[] [நல்ல பிள்ளை] நல்ல பிள்ளை நிர்மலா ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - நல்ல பிள்ளை - முன்னுரை - 1. நல்ல பிள்ளை - 2. ஒரு கிளை, இரு மலர்கள் - 3. காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும் - 4. பெயர் போன எழுத்தாளர் - 5. அழகான மண்குதிரை - 6. புது அம்மா வாங்கலாம் - 7. என் பெயர் காதல் - 8. பெரிய வாத்தியார் - 9. இதுவும் ஒரு விடுதலைதான் - 10. ஏணி - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 நல்ல பிள்ளை [nallapillai] நல்ல பிள்ளை – சிறுகதைகள் வகை – சிறுகதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா வெளியீடு: http://FreeTamilEbooks.com மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 முன்னுரை வணக்கம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளைப்பற்றிய குறிப்பு இதோ: எந்த வயதானாலும், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அதிலும், படிப்பு இல்லாவிட்டால், அதோகதிதான். ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. (நல்ல பிள்ளை). குழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதோ, பின்தங்குவதோ வளர்ப்பினால் என்பதை வலியுறுத்துகிறது `ஒரு கிளை, இரு மலர்கள்’. தன் கலாசாரத்தில் பெருமிதம் கொள்ளாது, பிற இனத்தவரிடம் அதை ஏளனமும் செய்தால், தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணும் சில பரிதாபத்திற்குரியவர்களைக் கண்டு வருந்தியிருக்கிறேன். அப்படி ஒரு ஆசிரியை ‘காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும்’ என்ற கதையில் வருகிறாள். `தமிழர்கள் குடிக்கிறார்கள், அடிக்கிறார்கள்’ என்று பங்களாதேசிகளை மணந்துகொண்ட தமிழ்ப்பெண்கள் மலேசியாவில் அநேகர். வெளிநாட்டுக்காரர்கள் குறுகிய காலம் வேலை செய்ய இங்கு வந்துவிட்டு, பின்னர் தாய்நாட்டுக்கே திரும்பிப் போய்விடும் அபாயம் இருப்பதை இப்பெண்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை (`அழகிய மண்குதிரை’). சிறுபான்மை இன மாணவிகள் இடைநிலைப் பள்ளியில் படும் பாடும், அவர்களை முன்னைற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஆசிரியையின் போராட்டமும். (ஏணி) நன்றி. நிர்மலா ராகவன், மலேசியா [pressbooks.com] 1 நல்ல பிள்ளை “மாயா!” டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாயா காதில் விழாததுபோல இருந்தாள். “ஏ மாயா! கூப்பிட்டா, ஒடனே பதில் கொரல் குடுக்கறதில்ல? செத்தா தொலைஞ்சுட்டே?” அந்த வேளையில் தந்தையின் குரலை எதிர்பார்த்திருந்தாலும், மாயாவுக்கு எரிச்சலாக எரிந்தாது. “என்னப்பா?” என்றாள் அலுத்தபடி. “சீனன் கடைக்குப் போய், நான் அனுப்பினதாச் சொல்லி வாங்கிட்டு வா. மசமசன்னு வேடிக்கை பாக்காம, போனமா, வந்தமான்னு..!” ஒருநாளைப்போல் இதே வார்த்தைகள்தாம். என்ன வாங்கி வருவது என்பதை அவளிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தினமும் அதேதானே! தான் ஒரு ஆணாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் மாயா. இப்படி இருட்டில், குண்டும் குழியுமாக இருக்கும் குறுக்குப் பாதையில் பயந்து பயந்து நடந்துபோக வேண்டாம். பயம் வழியில் மட்டும் இருக்கவில்லை. சீனன் கடையென்று பெயர்தான். அந்த `பங்களா’ மட்டும்தான் கடையில் இருப்பான். அந்த நாட்டுக்காரர்களுக்கே உரிய அடர்ந்த இமைகளுடன் கூடிய அகன்ற கண்களும், நல்ல உயரமாக, அந்த உயரத்தினால் உண்டான ஆழ்ந்த குரலுமாய்..! அவன் ஏன் இப்போதெல்லாம் தன்னோடு சண்டை பிடிக்கிறான் என்று மாயாவின் யோசனை போயிற்று. “ஏ பொண்ணு! அப்பா பேரைச் சொல்லி, ஒனக்காகத்தானே வாங்கிட்டுப் போறே?” என்று மலாய் மொழியில் கேட்டு அவன் சிரித்தபோது, முதலில் அவளுக்குக் கோபம்தான் வந்தது. “இல்ல ஒண்ணும்!” இதே உரையாடல்தான் தினமும். “என் பேரு கரீம். ஒன் பேரு என்ன?” தோள்மேல் படிந்தது அவன் கரம். இன்னதென்று புரியாத உணர்வுடன் மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். “சொல்ல மாட்டேன், போ!” “சொல்லாட்டிப் போயேன்! எனக்குக் கண்டுபிடிக்க முடியாதா!” அடுத்த முறை, தன் தந்தை முனியனுடன் அவள் கடைக்கு வந்திருந்தபோது, `ஏ மாயா!’ என்று அவர் உரக்க அழைத்தது தப்பாகப் போயிற்று. அவள் தனியாக வந்தபோது, “மாயான்னா ஒரு சாமான் உண்மையா அதோட இடத்தில இல்லேன்னு அர்த்தம். நீ இருக்கியான்னு தொட்டுப் பாக்கட்டுமா?” அவள் மார்பைப் பிடித்து அழுத்தினான். அவள் திகைப்புடன் விரிந்த விழிகளுடன் அவனைப் பார்க்கையில், கண்ணடித்துவிட்டு, கையை விலக்கிக்கொண்டான். மாயாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இது தப்பு என்று பட்டது. யாரிடம் போய் சொல்வது? கண்டிப்பாக, அப்பாவிடம் சொல்ல முடியாது. `அவன் ஒன்னைப் பிடிக்கிறவரைக்கும் நீ வேடிக்கை பாத்துட்டு இருந்தியா?” என்று, அவள்மேலேயே பழியைத் திருப்புவார். அவரைப் பொறுத்தவரை, பெண்களால்தான் இந்த உலகமே கெட்டுக் குட்டிச்சுவராக இருக்கிறது. அம்மா மட்டும் செத்திருக்காவிட்டால், அந்த துக்கத்தை மறக்க இப்படி அவர் குடித்தே சாக வேண்டியிருக்குமா? மாயாவுக்கும் அம்மாவின்மேல் கோபம்தான். தன்னை வளர்க்கவென்று, பாட்டி வீட்டில் விட்டிருக்க மாட்டாரே அப்பா! `பொம்பளைப் பிள்ளைக்குப் படிப்பு எதுக்கு? நானெல்லாம் படிச்சேனா! வளந்து ஆளாகலே? கல்யாணம் கட்டி, பிள்ளைங்களைப் பெத்து வளக்கலே?” என்று, மந்திரம்போல் பாட்டி தினமும் கூறிவர, `படிப்பு எதற்கு!’ என்று மாயாவுக்கும் தோன்றிப்போயிற்று. பத்து வயதானபின், பள்ளிக்கூடத்திற்குப் போவதாகப் பாவனை காட்டிவிட்டு, ஆற்றங்கரை, ரம்புத்தான் தோட்டம் என்று கால்போனபடி சுற்ற ஆரம்பித்தாள். வாரத்தில் நான்கு நாட்கள் அவள் பள்ளிக்கூடத்துக்கு வராத மர்மத்தை அறிய இரண்டு ஆசிரியைகள் வீட்டுக்கு வந்தபோது, நல்ல வேளையாக, மாயா வீட்டில் இருக்கவில்லை. பாட்டி, “இது இருக்கா, இல்ல செத்துத் தொலைஞ்சிடுச்சான்னு பெத்த அப்பனுக்கே அக்கறை இல்லே. பள்ளி உடுப்பை மாட்டிக்கிட்டு காலையில போகுது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். வயசுக்கு வந்த பிள்ளை ஒடம்பில கொழுப்பெடுத்துப் போய் எங்கெங்கேயோ சுத்தினா, அதுக்கு நான் என்னா செய்யறது!” என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டாள். மேலே எதுவும் கேட்காமல், விடைபெற்றுக் கொண்டதாகப் பாட்டி மாயாவிடம் தெரிவித்தாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் பெண் உருப்பட்டால்தான் ஆச்சரியம் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். “நீ ஒங்கப்பன் வீட்டுக்கே போடி. கண்டவங்ககிட்ட பேச்சு கேக்க என்னால முடியாது,” என்று கைகழுவிவிட்டாள். முதலில், மாயாவுக்கு அந்த விடுதலை சுகமாக இருந்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் டி.வி, பிறரைப் பற்றிய வம்புப்பேச்சு என்று பொழுதை இலக்கின்றி கழித்தாள். ஒரு நாள் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு வீட்டில் நுழைந்த முனியன், “அன்னக்கிளி! வந்துட்டியா?” என்று தாபத்துடன் கூவி, அவளை அணைக்க முயன்றான். “அப்பா! நான் மாயா! அம்மா இல்லே!” என்ற அவள் அலறல் அவனுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அணைப்பு இறுகியது. `அது ஏன் என்னைப் பாத்தா எல்லா ஆம்பளைங்களுக்கும் தொட்டுப்பாக்கத் தோணுது?’ மாயாவுக்கு அழத்தான் முடிந்தது. “ஓ, மாயாவா?” ஏமாற்றத்துடன் அவளை விட்டாலும், “நான் தனியா எவ்வளவு கஸ்டப்படறேன், தெரியுமா, மாயா?” என்று பிதற்றியபடி மீண்டும் அவளை நெருங்கினான். முரட்டுத்தனமாக அவனை விலக்கிவிட்டு, இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த பாட்டி வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடினாள் மாயா. ஏதேதோ புலம்பிவிட்டு, “நான் இனிமே அந்த வீட்டுக்குப் போகவே மாட்டேன்!” என்று கதறியவளை, “விடுவியா! என்னமோத்தான் அழுவறியே! பொம்பளையாப் பொறந்துட்டயில்ல? நீ படவேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கு!” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி. “நேத்து டவுனிலேருந்து ஒரு பெரிய மனுசன் வந்து, வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டுட்டு இருந்தாரு. காடி போட்டுக்கிட்டு வந்தாரு!” அழுத்திச் சொன்னாள். “கண்காணாம அங்க போய் தங்கிக்க!” மாயாவின் பயம் அதிகரித்தது. எவர் வீட்டுக்கோ போவதா! தெரிந்தவர்களே இப்படி..! அவள் முகம் போன போக்கைக் கவனித்த பாட்டி, “ஒனக்குப் படிக்கவும் பிடிக்கல. வேற என்னதான் செய்வே? வயிறு பிழைக்க வேணாம்?” என்று அதட்டினாள், அவளுக்குப் படிப்பில் அக்கறை இல்லாது போனதற்குக் காரணமே தான்தான் என்றபதை உணராது. `ஒங்கப்பன், அந்தக் குடிகாரப் பாவி, தனியா கெடந்து சாவட்டும்!” என்று மருமகனுக்குச் சாபமும் கொடுக்கத் தவறவில்லை. `அப்பா’ என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன், அச்சத்துடன் மூச்சை இழுத்துக்கொண்டாள் மாயா. இங்கே இருந்தால், அப்பா தன்னை அவருடன் இழுத்துப் போனாலும் போவார்! அவள் ஒரு முடிவுக்கு வர அதிக நேரமாகவில்லை. புறப்படும்போது, “ஒன்னோட வேலை ஒரு சின்னப்பிள்ளையை பாத்துக்கிடறது மட்டும்தானாம். வீட்டைச் சுத்தமா வெச்சுக்க ஒனக்கு சொல்லியா குடுக்கணும்! நான் எப்படி ஒன்னைப் பழக்கியிருக்கேன்!” என்று, கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னையே மெச்சிக்கொண்டபடி பாட்டி சொல்லி அனுப்பினாள். `காடியில் பயணம் செய்கிறோம்!’ என்று எழுந்த பெருமையில் கடந்தகாலக் கசப்பெல்லாம் பின்னால் போயிற்று. புறம்போக்கு நிலத்தில், குறுகலான நான்கே தெருக்கள் கொண்ட கம்பத்தைத்தவிர வேறு எங்கும் போய் பழக்கமல்லாத அப்பெண்ணின் விழிகள் பெட்டாலிங் ஜெயாவின் நாகரீகமான வீடுகளையும், அடுக்குக் கட்டிடங்களையும் பார்த்து விரிந்தன. தன் முன்னால் அமர்ந்து காரை ஒரு கையால் லாவகமாக ஓட்டும் எஜமானரைப் பார்த்தாள். `அப்பாவும் இருக்கிறாரே, அழுக்குச் சட்டையும், துர்நாற்றமுமாக! இவர்மாதிரி பெரிய மனிதருக்கு மகளாகப் பிறந்திருக்க வேண்டும்!’ ஏக்கப் பெருமூச்சு விட்டாள். பாட்டி அடிக்கடி சொல்ல மாட்டார்கள், `புண்ணியம் செஞ்சிருந்தாத்தான் நம்ப வாழ்க்கை நல்லா இருக்கும்’ அப்படின்னு? வருத்தத்தினூடே, இந்த மனிதருடைய பிள்ளையாகப் பிறக்கும் புண்ணியம் செய்திருக்கும் குழந்தையின் ஞாபகம் வந்தது. “ஒங்க பிள்ளை பேரு என்னங்க ஐயா?” என்று கேட்டவளை திரும்பிப் பார்த்தான் முரளி. பதினான்கு வயது என்று அந்த முதியவள் அளந்தாளே? உயரமும் பருமனுமாக இருக்கும் இந்தப் பெண்ணுக்குக் கூசாமல், பதினேழு, பதினெட்டு சொல்லலாம். ஆனால், கண்ணில் அறிவுக்களை சுத்தமாக இல்லை என்று ஒரு நொடியில் அளந்தான். “படிச்சிருக்கியா?” “ம். நாலாவது வரைக்கும். பாட்டிதான், பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு நிப்பாட்டிட்டாங்க!” “தேவலியே! பத்திரிகை எல்லாம் படிப்பியா?” எங்காவது பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடு என்றால்? மாயா பயந்தாள். “மறந்து போச்சு..,” என்று இழுத்தாள். “ஒங்கப்பா, 1பள்ளிக்கூடத்துக்குப் போ!’ன்னு விரட்டலியா?” தான் மறக்க நினைத்த அப்பாவைப்பற்றிய பேச்சை அவன் எடுத்ததுமே அவள் முகம் வாடியது. “எங்கப்பா ரொம்ப மட்டம். நான் ஒருத்தி இருக்கிறதே அவருக்கு நெனப்பிருக்காது. எப்பவும் குடிப்பாரு!” என்றாள். அப்போது முரளியின் முகத்தில் நிம்மதியுடன் கூடிய சிறுமுறுவல் தோன்றியதை அவள் கவனிக்கவில்லை. பார்த்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவளுக்கு விவேகம் வளர்ந்திருக்கவில்லை. இன்று இதுவரை போதும் என்று நினைத்தவனாய், அவள் கேட்ட கேள்விக்கு நிதானமாகப் பதிலளித்தான் முரளி. “எங்க மகன் பேரு பாண்டி — பாண்டியன். அவங்கம்மா நர்ஸ் வேலை பாக்கறாங்க. அப்பல்லாம் நீதான் பாண்டியைப் பாத்துக்கணும். என்ன?” குழந்தை பாண்டியைப் பார்த்ததுமே மாயாவுக்குப் பிடித்துப்போயிற்று. `ஏய்! என் காலைக் கொஞ்சம் பிடிச்சுவிடு!’ என்று, மனைவி இல்லாத சமயம் பார்த்து அவளை வேலைவாங்கிய எஜமானர் போலவோ, `இதை எங்க போய் பிடிச்சுட்டு வந்தீங்க? சரியான மக்கு! சுத்தம்னா என்னான்னே இதுக்குத் தெரியல!’என்று அவளெதிரேயே பழித்த வீட்டுக்கார அம்மாள் போலவோ இல்லாது, `அக்கா, அக்கா,’ என்று அவளையே சுற்றிச் சுற்றி வந்தான் அந்த இரண்டு வயதுப் பாலகன். வீட்டில் அவனுடைய பெற்றோர் இருவரும் வெளியே போய்விடும் நாட்களில் அவனுடன் சேர்ந்து உட்கார்ந்து, கடையில் வாங்கிய முறுக்கையோ, பிஸ்கோத்தையோ கடித்தபடி, பெரிய கலர் டி.வியில் கார்ட்டூன் படங்கள் பார்த்தபோது, உடல் வலிகூட பெரிதாகத் தெரியவில்லை. பார்ப்பதற்கெல்லாம் தனக்குப் புரிந்தவரை விளக்கம் சொல்லும்போது அவன் கைகொட்டிச் சிரித்தபடி அவளையே பார்க்கையில், புளகாங்கிதம் ஏற்படும் மாயாவுக்கு. இனி என்றும் அவனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவா தோன்றும். அன்று பாண்டியின் அம்மாவுக்கு இரவு வேலை. “ஏய்! பாண்டி தூங்கிட்டானில்ல? மேல வா! தினமும் கூப்பிடணுமா? சொல்லி இருக்கேன்ல, அவன் தூங்கினதும், நீயே வரணுமின்னு?” மாடியிலிருந்து முரளியின் குரல் அதிகாரமாகக் கேட்டது. ஆனால் மாயாவின் காதில் அவ்வார்த்தைகள் விழுந்ததாகத் தெரியவில்லை. அசையாது அமர்ந்திருந்தாள். `ஒரு வேலைக்காரப் பெண்ணுக்கு இவ்வளவு திமிரா!’ அவனுக்கு ஆத்திரம் எழுந்தது. மனைவி இவளைப்பற்றி ஓயாது குற்றப் பத்திரிகை வாசித்தாலும் கண்டுகொள்ளாமல், தான் இவளை பாசார் மாலாமிற்கு (மலாயில், இரவுச் சந்தை) அழைத்துப்போய், குட்டைப் பாவாடை, இடுப்புக்குக் கீழ் தொங்கும் தொளதொள சட்டை, வளையல், பின்னலில் கட்டும் பிளாஸ்டிக் ரோஜா என்று எவ்வளவு சாமான்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்! நன்றிகெட்ட ஜன்மம்! கேள்வி கேட்ட மனைவியை, `பாவம், ஏழை! தாயில்லாப் பொண்ணு வேற! இவளை சந்தோஷமா வெச்சுக்கிட்டாதானே நம்ப பிள்ளையை கவனமா பாத்துக்குவா!’ என்று அடக்கினோமே! மாடியிலிருந்து வேகமாகக் கீழே இறங்கி வந்தவன், முரட்டுத்தனமாக அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான். “சனியன்! செவிடாப் போயிட்டியா?” என்று அலறினான். ஆள்காட்டி விரலை உதட்டின்மேல் வைத்து, அவனை அடக்கினாள்: “ஷ்..! பாண்டி தூங்கறான்!” விழிகள் எங்கோ நிலைகுத்தி நின்றன. மூடியிருந்த அறைக் கதவைத் திறந்து பார்த்தான் முரளி. “எங்கே தூங்க வெச்சே? இங்கே காணோமே?” “காணும்?” என்று திருப்பிக் கேட்டபடி, அவனைத் தள்ளிவிட்டு, மாயா உள்ளே எட்டிப் பார்த்தாள். “முட்டாள்! என்னையே கேளு! அவனைப் பாத்துக்கத்தானே நீ இருக்கே!” அடுத்த அரைமணி நேரம், அவர்களிருவரும் வீட்டுக்குள் பாண்டியைத் தேடினார்கள். மூடியிருந்த அலமாரிக் கதவைத் திறந்து, அரிசி மூட்டையின் பின்னால் என்று ஒரு மூலை விடாமல் தேடினார்கள். முரளியின் மனம் பரிதவித்தது. ஒரே குழந்தை! உடலில் ஒரு குறையுமில்லாத ஆண் குழந்தை! குறைந்த பட்சம், காதுகூட குத்தவில்லை. சில மாந்திரீகர்கள் உடற்குறை எதுவுமற்ற தலைச்சன் ஆண்குழந்தையைக் கொன்று, அதன் உயிரற்ற உடலை `ஜாம்பி’யாக்கி, தாம் விரும்பியபடி தீய காரியங்களில் ஈடுபடுத்துவார்களாமே! `காதில் துளை இருந்தால், உடலின் முழுமை போய்விடும். அதுதான் குழந்தைக்குப் பாதுகாப்பு!’ என்று அம்மா அடித்துக்கொண்டபோது, `பத்தாம்பசலித்தனம்!’ என்று கேலி செய்தோம்! நடுங்கிய கரங்களுடன் போலீசை வரவழைத்தான். யார் எது கேட்டாலும், “இங்கதான் தூங்கிட்டு இருந்தான். அவனுக்குப் பிடிச்ச ஆமை கதை சொல்லித் தூங்கவெச்சேன்!” என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடி இருந்தாள் மாயா. “இது ஒரு இடியட். பொய் சொல்ற அளவுக்கு இதுக்கு சாமர்த்தியம் கிடையாது. யாரோ கடத்திட்டுப் போயிருக்காங்க!” என்றான் முரளி, குரலடைக்க. நாட்டில்தான் குழந்தைகளைக் கடத்துவது சர்வசாதாரணமாக நடக்கிறதே! `பத்து லட்சம் ரிங்கிட் கொடுத்தால்தான் உன் குழந்தையை விடுவேன். இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்!’ என்று தொலைபேசியில் மிரட்டல் வருமோ? போலீஸ் நாய் வந்தது. குரைத்தபடி, அது பின்புறத்திலிருந்த தோட்டத்திற்கு ஓடியபோது, முரளியின் கையைப் பிடித்து இழுத்தாள் மாயா. “பாண்டியை எழுப்பிடாதீங்க!” அவள் குரலிலிருந்த ஏதோ அவனை அதிரவைக்க, ஓட்டமும் நடையுமாக, பின்புறக் கதவைத் திறந்து வெளியே ஓடினான். அவளும் தொடர்ந்தாள். “இதோ!” அவள் காட்டிய இடத்தை வெறித்துப் பார்த்தான். பாண்டி பிறந்த வருடம் நட்ட செண்பக மரம் இப்போது நெடிதாக வளர்ந்திருந்தது. அதன்கீழ் மஞ்சள் நிறப் பூவிதழ்கள் உதிர்ந்திருந்த இடத்தில் புதிதாகக் கொத்தப்பட்ட மண்! அதிர்ச்சியுடன், மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டான் முரளி. “பாவி! என் குழந்தையை என்னடி செஞ்சே?” என்று மாயாவின் தோள்களைப்பற்றி அவன் உலுக்கிய வேகத்தில் அவளது சட்டையின் கைப்பகுதி கிழிந்து போயிற்று. “பாண்டி நல்ல பிள்ளை!” என்று திரும்பத் திரும்ப அவள் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒருவர் மண்ணைக் கொத்த, வெளிப்பட்டது — குப்பை போட வைத்திருந்த பெரிய, கறுப்பு வண்ண பிளாஸ்டிக் பை. அதனுள்…! `பாண்டி நல்ல பிள்ளை. பெரியவனாப் போயிட்டா, அவனும் அவங்கப்பா மாதிரி, வேலை செய்ய வர்ற பொண்ணுங்களை அசிங்கப்படுத்துவான். இல்ல, எங்கப்பா மாதிரி பெத்த பொண்ணுங்ககிட்டேயே தப்பா நடந்துக்குவான். பெரியாளாப்போனா, எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்! சின்னப்பிள்ளையா இருக்கிறப்போவே செத்துப்போனா, அவன் எப்பவும் நல்ல பிள்ளையாத்தானே இருப்பான்!’ பல நாட்களில், மனோதத்துவ நிபுணர்களிடம் சிறுகச் சிறுக மாயா தெரிவித்ததின் சாராம்சம் அது. வேலை செய்ய வந்த இடத்தில் நீண்ட காலம் அவளது பெண்மை பலவந்தமாகப் பறிக்கப்பட்டதால், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டது. கொலைக் குற்றத்துக்காக சிறைச்சாலை         செய்ய வேண்டியவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். வயதில் குறைந்த பெண்ணுடன் நீண்ட காலம் பலாத்காரமாக உடலுறவு கொண்ட குற்றத்துக்காக முரளி சிறைத்தண்டனை பெற்று, அங்கு அதேபோல் அவனைப் பிறர் பலாத்காரம் செய்தது மாயாவுக்குப் புரிந்திருந்தால் அவள் மகிழ்ந்திருப்பாளோ, என்னவோ! தான் அருமையாக வளர்த்த பாண்டியை, தன்னிடம் உண்மையான அன்பு செலுத்திய ஜீவனை, எந்தப் பெண்ணுக்கும் தீங்கு இழைக்காதவனாகக் காப்பாற்றிவிட்டோம் என்ற நிம்மதிதான் அவளிடம் நிலைத்திருந்தது. `என்னோட பாண்டி எப்பவும் நல்ல பிள்ளை!’ என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று கேள்வி. (தமிழ் நேசன் முத்திரைக்கதை, 2005) 2 ஒரு கிளை, இரு மலர்கள் “நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற இடத்துக்கே நீயும் போயிடணுமா?” கண்களில் பெருகிய நீரை அடக்கப் பாடுபட்டாள் சாந்தி. கண்ணீரைப் பார்த்தால், `இப்போ என்ன சொல்லிட்டேன், இப்படி மாய்மாலம் பண்ணறே?’ என்று அதற்கும் திட்டுவாள் பாட்டி. “ராமுவுக்கு பெரிய கிளாசில மைலோ குடுத்துட்டு, நீ சின்னதை எடுத்துக்கன்னு சொல்லல?” வசவு தொடர்ந்தது. அது ஏன் தான் எது செய்தாலும், பாட்டிக்கு அது தப்பாகவே தெரிகிறது? அந்த குழந்தைக்குப் புரியத்தானில்லை. பரிதாபகரமாக விழித்தாள். “அண்ணன்தான் சின்னதை எடுத்துக்..,” ஈனஸ்வரத்தில் அவள் முடிப்பதற்குள் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. கன்னத்தைத் தடவியபடி, ராமுவைத் தேடி வந்தாள் சாந்தி. பெருமையாக நின்றிருந்தான் பையன். பாட்டியின் தொணதொணப்புக்கு, அவனுடைய ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்த பாட்டியின் `அன்பு’க்கு அவன் மட்டும்தான் பாத்திரமானவன்! “அம்மா எங்கே போயிட்டாங்கண்ணே?” அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். “தம்பிப்பாப்பா செத்துப் போச்சில்ல? அன்னிக்கும் அப்பா குடிச்சுட்டு வந்தாரா..!” என்று தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்க ஆரம்பித்தான். கைக்குழந்தையைத் தன் மார்புடன் அணைத்து, பாலூட்டியபடி அமர்ந்திருந்த மனைவியின் பரவசத் தோற்றம் ஆத்திரத்தைத் தூண்டிவிட, “இந்தப் பிள்ளைமேல அப்படி என்னாடி ஆசை ஒனக்கு? நானும் பாக்கறேன், வர வர, நீ என்னைக் கவனிக்கிறதுகூட இல்லே!” என்று கத்த ஆரம்பித்தான் ரத்னம். இன்று என்ன, அடியா, உதையா, இல்லை பெல்டால் விளாசப்போகிறாரா என்று பயம் எழ, குழந்தையை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள் அவள். “அந்தச் சனியனைக் கீழே போடு, சொல்றேன்! புருஷன் இல்லாம, பிள்ளை மட்டும் எப்படி வந்திச்சாம்?” என்று கொச்சையாகத் திட்டியபடி, ஓங்கிய கரத்துடன் அவன் அவளை நெருங்கவும், அவசரமாக எழுந்தவளின் கால் அவிழ்ந்த கைலியில் தடுக்க, அதே தருணம் குறி தப்பாது ரத்னம் விட்ட அறை அவள் கன்னத்தைத் தாக்கியது. நிலைகுலைந்து போனவளாக, குழந்தையைக் கைதவற விட்டாள். அந்த மகவின் தலையில்தான் அடிபட்டதோ, இல்லை, பால் குடித்துக்கொண்டிருந்தபோதே தாயின் இறுகிய அணைப்பில் மூச்சு முட்டிப் போயிற்றோ, குழந்தையை மீண்டும் கையிலெடுத்தபோதுதான் உணர்ந்தாள் — இனி அதற்குப் பாலூட்ட வேண்டிய அவசியமே இருக்காதென்று. அலறவோ, அழவோ இயலாதவளாய், பிரமையாக நின்றாள். “சரோ..!” தன் செய்கையின் பாதகமான விளைவைப் புரிந்துகொண்டு, அந்த அதிர்ச்சியே அவனை நடைமுறைக்கு மீட்டுவர, குழைவுடன் அழைத்தபடி, மனைவியை நெருங்கினான் ரத்னம். “இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சீங்க, இன்னொரு கொலை விழும் இந்த இடத்திலே!” அவளுடைய ஆங்காரமான குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. பயந்து பின்வாங்கியவன், அவசரமாக வெளியே போனான் — இன்னும் குடித்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள. `தம்பிப்பாப்பா இனிமே பெரியவனா ஆகவே மாட்டானா! அவனோட விளையாட முடியாது?’ என்ற சிறியதொரு ஏமாற்றம் எழுந்தது, எப்போதும் தாயின் அருகில் அமர்ந்து, அம்மா பாப்பாவுக்குப் பாலுட்டுவதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு. ஆனாலும், `முன்போல், அம்மாவின் முழுக்கவனமும் இனி தன்மேல் திரும்பும்” என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி பிறந்தது. தானும் மெல்ல எழுந்து, தாயின் கையைப்பற்றி இழுத்தாள். அவளோ, சுற்றுப்புறத்தையே மறந்தவளாக, வெறிப்பார்வையுடன் நின்றாள். “ரத்னம்! இவளை வெச்சுக்கிட்டு என்னால இனியும் சமாளிக்க முடியாது. அவ கண்ணைப் பாரு! எந்த நேரம் நம்பளை என்ன செய்துடுவாளோன்னு பயமா இருக்கு எனக்கு! இந்த அழுகையும், அலறலும்! பத்தாத குறைக்கு, பாக்கறவங்ககிட்டே எல்லாம், `நான் கொலைகாரி! என் பிள்ளையை நான் கொன்னுட்டேன்!’னு வேற பேத்தல்!” என்ற பாட்டியின் பேச்சைக் கேட்டுத்தான் அப்பா அம்மாவை எங்கோ கொண்டுபோய் விட்டிருக்க வேண்டும். இப்போது அம்மாவின் முகம்கூட சரியாக நினைவில்லை சாந்திக்கு. ஆனால், தன் பருத்த வயிற்றின்மேல் அவளுடைய பிஞ்சுக்கரத்தை வைத்து, `பாப்பா எப்படி குதிக்குது, பாரு!’ என்று சிரித்ததும், `அப்பா கோபமா வர்றாரு போலயிருக்கு கண்ணை மூடிட்டு, தூங்கறமாதிரி படுத்துக்க!’ என்று அவளைப் பாதுகாத்ததும், மறக்கக்கூடிய நினைவுகளா! பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்த புதியவளைப் பார்த்து, “அம்மாவா?” ரகசியக்குரலில் அண்ணனிடம் கேட்டாள் சாந்தி. “அவங்க அக்கா. நம்ப பெரியம்மா. அமெரிக்காவில இருக்காங்களாம்!” அதற்குள் சிறுமியைக் கவனித்தவள், “சாந்திக் குட்டிதானே? அப்படியே சரோ ஜாடை!” என்று, அவளை வாரியெடுத்து, அலாக்காகத் தூக்கிக்கொண்ட பெரியம்மாவுடன் ஒன்றிப்போனாள் அன்புக்கு ஏங்கியிருந்த அப்பெண். `என்னையும் கவனிக்கலியே!” என்று ராமுவின் முகம் வாடியதை பாட்டி கவனித்தாள். அசுவாரசியமாகச் சூள் கொட்டினாள். “ஒன் தங்கச்சிமாதிரி பைத்தியமா இல்லாம இருந்தா சரிதான்!” பெரியம்மா அவசரமாகப் பேசினாள். “ஒங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரே மகன்தான். அவனும் ஒரு தங்கச்சி வேணும்னு நச்சரிச்சுக்கிட்டே இருக்கான். நாப்பத்தஞ்சு வயசுக்குமேல எனக்கு எதுக்கு இன்னொரு கைப்பிள்ளை? அதான் சாந்தியை தத்து எடுத்துக்கலாம்னு..!” ”ஒனக்கில்லாத உரிமையா! எங்கே இருந்தா என்ன! அவ நல்லா இருந்தா சரி,” என்றாள் பாட்டி, தன் சுமை குறைந்துவிடப்போகும் மகிழ்வில். “வராதவ வந்திருக்கே! ரெண்டு நாள் தங்கிட்டுப் போகக்கூடாதா!” என்ற பாட்டியின் வாய்சாலகத்தில் பெரியம்மா மயங்கிவிடப்போகிறாளே என்ற பயம் பிடித்துக்கொண்டது சாந்திக்கு. ஆனால், பெரியம்மா ஏமாறவில்லை. நாசூக்காக மறுத்துவிட்டு, அன்றே கிளம்பினாள். “போயிட்டு வரேண்ணே! அப்புறம் நீயும் வருவேயில்ல?” களங்கமின்றிக் கேட்ட தங்கையை அலட்சியமாகப் பார்த்தான் ராமு. “பாட்டி என்னை விடமாட்டாங்க. என்மேல ரொம்ப பிரியம்!” என்று உதடுகள் சொன்னாலும், தன்னுடன் நாலு வார்த்தைகூடப் பேசாது, தானும் அதே அம்மாவுக்குப் பிறந்தவள்தான் என்பதையே உணராதவள்போல், சாந்தியை மட்டும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருந்த பெரியம்மாவின்மேல் ஆத்திரப்படத்தான் அவனால் முடிந்தது. தானும் ஏன் அம்மா ஜாடையாக இல்லை, அப்பாவைப்போல் இருக்கிறோம் என்ற வருத்தம் எழுந்தது. அந்த புறம்போக்கு இடத்துக்குப் பொருத்தமில்லாது, வாசலில் நின்ற பளபளப்பான, பெரிய வாடகைக் காரில் அமர்ந்து, குதிக்காத குறையாகக் கையை ஆட்டிய சாந்தியைப் பார்த்தபடி விறைத்து நின்றான் ராமு. “ஒன் தங்கச்சிக்கு வந்த வாழ்வைப் பாத்தியா! ஒங்கப்பன் குடிச்சே எல்லாத்தையும் அழிக்கிறான். இல்லாட்டி, நீயும் எப்படி எப்படியோ இருக்கலாம்!” என்ற பாட்டியின் அனுதாபம் அவனுக்கு வேண்டித்தான் இருக்கவில்லை. வளரத் தொடங்கியிருக்கும் மீசையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். வருடங்கள் சில கடந்தன. அவனை இன்னும் சின்னப் பையனாகவே பாவித்து, பாட்டி அவனைத் தானே பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவிடுவதும், `கூட்டாளிங்க சகவாசமே வேணாம். நீயும் ஒங்கப்பன்மாதிரி கெட்டுப்போயிடுவே!’ என்று அவன் வயதினர் ஓடியாடும் நேரத்தில், வலுக்கட்டாயமாக அவனை வீட்டிலேயே தங்க வைப்பதும் பிறருடன் ஒட்டாத அவனை ஒரு கேலிப்பொருளாக ஆக்கியது. எப்போதாவது தங்கையின் நினைவு எழும். மூர்க்கத்தனமாக அதைத் தள்ளுவான். `அண்ணனுக்கு என்னை அடையாளம் தெரியுதோ, என்னவோ! அண்ணனும் என்னைப்போல பெரிசா வளர்ந்திருப்பானில்ல!’ என்றெல்லாம் துள்ளிக்கொண்டு வந்த சாந்தி, அதிர்ச்சியில் உறைந்துபோனாள். செல்வச் செழிப்பு மின்னிய அவளுடைய உடலைப் பார்த்து ராமு பிரமித்தானோ, இல்லையோ, அவனைக் கண்டதும் சாந்தி அடைந்த ஏமாற்றம், வருத்தம்! முகமெங்கும் வியாபித்திருந்த சிறு சிறு கட்டிகளைக் கிள்ளியபடி நின்றிருந்த சோனி உருவமா அவள் அன்புக்குரிய அண்ணன்? அவனுடைய பரட்டைத்தலையும், கலங்கிய சிவந்த கண்ணும்! அருகில் வரும்போதே அது என்ன நாற்றம்? நடனமும், நீச்சலும் கற்று, தான் மட்டும் முன்னுக்கு வந்திருப்பது குறித்து அவளுக்குக் குற்ற உணர்வு உந்த, விமானதளத்துக்குப் போகையில், அவள் பக்கத்தில் உட்கார்ந்து, கரிசனத்துடன் அவளையே பார்த்தபடியிருந்த வளர்ப்புத்தாயின் பக்கம் திரும்பினாள் சாந்தி. “அண்ணனையும் நீங்க எடுத்துக்க பாட்டி விட்டிருக்க மாட்டாங்க. இல்லம்மா?” தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளும் முயற்சியில் எழுந்தது அக்கேள்வி. “என்னண்ணே இப்படிப் போயிட்டேன்னு கேட்டேன். அண்ணன் சொன்னான்..,” பெரிதாக மூச்சை இழுத்துக்கொண்டாள். “அண்ணன் சொன்னான், `எங்கப்பா குடிகாரரு. அம்மாவோ பைத்தியம்! நான் எங்கேயாவது அதையெல்லாம் மறந்து, வயசான காலத்திலே அவங்களைத் தனியா விட்டுட்டுப் போயிடுவேனோன்னு பயந்து, இதையெல்லாம் நாள் தவறாம சொல்லிக்காட்டற பாட்டி! நான் வேற எப்படி இருக்க முடியும்?’அப்படின்னு என்னையே திருப்பிக் கேட்டாம்மா!” சாந்தியின் குரல் விக்கியது. அவளுடைய இடுப்பில் கைகொடுத்து அணைத்துக் கொண்டாள் பெரியவள். அவர்களுக்கு முன்னால், எவரையோ இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த்து ஒரு கறுப்பு நிற ஊர்தி. “அந்த `வேனு’க்குள்ளே பாத்தியா, சாந்தி? அழகழகா, எவ்வளவு பூ!” என்று பேச்சை மாற்றப்பார்த்தாள். சாந்தியின் மனம் வேறு ஏதோ யோசித்த்து. எங்கோ ஒரு பூக்கடையில் இவை போக மிகுந்திருந்த பூக்கள் இருக்கும். இதோ, இந்த மலர் வளையங்களில் உள்ள மலர்களுடன் ஒரே கிளையில் பூத்தனவாகவும் இருக்கலாம். அவைகளில் சில பூசைக்கோ, அல்லது திருமண விழாக்களுக்கோ உபயோகம் ஆகும். இன்னும் சிறிது நேரத்தில், பெட்டியிலிருக்கும் உயிரற்ற உடலுடன் தாமும் மின்சாரத்துக்கு இரையாகி, சாம்பலாகிவிடப்போவதை அறியாது, கண்கவர் வண்ணங்களுடன் மிளிரும் பூக்களைப் பார்த்து, மெல்ல விசும்ப ஆரம்பித்தாள் சாந்தி. (தமிழ் நேசன், 1984) 3 காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன. ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் — முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் — படிக்கவேண்டுமென்ற பயம். தங்கள் தோட்டப்புறத்திலேயே முதன்முறையாக இவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்க ஆயத்தமென, இந்தப் பள்ளியில் சேரப் போகும் களிப்பு. ‘கேவலம், பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு செலவழிச்சாவது படிப்பு அவசியந்தானா! ஆனாலும் ஒங்க மகளுக்கு ரொம்பத்தான் இடங்கொடுத்து வளக்கறீங்க!’ பொறாமை மேலிட, அண்டை   அயலார் அவநம்பிக்கை     ஊட்டிப்பார்த்தபோது, பொன்னுசாமி கங்காணி அயரவில்லை. ‘பெண்களை மதிக்கறவன்தான் தெய்வம் ஆகிறான்,’ என்று நிதானமாக மகாத்மா காந்தியின் போதனையை எடுத்துக்கூறினார். காந்தி மகான்தான் அவருடைய தெய்வம். அவர்கள் வீட்டில் மூஞ்சூறுமேல் அமர்ந்த பிள்ளையார், யானைமேல் கஜலட்சுமி ஆகிய கடவுள் படங்களுடன், வேட்டி மட்டும் அணிந்து, தரையில் காலை மடக்கி, சர்க்காவில் நூல் நூற்கும் காந்தியின் படமும் மாட்டி இருந்தார். அதைப்பற்றிக் கேலியாக விசாரிப்பவர்களிடம், ‘சாமி கண்ணுக்குத் தெரியுமான்னு நாத்திகம் பேசறாதாலதான் இன்னிக்கு இளவட்டங்க தறிகெட்டுப்போறாங்க. ஒத்தையாளா வெள்ளைக்காரனைத் துரத்தி அடிச்சிருக்காரே, நம்ப காந்தி! இது சாமான்யமான மனுசன் செய்யற வேலையா? எவன் ஒருத்தன் சுயநலமில்லாம இருக்கானோ, அவன்தான் சாமி!” என்று, “அன்பே சிவம்” கமலஹாசன் பாணியில் பேசி, அவர்கள் வாயை அடைத்துவிடுவார். பிறரது கேலிக்கெல்லாம் மசியாது, தனது கொள்கைகளில் பிடிவாதமாக, உண்மையே பேசி, வெற்றியும் பெற்றிருக்கிறாரே அம்மகான்! அப்பாவுக்குப் பிடித்த காந்திபோலத் தானும் நடக்கவேண்டும் என்று புலியம்மா உறுதி செய்துகொண்டாள். ஆனால், அப்பா செய்தது எல்லாமே அவளுக்குப் பிடிக்கும் என்பதில்லை. முக்கியமாக, அவளுடைய பெயர். “ஏம்பா எனக்கு இந்தப் பேரு வெச்சீங்க? எல்லாரும் கேலி செய்யறாங்க!” பத்து வயதாயிருக்கும்போது தந்தையிடம் செல்லமாகச் சிணுங்கினாள். மகள் தன்னைத் தட்டிக்கேட்பதாவது என்று அவர் ஆத்திரப்படவில்லை. அவர்தான் அகிம்சாவாதி ஆயிற்றே! “எல்லாம் காரணமாத்தான். தனக்கு எல்லாம் தெரியும்னு அலட்டிக்கிற மனுசன் புலியைப் பாத்துப் பயப்படறான், ஓடி ஒளிஞ்சுக்கறான்!” அந்த நினைவிலேயே அவர் சிரித்தார். அவளுக்கு அந்த விளக்கம் பிடிபடவில்லை. “எங்கிட்ட ஏம்பா மத்தவங்க பயப்படணும்?” “அப்படி இல்ல. நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கண்ணு. இது ஆம்பளைங்க ஒலகம்! பொண்ணுங்கன்னா மட்டம். அதான் அன்னாடம் பாக்கறியே! நம்ப லயத்திலேயே, கண்ணுமண்ணு தெரியாம தண்ணி போட்டுட்டு, அவனவன் பெண்டாட்டியை மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கிறான். ம்! இவனெல்லாம் ஆம்பளை!” என்று எள்ளியவர், “அந்த மகானைப் பாரு! துப்பாக்கியும், பீரங்கியுமா வெச்சு வெள்ளைக்காரனை விரட்டினாரு? அகிம்சாவாதத்திலேயே தாய்தாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்குடுத்தாரு!” என்ன பேச ஆரம்பித்தாலும், அதைக் காந்தியில்தான் கொண்டு முடிப்பார் பொன்னுசாமி கங்காணி. அவருடைய மனைவி பதைத்துப்போய் உள்ளேயிருந்து வருவாள். “யாருகிட்ட எதைச் சொல்றதுன்னு கிடையாது? அது சின்னப்பிள்ளை!” என்று மகளுக்குப் பரிவாள். அவளிடம் நேராகப் பதிலளிக்காது, புலியம்மாவிடம் கூறுவார் அவர்: “நான் எதுக்குச் சொல்றேன், நீ என்னைமாதிரி தற்குறியா நின்னுடப்படாது. பெரிய படிப்புப் படிச்சு, நல்லா வரணும். நடுவிலே யாராவது வயத்தெரிச்சல்பட்டு ஒன்னை வெரட்டினா, நீ பயந்து ஒதுங்கலாமா? புலிமாதிரி எதிர்த்துச் சண்டை போடணும், என்ன?” புலியம்மாவுக்கு அவருடைய அடிப்படைக் கொள்கையிலேயே சந்தேகம் பிறந்தது. “ஏம்பா? சண்டை போட்டா, அது அகிம்சை ஆகுமா?” “சண்டைன்னா, வெட்டறதும், குத்தறதும் மட்டுமில்ல. கொள்கைக்காக போராடறதும்மா. துப்பாக்கியா பிடிச்சிருந்தாரு காந்தி?” இவ்வளவு தெரிந்துவைத்திருந்த அப்பாவுக்கு ஏன் தன்னை முதலிலேயே ஒரு மலாய்ப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று தோன்றாமல் போயிற்று? பயத்தால் உறைந்திருந்த அந்த வேளையில் புலியம்மாவுக்கு இந்தச் சந்தேகம் உதித்தது. அவள் எந்தக் கேள்வி கேட்டாலும், அப்பா நிதானமாகப் பதில் சொல்வார். எங்கேயோ இருந்திருக்கவேண்டியவர், பாவம்! அதிகக் கல்வி இல்லாததால், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையாம். தானே அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறார். அதனால்தான் மகளாவது உயரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். “அப்பா!” புலியம்மா தயங்கினாள். “என்னம்மா? எதுவானாலும் கேளு. ஒனக்கில்லாததா!” “எனக்கு ஒண்ணும் வேணாம்பா. என்னை… ஏம்பா தமிழ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீங்க?” எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டாள். கங்காணியின் முகம் வாடிப்போயிற்று. “என்னம்மா இப்படிக் கேட்டுட்டே?” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன். “தாய்மொழிங்கறது பெத்த தாய்மாதிரி. கருவிலேயே நம்பளோட மூளையில பதிஞ்சது. வயத்துப்பிழைப்புக்காக நம்ப கலாசாரத்தைத் தலைமுழுகிட முடியுமா? சாப்பிட்டோம், தூங்கினோம்னு இருந்தா, அப்புறம் நமக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நம்பளையே நாம்ப மதிக்கவேணாம்?” தான் தமிழச்சி என்ற பெருமை புலியம்மாவுக்குப் பிறந்தது அப்போதுதான். புதுப்பள்ளியிலோ, நூற்றுக்கு ஒருவர்கூட தமிழர் கிடையாதாம். மூன்று மாடிகளைக்கொண்ட பெரிய பெரிய கட்டிடங்கள் அமைந்த விசாலமான வளாகத்துக்குள் நுழைந்தபோது கால்கள் பின்னுக்கு இழுத்தன. அப்பாவுக்குப் புரிந்திருக்கவேண்டும். அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். ‘நீ எதுக்கும் பயப்படக் கூடாதுன்னுதானே ஒன் பேரிலேயே வீரத்தை வெச்சிருக்கேன்?’ என்று சொல்வதுபோலிருந்தது. அச்சிரிப்பில் எல்லாம் மறந்து போயிற்று அவளுக்கு. “அதோ பாருங்கப்பா. தமிழ் டீச்சர்!” என்று உற்சாகமாகக் கையை நீட்டிக் காட்டினாள். புடவையும், பொட்டுமாக இருந்த அந்த “தமிழ் டீச்சர்” தன் வகுப்புக்கு வரமாட்டாள் என்று அதன்பின் அறிந்ததில் ஒரு சிறிய ஏமாற்றம் எழுந்தது. அதனால் என்ன? தானே போய் அறிமுகம் செய்துகொள்ள வழியா இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள் புலியம்மா. “ஒங்க பையைத் தூக்கிட்டு வரட்டுமா, டீச்சர்?” அந்தத் தமிழ்க் குரல் வித்தியாசமாகக் கேட்டிருக்க வேண்டும். டீச்சர் சட்டெனத் திரும்பினாள். எதுவும் பேசாது, தன் கையிலிருந்த பிரம்புப் பையை எதிரில் அகன்ற விழிகளுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தாள். பை சற்றுக் கனம்தான். ஆனால், சிவபெருமானிடமிருந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்ட பிள்ளையார்மாதிரி அச்சிறுமிக்குப் பூரிப்பு ஏற்பட்டது. அதனை அடக்க வழி தெரியாது, பல் தெரிய புன்னகைத்தபடி, டீச்சரின் சிவப்புப் புடவையையும், அதற்குப் பொருத்தமாக, கவனத்துடன் தேர்ந்தெடுத்திருந்த சிவப்புக் காலணிகளையும் பார்த்தபடி, ராமனைப் பின்தொடர்ந்த லட்சுமணனாக நடந்தாள். மறுநாள் காலை, இருள் பிரியுமுன்னரே பஸ் பிடித்து, டீச்சரின் வருகைக்காகக் காத்திருந்தாள் புலியம்மா. கும்பல், கும்பலாக நின்றுகொண்டு, உரக்கப்பேசி, அதிர்வேட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர விரும்பாது, ஒரு போகன்வில்லா புதர் அருகே தனித்து நின்றாள். டிச்சருடைய சிறிய, வெள்ளைக்கார் கேட்டுக்குள் நுழைந்தது. காதல் வசப்பட்டவருடையதைப்போல புலியம்மாவின் இருதயம் துடித்தது. ஓடாத குறையாகக் காரை நெருங்கினாள். “வணக்கம் டீச்சர்!” டீச்சர் அவளுடைய முகமன் காதில் விழாதவளாக நடந்தாள். இன்னும் உரக்க சொன்னாள்: “வணக்கம் டீச்சர்!” டீச்சர் நின்றாள். தலையை வெட்டினாற்போல் அவள்பக்கம் திரும்பி, “மெதுவாப் பேசு!” என்று அதட்டினாள். குரல் கட்டையாக இருந்தது. “இப்படிக் கத்தினா, நாலுபேர் பாத்துச் சிரிப்பாங்க!” பழக்க தோஷத்தால், அவள் குரலில் கடினமும், அதிகாரமும் கலந்திருந்தன. ஒரேயடியாக மிரண்டுபோன புலியம்மாவால், கையாலாகாத்தனத்துடன் தலையை அசைக்கத்தான் முடிந்தது. பல வினாடிகள் கழித்துத்தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. தன்மீது எவ்வளவு அக்கறை இருந்தால், இப்படித் தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்கள் என்ற நெகிழ்வு ஏற்பட்டது. தன்னைப்போலத்தானே டீச்சரும்! ஒரே இனம், ஒரே மொழி என்ற பற்றுதல் அவர்களுக்குமட்டும் இருக்காதா, என்ன! இப்போதெல்லாம் தானே வலியப்போய் முணுமுணுப்பாக வணக்கம் தெரிவித்துவிட்டு, உரிமையுடன் டீச்சரின் கையிலிருந்து பிரம்புப் பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சல் ஏற்பட்டிருந்தது புலியம்மாவுக்கு. “ஒன் பேரு என்ன?” அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை அந்தக் கட்டைக் குரலில். ஒப்புக்குக் கேட்பதுபோலிருந்தது. ஆனால், அதையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை மாணவிக்கு. என்னதான் சகமாணவிகளுடன் பழகினாலும், ஆசிரியை தன்னை மதித்துப் பேசுவதுபோல் ஆகுமா? வெண்மையான பற்கள் கறுத்த முகத்தின் பின்னணியில் மேலும் ஒளிவிட, “என் பெயர் புலியம்மா,” என்று ஒப்பிப்பதுபோல் தெரிவித்தாள். கைகள் தாமாகக் கட்டிக்கொண்டன. அவள் தோழிகள் ‘காக்கா’ என்று கேலியுடன் அவளைக் குறிப்பிட்டதை லட்சியம் செய்யவில்லை புலியம்மா. அவர்களுக்கு என்ன தெரியும் சேவை செய்வதன் மகத்துவம்? காந்தி சொன்னபடி.. அவள் தானே சிரித்துக்கொண்டாள். தானும் அப்பாமாதிரியே ஆகிவருகிறோமே! அன்றும் ஒரு கட்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதுபோல பயபக்தியுடன் டீச்சரின் மேசைமேல் வைத்தாள் புலியம்மா. வழக்கம்போலவே, ஒரு நன்றிகூட எதிர்பார்க்காது, ஆசிரியர்களின் பொது அறையைவிட்டு வெளியே வந்தாள். ஜன்னல்வழியே உள்ளே நடந்த உரையாடல் கேட்டது. “அந்தப் பொண்ணு என்ன, உனக்கு வாலா? கிட்ட வந்தாலே ஏதோ எண்ணை நாத்தம்!” யாரோ சிரித்தார்கள். தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள்! புலியம்மாவின் கால்கள் மேலே நகர மறுத்தன. “சரியான கழுத்தறுப்பு. ஒரு நாளைக்கு நாலு தடவை அங்க, இங்க பாத்து, ‘குட் மார்னிங்’ சொல்லியாகணும் அதுக்கு. அன்னிக்கு என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘எங்க கிளாசுக்கு வாங்க டீச்சர்’னு முரட்டுப் பிடிவாதம் வேற!’ ‘தமிழ் டீச்சரா’ இப்படிப் பேசுகிறார்கள்? யாரோ மென்னியைப் பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது புலியம்மாவுக்கு. இரு கைகளாலும் நீலநிறக் குட்டைப் பாவாடையைக் கசக்கிப் பிடித்துக்கொண்டாள். கட்டைக்குரல் தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது: “அந்தப் பொண்ணு பேரு புலியம்மா. வேடிக்கையா இல்ல? காட்டில இருக்கவேண்டியதை எல்லாம் இந்தமாதிரி நல்ல பள்ளிக்கூடத்திலே விட்டா இப்படித்தான்!” யார்யார்மீதோ மோதிக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் உணர்வுகூட அற்றவளாய், வகுப்பை அடைந்தாள் அவள். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘அழக்கூடாது. நீ புலிமாதிரி இல்லியா!’ அப்பா மானசீகமாகப் பக்கபலம் அளித்தார். ‘காந்திகூடத்தான் சிறுமைப்பட்டிருக்கிறார். அதனால் அவர் தளர்ந்துபோனாரா, என்ன!’ என்று அவர் கூறுவதுபோலிருந்தது. அப்பாவுடன் டவுனுக்குப் போய், ‘காந்தி’ ஆங்கிலப்படம் பார்த்திருந்தாள். அதிகம் புரியாவிட்டாலும், ஒரு காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தது. காந்தி ஆப்பிரிக்காவில் இருந்தபோது, தாங்கள் நடக்கும் தெருவில் கறுப்பரான அவர் நடக்கக்கூடாது என்று அவர் எதிரில் வந்த இரு வெள்ளையர்கள் தகறாறு பண்ணுகிறார்கள். அவரோ, அஞ்சாமல் அவர்களைக் கடக்கிறார். பின்பு, தன் நண்பரிடம் கூறுகிறார், “சகமனிதனை அவமானப்படுத்துவதால் ஒருவனுக்கு என்ன ஆனந்தம் என்று எனக்குப் புரியத்தான் இல்லை,” என்று. அன்றுபூராவும் நினைத்து நினைத்து அழுகை வந்தது. அப்பாவையும், காந்தியையும் நினைத்துக்கொண்டாள். அம்மாவிடம் சொல்லவேண்டும், ‘இனிமே கடுகெண்ணை வைத்துத் தலைபின்னாதீங்கம்மா’ என்று.   இப்போதெல்லாம் டீச்சர் புடவை அணிந்து வருவதே அபூர்வமாக இருந்தது. டீச்சருடைய காரைக் கண்டும் காணாததுபோல் நின்றாள் புலியம்மா. “ஏ பையா! இந்த நோட்டை எல்லாம் எடுத்திட்டு என்கூட வா!” அந்த அதிகாரக்குரல் என்னவோ பலத்துத்தான் இருந்தது. ஆனால் அது காதிலு விழாததுபோல் தன்பாட்டில் நடந்துபோனான் அவள் அழைத்த மாணவன். “பெரிய அதிகாரம்! சம்பளம் வாங்கலே? இந்த நோட்டுங்களைத் தூக்கிட்டு நடக்க என்ன கேடு?” அவன் தன் நண்பர்களிடம் உரக்கக் கூறியது புலியம்மாவின் காதிலும் விழாமல் போகவில்லை. ‘பாவம் டீச்சர்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். தானும் ஒரு தமிழ்ப்பெண் என்பதில் டீச்சருக்குப் பெருமிதம் இருந்திருந்தால், இப்படி ஒரு அவமதிப்பு உண்டாகி இருக்குமா? (1996-ல், மலேசியாவில் பாரதிதாசன் இயக்கத்தின் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது) 4 பெயர் போன எழுத்தாளர் எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள். ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில் நண்பர்கள் செய்த கேலியும், அதனால் தான் அடைந்த துயரும் பொறுக்காதுதானே அவர் வாழ்வில் உயர்ந்தார்? இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது. முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம், வாருங்கள். அப்போது வெறும் கருப்பண்ணசாமியாக இருந்த நம் கதாநாயகனுக்கு ஆறு வயது. தன்னை ஒத்த நண்பர்கள், ஆறுமுகத்தை ‘ஆறு’ என்றும், ஏழுமலையை ‘ஏழு’ என்றும் அழைக்கும்போது, தன்னைக் ‘கருப்பு’ என்று விளித்ததை வித்தியாசமாக நினைக்கத் தோன்றாத பருவம். அவன் பள்ளியில் சேர்ந்த சில வருடங்களுக்குப்பின், இலக்கணப் பாடத்தை நடத்திய ஆசிரியர் ‘காரணப் பெயர்’, ‘இடுகுறிப் பெயர்’ என்ற பதங்களை விளக்க முயன்றபோதுதான் வினை பிறந்தது. “ஊறும் காய் என்பது ஊறுகாய் ஆயிற்று,” என்று புத்தகத்திலிருந்த உதாரணத்தை விளக்கியதோடு நில்லாமல், தன் சொந்தக் கற்பனையையும் சிறிது கலந்துகொண்டார் அவர். “இதோ நம்ப கருப்பண்ணசாமியை எடுத்துக் கொண்டால், பிறந்தபோது இவன் கருப்பாக இருந்ததால், இந்தப் பெயரை இவனுக்குச் சூட்டி இருக்கிறார்கள். ஆக, இதுவும் ஒரு காரணப் பெயர்தான்!” என்னமோ தானே நேரில் வந்து, அவனுடைய பெயர்சூட்டு விழாவை நடத்தி வைத்திருந்ததுபோல் அளந்தார் வாத்தியார். தனக்கே தெரியாமல் தன்னுள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறதே என்ற பூரிப்பில் அவர் தொந்தி குலுங்கச் சிரித்தார். அவருடைய அடிவயிற்றை இறுக்கியிருந்த பெல்ட் எந்த வினாடியும் அறுந்து, நடக்கக்கூடாதது நடந்துவிடும் என்று பயந்தபடி இருந்த மாணவர்கள், அக்கற்பனையிலும், வாத்தியாரே சிரிக்கும்போது நாமும் சிரிக்காவிட்டால் மரியாதை இல்லை என்ற உசிதத்தாலும் பலக்கச் சிரித்துவைத்தார்கள். அவர்களில் பலரும் கறுப்புத்தான் என்பதால், ‘நல்லவேளை! நம்ப வீட்டில நமக்கு இப்படி ஒரு பேரை வெக்காம போனாங்களே!’ என்ற நிம்மதி அச்சிரிப்புடன் வெளிப்பட்டது. கருப்பண்ணசாமிக்குள் வைராக்கியம் பிறந்தது அன்றுதான். ‘நான் தோத்துட்டா, என் பேரை மாத்தி வெச்சுக்கறேண்டா!’ என்று எந்த ஒரு சிறு பந்தயமாக இருந்தாலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சவால் விடுவதை உண்மை ஆக்கிவிட்டால் என்ன? ஆனாலும், பணங்காசு செலவழித்து, உற்றார், உறவினர் முன்னிலையில் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற எண்ணுவதே அவர்களுக்குத் துரோகம் இழைப்பதைப்போல் பட்டது. உடன்படித்தவர்கள் ‘டேய் கருப்பு!’ என்று விளித்தபோது, முன்போல் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உலகமெல்லாம் கூடி தன்னை மட்டம் தட்டுவதுபோல் இருந்தது. பிறருடன் பேசிப் பழகினால், அவர்கள் தன்னை அந்த பாழாய்ப்போன பெயரால் கூப்பிட்டு விடுவார்களே என்று பயந்தவனாகத் தனிமையில் இருக்கத் தலைப்பட்டான். எதுவும் செய்யாமல் இருந்ததில் விசனம் அதிகமாகவே, அந்நேரங்களில் எல்லாம் கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான். அதிகம் படித்திராத அம்மா, “கண்ட புஸ்தகங்ககளைப் படிச்சுக் கெட்டுப் போகாதேடா!” என்று ஓயாது கண்டித்ததில், அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்தாலே தூக்கம் வந்துவிடும், அல்லது கவனம் திசைமாறிவிடும் என்ற பொது நிலை அவன்வரை பொய்த்துப்போய், யாருமே எதிர்பாராதபடி, வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்தான். சகமாணவர்கள் பொறாமை தாங்காது, “காரணப் பெயருன்னா என்னடா?” என்று அவன் காதுபட கேட்டபோதுதான் அவனுக்கு அந்த யோசனை உதித்தது. தான் ஒரு எழுத்தாளனாகிவிட வேண்டும்! அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்றி வைத்துக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி கிடையாது. யாரும், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். தனக்கும் குற்ற உணர்வு தோன்றாது. இந்த எண்ணம் எழுந்தவுடனேயே ஏதோ பெரிய பாவத்தைத் தொலைத்துவிட்டமாதிரி ஒரு நிம்மதி பிறந்தது அவனுக்குள். ‘எதை எழுதுவது?’ என்று யோசித்து, ஒன்றும் பிடிபடாமல், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு முக்கியமான விஷயம் புனைப்பெயர்தான் என்று தீர்மானித்தான். புனைப்பெயரில் இன்னொரு சௌகரியம். எழுதுவது சற்று முன்னே பின்னே இருந்தாலும், தான்தான் அது என்று பிறருக்குத் தெரியாமல் போய்விடும். அடுத்த சில மாதங்களை வாசகசாலையில் கழித்தான் கருப்பண்ணசாமி. கேட்டவர்களிடம், ‘ஆராய்ச்சி,’ என்றான். எல்லாம் புனைப்பெயர் ஆராய்ச்சிதான். அந்தத் தேடுதலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தான். சில எழுத்தாளர்கள் தம் மனைவியின் பெயரில் ஒளிந்திருந்தார்கள். ‘பாவம், பெண்!’ என்று பத்திரிகை ஆசிரியர்கள் சற்றே மட்டமான படைப்பையும் வெளியிட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோ, என்னவோ! ஒருவேளை, மனைவியின் விருப்பு வெறுப்பில் அவ்வளவு தூரம் ஒன்றிப்போய், தாம் வேறு, அவள் வேறு என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவோ என்னவோ என்றுகூட அவன் நினைத்தான். தன்னால் அப்படிச் செய்ய முடியாது, தனக்கு ஒரு மனைவி வருவதற்குப் பல வருடங்கள் இருக்கின்றன என்பதோடு, ‘மிஸஸ். கருப்பண்ணசாமி’ என்பதாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ள எவளும் வலிய வரமாட்டாள் என்று தோன்றியது. அப்படி வருபவள் அவனுக்கு வேண்டவும் வேண்டாம். சுயகௌரவம் உள்ளவளாக இருக்கவேண்டும் அவனுக்கு வாய்ப்பவள். இன்னும் சிலர், ‘நான் ஆண்மை பொருந்தியவன், என் மனைவியை நேசிப்பவன்’ என்று தங்கள் புனைப்பெயரால் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். அதாவது, கொண்டவள் ஜானகியாக இருந்தால், இவன் ‘ஜானகிமணாளன்’ அல்லது ‘ஜானகிப்ரியா’ என்று மாறினான். இலக்கியத் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் மறைந்தபிறகு, பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறலாமே என்ற நப்பாசையுடன் தத்தம் பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து, அந்த இரவல் சுகத்தில் புகழ் தேடியவர்கள் கண்ணில் பட்டார்கள். இப்படியாகத்தானே கருப்பண்ணசாமியின் ஆராய்ச்சி தொடர்ந்தது. ‘அது ஏன் ஒளவையாருடன் எந்தப் பெண் எழுத்தாளரும் ஒட்டிக்கொள்ளவில்லை?’ என்ற் சிலகாலம் யோசித்ததில், ‘தாசன்’ என்ற வார்த்தைக்குப் பெண்பால் ‘தாசி’. அது அவ்வளவு மரியாதைப்பட்டதாக இருக்காது என்பது புரிந்தது. இந்த ரீதியில் எழுத்தாளர்களுடைய பெயர் வண்ணங்களை ஆராய்ச்சி செய்துவந்ததிலும், ஓயாது படித்ததிலும் கருப்பண்ணசாமியின் வயதும், அறிவும் கூடின. ஆனால், தன் பெயரைப்பற்றிய ஏக்கம் என்னவோ சற்றும் குறையவில்லை. இயற்பெயர் பிடிக்காது போனாலும், கன்னத்தில் இருந்த மச்சத்தைப்போல் அதுவும் அவனுடைய ஒரு அங்கமாகிவிட்டது. ‘விரைவில் அதை இழக்கப் போகிறோம்’ என்ற நினைவு எழும்போது சற்று வருத்தம்கூட வந்தது. பெயருக்குச் சம்பந்தம் இல்லாத இன்னெரு பெயரை எங்கேயாவது போய்த் தேடுவானேன் என்ற ஞானோதயம் அப்போதுதான் உதித்தது. இந்தமாதிரி வேண்டாத ஆராய்ச்சியும், யோசனையும் செய்துகொண்டே இருந்தால், தன் பெயருக்கு ஒரு விமோசனமே கிட்டாது என்று ஒரு நாள் உறைக்க, அண்மையில் இறந்துவிட்ட அவனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய, ‘கருப்பு’ என்ற பொருளில் ஏதாவது புனைப்பெயர் வைத்துக் கொள்வதுதான் நியாயம் என்று தோன்றிப் போயிற்று. ஒரு விடுமுறை நாளன்று பகலில் அயர்ந்த தூக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். ‘படபட’வென்று நிறையபேர் கைதட்ட, “நம்ப கார்மேகவண்ணன் இன்னும் அனேக எழுத்துப் படிவங்களைப் படைத்து நம்மை நீண்ட காலம் மகிழ்விக்க வேண்டும்!” என்று யாரோ ஒருவர் சொல்லி, பொன்னாடை போர்த்துகிறார். இன்னொருவர் முன்னால் வந்து, “நமது கார்மேகவண்ணனின் புகழில் பாதி அவருடைய மனைவிக்குச் சேரவேண்டும். இரவும், பகலுமாக அவர் இலக்கியச் சேவையில் ஈடுபட்டிருப்பது மனைவியின் புரிந்துணர்வால்தான்!” என்று மெச்சுகிறார். இம்மாதிரி பல பாராட்டு விழாக்களில் தான் பேசி இருப்பது நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே, விழா நாயகன் தலைமறைந்ததும், ‘இவனெல்லாம் பெரிய எழுத்தாளனாம்! இவனுக்கு ஒரு விழா எடுக்கறாங்களாம், வேலையத்தவங்க!’ என்று அனேகமாகச் சொல்லக்கூடும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. பொன்னாடைமேல் ஒரு மலர்மாலை விழுகிறது. அதன் கனமானது எழுதி, எழுதி வலிகண்டிருக்கும் அவனுடைய கழுத்தை மேலும் அழுத்த, அந்தப் நோவைப் பெரிதாக மதிக்காது, ஒரு பெரிய எழுத்தாளனுக்கே உரிய அடக்கத்துடனும், கம்பீரத்துடனும், “உங்களைமாதிரி தரமான வாசகர்கள் அமையாவிட்டால் நான் ஏது!” என்று பற்கள் (அவை வெகு வெண்மை) தெரியப் புன்னகைத்து… இந்த இடத்தில் கருப்பண்ணசாமி விழித்துக்கொண்டான். சற்றும் எதிர்பாராவிதமாக புனைப்பெயர் அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கார்மேகம். அதாவது கரிய மேகம். அந்த மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவன் கண்ணன். நினைவுதெரிந்த நாளாகத் தன்னை அவமானப்படுத்திவந்த பெயரை மாற்றினாற்போலவும் ஆயிற்று, கடவுள் பெயரை அடிக்கடி எழுதினால் புண்ணியத்திற்குப் புண்ணியமும் ஆயிற்று. நிம்மதி பிறந்தவுடனேயே மறைந்தும் போயிற்று. புனைப்பெயரெல்லாம் சரிதான், அதை வைத்துக்கொண்டு ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டுமே! தன் பெயர் மாற்றத்துக்காக செய்த ஆராய்ச்சிகள், கழித்த ஆண்டுகளையெல்லாம் நினைவில் கொண்டுவர முயற்சித்தான். நாற்பது, ஐம்பது கதைகளைப் படித்து, அதன்பின் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று நிரவினால், ஒன்றாவது தேறாது! இந்தக் கற்பனை அளித்த உற்சாகத்தில், ‘கருப்பண்ணசாமி’ விரைவில் மறைந்து, அந்த இடத்தை ‘கார்மேகவண்ணன்’ பிடித்துக் கொள்வதை மானசீகமாகக் கண்டு மகிழ்ந்தான் அவன். பி.கு: இக்கதையால் எவரையும் நோகடிக்க எண்ணமில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது. (தமிழ் நேசன், 1992) 5 அழகான மண்குதிரை நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும். அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்? அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய், இப்படியா தன்னை விட்டுக்கொடுப்பது! ஒரு மரியாதைக்காவது… ‘நீ கணவருக்கு மரியாதை கொடுத்தது என்ன தட்டுக்கெட்டுப் போயிற்று, அவரிடம் அதை எதிர்பார்க்க?’ அந்தராத்மா இடித்துரைத்தது. பழகின தெருக்களிடையே பஸ் நுழைந்து சென்றபோது, இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடம்தான். கண் அனிச்சையாகக் கடிகாரத்தில் பதிய, அடிவாயில் கசந்தது. ‘முதலில் இந்தக் கடிகாரத்தைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டும்!’ அந்த பாழாய்ப்போனவன் கொடுத்த பல பரிசுகளுள் ஒன்று அது. பாவி, புகழ்ச்சியையும், பரிசுப் பொருட்களையும்கொண்டு, எந்தப் பெண்ணையும் வீழ்த்திவிடலாம் என்று நன்கு உணர்ந்தவன். “உன் அழகுக்கு அழகு சாதனங்களே வேண்டாம். இருந்தாலும், கடையிலே இதைப் பாக்கறப்போ, ஒனக்குக் குடுக்கணும்னு தோணிச்சு!” அரைகுறை மலாயில் சொல்லிவிட்டு, லிப்ஸ்டிக், முத்துபதித்த வளையல் இப்படி ஏதாவது கொடுப்பான் அவன். இவ்வளவு அன்பானவர் இப்படி, பங்களா தேஷிலிருந்து நாடு விட்டு நாடு வந்து, இரவு பகலெனப் பாராது உழைக்கிறாரே என்று நந்தினிக்குப் பச்சாதாபம் மேலிடும். ‘இவருடைய அழகுக்குச் சினிமா நடிகராகி இருக்கவேண்டும். எல்லாப் பெண்களும் இவருடைய காலடியில் கிடக்க மாட்டார்களா!’ தன் எண்ணத்தை அவனிடம் தெரிவித்தாள், ஒரு முறை. வாய்விட்டுச் சிரித்தான் அவன். “அந்தப் பேராசை எல்லாம் எனக்குக் கிடையாது நந்தா. ஒன்னைமாதிரி அழகான ஒரே பொண்ணோட அன்புதான் எனக்குப் பெரிசு. சில சமயம் நினைச்சுப்பேன், ஒன்னைச் சந்திக்கணும் என்கிறதுக்காகவே பிழைப்பைத் தேடற சாக்கில இப்படி வேற நாட்டுக்கு விதி நம்மை அனுப்பி இருக்குன்னு!” நந்தினிக்குப் பெருமையாக இருந்தது. தனக்கு எந்தக் காலத்திலும், எவரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தியது கிடையாது என்று பட்டது அவளுக்கு. அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது, அப்பாதான் ஓயாது அவளது அழகைப் புகழ்ந்துகொண்டு இருப்பார். அதனால் உண்டான கர்வத்தில் அவளுக்குப் படிப்பில் சுவாரசியம் இல்லாது போயிற்று. பிற பெண்களிடமும் அலட்சியம். அப்பா அகாலமாகப் போனபோதும் அவர் அறியாமல் விதைத்த விஷக்கன்று வாடவில்லை. ‘நான் அழகி!’ என்று தலைநிமிர்ந்து நடப்பாள். பார்ப்பவர்கள் எல்லோருமே சொல்லிவைத்தாற்போல் ஒரு முறைக்கு இரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தது நந்தினி தன்னைப்பற்றிக் கொண்டிருந்த கணிப்பை ருசுப்படுத்தியது போலிருந்தது. யாருடனும் ஒத்துப்போகாமல், என்னமோ மகாராணியாகத் தன்னைப் பாவித்து நடந்துகொள்ளும் மகளின் போக்கு அவளுடைய தாய்க்குக் கவலையை ஊட்டியது. அப்பா இல்லாத பெண் என்று அருமையாகவேறு வளர்த்துவிட்டோமே! இவளுடன் யாரால் ஒத்துப்போக முடியும்? பலவாறாக யோசித்தவள், “ஒனக்கும், கோபாலுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடணும்னு அத்தை ஆசைப்படறாங்க, நந்தினி. ஒனக்கும் வர்ற பத்தாவது மாசம் பதினேழு முடியப்போகுது,” என்று மெள்ள ஆரம்பித்தாள். நந்தினி சிரித்தாள் — சினிமாவில் வில்லன் சிரிப்பானே, அந்தமாதிரி. “என்னடி?” என்றாள் அம்மா, அதிர்ந்துபோய். “பின்னே என்னம்மா? ஆசைக்கும் ஒரு அளவு வேணும். எவ்வளவு சுயநலம் இருந்தா, அந்தக் கறுப்பனை என் தலையில கட்டலாம்னு யோசிச்சிருப்பாங்க அவங்க!” தாயின் முகம் வாடியது. “அப்படியெல்லாம் தூக்கி எறிஞ்சு பேசாதே, நந்தினி. அப்பா இருக்கிறபோதே சொல்லிட்டு இருந்ததுதானே! ஒறவும் விட்டுப் போகாது, அப்புறம்… கோபாலும் தங்கமான பிள்ளை!” நந்தினி மீண்டும் சிரித்தாள், இளக்காரமாக. “ஏதோ, நிறம்தான் தங்கம் மாதிரி இல்ல. குணமாவது தங்கமா இருந்தா சரி!” “ஆனாலும் ஒனக்கு இவ்வளவு மண்டைக்கனம் கூடாது!” அம்மாவின் அதட்டல் அவளைப் பாதிக்கவில்லை. “அம்மா! நான் எனக்குப் பிடிச்சவரா, அழகானவரா ஒருத்தரோட பழகிப் பாத்துட்டு, அப்புறமாத்தான் பண்ணிப்பேன். என்னோடது காதல் கல்யாணமாத்தான் இருக்கும். ஒருத்தரோட சேர்ந்து வெளியே போனா, பெருமையா இருக்க வேணாம்?”என்று இரைந்தாள். அவளையும் அறியாது, அத்தான் கோபாலையும், அவளுடைய தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் கிரனையும் ஒப்பிட்டுப் பார்த்தது அவள் மனம். அந்தக் கிரனுடன் இணைந்து நடந்தால் எப்படி இருக்கும்! ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “ஓயாம வீடியோ பாத்தா இப்படித்தான்! காதல், கீதலுன்னு பினாத்திக்கிட்டு, கண்டவனை இழுத்துக்கிட்டு வராதே,” என்று அலுத்துக்கொள்ளத்தான் முடிந்தது பெற்றவளால். அதன்பின், தற்செயலாகச் சந்திப்பதுபோல், கிரனைக் கேண்டீனிலும், மாடிப்படிகளிலும் பார்த்துப் பேச முற்பட்டாள் நந்தினி. அவனிடம் மணி கேட்டாள். அவனுடைய மலாயைப் பாராட்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே, அவனது கவனம் அவள்பால் திரும்பியது. முதலில் சற்றுப் பயந்தவனைப்போல் இருந்தவன், சிரிக்கச் சிரிக்கப் பேசினான். பல நூறு பெண்கள் வேலைபார்க்கையில், அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதியாது, தன்னை நாடுகிறார் இந்த அழகர் என்ற நினைப்பில், நந்தினியின் தலை மேலும் அண்ணாந்தது. அவனுடன் கைகோர்த்துக்கொண்டு சினிமாவுக்குப் போனாள். கதாநாயகியாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, அவனது பரந்த தோளில் சாய்ந்தபடி நடந்தாள். சிறுசிறு பரிசுகளால் அவனை மேலும் திணற அடித்தான் அவன். “ஒனக்கு என்னென்னமோ குடுக்கணும்னு ஆசை அடிச்சிக்குது. ஆனா, நான் ஏழை. இருந்தாலும், ‘ஓவர்டைம்’ பண்ணி வந்த காசில ஆசை ஆசையா இதை வாங்கிட்டு வந்தேன்!” என்று வசனம் பேசியபடி, ஒரு நாள் அந்தக் கடிகாரத்தை அவன் அவளுக்கு அணிவித்தபோது, என்னமோ அவன் கையால் தாலியே கட்டிக்கொண்டதுபோல் பூரித்துப்போனாள் நந்தினி. தனக்காகவே தூக்கம் முழித்து, உடலை வருத்தி வேலை பார்த்திருக்கிறார்! இந்த அன்புக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாமே என்று நெகிழ்ந்துபோனாள். காய் கனிந்ததைப் புரிந்து கொண்டவனாக, “ரெண்டு நாள் நாம்ப ரெண்டு பேரும் இப்படியே ஜாலியா, எங்கேயாவது வெளியூர் போயிட்டு வரலாமா, டார்லிங்?” என்று கொஞ்சினான். அவள் யோசிப்பதற்கே இடம் கொடாது, இறுக அணைத்தபடி நடந்தபோது, நந்தினி இவ்வுலகில் இல்லை. கிரனின் மடியில் உட்காராத குறையாகச் சாய்ந்தபடி அவள் அயலூர் போகும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோதுதான் அது நடந்தது. எங்கிருந்தோ வந்தான் கோபால். நேரே கிரனுக்கருகில் வந்தவன், யோசியாமல் அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். எதுவும் பேசாது, நந்தினியின் கையைப் பிடித்து இழுத்தபடி நடந்தான். தன்னை மீட்கக் காதலர் ஓடி வருவார் என்று எதிர்பார்த்த நந்தினிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வீட்டுக்குள் நுழைந்ததுமே, “நீ இன்னும் மைனர். அதனால அந்த ரௌடியைப் போலீசில பிடிச்சுக் குடுக்க என்னால முடியும். ஆனா, ஒனக்கும் சேர்த்துத்தான் கெட்ட பேரு வரும். அதான் அவனை விடறேன்,” என்று அதட்டியவன், “இனிமே நீ வேலைக்குப் போக வேணாம். ஒழுங்கா, வீட்டில இரு!” என்றான் கண்டிப்புடன். “அதைச் சொல்ல நீ யாரு?” என்று சீறினாள் நந்தினி. அவன் எதுவும் பேசவில்லை. அதுவரை பேசியதே அதிகம் என்று நினைத்தவன்போல, வெளியே நடந்தான். உள்ளேயிருந்து வந்த அம்மாதான் அவளுடைய கேள்விக்குப் பதிலளித்தாள். “மரியாதையாப் பேசுடி. ஒன் குணம் தெரிஞ்சும், பெரிய மனசோட, ஒன்னைக் கட்டிக்க ‘சரி’ன்னிருக்கான் கோபால்!” “அம்மா!” குரலில் அதிர்ச்சியைவிட அதட்டலே அதிகமிருந்தது. “இன்னும் நாலு நாளில கல்யாணம், கோயிலிலே வெச்சு. கண்ட பயலோட நீ… ஒன்னை இப்படியே விட்டா, நான் விஷத்தைத்தான் தேடிப் போகணும்!” “நான் கிரனைத்தான் கட்டிப்பேன்!” “புரியாம உளறாதே நந்தினி. அவன் வெளிநாட்டுக்காரன். காண்டிராக்டிலே வந்திருக்கிறவன். அப்படியே பேருக்கு ஒன்னைக் கட்டிக்கிட்டாலும், கையில புள்ளையைக் குடுத்தப்புறம், ஒன்னை ‘அம்போ’ன்னு விட்டுட்டுத் திரும்பப் போயிடுவான். ஒன்னையுமா கூட்டிட்டுப் போவான்? அங்கே அவனே சோத்துக்கு வழி இல்லாமதானே இங்க வந்திருக்கான்! ” “எனக்காக அவர் இங்கேயே இருப்பாரு!” என்றவளின் சுருதி இறங்கிப் போயிருந்தது. “அடம் பிடிக்காதே, நந்தினி. ஒன்னை அழ வைக்கணும்னு எனக்குமட்டும் ஆசையா? மலேசிய நாட்டு ஆம்பளையைக் கட்டிக்கற பொண்ணு அயல்நாடா இருந்தா, அவ இங்கேயே தங்கலாம். ஆனா, நீ ஒருத்தனைக் கட்டிக்கிட்டா, அவனால அது முடியாது. அவன் திரும்பிப் போய்த்தான் ஆகணும்”. உண்மை பயங்கரமாக இருந்தது. சொற்ப வருடங்களே கிரனுடன் வாழ்ந்துவிட்டு, பின் அவனுடைய குழந்தைகளுடன் திண்டாடிக்கொண்டு, வாழாவெட்டியாக, எல்லாருடைய இளக்காரத்துக்கும் ஆளாக வேண்டுமா அவள்? ஆயினும், கிரன் இல்லாத வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலையில், அழுகை பீறிட்டது. அவருக்கு மட்டும் இதெல்லாம் முன்பே தெரியாமல் இருந்திருக்குமா? பின் ஏன் தன்னிடம் இவ்வளவுதூரம் பழகி, தன்னைப் பைத்தியமாக அடிக்கவேண்டும்? அடுத்த சில தினங்கள் அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து, ஓயாது அழுதாள். இடையிடையே யோசித்தாள். அம்மா அவளுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறார்கள் என்று விளங்கியது. மண் குதிரை அழகாக இருக்கலாம். அதற்காக, அதை நம்பி ஆற்றில் இறங்குவார்களா யாராவது? வெறும் அழகுக்காகத் தன்னைப் பலியிட்டுக்கொள்வது அபாயகரமானது, அறிவீனம் என்ற முடிவுக்கு வந்தாள். அந்த முடிவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை. பலியாடுபோல் திருமணப் பந்தலிலே கோபாலினருகே உட்கார்ந்திருந்தாள் நந்தினி. கடைசியில், தனக்குக் கொடுத்துவைத்தது இந்தக் கறுப்பருடன் சேர்ந்த வாழ்வுதான் என்ற எண்ணம் உறைக்கையில், துக்கம் பொங்கியது. அன்றிரவு. “நீ என்னென்னமோ நினைச்சு கனவு கண்டிருப்பே! என்னால எல்லாம் பாழாயிடுச்சு, இல்ல?” என்ற புதுக்கணவனின் தொனி குத்தலா அல்லது கரிசனமா என்று அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும், கோபால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தனியறையைவிட்டு வெளியேறி, சோபாவில் படுத்துக்கொண்டபோது, நந்தினிக்கு அவன் நாலு வார்த்தை அதட்டியிருந்தால் தேவலை என்று தோன்றியது. கோபாலைப் பொறுத்தவரை, குற்றம் சொல்லமுடியாதபடி நடந்துகொண்டான். அவள் கேட்குமுன், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிப்போட்டான். அதே சமயம், அவள் ஒருத்தி இருப்பதைக்கூட பொருட்படுத்தாதவனாக நடந்துகொண்டான். இப்படி ஒரு உம்மணாமூஞ்சியுடன் வாழ்நாள் பூராவும் எப்படித்தான் தள்ளப்போகிறோமோ என்ற பீதி நந்தினியைப் பிடித்துக்கொண்டது. மௌனம் சாதித்தே தன்னைக் கொல்வதற்குக் கல்யாணமே செய்து கொண்டிருக்க வேண்டாமே என்று ஆத்திரப்பட்டாள். ஆனால், வாய்விட்டு கணவனை எதுவும் கேட்கவும் அவளுடைய சுயகௌரவம் இடங்கொடுக்கவில்லை. நந்தினிக்கு அவள் தாயிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. “தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு…,” என்று இழுத்தவளைப் பாராமலேயே, “நாளைக் காலையில தயாரா இரு. பஸ்ஸிலே ஏத்தி விடறேன்!” என்று விறைப்பாகப் பதிலளித்தான் கோபால். ‘ஒங்களையும்தான் அழைச்சிருக்காங்க!’ என்று சொல்லவந்ததை அடக்கிக்கொண்டாள். அவர்களுக்குத் தலைதீபாவளி. இதுகூடவா தெரியாது அவனுக்கு? “என்ன நந்தினி? இளைச்சு, கறுத்துப் போயிட்டியே! ஏதேனும் ‘விசேஷமா’?” பக்கத்து வீட்டு சரசா கண்ணைச் சிமிட்டியபடி கேட்டபோது, நந்தினிக்கு வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது. இருவரும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்தாம். அப்போதெல்லாம் சரசாவுடன் முகம்கொடுத்துக்கூடப் பேசமாட்டாள் நந்தினி, தன் அழகுக்கு சர்வசாதாரணமாக இருந்தவளுடன் என்ன பேச்சு என்று இறுமாந்திருந்தவளாக. ஆனால் அவளோ, அதையெல்லாம் மறந்துவிட்டு, தோழமையுடன் வந்து குசலம் விசாரிக்கிறாள்! ‘அழகோ, அழகில்லையோ, எல்லாரும் ஒரு நாள் வளர்ந்து ஆளாகத்தான் போறோம். கடைசியிலே பிடி சாம்பலாத்தான் போகப்போறோம்’. அவளுக்குப் புத்தி புகட்டவென்று அம்மா எப்போதோ சொன்னது காலங்கடந்து இப்போது புரிந்தது. யார் தன் அழகை ரசித்துப் பெருமைப்பட வேண்டுமோ, அவரே தன் முகத்தைப் பார்க்கக்கூட வெறுத்து விலகுகிறார்! நந்தினிக்குக் கண்ணீர் ததும்பியது. அதற்குத்தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்ட தோழி, “இன்னுமா அந்த வெளிநாட்டானை மறக்கலே, நீ? விட்டுத்தள்ளுவியா!” என்று சமாதானப்படுத்திவிட்டு, “நம்பகூட வேலை செய்தாளே, குண்டு சுசீலா, அவளை நீ போன கையோட செட்டப் செய்துட்டான்,” என்று தெரிவித்தாள். “யாரு?” தெரிந்தும் தெரியாதவள்போல் கேட்டாள் நந்தினி. “எல்லாம் அந்தத் தடியன் கிரன்தான். நாங்க அவளுக்கு எவ்வளவோ புத்தி சொல்லிப்பாத்தோமே! ‘ஒங்களுக்குப் பொறாமை!’ன்னுட்டா. இப்ப வயத்திலே ஒண்ணு. அந்தப் பழிகாரன் அப்புறம் இங்க ஏன் இருக்கான்?” சரசா விவரித்துக்கொண்டே போனபோது, தான் எப்படிப்பட்ட கண்டத்திலிருந்து தப்பினோம் என்று அதிர்ந்தாள் நந்தினி. அன்று அத்தான் மட்டும் அவனை அடித்து, தன்னை இழுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால், தானும் இப்படி… ஐயோ! மற்றவள் தன்பாட்டில், “ஒன் கல்யாணத்திலே நாங்க எல்லாம் என்ன பேசிக்கிட்டோம், தெரியுமா? ‘சொந்தம்கிறதாலே இப்படிக் கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாதவருக்கு இவளைக் குடுக்கறாங்களே! இவ கலரென்ன, அவர்.,.” என்று சொல்லிக்கொண்டேபோனபோது, ஆத்திரத்துடன் இடைமறித்து, “அட்டையைப் பாத்த உடனே, புஸ்தகத்தோட உள்ளே இருக்கிறது என்னன்னு தெரியுமா? வெளித்தோலைப் பாத்து ஆளை எடை போடக்கூடாது!” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள். அத்தான் தன்னை எப்பேற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்! இது புரியாமல், அவர்மேல் ஆத்திரப்பட்டோமே! எவனுடனோ கையைக் கோர்த்துக்கொண்டு தான் சினிமா, கடைத்தெரு என்று சுற்றியதை அறியாதவரில்லை. அப்படி இருக்கையில், யார் தன்னை மணக்க முன்வந்திருப்பார்கள்? இனியும் ஏன் வரட்டுக் கௌரவம் என்று ஏதோ இடித்துரைத்தது. உடனே அத்தானை போனில் கூப்பிடவேண்டும். ‘மாப்பிள்ளை வராம என்ன தலைதீபாவளி?’ன்னு அம்மா சத்தம் போடறாங்க. அடுத்த பஸ்ஸிலேயே வாங்க’என்று. ‘அம்மாதானே கூப்பிடறாங்க? நீ கூப்பிடலியே!’ என்று சீண்டுவாரோ? அந்தக் கற்பனையிலேயே நந்தினியின் இதழ்க்கடையில் புன்முறுவல் அரும்பியது. (சூரியன், 1995) 6 புது அம்மா வாங்கலாம் “ என்னம்மா இப்படிச் செய்துட்டே ? ” ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டார் அப்பா . “ கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிர் . இப்படியா முறிச்சுக்கிட்டு வருவே ! ” ஒரு கையில் பெட்டியுடனும் , மறு கையில் தனது மகளது கரத்தையும் பிடித்தபடி அசையாது நின்றாள் திலகா . வீட்டுக்குள் நுழையும்போதே இப்படி ஒரு வரவேற்பா ? நல்லவேளை , அவள் எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்பா . “ உள்ளே போய் உக்காரு . சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன் ! ” அவளுக்குத் தெரியும் , அவர் அவசரமாக வெளியே ஓடுவதன் ரகசியம் . தனியாகப் போய் , ஒரு குரல் அழுதுவிட்டு வருவார் . நாலடி நடந்தவர் , ஏதோ நினைத்துக்கொண்டவராக , திரும்பினார் . “ நல்ல வேளை , இதையெல்லாம் பாக்க ஒங்கம்மா இல்ல . இருபத்தி ரெண்டு வருஷமில்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா குடித்தனம் நடத்தினோம் ! ” அலட்சியத்துடன் உதட்டைச் சுழிக்காமலிருக்க பாடுபட்டாள் திலகா . ` நீங்களும் , அம்மாவும் குடித்தனம் நடத்திய லட்சணத்தை நீங்கதான் மெச்சிக்கணும் ! ’ என்று நினைத்துக்கொண்டாள் . ` அப்பா பாவம் ! ’ என்ற பரிதாபமும் எழாமலில்லை . உயரமாக இருந்ததாலோ , ஒல்லியாக இருந்ததாலோ , அல்லது வாழ்க்கைப் பளு முதுகை அழுத்தியதாலோ , நாற்பது வயதுக்குள்ளேயே கூன் விழுந்து , கிழத் தோற்றம் வந்திருந்தது அப்பாவுக்கு . திலகாவுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவரை அப்படித்தான் பார்த்திருந்தாள் . ஆனால் , அவருடைய சாத்வீகமான குணமும் , அதிர்ந்தோ , அல்லது பிறரை ஒரு வார்த்தை கடிந்தோ பேசாத தன்மையும் அவருக்கு நேர்மாறாக இருந்த அம்மாவுக்குத்தான் சாதகமாகப் போயிற்று . “ ஏன் மீனு வேலையிலிருந்து வர இவ்வளவு நேரம் ? ரொம்ப வேலையா ? ” ஏதோ , தனக்குத் தெரிந்த வகையில் இரவுச் சமையலை முடித்துவிட்டு , மகளையும் படுக்க அனுப்பிவிட்டு , தான் சாப்பிடாமல் மனைவிக்காக காத்துக்கொண்டு இருப்பார் வெங்கடேசன் . அவருடைய அனுசரணை மனைவிக்குப் புரியாது . “ இவ்வளவு சந்தேகம் இருக்கிறவங்க பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பக்கூடாது . அவளை நல்லா வெச்சிருக்க துப்பில்லையாம் , ஆனா , பேச்சில ஒண்ணும் குறைச்சல் இல்ல ! ” பட்டப்படிப்பு படித்து , பெரிய வேலைக்கும் போகும் திமிரில் வார்த்தைகள் வந்து விழும் . முகமும் மனமும் ஒருங்கே சுருங்கிப்போகும் அவருக்கு . இருந்தாலும் , இன்னொரு முறையும் , “ ஏன் மீனு லேட்டு ? ” என்று கேட்காமல் இருக்க முடியாது அவரால் . தான் அவளுக்காக உருகுவது ஏன் அவளுக்குப் புரியவில்லை ? மகள் ஒருத்தி இருக்கிறாளே , அவளுடனாவது வந்து பேசி , சிறிது நேரத்தை உல்லாசமாகக் கழிப்போம் என்றுகூடவா ஒரு தாய்க்குத் தோன்றாது ? கதவிடுக்கு வழியாக அப்பாவும் அம்மாவும் பேசுவதை திலகா அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள் . அவள் பயந்தபடியே அம்மா கத்துவாள் : “ நான் என்ன , பாங்கில வேலை முடிஞ்சதும் , எவனோடேயோ கும்மாளம் போட்டுட்டு வரேன்னு நினைச்சீங்களா ? ” தான் நினைத்தும் பாராதது அவள் வாயிலிருந்து வரவும் , வெங்கடேசன் அதிர்ந்துபோனார் . வழக்கமாக அவள் செய்துவந்ததை மறைக்கவே அவள் அப்படித் தாக்கினாள் என்று காலம் கடந்து புரிந்தபோதுகூட , அவள்மேல் ஆத்திரம் எழவில்லை . தான் அவளுக்கு எந்த விதத்திலும் இணையில்லை என்று தன்னைத்தானே நொந்துகொள்ளத்தான் அவரால் முடிந்தது . மீனாட்சியோ , தான் கிடைத்தற்கரிய பொக்கிஷம் , அதனால்தான் தன்னை மணப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டியிருக்கிறார் இந்த மனிதர் என்று எண்ணிக்கொண்டாள் . தன்னிடம் ஏதோ அலாதி கவர்ச்சி இருக்கிறது , அதைக்கொண்டு ஆண்கள் அனைவரையும் அடிபணிய வைக்கலாம் என்ற ரீதியில் அவள் புத்தி போயிற்று . அழகிய பெண் ஒருத்தி வலிய வந்து அழைத்தால் , ` வேண்டாம் ! ’      என்று விலகிப்போகும் விஸ்வாமித்திரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ! சில மணி நேரம் அவளுடன் உல்லாசமாகக் கழித்துவிட்டு , பதிலுக்கு அவள் வேலையாக இருந்த வங்கியில் தங்கள் பணத்தைச் சேமிக்க முன்வந்தார்கள் பல செல்வந்தர்கள் . அவளால் வியாபாரம் கூடியது . பதவி உயர்வு தானாக வந்தது . பராபரியாக சமாசாரம் காதில் எட்ட , மனம் பொறாது , ஓர் இரவுப் பொழுதில் மகளையும் உடன் அழைத்துக்கொண்டு , மனைவி வேலைபார்க்கும் இடத்துக்கே போனார் வெங்கடேசன் . தன் நடத்தையால் மகளும் ஒரு நாள் கெட்டுவிடக்கூடும் என்றாவது அவள் மனம் பதைக்காதா என்ற நப்பாசை அவருக்கு . ஆனால் , அவளுக்கோ , தனக்கு இவ்வளவு பெரிய மகளும் , சந்தேகப்பிராணியான ஒரு கணவனும் இருப்பது பிறருக்குத் தெரிந்துவிட்டதே என்று அவமானமாக இருந்தது . “ ஒங்களை யாரு இங்கேயெல்லாம் வரச்சொன்னது ? எப்போ திரும்பி வரணும்னு எனக்குத்தெரியும் ! ” என்று அடிக்குரலில் மிரட்டினாள் . தலை குனிய , “ வாம்மா , ” என்று அப்பா வெளியே நடந்தது இன்றைக்கும் திலகாவுக்கு மறக்கவில்லை . அன்று வழக்கத்தைவிட நேரங்கழித்து வந்தாள் மீனாட்சி . “ இனிமே அந்தப் பக்கம் நீங்க தலையைக் காட்டினா , தெரியும் சேதி ! நான் எவ்வளவு பெரிய ஆபீசர் ! ஒங்களால இன்னிக்கு எனக்கு ரொம்ப தலைகுனிவாப் போச்சு . என்னை இப்படி அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளாக் காத்துக்கிட்டு இருந்தீங்க ? ” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினாள் . “ எங்கூட வாழப் பிடிக்காட்டி , விவாகரத்தாவது பண்ணித் தொலைங்க . நானும் இந்தப் பாழாப்போன வீட்டைவிட்டுப் போயிடறேன் ! ” என்று ஓர் அஸ்திரத்தையும் எடுத்து வீசினாள் . அப்படி ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை வெங்கடேசனால் . அதன்பின் , மனைவியுடன் பேசுவதையே தவிர்த்துக்கொண்டு , மகளிடம் பாசத்தைக் கொட்டி வளர்த்தார் . அப்பாவின் நிலைமை சிறுமிக்கும் புரிந்துதான் இருந்தது . “ இந்த அம்மா வேண்டாம்பா . இவங்களுக்குத்தான் நம்பளைப் பிடிக்கலியே ! புதுசா வேற அம்மா வாங்கலாம் ! ” என்று ஆலோசனை தெரிவித்தாள் . அப்பா துணுக்குற்றார் . மகளின் தோளில் கைபோட்டு அணைத்தபடி , “ இப்படி எல்லாம் பேசக்கூடாது , திலகா . அம்மா நல்லவங்க . ஏதோ , சகவாச தோஷம் . நாம்பதான் பொறுமையா இருக்கணும் , ” என்று சமாதானப்படுத்த முயன்றார் . ஒருவாறாக , அவரது பொறுமைக்குப் பரிசு கிடைத்தது . படுக்கையோடு படுக்கையாக வீழ்ந்தாள் மீனாட்சி . ஓயாமல் அவரை ஏசிப் பேசிய வாயிலிருந்து இப்போது ஓரிரு அத்தியாவசியமான வார்த்தைகளே வந்தன — அதுவும் குளறலாக . ஒவ்வொரு