[] [cover image] நெஞ்சக்கனல் நா.பார்த்தசாரதி FreeTamilEbooks.com Public Domain - CC0 நெஞ்சக்கனல் 1. நெஞ்சக்கனல் 1. பதிப்புரை 2. கொடி ஏற்றம்–காப்பு 2. பகுதி - 1 3. பகுதி -2 4. பகுதி -3 5. பகுதி -4 6. பகுதி -5 7. பகுதி -6 8. பகுதி -7 9. பகுதி -8 10. பகுதி -9 11. பகுதி -10 12. பகுதி -11 13. பகுதி -12 14. பகுதி -13 15. பகுதி -14 16. பகுதி -15 17. பகுதி -16 நெஞ்சக்கனல் நெஞ்சக்கனல்   நா.பார்த்தசாரதி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - G.சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/nejakkanal} பதிப்புரை “…ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்று வள்ளுவப் பேராசான் வற்புறுத்துகிறார். ஏன்? குற்ற உணர்வு நெஞ்சில் கனலாக எரிந்து கொண்டிருப்பதால்தான் அந்த விடு ஆறாத புண்ணாக நிலைத்துவிடுகிறது. அந்த நெஞ்சக் கனலை அவித்துவிடும் ‘ஆற்றல்’ உடையவர்களுக்கும், அல்லது அக்கணலே தோன்றாத உள்ளம் படைத்தோர்க்கும் நாவினாற் சுட்ட வடு புண்ணாவதில்லை என்பது உலகம் கண்ட அனுபவ உண்மை. மனச்சாட்சியின் குரலுக்குச் செவி சாய்ப்பவர்களுக்கெல்லாம் ‘நெஞ்சக் கனல்’ தோன்றுவது இயற்கை. அக்கனல் மனிதனை எரித்து விடுவதில்லை. அவனுள்–அவனது பலவீனமாகக் கிளர்ந்தெழும் தீய உணர்ச்சிகளையே எரித்துச் சாம்பலாக்குகிறது. வேள்வித் தீக்குச் சமானமான இந்த நெஞ்சக்கனல் அவிந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ளும் எந்த மனிதனும் முழு மனிதனாக உயர முடியும். அவ்வாறு உயர்ந்த ஒரு மனிதர் இக்கதையில் வருகிறார்.  கடந்த கால் நூற்றாண்டில் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள எத்தனையோ குழப்பங்களுக்கிடையிலும் நம் மக்களின் மனச்சாட்சி முற்றிலும் மரத்துப்போய் விடவில்லை என்ற உண்மையை இந்நாவல் மிகவும் தெளிவாக விளக்குகிறது. இனிய காதல் கதைகளைவிட இம்மாதிரிப் பிரச்னைகளை வைத்துக் கதை பின்னுவது கொஞ்சம் சிரமமான காரியமே. அந்தச் சிரமமான காரியத்தைத் திறம்படவும் அழகாகவும் செய்து முடித்திருக்கிறார் ஆசிரியர் நா. பார்த்தசாரதி. அவருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக. கண. முத்தையா, சென்னை, 18–5–68. தமிழ்ப் புத்தகாலயம். கொடி ஏற்றம்–காப்பு அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சினைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது. இதற்கான சூழ்நிலையும் திறக்கிறது. என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும்,கவியின் நளினமுமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்தியவேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீர தைரியமுள்ள ஓர் உழைக்கும் பத்திரிகையாளனை ’நெற்றிக்கண்’ணிலும் படைத்தேன். இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் ‘பெரிய’ குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். நான் நெருங்கியிருந்து கண்ட சில அரசியல்வாதிகளின் சாயல்களும் நான் விலகியிருந்து உணர்ந்த பல அரசியல்வாதிகளின் சாயல்களும் இதில் வராது என்று உங்களுக்கு இந்த முன்னுரையில் உத்தரவாதம் கொடுப்பது அவ்வளவு நியாயமாக இருக்க முடியாது அல்லவா? ‘ஆப்ஸர்வேஷன்’ எழுத்தாளனின் குணமாகுமா, குற்றமாகுமா? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் எப்படி முடிவு கூறுவீர்களோ  அப்படியே இது நியாயமுமாகலாம்; நியாயமாகாமலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய மனோதர்மத்தையே ஒரு நியாயமாக நிறுத்தித் திருவிழாவுக்குக் காப்புக் கட்டிக்கொண்டு கொடியேற்றுவதுபோல் அதனுயரத்தில் என்னுடைய சத்தியமான தேசிய நம்பிக்கைகளை ஏற்றி உயர்த்திவிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்குகிறேன். இதை இந்தச் சமயத்தில் எழுதுவதற்குச் சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எந்தச் சமயத்தில் எழுதினாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே; அதுதான் இந்தச் சமயத்திலும் காரணமாக இருக்கிறது; சிறப்பாகவும் இருக்கிறது. இனி. மேலே படியுங்கள். ஓ! ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே! ஆம்! இப்போது நினைவு வருகிறது. இந்த நாவலைப் படிப்பதனால் என்ன இலாபம் என்று உங்களில் சிலர் கேட்கலாம்! அல்லது அப்படிக் கேட்க நினைக்கலாம். படிக்காமல் தவற விடுவதனால் நஷ்டம் நிச்சயமாக உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொன்னால் அப்படிச் சொல்வதற்காக என்னை மன்னிப்பீர்களா? நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்) பகுதி - 1 அந்த நிசப்தமே அங்கு ஒரு கெளரவமான சூழ்நிலை யைப் படைத்துக் கொடுப்பதாக இருந்தது. ஒரு மனிதனுடைய பிரவேசம் பல மனிதர்களுடைய பேச்சுக்களையும், குரல் விகாரங்களையும் ஒடுக்கி நிசப்தத்தைப் படைப்பது அந்த ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவும் இருக்கலாம்: பயமாகவும் இருக்கலாம். மரியாதையா, பயமா என்று விவாதித்து முடிவு காண்பதைவிட அந்த நிசப்தம் யாரோ ஒருவன் பலரிடமிருந்து ஒரே சமயத்தில் அடைகிற இரகசியமான வெற்றி என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். பலரிடையே ஆரவாரத்தையும், கிளர்ச்சியையும் படைக்க முடிகிறவன் எப்படித் தலைவனாகி விடுகிறானோ அப்படியே, சிலரிடையே நிசப்தத்தைப் படைக்கிறவனும் ஒரு தலைவன்தான். சொல்லப்போனால் நிசப்தத்திலிருந்துதான் ஆரிவாரமே பிறக்கிறது. ஆரவா ரத்துக்கு முந்திய நிசப்தம்தான் அந்த ஆரவாரத்தையே பிரித்துணர அடிக்கோடு போட்டுத் தருகிறது. மெளனத்தின் மறுபுறம்தான் ஆரவாரம். ஆரவாரத்தின் மறுபுறம் தான் மெளனம். பலரை நிசப்தமாக்கிவிட்டுத் தான் மட்டும் உரத்த குரலில் பேசுகிற ஒருவன் எப்படித் தலைவனோ அப்படியே, சிலரை நிசப்தமாக்கிவிட்டு அந்தச் சிலரின் மரியாதையை மெளனமாக வெல்கிறவனும் ஒரு தலைவன்தான். இருபத்தைந்து முப்பது பேர் வேலை பார்க்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பார்த்தால் கமலக்கண்ணன் அப்படி ஒன்றும் படாடோபமானவரோ, பகட்டுப் பேர் வழியோ இல்லை. படாடோபம், பகட்டு, பணச்செழிப்பு, அதிகார முதன்மை எல்லாவற்றையும் தவிரவும் கூடச் சில மனிதர் களின் தோற்றமே, சுற்றியிருப்பவர்களை எழுந்து நிற்கவும், அதுவரை பேசிக்கொண்டிருந்த கலகலப்பான பேச்சிலிருந்து விடுபட்டு மெளனமடையவும் செய்வதுண்டே; அப்படிச் செய்கிற சக்தி கமலக்கண்ணனிடமிருந்தது. அவரைப்போல் பரம்பரையான பணக்காரக் குடும்பத்தில் வந்தவர்களுக்கு இப்படி மனிதர்களை ஆள்கிற தன்மையும் ஒருவேளை பரம்பரையாகவே வந்து விடுகிறதோ என்னவோ? ‘பணத்தை ஆள்கிறவர்களும், பதவியை ஆள்கிறவர்களும் அவற்றின் மூலமாக அதிகாரங்களை ஆள்கிறவர்களுமே இந்த விநாடி வரை மனிதர்களையும் ஆள்கிறார்கள் போலிருக்கிறதே’–என்று சொன்னால் சமதர்மம் மலருகிற நாட்டில்–சமதர்மம் மலருகிற நாட்களில் அது கேட்பதற்குக் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்? கசப்பாக இருந்தாலும் உண்மை, உண்மைதானே? எவ்வளவுக்கெவ்வளவு கசப்பாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு கசப்பதினாலேயே அது உண்மை என்று இனங் கண்டு கொள்ளப் பழகிவிட்டால் அப்புறம் கவலையில்லை, கசப்புமிருக்காது. சராசரியாக நீங்கள் பார்த்திருக்கிற எல்லாப் பெரிய முதலாளிகளையும் போல்தான் கமலக்கண்ணனும் நீண்ட பெரிய காரில் பின் ஸீட்டின் இடது கோடியில் ஒரமாக உட்கார்ந்து ஒற்றைத் தனி ஆளாகச் சவாரி செய்து நாள் தவறாமல் காலை பதினோரு மணிக்கு அலுவலகம் வருவார். போர்டிகோவில் டிரைவர் பரபரப்பாக விரைந்து முன்னிறங்கிக் கார்க் கதவைத் திறந்து விட்டதும், மெதுவாகக் கீழே இறங்கி எதிரே மரம்போல் விறைத்து நின்று சலாம் வைக்கும் கூர்க்காவைக் கடந்து உள்ளே செல்வார். குளிர்சாதனம் செய்யப்பட்ட தமது அறைக்குள் நுழைவார். அமர்வார். டெலிபோன் பேசுவார். செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவார். கடித்ங்களை ‘டிக்டேட்’ செய்வார். ஸ்டெனோ சுத்தமாக டைப் செய்துகொண்டு வந்த கடிதத்தில் கீழே கடைசியாக அசுத்தமான தன் கையெழுத் திலும் இரண்டு வரி கிறுக்கிய பின் கையெழுத்துப் போடுவார். மனிதர் ரொம்பக் கெட்டவரில்லை. ரொம்ப நல்லவரா இல்லையா என்பதையும் அவசரமாக இப்போதே முடிவு செய்ய இயலாது. நாள் பொறுத்து இனி மேல் முடிவு செய்யவேண்டிய காரியம் அது. ஒருவேளை அப்படி முடிவு செய்யவேண்டிய அவசியமும் இல்லாமற் போகலாம், பெரிய மனிதர்களுக்கு நிர்ப்பந்தமாக இருந்தே தீரவேண்டிய வரையறுக்கப்பட்ட அதாவது– ‘லிமிடெட்’, –‘தார்மீக உணர்ச்சிகள்’ சில அவரிடமும் உண்டு. பழமையான தமிழ் அகராதியிலும், இலக்கியங்களிலுள்ள வள்ளன்மை, கொடை, அறம்போன்ற வார்த்தைகளுக்குப் பொருந்தி வரக்கூடிய உணர்ச்சிகளாக அவைகளை நீங்கள் கொண்டு விடக்கூடாது. அவசரப்பட்டு. அப்படிப் புகழ்வதால் பின்னால் துன்பப்பட நேரக்கூடாதல்லவா? பொய்கள் பூத்துக்கிடக்கும் பட்டினத்தின் அகன்ற வீதிகளில் அவர் காரில் போகும்போது அருகிலும், தொலைவிலும் நடந்துபோகிறவர்கள் அவரையும் அவர் காரையும் சுட்டிக் காட்டிப் பெயர் சொல்லி வியக்கவும், பெருமைகூறவும் நேர்வது உண்டுதான். ஆனால் அந்த வியப்பும், பெருமையும் அவருக்கு மட்டுமே உரியவை அல்லவே அவரைப் போலவே பரம்பரையாகச் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து பத்திருபது பேர்களை வைத்துக் சம்பளம் கொடுத்து வேலை வாங்குகிற வியாபாரிகள் யாவருக்குமுள்ள பகட்டுதான் அது. அநுபவிக்கிறவனைப் பார்த்து அநுபவிக்கத் தவிக்கிறவன் கூறுகிற பொறாமையான பெருமை அது புகழின் பின் பக்கத்தில் பொறாமையும் பொறாமையின் பின் பக்கத்தில் புகழும் இருக்கிறதென்று யாரோ சொல்லியிருக்கிறானே, அப்படிப்பட்ட விவகாரம் அது. ஆனால் முழுமையாக அப்படியே சொல்லி முடித்துவிடவும் முடியாது, அவருடைய தோற்றத்துக்கும் பார்வைக்கும் ஒரு கம்பீரம் உண்டுதான், அவருடைய கம்பெனியில் பணிபுரியும் அந்த முப்பது பேருக்கு அது உணர்ச்சி பூர்வமாகத் தெரியும். கம்பெனிக் கட்டிடத்தின் நடுக்கூடத்தில் அக்கவுண்டண்டுகளும், கிளர்க்குகளும் மற்றவர்களும், அமரும் வரிசை வரிசையான நாற்காலிகளுக்கு நடுவே வகிர்ந்துகொண்டு செல்லும் அழகிய கம்பளம் விரித்த பாதையில் அவருடைய குளிர் சாதனம் செய்யப்பட்ட அறையை நோக்கி அவர் வரும்போதும் அறையிலிருந்து அவர் திரும்பிப் போகும்போதும் வரிசையாக எழுந்து நிற்கும் மனிதர்களும், ஒரு சீராகப் பரவி நிற்கும் மெளனமும் வெறும் பணத்தின் எதிரொலி என்றுமட்டுமே சொல்லிவிட முடியாது தான். எடுப்பான தோற்றமும் அவருக்கு இருந்த வசதியுள்ளவர்களின் உடம்பு, மேனி மினுமினுப்பு, கண்களின் பார்வையில் ஒருபகமை எல்லாம் அவருக்கும் வாய்த்திருந்தன. பணச்செழிப்பில் மிதந்ததனால் வாலிபம் கடந்த பின்னும் அதுகடந்துவிட்டது தெரியாத தோற்றமும், நடுத்தர வயதிலும் இளைஞர் போல் காண்கிற பொலிவும், அவருக்கு உரியவையாக இருந்தன. பல வசீகரங்களை உண்டாக்கித் தரும் ஒரே வசீகரம் பண வசதிதான் போலிருக்கிறது. உள்ளே நுழைந்து சுத்தமாகப் பளீரென்று துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடித் தகடு பரப்பிய மேஜைக்கு எதிரே இருக்கையில் அமர்ந்து வழக்கமும், பழக்கமும் ஆகிவிட்ட காரணத்தில் குளிர் சாதன சுகத்தை உணரும் நிலையில்கூட இலயிக்காமல் குளிர்ச்சிக்கண்ணாடியும் சேர்த்துப் பொருந்திய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு அலட்சியமாக டெலிபோனை எடுத்து ‘ரோஸியை வரச் சொல்லுங்கள்’ என்று ஸ்டெனோவுக்கு அழைப்பு விடுத்தார் கமலக்கண்ணன். ரோஸி என்றழைக்கப்பட்ட ஆங்கிலோ – இந்தியப் பெண்மணி – ஒரு கொத்துக் கடிதங்களுடனும், கையெழுத்து வாங்குவதற்கு தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த ‘செக்’ புத்தகங்களுடனும் உள்ளே நுழைந்தாள். அபிநயத்துக்கு உயர்த்திய கையைப் போல் ஒரு கொத்துக் கடிதங்களுடனும் மற்றவற்றுடனும் வலது கையை மேலே உயர்த்திக் கதவை இடது கையால் ஒசைப்படாமல் திறந்து அவள் உள்ளே நுழைந்ததே ஒரு சிறிய நடனம் போல் இருந்தது. அளவுக்கதிகமாகவே அவள் பூசியிருந்த யார்ட்லி பவுடரின் சுகந்தம்அறையில் குப்பென்று பரவியதும் கமலக்கண்ணன் தலை நிமிர்ந்தார். வாசனையும், வாசனையற்ற தன்மையும் குளிர் சாதனம் செய்யப்பட்ட அறையில் குப்பென்று பரவுவதுண்டே தவிர மெதுவாகப் பரவுவதே இல்லை. “இன்றைக்கு வந்த கடிதங்களில் நீங்கள் பார்க்கவேண்டிய கடிதங்கள்” என்று சொல்லிவிட்டுக் கடிதங்களை ஒரு புறமும், வேறு வேறு பாங்குகளுக்கான ‘செக்’ புத்தகங்களை இன்னொரு புறமுமாக மேஜைமேல் வைத்தாள் ரோஸி. பின்பு கையில் தயாராகக் கொண்டுவந்திருந்த பதில் கடிதங்களைக் குறிப்பெடுப்பதற்கான நோட்டுப் புத்தகத்தையும் கூராகத் தீட்டிய பென்சிலையும் வைத்துக்கொண்டும் சாய்ந்தாற் போல் அங்கேயே நின்று கொண்டாள் அவள். கமலக்கண்ணனோ கடிதங்களை முதலில் பார்ப்பதில் சலிப்புற்றவர்போல்–அல்லது அதைவிட வேகமாகச் செய்து முடிக்கிற காரியமான செக்கில் கையெழுத்திடும் காரியத்தை முதலில் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணங்கொண்டவர் போல் செக்கில் அலட்சியமாகக் கையெழுத்திடத் தொடங்கினார். செக்கில் அலட்சியமாக கையெழுத்திடத் தொடங்குகிற அந்த வேலையும் பரம்பரைப் பணக்காரக் குடும்பத்துக்கே உரிய அலட்சியத் தோடும் வேகத்தோடும் நடைபெற்றது. ‘செக்’ யாருக்குக் கொடுக்கப்படுகிறது? – எதற்தாகக் கொடுக்கப்படுகிறது? என்ன தொகைக்குக் கொடுக்கப்படுகிறது? – என்பதைப் பற்றியெல்லாம் அதிகம் சிரத்தை காட்டாமல், அதிகம் கவலைப்படாமல், சோம்பலோடும் அவசரத்தோடும் சிறு பிள்ளை கிறுக்குவதுபோல் கையெழுத்துக்களை அவற்றில் கிறுக்கித்தள்ளினார் கமலக்கண்ணன் அந்தக் கையெழுத்துக்களில் அவருடைய முதலெழுத்தான ‘டி’ என்பதையும்.அதற்கு அடுத்தாற்போல் பெயரின் முதல் எழுத்தாகிய ‘கே’ என்பதையும் தான் அரிய பெரிய முயற்சியின் பேரில் சிரமப். பட்டு கண்டுபிடிக்க முடியுமே ஒழிய அதற்கப்பால் வெறும் கோடுகளாக ஏறி இறங்கி வளைந்து புரண்டு நீளும் கிறுக்கலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. யாருக்கு, எதற்கு எவ்வளவிற்கு என்றெல்லாம் கவலைப்படக் கூடச் சோம்பல் பட்டுக் கொண்டே கையெழுத்திட்டாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அந்தச் செல்வம் கரைந்துவிடப் போவதில்லை. அலட்சியத்திற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது நீண்டகால அநுபவமும் நம்பிக்கையும் வாய்ந்த அக்கவுண்டண்ட், காஷியர் போன்ற ‘கவந்தன்கள்’ அதையெல்லாம் ஒரு முறைக்குப் பலமுறை கவனித்து உறுதி செய்யாமல் ’செக்’கே எழுதமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் தன் குடும்பச் சொத்துக்கள் எங்கே எப்படி எப்படி எந்த எந்த உருவத்தில் உள்ளன என்பது கூட அவருக்குச் சரியாகத் தெரியாதுதான். எல்லாம் அக்கவுண்டண்டுக்கும் காஷியருக்கும் வீட்டில் அம்மாவுக்கும்தான் நன்றாகத் தெரியும். இந்த மாபெரும். சென்னைப்பட்டினத்திலேயே முப்பது வீடுகளுக்கு மேல் தம் குடும்பச் சொத்தாக இருப்பதாய் அவருக்குத் தெரியுமே ஒழிய, எங்கெங்கே எந்த வீடு இருக்கிறது? யார் வாடகைக்கு இருக்கிறார்கள் என்ன வாடகை வருகிறது? என்பதெல்லாம் அவருக்குச் சரியாகத் தெரியாதவை. அவருக்கு முதுமையுமில்லை, துள்ளித் திரியும் இளமையும் இல்லை. முப்பத்து ஏழு வயது என்பது வாலிபத்தின் கடைசி அத்தியாயமாகவும் இருக்கலாம், நடுத்தரப் பருவத்தின் முதல் அத்தியாயமாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பணக்காரர்களுக்கு நிரந்தரமாக ஓர் இளமை உண்டு. உப்புப்புளிக்குக் கவலைப்படுகிறவனுக்கு அந்தக் கவலையே ஒரு முதுமை. ஒரு வேலையுமில் லாதவனுக்கு அதுவோ ஓர் இளமையாகிற வசதி கிடைக்குமாயின் அந்த இளமை நம் கமலக்கண்ணன் அவர்களுக்குத் தாராளமாகவே கிடைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சிலவேளைகளில் கழுத்தின் கடைசி நுனிவரை பெரியபெரிய பித்தான்கள் வைத்துத் தைக்கப்பெற்ற அந்த க்ளோஸ் கோட்டிலும், பாண்டிலும், புகுந்துகொண்டு அவர் அளிக்கிற தோற்றம்கூட அவர் முகத்தின் இளமை யையோ பொலிவையோ, மாற்றி விடுவதாயில்லை. இளமைக்கு–இளமையாக நிருபித்துக் கொள்வதற்கு அடையாளமென்று சிலர் கருதும் அரைக்கை ஸ்லாக் அணிந்து கொள்வது அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. தங்கக் கம்பிகள் மின்னும் ப்ரேம் போட்ட அந்த மூக்குக் கண்ணாடியும், நீண்ட மூக்கும், சிவந்த உதடுகளும், அளவாகப் பேசும்பேச்சும், சிரித்தால் வைத்துக்கட்டிவிட்டாற் போன்ற அந்தப் பல்வரிசையின் வெண்மையும் – அவரைத் தனி கெளரவத்தோடு உயரத்தில் தூக்கி நிறுத்திக் காட்டக்கூடியவையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்கமுடியாது. பொம்மலாட்டத்தில் பொம்மையின் இயக்கத்துக்கான சகல கயிறுகளும் – பின்னாலிருந்து இயக்குகிறவனின் கைகளில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் வாழ்க்கையின் இளமை, புகழ், பொலிவு, அந்தஸ்து, செள கரியங்கள் எல்லாம் பணத்தின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பணம்தான் பின்னாலிருந்து இவற்றையெல்லாம் இயக்குகிறது என்பதைக் கமலக்கண்ணன் நிரூபித்துக் கொண்டிருந்தார். கமலக்கண்ணனைப் போன்ற இன்னும் சிலரும் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ அவர் ‘செக்’ புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறாரே: சங்கீத சபைக் கட்டிட நிதிக்குப் பத்தாயிரம், கடம்பவனேசுவரர் கோயில் புனருத்தாரண நிதிக்கு ஐயாயிரம்; காந்திய சமதர்ம சேவா சங்கத்திற்கு மூவாயிரம்–என்று அவர் போடும் நன் கொடைக் கையெழுத்துக்களைப் பார்த்தாலே ஏழையாகிய உங்களுக்கும், எனக்கும் தலை சுற்றுகிறதல்லவா? தலை சுற்றாமல் வேறென்னசெய்யும்? இதில் சில தொகைகளைக் கணித பாடத்தில் படித்ததைத் தவிரத் தொட்டு எண்ணிப் பார்க்கும் அத்தனை வசதி உங்களுக்கோ எனக்கோ ஏற்பட்டதே இல்லையே! காந்திய சமதர்ம சேவா சங்கத்தின் ‘செக்’ கையெழுத்தானதும் ஸ்டெனோ இன்னொரு செய்தியையும் அந்தச் சங்கத்தோடு தொடர் புடையதாக அவருக்கு நினைவூட்டினாள். “அவர்களுடைய மூன்றாவது ஆண்டு விழா வருகிற வாரம் நடக்கப் போகிறதாம். அதற்கு நீங்கள் தான் தலைமை வகிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார்கள் சார்! ‘செக்’கை அனுப்புமுன் கடிதத்தைப் படித்துப் பார்த்து விடுங்கள்" என்றாள். இதைச் சொல்லும்போதே அந்த ஆண்டு விழாவிற்குத் தலைமைதாங்க அவர் இணங்குவார் என்ற நம்பிக்கை நிச்சயமாக அவளுக்கு இல்லை. ஆனால் வாழ்க்கையிலேயே முதன் முறையாக அன்று ஒர் அதிசயம் நடக்கப்போகிறது என்று அவள் கண்டாளா என்ன? கூட்டம், சொற்பொழிவு, தலைமை, பரிசு வழங்கல் என்றாலே காததூரம் விலகி ஓடுகிற சுபாவம் அவருக்கு. வெட்கமும், பயமும், சபைக்கூச்சமுமே முக்கியமான காரணங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தம்மை விட்டுவிடுவதற்கும் சேர்த்து ஏதாவது நன்கொடை கொடுத்தாவது தப்பித்துக் கொள்வாரே ஒழியச் சிக்கிக் கொண்டு விடுவது அவர் வழக்கமேயில்லை. ’ரோட்டரி கிளப்’ காரியதரிசியாயிருந்த காலத்தில்கூட ‘வெல்கம் அட்ரஸ்’, ‘ஒட் ஆஃப் தேங்க்ஸ்’ போன்ற அயிட்டங்களை ஒர் ஆங்கிலப் பேராசிரியரிடம் எழுதி வாங்கிப் படித்து முடித்துவிடுவாரே தவிர மேடையிலே ‘எக்ஸ்டெம்போர்’ ஆகப் பேச வராது அவருக்கு, பரம்பரைப் பணக்காரர் குடும்பத்துக்குச் சில முறையான அடையாளங்கள் சென்னையில் உண்டு. ஆஸ்திகத்துக்கு அடையாளமாக கொஞ்சம் டோக்கன் பக்தி, கொஞ்சம் சங்கீத ரசனை, இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை வெளிநாட்டுப் பயணம், எதாவது ஒரு கல்லூரியில் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவி, தாய்மொழியில் கூடியவரை பற்றின்மை–சாத்தியமானால் அதன்மேல் ஒரளவு வெறுப்பு–ஏதாவது ஒரு சங்கத்தின் கெளரவ போஷகர் பதவி–வீட்டுக் குழந்தை களுக்கு நாட்டியம், சங்கீதம் கற்பித்தல், இவையெல்லாம் அடங்கிய ஓர் அஞ்சறைப் பெட்டி ஞானம் வேண்டும். இவற்றில் சில அம்சங்கள் நம் கமலக்கண்ணன் அவர்களிடமும் இருந்தன. எதிலும் தீவிர விருப்பு வெறுப்பு இருக்காது. பக்தியிலிருந்து பரதநாட்டியம்வரை ’டோக்கனா’க ஒர் உணர்வு இருக்கவேண்டுமே ஒழிய முழுமையாகவோ, தீவிரமாகவோ, எதிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பது இந்தப் பணக்காரக் குடும்பங்களில் ஒரு வழக்கம். காரணமில்லாத பலவற்றில் நிறையச் செலவழிப்பதும் காரணமுள்ளவற்றில் செலவழிக்காமலே விட்டுவிடுவதும் கூட இவர்களிடம் சகஜமான சுபாவமாக இருக்கும். அப்பனும் மகனும் பேசிக்கொள்ளும் போதுகளில், கணவனும், மனைவியும் பேசிக்கொள்ளும் போதுகளில்கூடத் தாய்மொழியில் பேசாமல் இருப்பதும் ஒரு பெருமை இவர்களுக்கு. சாதாரண மக்களின் வாழ்க்கையில் தெருவில், வீதியில் உள்ளவர்களின் சுகதுக்கங்கள் தெரியாத இப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகளும், உயர்தர உத்தியோகஸ்தர்களும் வருகிறார்கள் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்களே, அதில் நியாயமும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். சமூக வாழ்வில் தீவிர மாறுதல்கள் நிகழ வேண்டுமானால், இப்படிப்பட்ட அஞ்சறைப் பெட்டி ஞானமுள்ளவர்கள் குறைய வேண்டும். எந்தத் துறையிலும் ஆழ்ந்த பற்றோ அநுபவமோ இல்லாமல் எல்லாத் துறையிலுமே ஆழ்ந்த பற்றும் அநுபவமும் இருப்பவர்களைப்போல் நடிப்பவர்கள் பெருகி வருவதுதான் இந்த நூற்றாண்டின் இந்திய வாழ்க்கையில் பெரிய குறைபாடு என்பதை நாம் உணர்ந்து தீர வேண்டிய நிலையில் இருப்பதைத்தான் இது காண்பிக்கிறது. அவசர உபயோகத்துக்காக அடுப்படியில் வைத்துக் கொள்ள ஏற்ற முறையில் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் பருப்பு என்று போட்டு வைத்துக் கொள்ளும் அஞ்சறைப் பெட்டிபோல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இரசனை உள்ளவர்கள்தான் இன்று நிரம்பியிருக்கிறார்களே ஒழிய எந்த ஒன்றிலும் ஆழ்ந்த இரசனை உள்ளவர்களை எங்குமே காணமுடியாமலிருக்கிறது. புதியஇந்தியாவுக்கு இன்று இதுவும்ஒருகுறைதான். தன் நாட்டுக் கலைகளில் நம்பிக்கையில்லை. அந்நிய நாட்டுக்கலைகள் சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டும் தெரிந்தது போல் நடிக்கும் போலித்தன்மையோ எங்கும் உண்டு. கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டு இரண்டு விநாடி யோசனைக்குப்பின், “இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். ’செக்’கை அனுப்பும்போது என் சம்மதத்தையும் தெரிவித்துக் கடிதம் எழுதிவிடு” என்று கமலக்கண்ணன் பதில் கூறியபோது ரோஸிக்குத் தன் செவிகளையே நம்பமுடியவில்லை. பேசுவது அவர் தானா என்று சந்தேகமாயிருந்தது. “சார்! அந்தக் காந்திய சமதர்ம சேவா சங்கம் இருக்கிற இடம் இங்கிருந்து எழுபது எண்பது மைலுக்கு அப்பால் திண்டிவனம் பேர்கிற வழியில் ஏதோ ஒரு குக்கிராமம். அங்கே இங்கிலீஷில் பேசினால் புரியாது. கூட்டமும் வராது. ‘மைக்’ கூட ஏற்பாடு செய்வது சந்தேகம். அதனால்தான் பார்க்கிறேன்…” “எதனாலும் பார்க்கவேண்டாம். நான் அவசியம் அந்தக் கூட்டத்துக்குப் போவதென்று முடிவு செய்து விட்டேன். பதில் எழுதிவிடு. அந்தத் தமிழ்ப் புலவர் ஒருவர் அடிக்கடி ஏதோ இலக்கியச் சங்கம் என்று நன்கொடைக்கு வருவாரே அவரை நான் கூப்பிட்டனுப்பியதாகத் தகவல் சொல்லி அனுப்பு. பிரசங்கத்தைத் தயாரித்துக் கொடுக்கச் சொல்லிவிடலாம்…” “உங்களுக்குத் தமிழில் பேசிப் புழக்கமில்லையே…!” “பரவாயில்லை! சமாளித்துக் கொள்ளலாம்… எப்படித்தான் பழகுவது ..? அறையில் ஆடித்தானே அம்பலத்துக்குப் போகவேண்டும்…” –இப்படிக் கூறியதிலிருந்து ‘அம்பலத்தில்போய் ஆட வேண்டும்’ என்ற இரகசிய ஆசையும் அவருக்குள் புதைத் திருக்கும் உண்மையை ரோஸி உணர முடிந்தது. வெளியே போய்த் தமிழ்ப் புலவரை அழைத்து வரச் சொல்லி அலுவலகத்துப் பையனை அனுப்புவதற்காகச் சென்றாள் அவள். ‘கமலக்கண்ணன்’ மற்றக் கடிதங்களில் மூழ்கினார். அவர் மனத்திலோ இனம்புரியாத ஒரு துறு துறுப்பு. பொது வாழ்க்கையில் தீவிரமாக இறங்கி, மேடை, ரோஜாப்பூமாலை, கைதட்டல், வரவேற்பு மடல் ஆகிய சுகங்களில் மூழ்கிப் பேரும் புகழும் எடுக்க வேண்டுமென்று அவர் இதயத்தின் ஒரு கோடியில் ஆசை அரும்பியிருந்தது. அதற்குக்காரணம் முன்தினம் மாலையில் அவர் கலந்து கொண்ட ஒரு மணி விழாவாயிருந்தது. உள்ளூர்ப் பிரமுகர் ஒருவருடைய அறுபதாண்டு நிறைவுவிழாவுக்குப் போயிருந்தார் அவர். அவரும் குறிப்பிடத்தக்க கணிசமான நன்கொ டை அந்த விழாவுக்குக் கொடுத்திருந்ததனால் ஒரு மரியாதைக்காக அவரை அழைத்திருந்தார்கள் விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள். போய்ப்பார்த்தபோது அவருக்கு வியப்பாயிருந்தது. தமிழில்மேடைப்பேச்சுப் பேசுகிறவர்கள்தான் எத்தனை விதவிதமாக வளர்ந்திருக்கிறார்கள்? எவ்வளவு கை தட்டல்? எவ்வளவு கூட்டம்? ஒரே வியப்பாயிருந்தது அவருக்கு கிளப், சேம்பர் அஃப் காமர்ஸ், டென்னிஸ் கோர்ட் இதைத் தவிர வேறு எங்குமே அதிகம் போயிராத அவருக்குப் புகழ்மயமான இன்னொரு புதிய உலகமே இந்த மணிவிழாவில் தெரிந்தது. அங்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையில் ஒரு தீவிர ஆசை அவருள் அரும்பி யிருந்தது. அதன் விளைவே இன்று திடீரென்று அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாகக் காந்திய சமதர்ம சேவா சங்கம் எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடத்துகிற கூட்டத்துக்குத் தலைமை தாங்க இணங்கியது. உள்ளே ஒரு தாகம் வந்திருந்தது அவருக்கு. மணிவிழாக் கொண்டாட்டத்துக்கு உரியவரை எல்லாரும் புகழ்ந்தது–வசனத் திலும், கவிதையிலும் அவருக்கு வரவேற்பு மடல்கள் வாசித்தளித்தது–எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்துக் கூட்டம் கூட்டமான மனிதர்களால் புகழப்படுவது என்ற வெதுவெதுப்பான சுகத்தில் ஒரு தாயமே உண்டாகியிருந் தது அவருக்கு. அந்தப் புகழின் உலகில் இதுவரை அவர் இருந்த இடம் அதலபாதாளம்தான். பணம் இருக்கலாம், ஆனால் அதை வைத்துக்கொண்டு இந்தப் புதிய வெது வெதுப்பான சுகத்தை அடைந்து பார்த்துவிட வேண்டு மென்ற தவிப்பு தவிர்க்க முடியாமலே அவருள் வளர்ந்து பெருகிவிட்டது. பணத்தினால் அடைய முடியாதது இல்லை. ஆனால் இந்த விதமான அசல் புகழினைப் பணத்தினால் மட்டுமே அடைய முடிவதில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அதனை அடைகிற மார்க்கங்களில் எதிலும் நடக்கத் தயங்கலாகாது என்ற முடிவிற்கு அந்தரங்கமாக வந்திருந்தார் அவர். அதன் முதல் விளைவே, அந்தக் குக்கிராமத்துக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேச விரும்பிய விருப்பம். பணத்தைச் செலவழித்து அடைகிற புகழைவிடத் திறமையையும், சாதுரியத்தையும் செலவழித்து அடைகிற புகழ்தான் சிறந்தது, விலைக்குப் பெறாமல், பரிசாக அல்லது கொடையாகப் பெறுகிற ஒரு பொருளின் சுகம் தானாக வருகிற–தகுதிக்காக வருகிற புகழில் இருக்கிறது. அந்தச் சொகுசு நிறைந்த சுகத்தின்மேல் அவருக்கு ஒரு காதலே உண்டாகி விட்டது. காதல் என்பதைவிடச் சக்தி வாய்ந்த மையல் என்ற வார்த்தையைப் போட்டுச்சொன்னாலும் அவருக்கு உண்டான புகழ் வேட்கைக்குப் பொருத்தமானதாகவே இருக்கும். தந்தக்கோபுரத்திலிருந்து உலகைப் பார்த்து வந்த அவரைப் போன்றவர்களுக்கு இந்தக் குடியரசு நூற்றாண்டின் சுகமான அநுபவம் இப்படிப்பட்ட மேடைப் புகழ்தானே என்று ஒரு மயக்கம்கூட ஏற்பட்டுவிட்டது. பொது வாழ்வில் ஈடுபட்டுப்புகழடைய முதற்படி மேடைதான்’என்று நேற்றைய நிகழ்ச்சிக்குப்பின் அவர் புத்தகக்கடைக்குப் போய் வாங்கிவந்தமேடைக்கலை என்றபொருளுள்ள தலைப்போடு கூடிய ஆங்கிலப்புத்தகம் தன் முதல் வாக்கியத்தைத் தொடங்கியது. “தமிழ்ப் புலவருக்கு ஆளனுப்பி விட்டேன்! இன்னும் அரைமணியில் வந்துவிடுவார்” என்று ரோஸி திரும்பிவந்து கூறினாள். சிந்தனையிலாழ்ந்து போயிருந்த அவர் தலை நிமிர்ந்தார். பதில் எழுத எடுத்துவைத்திருந்த வேறு கடிதங்களுக்குப் பதிலை ‘டிக்டேட்’ செய்யத் தொடங்கினார். ஒரு ஸ்டெனோவுக்கு வேகமாக ஆங்கிலத்தில் டிக்டேட் செய்கிற அளவுக்கு வியாபாரக் கடிதங்களும், அவற்றை எழுதும் முறைகளும் அவருக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. எப்படித் தொடங்கவேண்டும், எதைச் சொல்லவேண்டும், எவ்வள்வு சொல்லவேண்டும், எங்கே சொல்லவேண்டும் என்றெல்லாம் அவர் நன்றாக அறிவார். பிரசங்கத்தைத் தயாரிப்பதற்குத்தான் அவருக்குத் தமிழ்ப்புலவரின் அல்லது ஆங்கிலப் பேராசிரியரின் துணைவேண்டுமே ஒழிய–வியாபாரத்தை நடத்துவதற்கு யாருடைய உபாயமும் யோசனைகளும் அவருக்குத் தேவையில்லை. போதுமான உபாயங்களும் யோசனைகளும், அவரிடமே நிறைய இருந்தன. பகுதி -2 புகழாசை என்பது சூதாடுவதைப் போன்றது, தோற்றால் மறுபடி வெல்கிற வரை ஆசை தணியாது. வென்றுவிட்டாலோ மேலும் மேலும் வெற்றியின் கடைசி உச்சிவரை ஏறிப் பார்க்க வேண்டுமென்று வெறி உண்டாகும். தெரிந்தோ, தெரியாமலோ சாதக பாதகங் களை அறிந்தோ அறியாமலோ கமலக்கண்ணனும் இந்தச் சூதாட்டத்தில் மையல் கொண்டுவிட்டார். பணமில்லாமையினால் மட்டுமே மனிதர்கள் தங்களை, ஏழைகளாக நினைத்துக்கொள்வதில்லை. விதம் விதமான ஏழைகள், விதம் விதமான பிரிவுகளில் இவ்வுலகில் இருக்கிறார்கள். பணத்தினால் ஏழைகள், புகழினால் ஏழைகள், அறிவினால் ஏழைகள், அந்தஸ்தினால் ஏழைகள் என்று எத்தனையோ வகைகள் இருக்கின்றன. மனிதனுடைய சுயமான இதயம் இருக்கிறதே; அதைச் சொர்க்கம் என்று புகழப்படுகிற இடத்திற்கு அனுப்பிவைத்தால்கூட அங்கும் அது ஏதாவதொன்றிற்காக..ஏழைமைப்பட்டு ஏங்கி நிற்கத்தான் செய்யும். இலட்சாதிபதி கமலக்கண்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? பொதுவாழ்வின் முதல்படி யாகியமேடையில்தைரியமாக ஏறுவதென்றுமுடிவு செய்து விட்டார் அவர். மேடையில் ஏறும் ஆசை வந்துவிட்ட தென்பதற்காக மேடையைப் பற்றிய பயமும் தயக்கமும் போய்விட்டதென்று கொள்வதற்கில்லை. மேடை, சொற்பொழிவு, கைதட்டல், முகஸ்துதி. இவைகளுக்கு எல்லாமே முற்றிலும் புதியவனான ஒரு பாமரனுக்கு–ஒரு நல்லவனுக்கு முதலில் இவை எல்லாமே அசட்டுத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் தோன்றும். நாள் ஆகஆக இதே அசட்டுத்தனங்களையே பலர் மெச்சும்படி செய்து விடுகிற சாதுரியம் வந்துவிடும். ‘தான் மட்டும் அசடனாக இருக்கிறோமோ?’ என்று பயந்து தயங்குவது போய்த் தன்னால் எதிரே இருக்கிற அத்தனை பேரையும் அசடர்களாக்க முடியும் என்ற துணிவும் நம்பிக்கையும் வந்து விட்ட பிறகு, முதலில் அசட்டுத்தனங்களாகவும், விளையாட்டுத்தனங்களாகவும் தோன்றிய அதே காரியங்கள் வாழ்க்கை நோக்கங்களாகவும், நாளடைவில் இலட்சியுங்களாகவும் மாறிவிடும். கடிதங்களில் எல்லாமே கையெழுத்துப் போட்டு முடித்துவிட்டுப் பிரசங்கத்தைத் தயாரித்துக் கொடுப்பதற்காக வரவிருக்கும் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க் கண்ணனாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கமலக் கண்ணன். வெண்ணெய்க் கண்ணனார் என்ற பெயரைப் பார்த்தவுடன் ஏதோ பொன்விழாக் கொண்டாடும் வயதுக்குத் தலைநரைத்த கிழவரென்று நினைத்துவிடக் கூடாது. வயது என்னவோ முப்பது முப்பத்திரண்டு – தான் இருக்கும். பெற்றோர்கள் அவருக்குச் சூட்டிய நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை அளவற்ற தமிழ்ப் பற்றுக் காரணமாக இப்படித் தமிழாக்கிக் கொண்டு விட்டார். நவநீதம் என்றால் வெண்ணெய், கிருட்டிணன் என்றால் கண்ணன் முதலில் ‘நவநீத கிருட்டிணன்’ என்று தான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் பண்டிதர். ‘என்ன இருந்தாலும் வடமொழி வடமொழி தானே?’ என்று அவருடைய தனித்தமிழ் நண்பர்கள் இடித்துரைக்கப் புகுந்தபின் ‘நவநீத கிருட்டினன்’ வெண்ணெய்க் கண்ணன் ஆகி ஒர் ஆரும் கடைசியில் ஒட்டிக் கொண்டுவிட்டது. தமிழ்ப் பண்டிதர்களுக்கு எப்போதுமே பெயருக்குப் பின்னால் ‘ஆர்’ போட்டுக் கொள்வதில் தனி விருப்பம் உண்டு. இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது இவருடைய விநோதமான பெயரை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக்கொண்டார் கமலக்கண்ணன். டெலிபோன் மணி அடித்தது. “தமிழ்ப் பண்டிதர் வந்திருக்கிறார். உள்ளே அனுப்பட்டுமா?” என்று டெலிபோன் ஆப்ரேடரின் குரல் ஒலித்தது. “உடனே அனுப்பிவை…” என்றார் கமலக்கண்ணன். சொல்லிவிட்டு" டெலிபோனை வைத்த சூட்டோடு பிரசங்கத்தை எழுதிக் கொள்வதற்கான தாள்களையும் பேனாவையும் மேஜைமேல் தயாராக எடுத்து வைத்து ஆயத்தம் செய்து கொண்டார். தமிழ்ப் பண்டிதர் வெண்ணெய்க் கண்ணனார் எனப்படும் நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு அந்தக் கட்டிடம் ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பலமுன்றநிதிவசூல்களுக்காகவும், நன்கொடை திரட்டுவதற்காகவும் வந்திருந்தும், காத்திருந்தும் பழக்கமான இடம்தான். ஆனால் இப்போது மட்டும் ஒரு வித்தியாசம். நன்கொடைக்காகவும், நிதிக்காகவும் அவராகத் தேடி வரும்போது கமலக்கண்ணனை வந்த உடனே பார்த்துவிடமுடியாது. காத்திருந்து ஆட்களிடம் பலமுறை சொல்லி அனுப்பிய பின்புதான் அவரைப் பார்க்க முடியும். இன்றோ கமலக்கண்ணனே வரச்சொல்லிக் கூப்பிட்டனுப்பியிருந்ததனால் நேரே உள்ளே போக முடிந்தது. கமலக்கண்ணனின் ஏர்க்கண்டிஷன் அறைக்குள், நுழைந்தவுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு எதிரே அவர் நெ.–2 சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமர்ந்ததும் இருந்தாற் போலிருந்து, ‘ஏர்க்கண்டிஷன்’ என்பதை எப்படித் தனித்தமிழில் சொல்லுவதென்று ஒரு சந்தேகம் வந்தது. பண்டிதருக்கு. இப்போதெல்லாம் இப்படிச் சந்தேகங்கள் வருவது அவரைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அதற்குத் தனித்தமிழ் என்ன என்று சிந்திப்பதிலேயே அவருடைய பெரும்பாலான நேரம் கழிந்து போய்க்கொண்டிருந்தது. தெருவிலே, ஒட்டவிலே, பொது இடங்களிலே பார்க்கிற விளம்பரப் பலகைகளில் உள்ள பெயர்களை எல்லாம் தமிழாக்கிப் பார்த்து உள்ளூர மகிழ்கிற சுபாவம் அவருக்கு. ‘ஏர்க்கண்டிஷன் ரூம்’ என்பதைக் குளிர் அறை என்று கூறலாமா, ‘தண்ணறை’ என்று கூறலாமா? என்றெல்லாம் சிந்தித்து இரண்டிலும் கடுமையானது ‘தண்ணறை’ என்பதே ஆகையால் அப்படியே கூறவேண்டும் என மனதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தார் அவர். அந்த நேரம் பார்த்துக் கமலக் கண்ணன் குறுக்கிட்டு வினவினார். “என்ன ஐயா புலவரே! என்ன யோசிக்கிறீர்? காபி டீ ஏதாவது குடிக்கிறீரா?” “நான் காபி, டீ எதுவும் அருந்துவதில்லை. பால் இருந்தால் பருகலாம்…” என்று கூறியவாறே ஒரே சமயத்தில் கமலக்கண்ணனுடைய வாக்கியங்களில் இரண்டு மூன்று வேற்றுமொழிச் சொற்கள் வந்துவிட்டதாக உள்ளூர் வருந்தி இருந்தார் வெ. கண்ணனார்.– “காண்டினிலிருந்து ஒரு கப் பால் கொண்டுவரச் சொல்” என்று டெலிபோனை எடுத்து உத்தரவு பிறப்பித்தார் கமலக்கண்ணன். பால் வந்தது. புலவர் பாலை எடுத்துப் பருகியபின் கமலக்கண்ணன் அவரிடம் தமக்காக அவர் சொல்லித் தரவேண்டிய பிரசங்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை விவரிக்கத் தொடங்கினார். “இங்கேயிருந்து எழுபது எண்பது மைலுக்கப்பாலே ஒரு சின்னக் கிராமத்திலே ’காந்திய சமதர்ம சேவா சங்கம்’னு ஒரு சங்கம் இருக்குது. அதுனோட அனிவர்ஸரிலே பேசணும். இனிமே இதுமாதிரி நம்மைப் பேசக் கூப் பிடற இடங்களுக்கெல்லாம் நானும் பேசப் போகலாம்னு நினைக்கிறேன்… அதுக்கெல்லாம் உங்க உதவி ரொம்பத் தேவைப்படும்…நான் செய்யவேண்டிய பிரசங்கத்தை நீங்க டிக்டேட் செய்தீங்கன்னா, அப்படியே எழுதிக்குவேன். ஒரு தரம் எழுதிக்கிட்டா எழுதறப்பவே எனக்குப் பாதி மனப்பாடம் ஆயிடும்…” “அதெற்கென்ன? தங்கள் சொற்பொழிவை உருவாக்கிக் கொடுப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சியே.” “அது சரி! உங்களைப் போலத் தமிழ் வாத்திகள்ளாம் மேடை மேலே மூச்சுவிடக்கூட இடைவெளி இல்லாமச் சரமாரியாப் பொழியுதாங்களே? அது எப்படி முடியுது? எங்களுக்கெல்லாம் ரெண்டு வார்த்தை சேர்த்துப் பேசறதுக்குள்ள கை பதறுது, கால் நடுங்குது, நாக்கு வறளுது… என்னென்னமோ செய்யுதே…” “பயிற்சியும், பயிற்சியின்மையுமே காரணம்…” “பயிற்சியின்னா… எக்ஸ்பீரியன்ஸ்– அதைத்தானே சொல்றீங்க நீங்க…” “ஆம்! அதனையே குறிப்பிட்டேன். பயிற்சியால் ஆகாததொன்றில்லை. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.” “பிரசங்கத்தைச்சொல்லுறீங்களா? எழுதிக்கிறேன்…” “தொடங்கலாமா?…” “சும்மாச் சொல்லுங்க…நேரமாகுது…” “முதற்கண்…” “அதென்ன முதல்கண்ணு ரெண்டாங்கண்ணுன்னு?” “அல்ல! அல்ல! ‘முதற்கண்’ என்றால் முதலில் என்று தான் பொருள்..:எழுதுங்கள்…” “ஒய் பண்டிதரே! இதோ பாரும்…! முதல்லே ஒரு சங்கதியைத் தெளிவா நீரு தெரிஞ்சுக்கணும். நீர் எனக்குத் தயாரிச்சுக் கொடுக்கிற பிரசங்கம் நான் பேசினா எப்படி இருக்குமோ அப்படியிருக்கனுமே ஒழிய நீர் பேசினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கப்படாது. நீருபாட்டுக்கு ‘முதற்கண்’ அது இதுன்னு கடுந்தமிழா அடுக்கிட்டிருன்னா கேக்கறவனுக்குஉம்மைப்போல ஒரு புலவர்தான்பிரசங்கத் தைத்தயாரிச்சுக்கொடுத்திருக்கணும்னு புரிஞ்சு போயிடும். இதெல்லாம் ரொம்ப நாகுக்காகச் செய்து கொடுக்கனும் நீர்! நான் சொல்லுறது மனசிலே ஆகுதா? இல்லையா?” புலவர் பயந்தபடியே தலையை அசைத்தார். “முதல்லே உங்களுக்கெல்லாம் என் வணக்கம்னு போட்டுக்கறேன்…” “சரி…” “அப்புறம் என்ன பேசலாம்னு சொல்லும்…” “இச்சிற்றுாரில் கடந்த சில ஆண்டுகளாக இக்கழகம் சீரிய பணிகள் பல ஆற்றி வருகிறதென்று நான் பலர் வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்…” “அதுசரி; நான் அப்படியெல்லாம் ஒண்னும் கேள்விப் படவியே ஐயா?” “படவில்லையெனினும் இங்ஙனம் சொல்லித் தொடங்குதல் ஒரு மரபு…” “மரபுன்னா என்னாய்யா?” “தொன்று தொட்டு வரும் முறைமை–” “இப்ப நீர் சொல்ற இந்த அர்த்தம் மரபுங்கிறதை விட இன்னுமில்ல கடுமையாயிருக்கு–?” “எதற்கும் தாங்கள் தமிழ்க் கையகராதி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுதல் நல்லது. இதுபோன்ற நேரங்களில் பெரிதும் பயன்படும்…” இப்பவே வாங்கியாரச் சொல்றேன்! அது எங்கே கிடைக்கும்னு மட்டும் சொல்லுங்க–என்று உற்சாகத்தோடு உடனே கேட்டார் கமலக்கண்ணன். வெண்ணெய்க்கண்ணனார் உடனே அந்த இடத்திலிருந்து மிக அருகிலுள்ள ஒரு புத்தகக் கடையின் பெயரைக் கூறவே கமலக்கண்ணன் டெலிபோனை எடுத்துப் புத்த்கத்தை வாங்கிவர உத்தரவிட்டார். பத்தே நிமிஷங்களில் ஒரு புதிய தமிழகராதி அவருடைய மேஜைக்கு வந்துவிட்டது. “இதோ இப்ப உம்மமுன்னாடியே நீர் சொன்ன வார்த்தைகளில் எனக்குப் புரியாததுக்கு உடனே இந்த அகராதியிலேஅர்த்தம் பார்க்கிறேன்”–என்று சொல்லிக்கொண்டே வந்த கமலக்கண்ணன் ஒரு நிமிஷம் யோசித்துத் தயங்கிய பின், “என்ன சொன்னீரு? மறந்தில்ல போச்சு? அதை இன்னொரு தரம்சொல்லுமேன்பார்க்கலாம்…”– என்றார். “இச்சிற்றுாரில் கடந்த சில ஆண்டுகளாக இக்கழகம்சீரிய பணிகள் பல ஆற்றி வருகிறது என்று நான் பலர்வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன்…”– எனக் கிளிப்பிள்ளை போல் மறுபடியும் அந்த வாக்கியத்தைச் சொன்னார் புலவர். அதை ஒவ்வொரு வார்த்தையாக உற்றுக்கேட்டபின், ‘இதிலே கழகம்கிறவார்த்தைக்கும் ’சீரிய’ங்கிற வார்த்தைக்கும் எனக்கு அர்த்தம் புரியலே. அதை இதிலே பார்க்கிறேன்’– என்று கூறியபடியே அகராதியின் பக்கங்களைப் புரட்ட்லானார் கமலக்கண்ணன், வேண்டிய பக்கம் உடனே கிடைக்காததனால் தமிழ் அகராதியின் மேலேயே கோபம் கோபமாக வந்தது அதிகம் பொறுமையில்லாத அந்த வியாபாரிக்கு. கடைசியாகக் ‘கழகம்’ என்ற வார்த்தை இருந்த பக்கத்தைக் கண்டுபிடித்து விட்டார் அவர் அர்த்தத்தையும் பார்த்துக்கொண்டார். ஆனாலும் தாம் பார்த்த அர்த்தத்தை உடனே வாய்விட்டுப் படித்து விடாமல்" ‘கழகம்’ என்றால் என்ன ஐயா அர்த்தம்? நீரேதான் சொல்லுமே; பார்க்கலாம்?" – என்று வெண்ணெய்க் கண்ணனாருக்கே ஒரு ப்ரீட்சை வைப்பது போல் அவரைக்கேட்டார் கமலக்கண்ணன், – “கழகம் என்றால் சங்கம், மன்றம் என்றுபொருள் படும். காந்திய சமதர்ம சேவா சங்கத்தில் வருகிற சங்கம் என்ற பதத்தையே தனித்தமிழில் அவ்வாறு ‘கழகம்’ என்று குறித்தேன்…” “தப்பு ஐயா! இதிலே பாரும்…கழகம் என்பதற்கு நேரே ‘சூதாடுமிடம்’ என்று அர்த்தம் போட்டு சாட்சிக்குத் ’திருக்குறள் 935ஐப் பார்க்க’ன்னு வேறே போட்டிருக்கான். என்னய்யா தமிழ் பெரிய வம்பா இருக்குதே? நான் அந்தச் சங்கத்தைக் ’கழகம்’னு சொல்லி அவனும் அதை இந்த அகராதியிலே போட்டிருக்கிறமாதிரி அர்த்தத்திலே புரிஞ்சுக் கிட்டான்னா என்ன ஆகும்? எவ்வளவு அனர்த் தமா முடியும்?”– என்று வெண்ணெய்க்கண்ணனாரை நோக்கிக் கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் கமலக் கண்ணன். வெண்ணெய்க்கண்ணனாருக்கோ அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று பயமாகப் போயிற்று. மென்று விழுங்கித் தயங்கித் தயங்கிப்பேசினார் அவர், “ஒரு கால்த்தில் அச்சொல்லுக்கு அப்பொருள் இருந் திருக்கலாம். இன்று அப்படியில்லை.” “அதெப்படி? நீர் சொல்லிட்டாப்பில ஆச்சா அகராதிக்காரன் கொட்டை எழுத்திலே ’சூதாடுமிடம்’னு போட்டிருக்கானே?” “சரி! நீங்கள் தயங்கினால் வேண்டாம்! அந்த இடத்தில் கழகம் என்ற வார்த்தைக்குப் பதில் சங்கம் என்றே போட்டுக் கொள்ளுங்களேன்” “சிற்றுார்’னும் வேண்டாம் ஐயா! அதையும் கிராமம் என்று மாத்திக்கிறேன்…” “சரி, உங்கள் விருப்பம்…” “சீரிய பணிகள்’ங்கிறத்துக்குப் பதிலா என்ன போடலாம்?” “அதிலே ஒன்றும் தவறோ பொருட்பிறழ்ச்சியோ இல்லையே? அது அப்படியே இருக்கலாமே?” ’’எதுக்கு வம்பு? தெளிவா எனக்குப் புரியற மாதிரி மாத்திப்பிடுவமே?" ’நல்லபணிகள் என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்களேன்." “சபாஷ்! அப்படிச் சொல்லும்! அது நல்லாப் புரியிற வார்த்தையாயிருக்கு”– இப்படியே பண்டிதர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கமலக்கண்ணன் திருத்த; கமலக் கண்ணன் திருத்திய ஒவ்வொரு வார்த்தையும் கொச்சையாயிருக்கிறதே என்பதற்காகப் பண்டிதர் வாதிட்டு வருந்த, அந்தப் பத்து நிமிஷப் பிரசங்கத்தைத் தயாரித்து முடிக்க. இரவு 8 மணிவரை ஆகிவிட்டது. அலுவலகத்தில் கமலக் கண்ணனின் ஸ்டெனோவும், காரியதரிசியும் தவிர மற்றவர் கள் எல்லாம் வீட்டுக்குப் போயிருந்தார்கள். நிறைய நாற். காலிகளும், மேஜையுமாக ஹால் வெறிச்சென்றிருந்தது. குளுமையாக ஒளி பொழியும் டியூப் விளக்குகள் எல்லாம் எரிந்துகொண்டிருந்தன. ஓடாமல் தெரிந்த மின் விசிறிகள் அவ்வளவும் தனிமைக்குச் சுருதி கூட்டுவதுபோல் அவ்வளவு பெரிய ஹாலில் கோரமாகக் காட்சியளித்தன. தமிழ்ப்புலவர் வெண்ணெய்க்கண்ணனார் ஒரு கனைப் புக்கனைத்துக்கொண்டு எழுந்துநின்றார். ‘புறப்படத்தயாராகி விட்டேன்’– என்பது அந்தக் கனைப்பின் பொருள், கமலக்கண்ணனும் இருக்கையிலிருந்து எழுந்து அவரை வழியனுப்ப உடன் வருகிறவர்போல் அறையிலிருந்துவெளியே வந்தார். வெளியே வந்ததும் அங்கே தயாராகநின்றுகொண்டிருந்ததம்முடைய காரியதரிசிக்குக் கமலக்கண்ணன் ஏதோ ஜாடை காட்டினார். உடனே காரியதரிசி ஒரு கவரை எடுத்துக்கொண்டு வந்து கமலக்கண்ணனிடம் கொடுத்தார். அதைக் கையில் வாங்கிக் கொண்ட கமலக்கண்ணன் புலவருக்குவிடை கொடுக்கிற தோரணையில் முகம் மலர்ந்தார். ஒருவரை வரவேற்கும் போது இப்படி முகம் மலர வேண்டும். விடை கொடுக்கும் போது இப்படி முகம் மலர வேண்டும். வியாபாரியாயிருந்தால் இப்படி, உறவினராயிருந்தால் இப்படி, விரோதியாயிருந்தால் இப்படி, என்றெல்லாம் பழக்கத்தில் கச்சிதமாகதேர்ந்திருந்தார் அவர். கையில் இருந்த உறையைப் புலவரிடம் கொடுக்கப் போனவர், ஒரு விநாடி தயங்கிவிட்டு “புலவரே! ஒரு நிமிஷம் இப்படி உள்ளே வாரும் தனியாக உம்மிடம் ஒரு விஷயம் சொல்லணும்” என்று அவரை மீண்டும் அறைக்குள் அழைத்துக்கொண்டு போனார் கமலக்கண்ணன். “எனக்குப் பிரசங்கம் எழுதிக் கொடுத்தேனின்னோ சொல்லிக் கொடுத்தேனின்னோ, வெளியிலே யாரிடமும் சொல்லப்படாது. பெரிய இடத்திலே பழகறப்போ நடந்துக்க வேண்டிய இங்கிதம்லாம் உமக்கே தெரியும்னு நினைக்கிறேன். நான் இதெல்லாம் சொல்லாமலே உமக்குத் தெரியனும். எதுக்கும் இப்ப உமக்கு ஞாபகப்படுத்தி வைக்கி றேன். இந்தாரும்! இதை வச்சுக்கோரும். அப்பப்போ என்னால இப்படி முடிஞ்சதைச் செய்யறேன்” என்று சொல் லிக்கொண்டே மறுபடியும் அதே ரெடிமேட் புன்முறுவ லோடு உறையைப்புலவரிடம் நீட்டினார் கமலக்கண்ணன். இதைக் கேட்டுப் புலவர் நாணிக் கோணியபடியே உறையை வாங்கிக்கொள்ளத் தயங்கியவர்போல் நடித்துக் கொண்டே. “இதெல்லாம் எதற்கு? உங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குழைந்தார். ஆனால் கைகள் என்னவோ பழக்கத்தால் தாமாகவே முன் நீண்டு உறையை வாங்கிக்கொண்டன. “இந்தாப்பா இவரைச் சின்ன வண்டிலே கொண்டு போய் ‘டிராப்’ பண்ணிடச் சொல்லு” என்று காரியதரிசிக்கு அடுத்த உத்தரவைப் போட்டார் கமலக்கண்ணன். புலவர் முகமெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே கமலக்கண்ணனை நோக்கிக் கைகூப்பினார். “சரி அப்புறம் பார்க்கலாம். நான்சொன்னதுமட்டும் ஞாபகமிருக்கட்டும்” என்று மறுபடியும் எச்சரிப்பதுபோல் கூறினார் கமலக்கண்ணன். புலவர் புறப்பட்டார் கம்பெனி கார் டிரைவர் வந்து அவரை வண்டி நின்று கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்க் கதவைத்திறந்து விட்டு மரியாதையாக உள்ளே ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். கார் புறப்பட்டதும் காருக்குள் இருந்தபடியே அவசர அவசரமாக தனது ஜிப்பாபையிலிருந்து உறைஎடுத்துப் பிரித்துப்பார்த்தார் புலவர். புதிதாகப்பத்து ஐந்து ரூபாய் நோட்டுக்கள் உறைக்குள் புத்தம் புதிதாக வெளுத்து வைத்ததுபோல் மின்னின. ‘ஐம்பது வெண் பொற்காசுகள்!’ என்று தனக்குத்தானே அந்த வெகுமதியைத் தனித்தமிழில் சொல்லிப்பார்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டார் புலவர் வெண்ணெய்க்கண்ணனார். இடையிடையேடிராபிக்ஸிக்னலுக்காகக் கார் நின்ற இடங்களில் அவருக்குத்தெரிந்தவர்கள். நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைப்பெயர் சொல்லி உரத்த குரலில் கூப்பிட்டுத் தாம் அமர்ந்திருந்த காரின் அருகே வரவழைத்து வணக்கம் தெரிவித்தார்.புலவர் வெண்ணெய்க்கண்ணனார் அவர்களுக்கு வணக்கம் தெரிவிக் கவேண்டும்என்பதைவிடமுக்கியமாக அப்படிப்பளீரென்ற கார் ஒன்றில் தாம் தனியே அமர்ந்து கம்பீரமாகச் சவாரி செய்வதை அவர்கள் எல்லாரும் பார்க்கும்படியாகச்செய்து விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கமாயிருந்தது. சிலரிடம், “கமலக்கண்ணன் ஒரு முக்கியக் காரியமாக வண்டி அனுப்பிக் கூப்பிட்டார். போய்விட்டு வருகிறேன்…” என்றும், இன்னும் சிலரிடம், “ஒரு காரியமாகப் போகிறேன். அப்புறம் பார்க்கலாமே” என்றும் கூறினார் வெண்ணெய்க்கண்ணனார். கார் டிரைவர் தனக்குள் சிரித்துக்கொண்டான். ஏறுவதற்கோ இறங்குவதற்கோ கார்க் கதவைத் திறப்பதற்குக் கூடத் தெரியாத இந்தத் தமிழ்ப் பண்டிதர் செய்கிற ஜபர்தஸ்தைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. அவரைக் கொண்டுபோய் இறக்க வேண்டிய இடம் புரசைவாக்கத்தில் ஒரு சிறிய சந்து, சந்தின் முனையை நெருங்கியபோதுதான் அது ‘நோஎண்ட்ரி" என்று தெரிந்தது. சந்தின் மறுமுனை ’எண்ட்ரி’ ஆக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் போவதற்கு ஊர் சுற்ற வேண்டும். இந்த நிலைமையில், “ஐயாவுக்கு இந்தச் சந்திலே எத்தினியாவது வீடு?” என்று காரை நிறுத்திக் கொண்டு மெதுவாகக் கேட்டான் டிரைவர். “இந்தச் சந்திலே கீழ வரிசையிலே ஐந்தாவது வீடு வாசலிலேயே பெயர்ப்பலகை மாட்டியிருக்கும் ’தொல் காப்பியர் இல்லம்’னு” என்றார் வெண்ணெய்கண்ணனார். தான் சொல்கிற குறிப்பை நாசூக்காகப் புரிந்து கொள்ளத் தெரியாத அந்தப் புலவர் மேல் கோபம் கோபமாக வந்தது டிரைவருக்கு. புத்திக் கூர்மையும் சந்தர்ப்ப ஞானமும் உள்ள பாமரனுக்கு அவை சிறிதுமில்லாத மரத்துப்போன அறிவாளியின் மேல் உண்டாகிற ஆத்திரம் அது சமயோசிதமில்லாத மேதையின் மேல் சமயோசிதமும் குறிப்புணரும் திறனுமுள்ள சாதாரண மனிதனுக்குச் சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமலும் தடுக்கமுடியாமலும் ஏற்படுகிற ஆத்திரத்தின் வகையைச்சேர்ந்தது அது.  புலவரோ தம் வீட்டிலுள்ளார் அனைவரும் காண அண்டை அயல் வீட்டிலுள்ளார் அனைவரும் காண, அண்டைஅயல் வீட்டிலுள்ளார் யாவரும் வியக்க, தம் வீட்டின் வாயிற்படிக்கு ஒரு அங்குலம் கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் விலகிவிடாமல் நூலிழை பிடித்தாற்போல் போய்க் கார் நிற்க வேண்டுமென்று அந்தரங்கமாக ஆசைப்படுவது தெரிந்தது. “நோ எண்ட்ரி போட்டிருக்கானே? இங்கேயேவிட்டிடறேன். தயவுசெஞ்சு சிரமத்தைப் பார்க்காமே நடந்து போயிடறீங்களா ஐயா?” என்று விநயமாகச் சொல்லிப் பார்த்தான் டிரைவர். அதையும் புலவர் செவியுற்றுக் கேட்டதாகத் தெரியவில்லை. “சந்துமுனை ஒரே சேரும் சகதியுமாக இருக்கும். நான் வழக்கமாகவே இப்பகுதியில் நடந்தே செல்வதில்லை. ரிக்ஷாவில்தான் செல்லுவேன்” என்று நிர்த்தாட்சண்யமாகப் புலவரிடமிருந்து பதில் வந்தது. “சரிதான் இறங்கி நடய்யா” என்று ஆத்திரம்தீரக்கத்திவிடலாம் போல எரிச்சலாயிருந்தது அவனுக்கு திரும்பிப்போனால் ஐயா கோபித்துக்கொள்வாரோ என்றும் பயமாயிருந்தது. அக்கம்பக்கத்தில் ஒருமுறை பார்த்து விட்டு ‘நோ எண்ட்ரி’யாக இருந்தாலும் பாதகமில்லை என்று வண்டியைத் திருப்பி ரிவர்ஸில் உள்ளே விட்டுப் புலவர் வீட்டுவாயிலில் அவரை இறங்கச்சொல்லித் துரிதப்படுத்தினான் டிரைவர். புலவருக்கே ஒரே வருத்தம். காரைத் தமது தொல்காப்பியர் இல்லம் வரை விடுத்த டிரைவன் (டிரைவருக்கு அவர் கண்டுபிடித்த ஒருமை) முன் முகமாக விடுக்காமல் பின் முகமாக விடுத்ததும் அண்டை அயலார் தான் அத்தகு காரொன்றிலிருந்து இறங்கும் சீர்மையைக் காண முடியாது விரைந்து இறங்கச் சொல்லித் துரிதப்படுத்துகிறானே என்பதும் அவரை அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன. அதிருப்தியுடன்தான் அவர் உள்ளே இறங்கிச் சென்றார். ’விட்டது சனி’ என்பதுபோல் சொல்லிக்கொள்ளாமல் கூடக் காரை விட்டுக்கொண்டு ஒட்ட மெடுத்தான் டிரைவர் கார்க் கதவைப் பயந்துகொண்டே அடைத்திருந்தார் புலவர், அதை மறுபடியும் திறந்து நன்றாக அடைத்துக்கொள்கிற சாக்கில் படிரென்று அறைந்து அடைத்தான் டிரைவர் புலவருக்கோ அப்படிச்செய்வதன் மூலம் அவன் கோபமாகத் தன் முகத்திலறைவதுபோலிருந்தது அவருக்கு டிரைவர்மேல் கோபம்கூட வந்தது. சமயம் வாய்க்கும்போது அந்த ’டிரைவனை’ப் பற்றிக் கமலக்கண்ணனிடம் ஒரு வார்த்தைப் போட்டுவைக்க வேண்டுமென்றும் எண்ணிக்கொண்டார் புலவர். டிரைவர் புலவரை இறக்கிவிட்டுப்புறப்பட்ட இடமாகிய கம்பெனி அலுவலகத்துக்குப் போகாமல் இராயப்பேட்டையிலிருந்த கமலக்கண்ணனின் பங்களாவுக்குத் திரும்பிப் போனான். கமலக்கண்ணன் பெரிய காரில் கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார். அலுவலக உடைகளை எல்லாம்கழற்றிவிட்டு ஒரு சாதாரணவேஷ்டி ஜிப்பா அணிந்து முன் ஹாலில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். அவருடைய இன்னொரு கையில் அந்தப் பிரசங்கம் எழுதிய தாள்களின் கத்தை இருந்தது. பள்ளிக்கூடத்தில் சேரப்போகிற நாளை எண்ணும் ஒரு சிறு குழந்தை அல்லது திருமண நாளை கற்பனைச் செய்யும் ஒரு பட்டிக்காட்டு மணப்பெண்ணைப் போன்ற மனநிலையில் தமது முதற் பிரசங்கம்பற்றிய சிரத்தையான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தார் அந்த வியாபாரி. நவநாகரிகப் பெண்மணியும் தோற்றத்தில் அவருடைய மகளைப்போன்ற அவ்வளவு இளமையுடையவளுமான அவர் மனைவி எதிரே இன்னொரு சோபாவில் அமர்ந்துபுதிதாக வந்திருந்த ’பெர்ரிமேஸ்னை’ப் படித்துக்கொண்டிருந்தாள். புலவர் வீட்டிலிருந்து திரும்பிய டிரைவர் வண்டியைப் போர்டிகோவில் விட்டுவிட்டுத் தயங்கித் தயங்கி உள்ளே, வந்து ஹால் கதவோரமாக நின்று தலையைச் சொரிந்தான். “அவரைக் கொண்டுபோய் விட்டாச்சுங்க…” ‘ரொம்ப, சரி! வீடு இருக்கிற இடத்தை நல்லா ஞாபகம் வச்சிக்கோ முனிசாமி! அடிக்கடி நீதான் அவரைப் போய்க் கூட்டிக்கிட்டு வரவேண்டியிருக்கும்…’ என்றார் கமலக்கண்ணன். . “சரிங்க… எனக்கு நல்லா நினைவிருக்கு. கெல்லீஸ், போற வழிலே ஒரு சந்திலே இருக்காருங்க…”– என்று மீண்டும் தலையைச் சொரிந்தான் டிரைவர். “அதோட இன்னொரு விஷயம் முனிசாமி! திண்டி வனத்துக்குப் பக்கத்திலே ஒரு சின்னக்கிராமத்திலே அடுத்த வாரம் ஒரு ஆண்டுவிழா இருக்கு. அதுலே நான் தலைமை வகிச்சுப்பேசப்போறேன். அந்த ஊருக்கு மெயின்ரோடிலே இருந்துவிலகிப்பக்கத்திலே சின்னரோடிலே போகவேண்டியிருக்கும் போலிருக்கு. அதுனாலே நீதான் சின்னக்காரை எடுத்துக்கிட்டு எங்கூட வரணும்”– என்றார் கமலக்கண்ணன்.அப்படிச்சொல்லியதன் மூலம் அவர் நினைவில் இடைவிடாமல் அந்தக் காந்திய சமதர்ம சேவா சங்கமும் அதனுடைய ஆண்டுவிழாவும், அந்த ஆண்டுவிழாவில் தாம் தலைமை வகித்துப்பேச இருப்பதையும் அந்தப் பேச்சைத் தாம் தயாரித்திருக்கும் விதத்தையும் அது மேடையில், பேசப்படும்போது பலர் கைதட்டப்போவதையும் எண்ணி எண்ணிக் கற்பனைகளிலும் சுகங்களிலும் மூழ்கிக் கொள் ளும் நிலைமை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. “நீங்களா? மேடையிலே தமிழிலே பேசப்போlங்க?” என்று ஒரு விநாடி பெர்ரிமேஸ்னிலிருந்து தலையை நீட்டி விசாரித்தாள் மிஸஸ் கமலக்கண்ணன். “ஏன்? அதிலென்ன சந்தேகம்? நான்தான் பேசப்போகிறேன். நீயும்கூட வாயேன். மிஸஸ் கமலக்கண்ணனும் இந்தக் கூட்டத்திற்குவந்து சிறப்பித்ததற்காக எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”– என்று உனக்கும் சேர்த்துக்கூட அந்தக் கூட்டத்தில் நன்றி கூறுவார்கள். நான் இனிமே தலைமை தாங்கல், சொற்பொழிவு செய்வது எல்லாத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்னு நினைக்கிறேன்.நீயும்கூட அதுக்கு ஒத்துழைக்கனும், நான் பிரமுகராகறதுன்னா அதற்கு நீயும் உதவி செய்தால் தான் முடியும். ‘மிஸஸ் கமலக்கண்ணன் பரிசு வழங்குவார்’– என்று நிகழ்ச்சி நிரலில் உன் பெயரைப் போட்டால் நீயும் வந்து கூட்டங்களில் கலந்துகொண்டு பரிசு வழங்கணும்“– என்றார். அவர் இப்படிக் கூறியவுடன் மறுபடியும் பெர்ரிமேஸன் முகத்திலிருந்து விலகியது. அந்த அம்மாள் ஒரு விநாடி தலைநிமிர்ந்து, “அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா! மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்”–என்று சிரித்துக்கொண்டே கூறியது அவருடைய இந்தப் புதிய நைப்பாசையைக் கொஞ்சம் கேலி செய்வது போல் கூட இருந்தது. அந்தக் கேலியைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல் மெளனமாக இருந்துவிட்டார் அவர். கூட்டம், பிரசங்கம் என்றாலே காதவழி பயந்து ஓடும் தன் கணவனுக்கு இப்போது அவற்றில் எல்லாம் ஆசையும், பற்றுதலும் வந்திருப்பதை அந்த அம்மாளால் உடனே அங்கீகரித்துவிட முடியவில்லை. அவள் அங்கீகரிக்காமல் கேலி செய்ததை அவரும் அப்போது பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அவள் தன்னோடு காந்திய சமதர்ம சேவா சங்கத்துக்கு வரமாட்டேனென்றது மட்டும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவள் வர இனங்குவாள் என்றே எதிர்பார்த்தார்– அவர். அவள் வரமாட்டேனென்றதை மட்டும் அவரால் இரசிக்க முடியவில்லை. பகுதி -3 ஏழையின் திறமைகள் வியக்கப்படாத உலகம் இது. திறமைகளை உடையவன் செல்வாக்கு என்ற வெளிச்சத்தைப் போட்டு அதை மற்றவர்களுக்கும் காட்டிப் ‘பார் பார்’–என்று தாண்டிவிட்டு வியக்கச் செய்யவேண்டும். எத்தனையோ சாதாரணப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட மிகவும் திறமையாக மேடையில் பேசுகிற காலம் இது. எத்தனையோ சாதாரண அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கூடப் பிறர்வியக்க மேடையில் முழங்குகிற இந்த நூற்றாண்டில் மனிதனின் வெற்றி தோல்விகளே மேடை மீது தான் நிர்ணயிக்கப்படுகின்றன. சாரசரி மனிதனின் வெற்றி தோல்விகள் போர்க்களத்தில் நிர்ணயிக்கப்படாமல் பொது மேடையிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிற இந்த நாளிலும் அந்த வெற்றியை நிரூபிக்கச் செல்வாக்கு என்ற வெளிச்சத்தைப் போட்டுக் காண்பிக்கத்தான் வேண்டியிருக்கிறது. கமலக்கண்ணன் தமது முதல் மேடையேற்றத்தின் போதே அந்த வெளிச்சத்தைத் தாராளமாகப் போட்டுக்காண்பித்து விட்டார். திண்டிவனத்துக்குஅருகில் அந்தக் குக்கிராமத்து ஆண்டு விழாவுக்குப் போகவேண்டிய தினத்தன்று காலையிலிருந்தே அவருடைய சுறுசுறுப்புத் தொடங்கிவிட்டது. “என்ன சார்! சாயங்காலம் ரேஸ் கிளப்பில் பார்க்கலாமில்லியா? நம்பகமான ‘டிப்ஸ்’ ஏதாவது கிடைச்சிருக்கா?” என்று விடிந்ததும் விடியாததுமாக அன்றையக் குதிரைப் பந்தயத்தைப் பற்றி ஃபோன் செய்தார் ஒரு சிநேகிதர். அவருக்கு ஃபோனில் பதில் கூறியபோதுகூட “எஸ்க்யூஸ் மீ சார்! இன்னிக்கு ரேசுக்கு நான் வரப்போறதில்லே. எனக்கு வெளியூர்லே ஒரு மீட்டிங் இருக்கு… ரெண்டு மணிக்கே புறப்பட்டுடனும்…” என்று இழுத்தார் அவர். “அடடே! நீங்ககூட மாறிட்டீங்க போலிருக்கே… சோஷியல் ஆக்டிவிடீஸ்ல எல்லாம் இறங்கிட்டீங்களா; என்ன?’– என்று எதிர்ப்புறம் பேசியவர் சிரித்துக் கொண்டே வினாவியதைக் கூடக் கமலக்கண்ணனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேறு சிலருக்கு அவரே ஃபோன் செய்து தாம் அன்று மாலை ஓர் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கப் போவதை வலுவில் தெரிவித்தார்.அந்த ஆண்டுவிழாவைப் பற்றி விசாரித்தவர்களுக்கு எல்லாம் பிரமாதமாகப் பதில் கூறி மகிழ்ந்தார் அவர். விசாரித்துக் கேட்காதவர்கள் மேலெல்லாம் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. “ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்க…வெளியூர் கிளியூர்லாம் ஏதுக்கு? உடம்பைக்கவனிச்சிக்கவாணாம்?”– என்று ஆதரவாக விசாரித்த ஒரு நண்பரிடம், “என்ன சார் செய்யறது? யாரோ சென்ட்ரல் மினிஸ்டர். வரேன்ருந்தானாம். வரலே. நீங்கதான் வரணும்னாங்க… தட்டமுடியலே–காந்தியன் ’மெத்தேட்’லே ஸிம்பிளா பணிபுரியிற சங்கம்… நாம ஆதரிக்கனுமில்லியா?”– என்று. கொஞ்சம் தாராளமாகவே வெளிச்சத்தைப் போட்டுக் காட்டினார். “இதென்ன? காலையிலேருந்து பைத்தியம் மாதிரி எல்லாரிட்டயும் இதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க… சரியான பைத்தியந்தான் பிடிச்சிருக்கு ஒங்களுக்கு” என்று அவருடைய மனைவி சொல்லிச் சிரித்ததுகூட அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தது. முழுமையாக நான்கு பக்கம் கூடத் தேறாத அந்தப் பிரசங்கத்தைத் தாம் பேசும் போது கூட்டத்திலிருப்பவர்களுக்கு வழங்குவதற்காக ஓர் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டும் வைத்துக்கொண்டிருந்தார் அவர் இரண்டரை மணிக்குப் புறப்படலாம் என்று முடிவு செய்திருந்தார் அவர் புறப்படுவதற்குக் கால் மணி நேரத்திற்குமுன் ஃபோன் செய்த ஒரு நண்பர், “பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் யாராவது வந்தாக் கூட்டிக் கிட்டுப் போகப்படாதோ? இவ்வளவு தூரம் போறது தான் போlங்க. பேப்பர்லியாவது வரட்டுமே? நமக்குத் தெரிஞ்ச ரிப்போர்ட்டர் ஒருத்தர் இருக்காரு. அவருக்கே போட்டோவும் பிடிக்கத் தெரியும்…நம்ம காரிலேயே பிக்… அப் பண்ணிட்டுப் போய் வர்ரபோது கொண்டாந்து ‘டிராப்’ பண்ணிட்டாப் போதும்’–என்றார். “ஒ எஸ்! முடிஞ்சா ஃபோன் பண்ணி இங்கே வரச் சொல்லிடுங்க… நான் இன்னும் கொஞ்ச நேரம் அவருக்காக ‘வெயிட்’ பண்றேன்…” என்று கமலக்கண்ணன் அந்த நண்பரிடம் ஃபோனில் குழைந்தார். அந்த ரிப்போர்ட்டரைக் கொஞ்சம் கவனிச்சிக்குங்க… கூட்டம் முடிஞ்சதும் ஏதாவது பார்த்து…’ – “ஒ எஸ் டெபனட்லி…அதாவது…” “நாட் லெஸ் தென் ட்வெண்டிஃபைவ் ருபீஸ்…” டெலிபோன் உரையாடல் இவ்வளவில் முடிந்தது. கமலக்கண்ணன் தும்பைப்பூப் போல் கதருடைஅணிந்து– அங்கவஸ்திரத்தையும் தரித்துத் தயாரானார். ’இதென்ன கோலம்: புதுசாயிருக்கே?" – என்று மிஸஸ் கமலக்கண்ணன் வியந்தாள். . . “நீயும் வரியா?”–என்ற கமலக்கண்ணனின் கேள்விக்குப் பதில் கூறாமல் உதட்டைப் பிதுக்கினாள் அவள். பத்து நிமிஷம் கழித்து பீட்டில்ஸிலிருந்து பிரிந்து வந்த ஆள்போல் முன் நெற்றியில் சுருண்டு விழும் கிராப்பும் அரும்பு மீசையுமாக ஒரு ஸ்லாக்–பாண்ட்–ஆள் போர்டிகோவில் வந்து நின்றான். அவனுடைய தோளில் காமிரா ஒன்றும் தொங்கியது. கையில் அவனைவிடச் சற்று பருமனான ஒரு ‘லெதர் பாக்’ காட்சியளித்தது. “சார் நீங்கதானே…?’ என்று இழுத்தான் அவன். “ஆமாம்!…நான்தான்.பூமி நாயகம் அனுப்பிச்சாரா? நீங்கதானே நியூஸ் ரிப்போர்ட்டர்…” “ஆமாங்க…! கலைச்செழியன்…சீஃப் ரிப்போர்ட்டர் ஆப் டெய்லி டெலிகிராம்.” “அது சரி! உங்க சொந்தப் பேரு”. “சொந்தப் பேரே கலைச்செழியன் தானுங்க…” “சரி? புறப்படலாமா?” “ராத்திரி ஒன்பது மணிக்குள்ள திரும்பிடலாமில்லிங்களா? ஏன்னா எங்க பேப்பர் ஸிட்டி எடிஷனுக்குள்ள வந்திட்டா உங்க பேச்சும் போட்டோவும் காலைப்பேப்பர்லே வரும்படியாய்ப் பண்ணிடலாம்…” என்றுகூறியஅந்தஆள் ‘வரும்படியாய்’ என்பதை மட்டும் கொஞ்சம் அழுத்தினாற் போலிருந்தது. அந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் ரெண்டு அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு உள்ளுற நகைத்துக் கொண்டார் அந்தப் பிறவி வியாபாரி. நிருபர் முன் ஸுட்டில் ஏறிக்கொண்டார். கமலக்கண்னன் பின்னால் ஏறிக்கொண்டதும், டிரைவர் ஸ்டார்ட் செய்தான்.போர்டிகோவில் நின்று மிஸஸ் கமலக்கண்ணன் கையை ஆட்டிவிடைகொடுத்தாள். கார் கேட்டைக் கடந்து ரோடில் இறங்கி விரைந்தது.பிரயாணம் உற்சாகமாக இருப்பதை உணர்ந்தார் கமலக்கண்ணன். கிண்டியைக் கடந்து கார் விரைந்த போது குதிரைப் பந்தய மைதானத்திற்கு ஒடிப் பாசத்தோடு, ஒரு கணம் அங்கே தங்கி மீண்டது அவர் மனம். கூட வருகிற நிருபரோடு ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக சூயஸ்கெனால் விவகாரம், ஈரோப்பியன் காமன் மார்க்கெட், நாட்டோ, விட்டோ போன்றவைபற்றி ஏதோ பேச்சுக் கொடுத்தார். ஆனால் பாவம் அந்த சீஃப் ரிப்போர்ட்டருக்கு அவற்றையெல்லாம் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. கோடம்பாக்கத்திற்குப் புதிதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள், படப்பிடிப்புக்கள், இவை பற்றி மட்டுமே மளமளவென்று பேசினார். கலைச்செழியன். அதற்குபின் ராயபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு குழாயடிச் சண்டையைப் பற்றியும் வியந்து கூறினார். சண்டைபோட்ட இரண்டு பெண்களும் பரஸ்பரம் ரவிக்கையைக் கிழித்துக்கொண்டதை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்தார் நிருபர்.பேச்சை நிறுத்திவிட்டுக் காரிலேயே மெல்லக் கண்களை முடித் தூங்கத் தொடங்கினார் கமலக்கண்ணன். மறுபடி அவர் கண்களைத் திறந்தபோது கார் திண்டி வனத்துக்குப்போகிற பெரிய சாலையிலிருந்து விலகிக் காந்திய சமதர்ம சேவாசங்கம் இருந்த கிராமத்திற்குப்போகும் சிறிய செம்மண் ரஸ்தாவில் சென்றுகொண்டிருந்தது. அந்தச் சங்கம் கிராம சேவகிகளுக்குப் பயிற்சியளித்து அனுப்பும். ஒரு ‘வில்லேஜ் டிரெயினிங் சென்டர்’–போலிருக்கிறது. வெள்ளை வெளேரென்று. கதர்ப்புடவையணிந்த இளம் பெண்கள் கூட்டமும் அவர்களுடைய பிரின்ஸிபால், ஆசிரியைகளும் ஆசிரம வாசலிலேயே அவருடைய காரை எதிர் கொண்டு வரவேற்றார்கள். கமலக்கண்ணன் அங்கேயே காரை நிறுத்தி இறங்கி அவர்களோடு மேடையை நோக்கி நடக்கலானார். அப்படி அவர் அந்தப் பெண்கள் கூட்டம் புடைசூழ நடப்பதை ஒரு படம் பிடித்துக்கொண்டார் நிருபர் கலைச்செழியன். திடீரென்று அத்தனை பெண்களுக்கும் நடுவே பேசிக்கொண்டு நடந்து செல்வது சிரமமாக இருந்தது அவருக்கு “உங்களைப் போன்றவர்கள் பெரிய மனசு பண்ணினால் இந்த ஆசிரமம் எவ்வளவோ வளரமுடியும்”– என்று பேச்சோடு பேச்சாக எதையோ நினைவூட்டி வைத்தாள் பிரின்ஸிபால் அம்மாள். தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைப்பதற்குமுன் எதிர்பாராதவிதமாக இன்னொரு காரியத்தையும் அவர் செய்யவேண்டியிருந்தது. காந்திய சமதர்ம சேவா சங்கத்து ஆசிரமத்தின் புதிய ‘பிளாக்’ ஒன்றைக்கட்டுவதற்கான அஸ்திவாரக்கல்லையும் அவரை நடும்படி வேண்டிக்கொண்டாள் பிரின்ஸிபால் அம்மாள். அழகிய சிறிய வெள்ளிக்கரண்டி அவரிடம் அளிக்கப்பட்டது. அஸ்திவாரக்கல்லின் ஒர் ஒரத்தில் சம்பிரதாய மாக இரண்டு கரண்டி சிமென்ட்டை அள்ளிவைத்தார் கமலக்கண்ணன். மீதிக் காரியங்களை அருகிலிருந்த கொத்தனார் செய்துமுடித்தார். கூட்டம் தொடங்கியது.பிரின்ஸி பால் அம்மாள் கமலக்கண்ணனை வானளாவப் புகழ்ந்து வரவேற்பு மடல் ஒன்றை வாசித்துக் கொடுத்தாள். அந்த வரவேற்பில் ஆசிரமக் கட்டிட நிதிக்குக் கமலக் கண்ணன் நிதியுதவி செய்யவேண்டுமென்ற வேண்டுதலும் இருந்தது. கலைச்செழியன் ‘பளிச்’ சென்று ‘பிளாஷ்’ பல்புகள் எரியப் புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளினான். கிராமத்து மக்களுக்குக் கலைச்செழியன் அங்கும் இங்கும் தாவித்திரிந்துபோட்டோ பிடிப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பலர் படங்களில் விழவேண்டுமென்றே தலையைக் கொக்குப்போல் உயர்த்தினார்கள். சிலர் படங்களில் விழ முயன்று கீழே விழுந்தார்கள். கமலக்கண்ணன் பேச எழுந்து– ஒரு பற்றுக்கோடும் இன்றி நிராதரவாக விடப்பட்டது போன்ற சபை அச்சத்துடன் எதிரே இருந்த ஒரே பற்றுக்கோடாகிய’மைக்’ கைப்பற்றினார்… அந்தநாட்டுப் புறத்து மைக் ‘டபக்’கென்று கீழே சரிந்துவிட்டது. ’மைக்’ காரன் ஓடிவந்து சரிசெய்து பார்த்தும் அதுகமலக்கண்ணனுடைய வாய்க்குச்சரியான உயரத்தில் நிற்க மறுத்துவிட்டதனால் அவனே அதைப்பேச்சு முடிகிறவரைகையினால் தாங்கிப்பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. இந்தமுதல் பதற்றத்திலேயே கமலக்கண்ணனுக்குச் சொல்ல நினைத்த தெல்லாம்மறந்து போயிற்று. இரண்டாவதாக அவர் மென்றுவிழுங்கி ஏதோ சொல்ல முயன்று முன் வந்தபோது யாரோ மாலையோடு வந்து எதிரே நின்றுவிட்டார்கள், கடைசியில் வேறு வழியின்றி அச்சிட்டுக்கொண்டு வந்திருந்த பிரசங்கத்தை அப்படியே படிக்கத் தொடங்கிவிட்டார் அவர். அதன் பிரதிகளைக் காந்திய சமதர்ம சேவா சங்கப்பெண்கள் கூட்டத்தில் வழங்கத்தொடங்கினார்கள். கமலக்கண்ணன் வேர்க்க விறுவிறுக்க அதைப்படித்தாலும் அவர்பேசும்போது நடுநடுவே கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டுமென்று பிரின்ஸிபால் அம்மாள் முன்பே சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ, மாணவிகள் நடுநடுவே கரகோஷம் செய்து அவரை வியந்தனர். அந்தக்கரகோஷம் அளித்த உற்சாகத்தில் அச்சிட்டுக்கொண்டு வந்திருந்ததைப் படித்து முடித்த பின் அதில் இல்லாமல் தாமே துணிந்து சொந்தமாக, ‘என்னை இங்கு அழைத்துக் கெளரவித்த உங்களுடைய சங்கத்துக்கு என் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று ஒரு புது வாக்கி யமும் பேசிவிட்டார். கமலக்கண்ணன். தன்னுடைய தலைமையுரையில் பிறர் இரசிக்கவோ வியக்கவோ தகுந்த எந்த அம்சமும் இல்லையென்பது, அவருக்கே தெரிந்திருந்தது. ஆனால் தனக்கு அடுத்தாற்போல் தொடர்ந்து பேசிய ஒவ்வொருவரும் தவறாமல் தன்னுடைய தலைமையுரையைப் பற்றியே வியந்தும், புகழ்ந்தும் வானளாவத் தூக்கி விட்டதைக் கேட்கக் கேட்கத்தான் பிரமாதமாகத் தான் பேசியிருக்கவேண்டும் என்றொரு நம்பிக்கை அவருக்கே வந்து விட்டது. அச்சிட்டுக்கொண்டு வந்து படித்ததற்கே இவ்வளவு பாராட்டானால் சுயமாக எழுந்து பேசியிருந்தால் இன்னும் எவ்வளவு பாராட்டுக் கிடைத்திருக்கும் என்பதையும் இப்போதிருந்தே கற்பனைசெய்யத் தொடங்கி விட்டார் கமலக்கண்ணன். எல்லோரும் தன்னைப் புகழ்ந்து பேசும் போது மேடையில் விறைப்பாக நிமிர்ந்து உட்கார வேண்டும் போல் தோன்றியது அவருக்கு மேடையில் அதிகநேரம் உட்கார்ந்து பழக்கமில்லாத அவருக்குநடுவில் ஒரு சிகரெட் புகைக்கவேண்டுமென்று ஆசையிருந்தும் மிக வும் சிரமப்பட்டு அந்த ஆசையை அடக்கிக்கொண்டார். “ரொம்ப நல்லாப் பேசிட்டீங்க சார்” என்று நிருபர் கலைச்செழியன் மேடைக்கு வந்து அவர் காதருகே கூறி விட்டுப் போனான். அவன் அப்படிச்சொல்ல வந்தபோது, மேடையேறியதும் கமலக்கண்ணனின் அருகே நெருங்கியதும் தனக்கு அவரோடு ஒரு ‘இன்டிமஸி’–நெருக்கம் இருப்பதாகக் கூட்டத்தினருக்குக் காண்பிக்க முயல்வது போலிருந் ததே தவிரப் பேச்சைப் பாராட்டிக்கூற மட்டும் வந்ததாகத் தோன்றவில்லை. கூட்டத்தின் இறுதியில் தன்னையறியாமலே ஒரு தவறு செய்துவிட்டார் கமலக்கண்ணன். ஒலி பெருக்கிக்காரர்கள் ஒலிபெருக்கியில் பதிவு செய்த தேசீய கீதத்தைப் போட்டிருப்பதை உணராமல் எல்லோரும் ‘அட்டென்ஷனில்’ நிற்பதையும் கவனியாது மெல்ல நகரத் தொடங்கிவிட்டார். முன் வரிசையில் சிலர் அவருடைய இந்த அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டுவிட்டனர். அப்புறம் யாரோ சைகைசெய்ததைப் புரிந்து கொண்டு நகரத் தொடங்கிய இடத்திலேயே நின்றார் அவர். தேசியகீதம் முடிந்ததும் பிரின்ஸிபால் அம்மாள் அவரைத் தம்முடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று ‘விஸிட்டர்ஸ் நோட்புக்கை’ நீட்டினாள். அந்த ஆசிரமத்தை வானளாவப் புகழ்ந்து எழுதிக் கையெழுத் திட்டுக் கொடுத்தார் அவர். ஆசிரமம் தோன்றிய விதம், பணிகள் முதலியன பற்றிய சிறு சிறு பிரசுரங்களை அவருக்கு அளித்தாள் அந்த அம்மாள். “இந்த நாட்டில் காந்தியசமதர்ம வாழ்வு கிராமங்களில் எல்லாம் மலர வேண்டுமானால் ‘ரூரல்டெவலப்மெண்ட் ஸ்கீம்’ சரியாக அமையவேண்டும். ‘ரூரல்டெவலப்மெண்ட்’ சரியாக அமைவதற்கு நல்ல கிராம சேவகர்களும், கிராம சேவகிகளும் வேண்டும். நல்ல கிராம சேவகர்களும், சேவகி.களும் உருவாவதற்கு இதுமாதிரி ஆசிரமங்கள் தான் பாடுபட முடியும்” என்று அந்த அம்மாள் பிரசங்கபாணியில்விவரித்த போது, ‘சரிதான் இதுமீண்டும் நன்கொடையில் வந்துமுடியும் போலிருக்கிறது’ என்று அநுமானித்துக் கொண்டார் கமலக்கண்ணன். இந்த மாதிரி தேசிய சேவை, காந்திய தர்மம் இவையெல்லாம் அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்துக்கே புதியவை. அவருடைய தகப்பனார் யுத்த நிதிக்கு நிறையப் பணம் கொடுத்து வெள்ளைக்காரனிடம் திவான் பகதூர், சர் பட்டங்களையெல்லாம் பெற்றிருந்த ஒரு ஜஸ்டிஸ் கட்சிக்காரர். மிகமிக ‘கன்சர்வேடிவ்’ ஆசாமி. அவர் காலமான பின்பும் அவருடைய அபிப்பிராயங்கள், கொள்கைகளே நீண்டநாள் அந்தக் குடும்பத்தில் நிலவின. காலநிலையை உத்தேசித்துக் கமலக்கண்ணன் தான் படிப்படியாக மாறினார். அப்படிப்பட்ட குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவருக்கு ‘ரூரல் டெவ்லப் மெண்ட்’ போன்ற தொடர்கள் திடீர் திடீரென்று காதில் விழத் தொடங்கினால் அவற்றைப் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் சிரமமாயிராதா என்ன? நீண்ட நாள்வரை அவருடைய வீட்டில் மாட்டத்தகாத படங்கள் என்ற வரிசையில் காந்தி, சுபாஷ், நேரு, பாரதியார் போன்றவர்களின் படங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. தகப்பனார் காலமானபின்பே இந்தத் தடை மெல்லமெல்ல நீங்கியது. தடைநீங்கியது என்றாலும் முதல்முதலாக அந்தப் படங்களைச் சுவர்களில் மாட்டும் துணிவு யாருக்கும் வரவில்லை. கமலக்கண்ணனுக்கு வேண்டிய வியாபாரிகள் சிலருடைய கம்பெனிக் காலண்டர்களில் மேற்படியார்களுடைய படங்கள் வரநேர்ந்ததால்–அந்தக் காலண்டர்கள் அவருடைய வீட்டில் மாட்டப்படவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயின. ஆனால் அந்தக் குடும்பத்தைப்பொறுத்தவரை கமலக்கண்ணனின் இந்த மாறுதல் ஒரு ‘டிரான்ஸ்மிஷன் பீரியட்’ என்றுதான் சொல்லவேண்டும். அதனால் தான் இருந்தாற்போலிருந்து காந்தியம், கிராம வளர்ச்சி, கிராம் சேவகர் என்ற பெயர்களைக் கேட்டவுடன் மிரண்டார் அவர். கடைசியில் பிரின்ஸியால் அம்மாள் நேர்டியாகவே பேச்சைத் தொடங்கினாள். " ‘புது பிளாக்’ கட்டுவதற்கு நீங்களெல்லாம் நிறைய உதவி செய்ய வேண்டும்… உங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கும் எடுத்துச் சொல்லணும்…" “பார்க்கலாம்! நல்ல காரியங்கள் தெய்வசித்தத்திலே தான் நடக்கணும்” என்று பட்டுக்கொள்ளாமல், ‘நான் கமிட்டலாக’ பதில் கூறினார் கமலக்கண்ணன். “உங்களைப் போன்றவர்கள்தான் இன்னிக்கு தெய்வங்களுக்குச் சமானம்” என்று விடாமல் மேலும் தொற்றிக்கொண்டே பேசினாள் அவள் . கமலக்கண்ணன் காரை நோக்கி மெதுவாக நகர்ந்தார். கலைச்செழியன் ஏற்கெனவே தயாராக முன் வீட்டில் உட்கார்ந்திருந்தபடியால் பின் தொடர்ந்து வந்திருந்த எல்லாரையும் நோக்கிக் கைகூப்பி விட்டுக் காரில் ஏறினார் கமலக்கண்ணன். “சீக்கிரமாப் போயிட்டா நியூஸை ஸிடி எடிஷன்லியே சேர்த்துப்பிடலாம்’ என்று கலைச்செழியன் மீண்டும் கமலக்கண்ணனை நோக்கி வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே கூறினான். கமலக்கண்ணன் டிரைவரிடம், ‘முடிஞ்ச வரைக்கும் வேகமாகத்தான் போயேன்’ என்று அவசரப்படுத்தினார். கார் விரைந்தது. பகுதி -4 அவ்வளவு நேரம் ‘சிகரெட்’ பிடிக்காமலிருந்துவிட்ட தியாகத்தை அப்போதுதான் நினைவு கூர்ந்தவர்போல் முன் ஸீட்டில் அமர்ந்திருந்த நிருபர் கலைச்செழியனிடம் ஒரு மரியாதைக்காக சிகரெட் பாக்கெட்டை எடுத்து. நீட்டினார் கமலக்கண்ணன். நிருபர் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டபின்– கமலக்கண்ணன் புகைபிடிக்கத் தொடங்கினார். கார் விரைந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் பேசாமல் பிரயாணத்தைத் தொடர்வது சூழ்நிலையைக் கடுமையாக்கவே – ஏதாவது ஒரு கல்லிடமாவது இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் போன்ற அந்தத் தவிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காகக் கமலக்கண்ணன் பேச்சுக் கொடுத்தார். “உங்க பேப்பர் என்ன ‘சர்குலேஷன்’ இருக்கும்?” “மூண்ரை லட்சத்துக்குமேலே போவுது சார்! வியாழக்கிழமை எடிசன் மட்டும் அரை லட்சம் கூடவே போவுது, அன்னிக்கி ராசி பலனும் சினிமாப் பக்கமும் உண்டு” “ஆமாம்! நான்கூடப் பார்த்திருக்கேன், ராசிபலனுக்கு எப்பவும் ஒரு மவுஸ் இருக்கு…” “சினிமாவுக்கு– அதைவிட கிராக்கி இருக்கு சார்!”– என்று அவருடைய அபிப்பிராயம் கலைச்செழியனுடைய திருத்தப் பிரேரணையோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பர்ஸை மெல்லத்திறந்து இரண்டு பத்துரூபாய் நோட்டுக்களையும், ஒர் ஐந்துரூபாய் நோட்டையும் நாசூக்காக உருவி எடுத்துக்கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன். “நம்பளுக்குள்ள இதெல்லாம் எதுக்கு சார்?”– என்று குரலை இழுத்தபடியே ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்ட நிருபரிடம் “பரவாயில்லை! வச்சிக்குங்க” – என்று அவசியமில்லாமலேயே வற்புறுத்தினார் கமலக் கண்ணன். அவன் ‘நம்பளுக்குள்ள’ என்று சமதை கொண்டாடியதை மட்டும் அவரால் ரசிக்க முடியவில்லை. “ஆமாம்! உங்க பத்திரிகையோட முதலாளி முன்னாலே வேறே பிஸினஸ் பண்ணிட்டிருந்தாரில்ல…?” “வேலூர்லே கள்ளுக்கடை வச்சிருந்தார். மதுவிலக்கு வந்தப்பறம்தான் இந்தப் பத்திரிகையை ‘ஸ்டார்ட்’ பண்னினார். இப்ப இதுலேயும் நல்ல லாபம்தானுங்க… “வெளியூரிலே எல்லாம்கூட எடிசன் இருக்குப் போலிருக்கே?” “ஒவ்வொரு ஊரிலேயும் தனித்தனி எடிசன் போடறதினாலே பல செளகரியம் இருக்குங்க…” – இப்படியே அவர்களுடைய உரையாடல் வளர்ந்தது. கார் மர்மலாங்பாலத்தைக்கடந்து சைதாப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ஒரு டாக்ஸ் ஸ்டாண்டில் நிறுத்தச்சொல்லி நிருபர் இறங்கிக்கொண்டபின் கமலக்கண்ணன் வீடு திரும்பியபோது மணி இரவு பத்துக்கு மேலும் ஆகிவிட்டது. வீட்டில் சமையற்காரனையும், கூர்க்காவையும், பின் கட்டில் தாயையும் தவிர யாரும் இல்லை. ஓர் கால்மணி நேரம் முன் ஹாலில் கிடந்த ஆங்கில மாலைத் தினசரியைப் புரட்டுவதில் கழிந்தது. அப்புறம் இரண்டொருவருக்கு ஃபோன்செய்து மாலையில் காந்திய சமதர்ம சேவாசங்கக் கூட்டத்தில் தாம் பேசிய சிறப்பை விவரித்தார். வேறு சிலருக்கு ஃபோன்செய்து ரேஸ் முடிவுகள் பற்றி ஆர்வமாக விசாரித்தார். அதற்குள் மனைவியும் குழந்தைகளுமாகக் காரில் திரும்பிவந்து இறங்கினார்கள். – “என்ன, கூட்டம் பிரமாதமாக்கும்?”– என்று மனைவி கொஞ்சம் கேலி கலந்த குரலிலேயே விசாரித்தாள். “என்னைக் கேட்காதே; நாளைக்குக் காலைத் தமிழ்ப் பேப்பரைப் பார்…” என்று. ஜம்பமாகவே பதில் கூறினார் கமலக்கண்ணன். தன்னுடைய முதற் கூட்டத்தையும், சொற்பொழிவையும் பற்றி அவள் இளக்காரமாகப் பேசுவதை உள்ளூர அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. டைனிங்டேபிளில் எல்லாரோடும் உட்கார்ந்து சாப்பிடும்போது திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவர் போல், “நாளைக்குக் கடைவீதிப்பக்கம் போனாத் தேவராஜமுதலி தெருவிலே படக்கடையிலே பெரிய காந்தி படமாப் பார்த்து ஒண்னு வாங்கிட்டுவந்து முன்னாலே மாட்டிடணும். மறந்துடாதே”– என்று சமையற்காரனிடம் உத்தரவு போட்டார் கமலக்கண்ணன். “காந்தி படத்தையா சொல்றீங்க?”–என்று மீண்டும் சந்தேகத்தோடு கேட்டுக் கமலக்கண்ணன் தலையை அசைத்தபின்பே சமையற்காரன் தனக்கு இடப்பட்ட உத்தரவை உறுதி செய்துகொள்ள முடிந்தது. படம் முன் ஹாலின் முகப்பில் நுழைந்தவுடன் எல்லார் கண்களிலும் படக்கூடியதாகவும், பெரியதாகவும் இருக்க வேண்டு மென்று கமலக்கண்ணனே மேலும் விவரித்துக் கூறினார். சமையற்காரன் பயபக்தியோடு கேட்டுக்கொண்டான். அவனுக்கு அந்த வீட்டில் இத்தகைய புரட்சிகள் எல்லாம் திடீர் திடீரென்று நிகழ்வது புதுமையாகவும், விநோதமாகவும் தோன்றியிருக்க வேண்டும். சாப்பாட்டிற்குப்பின் மனைவியோடு அமர்ந்து சிறிது நேரம் செஸ் விளையாடினார். பின்பு அவள் துப்பறியும் நாவல் படிக்கப்போய்விடவே அவர் தீராத தாகத்துடன் தமது பிரத்யேக அறையில்நுழைந்தார். உள்ளே அழகிய சிறிய வட்டமேஜையின்மேல் எல்லாம் இருந்தன. விதவிதமான வடிவமுடைய கிளாஸ்கள், கலந்துகொள்ளசோடா, மதுபான வகைகள் எல்லாம் இருந்தன. ‘பெர்மிட்’ சிறிய அளவுக்கானாலும் இத்தகைய ருசிகளில் பஞ்சம் ஏற்படும் படி விடுவதில்லை அவர். குடிக்கிற நேரங்களில் மட்டும் இடையிடையே புகைப்பதற்கு சிகரெட் போதாது அவருக்கு. அப்போது மட்டும் நல்ல காரமான சுருட்டுகள் அல்லது ஸ்பென்சர் விகார்ஸ் வேண்டும் அவருக்கு. இந்தப் பழக்கங்கள் எல்லாம் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாகவந்து விட்டவை. சிலசந்தர்ப்பங்களில் பெரியமனிதத்தன்மையை இவற்றாலும்தான் நிரூபித்துக்கொள்ள நேரிடுகிறது. சுக போகங்களைத் தவிர வேறு எவற்றின் மேலும் அதிகமான பக்தி செலுத்தியிராத ஒரு குடும்பம் அது. அப்படிப்பட்ட போகங்களில் ஒன்றை அடையத் தொடங்கியபின் இரவும் பகலும் கூடத் தெரியாமல் போய்விடுவது இயல்புதானே? மறுநாள்காலை விடிந்ததும்– விடியாததுமாகத்தமிழ்த் தினசரியைத் தேடிப்பிடித்து வாங்கிவரச்சொல்லி அதன் முகத்தில் தான் விழித்தார் கமலக்கண்ணன். அவர் காந்திய சமதர்ம சேவாசங்கத்தில் பேசிய பேச்சு– புகைப்படம் எல்லாம் அதில் வெளிவந்திருந்தன. ஆனால் அவர் நல்ல அர்த்தத்தில் நல்ல வாக்கியத்தில் விளக்கியிருந்த ஒரு கருத்துக்கு ‘பெண்கள் வரவர மோசமாகிவிட்டார்களே!– பிரமுகர் கமலக்கண்ணன் வருத்தம்’ என்று ஒரு தினுசான மஞ்சள் கவர்ச்சியுடன் நாலுகாலம் தலைப்புக்கொடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் இரவு காரில் திரும்பும்போது இந்தப் பத்திரிகையை நடத்துகிறவர் நீண்ட நாட்களுக்குமுன் கள்ளுக்கடை வைத்திருந்ததாக அந்த நிருபர் கூறியதை நினைவுகூர்ந்தார் கமலக்கண்ணன். கள்ளிலிருந்து பத்திரிகைவரை எதைவிற்றாலும் வாங்குகிறவர்களைப்போதை யூட்டி விற்கும் அந்தத் தொழில்திறனை – அதே அளவு தொழில் திறனுள்ள மற்றொரு வியாபாரி என்ற முறையில் கமலக்கண்ணன் இப்போது மனத்திற்குள் வியந்தார். பத்திரி கையை எடுத்துப்போய்த் தான் பேசியிருந்த செய்தியும் புகைப்படமும் அடங்கிய பக்கத்தை மனைவியிடம் காண்பித்தார். அதைப் பார்த்துவிட்டு ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே, ‘அடேயப்பா! பெருமை பிடிபடவில்லை’– என்றாள் அவருடைய மனைவி இதற்குள் அவருடைய வியாபார நண்பர்கள் சிலரிடமிருந்து, ‘பத்திரிகையில் அவர்பேசிய செய்தியும், படமும் வெளி வந்தது பற்றி’ போனிலேயே அன்பான விசாரணைகளும் தொடர்ந்து வரத்தொடங்கி விட்டன. அப்படி விசாரணைகளையும் பாராட்டுக்களையும், கேட்கக் கேட்க இந்தச் சமூகத்துக்கு எல்லாத் துறையிலுமே வேண்டிய அறிவுரைகளையும், உபதேசங்களையும், அளிக்கிற தகுதி. முழுவதும் தனக்கு வந்துவிட்டதுபோல் ஓர் பெருமிதஉணர்வு கமலக்கண்ணனுக்கு ஏற்படத்தொடங்கி விட்டது. அந்தப்பெருமை குளிருக்கு இதமாக நெருப்புக் காய்வது போன்ற சுகத்தை அளிப்பதாக இருந்தது. வழக்கத்துக்குவிரோதமாக இருந்தாற்போலிருந்து அவருடைய உதடுகள் ஏதோ ஒரு தெரிந்த பாடலைச் சீட்டியடிக்கத் தொடங்கின. சோப்புப் டவலுமாகப் பாத்ரூமிற்குள் நுழையும் விடலை வயதுக் கல்லூரி மாணவனைப் போல் உற்சாகமாக ஏதோ பாடவேண்டும் என்று தோன்றியது. அவருக்கு முதலாளியின் மனநிலையைக் கணிப்பதில் வேலைக்காரர்களை மிஞ்சிய மனோதத்துவ நிபுணர்கள் உலகில்.இதுவரை ஏற்பட்டுவிடவில்லை என்று தோன்றுகிறது. சமையற்காரன் அவருக்குக் காலை காப்பி கொண்டுவந்து கொடுக்கும்போதுகாபியை டைனிங்டேபிளில் வைத்துவிட்டுத் தலையைச் சொரிந்து கொண்டே ஏதோ செலவுக்கு ஐம்பது ரூபாய் பணம் வேண்டுமென்று விநயமாகக்கேட்டான். ‘ஓ! பேஷாக…வாங்கிக்கொள்! நான் சொன்னேனென்று அம்மாவிடம் சொல்லு தருவாள்’ என்று அதற்கு இணங்கினார் கமலக்கண்ணன், இங்கே அவர் அம்மா என் றது மனைவியை. தாயாரைக் குறிக்கும்போது. பெரிய ‘அம்மா’…என்று அடைமொழி தருவதுவழக்கம். பங்களாவின் உள்கூடத்தில் மூலை அறையில் நீண்டி நாட்களாகப் படுத்த படுக்கையாக இருந்த நடமாட முடியாத – தன் தாயாரைப் பார்ப்பதற்காகப் போன கமலக்கண்ணன் – அன்று தாயிடம் கனிவாகவே இரண்டு வார்த்தைகள் விசாரித்தார். பார்வை மங்கிய அந்த மூதாட்டியின் மூக்குக்கண்ணாடியைத் தாமே மாட்டி விட்டுத் தமிழ்த்தினசரியில் வந்திருந்த தமது புகைப்படத்தையும், செய்தியையும்காட்டினார். “என்னமோ…அந்த முருகன் புண்ணியத்திலே நீ எவ்வளவோ நல்லாயிருக்கணும். உங்க நாயினா வார் ஃபண்டுக்குப் பணம்கொடுத்தப்ப அவரைப்பத்தி பேப்பர்காரன்லாம் இப்படித்தான் நெறைய எளுதினான். அதுக்குப்பெறவு இப்பத்தான் இப்பிடில்லாம் வருது…இதைப்பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு…”–என்றாள் அந்த அம்மாள். – அந்தக் குடும்பத்தில் ஆண்கள் என்றுமே அதிகம் பக்தர்களாக இருந்ததில்லை. பெண்கள் ஒவ்வொரு தலை முறையிலும் பக்தி– நியாயம்– பழைய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் விடாமல் பேணி வந்திருக்கிறார்கள். இந்த மூதாட்டியும் அப்படித்தான் என்பதைத் தன் வார்த்தைகள் மூலமே விளக்கினாள். அந்த அம்மாளின் – கணவர் கமலக்கண்ணனின் தந்தை ஜஸ்டிஸ் கட்சி– நாஸ்திக மனப்பான்மை இரண்டும் அளவாகக் கலந்திருந்தவர். ஆனால் தம் மனைவியை அவரால் கொள்கை மாற்றம் செய்ய முடிந்ததே இல்லை. மாறாக மனைவியால் கடைசி காலத்தில் முதுமையில் கமலக்கண்ணனின் தந்தையும் கொஞ்சம் பக்தராக மாறினார். அந்திம தசையில் ஆஸ்திகவிஷயமூமாகவும்– கோயில் கட்டிடநிதிகள் வகையிலும் கொஞ்சம் தாராளமாகவே கூட இருந்தார் கமலக்கண்ணன் தலையெடுத்த காலத்தில் குடும்பத்தில் இந்த நிலைமை முற்றிலுமே மாறி விட்டது. நாட்டிலும்தேசிய நிலைமைகள் வளர்ந்து வெற்றி பெற்றுவிட்டன. எனவே புதியமாறுதல் தேவையுமாயிற்று. ‘அடித்தளக் கல் நாட்டியவர்– பிரபல தொழிலதிபர் திரு.கமலக்கண்ணன் அவர்கள்’–என்று முதல்நாள் மாலை தாமே நாட்டிய சலவைக்கல்லில் பொறித்திருந்த தம்முடைய பெயர் அவருக்கு நினைவு வந்தபோது அந்த மாதிரித் தம் பெயரைக் கல்மேல் எழுதிய அவர்களுக்கு மேலும் ஏதாவது உதவ ஆசைப்பட்டார் அவர். அப்படி உதவலாமா என்பதையும் தாயிடம் கலந்தாலோசித்தார். “ஏற்கெனவே அவங்களுக்கு ஒரு மூவாயிரம் நன்கொடையாகக் கொடுத்திருக்கேன். இப்ப கட்டிட நிதிக்கின்னு தனியாக் கேக்கிறாங்க. நீ என்னம்மா நினைக்கிறே? இன்னொரு ஐயாயிரம் கொடுத்துடலாமா?” இன்கம்டாக்ஸ்_காரன் கொண்டு போறதை இவுங்கதரின் கொண்டு போகட்டுமே…?“_ “கட்டாயம் கொடுடா கமலு! தருமம் வீண்போவாது! இவ்வளவெல்லாம் பேர் போட்டிருக்கறப்ப நாமளும் பதிலுக்கு ஏதாச்சும் உபகாரம் பண்ணனுமில்லை?” என்றாள் அந்த அம்மாள். “நாளைக்கு இன்னொரு ஐயாயிரத்துக்குக் ‘செக்’ போட்டு அனுப்பிச்சிடறேன்” என்று தானே முடிவு செய்ததை அழ்மாவிடம் இணங்குவது போல் வெளியிட்டார் கமலக்கண்ணன். தாயிடம் பேசிவிட்டு அவர் மறுபடி முன்ஹாலுக்கு வந்தபோது–அவரைக் காண்பதற்கு யாரோ சிலர் காத்திருப்பதாக வேலைக்காரன் வந்து தெரிவித்தான். “யாருன்னு கேட்டுக்கிட்டு வா!” என்று வேலைக் காரனை அனுப்பிவிட்டு உள்ளேயே தயங்கி நின்றார் அவர். யாராயிருந்தாலும் வந்திருப்பவர்களை உடன் பார்க்க வேண்டும் போலவும், உபசரிக்கவேண்டும் போலவும் அப்போதைய மனநிலை இருந்தது. ஆனாலும் யாரென்று தெரிந்துகொள்ள விரும்பினார். வேலைக்காரன் இரண்டு நிமிஷத்தில் திரும்பி வந்து, “யாரோ கோவில் ஆளுங்க. ஏதோ கடம்பவனேசுவரர் கோயில் நிதியாம்”– என்றுதெரிவித்தான். கமலக்கண்ணன் உடனே பாத்ருமில் நுழைந்து அவசர அவசரமாக முகம் கழுவி நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு வெளியேவந்தார். “வாங்க! வாங்க…ஏது இப்படிப் பெரியவங்கள்ளாம் காலங்கார்த்தாலே என்னைத் தேடிக்கிட்டு” என்று வந்திருந்தவர்களைப் புன்முறுவலோடு வரவேற்றார். “ஏதோ இன்னிக்கார்த்தாலே உங்க தரிசனம் கிடைக்கணும்னு கடம்பநாதன் கிருபை பண்ணியிருக்கான்…” வந்தவர்களில் முக்கியமானவர் பேச்சைத் தொடங்கினார். “செக் அனுப்பிச்சேனே? கிடைச்சிதா…” என்றார் கமலக்கண்ணன். ‘கிடைச்சது மட்டுமில்லே! புனருத்தாரண நிதிக்கு முதல் ’செக்’ ஐயாயிரத்துக்கு உங்ககிட்டருந்து தான் வந்திருக்கு. மினிஸ்டர் விருத்தகிரீசுவரன்தான் நம்ம நிதிக் குழுவுக்குக் கெளரவத் தலைவர். அவர்கிட்ட உங்க ‘செக்’ விஷயத்தைச் சொன்னோம். உடனே, “அப்பிடியா!கடம்பநாதன் நம்ப கமலக்கண்ணனை முதல் ,செக்’ அனுப்பப் பண்ணியிருக்கான். அவரையே நிதிக் கமிட்டிக்கு வைஸ்பிரஸிடெண்டா இருக்கச் சொல்லிப் பகவானே கிருபை செய்யறான். நான் சொன்னதாகச் சொல்லி அவாளைக் கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக இருக்கச் சொல்லிக் கேளுங்கோ”ன்னுட்டார். நீங்க தட்டிச் சொல்லாம ஒத்துக்கணும். இது எங்க எல்லாருடைய அபிப்பிராயம் மட்டுமில்லை. ஈசுவர கிருபையும் உங்களுக்கு இருக்கு" என்றார்கள் யாவரும். “எனக்கு, அத்தனை தகுதி ஏது?” என்று விநயமாகக் குழைந்தார் கமலக்கண்ணன். “அப்படியில்லை. இந்த விநயமே ஒரு பெரிய யோக்கியதைதான்” என்றார் வந்தவர்களில் சாதுரியமாகப் பேசத் தெரிந்த ஒருவர். ’அதுக்கில்லே! நான் வியாபாரி. பல அலைச்சல் உள்ளவன். நினைச்சா டில்லி, கல்கத்தா, பம்பாய்னு பறந்துடுவேன்…" “கண்டிப்பா நீங்கதான் இருக்கணும்னு பகவானே நியமிச்சுட்டார்…” “மினிஸ்டர் கூட அபிப்ராயப்படறாராக்கும்…” “ஆமாம்! அவாளே உங்களுக்கு ஃபோன் பண்ணாலும் பண்ணுவா…நீங்க மறுத்துச் சொல்லப்படாது…” “நீங்க இத்தனைபேர் வந்து சொல்றப்ப எப்படி மறுக்கிறது..?