[] 1. Cover 2. Table of contents நேர்வழியின் சீரிய ஒளி நேர்வழியின் சீரிய ஒளி   ஜேம்ஸ் ஆலன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/the_shining_gateway மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation நேர்வழியின் சீரிய ஒளி காட்டும் தியானம் விழிப்புடன் இருங்கள் அச்சமின்றி இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் பொறுமையுடன் இருங்கள் மனமாசின்றி இருங்கள்: தியானத்தின் வாயிலாக வாழ்வின் ஆழமான உண்மைகளை உணருங்கள் அன்பின் உயர் சிகரங்களை அடையுங்கள் மெய்யறிவின் உயர சிகரங்களை அடையுங்கள். தியானத்தின் வழிகாட்டுதலை காண தவறியவனால் மீட்சியையும் மெய்ஞானத்தையும் அடைய முடியாது. தன்னைப் பண்படுத்திக் கொள்ளாதவன் ஆசை, வெறியுணர்வின் வேட்கை, துக்கம் ஆகிய மூன்றின் பிடிக்குள் சிக்கியவன் ஆவான். இந்த மூன்று நிலைகளில் வாழ்வதையே அவன் வழக்கமாகக் கொண்டுள்ளான். அவற்றை அவன் கேள்வி கேட்பதும் இல்லை, பரிசோதிப்பதும் இல்லை. அவற்றையே அவன் தன் வாழ்வாகக் கருதுகிறான். அவற்றின் துணையில்லாமல் அவனால் வாழ்வை எண்ணிப் பார்க்க முடிவதில்லை. இன்று ஆசைப்படுகிறான், நாளை வேட்கையைத் தணிக்கிறான், அடுத்த நாள் துக்கப்படுகிறான்; இந்த மூன்றால் (இந்த மூன்றும் எப்போதும் இணைந்தே காணப்படும்) அவன் உந்தப்படுகிறான். ஏன் அவ்வாறு உந்தப்படுகிறான் என்று அவனுக்கும் தெரியாது; ஆசை மற்றும் வேட்கையின் உள்ளாற்றல்கள் அவனுள் கிட்டத்தட்ட தன்னிச்சையாக எழுகின்றன. அவற்றின் கோரிக்கைகளை அவன் எந்த கேள்வியும் கேட்காமல் ஈடேற்றுகிறான்; அவனது கண்மூடித்தனமான ஆசைகளால் வழிநடத்தப்படுகிறான், அவ்வப்போது அவன் மன உறுத்தல், துக்கம் என்னும் குழிகளுக்குள் விழுகிறான். அவனது நிலை குறித்து அவனுக்கே எந்த புரிதலும் இல்லை, எந்த உணர்தலும் இல்லை. அந்த அளவுக்கு அவன் ஆசையில் (அல்லது தான் என்ற அகம்பாவித்தலில்) மூழ்கிக் கிடக்கிறான். அவனால் அதை விட்டு வெளியேற முடிவதில்லை. அவ்வாறு வெளியேற முடியாததால், அவனால் அதை பரிசோதித்துப் பார்க்க முடிவதில்லை. ஆசை மற்றும் துன்பத்தை விட்டு மேல் எழுந்து ஒரு புதிய வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்க முடியும் என்னும் கருத்தே அத்தகைய ஒரு மனிதனுக்கு நம்புவதற்கு இயலாததாக, புதிராகத் தோன்றும். ஆசைகளை ஈடேற்றிக் கொள்வதே முழு வாழ்வு என்னும் கருத்தை கொண்டிருக்கிறான். எனவே, காரண விளைவு விதியின்படி விளையும் துக்கத்தின் வேதனையை அனுபவிக்கிறான். இன்பம் மற்றும் துன்பத்திற்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றான். தனது நிலை குறித்து ஆழமாக உற்று நோக்கும் சிந்தனை மனதில் உதித்து எழும்போது (முதலில் உறுதியற்றதாகவும் மங்களாகவுமே உள்ள) ஓர் சாந்தமான, மெய்யறிவான, பரந்து விரிந்த ஓர் வாழ்வை வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை மனம் உணரும். சுய ஆய்வு மற்றும் சுய பரிசோதனை நிலைகள் அடையப்படும் போது இந்த உணர்வு இன்னும் தெளிவாகவும் தீவிரமாகவும் அதிகரிக்கும். அதன் முதல் மூன்று நிலைகள் முழுமையாக கடந்துவரப்படும் போது அத்தகைய ஓர் வாழ்வை உண்மையாகவே வாழ்வதற்கான சாத்தியமுள்ளது என்ற உறுதியான எண்ணம் மனதில் நிலைபெறும். மனமாசியின்மை மற்றும் நன்மை ஆகியவற்றின் ஆற்றலைக் கொண்டு ஆசை மற்றும் வெறி உணர்வு வேட்டையைக் கடந்து வர முடியும் என்னும் ஓர் உள்ள உறுதியிலேயே நம்பிக்கை என்பது உள்ளடங்கி இருக்கின்றது. ஒருவன் இருளை விட்டு மீண்டு எழாத நிலையில் உள்ள போது அத்தகைய ஓர் நம்பிக்கையே அவன் உடன் இருந்து அவனுக்கு ஆதரவும் தெம்பும் அளிக்கக் கூடியதாக இருக்கும். தியானத்தின் வாயிலாக அவன் சீரிய ஒளி சிந்தும் நேர்வழியின் வாயிற்கதவினுள் நுழையும் போது, அவன் உள்ளார்ந்து தேடும் ஒளி முதன்முறையாக அவன் மீது தன் முழு பிரகாசத்தோடும் ஈடு இணை இல்லா கம்பீரத்தோடும் ஒளி பிரவாகமாக பொங்கும். எனவே, அத்தகைய உள்ள உறுதியினால் ஆன நம்பிக்கையின் துணையின்றி ஒருவன் தன்னைத் துன்புறுத்தும் வாழ்வின் சோதனைகளை, தோல்விகளை, பிரச்சனைகளை ஒருநாள் கூட எதிர்கொண்டு தாக்குப் பிடிக்க முடியாது என்னும் போது, அவற்றை அவன் துணிச்சலாக போரிட்டு மேலெழுந்து வருவதும் அவனது இறுதி வெற்றியும் மீட்சியும் சாத்தியமற்றதாகி விடுகின்றது. தியான நிலைக்குள் நுழையும் போது நம்பிக்கையானது படிப்படியாக கனிந்து மெய்யறிவாக மாறும். அமைதியான மெய்யறிவிலும், சாந்தமான அழகிலும், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வலிமையிலும் பண்படுத்தப்பட்ட புத்துருவாக்கமான வாழ்வு தொடங்கி உணரப்படும். அதன் மகிழ்ச்சியும் பேரெழிலும் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே இருக்கும். பாவத்தின் மீதான இறுதி வெற்றி இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புலனின்ப இச்சை, காழ்ப்புணர்வு, கோபம், பேராசை, தற்பெருமை மற்றும் வீண் ஆரவாரம், சுகபோக கொண்டாட்டங்களுக்கான ஆசை, பணம், பேர், புகழ் மற்றும் அதிகாரம் என இவை எல்லாம் உயிர்துடிப்பற்றதாகி விரைவில் கடந்து வரக்கூடியதாகி விட்டன. அவற்றில் இனியும் உயிர் துடிப்போ மகிழ்ச்சியோ இல்லை. பண்படுத்தி புதுப்பித்துக் கொண்டவன் வாழ்வில் இனி அவற்றுக்கு எந்த இடமும் இல்லை. அந்த பழைய வாழ்வுக்கு இனி அவனால் திரும்ப முடியாது. தான் என்று அகம்பாவித்தலையும் பாவத்தையும் புரியும் அந்த பழைய மனிதன் இறந்து விட்டான். அன்பு மற்றும் மனவாசின்மையும் கொண்ட புதிய மனிதன் அவனுள் பிறந்து விட்டான். (தியானத்தின் செயல்பாடு மலர்ந்து காய்த்து கனிந்து விளையும்போது) அவன் புதிய ஒருவனாக மாறி இருப்பான். மனமாசின்மை, அன்பு, மெய்யறிவு மற்றும் நிம்மதி ஆகியன அவனது முதன்மை குணங்களாக இருக்கும். சண்டை சச்சரவு, பொறாமை, சந்தேகம், காழ்ப்புணர்வு பிறரிடம் கொள்ளும் இழிவான போட்டி மனப்பான்மை ஆகியன அவனுள் புக முடியாது. “பழையன எல்லாம் களைந்து விட்டன. அனைத்தும் புதியதாகி விட்டன”. மனிதர்களும் நிகழ்வுகளும் ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்கப்படுகிறார்கள். ஒரு புதிய பிரபஞ்சம் வெளிப்படுகின்றது; எந்த குழப்பமும் இல்லை; அகத்தின் சடுதியில் ஆடும் முரண்பாடான ஆசைகள், வெறியுணர்வைத் தூண்டும் வேட்கைகள், மற்றும் துன்பங்களில் இருந்து புதிய மனிதன் பிறந்து மேல் எழுகிறான். அதற்கு ஏற்ப புற உலகில் ஒரு புதிய பிரபஞ்சம் ஒழுங்கமைப்புடன், வரிசை முறையுடன், ஒத்திசைவுடன், பெருமையுடன், தவறாத சமநிலையுடன், சீர்குலைவிற்கு இட்டுச் செல்ல முடியாத வண்ணம் தோன்றுகிறது. தியானம் என்பது மன மாசு அகற்றுதல் மற்றும் மனதை சீர்படுத்திக் கொள்ளுதல் என்னும் இருநிலை செயல்பாடுகளை உள்ளடக்கியது ஆகும். மனமாசு அகற்றுதலுக்கான ஊக்கியாக இருப்பது உயர்வு எண்ணுதலுககான ஊக்கமே ஆகும். தொடர்ச்சியாக என்னும் உயர்வு எண்ணங்கள் ஒத்திசைவுக்கான ஆற்றலை வழங்குகிறது. தியான நிலை அடைய பட்டு அடியெடுத்து வைக்கப்படும் போது ஆன்மீக உருமாற்றம் இரண்டு தனித்துவமான செயல்பாடுகளாக ஏற்படுகின்றது. அந்த ஆன்மீக மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் இரு செயல்பாடுகள் ஆவது: 1. வெறியுணர்வு வேட்கை உருமாற்றம் அடைவது. 2. துன்பம் உருமாற்றம் அடைவது இந்த இரு செயல்பாடுகளும் ஒரே நேரத்தில் அரங்கேறுகின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. ஒன்றின் மீது மற்றொன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வெறியுணர்வைத் தூண்டும் வேட்கை மற்றும் வேதனை அல்லது பாவச் செயல் மற்றும் துன்பம் என்பன ஒரே அம்சத்தின் இரு வேறு கூறுகள் ஆகும். குறிப்பிட்டு சொன்னால் ஒருவனது அகம்பாவத்தின் விளைவாகும். அந்த அகம்பாவமே மனிதகுலம் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் மூல காரணமாக உள்ளது. அது ஆற்றலை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால், தவறாக பயன்படுத்தப்படும் ஆற்றலை. வெறியுணர்வை தூண்டும் வேட்கை என்பது ஒரு தெய்வீக ஆற்றலின் கீழ்நிலை வெளிப்பாடு ஆகும். அது தெய்வீக ஆற்றலாக உருவெடுக்கும் போது உயர் பயன்பாடும் செயல்பாடும் கொண்டிருக்கும். தவறாக பயன்படுத்தப்படும் அவ்வாற்றலை எதிர்க்கும் விதமாக, தடுக்கும் ஒரு சுவராக துன்பம் வெளிப்படுகிறது. எனவே துன்பம் என்பது ஒத்திசைவை நிலைநாட்டும் ஒரு வழித்தடமாக விளங்குகிறது. ஆணவ அகம்பாவம் கொண்டு செயல்படுபவனுக்கு அது கூற விளைவது “இவ்வளவு தான் நீ செல்ல முடியும், அதற்கு மேல் முடியாது” என்று தடை போடுகிறது. எண்ணங்களைத் தியானித்து செயல்படுபவன் வெறியுணர்வு வேட்கையில் இருந்து (தான் என்ற அகம்பாவ தளத்தில் இருந்து) எழும் ஆற்றலை நன்மைக்கான ஆற்றலாக (தன்னை தான் வென்று மீளுதல் என்ற தளத்திற்கு) மாற்றம் செய்கிறான். இன்று - உண்மையின் சாட்சியமாக தன் எண்ணங்களை உற்று கவனிக்கிறான், நாளை -தன் வெறியுணர்வு வேட்கையில் இருந்து மீள்கிறான் மூன்றாம் நாள் -மகிழ்ச்சி அடைகிறான். மனமானது கீழ்நோக்கி பாய்வதில் இருந்து மேல் நோக்கி செல்ல வழிநடத்தப்படுகிறது. பிழை என்னும் தாது பொருட்களுடன் கூடிய உலோகம், புடம் போட்ட பசும்பொன்னாக மாறுகிறது. இச்சை, காழ்ப்புணர்வு, மற்றும் சுயநலம் மறைந்து அவற்றின் இடத்தை மனமாசியின்மை, அன்பு, நல்லெண்ணம் ஆகியன எடுத்துக் கொள்கின்றன. மனம் உயர்வான எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் மென்மேலும் ஈடுபடுவதன் காரணமாக கீழ்நிலை எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் அது ஈடுபடுவது முடியாததாகவும் கடினமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. கீழ் நிலையான, வன்முறையான, ஒத்திசைவில்லாத செயல்பாடுகளில் இருந்து மனம் விடுவிக்கப்படும் அளவுக்கு ஏற்ப வெறியுணர்வு வேட்கை, நல்லாற்றலாக உருமாற்றம் பெறுகிறது. துன்பம், ஆனந்தமாக உருமாற்றம் அடைகிறது. இதன் பொருள், பாவங்கள் அற்ற மனிதனுக்கு துன்பம் என்று எதுவும் இல்லை. பாவம் கைவிடப்படும் போது துன்பம் மறைகிறது. தான் என்ற அகம்பாவமே துன்பத்தின் மூல ஊற்று. உண்மையை ஆனந்தத்தின் ஆதாரம். தன்னை முழுதும் பண்படுத்திக் கொள்ளாதவன் மீது அவதூறு பரப்பப்படும் போது அல்லது புறஞ்சொல் பேசப்படும் போது, அவன் தவறாக புரிந்து கொள்ள படும்போது அல்லது தவறாக நடத்தப்படும் போது, அது அவனுக்கு ஒரு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும். ஆனால் இவையெல்லாம் ஒரு பண்பட்ட மனிதனுக்கு நேரும் போது அவனுள் ஒரு சுவர்க்க நிலையின் பேருவகை ஏற்படும். தான் என்ற அகம்பாவம் என்னும் பெரும் எதிரியை தன் காலடியில் போட்டு மிதித்தவனை அன்றி வேறு எவரும் பின்வரும் வாசகத்தை முழுதும் புரிந்து கொள்ள இயலாது.: “மனிதர்கள் உங்களை நிந்திக்கும் போது, தவறாக நடத்தும் போது, எல்லா விதங்களிலும் உங்களுக்கு எதிராக பொய் பேசும் போது, நீங்கள் வேறு பெற்றவராகிர்கள். என் நிமித்தமாக நீங்கள் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொள்ளுங்கள்.” அத்தகைய சூழல்கள் நெறிகளைக் கடைப்பிடிக்காதவனுக்கு (பண்படாதவனுக்கு) பெரும் துன்பமாக இருக்கும் போது, நெறிகளைக் கடைப்பிடிப்பவனுக்கு (பண்படுத்திக் கொண்டவனுக்கு) எவ்வாறு அவை மகிழ்ச்சியைத் தர முடிகிறது? அதற்கு காரணம், அவன் தன் உள்ளே உள்ள தீங்கிலிருந்து மீண்டு எழுந்துள்ளது தான். தனக்கு வெளியே அவன் தீங்கை காண்பதில்லை. நல் மனிதனுக்கு அனைத்து நிகழ்வுகளும் நன்மையே. அவன் அனைத்தையும் உலகின் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்கிறான். தவறான வகையில் அவன் நடத்தப்படுவதை அவன் தீங்கானதாக கருதுவது இல்லை. அதை நன்மைக்கானதாகவே கருதுகிறான். உள்ளுணர்வு, மெய்யறிவு மற்றும் ஆற்றலை பெற்றிருப்பதால் அவன் தவறாக நடத்தப்படுதலை அன்பான உள்ளத்தோடு எதிர்கொள்கிறான். தன்னை தவறாக நடத்துவோர் மேன்மையுற உதவுகிறான். அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை துரிதப்படுத்துகிறான். அவர்களே இதை அந்த நேரம் அறியாது இருந்தாலும். அவன் விவரிக்க முடியாத ஆனந்தத்தில் திளைத்திருக்கிறான். காரணம், அவன் தீமையின் ஆற்றலை வென்றிருக்கிறான். தீமையின் ஆற்றல்களுக்கு அடிபணிவதற்கு பதில், அவ்வாற்றலை எவ்வாறு மனித குலத்தின் நன்மைக்கு இயக்கி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டுள்ளான். அவன் அனைவரோடும் ஒன்றுபட்டு இருக்கிறான். உலகோடு அவன் சமாதானமாக இருக்கிறான். பிரபஞ்ச ஒழுங்கு அமைப்போடு ஒத்திசைந்து செல்கிறான். இங்கே விளக்கப்பட்டதை உடனே கிரகித்துக் கொள்ள பின்வரும் வரைபடம் வாசகனுக்கு உதவியாக இருக்கலாம். [] அடி ஆழத்தில் புலனின்ப இச்சை, இருள் மற்றும் இறப்பு ஆகியன இருக்கின்றன. அவை அறியாமையுடன் தொடர்பு உடையதாக இருக்கின்றன. சிலுவையின் பாதசுவடியில் ஆசை வேர் கொண்டிருக்கின்றது. சிலுவையில் இரு கரங்களாக, வலது கரமாக (நேர்மறையாக செயல்படும் விதமாக)வெறியுணர்வு வேட்கை இருக்கின்றது. அதை சமநிலைப்படுத்தும் இடது கரமாக (எதிர்மறையாக செயல்படும் விதமாக) துன்பம் இருக்கின்றது. இவற்றை ஒன்றிணைத்து சிலுவையின் சிரம், உயர்வு எண்ணுதலுக்கான ஊக்கமாக மேல் எழுகிறது. சிலுவையில் அறையப்பட்டு மனிதகுலம் ரத்தம் வடிய முள் கிரீடத்துடன் காட்சியளிக்கின்றது. சிலுவையின் சிகரத்தில் மெய்யறிவு இருக்கின்றது. தான் என்ற அகம்பாவ வாழ்வின் முடிவாக மெய்யறிவு இருக்கின்றது. உண்மை வாழ்வின் அடித்தளமாக அது இருக்கின்றது. அன்பு, வெளிச்சம், நித்தியவாழ்வு என்னும் சுவர்க்கத்திற்கு அது இட்டுச் செல்கிறது. பண்படுத்திக் கொண்ட மனிதன், இந்த பூமியில் வாழும் போதே அப்படி ஒரு பேரருளான, பேரழகான உலகில் வாழ்கிறான். அவன் நிர்வண்ண நிலையை அடைந்து விட்டான். சுவர்க்கத்தின் ஆட்சி பிரதேசத்தை அடைந்து விட்டான். அவன் தன் சிலுவையை சுமந்து விட்டான். இனி அவனுக்கு பாவமும் துன்பமும் இல்லை. ஆசை, அதை தனித்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை, அதை தொடரும் துன்பம் ஆகியவற்றை கடந்து சென்றுவிட்டான். ஒத்திசைவு மீட்கப்பட்டுள்ளது. பேருவகையும் பெரு நிம்மதியுமே அனைத்துமாக உள்ளது. வலி மற்றும் வேதனையின் குறியீடாக சிலுவை உள்ளது. ஆசை வேதனையானது. அதை தனித்துக்கொள்ள வேண்டும் என்னும் வேட்கை வேதனையானது. அதை தொடரும் துன்பம் வேதனையானது. அதனால் தான் இரண்டு ஜோடி எதிர் துருவங்கள் கொண்ட சிலுவை, குறியீடாக கொள்ளப்பட்டு இருக்கிறது.. வெறியுணர்வு வேட்கையைப் பரிசுத்தப்படுத்தும் ஒத்திசையச் செய்யும் அம்சமாக