது இலவசமான மென்பொருள் என்பது மகிழ்ச்சியான செய்தி. லினக்ஸ் நிறுவியுள்ள எனது கணினியில் இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸை நிறுவ முடியுமா?  -மா.வான்மதி, கீரமங்கலம் மேற்கு  லினக்ஸ் நிறுவிய பிறகு விண்டோஸை மீதமுள்ள வன்வட்டில் நிறுவலாம். லினக்ஸ் நிறுவிய பகுதியை விட்டு விட்டு விண்டோஸை மீதமுள்ள வன்வட்டில் நிறுவ வேண்டும். பிறகு Linux Boot CD ஐ CD Tray ல் இட்டு Linux Rescue Mode ல் சென்று GRUB ஐ reinstall செய்ய வேண்டும்.  அதற்கு Linux Rescue Mode ல் சென்று கீழ்க்காணும்  கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.  # chroot /sysimage/mnt # grub-install /dev/hda இதில் hda என்பது வன்வட்டினைப் பொறுத்து மாறுபடும்.  hda - primary master hdb - primary slave hdc - secondary master hdd - secondary slave அல்லது GRUB file ஐ மனனம் செய்து தட்டச்சு செய்யலாம்.  GRUB file பின்வருமாறு  நான் சொல்லட்டுமா?   # grub.conf generated by anaconda # Note that you do not have to rerun grub after making changes to this file # NOTICE: You have a /boot partition. This means that all kernel and initrd paths are relative to /boot/, eg. root (hdo, 1) kernel /vmlinuz-version ro root=/dev/VolGroupoo/LogVoloo initrd /initrd-version.img #boot=/dev/hda default=1 timeout=5 splashimage=(hdo, 1)/grub/splash.xpm.gz hiddenmenu title Red Hat Enterprise Linux Server (2.6.18 - 8. e15) root (hdo, 1) kernel /vmlinuz-2.6. 18-8.el5 ro root=/dev/VolGroupoo/Log Voloo rhgb quiet initrd /initrd-2.6.18-8.el5.img title Windows XP root noverify (hdo, o) chainloader +1 so GRUB file urma sijuilme os eflon yi ஆகாது.  MS-DOS வழியாக ஒரு ஃளைபலிளைன CDயில் எழுத முடியுமா?  - ஜி. தமிழரசன், பேராவூரணி.  இது நானறிந்த வரையில் XP Operating System ல் மட்டும் சாத்தியம். கீழ்காணும் கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். copy {source file} {destination file}  xcopy {source file} {destination file}   5) உவத்தல் என்றால் கெட்ட வார்த்தையா?   முன்னுரை வலைப்பதிவில் அதிகம் படிக்கப்பட்ட பதிவுகளில் இதுவும் ஒன்று.  தமிழில் கெட்ட வார்த்தை என்று எதுவும் இல்லை. எல்லாம் கேட்ட வார்த்தைகள்தாம் என்ற கூற்றிற்கொப்ப, நல்ல வார்த்தைகளயெல்லாம், கெட்ட வார்த்தைகளாக மாற்றக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட பதிவு.   ---------------------------------------------------------------------------------------------------- கெட்ட வார்த்தைகள் பொதுவாக இரண்டு தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று சினம், வெறுப்பு, மனக்கசப்பு. இரண்டாவது, கிண்டல், விளையாட்டு, நகைச்சுவை. ஆனால் கெட்டவார்த்தைகள் பேசுதல் குமுகாயத்தில் ஒரு எதிர்மறை விளைவாகவே கருதப்படுகின்றன. பற்பல கெட்டவார்த்தைகள் புழக்கத்தில் இருப்பினும், அவை தொன்று தொட்டு பொதுவார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டு,காலம் மாறமாற கெட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன‌. இவைகள் எல்லாம் வழக்கின் திரிபே. பொதுவாக மொழியில் இயல்பாகவே கெட்ட வார்த்தையாக இருப்பவை எவையுமில்லை என்றே சான்றோர்கள் கூறுகின்றார்கள். உவத்தல் என்றால் மகிழ்தல் என்று தமிழில் பொருள். உவகை என்றால் மகிழ்ச்சி என்று தமிழ் வழிக்கற்றலில் வரும் மக்கள் நன்கு உணர்வர். "உ" வுக்கு ஒலியில் வரும் இணை "ஒ" என்ற எழுத்தாகும்.எனவே அதுவே திரிந்து ஒவத்தல் என்றானது. "உன்னை", "உனக்கு" என்பவைகள் "ஒன்னை", "ஒனக்கு" என்று மாறியிருப்பது ஒலியின் திரிபே என்பதை சொல்ல சொல்லாராய்ச்சியாளர்கள் தேவையில்லை. "உவத்தல்"தான் சென்னை வழக்கில் "...த்தா.."என்றாகி எழுத்து வடிவம் பெறாமல் ஒலி வடிவோடு நின்று விட்டது இக்கட்டுரையில். பார்த்தீர்களா.. மகிழ்தல் என்னும் வார்த்தை எவ்வள்ளவு இழிவாக ஒலிக்கிறது.!!! இதுபோலத்தான் கெட்டவார்த்தைகள் உருவாகின்றன. வரம்பு மீறிய பாலுறவுகளை வெளிப்படுத்தும் சொற்களும்,கெட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன. "தக்காளி"க்கு எதுகைச்சொல் எது என்றால் எல்லாருக்கும் தெரியும். தெருவிலிருந்து திரைவரை இச்சொற்கள் விரவிக்கிடக்கின்றன. இது போன்றகெட்ட வார்த்தைகள் பற்றி செயமோகன் எழுதிய கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும். "கெட்ட வார்த்தைகள் தவிர்த்து நல்ல வார்த்தைகளை நாடோறும் பேசிவர அகமும் புறமும் தூய்மையாகும்." என்பதை உள்ளத்துப்பள்ளத்தில் நினைக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அறிவுரை.      