மினிஸ்டர்வேறே அபிப்ராயப்படறார்ங்ரீங்க…” கமலக்கண்ணன் அந்தக் கோயில் புனருத்தாரண நிதிக் கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக இருக்க இண்ங்கினார். பின்பு மெல்ல, “கமிட்டியிலே வேறே யார் யார் லாம் இருக்கா…?” என்று கேட்டார். “குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையாசெட்டியார், கொச்சின்சா மில்ஸ் குமாரசாமி ஐயர், குபேரா பேங்சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் கமிட்டிலே இருக்கா…இனிமே ‘வைஸ் பிரஸிடெண்ட்’தான் கமிட்டியையே கூட்டணும். ’செக்ரட்ரி’ ஒருத்தர் ‘எலெக்ட்’ பண்ணனும். வைஸ் பிரஸிடெண்டாகிய தனக்குக் கீழே இத்தனை லட்சாதிபதிகளும், தொழிலதிபர்களும், கமிட்டியில் இருப்பதாகக் கேட்டபோது அந்தப் பெருமையை வெளியே காண்பித்துக் கொள்ளாமல், “ஆமாம்! குப்புசாமிநாயுடு அமெரிக்கா போயிருக்கறதாக யாரோ சொன்னாங்களே? வந்துட்டாரா?” என்று விசாரித்தார். “வந்து விடுவார். இந்த வாரம் திரும்பி வரணும்” என்று வந்திருந்தவர்களில் ஒருவர் பதில்கூறினார். உடனே உட்புறம் திரும்பி எல்லாருக்கும் ‘காபி’ கொண்டுவரச் சொல்லிக் குரல் கொடுத்தார். “எதுக்குங்க;இப்பதான் காபி குடிச்சிட்டு வரோம்…” என்று வந்திருந்தவர்களும் உபசாரத்துக்காக மறுத்தார்கள். “அப்படிச் சொல்லப்படாது” என்று கமலக்கண்ணனும் உபசாரத்துக்காக வற்புறுத்தினார். கடைசியில் எல்லாரும் காபி குடித்துவிட்டே புறப்பட்டார்கள். போர்டிகோவரை சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய பின்பே, ‘மினிஸ்டர் விருத்தகிரீஸ்வரனிடமிருந்து டெலிபோன் வந்தாலும் வரும்’ என்பதாக அவர்கள் கூறிச் சென்றது நினைவு வந்தது அவருக்கு. அவர் தனக்குப் ஃபோன் பண்ணுகிற வரை காத்திருக்கப் பொறுமை இன்றித் தானே அவருக்கு ஃபோன் செய்துவிட வேண்டுமென்ற துறுதுறுப்பு உண்டாயிற்று கமலக்கண்ணனுக்கு டைரக்டரியில் நிறம் மாறிய பக்கத்தில் நம்பரைத் தேடிப்பிடித்து மினிஸ்டருக்கு ஃபோன் செய்தார் கமலக்கண்ணன். முதலில் வேறு யாரோ எடுத்தார்கள். அப்புறம், மந்திரி பேசினார். மந்திரியே மாபெரும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும், அடடா! நானே உங்களுக்கு டெலிபோன் செய்ய வேண்டுமென்றிருந்தேன். மறந்துபோய் விட்டது" என்பதாகப் பேச்சைத் தொடங்குவாரென்று கமலக்கண்ணன் எதிர்பார்த்தார், ஆனால் எல்லாமே முற்றிலும் மாறாக இருந்தது. மந்திரி ஒரு விநாடி தடுமாறி கமலக்கண்ணனா? எங்கேயிருந்து பேசறீங்க?" என்று கேட்ட பின்பே பேசுவது யர்ரென்று அடையாளம் கண்டுகொண்டார். அதன்பின் கமலக்கண்ணனே வலுவில். “நம்ம கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தராண நிதிக்கு நான் ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கேன்” என்று. ஆரம்பித்தபோதும், “தெரியுமே! அதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களைத்தான் உபதலைவராய்ப்போடணும்னு கூடச் சொல்லி அனுப்பிச்சேனே” என்றும் மினிஸ்டர் கூறி விடவில்லை. “அப்பிடியா ரொம்ப நல்லது” என்று அந்தத் தகவலையே இப்போதுதான் முதல் முறையாக் கேட்பவர் போல மந்திரி வியந்தார். வந்திருந்த நிதிக் குழுவினர் தன்னிடம் மந்திரி பெயரை உபயோகித்துக் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டதை அவர் இப்போது புரிந்து கொண்டார். தனது ஏமாற்றம் மந்திரிக்குத் தெரியா தீவகையில் அவரிடம் பேச்சை முடித்துக் கொண்டு, டெலிபோனை ரெஸ்ட்டில் வைத்தார் கமலக்கண்ணன், ஒரு வியாபாரி என்ற முறையில் இப்படிப் பெரிய பெயரை உபயோகித்துப் பெரிய காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் ஒரு லெளகீக தந்திரம். ஆகையால் ‘நிதிக்குழுவினர்’ மேல் அவருக்குக் கோபம் வரவில்லை. மாறாக அவர்களது சமயோசிதத்தை அவரும் மனத்திற்குள் பாராட்டவே செய்தார். ‘என்ன விஷயம். ஏதோ டெலிபோன்லே பேசிட்டிருந்தீங்களே?’ என்று மனைவி விசாரித்தபோதுகூட, “ஒண்னு மில்லே! கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரணக் கமிட்டிக்கு நான்தான் ‘வைஸ் பிரசிடெண்டா’ இருக்கனும்னு மினிஸ்டரே வற்புறுத்தினார்” என்றுதான் பதில் வந்தது அவரிடமிருந்து. லெளகீகத்தை அதில் தேர்ந்த மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு அவர் எப்போதுமே தயங்கியதில்லை. இப்போதும் அப்படி ஓர் லெளகீகத்தை அவர்கள் இன்று தனக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனதாக நினைத்துப் பெருமைப்பட்டாரே ஒழிய அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் நினைக்கவே இல்லை. ‘நல்ல வியாபாரி ஒரு தடவை தான் ஏமாறும்போது அதிலி ருந்து பலரை ஏமாற்றுவதற்கான பலத்தைப்பெறுகிறான்’ என்பது கமலக்கண்ணனின் சித்தாந்தம். இந்தச்சித்தாந்தத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது. இந்த விஷயத்தை வேறுபல நண்பர்களிடம் கூற நேர்ந்தால், கூட இன்மேல், ‘மினிஸ்டரே நான்தான் உபதலைவரா இருக்கனும்னு ரொம்ப வற்புறுத்தினார்’ என்பதாகச் சொல்வதைத் தவிர வேறுவிதமாகச் சொல்ல அவரால் முடியாது. அந்த அளவு பிறர் சாமர்த்தியத்தால் நிரூபணமாகும் உபாயங்களைக்கூடத் தன் சாமர்த்தியத்தால் இடம் விட்டு ஏற்றுக் கொள்ளும் உலகியல் ஞானத்தை அவர் பெரிதும் போற்றி வந்தார். வியாபாரி ஒருவன் சுலபமாக அரசியல் பிரமுகனாக முடிவதற்கும் பள்ளிக்கூட ஆசிரியன். ஒருவன் சுலபமாக அரசியல்வாதியாக முடியாததற்கும். இதுதான் காரணமாக இருக்க்வேண்டும் போலிருக்கிறது. நியாயமான திறமை வேறு; திறமையான சாகஸம்வேறு. திறமையான சாகஸம் உள்ளவர்கள் வெற்றிமுனையில் உள்ள காலம் இது. ஆகவே தான் கமலக்கண்ணன்கால தேசவர்த்தமானங்களைப்புரிந்து கொள்ளவும் அதன்படி மாறவும், வளையவும் தெரிந்து கொண்டிருந்தார். பணம் இருந்தாலும் அன்த ஒரு சாக்ஸமாக்கிப் புகழ்பெற வழி தெரிய வேண்டுமே? அது தெரியா விட்டால் என்ன இருந்தும் பயனில்லை. கமலக்கண்ண்னுக்குப் புகழடையும் வழிதுறைகளும் புலப்பட்டது அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தேசிய உணர்வுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அப்படி ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று அவருக்கு ஏற்பட்டிருந்தது. அதேபோல் பக்தி பூஜை, புனஸ்காரத்திற்கு அரசியல் ரீதியாகவும், மனப்பான்மையின் படியும் அந்தக் குடும்பத்து முன் தலைமுறை ஆடவர்களிடம் இடமில்லை. இன்று பலரோடு பழகி ஒட்டிக் கொள்வதற்கு அதுவும் ஒரு தேவை ஆகிவிடவே அவரால் தவிர்க்க முடியவில்லை. சர். பட்டம்பெற்றவர்கள், ஜஸ்டிஸ் கட்சி ஜமீன்தார்கள், வெள்ளைக்கார கவர்னர்கள் தவிர வேறெவருடைய படங்களும் அந்த பங்களாவின் சுவர்களில் முன்பு இடம் பெற்றதே இல்லை. இப்போதோ காந்திபடமும்,நேரு – படமும், பாரதியார் படமும் இடம் பெறுகிற நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க முடியவில்லை. இந்த மாறுதலுக்கு எல்லாம் வளைந்து கொடுத்துத்தான் தம்முடைய உள்ளத்தின் எதிர் கால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். பட்டம், பதவி, அதிகாரம் இவற்றையெல்லாம் அடைய ஆசைப்பட்டுத் தவிக்கும் காலங்களில் தன்மானம், தார்மீகக் கோபம் போன்றவற்றைக்கூட விட்டுவிட வேண்டும், அவற்றை எல்லாம் விடாமல் கட்டிக்கொண்டு பிடிவாதம் பிடித்தால் அடைய வேண்டியவற்றை அடைய முடியாமல் கூடப் போகும். அதனால் தான் மந்திரி விருத்தகிரீஸ்வரன்போனில் அப்படிப் பேசிய போது கூட அவரைவிடச் செல்வமுள்ளவராக இருந்தும், அதைத் தாங்கிக் கொண்டார் கமலக்கண்ணன். என்றாவது ஒருநாள் இப்படி மந்திரிகளை எல்லாம் அதிகாரம் செய்யும் இடத்துக்குகூடத் தான் வரமுடியும் என்ற நம்பிக்கை அவருள் இருக்கும்போது இதென்ன பெரிய விஷயம்? இன்று தன்னைத்தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை எல்லாம்தான் பழிவாங்குவதற்கு ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது இன்று இவ்வளவு பதவி இறுமாப்புடன் இருக்கும் இதே விருத்தகிரீசுவரன் நாளை உலகத்திற்கும் கமலக்கண்ணனுக்குமே தெரியாதவராகப் போய்விடலாம். ‘அடுத்த தேர்தலில் யார் எப்படி ஆவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாதல்லவா?’ என்று ஆறுதலாக எண்ணினார் கமலக்கண்ணன். பகுதி -5 கமலக்கண்ணன் மந்திரி விருத்தகிரீசுவரனுக்கு ஃபோன் செய்து பேசிய இரண்டு நாட்களுக்குப் பின் அவரையே கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரணப்பணி ஆரம்ப விழாவில் நேரில் காண நேர்ந்தது. நேரில் சந்தித்தபோது மந்திரியும் கூடக் கமலக்கண்ணனிடம் தேனாகக் குழைந்தார். உங்களைப் போலிருக்கிற இண்டஸ்டிரிலியஸ்ட்களெல்லாம் பொதுக்காரியங்களிலே இப்படி நிறைய ஈடுபடனும் – என்று கமலக்கண்ணனைத் தூக்கிவைத்துப் பேசினார். கமலக்கண்ணன் அன்று மிகமிக மாறிய கோலத்தில் கோவிலுக்கு வந்திருந்தார். அரை வேட்டியும் இடுப்பில் தூக்கிக் கட்டிய மேலாடையுமாகத் திறந்த மார்புடன் அவரைப் போன்றவர்கள் வெளியில் தென்படுவது. அபூர்வும் தான். ‘ஒரு நாளும் இப்படி வராதவர் இன்று கோவில் காரியத்துக்காக இப்படி வந்திருக்கிறாரே?’– என்று பாமரர்கள் அதையும் வியக்க வேண்டுமென்பது தான் அவருடைய அந்தரங்க ஆசை. ஒரு தலைமுறைக்கு முன் என்றால் ஒரே மனிதன் ஆஸ்திகனாகவும் நாஸ்திகனாவும் கலந்து இருக்க முடியும் என்பது அசாத்தியம் மட்டுமல்ல, அசம்பாவிதமும்கூட. இந்தத் தலைமுறையிலோ அதுவும் கூட முடியும். கமலக்கண்ணன் பக்தியைப்பற்றி அதிகம் தெரியாதவர். ஒரே மனிதன் ரேஸ், சீட்டாட்டம், பரத நாட்டியம், சங்கீதம், மது கடைசியாகக் கொஞ்சம் கடவுள் இவ்வளவின் மேலும் பக்தி செலுத்த முடிந்த தலைமுறை இது. ரேஸ் கிளப்பிற்கும், கோவிலுக்கும் ஒரே சமயத்தில் போயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ரேஸ் கிளப்பைத் தவிர்க்க முடியாதபடி இருக்கக்கூடியது அவருடைய மனப்பான்மை, பணவசதி என்ற சுகத்தைப் புரிந்து கொண்டுவிட்டவர்களுக்கு அதைவிட பெரிய கடவுள் இருக்க முடியாதது தான். வசதியுள்ளவனின் அல்ப பக்திகூட இங்குப் பெரிதாகக் கொண்டாடப்படும்– என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் அவர் இதையெல்லாம் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. அன்றைக்கு அந்தக்கோவில் திருப்பணித் தொடக்க விழாவில் எல்லாரும் வயதில் இளையவரான அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எதைச் செய்ய வேண்டுமானாலும் அவரருகே பயபக்தியோடு வந்து வாய்பொத்தி வினாவி, அவரது நோக்கம் தெரிந்து கொண்டு அப்புறம் செய்தார்கள். கடவுளுக்கு முன்னால் அவரது சந்நிதியிலேயே மனிதன் பக்தி செய்யப்படுவது பரிதாபகரமானது தான் என்றாலும் அதுதான் அங்கே தாராளமாக நடந்தது. அர்ச்சகர்களிலிருந்து கோவில் நிர்வாக அதிகாரிகள் வரை சகலரும் மந்திரியையும் கமலக்கண்ணனையுமே சுற்றிச் சுற்றி வந்தார்கள். கடவுள் கழுத்திலிருந்த மாலைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றி மந்திரிக்கும், கமலக் கண்ணனுக்கும் போட்டுத் தலையில் பரிவட்டமும் கட்டி மரியாதை செய்தார்கள். கடவுளை மரியாதை செய்கிற பாவனையில் இடுப்பில் கட்டிய வேட்டியும், நெற்றியில் விபூதிப்பட்டையுமாக வருகிறவர்களுக்கு மிரண்டு ‘கடவுளே’ பதில் மரியாதை செய்வது வேடிக்கையாகத்தான் இருந்தது மரியாதைகள் முடிந்தபின் கோவில் முன் மண்டபத்தில் திருப்பணிக் குழுவின் கூட்டம் நடை பெற்றது. மந்திரி தான் தலைமை தாங்கினார். இடுப்பில் தயாராகக் கிழித்துச் சொருகிக் கொண்டு வந்திருந்த ஒற்றை ‘செக்’ தாளை எடுத்து அதில் ஒரு பெரிய தொகையைப் பூர்த்தி செய்து ‘கடம்பவனேசுவரர் கோவிலில் புனருத்தாரண நிதிக்காக நான் அளிக்கும் இரண்டாவது பகுதி நன்கொடை’– என்று மந்திரியிடம் நீட்டினார். கமலக்கண்னன். “நம் தொழிலதிபர் கமலக்கண்ணன் இந்தத் திருப்பணி நிதிக்கு ஏற்கெனவே ஒரு கணிசமான தொகை அளித்திருப்பதை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள். இன்று மறுபடியும் அவர் ஒரு பெரிய தொகைக்குச் செக் அளித்திருக்கிறர்”– என்று மந்திரி கூட்டத்திலேயே அதை அறிவித்த வுடன் பலத்த கைதட்டல் எழுந்தது. உடனே அங்கே வந்திருந்த இன்னொரு தொழிலதிபர் கமலக்கண்ணனின் தொகையைவிட ஒர் ஆயிரம் ரூபாய் அதிகத் தொகை ஒன்றைத் தாம் அந்தத் திருப்பணி நிதிக்கு அளிப்பதாக அறிவித்தார். மந்திரி அந்தச் செய்தியையும் பலத்த கைத் தட்டலுக்கிடையில் வெளியிட்டபோது கமலக்கண்ணனின் முகத்திலே மலர்ச்சி குன்றியது போல் தெரிந்தது. அடுத்து வேறு இரண்டொருவரும் அதே கூட்டத்தில் திருப்பணிக்கான நன்கொடைத் தொகைகளை மந்திரி வாயால் வெளியிடுவதற்கென்றே சொல்லியதுபோல் அறிவித்தார்கள். முடிவில் நன்றிகூறியவர்– “நம் அமைச்சரவர்கள் கைராசிக்காரர். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதற்கு இந்த விழாவை அவர் தொடங்கி வைத்ததிலிருந்து வந்து குவிந்த நன்கொடைகளே சாட்சி. நமது உபதலைவ ராகிய கமலக்கண்ணன் அவர்களின் குடும்பமோ பரம்பரையாகவே கைராசிக்காரக்குடும்பம். இந்தநிதிக்கு அவர் நன்கொடை கொடுத்திருப்பதே இது மேலும்மேலும் பெருகி வளரும் என்பதற்கு அடையாளம்”– என்று மீண்டும் தன் பெயரை நினைவூட்டியபோது கமலக்கண்ணனுக்குப் பெருமையாக இருந்தது. தன்பெயர் கூட்டத்தில் நினைவூட்டப்படாத போதெல்லாம் சோர்ந்திருந்த அவர், பெயர் நினைவூட்டப்பட்ட போதெல்லாம் பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். உள்ளமும் இனம் புரியாது குறுகுறுத்தது. கூட்ட முடிவில் மந்திரி வெளியில் வருகையில் மிகவும் நெருங்கி ஏதோ சொல்லிக்கொண்டு வருவது போல் கமலக்கண்ணனின் தோளில் கைபோட்டுத் தழுவிக் கொண்டாற்போல வந்தார். அந்த நிலையில் கோயிலிற் கூடியிருந்த எல்லார் கண்களும் கமலக்கண்ணனையே மதிப்புடன் நோக்கின. திருப்பணியின் செயற்குழுவில் இருந்த மற்ற பிரமுகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கமலக்கண்ணன் மேற்பொறாமையாகக் கூட இருந்தது. மந்திரி எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுப் போய் விட்டார். மற்றவர்கள் கமலக்கண்ணனைச் சூழ்ந்துகொண்டார்கள். எல்லா ருடனும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கமலக்கண்ணனும் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அன்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் முகாம் செய் திருந்த ஒருசமய ஆதீனகர்த்தரின் காரியஸ்தர் கமலக்கண்ணனுக்கு ஃபோன் செய்தார். கமலக்கண்ணனுக்கு முதலில் இது போன்றவர்களிடம் எப்படிப் பேசிச் சமாளிப்பது என்றே புரியவில்லை. “நீங்க கோயில் திருப்பணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் பத்திச் சாயங்காலப் பேப்பரிலே பார்த்தோம். ஆதீனமே உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறது. நீங்க வந்து பார்த்தாச் சாமியே ரொம்பச் சந்தோசப்படுவாங்க”–என்றார் காரியஸ்தர் கமலக்கண்ணன் தயங்கினார். ஆதீன கர்த்தரே தன்னைப் பார்க்க விரும்புவது காரியஸ்தரின் பேச்சிலே தெரிந்திருந்தாலும் அதில் ஒரு வறட்டுக் கர்வமிருப்பதையும் அவர் உணர்ந்தார். ஆயினும் அவரால் அந்த அழைப்பை மறுக்க முடியவில்லை. “நீயும் சாயங்காலம் என்கூட துங்கம்பாக்கம் வரவேண்டியிருக்கும்”– என்று மனைவியிடம் வேண்டினார் அவர். “நான் கிளப்பிற்குப் போகணுமே?…” என்று முதலில் தயங்கினாற்போல இழுத்த அவள் அப்புறம் அவர் வற்புறுத்திய வேகத்தை மறுக்கமுடியாமல் இணங்கினாள். பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டபின் அவள் புறப்பட அதிக நேரமாயிற்று. அவர், பட்டு அதர வேஷ்டி, சில்க் ஜிப்பா விபூதிப்பூச்சு, இடுப்பில் பட்டுஅங்கவஸ்திரம் சகிதம் புறப் பட்டார். சாமியாரிடம் கொடுப்பதற்குத் தட்டு நிறைய ஆப்பிள், திராட்சை, மாதுளம் பழங்களை அழகாக அடுக்கிக் காரில் கொணர்ந்து வைத்திருந்தார் சமையற்காரர். இதுவரை அவரோ, அவருடைய நவநாகரிக மனைவியோ இப்படி ஒரு மடாதிபதியைத் தேடிச் சென்றதே இல்லை. ஆயினும் இதன் மூலமும் ஒரு சமூக கெளரவத்தைத் தேடிக் கொள்ள முடியும் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்து கொண்டிருந்தார். இந்த ஆதீன் கர்த்தருக்கு வேறு பல வியாபாரிகள், தொழிலதிபர்கள், வருமானவரி அதிகாரிகள் எல்லாரும் நெருங்கிய அன்பர்களாக இருப்பதை அவர் பலரிடம் கேள்விப்பட்டிருந்தார். ஆதீனகர்த்தரை அறிமுகம் செய்துகொள்வதாலும் பழகிக் கொள்வதாலும் தனக்கு இலாபமுண்டு என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பக்தனாக இருப்பதைவிடப் பக்தனைப்போல் தன்னைக் காண்பித்துக் கொள்வது கூடப் பெரிய சமூக அந்தஸ்தை தரமுடியும் என்பதைப் பலருடைய வாழ்வில் அவர் காண முடிந்திருக்கிறது. அதனால் தான் மடத்துக் காரியதரிசி வலுவில் அழைத்தபோது அவரும் மறுக்காமல் புறப்பட்டு வந்திருந்தார், . “மிஸஸ் சோமசுந்தரம் நேத்து லேடீஸ் கிளப்லே சொன்னாள், இந்தச் சாமிக்குச் ‘சித்து விளையாட்டு’ எல்லாம்கூட அத்துப்படியாம்”– என்று காரில்வரும்போது கூறினாள் அவர் மனைவி. “சித்து விளையாட்டுன்னா…” என்று அவள் கூறியதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் பதிலுக்கு அவளையே வினவினார் கமலக்கண்ணன். அவள் தனக்குத் தெரிந்த இரண்டொன்றை விவரித்துக் கூறத் தொடங்கினாள். அதற்குள் கார் சுவாமிகள் தங்கியிருந்த மடத்து வாசலுக்கு வந்து நின்றுவிட்டது. காரியஸ்தர் ருத்ராட் சதாரியாக ஓடோடி வந்து கார்க்கதவை திறந்துவிட்டு அவர்களை வரவேற்றார். “சாமி இப்பத்தான் என்னைக் கூப்பிட்டு நீங்க வந்தாச்சான்னு கேட்டாங்க”–என்றார் அவர். “அஞ்சு மணிக்கே புறப்படனும்னு நினைச்சோம். இவதான் வீட்டிலே விளக்கேத்தாமப் புறப்படமாட்டேன்னிட்டா…”– என்று மனைவியைச் சார்ந்து புளுகித் தள்ளினார் கமலக்கண்ணன். பின்னாலேயே டிரைவர் வர்ணபூர்வமாக அடுக்கப்பட்டிருந்த பழத்தட்டை எடுத்துக்கொண்டு வந்தான் காரியஸ்தர்யாரோ கண்பார்வை குன்றியவர்களுக்கு ஒவ்வொரு படியாகச் சுட்டிக்காட்டி அழைத்துப் போவதைப்போல அவர்களுக்குத் தம் கையால் கீழே ஒவ்வொரு படியாய்க் காட்டிப் பவ்யமாக உள்ளே அழைத்துக்கொண்டு போனார். மடங்களும் சமயநிலையங்களும் உலகம் முழுவதும் இப்படிப்பட்ட முறைகளில் மட்டுமே தங்களுடைய சாதுரியங்களை வைத்திருப்பதை விளக்குவதுபோல் நடந்துகொண்டார் அந்தக் காரியஸ்தர். சந்நிதானத்துக்கு முன்னே சென்றதும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி இருவரும் விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள். பின்பு சாமிகள் கையை ஆசி கூறுவது போல அசைத்ததும் சற்றே தள்ளி இருவரும் அமர்ந்துகொண்டார்கள். காரியஸ்தர் விலகி நின்று கைகட்டி வாய்பொத்தினாற் போன்று பணிவாக இருந்தார். சாமிகள் ஷேமலாப விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்மா, பசு, பதிபாசம், இவைகளையெல்லாம் பற்றிப் பாரமார்த்தியமாக அவர் பேசுவார் என்று கமலக்கண்ணன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக லெளகீகமானவற்றையே அவர் நிறையப் பேசத் தொடங்கினார். சிலவற்றைக் கமலக்கண்ணனே விரும்பவுமில்லை. எதிர்பார்க்கவுமில்லை கமலக்கண்ணன் குடும்பத்தின் சொத்து, தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீடுகள் பற்றி எல்லாம் நேரிடையாகவே தூண்டித் தூண்டிப் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். சாமிகள், அரசியல் பற்றியும், ஊர் வம்புகள் பற்றியும் கூடப் பேசினார். “மடத்துக்கு வருகிற பலருக்கு சம்பிரதாயங்களே தெரிவதில்லை. வந்ததும் ஹோட்டல் டேபிள் மாதிரி நினைத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விடுகிறார்கள். கும்பிட்டுத் திருநீறு வாங்கிப்பூசிக்கொள்ள வேண்டு மென்பதையே மறந்து விடுகிறார்கள். காலம் அப்படிக் கெட்டுப்போயிருக்கு”– என்று கால நிலைமை பற்றியும் சாமிகள் வருத்தப்பட்டுக் கொண்டார். “இந்தக் காலத்துப் பெண்கள் எல்லோரையும் போலில்லாமே அம்மா நல்ல குணவதியாகத் தெரியறாங்க”– என்று மிஸஸ் கமலக்கண்ணனுக்கு இருந்தாற் போலிருந்து ஒரு புகழுரையைக் கொடுத்து அந்த அம்மாள் முகத்தை மலர வைத்தார் சாமிகள். ‘துறவிகளும், அரசியல்வாதிகளும் எப்போதுமே சொல்லவிரும்புவதை எப்போதாவது சொல் வது போலஅசாதாரணமாகச் சொல்லுவார்கள்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அவருடைய பேச்சு. அங்கு இருவரும் வந்ததிலிருந்து மிஸஸ் கமலக்கண்ணன் பக்கமே அவர் பார்வை அதிகம் நிலைத்திருந்தாற்போலப் புரிந்தது. “சாமியை ஒருநாள் நம் பங்களாவுக்குப் பாதபூஜைக்கு வரச்சொல்லி இப்பவே அழைச்சிடுங்க”– என்று மிஸஸ் கமலக்கண்ணன் அவர் காதருகே முணுமுணுத்தாள். அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்தால் அவளே துணிந்து சாமிகளிடம் அந்த வேண்டுகோளைச் சொல்லி விடுவாள் போல் தோன்றவே கமலக்கண்ணன் வெளியிட்டார். “சாமி ஒருநாள் நம்பவிட்டுக்கு வந்து பெருமைப்படுத்தணும்”– என்று தனக்குத் தெரிந்த அளவு சம்பிரதாயமாக அந்த வேண்டுகோளைக் கமலக்கண்ணன் வெளியிட்டார். “எங்கேயுமே அதிகம் போறதில்லே…பார்க்கலாம்’என்று தயங்கியபடி காரியஸ்தர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் சாமிகள். காரியஸ்தர் முகம் மலர்ந்தது. “சாமி அப்படிச் சொல்லப்படாது…இவங்க விஷயத்திலே கொஞ்சம் கருணை காட்டனும்”–என்றார் காரியஸ்தர். தன்னை வலிய ஃபோன் செய்து அழைத்துவிட்டுத் தான் ஒரு முறைக்காக அழைக்கும் அழைப்பை மட்டும் ஏற்க மறுப்பதுபோல் சாமிகளும், மடத்துக் காரியஸ்தரும் பிகு’செய்வதை உள்ளுர வெறுத்தாலும் அந்த வெறுப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சாமி அவசியம் வரனும் எங்க ஆர்வத்தை ஏமாத்திடப்படாது”– என்று மீண்டும் வற்புறுத்தினார் கமலக்கண்ணன். சாமிகள் தன் வீட்டிற்கு வந்தால் அதைஒட்டி ஒரு பத்துப் பெரிய மனிதர்களுக்குத் தன்னை ஒரு பக்திமானாகவும் நல்லவனாகவும் நிரூபித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கமலக்கண்ணன் மனத்தில் எண்ணங்கள் அந்தரங்கமாக ஓடின. சாமிகளிடம் கடைசியாகவும் தன் வேண்டுகோளை வற்புறுத்தி விட்டுத்தான் வீடு திரும்பினார் கமலக்கண்ணன். மறுநாள் காலை ஒரு முக்கியமான உத்தியோகப்பிரமுகர் கமலக்கண்ணனைத் தேடிவந்தார். தன்னுடைய மகள் பரத நாட்டியம் பயின்று வருவதாகவும், அதற்கு அரங்கேற்றத் தேதி பார்த்திருப்பதாகவும் கமலக்கண்ணனே தலைமை வகித்து நடத்தித் தரவேண்டும் என்றும் அவர் விரும்பினார் நகரில் இரண்டு மூன்று முக்கியமான சங்கீத நாடக சபாக்களுக்குக் கமலக்கண்ணனே கெளரவத் தலைவராக இருந்து வந்ததனால் அவரைத் தலைவராகப் போட்டு அரங்கேற்றுவதனால் பின்னால் பல பயன்களை எதிர் பார்த்தார் அந்த உத்தியோகப் பிரமுகர். “பரத நாட்டியத்தைப்பத்தி எனக்கென்னத்தைத் தெரியும்? வேறெ யாராச்சும் பெரியவங்களாக் கலை ஞானமும் கொஞ்சம் உள்ளவங்களாப் பார்த்துத் தலைமை வகிக்கப் போடுங்களேன்!…” என்று கொஞ்சம் கெளரவத் தயக்கம் தயங்கினார் கமலக்கண்ணன். “தலைமைங்கறதே உங்களைப்போலத் தகுதி உள்ளவா யாராவது நாலுபேருக்கு முன்னாலே குழந்தையை ஆசீர்வாதம் பண்றதுதானே?” என்றார் வந்த உத்தியோகப் பிரமுகர். கமலக்கண்ணன் இதற்குமேலும் பிடிவாதமாக மறுக்கவில்லை. “உங்க இஸ்டம் அப்பிடியானா நான் மறுக்கறதுக்கில்லே!” என்று இணங்கினார். “அப்போ இன்விடேஷன், வால்போஸ்டர்லாம் கொடுத்துடறேன் பத்திரிகைகளுக்கும் கொடுத்து ‘எங்கேஜ் மெண்ட்ஸ்’ காலத்தில் வரச்செய்து விடுகிறேன். ஏதோ இந்தக் கலையிலே உங்க ஆசீர்வாதத்தாலே தான் குழந்தை முன்னுக்கு வரணும்”– என்றார் வந்தவர். அவர் பேசியது வசீகரிக்கிற தினுசில் இருந்தது. ‘வால்போஸ்டர் கூட அடித்து உங்கள் பெயரை விளம்பரப்படுத்தத் துணிந்து விட்டேன். என்னைப் பதிலுக்குப் பெருமைப்படுத்துங்கள்’. என்று கெஞ்சுகின்ற தொனி தெரிந்தது. கமலக்கண்ணன் பதில் ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார். வந்தவர் திரும்பிச் சென்றபின் அவர் தனக்குத்தானே சிந்திக்கத் தொடங்கினார். ‘ஏதோ ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகித்துப்பேசி அந்தக் கூட்டமும், அதன் புகைப்படமும் அதற்கு நன்கொடை கொடுத்த செய்தியும் பத்திரிகையில் வரப்போக எல்லாருமே என்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார் கள். பேசவும் தலைமை வகிக்கவும் பரிசு வழங்கவும் அழைக்கிறார்கள். இந்த உலகில் பாமரர்கள் பலர் பெரும் புகழை அடையமுடியாத நிலையில் இருக்கிறார்கள் தாங்கள் புகழை அடையமுடியாத பலர் யாரையாவது தேடி அப்படித் தேடி கிடைக்கிற அந்த ஒர் ஆளுக்கு எல்லாப் புகழையும் அடைவித்துப் பார்த்து மகிழ்கிறார்கள். மக்கள் அப்படித் தேடிப்பிடித்துப் புகழை அடைவிக்கின்ற ஆளுக்குத்தான் தலைவர் அல்லது பிரமுகர் என்று பெயரும் ஏற்பட்டு விடுகிறது. நானும் இனி பிரமுகர் ஆகிறேன் என்பதற்கு தான் இவை எல்லாம் அடையாளங்கள்!’ கூட்டத்தலைமை, பொதுநிறுவனங்களுக்குத் தாராளமான நன்கொடை, திருப்பணி நிதியில் உபதலைவர் பதவி, சுவாமிகளின் அழைப்பு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு ஆசி எல்லாமே இதோ இதோ என்று வலிய வாய்க்கும் சந்தர்ப்பங்களாகத் தோன்றின. அவருக்கு தலைமை வகிக்க அழைத்துவிட்டுப்போக வந்த பிரமுகர் சென்ற சில விநாடி களுக்கு எல்லாம் சோதிடர் ஒருவர் தேடிவந்தார். வெளியே வராண்டாவில் அவரை உட் கார்த்தி வைத்துவிட்டு அவர் கொடுத்திருந்த விஸிட்டிங் ‘கார்டை’ உள்ளே கமலக்கண் ணனிடம் கொண்டுவந்து கொடுத்தான் வேலைக்காரன். ‘கே.கே.சர்மா அஸ்ட்ராலஜர்’ என்று போட்டு அவருடைய முகவரியும் டெலிபோன் நம்பரும், தந்தி முகவரியும் எல் லாம் அந்தச் சிறு அட்டையில் நெருக்கமாக அச்சிடப்பட்டிருந்தன. கமலக்கண்ணன் வெளிப் பேச்சில் சோதிடத்தை எதிர்த்துப் பேசுகிறவராக இருந்தாலும் இப்போது என் னவோ தன் எதிர்காலத்தைச் சற்றே தெரிந்து கொள்ள வுேண்டும் என்பது போல் ஆசைப்பட்டார். எனவே அவரை உடனே உள்ளே அனுப்பும்படி வேலைக்கார்னிடம் கூறி னார் கமலக்கண்ணன். தொழில் திறன் வாய்ந்த அந்தச் சோதிடர் உள்ளே வந்து கமலக்கண்ணனை எதிரே சந்தித் ததும், உங்களுக்குச் சகல சம்பத்துக்களும் பெருகி ஐசுவரியம் விருத்தியாகும்’ – என்ற பொருளுள்ள சம்ஸ்கிருத சுலோகம் ஒன்றைக் கணிரென்ற குரலில் பாடிவிட்டு– “இதை வாங்கிக்குங்கோ குருவாயூரப்பன் ப்ரசாதம் சசலமங்களமும் உண்டாகும்”– என்று சந்தனவில்லையையும் பச்சைக் கற்பூரத் துளையும் சிறிய இலைத்துணுக்கில் வைத்து நீட்டினார். கமலக்கண்ணன்கும்பிட்டு விட்டு அதை வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டார். தாமே ஒடிப் போய்த் தமது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து சர் மாவிடம் கொடுத்தார். சர்மா ஜாதகத்தைக் கால் மணி நேரம் மேலும் கீழும் பார்த்துவிட்டு “இது ராஜயோக ஜாதகம் ஜாதகனுக்குச் சந்திர தசை குருபுத்தியின் போது மந்திரியாக வரவேண்டிய பாக்கியமிருக்காக்கும்”– என்று ஸ்பஷ்டமாகக் கூறியபோது கமலக்கண்ணனுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. அவர் எதை நினைத்து அல்லும்பகலும் உருகுகிறாரோ அதையே அல்லவா சோதிடரும் கூறிவிட்டார்! “நீங்க தொட்டது பொன்னாகும். எடுத்த காரியம் உடனே வெற்றியடையும். கீர்த்தி அதிவேகமாகப் பெருகிப் பரவும். தேசமெல்லாம் உங்களைக் கொண்டாடப் போகிறது பாருங்கள்”– என்று பூமாரியாகச் சோதிடர் சொறிந்த சொற்கள் எல்லாம் அவரை அப்படியே வான மண்டலத்துக்குத்தூக்கிக் கொண்டு போய்விட்டன. இந்தப் பூமியில் எல்லாரையும் போலத் தானும் ஒருமனிதன் என்று எண்ணுவதை விடத் தெய்வாம்சம் பொருந்தியதோர் அவதாரம் என்றே எண்ணிக்கொள்ளலாம் போலப் பெருமிதம் வந்துவிட்டது அவருக்கு. “ஃபாரின் டூர்ஸ் எதாச்சும் இருக்கான்னு பாருங்களேன்”– என்று ஒரு மந்திரம் கேட்பது போன்ற தாகத்துடன் சோதிடம் கேட்பதில் வெறிகொண்டு வினவினார் கமலக்கண்ணன். “பேஷா இருக்கு! ஒண்ணா ரெண்டா? ஏகப்பட்ட ஃபாரின் டூர்ஸ் இருக்கே. பூமியில் உள்ள சகல தேசங்களையும் பல தடவை சுத்திவரப் போறேள். பாருங்கோ”– என்றார் சோதிடர் சர்மா. சுதந்திரமடை வதற்கு முன் இந்தியாவையே சரியாகப் பாராத இந்தியன் ஒவ்வொருவனும் சுதந்திரம் அடைந்த பின்போ தன் தாய் நாட்டை முழுமையாகப் பார்க்காவிட்டாலும் அந்நிய நாடுகளைப் பார்ப்பதில் தவிப்புக் கொண்டிருக்கிற நிலை மைக்கு ஓர் உதாரணமாகவே கமலக்கண்ணனும் இருந்தார். சோதிடர் எதையும் விடவில்லை. எல்லாவற்றிற்கும் பொறுமையாக மறுமொழி கூறினார். “ஜீவிய காலத்திலே நீங்க மகாயோகவானாக இருக்கறத்துக்கான எல்லா அம்சமும் இருக்கு”– என்று கூறிக் கொண்டே வந்தவர். குரலை மெதுவாக்கி, கொஞ்சம்விஷம் மும் கலந்த குரலில், “இன்னும் கொஞ்ச நாளிலேஸ் திரிவசியமும் உங்களுக்குக் கைகூடும். மகா ஸெளந்தரியவதியான சில ஸ்திரிகள் உங்க மேலே பிரியப்படுவா…”– என்று கூறிய படியே புன்முறுவல் பூத்தார். கமலக்கண்ணனுக்கே இதைக் கேட்க மகிழ்ச்சிக் குறுகுறுப்பு இருந்தாலும், “இரைந்து சொல்லாதிங்க…என் சம்சாரம் உண்ணா விரதம் இருக்கக் கிளம்பிடப்போறா”– என்று ஒப்புக்கு ஏதோ நகைச்சுவை போல் மறுமொழி கூறினார். பணக்காரனுக்குச் சோதிடம் கூற வருகிறவன் அவனுடைய ஜாதகம் கூறுவதைவிட மனம் கூறுவதற்கேற்பவே அதிகமாகப் பலன்கள் கூற வேண்டியிருப்பதைப் புரிந்துகொண்டவர் போல் பேசினார் அந்த சோதிடர். அவர் பல ஜமீன்தார்களுக்கும், மிராசுதார்களுக்கும் பல முறை சோதிடம் கூறிய அனுபவத்தில், ‘எவ்வளவு பணம் சேரும், எவ்வளவு பெண்கள் சேர்வார்கள்’– என்பதையே அவர்கள் அறிய விரும்பித் தவிப்பார்கள்– என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவராக இருந்தார் அவர். “அது சரி! ஏதே மந்திரியா வருவேன்னிங்களே! என்ன மாதிரி? எப்போ? எவ்வளவு காலம்? எல்லாம் விவரமாச் சொல்லுங்களேன்…” என்று அவரை அனுப்பவே மனமில்லாமல் தூண்டித் தூண்டிக் கேட்டார் கமலக்கண்ணன். “சீக்கிரமே வருவீங்க; சந்திரதசை குருபுத்திமுடியறதுக்குள்ளே நடக்கத்தான் போகுது! நான் சொல்லலே, ஜாதகமே தெளிவாச் சொல்றது. பார்த்துண்டே இருங்கோ…” – என்றார் ஜோதிடர். கமலக்கண்ணனுக்கு உச்சி குளிர்ந்தது. முழுமையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைச் சன்மானமாக எடுத்துவைத்து வெற்றிலைப்பாக்குப் பழங்களோடு சோதிடருக்குக் கொடுத்தனுப்பினார் அவர். “என்னாங்க உங்களுக்குச் ஜோஸ்யத்திலே நம்பிக்கையில்லை என்று அடிக்கடி சொல்லுவீகளே! இன்னிக்கி என்னவோ ஒரேயடியாக் குலாவினிங்களே? என்ன விஷயம்?’ – என்று குத்தலாகக் கேட்டாள் மனைவி. “வீடு தேடிவந்த பெரியவரைத் திருப்பியனுப்பிடப் படாதேன்னு ஏதோ கேட்டுக் கொண்டேன். பணமும் கொடுத்தனுப்பினேன்”– என்று மனைவியிடம் மெல்லச் சமாளித்தார் கமலக்கண்ணன். மனைவியின் முகத்தில் அவர் கூறியதை நம்பாதது போன்ற கேலிப் புன்முறுவல் மலர்ந்தது. “ஏதோ இப்பவாவது ஜோஸ்யம், சாமி, கோவில் பணி எல்லாத்திலியும் நம்பிக்கை வருதே”…என்று வியந்தபடி பேசினாள் அந்த அம்மாள், கமலக்கண்ணன் அதை மறுத்தோ ஒப்புக்கொண்டோ மறுமொழி ஒன்றும் கூறவில்லை. மெளனம் சாதித்துவிட்டார். ‘கோழைகள் ஒவ்வொருவரும் தான் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சோதிட மூலம் பார்க்கிறார்கள்’– என்ற வெளிநாட்டுப் பழமொழி ஒன்றை அடிக்கடி தன் மனைவி உட்படப் பலரிடம் கூறியிருக்கிறார் கமலக்கண்ணன். இப்போதோ ஆசை மிகுதியில் அவரே ஒரு கோழையாகி மீண்டிருந்தார். அன்றிரவு கிளப்பில் சீட்டாடும்போது ஒரு சகதொழிலதிபர் கமலக்கண்ணனைக் கேலி செய்தார்: “இனிமே இவரைக் கிளப் பக்கம்கூடப் பார்க்க முடியாதப்பா, ஏராளமான பொதுக் காரியங்களிலே இறங்கிப் பிரமுகராகி விட்டார்.” “அட நீங்க ஒண்ணு! நீங்களும் சரி, நானும் சரி பொது, வாழ்க்கையிலிருந்து விலகி எந்த வியாபாரத்தையும் தொழிலையும் இன்னிக்கி நடத்திவிட முடியாது. அதனாலே நாலு எடத்துக்குப் போகனும் வரணும். பொது வாழ்க்கையிலேயும் தாராளமாகக் கலந்துக்கணும். எதையும் ஒதுக் கிடப்படாது, எதிலிருந்தும் ஒதுங்கிடவும் கூடாது”– என்றார் அவர். “அது சரி! ஆனா நீங்க சொல்றதைவிட நல்ல காரியம் – பப்ளிக் ரிலேஷனுக்காக நீங்களே ஒரு டெய்லி நியூஸ் பேப்பர் நடத்தறதுதான். உங்களுக்கு அதை ஸஜ்ஜஸ்ட் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை மிஸ்டர் கமலக்கண்ணன்! நம்ம நியூஸ் எல்லாம் போட்டுக்கலாம் கிறதைத்தவிர– நம்ம சொந்தக் கம்பெனிகளோட விளம்பரங்களைக்கூட அதிலே போட்டுக்க முடியும். ஒரு நல்ல டெய்லிநியூஸ் பேப்பராலே லட்சக்கணக்கில் மக்கள் ஆதர வைத்திரட்டறது சுலபம். நீங்க மனசுவச்சா இது முடியும்’– என்றார் அவர் நண்பர்களில் ஒருவரான மற்றொரு பணக்காரத் தொழிலதிபர். கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்த்ததில்,”ஜாயிண்ட் வென்ச்சராகூடத் தொடங்கலாம்“– என்று தாமும் துணை செய்வதாக வாக்களித்தார் அந்த நண்பர். கமலக்கண்ணனுக்குச் சபலம் தட்டியது. உடனே கிளப்பிலேயே நண்பர்களாக உட்கார்ந்து ஒரு திட்டம் போடத் தொடங்கினார்கள். பேப்பர் கோட்டா எவ்வளவு தேவை? எஸ்டாபிளிஷ்மெண்ட் செலவு என்ன ஆகும்? விளம்பர வருமானம் எவ்வளவு இருக்கும்? ஆரம்ப காலத்தில் எவ்வளவு நஷ்டம் வரும்; போகப்போக எப்படி இலாபகரமாக மாறும்? என்பதையெல்லாம் திட்டமிட்டு, விவாதித்தார்கள். அந்தப் பேச்சும், யோசனையும் கமலக்கண்ணன் மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. சோதிடர் சொல்லிவிட்டுப் போயிருந்த ராஜயோக காலம் நெருங்கி வருவதற்கு அறிகுறியாகவே இத்தகைய திட்டங்கள் தமக்குத் தென்படுவதாக அவர் எண்ணத் தொடங்கிவிட்டார். அந்தப் பிரமையே– அந்த மயக்கமே–அந்தப் போதையே ஓர் இலட்சியமாகிக் கனலத் தொடங்கி விட்டது அவருள். ஒரு தினசரிப் பத்திரிகை தனக்கே கொந்தமாக அவசியமென்று தீவிரமாக நினைக்கலானார் அவர். அந்த நினைவே ஒரு தவிப்பாகவும் ஆகிவிட்டது சிறிது நேரத்தில். பகுதி -6 இரண்டு மூன்று நாட்களில் ‘தினசரிப் பத்திரிகை தொடங்கும் பேச்சு பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம்’– என்று சிந்திக்கிற அளவு வளர்ந்திருந்தது. எல்லாமே ’கிளப்’பில் இரவு நேரத்துச் சீட்டாட்டத்தின் போது பெருந்தலைகளின் பேச்சில் தான் வளர்ந்திருந்தன. “புதிதாகத் தொடங்க இருக்கும் தினசரிப் பத்திரிகைக்குப் பொருத்தமானதும் கவர்ச்சி நிறைந்ததுமாகிய பெயர் ஒன்றைத் தெரிந்து எழுதுகிறவர்களுக்கு ரூ. 500 சன்மானம் வழங்கப்படும்” என்று விளம்பரச் செய்யலாம் என யோசனை வழங்கினார் ஒரு நண்பர். அப்போதிருந்த ஒருவித உற்சாகத்தில் எந்த யோசனையைக் கேட்டாலும் அது சிறந்த யோசனைதான் என்பதுபோல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு. விருப்பு வெறுப்புக்களின் கடைசி எல்லைவரை போய் மூழ்குகிறவர்கள் எந்த ஒரு பிரச்னையையும் நியாயமாகந் தீர்மானிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். தின சரிப் பத்திரிகை தொடங்குவது அவசியமா? அவசியமில்லையா? அதற்கு ஒரு பெயர் சூட்டுவதற்கு விளம்பரம் செய்ய வேண்டியது பொருத்தமா? பொருத்தமில்லையா?என்பதைப் போன்றவற்றைத் தீர்மானிக்க முயல்வதில் கமலக்கண்ணனின் நிலைமையும் இப்படித்தான் இருந்தது. எந்தத் தொழிலைத் தொடங்கவேண்டுமென்று, அவர் நினைத்தாரோ அதைப் பற்றிய அறிவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்களின் யோசனைகளே அவருக்குக் கிடைத்தன. ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்கள் அதைச் சரிவரக் கணிக்கவே முடியரது–என்ற நியாயத்தை ஒட்டியதாகவே இருந்தன அவர்களுடை ஆழமில்லாத முடிவுகள். உலகத்தைப் பொறுத்தும் உலகத்தை எதிர் பார்த்தும் வாழவேண்டும் என்பதைவிட சோதிடத்தைப் பொறுத்தும் சோதிடத்தில் சொல்லியவற்றை எதிர்பார்த் தும் வாழவேண்டுமென்ற தவிப்பைச் சமீபத்தில் உடைய வராகியிருந்தார் கமலக்கண்ணன். அதனால் அவரைக் கெடுப்பதற்குப் பல போலி நண்பர்களும் சுற்றிச்சுற்றி வரலானார்கள். சோதிடர் சர்மா, டெய்லிடெலிகிராம் நிரூபர் கலைச் செழியன், புலவர் வெண்ணெய்க்கண்ணனார், போன்றவர்கள் அவரிடம் பணம் கறப்பதற்காக ஏதோ செய்தார்கள், அவரும் அவற்றிலெல்லாம் நன்றாக மயங்கினார். வசப்பட்டார் யார்யார் எதை எதைச் சொன்னாலும் அவை அனைத்தும் தம்மைப்பிரமுகராகவும் மந்திரியாகவும் கொண்டு வருவதற்கான உண்மை யோசனைகளாகவே கமலக்கண்னனுக்குத் தோன்றின. தினசரிப் பத்திரிகைக்கு அச்சகம் அலுவலகம் எல்லாம் வைப்பதற்காக மவுண்ட்ரோடில் இடம் தேடுவதற்கு நாலு புரோக்கர்களிடம்கூடச் சொல்லியாயிற்று. இந்த ஏற்பாடும் தகவலும் எப்படியோ அதற்குள் காட்டுத் தீ போலப் பரவிவிட்டது உதவியாசிரியர்கள், புரூப்ரீடர்கள், கார்ட்டுனிஸ்ட், நியூஸ் எடிட்டர் என்று பத்திரிகை சம்பந்தமான ஒவ்வொரு வேலைக்கும் தக்கவர்களின் சிபாரிசுக் கடிதங்களோடு கமலக்கண்ணனை ஆட்கள் தேடி வரலானார்கள் படையெடுக்கலானார்கள். நாளுக்குநாள் அவர் ஒரு தினசரிப் பத்திரிகை நடத்தியே தீரவேண்டும் என்ற நிலை உறுதிப்பட்டுக் கொண்டு வந்தது. சொந்தமாகச் செய்துவந்த தொழில்களையும் கம்பெனி நிர்வாகங்களையும், எஸ்டேட் பொறுப்புக்களையும்விட இப்போது ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துகிற விஷயமே அவர்கவனத்தில் அதிகமாக இலயிக்கத் தொடங் கியிருந்தது. பிரமுகராக உயரவும், மந்திரியாகவும், அதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குப் பலர் பல விதத்தில் உண்டாக்கிவிட்டார்கள். பத்திரிகைகளில் செய்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வண்டிவண்டியாகப் பெயர்கள் வந்து குவிந்தன. அந்தப் பெயர்க்குவியலில் எந்தப்பெயரைத் தேர்ந்தெடுப்பதென்று திணற வேண்டியிருந்தது. ‘வைகறை ஏடு’– எனப் பெயர் சூட்டுதலே ‘சாலச்சிறப்புடையது’–என்று புலவர் வெண்ணெய்க்கண்ணனார் வந்து கூறியதைக் கமலக்கண்ணனின் வியாபார நண்பர்கள் ஒப்புக்கொள்ளாததோடு கணிசமாகக் கேலியும் செய்து அனுப்பிவிட்டார்கள். இந்த நிலையில் ஒருநாள் காலை, நிருபர் கலைச்செழியனிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஃபோன் வந்தது. “சார்! நம்ப பேப்பர்லே ’பிரமுகர் பக்கம்’னு ஒண்னு வருதே; அதிலே வாரம்வாரம் ஞாயித்திக்கிழமையன்னிக்கி ஸப்ளிமெண்ட்லே ஒருத்தரை இண்டர்வ்யூ பண்ணிப் போடறோம். அடுத்த வாரம் வெளிவர வேண்டிய இண்டர்வ்யூவுக்காக இன்னிக்கி நானும் ஒரு நண்பரும் உங்களைப் பார்க்க வரோம்! சாயங்கால்ம் நாலு மணிக்குச் சவுகரியப்படுமில்லையா?” “அதுக்கென்ன வாங்க கூட யாரோ வர்றதாச் சொல்றீங்களே…யாரது?” “யாருமில்லே சார்? நமக்கு ரொம்ப வேண்டியவர்… ’பிரகாஷ் பப்ளிசிட்டீஸ்’னு புதுசா ஒரு விளம்பர ஏஜன்ஸி ஸ்டார்ட் பண்ணியிருக்கார்…” “எங்கிட்ட எதுக்காக…?’’ “அதான் வரோமே! நேரே பேசிக்கலாம் சார்!” “சரி வரட்டும்…நாலு மணிக்குப் பார்க்கலாம்” என்று ஃபோனை வைத்தார் கமலக்கண்ணன். கூட வருகிறவனை வரவேண்டாம் என்று சொன்னால் எங்கே கலைச்செழியனே தன்னைப் பேட்டி காண வராமல் இருந்துவிடுவானோ என்ற தயக்கத்தினால் அதற்கும் ஒப்புக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். ஒவ்வொரு நாள் காலையிலும் தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகத்தில் விழிக்கும்போதெல்லாம் – தமது தினசரிப் பத்திரிகையும் அதேபோல் வெளியாகி வீடு வீடாகப்போய் விழும் காலம் அருகிவிருப்பதைத் தவிர்க்க முடியாமல் கற்பனை செய்யும் அவருடைய மனம். மாவு மில், ரைஸ் மில்லுக்கான இரும்பு சாதனங்களையும், உபபாகங்களையும், வாட்டர் பம்புகளையும் வளர்க்கும் ஓர் ஃபவுண்ட்ரி–ட்ரில்லிங், வெல்டிங், மில்லிங், தொழில்களைச் செய்யும் நவீன மிஷின் களடங்கிய ஒரு பட்டறை – எல்லாம் கமலக்கண்ணனின் தகப்பனார்காலத்தில் ஏற்பட்டவை. நல்ல இலாபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த அவற்றின் ‘வொர்க் ஸ்பாட்’ திருவொற்றியூரில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. அது தவிரக் கொஞ்சம் இம்போர்ட் எக்ஸ்போர்ட் டிரேடிங் – சிலமருந்து – பால் உணவு – ஏஜன்ஸிகள் எல்லாம் இருந்தன. திரு வொற்றியூரில் ஒர்க்ஷாப்புக்கு அவர்போய் மாதக்கணக்கில் ஆகியிருந்தது. நம்பகமான உறவினர் ஒருவரை அங்கே ஒர்க்ஸ் மானேஜராகப் போட்டிருந்தார். ஒர்க்ஷாப்பின் அலுவலக சம்பந்தமான வேலைகள், நிர்வாகம்–எல்லாம் அவருடைய கம்பெனிகளின் மொத்தமான அலுவலகத்திலேயே சேர்ந்து இருந்ததனால் அது சம்பந்த மான ஆர்டர்கள்– கடிதப் போக்குவரத்துக்களை இருந்த இடத்திலிருந்தே அவரால் கவனித்துக்கொள்ள முடிந்தது. நகரின் பல பகுதிகளில் அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த வீடுகளின் வாடகை உள்பட அவருக்கு வருமானமும் இலாபமும் தந்து கொண்டிருந்த தொழில்கள் பலவாக இருந்தன. ஆயிரம் விளக்கின் அருகே கிரீன்ஸ், ரோட்டில்–மவுண்ட்ரோடிலிருந்து திரும்பி நுழைந்ததுமே கண்ணிற்படுகிறாற் போன்ற முக்கியமான இடத்தில் கம்பெனிக் கட்டிடம் அமைந்திருந்தது. அதுவும் சொந்தக் கட்டிடம் தான். தமது பங்களா அமைந்திருந்த இராயப் பேட்டையின் மேற்குக் கோடிப்பகுதிக்கும் அலுவலகத்துக்கும், தாம் நெருங்கிய உறவுகொண்டிருந்த மவுண்ட்ரோடிலிருந்த ஒரு கிளப்பிற்கும் – பக்கம் பக்கமாக இருந்தது கமலக்கண்ணனுக்குச் செளகரியமாக இருந்தது. இதே செளகரியத்தை நாடித்தான் தினப்பத்திரிகைக்கும் மவுண்ட்ரோடிலேயே இடம் பார்த்தார் அவர். ஏற்கெனவே தினப்பத்திரிகை நடத்துவதற்காக ஒருவர் வாங்கிப்போட்டிருந்த ரோடரிமிஷின்களைத் தன்னுடைய தினப்பத்திரிகைக்கு எடுத்துக்கொள்வதற்குச் சாதுரியமாக ஏற்பாடும் செய்திருந்தார். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் தொந்தரவு வராமலிருப்பதற்காகத் தம் பத்திரிகையில் அவரையும் ஒரு பங்குதாரர்போல் பெயருக்கும் ஆக்கிவிடத் திட்டமும் போட்டிருந்தார் கமலக்கண்ணன் ‘டெக்ளரேஷன்’ கேட்டு டெல்லியிலிருக்கும் பிரஸ் ரிஜிஸ்டிராருக்கு எழுதிப் போடவேண்டியதுதான் பாக்கி, அப்படி எழுதிப் போடுவதற்கு முன்னால் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்ப தென்று– விளம்பரத்தைப் பார்த்து– வந்து குவிந்திருக்கிற பெயர்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெயர் முடிவாகிவிட்டால் டெல்லிக்கும் எழுதிவிடலாம். பின்பு பத்திரிகைகளில் விளம்பரமும் போட்டு– ஏஜெண்டுகளை விண்ணப்பிக்கச் சொல்லலாம். பெயரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்றிரவு கிளப்பில் நண்பர்களோடு பேச முடிவு செய்திருந்தார் அவர். மாலை நான்கு மணிக்குக் கலைச்செழியன் பேட்டி காண வருவதாகச் சொல்லியிருந்த தனாலும், பேட்டி முடிந்தவுடன் நண்பர்களைக் காண ’கிளப்’புக்குப் போக வேண்டியிருந்ததனாலும் பகலில் நன்றாக ஒய்வெடுக்க விரும்பினார் அவர் கம்பெனியிலிருந்து பதினொரு மணிக்கு ஃபோன் வந்தது. அவருடைய காரியதரிசி பேசி னார். முக்கியமான தபால்களை ஃபேர்னிலேயே படித்தார். ஸ்டெனோவைக் கூப்பிட்டு ஃபோனிலேயே முடிந்த வரை பதில்களைச் சொல்லிவிட்டார் அவர். பகலில் நன் றாகத்துங்கி எழுந்தால்தான் மாலையில் கலைச்செழியன் பிரமுகர் பேட்டிக்காகப் போட்டோ எடுக்க வருகிறபோது ஃபிரஷ் ஆக இருக்குமென்று தோன்றியது அவருக்கு. குளித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் துரங்கினார். மூன்று மணிக்கு அவர் எழுந்திருந்தபோது வேலைக்காரன். “சார்! இவரு உங்களைப் பார்க்க வந்திருக்கார். அனுப்பட்டுமா?”– என்றபடி ஒர் அழகிய விஸிட்டிங்கார்டைக் கொண்டு வந்து நீட்டினான். முகத்தைச் சுளித்துக் கொண்டே அதை வாங்கித் துங்கி எழுந்திருந்த சோம்பலோடு வாசித்தார் கமலக்கண்ணன். எஸ்.வி.கே. நாதன், எம்.ஏ என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு அதன் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து– நாடுகளின் இரண்டு யூனிவர்ஸிடிகளில் ஜர்னலிஸத்தில் விசேட டிப்ள மோக்கள் வாங்கியிருப்பதாகவும் கண்டிருந்தது. “என் அறையில் உட்காரச் சொல். காபி கொண்டு போய்க்கொடு. நான் முகம் கழுவிக்கொண்டு வருகிறேன். டைனிங் டேபிளில் எனக்கும் காபி வை…”– என்றார் கமலக்கண்ணன். வேலைக்காரன் விரைந்தான். கமலக்கண்ணன் முகம் கழுவிக் காபி குடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தபோது வந்திருந்தவரும் காபி குடித்து விட்டுக் காத்திருந்தார். தம்மை மரியாதையாகவும், அடக்கமாகவும் அறிமுகம் செய்துகொண்டு கமலக்கண்ணலுடன் கை குலுக்கினார் வந்திருந்தவர். ‘க்ளாட் டு மீட் யூ’–என்று முகம் மலர்ந்த கமலக்கண்ணன்– இரண்டு விநாடி வந்திருந்தவருடைய தோற்றத்தை நிதானமாக அளந்துவிட்டு எதற்காக அவர் வந் திருக்கக் கூடும் என்பதையும் அநுமானித்துக்கொண்டே பின், ஒன்றுமே அநுமானிக்காதவர் போன்ற குரலில், “வாட் கேன் ஐ டு ஃபார் யூ ஸார்…”– என்று நாகுக்காக வினவினார். இருவரும் ஆங்கிலத்திலேயே பேச்சைத் தொடர்ந்தார்கள். “நீங்க ஏதோ ஒரு டெய்லி தொடங்கப் போறதாக் கேள்விப்பட்டேன். டெய்லி ஜெர்னலிஸ்த்திலே எனக்கு இருபத்தைந்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு ரெண்டு வருஷம் லண்டன்லியும் ஆறு வருஷம் நியூயார்க்கிலேயும் இருந்து மாடர்ன் ஜெர்னலிஸத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் பத்து வருஷம் பம்பாயில் மார்னிங் டைம்ஸிலே சீஃப் எடிடரா இருந்திருக்கேன். ஏழு வருஷம் கல்கத்தாவிலே……’ பேப்பர்லே எக்ஸிகியூடிவ் எடிடரா இருந்திருக்கேன். இப்பத்தான் ஊரோட வந்தாச்சு. என் செர்வீஸை நீங்க ஏதாவது யுடிலைஸ் பண்ணிக்க முடியுமானாச் சந்தோஷப்படுவேன்…லீடர், கரண்ட்டா பிக்ஸ், எல்லாம் டீல் பண்றதிலே என்னோட சாமர்த்தியம் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் எல்லாம் கொண்டாடப்பட்டிருக்கு…”–என்று கூறியவாறே ஒரு பைல் நிறைய சர்டிபிகேட்டுகளையும், உலகப் பிரமுகர்களினது பாராட்டுக் கடிதங்களையும் எடுத்து நீட்டினார் எஸ்.வி கே.