துன்பம் உள்ளது. ஆசையைப் பரிசுத்தப்படுத்தும் ஒத்திசையை செய்யும் அம்சமாக உயர்வு எண்ணுதலுக்கான ஊக்கம் உள்ளது. எங்கே ஒன்று இருக்கின்றதோ, அங்கே அந்த மற்றொன்றும் இடம்பெற வேண்டும். ஒன்றை நீக்குங்கள், அந்த மற்றொன்று மறைந்துவிடும். துன்பம் அல்லது வேதனை என்பது வெறியுணர்வு வேட்கையைச் சமநிலைப்படுத்த தேவையான ஒன்றாகும். ஆசையை களைவதற்கு உயர்வு எண்ணுதலுக்கான ஊக்கம் தேவையாகும். ஆனால், தன்னை பண்படுத்திக் கொண்டவனுக்கு இவையெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. புதிய ஒழுங்கு முறையின் புதிய ஒரு வாழ்விற்குள் அவன் பிரவேசித்துள்ளான். மன மாசு அகற்றிய உணர்வு நிலையில் பிரவேசித்துள்ளான். எந்த குறையும் இல்லாமல் அனைத்தும் நிறைவாக பெற்று இருக்கிறான். எதையும் வேண்டுவதற்கான தேவையின்றி இருக்கிறான். மீட்கப்பட்டவனாக, சமநிலை கொண்டவனாக, மன நிறைவானவனாக, நிம்மதியானவனாக இருக்கிறான். பிரபஞ்சத்தில் உள்ள எதைக் கண்டும் காழ்ப்புணர்வோ அச்சமோ அவன் கொள்வதில்லை. மனித குலம் நன்மையுறவும் மீட்சியுறவும் தன் ஆற்றலைக் கொண்டு பாடுப்படுவதையே தன் கடமையாகக் கொண்டிருக்கிறான். உள் மனத்தூண்டுதல் வெறியுணர்வு வேட்கையைத் துக்கம் பின் தொடரும் என்று நான் அறிவேன்; இப்புவியுலக வாழ்வின் மகிழ்ச்சிகள் அனைத்தினை அடுத்தும் துக்கமும் வெறுமையும் உளச்சோர்வும் காத்திருக்கின்றன என்று நான் அறிவேன்; அதனால் நான் வருத்தத்துடன் இருக்கின்றேன். என்றாலும், உண்மை என்பது இருக்கின்றது. அதை கண்டடைய முடியும்; நான் துக்கத்தில் இருக்கிறேன் என்றாலும், நான் உண்மையைக் காணும் போது மகிழ்ச்சி அடைவேன் என்பதை நான் அறிவேன். மனிதனின் உள்மன தூண்டுதலுக்கு காரணமாக விளங்கும் புலனின்ப இச்சையூட்டும் பொருட்கள் தான் புறஉலகை சார்ந்தவையாக இருக்கின்றன. அப்பொருட்களை உடமையாக்கிக் கொள்ள வேண்டும் /அனுபவிக்க வேண்டும் என்னும் ஆசை ஒருவன் அக உலகில் பிரதிபலிக்காத வரை, அந்த புற உலகப் பொருட்களுக்கு என்று தனியே எந்த வித ஆற்றலும் கிடையாது. எனவே, அவனது அவனது ஒரே எதிரி என்பது அவனது பேராசையே. அந்த புலன் இன்ப இச்சையூட்டும் பொருட்களை அடைய வேண்டும் என்னும் பேராசையே. புலன் இன்ப இச்சையூட்டும் பொருட்களின் மீதான பேராசையைக் கைவிடும் போது உள் மனத் தூண்டுதல் மற்றும் களங்கமான ஆசைகளுக்கு எதிரான வேதனையான போராட்டம், விலகி ஓடும். இந்த புலன் இன்ப இச்சையூட்டும் பொருட்களின் மீதான ஆசையை கைவிடுவது, “ஆசை அறுத்தல்” எனப்படும்; “உள் மன களங்கங்கள் மீது கொண்ட பற்று அறுப்பது” ஆகும். ஒருவன் புறஉலக பொருட்களின் அடிமையாக இருப்பதை விடுத்து, அவற்றை கட்டுப்படுத்தி ஆளும் தலைவனாக இருப்பது ஆகும். உள்மனத் தூண்டில் தூண்டுதல் என்பது மிக மெதுவாக நிகழும் ஒரு நிகழ்வு. தனது எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்தும் அவற்றை நிர்வகித்து ஆளும் விதிகள் குறித்தும் உணர்ந்து, மனஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாட்டில் தன்னை நீண்ட பயிற்சிக்கு உட்படுத்திக் கொண்ட காரணத்தால், அது குறித்த துல்லியமான மெய்யறிவை மெய்ஞானி பெற்றிருப்பான். உள்மன தூண்டுதல் என்னும் நிகழ்வின் கால அளவை அத்தகைய மெய்ஞானியால் கணக்கிட முடியும். அதற்கு ஐந்து படிநிலைகள் உள்ளது. அவற்றை தெளிவாக வரையறுக்க முடியும். அது ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு மெல்ல வளர்கிறது என்று கணிக்க முடியும். ஆனால், தனது எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவற்றை நிர்வகித்து ஆளும் விதிகள் குறித்தும் உணராத ஒருவனால், எந்தவிதமான மெய்யறிவையும் பெற்றிராத ஒருவனால், தூண்டுதலின் இறுகிய பிடிக்குள் இன்னும் மூழ்கிக் கிடக்கும் ஒருவனால், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. அவன் நெடுங்காலம் புறவுலக பொருட்கள்- புலனின்ப இச்சையூட்டும் பொருட்களைச் சார்ந்தே வாழ்ந்து உள்ளான். அவன், தன் மன மாசுகளை அகற்றவும் இல்லை. மனதை உற்று நோக்கி பரிசோதித்ததும் இல்லை. அவன் எண்ணும் எண்ணங்கள், செய்யும் செயல்களின் உண்மை இயல்பு குறித்து ஏதும் உணராமல் ஏறக்குறைய அறியாமையில் தினசரி வாழ்வை மேற்கொள்கிறான். தூண்டுதல் என்பது அவனுக்கு உடனுக்குடன் எழக்கூடியதாக உள்ளது. அதன் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ள வலிமையின்றி இருக்கிறான். அவன் நிலை குலைந்து போகும் காரணம் புரியாமல் தவிக்கிறான். அது ஒரு புரியாத புதிராக அவனுக்கு தோன்றுகிறது. புரியாத புதிர் என்பது மூடநம்பிக்கையின் தாயாக விளங்குகின்றது. உறுதியாக நம்புவதற்கு இயலாத யூகத்துக்கு உட்பட்ட ஒரு கருத்தின் மீது பழியைப் போடுவான். அதாவது, கண்களுக்கு புலப்படாத தீய ஆற்றல் அல்லது ஒரு தீய சக்தி, திடீர் என்று அவனை தாக்கி வீழ்த்துகிறது என்பான். இத்தகைய மூடநம்பிக்கைகள் அவனை இன்னும் பலவீனனாக ஆக்குகின்றது. தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு தீய சக்தியை, அதன் தந்திர உபாயங்கள் குறித்து ஏதும் அறியாத அவனால் எப்படி வெல்ல முடியும் என்று நம்பத் தொடங்குவது அவனை பலவீனன் ஆக்குகின்றது. குழப்பமான மனநிலையில் தவிப்பது அவனுள் மேலும் பல மூடநம்பிக்கைகள் புக வழி செய்கிறது.இறுதியில், அவனது பாவங்கள் மற்றும் துன்பங்களுக்கு மேல், பாரமாக அழுத்திக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகள், அவன் கவனத்தை சிதறடித்து அவனது பிரச்சினையின் மூல காரணத்தை அறிய விடாமல் அவனை தூர இழுத்துச் செல்கின்றன. அவன் தொடர்ந்து தூண்டுதல்களின் பிடிக்கு உள்ளாகி சரிந்து வீழ்வது வாடிக்கையாக நிகழ்கிறது. அவன், தன்னை கட்டுப்படுத்தி ஆளும் வரையில், தன் மன மாசுகளை அறுக்கும் வரையில், அது அவ்வாறு தான் நிகழும். காரணம்-விளைவு என இரண்டிற்கும் உள்ள தொடர்பின் ஆன்மீகத் தன்மையை அவன் உணர வேண்டும். அவன் மன மாசு அறுத்து மெய்ஞான பார்வையுடன் காணும் போது தூண்டுதலின் பிடியில் அவன் சிக்கும் நொடி என்பது, அவன் தன் இதயத்தில் இரகசியமாக போற்றி வளர்க்கும் களங்கமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள எண்ணும் துடிப்பே என்று உணர்வான். அவன் தன் அலைப்பாயும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றலை இன்னும் போதுமான அளவு பெற்று, அவற்றை ஆராய்ந்து புரிந்து கொள்ளும்போது, அவன் இதயம் இன்னும் பரிசுத்தமாகும் போது, அவன் தூண்டுதலின் பிடியில் சிக்கும் அந்த நொடிக்கு ஒரு உட்கரு, வளர்ச்சிநிலை, விளைவு இருப்பதை உணர்வான். அப்படி என்றால் தூண்டுதலின் படிநிலைகள் தான் என்ன? தூண்டுதலின் செயல்பாடு மனதில் எவ்வாறு உதிக்கின்றது? அது எவ்வாறு வளர்ந்து அதன் கசப்பான கனியை ஈகின்றது? தூண்டுதல் ஐந்து படிநிலைகளை கொண்டுள்ளது. அவை பின்வருமாறு: 1. இன்பம் என்று ஒரு விடயத்தை உணர்வது. 2. இன்பம் என்று உணரும் அந்த விடயத்தை தொடர்ந்து சிந்தித்து இருப்பது. 3. இன்பம் என்று உணரும் அந்த விடயத்தின் உட்கூறு மனதில் கரு கொள்வது. 4. இன்பத்தின் மீதான ஈர்ப்பு அதிகரிப்பது 5. இன்பத்தின் மீது ஏற்படும் தீவிர ஆசை முதல் படிநிலையில், இன்பத்தை ஊட்டுவதாக கருதப்படும் பொருட்கள், வெறும் பொருட்களாகவே பாவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் அவற்றோடு எந்த பாவமோ களங்கமோ ஒட்டி இருக்கவில்லை. இரண்டாவது படிநிலையில், புலனின்பத்தை ஊட்டும் பொருட்கள் சுகபோகத்துக்கான பொருட்களாக பாவிக்கப்படுகின்றன. மனம் அந்த பொருட்களைக் குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த விவரிக்க முடியாத புலனின்பத்தை குறித்து மனம் அசை போட்டுக் கொண்டே இருக்கின்றது. பாவம் மற்றும் களங்கம் இந்த நிலையில் தொடங்க ஆரம்பிக்கின்றது. மூன்றாவது நிலையில், புலன் இன்பத்தை ஊட்டும் பொருட்கள், சுகபோகத்துக்கான பொருட்களாக மனதில் கரு கொள்கின்றது. அந்த புலனின்ப பொருட்கள் சில வகையான இன்ப உணர்ச்சிகளோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. அந்த இன்பமான உணர்வுகளை மனம் உயிர்போடு அசை போடுகின்றது. நான்காவது நிலையில், புலனின்பத்தை ஊட்டும் பொருட்கள் சுகபோகத்துக்கான பொருட்களாக உணரப்படுகின்றன. அந்த புலன் இன்ப பொருட்கள், முந்தைய நிலையைப் போல சில வகையான வரையறுக்கப்பட்ட இன்பமான உணர்ச்சிகளோடு தொடர்பு படுத்தப்படுகின்றன என்றாலும், புலன் இன்ப பொருளுக்கும் அப்பொருள் வழங்கும் சுகபோகத்துக்கும் இடையே ஒரு குழப்பம் நீடிக்கின்றது. இரண்டும் ஒன்றாக கருதப்பட்டு அந்த பொருளை அடையும் ஆசை மனதில் துளிர் விடுகின்றது. மனம் அந்த பொருளை நாடி செல்கின்றது. ஐந்தாவது நிலையான இறுதி நிலை என்பது, அந்த புலன் இன்ப பொருளை அடைந்தே தீரவேண்டும் என்னும் தீவிர வேட்கை, அந்த பொருளை உடமையாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் பேராசை, அந்த பொருள் வழங்கும் இன்பத்தை அனுபவித்து ஈடேற்றிக் கொள்ள வேண்டும் என்னும் துடிப்பு மேலிடுகிறது. மனதில் முதல் நான்கு நிலைகள் திரும்பத் திரும்ப தொடரும்போது இந்த ஆசை இன்னும் அதிகமாகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அந்த வேட்கை தீ கொழுந்துவிட்டு எரிந்து முழு இருப்பையும் பற்றிக்கொள்கிறது. இறுதியில் அந்த உடனடி இன்பத்தை அனுபவித்து ஈடேற்றிக் கொள்வது மட்டும் தான் முதன்மையாக நிற்கும். அதைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. வேதனையூட்டும் இந்த எண்ணத்தின் விளைவு ஒருவனை அடையும் போது அவன் தூண்டுதலின் பிடியில் சிக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறான். இன்னும் ஒரு செயல்பாட்டு கட்டம் மீதம் இருக்கின்றது. மனதில் ஏற்கனவே செய்த பாவத்தைப் புறத்தில் செயல்படுத்துவது தான் அது. ஆசையிலிருந்து செயல்பாட்டுக்கு இடையில் இருப்பது ஒரு சிறிய படி தான். கீழ்காணும் விளக்க அட்ட வனை இந்த செயல்பாட்டின் அடிப்படையை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வாசகருக்கு துணை புரியும். சலனமற்ற நிலை: புனித எண்ணங்கள், இளைபாறுதல் 1. இன்பம் என்று ஒரு விடயத்தை உணர்வது. பொருட்களில் சிலவற்றை புலன் இன்பம் ஊட்டக்கூடிய பொருட்களாகப் பாவிப்பது. 2. இன்பம் என்று உணரும் அந்த விடயத்தை தொடர்ந்து சிந்தித்து இருப்பது. பொருட்களை புலன் இன்பத்திற்கான ஆதாரமாகக் கருதுவது. 3. இன்பம் என்று உணரும் அந்த விடயத்தின் உட்கூறு மனதில் கரு கொள்வது. பொருட்கள் புலனின்பத்தை ஊட்டும் என்ற எண்ணம் மனதில் கரு கொண்டு வளர்வது. 4. இன்பத்தின் மீதான ஈர்ப்பு புலன் இன்பம் ஊட்டும் பொருட்களை உடமையாக்கி கொள்ள வேண்டும் என்று உணர்வு நிலை. 5. இன்பத்தின் மீது ஏற்படும் தீவிர ஆசை புலன்இன்பம் ஊட்டும் பொருட்களை அனுபவித்து மகிழ வேண்டும் தீவிர ஆசை சஞ்சலமான நிலை— பாவமான எண்ணங்கள், மனசஞ்சலமான ஓய்வற்ற நிலை ஒரு மனிதன் தூண்டுதலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு தடவையும், சலனமற்ற செயல்படாத நிலையில் இருந்து, இந்த ஐந்து படிநிலைகளையும் வரிசையாக கடந்து இறுதியாக சஞ்சலமான செயல்படும் கட்டத்தை அடைகிறான். தூண்டுதலின் தன்மை மற்றும் தூண்டுதலுக்கு உள்ளாகுபவனின் குணாதிசயத்திற்கு ஏற்ப செயல்பாட்டின் கால அளவு மாறுபடும். ஆனால், பலமுறை தூண்டுதலின் பிடிக்கு இடம் கொடுத்து சருக்குவதால் மனம் அதற்கு பழக்கப்பட்டு விடும். தூண்டுதல் நிலையிலிருந்து செயல்பாட்டு நிலைக்கு வருவதற்கு இடையில் நிகழும் மாற்றம், ஐந்து படிநிலைகளும் கடந்து வருவதற்கான கால அளவு அதிவிரைவாக நடந்தேறும். தூண்டுதலை அடுத்து இடையே எதுவும் இல்லை என்னும் அறவிறகு உடனடியாக செயல் அரங்கேறும். இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு நடைபெறும். என்றாலும், மெய்ஞானம் பெற்றவன் தூண்டுதல் என்னும் செயல்பாடு நிகழும் கால அளவை கவனியாமல் விடுவது இல்லை. அது வளர்ந்து மாற்றம் பெறுவதை கூர்ந்து கவனிக்கிறான்; மூளையிலிருந்து உறுப்புகளுக்கு மற்றும் உறுப்புகளில் இருந்து மூளைக்கு உணர்வுகள் செல்வதற்கு ஆகும் கால அளவை அறிவியலாளன் கவனிக்கிறான். மற்றவர்களுக்கு அது ஒரு உடனடி செயல்பாடாகத் தெரியும். அதைப் போல மெய்ஞானியும் வெறும் உணர்வாக தோன்றியது ஒரு திடீர் தூண்டுதலினால் பற்றி எரியும் ஆசையாக உருமாறுவதை அதற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்வதை கவனிக்கிறான். தூண்டுதலின் இயல்பு குறித்த அறிவைப் பெறுவது அதன் ஆற்றலை அழிக்கும் அல்லது அதற்கு இருப்பதாக தோற்றமளிக்கின்ற ஆற்றலை அழிக்கும். காரணம், ஆற்றல் என்பது புனிதமானவைகளுக்குத் தான் சொந்தம். அனைத்து பாவங்களின் வேராக அறியாமை இருக்கின்றது. மனதிற்குள் அறிவு உட்புகும் போது அறியாமை அகன்று விடும். இருள் மற்றும் இருளின் விளைவுகளும் ஒளி புகும்போது மறைவது போல, ஒருவன் தனது ஆன்மீக இயல்பை அறியும் போது, அறிந்து அதனை தழுவும் போது, பாவமும் பாவத்தின் விளைவுகளும் சிதறி ஓடும். அப்படி என்றால் மெய்ஞானி எப்படி பாவத்தை தவிர்த்து நிம்மதியில் உறைகிறான்? பாவச் செயல்களின் தன்மை குறித்து அறிவதால் அவை எவ்வாறு உள்மன தூண்டுதலின் விளைவுகளாக உள்ளன என்று அறிவதால், அந்த உள் மனத் தூண்டுதல் எப்படிப்பட்டது என்று அதன் இயல்பையும் அறிகிறான். அது எப்படி ஒரு குறிப்பிட்ட வகை எண்ணங்களின் தொடர்ச்சியாக அதன் விளைவை இறுதியில் ஏற்படுத்துகிறது என்று அறிகிறான். அவன் அந்த தொடர் எண்ணங்களை தொடக்கத்திலேயே கண்டுணர்ந்து துண்டிக்கிறான். தன் மனதை புலனின்ப உலகில் அலைய அனுமதியாமல் இருக்கிறான். அந்த புலனின்ப உலகம் உண்மையில் வேதனை மற்றும் துக்கத்தின் உலகமாகும். வெறும் உணர்வு தானே என்ற அந்த வளையத்திற்குள் அவன் எண்ணங்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு கதவை அமைத்து தன் மனதை எக்கணமும் எப்பொழுதும் விழிப்புடன் காவல் காக்கிறான். அவனுக்கு அனைத்தும் தூய்மையானது தான். காரணம், அவன் மனம் தூய்மையானது. அவன் பொருட்களை, அவை உருவமான புறப்பொருட்களோ அல்லது அருவமான மனதினால் உணரப்படுபவைகளோ, அவற்றை உள்ளவாறே பார்க்கிறான். புலனின்ப வேட்கை கொண்டவனைப் போல தன் சுய கொண்டாட்டத்திற்கான கண்ணோட்டத்தில் அவன் பார்ப்பது இல்லை அல்லது உள்மனத்துண்டுதலுக்கு இரையானவன் போல அவற்றை வேதனை மற்றும் தீமையின் ஊற்றாக பார்ப்பது இல்லை. அவனுடைய இயல்பான நிலை என்பது சலனமில்லாத செயல்பாடற்ற நிலை. அது புனிதமும் இளைப்பாறுதலும் ஆன நிலை. மகிழ்ச்சி மற்றும் வேதனை என்பவற்றை விருப்பு வெறுப்பின்றி வெறும் சாட்சியமாக இருந்து நோக்கும் நிலை. எது சரி என்ற கண்ணோட்டத்தில் நோக்கும் நிலை. எது