6) கணினிச்சிரிப்புகள்    முன்னுரை  இதழில் வந்த எனது தொழிற்நுட்பச் சிரிப்புகள். சிரிக்க, சுவைக்க... -----------------------------------------------------------------------------------------------------------   “அந்தப் பொண்ணு Google voice assistant ல‌ ஏன் ‘OK Google’ ன்னு சொல்லீட்டு அடுத்து எதுவும் சொல்லாம‌ அமைதியான நிக்கறா...” “ம்ம். இது புரியலயா, அவ அமைதியத் தேடுறா..” “இந்தக்காலப் பொண்ணுங்க அமைதியக்கூட கூகுள்லதான் தேடுவாங்க போலருக்கே.” ---   “நம்ம தலைவருக்கு பெரிய கலைஞர்ன்னு நெனப்பு.” “என்னாச்சு...” “கூகுள், சிஸ்கோ என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. Facebook, whatsapp என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்.” அப்டீன்னு மேடைலயே‌ அடிச்சு விட்றாருய்யா.. ---   “நம்ம பள்ளிக்கூடத்து தலைமையாசிரியர் ரொம்பக்குறும்புக்காரர் போலிருக்கே.” “ஏன் அப்படிச்சொல்ற?” “அடுத்த வாரம் இன்ஸ்பெக்ஷன் இருக்குன்னு சொன்னா, ‘Let us C++’ அப்டீன்னு சொல்றாரே.” “இதென்ன பெரிசு, ரொம்ப நாளைக்கப்பறம் அவரோட நண்பர் வந்து, ‘Long time no see’ அப்டீன்னு சொன்னதுக்கு, ‘Short time yes C++’ அப்டீன்னு சொல்றார்.” ---   “கண்ணாடி பார்த்து தலைவாரிய மனிதன் இன்று கைபேசி பார்த்து தலைவாருகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது?” “என்னய்யா நம்ம மாவட்டம் திடீர்ன்னு தத்துவமெல்லாம் பேசுது ?” “அட நீ வேறய்யா... கூட்டமெல்லாம் முடிச்சிருச்சு. எல்லாரும் என்னோட சேந்து ஒரு செல்ஃபி எடுங்க அப்டீங்கறாரு...”   --- புது நகைச்சுவை எழுத்தாளர் காதலியிடம் தனது நகைச்சுவைகளைக் காட்டி, “என்னம்மா நல்லாயிருக்கா...” “அடப்போங்க..எப்பப் பாத்தாலும் தலைவரு அப்டீன்னு.. இந்தப் படத்துல (selfie) என்னோட சிரிப்பு எப்படி?” “என்ன கொடுமை சார் இது?” காதலி கோபத்துடன்... “இப்பவே வாட்ஸ் அப்ல ப்ளாக் பண்றேன். ஃபேஸ்புக்ல unfriend பண்றேன்.” எழுத்தாளர் குறும்புடன். "மகிழ்ச்சி." ---   7) வேந்தனும், வீரையும்    முன்னுரை  நான் தமிழ்ப் படித்தவன் என்ற அறிவுச் செருக்கோடு அடியேன் எழுதிய ஒரு சிறுகதை.  என் வலைப்பதிவில் வீசப்பட்டது. துண்டு துண்டான வாக்கியங்களில் எழுதப்பட்டது. கீழேயிருந்து படித்தால் ஒரு கதையும், மேலேயிருந்து படித்தால் இன்னொரு கதையும் அவரவர் தமிழறிவிற்கும் பட்டறிவிற்கும் ஏற்ப கற்பனைத்திரையில் விரியும். -----------------------------------------------------------------------------------------------------------   "எங்களுக்குத் தெரியும்டா" நூலினை ஏழாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தான் வேந்தன். நூலினைப் படிக்கும் பொழுதே நூலினூள் நுழைந்துவிடும் நடை அந்நூலினுடையது. எண்ணியல் மயமாக்கப்பட்ட வேந்தனின் இல்லம் பெரும்பாலும் அயல்நாட்டு கண்ணாடிகளாலும், அலங்காரச் சிலைகளாலும் வேயப்பட்டிருந்தது. அத்தனையும் மறந்து நூலினுள் மூழ்கலானான் வேந்தன். நூலின் வனப்பு அதன் ஆசிரியரின் பெயரைக்கூட பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது. அவள் அழகிமட்டுமல்ல, வீரமிக்க பெண்ணுங்கூட. தனியாகச் செயல்களைச் செய்வதில் வல்லவள்.பெயர் வீரை. இனி இவளைப்பற்றிச் சில வரிகள் பார்ப்போம். புதினம் எழுதும் புதுமை விழிகள் வில்லொத்த புருவம். தொழில் திருட்டு. நுனி போல் குத்தும் நாசி. ஆரஞ்சுப்பழ சுளை உதடுகள். இன்னும் எழுத முடியாத அழகு மிகுதியாக இருந்தது வீரையிடம். நூலிலிருந்து வெளியேறிய வேந்தன் தண்ணீர் குடிக்கச் சென்றான். குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு குவளை நீருடன் வந்தவன் மீண்டும் நுழைந்தான் நூலினுள். வீடு முழுதும் எண்ணியல் மயமாக்கப் பட்டிருந்தாலும் பழைய நூலினைப் படிப்பது வியப்பே. ஒவ்வொரு வார்த்தைகளும் சேர்ந்திருந்த விதம் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது வேந்தனுக்கு. கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அவன் அருகில் இருப்பது போல் எண்ணிக்கொண்டே நூலினுள் மூழ்கலானான். வீரை உடும்பு கொண்டு வந்திருந்தாள். எண்ணியல் அறையைத் திருடுவதற்காக. உடும்புப் பிடி பிடிக்க தூக்கி கட்டிடத்தின் மேற்கூரையில் எறிந்தாள் வீரை. எதோ அரவம் கேட்டவன் போல் எழுந்த வேந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்றுமில்லை என்ற உடன் மீண்டும் நூலினுள் நுழைந்தான். வீரை கட்டிய கயிறு அவ்வளவு தடிமனாக இல்லை. ஆதலால் வீரையின் கயிறு அறுந்த‌து பாதி தொலைவு வந்தவுடன். கதை முடிந்திருந்தது. நூலின் மேல் உள்ள காதலால் "எங்களுக்குத் தெரியும்டா" நூலினை எட்டாவது முறையாகப் படிக்கத் தொடங்கினான் வேந்தன்.    8) கணினிச்சிரிப்புகள்    முன்னுரை  மீண்டும்... இதழில் வந்த எனது தொழிற்நுட்பச் சிரிப்புகள். சிரிக்க, தணிக்க..,சுவைக்க...   ----------------------------------------------------------------------------------------------------------- "நம்ம தலைவருக்கு ஃபேஸ் புக் பத்தி ஒன்னுமே தெரியாது போலிருக்கே..."  "ஏன் என்னாச்சு?"  "ஃபேஸ்புக்க பைண்டிங் பண்ணி நம்ம அலுவலக நூலகத்துல வச்சுட்டா அப்பப்ப பாத்துக்கலாம்ங்கறார்."    "அரசருக்கு எல்லாமே தெரியும் போலருக்கே?"  "எப்படி சொல்ற?"  "போர்ல வீரர்களுக்கு மாற்றாக ரோபோக்கள பயன்படுத்தலாம்கிறார்"  "அட நீ வேற.. ரோபோக்கள பயன்படுத்தினா புறமுதுகு சிக்கல் வராதில்லையா அதுக்குத்தான் அப்படிச் சொல்றார்.”    “நம்ம ஹெச் ஓ டி மேடத்துக்கு கம்ப்யூட்டர்ல அன்னா ஆவன்னா கூட தெரியாது போலருக்கே.”  “எப்டீ சொல்ற?”  “அடுத்த ப்ராஜெக்ட்ட நாம எம் எஸ் ஆஃபிஸீல பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கு அவுங்க அதுக்கெதுக்கு எம்.எஸ் ஆஃபிஸ் போகணும். நம்ம ஆஃபிஸுலேயே பண்ணலாமேன்னு சொல்றாங்களாம்.”    “டேய் ஒனக்குத் தெரியுமா? நா.. கூகுள்+, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் எல்லாத்துலயும் அக்கெளண்ட் வச்சிருக்கேன்.”  “ஒனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமாடா?”  “அடக்கடவுளே. எனக்குத் தெரியாதே. அதுக்குச் சீக்கிரமா லிங்க் அனுப்புடா.”    “தலைவர் மகளிரணித்தலைவி மேல ரொம்பக் கோவமா இருக்காரே ஏன்?”  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட்ராய்டுக்குப் போட்டியா நம்ம கட்சியிலர்ந்து பெண்ட்ராய்டு கைபேசி தருவோம்ன்னு மேடையிலயே அறிவிச்சுட்டாங்களாம்.”   9) பாரதி புரட்சிக்கவிஞனா இல்லை ஆரிய நச்சா? - நாணயம்    முன்னுரை  தமிழ் எக்காளம் முழங்கிய மற்றொரு புத்துரை. எப்பேர்ப்பட்டவர்க்கும் மறுபக்கம் உண்டு. அவ்வகையில் பாரதியாரின் இரு பக்கங்களையும் நாணயாம் போல் அலசும் புத்துரை.   ----------------------------------------------------------------------------------------------------   []   நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இங்கு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புக்களும் இரண்டு பக்கங்களுடையவை. ஒவ்வொன்று பற்றியும் விரிவாக ஆராய்வோம். எனவே இப்பக்கத்திற்கு நாணயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. யாருடைய மனத்தையும் புண்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டுமென்பதுதான். ஆகவே நாணயம் போன்றிருப்பவர்கள் தாம் இப்பகுதியில் இடம்பிடிப்பார்கள். தமிழ் சுவைக்காக, ஆய்வுச்சுவைக்காக, பட்டிமன்ற சுவைக்காக எடுத்துக்கொண்ட ஆய்வே இது. இந்தச்சிந்தனைக்கு தலைப்புக் கொடுத்தவர் எம‌து இணைய நண்பர் அறிவழகன் கைவல்யம். அவர்களுக்கு எமது வலைப்பூ வாசகர்கள் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம். வாசகர்களும் உங்கள் தலைப்புக்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.  புரட்சிக்கவிஞனே:  புரட்சிக்கவிஞந்தான். இதில் வேறு கருத்துக்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எத்துணை கவிகள்.அத்துணையும் காலத்தில் அழிக்க முடியாதவை. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என இவற்றை மிஞ்ச ஆளேயில்லை. ஏன் இன்றும் கூட பல மேடைகளில் இவரின் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறார்களே.  உலகமாகவி:  அவரை உலகமாகவி என்று சொல்லாத ஆட்களே இல்லை. பார்ப்பனர்களிடத்திலிருந்து வேறுபட்டவர் எங்கள் பாரதி. முகம் முழுக்க மழித்துக்கொள்ளும் காலத்திலேயே காது வரை மீசை வைத்தவர். அந்த வீரத்தினை என்சொல்வது? வார்த்தைகளே இல்லை. அந்தணர்கள் யாரும் அக்காலத்தில் முண்டாசு கட்டாத காலத்தில் வீரத்துடன் முண்டாசு கட்டியவர். தடியினைப் பிடித்துக்கொண்டு பாரதி வீதியினை வலம் வருவதே அழகுதான்.  இதனை அறியா இக்காலச் சிறுவர்கள், பாரதி திரைப்படம் பார்க்க வேண்டுகிறேன். கைம்பெண் மறுமணம், தாழ்த்தப்பட்டோரை இறைவனின் பிள்ளைகள் என்று மாற்றியது என மிகுதியான எடுத்துக்காட்டுகள் பாரதியினை ஓர் உலகமாகவியாக ஏற்றுக்கொள்ள உதவும்.   பாரதி பாடல்கள்:  எல்லாவற்றிற்கும் மேலாக இவரின் மேல் கொண்ட நட்புக்காக, கனகசபை என்பவர் தன் பெயரையே பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டதை ஏற்றுக்கொண்டதே தமிழ் கூறும் நல்லுலகம். இன்றும் எத்துணை பாடல்கள் இவரின் பெருமை பறைசாற்றுகின்றன. சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா..., இந்த காற்று வெளியிடைக் கண்ணம்மா..., ஓடி விளையாடு பாப்பா..., முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை... என பள்ளிக்குழந்தைகள் பாடாத பாடல்களே இல்லை.   நாட்டுப்பற்று:  பாரதியின் நாட்டுப்பற்றுக்கு அளவே இல்லை. அவரின் பாடல்களில் அது தென்றென விளங்கும்.  "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்  தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்  தந்தையர் நாடெனும் போதினிலே புதுசக்தி பிறக்குது மூச்சினிலே.”  நாட்டினை தாய் என்றழைப்பதுதான் வழக்கம். ஆனால் பாரதி தந்தையர் நாடென்று அழைத்திருக்கிறார். மரபு தெரிந்து மரபு மீறியிருக்கிறார். அதனாலேயே புதுமை கிடைத்திருக்கிறது. தாம் புதுச்சேரியிலிருந்த காலத்தில் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றிருக்கிறார். பிரெஞ்சுக்காரர்கள் பிடிக்க வரும் பொழுது ஒரு வீட்டில் சென்று ஒளிந்து கொண்டார் பாரதி. அவரை நாம் இழந்தது, ஈடு செய்ய இயலாத இழப்பேயாகும். உலகமாகவி இறந்த நாளை அல்லது பிறந்த நாளை கவிகள் நாளாகக் கொண்டாட வேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.  "யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதானதெங்கும் காணோம்.” என்ற இவரது உயர்கூற்று தமிழ்கூறும் நல்லுலகத்தின் அரிய உடைமை. இன்றும் இந்தக்கூற்று எல்லோராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அது தவறு. ஏனெனில் பாரதி தமிழ்,மலையாளம்,வடமொழி,சமற்கிருதம்,பிரெஞ்சு,ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றவர். எனவே அவர் இவ்வாறு சொல்வது சரியே. ஒரே ஒரு மொழியினை மட்டுமே தெரிந்த பிஞ்சுகள் இதனைப் பயன்படுத்தக்கூடாது என் தாழ்மையான கருத்து. எல்லாமே எம்முயிர் எனக்கருதிய உயர்ந்த உள்ளம் :  தாமுண்ண வைத்திருந்த சோற்றினை காக்கைகளுக்கு இட்டு விட்டு காக்கை குருவி எங்கள் இனமே என்று பாடியவர் பாரதி. இவரது இச்செய்கை, வாடிய பயிர்களைக் கண்ட பொழுதெல்லாம், வாடினேன் என்று கூறிய வள்ளலாரின் செய்கையினை நினைவூட்டுகிறது.  