[]     []   தமிழ்ப்  பெருநூல்    The Big Book of the Tamils   தொகுதி 1 - பக்கம் 1 -100 வரையில்    Volume 1 – Pages 1 to 100   ஜனவரி 2022 பதிப்பு  January 2022 Edition   தமிழர்களின் சிறப்புமிகு ஆக்கங்களை இணையத்தில் கல்வெட்டாக பதியும் முயல்வு  []       அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா   அவர்களின் நினைவாக இயங்கும்   மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கையின்  பெருநூல் உருவாக்கத்   திட்டத்தின் மூலமாக   இந்த நூல் வெளியிடப்படுகிறது            ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்    அறங்காவலர்கள்   திரு. கவி செங்குட்டுவன் (ஊத்தங்கரை, தமிழ்நாடு)  திரு. பறம்பு நடராசன் (காரைக்குடி, தமிழ்நாடு)   திரு. அஸ்ரப் அலி (மணப்பாறை, தமிழ்நாடு)  . ஐம்பெருங்குழு (5 நபர் உயர்மட்ட குழு)  (1) Dr. டாக்டர் செம்மல் முஸ்தபா (சவுதி அரேபியா)  (2) திரு. அறிவழகன் (பிரான்ஸ்)  (3) திரு. சுதர்சன் மீனாட்சி (கனடா)   . எண்பேராயம் (8 நபர் உயர்மட்ட குழு)  (1) திரு வெற்றிவேல் (சவுதி அரேபியா)  (2) திரு தமாம் பாலா (வியட்நாம்)   (3) திருமதி வேலம்மாள் (தமிழ்நாடு)    மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும்   நன்றி       []       “தமிழ்ப் பெருநூல், நவீன உலகின் கல்வெட்டு போன்றது - உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் சிந்தனைகளை காலத்தால் அழியாத வடிவில் என்றும் என்றென்றும் இலவசமாக கிடைக்கும் நிலையில் அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு கடத்த வேண்டியது நம் பொறுப்பு. தமிழ் வாழ்ந்தே தீரும்”  திட்ட  இயக்குனர்   தமிழ்ப் பெருநூல் உருவாக்கத் திட்டம்     பேராசிரியர்  டாக்டர் செம்மல் முஸ்தபா   MBBS,MD,DLO,B.Sc,M.Sc,M.Phil,PhD           தமிழ்ப் பெருநூல் - தொகுதி 1  - மேற்கோள் (Citation Index)   கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன், கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 1.  கவி செங்குட்டுவன், கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 6.  ஆற்றல் மறவன், கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 7.  கவிஞர் புகாரி, கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 8 -24.  வெண்கொற்றன்,  கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 25,26.  இராமசாமி துரைப்பாண்டி,  கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 27.     கவிஞர் வாரூர்ச்செல்வன், கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1,பக்கம் 28 - 31.  துரை தனபாலன், கவிதை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 32 - 33.  இராமசாமி துரைப்பாண்டி, சிந்தனைகள், தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 34 - 37.  இராமசாமி துரைப்பாண்டி, இறப்பது இயல்பானது, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 38  Lateral Thinking by Tamils , LTM1, The Big Book of Tamils, Volume 1 , Pages 38 – 45. கோவை ஞானியுடன் ஒரு பேட்டி, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 46 - 51.  கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள், நியூயார்க் ஜனவரி 2,1914 கடிதம், , தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 52 - 55.   இராமசாமி துரைப்பாண்டி, ஆபிரகாம் பண்டிதர், கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 56 - 61.   கோட்டாறு தமிழரசன், திருக்குறள் உரையாடல், கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 62 - 63.   இராம கி, தமிழெனும் கேள்வி, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 64 - 69.   முனைவர். பா. வில்சன், திருமதி ஜாஸ்மின், தமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில் கலாசார பரிமாற்றத்தின் பங்கு, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 70 - 74.  பாபு விநாயகம்,முனைவர்.ஆ.ஷைலா ஹெலின்,பாரதியின் பண் பாடு - பண்ணோடியைந்த மகாகவி பாரதி, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 75 - 81.  ஆனந்தி ஜீவா , வாழ்வியல் சிந்தனை, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 82.  பேராசிரியர் செம்மல் முஸ்தபா, அயலானின் கடிதங்கள் நூலிலிருந்து, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 83.  முனைவர் பா.வேலம்மாள், திருக்குற்றாலக் குறவஞ்சி, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 84 - 88.  இசையறிஞர் நா.மம்மது, ஆய்ச்சியர் பாடிய முல்லைத் தீம்பாணி, கட்டுரை, தமிழ்ப் பெருநூல், தொகுதி 1, பக்கம் 89 - 95.  Kalpitha M, Books, Poem, , The Big Book of Tamils, Volume 1 , Pages 96. Dammam Bala, Work from home, Article, The Big Book of Tamils, Volume 1 , Pages 97 – 99.   பொருளடக்கம் கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன், கவிதை 10  கவி செங்குட்டுவன், கவிதை 11  ஆற்றல் மறவன், கவிதை 13  கவிஞர் புகாரி, கவிதை 15  வெண்கொற்றன், கவிதை 41  இராமசாமி துரைப்பாண்டி, கவிதை 44  கவிஞர் வாரூர்ச்செல்வன், கவிதை 46  துரை தனபாலன், கவிதை 52  இராமசாமி துரைப்பாண்டி, சிந்தனைகள் 55  இராமசாமி துரைப்பாண்டி, இறப்பது இயல்பானது, கட்டுரை 59  Lateral Thinking by Tamils 61  கோவை ஞானியுடன் ஒரு பேட்டி, கட்டுரை 70  கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள் 75  இராமசாமி துரைப்பாண்டி, ஆபிரகாம் பண்டிதர், கட்டுரை 79  கோட்டாறு தமிழரசன், திருக்குறள் உரையாடல், கட்டுரை 85  இராம கி, தமிழெனும் கேள்வி, கட்டுரை 88  முனைவர். பா. வில்சன், திருமதி ஜாஸ்மின், தமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில் கலாசார பரிமாற்றத்தின் பங்கு, கட்டுரை, 95  பாபு விநாயகம்,முனைவர்.ஆ.ஷைலா ஹெலின்,பாரதியின் பண் பாடு - பண்ணோடியைந்த மகாகவி பாரதி, கட்டுரை 101  ஆனந்தி ஜீவா , வாழ்வியல் சிந்தனை, கட்டுரை, 109  பேராசிரியர் செம்மல் முஸ்தபா, அயலானின் கடிதங்கள் நூலிலிருந்து, கட்டுரை 111  முனைவர் பா.வேலம்மாள், திருக்குற்றாலக் குறவஞ்சி, கட்டுரை 112  இசையறிஞர் நா.மம்மது, ஆய்ச்சியர் பாடிய முல்லைத் தீம்பாணி, கட்டுரை 118  Kalpitha M, Books, Poem 125  Dammam Bala, Work from home, Article 126      []       கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன், கவிதை   சிந்தை இனிப்பவளே! அன்புச் சின்னமே! சீதனமே!   எந்தன் வாழ்வினிக்க எம்வீட்டில் வந்துதித்த   தங்கமே தமிழ்மகளே! தளிரே நீ தூங்கிடடி!  செல்லமே!  செங்கரும்பே! சிந்தாமணியமுதே!   சின்னவிழி மூடி செல்வமே  கண்ணுறங்கு!   தூளியிலே உன்னை இட்டு  தூங்காமல் பாடுகிறேன்..  தூங்கடி என் கிளியே! தூங்கி விழித்திடடி!    சின்ன விழிமூடி என் செம்பவளம் தூங்கிடடி!                []     கவி செங்குட்டுவன், கவிதை   அகரத்தை முதலாகக் கொண்டே துவங்கி  ஔகாரத்தை இறுதியாகப் பெற்றே முடியும்  அன்னைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டே  எண்ணையும் எழுத்தையும் கண்ணெனத் தகுமென   வண்ணத் தமிழில் சொன்ன வள்ளுவன்  ஆதியையும் அந்தத்தையும் அறுதியிட்டுச் சொன்னபோது  முழுமுதற் கடவுளாக இறைவனை என்றும்  முன்னிருத்தியே முகமன் சொன்னான் குறளிலே  அகமது தெளியவும் செகமது மிளிரவும்  முகமது பொலிவு பெற்றிடல் வேண்டும்  காக்கும் கடவுள் கருணை காட்டினால்  நோக்கும் திசையெலாம்  வெற்றிப் படிக்கட்டே  வாழ்க்கையின் துவக்கம் வசந்தமாக வேண்டின்  சொல்லும் செயலும் என்றும் பிறரை  வெல்லும் வகையில் அமைதல் வேண்டும்  எண்ணமும் எழுத்தும் சொல்லும் செய்தி  அன்னத்தின் வண்ணமாய் ஒளிர வேண்டும்  உள்ளத்துக் கருத்துக்கள் எல்லாம் என்றும்  உயரிய நோக்கம் நிரம்பியதாக வேண்டும்  வள்ளுவன் வாக்கு வென்றிட வேண்டும்....          []     ஆற்றல் மறவன், கவிதை   உணர்வாய் உணர்வாய் உணரா மனிதா  தளரும் வயதிலும் நிறைவாய் இருப்பாய்  புரியா உலகில் புதுமை நீயே  புரியும் வயதிலும் குழப்பமும் நீயே  தெளிவை உணர்ந்தால்  வலியை தவிர்ப்பாய்   வலியை உணர்ந்தால் வலிமை பெறுவாய்  இருக்கும் உலகம் நிலையற்று போகும்   காணும் உலகம் தெளிவற்று சுழலும்   உன்னை நீ உணர்ந்தால் தெளிவு பிறக்கும்   பொங்கும் இன்பம் உன்னுள் சுரக்கும்!                              []     கவிஞர் புகாரி, கவிதை செல்வழி செவியில் சொல்லின்றி கிசுசிசுத்ததை  இருபத்திநாலு மணி நேரத்தில்  இருநூற்றி நாற்பது வினோதங்கள்  எதையும் தப்பாமல் செய்யும் நானேதான்  தம்பிக்குத் தபால் எழுதி  தாசில்தாருக்கு அனுப்பிவைத்தேன்  அலுவலகத்தில் சுறுசுறுப்பாய்  ஏதேதோ செய்தேன்  அது எதுவுமே என் நிறுவனத்திற்குத்  தேவையே இல்லை  கணினியின் சாளரங்களில்  காட்டுப் பூனைகள் பல  பதுங்கிக் கிடப்பதுபோல்  என் விரல்களுக்குள் சிக்காமல்  மின்னெலி துள்ளிக்கொண்டே இருந்தது  நலமா என்று கேட்டு  என் மின்னஞ்சல் பெட்டிவிழுந்த  அத்தனை நட்பு மடல்களையும்  கன்னாபின்னாவென்று வைதுவைத்து  பதில் பொத்தானை அழுத்திவைத்தேன்  மதிய உணவிற்கு 'ஹாட் டாக்' வாங்கி  இரண்டாவது கடியாக  என் கட்டை விரலைக்  கடித்து முடித்தேன்  கூடவே ’ஹாட் டாக்’ என்றால்  சுடுநாய் என்று  தூய தமிழில்  மொழிபெயர்த்து மகிழ்ந்தேன்  ஐந்தாவது தளத்தில் ஏறவேண்டிய  கோ-ட்ரான்சிட் ரயிலுக்காக  மூன்றாவது தளதில்  மூன்று மணி நேரமாய்  நின்றுகொண்டிருந்தேன் கவிதை நூல் ஒன்றைப் பிரித்து  முதல் வரியை மட்டும்  முந்நூறுதரம் வாசித்தேன்  என் சீறுந்தில் அமர்ந்து  (அதாங்க ’என் காரில் அமர்ந்து’)  சாவியிடாமலேயே உந்து விசையை  (உந்துவிசை புரிந்திருக்குமே)  அழுத்திக்கொண்டிருந்தேன் என் பெயரை  யாரோ கூவிக் கூவி அழைக்க  செத்துப் போன எவனையோ  அழைக்கிறார்களே என்று  விடுவிடுவென்று வீடுவந்து சேர்ந்தேன்  அன்பே இதுபோல் என்னால்  இனியொருநாளை கைகால்களில் சங்கிலி பூட்டிக்கொள்ளாமல்  கடத்த முடியாது  செல்வழி நீ என் செவியில்  சொல்லின்றி கிசுகிசுத்ததைச்  சத்தமாய் நீயே சொல்லிவிடு  நம் சத்தியத் தமிழால்  அன்புடன் புகாரி   10.10.2021 என் தகப்பனும் தாயும்  இறைவன்   என் தகப்பன்  அந்த இறைவனே   என் பல்லாயிரம் தாய்  தமிழ்   என் காதலி  அந்தத் தமிழே   என் ஆயிரம் தோழியர்  கவிதை   என் பிள்ளை  எனக்குப்   பலகோடிப் பிள்ளைகள்  ஓயாமல் சாயாமல்   உலராமல் நொடிப் பொழுதும்  பெற்றெடுத்துக்கொண்டே இருக்கிறேன்   என் பிள்ளைகளை  என்   ஆயிரத்தோறாம் வயதிலும்  பருவம் வதங்காமல்  பெற்றெடுப்பேன் நான்  பழுதில்லாப்   பசுந்தளிப் பிள்ளைகளை  கசடென்று   உள்ளேதும் இல்லாதவன்  எக் கவலையும்   நிலையாகக் கொள்ளாதவன்   புதுப்பிஞ்சு மழலைகளின்  கன்னத் தோப்புகளில்  முத்தக் காட்டாறாய்ப்   பாய்பவன் என்றென்றும்   பாசத் தாகம் தணியாமல்   தவிப்பவன் இயற்கை   இழைகளில்    இயல்பாய்க் கலந்தவன்   என்றும்   இறந்தே போகாத  நெஞ்சினன் புன்னகைப் பூக்கள்   என் பேரப்பிள்ளைகள்  நாளும் என்  உயிருக்குள் உயிர் ஏற்றும்    தென்னம் பிள்ளைகள்  ஆம்...  இறைவன்   என் தகப்பன்  அந்த இறைவனே   என் பல்லாயிரம் தாய்  நான்   கேட்கும் எதையும்   அவன்   மறுப்பதில்லை எப்படி மறுப்பான்   அவன் என்   சொந்தத் தந்தையல்லவா  நாளும் பொழுதும்   கருணைப் பால் சுரக்கும்   தன் பலகோடி முலைகளை  எனக்காக ஏந்தும்  பந்தத் தாயும்   அவனே அல்லவா  அன்புடன் புகாரி  25.10.2021 ஒரு குறள் அதில் என் குரல்  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்  மெய்ப்பொருள் காண்ப தறிவு  குறள் என்றாலே அது நம் வாழ்வை   சிறப்பாக வடிவமைத்துத் தரும்   அறிவின்  குரலாகத்தான் இருக்கும்  வள்ளுவர் இக்குறளில்   ஒரு கருத்தைச் சொல்கிறார்  ஆனால் அக்கருத்தை   வள்ளுவன் சொல்கிறேன் என்பதற்காக  அப்படியே ஏற்றுவிடாதே என்றும் சொல்கிறார்  அறிவு வானமான நீங்கள் சொன்னால் கூட  அப்படியே ஏற்கக் கூடாதென்றால்  என்னதான் செய்ய வேண்டும் என்று   குழம்புகிறது மனது  ஆய்ந்து அலசி அதன் உண்மைத் தன்மையை   அறிவதுதே அறிவுடைமை மற்றவை மடைமை என்று   விளக்கம் தருகிறார் வள்ளுவர்   குழம்பிய மனதை திடப்படுத்துகிறார்  ஆம் எவர் எதைச் சொன்னாலும்   அதை அப்படியே நம்பிவிடாமல்  உண்மை எது என்பதை   ஆராய்ந்து அறிவது மட்டுமே   அறிவுடைமை மிக நெருங்கிய நண்பர்கள்   ஏதோ ஒன்றைச் சொல்லலாம்  தாய் தந்தை மனைவி மக்கள் என்று  மிக நெருங்கிய உறவுகள்   எதையோ சொல்லலாம்  நம் எதிரிகூட   ஏதோ ஒன்றைச் சொல்லலாம்   ஒரு கவிதை ஒரு கட்டுரை ஒரு கதை  ஏதோ சொல்லலாம்  இன்னும் இந்த உலகில்  நம்மிடம் சொல்வதற்கு   ஆயிரம் பேர் இருக்கிறார்கள்  இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில்  ஆயிரம் அல்ல   கோடி கோடியாய் இருக்கிறார்கள்  யார் சொன்னால் என்ன?   அவர் எதைச் சொன்னால் என்ன?  அதை உன் மூளை என்ற சல்லடையால்   நீ சலித்தெடுத்தாயா?  உண்மையைத் தேடும் பொருட்டு   என்ன முயற்சி செய்தாய்?  சொன்னவரிடமே   குறுக்குக் கேள்விகள் கேட்டாயா?  நீ சொல்வது உண்மையா  சம்பந்தப் பட்டவரையும் அழைத்து  நேரடியாய்ப் பேசலாமா என்று கேட்டாயா?  நீ சொல்வதை நான் எப்படி நம்புவது?  கண்ணால் காண்பதும் பொய்  காதால் கேட்பதும் பொய்  தீர விசாரிப்பதல்லவா மெய்?  நீ சொல்வதைக் கேட்டு   நான் ஒரு முடிவெடுத்தால்  நீ யாரைப் பற்றி அவதூறு பேசுகிறாயோ  அவர் வாழ்க்கை மட்டுமல்ல  சொன்ன உன் வாழ்க்கையும் அழியும்  அலசி ஆராயாமல் கேட்டு மட்டும் செயல்பட்ட  என் வாழ்க்கையும் சேர்ந்தே அழியும்  தவறிழைத்துவிட்டால் என் நெஞ்சே என்னைக் கொன்று புதைத்துவிடும்  கண்ணகி கோவலன் பாண்டியமன்னன்  கதையும் இதைத் தெளிவாய்ச் சொல்லும்   இப்போது புரியும் வள்ளுவர்   ஏன் இப்படிச் சொல்கிறார் என்று   அவர் சொல்வதை அவசியம் கேட்போம்   இப்படி அலசி ஆராய்ந்து உணர்ந்து புரிந்து கேட்போம்  ஏன் என்ற கேள்வி   இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை  நான் என்ற எண்ணம்   கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை  நன்றி வாலி  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு  ஒன்று மனசாட்சி   ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா  நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்  தெய்வத்தின் காட்சியம்மா  அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா  அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா  ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை  அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை  மனிதனம்மா மயங்குகிறேன்  தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே  தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே  நன்றி கண்ணதாசன்  அன்புடன் புகாரி  26.10.2021 .   .. சிறகுகள் இருந்தும் பறக்காத பறவை  தனக்கே தனக்கான சிறை  கனவுகள் இருந்தும் கனியாத கண்கள்  சந்தோசம் விலக்கிடும் திரை  இயல்புகள் மறுத்து ஏங்கும் உள்ளம்  வளர்ந்தும் வளராத குறை  உணர்வுகள் இருந்தும் வாழாத உயிர்கள்  மயான நெருப்புக்கே இரை  அன்புடன் புகாரி  10.10.2021 . .. உனக்காக  எதையும் இழப்பவர்களைவிட எதற்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி அன்புடன் புகாரி  10.10.2021   அழுகையும் சிரிப்பும் தூரமில்லை  இந்த வாழ்க்கை வினோதமானது. ஆனந்தத்தில் ஆடும்போது காலம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. ஆனந்தம் வடிந்து, கொடுந்துக்கம் பற்றிப் புறட்டிப் போடும்போது, ஆழமான தத்துவ வரிகள் நெஞ்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அவை பெரும்பாலும் விரக்தி வரிகளாகவும் நம்பிக்கையைச் சிதைக்கும் முட வரிகளாகவும் இருப்பதால், அவற்றை நான் பொதுவெளிகளில் பகிர்வதில்லை. ஆனால் இந்தக் கவிதையின் முதல் நான்கு வரிகள் என் வாழ்வின் ஒரு மிக முக்கிய காலகட்டத்தை அழுத்தமான என் நினைவில் கொண்டுவந்து நிறுத்துவதால், அவசியம்தான் என்று எண்ணிப் பகிர்கிறேன். மடியும் வரைக்கும் துயரம் என்பதெல்லாம் சுத்தப் பொய். அந்த நேரக் காயத்தின் வேதனைச் சொற்கள் அவை. அதன் பின் நான் ஏராளமான இன்பங்களைத் தாராளமாகச் சுகித்துதுவிட்டேன் சுகித்துக்கொண்டும் இருக்கிறேன் என்பதே நான் இங்கே வாழ்க்கையின்மீது முன்வைக்கும் மேலான நம்பிக்கை. சத்தியம், வாழ்க்கை இனிமையானது, அதில் வந்துபோகும்ம் துயரங்கள் அந்த இனிமையை நமக்கு எடுத்துச் சொல்லும் தத்துவப் பாடப் புத்தகங்கள்.  . என்னை மீறும் எண்ணங்களே  என் இதயம் எங்கும் காயங்களே  மண்ணில் வாழ்க்கை மாயங்களே  மடியும் வரைக்கும் துயரங்களே  . நீளும் விரல்களில் ஏக்கங்கள்  நெருப்பைத் தொட்டே அழுகைகள்  வாழும் வாழ்வில் தேடல்கள்  வரண்டு போனால் சடலங்கள்  . கண்ணில் அலையும் நினைவுகள்  கலைந்து சிதையும் கனவுகள்  மின்னல் போன்ற உறவுகள்  உயிர் மிதித்துப் போகும் பறவைகள்  . நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்  ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்  கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து  கனவுச் சித்திரச் சாயம் போகும்  . நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்  ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்  கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து  கனவுச் சித்திரச் சாயம் போகும்  . அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது  சிரித்தவன் அழுவான் மறுபொழுது  அழுகையும் சிரிப்பும் தூரமில்லை  அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை  அன்புடன் புகாரி  23.09.2021 . எல்லாமே   பொய்தான் திரைப்படங்கள் செய்திகள் சமூக வலைத்தளங்கள்  மட்டுமல்ல   மனிதர்களுக்கு   இடையே நிகழும்   உரையாடல்களும்   பொய்தான் ஆனாலும்   இந்த உலகில்   சில   சத்திய நூல்கள் உண்டு   சத்திய மனிதர்கள் உண்டு   சத்திய வார்த்தைகள் உண்டு  இனம் பிரிக்கத்   தெரிந்தவனுக்கே   நலம் வந்து சேரும்   அன்புடன் புகாரி  21.08.2021 . கண்களின் திறவுகோல்   கண்ணதாசனின் ’மயக்கமா கலக்கமா’ பாடலைக் கேட்டுவிட்டுத்தான் ஊருக்குத் திரும்பிப் போக எடுத்த என் முடிவை நான் மாற்றிக்கொண்டேன், பாடலாசிரியன் ஆனேன் என்றார் வாலி.   வாலியிடம் இல்லாத அறிவா?   தன் பாடல்களின் மூலம் எத்தனையோ கோடி மக்களுக்கு அறிவுரை வழங்கிய கண்ணதாசன்கூட தன் வாழ்வில் எப்படியெல்லாம் முடிவெடுக்கத் திண்டாடினார்  என்று அவரின் வனவாசம் என்ற நூல் சொல்லும்.  தனக்கென்று ஒரு சிக்கல் வரும்போது குழம்பாதவர்கள் எவரும் இல்லை.  பிரச்சினையின் தீவிரம் தாக்கத் தாக்க மூளை தடுமாறிப் பின்வாங்கி விடுகிறது.   சோகம் கோபம் வெறுப்பு கண்ணீர் என்ற அத்தனையும் முன்னுக்கு வந்து கண்ணுக்குத் திரையிட்டுவிடுகின்றன.  முடிவுகள் நம் கைகளுக்குள்ளேயே இருந்தாலும் பயத்தில் பதட்டத்தில் நடுக்கத்தில் கலக்கத்தில் நம்மால் அவற்றைக் காணவே முடிவதில்லை.  முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு மரண வேதனையின் தவிப்பு.  வாழ்வா சாவா என்ற நிலையில் முரட்டுத்தனமாய் சிலர் முடிவெடுத்து வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.   ஆனால், எல்லோருக்கும் அது இயலுவதில்லை.   ஏனெனில், சரிந்துவிடக் கூடாது என்ற அக்கறை ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் கொடுத்தது.  ஒரு முடிவு தன்னை மட்டும் அல்ல தன் குடும்பத்தை, தன் சமூகத்தை, தன் நாட்டை, ஏன் இந்த உலகத்தையே பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தால், முடிவெடுக்க எத்தனிக்கும் ஒருவனின் போராட்டம் அவனைக் கொன்றே போட்டுவிடக் கூடும். சரியான நேரத்தில் கிடைக்கும் சரியான அறிவுரை சொர்க்கத்திற்கு இணையானது.  . உன்  உபதேச தேசத்தில்  கர்ணனும்   நீயே கையேந்துபவனும்   நீயே . இருந்து   கொடுத்தாய் இருந்தே   தவிக்கிறாய் .