இன்பம் தரக்கூடியது என்ற கண்ணோட்டத்தில் நோக்குவது அல்ல. அப்படி என்றால் மெய்ஞானியானவன், பாவங்களற்றவன் அனைத்து வகையான இன்பங்களையும் இழந்தவனா? அவனது வாழ்வு எந்த உயிரோட்டமும் இல்லாத சலிப்பான வாழ்வா? உலகம் கொண்டாட்டம் என்று சொல்லக்கூடிய அனைத்து வகையான புலனின்ப வேட்கைகளில் இருந்து அவன் விடுப்பட்டிருக்கிறான் என்பது உண்மை தான். ஆனால் கொண்டாட்டம் என்று கருதப்படும் அந்த விடயம், முகமூடியாக இருந்து, வேதனையின் கூறுகளை மறைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அவன் கொண்டாட்டம் மற்றும் அதற்கு ஏங்கும் தவிப்பிலிருந்து விடுபட்டு இருப்பதால் அவன் இடையறாத தெய்வீகமான, நிலையான மகிழ்ச்சியில் வாழ்கிறான். சுகபோக கொண்டாட்டத்தை நாடி திரிபவனாலும் பாவத்தில் உழல்பவனாலும் அவற்றை அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது. இவ்விடயத்தில், சலனமில்லாத செயல்பாடு அற்ற நிலை என்பது பாவத்தில் ஈடுபடாத நிலை. ஆற்றலானது, கீழ்நிலை செயல்பாடுகளில் ஈடுபடாதிருக்கும் பொழுது, உயர்நிலை செயல்பாடுகளுக்கு மாற்றப்படுகிறது. அறிவு சார்ந்த, அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு மாற்றப்படுகிறது. அந்த ஆற்றல் வெளிப்பட்டு உயரிய வளர்ச்சி பாதையும் சுதந்திரமும் கிடைக்கின்றது. இவ்வாறு மெய்ஞானி பாவத்திலிருந்து விடுபட, தன்னுள் இருக்கும் அதன் ஆணிவேரை பிடுங்குகிறான். அது தீய எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு வளர, தீய ஆசைகளாக மலர்ந்து பாவ செயல்கள் என்னும் கசப்பான கனிகள் விளைவிப்பதை தடுக்கிறான். ஆனால், மெய்ஞானம் இல்லாத ஒருவன், சுகபோக எண்ணங்கள் தன் மனதில் வேர் விட அனுமதிக்கிறான். அது தூண்டிவிடும் புலன் இன்பங்கள் அவனுக்கு சுகபோகமாக இருக்கின்றன. அந்த புலன் இன்பங்கள் வழங்கும் சுகபோகத்தில் அவன் மகிழ்ச்சியில் திளைக்கிறான். தன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான், “நான் அந்த பாவத்தை செயல்படுத்தாத வரை, நான் பாவத்திலிருந்து விடுபட்டவன் தான்” என்று எண்ணுகிறான். தன் பாவமான எண்ணங்களின் காரணமாக பாவ செயல்கள் விளையும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான். பாவமான எண்ணங்களில் உழல்பவனால் பாவமான செயல்களில் ஈடுபடுவதில் இருந்து தப்ப முடியாது. இந்த பாவ செயல் முதலில் மனதில் எண்ணமாக துளிர் விட்டு ஆசையாக வளர்கிறது. தூண்டுதலின் இறுதி கட்டத்தில் (அவனுள் ஆசையாக மலர்ந்து பற்றி எரியத் தொடங்கிய அந்த வேட்கை ஈர்த்த சூழல்) அந்த உருவமான அல்லது அருவமான பொருள் மீது கொண்ட தீராத வேட்கையினால், பாவ எண்ணங்களில் உழன்ற ஒருவன் பாவச்செயலில் ஈடுபடுவதில் இருந்து தப்ப முடியாமல் வீழ்கிறான். புத்துருவாக்கம் உயர்ந்தவற்றுக்குத் தவிர வேறு எதற்கும் அடிபணியாதே; மகிழ்ச்சி கொள் பரிசை வெல்வதற்காக பயிற்சி செய்யும் விளையாட்டு வீரனை போல, உனது முழு வலிமையும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் போது; இச்சைகள், தூண்டுதல்கள், ஆசைகள், தன்முனைப்பு, ஏமாற்றம், துக்கம், வருத்தம், அச்சம், சந்தேகம், அத்துமீதும் புலம்பல் ஆகியவற்றுக்கு அடிமையாகயிராதே. ஆனால், சாந்த மனதால் உன்னைக் கட்டுப்படுத்திக் கொள். உனக்குள் இருந்து பிறரை ஆட்டுவிக்கும் ஒன்றை, இதுவரை உன்னை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த அந்த ஒன்றை, இனிமேல் நீ ஆள வேண்டும்; உன் உணர்வுகளின் வேட்கை உன்னை ஆளக்கூடாது. நீ உன் உணர்வுகளின் வேட்கையை ஆள வேண்டும். உன் வெறிய உணர்வுகளின் வேட்கை நிம்மதியாக மாறும் வரையிலும் நீ உன்னை கட்டுப்படுத்தி ஆள வேண்டும். மெய்யறிவு உன்னை முடிசூட்டும்; இவற்றை நீ அடைய வேண்டும், அடையும் போது, அறிந்து உணர்வாய். உள் மன தூண்டுதலின் இயல்பையும் ஒன்றை ஒன்று சார்ந்த அதன் 5 படிநிலைகளையும் நாம் விரிவாக ஆராய்ந்து கண்டோம். இனி புத்துருவாக்கத்தின் செயல்பாட்டையும் அதன் இயல்பையும் காண்போம். ஓரளவு மெய்யறிவைப் பெற்று, நிறை வாழ்வை நோக்கி உறுதியோடு பயணிக்கும் வாசகனுக்கு, அது கூடுதல் வழிகாட்டுதலாக அமையும். புத்துருவாக்கத்தின் ஐந்து படிநிலைகள் ஆவது (வரிசை முறைப்படி):— 1. ஆழ்ந்த சிந்தனை 2. சுய பரிசோதனை 3. சுய ஆய்வு 4.தியானம் 5.களங்கங்கள் அற்ற உணர்வு நிலை ஒரு தூய்மையான உண்மையான வாழ்வின் முதல் படிநிலை எது என்றால் அது எண்ணங்களை கவனமாக உணர்ந்து எண்ணுவது ஆகும். எண்ணங்களை கவனமாக எண்ணாதவர்கள் ஒரு சரியான வாழ்விற்குள் உள்நுழைய முடியாது. கவனமாக, ஆழ்ந்து சிந்திக்கும் மனதால் தான் மெய்யறிவு பெற முடியும். ஒருவன் கொண்டாட்டங்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதை விடும் போது தன்னை ஓரிடத்தில் நிலைநிறுத்திக் கொண்டு உற்று நோக்கி காணும் வாய்ப்பைப் பெறுகிறான். உலகத்தின் நிலையையும் வாழ்வின் அர்த்தத்தையும் ஆழ்ந்து சிந்திக்கிறான். அப்போது அவன் புத்துருவாக்கத்தின் முதல் படி நிலைக்குள் அடி எடுத்து வைக்கிறான். ஒருவன் ஓர் ஆழமான உயர்ந்த நோக்கம் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கும் போது, கவனக்குறைவானவர்களும் அற்பமானவர்களும் பயணிக்கும் அகலமான பாதையை விடுத்து, அங்கு காணப்படும் நீர்க்குமிழி போன்ற கொண்டாட்டங்களைத் துரத்தி ஓடுவதை விடுத்து, கவனமானவர்களும் மெய் அறிவாளர்களும் பயணிக்கும் குறுகிய பாதைக்குள் நுழைகிறான், என்றும் நிலையான அறநெறிகளை கடைபிடிப்பதற்கு. பாவம் மற்றும் வேதனையிலிருந்து அத்தகைய மனிதனின் விடுதலை உறுதியளிக்கப்படுகிறது. பல நிச்சயமற்ற தன்மைகளால் அவன் தற்போது சூழப்பட்டிருந்தாலும், அவனுக்காக காத்திருக்கும் நிம்மதியின் துளி சுவையை உணரத் தொடங்கி விட்டான். அவனது வெறியுணர்வு வேட்கைகள் அவனுள் இன்னும் முழுமையாக தணியவில்லை என்றாலும் அவை அமைதியாகி வருகின்றன. அவன் மனம், சாந்தமும் தெளிவும் அடைகின்றது. மற்றவர்களுடனான அவனது பழகுமுறை தூய்மையுடனும் நெறியிடனும் இருக்கின்றது. வலிமையையும் சாந்த குணத்தையும் மெய்யறிவையும் அவன் ஒரு நாள் உடமையாக பெற்று இருப்பான் என்னும் மன கண் காட்சி அவன் ஆழ்ந்து சிந்திக்கும் கணப்பொழுதில் அவனுக்கு கிடைக்கின்றது. அவன், இவ்வாறு இரண்டாவது படி நிலைக்குச் செல்கிறான். வாழ்வையும் அதன் அனைத்து கட்டங்களையும் உளப்பூர்வமாக ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் ஆழ்ந்து சிந்திக்கிறான். மனிதர்கள் கொண்டிருக்கும் வெளியுணர்வு வேட்கைகளையும் ஆசைகளையும் உணர்கிறான். நிலைத்தன்மை அற்ற அவற்றின் வினோதமான இருப்பின் காரணமாக தொடர்பு கொள்ளும் துக்கங்களையும் உணர்கிறான். இச்சைகள் மற்றும் சுயநல குறிக்கோள்களின் எரியும் காய்ச்சலைக் காண்கிறான். கொண்டாட்டங்களுக்கான ஏக்கத்தையும் தவிப்பையும் காண்கிறான், கூடவே வந்து நடுங்க செய்யும் பதட்டத்தையும் அச்சத்தையும் காண்கிறான். எப்போது கைப்பற்றும் என உறுதியாக தெரிந்து கொள்ள முடியாத நெருங்கி வரும் இறப்பையும் காண்கிறான். இவை அனைத்தின் அர்த்தங்களையும் தெரிந்து கொள்ள உளச்சிந்தை கொண்டிருக்கிறான். விளக்க முடியாததாக துக்கம் நிறைந்ததாக காணப்படும் இவற்றின் மூல காரணத்தை கண்டறிய ஆவல் கொண்டிருக்கிறான். மனித குலத்தில் தானும் ஒரு பகுதி, தானும் மற்றவர்களைப் போலவே வெறியுணர்விலும் துக்கத்திலும் உழல்வதை அடையாளம் காண்கிறான். மேலோட்டமான கண்ணோட்டத்துடன் கூறப்படும் கோட்பாடுகளாலும் வாதங்களாலும் திருப்தி அடையாமல் இருக்கிறான். தனது சொந்த இருப்பை கூர்ந்து கவனித்து, தூய்மையான சாந்தமான மனதோடு வாழ்வின் பெரு இரகசியம் எதோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்று புரியாமல் தவிக்கிறான். அவன் தன் எண்ணங்களை உள்முகமாக திருப்புகிறான், தான் தேடும் மெய்யறிவு வெளிப்பாடும் நிம்மதியும் ஒருவேளை உள்ளத்தில் காத்திருக்குமோ என்னும் எதிர்பார்ப்போடு. இவ்வாறு தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு மூன்றாம் படிநிலைக்குள் அடியெடுத்து வைக்கிறான். சுய பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளும் பழக்கம் முழுவதுமாக முற்றி கனியும்போது மனதிற்குள் ஒரு நுட்பமான செயல்பாட்டின் மூலமாக ஓர் எண்ணம் உட்புகும். அதன் விளைவாக அவனுள் ஆழ உள் கிடக்கும் அவனது இயல்புகள் வெளிப்படத்.தொடங்கும். அவை அவன் ஒருவனது இயல்பாக மட்டுமல்ல, அது மொத்த மனித குலத்தின் இயல்பின் வெளிப்பாடாக இருக்கும். ஊடுருவும் உள்ளுணர்வின் தேடுதலோடு பொறுமையோடு ஈடுபடுபவனுக்கு அது தன் இரகசியத்தை வெளிப்படுத்தும். வாழ்வு என்னும் ஆடையாக நெய்யப்பட்டுள்ள எண்ண நூல்களின் ஊடுபாய்வுகளின் ஓட்டத்தை ஆராய முற்படுபவனுக்கு மனித செயல்பாடுகளின் மூல காரணம், வாழ்வின் இருப்பிற்கான காரணம், வாழ்வின் குறிக்கோள் போன்றவை எண்ணங்களின் அதிவேக செயல்பாட்டால் முதல் முறையாக புலப்படத் தொடங்கும். இந்த எண்ண செயல்பாடு தொடர்ந்து நடைபெறும் போது மனதில் நிலைக்கொண்டிருக்கும் ஆசைகளும் வெளியுணர்வு வேட்கைகளும் பரிசுத்தப்படுகின்றன. உண்மையை உணர்வதற்கு, உணர்ந்து கொள்வதற்கு வேண்டிய சரியான மனப்பான்மையைப் பெறுவதற்கு, தேவையான சாந்த குணம் அடையப்படுகின்றது. வாழ்வின் நிலையான நீதிகள் குறித்த புரிதல் தங்கு தடை இன்றி உள்வாங்கப்படுகின்றன. விடியல் பொழுதின் மென்மையான ஒளி, உறங்கிக் கொண்டிருக்கும் உலகிற்குள் அறிந்து உணரப்பட முடியாத வகையில் புகுவது போல இப்போது-, அமைதியாக, முழு கட்டுப்பாட்டுடன் நான்காவது படிநிலைக்குள் சாதகன் நுழைகிறான். உண்மையின் ஒளியை நெடுங்காலமாக காணாமல் தூங்கிக் கொண்டிருந்த அவனது கண் இமைகள் இப்போது திறக்கின்றன. தியான நிலை அவனுக்கு இயல்பாக வருகின்றது. அவனது தியானங்களில் மெய்யறிவு கதவுகளைத் திறக்கும் முதன்மை திறவுகோலைக் காண்கிறான். புத்துருவாக்க செயல்பாட்டின் இந்த அதிஉயர் நிலையில் தான், பாவி புனிதனாகிறான். மாணவன், ஆசானாக உருமாறுகிறான். இந்த உருமாற்ற செயல்பாடு இதுவரையிலும் மெதுவாக வலிமிக்கதாக இருந்தது. இனி அதிவேகமான செயல்பாடாக மாறுகின்றது. சுகபோக கொண்டாட்டங்களிலும் ஆசைகளை ஈடேற்றுவதிலும் வெளியுணர்வு வேட்கைகளிலும் வேதனை அனுபவிப்பதிலும் இதுவரை செலவிடப்பட்டு வந்த மன ஆற்றல்கள் இப்போது வீணாகாமல் கட்டுப்படுத்தப்பட்டு உயர் குறிக்கோள்களுக்காக முன்னேற்ற பாதையில் செலுத்தப்படுகின்றன. மனதில் மெய்யறிவும் பேரானந்தமும் பெரு நிம்மதியும் பிறப்பெடுக்கின்றன. தியானம் பயில்வதன் விளைவாக திறனும் ஆற்றலும் பெருகுகின்றன. ஐந்தாவது படி நிலையாக உள்ள இறுதி கட்ட நிலை எட்டப்படுகிறது. மெய்ஞானியின் தொலைநோக்கு கொண்ட உள்ளுணர்வு எட்டப்படுகிறது. வாழ்வின் நிதர்சனங்கள் கிரெகிக்கப்படுகின்றன, புரிந்துணரப்படுகிறன. அடிப்படை நியதிகளும் கோட்பாடுகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில், மனிதன் புத்துருவாக்கம் பெறுகிறான். பரிசுத்தம் அடைகிறான். முழுமையாகிறான். மனித இயல்பின் வெறியுணர்கள் அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. மனிதனுக்கேயான துக்கங்கள் கடந்து வரப்படுகின்றன. நிகழ்வன அனைத்தும் (மன கண்ணோட்டத்தின் பாரபட்சமோ ஒரு சார்பு நிலையோ மிகைப்படுத்தலோ இன்றி) உள்ளபடியே காணப்படுகின்றன. வாழ்வின் நுட்பங்கள் எந்த அரிதாரமும் பூசாமல் உண்மையின் வெளிச்சத்தில் நிற்கின்றன. எந்த குழப்பமோ சந்தேகமோ இனியும் இல்லை. எந்த பாவமோ கைவிடப்பட்ட நிலையோ இனியும் இல்லை. மனித வாழ்வை மறுக்க முடியாத வகையில் இயக்கும் மறைவான காரண விளைவுகளை கண்டுணரும் பரிசுத்தமான மெய்ஞான கண்கள் கொண்டவன், வெறியுணர்வின் விளைவான கனிகள் எவ்வளவு கசக்கும் என்று அறிவான். வேதனை ஊற்று எங்கே அதன் இருள் படிந்த நீரை சுரக்கும் என்று அறிவான். அவன் இனியும் பாவமோ துக்கமோ படுவதில்லை. அவன் நிம்மதியை அடைந்து விட்டான். இவ்வாறு கடந்துவரப்பட்ட ஐந்து நிலைகளை பின்வருமாறு சுருக்கமாக விளக்கலாம்: அறியாமை —->பாவம்; துன்பம் 1. ஆழ்ந்த சிந்தனை ஆழ்ந்து சிந்தித்தல் }வாழ்வின் தன்மை குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்தும் ஆழமான உளப்பூர்வமான சிந்தனை. 2. சுய பரிசோதனை சுயபரிசோதனை} வாழ்வை இயக்கும் காரண விளைவுகளின் இருப்பை உள்நோக்கிக் காண்பது. 3. சுய ஆய்வு சுய ஆய்வு }ஊற்றெடெடுக்கும் எண்ணங்களைத் தேடுதலோடு ஆராய்ந்து அவற்றின் உள்நோக்கங்களை பரிசுத்தப்படுத்தி வாழ்வின் அர்த்தத்தை காண்பது. 4. தியானம் தியானம்} வாழ்வின் நிதர்சனங்கள், அடிப்படை நியதிகள் குறித்து பகுத்தறியும் தூய்மையான எண்ணங்களைத் தியானிப்பது. 5. களங்கங்கள் அற்ற உணர்வு நிலை, மனமாசில்லாத தூய்மையான மனக்கண்ணோட்டம் உள்ளுணர்வு வாழ்வின் நியதிகள் குறித்த தெளிந்த அறிவு மெய்ஞானம்—>மனமார்சின்மை ; நிம்மதி புத்துருவாக்கம் என்னும் முழு செயல்பாட்டை ஒரு செடியின் வளர்ச்சியோடு ஒப்பிடலாம். முதலில் ஆழ்ந்த சிந்தனை என்னும் சிறிய விதை அறியாமை என்னும் இருண்ட நிலத்தில் தூவப்படுகிறது. அது வேர் விட்டு முளைத்து எழுந்து சுய பரிசோதனை என்னும் ஆதாரத்தைத் தேடிச் செல்கிறது. அடுத்த கட்டமாக அச்செடி வெளிச்சத்தை நோக்கி வளர்வது சுய ஆய்வு ஆகும். அதனை அடுத்து மொட்டு விடுவது தியான நிலையாகும். இறுதியாக மெய்ஞானியின் ஆன்மீக உயர்நிலையான பரிசுத்தமான மெய்யறிவான உள்ளுணர்வு வளர்வது மொட்டவிழ்ந்து பூ மலர்வதோடு ஒப்பாகும். இவ்வாறு, பாவமும் துன்பமும் ஆரம்பமாக உள்ளது. அதை தொடர்ந்து கவனமான சிந்தனை, சுய பரிசோதனை, மனமாசறுத்தல், தியானம், உள்ளுணர்வு என தூய வாழ்வு மற்றும் தெய்வீக மெய்யறிவு தேடலில் ஈடுபட்டுள்ளவன் செம்மையான நீதியை உணர்ந்து, துன்பத்தின் இருண்ட அறையைக் கடந்து இறுதியாக களங்கமற்ற வாழ்வின் தளத்தை அடைகிறான்ன். செயல்பாடுகளும் ஆழப் பதிந்த உள்தோக்கங்களும் சரியானதற்கு கீழ்படியுங்கள், தவறுகள் உங்கள் நிம்மதியை அதன் பின், கெடுக்காது அல்லது இனியும் காயப்படுத்தாது: உள்ளம், தூய்மையோடு ஒத்திசையச் செய்யுங்கள். துக்கம் இல்லாத இடத்தை தீமை முடிவுறும் இடத்தை நீங்கள் அடைவீர்கள். நரகத்திற்கான பாதை, சில வேளைகளில் நல்செயல்பாட்டு நோக்கங்களாலேயே அமைகிறது என்று ஒரு சொல் வழக்கு இருக்கின்றது. ஒரு நல்ல உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட பாவச் செயல் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுகிறது என்பதையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். சில செயல்பாடுகள், தம் இயல்பாலேயே தீமையானதாக இருக்கின்றன. சில செயல்பாடுகள், தம் இயல்பாலேயே நன்மையானதாக இருக்கின்றன. நல்ல உள்நோக்கங்கள், முன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நன்மையானதாக்க முடியாது. சுயநல உள்நோக்கங்கள், பின்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை தீமையானதாக்க முடியாது. தம் இயல்பாலேயே தீமையானவ என்று கருதப்படும் செயல்பாடுகள் நாகரீகம் அடைந்த அனைத்து சமூகங்களாலும் “சட்டத்துக்கு புறம்பான குற்றங்கள்” என்று வரையறுக்கப்படுகின்றன. இவ்வாறு கொலை, திருட்டு, விபச்சாரம் போன்ற செயல்பாடுகள் எப்போதும் தீங்கானவை தான். அவற்றை தூண்டிவிட்ட உள்நோக்கம் எதுவென்று ஆராய்ந்து பார்க்க எந்த தேவையும் இல்லை. அப்பட்டமாக தெரியும் தவறு எக்காலத்திற்கும் தவறு தான். தந்திரமான வாக்குவாதங்களால், தீமையை நன்மையானதாக மாற்றி அமைக்க முடியாது. ஒரு பொய் என்பது, எக்காலத்திற்கும் பொய் தான். எவ்வளவு எண்ணிக்கையிலான உள்நோக்கங்களும், அதை உண்மை என்று மாற்ற முடியாது. ஒரு நல்ல செயல்பாட்டிற்கான நோக்கத்தோடு ஒருவன் பொய் சொல்லி இருக்கிறான் என்றாலும், அவன் சொன்னது பொய் தான். ஒரு சுயநலமான செயல்பாட்டிற்கான நோக்கத்தோடு ஒருவன் உண்மையைச் சொல்லி இருக்கிறான் என்றாலும், அவன் சொன்னது உண்மை தான். மேற்குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளைத் தவிர்த்து விடும் பட்சத்தில், வேறு பல செயல்பாடுகளும் இருக்கின்றன. அவை அந்த வாழும் சமூகத்தால் குற்றம் என்று வகைப்படுத்தப்படவில்லை. ஆனாலும், அறிவோடு சிந்திக்கும் அனைவராலும், அது குற்றம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில், சக மனிதர்களுடனான உறவுகளில் அச்செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நடைபெறுகின்றன. எடுத்துகாட்டாக, ஒரு சிறுவன் தன் தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வேண்டுமென்றே மீறும்போது, தந்தை அவன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க மாட்டார். ஆனால், தக்கம்படி தண்டனை கொடுத்து அதை திருத்துவார். காரணம் ஒழுக்கக்கேடு, அதன் இயல்பாலேயே தவறான செயல்பாடு என்பதால் தான். இந்த இடத்தில் வாசகர் கேட்கலாம், “அப்படி என்றால் உள்நோக்கம், இதயத்தின் நிலை தான் முக்கியம். முதன்மையானது என்று கற்றுத் தரப்படுகிறதே, அது தவறா?” என்று . இல்லை, அது தவறு இல்லை. உள்நோக்கம் தான் முதன்மையானது. அது தான் செயல்பாட்டின் தன்மையைத் தீர்மானிக்கின்றது. இங்கே, செயல்படுத்துவதற்கான குறிக்கோள் என்பதற்கும் உள்ளத்தின் ஆழ பதிந்த உள்நோக்கம் என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை நாம் காண வேண்டும். நல்ல உள்நோக்கம் / தீய உள்நோக்கம் என்று மக்கள் பொதுவாக பேசும் போது செயல்படுத்துவதற்கான நல்லகுறிக்கோள் / செயல்படுத்துவதற்கான தீய குறிக்கோள் என்று தான் கிட்டத்தட்ட அவர்கள் அர்த்தம் கொள்கின்றனர். உள்நோக்கம் என்பது உள்ளத்தின் ஆழ பதிந்து இருக்கும் காரணமாகும். இதயத்தின் இயல்பு நிலை ஆகும்; செயற்பாட்டிற்கான குறிக்கோள் என்பது மேற்கொள்ளப்பட வேண்டிய செயலிற்கான ஒரு நினைவூட்டல் ஆகும். எனவே, ஒரு செயல்பாடு தீங்கான உள்நோக்குடன் மேலெழலாம், ஆனால் சிறந்த குறிக்கோளுடன் அது மேற்கொள்ளப்படலாம். தவறான உள்நோக்கங்களை வைத்துக் கொண்டு சிறந்த குறிக்கோள்களைச் செயல்படுத்துவது சாத்தியம் தான். உதாரணமாக, ஒருவன் மற்றவர்கள் வாழ்விலும் தொழிலிலும் வேலையிலும் பணியிலும் தலையிட்டு (நல்ல குறிக்கோள் கொண்டு) அவர்களது நல்வாழ்விற்கு தனது உதவி தேவை என்ற மாயையில் (தவறான உள்நோக்கம் கொண்டு) செயல்படலாம். குறிக்கோள் என்பது ஏறக்குறைய மேலோட்டமான பெரும்பாலும் உந்துதல்களால் ஏற்படக்கூடியது. ஆனால், உள்நோக்கங்கள் என்பன உள்ளத்தின் ஆழத்தில் அழுத்தமாக பதிந்து மேல் எழுபவை ஆகும். அவை, ஒரு மனிதனின் அறநெறி இயல்புக்கு ஒரு நிலையான காரணமாக இருப்பவை ஆகும். ஒருவன் ஒரு செயலை, நல்ல குறிக்கோளுடன் இன்று மேற்கொள்ளலாம், சில வாரங்கள் கழிந்து அதே செயலை தீய குறிக்கோளுடன் மேற்கொள்ளலாம். ஆனால், அந்த இரு வித செயல்பாடுகளும் மேலெழுவதற்கான அடிப்படை ஒரே உள்நோக்கமாகத் தான் இருக்கும். உண்மையில், ஒரு தவறான செயல்பாடு நல்ல உள்நோக்கத்திலிருந்து மேல் எழ முடியாது. ஆனால், அது ஒரு நல்ல குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படலாம். ஒருவன், தன்னியல்பாலோ அல்லது உள் மனத்தூண்டுதல்களின் நெருக்குதல் காரணமாகவோ கொலை, திருட்டு, பொய் கூறுதல் அல்லது தவறு என்று வரையறுக்கப்பட்டுள்ள ஏதோ ஒன்றில் ஈடுபடுகிறான் என்றால், அவன் இன்னும் இருளான குழப்பமான மனநிலையில் உள்ளான். சரியான உள்நோக்கங்களைக் கொண்டு செயல்படும் திறனற்று இருக்கிறான். இத்தகைய செயல்பாடுகள், தவறான (மூல காரணங்கள்) உள்நோக்கங்களில் இருந்தே தோன்ற முடியும். அதனால் தான் மனித குலத்தின் பேராசான்கள், எப்போதும் செயல்பாட்டை குறித்து தான் பேசுவார்கள், வெகு அரிதாகவே உள்நோக்கங்களைக் குறித்துப் பேசுவார்கள். அவர்கள் தங்கள் நன்னெறி போதனைகளில் எந்த செயல்பாடுகள் தீயவை, எந்த செயல்பாடுகள் நன்மையானவை என்று குறிப்பிடுவார்கள், அவற்றிற்கான உள்நோக்கம் குறித்து எந்த குறிப்பும் இடாமல். காரணம், தீமையான செயல்பாடுகள் தீமையான உள்நோக்கங்களில் இருந்து விளைந்த கனிகளே. நன்மையான செயல்பாடுகள் நன்மையான உள்நோக்கத்திலிருந்து விளைந்த கனிகளே. விளையும் கனியை கொண்டு அதன் மரத்தை நீங்கள் அறியலாம். எதன் மீதும் தீர்ப்பு வழங்காதே என்று வலியுறுத்தப்படுவதன் காரணம் நாம் “பால்”ஐ–“கள்” என்றும் “கள்”ஐ–“பால்” என்றும் முடிவு செய்து விடக் கூடாது என்பதற்காகத் தான். இரண்டையும் வேறுபடுத்தி ஆராய்ந்து தெளிந்து தீர்ப்பை வழங்க வேண்டும். அதுபோலவே, தீய செயல்பாடுகளையும் நல்ல செயல்பாடுகளையும் குழப்பமின்றி தெளிவாக வேறுபடுத்தி கண்டறியும் திறன் பெற்றிருக்க வேண்டும், தீயதை தவிர்த்து நல்லதை கடைபிடிப்பதற்கு. இந்த வழியாகத்தான் ஒருவன் தன் இதயத்தை பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நல்ல உள்நோக்கில் இருந்து செயல்படுவதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். எது சரி, எது தவறு என்று நம்மிலும் மற்றவரிலும் காண்பது பொய்யாக தீர்ப்பு வழங்குதல் என்று ஆகாது. அது மெய்யறிவாகும். எந்த அடிப்படையும் இல்லாமல் மற்றவர்கள் மற்றவர்கள் மீதான சந்தேகங்களை மனதில் நங்கூரம் பாய்ச்சி நிலை கொள்ள செய்து சுயநல உள்நோக்கங்களைக் கொண்டு அவர்களின் செயல்பாடுகளைத் தனது சந்தேகத்தோடு தொடர்புபடுத்தும் போது தான், இதற்கு முன்பு தவறு என்று எச்சரிக்கப்பட்டுள்ள (தீங்கான) பொய்யான தீர்ப்பு வழங்குதல்களில் ஒருவன் ஈடுபடுகிறான். சக மனிதர்களின் நல்ல குறிக்கோள்களை நாம் சந்தேகப்படத் தேவையில்லை. ஆனால், அதே நேரம் அவர்களது தவறான செயல்பாடுகள் குறித்த தெளிந்த அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய தவறான செயல்பாடுகள் செய்யப்படாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நல்ல செயல்பாடுள் செய்திருந்தாலும் சிறப்பாக இருந்திருக்கும். தவறானவை தவிர்க்கப்பட்டு நல்லவை மேற்கொள்ளப்பட வேண்டும். நமது வாழ்வில் நல்லவற்றை கடைப்பிடித்து எடுத்துக்காட்டாக விளங்கி அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும், அவர்களை கண்டித்து குற்றம் சாட்டாமல். எத்தனையோ தவறான செயல்பாடுகள், நல்ல குறிக்கோளுடன் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன; இதனால் தான் சாதிக்கப்பட வேண்டிய எத்தனையோ இலக்குகள் தடங்கலுக்கு உள்ளாகி ஏமாற்றம் தருகின்றன. காரணம், அதன் ஆழ இருக்கும் உள்நோக்கம் களங்கமானதாக இருக்கின்றது. அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற நற்பலன் வராமல் போகின்றது ; அந்த செயற்பாடானது அந்த நல்ல குறிக்கோளுடன் ஒத்திசைவின்றி இருக்கிறது. இறுதி இலக்குடன் வழிமுறை ஒத்துப்போகவில்லை. தீய செயல்பாடுகள் கசப்பான கனியை விளைவிக்கும். நல்ல செயல்பாடுகள் இனிப்பான கனியை விளைவிக்கும். “நீங்கள் கொலை செய்யக்கூடாது, நீங்கள் திருடக்கூடாது, நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது” என்று தான் கட்டளைகள் இருக்கிறதே தவிர, “நீங்கள் தீய உள்நோக்குடன், கொலையோ திருட்டு விபச்சாரமோ செய்யக்கூடாது” என்று இல்லை. தவறான செயற்பாடுகளின் துணையாக எப்போதும் சுயமாயை உடன் இருக்கும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளுதலே அந்த சுய மாயை தரிக்கும் முதன்மை வேடமாகும். ஒருவன், தான் பாவச் செயல்களை செய்தாலும் பாவம் தன்னை அண்டாது, காரணம் தான் தூய்மையான உள்நோக்கம் கொண்டிருக்கிறான் என்று தன்னைத்தானே தற்புகழ்ச்சி செய்து கொள்வான் என்றால், அவனால் எல்லை வகுக்க முடியாத அளவிற்கு எத்தகைய தீங்கையும் செய்ய முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நல்ல குறிக்கோள்களுக்காகவே கெட்ட செயல்பாடுகள் நடைபெற்று இருப்பதை காண முடியும். பொதுவாக, புறங்கூறுதல் ஏன் நடைபெறுகிறது என்றால், ஒருவன் தன் சக மனிதர்களை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகத் தான். அவன் தனது முட்டாள்தனமான சந்தேகங்களில் உழ்ல்வதாலோ அல்லது பாதிப்பு ஏற்படும் என்று புத்திசாலித்தனத்தால் கணித்ததாக நினைத்துக் கொள்வதாலோ, அவன் மற்றவனை குறித்து தன் சகாக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யும் விதமாக, தனது அதீத ஆர்வத்தின் காரணமாக, அவர்களது தீய குணங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கூறி உண்மையை சிதைக்கிறான். அவனது குறிக்கோள் சரியானது தான். அதாவது, அவன் தன் சக மனிதர்களை காக்க எண்ணுகிறான். ஆனால், அவனது உள்நோக்கம் தீங்கானது. அதாவது, அவன் யாரை பற்றி புறம் கூறுகின்றானோ, அவர்கள் மீது அவன் காழ்ப்புணர்வு கொண்டிருப்பது. அத்தகைய ஒருவனின் நல்ல குறிக்கோள் அவனது தவறான செயல்பாட்டால் தடங்கலுக்கு உள்ளாகிறது. அவன் இறுதியாக உண்மையை விரும்பும் மனிதர்களிடமிருந்து விலகி செல்வதில் மட்டும் தான் வெற்றி பெறுகிறான். நல்ல குறிக்கோள் என்னும் ஒரு களிம்பை பூசுவதால், ஒரு தவறான செயல்பாடு ஏற்படுத்தும் காயத்தை ஆற்றி விட முடியாது. இதயத்தில் உண்டான களங்கத்தையும் அகற்றி விட முடியாது. தவறான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள், தூய்மையான உள்நோக்கங்களைக் கொண்டு செயல்பட முடியாது ஒரு களங்கமான மூல ஊற்றிலிருந்து நாற்றம் அடிக்கும் தண்ணீர் பெருகி ஓடும்; ஒரு களங்கமான உள்ளத்திலிருந்து தூய்மையற்ற செயல்பாடுகள் புறப்படும். குறிப்பிட்ட சில வகை செயல்பாடுகள் எக்காலத்திற்கும் தீங்கானவை, சில வகை செயல்பாடுகள் எக்காலத்திற்கும் நன்மையானவை என்று அடையாளப்படுத்தும் போது;- தீயவற்றை ஒதுக்க முடியும், நல்லவற்றை கடைபிடிக்க முடியும். இது வாழ்வை பெருமளவு எளிமைப்படுத்தும். ஒழுக்கமுறை சார்ந்த சிக்கலான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். மெய்யறிவாளர்களும் நன்மையாளர்களும் நல்ல செயல்பாடுகளைக் மேற்கொள்வார்கள். உள்நோக்கம் ,செயல்படு முறை, குறிக்கோள் அனைத்தும் சீராக ஒத்திசைவோடு இருக்கும். அவர்கள் வாழ்வு, நன்மைக்கு ஆற்றல் பயப்பதாக உள்ளது. ஏமாற்றங்களில் இருந்து விடுபட்டிருக்கிறது. அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளினால் விளைந்த பலன் உரிய காலத்தில் கனியும். அவர்கள் தங்கள் செயல்பாடுகளை நுட்பமான வாதங்களாலும் தந்திரமான வாதங்களாலும் தற்காத்துக் கொள்ள வேண்டாம். உள்நோகங்கள் குறித்த யூகங்களில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். ஆனால், தங்கள் செயல்களின் விளைவான பலன் கனிந்து வரும் என்னும் மன நிறைவோடு செயலில் ஈடுபடுவார்கள். நாம் கொண்டிருக்கும் நல்ல குறிக்கோள்கள் நமது தவறான செயற்பாடுகளில் விளைவை அகற்றி விடும் என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளக் கூடாது; ஆனால் சரியான செயல்பாடுகளை மேற்கொண்டு ஒழுக உறுதி ஏற்று இருக்க வேண்டும்; இந்த வழிமுறையின் வாயிலாகத் தான் நாம் நன்மையை அடைய முடியும்; அது மட்டுமே, நிலையான அறநெறிகளின் அடிப்படையில் வாழ்வை கட்டமைக்கும் வழி. அப்போது மனம், தூய உள்நோக்கங்களைப்புரிந்து உணர்ந்து செயல்படும் திறன் பெற்று விளங்கும். அறநெறிகளும் மதமும் ஒரு எண்ணத்தோடு இன்னொரு எண்ணம், ஒரு செயலோடு இன்னொரு செயல், என்று தொடர்ந்து நல்வழியை கடைப்பிடித்து தன் குணத்தை வளர்த்தெடுக்கிறான் மெய்யறிவாளன். படிப்படியாக தன் உயர் இலட்சியங்களை அடைகிறான்; பொறுமையோடும் கவனத்தோடும் செயலாற்றுகிறான். பரிசுத்தமான எண்ணங்களை, உயர்வு எண்ணுதலுக்கான ஊக்கத்தை, தான் என்ற அகம்பாவம் அற்ற செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் தன் மனதிலும் இதயத்திலும் கட்டிஎழுப்புகிறான், உண்மை நிலை கொள்வதற்கான மாளிகை இறுதியாக நிறைவு பெறும் வரை. அப்போது நிறைவாழ்வின் பேராலயம் அங்கே தோன்றி எழும். மதத்தில் இருந்து அறநெறிகளை துண்டித்து அப்புறப்படுத்துவது-, ஆன்மீக விடயங்களில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் சீர்குலைவையும் சுட்டிக்காட்டும் ஒரு நிச்சய அளவுகோலாகும். “அவன் உயர்ந்த அறநெறிகளை கடைப்பிடிப்பவன், ஆனால் அவன் மதவாதி அல்ல”, “அவன் சிறந்த நல்ல குணங்களைக் கொண்டவன், ஆனால், அவன் ஆன்மீகவாதி அல்ல” போன்றவைகள் எல்லாம் பலரது உதடுகளில் இருந்து வெளிப்படும் பொதுவான சொற் தொடர்கள் ஆகும். நற்குணம், பரிசுத்த மனம், அறநெறி வாழ்வு ஆகியவற்றோடு மதத்துக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று அவர்கள் கருதுவதாக உள்ளது. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட வகை நம்பிக்கையை கொண்டு இருக்கும் ஒரு வெறும் வழிபாட்டு முறை என்று கருதப்படுமானால், “அவன் சிறந்த அறநெறி குணமுடையவன், ஆனால் மதவாதி அல்ல” என்று சொல்வது சிலவேளைகளில் சரியாக இருக்கும். “அவன் தீநெறி குணம் கொண்டவன், ஆனால் சிறந்த மதவாதி” என்று சொல்வதும் சிலவேளைகளில் சரியாக இருக்கும். காரணம், கொலைகாரர்களும் திருடர்களும் வேறு பல தீங்குகள் செய்பவர்களும் மதப் பிரிவுகளின் தீவிரமான ஆதரவாளர்களாகவும் கடைபிடிப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவ்வாறு மதத்தை சுருக்குவது, மதரீதியான கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது மலை பிரசங்கத்தின் பெரும்பாலான போதனைகளை மிக மேலோட்டமானதாக செய்கிறது. மதத்தை அதன் இறுதி இலக்கோடு இணைத்துக் காணாமல், அதை-, அதன் வழிமுறைகளோடு இணைத்து குழப்பிக் கொள்வதற்கு வழி சமைப்பதாக உள்ளது. சம்பிரதாயங்களை முன்னிலைப்படுத்தி அதன் ஆன்ம உயிரோட்டத்தை சிதைப்பதாக உள்ளது. அறநெறி கோட்பாடுகளை-. மதத்திலிருந்து துண்டிக்கும் போதும், மதத்தோடு தொடர்பு இல்லாததாக அப்புறப்படுத்தும் போதும், இது தான் நிகழும். ஆனால், மதம் என்பது பரந்த அளவிலான முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கேள்விப்படாத மதப் பிரிவுகளும் கூட, தனது சடங்குகளின் ஊடாகவோ உள்ளடக்கமாகவோ, நன்மைக்காக ஏங்கும் மனித இனத்தின் கண்ணீர் கூகுரலை தணிப்பதற்கு, அறநெறி தழைப்பதற்கு, நற்குணம் ஓங்குவதற்கு முயற்சிக்கின்றது. ஆனால், ஆனால் பலரது கவன குறைவால் அவை மத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. உயர்ந்த அறநெறி வாழ்வு, சிறந்த நற்குண இயல்பு, பரிசுத்தமான இதயம்:- இவை எல்லாம் தானே மதத்தின் இலக்கு மற்றும் குறிக்கோள், அவை தானே ஆன்மாவாகவும் உள்ளுயிராகவும் இருப்பது. குறிப்பிட்ட வழிபாட்டு முறையும் நம்பிக்கையும் உருவமும் நிழலும் ஆக தானே இருக்கின்றன? மதத்திலும், ஏனைய பல விஷயங்களை போலவே, வழிமுறை மற்றும் இலக்கு என்று இருக்கின்றன. இலக்கை அடைவதற்கு என்று வழிமுறைகள் இருக்கின்றன. வழிபாட்டு முறை, கடவுளைக் குறித்த நம்பிக்கை, மதப் பிரிவுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளுதல்-, இவையெல்லாம் சில வகையான வழித்தடங்கள் மட்டுமே. நன்மை, அறநெறித்தன்மை, நல்லொழுக்கம் இவையெல்லாம் தான் இலக்குகள். பல்வேறு வழித்தடங்கள் நிறையவே இருக்கின்றன. எண்ணிலடங்கா நம்பிக்கைகளின் வடிவங்களில் அவை உள்ளடங்கி இருக்கின்றன. ஆனால் இலக்கு என்பது ஒன்று தான். அது பெரும் நற்குண இயல்பு ! உயர் நட்குண இயல்பு கொண்டவன், வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்காமல் இருக்கலாம். ஆனால், மதத்தின் உள்ளுணர்வை/உயிரோட்டத்தை கொண்டிருக்கலாம். அதன் வெளிவடிவத்திற்கு அவன் முக்கியத்துவம் அளிக்காததால் மதத்தை கடைப்பிடிக்காதவனாகக் கருதப்படலாம். ஆனால், அவன் அதன் இலக்கை அடைந்தவன் ஆவான். வழிபாட்டு முறைகள் என்னும் ஓட்டின் உள் மதத்தின் சாரம் என்னும் உலர் கனி இருக்கின்றது. ஓட்டின் உள்ளிருக்கும் உலர் கனி(பருப்பு) அடையப்பட்ட பின்பு, அதை, அதுவரையிலும் பாதுகாத்து வைத்திருந்த ஓடு, தன் கடமையை நிறைவேற்றி விட்டது. இனி அதன் இருப்பிற்கு என்று எந்த தேவையும் இல்லை. அது தூக்கி எறியப்படலாம். என்றாலும், இது தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடாது. புற வடிவிலான உயர் குணங்களைக் கொண்டிருப்பவனை மட்டுமே உயர்குண இயல்பு உடையவன் என்று குறிப்பதாகாது. உலகின் கண்களுக்கு உயர் குணங்களை உடையவனாகவும், இழி குணங்களை தனக்குள் இரகசியமாக வைத்துக் கொண்டுள்ளவனையும் அது குறிப்பதாகாது. சட்ட வரைமுறைகளுக்கு ஏற்ற அளவு மட்டும் உயர் குணங்களை கடைபிடிப்பவனையும் அது குறிப்பதாகாது. தங்கள் உயர் குணத்தை குறித்து பெருமைப்படுபவர்களையும் அது குறித்தல் ஆகாது. காரணம், தற்பெருமைபடுதல் என்பது உயர் குணத்திற்கு எதிரானதாகும். ஆனால், தூய்மையில் மகிழ்ச்சியுறுவது, பெருந்தன்மையுடன், கனிவுடன், சுயநலம் இன்றி, கவனமுடன், நல் உள்ளத்துடன் தூய எண்ணங்கள் மற்றும் நற்செயல்களின் மணம் பரவச் செய்பவர்களை குறிப்பதாகவே அது ஆகும். உயர்குணம் என்பதன் அர்த்தம் என்பது நன்மை, தூய்மை, உயர்வு மற்றும் உண்மை உள்ளம் என்பதாகும். ஒருவன்-, தன்னை கிறிஸ்துவன் என்றோ, யூதன் என்றோ, புத்திஸ்ட் என்றோ, இஸ்லாமியன் என்றோ, இந்து என்றோ, அல்லது வேறு எந்த பெயரையும் கூறிக் கொள்ளலாம். இருந்தும், அறநெறிகள் அற்றவனாக இருக்கலாம். ஆனால், ஒருவன் தூய உள்ளம் கொண்டிருந்தால், உண்மையாளனாக, சிறந்த அழகான குண இயல்புகளைக் கொண்டிருந்தால் ஒரு வார்த்தையில் சொல்லும் போது அறநெறியாளனாக இருந்தால், அவன் எந்த வழிப்பாட்டுத் தளமும் அற்ற புனித நகரத்தின் குடியிருப்புவாசி ஆவான். அவன் தன் எடுத்துக்காட்டான வாழ்வாலும், தாக்கத்தை ஏற்படுத்தும் தனது ஈர்ப்புஆற்றலாலும், மனித குலத்திற்கு புத்துயிர் ஊட்டுபவன் ஆவான். மெய்யொளி தேவதைகளின் துணையை பெற்றவர்ளில் ஒருவன் ஆவான். நியாபகம், மறுநிகழ்வு, பழக்கம் பரிசுத்த தன்மையாலும் வலிமையான சுயக்கட்டுப்பாட்டாலும் நான் நல்நிலை அடைவேன். விழிப்புணர்வின் பார்வை, வேதனை என்னும் தூக்கத்தில் இருந்தும் துக்கம் என்னும் இரவில் இருந்தும் மனிதர்களை விடுவிக்கும். குறிப்பிட்ட கோர்வையிலான சில வார்த்தைகள், வாசகங்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் போது, அதன் விளைவாக அது, நம் நியாபகத்தில் தங்கி விடுகின்றது. அதாவது, அதை நாம் பார்த்து படிக்க வேண்டிய அவசியம் இன்றி எந்த பெரும் முயற்சியோ தடங்கலோ இன்றி அது வெளிப்படுகின்றது; உண்மையில் சில வார்த்தைகள் ஒரு வகையான தன்மையை கொண்டிருக்கின்றன. அவை மனதுக்குள் தன்னால் ஒலித்துக் கொண்டிருக்கும். அவ்வாறு ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையோ விருப்பமோ இல்லாதிருக்கும் போதும் ,அவ்வார்த்தைகளோ அல்லது வாசகமோ ஒலித்துக் கொண்டு இருப்பது ஒரு வகையில் தொந்தரவாகவே இருக்கும். அவற்றிலிருந்து விடுபடுவதும் அந்த வார்த்தையை மறப்பதும் கடினமாக இருக்கும் முழு வாழ்வுமே நியாபக செயல்பாடுகளின் விளைவு தான் என்று கூறுவதில் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கின்றது. முதலில் செயல்பாடு நிகழ்கின்றது. அந்த செயல்பாட்டில் இருந்து ஒரு அனுபவம் ஏற்படுகின்றது. அந்த அனுபவம் நியாபகமாக தங்கி விடுகின்றது அவ்வாறு தங்கும் நியாபகங்கள் தம்மை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்கின்றன. அவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்வது, பழக்கமாக உருவாகின்றது. இவ்வாறு உந்துதல், இயற்கை திறன், குண இயல்பு தனித்துவமான இருப்புநிலை ஆகியன ஏற்படுகின்றன. வாழ்வென்பது திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பு தான். ஒரு மனிதனது வாழ்வில், அவனது நாட்களுக்கும் அவனது ஆண்டுகளுக்கும் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்பது மிகக் குறைந்த அளவே. நாட்களின் தொடர்ச்சியான மறு செயல்பாடே ஆண்டாக உருவாகின்றது. ஒவ்வொரு உயிரும் தான் பயின்ற பாடங்களின், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது. முடிவில்லாத தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப நிகழும் மறு நிகழ்வுகள், உயிரில் ஒன்றி கலந்து விடுகின்றன. எண்ணிலடங்கா பிறவிகள் மூலம் பல கால யுகங்களிலும் பயணித்ததில் இருந்து இது நீண்டு கொண்டு வருகின்றது. ஒரு மனிதனின் வாழ்வு என்பது கருவினுள் விந்தனு-கருமுட்டை நிலையில் இருந்து முழு வளர்ச்சி நிலை வரை திரும்பத் திரும்ப நிகழும் மறு நிகழ்வுகளே ஆகும். பரிணாம வளர்ச்சி என்னும் முழு செயல்பாட்டின் சாரம்சமாகும். அனைத்து வகையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் வேராக, ஓர் பிரபஞ்ச நியாபகம் இருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்னும் செயல்பாட்டின் அடிப்படை தத்துவமாகவும் வழிகாட்டியாகவும் பிரபஞ்ச நியாபகமே இருக்கின்றது. ஒரு மனிதனின் மேலோட்டமான நியாபகம் பலவீனமானது, நிலையில்லாதது. ஆனால் அவனது ஆழ்நிலை நியாபகமானது, அனுபவங்களை மீள் உருவாக்கம் செய்யும் ஆற்றல் கொண்டது. அந்த ஆழ் நிலை நியாபகம் அனைத்து உயிர் மற்றும் அனைத்து சடப் பொருட்களிலும் பிரிக்க முடியாத வகையில் கலந்து இருக்கின்றது. அந்த ஆழ் நிலை நியாபகமே, வடிவுகளையும் திறன்களையும் இனபெருக்கச் செயல்பாட்டின் போது கட்டமைக்கின்றது. வாழ்வு என்பது முடிவில்லாமல் திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகும். இயற்கை எப்போதும் பழைய பழக்கப்பட்ட தளத்திலேயே பயணிக்கின்றது. மனிதன் தான் கற்ற பாடங்களையே மீண்டும் மீண்டும் மறு நிகழ்வு செய்து கொண்டிருக்கிறான். அவன் அனுபவம் என்னும் பள்ளியில் கற்ற பாடத்தை, ஒருவேளை மறந்து இருக்கலாம். ஆனால், அவன் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் அவனை விட்டு நீங்கவில்லை. அது முன்னோக்கி சென்றவாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தன்னிச்சையாக, தன்னியக்கமாக, லாவகமாக நிகழும் இயற்கை திறன்கள் ஏதோ ஒரு படைப்பாளன் படைத்து உருவாக்கி பொருத்தி வைத்த இயங்குமுறை அல்ல. அது தொடர் பயிற்சியின் விளைவாக அடையப்பட்ட திறன். ஒரே எண்ணம் மற்றும் செயல்பாடு பல மில்லியன் மறு நிகழ்வுகளின் காரணமாக உள் கிரகித்துக் கொள்ளப்பட்டுள்ளது. நெடுங்காலமாக உயிர்துடிப்போடு இயங்கி கொண்டிருந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் இறுதியில் தன்னிகழ்வாக நிகழும் உந்துதல்கள் ஆகிவிடுகின்றன. “சூரியனுக்கு கீழ் எதுவும் புதிதல்ல” என்னும் சொற்றொடர் ஒரு ஆழமான உண்மையாகும். முடிவில்லாத கால சுழற்சியின் கண்ணோட்டத்தில் நோக்கினால், நமது நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் இயந்திரவியல் அதிசயங்கள் கூட ஏற்கெனவே இங்கோ அல்லது வேறு உலகங்களிலோ எண்ணிக்கையிட முடியாத தடவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாகக் கூட கருதலாம். இந்த உலகத்தில், ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிய விகிதாசாரங்களில் புதிய கூட்டுசேர்மானங்களில் பொருட்கள் தோன்றுகின்றன? ஆனால் அவை எல்லாம் இந்த பிரபஞ்சத்திற்கு புதியதா? பிரபஞ்ச நியாபகம், தன்னில் இருந்து நெடுங்காலம் முன்பு என்றோ உருவாக்கப்பட்ட பொருட்களை மீண்டும் மறுஉருவாக்கம் செய்கின்றது என முடிவில்லாத காலத்தை கடந்து நோக்கும் ஒரு மனம் கூறினால் எவர் அதை மறுக்க முடியும்? பிரபஞ்சத்தில் எதையும் சேர்க்கவும் முடியாது அல்லது பிரபஞ்சத்திலிருந்து எதனையும் வெளியே எடுக்கவும் முடியாது. அதன் சடப் பொருட்களின் அளவை கூட்டவும் முடியாது கழிக்கவும் முடியாது. சடப் பொருட்களின் வேதியல் கலவை விகிதாசாரங்கள் மாறுபடலாம். ஆனால், அந்த சடப் பொருட்கள் மாறுபடாது. உயிரும் அதுபோலத் தான் மாறுபடாமல் இருக்கும். உயிரின் வடிவங்களில் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால், உயிரின் அடிப்படையில் ஏற்றமோ இறக்கமோ இருக்காது. வடிவங்கள் முன் வந்து தோற்றமளித்து பின்பு மறையும். ஆனால், மறைவது ஒரேடியாக தொலைந்து போவது இல்லை. அது நியாபகமாக பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. அது தொடர்ந்து மறு நிகழ்வாகிக் கொண்டே இருக்கும். என்றென்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் சிதைவு, என்றென்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் மீள் உருவாக்கத்தால் சமநிலைப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது. மனித மனம் ஆனது, என்றென்றும் நிலவும் பிரபஞ்ச மனதில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒன்று அல்ல. அதன் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டவைகள், மறுக்க இயலாத வகையில் அதன் தினசரி மறு நிகழ்வுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. செயல்களின் ஒட்டுமொத்த தொகுப்பே குண இயல்பாகும். ஒவ்வொரு மனிதனும் பரிணாம வளர்ச்சி பாதை என்னும் நீண்ட கூட்டுத்தொகை எண்ணை முன்னிறுத்தும் இறுதி பதிவாக இருக்கிறான். அந்த பரிணாம வளர்ச்சி கணக்கில், எந்த பிழையோ குளறுபடியோ கிடையாது. மில்லியன் முறை மறுநிகழ்வாகி கொண்டிருக்கும் அதே செயல்பாட்டிற்கு மனம் பழக்கப்பட்டு தன்னியக்கமாக அதைத் தொடர்கின்றது. அழித்தொழிக்கப்பட முடியாத இந்த பிரபஞ்ச நியாபகத்தோடு ஒப்பிடும் போது, மூவாயிரமாண்டு நியாபகமோ அல்லது பத்தாயிரமாண்டு நியாபகமோ கூட, எகிப்திய பிரமிட் உடன் விரைந்து மறையும் நீராவியை ஒப்பிடுவது போன்றதே ஆகும். தன்னியல்புகளுக்கும், உந்துதல்களுக்கும் பழக்கங்களுக்கும் மனிதன் ஆட்பட்டிருக்கிறான். அவை, அவன் தொடர் மறுநிகழ்வாக மேற்கொண்டிருந்த செயல்பாடுகளின் தொகுப்பே ஆகும். அவன் விதைத்தவைகளே அவனது விதியில் மறைந்திருந்து வெளிப்படுகின்றன. எந்த வித பெருமுயற்சியுமின்றி மனிதன் வெளிப்படுத்தும் அணிநயங்களும், நற்குணயியல்புகளும் மேதைகுணங்களும் அவனது மனதின் இடைவிடாத உழைப்பிற்கான ஊதியமாகும். அவன் பாடுபட்டு பயின்ற பாடத்தை பின்பு எளிதாக மறுநிகழ்வு செய்கிறான். தன்னையும் மீறி தன்னை ஆட்கொண்ட விதியில் மெய்யறிவானவன் தனது பிரதிபலிப்பையே காண்கிறான். வாழ்வு என்பது உரிய வழித்தடங்களில் பாய்ந்து செல்கிறது. ஒவ்வொரு மனிதனும் அவனவனுக்கு உரிய குடுவையில் அல்லது கூட்டில் அடைபட்டுக் கிடக்கிறான். மனிதர்கள், தங்கள் சக மனிதர்களிடம் அவர்கள் தங்கள் கூட்டை விட்டு வெளிவரும்படி கூறுகிறார்கள். ஆனால், அவர்களே வேறு ஒரு வகையான கூட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை பாய்ந்து செல்லும் வழித்தடத்தை தவிர்க்க முடியாது. ஆனால், அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம், நமக்கு வழங்கப்பட்டுள்ள குடுவைகளை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால், தீங்கான குடுவைகளைத் தவிர்த்து நல்ல குடுவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்றைய குழந்தைகள் பெறும் கல்வி முறையும் பயிற்சி முறையும் ஆயிரம் தலைமுறைகள் கடந்து வந்த பாதையில் இருந்து விலக முடியாத வண்ணம் அதற்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஆயிரக்கணக்கான முன்னோர்களின் வாழ்வின் செயல்பாடுகளில் இருந்து நிலைப்படுத்தப்பட்ட பழக்கங்களையும் குண இயல்புகளையும் இன்றைய மனிதன் மீட்டெடுக்கிறான். மனிதர்கள் பிணைக்கப்பட்டு உள்ளார்கள், கட்டப்பட்டு உள்ளார்கள் என்பது உண்மை தான். ஆனால், அந்த கட்டுகளை அவர்கள் அவிழ்த்துக்கொள்ளவும் முடியும் என்பதும் அதே அளவு உண்மை தான். ஒருவன், தனது தவறான செயல்பாடுகளின் விளைவாக துக்கத்தின் பிடியில் சிக்குகிறான் என்னும் விதி என்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு விதி ஆகும், சபிக்கப்பட்ட ஒரு விதி அல்ல ; காரணம், அவன் அதே விதியின் செயல்பாட்டால் அனைத்து நன்மையானவைகளும் அவனுள் பாய்ந்தோடும் வழித்தடமாக அவனால் செயல்பட முடியும். பழக்கங்கள் என்னும் சங்கிலியால் மனிதன் பிணைக்கப்பட்டு இருக்கிறான். ஆனால், அந்த சங்கிலியின் ஒவ்வொரு கன்னியையும் வடிவமைத்தது அவன் தான். இந்த விதியை கண்டு உணர்வதற்கு எவனது மனக்கண் திறந்திருக்கின்றதோ, அவன் புலம்பி வருந்த மாட்டான். தீங்கோடு பிணைக்கப்பட்டு இருப்பது, தீங்கால் பிணைக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அடிமை