தனியொரு மனிதருக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம். என்று பாடியவர் பாரதி. தம்மில்லத்திற்கு அழைத்து வந்து இழிவாகக் கருத்தப்பட்ட இனத்தோருக்கு பூணூல் அணிவித்து பெருமைப்பட்டவர் பாரதி.  "வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்  வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப்பூனை - அவை  பேருக்கொரு நிறமாம். பாம்பின் நிறமொரு குட்டி - வெள்ளைப்  பாலின் நிறமொரு குட்டி கருஞ்சாந்து நிறமொரு குட்டி எந்த நிறமிருந்தாலும் அதில் ஏற்றம் குறைவு உண்டோ” என்று பாடி பூனையிலேயே ஏற்றதாழ்வில்லை, மனிதனில் ஏனப்பா இத்தனை பிரிவு என்றவர். மேலும் இசை பின்னோடிகளாக அவரது பிள்ளைகளை விட்டுச்சென்றுள்ளார். அவரது பெயரன் இராஜ்குமார் பாரதி ஒரு அருமையான கருநாடக இசைப்பாடகர். இத்தகைய பாரதி புரட்சிக்கவிஞனே. வாழ்க பாரதி புகழ்.   ஆரிய நச்சே - மறுபக்கம் : என்னய்யா பெரிய பாரதி? இவரெல்லாம் ஒரு கவிஞரா? இழுவைக்கவிஞர் என்று மதுரைக்காரர்களால் அழைக்கப்பட்டவர். சரியான கஞ்சா குடிக்கும் பேர்வழி. இவரது பழைய ஒளிப்படங்களில் கன்னங்களெல்லாம் ஒடுங்கிக்காணப்படும். அதற்குக்காரணம் கஞ்சா இழுவையே. உலகமாகவி என்றழைக்கப்படும் இவர் இப்படி கஞ்சாவிற்கு அடிமையானவரே.  பல்லாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்த பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து விட்டு ஏதோ தமிழைக் குத்தகைக்கு எடுத்தவர் போல் பிதற்றியவர். வீட்டில் அந்தணத்தமிழ் பேசிய இவர் தமிழ்க்கவிஞனா? வடமொழியினை தமிழில் நுழைத்தெழுத கவியெழுதியவர். தனிமை விரும்பி. சரியான பித்தர்.   தமிழ்க்கொலைகள்:  ஜகம் என்பது உலகம் அல்லது காடு. இதனை சகம் என்று எழுதி தமிழ்க்கொலை செய்தவர். தன்னைத்திட்டியவர்களைத் திட்டுவதற்காகவே கதைகள் எழுதியவர். காக்கைப்பார்லிமெண்ட் என்ற கதைகளையெல்லாம் எழுதியவர். காக்கைபார்லிமெண்ட் என்ன தமிழா? தான் எழுதியதுதான் சரி என்று பேசுபவர். அகம்பிடித்தவர். ஒருமைப் பன்மையினை மாற்றி எழுதிவிட்டு இதற்கு போகர் இலக்கணத்தில் இடம் இருக்கிறது என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டுபவர்.   தன்னலமிக்கவர்:  தன்னினத்தார் யாருடனும் சரிவர பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதவர். உலகமாகவி இந்த வார்த்தையை நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. இவர் இறந்த போது வந்த கூட்டத்தில் மொத்தம் பதினெட்டே பேர்கள் தாம். இவர் உலகத்தை தன்னகத்தே கொண்டவரா? தன் விளம்பரத்திற்காக தன்னைப்பற்றியும், வகுப்புகள் பற்றியும் எழுதி பெயரெடுக்க நினைத்தவர். வீட்டில் உண்ணச் சோறில்லாத பொழுது பாடல் மூலம் உலகைக்கட்டியிழுக்க நினைத்தவர். வாழுங்காலத்தில் தன்னினத்தார் எல்லோராலும் ஏசப்பட்டவர் பாரதி. புதுமை என்ற பெயரில்:  கடவுளை தாயாக நினைப்பர், தந்தையாக நினைப்பர். சரி இவர் ஒரு படி மேலே போய் காதலியாக நினைத்து எழுதியதுதான் கண்ணன் பாட்டு. இதில்தான் கண்ணன், கண்ணம்மா ஆகியது. கண்ணன் ஒரு ஆண்பால் அதை பெண்ணாக்கி எழுதியது புதுமையா என எண்ணத்தோன்றுகிறது. இதைப்பற்றி பெரியார் குழுவினர் வேறுபட்ட கீழ்த்தரமான கதைகளைக் கூறுவர். உயிரில்லா கண்ணனை கண்ணம்மா ஆக்கியதற்கு மாறாக தன் மனைவி செல்லம்மாவைப் பற்றி எழுதியிருந்தாலும் தகும். அகம்பிடித்தவர்:  அகம்பிடித்த இவரது பாடல்களில் ஒரு அச்சமின்மை தெரியும்.  "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்திலுள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்பதில் தொடங்கி "காலா என் காலருகே வாடா  உன்னைச் சிறு புல்லென மிதிப்பேன்.”  என்பது ஈறாக அனைத்திலும் அகம்பிடித்தவராகவே செயற்பட்டிருக்கிறார். வாழுங்காலத்தில் புகழ் இல்லாதவர்தான் இந்த ஆரிய நச்சான பாரதி.   10) தமிழறிவோம்   முன்னுரை:   எனது முதல் சொல்லாராய்ச்சிக் கட்டுரை. "படி" மற்றும் "சும்மா" ஆகிய பதங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகின்றன என்பதை எளிமையாச் சொல்லும் கட்டுரை.  ---------------------------------------------------------------------------------------------------------------   புதிய பரிணாமம்  புதிய பரிமாணம் புதிய பரிமாணம் புதிய பரிணாமம் படி என்னும் வார்த்தை எத்தனை பொருளில் வருகிறது, எத்தனை பரிமாணங்களில் வருகிறது என்பதைப் பார்போம்.  1. படி பெயர்ச்சொல் பெயர்ச்சொல்லாக எடுத்துக் கொண்டால் படிக்கட்டு சொல்லைக் குறிக்கிறது 2. படி பெயர்ச்சொல் படிக்காசு (allowance) சொல்லைக் குறிக்கிறது.  அன்றாடப்படி (daily allowance)  3. படி பெயர்ச்சொல் உழக்கு என்னும் வழக்கொழிந்த சொல்லைக் குறிக்கிறது.  எ.கா; கால்படி அரைப்படி  4. படி வினைச்சொல் வினைச்சொல்லாக எடுத்துக் கொண்டால் படித்தல், (வாசித்தல்) தொழிலைக் குறிக்கிறது.  5. படி வினைச்சொல் xerox என்னும் சொல்லுக்கு இணையான படி எடுத்தல் தொழிலைக் குறிக்கிறது.  எ.கா; Backup = காப்புப்படி  xerox = ஒளிப்படி   6. படி வினைச்சொல் அடிபணிந்து செல்லல் தொழிலைக் குறிக்கிறது.  7. படி படி அடுக்கடுக்காய் வந்தால் படிப்படியாய் முன்னேறுதல் தொழிலைக் குறிக்கிறது.  இப்போது "சும்மா" எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.  1. சும்மா "சும்மா இரு" என்றால் அமைதியாக இரு என்று பொருள்.  2. சும்மா "சும்மாதான்" என்றால் ஒரு பேச்சுக்குத்தான், விளையாட்டுக்குத்தான் என்று பொருள்.  3. சும்மா "சும்மா பேசிக்கிட்டே இருக்காதே" என்றால் எப்பொழுதும் பேசிக்கிட்டே இருக்காதே என்று பொருள்.  4. சும்மா "சும்மாதான் செஞ்சேன்" என்றால் காரணமில்லை என்று பொருள்.  5. சும்மா "சும்மாதான் இருக்கேன்" என்றால் வேலையில்லாமல் இருக்கேன் என்று பொருள்.  6. சும்மா "சும்மாதான் ஒப்புக்காகத்தான்" ஒன்றுமில்லை என்று பொருள்.  7. சும்மா "சும்மா சும்மா செய்யாதே" என்றால் அடிக்கடி செய்யாதே என்று பொருள்.  சரி. "படி" மற்றும் "சும்மா" பற்றி தெரிந்து கொண்டோம். அவைகளை ஏழு வழிகளில் பிரித்தாராய்தோம் . சும்மா இருக்காமல் படியுங்கள்.    11) பழமொழி   முன்னுரை:   பழமொழி நானூறு என்ற நூலில் முன்னுரையறையனார் எழுதிய நானூறு பழமொழிகள் மட்டுமே பழமொழிகள். ஆனால் நாம் இன்றைய நாளில் பேசுவதில் கொஞ்சம் பழைமை ஒட்டியிருப்பினும் அதைப் பழமொழி என்று அழைத்து நாமே அதற்கொரு விளக்கம் கொடுத்து வருகிறோம். அவ்வகையில் நாமே சொல்லிக்கொள்ளும் பழமொழிகள் இரண்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளேன். இவ்விளக்கங்கள் எனது பட்டறிவில் நான் கற்றவவையாகும். ---------------------------------------------------------------------------------------------------------- i) நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் "நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்று ஒரு சொலவடை உண்டு.  விளக்கம்:  "கல்லில் வடிக்கப்பட்டிருந்த நாயின் சிலையினை, நாய் என்று நினைத்துப் பார்த்தால் அது நாய். கல்லென்று நினைத்துப் பார்த்தால் அது கல்." என்பது விளக்கம்.  மறுப்பு: இதை இக்காலச் சிறார்கள், நாய் வருகின்றது, கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். ஆகவே நாயைக் கண்டால் கல்லைக், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பர்.  தவம்:  நாயாக வடிக்கப்பட்ட சிலையே உயிர் கொண்டு எழுந்து குரைக்கும் என்றெண்ணி தவம் செய்தால், அந்தக்கல்லும் நாயாக மாறும் தருணம் வந்தே தீரும் என்பது தவம். அவ்வாறு குரைக்கும் கால் அஃது கல் அன்று; கடவுள்.  ii) பந்திக்கு முந்து படைக்குப் பிந்து - பழமொழி விளக்கம் "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து" என்று ஒரு பழமொழி உண்டு. அதன் விளக்கமாக, பந்தியில் சென்று சீக்கிரம் சாப்பிட வேண்டும். படை என்றால் பின்னால் நின்று ஒளிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு விளையாட்டாக விளக்கத்தைச் சொல்வதுண்டு. ஆனால் அதன் பொருள் அஃதன்று.   அதன் பொருளை கீழே காண்போம். அதைக் கீழேயுள்ளது போன்று திருத்தி வாசிக்க வேண்டும்.    "பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்." அனைவரும் நினைப்பது போன்று இது ஒரு பழமொழியன்று. இது ஒரு விடுகதை. அதை "பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும். அது என்ன ?" என்று கேட்க வேண்டும்.    அதற்கான விடை கட்டை விரல் அல்லது பெருவிரல்.     பந்தியில் கட்டை விரல் முந்திச் சென்று தேவையானதை எடுத்து வாய்க்குள் உணவாகத் தள்ளுகிறது அதனால் பந்திக்கும் முந்தும் என்றும், படையில் முதன்மையான போர்க்கருவி வில்லும் அம்பும் ஆகும். வில்லில் கட்டைவிரலானது பின்புறமாக நாணை (வில்லின் கயிற்றை) இழுக்க உதவும. எவ்வளவு பின்னால் நாணானது இழுக்கப்படுகிறதோ அவ்வளது தொலைவு முன்னால் அம்பானது சென்று எதிராளியைத் தாக்குகிறது. ஆகையால் படைக்கும் பிந்தும் என்றும் அழைக்கப்படுகிறது.    ஆதலால்,    "பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்." - அது என்ன? "கட்டைவிரல்"    []     12) தமிழில் புதிய திரட்டி:   முன்னுரை:   அண்மையில், தமிழுக்குக் கிடைத்த இணையச் சொத்து. அதைப்பற்றி தமிழ் கம்ப்யூட்ட்டர் இதழுக்கு எழுதிய ஒரு பதிவு.  தமிழில் புதிய திரட்டி --------------------------------------------------------------------------------------------------------- தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவர்கள் பொதுவாகத் திரட்டிகளைத் தேடி அலைவர். அவை வலைப்பதிவுகளைத் திரட்டி வலைப்பதிவர்களின் பதிவுகளை இணையத்தில் உலா வருபவர்களுக்குக் காட்டும். அதன் மூலம் அவர்களின் வலைப்போக்குவரத்து (net traffic) அதிகமாகும்.    தமிழ் மணம்  இந்திய நாட்டவர்களை மட்டுமின்றி உலகத்தமிழ் வலைப்பதிவர்கள் பெரும்பாலானோரை தன்பால் ஈர்த்து ஆண்டு தோறும் விருது வழங்கி வந்த முதலாம் இடத்துத் திரட்டி இது. []   தமிழ்மணம் பற்றி சில குறிப்புகள்:    1. தமிழ்த்திரட்டியானது ஒரு பொத்தானைக் கொடுத்தது. அதைச் சொடுக்க புதியபதிவுகள் தளத்தில் ஏற்றப்படும். 2. அதில் நாம் வாக்களிக்க, வாக்குகளுக்கேற்ப பதிவுகள் தமிழ்மணத்தில் காட்டப்படும். 3. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தத்திரட்டி (புதுப்பிக்கப்பட்ட நேரம் : July 26, 2019, 4:20 am) குறிப்பிட்ட தேதிக்குப்பிறகு, மேம்படுத்தப்படாமல் முடங்கிவிட்டது. 4. வலைப்பதிவர்களூக்கு இதன்முடக்கம் பெரும் ஏமாற்றமாக இருந்தது.   தமிழ்ச்சரம்: புதிய தமிழ்த்திரட்டி    தமிழுக்காக பல நிரல்கள், வலைச்செயலிகள் என தன்னால் இயன்ற வரையில் தமிழ் தொண்டாற்றி வரும் அன்பர் நீச்சல்காரன் அவர்கள் இந்த வலைத்திரட்டியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். இராஜா இராமன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும், வாழ்க்கையில் பல்வேறு வண்ணம் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருப்பதால் நீச்சல்காரன் என்ற புனைப்பெயரில் தமிழ்த் தொண்டு செய்வதன் மூலம் உலா வந்து கொண்டிருக்கிறார்.    []   1. கடந்த ஆண்டு இதே சர்வதேசத் தாய்மொழி நாளில் தமிழ்ப் பிழைதிருத்தியான வாணியின் மேம்பட்ட பதிப்பு வெளியானது. இந்த ஆண்டு இணையத்தமிழ்க்குச் சிறு முயற்சியாக ஒரு புதிய தமிழ் வலைப்பதிவு திரட்டியை அறிமுகம் செய்யப்படுகிறது. 2.  இணையத் தமிழ் வரலாற்றில் இருபதிற்கும் மேற்பட்ட வலைப்பதிவு திரட்டிகள் இருந்தன. ஆனால் இன்று அவை அரிதாகிவிட்டன. அதன் மூலம் கற்ற பாடத்தைக் கொண்டும் புதிய பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்தத் திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.   3. ஒருமுறை தளத்தை இணைத்தால் போதும். அதன் பதிவுகளைத் தானாகத் திரட்டிக் கொள்ளும். அமேசான் டைனமோடிபி (DynamoDB in AWS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணிக்கை வரம்பில்லா வலைப்பதிவையும் (unlimited blogs) தானாகத் திரட்டிக் கொள்ளும் திறனுள்ளது.   4. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) கொண்டு பதிவைத் தானாக வகைபிரித்து வாசகர்களுக்குப் பிரித்துக் காட்டும். கணித்தமிழில் உரைப்பிரிப்பு (Text classification) நுட்பம் இங்கே கையாளப்படுகிறது.   5. அனைத்துக் கையடக்கக் கருவிகளுக்கும் உகந்ததாக இதன் பயனர் இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதில் கைப்பேசியிலிருந்து திரட்டியை எளிதில் அணுகிப் பயன்படுத்த முடியும்.   6. இன்றைய பதிவு, இந்த வாரப்பதிவு, கடந்த வாரம், முன்னணி 25 பதிவுகள் என்று காலவாரியாகவும் படிக்கலாம். தேடல் பெட்டியில் குறிச்சொல் இட்டும் தேடிப் படிக்கலாம். இது போக பல சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன. பல அம்சங்களும் ஆய்வு நிலையில் உள்ளன. இனி எழுதுவோரையும் வாசிப்போரையும் இணைக்கும் சரமாக இந்தத் தமிழ்ச்சரம் செயல்படும்.   தளம்: https://tamilcharam.com/ இத்தளம் இன்னும் பயனர்களின் உள்ளீடுகளைக் கேட்டு அதற்கேற்ப மாற்றங்கள் செய்யக் காத்திருக்கிறது.   tamilcharam@gmail.com மின்னஞ்சல் செய்து தள மேம்பாட்டிற்கான குறிப்புக்களைத் தரலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் செயற்படும் தமிழ்த்திரட்டி இது என்பது நம் தமிழுக்குப் பெருமை. என் வலைப்பதிவைச் சேர்த்து விட்டேன். உங்கள வலைப்பதிவை விரைவாய்ச் சேருங்கள்.   13) யம் சர்வர் (வழங்கி)   முன்னுரை:  யம் சர்வர் (வழங்கி) எப்படி சென்ட் இயங்குதளத்தில் செயல்படுகிறது, அதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை விளக்கும் ஒரு தொழிற்நுட்பக் கட்டுரை. புதிய பொறி நிறைஞர்களுக்குப் (system admins - newbies) பயன்படும்.  ---------------------------------------------------------------------------------------------------------- பழுப்பு ஞமலி மேம்பாட்டு வழங்கி (YellowDog updater Modified Server)  பழுப்பு ஞமலி மேம்பாட்டு வழங்கி என்றால் என்ன? (YUM server) என்றால் என்ன?)  லினக்சு இயங்குதளத்தில் பொதுவாக ஏதேனும் நிறுவ வேண்டுமெனில், ஒரு கோப்பினை மட்டும் பயன்படுத்தினால் ஆகாது. அது சிற்சில அல்லது பற்பல சார்புப் பொதிகளை (dependency packages) நிறுவக் கேட்கும். நாம் சில நேரங்களில், கோப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறுவல் செய்ய நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்பொழுதும் அனைத்து முதன்மைக் கோப்புக்களையும் (primary packages), சார்புக் கோப்புக்களையும் நினைவில் வைத்தல் இயலாத செயலாகும். சில நேரங்களில் அதிகப் படியான சார்புக் கோப்புகள தேவைப்படும். எனவே, அதற்கான ஒரு அமைவினை (configuration), நாம் அதே பொறியிலோ அல்லது வேறு ஒரு வழங்கியிலோ வைக்கலாம். அந்த அமைவே யம் சர்வர் (YUM server) என அழைக்கப்படுகிறது. அதை நாம் பழுப்பு ஞமலி மேம்பாட்டு அமைவு என்று அழைக்கிறோம்.   அதன் பயன்பாடுகள் என்னென்ன? (Advantages of YUM server)  1. சார்புப் பொதிகளை அது நினைவில் வைத்துக் கொள்ளும். (It is automatic dependency resolution)  2. அனைத்துப் பொதிகளின் பெயர்களையும் பயனர் நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை. முதன்மைப் பொதியின் பெயரை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். (No need to remember the packages)    []     பழுப்பு ஞமலி மேம்பாட்டு வழங்கி  அமைவு முறைகள் Yum (Yellow-Dog updater Modified) server configuration: மூன்று வகையான பழுப்பு ஞமலி வழங்கியின் அமைவுகளைக் காணலாம்.   1. கோப்பு முறையில் அமைவு (File method): வழங்கியும் (server), பயன்பாட்டுப் பொறியும் (client) ஒன்றாயிருப்பின் இந்த முறை ஒத்து வரும். முதலில் நமது இயங்குதளம் அடங்கிய அடர்குறுவட்டு அல்லது ISO கோப்பிலுள்ள அனைத்து கோப்புகள் (files), அடைவுகள் (directories) அனைத்தையும் குறிப்பிட்ட பாதையில் படியெடுத்து (copy to /var/ftp/pub) அமைக்க வேண்டும். அதன் பிறகு கீழேயுள்ள கோப்பினைத் தயார் செய்து வழங்கியமைவை முடிக்கலாம்.   #vi /etc/yum.repos.d/somename1.repo  [somename] name=reponame baseurl=file://var/ftp/pub/  enabled=1 gpgcheck=0    வழங்கியைப் பயன்படுத்தி பொறியினை மேம்படுத்த பின்வரும் கட்டளையை உள்ளிடவும். #yum update   வழங்கியும் (server), பயன்பாட்டுப் பொறியும் (client) வெவ்வேறாக இருப்பின் இம்முறை ஒத்துவராது. அதற்கு கீழேயுள்ள முறைகளில் (ftp or http) ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இம்முறைகளில் வழங்கியும், பயன்பாட்டுப்பொறியும் ஒரே பொறியாகவும் இருக்கலாம் அல்லது வெவ்வேறு பொறிகளாகவும் இருக்கலாம்.  அதற்கு முதலில் அல்லது FTP / HTTPவழங்கிகளை பொறியில் நிறுவுதல் செய்தல் தேவை.   2. கோப்பு மாற்றி வழங்கி மூலம் அமைக்கப்படும் முறைமை (FTP முறை அமைவு File Transfer Protocol Method): #vi /etc/yum.repos.d/somename2.repo    [somename] name=reponame baseurl=ftp:/192.168.1.254/pub/  enabled=1 gpgcheck=0   3. மீஉரை கோப்பு மாற்றி முறைமை (Hyper Text Transfer Protocol - HTTP Method): #vi /etc/yum.repos.d/somename2.repo  [somename] name=reponame baseurl=http:/192.168.1.254/pub/  enabled=1 gpgcheck=0   கோப்பமைவின் விளக்கம்:   vi /etc/yum.repos.d/somename2.repo – somenameஎன்பது ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.  [somename], name=reponame - ஏதேனும் உங்களுக்குத் தேவையான பெயர்களைக் கொடுக்கலாம். baseurl=http:/192.168.1.254/pub/ - உங்கள் பொறியினைப் பொருத்து, ftp அல்லது httpகொடுக்கலாம்.  enabled=1, gpgcheck=0  போன்ற வரிகளை அப்படியே உள்ளீடு செய்யலாம்.    பழுப்பு ஞமலி பேம்பாட்டு வழங்கியைப் பொறுத்து நாம் இயங்குதளத்தினை எளிதில் மேம்படுத்தலாம் (update), புதிய கோப்புக்களை நிறுவிப் (new package installation)பயன்படுத்தலாம்.   கலைச்சொற்கள்: folder - அடைவுகள் files - கோப்புகள் dependency - சார்புகள் server - வழங்கி target system - பயன்பாட்டுப் பொறி அல்லது இலக்குப் பொறி     14) வாகை சூடிய வாமணி - எழுத்தாளர் வா.மணிகண்டனுடன் ஒரு நேர்காணல்    முன்னுரை  நண்பர், எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களுடன் ஒரு சிறிய நேர்காணல்.  எளிய கொங்குத்தமிழில் அமைந்துள்ளது. எழுத்தின் மூலம் ஈட்டியதை மக்களுக்குச் சேவை செய்து வரும் அவரது பண்பு எனக்கு மட்டுமின்றி உங்களுக்கும் பிடிக்குமென்றே கருதுகிறேன். -------------------------------------------------------------------------------------------------------------- [] எழுத்தால் ஈட்டிய இன்பொருள் கொண்டு ஏழை மாணவர் இதயம் பயில‌ ஆறுதல் தந்து அறப்பணி செய்யும் வண்ணம் மிகுந்த வாமணி நீயே.  “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் சுஜாதா எழுத்தில் வரும் ஓர் உரையாடல்,  “ஒர் எழுத்தாளனைப் பேசச்சொல்வது முதல் தவறு"  மாதவனின் இந்த உரையாடல் கேட்டு அவையே படத்தில் கைதட்டும். நாமும் அது போலத்தான் பூனை போல் இருக்கும் ஓர் எழுத்தாளர் என்ன பேசுவார் என்ற நோக்கில் வா.மணிகண்டன் இல்லம் சேர்ந்தோம். அமைதியாக வரவேற்பறையில் அமர வைத்து, “வாங்க.. போங்க..” கொங்குத் தமிழில் இனிமையாகப் பேசினார்.  இவரைப்பற்றி “ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையம்” என்று தட்டினால் இணையம் காண்பிக்கிறது. சுருங்கக்கூறினால், இவரது பிள்ளையை, குடும்பத்தை இவரது பெற்றோர் பார்த்துக் கொள்வதால் இவரால் எழுத்துலகில் பரிமளிக்க முடிகிறது. “வலைப்பூ எழுத்தாளர்”, “நிசப்தம் அறக்கடளை நிறுவனர்”, “கடலூர் வெள்ளத்திற்கு அறுபது இலகரங்கள் உதவியவர்”, “2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவ ராக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்”. என்று இவரது பேர், புகழ் கூடிக்கொண்டே போனாலும் துளியளவும் செருக்கின்றி இனிதாய் அளவளாவுகிறார். அவரது உரையாட்டிலிருந்து நாம் தொகுத்தவை.  எழுதத் தூண்டு கோலாக இருந்தது?  “எழுத்தாளர் சுஜாதாதான். அவர் எழுத்தைப் படித்தது, அவர் ஒரு வாரத்தில் ஏழு நாட்களில், ஏழு கதைகள், எழு இதழ்களில் எழுதியிருக்கிறார். எந்தக் குழப்பமுமில்லை. எழுத்தில் யாருமே செய்யாத ஒன்று இது.”  “அதோடு மூன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழிக்கல்வி கற்றதுதான். எழுத்தாளர் மனுஷ்யபுத்ரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் புதிய இலக்கியங்களின் பக்கம் எனது ஆர்வத்தைத் திருப்பி விட்டார்.”   அறக்கட்டளை எண்ணம் எப்படி வந்தது? “குடும்பப் பொறுப்புமில்லாமல் இந்த வயதில் வாழ்க்கை வாய்ப்பது வரம் என்று புரிந்து கொண்ட போதுதான் நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கும் எண்ணம் உதித்தது. எழுத்துல கெடைக்கற பணத்த என்ன செய்யறது அப்டீன்னு நெனைக்கறப்பத்தான் இந்த மாதிரி எண்ணம் வந்தது. அறங்காவலர், பொறுப்பாளி (trustee) அப்டீன்னு நா. யாரையும் சேக்கல. அலுவலகமும் இல்ல. என்னோட வீடுதான் அலுவலகம். என்னப்பத்தி தெரிஞ்சவங்க. நண்பர்கள். எல்லாரும் உதவுறாங்க. ஏழை மாணவர்களுக்கு என்னால முடிஞ்சதைச் செய்யறேன்.”  “நிசப்தம் அறக்கட்டளைக்கு வெள்ள நிவாரண நிதி அறுபது இலகரங்கள் வந்திருக்கே. ஆனந்த விகடன் நம்பிக்கை மனிதர்கள் வரிசையில வந்திருக்கிங்க‌ எப்படி இருக்கு இந்த சேதி? “எல்லாமே தானா நடக்கறதுதான். நா. கடலூர்ல வெள்ள நிவாரணத்துக்கு ஒதவுறதப் பாத்துட்டுதான், அறக்கட்டளைக்கு பணம் நெறைய வரத் தொடங்கிச்சு. 2015ல ஆனந்த விகடன்ல என்னோட கலந்துரையாடல் நடத்தினாங்க. இப்ப 2016ல தேர்ந்தெடுத்திருக்காங்க. நாம செய்யறத நாம செய்யறோம் அவ்வளவுதான்.”   எப்படி எழுதுகிறீர்கள்? தமது வரவேற்பறையில் அகன்று இருக்கும், ஒளி உமிழ் இருமுனையத் தொலைக்காட்சியைக் (LED-Light Emitting Diode TV) காட்டிப் பேசுகிறார். “நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. பத்து மணிக்கு எல்லோரும் உறங்கப் போய் விடுவார்கள். நமக்கு பத்துலர்ந்து ரெண்டு மணிவரைக்கும் நேரம் இருக்குது. இந்த நேரத்துல நான் எழுதறதுதான் இதழ்கள்ல நாளேடுகள்ல‌ வர்றது.”  “தொலைக்காட்சி பாக்கறதில்லைங்கறீங்க, ஆனா ஒங்க செல்லுலாய்ட் சிறகுகள் அயல் நாட்டுப்படங்கள் பத்தி பேசுதே” இது நாம்.  சிரிப்புடன் தொடர்கிறார். “நா.. பாக்கறதேல்லாம் அடர் குறுவட்டுத்தான் (DVD). வாரத்துக்கு இரண்டு படம் அயல் மொழில பாத்துருவேன். அதப்பத்திதான் செல்லுலாய்ட் சிறகுகள்ல எழுதிக்கிட்டு வர்றேன். சில உதவி இயக்குநர்கள் கூட அவங்க படத்து எதாவது உதவி கேக்கறாங்க. ஆனா இன்னும் என் பேர போடத் தொடங்கல.”   எழுத்தின் எதிர்காலம் எப்படி? “எழுத்திற்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. என்ன எழுத வேண்டும் என்று மட்டும் மனதில் கொண்டு எழுதத் தொடங்குங்கள். ‘எல்லோரும் புகழ வேண்டும்’, ‘நிறைய பணம் ஈட்ட வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதினால் மக்கள் உங்கள் எழுத்தைப் புறக்கணிக்கக்கூடும். நீங்கள் எழுதுவதை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் அதற்குரிய சன்மானம் உங்களை வந்து சேரும். தொடக்கத்தில் நான் வலைப்பூவில் எழுதத் தொடங்கிய நேரம், முகந்தெரியாத ஆட்களின் வசைமொழி காரணமாக கருத்துரைப் பெட்டியையே, எடுத்து விட்டேன். இப்போது என் தளத்தில் கருத்துரை இருக்கிறது. இன்று என்னை எழுத்தாளன் என்று கொண்டாடுகிறார்கள்.” சிரிக்கிறார்.  “இன்று எல்லாமே கணினியுகம். நாமும் அதோடு சேர்ந்து போராட வேண்டும். நாம் எதேனும் ஒன்று எழுதினால் அதைப்படித்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்பட வேண்டும். நான் கூட, ‘அறிவில் அம்மணமாக இருக்க வேண்டும்.’ என்று எழுதியிருக்கிறேன். தெரியாததைப் பற்றி எழுதி வாங்கிக்கட்டிக் கொள்ளக்கூடாது. இன்று தொழிற்நுட்பத்தில் எதுவும் தெரியவில்லை என்றால், எல்லாரும் கூகுளில் தேடுகிறார்கள். யாரும் நூலினை எடுத்துப் படிப்பதில்லை. சுவையாரத்தோடு எழுதினால், கண்டிப்பாக நமது எழுத்து மக்களைச் சென்று சேரும்.   தமிழ் கம்ப்யூட்டர் போன்ற தொழிற்நுட்ப இதழ்கள் படிப்பதுண்டா? “தொடர்ந்து வாசிப்பதில்லை. நேரம் கிடைக்கும்பொழுது வாசிப்பதுண்டு. தமிழ் கம்ப்யூட்டர் நன்றாக செய்கிறார்கள். இருப்பினும், தொழிற்நுட்ப உலகில் போட்டி போட‌ இன்னும் தகவல்களை அள்ளித்தர வேண்டும். இல்லையெனில் தொழிற்நுட்ப இதழ்களை இணையம் விழுங்கிவிடும். இது எதிர்மறையானது அல்ல. நாணயத்தின் மறுபக்கம். (Other side of the coin)” நாம் கொடுத்த தமிழ் கம்ப்யூட்டர் இதழினை பெற்றுக்கொண்டே தெளிவுபட பேசினார் வா.ம‌.   நூல் ஆசிரியர் அறிமுக உரை   []   நான்... பெங்களூரு. பணியா. பிரசன்னா எம்.எஸ்.சி. எம்.பில். திண்டுக்கல் தூய மரியன்னைப் பள்ளியில் முடித்து, திருச்சி தூய வளனார் கல்லூரியில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்து முடித்துள்ளேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் தொடர்ந்துள்ளேன். இன்று பெங்களூரில் ஓர் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் கட்டுமானர் ஆக‌வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். விர்ஜின் பிரசன்னாவை 2008 இல் திருமணம் முடித்தவன், இன்று ஹேமில்டன், ஹேரிங்டன் ஆகிய இரு ஆண் மகவுகளின் தந்தை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், பொழுதாக்கமாக‌ கணினிக்கதைகள், கட்டுரைகள் எழுதுவது, கணினித் தொடர் எழுதுவது ஆகியவற்றைச் செய்துஇன்புறுகிறேன். தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியான செம்மொழியில் கற்போம் ஷெல் ஸ்கிரிப்ட் என்ற தொடரைத் தொகுத்து இந்நூலில் வழங்கியுள்ளேன்.   பால் ஜெயசீலன் நிர்மல் ஆரோக்கிய பிரசன்னா என்ற இயற்பெயர் சுருங்கி, பா.நி.ஆ. பிரசன்னா என்று சான்றிதழ்களுக்காக மாற்றப்பட்டது. அதுவே மேலும் சுருங்கி பணியா. பிரசன்னா என்றாயிற்று. நூலாசிரியரின் பிற நூல்கள்:   தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளிவந்து பிறகு நூலாகத் தொகுக்கப்பட்ட நூல்கள் 1. கணினிக்கதைகள் ‍ தொகுதி - 1  2. செம்மொழியில் கற்போம் ஷெல் ஸ்கிரிப்ட்    [] நன்றி