[] []   தந்தை பெரியார்    கே. பி. நீலமணி   [] 2006   Exported from Wikisource on 09/06/16 https://ta.wikisource.org/s/7tn4           உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)  இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode  என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.  ***   இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org  ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org  ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.       +----+----+----+ | [] | [] | [] | | | | | |   |   |   | +----+----+----+    Universal (CC0 1.0) Public Domain Dedication    This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.  You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. ***   This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.+          தந்தை பெரியார்         அமரர் கே. பி. நீலமணி         லியோ பதிப்பகம் 37, மந்தைவெளி தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028.          அணிந்துரை   இது என்ன வரலாற்று உரைநடையா?-ஐயம் வரும்! தென்றல் தவழ்கிறது. தேனருவி வீழ்கிறது. புரட்சிப் புயல் வீச்சும் உண்டு. சின்னஞ்சிறு தொடர். சிங்காரச் சொல்லமைப்பு - செவிக்கு விருந்தாய் தேனிசை போல் உவமைகள்- உருவகங்கள். எழுத்து மன்னன் "நீலமணி" பிடில் வாசித்துப் பழகியவர் என்பது படிக்கும் போதெல்லாம் பலமுறை உணர்ந்தேன். எழுத்தில் ஏற்றம், எண்ணக் குவியல். சிந்தனைச் சிகரங்கள் - இப்படிப் பலப்பல. 26 ஆண்டுகள் தினமணியின் இணை ஆசிரியரல்லவா? என் நண்பர் கீழாம்பூர் அவர்கள் இப்படி என்னை முன்னுரை எழுதப் பணித்து விட்டாரே! என்ற பொறுமல் என்னுள் இருந்தது உண்மைதான். ஆனால் நூலைப் படிக்கும்போது தான், நூலுக்கு முன்னுரை எழுதச் சொல்லி நமக்கு உயர்வு தந்திருக்கிறார் என்று உணர்ந்தேன். குழந்தையும் படிக்கலாம் - புரியும்! இளமையும் ஏற்கும். முதுமை, படித்து முறுவல் பூக்கும்! பெரியாரைப் பற்றிப் பொருள் உள்ள சொல் வளம் புத்தமிழ்தாய் இனிக்கிறது.      “படரும் சாதிப்படைக்கு மருந்து -     மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு     அயலார் எதிர்ப்புக்கு அணையாவிளக்கு"    தொண்டு ஒன்றே - வாழ்வின் குறிக்கோள் -    எப்பொருளிலும் மெய்ப்பொருள்கண்டமுனிவன்-(புத்தன்)    தரங்கெட்டவரின் வசவைப் பொறுத்தவர்    மனப்பிழை இன்றி நடந்த மனிதர்    ஆசைகளை அடக்கி உயர்ந்த அறிஞர்    மயக்கம் இல்லாத நல்லறிவாளர்    பொது நன்மையினால் கேடு வருகுது என்றால்    அக்கேட்டைக் கேட்டுப் பெறும் தலைவர்    ஊக்கம் மிகுதியே வலிமை எனக் கொண்டவர்    சிங்திப்பார்- தெளிவார்- உறுதியாய்ச்சொல்வார் -    அதிராத மனிதர் -    மனம் இனிக்கப் பழகும் மாமேதை -    சமுதாயப் பண்பின் சரித்திரம்.    ஒளிக்காத மனமும், உயர்ந்த கடமை உணர்வும்    ஒரு சேரக் கொண்ட உயர்தமிழர்.   இவரே பெரியார் - திரு. நீலமணி அவர்கள் - நிலவைக் குழந்தைக்கு காட்டிச் சோறு ஊட்டுவது போல் - பெரியாரைப் பல்வேறு நிலைகளில் காட்டுவார். சிந்தனை அமிழ்தை ஊட்டுவார். பெரியாரின் கருத்துக் குவியல்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு பகுதியிலும் - தொடக்கத்தில் பதிவு செய்துள்ள பாங்கு மிகச்சிறப்பாக உள்ளது. நான் யார்? என்ற வினாவிற்குப் பெரியாரின் கூற்றை வருமொழியாக்கி வரைந்திட்ட தொடரின் தொடக்கம். “ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தினரை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டைமேற்கொண்டு அதேபணியாய் இருப்பவன்.” நீலமணி அவர்கள் பெரியாரை அறிமுகஞ் செய்யும் ஒவ்வொரு வரிகளிலும் உண்மை ஒளிர்கிறது. “தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாள் எல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர்-தந்தை பெரியார்” என்கிறார். உடல் வருந்த ஏர்பூட்டி, நிலம் உழுது, களை எடுத்து, நாற்று நட்டு, நீர் பாய்ச்சிக் கதிர் அறுத்து, நெல் நீக்கிய அரிசியை ஆதிதிராவிடன் தீண்டலாம் - ஆனால் அவன் விளைவித்த அரிசி, வெந்து சோறானதும், அந்த ஏழை அன்னியப்பட்டுப் போனான்! அதைத் தாழ்ந்தவன் பார்த்தால் குற்றம்; சோற்றைத் தொட்டால் தீட்டு; எத்துணை பெரிய சோகம். ஆலயத்திற்கான அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து உச்சியில் கோபுரக் கலசம் வைக்கிறவரை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு ஆலயத்தின் மணிக்கதவுகள் திறக்க மறுப்பதேன்? இப்படி அடுக்கடுக்கான கீழ்சாதியினரின் இதயத்தைக் கீறிக் கிழித்து குருதியை ஓடவிடும் மேல் வருணத்தாரின் போக்கை - நீலமணியின் எழுத்து சுட்டெரிக்கிறது. தந்தை பெரியார் இக்கொடுமைகளைக் களைய வந்த கருப்புச் சூரியன். சுயமரியாதை உணர்வூட்டிய - பகுத்தறிவு சோதி. நொந்தார்.உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம்! இந்திய நாடு துலங்க வந்த காந்தி மகான் போல; நிறவெறியை ஒழிக்க, அடிமை விலங்கை அறுக்க வந்த மார்ட்டின் லூதர்கிங் போல; சாதி வெறியையும், மூட நம்பிக்கைகளையும், ஆதிக்க வெறியையும் அடியோடு அழிக்க - வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார் என்கிறார் நீலமணி. தந்தை பெரியார் பிறந்த நாள் தொட்டு வளர்ந்த நாள் வரை வரலாற்றுப் பெட்டகமாக வழங்கி இருக்கிறார். நிகழ்ச்சிகளைத் தொட்டால் தொடர்கதைபோல் வளரும். 'கண்ணீரும்ம் தண்ணீரும்’ எனும் தலைப்பில் ஒரு செய்தியைத் தருகிறார். ஒருநாள் இராமசாமி (தந்தை ஈ.வெ.ரா.) பள்ளியை விட்டார். நகரின் ஒதுக்குப்புறம் ஓலைக் குடிசைகளின் வழி நடந்தார். ஒரு வீட்டிலிருந்து அழுகுரல்! "என்னை அடிக்காதேம்மா! நான் அந்த ஐயாகூடப் பேசல்லே, விளையாடப் போகல்லே" என்று சிறுவனின் அலறல்! குடிசைவாயிலில் நின்றார்- கதவைத் தள்ளினார்- உள் நுழைந்தார். அடிபட்டு அழுதவன் தன் நண்பன் காளி. அவன் தாயின் கையில் விறகுச் சுள்ளி - அதனால் அவள் விளாசிக் கொண்டிருந்தாள். இராமசாமி குறுக்கே புகுந்தார். தாயின் பிடியிலிருந்து காளியை விடுவித்தார். பெரிய இடத்துப்பிள்ளை போல் தோற்றம். இராமசாமியின் செய்கையால் காளியின் தாயார் பயந்து நடுங்கினாள். விறகுக்கட்டையை வீசினாள்-மகனைப் பார்த்து யார் இவர்? என்பது போல் விழியால் விசாரித்தாள்.   தன் நண்பன் இவ்வாறு வருவான் என எதிர்பாராத பிரமிப்போடு, காளி-தன்னுள் முகிழ்த்த மகிழ்ச்சியோடு “இவருதாம்மா -என்னோட சினேகிதரு-நம்ம அப்பாரு இவங்க பண்ணையிலேதாம்மா வேலை செய்யறாரு. சின்ன எசமான் ரொம்ப நல்லவரு அம்மா” என்கிறான். தாய் பதறிப் போனாள். “ஐயோ பெரிய நாயக்கரய்யா வீட்டுப் பிள்ளையா நீங்க? சின்ன எசமான்! நீங்க இந்தத் தெருவுக்குள்ளாறெ வரலாமா? என் மவன்கூடச் சேரலாமா?” என்று பயந்தபடி பதறினாள். “இதிலே என்னதப்பு? காளி என்னோட சினேகிதன். என்னோட பழகினதுக்கு இப்படி அடிக்கிறீங்க - அவன் மேல என்னதப்பு?” என்றார் இராமசாமி. “நீங்க இங்கெல்லாம் வரக்கூடாது - என் புள்ள கிட்ட பழகக் கடாது. பெரிய எசமானுக்குத் தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாரு - நாங்க கீழ்சாதி” என்றாள். “நீங்க எல்லாம் கீழ்சாதி என்று யார் சொன்னாங்க? அதெல்லாம் சுத்தப் பொய் நம்பாதீங்க” என்றார் இராமசாமி. “எசமான் அதை இந்த ஊரு உலகம் சொல்லுது. காலகாலமாய் தீண்டப்படாதவன்னு வாழற எங்கப் பொறப்பைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? வாதம் பேசினால் நாங்க வாழ முடியாது. சீக்கிரமா இங்கிருந்து போங்க! யாராவது பார்த்துட்டா - காளியோட அப்பாவுக்குத் தான் கஷ்டம் வரும்” என்று பயத்தால் உடல் நடுங்கக் கூறினாள் காளியின் தாய். அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்று நினைத்தார் இராமசாமி. “சரி ரொம்ப தாகம்; கொஞ்சம் தண்ணி கொடுங்க!” என்றார். “தண்ணியா கேக்கிறீங்க” என்ற காளியின் தாயாருக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. “சின்ன எசமான்,உங்களுக்குத் தண்ணிகூடக் கொடுக்க முடியாத பாவிங்க நாங்க” என்றாள். “நீங்க என்கையால தண்ணி வாங்கிக் குடிச்சசேதி தெரிஞ்சா - எங்க குடிசை மட்டுமல்ல; இந்தத் தெருவையே கொளுத்திருவாங்க. உங்க தயவிலே வாழ விடுங்க. என் மகன் கூடப் பேசாதீங்க - சேராதீங்க! அவனை விட்டுவிடுங்க!” என்ற காளியின் தாய் கையெடுத்துக்கும்பிட்டாள். இராமசாமி குடிசையை சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரு மூலையில் தண்ணீர் பானை மூடியிருந்தது. அதன் மீது அலுமினியக்குவளை-அந்தக்குவளையால் தாகம் தீரத் தண்ணீரை மொண்டு குடித்தார். இந்தக் காட்சியைப் பயந்து நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தனர் காளியும், காளியின்தாயும். குடிசையை விட்டு வெளியேறி நடந்தார். கீழ்சாதியினரின் முழு உழைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு அவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரைகுத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் சாதியினரிடம் அவர்களுக்குள்ள பயமே இதற்குக் காரணம் என்று எண்ணிய இராமசாமியின் நெஞ்சு துடித்தது" என்று எழுதும் நீலமணியின் வரிகளால் கண்கள் பனிக்க மேலே படிக்க விரிகிறது விழிகள். இப்படித் தந்தை பெரியாரின் வரலாற்றை வடித்துத் தரும் நீலமணியின் எழுத்துக்கு நிகர் வேறெதுவுமில்லை. "செந்தாமரைப் பூவின் அழகையும், மணத்தையும் மனிதன் நேசிக்கிறான். அந்தப் பூவும் அவனுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அது பிறந்த சேற்றையும் சகதியையும் கேவலமாக வெறுக்கிறான், அசிங்கமாகக் கருதுகிறான்" இந்த உவமையைக் காட்டி உள்ளங்கொதித்த தந்தை பெரியாரைப் போல் இதயங்கலங்குகிறார் நீலமணி. காளியின் வீட்டு நிகழ்வோடு வேறு ஒரு வீட்டின் நிகழ்ச்சியைக் காட்டுகிறார். தன் ஆசிரியர் வீடு இருக்கும் தெருவில் நுழைந்தார் இராமசாமி - தாகம் எடுத்தது. ஆசிரியர் வீட்டை அடைந்தார், அருந்த நீர் கேட்டார் - ஆசிரியர் மகள் நீர் கொணர்ந்தாள்; குவளையில் நீர் ஊற்றினாள் - அதை வாங்க நீட்டினார் கையை, கையில் தராது தரையில் வைத்தாள். இராமசாமி குடிக்கத் துவங்கும்போது "எச்சில் பண்ணாமெத் தூக்கிக் குடிங்க" என்றாள், - இராமசாமி அப்படியே குடித்தார் - குவளையைக் கீழே வைத்தார். வைத்த குவளையின்மீது இரண்டு முறை நீரை ஊற்றிக் கழுவி, சுத்தமானதாக எண்ணிய பிறகே உள்ளே எடுத்துச் சென்றாள். ஆசிரியரின் மனைவி இதை யெல்லாம் அருகில் இருந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இராமசாமி அப்படியே குன்றிப் போனார். ஆசிரியர் வைதீகர் - தேசிகர் குலத்தைச் சேர்ந்த பிள்ளைமார். அவர்கள் மற்றவர்களைவிடத் தங்கள் சாதியே உயர்வு என எண்ணுபவர். "இப்போது - காளியின் வீட்டில் நீர் அருந்தியதே மகிழ்ச்சி ஊட்டுவது போல் தோன்றியது" என்று இந்நிகழ்ச்சியை வரைகிறார் நீலமணி. பெரியாரின் உள்ளம் பேருள்ளம். அது தீண்டாமையை ஒழிக்கத் திரண்டு எழுந்த தீக் காற்று என்று கூறாது கூறும் நீலமணி அவர்களின் எழுத்து. சிந்தனை அறிவால் சிறகடிக்கும் பறவையாகத் திகழ்ந்த தந்தை பெரியாரின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் பகுத்தறிவும் - பண்பும் மிளிர்வதைக் காட்டுகிறார் நீலமணி. மணவாழ்க்கையில் இராமசாமிக்கு வாழ்க்கைத் துணைநலமாக வந்த நாகம்மை - கற்பனையில் எண்ணி உவக்கும் வள்ளுவரின் வாசுகியாக வாழ்ந்ததை மிகச் சிறப்பாக எழுதுகிறார். ஒவ்வொன்றையும் சுட்டினால் நூலுள் நுழையும் யாவர்க்கும் - நம்பியின் ஆக்கிரமிப்பு அதிகம் என்று தோன்றும். பொது வாழ்க்கையின் புனிதமாகத் திகழ்ந்தார் பெரியார் இதை விரிக்கும் விதம் - மிகச்சிறப்புடையது. மொத்தத்தில் ஏழையின் ஏற்றத்திற்குச்செய்யும் தொண்டு! கீழ் சாதியினரின் கீழ்மையை ஒழிக்க அவர் போராடிய போராட்டம்! குடும்ப வாழ்க்கையிலும் இயக்க வாழ்க்கையே மேலானது என எண்ணிய பெரியாரின் நெஞ்சு உரம். சிறைப்பறவையாய் சிறகடித்த செயல். பொது வாழ்க்கைக்காக தன் சொத்தை தென்னைமரத் தோட்டத்தைக் கள் அரக்கனை ஒழிக்க அழிப்பதில் அவர் காட்டிய ஆர்வம்! இப்படி ஒவ்வொன்றாக எழுதினால் - முற்றுப் பெறாத தொடராக அணிந்துரை வளரும். சுயமரியாதைச் சுடராய்ப் பெரியார் வலம் வந்த நாட்களிலும்; -இளம் வயதில் தன் மீது காதல் கொண்டு வாழ்ந்த நாட்களிலும்; - தன்னோடு இணைந்து பணியாற்றி இரண்டறக் கலந்த தன் துணைவி, உடல் நலங்குன்றிக் கிடந்தபோது; - அருகில் இருந்து அரவணைத்தாரில்லை. திருப்பத்துார் கூட்டத்திற்குப் பெரியார் போய்விட்டார். மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - 'கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும்போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. பொது வாழ்க்கையில் மூழ்கி நின்ற காந்தி அண்ணல் கஸ்தூரிபாயின் உயிரற்ற உடலைக்கண்டு குமுறிக்குமுறி அழுதாராம். காந்தியைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியார் ஈ.வே.ரா. - பொது வாழ்க்கைக்காக ஈரநெஞ்சைக் கல் நெஞ்சாக மாற்றிக் கொண்ட கதையை நீலமணியின் எழுத்து நமக்கு நேர் படக்காட்டும் விதம் அருமை - அற்புதம் - அழகு! மொத்தத்தில் இது ஒரு வரலாற்றுப் பெட்டகம் - தமிழரின் அடையாளமாகத் திகழும் குறள் நூலைப் போல் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும்.    புலவர் அறிவுடைநம்பி (மேனாள் சட்டவை மேலவை உறுப்பினர்)     அம்புஜம் இல்லம் A1 பிளாக் பழைய எண் 9213, புது எண் - 15 9வது மெயின் ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040.              நன்றியுரை   எனது கணவர் திரு. கே.பி.நீலமணி அவர்கள் எழுதிய "தந்தை பெரியார்" என்னும் வாழ்க்கை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியை, அவர் அமரராகி ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘லியோ பதிப்பகம்’ மூலம் நூலாக வெளியிடுகிறேன். இந்த நூல் வெளியாவதற்குச் சிறந்த ஆலோசகராகவும், திரு. புலவர் அறிவுடைநம்பி அவர்கள் மூலம் அணிந்துரை எழுதி வாங்கி அளித்த அன்புள்ளம் கொண்ட, கலைமகள் பொறுப்பாசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கணவர் எழுதிய, ‘தந்தைப் பெரியார்’ என்ற வரலாற்று நூலுக்கு அணிந்துரை மூலம் அவருக்குப் பெரும் புகழாரம் சூட்டி பெருமையுடன் எழுதிய, திரு. புலவர் அறிவுடை நம்பி அவர்களுக்கு என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமை நிலையில் இருக்கும் எனக்கு இந்த நூல் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்து உதவி செய்த, பத்திரிகையாளரும் சிறந்த எழுத்தாளருமான திரு. திலீப்குமார் - அவர் மனைவி திருமதி அம்பிகா திலீப்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை சிறந்த முறையில் அச்சிட்டுத் தயாரித்து அளித்த திரு. ஆர்.வெங்கடாசலத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.  ஜானகி நீலமணி லியோ பதிப்பகம்              காணிக்கை   இந்நூலை காலம் சென்ற என் தாய், தந்தையான திரு. C.A.சுப்ரமணியம் திருமதி, ருக்மணி சுப்பிரமணியம் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்     திருமதி. ஜானகி நீலமணி லியோ பதிப்பகம் 37, மந்தைவெளி தெரு, மந்தைவெளி, சென்னை - 600028.             பொருளடக்கம்  அணிந்துரை 5   நன்றியுரை 10  காணிக்கை 11   1. பூத்துக் குலுங்கும் பகுத்தறிவுப் பூங்காவின் நுழைவாயில் 14   2. தந்தை பெரியார் பிறந்த மண்ணின் பெருமை 17        3. பெரியாரைப் பெற்றெடுத்த பாக்கியசாலிகள்… 19   4. தீராத விளையாட்டுப் பிள்ளை 22   5. பள்ளிக்கூடம் சிறைக்கூடம் போல் தோன்றியது 25   6. கேள்வியும் நானே... பதிலும் நானே… 29   7. இரு வேறு சுவையுடைய ஒரு குலைக் கனிகள் 32   8. கண்ணீரும் ... தண்ணீரும் 35   9. நெஞ்சிலே பட்ட வடு… 38   10. பள்ளி போயிற்று கடை வந்தது… 42   11. ஈரோட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் 45   12. வழிகாட்டியாக வாழ்ந்து - காட்டியவர்... 47        13. வாழ்வே மாயம்… 49   14. காசியில் கற்றுக் கொண்ட பாடம் 51   15. பிரிந்தவர் கூடினால் பேரின்பமே… 53   16. கொள்கை வேறு பதவி என்பது வேறு… 55   17. நினைத்ததை முடிப்பவர்… 58   18. புதிய பாதை - புதிய பார்வை… 60   19. காங்கிரஸ் வானில் ஒரு புதிய ஒளிக் கீற்று 62   20. முதல் - சிறை அனுபவம் 64   21. வைக்கம் வாழ்த்திய வீரர் ஈ.வெ.ரா. 66   22. படிக்காத மேதை பத்திரிகை ஆசிரியரானார் 68   23. விழலுக்கு இறைத்த நீர் 70   24. தொழிலாளர்களின் தோழர்… 72   25. உலகம் சுற்றிய ஈ.வெ.ரா.. 74   26. நாகம்மை என்னும் நாக இரத்தினம் மறைந்தது… 75   27. பெண்கள் மாநாடு சூட்டிய 'பெரியார்' பட்டம் 78   28. பொதுத் தொண்டு செய்பவனுக்கு பதவிகள் எதற்கு? 80   29. அறிவியல் மேதை தந்தை பெரியார் 82   30. திராவிட வானில் கறுப்புச் சூரியனின் உதயம் 83   31. முட்டையிலிருந்து பிறந்த முதல் குஞ்சு 85   32. பெண்மனம்… 87   33. போராட்டங்களும்... எதிர்ப்புகளுமே- பெரியாரின் அணிகலன்கள்... 89   34. தமிழ் நாட்டை ஆட்சி செய்த முதல் தமிழர் 91   35. இந்தி எதிர்ப்புப் போர் 92   36. அறிஞர் அண்ணா அரியாசனம் ஏறினார் 94   37. தாய்ப் பறவையைத் தேடி… 96   38. தந்தை பெரியார் அமரர் ஆனார் 98   39. பகுத்தறிவுச் சோதியின் சுயமரியாதைப் பயணம்… 101  இந்த மின்னூலைப் பற்றி 105  https://ta.wikisource.org/s/7tn4 105         1. பூத்துக் குலுங்கும் பகுத்தறிவுப் பூங்காவின் நுழைவாயில்   ★ சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு. ★ பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், அத்தொண்டிற்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே எண்ணுகிறேன். ★ என் கருத்துக்கள் பாராட்டப் படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்.    - தந்தை பெரியார்     அன்பார்ந்த குழந்தைகளே... மாணவ மணிகளே... நீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது. சமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்த்து நின்று; அறிவுப்பூர்வமாகப் போராடிய தந்தை பெரியார் ஓர் பகுத்தறிவுப் பூங்காவாகவே திகழ்ந்தார். அவரது ஒப்பற்ற அறிவுப் பூங்காவில் பூத்த புரட்சிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றிலும், முட்களின் இரக்கமற்ற கீறலைக் காணலாம். தாழ்த்தப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர் தந்தை பெரியார். சாதி, மதம், இனம், மொழி இவற்றின் பேரால், தமிழனை உயர் சாதியினர் இனம் பிரித்தனர். தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஆதி திராவிடர்களைத் தங்கள் அடிமைகள் போல் எண்ணி நடத்தினர். உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த தமிழனரின் நடமாட்டத்திற்குத் தடை விதித்தனர். காலில் செருப்புடனோ, தோளில் துண்டுடனோ, உயர் வகுப்பினர் எதிரில் செல்வதும்; நின்று பேசுவதும் குற்றமாகக் கருதப்பட்டது. மண்ணில் மட்டுமல்ல - நீரிலும் தமிழனுக்கு முழுச் சுதந்திரமில்லை.   இயற்கை வழங்கிய, ஆறு, குளம், ஏரி, கிணறு போன்ற நீர்த் தேக்கங்களிலும், தமிழனுக்கென்று தனியாக துறைகள் ஒதுக்கப்பட்டு, விலக்கி வைக்கப் பட்டிருந்தனர். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இரயில் நிலையங்களிலும், இதர பொது உணவு விடுதிகளிலும் கூட, உயர்சாதியினருக்கெனத் தனியாக இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. மனிதருக்கு மனிதர் ஏன் இந்த வேற்றுமையும் பாரபட்சமும்? இதையெண்ணி வெட்கப்பட்டு, வெகுண்டு எழ வேண்டிய தமிழனே, தமிழினத்தைச் சார்ந்த ஆதி திராவிடரை அன்னியர் போல் எண்ணியது எவ்வளவு பெரிய அறியாமை! உடல் வருந்த ஏர்பூட்டி, நிலம் உழுது, களை எடுத்து, நாற்று நட்டு, நீர்பாய்ச்சிக் கதிர்அறுத்து, நெல் நீக்கிய அரிசியை ஆதிதிராவிடன் தீண்டலாம் - ஆனால் அவன் விளைவித்த அரிசி, வெந்து சோறானதும் - அந்த ஏழை, அன்னியப்பட்டுப் போனான்! அதைத் தாழ்ந்தவன் பார்த்தால் குற்றம், சோற்றைத் தொட்டால் தீட்டு, இது எத்தனை பெரிய சோகம்! உலக மக்கள் அனைவருமே, இறைவனின் குழந்தைகள் என்பது பொய்யாகி - 'இறைவன் படைப்பில் தீண்டத்தகாத குழந்தைகளும் உண்டு, என்பது நியாயப்படுத்தப் பட்டு வந்த காலமது. இல்லாவிட்டால், ஆலயத்திற்கான அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து - உச்சியில் கோபுரக்கலசம் வைக்கிற வரை, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு - ஆலயத்தின் மணிக் கதவங்கள் திறக்க மறுப்பதேன்! கருவறைக்குள்ளே சென்று, கடவுளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தொழ வேண்டும், என்று அவர்கள் ஆசைப்படவில்லை. கொடிமர நிழல் கூட வேண்டாம், கோபுரவாயிலில் நின்று தரிசித்தாலே போதுமென்று கெஞ்சினார்கள். ஆலயத்தின் அருகில் கூட வரக்கூடாதென்று, உயர் சாதியினரால் அடித்து விரட்டப்பட்டனர். இதையெல்லாம் நம்புவதற்கு இன்றைய இளைய தலைமுறையினராகிய குழந்தைகளே உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் - இப்படியெல்லாம் இந்த நாட்டில் நடந்து வந்தது உண்மை! இது போன்ற கொடுமைகளையெல்லாம் கண்டு மனம் பொறாமல் - இன்றைக்கு 117 - ஆண்டுகளுக்கு முன்னர், பிறந்த ஒரு குழந்தை - தாழ்த்தப்பட்டவர்களின் நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்தது. கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள ஈரோட்டில்... அளவற்ற தெய்வநம்பிக்கையும், இறை வழிபாடுகளும் நிறைந்த ஒரு ஆத்திகன் குடும்பத்தில் - நாத்திகமே உருவாய், இறை நம்பிக்கையே இல்லாத அந்தப் பகுத்தறிவுக் குழந்தை பிறந்தது. அக்குழந்தை அழும்போதெல்லாம் 'கடவுள் இல்லை', என்று கூறுவது போலவே ஒலித்தது. பின்னாளில், அக்குழந்தையே, தந்தை பெரியாரானார். மிகச் சிறந்த சீர்திருத்தச் சிந்தனையாளர் என்றும் -   மனிதாபிமானம் மிக்கவர்; சுயமரியாதைக்காரர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களை, தலைநிமிரச் செய்தவர் என்றும்; ஒடுக்கப்பட்டவர்களுக்குப் புதுவாழ்வு கொடுத்தவர் என்றும் தந்தை பெரியாரைப் பலரும், பலவிதமாகப் போற்றிப் புகழ்ந்தாலும் - தந்தை பெரியார், தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் என்று, தந்தை பெரியாரிடமே கேட்போமே!  நான் யார்?    ★ "ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்கொண்டு, அதே பணியாய் இருப்பவன்."    - தந்தை பெரியார்     தந்தை பெரியார் இப்படித்தான் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார். சமத்துவம், சகோதரத்துவம் என்கிற அடிப்படையில், மனிதனுக்கு மனிதன், உயர்வு தாழ்வு இல்லாத, சுயமரியாதை மிக்க, ஓர் உன்னதமான சமுதாய மறுமலர்ச்சி காண, இரவு பகலாகப் பாடுபட்டார். எதிர்ப்பையே சுவாசித்து வளர்ந்த தந்தை பெரியார், எதற்கும் அஞ்சாத வீரனாய்; கொள்கை முழக்கத்தோடு, தன் கடமைகளைத் தொடர்ந்து செய்து வெற்றி கண்டவர். யாரையும், எவரையும் துணை தேடாமல், மக்களை மனமாற்றம் செய்யும், தன் ஓயாத பேச்சையும், ஒய்வில்லாத எழுத்தையுமே நம்பி; அகிம்சா வழியில் போராடியவர் தந்தை பெரியார். என்றுமே மக்களைச் சந்திப்பதையும், மக்களோடு மக்களாய் பழகுவதையும், மக்களுக்காகவே மேடை தோறும் பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதையும்; அவர்களுடைய மேம்பாட்டிற்காகவே தொடர்ந்து எழுதுவதையும் இறுதிவரைத் தந்தை பெரியார் நிறுத்தவே இல்லை. தந்தை பெரியாரது வருகை, திராவிட மக்களது இருண்ட வாழ்வில் தோன்றிய கறுப்புச் சூரியன், அவர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டி புதுவழி காட்டிய பகுத்தறிவு சோதி! நொந்து போயிருந்த திராவிடர் உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம் தந்தை பெரியார். இப்படித்தான் அபூர்வமாகச் சிலர் பிறக்கிறார்கள். அடிமை இந்தியாவின் விடுதலைக்கு அகிம்சா முறையில் வழிகாட்ட காந்திமகான் வந்தது போல - நிறவெறி கொண்ட ஆங்கிலேயரிடமிருந்து, தனது கருப்பர் இனத்தை மீட்டு, அவர்களது அடிமை விலங்கறுக்க வந்த ஒரு மார்ட்டின் லூதர் கிங், போராடி வென்றதைப் போல - தமிழ் மக்களிடையே விஷம் போல் பரவி வந்த சாதி வெறியையும்; மூடநம்பிக்கைகளையும்; ஆதிக்க வெறியையும் அடியோடு அகற்றிட வேண்டித் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார். அவரது பகுத்தறிவு நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை, அடுத்து வரும் அத்தியாயங்களில், படித்து மகிழலாம் வாருங்கள்.    2. தந்தை பெரியார் பிறந்த மண்ணின் பெருமை   பிறந்த மண்ணின் பெருமை... “நம் நாட்டுக்கு மனிதன் செய்ய வேண்டிய முக்கிய தொண்டு மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்குவதுதான். நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தப் பற்றுமின்றி மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்கு தடையின்றிச் சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும் பொறுப்புமாகும். மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற உதவ வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் என் ஆசை.”    - தந்தை பெரியார்     பூவுடன் சேர்ந்த நார் மட்டுமல்ல; சில பெயர்களுடன் சேர்ந்த ஊரும் மணம் பெறும். மேலை நாட்டில் ஒருவரிடம் இந்தியா பற்றிக் கேட்டபோது; "காந்தி நாடா?" என்று கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டாராம். அதே போல - "ஈரோடு", என்றால் தந்தை பெரியார் பிறந்த ஊர் என்று இன்று உலகெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த ஈரோடு நகரம் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும். சேர மன்னர்களான சங்கர்கள் பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள், ஒய்சளர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும் மைசூர் மன்னர்கள் ஆட்சியிலும் இப்பகுதி இருந்தது. மைசூர் மன்னர், 'சிக்க தேவராயன்' தெற்கில் படையெடுத்தபோது அவருக்கும் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதருக்கும் ஈரோட்டுக்கு அருகில் போர் நடந்தது. இப்போரில் சொக்கநாதர் வெற்றி பெற முடியாமல் ஈரோடு கோயமுத்தூர் பகுதிகளை மைசூர் மன்னரிடம் (கி.பி. 