நிலையாகும். ஆனால், நன்மையோடு பிணைக்கப்பட்டிருப்பது, நன்மையால் பிணைக்கப்பட்டிருப்பது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். வாழ்வின் விதியை மாற்றி அமைப்பதற்கான வலிமையை மனிதனின் உள்ள உறுதி பெற்று இருக்கவில்லை. ஆனால், அதற்கு கீழ்படிந்து நடக்கும் வலிமையை பெற்றிருக்கின்றது. உயர் பெரும் நீதி என்றும் நன்மைக்கே செயல்படுகின்றது; அது தீங்கின் மீது கடும் தண்டனையை விதிக்கின்றது. மனிதனால் தனது சங்கிலிகளை உடைத்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். தன் சுய விடுதலைக்காக உளமாற முயற்சிக்கும்போது, இந்த முழு பிரபஞ்சமும் அவனது உழைப்பிற்கு உறுதுணையாக நிற்கும். மறு நிகழ்வு செயல்பாட்டையும் பழக்கத்தையும் அவனால் தவிர்க்க இயலாது. ஆனால், அந்த மறு நிகழ்வு செயல்பாடுகள் ஒத்திசைவுடன் இயங்க அவன் வழி அமைக்க முடியும். அவன், பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவை, தூய சிறந்த குண இயல்புகளாக நிலை பெற அவன் வழி செய்யலாம். மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அனைத்து பதிவுகளும் மனதில் தன்னியக்கமாக உருவாக்கப்பட்ட சேகரங்களில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் வரலாற்றை உள்ளடக்கி இருக்கும் ஒரு சித்திரமாக மனிதன் இருக்கின்றான். அவன் கோபத்தில் கர்ஜிக்கும் போது, காட்டில் கர்ஜிக்கும் சிங்கத்தின் கர்ஜனையை நினைவு கூர்கிறோம். அவன் சுயநலத்தோடு தந்திரமும் வஞ்சகமும் ஆக திட்டமிடும்போது புலி மறைந்திருந்து தன் இரையை கொல்வதை நினைவு கொள்கிறோம். அவனது இச்சைகளும் பழி உணர்ச்சிகளும் காழ்ப்புணர்வுகளும் அச்சங்களும்-, ஆதிமனிதனாக அவனுக்கு காட்டில் நேர்ந்த அனுபவங்களில் இருந்து உள்ளுணர்வாக வெளிப்படுகின்றன. இந்த பிரபஞ்சம் எதையும் மறப்பதில்லை. வாழ்வு அனைத்தையும் நினைவில் கொண்டு சேகரித்து வைக்கின்றது. சுய உணர்வு உடனான நியாபகத்திற்கும் பிரபஞ்ச நியாபகத்திற்கும் இடையில் மறதி என்னும் நதி ஓடுகிறது. எவன் பிரபஞ்ச நியாபகம் என்னும் உலகிற்குள் செல்கின்றானோ, தூய்மையான நன்மையான அந்த உலகிற்குள் செல்கின்றானோ, அவன் பல லட்சம் இறப்புகளைக் கடந்த வாழ்வின் நியாபகங்களை நினைவு கூர்கிறான். எவன் பிரபஞ்ச விருப்பத்தை நிறைவேற்ற சித்தமாக இருக்கின்றானோ, எவனது இதயம் பிரபஞ்ச ஒழுங்கமைப்போடு ஒத்திசைவாக இருக்கின்றதோ, அவனது பார்வை காலம், இடம் என்னும் திரையைக் ஊடுருவி செல்லும். அவன் அப்பால் உள்ளதையும் அதனை அடுத்து பின் வருவதையும் காண்பான். மனிதன் விரைவில் மறந்து விடுவான், அவன் அவ்வாறு மறந்து விடுவதும் நல்லதே; பிரபஞ்சம் நினைவில் கொள்கின்றது. பதிவு செய்து கொள்கின்றது. ஒரு தீமையான செயல், மறுநிகழ்வு ஆகி கொண்டிருப்பதே அதற்குரிய தண்டனை. ஒரு நன்மையான செயல், மறு நிகழ்வு ஆகிக் கொண்டிருப்பதே அதற்குரிய பரிசு. தீமைக்கான கொடிய தண்டனை, தீமையே. நன்மைக்கான மிக உயர்ந்த பரிசு நன்மையே. ஒரு செயல் செய்யப்படும் போது அது அத்தோடு நிறைவு பெறுவதில்லை, அப்போது தான் அது ஆரம்பம் ஆகின்றது. அது செயலை செய்தவன் உடனேயே தங்கியிருக்கும். அது தீங்கு என்றால் அவனுக்கு சாபமிடும். அது நன்மை என்றால் அவனுக்கு ஆசி வழங்கும். மறுநிகழ்வு செயல்பாட்டால் செயல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை குண இயல்புகளாக தங்குகின்றன. குண இயல்பில் சாபம் மற்றும் ஆசீர்வாதம் இரண்டும் இருக்கின்றன. ஒத்திசைவில்லாத தீமையான மறு நிகழ்வு செயல்பாடுகளில் துன்பம் குடி கொண்டிருக்கின்றது. ஒத்திசைவான நன்மையான மறு நிகழ்வு செயல்பாடுகளில் பேருவகை குடி கொண்டிருக்கின்றது. மறு நிகழ்வு செயல்பாடு என்னும் விதியில் இருந்து நாம் தப்ப முடியாது என்பதை நாம் காண்கிறோம். எனவே, நாம் நன்மையானதை தேர்ந்தெடுப்போம். தூய்மையான பழக்கங்களை நிலைப்படுத்துவோம். எவன் இதை செய்கின்றானோ, அவனுள் தெய்வீக நியாபகம் விழித்தெழும். சொல்லும் சொற்களும் மெய்யறிவும் மெய்யறிவு எங்கே இருக்கின்றது என்று நிம்மதி எங்கே உறைகின்றது என்று கம்பீரம் குறையாத,மாற்றத்துக்கு உள்ளாகாத, காலத்தால் அழியாத, உலகின் மாயைகளால் தொடப்பட முடியாத பேருண்மை-, எங்கே நின்று கொண்டு இருக்கின்றது என்று நான் காண்பேன்; எவன் மெய்யறிவு, உண்மை, நிம்மதியை தேடுகின்றானோ அவன் நிச்சயம் கண்டு அடைவான். எண்ணங்கள், சொற்கள், செயல்கள்—இவை ஒன்றிணைந்து, ஒவ்வொரு தனிமனிதனின் முழு வாழ்வையும் உருவாக்குகின்றன. சொற்களும் செயல்களும் வெளிப்படும் எண்ணங்கள் ஆகும். நாம் சொற்களைக் கொண்டு சிந்திக்கின்றோம். சிந்திக்கும் செயற்பாட்டில் சொற்கள் நமது உணர்வு நிலையில் தங்கி விடுகின்றன. சூழ்நிலை அழைக்கும் போது, அவை தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவும் பயன்படவும் காத்திருக்கின்றன. வார்த்தைகள், அவற்றை வரவேற்கும் மனதில் பொருந்துகின்றன; அவைகளை பயன்படுத்தும் அறிவுக்கூர்மையோடு நேர்படுகின்றன. ஒரு தாழ்வான மனம், ஒரு தாழ்வான சொற் பயன்பாட்டை கொண்டிருக்கும். ஒரு குறுகிய அறிவுகூர்மை கொண்ட மனம், ஒரு பரந்த அறிவு கூர்மை கொண்ட மனம்-, அவை தம் இழல்புக்கு ஏற்ப குறுகிய சொற் பயன்பாட்டையும் பரந்த சொற் பயன்பாட்டையும் கொண்டு வார்த்தைகளை வெளிப்படுத்தும். ஒரு சிறந்த மனம் தவழ்ந்து ஓடும் உயர்ந்த சொற்களால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். சொற்கள் கருத்துருவாக்கங்களை முன்னிறுத்துகின்றன. கருத்துருவாக்கங்கள் சொற்களில் உள்ளடங்கி இருக்கின்றன. மனதில் ஒரு கருத்து உருவாகும் அந்த நொடியே, அதனை வெளிப்படுத்துவதற்கான ஒரு வார்த்தை எண்ணத்தில் எழுகிறது. கொண்ட கருத்துக்களையும் சொற்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டே இருக்க முடியாது. உடனடியாகவோ அல்லது காலம் கழிந்தோ அவை புற உலகில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு விடும். பிரபஞ்சத்தின் சடப்பொருட்கள் எல்லாம் இடையறாத சுழற்சியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதன் மறைபொருட்கள் எல்லாம் தொடர்ந்து வெளிப்பட்டு வாழ்வோட்டத்திற்கு தம்மை பறைசாற்றுகின்றன. அது போலவே மனிதர்களின் மனச்செயல்பாடுகளும் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றன. அவர்களது மறைவான எண்ணங்கள் தினமும் அவர்களது வார்த்தைகள் மற்றும் செயல்களின் வாயிலாக வெளிப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனது சொல்லையும் செயலையும் தீர்மானிப்பது வழக்குநிலையாக அவனுள் உறையும் எண்ணங்களே. பேச்சு என்பது செவிகளால் கேட்டு உணர பட கூடிய எண்ணம். ஒருவன் தன் பேச்சின் வாயிலாக, தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். ஒருவன் பரிசுத்தமானவனோ அல்லது களங்கமானவனோ, மெய்யறிவானவனோ அல்லது முட்டாளோ, அவன் தன் உள் மனநிலையை-, தன் பேச்சின் மூலமாக அறிய செய்கிறான். தான் பேசும் சொல்லின் மூலமாக முட்டாள் அறியப்படுகிறான். பேச்சின் தூய்மை ஈர்ப்பாற்றல் மற்றும் சிறப்பால் மெய்யறிவானவன் அறியப்படுகிறான். “எவன் மனிதர்களைக் குறித்த அறிவை பெற விளைகிறானோ, அவன் முதலில் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் கன்பூஷியஸ். நாவடக்கமே மெய்யறிவின் முதற்படி என்று அனைத்து எல்லா மெய்யறிவாளர்களும், புனிதர்களும், ஆசான்களும் அறுதியிட்டு உள்ளனர். எவன் தன் சொற்களை பயில்கிறானோ அவன் தன் மனதை பயில்கிறான். எவன் தன் நாவை கட்டுப்படுத்தி ஆள்கிறானோ, அவன் தன் மனதை கட்டுப்படுத்தி ஆள்கிறான். அவன் தன் வார்த்தைகளை பரிசுத்தப்படுத்தும் போது மனதை பரிசுத்தப்புடுத்துகிறான். பேசும் பேச்சையும் மனதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவை குணயியல்பின் இரு கூறுகள். ஒருவன் வேதநூல்களைக் கற்கலாம், மத தத்துவங்களைக் கற்கலாம், வெளிப்படையாக விளங்கி கொள்ள அயலாத சூட்சுமமான கலைகளைக் கற்கலாம். ஆனால், அவன் தன் நாவை கட்டுப்படுத்த தவறினால், அவன் இவ்வளவு உழைப்பையும் செலுத்தி அவன் கற்ற பின்னாலும், அவன் தொடக்கத்தில் எந்த அளவு முட்டாளாக இருந்தானோ அதே அளவு முட்டாளாக இருப்பான். ஒருவன் வேதநூல்களைக் கற்றிருக்க மாட்டான், மத தத்துவங்களைக் கற்றிருக்க மாட்டான், வெளிப்படையாக விளங்கி கொள்ள அயலாத சூட்சுமமான கலைகளைக் கற்றிருக்க மாட்டான். ஆனால், அவன் தன் நாவை கட்டுப்படுத்தி ஆள்வான் என்றால், எவ்வாறு ஞானத்தோடும் நல்விதமாகவும் பேச வேண்டும் என்று பயின்று இருந்தால், அவன் மெய்யறிவாளன் ஆவான். மெய்யறிவு என்பது அதை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் உள் உணரப்பட்டிருக்கின்றது. நாம் சில மனிதர்களை, உதாரணத்திற்கு— ஷேக்ஸ்பியர் போன்றவர்களை —மெய்யறிவானவர் என்கிறோம். நாம் ஷேக்ஸ்பியரை பார்த்ததும் கிடையாது. அவரைப் பற்றி, அவரது வாழ்வைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாது. பின் எப்படி நாம் அவரை மெய்யறிவானவர் என சொல்கிறோம்? அவரது வார்த்தைகளின் மூலமாகத் தான். எங்கே மெய்யறிவான வார்த்தைகள் இருக்கின்றதோ, அங்கே ஒரு மெய்யறிவான மனமும் இருக்கின்றது. ஒரு முட்டாள், கிளியை போல மெய்யறிவு வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சரிக்கலாம். ஆனால் மெய்யறிவானவனோ மெய் அறிவான வாசகங்களை வடிவமைத்துக் கூறுவான். அவனது வெளிப்படுத்துதலில் போலியில்லாத அசலான ஒரு மெய்யறிவு காணப்படுகின்றது. மனிதர்கள் ஏன் வார்த்தைகள்-, தீங்கானவையாக அல்லது நன்மையானவையாக, ஊக்க உணர்வை சிதறடிப்பவையாக அல்லது ஊக்க உணர்வை ஊட்டுபவையாக, கீழ்நிலைப்படுத்துபவையாக அல்லது மேல்நிலைப்படுத்துபவையாக, பலவீனப்படுத்துபவையாக அல்லது வலிமைப்படுத்துபவையாக இருக்கின்றன என்று கூற காரணம் என்ன? அதற்குக் காரணம், வார்த்தைகளை எண்ணங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்று தங்களையும் அறியாமல் அங்கீகரிக்கிறார்கள். களங்கமான வார்த்தைகளையே வாடிக்கையாக பேசுபவனை தூய்மையான மனம் கொண்டவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்? அத்தகைய வார்த்தைகள், ஒரு களங்கமான மனதில் இருந்து தான் வெளிப்படும் என்று அவர்கள் உணர்வதால் தானே? எவன் ஒருவனுக்கும் அவன் மனதில் எண்ணங்களின் வடிவங்களாக ஏற்கெனவே குடியிருப்பவைகளை அன்றி வேறு ஒன்றை வார்த்தைகளாக உச்சரிப்பதற்கு சாத்தியம் இல்லை. களங்கமான மனதால் தூய்மையான வார்த்தைகளைப் பேச முடியாது. தூய்மையான மனதால் களங்கமான வார்த்தைகளைப் பேச முடியாது. அறியாமையில் உழல்பவன், கற்றுணர்ந்தவன் போல் பேச முடியாது. கற்றுணர்ந்தவன், அறியாமையில் உழல்பவனாக பேச முடியாது. முட்டாள் மெய்யறிவானவன் போல் பேச முடியாது. மெய்யறிவானவனும் முட்டாள் போல் பேச முடியாது. ஒருவனது திருந்திய மனதை அவனது திருத்தமான பேச்சு பின் தொடரும். ஒருவன் தீமையிலிருந்து நன்மைக்கு திரும்பும் போது அவனது உரையாடல் பரிசுத்தமாகின்றது. ஒருவன் மெய்யறிவில் வளர வளர, அவன் தன் பேச்சை உற்று கவனிக்கிறான், திருத்தி அமைக்கிறான், செம்மைப்படுத்துகிறான். முட்டாளும் மெய்யறிவானவனும் தத்தமது பேச்சினால் அறியப்படுகிறார்கள் என்றால் எது முட்டாள்தனமான பேச்சு? எது மெய்யறிவான பேச்சு? ஒருவன் முட்டாள் தனமாக பேசுகிறான் என்பதற்கான அறிகுறிகள்: ஒருவன் எதை குறித்து பேச வேண்டும் என்ற இலக்கின்றி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறான் என்றால். ஒருவன் களங்கமான உரையாடல்களில் ஈடுபடுகிறான் என்றால். ஒருவன் பொய் உரைக்கிறான் என்றால். ஒருவன் அந்த இடத்தில் இல்லாதவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிறான் என்றால், மற்றவர்களை குறித்து தீங்கான வதந்திகளைப் பரப்புகிறான் என்றால் வீண் புகழ்ச்சியான வார்த்தைகளை கட்டமைக்கிறான் என்றால். வன்முறையான அவதூறான வார்த்தைகளை உச்சரிக்கிறான் என்றால். அவனது பேச்சு அவமரியாதை ஆனதாக இருக்கின்றது என்றால். அவனது பேச்சு உயர்ந்தவர்களையும் சான்றோர்களையும் ஏகனப்படுத்துகிறது என்றால். தற்புகழ்ச்சியாக பேசுகிறான் என்றால் ஒருவன் மெய்யறிவானவனாக பேசுகிறான் என்பதற்கான அறிகுறிகள்: ஒருவன் ஒரு இலக்கை நோக்கி அறிவு கூர்மையோடு பேசுகிறான் என்றால். அவனது உரையாடல் தூய்மையானதாக இருக்கின்றது என்றால். ஒருவன் நேர்மையான உண்மையான வார்த்தைகளை உச்சரிக்கிறான் என்றால். ஒருவன் அந்த இடத்தில் இல்லாதவர்களை தற்காக்கும் விதமாகவும் நல்ல விதமாகவும் பேசுகிறான் என்றால். ஒருவன் அறநெறியான வார்த்தைகளை பேசுகிறான் என்றால். ஒருவன் கனிவான இரக்கமான வார்த்தைகளை பேசுகிறான் என்றால். ஒருவன் உயர்ந்தோர்களுக்கும் சான்றோர்களுக்கும் மதிப்பளித்து பேசுகிறான் என்றால். ஒருவன் தற்புகழ்ச்சி பாராட்டாமல் மற்றவர்களைப் புகழ்ந்து பேசுகிறான் என்றால். நாம் அனைவருமே, இப்போதும் எப்போதும்-, நமது வார்த்தைகளால் நியாயப்படுத்த படுகிறோம் அல்லது கண்டனம் செய்யப்படுகிறோம். உண்மையின் நீதி தள்ளி வைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு நியாயத்தீர்ப்பு நாளே. “உதிர்க்கும் ஒவ்வொரு பயனில்லா சொல்லுக்கும்” அதற்கான உடனடி தண்டனையாக, ஒருவன் தன் மகிழ்ச்சியையும் ஈர்ப்பாற்றலையும் நிச்சயமாக இழப்பான். நாம் வழக்கமாக உச்சரிக்கும் வார்த்தைகளின் மூலம், நாம் நமது அறிவின் படிநிலையையும் நமது அறநெறி குணத்தின் அளவீட்டையும் இந்த பிரபஞ்சத்திற்கு அறிவிக்கிறோம். அதற்கு மறு ஈடாக உலகம் நம்மீது வழங்கும் தீர்ப்பை பெறுகிறோம். முட்டாள்-, மற்றவர்களால் தான் தவறாக நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறான். அவன் மீது கடுமையான தீர்ப்பளிக்களிப்பட்டுள்ளதாக நினைக்கிறான்..அவனுக்கு உண்மையில் பெரும் தண்டனையை வழங்கியது அவனது கட்டுப்படுத்தப்படாத நாவு தான் என்பதை தெரியாமல் இருக்கிறான். நாவை கட்டுப்படுத்துவது, பேச்சை திருத்தி அமைப்பது, தூய்மையான கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்த விளைவது— இவையெல்லாம் ஒரு சிறிய செயல் என்று பலராலும் புறந்தள்ளப்படுகிறது; ஆனால் மெய்யறிவின் பாதையில் நடக்க ஆர்வம் கொண்டிருப்பவனால், அவற்றைப் புறந்தள்ள முடியாது உண்மையின் வெளிப்பாடு இருளும் மேகங்களும் இல்லாத உண்மையின் உயர் சிகரங்களை காண்பாய்; அங்கே பிரம்மாண்ட பேரொளி என்றும் நிலைத்திருக்கும், நிலையான மகிழ்ச்சி, உனக்காக அங்கே காத்திருக்கும். விழிப்புடன் இருங்கள் அச்சமின்றி இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் பொறுமையுடன் இருங்கள் மனமாசின்றி இருங்கள்: தியானத்தின் வாயிலாக வாழ்வின் ஆழமான உண்மைகளை உணருங்கள் அன்பின் உயர் சிகரங்களை அடையுங்கள் மெய்யறிவின் உயர சிகரங்களை அடையுங்கள். செயற்பாடு என்னும் ஊடகத்தின் வாயிலாகவே உண்மை வெளிப்பட முடியும். அது உணர வேண்டிய ஒன்று. கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்ல. வார்த்தைகள், உண்மையை உள்ளடக்கி இருக்கவில்லை. அவை உண்மையின் ஒரு குறியீடாகத் தான் இருக்கின்றன. நற்செயல்கள் மட்டுமே உண்மையை ஏந்த கூடிய ஒரே பாத்திரமாகும். செயல்பாடு நிறைவேறும் முன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூற கூறப்படுகிறது. ஆனாலும், இருப்பையும் செயல்பாட்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. ஒருவன் தன் செயல்பாட்டின் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். செயல்பாடுகள் என்பன நிதர்சன நிகழ்வுகளின் மொழியாகும். ஒருவனது உள்ளிருப்பு உண்மையின் துணையைக் கொண்டிருந்தால், அவனது செயல்பாடுகள் அந்த உண்மையைப் வெளிப்படுத்தும்; அது பிழையின் துணையைக் கொண்டிருந்தால், அவனது செயல்பாடுகள் அந்த பிழையைப் வெளிப்படுத்தும். எவன் ஒருவனும் தான் என்னவாக இருக்கிறான் என்பதை ஒருகாலும் மறைக்க முடியாது. அவன் இன்றியமையாது கட்டாயம் செயல்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு அவன் செயல்படும் ஓவ்வொரு தடவையும் தன்னை வெளிகாட்டிக் கொள்கிறான். உண்மையின் வெளிச்சத்தில், எவன் ஒருவனும்-, மனித குலத்தையோ அல்லது இந்த பிரபஞ்சத்தையோ ஏமாற்ற முடியாது; ஆனால், அவன் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும். தூய்மை, அன்பு, கனிவு, பொறுமை, பணிவு, இரக்கம் மற்றும் மெய்யறிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் எல்லாம் உண்மையின் வெளிப்பாடுகள் ஆகும். இந்த குணங்களை எல்லாம் புத்தகத்தின் இரு அட்டைகளுக்கு இடையே காண முடியாது. புத்தகத்தில் அவற்றை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் மட்டுமே இருக்கும். அவை வாழ்வாகத் தான் இருக்க முடியும். களங்கம், காழ்ப்புணர்வு, கோபம் தற்பெருமை, ஆணவம் மற்றும் முட்டாள்தனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் எல்லாம் பிழை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகள் ஆகும். ஒருவனது செயல்பாடுகள் எல்லாம் அவன் தன்னை இந்த உலகிற்கு வெளிப்படுத்திக் கொள்ளும் முறைகள் ஆகும். வார்த்தைகளை படிப்பதால் ஒருவன் உண்மையை உணர முடியாது. அவன் தன்னை சரி செய்து திருத்தி அமைத்துக் கொள்வதால் மட்டுமே உணர முடியும். அறநெறிகள் என்பன மெய்யறிவை அடைவதற்கான வழித்தடம் ஆகும். ஆனால் கடைபிடிக்கும் போது தான் மெய்யறிவை அடைய முடியும். ஒருவன், உண்மையை எந்த அளவு கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் அவன் தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி “நான் எப்படிப்பட்டவன்?”என்னுடைய செயல்பாடுகள் எப்படிப்பட்டவை?" மனிதர்கள் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு வாக்குவாதம் புரிகிறார்கள். உண்மை படித்து தெரிந்து கொள்ள கூடியது, கேட்டு தெரிந்து கொள்ள கூடியது என்று நினைக்கிறார்கள். உண்மை கேட்டோ படித்தோ தெரிந்து கொள்ளள கூடியதோ அல்ல; அது உணர்வால் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது. நற்செயல்களே உண்மையை கண் முன் கொண்டு வரும் வாகனங்களாகும். அவை மெய்யறிவின் தூதுவர்கள். மெய்ஞானத்தின் தேவதைகள். ஆனால் பிழையின் கண் இருளானது. அதனால் அதை காண முடியாது. ஆன்மீக பணிவு மெய்யறிவாளர்களின் துணையாய் இருந்து இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை அறிய ஆவல் கொண்டிருப்பவன்; நிற்க விரும்பும் முன், குனிவதற்கு தயாராக இருக்க வேண்டும் எழுவதற்கு விரும்பும் அவன், விழுவதைப் பற்றி கவலை கொள்ள கூடாது; மேல் ஏற விரும்பும் அவன் கீழே உள்ளவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் சிறியவற்றையும் அறிய கவனத்தோடு காத்திருக்க வேண்டும் எவன் பணிவை காண்கின்றானோ, அவனை மெய்யறிவு கண்டு அடையும். அனைத்து மதங்களின் புனித நூல்களிலும் பணிவை குறித்த போதனை ஒரு வெள்ளி நூலிழை போல இழையோடி காணப்படுகின்றது. புனித நூல்கள் மட்டுமல்ல அனைத்து கால கட்டங்களிலும் வாழ்ந்த மெய்ஞானிகளும் பணிவு என்ற நுழைவாயிலின் வழியே நுழைந்தால் தான் வாழ்வின் உண்மையை அடைய முடியும் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்; அந்த உண்மை வாழ்வு முழுக்க முழுக்க ஆன்மீகத் தன்மையினால் ஆனது. எனவே, துளியும் கலப்பில்லாத மாசில்லாத ஆன்மீகத் தன்மைக்கு அந்த பணிவு இட்டுச் செல்லும். அவ்வாறிருக்க அதனை ஒருபோதும் பொருள் சார்ந்ததாக மாற்ற முடியாது, கோட்பாட்டுக்குள் அடக்கி வைக்க முடியாது, அல்லது ஒரு சமன்பாடாக, சூத்திரமாக எழுதி வைத்து கடைபிடிக்க முடியாது. அது ஒரு புறப்பொருள் அல்ல. தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் நடைமுறையிலும் அது உள்ளடங்கி இருக்க வில்லை. அவற்றை பணிவு என்று அழைப்பது, பணிவு என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்துவது ஆகும். தன்னை, தன் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை, உண்மை பணிவு என்று என்று பூசாரிகள் போதிக்கிறார்கள். பலரும் அந்த போதனையை நம்பி வழிகெடுகிறார்கள். ஆனால் உண்மையில் தன்னிலையை தாழ்த்திக் கொள்ளுதல் என்பது பணிவிற்கு நேர்எதிர் நிலையாகும். தன்னைத் தாழ்த்திக் கொள்ளுதல் என்பது தன்னை இழிவு படுத்திக் கொள்வது ஆகும். ஒருவகையில் தன்னை ஒழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். அது ஆன்மீக தற்கொலை ஆகும். எவன் ஒருவன் தன்னிடம் உள்ள அனைத்து நற்குணங்களையும் இழிவாக நினைக்கின்றானோ, அவனுள் எந்த நன்மையும் இல்லை என்று நினைக்கின்றானோ, அவனால் தனது எந்த முயற்சியாலும் மேல்நிலை எய்த முடியாது என்று நினைக்கின்றானோ, அவன் தனது அந்த மனப்பான்மையினால் தன்னை செயல்துடிப்பற்றவனாக தன்னை மாற்றிக் கொள்கிறான். அவன் தன் உள்உயிரை, ஜீவனை நெறிக்கிறான். அவன் தனது குண இயல்பில் உள்ள உயர்ந்தவற்றையும் சிறந்தவற்றையும் உதாசீனப்படுத்துகிறான், நிராகரிக்கிறான், சிதறடிக்கிறான். தனது குண இயல்பை உயர்த்துவதற்குப் பதிலாக அதை மட்டப்படுத்துவதில் ஈடுபடுகிறான். ஒருவன் தனது உள்ளத்தில் எண்ணும் எண்ணங்களின் விளைவாகிறான்; நமது எண்ணங்கள் எதுவோ, அதுவே நமது குண இயல்பாக இருக்கின்றது. நாம் உண்மையில் நமது எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டவர்கள்; நமது எண்ணங்கள் என்னும் செங்கற்களை கொண்டு அடுக்கி அடுக்கி நாம் நமது ஆன்மாவை கட்டமைக்கிறோம். முழுதும் சுடப்படாத செங்கல்லை கொண்டு நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டினால் அந்த கட்டிடம் விரைவில் இடிந்து விழுந்து கற்குவியல் ஆகிவிடும். தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் ஒவ்வொரு எண்ணமும், ஒரு சுட்டெரிக்கப்படாத செங்கல் ஆகும். அது விரைவில் இடிந்து விழுகும். தன்னை இழிநிலைப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையில் தொடர்ந்து உழல்பவர்கள் தங்களின் அந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரை தோல்விகளையே சந்திப்பார்கள். ஓர் உயர்ந்த மனப்பான்மையைக் கொள்ளும் வரை தோல்விகளையே சந்திப்பார்கள். அந்த மனப்பான்மையைக் கொண்டு இருந்ததனால் தோல்வியடைந்த பலரும் என் மனதில் நினைவுக்கு வருகிறார்கள். அது வேறு எப்படி இருக்க முடியும்? ஒருவன் தன் மீது நம்பிக்கை கொள்ளாது இருக்கும்போது அவன் மீது வேறு யார் நம்பிக்கை கொள்வர்? அவன் எதை எப்படி சாதிக்க முடியும்? மேலும் தன் மீது நம்பிக்கை கொள்ளாத அத்தகைய மனிதனால், மனித இயல்பின் மீது நம்பிக்கை கொள்வதற்கு சாத்தியம் இல்லை. அவன் அவன் தன்னை இழிநிலைப்படுத்திக் கொள்வதைப் போல அனைவரையும் இழி நிலையானவர்களாகவே கருதுவான். காரண-விளைவு என்ற பிழைக்கு இடம் தராத விதியின் விளைவாக அனைத்து மனிதர்களும் அவனை உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனாலும், தன் மீது நம்பிக்கையை கொள்ளாமல் இருக்கும் மனப்பான்மையை கொண்டிருப்பவர்கள், ஆச்சரியப்படத்தக்க வகையில் கடவுளின் மீது மிகப் பெரும் நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள். கடவுளின் மீது உள்ள அளவு கடந்த நம்பிக்கைக்கு அதனையே ஒரு சாட்சியமாக, தங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதையை ஒரு சாட்சிமாக கருதுகிறார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன், உண்மையான நம்பிக்கை என்பது உண்மையான அறநெறி போல, வீட்டிலிருந்து தானே தொடங்க வேண்டும்? ஆன்மாவின் வளர்ச்சி பாதையில்-, முதலாவது- தன் மீது கொள்ளும் நம்பிக்கை, இரண்டாவது-மனித இயல்பின் மீது கொள்ளும் நம்பிக்கை, மூன்றாவது-கடவுளின் மீது கொள்ளும் நம்பிக்கை. முதல் இரண்டு நம்பிக்கைகளையும் கொள்ளாமல் இறுதியாக கடவுளின் மீது மட்டும் நம்பிக்கை கொள்வது, ஒரு பொய்யான பணிவினால் வரக்கூடிய ஒன்றாகும். இன்னொரு வகையான பொய்யான பணிவு எது என்றால் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவப்பட்ட அதிகார மையத்துக்கோ தன்னை தாழ்த்திக் கொள்வது அல்லது தன்னை அடிமைபடுத்திக் கொள்வது ஆகும். இது பணிவை வேடமாக்கி பொருள் மயம் ஆக்குவதாகும் அல்லது வேறு தீய உள்நோக்கத்துக்கு பயன்படுத்துவதாகும். இது டிராகன் வழிபாட்டிற்கு ஒப்பானதாகும். பண்டைய கற்பனை கடவுளான பால்(Baal)ஐ மண்டியிட்டு வணங்குவதாகும். தங்க கன்று குட்டியை அடிமையைப் போல் ஆராதிப்பதாகும். தன் குண இயல்பை சிறுமை ஏற்படுத்திக் கொள்ளாமல் எந்த மனிதனும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. அவனது ஆன்மீக மன ஆற்றல்களை எல்லாம் இவை நீர்த்துப் போக செய்து விடும். எந்த ஒரு தனி மனிதனுக்கோ அல்லது எந்த ஒரு தற்காலிக அதிகார மையத்துக்கு தன்னை இழிநிலைபடுத்திக் கொள்வதற்கும் தன்னை அடிமைப்படுத்திக் கொள்வதற்கும் பெயர் பணிவு அல்ல; மிக உயர்ந்த ஒன்றுக்கு பணிவுடன் இருப்பது பேரழகானதாகும். ஆன்மீகத் தன்மையுடனான பணிவு என்பது நம்பிக்கைக்கு மிக நெருக்கமானதாகும். அத்தகைய பணிவு அதிகம் இருக்கும் போது நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். உண்மையான உயர் குணத்தின் இருப்பை சுட்டிக்காட்டும் ஒரு அடையாளமாக அது இருக்கின்றது. இதற்கு நான் தகுந்த சான்று வழங்க வேண்டும் என்றால் மெய்ஞானிகள், புனிதர்கள் மற்றும் அனைத்து காலங்களுக்குமான சீர்திருத்தவாதிகளின் வாழ்வையே நான் சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களுள் எவரிடம் ஆன்மீகப் பணிவு அதிகமாக இருந்ததோ அவர்களே மிக உயர்ந்தவராக விளங்கி இருந்தனர். பொய்யான பணிவிலிருந்து வேறுபடும் விதமாக உண்மையான பணிவு என்பது ஒரு வலிமைப்படுத்தும் ஆற்றலை ஒரு முன்னேற்றும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. அது ஆன்மாவிற்கு உள்ளுணர்வை வழங்கி ஊக்கப்படுத்தும். மிக உயர்ந்த லட்சியங்களுக்கு அதனை இட்டுச் செல்லும். அப்படி என்றால் இந்த உண்மையான பணிவு என்பது எதில் அடங்கி இருக்கின்றது? சொந்த வேண்டுதல்களை மண்டியிட்டு தெய்வத்திடம் மன்றாடி பெறுவதில் அடங்கியிருக்கின்றதா? நமது குறுகிய அற்பமான தேவைகளை அடைவதற்காக கடவுளிடம் வேண்டுதல்களை பட்டியலிட்டு ஒப்பிப்பதில் அடங்கி இருக்கின்றதா? இல்லை, இவையெல்லாம் அதன் போலிகள். உண்மையான பணிவு இவற்றையெல்லாம் கடந்து அப்பால் இருக்கின்றது. உண்மையான பணிவு என்பது மனித இதயத்தின் ஆழமான புனிதமான ஊக்க உணர்வு. புனிதமற்ற எந்த ஒரு பார்வையினாலும் ஊடுருவ முடியாத அளவு ஆழத்தில் மறைவாக ஒளிந்திருக்கின்றது. உண்மையான பணிவு என்பது ஒருவனது அகம்பாவ, ஆணவ இச்சைகளை பரிசுத்தப்படுத்த, உருமாற்றம் செய்ய அமைதியாக செயல்படும் ஒரு பெரும் ஆற்றல் ஆகும். இறைவனிடம் இருந்து பிரிந்த ஆன்மா, தனித்து நிற்கும் அதன் பிரம்மாண்டத்திற்குள் நுழையும் போது மீண்டும் இறைவனின் நிழலை நெருங்கும் நிம்மதியை பெறும். அனைத்தையும் தழுவி நிற்கும் இறைவனின் அன்பு ஒளியில் ஆனந்த ஆற்றில் நீராடும். ஒருவன் தனது கீழ்நிலை தன்மைகளில் இருந்து மேலெழும்போதுதான் அத்தகைய நிலைக்குள் நுழைய முடியும். அகம்பாவம் எனப்படுவது கரைந்து தான் என்று ஏதும் இல்லாமல் இருக்கும் நிலையாகும். வெறிஉணர்வு வேட்கையையும் அறிவு கூர்மையையும் ஆக உயர்ந்த ஒன்றுக்கு சமர்ப்பிப்பதாகும். ஆக உயர்ந்த ஒன்றை மனித ஆன்மா ஆராதிக்கும் மனப்பான்மை ஆகும். அத்தகைய பணிவு அதன் உடைமையாளனை அவனது அனைத்து தாழ்வான பொருந்தாத குண இயல்புகளில் இருந்து அவனை விடுவித்து அவனை மேல் உயர்த்தும். அவனை சாந்தமானவனாக, வலிமையானவனாக, சிறந்தவனாக, தன்னம்பிக்கை உடையவனாக, தெய்வீகத் தன்மை நிரம்பியவனாக மாற்றும். உயர்வு எண்ணும் அனைத்து ஆன்மாக்களுக்கும் அது வாழ்வின் அமுதத்தை வழங்கும். அதன் ஆற்றலை உணராத ஆன்மா உயிரோட்டம் இல்லாததாக இருக்கின்றது. இது முரண்பாடாக ஒலிக்கலாம், ஆனால் இது உண்மை. எவன் அதிக பணிவு கொண்டிருக்கின்றானோ, அவன் அதிகம் எவரையும் சார்ந்து இராமல் இருக்கிறான். இந்த முரண்பாட்டை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ஒரு கணம் உயர்ந்த ஆசான்களின் வாழ்வை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசு, புத்தர் கன்பூசியஸ், சாக்ரடீஸ், ஜேக்கப் போஹிம், ஜார்ஜ் பாக்ஸ் மற்றும் அனைத்து மத சீர்திருத்தவாதிகளின் வாழ்வையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் நிமிர்ந்த நன்னடையோடும் நேர்கொண்ட பார்வையோடும் விளங்கினார்கள் காரணம் அவர்கள் பணிவின் எளிமைக்கு முற்றுமாக தங்களை ஈந்து கடவுளோடு நடந்தார்கள். உண்மையான பணிவு எந்த அளவுக்கு மேல் உயர்த்துகிறதோ வலிமைப்படுத்துகிறதோ அதே அளவுக்கு பொய்யான பணிவு இழிநிலைப் படுத்துகிறது, அழிவை ஏற்படுத்துகிறது. நம்மை மோசமான பாவிகள் என அழைத்துக் கொண்டு அச்சப்படும் மிருகங்களாக, கூனிக்குறுகிய நிலையில் ஏன் நம் சக மனிதர்கள் இடையே செல்ல வேண்டும்? அவ்வாறு செய்வதால் நாம் நம் பாவத்திலிருந்து மேல் எழுந்து விடுவோமா? நமது இழிநிலை குணங்களை இடையறாது எண்ணிக் கொண்டிருந்தால் நாம் மேல் எழுவது சாத்தியமா? அது சாத்தியமில்லை. நாம் உயர்ந்த ஒன்றை தொடர்ந்து ஆழ்ந்த உணர்வுநிலையில் கொண்டிருப்பதே நாம் உயர்வதற்கான வழி. ஒருவனது இதயத்தில் போற்ற தகாதவைகள் எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அதில் புனிதமும் இருக்கின்றது, கண்ணியமும் இருக்கின்றது, தெய்வீகத் தன்மையும் இருக்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்திப்போமாக. நன்மையை, பரிசுத்த