நாதன். அந்தப் பாராட்டுக் கடிதங்களையெல்லாம் பார்த்துக் கமலக்கண்ணன் அயர்ந்தே போனார். சர்ச்சில், ரூஸ்வெல்ட், காந்தி, நேரு, சேனநாயகா, அவுன்ஸாங், போன்றவர் களிடமிருந்தெல்லாம் கூடப் பாராட்டுக் கடிதங்கள் வாங்கியிருந்தார் அவர். ஆள் உண்மையாகவே பெரிய ஆள்தான் என்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொண்ட கமலக்கண்ணன் வியப்பில் சிலநிமிடங்கள் என்ன பேசுவதென்றே தெரியாமல் மெளனமாயிருந்தார். “என்ன யோசிக்கிறீங்க”–என்றார் வந்தவர். “ஒண்னுமில்லே! நான் நடத்தப்போறது ஒரு சாதாரண தமிழ் டெய்லி நியூஸ் டேப்பர்! உங்க குவாலிபிகேஷன்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்பப் பெரிசா இருக்கேன்னுதான் பார்க்கிறேன்…” “என் மதர் டங்டமில்தான்! இத்தனை நாள் ஏதேதோ இங்கிலீஷ் பேப்பர்லே உழண்டாச்சு. இனிமேலாவது ரிடயர்ட் லைஃபை இப்படிக் கழிக்கலாம்னு பார்க்கிறேன், உங்களுக்கும் இப்ப இங்கே என்னைவிட ‘க்வாலிஃபைட் ஸீனியர் ஹாண்ட்’ கிடைக்காது…” “அதெல்லாம் சரிதான்… ஆனால்… வந்து’’ “சம்பளம் நெறையக் கேப்பேனோன்னு சந்தேகப் படறாப்பிலே தெரியறது…” ‘சே சே அதெல்லாமில்லே… நான் யோசிக்கிறது என்னன்னா…’ நீங்க ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம், நம்பிக்கையா எங்கிட்ட விட்டுடுங்கோ, உங்க பேப்பருக்கு ஆறே மாசத்திலே அகில இந்தியப் புகழ் உண்டாக்கிக் காண்பிக்கிறேன்…" “எனக்கு ரெண்டு நாள் டயம் குடுங்க மிஸ்டர் நாதன்…” “ஒ எஸ் டேக் யுவர் ஒன் டைம்…” – இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கலைச்செழியனும் அவரோடு பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ் உரிமையாளரும் வந்து சேர்ந்தார்கள். கமலக்கண்ணனுக்குப் பிரகாஷ் பப்ளிவிட்டீஸ் உரிமையாளரை அறிமுகப் படுத்தி வைத்தான் கலைச்செழியன். அவர்கள் இருவருக்கும் நாதனை அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன். இதற்குள் கலைச்செழியன் கையோடு கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து ஒரு எவர்ஸில்வர் அரிவாள் மணையின் நுனி தெரியவே, “இதென்ன? அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு கிளம்பிட்டீர்கள்? வீட்டுக்கு வாங்கிக்கொண்டு போகிறீர்களா?” என்று வேடிக்கையாகக்கேட்டார்கமலக்கண்ணன். “இதுவா? குட்டி நடிகை குந்தள குமாரியோட பிரத்யேகப் பேட்டிக்காகப் போயிருந்தேன். ‘அது’ காய்கறி நறுக்கறமாதிரியும், சமயல் செய்யிற மாதிரியும்போட்டோப் புடிச்சுப் போடணும்னுபோனா அவங்க வீட்டிலே அரிவாள் மனையே கிடையாதுன்னுட்டாங்க. காய்கறி நறுக்கக்கூட. ஏதோ ‘எலக்ட்ரிக்’லே மிஷின் வந்திருக்குதாமே? அதுதான் அவங்க உபயோகிக்கிறாங்களாம். சிவனேன்னு நானே எவர்ஸில்வர் கடைக்குப்போயி ஒரு அருவாமணை வாங்கிக் கொண்டுபோய்– அந்தப் பொண்ணை உக்கார வச்சிக் காய்கறி நறுக்கற மாதிரிப் படம் புடிச்சேன் ’எலக்ட்ரிக்’ மிஷின்லே நறுக்கற மாதிரிப் போட்டோ படத்துக்கு எடுக்காதுங்களே?…” என்று கலைச்செழியன் தன் குட்டி நடிகை சம்பந்தமான சாதனையை வியக்கத் தொடங்கியபோது, “நல்லவேளை நடிகைக்காக நீங்களே கறிகாய் நறுக்கத் தொடங்கி கையைக்காலை வெட்டிக்கொள்ளாமல் பிழைத்தீர்களே! அந்த மட்டில் புண்ணியம்…”– என்றார் நாதன். “என்ன சார் செய்யிறது ’மாஸ் அப்பீல்’தான் இன்னிக்குப் பத்திரிகையாருக்கு”– என்றார் கமலக்கண்ணன் கலைச்செழியனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஆவர். “மாஸ் அப்பீலாவது மண்ணாங்கட்டியாவது? சும்மா அப்படிச் சொல்லிச் சொல்லி இவங்களாக் கீழே அதல பாதாளத்துக்குப் போயிட்டிருக்காங்க சார். ஒருகாலத்தில் நவகாளி யாத்திரையில் காந்திக்குப் பின்னாலும், அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்துக்குப் பின்னாலும், புண்ணிய நடை நடந்த இந்த நாட்டுப் பத்திரிகை நிருபர்களின் இன்றைய வம்சாவளியினர் குட்டி நடிகைகளையும் குச்சுக் காரிகளையும் தேடிப்போகிற நிலைமை வந்திருப்பது கேவலத்திலும் படுகேவலம். அன்று புனிதமான, பெருமிதமான காரியங்களுக்கு எல்லாம் முதல் அடி பெயர்த்து வைத்த தமிழ்நாடு இன்று மட்டமான கேவலமான காரியங்களுக்கு எல்லாம் உதாரணமாயிருப்பதை எங்கே போய் அழுவது?” என்று கடுமையாக யாரும் எதிர்பாராத நிலையில் சீறினார் நாதன். கலைச்செழியனோ, அவனுடன் வந்திருந்த பப்ளி விட்டி ஆசாமியோ நாதனின் இந்தச் சீற்றத்தை ரசிக்க வில்லை. கமலக்கண்ணனின் நிலையோ தர்மசங்கடமாகி விட்டது. இப்படியே பேச்சைத் தொடரவிட்டால் நாதன் எழுந்திருந்து கலைச்செழியனை அறைவதோ, கலைச்செழியன் எழுந்திருந்து நாதனை அறைவதோ, தவிர்க்கமுடியாத தாகிவிடும் என்று தோன்றியது. நாதனைப் பகைத்துக் கொண்டாலும் கலைச் செழியனைப் பகைத்துக்கொள்ளத் தயாராயில்லை அவர். கலைச்செழியனைப் பகைத்துக் கொண்டால் ‘இண்டர்வ்யூவை’ முடிக்காமலே அவன் போய்விடுவானோ என்ற பயம் உள்ளுரக் குறுகுறுத்தது. அந்த நிலையில், “அப்போ நான் வர்ரேன். தேவையானால் மறுபடி சந்திப்போம்…”– என்று மீண்டும் கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார் நாதன். கமலக்கண்ணனைத் தவிர மற்ற இருவரிடமும் “போய் வருகிறேன்” என் பதற்கு அடையாளமாகத் தலையை மட்டுமே ஆட்டினார் நாதன். ஆனால் நாதனிடமிருந்த கம்பீரத்தினாலோ அல்லது பேச்சின் பெருமிதத்தினாவோ அனிச்சைச் செயலாகத் தன்னையறியாமலே எழுந்து நின்று அவரைப் பயபக்தியாகக் கைகூப்பி விடை கொடுத்தான் கலைச்செழியன். எழுந்து நின்ற பின்புதான் ‘தான் அந்த ஆளுக்காக எழுந்து நின்று விட்டோமே’ என்று தன் மேலேயே கோபம் வந்தது கலைச்செழியனுக்கு. நாதன் தலைமறைந்தபின், “இந்தக்காலத்திலே இவரு மாதிரி ஆள் பத்திரிகை நடத்தினா அதை இவரு மட்டும் தான் படிக்கனும். வேற ஒரு பய தொடமாட்டான். புனிதமாவது வெங்காயமாவது?” என்று கமலக்கண்னனை நோக்கித் கூறினார் பிரகாஷ் பப்ளிஸிட்டி அதிபர். “அது சரிதான்! ஆனா மனுஷன் நெறையப் படிச்சிருக்கார். ஆனானப்பட்ட ஆளுங்கள்ளாம் இவர் திறமையைப் புகழ்ந்து எழுதியிருக்கானே! சரக்கு இல்லாம அப்பிடி எழுதுவானா?” என்று இதற்கும் விட்டுக்கொடுக்காமல் பதில் கூறினார் கமலக்கண்ணன். “சரக்கு இருக்கலாம் சார் ஆனால் இன்னிக்கி எந்தச் சரக்கானாலும், அதை ஜனங்க விரும்பற சரக்கா மாத்திக்கணும். இல்லாட்டா–சாக வேண்டியதுதான்…” “சரி அது எப்படியும் போகட்டும்! நமக்கு வேண்டாம் அவர் கவலை. இப்ப நீங்க வந்த காரியத்தைக் கவனியுங்க…’ என்றார் கமலக்கண்ணன். “நம்ம காரியம் ரெண்டு நிமிஷத்திலே முடிஞ்சிடும். உங்க பேட்டியை நீங்க எப்படி எப்படி விரும்புவீங்களோ அப்பிடி நானே எழுதிகிட்டு வந்திட்டேன். இந்தாங்க! சும்மா ஒருதரம் புரட்டிப்பார்த்து விட்டுக்கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடுங்க. படம் மட்டும் புடிச்சிக்கணும்…” என்று தொடங்கிய கலைச்செழியனை இடைமறித்து “அதெப்படி? நீங்களே எழுதிட்டு வரமுடியும்? நான் ஒண்ணுமே சொல்ல வேண்டியதில்லையா?" என்று கமலக்கண்ணன் வினவினார். “முதல்லே இதைப் படியுங்க! எல்லாம் கச்சிதமா இருக்கும். நீங்களே அசந்து பூடுவிங்க…” கமலக்கண்ணன் கலைச்செழியனின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கத் தொடங்கினார். படித்துக்கொண்டே வந்தவர், “எனக்கு வீணை வாசிக்கறதிலே ரொம்பப் பிரியமும், திறமையும், பழக்கமும் உண்டுன்னு எழுதியிருக்கீங்களே…?” என்று தயங்கிய குரலில் கேட்டார். “அதெல்லாம் பரவாயில்லே சார்!சும்மா இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன். எத்தனை சங்கீத சபைகள்லே தலைவராகவும் உபதலைவராகவும், மெம்பராகவும் இருக்கீங்க… சும்மா அதோட சம்பந்தப்படுத்தி ஏதாச்சும் போடாட்டி நல்லாருக்காது பாருங்க…உங்க வீட்டிலே குழந்தைங்க யாராவது வீணை படிப்பாங்களே! இல்லியா…? அதிலே ஒரு வீணையைத் தூக்கி வச்சிட்டுச் சும்மா உக்காருங்க… ஒரு படத்தைத் தட்டிக்கிறேன் அசல் வீணை வித்வான் தோற்றுப் போகிற மாதிரிப் பண்ணிடமாட்டேன்–”என்று அட்டகாசமாக ஒரு போடு போட்டான் கலைச்செழியன். “அப்போ குட்டி நடிகை எவர் ஸில்வர் அரிவாள் மணையில் காய்கறி நறுக்கற மாதிரித்தான் இதுவும்னு சொல்லுங்க…” என்று கமலக்கண்ணன் கலைச்செழியன்ன ஹாஸ்யத்துக்கு இழுத்தார். கலைச்செழியன் அதைக் கேட்டு அசடுவழியப் புன்முறுவல் பூத்தான். “மத்ததெல்லாம் சரியாகவே இருக்கு. நான் டெய்லி ஸ்டார்ட் பண்றதைப் பத்திக்கூட எழுதிட்டீங்க என்னைப் பத்தித்தான் ரொம்ப அதிகமாகத் தூக்கிவச்சு எழுதியிருக்கீங்க. அது உங்க அன்பைக் காட்டுது…” “அதென்ன ஒருத்தர் சொல்லியா தெரியணும்? நம்ம கலைச்செழியன் சார் மனசு வச்சிட்டார்னா எல்லாம் பிரமாதமாப் பண்ணிப்பிடுவாரு இன்னிக்கி நேத்திக்கிப் பழக்கமா? பத்துவருஷமா நானும் இவரும் பழகுகிறோம். இவரிட்ட தான் தெரிஞ்சுக்கிட்ட ஒரே நல்லகுணம் அன்புக்காக உசிரைக் கொடுப்பாரு…” என்ற பிரகாஷ் பப்ளி ஸிட்டியின் தாளத்தை இடைவெட்டி , “உசிர் இருந்தாத்தானே அன்பு செய்யலாம்? கொடுத்துப்பிட்டா என்ன பிரயோசனம்?” என்பதாகக் கமலக்கண்ணன் ஒரு போடு போட்டார். “நல்லாச் சொன்னிங்க…போங்க…!” என்று அதற்கும் ஒரு பதில் கொடுத்து அடி வாங்கியதைச் சமாளித்துக் கொண்டார் பப்ளிஸிட்டி. புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் வந்தது. பலகோணங்களில் கமலக்கண்ணன், கமலக்கண்ணனின் குடும்பம், கமலக்கண்ணன் தன் வயசான தாய்க்கு உபசாரம் செய்வது போல், முன் ஹாலில் புதிதாகப் பெரிதாக மாட்டியிருந்த காந்தி படத்துக்கு அருகே நிற்பதுபோல்– எல்லாம் படங்கள், எடுத்தபின் கீழே ஜமுக்காளத்தை விரித்து அவர் வீணை வாசிப்பதுபோல் படம் எடுக்க ஏற்பாடு தொடங்கியது. வீட்டிலிருந்த பழையவீணையைத் தாசிதட்டித்துடைத்துக் கொண்டுவந்து கொடுத்தாள் மிஸஸ் கமலக்கண்ணன். அந்தப் படப்பிடிப்புக் காட்சியை வேடிக்கை பார்க்கக் கமலக்கண்ணனின் குடும்பமே ஹாலில் திரண்டுவிட்டது. தம்புராவைப் பிடிப்பதுபோல் வீணையை நெட்டுக் குத்தாகப் பிடித்துக்கொண்டு அவர் படத்துக்கு உட்கார்த்ததும் மிஸஸ் கமலக்கண்ணன் சிரிப்பை அடக்கமுடியாமல் கொல்லென்று சிரித்தே விட்டாள். “இந்தாங்க! உங்களைத்தானே? இது தம்புரா இல்லே – வீணை வைச்சுக்கிட்டு வாசியுங்க…” என்று அந்த அம்மாள் ‘டைரக்ட்’ செய்த பின்னே படப்பிடிப்புக் காட்சியில் நேர இருந்த அபத்தம் தவிர்க்கப்பட்டது. “சாருக்குத் தெரியாதுங்கிறதில்லே அம்மா! சார் அதிலேயும் ஒரு புதுமை செய்ய விரும்பினார். நீங்க கெடுத்துட்டிங்க…” என்று அந்த அபத்தத்தையும் ஒரு சமத்கார மாக்கி உளறினான் கலைச்செழியன். படப்பிடிப்புக்கள் முடிந்து கமலக்கண்ணன், கலைச் செழியன், பிரகாஷ் பப்ளிவிட்டி மூவரும் மீண்டும் அறைக்கு வந்து அமர்ந்தார்கள். பின்னவர் இருவருக்கும் டிபன், காபி வந்தது– சாப்பிட்டார்கள். “சாரை என்ன காரியமா அழைச்சிட்டுவந்திங்களோ?” என்று பிரகாஷ் பப்ளிஸிட்டியைச் சுட்டிக் காண்பித்துக் கலைச்செழியனிடம் தயங்கிய குரலில் மெல்லக் கேட்டார் கமலக்கண்னன். “சார்–அட்வர்டைஸிங் அண்ட் சேல்ஸ் ப்ரமோ ஷன்ஸ்லே ரொம்பப் பெரிய எக்ஸ்பர்ட் பிரகாஷ் பப்ளிலிட்டி ’பிரகாசம்’னா மெட்ராஸிலே சினி ஃபீல்டிலேயும் சரி. பிஸினஸ் ஃபீல்டிலேயும் சரி, தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க–” என்று பலமான அடிப்படையோடு தொடங்கினான் கலைச்செழியன் அடிப்படை பலமாகப் பலமாகக் கமலக்கண்ணனுக்கு என்னவோ ஏதோ என்று சந்தேகம் தட்டத் தொடங்கியது. பகுதி -7 எதிரே வந்து உட்கார்ந்து பேசுகிறவனின் அதிகப் பணிவும், குழைவும், தன்னை எந்த நஷ்டத்துக்கும் ஆளாக்கலாம் என்று முன்னதாகவே எடை போட்டு நிறுத்து நிர் ணயிப்பதில் ஒவ்வொரு வியாபாரியும் கெட்டிக்காரனாகத் தான் இருப்பான். கமலக்கண்ணனோ பிறவி வியாபாரி. கலைச்செழியன் தன்னோடு உடனழைத்து வந்திருந்த ‘பிரகாஷ் பப்ளிவிட்டி’பிரசாசத்தைப் ’பளிச்பளிச்’ சென்று புகழ்ந்து அறிமுகப்படுத்தியபோதே, ‘என்ன காரியத்துக்கு அடிப்போடுகிறார்களோ?’–என்று மெல்லச் சந்தேகம் தட்டியது அவருக்கு. “பிரகாஷ் பப்ளிஸிட்டியைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்…ஆனா…வந்து…” –என்று தயங்கினாற் போல இழுத்தார் கமலக்கண்ணன். “படத் தயாரிப்பாளர்களுக்கு நியாயமான வட்டியிலே ஃபைனான்ஷியர்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்ரதோட–பப்ளி ளிட்டி இன்சார்ஜ் ஆகவும் இருக்கோம். உங்க கம்பெனி விளம்பரங்களை எல்லாம்கூட எங்க மூலமாகவே செய்யணும்னு ரொம்ப நாளா எங்களுக்கு ஒரு ஆசை இருந்தது ஏன் விளம்பரம் செய்யனும்கிறதைவிட– எதுக்காக விளம்பரம் செய்யணும்கிறதை– எதிர்பார்த்து அதுக்கேற்ற முறையிலே செயல்படற ஒரே அட்வர்டைவிங் மீடியா எங்களோடது தான். இதிலே உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே. எங்களைப் பற்றி தாங்களே ரொம்பவும் சொல்லிக் கொள்ளக்கூடாது பாருங்க…” என்று ஓயாமல் அடுக்கியபின் கடைசியில் உபகார அடக்கமாகவும் போனால் போகிறதென்று ஒரு வார்த்தை சொல்வி முடித்தார் பிரகாசம். ‘மாயா தேவின்னு ஒரு புது ஹீரோபின் வந்திருக்குப் பாருங்க…இப்பத்தான் எங்க பார்த்தாலும் அதைப் பத்தியே பேச்சாயிருக்குங்களே…? அதை இந்த லயன் ’லே கொண்டாந்து விட்டதே நம்ம பிரகாசம் சார்தான்…’ என்றான் கலைச்செழியன். “இந்த ’லயன்’லேன்னா…எந்த லயன்லே…” என்று கமலக்கண்ணனும் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டுக் கேட்டபோது அந்தச்சிரிப்பிலேயே அவரைக் குறிப்பறிந்து விட்டார் பிரகாசம், உடனே மெல்லத் தொற்றினார். “மாயாவுக்குக்கூட உங்களைப் போலொத்தவங்களை . அறிமுகப்படுத்திக்கிடனும்னு… ரொம்ப ஆசைதானுங்க.” “ரியலி–ஷி இஸ் சார்மிங்–ப்யூட்டிஃபுல்..” என்று கமலக்கண்ணனும் நெகிழ்ந்தார். " ஷி இஸ் வெரி ஈகர் டு ஸூ யூ ஸார்…" “பார்த்தாப் போச்சு…” “வீட்டுக்கே அழச்சிட்டு வரட்டுமா……சார்……… இல்லே…?” – “இங்கேயா…வாணாம்…நான் அப்புறம் சொல்றேனே?”–என்று சிரித்து மழுப்பினார் கமலக்கண்ணன். “உங்களைப் போல கலை ரசிகர்களிட்ட ரொம்ப தொடர்பு வச்சிக்கணும்னு மாயாவுக்கு ஆசை உண்டுங்க…” என்று வேறு விதமாகச் சொல்ல முடியாத விஷயத்தை ரசிகத் தன்மை என்ற தோரணையில் அழகாக விவரித்தார் அட்வர்டைஸிங் அண்ட் வேல்ஸ் ப்ரமோஷன்ஸ் பிரகாசம். அது அவருக்கும் புரியும். கமலக்கண்ணனுக்கும் புரியும் அப்புறம் என்ன? “நீங்க தொடங்கப் போற புது டெய்லிக்கு– ‘விளம்பர பட்ஜெட்’ எவ்வளவு போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா…சார்!” “இன்னும் ‘பட்ஜெட் எதுவும் போடலே நீங்களே ஒரு ’ஸ்கீம்’ கொடுங்களேன். முதல்லே பத்திரிகைக்குப் பேர் செலக்ட் பண்ணனும். அப்புறம் வால்போஸ்டர், மற்ற நியூஸ் பேப்பரிலே விளம்பரம், தியேட்டர்களிலே சிலைடு, எல்லாமே கொடுத்துடலாம்னு நினைச்சிருக்கேன்…” “ஓ! பேஷா செய்யலாங்க…” “தினமுழக்கம்’னு வைச்சிடுங்களேன்…”– என்றான் கலைச்செழியன். “சே! சே! அது நல்லாயில்லே…ரொம்ப ‘சீப்பா’ இருக்கு! ’தினக்குரல்’னு வைக்கலாம்..” என்று திருத்தினார் பிரகாசம். “பேப்பர்லே போட்ட விளம்பரத்தைப் பார்த்து நெறையப் பேர் எழுதியனுப்பிச்சிருக்காங்க. அதையும் பார்த்துத்தான் முடிவு பண்ணுவமே…?” என்றார் கமலக்கண்ணன். சிறிது நேரத்திற்குப் பின் பத்திரிகையைப் பற்றிய பேச்சைவிட்டு மறுபடியும் மாயாதேவியைப் பற்றிய பேச்சுக்குக் கமலக்கண்ணனே வந்தார். “இப்ப எல்லாருமே அந்தப் பெண்ணைத்தான் ஹீரோயினாப் போடறாங்க இல்லே…? வந்த கொஞ்ச நாளிலேயே ஃபீல்டைப் பிடிச்சுக்கிட்டா. கெட்டிக்காரியாகத்தான் இருக்கணும்.” “பின்னே சும்மாவா சொல்றேன் நான்…பழகினா நீங்களே கூட அதுங்குணத்தைப் புரிஞ்சுக்குவீங்க… அப்புறம் நான் சொல்ல வேணாம்…” என்று மறுபடி ஒத்துப் பாடினார் பிரகாசம். உலகில் மாயா உட்பட சகல விஷயங்களையும் விளம்பரம் செய்வதும் விற்பனையை வளர்ப்பதும் தான் அவருடைய இலட்சியங்களாயிற்றே. பப்ளிஸிட்டி சம்பந்தமாக க்ளையண்ட்களை– வாடிக்கைக்காரர்களை– இப்படி ‘மாயா’ ’விநோதங்கள் மூலமாக வலை விரித்துப் பிடிப்பது தான் பெரும்பாலும் அவர் வழக்கம். இந்த வலைகளுக்குத் தப்பியவர்கள் பெரும்பாலும் எந்த வலையிலுமே சிக்க முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் அவருடைய திட சித்தாந்தமாக இருந்தது. சிறிது நேரம் கமலக்கண்ணனிடம் புது நடிகை மாயா வைப்பற்றிப் பேசி அவருக்குச் சரியானபடி மயக்கமூட்டி விட்டபின் பிரகாசமும், கலைச்செழியனும் விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உடை மாற்றிக்கொண்டு கமலக்கண்ணனும் கிளப்புக்குப் புறப்பட்டுவிட்டார். புறப்படு முன் மறக்காமல் அலுவலகத்திற்குப் போன் செய்து பத்திரிகைக்குப் பெயர் வைப்பது சம்பந்தமாக யோசனை கூறி வந்திருந்த கடிதங்களைக் கிளப்பிற்கு எடுத்து வருமாறு தன் காரியதரிசிக்குத் தெரிவித்திருந்தார் அவர். கிளப்பில் எட்டரை மணிவரை சீட்டாடிய பின் நண்பர்களில் முக்கியமானவர்களோடு பத்திரிகைப் பெயர் சம்பந்தமான ஆலோசனை தொடங்கப்பட்டது. கடிதங்களில் வந்திருந்த பெயர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. “சாயங்காலம் வீட்டுக்கு– பிரகாஷ் பப்ளிவிட்டி பிரகாசம்னு ஒரு ஆளு வந்திருந்தார். ’தினக்குரல்’னு பேர் வைக்கலாமின்னு அந்த ஆள் சொன்னாரு” என்று கமலக்கண்ணன் தற்செயலாகக் கூறியபோது அந்தப் பெயரை எல்லா நண்பர்களுமே சொல்லி வைத்தாற்போல் ஏகமனதாக ஆதரித்தார்கள். அந்தப் பெயரையே வைப்பதென்று, கமலக்கண்ணனும் முடிவு செய்தார். “பத்திரிகையிலேயே விளம்பரம் செய்தபடி ஐநூறு ரூபாய் பரிசு கொடுக்கனுமே! இல்லாட்டி ஏமாத்திப் பிட்டதாகப் பேசுவாங்களே?” என்றார் ஒருவர். “அதுக்கென்ன? பிரகாஷ் பப்ளிவிட்டி பிரகாசமும் போட்டியில் கலந்துகொண்டு ‘தினக்குரல்’ங்கிற பேரை எழுதி அனுப்பினதாகவே சொல்லி அவருக்கு ஐந்நூறு ரூபாய் பரிசையும் கொடுத்தாப் போச்சு…’ என்று அந்தப் பிரச்சினைக்குச் சுலபமாக முடிவு சொல்லிவிட்டார் கமலக் கண்ணன். உடனே– அப்போதே– கலைச்செழியனைப் போனில் பிடித்து அந்தச் செய்தியையும் தெரிவித்து விட்டார். மறுநாள் காலையிலேயே பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசத்தை அழைத்துக்கொண்டு மறுபடி கமலக்கண்ணனைத் தேடி வந்துவிட்டான் கலைச்செழியன். இன்று பிரகாசம் வெறுங்கையோடு வராமல் கமலக்கண்ணனுக்குப் போடுவதற்கு ஒரு மாலையோடு வேறு வந்திருந்தார். “இதெல்லாம் எதுக்குங்க…? இந்த ’பார்மாலிடீஸெ’எனக்குப் பிடிக்கிறதில்லே?” என்று கமலக்கண்ணன் அந்த மாலை மரியாதைக்கு நாணி ஒதுங்குவதுபோல் நடித்தாலும் பிரகாசம் அப்படிச் செய்ததை அவர் மனம் கொண்டாடி வரவேற்கவே செய்தது. சொல்லப் போனால் இப்படி மாலைகளுக்கும் மரியாதைகளுக்கும் தான் அவர் மனம் ஏங்கிக் கிடந்தது. பிரகாசம் அதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார். பிரகாசம் மாலையைத் தன் கழுத்தில் போட்டு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்த பத்தாவது நிமிடமே அந்தப் பரிசுத் தொகை ஐநூறு ரூபாயை ஒரு கவரில் போட்டுக் கொடுத்துவிட்டார் கமலக்கண்ணன். மாலையைக் கழுத்தில் போட்டதும் எலுமிச்சம் பழத்தையும் கையில் கொடுக்கிற வழக்கம் எதற்காக ஏற்பட்டதோ– ஆனால் பொருத்தம் மிக நன்றாக அமைகிறது. எப்பேர்ப்புட்ட மனிதனுக்கும் மாலை கழுத்தில் விழுந்ததும் ஒரு கிறுகிறுப்பு– தலை சுற்றல்– வருகிறதே– அதைக்கருதித்தான் எலுமிச்சம்பழத் தையும் உடன் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது. “என்னங்க இந்த வாரத்திலே ஒருநாள் மாயா வீட்டிலே தலையைக் காட்டிட்டு வரச் செளகரியப்படுமா?’ என்று சமயமறிந்து அடுத்த வலையையும் விரித்தார் பிரகாசம். “யோசிச்சுச் சொல்றேன். இந்த வாரம் ‘சாமிகள்’ நம்ம வீட்டுக்கு வாராரு பாத பூஜை எல்லாம் இருக்கு, ஏதோ என் சம்சாரத்துக்கு இதிலே கொஞ்சம் கிறுக்கு…” என்று மனைவியின் தலையில் பக்திப் பழியைப் போட்டார் கமலக்கண்ணன். “ஆமாங்க! இந்த ’சாமி’யைப் பத்தி எல்லாருமே நல்லபடியாச் சொல்றாங்க…இவர் சொன்னது அப்படியே பலிக்குதாம்…” என்று உடன் ஒத்துப் பாடினார் பிரகாசம். பெரிய மனிதர்களிடம் பழகி வெல்வதற்கு அது சரித்துப் பேசுவதும் ஒரு சாதனம் என்று கருதியவராகத் தோன்றினார் அவர்." “டெய்லி நடத்தப் போறதைச் சாமிகிட்டேயே சொல்லி ஆசீர்வாதம் வாங்கிடலாம்”– என்று கலைச் செழியனும் இழைந்து பேசிச் சமாளித்தான். “இந்தச் சாமி எதை வாழ்த்தினாலும் அது பொன்னாக் கொழிக்குதுங்கிறாங்க…” என்றார் பிரகாசம். “சாமி வரன்னிக்கு எல்லாப் போட்டோவும் நீங்க தான் எடுக்கணும்…” என்று கலைச்செழியனிடம் கூறினார் கமலக்கண்ணன், . – – “ஆகா! நீங்க சொல்லணுங்களா? உங்க ஆஸ்தான போட்டோகிராபர உத்தரவே வாங்கிக்கிட்டப்புறம்?”… என்று கலைச்செழியன் வாயெல்லாம் பல்லாகத் தெரிய இளித்து அதை அங்கீகரித்தான். உடனே ஒரு இருபது முப்பது நண்பர்களுக்கும், பிரமுகர்களுக்கும் போன்செய்து மடாதிபதி வரப்போகிற செய்தியைத் தெரிவித்தார் கமலக்கண்ணன் ஒருவார்த்தை கூட வித்தியாசமில்லாமல் ஒரே செய்தியை இருபது பேருக்கு கிராமபோன் பிளேட்மாதிரி கூறியதில் அவருக்கு அலுப்போ, சலிப்போ சிறிதும் ஏற்பட்டதாகவே தெரிய வில்லை. பத்துப் பேருக்கு, ‘நான் பக்தி செய்கிறேன்’– என்று விளம்பரப் படுத்திவிட்டுப் பக்தி செய்தால்தான் இந்தக் காலத்தில் மதிப்பு என்பதைப் புரிந்து கொண்டவர் கமலக்கண்ணன். மடாதிபதி விஜயம் அவருடைய பங்களாவில் திருவிழாவாக வந்து போயிற்று. போட்டோக்கள், பந்தி பந்தியாய் அன்னதானம், வாசலில் பந்தல் என்று தடபுடல் பட்டது. சுவாமிகள் கமலக்கண்ணனின் பங்களா காம்பவுண்டில் மண், பொன், பெண் ஆகியவற்றின் நிலையாமைகளைப் பற்றிப் பிரசங்கங்கள் செய்தார். தினம் ஐநூறுபேர் கூடிக் கேட்டார்கள். மூன்றுநாள் இப்படி நடந்தது. நாலாவது நாள் வேறொரு பெரியமனிதர் வீட்டுக்குப் போய்விட்டார் சுவாமிகள். கமலக்கண்ணனுடைய பங்களா முகப்பில் பந்தல், வாழைமர அலங்காரங்களைப் பிரிக்க வேண்டியதாயிற்று. ஆதினத்துச் சாமிகள் விஜயம் செய்து முடித்தபின் பிரகாசமும், கலைச்செழியனும் மறுபடி வந்து மாயா தேவியைப்பற்றி நினைவூட்டினர். “இப்பவே மாயாவைப் பார்த்துவச்சால் அப்புறம் ஒரு செளகரியம் இருக்குங்க, நம்ம ‘தினக்குரல்’ தொடக்க விழாவில் முதல்நாள் பேப்பர் முதல் பிரதியை வெளியிட ஒரு விழா ஏற்பாடு செய்து மாயாவையே முதல் பிரதியை வாங்கச் சொல்லலாம். அப்படிச் செய்தால் நல்ல ‘பப்ளிஸிடி’ ஆகும். முதல் பிரதியை மாயா வாங்கின செய்தி ஊரெல்லாம் பரபரப்பாகப்பரவும். அது பத்திரிகை விற்பனைக்குத் துணை செய்யக்கூடியது”–என்று பிரகாசம் யோசனை கூறியபோது, “நல்ல ஐடியாங்க– இவரு சொல்றது”– எனக் கலைச்செழியனும் சேர்ந்துகொண்டான். “டெய்லி பேப்பருக்கு இப்படி ஒரு விழா எல்லாம் அவசியமில்லேன்னு நினைக்கிறேன்”– “அப்படிச் சொல்லாதீங்க டெய்லிக்குத்தான் இது ரொம்ப அவசியம்…”– என்று கமலக்கண்ணனிடம் மேலும் வற்புறுத்தினார் பிரகாசம். மறுநாள் அவரை எப்படியோ சம்மதிக்கச் செய்து மாயாதேவியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள் பிரகாசமும் கலைச்செழியனும், மாயாதேவிக்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்தார் கமலக்கண்ணன். கமலக்கண்ணனிடம் சிரித்துச் சிரித்துப் பேசினாள் மாயா; அவளுடைய சிரிப்பின் ஒய்யாரத்திலும், பழகிய தளுக்கிலும் கமலக்கண்ணன் சொக்கிப்போனார். இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது– கமலக்கண்ணன் எவ்வளவு மறுத்துச் சொல்லியும் கேட்காமல் கலைச்செழியன் ஒரு படம் பிடித்துக்கொண்டான். “உங்களைப்போலக் கலைகளை ஆதரிக்கிற ரசிகர் என் வீடுதேடி வந்தது நான் செய்த பாக்கியம்” என்றாள் மாயா. அந்தப் பேச்சிலிருந்த மழலைத்தன்மை போன்ற ஒரு போதை கமலக்கண்ணனைக் கிறங்கச் செய்தது. “உங்களைப்பத்திப் பேசாத ரசிகனே இன்னிக்கித் தமிழ்நாட்டிலே கிடையாது. நான் என்ன? சாதாரண வியாபாரி…” என்று கீழே இறங்கினாற்போல் பணிந்து பேசினார் அவர். “எனக்கென்னமோ உங்களை ரொம்பப்பிடிச்சிருக்கு” என்று முகம் மலர்ந்தாள் மாயா. அதுதான் சமயமென்று தினசரியின் வெளியீட்டு விழாவில் முதல் நாள் பேப்பர் முதல் பிரதியை விலைக்கு வாங்க ’மாயா’தான் வரவேண்டுமென்று கமலக்கண்ணன் ஆசைப்படுவதாகக் கலைச்செழியன் பேச்சைத் தொடங்கி வைத்தான். “நான் எதுக்குங்க…சினிமாப் பத்திரிகையா இருந்தாலும் பொருத்தமா இருக்கும். இதுவோ…டெய்லி நியூஸ் பேப்பர்…இதுக்குப் போயி என்னை விழாவுக்குக் கூப்பிட றீங்களே…’ என்று மாயாவும் மறுப்பதுபோல் விநயமாகக் குழைந்தாள். “அதென்னம்மா அப்படிச் சொல்லிட்டே? சினிமாப் பத்திரிகையின்னாத்தான் நீவரணுமா? எதுன்னாலும் இன்னிக்கி அதிலே சினிமா உண்டு, சினிமா இல்லாம எதுவும் இல்லே. எந்தப் பத்திரிகையின்னாலும் அது இன்னிக்கு நிலைமையிலே ஏதாவது ஒரு நாள் சினிமாப் பத்திரிகை யாகத்தான் ஆகனும் சினிமா இல்லாட்டி டெய்லிதான். ஏது…? என்றார் பிரகாசம். “அதுக்கில்லே…வந்து நான் என்ன அவ்வளவு பெருமைக்குத் தகுதியா?” என்று கிளுகிளுத்தாள் மாயா. “இப்படிச் சொல்றதே உங்களுக்குத் தகுதிதான்” என்றார் கமலக்கண்ணன். கமலக்கண்ணன் வைர நெக்லஸ்ஸைக் கொடுத்த போது மாயா மறுப்பதுபோல் பாசாங்கு செய்தாள். “சும்மா வாங்கிக்கம்மா! சார் பிரியப்பட்டுக் குடுக்கிறப்ப நீ மறுக்கிறது கொஞ்சங்கூட நல்லா இல்லை” என்று பிரகாசம் கூறிய பின்பே அவள் அதை வாங்கிக் கொண்டாள். கமலக்கண்ணனுக்கும், கலைச்செழியன், பிரகாசம் ஆகியோருக்கும் ஆப்பிள் ஜூஸ்–ஐஸ் போட்டுக் கொடுத்தாள் மாயா. “உங்க கையாலே கொடுத்ததிலே ஆப்பிள் ஜூஸ் வழக்கத்தைவிடப் பிரமாதமாயிருக்கு…’ என்று கமலக்கண்ணனும் கடைசி கடைசியாகப் பேச்சில் அசடு வழியத் தொடங்கினார். அழகிய பெண்ணிடம் அசடு வழியாத சராசரி ஆண்மகனே இருக்கலாகாது என்பது கடவுளின் சூழ்ச்சியோ என்னவோ? – அங்கிருந்து திரும்பி வெளியேறும்போது காரில், “நான் இங்கே வந்து போனதைப் பற்றி எங்க வீட்டிலே வச்சுப் பிரஸ்தாபிக்க வேண்டாம்…தெரியுதா?’ என்று கலைச்செழியனிடமும், பிரகாசத்திடமும் வேண்டிக் கொண்டார் கமலக்கண்ணன். “அடேடே! என்னங்க நீங்க? இதுகூடத் தெரியாதுங்களா எங்களுக்கு…? விடிஞ்சி எந்திரிச்சா எத்தினி பெரிய ஆளுங்க கூடப் பழகறோம்?” என்று ஏககாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு இருவரும் ஒரே வார்த்தைகளில் அவருக்குப் பதில் சொன்னார்கள். கமலக்கண்ணனும் உடனே அவர்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் “மிஸ்டர் கலை! மாயா வீட்டிலே எடுத்தீங்களே படம்! அதைப் பத்திரிகையிலே கித்திரிகையிலே போட்டுத் தொலைச்சிராதியும்…!” “நீங்க ஒண்ணு! அவங்க பக்கத்திலே நீங்க கம்பீரமா உக்காந்திருந்த போஸ் ரொம்ப ‘மேட்ச்’ ஆறமாதிரி இருந்திச்சு! அதான் ஒண்னு தட்டி வச்சேன். இதைப் போயிப் பத்திரிகையிலே போடுவாங்களா என்ன? அவ்வளவுக்கு விவரம் தெரியாத வனில்லிங்க… நான்” “உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்காகச் சொல்லி வைக்கிறேன். ஞாபகமிருக்கட்டும்.’’ பத்துப்பதினைந்துநாட்களில் முதலமைச்சர் தலைமையில் முதல் பிரதியை கவர்ச்சி நடிகை மாயாதேவி வாங்க ‘தினக்குரல் நாளிதழ்வெளியீட்டுவிழா அமோகமாக் நடை பெற்றது. அதைப்பற்றிய செய்திகளும், படங்களும் வேறு தினசரிகளிலும் தாராளமாக வந்திருந்தன. தினப் பத்திரிகைக்கு உதவியாசிரியர்கள். ஒரு நியூஸ் எடிட்டர், நிரு பர்கள் மட்டும் போட்டு விட்டுத் தம் பெயரையே ஆசிரியர் என்ற பதவிக்கு நேரே போட்டுக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். கீழே அச்சகமும் மாடியில் அலுவலகமுமாக அவருடைய கம்பெனி காரியாலயத்திற்கு அருகிலேயே ஒரு கட்டிடம் பத்திரிகைக்குக் கிடைத்திருந்தது. டெய்லியில் வியாழக்கிழமை சோதிடப் பகுதியைக் கமலக்கண்ணனுக்கு ஏற்கெனவே அறிமுகமான சர்மாவும், ஞாயிறு சினிமா மலரை வேறொரு புனைப்பெயரில் கலைச்செழியனும், கவனித்துக் கொண்டார்கள். நியூயார்க்கிலும், லண்டனிலும், ஜர்னலிசம் படித்த நாதனைப்போன்றவர்களை அருகில் வரவும் விடவில்லை. பணமும் பத்திரிகைப் பிரசாரமும் அவர் எதிர் பார்த்ததை அவருக்கு மெல்ல மெல்லத் தரலாயின. அப்போது பதவியிலிருந்த – அரசியல் கட்சியில்– அவரும் ஒரு தீவிர உறுப்பினராக வாய்ப்பு வந்தது. அந்தக் கட்சியின் தேசியத் தன்மைகளுக்கும். காந்தீய நெறிகளுக்கும், எதிரான வழிகளில் ஒருகாலத்தில் சென்ற குடும்பமே அவருடையது. என்றாலும் அவரிடமிருந்த பணம்– பத்திரிகை இரண் டிலுமே.. அதை அவர் இன்று அடைய முடிந்தது. கட்சியில் புதிதாக நுழைந் திருந்தாலும் வசதியுள்ளவர் என்ற காரணத்தால் அவர் சொல்லியதை எல்லோரும் கேட்டார் கள். அதே சமயம் கட்சிக்காக உயிரை விட்டுச் சிறை சென்று, தனி நபர் சத்தியாக்கிரகங்கள் செய்து, அந்நியத் துணி பகிஷ்கரிப்புச் செய்து பாடுபட்ட ஏழைத் தியாகிகள். பலரைக் கட்சி இலட்சியமே செய்யவில்லை. கமலக்கண்ணன் ஒரு நோக்கத்தோடு கட்சியில் தீவிர உறுப்பினரானார். அந்த நோக்கம் நிறைவேறுகிற காலமும் வந்தது. கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தகுதியாக சட்டத்தில் இருந்தது–’மதுவிலக்கை ஒப்புக்கொண்டாக வேண்டும்’ என்ற பிரிவு. அந்தப் பிரிவை ஒப்புக்கொண்டு அதன்கீழ்க் கையெழுத்திட்டு உறுப்பினராகியும் கமலக்கண்ணனால் குடிப்பதை நிறுத்த முடியவில்லை. “கட்சி இலட்சியங்களில் நம்பிக்கை இன்றி ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று அவரை எதிர்த்துக் கேட்கவும் அந்தப் புராதனமான தேசிய இயக்கத்தில் யாரும் துணியவு மில்லை. அந்த நிலை கமலக்கண்ணனுக்கு வசதியை அளித்தது. மெல்ல மெல்லக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர்களும், உண்மை ஊழியர்களுமான தியாகிகள் பலர் அவருக்குச் சலாம் போடும் நிலைக்கு ஒடுக்கப்பட்டனர். கட்சி அலைச்சல்களுக்கு கார், கட்சி நிதிக்குப் பணம், கட்சிப் பத்திரிகைகளுக்கு ஆதரவு எல்லாம் அவர் தந்தார். கட்சி தன் இலட்சியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே விற்று விட்டது. இந்த நிலையைத்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் திடீரென்று ஒரு சிறு சலசலப்பும் கட்சியில் அவருக்கெதிராக முளைத்தது. பகுதி -8 கமலக்கண்ணனுடைய புதிய தினசரிப் பத்திரிகை தொடங்கப்பட்டுச் சில மாதங்கள் ஆகிவிட்டன. இந்தச் சில மாதங்களில் ‘தினக்குரல்’– எல்லாச் சிற்றுரர்களிலும் பேரூர்களிலும் ப்ரவி விட்டது. சினிமாவில் காட்டப்படும் சிலைடுகளிலிருந்து, தகர போர்டுகள் வரை எல்லா விளம்பரங்களிலும் மாயாதேவி ஒரு ‘தினக்குரல்’இதழைக்கையில் விரித்துப் படித்துக் கொண்டிருப்பது போல்– படுத்துக் கொண்டிருக்கும் காட்சியோடு விளம்பரங்களைச் செய்திருந்தார் ’பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ்’ உரிமையாளர் பிரகாசம். ஒரு தினசரிப் பத்திரிகையை ஒரு கவர்ச்சி நட்சத்திர நடிகை படிப்பதுபோல் காட்சியிட்டு விளம்பரம் செய்தது, இது முதல் தடவை–என்று கமலக்கண்ணனைச் சந்திக்கும் போதெல்லாம் பெருமையாகக் கூறிவந்தார் பிரகாசம். மாயாதேவியின் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்த காரணத்தால் கமலக்கண்ணனும் பிரகாசத்தை ஒரு செல்லப்பிள்ளை போல் கவனிக்கத் தொடங்கியிருந்தார். தன்னுடைய அந்தரங்கங்களும், பலவீனங்களும், பிரகாசத்திற்குத் தெரிந்தவைகளாக விடப்பட்டதன் காரணமாகவே –நிர்ப்பந்தமாகப் பிரகாசத்தைத் தன் செல்லப்பிள்ளையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. கலைச்செழியனோ பிரகாசத்துக்கு முன்பே செல்லப் பிள்ளை ஆகிவிட்டிருந்தான். பத்திரிகை எப்படி நடத்துவது என்பதைப் பற்றிய விவரங்களை– இந்த இருவர் மட்டுமே தன்னை அணுகிக் கூறும்படி விட்டிருந்தார் கமலக்கண்ணன். இருவரும் சேர்ந்து தங்களைத் தவிர அவருக்கு வேறு சிந்தனைகள் கிடைத்து விடாதபடி பாதுகாத்து வந்தனர். வசதிகளை உடையவர்களை அண்டிப்பிழைக்கின்றவர்கள் இயல்பாகவே செய்கிற காரியம்தான் அது. தாங்கள் அண்டிப் பிழைப்பதோடு பிறர் அண்ட முடியாதவாறு கவனித்துக்கொள்கிற காரியத்தையும் அவர்கள் செய்துகொண் டிருப்பார்கள். கமலக்கண்ணனின் இருபுறமும் கலைச் செழியனும்,பிரகாசமும் இருந்து இப்படிப்பிறர் அணுகாதபடிகாத்துக் கொண்டார்கள். பத்திரிகை தரத்தில் மிகமிகக் கீழானதாக இருந்தாலும்– கமலக்கண்ணன் பதவிகளை எதிர்பார்த்து எந்தஅரசியல் கட்சியைச்சார்ந்திருந்தாரோ அந்தக் கட்சிக்கு ஆதரவாகவே பத்திரிகை நடத்தப்பட்டது. கட்சியின் குரலாக வேறு சரியான பத்திரிகைகள் இல்லாத காரணத்தால் கட்சியும் கமலக்கண்ணனுடைய தினசரியை ஒப்புக்கொண்டிருந்தது. கட்சிக் கூட்டங்களுக்காகப் பிரசாரத்திற்குப் போகிறவர்களுக்குக் கார் பிரயாணப்படி செலவு போன்றவற்றிற்கு எல்லாம் கமலக்கண்ணன் தன்கையிலிருந்தே தாராளமாகச் செலவழித்துக்கொண்டிருந்தார். கட்சியின் முழுஇயக்கமும் ஏறக்குறைய அவர் கையில் இருப்பதுபோல் வந்துவிட்ட இந்த நிலையில் தான் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு சலசலப்பு உண்டாயிற்று. கட்சியின் நகரக் குழுவில் உள்ள உறுப்பினர்களும், தலைவரும் செயலாளரும் கமலக்கண்ணனை எதிர்க்க முடியாதவர்களாக இருந்தனர். ஆனால் கட்சி ஊழியர்கள்– உண்மைத் தொண்டர்கள், கட்சியின் அடிப்படை இலட்சியங்களை ஆன்ம பலமாகக் கொண்டவர்கள் கமலக்கண்ணன் போன்றவர்களை எதிர்ப்பதற்குச் சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஊழியர்களின் மனப்போக்கைப் புரிந்து கொண்டு கட்சித்தலைவர்–நீண்ட நாட்களாக ஊழியர் கூட்டத்தைக் கூட்டாமலே தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார். கடைசியில் ஒருநாள் – ஊழியர்களில் முக்கியமான சிலர் கட்சித் தலைவரை அவருடைய வீட்டிற்கே தேடிக்கொண்டு வந்து விட்டார்கள். தலைவர் அவர்களை நாசூக்காக வரவேற்றார். “வாங்க! என்ன சேதி கட்சி நிலைமை எப்படி இருக்கு ஊழியர்கள் மத்தியிலே கட்சியைப்பற்றி என்ன பேசிக்கிறாங்க…?” “ஊழியர்கள் மத்தியிலே கட்சியைப் பற்றி இருக்கிற அதிருப்தியைச் சொல்றதுக்காகத் தான் நாங்களே இங்கே தேடி வந்தோங்க கட்சியிலே மேல் மட்டத்திலே இருக்கிற வங்க ஊழியர்களின் மனச்சாட்சியை மதிக்கிறதே இல்லேன்னு நினைக்கிறாங்க ஊழியர்கள் கூட்டத்தையே கூட்டி அதிக நாளாச்சுங்க. இந்த நிலைமைக்காக ஊழியர்கள் ரொம்ப வருத்தப்படறாங்க…”என்று ஊழியர்களிடம் இருந்து மறுமொழி வந்ததைக் கேட்டுத் தலைவர் சிறிது நேரம் ஒன்றுமே பேசத் தோன்றாமல் சும்மா இருந்தார். நீண்ட நேரம் அப்படிச் சும்மா இருந்தபின் மெதுவாகப் பதில் பேசத் தொடங்கினார். “ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதுதான். ஆனால் அதைச் செய்யறதுக்கு இப்ப என்ன அவசியம்? ஒரு காரியமுமில்லாமே சும்மாச் சும்மா ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டி என்ன காரியத்தைச் சாதிக்கப் போறோம்னுதான் தெரியலே. இப்ப என்ன நடக்காதது நடந்திரிச்சு? இதுக்கு ஊழியர் கூட்டத்தைக் கூட்டு வானேன்?” “அதுக்கில்லீங்க! கட்சி நம்பிக்கையைப் பொது மக்கள் அளவிலே பரப்பறதும், பிரச்சாரம் செய்யிறதும் நாங்க தான்! எங்களுக்கே அதிலே நம்பிக்கையில்லாமப் போயிட்டா அப்புறம் நாங்க எப்பிடி மற்றவங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?” “உங்களுக்கு அப்பிடி நம்பிக்கை இல்லாமப் போகும் படியா இப்ப என்ன நடந்திடுச்சு? அதைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்.” “எவ்வளவோ நடந்திருக்குங்க இப்பிடி உட்கார்த்தி வச்சுத்தனியே கேட்டா எதுவும் சொல்ல முடியாதுங்க. நின்னு நிதானமா ஊழியர்களைக் கூட்டிப் பேசினா எல்லாமே சொல்லலாம்.” வேறு வழி இல்லாதகாரணத்தால் அடுத்த ஞாயிற்றுக் கிழமையே ஊழியர் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒப்புக் கொண்டார் கட்சித் தலைவர். ஊழியர் கூட்டத்தைக் கூட்டினால் என்னென்ன கேள்விகள் வரும் என்பது அவருக்குத் தெரியாததல்ல. ஆயினும் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அவர் ஏற்பாடு செய்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று. சுற்றறிக்கையைக் கமலக்கண்ணனும் பார்த்தார். உடனே நகரக் கட்சித்தலைவரை டெலிபோனில்அழைத்து “என்னய்யா இது?திடீரென்றுசொல்லாமல்,கொள்ளாமல் ஊழியர் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறீர்? என்ன சமாசாரம். ஏதாவது கலவரம் பண்ணப்போறாங்கன்னா முன்கூட்டியே சொல்லிப்பிடும். நான் கூட்டத்துக்கு வரலை, நான் இருக்கிறது உங்க கட்சிக்குப் பலமே ஒழிய எனக்கு உங்க கட்சியாலே பலம் இல்லே! ஞாபகமிருக் கட்டும்.’’ என்றார் கமலக்கண்ணன். “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நீங்க சும்மா ராஜா வாட்டம் வந்து கூட்டத்திலே உட்காருங்க. நான் பார்த்துக்கறேன். இந்தக் கூட்டமே ஒரு கண் துடைப்புக்காகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நம்ம பசங்க வந்து தொந்தரவு செய்யிறாங்க ஊழியர் கூட்டம் போட்டு நாளாயிடிச்சாம். கட்சியிலே ஊழியர்களுக்கே நம்பிக்கைக் குறைஞ்சுக்கிட்டு வருது–அப்பிடி–இப்படிங்றாங்க…வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சாப்ல. நாம் கூட்டத்தைக் கூட்ட மாட்டேன்னு மறுத்தா நிலைமை இன்னும் மோசமாயிடும். அதுனாலேதான் கூட்டத்துக்குச் சம்மதிச்சாப்பிலே ஒரு சுற்றறிக்கையை விட்டேன்” என்று கமலக்கண்ணனுக்கு ஃபோனில் மறுமொழி கூறினார் கட்சித் தலைவர். “எப்படியோ பார்த்துச் சமாளிக்கத் தெரிந்து கொள்ளும். என் பத்திரிகையைக் கட்சிக்காகவே கொடுத்திருக்கேன். என் செலவிலே ஊரூராய்க் கட்சிப் பிரச்சாரமும் நடக்குது. என்னை எவனாவது ஊழியர் கூட்டத்திலே குறைசொல்லிப் பேசினா நான் தாங்கமாட்டேன்” என்று மீண்டும் வற்புறுத்திக் கூறிய பின்பே கமலக்கண்ணன் ஃபோனை வைத்தார். பேசி முடித்து ஃபோனை வைத்துவிட்டாலும் அவர். மனம் என்னவோ. கவலை நிறைந்தே இருந்தது. அந்தவேளையில் பார்த்துச் சமய சந்தர்ப்பம் தெரியாமல் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார். கமலக்கண்ணனோ அப்போதிருந்த மனநிலையில் அவர் வந்ததையே கவனிக்காதது போல் இருந்துவிட்டார். புலவர் என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கிய படியே நின்றார். தாம் வந்திருப்பதை அறிவுறுத்துவதற்கு அடையாளமாக இலேசாய்ச் செருமினார். அதற்கும் கமலக் கண்ணன் திரும்பவில்லை. பின்பு சற்றுப் பலமாகவே இருமினார். கமலக்கண்ணன் மெல்ல நிமிர்ந்து திரும்பிப் பார்த்தார். எதிரே நின்ற புலவரை உட்காரச் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை அவருக்கு. சுபாவமாகவே ஒருமுறை–இருமுறை பணிந்து விட்டுக் கொடுக்கிறவனிடம் – எப்போதுமே அப்படி விட்டுக்கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது பணக்காரர்களுக்கு வழக்கமாகி விடும். விட்டுக்கொடுக்காமல் எப்போதுப் பிடிவாதமாக நிமிர்ந்து நிற்கிற தீரனைத்தான் ஒரு சீராக மதிக்க வேண்டுமென்று அவர்கள் பயப்படுவார்கள். ஒருமுறை இருமுறை விட்டுக் கொடுக்கிறவனிடம் அவர்களுக்கே குளிர் போய்விடும். புலவர் அப்படிப் பலமுறை விட்டுக்கொடுத்தே பழகியிருந்ததனால்– அவரை மரியாதையாக உட்காரச் சொல்லா விட்டாலும் தவறில்லை என்றே கமலக்கண்ணன் எண்ணினார். “ஐயா…வந்து…வந்து…” என்று புலவர் நின்றபடியே எதையோ பேசத் தொடங்கினார் “வந்தாவது…போயாவது? இப்ப என்ன காரியமா வந்தீங்க…” “ஒன்றுமில்லை ஐயா! தங்கள் தந்தையார் நினைவு நாள் இத்திங்கள் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று வருகிறது. யான் செயலாளனாக இருந்து கட்மையாற்றும் செங்குட்டுவன் படிப்பகத்தின் சார்பில் அறப்பெருந்தகையும், வள்ளலுமான தங்கள் தந்தையார் நினைவு நாளைச் சீரிய முறையிலே கொண்டாட எண்ணியுள்ளோம்.” “சரி, அதான் வருமே வழக்கமா…”–என்று அசுவாரஸ்யமாக இழுத்தார் கமலக்கண்ணன். வழக்கமாக இப்படி ஒரு கோரிக்கையைப் புலவர் விடுத்தால் உடனே ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டை உறையிலிட்டுக்காதும் காதும் வைத்தாற்போல் கொடுப்பது கமலக்கண்ணன் இயல்பு. இன்று அந்த இயல்புக்குமாறான கடுமையோடு அவர் இருக்கவே புலவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மறுபடி எப்படித் தனது குறிப்பைத் தெளிவாகப் புலப்படுத்துவது எனப் புரியாமல் தவித்தார் புலவர். கமலக்கண்ணனோ அப்போது இத்தகைய கூட்டங்கள், கட்சிகள், மாநாடுகள் ஆகியவற் றையே வெறுக்கும் மனப்பான்மை யோடிருந்தார். எனவே புலவர் தன்னிடமே பணம் பெற்றுக்கொண்டு போய்த்தன் தந்தைக்கு நினைவுவிழா நடத்துவதையும் அந்தக் கணத் திலே வெறுக்கிற நிலையில் இருந்தார் அவர். ஆனால் ஒரு காலத்தில் இப்படி இரகசியமாகப் பணம் கொடுத்து விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப் பழக்கப்படுத்தியவரே அவர்தான், புலவருக்கே அந்த வழக்கம் அவரால் தான் பழகியது. இப்போது அவரே மெளனமாக இருந்ததைக் கண்டு புலவருக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் எதிரே தயங்கி நின்றார். கமலக்கண்ணனோ புலவர் நின்று கொண்டிருப்பதைக் கவனிக்காததுபோல் வேறு காரியங்களில் மூழ்கினார் நீண்ட நேரங்கழித்து அவர் மறுபடி தலை நிமிர்ந்தபோது இன்னும் புலவர் நின்று கொண் டிருப்பதைக் கண்டு கோபம் வந்தது அவருக்கு. உடனே ஆத்திரமாகக் கேட்கலானார். “என்ன நிற்கிறீர்? அதுதான் நினைவுவிழா நடத்து வதைப்பற்றி என்க்கு ஒன்றும் மறுப்பில்லை என்று சொன்னேனே?” “அதற்கில்லை…வந்து…விழாச் செலவுகளுக்கு ஒரு நூறு வெண் பொற்காசுகள் தாங்களே தந்து வரும் வழக்கப்படி…” “வழக்கமாவது ஒண்ணாவது? நான் என்ன படியளக்கிறதாகவா எழுதிக் கொடுத்திருக்கேன்? படிப்பகத்தின் சார்பிலே வசூல் செய்து நடத்தினால் என்ன?” “அது சரிதான்! ஆனால் இதற்கெல்லாம் எப்படி வசூல் செய்வது?” “சரி சரி! எப்படி முடியுமோ பார்த்துச் செய்யும். இப்ப எனக்கு நிறைய வேலையிருக்கு. பிறகு பேசலாம்” என்று புலவரைத் துரத்தினார் கமலக்கண்ணன். புலவர் கமலக்கண்ணனை மரியாதையாக ஒதுங்கி நின்று கும்பிட்டு விட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் தனியே கட்சியின் வரவிருக்கும் ஊழியர் கூட்டத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த விநாடியிலிருந்து – ஊழியர் கூட்டம் நடைபெறும் தினமாகிய ஞாயிற்றுக்கிழமை வருகிற வரை ஒவ்வொரு விநாடியும் இதே சிந்தனையிலும் கவலையிலுமாகவே மூழ்கியிருந்தார்அவர். இந்த ஊழியர் கூட்டத்தைக் கூட்டுவதில் தமக்குள்ள அதிருப்தியைக் காட்டுவதன் அடையாளமாகக் கூட்டம் நடைபெறப் போகிற அறிக்கையைத் தமது ’தினக்குரலி’ல் வெளியிடாமலே இருந்துவிட்டார். “அறிக்கையைத் ‘தினக்குரலி’ல் எதிர்பார்த்தோம். ஏன் வெளியிடவில்லை?’’–என்று கேட்டுக் கடிதங்கள் வந்தன. அவற்றையும் கிழித்துக்குப்பைக் கூடையிலே போடச் செய்தார். அதோ, இதோ, என்று ஊழியர்களின் கூட்டம் நடைபெறும் தேதியாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. கூட்டம் காலை பத்து மணிக்கு என்று குறிக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணி சுமாருக்குக் கட்சித் தலைவரிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஒரு அந்தரங்கமான டெலிபோன் செய்தி வந்தது. “இன்றைக்கு ஊழியர்கள் கூட்டத்திற்கு நீங்கள் வர வேண்டாம். இங்கு நிலைமை ஒருவிதமாக இருக்கிறது. நானே பார்த்துச் சமாளித்துக் கொள்கிறேன்” – என்றார் கட்சித் தலைவர். கமலக்கண்ணன் இதை அவ்வளவாக இரசிக்கவில்லை. கூட்டத்திற்குத் தானும் போகவேண்டுமென்றே விரும்பினார். பழைய பயம் அவர் மனத்தில் அன்று இல்லை. “அதெல்லாம் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். தனியாக நீங்கள் மட்டுமே இருந்து கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சிரமப்படுவதைவிட நானும் சேர்ந்து இருப்பது நல்லது. பயல்களுக்கு ஒரு அத்து இருக்கும். சரியாகப் பத்து மணிக்கு– ஐந்து நிமிடம் இருக்கும்போது நான் வந்து விடுகிறேன்”–என்று தானும் வரப்போவதாகவே கூறினார் கமலக்கண்ணன். “சரி! நான் சொல்வதைச் சொல்லி , . விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்” – என்று எதிர்ப்புறம் டெலிபோனை வைத்தார் கட்சித்தலைவர். கமலக்கண்ணன் ஊழியர் கூட்டத்திற்கு வருவதே இரசாபாசமாக முடிந்துவிடும் என்று கருதிப் பயந்துதான் அவருக்குக் குறிப்பாக அறிவித்தார் கட்சித்தலைவர். கமலக்கண்ணனோ அதைப் புரிந்துகொள்ளாமல் கூட்டத்திற்குத் தானும் வரப்போவதாக அறிவித்துவிட்டார். ஊழியர் கூட்டம் தொடங்கியபோது பரபரப்பாக இருந்தது. கமலக்கண்ணன் உள்ளே நுழைந்தபோது விரும் பத்தகாத ஒருவித மெளனம் அங்கே நிலவியது. கட்சித் தலைவர் தான் அவரை வரவேற்று உட்காரச்சொன்னாரே ஒழிய வேறு யாரும் பேசவே இல்லை. வாருங்கள் என்று கூப்பிடவோ, கமலக்கண்ணன் உள்ளே நுழைந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யவோ யாருமே தயாராக இல்லை அங்கே. “இந்தக் கூட்டம் ஊழியர்களின் மனக்குறைகளை அறிவதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கட்சியில் தமக்குள்ள உரிமையைப் பாராட்டித் தாராளமாகப் பேசலாம்” – என்று தலைவர் அறிவித்ததும் ஒர் ஊழியர் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்தார். “கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூடச் சேர்க்கப்படுகிறார்கள், ‘சினிமா’ டிக்கெட் விற்கப்படுவது. போல் கட்சி உறுப்பினர் டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றனவா? என்பது தெரியவேண்டும்”–எனக் கேட்டார் அந்த ஊழியர். “உறுப்பினர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள்கை ரீதியான தகுதிகள் இல்லாதவர்களைக்கூட உறுப்பினர்களாகச் சேர்த்து வருவதைப் பார்க்கிறோம். இப்படி நிகழ்ச்சிகள் சமீபகாலத்தில் கட்சியில் அதிகமாகி இருக்கின்றன என்று தோன்றுகிறது” என்றார் மற்றொரு உறுப்பினர். கட்சித் தலைவர் மறுமொழி கூற முடியாமல் விழித்தார். – “தயவு செய்து ஒரே சமயத்தில் பலபேர் கேள்வி கேட்டால் மறுமொழி சொல்ல முடியாதநிலை ஏற்பட்டுவிடும். கூட்டத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் வேண்டும். ஒவ்வொருவராகக் கேட்பதே நல்லது”– என்று ஒழுங்குப் பிரச்னையை எடுத்துக் கூறினார் தலைவர். யாரும் அதை இலட்சியம் செய்யவில்லை. “கட்சி படிப்படியாக வசதியுள்ளவர்களுக்கு விற்கப்பட்டு விட்டதென்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் ஒரு ஊழியர். “கட்சியின் மதுவிலக்குக் கொள்கையில் அறவே நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படிக் கட்சியிலே தீவிர உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்குச் சரியான காரணம் கூறப்படவேண்டும்”– என்று கொதிப்போடு எழுந்து நின்று கேள்வி கேட்டார் ஒரு முதியவர். இந்த நிலைமையைத் தலைவரால் ஒழுங்கு செய்ய முடியாமல் போகவே தாம் எழுந்து நின்று பேசினால் எல்லாரும் அடங்கிவிடுவார்கள் என்று தமக்குத் தாமே ஒரு சக்தி இருப்பதாகக் கற்பித்துக் கொண்ட கமலக்கண்ணன் பேசுவதற்கு எழுந்திருந்தார். அத்தனை எதிர்ப்பும், அத்தனை கேள்விகளும் தனக்காகத்தான் கேட்கப்பட்டன என்பதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எழுந்து நின்றதும் கூட்டத்தில் அனைவர் முகங்களிலும் வெறுப்புத் தாண்டவமாடியது. முதல் வாக்கியத்தை அவர் தொடங்கியபோதே, எங்கோ ஒருமூலையிலிருந்து யாரோ பேசவேண்டாம், போதும்’ என்பதுபோல் கைதட்டுவது கேட்டது. அடுத்தவாக்கியத்தை அவர் தொடங்குவதற்குள் “தயவு செய்து மன்னிக்க வேண்டும்! தாங்கள் கட்சியில், எவ்வளவு காலமாக உறுப்பினர் என்பதை நாங்கள் அறிய மாட்டோம், தீவிர உறுப்பினரா? சாதாரண உறுப்பினரா என்பது கூடத் தெரியாது எங்களுக்கு, எந்த முறையில் இன்று இந்தக் கூட்டத்தில் நீங்கள் பேச முன் வந்தீர்கள் என்பதும் தெரியவில்லை?”– என்று எழுந்து கூப்பாடு போட்டான் ஓர் இளம் ஊழியன். கமலக்கண்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட திடீரென்று இப்படி ஒரு கேள்வியையோ, எதிர்ப்பையோ அவர் எதிர்பார்க்கவில்லை. ஆகவே திகைத்துப் போனார். ஒரு வசதியுள்ள பெரிய குடும்பத்து மனிதனைப் பார்த்து ஏழைகள் இப்படி ஆவேசத்தோடு கேள்விகள் கேட்க முடியும் என்பதையே அவரால் கற்பனை செய்ய இயலவில்லை. அத்தனை ஊழியர்களும் தனக்கும், தன் பணவளத்திற்கும், செல்வாக்கிற்கும், பயந்திருப்பார்கள் என்று நினைத்திருந்த அவரால் சிறிதுகூட, தாட்சண்யமே இல்லாமல் கூட்டத்தினர் இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுத்ததைத் தாங்கவே முடியவில்லை. பழக்கத்தின் காரணமாகவும், உடம்பில் ஊறிப் போயிருந்த திமிரின் காரணமாகவும் இரைந்த குரலில், ‘நான்சென்ஸ்’–என்று கத்திவிட்டு அவர் உடனே நாற்காலியில் திரும்பவும் அமர்ந்துவிட்டார். அவ்வளவுதான் கூட்டத்தில் ஒரே கூச்சல், குழப்பம். “யாரைப் பார்த்து ‘நான்சென்ஸ்’– என்று கூறினீர்கள்? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்கள்” என்று. எல்லாரும் சேர்ந்து கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் கள்.அதுவரை பேசாமல் உட்கார்ந்திருந்த கட்சித்தலைவர் எழுந்திருந்து, “அன்பர்களே! நமது கட்சி ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் பெயர் பெற்றதாகும்.நாம் இப்படிக் காட்டு மிராண்டிகள்போல் பழகுவது நல்லதா என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்”– என்ற போதும் கூப்பாடு அடங்கவில்லை. “யார் காட்டுமிராண்டி போல் பேசினார்கள் என்பதைத் தலைவரே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”– என்று சிலர் நடுக்கூட்டத்திலேயே எழுந்து நின்று மேடையை நோக்கிக் கத்தினார்கள். “கமலக்கண்ணன் அவர்களைக் கேவலம் வாய் தவறிக் கூறிய இந்த ஒரு வார்த்தைக்காக நாம் வாபஸ் வாங்கச் சொல்லக்கூடாது. கட்சிக்காகவே அவர் பெரும் முதல் போட்டுத் தினசரி ஏடு நடத்தி வருகிறார். அவரால் கட்சி பலவழிகளில் பயனடைகிறது. எனவே கூட்டத்தில் யாரும் அவர் மனம் புண்பட நடந்துகொள்ள வேண்டாமென்று. மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்”– என்று தலைவர் முழங்கியபோது– “அதுதான் கட்சியையே நீங்கள் அவருக்கு விலைபேசி விற்று விட்டீர்களே”– என்று கூப்பாடு போட்டார்கள் கூட்டத்தில் சிலர், தலைவர் நிலை தர்மசங்கடமாகி விட்டது. புகழ், பதவி, செல்வாக்கிற்காகச் சேர்ந்த கட்சியில் முதல் முதலாக ஒர் அவமானம் நிறைந்த கடும் எதிர்ப்பை இப்போதுதான், சந்தித்தார் கமலக்கண்ணன். கூட்டத்தினரோ, ‘நான்சென்ஸ்’ என்ற வார்த்தையை வாபஸ் வாங்காமலோ, மன்னிப்புக் கேட்காமலோ, அவரை அங்கிருந்து வெளியேற விடவே தயாராயில்லை. பகுதி -9 குடியரசாட்சி, சமஉரிமை, எல்லாருமே ஒர் குலம், எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் ஓர் நிறை– என்றெல்லாம் பழக்கமாகி விட்ட வாசகங்களை நம்பிக்னையில் ஆழம்வரை போக விடாமல்– எதிரே கேட்கிற பாமரர்களுக்காகச் சொல்கிறவர்கள்–கேட்கிறவர்களிடம் அது உண்டாக்குகிற விளைவுகளுக்கேற்பப் பின்பு நடக்கவும் தெரிய வேண்டும். ஆனால் அடுத்தலனுடைய மனச்சாட்சியைக் கிளரச்செய்து – விட்டு அது கிளர்ந்தெழுந்து தனக்கெதிரே வருகிறவேளையில், ‘என்னை எதிர்த்து இப்படிக் கேட்க, இவனுக்கு எவ் வாறு இவ்வளவு துணிவு வந்தது’– என்று வெகுளிப்படுவது தான் சராசரி இந்தியப் பெரிய மனிதனின் ஜனநாயகமாக இன்று இருக்கிறது. பாமரர்கள் செயலளவில் ஜனநாய கத்தைப் புரிந்துகொள்கிற வேளையில் புரியவைத்தவர்கள் வெட்கப்படுகிற நிலையோ, பயப்படுகிற நிலையோ கனிந்த ஜனநாயகம் ஆகாது. உரிமை, அபிப்பிராய – சுதந்திரம் போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் எவ்வளவு பொருள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளாமல் கமலக்கண்ணனே பலமுறை யாரோ சொல்லிக் கொடுத்துப் பேசியது போல மேடையிலே அவற்றைப்பற்றி முழங்கியிருக்கிறார். இன்று அந்த உரிமையை அவராலேயே பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. “வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! ‘நான்சென்ஸ்’ – என்ற வார்த்தையை வாபஸ் வாங்கு” எனச் சுதந்திரமான மனிதர்களின் கோபம் நிறைந்த குரல்கள் கூடம் நிறைய அதிர்ந்த போது தான் அவர் பயந்தார். “தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே இருக்கின்றன! இந்தச் சமயத்தில் இவர்களை எல்லாம் பகைத்துக் கொண்டீர்களானால் கட்சித் தொடர்பையே இழக்க நேரிட்டுவிடும். கவனமாக ஏதாவது சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பாருங்கள், கோபமாகப் பேசாதீர்கள்” என்று கட்சித் தலைவர் கமலக்கண்ணனின் காதருகே முணுமுணுத்தார். கமலக்கண்ணனுக்கும் தன் நிலைமை புரிந்துதான் இருந்தது. புதிதாகச் சேர்ந்த அந்தக் கட்சிக்காக எவ்வளவோ செலவழித்தது எல்லாம் தேர்தலை மனத்தில் வைத்துத்தான். பணத்தைச் செலவழித்து அடைய முயன்ற செல்வாக்கை ஒரு வார்த்தையைச் செலவழிக்கத் தயங்குவதன் மூலம் இழந்துவிடக் கூடாதென்ற முன் ஜாக்கிரதையுடன், “நண்பர்களே! என்னை மன்னியுங்கள். தவறாக எதையும் நினைத்து நான் கூறவில்லை. பழக்கத்தின் காரணமாக ‘நான்சென்ஸ்’ என்று வந்துவிட்டது. யாருடைய பெருமையையும் நான் வாய்தவறிக் கூறிய வார்த்தை குறைத்து விடாது என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமயோசிதமான தந்திரத்துடன் கூறி முடித்தார் கமலக்கண்ணன். ஊழியர்கள்கூட்டம் அமைதியடைந்தது. அதுதான் சரியான வேளையென்று – வேறு எதுவும் அவர்களுக்கு ஞாபகம் வருவதற்குமுன் நன்றி கூறிக் கூட்டத்தை முடித்துவிட்டார் கட்சித் தலைவர். கூட்டத்தில் நிகழ்ந்த குழப்பம் பத்திரிகைகளில் தவறிக்கூட வந்துவிடாமல் தலைவரும் கமலக்கண்ணனும் கவனித்துக் கொண்டார்கள். அதற்குப்பின் இரண்டுமாதகாலம் ஊழியர் கூட்டம் என்ற பேச்சே கிடையாது. மூன்றாவது மாதம் பொதுத்தேர்தல் வந்துவிட்டது. கட்சி கமலக்கண்ணனை அபேட்சகராக நிறுத்தும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தியும் பரவத் தொடங்கிவிட்டது அந்த வேளையில். தான் மறுபடியும் எதிர்ப்பு உருவாயிற்று. ‘தேசியப் போராட்டக் காலத்தில் வெள்ளைக்கார னுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும், கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தீவிரத் தகுதிகளான சுதேசித் துணி உடுத்துதல், மதுவிலக்குக் கொள்கையை மேற்கொள்ளுதல், போன்றவற்றைக் கடைப்பிடிக்காதவரு மான கமலக்கண்ணன் கட்சி அபேட்சகராக நிறுத்தப் பட்டால்–உடனே கட்சியிலிருந்து விலகுவோம்’ – என்று கையொப்பமிட்ட பல கடிதங்கள் தலைவரிடம் குவிந்தன். ‘ஒருவன் தான் படுகிற சிரமங்களினால் தியாகியாகலாம். ஆனால் தன்னைத் தியாகியாகத் தயாரித்துக் கொள்ள முடியாது’–என்பது மீண்டும் கமலக்கண்ணனுக்கு நிரூபிக்கப்பட்டது. ஆனாலும் பெரிய மனிதரும் பெரும் பணக்காரருமான கமலக்கண்ணனைக் கட்சி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எல்லாத் தொகுதி களுக்கும் கட்சியின் அபேட்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் பெயர்களும் பத்திரிகைகளில்வந்துவிட்டன. கமலக்கண்ணன் நிற்கவேண்டிய தொகுதிமட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கமலக்கண்ணனையே நிறுத்திவிடுகிற துணிவு கட்சிக்கு இல்லை. ஆனால், ‘சுயேச்சையாகக் கமலக்கண்ணன் நின்றால் அவரை எதிர்த்துக் கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்துவதில்லை’ என்றுமுடிவாயிற்று. இந்த ஏற்பாட்டைக் கமலக்கண்ணனும் ஏற்கவேண்டியதாயிற்று. இதற்கே கட்சியில் பலத்த எதிர்ப்பு இருந்தும் பெரிய பெரிய தலைவர்கள் கமலக்கண்ணனுக்காக முன் நின்று இதைச் செய்தார்கள். சுயேச்சையாக நின்றால் எதைச் சின்னமாகக் கொள் வது என்றுமுடிவுசெய்வதற்காக அபேட்சைமனுக் கொடுப் பதற்குமுன் தம் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு நெருங்கிய நண்பர்களைக் கலந்தாலோசித்தார் கமலக்கண்ணன். எல்லாரும் விருந்து சாப்பிட்ட பின்னர் மொட்டை மாடியில் ஆலோசனை ஆரம்பமாயிற்று. “நம்ம தொகுதியில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். ஆகவே பெண்களுக்கு அதிகம் பரிச்சயமுள்ள இன்னம் ஒன்று வேண்டும்…” என்றார் கமலக்கண்ணன். “மலர் – தான் பெண்களுக்கு அதிகமாக அறிமுகமானது. எனவே ‘பூ’ சின்னம் வைக்கலாம்”– என்றார் புலவர் வெண்ணெய்க் கண்ணனார். “முடியவே முடியாது! அந்தச் சின்னத்தை இதே தொகுதியில் நிற்கும் ‘சிவராசன்’ என்ற மற்றொரு சுயேச்சை அபேட்சகர் வைத்துக்கொண்டு விட்டார்” என்று உடனே அந்த யோசனை மறுக்கப்பட்டது. “குடம்–அல்லது பானை…” “அதுவும் சாத்தியமில்லை. இதே தொகுதியில் பார்லிமெண்டிற்கு நிற்கிற சுயேச்சை சுப்பையாவின் சின்னம் அது.” குடமும் கைவிடப்பட்டது. “வளையல்–ஹேர் பின்…” “கண்ணுக்குப் போல்டாகத் தெரியாத சின்னங்களால் பயனில்லை. பிரச்சாரமும் பயனளிக்காது.” – கண்ணுக்குப் போல்டாகத்தெரியாதவை என்ற காரணத்தால் வளையலும் ஹேர் பின்னும் கைவிடப்பட்டன. “அரிவாள்மணை – அடுப்பு – விறகு……காபி டவரா டம்ளர்…” “அமங்கலம்! அமங்கலம்! இவை யாவுமே மங்கலக் குறிகளல்ல”– என்று மறுத்தார் புலவர். அவைகளும் கைவிடப்பட்டன. சில நிமிடங்கள் அமைதி நிலவிற்று. “எல்லாரும் ஒப்புக்கொள்வதாயிருந்தால் நான் ஒன்று சொல்கிறேன்…. யாரும் மறுக்கக்கூடாது…”என்று பிரகாஷ் பப்ளிவிடீஸ் பிரகாசம் தொடங்கினார். கமலக்கண்ணன் உள்பட எல்லோரும் ஆவலோடு அவர் முகத்தையே பார்க்கலானார்கள். “ஏன்னா பப்ளிவிடி லயன்லே ரொம்ப நாளா இருக்கேன். மாஸ் ஸைகாலஜி புரிஞ்சவன். நல்லா யோசிச்சு இதைச் சொல்கிறேன்…” “அட சொல்லும் ஐயா! முன்னுரை வேண்டாம்” என்றார் கமலக்கண்ணன். பிரகாசம் கூறலானார்:– “தண்ணீர் பிடிக்கச் சிரமப்படாத பெண்ணே கிடையாது. பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறதுனாலே கிணறு அல்லது குழாய்ச்சின்னம் வச்சிக்கலாம். குழாய் கூட போல்டா இராது. இராட்டினம் கயிறோடு கூடிய கிணறுதான் போல்டான பெரிய சின்னம். நீர் ஊறுகிற அம்சமாகையினால் மங்கலமாகவும் இருக்கும். தொழில் வளரும்கிறதுக்கும் நீர் மேலும் மேலும் ஊறுகிற கிணறு ஒரு சுபசூசகம்…”– “எனக்குக் கிணறு பிடிச்சிருக்கு அதையே வச்சிக்கலாம்”– என்று தீர்க்கமான குரலில் கமலக்கண்ணனிடமிருந்து பதில் வந்தது. பிரகாசம் முகம் மலர்ந்தார். கமலக் கண்ணனுக்கே பிடித்தபின் மற்றவர்கள் ஏன் வாய் திறக்கிறார்கள்? எல்லோரும் ஏகமனமாகக் கிணற்றுச் சின்னத்தைப் பாராட்டினார்கள். பிரகாசத்தையும் பாராட்டினார்கள். “கிணறு விருத்திக்கு அடையாளம்னா…பேஷானசின்னமாச்சே அது”– சோதிடர் சர்மாவும் ஒத்துப்பாடினார். மறுநாள்காலை அதிகார பூர்வமாக அபேட்சை மனுதாக்கல் செய்து கிணற்றுச் சின்னமும் வேண்டப்பட்டது. சின்னமும் கிடைத்தது கிணற்றுச் சின்னத்திற்கு யாருமே போட்டியில்லை. அகில இந்தியாவிலேயும் கமலக்கண்ணன் என்ற ஒரே ஒரு சுயேச்சை அபேட்சகர்தான் கிணறு சின்னத்தையே கேட்டிருந்தார். அதனால் அதை இவருக்கு வழங்குவதில் எந்தச்சிரமமும் இருக்கவில்லை. கிணறுச்சின்னம் முடிவாகி அபேட்சைமனு தாக்கல் செய்து பத்திரிகைகளிலும் செய்தி கள் வெளிவந்த பின் தேர்தல் அலுவிலகம் திறப்பதற்கு ஏற்பாடாயிற்று. தேர்தல் பிரச்சாரத்திற்கான பிரசுரங்கள், வாசகங்கள், சுவரொட்டிகள் அச்சிடும் பொறுப்பு புலவர் வெண்ணெய்க்கண்ணனாரிடம் விடப்பட்டது. நீர்வளத்திற்கு அடையாளம் கிணறு! நிலவளத்திற்கு அடையாளம் கிணறு! நல்வாழ்வின் சின்னம் நற்கேணியே! ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டுவது கிணறே! என்றெல்லாம் வாசகங்களை அடுக்கிவரைந்து தள்ளினார் புலவர். பெண் வாக்காளர்களுக்கு ஒரு கவர்ச்சி வேண்டு மென்று கருதித் தேர்தல் அலுவலகத் திறப்புவிழாக் கூட்டத்திற்கு நடிகை மாயாதேவி அழைக்கப்பட்டிருந்தாள். அவளும் கமலக்கண்ணனை ஆதரித்து மேடையில் இரண்டு வார்த்தைகள் பேசினாள். பிரகாஷ் பப்ளிவிட்டி அதிபர் பிரகாசத்தின் யோசனைப்படி நடிகை மாயாதேவியின் படத்துடன்– “உங்கள் ஒட்டு கமலக்கண்ணனுக்கே’’ என்ற மாபெரும் சுவரொட்டி சின்னத்துடன் அச்சிட்டு ஒட்டப்பட்டது. மாயாதேவி மயக்கும் புன்னகையுடன் வளைக்கரங்களால் கிணற்றுச் – சின்னத்திற்கே ஒட்டு போடுவதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படக் காட்சியோடு சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் மின்னின. தினசரி காபி–சிற்றுண்டிச் செல்வுபகல்– இரவு உணவுச் செலவு–வாகனங்களுக்கான பெட்ரோல் செலவு இரண்டாயிரம் ரூபாய் வரை ஆயிற்று. தொகுதியில் மொத்தம் ஐந்தாறு பெரிய தேர்தல் அலுவலகங்கள். பத்துப் பன்னிரண்டு சிறிய தேர்தல் அலுவலகங்கள் எல்லாவற்றிலும் ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீசர், வேறு, தற்காலிகமாக அவர்களுக்கு மாதச் சம்பளம் வேறு பேசப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த சோம்பேறிகளை பிரகாசமும், தனக்குத் தெரிந்த சோற்று மாடன்களைக் கலைச்செழியனுமாகக் கமலக்கண்ணனின் தேர்தல் அலுவலகங்களில் பி.ஆர்.ஒக்களாக அமர்த்தி வைத்திருந்தனர். தேர்தல் ஊர்வலங்கள் நடத்தி நடைமுறையில் கமலக் கண்ணனின் சின்னத்திற்கே ஒட்டைப் போட வேண்டு மென்று கோஷங்கள் இடும் போதுதான் ஒரு தொல்லை புரிந்தது. “உங்கள் ஒட்டை”–என்று ஒருவர் கோஷத்தைத் தொடங்கினால், “கிணற்றில் போடுங்கள்’’–என்று மற்றும் பலர் அதைத் தொடர்ந்து சொல்லி முடிப்பதைக் கேட்கும் போது அந்தச் சொற்றொடர்கள் கமலக்கண்ணனுக்காகப் பிரச்சாரம் செய்வதாகத் தோன்றியதைவிடத் துஷ்பிரச்சாரம் செய்வதுபோல் ஒலிக்கத் தொடங்கின. உடனே பலத்த சந்தேகத்தோடு கோஷங்கள் நிறுத்தப்பட்டன. அன்றிரவே இந்தப்பிரச்சினை வாசகங்களின் தேர்தல் மொழி அதிகாரியும் பிரச்சாரப் பொறுப்பாளருமாகிய புலவர் வெண்ணெய்க்கண்ணனாரிடம் கொண்டு போகப்பட்டது. “உங்கள் ஒட்டைக் கிணற்றில் போடுங்கள்…என்பது சரியா அல்லது வேறு விதமாகத்தான் சொல்ல வேண்டுமா?” “அடபாவிகளா! கெடுத்தீர்களே குடியை அறியாதவன், தெரியாதவன் கிணற்றிலேயே கொண்டுபோய் ஒட்டைப் போட்டுவிடப் போகிறான்! இனிமேல், ‘உங்கள் ஒட்டைக் கிணற்றுச் சின்னத்திலேயே போடுங்கள்’–என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமே ஒழியவேறுவிதமாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது’–என்று முடிவு கூறப்பட்டது. தேர்தல் போர்க்களத்தில் மாற்று அபேட்சகர்களாகிய எதிரிகளின் முகாம்களிலிருந்து ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கமலக்கண்ணனுக்குக் கிடைத்தன. அவற்றிற்கெல்லாம் தகுந்தபடி கமலக்கண்ணனும் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. “பூச்சின்னக்காரர் தன்னுடைய வாக்காளர்களைச் சந்திக்கப் போகும்போது பூவும், தேங்காய்ச் சின்னக்காரர் வாக்காளர்களைச் சந்திக்கப் போகும்போது தேங்காயும் கொடுக்கிறார்கள். மக்களும் இப்படிப் புதுமையான முறை யில் பொருள்களுடனேயே தங்களை நாடிவருகிறவர்களை வியக்கிறார்கள்’’–என்று கூறப்பட்டவுடன். “கிணறு சின்னத்தை அப்படியெல்லாம் வாரி வழங்க, முடியாது. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிணறே வெட்டிக் கொடுக்கலாமென்றாலும் அது தேர்தலுக்குள் நடக்கக்கூடிய காரியமில்லை. எனவே எனாமலில் சட்டையில் குத்திக்கொள்ள ஏற்றபடி கிணறு சின்ன ‘பாட்ஜ்’ ஒன்று செய்து யாவருக்கும் வழங்கலாம்”– எனப் பதிலுக்கு இவர்கள் தரப்பிலும் யோசனை தெரிவிக்கப்பட்டது. உடனே கமலக்கண்ணனிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு, அவருடைய சம்மதத்துடன் எனாமல் பாட்ஜுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. சினிமா கம்பெனி ஒன்றில்கூறி கிணறு மாதிரி லாரியின் மேல் ஒரு ஸெட்டிங்ஸ் பிளைவுட்டில் தயாரித்து ஊர்வலம் விடவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கமலக்கண்ணனை எதிர்த்து அவர் சேர்ந்திருந்த அதே தேசியக் கட்சி ஊழியர்கள் சிலரும் மேடையேறி முழங்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை எதிர்த்தும் சமாளிக்க வேண்டியிருந்தது. “தேச விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூட இவர் அசைத்ததில்லை! வெள்ளைக்காரன் இருந்தவரை இவர் குடும்பம் தாசானு தாசனாக இருந்தது. அன்று சத்தியாக்கிரகிகளைக் கேலி செய்த இவர் குடும்பம் இன்று பதவிக்காகப் பறக்கிறது. கிணறுச் சின்னத்தில் நிற்கிற இவரை நம்பினால் பொதுமக்கள் பாழுங்கிணற்றில் விழவேண்டியதுதான்”– என்று முழங்கினார்கள் கமலக்கண்ணனின் எதிரிகள். பதிலுக்குக் கமலக்கண்ணனின் பிரசார இயந்திரம் சரியாக இயங்கி உடனே மறுமொழி கூறியது. காந்திய சமதர்மசேவா சங்கத்தின் கட்டிடங்களை உருவாக்கிய வள்ளல் கமலக்கண்ணனைக் குறைகூறுகிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். தம் வீட்டு முகப்பில் பெரிதாக மாட்டியிருக்கிற் காந்தியடிகள் படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ளாமல் சாப்பிடப் போகமாட்டார் நம் வள்ளல். ஆலயங்களுக்குச் செய்த அறப்பணிகளோ அளவற்றவை. கலைத்துறையிலோ மாயாதேவி போன்ற மாண்புமிகு தாரகைகள் மின்னவும் புகழடையவும் நம் வள்ளலே உறுதுணை புரிந்தவர். நல்லவர்களின் நண்பர், தீயவர்களின் எதிரி, துரயவர்களின் துணைவர், தூர்த்தர்களைத் தொலைப்பவர், கமலக்கண்ணன் அவர்களே. கருணை மயமாக ஊறும் அந்தக் கிணற்றிற்கே உங்கள் ஒட்டைப் போடவேண்டுகிறேன்“– என்பது போன்ற சொற்பொழிவுகளைக் கமலக்கண்ணனின் ஆட்கள் முழக்கித்தள்ளினார்கள். ‘தினக்குரல்’ பக்கம் பக்கமாகக் கமலக்கண்ணனைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. துண்டுப் பிரசுரங்கள் விமான மூலம் தூவப்பட்டன. பானர்கள்,தோரணங்கள், சுவரொட்டிகள், எங்கும் கமலக் கண்ணனின் கிணற்றுச் சின்னமே தென்படலாயிற்று. இருபத்தைந்து கார்களும், ஐந்து ’வான்’களும் தொகுதி முழுவதும் சுற்றின. பனம் தண்ணீராக ஒடியது. “ரொம்பச் செலவழிக்கிறேன்னு பேசிக்கிறாங்க… இத்தினி செலவழிச்சி ஜெயிச்சுத்தான் என்ன பண்ணப் போறே?”– என்று ஒரு வழிக்கும் வராத கமலக்கண்ணனின் தாய்கூட ஒருநாள் அவரை மெல்லக் கண்டித்தாள். “பேசாம இரம்மா! உனக்கொண்ணும் இதெல்லாம் புரியாது. ஜெயிச்சா எத்தினியோ காரியம் ஆகும்”– என்று தாய்க்குப் பதில் சொன்னார் கமலக்கண்ணன். கமலக்கண்ணன் நின்ற தொகுதியில் மிக முக்கிய கட்சியும், அப்போதைய ஆளும் கட்சியுமான தேசியக்கட்சியின் போட்டி இல்லை என்றாலும் மற்றக் கட்சிகளின் போட்டியும், உதிரி களான சுயேச்சைகளின் போட்டியும், அதிகமாக இருந்தது. ஒட்டுக்கள் அநாவசியமாகப் பிரிந்து கமலக்கண்ணன் தோற்றுப் போய்விடுவாரோ என்ற பயமும் எழுந்தது. ஏற்கெனவே அபேட்சை மனுத்தாக்கல் செய்வதற்கு – முன்பாகவே – சிலரை நிற்கவிடாமலே தடுத்திருந்தார் அவர். கொடுக்க வேண்டியதை கொடுத்துத் தடுக்க வேண்டியதைத் தடுத்திருந்தார் என்றாலும் கூடப் பயம்–பயமாகத் தான் இருந்தது. ஆனால் கமலக்கண்ணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மாயாதேவி போன்ற நட்சத்திரங்கள். வெண்ணெய்கண்ணனார் போன்ற புலவர்கள், சர்மா போன்ற சோதிடர்கள் பிரகாசம், கலைச்செழியன் போன்ற சாதுரியக்காரர்கள், எல்லோரும் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். எந்தக் கூட்டத்திலும் அபேட்சகராகிய கமலக்கண்ணன் அதிகம் பேசவில்லை. மற்றவர்கள் அவரை மேடையில் அமர்த்தி வைத்துக்கொண்டு பேசி னார்கள். இறுதியில் நாடகத்தின் கடைசிக் காட்சி போல் அவரும் எழுந்து ‘மைக்’ முன்வந்து பொது மக்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். எனக்கு வாழ்க்கையில் சகலவிதமான வசதிகள் இருந்தும் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காகத் தான் இப்படித் தேர்தலில் நிற்கிறேன். வேறு சிலரைப்போல் ஒரு பதவியை அடைந்து அந்தச் செல்வாக்கின் மூலம்தான் பணமும், புகழும் சேர்க்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்குக் கிடையாது. வசதிகளை உடைய நான் ஏன் சிரமப்பட முன் வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும்“– என்று விளக்கி யாவரும் தமக்கேவாக்களிக்க வேண்டுமெனக்கோருவதோடு கூட்டங்கள் முடியும். தேர்தல் நாள் நெருங்க நெருங்கக் கமலக்கண்ணனின் தொகுதியிலுள்ள ஸ்லம், சேரி, குடிசை வாழ்பெருமக்களின் கோட்டைகளைப் பற்றிய பிரச்சினை தலையெடுத்தது. “நூறு குடிசைங்க நான் இன்னா சொல்றேனோ அப்பிடியே ஒட்டுப் போடும் சார்! நம்பகிட்ட பொறுப்பா வுட்டுடுசார்! அத்தினி ஒட்டும் தானா உனக்கே விழுந்துடும்”– என்று ஒர் தலை சீவாத ஆள் கழுத்தில் கைக்குட்டையைச் சுற்றுவதும் கழற்றுவதுமாகச் சேட்டை செய்து கொண்டே பேரம் பேசினான். அதுவரை அப்படிப் பத்து. ஆட்களைச் சந்தித்திருந்தார் கமலக்கண்ணன். ஒவ்வொரு வரும் குறைந்தபட்சம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் முன் பணமாகக் கேட்பதற்குத் தவறவில்லை. “அத்தினி ஸ்லம் ஒட்டும் லாட்டா விழறாப்ல பண்றேன் சார்! மூவா யிரம் குடுப்பியா?”– என்றான் ஒருவன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே சேரிக்கு ஆறு பேர் தங்களையே தனிப் பெரும் தலைவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். சேரி, குடிசைப் பகுதிகளுக்குள் கமலக்கண்ணனே நேரில் நடந்துபோய் குடிசை குடிசையாக ஒட்டுக் கேட்க வேண்டுமென்று பிரகாசம் யோசனை கூறினார். “ஒரே சேறும் சகதியுமா ரொம்ப டர்ட்டி ப்ளேஸா இருக்குமே? நாம்பளே போவானேன்னு பார்க்கிறேன். ரூபாயை வீசி எறிஞ்சாலே நடக்காது…?”– என்றார் கமலக்கண்ணன். “ரூபாயும் வேணும்தான்! ஆனா நேரேயும் போனால் தான் நல்லது. நேரே போகலேங்கறது. ஒரு குறையா ஆயிறப்பிடாது பாருங்க?” “சரி! போனாப் போகுது. காரிலே முடியாது நடந்தேதான் போய் ஆகணும்.” ’காரை மெயின் ரேர்டிலே விட்டுட்டு இறங்கி நடந்துட வேண்டியதுதான். நாங்கள்ளாம் கூட வருவோம். ஒரு பந்தாவா – அஞ்சாறு பேர் சேர்ந்து போனம்னாலே களை கட்டிப்பிடும்." “அதான் செய்துடலாம்னேனே.” “நம்ம எனாமல் கிணறு பாட்ஜ் கொஞ்சம் கையோட எடுத்துக்கனும், குடிசைக்குக் குடிசை அதையும் ஒரு ஞாபகமாகக் கொடுத்துட்டு வந்துடலாம்.” “ஒகே! வர ஞாயிற்றுக்கிழமை காலைலே புறப்பட்டுடலாம் எல்லா ஏற்பாடும் பண்ணிப்பிடு…” பிரகாசம் கமலக்கண்ணனின் ஸ்லம் விஜயத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். ஞாயிறு காலையும் விடிந்தது. தேர்தல் பரிவாரங்கள் புடைசூழ மின்னல் வழிவது போல லில்க் ஜிப்பாவும், பட்டு வேஷ்டியும், அழுக்குப் படாத புதுப் பாதரட்சைகளும், கை நிறைய டாலடிக்கும் மோதிரங்களுமாகக் கமலக்கண்ணன் சேரியில் புகுந்தார். என்ன ஆச்சரியம்! முதல் குடிசையிலே அவருக்கு ரோஜாப்பூ மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் ‘இந்த சேரி மக்களுக்கு நாம் எதுவுமே செய்யவில் லையே?இவர்களுக்கு நம் மேல் இவ்வளவு பிரியமா?’ என்று கமலக்கண்ணனுக்கே வியப்பாகிவிட்டது சில குடிசைகளில் பெண்களே ஆரத்தி எடுத்ததுடன் அவருக்கு மட்டரகக் குங்குமத்தில் திலகமும் வைத்தார்கள். கமலக்கண்ணனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அப்போதே தேர்தலில் வென்று விட்டது போன்றபெருமிதம் வந்துவிட்டது இத்தனை பயபக்தியுள்ள சேரி மக்களின் ஒட்டு நிச்சயம் தனக்கே கிடைக் கும் என்று பெருமிதம் கொண்டார். ஆனால் அந்தப் பகுதி மக்கள் ஒவ்வொரு அபேட்சகரையும் இப்படியே வரவேற்றிருக்கிறார்கள் என்பதை அவர் அறியமாட்டார். நவீன காலப் பொதுவாழ்விலே மிகவும் சிரம சாத்தியமான காரியம் அசல் புகழ் எது? அசல் பிரியம் எது? என்று கண்டு பிடிப்பதுதான். கமலக்கண்ணனோ அப்படி எல்லாம் கண்டு பிடிக்க முடியாமல் ஆரத்தியையும் மாலையையும், திலகத்தையும் அசல் பிரியமாகவே எடுத்துக்கொண்டு விட்டார். ஆனால் அன்று மாலையிலே ஆரத்தி, மாலை, திலகம் ஆகியவற்றைப்பற்றிய சாதாரண உண்மைகளை அவர் புரிந்து கொள்ளும்படியான சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை அவரைத் தேடிச் சேரியிலிருந்து ஆட்கள் வந்தார்கள், வந்த ஒவ்வோர் ஆளும் பேரம்பேசினான். பேரம் ஒத்து வராமற் போகவே ஓர் ஆள் கோபமாகச் சொல்லியே விட்டான்: “இன்னா சார்! நீ ஏதோ பெரிசாக் குடுக்கப் போறேன்னு நான் தெண்டத்துக்கு மாலை, ஆரத்தின்னு, எங்க பேட்டையிலே கைக் காசைச் செலவழித்துத் தட புடல் பண்ணினேனே?” கமலக்கண்ணனுக்கு இந்த வார்த்தைகள் கரீறென்று உறைத்தன. பணத்தைக் கொண்டு வந்து அந்த ஆளுக்கு முன்னால் எறிந்தார். “நீயே வச்சுக்க சார்! நம்பளுக்கு வாணாம் இந்தப் பிச்சைக் காசு. ஏதோ நாய்க்கு வீசிக் கடாசற. மாதிரி எறி பிறியே. நீ ஒட் வேனும்னே நான் ஏற்பாடு பண்றேன்னேன். ஏதோ தருமம் பண்ற மாதிரி வீசி எறிஞ்சா வாணாம் சார்…” இப்படி அவன் சல்லியாக மாறி ரிக்ஷாக்காரன் போல் இறக்கி விடுகிற இடம் பார்த்துத் தகராறு செய்யும் நிலைக்கு வரவே அருகிலிருந்த பிரகாசம் கமலக்கண்ணனுக்கு ஜாடை செய்து உள்ளே அழைத்தார். அவர் உள்ளே வந்ததும், “சுத்த செங்காங்கடைப்பசங்க இவங்களோட ரொம்பப் பேச்சு வச்சுக்காதீங்க…கொடுக்கிறதை மரியாதையாக் கொடுக்கிற மாதிரிக் கொடுத்தனுப்பிச்சிடுங்க…” என்றார் பிரகாசம். “அதென்னமோ சேரிமக்களுக்கு உங்க மேலே அபாரப் பிரியம், அமோகமான மரியாதை, அதுனாேலதான் மாலை மரியாதை, ஆரத்தி எல்லாம்னு நீயே சொன்னியே பிரகாசம்?” “சொன்னேன் சார்! ஆனா என்ன செய்யிறது. இந்தக் காலத்திலே பணமில்லேன்னா என்னதான் நடக்குது?’’ இதற்குப் பதில் சொல்லக் கமலக்கண்ணனால் முடியவில்லை. பேசாமல் வெளியே வந்து மரியாதையாக அந்த ஆளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தார். கூடவே இன் னொரு பத்துருபாயும் தனியே கையில் கொடுத்து இதைக் காப்பிச் செலவுக்கு வச்சிக்க’ என்று போலியாக வர வழைத்துக்கொண்ட ஒரு சிரிப்புடன் கூறி வைத்தார் கமலக்கண்ணன். “ரொம்பச் சந்தோசங்க… மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன். லாட்டா அத்தினி ஸ்லம் ஒட்டும் உங்களுக்குத்தான் வுளும்” என்று கூறிப் பெரிதாக ஒரு கும்பிடும் போட்டு விட்டுப் போனான் அவன். கமலக்கண்ணனுக்குப் பிரகாசத்தின் மேல் ஒரு சந் தேகமும் வந்தது. ‘மாலை, ஆரத்தி, திலகம் எல்லாமே பிரகாசத்தின் ஏற்பாடுதானா?’ என்று தோன்றியது. எல்லாம். பிரமாதமாச் செய்து ஐயாவைக் குவிப்படுத்தனிங்கன்னா அஞ்சுக்குப் பத்தாக் குடுப்பாரு’ என்று பிரகாசமே அந்தச் சேரி ஆட்களைத் தூண்டிவிட்டிருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தாலும் பிரகாசத்திடம் அதை அவர் கேட்க வில்லை. சேரிக்கு விஜயம் செய்த தினத்தன்று மாலையிலேயே தனித்தனியாக நான்கு ஆட்களுக்கு மேல் முதலில் பிரகாசத்தைத் தேடி வந்து அப்புறம் பிரகாசம் அவர்களைக் கமலக்கண்ணனிடம் அழைத்து வந்து தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். அவர்களுக்கும் பிரகாசம் சொன்ன தொகையை மறுக்காமல் கொடுத்தனுப்பினார் கமலக்கண்ணன். “வீடுகளிலே நீயும் உன் ஃபிரண்ட்ஸும் போய் மஞ்சள் – குங்குமம் கொடுத்து ஒட்டுக்குச் சொல்விட்டு வரணும்…” என்று மனைவியிடம் வேண்டினார் கமலக்கண்ணன். “ஏன் அந்த மாயாவையே போகச் சொல்லப் படாதோ? ஒருவேளை நான் போனா ஒட்டுக் குறைஞ்சு போனாலும் போயிடலாம். எனக்கும் என் ஃபிரண்ட்ஸுக்கும் கவர்ச்சி ஒண்ணும் கிடையாது” என்று அந்த அம்மாள் பதிலுக்குக் கிண்டிலில் இறங்கினாள். “வீணா வம்பு பண்ணாதே! உன் மாதிரி யாராலியும் கவர்ச்சியா இருக்க முடியாது. நீ மனசு வச்சா எத்தினி காரியத்தையோ சாதிக்க முடியுமே…!” என்று சொந்த மனைவியிடமே வேறெங்கோ பேசுவது போல் செயற்கையாகப் புனைந்து பேசினார் கமலக்கண்ணன். அந்த அம்மாள் முகம் ஒரளவு மலர்ந்தது. பகுதி -10 தேர்தல் நாள் நெருங்க நெருங்கக் கமலக்கண்ணனுக்கு ஒரே கவலையாக இருந்தது. செலவை நினைக்கும் போதும் பயமாக இருந்தது. தோற்றுவிட்டால்?’ என்று நினைக்கும் போதோ அதைவிடப் பயங்கரமாக இருந்தது. பிரகாசம் ஏதோ பெட்ரோல் செலவுக் கென்று வந்து பணம் கேட்டான். “பார்த்துச் செலவு செய்யி…ஏகமா ரூபாய் செலவழியிது” என்று கவலையோடு சொல்லியபடியே பணத்தை எடுத்துக் கொடுத்தார் கமலக்கண்ணன். “கவலைப்படாதீங்க சார்! நிச்சயமா ஜெயிச்சுடுவீங்க. மந்திரியா வர்ரத்துக்கும் சான்ஸிருக்கு…அப்படியே இல்லையின்னாலும் போட்ட பணத்தை எடுத்துடலாம். நாலு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரெண்டு என்ஜினீயரிங் காலேஜ் அட்மிஷன்னு வராமலா போயிடுவாங்க…” கமலக்கண்ணனுக்கு என்னவோ பயமாகத்தான் இருந்தது. பணத்துக்கு பணமும் நஷ்டமாகி அவமானமும் ஆகிவிடக் கூடாதே என்று பயந்தார் அவர். அவருடைய மனைவி வேறு மாதர் சங்கத்துப் பெண்களை அழைத்துக்கொண்டு வீடு வீடாகக் கணவனுக்கு ஒட்டுப் போடுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள். நாலா விதங்களிலும் முழு மூச்சாகப் பிரச்சார வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தக் கவலையும் பயமும் நிறைந்த இரவுகளில் கமலக்கண்ணன் நிறையக் குடித்தார். இன்னும் சில இரவுகளில் மதுவின் மயக்கத்தோடு மாயாதேவியின் துணையும் வேண்டியிருந்த்து அவருக்கு. தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் போது, சேரிப் பக்கமாகப் போன போது பிரகாசத்தை யாரோ எதிர்த்தரப்பு ஆட்கள் அடித்துப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். சேரியில் ஏதோ ஒட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போக வந்ததாகச் சந்தேகப்பட்டு அடித்துவிட்டதாகத் தெரிந்தது. கமலக்கண்ணன் பிரகாசத்தை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தார். வழக்கப்படியும் விதியை அநுசரித்தும் தேர்தலுக்கு நாள் நெருங்கி வரவரப் பொதுக்கூட்டங்கள், பிரசார மேடைகள் நிறுத்தப்பட்டன. போர் தொடங்கப்படுவதற்கு முந்திய போர்க்களம்போல் நகரம் அமைதியடைந்து விட்டது. கமலக்கண்ணனுக்கான தேர்தல் ஏஜண்டுகள் ‘போலிங் பூத்’ வாரியாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் தவிர வாக்காளர்க்ளை ஒட்டுச் சாவடிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு ஐம்பது ஆட்களும் இருபத்தைந்து கார்களும் ஏற்பாடு செய்யப் பட்டாயிற்று. கமலக்கண்ணனின் தொழில் நிறுவனங்களில் பல்வேறு உத்தியோகங்களைப் பார்த்து வந்தவர்கள் எல்லாம் தேர்தல் காரியங்களைக் கவனிப்பதற்கு அமர்த்தப்பட்டார்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி போலவும் – அதே சமயத்தில் வேகமாக நிகழ்ந்து சுவடில்லாமல் மறையும் ஒரு கனவு போலவும் – தேர்தல் நாளும் வந்துபோயிற்று. கார்களும், ஆட்களும் பறந்தார்கள். ஒட்டுச்சாவடிகளில் பெரிய பெரிய க்யூ நின்றது. கடைசி வினாடி வரை ஒட்டுப் பதிவாயிற்று. நடுப்பகல் வெயிலில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தாலும் மாலை மூன்றரை மணிக்கு மேல் மீதமிருந்த குறுகிய நேரத்தில் விறுவிறுப்பாக ஒட்டுப் பதிவு நடந்தது. இரண்டு தினங்கள் முடிவை எதிர்பார்த்திருக்கும் ஆவலும் அமைதியும் நிலவின. பத்திரிகை ஹேஷ்யங்கள் வேறு குழப்பின. வெற்றி தோல்விகளைப் பற்றிய வம்பு களும் வதந்திகளும், பொதுமக்களையும் அபேட்சகர்களையும் குழப்பிக்கொண்டிருந்தன. இந்த இரண்டு நாட்களும் கமலக்கண்ணன் எங்கும் வெளியே போகவில்லை. ரேடியோவில் தேர்தல் முடிவுகளைக் கேட்பது தவிரக் காலை – மாலை வேளைகளில் வெளியாகும் எல்லாச் செய்தித்தாள்களையும் வாங்கி ஒரு வரி விடாமல் படித்தார். தம்முடைய தினக்குரல் காரியா லயத்துக்கும் ஃபோன் செய்து அடிக்கடி விவரங்களை விசாரித்துக்கொண்டார். மீதி நேரங்களில் நிறையக் குடித்தார். மாயாவோடு சல்லாபம் செய்தார். வோட்டுக்கள் எண்ணப்பட்ட தினத்தன்று நம்பிக்கையான செய்திகள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை டெலி போனில் கமலக்கண்ணனுக்குத் தெரிவிக்கப்பட்டுக்கொண் டிருந்தன. இரவு ஏழரை மணி நிலவரப்படி அவருக்குப் பதினேழாயிரம் ஒட்டுக்கள் அதிகமாக இருந்தன. இரவு ஒன்பதரை மணிக்கு அதிகாரப்பூர்வமான முடிவே தெரிந்துவிட்டது. இருபத்தேழாயிரத்து நூற்றிருபது வோட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று விட்ட மகிழ்ச்சியான செய்தி ஃபோனில் வந்தது. பல நண்பர்களும், பிரமுகர்களும், வர்த்தகர்களும், கட்சித் தொண்டர்களும் பார்த்துப் பாராட்டவும் மாலை சூட்டவும். தன் வீடுதேடி வருவார்களாதலால் இனி மாயாவின் வீட்டிலிருக்கக் கூடாதென்று கருதியவராகக் கமலக்கண்ணன் வீடு புறப்படத் தயாரானார். நிறையக் குடித்திருந்ததனால் மற்றவர்களுக்கு வாடை தெரிந்துவிடக் கூடாதே என முகத்தில் ’சென்ட்’டை வாரிப் பூசிக் கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார். “இந்த வெற்றிக்காக எனக்கு என்ன தரப்போகிறீர்கள்?” என்று பூ மத்தாப்புச் சிலிர்த்தது போல் புன்னகையோடு எதிரே வந்து கிளுகிளுத்தாள் மாயா. “இந்த வெற்றியே நீ தந்ததுதானே மாயா…” என்று கமலக்கண்ணன் அவளை நெருங்கி இறுகத்தழுவிக்கொண்டார். பேதைகளைத் திருப்தி செய்ய வெறும் புகழ் வார்த்தைகள் மட்டுமே போதும் என்பதில் அவருக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவர் வீடு திரும்புவதற்கு முன்பே தயாராக ஒரு கூட்டம் மாலைகளோடு அங்கே அவரைப் பாராட்டுவதற்குக் காத்திருந்தது. மனித இதயத்திலுள்ள தார்மீக பிடிகள் – வாழ்க்கையின் சோர்வுகளாலோ பயத்தினாலோ தளரும் போதும் அவனுக்குப் பெண் வேண்டும், மது வேண்டும், புகழ் வேண்டும். கமலக்கண்ணனுக்கு முதல் இரண்டு வகையிலும் குறைவில்லை. மூன்றாவது வகை ஆசையிலும் இப்போது அவர் வெற்றிப்படியேறி விட்டார். “வர்த்தக இனமே உங்கள் வெற்றியால் பூரிப்படைகிறது” என்று கூறிக் குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு ஒர் ஆள் உயர மாலையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கமலக்கண்ணனின் கழுத்தில் போட்டார். அடுத்த மாலை கடம்பவனேசுவரர் கோயில் தர்மகர்த்தாவினுடையதாக இருந்தது. “கோயில் திருப்பணிக்கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக வந்தாலும் வந்தீர்கள், கடம்பவனேசுவரன் உங்களுக்கு ஒவ்வொரு யோகமாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டான். இப்போது ராஜயோகமே வந்திருக்கு…” என்றார் தர்மகர்த்தா. புலவர் வெண்ணெய்க்கண்ணனார் ஓர் உரோசாப் பூமாலையைக் கமலக்கண்ணனுக்குக் கொண்டுவந்து அணிவித்தார். ‘சேம்பர் ஆஃப் காமர்ஸ்’, ‘காஸ்மாபாலிடன் கிளப்’, ‘சங்கீத சபை’– எல்லாவற்றின் சார்பிலும் – அவற்றைச் சேர்ந்த பெருந்தலைகள் கமலக்கண்ணனுக்கு மாலை அணிவித்தார்கள். பத்திரிகைக்காரர்கள் புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளினார்கள். “மாநிலத் திரைப்பட நிருபர்கள் சங்க சார்பில் வள்ளல் கமலக்கண்ணன் அவர்களுக்கு இந்த மலர் மாலையைச் சூட்டுகிறேன்” என்று எங்கிருந்தோ திடீரென்று வந்து குதித்த கலைச்செழியன் திடீரென்று உதயமாகியிருந்த ஒரு சங்கத்தின் சார்பிலே கமலக்கண்ணனுக்கு மாலையையும் வள்ளல் பட்டத்தையும் சேர்த்துச் சூட்டினான். அந்த நேரம் பார்த்து அங்கு கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவர், “முன்னாள் அறநிலையப் பாதுகாப்பு மந்திரி விருத்தகிரீஸ்வரன் தோற்றுப்போய் விட்டாராமே? தெரியுமா சேதி?” என்று கூறவே கமலக்கண்ணன் பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார். இதே விருத்தகிரீஸ்வரன் முன்பொரு சமயம் நான் கோவில் திருப்பணி சம்பந்தமாக ஃபோன் செய்தபோது கமலக்கண்ணனா? எந்தக் கமலக்கண்ணன்? என்று என்னை யாரென்றே தெரியாதவர் போல நடித்தாரே! அன்று என்னை அவமானப்படுத்திய அவர் நாளை நான் மந்திரியானால் என்னைத்தேடி வரவேண்டியிருக்குமென்று எண்ணினார் கமலக்கண்ணன். அப்போது தேசியக் கட்சித் தலைவர் மாலையோடு தேடிவந்தார். “என்னய்யா? என்னமோ நான் பழைய ஜஸ்டிஸ் கட்சி ஆளுன்னு ‘டிக்கட்’ கொடுக்க பயந்தீங்க; அப்படியிருந்தும் ஜெயிச்சுட்டேன்.” “எனக்குத் தெரியாதா சார் உங்க பெருமை? ஏதோ நம்ம கட்சியிலே விடலைப் பசங்க… ஆ..ஹீன்னாங்க… இப்ப அவங்களுக்கே மூஞ்சிலே கரியைப் பூசினாப்ல நீங்க ஜெயிச்சிட்டீங்க…ஆனாலும் நம் கட்சிக்கு இத்தனை செல்வாக்கு இருந்தும்கூட உங்க தொகுதியிலே உங்களை எதிர்த்து யாரையுமே நாங்க நிறுத்தலியே…” “நிறுத்தியிருந்தீங்கன்னாக் கூட நம்ப முதலாளியை அடிச்சிருக்க முடியாது. இருபதாயிரத்துக்கு மேலேயில்ல ஒட்டு வித்தியாசப்படுது…” என்று ’முதலாளி’யைக் காக்காய் பிடித்தார் ஒருவர். அன்றிரவு கமலக்கண்ணன் வீட்டில் ஒரு நூறுபேருக்கு மேல் வடை– பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டார்கள். கமலக்கண்ணனுடைய வெற்றி அமோகமாகக் கொண்டாடப் பட்டது. “நாளன்றைக்குச் சாயங்காலம் ‘பார்டி ஆபீஸிலே’– ஒரு பாராட்டுக் கூட்டம் வச்சிருக்கோமுங்க. நீங்க அவசியம் வந்துடனும்”– என்று கட்சித் தலைவர் தொடங்கியபோது. “அங்கேயா? உங்க கட்சியைச் சேர்ந்த தடிப்பசங்க யாராச்சும், ‘வாபஸ் வாங்கு’ – அது இதுன்னு கத்தினா நான் வரமாட்டேன். ஏற்கெனவே அன்னிக்கி ஊழியர் கூட்டத்திலே அவங்க நடந்துக்கிட்டது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே…நான் பெரிய மனுசன் வீட்டுப் பிள்ளை…பொடிப்பசங்க கண்டபடி கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது…” “அப்படியெல்லாம் ஒண்னும் ஆகாதுங்க…இது நீங்க ஜெயிச்சதுக்காகப் பாராட்டுக் கூட்டம்தானே?…” “ஒண்ணும் தாறுமாறாஆகாதுன்னா வர்ரதைப்பத்தி எனக்கொண்ணுமில்லை. ‘கட்சியிலே நீங்க எவ்வளவு காலமாக உறுப்பினர்? தீவிர உறுப்பினரா? சாதாரண உறுப் பினரா–ன்னெல்லாம்’ ஊழியர் கூட்டத்திலே – என்னைக் கேள்வி கேட்டு மடக்கினானே – யாரு அந்த ஆளு?”… “அடடே அந்த ஆளா? காந்திராமன்’னு பேரு. ’சர்வோத்யக் குரல்’ங்கிற பத்திரிகைக்கு ஆசிரியர். தீவிர உறுப்பினர். சரியான காந்தி பக்தர்…ரொம்ப முரண்டுக் காரரு… நெளிவு சுளிவுகூடப் பார்க்கத் தெரியாது…” “அந்த ஆளென்னமோ தேசியமே தனக்குத்தான் சொந்தம்னு நினைக்கிறாப்பலருக்கு…” “ரொம்பக் கொள்கைப்பிடிப்புள்ள ஆள். தீவிரமான தேசியவாதி…” “அது சரி! அதுக்காக மத்தவங்களை அவமானப் படுத்தணும்னா சொல்லியிருக்கு…” “அந்த ஆள் கிடக்கிறாருங்க…உங்க செல்வாக்குக்கு முன்னாடி ஒண்னும் பண்ணிட முடியாது!…நீங்க நாளைக்கு மந்திரியா வந்துட்டீங்கன்னா கட்சியிலே உங்களுக்கு ஒரு பிடி இருக்கும்…” “கட்சிக்கு நாம் எவ்வளவோ செய்யிறோம். கட்சி தான் சமயத்துலே நம்மை மறந்துடுது….” –என்று ஒரு தினுசாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கமலக்கண்ணன். “– சுயேச்சையாக நின்று ஜெயித்தாலும் – நான் தேசியவாதியானபடியினால் கட்சியில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றுகிற உத்தேசம் உண்டு’–ன்னு பத்திரிகையிலே இப்பவே ஒரு அறிக்கை விட்டுட்டிங்கன்னா நல்லாயிருக்கும். இல்லையின்னா மந்திரியா வர் ரதுக்காகத் தான் கட்சியிலே சேர்ந்தார்னு பின்னாலே நாலு பேருவம்பு பேசுவாங்க…”–என்று கமலக்கண்ணனைத் தனியே அழைத்து. இரகசியமாக யோசனை கூறினார் கட்சித் தலைவர். “நாளைக் காலை எடிஷன்லியே வர்ராப்ல இப்பவே நம்ம தினக்குரலுக்குச் சொல்லிடறேன்” என்றார் கமலக்கண்ணன். “சும்மா – பி.டபிள்யூ.டி. மீன்வளப் பாதுகாப்புன்னு உருப்படாததைத் தலையிலே கட்டிடப்போறாங்க… கேக்கறப்புவே, கல்வி, அல்லது தொழில்தான் வேணும்னு கண்டிப்பாக்கேளுங்க… நம்ம ஆளுங்களுக்கு ஏதோ நாலு உபகாரம் பண்ணலாம்…” என்று அந்தரங்கமாகக் கமலக்கண்ணனுக்கு யோசனை கூறினார் அனுதாபியும், பிரமுகருமான ஒரு நண்பர். “கல்வி எதுக்கு? இண்டஸ்ட்ரீஸ் அண்ட் லேபர் தான் நல்லதுன்னு பார்க்கிறேன்” என்று கமலக்கண்ணனும் மெல்ல அதற்கு ஒத்துப் பேசினார். கமலக்கண்ணன் பங்களாவில் பின்பக்கத்து அறையில் நடமாட்டமின்றிக் கிடந்த தாயைப் போய்ப் பார்த்து வணங்கிவிட்டு வந்தார். உடனே பக்கத்திலிருந்த நிருபர் – கலைச்செழியன் அதையே ஒரு செய்தியாக எழுதி மறுநாள் தினக்குரலில் பிரசுரிக்கு மாறு ஃபோனில் கூறினான். “வெற்றிபெற்ற செய்தியறிந்ததும், நேரே அன்னையைக் கண்டு வணங்கி ஆசி பெற்றார் கமலக்கண்ணன்” – என்று தினக்குரலில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டிச் செய்தி போடுவதற்கு ஏற்பாடு செய்தாயிற்று. சாதாரண மனிதன் எளிமையாயிருந்தால், சாதாரணமனிதன் தாயன் போடிருந்தால், சாதாரண மனிதன் தெய்வபக்தியோடிருந் தால், அதற்கெல்லாம் விளம்பரமோ, புகழோ, வியப்போ கிடைக்காது. செல்வாக்குள்ளவனின் குண நியாயங்கள் தான் தேவையை மீறிக் கொண்டாடப்படும். தேவையை மீறி விளம்பரப்படுத்தப்படும். கமலக்கண்ணனின் சாதாரண செயல்கள் கூடக் குணங்களாகவும், இலட்சியச்செயல்களாகவும் விளம்பரப்படுத்தப்பட்டன. கமலக்கண்ணனின் பங்களா கலியாண வீடு போலாகி விட்டது. வருகிறவர்களும் போகிறவர்களும் அதிகமானார்கள். காலையிலும் மாலையிலுமாக தினம் ஐம்பது பேருக்குக் குறையாமல் சாப்பிடத் தொடங்கினார்கள். தேர்தலில் வெற்றிபெற்றதற்காக நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் பிரகாசம் ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவந்திருந்த தனால் கூட்டத்தை அவனே நடத்தினான். பேசிய பேச்சாளர்கள் யாவருமே கமலக்கண்ணன் அமைச்சராக வந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திப் பேசினார்கள். கமலக்கண்ணனுக்கே அந்தப் பேச்சுக்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியை அளித்தன. சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தாலும் சட்டசபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருந்த தேசியக்கட்சியில் சேர்ந்து விடப் போவதாகவே அவர் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தார். கட்சி ஊழியர்கள் கூட்டத்திலும் அவரைப் பாராட்டுவதற்கு ஒர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் போவதற்கு மட்டும் கமலக்கண்ணன் பயந்து நடுங்கினார். கட்சி ஊழியர்கள் கூட்டமென்றாலே அவருக்குப் பயமாக இருந்தது. பழைய ஊழியர் கூட்டத்தில் நடந்ததை நினைத்த போது சிம்ம சொப்பனமாகவும் இருந்தது. ஆனால் இப்போது ‘கட்சி ஊழியர்கள்’ நடத்தும் பாராட்டுக்கூட்டத்திற்கு வரமாட்டேனென்று மறுப்பதிலும் தர்ம சங்கடம் இருந்தது. அதே கட்சியின் சார்பில் ஒரு மந்திரியாகப் பதவி வகிக்க நாளைக்குச் சந்தர்ப்பம் இருக்கும்போது இன்று அவர்களைப் பகைத்துக்கொள்வது நன்றாக இராதென்றும் தோன்றியது. கட்சித் தலைவரையும், நகரக் குழுவின் காரியதரிசியையும் மட்டும் அந்த ரங்கமாக விசாரித்து வைத்துக்கொண்டார். “என்னவோ ஊழியர் பாராட்டுக் கூட்டம்றீங்க…! உங்ககட்சி ஊழியர்களிலே நம்மை மனசாரப் பாராட்டறவன் எவனும் இருப்பான்னு எனக்குத் தோணலை. முன்னாடியே ஒருதடவை தகராறாயிருக்குது, அதனாலேதான் பயப்படறேன். எவனாவது கன்னாப்பின்னான்னு நடந்துக்கிட்டான்னா நான் ரொம்பப் பொல்லாதவனாயிருப்பேன்”–என்று முன்னெச்சரிக்கை போல் அவர்களிடம் சொல்லியும் வைத்திருந்தார் கமலக்கண்ணன். ஆனால் அவர்களோ தம் செவிகளால் நம்ப முடியாத ஒரு செய்தியை அவருக்குத் தெரிவித்தார்கள். “இப்ப அப்படியெல்லாம் நடக்காது. நீங்க எலெக்ஷன்லே ஜெயிச்சிருக்கீங்க…அந்த ஆள் காந்திராமனே உங்களுக்கு மாலைபோட வந்தாலும்கூட ஆச்சரியப்படறத்துக்கில்லே.” “மாலை போட்டாலும் பரவாயில்லை. நாலு பேர் கூடியிருக்கிறப்ப அவமானப்படுத்தாமே இருந்தாக்கூடப் போதும்.” “அதெல்லாம் ஒண்னும் நடக்காது! நீங்க கவலைப்படாம வாங்க…” என்றார் கட்சித் தலைவர். இதற்குள் பத்திரிகைகளில் எல்லாம் கமலக்கண்ணன். மந்திரியாக வர இடமிருப்பதாக உறுதியான ஹேஷ்யங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அறநிலையப் பாதுகாப்பு மந்திரியாக வருவார் – என்பது சில பத்திரிகைகளின் ஹேஷ்யம் கல்வி மந்திரியாக வருவார் என்பது வேறு சில பத்திரிகைகளின் ஹேஷ்யம் தொழில்மந்திரியாக வருவார் என்பது வேறு சிலரின் ஹேஷ்யமாக இருந்தது. அவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க, ‘இந்த ஹேஷ்யங்கள் எல்லாம் பொய்யாகும்படி மந்திரி பதவி என்றுமே கிடைக்காமல் ஆகி விடக்கூடாதே’– என்ற பயமும் தற்காப்பும் வேறு அவருள் தலை எடுத்தன எனவே கட்சி ஆட்களைக் கவரவும் வசீகரிக்கவும் அவரே முன்வந்து முயற்சிகள் செய்யவேண்டியிருந்தது. கொஞ்ச நஞ்சமிருந்த வேறு உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு முழுக்க முழுக்கக் கதரில் இறங்கினார் கட்சியின் செல்வாக்குள்ள மனிதர்களையும், தலைவர்களையும் அடிக்கடி பார்த்து அவர்களுடைய ’குட்புக்ஸ்’ஸில் இருக்க முயற்சி செய்தார். கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மெல்ல ஒரு காருக்கு அடிப்போட்டார். கமலக்கண்ணனிடம் நேரடியாகப் பணம் கேட்க அவருக்குத் தயக்கமாயிருந்தது. “கட்சி வேலையா அலைச்சல் அதிகம். நீங்க எனக்குச் செய்யறதா கவே நினைக்கப்படாது. கட்சிக்கே இதைச் செய்யறதாகத் தான் வச்சுக்கணும். உங்கக்கிட்ட உபயோகத்திலே இருக்கிற வண்டியா இருந்தாக்கூடப் பரவாயில்லே” என்றார் பிரமுகர். பார்க்கலாம்! கொஞ்சம் டயம் குடுங்க, யோசிக்கறேன்" – என்று நழுவப் பார்த்தார் கமலக்கண்ணன். பிரமுகரும் சுற்றிச் சுற்றி அதே பேச்சுக்கு வரவே நாசூக்காக மந்திரி பதவியைப் பதிலுக்கு வற்புறுத்த ஆரம்பித்தார் கமலக்கண்ணன். “அது ஒண்னும் சிரமமில்லே! நிறைய எம். எல். ஏக்களோட குட்புக்ஸ்ல இருக்கணும். அதை நான் பார்த்து முடிச்சுத்தரேன். கொஞ்சம் செலவழியும், தயங்காமே செலவழிக்கணும்…” “ஏற்கெனவே வேறே நிறையச் செல்வாகியிருக்கு. நீங்க வேறே காரைப்பத்திச் சொல்றீங்க…” “இதுக்கெல்லாம் தயங்கினிங்கன்னா ஒண்னுமே ஆகாதுங்க… அஞ்சு வருஷம் மந்திரியா இருக்கிறதுன்னா சும்மாவா…?” “அதுக்குச் சொல்ல வரலே. பார்ட்டிக்கே நான் நிறையச்செஞ்சிருக்கேன். நான் ஒரு ‘டெய்லி’ நடத்தறனே, அதுலே எவ்வளவோ கையைப் பிடிக்குது…இருந்தும் பார்ட்டிக்காக அதைவிடாப்பிடியா நடத்திட்டுவரேன்…’ “அதெல்லாம் வேறே..அதைக்கொண்டாந்து இதிலே சம்பந்தப்படுத்தாதீங்க…இது எப்படின்னா…சாதாரணமாகவே கொஞ்சம் வசதியுள்ளவங்கதான் மந்திரியா வர முடியும். நீங்களோ சுபாவமாகவே வசதியுள்ளவரு. மந்திரியா வரணுங்கற ஆசையுள்ள பத்து எம்.எல்.ஏக்கள் உங்களுக்காக அதை விட்டுக்குடுக்கணும்னா பதிலுக்கு. அவங்களுக்காக நீங்க ஏதாவது செஞ்சுத்தானே ஆகணும்?” “என்னமோ…ரொம்பப் பெரிசா பயமுறுத்தீங்க… பார்க்கலாம்…” கமலக்கண்ணனுக்குத் தான் ஒரு மந்திரியாக வரமுடியும் என்ற நிலைமைகள் தெளிவாகி விட்டன. அதற்கான ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக இறங்கினார். கட்சி ஊழியர்கள் பாராட்டுக்கூட்டத்தன்று அவர் மிக மிக உற்சாகமாக இருந்தார். எல்லாரும் அவரையும் அவருடைய வெற்றியையும் வானளாவப் புகழ்ந்து பேசினார்கள். தேர்தலுக்கு முன்பு நடந்த ஊழியர் கூட்டத்தில் கமலக்கண்ணன் அசல் தேசியவாதி அல்ல என்றும் அவரைப் போன்றவர்கள் கட்சியில் தீவிர உறுப்பினராகக்கூடாதென்றும்’ – தாக்கிப் பேசிய அதே காந்திராமன் இன்று தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் பேசுவதாகவும் மாலையணிவிப்பு தாகவும் நிகழ்ச்சி நிரலில் கண்டிருந்தது. கமலக்கண்ணன் முற்றிலும் எதிர்பாராத மாறுதல் இது. அதனால் எல்லா ருடைய மாலைகளும், எல்லாருடைய புகழும் அவர் செவிக்கு இன்பம் தந்ததை விடக்காந்திராமன் என்ன பேசப் போகிறார் எப்படிப்பட்ட மாலையைச் சூட்டப்போகிறார் என்பதையே அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். நிகழ்ச்சி நிரலில் காந்திராமனின் பெயர் கடைசியிலிருந்தது. அவர் ஒரு தீவிரமான காந்தியவாதி என்பதால் முன்பு பலமுறை கமலக்கண்ணனைப் பிடிக்காததுபோல் காண்பித்துக் கொண்ட அவர் – இன்று எப்படிக் கமலக்கண்ணனைப் பாராட்டிப் பேசப்போகிறார் என்பது எல்லாருக்கும் திகைப்பாகவும் – வியப்பாகவுமே இருந்தது. ஆனால் மின்வெட்டும் நேரத்தில் யாருமே எதிர்பாராத நிகழ்ச்சி நிகழ்ந்துவிட்டது. “கெட்டவை நிகழ்வதற்குமுன் வானில் வால் நட்சத்திரங்கள் தோன்றுமென்பார்கள், காந்தியத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை இல்லாத ‘கள்ள மார்க்கெட்’ பேர்வழிகள் நம் கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்றிருப்பது நமது லட்சியங்களுக்கு ஏற்றதல்ல என்று நான் கருதுகிறேன். நமது கட்சி அழிவதற்குரிய உற்பாதங்களாக இந்த வெற்றிகளைக் கருதி வெறுக்கிறேன் நான்’ என்று மேடையேறிச் சீறுவதுபோன்ற குரலில் வேக வேகமாக முழங்கிவிட்டுக் கையோடு கொண்டுவந்திருந்த மாலை பொட்டலத்தைப் பிரித்துக் கமலக்கண்ணனை அவமானப் படுத்துவதுபோல் முற்றிலும் எருக்கம் பூவாலேயே கட்டப்பட்டிருந்த அந்த மாலையைத் துணிந்து அருகில் நெருங்கி அவருக்கு அணிவித்துவிட்டு – விறு விறுவென்று இறங்கி நடந்துவிட்டார் காந்திராமன். ஒருவருக்கும் அவரை எதிர்க்கத் தோன்றவில்லை. அவ்வளவேன்? கமலக்கண்ணனே எருக்கம்பால் நாற்றமடிக்கும் அந்த மாலையைக் கழற்றத் தோன்றாமல் ஐந்து நிமிஷம் ‘திக்பிரமை’ பிடித்து இருந்தார். காந்திராமன் மின்னலைப்போல் மேடையேறி ஒவ்வொரு வார்த்தையாக முழங்கிய முழக்கம் இன்னும் சபையில் எதிரொலித்துக் கொண்டிருப்பதுபோல ஒரு பிரமை நிலவியது. யாருக்கும் எதுவும் செய்யத் தோன்ற வில்லை. கூட்டத்தை முடிக்கும்போது சம்பிரதாயமான முறையில்,”இங்கு நடந்த அசம்பாவிதங்களுக்காக மனப் பூர்வமாக வருந்துவதோடு கமலக்கண்ணன் அவர்களிட மும், உங்களிடமும் தலைவன் என்ற முறையில் கட்சியின் சார்பில் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் கட்சித் தலைவர் . “நீங்க இதைப் பெரிசு படுத்தாதிங்க…பொறாமைக்காரங்க எங்கேயும் இருப்பாங்க… எதுவும் செய்வாங்க…” என்று ஒருபிரமுகர் கமலக்கண்ணனுக்கு ஆறுதல் கூறினார். “பேப்பர்ல பெரிசா பாராட்டுக் கூட்டத்தில் கலாட்டான்னு வராமப் பார்த்துக்கணும்” என்று மட்டும் கமலக்கண்ணன் பதில் கூறினார். “அப்பிடி ‘நியூஸ்’ வராது. அதை நாங்க பார்த்துக்கறோம். நீங்க கவலைப்படாதீங்க” என்று கட்சித்தலைவர் உறுதி கூறினார். மனம் என்னவோ அவமானத்தை உணர்ந்து கொதிக்கத்தான் செய்தது. ஆனாலும் நிலைமை கெடாமல் ‘டிப்ளமேட்’ ஆக இருந்தார் கமலக்கண்ணன். அடுத்த வாரம் அசெம்பிளியின் மெஜாரிடி உறுப்பினர் களடங்கிய தேசியக் கட்சித் தலைவரின் மந்திரிகள் பட்டியல் வெளியானபோது பட்டியலில் நாலாவதாகக் கமலக்கண்ணனின் பெயரும் இருந்தது. இரண்டு நாட்களில் கட்சியின் சட்டசபை முதல்வர் பட்டியலை ஒப்படைப்பதற்காகக் கவர்னரைச் சந்திக்கச் சென்றபோது உடன் சென்றவர்களில் கமலக்கண்ணனும் ஒருவராக இருந்தார். இந்த மிதமிஞ்சிய மகிழ்ச்சிகளில் ‘காந்திராமன்’ செய்த அவமானத்தைத் தற்காலிகமாகக் கமலக்கண்ணனால் மறக்க முடிந்தது. பகுதி -11 கமலக்கண்ணன் அமைச்சராகிவிட்டார். நிதி, அறநிலையம்ஆகியதுறைகள் அவர் பொறுப்பில்விடப்பட்டன. காபினட் வரிசையில் அவர் இரண்டாவதாக வந்துவிட்டார் பட்டியல் வெளியான அன்று வெறும் பெயர் வரிசையில் தான் அவர் நாலாவதாக இருந்தார். பின்பு அவருக்கு நிதியினால் இரண்டாவது இடம் கிடைத்தது கமலக்கண்ணனே ஆசைப்பட்ட ‘இண்டஸ்டரீஸ் அண்ட் லேபர்’ அவருக்குக் கிடைக்கவில்லையானாலும் அதைவிட முக்கியமான ‘நிதி’ கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார் அவர் . ‘நிதியும் தெய்வங்களும் உங்கள் பொறுப்பில் விடப்பட்டி ருக்கிறார்கள்’ என்று ஒரு நண்பர் சிரித்துக்கொண்டே வேடிக்கையாகப் பாராட்டினார் கமலக்கண்ண்னின் வழக்கமான முறைகளை இந்த மந்திரி பதவி ஒரளவு மாற்றியது. அவருடைய தொழில் நிறுவனங்களைத் தவிர மந்திரி பதவி வேலைகளை வேறு அவர் கவனிக்க வேண்டியிருத்தது. காலையில் மிகமிகத் தாமதமாகவும் சோம்பேறித்தனமாக வும் எட்டரை மணி, ஒன்பதரை மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறவர் கண்டிப்பாக இப்போது முன் கூட்டியே எழுந்திருக்க வேண்டியிருந்தது. காலை ஏழு மிணியிலிருந்தே பலவிதமானவர்கள் பார்க்க வரத்தொடங்கினார்கள். அவருடைய பழக்க வழக்கங்கள் அவரை ‘வைகறைத் துயிலெழ’ விடுவதாயில்லை அவருடைய பங்களா முகப்பில் புதிதாக போலீஸ் ‘செண்ட்ரி’ கூடாரம் ஒன்று முளைத்தது. வராண்டாவில் விடிந்ததும் பத்துப் பேராவது காத்திருக்கும் கூட்டம் தினசரி இருந்தது. கம்பெனி வேலைகளை வேறு பொறுப்பான ஆட்கள் கைக்கு மாற்றினார். தாம் டைரக்டராகவும். பார்ட்னராகவும் இருந்த தொழில் நிறுவனங்களை மனைவி பேருக்கும், தாயின் பேருக்கும், வேறு நம்பிக்கையான் உறவினர்கள் பேருக்குமாக மாற்றினார். பாராட்டுக் கூட்டங்கள் விருந்துகள் ஒய்வதற்கே இரண்டு மாதங்கள் ஆகும் போல் தோன்றியது. மந்திரி பதவியை ஏற்ற தினத்தன்று இரவில் அவருக்கு மிகவும் வேண்டிய தொழிலதிபர்கள் யாவரும் சேர்ந்து ஒரு விருந்து கொடுத்தனர். அந்த விருந்துக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும், தொழிலதிபர்களும் ஆகிய குமர கிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையா செட்டியார், கொச்சின் சாமில்ஸ் குமாரசாமி ஐயர், குபேராபேங் சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் வந்திருந்தார்கள். வழக்கமாகவே நெருங்கிய நண்பர்களாகிய அவர்கள் இப்போதுதான் புதிதாக மதிக்கத் தொடங்கியவர்களைப் போலக் கமலக்கண்ணனை மதிக்கத்தொடங்கினர். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று அது செயற்கையாகத் தோன்றியது. இப்படி மரியாதையையும், விருந்தையும், பாராட்டையும் எதிர்கொள்கிற வேளைகளில் எல்லாம் – எருக்கம்பூ மாலையுடன் காந்திராமன் தன் முன் நின்ற அந்த முதல் அவமானம் ஒரு விநாடி அவர் மனத்தில் நினைவு வரத்தவருவ தில்லை. அவரிடமே நாலைந்து கார்கள் இருந்தாலும், தேசியக் கொடிபறக்கும் கப்பல்போல் பெரிய வெளிநாட்டுக்கார் – போர்டிகோவில் அரசாங்க சின்னமாக வந்து நின்றது அதில் தான் அவர் தினசரி செக்ரடேரியட்டுக்குப் போய் வந்தார். நிறையப் பிரசங்கங்களுக்கும், தலைமை வகிக்கவும் போய் வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததனால் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க்கண்ணனாரின் உதவி அதிகமாகத் தேவைப்பட்டது. எந்தக்கூட்டத்திற்காக யார் வந்து கேட்டாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு ஒரு பொதுப் பிரமுகராக உயர ஆசையிருந்தது அவருக்கு. தம்முடைய பெர்ஸனல் செகரெட்டரியை ஒரு நாள் தனியே அறைக்குள் அழைத்துச் சென்று கூச்சமில்லாமல் கீழ்வரும் அறிவுரைகளைக் கூறினார் கமலக்கண்ணன். ‘எந்தக் கூட்டத்துக்குக் கூப்பிட் வந்தாங்கன்னாலும் ’வால்போஸ்டர்’ போடு வாங்களான்னு தெரிஞ்சுக்குங்க. ‘வால்போஸ்டர் போட வசதி இல்லேன்’னாங்கன்னா ’வால் போஸ்டர் கண்டிப்பாப் போடனும், அப்பத்தான் மத்திரி வர்ரத்துக்கு, ஒரு கெளரவமா இருக்கும்’னு வற்புறுத்திச் சொல்லிப்பிடனும். எந்தக்கூட்டம்னாலும் ஐயா தலைமை தாங்கத்தான் ஒத்துக்குவார்னு சொல்லிப்பாருங்க. இல்லாட்டி முக்கியமான ஏதாவது ஒன்னைச் செய்யற மாதிரி ’ப்ரோகிராம்’ மட்டும் ஒத்துக்குங்க. சும்மா ’பட்டாணிக் கடலை’க் கூட்டம்லாம் வேண்டவே வேண்டாம். நாம இப்ப இதிலே இருந்தாலும் பரம்பரை பரம்பரையா நம்ம இப்ப வழக்கப்படி – பழைய ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தமான ஆட்களும் இங்கே தேடி வருவாங்க. அவங்களையும் முகஞ் சுளிக்காமே திருப்திப்படுத்தி அனுப்பனும்." அந்தர்ங்கக்காரியதரிசி பெருமாள்கோவில் மாடுமாதிரி தலையை ஆட்டிவைத்தார். தினசரி செக்ரடேரியட் போவதுல் பைல் பார்ப்பதும், செகரட்டரி, டெபுடிசெகரட்டரிகளை ஆளுவதும் பெருமையாகத்தான் இருந்தன. அந்தப் பெருமைக்கும், பதவியின் புகழுக்கும் இடையே அவர் அஞ்சி நடுங்க வேண்டிய பலவீனங்களும் இருந்தன. பதவி ஏற்ற மறு மாதமே புதிய பட்ஜெட்டை அவர் தயாரித்தளிக்க வேண்டியிருந்தது. திறப்புவிழா, தொடக்கவுரை, தலைமையுரை, முதலியவற்றுக்காக அலைந்து திரி வதைக் குறைத்துக்கொண்டு பட்ஜெட்டுக்காக அவர்காரிய தரிசிகளுடனும் பொருளாதார ஆலோசகர்களுடனும் நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்த சமயத்தில் – செக்ரட் டேரியட்டில் இருந்து களைப்பாகவும் அலுப்பாகவும் வீடு திரும்பிய மாலை வேளை ஒன்றிலே முற்றிலும் எதிர்பாராத மூலையிலிருந்து ஒரு பயமுறுத்தல் அவரை நெருங்கியது. வரவேற்பு அறையிலே உட்கார்ந்து மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் அவர் வேர்க்க–விறு விறுக்கக் கலைச்செழியன் எங்கிருந்தோ வந்துசேர்ந்தான். அவன் கையில் ஏதோ இரண்டாக மடித்த பத்திரிகை ஒன்றிருந்தது. முகத்தில் பதற்றமும் பரபரப்பும் தெரிந்தன. “என்ன சமாசாரம்? நான் ரொம்ப பிஸி. ‘பட்ஜெட்’ வேலைகள் ஏராளமா இருக்கு…நீ இன்னொரு நாள் வாயேன்…” என்று அவனைத் தட்டிக்கழிக்க முயன்றார் அவர். இப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலே எரிச்சலாக இருந்தது அவருக்கு. அவனோ பதறினான். அவன் குரல் கூசிக் கூசி வந்தது. “தலைபோற காரியம் சார்! இப்பவே கவனிக்காமே விட்டோம்னா ஊர் சிரிச்சிப்பிடும்” என்று கையிலிருந்த பத்திரிகையைக் காண்பித்து ஏதோ கூறினான் அவன். அவரோ கோபமாக இரைந்தார். “அப்பிடி என்ன தலைபோற காரியம்! சொல்லித் தொலையேன்…” “உள்ளே வாங்க சார்! இங்கே வச்சு – இப்படி, இரைஞ்சு பேசற காரியமில்லே –” என்று வரவேற்பு அறையை ஒட்டி அடுத்தாற்போலிருந்த உட்பகுதியைக் காண்பித்து அவரைக் கூப்பிட்டான் அவன். அவருக்கு அவன்மேல் கோபம் அதிகமாகியது. “சும்மா தொந்தரவு பண்ணாதே! உனக்கு இப்ப என் நெலைமை தெரியும். முன்னே மாதிரி நேரமில்லே. பதவி, பொறுப்பு எல்லாம் இருக்கு! ஏதாவது செலவுக்கு வேணும்னா வாங்கிட்டுப் போ…நேரமில்லே”– இப்போது அவனும் தன் பேச்சில் முறுக்கை ஏற்றினான். ஆத்திரமாகவே அவருக்குப் பதில் வந்தது. “சார்! உங்க நன்மைக்காகத்தான் இதை இப்பவே நினைவு படுத்த வந்தேன் வேனுமானால் கவனிச்சி ஏதாவது செய்வோம். இல்லேன்னா அவன் பாடு உங்க பாடு…பேர் நாற வேணாம்னு பார்க்கிறேன் அப்புறம் உங்க இஷ்டம்.” “அவன் பாடுன்னா…எவன் பாடு…?’ “அதுதான் முழுக்க வந்து கேட்க மாட்டேன்கிறீங்களே?” வேண்டா வெறுப்பாக அவனோடு உள்ளே எழுந்து சென்றார் அவர். ‘உண்மை ஊழியன்’ என்ற அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்திலே கட்டம் கட்டிய ஒர் அறிவிப்பைப் பிரித்து அவரிடம் காட்டினான் கலைச்செழியன். எடுத்த எடுப்பிலேயே அது ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதும் ‘பிளாக்–மெயில்’ செய்வதையே தொழிலாகக் கொண்டது என்பதும் கமலக்கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. அப்படிப் புரிந்ததனால் விளைந்த கோபத்தோடும் அருவருப்போடும் அந்தக் கட்டத்திற்குள் இருந்த அறி விப்பை ஏறிட்டுப்பார்த்தார் அவர். மீண்டும்இரண்டாவது முறையாகக் கசப்போடு சென்றது அவருடைய பார்வை. நடிகை மாயாதேவிக்கும் பிரபல தொழிலதிபருக்கும் தொடர்பு சுவையான விவரங்கள் அடுத்த ‘உண்மை ஊழியனில்’ பாருங்கள். என்று அந்தப் பக்கத்தில் கட்டம் கட்டிய இடத்தில் அச்சிடப்பட்டிருந்தது. “காலிப்பயல்கள்! என்னைப் பயமுறுத்திப் பணம் பறிக்கலாம் என்று எண்ணிக் கொண்டார்களா என்ன? இப்போதே மான நஷ்ட வழக்குப்போட வக்கீலைக் கூப் பிடுகிறேன் பார்!” என்று சீறினார் கமலக்கண்ணன். “சார்! பதறாதீங்க…அதெல்லாம் ஒண்ணும் பலிக்காது. இப்பவே அப்படி எல்லாம் மானநஷ்ட வழக்குப் போடமுடியாது.” “ஏன்? அதைப்பத்தி உனக்கென்ன தெரியும்?” “பிரபல தொழிலதிபருக்கும்’னு மட்டும்தானே போட்டிருக்கு? அதை வச்சு நீங்களே எங்கப்பன் குதிருக் குள்ளே இல்லேன்னு எப்படி வழக்குப் போட முடியும்ன்னேன்? இதெல்லாம் காதோடகாது வச்சாப்பிவ கமுக்கமா முடிக்கனும் சார்… வழக்கு – கிழக்குன்னு போய் மாட்டிக்கப்படாது.” “பிரபல தொழிலதிபருக்கும்’னு போட்டிருக்கிறது என்னைக் குறிக்காதில்லே…? பின்னே ஏன் என் கிட்டக் கொண்டாந்து காமிக்கிறே? o “அப்படியில்லே சார், உங்களைத்தான் எழுதப் போறானின்னு எனக்குத் தெரியுது சார்! ஆனாலும் சட்டப்படி இந்த அறிவிப்பை வச்சு ஒண்னும் அவன் மேலே நீங்க கேஸ் போட முடியாதுன்னேன்…” “அதெப்பிடி அவன் ’எவன்’னு ஒரு வார்த்தை சொல்லு..? இப்பவே கமிஷனருக்கு ஃபோன் பண்ணி உள்ளே தள்ளிப்புடறேன்… நீயா என்னைப் பத்தித்தான் அவன் எழுதப் போறான்னு கற்பனை பண்ணிக்கிட்டு வந்தியா? போய் வேற வேலையைப் பாரு”– என்று கோபாமாக இரைந்தார் கமலக்கண்ணன். கலைச்செழியன் அயர்ந்துவிடவில்லை. சிறிது நேரம் மெளனமாக எங்கோ பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, மெல்ல மறுபடி ஆரம்பித்தான்: “சேத்துலே கல்லை விட்டெறிஞ்சா நம்ம முகத்திலே தான் தெறிக்கும் சார்! பதறப்பிடாது. இந்தத் தகவல் தெரிஞ்சதும் நான் நேரே நம்ம ‘தினக்குரல்’ – ஆபீஸுக்குப் போயி பப்ளிஸிடி பிரகாசம் அண்ணன்கிட்டக் கலந்து பேசினேன். அவரு உங்க பேப்பரில் இருக்கறதுனாலே இந்தச் சேதியை உங்ககிட்டத் தானே வந்து சொல்லக் கூசினாரு அதுதான் நானே வந்தேன். இதிலே எனக் கொண்னுமில்லே.. .பார்க்கப்போனா இந்த மாதிரி விசயத்திலே உங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு வேண்டியதில்லே… ஆனா உங்ககிட்டப் பழகிட்ட தோஷம்… மனசு கேக்கல்லே…” – கலைச்செழியனின் இந்த அநுதாபம் தேர்ய்ந்த வார்த்தைகள் கமலக்கண்ணனைச் சிறிதளவு மனம் இளகச் செய்திருக்க வேண்டும். அவர் கடுமையாகப் பதில் கூறுவதை விடுத்துச் சற்றே சிந்தனையிலாழ்ந்தாற் போலிருந்தார். அவர் நிலையை நன்கு புரிந்துகொண்ட கலைச் செழியன் மீண்டும் தொடர்ந்தான்: “என்ன காரணமோ தெரியலிங்க.. ஐயாகிட்ட முதமுதலாப்பழகினதிலிருந்து எனக்கு மனசு ஒட்டுதலாயிடிச்சு. ஐயா பேருக்கு ஒரு களங்கம் வர்ரதை என்னாலே சகிச்சுக்க முடியலிங்க அதுவும் இப்ப இருக்கிற ஒரு நெலையிலே இப்படி அவதுாறே வரக்கூடாதுங்க…களையெடுக்கற மாதிரி முதல்லேயே இதுகளைத் தீர்த்துக் கட்டிப்புடனும்…” “இப்ப என்னதான் செய்யனுங்கிறே நீ?” “ஏதாவது கொடுத்து ஒழியுங்க… இவனுகளுக்கு இது ஒரு பிழைப்பு…” “யாரிட்டக் கொடுக்கணும்? எவ்வளவு கொடுக்கனும்…” “ஏதோ…கொடுங்க…உங்களுக்குத் தெரியாதுங்களா?” “அந்த ‘உண்மைஊழியனை’ இங்கே தான் கூட்டிக்கிட்டு வாயேன். நைசா உக்கார வச்சுப் பேசிக்கிட்டே போலீசுக்கு ஃபோன் பண்ணலாம்…”– என்றார் கமலக்கண்ணன். “சே! சே! அதுகூடாது! அவன் எமகாதகன். கூப்பிட்டால் வரமாட்டான். நமக்குத்தான் வீண்வம்பு. எதையாவது தாறுமாறா எழுதி நாலு பேர் அதை வாங்கியும் பார்த்தாச்சுன்னா அப்புறம் தகவல் காட்டுத் தீப்போலப் பரவி வச்சுடுங்க…” “இந்தக் காலிப்பயலோட பேப்பர் ஆபீஸ் எங்கே தான் இருக்கு…?” “இதுக்கெல்லாம் ஆபீஸ் ஏதுங்க? எங்கேயாவது கோடம்பாக்கத்திலே ஒரு அட்ரஸ் போட்டு இருக்கும்; அங்கே போனா ஆள் இருக்க மாட்டாங்க.. .உங்களைப் போலொத்தவங்க அங்கே தேடிட்டுப் போறதும் நல்லா இருக்காது…” “பின்னே என்னதான் செய்யிறது?” “நான் பார்த்து முடிக்கிறேங்க…” “எதை?” “ஆக வேண்டியதை…” “என்ன ஆகவேண்டியதை…?” “ஒண்னும் வராமச் செய்திடறேன். எதைக் கொடுக்கனுமோ – எங்கிட்டக் கொடுத்தனுப்புங்க… என்னைப் போல இருக்கிறவன் அவமானப்பட்டால் பாதகமில்லை. உங்கபேரு கெடப்பிடாது. அதுதான் எனக்குக் கவலை…” – கமலக்கண்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ’துண்டு விழுகிற பட்ஜெட்டை எந்த மறைமுக வரி அல்லது நேர்முக வரியினால் சரிக்கட்டுவது! மக்களிடமும் பொருளாதார எமன்களிடமும் நல்ல பெயரெடுக்கிற மாதிரி எப்படிப் புதிய பட்ஜெட்டைத் தயாரிப்பது?– என்றெல்லாம் கடந்த சில நாட்களாகக் கவலையிலாழ்ந்திருந்த அவருக்கு இந்திப் புதிய வம்பு திடீரெனப் பெரிய தலை வேதனையாகத் தோன்றியது. “நீங்கள் தொழிலதிபர்! அதனால் பெரும் மூலதனத்தைத் தொழிலில் முடக்கியுள்ள பணக்காரர்களைப் பாதிக்கிற ‘பட்ஜெட்’டாகப் போட்டாலும் உங்களுக்குக்கெட்ட பெயர். பாமர மக்களைப் பாதிக்கிற ’பட்ஜெட்’ போட்டாலோ அவர் பணக்காரர் – தொழிலதிபர்; அதனால் தனக்குச் சாதகமாக ‘பட்ஜெட்’டை போட்டுவிட்டார்" – என்று பத்திரிகைகளும் – மக்களும் பிரசாரம் செய்வார்கள். அதனால் இந்த முதல் பட்ஜெட்டை நீங்கள் மிகக் கவன மாக அமைத்து வெற்றிபெறவேண்டும்" என்று வேண்டிய நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். அது சம்பந்தமான கவலைகளில் அவர் ஆழ்ந்திருந்த போது இந்தப் பாழாய்ப் போன உண்மை ஊழியனின் பிளாக் மெயிலுக்கும் அஞ்ச வேண்டி வந்ததே என்ற வேதனை அவரை வாட்டியது. ’சில சமயங்களில் மனிதனின் பதவிப் பெருமையும், பணபலமும் செல்வாக்கும் அவனுடைய அந்தரங்கமான பேடித்தனத்தை வளர்க்கவே பயன்படுகின்றன’ – என்பதற்கு அவர் அப்போது நிதரிசனமான உதாரணமாயிருந்தார். ‘பணமில்லாதவர்கள் தாங்கள் தைரியமாகவும் நிமிர்ந்து நிற்பவர்களாகவும் – இல்லாமற் போனதற்குத் தங்களிடம் பணமின்மை தான் காரணமோ என்று எண்ணுகிறார்கள், பணமுள்ளவர்களில் சிலரோ அதன் காரணமாகவே நிமிர்ந்து நிற்கவும் – தைரியமாக இருக்கவும் இயலாதவர்களாகத் தவிக்கவேண்டியிருக்கிறது. பணம் – பதவி – செல் வாக்கு எல்லாமே – அவற்றோடு சேர்த்துத்தன்னைப்பிரித்து விடாமல் காக்கும் – பயத்தையும் பேடித்தனமான பாதுகாப்புணர்வையும் தான் மனிதனுக்குள் வளர்க்கின்றன போலும்’ – இப்படி ஏதேதோ எண்ணியபோது – நிர்ப்பயமாக நேருக்குநேர் மேடையேறி நின்று – இப்படிப்பட்ட ஒருவரின் வெற்றியைத் தேசிய விரோத நிகழ்ச்சியாகக் கருதி வெறுக்கிறேன் நான்’ – என்று கூறித் தனக்கு எருக்கம்பூ மாலையணிவித்த காந்திராமனின் நினைவு ஏனோ அப்போது அவருள் எழுந்தது! ‘அந்தக் காந்திராமனை அப்படிப் பேசத் துணியச் செய்த நெஞ்சின் கனல் எது? தன்னை அப்போதும் – இப்போதும் பேசவிடாமல் செய்த நெஞ்சின்பேடித்தனம் எது?’ என்று சிந்தித்து எல்லை காணமுடியாமல் ஓரிரு விநாடிகள் உள்ளேயே குழம்பினார் கமலக்கண்ணன் காந்திராமனுக்குள் எரிகிற சுதந்திர – சுதேசியத் தன்மரியாதைக் கனல் தனக்குள் பணம் – பதவி – செல்வாக்கு எல்லாவற்றாலும் அறிவிக்கப்பட்டு விட்டதோ – என்றெண்ணியபோது அவர் உடல் நடுங்கியது. “என்ன யோசிக்கிறீங்க…? நான் சொல்றபடி கேளுங்க…‘பட்ஜெட்’ சமயத்திலே நாலுபேரு இந்த நாற்றத்தைக் கையிலே வச்சுக்கிட்டு வம்புபேச இடம் கொடுத்துடப்பிடாதுங்க…?” என்று கலைச்செழியன் தன் கையிலிருந்த உண்மை ஊழியனைக் காண்பித்து வற்புறுத்தத் தொடங்கினான். பேசாமல் டிராயரைத் திறந்து எண்ணிப்பார்க்காமலே ஒரு கட்டு நோட்டுக்களை அடுக்காகக் கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன். அப்படிக் கொடுக்கும்போது தனது கை இப்படிப் பலவீனங்களுக்காகக் கொடுத்துக் கொடுத்து மேலும் பலவீனத்தை அடைவதுபோல் ஒருணர்வு அவரை உள்ளே அரித்தது. கிழிந்த மேல்துண்டு தவிர வேறு ஆஸ்தி இல்லாத அந்தக் கதர்ச்சட்டைக் காந்திராமனை இப்படி யாரும் மிரட்ட முடியாதென்று நினைத்தபோது சமூகத்தின் அந்தரங்கமான பலங்களைத் தான் எந்த நிலையில் இழந்திருக்கிறோம் என்பதையும் – அந்தப் பாமரத் தொண்டன் எந்த எல்லையில் எந்த அடிப்படையில் பலப்பட்டிருக்கிறான் என்பதையும் மனத்திற்குள் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தொடங்கினார் அவர். கமலக்கண்ணன் எண்ணாமல் கொடுத்திருந்தாலும் கலைச்செழியன் பணத்தை அங்கேயே எண்ணத்தொடங்கி விட்டான். “ஏன்? எண்ணி என்ன ஆகப்போகுது? பேசாம எடுத்துக்கிட்டுப் போய் அழு” – என்று கமலக்கண்ணன் கூறியதையும் கேட்காமல் பொறுமையாக எண்ணி முடித்த அவன், “தவுலண்ட் இருக்குதுங்க” – என்று தயங்கினான். “இருக்குதில்ல…? கொண்டுபோய்க் கொடுத்துக் காரியத்தை முடி” – என்றார் அவர். “பத்தாதுங்களே! அவன் பெரிய விடாக்கண்டனாச்சே…ஒரு டூ தவுலண்ட் கூட இல்லீன்னா – சரிப்படாதே…”– என்று கலைச்செழியன் பேச்சை இழுத்தான். – ‘உண்மையில் பார் பெரிய விடாக்கண்டன்’ என்று தெரியாமல் மலைத்தார் கமலக்கண்ணன் கலைச்செழியன் விடாக்கண்டனா அல்லது அவனாலே விடாக் கண்டனாகச் சித்திரிக்கப்படுகிற அந்த யாரோ ஒருவன் விடாக்கண்டனா என்று புரியாமல் அதை அவனிடமே துணிந்து கேட்டுவிடும் அளவுக்கு மன பலமும் இழந்து கையாலாகாத வெறுங்கோபத்தோடு இன்னும் ஒரு கட்டு நோட்டுக்களை எடுத்து மேஜையில் எறிந்தார் கமலக்கண்ணன். “கோபப்பட்றீங்களே? பார்க்கப்போனா உங்க பெருமையைக் காப்பாத்தறதைத் தவிர இதுலே எனக்கு வேறெந்த லாபமும் கிடையாதுங்க” என்று அந்த நோட்டுக் கற்றையையும் எடுத்து எண்ணத் தொடங்கினான். கலைச்செழியன். அவன் அதையும் எண்ணத் தொடங்கிய போது இயல்பாகலே அவருடைய பயம் அதிகரித்தது. எங்கே மேலும் கேட்கப் போகிறானோ என்று அவர் உள்ளம் நடுங்கியது. நல்லவேளையாக அவன் அவரை அப்படியெல்லாம் மேலும் துன்புறுத்தாமல் விட்டுவிட்டான். “நான் இதை வச்சு சரிக்கட்டிடறேனுங்க” – என்று. கூறிவிட்டுப் புறப்பட்டான். போவதற்கு முன், “இந்தாங்க… எதுக்கும் இது இங்கே இருக்கட்டும்”– என்று கையோடு மடித்துக் கசக்கிக் கொண்டு வந்திருந்த உண்மை ஊழியனை அவரிடம் நீட்டினான். அதை வாங்கிக் கோபத்தோடு ஆத்திரம் தீர அவன் முன்னாலேயே கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட்டார் அவர். அவன் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு விடைபெற்றான். அவனுடைய தலை மறைந்ததும் மறுபடி குப்பைத் தொட்டியிலிருந்து அந்த ‘உண்மை ஊழியனை’– எடுத்துக் கிழிசல்களை ஒட்ட வைத்து ஏதோ ஒர் ஆவலில் படிக்க முயன்றார் கமலக்கண்ணன். அப்போது அறைவாயிலில் மனைவியின் தலை தெரிந்தது – மறுபடியும் அதைக்கசக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார். “என்னங்க…இது? ஏன் என்னவோ போலிருக்கீங்க…” “ஒண்னுமில்லே! ‘புது பட்ஜெட்’ வரணும்– அதுதான் ஒரே யோசனை”… “சாப்பிட்டுட்டு யோசிக்கலாம்…வாங்க…டைனிங் டேபிளிலே ‘குழந்தைகளும்’ காத்துக்கிட்டிருக்காங்க…” அவர் சாப்பிடப் போனார். சாப்பாட்டுக்குப் பின்னும் இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தபடி இருந்தார் அவர். கலைச்செழியன் எப்போதோ தான் மாயாவுக்கு நெக்லேஸ் கொடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகக்காட்டி மிரட்டுவது போல் ஒரு காட்சியைத் தாமாகக் கற்பித்துக் கொண்டு அஞ்சினார் கமலக்கண்ணன். இரவுமுழுவதும் பலவீனங்களால் வந்த பயமே அவரை வாட்டியது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர முடிந்தது. மறுநாள் காலை யில் கடம்பவனேச்வரர் கோயில் திருப்பணியின் செயற்குழுக் கூட்டத்தைத் தம் வீட்டிலேயே கூட்ட ஏற்பாடு செய்திருந்தார் அவர். எல்லாரும் வந்து ஹாலில் கூடிவிட்டார்கள். அவரோ ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருந்தார். அதுவரை எல்லாரும் காத்திருந்தார்கள். அப்படிக் காத்திருந்தவர்களில் பழைய அறநிலைய மந்திரி விருத்தகிரீசுவரனும் ஒருவர். அப்படி அவர்களைக்காக்கவைத்ததற் காக ஒருமுறை கருதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரானாலும் – உள்ளுர மந்திரி விருத்தகிரீசுவரனைக் காக்கவைத்ததில் பழிதீர்த்த மகிழ்ச்சி இருந்தது அவருக்கு. ஒன்பதரை யிலிருந்து பத்துவரை கடம்பவனேசுவரர் திருப்பணிக்கூட்டம் நடந்தது. பத்துமணிக்கு அவசர அவசரமாக ஒருவாய் சாப்பிட்டுவிட்டு அவர் செகரெட்டேரியட் புறப்பட்டார். பதினொரு மணிக்கு – மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழு ஒன்றிற்குப் பேட்டியளிக்க வேண்டுமென்ற செய்தியைக் காரில் போகும்போதே நினைவுபடுத்தினார் காரியதரிசி, முதல் நாள் மாலைச் சம்பவம் உள்ளூர உண்டாக்கியிருந்த பலவீனத்தாலும் மன நலிவினாலும் – யாரைச் சந்தித்தாலும் எவரோடு பேசினாலும் – ஒரு தாழ்வு மனப்பான்மை அவருள் நிலவியது. எல்லாரும் தன்னைத் தாழ்வாக நோக்கி அந்தரங்கமாக எள்ளி நகை பாடிக்கொண்டே புறக்கோலமாக மரியாதையுடன் வணங் கினாற்போல் பாவிப்பதாகத் தோன்றியது அவருக்கு. பன்னிரண்டரை மணிக்குத் துாதுக்குழுவினர் ‘தொழில் தவணைக்கடன் உதவி’ – பற்றிய தங்கள் முறையீடுகளை எல்லாம் அமைச்சரிடம் கூறிவிட்டு வெளியேறினர். ‘லஞ்ச்’ ஒய்வு என்ற பேரில் அரைமணி கழித்துக் கொள்ள முடிந்தது. ஒன்றேகால் மணிக்குப் பத்துப் பதினைந்து பத்திரிகை நிருபர்கள் பார்க்க வரப்போவதாகவும் – அங்கேயே ஒரு சிறிய பிரஸ் கான்பரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் காரியதரிசி வந்து தகவல் தெரிவித்தார். முன்பே செய்துவிட்ட ஏற்பாட்டை மறுத்துப் பத்திரிகைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாதென்ற ஒரே காரணத்திற்காக மனம் தளர்ந்திருந்தும் அவர் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று. நிருபர்கள் ‘பட்ஜெட் ஹேஷ்யமாக’–ஏதாவது வெளியிட அவர் வாயைக் கிளறிப் பார்த்தார்கள். ஒரு திருபர் அவரையும் வம்புக்கே இழுத்தார். “மதுவிலக்கில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க முடியாது…” “ஏன் முடியாது?’’ “அதற்கில்லை…நீங்கள் நேஷனல் மூவ்மெண்ட்பீரியடில் இதையெல்லாம் கேலி செய்து நண்பர்களிடம் பேசி யிருக்கிறீர்கள். ஆகவே ஒருவேளை மதுவிலக்கை எடுப்பதன் மூலம் கிடைக்கிற லாபத்தை பட்ஜெட்டுக்குப் பயன்படுத்தக் கூடுமல்லவா? மன்னிக்கவும்… உங்களிடம் அப்படி எதிர் பார்க்கிறார்கள் என்பது என் பணிவான அபிப்பிராயம்” “ஹவ் டு யூ லே லைக் தட்” – என்று அந்த நிருபரிடம் கோபமாக இரைந்தார் கமலக்கண்ணன். – . ‘தான் குடிப்பழக்கமுள்ளவன்’ – என்று அந்தக் கேள்வியின் மூலம் அந்த திருபர் தனக்குச் சுட்டிக்காட்டுவது போல் உணர்ந்தார் அவர். அதனால்தான் அவருக்குக் கோபம் வந்தது. அப்போதிருந்த அவருடைய மனநிலையில் தன்னைக்கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் தன்னை மட்டம் தட்டுவதற்கே என்ற உணர்வு அவருள் ஏற்பட்டிருந்தது. டோண்ட் கிவ் மச் இம்பார்ட் டன்ஸ் தட் க்வஸ்டின் எலோன், தட் இஸ் ஆன் ஆர்டினரி க்வஸ்டின் வித் ஆர்டினரி பேக்ரவுண்ட்ஸ்…" என்று அந்த நிருபர் எவ்வளவோ வற் புறுத்தியும் அது குத்தலான கேள்வியாகவே அவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு வரும் வேண்டுமென்றே சதிசெய்து காந்திராமன் செய்தது போலவே தன்னை ஒரு போலித் தேசியவாதியாக நிரூபிக்க முயன்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் அவருக்குப்பிரமைதட்டியது. ஒரு பலவீனம் இரகசியமாகப் பயமுறுத்தப்பட்ட தன். காரணமாக எல்லாப் பலவீனங்களையும் எல்லாருமே நினைவுவைத்துக்கொண்டு தன்னைக் குத்தலாகவும், கபடமாகவும் கேள்விகள் கேட்பதுபோல் அவருக்குதோன்றியது. – ஒரு வழியாக பிரஸ் கான்பரன்ஸ் முடிந்தது. மூன்று மணிக்குத் தற்செயலாக ஒரு இன்விடேஷனை மார்க்செய்து டேபிளில் கொண்டுவந்து வைத்தார் காரியதரிசி. ’மாயர்தேவியின் குறவஞ்சி நாட்டிய அரங்கேற்றம்… என்ற அந்த அழைப்பிதழைப் பார்த்ததும் சீறி விழுந்தார் அவர். “பட்ஜெட் பிரிபரேஷன் வேலை உயிர் போகுது. இதையேன் என் டேபிளில் கொண்டாந்து வைக்கிறே? நாட்டியமும் – நாடகமும் பார்க்க நேரமேது எனக்கு? துர எறி” என்று அந்த இன்விடேஷனைத் தூக்கிக் கிழித்தெறிந்தார் கமலக்கண்ணன். தன்னை ஒரு ஸீரியஸ்ஸான பதவிப் பொறுப்புள்ள மந்திரியாக எடுத்துக் கொள்ளாமல் எல்லா ருமே வெறும் உல்லாசப் பேர்வழியாக பழைய கமலக்கண்ணனாகவே – நினைக்கிறார்க ளோ? என்ற சந்தேகமும் – இந்தச் சந்தேகத்தின் விளைவான ஆத்திரமும் அவருள் புகுந்து பேயாய் ஆட்டின. காரியதரிசி அவருடைய கோபத்தைக் கண்டு மிரண்டு போனார் . – மூன்றரை மணிக்கு பட்ஜெட் விஷயமாக ஒரு உயர் தர அதிகாரி – பழைய ஸிவில் சர்வீஸில் நீண்ட நாள் ஆபீஸராக இருந்து பழக்கப்பட்டவர் – கமலக்கண்ணனைப். பார்க்க வந்தபோது “சார் மினிஸ்டர் கோபமாக இருக்கிறார். தயவு செய்து அப்புறமா வாருங்களேன்” – என்று காரியதரிசி அவரைக் கெஞ்சினான். அவரோ கமலக்கண்ணனை விடக்கோபக்காரராக இருந்தார். “நான் ஒண்னும் எடுபிடி வேலைக்காரனில்லே. கோபதாபம் பார்த்துக் கூழைக் கும்பிடு போட்டு பக்ஷிஸ் கேக்க இங்கே வரலே. பேப்பர்கள் டிஸ்போஸ் ஆகாமே கிடக்குது கேட்கணும். எனக்கென்ன? நான் போறேன். எலெக்ஷன்லே யார் யாரோ மந்திரியா வந்துடறாங்க…கிரகசாரம்…”– என்று சாடிவிட்டுப் போனார். . உடனே அவரைக் காலில் விழாக் குறையாக உபசரித்து உட்கார வைத்துவிட்டு – உள்ளே மந்திரியைப் பார்த்து அவர் வரவைக் கூறுவதற்கு விரைந்தார் காரியதரிசி. மந்திரியோ உள்ளே டேபிளில் தலை சாய்த்துக் கவலையில் ஆழ்ந்திருந்தார். காரியதரிசி என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கினார். பகுதி -12 கடைசியில் தன்மேல் கோபப்பட்டுச்சீறி விழுந்தாலும் – விழட்டும் என்று – மேஜைமேல் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மந்திரி கமலக்கண்ணனை எழுப்பி – வெளியே ஐ.சி.எஸ். அதிகாரி வந்து காத்திருப்பதைக் கூறினார் காரியதரிசி. அவரை வரச் சொல்லுமாறு கூறிவிட்டுக் கமலக்கண்ணன் அவசர அவசரமாக முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு ஐ.சி.எஸ். அதிகாரியை வரவேற்பதற்குத் தயாரானார். மனநிலை வேறு தெளிவாக இல்லை. ‘உண்மை ஊழியனின்’ பயமுறுத்தல், அதை வைத்துக் கலைச்செழியன் தன்னை பிளாக் மெயில் செய்து பணம் பறித்தது, எல்லாம் சேர்ந்து மனத்தைக் குழப்பியிருந்தன. அதிகாரியிடம் முறையைக் கழிப்பது போல் ஒரு மன்னிப்புக்கேட்டு விட்டு வரவேற்றுப் பேசினார். அதிகாரியும் தம்முடைய மன எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல், .ஏதோ பேச வேண்டியதைப் பேசி விட்டுப் போய்ச் சேர்ந்தார். சிறிதுநேரத்திற்கு யாரையும் உள்ளே அனுப்பவேண்டாமென்று காரியதரிசியிடம் கூறிவிட்டு மீண்டும் சிந்தனையிலாழ்ந்தார் கமலக்கண்ணன். மந்திரியாக வந்ததிலிருந்து தமது தொழில் நிறுவனங்களின் நிலை என்ன என்பதை அன்றன்று அறிய முடியாமலிருப்பதை எண்ணியும் அவர் கவலைப்பட்டார். தம்முடைய அன்றாட வாழ்க்கையின் உல்லாசங்கள் பலவற்றை இந்தப் பதவி காரணமாகத்தாம் இழக்க நேர்ந்திருப்பதையும் அவர் சிந்தித்தார். நண்பர்கள் சந்திப்பு, கிளப்பில் சீட்டாட்டம், ரோடரி மீட்டிங், டென்னிஸ் விளையாட்டு, வீக் எண்ட் பயணம், எல்லாம் போயிருப்பதையும் உணர முடிந்தது. ஆனாலும் தங்களுக்காகத் தாங்களே நியமித்துக்கொண்ட தெய்வங்களை வழி படுவது போல் மக்கள் மந்திரிகளை வழிபடுவதினால் கிடைக்கிற பதவியின் சுகம் நின்னவு வந்து ஆறுதலளித்தது. ஜனநாயகத்தில் வாக்களிக்கின்றவன் சுதந்திரத்தை ஒரே ஒரு நாளிலும், வாக்களிக்கப்பட்டவன் பதவிக்காலம் முடிகிற வரை பல நாட்களும் அடைய முடியும் என்பது ஞாபகம் வந்தது. அந்த நினைவு இதமாக இருந்தது. டெலிபோன் மணி அடித்தது. கமலக்கண்ணன் தமது சிந்தனை கலைந்து டெலிபோனை எடுத்தார். முதலமைச்சர் அவருடைய அறையிலிருந்து டெலிபோனில் பேசினார். “டெல்லி மந்திரி ஒருத்தர் வருகிறார். நம்ம அரசாங்க சார்பிலே நீங்கதான் ஏர்ப்போர்ட்டிலே போய் ரெஸீவ் பண்ணனும்”… “ஒ எஸ்… அப்படியே செய்யறேன் சார் …” “அது மட்டுமில்லே! ‘பிளானிங்’ அது – இது எல்லாம் வர்ரவரோட கையிலேதான் இருக்கு. ராஜ்பவனுக்கோ சென்ட்ரல் கெஸ்ட் ஹவுஸ்குக்கோ எங்கே போனாலும், அவர் கூடவே போய்க் க்னிவாகப் பேசி நம்ம ஸ்டேடுக்கு ஆகவேண்டிய நல்ல காரியங்களை மெல்ல அவர் மனசிலே பதிய வச்சுடனும்…சிக்கிரம் புறப்படுங்க…இன்னிக்கு டில்லி பிளேன் லேட்…ஆனாலும் அரைமணி முன்னாலே ஏர்ப்போர்ட் போயிடறது நல்லது.” “நான் பார்த்துக் கவனிச்சுக்கிறேன் சார்!” “அப்படியே நாளை – நாளன்னிக்கு உங்க பிஸினஸ் பீப்பிள்ட்ட எல்லாம் சொல்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ், எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன்ஸ், எல்லாம் ஒரொரு மீட்டிங் போட்டு அந்த மந்திரியைப் பேசவச்சாக் கூட நல்லது… எல்லாம் கவனிச்சுச் செய்யுங்க.. நான்… இதோ … இப்பவே முதல் டிரெயின்ல மதுரை புறப்பட்டுக்கிட் டிருக்கேன்…” “நீங்க போயிட்டு வாங்க சார்! நான் கவனிச்சுக்கிறேன்…” என்றார் கமலக்கண்ணன். – உடனே காரியதரிசியைக் கூப்பிட்டு, “நீ அவசரமாப் பூக்கடைக்குப் போயி ஜீப்பிலே மாலை வாங்கிட்டு ஏர்ட் போர்ட்டுக்கு வா!… நான் இப்பவே புறப்படறேன்.. நேர மாக்கிடாதே … பிளேன் வந்துடும் … ஜல்தி’ என்று விரட்டி விட்டுப் புறப்பட்டார் கமலக்கண்ணன், இடைவழியில் வீட்டில் முகம் கழுவி உடைமாற்றிக்கொள்ள ஐந்து நிமிடங்கள் ஆயின. விமான நிலையத்திற்குக் கால்மணி முன்னாலேயே போய்விட்டார் அவர். ஏற்கெனவே அங்கே வழக்கமாக இம்மாதிரி வரவேற் புக்களுக்கு வரும் நகர் மேயர்,ஷெரீப் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத் தலைமைக் காரியதரிசி, போலீஸ் அதிகாரிகள் இரண்டு மூன்று எம். எல். ஏக்கள் எல்லோரும் வந்திருந்தனர். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் ஒரு பக்கம் அலட்சியமாகவும், உல்லாசமாகப் பேசிச் சிரித்தபடியும் காத்திருந் தது. ஏர்போர்ட் லவுன்ச்சில் இருந்த பிரமுகர்கள் கமலக் கண்ணனைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றனர். கமலக்கண்ணனும் அவர்களிடையே சென்று அமர்ந்தார். “சீஃப் மினிஸ்டர் முதல் டிரெயின்லே மதுரை போறார். நீங்க போய் ரெஸிவ் பண்ணுங்கன்னார். அதான் இப்படி அவசரமா வரவேண்டியதாச்சு. வர வர டெல்லி பிளேன்… மணிக்கணக்கா நாட்கணக்கா லேட்டாகுது போங்க…’ என்று சம்பிரதாயமாகவும், பெரிய வியாபாரிக்குரிய அவசரத்துடனும், அலட்சியத்துடனும் பேச்சை ஆரம்பித்தார் கமலக்கண்ணன். “உலகத்திலே ஒவ்வொரு நாட்டுக்காரன் எதெதுலேயோ வளர்ச்சியடையறான்னா நாம லேட்டாறதுலேயாவது வளர்ச்சியடையப்பிடாதா; என்ன?” – என்று அசெம்பிளிக்கு வெளியேவந்தும் மறக்காமல் எதிர்க்கட்சிக்கேயுரிய குத்தல் மனப்பான்மையோடு கமலக்கண்ணனிடம் ஜோக் செய்தார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர். – டில்லி விமானம் லாண்ட் ஆகி ரன் – வேயில் – சீறிப் பாய்ந்து வந்து நின்றது. கமலக்கண்ணன் மலையோடு விமானத்தை நெருங்கினார். பிர்முகர்களும் பின்தொடர்ந் தனர். மாலையிட்டு அறிமுகங்கள் முடிந்தபின், விமான நிலைய வி.ஐ.பி. ல்வுன்ச்சில் பத்திரிகை நிருபர்கள் டில்லி மந்திரியை வளைத்துக் கொண்டனர். அவர்களுடைய பிரஸ் கான்பரன்ஸ் முடிந்ததும்– தம்காரைப் பின்தொடருமாறு கூறிவிட்டு டில்லிமந்திரியுடன் ராஜ்பவன் சென்றார் கமலக்கண்ணன். சேதுச்முத்திரத் திட்டம், உருக்காலைத்திட்டம் பற்றி எல்லாம் டில்லி மந்திரி ஏதாவது பேசினால் பதிலுக்குக் கூறுவதற்குப் புள்ளிவிவரங்களை எல்லாம் அன்று சிரமப்பட்டுச் சிந்தித்து வைத்துக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். எந்த விநாடியிலும் டில்லி மந்திரி சர்தார் ரமேஷ்சிங்ஜி அவற் றைப்பற்றித் தன்னிடம் பேசத்தொடங்கலாம் என்ற பயம் காரில் போகும்போதே கமலக்கண்ணன் மனத்தில் இருந்தது. ஆனால் டில்லி மந்திரி ரமேஷ்சிங் ஒரே ஒரு தடவை தான் கமலக்கண்ணனுடன் ராஜ்பவன் போவதற்குள் பேசினார். “மிஸ்டர் கமலக்கண்ணன்! பிஃபோர் லீவிங் மெட்ராஸ் ஐ வுட்லைக் டூ ஸீ அட்லீஸ்ட் ஒன் பரத்நாட்யம் ஃபெர்பா மன்ஸ் ஹியர்… கேன் யூ அரேன்ஜ் ஃபார் மீ…” என்று மத்திய மந்திரி பரத நாட்டியம் பார்க்க ஆசை தெரிவித்த போது கமலக்கண்ணன் உருக்காலை, துறைமுகம் பற்றிய புள்ளி விவரங்களை அவசர அவசரமாக மறந்து– பரத நாட்டிய நாரீமணிகளை ஏற்பாடு செய்வதுபற்றி நினைக்கத் தொடங்கினார். “யெஸ்! ஐ கேன் அரேன்ஜ்…” – என்று உடனே இணங்கியது மன்றி உருக்காலை, சேது சமுத்திரம் – போன்ற சிரம சாத்தியமான சிந்தனைகளை மறக்க உதவி செய்ததற்காக மத்திய மந்திரிக்கு மனப்பூர்வமாக உள்ளே நன்றியும் செலுத்தினார் கமலக்கண்ணன். – ராஜ்பவனில் டெல்லி மந்திரி கவர்னரோடு டீ அருந்தி விட்டுப் பேசிக்கொண்டிருக்கும் போதே – கமலக்கண்ணன் டெலிபோனில் ஃபிலிம் எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன் காரியதரிசியைக் கூப்பிட்டு, “டெல்லி மந்திரி ரமேஷ் சிங் இன்னும் நாலு நாள் இங்கே தங்கறார். அவர் இங்கே இருக்கறப்ப ஒரு பரதநாட்டியம் பார்க்கனுமாம். ஒரு ஈவினிங் உங்க அசோசியேஷன் சார்பிலே பார்ட்டி ஒண்ணும் கொடுத்து நாட்டியத்துக்கும் ஏற்பாடு பண்ணினா நல்லது. செய்வீங்களா?” – என்றார் கமலக்கண்ணன். “கட்டாயம் செய்யறோம் சார்! இப்படி ஒரு மகத்தான சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளிச்சதுக்காக நாங்க உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம் சார்!” –என்று ஃபோனில் எதிர்ப்புறமிருந்து வெல்லப் பாகாய் உருகினார் பிலிம் வர்த்தக சபைக் காரியதரிசி. “அப்ப நாளன்னிக்குச் சாயங்காலம் வச்சுக்கலாம். ஸிக்ஸ் தர்ட்டி டு ஸெவன் தர்ட்டி. என்கேஜ்மெண்ட் பிக்ஸ்ட்…” என்று முடித்தார் உள்ளூர் மந்திரி கமலக்கண்ணன். எதிர்ப்புறம் பிலிம் வர்த்தக சபைக் காரியதரிசி ஆயிரம் நன்றிகளை அவசர அவசரமாகத் தெரிவித்து விட்டு ஃபோனை வைத்தார். டெல்லி மந்திரி ராஜ்பவனிலிருந்து கெஸ்ட் ஹவுஸுக் குக் காரில் வரும்போது உடன் வந்த கமலக்கண்ணன் ‘நாட்டியத்துக்கு ஏற்பாடு செய்தாயிற்று’ என்பதை அவரிடம் தெரிவித்தார். அவரும் அதற்காக மகிழ்ந்து உடனே கமலக்கண்ணனுக்கு நன்றி தெரிவித்தார். – இரவு டின்னருக்கும் புகழ்பெற்ற தென்னிந்திய இட்லி சாம்பார் இரண்டும் சூடாக இருந்தால் நல்லது என்று ரமேஷ்சிங் அபிப்பிராயப்படவே. நகரத்திலேயே இட்லி தயாரிப்பதில் பெயர் பெற்ற ஹோட்டல் ஒன்றிற்குத் தகவல் சொல்லி ஜீப்பில் ஆளனுப்பினார் கமலக்கண்ணன், இட்லி சாம்பார் வந்தது. டெல்லி மந்திரி முன்றே மூன்று இட்லிகளை ஆறு பிளேட் சாம்பாரில் கரைத்துக் குடித்தார். சாம்பாரை மட்டுமே அவர் அதிகம் சுவைப்பதாகத் தெரிந்தது. சாம்பாருக்குத் தொட்டுக்கொள்ளவே இட்லியை அவர் பயன்படுத்தினார். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த டில்லி மந்திரியை ஒருநாள் பகல் தன் வீட்டில் லஞ்சிற்கு அழைத்து …உள்ளுர் இண்டஸ்டிரியலிஸ்ட்டுகளையும், பாங்கர்களையும், மந்திரிகளையும் கூப்பிட்டு ஒரு தடபுடல் செய்தால் என்ன?…’ என்று எண்ணினார். உடனே ரமேஷ்சிங்கிடம் தன் ஆசையை மெல்ல வெளியிட்டார் கமலக்கண்ணன். “ஒ எஸ் வித் பிளஷர் – என்று புன்னகையோடு இணங்கினார் டெல்லி மந்திரி. உடனே மனைவிக்கு ஃபோன் செய்து சமையல் ஏற்பாடுகள் – மெனு பற்றி விவரித்தார் காரியதரிசிக்கு…அழைப்பு அனுப்பவேண்டிய ஆட்கள் பற்றி உத்தரவுகள் பிறப்பித்தார் நண்பர்களுக்கும் அட்டகாசமாக ஃபோன் செய்தார். “யாரு–குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் நாயுடு காருவா? நீங்க இல்லாம நம்ம வீட்டிலே எந்த விருந்தும் நடக்காது. நடக் கவும் கூடாது. நாளை மறுநாள் – சென்ட்ரல் மினிஸ்டருக்கு ஒரு லன்ச் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்! பெரிசா ஒண்ணுமில்லே. எல்லா லீடிங் இன்டஸ்டிரியலிஸ்டா மட்டுமே கூப்பிட்டிருக்கேன். மந்திரியையும் பார்த்துப் பேசினாப்பிலே இருக்கும் கட்டாயம் வந்திடுங்க” என்கிற பாணியில், அழைப்புக்களை அடுத்தடுத்து விடுத்தார். அரைமணிநேரத்திற்குள் நகரின் முக்கியஸ்தர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஃபோன் செய்து தெரிவித்துவிட்டார் கமலக்கண்ணன். – மறுநாள் காலையில் வெளியான ஆங்கில தமிழ் தினசரிகளில் எல்லாம் முதல் நாள் மாலை கமலக்கண்ணன் விமானநிலையத்தில் ரமேஷ்சிங்குக்கு மாலை போட்டு வர வேற்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. வீட்டிலிருந்தே கெஸ்ட் ஹவுஸ் ஆட்களுக்கு ஃபோன் செய்து ரமேஷ்சிங் எழுந்திருந்ததும் பத்திரிகைகளை அவருக்கு அனுப்பு மாறும்…‘தினக்குரல்’ தமிழ் பத்திரிகையைக் காட்டி, “இதை எங்கள் ஸ்டேட் மந்திரி கமலக்கண்ணன் ஆதரவுடன் நடத்துகிறார்கள் – என்பதையும் தெரிவிக்குமாறும் கூறினார் கமலக்கண்ணன். – அன்றுமாலை…அதாவது டெல்லி மந்திரி வந்த இரண்டாவது நாள் மாலை…கட்சி அலுவலகத்திலே அவருக்கு ஒரு கூட்டம் இருந்தது. அத்தக் கூட்டத்திற்குப் போனால் மறுபடி காந்திராமனைச் சந்திக்க வேண்டி நேருமோ என்று கமலக்கண்ணன் தயங்கினார். ஆனால் போகாமலும் இருக்கமுடியாதென்று தோன்றியது. வந்ததிலிருந்து. கூடவே இருந்துவிட்டுக் கட்சிக்கூட்டத்துக்கு மட்டும் போக வில்லை என்றால் அதை யாராவது கவனித்து வம்பு பேசுவார்கள் என்றாலும் காத்திராமனின் முகம், எருக்கம் பூ மாலை, எல்லாம் நினைவு வந்து அந்த இடத்திற்குப் போவதற்கே பயத்தையும், தயக்கத்தையும் உண்டாக்கின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து தனியே. போகாமல் கெஸ்ட்ஹவுஸிலிருந்து மந்திரியுடனேயே புறப்பட்டு விட்டார். கட்சி அலுவலகத்தில் கூட்டம் அமைதியாகவே நடந்தது. ரமேஷ்சிங்கிற்கு நன்றாக ஆங்கிலம் தெரிந் திருந்தும் பிடிவாதமாக ‘இந்தியில்தான் பேசுவேன்’ என்று அங்கே இந்தியில் பேசினார். அந்தப் பேச்சை அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்கும். அங்கு , வந்திருந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மொத்தத்தில் இரண்டொருவருக்கே இந்தி தெரியும். எனவே பேச்சும் கூட்டத்தில் அதற்கிருந்த வரவேற்பும் மந்தமாகவே இருந்தன. டில்லி மந்திரியின் இந்திப் பேச்சையாரோ ஒரு நரைத்தலை மனிதர் தமிழிலே மொழிபெயர்த்துக் கூறினார். கூட்டம் மந்தமாக நடந்து முடிந்தது. முன்னால் கமலக்கண்ணன் நினைத்துப் பயந்தபடி காந்திராமன் அந்தக்கூட்டத்திற்கே வரவில்லை. கூட்டம் முடிந்ததும் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த இளந்தலை முறைப் பத்திரிகை நிருபர் ஒருவர் டில்லி மந்திரியை வழிமறித்துப் பேசத் தொடங்கிவிட்டார். “நீங்கள் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இங்கிருந்தவர்களில் பலருக்குப் புரிந்திருக்கும்.” “ஆங்கிலம் விதேசி மொழி! அது இந்த நாட்டில் தொண்ணூற்றெட்டு சதவிகிதம் மக்களுக்குத் தெரியாது…” “அப்படியல்ல! பல ஆண்டுகளாக இந்த நாட்டுமொழிகளில் ஒன்றாக நம்மோடு இணைந்திருக்கிறது ஆங்கிலம், உலக ஒற்றுமைக்கே வழிவகுக்கிறது ஆங்கிலம். மற்ற மொழிகளோ ஒரு மாநில ஒற்றுமைக்கே துணைசெய்வதில்லை. உதாரணமாக உங்களையே எடுத்துக்கொள்ளுவோம். தனிப்பட்ட முறையிலும், சொந்தமாகவும் உங்க ளிடம் யார் பேசினாலும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிறீர்கள். ஆனால் கூட்டங்களில் மட்டும்.வறட்டுப் பிடிவாதத்தோடு இந்தியில் பேசுகிறீர்கள்…” “யூ ஆர் டாக்கிங் டூ மச் கீப் யுவர் லிமிட்ஸ்”… என்று உணர்ச்சிவசப்பட்டு நிருபரை கோபித்துக்கொண்டார் ரமேஷ்சிங். என்ன காரணத்தாலோ அந்த இளம் நிருபர் டெல்லி மந்திரியை மடக்கியதை விரும்பி உள்ளுர மகிழ்ந்தார் கமலக்கண்ணன். டெல்லி மந்திரியின் மொழி வெறி அவருக்கும் பிடிக்க வில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கு வட இந்தியர்கள் தங்கள் மொழி வெறியாலேயே உலை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அருவருப்பாக இருந்தது. அவருக்கு. ஆனால் வெளிப்படையாக அப்படிச் சொல்லித் தமக்குப் பதவி கொடுத்திருக்கும் கட்சியைப் பகைத்துக் கொள்ளவும் கமலக்கண்ணன் தயாராயில்லை. . . டிெல்லி மந்திரியிடம் தனியே பரஸ்பரம் குடும்ப செளக்கியங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கமலக்கண்ணனிடம் கூறினார்:– “எனக்கு இரண்டு பையன்கள்! ஒருத்தன் இங்கிலாந்துலேயும்; இன்னொருத்தன் அமெரிக்காவிலே மிக்சிகன் யூனிவர்சிடியிலும் படிக்கிறார்கள். யூ நோ… இண்டியன் எஜூகேஷன் ஸ்டாண்டர்ட் இஸ் வெரி வெரி புவர்…” தன் குழந்தைகளைக் கவனமாக வெளி நாட்டில் ஆங்கிலச் சூழ்நிலையில் படிக்க வைக்கும். இதே மந்திரி ‘பாமர இந்தியர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன’ என்ற மனோபாவத்தோடு இந்தி வெறியுடனிருப்பதை உணர்த்தார் கமலக்கண்ணன். ஒரு கோமாளி போல் அபிப்பிராயங்களை உதிர்க்கும் அந்த டெல்லி மந்திரி – திறமை வாய்ந்த தென்னிந்தியப் பத்திரிகை நிருபர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதைக் காண வேடிக்கையாயிருந்தது கமலக்கண்ணனுக்கு. மறுநாள் பகலில் கமலக்கண்ணனின் பங்களாவில் ஒரு நவீன பஃபே முறை லஞ்சுக்கு ஏற்பாடாகியிருந்தது. மந்திரி ரமேஷ்சிங்குக்காகவே சூடாக நாலு பிளேட் சாம்பார் தனியே எடுத்து வைக்கச் சொல்லி சமையற்காரரிடம் கூறி விட்டார் கமலக்கண்ணன். இந்தியின் மேலிருந்த காதலை விட டில்லி மந்திரிக்குத் தென்னிந்திய சாம்பார் மேல் அதிகமான காதல் ஏற்பட்டுக்கொண்டிருப்பதைக் கமலக்கண்ணன் இரண்டு தினங்களாகவே அவரோடு கூட இருந்து கண்டுபிடித்கிருந்தார். நகரத்தின் பெரிய பெரிய தொழிலதிபர்களும் பாங்குகளின் டைரக்டர் போர்டுத் தலைவர்களும் கமலக்கண்ணன் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் கவனமாக மறந்து விடாமல் மந்திரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன் எல்லாருடனும் மந்திரி கலகலப்பாகப் பழகினார். பேர் தான் ‘பஃபே’ என்றாலும் ஏராளமான வகைகள் டேபிளில் இருந்தன. எல்லாம் பிரமாதமான தயாரிப்புக்கள். ‘வெஜிடேரியன் டேபிள்’, நான் வெஜிடேரியன் டேபிள்’… என்று இரண்டும் தனித்தனியே இருந்தன. இரண்டிலும் ஏராளமான பதார்த்த வகைகள் இருந்ததாலும் எல்லாரும் பேசிக்கொண்டும், உலாவிக்கொண்டும் சாப்பிட்டதாலும் விருந்து முடியப்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மாலையில் ஃபிலிம் எண்டர்பிரைசர்ஸ் அசோசியேஷன் கூட்டம் இருந்ததனால் மந்திரி ஓய்வு கொள் வதற்காக கெஸ்ட் ஹவுஸ் போய் விட்டார். கமலக்கண்ணன் மாலை ஆறு மணிக்குக்கஸ்ட்ஹவுஸ் சென்று டில்லி மந்திரியை அழைத்துக் கொண்டு ஃபிலிம் வர்த்தகசபைக் கூட்டத்திற்குப் போவதென்று திட்டமிட்டிருந்தார். ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள் பிரமாதமாகக் கண்ணாடித்தாளில் அழைப்பிதழ்கள் அச்சிட்டு அனுப்பியிருந்தனர். பரத நாட்டியத்துக்குக் கூட மாயாதேவியைத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக அவர்கள் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்களா அல்லது தனக்கு மாயாதேவியை ஏற்பாடு செய்தால் தான் பிடிக்கும் என்று அவர்களாகவே அநுமானித்துக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்களா என்பது கமலக் கண்ணனுக்குத் தெரியவில்லை. ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள். மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. தர்மசங்கடமான நிலைமையில் அவர் இருந்தார். மாயா தேவியைக்கண்டும் காணாமலும் பழகிக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்த நினைப்பில் மண்ணைப்போட்டுவிட்டு அவர் தலைமையிலேயே மத்திய மந்திரிக்கு நடக்கும் ஒரு விருந்தில் மாயாதேவியின் நடனத்தையும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் சேர்த்துப் போட்டுவிட்டதை அவ்வளவாக அவரால் இரசிக்க முடியவில்லை. தனக்கும் மாயா தேவிக்கும் இடையே உள்ள நட்பு நகரப் பிரமுகர்கள் வட்டாரத்தில் ஓரளவு தெரியுமாகையினால் யாராவது இதை வைத்து வம்பு பேசப் போகிறார்களே என்று பயந்தார் அவர். கூட்டங்களில் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பலர் நடுவே மந்திரி என்ற அந்தஸ்தோடு தான் தலை நிமிர்ந்து நிற்கிற வேளைகளில் மாயா எதிர்ப்பட்டுத் தன்னை வணங்கு வதையோ, நெருக்கம் தெரிகிற பாவனையில் புன்னகை பூப்பதையோ அவர் பலமுறை தவிர்க்க முயன்றிருக்கிறார். இப்போதோ இந்த டில்லி மந்திரி ரமேஷ்சிங் விஷயத்தில்– இதுமாதிரி ஆகிவிட்டது. நிகழ்ச்சி நிரல் எல்லாம் அச்சாகியாவருக்கும் அனுப்பப் பட்டுவிட்டதனாலும், பத்திரிகைகளில் வெளிவந்து பரவிவிட்டதனாலும் இனி மாயா தேவியை அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக்குவதென்பது முடியாத நிலை ஆகியிருந்தது கமலக்கண்ணனுக்கு. ஆகவே தர்மசங்கடத்தோடும், பயத்தோடும், தயக்கத்துடனும் தான் அந்த விருந்துக்கு டில்லி மந்திரியோடு போனார் கமலக்கண்ணன் . ஃபிலிம் வர்த்தக சபை விருந்தில் டில்லி மந்திரி ஆங்கிலத்தில்தான் பேசினார். இந்தியில் பேசினால் ஒருவேளை அங்கு வந்திருந்த அழகிய பெண்களும் இளம் எக்ஸ்ட்ராக்களும், தன்னுடைய ஹாஸ்யங்களுக்குச் சிரிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்துதான் அப்படிப் பேசுகிறார் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்துகொண்டார். நடிகை மாயாதேவியின் பரதநாட்டியம் நடந்தபோது டெல்லி மந்திரி வாஹ், வாஹ்’ என்று நிமிஷத்துக்கு ஒரு தரம் தலையாட்டிக் கொண்டிருந்தார். மந்திரியின் ஒரு பக்கம் கமலக்கண்ணனும் மறுபக்கம் பிலிம் வர்த்தகசங்கத் தலைவரும் அமர்ந்திருந்தனர். டெல்லி மந்திரி தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்த போது மாயாவைப் பற்றிக் கமலக்கண்ணனிடம் ஏதோ கூறத் தொடங்கவே, பிலிம் சங்கத் தலைவர் குறுக்கிட்டு, “அவருக்குத் தெரியாதுங்களா? ஹீ…இஸ்…ஆல்ரெடி..” என்று ஏதோ டெல்லி மந்திரியிடம் சொல்லத் தொடங்கிய அந்தவேளையில் கமலக்கண்ணனின் முகம்போன போக்கைப் பார்த்து மேலே ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டார். இதையெல்லாம் சாதாரணமாகச் செய்து விடுவது போல் நாட்டியம் முடிந்ததும் ஒரு சம்பவம் நடந்தது. டெல்லி மந்திரியைச் சந்திப்பதற்காக மாயா அவசர அவசரமாக மேக் – அப்பைக் கலைத்துவிட்டு மேடையிலிருந்து வந்தாள். கைகூப்பியவளைக் கமலக்கண்ணன் – டெல்லி மந்திரிக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். கமலக்கண்ணன் தயங்கியபடி சும்மா இருக்கவே மற்றொருபுறம் அமர்ந்திருந்த பிலிம் வர்த்தக சங்கத் தலைவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் மாயாவோ டெல்லி மந்திரியிடம் பேசிவிட்டுக் கமலக்கண் ணனை விசேஷப் புன்னகைகளோடு அணுகி, “என்ன? பார்த்து ரொம்ப நாளாச்சே?” என்று தமிழில் குழைந்த போது கமலக்கண்ணனுக்கு – ஒன்றுமே பதில் சொல்ல வரவில்லை. அசடு வழியச் சிரித்தார். ஃபிலிம் சங்கத் தலைவருக்கு கமலக்கண்ணனின் நிலை புரிந்தது. ஆனால் டெல்லி மந்திரி ஆங்கிலத்தில் மாயாவிடம் கமலக்கண்ணனைப் பற்றி ஏதோ கூறத் தொடங்கவே, ‘வாட் இஸ் திஸ்…யூ நீட் நாட் டெல் மீ எபெளட் ஹிம், ஐ நோ ஹிம் ஃபுல்லி வெல்…’ –என்று மாயாவே உற்சாகமாகப் பதில் கூறினாள். கமலக்கண்ணன் மேலும் அசடு வழிந்தார். மாயாதேவி தன்னை மிக மிகத் தர்மசங்கடமான நிலையில் வைப்பதாகக் கருதி அவள்மேல் கடுங்கோபம் குமுறிப் பொங்கியது அவருள்ளே. பகுதி -13 ஒரு வழியாக மத்திய மந்திரி ரமேஷ்சிங்கின் சென்னை விஜயத்தை உடனிருந்து வெற்றிகரமாகச் செய்து வழியனுப்பி வைத்தார் கமலக்கண்ணன். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு விமானநிலையத்திலிருந்து வீடுதிரும்பியதும் நிம்மதியாகவும், ஒய்வாகவும் இருந்தது. அந்த நேரம் பார்த்து நடிகை மாயாதேவியின் ஃபோன் வந்தது. அவள் என்ன பேச வந்தளோ அதைப் பேச விடுவதற்கு முன்பே, என்ன இருந்தாலும் அன்னிக்கு பிலிம் சேம்பர்ஸ் பார்ட்டீலே சென்ட்ரல் மினிஸ்டருக்கு முன்னே நீ என்னை அப்பிடித் தர்மசங்கடமான நெலைமைக்கு ஆளாக்கியிருக்கப் பிடாது. பல சமயங்களிலே உனக்கு இங்கிதம்கிறதே என்னான்னு தெரியாமப் போயிடறது“– என்று ஃபோனில் அவளை இரைந்தார். அவள் ஏதோ பதில் சொன்னாள். மீண்டும் கோபம் தணியாமல்”எங்கே எப்பிடி அளவாப் பழகனுங்கறதே உங்களுக்கெல்லாம் தெரியறதேயில்லே" என்றார் அவர். “ஒண்னுமில்லாததை எல்லாம் பெரிசு படுத்தி வீணாச் சண்டைக்கு இழுக்காதிங்க”– என்று கனிவாகக் கொஞ்சும் குரவில் இழைந்து அவருடைய கோபத்தை ஆற்றினாள் அவள். அப்புறம் கோபதாபமின்றி உரை யாடல் பத்து நிமிஷங்கள் தொடர்ந்தது. அவளுக்குத் தெரிந்த யாரோ ஒருவருக்குப் புது பஸ் ரூட் ஒன்று வேணுமாம். அதற்கு உதவி செய்யவேண்டுமென்று கோரி அவரைக் கெஞ்சினாள் அவள். ’இதையெல்லாம் இப்படி ஃபோன்ல பேசப்பிடாதுங்கிறதை முதல்லே நீ தெரிஞ்சுக்கணும்.." என்று மறுபடியும் சூடேறிய குரலில் இரையத் தொடங்கினார் கமலக்கண்ணன். அவள் பதிலுக்கு இதமாக ஏதோ கூறினாள். “பார்க்கலாம்” – என்று பட்டும் படாமலும் சொல்லி ஃபோனை வைத்தார் அவர். அவளைப்போல் தன்வாழ்வின் ஒரு பகுதியில் பழகிய பெண் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டு உதவி கோருவதைக் கேட்டு அவருக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. பயமும், தயக்கமும்,மாயாவை நினைத்து அல்ல. பதவியை நினைத்தே அந்த உணர்ச்சிகள் உண்டாயின. குற்றம் புரிகிறவர்கள் எங்கே எங்கே என்று நெற்றிக்கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் காந்திராமனைப் போன்றவர்கள் அவருடைய நினைவில் வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தனர். வரலாற்றின் படி குருட்சேத்திரப் போர் என்பது பல யுகங்களுக்குமுன் நடந்து முடிந்து விட்டாலும் தர்க்க்ரீதியாகவும், தத்துவரீதியாகவும் அது சராசரி இந்தியனின், மனிதனின் பொது வாழ்விலும், தனி வாழ்விலும் இன்றும் இந்த விநாடியும் நடைபெறக்கூடியதாகவே இருக்கிறது. எதிரே இருப்பவர்கள் நண்பர்கள், உறவினர்கள், வேண்டியவர்கள் என் றெல்லாம் பாராமல்,அவர்களுடைய அதர்மத்தை எதிர்த் துப் போரிட வில்லெடுக்கும். துணிவும் சொல் எடுக்கும் துணிவும் இன்றைய மனிதனிடமும் அபூர்வமாக இருக்கிறது. அரசியலில் பதவியிலும், அதிகாரங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் குருட்சேத்திரப் போர்க்களத்தில் கெளரவர்களைப் போல் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பாசமும், உறவும் கருதாமல் அறப்போர். நடத்துவதற்கோ காந்திராமனைப் போன்றவர்கள் சமூகம் என்ற பாண்டவர்களாக நியாயம் என்ற கண்ணபிரானின் துணையோடு என்றும் எதிர் நிற்கிறார்கள். எனவே குருட்சேத்திரப் போர் என்பது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே உள்ள தர்ம அதர்மப் பிரச்சினைகள் உள்ளவரை நித்தியமாக இருக்கும் ஒரு தத்துவமே. புகழ், பதவி, அதிகாரம், பணம், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் கமலக்கண்ணன் தன்னுடைய மனோபயங்களைத் தவிர்க்கமுடியவில்லை. அரும்பாடுபட்டு அடைந்த தேர்தல் வெற்றி…அதன் காரணமாகக் கிடைத்த மந்திரி பதவி எல்லாவற்றையும் எண்ணி எண்ணி அஞ்சினார் அவர். விருப்பு வெறுப்பற்ற பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் பயப்படாமல் இருக்கமுடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரை தான் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை. தலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்புதான் பயம் என்பதே ஆரம்பமாகிறது. அந்தஸ்தின் உயரத்திற்குப் போன பின்புதான் பயம் என்ற பள்ளம் கண்ணுக்குத் தெரிகிறது, பயமுறுத்துகிறது. ‘இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கிவிடுவோமோ…’ என்றபயமும், இதற்கும் மேலே போக வேண்டுமே என்ற சுயநலமும்தான் இப்போது அவரைக் கவலைப்படச் செய்தன. ஆனால் இன்னும் ஒருவாரத்தில் பட்ஜெட் அறிவிக்கப் படவேண்டுமென்ற பெரிய கவலையில் இந்தச் சிறிய கவலைகளை மறக்க முடிந்தது. மாயாதேவிக்கு வேண்டிய ஆளுக்குப் புதிய பஸ்ரூட் பெர்மிட், ‘உண்மை ஊழியனின்’ பயமுறுத்தல், கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரண நிதி, தினக்குரலின் சர்க்குலேஷன் நாளுக்கு நாள் குறைவதாகப் பிரகாசம் கூறிய கசப்பான நிலைமை, ஆகிய எல்லாவற்றையும் மறந்து ‘பட்ஜெட்’டிற்கு உருக்கொடுப்பதில் அவர் ஈடுபட்டார். காரியதரிசிகளும், பொருளாதார நிபுணர்களும் உதவினர். சிலதினங்களில் ’பட்ஜெட்’ தயாரிப்பு அவருடைய இலாகா அளவில் நிறைவேறி முடிந்துவிட்டது அதைவெளியிட வேண்டிய வேலை தான் மீதமிருந்தது. நாளைக்கு விடிந்தால் அசெம்பிளியின் பட்ஜெட் செஷன் ஆரம்பமாகிறது. முதல் நாளிரவு ஆவலினாலும், பரபரப்பினாலும், பயத்தினாலும் கமலக்கண்ணனுக்குத் தூக்கமே இல்லை. விடிந்ததும் நீராடி உடை மாற்றிக் கொண்டு கோவிலுக்குப் போய் வந்தார். அசெம்பிளிக்குப் புறப்படுமுன் பங்களாவின் பின்கட்டுக்குப் போய்த் தாயைப் பார்த்து வணங்கி ஆசிபெற்றார். பட்ஜெட் செஷன் என்பதால் அன்று அசெம்பிளியில் சகல எம்.எல்.ஏக்களும் வந்திருந்தார்கள். ‘பட்ஜெட்’டைச், சமர்ப்பித்து அவர் உரை நிகழ்த்தினார். அவருடைய கட்சி எம்.எல்.ஏக்கள் நிர்ப்பந்தமாக அவரது பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டிய நிலையிலிருந்தார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ நிர்ப்பந்தமாக அதை எதிர்க்க வேண்டிய நிலையிலிருந்தார்கள். கேள்விக்கணைகளும் கண்டனக் கணைகளும் கிளர்ந்தன. சாயங்கால செஷனுக்கு முன் மந்திரி கமலக்கண்ணன் அறையில் தற்செயலாக அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அவருடைய கட்சி எம். எல்.ஏக்கள் சிலரே பட்ஜெட்டைப்பற்றி அதிருப்தி தெரிவித்துத் தனிப்பட்ட அபிப்பிராயம் கூறினார்கள். மாலை செஷனில் எதிர்க்கட்சித் தலைவர் ’இது பொதுமக்களுக்குப் பயன்படாத பட்ஜெட்’–என்று காரசாரமாக வெளுத்துக் கட்டிவிட்டார். அதோடு சபை கலைந்தது மறுநாள் பட் ஜெட் விவாதங்கள் தொடரும் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அவசரஅவசரமாக வீட்டுக்குவந்து சாயங் காலப்பத்திரிகைகளை எல்லாம் வரவழைத்துப் படித்தார் கமலக்கண்ணன். அவரே நடத்தும் ‘தினக்குரல்’ தவிர வேறு எல்லாப் பத்திரிகைகளும் பட்ஜெட் சுகமில்லை என்பது போல் தாக்கி எழுதியிருந்தன. தினக்குரலில் மட்டும் பட்ஜெட் சமர்ப்பிக்கும் முன் அமைச்சர் தன் அன்னையைக் கண்டு ஆசிபெற்றார் – ஆலயம் சென்று வழிபட்டார் – என் பது போன்ற செய்திகள் முன் பக்கத்தில் வந்திருந்ததோடு ‘ஏழைக்கும் செல்வருக்கும் ஏற்ற பட்ஜெட்’–என்ற தலைப்பில் தலையங்கமும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. தன் பத்திரிகையிலேயே வெளிவந்த அந்த பாராட்டினால் மட்டும் அவர் திருப்தியடைந்துவிட முடியவில்லை. அதே சமயத்தில் ஒரு திருப்தியும் இருந்தது. எவ்வளவு நல்ல பட்ஜெட் ஆனாலும் தாக்கி எழுதுவதுதான் பத்திரிகைகளின் வழக்கம். எனவே பத்திரிகைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை என ஆறுதல் கொள்ளவும் முடிந்தது. இந்த அம்சத்தில் பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் ஒரே மாதிரித்தான் என்று தோன்றியது. மறுநாள் பட்ஜெட் மீது நடைபெற இருக்கும் விவாதத்தில் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற தயக்கமிருந்தாலும், முறை மீறவிடாமல் சபாநாயகர் ஓரளவு துணை செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. அன்றிரவு மாயாதேவி மீண்டும் அவருக்கு ஃபோன் செய்தாள். “வரவர உங்க தயவே இல்லை! என்னோட குறவஞ்சி நாட்டிய நாடக அரங்கேற்றத்துக்கு அழைப்பு அனுப்பிச்சேன், நீங்க வரவே இல்லை! டெல்லி மந்திரி ரமேஷ்சிங் வந்திருந்தப்ப ரொம்ப பாராமுகமாக நடந்துக்கிட்டீங்க. ‘பஸ்ரூட்’ விஷயமாகச் சொன்னேன். இதுவரைக்கும் நீங்க ஒண்ணுமே கவனிக்கல்லே…? என்மேல் ஏன் இத்தினி கோவமோ தெரியலே. நான் என்னிக்கும் உங்களவள்தான். என்னை நீங்க மறந்துடப்பிடாது இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே பட்ஜெட்கிட்ஜெட் எல்லாம் தயாரிச்சுக் களைப்பா இருப்பீங்களே? இன்னிக்காவது வந்துபோங்களேன்…” என்று கெஞ்சினாள் அவள். அவருக்கும் போக வேண்டும் போல நைப்பாசையாகத் தான் இருந்தது. ஆனாலும் மந்திரியாகி விட்ட நிலைமையை எண்ணித் தயங்கினார், பயப்பட்டார். “முன்னேமாதிரி நெனைச்சா வந்துடறகாரியமா மாயா? மந்திரியானப்பறம் எங்கே நம்ம இஷ்டப்படி முடியுது…?” “ஊருக்குத்தான் இன்னிக்கி மந்திரி நீங்க, எனக்கு என். னிக்குமே நீங்க ராஜாதானே…?’ “அதிலே சந்தேகம் வேறேயா?” “அதுசரி!அந்த பஸ்ரூட் விஷயம்என்னாச்சு?‘பார்ட்டி’ இங்கேயே ’கன்னிமரா’விலே ஒரு மாசமா வந்து குடியிருக்கானே! அவனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்!” “சீக்கிரமே காரியம் ஆகும்னு சொல்லு!” எதிர்ப்புறம் கொஞ்சலாக நாலு வார்த்தை சொல்லி ஃபோனிலேயே அவரைத் திருப்திப் படுத்திவிட்டு மாயா ரிஸிவரை வைத்தாள். அந்த பஸ்ருட் விஷயமாக அவளுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கமலக்கண்ணனும் மனத்தில் நினைத்துக் கொண்டார். பல காரணங்களால் மாயாதேவியைப் பகைத்துக்கொள்ளவும் அவர் தயாராக இல்லை. அவர் மனம் வைத்தால் காதும் காதும் வைத்தாற் போல் அந்த பஸ் ரூட்டை மாயாதேவியின் ‘பார்ட்டிக்கு’ வாங்கிக் கொடுக்கவும் முடியும். அவர் நிலையில் அவருக்கு அது பெரிய காரியமில்லைதான். தேவையான காரியங்களைச் செய்து கொடுத்து யாருடைய பகைமையும் தவிர்க்க அவர் தயாராயிருந்தார். அந்தக் காந்திராமனே ஒரு காரியமாக உதவி வேண்டி வந்தால் கூட மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பதைவிட அவசரமாகவும், அவசியமாகவும் அவனுக்கு அதைச் செய்து கொடுத்து அவனது பகைமை என்ற நெருப்பை அவித்துவிட அவர் தயார் தான்! ஆனால் அவன் தேடி வரவேண்டுமே? கட்சிக் கட்டுப்பாட்டினாலும் வலிமையினாலும் பட்ஜெட் விவாதத்தின் போது அசெம்பிளியில் கமலக்கண்ணனின் பெயர் கெட்டுப் போகும் படி எதுவும் நடந்துவிட வில்லை. கேள்விகளும், விவாதங்களும், கண்டனங்களும் பலமாக இருந்தன. யார் எப்போது நிதி மந்திரியாக இருந்தாலும் அவை இருக்கும், ‘காந்திராமனின் சர்வோதயக் குரல்’ வாரப் பத்திரிகையில் கூடக் ‘கமலக்கண்ணனின் பட் ஜெட் தேசியக் கட்சியின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக இல்லை’ என்பதை விவரித்துத் தலையங்கம் எழுதப்பட்டிருந்ததைக் கமலக்கண்ணனே படித்துப் பார்த்தார். ஒரே கட்சியைச்சேர்ந்தவராக இருந்தும் காந்திராமன் அப்படிச் செய்திருப்பதைக் கண்டு கமலக்கண்ணன் பயந்தார். தன் மேல் காந்திராமனுக்குச் சொந்தமாக விரோதங்கள், வெறுப்புக்கள் இருந்தாலும் பட்ஜெட் விஷயத்தில் கட்சியை விட்டுக் கொடுத்தாற்போல் காந்திராமன் எழுத மாட்டார் என்று நினைத்திருந்தார் கமலக்கண்ணன். இப்போது அந்த நம்பிக்கையும் போய்விட்டது கட்சி அலுவலகத்திற்கு ஃபோன் செய்து தலைவரிடம் பேசினார். “இந்தக் காந்திராமன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனே அவரைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் இல்லாவிட்டால் போகப் போகத் தொல்லைதான்”– என்று கண்டிப்பாகக் கூறினார் கட்சித் தலைவர் அதைச் செய்ய அஞ்சினார். “அது நடக்காத காரியம் சார்! அவர் நேஷனல் மூவ் மெண்டிலே பலமுறை ஜெயிலுக்குப் போனவர். அசல் தியாகி. அந்த நாளிலே மகாத்மாஜியோட தமிழ்நாடு பூரா சுற்றியிருக்கிறார். தியாகிகளுக்காக அரசாங்கம் நிலம் கொடுத்த போது கூட, ’இப்படி நிலம் வாங்கிக்கறதுக்காக அன்னிக்கு நான் தியாகம் செய்யலே! தியாகத்துக்காகவே தான் தியாகம் செய்தேன். தயவுசெய்து அதற்குக் கூலி கொடுத்து என்னை அவமானப்படுத்தாதீங்க’ன்னு அதை மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட ஆளை நான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியேற்றினா எம்பேரு கட்சிப்பேரு” எல்லாமே கெட்டுப் போயுடும். இதுமட்டும் என்னாலே முடியாது. தயவுசெய்து நீங்க என்னை மன்னிக்கணும்…" இதற்குமேல் கட்சித் தலைவரைக் கமலக்கண்ணனால் வற்புறுத்த முடியவில்லை. ‘காந்திராமன் காலைவாரி விடுகிறார்’– என்றதலைப்பில் தினக்குரலில் ஒரு பதில் தலையங் கம் மறுத்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. ‘தினக்குரல்’ கமலக்கண்ணனின் பத்திரிகை என்பதாலேயே அதில் வந்த மறுப்பு – பயனில்லாமல் போயிற்று. ஏராளமான கண்டனக் கடிதங்கள் தினக்குரலின் அலுவலகத்தில் குவிந்தன. ‘உம்மைப்போல் முந்தா நாள் காலையில் பதவிக்காகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் காந்திராமனைத் தாக்கி எழுதுவதற்கு யோக்கியதையே இல்லை’ என்று வந்த எல்லாக் கடிதங்களுமே கமலக்கண்ணனைத் திட்டின. சில ஊர்களிலிருந்து பத்திரிகையின் அன்றையப் பிரதியை எரித்த சாம்பல் கற்றைகள் கவரில் வந்தன. கமலக்கண்ணன் பயந்துவிட்டார். உடனே காந்திராமனை எதிர்த்து எதுவும் எழுதக்கூடாதென்று தினக்குரலுக்கு அவரே கட்டளையிட வேண்டியதாயிற்று. ஒருவேளை நினைத்துப் பார்த்தால் காந்திராமனைப்போல் நெஞ்சில் கனல் அவியாமல் இருக்கிற ஒருவரைக் கொன்று விட வேண்டும் போலிருந்தது அவருக்கு இன்னொரு வேளை – இன்னொரு விதமான மனநிலையோடு நினைத்துப் பார்த்தால் – நெஞ்சில் அப்படி ஒரு கனல் இல்லாத தன்னைத்தானே கொன்று கொண்டு விட வேண்டும் போலவும் இருந்தது. அவரைப் போன்ற ஒரு பிரமுகர் நினைத்துப் பொறாமைப் படவேண்டிய எந்த வசதியும் காந்திராமனிடம் நிச்சயமாக இல்லை. ஆனால் அவரிடம் இல்லாத அந்த நெஞ்சின் கனல் – தார்மீகக் கனல் அவனிடம் இருந்தது. அதைக் கண்டு தான் அவர் பயந்தார். அதை நினைத்துத் தான் அவர் பொறாமைப்பட்டார். அவன் மட்டும் பணத்தினால் விலைக்கு வாங்கிவிட முடிந்த மனிதனாக இருந்தால் அவர் நாளைக்கே அவனை விலைக்கு வாங்கிவிடத் தயார். இந்த மாகாணத்தையே விலைக்கு வாங்க முடிந்த பணவசதி அவரிடம் உண்டு. ஆனால்…? ஆனால்? ‘நோ ஒன் கேன் பார்ச்சேஸ் ஹிம்…’ இடையே ஒருமுறை ஸ்டேட் நிதிமந்திரிகளின் மாநாட்டிற்காக டெல்லி போய் வந்தார் கமலக்கண்ணன். மத்திய நிதி மந்திரி மூன்று தினங்கள் மாநில நிதி மந்திரிகளைக்கூட்டி வைத்துப்பேசினார். டெல்லியிலிருந்தபோது தற்செயலாக ரமேஷ்சிங்ஜியைச் சந்திக்க நேர்ந்தது ரமேஷ்சிங், “ஐநெவர் ஃபர்கெட் யுவர் இட்லி சாம்பார் அண்ட் மாயாதேவிஸ் டான்ஸ் பெர் பாமன்ஸ்”– என்று வியந்தார் . கமலக்கண்ணன் புன்னகை புரிந்தார். பேச்சினிடையே “வெரி வெரி… ஸ்வீட் கேர்ல்” என்று மாயாவைப் பற்றி மறுமுறையும் குறிப்பிட்டார் ரமேஷ்சிங். டெல்லியின் தனிமையில் அவளுடைய பெயரைக் கேட்டதுமே கமலக்கண்ணன் ஆசை மயமாகிவிட்டார். அன்றிரவே டெல்லியிலிருந்து மாயாவுக்கு ஒரு டிரங்க்கால்’ போட்டு, “ரமேஷ்சிங் உன்னை மறக்காமல் விசாரித்தார். பலே ஆளாச்சே நீ…? உன் கியாதி டெல்லி வரை பரவியிருக்கு” என்று பேசினார். “ரொம்பக் குளிராயிருக்குமே டெல்லியிலே? என் ஞாபகம் வரதா உங்களுக்கு…என்ன வரலியா?” “ஞாபகம் வராமல. இப்ப ஃபோன் பண்ணினேன்?” “அது சரி! நான் சொன்ன பஸ்ரூட் விஷயம் மறந்தே போச்சா; என்ன? அந்தப் ‘பார்ட்டி’ இன்னும் கன்னிமராவிலேயே…?” “ஆல் ரைட் மாயா! ஐ வில் ஃபோன் அப் டு தி கன்ஸ்ர்ன் மினிஸ்டர் டு நைட் இட்ஸெல்ஃப், மோஸ்ட் ப்ராப்பலி ஹி வில் கெட் தி ஆர்டர்ஸ் டு–மாரோ ஆர் டே ஆஃப்டர் டுமாரோ…ஓ கே..” “தாங்க் யூ…தாங்க் யூ…நான் அவருக்கு இப்பவே சொல்லிடறேன்…” “ஐயையோ! இப்பவே சொல்லிடாதே! கன்னிமரா வைக் காலி பண்ணிட்டு உடனே செகரெட்டேரியட்டுக்கு ஒடிடப் போறான்…நாளைக்குச் சொல்லு போதும்” என்று ஃபோனில் ஜோக் செய்தார் கமலக்கண்ணன். மாயாவோடு பேசி முடிந்தபின் அந்த இனிய சொப்பனங்களைத் தழுவிய படியே டில்லியின் குளிர்ந்த இரவை வெது வெதுப்பாக்கிக் கொண்டு உறங்கினார் கமலக்கண்ணன். மறுநாள் மாலை மாயாவிடமிருந்து அவருக்கு டிரங்க…கால் வந்தது. – – – – “நான் சொன்ன பார்ட்டிக்கு ஆர்டர் கிடைத்து விட்டது. உங்களுக்குத்தான் நான் ரொம்ட் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்…லோ கைண்ட் அஃப். யூ” “இந்த மாதிரி விஷயமாக இப்படியெல்லாம் நீ எனக்கு ஃபோன் பண்ணப்பிடாது மாயா? காரியம் ஆனாச் சரி தான். ஃபேர்ன்லே நான் இங்கிருந்து உன்னைக் கூப்பிடறதைப் போல நீயும் அங்கிருந்து என்னைக் கூப்பிடலாமா?. காதும் காதும் வச்சாப்பிலே ஒரு காரியம் முடியறதைக் கெடுத்துடாதே” என்று அவளைக் கடிந்து கொண்டார் கமலக்கண்ணன். மறுநாள் விமானத்தில் அவர் சென்னை திரும்பிவிட்டார். அன்றும் மறு நாளும் கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இரண்டு நாட்களும் தொடர்ந்தாற் போல் அரசாங்க விடுமுறையாதலால் செக்ரட்டேரியட்டிற்குப் போகவேண்டிய அவசியமில்லை. மூன்றாம் நாள் அதிகாலையில் கட்சித் தலைவர் பரபரப்பாக அவரைத் தேடி வீட்டுக்கு வந்தார். “என்ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்கப் படாது. பொது வாழ்க்கையிலே இதுமாதிரி தாட்சண்யங்களே கூடாது.” “எதைச் சொல்றீங்க? என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது எனக்கு ஒண்னுமே புரியலியே!” “அந்தப் புலிப்பட்டி மணியத்துக்கு பஸ்ரூட் தரச் சொல்லி டிரான்ஸ்போர்ட் மினிஸ்டருக்கு ரெகமண்ட். பண்ணினிங்களே! அதைத்தான் சொல்றேன்…” ‘புலிப்பட்டியாவது, மண்ணியாவது, எனக்கு ஒரு எழவுமே தெரியாது; மாயாதான் சொன்னாள்…’ என்று பதில் சொல்ல நினைத்தவர் சட்டென்று நாக்கைக் கடித்து அதை அடக்கிக்கொண்டு, “ஆமாம்! அதுலே என்ன தப்பு” என்று கேட்டார். “என்ன தப்பா? அந்தப் புலிப்பட்டி மணியம் பழைய கள்ளுக்கடை ஆள். கள்ளுக்கடை மறியலின் போது நாலு தேசியவாதிகளை அவன் கடை முன்னாடி அவனே ஆள் விட்டுக் கொலை பண்ணின கிராதகன். போதாதகுறைக்கு அந்த நாளைய ஜஸ்டிஸ் பார்ட்டி ஆள் வேறு. நீங்களும் முன்னாள் ஜஸ்டிஸ் பார்ட்டி ஆள். இவனும் பழைய ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரன். அதனாலே இதை வெளியிலே எப்பிடி எப்பிடியோ காது மூக்கு வச்சிப் பேசறாங்க. ‘அந்த ரூட்டுக்கு அநுமதி கேட்டு எத்தனையோ நல்ல நல்ல அப்ளிகேஷன்லாம் இருந்தது சார்! ஆனா எனக்கு ஸீனியரா இருக்கிற ஒரு மினிஸ்டர் சிபாரிசு செய்யறப்பு நான் எப்படி மறுக்கிறதுன்னு அவரு சொன்ன ஆளுக்கே அனுமதி கொடுத்துட்டேன்’ என்று டிரான்ஸ்போர்ட் மின்னிஸ்டர் சொல்றாரு. சீஃப் மினிஸ்டருக்கும் இது விஷயம் நீங்க தலையிட்டுச் செய்ததின்னு தெரிஞ்சிருக்கு. அவரு எங்கிட்ட வருத்தப்படறாரு. அந்தப் புலிப் பட்டி மணியம் யாரோ சினிமாக்காரி மாயாவாமே; அவளுக்கு வேண்டியவனாம். அவ உங்களுக்கும் வேண்டியவள்னு கூடப் பேசிக்கிறாங்க…” “ஷட் அப்! நான்சென்ஸ்…எனக்கு யாரும் வேண்டிய வங்கள்ல்லே! வேண்டியவங்களை வச்சுக்காலந்தள்ளனும்கிறதுக்கு நான் ஒண்னும் பஞ்சைப்பயல் இல்லே…” என்று கோபமாக அவரிடம் இரைந்தார் கமலக்கண்ணன். “நீங்க பெரிய கோடீஸ்வரர்தான்! ஆனாலும் பதவியிலே இருக்கிறப்ப பேர் கெட்டுடாமப் பார்த்துக்கனுமில்லியா?” என்று நறுவிசாகக் கூறிவிட்டு விடைபெற்றார் கட்சித்தலைவர். ஆனால் வந்தசுருக்கில் அவர் சட்டென்று பேசிக்கத்தரித்துக் கொண்டு போன விதம் கமலக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. ஆள் யார், என்ன, என்பதைப் போன்ற விவரங்களைக் கேட்காமல் மாயா சொன்னதை மட்டுமே நம்பி பஸ்ரூட் விஷயமாகத் தான் தலையிட்டுச் சிபாரிசு செய்தது. பெரிய தவறென்றே அவருக்கும் இப்போது தோன்றியது. கட்சித் தலைவரே நேரில் வந்து கோபித்துக் கொண்டு பேசிவிட்டுப் போனதிலிருந்து இந்த பஸ்ருட் விஷயம் பெரிதாக உருவெடுக்கப்போகிறது என்ற பயம் இப்போதே கமலக்கண்ணனுக்கு வந்துவிட்டது. ‘அதுவும் இதே ருட்டுக்கு அனுமதி வேண்டிக் கட்சி நலனில் அக்கறையுள்ள நியாயமான தேசியவாதிகளிட மிருந்து மனுவும் வந்திருக்கிற போது.வேறொருவருக்கு அது கொடுக்கப்பட்டதைப் பார்த்து அவர்களே வயிறெரிந்து இதைப் பெரிதாகக் கிளப்புவார்கள். அவ்வளவேன்? மாயா சிபாரிசு செய்த பார்ட்டி இப்படிப்பட்டவர் – பழைய தேச விரோதப் பேர்வழி என்றெல்லாம் தெரிந்திருந்தால் நானே இதற்குத் துணிந்திருக்க மாட்டேன்! ஹீம்…எப்படியோ இந்த மாதிரி ஆகிவிட்டது! இதை என்னுடைய போதாத வேளை என்று தான் சொல்லவேண்டும்’– என்று நினைக்கலானார் அவர். விஷயம் அதோடு போய்விடவில்லை. மறு – நாள் செகரட்டேரியட் போனபோது முதன் மந்திரியின் அறையிலிருந்து ஃபோனில் கமலக்கண்ணனுக்கு ஒர் அழைப்பு வந்தது. ‘ஒருநிமிஷம் தயவு செய்து இப்படி வந்து விட்டுப் போறீங்களா மிஸ்டர் கமலக்கண்ணன்…உங்களிடம் நேரில் கொஞ்சம் பேசணும்’ – என்று முதன் மந்திரியே பேசிக் கூப்பிட்டார். வயது மூத்தவரும் நிர்வாகத்தில் சூரரும், அநுபவசாலியுமான அந்த முதன் மந்திரியிடம் கமலக்கண்ணனுக்கு பயமே இருந்தது. அவர் யாரையும் இப்படிக் கூப்பிட்டுப் பேசுவதே அபூர்வம். சதா காலமும் ஃபைல் கட்டுக்களில் மூழ்கியிருப்பவர் அவர். அவரைத் தேடிச் செல்லும் போது பஸ்ரூட் விஷயமாகத் தான். அவர் தன்னைக் கூப்பிடுகிறார் என்பது போல் உணர்ந்ததும், ‘கடவுளே! தயவுசெய்து இது வேறு விஷயமாக இருக்கட்டுமே’–என்று பிரார்த்தித்துக் கொண்டு தான் போனார் கமலக்கண்ணன். முதன்மந்திரி அவரை முகமலர்ச்சியோடு வரவேற்றார். அலுவலக அறைக்கும் அப்பால் உள்ளே தள்ளி இருந்த தம்முடைய வஞ்ச் ரூமிற்கு அழைத்துச் சென்று மிகவும் அந்தரங்கமான முறையில் இரகசியமாகவே பேச்சைத் தொடங்கினார். ஆனால் பேச்சு மட்டும் பஸ்ரூட் விஷயமாகவே இருந்தது:– “என்ன மிஸ்டர் கமலக்கண்ணன், இதில் இப்படி நீங்கள் போய் மாட்டிக்கொள்ளலாமா? எத்தனையோ தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நன்றாக நிர்வாகம் செய்திருக்கிறீர்கள். இதில் போய் அவசரப் பட்டுத் தப்பான ஆளுக்குச் சிபாரிசு செய்துவிட்டீர்களே? டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் இளைஞர். பதவிக்குப் புதியவர். உங்களைப் போலக் காபினட்லே இரண்டாவது இடத்திலே இருக்கிற மந்திரி சொன்னதும் யாரையும் கேட்காமல் நீங்க சொன்னவருக்கே ஆர்டர்ஸ் கொடுத்து அனுப்பிவிட்டார். இப்ப என்னடான்னா ஏகப்பட்ட கலவரமாயிருக்கு. பார்ட்டி ஆபீஸ்லே ஒரே கொந்தளிப்பு. ஒரு தகுதியுள்ள நல்ல ஆளுக்கு இதைக் கொடுத்திருந்தா பார்ட்டி ஆளுங்களைக்கூட நீங்க இதிலெல்லாம் தலையிடாதீங்கன்னு: நானே கண்டிச்சு அனுப்பிடுவேன். ரூட்டுக்கு அநுமதி வாங்கிட்டுப் போயிருக்கிறவனோ முதல் நம்பர் அயோக்கியன். கொலைகாரன்…இதே ரூட்டுக்கு அப்ளை பண்ணின பத்து நல்லவனும் இப்ப சண்டைக்காரனா மாறி – ஆட்களைக் கிளப்பி விடறான்கள். நாளையே பத்திரிகைக்காரர். களைத் தேடி இதைப்பற்றி எழுதச் சொல்லுவார்கள். எப்படி சமாளிப்பதென்றுதான் தெரியவில்லை…” “தவறுதான் சார்! ஆனால் என்னை அறியாமல் நடந்துவிட்டது.” “எப்படி அது…சாத்தியம்? உங்களை அறியாம. எப்பிடி நடக்கும்?” கட்சித் தலைவரிடம் மறைத்தது போல முதலமைச்சரிடம் உண்மையை மறைக்க விரும்பாமல், “எனக்குத்தெரிஞ்ச ஒருத்தர் இந்த ஆளுக்காகச் சிபாரிசு பண்ணினார். நான் பண்ணின ஒரே தப்பு இந்த ஆள் யாருன்னு கேட்காமலே டெல்லியிலிருந்து டிரான்ஸ்போர்ட் மினிஸ்ட்டருக்கு ஃபோன் பண்ணிவிட்டேன்…” என்று ஒருவிதமாகக் கூறி விட்டார் கமலக்கண்ணன். இதை கேட்டுச் சில விநாடிகள் ஏதோ யோசனையிலாழ்ந்தார் முதலமைச்சர். பின்பு பெரு மூச்சு விட்டுவிட்டு, “இதெல்லாம் வெளியிலே இருக்கிறவனுக்குத் தெரியாது. அவன் பாட்டுக்கு மந்திரி கமலக் கண்ணனும் முன்னாள் ஜஸ்டிஸ் ஆள் – ரூட் வாங்கியிருக் கிறவனும் பழைய ஜஸ்டிஸ் ஆள்–’ என்று தான் பாமர நிலையில் பேசுவான். சிபாரிசு நீங்கள் செய்ததால் தான் இது கிடைத்தது என்பது எப்படியோ எம்.என்.சி.சி. ஊழியர்கள் அனைவருக்கும் பார்ட்டி ஆபீஸுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறதே?” – என்று குறைபட்டுக் கொண்டார் முதன் மந்திரி. அந்த நிலையில் கமலக்கண்ணனால் அவருக்குத் திருப்தியளிக்கிற ஒரு பதிலும் கூற முடியவில்லை. பகுதி -14 முதலமைச்சருக்கும் கமலக்கண்ணனுக்கும் இடையே நீண்ட நேர அமைதி நிலவியது. அவருக்கும் இவரிடம் கேட்க எதுவுமில்லை. இவருக்கும் அவரிடம் தெளிவு செய்ய எதுவுமில்லை என்பது போல அந்த மெளனம் விட்டுத் தெரிந்தது. பஸ்–ரூட் தொடர்பாகக் கமலக்கண்ணன் தலையிட்டுச் செய்த காரியத்தை முதன் மந்திரி அறவே விரும்ப வில்லை என்பதை – அந்த அழுத்தமான மெளனம். காட்டியது: “சரி! அப்புறம் பார்க்கலாம்…”– என்று மெளனத்தின் நீண்ட இடைவெளிக்குப்பின் மெல்ல வாய் திறந்தார் முதலமைச்சர். அதற்குமேல் அவரை நோக்கிப் ‘போய் வருகிறேன்’ – என்ற குறிப்பில் தலையசைத்துவிட்டு எழுந்து வெளியே வருவதைத் தவிரக் கமலக்கண்ணன் செய்ய எதுவும் மீதமில்லை. அதையே அவரும் செய்தார். கோடிசுவரராகிய அவர்–தேசபக்தியையும், தியாகத்தையும் தவிர நாளைக்குச் சாப்பிடுவதற்கென்று ஒரு பைசாவைக்கூடச் சேர்த்துக்கொள்ளாத அந்த ஏழை முதலமைச்சரிடமிருந்து வெளியேறி வரும்போது – குணங்களால் ஏழையாகிவிட்ட தாழ்வு மனப்பான்மையோடு தள்ளாடி நடந்துவர நேரிட்டது. தான் தள்ளாடி நடக்கவும், அவர் நிமிர்ந்து உட்காரவும் காரணமானது எதுவென்று ஒருகணம் உள்ளே சிந்தனை ஒடியபோது அவரால். மேலே சிந்திக்க முடியவில்லை. ’அந்த முதலமைச்சருக்குச் சொந்த வீடு கிடையாது. மனைவி மக்கள் குடும்பம் கூடக் கிடையாது. தனிக்கட்டை சிறையிலே மலர்ந்த தியாகம்… நாடு விடுதலை பெற்ற பின்பு தொண்டாக மாறியிருக்கிற மாறுதலைத் தான் அவரிடம் இன்று காண முடிந்தது. மறுபடி அந்த எளிய தொண்டரின் அரிய மனத்திலே எப்படிப் பழைய நன்மதிப்பைப் பெறுவதென்பது தான் கமலக்கண்ணனின் இடைவிடாத சிந்தனையாயிருந்தது. செக்ரட்டேரியட்டிலிருந்து வீடு திரும்பியதும் கூட அதே சிந்தனைதான் தொடர்ந்தது. அந்த வேளை பார்த்து மாயாதேவியிடமிருந்து ஃபோன் வந்தது எரிந்து விழுந்தார் அவர். அவருடைய கோபத்துக்குக் காரணம் புரியாமல் மாயா ஃபோனில் பதறிப் போய்க் கொஞ்ச முயன்றாள். அவரே கோபம் தணியாமலே பேச்சைப் பாதியில் வெட்டி ஃபோனை வைத்துவிட்டார். கவலையோடும் சிந்தனையோடும் பங்களா ஹாலில் உட்கார்ந்திருந்த அவரைத் தேடிப் புலவர் வெண்ணெய்க் கண்ணனார் அப்போது எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். மனிதனுக்குச் சில பலவீனமான வேளைகளில் எதிரே தென்படுகிற ஒவ்வொருவரும் தன்னைவிடப் பலமானவர்களாகத் தோன்றுவதுண்டு. புலவர் வெண்ணெய்க்கண்ணனாரும் கமலக்கண்ணனுக்கு அப்போது அப்படித்தான் தோன் றினார். சிறிது நேரம் புலவரிடம் வேறு எது எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, பின்பு நடந்ததை எதுவும் கூறாமல் முதலமைச்சருடைய பெயரைக்கூறி, “அவருடைய மனம் திருப்திப்படுகிற மாதிரி ஏதாவது செய்யனும்…! உங்களுக்கு ஏதினாச்சும் ஐடியா தோணினாச் சொல்லுங்களேன்…பார்ப்பம்…’ என்றார் கமலக் கண்ணன். புலவர் சிறிது நேரம் தீவிரமாகச் சிந்திக்கலானார். பின்பு நிதானமாகக் கமலக்கண்ணனிடம் கூறினார்: “மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லுகிற வழியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமொன்றில் அன்னாருக்குச் சீரியதோர் சிலை எடுத்தல் வேண்டும்.” “சிலையா? உயிரோட இருக்கறப்பவேயா சிலை வைக்கிறது? நல்லா இருக்குமா?” இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது பிரகாசமும், கலைச்செழியனும் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் புலவர் முகமலர்ந்து, “வேண்டுமானால் இவர்களையே கேட்டுப் பாருங்களேன்? என் முடிவை இவர்களும் ஒப்புக்கொள்கிறார்களா, இல்லையா, பார்க்கலாம்!” என்றார். கமலக் கண்ணன் நிலைமையைப் பிரகாசத்துக்கும், கலைச்செழியனுக்கும் விளக்கிப் புலவரின் யோசனையையும் கூறினார். “ஆமாங்க…இந்த பஸ்ருட் விஷயமா சீஃப் மினிஸ்டருக்கு ஏதோ உங்க மேலே மன வருத்தம்னு பராபரியாக் காதிலே விழுந்திச்சுங்க. அதைச் சரிக்கட்ட இது நல்ல யோசனைதான். சிலை வைக்க ஆகற செலவைக்கூட பப்ளிக்லே வசூல் பண்ணிடலாம். அவருக்கும் மனசு நிறைஞ்சிடும்” என்று பிரகாசமும் கலைச்செழியனும் ஏகமனதாக ஒப்புக்கொண்டார்கள். “அவரு ரொம்பக் கறாரானவரு. சம்மதிக்கணுமே?” “சம்மதிக்காம் என்னங்க? மத்தவங்க தன்னைக் கால்லே விழுந்து கும்பிடலுங்கிற ஆசை, தனக்கு மத்த வங்க சிலைவச்சுக் கொண்டானுங்கிற ஆசை – இல்லாத… அரசியல் பிரமுகரு யாருமே நாட்டிலே இன்னிக்கு இல்லே. மனுஷனைப் பலவீனப்படுத்தணும்னா–முதல்லே அவனைத் தெய்வமாக்கணும். ஒருத்தனைத் தெய்வமாக்கி விட்டா அப்புறம் அவனைத் தனியாப் பலவீனப்படுத்த வேண்டியதில்லே. அவன்தான் மனுஷன்கிறதை…மறக்கச் செய்யிறதே ஒரு பலவீனம்தான்.” “சொல்லாமலே ஒரு கமிட்டி ஸெட் அப் பண்ணி பேப்பர்லே அறிக்கை விட்டுடலாமா?” “அப்பிடித்தான் செய்யணும்! ஏற்பாடு பண்ணி கமிட்டியும் போட்டு அறிக்கை விட்டுப்பிட்டா அப்புறம் எப்படி மறுக்கத் தோணும்கிறேன்?” மறுநாள் தினக்குரவில் முதல் அமைச்சரின் சிலை நிறுவும் கமிட்டியைப் பற்றி முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. கமலக்கண்ணன் இந்தச் செய்தியைத் தினக்குரலில் காலை ஏழரை மணிக்குப் படித்தார். முதலமைச்சர் காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து விடும் பழக்க முடையவராகை யால் அவர் அதை ஆறு – ஆறரை மணிக்கே படித்திருக்க முடியும் என்று அநுமானித்துக் கொண்டார் கமலக்கண்ணன், ஐந்தரை – ஐந்தேமுக்கால் மணிக்குள் முதலமைச்சர் வீட்டுக்கு எல்லாத் தினசரிகளும் போடப்பட்டு விடும் என்பதை அவர் அறிவார். முதலில் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, படித்துவிட்டு அப்புறம் தினக்குரலை எடுப்பார் என்று கற்பனை செய்தது கமலக்கண்ணன் மனம், அவர் இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த போதே டெலிபோன் மணி சீறியது. ஒடிப்போய் எடுத்தார் கமலக்கண்ணன். அவ்வளவு அதிகாலையில் வழக்கமாக மற்றவர்கள் எடுத்து யாரென்று கேட்டு அவரிடம் டெலிபோனைக் கொடுப்பது தான் நடைமுறை. அன்று ஏதோ சந்தேகமான ஆவலுடன் அவரே எடுத்தார். எதிர்ப்புறம் முதலமைச்சரின் குரல் சிறியது, “இதென்ன அபத்தம் உடனே நிறுத்திட்டு மறுவேலை பாருங்க…சிலையாவது மண்ணாங்கட்டியாவது: அதெல்லாம் விவேகாநந்தர், காந்திஜி, நேதாஜி போன்றவர்களுக்கு வைக்கவேண்டியது. நான் சாதாரணத் தொண்டன். குறைகளும் நிறைகளும் கலந்தவன், மனிதனைத் தெய்வமாக்குவது அற்பத் தனம். தெய்வங்களின் சிலைகளைப் பகுத்தறிவின் பெயரால் ஏளனம் செய்துவிட்டு மனிதர்கள் தங்களுக்குச் சிலைகள் வைத்துக் கொள்கிற மடமையை வெறுப்பவன் நான். ‘பஸ்ரூட்’ ப்ளண்டர் ஒண்னு போதும். அதைச் சரிசெய்யறதா நெனச்சுக்கிட்டு அதைவிடப் பெரிய ப்ளண்டரை ‘கமிட்’ பண்ணிக்காதிங்க…இதைக் கைவிடறதாகச் சாயங்காலப் பேப்பர்லே நீங்களே அறிவிக்கலேன்னா நானே இன்த மறுத்து அறிக்கைவிட வேண்டியிருக்கும்…” “…………………” “என்ன பதில் பேச மாட்டேங்கிறீங்க? உடனே நிறுத்தறேன்னு சொல்லுங்க…’ “அப்படியே செய்யறேன் சார்.