1676)ல் இழக்க வேண்டியதாயிற்று. மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில் ஈரோடு செழிப்புமிக்க நகரமாக விளங்கிற்று. ஆனால் - மராத்தியர் ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளினால் இந்நகரம் பெரிதும் சேதமுற்றும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மீண்டும் சிறப்புப் பெற்றது. ஈரோடு கி.பி. 1871ல் நகராட்சி ஆயிற்று. இந்நகரிலிருந்த பாழடைந்த கோட்டைப் பகுதிகள் நீக்கப்பட்டன. கோயமுத்துார் மாவட்டத்தைச் சார்ந்த தாராபுரம், ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம் வட்டங்களும், காங்கேயம் துணை வட்டமும் அடங்கிய பகுதிகள் பிரிக்கப்பட்டு 17.9.1979 இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது பெரியார் மாவட்டம் என்று தந்தை பெரியாரின் பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெரியார் மாவட்டத்தின் தலைமையிடமாக ஈரோடு நகர் விளங்கி வருகிறது. காவிரி நதியின் கரையிலுள்ள ஈரோடு நகரில் நமது பண்பாட்டுச் சின்னங்கள் பல இடம் பெற்றுள்ளன. இனி - இந்த ஈரோட்டுக்குத் தன் பிறப்பால் தன் ஈடு இணையற்ற தொண்டுகளால் பெருமை சேர்த்த கதாநாயகரைச் சந்திக்கலாம்.    3. பெரியாரைப் பெற்றெடுத்த பாக்கியசாலிகள்…     "மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்."    - தந்தை பெரியார்     தமிழ்நாட்டில் பண்டை கோயமுத்துார் மாவட்டத்திலிருந்த ஈரோட்டில் வைணவ பக்தரான வெங்கடப்ப நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சின்னத் தாயம்மையார் என்று அழைக்கப்படுகிற முத்தம்மாள். கணவன் மனைவி இருவருமே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கடவுளிடம் மிகுந்த பக்தியும் ஈடுபாடும் உடையவர்கள். வெங்கடப்ப நாயக்கர் படிக்காதவர். அதனால் அன்றாடம் பல இடங்களுக்குச் சென்று கூலி வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். வெங்கடப்பநாயக்கரின் மனைவி மிகுந்த குணவதி. நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவர். குடும்பத்திற்காகத் தன் கணவர் மட்டும் கடுமையாக உழைப்பதைக் கண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை. கணவரோடு சேர்ந்து சின்னத்தாயம்மையாரும் கூலி வேலை செய்யப் புறப்பட்டார். மனைவியிடம் மட்டற்ற அன்பு கொண்டவர் வெங்கடப்ப நாயக்கர். தன்னைப் போல கல் உடைப்பது, மண் சுமப்பது போன்ற வேலைகளை மனைவியும் செய்வதை அவர் மனம் ஏற்கவில்லை. "இருவருமாகச் சேர்ந்து உழைத்தால் பற்றாக்குறை இருக்காது. குடும்பமும் விரைவில் முன்னேறிவிடும். பிறகு சுயமாக ஏதாவது தொழில் செய்து பிழைக் கலாம்” என்று கணவருக்கு ஆறுதல் கூறினார். மனைவியின் ஆதரவும், உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளும் வெங்கடப்ப நாயக்கருக்கு உடம்பில் புதிய ரத்தம் பாய்ச்சியது போல் மிகுந்த தெம்பை அளித்தது. கருமமே கண்ணாக இருவரும் கடுமையாக உழைத்தனர். சின்னத்தாயம்மையார் கூறியது போல் வருவாய்க்கு ஏற்றபடிச் சிக்கனமாகச் செலவு செய்து; வீண் ஆடம்பரங்கள் ஏதுமின்றி குடும்பத்தை நடத்தினார். சிறுகச் சிறுக மாதா மாதம் பணம் சேமித்து மிகக் குறுகிய காலத்திற்குள் தன் கணவர் கையில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்தார். வெங்கடப்ப நாயக்கர் நெகிழ்ந்து போனார். இவ்வளவு பொறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த மனைவி கிடைத்தது கடவுள் அருளே என்று மனம் மகிழ்ந்தார். மனைவி கொடுத்த பணத்தைக் கொண்டு வெங்கடப்ப நாயக்கர் ஒரு மாட்டு வண்டி வாங்கினார். அவ்வண்டியில் வாடகைக்குச் சரக்குகளை ஏற்றி அருகிலுள்ள ஊர்களுக்கு சந்தைக்கும் கொண்டு போய் பொருள் சேர்த்தார். ஓரளவு பணம் சேர்ந்ததும் மாட்டுவண்டி ஓட்டிப் பிழைப்பதை நிறுத்தினார். வண்டி விற்ற பணத்துடன் தன்னிடமுள்ள பணத்தையும் போட்டு மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார். வேலைக்கு ஆட்களை அமர்த்திக் கொள்ளாமல் கணவரும் மனைவியுமாக இருவருமே மளிகைக் கடையில் முழு நேரமும் உழைத்தனர். வெங்கடப்ப நாயக்கர் அங்குமிங்கும் ஓடி அலைந்து நல்ல சரக்குகளாகவே வாங்கி வியாபாரம் செய்தார். இதனால் மக்களிடையே அவரது கடை பிரபலமாயிற்று. வியாபாரம் அமோகமாகப் பெருகிப் பணப் புழக்கம் அதிகமாயிற்று. சிறியதாய்த் துவங்கப்பட்ட மளிகைக் கடை நாளுக்கு நாள் விருத்தியடைந்து பெரிய மண்டிக் கடையாக உருவாயிற்று. சில்லரை வியாபாரத்துடன் - மொத்த வியாபாரமும் செய்யுமளவிற்கு வெங்கடப்ப நாயக்கருக்கு வசதியும் அந்தஸ்தும் உயர்ந்து விட்டது. ஆயினும் - கணவன் மனைவியரிடையே துளிக்கூட கர்வம் தலை தூக்கவில்லை. எல்லோரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகினார்கள். அவரிடம் பல ஆட்கள் வேலை செய்தார்கள். எல்லோரும் அவரை முதலாளி என்றே அழைத்தார்கள். புதிய வீடு ஒன்றும் வாங்கினார். இப்படி நிறை வாழ்வு வாழ்ந்தும் - வெங்கடப்ப நாயக்கருக்கும், சின்னத்தாய் அம்மையாருக்கும் உள்ளத்தில் பெரும் குறையொன்று சதா உறுத்திக் கொண்டேயிருந்தது. அது - அவர்களுக்கென்று மக்கட்பேறு இல்லாத பெருங்குறைதான். கணவரும் மனைவியும் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத தானதருமங்கள் இல்லை. சதா இறைவனை வழிபட்டே வந்தனர். தன் வீடு தேடி வரும் அடியார்க்கும், ஏழைகளுக்கும் சின்னத் தாயம்மையார் முகமலரச்சியுடன் அமுது படைத்து அவர்களது ஆசி பெற்றார். இத்தனை போதாது என்று - சின்னத்தாய் அம்மையார் தவறாமல் விரதம் நோன்பு ஆகியவற்றை பக்தியுடன் நிறைவேற்றி வந்தார். இறுதியில் - ஒருநாள் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்த்து விட்டதாக கணவன் மனைவி இருவருமே மகிழ்ந்தனர்.   1877-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சின்னத்தாயம்மையார் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். கணவரும் மனைவியுமாக அக்குழந்தைக்கு திருமாலின் பெயரான கிருஷ்ணசாமி என்கிற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள். கிருஷ்ணசாமிக்கு இரண்டு வயதாகும்போது 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 'இராமசாமி' என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது. வெங்கடப்ப நாயக்கரின் உழைப்பும், நாணயமும் தொழில் நேர்மையும் மேலும் அவரை உயர்த்தியது. கோயமுத்துார் மாவட்டத்திலுள்ள பெரு வணிகராகவும் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராகவும் வெங்கடப்ப நாயக்கர் விளங்கினார். செல்வம் உயர உயர் அவரிடமுள்ளதரும சிந்தனையும், பக்தி மார்க்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.    4. தீராத விளையாட்டுப் பிள்ளை     "தொட்டதற்கெல்லாம் 'கடவுள் செயல்', 'கடவுள் செயல்' என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள், தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள்; அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறவர்கள் ஆவார்கள்.    - தந்தை பெரியார்     ஒரு மனிதன், தன் அயராத உழைப்பினால் அடைந்த வெற்றியாகத்தான் நம்புகிறான். வெங்கடப்ப நாயக்கரும் அப்படித்தான் நம்பினார். "ஏழையாயிருந்த தாங்கள் இத்தனை பெரிய செல்வந்தரானது; கடவுளின் கருணையினால் தான்" என்று கணவரைப் போலவே சின்னத்தாயம்மையாரும் கருதினார். இயற்கையிலேயே தெய்வபக்தி மிகுந்த வெங்கடப்ப நாயக்கர், தன் வீட்டிலுள்ள பெரிய கூடத்தில் நாள் தோறும் இரவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பண்டிதர்களைக் கொண்டு உபன்யாசம் செய்வித்துக் கேட்டு மகிழ்வார். இதற்காக பல அன்பர்களும் அங்கு வருவார்கள். தெய்வபக்தியோடு வெங்கடப்ப நாயக்கர் இளகிய மனமும், கருணை உள்ளமும் கொண்டவராகத் திகழ்ந்தார். அதனால் - தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை அவர் ஒரு போதும் மறந்ததில்லை. ஏழை எளியவர்களுக்குத் தாராளமாகத் தானதருமங்கள் செய்தார். வியாபாரத்தில் நொடித்துப் போன சிறிய வியாபாரிகளுக்குப் பொருள் உதவி செய்து கைதுாக்கி விட்டு அவர்களுக்குப் புது வாழ்வளித்தார். தான் ஏழ்மையில் பிறந்து வறுமையில் வாடிக் கஷ்டப்பட்டது போல; பிறர் அத்துன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்று எண்ணினார். பசியின் கொடுமையை நன்கு அறிந்திருந்த அவர்; ஏழைகளுக்கான அன்னதானச் சத்திரங்கள் வைத்தார். வழிப்போக்கர்கள் தங்குவதற்கும்; இரயில் பயணிகள் தங்குவதற்கும் ஆங்காங்கே தரும சத்திரங்கள் கட்டினார். ஆலயங்கள் நிறைந்த ஊரில் தன் பங்கிற்கும் ஓர் பிள்ளையார் கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்தார். இத்தனைக்கும் பிறகும் வெங்கடப்ப நாயக்கரின் உள்ளத்தில் திருப்தி ஏற்படவில்லை. கல்வி அறிவில்லாமல் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் அவர் கண்முன்னே நின்றன. அதனால் அடைய நேரிட்ட அவமானங்களை அவரது நெஞ்சம் மறக்கவில்லை - 'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி' - என்கிற பாரதியின் வரிகளை அவர் படித்ததில்லை. ஆயினும் - தன்னையே உதாரணமாகக் கொண்டு ஊரிலுள்ள ஏழைச்சிறுவர்களை எண்ணிப் பார்த்தார். மற்றெதனையும் விடக் கல்விச் சாலையே அவரது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. ஈரோட்டில் மஹாஜன ஹைஸ்கூல் என்கிற பள்ளியை நிறுவினார். எண்ணற்ற, ஏழைக் குழந்தைகளின் அறிவுக்கண் திறக்க வெங்கடப்ப நாயக்கர் கட்டிய, ஆலயத்திலும் சத்திரத்திலும் சிறந்த பள்ளிக்கூடம் - இன்றும் அவரது அழியாப் புகழையும் கருணை உள்ளத்தையும் பறை சாற்றி நிற்கின்றது. ★ பசிக்குச் சத்திரமும் ★ கல்விக்குப் பள்ளியும் கட்டிய பிறகு - மனிதனை வாட்டும் ★ பிணிக்கு வழி செய்யவில்லையே என்று எண்ணினார். அன்றே - ஈரோட்டில் தர்ம வைத்திய சாலை ஒன்றை நிறுவி முப்பிணிக்கும் மருந்திட்ட பெருமகனானார். வெங்கடப்ப நாயக்கரும் சின்னத்தாயம்மையாரும் தங்களின் இரு புதல்வர்களையும் இரண்டு கண்களைப் போல் கருதினர். அன்பையும் பாசத்தையும் கொட்டி அவர்களை மிகவும் ஆசை ஆசையாக வளர்த்து ஆளாக்கினர். தக்க வயது வந்ததும் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.இராமசாமியையும் பள்ளியில் சேர்க்க ஆசைப் பட்டார். இராமசாமியின் சிறிய பாட்டியார் குடும்பத்தில் குழந்தை இல்லாததால் - இராமசாமி பாட்டியார் குடும்பத்தில் சுவீகார புத்திரனாக வளர்ந்து வந்தார். இராமசாமி குழந்தைப் பருவத்திலிருந்தே மிகுந்த பிடிவாதமும், குறும்புத்தனமும் நிறைந்தவராக இருந்தார். இப்போது - அவரைக் கண்டித்து வளர்க்க அப்பாவோ, அம்மாவோ அருகில் இல்லாததால் இராமசாமிக்கு மிகுந்த சவுகரியமாயிற்று. பாட்டியைப் பற்றி பயமே அவருக்கு இல்லை. மனம் போல் ஊர்க் குழந்தைகளுடன் சுற்றித் திரிந்துவிட்டு, இஷ்டத்திற்கு வீட்டிற்கு வருவார். பள்ளிக்குச் சென்றாலும் சக மாணவர்களுடன் சண்டை, வாக்குவாதம் தினம் தினம் ஊர்ச் சண்டை. தட்டிக் கேட்க ஆளில்லாததோடு பாட்டியார் கொடுக்கிற அளவுக்கு மீறிய - செல்லத்தினால் தன் பிள்ளை தறுதலையாக வளர்ந்து வருகிற விஷயம், வெங்கடப்ப நாயக்கருக்குத் தெரிய வந்தது. இப்படியே போனால், பிறகு தன் மகனைத் திருத்தவே முடியாது என்பதை உணர்ந்தார். உடனே, பாட்டியாரிடமிருந்த இராமசாமியைத் தன் வீட்டோடு அழைத்து வந்து விட்டார். இது இராமசாமிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான் - தன்னிடம் மிகவும் ஆசையாகவும் அன்பாகவும் இருப்பார்கள். ஆனால் - மிகவும் கண்டிப்பானவர்கள் - நேர்மையாகவும், ஒழுங்காகவும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள் எல்லாவற்றிற்கும் மேல், நிதம் காலையில் குளிக்கச் சொல்லுவார்கள். பாட்டி வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்தது போல இஷ்டத்திற்கு ஊர் சுற்றித் திரிவதும், பள்ளிக்குச் செல்லாமல் பாட்டியை ஏமாற்றுவது போல் இங்கு நடவாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்த இராமசாமிக்குத் துக்கம் பெரு உருண்டையாகத் தொண்டையை அடைத்தது. அன்று இரவெல்லாம் இராமசாமிக்கு உறக்கமே வரவில்லை.    5. பள்ளிக்கூடம் சிறைக்கூடம் போல் தோன்றியது     "என்னைப் பொறுத்தவரை நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல், எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச் சக்தி உண்டு என்று நம்புகிறவன்."    - தந்தை பெரியார்     அன்று இரவு, இராமசாமியின் தந்தைக்கும் உறக்கம் வரவில்லை. வெங்கடப்ப நாயக்கர் இறைவனுடைய திருவிளையாடலை எண்ணி வியந்தார். படிக்க வேண்டும் என்கிற ஆசையிருந்தும், ஏழைக் குடும் பத்தில் பிறந்ததினால் தனக்குக் கல்வி எட்டாக் கனியாக இருந்தது. அதை அவரால் ஒப்புக் கொள்ள முடிந்தது. ஆனால் - இராமசாமிக்கு என்ன குறை? ஏன் பள்ளிக்கூடம் வேண்டாம் என்கிறான்; படிப்பில் விருப்பமே இல்லாமல் இருக்கிறானே! தான் படிக்காததினால்தானே, கூலி வேலை செய்து பிழைக்க வேண்டியிருந்தது. ஒருவேளை, தன்னைச் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்று எண்ணிக் கொண்டு அவன் இப்படி நடந்து கொள்கிறானா! நிலையில்லாத இந்தச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகலாம்; கல்வி ஒன்று தானே நிலையான, அழியாச் செல்வம்! இதை அவன் மறுக்கலாமா? கடையில் எப்போது வேண்டுமானாலும் அவன் வந்து உட்கார்ந்து கொண்டுவிட முடியும்; ஆனால் - கல்வி அத்தகையது அல்லவே! காலத்தோடு - இளமையில் தேடி அடைய வேண்டிய வற்றாத செல்வமல்லவா கல்வி. இதையெல்லாம் இராமசாமிக்கு விளக்கிச் சொன்னால் அவன் புரிந்து கொள்வான் - என்று இப்படிப் பலவாறாக எண்ணி; இரவு வெகுநேரம் வரை மகனைப் பற்றிய சிந்தனையிலேயே உறக்கம் வராமல் விழித் திருந்தார் - வெங்கடப்ப நாயக்கர். மறுநாள் காலை - வெங்கடப்ப நாயக்கர் குளித்துக் குறியிட்டு, சாமி கும்பிட்டு, ஹாலுக்கு வந்தபோது அவர் பிரமித்துப் போனார். அவர் கண்களையே அவரால் ஒருகணம் நம்ப முடியவில்லை. அண்ணன் கிருஷ்ணசாமியைப் போலவே ராமசாமியும், அழகான உடைதரித்து, தோளில் புத்தகப் பையைத் தொங்க விட்டுக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். சின்னத்தாயம்மையார் அவனது தலையைச் சீவி, நெற்றியில் அழகான பொட்டும் வைத்தார். பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டு இராமசாமி அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.   ஈரோட்டிலுள்ள பள்ளியில் சேர்ந்த அன்று முதல் ஆரம்பச் சில நாட்கள் இராமசாமி ஒழுங்காகத்தான் பள்ளி சென்று வந்தார்; பாட்டி ஊரிலுள்ள பள்ளியை விட இது பெரிதாக இருந்ததுடன் நிறைய மாணவர்களும் பல ஆசிரியரும் இருந்தனர். அங்கு நடப்பதெல்லாம் அவருக்கு விசித்திரமாகவே பட்டது. எல்லோருடனும் சேர்ந்து கை கூப்பி கடவுள் வாழ்த்துப் பாடுவது வேடிக்கையாயிருந்தது. பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை வீட்டில் வந்து படித்து உருப் போட்டு மறுநாள் அதை ஒப்புவிக்க வேண்டும் என்பது இராமசாமிக்கு மிகவும் தொல்லையாகத் தோன்றியது. கிருஷ்ணசாமியோ, எதைப் பற்றியும் கவலைப் படாமல் பள்ளி விட்டு வந்ததும் ஒழுங்காக வீட்டுக் கணக்குகளை முடித்தார். மறுநாள் கூற வேண்டிய பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டார். இராமசாமிக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. பள்ளிக்கூடம் சிறைச்சாலை போல் தோன்றியது அவருக்கு. ‘இஷ்டம் போல், ஊர்ப்பிள்ளைகளுடன், பாட்டி ஊரில் சுற்றித் திரிந்தது - கையில் காசு எடுத்துச் சென்று விருப்பம் போல் தோன்றிய இடத்தில் எல்லோருடனும் சேர்ந்து வாங்கித் தின்று விட்டு வந்தது - பள்ளிக்குச் செல்லாமல், புத்தகப்பையை மரக்கிளையில் தொங்கவிட்டு விட்டு, மனம் போல் யாரும் காணாத மைதானத்தில் இஷ்டம் போல் விளையாடியது; குளக்கரை, ஏரிக்கரை வழியாக சக நண்பர்களுடன் குஷியாகச் சிரித்துப் பேசிக் கழிந்த நாட்கள் ஆகியவை இராமசாமியின் நினைவில் அடிக்கடித் தோன்றி வருத்தியது. வேண்டா வெறுப்பாகத் தோளில் பையை மாட்டிக் கொண்டு - அப்பா அம்மாவுக்குப் பயந்து, அண்ணன் பின்னால் பள்ளிக்குச் சென்று வந்தார். ஆனால் இது அதிக நாள் நீடிக்கவில்லை. பள்ளிப் பாடங்களில், இராமசாமியின் மனம் லயிக்க மறுத்தது. ஆசிரியர், அதட்டி உருட்டி அடித்துப் பிள்ளைகளைப் பணிய வைக்கக் கூடிய ஒரு பொல்லாத உருவமாகவே இராமசாமியின் கண்களுக்குப் பட்டது. இதனால் - பள்ளி செல்வதிலுள்ள நாட்டம் அவர் உள்ளத்தில் படிப்படியாகவே குறைந்து கொண்டு வந்தது. ஆசிரியர் கற்றுக் கொடுப்பது எதுவும் தேவைப் படாதது போலவும் - அதைவிடத் தனக்குப் பல விஷயங்கள் தெரியும் என்பது போலவும் ஒருவித அலட்சியப் போக்கு அவருள் உருவானது. கிருஷ்ணசாமி, இராமசாமியின் குணாதிசயங்களுக்கு நேர்மாறாக விளங்கினார். ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தார். காலந்தவறாமல், பாடங்களை வீட்டில் நன்றாகப் படித்து வகுப்பில் முதலாவதாகவும்; பள்ளியிலேயே மிகவும் நல்ல பையன் என்கிற நற்பெயரையும் பெற்று வந்தார். இராமசாமி அண்ணனுடன் கை கோர்த்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்படுவார். ஆனால்,   ஒழுங்காகப் பள்ளிபோய் சேரமாட்டார். வழியில் அண்ணன் கையை உதறிவிட்டுக் கடைகளில் தின்பண்டம் வாங்கித் தின்பார். எதிரில் தென்படுகிற மாணவர்களிடமும்; அப்பாவுக்குத் தெரிந்த மனிதர்களுடனும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். அந்த சமயங்களில் பள்ளி நினைப்பே இராமசாமிக்கு இருக்காது. அண்ணன், "பள்ளிக்கு நேரமாகிறது வா தம்பி" என்று அழைத்தால், எரிந்து விழுவார் - கிருஷ்ணசாமி தம்பியை விட்டுவிட்டு பள்ளி சென்று விடுவார். பள்ளிக்கே சென்றாலும் இராமசாமி ஆசிரியர் பாடம் சொல்வதைக் கவனமாகக் கேட்பதில்லை. சக மாணவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். இராமசாமியின் குணாதிசயங்களுக்கு ஒத்த மாணவர்கள் சிலரும் அவர் வகுப்பில் இருந்தனர். பாதி வகுப்பிலேயே அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றப் போய் விடுவார். அவரைக் கேலி செய்கிற மாணவர்களுடன் அடிக்கடி, வீண் வம்பிழுத்து. சண்டையிடுவார். பள்ளி மைதானத்தில் அவர்களுடன் கட்டிப்புரண்டு அழுக்கான உடைகளுடனே வகுப்பில் வந்து; ஒன்றுமே அறியாதவர் போல், சாதுவாக உட்கார்ந்து கொள்வார். இவரால் வகுப்பாசிரியர்களுக்குப் பெருந்தொல்லையாகி விட்டது. பெரிய இடத்துப் பிள்ளை அதிகம் தட்டிக்கேட்டு, கண்டித்து அடிக்கவும் முடியாது. எப்படி இராமசாமியைத் திருத்துவது; என்று ஆசிரியருக்குப் புரியவில்லை. கிருஷ்ணசாமி தன் தந்தையிடம், ஒருநாள், தம்பியைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் கூறி விட்டார். அப்போது சின்னத்தாயம்மையாரும் அருகில் இருந்தார். தன் கணவர் இத்தனையையும் கேட்டு கோபித்து பிள்ளையை அடித்துவிடக் கூடாதே என்று பயந்தார். சட்டென்று: "நான் இராமசாமிக்கு நல்ல புத்திமதிகள் சொல்லிக் கொடுத்துத் திருத்துகிறேன் இனிமேல் அவன் நல்ல பிள்ளையாகப் பள்ளிக்கூடம் போவான்; ஒழுங்காகப் படிப்பான்" என்று அவர்களிடமிருந்து மகனைத் தனியே அழைத்து வந்துவிட்ட சின்னத் தாயம்மையார், மகனைத் தன் அருகில் அணைத்தபடி அமர்த்திக் கொண்டார். மிகவும் அன்பான குரலில் குழந்தை இராமசாமிக்குப் புரியும்படியாகப் பல விஷயங்களை விளக்கிக் கூறினார்: "இராமசாமி நீ நல்ல பிள்ளை, அல்லவா? அது எனக்குத் தெரியும். அண்ணனின் பேச்சை அப்பா நம்பினால் நம்பட்டும்; நான் நம்ப மாட்டேன்." "இனிமேல் நீ பள்ளிக்கு ஒழுங்காக அண்ணனுடனேயே சென்று படித்துவிட்டு; அண்ணனுடனேயே திரும்பி வரவேண்டும். வழியில் எந்தக் கடையிலும்; யார் வீட்டிலும் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது. கீழ்சாதிக் குழந்தைகளுடன் சேரவே கூடாது. அவர்கள் வீடுகளுக்கு நீ போவது தெரிந்தால் அப்பா மிகவும் மன வருத்தப்படுவார். அவர்கள் வீட்டிலிருந்து தண்ணிர் கூட வாங்கிக் குடிக்கக் கூடாது.     ஏனென்றால் - மற்றவர்களை விட நாமெல்லாம்தான் மிக உயர்ந்த வைணவ வகுப்பைச் சேர்ந்தவர்கள்; நாம் கீழ்ச்சாதிக்காரர்களுடன் பழகுவதும்; அவர்கள் வீட்டில் ள்தையாவது வாங்கிச் சாப்பிடுவதும் நமது குலப்பெருமைக்கும்; சாதி கெளவரத்திற்கும் அவமானமல்லவா? அதனால் - இனிமேல் அம்மாதிரி எல்லாம் நடந்து கொள்ள மாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லு," என்று அன்போடு கேட்டார். அம்மா கூறிய அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமசாமி, "அம்மா, இனிமேல், உன் சொற்படியே நடக்கிறேன் அம்மா,” என்று உருக்கமாகக் கூறினார். பெற்றவளின் மனம் அப்படியே மகிழ்ந்து போயிற்று. அருகிலிருந்த மகனை வாரி இறுக அணைத்துக் கொண்டு, சின்னத்தாயம்மையார், இராமசாமியின் உச்சியில் முத்தமழை பொழிந்தார்.    6. கேள்வியும் நானே... பதிலும் நானே…     "என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்."    - தந்தை பெரியார்     "கட்டிக் கொடுத்த சோறும்; சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு வரும்? சுயபுத்தி வேண்டாம்! ஊரிலே தலை காட்ட முடியலே; எவன் எவனெல்லாமோ முதுகுக்குப் பின்னாடி பேசிட்டுத் திரியறான்.” வெங்கடப்ப நாயக்கர் கோபத்தின் உச்சியிலிருந்து வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார். ஒரு விசாரணையின் நிமித்தம் தூண் ஒரமாகக் கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராமசாமி, தாயாரைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். "சரி... சரி....விடுங்க... யாரோ சொன்னதுக்காக, இப்படி ஏன் கோவப்படறீங்க.பாவம், அவன் கொழந்தைதானே! எல்லாம் போகப் போகச் சரியாயிடும்.” "நிச்சயம் சரியாகாது. பாட்டி வீட்டிலே செல்லம் குடுத்துக் கெட்டுப் போறான்னு, இங்கே கூட்டிட்டு வந்தோம். கொழந்தை, கொழந்தைன்னு, இங்கே நீயும் அதே காரியத்தைச் செய்து அவனைக் குட்டிச் சுவராக்கிட்டே. குழந்தையா அவன்; வயசு பத்தாகல்லே... கூடப் பொறந்த அண்ணன்தானே கிருஷ்ணசாமி! அவன் எப்படிப் படிக்கறான்? எவ்வளவு அடக்க ஒடுக்கமா எல்லார்கிட்டேயும் நடந்துக்கறான். அவனைப் பத்தி இன்னிவர, யாராவது ஏதாவது தப்பாச் சொல்லி யிருப்பாங்களா?" "போதும் நிறுத்துங்க உங்களுக்கு எப்பவும் இராமசாமின்னா.... ஒரு எளப்பமும்; கோவமும்தான். மூத்தவனைப் போல அவனும் நமக்கு ஆசையாய் பொறந்த பிள்ளைதானே! ஏன் ஒரு கண்ணிலே வெண்ணெயும்; ஒரு கண்ணிலே சுண்ணாம்பும் மாதிரி நடந்துக்கறிங்க?” "நானா அப்படி நடந்துக்கறேன்?" வெங்கடப்ப நாயக்கர் வியப்போடு கேட்டார். "பின்னே என்ன? சில புள்ளங்க, ஆரம்பத்திலே சுறுசுறுப்பா இருக்கும், சில புள்ளங்க பின்னாலே சூரப்புலியா வருவாங்க. உங்களுக்கு ஆமையும் முயலும் கதை தெரியுமில்லே..." "எனக்கு உன்னோடு ஒரு கதையும் கேட்க வேண்டாம். இதோ... இவனாலே இன்னும் கொஞ்ச நாள்லே நம்ம வீட்டுக்கு கதை சொல்ல வர்றவங்களே நின்னுடுவாங்க போலிருக்கு. அப்புறம் நீயும், நானும மாறி மாறி கதை சொல்லிட்டு இருக்கலாம்.” "நீங்க என்ன... புதுசு புதிசாப் புகார் சொல்றீங்க?" என்றார் வியப்போடு சின்னத்தாயம்மையார்.   "நடந்ததை நான் சொல்லாட்டி உன்கிட்டே வந்து வேறெ யார் சொல்லுவாங்க? இவனப் பத்தி முழுசுமா உனக்கு ஒண்ணுமே தெரியாமத்தான் இப்படி அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசறே.” "சரி... என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்.” "நம்ம வீட்டுக்கு கதை சொல்ல வந்த சுப்ரமண்ய சாஸ்திரிகிட்டே இவன் கேட்டிருக்கான். 'ஏன் ஐயா, ராமர் ராச்சியம் வேண்டாம்னு சொல்லிட்டார்னா பரதன் ஆள வேண்டியதுதானே. அதில்லாமே, ராமரோட செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்திலே வச்சு, அது ஆளுதூன்னா; செருப்பாலே எப்படி ஐயா அரசாட்சி பண்ண முடியும்னு" கேட்டிருக்கான். என்று கணவர் கூறி முடிப்பதற்குள், தாயம்மையார் குறுக்கிட்டுக் கேட்டார். "ஆமாம்... அதிலே என்னதப்பு? அவன் பச்சப்புள்ளதானே? தெரியாத விசயத்தைக் கேட்டிருக்கான்; சாஸ்திரி அவனுக்கு விளக்கி பதில் சொல்லியிருக்க வேண்டியதுதானே? சும்மாவா வந்து இராமாயணம் படிக்கறாரு?” "இதோ பாரு... தாயம்மா அத அவரு அவனுக்கு விளக்கிட்டாரு, ஆனா நம்ம வீட்டுக்கு வந்து கதை படிக்கறவங்க எல்லாம் ஒண்ணும் சாமானிய ஆளுங்க இல்லே; பெரிய பெரிய வேதம் படிச்சவங்க, சாஸ்திரம் தெரிஞ்சவங்க பணம் குடுக்கறோம்கறதுக்காக மட்டும் அவங்க நம்ம வீட்டுக்கு வரல்லே... நாமல்லாம் கடவுள் பக்தி உள்ளவங்க, நமக்குப் புரியாத பல புராண விஷயங்களை விளக்கிச் சொல்லணும்கறதுக்காகத்தான் வர்றாங்க. அதைக் கேட்டு புண்ணியம் பெறணும்கறதுக்காகத்தான் நம்ம வீட்டைத் தேடி, கதை கேக்க பல பேரு வர்றாங்க - நாம எல்லோரும் இதுவரை அவங்க சொல்லறதையெல்லாம், பக்தியோடு கேக்கறோமே தவிர, நீயோ, நானோ இப்படி எப்பவாவது எதிர் கேள்வி கேட்டிருக்கோமா? சரி போவட்டும்; பஞ்சு தீஷதரை உனக்குத் தெரியுமில்லே?" கேட்டுவிட்டு வெங்கடப்ப நாயக்கர், பதிலுக்காக மனைவியின் முகத்தைப் பார்த்தார். "தெரியும்... சொல்லுங்க பெரிய வேதவித்து. புராணங்கள் எல்லாம் படிச்சு; நிறைய பட்டமெல்லாம் வாங்கினவரு. அவருக்கு என்ன இப்போ?” "அவருக்கு ஒண்ணுமில்லே. இதோ நிக்கறானே உன் பிள்ளை இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு, சாது மாதிரி. அவனுக்குத்தான் கிறுக்குப் பிடிச்சுப் போச்சு அவ்வளவு பெரிய பண்டிதரைப் போய் இவன் என்ன கேள்வி கேட்டிருக்கான் தெரியுமா?’’ “எனக்கென்ன தெரியும்; சொல்லுங்க..." "கோவில்லேயிருந்து அவரு வீட்டுக்குப் போறப்போ "ஐயா" ன்னு கூப்பிட்டிருக்கான். திரும்பிப் பார்த்தாரு. இவனைப் புரிஞ்சுக்கிட்டு, "என்னப்பா விஷயம்... அப்பா ஏதாவது சொல்லி அனுப்பினாரா" என்று கேட்டிருக்காரு. "ஒண்ணுமில்லே ஐயா, முந்தா நாள் கதை சொன்னீங்களே... அதிலே ஒரு சந்தேகம்" என்று கேட்டிருக்கான். “என்னான்னு கேட்டாரு; இவன் என்ன கேட்டான் தெரியுமா, ஐயா கல்யாணத்துக்கு முந்தி குந்தியம்மா சூரிய பகவான்கிட்டே குழந்தை பெத்துக்கிட்டதாச் சொன்னிங்க. ஆனா கல்யாணத்தப்போ... சூரியனைப் பண்ணிக்காமெ; ஏன் பாண்டு மகாராசாவைக் கட்டிக் கிட்டாரு" ன்னு கேட்டிருக்கான். "சின்னப் பையன் கேக்கற கேள்வியா இது, அதுவும் நடு ரோட்டிலே நிறுத்தி...” "அது சரி... அந்த ஐயா என்ன பதில் சொன்னாராம்?” “என்ன சொல்லுவாரு... தம்பி, இதையெல்லாம், பத்தாம் நாள் கதையும்போது நல்லா விளக்கமாச் சொல்லறேன்னு அனுப்பிச்சுட்டாரு." "நேத்திக்குக் காத்தாலே என்னைப் பார்த்ததும், ஏன்... நாயக்கரேன்னு எல்லா விஷயத்தையும் சொல்லிப்புட்டு, 'பையன் பெரிய நாத்திகனா இருப்பான் போலிருக்கே... உங்களோட பக்திக்கும், பவ்யத்துக்கும் இப்படியொரு பிள்ளையா? ஏதோ கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கு போலிருக்கு. பையனை சாக்கிரதையாப் பார்த்துக்குங்கோ' அப்படின்னுட்டுப் போனாரு.” சின்னத்தாயம்மையாருக்கு மனதை என்னமோ செய்தது. மிகுந்த துயரத்துடன் மகனின் அருகில் சென்று, "ஏன் ஐயா... அவ்வளவு பெரிய பண்டிதர்கிட்டே, இப்படி அசிங்கமா எல்லாம் கேள்வி கேக்கலாமா? தப்பு இல்லையா", என்று தலையை வருடியபடிக் கேட்டார். "எனக்குத் தப்பாத் தோணல்லேம்மா சீதாம்மா, ருக்மணியம்மா இவங்க எல்லாம் தாங்க விரும்பின வங்களையே கட்டிக்கிட்டதாச் சொன்னாரு. இந்த குந்தி அம்மா மட்டும் ஏன் இப்படித் தப்புப் பண்ணினாங்கன்னு கேக்கணும்னு தோணிச்சு, அது தாம்மா கேட்டுட்டேன்." சின்னத்தாயம்மையார் பிள்ளையின் கன்னத்தில் முத்தமிட்டபடி, "இதப்பாருய்யா... குந்தியம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களும் உன்னாட்டமா குழந்தைத்தனமா அப்படி நடந்துகிட்டாங்க; அதுக்காக அவங்களாலே சூரியனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது; என்று விளக்கிக்கூறிக் கொண்டிருக்கும்போது வெங்கடப்ப நாயக்கர் தன் மனைவியிடம், "தாயம்மா... நாளையிலிருந்து இவன் கதை கேக்கறதை எல்லாம் விட்டுட்டு; கிருஷ்ணசாமி மாதிரி ஒழுங்கா ரூமிலே இருந்து படிக்கச் சொல்லு, நான் வரேன் கடைக்கு நேரமாச்சு" என்று சொல்லியபடி துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டபடி வெளியே சென்று விட்டார். சின்னத்தாயம்மாள் அவசரம் அவசரமாக இராமசாமியின் புத்தகப் பையை எடுத்துத் தோளில் மாட்டி, "கிருஷ்ணசாமி உன்னை விட்டுட்டுப் போயிட்டான். நீ தனியாப் போவியா?" என்று கேட்டார். "எனக்கு எதுக்கம்மா துணை நான் போயிட்டு வறேம்மா" என்று விடை பெற்று வெளியே வந்து விட்டார். வழியெல்லாம் இராமசாமிக்கு ஒரே யோசனையாக இருந்தது. வகுப்பு ஆரம்பமாகியிருக்கும். நேரம் கழித்து வந்ததற்கு ஆசிரியர் காரணம் கேட்பார். இந்த வம்பெல்லாம் எதற்கு, என்று பள்ளிக்கூடமே போகாமல், தனக்குத் தெரிந்த நண்பர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழித்தார். மாலையில் ஒன்றுமே நடக்காதது போல் பள்ளிக்கூடம் விடுகிற நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விட்டார்.    7. இரு வேறு சுவையுடைய ஒரு குலைக் கனிகள்     "ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ; அப்படியே எல்லோரிடமும் தான் கடந்து கொள்வதே ஒழுக்கம் ஆகும். படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்."    - தந்தை பெரியார்     ஒரே குலையில் உள்ள திராட்சைகளில் ஒன்று இனிக்கிறது; சில சமயம் மற்றொன்று புளிக்கிறது. இது ஏன்! திராட்சைக்கு மட்டுமல்ல... இயற்கையின் இந்த விசித்திரம், மனிதப் பிறவியிலும் நிகழத்தான் செய்கிறது. ஒருவர் முகம் போல் ஒருவர் இல்லை, ஒருவர் குணம் போல் ஒருவர் குணம் இல்லை. வெங்கடப்ப நாயக்கரின் இரண்டு பிள்ளைகளும் இப்படித்தான். இரண்டு விதமான - மாறுபட்ட குணாதிசயங்களுடனேயே இளமையிலிருந்து வளர்ந்து வந்தனர். பேச்சில் - நடைமுறைப் பழக்க வழக்கங்களில், படிப்பில், கொள்கைகளில் - இப்படி அனைத்திலுமே அண்ணனும் தம்பியும், இருவேறு துருவங்களாகவே காட்சியளித்தனர். கிருஷ்ணசாமி, ஆசிரியர் அன்றாடம் கற்பிக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்டுப் படிப்பார். பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்கி நடப்பார். வகுப்பிலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அதனால், அவரிடம் ஆசிரியர்கள் அன்பு செலுத்தி னார்கள். பள்ளியிலும் நல்ல பெயர் வாங்கினார். ஆனால் - இராமசாமியின் பள்ளிப் பருவமோ இதற்கு நேர் மாறாக இருந்தது. பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. வந்தாலும் பாடங்களைக் கவனமாகக் கேட்டுப் படிப்பதில்லை - தனவந்தரான வெங்கடப்ப நாயக்கரின் பிள்ளை என்பதற்காக - இராமசாமி பரீட்சையில் எவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், கீழ் வகுப்புகளில் அவரை பாசாக்கி அனுப்பி வைத்தனர். எப்படியோ தம்பி, பரீட்சை சமயத்தில் கஷ்டப் பட்டுப் படித்து பாசாகி விட்டதாகவே கிருஷ்ணசாமி எண்ணி சந்தோஷப்பட்டார். மேல் வகுப்புகளுக்குப் போனாலும், இராமசாமியின் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாளுக்குநாள் தீய பழக்க வழக்கங்களும், கெட்ட நண்பர்களுடைய சகவாசமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனாலும் கிருஷ்ணசாமி இவற்றையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. முன்பு ஒரு தடவை தம்பியைப் பற்றி அப்பாவிடம் சொல்லி, அதனால் தம்பி அப்பாவின் பயங்கர கோபத்திற்கு ஆளானதிலிருந்து, கிருஷ்ணசாமி தம்பியைப் பற்றி வீட்டில் எவ்வித புகாரும் கூறுவதில்லை. பள்ளிக் கூடத்திற்கு தினம் தாமதமாக வருவதையோ, கீழ்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதையோ அவர்கள் வீட்டிலெல்லாம் எது கொடுத்தாலும் அருவெறுப்புக் கொள்ளாமல் வாங்கிச் சாப்பிடுவதையோ எல்லாவற்றிற்கும் மேல் சமீப காலமாக சலீம் என்கிற முகம்மதியப் பையனோடு அதிகம் பழகுவதையும்; அவர்கள் வீட்டிலும், தின்பண்டங்கள் வாங்கித் தின்பதையோ கூட கிருஷ்ணசாமி வீட்டில் வாயே திறக்கவில்லை. 'இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது' என்று தம்பிக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராமசாமி கேளாமல் போகவே, கிருஷ்ணசாமி வெறுத்துப் போய்; தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இராமசாமியிடமிருந்து ஒதுங்கியே விட்டார். இராமசாமிக்கு, சலீமின் பழக்கம் ஏற்பட்ட பிறகு தான் அசைவ உணவுகளை வீட்டிற்குத் தெரியாமல் உண்ணத் துவங்கினார். சலீமின் தாயார் ஆசையோடு கொடுக்கும் பிரியாணியை ராமசாமி மிகவும் ரசித்து உண்டார். அதனால் அந்த முஸ்லிம் அம்மணி இராமசாமி வரும் போதெல்லாம், தவறாமல் பிரியாணி செய்து கொடுப்பார்; அவரும் சாப்பிடுவார். இராமசாமிக்கு யாரைப் பற்றியும் வரவர பயம் அற்றுப் போய்விட்டது. சலீமின் வீட்டிற்கோ - இன்னும் இதுபோல் தன் சாதிக்காரர்கள் எட்டிவிலகும் வீடுகளுக்கெல்லாம் கூட இராமசாமி இயற்கையாய்ப் போய் வந்தார். ஒருநாள் - அம்மா அவரை எதற்காகவோ ஆசையோடு அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது தடால் என்று அவனைத் தள்ளி விட்டார். "ஏண்டா இராமசாமி, பல்லுக்கூட ஒழுங்கா நிதமும் தேய்க்க மாட்டியா? வாயெல்லாம், என்னமோ நாத்தமா நாறுது” என்று கூறியபோது இராமசாமி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். சலீம் வீட்டுப்பிரியாணி அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனாலும் அது என்ன கெட்ட வாசனை என்று அம்மாவால் கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மா சொன்னதற்காக அவள் சந்தோஷத்திற்காக அந்த மாலை வேளையில் மீண்டும் ஒருமுறை பல் விளக்கினார் இராமசாமி. இப்போது கூட சலீமின் வீட்டிலிருந்து வருகிறார். ஆனால், அன்று போல் அம்மாவின் அருகில் போய் மீண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது; ஏன்? அம்மாவின் அருகிலேயே கூடப் போகாமல் இருப்பதுதான் நல்லது. உடம்பெல்லாம் கூட ஒரு வேளை பிரியாணி மணக்கலாம்; என்றே எண்ணினார். இராமசாமி, தோளில் மாட்டிய பையுடன் இப்படியெல்லாம் சிந்தித்தபடி, நகரின் ஒதுக்குப்புறமாயிருந்த ஓலைக் கூரை போட்ட குடிசைகளின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டினுள்ளிருந்து, சிறுவன் ஒருவனின் பயங்கரமான அழுகுரல் கேட்டது. "என்னை அடிக்காதேம்மா...அடிக்காதேம்மா, நான் இனிமே அந்த ஐயா கூடப் பேசலே; விளையாடப் போகல்லே..." என்று அந்தச் சிறுவன் அலறிக் கொண் டிருந்தான். ஒரு கணம் தயங்கிய இராமசாமி, குடிசைக் கதவை உந்தித் தள்ளியபடி உள்ளே நுழைந்து பார்த்தபோது, அடிபட்டு அழுது கொண்டிருப்பவன் அவரது நண்பன் காளி; அவன் தாயார் கையிலிருந்த விறகுச் சுள்ளி ஒன்றினால் அவனை விளாசிக் கொண்டிருந்தாள். இராமசாமி சட்டென்று குறுக்கே புகுந்து காளியை அவன் தாயாரின் பிடியிலிருந்து விடுவித்து விலக்கினார். பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளைபோல் தோற்றமளித்த இராமசாமியின் இந்தச் செய்கையால் காளியின் தாயார் பயந்து நடுங்கிப் போனாள். ஒரு கணம் என்ன செய்வதென்று தோன்றாமல், சட்டென்று கையிலிருந்த விறகுக் குச்சியைக் கீழே போட்டுவிட்டு 'வந்திருப்பது யார்?' என்று விழிகளால் கேட்பதுபோல், பயந்தபடி காளியைப் பார்த்தாள். தன் நண்பர் இராமசாமி தன் வீடுதேடி இந்த சமயத்தில் இப்படி நிற்பார் என்று சற்றும் எதிர்பாராத காளி பிரமிப்போடு இராமசாமியைப் பார்த்தான். தாயிடம் பட்ட அடிகளின் வேதனையை மீறி, அவனுள் சந்தோஷம் பொங்கிற்று.    8. கண்ணீரும் ... தண்ணீரும்     "மூடநம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே, உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வங்தது. முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாதே என்று கவலைப் படுகின்றவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக புத்திசாலிகளாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள்."    - தந்தை பெரியார்     இராமசாமிக்கு, நிமிச நேரத்தில் அங்கு நிலவிய, சூழ்நிலையின் இறுக்கம் புரிந்துவிட்டது - இரண்டு அன்பு உள்ளங்கள், நட்போடு ஒன்றாய்ப் பழகுவதற்குக் கூட ஒரு தகுதி வரையறுக்கப்பட்டிருந்தது. உயர் சாதியினர், அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்பவும்: கீழ்ச் சாதியினர் அவர்களுக்குச் சமமானவர்களுடன்தான், நட்பும் உறவும் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் - கீழ்ச்சாதிக்காரனை மேல் சாதியினர் பாகுபாடின்றி - யார் வேண்டுமானாலும் தங்களுக்கு அடிமைபோல் ஆண்டு அனுபவிக்கலாம். இது எந்த விதத்தில் நியாயம்? - என்று இராமசாமி எண்ணிக் கொண்டிருக்கும் போதே - காளி மகிழ்ச்சி பொங்கக் கூறினான். "அம்மா... இவருதாம்மா என்னோட சினேகிதரு நம்ம அப்பாரு கூட இவங்க பண்ணையிலேதாம்மா வேலை செய்யறாரு. சின்ன எசமான் ரொம்ப நல்லவரு அம்மா..." காளியின் பேச்சைக் கேட்டு அவன் தாய் பதறிப் போனாள். "ஐயோ... பெரியநாயக்கரய்யா வீட்டுப் பிள்ளையா நீங்க?" என்று அலறியவள் "சின்ன எசமான் நீங்க இந்தத் தெருவுக்குள்ளாறெ, எங்க வூட்டுக்கெல்லாம் வரலாமுங்களா? என் மவன் கூட நீங்கள்ளாம் சேரலாமுங்களா!" என்றாள் மிகவும் பயந்தபடி. "இதில் என்ன அம்மா தப்பு இருக்கு? காளி, என்னோட சினேகிதன். நான் வலுவிலே, அவனோடு பழகினதுக்கு, சினேகமா இருந்ததுக்கு உங்க பிள்ளையைப் போட்டு ஏன் இப்படி அடிக்கறீங்க? அவன் மேலே என்னதப்பு இருக்கு?" என்று இராமசாமி கேட்டார். "எசமான்... நீங்க சின்னப் புள்ளே... உங்களுக்கு இந்த விசயமெல்லாம் புரியாது. நாங்க கீழ்ச்சாதிக்காரங்க. எங்க இடத்துக்கெல்லாம் நீங்க வரக்கூடாது. பெரிய எசமானுக்குத் தெரிஞ்சா எங்களைக் கொன்று போட்டுருவாரு.” "நீங்க எல்லாம் கீழ்சாதின்னு யாரு சொன்னாங்க? அதெல்லாம் சுத்தப் பொய் நம்பாதீங்க.” காளியின் அம்மா மெல்லச் சிரித்தாள். "எசமான்! அதை இந்த ஊரு சொல்லுது; உலகம் சொல்லுது. எல்லாத்துக்கும் மேலே காலங்காலமா, தீண்டப்படாதவன்னு வாழற எங்க பொறப்பைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? வாதம் பேசினாநாங்க வாழ முடியாது. எசமான், சீக்கிரமா இங்கிருந்து போயிடுங்க; இனிமே என் மவன் கூடவும் சேராதீங்க. அவனை விட்டுருங்க. யாராவது உங்களோடு பார்த்துட்டா, காளியோட அப்பாவுக்குத்தான் கஷ்டம் வரும்." இதையெல்லாம் கூறும்போது, பயத்தால், காளியின் உடல் நடுங்கியது. மகனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அதற்கு மேலும் அங்கிருந்து அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க இராமசாமி விரும்பவில்லை. “சரி... ரொம்பத் தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணி குடுங்க... குடிச்சுட்டுப் போகிறேன்," என்றார். இதைக் கேட்டதும் காளியின் அம்மா, தன் இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி, "ஐயோ...தண்ணியா கேக்கறீங்க?" என்றாள். ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதைப் போல. "ஏன்? தண்ணி இல்லியா?" இராமசாமி தயங்கியபடிக் கேட்டார். காளியின் அம்மாவுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. இராமசாமியைப் பரிதாபமாகப் பார்த்தபடிக் கூறினாள்: "சின்ன எசமான்... வீட்டிலே பானை நிறையத் தண்ணி இருக்கு; ஆனாலும் தவிச்ச வாய்க்கு உங்களப் போல உள்ளவங்களுக்குத் தண்ணி கூட கொடுக்க இயலாத பாவிங்க நாங்க. நீங்க என் கையாலெ தண்ணி வாங்கிக் குடிச்ச சேதி தெரிஞ்சா; உங்களவங்க என் குடிசையை மட்டுமில்லே; இந்த தெருவையே கொளுத்திடுவாங்க. கஞ்சியையோ கூழையோ குடிச்சிட்டு உங்க காலுங் கீழே எங்களை உசிரோட வாழ விடுங்க. அதனாலே சொல்றேன், தயவு செய்து இங்கெல்லாம் வராதீங்க... என் மகன் கூடப் பேசாதீங்க... சேராதீங்க... அவனை விட்டுடுங்க.” அந்தத் தாய் கையெடுத்துக் கும்பிட்டாள். இராமசாமி, காளியின் பக்கம் திரும்பினார். தாயின் நீண்ட பேச்சைக் கேட்ட அவன், இன்னும் அதிகம் பயந்து போய், பரிதாபமாக இராமசாமியைப் பார்த்தான். இராமசாமி குடிசையைச் சுற்று முற்றும் பார்த்தார். ஒரு மூலையில் தண்ணீர்ப் பானை இருந்தது. மூடியிருந்த அதன் மீதிருந்த அலுமினியக் குவளையால் தாகம் தீரத் தண்ணீரை மொண்டு குடித்தார். காளியும், அவன் தாயாரும் இந்தக் காட்சியை பயந்து நடுங்கிய உள்ளத்துடன் பார்த்துக்கொண் டிருந்தனர். இராமசாமி மெளனமாக அந்தக் குடிசையை விட்டு வெளியே வந்து விட்டார். வழியில் அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் - சட்டென்று முண்டாசை அவிழ்த்துக் கக்கத்தில் வைத்துக் கொண்டனர். காலில் இருந்த செருப்பை உதறிவிட்டு; ஒரமாக ஒதுங்கி நின்றனர். இவர்களின் இந்தச் செய்கைகள், தன்னிடமோ; தன் குடும்பத்தின் மீதோ கொண்டுள்ள அன்பின் காரணமாக; அல்லது மரியாதையின் நிமித்தமானது என்றால் இராமசாமி சந்தோஷப்பட்டிருப்பார் - ஆனால் இதற்குக் காரணம் அதுமட்டுமல்ல, அவர்களது அயராத முழு உழைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு; அவர்களை மட்டும், தீண்டத்தகாதவர்கள் என்னும் முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் ஜாதியாரிடம் அவர்களுக்குள்ள பயமே இதற்குக் காரணம், என்று எண்ணியபோது இராமசாமியின் நெஞ்சு துடித்தது.    9. நெஞ்சிலே பட்ட வடு…     "மனிதன் உலகில் தன் சுயமரியாதையை, தன்மானத்தை, உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும். பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும். நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல. இதுதான் எனது நிலை."    - தந்தை பெரியார்    செந்தாமரைப் பூவின் அழகையும், மணத்தையும் மனிதன் நேசிக்கிறான். அந்தப் பூவும் அவனுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் - அது பிறந்த சேற்றையும், சகதியையும் மட்டும் கேவலமாக வெறுக்கிறான்; அசிங்கமாகக் கருதுகிறான். சேரியைக் கடந்து வெகுதூரம் வந்த பிறகும் அவரால் காளியையும், அவன் தாயாரையும் மறக்க முடிய வில்லை. காளியும், அவன் அம்மாவும் அவர் கண் முன் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். வழியெல்லாம் அவர்களைப் பற்றிச் சிந்தித்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். எவ்வளவு புத்திசாலியான பெண்மணி காளியின் அம்மா. 'வாதம் பேசினா நாங்க வாழ முடியாது'ன்னு வாழ்க்கையின் எதார்த்தத்தை - தங்களின் இயலாமையை, எவ்வளவு இயல்பாய், இரண்டே வார்த்தைகளில் கூறிவிட்டாள். இந்த சாதிப்பிரிவு, இவர்களை எவ்வளவு கொடுமையாய் அடக்கி வைத்திருக்கிறது; அவள் கட்டியிருந்த கிழிந்த நூல் சேலைக்குப் பதில் - பட்டுப் புடவையும்; பொன் நகைகளையும் பூட்டித் தன் வீட்டுக் கூடத்தில் கொண்டு போய் நிறுத்தினால் - அழகிலும், அறிவிலும், காளியின் தாயார், தன் தாய்க்கு எந்த விதத்தில் தாழ்ந்து நிற்பாள்? தன் ஆசை மகனைக் கைவலிக்க அடித்து விட்டு; அப்படி யாருக்காகவோ, எதற்காகவோ அடிக்க நேர்ந்ததை எண்ணி, அந்தத்தாய் தன் மகனைக் கட்டிக் கொண்டு அழுதாளே! தன் தாயார் தங்களிடம் செலுத்துகிற அன்பிற்கு இது எந்த விதத்தில் குறைந்து போயிற்று. சிந்திக்கத் தெரிந்த இப்படியொரு அம்மாவைப் பெற்ற காளி அதிர்ஷ்டக்காரன்தான்.” அந்தத் தாயைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போலிருந்தது இராமசாமிக்கு. இப்படிப் பலவாறு எண்ணியபடி, கால்கள் போன போக்கில் சென்று கொண்டிருந்த இராமசாமிக்கு அப்போதுதான் புரிந்தது - தன்னுடைய வகுப்பு வாத்தியார் வசிக்கும் தெருவழியே போய்க் கொண்டு இருக்கிறோம் என்பது. அந்தத் தெருவிற்கே வரக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவர் இராமசாமி. ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில், சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ராமசாமியைப் பார்த்துவிட்டு,"பள்ளிக்கூடம் போகாமல்; நாயக்கர் பிள்ளை ஊரைச் சுத்திட்டுப் போறான் பாரு" என்று அவர்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டது அவர் காதில் தெளிவாக விழுந்தது. அதை இலட்சியம் செய்யாமல் அவர்களைத் தாண்டி, தன்னுடைய வாத்தியார் வீட்டு வாசலைக் கடக்கும்போதும் - இராமசாமி ஒரு கணம் அந்த வீட்டையே வெறிக்கப் பார்த்தபடி நின்றார். விட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. விசாலமான திண்ணை வெறிச்சோடிக் கிடந்தது. மாலை வேளைகளில், சில பணக்கார வீட்டுப் பிள்ளைகள், தனியாகப் பணம் கொடுத்து அந்தத் திண்மையில் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கற்றுக் கொள்வதுண்டு. அந்த வீட்டைப் பார்க்கப் பார்க்க இராமசாமியின் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கி எழுந்தது. தன் இதயத்தை யாரோ பலம் கொண்ட மட்டும் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அந்த வீட்டைக் கோபமாகப் பார்த்தபடி வேகமாகக் கடந்து மேலே சென்றார். எத்தனை முயன்றாலும் நெஞ்சிலே பட்ட வடுவாக அன்று நடந்த சம்பவத்தையும் - அதனால் தன் மனம் அனுபவித்த மிகப் பெரிய வேதனையையும், அவரால், ஒதுக்கித் தள்ளி விடவோ; மறக்கவோ முடியவில்லை. அந்தச் சம்பவம் இதுதான் - - ஒரு நாள் எங்கேயோ போய்விட்டு அந்தத் தெரு வழியாக இராமசாமி வந்தபோது வாத்தியார் வீடு திறந்திருந்தது. இராமசாமிக்கு அப்போது மிகவும் தாகமாயிருந்ததால், வீட்டினுள் சென்றார். குடிக்கத் தண்ணிர் கேட்டார். வாத்தியாரின் மகள் செம்பு நிறைய நீர் கொண்டு வந்து டம்ளரில் ஊற்றினாள். இராமசாமி அதை வாங்கக் கை நீட்டியபோது, டம்ளரைக் கையில் கொடுக்காமல் தரையில் வைத்தாள். இராமசாமி தண்ணீரை எடுத்துக் குடிக்கத் துவங்கும் போது, "எச்சில் பண்ணாமெத் துரக்கிக் குடிங்க," என்றாள் ஆசிரியரின் மகள். இராமசாமி அப்படியே செய்தார். அதன்பிறகு, இராமசாமி குடித்த டம்ளர் மீது இரண்டு மூன்று முறை நீர் ஊற்றிக் கழுவி சுத்தமானதாக எண்ணிய பிறகே அந்த டம்ளரை உள்ளே எடுத்துக் கொண்டு சென்றாள். ஆசிரியரின் மனைவி இதையெல்லாம் அருகிலிருந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இராமசாமி அப்படியே குன்றிப் போனார். அந்த அம்மாளின் இந்தச் செய்கை, அவரது சுயமரியாதையை வெகுவாகப் பாதித்ததுடன்; மிகுந்த அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டது போலவும் மனதை வெகுவாக வருத்தியது. பள்ளி ஆசிரியர் வைதீகர், ஓதுவார் வகுப்பைச் சேர்ந்த சைவப் பிள்ளைமார். அவர் மற்றவர்களைவிடத் தங்கள் சாதியே உயர்வு என எண்ணுபவர். இப்படிப்பட்ட ஆசிரியர் வீட்டில்; கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடிப்பதைவிட, காளியின் வீட்டில் மொண்டு குடித்து விட்டு வந்ததே அவர் மனதிற்கு மகிழ்ச்சி ஊட்டுவது போல் தோன்றியது. அதன் பிறகு - அந்த ஆசிரியர் வீட்டை மட்டுமல்ல; அந்த உயர் சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவையே இராமசாமி புறக்கணித்தார். ஆனால், இன்று எப்படியோ வழிதவறி வந்துவிட்டார். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தபோது, இராமசாமிக்கு வேடிக்கையாகவும் - மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது. ஒருகணம் அவர் தங்கள் குடும்பத்தையே எண்ணிப் பார்த்தார். இராமசாமியின் தாயார், மற்றெவரையும் விட வைணவ பக்தர்களான, தங்கள் சாதிதான் உயர்வானது என்று எண்ணுபவர். அதையே, மகனிடம் கூடப் பலமுறை கூறி உபதேசம் செய்திருக்கிறார். ஆனால் - ஆசிரியரின் மனைவியோ, 'ஒதுவார் சாதியே உயர்வு', என்று அவரை அங்கீகரிக்கவில்லை. இராமசாமிக்கு இவை எல்லாமே வேடிக்கையாகத் தோன்றியது. ஒவ்வொரு பிரிவினரும், மேல் மட்டத்தில் தங்களையே உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாலும் உள்ளுர அவர்களுக்குள்ளும் வேற்றுமை இருந்தது. ஆனால் - ஆதிதிராவிடர்களை அன்னியர்களாக எண்ணித் தள்ளி வைப்பதிலும்; தீண்டத்தகாதவர்கள் என்று தெருவுக்குள் விடாமலிருப்பதிலும் மட்டும்; அனைத்து மேல் சாதியினருமே ஒற்றுமையாயிருந்தனர். இதற்கு இராமசாமியின் குடும்பமும் விதிவிலக்கல்ல. இராமசாமியின் அம்மா, விரதம், தெவசம், நோன்பு, காலங்களில் வேற்று சாதியினருடன் பேசவோ; அவர்கள் கண்ணில் படவோ கூட மாட்டார். தன் வீட்டில் வேற்று சாதிக்காரர்களைச் சேர்க்க மாட்டார். அவர்களுக்குத் தண்ணீரோ - உணவோ கொடுக்க வேண்டியிருந்தால் கூட, 'ஆசிரியரின் மனைவிக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்தவளில்லை’ என்பது போல் நடந்து கொள்வார். இவற்றையெல்லாம் வெறுப்போடும்; வேதனையோடும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அந்த வயதில் அவரால் என்ன சீர்திருத்தம் செய்துவிட முடியும்? இதனால் - தங்களை மட்டும் உயர் சாதியினர் என்று கூறிக் கொள்கிறவர்கள் அனைவர் பேரிலுமே நாளுக்கு நாள் இராமசாமியின் உள்ளத்தில் ஒரு தார்மீகமான வெறுப்பும், கோபமும் வேகமாக வளர்ந்து பெருகிக் கொண்டே வந்தது. குமுறிக் கொண்டிருக்கிற எரிமலை எனறாவது ஒரு நாள் வெடிக்காமலா போகும்! அதற்கான காலம், நேரத்திற்காகவே அன்றிலிருந்து இராமசாமி காத்துக் கொண்டிருந்தார். தாழ்ந்த சாதியினர் என்று மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் முன்னிலும் அதிகமாக ஒட்டுறவுடன் பழகினார். சலீமைத் தொடர்ந்து இராமசாமிக்குப் பல முஸ்லிம் இளைஞர்கள் நண்பர்களானார்கள்.   காளியைப் போல பல பிள்ளைகளைத் தேடிப் பிடித்து கொண்டார். கையில் உள்ள தன் காசுக்குச் சேரிப்பிள்ளைகளுக்கு எதையாவது வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். வீட்டில் அம்மா, தன் குழந்தைகளுக்கென்று ஆசையாய்ச் செய்து வைத்திருக்கும் இனிப்புப் பண்டம், பலகாரங்கள் எல்லாம் இரகசியமாக இராமசாமி மூலம் சேரிக் குழந்தைகளை வந்து அடையும். அவர்கள் கனவு கூடக் கண்டிராத அந்த நெய்ப் பண்டங்களை - சேரிக் குழந்தைகள் ரசித்து உண்பதைக் கண்டு மகிழ்ந்தார். இப்படியெல்லாம் நடந்து கொள்வதின் மூலம் உயர் சாதியினருக்குத் தான் ஏதோ தண்டனை கொடுத்து விட்டது போன்ற ஓர் ஆத்ம சந்தோஷத்தை இராமசாமி தனக்குள் அனுபவித்தார். அந்த மகிழ்ச்சியைத் தன் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் - இராமசாமியின் இந்த அல்ப சந்தோஷமும், சுதந்திரமும் திடீரென்று ஒரு நாள் பறிக்கப்பட்டு விட்டது. ஆம்! உயர்சாதியினருக்குத் தலைக் குனிவு ஏற்படுத்தும் இராமசாமியின் செய்கைகள் எல்லாம் - சேரியிலிருந்து; சலீம் வீடு சென்று வருவது வரை - ஒன்று விடாமல் இராமசாமியின் தாயாரிடம் வந்து அறிந்தவர்கள் பலரும், ஒப்பாரி வைப்பது போல், புகார் செய்து புலம்பித் தீர்த்தனர். மகன் திருந்தி விட்டதாக எண்ணிக் கொண்டிருந்த சின்னத் தாயம்மையார், மிகுந்த வேதனைக்குள்ளாகி, எல்லாவற்றையும் ஒன்று விடாமல், தன் கணவரிடம் கூறிவிட்டார், அதன் விளைவு?    10. பள்ளி போயிற்று கடை வந்தது…     மனிதனுக்குக் கல்வி அவன் அறிவாளியாகும் லட்சியத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டும். படிப்பில் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். பகுத்தறிவிற்கு ஏன் பயப்பட வேண்டும்? சிந்தனை அறிவு ஒன்றுதானே, உண்மையறிவாகக் கருதப்படக் கூடியது. வெறும் புத்தக அறிவு, அறிவாகி விடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? அறிவு வளர்ச்சிக்குக் கல்வி பயன்படவில்லையென்றால் வேதனையாகத்தானே இருக்கிறது! வெங்கடப்பர் நொறுங்கிப் போனார். தன்னுடைய இரண்டு பிள்ளைகளைப் பற்றியும் அவர் ஏராளமான கனவுகள் கண்டு வந்தார். கலெக்டரைப் போல் பெரிய படிப்பெல்லாம் படித்து - வெள்ளைக்காரத் துரைகளைப் போல மிடுக்காக உடைகள் அணிந்து கொண்டு, பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களாகத் தம் மக்கள் பெயர் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். நம்பிக்கை நட்சத்திரமாகக் கண்ணும் கருத்துமாகப் படித்து வருபவர் கிருஷ்ணசாமி ஒருவர்தான். இராமசாமியைப் பொறுத்தவரை - அவனைப் பற்றிய ஆசைகளும் - எதிர்பார்ப்புகளும் அவர் மனதில் அடியோடு அஸ்தமித்து விட்டன. - 'பள்ளிக்கூடம் ஒழுங்காய்ப் போவதுமில்லை, படிப்பதுமில்லை; கெட்ட சகவாசமும், தீய பழக்க வழக்கங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. எல்லாவற்றிற்கும் சிகரமாகக் கீழ்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுகிறான். தங்கள் பெருமை மிக்க குல ஆசாரத்தையும்; அனுஷ்டானங்களையுமே தன் மகன் பரிகசிப்பது போல் நடந்து கொள்கிறான்.' சின்னத்தாயம்மையாரால், கணவரிடம் முறையிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? வெங்கடப்ப நாயக்கரும், மகனைத் திருத்த, தனக்குத் தெரிந்த வழியெல்லாம் முயன்று தோற்றுப் போனார். அவனைத் திருத்த ஒரே வழிதான் அவருக்குத் தெரிந்தது. மறுநாள் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இராமசாமியை அருகில் அழைத்தார். அவன் தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையைக் கேட்டு வாங்கினார். "இனிமேல் நீ படிக்க வேண்டாம்; என்கூட மண்டிக் கடைக்கு வந்து வியாபாரத்தை கற்றுக் கொள்" என்றார். இராமசாமி எவ்வித மறுப்பும் கூறாமல் “சரி அப்பா", என்று கூறினான். தன்னுடைய தந்தை, எவ்வித முன் அறிவிப்புமின்றித் திடீரென்று தன் படிப்பை நிறுத்தி விட்டாரே! என்கிற கவலையோ, துளி வருத்தமோ கூட இராமசாமிக்கு ஏற்படவில்லை. 'பகுத்தறிவில்லாத ஆசிரியர்களிடம் பாடம் படிப்பதைவிட; படிக்காத முட்டாளாக இருப்பதே மேல்' என்று அவருக்குத் தோன்றியது. ஊர்ப்பிள்ளைகளுக்கெல்லாம், கல்விக்கண் திறக்கப் பள்ளிக்கூடம் கட்டியவர்; தன் பனிரெண்டு வயதுப் பிள்ளைக்குப் பள்ளியின் வாசலை அடைத்து விட்டார். ஆசிரியர்கள், பெரிய தலைவலி விட்டதென்று மகிழ்ந் தனர். 1891-ம் ஆண்டோடு அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது. இராமசாமி இதற்கெல்லாம், சிறிதும் கவலைப் படாதவராகவே காணப்பட்டார். சாதிப்பித்து பிடித்த ஆசிரியரிடம் கல்வி கற்பதை விட முட்டாளாக இருப்பதே மேல் என எண்ணி, அப்பாவுடன் சேர்ந்து கடைக்குப் போனார். வெகு விரைவிலேயே வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். கமிஷன் கடையில் திறமையாக ஏலம் போட்டு விற்பது - மொத்த வியாபாரிகளிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் பக்குவமாகப் பேரம் பேசவேண்டிய முறை - இரயில் நிலையங்களிலிருந்து கடைக்கு வந்து போகும் சரக்குகளுக்கு ஒழுங்காகக் கணக்கு வைத்துக் கொள்வது; இப்படித் தன்தந்தையின் தொழில் துறையில் - சகல விதத்திலும் தன் அறிவுத்திறனை பிறர் மெச்சும்படியாக இராமசாமி நடந்து கொண்டு; விரைவிலேயே நற்பெயர் எடுத்து விட்டார். வியாபாரிகள்; வயதான வெங்கட்டப்பரை விட சுறுசுறுப்பும், புத்தி கூர்மையும் உடைய இராமசாமியிடம் வியாபாரம் செய்யவே விரும்பினர். பல ஆண்டு கால அனுபவமுடைய தன்னுடைய தொழில் வெற்றியின் ரகசியத்தை, பனிரெண்டு வயதிலேயே புரிந்து கொண்டு வெற்றி மகனை எண்ணி வெங்கட்டப்பர் உள்ளம் பூரித்தார். இது தாயாருக்கும் பெருமையாயிருந்தது. ஆனால், இராமசாமியின் உள்ளத்தில் மட்டும் ஒரு குறை - முன்பெல்லாம் பள்ளி விட்டதும், வீட்டில் நடக்கும் இராமாயணம், பாரதம் சொற்பொழிவுகளை அவரால் கேட்க முடிந்தது. இப்பொழுது கடையை விட்டுப் போக முடியாது. ஆனால் கடை விடுமுறை நாளில் கதை சொல்கிறவர்கள் வீடு தேடிப் போவார். இவர்கள் எதைச் சொல்லி, நாள் தவறாமல், இத்தனை மக்களைத் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்கள் என்று அறியவோ - அல்லது - இத்தனை பேரும் இந்தக் கதைக்காரர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ள வருகிறார்கள் என்று அறிந்து கொள்ளவோ - இராமசாமியும் விடுமுறை நாளில் அவர்கள் வீடு தேடிப்போய் நடந்த ஒரு வாரக் கதையையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்கள் மகிழ்ச்சியோடு கூறுகிற விளக்கங்கள் தனது பகுத்தறிவுக்கு ஏற்பதாக இல்லாவிட்டாலும்; வாதம் செய்ய மாட்டார். வாதம் செய்தால், அதிகப் பிரசங்கி என்று பிறகு கதை சொல்ல மாட்டார்கள்; அதன் பிறகு அவர்களிடமுள்ள விஷய ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்வதோ; எடை போடுவதோ எப்படி! மேலும், முன்பு ஒரு சமயம், இப்படி ஒருவரிடம் வாதம் செய்து, அப்பாவின் கோபத்திற்கு ஆளானதை அவர் மறக்க இல்லை.   விடுமுறை நாளைக் கூட வீணாக்காமல், இராமசாமி தன் வீடு வந்து கதை கேட்பதை சில உபன்யாசகர்கள், பெருமையாக சின்னத் தாயம்மையாரிடம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் அந்தத் தாய் மகிழ்ந்து போவார். தன் மகன் மிகவும் திருந்தி விட்டான்; தீய வழிகளை விட்டு, இறைவனிடமும், பக்தி மார்க்கத்திலும் அவன் மனம் செல்லவாரம்பித்து விட்டது, என்று பெருமையோடு அடிக்கடி எண்ணிக் கொள்வார். கிருஷ்ணசாமி படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மளமளவென்று முன்னேறினார். சித்த வைத்தியம் பயின்று பட்டம் பெற்றார். தனது தந்தையார் நிறுவிய தர்ம மருத்துவமனையைக் கவனித்துக் கொண்டார். ஏழை நோயாளிகளுக்கு மனமுவந்து, முழு நேரப் பணியாற்றினார். அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவராகப் புகழ் பெற்றார். பெற்றோர் மனம் கோணாதபடி நடந்து இனிய வாழ்வு வாழ்ந்து வந்தார்.    11. ஈரோட்டில் நிச்சயிக்கப்பட்ட  திருமணம்     "ஆணுக்குப் பெண் சரிநிகர் ஆவாள். சோறு சமைத்துப் போட்டுச் சாப்பிடும் சோற்று ஆள் அல்ல பெண்! அடிமை இல்லை அவள்! சமமானவர் - வாழ்க்கைத் துணைவி அவள்."    - தந்தை பெரியார்     உலகில், எல்லா நற்குணங்களும் பொருந்திய ஒருவரைப் பார்ப்பது அரிதிலும் அரிது. வெங்கடப்பர் சிறந்த பக்திமான், நேர்மையானவர், உழைப்பாளி, இரக்க குணமுடையவர், திறமையான வியாபாரி - இத்தனையிருந்தும், பகுத்தறிவுப்பார்வையில் அவர் பின் தங்கி விட்டார். மண்டிக்கடையை மகனிடம் ஒப்புவித்த சில வருஷங்களிலேயே இராமசாமியின், அதிபுத்திசாலித் தனத்தையும், வாதத்தில் மற்றவர்களை மடக்கிக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலுள்ள திறமையையும் கண்டு வியந்து போனார். பணம் கொடுப்பதிலும்; வராத கடனை வசூலிப்பதிலும் இராமசாமி காண்பிக்கும் கறாரும் கண்டிப்பும், தந்தையை பிரமிக்கச் செய்தது. இராமசாமியின் அறிவுக் கூர்மையும், தொழில் திறமையும் வியாபாரிகளிடையே பிரபலமாயிற்று. மண்டிக்கடைக்காரர்கள் மத்தியிலே ஏற்படும் சண்டை சச்சரவுகள்; கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் தகராறுகள், இவை எதுவானாலும் மத்தியஸ்த்தத்திற்கு, அவர்கள் இராமசாமியிடம்தான் வருவார்கள். இராமசாமி இருசாரருடைய பிரச்சினையையும் நன்கு புரிந்து கொண்டு நியாயம் வழங்குவார். இராமசாமியின் தீர்ப்பில், இரு சாராருமே மகிழ்ச்சியோடு செல்வார்கள். தொழில் வட்டாரத்திலிருந்து; இராமசாமியின் இந்த மத்தியஸ்த்தப் புகழ் மெல்ல ஊருக்குள்ளும் பரவி - ஊரில் எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதை இராமசாமி வந்து தீர்த்தால் சரி என்கிற நிலைமை உருவாகி விட்டது. தன் தந்தையாரைப் போலவே, ஈரோட்டில் இராமசாமியின் புகழும், செல்வாக்கும் நாளுக்கு நாள் பெருகி வந்தது. ஊரே புகழ்ந்தது. மகனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்துப் போன சின்னத்தாயம்மையார், இராமசாமிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்கிற தன் விருப்பத்தைக் கணவரிடம் கூறினார். வெங்கடப்பரும், இதுவே நல்ல தருணம் என்று மாமன் மகளான நாகம்மையை, இராமசாமிக்கு மண முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். நாகம்மை, தாதம்பட்டி, அரங்கசாமி - பொன்னுத்தாயி தம்பதியரின் மகள். இராமசாமி, நாகம்மையை நன்கு அறிவார். உறவு என்பதோடு, சிறு வயது முதலே, ஒன்றாய்ப் பழகி; ஓடி விளையாடி வந்தவர்கள். ஒருவர் குணத்தை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசித்து வந்தனர். ஒரு திருமணத்திற்கு, இதைவிடச் சிறந்த வேறு என்ன பொருத்தம் வேண்டும்! நாகம்மையின் பெற்றோர், பெரிய செல்வந்தர்கள் அல்ல என்றாலும்; பொருளாதார நிலையை ஒரு பொருட்டாக இரு குடும்பத்தாரும் கருதவில்லை. சாத்திர சம்பிரதாயங்களோடு, ஈரோடு நகரமே வியக்கும் வண்ணம் அதிவிமரிசையாக இராமசாமி நாகம்மை திருமணம் நடைபெற்றது. இராமசாமிக்கு அப்போது வயது 19, நாகம்மையாருக்கு வயது 13. திருமணத்திற்கு ஏராளமான பிரமுகர்களும், வியாபாரிகளும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். நம்ம நாயக்கர் வீட்டுத் திருமணம் என்று ஊரே திரண்டு வந்து பந்தலில் கூடியிருந்தது. இராமசாமி மறவாமல் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். பிள்ளைப் பிராயத்தில் படிப்பு; வாலிப வயதில் திருமணம். இராமசாமி இந்த இரண்டாவது கட்டத்தில் இருந்தார். திருமணத்திற்குப் பிறகு பொறுப்பும், கடமைகளும் அதிகம் என்று அவருக்கு உணர்த்தப்பட்டது. ஆனால் இராமசாமி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே இருந்தார். இன்னும் சொல்லப் போனால் - தொட்டதற்கெல்லாம் பெற்றோரின் தலையீடு இல்லாத ஒரு சுதந்திர மனிதனாகவே இப்போது அவருக்குத் தோன்றியது.    12. வழிகாட்டியாக வாழ்ந்து - காட்டியவர்...     "சுய மரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது. கணவன் மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான்; இதில் ஒருவருக்கொருவர் அடிமை - ஆண்டான் என்பது கிடையாது. இருவரும் சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்."    - தந்தை பெரியார்     ஒரு மரத்துண்டை எத்தனை நேரம் நீருக்கடியில் அமிழ்த்தி வைத்திருந்தாலும், கையை எடுத்தவுடன் அந்த மரத்தடி எழும்பி, நீர் மட்டத்திற்கு மேலே வந்து மிதக்கவே செய்யும். அப்படித்தான் இராமசாமியின் வாழ்க்கையும் இருந்தது. பெற்றோரை அனுசரித்துப் போனதில்; மற்றவர்கள் கண்ணுக்கு அவர் மாறி விட்டதாக, திருந்தி விட்டதாகத் தோன்றினாலும்; இராமசாமி தன் இயற்கைக் குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. தன்னைப் பொறுத்தவரை, மாறுவதற்கோ, திருந்துவதற்கோ தான் எந்தத் தவறும் செய்ததாக இராமசாமி எண்ணவில்லை. நாகம்மையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும், இராமசாமி தன்னுடைய பழக்க வழக்கங்களையும்; தான் விரும்பிய நண்பர்களின் சேர்க்கையும் விட்டு விலகி விடவில்லை; தனக்குச் சரி என்று பட்டதைத் தயங்காமல் செய்தார். சாதிமத பேதமின்றி வெளியில் அவருக்குப் பலவிதமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு இரவு எப்போது வீடு திரும்புவார் என்று நாகம்மைக்கே தெரியாது. நாகம்மை கணவரைப் பற்றி எதுவும் பிறரிடம் கூற மாட்டார். ஆனாலும்; இராமசாமியின் பெற்றோருக்கு எல்லா விஷயங்களும் புரிந்தன. தன் மகனுக்காக ஒரு இளம் பெண்ணினுடைய வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்று வெங்கடப்பரும் தாயம்மையாரும் உள்ளூர வருந்தினார்கள். முன்போல், பகிரங்கமாக மகனைக் கண்டிக்கவும் வெங்கடப்பராமல் இயலவில்லை. இராமசாமி, திடீர் திடீர் என சாதி மதம் பாராமல், கடை வாடிக்கையாளர்கள் என்றும்; நண்பர்கள் என்றும் பலரைத் தன் வீட்டிற்கு முன் அறிவிப்பின்றி சாப்பாட்டிற்கு அழைத்து வந்து விடுவார். நாகம்மையார், சிறிதும் முகம் கோணாமல், நிமிஷ நேரத்தில் அனைவருக்கும் உணவு தயார் செய்து அன்போடு பரிமாறுவாள். இதையெல்லாம் கண்டு மனம் வெதும்பிய வெங்கடப்பர் மகன் தலையில் இன்னும் கூடுதல் பொறுப்பைச் சுமத்தினால் திருந்தி விடுவான் என்று எண்ணி - தன் பெயரில் இருந்த கடையை இராமசாமி பெயருக்கு மாற்றி, முழுப் பொறுப்பையும் அவன் தலையில் சுமத்தினார். கூடுதல் பொறுப்புக்களைத் திறமையாகச் சமாளித்தாரே தவிர; அதன் பிறகும் இராமசாமி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. பக்தி நெறியும்; சுத்த சைவமுமாய் திகழும் வீடு அது. சிறு வயதில், நண்பன் சலீமின் பழக்கத்தால் புலால் உண்ணும் பழக்கம் இராமசாமிக்கு ஏற்பட்டது. அதன்பிறகு அதன் சுவையிலிருந்து இராமசாமியால் மீளவே முடியவில்லை. சைவக் குடும்பத்திலிருந்து வந்த நாகம்மையிடம், இராமசாமி நைச்சியமாகப் பேசி, அவளையும் உண்ணவும் செய்துவிட்டார். கணவரது குணாதிசயங்களை, இளம் வயதிலிருந்தே நன்கறிந்திருந்த நாகம்மை எதற்கும் மறுமொழி கூறாமல், கணவன் மனம் கோணாமல் நடப்பதை தன் கடமை என்று அனைத்தையும் சகித்து வாழ்ந்தாள். கடை வேலையை விட இராமசாமிக்கு வெளிவேலை தான் அதிகமாயிருந்தது. ஊரில் எந்த மூலையில் அடிதடியோ; தொழில் தகராறாகிப் புருஷன் - மனைவி குடும்பச் சண்டையோ, எது நடந்தாலும் உடனே பலர் இராமசாமியைத் தேடி, கடைக்கோ வீட்டிற்கோ ஆட்கள் வந்து விடுவார்கள். எந்த ஒரு வழக்கையும் புத்தி பூர்வமாக நன்கு ஆராய்ந்த பிறகுதான் இராமசாமி ஒரு முடிவுக்கு வருவார். அதன் பிறகு - இராமசாமி வழங்கிய தீர்ப்புக்கு மறு பேச்சிருக்காது. அனைவரும் கட்டுப்பட்டு நடப்பர். இதனால், இராமசாமியின் அறிவும், புகழும் ஈரோட்டைத் தாண்டி சுற்று வட்டாரங்களிலும் பிரபலமாயிற்று. இளமையிலிருந்தே பழமையை வெறுப்பவராகவும் முற்போக்குச் சிந்தனையுடையவராகவும் இராமசாமி இருந்து வந்தார். பிறருக்குத் தான் போதிக்கிற எந்த முற்போக்கும், சீர்திருத்தமும் முதலில் தன் வீட்டிலிருந்தே துவங்க வேண்டுமென்று விரும்பினார். அதனால் - தன் தாயாருடன் சேர்ந்து விரதம், நோன்பு, கோவில், பூஜை என்றிருந்த தன் மனைவியிடம் அனைத்தையும் கைவிடும்படிக் கூறினார். நாகம்மைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருமகளுடைய தர்ம சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட சின்னத் தாயம்மையார் - "நீ இனிமேல் எந்த விரதமும் நோன்பும் இருக்க வேண்டாம். இராமசாமியின் இஷ்டப்படியே நடந்து கொள்" என்று கூறிவிட்டார். கழுத்திலிருந்த தாலியைக் கழற்றித் தரும்படி இராமசாமி கேட்டபோது மறுப்புக் கூறாமல் கழற்றிக் கொடுத்தார் நாகம்மை. அதைப் பற்றித் தன் மாமியார் மாமனாரிடம் கூட நாகம்மை கூறவில்லை. ஒன்றுமே நிகழாதது போல் எப்போதும் போல் சகஜமாக இருந்தார். நாகம்மை முழுவதும் தன் வழிக்கு வந்துவிட்டதில் மகிழ்ந்த இராமசாமி தாலியை மனைவியிடம் கொடுத்து திரும்பவும் அணிந்து கொள்ளச் செய்தார்.    13. வாழ்வே மாயம்…     "சிந்திப்பீர்! சிந்திப்பதில் கெடுதியில்லை. சிந்திப்பதால் நீங்கள் பாவிகளாகிவிட மாட்டீர்கள்; சிங்தித்தால்தான் உங்கள் இழிவினுடைய துன்பத்தினுடைய அஸ்திவாரம், ஆணிவேர் எங்கிருக்கின்றது என்று உங்களுக்குப் புரியும்."    - தந்தை பெரியார்     வாழ்க்கையில் ஒருவருக்கு நல்ல மனைவி அமைவதற்கும்; நல்ல மனைவிக்கு அன்பான கணவன் கிடைப்பதற்கும் பாக்கியம் செய்ய வேண்டும் என்பார்கள். அந்த வகையில் நாகம்மை இராமசாமி இருவருமே அதிர்ஷ்டசாலிகள்தான். இளம் வயதிலிருந்தே இருவரும் ஒன்றாய்ப் பழகி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வளர்ந்தவர்கள். இத்தகையவர்களைத் திருமணத்தின்போது பெற்றோர்கள் பிரித்து தங்கள் குழந்தைகளுக்கு வேறு வரன் தேடி முடிக்க எண்ணினார்கள். ஆனால் நாகம்மையோ - மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்? என்று உறுதியாகப் பெற்றோரிடம் கூறிவிட்டார். ஒரு பெண் ஒருவரை விரும்புவது பெரிதல்ல. ஆனால் திருமணத்தின்போது அதற்கு எதிர்ப்பு வந்ததும், 'நான் விரும்பியவரைத்தான் மணந்து கொள்வேன்' என்று போராடி - - ஒரு பெண் வெற்றி பெற்றாள் என்றால் அதற்கு அவரது உள்ளத்தில் எவ்வளவு உறுதி இருந்திருக்கி வேண்டும்! நாகம்மையார் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கவில்லையே தவிர பொது அறிவும், பொறுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. இப்படியொரு பொறுப்புள்ள அருமையான மனைவி கிடைத்ததினால்தான் இராமசாமிக்கு இஷடப்படி பொதுவாழ்வில் ஈடுபட்டு உழைக்க முடிந்தது. திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1904-ம் வருடம் நாகம்மையார் ஓர் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அனைவருடைய அன்புக்கும் ஆசைக்கும் பாத்திரமாயிருந்த அந்தக் குழந்தை ஐந்தே மாதங்களில் இறந்து போய் விட்டது. அதற்குப் பிறகு இராமசாமி தம்பதியருக்குக் குழந்தையே பிறக்கவில்லை. இந்த சோகம் நாகம்மையைப் பெரிதும் வருத்தியது. இராமசாமி எதைப் பற்றியும் கவலைப் படாதவராகவே வாழ்ந்து வந்தார். நினைத்த போது கடைக்குப் போவார். மற்ற நேரங்களில் நண்பர்களுடனேயே பொழுதைக் கழிப்பார். எப்பொழுது பார்த்தாலும் எதைப் பற்றியாவது யாருடனாவது வாதம் செய்து கொண்டிருப்பார். வீட்டில் தனக்காக ஒரு மனைவி காத்திருக்கிறாளே என்கிற நினைப்பே அவருக்கு இருக்காது. நாகம்மையோ எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்று சகித்துக் கொள்வார். கணவரது எந்த நடவடிக்கை பற்றியும் மாமனார் மாமியாரிடம் குறை கூறவே மாட்டார். ஆனால் நாகம்மை இப்படித் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு வாழ்வதை வெங்கடப்பரால் தாங்க முடியவில்லை. இரவு வெகு நேரம் கழித்து வந்த இராமசாமியை மிகவும் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அப்போது நாகம்மையும் அருகில் இருந்தார். வெங்கடப்பர் இதுபோல் நடந்து கொண்டதில்லை. பதில் ஏதும் பேசாது மாடிக்குப் போய் விட்ட இராமசாமிக்கு மனது சரியில்லை. இரவு முழுதும் யோசித்தபடி தூங்காமல் விழித்திருந்தார். வாழ்க்கையே அவருக்குக் கசந்தது. 'காசிக்குப் போய், பேசாமல் துறவி ஆகிவிடுவது' என்று அவர் மனம் முடிவிற்கு வந்து விட்டது. எவரிடமும் சொல்லாமல் இரவோடு இரவாக தன் தங்கை கண்ணம்மாவின் கணவருடனும், வேறொரு நண்பருடனும் ஈரோட்டை விட்டு காசிக்குப் புறப்பட்டு விட்டார். பொழுது விடிந்தது. தன் கணவரை வீட்டில் காணவில்லை என்றதும் நாகம்மை பதறிப் போனார். உடனே போய் தன் மாமனார் மாமியார் இவர் களிடமும் விபரம் கூறினார். மகனைக் காணோமென்றதும் சின்னத்தாயம்மையார் துடித்துப் போனார். வெங்கடப்பர் ஊர் முழுது தேடினார். நாலா பக்கங்களுக்கும் ஆட்களை அனுப்பி தேடினார். பயன்தான் இல்லை. மனமுடைந்து போனார்.    14. காசியில் கற்றுக் கொண்ட பாடம்     "பாமரனின் ஞான சூனியம், சுயநலக் காரனின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்."    - தந்தை பெரியார்     'துறவுக்குத் துணை எதிரி' என்பதை இராமசாமி கற்றுக் கொண்டார். அவருடன் கூட வந்த தங்கை புருஷனும் மற்ற நண்பரும் சென்னையை அடைந்ததும் நாம் எதற்காகக் காசிக்குப் போகிறோம்? என்று கேட்டனர். "காசிக்குச் சென்று கொஞ்ச காலம் சாமியாராக வாழ்ந்து பிறகு துறவி ஆகிவிடலாம்” என்று கூறினார். இதைக் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டும் போனார்கள். "எங்களுக்குத் துறவியாக விருப்பம் இல்லை; உடனே ஊருக்குப் போக வேண்டும்" - என்றனர். இராமசாமி மறுப்பு ஏதும் கூறாமல் உடனே அவர்களை ஈரோட்டுக்கு அனுப்பி வைத்தார். மறு ரயிலிலேயே,தனியாக அவர் காசிக்குப்புறப்பட்டு விட்டார். இரயிலில், இராமசாமிக்கு இரண்டு பிராமணர்களின் துணை கிடைத்தது. அவர்களும் அவரைப் போலவே காசிக்குச் செல்வதாகக் கூறினார்கள்; வழியில் பெஜவாடாவில் சில நாள் தங்கி விட்டு, பிறகு காசி போகலாம் என்று இரு பிராமணர்களும் கூறினர். இராமசாமியும் சம்மதித்து பெஜவாடாலில் இறங்கினார். அந்த இரு பிராமணர்களும், வீதிதோறும் பஜனை பாடல்கள் பாடி யாசகம் செய்தனர். இராமசாமியும் அவர்களுடன் செம்பு ஏந்திச் செல்வார். அதன் மூலம் கிடைக்கிற அரிசியைக் கொண்டு மூவரும் சமைத்து உண்டனர். அவ்வூரிலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தரான முருகேச முதலியார், இந்த பிராமணர்களின் பஜனையையும், கதை சொல்லும் திறமையையும் கண்டு "இனி நீங்கள் யாசகம் எடுக்க வேண்டாம். இங்குள்ள தமிழர்கள் வீட்டில் ஒருநாள் வீதம் சாப்பிடலாம்," என்று ஏற்பாடு செய்தார். ரங்கநாத நாயுடு என்பவர் அவ்வூரில் பெரிய செல்வந்தர் அவருடைய வீட்டில் மூவரும் விருந்துண்டனர். மாலை பிராமணர் இருவரும் இராமாயணம் படித்தனர். இரவு நாயுடு இராமசாமியைத் தனியே அழைத்து, "நீ இந்த பிராமணர்களை நம்பி காசிக்குப் போக வேண்டாம். இவர்கள் உன்னைக் கைவிட்டு விடுவர்." என்று எச்சரித்தார். இராமசாமி இசையவில்லை. "சரி அப்படியானால் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளையாவது என்னிடம் பத்திரமாக வைத்துவிட்டுச் செல்லுங்கள், காசியிலிருந்து திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார். இராமசாமிக்கு இந்த ஏற்பாடு பிடித்தது. இராமசாமி, தான் அணிந்திருந்த தங்கக் காப்பு, வைரக் கடுக்கன், வைரமோதிரம், தங்கச் சங்கிலி, தங்க அரை ஞாண் இவை அனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து நாயுடுவிடம் ஒப்புவித்தார். இவற்றில், ஒரே ஒரு தங்க மோதிரத்தை மட்டும், போட்டுக் கொண்டு, மற்றவர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். போகிற வழியில் கல்கத்தாவில் சில நாள் தங்கினார்கள். காசியை அடைந்தவுடன், அந்த இரு பிராமணர்களும், புரோகிதர்களுடன் சேர்ந்து கொண்டு, இராமசாமியை விட்டு விட்டனர். காசியில் அன்ன சத்திரங்கள் ஏராளமாக இருந்தன. ஆயினும் இராமசாமி பிராமணராக இல்லாததால், அவருக்கு ஒரு சத்திரத்திலும் உணவும் கிடைக்க வில்லை; தங்க இடமும் கிடைக்கவில்லை. செல்வத்திலே புரண்டு வளர்ந்தவர். வெள்ளித்தட்டில், வேளைக்கு விதம் விதமான உயர் ரக உணவு வகைகளை உண்டு வாழ்ந்தவர்; தாங்க முடியாத பசியோடு சத்திரத்து வாசலில் உட்கார்ந்திருந்தார். உள்ளே பிராமணர்கள் சாப்பிட்ட பந்தி முடிந்ததும், எச்சில் இலைகளைக் கூடையில் எடுத்து வந்து வெளியே கொட்டினார்கள். இராமசாமி பசியின் கொடுமை தாளாமல் அந்த எச்சில் இலைகளில் மீதமிருந்த உணவுகளை எடுத்து உண்டு பசியாறினார். மரத்தடியிலும், தெருவோரங்களிலும், கங்கைப் படித் துறைகளிலும், குளிரில் உடம்பு நடு நடுங்க படுத்து உறங்கினார். விடிந்ததும் கங்கைக் கரையில் புண்ணிய காரியம் செய்ய வருபவர்கள் போடுகிற அரிசி, பழம், சோறு இவற்றை உண்டு சில நாள் தள்ளினார். பசியின் கொடுமையையும் வறுமையின் நிறத்தையும் காசி அவருக்குக் கற்றுக் கொடுத்தது. காசியில் துறவியாய் வாழ முடியாது என்று தெரிந்து கொண்டதை விட - காசி இந்துக்களின் புண்ணியத் தலம். அங்கு உன்னத வாழ்வு கிட்டும் என எண்ணியது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அங்கு அவர் கண்ட காட்சிகள் மனதை துன்புறுத்தின. பிறரிடமிருந்து பணத்தை அபகரிப்பதற்காகப் பொய் சொல்லுபவர்களையும், துறவியைப் போல் தோற்றமளித்த ஒழுக்கங் கெட்டவர்களையும் கண்டு மனம் வருந்தினார். காசி அவருக்குக் கசந்தது. தன்னிடமிருந்த மோதிரத்தை விற்றார். எல்லூரில் தனது நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பது நினைவிற்கு வந்தது.தன்னிடமிருந்த மோதிரத்தை விற்று எல்லூருக்கு ரயில் ஏறினார். அங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.    15. பிரிந்தவர் கூடினால் பேரின்பமே…     "வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மைதீமையை அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள்."    - தந்தை பெரியார்     மனிதன் என்னதான் எதிர்நீச்சல் போட்டாலும் வாழ்க்கை வெள்ளம் அது மனிதனைத்தன் போக்கிற்கு இழுத்துச் செல்லவே விரும்புகிறது. துறவியாகப் போக வேண்டும் என்று புறப்பட்ட இராமசாமி தோற்றுப் போய் எல்லூரில் இறங்கினார். அங்கு தன் நண்பர் சுப்பிரமணியப் பிள்ளையின் வீட்டைத் தேடிப்பிடித்து அடைந்தார். முதலில் இராமசாமியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பிறகு புரிந்ததும் மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தார். இராமசாமி வீட்டை விட்டுப் புறப்பட்டுக் காசியில் பட்ட கஷ்டங்கள் வரை ஒன்று விடாமல் கூறினார். சுப்பிரமணியபிள்ளை, இராமசாமியிடம் "நீங்களாக, உங்கள் ஊருக்கு எப்போது போக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவரை இது உங்கள் வீடு" என்று அன்புடன் கூறினார். ஒரு நாள் இராமசாமி சுப்பிரமணியப் பிள்ளையுடன் கடை வீதிகளைப் பார்க்கச் சென்றார். எல்லூர் கடை வீதியைப் பார்த்தபோது; ஈரோடு மண்டிக் கடையைப் பார்ப்பது போலவே இருந்தது. பலதரப்பட்ட நவதானியக் கடைகளையும், வரிசையான அரிசி மண்டிக் கடைகளையும் ஜனங்களையும் பார்த்துக் கொண்டு வந்தபோது, மலரும் நினைவுகளாக அவருள் வியாபார எண்ணம் தலை தூக்கியது. எதிரில் இருந்த ஓர் எள்ளுவிற்கும் கடைக்குச் சென்றார். அந்த ஊரின் விலைவாசியை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் விலை கேட்டார். அந்தக் கடையின் சொந்தக்காரரான ஸ்ரீராமுலு விலை சொன்னார். அவருக்கு இராமசாமியை எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது. ஆனால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. விலை கேட்ட இராமசாமி கையில் எடுத்துப்பார்த்த எள்ளை மூட்டையில் போட்டு விட்டுச் சிரித்தபடி மேலே சென்று விட்டார். இது ஸ்ரீராமுலுவுக்கு என்னமோ போலிருந்தது. உடன் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியப் பிள்ளையிடம், "இவர் யார்?' என்று விசாரித்தார். சுப்பிரமணியப் பிள்ளை விவரமாக எடுத்துக் கூறியதும், "நம்ம ஈரோட்டு நாயக்கர் மகனா?” என்று கூறி, இராமசாமியை வியப்புடன் பார்த்தார். இராமசாமி தன் கடையில் சரக்கு வாங்காமற் போனது ஸ்ரீராமுலுவின் மனதிற்கு கஷ்டமாயிருந்தது.   அன்றிரவே ஈரோடு வெங்கடப்ப நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டார். அதில் - "தாங்கள் என் கடையில் பல வருஷங்களாக எள்ளு வியாபாரம் செய்கிறீர்கள். இந்தத் தடவை தாங்கள் வராமல் தங்கள் மகனை அனுப்பியதால் என் கடைக்கு அவர் வந்தும் பேரம் கூடப் பேசாமல் வேறு கடைக்குப் போய்விட்டார். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று எழுதியிருந்தார். மகனைப் பல ஊர்களிலும் தேடி அலைந்து கிடைக்காமல் மனம் சோர்ந்து போயிருந்த வெங்கடப்ப நாயக்கருக்கு ஸ்ரீராமுலுவின் கடிதம் புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை ஊட்டியது. தன்னை மறந்து மனைவி, மருமகள் எல்லோருடைய பெயரையும் சொல்லி உரக்க அழைத்தார். என்னுடைய மகன் இருக்கிற இடத்தை பெருமாள் காட்டி விட்டார். தெய்வம் நம்மைக் கைவிடவில்லை” என்று உணர்ச்சி பொங்க உற்சாகத்துடன் கூறினார். அன்றிரவே வெங்கடப்பர் தன் நண்பர் ஒருவருடன் எல்லூருக்குப் புறப்பட்டார். வியாபாரி ஸ்ரீராமுலுவின் உதவியுடன் சுப்பிரமணிய பிள்ளை வீட்டிற்குச் சென்றார். வெங்கடப்பரை சுப்ரமணிய பிள்ளை அன்புடன் வரவேற்று உபசரித்தார். வந்ததுமே, "சுப்ரமண்யம்... என் மகன் எங்கே?" என்று கேட்டார் வெங்கடப்பர் அருகிலிருந்த மகனை அடையாளம் தெரியாமல். "இதோ நான்தான் அப்பா" என்று நெஞ்சைத் தொட்டுச் சொன்னார் இராமசாமி. குரலைக் கேட்டதும் அருகிலிருந்த மகனை வாரி அணைத்துக்கொண்டார். அவரது விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. செல்லமாக வளர்த்த பிள்ளை எப்படியாகி விட்டான். - உடல் இளைத்து மீசையை எடுத்து உருமாறிப்போயிருந்த மகனின் உச்சியில் முத்தமிட்டார். அவன் தன்னை விட்டுப் போனதிலிருந்து அன்று வரை அவனைத் தேடித்தேடி அலைந்த ஊர்களையும் அனுபவித்த வேதனைகளையும் வெங்கடப்பர் சொல்லி அழுதார். "உனக்குத் தெரியுமா! நீ போனதிலிருந்து உன் அம்மா படுத்த படுக்கையாகி விட்டாள். எங்களை எல்லாம் விட்டு எங்கே போயிருந்தாய் இராமா" என்றார் வெங்கடப்பர் குரல் தழுதழுக்க. "அப்பா! நான் துறவியாக வேண்டுமென்று காசிக்குப் போனேன். ஊரில் நம்முடைய அன்னச் சத்திரத்தில் எவ்வளவோ பேர் சாப்பிடுகிறார்கள். காசியில் எனக்கு ஒருவேளை சாப்பாடு கிடைக்க வில்லை. தெருவில் பிச்சை எடுத்தேன்; எச்சிலை சாப்பிட்டேன்..." என்று கூறிக்கொண்டு வரும் பொழுதே இராமசாமி அழுதுவிட்டார்; அது கண்டு அப்பாவும் அழுதார். "இனிமேல் நான் உன்னை எதற்காகவும் கோபிக்க மாட்டேன். வா, ஊருக்குப் போவோம்" என்று அழைத்தார். "சரி அப்பா", என்ற இராமசாமி தன்னுடைய நகைகளைப் பற்றிக் கூறினார். தந்தி அடித்ததும் ரங்கநாத நாயுடு கொண்டு வந்து கொடுத்தார். வெங்கடப்பர் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றதும்; மகனை அழைத்துக் கொண்டு ஈரோடு புறப்பட்டார்.    16. கொள்கை வேறு பதவி என்பது வேறு…     "பதவி மோகம் எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக நாணயமற்றவர்களாக ஆக்கி வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். எவ்வளவோ யோக்கியனாகப் பதவிக்குச் சென்றாலும், அவனால் இன்றைய நிலையில் அயோக்கியத்தனம் செய்யாமல் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது."    - தந்தை பெரியார்     வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சோதனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தி முழுமையாக்குகிறது. என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் இராமசாமி. காசி மாநகரம் அவருக்கு அனேக பாடங்களை போதிக்காமல் கற்றுக் கொடுத்திருந்தது. ஈரோடு வந்தபின் இராமசாமி முற்றிலும் புது மனிதராக தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவராக வாழ்ந்தார். காசியில் உயர் சாதி மக்கள் மத்தியில் ஒருவாய் சோற்றுக்காக ஏறி இறங்கிய சத்திரங்களும் விரட்டி யடிக்கப்பட்ட வேதனையும் அவர் இமைகளை நனைத்தன. தனக்கு ஏற்பட்ட அனுபவம் இனியாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக முழு நேரமும் பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த தடைக் கற்களாக இருக்கும் ஜாதி, மதம், சாத்திரம் இவற்றை அழிக்கும் வரை ஓய்வதில்லை என்று உறுதி கொண்டார். பிறரது துன்பத்தைப் போக்க இரவு பகல் பாராமல் உழைத்தார். அவருடைய சமுதாய சேவை அவருக்கு நகரசபை உறுப்பினர் பதவியைத் தேடித் தந்தது. சுத்தமும், சுகாதாரமும் அற்றிருந்த ஊரைச் சீர் திருத்த அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கொடிய பிளேக் நோய் ஊர் முழுதும் பரவி, மக்கள் பலரை மடியச் செய்தது. அந்நோய்க்கு அஞ்சி பலர் ஊரை விட்டு வெளியேறினார்கள். ஏழை மக்கள் எங்கு செல்ல முடியும். பிளேக் நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாயிற்று. பிணங்களை உடனுக்குடன் அகற்ற நகர சபையில் போதிய ஊழியர்கள் இல்லை. இராமசாமி சுய கெளரவம் பாராது தன் உயிரையும் இலட்சியம் செய்யாது, விழும் பிணங்களை தோளில் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்கச் செய்தார். பிளேக் நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஈரோட்டை விட்டு கொள்ளை நோய் மறைந்ததும் மக்கள் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பினர். ஊரே ஒன்று கூடி இராமசாமியின் அபார துணிச்சலையும் அயராத சேவையையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தியது. இதையெல்லாம் கேட்டு நாகம்மையாரும், வெங்கடப்பரும், சின்னத் தாயம்மையும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இராமசாமியின் திறமை மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வெங்கடப்பர் கடைத்தெருவில் தன் பெயருக்கிருந்த பெரிய மண்டிக் கடையை 'ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி,' என்று பெயர் மாற்றும் செய்து; முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒய்வெடுத்துக் கொண்டார். மக்கள் அவரை ஈ.வெ.ரா. என்று அன்போடு அழைத்தனர். பெரிய மண்டிக்கடை முதலாளி ஆகிவிட்டாலும் ஈ.வெ.ரா. பொது நலத்தொண்டை விடவில்லை. பொறுப்புகளும் பதவிகளும் வலியத் தேடி வந்த வண்ணமிருந்தன. ஈரோட்டை சுற்றியுள்ள ஆலயங்கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். கடவுளையும் ஆலய வழிபாடுகளையும் ஈ.வெ.ரா. தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவராக இருந்தாலும், பொதுப் பணியில் தன் கொள்கைகளை ஒதுக்கி வைத்தார். பல ஆலயங்களைப் புதுப்பித்து; திருப்பணிகளை மேற்கொண்டார். பக்தர் கொண்டாடும் ஆலய உத்சவங்களை விமரிசையாக நடத்த வேண்டிய செளகரியங்களைச் செய்தார். பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கத் திருப்பணிக் குழுக்களை அமைத்தார். வழக்கமான ஆலய திருவிழாக்களை முன்னிலும் சிறப்பாக முன்னின்று நடத்தினார். ஈ.வெ.ரா.வுக்கு முன் அப்பதவிகளை நிர்வகித்து வந்தவர்கள், கோயில் பணங்களை வீண் செலவு செய்து திருப்பணிகள் நடத்தக்கூட பணமில்லாமல் கடனில் இருந்தது. ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபின், பல திட்டங்கள் வகுத்து சிக்கனத்தைக் கடைப்பிடித்து அனாவசியச் செலவுகளைத் தவிர்த்தார். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் பணத்திற்கும் நன்கொடைகளுக்கும் ஏற்ப சரியான வரவு செலவு கணக்குகளைக் கையாண்டார். கையிருப்புகளை வங்கியில் வட்டிக்குப் போட்டார். ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபோது இருந்த பழைய கடன்களை அடைத்து; பதவி விலகும் போது ஐம்பதினாயிரத்திற்கும் மேல் கையிருப்பும் வைத்துவிட்டு வந்தார். ஆலய அறங்காவலராக இருந்தபோது ஈ.வெ.ரா. ஆற்றிய தொண்டுகளையும் அவரது நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ்ந்தனர். விரைவிலேய ஈ.வெ.ரா.வுக்கு நகரப் பாதுகாப்புக் கழகத் தலைமைப் பதவி கிடைத்தது. பத்தாண்டுகள் இப்பதவியை ஈ.வெ.ரா. திறமையாக நிர்வகித்தார். தொடர்ந்து தாலுகா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் கெளரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். ஈரோட்டு நகரசபைத் தலைவராக ஈ.வெ.ரா. விளங்கியபோது மக்களுக்கு அரிய திட்டங்கள் மூலம் பல நன்மைகள் செய்தார். காவிரியிலிருந்து அந்நகருக்குக் குடி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வகுத்தார். நகர் முழுதும் குழாய்கள் போட ஏற்பாடு செய்தார். விரைவிலேயே பணி முடிந்து; நகர மக்கள் நல்ல காவிரி நீரைப் பருகி மகிழ்ந்தனர். தங்களுடைய இந்த நன்றியைத் தெரிவிக்க பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஈ.வெ.ரா.வின் பெயரைக் கல்லில் செதுக்கி நட்டனர். இதனால் ஈ.வெ.ரா மீது சிலர் பொறாமை கொண்டனர்.    17. நினைத்ததை முடிப்பவர்…     "வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. இவைகளைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?"    - தந்தை பெரியார்     பணத்தை வாரி இறைத்துச் சிலர் பதவியைப் பிடிப்பார்கள். பதவிக்கு வந்தபின், செலவழித்த பணத்தை வட்டியும் முதலுமாக மக்களிடமிருந்தே கறப்பார்கள். மக்கள் சேவைக்கென்று மனப்பூர்வமாகப் பதவி ஏற்பவர்களே உண்மையாக மக்களுக்குத் தொண்டாற்றுவார்கள். ஈ.வெ.ரா. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். பதவிக்காக என்றுமே அவர் ஆசைப்பட்டதில்லை. ஆனால் தேடி வந்த நகர சபைத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தார். இரவும் பகலும் நகர மக்களின் நலம் பற்றியே சிந்தித்தார். மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து அவ்வப்போது ஆவன செய்தார். இதனால் அவரது பதவிக் காலத்தில் ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. சிறந்த வியாபாரத் தலமாக விளங்கிய ஈரோட்டுக் கடைத்தெரு மிகவும் குறுகலாகவும் நெருக்கமாகவும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதற்கு என்ன வழி செய்யலாம் என்று ஈ.வெ.ரா. தீவிரமாகச் சிந்தித்தார். கடைத்தெருவிலுள்ள கடைகளில் பாதிக்கு மேல் இடித்தாலன்றி; வீதியை விரிவுபடுத்த முடியாது என்று உணர்ந்தார். அப்படிச் செய்ய முனைந்தால், பழைய கடைக்காரர்களும் பெரும் பணக்காரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். தன்னிடம் சண்டைக்கு வருவார்கள் அல்லது கிளர்ச்சி செய்வார்கள். இதைத் தவிர்க்க ஈ.வே.ரா. உடனே நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். தன் யோசனையைப் பொது நலன் கருதி ஏற்க வேண்டுமென்று எடுத்துக் கூறினார். சிலர் இதை வரவேற்றாலும் பலர் எதிர்த்தனர். பணக்காரர்களின் பகையையும் பழைய கடைக்காரர்களின் விரோதத்தையும் சந்திக்க வேண்டிவரும். அதற்குப் பணிந்து பிறகு திட்டத்தை நிறுத்துவதை விட இதை ஆரம்பிக்கவே வேண்டாம் என்று அவர்கள் கூறினார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் ஈ.வே.ரா. எதிர்ப்புகளைக் கண்டு என்றுமே அஞ்சியவரல்ல அவர். பெருமைக்காகப் பதவி வகிப்பதை விட மக்களுக்கு நன்மை செய்வதன் மூலம் பதவியை இழந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினார். உடனே 'நில ஆக்கிரமிப்பு' என்னும் பெயரால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் பெரிய பெரிய மாடிக் கடைகளையும் இடித்துத் தள்ளினார். கடைத் தெருவைத் தேவையான அளவிற்கு அகலப் படுத்தி விட்டார். பொதுமக்கள் கடைத்தெருவின் அழகைக் கண்டு வாயாரப் புகழ்ந்து பாராட்டினர். பணக்காரக் கடைக்காரர்களும் தற்சமயம் ஏற்பட்டுள்ள அதிகமான செளகரியங்களை உணர்ந்து சமாதானமாகி விட்டனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே ஈ.வே.ரா. எடுத்த முடிவு இன்றும் அவர் புகழ் பரப்பும் அழகிய கடைத் தெருவாக காட்சியளித்து வருகிறது. எந்தக் காதுகளால் இராமசாமியைப் பற்றி ஒவ்வொருவரும் நிதம் கூறும் புகார்களைக் கேட்டு வெங்கடப்பர் மனம் வருந்தினாரோ - இன்று அதே காதுகளில் ஈ.வே.ரா.வைப் பற்றி மக்கள் தேடிவந்து கூறிவிட்டுப் போகும் புகழுரைகளைக் கேட்டு வெங்கடப்பர் பூரித்துப் போனார். ஆனால் அந்த மகிழ்ச்சியை அதிக நாள் அனுபவிக்காமல் வெங்கடப்பர் 1911-ம் ஆண்டு இயற்கை எய்தினார். வைணவ சம்பிரதாயப்படித் தந்தையின் உடலைத் தகனம் செய்ய வேண்டுமென்று விரும்பினார் கிருஷ்ணசாமி. ஆனால் ஈ.வே.ரா. பிடிவாதமாகத் தந்தையின் உடலைத் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தார். தந்தையின் நினைவாக அந்த இடத்தில் ஒரு சமாதியையும் கட்டி முடித்தார்.    18. புதிய பாதை - புதிய பார்வை…     "இந்த நாட்டில் கடவுள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கிறானேயொழிய தன்புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்பதேயில்லை; எப்படி முன்னேற முடியும்?"    - தந்தை பெரியார்     இறைவன் படைப்பில் மக்கள் அனைவருமே சமமானவர்கள்தான். ஆயினும் அழிக்க முடியாத ஒன்றாக இன்று நம்மிடையே உயர்வு தாழ்வு உருவாகிவிட்டது. கடவுள் மனிதனைப்படைத்தான். மனிதன் சாதியைப் படைத்தான். அதில் பல பிரிவுகளையும் படைத்து - சிலரைத் தீண்டாதவர்களாகவே உருவாக்கி விட்டார்கள். தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு இனத்தவரைக் குறிப்பிடுவது மனித மனத்தைப் புண்படுத்தக் கூடிய செயலாகும். அதனாலே மகாத்மா காந்தி அவர்களை அரிசன் என்று புதிய பெயரிட்டு அழைக்கலானார். சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று வடக்கே இருந்து குரல் கொடுத்தார். தெற்கே வாழ்ந்த ஈ.வே.ரா.வின் செவிகளில் காந்திஜியின் இந்தக் குரல் தேனாகப் பாய்ந்தது. அவரது கொள்கைகளும் தனது கொள்கைகளும் ஒரே இலட்சியப் பாதையை நோக்கித்தான் பயணமாகின்றன என்பதை ஈ.வே.ரா. புரிந்து கொண்டார். அன்றிலிருந்து காந்திஜியிடமும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி மீதும் ஈ.வே.ரா. மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டார். காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் அவரது மனதைக் கவர்ந்தன. ஈ.வே.ரா.வுக்கு நண்பராக விளங்கியவர் இராச கோபாலாச்சாரியார். ஈ.வே.ரா. ஈரோட்டில் சேர்மேனாக இருந்தபோது இராசகோபாலாச்சாரியார் சேலத்தில் சேர்மேனாக இருந்தார். ஈ.வே.ரா.வின் நிர்வாகத் திறமையை இராசகோபாலாச்சாரியார் நன்கு அறிவார். ஈ.வே.ரா.வை மக்கள் ஈரோடு நகர சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது அவரை எதிர்த்து நின்ற சிலர் ஈ.வே.ரா. ஒழுக்கமில்லாதவர் பொறுப்பில்லாதவர் இப்பதவிக்கு அருகதை அற்றவர் என்று கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். கலெக்டர் அதை ஏற்றார். ஈ.வெ.ரா. அதை மறுத்து என் மீது பொறாமை கொண்டு கொடுத்த மனு அது. நான் கிட்டத்தட்ட பொது நிறுவனங்களில் தலைவராகவும், உறுப்பினராகவும், செயலாளராகவும் முக்கிய பதவிகள் வகிக்கிறேன். இப்பதவிக்கு நான் முற்றிலும் தகுதியுடையவன் என்று எதிர் மனு கொடுத்தார். இரு மனுக்களும் வழக்கறிஞர் இராசகோபாலாச்சாரியாரின் பரிசீலனைக்கு வந்தது. ஈ.வே.ராவைப் பற்றி நன்கு அறிந்திருந்த இராசகோபாலாச்சாரியார் 'ஈ.வே.ரா. மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார். அப்போதிலிருந்தே இராசகோபாலாச்சாரியாருக்கு தன்னோடு ஈ.வே.ரா.வை காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. மதுரையில் மில் தொழிலாளர்கள் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. மதுரையில் மில் தொழிலாளர் சங்கத்திற்கு ஈ.வே.ரா. தலைவர். இவ்வழக்கை நடத்திய டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் மில் தொழிலாளர்களுக்காக வாதாடும் இராசகோபாலாச்சாரியாரும் மதுரை போகும் வழியில் ஈ.வே.ரா.வின் வீட்டில் தங்குவார்கள். அப்போது இராசகோபாலாச்சாரியார் ஈ.வே.ரா.வைப் பற்றித் தாம் கொண்டுள்ள விருப்பத்தை நாயுடுவிடம் கூறினார். வரதராஜுலு நாயுடும் அது நல்லதே என்று எண்ணினார். உடனே நாயுடு ஈ.வே.ரா.விடம், "ஈ.வே.ரா. நீங்கள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டு செய்யுங்களேன். உங்களுடைய திறமையான சேவை நாட்டுக்கும் பொது மக்களுக்கும் பயன்படட்டுமே” என்றார். இராசகோபாலாச்சாரியாரும் எடுத்துக் கூறினார். காங்கிரஸ் மீதும் காந்திஜி மீதும் முன்னரே மதிப்புக் கொண்டிருந்த ஈ.வே.ரா. தன் இரு நண்பர்களின் அழைப்பை மறுக்காமல் காங்கிரசில் சேர்ந்தார். மதுரை மில் வழக்கில் தொழிலாளர்களே வெற்றி பெற்றனர். ஈ.வே.ரா.வின் புகழ் ஓங்கியது. அதுவரைத் தனி மனிதராக நின்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்து வந்த ஈ.வே.ரா. தன்னை ஒரு தேசிய நீரோட்டமுள்ள கட்சியுடன் இணைத்துக் கொண்டு முன்னிலும் அதிக உற்சாகமாகச் செயல்படலானார்.    19. காங்கிரஸ் வானில் ஒரு புதிய  ஒளிக் கீற்று     "எனது தொண்டு மற்றவர்கள் செய்வது போல் வெள்ளத் தோடு சேர்த்து செல்லும் நீரோட்டத் திசை வேலை அல்ல; அதை எதிர்த்துப் போராடிச் செல்லும் எதிர் நீச்சல் தொண்டாகும். அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குக் கல்லைப் புரட்டுவது போன்றகாரியத்தில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்."    - தந்தை பெரியார்     ஒருவர் ஒரு காரியத்தைத் திறமையாகச் செய்து முடிப்பர். சிலர், ஒரே சமயத்தில் பல காரியங்களையும் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர். அத்தகைய அளப்பரிய ஆற்றல் படைத்தவர் ஈ.வே.ரா. இருபத்தி எட்டுவிதமான பொறுப்புள்ள பதவிகளை; ஒரே காலத்தில் பல்வேறு ஸ்தாபனங்களில் திறம்படச் செய்து காட்டியவர் ஈ.வே.ரா. எந்தத் துறையானாலும் ஏற்றுக்கொண்ட பணியினை திறமையாகவும், பிறர் மெச்சும்படியாகவும் செய்பவர் ஈ.வே.ரா. காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் முழு மூச்சாக அக்கட்சிக்காக உழைத்தார். சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும் என்பது பற்றி ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வந்தார். அப்போது, பஞ்சாப் படுகொலை நடந்தது. அதைக் கண்டித்து, பலர் தங்களது அரசு பதவிகளை விட்டார்கள். ஈ.வே.ரா.வும் தன்னுடைய சேர்மேன் பதவியை ராஜினாமா செய்தார். அதை வாபஸ் வாங்கும்படி இராசகோபாலச்சாரியார் கூறியும் ஈ.வே.ரா. இணங்கவில்லை. அதனால் இராசகோபாலாச்சாரியாரும் நண்பரைப் பின்பற்றி ராஜினாமாச் செய்தார். 1918-களில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளை ஈ.வே.ரா. முன்னின்று நடத்தினார். 1919ம் ஆண்டு காங்கிரசு இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததும், தனது ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவியை விட்டு விலகினார். காந்திஜி, மதுவிலக்குத் திட்டம்; திண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை காங்கிரசில் கொண்டு வந்தார். 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார் காந்திஜி. ஈ.வே.ரா.வை, இத்திட்டங்கள் பெரிதும் கவர்ந்தன. அதனால் தனது முழுநேர உழைப்பையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்தார். தாம் வகித்து வந்த பற்பல பதவிகளிலிருந்தும் விலகிக் கொண்டார். ஈரோடு நகரில் காங்கிரசு இயக்கம் ஈ.வே.ரா.வின் முயற்சியால் தீவிரம் அடைந்தது. பொதுத் தொண்டில் தன் முழு நேரத்தையும், ஈ.வே.ரா. செலவிட்டார். அதனால் வியாபாரத்தை அவரால் ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லை. தந்தையார் காலத்திலிருந்து சிறப்போடு நடைபெற்று வந்த மண்டிக் கடையை மூடும் படியாயிற்று. காந்திஜியாலும், அவரது மதுவிலக்கு, தீண்டாமை போன்ற கொள்கைகளினாலும் ஈர்க்கப்பட்ட ஈ.வே.ரா. கதராடை அணிந்தார். தான் மட்டுமல்ல. தன் குடும்பத்தினர் அனைவரையுமே கதர் ஆடை அணியும்படிச் செய்தார். கதர் துணிகளை மூட்டை மூட்டையாகத் தம் தோளில் சுமந்தார், விற்றார். காந்திஜியின் கொள்கைகளைப் பரப்ப ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார். அவரது திறமையான பேச்சு மக்களைக் கவர்ந்திழுத்தது. ஈ.வே.ரா. என்னும் மூன்றெழுத்து தமிழகமெங்கும் பிரபலமாயிற்று. ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈ.வே.ரா. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற பாடுபட்டார். நீதிமன்றங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரசு இயக்கம் தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி நடந்தார் ஈ.வே.ரா. அதனால் அவர் குடும்பத்திற்கு நீதிமன்றத்திலிருந்து வர வேண்டிய ஐம்பதினாயிரம் ரூபாயை வேண்டாம் என்று இழந்து ஒதுக்கினார். இது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரிந்தது. அடுத்தபடியாக கோர்ட்டிலிருந்து அடமான பத்திரம் மூலம் தனக்கு வரவேண்டிய, 28,000/ ரூபாயையும், ஈ.வே.ரா. பகிஷ்கரித்தார். அப்படிச் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஈ.வே.ரா. கேட்கவில்லை. வேண்டுமானால் அந்தப் பணத்தை திலகர் நிதியில் சேர்த்துவிடலாம் என்றனர். 'திலகர் நிதியில் சேர்ப்பதும்; அந்தப் பணத்தை நானே வைத்துக் கொள்வதும் ஒன்றுதான்' என்று மறுத்து விட்டார் ஈ.வே.ரா. கொள்கைப்படி கோர்ட்டிலிருந்து எனக்கு அந்தப் பணமும் வேண்டாம்; அதுதான் உண்மையான பகிஷ்கரிப்பு - என்று ஈ.வே.ரா. உறுதியாக இருந்துவிட்டார். ஈ.வே.ரா.வின் கொள்கைப்பற்று காங்கிரஸ்காரர்களை வியப்பில் ஆழ்த்தியது. மதுவிலக்குப் பிரசாரத்தை ஈ.வே.ரா. மும்முரமாக நடத்தினார். கள்ளுக் கடைகளின் முன் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார். குடிக்காதே என்று குடிக்கிறவன் காலில் விழுவதை விட, அவனுக்கு மதுவைக் கொடுக்கிற மரத்தையே அழித்து விட்டால் என்ன என்று ஒரு புதிய கோணத்தில் யோசித்தார். இளநீரும், தேங்காயுமாய் மரத்திலிருந்து காலத்திற்கும் வருகிற வருமானத்தைப் பற்றி அவர் பொருட்டாக எண்ணவில்லை சிறிதும் தயங்காமல், தனது பண்ணையிலிருந்த ஆயிரக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டார் ஈ.வே.ரா. இப்படிச் செய்ய, ஒருவருக்கு எவ்வளவு பெரிய தியாக மனப்பான்மை இருந்திருக்க வேண்டும்! மதுவின் பிடியிலிருந்து பாமர மக்கள் விடுபட்டுத் திருந்தி வாழ வேண்டுமென்று ஈ.வே.ரா. விரும்பினார். அந்த ஏழை அப்பாவிகள் மீது ஈ.வே.ரா. கொண்டிருந்த அளவு கடந்த மனிதாபிமானத்தையே அவருடைய அந்தச் செய்கை பிரதிபலித்தது என்றால் அது மிகையாகாதன்று.    20. முதல் - சிறை அனுபவம்     "இன்றையச் சுதந்திரத்திற்கு, முதன் முதல், நானாகவே சிறைக்கும் போகிறேன் என்று இந்த நாட்டில், ஏன் இங்தியாவிலேயே சிறைக்குப் போனது, நானும் எனது குடும்பமும்தானே... "நிலம், காணி இவையெல்லாம் எவ்வளவு சேர்த்து வைத்திருந்தாலும், அவன் செத்துப் போனதும், அவனது என்று சொல்ல மாட்டார்கள். அவனுடைய மகனது என்றுதான் கூறுவார்கள். இது இயல்பு. தனது என்று கூறும்படியானது தொண்டு ஒன்றுதான். மற்றவர்களுக்காகப் பலனை எதிர்பாராமல் தொண்டு செய்வது தான்."    - தந்தை பெரியார்     எதையும் வித்தியாசமாய்ச் சிந்தித்துச் செயல்பட்டால் அது மக்கள் மனதைக் கவரவே செய்யும். மதுவிலக்கு பிரசாரத்தில், யாரும் நினைத்தறியாத ஒரு புதிய கோணத்தில் செயல்பட்டார் ஈ.வே.ரா. மறியல் செய்து பிறரது உடைமைகளைச் சேதம் செய்யவில்லை அவர். மாறாக - மது ஒழிப்பிற்காக தனது சொத்தையே அழித்தார். ஈ.வே.ரா. தென்னை மரங்களை வெட்டிய நிகழ்ச்சி ஈரோட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. மக்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரம் அடைந்தது. அரசாங்கம் விழித்துக் கொண்டது. மறியல் போராட்டத்தைத் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு போட்டது. காங்கிரசு தொண்டர்கள் தடை உத்தரவை மீறிச் செயல்பட வேண்டும் என்று சொன்னார்கள். ஈ.வே.ரா. நூறு தொண்டர்கள் தடை உத்தரவை மீறிச் செயல்பட வேண்டும் என்று சொன்னார். போலீசார் அவரையும் நூறு தொண்டர்களையும் கைது செய்தனர். நீதிமன்றம் அனைவருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியது. 1921-ம் ஆண்டு நவம்பர் 21 நாள் ஈ.வே.ரா. முதன் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நகரம் முழுதும் கலவரம் பரவியது. ஈ.வே.ரா.வுக்குப் பிறகு யார் கள்ளுக் கடை மறியலை முன்னின்று நடத்தப் போகிறார்கள் என்று அரசாங்கம் அலட்சியமாக எண்ணியது. புலியை முறத்தால் விரட்டிய விரத்தமிழ் பெண்களின் பரம்பரை வற்றிவிடவில்லை என்பதை அரசு விரைவிலேயே உணர்ந்தது. ஈ.வே.ரா.வின் மனைவி நாகம்மையாரும், அவரது தங்கை கண்ணம்மாவும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் நகரெங்கும் பரவியது. வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெளியே வந்தனர். நாகம்மையுடனும் கண்ணம்மையுடனும் கை கோர்த்துக் கொண்டு கள்ளுக்கடையை நோக்கி மறியல் செய்யப் புறப்பட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத அரசாங்கம் ஆழ்ந்து யேர்சனை செய்தது. பெண்களைக் கைது செய்தால் ஊரில் பெருங் கலவரம் மூளும். அதனால் ஆயிரக் கணக்கில் மக்கள் சிறை செல்லுவர். இதைத் தவிர்க்க ஒரே வழி - தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டது. இப்போராட்டத்தில் ஈ.வே.ரா.வின் குடும்பம் முழுதும் ஈடுபட்டதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் உற்சாகமானார்கள். தமிழ்நாடு முழுதும் கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழகத்தில் மது விலக்குப் போராட்டத்திற்காக காந்திஜி தமிழ்நாடு வந்தபோது ஈ.வே.ரா. வீட்டில்தான் தங்கினார். அங்குதான் மதுவிலக்குப் போராட்டத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டது. அவர் எண்ணியது போல் தமிழகம் கள்ளுக்கடைப் போராட்டத்தில் சிறப்பான பணியாற்றியது. இதைப் பற்றி காந்திஜி கூறுகையில் - கள்ளுக்கடைப் போராட்டத்தின் வெற்றி ஈரோடிலுள்ள நாகம்மை, கண்ணம்மாள் ஆகிய இரு பெண்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதிகள் ஆவார்கள் என்று பெருமையுடன் கூறினார்.    21. வைக்கம் வாழ்த்திய வீரர் ஈ.வெ.ரா.     "மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ; பூமிப்பிளப்பில் அமிழச் செய்யாமலோ; சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."    - தந்தை பெரியார்     கேரளாவில் வைக்கம் என்பது மிகவும் அழகான ஊர். இங்குள்ள கிருஷ்ணன் கோவில் மிகவும் பிரசித்தமானது. நாட்டில் நாலா திசைகளிலிருந்தும் மக்கள் வைக்கம் வந்து கண்ணனை தரிசனம் செய்து போவார்கள். ஆனால் - உள்ளூரில் வசிக்கின்ற அரிசனங்கள் ஆலயத்தின் அருகில் கூடப் போகக் கூடாது. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்வதற்குக்கூட அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது. காங்கிரஸ் இயக்கத்தின் சிறந்த கொள்கைகளில், தீண்டாமை ஒழிப்பு முக்கியமானதாகும். பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவும்; அரிசனங்கள் கொடுமைப் படுத்தப் படுவதை தடுத்து நிறுத்தவும்; கடவுள் அனைவருக்கும் என்பதை அரிசன ஆலயப் பிரவேசத்தின் மூலம் நிரூபிக்கவும் காந்திஜி சத்தியாக்கிரகப் போராட்டங்களை ஊக்கு வித்தார். வைக்கத்தில் அரிசனங்களை உயர் சாதியினர் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தனர். அதைக் கண்டித்து கேரளாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் வைக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார்கள். திருவிதாங்கூர் மன்னர் அப்போராட்டத்தை அடக்க எண்ணினார். சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்தது அரசாங்கம். வைக்கத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தத் தலைவர்கள் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈ.வெ.ரா. அப்போதுதான் ஈரோடு வந்திருந்தார். அவருக்கு உடம்பு சரியில்லை. வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வைக்கம் சத்தியாகிரக நிலைமை பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டது. செய்தி கேள்விப்பட்டவுடன், தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல், ஈ.வெ.ரா. வைக்கம் புறப் பட்டுப் போனார். ஈ.வெ.ரா. வந்துவிட்ட செய்தி அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், முன்னிலும் உற்சாகமாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னர் ஆள் அனுப்பி ஈ.வெ.ரா.விடம் போராட்டத்தை கைவிடும்படிக் கேட்டுக் கொண்டார். அப்படியானால் ஆலயத்தை அரிசனங்களுக்குத் திறந்து விடுங்கள் என்று ஈ.வெ.ரா. கூறினார். மன்னர் ஆணைப்படி அதிகாரிகள் ஈ.வெ.ராவையும் கைது செய்து வைக்கம் சிறையில் அடைத்தனர். கணவர் கைதாகி சிறையில் இருப்பது அறிந்த நாகம்மையார் உடனே வைக்கம் புறப்பட்டார். கணவர் விட்ட இடத்திலிருந்து போராட்டத்தை தொண்டர்களுடன் நடத்தினார். நாகம்மையாரைப் பின் தொடர்ந்து, கேரளப் பெண்களும், தமிழகப் பெண்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தீவிரமாகப் போராடினார்கள். இதற்குக் காரணம், ஈ.வெ.ரா.வும் அவர் மனைவியும் என்பதை அறிந்த மன்னர் ஈ.வெ.ரா.வை வைக்கம் சிறையிலிருந்து விடுதலை செய்தார். வைக்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். மன்னர் ஆணையை மதிக்காமல், ஈ.வெ.ரா. போராட்டத்தைத் தொடரவே 1922-ம் ஆண்டு, ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்தது அரசாங்கம். ஈ.வெ.ராவைச் சிறையில் அடைத்தது. கணவர் சிறை சென்றதால், நாகம்மையார் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். கேரளா முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்த நாகம்மையார்; தீண்டாமை ஒழிய வேண்டும் என்றும் - 'அரிசனங்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு' என்று பிரசாரம் செய்தார். போராட்டம் வலுத்தது. மக்கள் ஆதரவு பெருகியது. மன்னர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இறுதியில் - அரிசனங்கள் கோவிலுக்குள் செல்லலாம் - என்று ஆணை பிறப்பித்தார். முதல் அரிசன ஆலயப் பிரவேசம் நடந்த ஊர் வைக்கம் என்ற புகழ் பெற்றது. முதல் ஆலயப் பிரவேசத்தின் வெற்றிக்குக் காரணமாயிருந்த ஈ.வெ.ரா.வை மக்கள் 'வைக்கம் வீரர்' என்று பெருமையாக புகழ்ந்தார்கள். வைக்கத்தில் நடைபெற்ற இந்த முதல் ஆலயப்பிரவேச வெற்றியைத் தொடர்ந்து கேரளத்து ஆலயங்களிலெல்லாம் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. பிறகு, இந்தியா முழுதும் இந்தச் செய்தி பரவியது. ஈ.வெ.ரா.வை முன் மாதிரியாகக் கொண்டு அம்பேத்கர் உட்பட பல தலைவர்கள், வட இந்தியாவில் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார்கள்.    22. படிக்காத மேதை பத்திரிகை ஆசிரியரானார்     "மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்க வேண்டு மென்பதிலும் எனக்கு, 1925-ம் ஆண்டு முதலே உறுதியான எண்ணமும், ஆசையும் உண்டு."    - தந்தை பெரியார்    நாட்டில் நடைபெறும் அன்றாட விஷயங்களை, அதிகாலையில் மக்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கிற ஒரே சாதனம் பத்திரிகைதான். நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்பதையும்; நாடு நமக்கு என்ன செய்கிறது என்பதையும் பிற பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள்வதைவிட, நமக்காகவும்; மக்களுக்காகவும் நாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தால் என்ன என்று ஈ.வெ.ரா. ஆலோசித்தார். இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் அதற்கான காரியங்களில் தீவிரமாக முனைந்தார் ஈ.வெ.ரா. 1935-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி 'குடியரசு’ என்ற வார இதழை வெளியிட்டார் ஈ.வெ.ரா. இப்பத்திரிகை, "சாதி, சமயம், மதம், அரசியல் இவற்றைக் கடந்து நடுநிலைச் செய்திகளை வெளி யிடும்” என்று ஈ.வே.ரா. அறிவித்தார். அப்படியே செய்தார். மிக விரைவில் குடியரசு பத்திரிகை பிரபலமாயிற்று. சேரன் மாதேவி என்னும் ஊரில் காங்கிரசின் நிதி உதவியோடு, வ.வே. சுப்பிரமணிய ஐயர் என்பவர் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த குருகுலத்தில் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இளம் பிள்ளைகள் மனதில், தேச பக்தி, தெய்வ பக்தி, ஒற்றுமை, சாதி, மதம், மொழி வேறு பாடில்லாமல், ஒருமைப்பாட்டு உணர்வை ஊட்டுவதே குருகுலத்தின் நோக்கம். 1942-ல் தமிழ்நாட்டு காங்கிரஸ் இயக்கத்தின் செயலாளராகப் பதவியில் இருந்த ஈ.வெ.ரா. ஒரு நாள் சேரன் மாதேவி குருகுலத்தைப் பார்வையிடச் சென்றார். அங்கு, பார்ப்பனச் சிறுவர்களுக்கு தனி இடம், தனி உணவுக்கூடம்; மற்ற சிறுவர்களுக்குத் தனி இடம், தனி உணவுக்கூடம் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட ஈ.வெ.ரா. திடுக்கிட்டுப் போனார். "சிறுவர்கள் உள்ள குருகுலத்தில் இப்படி சாதிப் பிரிவினையை வளர்க்கலாமா? இது சிறுவர்கள் மனதில் ஒற்றுமை உணர்வை கெடுத்து; வேற்றுமையை வளர்க் காதா?” என்று வ.வே.சு ஐயரிடம் ஈ.வெ.ரா. கேட்டார். உடனே வ.வே.சு. ஐயர் "என் தலைமையில் நடத்தப்படும் குருகுலம் இப்படித்தான் நடக்கும்” என்று ஆணவத்தோடு கூறிவிட்டார். ஈ.வெ.ரா. இந்தக் கொடுமையை, திரு.வி.க., வரத ராஜுலு நாயுடு போன்ற பெரியோர் நேரில் பார்க்கட்டும் என்று அவர்களை அழைத்து வந்து காட்டினார். அவர்கள் மனம் கொதித்தனர். கேட்டதற்கு, அவர்களிடமும் வ.வே.சு. ஐயர் அதே பதிலைத்தான் கூறினார். உடனே குருகுலத்திற்கு காங்கிரஸ் வழங்கும் நிதி உதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். குருகுலத்தின் செயல் முறையைக் கண்டித்து ஈ.வெ.ரா. தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து போராட்டம் நடத்தினார். பத்திரிகைகள் குருகுலத்தின் கொள்கையை கடுமையாக விமர்சித்தன. காந்தி சமரசம் செய்ய முன் வந்தார்; "சாதியை ஒழிக்கப் பாடுபடும் காங்கிரசில் இருப்பவர்கள், சாதிப் பிரிவினையை வளர்க்கலாமா?" என்று கேட்டார். வ.வே.சு. ஐயர் காந்திஜி பேச்சையும் கேட்கவில்லை. "குருகுலத்தை என் இஷ்டப்படித்தான் நடத்துவேன்," என்றார். இதனால் கிளர்ச்சி மூண்டது. காங்கிரசு மானியத்தை நிறுத்தியது. குருகுலம் மூடப்பட்டது. வ.வே.சு. ஐயரின் பிடிவாதத்தினால், பல இளம் குழந்தைகளின் எதிர்காலம் பாழாயிற்று. 1927-ம் ஆண்டு, 'திராவிடன்' என்னும் நாள் இதழுக்கு, ஆசிரியராக இருந்து, ஈ.வெ.ரா. அருந்தொண்டாற்றினார். தன் பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப் பெயரை நீக்கினார். குடிஅரசைப் போல், இதிலும் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியே, காரசாரமான, தம் கருத்துக்களை மக்களுக்கு எழுதி வந்தார். ஈ.வெ.ரா.வின் பத்திரிகை ஆசை மேலும் அதிக மாயிற்று. மேல்தட்டு மக்களுக்கும், தனது கருத்துக்களும், கொள்கைகளும் சென்று எட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் 1928-ம் ஆண்டு 'ரிவோல்ட்' (REVOLT) என்கிற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார்.    23. விழலுக்கு இறைத்த நீர்     "இந்த நாட்டில் சாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம், மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள்அல்ல. நானோ, மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர் தேக்கத்தைக் கண்டு, கொசுக்களை அழித்துத் தடுக்கும், வைத்தியன் போன்றவன்."    - தந்தை பெரியார்     "ஒரே சாதி" என்கிற முறை உருவாக வேண்டும் என்று ஈ.வெ.ரா. விரும்பினார். ஆனால், முயன்றும் தீராமல், காங்கிரசில் ஜாதி உணர்வு ஆழமாக வேர் விட்டிருந்தது. அதனால் 1925-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க.தலைமையில் நடைபெற்ற காங்கிரசு மகாநாட்டில், "வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை வேண்டும்", என்று கோரிக்கை எழுப்பினார். மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. இத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். ஈ.வெ.ரா.வுக்கு இது தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்தது. இதே தீர்மானத்தை இதற்கு முன், 1920-ல் திருநெல்வேலி மகாநாட்டிலும், 1921-ல் தஞ்சாவூர் மகாநாட்டிலும், 1922-ல் திருப்பூர் காங்கிரக மகாநாட்டிலும், 1924-ல் சேலத்திலும் திருவண்ணாமலையிலும் நடைபெற்ற மாகாண காங்கிரசு மகாநாட்டிலும் நிறைவேற்ற ஈ.வெ.ரா. கொண்டு வந்த போதெல்லாம்; வரிசையாகத் தோற்கடிக்கப் பட்டன. இறுதியாக இப்போது காஞ்சிபுரத்தில் 1925-ல் நடந்த மகாநாட்டிலும் தீர்மானம் தோல்வியடையவே, ஈ.வெ.ரா. இனி இந்த இயக்கத்திற்காக உழைப்பது வீண் என உணர்ந்தார். பிராமணரல்லாதாரின் நலனுக்காகக் கொண்டு வந்த தீர்மானம்; பார்ப்பனரல்லாதாராலேயே தோற்கடிக்கப்பட்டது. - வகுப்புகளை ஒழிக்காமல் ஏற்றுக் கொண்டு; அதற்கான பிரதிநிதித்துவ உரிமையை மட்டும் மறுப்பது என்பது, எந்த விதத்திலும் ஈ.வெ.ரா.வுக்கு நியாயமான செயலாகப் படவில்லை. அதனால் - 1919-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலம், காங்கிரசின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுத் தொண்டாற்றிய ஈ.வெ.ரா. 1925-ம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். தேசிய வாதிகளின் உள்ளத்தில் வருணாசிரம கொள்கை கூடாது. 'வருணாசிரமக் கொள்கையை' ஆதரிக்கும், காங்கிரசை; அக்கட்சிக்கு வெளியே இருந்து எதிர்ப்பது என முடிவு செய்தார். 1926-ம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு எதிராக நின்ற நீதிக் கட்சி படு தோல்வி அடைந்தது. ஈ.வெ.ரா. நடுநிலை வகித்தார்.   காங்கிரசின் மீதுள்ள கோபத்தில் நீதிக் கட்சியில் சேர்ந்தார் ஈ.வெ.ரா. "தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்; தமிழர்களுக்காகப் பாடுபட வாருங்கள்", என்று அறைகூவல் விடுத்தார் ஈ.வெ.ரா. நீதிக்கட்சியில் ஈ.வெ.ரா. சேர்ந்தபிறகு அது மீண்டும் வளர்ச்சி பெற்றது. காங்கிரஸ்காரர்கள் அக்கட்சி மீது கூறி வந்த பொய்ப் பிரசாரத்திற்கு பதில் கொடுத்தார். 1926-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26 தேதிகளில் இரண்டு நாள் மதுரையில் ஈ.வெ.ரா. பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்றை நடத்தினார். பல தலைவர்கள் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தந்தனர். காங்கிரசை விட்டு கோபித்துக் கொண்டு ஈ.வெ.ரா. வெளியேறியது காந்திஜிக்குத் தெரிய வந்தது. 1927-ம் ஆண்டு காந்திஜி தமிழ் நாட்டிற்கு வந்த போது, ஈ.வெ.ரா.வை சந்தித்து, அவரது கோபத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். ஈ.வெ.ரா. குடும்பத்தினர் மீது காந்திஜிக்கு எப்போதுமே ஒரு தனி அன்பும் மரியாதையும் உண்டு. ஈ.வெ.ரா. எதிலும் தீவிரமாகவும், உண்மையாகவும் உழைக்கக் கூடியவர் என்கிற நம்பிக்கை காந்திஜிக்கு இருந்தது. அதனாலேயே - கதர் இயக்கத்திற்கு ஈ.வெ.ரா.வைப் பொறுப்பாக நியமித்தார். ஓர் உண்மையான தொண்டனின் கோபத்தையும் மனக்குறையையும் தீர்க்க வேண்டியது ஒரு தலை வனின் கடமை என்று கருதியே காந்திஜி இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் காந்திஜியின் சமாதானத்தை ஈ.வெ.ரா. ஏற்கவில்லை.    24. தொழிலாளர்களின் தோழர்…     "எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான், தொழிலாளர் கிளர்ச்சியின் முக்கியத்துவமாக இருக்க வேண்டும்."    - தந்தை பெரியார்     பொது மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய எண்ணுபவர்களுக்கு எந்தக் கட்சியோ அரசியல் சார்போ எதுவும் தேவையில்லை என்பது ஈ.வெ.ராவின் கருத்து. இரயில்வே தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் செய்தார்கள். சட்ட விரோதமானது என்று அதை அரசாங்கம் அறிவித்தது. தொழிலாளர் ஆத்திரம் கொண்டு, பலாத்காரத்தில் ஈடுபட்டார்கள். அரசின்தடை உத்தரவைக் கேட்டு, அதுவரை தொழிலாளரை ஆதரித்த கட்சிகள் பேசாமல் இருந்து விட்டன. ஈ.வெ.ரா. தடையுத்தரவை மீறி தொழிலாளர்களுக்காகப் பல கூட்டங்களில் பேசினார். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவை; ஏற்கப்பட வேண்டியவை என்று குடியரசு பத்திரிகையில் எழுதினார். தொழிலாளர்களுக்காக கூட்டம் போட்டு பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார். அரசு அவரைக் கைது செய்தது. பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் முன் வைத்தது. ஈ.வெ.ரா. எதிர் வழக்காட மறுத்துவிட்டார். சிறை தண்டனை ஏற்கத் தயாராயிருந்த ஈ.வெ.ராவை அரசு விடுதலை செய்து விட்டது. அதன்பிறகு, சுயமரியாதை இயக்க மகாநாடுகளைக் கூட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படப் பாடு பட்டார். சாதியை ஒழிக்க, கலப்புத் திருமணம் ஒன்றுதான வழி என்று திடமாகக் கூறினார். விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு உண்டு என்று வலியுறுத்தினார். 1909 - ல் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது தங்கை மகளுக்கு விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர் ஈ.வெ.ரா. எதற்கும், எதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஈ.வெ.ரா. தமிழ்நாட்டில் அவரது சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது. தமிழர்களின் உள்ளங்களில் தந்தை பெரியார் இடம் பெற்றார். ஈ.வெ.ராவின் புகழ், கடல் கடந்தும்; அன்னிய மாநிலங்களுக்கும் பரவி; அழைப்புகள் வந்தன. மலேயாவில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை மாநாட்டிற்கு வரவேண்டும் என ஈ.வெ.ராவை அழைத்தார்கள். 1929 - ம் ஆண்டு, டிசம்பர் 15ம் நாள் தன் மனைவி நாகம்மையாருடனும், தன் நண்பர்கள் சிலருடனும் ஈ.வெ.ரா. மலேயா புறப்பட்டார். மலேயாவிலுள்ள தமிழர்கள் ஈ.வெ.ராவை அன்புடன் வரவேற்றார்கள். சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம், சுயமரியாதை ஆகியவை பற்றிய ஈ.வெ.ராவின் சீர்திருத்தக் கருத்துக் களைக் கேட்ட மலேயா மக்கள், அறியாமையிலிருந்து விடுபட்டார்கள். ஈ.வெ.ராவின் பேச்சில் ஒரு புதிய உலகத்தை அவர்கள் கண்டார்கள். பகுத்தறிவுவாதிகளாக மாறினார்கள். மலேயாவில் ஈ.வெ.ரா ஒருமாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள பல ஊர்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துத் தமது கொள்கையைப் பரப்பினர். 1930-ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழகம் திரும்பிய ஈ.வெ.ராவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து - 1930, மே மாதம் 10,11 தேதிகளில், ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம்மகாநாட்டின் விசேஷம் என்னவென்றால், வந்திருந்த அனைவருக்கும் உணவு சமைப்பது முதல் பரிமாறுவது வரை, எல்லா வேலைகளையும் அரிசன தொண்டர்களைக் கொண்டுதான் ஈ.வெ.ரா செய்வித்தார். இந்தியாவில் இதுவே முதலாவதாகும்.    25. உலகம் சுற்றிய ஈ.வெ.ரா..     "நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்று நான் தொண்டாற்றுகிறேன். அதனாலேயே நம் மக்களுக்கு நன்மை செய்யக் கூடியவர்களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும், சமுதாயத்தின் நலன் கருதியே ஆதரிக்கிறேன்."    - தந்தை பெரியார்     தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகியது. 1931 - ம் ஆண்டு விருதுநகரில், மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தத் திட்டம் வகுத்தது. ஈ.வெ.ரா. சமதர்மக் கொள்கையுடைய நாடுகளைக் காணவும்; மேலைநாட்டு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நேரில் கண்டறியவும், மேலைநாடுகள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். 1931, டிசம்பர் 31ம் நாள் ஈ.வெ.ரா சென்னையிலிருந்து புறப்பட்டார். தமது சுற்றுப் பயணத்தில், ரஷ்யா, துருக்கி, கிரீஸ், எகிப்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரெஞ்ச், போர்ச்சிகல் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். அங்குள்ள தொழிலாளர் நிலை; சமூக நிலை, அரசியல் நிலை இவைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டார். 13.12.1931 முதல் 11.11.1932 வரை 11 மாதகால சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வந்த ஈ.வெ.ரா. நாகம்மையாருடன் சேர்ந்து இலங்கைச் சுற்றுப் ப்யணத்தை மேற்கொண்டார். இலங்கைத் தமிழர்கள் ஈ.வெ.ராவின் பேச்சை; கொள்கைகளை அறிந்தவர்கள். பல பொதுக் கூட்டங்களிலும், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும்பேசினார். தமிழ் மக்கள் அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டதுடன்; அவரது கருத்துக்களை, அச்சிட்டு விநியோகம் செய்தனர். 1932 - ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈ.வெ.ரா. தமிழகம் வந்து சேர்ந்தார். ஈரோட்டில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுப் பயணத்தின்போது வளர்ந்த தாடியை, பெரியார் நிரந்தரமாக்கினார். இரவு பகல் பாராமல், சதா பொதுத் தொண்டு, மேடைப் பேச்சு, சுற்றுப் பிரயாணம் என்று உற்சாகமாகச் செயல்பட்டு வந்தார் ஈ.வெ.ரா.    26. நாகம்மை என்னும் நாக இரத்தினம் மறைந்தது…     "பெண்களே வீரத்தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் "இவள் இன்னாருடைய மனைவி" என்று அழைக்கப்படாமல்; "இவர் இன்னாருடைய கணவன்" என்று அழைக்கப்பட வேண்டும்."    - தந்தை பெரியார்     ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் கடமை, இலட்சியம் என இரு பகுதிகள் உண்டு. கல்வி, குடும்பம் என இருபகுதிகள் உண்டு. கல்வி, குடும்பம், தொழில் எனக் கடமைகளைச் செய்து கொண்டே இலட்சியத்திற்காகப் பாடுபடுவது ஒருவகை - தன் லட்சியம் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று வாழ்வது ஒருவகை. ஈ.வெ.ரா இதில் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக வாழ்ந்தவர். - ஈ.வெ.ரா. எந்தக் கடமைகளைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல், லட்சியம் ஒன்றே வாழ்க்கை - தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதே அந்த லட்சியம் - என வாழ்ந்து காட்டியவர். இப்படியொரு லட்சிய புருஷனுக்கு மனைவியாக வாய்த்தவர் நாகம்மையார். கணவன் செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோள் கொடுத்து; கணவரது சுக, துக்கங்கள் அனைத்திலும் சமபங்கேற்று வாழ்ந்து காட்டிய நாகம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தார். மனைவியின் அருகிலிருந்து கவனித்து அவளுக்குத் தைரியமூட்டி, ஆறுதல் கூறவேண்டிய ஈ.வெ.ரா அதைப் பற்றிச் சிந்தித்தாரில்லை. தான், தனது தொண்டு - அதுவே பெரிதென்றெண்ணி, பொதுக் கூட்டங்களில் உரையாற்றச்சுற்றுப் பயணம் சென்று விட்டார். நாளுக்கு நாள் நாகம்மையார் உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்தது. வைத்தியம் செய்த மருத்துவர்கள் இனிப் பிழைப்பது அரிது என்று கூறினார்கள். அருகில் இருந்து கவனித்துக் கொள்ள எத்தனையோ பேர் இருந்தாலும்; நாகம்மையாரின் தளர்ந்த விழிகள், நாற்புறமும் கணவரைத் தேடித் துழாவின. இத்தருணத்தில் கூடத்தன் கணவர் அருகில் இல்லாமற் போனது நாகம்மையாரின் மெல்லிய மனத்தை மிகவும் வருத்தியது. வந்துவிடுவார்... வந்து விடுவார் என்கிற நம்பிக்கை வரவர அவரது உள்ளத்தில் தளர்ந்து கொண்டே வந்தது.   ஈ.வெ.ராவோ - திருப்பத்துரில் நடக்கும் மகாநாட்டில்; ஈ.வெ.ரா பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தார். ஈரோட்டிலிருந்து சென்ற ஆள், ஈ.வெ.ராவிடம் நாகம்மையாரின் மோசமான நிலைமையையும், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார். ஆனால், இதைக் கேட்டதும் - ஈ.வெ.ரா. உடனே புறப்பட்டு விடவில்லை. மகாநாட்டில் தன் முழு உரையையும் முடித்த பின்னரே புறப்பட்டார். ஈரோட்டு மிஷன் ஆஸ்பத்திரியில் நாகம்மையார், கணவரைக் காணும் கடைசி ஆசையும் நிறைவேறாமலே, 1933 -ம் ஆண்டு மே மாதம், உயிர்துறந்தார். ஈ.வெ.ரா. ஊர்வந்து, நாகம்மையாரைக் காண ஆஸ்பத்திரி சென்றபோது - நாகம்மையாரின் உயிரற்ற உடல்தான் அவரை வரவேற்றது. எதற்கும் அஞ்சாத ஈ.வெ.ராவை - எதற்கும் கலங்காத ஈ.வெ.ராவை - நாகம்மையாரின் மரணமும் கலக்கவில்லை. அன்பே உருவானவர் நாகம்மையார். எந்த நேரத்தில், யார் தன் வீடு தேடி வந்தாலும், அவர்களை வாயார உபசரித்து; வயிரார உணவளித்து அனுப்புவார். மாமன், மாமியைத் தன் இரு கண்கள் போல் போற்றிக் கடைசிக் காலம்வரைத் தொண்டு செய்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி அறிவில்லாமல் வளர்ந்த நாகம்மை மணமான பின்பு, பொறுப்புள்ள நல்ல குடும்பப் பெண்ணாக வாழ்ந்து காட்டினார். அதேசமயம் - கணவரைப் பலசமயம் தன் வீட்டாரிடம் விட்டுக் கொடுக்காமலும் - வெளியுலகில் தன் கணவரது பொதுத் தொண்டுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுத்து - கணவர் சிறைபுக நேர்ந்தால், அவர் விட்ட இடத்திலிருந்து தொண்டைத் தொடர்ந்து போராடி - சிறைக்கும் அஞ்சாமல் வீரசாகசம் புரிந்த ஒப்பற்ற வீராங்கனையாக வாழ்ந்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் நாகம்மையார். காந்திஜிக்கு வாய்த்த கஸ்துரிபாய் போல; ஈ.வெ.ரா. வுக்கு நாகம்மை கிடைத்தார். ஆனால் - கஸ்தூரிபாயை இழந்தபோது ஒரு குழந்தையைப் போல காந்திஜி அழுதார். ஈ.வெ.ராவோ - இறந்துபோன மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்தார். பற்றற்ற துறவிபோல, அன்றிரவே திருச்சிக்குப் புறப்பட்டார்.   அங்கு சென்ற ஈ.வெ.ரா. அரசு விதித்திருந்த 144 - தடை உத்தரவை மீறினார். கைதுசெய்யப்பட்ட ஈ.வெ.ரா. பிறகு விடுதலையானார்.    27. பெண்கள் மாநாடு சூட்டிய 'பெரியார்' பட்டம்     ★ சகோதரிகளே! ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் செய்ய முடியும் என்பேன். ★ பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்; அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே! ★ நமது பெண்கள் தங்களைப் பிறவி அடிமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். ★ பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும், சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். ★ இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும்; இழிவையும்; அடிமைத் தனத்தையும் விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.    - தந்தை பெரியார்     நாகம்மையாரின் மரணத்திற்குப் பிறகு ஈ.வெ.ரா. சுயமரியாதைப் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். பல மகாநாடுகளைக் கூட்டினார். காரசாரமாகக் குடி அரசுப் பத்திரிகையில் விமரிசனங்கள் எழுதினார். பெரியார் குடி அரசு இதழில் ஒருநாள்; 'இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்' என்பதை, தமக்கே உரிய பாணியில் விளக்கி, விரிவாக ஒரு தலையங்கம் எழுதினார். விளைவு? அந்தத் தலையங்கத்திலுள்ள ஆட்சேபகரமான விஷயங்களுக்காக ஆசிரியர் ஈ.வெ.ராவும்; அதனை அச்சிட்டதற்காக, ஈ.வெ.ராவின் தங்கை கண்ணம் மாவும் கைது செய்யப் பட்டார்கள். ஈ.வெ.ராவுக்கு ஆறுமாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப் பட்டார். அப்பொழுது, அதே சிறையில், ஈ.வெ.ராவின் நண்பரான சி. இராசகோபாலாச்சாரியாரும் இருந்தார். இருவரும் சேர்ந்து பொதுச்சேவையில் ஈடுபடலாம் என இராசகோபாலாச்சாரியார் எண்ணினார். ஆனால் ஈ.வெ.ரா - 'என் வழி தனி வழி' என்று இருந்து விட்டார். அரசாங்கம் பகுத்தறிவு இயக்கப் பத்திரிகைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. பல பகுத்தறிவுப் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன; பல பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமயம், ஜஸ்டிஸ் கட்சியின் சிறப்புப் பேச்சாளராக விளங்கிய எம்.ஏ., பட்டதாரியான அறிஞர் அண்ணாவை, ஈ.வெ.ராவின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் வெகுவாகக் கவர்ந்தன. 1935 - ம் ஆண்டு திருப்பூர் மகாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவைச் சந்தித்துப் பேசிய அறிஞர் அண்ணா பொதுவாழ்வில் ஈடுபடத் தான் விரும்புவதாகக் கூறினார். சட்ட சபைக்கான தேர்தல் வந்தது. 1937 - ஆம் ஆண்டு பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி தோற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மந்திரிசபையின் முதல் அமைச்சராக சி. இராசகோபாலாச்சாரியார் பதவி வகித்தார். தமிழ் நாட்டுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்று இராசகோபாலாச்சாரி திட்டம் கொண்டு வந்தார். ஈ.வெ.ரா இந்தியைத் தமிழ்ப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்குவதை கண்டித்து எதிர்த்தார். தனது 'குடியரசு', 'விடுதலை' இதழ்களில், விமர்சனம் எழுதினார். பொதுக் கூட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசினார். 1937 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மகாநாடு நடந்தது. இதில் அறிஞர் அண்ணாவும், பெரியாருடன் சேர்ந்தார். ஈ.வெ.ராவும், அண்ணாவும் காரசாரமாகப் பேசினார்கள். முதல் அமைச்சர் வீடு முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அறிஞர் அண்ணா கைதாகி சிறையில் அடைக்கப் பட்டார். இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து எழுதும் விடுதலைப் பத்திரிகையின் ஆசிரியர் ஈ.வெ.ரா; அச்சிடும் ஈ.வெ. கிருஷ்ணசாமி இருவர் மீதும் அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது. இருவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பெரியாரை அண்ணா, மகிழ்வுடன் வரவேற்றார். இதனால் நாட்டில், கிளர்ச்சியும் மறியலும் அதிகரித்தது.    28. பொதுத் தொண்டு செய்பவனுக்கு பதவிகள் எதற்கு?     "சமுதாயத் தொண்டு செய்வது இலேசான காரியமல்ல; கடவுள் தொண்டு, தேசத் தொண்டு, என்பவைகளை யாரும் செய்யலாம்; சமுதாயத் தொண்டு செய்வது சிறுமைக்கும், எதிர்ப்புக்கும், மானாவமானத்திற்கும் உரியதானதால் யாரும் இத்தொண்டிற்கு முன் வருவது கிடையாது."    - தந்தை பெரியார்     நீதிக் கட்சியின் 14-வது மகாநாடு, 1938-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடைபெற்றது. மகாநாட்டின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியாரோ - இந்தி எதிர்ப்புப் போரில் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார். சிறையில் பெரியார் நூறு நாட்களுக்கு மேலாகத் துன்பங்களை அனுபவித்தார். அவர் உடல்நலம் குன்றியது. வயிற்றுப் போக்கும், காய்ச்சலும் வந்து அவரை வாட்டியது. சிறையில் பெரியாரின் உடல் நிலையைக் கேட்டு, தமிழ் மக்கள் உள்ளம் கொதித்தார்கள். கிளர்ச்சி மூளும் என்ற பயத்தில், அரசு 1931 மே மாதம் 22ம் நாள் விடுதலை செய்தது. விடுதலையடைந்து பெரியார் இன்னும் வீராவேசமாகச் செயல்பட்டார். 'தமிழர் சுயாட்சி பெற வேண்டும்', என்கிற தனது நீண்ட நாளையக் கருத்தை - 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முதல் முழக்கமாக 17.12.1939 ம் நாள் தனது குடி அரசுப் பத்திரிகையில் எழுதிப் பிரசுரம் செய்தார். இந்தக் கட்டுரை தமிழ் மக்களை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்தது. அத்துடன் - கட்டாய இந்தி திணிப்பு காரணமாகவும்; பெரியாரின் ஆவேச இந்தி எதிர்ப்பு பிரசாரத்தினாலும் சென்னையை ஆண்டுவந்த இராசகோபாலாச்சாரியார் தனது முதல் மந்திரிப் பதவியை இழந்திருந்தார். இராசகோபாலாச்சாரியார், ஆளுநரின் ஆணைப்படிப் பெரியாரைச் சந்தித்தார். நீதிக் கட்சியின் தலைவராயிருந்த பெரியாரை, மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு இராசகோபாலாச் சாரியார் கேட்டுக்கொண்டார். தமக்கு அப்பதவி தேவையில்லை என்று பெரியார் திடமாகக் கூறிவிட்டார்.   1940-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று பெரியார் பம்பாய் சென்றார். தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்ற கொள்கைகள் மூலம் அம்பேத்கர் பெரியாரை நன்கு அறிந்து வைத்திருந்தார். பம்பாய் வந்த பெரியாருக்கு அம்பேத்கர் பெரிய விருந்து கொடுத்தார். வரவேற்புக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், 'பெரியாரின் சேவை, இந்தியாவிலுள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேவை' - என்று புகழ்ந்து கூறினார். பின்னர் பெரியாரை, அம்பேத்கர் ஜின்னாவிடம் அழைத்துச் சென்று, தென்னாட்டில் பெரியார் செய்து வரும் தொண்டுகளைப் பெருமையோடு எடுத்துக் கூறினார். ஜின்னா பெருமையோடு கை குலுக்கித் தன் கருத்துக்களையும் கூறினார். பெரியார் பம்பாயை விட்டு சென்னை வந்த பிறகு ஒரு மாறுதல் ஏற்பட்டது. "இந்தி கட்டாயப் பாடமில்லை. இந்தியை மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம். அது விருப்பப் பாடம்" என்று நேருஜி கூறினார். சென்னை மாகாணத்தை அப்போது ஆண்டுவந்த அட்வைசர் ஆட்சியினர் இதை அறிவித்திருந்தனர். 'இந்த வெற்றி, இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி; அந்த வெற்றிக்கு உரியவர் பெரியார்' தான் என்று அனைத்துக் கட்சிகளும் பாராட்டிப் புகழ்ந்தன. பெரியாருக்குப் போராட்டங்களில் இல்லை என்றால், ஒருநாள் கூட சுவையாக இருக்காது. இந்தி எதிர்ப்பை அடுத்து; ரயில் நிலையங்களிலுள்ள உணவகங்களில், பிராமணருக்கென்று தனி இடம் ஒதுக் கப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து பெரியார் ரயில்வே நிர்வாகத்திடம் போராட்டம் நடத்தினார். பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை கழகத் தொண்டர்கள் அழித்தனர். இறுதியில் - 1941-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் நாள், பெரியார் விருப்பப்படியே இரயில்வே உணவு விடுதிகளில், சாதி பேதம் நீக்கப்பட்டு, பொது உணவு விடுதியாக மாறியது.    29. அறிவியல் மேதை தந்தை பெரியார்     "மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் செனரலாவதை விட அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆக வேண்டும். இயற்கை சிந்தனா சக்தி வளர்க்கப்பட வேண்டும்."    - தந்தை பெரியார்     'பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள், அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை' என்பது பெரியாரின் கருத்து. தோல்வியைக் கண்டு அவர் துவண்டதில்லை. உயர்ந்த பதவியை வகிக்க வேண்டுமென்கிற ஆசையே பெரியாருக்கு என்றுமே இருந்ததில்லை. 1939 -ம் ஆண்டு ராஜாஜி பதவி இழந்தபோது, சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பெரியாரிடம், வைசிராயும், கவர்னரும் கேட்டுக் கொண்டனர். பெரியார் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதே போல் சென்னை முதல் மந்திரிப் பதவி இருமுறை பெரியாரைத் தேடிவந்தது. இராசகோபாலாச்சாரியாரே, வற்புறுத்தினார். தனக்கு எந்தப் பதவியுமே வேண்டாம் என்று கூறிவிட்டார். - 'சேவை என்பது கூலியை உத்தேசித்தோ; தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல; மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான்' - என்பது பெரியாரின் கருத்து. 'சமுதாயத் துறைக்குப் பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்' என்று கூறிய பெரியாரின் மனம் - - 'தமிழனை எப்படியெல்லாம் உயர்த்தலாம்; மற்றவருக்குச் சமமாகத் தமிழனை எப்படித் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம்' - என்பதைப் பற்றியே சிந்தித்த வண்ணமிருந்தது. அதன் விளைவு - 1942 -ம் ஆண்டு 'திராவிடநாடு' பிரிவினைக் கொள்கையைப் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். அது பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. 1943 -ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் முதலாவது திராவிடர் கழக மகாநாட்டைக் கூட்டி, தனித் தமிழ்நாடு வேண்டுமென்றார். பெரியார், ஒரு தனி சமுதாய மேம்பாட்டு நோக்கம் கொண்டவராக என்றும் இருந்ததில்லை. எந்தக் கருத்தையும் - எந்தச் செயலையும் உலக அறிவியல் நோக்கோடு பார்ப்பவராகவே திகழ்ந்தார். எதையும் முன்னரே ஆராய்ந்து கூறும் உலகியல் பார்வையாளராகவும் திகழ்ந்தார்.    30. திராவிட வானில் கறுப்புச் சூரியனின் உதயம்     "மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்திற்கும், அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்."    - தந்தை பெரியார்     சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16 - வது மகாநாடு ஒரு புதிய விடியலுக்கு வித்திட்டது. 27.8.1944 -ல் நடைபெற்ற அம்மகாநாட்டில் பெரியார், தனது கட்சியின் பழைய பெயர்களை யெல்லாம் ஒருங்கிணைந்த கட்சியாக, "திராவிடர் கழகம்" என்றும் புதிய பெயரைத் தன் கட்சிக்குச் சூட்டினார். அறிஞர் அண்ணா அன்று முதல் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார், அத்துடன், பெரியாரின் 'விடுதலை' என்னும் நாளேட்டின் ஆசிரியராகவும், அண்ணாவைப் பெரியார் நியமித்தார். இளைஞர்களின் இதயங்களைத் தமது அடுக்கு மொழிப் பேச்சால் கொள்ளை கொண்டு வந்த அறிஞர் அண்ணா குரல், தொடர்ந்து விடுதலை ஏட்டில் முழங்கியது. அண்ணாவின் எழுத்தில், சுயமரியாதைக் கொள்கைகளும்; சீர்த்திருத்தக் கருத்துக்களும்; கதைகளும், மக்களைக் கழகத்தின்பால் கவர்ந்து இழுத்தன. பெரியார் 1944 -ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடை பெற்ற 'ரேடிகல் டெமாக்ரடிக்' கட்சி மகாநாட்டில் கலந்து கொண்டார். கல்கத்தாவில் உலக சமூக சீர்திருத்தவாதியான எம்.என். இராய் பெரியாரை அன்புடன் வரவேற்றார். பெரியாரை எம்.என். இராய் தனது ஆசான் என்றும், தனது நாத்திகக் கொள்ளைக்கு வழிகாட்டியவர் என்றும் மாநாட்டில் போற்றிப் புகழ்ந்தார். கல்கத்தா மாநாடு முடிந்து, கான்பூர் சென்றார் பெரியார். அங்கு நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தார். வட இந்தியச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பெரியார் தமிழகம் திரும்பினார். தனது புதிய கட்சிக்கு ஒரு கொடியும், கட்சியின் தொண்டர்களுக்கு ஓர் புதிய உடையும் உருவாயிற்று. திராவிடர் கழகம் கருஞ்சட்டைப் படையை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் நிறைவேறியது. அதன்படி 1945 -ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி இப்படை அமைக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு மதுரையில் கருஞ்சட்டைப் படையின் முதல் மகாநாடு நடந்தது. கருப்புக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம் பொறித்த கொடியுடனும் - கருப்பு வேட்டி, கருப்புச் சட்டை அணிந்த தொண்டர் படையுடனும் மதுரை மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. 1947 -ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரமடைந்தது. அந்தப் பொன்னான நாளை இந்தியா விமரிசையாகக் கொண்டாடியது. பெரியார் அந்த நாளை - "இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்" என்று அறிக்கை விட்டார். அறிஞர் அண்ணா அதிர்ந்து போனார். - 'எண்ணற்ற உயிர்த்தியாகங்களும், உண்ணாவிரதங்களும் இருந்து - கத்தியின்றி, ரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற பொன்னான சுதந்திரத்தை, தந்தை பெரியார் ஏன் துக்க நாள் என்கிறார்?' - அண்ணாவின் சிந்தனையில் பெரியாரைப் பற்றிய முதல் வருத்தம் எழுந்தது. தனக்குச் சரியென்று பட்டதைத் துணிந்து கூற, எவ்வளவு தைரியமும், மனஉறுதியும் வேண்டும்! அதுதான், தந்தை பெரியாரின் இயல்பான குணம். காங்கிரசின் மேல் மோகம் கொண்டு; காங்கிரசு கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்துத் தன் அளவற்ற சொத்துக்களைத் தியாகம் செய்தவர் பெரியார். காங்கிரசின் கொள்கையைத் தென்னாட்டில் பரப்ப முழு ஒத்துழைப்பையும்; அயராத தன் உடலுழைப்பையும் அளித்தவர் பெரியார். பெரியாரைப் படிப்பவர்களுக்குப் புரியும்; அவரது கோபமெல்லாம் - சுதந்திரத்தின் மீது அல்ல; அதற்குச் சொந்தம் கொண்டாடும் காங்கிரசு மீதுதான் என்று. தான் மனமுவந்து நாடிச் சேர்ந்த காங்கிரசு கட்சியில், சாதி மனப்பான்மை கோலாச்சியதைப் பெரியாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மனம் புழுங்கினார். குழந்தைகளிடமும் சாதியைப் புகுத்திய சேரன்மாதேவி குருகுல சம்பவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். சாதியை ஒழிக்க இயலாத காங்கிரசிடம்; வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையையாவது அங்கீகரிக்கும் படி தொடர்ந்து போராடினார். காங்கிரசு அதற்கும் இணங்கவில்லை. இனி எதற்கும் காங்கிரஸ் அருகதையில்லை என்று பெரியார் விலகி விட்டார். 'சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசு ஆட்சி வந்த பிறகும், அக்கட்சியால் ஏழை எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எந்தப் பலனும், சுதந்திரமும் கிட்டாது' என்கிற கருத்திலேயே பெரியார், சுதந்திர தினத்தை துக்க நாள்' என்று கூறினார். ஆயினும், 'இது சரியல்ல' என்று அண்ணா கருதினார். அண்ணா மட்டுமல்ல; கழகத்திலிருந்த பலரும் அப்படியே கருதினார்கள்.    31. முட்டையிலிருந்து பிறந்த முதல் குஞ்சு     "சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது. கணவன்- மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் அடிமை ஆண்டான் என்பது கிடையாது. இருவருமே சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல, நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது."    - தந்தை பெரியார்    சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு, அதை அகிம்சை முறையில் வாங்கித் தந்தவர் அண்ணல் காந்திஜி. நாடே நன்றிக் கடன் செலுத்த வேண்டிய அந்த மகானின் மார்பை, நாதுராம் விநாயக் கோட்சே என்னும் கொடியவன், இரக்கமின்றித் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தான். காந்திஜி கொலையுண்டதும், நாட்டிலுள்ள பல இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஒமந்தூர் இராமசாமி, மீண்டும் இந்தியைக் கொண்டுவந்தார். நாடெங்கும், இந்தித் திணிப்பை எதிர்த்து கிளர்ச்சி மூண்டது. 1948-ம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில், இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில், சென்னைக்கு வரும் இராஜாஜிக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று முடிவாயிற்று. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் கைது செய்யப்பட்டு; பிறகு விடுதலையானார். 1948 -ம் ஆண்டு, மீண்டும் பெரியார், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் கலந்து கொண்டார். அரசு அவரைக் கைது செய்தது. பொது வாழ்வில் பெரியார் கைதானது, இது பத்தாவது தடவையாகும். ‘விரும்பும்வரை, இந்தி திணிக்கப்பட மாட்டாது' என்று நேருஜி வாக்களித்தார். விடுதலையடைந்து வந்த பெரியார், செயற்குழுவைக் கூட்டினார். திராவிடர் கழகத்தின் எதிர்காலம் குறித்தும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இச்செய்தியைக் கேட்டுக் கழகத்தினர் கலங்கிப் போயினர். இன்னது செய்வது என்று புரியாமல் திகைத்தனர். பெரியாருக்கு அப்போது வயது 70. மணியம்மையாருக்கு வயது 26. மணியம்மையாருடைய குடும்பத்துடன் பெரியாருக்கு நீண்டகால உறவு உண்டு. மணியம்மையார் அருடைய சிறுவயது முதலே பெரியாரின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். கட்சியில், பெரியாருக்கு உறுதுணையாக வாழ்வதோடு அவரது வாழ்விலும் பங்கேற்கவே விரும்பினார். இது 'பொருந்தாத் திருமணம்' என்று திராவிடக் கழகத்திலிருந்த பல பிரமுகர்களும், பேச்சாளர்களும் தொண்டர்களும் கூட எண்ணினார்கள். தயவுசெய்து அத்திருமணத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பெரியார் எதையும் பொருட்படுத்தவில்லை. எப்பொழுதுமே, அவர் தம் மனசாட்சிக்குச் சரி என்று பட்டதைத் தயங்காமல் செய்வார். பிறகு யாருக்காகவும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார். மணியம்மையார் திருமண விஷயத்திலும் பெரியார் அப்படியே நடந்து கொண்டார். 'சுயமரியாதைத் திருமணம்' செய்து கொண்ட மணியம்மை பெயரில் - ஈ.வெ.ரா. மணியம்மை என்று சட்டப்படி பதிவுத் திருமணம் செய்தார். இந்தச் செய்தியினை தமது குடியரசு பத்திரிகையிலும் பிரசுரித்து வெளியிட்டார். பெரியாரின் இச்செயல், திருமணத்தை எதிர்த்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்தது. அண்ணா ஆடிப்போனார். ஏற்கனவே சுதந்திரதின கருத்து வேறுபாடுகள் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் பலருக்குமிடையே நீரு பூத்த நெருப்பாகவே இருந்தது. இப்போது - மணியம்மையாரின் திருமணம் அதை ஊதிப் பெரிய காட்டுத் தீயாக்கி விட்டது. பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு, திராவிடர் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து தொண்டாற்ற முன் வந்தனர். அண்ணாவின் உவமைகளும், அடுக்குச் சொல் அழகும், பேச்சும் அவ்விளைஞர்களை மகுடி இசைக்கு மயங்கும் நாகமாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கழகத்தின் கண்மணிகளும்; அதுவரை பெரியாரோடு கருத்து வேறுபாடின்றி ஒன்றியிருந்த பலரும் வேறுபட்டனர். அறிஞர் அண்ணாவின் நிலையை நியாயப்படுத்தி அண்ணாவின் கரங்களுக்கு வலுவேற்றினர். இதன் விளைவாக தாய்க்கழகம் பிளவுண்டது. 17.11.1949 -ம் ஆண்டு அண்ணாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று ஓர் புதிய இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.    32. பெண்மனம்…     "உன் சொந்த புத்திதான், உனக்கு வழிகாட்டி; அதை நல்ல முறையில் பயன்படுத்து. பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. முன்னோர் சொல்லிப் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல, அதை அவர்களிடமே விட்டு விடு. அதில் நீ சம்பந்தப் படாமல் நீயே செய்ய, கண்டு பிடிக்க, முயற்சிசெய். அறிவுக்கே முதலிடம் கொடு. தியாகம் என்பது சுயநலத்துக்கான, பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும், எவ்விதமான அவமானங்களையும் லட்சியம் செய்யாமல், பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது."    - தந்தை பெரியார்     மணியம்மையாரின் மனம் மிகவும் வேதனைக் குள்ளாகியது. 'நான் பெரியாரை மணந்து கொண்டது தவறா?' என் திருமணத்தால் ஒன்றாய் இருந்த கழகத் தொண்டர்கள் ஏன் பிரிந்து செல்ல வேண்டும்? நானும் தொண்டு செய்யவே தானே வந்துள்ளேன். நான் இவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்! பெறாமலே எனக்கு இவ்வளவு பிள்ளைகளும்; உடன் பிறவாமலே; எனக்கு இவ்வளவு சகோதரர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேனே - எல்லாம் கசப்பாய்... கனவாகிவிட்டதே என்று எண்ணி மணியம்மையார் மனம் வருந்தினார். ஆனால் பெரியாரோ - ஒன்றுமே நடவாதது போல - எதைப்பற்றியும் கவலைப்படாமலும், கலங்காமலும் இருந்தார். அவரது எண்ணமெல்லாம்- தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றியும், அவர்களைப் பாதிக்கும் இந்தியைப் பற்றியுமே இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதல்வராக ஒமந்துார் இராமசாமியும்; முதல் கவர்னர் ஜெனரலாக இராஜாஜியும் பதவி வகித்து வந்தனர். அந்த சமயம் - பம்பாயிலிருந்து பெரியாருக்கு அழைப்பு வந்தது. அங்கு நடந்த திராவிடர் கழக மகாநாட்டில் கலந்து கொண்டார். திராவிடர் கழகத்தின் இலட்சியத்தையும், அதன் முற்போக்குக் கொள்கைகளையும் பெரியார் விளக்கிப் பேசியபோது - அனைவரும் கைதட்டி வரவேற்றனர். பெரியார் சென்னை வந்ததும், இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார்.   மத்திய அரசு கட்டாயமாக இந்தியை ஆட்சி மொழி யாக்க முயன்றது. இதைக் கண்டித்துப் பெரியார் 'தேசியக் கொடியை எரிக்கும்' போராட்டத்தை அறிவித்தார். 1950 - குடி அரசு நாளை துக்க தினமாக அறிவித்து அறிக்கை விட்டார். தமிழக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வை புரிந்து கொண்ட நேருஜி, "இந்தி மொழி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை; அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது" என்று வாக்களித்தார். 1950 - ஜூன் 20-ம் நாள் தமிழக அரசு இதை அறிவித்தது. இந்தி எதிர்ப்பில் பெரியாரின் மகத்தான வெற்றி இது.    33. போராட்டங்களும்... எதிர்ப்புகளுமே- பெரியாரின் அணிகலன்கள்...     "ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில் தான், மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத் தொண்டு என்று வந்து விட்டால், அவை இரண்டையும் பார்க்கக் கூடாது."    - தந்தை பெரியார்     'பொழுது விடிந்தால், இன்றையப் போராட்டம் என்ன?' இன்று எதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும், என்கிற எண்ணத்துடனேயே கண் விழிப்பது பெரியாருக்குப் பழகிப் போய் விட்டது. காரணம் - தமிழர்களின் நலனுக்காகப் போராடியும், எதிர்த்தும் சீர்திருத்த வேண்டிய எண்ணற்ற பணிகள், அவர் கண் முன்னே குவிந்து கிடந்தன. அவற்றைப் பற்றியே பெரியார் சதா சிந்தித்துக் கொண்டிருப்பார். 1950 ம் ஆண்டு பெரியார் எழுதிய 'பொன்மொழிகள்' என்னும் நூலை அரசு தடைசெய்து; பெரியாருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதித்தது. தமிழ் மக்களது கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு முறை இருந்து வந்தது. இந்த முறை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பெரியார் வன்மையாகப் போராடினார். அத்துடன் - இரயில் நிலையங்களின் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை நீக்க வேண்டும் என்று போராடினார். இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்தனர். அதனால் - இரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் முதலில் ஆங்கிலமும், அடுத்து தமிழும், கடைசியாக இந்தியும் இடம் பெற்றது. அதே போல - ஹோட்டல்களின் பெயர்ப் பலகைகளில் இருந்த குறிப்பிட்ட சாதிப் பெயரையும் நீக்க வேண்டுமென்று எதிர்ப்புத் தெரிவித்தார். சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டது. பெரியாரின் எண்ணம் ஈடேறியது. 1952 ஆம் ஆண்டு, இந்தியாவெங்கும் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில், பெரியார் காங்கிரஸ் - வேட்பாளராக நின்ற இராஜாஜியை - ஆதரிக்காமல், கம்யூனிஸ்ட்டுக்காரருக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துப் பிரசாரம் செய்தார். ஆனால், கம்யூனிஸ்ட் தோற்றது. இராஜாஜி வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார்.   தமது ஆட்சியில், இந்தியைக் கொண்டுவர முயற்சி செய்தார். பெரியார் உடனே அதை எதிர்த்தார். மாணவர்களுக்குக் குலக்கல்வித் திட்டத்தைக் கொணர்ந்தார். அதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். - பாதி நாள் பள்ளியிலும், பாதி நாள் வீட்டிலும் இருந்து; பள்ளிப் படிப்புடன், தங்கள் குலத் தொழிலையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அத்திட்டம். இதற்கு மாணவர்களிடமிருந்தும், அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பிற்று. அனைவரும், பெரியாரின் ஒத்துழைப்போடு அரசை தீவிரமாக எதிர்த்தனர். இதனால், இராஜாஜியின் மந்திரி சபை கவிழ்ந்தது. இராஜாஜி முதல் மந்திரிப் பதவியை இழந்தார் (குலக் கல்வித் திட்டம் கைவிடப் பட்டது). புராணக் கதைகளையும்; மக்களின் மூட நம்பிக்கைகளையும் இளம் வயதிலிருந்தே எதிர்த்து வந்தவர் பெரியார் - 1953 ஆம் ஆண்டு பிள்ளையார் விக்கிரக உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். தெய்வ நம்பிக்கை உடைய இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக, பெரியார் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 1954ல் அவ்வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டன. 1955 ஆம் ஆண்டு பர்மாவில் நடைபெற்ற புத்த மகாநாட்டின் அழைப்பை ஏற்று பெரியார் பர்மா சென்றார். பர்மாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட 'அவுஸ் சான்' னின் கல்லறைக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தார். பர்மாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 17.1.1955 ல் சென்னை வந்தார். தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்றும் - கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டுமென்றும் பெரியார் தொடர்ந்து தனது கூட்டங்களில் பேசி வந்தார். 27.12.1956 ஆம் ஆண்டு பெரியார் கண்ட கனவு நிறைவேறியது. பெரியார் விரும்பியபடியே - தமிழை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேறியது. தமிழில் அர்ச்சனை செய்யவும் அரசு அனுமதியளித்தது. பிறகு, சாதி முறைகளையும்; குல ஆசாரங்களுக்கும், பாதுகாப்புத் தரும் இந்திய அரசியல் சட்டத்தை பெரியார் எதிர்த்தார். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அதற்காக சிறை தண்டனை அடைந்தார் பெரியார்.    34. தமிழ் நாட்டை ஆட்சி செய்த முதல் தமிழர்     "சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல, கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்க வேண்டும்."    - தந்தை பெரியார்     இந்தியாவின் இரண்டாவது பொதுத் தேர்தல், 1957 -ம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது - திராவிட முன்னேற்றக் கழகம் மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இணையாக முன்னேறி வந்து கொண்டிருந்தது. காங்கிரசு கட்சியின் வேட்பாளராக காமராசர் களத்தில் இறங்கினார். தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காமராசர் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். ஒரு தமிழர் என்கிற முறையில் காமராசர் ஆட்சியைப் பெரியார் பெரிதும் வரவேற்றார். பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வியும்; உணவும் அளிக்க வேண்டும் என்று பெரியார் அரசுக்குக் கோரிக்கை விடுத்து மேடை தோறும் பேசினார். சாதிமுறைகளுக்கும்; அதன் சம்பிரதாயங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். அதற்காகப் பெரியார் 1957 -ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். காமராசர் ஏழைகளின் நலனை மனதில் கொண்டு ஆட்சி செய்தார். 1958 -ம் ஆண்டு. டிசம்பர் மாதம்; எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும்; மதிய உணவும் வழங்கப்படும் என்று காமராசர் அறிவித்தார். 110 உயர்நிலைப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப் பட்டன. பெரியாரின் கோரிக்கையை காமராசர் மதித்துச் செயல்பட்டார். பெரியார் காமராசரைத் 'தமிழர் நலம் காக்கும் தமிழர்' என்று பாராட்டினார். காமராசரின் கரத்தை வலுப்படுத்த அவரது ஆட்சிக்குப் பெரியார் பேராதரவு கொடுத்தார். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் காமராசரை ஒரு விடிவெள்ளி என்று புகழ்ந்தார். 1960 -ம் ஆண்டு பெரியார் தனித் தமிழ்நாடு பிரிவினை கோரினார். இதற்காகத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள தேசப் படத்தை எரித்தார். அரசு பெரியாரைக் கைது செய்தது.    35. இந்தி எதிர்ப்புப் போர்     "ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்."    - தந்தை பெரியார்     காமராசர் தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பற்பல நன்மைகளைச் செய்தார். மக்கள் அவரை 'கர்ம வீரர்' காமராசர் என்று போற்றிப்புகழ்ந்தனர். காமராசரின் வெற்றிக்குப் பெரியார் பெரிதும் பின்புலமாக உதவினார். மக்களிடையே 'காமராசரின் ஆட்சி தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் அவரால் தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஏற்றம் ஏற்படும்' என்று தமது பிரசாரத்தின் போதெல்லாம் பெரியார் தவறாது கூறிவந்தார். 1962 - ம் ஆண்டு தமிழ் நாட்டில் காங்கிரசின் மூன்றாவது பொதுத் தேர்தல் நடந்தது. முதல் தடவையாக காங்கிரசை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் போட்டி இட்டது. காஞ்சிபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அறிஞர் அண்ணா போட்டி இட்டார். பெரியாருக்கு அண்ணாவிடம் உள்ள ஆரம்பக் கோபம் தணியவே இல்லை. அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளரையும், காமராசரையும், காங்கிரசையுமே பெரியார் முழு மூச்சோடு ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்தார். காமராசர் வெற்றி பெற்றார். அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளரும்; காங்கிரசுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காமராசர் இரண்டாவது தடவையாக முதல்வரானார். இந்த சமயம் - சீனா திடீரென்று இந்தியாவைத் தாக்கியது. நாடு முழுதும் நிதி திரட்டப்பட்டது. அறிஞர் அண்ணா நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை உணர்ந்தார். ஆட்சியைப் பிடிக்க முடியாமற் போனதை அறவே மறந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏராளமாக நிதி திரட்டி நேருஜிக்கு அனுப்பி வைத்தார். காமராசர் ஆட்சி தமிழகத்தில் ஓர் பொற்காலத்தை உருவாக்கி வந்தது. மத்திய அரசோ; மீண்டும் கட்டாயமாக இந்தியை ஆட்சிமொழியாக்க முயன்றது. அப்போது காமராசர் ஆட்சிப் பொறுப்பை பக்தவத்சலனாரிடம் ஒப்படைத்திருந்தார். 1965, ஜனவரி 29-ம் நாள் முதல் இந்தியே ஆட்சி மொழியாகும் என்று மத்திய அரசு அறிவித்தது. 1965 குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார் பெரியார். இந்தி திணிப்பை எதிர்த்து போர்ப் பிரசாரம் தொடங்கினார். அத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த பொது மக்கள் பொங்கி எழுந்தனர். முன் எச்சரிக்கையாக அண்ணா கைது செய்யப்பட்டார். போராட்டம் இன்னும் சூடு பிடித்தது. மாணவர்கள் படை திரண்டு எழுந்தனர். மதுரையில் பெருங்கலவரம்; சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு; பள்ளிகள் கடைகள் மூடப்பட்டன. இந்தியை எதிர்க்க தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்; ஆயினும் நாட்டின் மோசமான நிலையை உணர்ந்த பெரியார் போராட்டத்தை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்தார். ஆயினும் மொழிப் பிரச்சினை; மக்கள் மனதில் காங்கிரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை பெரிதும் துண்டி விட்டுவிட்டது. காங்கிரசின் வீழ்ச்சிக்கு நாட்டில் நிலவிய கடுமையான அரிசிப் பிரச்சினையோடு இந்தியும் சேர்ந்து முக்கிய காரணங்களாக விளங்கின. எல்லையில் எழுந்த சீனப்போரை அடக்கிய மத்தியஅரசு; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரை சமாளிக்க முடியாமல் திணறியது.    36. அறிஞர் அண்ணா அரியாசனம் ஏறினார்     "பிறப்பதும் சாவதும் இயற்கை. ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும்."    - தந்தை பெரியார்     தமிழகத்தில் 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெரிய கட்சியான காங்கிரசை எதிர்த்து; ஒரு புதிய விடியலுக்கான பாதையை வழி வகுத்த தேர்தல் அது. பொதுத் தேர்தலில், காங்கிரசையும் காமராசரையும் பெரியார் ஆதரித்தார். அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அதை எதிர்த்துக் கடுமையாகப் பிரசாரம் செய்தார். அண்ணாவை ஆதரிக்கக் கூடாது என்ப தோடு; அண்ணாவை எதிர்த்து தி.மு.க. மேடையிலேயே நாடெங்கும் பிரசாரம் செய்து, தி.மு.க. ஆட்சி அமைப்பதை எதிர்த்துப் பெரிதும் பாடுபட்டார். அறிஞர் அண்ணா, காங்கிரசின் பழைய பாரம்பரியத்திலிருந்து; கழகத்தின் முற்போக்கான புதிய பாதைக்குத் தமிழக மக்களை அழைத்துச் சென்று மகிழ்வூட்டினார். பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து போனதாக மற்றவர் கண்களுக்குத் தோன்றினாலும், பெரியாரின் ஆரம்பப் பள்ளியில் பயின்றவர் அண்ணா. பெரியாரின் கொள்கைகளும்; முற்போக்குக் கருத்துக்களுமே அண்ணாவின் மனதிலும் ஆட்சி செய்து கொண்டிருந்தது. நல்லவற்றை யார் செய்தால் என்ன? பெரியாரின் நகலாகவே அண்ணா தமது ஆட்சியில் புரட்சியை ஊட்டினார். 'செகரடேரியட்' என்பது 'தலைமைச் செயலகமாக' மாறியது. 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டது, 1967 - ஜூலை முதல் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டு சட்ட சபையில் நிறைவேறியது. ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரிகள் - திரு, திருமதி, செல்வி என்று அழகு தமிழில் அழைக்கப்பட்டனர். பெரியாரால் நடத்திவைக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைத்தது. இப்படி 'எங்கும் தமிழ்', 'எதிலும் தமிழ்' - என்று பெரியார் எண்ணினார். அண்ணா நிறைவேற்றினார். நின்ற காங்கிரஸ் வேட்பாளரைப் புகழ்ந்து பேசினார். அவருக்கே ஒட்டு அளிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார்.   முந்தையத் தேர்தலைப் போலவே, இம்முறையும் தி.மு.கழகம் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்று காங்கிரஸ்காரர்களை போலவே பெரியாரும் எண்ணியே எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். ஆனால் - கோழி மிதித்து குஞ்சு சாகுமா..? அண்ணா அமோக வெற்றி பெற்று விட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசு கட்சியைத் தோற்கடித்ததுடன், பெருவாரியான வாக்குகள் பெற்று ஆட்சியையும் பிடித்துவிட்டது. காமராசரும் - காங்கிரசுகாரர்களும் நிலைகுலைந்து போனார்கள். இப்போது கோட்டை அவர்கள் கையில், அண்ணா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தார். இப்படியொரு இன்ப அதிர்ச்சியைத் தமிழ் மக்கள் தருவார்கள் என்று அண்ணா எதிர்பார்க்கவே இல்லை. கையில் வந்து விழுந்த கழகத்தின் வெற்றிக் கனியை ஏந்திக் கொண்டு நேராக திருச்சியை நோக்கி விரைந் தார். மனம் சோர்ந்து போயிருந்த பெரியார் அப்போது திருச்சியில் போய் தங்கியிருந்தார். சற்றும் எதிர்பாராமல் அண்ணா தம்முன் வந்து பணிவுடன் நின்றதைக் கண்ட பெரியார் எழுந்து வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தார். மறுநிமிடம் மகிழ்ச்சிப் பெருக்குடன் அண்ணா, பெரியாரின் கரங்களை இறுகப் பற்றிய வண்ணம் "இந்த ஆட்சியைத் தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்" என்றார். நன்றிப் பெருக்கால் பெரியாரின் விழிகளில் கண்ணீர் பளபளத்தது.    37. தாய்ப் பறவையைத் தேடி…     "போட்டி, தேர்தல் வரைத்தான் இருக்க வேண்டும். தேர்ந்தெடுத்து உள்ளே வந்துவிட்டால், இருவரும் சேர்ந்து காரியம் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும்."    - தந்தை பெரியார்     வெள்ளை மனம் படைத்த அண்ணாவின் அளப்பரிய செயல், தோல்வியின் துயரத்தில் துவண்டு போயிருந்த தந்தை பெரியாரை - வெற்றிக் களிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இடையில் கழிந்த பதினேழு ஆண்டுகள் மறைந்து போய், ஆதியில் கண்ட அண்ணாதான் பெரியாரின் கண்களில் தோன்றினார். கருத்து பெரியாரின் ஆசி பெறாமலே, தனி திராவிட முன்னேற்றக் கட்சியைத் துவக்கியவர் அறிஞர் அண்ணா! 1962 - ல் தோல்வியுற்ற அண்ணா, இம் முறையும் தேர்தலில் போட்டி இட்டார். அண்ணாவின் வெற்றிக்காகத் தமது சுதந்திரா கட்சி மூலம் அரும்பாடு பட்டவர் இராஜாஜி. மேடை தோறும் அண்ணாவைப் புகழ்ந்து மக்களை மனம் மாறச் செய்தவர் இராஜாஜி. தந்தை பெரியாரின் ஆசிக்குப் பதிலாக அவரது பெரும் எதிர்ப்பில் எதிர்நீச்சல் போட்டவர் அண்ணா! அந்த நீச்சல் வீரர் இன்று வென்றது மல்லாமல் - அந்த மாபெரும் வெற்றியை - - ஓர் ஒப்பற்ற குருவிற்கு சிஷ்யன் செலுத்தும் பணிவான காணிக்கையாக? தந்தை பெரியாருக்கு அளித்துவிட்டார். இது எவ்வளவு பெரிய காரியம்! உலகில் எத்தனை பேருக்கு அண்ணாவைப் போன்ற அபூர்வ மனமிருக்க முடியும்! நெகிழ்ந்து போன பெரியாரால் விழி நீரைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அண்ணாவைத் தழுவிக் கொண்டு வாழ்த்தினார். பெரிய மனச் சுமை குறைந்தவர்போல, அன்றே பெரியார் சென்னை வந்தார். அன்றைய விடுதலை நாளிதழின் தலையங்கத்தில் முதல்நாள் காங்கிரசு தோற்றுப் போனதற்கான காரணங்களைப் பற்றித் தெளிவாக எழுதினார். அதற்கு அடுத்த மறுநாளிலிருந்து - அண்ணாவின் வெற்றியைப் பாராட்டியும், அண்ணாவின் அமைச் சரவையைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும் தினந்தோறும் தொடர்ந்து எழுதி வந்தார்.   பெரியாரின் முன்னுக்குப் பின் முரணான செயல் பலரை வியப்பிலாழ்த்தியது. எண்ணற்றவர்கள்; நேற்றுவரை 10 ஆண்டு காலம் காங்கிரசையும் காமராசரையம் ஆதரித்தவர்; திடீரென்று இப்படி அண்ணாவின் பக்கம் திரும்பிவிட்டாரே' - என்று கேள்விக் கணைகளையும்; கடிதக் கணைகளையும் தொடுத்தனர். ஆனால் - தனக்குச் சரி என்று பட்டத்தை எடுத்துக் கூறவோ, எழுதவோ என்றுமே தயங்கி அறியாதவர் தந்தை பெரியார். ஆயினும் பெரியாரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணமானவர் அறிஞர் அண்ணா என்பதை தன்னுடைய நண்பர்களிடம் பெரியார் எப்படிக் கூறினார் என்பதை பெரியாரின் வாய்மொழியாகவே கேட்போம். "மானத்தையே தியாகம் செய்ய வேண்டிய சங்கடமான நிலையில் நான் இருந்தேன். அண்ணா பெருந்தன்மையுடன் அந்தச் சங்கடத்தை எனக்குத் தராமல் மிக்கப்பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்." "தொடர்ந்து நானும் காமராசருடன் சேர்ந்து அவரை எதிர்க்க முற்பட்டால் இராஜாஜியை நம்பித்தான் அவர் ஆட்சி நடத்த வேண்டும்." "அம்மாதிரி நிலை ஏற்பட்டால் அண்ணா தமது ஆட்சியை நிலை நிறுத்த அவர்கள் சொல்லுகிறபடி காரியங்களை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகத் தான் வேண்டும்." "எனது நிலை பக்கத்து வீட்டுக்காரிக்கு சேலையை இரவல் கொடுத்துவிட்டு அவள் போய் உட்காருகிற இடத்திற்கெல்லாம் போய் ஜமுக்காளத்தை விரிக்கின்ற கதையாகிவிட்டது." "நாற்பது ஐம்பது ஆண்டுகளாக நாட்டில் ஒரு உணர்ச்சியைப் பரப்பி வந்து இருக்கிறேன்." - அந்த உணர்ச்சி குன்றிப் போய்விடாமல் பாதுகாப்பது என் கவலையாகிவிட்டது. அதற்காக அண்ணாவிடமிருந்து இராஜாஜியைத் தூர விலக்கி வைக்க வேண்டியிருக்கிறது. "நான் சொல்லுகிறேன், அண்ணா திருச்சி வந்து என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால்; நானே அண்ணாவிடம் வலியச் சென்று 'நான் உங்களை ஆதரிக்கிறேன்' என்று மானத்தை விட்டுச் சொல்லவும் தயாராக இருந்தேன்." இப்பொழுது சொல்லுங்கள் - தொண்டு எண்ணங்கள் கொண்ட இரண்டு உள்ளங்களின் உயர்வைப்பற்றி, - வானத்தை விட்டுப் பிரிந்த நிலவு தன்னைத் தேடி வராவிட்டால் நிலவைத் தேடி வானம் புறப்பட்டு வந்திருப்பேன் என்றது.    38. தந்தை பெரியார் அமரர் ஆனார்     "நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருங்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். - "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகி விடுவீர்கள் - " என்று - வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி, நான் உங்களை அடக்கு முறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளி விடுங்கள்." "ஒருவனுடைய எங்தக் கருத்தையும் மறுப்பதற்கு, யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."    - தந்தை பெரியார்     (கு. 13.4.30; 12:2) அண்ணாவின் ஆட்சியை அனைத்துத் தமிழக மக்களும் திறந்த மனத்துடன் வரவேற்றனார். எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என்று தமிழ் மொழி தலை நிமிர்ந்து நின்றது. 'இது தமிழ் நாட்டை ஆளுகிற தமிழரின் ஆட்சி’ என்பதை அறிஞர் அண்ணா தமது ஒவ்வொரு அரசு ஆணைகளின் போதும் நிருபித்து வந்தார். 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று மெல்லிய ஆங்கிலத்தில் வெள்ளையன் வைத்த பெயருக்கு விடை கொடுத்தார். 'சென்னை மகாணம்' என்று அதுவரை அழைக்கப் பட்டு வந்ததை; 'தமிழ்நாடு' என்கிற புதிய பெயரிட்டு அழைக்க ஆணை பிறப்பித்தார். 1967 - ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்ட சபையில் நிறை வேறியது. பெரியார் காங்கிரசில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாகச் சொன்ன சொல், 'தமிழ்நாடு' என்கிற வார்த்தை அது இன்று அண்ணாவின் ஆட்சியில் சட்ட பூர்வமாக நிறைவேற்றுப்பட்டது. 'ஸ்ரீ, ஸ்ரீமதி' என்கிற வடமொழிச் சொற்கள், திரு என்றும் திருமதி என்றும்; குமாரி என்கிற சொல் 'செல்வி' யாகவும் இடம் பெற ஆணை பிறப்பிக்கப் பட்டது. களிப்பில் பூரித்துப் போயிருந்த பெரியாருக்கு 17.9.1967 அன்று முதல் முதலில் திருச்சியில் சிலை வைத்து பெருமைப் படுத்தினார் அண்ணா. பெரியார் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள்; குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலோடு; சட்ட பூர்வமானதாக ஆக்கப்பட்டது. 1968 -ம் ஆண்டு பெரியார் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர்; பிற்படுத்தப் பட்டோர்; சிறுபான்மையினர் மகா நாட்டிற்குச் சென்று சிறப்புச் சொற்பொழி வாற்றினார். 1968 -ல் தனித்தமிழ்நாடு கோரி, டில்லி ஆதிக்கக் கண்டன நாள் மேற்கொண்டார். அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக் கழகம் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்ற அண்ணா தமது சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள 15.4.1968 அன்று சென்னையை விட்டுப் புறப்பட்டார். உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்ற அண்ணா 12.5.1968 சென்னை திரும்பினார். கடுமையான உழைப்பின் காரணமாக அண்ணா உடல்நலம் குன்றினார். 10.9.68 அன்று சிகிச்சைக்காக, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். பெரியார் மீண்டும் தமது சுயமரியாதை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். தமிழகம் முழுதும் அண்ணாவின் ஆட்சியைப் பாராட்டிப் பேசினார். அதுவரை 'ஆகாஷ்வாணி' என்று வழங்கிய பெயர், 'வானொலி என்று மாற்றப்பட்டது. 6.11.68 அன்று அண்ணா சிகிச்சைமுடிந்து சென்னை திரும்பினார். 1.12.68 அன்று 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் திருவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் உடல்நிலை சரியில்லாததால், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று டாக்டர்களும் நண்பர்களும் கூறினர். அண்ணா பிடிவாதமாக விழாவில் கலந்து கொண்டு; அற்புதமாக உரையாற்றி பல்லாயிரக் கணக்கான மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். பின்னர் ராஜாஜியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் புது நாளில், கலைவாணர் சிலை திறப்பு விழா நடந்தது. அதிலும் பிடிவாதமாக அண்ணா கலந்து கொண்டு உரையாற்றினார். அடுத்த வாரம் அண்ணா படுத்த படுக்கை ஆனார். அமெரிக்க டாக்டர்கள் வந்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் அண்ணாவுக்கு சிகிச்சை நடந்தது. எதுவும் பலன் அளிக்கவில்லை. 2.2.69 அன்று இரவு 12.20க்கு அண்ணாவின் உயிர் பிரிந்தது. பெரியார் இடி விழுந்த மரம் போல் கலங்கிப் போனார். அண்ணாவின் ஆட்சியை, கலைஞர் கருணாநிதி தொடர்ந்தார். 12.11.1971-ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியாரை 'இரணியா' என்னும் குடல்வாத நோய் பெரிதும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. பெரியார் தன் உடல்நலனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன் தொண்டுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். 1973-ம் ஆண்டு பிறந்தது. அது தமிழர்களின் நினைவில் என்றுமே மறக்க முடியாத ஆண்டாக நிலை பெற்று விடுமென்று யாருமே எண்ணவில்லை. 1973, டிசம்பர் 8, 9, 12 ஆகிய தேதிகளில், 'இன ஒழிப்பு மகாநாடு' சிறப்பாக நடைபெற்றது. பெரியார் அதில் கலந்து கொண்டு பேசினார். 19.12.1973-ம் நாள் தியாகராய நகரில், 'சிந்தனையாளர் மன்றத்தின் மகாநாடு' சிறப்பாக நடைபெற்றது. பெரியார், உற்சாகத்துடன் அதில் கலந்து கொண்டார். - அதுவே, பெரியார் ஆற்றிய கடைசிச் சொற் பொழிவாக அமையும் என்று - அப்போது யாரும் கனவு கூடக் காணவில்லை. நோயின் கடுமை, திடீரென்று தீவிரமடைந்து, தந்தை பெரியார் உடனடியாக வேலூரிலுள்ள, சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரபல மருத்துவர் குழாம் ஒருங்கிணைந்து போராடியும்; விடுதலை பெறத் துடித்த பெரியாரின் உயிரை நிறுத்தி வைக்க முடியவில்லை. 24.12.1973ம் நாள் காலை 7.31 மணி அளவில் தனது, 95-வது வயதில், லட்சக் கணக்கான மக்களைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு தந்தை பெரியார் அமரரானார். 'பெரியார் வாழ்க’, என்று விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே, அரசாங்க மரியாதையுடன், முப்பத்தாறு முறைகள் பீரங்கி குண்டுகள் முழங்க, இராணுவ பாண்டுகள் சோககீதம் இழைக்க, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் புனித உடல் சமாதியில் வைக்கப்பட்டது. தந்தை பெரியார் மறைந்து விட்டாலும் அவர் விடடுச் சென்ற கொள்கைகள் என்றும் தமிழர்களுக்கு வழிகாட்டும்.    39. பகுத்தறிவுச் சோதியின் சுயமரியாதைப் பயணம்…     "பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை."    - தந்தை பெரியார்     1879 - செப்டம்பர் 17-ல் ஈரோட்டில் பிறந்தார். தந்தை - வெங்கடப்ப நாயக்கர் தாயார் - சின்னத் தாயம்மை 1885 - பள்ளியில் சேர்ந்தார். 1891 - பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தப் பட்டார். 1892 - வியாபாரத்தில் ஈடுபட்டார். 1898 - 19வது வயதில் நாகம்மையை (13 வயது) மணந்தார். 1902 - கலப்புத் திருமணங்கள் நடத்தி வந்தார். அனைத்து சமயத்தினர் - சாதியினருடன் சேர்ந்து விருந்து உண்டார். 1904 - ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார். (அக்குழந்தை 5 மாதத்தில் இறந்தது பின்னர் குழந்தையே இல்லை.) 1907 - காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோடில் காலரா நோய் பரவிய போது யாரும் உதவிக்கு வராத நிலையில், துணிந்து மீட்டுப் பணியாற்றினார். 1909 - எதிர்ப்புக்கிடையில், தங்கையின் மகளுக்கு விதவா மறு திருமணம் செய்து வைத்தார். 1911 - தந்தையார் இறந்தார். 1917 - ஈரோடு நகர மன்றத் தலைவரானார். நகரில் குடிநீர், சுகாதார வசதிகளைச் செய்தார். 28, மதிப்பு மிக்க பதவிகளை வகித்தார். 1918 - காங்கிரசு மாநாடுகளை முன்னின்று நடத்தினார். 1919 - நகர மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். காங்கிரசு இயக்கத்தில் உறுப்பினர் ஆனார். 1920 - மதிப்பு மிக்க பதவிகள் அனைத்திலிருந்தும் விலகினார். காங்கிரசு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். 1921 - ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் நடத்தினார். கள் இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட தமக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். 1922 - கள்ளுக்கடை மறியல் செய்ததால் கோவைச் சிறையில் வைக்கப்பட்டார். 1923 - குடியரசு பத்திரிகையைத் தொடங்க அரசாங்கத்தில் பதிவு செய்தார் (19.1.1923). 1924 - தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தில் தலைவராய்ப் பணியாற்றினார். வைக்கம் போராட்டம், இரு முறை சிறை வைக்கப்பட்டார். வெற்றி கண்டார். வைக்கம் வீரர் என்று புகழப்பட்டார். வ.வே.சு. ஐயர் சேரன் மாதேவியில் காங்கிரசு இயக்கத்தில் நிதியுதவி பெற்று நடத்தி வந்த குரு குலத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமையை எதிர்த்தார். 1925 - குடியரசு வார இதழைத் தொடங்கினார் (ஈரோடு 2-5-1925). காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாட்டில் வகுப்புரிமை தீர்மானம் கொண்டுவர முயன்றார். தோல்வி அடைந்தார். அதனால், காங்கிரசை விட்டு வெளியேறினார். 1927 - காந்தியாரைச் சந்தித்தார் (பெங்களுர்). 'திராவிடர்' நாளிதழுக்கு ஆசிரியராக விளங்கினார். தம் பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப்பெயரை விலக்கினார். 1928 - ருவோல்ட் (Revolt) என்னும் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார் (17.11.1928). 1929 - செங்கல்பட்டு முதல் மாநில சுயமரியான்த மாநாடு நடைபெற அடிப்படையாக இருந்தார். நாகம்மையாருடன் மலேசியா நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 1930 - மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்பினார். பயண நாட்களில் தாடி வளர்க்க நேர்ந்தது; நிலையானது. 1932 - எகிப்து, கிரீசு, துருக்கி, உருசியா, இங்கிலாந்து, வேல்சு, சுபெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி, பிரான்சு, இலங்கை முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் (13.12.1931 முதல் 11.11.1932) வரை மேற்கொண்டார். 11 மாதத்திற்குப் பிறகு ஈரோடு திரும்பினார். 1933 - நாகம்மையார் மறைந்தார் (11.5.33). 21.5.1933 முதல் மேதினம் கொண்டாட கூறினார். 'புரட்சி' வார இதழ் தொடங்கப்பட்டது. 1934 - புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு, 'பகுத்தறிவு' இதழ் தொடங்கப்பட்டது. 1935 - நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்தார். 1938 - இந்தித்திணிப்பை எதிர்த்துச்சிறை சென்றார் (பெல்லாரி சிறையில் வைக்கப்பட்டார், 2 ஆண்டு சிறைக் காவல் தண்டனை - 2000 - ரூபா). சிறையிலிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (29.12.1938). 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். பெண்கள் மகாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1940 - வடநாட்டுச் சுற்றுப் பயணம். பம்பாயில், ஜின்னா, அம்பேத்கர் முதலியோரைச் சந்தித்தார். கவர்னர் ஜெனரல், கவர்னர், இராஜாஜி ஆகியோர் வற்புறுத்தியும் அமைச்சரவைப் பதவியைப் புறக்கணித்தார். 1942 - 'திராவிடாநாடு' பிரிவினைக் கொள்கையை எழுப்பினார். 1943 - சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்படும் என்று உலகுக்கு அறிவித்தார் (Test Tube Baby). 1944 - நீதிக்கட்சி - திராவிடர் கழகமாக மாறியது (27.8.1944). கல்கத்தா 'ரேடிகல் டெமாக்ரடிக் கட்சி' மகாநாட்டில் கலந்து கொண்டார். கான்பூர் பார்ப்பனரல்லாத - பிற்படுத்தப்பட்டோர் மகாநாட்டில் கலந்து கொண்டார் (29, 30, 31-12-1944). 1947 - ஆகஸ்ட் 15 - துக்க நாள் என அறிவித்தார் (அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து.) 1948 - கட்டாய இந்தி எதிர்ப்பு மாநாடு நடத் தினார் (17.7.1948). திருக்குறள் மாநாடு நடத் தினார். 1949 - மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார் (9.7.1949). உடுமலைப் பேட்டையில் தடை உத்தரவை மீறிச் சிறைப்பட்டார். 1950 - குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார். 'பொன்மொழிகள்' - என்ற நூலுக்காக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார். 1952 - குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடினார். 1953 - பிள்ளையார் சிலையை உடைத்தார். தொடர் ரயில் வண்டி நிலையங்களில் எழுதப்பட்டிருந்த இந்திப் பெயர்களை அழித்தார் (1.8.1953). 1954 - குலக்கல்வித்திட்ட எதிர்ப்பால், இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். 1955 - இந்தித் திணிப்பை எதிர்த்துத் தேசியக்கொடியை எரிக்கத் தீர்மானித்தார் (1.8.1955). மத்திய, மாநில அரசுகள் - இந்தியைத் திணிப்பதில்லை என்று அறிவித்ததால், கொடி எரிப்புத் திட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தார். 1956 - இராமன் படத்தை எரித்தார். 'தட்சணப் பிரதேசம்' என்ற அமைப்பை எதிர்த்து, அரசைக் கைவிடச் செய்தார். 1957 - திருச்சியில் வினோபாவைச் சந்தித்தார். சாதிக்குப் பாதுகாப்பாக உள்ள அரசியல் சட்டத்தை எரிக்கத்துண்டினார் (26.11.1 957). 1959 - வடநாட்டுச் சுற்றுப் பயணம். கான்பூர், இலக்னோ, டில்லி, பம்பாய் ஆகிய இடங்களில் குடியரசுக் கட்சியின் கூட்டங்களிலும், கல்லூரிகளிலும் பேசினார். 1960 - தமிழ்நாடு பிரிவினை கோரி தமிழ்நாடு நீங்கிய தேசப்படத்தை எரித்தார்; கைதானார். 1964 - நில உச்சவரம்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எரித்தார். 1965 - நாடெங்கும் இராமாயணத்தை எரிக்கச் செய்தார் (6.4.1965). 1967 - பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. ★ தமிழக முதல்வர் அண்ணா பெரியாரைச் சந்தித்தார். ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார். ★ முதன் முதலில் திருச்சியில் பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்டது (17.9.1967). ★ சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெற்றது. 1968 - தனித்தமிழ்நாடு கோரி, டில்லி ஆதிக்கக் கண்டன நாள் மேற்கொண்டார்.   1969 - இன இழிவை நீக்கக் கோவில் கர்ப்பக்கிரகங்கள். கிளர்ச்சி பற்றி அறிக்கை வெளியிட்டார். 1970 - 'உண்மை' இதழைத் தொடங்கினார். யுனெசுகோ இவருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. 1971 - கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராய் இருந்த காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ★ பெரியார் கோரிக்கை நிறைவேற வழி வகுக்கப்பட்டது (12.11.1971). ★ 'மாடர்ன் ரேசனலிசுட்' ஆங்கில இதழ் தொடங்கினார். 1973 - இன ஒழிப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார் (சென்னை 8, 9, 12, 1973). ★ தியாகராய நகரில் இறுதிச் சொற்பொழிவாற்றினார் - (19.12.1973) ★ 24.12.1973 - ல் பெரியார் மறைந்தார். ★ 25.12.1973 இலட்சக்கணக்கான மக்கள் 'அய்யா... அய்யா' என்று கண்ணீர் சிந்தி அழ; அய்யாவின் உடல் சென்னை எழும்பூர் பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டது. ★ இத்தொகுப்பிற்கு உதவிய மிகுந்த நன்றிக்கு உரியவர்கள்: பெருமதிப்பிற்குரிய சாமி சிதம்பரனார்; பெருமதிப்பிற்குரிய கருணானந்தம்; பெருமதிப்பிற்குரிய டாக்டர் கு.வணங்காமுடி ஆகியோர்.       இந்நூலை எழுதிய அமர் திரு.கே.பி.நீலமணி அவர்கள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும்; இலங்கை வாழ் தமிழர்களின் கண்ணீர்க் கதையையும், அந்தக் குழந்தைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘தென்னைமரத் தீவினிலே’ என்ற நூலுக்கு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றவர். இவர் எழுதிய ‘கவிமணியின் கதை’ நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இதே நூல் 13 வாரங்கள் சென்னை வானொலியில் ஒலிபரப்பாயிற்று. இவர் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற சங்கீத நூல், கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது. இவர் எழுதிய மாஸ்டர் ராஜா என்ற சிறுவர் நாவல், தொலைக்காட்சித் தொடராக 13 வாரங்கள் ஒளிபரப்பாகியது. இந்தத் தொடரை சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்த திரு. எஸ். எஸ். ஆர். கலைவாணன். கார்த்திக் சரண் அவர்கள் இந்தத் தொடர் ஒளிப்பரப்பாவதில் பெரும் பங்குவகித்தார்.       இந்த மின்னூலைப் பற்றி   இம்மின்னூல், இணைய நூலகமான விக்கிமூலத்தில் இருந்து வருகிறது[1]. இந்த பன்மொழி இணைய நூலகம் தன்னார்வலர்கள் மூலம் சாத்தியமாகிறது. விக்கிமூலம் எப்பொழுதும் புதிய தன்னார்வலர்களை தேடிக்கொண்டு இருக்கிறது. ஆதலால் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல புத்தகங்களை அனைவரும் படிக்குமாறு செய்வீர்.   மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இப்புத்தகத்தின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். https://ta.wikisource.org/s/7tn4 இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பின்வரும் நபர்கள் பங்களித்துள்ளனர். -   தேமொழி -   Balajijagadesh -   Info-farmer -   கி.மூர்த்தி -   Rocket000 -   Be..anyone -   Xato -   Patricknoddy~commonswiki -   Fleshgrinder -   HoboJones -             Mecredis     ↑ http://ta.wikisource.org