தன்மையை, மனித இயல்பின் தனித்துவமான பேரழகை நாம் தொடர்ந்து ஆழமாக உணர்வோமாக. நமது சொந்த ஆன்மாவின் தெய்வீக தன்மையை இடையறாது தேடுவோம். பணிவு என்னும் நுழைவாயிலின் வழியாகவே சென்று அந்த தெய்வீக தன்மையைக் காண முடியும். அதன் பின் நாம் அனைத்து மனிதரிலும் உள்ள தெய்வீக தன்மையை அடையாளம் காண்போம். அவ்வாறு செய்வதால் நாம் நமது சுயநல ஆசைகளின் குறுகிய எல்லைகளில் இருந்து மீளுவோம். பரந்த ஆரோக்கியமான புனிதமான அன்பின் வாழ்விற்குள் நாம் நுழைவோம். ஆன்மீக வலிமை புனிதமான மனதிற்கு அனைத்துமே புனிதமானவைகள் தான், அனைத்து பயன்பாடுகளும் ஏற்கத்தக்கதை பரிசுத்தமானவையே, எல்லா தொழில்களும் வேலைகளும் ஆசீர்வதிக்கப்பட்டவையே புனிதமானவையே, எல்லா நாட்களும் புனித நாளே ஒரு தெளிவான நேர்கொண்ட மனம் என்பது ஒரு மனமாசற்ற கனிவான இதயத்திற்கு முன்னோடியாக இருக்க வேண்டும். முதலாவதாக குறிப்பிடப்பட்ட ஒன்று இல்லை என்றால் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது இருப்பதற்கு சாத்தியமில்லை. காரணம், எது சரி எது தவறு என்பதைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்துணர்வு இருக்கும்போது தான் மனமாசின்மை மற்றும் கனிவு ஆகிய குணங்களை அடைய முடியும். மற்றவர்கள் மீது தாக்குதல் தொடுக்கவோ அல்லது எதிர் தாக்குதலை முறியடிக்கவோ பயன்படும் வலிமையான மிருக ஆற்றலோ அல்லது அசுர பலமோ ஒருவகையில் பலவீனமானது தான், ஒருவன் தன்னை வென்று ஆளும் அமைதியான பொறுமையான வெல்ல முடியாத உள்ள உறுதியோடு ஒப்பிடும்போது. அவன் அதைக் கொண்டு தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறான். புனித குறிக்கோள்களை நிறைவேற்ற தன்னை பயிற்றுவிக்கிறான். தனது வெறியுணர்வு இயல்புகளை கட்டுக்குள் கொண்டு வந்து வசப்படுத்தி வழிநடத்துகிறான். ஒவ்வொரு நாயாலும் குரைக்க முடியும். சண்டை போட முடியும். ஒவ்வொரு முட்டாளாலும் கீழான மனநிலைக்கு இடம் தந்து மோசமான கடுமையான வார்த்தைகளை வாரி இரைக்க முடியும், அவதூறாக பேச முடியும், வேலாக நெஞ்சில் பாய்ச்ச முடியும். இவையெல்லாம் எளிதானவையே, அவனுக்கு இயல்பாகவே வரும். இதை மேற்கொள்ள அவனுக்கு எந்த பெரு முயற்சியோ எந்த பெரும் வலிமையோ வேண்டாம். ஆனால் மெய் அறிவானவன் இத்தகைய முட்டாள்தனங்களைக் கைவிடுகிறான். அவற்றை கைவிட்டு தன்னை சுய கட்டுப்பாட்டில் பயிற்றுவிக்கிறான். தனது நிலை இல்லாத இயல்பில் இருந்து பொங்கி எழுந்து மறையும் உந்துதல்களில் இருந்து செயல்படுவதற்கு பதிலாக, நிலையான அறநெறி கோட்பாடுகளில் இருந்து விலகாத வண்ணம் தன்னை பயிற்றுவித்துக் கொள்கிறான். எவன் வெற்றிகரமாக தன்னை பயிற்றுவித்துக் கொண்டுள்ளானோ அவனால் அறிவுரைகளின் வாயிலாக மற்றவர்களை ஒரு சிறிய அளவுக்கு பயிற்றுவிக்க முடியும். ஆனால், எடுத்துக்காட்டின் மூலமாகவே பெருமளவுக்கு பயிற்றுவிக்க முடியும். காரணம் மெய்யறிவாளர்கள் தங்கள் செயல்பாட்டின் வாயிலாகவே ஒன்றை கற்றுத்தருவது அவர்களது தனிச்சிறப்பாகும். ஹெரோடின் ஏகன பேச்சுக்கள், மனிதர்களின் குற்றச்சாட்டுக்கள், பூசாரிகளின் கோப வெறியான தண்டனைகள் -இவை யாருமே இயேசுவிடம் இருந்து ஒரு கசப்பான வார்த்தையையோ புலம்பலையோ அல்லது தற்காப்பையோ வெளிகொண்டு வரவில்லை. மௌனமும் சுயகட்டுப்பாடுமான அத்தகைய நுட்பமான செயல்கள் காலத்தை கடந்து தனி நபர்களையும் தேசங்களையும் தொடர்ந்து வந்தடைகின்றன. கற்றறிந்த சான்றோர்கள் மற்றும் மற்றும் மதகுருமார்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள், வார்த்தைகளையும் விட அவை வலிமையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணமும் இருக்கின்றன. பதில் தாக்குதல் தொடுப்பதும் சண்டையிடுவதும் மனிதனுள் இருக்கும் மிருக குணத்திற்கே உரியது, காட்டில் வாழும் விலங்கிற்கு உரியது போல. தெய்வீக அறநெறியை கடைப்பிடிப்பதிலிருந்து மீள்வதற்காக எவ்வளவு புற அழுத்தங்கள் வந்த போதும் அந்த புறஅழுத்தங்களுக்கு அடிப்பணியாமல்-, போற்றுதலோ தூற்றுதலோ இரண்டையும் பொருட்படுத்தாமல், மாறாத நன்மை மற்றும் உண்மையின் பக்கம் உறுதியுடன் நிற்பது என்பது மனிதனுள் இருக்கும் தெய்வீக குணத்திற்கே உரியது, பிரபஞ்சத்தின் தெய்வீக குணத்திற்கு உரியது போல. மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காகவோ அல்லது அவர்களது தவறான புரிதலையோ அல்லது கண்டனங்களைத் தவிர்ப்பதற்காகவோ ஒருவன் தன்னுடைய தன்னுடைய நல்லொழுங்கை மாற்றி அமைத்துக் கொள்வது ஒருபோதும் ஆன்மீக வலிமைக்கு இட்டுச் செல்லாது. ஆன்மீகப் புரிதலுக்கும் வலிமைக்கும் எப்போதும் துணையாக வரும் தெய்வீக இரக்கம் என்பது வெறும் இனிய வார்த்தைகளை சொல்வதிலிருந்து பெருமளவு வேறுபட்டதாகும். காரணம் இனிய வார்த்தைகள் எப்போதும் உண்மையான வார்த்தைகள் என்று கூறிவிட முடியாது. தெய்வீக இரக்கம் என்பது மற்ற நபர் அல்லது நபர்களுக்கு எப்போதும் என்றென்றும் ஆன நன்மையை செய்யக்கூடியது ஆகும். ஒரு பலவீனமான தந்தை தனது குழந்தைகளை முறையாக பயிற்றுவித்து சீர்படுத்த தகுதியற்றவராக இருக்கிறார். தனது குழந்தைகள் தரும் தொல்லையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று மட்டுமே கருதுகிறார். அவர்களது ஒழுக்கக்கேடான செயல்பாடுகளை, சுயநல செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கிறார். இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார். ஒரு மனோ பலம் வாய்ந்த தந்தை, தனது குழந்தைகளின் குணஇயல்பின் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொள்கிறார். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் கடுமையாக கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். தனது கண்டிப்பான செயல்பாட்டால் நேரும் சில நிமிட வலி அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் நேர கூடிய பல வருட துன்பத்தை தவிர்க்கும் என்பதை புரிந்து கொள்கிறார். பெற்றோர்களின் கவனக்குறைவான குழந்தை வளர்ப்பு முறைகள் காரணமாக அத்துன்பங்கள் நேர வாயப்பிருப்புகின்றது. வலிமையான இரக்கமான சுயநலமற்ற தந்தை தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்கிறார். தனக்கான உடனடி சுகத்தையோ வசதியையோ தொல்லையில் இருந்து தப்பித்துக் கொள்வதையோ அவர் நாடுவதில்லை. அவர் பாசத்தை மட்டும் மென்மையோடு காட்டுவதில்லை. ஆனால் கண்டிப்புடன் ஒழுக்கத்தையும் கூட மென்மையுடன் காட்டுகிறார். தனது குழந்தை அறியாமையின் காரணமாக தவறான பாதையில் செல்லும் போது கண்டிப்பை காட்டி அதை எப்படி எப்படி தடுத்து நிறுத்தி நல்வழிபடுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார். எனவே ஆன்மீக ஆற்றல் வாய்ந்த ஒருவன் இனிதாக பேசுபவனாக மட்டுமே இருக்க முடியாது, ஆனால், அவன் சரியான செயல்களை செய்பவனாகவும் இருக்க வேண்டும். சரியான முக்கியமான உண்மையான வார்த்தைகளை கூறுபவனாக இருக்க வேண்டும். எனவே அவன் என்றென்றும் எல்லா காலத்திற்கும் இரக்கமானவனாக இருப்பான். ஆன்மீகத்தில் பலவீனமான மனிதன் தனது ஆசைகளுக்கு எதிராக ஒன்று கொண்டு வரப்படும் பொழுது (இயற்கையின் விதிப்படி அது கொண்டுவரப்பட வேண்டும்) சரியான செயல்பாட்டை செய்வதிலிருந்து விலகி பாவ செயல்பாட்டை தழுவுவான், அது அவனுக்கு இன்பமாக இருப்பதால். ஆன்மீகத்தில் வலிமையான ஒருவன், ஒரு பாவமான செயல்பாடு, அதிலும் குறிப்பாக அது அழகிய முகமூடி அணிந்து வரும் போது, அவன் பாவத்தை தவிர்த்து சரியான செயல்பாட்டையே தழுவுவான். அவ்வாறு செய்வதால் அவன் தன்மீது மற்றவர்களின் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் அது பற்றி கவலைப்பட மாட்டான். அந்த சரியான செயல்பாட்டின் தெய்வீக அடிப்படைகள் குறித்து அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர் என்பதை அறிந்திருக்கிறான். ஆன்மீக புரிதல் கொண்ட ஒருவன் சரியான செயல்பாடு என்று வரும்போது அதிலிருந்து சிறிதும் வளைந்து கொடுக்காமல் எஃகு கம்பி போல இருப்பான். தனது சுயத்துக்கு எதிரான நிலைப்பாடு ஒன்று வரும்போது தண்ணீரை போல எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருப்பான். சரியான செயல்பாடு நன்மையானது என்று அறிந்திருப்பான். தனது சுயம் மட்டுமே தீங்கு என்று அறிந்து இருப்பான். என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் அடிப்படையில் இருந்து செயல்படுகிறான். தனது சுயத்திலிருந்து மாறிக்கொண்டே இருக்கும் ஆசைகளின் அடிப்படையில் அவன் செயல்படுவது இல்லை. அவனது செயல்பாடுகள் என்றும் மாறாத இயல்புடைய அறநெறி கோட்பாடுகளின் தன்மையை கொண்டிருக்கின்றன. அந்த அறநெறி கோட்பாடுகளில் இருந்தே அவை முளைத்து எழுந்தன. அச்செயல்பாடுகள் பின்வரும் எண்ணில் அடங்காத தலை முறையினருக்கு வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும். அறநெறி கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் ஒருவன் எப்போதுமே தவறாக புரிந்து கொள்ளப்படுவது என்பது தொன்று தொட்ட நிகழ்வாகும். பெரும்பாலானவர்கள் தங்களது ஆசைகளிலும் உந்துதல்களிலும் வாழ்கிறார்கள். புறச் சூழ்நிலைகளின் தூண்டுதல்களுக்கு இரையாகி கண்மூடித்தனமாக அவற்றை கடைபிடிக்கிறார்கள். சரியான நிலையான கோட்பாடுகளின் அடிப்படையில் பற்றற்று செயல்படுவது என்றால் என்ன என்பதன் பொருளை விளங்காமல் இருக்கிறார்கள். சுயநலத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு செயல்படுவது என்றால் என்ன என்று அறியாமல் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் சரியான செயல்பாடுகளை மேற்கொள்பவனே தவறாக புரிந்து கொள்வதும் தவறாக கணிப்பதும் வாடிக்கையே. அவர்கள் அவனை இறுகிய நெஞ்சம் கொண்டவனாக, (சரியான பாதையில் இருந்து விலகாததால்) கொடுமைக்காரனாக தன்னை அவன் வெறி உணர்வு கொண்டு தற்காத்துக் கொள்ளாததால் அவனை கோழை, பலவீனமானவன் என்று கருதுவார்கள் . எனவே அவன் மீது பல வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஆனால், அவை அவனுக்கு எந்த கலக்கத்தையும் தராது. அதனால் அவன் குழப்பத்திற்கு உள்ளாக மாட்டான். காரணம், அவன் கடைபிடிக்கும் உண்மை அவனுக்கு ஒரு நிரந்தர மகிழ்வின் ஆதாரமாக இருக்கும். தன்னை புரிந்து கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் என்னும் அறிவோடு அவன் இளைப்பாறுதலில் இருப்பான். அவன் தன் மீது பழி சுமத்துபவனின் நன்மைக்காகவும் செயல்படுகிறான் தனது தினசரி செயல்பாடுகளால் அவன் உண்மையை வெளிப்படுத்துகிறான். அவன் தெய்வீக வலிமை பெற்றவர்களின் துணையில் இருக்கிறான்.அவர்கள் இந்த உலகை அமைதியான நிம்மதியான பாதையில் செலுத்துகிறார்கள். அச்சு புத்தக விலை பட்டியல் +---+-----------------+--------------------------------------------+---+ | வ | ஜேம்ஸ் ஆலன் | தமிழ் மொழிபெயர்ப்பு நூல் | வ | | . | முதன்நூல் | | ி | | எ | | | ல | | ண | | | ை | | ் | | | ர | | | | | ூ | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | Man: King of | மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன் | 1 | | | Mind, Body and | | 2 | | | Circumstance | | 5 | | | | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 2 | Foundation | மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம் | 1 | | | Stones to | | 2 | | | Happiness and | | 5 | | | Success | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 3 | Out from the | உள்ளத்திலிருந்தே வாழ்வு | 1 | | | Heart | | 2 | | | | | 5 | | | | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 4 | Byways of | அருள் பொழியும் நிழல் பாதைகள் | 4 | | | Blessedness | | 0 | | | | | 0 | | | | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 5 | All These | வேண்டுவன யாவும் கிட்டும் | | | | Things Added | | | | | | (சுவர்கத்தின் நுழைவாயில் | | | | (Entering the | | | | | Kingdom | சுவர்க வாழ்வின் தன்மைகள்) | | | | | | | | | The Heavenly | | | | | Life) | | | +---+-----------------+--------------------------------------------+---+ | 6 | Above Life’s | வாழ்வின் கொந்தளிப்புகளை கடந்த உயர்நிலைகள் | | | | Turmoil | | | | | +---+-----------------+--------------------------------------------+---+ | 7 | Men and Systems | மனிதர்களும் அமைப்புகளும் | | +---+-----------------+--------------------------------------------+---+ | 8 | Mastery of | விதியை நிர்ணயிக்கும் ஆற்றல் | | | | Destiny | | | +---+-----------------+--------------------------------------------+---+ | 9 | From Passion to | வெறியுணர்வு முதல் | | | | Peace | | | | | | நிம்மதி வரை | | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | Eight Pillars | வளமான வாழ்வைக் கட்டமைக்கும் எட்டு தூண்கள் | 2 | | 0 | of Prosperity | | 5 | | | | | 0 | | | | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | Through the | நல்வாசலின் வழியே அல்லது கிறிஸ்துவும் | | | 1 | Gate of Good or | நல்லொழுக்கமும் | | | | Christ and | | | | | Conduct | | | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | Morning and | Morning and Evening Thoughts -காலை மாலை | 2 | | 2 | Evening | சிந்தனைகள் ஆங்கில மூலம்-தமிழ் | 0 | | | Thoughts | மொழிபெயர்ப்பு இரண்டும் கொண்ட இரு மொழி | 0 | | | | நூல்) | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | Life Triumphant | வெற்றிகரமான வாழ்வு | | | 3 | | | | | | (Mastering the | (மனதையும் இதயத்தையும் பண்படுத்தி ஆளுதல்) | | | | Heart and Mind) | | | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | Poems of Peace | நிம்மதியின் பாடல்கள் | 2 | | 4 | | | 5 | | | | | 0 | | | | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ | 1 | The Shining | நேர்வழியின் சீரிய ஒளி | 2 | | 5 | Gateway | | 0 | | | | | 0 | | | | | / | | | | | - | +---+-----------------+--------------------------------------------+---+ தொடர்புக்கு வள்ளியம்மை பதிப்பகம் மின்னஞ்சல்: arun2010g@gmail.com வாட்ஸ் அப் எண்: 91-8939478478 கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account