உன்   கண்களின் திறவுகோல்  உன்னிடமே இருந்தும்  பிறர்தாம் திறக்கவேண்டும்  .. இது   உனக்கு   மட்டுமல்ல எல்லோருக்குமே   தலையெழுத்து அன்புடன் புகாரி  18.08.2021 . மல்லியும் ரோஜாவும்  மல்லிகையின்   மாய மணம்   என்   உயிரைக் கிள்ளிக்கிள்ளி   என்னவோ செய்யும்  மனதின்   ரசனைமிகு இடுக்குகளில்   மந்திர வேர்விட்டு   மெல்ல மெல்ல ஊடுருவும்  அந்தக்   குட்டிக்குட்டி   வெள்ளை மலர்களைக்   கண்டாலே   கனவுகளில் கவிழும்   கப்பல்களாய்   மிதக்கும்   என் கண்களுக்கு  கொள்ளை அழகாய்த்   தெரியும் ரோஜாவோ   கோடை விழிகளுக்குள்   குடியேற வரும்   சில்லென்ற குளிரழகு  இதயத்தை இழுத்து   மடியில்   இட்டுக்கொண்டு   என்   வியப்புகளில்   முத்தமிடும் பேரழகு  தொடத் தொட மிருதுவாய்  விரல்களில் ஒட்டிக்கொண்டு   உணர்வுகளில் கரைந்துபோகும்   மென்மையிலும் மென்மை   இன்னுமின்னும் ஆயிரம் ஆயிரம் பூக்களின்  அழகும் வாசமும்   மகரந்தச் சொர்க்கமும்  ஒன்றாய் முகாமிட்டிருக்கும்   உன்னோடு தடுக்கத் தடுக்கக்   கேளாமல் அலைகிறது   என் மனம்   பித்துப்பிடித்து காதலிக்கிறேன்   உன்னை எப்போதும்  அன்புடன் புகாரி  17.08.2021   கணவன் மனைவி என்றாலே நகைச்சுவைதான்  மனைவி   கடவுளைப் போன்றவள்   எந்த   நல்லது நடந்தாலும்   அது கடவுளின் செயல்  எந்த   கெட்டது நடந்தாலும்   அது சாத்தானாகிய   கணவனின் செயல்  இதைத்தான்   உங்களுக்கு   ஒண்ணும் தெரியாது   ஒண்ணும் தெரியாது   என்று   கணவனைப் பார்த்து   அவள் அடிக்கடி சொல்வாள்   அவளின் தவறால்   ஒரு விபரீதம் நடந்திருக்கும்   அதை அவளை   ஒத்துக்கொள்ளச் செய்ய   கடவுளாலும் முடியாது   என்று   கடவுளே கைவிரித்து   கோடி ஆண்டுகள்   ஓடிவிட்டன திரும்பத் திரும்ப  அதையே பேசுவதில்  அர்த்தம் ஏதும்   இல்லை இதுவும்   கடந்துபோகும்   என்பது   கணவன்மார்களுக்கு மட்டும் இந்த உலகம் சொல்லும்   ஆறுதல் . அன்புடன் புகாரி  16.08.2021     அழிவில் வாழ்வா   கலவரம்   அது இங்கே தினம் வரும்     அது வரும்போதெல்லாம்   வெறுமனே நிற்கும்   சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்     தவறொன்றும் செய்யாமலேயே   தரையோடு தரையாக   இரத்தச் சகதியாய்ச்   சிதைந்து கிடக்கும் சகோதரா     திடீர்த் துவேசம் உன்னைத்   துண்டாடித் துண்டாடி   வெறியின் பசிக்குத்   தீனியாக்கிவிட்டதா     *முதலில்   என் கருணைக் கரங்களை   உன் கண்ணீர் துடைக்கவே   நான் நீட்டுகின்றேன்     இது   ஓரிரு நிமிடங்களில்   காய்ந்துபோகும்   ஈர ஒத்தடம்தான்     இதனால்   உன் உயிருக்குள்   கொதி கொதித்துக் குமுறும்   நெருப்பு ஊற்றுகள்   நிச்சயமாய்   நிற்கப்போவதில்லைதான்     ஆகையினாலேயே   நிரந்தர நிவாரணத்தின்   விடியல் கீற்றாய்   இந்தக் கவிதை உருவாக வேண்டும்   என்ற உயிர்த் தவிப்போடு     என் வார்த்தைகளை   உருக்கி உருக்கி   உன்முன் வார்க்கிறேன்     நீயோ -   இன்றைய வெறிச் சூறாவளியில்   வெற்றிகண்ட இனத்தின்   துவம்ச வதைகளால் குதறப்பட்ட   தளிர்க்கொடியாய் இருக்கலாம்     அல்லது -   தோல்விகண்ட இனம்   துவைத்துக் கிழித்து   துயரக் கொடியில் தொங்கவிட்ட   நைந்த ஆடையாய் இருக்கலாம்     நீ யாராய் இருந்தாலும்   என் கரிசனம் மட்டும்   உனக்கு ஒன்றுதான் சகோதரா   இன்று நான்   உனக்குச் சொல்லும் சேதியை   உன் மூளையின் மத்தியில்   ஓர் சுடராக ஏற்றிப்பார்     இங்கே   கண்ணீரை முந்திக்கொண்டோடும்   உன் இரத்த அருவியை     நாளை   அங்கே ஓடும்   மரண காட்டாறாய் மாற்றிவிட   நீ குறிவைத்து வெறிகொள்வதில்   நிச்சயம்   நியாயம் இருக்கிறதுதான்     தன்மானமென்பது கடைப்பொருளல்ல   அது உன் உயிர்ப் பொருள்தான்   உன்னத உணர்வுகளின்   கருப்பொருள்தான்       கருகிக்   குவிந்து கிடக்கும்   கணக்கற்ற சடலங்கள்   உன் சுற்றமும் நட்புமல்லவா     நொறுங்கி நீராகிக் கிடப்பது   உன் உடலும் உள்ளமுமல்லவா     ஆயினும்   என் அன்புச் சகோதரா     உன்னிடம்   எனக்கொரு கேள்வியுண்டு     உன்   நிதான நிமிடங்களின்   நிழல்மடி அமர்ந்து   எனக்கொரு பதிலைச் சொல்     வெற்றி என்பது என்ன சகோதரா     முட்டாள் கரமெடுத்து   மூர்க்க அரிவாள் வீச்சில்   மூடத் தலைகளை   முடிவற்று வெட்டிச் சாய்ப்பதா     இல்லை சகோதரா   இல்லை     தலைகள் எடுப்பதால்   உன் தலையும் ஓர் நாள்   குறி வைக்கப்படுகிறது   என்பதை நீ மறக்கலாமா     இன்று தப்பலாம் உன் தலை   அது என்றும் தப்புமா சகோதரா     இன்றும் கூட   உன் தலைக்குப் பதிலாய்   இங்கே உருண்டோடிய உன்   இனத்தின் தலைகள்தாம்   எத்தனை எத்தனை             வாழ்வில்   அழிவு வரும்தான்   ஆனால் -  அழிவில் வாழ்வு வருமா   சரித்திரம் பார் சகோதரா     வந்தபின் ஒத்தடம்   அறிவீனமல்லவா   வருமுன் வேரறுப்பதே   வெற்றியல்லவா     ஒருமுறை   அந்த   இரத்தக் காட்டேறி   நம்மை நசுக்கி அரைத்து   நகைப்புக் காட்டி   நகர்ந்துபோய்விட்டது     மீண்டும்   அதையே வரவேற்று நீ   சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா     என்னருமைச் சகோதரா   இனி நீ   செய்யச் சிந்திக்கவேண்டிய   காரியமென்ன தெரியுமா     மூட வெறியர்களின்   மூர்க்க வேட்டுகள்   முற்றும் துளைக்காத கேடயமாய்   உன்னை நீ உருவாக்கு     கையரிவாள்களை   கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு   உன் மனோ பலத்துடன்   மீண்டு வா     எது கேடயம் என்று   நீ கேட்டுத் தவிப்பது   எனக்குத் கேட்கிறது சகோதரா.   கேள்     பொருளாதார மேன்மை  மனோதிடச் செல்வம்  பேரறிவுப் பெருநெருப்பு    இவையே   எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத   பூரண அரண்கள் உனக்கு       அரிவாள்கள்   அறிவில்லாதவனுக்கே வேண்டும்   இந்தக் கேடயங்களல்லவா   உனக்கு வேண்டும்     எந்த நாய் நரியும் உன்   அழுக்கையும் தொடத் துணியாத   உயர் நிலையை   உன் உள்மூச்சடக்கித்   தவமிருந்து உனதாக்கு     வெட்டிக் கொண்டு சாவதை   வீர மரணம் என்று   முட்டாள் கோஷம் போடாதே     ஒப்புகிறேன்   வீடு புகுந்து நம் பெண்களின்   முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை  முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்   சகோதரா     அதில் மரணம்   உன் மண்ணின் பெருமைக்கும்   தன்மான உணர்வுக்கும்   மனிதகுல இனத்திற்கும்   மகத்தான தொண்டுதான்   ஆனால்     நடந்து முடிந்த களத்தில்   வீரம் கொள்வதென்பது   இனி வரும் சந்ததிப் பெண்களின்   முந்தானையையும்   இழுக்கக் கொடுக்க   இன்றே கையொப்பமிடும்   சாசனமல்லவா     'வெட்டு' என்பது   என்றும் விட்டுப் போகும் விசயமா   வெட்டாமையே பேரறிவல்லவா         சாவதா வாழ்க்கை   வாழ்வதன்றோ வாழ்க்கை     வீசியெறிந்த விதை   விழுந்த இடம் முளைக்கும்   வெட்டிச் சரிந்த கிளை   தரை தொட்டதும் துளிர்க்கும்   உலகின் உயிர்கள் வாழ்வதற்கே     அதை   உணர்த்தும் இயற்கையை   உற்றுப் பார் சகோதரா   வெறியரின் தலைகளை   வெட்டிச் சாய்ப்பது   உனக்கு வெற்றியா தோல்வியா     தொடரும் அழிவுகள் என்பது   எக்காலத்தும் எவர்க்கும்   தோல்விதானே சகோதரா   அன்று   அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்     இன்றோ அதுதன்   உழைப்பின் வெற்றியோடும்   பொருள்வளப் பெருக்கோடும்   அறிவுச் சுடர் ஏற்றி   உள்ளத் திண்மை பூட்டி   உலகை வென்றே உலா வருகிறதே   அந்தப்   பேரெழில் கண்டாயா     அதுவன்றோ வெற்றி  அதுவன்றோ வீரம்  அதுவன்றோ வாழ்வு    மீண்டும் ஓர்   அணுகுண்டுப் போரென்று  அடிபட்ட ஜப்பானும்   தாழ்ந்து போனால்     புல்லும் பூண்டும் கூட   எங்கும் மிஞ்சுமோ               என் அன்புச் சகோதரா   இரத்தப் பாளமான உன்   நெற்றியை   அறிவென்னும் நெருப்புக் கோடுகள்   அழுத்தமாய்ப் பதிய   சுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்     இன்றின் அவலம் மற   மூட வெறிக்கு   முக்கியத்துவம் தராதே     நாளையேனும்   நல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி   உன் நெஞ்சோடு போராடு   நல்ல விடையோடு எழு     வாழ்க்கை ஒருமுறைதான்   அதை   மூடருடன் முட்டிக்கொண்டு   முடித்துக்கொள்ளல் அறிவீனம்     காயங்களைச் செப்பனிட்டு   உன் கேடயங்களைத் தேடு     அந்த அறிவு வெளிச்சம்   உனக்குள் பட்டுத் தெறிக்க   சின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்   பூக்கவைத்தால் மட்டுமே     இது ஒரு கவிதை   சகோதரா   அன்புடன் புகாரி  2021                               []     வெண்கொற்றன்,  கவிதை [குறள்வெண்பா]  ஆசான் எனநின்று கூசாமல் கள்ளஞ்செய்  வேசரை வைதேன் வெகுண்டு!    [நேரிசை வெண்பாக்கள்]  பசுத்தோலைப் போர்த்திப் பதுங்கும் புலிகள்  விசநிறையும் நெஞ்சுடை வீணர் - இசையுடைய  ஆசான் தொழிற்கே அவஞ்சேர்க்கும் கள்ளவெளி  வேசத் தவர்கென்றோ வீழ்வு?    1 கற்கவரும் பிள்ளைகளின் கள்ளமிலா உள்ளத்தில்  பொற்புடைய கல்வி புகுத்திடார்! - அற்பரவர்  தங்காம இச்சைக்குச் சாத்திரரைப் பாழ்செய்வார்  வெங்கால் நரகுழல்க வீழ்ந்து!    2 தாய்தந்தைக் கொப்பாய்த் தகுமிறைக்கும் மேலாய்நூல்  ஆய்ந்தறி விக்கின்ற ஆசானைத் - தேர்ந்துலகில்  வைத்துத் துதிப்பார்! விடநெஞ்சர் ஆகியவர்  ஏய்த்தால் அழியாரோ இற்று?!    3 கல்லைச் சிலையாக்கிக் கண்திறக்குஞ் சிற்பியே  பொள்ளிச் சிதைத்தல் பொருந்துவதோ? - கள்ள  மனத்தர் குருவென்று மாணவரை ஏய்த்தால்  துணையோ டழிக தொலைந்து!     4 பேதை மதியில் பெருங்கல்வி சேர்த்தவரை  மேதை எனச்செய்து மெச்சிடார்! - சூதை  உளநிறைத்துச் சீடர் உயிரழியச் செய்வார்  வளமழிக வாக்கழிக வாழ்வு!     5 சின்னஞ் சிறுபிள்ளை சீடரெனப் பாராதே  எண்ணங் கருத்த இழிதகையார் - இன்னும்  மனிதரென இவ்வுலகில் வாழ்தல் தகுமோ?  முனிக அறமவரை முன்!    6 வண்ணக் கனவுபல மண்டுவிழி மாணவரின்  எண்ணஞ் சிதைக்கும் இழிதகையார் - கண்ணவிந்து  இன்னல் பலசேர்ந்து இறுமாப் பழிந்துழல்க  சின்னப் புழுவாய்ச் சிதைந்து!    7 வெள்ளை மனத்தை விருந்தாக்கி வீழ்த்திடும்  கள்ளரை ஆசானாய்க் கண்டடைந்த - தள்ளாப்  பெரும்பாவம் போக்கிடப் பிஞ்சுதன் ஆவி  தரும்பாவம் நன்றோ சகத்து?    8 தீச்சுடும் என்றறியாச் சேய்விரலுள் நீட்டிவிடின்  காய்ச்சினமச் சேய்மீதோ காட்டுவர்? - சூழ்ச்சியுளார்  ஆசான் எனநின்று அரும்புகளைச் சுட்டால்நம்  ஏசல் எவர்க்காம் இயல்பு?    9 பட்டங்கள் மட்டுமொரு பாங்குடைய ஆசானைச்  சுட்டாவென் றுள்ளத் தொழிலியல்பும் - முட்டின்றிக்  காட்டும் உளவியலால் கண்டளந்து நல்லோரை  நாட்டல் இனியதுவே நன்று! 10    - வெண்கொற்றன் - கா. விசயநரசிம்மன்    பெற்றோர் பெயர்: ரமா & கார்த்திகேயன்  © Vijayanarasimhan, 13.11.2021       []     இராமசாமி துரைப்பாண்டி,  கவிதை பெயரிடப்பட்ட அனைத்து  மரணங்களும்..  கொண்டாடப் படும்..  பீடங்களில் உறைந்து...  காட்சிப் பொருளாயின....  எனவேதான் என் அன்பே....  எனக்குப் பெயரற்ற மரணம் வேண்டுமென..  மன்றாடிக் கேட்கிறேன்...  விதை நெல்லுக்குக் கூட  பயனற்ற அற்பக் கண்ணீரின்  ஆற்றொழுக்கை வைத்து  நான் தான் என் செய்ய..  நீயுமே என் செய்ய இயலும்...  என் காதுகள் களவு போயின..  ஆயினும் பேச்சிருந்தது..  என் கண்கள் இரண்டும் காணாமலாயன..  ஆயினும் பேச்சிருந்தது...  இன்றோ என் நா  பறிபோகும் நிலையில்  என் அன்பே கடைசியாகக் கேட்கிறேன்...  பெயரற்ற மௌனம் தந்திடென...  அற்பமும் அபத்துமுமான்  இந்தப் பரந்து பட்ட யாவின் முன்னும்  என் விருப்பம் இது ஒன்றே...    திரு ராமசாமி துரைபாண்டி   Facebook - 14.03.2019   []     கவிஞர் வாரூர்ச்செல்வன், கவிதை உழவால் கனிவிளைக்க நாளும் விழைந்தேன்..!   எழுகின்ற களைப்பாலும் சலிக்காது உழைத்தேன்..!    கிழக்குக்  கருமேகம் மழைதர மகிழ்ந்தேன்..!  பள்ளிப் பறவைகள்  துள்ளியெழக் களித்தேன்..!    படரும் கொடிதனில்  பலகனிவகை   கண்டேன்..!    வளரும்  செடிதனில்  வகைவகைப் பழங்கண்டேன்..!  வானோக்கும் மரங்களில்  மண்டிய கனிகண்டேன்...!    முதிர்ந்திட்ட முக்கனி உண்டிட விழைவுற்றேன்..!  செழுங்கனி செங்கனி நல்லுணவாகக் கண்டேன்..!  தவழ்ந்திடும்  தமிழுமோர் முக்கனியே உணர்ந்தேன்..!  உள்ளம் விரும்பிடும்    வெள்ளத்தமிழை உரக்கச் சொல்வேன்..!      துள்ளி விளையாடும்  பிள்ளைகள் நெஞ்சில் விதைப்பேன்..!      மூவேந்தர் மடிவளர்  மகளே தமிழ் என்றுரைப்பேன்..!  அகிலம் எங்கும் அன்னைத் தமிழை வளர்ப்பேன்..!  ஆண்டுகள் பலஆயிரம் கண்டதெங்கள் தமிழென்பேன்..!  உலகம் வாழும்வகை சொன்னதும் தமிழே என்பேன்..!  ஒற்றுமைகண்டால் ஓங்கிவளரலாம் எனச்சொல்லக் கண்டேன்..!  பிழைகள் மலையாய்க் குவிந்திடக் கண்டேன்..!   பிழைகள் தவிர்த்து தீந்தமிழ் வளர்த்திட வழிகளும் கண்டேன்..!   எழுத்துப் பிறப்பியல் பயிலாது சொல்வேன்..!    பிள்ளைகள் பிழையும்  படித்திட தடைதனைத்  உடைப்பேன்..!    மெய்களை  இணையாகக் கற்க  தமிழ் நிலைத்து நிற்க..!  க்ங் ச்ஞ் ட்ண் த்ந் ப்ம் ய்ர் ல்வ் ழ்ள் ற்ன் இதுவே சொல்லும் முறையெனக்  கொள்க.  முதல் நிலை சிறப்பாய்  வாய்க்கும்  உச்சரிப்பிற்கு..!  கவிஞர். வாரூர்ச்செல்வன்  பெற்றோர்: இறைவனடி. திரு.முரு.பழனிச்சாமி  திருமதி. பழ.பழனியம்மாள்  அன்னை மகளுக்கு    வெற்றரின் வெளி  வார்த்தைகளில் வாய்பிளந்திடாதே.    வசந்தமே வாழ்வென்று  நம்பிடாதே...    ஆள்பெருக்கத்தின் ஆலமரமானேன்..  புயலும் மழையும்  நனைந்தே கடந்தேன்..‌!  ஆருயிரென்று   அழைத்தபோ தெல்லாம் அகமகிழ்ந்தேன்...    ஆயிரம் ரணமென்று   மறந்ததை உணர்ந்தேன்..!    அணைத்தபோ தெல்லாம் அன்பைப் பொழிந்தேன்...    காம்புகள்நீண்ட அரும்பாகிச் சரிந்தேன்..!    உறவுகள்   கூட்டம்ஓடிவரும்..  இருப்பதைப் பிடிங்கி உண்டுவிடும்..!    தாயெனப் புகழ்வார் வாய்கிழிய...!  தரங்கெட்ட   செயல்களும் செய்திடுவார்..!    மடிமீது உறங்கிடு  மயிலிறகே மாற்றங்கள் நாளும்  நூறு வரும்...!    பெண்சுகமாய் வாழ்கின்ற செய்திவரும்..!    உண்மையும் கூடப்  பொய்யாகும்..  உரக்கச் சொன்னால்  வெறுப்பாகும்...!    ஆயினும் ஆறுதல்  நமக்கென்று சில ஆயிரவர்  நமக்குத் துணையுண்டு.!  பாரதி பாடலைப்  படித்துக்கொள்..  மனதில் என்றுமே  மாறா உறுதிகொள்.‌!.    இளமைஇருக்கும்வரைதான் நீ பால்மாடு...    அறிவோ டிருக்கட்டும் உன்செயல்பாடு..!    எதற்கும் எங்கும் போடாதே  கூப்பாடு..!    அமைதி காத்தால் நீ திருவோடு..    அது, இல்லையெனில்  நீ தெருவோடு...!    இல்லறம் என்பது  நல்லறம் தான்  அறம் போற்றி  திறங்காட்டி வாழ்ந்துவிடு..!    வாழ்கை என்பதும்  சிலம்பாட்டம் வாழத்தெரிந்தால் கொண்டாட்டம்..!    வாழ்க மகளே  நூறாண்டு..  குலம் வளர்க மகளே பல்லாண்டு..!    வாழ்க்கை என்பது தேரோட்டம்...  தினமும் நாடினால்  போராட்டம்....!    அன்னை பாடம்  வேப்பங்காய் தான்..  கனிந்தால் இனிக்கும் தப்பாது..!    கவிஞர் வாரூர்ச்செல்வன்  2021   []     துரை தனபாலன், கவிதை அகக் கண்    முகத்திருக்கும் இருவிழிகள் உலகம் அறியும்   மோதுகின்ற வேல்விழிகள் இளமை அறியும்!   நகத்திருக்கும் நுண்கண்கள் மாவலி அறியும்  நாலுபேரின் கொள்ளிக்கண் தாயுளம் அறியும்!   நுதலிருக்கும் நெற்றிக்கண் மதனுரு அறியும்   நுட்பமான ஊற்றுக்கண் மண்ணே அறியும்!   புதலிருக்கும் புலியின்கண் மானே அறியும்   புவிமாந்தர் அகக்கண்ணை ஆரே அறிவார்?     உள்ளத்து உணர்வுகளை உலகில் பலரின்    ஒளியுண்ட இருகண்கள் உரத்துப் பேசும்!   உள்ளத்தின் ஆழத்தில் உறைந்தே உள்ள    உணர்வுகளை அகக்கண்ணோ ஒளித்தே வைக்கும்!  புறக்கண்கள் புன்சிரிப்புச் சிரிக்கும் பலரின்     புகைகின்ற அகக்கண்கள் சினந்தே நோக்கும்!  பிறர்துயரைக் காணுகையில் வருந்தும் பலரின்    பின்புலத்து அகக்கண்கள் பெரிதாய்ச் சிரிக்கும்!           அகந்தெளிந்த சான்றோர்க்கு அகத்தின் கண்ணில்    அறிவொளியும் அன்பொளியும் கலந்தே வீசும்!   அகத்திலவர் கண்போல ஒருகுரல் வாசம்   ஆண்டவனின் குரலாயது அறமே பேசும்!  முகத்தினிலே  உணர்வுகளை மறைப்போர் தம்மை   மூத்தோர்தம் அகக்கண்ணால் அறிந்தே கொள்வார்!     தகைமையொடு அவருக்கும் நன்றே செய்வார்   தம்அன்பின் திறத்தாலே அவரை வெல்வார்!     இருவேறு நிலைதம்மை எண்ணிப் பார்ப்பீர்   எந்தநிலை நல்லநிலை என்றே அறிவீர்!   புறக்கண்ணும் அகக்கண்ணும் ஒன்றாய் நோக்க  புவிவாழ்வில் அமைதியெனும் பூக்கள் மலரும்!   ஒருமைநிலை உள்ளத்துள் உணர்வுகள் ஒன்ற   உள்ளுறையும் அகக்கண்ணில் ஒளிச்சுடர் தோன்றும்!   அறநெறிக்குறள் அகிலத்தை உய்த்தல் போல    அகக்கண்ணின் ஒளியாலும் உலகே உய்யும்!    துரை. தனபாலன்  21.11.2021                         []     இராமசாமி துரைப்பாண்டி, சிந்தனைகள் அந்திமழை பத்திரிகை எந்த வம்பு தும்புக்கும் போகாது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் அசோகன் ரொம்ப நல்லவர்; தங்கமானவர். இருந்தும் இந்த மாதம் டிஜிட்டலில் வெளியாகியுள்ள  அந்திமழை  பத்திரிகையில், ‘ நவீனத் தமிழ் இலக்கியவுலகில் தொன்மக் கதைகள்’ குறித்து ஜாலியாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். Myth என்ற தொன்மங்கள் எப்படியெல்லாம் நிலவுகின்றன என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக நண்பர்கள் விடுபட்ட தொன்மங்களை எழுதுங்கள். அவசியம்.    இன்று தொன்மம் மாறியுள்ளது.  ஆளு கண்ணகி, நெற்றிக்கண்ணுடன் திரியுறான், வாழும் வள்ளுவர், நடமாடும் பல்கலைக்கழகம், ஆள் சரியான சகுனி, கலைஞர் என்று நினைப்பு, ஆள் வடிவேல் மாதிரி, அவளுக்கு ஐஸ்வர்யான்னு நினைப்பு, மன்மதக் குஞ்சு … நவீன வாழ்க்கையில் தொன்மக் கதையாடல் தொடர்கிறது.  தமிழர் வாழ்க்கையில் திரைப்படம் சார்ந்து உருவாகியுள்ள தொன்மங்கள் ஏராளம். யதார்த்த வாழ்க்கை தொன்மங்களால் நிரம்பியுள்ளது. இலக்கியத்தை முன்னிறுத்திப் பல்வேறு தொன்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, ஒருவகையில் புனைவுகள்தான். இலக்கிய உலகில் நிலவுகிற தொன்மங்களை   உண்மை என்று நம்புகிறவர்கள் நிரம்ப இருக்கின்றனர்.  இலக்கியம் பற்றிய பரந்துபட்ட பார்வையில்லாமல் தன்னுடைய ஆளுமையை முக்கியத்துவப்படுத்தவும், குறுகிய வணிக நோக்கங்களுக்காகவும்கூடத்  தொன்மங்கள்  உருவாக்கப்படுகின்றன.        இன்றைய காலகட்டத்தில்  நவீனத் தமிழிலக்கிய உலகில் நிலவுகிற தொன்மக் கதையாடல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.      சிறுபத்திரிகையை முன்வைத்துத் தீவிர இலக்கிய உலகில் பல்வேறு தொன்மங்கள் நிலவுகின்றன. சிறுபத்திரிகை என்ற சொல்கூட ஒருவகையில் தொன்மம்தான். சிறுபத்திரிகையில் பிரசுரமாகிற படைப்புக்கள் எல்லாம் உன்னதமானவை என்ற நம்பிக்கை; மங்கலாகவும் கலங்கலாகவும் எழுதுவதுதான் சிறந்த படைப்பின் அடையாளம்;  சராசரி வாசகர்களுக்குப் புரியாத மொழியில் எழுதப்படுகிற கட்டுரைகள் தனித்துவமானவை.       சிறுபத்திரிகைக்காரன் என்ற தெனாவட்டும், நம்பிக்கையும்; சிறுபத்திரிகை ஆசிரியர் என்ற ஹோதாவில் மாபெரும் சாதனையாளராகத் தன்னைக் கருதுகிற ஆசிரியர். முந்நூறு பிரதிகள் அச்சடிக்கிற பத்திரிகைதான் சிறுபத்திரிகை. இத்தகைய சிறுபத்திரிகையில் படைப்புப் பிரசுரமாகிவிட்டால், இலக்கியச் சிகரத்தை அடைந்து விட்டதாகக் கருதும் மனநிலை.    ஐம்பதுகளில் ’எழுத்து’ பத்திரிகை  தொடங்கி வைத்த இருண்மையான கவிதை மரபை 2020 ஆம் ஆண்டிலும் அப்படியே நகலெடுத்து, அத்தகைய மரபின் தொடர்ச்சிதான் சிறந்த கவிதையின் அடையாளம் என்று நம்புதல். ஒரு குழு சார்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கவிஞர்கள் எழுதுவது மட்டும்தான் நவீன கவிதை என்று பிரகடனப்படுத்துதல்; வேறு யார் கவிதை எழுதினாலும்  கவிதைப் புத்தகத்தை வாசிக்காமல் அவன் எழுதுறது எல்லாம் கவிதையா? என்று திட்டுதல்.                     கவிதை என்பது பார்ப்பனர், பிள்ளைமார் போன்ற உயர்சாதியினர்க்கு மட்டும்தான் சாத்தியம்; பிறப்பினால் தலித்தாக இருக்கிறவர் எப்படி சிறந்த கவிதை எழுத முடியுமென்று வெறுப்புடன் சொல்கிற திமிரான பேச்சு.         ஔவை, ஆண்டாளுக்குப் பின்னர் பெண் கவிஞர்கள் தமிழில் உருவாகவில்லை என்ற ஆண் மேலாதிக்கப் பேச்சு. ஆங்கிலச் சொற்களைக் கலந்து, திருகலான மொழியில் எழுதப்பட்ட  விமர்சனத்தை முக்கியமானதாகக் கருதுதல். அடுத்தடுத்த வாசிப்பில் புரியக்கூடிய கவிதையைப் பற்றி ஒருபோதும் புரியாத மொழியில் விமர்சித்து எழுதப்படுகிற விமர்சனத்தை சிறப்பானதாகக் கருதுதல்.  இலக்கிய விமர்சனம்  என்றால் ஒரு படைப்பை எதிர்மறையாகக் கண்டனத்துடன் திட்டி எழுதுதல் என்ற பார்வை.            ஒரு காலட்டத்தில்  தடம் பதித்த படைப்பாளி இறந்து சில பத்தாண்டுகளுக்குப் பின்னர் அந்தப் படைப்பாளி   வாழும் காலத்தில் பத்திரிகையில் எழுதி, அதை வேண்டாமென்று தொகுப்பில் சேர்க்காமல், கசக்கிப் போட்ட தாளைத் தேடியெடுத்து, தற்சமயம் செம்பதிப்பு என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வருதல். செம்பதிப்புப் பற்றிய பிரேமை.  எழுபதுகள் காலகட்டத்திய படைப்பாளர்கள்தான் சாதனையாளர்கள் என்று 2020 ஆம் ஆண்டிலும் எழுதுதல். இந்த விஷயத்தில் மொழி திரைப்படத்தில்  பேராசிரியராக வரும் பாஸ்கர்  போல் ஒரு காலகட்டத்தில் உறைந்திருக்கிற சிலர் தொடர்ந்து நாளிதழ்களில் எழுதுகிற கட்டுரைகள்.             மார்க்யூஸ், போர்ஹே, முரஹாமி போன்றவர்களின் படைப்புகளை மட்டும் எப்பொழுதும்  உயர்வாகக் கூறுதல்; தமிழில் சிறந்த படைப்பு எதுவுமில்லை என்று கூறுதல். தாஸ்தாயெவ்ஸ்கியின் அகம் சார்ந்த படைப்புகளை மட்டும் உன்னதமானவை, அவருக்கு நிகராக உலகில் யாருமில்லை என்று தொடர்ந்து எழுதுதல். திருக்குறள் உலகப் பொதுமறை என்று கொண்டாடுதல். பாரதிதாசன் இனவாதம் பாடிய கவிஞன் என்ற புறக்கணிப்பு. பாரதிக்கு அடுத்த மகாகவி நான் தான் என்று பெருமையாகச் சொல்லும் கவிஞன். மௌனியின் 24 கதைகளும் அற்புதம்; மௌனி, தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்; மௌனியின் சிறுகதைகளுக்கு ஒப்பீடாகத் தமிழில் யாரையும் சொல்ல முடியாது என்ற பினாத்துதல்.            தி.ஜானகிராமனின் ’மோகமுள்’ நாவலை விமர்சனம் எதுவுமின்றிப் பாராட்டுதல்; வெகுஜனப் பத்திரிகையின் வாசகர்களுக்காக எழுதப்பட்ட மோகமுள் நாவலில்  வரும் யமுனா மீதான காதலுடன் கும்பகோணம் தெருக்களின் அலைந்தது குறித்த பதிவுகள். சுஜாதாவிற்குப் புத்தகங்களை அனுப்பிவிட்டு, அவர் ஏதாவது தன்னைப்பற்றி எழுத மாட்டாரா என்று காத்திருந்துவிட்டு, வெளியில் சுஜாதாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுதல். நகுலனின் ’ராமச்சந்திரனா’ என்ற கவிதையை மட்டும் வாசித்துவிட்டு, பித்து மனநிலையில் அலைதல்.   கோணங்கியின் எழுத்துகளை வாசிக்காமல், அந்தப் பெயரும், அவருடைய பேச்சும் உருவாக்குகிற போதையில் திரிந்து,கோணங்கியின் நண்பன் என்ற பில்டப்.        இலக்கியப் படைப்புகள் மூலம் புரட்சியை உருவாக்கிட முடியுமென்று எழுதுகிற இடதுசாரிப் படைப்பாளரின் நம்பிக்கை. மொழிபெயர்ப்புப் படைப்புகள் எல்லாம் மேன்மையானவை; இலத்தீன் அமெரிக்க இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் காத்திரமானவை; இருபத்து நான்கு மொழிகளில் 64 லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ள நாவல், உலக இலக்கியத்தின் உன்னதமான நாவல்; மொழிபெயர்ப்புப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது, தமிழில் சிறந்த நாவல் எதுவும் இல்லை.    தமிழ்க் கவிதைகள் குறித்துப் புறக்கணிப்பான மனநிலை; மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஒப்பீடு அற்றவை என்ற நம்பிக்கை. எரிட்டேரிய மொழியில் அற்புதமாக ஒரு நாவல்  மட்டும் எழுதியுள்ள பெண் படைப்பாளி போல உலகில் யாரும் இல்லை எனக் கூறுதல். அப்புறம் அந்தப் பெண் படைப்பாளியின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகப் பிரகடனப்படுத்துதல்.             போர்த்துக்கீசிய மொழியில் 23 நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியரின் பதினேழு நாவல்களை வாசித்துவிட்டு, தற்சமயம் பதினெட்டாவது நாவலில் பாதியளவு வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதுதல். மூத்த கவிஞரிடம் அணிந்துரை வாங்கிக் கவிதைப் புத்தகத்தில் சேர்த்தால், இலக்கியத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. சொந்த சாதிப் படைப்பாளிகளுக்கு மட்டும் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவிட்டு, தன்னுடைய கவிதைகளைக் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த காரணத்தினால் புறக்கணிக்கின்றனர் என்று ஒப்பாரி வைக்கிற உயர்சாதிக் கவிஞர்.           சாகித்திய விருது பெறுவதற்காக எல்லாவிதமான லாபிகளும் செய்து, அறிவிப்பு வெளியானவுடன் அந்த விருது தானாகத் தேடி வந்ததாகக் கூட்டங்களில் பேசுகிற விருதாளரின் பேச்சு. கிளாசிக் நாவல் வரிசையில் பிரசுரமாகியுள்ள நாவல்கள் எல்லாம் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை என்று விளம்பரப்படுத்துகிற பதிப்பகம் உருவாக்குகிற புனைவு. குறிப்பிட்ட பதிப்பகம் வெளியிடுகிற படைப்புகள் எல்லாம் முக்கியமானவை என்ற பிரச்சாரம். பதிப்பக விசுவாசிகள் சேர்ந்து நடத்துகிற புத்தக ஆராதனைக் கூட்டம். பதிப்பகம், பதிப்பாளர் பற்றிய பில்டப்.            காலச்சுவடு என்ற பெயர் நவீன இலக்கியப் பத்திரிகையுலகில் தொன்மம். முன்னொரு காலத்தில் கணையாழி பத்திரிகை தொன்மமாக  இருந்தது. இழவு வீட்டில்கூட தனக்கு மாலை விழாதா என்ற நோக்கில், எப்பொழுதும்  ஏதோவொரு பிரச்சினையை முன்வைத்து எழுதி, எல்லோரின் கவனமும் தன் மீது விழுமாறு செய்கிற எழுத்தாளரின் மனோபாவம்.           எவ்விதமான வேலையும் செய்யாமல், அலைந்து திரிந்து, படைக்கிற முழுநேரப் படைப்பாளியிடமிருந்துதான் உன்னதமான படைப்பு வரும்; மற்றபடி ஏதாவது வேலை, அலுவலகப் பணியாற்றுகிற பகுதி நேர எழுத்தாளனிடமிருந்து சிறந்த படைப்பு வராது.       டாஸ்மாக்கில் விற்கப்படும் மட்டமான மதுவை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு, எரிச்சலுடன் கண்டமேனிக்குப் பேசி, அலப்பறை பண்ணி, உளறுகிற படைப்பாளியைக் கலகக்காரனாக அவதானித்தல். எல்லாம் தொன்மங்களாக மாறுகிற இன்றையச் சூழலில் எனது கட்டுரையும் தொன்மக் கதையாடலாகி விட்டது. விடாது தொன்மம்.    திரு ராமசாமி துரைபாண்டி  Facebook - 04.07.2020         []     இராமசாமி துரைப்பாண்டி, இறப்பது இயல்பானது, கட்டுரை என் அருமை நண்பன் பிரபஞ்சன் அழகாக மறைந்தான்... அவனுடன் நான் நிறைய பொழுதுகளை கழித்திருக்கிறேன்..    குற்ற உணர்வு எவ்வளவு சிக்கல் மிகுந்தது என்பதை நாங்கள் சென்னையில் பேசி(?)க் கொண்டே பேசியிருந்தோம்.. அவனின் பச்சைமாமி மெஸ் கதையாடல்  குறித்த எங்கள் பேச்சு எம்மிருவருக்கும் மறக்க இயலாதது..  எந்தச் சங்கடம் இன்றி குடிப்பது, புகைப்பது, அதீதக் காதலில் பொது வெளி குறித்த பயம் ஏதுமற்று காதலை இயற்கை வழியாக இயல்பாக வெளிப்படுத்தல் என என் நிறைய இயல்புகளுக்கு அவனும் முக்கிய காரணம்....  உனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள சிக்கல் தீராமல் போயின...  அதனால் என்ன...  புற்று வைத்த பகுதிகளின் மீதான கீமோ தெரபி கடும் சிக்கல் கொடுக்கும்..  அதனால் என்ன...  இறப்பின் வலியை எறும்புகள் மேனி முழுதும் ஊர்ந்திடும் சிக்கலை உணர்ந்திருப்பாய்...  அதனால் என்ன....  உன்னை தமிழ் நினைவில் வைக்கும் என்றும்....  இறப்பு இயல்பானது.. அழகானது...  பின்பு எப்போதாவது பேசுவோம்...    திரு ராமசாமி துரைபாண்டி  Facebook - 22.12.2018             []         []       Lateral Thinking by Tamils       LTM1 - கவிதை (1)    எருதுகள் க(ழு)தைகள் ஆன கதை    வள்ளுவன் கூட  எங்கள் கூட்டணியோடுதான்  குறளும் சொன்னார் வெற்றிகண்டார்...!    வைக்கோலும் புல்லும் தந்தீர்கள்   உரமும் உழைப்பும் தந்தோம்..!    பசியில்வாடும் பிள்ளைக்கும்  படுக்கை நோயாளிக்ககும்  உயர்தர/ உயிர்தர உணவளித்தோம்..!    எமையேனோ   வேண்டாக் கனியாக்கி விட்டார் வெறுத்து   ஒதுக்கிவிட்டார்....!    வேடிக்கை   மனிதர் கூட்டம்  விபரீதம் செய்துவிட  வேதனையாச்சு   எங்க மனம்.....!    கரக்கும்வரை கரந்துவிட்டு கறிக்கடைக்கு   நாங்க இப்போ..!    இயற்கையோடு இருந்த எம்மை  இயற்கை எய்த  இரக்கமின்றி வண்டிகளில்  ஏற்றுகின்றீர்..!    உங்களின் கனவெல்லாம் உயிரற்ற பணந்தானே  உயிர்தந்த நாங்களெல்லாம்   உடைஞ்ச பானையானோம்..!      மனமில்லா மாந்தர்களை பொறுத்தருள மனமில்லை என்றாலும் மனம்பொங்கிய அழுகின்றோம்  உங்களின் எதிர்கால  வாழ்வை எண்ணி..!    சீமைமாடு வந்ததால  நாங்கசீரழிஞ்சு போறோமே..  சீக்காளியாகி நீங்களெல்லாம் ஒருநாளில் சாவத்தான் போறீங்க..!  அப்பவும் சாணவராட்டி  பாலுவேணும் ஞாபகமிருக்கட்டும்..  சக்களத்தி (செர்சி) வந்தபின்பு எங்களின்  சரித்திரமே மாறிப்போச்சு..    அழகான பெண்ணைக்  காணில் அசந்ததுநிற்கும் ஆளைப்போல,  அவளின் ஒய்யார  அழகிற்கு ஒய்யாரக்கொட்டகையாம்,     எங்களுக்கு எப்பவுமே இளந்தமர நிழல் தானே..!    எமலோகப்பதவியெல்லாம் எல்லாருக்கும் ஒன்றில்லை..  பாவிகள் என்றே  ஆகிவிட்டீர்..!    கட்டத்தொட்டிச் சத்தம் காதில்  கேட்கிறது..  என்றாலும்   எங்கமனம் உங்களைத்தான் நினைக்கிறது...!    இயற்கையோடு இருந்தகூட்டத்தை  இயற்கை எய்தவழிவகை  செய்திட்டீர்...!    நாட்டுப்புறங்களில் நாட்டங்கொண்டால் நானிலமே  நன்மையில் ஓங்கும்..  இல்லையெனில் மாந்தர் கூட்டம்  மண்ணின் மடியில் உறங்குவார்கள்..!    பாலே நஞ்சாகும்  சங்கடத்தை மாற்றுங்கள்  மாற்றினப் பசுவை  எல்லாம் மண்ணில் புதையுங்கள்..!    மண்ணின் மைந்தர்களே இனியும் உறக்கம்  வேண்டாம்..!    இரைதந்த நாங்களே  உங்களுக்கு இரையாகிப் போகலாமா..?    மண்டைக்குள் மூளையிருப்பது உண்மையெனில் உணர்வு பெற்றுழையுங்கள்.!    உன்னத வாழ்வு  உங்களின் சந்ததிகளுக்கேனும் வாய்க்கட்டும்..!    வாய் மூடியிருந்தால்  மண்மூடிப் போவீர்கள்..!    மானுடம் மேம்பட  மண்பயனுற வாழ்வோம்..  வாருங்கள்..!    கழுதை கட்டெறும்பு  ஆனகதை பழசு..  இது எருதுகள்  கழுதைகளான கதைபுதிது‌...!    கண்ணீர் சிந்தாமல்  கருத்தோடு சிந்திப்பீர்....!     உயிர்நீராம் பால்தரும் நாட்டுப் பசுக்களைக்  காப்போம்..!    தமிழர்கள் அடையாளங்களில்  நாங்கள் முதன்மை என்பதை மறவாதீர்..!    கவிஞர் வாரூர்ச்செல்வன்  சென்னை அரும்பாக்கம்  இந்தியா.  . LTM1 - கவிதை (2)    துன்பச்சிக்கலுக்குள் துயரத்தின் வளமைகள்  எழும்புக்கூடாய் ஏணிவைத்து ஏறியதோ!    இனவெறிப் புயலில்  கருப்பும் வெளுப்பும்  களம் கண்டதால்  இ(ன)டம் மாறின  இனவெறிக்கழுதைகள் ஒன்றாய் ....!!!!...????    சாதி(தீ)ய பாகுபாட்டில்  சல்லாப உணர்வுகள்  சவுக்கடி பட்ட சாட்சியின்  சரித்திர குறியீடுகள்    துணியும் இல்லா  தோலும் இல்லா  அரை நிர்வாணம்    இவைகள்   அதிசியமுமல்ல ஆச்சரியமுமல்ல   பாவாக்கம் கவிஞர் பறம்புநடராசன்  காரைக்குடி  .   LTM1 - கவிதை (3)  உழைத்து ஓடாகிப் போன உயரினங்கள்  பிறவிக்குறையோ  பெரும்பிணி நோயோ...  உழுது ஒடிங்கியதோ  உழாது முடங்கியதோ...  பசிப்பிணி கொடுமையோ...   பாராதுபோன வறுமையோ...  கருப்பு வெள்ளை கலப்பிணமோ...  கண்கள் மிரளும் காட்சிப் பிழையோ...  கன்றை ஈன்ற குறையோ...  கவிதைக்கான கருவானதோ...  கண்கள் கலங்கி நிற்கிதோ...  கண்கள் கலங்க வைக்குதோ...  கஞ்சிக்காக ஏங்குதோ... கருவறையின் குற்றமோ...  கண்ணுறங்கிய நேரமோ...  கடவுள் படைப்பின் ஊனமோ...  செல்வராணி ரத்தினகுமார்    . LTM1 - கவிதை (4)  நாகப்பட்டினம் ஒட்டிப் பிறந்தோம் ஒடுங்கி நின்றோம்- யாம்  ஈருயிரா ஓருயிரா அறியாது வியந்தோம்!  ஓர் உடலில் இரு தலையாம்- இது   அறிவியல் உலகின் சிக்கல் கலையாம்!   - ஆ.ஆனந்தவேல்.  . LTM1 - கருத்துரை (1)  இங்கே மெலிந்து காணும் காளைகளை காணும்பொழுது மனம் வெதும்புகிறது;  தமிழ் மரபு நலிந்து விடுமோ என்று எண்ணும் பொழுது மனம் பதைபதைக்கிறது...  . LTM1 - கருத்துரை (2)  தமிழனின் வீர விளையாட்டாம்- ஜல்லிக்கட்டு; தமிழனின் பாரம்பரியத்தை உலகுக்குச் சொல்லும் உயிர் மூச்சாம்;  . LTM1 - கருத்துரை (3)  நலிந்த காளைகளுக்கும், அதற்கு நன்மை செய்யத் துடிக்கும் காளையர்களுக்கும் உதவிடுவோம்; ஊட்டம் கொடுக்க  நல்ல சூழ்நிலையை உருவாக்கிடுவோம்....  . LTM1 - கருத்துரை (4)  வறுமையிலும் ஒற்றுமை - MM Ashraf Ali (M)  . LTM1 - கருத்துரை (5)  பச்சையத்தை இழந்த உலகு (F)  . LTM1 - கருத்துரை (6)  பொதி சுமக்கப் பிறந்தவர்கள் நாங்கள் என்று வாயில்லா ஜீவன்கள் - Manimekalai (F)  . LTM1 - கருத்துரை (7)  எல்லாமே கருந்துளைக்குள்  . LTM1 - கருத்துரை (8)  என்ன ஆனாலும் சரி   நாம் பிரியாமல் இற(இரு)ப்போம் - Dr Semmal                            .           []   கோவை ஞானியுடன் ஒரு பேட்டி, கட்டுரை கோவை ஞானி நேர்காணல்கள்  தொகுப்பிலிருந்து        ஞானியுடன் ஒரு பேட்டி....   'ஞானி' தன்னை என்றும் ஒரு இலக்கிய மாணவன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறார். கோவையைச் சேர்ந்த இவருக்கு இலக்கியம், தத்துவம், அரசியல் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்வதில் ஆர்வம் அதிகம். கோவையிலிருந்து முன்பு வெளி வந்த 'புதிய தலைமுறை' யோடும், தற்போது வெளி வரும் 'பரிமாணம்' என்ற இதழோடும் தொடர்புடையவர் இவர். தன்னுடைய விமர்சனங்கள் சில சமயங்களில் பிறரைப் புண்படுத்துவதாக இருந்த போதிலும் அதைத் தேவை என்று கருதுபவர், பிறர், இவரைப் பற்றிச செய்யும் விமர்சனங்களிலுள்ள உண்மையைப் புரிந்து கொள்ள இவர் விரும்புகிறார். கடந்த, பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, "இலக்கிய மாணாக்கராக" இருக்கும் இவர், பத்திரிக்கைகென்று பேட்டி கொடுக்கச் சம்மதித்தது இதுவே முதல் முறையாகும்.   கோவை வட்டத்தில் நெடுங்காலமாக இலக்கியத் துறையில் பல மன்றங்கள் செயல்பட்டிருக்கின்றன. சில பத்திரிகைகளும் வெளி வந்திருக்கின்றன. இவற்றில் உங்கள் பங்கு என்ன ?   கடந்த 25 ஆண்டுகளுக்குள் கோவையில் பலவகையான இலக்கியக் கழகங்கள் தோன்றி வளர்ந்து, மீண்டும் தோன்றி வளர்ந்து வந்திருக்கின்றன. சமய இலக்கியம் சம்பந்தமான முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இலக்கியத்தைப் பொருத்தவரை கோவை இலக்கியப் பேரவை, இலக்கிய நண்பர்கள் சங்கம், தேன் கூடு, சிந்தனைமன்றம், சிந்தனையாளர் மன்றம், வானம்பாடி இயக்கம், இலக்கிய ஆய்வரங்கம், கொங்கு இலக்கியப் பேரவை முதலியவை இங்கு தோன்றி வளர்ந்த மன்றங்கள். தமிழை பயிற்று மொழி ஆக்குவதன் தேவை பற்றி கோவையில் நடந்த விவாதங்களும் முயற்சிகளும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை தமிழ்க் கவிதையில் சமூக கண்ணோட்டத்தைப் புதுக்கவிதை வடிவத்துக்குள் கொண்டு வர முயன்றது வானம்பாடி இயக்கம். இந்த இயக்கத்தில் குறிப்படத் தக்கவர். புவியரசு, இளமுருகு , சிற்பி, தேனரசன், சக்திக்கனல், சிதம்பரநாதன் முதலியவர்கள். இவர்கள் கவிதைச் சாதனை ஆராய்ச்சிக்குரியது. இந்த இயக்கத்தின் விமர்சகர்களாக நானும், ஜன. சுந்தரமும், ஜன ஒளியும் இருந்தோம்.   பின்னர், இவ்வியக்கம், சிலரது தன்னிச்சையான போக்கினாலும் இயக்கமாக்கும்போது சிலர் தனது தலைமையைப் பறி கொடுக்க வேண்டும் என்பதனாலும், கவிதைகளை மேலும் தத்துவச் செறிவோடு கொண்டு செல்வதில் பயிற்சி பெறாததினாலும், கவிதை தங்களுக்குத் தந்த பெருமை, ஆணவமாகச் சிலரிடம் மாறியதனாலும் இயக்கம் சீர்குலைந்தது. இன்று, ''வானம்பாடி"  ஒரு கவிதை இதழ் என்ற அளவில் மட்டும் வெளி வருகிறது.   கோவையில் இலக்கிய வளத்தைப் பரப்பியவர்கள் என்ற வகையில் பேராசிரியர் மா. ரா, பேரா.குருசாமி, கு.வெ, கிருஷ்ணசாமி ஆசான், புவியரசு, சிற்பி முதலியவர்களைக் குறிப்பிடலாம்.  கோவையிலிருந்து வெளி வந்த இலக்கிய இதழ்களில் குறிப்பிடத் தகுந்தவை 'புதிய தலைமுறை', 'தேனீ' ஆகியவை.   இலக்கியத்தில் முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம் இது பற்றி உங்கள் கருத்து என்ன?   அழுத்தமான தன்மையுடையது முற்போக்கு இலக்கியம். சமூகத்தில் பல்வேறு வகையான, பல்வேறு தரப் பட்ட வாழ்க்கை நிலைகள் உள்ளன. இவை எல்லாக் காலத்தும் பல்வகைப் பிரச்சினைகளோடு இருக்கின்றன. இப்போது இப்பிரச்சினைகள் சிக்கல்கள் கடுமையாயிருக்கின்றன, இவற்றிற்கான காரணங்களும் ஆழப்பட்டுள்ளன, அகலப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளை இலக்கியம் வெளியிடுகிறது. இதைச் சரியாக வெளியிட்டால் அதுவே பிரச்சினையினுடைய தீர்வுக்கான எண்ணங்களையும். விருப்பங்களையும் முயற்சிகளையும் தூண்டும், இத்தன்மையுடைய இலக்கியம் முற்போக்கு இலக்கியம், உண்மைகளைப் பற்றி அக்கரை கொள்ளாமல், வெறும் வணிக நோக்கோடு, வெற்றுக் கற்பனை அழகுகளோடு, தானும் ஒரு எழுத்தாளனாக இருக்க வேண்டுமென்ற பெருமையோர் செய்யக்கூடியவை பிற்போக்கு இலக்கியம்.   இதுவரை தாங்கள் படைத்துள்ள இலக்கியப் படைப்புக்கள் எவை?   முன்பு, சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். எப்பொழுதுமே தத்துவ நோக்கிலான விமர்சனத்தில்தான் எனக்கு அதிகமான ஆர்வம். இம்முறையில் சில கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியிருக்கிறேன். எனது கவிதைகளில் சிறந்தது என்று, 'கல்லிகை'யை நான் குறிப்பிட்டுக் கொள்ளலாம். "இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்", "மேட்டில் ஒரு அழகிய வீடு"- இவற்றில் முதல் நூல் இந்தியாவுக்கேற்ற மார்க்சியத்தைப் பற்றிய ஒரு முன்னுரை. அடுத்த நூல், ஜெ கிருஷ்ணமூர்த்தி யைப் பற்றிய ஒரு விமர்சன நூல்.   தமிழ் எழுத்தாளர்களில் நீங்கள் விரும்பக் கூடியவர் யாவர்?   நாவலாசிரியர்களில் கன.சுப்பிரமணியம்,  தி.ஜானகிராமன், லா.சா.ராமாமிர்தம், சுந்தரராமசாமி, எம்.வி.வெங்கட்ராம், கிருத்திகா, இந்திராபார்த்தசாரதி, ஜெயகாந்தன், சிறுகதை ஆசிரியர்களில் இன்றுள்ளவர்களில்  வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி, பா.ஜெயபிரகாசம் கவிஞர்களில் தர்முசிவராம், பசுவய்யா, ஞானக்கூத்தன், அப்துல்ரகுமான், புவியரசு.   வட்டார இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன?   வட்டார இலக்கியத்தில், குறிப்பிட்ட வட்டாரத்தின் மொழியை சிறப்பாகக் கையாள்வதும் குறிப்பிட்ட வட்டாரத்தின் சமூக பழக்க வழக்கங்களை எடுத்துச் சொல்வதும் இன்று முதன்மையாகி இருக்கின்றன.  'கரிசல்' இலக்கியம் என்பதை கி. ராஜநாராயணன், முதலியவர்கள் சிறப்பாக தமிழில் நிலை நிறுத்தியுள்ளனர். மொழி நடையிலுள்ள சில தனிக் கூறுகள்,  பிற வட்டாரத்தைச் சார்ந்தவர்களுக்குப் புரியாமலிருந்த போதிலும் ஒரு இலக்கியத்தைப் பற்றிய சரியான அறிவைப் பெறுவதற்கு இந்தச் சிரமத்தை வாசகர் மேற்கொள்வது தேவையாக இருக்க முடியும். வட்டார இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களாக புதுமைப்பித்தன், சண்முகசுந்தரம், நீல. பத்மநாபன், பொன்னீலன், கி. ராஜநாராயணன், பா. ஜெயப்பிரகாசம், பூமணி, தி. ஜானகிராமன் முதலியவர்களைக் குறிப்பிடலாம். மொழி நடையையும் சமூகப் பழக்க வழக்கங்களையும் பற்றிய அறிவைத் தொகுப்பதும் அவற்றைத் தம் படைப்புக்களில் பயன் படுத்துவதுமே, கவர்ச்சியான அம்சங்களாக இருப்பதனால் எழுத்தாளர்கள், இதற்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் தான் வட்டார இலக்கியம் குறுகிய எல்லைக்குள் செயல்படுவதாக விமர்சனம் எழுகின்றது. ஆனால் இவற்றோடு அந்தக் குறிப்பிட்ட வட்டாரத்தின் வரலாற்று ரீதியான பொருளியல் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதுவது வட்டார இலக்கியத்தின் கனத்தை அதிகப்படுத்தும்.  சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தின் பங்கு என்ன?  இலக்கியம் சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையில் மேன்மையான உறவுகளை வற்புறுத்துகிறது. இந்த உறவுகள் நெடுங்காலமாக சில குறுகிய சூழல்களில், சில மனிதர்கள் தமக்கிடையில் மட்டும் கொண்டிருக்கிற உறவுகள், -  இந்த மேன்மையான உறவுகள் சமூகம் முழுவதும் பரவலாக வேண்டும் இந்த உறவுகளுக்குத் தடையாக இருப்பது இன்றைய சமூக முறை, இன்றைய சமூகத்திலுள்ள வர்க்க வேறுபாடுகள், சுரண்டல் முறை, அரசு முறை, உடைமை முறை, இவை சார்ந்த ஆதிக்க முறை ஆகியவை. இவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை ஒழிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பில் உள்ளவை உழைக்கும் வர்க்கம் சார்ந்த அமைப்புக்கள், இந்த அமைப்புக்களில் ஒரு பகுதியாக இருப்பது இலக்கியம்.  இலக்கியம், மனிதர்களுக்கிடையிலான மேன்மையான உறவுகளை என்றும் நினைவுறுத்திக் கொண்டே மனிதர்களின் போராட்டத்திற்கு ஊக்கம் தருகிறது. இம்முறையில் இலக்கியம் என்றைக்குமே மனித உறவுகளில் ஏற்படும் இறுக்கத்திற்கும் சீர்குலைவுகளுக்கும் எதிராக இருக்கும். சோஷலிச காலத்திலும் இலக்கியம் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யும். இலக்கியம் என்றைக்கும் கட்சிக்கோ அரசியல்வாதிகளுக்கோ காவடி எடுக்கக் கூடாது என்பது முக்கியம். நான் முன்பு குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேன்மையான மனித உறவுகளில் அக்கறையோடு எழுதுபவர்கள்.  தமிழ்நாட்டில் சிறு பத்திரிகைகள் நிறைய வெளிவருகின்றன. அவை பற்றி உங்கள் கருத்து என்ன ?  தமிழகத்தில் இன்று கலை இலக்கியம் கலாச்சாரம் ஆகிய துறைகளில் செயல்படும் ஒரு புதிய சக்தி தோன்றியிருக்கிறது. சிறு பத்திரிகைகள் பல இதற்கு வெளியீடாகின்றன. படிகள், இலக்கிய வெளி வட்டம், பரிமாணம், மானுடம், கொள்ளிப்பாவை, யாத்ரா, பனிமலர் ஆகிய பத்திரிகைகள் இவ் வகையைச் சார்ந்தவை. இவை வணிக சக்தியை ஆளும் வர்க்கத்தைச் சாராதவை ஒரு புதிய கலாச்சார மறுமலர்ச்சிக்காக நிற்பவை.  எழுத்தாளர்களுக்குச் சங்கம் தேவையா?  தேவைதான். இதற்கு முதன்மையான காரணம், இந்தச் சமூகத்தினுடைய பிரச்சினைகளைப் பற்றி உண்மையான அக்கரையோடு விரிவாக விவாதித்துக் கொள்ளவும் பழைய இலக்கியங்களையும் தற்கால இலக்கியப் போக்குகளையும் விரிவான முறையில் விமர்சனம் செய்து உண்மைகளைத் தொகுத்துக் கொள்வதற்காகவும் எழுத்தாளர்களுக்கு அரசு தரப்பிலிருந்தும் பதிப்பகத்தார், வெளியீட்டாளர் தரப்பிலிருந்தும் வரும் பிரச்சினைகளை சந்திப்பதற்காகவும் தேவைப்படும் போது இச்சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய தீர்வுக்கு உதவியாக இருப்பதற்காகவும் சங்கம் தேவைதான்.  இதுபோன்ற ஏதாவது ஒரு சங்கத்தில் நீங்கள் உறுப்பினரா?  இல்லை. மேற்சொன்ன முறையில் சங்கங்கள் அமையவில்லை. அதனால் இப்பொழுதிருக்கும் சில சங்கங்களில் நான் உறுப்பினராக இல்லை.  இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?  எழுத்துத்துறைக்கு வரக்கூடிய புதிய எழுத்தாளர்கள், புதுமைப்பித்தனைக்கூட சரிவரப் படிப்பதில்லை. இவர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் கனமாக இல்லை. வாழ்க்கையை சமூக அளவில் வரலாற்று அளவில் வைத்து இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நிறையப் படிக்க வேண்டும். அதை இவர்கள் செய்வதில்லை. தமது கற்பனையையும் தாங்கள் பார்க்கும் சில மனிதர்களின் வாழ்க்கையையும் கைமுதலாக வைத்துக்கொண்டு இலக்கியம் படைக்கக் தொடங்கி விடுகிறார்கள். வணிக சக்திகளுக்கும் சந்தர்ப்பவாத சக்திகளுக்கும் இவர்கள் எளிதாக இறையாகிவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமிருக்கின்றன. சிறந்த இலக்கியம் இத்தகையவர்களிமிருந்து தோன்ற முடியாது. வாழ்க்கையையே தனக்குப் பிரச்சினையாக்கிக் கொண்டவர்கள் தான் சிறந்த இலக்கியம் படைக்க முடியும்,  கடைசியாக ஒரு கேள்வி. தற்கால அரசியல் பற்றிய தங்கள் கருத்து என்ன?  இந்தியாவில் பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் கடுமையாகி வருகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறையைப் பெருங்கட்சிகளெதுவும் கொண்டிருக்க வில்லை. மாறாக இக் கட்சிகள் சமூகத்திற்கு தொடர்ந்து பாரமாகி வருகின்றன. ஆதிக்க சக்திகளோடு இவை நெருங்கியிருப்பது இன்று வெளிப்படையாகி வருகிறது. இந்த ஆதிக்க சக்திகளை அடியோடு தகர்ப்பது இன்று சமூகத்தின் கடமை. இதற்கு ஈடு கொடுக்கும் அரசியல் சக்திகளே இன்று தேவை. (பேட்டி : கலாஜெயம் (1/05/1980 கோவையில் இருந்து வெளிவந்த முகங்கள் இதழ்)  இந்த கட்டுரையை (02.12.2021) பெருநூல் திட்டத்திற்கு வழங்கிய திண்டுக்கல் ராமசாமி துரைபாண்டி அய்யாவுக்கு  நன்றி.    []   கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள் அன்புத் தோழி ஸியாதா,  உன்னிடமிருந்து பதிலோ கடிதமோ இல்லாமல் கழிந்து போன பல மாதங்களில் பலவற்றைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். என்றாலும் நீ மோசமானவளாயிருக்கலாம் என்ற எண்ணம் மட்டும் எனக்குத் தோன்றியதேயில்லை. நீயோ உன் ஆத்மாவுக்குள்ளும் மோசங்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொண்டிருக்கிறாய்.   நீ சொல்வதை நான் நம்புவதுதான் சரி. உன் ஒவ்வொரு வார்த்தையிலும் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது. நான் மோசமானவள் என்று  சொல்வதில் பெருமிதம் கொள்கிறாய். அந்தப் பெருமிதமும் நியாயமானதுதான். தன் ஆற்றலிலும் தாக்கத்திலும் நல்லதுக்குச் சரியான சவாலிடுவது மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.   என்றாலும் உன்னிடம் சொல்லித்தானாக வேண்டும். எவ்வளவுக்கு மோசமானவளாக நீ மாறினாலும் என்னளவில் பாதியாவது மோசமானவளாக நீ இருக்க முடியாது. நரகத்தின் இருட்டுக் குகைகளில் பதுங்கி நிற்கும் பேய்களைப் போல மோசமானவன் நான். இல்லை, இல்லை.. நரகத்தின் வாசலில் காவலிருக்கும் கறுப்புப் பேய் அளவுக்கு மோசமானவன். நீ நம்புவாய் என்பது எனக்குத் தெரியும்.   ஆனால் மோசமானவன் என்ற குற்றச்சாட்டை எனக்கு எதிராகத் திருப்பிய ஆயுதமாக நீ கையில் ஏந்தியது ஏனென்பது எனக்கு விளங்கியபாடில்லை. தயவு செய்து விளக்கம் தருவாயா?   எனக்கு நீ கருணை கூர்ந்து எழுதிய ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் எழுதியிருக்கிறேன். என் காதுகளில் நீ கிசுகிசுத்த ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் ஆராய்வதில் முனைப்பாக இருந்திருக்கிறேன். வேறு ஏதாவது செய்திருக்க வேண்டுமா என்ன?   ஏன் இப்படிக் கேட்கிறேனென்கிறாயா? ஒரு பாவத்தை உன் மேல் ஏற்றிச் சொல்லி என்னைத் தண்டிக்க உனக்குச் சக்தி இருக்கிறதென்று காட்ட நினைத்தாய் போலும். முயற்சியில் வென்றுவிட்டாய். இந்தியக் காளியின் வேல் மற்றும் கிரேக்க டயானாவின் பாணம் இரண்டும் ஒருங்கிணைந்த உன் வார்த்தைகளை நம்பத்தான் செய்கிறேன்.  இனி என்ன? நான் மோசமானவன் என்பதை நீ புரிந்து கொண்டாய். நீ மோசமானவள் என்பதை நான் புரிந்து கொண்டேன். இருவருமே தண்டனைக்குரியவர்கள்தான் எனும்போது இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கிப் பின் தடைப்பட்டுப் போன நமது தொடர்பு தொடரட்டுமே.  எப்படியிருக்கிறாய்? லெபனானில் சொல்வதைப் போல உன் சுறுசுறுப்பை அனுபவித்துக் கொண்டு நன்றாக இருக்கிறாயா? போன வருடத்துக்கு கோடை காலத்தில் போலக் கையை உடைத்துக் கொண்டாயோ? அல்லது உன் தாய் குதிரை சவாரி செய்யக் கூடாது என்று உன்னைத் தடுத்து விட்டாரோ? முழுக்கைகள் இரண்டோடு எகிப்துக்கு வரவேண்டும் என்ற தாயின் கவலைதானே உன்னைத் தடுத்திருக்க முடியும்.   குடிகாரனின் பிதற்றல் போக்கில்தான் என் ஆரோக்கியம் இருக்கிறது. மலை உச்சிக்கும் கடற்கரைக்குமிடையேயான இடையாட்டத்தில் கோடையையும் இலையுதிர்காலத்தையும் கழித்தேன். நியூயார்க் திரும்பியபோது இளைத்து வெளுத்துப் போய் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறேன்.   கனவுகளோடான என் போராட்டமும் தொடர்கிறது. எந்தக் கனவுகளா? மலை உச்சிக்கு என்னை உயரத் தூக்கிப் பள்ளத்தாக்கின் ஆழத்துக்குள் வீசியடிக்கும் அந்த விநோதக் கனவுகள்தான்.  அரேபிய உலகில் வெளிவரும் பத்திரிகைகளில் மிகச் சிறந்த அல்•பூனான் உன்னுடைய அங்கீகரிப்பைப் பெறுகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதன் உரிமையாளர் இனிய இயல்புடைய இளைஞர். எண்ணங்களில் தெளிவு. அழகான எழுத்து. அலீப் என்ற புனைப் பெயரில் எழுதிய சொந்தக் கவிதைகள். இந்த இளைஞரின் சிறப்பு என்னவென்றால் ஐரோப்பியர் படித்தது அத்தனையும் படித்திருப்பதோடு படித்ததைச் சீரணித்தும் வைத்திருப்பதுதான்.   நமது நண்பர் அமீன் ரிஹானியைப் பற்றிக் கேட்கிறாயா? அல்•பூன் பத்திரிகையில் புதியதொரு நீண்ட நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார். ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களையும் படித்துக் காட்டினார். அழகாக வந்திருக்கின்றன. உன் சார்பில் ஒரு கட்டுரையை அல்•பூனுக்கு எழுதுவதாகச் சொல்லியிருக்கிறேன். மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அதன் உரிமையாளர்.  வாத்தியம் எதுவும் எனக்கு வாசிக்கத் தெரியாதென்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும். வாழ்வை நேசிக்குமளவுக்கு இசையையும் நேசிக்கிறேன். இசையின் தத்துவங்களையும் அமைப்பையும் பற்றித் தெரிந்து கொள்வதுடன் இசை வரலாற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்று அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. உயிரோடு இருக்க முடியுமானால் அரேபிய பெர்ஸியப் பாடல்களைப் பற்றி நீண்டதொரு கட்டுரை எழுத வேண்டும்.   மேற்கத்திய கிழக்கத்திய இசை இரண்டிலுமே எனக்கு ஆர்வம் அதிகம். வாரத்துக்கு ஓரிரண்டு கச்சேரிகளுக்குப் போகாமல் இருப்பதில்லை. அதிலும் மேற்கத்திய இசையில் ஸிம்பனி, ஸொனாடா, காண்டாடாவில் எனக்கு விருப்பம் அதிகம். என் இயல்புக்கு ஏற்றதும் என் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவானதுமான கலையெளிமை ஆபராக்களில் இல்லையென்றுதான் எனக்குப்படுகிறது.  உனக்கு மிகவும் பிடித்தமான ஒளத் மேல் எனக்குப் பெரும் பொறாமைதான். உன் ஒளத்தின் நரம்புகளை மீட்டி நீ நஹாவாந்த் இசைக்கும்போது என் பெயரையும் நயமான என் வார்த்தைகளையும் பாடுவாயா கண்ணே? அந்தப் பாடல்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. முகம்மது நபிகளைப் பற்றிக் கார்லைல் சொன்ன கருத்துகளின் இனிமை அதில் இருக்கிறது.  ஸ்பிங்ஸின் கம்பீரத்துக்கு முன்னால் நிற்கும்போது தயவு கூர்ந்து என்னை நினைத்துக் கொள்வாயா? எகிப்துக்குப் போயிருந்த போது ஒவ்வொரு வாரமும் இருமுறை அங்கே போய்க் கொண்டிருந்தேன். பொன் மணலில் உட்கார்ந்து பிரமிட் மேலும் ஸ்பிங்ஸ் மேலும் நிலைத்த பார்வையோடு பல மணி நேரம் உட்கார்ந்திருப்பேன்.   பதினெட்டே வயதான இளைஞன் நான் அப்போது. கலையின் பிரம்மாண்ட வெளிப்பாடுகளுக்குமுன் புயலுக்கு முன் நடுங்கும் நாணலைப் போல என் ஆத்மா அப்போது நடுங்கியதுண்டு. என்னைப் பார்த்துப் புன்னகைத்த ஸ்பிங்ஸ் என் உள்ளத்தை இனியதொரு துயரத்தாலும் மகிழ்வின் வலியாலும் நிறைத்தது.  டாக்டர் ஷ¤மாய்யல் கீழ்த்திசையில் புதியதொரு மறுமலர்ச்சியைக் கொண்டு வர முடிந்த சிலரில் ஒருவர். லெபனான் தந்த சொத்து. உன்னைப் போலவே எனக்கும் அவர் மீது பெரும் மரியாதை உண்டு. எகிப்திலும் சிரியாவிலும் ஸூபிக்கள் விட்டுச் சென்ற தாக்கங்களுக்கு எதிரிடையான போக்கை நடத்திச் செல்ல டாக்டர் ஷுமாய்யல் போன்றோர் கீழ்த்திசை நாடுகளின் இன்றியமையாத் தேவை எனத்தான் நம்புகிறேன்.  கைரல்லா எஃபெண்டி - கைரல்லா என்ற பிரெஞ்சுப் புத்தகத்தைப் படித்தாயா? நான் இன்னும் பார்க்கவில்லை. என்றாலும் அதில் ஓர் அத்தியாயம் உன்னைப் பற்றி இருக்கிறதென்று நண்பரொருவர் சொன்னார். இன்னொரு அத்தியாயம் என்னைப் பற்றியதாம். எனவே உன்னிடம் இரண்டு பிரதிகள் இருந்தால் எனக்கு ஒன்றை அனுப்பி வை. கடவுள் இதற்காக உனக்குப் பரிசளிப்பார்.   நடுச்சாமமாகிவிட்டது. நல்லிரவு. எனக்காக உன்னைக் கடவுள் பாதுகாக்கட்டும்.    அன்புள்ள ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்        []   இராமசாமி துரைப்பாண்டி, ஆபிரகாம் பண்டிதர், கட்டுரை   ஜமீன்தாரர்களுக்கும் அடிவருடிகளுக்கும் மட்டுமே ஆங்கிலேயர்களால் இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ராவ்சாகேப் போன்ற பட்டம் ஒரு தமிழ்நாட்டு விவசாயிக்கு வேளாண்மை கண்டுபிடிப்புகளுக்காகக் கொடுக்கப்பட்டது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் அதிகச் சுவை கொண்ட ராஜகரும்பு எனும் புதிய கரும்பு வகையை உருவாக்கியதாலும் இயற்கை முறையில் விவசாயத்தில் அதிக உற்பத்தியைத் தரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ததாலும் ஆங்கிலேய அரசு அந்தத் தஞ்சை விவசாயிக்கு ராவ்சாகேப் என்ற உயரிய பட்டத்தை வழங்கியது.     அவர் பெயர் ஆபிரகாம் பண்டிதர். நூறு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு துறைகளில் மேதையாக இருந்தார், பல்வேறு சாதனைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஒவ்வொரு துறையிலும் நிகழ்த்தினார் அதன் வழியாக தமிழுக்கும் தமிழருக்கும் பெருமிதத்தை அந்தக் காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுமையிலும் ஏற்படுத்தினார். அவர் யார் என்று யாரேனும் கேட்டால் உடனே கண்ணை மூடிக் கொண்டு பதில் சொல்லுங்கள் தஞ்சையைச் சார்ந்த ராவ்சாகேப் ஆபிரகாம் பண்டிதர் என்று.    தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், விருது பெறும் அளவிற்கான வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தனக்கேயான ஆழமான முத்திரைகளைப் பதித்திருந்தார். ஆனாலும் தமிழ்கூறு நல்லுலகம் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய தேவை அவர் இசைத்துறையில் செய்த பல்வேறு ஆய்வுகளும், அதனால்  விளைந்த பல்வேறு கண்டுபிடிப்புகளாலும் ஏற்பட்டுள்ளது.              எங்காவது இசைக்கச்சேரி நடந்தால் நேரில் சென்று பாருங்கள். பதினைந்து தெலுங்குக் கீர்த்தனைகள், ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்கள், சில இசைக் கருவி தனியாவர்த்தனங்கள் இவற்றுடன் பலத்த கைதட்டலுடன் அந்தக் கச்சேரி முடிந்து விடும். சிலநாள் கழித்து இசை விமர்சகர்கள் அற்புதமான ஆலாபனை, மிக விஸ்தாரமாண சஞ்சாரம், அழகான கமகப் பிரயோகம், அதிசயமளிக்கும் மனோதர்மம் என்றெல்லாம் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஒரு இசைக் கலைஞருக்கு இவை யாவும் அவரின் படைப்புத் திறனுக்கு மிகத் தேவையான நேர்மையான அவசியமான விஷயம்தான். ஆனால் ஒரு மிகச்சிறந்த இசைக்கலைஞருக்கு எத்தனை ராகங்களில் ஆழமான திறமை இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். இருபது ராகங்களுக்கு மேல் தாண்டாது. சிலர் வேண்டுமானால் சற்று கூடுதலாகப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் யாரும் நூறு ராகங்கள் வரை அறிந்தவர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இன்னமும் சிலர் வெறும் ஐம்பதே பாடல்களைக் கூடத் தாண்டாதவர்கள்.  மகாகவி பாரதி அவர் காலத்தில் எழுதினார் ”எந்தக் கச்சேரிக்குப் போ, வித்வான் வாயைத் திறந்தால் வாதாபி கணபதி அதைத் தவிர புதிதாய் ஏதும் இல்லை” என அதுதான் இப்போதும் இங்கிருக்கும் நிலைமை.             இதற்கான காரணம் கர்நாடக இசையின் போதாமைதான். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசவையில் இருந்த கோவிந்ததீட்சிதர் நாயக்க மன்னர்களுடன் மிக நெருக்கமானவர். அவர் மகன் வேங்கிடமகி என்பவர் 300 வருடங்கள் முன் எழுதிய சதுர்த்தண்டிப் பிரகாசிகை எனும் நூலில் மேளகர்த்தா இராகங்கள் 72 என்ற கருத்து மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேளகர்த்தா என்பது தாய் இராகம். அதன் வழியாகப் பிறந்த குழந்தை இராகங்கள் ஜன்ய இராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.                திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றியபோதே இசையை முறையாகக் கற்றுக் கொண்ட ஆபிரகாம்பண்டிதர் பின் தஞ்சைக்குச் சென்ற பின்னரும் இசை மீதுள்ள தீராக் காதலினால் நாதஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றார். இயல்பாகவே எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்திடும் பண்டிதருக்கு கர்நாடக இசையின் அடிப்படைகள் மீதும் அதன் சிக்கல்கள் மீதும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. எங்கெங்கோ விடைகளுக்கான தேடலில் தோற்றவர் கடைசியில் அதற்கான விடைகளை தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கண்டுணர்ந்தார். ஆம் சிலப்பதிகாரம் வெறும் கதையல்ல இசை மற்றும் நடனம் குறித்த விரிவான விளக்கங்களைக் கொண்டிருக்கும் காப்பியம். அதில் உள்ள மாதவியின் நடன அரங்கேற்றப் பகுதியிலும் ஆய்ச்சியர் குரவை வட்டப்பாலை போன்ற பல்வேறு பகுதிகளிலும் நுட்பமாக ஆய்வு செய்தார். அதில் அவர் கர்நாடக இசை என்ற முறை சொல்லும் 72 மேளகர்த்தா (தாய்ப்பண்கள்) இராகங்களுக்கு அறிவியல் பூர்வமாக வாய்ப்பில்லை என்பதை கண்டறிந்தார். அதற்குப் பதிலாக சுத்த மத்திமம் பிரதி மத்திமம் என்பவைகளில் ஒவ்வொன்றிலும் 16 ஆக 32 தாய்ப் பண்களுக்கே வாய்ப்பிருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.       []                     ஆபிரகாம் பண்டிதரின் குடும்பம்                  இந்த 32 தாய்ப் பண்களில் (இராகங்கள்) உருவாகக் கூடிய ஜன்ய இராகங்கள் என்னும் சேய்பண்கள் உருவாகும் முறை குறித்து அடுத்து ஆய்வு செய்தார். அப்போதுதான் பண்களுக்குள் நுட்பமாக ஒளிந்திருக்கும் கணித முறையை உணர்ந்தார். அடுத்து அந்தக் கணித முறையை விரிவு செய்து புதிய இராகங்கள் உருவாகும் முறையைக் கண்டறிந்தார். அதை ஒரு கணிதச் சமன்பாடாக மாற்றினார். அதன் பெயர் இராகப் புட கணிதம்.  இந்த கணித முறையை முழுமையாகப் பயன்படுத்தும்போது பழைய தமிழ் இசையாசிரியர்கள் குறிப்பிடுவது போல புதிய இராகங்களை உருவாக்கிட இயலும் என நிறுவினார். அவர் இசைக்கு இலக்கணம் அமைக்கவில்லை ஆனால் இசைக்கான விஞ்ஞான வழியை வகுத்த பெரும் அறிவியல் அறிஞர்.12, 000 இராகங்கள் தமிழிசையில் உள்ளது என தமிழ் நூல்கள் குறிப்பிடுவது உண்மை என நிறுவி முடிப்பதற்குள் இயற்கை அவரை 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று தன்வசம் ஏற்றுக் கொண்டது தமிழுலகத்திற்கும் தமிழிசைக்கும் மட்டுமின்றி உலக இசை மரபிற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்              அவர் வாழ்க்கையில் குறிப்பிடத் தகுந்த பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஆனால் இது வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை அல்ல. அவரின் வாழ்வின் மிக முக்கிய நிகழ்வுகளை சிறு குறிப்பாக விவரிக்கலாம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்னும் ஊரில் முத்துச்சாமி நாடார் அன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாக 02.08.1859இல் பிறந்தார். ஆபிரகாம் தமது தொடக்கக் கல்வியை சுரண்டை எனும் ஊரிலும், அதன் பிறகு, உயர்கல்வியை பன்றிகுளம் எனும் ஊரிலும் முடித்தார்.          1874 இல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முதன் மாணக்கராகத் தேர்ச்சி பெற்றார். ஆப்ரிகாமின் தனித்திறமையை வியந்து போற்றி அதன் முதல்வர் அருள்திரு யார்க் துரை அவர்கள் தமது மாதிரிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தார். பள்ளி வகுப்பறையில் பாடங்களை நேரடியாக வழமையான முறையில் நடத்தாமல், கதையின் ஊடாகவே வலியுறுத்துவார். இதன் காரணமாக அவரைப் பள்ளியில் "கதை வாத்தியார்" என்று அழைத்தனர்.           திண்டுக்கல்லில் புகழ்பெற்ற வயலின் வித்வான் சடையாண்டிப் பத்தரிடம் சென்று சரளி வரிசை, அலங்காரம், கீதம், கீர்த்தனை, வர்ணம் ஆகியவற்றை முறையாகக் கற்று கொண்டார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார்.            இசைத்துறையில் இருந்துகொண்டே சித்த மருத்துவம் கற்றுக்கொள்வதிலும் ஆர்வ  மிகுதியோடு காணப்பட்டார். அவர் நண்பருடன் சுருளிமலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கருணானந்த முனிவர் என்பவரைச் சந்தித்து பல்வேறு நோய்க்ளை தீர்க்கும் மருந்துகள் தயாரிக்கும் முறையை கற்றுக் கொண்டார்.         1882இல் திருமணம் நடந்தது. இவரின் துணைவியார் ஞானவடிவு பொன்னம்மாள் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இருவருக்கும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தனர். அப்பள்ளியின் முதல்வர் அருட்திரு. பிளேக் பண்டிதர் மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அம்மையாருக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பையும், பண்டிதருக்கு தமிழாசிரியர் பொறுப்பையும் வழங்கினார்.           1890ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து இருவரும் விலகினர். மீண்டும் கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளை தயாரிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். துவக்கத்தில் பணவரவு அதிகம் இல்லை என்றாலும் காலப்போக்கில் ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் தயாரித்த கோரசனை மாத்திரை உள்ளிட்ட சித்த மருந்துகள், இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மருந்து விற்பனை வழியாக அதிகளவில் பொருளீட்டினார்.            அவரின் இரண்டாவது மனைவி கோவில் பாக்கியத்தம்மாள் ஆசிரியர். மிகச் சிறந்த இசை ஆளுமை அந்தக் காலத்திலேயே வீணை, பியானோ போன்ற கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவர். அவர்கள் இருவருக்கும் இடையான மிக ஆழமான இசையினால் ஏற்பட்ட காதல் கதையைக் குறித்துப் பேசிட ஒரு தனி புதினமே எழுத வேண்டும்  தஞ்சைக்கு அருகில் 100 ஏக்கர் பரப்பில் நிலமொன்றை விலைக்கு வாங்கி அதற்க்கு 'கருணானந்தபுரம்' என்று பெயரிட்டார். அங்கு உருவான தோட்டத்தில் மாங்கன்றுகள், பலாமரங்கள், தென்னைமரங்கள் வளர்க்கப்பட்டன. 1907 முதல் 1914 வரை நடைபெற்ற விவசாயப் பொருட்காட்சியில் கருணானந்தபுரத் தோட்டம் பங்குபெற்று 6 தங்கப பதக்கங்களும், 37 வெள்ளிப் பதக்கங்களும் வென்றது.              திண்டுக்கல்லில் இருந்தபோது அச்சுத்தொழிலையும் கற்றவர் என்பதால், 1912இல் தஞ்சையில் மின்சக்தியால் இயங்கும்  'லாலி அச்சகம்' எனும் பெயரில் அச்சகத்தை நிறுவினார். 1909இல் லண்டன் அரசுக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டிதர் தமிழில் பாடல் எழுதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு - 96 தமிழிசைப்பாடல்களை இயற்றினார்.1912 முதல் 1916 வரை 'சங்கீத வித்தியா மகாஜன சங்கம்' பெயரில் பல இசை மாநாடுகளை தமது சொந்த முயற்சியிலும் செலவிலும் நடத்தினார். மேற்கத்திய இசை விற்பன்னர்களையும் இந்த மாநாட்டில் பங்கேற்க வைத்து தமிழிசைக்குப் புத்துயிர்ப்பு தந்தார்.             வடக்கே பாடப்படும் இந்துஸ்தானி இசை என்பது தமிழிசை என்றும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை குறித்த தகவல்கள் இன்றைய கர்நாடக இசையில் உள்ள மூல இலக்கணங்கள் என்றும், இன்று இசையின் அடிப்படைகளாக வளங்கும் இராகங்களை உண்டு பண்ணும் முறையும், பாடும் முறையும் நமது பழந்தமிழ் இசை இலக்கணத்தில் இருந்தே வந்தது என்றும் அறிவித்தார்.              1916 ஆம் ஆண்டில் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் கலந்துகொண்டு, தனது ஆய்வு முடிவுகளை ஆய்வாளர்கள் முன் நிரூபித்தார்.   இசைத்தமிழ் குறித்து அரிய உண்மைகளை விளக்கும் வகையில் 1917ஆம் ஆண்டில் 'கருணாமிர்த சாகரம்' என்னும் நூலினை பண்டிதர் வெளியிட்டார்.  இந்த நூல் தமிழிசை வ‍ரலாற்றில் ஒரு மைல் கல்.           பொதுவாகவே தமிழர் மனம் மறதி மிக்கது. அதிகமாக தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்தவர்கள் மீதான மரியாதையும் நன்றியும் இல்லாதது. அவர் மறைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. காற்றில் கரைந்த கீதம் போல அவரின் அளவிட முடியாத தமிழிசைக்கான கண்டுபிடிப்புகள் மறக்கப்பட்டன, மறைக்கப்பட்டன என்பது மிகக் கசப்பான வரலாற்று உண்மை.    - திரு ராமசாமி துரைபாண்டி, 2019                      . []   கோட்டாறு தமிழரசன், திருக்குறள் உரையாடல், கட்டுரை   அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை  மாதர்கொல் மாலும்என் நெஞ்சு    (அதிகாரம்: தகை அணங்கு உறுத்தல்   குறள் எண்:1081)    நான் : பெண்ணா இவள்...?  பேய்...!  அழகுப்பேய்...பிடாரி ...!    அயலான் : உனக்கு என்ன ஆயிற்று ?  பேய் என்கிறாய்;  பிடாரி என்கிறாய்.    நான் : வேறு என்ன செய்யட்டும் பெரியோரே!   அப்படியன்றோ பாடாய்ப் படுத்துகிறாள்  இந்தப் பாதகி...!    அயலான் : இல்லை ...    நான் : எனிலிவள் மயிலோ?   பின்னால் இருக்கும்   பின்னல் அப்படித்தான் கூறுகிறது.    அயலான் : முட்டாளா நீ?  உன் முன்னால்   நிற்பது ஆணா? பெண்ணா?  ஆண்மயிலுக்குத் தானே  தோகையுண்டு.    நான் : ஆமாம் ஆமாம்   அப்படியானால்   இவள் மானுடப் பெண்தானா?  எனில் இத்தனைக் கனமாய்க் கூந்தல்  எதற்கு?    அயலான் : ஆய்வுக்குரிய மயில்தான்...  ஆட்டிப் படைக்கும் பேய்தான்...    நான் : அய்யோ!   மீண்டும் குழப்பம்...மயக்கம்  நான் மயிலென்றால் அயலான் ஆண்மயிலுக்குத் தானே தோகை உண்டென்கிறான்...  நான் பேயென்றாலும் கேள்வி கேட்கிறான்.  இறுதியில் அவனே மயிலென்கிறான்    அறியாமை தீர்க்கப்  பெரியோரே வாரும்  என்   மூச்சைத் தெளிவிக்கும்  மூலிகை தாரும்.  . கோட்டாறு தமிழரசன் (எ) ச.ச.வேலரசு  2021         []     இராம கி, தமிழெனும் கேள்வி, கட்டுரை   தமிழெனும் கேள்வி    அன்பிற்குரிய வாசகருக்கு,    இந்த ஆண்டு (2003) ஆகசுடு 15-ல் கணினியில் தமிழ் என்ற விழிப்புணர்ச்சி விழாவை அமீரகத் தமிழர்கள் சிலர் சேர்ந்து திருவாரூரில் நடத்தினார்கள். பாராட்டப் படவேண்டிய நல்ல முயற்சி; இதுபோன்ற உருப்படியான நிகழ்வுகள் பல ஊர்களிலும் நடத்தப் படவேண்டும். கதை, கவிதை, இன்ன பிறவற்றை மட்டுமே நமக்குள் பேசிக் கொண்டு இருப்பதில் மட்டும் பலனில்லை. அதற்கு மேலும் உள்ளவை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். தமிழ் எதிர்காலத்தில் தொடர்ந்து வாழ நம் பங்களிப்புத் தேவை. நிகழ்ச்சியின் பொழுது ஒரு நூலும் வெளியிடப் பட்டது. அந்தப் பொத்தகத்தில் என் பங்களிப்பாக இருந்த கட்டுரையை உங்கள் வாசிப்பிற்காக இங்கு தருகிறேன்.    இந்த மலர் உங்களுக்கு வந்து சேர்ந்து, இந்தக் கட்டுரை வரைக்கும் விருப்பத்தோடு நீங்கள் படிக்க முற்பட்டு இருப்பீர்களானால், தமிழ் மேல் உங்களுக்கு ஏதோ ஒரு பற்று அல்லது அக்கறை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் உங்களோடு பேசலாம்; இன்னும் சொன்னால் பேசத்தான் வேண்டும்; உங்களைப் போன்றவர்களுடன் கலந்து உரையாடாமல் வேறு யாருடன் நான் உரையாடப் போகிறேன்?    தமிழ் மொழியைப் பேச, படிக்க, மற்றும் எழுத எங்கு கற்றுக் கொண்டீர்கள்? உங்கள் பெற்றோரிடம் இருந்தா, ஆசிரியரிடம் இருந்தா, அல்லது உங்களைச் சுற்றி உள்ள சுற்றம், நட்பில் இருந்தா? நீங்கள் எந்த இடங்களில் எல்லாம் தமிழில் பேசுகிறீர்கள்? எங்கெல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்? உங்கள் நெடு நாளைய நண்பரையோ, அல்லது முன்பின் தெரியாத தமிழரையோ பார்க்கும் பொழுது, அந்தக் கணத்தில் நீங்கள் தமிழில் உரையாடுகிறீர்களா, அல்லது ஆங்கிலத்தில் உரையாடுகிறீர்களா?    நீங்கள் பேசும் ஆங்கிலத்திற்குள் உங்களை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால் அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு, அதைத் தவிர்க்க முயன்றிருக்கிறீர்களா? உங்கள் ஆங்கில வன்மை கூடுவதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலியை வைத்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும் போது அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீர்களா?    ஆங்கிலப் பேச்சில் சிறக்க வேண்டும் என்ற ஒய்யார எண்ணத்தால் உந்தப் பெற்று, உச்சக் கட்டமாக, தங்கள் பெற்றோரோடும் சுற்றத்தாரோடும் இருக்கும் உறவையே கூடச் சில போது முற்றிலும் துண்டித்துக் கொள்ளச் சிலர் முயலுவார்கள்; அந்த விவரங் கெட்ட நிலைக்கு நீங்கள் போனதுண்டோ ? ஆங்கிலம் அறியாப் பெற்றோர், சுற்றத்தாரின் வாடையே உங்களூக்கும், உங்கள் பிறங்கடைகளுக்கும் (successors) வரக்கூடாது என்று நீங்கள் எண்ணியதுண்டோ ?    உங்கள் பேச்சில் தமிழ் மிக மிகக் குறைந்து இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீர்களா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும் தமிழை விலக்குகிறீர்களா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும் என்று எண்ணுகிறீர்களா?    இதற்கெல்லாம் ஆம் என்று நீங்கள் விடையளித்தால் உங்களோடு மேற்கொண்டு நான் உரையாடுவதில் பொருள் இல்லை; மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்துகொண்டு நாலைந்து தலைமுறைக்கு அப்புறமும் தன் பெயரை முட்டம்மா என்று வைத்துக் கொண்டு "தன் தாத்தா தண்டபாணிக்குக் கொஞ்சூண்டு தமிழ் தெரியும்" என்று சொல்லித் தமிழில் பேச இயலாத ஒரு பெண்ணுக்கும் உங்களுக்கும் மிகுந்த வேறுபாடு இல்லை. வெகு விரைவில் நீங்கள் எங்களை விட்டுப் பெருந் தொலைவு விலகிப் போய்விடுவீர்கள்; என்றோ ஒரு நாள் தமிழராய் இருந்ததற்காக உங்களோடு நாங்கள் அன்பு பாராட்ட முடியும். அவ்வளவே. எங்கிருந்தாலும் வாழ்க, வளமுடன்!      மாறாக மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் என்று சொல்லாமல் கொஞ்சமாவது தடுமாறினீர்கள் என்றால் உங்களோடு உரையாடுவதில் இன்னும் பலன் உண்டு. அந்த எண்ணத்தினாலேயே மேலும் இங்கு உரையாடுகிறேன்.    சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீங்கள் தமிழ் பேசத் தவித்திருக்கிறீர்களா? அலுவல் தவிர்த்து மற்றோரோடு நீங்கள் பேசும் உரையாடல்களில் எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில் உங்களால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும் போது ஆங்கிலம் ஊடுறுவினால் அதைப் பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணாமல், நாகரிகம் என்று எண்ணுகிறீர்களா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியும் என்று அறிவீர்களோ? உங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி இருக்கிறதா? உங்களுக்குத் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயிலும் போது உடனே தமிழ்-தமிழ் அகரமுதலியைத் தேடுகிறீர்களா?    உங்கள் பெற்றோர் அறிந்த தமிழோடு உங்கள் தமிழை ஒப்பிட்டால் இப்பொழுது அந்தப் பேச்சில் தமிழ் எவ்வளவு தேறும்? 98 விழுக்காடாவது தேறுமா? இரண்டு விழுக்காடு குறைந்தாலேயே ஏழாவது தலைமுறையில் முக்கால் பங்கு தமிழ் "போயே போயிந்தி" என்று உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும் 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உங்களுக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச்சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்ளுவதே என்று கேட்டிருக்கிறீர்களா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்று அறிவீர்களா? தமிழ் வட்டாரத்திற்கு வட்டாரம் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இந்தத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.    மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை அந்தக் குழந்தையின் பெற்றோர்களுடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத ஒரு குமுகாயத்தில், தமிழ் அறியாத ஒரு குமுகாயத்தில் வளர்த்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தமிழப் பிள்ளையாக அல்லாமல் வேறு வகைப் பிள்ளையாகத்தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த ஒரு கெண்டை மீனைக் கொண்டு போய் உப்பங் கழியில் போட்டால் அது உயிர் வாழ முடியுமோ? பின் புலத்தை மீறிய ஒரு வாழ்வு உண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ ம் அல்லவா? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது.     நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர்கள், அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உங்கள் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் நீங்கள் தமிழை விட முடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாமல் இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணற்றைத் தாண்டி உயிர் வாழ முடியுமோ?    தமிழும் அது போலத்தான். தமிழ் எனும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ளாமல் தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அல்லது தெரிந்து கொண்டு தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பது ஒருவகையில் திரிசங்கு சொர்க்கமே! தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? குழந்தையாய் இருந்த போது கற்றுக் கொண்ட "நிலா!நிலா! ஓடி வா" வையும், "கைவீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? ஆத்திச் சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் இருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இந்தக் கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கொஞ்சம் மு.வ., கொஞ்சம் திரு.வி.க. படித்திருக்கிறீர்களா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, லா.ச.ரா, செயகாந்தன் படித்திருக்கிறீர்களா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீர்களா?    "தமிழ் சோறு போடுமா?" என்று சிலர் கேட்கிறார்கள்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக்காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடாவிட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீர்களா? மேலே நான் சொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா?    சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீர்களோ? நான் அவனைப் பார்த்தேன் என்று சொல்லும் போது கொஞ்சம் நின்று எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகுதான் தமிழில் வினையைச் சொல்லுகிறோம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இந்தச் சிந்தனை முறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்லுவார்கள். மாறாக மேலை மொழிகளில் SVO - நான் பார்த்தேன் அவனை என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன் SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்ளுவது கடினமே. சப்பானியர்கள் முற்றிலும் SOV பழக்கம் உடையவர்கள். அவர்கள் வெள்ளைக் காரர்களைப் புரிந்து கொள்ளுவதும், வெள்ளைக் காரர்கள் சப்பானியரைப் புரிந்துகொள்ளுவதும் மிகக் கடினம் என்பார்கள். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன்படுத்துகிறோம்.     சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்லுவதாகக் கம்பன் சொல்லுவான்: "கண்டேன் சீதையை"; இது போன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV என்ற சிந்திக்கும் நாம் ஓரோ வழி SVO என்பது போலும் சிந்திக்கிறோம். இந்தியர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. நீ உன் பெற்றோருக்கு எத்தனையாவது பிள்ளை என்ற கேள்வி தமிழில் மிக இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்துத்தான் சொல்ல இயலும். இது போல ஆங்கிலத்தில் சொல்லுவது சிலபோதுகளில் தமிழில் நேரடியாய்ச் சொல்ல முடியாது.    இந்தச் சிந்தனை ஒரு வகையில் பார்த்தால் பண்பாட்டு வருதியானது (ரீதியானது); மொழி வருதியானது. இதில் ஒரு மொழியின் வருதி உயர்ந்தது; இன்னொரு மொழியின் வருதி தாழ்ந்தது என்பது தவறான கூற்று. நம் வருதி நமக்கு உகந்தது என்பதை நாம் உணரவேண்டும்; இன்னும் சொன்னால் தமிழ் என்னும் வருதி தமிழனுக்கு ஒரு அடையாளம்; ஒரு முகவரி. தமிழ் நமக்கு இதைத்தான் கொடுக்கிறது.    சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?    இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள். தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர்கள். இந்தக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீங்கள் ஒத்துழைத்தால். செய்வீர்களா?  அன்புடன்,  இராம.கி.  வளவு - வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு  16.11.2003     []   முனைவர். பா. வில்சன், திருமதி ஜாஸ்மின், தமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில் கலாசார பரிமாற்றத்தின் பங்கு, கட்டுரை, தமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில்   கலாசார பரிமாற்றத்தின் பங்கு!...  கலாச்சார பரிமாற்றம் என்பது வர்த்தகம், போர், நாடு கைப்பற்றுதல் மதப்பிரச்சாரம் போன்றவைகள் வாயிலாக தொன்று தொட்டு நடைபெறுகின்ற ஒன்று என்பதற்கு வரலாறு ஒரு சான்றாக அமைந்துள்ளது. தமிழ் இசையும் வரலாற்றில் இந்த காரணிகளைக் கடந்து பயணித்துள்ளது என்பது ஆய்வின் வழி புலப்படுகின்ற உண்மை.   தமிழ் இசை வளர்ச்சி என்பது தமிழ் இசை புத்துருவாக்கம், இசை நுணுக்கங்களைக் கிரமப்படுத்துதல், இசை வடிவங்களை பதிவு செய்து பத்திரப்படுத்துதல் போன்ற நிலைகளைக் கடந்து வந்துள்ளது என்று கூறுவது மட்டுமல்லாமல் இவை ஒவ்வொன்றிலும் சாதி மத பேதமின்றி அநேக இசை வல்லுநர்கள் இதைக் கலையாக மட்டுமே கருதி இதன் வளர்ச்சியில் பரந்த மனதுடன் பங்களித்துள்ளார்கள் என்று கூறினால் மிகையாகாது.  தென் இந்திய கலாச்சார இசை, சங்க காலத்தில் சிறந்து விளங்கிய தமிழ் இசை வடிவத்தின் மறு பரிணாமம் என்பது ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பது தமிழ் இசை ஆய்வாளர்கள் அறிந்ததே. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் இதனைக் “கர்நாடக இசை” என்று அவனது புத்தகத்தில் குறிப்பிட்ட பிறகே கர்நாடக சங்கீதம் என்ற பெயர் பெற்றது என்பது வரலாற்றுக் குறிப்பாகும்.   சங்க காலத்தில் தேவதாசிகளால் மட்டுமே பரம்பரையாகக் கற்கப்பட்டு கோவில்களிலும், அரசவைகளிலும் பரதநாட்டிய நடனமாகவும், தமிழ் இசையாகவும் விடுதலையாக வலம்வந்த இந்த கலை, பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும், ஒரு பிரிவினருக்கும் மட்டுமே உரிமையாகக் கருதப்பட்டு சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டு இருப்பது, ஒரு வேதனைக்குரிய உண்மையாகும். ஆனால் வரலாற்று உண்மைகளை எந்தவித பாகுபாடுமின்றிக் கூர்ந்து ஆராயும் பொழுது, நம்மையே வியப்பில் ஆழ்த்தக் கூடிய உண்மைகள் வெளிவருவது திண்ணமாகிறது.  எந்த ஒரு கலையும், உருவானது முதல் தன் வளர்ச்சியில், பிற கலைகளிடம் இருந்து அவைகளின் பண்புகளையோ அல்லது சாயல்களையோ தாக்கங்களாக உள்வாங்கிக் கொண்டு, கலாச்சார கலப்புடன் வளர்வது என்பது கலை வளர்ச்சியின் பண்புகளில் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வித வளர்ச்சியில் பிற கலாச்சார தாக்கங்களுக்கு உட்பட்டு அதனை உள்வாங்கி வளரும்போது, ஆங்காங்கே கருத்து திருட்டு (Plagiarism) அல்லது கலாச்சார பரிமாற்றம் (Cultural Exchange) நிகழ்வது என்பது வழக்கமாக வரலாற்றின் சான்றுகள் புலப்படுத்தும் உண்மையாகும். இதனை எவ்வித பார்வையுடன் பார்க்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.ஆங்கிலேயர் காலத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் இசைக்குழுவில் இடம் பெற்ற 'வயலின்' என்ற இத்தாலி நாட்டில் உருவான இசைக்கருவி, தற்கால கர்நாடக இசைக் கச்சேரியில் முக்கிய பங்கு வகிப்பது கலையின் மேம்பாட்டிற்கும், பிற கலாச்சார இசையின் கலப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.   சியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் என்ற தீருவாரூர் மூவரில், முத்துசுவாமி தீட்சிதர், கலாச்சார கலப்புடன் இசை வளர்வதற்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார் என்றால் அது மிகையாகாது. மேலும் தஞ்சாவூர் நால்வரில் (Tanjavur Quartet) ஒருவரான வடிவேலு பிள்ளை, வயலின் என்ற இசைக்கருவியை தனது சமகாலத்தில் வாழ்ந்த கிறித்தவ புலவர் வேதநாயக சாஸ்திரிகளிடம் கற்றுக்கொண்டு, மேற்கத்திய இசைக்காக மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த இசைக்கருவியைக் கர்நாடக இசைக்கேற்ப பயன்படுத்தும் முறையை கண்டறிந்து, மனோதர்மத்தை (Improvisation) வயலின் இசைக் கருவி வழியாக இவ்வுலகிற்க்கு அறிமுகப்படுத்தியவர்களுள் முதல்வர் என்ற பெயரினை பெற்றவர். அதே காலத்தில் வாழந்த முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசுவாமி தீட்சிதர், மணலி முத்துகிருஷ்ண முதலியாரின் ஆதரவோடு தன் தந்தை ராமசாமி தீட்சிதருடன் சென்னைக்கு வந்து மூன்று வருடம் சென்னை தூய ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் இசைக்குழுவைக் காணுவதற்கும் அதில் இடம் பெற்ற வயலின் இசைக்கருவி மேல் காதல் கொண்டு அதனை கற்கவும் ஒரு வாய்ப்பு பெற்றார்.   முத்துசுவாமி தீட்சிதரும், பாலுசுவாமி தீட்சிதருடன் இணைந்து மூன்று வருடம் மேற்கத்திய இசையைக் கூர்ந்து கவனித்து அதன் தாக்கங்களுக்கு உட்பட்டு எழுதிய 39 பாடல்கள்தான் “நோட்டு சுவரங்கள்” (English Notes) என்று அழைக்கப்பட்டு மதுரை மணி அய்யர் அவர்களால் பின்னர் கச்சேரியில் பிரபலமாக்கப்பட்டது. அதில் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவென்றால், கலாச்சார கலப்பின் உச்சகட்டமாக “God Save the king (queen)” என்ற ஐரோப்பிய நாட்டின் புனித பாடல்களில் ஒன்றை அதன் இராகத்தைத் தழுவி தெலுங்கு மொழியில் இந்து கடவுள்களின் பெயரில் மாற்றி எழுதியுள்ளார். கலாச்சாரம் என்பது அதன் பரிணாம வளர்ச்சியின் முதற்கட்டத்தில் மேற்கத்திய இசையின் வடிவத்தை மட்டுமல்லாமல், அந்த இசையை இராகமாற்றமில்லாமல் அப்படியே வார்த்தை மாற்றம் மட்டுமே செய்து வளரவைத்துள்ளது என்பதற்கு “நோட்டு சுவரங்கள்” ஒரு சான்றாக அமைந்துள்ளது.   முத்துசுவாமி தீட்சிதரை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துத் தற்போது அமெரிக்காவில் சின்சினாட்டி பல்கலைகழத்தில் தென்னிந்திய இசை பேராசிரியராக பணிபுரியும் Dr.Kanniks Kannikeswaran குறிப்பிடும் பொழுது, முத்துசுவாமி தீட்சிதரின் பன்னிரண்டு பாடல்களில் ஒன்று மேற்கத்திய இசையின் தாக்கத்தை உள்வாங்கியதாக அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட வரலாற்று உண்மைகள் ஒரு கலாச்சாரம் பிற கலாச்சார வடிவங்களை, சமுதாய கலாச்சார மாற்றங்களால் (Socio - cultural) தன்னுள் வாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், சில நேரங்களில் மொழிமாற்றம் மட்டும் அமையப்பெற்று வளர்ந்துள்ளது என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கின்றது. இவ்வித வளர்ச்சியை (Plagiarism) “கருத்து திருட்டு”, என்று கருத இயலுமோ அல்லது “கலாச்சார பரிமாற்றம்”, என்று எண்ண முடியுமோ என்பது வரலாற்றை எந்தவித சாதி, மத பார்வை இன்றி பார்க்க இயல்வோர் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.  இசை என்பது முன்னோர்களின் இசை ஆராய்ச்சியை மூலதனமாகக் கொண்டு அதன் வடிவங்களையோ, பண்புகளையோ தாக்கங்களாக உள்வாங்கிக் கொண்டு புதுமை படைத்து வளர்கிறது என்பதற்கு தியாகராஜ சுவாமிகளின் “நிந்தாஸ்துதி” ஒரு எடுத்துக்காட்டு. தியாகராஜ சுவாமிகளுக்கு முன்பாக வாழ்ந்த பாபநாசம் முதலியார் உருவாக்கின இசை வடிவம் “நிந்தா ஸ்துதி” ஆகும். கடவுளை நிந்திப்பது போல் புகழ்வது என்பது இதன் பொருளாகும்.   திருவாரூர் மூவருக்கு முன்பாக வாழ்ந்த “தமிழ் மூவர்” தமிழ் இசைக்கு ஆற்றிய பங்களிப்புகள் “கிருத்தி” உருவாகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், மாரிமுத்து பிள்ளை மற்றும் அருணாச்சல கவிராயர் அவர்களது பங்களிப்புகளை பற்றிய முழுமையான தகவல்கள் இன்றும் வாய்வழி உண்மைகளாகவே வலம் வருகின்றன. எனவே ஒவ்வொரு புதிய படைப்பும் முந்தைய படைப்புகளால் உள்ளூக்கம் பெற்று உருவாகிறது என்பது திண்ணமாகிறது.   இசை என்பது ஒரு கலை மட்டுமே. ஆயினும், ஆதரவின் நிமித்தம் அதன் பரிணாம வளர்ச்சியில் கோவில்களைச் சார்ந்தோ அல்லது அரசவையைச் சார்ந்தோ, வளர்ந்து வந்திருக்கின்றது. இவ்வித வளர்ச்சி, இசையைக் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பினை வர்ணிப்பதற்கு மட்டும் உரியதாகவே முன்னெடுத்துக் காட்டி வந்து உள்ளது. இவ்வித மனப்பான்மையை முறியடிக்கும் வகையில் சூழலுக்கு தகுந்த முறையில் மொழிமாற்றம் கொண்டோ அல்லது மனித உறவுகளை வர்ணிக்கும் ஒரு கருவியாகவோ இசையை கையாண்டு, இசையை பொதுவுடமை ஆக்கியதில் தமிழ் திரைப்படத்துறையின் பங்களிப்பு இன்றியமையாதது.   திரைப்படங்களில் பாடல்களின் வரிகளை திரைப்படத்தின் தலைப்பாகவோ அல்லது திரைப்பட தலைப்பை பாடல் வரிகளாகவோ மாற்றுதல் கருத்து திருட்டாக பார்க்கப் படுவது இல்லை. கர்நாடக சங்கீத வித்வான்களும் தங்கள் முன்னோர்களுடைய பாடல்களில் ஈர்ப்புக்கொண்டு உள்ளூக்கம் அடைந்து அவர்களது பாடல் வார்த்தைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து தங்களது பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை கருத்து திருட்டு (Plagiarism) என்று கருத இயலாது.“வார்த்தை திருட்டு” என்பது பழங்காலந்தொட்டே இசை வளர்ச்சியில் ஒரு பகுதியாக இசையின் மேல் கொண்ட ஈர்ப்பினால் நிகழ்ந்திருக்கின்றது என்பது வரலாற்று ஆய்வில் திண்ணமாகிறது.   முத்துசுவாமி தீட்சிதர் ஐரோப்பிய இசையை தனது கடவுளின் பெயரில் மொழிமாற்றம் செய்து கீர்த்தனைகளை இயற்றியது தனது சகோதரர் பாலுசாமி தீட்சிதர் மேற்கத்திய இசையை வயலினில் கற்று அதன் பின்னர் அதை தென் இந்திய இசைக்கேற்ப தகவமைக்கவே என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு முன்வைக்கிறது. இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆராய முற்பட்டால், இந்த வரலாற்று நிகழ்வு கலாச்சார வளர்ச்சிக்கான கருத்து பரிமாற்றமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே ஒழிய மேற்கத்திய இசையின் கருத்து திருட்டு (Plagiarism) என்ற பொருளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை. இந்த நிகழ்வை ஆதாரமாகக் கொண்டு கருத்து திருட்டை நியாயப்படுத்துவது இந்த கட்டுரையின் நோக்கமன்று.   ஒரு கலாச்சார வளர்ச்சி கலாச்சார பரிமாற்றமாக அல்லது “கருத்து திருட்டாக” பார்க்கப்படுவது அதன் காரணமான சூழ்நிலையையோ அல்லது மனப்பான்மையையோ வைத்தே தீர்மானிக்க வேண்டும்.“சந்தப் புலவர்” என்று உலகமே பாராட்டும் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் அவருடைய பாடல்களில் “சலாம்” என்ற முகமதியரால் வழங்கப்படும் “வணக்கம்” என்ற பொருளை கொண்ட பதத்தை உபயோகப்படுத்தியுள்ளார். இதனையும் கருத்து திருட்டு என்று முகம்மதியர்கள் கூற இயலுமா?ஆனால் இசை வடிவங்களை தாக்கங்களாக உள்வாங்கிக் கொண்டு ஒரு கலாச்சாரம் வளர்வதை “கருத்து திருட்டு” என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட “தீவிரவாதம்” வழியாக மட்டுப்படுத்துவது என்பது ஒரு கலை வளர்ச்சிக்கு நாம் ஏற்படுத்தும் தடைக்கல் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முற்பட வேண்டும். கிறித்துவர்களாலும், முகமதியர்களாலும் சாதி மத வேறுபாடின்றி தமிழ் இசை வளர்க்கப்பட்டது என்ற வரலாற்று உண்மை எல்லோரும் இந்த இசையின் பங்குதாரர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கின்றது. மேலும் 1888 – 1973-ல் வாழ்ந்த செட்டி பானுமூர்த்தி என்பவரால் சங்கராபரண ராகத்தில் “சாமானுலவரு” என்று துவங்கும் பாடல் 1966-ல் இயற்றப்பட்டது. இந்தப் பாடல் கிறித்துவ வேதாகமத்தில் சங்கீதம் 71:19ல் தேவனே உமக்கு நிகரானவர் யார்” என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்று ஒரு குறிப்பு உணர்த்துகிறது.   தியாகராஜரின் கரகரப்பிரியாவில் அமைந்த “சாமானுமெவரு” என்ற பாடலோடு இந்தப் பாடல் ஒப்பிடப்பட்டு “கருத்து திருட்டு” (Plagiarism) என்று கூறுவது இந்த புனிதக் கலையை வளரவிடாமல் பிணைய கைதியாக்கி அழிக்க முற்படும் ஒரு வடிவமைக்கப்பட்ட தீவிரவாதமாவே (Structural Violence) கருதமுடியுமே ஒழிய இக்கலையை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாக கருத முடியாது.   ஒரு ஐரோப்பிய கிறித்தவ இசை வடிவத்தை அதன் ராகத்தோடு மொழிமாற்றம் செய்து, தனது கடவுளின் பெயரிட்டு பாடல்களை உருவாக்குவது கலாச்சார பரிமாற்றமாக பார்க்கப்பட இயலுமானால், “சாமானுமெவரு” என்ற பதத்தை மட்டும் உள்ளூக்கத்தினிமித்தம் பயன்படுத்தி, வேறு இராகத்தில் முற்றிலும் மாறுபட்ட வார்த்தைகளினால், 1966ல் உருவாக்கப்பட்ட பாடலை “கருத்து திருட்டு” (Plagiarism) என்று கூறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று.  கட்டுரையாளர்கள் : முனைவர். பா. வில்சன், திருமதி ஜாஸ்மின்   முனைவர். பா. வில்சன்,சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் துறை தலைவராக பணியாற்றுகிறார் மற்றும் திருமதி ஜாஸ்மின் தமிழ் இசையில் ஈடுபாடு கொண்ட இசைக் கலைஞர். வில்சன்தமிழ் இசையில் முதுகலைப் பட்டம் பெற்று (MFA) இசை ஆசிரியராகவும், இசையியல் வல்லுனராகவும் செயல்பட்டு வருகிறார்.              []     பாபு விநாயகம்,முனைவர்.ஆ.ஷைலா ஹெலின்,பாரதியின் பண் பாடு - பண்ணோடியைந்த மகாகவி பாரதி, கட்டுரை பாரதியின் பண் பாடு - பண்ணோடியைந்த மகாகவி பாரதி  RELATIONSHIP OF PANN(RAGAM) WITH MAHAKAVI BHARATHI   திரு.பாபு விநாயகம்,  நிறுவனர் மற்றும் தலைவர், உலகத்தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம், வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா.    முனைவர்.ஆ.ஷைலா ஹெலின், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம்,  திருவனந்தபுரம், இந்தியா.    முன்னுரை   தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் இலக்கிய உணர்வோடு வெளிப்படுத்துபவன் கவிஞன். எல்லா காலங்களிலும் எல்லா மொழிகளிலும் புற்றீசல் போல் முளைத்தெழும் கவிஞர்களுள் “மகாகவி” எனும் சிறப்புக்குரியவராவோர் ஒரு சிலரே. அங்ஙனம் இவ்வுலகில் கி.பி.1882 முதல் கி.பி.1921 வரையிலாக மொத்தம்  முப்பத்தொன்பது ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்து முண்டாசு கவி, பாட்டுக்கொரு புலவன், புரட்சிக் கவிஞன், வரகவி, அமரகவி, மக்கள் கவி, தேசியக்கவி, புதுயுகக் கவி எனும் பெயர்களால் தடம் பதித்த சுப்பிரமணிய பாரதியார், ஒரு மகாகவி எனும் தகுதிக்குரியவரும் ஆவார்.    இங்ஙனம் பாரதி ஏன் “மகாகவி” என்று அழைக்கப்படுகிறார் என்றும் தமிழரின் மரபிசையாம் பண்ணிசை இலக்கணத்தை தெளிவுபடுத்தியும் அதனை மீட்டுருவாக்கிடும் வண்ணமாக பாரதியின் இரண்டு பாடல்களுக்குப் பண்ணிசையமைத்தும் பண்ணின் மேன்மையை தெளிவு செய்தலுமே இக்கட்டுரையில் நோக்கமாக அமைகின்றது.  மகாகவியின் இலக்கணம்    கவிஞன் என்பவன் குறிப்பிட்ட பாடுபொருட்களில் தன்னுடைய படைப்புகளை முடித்து விடுபவன். கவிஞன் என்பவன் தற்கால சிந்தனைகளில் மூழ்கி,  படைப்புகளை அளிப்பவன். கவிஞன் என்பவன் ஒரு குறிப்பிட்ட பருவ காலம் போல்,  தன் படைப்புகளை அளிக்கக் கூடியவன். கவிஞன் என்பவனின் படைப்புகள் தன் மொழி மற்றும் ஒரு சில அயல் மொழிகளில் மட்டும்  மொழியாக்கம் செய்யப்பட்டு முற்றுப்பெறும்.  ஆனால் மகாகவி என்பவன் திட சிந்தனை, தீர்க்கதரிசனம், கடின உழைப்பு என்னும் ஆதாரங்களால் தனது படைப்புகளை இடையறாது தொய்வின்றி தொடர்ந்து, பல பாடுபொருள்களை தன் படைப்புகளில் அளிக்கக் கூடியவன். ஒரு மகாகவியின் இலக்கணங்கள் என்பது பன்பொருள் பாடும் திறமை, தொடர்ந்து படைப்புகள் ஆக்கும் ஆற்றல், பன்மொழி ஆக்கத்திற்கு தன் படைப்புகளை உள்ளாக்கும் பாங்கு, தீர்க்க தரிசனத்தோடு படைப்புகளை அளித்தல், மக்களுக்காக பாடுதல், மனிதனுடைய கவலைக் கண்ணீரை தன் எழுத்துக்கள் வழியே சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லுதல் முதலியவைகளாகும். மேலும் கவிதைகளின் பல வகைமைகளையும் வடிவங்களையும் தொடர்ந்து அளிக்கக்கூடிய ஒரு வல்லாண்மை மிக்க கவிஞன் மகாகவி.  பாரதி  ஒரு மகாகவி    பாரதி மரபுக் கவிதைகளுக்குள்ளும் புதுக் கவிதைகளுக்குள்ளும் பல பாடுபொருள்களைத் தந்து, தன் கருத்துக்களைப் புகுத்துவது அவரின் சிறப்பாகும். இவரின் படைப்புகளில், சுயமரியாதை பாட்டுகளை வேண்டுவோர் வரிகளின் இடையில் அர்த்தங்களை தரிசிக்கலாம். பெண்மையைப் போற்ற விரும்புவோர் அவர் எழுத்துக்களினூடே பெண்ணுரிமைதனை உணரலாம். பொதுவுடமை பேணுவோர் அவருடைய கவிதைகளின் இடையே உணர்ச்சியின் வேகத்தை  எய்தலாம். இயற்கை எழில் நுகர விரும்புவோர், மழலையின் இன்பம் விழைவோர் புதிய வகைமைகளில் நுழைந்து இன்புறலாம். ஆக, ”எல்லோருக்குமான கவிதை, எல்லா பாடுபொருளுகளுக்குமான  கவிதை ரொட்டியாக இருக்க வேண்டும்’ என்று சொன்ன மகாகவி பாப்லோ நெரூடா போல எல்லோருக்குமான கவிதைகளைப் படைத்துள்ளார் பாரதி. இவரின் மரபுக் கவிதைகளிலும் புதுக்கவிதைகளிலும் வால்ட் விட்மனின் ஈர்ப்பினை உணரலாம், பாப்லோ நெரூடாவின் சீற்றத்தையும், வேதநயகம் பிள்ளையின் உணர்வின் எழுச்சியையும் இசைத்திறனையும் அனுபவிக்கலாம். பாரதிதாசனின் மொழி உணர்வையும், சமுதாய அக்கறையையும் நுகரலாம்.     தாகூரின் இயற்கையை நேசிக்கலாம், வள்ளுவரின் வாழ்வியல் நெறிகளுக்குள் நுழைந்து வாசிக்கலாம். வள்ளலாரின் மானுட வாஞ்சையை அறியலாம். பாரதியைப் பொறுத்தவரை இவரின் கவிதைகளில் தொடாத பாடுபொருள்கள் எதுவுமில்லை, தொட்ட பாடுபொருள்கள் எதுவும் துலங்காமல் போனதும் இல்லை. இவரின் புதிய வகைமை படைப்புகளுக்குள் உண்மை, உழைப்பு, நேர்மைக்கான தேடல்கள் உண்டு. கயமை, பொய்மை, ஊழலுக்கான எரிதழல் உண்டு. காதலுக்கான வீச்சுகள் உண்டு. ஆக எல்லா பாடுபொருள்களையும் மக்களுக்காக தன் படைப்புகளில் கொண்டு வந்து கொடுத்து  இருக்கக் கூடியவர் பாரதி.  எனவே “பாரதி ஒரு மகாகவி”.     இசையோடியைந்த பாரதியின் பல்நோக்குப் பார்வையில் இசைசார் விளக்கங்கள் இல்லாமல் இல்லை. இசை பற்றிய பல நுணுக்கங்களைக் குறிப்பிட்டும் இசைப் பாடல்கள் பல இயற்றியும் தான் ஒரு சிறந்த வாக்கேயக்காரர் என்பதை நிலைநாட்டியுள்ளார். தமிழிசைக் கலைச் சொற்களான பண், தாளம், சந்தம், பாடல், சங்கீதம் முதலியவைகளும் குழல், வீணை, முரசு, பேரிகை வெண்சங்கு ஆகிய இசைக் கருவிகளும்  பாடல் வரிகளில் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளன. பாரதியார் கவிதைகளில் பண் குறிப்புகளாவன:    ”பண்ணில்  இனிய பாடலோடு” (விடுதலை வேண்டும்)1      ”பண்ணிலினிய   சுவை பரந்த மொழியினால் ” (மனப் பீடம்)1  ”பாட்டைத் திறப்பது பண்ணாலே” (அம்மாக்கண்ணு பாட்டு)1   ”பண்ணே பண்ணே பண்ணே    பண்ணிற்  கேயோர் பழுதுண்டாயின்   மண்ணே மண்ணே மண்ணே” (குயில் பாட்டு)1  “பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு  பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்  கூட்டுக் களியினிலே-கவிதைகள்  கொண்டுதர வேணும்;-அந்தக்  காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்  காவலுற வேணும்;என்தன்  பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்  பாலித்திட வேணும்” (காணி நிலம் வேண்டும்)1  “எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி  யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல  பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்  பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை  நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக  நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல  பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்  பாடத்திறனடைதல் வேண்டும்!  ( யோக சித்தி – 7)1  “பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்  புண்ணை யொழிப்பீர் -இந்தப்  பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை”( கண்ணன் பிறப்பு)1  “பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்   பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே”  -(விடுதலை வேண்டும்)1  ஆகிய  வரிகளுள் இசைக் கூறுகளையும், தேசிய கீதங்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்கள், தெய்வப் பாடல்கள் ஞானப் பாடல்கள், தனிப்பாடல்கள், கண்ணன் பாட்டு, தமிழர் பாட்டு, வள்ளிப் பாட்டு, காளி பாட்டு, நவராத்திரி பாட்டு முதலிய பாட்டுகளையும் பாரதி பாடியுள்ளார். தாளத்தோடு பாட வேண்டும் என்பதனை,  ”தாளம் தாளம் தாளம்  தாளத்திற்கோர் தடையுண்டாயின்  கூளம் கூளம் கூளம்”1 (குயில் பாட்டு) என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.  “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!  பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்  நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?  ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,  ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ…”1 (குயிலும் மாடும்)   எனும் வரிகளினால் பாரதியார் பாடலின்களின்கண் காணலாகும்  ஈர்ப்பு அறியலாகிறது.    பண்ணோடியைந்த பாரதி  “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்    பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா  கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா!”2  (அமரகவி)  என்று கூறியுள்ள கவிமணியின் வரிகளிலிருந்து பாரதியின் பாடல்கள் பண்ணோடு பாடக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன என்பதனை நன்கு  உணர்ந்து கொள்ள முடிகிறது.  ”மனந் திறப்பது மதியாலே  பாட்டைத் திறப்பது பண்ணாலே” 1  (அம்மாக்கண்ணு பாட்டு)  இவ்வரிகளில் “பாட்டைத் திறப்பது பண்ணாலே” எனும் பாரதியின் தொடர் முலம்,  இவரின் பாடல்கள் பண்ணின் இலக்கணம் பெற்ற பாடல் என்பது பொருள். நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டுப் பெருந்தானங்களில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு எனும் எட்டு கிரியைகளால் பண்ணப்படுவதால் “பண்” எனப் பெயராயிற்று என்பதனை,  “பாவோடணைதல் இசை என்றார், பண் என்றார்  மேவார் பெருந்தானம் எட்டானும் - பாவாய்  எடுத்தல் முதலாய் இருநான்கும் பண்ணிப்  படுத்தமையால் பண்ணென்று பார்”3                                                                      (3:26.அடியார்க்.உரை.ப.105) என அரங்கேற்று காதையில் அடியார்க்கு நல்லார் பண் குறித்துக் கூறியுள்ளார்.    பண்ணிலக்கணம் என்பதனை பண்ணீர்மை எனவும் உரைப்பர்.  பண்ணீர்மைகள் என்பன பண்ணிற்குரிய ஓசைகளாலாகிய நிறங்கள். பண்ணின் நிறங்கள் பதினொன்றும் பண்ணின் சுரங்களைப் பல்வேறு வகைகளில் இசைத்தலால் வருவன. இதனை இளங்கோவடிகள் “வக்கிரித் திட்டம்” என குறிப்பிட்டுள்ளார்.  ‘’இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்தாங்கு  அசையா மரபின் அதுபட வைத்து”3  (3:41,42.ப.63)                          என்னும் அடிகளுக்கு ஈருரைஞர்கள் (அடியார்க்கு நல்லார், அரும்பத உரையார் ) உரைத்துள்ள விளக்கம்,  “இவைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணீர்மையை முதலும், முறையும், முடிவும், நிறையும், குறையும், கிழமையும்,  வலிவும், மெலிவும், சமனும், வரையறை,  நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிந்து, அறிந்த வண்ணம் அவன் தாள நிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியினிடையே தோன்ற வைக்க வல்லோனாய்” 3 (3:41,42 அடியார்க்.உரை.ப.63, அரும்பத உரை.ப.108) என்பதாகும்.   1.முதற் சுரம் என்பது பண்ணின் எடுப்பு சுரம் (கிரக சுரம்).  2. முறை என்பது பண்ணுக்குரிய சுரங்களின் வகைகளையும் அவை வரும் வரிசைகளையும் குறிப்பது.  3. முடிவு சுரம் என்பது பண்ணின் முடிவு பெரும் சுரமமாகும்.  4. நிறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் நிரம்ப நிறுத்தல் சுரத்தை குறிக்கும்.  5. குறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் மிகக் குறைவாக ஒலித்தற்குரிய சுரம்.   6.கிழமை சுரம் என்பது இணை, கிளை, நட்பு என்னும் குறியறிந்து புணரும் சுரங்கள் வந்து வந்து சேரும் சுரமாகும். இதனை ஜீவ சுரம் என்பர்.  7.வலிவு என்பது இராகத்தை வலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.  8.மெலிவு என்பது இராகத்தை மெலிவு மண்டிலத்தில்  நிறுத்தி பாடுவது.  9.சமன் என்பது சமன் மண்டிலத்தில் பண்களின் சுரங்களை இசைத்தல்  10.வரையறை என்பது பண்ணிற்கு என வரையறுக்கப்பட்ட நெறிகளும் முறைகளுமாகும்.  11.நீர்மை  என்பது ஒவ்வொரு பண்ணுக்குரிய சுவை, உணர்வு, மெய்ப்பாடு, தாட்டு வரிசைகள் முதலியவைகளை குறிக்கும்.  பண்ணிலக்கணம் அல்லது பண்ணீர்மைகள் என்பது முதல், முறைமை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் பதினோரு பாகுப்புகளாக வகைப்படுத்தி பாடும் திட்டமாகும்.4(தொகுதி -3.ப.248)  பண்ணிசையில் பாரதியார் பாடல்கள்   தென்னக இசையியலினுடைய சிறப்புத் தன்மைகளுள் ஒன்றான இராக முறைக்கு முன்னோடியாகத் திகழ்வது தமிழிசையின் பண்களே.5(ப.48) இப்பண்ணிசையை மீட்டுருவாக்கம் செய்வதோடு தமிழர் தம் பாரம்பரிய இசை முறையினை தெரிந்திருப்பதின் அவசியம் உணர்ந்து மகாகவி பாரதியின் இரண்டு பாடல்களுக்கு பண்ணிசை அமைக்கப்பட்டு இங்கே சமர்பிக்கப்பட்டுள்ளன.  1. சொல்  பண்: செம்பாலை          இராகம்:  அரிகாம்போதி         தாளம் : ஆதி                                          சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை  நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.  1.விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு     வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:     தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல     தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.  2.“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்      வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;      கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்      கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.  3.“அமிழ்தம்,அமிழ்தம்’‘என்று கூறுவோம்-நித்தம்      அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;      தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்      தலைமை பெருமை புகழ் கூடுவோம்.1  2. முரசு  பண்: தனாசி          இராகம்: தன்யாசி                      தாளம்: ஆதி                                    வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!  வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!  நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்  நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!  1.சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு     தன்னில் செழித்திடும் வையம்;     ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்     ஆயிரம் மாண்புறச் செய்வோம்  2.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி     பேணி வளர்த்திடும் ஈசன்;     மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல     மாத ரறிவைக் கெடுத்தார்  3.அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்     அத்தனைப் பேரும் நிகராம்.     இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு     யாவரும் ஒன்றென்று கொண்டால்.1    முடிவுரை    “பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்     பாலித்திட வேணும்”1   எனக் கூறியுள்ள மகாகவி பாரதி தன் பல்நோக்கு பார்வையினால் இறை உணர்வு, தேச உணர்வு, விடுதலை வேட்கை, சமூக எழுச்சி, கவித்துவம், சொற்சுவை, பொருட்சுவை முதலியவைகளடங்கிய பல்வேறு பாடுபொருள்களில் ஆவேசப் படைப்புகளைப் படைத்து, “மகாகவி” எனும் தகைமையுடையவராக மட்டும் அல்லாது “பண்ணோடியைந்தோன்” என்னும் தகைமையையும் பெற்று திண்மையாக விளங்குகின்றார்.   தமிழரின் மரபிசை என்பது பண்ணிசையாகும். பண்ணிசைக் கூறுகளையும் தமிழிசையின் வேர்களைக் கொண்ட கருநாடக இசையின் கூறுகளையும் நன்கு அறிந்திருந்தமையால் பாரதி  பிற பிரபலமான  கவிஞர்கள் குறிப்பிடாத இப்பண்ணின் மேன்மையை தம் கவிதைகளுள் விரவியுள்ளார். இவரின் காலகட்டத்தில் பண்ணிசையின் ஆக்கம் விளிம்பு நிலையடைந்து, அயல் மொழியாளரின் கலப்பினால்  கருநாடக இசை துளிர்விட்டு  படர்ந்து பந்தலித்து வளரத் தொடங்கியிருந்தது.  இயற்றமிழ் வடிவில் பல்வேறு பாடுபொருள்களை மக்களின் மனதில் உறையச் செய்வதைக்காட்டிலும் இசை வடிவின் வாயிலாக மக்கள் மனதில் பதிப்பிப்பது என்பது மிக எளிமையாது  என்பதனால், மகாகவி பாரதியின் பாடல்களுள் இரண்டு பாடல்களை தெரிவு செய்து, தமிழரின் மரபிசையான  பண்ணிசையினை  மீட்டுருவாக்கும் நோக்கோடு பண்ணிசைக்கப்பட்டு  உள்ளன.  இப்பாடல்கள்வழி தமிழினத்தோரின் இசையுணர்வுகள், பண்ணுணர்வுகள், கலையுணர்வுகள் மேம்படுத்துவதோடு, தமிழரின் மரபிசையாம் பண்ணிசை மக்களிடையே  மீண்டும் உயிரோட்டம் பெற வாய்ப்புள்ளதாகவும் அமைகின்றது.      துணை நின்றவைகள்    பாரதியார் கவிதைகள் -   கவிமணியின் கவிதைகள்-  சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்- முனைவர்.சாமிநாதய்யர்.உ.வே.தமிழ்ப் பல்கலைக் கழகம்,தஞ்சாவூர் ,1985.  தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி(1-4)- சுந்தரம்.வீ.ப.கா. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2006.  பண்ணும் இலயமும் - முனைவர் அங்கயற்கண்ணி.இ. அருளானந்த நகர், தஞ்சாவூர்,2010.    []     ஆனந்தி ஜீவா , வாழ்வியல் சிந்தனை, கட்டுரை,   என்னது செருப்பு ஒரு சேற்றில் சிக்கி அறுந்து போய்விட்டது. அதை தைத்து வாங்கி வரவேண்டும். மழையால் செருப்பு தைக்கும் தொழிலாளி வரவில்லை. மழை இல்லாத ஒரு நாளில் அந்த செருப்பை தைத்து வாங்கி வந்தேன்.    இங்கு ஏன் இதைச் சொல்ல வேண்டும் என்றால் அதீத நுகர்வு. பயண்படுத்தி தூக்கி எறிதல் என்ற கலாச்சாரத்திற்குள் நம்மையறியாமல் நாம் மாட்டிக்கொண்டு உள்ளோம்.     நம்மில் எத்தனை பேர் அறுந்து போன செருப்பை தைத்து பயன்படுத்துகிறோம். எத்தனை பேர் கிழிந்து போன குடையை தைத்து பயன்படுத்துகிறோம். எத்தனை பேர் ஓடாத கடிகாரத்தை சரிசெய்து பயன்படுத்துகிறோம்.    ஒரு சட்டை தையல் விட்டாலோ, பட்டன் போனாலோ 20களில்  இருக்கும் யாரேனும் தைத்து போடுகிறார்களா?!    சரிசெய்து உபயோகப்படுத்தினால் தரக்குறைவு என்ற எண்ணம் ஆழ ஊறிபோய்விட்டிருக்கிறது இன்றைய தலைமுறைக்கு.     கால்பந்தில் காற்றிறங்கினால் கூட காற்றடித்து பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத ,ஒரு தலைமுறையை பார்க்கிறேன்.    கடிகாரம் ரிப்பேர் செய்யும் தாத்தாவோ, மாமாவோட இப்போ பார்க்கக்கூட முடிவதில்லை. காரணம்.    குப்பை, குப்பை என பல பொருட்களை  தூக்கி எறிந்து, பலரின் வாழ்கையையும் அதனூடே தூக்கியெறியப்பட்டாகிவிட்டது.    மை பேனா, மை ஊத்தி எழுதும் பேனாவில் கூட refill.... அது ஒரு பக்கம் plastic குப்பை குவியலை விட்டுச்செல்கிறது.     சாதாரண மை பேனாவை பார்ப்பது கூட அரிதாக உள்ளது.    அதீத  நுகர்வு கலாச்சாரம் குப்பைகளை மட்டுமே நம்நாட்டில் விட்டுச் செல்கிறது.    - ஆனந்தி ஜீவா - 2021       []     பேராசிரியர் செம்மல் முஸ்தபா, அயலானின் கடிதங்கள் நூலிலிருந்து, கட்டுரை கருவறையில் ஒரு சிசு உருவாகும் நிலையில் அதனுடைய மூளை மிகப்பெரிய உள்வாங்கியாக செயல்படும், அதனால் தன்னுடைய தாயின் உடலில் உருவாகும் ஒலி அதிர்வுகளை முழுமையாக உள்வாங்க முடியும் - இச்சமயத்தில் தாய் தமிழோடு சரியாக இழையாமல் இருப்பாளேயானால் அவள் பெற்றெடுக்கும் குழந்தையும் தமிழோடு இழையாமலேயே உருவாகும். கொடுத்தால்தானே எடுக்க முடியும். அக்குழந்தை பின்னாளில் ஆழ்மனதில் தாய்மொழிப் பற்று அற்ற நிலையில் வளரும், சுற்றியுள்ள மனிதர்களின் மொழியைத் தன்மொழியாக நம்பி, தனக்கான மொழி அடையாளமற்ற ஒரு உயிரினமாக உலகை அது வீணாக சுற்றி வரும். ஒரு தாய் அவள் கர்ப்பமுற்று உள்ள நிலையில் தமிழோடு, தன் பாரம்பரியத்தோடு, தன் அடையாளத்தோடு இழைந்து வாழும் நிலையில் அவள் பெற்றெடுக்கும் குழந்தையும் மொழி அடையாளம் உள்ள சிறப்பான  தமிழ்ப்பிள்ளையாக உருவாகும். மூடர்களுக்கு இது என்றுமே புரியாது, அழியட்டும் அவர்களின் தலைமுறைகள். ஆனால், தக்கவை தழைக்கும், அதுபோதும் எமக்கு - அயலான் (9/10/2021)    []     முனைவர் பா.வேலம்மாள், திருக்குற்றாலக் குறவஞ்சி, கட்டுரை திருக்குற்றாலக் குறவஞ்சி  தமிழில் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனும் பகுப்பு பின்னா் தோன்றியது எனினும், சிற்றிலக்கியப் புறப்பாடு ஆற்றுப்படை நூல்களிலேயே தோற்றம் கண்டுவிட்டது. உள்ளடக்கமாகிய புலப்படுத்தப்பெற்ற பொருள் சமுதாய மாற்றத்திற்கேற்ப மாறி உள்ளது. சிற்றிலக்கியங்களை வடமொழியில் “பிரபந்தம்” என்பா். செம்மையாகக் கட்டப்பட்டது என்பதே இதன் பொருள். “பிரபந்தமென்றது அடிவரையின்றிப் பலதாளத்தாற் புணா்ப்பது” என்கிறார் அடியார்க்கு நல்லார். “பிள்ளைக் கவிழுதல் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு எனும் தொகையதான” என்று பாட்டியல் நூல் கூறுகிறது. ஆனால் இன்று ஏறத்தாழ நூற்றிருபதற்கும் அதிகமானச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. சிற்றிலக்கியம் எனப்படும் சிறுநூல் வகைகளுள் ஒன்று குறவஞ்சியாகும். குறவஞ்சி என்பது குறவா் வாழ்வைச் சித்தரிக்கும் ஒரு சிற்றிலக்கியம் ஆகும். குற்றாலக் குறவஞ்சி சிற்றிலக்கியங்களுள் தனித்த அடையாளத்தைக் கொண்டது எனலாம்.  “செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்   கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்”  மலர் மணத்துடன் தமிழ் மணமும் சுமந்து வரும் தென்றல் தவழும் பெருமையினை உடையது. குற்றாலத் தலமும், திருக்குற்றாலநாதரும் கொண்ட சிறப்புகளை விளக்கவந்து, தானும் பெரும் பெயா் பெற்ற நூல் திருக்குற்றாலக் குறவஞ்சியாகும். திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி கி.பி.1781-இல் அரங்கேறியது.  வெயில் நுழைய முடியாத பச்சைப்பசேல் என்று இருண்ட காடாக இருந்த குற்றாலத்திற்குள் உறைந்திருந்த குற்றாலநாதரைத் தேடி அகத்தியா், மாணிக்கவாசகா், பட்டினத்தார், நாவுக்கரசர், திருஞானசம்பந்தா் இன்னும் பல சித்தர்கள் வந்தார்கள். திரிகூடராசப்ப கவிராயரும் வந்தார். பாற்கடல்போல் பொங்கி வழிகின்ற அருவி குற்றாலநாதா் அனுபவித்தால் போதும் ஆயுள் முழுவதும் மனதில் அப்படியே நிற்கும், நினைக்க நினைக்க ஆனந்தம்.  சுற்றாத ஊா் தோறும்  சுற்றவேண்டாம் புலவீா்  குற்றாலம் என்றொரு கால்  கூறுங்கள் – வற்றா  வடஅருவிபோலும்  வளம் பெருக்கும், மாளா  இடா்களையும் எந்தைகழல்.  என்று குற்றாலத்தையும், நாதரையும் புகழ்கின்றார்.    தலைவன் உலவாரக்கண்ட தலைவியொருத்தி அவன் மீது காதல் கொண்டு வாடி விரக வேதனையால் தவிக்கும்போது குறத்தி மகளொருத்தி அவளுக்குள் குறி கூறி பரிசில் பெற்று செல்கின்றாள். அப்போது அவளைத்தேடி வரும் குறவன் பரிசில் பொருள்களோடு வரும் குறத்தியைக் கண்டு ஐயுற்று வினவ அலட்சியமாக அவள் பதில் கூறுகின்றாள். பின்னா் இருவரும் இறைவனை வாழ்த்துகின்றனா். இதுவே குற்றால குறவஞ்சியின் அமைப்பு. இதுவசனம் விரவ இடையிடையே சிந்து கண்ணி முதலிய நாடகத் தமிழால் கீா்த்தனை வடிவில் பாடப்பெற்றுள்ளது.    குற்றாலக் குறவஞ்சி தன் உவமை நலத்தாலும், வருணனைத் திறத்தாலும் அழகு நலத்தாலும் தென் தமிழ்க்குச் சிறந்ததோர் அணியாய்த் திகழ்கின்றது.    பிள்ளையார் சுழியுடன் தொடங்கும் சொல்லழகு திருக்குற்றாலக் குறவஞ்சி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றது. பெரிய பிள்ளையாருடைய திருக்கைகள் ஐந்து, அவை கற்பகத்தருக்களைப் போன்றவை வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுக்கும் கைகள் அவை. காத்தல் தொழிலுக்கு இன்றியமையாதவை கைகளே. எனவே “ஐந்து கை வலான் காவலான்” என்று அடுக்குச் சொல்லில் அழகுபடி எடுத்துரைக்கின்றார்.    பன்னிரண்டு முதல் ஒன்று முடிய இறங்கு முகமாய் எண்களை இயைத்து,  “பன்னிரு கைவேல் வாங்கப் பதினொருவா்  படை தாங்கப் பத்துத் திக்கும்  நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும்  கடலேழும் நாடி ஆடிப்   பொன்னின் முடி ஆறேந்நி அஞ்சுதலை  சுனா் கொழித்துப் பாயுநான் மூன்றாய்த்  தன்னிருதாள் தாள் தரும் ஒருவன் குற்றாலக்   குறவஞ்சித் தமிழ் தந்தானே”  என முருகளை புகழும் இடம் மிகச் சிறப்புமிக்கது.    திரிகூடராசப்பருக்கு பலாமரத்தைக் கண்டதும், அது வெறும் மரமாக அவருக்கு தெரியவிலலை. இறைவன் வீற்றிருக்கும் கோவிலாகவேத் தெரிகின்றது. பழம், சுளை. வித்து, கிளை, களை எல்லாமே சிவலிங்கமாகத் தெரிகின்றது. வீதியில் இறைவன் உலா வந்து கொண்டிருப்பதைக் கூற கட்டியங்காரன் வருகிறான். அவனை,  “நோ் கொண்ட புரிநூல் மார்பும் நெடியகைப் பிரம்பும் ஆகக்  கார் கொண்ட முகிலேறு என்னக் கட்டியங்காரன் வந்தான்”  என்ற வரிகளில் கட்டியங்காரனின் நிறத்தை மழை மேகத்திற்கு உவமையாக்கி கூறுகின்றார்.    சிவபெருமான் வீதியில் உலா வருகிறார். அவா் ஏறி வருகின்ற விடையோ மலை போன்றதாகும். அதன் மீது ஏறியமா்ந்துள்ள இறைவன் மேற்குத் திசையில் தோன்றும் இளம்பிறையைத் தன் சடையில் சூடியவனாகக் கிழக்குத் திசையில் எழுந்து வரும் இள ஞாயிறு போல காட்சியளிக்கிறான்.  “மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்   நன்னகர மூதூா் வீதி  பாதர் விடைச் சிலம்பில் ஏறி  மேற் கெழுந்த மதிசூடிக் கிழக்கெழுந்த  ஞாயிறு போல மேவினரே”  வசந்த வல்லியின் அழகைக் கூறுகையில் இருண்ட மேகஞ் சுற்றி சுருண்டு சுழி எறியும் ஏறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழி கொண்டையாள் திருத்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் சிலையைப் போல வளைந்து, பிறையைப் போல் இலங்கு நுதலினாள் என வா்ணிக்கின்றார். மேலும்  “நடை கண்டால் அன்னந் தோற்கும்  நன்னகா் வசந்த வல்லி  விடை கொண்டான் எதிர் போய்ச்சங்க  வீதியிற் சங்கம் தோற்றாள்”  என்று விவரிக்கின்றார்.  இந்திரையோ இவள்  சுந்தரியோ தெய்வ  மோகினியோ – சிந்தை  முந்தியதோ கெண்டை   முந்தியதோ செங்கை  முந்திய தோதான்     என பைங்கொடி நாரி, வசந்த ஒய்யாரி பொன்பந்து விளையாடி குற்றாலத்தையே ஒரு கலக்கு கலக்கிவிட்டாள்.  இறைவன் பவனி கண்டு காதல் கொண்டு தன்னை மயக்கிய சித்தன் ஆரோ, வித்தைகாரராக விடை ஏறி வந்து மாயம் செய்தவன் யாரோ என்று வினவி, இப்படி ஓா் அழகைக் கண்டால் எந்தப் பெண்தான் மயங்கமாட்டார் மயங்கி,  “வாகனைக் கண்டு உருகுதையோ – ஒரு  மயக்கமாய் வருகுதையோ  மோகம் என்பது இது தானோ – இதை  முன்னுமே நான் அறியேனே”    என்று பாலும், படுகையும் நொந்து காதல் மயக்கம் கொள்வதை நிலாவைப் பழிப்பதைக் கண்ட தோழியா் காரணம் வினவ தன் மனம் கவா்ந்த குற்றால ஈசரிடம் தூது அனுப்புகிறாள். தூது எந்த நேரம் செல்ல வேண்டும் என்று தூதனிப்பி கூடலிழைத்துப் பார்கிறாள்.  வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்  மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்  தேன் அருவித்திரை எழும்பி வானின் வழி ஒழுகும்  செங் கதிரோன் பரிக்காலும் தோ்க்காலும் வழுகும்  கிழங்கு கிள்ளி தேன் எடுத்து, வளம்பாடி நடிப்போம்  கிம்புரியின் கொம்பு ஒடித்து வெம்பு திணை இடிப்போம்.  என்னும் பகுதிகள் சிறப்பானவை.    நாட்டு வளம் கூறும் போது,  “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்  ஒடுங்கக் காண்பது யோகியா் உள்ளது  வாடக் காண்பது மின்னள் மருங்கு  வருந்தக் காண்பது சூலுண சங்கு  போடக் காண்பது பூமியில் வித்து  புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து  தேடக் காண்பது நல்லம் கீர்த்தி  திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே.  என்ற பாடலின் மூலம் ஆசிரியா் உணா்ச்சிக் கூறுகளைத் தெளிவாகக் கூறுகிறார்.    பெண்களின் தலைவி பெண்ணென்று சொல்வது “திரி“ என்று பொருள். பெண்ணுடன் சேர என்றால் “கூட” என்று பொருள். திண்ணமாகவல்லவன் என்றால் “நாதன்“ என்னும் பொருள்படும். இவற்றையெல்லாம் சோ்த்துப் பார்த்தால் “திரிகூடநாதன்“ என்று பெயா் ஆகும் என்று ஆசிரியா் தன்னுடைய கற்பனையைக் குறத்தி மூலம் கூறுகிறார்.     திரிகூட சிங்கனால் வேட்டையாடப்படும் பறவைகள் கூட்டமாகப் பறந்துவரும் அழகினைக் கற்பனைச் செறிவுடன் காட்டுகின்றார் கவிராயா். திரிகூடநாதர் சென்னியிலே வைத்துள்ள புனற் கன்னியாகிய சங்கையைத் திருமணம் செய்தபோது அவளுக்குச் சீா்வரிசை செய்யவில்லை, இன்று நானே அவ்வரிசையைச் செய்வேன் என்று அவளுடைய அன்னையாகிய ஆகாய கங்கை கருதி, சீா்வரிசையோடு மகளுடைய அடுக்களை காணப் புறப்படும் நோ்த்தி போல, வானம் முழுவதும் தம் நிறமாகவே தோன்றுமாறு வருகின்றன குருகினங்கள்.    மதுரை நகரைக் கைப்பற்றிச் சைவத்தை வெளியேற்றிய சமணக் கூட்டத்தைக் கழுவேற்ற திருஞானசம்பந்தரின் முத்துப்பந்தர் வருவதைப் போல கொக்குக் கூட்டங்கள் வருகின்றன. சூலமேந்திய திரிகூடநாதரின் மனைவியான குழல்வாய்மொழி அம்மை அணிந்த பஞ்ச வண்ணப் பட்டாடைப் போல, பல வண்ணப் பறவைகள் அணியணியாய் வருகின்றன. இவ்வாறாய்ப் பலபட வருணித்துப் பாடியுள்ளார். கவிராயர் குற்றாலத்தின் அருகே அமைந்த பல்வேறு ஊா்கள், நீா்நிலைகள், வள்ளல்களின் நிலங்களில் பறவைகள் இறங்குவது என்று விரிவாகவே பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.    கூடல் இழைத்தல், குறிகேட்டல், நீராடல் போன்ற நம்பிக்கைகள், சகுனம் பார்த்தல், படைத்தல், தெய்வம் தொழுதல் போன்ற பழக்கவழக்கங்கள், குறவர் இன மக்களின் தொழில், பெண்களின் நிலை, சமயநூற் கருத்து நலங்கள், பழமொழிகள், விடுகதைகள், பேச்சு வழக்குச் சொற்கள், புராணமரபுச் செய்திகள், நாட்டுப்புற நம்பிக்கைகள், என பல்வேறு செய்திகளை விளக்கமாக தழிழுணா்வுடன் எடுத்துரைக்கின்றார்.    திரிகூடராசப்பக் கவிராயர் சுற்றுப்புறசூழல் ஆர்வலராய் இருந்து, தன் படைப்புகளில் மிகுதியான இயற்கை வா்ணனைகளை இணைத்துள்ளார். காண்பதற்கு ஆயிரம்கண் போதாத இயற்கை அழகினைக் கொண்ட குற்றாலக் காட்சிகள், குற்றாலக் குறவஞ்சியில் திகட்டாத இனிமையுடன் காட்டப்பெற்றுள்ளது. திரிகூடராசப்பக் கவிராயரின் கவித்திறனை அவை முழுவதுமாய் வெளிப்படுத்துகின்றது. சொல்நலம், பொருள் நலம், தொடை நலம், அணிநலம், சுவைநலம், ஒலிநலம் முதலான நலங்கள் பல கொண்டிருக்கும் குற்றாலக்குறவஞ்சிக்கு ஈடுயிணை இல்லாத குறவஞ்சியே இல்லை எனச் சொல்லலாம்.   முனைவர் பா.வேலம்மாள்,  முதல்வா்,   அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூா்.      []     இசையறிஞர் நா.மம்மது, ஆய்ச்சியர் பாடிய முல்லைத் தீம்பாணி, கட்டுரை ஆய்ச்சியர் பாடிய முல்லைத் தீம்பாணி      முதன் முதலில் மானிடர் தோன்றியது குறிஞ்சி நிலமே என்று மானிட இயலாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். குறிஞ்சி நிலத்தில் சுற்றி அலைந்து வேட்டைச் சமூகமாக வாழ்ந்த முதல் மாந்தர் சிறுசிறு இருப்பிடங்களையும் அமைத்து வாழத் துவங்கினர். அவ்வாறு குறிஞ்சி நிலத்தில் ஏற்பட்ட சிற்றூர்களை நம் சங்க இலக்கியங்கள் குறிஞ்சி, சிறுகுடி, சீறூர் எனப் பதிவு செய்துள்ளன. முல்லை நிலக்குடியிருப்புகளை பட்டி, பாடி, சேரி எனச் சான்றோர் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறான சிற்றூர், சிறுகுடி என்பதே பிற்காலத்தில் நகரங்களாகவும் பேரூர்களாகவும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.    தொடக்க காலச் சிற்றூர், சிறுகுடியிருப்புகளில் வாழ்ந்த எளிய மக்கள் பாடியதே நாட்டுப்புறப் பாடல்கள், இப்பாடல்களில் அமைந்த எளிய பண்களே நாட்டுப்புறப் பண்கள் கர்நாடக (இசை) ராகங்கள், சாஸ்திரிய ராகங்கள், இலக்கணப்படுத்தப் பட்டுள்ள பண்கள் யாவும், நாட்டுப்புற மக்களின் பாடல்களில் அமைந்த எளிய பண்களில் இருந்து உருவானவையே.  "All our classical ragas emerged from folk songs" என்று புகழ்பெற்ற சரோட் இசைக் கலைஞர் அம்ஜத் அலிகான் குறிப்பிடுகின்றார். தொடக்க கால எளிய இப்பண்களில் அமைந்த பாடல்களைப் பாடி ஆடிய மகளிர் குழுக்களை "பண்ணை", "ஆயம்", "ஓரை" என்ற சொல்லாட்சிகளில் தொல்காப்பியர் பதிவு செய்கிறார். "விளையாட்டு ஆயம்", "ஆயத்தார் சொல்" என்ற சொல்லாட்சிகளை நம் பழம் பனுவல்களில் நிறையவே நாம் காண்கிறோம். பசுத்திரள், ஆனிரை போன்ற "ஆ" எனும் அடிச்சொல்லில் இருந்தே ஆயம், ஆயர், ஆய்ச்சியர் என்ற சொற்கள் தோன்றியுள்ளன.    இம்முல்லை நில ஆயரும், ஆய்ச்சியரும் பாடிய எளிய பண் முல்லைப்பாணியாகும். இசையின் ஏழு சுரங்களில், மூன்று அல்லது நான்கு சுரங்களைக் கொண்டு பாடும்போது இசை இனிமை தோன்றாது. அது ஒருவகை "ஓதுதல்" (chanting) போல் அமையும் குறைந்தது ஐந்து சுரங்களால் அமைந்த பண்களில் பாடப்படும் பாடல்களே இனிமையாக, சுவையாக, பண்சாயலுடன் அமையும்.    "குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்  வழுவின்றி இசைத்து வழித்திறம்காட்டும்  அரும்பெறல் மரபின் பெரும்பாண்........" (சிலம்பு 5: 35-37)  என்றும் "பண்ணியாழ்ப் புலவர், பாடற்பாணர்........" (சிலம்பு 5: 185)  என்றும் "குரல்வாய்ப் பாணர்........" (சிலம்பு 5: 200)  என்றும் போற்றப்பட்ட பாண்குடி, இத்தகைய எளிய பாடல்களில் அமைந்த சுரங்களைக் கண்டுபிடித்து பண்களை வகைதொகைப்படுத்துகின்றது. ஐந்து சுரங்களில் அமைந்த பண்கள் உலகில் பல நாடுகளில் நடப்பில் உள்ளன.     சீன நாட்டின் ஐந்து சுரப்பண்கள் மட்டுமே பாடுதல் வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாடே உண்டு. ஐந்து சுரப்பண்கள் மிக எளிமையானவை, இனிமையானவை. சில சான்றுகள் முல்லைப்பாணி (மோகனம்), குறிஞ்சிப்பாணி (மத்யமாவதி), நெய்தல்பாணி (இந்தளம்), பாலைப்பாணி (சுத்தசாவேரி), மருதப்பாணி (சுத்ததன்யாசி), வைகறைப்பாணி (சிவரஞ்சனி), திலங், சந்திரகௌன்ஸ் (கதரம்), நாக சுராவளி, வரமு, கம்சநாதம், மலகரி, குந்தளவராளி, ரேவகுப்தி, பூபாளம்,பௌளி, ஸ்ரீ கண்டி, அம்சத்வனி, அமிர்தவர்சினி, அம்சானந்தி, அட்டபாதம், சுனாதவினோதினி, ரேவதி, இரதிபதிப்பிரியா, வைசயந்தி முதலியன.    "தெய்வம் உணாவே மா, மரம், புள், பறை  செய்தி, யாழின் பகுதி.............." என்ற தொல்காப்பிய (அகத்திணையியல் 20) நூற்பாவிற்கு உரை கூறும் இளம்பூரணர் "யாழின் பகுதி என்பது பண் அது சாதாரி" என்பார். இது முல்லைநிலம் பற்றிய செய்தி. "யாழ்", "முல்லை யாழ்" என்பார் நச்சினார்கினியர். எனவே நிலத்திற்கொரு பெரும்பண்ணும், சிறுபண்ணும் தமிழரால் வகுக்கப்பட்டது. இதன் மூலம் தெரியவருகிறது. முல்லைநிலப் பெரும்பண் முல்லை, முல்லையாழ், செம்பாலை என்ற இன்றைய அரிகாம்போதி, முல்லைநிலச் சிறுபண் முல்லைப்பாணி, முல்லைக்குழல் சாதாரி என்ற இன்றைய மோகனம்.    "பண் முல்லைத் தீம்பாணி என்றாள் (17: செந்நிலை) என்பதனாற் 'சாதாரியும்' கூறினாள்" என்று சிலப்பதிகாரப் பதிக உரையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்.    "செந்நிலை மண்டலத்தால்.......பாடுதும்  முல்லைத்தீம்பாணி என்றால்" சிலம்பு (17 : 17)  "குரல் மந்தமாக, இளி சமனாக  வரன்முறையே துத்தம் வலியா உரனிலா  மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின்  பின்றை யைப் பாட்டெடுப்பாள்" சிலம்பு (17 : 18)    மேற்கண்ட ஆய்ச்சியர் குரவைப் பாடல் 18ல், குரல்(ச), இளி(ப), துத்தம்(ரி), விளரி (த), நட்பின் பின்றை (க) என்று முல்லைத்தீம்பாணியின் சுரங்களைக் கூறுகிறார். இது இன்றைய மோகன ராகத்தின் சுரங்கள். இந்தப் பண்ணில் முல்லைநில எளிய மக்களாகிய ஆய்ச்சியர் பாடுவதாக இளங்கோ அடிகள் அமைத்துக் காட்டுகின்றார்.    நாட்டார் பண்கள் பெரும்பாலும் எளிய முறையில் பாட ஏற்றதாய், ஒருதாளத்தில் (மத்திமஸ்தாயி  middle octave) அமைந்திருக்கும். இவை அந்திய ராகங்கள் என இக்காலம் அழைக்கப்படுகின்றன. சான்றாக  செஞ்சுருட்டி, நாத நாமக்கிரியை, புன்னகவராளி - தாரமுடிவுப்பண் (நிசாதாந்திய ராகம்)  குறிஞ்சி - விளரி முடிவுப்பண் (தைவதாந்திய ராகம்)  நவரோசு, சைந்தவி - இளிமுடிவுப்பண் (பஞ்சமாந்திய ராகம்)  ஆய்ச்சியர் குரவை பாடல் 17ல் செந்நிலை மண்டிலம் என்று இளங்கோ அடிகள் கூறுவது, மந்ததாளம், சமன்தாளம், நடுத்தாளம், சமநிலை (மத்திமஸ்தாயி, middle octave) உரையாசிரியர்களும் செந்நிலை - சமநிலை என்றே கூறியுள்ளனர். சமநிலை - சமன்தாளம் (சமஸ்தாயி). "குரல் மந்தமாக" என்ற பாடலில் (18)இல் வருவது மந்தக்குரல் அதாவது சமநிலைக்குரல் (மத்தியஸ்தாயி சட்சம்).    "குரல் என்னும் நரம்பு மந்தசுரமாக, இளி என்னும் நரம்பு சமசுரமாக ----- விளரியையும் வலிமை இல்லாத மந்த சுரமாக பிடிக்கின்றவள்......" என்று அடியார்க்கு நல்லார் மந்தத்தாளத்தில் (மத்திமஸ்தாயி) ஒன்றிலேயே பாடல் இயங்குவதைச் சுட்டிக் காட்டுகின்றார். மேற்கண்ட செய்திகள் ஆய்ச்சியர் குரவையில் ஆய்ச்சியர், நாட்டார் பண்ணாக முல்லைப்பாணி (மோகனம்) பாடியதைத் தெரிவிக்கின்றன.    பண் என்றம் பெரும்பண் என்றும் யாழ் என்றும் பாலை என்றும் ஏழுசுரப்பண்களுக்கு நம் முன்னோர் பெயர் தந்துள்ளனர். இக்காலம் அதுவே சம்பூர்ணம், மேளம், மேளகர்த்தா (generative) என்று அழைக்கப்படுகின்றது.    தொல்காப்பியர் "யாழின் பகுதி" என்று குறிப்பிடுவது சிறு பண்களை. திறம், கிளை என்று அழைக்கப்பட்டவை. இக்காலம் ஜன்ய ராகங்கள் (derivatives) என்று வகைப்படுத்தப் படுகின்றன. சிறப்பாக "திறம்" என்று அழைக்கப்பட்டவை ஐந்து சுரப்பண்களையே, பாணி, குழல் என்றழைக்கப்பட்ட ஐந்து சுரப்பண்கள் இப்போது "ஔடவம்" என்று கூறப்படுகின்றன.  "பாடுதும் முல்லைத்தும் பாணி என்றாள்" - சிலம்பு 17:(17)  "முல்லை யத்தீம்குழல் கேளாமோ தோழி" - சிலம்பு 17:(21)  "கொன்றையந்தீம்குழல் கேளாமோ தோழி" - சிலம்பு 17:(19)  "ஆம்பலந்தீம்குழல் கேளாமோ தோழி" - சிலம்பு 17:(20)    மேற்கண்ட பாடல்களில் பாணி, குழல் என்று கூறப்பட்டவை ஐந்து சுரப்பண்களே நிலத்தின் சிறுபண்களாக வகுக்கப்பட்டவை. இவ்வகை ஐந்து சுரப்பாணி என்ற திறப்பண்கள் தொல்காப்பியத்தில் "பகுதி" என்று பதிவு பெறுகின்றன.  "ஆடல் பாடல் இசையே தமிழே"- சிலம்பு 3:45  என்ற அரங்கேற்றுக் காதை அடிக்கு உரையாசிரியர்கள் கூறுவது : இசையாவது நரம்படைப்பால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்றொன்றாகிய ஆதி இசைகளும். அவையாவன "உயிர், உயிர்மெய் அளவு உரைத்த ஐம்பாவினும் உடல் தமிழ் இசை ஏழுடன் படுத்து மூவேழ் பெய்து.... பன்னீராயிரம்" என்ற நூற்பாவை மேற்கோளாகக் காட்டுகின்றனர். இதில் வரும் ஐம்பால் எனும் சொல் ஐந்து சுரப்பண்களைக் குறிக்கிறது என்று தெளியலாம். "ஏழுடன்" என்பது ஏழுசுரப் பண்கள் எனக் கொள்ளலாம்.    "ஏழ்புழை ஐம்புழை யாழிசை...." பரிபாடல் 8:22  இப்பரிபாடல் வரியில் வரும் புழை என்ற சொல் துளை மற்றும் துளை வழிப்பிறக்கும் சுரத்தையும் குறிக்கும். இவ்வகைப் புல்லாங்குழல் மடகாஸ்கரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐந்து சுரப்பண்களுக்கும், ஏழுசுரப் பண்களுக்கும் தனித்தனிப் புல்லாங்குழல்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது.    ஏழ்புழை, ஐம்புழை என்பவை ஏழுசுரப்பண்களையும் ஐந்து சுரப்பண்களையும் குறிப்பதாகக் கொண்டால், நிலத்திற்கான பெரும்பண், சிறுபண் பற்றி இப்பரிபாடல் காட்சிப்படுத்துவதாக் கொள்ளலாம்.    "வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்" - சிலம்பு 8 : 36 இச்சிலம்பின் வரியும் ஐந்து சுரப்பண்களையும் ஏழுசுரப் பண்களையும் குறிப்பதாகச் சொல்லலாம். இவ்வாறாக நிலத்திற்கான ஏழுசுரப் பெரும்பண்களையும் சிறுபண்களையும் மிக முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் வகுத்துக் கொண்ட இசை முறையினை நம் பனுவல்கள் நெடுகவே பதிவு செய்திருக்கின்றன.    இக்காலம் "பஞ்சபாவம்" என்றும் மேலை இசையில் (order of 5th) என்றும் கூறப்படுகின்ற வழக்கு, தமிழிசையில் "இணைமுறை" என்று அழைக்கப்படுகின்றன.  "இணை, கிளை, பகை, நட்பி என்று இந்நான்கின்  இசைபுணர் குறிநிலை...." சிலம்பு 8 : 33,34    இந்த இணைமுறை என்ற ஏழன்முறையில் சப, பரி2, ரி2, நி2, த2, க2 என்று ஏழாவது ஏழாவதாகச் சென்றால் "ச,ரி2,,க2,ப,த2" என்ற முல்லைப்பாணியின் சுரங்கள் கிடைக்கும். இது இன்றைய மோகன ராகம். தமிழிசையின் தலைமைப் பாலையான அரிகாம்போதியின் கிளைப்பண் மோகனம். எனவே தமிழிசையின் தலைமையான சிறுபண் இதுவே. இது பழமையான பண். எனவே இதுவே தமிழிசையின் தொன்மையான ஐந்து சுர முதல் பண். ஆகவே இதை நாட்டார் பண்ணாக ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகள் பதிவு செய்கிறார். முல்லைங்பபாணி என்றும் முல்லைக்குழல் என்றும் பழங்காலத்தே இப்பண் பெயர் பெற்றிருந்ததையும் அடிகளார் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். முல்லை நில மக்கள் ஆயர், ஆய்ச்சியர், கோவலர், இடையர், இடைச்சியர் எனப்பட்டனர். ஒரு காதைக்கே ஆய்ச்சியர் குரவை எனப் பெயரிட்டுள்ளார் அடிகளார்.    "கோவலர் முல்லைக்குழல் மேற்கொள்ள...." மணிமேகலை 5:136 என்று முல்லைநிலக் கோவலர் இப்பண் பாடிய செய்தியை மணிமேகலை குறிப்பிடுகின்றது. ஆய்ச்சியர் குரவையில் ஆய மங்கையர் எழுவர் இளங்கோதையர் முதலில் முல்லை நிலப் பெரும்பண்ணான முல்லையாழில் (செம்பாலை) தொல் ஏழிசை (அரிகாம்போதி) பாடி ஆடுகின்றனர். பின்பு முல்லை நிலச் சிறுபண்ணான முல்லைப்பாணி (முல்லைக்குழல் - மோகனம்) பாடி ஆடுகின்றனர். பக்திக் காலத்தில் தேவாரம் 3 : 67-99 மற்றும் 4 : 9    ஆகிய பதிகங்கள் முல்லைப்பாணியில் (சாதாரி) பாடப்பட்டுள்ளன.  திருவாசகம் வழமையாக இப்பண்ணிலேயே பாடப்பட்டு வருகின்றது. திருவாசகம் நாட்டார் மரபான திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருகோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல் என்ற வடிவங்களைக் கொண்டது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.    பாசுரத்தில், திருமங்கை ஆழ்வாரின் பெரியதிருமொழி மூன்றாம் பத்து பாடல் "வாட மருதிடை..." மற்றும் எட்டாம் பத்தின் ஒன்பதாம் பாடல் "கைம்மாளம்..." முல்லைப்பாணியில் (சாதாரி - மோகனம்) அமைந்தவை.  ஐந்து சுரப்பண்கள் முதற்கொண்டு தமிழிசையின் பற்பல பண்களும் பல்வேறு முறைகளில் பெயர் பெறுகின்றன. மலரால், மரத்தால், இசைக்கருவியால், பெரும்பொழுதால், சிறுபொழுதால், தெய்வத்தால், நிலத்தின் மக்களால் என நம் பண்கள் பல்வாறு பெயர் பெற்றிருக்கின்றன.  முல்லையாழ் (செம்பாலை - அரிகாம்போதி) - மலர்ப்பெயர்.  பாலையாழ் (அரிகாம்போதி மற்றும் சங்கராபரணம்) மரப்பெயர்.  யாழ், குழல் - இசைக்கருவியின் பெயர்.  வேனல் பாணி (சுத்ததன்யாசி) - பெரும்பொழுதின் பெயர்  யாமை யாழ் (நடபைரவி), வைகறைப்பாணி (சிவரஞ்சனி) - சிறுபொழுதின் பெயர்கள்  வேலன்பாணி (மத்யமாவதி) - நிலத் தெய்வங்களின் பெயர்  மாயோன்பாணி (மோகனம்) ஆயன்குழல் (மோகனம்) - நிலத்தின் மக்கள் பெயர்.    "அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்  குழல் போலும் கொல்லும் படை" குறள் 1228  பிரிவு, மாலைப் பொழுது, ஆயன்குழல் முதலியவற்றை வள்ளுவர் இவ்வாறு பதிவு செய்கிறார்.  இந்தளத்தில் (39 பதிகங்கள்) அமைந்த பதிகங்களை அடுத்து அதிகமான பதிகங்களில் (33 பதிகங்கள்) சம்பந்தர் முல்லைப்பாணியில் (மோகனம்) பாடியுள்ளார்.    சீனநாட்டு வாழ்த்தும், நமது தமிழ்த்தாய் வாழ்த்தும் இப்பண்ணில் உள்ளன. பக்தி, நாடக, நாட்டிய, திரைப்பாடல்களில் இப்பண்ணே அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்துஸ்தானியில் இப்பண் "பூப், போபாலி" எனப் பெயர்பெற்றுள்ளது. நிலத்தால் முல்லைப்பாணி என்றும் அரிகாம்போதியில்(குரல்பண்) பிறப்பதால் (கிளைப்பண்) குரல்பாணி என்றும், புல்லாங்குழலிசையில் இனிமை பெறுவதால் குழல்பாணி என்றும் முல்லை நிலத்தெய்வத்தால் "மாயோன் பாணி" என்றும் பக்திக் காலத்தில் "சாதாரி" என்றும் இக்காலம் மோகனம் என்றும் பெயர்பெறும் இத் தொன்மைப்பண் ஒரு நாட்டார் பண்.    "கூடமேல கூடவச்சி குமரிப்பொண்ணே எங்கே போற" மற்றும் "போறவளே போறவளே பொன்னுரங்கம்", "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி" போன்ற திரைப்பாடல்களில் இப்பண்ணின் நாட்டார் சாயலைக் காண முடியும்.    மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையுடைய இப்பண் காலங்காலமாக நம்மால் காத்துவரப் படுகின்றது. இதற்கான காரணம் இப்பண்ணில் வரும் இப்பாலைக் கேட்டால் தெரியும்.    "துள்ளாத மனமும் துள்ளும்  சொல்லாத கதையும் சொல்லும்".    இசையறிஞர் நா.மம்மது  30.03.2019             []     Kalpitha M, Books, Poem Books are always friendly Because they never keep you bored They teach you moral values And make you good and wise Books never complain or shout at you And wait for you all day They never tease you nor make you sad All they do is making you happy by reading them When you feel lonely - remember That there are few friends nearby So spend your time by reading books And inspire many to read books...   - Kalpita. M IXth Standard (2021)   []     Dammam Bala, Work from home, Article Ten years ago, I landed into this land of dragons. I wasn't aware the year is of great significance to two countries thousands of kilometers apart. Yes, Thang lang, called Ha Noi these days, celebrated 1000 years simultaneously with Than Gia Vu in An do.   An do is Indian in Vietnamese. Than Gia Vu is Thanjavur! That day I went to Hoan Kiem Lake in Hanoi to take part in the celebrations, lots of floral decorations, serial lights, bikes everywhere, many families, men carrying their kids on their shoulders and beautiful butterfly like girls fluttering in all directions, but be careful and watchful guys! Otherwise you may get gently pushed down into the crowd that like it happened to my friend Abishek Misra and his Samsung Note was barted away for a cup of ice cream!!   The country loves to eat and drink outside every day. Freely flowing green tea during day time and burgundy golden beers after the sunset. Zamil my saudi company has factories in north and south Vietnam. Hanoi in north and Saigon in south.    After reunification of Vietnams, Saigon became HCMC- Ho Chi Minh City. I went there first time in 2011, looking for a Hindu temple to pray when Aakash joined medical school in Bharatpur Nepal. I was curious to know if Sai baba was in anyway connected to Saigon; was pleasantly surprised to see him in Dandayuthapani temple in HCM. Crazy me landing into right destinations by my not so right and baseless google searches.   During years 2011 to 2014 almost every alternate month I was flying from Ha Noi to HCMC until I got transferred to our Dong Nai factory, 50km away from HCMC. In the middle of year 2015, Radhika and me had to say good bye to Zamil and return back to India. After that I almost forgot Vietnam meandering back in Saudi for three more years and the last two years in India.   Back in Oct 2019, I got an opportunity to join another steel company in HCMC. The day I joined, I regained the Vietnamese hospitality, the beer culture while my colleagues enjoyed the sea food and meat, I'm happy with my tofu, boiled spinach and garlic rice.   Year 2020 arrived with a surprise to Vietnamese, they could no longer drink and drive anymore. First time in the history, bikers need to be sober when they reach homes in the evening. The business activities slow down every January looking with TET the Vietnamese lunar new year around the corner to arrive by the month end. Its nothing but the other name of Chinese new year!    But the word China is dreaded and forbidden in Vietnam, similar to Pakistan in India. During the TET holidays we drank a lot, back to back sessions. Our friend from China had arrived in Wuhan by this time. We were joking at each other "you are the virus" while considering corona as just an internal affair of China. I had a short trip to Africa by January end, Radhika and Ashika arrived in HCMC by February 1st week nobody bother to check us during our flights.    With my wife and daughter, I was roaming around freely in HCM while Ashika was enjoying her Cafe Sua Da while Radhika got engaged with her newly discovered You Tuber passions. I asked Ashika if she could extend her stay with us until March, but she stuck to her original plan to return to Melbourne by 25th Feb, which I think now was a right decision.   By March 2020, Corona has become a global nuisance. Europe has started melting under the covid's heat. We stared hearing about covid cases in Hongkong, Singapore, Bangkok and Philippines. The other Sunday evening, my assistant Phuc a Vietnamese Catholic called me in Zalo with the breaking news! Corona has arrived Vietnam shores, his friend's sister was in the same flight with the air hostess tested positive upon arrival in Tan Son Nhat Int'l airport HCMC. Air hostess became F0, Phuc's friend's sister F1 along with 250 passengers. Phuc's friend the F2 met Phuc in Church for evening chorus making Phuc F3 with no symptoms or infections what so ever. We asked Phuc to self quarantine to be in the safe side for two weeks time and he started working from home until end of March. Later the F1 girl was found negative for covid test which otherwise would have upgraded to F0 status.    Infections found left and right in Hanoi, Danang and HCMC. Ten thousand people quarantined in north Vietnam. Some foreigners, pilots landed HCMC infecting some in Buddha bar, Indian restaurant with areas near airport and district one becoming hotspots. Too many public announcements in my apartment, security checking temperature, offering sanitizer at the main gate. There was even an emergency assembly announcement one day morning 5 am that made us running down from 7th floor.     From 1st of April, we declared lockdown for office started work from home extended twice until month end now. Tri ky the busiest local restaurant opposite to my balcony is silent since ages after one of its waitress was found positive on 16th March. Radhika and myself come out of our apartment once in two three days to buy groceries and milk from Vinmart down stairs.    Couple of days ago, we had a long walk to the co-op mart supermarket crossing the deserted Gia Dinh park which otherwise stays packed with evening walkers and joggers. Business appears almost normal in HCM with a steel building getting erected near our place, banks shops open and bikes still on the road. All restaurants, bars, pubs and massage centers are closed until further notice. Govt has registered 268 positive cases until now with a majority declared cured.    There is a talk to relax the lockdown with social distancing, mask and sanitizer to continue, to resume local buses, trains and flights by early May downgrading the covid status. All said and done, life in Vietnam will not be the same anymore in same lines with bitter and sad pessimistic mindset sowed by the virus in two hundred plus countries across the world.     []   []   Creative Commons Attribution -Non Commercial - ShareAlike            (யாரும் பகிரலாம், விற்பனை கூடாது)  தமிழ்ப் பெருநூல் என்றும் என்றென்றும் உலகத் தமிழர்களுக்கு இலவசமாகவே கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.  பெருநூலிற்கு தரவுகளை அனுப்பிய சிறப்புமிகு எழுத்தாளர்கள், படைப்பாளிகள் யாருமே எந்தவித தொகையையும் பெறவில்லை. உலகிற்கு இவை இலவசமாக கிடைக்க வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியில் சிந்திக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நூல் PDF, E Book வடிவங்களில் இலவசமாகக் கிடைக்கும்.   அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை, ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புகளும் இந்த நூலின் பிரதிகளை அச்சிட சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து அந்த நிதிநிலைக்கு ஏற்ப முடிந்த அளவிற்கு அதிகமான பிரதிகளை அச்சிட்டு இலவசமாக தமிழ் சமூகத்திற்கு வழங்கும்.  உங்களுக்கு அச்சிட்ட பிரதிகள் தேவையெனில் மன்றத்தை தொடர்புகொள்ளவும் (appliedtamil@gmail.com). உங்களுக்கு தேவைப்படும் பிரதிகளை Print On Demand முறையில் நாங்களே அச்சிட்டு, அச்சிட ஆகும் செலவையும் தபால் செலவையும் மட்டுமே பெற்றுக்கொண்டு  உங்களுக்கு நூல்களை வழங்குவோம். எந்த சூழலிலும் லாபத்திற்கு இந்நூலகளை யாரும் விற்பனை செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், நூலின் பகுதிகளை - ஆசிரியர்களின் பெயர்களை - அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அகற்றவோ மாற்றவோ கூடாது என்பதற்காகவும் இவ்வகையான ஏற்பாடு.  "உழுபவனுக்கே நிலம் சொந்தம், எழுதுபவனுக்கே எழுத்து சொந்தம்". "ஒருவர் உருவாக்கிய படைப்புகளை மற்றவர் விற்று உண்பது அறமற்ற செயல்"   மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை , ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் அறக்கட்டளை                                          25.12.2021      மின்னூலின் காப்புரிமை: Creative Commons Attribution -NonCommercial-ShareAlike ( யாரும் பகிரலாம், விற்பனை கூடாது)