கோபப்படாதீங்க…” – என்று பயந்த குரலில் பதில் கூறினார் கமலக்கண்ணன். எதிர்ப்புறம் முதலமைச்சரின் டெலிபோன் செவியை உடைப்பது போல் கோபமாக வைக்கப்படும் ஓசை கமலக்கண்ணனுக்கு கேட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தள்ளாடியவாறு சோபாவில் சாய்ந்தார் அவர். வியாபார ரீதியாகக் கணக்கிட முடியாத நல்ல மனிதர்கள் உலகில் நிறைய இருப்பதாக ஒரு பயம் அவருக்குள்ளேயே கிளர்ந்து சுமையாகிக் கணக்கலாயிற்று. ‘முதலமைச்சரின் வேண்டு கோளுக்கிணங்கிச் சிலை ஏற்பாட்டைக் கைவிடுவதாக’ – அவரே அறிக்கை எழுதியனுப்ப வேண்டிய நிலையிலிருந்தார். புகழையும், பணத்தையும் துச்சமாக மதிக்கிறவர்களை எதிரே பார்க்கும் போதெல்லாம் அந்த நெஞ்சங்களின் கனலில் அவர் பயந்து வெதும்பினார். காரணம் அவரால் புகழையும், பணத்தையும் துச்சமாக மதிக்க முடியவில்லை. அப்படி மதிப்பதற்குரிய நெஞ்சமோ, கனலோ அவரிடமில்லை. சிந்தித்தபடியே வராந்தாப் பக்கம் நடந்தவர் – எதிர்ப்புறம் தெருச்சுவரில் ஏதோ போஸ்டர் பளீரென்று தெரியவே – தோட்டத்துச் சுவரருகே சென்று நின்று படிக்க முயன்றார். எழுத்துக்கள் அங்கிருந்து சரியாகத் தெரியவில்லை. தோட்ட்க்காரனைக் கூப்பிட்டு அது என்ன சுவரொட்டி என்று படித்தறிந்து வருமாறு பணித்தார். அந்தச் சுவரொட்டியைப் பற்றி அவர் மனத்தில் ஏதோ சந்தேகம் தட்டியது. தோட்டக்காரனை அனுப்பவும் முதலில் அவர் மனம் கூசினாலும் தானே நேரில் தெருவில் போய் நின்று அதைப் படித்துப் பார்க்கத் துணிய முடியாமலிருந்தது. போஸ்டரோ தன் சம்பந்தப்பட்டதென்று அவரது மனக்குறளி கூறியது. ‘பஸ்ருட் ஊழல்’ கண்டனக் கூட்டம். பிரபல தேசபக்தர் காந்திராமன் தலைமையில் நடைபெறும்’. – என்று சுவரொட்டியில் கண்டவற்றை வந்து அப்படியே ஒப்பித்தான் தோட்டக்காரன். அவருடைய மனத்தில் பதற்றமும், பரபரப்பும் அதிகமாயின. “முடிஞ்சா இன்னிக்கிச் சாயங்காலம் அந்தக் கூட்டத்துக்குப் போயி என்னபேசுறாங்கன்னு கேட்டுக்கிட்டுவா…’ – என்று தோட்டக்காரனிடம் அந்தரங்கமாகச் சொல்லி வைத்தார். அவர். அவனும் சரியென்று தலையாட்டினான். நடுப்பகலில் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கமலக்கண்ணனைப் பார்க்க வந்தார். அவர் கையில் காந்திராமன் நடத்தும் பத்திரிகை இருந்தது. அந்தப் பத்திரிகையைப் புலவர் கைகளில் பார்த்ததுமே கமலக்கண்ணனுக்கு வயிறெரிந்தது. “சர்வோதயக் குரலா அது? அதை ஏன் கையிலே வச்சுக்கிட்டிருக்கீரு” என்று புலவரை வினாவினார், “பாருங்க… உங்களுக்குக் காண்பிக்கத்தான் வாங்கிக் கொண்டு வந்தேன்” என்று புலவர் அந்தப் பத்திரிகையையே கமலக்கண்ணனிடம் நீட்டினார். மனமும் கைளும் பதறி அதை வாங்கினார் கமலக்கண்ணன். அந்தப் பத்திரிகையில் கார்ட்டூனிலிருந்து தலையங்கம் வரை எல்லாவற்றிலும் கமலக்கண்ணனைக் கடுமையாகத் தாக்கியிருந்தார்கள். ‘குரங்கு கையில் பூமாலை’ என்று ஒரு கேலிச் சித்திரம். அதில் கமலக்கண்ணனைக் குரங்காகவும் – பூமாலையில் உள்ள மலர்களைத் தேசிய லட்சியங்களாகவும் உருவகம் செய்திருந்தது. தலையங்கத்தில் ‘பஸ்–ரூட்’ விஷயம் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கமலக்கண்ணன் சூடுசுரணையோ, மானமோ உள்ளவராக இருந்தால் உடனே இராஜிநாமா செய்யவேண்டுமென்றும் கோரப்பட்டிருந்தது. அதில் ஒரு ‘பாரா’ இப்படி இருந்தது. “தன் லட்சியங்களில் நம்பிக்கையில்லாத ஒருவரைப் – பணபலத்துக்காகக் கட்சியில் ஏற்பதும் – பதவியளிப்பதும் – பாலில் நஞ்சுக்கலப்பதைப் போன்றது. திலகரிலிருந்து காந்தி வரை தன்னலம் கருதாமல் வளர்த்த மாபெரும் தேசிய இயக்கம் இன்று ஒரு சாதாரண அரசியல் கட்சியாகிவிட்டாலும் – அதில் பல்வேறு கட்சிக்காரர்கள் ஊடுருவுகிற அளவு அது பலவீனப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சுயநல நோக்கங்களுக்காகத் தேசியக் கட்சியில் ஊடுருவியிருக்கிற ஒவ்வொருவரும் அந்த அந்த அளவுக்குக் கட்சியைப் பலவீனப் படுத்துகிறார்கள் என்றே கூறவேண்டும். சமீபத்தில் ‘பஸ்ருட் விஷயமாக’ நடந்த முடிவும் இதையே நிரூபிக்கிறது. கட்சியிலிருந்து உண்மையும் நியாயமும் விலகிப் போய்க் கொண்டேயிருக்கின்றன. உண்மைத் தொண்டர்களும், அன்பர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது கேவலமான நிலை அரசியல், தொண்டாக இருந்த காலம் போய் வசதியுள்ளவர்கள் முதலீடு செய்யும் ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. அப்படித் தான் நமது புதிய நிதி மந்திரியும் அரசியல் தொழிலில் இப்போது முதலீடு செய்திருக்கிறார் போலும்…’ படிக்கப் படிக்க கமலக்கண்ணனுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. காந்திராமனைப் போன்றவர்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏன் தன்னை இவ்வளவு தீவிரமாக எதிர்க் கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் குமுறினார் அவர். தன் செல்வாக்கிற்கும், செல்வத்திற்கும், பதவிக்கும் அவர்கள் ஏன் பயப்படுவதில்லை என்பது அவருக்கும் வேடிக்கையாகவே இருந்தது. முதலமைச்சர் விரும்பாததன் காரணமாகச் சிலை வைக்கும் யோசனை கைவிடப்பட்டதாக அன்றைய மாலைத் தினசரிகளில் அவரே அனுப்பிய செய்திகள் வந்திருந்தன. மறுநாள் காலை தினக்குரலிலும் அதே செய்தி வந்தது. திடீரென்று பத்திரிகைகளின் ஆசிரியர் கடிதப் பகுதியில் கமலக்கண்ணன் இராஜிநாமா செய்ய வேண்டுமென்று கோரும் கடிதங்கள் நிறைய வரலாயின. சில பத்திரிகைகள் அவர் ராஜிநாமா செய்வாரென்று தாமாகவே ஹேஷ்யச் செய்தி வேறு வெளியிட்டிருந்தன.  அடுத்த வார சர்வோதயக்குரலில் ‘முதலமைச்சருக்குச் சிலை – காக்கை பிடிக்கும் முயற்சியா?’ என்று தலையங்கம் வந்திருந்தது. இதே செய்தியைப் பொதுக் கூட்டத்திலும் காந்திராமன் பேசியதாகக் கூட்டம் நடந்திருந்த தினத்தின் மாலையிலேயே தோட்டக்காரன் கேட்டுக்கொண்டு வந்து கமலக்கண்ணனிடம் தெரிவித்திருந்தான். இப்போது ஐந்து நாட்களுக்குப் பின் அதையே தலையங்கமாக எழுதியிருந்தார் காந்திராமன். கமலக்கண்ணனுக்கு அவருடைய சக காபினட் மந்திரிகளிடமே நல்ல பெயர் போய்விட்டது. அவரை இலட்சியம் செய்யாதது போல் அவர்கள் நடந்து கொள்ளத் தலைப்பட்டார்கள். பஸ்ரூட் விஷயம் அளவுக் கதிகமாகப் பெரிது படுத்தப்பட்டு விட்டது. சில மஞ்சள் பத்திரிகைகள் இதில் மாயாதேவியையும் சம்பந்தப்படுத்தி எழுதின. அபவாதம் தனியே வருவதில்லை போலும். முதலமைச்சருக்குக் கமலக்கண்ணனைப் பற்றி ஏராளமாக தந்திகள் பறந்தன. பொதுமக்களின் சக்தி இவ்வளவு கடுமையாக இருக்க முடியுமென்று அவருக்கு இதற்கு முன் எப்போதுமே தெரிய வாய்ப்பிருந்ததில்லை. காந்திராமன் தலைமையில் கட்சியின் நீண்டகாலத் தலைவர்கள் பலர் முதலமைச்சரிடம் தூது போய்ப் பேசியதாகவும் ஒரு தகவல் கமலக்கண்ணனுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அந்த ‘பஸ்ரூட்’ விஷயத்தை அவர் செய்யாமலே விட்டிருக்கலாம். யாருக்கு அதைச்செய்கிறோம் என்பது தெரியாமலே அதை மாயாவுக்காகச் செய்யப்போக இப்படி ஒரு பெரிய எதிர்ப்புச் சூறாவளியில் சிக்க நேரிடுமென்று அவர் கனவிலும் . நினைக்கவில்லை, பார்க்கப்போனால் இது டிரான்ஸ் போர்ட் மந்திரி விவகாரம். ஆனால் எப்படியோ பழி கமலக்கண்ணனையே சரியாகத் தேடி வந்தது. ‘டிரான்ஸ் போர்ட் மந்திரி இதில் நிரபராதி’ – என்பது போலாகி விட்டது. பத்திரிகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கமலக்கண்ணனைச் சரியாகப் பழி வாங்கின. அவர் செய்த சிலை முயற்சியில் முதலமைச்சர் வேறு அவரை வெறுக்கத் தொடங்கியிருந்தார். ரூட் கிடைக்காத மற்ற விண்ணப்பதாரர்கள் ஓர் பெரிய அரசியல் குழப்பமாக இதை மாற்றிவிட்டு – அத்தனை குழப்பத்திற்கும். கமலக்கண்ணனே காரணமென்றும் கிளறி விட்டு விட்டார்கள். எங்கும் இதே பேச்சாகிவிட்டது. பெரிய குற்றம் எதையும் மன்மறிந்து செய்யாமலே இருந்தாற் போலிருந்து அவர் அருவருக்கத் தக்கவராகி விட்டார். சில பெரிய பத்திரிகைகள் ‘பஸ் ஊழல்’ – செய்திகள் என்றே ஒரு பத்தி தொடர்ந்து வெளியிடத் தொடங்கிவிட்டன். ஒரு மஞ்சள் பத்திரிகை ‘மாயாதேவிக்கு அவர் நெக்லஸ் பரிசளித்துக் கொண்டிருக்கும் படத்தை’ எப்படியோ – எங்கிருந்தோ வாங்கிப் பிரசுரித்து ‘நிதி மந்திரியா – சினிமா லோலரா?’ – என்று கீழே ஒரு வாக்கியமும் அச்சிட்டிருந்தது. அந்தப் படம் வெளிவந்த தினத்திலிருந்து கலைச்செழியன் அவர் முன் தென்படுவதில்லை. ‘ஆள் எங்கே?’ – என்பதும் தெரியாது போயிற்று. சரியான தொகைக்கு, அவனிடம் அந்தப் படத்தை யாரேனும் விலைக்கு வாங்கியிருக்க வேண்டு மென்று கமலக்கண்ணனால் அநுமானிக்க முடிந்தது. படத்தை வெளியிட்ட பத்திரிகையின்மேல் வழக்குப்போடவும் வழியில்லாமல் இருந்தது. அந்தப் பதினைந்து நாள் சூறாவளியில் முதன் மந்திரியோ, சகமந்திரிகளோ, கட்சித் தலைவர்களோ, கமலக்கண்ணனைப் பார்க்கவும் வரவில்லை, ஃபோனிலும் பேசவில்லை. புறக்கணித்த மாதிரி நடந்துகொண்டார்கள். “ஒருநாள் அவர் மனைவி தானாகவே அவரிடம்இதைப் பற்றிய பேச்சைத் தொடங்கினாள்:– “இதுக்காகப்போட்டு ஏன் இப்படி மனசை அலட்டிக்கிறீங்க…? பொதுக்காரியம்னா நாலு விதமும்தான் இருக்கும். நமக்கு இருக்கிறது நாலு தலைமுறைக்குக் காணும். பஸ்ரூட் வாங்கிக்கொடுத்துப் பணம் சம்பாதிக்கணும்னு நம்ம தலையிலே எழுதலே. சனியனை விட்டுத் தலையை முழுகுங்க…ஏதோ கிரக பலன் சரியில்லே…அந்த சோசியரு சர்மா–வந்தால் கேக்கணும்!…அவரையும் கொஞ்ச நாளாக் காணலை…” “அவருக்கு போன் இருக்கு…கூப்பிட்டு வரச்சொல்லேன்..கேட்போம்” என்றார் கமலக்கண்ணன். அவருடைய மனைவி உடனே ஜோசியருக்கு ஃபோன் செய்து விட்டுக் கமலக்கண்ணனின் அருகே வந்தாள்… “என்னாங்க? ஜோசியரு என்னமோ வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசறாரு…?” “வர்ராரா? இல்லையா? என்ன சொன்னாரு…? சொல்லு…” “வர்ரேன்னாரு…ஆனாகுரல்தான் உற்சாகமாஇல்லே!” “எப்படி இருக்கும்? அவரும் எல்லாம் கேள்விப்பட்டிருப்பாரில்ல?” “உங்க நண்பர்– அதான்…அந்த டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரு, தன் பேரில் அபவாதம் வராமத் தப்பணுங்கிறதுக்காக – நீங்கதான் டில்லிலேருந்து போன் பண்ணி இது விஷயமா அவரை வற்புறுத்தினிங்கன்னு’ எல்லாரிட்டவும் சொல்லியிருப்பாரு போலருக்கு…” – “சொன்னா என்ன தப்பு அதிலே? உள்ளதைத் தானே சொல்லியிருப்பாரு…நான் போன். பண்ணியிருக்கக் கூடாதுதானே?” என்று கமலக்கண்ணனும் விரக்தியோடு தன்னை வெறுத்தாற் போலவே கூறினார். அந்த விஷயமாக மனைவி தன்னுடன் பேசுவதுகூட அப்போது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை விட்டுவிட்டு வேறு எதையாவது பேசினால் நல்லதுபோலத் தோன்றியது. மனைவி…பங்களாவின் முன்புறம் போய் ஜோதிடர் சர்மாவை அழைத்து. வரக் கார் அனுப்பினாள். அரைமணி நேரத்தில் ஜோதிடர் சர்மா வந்தார். ஜாதகத்தைக் கொண்டுவந்து அவரிடம் வைத்தார் கமலக்கண்ணன். . “ராகு கொஞ்சம் கஷ்டப்படுத்தறான். ஒரு மண்டலத்துக்குக் கொஞ்சம் போறாது. திங்கள் கிழமை திங்கள் கிழமை…ஏதாவது முருகன் சந்நிதியிலே உங்க நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணுங்கோ. எல்லாம் சரியாப் போயிடும்” என்றார் சர்மா. “உண்மையிலே பார்க்குப் போனா இது ஒரு பெரிய பழியைத் தரவேண்டிய கெட்ட காரியமே இல்லே. மிஸ்டர் சர்மா! நான் எதிலேயும் ‘கமிட்’ பண்ணிக்கலே, அப்படி இருந்தும் பழி எல்லாம் எனக்கு வந்துவிட்டது. போன் பண்ணிச் சொன்னதுக்கூடப் ப்ரூப் இல்லை. ஒரே அடியா எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லேன்னு அடிச்சுப் பேசி ருக்கலாம் ஆனால் அப்பிடியும் எனக்குப் பேசவரவில்லை.” “எல்லாம் காலக்கோளாறு. ‘பாஸ்லிங்கிளவிட்ஸ்’ தான் எல்லாம் சரியாயிடும். முருகன் கிருபை பண்ணுவான்.” “கிருபை பண்ணலியே மிஸ்டர் சர்மா! விஷயம் பெரிசாவில்ல ஆயிட்டுது.” “கவலைப்படாதிங்கோ… எல்லாம் சரியா ஆகும். கொஞ்ச காலத்துக்குத்தான் போறாது. உங்களுக்கிருக்கிற பணத்துக்கு இந்த டர்ட்டி ’பாலிடிக்ஸ்’ல இறங்கியிருக்கணும்கிறதே இல்லை…” “அதென்ன சரியாகும்னும் சொல்றீங்க, டர்ட்டி பாலிடிக்ஸ்ல இறங்கியிருக்க வேண்டாம்னும் சொல்றீங்க…” “பொதுவாகச் சொன்னேன். வேறேனுண்னுமில்லே” இன்னும் ஒரு பத்து நாள் கழிந்தது. இதற்கிடையில் கமலக்கண்ணன் வீட்டு வாசலில் ஒரு கட்சி பிரமுகர் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தார். முதன் மந்திரியோ சகமந்திரிகளோ அந்த உண்ணாவிரதக்காரரைக் கண்டிக்க முன் வரவில்லை மாறாகக் கமலக்கண்ணனுக்குக் கிடைத்த அந்தரங்கத் தகவல்களின்படி முதன்மந்திரியும், மற்ற மந்திரிகளும் இவற்றையெல்லாம் ஆதரித்துச் சும்மா இருப்பதாகவே தோன்றியது. இந்நிலையில் அடுத்த அசெம்பிளி செஷன் தொடங்கவேண்டிய நாளும் நெருங்கியது. கமலக்கண்ணனுக்குத் தன் நிலைமை.இன்னும் தெளிவாகவில்லை, மனக்குழப்பமும் அவரை விட்டப்பாடில்லை. எதிரிகளின் கண்டனக்கணைகளும், எதிர்ப்புக் கூட்டங்களும், உண்ணா விரதங்களும் இன்னும் நின்றபாடில்லை. கடைசியாக அசெம்பிளி கூடுமுன்பே முதன் மந்திரியை வீட்டில் பார்த்து விடுவதென்ற முடிவிற்கு வந்தார் கமலக்கண்ணன். பகுதி -15 கமலக்கண்ணனுடைய செல்வாக்கில் இருண்ட நிழல் படிந்து கொண்டிருந்த அந்த வேளையில் ஒருநாள் மாலை – கலைச்செழினும், பிரகாசமும் மாயாவின் வீட்டில் சந்தித்தார்கள். “பாவம்! என் வார்த்தைக்காக அவரு இந்த பஸ்ரூட் விவகாரத்திலே தலையிடப் போய்ப் பேரைக் கெடுத்துக்கிட்டாரு” என்று மாயா அவர்களிடம் கமலக்கண்ணனைப் பற்றிப் பரிதாபப்பட்டாள். பிரகாசம் குறுக்கிட்டான்:– “அதெல்லாம் அவர் சரிக்கட்டிடுவாரு…சீஃப் மினிஸ்டருக்குச் சிலை வைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காரு… எல்லாம் அதுலே சரியாயிடும்…” “அதுதான் சீஃப் மினிஸ்டரே தனக்குச் சிலை வேண்டாம்னிட்டாராமே? சிலை வைக்கிற ஏற்பாட்டைக் கைவிட்டுட்டதாக உங்க ‘தினக்குரல்’லியே அறிக்கை வந்திட்டுதே? அப்புறம் எப்படி அவரைச் சரிக்கட்டறது?’’ என்று உடனே பதிலுக்குக் கேட்டான் கலைச்செழியன். பிரகாசம் இதை ஒப்புக் கொள்வில்லை. “அதெல்லாம் சும்மா ஒரு ஐ வாஷ்…நீ பார்த்துக்கிட்டே இரு…நம்பளவரு சிலைவச்சி முடிக்கிறாரா இல்லையான்னு…?” “இனிமே அது நடக்காது பிரகாசம்! கமலக்கண்ணன் வீட்டுவாசலிலேயே ஒருத்தன் உண்ணாவிரதம்னு போர்டு மாட்டிக்கிட்டுக் கூடாரமடிச்சிட்டான்…விஷயம் பெரிசா யிடிச்சி. தினசரி – உண்ணாவிரதம் நாலாவது நாள், அஞ்சாவது நாள்னு போர்டு மாத்தி மாத்தி எழுதிக்கிட்டிருக்கானுக…” “சே! சே! கேக்கறப்ப எனக்கே மனசுக்குச் சங்கடமா இருக்கு. நான் இந்தச் சிபாரிசுக்கு அவரிட்டப்போயிருக்கப் படாது”– என்று வருத்தப்பட்டுக் கொண்டாள் மாயா. “காரியத்தை முடிச்சுக் கொடுத்தோம். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சிட்டுது. இதுலே வருத்தப் படறத்துக்கு என்ன இருக்கு?” என்றான் கலைச்செழியன். “என்ன இருந்தாலும் அவரு நம்மளவரு, நீ அந்த போட்டோவைக்கூட வித்திருக்கப்படாது கலை…” எனறாள் மாயா . . . “இதெல்லாம் பார்த்தா முடியுமா! காத்துள்ளபோதே துாத்திக்கணும். அந்தப் போட்டோ விலை போகாத காலத்துலே அதை விற்கவே முடியாதே?’’ . “என்னவோ…எனக்குப் பிடிக்கலை…” “உனக்குப் பிடிக்காட்டி அதுக்கு நான் இன்னாசெய்ய முடியும்…? நல்ல ‘சான்ஸ்’ அடிச்சுது வித்துப்பிட்டேன்..” “போற போக்கைப் பார்த்தால் ‘தினக்குரலை’க்கூட ரொம்ப நாளு நடத்த மாட்டாரு போலிருக்கு…நாம மறுபடி ’பிரகாஷ் பப்ளிஸிட்டியிலே’ தீவிரமாக இறங்கவேண்டியது தான்” – என்று குறைபட்டுக்கொண்ட பிரகாசத்தை நோக்கி, “ஏன் அப்பிடிச் சொல்றிங்க?…பத்திரிகையை நிறுத்தறாப்பலே இப்ப அவருக்கு என்ன அத்தினி மொடை வந்திரிச்சு…?” என்று பதிலுக்குக் கேட்டாள் மாயா. “மந்திரியா வரணுங்கறதுக்காகத்தான் அவரு பத்திரிகையே தொடங்கினாரு…மந்திரியா வந்தாச்சு…இப்பவோ இனிமே மந்திரியா நீடிக்க முடியும்னு தோணலை…அப்புறம் எதுக்குப் பத்திரிகை…? மாசா மாசம் இருபதினாயிரம் ரூபாயை முழுங்குதே…! தண்டச் செலவா?” “இப்பிடி எத்தினியோ தண்டச் செலவு செய்யிறாரே அவரு? எல்லாத்துக்கும் சேர்த்து எதிலியோ வரவு இருக்கக் கண்டுதானே செய்யிறாரு?” “தண்டச் செலவிலேயே பிரயோசனமுள்ள தண்டச் செலவு, பிரயோசனமில்லாத தண்டச் செலவுண்ணு இரண்டு விதம் இருக்கு இது இனிமே அவருக்குப் பிரயோசனமில்லாத தண்டச்செலவுதானே?…” என்றான் பிரகாசம். “எலக்சனுக்கு நின்னப்பவே முதல்லே அவங்க இவருக்கு ‘பார்ட்டி டிக்கெட்’ கொடுக்கலே, சுயேச்சையா நின்று நிறைய செலவழிச்சு ஜெயிச்சாரு மந்திரி பதவிக்காகத் தான்.அப்புறம் பார்ட்டியிலே ஜாயின் பண்ணினாரு. அப்பவே தேசியக் கட்சியிலே ஏகப்பட்ட கசமுசல் இருந்திச்சு. ‘வெள்ளைக்காரனுக்கு அடி வருடின குடும்பத்தைச் சேர்ந்த ஆளு’–ன்னு எல்லாரும் ஒரு தினுசாத்தான் பேசினாங்க…அது கடைசியிலே இப்படி ஆயிரிச்சி…”என்று அலுத்துக்கொண்டான் கலைச்செழியன். அவர்களுடைய கவலை எல்லாம் கமலக்கண்ணன் தங்களுக்கு இனிமேல் பயன்படுவாரா – பயன்படமாட்டாரா என்பதைப் பற்றியதாகத் தான் இருந்ததே ஒழியக் கமலக்கண்ணனுக்கு வந்திருக்கும் துன்பங்களை எண்ணி வருந்துவதாக இல்லை. மாயாவுக்கு மட்டும்தான் மனத்தில் கொஞ்சம் ஈரம் இருந்தது. பெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்தினால் அவள் அவர்களைப் போல் ஈரப் பசையில்லாமல் வறண்ட மனத்தினளாக இருக்க முடியவில்லை. பிரகாசமும், கலைச் செழியனும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் காரியவாதிகள். தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் காரியங்கள் நடக்காதென்று தெரிந்தால் – அவை வேறு எங்கு நடக்குமோ அங்கே தேடிக்கொண்டு போய்விடுவார்கள். இது மாயாவுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை ஈர்ப் பசையுள்ளவர்களாக மாற்றுவதென்பது மாயாவினால் மட்டுமல்ல; கடவுளால்கூட முடியாது – என்பது உறுதி வாழ்க்கையின் இந்தத் துறைகளில் அவர்களின் நியதியே இதுதான். ஆனால் மாயாவின் நிலை அப்படியில்லை. அவள் கமலக்கண்ணனுக்காக உண்மையிலேயே வருத்தப்பட்டாள். கலைச்செழியனும், பிரகாசமும் வந்து சொல்லியதன் பேரில்தான் புலிப்பட்டி மணியத்தின் பஸ்ரூட் விஷயத்தில் அவள் தலையிட்டாள். அதனால் கலைச்செழியனுக்கும், பிரகாசத்துக்கும் பெரும் பயன் ஏற்பட்டிருக்கும் என்பது அவளுக்குத்தெரியும். ஆயினும் எந்த ஏணியில் மேலே ஏறி வந்தோமோ அந்த ஏணியையே வந்த வேகத்தில் உதைத்துத் தள்ளுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. முதன் மந்திரியை அவருடைய விட்டில் போய்ச் சந்திப்பதற்கு முன்பே கமலக்கண்ணன் மனக்குழப்பமும் வேதனையும் அடைந்திருந்தார். எதைச் செய்வது எதைப் பேசுவது என்ற மனக் குழப்பங்களிலிருந்து விடுபட முடியாமல் தவித்தார். தம் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் கட்சி ஊழியரைக் கண்டிக்கவோ அகற்வோ செய்யாமல், போலீஸ் பாதுகாப்பும் வசதிகளும் செய்து கொடுத்திருப்பதை வேறு அவர் கண்டிருந்தார். தேர்தலில் வென்றதும் தம்மை மந்திரியாக்குவதற்காக உதவி செய்து தம் செலவில் கார் வாங்கிக்கொண்ட பிரமுகரொருவரின் உதவியை நாடி அவரையும் அழைத்துக்கொண்டு முதன் மந்திரியைக் காணச் செல்வதென்று முடிவு செய்தார் அவர். ஃபோன் செய்து அந்தப் பிரமுகரோடு பேசுவதற்கு முயன்றார். ஃபோனில் இவர் எதிர்பார்த்தது போல் அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை. “ஏதோ கேள்விப்பட்டேனுங்க…சரியா விவரம் ஒண்ணும் எனக்குத் தெரியாது…நீங்க இப்படிப் போயிருக்க வேண்டாம்னு தோணிச்சு வெறும் வாயையே மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சா விடுவாங்களா;….எல்லாம் காலக் கோளாறுங்க..’–என்று பட்டும், படாமலும் கமலக்கண்ணலுக்கு ஆறுதல் கூறினாரே ஒழிய – எந்த வழியையுமே அவர் சொல்லவில்லை. “சீஃப் மினிஸ்ட்ரு எம்மேல ரொம்புக் கோபமாயிருக்காருன்னு தெரியுது. நீங்க வந்து சொன்னிங்கன்னாத் தேவலை”– என்று கமலக்கண்ணன் தம் கருத்தை அவரிடம் வெளிப்படையாகவே வெளியிட்டார். “சிலை வைக்கிறேன்னு கிளம்பி ஏற்கெனவே இருந்த கோபத்தை நீங்களே ரெண்டு மடங்காக்கிட்டீங்க. இப்ப நான்கூட வந்தேனோ என் மேலேயும் எரிஞ்சுதான் விழுவாரு .நீங்க இப்பிடியெல்லாம் பண்ணியிருக்கவாணாம்…” “நீங்க சொன்னதையெல்லாம் நான் உடனே செஞ்சிருக்கேன். இப்ப நான் ஒரு கஷ்டத்திலே இருக்கறப்பநீங்க தான் தயங்காம உதவ முன் வரணும். அந்த நம்பிக்கை யோட தான் உங்களுக்கு இப்ப ஃபோன் பண்றேன்.” “அது சரிதான்! இல்லேங்கலியே…ஆனா…உதவ முடியாத எல்லைக்குப் போனப்பறம் வந்து சொல்றீங்களே? இனிமே என்ன செய்யறது? சீஃப் மினிஸ்டரு ரொம்பப் பிடிவாதக்காரரு. அவரு வளைஞ்சு கொடுப்பாருன்னு. எதிர்பார்க்கறதுலே பிரயோசனமில்லே…” “பார்ட்டி ஆபீஸ் மூலமா எதுவும் பிரஷர் கொடுத்தாக்கூடவா நடக்காது?” “பார்ட்டி ஆபீஸ்லே முக்காவாசிப் பேர் உங்களுக்கு டெட் எகெயின்ஸ்ட்டா’வில்லே இருக்காங்க…உங்க நிலைமை நல்லாப் புரியுது…ஆனாலும் என்ன செய்யறதுன்னு தான் தெரியலை…” “யாருக்கும் எதுவும் செய்யனும்னாலும்…செய்திடலாம். இந்த அஞ்சு வருஷத்தை நிம்மதியாகக் கழிச்சிட்டா அப்புறம் கவலையில்லே…” “பார்க்கலாம்! நானே உங்களுக்கு மறுபடியும் ஃபோன் பண்றேன்” – என்று கூறி ஃபோனை வைத்து விட்டார் பிரமுகர்." – ‘ரூட்’ கிடைக்காமல் – ஏமாறிய விண்ணப்பதாரர்கள் கடுங்கோபத்துடன் கமலக்கண்ணனைப் பதவியிலிருந்து இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். காந்தி ராமன் போன்ற அசல் காந்திய வாதிகள் கமலக்கண்ணனைத் தீர்த்துக்கட்டி வெளியில் அனுப்ப வேண்டிய முயற்சிகளைச் செய்து வந்தனர். முதலமைச்சரோ கமலக்கண்ணன் மேல் இன்னும் கோபம் தணியாதவராகவே இருந்தார். உண்ணாவிரதம் இருந்த ஆளைச் சுற்றிக் கமலக் கண்ணனின் வீட்டின் முன்புறம் தினசரி ஒரு பெரிய கூட்டம் கூடுவதும், கோஷங்கள் இடுவதும் வேறு வழக்கமாகியிருந்தது. உண்ணாவிரதக் காரருக்காகப் போடப்பட்டி’ ருந்த கீற்றுக் கூடாரத்தில் தேசியக் கட்சியின் கொடிதான் பறந்தது. அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்கும் அமைச்சனாகிய தன் வீட்டின் முன்பே அதே கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு உண்ணா விரதமிருப்பதும் அதைக் கண்டிக்க ஒருவரும் முன்வராததும் – என்னவோ போலிருந்தது கமலக்கண்ணனுக்கு, டிரான்ஸ்போர்ட் மந்திரியிலிருந்து – முதன் மந்திரி வரை அனைவரும் தன்னைக் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் வெளியேற்றி விடவே விரும்புகிறார்களோ என்றும் சந்தேகம் தோன்றியது அவருக்கு. இந்த விஷயத்தில் டிரான்ஸ்போர்ட் மந்திரி தன்னைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டுமென்பதும் தெளிவாக அவருக்குப் புலனாகியது. டெல்லி மந்திரி ரமேஷ்சிங் விஜயத்தின் போது கூடத் தன்னையே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுப் போயிருந்த முதலமைச்சர் இப்போது ஏன் இப்படி மாறினார் என்பதை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வந்தது வரட்டும் என்று துணிந்து தானாகவே முதலமைச்சரைப் பார்க்க அவர் வீட்டிற்குத் தனியே சென்றார் கமலக்கண்ணன். அவர் செல்லும்போது அதிகாலை ஏழுமணி. முதலமைச்சர் வீட்டில் கூட்டம் எதுவும் இல்லை. உடனே அவரைப் பார்க்க முடிந்தது. பேச்சை அவரிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் கமலக்கண்ணனுக்குத் தெரியவில்லை. அவராக எதுவும் பேச ஆரம்பிக்கவும் இல்லை. விநாடிகள் மெளனமாகப் போய்க்கொண்டிருந்தன. “என்னகாரியமா வந்தீங்களோ?” சிறிது நேரத்திற்குப் பின் முதலமைச்சரே கேட்டார். “இல்லே…வந்து…எட்டு…நாளா வீட்டு முன்னாடி யாரோ உண்ணாவிரதம் இருக்காங்க..ஒரே கூச்சல்… ’ஒழிக ஒழிக’ன்னு கத்தறாங்க…ராஜிநாமா செய்யனும் னும் கூப்பாடு போடறாங்க…” “என்ன செய்யலாம்? ஜனநாயகத்தில் இப்படி நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாதவை.” “நம்ப கட்சிக் கொடியையே பறக்க விட்டுக்கிட்டு நம்ம ஆளுங்களே செய்யறாங்க. வேறொருத்தர் செய்தாப் பரவாயில்லே…நம்மளிவங்களே செய்யிறப்பத்தான் மனசுக் குக் கஷ்டமா இருக்கு…?” “டோண்ட் மிஸ்டேக் மீ…ஐ காண்ட் ஹெல்ப்யூ இன் திஸ் மேட்டர்…” “நான் என்ன செய்யனும்கிறதையாவது சொல்லுங்க? பார்ட்டிக்காக நான் எவ்வளவோ செஞ்சிருக்கேன்…” “இருக்கலாம்…அதுக்கு என்ன இப்ப? திஸ் இஸ் செப்பரேட் இஷ்யூ…’ “என் எதிர்காலம்…” “பார்ட்டி வில் டிஸைட்… “நோ.டோண்ட் டாக் லைட் தட்…யூ மஸ்ட் ஹெல்ப் மீ…” “ஐ காண்ட்…” “டூ யூ ப்ரஃபெர் மை ரெஸிக்னேஷன்…” “அஃப் கோர்ஸ் பார்ட்டி வில் டிஸைட் இட்…” “………………” – கமலக்கண்ணன் எழுந்து கைகூப்பி விடைபெற்றார். இனி அதிகம் பேச எதுவுமில்லை. தளர்ந்த நடையோடு முதலமைச்சர் வீட்டு போர்டிகோவில் நின்ற தம் காரில் வந்து ஏறிக்கொண்டார் அவர். அவர் வீடு திரும்பியபோது வராண்டாலில் புலவர் வெண்ணெய்க்கண்ணனாரும்– வேறோர் ஆளும் வந்து காத்திருந்தனர். “இவருதான் சிலைச்சிற்பி சிங்காரம். நம்ம முதலமைச்சர் சிலைக்காக இவரைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தேன். கர்மவீரர் கனகராசர் சிலை, சீர்திருத்தச் செம்மல் செங்கமலனார் சிலை, ஆன்மீக வள்ளல் அருளாநந்தர் சிலை எல்லாம் இவரு செய்ததுதாங்க…” “நீர் பேப்பரே பார்க்கிறதில்லையா புலவரே…” “ஏன்? என்ன செய்தி?” “சிலை ஏற்பாடு கைவிடப்பட்டதுன்னு நான் அறிக்கைவிட்டு ஏழெட்டு நாளாவுதே” “ஏன்…ஏன்?… : – – – – – – – – – “போய்ப் பேப்பரைப் படியும்! சும்மா வந்து உசிரை எடுக்காதீரும். எனக்கு வேற வேலை இருக்கு” – என்று அது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை அவரிடம் வெளிக்காட்டினார் கமலக்கண்ணன். புலவரும் ‘சிலை சிங்காரமும்’ மூச்சுவிடாமல் திரும்பி நடையைக் கட்டினார்கள். உள்ளே அறையில் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடி அலமாரியைத் திறந்து பிராந்தியை எடுத்தார் கமலக்கண்ணன். கதவைத் திறந்து கொண்டு மனைவி உள்ளே வந்தாள். “ஏன் இதுக்காகக் கிடந்து மாயlங்க…! வீட்டு வாசல்லே தலை காட்ட முடியலே. உண்ணாவிரதமும் ’ஒழிக’வும் ஒய்ந்த பாடு கிடையாது. சனியன் பிடிச்ச பதவியை விட்டுத் தலை முழுகுங்க…ஏதோ வந்தது… இப்போ போகுது… நமக்கெதுக்கு இந்த எழவெல்லாம்…? இருக்கிற பிஸினஸைச் சரியாகக் கவனிச்சாலே போதும்…” –என்று ஆறுதலாகக் கூறினாள் அந்த அம்மாள். மோவாயில் வழிந்த பிராந்தியைத் துடைத்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தார் கமலக்கண்ணன். அந்த அம்மாள் இந்த வேளையில் அவரிடம் பேசிப் பயனில்லை என்பது போல் கதவைச் சாத்திக்கொண்டு போனாள். . . . வெளியே ஹாலில் டெலிபோன் மணி அடித்தது. அந்த அம்மாள் டெலிபோனை எடுத்தாள். “ஐயா இருக்காருங்களா?…நான்தான் ’தினக்குரல்” மானேஜர் பிரகாசம் பேசறேன்…" “லயன்ல இருங்க. உள்ளே படுத்திருக்காரு. அந்த ரூம் எக்ஸ்டென்ஷனுக்குப் போடறேன்” என்று பதில் சொல்லிவிட்டு – எக்ஸ்டென்ஷன் மணியை அழுத்தினாள் மிஸஸ்,கமலக்கண்ணன், உள்ளே படுத்திருந்த கமலக்கண்ணன் தலைப்பக்கமாக இருந்த டெலிபோனை எடுத்தார். “யெஸ்..” “நான் தான் பிரகாசம் பேசறேன் சார்…நாளைக்கு ஸாலரி டேட்…சம்பளம் போடணும்…” “எங்கே…? உன்னை இரண்டு மூணு நாளா இந்தப் பக்கமே காணோம்?” “அதான் இன்னிக்கி வரலாம்னு ஃபோன் பண்ணினேன் சார்’’ “பணம் தேவையாக்கும்…அதான் வரவேண்டிய அவசியம் வந்திருக்கு…இல்லையா?…” “அதுக்கில்லை சார்! நியூஸ் பிரிண்ட் கிளியரன்ஸ்… புது ரோடரி மிஷின்..பிரஸ் ஒர்க்கர்ஸ் ஸாலரி, எல்லாம்… பாக்கி இருக்கு…” “இன்னிக்கு என்ன தேதி…?” “முப்பதுங்க…” “ஒண்ணாந்தேதி சம்பளம் கொடுக்கறப்ப– த்ரீ மந்த்ஸ் நோட்டிஸுக்குப் பதிலா எல்லாருக்கும் மூணு மாசச் சம்பளமாகக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவை. பத்திரிகை ரெண்டாந் தேதியோட நிக்கட்டும். பேப்பர் நடத்திக் கிழிச்சது போரும். அச்சடிச்ச பேப்பரை விக்கிறதை விட அச்சடிக்காத வெள்ளைப் பேப்பர் விற்கிறதுக்கு ஒரு கடை திறந்தா லாபமாவது வரும்…” “சார்…சார்…! அவசரப்ப்டாதீங்க… இத்தனை கோபம் எதுக்கு எதுக்கும் பொறுத்துச் செய்யலாம். பாலிடிக்ஸ்லே எல்லாம் உண்டு சார் …வெற்றி – தோல்வி எல்லாம் சகஜம். பத்திரிகை ஒண்ணு கையிலே இருந்தாத் தோல்வியைக்கூட வெற்றியா மாத்திக்க முடியும் சார்…அவசரப்பட்டுடாதீங்க…” “உங்ககிட்ட யோசனை கேக்கலை. சொன்னதைச் செய்யி. ஹூ ஆர் யூ டு அட்வைஸ் மீ?” “சார்…நான் சொல்ல வந்தது என்னன்னா…” எதுவும் சொல்ல வேண்டாம். கம் அண்ட் மீட் மீ த்ரீ ஓ க்ளாக் டு – டே ஐ வில் கிவ் யூ எ செக்…எல்லாம் செட்டில் பண்ணிட்டு – நாளைக்கிப் பேப்பர்லே பத்திரிகை இரண் டாம் தேதிக்கு மேலே வராதுன்னும் போட்டுடு. ஏஜண்ட்ஸீக்கு எல்லாம் ‘டிபாசிட்டை’ திருப்பி அனுப்பிடு! ஐ வில் ஸ்டாப் தி ஹோல் டிராமா–" “….ஒ…கே…சார்”– பிரகாசம் இனிமேல் அவருடன் பேசுவதில் பயனில்லை என்பதை… போனில் ஒலித்த அவரது குரலிலிருந்தே தெரிந்துகொண்டான். இது அவன் எதிர் பார்த்தது தான் என்றாலும், இவ்வளவு விரைவாக அவன் எதிர்பார்க்கவில்லை. கமலக்கண்ணன் தமது பதவியைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டுமென்பதை அவனால் இப்போது அதுமானம் செய்ய முடிந்தது உடனே இதைப்பற்றிக் கலைச்செழியனுக்கும் மாயாவுக்கும் ஃபோன் செய்தான் பிரகாசம். மாலையில் அவன் கமலக்கண்ணனைக் காணப்போகு முன் கலைச்செழியனைச் சந்தித் தாக வேண்டிய முக்கியமான காரியம் இருந்தது அவனுக்கு. பகுதி -16 மாலையில் பயமுறுத்தக்கூடிய வேறொரு செய்தியும் கமலக்கண்ணனுக்கு நம்பிக்கைக்குரிய வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த அசெம்பிளிக் கூட்டத்தின் போது அவர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரலாம் என்று தெரிந்தபோது நிலைமை இன்னும் தீவிரமாகியது. இராஜிநாமா செய்து வெளியேறிவிட வேண்டுமென்ற பதற்றமும், பரபரப்பும், அவர் மனத்தில் அதிகமாயின. அவமானப்பட்டு, மரியாதைக் குறைவாகிப் பத்திரிகைகளில் சந்திசிரிக்கு முன் தப்பி விடவே விரும்பினார். அவர் தன்மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்து நிறைவேறுவதற்கு முன் தானே பதவியிலிருந்து விலகிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கமலக்கண்ணன். அவர் இப்படி மனங்குழம்பிப் பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் பிரகாசம் அவரைத் தேடி வந்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. ‘தினக்குரல்’ – கணக்கு வழக்குகளைத் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விவரங்களைத் தெரிவித்துச் சுருக்கமாகவும் அளவாகவும் கண்டிப்பாகவும் பேசினார். ’செக்’கும் எழுதிக் கொடுத்தார். அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசுவதாலோ, எதிர்த்து விவாதிப்பதாலோ பயன் இல்லை என்பதைப் பிரகாசமும் புரிந்துகொண்டு விட்டான். ஆகவே அவன் ’செக்’கை வாங்கிக்கொண்டு புறப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. அவன் புறப்பட்டுப் போன பின்பு – சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பியிருந்தார். அவர். பிறகு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக முதல மைச்சருக்குத் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை எழுதுவதற்கு உட்கார்ந்தார். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் தயக்கமேற்பட்டது. நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் தமிழில் எழுதத் தன்னால் முடியுமோ முடியாதோ, என்ற பயத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதலானார். எழுத எழுதக் கடிதம் நீண்டு கொண்டே போயிற்று. கடைசிப் ‘பாரா’வில் இராஜிநாமா செய்வதைப் பற்றித் தனியாக சிலவாக்கியங்கள் எழுதித் தன்னுடைய பதவி விலகலை ஏற்குமாறு முதலமைச்சரை வேண்டிக் கையொப்பமிட்டுக் கடிதத்தை முடித்தார் கமலக்கண்ணன், மாலை ஆறுமணிக்கு முதலமைச்சருக்கு ஃபோன்செய்து, நேரில் ஒரு கடிதம் கொடுக்கவேண்டும்! இப்போது உங்களைப் பார்க்க வரலாமா?– என்று கேட்டார். வரச் சொல்லி முதலமைச்சரிடமிருந்து பதில் கிடைத்தது.ஃபோனில் தான் பேசியபோது, “என்ன கடிதம்? இப்போதே அதை என்னிடம் கொடுப்பதற்கு என்ன அவசரம்”– என்று முதலமைச் சர் ஒப்புக்குக் கேட்டிருந்தாலாவது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அப்படி எல்லாம் கேட்கவோ தயங்கவோ செய்யாமல் உடனே வரச்சொல்லி முதலமைச்சர் பதில் கூறியதிலிருந்து ’தன்னுடைய பதவி விலகலை’…அவர் எதிர்பார்க்கிறார் என்ற அநுமானம் கமலக்கண்ணனுக்குள்ளே உறுதிப்பட்டது. இந்தச் சூழ்நிலை அவருடைய மனத்துக்கு அதிர்ச்சியை அளித்தாலும் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார். “நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்” – என்று கட்சியிலிருந்தோ, மந்திரி சபையிலிருந்தோ யாராவது ஒருவர் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடுமென்றுகூட அவரால் எதிர்பார்க்க முடியவில்லை. பணமும், காரும், பங்களாவும், வீடும், வேண்டியபோதெல்லாம் தன்னைத் தேடித் தேடிக் கும்பிடு போட்ட கட்சி ஆட்களும், காரியக்கமிட்டி உறுப்பினர்களும் – இப்போது ஏன் அறவே தன்னை ஒதுக்கியும், விலக்கியும் ஓடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வேதனைப்பட்டார் கமலக்கண்ணன். மாலை ஆறே முக்கால் மணிக்கு அவர் முதலமைச்சர் வீட்டுக்குப் புறப்பட்டார். முதலமைச்சர் வீட்டு வராந்தாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வட்டம் போட்டுக்கொண் டிருந்தார்கள். கமலக்கண்ணன் கையில் முதலமைச்சரிடம் கொடுப்பதற்கான கடிதத்தோடு போர்டிகோவில் காரை விட்டு இறங்கியபோது – வராந்தாவில் வட்டம் போட்டுக் கொண் டிருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருடைய கண்களும் திரும்பிப் பார்த்தன. கமலக்கண்ணன் அவர்களுடைய வணக்கங்களையோ, கைகூப்புதல்களையோ, பொருட் படுத்தாமல் படியேறி உள்ளே நுழைந்தார். முதலமைச்சர் தமது அறையில் தயாராகக் காத்திருந்தார். கமலக்கண்ணன் உள்ளே நுழைந்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார். ஆனால் கமலக்கண்ணன் உட்கார வில்லை. “திஸ் இஸ் மை ரெஸிக்கனேஷன் லெட்டர்”– முதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்லாமல் அதை வாங்கிப் பிரித்துக்கொண்டே கேட்டார்:– “நான் இதைப் படிக்கிறவரை தயவுசெய்து இருக்க முடியுமா?” “எக்ஸ்க்யூஸ் மீ சார்!…நோ நீட் டு வெயிட். ஐயாம் டேக்கிங் லீவ்…” – பதில் பேசாமல் முதலமைச்சர் கைகூப்பினார். கமலக்கண்ணனும் பதில் பேசாமல் கைகூப்பிவிட்டு வெளியேறினார். வராந்தாவில் பத்திரிகை நிருபர்கள் வழிமறித்தனர். “எனி…நியூஸ்…ஃபார் பிரஸ்…” “நோ…நோ…நியூஸ் ஃபரம் மை எண்ட்…” “ஏதாவது கேட்கலாமா சார்…!” “ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர்…ஹி வில் டெல் யூ நியூஸ்…” – இந்த பதிலில் ஆஸ்க் ‘அவர்’ சீஃப் மினிஸ்டர், என்று கமலக்கண்ணன் கூறாமல் ‘ஆஸ்க் யுவர் சீஃப்மினிஸ்டர்’ என்று கூறியதிலேயே தங்களுக்கு வேண்டிய பதில் இருப் பதைப் பத்திரிகை நிருபர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படிக் குறிப்பாக அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே தான் கமலக்கண்ணனும் அப்படிக் கூறியிருந்தார். மேலும் வாயைக் கிளறும் நோக்கத்துடன் ஒரு துடிப்பான நிருபர் கமலக்கண்ணன் காரில் ஏறுமுன் கேட்டார். “எனிமோர் நியூஸ் டு ஸே…?” “நத்திங் மோர் டு ஸே…” – என்று கூறி கார்க்கதவைக் கொஞ்சம் அதிக ஓசை எழும் படியாகவே இழுத்து அடைத்தார் கமலக்கண்ணன். கார் புறப்பட்டது. வீடு திரும்பியதும் மனைவி அவரிடம் பேச வந்தாள். ’’சனியனைக் கைகழுவியாச்சா இல்லையா?" “கைகழுவியாச்சு. ராத்திரி சாப்பாட்டுக்குப் பாய்சம் வேணா வையி…” “நிம்மதியா இன்னிக்கி ராத்திரி ஒரு சினிமாவுக்குப் போகலாம் வரீங்களா…” “அவசியம் வரேன். என்ன படம்?” “லவ்வர்ஸ் இன் ஹொனலூலூ… “போகலாம்…” – இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மனைவி குழந்தைகளோடு திரைப்படம் பார்க்கப் போனார் அவர். திடீரென்று குடும்ப வாழ்க்கையையும், குடும்ப வாழ்வின் சுகங்களையும் அக்கறையோடு அநுபவிக்க வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. பொது வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றம் இதற்குக் காரணமா அல்லது தனிவாழ்வில் தன்னை, மறைத்துக் கொள்ள விரும்பும் விருப்பம் காரணமா என்று கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. சினிமாவிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு மணி. குழந்தைகள் தங்கள் அறைக்குப் படுத்துக் கொள்ளப் போனார்கள். அவர் நிறையக் குடித்தார். அதிகம் குடிக்காமல் தடுக்க மனைவி எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. கவலையை மறக்க மதுவில் மூழ்க வேண்டியிருந்தது அவருக்கு. மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கும் போது எட்டு மணிக்கு மேலாகி விட்டது. எழுந்திருந்ததும் எழுந்திராததுமாகத் தலைப்பக்கம் டீப்பாயில் தயாராகக் கொண்டு வந்து மடித்து வைக்கப்பட்டிருந்த காலைத் தினசரிகளை எடுத்து ஆவலோடு புரட்டத் தொடங்கினார். அவருடைய இராஜி நாமாச் செய்தி – அதை முதலமைச்சர் ஒப்புக் கொண்டு விட்டதாக அறிவித்திருந்த அறிவிப்பு எல்லாம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருந்தன. தமிழ்த் தினசரிகளில் முதல் பக்கத்திலும், ஆங்கிலத் தினசரிகளில் மூன்றாம் பக்கத்திலுமாக இந்தச் செய்தி பெரிதாக வெளியாகியிருந்தது…’நோ நியூஸ் ஃப்ரம் மை எண்ட்’என்பது முதல் ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர். ஹி வில் டெல் யூ நியூஸ் என்பதுவரை தான் நிருபர்களிடம் உரையாடிய வார்த்தைகள் அனைத்துமே பத்திரிகைச் செய்தியில் ஒன்று விடாமல் இருப்பதைக் கமலக்கண்ணன் படித்தார். காபியோடு உள்ளே நுழைந்த சமையற்காரன், “சார்! வாசல்லே உண்ணாவிரதப் பந்தலையும் காணலை, ஆளையும் காணோம்” என்றான். தன்னுடைய இராஜிநாமா அந்த விளைவை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று கமலக் கண்ணனுக்குத் தோன்றியது. சமையற்காரனுக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. பகல் சாப்பாடு முடிந்ததும் இடைவேளை ஓய்வுக்குப் பின் சமையற்காரன் தமிழ்த் தினசரியை ஒரு வரிவிடாமல் படிக்கும்போது அவனுக்கு எல்லா விஷயமும் தானே தெரிய வாய்ப்பிருக்கும் என்று அவர் தனக்குள் எண்ணிக்கொண்டார். ஏதோ நினைத்தவராக கார் டிரைவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரும்படி சமையற்காரனை அனுப்பினார். டிரைவர் வந்து கும்பிட்டுவிட்டு பவ்யமாக ஒதுங்கி நின்றான். சமையற்காரனும் போகவில்லை. “முன் ஹால்லே பெரிசா ஆளுயரத்துக்கு ஒரு காந்தி படம் மாட்டியிருக்குப் பாரு; அதைக் கழட்டி ’நீட்டா’க் கட்டி எடுத்துக்கிட்டுப் போயி திண்டிவனத்துக்குப் போற வழியிலே காந்திய சமதர்ம சேவா சங்கம்னு இருக்கே அங்கே கொடுத்திட்டு வந்திடனும்…இப்பவே புறப்படனும்…அந்த ப்ரின்ஸிபல் அம்மா ஏதாவது கேட்டாங் கன்னா என்னோட அன்பளிப்பா இந்தப் படத்தை அனுப்பினேன்னு சொல்லிடு…” டிரைவர் அப்படியே செய்வதாகக் கூறிவிட்டுப் போனான். படத்தைக் கழற்றிக் கட்டிக்கொடுப்பதில் அவனுக்கு உடனுதவுவதற்காகச் சமையற்காரனும் கூடவே சென்றான். சிறிது நேரத்தில் மனைவி வந்து வினவினாள்: “ஏன் அந்த காந்தி படத்தை எடுக்கச் சொல்லிட்டீங்களா…?” “ஆமா இனிமே அது எதுக்கு?” அவள் பேசாமல் போய்விட்டாள். அவர் ‘தினக்குரல்’ காரியாலயத்துக்கு ஃபோன் செய்து பிரகாசத்தைக் கூப்பிட்டார் பிரகாசம் பேசினான். “என்ன? எல்லாருக்கும் நோட்டிஸ் கொடுத்தாச்சா?” “கொடுத்தாச்சு சார் இன்னிக்குச் சாயங்காலம் எடிஷன்தான் கடைசி…” “அதுகூட வேண்டாம். நிறுத்திப்பிடு…என் பேப்பர்லியே நான் இராஜிநாமா பண்ணினேன்னு நீ நியூஸ் போட்டு ஊர் உலகத்துக்கு அனுப்ப வேணாம். ‘மேக்அப்’ – ஆனவரை விட்டுட்டு ஆபீஸை க்ளோஸ் பண்ணி கம்பாஸிடர் – மெஷின்மேன், ஃபோர்மேன் – எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடு…’ “சரி சார்…!” கமலக்கண்ணன் ஃபோனை வைத்தார். விரக்தியின் எல்லையில் ஒர் பயங்கர நாச வேலைக்காரனுடைய மனப் பான்மை இருந்தது அவருக்கு. இந்த விநாடி வரை ஒரு ஏழாந்தர எட்டாந்தரத் தொண்டன் கூட அவருக்கு ஃபோன் செய்து அவரது ராஜிநாமாவுக்காக வருந்தவோ, இரங்கவோ இல்லை என்பது அவருக்கு ஏக்கத்தை அளித்தது. ஒரு பதவியை அடையும் போது அனுதாபமும் ஆதரவும் காட்டுகிறவர்களின் துணை இல்லாமல் கூட அடையலாம். ஆனால் விலகும் போது அனுதாபமும் ஆதரவும் இல்லாத நிர்த்தாட்சண்யத்துக்கு இடையே விலகுவது மிகமிகப் பரிதாபகரமானது. அந்தப் பரிதாபத்தை உலகுக்கு மறைக்க அவர் ஆத்திரமாகவும் விரக்தியாகவும் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் அவர் மனத்தில் நிரம்பியிருந்ததென்னவோ வேதனையும் புழுக்கமும் தான். கோடீஸ்வரனாகவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேண்டிய ஆள்கட்டுள்ளவனாகவும் இருந்த தான் ஏன் இந்தப் பதவிக்குப் போய் இப்படிச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டோம் என்று நினைப்பதற்கே வேதனையாயிருந்தது அவருக்கு. எடுத்ததற்கெல்லாம் தேடி வந்து சுழைக் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்கும் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கூட அன்று தேடி வரவில்லை. வேண்டுமென்றே யாவரும் தன்னைத் தேடிவராமல் புறக்கணிப்பது போலக் கமலக்கண்ணனுக்கு அன்று ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று. ஒரு கணம் எருக்கம்பூ மாலையும் கையுமாகக் காந்திராமன் எதிரே தோன்றிச் சிரிப்பது போல் பிரமை உண்டாயிற்று. உலகில் எல்லாரும் ஒன்று சேர்ந்துகொண்டு, ‘நீ அவமரியாதைக்குரியவனே!’ என்று தன்னை ஒதுக்கி விட்டது போல் தோன்றியது அவருக்கு அன்று அந்த வார ‘சர்வோதயக் குரல்’ வெளியாக வேண்டும். கடைக்கு ஆளனுப்பி ஒரு பிரதி வாங்கி வரச் செய்து காந்திராமன் தன்னைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும் போல் அவருக்கு ஆசையாயிருந்தது. சமையற்காரனைக் கூப்பிட்டுச் சில்லறை கொடுத்து “‘சர்வோதயக் குரல்’ இந்த வாரப் பிரதி ஒண்னு வாங்கிட்டு வா” என்று கூறியனுப்பினார். சமையற்காரன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, “இன்னும் வரலீங்க…சாயங்காலம் தான் கிடைக்கும்னு கடைக்காரன் சொன்னான்”–என்று சொல்லிக் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். சாயங்காலம் வரை காத்திருக்கப் பொறுமையின்றித் தவித்தார் அவர். சில வேளைகளில் ஆழமாகச் சிந்தித்த போது தன்னை ஆதரிப்பவர்களைப் போலவும் நேசிக்கிறவர்களைப் போலவும் நடித்தும், கூழைக்கும்பிடு போட்டும் ஏமாற்றியவர் களைவிட நேருக்குநேர் தைரியமாக எதிர்த்துக் கொண்டிருக்கும் காந்திராமன் நல்லவர் என்று தோன்றியது கமலக்கண்ணனுக்கு, அரசியலில் போலியான துணையை விட நியாயமான எதிர்ப்பு நல்ல உதவி செய்ய முடியும். கூழைக் கும்பிடுபோடும் பொய்யான நண்பனைவிட மனதிலிருந்து வெளியாகும் உண்மைச் சொற்களால் எதிர்க்கும் எதிரி நல்லவன் என்று நம்பலாம் போலிருந்தது. தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற சுயமரியாதை – பதவியிலிருக்கிறவனுக்கு இருப்பதில்லை தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற துணிவும் செருக்கும். ஆண்டு கொண்டிருக்கிறவனுக்கு, இருக்க முடிவதில்லை. தொண்டனாக இருந்து இயக்கத்தை, அதன் சத்திய ஆவேசத்தைத் தன் நெஞ்சினுள்ளேயே வேள்வித்தீயைப் போல ஓர் அவியாத கனலாக வளர்த்துக் கொண்டிருப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதைப் போல் பதவிகளைத் தோள் நிறையச் சுமந்து கொண்டு அந்தப் பதவிகள் போய்விடுமோ என்று பயந்துகொண்டே காலங்கழிப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை. – மனத்தின் விரக்தியில் அவருக்கு இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியது. ‘சர்வோதயக் குரல்’ இதழ் அன்று மாலையிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் சமையற்காரன் அந்த வாரத்து ’சர்வோதயக் குர’லை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை ஆவலோடு பிரித்துப் படித்தார் அவர். கமலக்கண்ணனுடைய ராஜினாமாவை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதை வரவேற்று அதில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. “கனல் விளைந்து காக்கும் தீயை அகத்திடை மூட்டுவோம் – என்று மகாகவி பாடியிருப்பது போல் நெஞ்சில் சத்தியாவேசமும், தார்மீகக் கோபமும் நிறைந்துள்ள தொண்டர்களின் கருத்துக்கு எதிராக நடைபோடும் எந்த இயக்கமும் உருப்படாது. ஒரு கட்சியின் செல்வாக்கு அதன் உண்மை ஊழியர்களின் பலம் தான் என்பதை உணர்ந்து முதலமைச்சர் இந்த இராஜினாமாவை ஏற்றதைப் பாராட்டுகிறோம்”–என்று சர்வோதயக் குரலின் தலையங்கத்தில் காந்திராமன் எழுதியிருந்தார். – இந்தத் தலையங்கத்தைப் படித்தபோது காந்திராமன் மேல் கோபப்படுவதற்குப் பதில் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது கமலக்கண்ணனுக்கு. ‘சிறுமை கண்டு பொங்கும்’ அந்த நெஞ்சின் கனலைக் காந்திராமனிடமும், சிறுமைகளைப் புரியும் கோழைத்தனத்தைத் தன்னிடமும், இருக்கச் செய்த படைப்பின் மேலேயே கோபம் வந்தது அவருக்கு. கையாலாகாத் தன்மை நிறைந்த அந்த ஆற்றாமைக் கோபத்தால் அவர் மனம் தவித்தது, ஏங்கியது, இரங்கியது, புழுங்கியது. மீண்டும் எப்போதாவது ஒரு பிறவியில் வசதிகளே இல்லாத சாதாரணப் பாமரனாப் பிறந்து நெஞ்சில் சத்திய ஆவேசம் என்ற கனல் ஒளிர ஒளிர – அதை வளர்த்த படியே ஒரு முழு வாழ்க்கையை அசல் வாழ்க்கையைத் தொண்டனாக வாழ வேண்டும் போல் தவிப்பாயிருந்தது அவருக்கு. – உடனே அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி மறக்கவும் முடியவில்லை. ஏனென்றால் விருப்பு வெறுப்பற்றுப் பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் மற்றவர்களுக்குப் பயப் படாமல் இருக்க முடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரை தான் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை. தலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்புதான் ‘இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கி விடுவோமோ’ என்ற பயமும் இதற்கும் ‘மேலே மேலே போக வேண்டுமே’ என்ற சுயநலமும் வருகின்றன. உடனே மீண்டும் மறுபிறவி எடுக்க முடியுமானால் வாழ்நாள் முழுவதும் இந்தப் பயமும் சுயநலமுமில்லாத நெஞ்சக்கனலுடன் காந்திராமனைப் போல் ஒர் நியாய வாதியான ஏழையாகப் பிறக்கத் தவித்தார். இந்த விநாடியிலும் இனி எந்த விநாடியிலும் இந்தத் தவிப்பும் தாகமும்தான் அவர் மனத்தை நெருப்பாய் எரித்துக் கொண்டிருக்கும் போலும். ★ இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Shobia kaniyam - Balajijagadesh ------------------------------------------------------------------------ 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html