அங்கமாக சுவாதீனம் குன்றும் , எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத வியாதி என்று அறிந்தபோது , வியாதியின் பெயர் முக்கியமாகப் படவில்லை வெங்கடேசனுக்கு . இவள் இனி தன்னைவிட்டுப் போகவே மாட்டாள் என்று பூரிப்பாக இருந்தது . கைப்பிள்ளையைப்போல் அவளைக் கவனித்துக்கொண்டார் . ஒரு வழியாக , மீனாட்சி வாழ்விலிருந்து விடுதலை பெற்றபோது , அப்பா எதற்காக அப்படி அழுதார் என்று திலகாவிற்குப் புரியத்தான் இல்லை . இப்படியும் ஒரு வெறித்தனமான அன்பா ? இல்லை , ஆணான தன்னைவிட்டு ஒரு பெண் விலகிப் போய்விடுவதா என்ற மானப் பிரச்னையா ? அதனால்தான் அவள் எவ்வளவு தூரம் அத்துமீறி நடந்தபோதும் பொறுத்துப்போனாரோ ? திலகாவின் மனம் அழுதது . அம்மா தான் செய்த பாவங்களுக்கெல்லாம் துடித்துத் துடித்துச் செத்திருக்க வேண்டும் . கடைசிவரை இப்படி ஒரு ராஜபோகத்தை அனுபவிக்க அம்மாவுக்கு என்ன தகுதி இருந்தது ? அப்பாதான் அதற்கும் விளக்கம் சொன்னார் : “ வெவ்வேறு சூழ்நிலையிலிருந்து வந்த ரெண்டுபேர் காலம் பூராவும் சேர்ந்து இருக்கணும்னா , கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும் . விட்டுக் குடுக்கிறதுதான் வாழ்க்கை ! ” கல்யாணம் என்றாலே மிரண்டு போயிருந்தவள் , அப்பாவின் மகிழ்ச்சிக்காக ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டினாள் . ஆனால் , அப்பாவின் வாழ்க்கையே தனக்கு அமைந்துவிடும் என்பதை அவள் எதிர்பார்க்கத்தான் இல்லை . “ நடந்ததை மறைச்சு , என்னை ஏமாத்திடலாம்னு பாத்தீங்களா ? அந்த அம்மாவுக்குப் பிறந்தவதானே நீ ! ” என்று கணவன் வார்த்தைகளாலேயே குதறியபோது , துடிதுடித்தாள் . ` அம்மாவைப்போல் தானும் கட்டினவரைப் பார்த்துக் கண்டபடி கூச்சல் போடக்கூடாது ! ’ என்று தன்னை அடக்கிக்கொண்டாள் . அவளிடமிருந்து எதிர்ப்பே இல்லாத துணிச்சலில் , அவன் உடல் ரீதியான வதைகளைச் செய்ய ஆரம்பித்தபோதும் , அப்பாவிடம் கற்ற பொறுமையைக் கடைப்பிடித்தாள் திலகா . உடல் , மனம் இரண்டும் மரத்துப்போயின . அப்பாவின் ` மான ரோஷமற்ற ’ நடத்தைக்கும் அர்த்தம் புரிந்ததுபோலிருந்தது . மூன்றே வயதான மகள் ஒரு நாள் , “ பயம் ..! பயம் ..! ” என்று திக்கித் திக்கி அழ ஆரம்பித்து , ஓயவே மாட்டாளோ என்று அச்சப்படும் அளவுக்குக் கதறியபோதுதான் திலகா விழித்துக்கொண்டாள் . நாம் பட்ட துயரங்கள் நம்மோடு ஓய்ந்துவிடும் என்று நம்பினோமே ! இப்போது மகளும் அதே நிலைமையில்தான் இருக்கிறாள் ! முதலில் பயம் , பின் கோபம் , சுயவெறுப்பு , இறுதியில் , ` நிலைமையை மாற்றவே முடியாது ’ என்கிற விரக்தி . அதனாலேயே , நடைப்பிணம்போல ஒரு வாழ்க்கை . இருபத்து ஐந்து வருடங்கள் தான் அனுபவித்த கொடுமையையெல்லாம் இந்தப் பிஞ்சும் அனுபவித்தாக வேண்டுமா ? அப்பா வளர்த்த பெண் அவரைப்போலவே இருந்தாள் . கணவரை எதிர்த்துப் போராடுவது எப்படி என்று அப்பா அவளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை . ` நிரந்தரமாகப் பிரிவதுதான் ஒரே வழி , ’ என்று நிச்சயித்தாள் . அவளுடைய முடிவு அப்பாவுக்குப் புரியாமல் போகலாம் . ஆனால் , மகளாவது தன்னைப்போல் இல்லாது , நிம்மதியும் , சிரிப்புமாய் வளருவாள் என்ற நம்பிக்கை எழ , திலகாவின் மற்ற குழப்பங்கள் அனைத்தும் மறைந்தே போயின . ( மயில் — மலேசியா , 1994) 7 என் பெயர் காதல் அம்மா பெயர் மங்களம். அதை முதன்முதலில் தெரிந்துகொண்டபோது, “எப்படிம்மா இந்தப் பேரு வெச்சாங்க?” என்று கேட்டேன். “என் பாட்டி பேரு,” என்றாள். “என் பேருமட்டும் ஏன் பிரேமா?” பாட்டியின் பெயர் பிரேமா இல்லை. “ஒன் கேள்விக்கெல்லாம் யாரால பதில் சொல்ல முடியும்?” என்று அம்மா அலுத்துக்கொண்டாள். இருந்தாலும் சொன்னாள், “இந்தப் பேரு அழகா, நாகரீகமா இருக்குன்னு அப்பாதான் வெச்சார்!” பெயர்களும் பொருளுள்ள வார்த்தைகள்தாம் என்று பிறகு தெரிந்தது. பத்து வயதில் நான் அகராதி பார்க்கக் கற்றுக்கொண்டதும் தேடிய முதல் வார்த்தையின் பொருள் — காதல். ஆம், என் பெயரின் அர்த்தம்தான். நேரே அம்மாவிடம் போய், “காதல்னா என்னம்மா?” என்று கேட்டேன். அவள் முகம் போன போக்கைப் பார்த்து, கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. “என்னமாதிரி புஸ்தகம் எல்லாம் படிக்கிறே நீ?” என்று இரைந்தாள். அன்றையிலிருந்து இன்றுவரை — அதாவது, எனக்குத் திருமணம் ஆகும்வரை — என் பெயரின் பொருளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். “ஏண்டி பிரேமா! ஒன்னைப் பாத்தா ஒரு கல்யாணப்பொண்ணுமாதிரியா இருக்கு? ஒரு சிரிப்பு, ஒரு வெக்கம், அலங்காரம் ஒண்ணையும் காணோமே!” என்று அரற்றிய அம்மா, நான் வழக்கம்போல் காதில் வாங்காமல் இருந்ததைப் பார்த்து, “ஏ பிரேமா! ஒன்னைத்தான்!” என்று உரக்கக் கத்தினாள். நான் புத்தகத்திலிருந்து கண்ணைச் சிரமப்பட்டு விலக்கி, எதிரே நின்றிருந்த அம்மாவிடம் பதித்தேன். பெயருக்கு ஏற்ப, மங்களகரமாக — நெற்றி நிறைய குங்குமமும், காதோரம் இழைத்த மஞ்சள் பூச்சுமாய் நின்றிருந்தாள். “என்ன புதுசாப் பாக்கறே?” அம்மாவின் குரலில் எரிச்சலுடன் சிறிது பெருமையும்கூட. அது என்னவோ, நான் சும்மா பார்த்தால்கூட உற்றுப் பார்ப்பதுபோல்தான் எல்லாருக்கும் தோன்றுகிறது. இப்படிப் பார்க்கிறேனே தவிர, ஒருவருடைய முகத்தையும், என்னுள் பதித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை. அத்தை மூக்குத்தி போட்டிருக்கிறாளா, இல்லையா, சித்தப்பா கண்ணாடி அணிவாரா — இந்தமாதிரி கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், பிறருடைய வெளிப்புறத்தையும் மீறி, அந்தரங்கத்தில் உள்ள எதிலேயோ என் மனம் பதிந்துவிடும், என்னையும் அறியாமல். இன்னது பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. செடியிலிருந்து ரோஜாப்பூவைப் பறிக்கப்போய், ‘உன்னைக் கிள்ளினால் உனக்கு வலிக்காதா?’ என்று அந்த சிவந்த மலர் என்னைக் கெஞ்சி அழுவதுபோல் தோன்ற, அதன் பயத்தில், துக்கத்தில், நானும் பங்கு கொண்டவளாய், கண்ணீர் சிந்தியிருக்கிறேன் பலமுறை. தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவரின் உதடு எப்படி ஊதா நிறமாகத் தெரிகிறது என்ற யோசனை வரும். அவர் ஓயாமல் புகைபிடிப்பவராக இருக்க வேண்டும், கறுத்த உதடுகள் அதிப்பிரகாசமான மின்வெளிச்சத்தில் நிறம் மாறித் தெரிகின்றன என்று கண்டுபிடிப்பேன். “பிரேமா!” அம்மாவின் குரல் கெஞ்சலாக ஒலிப்பது வெகுதூரத்திலிருந்து வருவதுபோல் ஒலித்தது. “இப்படி எங்கேயோ போயிடாதே. இத்தனை வருஷமும் பரவாயில்ல. இப்ப புருஷன் வீட்டுக்குப் போகப்போற பொண்ணு நீ! அங்கேயாவது ஒன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமா இருடி. இப்படி இருந்தியானா, ‘சித்தப்பிரமை’ன்னு நெனைச்சுப்பாங்க!” அம்மாவின் அறியாமையைக் கண்டு எனக்குப் பாவமாக இருந்தது. ‘எல்லாரையும்போல இருடி!’ எனக்கு ஓயாமல் வழங்கப்பட்ட அறிவுரை. நானும் முயன்றுதான் பார்த்தேன். ஆனால், மற்ற பெண்கள் விரும்பிப் பேசும் எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எவள் எந்தப் புடவை கட்டினால் என்ன, வீட்டு வேலைகளை அவரவர் செய்யும் நேர்த்தியைப்பற்றி அப்படி ஓயாமல் பேசாவிட்டால்தான் என்ன! அவர்களுடைய அறிவும், ஆர்வமும் ஏதோ வேண்டாத இலக்கை நோக்கிப் பாய்வதுபோல் இருந்தது எனக்கு. முதலில் என்னையும் தங்களைப்போல் மாற்ற முயன்று, அடுத்து நான் இப்படி ஒருவருடனும் ஒட்டாமலிருப்பதன் காரணகாரியங்களை — சிறிது வம்பையும் கூடவே கலந்து — ஆராய்ந்து, இறுதியில் என்னால் அவர்களுக்கு ஒரு தொல்லையும் வராது என்று புரிந்தவுடன், என்னை என் வழிக்கே விட்டுவிட்டார்கள் என்னுடன் பழக நேரிட்டவர்கள். நானும் சௌகரியமாக என் எண்ணங்களிலேயே மூழ்கிப்போனேன். இப்போது விஞ்ஞானம் படித்து, அதில் இரண்டு பட்டங்களும் வாங்கியதும்தான் தெரிகிறது நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று. மனித மூளையில் இரு பகுதிகள், வலம், இடம் என்று. என்னைப் போன்றவர்களுக்கு வலப்புறத்தின் ஆதிக்கம் அதிகம். ஓயாத எண்ணங்களும், கற்பனையும் இதன் வேலை. அம்மாமட்டும் அவ்வப்போது என்னை உசுப்பி இருக்காவிட்டால், யோசித்து, யோசித்தே ஞானியாக ஆகியிருப்பேனோ, என்னவோ! சாதாரணமாக, சிறு குழந்தைகள் மட்டும்தான் இப்படி இருப்பார்கள். உலகத்தை ஒட்டி அவர்களை வாழவைக்கும் முயற்சியில் பெரியவர்கள்தாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் அந்த இன்பத்தை அபகரித்து விடுகிறார்கள். என் போக்கைப் பார்த்துப் பயந்துகொண்டிருந்த அம்மா என் திருமணப்பேச்சை எடுக்கத்தான் எவ்வளவு பயந்தாள்! “ஒரு பொண்ணு கொடிமாதிரி. அதைப் படரவிடுகிற கொழுகொம்புதான் புருஷன்,” என்று ஏதேதோ அளந்தாள். அம்மா இவ்வளவு சிரமப்பட்டிருக்கவே வேண்டாம். ‘காதல்’ என்ற வார்த்தை அகராதியிலும், கதைப்புத்தகங்களிலும்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிற அளவுக்கு எனக்குள் ஆயாசம் பிறந்திருந்தது. இல்லாத ஒன்றைத் தேடுவதைவிட, எல்லாரும் காட்டும் வழியில் போய்த்தான் பார்ப்போமே என்ற விரக்தியுடன், எதிர்ப்பே தெரிவிக்காது இருந்துவிட்டேன். அம்மாவுக்குக் கொள்ளை சந்தோஷம். “இவ்வளவு படிச்ச பொண்ணு! மத்த அறைகுறைங்களைப்போல காதல், கீதல்னு கண்டவனை இழுத்துக்கிட்டு ஓடாம, எவ்வளவு அமரிக்கையா பெரியவங்க பேச்சைக் கேக்குது!” என்று அத்தையிடம் பீற்றிக்கொண்டாள். முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் ஒரேநாள் மணவிழாவால் இணைக்கப்பட்டு, ஆயுள்பூராவும் இணைந்திருக்கவேண்டிய நிலை என்னைப் பொறுத்தவரை கஷ்டமாக இல்லை. நல்லவேளை, என் கணவரும் பெரிதாக எதிர்பார்ப்புகளை ஏந்தியிருந்து, என்னால் ஏமாந்து போகவில்லை. அவசியம் வந்தால் கொஞ்சம் பேசினோம். நான் எப்போதும்போலவே புத்தகங்களில் ஆழ்ந்துவிடுகையில், நிம்மதி அடைந்தவராக, அவர் வெளியே சென்று, நண்பர்களுடன் பொழுதைக் கழித்தார். அம்மா சொன்னதுபோல், அவரைக் கொழுகொம்பாகப் பாவித்து நான் அவர்மேல் கொடியாகப் படரவெல்லாம் இல்லை. எப்போதும்போல்தான் இருந்தேன். எங்களிருவரின் உடல்களும் அருகருகே இருந்தபோதும், அவர் கரம் — சமூக அங்கீகாரத்துடன் தான் பெற்ற உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் — என்மீது படர்ந்தபோதும்கூட என் மனம் எங்கோ தொலைதூரத்தில்தான் இருந்தது. வாயில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பதைப்போல ஒரு ஆணும், பெண்ணும் அந்தரங்கமான உறவு கொள்ளும்போது சிலிர்த்துப்போவது உடற்கூற்றினால்தான் என்று அறிவுபூர்வமாக என் மனம் விவாதித்தது. உடலுக்குள் எத்தனை எத்தனை சுரப்பிகள் இருக்கின்றன என்பது நான் அறியாததா, என்ன! இதில் காதல் எங்கிருந்து வந்தது? என்னமோ எல்லாரும் சேர்ந்து என்னை வஞ்சித்துவிட்டமாதிரி இருந்தது. எனக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். பிறந்தகத்தைவிட்டுப் போன சீக்கிரத்திலேயே நான் திரும்ப வந்துவிட்டேன், நிரந்தரமாக. இப்போதெல்லாம் அம்மா என்னிடம் ஆத்திரப்படுவதில்லை. தான் மங்களகரமாக பூவும், பொட்டுமாக இருக்கையில், மகள் அந்த உரிமையை இழந்துவிட்டாளே என்ற குற்ற உணர்வோ? நான் எப்போதும்போல்தான் இருந்தேன். ஆனால், கொழுகொம்பை இழந்ததில் ரொம்பத் துக்கப்பட்டுவிட்டேன் என்று எல்லாரும் எனக்காகப் பரிதாபப்பட்டார்கள். இப்படியே இருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடுமாம்! இந்தச் சாக்கில்தான் ஆசிரியர் பயிற்சி பெற என்னை அனுப்பினார்கள். காலமெல்லாம் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள ஏதாவது வழி வேண்டாமா? ஆனால், இதை யாரும் வாய்திறந்து சொல்லவில்லை. ஓயாமல் படித்ததற்காகத் திட்டுவாங்கியே பழக்கப்பட்டிருந்த எனக்கு, ‘படித்துத்தான் ஆகவேண்டும்’ என்ற நிர்ப்பந்தம் வரவேற்கக்கூடியதாகத்தான் இருந்தது. நான் உண்டு, கல்லூரி வாசகசாலை உண்டு என்று அமைதியாக காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தேன். அங்கேதான் அவரைப் பார்த்தேன். டாக்டர் கோசல்ராம் என்ன இனத்தவர் என்றே கண்டுகொள்ள முடியாதபடி உருவத்தில் தனித்திருந்தார். ஒட்டுச்செடியைப்போல, பற்பல இனக்கலவைகள் சேர்ந்து, வித்தியாசமாக இருந்தார். நாடி பிடித்து, காய்ச்சலுக்கு மருந்து அளிக்கும் டாக்டர் அல்ல அவர். மனத்தின் வக்கிரங்கள் அவரது சிறப்புப்பாடம். மனோதத்துவத்தின் ஒரு பிரிவான ‘கவுன்செலிங்’பற்றிப் பாடம் நடத்தியபோது, ஒவ்வொரு வரியிலுமே நகைச்சுவை இழையோட, தன் வேலையைப் பெரிதும் நேசித்து, ரசித்து, அவர் சிரித்தபோது, வகுப்பு முழுவதுமே குலுங்கிச் சிரித்தது. ‘அடேயப்பா! இந்த இளம் வயதிலேயே இந்த மனிதருக்குத்தான் என்ன மூளை!’ சம்பந்தமில்லாது எனக்குப் பெருமிதம் தோன்றியது. ‘இவருக்கு என்ன, முப்பத்தி ஐந்து, நாற்பது வயது இருக்குமா?’ என்று எண்ணமிட்டுவிட்டு, என்னையே கடிந்துகொண்டேன். அந்நிய ஆணைப்பற்றி இது என்னவேண்டாத யோசனை! அவர் உருவத்தைவிட்டு, அவர் போதித்ததில் கவனம் செலுத்த முயன்றேன். ‘கவுன்செலிங்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் ‘ஆலோசனை கூறுதல்’ என்கிறது அகராதி. உண்மையில், அதைமட்டும் ஒரு கவுன்சிலர் — நம் கவலையை நாம் விவரிக்கும்போது அதைப் பொறுமையாகக் கேட்பவர் — செய்துவிடக்கூடாது என்றார் டாக்டர் கோசல்ராம். ‘சாதாரணமாக, ஒருவர் நம்மிடம் வந்து தன் பிரச்னைகளைக் கூறிக்கொள்ளும்போது, ‘நான் அவரைவிட உயர்ந்தவன்’ என்ற கர்வம் அடைவது மனித இயல்பு. ஆனாலும், உண்மையான ஆலோசகர்களோ, ‘நானும், நீயும் சமம்தான், நமக்குள் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும்!’ என்ற நம்பிக்கையை அளிப்பவர்கள். இந்தப் பக்குவம் அடைய, பிறர் நம்மிடம் வந்து என்ன பேசினாலும், பேசுபவரின் மனநிலையோடு தானும் ஒன்றிவிடும் திறனை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்’. அவர் பேசப்பேச, என்னுள் ஏதோ அசைந்தது. வாய்வார்த்தையாக இல்லாமல், எப்படி மனப்பூர்வமாக, அனுபவித்துப் பேசுகிறார்! எனக்குமட்டும் ஏன் இவ்வளவு கலகலப்பாக இருக்க முடிவதில்லை? வாசகசாலையிலிருந்த அலமாரியின் அருகே சென்று, ஒவ்வொரு புத்தகமாகத் தள்ளித் தள்ளி, எனக்கு வேண்டியதை நான் தேடுகையில், அடுத்த அலமாரியின் அருகே நின்றிருந்த நெடிய உருவம் கண்ணில் பட்டது. அவர் பக்கத்தில் போய் வணக்கம் தெரிவித்துவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பதில் வணக்கம் தெரிவித்தபோது, அவர் விறைப்பாக இருந்ததுபோல் தோன்றியது. அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டிருந்தார். என் மனக்கண்ணுக்கு அந்த வட்டம் புலப்பட்டது. “டாக்டர் கோசல்ராம்! உங்களிடம் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்கலாமா?” ஒப்புதலுக்கு அடையாளமாக அவர் தலையசைத்தார். வகுப்பில் வாய் ஓயாமல் பேசவேண்டியிருந்தாலும், பொதுவாக அவர் அதிகம் பேசுவதில்லை, விதவிதமான தலையசைவுதான் அவருடைய மொழி என்று போகப் போகத் தெரிந்துகொண்டேன். “ஒரு ஆலோசகர் தன்னிடம் மனக்கவலையை சொல்லிக்கொள்ள வருபவரின் மனநிலையில் தன்னைப் பொருத்திக் கொள்ளவேண்டும், இதுதான் பாதிக்கப்பட்டவரைப் புரிந்துகொள்ளும் வழி என்றீர்களே, வகுப்பில்?” இன்னமும் கேட்க ஊக்கம் அளிக்கும் வகையில், மேலும், கீழுமான தலையசைப்பு. “இவர்கள் ஆணும், பெண்ணுமாக இருந்தால்? இருவரது உள்ளங்களும் நெருங்கி விடும் அபாயம் இருக்கிறதே?” தலையைச் சாய்த்து, யோசிக்கும் பாவனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பின் நிதானமாகப் பேசினார் அவர். ‘வார்த்தைகள் என்றால் இவருக்கு அப்படி ஒர் நேசமோ!’ என்று பிரமிக்கத் தூண்டும் வகையில், ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்து, தனித்தனியே, தெளிவாக உச்சரித்தார்: “பேசி முடிந்தபிறகு, அவர்களுக்குள் நடந்த உரையாடலை எழுத்தில் வடித்து, தேதியும் குறித்துக்கொள்ளவேண்டும் ஆலோசகர். இப்படிச் செய்தால், அவர் நினைவிலிருந்து மற்றவரை விலக்க முடியும்”. இது நடக்கிற காரியமா! என் அவநம்பிக்கையைப் புரிந்துகொண்டதன் அடையாளமாக அவர் கண்ணில் ஒரு மென்மை. “இதையும் மீறி அவர்களுக்கிடையே கவர்ச்சி தோன்றும் பட்சத்தில், அந்தத் தொடர்பை முறித்துக்கொண்டு, வேறு ஆலோசகரிடம் அவரை அனுப்பிவிடவேண்டும்”. “நான் கேட்கவந்தது இதுதான்!” என் வாக்கியம் முடிவதற்குள் அவர் அப்பால் நகர்ந்தார். அடேயப்பா! என்ன உயரம்! ஆறடி இருப்பாரா? அவர் நடந்துபோவதைக் கவனித்துப் பார்த்தேன். மென்மையான, ஆனால் கம்பீரமான நடை — குரலைப்போலவே. பூமிக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதுபோல். அவருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டது காலங்கடந்து நினைவுக்கு வர, “தாங்க்ஸ், டாக்டர் ராம்!” என்று கத்தினேன். வாசகசாலையின் நிசப்தமான சூழ்நிலையில் அது நாராசமாக ஒலித்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஒரு வகுப்பறையிலிருந்து இன்னொன்றுக்குப் போகையில், அவரைப் பார்த்தேன். இல்லை, அவரே என்னை முதலில் பார்த்துவிட்டு, “குட் மார்னிங், மிஸ் பிரேமா! எப்படி இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார். எனக்குப் பெருமையாக இருந்தது. என்னை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறாரே! நான் சட்டென்று நின்றேன். அவரும் நின்றார். மரியாதையைக் கருதி, நாலு வார்த்தை பேசிப் பிரிந்தோம். அதன்பின், அவரை வாரத்தில் ஓரிரு முறை சந்திப்பேன் — வகுப்புக்குப் போகும் வழியில், வகுப்புக்கு வெளியே, இப்படி. வணக்கம் தெரிவித்துக்கொண்டபிறகு, உடனே எந்த விஷயத்தைப்பற்றியாவது மும்முரமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம். யோசித்துப் பார்த்ததில், நான் பேசியதுதான் அதிகம் என்று தோன்றுகிறது. நான் கூறியது எனக்கே தெளிவாக இல்லாதபோது, அதையே அடுத்த கேள்வியாகக் கேட்டு, மேலும் அதைப்பற்றிப் பேச மறைமுகமாகத் தூண்டுவார். ‘இவருக்கு எப்படி நான் எதைப்பற்றிப் பேசத் துடிக்கிறேன் என்று தெரிகிறது!’ என்று நான் வியந்ததுண்டு. ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது, அதனால் எனக்குள் உண்டான ஆழ்ந்த பாதிப்பை என் முகபாவத்திலிருந்து இனம் கண்டுகொண்டிருப்பாரோ? என்னையும் அறியாது, நான் உடலை வளைத்தோ, அல்லது விறைத்தோ நின்று, அதீதமான கையசைவுகளுடன் பேசியதை அவர் மிகமிக உன்னிப்பாகக் கவனித்ததை அறிவேன். அந்த ஒருமுனையான கவனம்தானே என்னை அப்படிப் பேசத் தூண்டியது! ‘என்னை இதுவரை யாருமே புரிந்துகொள்ளவில்லையே!’ என்ற ஏக்கம் எனக்கே தெரியாமல் என்னுள் இருந்திருக்கவேண்டும். என்னையே மறந்து, இன்னதுதான் பேசுகிறோம், இதைத்தான் பேசலாம் என்ற வரம்பு இல்லாமல், தோன்றியதை எல்லாம் அவருடன் பேசினேன். (‘ஏன் மனிதர்கள் இப்படிச் சுயநலமிகளாக, பொறாமைக்காரர்களாக இருக்கிறார்கள்?’ ‘அன்பு எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அது ஏன் பெரும்பாலோர் அதிகாரத்திலும், ஆத்திரத்திலும் திளைத்து, அதிலேயே சுகம் காணுகிறார்கள்?’) இப்படி என் எண்ணங்கள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டேன். அத்தருணங்களில், எங்களைச் சுற்றி ஒரு உலகம் இருந்ததை மறந்தேவிட்டோம். கருத்துப் பரிமாறலே முக்கியமாகப்பட்ட நிலையில், எங்கள் குரல் ஒருவருக்கொருவர் கேட்கும் தொலைவில், (நான்கிலிருந்து பத்தடிவரை) நின்றபடி உரையாடினோம். உடல் நெருக்கம் முக்கியமாகப் படவில்லை. விடுமுறைக்கு வீடு திரும்பியபோது உற்சாகமாக இருந்தேன். அம்மாவிடம் டாக்டர் கோசல்ராமைப்பற்றிக் கதைகதையாகச் சொன்னேன். அம்மா கவனித்தாளா, இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை. “என்ன வயசிருக்கும் அந்த ஆளுக்கு?” என்னைச் சந்தேகமாகப் பார்த்தாள். “பார்க்க அழகா இருப்பானோ?” நான் யோசித்தேன். அவர் மீசை வைத்திருந்தாரோ? எவ்வளவு முயன்றும் என் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைமுடி — சுருட்டையா, அடர்த்தியா, இல்லை, வழுக்கையா? அதுவும் தெரியவில்லை. எனக்கே என்னைப் பார்த்து வேடிக்கையாக இருந்தது. இவ்வளவுதூரம் பேசி இருக்கிறேனே, பின் என்னதான் என் மனதில் பதிந்தது? இரு தீர்க்கமான கண்கள் தோன்றி மறைந்தன. என் பயிற்சிக்காலம் முடிவடையும் தறுவாயிலிருந்தது. விடுமுறை கழிந்து, மீண்டும் கல்லூரிக்குப் போனேன். அவரைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. சிரித்தபடி அருகில் ஓடி, “டாக்டர் ராம்! நான் வந்துவிட்டேன்!” என்றேன். அவர் தலையசைத்தார் ஒரு முறை. மெல்ல. மேலும் கீழுமாக. “இன்னும் இரண்டே வாரங்கள்!” அவர் குரலில் புதிதாக ஏதோ கேட்டது. எனக்குப் புரியவில்லை. வழக்கம்போல், முதல் வாரம் நான் நிறையப் பேசினேன். அதன்பிறகுதான் எங்கள் நிலை மாறிப்போயிற்று. ஒரு நாள், எனக்குப் பேசவே இடைவெளி கொடுக்காது, அரைமணி நேரத்துக்குக் குறையாது, அவரே பேசினார். எப்போதும்போல் தாழ்ந்த குரலில். ஆனால் ஒரு மாற்றம். என் பிரச்னைகளை நான் எந்தவிதமாகத் தவிர்க்கலாம் என்று நயமாக எடுத்துக் கூறும்போது, அவரே நானாகி, அதாவது கோசல்ராம் பிரேமாவாகி, துயரப்படுவதுபோல் பட்டது. ஒருவரின் குரல் தென்றலைப்போல் இதமாக மேனியை வருடுவது நடக்கிற காரியமா என்ற பிரமிப்பு தோன்றியது எனக்குள். ஏனோ அம்முறை என்னால் அவருடைய கண்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அடிக்கடி என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். சில சமயம் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டேன். எல்லையில்லா கருணையில் தோய்ந்த அவரது வார்த்தைகளை ஏற்பது அவ்வளவு கடினமாக இருந்தது. ஏனென்று தெரியவில்லை, அதன்பின் என்னைச் சந்திப்பதையே அவர் தவிர்ப்பதுபோல் பட்டது. ஏதேதோ எண்ணினேன். நான் அவருடைய மணவாழ்க்கையில் குறுக்கிடுவேன் என்று பயந்திருப்பாரோ? நினைக்கவே கூசியது. அவருடன் உரக்கப் பேசுவது நான் எனக்குள்ளேயே பேசிக்கொள்வதைப்போல தங்குதடையின்றி இருந்ததே! எந்தப் பெண்ணும் சாதாரணமாகச் சொல்லத் தயங்குவதைக்கூட ஏதோ ஒரு உரிமையில் அவருடன் பகிர்ந்துகொண்டேனே! எப்போதுமே உணர்ச்சிகளைக் காட்டாத அவரது முகம் அப்போதும் நிச்சலனமாக இருந்தாலும், அந்தக் கண்கள் சிரிக்கவில்லை? யோசித்துப் பார்த்தேன். நான் என்றுமே அவரிடம் வலியப்போய் பேசியதில்லை. யதேச்சையாக நாங்கள் சந்தித்துக்கொள்ள நேரிட்டபோது, நான் முதலில் வணக்கம் தெரிவிப்பேன். அவரும் தன் கேள்விக்கணைகளை ஆரம்பிப்பார், விட்ட இடத்திலிருந்து. இப்போதோ என் வணக்கத்துக்குப் பதிலாக ஒரு லேசான தலையசைப்பைமட்டும் தந்துவிட்டு, நகர்ந்துவிடுபவரிடம் எப்படிப்போய் பேசுவது என்று புரியவில்லை. குழம்பிய நிலையில் அவ்வாரத்தை ஓட்டினேன். மறுநாள்தான் கடைசி. சூரியன் அஸ்தமனமாகும் வேளையில், தோட்டத்தில் எனக்குப் பரிச்சயமான ஒவ்வொரு மரம், செடி, பூவிடமும் விடைபெற்றுக்கொள்வதுபோல், ஆழ்ந்த கவனத்துடன், நிதானமாக நடந்துகொண்டிருந்தேன். “குட் ஈவினிங், மிஸ் பிரேமா!” பழக்கமான குரல். அந்த நெடிய உருவத்தின் ஆழத்திலிருந்து வந்ததுபோலிருந்தது. அதிர்வுடன் திரும்பினேன். அவர்தான்! என் கண்கள் அவருடைய கண்களுடன் கலக்க, ஏக்கமோ, வேறு எதுவோ அந்த இரு ஜோடி கண்களிலிருந்தும் வெளியானதை உணர்ந்தேன். எங்கள் நிலை மறந்து, அப்படியே — கண்களின் சங்கமத்தைக் கலைக்க விரும்பாது — நின்றிருந்தோம். இமைக்கவும் துணியவில்லை. நீண்ட நேரம் என்றுதான் தோன்றுகிறது. மீண்டும், என் முகத்தை மிகமிக மெதுவாக நான் திருப்பிக் கொள்கையில், என் ரத்த நாளங்களுக்குள் வெம்மையாக ஏதோ ஓடிற்று. மூச்சு வேகமாக வந்து வியர்த்தது. முதன்முறையாக என் வாய் அடைத்துப் போயிற்று. அதுதான் எங்கள் கடைசி சந்திப்பு. நான் அப்போது பேசவே இல்லை. ஆனால், அவரைச் சுற்றி இருந்த வட்டம் பெரிதாகி, அதில் நாங்களிருவரும் இருந்தோம். இப்போதெல்லாம் என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று நான் குழம்புவதில்லை. ‘காதல்’ என்பது இனம், வயது, மொழி போன்ற எல்லாவிதமான பாகுபாட்டையும் கடந்து, அடிப்படை எண்ண ஒற்றுமையால் பிறப்பது என்று புரிந்தது. எங்கோ வாயு மண்டலத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒலியலையானது இணைக்கும் கம்பிகூட இல்லாது, வீட்டுக்குள் இருக்கும் வானொலிப்பெட்டிவழி கேட்பதில்லையா? அதுபோலத்தான். ஒருவரது மனத்தினடியிலிருந்து எழும் எண்ணங்கள் உடனுக்குடனே அதே அலைவரிசையில் இயங்கும் இன்னொருவரைப் போய்ச் சேர்ந்துவிடமுடியும். ஆனால், அவ்வுணர்வு எங்கோ அபூர்வமாகத்தான் பிறக்கும் என்பது புரிந்துபோயிற்று. அகாலமாகவும்தான். இதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவே வேண்டாமோ! இப்போது கொஞ்சநஞ்சமிருந்த அமைதியும் போய்விட்டது. என் பெயர் எனக்கு விளங்கக் காரணமாக இருந்தவரைச் சந்திக்க வேண்டும் என்று துடித்த மனத்தை அடக்க வழி தெரியவில்லை எனக்கு. நிம்மதி பெற வேறு மார்க்கம் புலப்படாது, கடவுள் படத்தின்முன் அமர்ந்துகொண்டு, கண்ணீர் பெருக்கி விம்முவேன். கோசல்ராம் இருக்குமிடம் தெரிந்தாலும்கூட, அவரை நானாகப் போய் பார்ப்பது சரிதானா? ‘இந்த ஆண்பிள்ளையை எனக்குப் பிடிக்காது!’ என்று பெண்ணொருத்தி சொல்லலாம். அதை உலகம் ஏற்கும். அதுவே, ‘இவரைப் பிடித்திருக்கிறது!’ என்று சொன்னால்மட்டும் அதில் என்ன கேவலம்? எனக்குப் புரியத்தான் இல்லை. ஓயாது எழும் கேள்விகளுக்கு இடையிடையே நாங்கள் சந்தித்துப் பேசிய ஒவ்வொரு வினாடியும் மனத்தடியிலிருந்து எழுந்து, மேலே வந்து, போயிற்று. திரும்பத் திரும்ப. வேடிக்கைதான். அவை நிகழ்ந்தபோது, ‘எவ்வளவு இன்பகரமான உணர்வுகள்!’ என்று ஏன் நான் உணரவில்லை? சட்டென ஏதோ தட்டுப்பட்டது. தன் உள்ளுணர்வை அவர் எனக்கு முன்பே அறிந்திருக்கவேண்டும். அதுதான் விலகிப் போனாரோ? இந்த மனம்தான் எப்படி எல்லாம் ஓடுகிறது! அவர் என்னை நினைவில் வைத்திருப்பார் என்பதே என்ன நிச்சயம்? அந்த எண்ணமே அதிர்ச்சி தந்தது. ‘மறந்திருக்கக் கூடாதே!’ என்ற பதைப்பு உண்டாகியது. நான்மட்டும் இப்படிப் பைத்தியக்காரியாக உருகுகிறேன், அவர் எப்படி என்னை மறந்திருக்க முடியும் என்று அடித்துக் கேட்டது எதுவோ. அவரும் என்னை நினைத்து நினைத்து ஏங்குவதைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன். என் சுயநலத்தை எண்ணுகையில், ஓர் சிறு கோபம் தோன்றும். சே, பாவம்! சுறுசுறுப்பாக, பிறர் அமைதிக்காக தன் நேரத்தைச் செலவழிக்கத் தயாராக இருந்த உத்தமர்! அவராவது நிம்மதியோடு, எப்போதும்போலத் தம் வேலையில் ஒன்றி, தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கட்டும். எண்ண ஓட்டத்தில் ஒரு திடீர் தேக்கம். அந்தப் ‘பிறரில்’ என்னைப்போன்ற இளம்பெண் இருந்து, அவளும் அவரது கம்பீரத்திலும், மனிதாபிமானத்திலும் மனதைப் பறிகொடுத்து… என்னையும் அறியாது நான் சிரித்தேன். அன்பு வந்தாலே ஆதிக்கமும் எப்படி வந்துவிடுகிறது! அவர் எந்தப் பெண்ணுடன் எப்படிப் பேசிப் பழகினால் எனக்கென்ன? அவரைக் கட்டுப்படுத்த நான் யார்? ‘ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் பிரத்தியேகமான காரணங்கள் இருக்கலாம். பிறரை எடைபோடவோ, குறை சொல்லவோ, கட்டுப்படுத்தவோ நாம் யார்?’ என்று ஒரு முறை அவர் என்னுடன் விவாதித்தது ஞாபகம் வந்தது. அவருடைய முகம் நினைவில் பதியவில்லையே தவிர, குணங்கள் எனக்கு அத்துப்படியாகி இருந்தன. எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் என்னை உள்ளாக்காது, ‘நீ இதைத்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்’ என்றெல்லாம் கட்டாயப்படுத்தாது, எனக்கும் தனியானதொரு மனம் இருக்கிறது என்பதை மதித்து நடத்தி, என்னையே நான் விரும்பும்படி செய்த முதல் நபர். ஆனால், எனக்கு என்னைவிட அவரைப் பிடிக்கும். ‘இத்தகைய மனிதருடன் பழகவாவது கொடுத்துவைத்ததே!’ என்ற புல்லரிப்பு உண்டாகியது. இன்னும் சில நாட்கள் இந்த நிறைவு நிலைத்திருக்கும். மனப் பாதாளத்திலிருந்து நினைவுகள் மீண்டும் மேலெழுந்து என்னை உலுக்கும்வரை. (1992-ல் தமிழ் நேசனில் வெளியான இக்கதை, கதாசிரியையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஜூன் 1997 கோம்பாக் ரிவியூ சஞ்சிகையில் வெளியாகியது) 8 பெரிய வாத்தியார் “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம். இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும். இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த நண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல். முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே ஆண்டால் என்ன’ன்னு கெணத்துத் தவளையா அவனவனும் இருக்கிறதாலேதான் ஒலகம் இப்படி சுயநலம் பிடிச்சு, ஒரேயடியாக் கெட்டுக் கிடக்கு!’ என்று சாம்பசிவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த ஜன்மத்துக்கும் மறக்குமா! தான் தினசரி படிக்காததிற்கும், உலகம் கெட்டுப்போவதற்கும் என்ன சம்பந்தம் என்று நாதனுக்குப் புரியத்தான் இல்லை. அதை வாய்திறந்து எப்படிக் கேட்பது? என்ன இருந்தாலும், தான் சாதாரண ஆசிரியராக இருந்தபோது, அதே தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்தவர் ஆயிற்றே! இப்போது இருவருமே ஓய்வு பெற்று, அரசாங்கம் அளித்துவந்த சொற்ப ஓய்வூதியத்தில் வறுமையின் எல்லைக்கோடு கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்துவந்தபோதும், சாம்பசிவம் மட்டும் அந்தப் பழைய மிடுக்கைக் குறைத்துக்கொள்ளவே இல்லை. ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை இருந்த அப்பள்ளியில் படித்த சிறுவர், சிறுமியர் அனைவரும் ‘பெரிய வாத்தியார்’ என்று பயபக்தியுடன் ஒதுங்கி வழி விட்டது, வாரம் தவறாது, திங்கள் காலை அவர்கள் எல்லாரையும் பள்ளி வளாகத்தில் இரட்டை மாடிக் கட்டிடத்தின்முன் நிற்கவைத்து, ஒழுக்கம், கடவுள், கலை என்று தனக்குத் தோன்றியதைப்பற்றி எல்லாம் மைக்கே அதிர்ந்துவிடும்படி அலறியது, மற்றும் தான் சொன்னது, செய்தது எதிலாவது குறையோ, மாற்றமோ தெரிவித்த ‘மரியாதை கெட்ட’ ஆசிரியர்களை அவர்களது வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்து, மரியாதை உள்ளவர்களாக மாற்றியது — இப்படிப் பலவும் சாம்பசிவம் தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள வைத்திருந்தன. மேலும், அவருடைய பெரிய ஆகிருதியும், ரகசியம் பேசினால்கூட எட்டு வீடுகளுக்குக் கேட்கும் சிம்மக்குரலும் அவரது பலம். சாம்பசிவம் ஓய்வு பெற்றதும், அந்தச் சிற்றூரைவிட்டு, டவுனில் இருக்கும் மகனுடனேயே போய் தங்கிவிடவேண்டும் என்று அவருடைய மனைவிக்கு ஆசை. ஆனால் தான் யாரென்றே தெரியாத பலரும் இருக்கும் ஓரிடத்தில் போய், தனது மதிப்பைக் குறைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இது பழகிப்போன இடம். ஓரிரண்டு தறுதலைகள் இவரைப் பார்த்தும் பாராதமாதிரி ஒதுங்கிப்போனாலும், ‘பெரிய வாத்தியார்’ என்று மார்க்கெட்டில் முருங்கைக்காய் விற்பவரிலிருந்து தபால்காரர்வரை இவரைத் தெரியாதவர்கள் எவருமில்லை. ‘ஆசிரியர்’ என்றால் எல்லாமே அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவர்கள் எண்ணத்திற்கேற்ப இவரும் நடந்துகொண்டார். தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லா விஷயங்களுக்கும் நியாய அநியாயம் கற்பிப்பார். பெரும்பாலும், இவரது தர்க்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காதில் இவரது சொற்கள் விழாதது இவருக்குச் சௌகரியமாகப் போயிற்று. இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சாம்பசிவம் ஒரே ஒரு தவறுமட்டும் செய்துவிட்டார். கல்யாணமான முதல் இருபது வருடங்கள் மனைவியை ஒரேயடியாக அடக்கி ஆண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார், காலங்கடந்து. வீட்டில் அவள் ராஜ்ஜியந்தான். ‘போன ஜன்மத்தில கோயில் தேரா இருந்திருப்பீங்களோ! மழையோ, வெயிலோ, நாள் தவறாம தெருத்தெருவா அசைஞ்சுக்கிட்டுப் போகணும் ஒங்களுக்கு!’ அவர் எது செய்தாலும், அதைப் பழிக்காவிட்டால் அவளுக்கு உணவு செரிக்காது. அவள் வாய்க்குப் பயந்தே அவர் கூடுமானவரை வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் சொல்வதற்கு ஏற்றார்போல், கடைத்தெரு, கோயில் பிரகாரத்துக்கு வெளியே, ‘விளையாட்டு மைதானம்’ என்ற பெயர் தாங்கிய முட்செடிகள் அடர்ந்த புல்வெளி — இப்படி, கால் போன போக்கில் செல்வார் சாம்பசிவம். அந்தச் சிற்றூரைத் தவிர வேறு வெளியுலகமே அறிந்திராத அப்பாவிகள் யாராவது சாம்பசிவத்திடம் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கும்தான் பொழுது போகவேண்டாமா! அப்படித்தான் அன்று நாதனும் — நவராத்திரி வெள்ளிக்கிழமையாக இருக்கிறதே என்று கோயிலுக்கு வந்தவர் –தனது மாஜி தலைமை ஆசிரியரிடம் வசமாகச் சிக்கிக்கொண்டார். “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்த சாம்பசிவம், “எல்லாம் சட்ட விரோதமா நம்ப நாட்டுக்குள்ள நுழைஞ்சவங்களைத்தான் சொல்றேன்!” என்று பீடிகை போட்டார். “யாரு, இந்தோன்களைச் சொல்றீங்களா?” மரியாதையை உத்தேசித்து, அக்கறை காட்டினார் நாதன். “அது பழைய சமாசாரமில்ல? நான் அதைச் சொல்ல வரல,” என்று மறுத்தாலும், வகுப்பில் பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவுபடுத்துவதுபோல, அந்தப் பழைய சமாசாரத்தைப்பற்றியே பேசிக்கொண்டுபோனார். “மலையில வளர்ந்திருக்கற மரத்தையெல்லாம் நெருப்பு வெச்சுக் கொளுத்திட்டு, அங்க கத்தரிக்கா, வெண்டைக்கா செடியெல்லாம் போட்டு, அதில காய்க்கறதை ஒண்ணுக்கு நாலு விலை வெச்சு நம்ப தலையில கட்டறானுங்க. இன்னும், ராவில வீடு பூந்து திருடிட்டு, ‘என்னைப் பிடிங்கடா, பாக்கலாம்!’ அப்படின்னு சவால் விடறமாதிரி, கறுப்புக் கறுப்பா கைரேகையை வீட்டுச் சுவத்தில பதிச்சுட்டுப் போறானுங்களாம். அதான் தெரிஞ்ச கதையாச்சே!” “ஓ! அப்போ ‘பங்களா’வைச் சொல்றீங்களா?” என்று கேட்கும்போதே நாதனுக்குப் பெருமை ஓங்கியது, சரியான விடை அளித்துவிட்ட மாணவனைப்போல. “அதேதான்!” என்று சாம்பசிவம் ஆமோதிக்கவும், நாதனுக்கு உச்சிகுளிர்ந்து போயிற்று. அந்தச் செய்தியும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அது தன் வாயிலிருந்து வருவதைப் பெரிய வாத்தியார் விரும்பமாட்டார் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால், அவருக்கும்தான் அலட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே என்ற பெருந்தன்மையுடன், வாயை மூடிக்கொண்டு, பழைய பணிவு மாறாது நின்றார். “ஏழு வயசுப் பொண்ணு, பாவம்! இப்பத்தான் பல் விழுந்து முளைச்சிருக்கும். அதைப்போய்…! சே! இவனுங்களை எல்லாம் அவன் ஏறி வந்த படகிலேயே திரும்பவும் ஏத்திவிட்டு, நடுக்கடலிலே மூழ்க வைக்கணும்!” சாம்பசிவத்துக்குத் திடீர் திடீரென்று யார்மேலாவது கோபம் கிளம்பும். ‘இவன்களை எல்லாம் வரிசையா நிக்கவெச்சு, சுட்டுத்தள்ளணும்!” என்று ஆக்ஞை பிறப்பிப்பார். இல்லாவிடில், ‘நகக்கணுவிலே ஊசியேத்தணும்,’ ‘கொதிக்கற எண்ணையில தூக்கிப் போடணும்’ என்று, நரகத்தில் நடத்தப்படுவதாகப் பெரியவர்கள் கூறித் தான் கேட்டிருந்ததை எல்லாம் சொல்லிச் சபிப்பார். ‘பிரெஞ்சுக்காரன் கடலிலே அணுசக்தி ஆராய்ச்சி செய்யறானே! அதில செத்துப்போற மீனை எல்லாம் அவனையே சமைச்சுச் சாப்பிடச் சொல்லணும்!’ என்று ஏசுவார். எல்லாம், ‘அவன் காதில் விழவா போகிறது!’ என்ற தைரியந்தான். சொல்கிறபோது சிறிது வீரமாக உணர்வார். வீட்டில் நுழையும்வரை அது நிலைக்கும். “காலம் கெட்டுப் போச்சு!” என்று ஒத்துப்பாடினார் நாதன். மனமோ, ‘ஓ! இதுதானா காரணம்!’ என்று எக்காளமிட்டது. சாம்பசிவத்தின் கடைசி மகள் கடந்த வருடம் பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த ஒரு அயல் நாட்டானின் அழகிலோ, வேறு எதிலோ மயங்கி, வீட்டைவிட்டு ஓட இருந்தாள். தக்க சமயத்தில் மூக்கில் வியர்த்து, அதைத் தடுத்து, பெண்ணை உடனடியாக டவுனுக்கு, அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சாம்பசிவம். அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாது அங்கு ஒவ்வொருவரும் வாழ்ந்தது அவருக்குச் சாதகமாகப் போயிற்று. அப்பெண்ணை நிறைமாதக் கர்ப்பிணியாக அங்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக அவர்கள் பள்ளித் தோட்டக்காரன் முருகன் நாதனுடைய காதைக் கடிக்காத குறையாகச் சொன்னதோடு, ‘பெரிய வாத்தியார்கிட்ட இதைப்பத்தி நான் சொன்னதா எதுவும் கேட்டுடாதீங்கைய்யா!’ என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். அதன்பின், அப்பெண் தந்தைவீடு வந்து சேர்ந்தாள். அவளைப்பற்றிய ரகசியம் தனக்குத் தெரிந்திருப்பதாலேயே தான் அவரைவிட ஒருபடி மேல் என்று நாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த எண்ணத்தில் பிறந்த கருணையுடன், “நாடுவிட்டு நாடு எதுக்காக வந்து, இங்க இருக்கறவங்க பிழைப்பிலே மண்ணைப் போடணும்கிறேன்!” என்றார் அழுத்தமாக. தமது மூதாதையர்களும் அதேமாதிரிதான் தாய்நாட்டைவிட்டு இந்த மலேசிய மண்ணில் கால்பதித்தார்கள் என்பதை இருவருமே அப்போது நினைத்துப்பார்க்க விரும்பவில்லை. நாதன் சொன்னது தன் காதிலேயே விழாததுபோல் நடந்துகொண்டார் சாம்பசிவம். ஒருநாள்போல் தினமும் இரவில் வீட்டுக்குப் போனால், மனைவியிடம் ‘பாட்டுக் கேட்கவேண்டி வருமே’ என்ற பயமெழ, சாம்பசிவம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளப் பார்த்தார்: “அட, நாம்பளும் இளவட்டங்களா இருந்தவங்கதான். இப்படி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு — மலைமேலேயும், காட்டுக்குள்ளேயும் நடந்துவந்து, — பிழைப்புத் தேடறது லேசில்ல. ‘பணம்தான் கிடைக்குதில்ல, சன்னியாசிமாதிரி இரு’ன்னு சொல்லிட முடியுமா? அவங்க மனைவிங்களைக் கூட்டிவரத்தான் அனுமதி இல்லியே!” பெரிய வாத்தியார் திடீரென்று கட்சி மாறிவிட்டது எதனால் என்று திகைத்தார் நாதன். ஆண்-பெண் விவகாரத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியதும், சாம்பசிவத்துக்கு மனைவி ஞாபகம் வந்ததை அவர் எப்படி அறிவார்! “கோயிலுக்கு வந்தோமா, சாமி கும்பிட்டோமான்னு இல்லாம, கண்டதுங்களைப்பத்தி எல்லாம் என்னா பேச்சுங்கறேன்!” என்னவோ, அடுத்தவர் மூச்சு விடாமல் பேசினாற்போலவும், தான் அதைக் கேட்க நேர்ந்துவிட்டாற்போலவும் நொந்துகொண்டவர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னப்பனே, முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தியைக் குடுடா!” என்று கடவுளை இறைஞ்சியபடி, எதிரில் நின்றிருந்தவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலேயே நடையைக் கட்டினார். (இதயம், 1996) 9 இதுவும் ஒரு விடுதலைதான் சீட்டை வாங்கியபடி அர்ச்சகர் கேட்டார், “யார் பேருக்கு  அர்ச்சனை?” அமுதா யோசித்தாள். அன்றும் ஒரு விதத்தில் ஆண்டுநிறைவுதான். மனத்தில் நிறைவு இல்லாதிருந்தாலும், வெறுமை குறைந்திருந்தது. அதற்காகவேனும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? “பிள்ளையார் பேருக்கு!” குரல் அவளுக்கே கேட்காதுபோக, இருமுறை சொல்ல வேண்டியிருந்தது. “ஓம் சுக்லாம் பரதரம்..,” அர்ச்சகரின் குரல் அழுத்தம் திருத்தமாக ஒலித்தது. இந்தச் சூழ்நிலைதான் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது! இந்தச் சிறு திருப்தியைக்கூட அளிக்க மறுத்தாரே! யாரோ, உயரக் கட்டியிருந்த மணியை ஓங்கி அடித்தார்கள் — தீப ஆராதனையின்போது வேறு எந்த எண்ணமும் மனத்துள் புகாதிருக்க. ஆனால், அமுதாவின் மனக்குதிரை பின்னோக்கி ஓடுவதை தடுக்க முடியவில்லை.   கல்யாணமான புதிது. திருமணமானதும், நாள் தவறாது கணவருடன் கைகோர்த்துக்கொண்டு எங்காவது போகலாம் என்று அமுதா கண்டிருந்த கனவு பொய்த்தது. “எனக்கு வெளியே வேலையிருக்கு!” என்று விறைப்பாகச் சுவற்றிடம் சொல்லிவிட்டு, சாயந்திரமே எங்காவது சென்றுவிடுவான் சுகுமார். ராத்திரி நீண்ட நேரம் அவனுக்காகக் காத்திருந்துவிட்டு, கண்ணீரைத் துடைக்கவும் மறந்தவளாய் தூங்கிவிடுவாள் அமுதா. எந்நேரமும் தனிமையிலேயே கழிக்க வேண்டியிருந்தது இனம்புரியாத பயத்தையும் துக்கத்தையும் அளித்தது. ஒரு நாள், “தினம் அப்படி எங்கே போறீங்க? என்னை எங்கேயாவது கூட்டிட்டுப் போங்களேன்!” என்று எப்படியோ கேட்டுவிட்டாள். அவளை உற்றுப் பார்த்த சுகுமார், “என் கூட்டாளிங்களுக்கு நான் இல்லாட்டி சரிப்படாது. ரொம்ப நாளாப் பழகிட்டோமில்ல!” என்று முணுமுணுத்தபடி போனான். அதிகம் வற்புறுத்தினால் ஆத்திரப்படுவானோ என்று பயந்து, வாயை மூடிக்கொண்டாள் அமுதா. மறுநாள், சற்று முகமலர்ச்சியுடன், “இன்னிக்கு பக்கத்து வீட்டுக்காரங்களோட பேசிக்கிட்டிருந்தேன். நல்லவங்களாத் தெரியுது!” என்று தெரிவித்தாள். அதிசயமாக, கனிவுடன் பேசினான் கணவன். “நீ எதுக்கும்மா கண்டவங்களோட எல்லாம் பேச்சு வெச்சுக்கறே! பேசாம, வீட்டிலேயே இருந்து, ரெஸ்ட் எடுத்துக்க. என்ன?” சுதந்திரமாகப் பறக்க நினைத்த பறவையின் சிறகுகள் ஒடுக்கப்பட்டன. அன்பான பெற்றோரின் பேச்சைக் கேட்டு வளர்ந்திருந்ததால், யார் எது சொன்னாலும் அதன்படி நடக்கும் குழந்தையாகவே இருந்தாள் அமுதா. இவர் சொல்வதும் நியாயம்தானே! நாலுபேருடன் பேச்சு வைத்துக்கொண்டால், வீண்வம்புதான் வளரும். வீட்டுக்குள், ஒரே இடத்தில் மணிக்கணக்காய் உட்கார்ந்திருந்தாள். யாருடனும் தொடர்பு இருக்கவில்லை. காரணமின்றி அழுகை வந்தது. இரவில் கணவனுக்காகக் காத்திருந்து ஏமாறுவது தொடர்ந்தது. அயர்ந்து தூங்குகையில், அவன் உடல் மேலே படரும். திடுக்கிட்டு அலறுவாள். “சனியன்! ஏன் கத்தறே? நான்தான்!” ஆத்திரத்தில் அவன் அதட்டும்போது, ஆள்காட்டி விரலைப் பற்களிடையே வைத்துக்கொண்டு, அவனது பலாத்கார ஆக்கிரமிப்பை ஏற்கத் தயாராவாள். இதுவா இல்லறம்..? இப்படி ஒரு வாழ்க்கைக்காகவா எல்லாப் பெண்களும் ஏங்கித் தவம் இருக்கிறார்கள்? இந்த அவலத்துக்காகவா பெண்ணைப் பெற்றவர்கள் கடனோ உடனோ வாங்கி, அவளை ஒருவனிடம் ஒப்படைக்கிறார்கள்? உடலும் உள்ளமும் நலிந்த நிலையில், ‘எப்படி ஆறுதல் தேடுவது?’ என்று வெகுவாக யோசித்துவிட்டு, கணவனைக் கேட்டாள்: “இன்னிக்குக்  கோயிலுக்குப் போகலாமா?” அவன் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. இரண்டாவது முறையாகக் கேட்டதும், எரிச்சல் பிறந்தது. “பொழுதும்   போகாம, வேற எங்கேயும் போக காசோ, சக்தியோ இல்லாத கெழங்கட்டைங்கதான் அங்கே எல்லாம் போகும். நீ கோயிலுக்குப் போய் என்ன கிழிக்கப்போறே? அப்படி என்ன பாவம் சேர்த்திருக்கே?” இம்முறை அமுதாவால் அவன் கூறியதை ஏற்க முடியவில்லை. அவர்களது அந்தஸ்துக்கு மீறிய இடத்திலிருந்து சுகுமார் பெண்கேட்டு வந்தபோது, அவளுடைய தெய்வ பக்திதான் அப்படி ஒரு நல்வாழ்க்கையைத் தேடித் தந்திருக்கிறது என்று எல்லோருமே ஒருமனதாகச் சொன்னார்களே! கடவுள் ஏன் தன்னை இப்படி எல்லாம் சோதிக்கிறார்? “வெளியே கூட்டிட்டுப் போறதில்லேன்னு குறைப்பட்டியே! வா!” என்று குற்றம் சாட்டியபடி, அதிசயமாக ஒரு நாள் அவனது நண்பன் வீட்டுக்கு அழைத்துப் போனான் சுகுமார். அவளுக்கோ ஏன் போனோம் என்று ஆகிவிட்டது. “யார் எது கேட்டாலும், அசட்டுச் சிரிப்போட தலையை மட்டும் ஆட்டினா என்ன அர்த்தம்? ஊமைன்னு நினைச்சுக்கவா? ‘ஏதோ, எனக்கும் கொஞ்சம் தெரியும்’னு பேசி வெக்கறது!’ ‘இவருக்கு ஏன் தான் எது செய்தாலும் தப்பாகவே தெரிகிறது!’ என்று அவளுக்கு வருத்தம் மிகுந்தது. ‘அவருடைய குரலே அப்படி. உண்மையில், நம்மை நாலுபேர் மெச்சவேண்டும் என்றுதானே இவ்வளவெல்லாம் சொல்கிறார்!’ என்று சமாதானப்படுத்திக் கொள்வாள். அடுத்த முறை எங்கோ ‘பார்ட்டி’ என்று அழைத்துப் போகுமுன்னரே சுகுமார் சொல்லிவிட்டான்: “போற இடத்திலே ‘உம்’முனு இருக்காதே. அது எழவு வீடு இல்ல!” முன்பின் தெரியாத பல ஆண்களும் முதல் அறிமுகத்துக்குப்பின் அவளுடன் சரளமாகப் பேசியபோது, அவளுக்குப் பயமாக இருந்தது. அடிக்கடி கணவன் பக்கம் பார்வையை ஓடவிட்டாள். அப்போதெல்லாம் அவன் ஒரு சிறு முறுவலுடன் தலையை ஆட்டுவான், அவள் செய்யப் போவதை அங்கீகரிப்பதைப்போல். அதிலேயே சிறிது தைரியம் பிறந்தது. “இன்னிக்கு பார்ட்டி நல்லா இருந்திச்சு, இல்ல?” திரும்பும் வழியில் சுகுமார் கேட்டபோது, அமுதாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சிறிது பொறுத்து, “ராஜன்னு ஒருத்தர் இருந்தாரே! வேணுமின்னே என்னை இடிச்சு, தொட்டுத் தொட்டுப் பேசினாருங்க! அப்புறம், ஸாரி’ன்னாரு!” என்று தெரிவித்தாள். தன் நலனில் இவ்வளவு அக்கறை காட்டுபவர், இனியாவது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் சற்று கவனமாக இருப்பார் என்றெண்ணிதான் சொன்னாள். அடுத்த நாளே அந்த ராஜன் அவர்கள் வீட்டுக்கு வந்தான், “சும்மாத்தான், ஒன்னைப் பாத்துட்டுப் போகலாம்னு!” என்றபடி. “யாரு தெரியுமில்ல, அமுதா?” என்று அட்டகாசமாக அவனை சுகுமார் வரவேற்றபோது அவள் திடுக்கிட்டாள். கூடியவரை வெளியே வராது சமாளித்தாள். “பெரிய அழகின்னு ஒனக்கு நெனப்போ? வீடு தேடி வந்தவங்களை மதிக்கத் தெரிய வேணாம்?” என்று சுகுமார் சாடியபோது அமுதா வாயே திறக்கவில்லை. சில தினங்கள் கழித்து, மீண்டும் ராஜன் வந்தபோது, திரும்பவும் அதே தவற்றைச் செய்யாமலிருக்கப் பெரும்பாடு பட்டாள். வலிய ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, அவனுடன் இயல்பாக பேச முயன்றாள். ‘தான்தான் அனாவசியக் கற்பனையால் ஒரு நல்லவரைச் சந்தேகித்து விட்டோமோ?’ என்று அவள் வருந்துமளவுக்கு அவன் கண்ணியமாக நடந்துகொண்டான். ஆனால், அதுவும் தப்பாகப் போயிற்று. “அது என்ன, ஒரு ஆம்பளையோட அப்படி ஒரு பேச்சும், சிரிப்பும்? நீ மொதமொதல்ல அவனைப் பத்திப் பேச்சை எடுத்தபோதே எனக்குப் புரிஞ்சுபோச்சு — அவனை வேறமாதிரி நெனைக்க ஆரம்பிச்சுட்டேன்னு!” சுகுமாரின் குற்றச்சாட்டு அவள் சிறிதும் எதிர்பாராதது. திடீரென உண்டான அதிர்ச்சியில், பெரிதாக அழ ஆரம்பித்தாள். “இப்படியெல்லாம் அபாண்டமாகச் சொல்லாதீங்க!” என்று கதறினாள் அமுதா. வெகுநேரம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சுகுமார். பின்னர், ஏதோ முடிவுக்கு வந்தவனாக, அவள் தோள்களை ஒரு கையால் அணைத்தபடி, “பைத்தியம்! சும்மா ஒன்னை டெஸ்ட் செய்து பாத்தா..,” என்று நேரே படுக்கைக்கு அழைத்துப்போனான். அன்று வழக்கத்துக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டாள் அமுதா. ஆட்கொண்டவனது முகத்தில் தோன்றிய வெற்றிப் புன்னகையை அவள் கவனிக்கவில்லை.   “இப்படியானும் கஷ்டப்பட்டுக்கிட்டு, இவரோட எதுக்காக இருக்கணும், கண்ணு?” மகளைப் பார்த்துவிட்டுப்போக வந்திருந்த தாய் அங்கலாய்த்தாள். “ஒங்கப்பா என்னை ஏசியிருக்காருதான். ஆனா, ஒரு நாளும் இந்தமாதிரி வேற ஆம்பளையோட சேர்த்துவெச்சு என்னைப் பேசினதே கிடையாது!” மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் அவள் குரல் விம்மியது. “இப்படி வாயில வந்ததை, என்னா பேசறோம்னு புரியாம பேசறவரோட நீ எப்படித்தான் படுக்கறியோ!” அம்மா விதைத்துப்போன கருத்து அவளுள் பதிந்தது. ஆனால், அது கிளை எடுக்குமுன்தான் எவ்வளவு இடர்பாடுகள்! பெண் ஒருத்திக்குத் திருமணமாவதே உன்பாடு, என்பாடு என்றாகிவிடுகிறது. ஏதோ, தன்னிடம் இல்லாத அழகு தான் மணப்பவளிடமாவது இருக்கவேண்டும் என்று சுகுமார் வலிய வந்திருக்காவிட்டால், தான் இப்படி காரும், பங்களாவுமாக வாழ முடியுமா? அப்பாதான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார், இந்தக் கல்யாணத்தை நடத்த! ‘உணர்வுபூர்வமான வதை’ என்று இப்போது கணவனை விட்டுப் பிரிந்தால், அது அப்பாவின் செய்கையை அவமதிப்பதுபோல் ஆகாதா? எல்லாவற்றுக்கும் மேலாக, தாம்பத்திய உறவில் சுவைகண்டுவிட்ட உடலை எப்படி ஒரு நிலைக்குக் கொண்டுவருவது? அவளது மனப் போராட்டத்தை உணர்ந்ததுபோல், அடுத்த சில தினங்கள் வீட்டிலேயே இருந்தான் சுகுமார். அமுதா குழம்பினாள். ‘தான் எது சொன்னாலும், செய்தாலும், இவளிடமிருந்து எதிர்ப்பே இருக்காது,’ என்ற பெருமிதம் ஏற்பட்டது சுகுமாருக்கு. ‘நான் வெளியே போய், பல பெண்களுடன் பழக நேரிடும்போது மனம் எப்படி அலைபாய்கிறது! அப்படித்தானே இவளுக்கும் ஏற்படும், பிற ஆண்களுடன் பழகினால்?’ என்று பயந்தான். எப்போதாவது நண்பர்கள் வீட்டுக்கோ, பொது இடங்களுக்கோ அழைத்துப் போவான். திரும்பியதும், அங்குள்ள எல்லா ஆண்களும் தன் மனைவியை எப்படிப் பார்த்தார்கள், அவர்கள் மனதில் தோன்றிய வக்கிரமான எண்ணங்கள் தனக்குப் புரிந்துவிட்டது என்றெல்லாம் அமுதாவைப் பழிப்பான். அவளையும் அறியாது, பிற ஆண்களிடம் அவளுடைய கவனம் போக, அமுதாவுக்குத் தன்மேலேயே பயம் உண்டாயிற்று. அடக்கி வைத்திருப்பதுதானே பீறிட்டுக்கொண்டு கிளம்பும்? தான் ஏதாவது தப்பு செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து, இவரே அதற்கு வழி வகுக்கிறாரோ என்று தோன்றிப்போயிற்று. உண்மையில், தன்மீதோ, அல்லது வேறு எவர்மீதோ நம்பிக்கை வைக்க இயலாததுதான் சுகுமாருடைய மனோவியாதி என்பது அவளுக்குப் புரியவில்லை. “எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுதுக்கிட்டே இருக்கப்போறே, அமுதா?” என்று, அவள் ஆக்ககரமாக ஏதாவது செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாள் தாய். “ஒரு கன்னத்தில் அறை வாங்கிக்கிட்டு, இன்னொரு கன்னத்தைக் காட்டறது முட்டாள்தனம். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு!” “நீங்கதானேம்மா, பெரியவங்க பேச்சைக் கேட்டு, மரியாதையா நடக்கணும்னு சொல்லிக் கொடுத்தீங்க?” தாய்மீது பழியைத் திருப்பப் பார்த்தாள் மகள். “சொன்னேண்டி. ஆனா, மத்தவங்க மொதல்ல நமக்கு  மரியாதை கொடுத்தாதானே, நாம்ப அதைத் திருப்பிக் கொடுக்க முடியும்?” சுயமரியாதையின் அவசியத்தைப் போதித்தாள் தாய். கணவரை விட்டுப் பிரிந்த பெண்ணை சமூகம் என்ன பாடு படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கையிலேயே அமுதாவுக்குப்  பயம் பெருகியது. “இவரை விட்டுட்டு நான் என்னம்மா செய்யறது?” என்றாள் குழப்பத்துடன். “படிச்சிருக்கேதானே! இல்ல, ஒன் ஒருத்திக்குச் சோறுபோட முடியாதா எங்களால?” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிய தாய், அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அவரு என்னவோ, தனக்கு மட்டும்தான் உணர்ச்சி உண்டுன்னு நெனச்சுக்கிட்டு இருக்காரு. நீ இப்படி பிரமை பிடிச்சாப்போல இருக்கறதைப் பாக்கத் தாங்கலியே, கண்ணு!” என்று, தானும் அழுதாள். அமுதா ஒரு முடிவுக்கு வந்தாள். “நான் கொஞ்ச நாள் அம்மாகூடப் போகப் போறேன்!” என்று கணவனிடம் அறிவித்தாள். தன் உத்தரவை எதிர்பார்த்து நிற்க வேண்டியவள், தானே முடிவு செய்துவிட்டு அல்லவா சொல்கிறாள் என்று ஆத்திரம் அடைந்தான் சுகுமார். ஆனால், இந்த மாமியார் கலகக்காரி. விஷயத்தைச் சற்று சாமர்த்தியமாகத்தான் அணுக வேண்டும் என்று குரலில் மென்மையை வரவழைத்துக் கொண்டான். “என்னை விட்டுப் போறியே! நீ இல்லாம, நான் என்னம்மா செய்யப் போறேன்!” என்றான் உருக்கமாக. தாய் அருகில் இருக்கும் தைரியத்தில் அமுதா புறப்பட்டுப் போனாள். ஒரே வாரத்தில் சுகுமார் வந்து மன்றாட, மனமிளகி, அவனுடன் திரும்பவும் செய்தாள். தன் போக்கு அவனது ஆத்திரத்தை மேலும் கிளப்பி விட்டிருக்கும் என்று அவள் எதிர்பார்க்கத்தான் இல்லை. அவன் கொஞ்சலை விரும்பி ஏற்றாள். “எனக்குத் தெரிஞ்சு போச்சு. ஒங்கம்மா வீட்டுக்கிட்ட ஒனக்கு எவனோ இருக்கான். இன்னிக்கு அவனைத்தானே நெனச்சுக்கிட்டிருந்தே?” உடைகளை மீண்டும் அணிந்து, படுக்கையில் சாய்ந்தபடி எகத்தாளமாகக் கேட்டவனை விழித்துப் பார்த்தாள் அமுதா. இப்படியே விட்டுக்கொடுத்துப் போனால், தன் மேலேயே தனக்கு நம்பிக்கையும், மதிப்பும் குறைகிறது என்பது ஒரு வழியாகப் புரிந்தது. ஓயாது தன்னைச் சந்தேகித்து, வார்த்தைகளாலேயே குதறுபவனுடன் வாழ்ந்தபடியே சாவதைவிட, தனிமை அப்படி ஒன்றும் கொடுமையானதாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தாள். ‘யார் என்னை வெறுத்தால் என்ன? அப்படி ஒதுக்குபவர்கள் எனக்கு வேண்டியவர்களே இல்லை. எனக்காக, என் குணநலன்களுக்காக என்னை விரும்புகிறவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?’ ஒரு தீர்மானத்துடன் கணவனை ஏறிட்டாள் அமுதா. “நீங்க இருக்கற லட்சணத்துக்கு நான் இன்னொருத்தன்கூடப் போகாததுதான் அதிசயம். நடைப்பிணமா ஆறதுக்கு முந்தி, ரொம்ப நாளைக்கப்புறம் புத்திசாலித்தனமா ஒரு காரியம் செய்யப் போறேன். ஒங்களை விவாகரத்து செய்யப் போறேன்!” சட்டென எழுந்த அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, “போ, போ! ஒனக்கு என்னைத் தவிர இன்னும் எத்தனை பேரோ! அதான் எல்லாத்துக்கும் துணிஞ்சுட்டே!” என்று சீறிய சுகுமாரைப் பார்த்து அமுதாவுக்குப் பரிதாபம்தான் மிகுந்தது. (இக்கதை, கதாசிரியை 1993-ன் சிறந்த பெண் எழுத்தாளராக சூரியன் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட வழிவகுத்தது) 10 ஏணி டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?” “என்னது?” முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: “எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த மாணவிங்களும் சரி”. குரலில் ஆழ்ந்த வருத்தத்தை மீறி கோபம் வெளிப்பட்டது. தோல் நிறத்தால் மட்டும் தாங்கள் எவ்விதம் மட்டமாகிவிட முடியும் என்று விளங்காத குழப்பமும்கூட கலந்து வந்தது. இன்னொரு பெண் அவளுடன் சேர்ந்துகொண்டாள்: “டீச்சர் நடக்கறபோது, தலையை நிமிர்த்தி நடக்கறீங்க! எல்லாரும் ஒங்ககிட்ட மரியாதையா இருக்காங்க. அந்த மாதிரி நாங்களும் ஆகமுடியுமா?” கடந்த வாரம் தலைமை ஆசிரியை மிஸஸ்.கூ புவனாவை அழைத்து, ‘நம்ப பள்ளியில் ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கணும்னு எல்லா மாணவிகளும் பல தடவை என்கிட்ட வந்து கேட்டுட்டாங்க. அதில நீங்கதான் பொறுப்பு ஏத்துக்கணும்னும் சொல்லிட்டாங்க. இருபது, முப்பது பேருக்காக ஒரு சங்கம் எதுக்குன்னு நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தும் கேக்கலே!’ என்று கூறியபோது, புவனாவிற்கு எதுவும் புரியவில்லை. இப்போது சங்கத்தின் முதல் கூட்டத்திற்கு வந்தபோதுதான் அப்படி ஒரு வினா, மாணவிகளிடமிருந்து. அவளைப்போல நடக்க வேண்டுமாமே! தற்பெருமையுடன், எதிரிலிருந்தவர்களைப் பார்த்துப் பரிதாபமும் எழுந்தது. ஆரம்பப் பள்ளிகளில் மலாய்மொழி படித்திருந்த இவர்களுக்குத் தேவையானது தமிழ்மொழிப் புலமை இல்லை. ஒரு மனிதர் பிறருக்கு அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை. எதனால் இவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது? வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து, தனியார் பள்ளிகளில் கல்வி பயின்றிருந்த அவளுக்கு அவர்களுடைய பிரச்னை புரியத்தான் இல்லை. “ஆறாம் வகுப்புவரை இந்தமாதிரி எதுவும் கிடையாதா?” என்று கேட்டாள். வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்கிருந்த எல்லா மாணவிகளும் பக்கவாட்டில் தலையை ஆட்டினர். உதடுகள் பிதுங்கின, சுய பச்சாதாபத்தில். யோசனையுடன், “எத்தனை பேர் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். ஒரு கைகூட மேலெழவில்லை. ஆச்சரியம் தாங்காது, “ஒருத்தர்கூட இல்லையா?” என்று அவள் தனக்குத்தானே கேட்டுக்கொள்வதுபோல் மீண்டும் வினவ, மெள்ள மெள்ள கரங்கள் உயரத் தொடங்கின. புவனாவிற்கு மெல்லப் புரிய ஆரம்பித்தது. தமிழ்ப் பள்ளிகளில் படித்திருப்பதே அவமானகரமான செயல் என்ற நினைப்பில் இவர்கள் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள்! “கைதூக்க இவ்வளவு நேரமா? இல்ல, எங்கே படிச்சோம்னு மறந்துபோச்சா?” என்று வேடிக்கையாகக் கேட்க, அவர்களின் முகத்தில் இருந்த இறுக்கம் கணிசமாகக் குறைந்தது. “தமிழ் நம்ப தாய்மொழி. அதில பேசவும், படிக்கவும் எதுக்கு வெட்கப்படணும்? நம்ப மொழி நமக்கே தெரியாவிட்டால்தான் கேவலம்!” என்று அடித்துச் சொன்னாள் ஆசிரியை. தொடர்ந்து, “இந்த இங்கிலீஷ் இப்போதான் நானூறு, ஐந்நூறு வருஷமா இருக்கு. நம்ப தமிழோட வயசு என்ன தெரியுமா?” என்று ஒரு சிறு புதிர் போட்டுவிட்டு, தானே விடையும் அளித்தாள்: “இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால எழுதின திருக்குறளே தமிழிலதானே இருக்கு! இப்ப அமெரிக்கா, ஐரோப்பாவிலகூட அதோட மொழிபெயர்ப்பை விரும்பிப் படிக்கறாங்களாம்!” முதலில் கைதூக்கப் பயந்தவர்கள் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். தமிழில் பேச மட்டுமே முடிந்த சிலர், அதிலும், ‘தமிழ் பேசத் தெரியுமா?’ என்ற கேட்கக்கூடாத கேள்வியை யாராவது அசந்தர்ப்பமாகக் கேட்டுவிட்டால், ‘கொஞ்சம் கொஞ்சம்!’ என்று சாதாரணமாக அலட்டிக் கொள்பவர்கள் தலையை லேசாகக் குனிந்து கொண்டார்கள். தம்மை இக்கட்டில் மாட்டிவிட்ட ஆசிரியைமீது கோபம்கூட வந்தது. “நம்ப சம்மதம் இல்லாம யாரும் நம்மை தாழ்த்திவிட முடியாது. புரிஞ்சுக்குங்க!” “டீச்சர்! நாங்க எப்பவாவது பாவாடை கட்டினா, ‘தங்கச்சி பாவாடை!’ன்னு மத்த பிள்ளைங்க கேலி செய்யறாங்க!” அழாதகுறையாக கமலவேணி கூறினாள். ஒல்லியான உருவம், கண்களில் எப்போதும் கலக்கம், நல்ல கறுப்பு என்று அவளை ஒரே பார்வையில் எடைபோட்டாள் ஆசிரியை. “இதில கேலி செய்ய என்ன இருக்கு? பாவாடை-சட்டை, புடவை இதெல்லாம் நம்ப கலாசார ஆடை. மத்தவங்க அவங்க முறைப்படி ஏதேதோ உடுத்திக்கலியா?” புவனா வேலைக்கு வரும்போது புடவையைத் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை. எல்லோர் முகத்திலும் புன்னகை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்துகொண்டதைக் கவனிக்கத் தவறவில்லை புவனா. பிறர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மனோதத்துவ ரீதியாக விளக்கத் தொடங்கினாள்: “மத்தவங்க வித்தியாசமா இருந்தா, சில பேருக்கு அதில ஒரு பயம் — எங்கே நாம்ப செய்யறதிலே குத்தம் கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு. நாம்ப அவங்களைச் சொல்றோமோ இல்லியோ, அவங்க முந்திக்கறாங்க! அவ்வளவுதான்”. “பொறாமை, இல்ல டீச்சர்?” முதல் வரிசையிலிருந்த பெண் கேட்டாள். “உன் பேர் என்ன?” “உமா தேவி, டீச்சர்!” டீச்சரின் பார்வை தன்மீது பட்டுவிட்ட சந்தோஷத்துடன் பதிலளித்தாள் அந்த மாணவி. ‘கொஞ்சம் குண்டு, நீண்ட இரட்டைப் பின்னல், குறுகுறுப்பான கண்கள்,’ என்று குறித்துக்கொண்டாள் புவனா. “பொறாமை, அவநம்பிக்கை, ஏதோ ஒண்ணு. அவங்க பேச்சை எல்லாம் கேட்டு மனசு தளர்ந்தா, நமக்குத்தான் நஷ்டம்!” இப்போது எல்லோருமே நிமிர்ந்தனர். புவனா “அ ஆ இ ஈ,” என்று ஆரம்பித்தாள். அவர்கள் அதைத் திரும்பச் சொன்னபோது, இனிய கானமாக ஒலித்தது. “டீச்சர்!” புவனா திரும்பினாள். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்ததாலோ, என்னவோ, தமிழ்ப் பெண்கள் பெரும்பான்மையும் வகுப்பில் பேசாமடந்தைகளாக இருந்ததை அவளறிவாள். ஏற்கெனவே இளக்காரத்துக்கு ஆளான தாம் ஏதாவது சொல்லப்போக, அது தவறாக இருந்துவைத்து, பிறரது கணிப்பில் மேலும் தாழ்ந்துவிடுவோமோ என்ற பயமே அவர்கள் நாவைக் கட்டிப் போட்டிருந்தது என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இப்போது வலியவந்து ஒரு பெண் பேசுகிறாள் என்றால், அதுவே ஒரு நல்ல அறிகுறி என்று அவளுக்குப் பட்டது. “என்ன துர்கா?” அந்தப் பெண் ஏகமனதாக தமிழ்ச் சங்கத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததில், புவனாவிற்கு அவளுடைய பெயர் தெரிந்திருந்தது. “நான் எங்க போனாலும், நம்ப சங்கத்தில இருக்கறவங்க எல்லாரும் ‘அக்கா, அக்கா’ன்னு கூப்பிட்டு, சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்காங்க, டீச்சர். என் கிளாசில இருக்கறவங்க கேலி செய்யறாங்க!” “நாளைக்கு நான் அவங்ககிட்ட சொல்றேன்,” என்று புவனா உறுதி கொடுத்ததும்தான் துர்கா நிம்மதியுடன் அவ்விடத்தைவிட்டு அகன்றாள். புவனாவுக்குப் பரிதாபம் ஏற்பட்டது. ஆனால் துர்காவிடம் அல்ல. அவளைத் தொந்தரவு செய்வதாக அவள் கருதிய பிறர், ‘ஒரு வழியாகத் தமக்கும் ஒரு ஊன்றுகோல் கிடைத்ததே!’ என்ற பூரிப்படைந்திருந்தது அவளுக்குப் புரியும் வயதாகவில்லை, பாவம்! அவர்களது வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ்ச் சங்கத்தில் நாலைந்து தடவைகள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றுவிட்டு, அதன்பின், நோட்டுப் புத்தகத்தை வெளியில் எடுக்கத் தயக்கம் காட்டி, ‘கிளாசில நாள் முழுவதும் படிக்கிறோமே, டீச்சர்!’ என்று சாக்குப்போக்கு சொன்னார்கள் அம்மாணவிகள். புவனாவுக்குக் கோபம் வரவில்லை. தன்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் தாம் எப்படி பிறர் மதிக்க வாழவேண்டும் என்ற அடிப்படைக் கல்விதான். தமிழ் மொழியைக் கற்பதால் அது எப்படி இயலும் என்ற நிராசையே அவர்களிடம் மிகுந்திருந்தது. அதிகம் வற்புறுத்தாமல், “ஒங்களோட பிரச்னை என்னன்னு ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க!” என்று அடுத்த கட்டத்தில் இறங்கினாள். “மொதல்லே ஒங்க பேரு..” “என் பேரு கலைவாணி. நான் ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு என்னோட கொலுசை எடுத்திட்டு வந்தேன்..,” என்று ஒரு பெண் ஆரம்பிக்கவும், கோபமாக இடைமறித்தாள் புவனா. “சம்பந்தமில்லாத சாமான்களை எடுத்திட்டு வரக்கூடாதுன்னு பள்ளி விதிமுறை. தெரியாது?” “அன்னிக்கு டான்ஸ் கிளாஸ் இருந்திச்சு, டீச்சர். ஆனா, நான் சொல்லச் சொல்ல கேக்காம, வழக்கம்போல என் பையைச் சோதனை செய்யறப்போ, அதைப் பாத்துட்டு, எடுத்திட்டுப் போயிட்டாங்க ப்ரிஃபெக்ட்ஸ்!” “என் பொட்டு சிவப்புக் கலரில இருந்ததால, அதை அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்!” உமா தேவி. “கறுப்புப் பொட்டுதான் வைக்கணுமாம். கல்யாணமானவங்கதான் சிவப்புப் பொட்டு வைக்கலாமா, டீச்சர்?” ‘வாயாடி!’ என்று தலையை ஆட்டிக்கொண்ட புவனா எதுவும் பதிலளிக்கவில்லை. சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் தான் பிள்ளை பெற முடியாது என்பதால் கல்யாணமே வேண்டாம் என்றிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் புடவை நிறத்திற்கேற்ப, சிவப்பு மட்டுமின்றி, பச்சை, நீலம் என்று எல்லா வண்ணங்களிலும் பொட்டு வைத்துக்கொள்கிறோம். இதற்கெல்லாம் விதிமுறைகளா வகுப்பார்கள்? அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் கண்டித்தால், மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடமே வெறுத்து விடாதா! “என் நெத்தி பூராவும் விபூதி இட்டிருக்கேன்னு அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்! தினமும் காலையில குளிச்சதும், விபூதி பூசணும்னு அப்பா சொல்வாரு! சின்ன வயசிலேருந்து பழக்கம்!” விக்னேஸ்வரி. புவனா மென்மையாகப் புன்னகைத்தாள். அவளே மீண்டும் சிறுபெண்ணாகி, தன் தாயுடன் பேசுவது போலிருந்தது. நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தும், அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது இன்றும் லேசாக வலித்தது. அன்று பொங்கல் பண்டிகை என்று அவள் அதிசயமாக வளையலும், பொட்டும் அணிந்து பள்ளிக்குப் போக, எதுவும் கேளாது, அவள் கன்னத்தில் அறைந்தாள் தலைமை ஆசிரியை. மத்தியானம் அழுதபடியே அவள் வந்ததைப் பார்த்த தாய்தான் என்னமாக அதிர்ந்து போனாள்! அந்த விவகாரத்தை அத்துடன் விடாது, கல்வி இலாகா, தமிழ், ஆங்கில தினசரிகள் எல்லாவற்றுக்கும் தகவல் கொடுத்தாளே! தலைமை ஆசிரியை கண்டிக்கப்பட்டு, உடனே வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டாள். விரைவிலேயே, “இன்னிக்கு வளை போட்டுக்க, புவனா!” பள்ளிக்குப் போகுமுன் அம்மா சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள் நான்கை நீட்ட, பெண் பயந்தாள். திரும்பவும் அடி வாங்கவா! “போட்டுக்க, சொல்றேன்,” அம்மா மிரட்டினாள். அம்மாவின் எதிரில் இப்போது அணிந்து கொண்டுவிட்டு, பள்ளிக்கூடத்தில்கழற்றிவிடலாமா என்று புவனாவின் யோசனை போயிற்று. அவளுடைய மனத்தைப் படித்தவளாக, “யாராவது கழற்றச் சொன்னா, ‘இந்துப் பெண்கள் வளை போட்டுக்கணும்’னு எங்கம்மா சொன்னாங்கன்னு சொல்லு!” என்று சொல்லியும் கொடுத்தாள் தாய். அம்மா சொன்னபடிதான் நடந்தது. முன்பே பிரச்னையை எதிர்பார்த்திருந்ததால், அதைச் சமாளிக்கத் தெரிந்தது. “எங்கம்மா சொன்னாங்க…,” என்று திரும்பத் திரும்ப அதையே சொன்னாள், ஒவ்வொரு முறையும் எதிராளியின் வலிமை குறைவது புரிய. அவளுக்கே வியப்பு உண்டாகும் விதமாக, புதிய தலைமை ஆசிரியை அந்த இடத்துக்கு வந்து, “என்ன தகறாறு இங்கே?” என்று விசாரித்து, இரு தரப்பினரது வாதத்தையும் கேட்டு, இறுகிய முகத்துடன், “புவனா வளை போட்டுக்கட்டும், விடு,” என்று தகறாறு செய்த மாணவியிடம் கூறினாள். அம்மா ஆவலுடன் வாசலிலேயே காத்திருந்தாள். “என்ன ஆச்சு?” சிரித்தபடி தனது வெற்றியை விளக்கினாள் மகள். மறுநாள், “வளையைக் கழட்டி வெச்சுடு!” என்று தாய் சாதாரணமாகக் கூற, “பின்னே எதுக்கும்மா நேத்து அவ்வளவு சண்டை போடச் சொன்னீங்க?” என்று அழமாட்டாக் குறையாகக் கேட்டாள் மகள். “நம்ப பக்கம் நியாயம் இருந்தா, நாம்ப எதுக்கும் பயப்பட வேண்டியதில்ல. அதுக்காகப் போராடணும். அது ஒனக்குப் புரியணும்னுதான்!” தாய் கூறியது அப்போது முழுமையாகப் புரியவில்லை எனினும், புவனா தைரியமாக உணர்ந்தாள். தான் தவறு செய்யாதிருக்கும்வரை பிறருக்கு எதற்காக அஞ்சுவது என்ற அறிவு வந்தது. தலை நிமிர்ந்து நடந்தாள். அஞ்சி, அவமானம் செய்யப் பார்த்தவர்களை அலட்சியம் செய்தாள். தனிமையிலேயே வாழ்வைக் கழிக்க நேர்ந்தவளுக்கு அந்த படிப்பினை மிகவும் உபயோகமாக இருந்தது. இப்போது, தாயிடம் கற்ற பாடங்களை பிறருக்குப் போதிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது! “நான் முதல் நாளே சொன்னமாதிரி, நம்பளை மத்தவங்ககிட்டேயிருந்து ரொம்ப வித்தியாசப் படுத்திக்கிட்டா, அவங்களுக்குப் பயம் வந்துடும். நம்பளை மிரட்டுவாங்க. கூடியவரைக்கும், பள்ளி விதிமுறைகளை மீறாம நடந்துக்குங்க. கறுப்புப் பொட்டு வைக்கலாம். விபூதியும் ஓகே. நான் பெரிய டீச்சர்கிட்ட கேட்டுட்டேன். ஆனா, ஒளவையார்மாதிரி வேண்டாமே!” இந்த ஒளவையார் ஜோக்கிற்கு எல்லாப் பெண்களும் சிரித்தார்கள். ஒரு மெல்லிய குரல் பின்னாலிருந்து தயங்கித் தயங்கி வந்தது: “நாங்க மஞ்சள் பூசிக்கிட்டு, பயங்கரமா இருக்கோமாம்”. அந்தத் தமிழ்ச் சங்கத்திற்கு ‘குறைகளை வெளிப்படுத்தும் இடம்’ என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். “என் பேர் காமாட்சி, டீச்சர்!” என்று அந்தப் பெண் சேர்த்துக் கொண்டாள். “நமக்குத் தெரியும், மஞ்சள் பூசினா, முகத்தில முடி வளராது, பரு வராதுன்னு. இதைப் பாக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டுத் திரியமுடியுமா? சாயங்காலம் முகத்தைக் கழுவறபோது மஞ்சள் பூசிக்கலாமே! காலையில ஸ்கூலுக்கு வரப்போ எதுக்கு?” என்றாள் புவனா, நைச்சியமாக. இன்னொரு குறை வெளிவந்தது: “கிளாசில மத்த பொண்ணுங்கல்லாம் எங்களைப் பக்கத்தில ஒக்கார விடமாட்டேங்கறாங்க, டீச்சர்!” ஆத்திரம் எழுந்தது புவனா டீச்சருக்கு. “ஏனாம்?” “எங்க தலையில பேன் இருக்குமாம். எங்க முடி நாறுதாம்!” புவனா பெருமூச்சு விட்டாள். “நானே ஒங்ககிட்ட இதைப்பத்தி சொல்லணும்னு இருந்தேன். தலைக்கு கடலை எண்ணை பூசினா, பழக்கம் இல்லாதவங்களுக்கு நாத்தமாத் தோணும். அது வேணாம், வேற ஏதாவது வாசனைத் தைலம் வெச்சுக்கலாம்னு டீச்சர் சொன்னாங்கன்னு அம்மாகிட்ட சொல்லுங்க, என்ன?” என்றாள் பக்குவமாக. மாணவிகளுக்கு மட்டுமின்றி, அவர்களது தாய்மார்களுக்கும் தான் வழிகாட்டியாக விளங்குகிறோம் என்று அவள் புரிந்து வைத்திருந்தாள். “பேன் இருந்தா, அதுக்கு மருந்து இருக்கு. இல்லே, தலைகாணிமேல துளசியைப் போட்டுக்கிட்டு படுக்கலாம். நாம்ப சுத்தமா, புத்திசாலியா இருந்தா, தானே எல்லாரும் கிட்ட வரமாட்டாங்களா!” அவர்களது இளம் முகத்தில் நம்பிக்கை ரேகை. “வெளிர் நிறத்தில உடை போட்டுக்குங்க. மத்தவங்கமாதிரி ஒங்க நடையுடை பாவனையும் இருந்தா, தானே அவங்க ஒங்களை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க!” அதற்கடுத்த வாரம், டீச்சருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு பெண்கள் முடியைக் கட்டையாக வெட்டிக் கொண்டிருந்தனர்! “என்ன, புது ஃபேஷன்!” என்று புன்சிரிப்புடன் புவனா கேட்க, “ரொம்ப வேர்த்துக் கொட்டுது!” என்று இல்லாத வியர்வையைத் துடைப்பதுபோல் பாவனை காட்டினாள் உமா தேவி. தான் சிவப்புப் பொட்டு இட்டுக் கொண்டதால் பிரச்னை எழுந்தது என்ற பெண். “அம்மா முந்தியெல்லாம் முடி வெட்டிக்கக் கூடாதும்பாங்க. இப்ப, டீச்சரே சொன்னாங்கம்மா, ‘மத்தவங்கமாதிரி நாம்பளும் இருந்தாத்தான் அவங்க நம்பளை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க’ன்னு அப்படின்னு சொன்னதும், ‘சரி’ன்னுட்டாங்க!” சங்கத் தலைவி துர்கா உண்மையைக் கூறினாள். பிறருடன் இணைந்து வாழ, நமது தனித்தன்மையை இழக்க வேண்டியதன் அவசியம் என்ன? துர்கா ஆத்திரப்பட்டாள். ஆனால் எதுவும் பேசவில்லை. அடுத்து அவர்கள் ஏற்பாடு செய்யவிருந்த கலைவிழாவில் பிற இன மாணவிகளும் பங்கேற்று, மிக ஒற்றுமையாக எல்லாரும் இயங்குவதைக் கண்டு, தான் சொல்லிக்கொடுத்தது வீண்போகவில்லை என்று பூரிப்படைந்தாள் புவனா. “இந்தப் பாட்டுக்கா ஆடப் போறீங்க?” ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினாள் புவனா. சினிமாப் பாட்டு என்றாலும், சற்று விரசம் இல்லாமல் இருக்கக்கூடாதா! “எங்களுக்கு இதுதான் தெரியும்,” துடுக்காகப் பேசினாள் மாலா. “டீச்சர் வேணாம்னா, நான் ஆடலே!” புவனாவிற்கு ஆழ்ந்த வருத்தம் உண்டாயிற்று. “அதில்லம்மா. ஒங்க டான்ஸ் ஏன் இவ்வளவு ஆபாசமா இருக்குன்னு யாராவது கேட்டா, நான் என்ன பதில் சொல்றது?” “வாங்கடி!” சினிமா கதாநாயகன் பாணியில் மாலா கையை வீச, அவளைப் பின்தொடர்ந்து போனார்கள் ஐந்து பெண்களும். அவர்களையே பார்த்தபடி வாயடைத்துப்போய் நின்றாள் புவனா. தன்னை இவர்களுள் ஒருத்தியாகப் பாவித்துத்தானே இவர்களுக்கு வழிகாட்டுகிறோம்! சிலருக்கு ஏன் தன்மேல் இவ்வளவு காட்டம்? ஒருவேளை, எல்லாரிடமுமே இப்படித்தான் நடந்துகொள்ளத் தெரியுமோ இவர்களுக்கு? அவள் நீண்ட காலம் குழம்ப வேண்டி இருக்கவில்லை. ஓரிரு வருடங்களில் உத்தியோக மாற்றல் கிடைக்க, புவனாவுக்கும், அந்தப் பள்ளிக்கும் தொடர்பு அற்றுப்போயிற்று. என்றாவது அந்தத் தமிழ்ப் பெண்களின் நினைவு வரும். இப்போது எல்லாரும் தன்னைப்போல் படிப்பு முடிந்து, வேலை பார்ப்பார்கள். ஒருவேளை, தன்னைப்போல் இல்லாது, கல்யாணமாகி வீட்டில் இருக்கிறார்களோ, என்னவோ என்றெல்லாம் அவர்களைச் சுற்றி எண்ணத்தை ஓட்டுவாள். சிலர் மரியாதை இல்லாது பேசினார்கள். அது தன் குறையால் அல்ல. அவர்களுடைய தாழ்மை மனப்பான்மையே அப்படி பார்ப்போரிடமெல்லாம் சண்டை போடத் தூண்டுகிறது என்பது புரிந்திருந்ததால், அவர்களிடம் விரோதம் பாராட்டத் தோன்றவில்லை. அந்தக் கொலுசுப் பெண் — அவள் பெயர் என்ன? சாமர்த்தியமான பெண். தினமும் வந்து வந்து, தன்னிடம் ஏதாவது கற்றுப்போவாளே! மிகவும் மரியாதையாக நடந்துகொள்வாள். அவள் புத்திசாலி, டீச்சருடைய அபிமானத்திற்கு   ஆளானவள் என்றே மற்ற பெண்களுக்கு அவளை அவ்வளவாகப் பிடிக்காது. அவளுக்கு விடை அளிப்பதற்கென்றேபோல் நாளிதழில் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. குறிப்பிடத்தக்க அரசியல்வாதியாகி விட்டாளா இவள்! குட்டையும், பரட்டையுமான முடி. பாழ் நெற்றி. பக்கத்திலேயே அவளுடைய தேர்தல் வெற்றியைப் பாராட்டும் வகையில் அவள் வாயில் கேக்கை ஊட்டும் கணவர். ‘எனக்குத் தமிழ் மொழியும், நமது கலாசாரமும் மிகவும் பிடிக்கும்,’ என்று பேட்டியில் அவள் சொல்லி இருந்தது புவனா டீச்சருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தனது மாணவி! இன்று நாடே பாராட்டும் வண்ணம் பெயரும், புகழுமாக இருக்கிறாள்! ஏதோ உந்துதலின்பேரில், உடனே அந்தக் கட்சியை அழைத்தாள், தொலைபேசியில். “நான் உமாவோட டீச்சர். புவனா டீச்சருன்னு சொன்னா, அவளுக்கு.. ம்.. அவங்க புரிஞ்சுப்பாங்க”. “யாரோ புவனாவாம். ஒங்க டீச்சர்னு சொல்றாங்க! ஒங்ககூடப் பேசணுமாம்மா!” “இப்ப நேரமில்லன்னு சொல்லு. அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம நான் யாரையும் பாக்கறது கிடையாதுன்னு சொல்லத் தெரியாதா ஒனக்கு?” என்று உதவியாளனிடம் எரிந்து விழுந்ததும், கூடவே, “யாராவது கொஞ்சம் வசதியா, செல்வாக்கோட இருந்தா, வந்துடுவாங்களே, சொந்தம் கொண்டாடிக்கிட்டு!” என்று சொன்னதும் தன் காதில் விழவெனவே அவ்வளவு உரக்கச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று புவனாவிற்கு நன்றாகவே புரிந்தது. என்றோ எழுந்த வினாவிற்கு அன்று விடை கிடைத்தது. பிறரை மதிக்கத் தெரியாது, தம்மைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மரியாதை கிட்டுவதில்லை. அதை வன்முறையால், பதவியால் பெறத் துடிக்கிறார்கள்! நடுங்கும் கரத்தால் ஃபோனைக் கீழே வைத்தாள். மனம் குமுறியது. ‘நான் பெறாத குழந்தைகளாக அவர்களைக் கருதி இருக்கலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, நான் ஒரு கருவி. அவ்வளவுதான். அதோ, அந்த ஏணிமாதிரி. மேலே ஏற்றிவிட்டதுடன் என் கடமையும் தீர்ந்தது’. ஏமாற்றமும், அவமானமும் ஒருங்கே எழுந்து, கண்ணீராக மாறின. இனிமேல் எந்த மாணவ மாணவியரிடமும் பற்று கொள்ளாது, அவர்கள் எக்கேடு கெட்டால் என்னவென்று, புத்தகங்களிலுள்ள பாடங்களை மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும். வாசலிலிருந்து ஒலித்த குரல் அவளுடைய சிந்தனையைக் கலைத்தது: “அம்மா! இன்னிக்குப் புல் வெட்டலாங்களா?” “வெட்டுப்பா,” என்று பதில்குரல் கொடுத்த புவனாவிற்கு சட்டென ஞாபகம் வந்தது. வழக்கமாகப் புல் வெட்டும் பெருமாள் போன மாதம் வந்திருந்தபோது, அவனுடைய நான்கு வயது மகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப தான் பொறுப்பேற்றுக் கொள்ளுவதாகச் சொன்னோமே! அவசரமாகத் தனது ‘செக்’ புத்தகத்தை வெளியே எடுத்து, அந்தக் குழந்தைக்கு ஓராண்டுக்கான சம்பளப் பணத்தைப் பூர்த்தி செய்யும்போதே சொல்லவொணாத திருப்தி எழுந்தது அவளுக்குள். இன்னொரு தமிழ்க் குழந்தையின் நலனுக்கு வழிவகுத்தாயிற்று! ‘ஏணிகள் வளைவதில்லை,’ என்று ஏதோ தோன்ற, புன்சிரிப்பு எழுந்தது. (2004 பாரதிதாசன் இயக்கத்தின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை) 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !