[] 1. Cover 2. Table of contents டாலர் நகரம் - விமர்சனங்கள் டாலர் நகரம் - விமர்சனங்கள்   ஜோதிஜி   texlords@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/doller_nagaram_criticism மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/doller_nagaram_criticism This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை வணக்கம். ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட காலம் உண்டு. அதன் பிறகு அதன் மதிப்பு மாறிவிடும். ஆனால் காலமாற்றம் எத்தனை மாற்றங்களை உருவாக்கினாலும் புத்தகங்களுக்கு மட்டும் ஒவ்வொரு காலத்திலும் உயிர் இருந்து கொண்டே இருக்கிறது என்பதனை டாலர் நகரம் புத்தகம் வாயிலாகக் கண்டு கொண்டேன். அமேசான் தளம் இப்போது உலகில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் எந்தப் புத்தகங்களையும் வாசிக்க முடியும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது. அமேசான் தளத்தில் டாலர் நகரத்தைச் செப்பனிட்டு வெளியிட்டேன். அருமையான ஆதரவு கிடைத்தது. 2013 டிசம்பர் மாதம் மறைந்த எழுத்தாளர் ஞாநி அவர்களின் தலைமையில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. ஒரு புத்தகம் எத்தனை நாட்கள் உயிர்ப்போடு இருக்கும்? டாலர் நகரம் நூல் 5 ஆண்டுகள் சென்ற பின்பும் இன்றும் பலருக்கும் வாசிக்க விருப்பமாக உள்ளது என்பதனை கண்டு கொண்டேன். கடந்த ஐந்தாண்டுகளில் இன்று வரையிலும் இந்தப் புத்தகத்திற்கு பலரும் விமர்சனம் எழுதி உள்ளனர். மொத்தமாக தொகுத்து இந்த மின்னூல் வழியாக உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன். டாலர் நகரம் புத்தகமாக வாசிக்க விரும்புவர்களுக்கு திருப்பூர் மகேஸ்வரி புத்தக நிலையத்தில் கிடைக்கின்றது. அமேசான் தளத்தில் மின்னூலாகக் கிடைக்கின்றது. விபரங்களைக் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ளேன். மாறாத பிரியங்களுடன் ஜோதிஜி 04.12.2019 powerjothig@yahoo.com [தான் கடைபிடிக்கும் கட்சியின் கொள்கைகளைப் போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்நாளும் மனிதர்களை எவ்வித பாரபட்சமின்றி நேசிக்கும் என் இனிய நண்பர் தம்பி புதுகை அப்துல்லா அவர்களுக்கு இந்த நூலை காணிக்கையாக்குகின்றேன்.] https://www.youtube.com/watch?v=blw-f8HH5SE&feature=emb_logo ஆர் எஸ். பிரபு காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்த ஜோதிஜி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு உத்வேகத்தில், மன்மோகன்சிங் இந்தியச் சந்தையைத் திறந்துவிட்டு லைசன்ஸ் ராஜ்யத்துக்கு முடிவுரை எழுதிய 1991-வாக்கில் திருப்பூருக்கு வந்து வேலைதேடியதில் ஆரம்பித்து இன்றுவரைக்கும் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி சுருக்கமாகவும், திருப்பூர் எப்படியெல்லாம் உருமாறியது என்பதை விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார். திருப்பூர் என்றாலே பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் கார்கள் வைத்திருக்கும் கொழுத்த பணக்காரர்கள் நிறைந்த ஊர், தொழிலாளர்களைச் சுரண்டும் ஊர், வரி ஏமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற ஊர், திருப்பூர் முழுக்க வெள்ளாளக்கவுண்டர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ஊர் என்ற பிம்பம் புத்தகம் முழுவதும் உடைபட்டுக்கொண்டே இருக்கிறது. திருப்பூரில் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் பேட்டியைப் படிக்கும்போது அதன் பின்னால் பெயர் தெரியாத 20 தோல்வியடைந்த நபர்களை நினைத்துக்கொள்ளலாம். திருப்பூர் உங்களிடம் எதிர்பார்ப்பது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. ஒருநாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்தே ஆக வேண்டும். மீதமிருக்கும் நேரமும் தொழில் குறித்த எண்ணங்களே மண்டையில் ஏறி ஆட்டிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் மட்டுமே அந்த ஊரில் தாக்குப்பிடிக்க முடியும். ஏற்றுமதி வியாபாரம் ஒரு உலகம் என்றால் உள்நாட்டு வியாபாரம் முற்றிலும் வேறு உலகம். திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, வாய்மை அது இது என தன்முன்னேற்றப் புத்தகங்களில் படித்த அத்தனை பண்புகளையும் சேர்த்து 51% என்றால் அதிர்ஷ்டம் என்பதும் ஏற்றுமதியில் 49% முக்கியம். ஏற்றுமதிக்குப் போன அனைவரும் பணத்தை அள்ளிக் குவித்துவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது. இதை ஆசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அந்த அதிர்ஷ்டம் ஏன் வருகிறது எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது, பூசை புனஸ்காரங்களாலும் வரவழைக்க இயலாது. அயராத உழைப்பும், நீதி, நேர்மை, யோக்கியவான் பண்புகள் மட்டுமே ஒருவரை வெற்றியாளராக்கிவிடாது. சிலநேரங்களில் இத்தோடு போதும் என்று அகலக் கால் வைக்காமல் நிறுத்திக்கொள்வது கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். பத்துக் கோடிக்கு ஏற்றுமதி செய்த நபர் அடுத்த ஆண்டு வாரச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற கதைகள் திருப்பூரில் ஏகப்பட்டது உண்டு. ஜோதிஜியும் அத்தகைய தோல்வியுற்ற தொழில் முனைவோர்களை, தொழிலதிபர்களைக் கடந்து வந்ததை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தியர்களின் வாழ்க்கையில் புரஃபஷனல், பெர்சனல் ஸ்பேஸ் என்றெல்லாம் கிடையாது. நமது சமூகக் கட்டமைப்பு அப்படி. ஒரு கம்பெனி/தொழிலின் ஆரம்பத்தில் குடும்பத்தினர் அனைவரும் உழைத்து அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டுவருவது இந்தியாவுக்கே உண்டான சிறப்பு என்றால், ஓரளவுக்கு வளர்ந்ததும் அதை விட்டு விலக மாட்டேன் என்று கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பது அம்பானி குடும்பம் வரைக்கும் இயல்பான ஒன்று. மூடுவிழாக் காண இருந்த கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஜோதிஜி அதை படிப்படியாக மேலே கொண்டுவர நிர்வாகத்தில் ஓனரின் மனைவி, மைத்துனருக்குச் சொந்தம் என்ற பெயரில் அட்டைப்பூச்சிகளாக இருந்தவர்களை நீக்கி, இலாபத்தில் கொண்டுவந்து நிறுத்தியபோது ஓனரின் மனைவி திரும்பவும் உள்ளே நுழைந்து கணக்குவழக்குப் பார்க்கிறேன் என்ற பெயரில் நெருக்கடி கொடுத்த கதையை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். கடைசியில் அந்த ஓனரும் மனைவி சொல்லை மீற முடியாத காரணத்தால் நெருக்கடி முற்றி பேப்பர் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். திருப்பூர் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் குடும்பத்தினர் தலையீடு என்பது தொழிலை விரிவாக்கவோ, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதைத் தடுப்பதாகவே இருக்கிறது என்பது நிதர்சனம். நாம் ஏன் அமேசான், அலிபாபா, ஆரக்கிள் மாதிரி கம்பெனிகளை உருவாக்க முடிவதில்லை என்பது தனியாக அலசப்பட வேண்டியது. இரண்டாவது தலைமுறைக்காவது தேவலாம், மூன்றாவது தலைமுறைக்கு ஒரு தொழிலைக் கடத்துவது என்பது சாதாரண விசயமல்ல. சர்வதேச வணிகம் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரக்கூடிய அத்தனை சட்டதிட்டங்களையும், தரம் குறித்த விவகாரங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தரம் என்பது உலகம் முழுவதும் ஒரே அளவில் இருக்கவேண்டும் என்பதற்காகவே ISO, HACCP என ஒவ்வொரு தொழலுக்கும் ஏகப்பட்ட third party சான்றளிப்புகளை வாங்க வேண்டியது அவசியமாகிவிட்டது. ஜோதிஜி பல சர்வதேச பிராண்டு நிறுவனங்களுடன் ஒரு கம்பெனியின் பொது மேலாளர் என்ற அளவில் தொடர்பில் இருந்தாலும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்திலும் நேரடியாகப் பணிபுரியவில்லை. அதனாலேயே அவர்கள் எதிர்பார்க்கும் தரக்கட்டுப்பாடு விவகாரங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து நடக்கும் நிர்வாக முறை, ஊழியர்களுக்கான ஊதியம், தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், அவர்களது குழந்தைகளின் கல்வி போன்றவற்றை Buyer எனப்படும் இறக்குமதியாளர் நோண்டும்போது நமது பிரைவசி விவகாரத்தில் தலையிடுவது மாதிரியும், இத்தகைய விவகாரங்கள் ஒரு வகையான சதித்திட்ட மாயவலை என்பது போன்ற அச்சத்தோடே பார்க்கிறார். அதேநேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்கள் தொழிலாளர்களின் உடல்நலனைக் கணிசமான அளவுக்குப் பாதுகாக்கும் வகையில் இயங்குகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறார். இதைத்தான் மன்மோகன்சிங் முதல் அபிஜித் பானர்ஜி வரைக்கும் Access to technology will improve the health and livelihood of downtrodden people என்று குறிப்பிடுகின்றனர். குவாட்டர் பாட்டிலில் திரி போட்டு மண்ணெண்ணெய் ஊற்றிப் படித்த காலம் நமக்கு உண்டு. இன்று சீனத்து எல்ஈடி விளக்குகள் மண்ணெண்ணெய் விளக்கை அழித்தேவிட்டன. இன்று எந்தக் குழந்தையும் மண்ணெண்ணெய் புகையில் கூரை வீட்டில் சுவாசிக்கச் சிரமப்படுவதில்லை, ஆடைகளில் தீப்பிடித்த கதைகளும் இல்லை. இந்த எல்ஈடி டார்ச் லைட்டுகளாலேயே இரவு தண்ணீர் பாய்ச்சச் சென்று பாம்புக் கடி வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது. இங்குதான் நமது பழைய தனத்து ஆட்கள் புதியவை எதையும் அனுமதிக்கக்கூடாது, அவையெல்லாம் சதி வேலை, நமது பாரம்பரிய வாழ்வே சிறந்தது என்று பரப்புரை செய்கின்றனர். அடிமை வேலை முறையில் தொழிலாளர்களை வைத்திருந்தால் ஆர்டர் தர மாட்டோம், முறைப்படி எல்லோரும் ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று துணி வாங்க வரும் வெளிநாட்டு கம்பெனி சொன்னால் ‘ஐயோ பார்த்தாயா, நமது தற்சார்பை WTO மூலமாக எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள்’ என்று அனத்த வேண்டியது. குஜராத்தில் பருத்திச் செடி ஆறு முதல் எட்டு அடி உயரம் சாதாரணமாக வளரும். ஒரு பூச்சிக்கொல்லி ஸ்பிரேயர் 14 கிலோ, அதில் ஊற்றப்படும் தண்ணீர் 16 கிலோ. ஓர் ஏக்கருக்கு 20 டேங்க் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டுமெனில் 30 கிலோ எடையைச் சுமந்துகொண்டு ஒரு விவசாயி குறைந்தது மூன்று கிலோமீட்டர் நடந்திருக்க வேண்டும். கூடவே தண்ணீர் ஊற்ற ஒரு ஆளும் குடத்தைச் சுமந்துகொண்டு நடக்க வேண்டும். வாரம் ஒருமுறை பருத்திக்குப் பூச்சிக்கொல்லி கட்டாயம். குறைந்தது 25 முறை தெளித்தால் மட்டுமே பஞ்சு கண்ணால் பார்க்கும்படியாக இருக்கும். இந்த இடத்தில் ஒரு தொழில்நுட்பத்தை மான்சான்டோ இறக்கி காய்ப்புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லித் தெளிப்பை முற்றிலும் நிறுத்திக் காட்டியது (சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மூன்று நான்கு முறை தெளிப்பது வேறு). நமது பஞ்சின் தரம் உயர்ந்ததோடு இறக்குமதி செய்த நாம், பஞ்சு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர முடிந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஜோதிஜி ஓரிடத்தில் மான்சான்டோவைத் திட்டிவிட்டுச் செல்கிறார். நமது தமிழகப் பாரம்பரியப்படி ஒருவர் சமூக அக்கறையுள்ளவராகக் காட்டிக்கொள்ள வேண்டுமெனில் மான்சான்டோவைத் திட்டு, கார்ப்பரேட் சதி அது இதுன்னு இரண்டு வார்த்தை சேர்த்துக்கோ என்ற புரோட்டோகாலைப் பின்பற்றுகிறார். பஞ்சு ஜின்னிங் ஆலைக்குள் வந்தபிறகு என்னவெல்லாம் ஆகிறது என்பதில் அவருக்கு மிகப்பெரிய பாண்டித்தியம் இருக்கலாம், ஆனால் பருத்தி சாகுபடியில் நமக்கு எதுவும் தெரியாது என்றால் குறைந்தபட்சம் அந்த ஏரியாவைத் தவிர்த்திருக்கலாம். இது நல்லது, இது கெட்டது என்று இன்றைய வியாபாரச் சூழலில் எதையுமே சொல்லிவிட முடியாது. திருப்பூரில் Buying House என்ற பெயரில் இருக்கும் புரோக்கர் அலுவலகங்களும் இப்படித்தான். ஒரு தொழில் வளரும்போது அதனுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் வளரும் தொழில்கள்தான் இந்தியாவின் வரமும், சாபமும். ஏனெனில் இலாபம் வரும்போது அதைப் பகிர்ந்துகொள்வது போலவே நட்டத்தையும் ஓரளவுக்குப் பகிர்ந்துகொள்வதுதான். (பகிர்ந்துகொள்ளுதல் என்றால் இலாபத்தில் கமிஷன் கேட்பது, நட்டம் வந்தால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு ஃபோன் எடுக்காமல் இருப்பது என்று படிக்கவும்). திடீரெனச் சட்டதிட்டங்கள் மாறினாலோ, இறக்குமதியாளர்கள் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டாலோ ஏற்படும் நட்டத்தைக் கண்ணுக்குத் தெரியாத, கணக்கில் வராத பல layerகளில் உள்ளவர்கள் பகிர்ந்துகொள்வதாலேயே திடீரென ஒரு பிராந்தியமே சரிந்துவிடாமல் செயல்படுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாத்திலும் ஜோதிஜி அரசியல்வாதிகளைத் திட்டுகிறார். அவர்களே நமது எல்லாப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்று நம்புகிறார். ஆரம்பம் முதலே சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொடர்ந்து ஒரு ஊழியராகவே இருப்பதால் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை நேரடியாக அனுபவித்துப் பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. நீங்கள் சுமார் 20 பேர் வேலை செய்யும் ஒரு சிறுதொழிலை நடத்திக்கொண்டு Frontline customer facing person ஆக நிற்பவராக இருந்தால் அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் என்ற ஒரு பிரிவினர் மீதான உச்சக்கட்ட அதிருப்தியும், வெறுப்பும், அறிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் சரளமாகப் பயன்படுத்தித் திட்டிக்கொண்டே இருக்கும் நபராகவே இருக்க முடியும். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கான நயத்தக்க உரைத்தல், நல்லவை கூறல், நட்பொழுகல், நண்பர்கள் நலம் பேணல், முக்காலமும் அறிந்து முகமன் கூறல் போன்றவற்றால் அடக்கி வாசித்துக்கொண்டு இருப்பவராக மட்டுமே இருக்க இயலும். எழுபதுகளில் கல்வி, மின்சாரம், மருத்துவம், பாசனம், நவீன வேளாண்மை போன்றவற்றைக் கிராமங்களுக்கு முதன்முறையாகக் கொண்டுசென்ற அரசு ஊழியர் வர்க்கம் வேறு. அப்போது இருந்த பயனாளிகள் எனப்படும் பொதுமக்களும் வேறு. உள்நாட்டு வியாபாரம் மட்டுமே இருந்த சமூகப் பொருளாதாரச் சுழலும் வேறு. அப்போது இருந்த ஊழியர்களும் ஓய்வுபெற்றுவிட்டனர், பயனாளிகளும் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டனர், கணிசமானோர் இறந்தும் விட்டனர். 2000-க்குப் பிறகு வந்த தொழில் வேகம், சர்வதேசச் சந்தை வரவுக்குத் தகுந்தவாறு அரசு ஊழியர் வர்க்கம் மாறவே இல்லை. தொழிற்சங்கப் பார்வைகளும் மாறவே இல்லை. அரசாங்கத்தின் அத்தனை சட்டதிட்டங்களையும் ஏற்றுக்கொண்டு, வரி கட்டி, வட்டி கட்டி வாழும் முதலாளிகளை ஏமாற்றுக்காரன் என்றும், அறக்கட்டளை வைத்து பள்ளி கல்லூரி நடத்தி வரியே இல்லாமல் வெளிப்படையாகவே சம்பாதிப்பவர்களை கல்வித்தந்தை என்றும், கடமையைச் செய்யாமல் உரிமையை எப்படிக் கேட்க முடியும் என்ற சுரணையே இல்லாத அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த இயந்திரங்களின் வேகமும், துல்லியமும் மிக அதிகம். அதேநேரத்தில் அவை இயங்குவதற்கு மின்சாரத் தேவையும் மிக அதிகம். திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களிலும் புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டதோடு ஆட்டோமொபைல், கணினிசார் தொழில்கள் வேகமாக வளர்ந்த வேகத்துக்கு அரசாங்கத்தின் மின் உற்பத்திக்கானத் திட்டங்கள் செயல்வடிவம் பெறவில்லை. அதன் விளைவுதான் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை. தமிழகத்தில் இருப்பது ஒரே மின்சார வாரியம். அவர்களுக்குத் தெரியாது என்பதெல்லாம் வடிகட்டிய பொய். அந்த அதிகார வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தால் அத்தோடு தமிழக அரசியலிலிருந்து திமுக அரசியல்வாதிகள் அப்புறப்படுத்தப்பட்டது வரலாறு. பிரமிடின் உச்சியில் இருக்கும் சிறு எண்ணிக்கைதான் அரசியல்வாதிகள். ஆசிரியர் ஜோதிஜி குறிப்பிடுவது போல எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் மேலேயே எழுதிவிட்டுத் தப்பிக்க இயலாது. கிராம நிர்வாக அதிகாரிகளே, கிராமத்திலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் அந்தந்த கிராமத்தின் சாகுபடிப் பரப்பு, கால்நடைகள் எண்ணிக்கை, அங்கு இருக்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள் என எல்லாத் தரவுகளுமே தவறானவையாகத்தான் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் கொள்கை முடிவு எடுத்தால் எப்படி இருக்கும்? இன்றைய தேதிக்கு மிகவும் over rated valuation என்பது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வரும் அதிகாரிகள்தான். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மட்டும் திறமையின் உச்சக்கட்ட வடிவமாகக் காட்டப்படுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்களது எல்லாத் திறமைகளும் 51% என்றால் அவர்களது அதிர்ஷ்டம் 49% என்பது போலவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளின் அதிர்ஷ்டமும் 49% உண்டு. மீதமிருக்கும் சர்வீஸ்களின் அதிகாரிகள் ஐந்து பத்து மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்ட காரணத்தினால் திறமை குறைந்தவர்களாகிவிட மாட்டார்கள். ஆறுமுறை நேர்முகத்தேர்வு சென்று தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்வில் ஐஏஎஸ் வாங்கியவர்களும் உண்டு. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்தும், அதன் அருமை பெருமைகள் குறித்தும் அவர்களே புத்தகம் எழுதிக்கொள்வதால் சமகாலத்தில் திறமை குறித்து உருவாக்கப்பட்ட பெரிய பிம்பங்களுள் சிவில் பணிகள் தேர்வும் ஒன்று. குரூப் 1 அதிகாரிகளைப் பார்த்தால் அவர்களுக்குக் கொஞ்சம் இளக்காரம்! இந்த அதிகாரிகளே கீழ்மட்டத்திலிருந்து வரும் தகவல்களைச் சரிபார்த்து மேலே அனுப்பித் திட்ட வடிவமாக்கி வைக்கின்றனர். இவர்கள் சொல்லுவதை அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வதைத் தாண்டி எதுவும் இருப்பதில்லை. வைகை அணையில் தெர்மாகோல் விட்ட மாதிரி, கோயமுத்தூரில் விண்வெளிப் பயணப் பாலம் அமைத்தது மாதிரி பல உதாரணங்கள் உண்டு. ஜோதிஜி குறிப்பிடும் நிர்வாகத் திறமைக்கும், ஒரு தேர்வில் வெற்றிபெற்று வருவதும் தொடர்பே இல்லாதவை (நீட் தேர்வு உட்பட). சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பின்னர் அவர்கள் பயில்வது புரோட்டோகால் பின்பற்றும் வழிமுறைகளே. ஓட்டுநர் உட்பட ஐந்து முதல் பத்து உதவியாளர்களை 24x7 வைத்துக்கொண்டு, எந்தக் கட்டத்திலும் வேலையை விட்டு நின்றுவிடாத, கிட்டத்தட்ட zero attrition rate கொண்ட workforce-ஐ வைத்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளைத் திறமையின் மறுவடிவம், எளிமையின் சிகரம், தன்னுடைய கார் கதவைத் தானே திறந்து இறங்கும் குணக் குன்று என்று அனைவரும் புகழ்ந்து வைப்பது நமக்கு எதற்கு வம்பு என்றுதானே? மற்றபடி சாதாரண feedback-ஐக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத அகங்காரத்தில் உழல்பவர்களாக்கவே 90% இருக்கின்றனர். அண்மையில் மத்திய அரசில் இணைச் செயலாளர் மட்டத்தில் ஐஏஎஸ் அல்லாத, அனுபவம் மிகுந்த தனியார் நிறுவன உயரதிகாரிகளும் வரலாம் என்று கொண்டுவந்த சட்டத்திருத்தம் நியாயமானதுதான் என்று ஜோதிஜிக்குத் தோன்றியிருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. நீதி, நேர்மை, அறமே தரம் என்று வாழ்ந்த அதிகாரிகள் இருந்திருந்தால் திருப்பூர் இப்படி இருக்குமா? கெளசிகா நதி வந்து சேரும் ஏரிக்குள்தானே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது? தமிழக அரசில் ஒரு ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி அவரது சொந்த மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி எப்படிக் கட்ட முடிகிறது என்பதெல்லாம் தெரியாததா? புத்தகம் முழுவதும் அரசியல்வாதிகளைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வருவார்கள் போவார்கள். நத்தம் விஸ்வநாதன் என்று ஒருவர் இருந்தார். மு. க. அழகிரி என்றும் ஒருவர் இருந்தார். இன்று அவர்கள் எங்கே? ஆனால் அவர்களிடம் கோப்புகளை வைத்து வாங்கிய அதிகாரிகள் அப்படியேதானே இருக்கிறார்கள்? சாயப் பட்டறை பிரச்சினைகள் அனைத்தையும் விலாவாரியாக அலசியிருக்கிறார். அது கடந்து வந்த பாதை, இன்னும் இருக்கும் பிரச்சினைகள் எனச் சகலமும். அதுதான் உள்ளே இருந்து எழுதுபவர்களின் சிறப்பம்சமே. எடுத்த உடனே மூடி, சீல் வை என்பது 24 மணிநேரச் செய்திச் சேனல்களின் தீர்ப்பாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதேபோல பி.டி. பருத்தி விவகாரத்தைப் பேசினால் கார்ப்பரேட் கைக்கூலி என்கிறார்கள். ஏற்றுமதிக்கு உதவும் DGFT, EIC, இன்னபிற ஏகப்பட்ட அமைப்புகள் எதற்காக இருக்கின்றன என்றே தெரியவில்லை என்று ஜோதிஜி குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. அவர்களது உலகம் வேறு, ஏற்றுமதியாளர்களது உலகம் வேறு. அவர்களது திட்டங்கள் தொழிலில் இருப்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் திவாலாகித் தூக்கில் தொங்க விட்டுவிட்டு, புதிதாகத் தொழில் தொடங்க வருபவர்களுக்கு உதவி செய்வதாகக் காட்டிக்கொள்வதையும் விரிவாக அலசியிருக்கிறார். மாவட்டத் தொழில் மையம் (DIC - District Industrial Centre) என்ற ஒன்று உண்டு. அங்கே சென்று ஒரு புராஜக்ட் கொடுத்து வாங்கி இலஞ்சம் ஏதும் கொடுக்காமல் நீங்கள் தொழில் ஆரம்பித்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்குச் சிலை வைத்துக் கொண்டாடலாம். DIC என்பதை உண்மையில் dick என்றுதான் சொல்லவேண்டும். அப்பேர்ப்பட்ட நவீனப் பிச்சைக்காரர்கள் அங்கே அதிகாரிகள் என்ற பெயரில் பணியில் இருப்பார்கள் என்பதைப் புத்தக ஆசிரியரும் அறிந்தே இருக்கிறார். புதிய தலைமுறை ஆலைகள் வந்தபிறகு தொழிற்சங்கங்களின் அடித்தளம் கிட்டத்தட்ட ஆட்டம் கண்டுவிட்டது. சுமங்கலி திட்டம் என்றபெயரல் இளம்பெண்களை நவீனக் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் தனியாக ஒரு கட்டுரையில் அலசப்பட வேண்டிய ஒன்று. தென்னக இரயில்வேயில் சாதாரணப் போர்ட்டராக கேரியரை ஆரம்பித்த அந்தத் தொழிற்சங்கப் பாட்டாளி ஐயா இன்று இரண்டு கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மகிழுந்தில் வருகிறார், சுமார் 1200 கோடிக்குமேல் சொத்து வைத்திருக்கிறார் என்றால் அதன் அருமை பெருமைகளைப் புரிந்துகொள்ளுங்கள். இரயில்வே மட்டுமல்ல, பெரும்பாலான அரசுத் துறைகளும் விற்றுத் தலைமுழுக வேண்டியவை என்று அரசியல்வாதிகள் நினைக்குமளவுக்குக் கொண்டுவந்தது உள்ளே இருப்பவர்கள்தானே? இன்னும் ஏகப்பட்ட விசயங்களை எழுதலாம். ஆனால் எப்போதுமே வண்டி வண்டியாக எழுதித் தள்ளுவதால் படிக்க முடியவில்லை என்று நண்பர்கள் புகார் சொல்லுவதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நம் ஊரில் தொழிற்சங்க நண்பர்கள் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ந்தால் அஃது அதிலுள்ள அனைவரின் பங்களிப்பு என்றும், தோற்றால் அது முதலாளியின் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையின்மை, திட்டமிடுதலில் கோளாறு என்றெல்லாம் எழுதிவிடுவது வழக்கம். ஆனால் முன்னால் நின்று நடத்துபவர்களுக்கே அதன் அத்தனை பரிமாணங்களும் தெரியும். அத்தகைய frontline workforce நபர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் டாலர் நகரமும் ஒன்று. ஜுனியர் விகடன் - விமர்சனம் கடந்த 24.07.2013 அன்று ஜூனியர் விகடனில் ஜு.வி. நூலகம் பகுதியில் வெளிவந்த டாலர் நகரம் புத்தகம் குறித்த விமர்சனம் இது. வந்தாரை வாழவைத்த திருப்பூர் நகரம் இப்போது விரக்தியால் திருப்பி அனுப்பி வருகிறது. `“திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைக்கலாம்” என்று நம்பி ஊரை விட்டு ஓடிவருவார்கள். ஆனால் இன்று அந்த ஊரை விட்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருப்பூரின் கதை இது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் எழுத்தாளர் ஜோதி கணேசன் தன்னுடைய அனுபவங்களின் மூலமாகத் திருப்பூரின் வரலாற்றைச் சொல்கிறார். “வேலையிருந்தால் போட்டுக் கொடுங்கண்ணே….” எனக் கேட்டபடி சட்டென என் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன். செய்து கொண்டிருந்த வேலை மீதான கவனம் சிதறியது. அனுமதி பெறாமல் கண்ணாடிக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்றுகூடத் தெரியாமல் உடைப்பது போலத் திறந்து உள்ளே வந்து நின்ற அவனுக்கு வயது அதிகபட்சம் 14 இருக்கலாம். செம்பட்டைத் தலையுடனும் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்து நிறுத்தியிருந்த அழுக்கான சட்டையுடனும் நின்றான்". என்று இவர் வர்ணிக்கும் காட்சி திருப்பூரில் நித்தமும் நடப்பது. இத்தகைய சின்னஞ்சிறுவர்கள் எப்படியெல்லாம் உழைக்கின்றனர் என்பதை ஜோதி கணேசன் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது. “திருப்பூருக்கு நான் உள்ளே நுழைந்த காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்து விட்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்” என்கிறார். வறுமை அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் உழைத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்தது. பெண்கள் இரவுகளில் பட்ட பாலியல் கஷ்டங்களையும் கண்ணீருடன் சொல்கிறார். இதனால்தான் பழைய தொழிலாளிகள் ஓடிப்போய்விட்டு இந்த இடத்துக்கு புதிய தொழிலாளிகள் வந்து விடுகிறார்கள். கடைசி வரை தொழிலாளியாகவே இருந்தவர்கள் கதை மனதை ரணம் ஆக்குகிறது. மின்வெட்டு, சாயப்பட்டறைகள், மூடல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தேக்கம், டாலர் வீழ்ச்சி என ஏதோ ஒரு காரணத்தை வைத்து திருப்பூரின் வர்த்தகம் சமீப காலமாக பெரும் சரிவை அடைந்தது. திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். வெளியேற முடியாதவர்கள் வெளிறிப்போய் நிற்கின்றனர். வெள்ளி சனி ஆகிய இரண்டு நாட்களும் சம்பள நாள் என்பதால் முன்பெல்லாம் தீபாவளி மாதிரி பணப்புழக்கம் இருக்கும்.இன்று எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையைப்போல வெறிச்சோடி கிடக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் பூமராங் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் திருப்பூர் தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தப் புத்தகம் இருக்கிறது. மெட்ராஸ் பவன் சிவகுமார் திருப்பூரின் முன்னணி பதிவர்களில் ஒருவரான ஜோதிஜி (தேவியர் இல்லம்) அவர்கள் எழுதிய நூல்தான் இந்த டாலர் நகரம். நூலெனும் சொல்லுக்குப் புத்தகமென்றும் பொருளென்பது நாமறிந்ததே. ஆனால் நூல் பற்றிய செய்திகளை பிரத்தியேகமாகத் தாங்கி வெளிவந்திருக்கும் அசல் நூல் என்பது இதன் தனிச்சிறப்பு. பின்னலாடைக்குப் பெயர் போன திருப்பூர் நகரில் ஒரு சாதாரணக் கிராமத்து இளைஞனாக அடியெடுத்து வைத்து படிப்படியாக உயர்ந்து தற்போது நிர்வாகப்பதவியில் இருக்கும் ஜோதிஜி அவர்கள் தான் கண்ட திருப்பூர் பின்னலாடை வரலாற்றைத் தொகுத்து டாலர் நகரமாகச் சமர்ப்பித்து இருக்கிறார். பல ஆண்டுகள் பின்னலாடை தொழில் அனுபவம் மிக்க நபர் எழுதிய புத்தகம் எனும் காரணத்திற்காக மட்டுமே இந்நூலை வாசிக்க முனைந்தேன். டாலர் நகரத்தின் முதல் சில பகுதிகளில் திருப்பூரில் வேலை தேடி அலைந்தது, சக நண்பர்கள் மற்றும் நிறுவனங்கள் வாழ்ந்து வீழ்ந்த கதைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பகிரப்பட்டு உள்ளன. உள்ளாடை நிறுவனங்கள், அதன் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் எப்போது வரும் என்று வாசகனாகச் சற்றே பொறுமை இழந்து காத்திருக்கும் நேரத்தில் அத்தியாயம் 11 முதல் 18 வரை அதற்கான விடை கிடைக்கிறது. எத்தனை வகையான நூல்கள், இயந்திரங்கள், துணிகள் ஆலைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன, ஏற்றுமதி இறக்குமதியில் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் நடக்கும் விளையாட்டுகள் என்ன, மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளால் இத்தொழில் எப்படி பின்னடைவைச் சந்தித்தது, தொழிலாளிகள் படும் சிரமங்கள், இடைத்தரகர்கள் செயல்பாடுகள், புதிய யுக்திகளைக் கையாள தடுமாறும் முதலாளிகள் நிலை என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித்தந்து இருக்கும் ஜோதிஜி.. உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்!! 19 முதல் 21-வது அத்தியாயம் வரை சற்று அயர்வைத்தந்தாலும் சாயப்பட்டறைகள் குறித்து தனிக்கவனத்துடன் 22 முதல் 26வது அத்தியாயம் வரை எழுதப்பட்டு இருக்கும் பக்கங்கள் பிரமாதம். குடிப்பதற்கு ஏதுவான ஆறுகள் சாயக்கலப்பால் எப்படிச் சீரழிந்து போயின என்பதை நுட்பமாக அலசி இருக்கிறார் ஆசிரியர். இந்த அலசலால் அரசு, தனியார் நிறுவனங்கள் மீதான கறை ஓரளவேனும் துடைக்கப்பட்டால் மகிழ்ச்சி. டாலர் நகரத்தின் குறை நிறைகள்: தமிழ் ஆர்வலரான ஜோதிஜியின் இப்படைப்பில் எழுத்துப்பிழை ஆங்காங்கே இருப்பது வருத்தம். குறிப்பாக சில இடங்களில் பொருட்பிழைகள் இருப்பது உறுத்துகிறது. உதாரணம்: பக்கம் 84 நான்காவது பேராவில் உள்ள ‘கோடடித்த’, பக்கம் 112 வரி மூன்றில் உள்ள ‘பின்னலாடை’. பிழை சரிபார்த்ததில் அதிகக் கவனம் செலுத்தாதது புருவத்தை உயர்த்த வைக்கிறது. திருப்பூர் சார்ந்த புகைப்படங்கள் புத்தகத்தில் சரியான அளவுடன்(எண்ணிக்கையையும் சேர்த்து) இருப்பது நன்று. எனினும் உள்ளாடை தொழில் சார்ந்த சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்த புகைப்படக் கலைஞர் உதவியுடன் எடுத்து இருக்கலாம். முதல் சில அத்தியாயங்களில் தமது தனிப்பட்ட போராட்டங்களை, ஆங்காங்கே தூவப்பட்ட தத்துவங்களைச் சுருக்கி பொதுப்பிரச்னைகளை மையப்படுத்தி இருப்பின் நூலின் கோர்வை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். முதல் 26 பக்கங்களுக்கு அணிந்துரை, ஏற்புரைகளே ஆக்கிரமித்து இருப்பது குறை. ‘இன்டக்ஸ்’ என்று அழைக்கப்படும் உள்ளடக்கம் 247 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் துவக்கத்தில் இல்லாதது ஆச்சர்யம்தான். பெண் மற்றும் குழந்தை தொழிலாளிகள் உள்ளாடை உலகில் எப்படிக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சிற்சில பக்கங்களில் மட்டும் கடந்து 95% ஆண் தொழிலாளிகள் பற்றிய பகிர்வுகளே மையம் கொண்டிருப்பதும் குறைதான். அக்குறை நீங்கும் வண்ணம் அடுத்த நூலில் ஜோதிஜி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். காத்திருக்கிறேன். அதுபோல திருப்பூரின் பிரதானத் தொழில் மின்வெட்டால் எப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்பதையும் ஊறுகாய் போல ஆசிரியர் தொட்டுவிட்டுச் சென்றிருப்பது ஆச்சர்யமே. தற்காலத்தில் பூதாகரப் பிரச்சினையாக இருக்கும் மின்வெட்டு குறித்து இறுதிப்பகுதிகளில் விலாவாரியாக எழுதி இருக்கலாம். நிறைகள் என்று சொல்வதற்குக் கணிசமான விஷயங்கள் டாலர் நகரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இயந்திரச் செயல்பாடுகள், பல்வேறு வகையான நிறுவனங்களின் வியாபாரத் தந்திரங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் என அள்ள அள்ளக் குறையாத தகவல்கள்/அனுபவங்களை ஜோதிஜி தனது வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இருப்பது அவரது அபார உழைப்பிற்கு எடுத்துக்காட்டு. தளமான தாள்கள், சரியான அளவில் தகுந்த இடைவெளிகளுடன் இருக்கும் எழுத்துகள் சிறப்பு. விலை ரூ.190 என்பதால் வசதி குறைந்த வாசகர்களின் கைகளுக்கு இந்நூல் பெருமளவில் சென்று சேருமா எனும் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. இறுதியாக… இணையத்தில் மட்டுமே அடங்கி இருக்கவிருந்த இப்படைப்பை நூல் வடிவில் நமக்குக் கொண்டு சேர்த்திருக்கும் 4 தமிழ் மீடியா இணையதளம் மற்றும் ஜோதிஜிக்கு தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களையும் மனமார பாராட்ட வேண்டும். நம்மில் பலர் நித்தம்(நெசமாத்தானா !?) அணியும் உள்ளாடைகளுக்குப் பின்னே இருக்கும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகள், தொழில்நுட்பங்கள், பணப் பரிவர்த்தனைகள் எத்தனை..எத்தனை. அதுகுறித்த போதுமான அடிப்படை அறிவை என் போன்ற சராசரி நபர்களுக்குக் கற்பித்த காரணம் ஒன்றிற்காகவே ஆசிரியருக்கு ஆளுயர பூங்கொத்தை அளிக்கலாம். நன்றிகள் பல ஜோதிஜி. புளித்த ஏப்பம் விடும் மேட்டுக்குடிகள் பொழுது போகப் படிக்க ஒளிவட்ட எழுத்தாளன் எழுதித்தள்ளும் ஆகச்சிறந்த காவியமல்ல இது. சாமானிய வாசிப்புத்திறன் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கு இன்னொரு பாமரன் தனது வியர்வைத்துளிகளால் நெய்திருக்கும் நூலோவியம். மெட்ராஸ் பவன் சிவகுமார் கவிப்ரியன் இது டாலர் நகரத்தைப் பற்றிய நூலா? ஜோதிஜி அவர்களின் வாழ்க்கை வரலாறா? அல்லது இரண்டும் கலந்த கலவையா? பிரித்தறிய முடியாத அளவிற்கு தன் வாழ்க்கை அனுபவங்களைத் திருப்பூர் நகரப் பின்னணியில், தனக்கே உரித்தான எழுத்து நடையில், அழகான பின்னலாடையைப் போல ஆடை போலப் பின்னியுள்ளார் ஜோதிஜி! பின்னலாடைக்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பைப் போலவே ‘டாலர் நகரத்தின்’ உருவாக்கத்தில் உள்ள உழைப்பையும் புரிந்து கொள்ளமுடிகிறது. புத்தகத்தைத் திறந்தவுடன் தொடக்கத்திலே உள்ள வரிகளைப்போலவே ‘நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை எனில் அதை நீங்களே எழுதத் தொடங்குங்கள்’ என்ற அழுத்தமான வரிகள்தான் வரவேற்கிறது. வாசிப்பு பழக்கம் உள்ள அனைவருக்கும் இயல்பாகவே ஒரு கனவு மனதிற்குள் குடி வந்துவிடும். நாமும் எழுத்தாளனாவது என்கிற கனவுதான் அது. எழுத எண்ணம் வரும்போதெல்லாம், ‘எழுதுவது எப்படி?’ என்ற எனது கேள்விக்கு ‘சுஜாதா’ அவர்கள் ‘சொந்தக் கதையை எழுதாதீர்கள்’ என்று சொன்னதுதான் ஞாபகத்திற்கு வரும். நமக்கு நேர்ந்தவற்றையும், நமது வாழ்க்கை அனுபவங்களையும் எழுதாமல் வேறு எதைத்தான் எழுதுவது? எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை ஜோதிஜியிடம் இருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும். சமூக பொறுப்புணர்வு என்பது அறவே இல்லாமற் போய்விட்ட இந்தக்காலத்தில், மிகப்பெரிய பொறுப்பிலிருந்துகொண்டு ஓய்வில்லாத உழைப்புக்கிடையிலும் வற்றாத ஆர்வம் காரணமாக சமூக அவலங்களைத் தணியாத தாகத்துடன் பதிவுலகில் மெகா பதிவுகளை எழுதிவரும் இவரை வியப்புடனே கவனித்து வருகிறேன். எப்படி முடிகிறது இவரால்… என எனக்குள்ளே கேள்விகள் ஆயிரம்! புத்தகத்தை வரவழைத்துவிட்டு நான் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டபடியால் உடனடியாக புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் புத்தகம் கைக்குக் கிடைத்த பின்பும் என்னால் படிக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவசரக் கோலத்தில் படிக்கக்கூடாது. பொறுமையாக ரசித்துப் படிக்கவேண்டும். விமர்சனமும் எழுதி அனுப்பவேண்டும் என்ற ஆசையினால் ஆழ்ந்து படிக்கத் திட்டமிட்டேன். ஆனாலும் ஒரு இரயில் பயணம்தான் இதை முடிவுக்குக் கொண்டு வந்தது. எழுத்தாளர் ஆகவேண்டும், புத்தகம் போடவேண்டும் என்று ஆசைப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கு வலைப்பதிவு உலகம்தான் வடிகாலாக அமைந்தது. என்னைப் போலப் பெயருக்கு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு அதைச் சரியாகப் பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். ஆனால் பதிவுலகில் அசைக்க முடியாத இடத்தையும், அருமையான நண்பர்களையும் பெற்று, டாலர் நகரத்தை நம் கைகளில் தவழ விட்ட ஜோதிஜிக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். இனி புத்தகத்திற்கு வருவோம்…. வாலிப வயதில் பிழைப்பிற்காக அல்லது வேலைக்காக ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் நகர வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளைஞனின் கதையாக டாலர் நகரம் தன் பயணத்தைத் துவங்குகிறது. சூதுவாது நிறைந்த நகர வாழ்க்கையின் நீர்த்துப்போன குணாதிசயங்களையும், பல்வேறுபட்ட மனிதர்களையும் படம் பிடித்துக்காட்டும் இவர் இதற்குப் பின்னால் சொல்லும் ஒரே விஷயம் ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’. எல்லா இளைஞர்களுமே கிராமத்து வாழ்க்கை அல்லது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேல்படிப்பிற்காகவோ அல்லது வேலை தேடியோ நகர்ப்புறம் நோக்கி நகர்வது வாடிக்கைதான் என்றாலும் இந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டுவருவது சற்று சிரமமான காரியம்தான். ஆனந்த விகடனில் ராஜூமுருகன் எழுதுவதைப்போல இது ஒரு அலாதி அனுபவம். நினைக்க நினைக்க, நம் நினைவுகள் கடந்தகால நிகழ்வுகளில் மூழ்கி அதை மீட்டெடுத்து எழுத்தாக்குவது சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கிறது. நானும் கூட இப்படித்தான் நண்பனிடம் 100 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு சென்னைக்கு முதன்முதலில் பயணமானேன். போட்டி, பொறாமை, அதனால் உருவாகும் எதிரிகள், பெண்கள் சகவாசம், தலைக்கனம், பணம் பணம் கொடுக்கும் தைரியம், திமிர், பணத்திற்காக எதையும் செய்யும் துணிச்சல் என மனித வாழ்வில் மனித உணர்வுகளே இல்லாமல் போகும் சூழ்நிலையில் உழைப்பு அதுவும் கடினமான உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் (திருப்பூரில்) உயரலாம் என்ற இவரது ஒவ்வொரு அனுபவங்களைக் கோர்வையான சம்பவங்களில் நமக்குத் திரைப்படத்தைப் போல நமக்குக் காட்டுகிறார். நண்பர்களைக் குறிப்பிடுவதைப் போலவே எதிரிகளையும் குறிப்பிடுகிறார். உடையைப்பற்றி உயர்வாய்ச் சொல்லிக் கூடவே அதிர்ஷ்டத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ஏனென்றால் நமது நாடு உழைப்புக்கு மரியாதை கொடுக்காத நாடாகிப் பல வருடங்கள் ஆகிறது. பணம், செல்வாக்கு, அதிகாரம் என இவையே எல்லா இடங்களிலும் கோலோச்சி உழைப்பைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. செல்வாக்கு உள்ளவனின் சின்னவீடு நினைத்தால் கூட உண்மையாய் இருப்பவனை, உழைப்பவனை எட்டி உதைத்து வெளியேற்ற முடியும் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார். பின்னலாடைத் தொழில் பற்றிய எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறரார். ஆனால் என்னைப் போன்ற அந்தத் தொழில் பற்றித் தெரியாத புதியவர்களுக்கு ஒரு முறை திருப்பூர் சென்று வந்தால்தான் அதன் முழுப் பரிமாணமும் விளங்கும் என நினைக்கிறேன். நிர்வாகத்திறன், நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் தன்மை, புதியன கற்றுக்கொள்ளல், வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளல், எதிரிகளைச் சமாளித்தல், தவறான பாதைக்குத் திரும்பாமை என இவரின் எல்லா அனுபவங்களும் வரும் தலைமுறைக்குப் பாடமாக இருக்கவேண்டிய விஷயங்கள். வெற்றி பெறும்வரை உழைப்பே கதியென்று இருப்பவர்கள் வெற்றி பெற்று உச்சாணிக்குப் போனபின் பின்னால் உழைத்துக் கொண்டிருப்பவர்களைத் திரும்பிப் பார்ப்பதேயில்லை. உதவுவதும் இல்லை. என் உழைப்பு, என் உழைப்பு என்கிற திமிர்த்தனமான கர்வமும், பணத்தின் மீதான அதீத வெறியும் அதிகமாகி கல் நெஞ்சக்காரர்களாய் மாறிப்போனவர்களையும் அடையாளம் காட்டியிருக்கலாம். இவர்களிடம் ஆலோசனைக்குப் போனால் வெற்று அறிவுரைகளும், சுயத் தம்பட்டமும்தான் பதிலாகக் கிடைக்கும். முதல் 5 அத்தியாயங்களில் திருப்பூரின் ஆரம்பக்கால அனுபவங்களையும், இவரின் படிப்படியான முன்னேற்றங்களையும் அசைபோட்ட இவர், அடுத்ததாக ‘ஆங்கிலப் பள்ளியும் அரைலூசுப் பெற்றோர்களும்’ என்ற ஆறாவது அத்தியாயத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டார். குறிப்பாய் இந்தப் பகுதியை என் மகள்கள் விரும்பிப் படித்தனர். உலகம் தெரியாத இளைஞனாய் இருக்கும்போது, இலட்சிய வேகங்கள் அதிகமிருக்கும். இப்படித்தான் தமிழ் மொழிப்பற்றினால் உள்ள வேகத்தால் எனது அண்ணியாரிடம் (அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதைக் கிண்டலடித்து) என் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன் என்று சபதம் எல்லாம் செய்தேன். இப்போது அந்தச் சம்பவத்தை அவர்கள் மறந்தே போயிருப்பார்கள். ஆனால் என் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் நாள் வந்தபோது நான் தடுமாறித்தான் போனேன். சமூக நிர்ப்பந்தத்திற்கு நான் அடிபணிந்து போனேன். எனது சபதமெல்லாம் சரணாகதியாகி விட்டிருந்தது. நாளை என் பிள்ளைகள் வளர்ந்து ‘ஏனப்பா எங்களை அதுமாதிரி படிக்க வைக்கவில்லை’ என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? என் லட்சியத்திற்கோ அல்லது என் இயலாமைக்கோ அவர்களைப் பலி கொடுப்பதா? இறுதியில் நானும் ஆங்கில வழிக்கல்வியில்தான் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. டாலர் நகரம் எனது பார்வையில்…………. தொடரும்… கவிப்ரியன் (2) முந்தைய தொடர்ச்சி இழப்பதற்கு ஒன்றுமில்லை’யில் ஆறுமுகத்தின் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு பாடம். படிப்பறிவு இருப்பவனைவிடப் பட்டறிவுடன் உழைப்பும் அதிர்ஷ்டமும் இருந்தால் கோடீஸ்வரனாவது (திருப்பூரில்) சாத்தியமே என்ற செய்தி வியப்பைத்தான் ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்தக் காலத்தில் அரசியல்வாதியினால்தான் (அதிகாரத்திலிருக்கும்) கோடீஸ்வரனாவது சாத்தியம். மற்றவர்கள்…………….?பெண்களில் பலர் உழைக்கவே தயாராயில்லாமல், உல்லாச வாழ்க்கையை அனுபவிக்க உடலை மூலதனமாக்கிய வாழ்க்கைக்கு நகரத்தொடங்கியிருப்பது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. ‘பணத்துக்குப் பணம், சுகத்துக்குச் சுகம்’ இந்த வார்த்தையை இத்தனை வருட ‘சென்னை’ வாழ்க்கையில் பலரிடம் கேட்டிருக்கிறேன். பணம் என்கிற பலவீனத்துக்கு இவர்கள் சகலத்தையும் இழக்கத்துணிகிறார்களா இல்லை ‘உடல்’ என்ற ஒன்றைக்காட்டி ஆண்களின் பலத்தைப் பலவீனமாக்குகிறார்களா என்று பட்டிமன்றம்தான் நடத்தவேண்டும். இப்படித்தான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை அட்டையைப் போல ஒட்டிக்கொண்டு சகலத்தையும் உறிஞ்சியபின் வேறொருவரைத் தேடிப்போகும் மனசாட்சியற்றவர்களை என்ன சொல்வது? இருதரப்பிலும் தவறு உண்டென்றாலும், இங்கே இது தொழில் தர்மமாக மாறிவிடுகிறது. காசு இருந்தபோது கம்பனி கொடுத்தேன். இப்போது இல்லையா ஆளைவிடு. நான் யார்கூட போனா உனக்கென்ன? இந்த உரையாடல் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இவர்கள்தான் சாதனைப் பெண்மணிகளாய்………. ச்சே… கீழ்த்தட்டு மக்கள் அனைவரும் படும் அல்லல்களையும், அவர்களின் இயந்திர வாழ்க்கையையும் படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது. ஒரு ஜான் வயிற்றுக்காக, மானத்தை மறைக்கும் ஆடைக்காக மனிதர்கள் படும் அவஸ்தைகள் மனசைப் பிசைகிறது. ‘யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்? பதவியை வைத்துக்கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்!… எதுகுறித்தும் அக்கறை இல்லை’. ஏனென்றால் அடுத்தவேளை உணவுக்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மற்ற எதுவுமே முக்கியமாகத் தெரியாத அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினால்தான் உண்டு கொழிக்கும் அதிகார வர்க்கத்தின் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை?! ’வேலையை மட்டும் விட்டுடாதேடா ‘மூன்றும் பொட்டப்புள்ளையா பெத்திருக்கே….’. இதில் மூன்றுக்குப் பதிலாக இரண்டு… இதே வார்த்தையைத்தான் நானும் இன்றுவரை என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதே அனுபவங்களைத்தான் நானும் பெற்றிருக்கிறேன். என்னோடு படித்தவர்கள் எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத அளவில் பணக்காரர்களாய் மாறிவிட்டிருக்க, நான் மட்டும் ஏதோ ஒரு வேலையில் கொடுத்ததை வாங்கிக் கொண்டிருக்க முடியாமல் அல்லது உழைப்புக்கு மரியாதை இல்லாத இடத்தில் தொடர்ந்து வேலை பார்க்கமுடியாமலோ வேலையை உதறிவிட்டு வீடு வரும் எண்ணத்தில் இருக்கும்போதெல்லாம் என் அம்மாவும் இப்படித்தான் கூறுவார்கள். என் நிலைமையை எப்படி இவருக்குப் புரியவைக்க முடியும்? இந்த வயதிலும் சான்றிதழ்களைத் தூக்கிக்கொண்டு நிறுவனங்களின் படியேறி… சொந்த ஊருக்குப் பக்கத்தில் வேலை கிடைத்து விடாதா… அல்லது சுயதொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியோடு இருக்கும் என்னை, அம்மாவின் ‘வேலையை மட்டும் விட்டுடாதேடா’ என்ற வார்த்தைகள்தான் இந்த வேலையிலும் தொடர வைத்துக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் காலத்திற்குத் தகுந்தமாதிரி வேறொரு வடிவம் எடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் அவதாரங்கள் இன்றைய சூழலில் திருப்பூரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற அவலத்தை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இயற்கை விவசாயம், மரபணு விதைகள், விளம்பர யுகம், உள்ளூர் சந்தை, உலக சந்தை, அவைகளின் சட்டதிட்டங்கள், போட்டிப் போடும் சீனா, தரகர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சாயப்பட்டறைகள், அது உருவாக்கியிருக்கும் மாசு என எல்லாவற்றையும் அலசியிருக்கிறார். ‘தண்ணீரில் விளையாடிய நாடுடா!’ என்ற தலைப்பில் தனியே பதிவுகூட எழுதியிருக்கும் இவர், தண்ணீரைப் பற்றி தாராளமாகவே விவரிக்கின்றார். எனக்கென்னவோ இதில் குழப்புகிறார் என்றுதான் தோன்றுகிறது. அதாவது சாயத்தொழில் நடக்கத் தண்ணீரைப் பயன்படுத்தியே தீரவேண்டும். இதனால் நிச்சயமாக நீர் மாசுபடும். சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதையும், அது எவ்வளவு விஷத்தன்மை உடையது என்பதையும், விவசாயமும் குடிநீரும் இதனால் எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதையும் இவரே விவரிக்கிறார். அதே சமயத்தில் ஸீரோ டிஸ்சார்ஜ் சாத்தியமில்லை என்கிறார். வேறு என்னதான் வழி? ஒன்று சாயப்பட்டறைகளை மூடி விளைநிலங்களையும், குடிநீரையும் இனியாவது பாதுகாக்கவேண்டும். அல்லது திருப்பூரைத் தொடர்ந்து டாலர் நகரமாகத் தக்கவைத்துக்கொள்ளக் குடிநீரையும், விளைநிலங்களையும் நிரந்தரமாக விஷத்தன்மையுள்ளதாக மாற்றி, தண்ணீருக்காகத் தனியாரிடம் தொடர்ந்து கையேந்த வேண்டும். மற்ற நாடுகளில் இதற்காக என்ன செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாம். இவரே சொல்வது போல ‘அத்தனையும் எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்’. எங்கள் வேலூர் மாவட்டமும் இதே போன்ற பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். ஆம்பூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை என இங்குள்ள தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி உவர்ப்பாகி உப்பாகிப் பல வருடங்களாகிறது. ஒரே ஆறுதல் பாலாறு. அங்கிருந்து பெறப்படும் நீரால்தான் மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் ஏதாவது பிரச்சினை என்றால்…. தண்ணீர் தண்ணீர் படத்திலுள்ளது போலத்தான். ஆனால் பாலாறோ தண்ணீர் பார்த்துப் பல வருடம் ஆகிறது. நல்ல மழையும் இல்லை. ஆற்றிலே தண்ணீரும் இல்லை. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில்…. பெண்களின் உழைப்புதான் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற ஆண்களைக் கொண்ட குடும்பங்களில் எல்லாப் பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. வீட்டிலும் உழைப்பு, வெளியிலும் உழைப்பு. முடியாமல் போகும் பட்சத்தில் வலை விரிக்கவோ அல்லது வலையில் விழவோ தயாராகிவிடுகிறார்கள். பொருளாதாரச் சுதந்திரம் கொடுக்கும் விடுதலை இவர்களை எல்லை தாண்ட வைக்கிறது. இது திருப்பூரில் மட்டுமல்ல எல்லாத் தொழில் நகரங்களிலும் வேரூன்றிப் பல வருடங்களாகிறது. சென்னை தாம்பரத்தில் உள்ள ஏற்றுமதி வளாக மண்டலத்தில் இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புதிய நட்பும், புதிய உறவுகளும் அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களாலும், வசதிவாய்ப்புகளாலும் மனம் சலனமடைந்து வீட்டுப்பிரச்சினைகளிலிருந்து விடுபடத் தவறான கள்ள உறவுகளில் வீழ்ந்து சீரழிகிறார்கள். இதை ஜோதிஜி நயமாக, ‘காமம் கடத்த ஆட்கள் தேவை’ என்ற தலைப்பில் அலசியிருக்கிறார். ‘இவ்வாறான மாற்றங்கள் எதிர்காலச் சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறவர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்’ என்ற இவரின் வரிகள் நூறு சதவிகிதம் உண்மையே! இன்னும் மனதில் தோன்றுபவற்றையெல்லாம் எழுத விமர்சனம் என்ற இந்த எல்லை போதாது. தவிர ஜோதிஜியின் பதிவுகளைப் போல நீளமாகப் போகக்கூடிய(?) அபாயமும் உண்டு. மொத்தத்தில் திருப்பூரின் வரலாற்றைச் எதிர்காலத் தலைமுறைக்குச் சொல்லப்போகிற மிக முக்கியமான நூல் இந்த ‘டாலர் நகரம்’. நட்புடன், கவிப்ரியன். தமிழ் இளங்கோ - ஆசையும் என் அச்சமும் நான் வங்கி வேலைக்குச் சேர்ந்த பிறகு திருப்பூரைப் பற்றி கேள்விப் பட்ட தகவல், திருப்பூரில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளும் உள்ளன என்பதுதான். எனக்குத் தெரிந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் திருப்பூருக்குச் சென்றனர். ஒருவர் 15 நாளிலேயே " என்னால் ஈரத்தில் ரொம்பநேரம் நிற்க முடியவில்லை என்று தாக்குப் பிடிக்க முடியாமல் வந்து விட்டார். இன்னொருவரால் கடினமாக உழைக்க முடியவில்லை. அவரும் ஓடி வந்து விட்டார். ஆனாலும் மற்றொருவர் (கடுமையான உழைப்பாளி) எங்கள் கிராமத்துக்காரரோடு திருப்பூருக்குச் சென்றவர், இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். தனது கடைசி தம்பிகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தார். கிராமத்தில் நிலங்களை வாங்கி போட்டார் . எனவே எனக்குத் திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நிறைய நாளாக ஆவல். அந்தக் கேள்விக்கு விடை சொன்ன நூல்தான் ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” – என்ற நூல் .. " கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலை வாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன் தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்குப் பணங்கொடுத்து வழியனுப்பத் திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்." - என்று தொடங்கித் தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். "திருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும்? என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்துக் கோடி நட்டத்தில் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷ்டம்., நம்பக் கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டுச் சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்." என்று தான் கூடு விட்டுக் கூடு பாயக் காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். - ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், " 15 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்த சொந்தத் தொழில், சொந்த நிறுவனம் என்ற எண்ணம் இயல்பாக என்னைத் தேடி வந்த போது சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். வாழ்வின் அடுத்த மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகத் தொடங்கியது " என்று சொல்கிறார். அப்போது தனக்குத் தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைப்படச் சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடிச் செல்வோருக்கும் தொழில் முனைவோருக்கும், கலங்கரை விளக்கங்களாக உள்ளன. திருப்பூரில் ஆடை தயாரிப்பு: திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் எவ்விதம் உருவாகின்றன, சாயப் பட்டறையில் ஏற்றப்படும் சாயங்கள் ,தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்கள் பெயர் என்பது உட்பட அலுப்பு தட்டாத வகையில் எழுதுகிறார். “உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம். அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி, போர்வை போலக் கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகளை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா? குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? குளிர் நடுங்க வைத்து விடாதா?” “நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் ஜட்டியின் துணி ஒரு விதமாகவும் பனியன் துணி வேறுவிதமாகவும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் தானே? சில துணிகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும். அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவிப் பார்க்கும் சுகம் தெரியும். அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப் பகுதியில் செய்யப்படும் ஜாலவித்தையாகும்.” - திருப்பூர் சாயப் பட்டறைகள்: திருப்பூர் என்றாலே சாயப் பட்டறைகள் நினைவுக்கு வராமல் போகாது. அந்த அளவுக்கு இப்போது செய்தித் தாள்களில் ஊடகங்களில் சாயப்பட்டறை பற்றிய தகவல்கள் வருகின்றன. “இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவைப் பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை, கம்பம், தேனி, போடி, சுற்று வட்டாரப் பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல் வலிமை வாய்ந்த இளைஞர்கள்.. படிப்பைப் பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல், வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரையுள்ள அத்தனை பேரையும் இந்தத் தொழிலில் பார்க்கலாம்.” மேலும் இந்தச் சாயக்கழிவுநீரால் ஒரத்துப்பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுக்களைப் பற்றியும் சொல்கிறார். திருப்பூர் நிறுவனதாரர்கள்: திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்தத் தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி – இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலைச் சொத்துக்களை அழித்தவர்கள், என்றும் உதாரணம் காட்டுகிறார். "உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் திருப்பூருக்கு உள்ளே வர, நிறுவன முதலாளிகள் தங்களின் வாலைச் சுருட்டிக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . நிறுவனங்களின் உள்ளே பணிபுரிபவர்களின் வயது கணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் நிறுவனங்களுக்குப் பாதகம்.. நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்திப் பாம்பாய் இறக்குமதியாளர்கள் கவனிக்கும் போது முதலாளிகளால் என்ன செய்து விட முடியும்? இன்றைய நவீன வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளர்களும் உண்டு. இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து…. … " நான் இப்படித் தான். இது தான் எனக்கு வேண்டும். உனக்கு என்ன தேவை? அப்படியா? இது தான் என்னால் முடியும்? உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சரி இதை வைத்துக் கொள்? இதுதான் இதற்கான சட்டதிட்டம். மாறாதே…….. நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன். எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை. மேலும் ஏற்றுமதி – இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டுக் காட்டுகிறார். திருப்பூர் தொழிலாளர்கள்: திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார். “தூங்கா நகரம், கோவில் நகரம், என்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவே திருப்பூரும் நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்குத் தேவைப்படும் ஆடைகள் என்று இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” “தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது. தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது இங்குச் சர்வசாதாரணம்.” புதுக்கோட்டைப் பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்குச் சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்குக் காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார். பணம் துரத்திப் பறவைகள் என்ற தலைப்பில் திருப்பூர் தொழிலாளர்களது நிலையக் காட்டுகிறார். அதில் ஆண் தொழிலாளர்களை மட்டுமன்றி பெண் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களையும் வெளிப்படையாகவே பேசுகிறார். " பெண்களின் பணி நேரமென்பது, தினமும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே பெண்களின் மற்றொரு வேலையில் கவனம் வைத்தாக வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து உணவை அடைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். இரவு ஒரு மணி வரைக்கும் வேலையென்றால் நிறுவனங்களுக்கருகே கிடைக்கும் இரண்டு பரோட்டாக்கள் தான் உணவாகியிருக்கும். நள்ளிரவு வேலை முடித்து வந்தாலும், மறுநாள் காலை , எப்போதும் போல , காலை ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலை எட்டு மணி வேலைக்குச் செல்லமுடியாது. இரவு எத்தனை மணிக்கு வேலை முடிகின்றது ? என்பது முக்கியமல்ல. மறுநாள் காலை எட்டு மணிக்கு நுழைவது தான் முக்கியமாக இருக்கும். அரை மணி நேரம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். " மேலும் தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும் நடக்கும் பாலியல் குற்றங்கள், கட்டை பஞ்சாயத்துக்கள் குறித்தும் அத்தியாயம் – 21 இல்" காமம் கடத்த ஆட்கள் தேவை" என்ற தலைப்பில் பேசுகிறார். திருப்பூர் இடைத் தரகர்கள்: இப்போது எல்லா மட்டத்திலுமே இடைத் தரகர்கள் ஊடுருவி விட்டார்கள். மந்திரி பதவி வாங்கித் தருவதற்குக் கூட ஆட்கள் இருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கா? என்ன? நிறுவனதாரர்களும் தொழிலாளிகளும் உழைத்து உருவாக்கும் திருப்பூரில் எல்லாவற்றிற்கும் இடைத் தரகர்களே முன் வந்து நிற்கிறார்கள். " தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் ( அத்தியாயம் – 4.) " என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களைச் சொல்லுகிறார். திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்: திருப்பூர் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா? இந்த வேலை வாய்ப்பை வைத்து நடக்கும் மோசடிகள் குறித்தும் அலசுகிறார்." வேலை காலி இருக்கிறது " என்ற பக்கங்களைப் படியுங்கள். " சந்தைக்குப் போகலாம் வாரீங்களா ? " என்று மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி விவரிக்கிறார். மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்குத் தேவையான குறிப்புகள். முடிவுரை: ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய “டாலர் நகரம்” – என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது. எனவே இந்நூலை ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போலப் பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்கு “முனைவர்” பட்டம் தரலாம். ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம் ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களைத் தனியாக எடுத்து வைப்பேன். இந்தமுறை எனக்குப் படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான, தான் நினைத்ததைப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றித் தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூடிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நான்குமுழ வேஷ்டி அணிந்து ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும் ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் – இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார். ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும் தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை ‘நான் தோற்றுக் கொண்டே இருந்தேன்’ என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும் கூறுகிறார். எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளைச் சுரண்டும் இடைத் தரகர்கள் என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிக்கையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின் விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மைச் சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் – உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் - வாழ்க்கைப்பயணம் இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள். தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாகக் கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான். ‘திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபடக் குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்ப்பணித்த வாழ்க்கை.’ அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் ‘டாலர் நகரத்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் ’கருணா என்னும் கூலி’ என்ற அத்தியாயத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும். மனத்தைக் கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை. ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே! ‘நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு’ (அத்தியாயம் – நம்பி கை வை) அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். ‘விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும்’. நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை? வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு, உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். ‘கடந்த இரண்டு வருடங்களாகத் திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் ’உங்களுக்கு என்னப்பா பிரச்சனை?’ என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை. ‘திருப்பூருக்குள் இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டுத் தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன’. ‘இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?’ இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி. திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம். இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக ‘இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும்’ என்று இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை. இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா? இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்? அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன். இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுதக் கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாகத் திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான் ரஞ்சனி நாராயணன். பெங்களூர் தோழரே, தங்களுடைய டாலர் நகரம் புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாங்கிப்படித்தேன். புத்தகம் வாங்க தங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டதில், அவர் கொடுத்த எண்ணைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. SPS ஸ்டோரிக்குச் சென்று கேட்டதில் அப்படி ஒரு புத்தகம் அவர்களிடம் விற்பனையில் இல்லை என்றார்கள், பின்னர் என்னுடைய பழைய நண்பர் தற்பொழுது சேர்தளம் உறுப்பினராக இருப்பவரிடம் கேட்டுப் பின்னல் புத்தக நிலையத்திற்குச் சென்று கேட்டேன். அங்கே கை இருப்பு இல்லை என்று கூறியதால் தங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு PN ரோடு (சாப்ளின் வாட்ச் ஹவுஸ்)கடிகாரக் கடையில் ஆர்வம் இல்லாமல் (ஒருவேளை நான் கடிகாரம் ஏதும் வாங்குவேன் என்று நினைத்திருப்பாரோ) விற்பனை செய்தவரிடம் வாங்கி வந்து நேரமின்மை காரணமாகப் பகுதி பகுதியாகப் படித்துமுடித்துவிட்டேன். புத்தகத்தின் வடிவமைப்பு நன்றாக வந்துள்ளது. தரமான தாள்களில் பெரிய எழுத்துக்களில் கணினி தேவையின்றி படிக்கும் அளவில் அச்சிடப்பட்டுள்ளது பக்கங்கள் அதிகமாக இருப்பதனாலும் செலவை ஈடுகட்டப் புத்தகத்தின் விலையைக் குறைக்கப் பக்கங்களின் எண்ணிக்கையைச் சுருக்கச்செய்த முயற்சி பெரிதாகப் பலனளிக்காமல் சற்று பாதகமாகவே முடிந்திருப்பது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இடையில் உள்ள தொடர்பின்மையில் தெரிகிறது. மாற்று வழிகளில் முயற்சி செய்து இதனைத் தவிர்த்திருக்கலாம். முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போலக் கிடைத்த வாய்ப்பை முடிந்தவரையில் பயன்படுத்தி எழுத்தாளராக அடுத்த கட்டத்திற்கு உயர தாங்கள் செய்த முயற்சி பலனளித்திருப்பதாகவே உணருகிறேன். வலைத்தளத்தில் வாரந்தோறும் வெளியிடப்பட்டதைத் தொகுத்து (எடிட்டிங்) புத்தகமாக வெளியிட்டதினால் தங்களுடைய சுயசரிதையும் டாலர் நகரத்தின் வரலாறும் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. குறைகள் சில இருந்தாலும் விழுந்து எழுந்து போராடிக்கொண்டிருக்கும், திருப்பூரில் வசிக்கும், தொழில் புரியும், பணியில் இருக்கும் உள்ளூர் வெளியூர் வாசிகளுக்கும் திருப்பூரைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும், புதிதாகத் திருப்பூரில் தொழில் துவங்க வேண்டும், வேலையில் சேரவேண்டும் என்பவர்களுக்கும் டாலர் நகரம் புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உங்களுடைய சொந்த அனுபவம், திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் உண்மைக்கதைகள் மூலம் படிப்பதற்கு உற்சாகம் குறையாமல் கொடுத்திருக்கிறீர்கள். இந்த நகரத்தின் நாடியைப் பிடித்து பேராசை இல்லாமல் உண்மையாய் உழைத்தால் திருப்பூர் வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தார்போல் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருப்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் கோட்டா, இறக்குமதியாளர், தரகர், முதலாளி, அலுவலர், தொழிலாளி, அரசாங்க அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள், அரசின் கொள்கைகள், தாரளமயமாக்களின் விளைவுகள், பஞ்சு மற்றும் நூல்விலை ஏற்றத்தின் பாதிப்புகள், சாய ஆலைப் பிரச்சினைகள், மாசுக்கட்டுப்பாடு, மின்சாரப் பற்றாக்குறை, விவசாயிகள் போராட்டம், பணவீக்கம் அண்டை நாடுகளுடனான தொழில் போட்டி, உள்ளூரில் உள்ள முறையற்ற தொழில் போட்டி, தொழிலாளர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடு, தொழில்நுட்ப அறிவுக்குறைபாடு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, உள்ளூர் தேவைக்கான பனியன் உற்பத்தி, கழிவுகளிலிருந்து பனியன் தயாரிப்பு வடநாட்டவர்களின் உழைப்புச் சுரண்டல் என அனைத்துத் தரப்பிலும் ஆழமாகப் பார்வையிட்டு நிறை குறைகளை மிகுந்த துணிச்சலுடன் விமர்சனத்திற்கு உள்ளாக்கி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை பாமரனுக்கும் புரியும் வண்ணம் படைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. முறையற்ற ஆண் பெண் பாலுறவு சற்று மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளதையும் அதன் சீர்கேடுகளையும் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது. தொழில் வளர்ச்சிக்கு என்ன செய்யக்கூடாது என்பதனை தெளிவாகக் கூறியுள்ளதுபோல என்னசெய்யவேண்டும் என்ற ஆலோசனைகளையும் முடிவுரையாகக் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பனியன் தொழில் புரிவதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு இருப்பது போல உலகத்தில் எங்குமே இல்லை. எவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் திருப்பூரில் பனியன் தொழில் அழிவு நிலைக்குச் செல்லாது. ஆடை அணிபவர்கள் இருக்கும் வரை எந்தக் காலத்திலும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவோம். நல்ல புத்தகத்தைப் படைத்தமைக்கு நன்றி. மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நட்புடன், விஷ்வா. திருப்பூர் வல்லமை விமர்சனம் மதிப்பு​ரை – ரஞ்சனி நாராயணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள்’ சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 10,000 + தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது. புத்தகம்: டாலர் நகரம் டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்? இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தைத் தனது டாலர் நகரம் மூலம் நமக்குக் காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில். ஒரு சாதாரணத் தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையைச் சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார். புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது. தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே. நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார். திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதற்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை? சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூகப் பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது. மையத் தொழிலான ஆடை தொழிலைச் சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார். ‘உலகமய பொருளாதாரப் பாதிப்பின் நேரடி உதாரணமாகத் திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மைக் கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்குத் தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’. அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூடக் கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்பந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களைக் கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’. உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர் வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றப்போகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது. 26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஆனந்த விகடன் இயர்புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டுப் புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல? கனடா கடிதம் அன்புள்ள ஜோதிஜி, 1973 ஆம் வருடத்திலிருந்து நான் டொரோண்டோவில் வசித்து வருகிறேன். ஜனவரி மாத ஆரம்பத்தில் நான் இந்தப் புத்தகத்தைச் சென்னையில் வாங்கி, டொராண்டோவிற்குத் திரும்பிய பின் ஒரு மாதத்திற்கு முன் படித்தேன். பெருமாள் முருகன் எழுதிய கங்கணம், தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி ஆகிய புத்தகங்களைப் படித்த உடன் உங்கள் புத்தகத்தைப் படித்தேன். இதனால், எழுத்தோட்டம், வழங்கிய விதம் இவற்றில் இந்தப் புத்தகங்களுடன் ஒருவிதமான ஒப்பீடு இருப்பதை என்னால் தவிர்ப்பது இயலாது என்று நினைக்கிறேன். உங்களது வலைப்பதிவுகளை ஒரு வருடத்திற்கு முன் படிக்க ஆரம்பித்தேன். உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து நீங்கள் எழுதுவது ரொம்பவும் பிடித்திருந்தது. நீங்கள் பார்ப்பதையெல்லாம் தெளிவாகவும் ஒருவித பரிவுணர்வோடும் எழுதுகிறீர்கள். ஒரு முறை உங்களது கடந்தகால நண்பர்கள் சிலரைப் பற்றி எழுதியிருந்தீர்கள்; ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை அரசு கொடுக்கும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது பற்றியும், ஒரு பிராமணர் அந்திமக் கிரியைகளுக்கு உதவுவது பற்றியும் படித்து நிறையவும் கவரப்பட்டேன். உங்கள் தேவியர்களைப் பற்றி எழுதும் பல பல நிகழ்வுகளையும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து யாரும் இதைப்போல ஆழ்ந்து எழுதுவதில்லை. நிறைய விஷயங்கள், குறைந்த சொற்களில்! இந்தப் புத்தகத்தில் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெரியாமலேயே, ஒரு மிகச் சிறந்த வலைபதிவாளர் ஆக நான் கருதுபவர் எழுதியிருக்கும் புத்தகம் என்று உங்களது எழுத்தின் விசிறியாக வாங்கினேன். வலைப்பதிவு செய்வதும் புத்தகம் எழுதுவதும் வேறு வேறு விஷயம் என்று நினைக்கிறேன். சர்க்கரை தடவப்பட்ட, புகழுரைகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது போன்றவை உங்களுக்கு ஏற்கனவே நிறையக் கிடைத்திருக்கிறது. ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தை அணுக நினைக்கிறேன். நீங்கள் விஷயங்களை முன்னிலைப்படுத்தும் விதம், தொழில்நுட்பம், தொழில் சார்ந்த மனப்பான்மை, எழுதியதைத் திருத்துதல், கலை ஆகியவற்றைக் குறித்த எனது மதிப்புரையை எழுதலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்களுக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்து இருக்காது என்று நம்புகிறேன். டாலர் நகரம் நீங்கள் எழுதிய தினப் பதிவுகளின் தொகுப்பு என்று நினைக்கிறேன். அதனால் அத்தியாயங்கள் ஒன்றோடொன்று இசைவுப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. ஒரு கைதேர்ந்த எடிட்டர் இவற்றைச் சரி செய்திருந்தால் எல்லா அத்தியாயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக இருந்திருக்கக்கூடும். அத்தியாயங்களுக்கிடையே பயணிக்கும்போது பலமுறை தடுமாறினேன். இப்போது நடக்கும் நிகழ்வுக்கும், அடுத்த நிகழ்வுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி. அடுத்த நிகழ்வு எப்போது நடந்தது, உடனேவா? சில நாட்களுக்குப் பிறகா? அல்லது கடந்து போன வாரத்திலா என்ற தடுமாற்றம். தேதிகள் குறிப்பிட்டிருக்கலாமோ என்னமோ, சரியாகத் தெரியவில்லை. அத்தியாயங்களில் தேதி குறிப்பிடுவது கட்டுரைக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எழுதி முடித்த பின்தான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. திரும்பவும் சொல்லுகிறேன்: ஒரு நல்ல எடிட்டர் இதையெல்லாம் வியத்தகு வகையில் செய்திருக்க முடியும். எடிட்டிங் என்பது ஒரு சிறப்புத்திறமை. சாதாரண எழுத்துக்களைக் கூட ஒரு நல்ல எடிட்டரால் மாபெரும் படைப்பாக மாற்றமுடியும். இப்படி நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு சாதாரண எடிட்டரால் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் சரிசெய்ய மட்டுமல்ல, இசைவுத் தன்மையையும் கூட்டவும், வழங்குதலை மேன்மைப்படுத்தவும் முடியும். புத்தகத்தின் கலையம்சம் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நிறங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம். கருப்பு வெள்ளையில் அமைந்திருந்தால், இன்னும் அருமையாகவும், விலை மலிவாகவும் இருந்திருக்கும். கருப்பு வெள்ளைப் படங்கள் கதையை மிகவும் எடுப்பாகச் சொல்லும்; சின்ன சின்ன விஷயங்கள் கூடப் பிரமாதமாகத் தெரியும் கருப்பு வெள்ளையில்; காலத்தைக் கடந்து நிற்கும் கருப்பு வெள்ளைப் படங்கள்; எத்தனை காலமானாலும் மங்காது; காகிதத்தின் இரசாயனங்களை நம்பி இவை இருக்க வேண்டியதில்லை. உங்கள் பதிப்பாளரும் இந்தத் துறையில் புதியவர் என்று தோன்றுகிறது. பதிப்பு என்பது ஒரு சிறப்புத்துறை. வெகு சமீபத்தில் ஒரு பதிவாளர் அனுபவம் மிகுந்த பதிப்பாளர் ஒரு விஷயத்தை முன்னிலைப் படுத்துவதற்கும், புத்தகத்தை விநியோகிப்பதற்கும், புதிதாக வருபவருக்கும், அல்லது சொந்தமாக வெளியிடுபவருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைத் தனது பதிவில் சொல்லியிருந்தார். திருப்பூர் பற்றி: எனக்குத் திருப்பூரின் மேல் என்றுமே அளவிட முடியாத ஈர்ப்பு உண்டு. இந்த நகரத்தைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டது. மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத எண்ணிக்கையில் பென்ஸ் கார்களும் BMW கார்களும் ஓடும் இடம் என்று. ஒரு நகரத்திற்கு என்ன ஒரு ஆச்சரியமான அறிமுகம்! எப்படி நிகழ்ந்தது இது? இதன் செல்வச் செழிப்பிற்கு என்ன காரணம்? செங்கல்பட்டு, சேலம், ஈரோடு போன்ற பழைய, மந்தமான நகரங்களை விட இது எப்படி மாறுபட்டது? எங்கிருந்து இப்படி ஒரு செல்வம் வந்தது? இதற்குக் காரணமானவர்கள் யார்? நாம் விரும்புகிறோமோ, இல்லையோ நமது சமூகம் ஜாதிகளால் ஆனது. எந்த ஜாதி எத்தனையோ இடர்பாடுகளைக் கடந்து இங்கு தங்கள் பணத்தை முதலீடு செய்தது? அவர்களுக்குப் பணம் எங்கிருந்து கிடைத்தது? தங்கள் நிலங்களை விற்றா? மூதாதையர்களின் சொத்துக்களிலிருந்தா? அரசிடம் குத்தகை எடுத்தார்களா? இங்கு இருக்கும் தொழிலாளர்கள் யார்? எந்த ஜாதிக்கு இதனால் பயனடைந்தது? முதலாளிகள் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்தார்களா, அல்லது வேறு ஆட்களையா? பூகோள அமைப்பு எப்படி? இதையெல்லாம் விளக்கும்படியாக சில குடும்பங்களின் கதைகளைச் சொல்லி புத்தகத்திற்குக் காரம், சுவை சேர்த்திருக்கலாம். மாசுபடுவதைப் பற்றி மிகக் கடுமையாக எழுதியிருக்கிறீர்கள். இது மன்னிக்கமுடியாத குற்றம். இதற்கு முதலாளிகள் மட்டுமல்ல அரசும் குற்றவாளிதான். இதற்காக வேண்டுமென்றே அதிகப் பக்கங்கள் செலவழித்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. வலைப்பதிவு வாரம் ஒரு முறை வருவதால் ஒரே விஷயத்தைப் பற்றி நிறையப் பேசுவது சரி. புத்தகத்தில் தொடர்ந்து திரும்பத்திரும்ப படிப்பது அலுப்பாக இருக்கிறது. பல நல்ல விஷயங்கள் இந்தத் தொழிற்துறையினால் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நகரம் இது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நன்மை பெற்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் இங்கு வேலை செய்து, தங்கள் வருமானத்தைச் சேர்த்து வைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளையும் உதாரணத்துடன் சொல்லியிருக்கலாம். புதுப்புது மனிதர்கள் இங்கு வந்து, வேலை செய்து பணம் ஈட்டி, திருமணம் ஆகி, இங்கேயே நிலம் வாங்கி குடியேறி இருக்கிறார்கள். இவர்களைப் பற்றியும் சொல்லியிருந்தால் பல அத்தியாயங்கள் வெறும் புள்ளி விவரங்களாக மாறியிருக்காது. உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். உங்கள் வலைப்பதிவுகளைப் படிப்பதால் எனக்கு இவை தெரியும். ஆனால் ஒரு புதியவர் வந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அங்கங்கே இடைவெளி இருப்பதுபோலத் தெரியும். உங்கள் வலைபதிவு வாசகர்களுக்காக இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளீர்கள்? பொதுமக்களுக்காக இல்லையா? நான் எழுதிக் கொண்டே போகிறேன்…. நான் நினைத்ததைவிடக் கடுமையாக விமரிசித்துவிட்டேனோ? மன்னிக்கவும். இந்தப் புத்தகத்தைப் படித்து சில வாரங்கள் ஆகின்றன. ஒரு விசிறியின் உற்சாகத்துடன் உங்களுடைய வலைப்பதிவுகளை மிக விரும்பிப் படிப்பவன் நான். உங்களுடைய பழைய பதிவுகள் பலவற்றையும் படித்தவன். அதனால் பதிவுகளின் தரத்துடன் உங்கள் புத்தகத்தைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்கிறேன். நீங்கள் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் கருத்துரை என்பதை எனக்கு முடிந்த அளவில் சிறப்பாகச் செய்ய நினைப்பவன் நான். ஒரு புத்தகத்தில் இருப்பதை விட மேலதிகமாகச் சொல்ல முடியும். எல்லாவற்றிலும் தனித்து நிற்பது விஷயத்தை எப்படிச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதும், தொகுத்து வழங்குதலும் தான். எல்லை மீறி இருந்தால் மன்னிக்கவும். ஆனால் நான் சொன்னதில் ஒரு சில நிச்சயம் நீங்கள் அடுத்த புத்தகத்தை வெளியிடும்போது உண்மையாகத் தோன்றும் என்று நினைக்கிறேன். இதை ஒரே மூச்சில் எழுதி முடித்துவிட்டேன்; எடிட் செய்யவில்லை. அதனால் எழுத்துப் பிழைகளையும், தெரியாமல் உங்களை நோகச் செய்திருந்தால் அதற்காக மன்னிக்கும்படியும் கேட்டுக் கொள்ளுகிறேன். டாலர் நகரம் பலர் தங்களது கனவுகளை எப்படியோ நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் ஒரு நகரத்தைப் பற்றிய உங்கள் புத்தகத்தைப் படித்து முடித்த மூன்று வாரங்களுக்குப் பின் என் மனதின் பிரதிபலிப்பை எழுதியிருக்கிறேன். அன்புடன், ராஜாமணி வீடு சுரேஷ்குமார் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகம் இருநூறு பக்கங்களுக்கு மேல் உள்ளது. தரமான அடர்த்தியான காகிதத்தில்; முழுப் பக்கங்களும் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்புடன், சற்றே பெரிய எழுத்தில் அனைவரும் படிக்க சிரமில்லாமல் நேர்த்தியாக, அழகாக, தரமாக, வந்துள்ளது. தரத்துடன் ஒப்பிடுகையில் விலையும் மிகக்குறைவுதான் சரி விமர்சனத்திற்குச் செல்லலாம். ஜோதிஜியின் முதல் புத்தகப் பிரசவம் என்கின்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி அதில் உள்ள விசயங்கள் திருப்பூரின் முழுபிம்பத்தையும் காட்டுகின்றதா…? இந்தப் புத்தகம் திருப்பூரைக் காட்டுகின்ற கண்ணாடியா…?என்கின்ற கேள்வி உங்களுக்கு எழலாம்..! படித்து முடித்த பிறகு இதே கேள்வி எனக்கும் எழுந்தது! சுவாரஸ்யமாகப் போகும் ஒரு நாவல் போல…. தான் காரைக்குடியிலிருந்து ஒரு மஞ்சள் பை, வெள்ளை வேட்டியுடன் இந்த மண்ணில் கால் வைத்ததிலிருந்து, இன்று வரை நடந்த விசயங்களை ஒரு கதை போலவே சொல்கின்றார் ஜோதிஜி. அதில் ஆங்காங்கே பனியன் நிறுவனங்களைப் பற்றி, நிட்டிங் பற்றி, சாயத் தொழில் பற்றி, பையிங் அலுவலகம் என்றழைக்கப்படும் புரோக்கர்களின் தில்லு முல்லுகள் பற்றி விரிவாக விவாதிக்கின்றார்,. நான் பையிங் அலுவலகம் பற்றி எழுதியதைப் படிக்க… படிக்க…. அத்திப்பழம் ஞாபகம் வருகின்றது. வெளியில் பளபளப்பாக இருக்கும் அத்திப்பழத்தைப் பிய்த்துப் பார்த்தால் ஏராளமான புழு நெளியும். என்னைப் போல் உற்பத்தித் துறை சாராதவர்களுக்கு பையிங் அலுவலகம் என்பது ஒரு மதிப்பு மிக்க இடமாகும் அதைப் பிய்த்து புழுக்களை ஜோதிஜி காட்டிவிட்டார். பாலியல் பிரச்சனைகள் பற்றியும் 18மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் பிரச்சனைகளைப் பற்றி அலசியிருந்தது பாராட்டத்தக்கது. அதில் அவர் நண்பர் ஒருவரே பெண்ணாசையினால் அவதிப்பட்டதையும் நடுத்தெருவிற்கு வந்ததையும் பற்றிக் கூறியிருந்தார். அது நிறையப் பேருக்குப் பாடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத வேலை ஓயாத உழைப்புக்கு மத்தியில் திருப்பூர் மக்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்தச் சென்னை போன்ற நகரங்களில் உள்ளது போலக் கடற்கரையோ சுற்றுலா தளங்களோ இங்கு இல்லை.ஒரே ஒரு பூங்கா இருக்கிறது அதுவும் பெயரளவில்தான் இருக்கின்றது. மனதில் ஏற்படும் அழுத்தத்தைத் தீர்க்க மதுக்கடையும், விபச்சாரப் பெண்களை நாடுவதைத் தவிர இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேறு வடிகால் இல்லை.சிலர் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களில் உடன் வேலை செய்யும் நபர்களிடமே காமச் சுகத்தையும் பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள். ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களே தடம் மாறிச் செல்கின்றார்கள். அதனால் இங்கு எய்ட்ஸ் நோய் நாமக்கல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பதையும் இந்தப் புத்தகம் தெளிவு படுத்துகின்றது. இதில் குறிப்பாகச் சாயத் தொழிற்சாலை முதலாளிகளின் பேராசையினால் இயற்கைச் சீரழிவு பற்றிச் சிந்திக்காமல் நடு இரவில் திருட்டுத்தனமாகச் சாயக்கழிவுகளை ஆற்றில் விட்டதைத் தெளிவான ஒரு பார்வையை எடுத்து வைத்திருக்கின்றார். சாயத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நலன் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகின்ற நோய் பற்றியும் சாப்ட் புளோ என்கின்ற நவீன இயந்திரம் வருகையினால் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், சாயமேற்றும் சில வகை அமிலங்கள் பற்றியும் தெளிவான குறிப்பிட்டுள்ளார். பயனற்றுப் போன சென்னிமலை அருகில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையும் விவசாயிகளும் சாய முதலாளிகளும் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சில இடங்களில் ஊறுகாய் போல உள்நாட்டுத் தயாரிப்பைப் பற்றிக் கூறியுள்ளார். ஆங்கிலம் நன்கு தெரிந்தால் போதும் மூளையை வைத்தே பல கோடிகளை அள்ளியவர்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு பனியன் நிறுவனங்களில் ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்கள் பற்றி சில இடங்களில் கூறியுள்ளார். அதிகமாக ஜோதிஜி பனியன் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும், சாயத் தொழிற்சாலை பற்றியும் மட்டுமே தன் களத்தில் கொண்டு வந்திருக்கின்றார், அது அவர் உலகம் அது ஒரு குறுகிய வட்டம் ஆனால் அதைத்தாண்டி ஒரு பிரம்மாண்டமான உலகம் திருப்பூரில் உள்ளது அதுதான் அச்சு தொழில். பனியன் துணிகளில் உள்ள அழகாக கார்ட்டூன் பொம்மை படங்கள், பல டிசைன்களைப் பார்த்திருப்பீர்கள், உலக அளவில் பல நாடுகளில் பேசப்படுவது திருப்பூர் பின்னலாடை என்றால் அந்தப் பின்னலாடையில் அச்சு செய்வது என்பது உலகம் முழுவதுமுள்ள ஜவுளி நிறுவனங்களால் திருப்பூர் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. பெங்களூரு, புனே, மும்பை, லூதியானா, அகமதாபாத் போன்ற நகரங்களில் இந்தத் தொழில் இருந்தாலும் அங்குள்ள நவீன ரக இயந்திரங்களில் குறிப்பிட்ட வகை பிரிண்ட் மட்டுமே அடிக்க முடியும். ஆனால் திருப்பூரில் மட்டும்தான் எளிதாகக் கையில் அடிக்கக் கூடிய இயந்திரம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நவீன இயந்திரம் வரை பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமில்லாது திருப்பூரில் அடிக்க முடியாத பிரிண்ட்டை உலகத்தில் வேறெங்கும் அடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுகளில் அழகான பாசிகள், முத்துகள், வைப்பது சில்வர் போன்று மினுமினுக்கும் பாயில், பஞ்சு போல் மெத்தென்று இருக்கும் புளோக் பிரிண்ட், டை அன் டை, டிச்சார்ஜ் பிரிண்ட், இரவில் ஒளிரும் ரேடியம் பிரிண்ட், தோல்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பயோ பிரிண்ட், என்று இது பனியன் தயாரிப்பு நிறுவனங்களை விட அதிக லாபம் கொழிக்கக்கூடிய பிரம்மாண்டமான ஒரு தொழில் அதைப் பற்றி ஒரு வரிகள் கூட இல்லை என்பதே இந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு குறை! ஜோதிஜி அடுத்த பதிப்பில் இதைச் சேர்க்க வேண்டுகின்றேன். இது அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்த சுவையான, படிக்கச் சுவாரஸ்யமான ஒரு புத்தகம் மற்றும் திருப்பூர் வேலைக்கு வர முயலுகின்றவர்களின் வழிகாட்டியாகத் திகழும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என்பதே முதல் பத்தியில் நான் வினவியிருந்த கேள்விக்கான பதில்! வெளியே தெரியாத படைப்பாளி ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாகத் திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம். ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன என்பதை ஆதங்கத்தோடு எடுத்துரைத்திருக்கின்றார் ஆசிரியர். அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள், உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல். இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும், தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில். நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளிப்படுத்துகின்றது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம் ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நம்மை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது. எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது. ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும். நல்வாழ்த்துகள் ஜோதிஜி நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள். செல்வி ஷங்கர். (வலைச்சரம் சீனா அவர்களின் துணைவியார்) கடுகு சிறிது. காரம் அதிகம் பிரபலப் பதிவர்களைப் படிக்கும் பிற பல பதிவர்களில் நானும் ஒருவன். திடங்கொண்டு போராடு என்னும் தலைப்பில் எழுதி வருகிறேன். தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ திடங்கொண்டு போராடு பாப்பா என்று பாரதி சொன்ன வரிகளைத் தலைப்பாக மாற்றிக் கொண்டேன். பெரிதினும் பெரிது கேள், ரௌத்திரம் பழகு போன்ற பாரதியின் தலைப்பை மற்ற நண்பர்கள் எடுத்துக் கொண்டதால் நான் திடங்கொண்டு போராடுகிறேன். திடங்கொண்டு போராடு சீனு (டாலர் நகரம் புத்தக விமர்சனம்) முன்குறிப்பு : டாலர் நகரம் புத்தகத்தில் இடம் பெற்ற ஜோதிஜியின் எழுத்துக்கள் நீல நிறத்தில் டாலர் நகரம். இருநூறுக்கும் அதிகமான பக்கங்களை உடைய சற்றே பெரிய புத்தகம். முதலில் புத்தகத்தைப் பார்த்த பொழுது சற்றே மலைப்பாய் இருந்தது. பொழுது போக்கிற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும்,‘குறிப்பிட்ட ஒரு விசயத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பதற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ஜோதிஜி எழுதி இருக்கும் டாலர் நகரம் இரண்டாவது ரகம். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் முதலில் படிக்கும் பொழுது ஒரு சில இடங்களில் சலிப்பு தட்டியது என்னவோ உண்மை, ஆனால் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை புரட்டும் பொழுது தான் அதில் ஜோதிஜியின் உழைப்பு மிகத் தெளிவாகத் தெரிந்தது. திருப்பூர், திருப்பூர் சார்ந்த தொழிற்சாலைகள், அதிகார வர்க்கத்திற்கும், அரசியல் வர்க்கத்திற்கும் இடையில் பலிகடாவாகும் திருப்பூர் சார்ந்த மக்கள் என்று அனைத்துத் தளங்களிலும் இந்தப் புத்தகம் பயணிக்கிறது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சாதாரண மனிதனாகத் திருப்பூருக்குள் நுழைந்தவர், தன் அசாதாரணமான உழைப்பின் மூலம் திருப்பூர் உற்பத்தி உலகத்தின் மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் கடந்து வந்த பாதைகளின் மூலம் டாலர் நகரத்தை முழுமையாகச் சுற்றிக் காட்ட முயன்றுள்ளார். “சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்” என்று நான் கூற காரணம் வீடு சுரேஷ் அவர்களின் விமர்சனம் தான், ஒருவேளை அவரது விமர்சனத்தைப் படிக்காமல் டாலர் நகருக்குள் நுழைந்திருந்தால் “சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்” என்பதற்குப் பதிலாகச் சுற்றிக் காட்டியுள்ளார் என்று தான் எழுதியிருந்திருப்பேன். ஜோதிஜியின் ஆரம்பக்கட்ட வாழ்க்கை தோல்விகளை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு ஆரம்பித்ததால், புத்தகம் முழுவதுமே சில தன்னம்பிக்கை வார்த்தைகளை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன். திருப்பூர் பற்றி நான் அறிந்தது, கொடி காத்த குமரன், உள்ளாடைகள் உற்பத்தியாகும் இடம், சாயக் கழிவால் நொய்யலாற்றை முடமாக்கி விவசாயிகளை நடக்க விடாமல் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கும் இடம், தமிழகத்தின் முக்கியமான ஏற்றுமதி நகரம் மற்றும் தொழிற்களம் தளத்தின் இயங்குதளம். ஒட்டுமொத்தத் தமிழகமும் தற்போது இந்தியாவும் திருப்பூரைத் தேடி வருவதற்கான முக்கியமான காரணம்,“முக்கால்வாசிப் பேர்கள் தங்களுடைய குடும்பக் கடன் தொல்லைகள் பொறுக்க முடியாமற் தான் திருப்பூருக்கு வருகிறார்கள்.” என்று ஜோதிஜி குறிப்பிடுவது நானும் நேரிடையாக அறிந்து கொண்ட உண்மை., குடும்பச் சூழலும், திருப்பூர் வேலை வாய்ப்புகளும் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்து விடுவதால் திருப்பூர் முழுவதும் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுவதை இந்தப் புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது. உழைப்பிற்குப் பெயர் போன திருப்பூரின் மற்றொரு முகம் சோகமும் கொடூரமும் சதவிகிதத்தில் கலக்கப்பட்ட, விடை தெரியா வாழ்வாதாரக் கேள்விகளைச் சுமந்து கொண்டு நிற்கும் நகரமாக இருக்கிறது. பெண்களும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வதால் குடும்பத் தலைவனின் குடும்ப பாரம் சற்றே குறைகிறது, ஆனால் அவனோ புகை மது மாது என்று தடம் மாற அவன் மனைவியின் தலையில் மொத்த பாரமும் விழுகிறது. காலை எட்டு மணி வேலைக்குச் செல்வதற்கு முன், குடும்பத்திற்கு, குழந்தைகளுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை அதிகாலையிலேயே எழுந்து செய்தாக வேண்டும். மூன்றுவேளைக்குமான உணவு, குழந்தைகள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகள் அத்தனையையும் செய்திருக்க வேண்டும். இவற்றைக் கடந்து வேலைக்குச் சென்றால் அங்கே ஆண் வர்க்கம் தரும் காமத் தொல்லைகள். தேவைப்பட்டால் பின்னிரவு வரையிலும் வேலை பார்க்க வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள். பின்னிரவு கடந்து வீடு வந்தாலும், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அதே போன்ற மற்றுமொரு நாளில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல் தான் திருப்பூர் வாழ் பெண்களுக்கு. அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால், அரவனைக்கப்பட வேண்டிய குழந்தைகள் தறிகெட்டுச் செல்ல நேர்கிறது, பின் அவர்களும் வேலைக்குச் செல்ல, கிடைக்கும் வருமானத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவறான வழிகளில் செலவிடுகிறார்கள். திருப்பூரில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலைமை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது. ஜோதிஜியின் எழுத்துக்களில் திருப்பூர் பெண்கள், சில சமயம் வேலை முடித்து ஒன்பது மணிக்கு உள்ளே நுழையும் அம்மாவின் குரலை, பாதித் தூக்கத்தில் காதுகள் கேட்கும்.. குழந்தைகளின் மூளை உணராது. 12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையின் காரணமாக வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது பாதி உயிருடன் தான் வந்து சேர முடியும். வீட்டுக்குள் நுழையும் போது மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட, அவளின் உயிர் கேட்கும் பசியே, பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் கூடத் திட்ட முடியாமல், இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது, காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணாமல் போய் இருக்கும். வாரத்தில் எந்த நாளில், பொதுக் குழாயில் குடிதண்ணீர் வருமென்று இங்குள்ள மாநகர மேயருக்கும் தெரியாத ரகசியமாய் இருக்கிறது. உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக, வரக்கூடிய தண்ணீர் வாராவாரம் என்பது மாறி சிலசமயம் மாதம் கூட ஆகலாம். அதனால் என்ன? நான்கு சந்து தாண்டிப் போனால், நடுச் சாமத்தில் அமைதியாய் பிடித்து வர, வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாமென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத பிளக்ஸ் போர்ட் கட்ட அரசியல்வாதிகளிடம் பணமும் இருக்கிறது. காமப் பார்வைக்குப் பலியாகும் பெண்களின் நிலை குறித்து எவருக்கும், எந்தக் குற்ற உணர்வும் தோன்றாத அளவிற்கு, சராசரி சிந்தனைகளுடன் கலந்துவிட்டது. தற்போது பாலுணர்வு என்பது பண்டமாற்று மிறை போல் ஆகிவிட்டது. பணிபுரியும் படித்த பெண்கள், தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற நரக வேதனையைத் தாண்டி தான் வர வேண்டும். பலர் தாண்டி வருகிறார்கள். சிலர் ஆசைகளுக்காக தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். பெண்களை தங்கள் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சில முதலாளி அம்மாக்களும் இதில் அடக்கம். முறையான நிர்வாகமின்மை, தரகர்கள் தரும் தொல்லை, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்படும் இடையூறுகள், குடும்ப உறுப்பினர்களின் நிர்வாக தலையிடல், தொழிலாளர்களுக்குள் நடைபெறும் உள் அரசியல் என்று தொழிற்சாலைகளுக்குள்ளும் அசாதாரணமான சூழலே நிலவுகிறது. பல லட்சங்கள் முதலீடு மற்றும் பல தொழிலாளர்களை நிர்வாகம் செய்து தொழிற்சாலை நடத்தும் நிர்வாகம் கூட மூளையையும், ஆங்கில அறிவையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்படும் தரகர்கள் முன் அடிபணிந்து போக வேண்டிய ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. அத்தகைய தரகர்கள் பற்றி ஜோதிஜி குறிப்பிடுவது அவருக்கு மெசர்மென்ட் டேப் பிடித்து ஆடைகளை அளக்கத் தெரியாது. துணிகளுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாது. மொத்தத்தில் இந்தத் தொழில் குறித்து எந்த அறிவும் இல்லை. கற்று வைத்துள்ள ஆங்கில அறிவின் மூலம் இரண்டு மாதத்தில் நான்கு லட்ச ரூபாய் கிடைத்து இருக்கிறது. நான் இந்தத் தொகையைச் சம்பாதிக்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு வருடங்களாவது உழைக்க வேண்டும். இது தான் இந்தத் தொழிலின் சாபக் கேடு. தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் பூமியிலிருந்து உறிஞ்சப்படுகிறது, நிலத்தடி நீர் வற்ற வற்ற ஆழ்துளைக் குழாய்கள் இன்னும் இன்னும் ஆழமாய் சென்று கொண்டுள்ளன. விவசாயம் படுத்துவிட்டது, விவசாயத்திற்குத் தேவையான குடிநீர் முற்றிலும் சாய நீராக மாற்றப்பட்டு விவசாயப் பூமி முழுமையான சாயப் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது. சாயப்பட்டறைகளை மூடும்படி விவசாயிகள் போராடுகிறார்கள், சாய நீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உபயோகப்படுத்தும் படியாக மாற்றப்படுகிறது என்று நிர்வாகம் உறுதி கூறினாலும் அவர்கள் எப்படியெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அல்லது வளைத்துப் போட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எழுதியுள்ளார். தொழிற்சாலை கழிவுகள் மொத்தமாகத் திருப்பூரைப் பாழ் செய்துவிட்டது. அதுபற்றி பல நாட்கள் கழித்து மழை பெய்ய, மழை நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாகச் சேர்ந்து விட, நீரனைத்தும் பாழாகிப் விடுகிறது. ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயரும் சாயக் கழிவு கலந்த நீரால், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில்லாத வர்த்தக மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் திருப்பூரை நலிவடையச் செய்து கொண்டே உள்ளது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். உலக சந்தையில் போட்டி நாடுகள் நம்மைப் போட்டிப் போட்டு முந்திக் கொண்டிருக்கும் வேளையில் சிங் அரசு இன்னும் சைலன்ட் மோடிலேயே இருப்பது வருங்காலத் திருப்பூருக்கும் இந்தியாவிற்கும் ஆபத்து, தனது மொத்தக் கோபத்தையும் ஒற்றை வரியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜோதிஜி. ஜட்டி போடாமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு உதவக்கூடும். எவ்வளவு தொழிற்சாலைப் பிரச்சனைகள் இருந்தாலும் பிழைக்கத் தெரிந்த முதலாளிகள், அரசியல் தெரிந்த முதலாளிகள் பிழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். “இன்றைய திருப்பூர் ஏற்றுமதியில் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்குப் பிடித்த எண்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்.” என்று ஜோதிஜி குறிப்பிடும் இந்த வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்தப் பணம் தின்னும் முதலாளிகள் விரும்புவது கீழ்க்கண்ட வார்த்தைகளைத் தான் நீ உழைத்துக் கொண்டே இரு. இரவு பகல் பாராமல் உன்னால் உழைக்க முடியுமா? முழு இரவும் முழித்து வேலை பார்த்துவிட்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு வந்து நிற்க முடியுமா? நீ தான் முதல் தகுதியாளன். நாளை செத்துவிடப் போகிறாயா? நல்லது? உன் தம்பியைக் கொண்டு வந்து சேர்த்து விட்டுச் செத்துப் போ. எட்டு மணி நேர நிர்வாக அமைப்பா? அது எதற்கு? சொன்னதைச் செய். சட்ட திட்டங்கள், அரசு அதிகாரிகள்? அவர்கள் கிடக்கிறார்கள். அவர்கள் வந்து இறங்கும் பொது பார்த்துக் கொள்ளலாம். ஜோதிஜியிடம் சில கேள்விகள் அல்லது வேண்டுகோள்கள் இது விறுவிறுப்பான கதை சொல்லும் புத்தகம் அல்ல. விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கான புத்தகம் அதனால் சில இடங்களில் மீண்டும் மீண்டும் வரும் சில பகுதிகளை வெட்டி இருக்கலாம். ஆங்கிலப் பள்ளியும் அரை லூசுப் பெற்றோரும் என்னும் பகுதி சிறப்பான கட்டுரையாக இருந்தாலும் அந்தக் கட்டுரைக்கும் டாலர் நகரத்திற்கும் தொடர்பு இல்லை, புத்தகம் படிக்கும் பொழுது அதன் வேகத்தை இது தடுப்பது போல் இருந்தது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். திருப்பூர் பஞ்சாலை நூற்பாலை நிட்டிங் செக்சன் போன்றவற்றைப் புத்தகம் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டேன், நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா. (இது சற்றே தனிப்பட்ட அவா)… திருப்பூர் உங்களை இனிதே வரவேற்கின்றது. டொங்…டொங்… (தமிழ்மணம்) காசி ஆறுமுகம் சமீப காலங்களில் எதையுமே ஆழ்ந்து வாசிக்காத மனநிலை, நண்பர் ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் நூலை வாசித்த எடுத்த போது பயமுறுத்தியது. இருப்பினும் ஞாயிறு பகற்பொழுதில் கிடைத்த ஓய்வில் ஓரளவு வாசித்துவிட்டேன். முதலில் தன்வரலாறாகவே தொடங்கும் நூல் விரைவில் திருப்பூரின் பொது வரலாறாகவும் 20 வருடத் திருப்பூர் நிகழ்வுகளின் ஒரு பரந்த பார்வையாகவும் விரிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கருவை எடுத்துக்கொண்டு உள்நாட்டு வணிகம், ஏற்றுமதி, பன்னாட்டு நிகழ்வுகளின் தாக்கம், சமூகச் சூழலின் போக்கு, சுற்றுச்சூழல், மைய மாநில அரசுகளின் பராமுகம், என்று பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் ஜோதிஜி. வழமையான தமிழ் ஊடகங்களில் இவைபற்றி இத்தனை ஆழமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் எதுவும் வந்ததா, வர வாய்ப்பு இருக்கிறதா என்பது ஐயமாகவே இருக்கிறது. கனமான பொருளில் எழுதினாலும் ஆர்வம் குறையாமல் நம்மை வாசிக்க வைக்கிறது ஜோதியின் எழுத்து லாவகம். ‘சுவாரசியத்துக்காக எழுதுகிறேன் பேர்வழி’ என்று துல்லியத்தைப் பெரிதும் இழந்து சறுக்கும் ஊடகப் புலிகளுக்கு நடுவில், கம்பிமேல் நடப்பதுபோல சுவாரசியமும் குறையாமல் தகவல் செறிவுக்கும் பங்கம் வராமல் சாதித்திருக்கிறார். திருப்பூருடன் ஏதாவது தொடர்பு காரணமாக அவ்வூரைப்பற்றி அறியவிரும்பினாலும், பொருளாதார, சமூக நிகழ்வுகள் எப்படியெல்லாம் தம்மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அறிந்துகொள்ள வேண்டிய தொழில்முனைவோராக இருந்தாலும், வெறுமனே ஆர்வத்துக்காக வாசிப்பவராயினும் ஒவ்வொருவருக்கும் பெறுவதற்கு ’டாலர் நகரத்தில் ஏதேனும் உள்ளது. இந்நூல் ஜோதிஜியின் எழுத்துப் பயணத்தில் ஒரு மைல்கல். பயணம் தொடர்ந்திடவும் அது வெற்றிப்பயணமாக அமையவும் வாழ்த்துகள். ஜோதிக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாகத் தமிழ்நாடனின் தமிழ் மீடியாவுக்கும் பாராட்டுக்கள். அன்புடன், காசி ஆறுமுகம் ‘தமிழ்மணம்’ வலைப்பதிவுத் திரட்டியை உருவாக்கியவர் சுடுதண்ணி மலேசியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ பிழைக்கச் சென்று பல வருடம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கும் சித்தப்பாவோ, மாமாவோ வீட்டுத் திண்ணையில் பக்கோடாவோ அல்லது பணியாரமோ கொறித்துக் கொண்டு சென்ற இடத்தில் நடந்த கதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படிக் கன்னத்தில் கை வைத்துக் கேட்போமோ, அதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது டாலர் நகரம். புதுவயல், காரைக்குடி, ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் என்று பாரதிராஜா பாணியில் தன் மண்வாசனை மாறாமல் நம்முன் காட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது போல் ஒரு பிரமிப்பினை ஏற்படுத்துகிறார் ஜோதிஜி. படித்து முடித்த பின் ஏதோ பிரம்மாண்ட ஜவுளிக்கடலில் மூழ்கித் திளைத்து, புது நூல் வாசனையும், சாயப்பட்டறைக் கழிவுகளுக்கு நடுவே இருப்பதைப் போன்ற பீதியும் உண்டாகிறது. பாலியல் தொந்தரவுகள், சுகாதாரமற்ற வசிப்பிடங்கள், வியாபாரத் தந்திரங்கள், நடைமுறைச் சிக்கல்கள் எனத் திருப்பூரின் முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரை சந்திக்கும் அவலங்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்து நம்மை அலற வைக்கிறது டாலர் நகரம். சில சிக்கலான விஷயங்களைக் கூட, இது இப்படித்தான் என்று பட்டவர்த்தனமாகவும், அதைச் சொல்லும் நயமும் சிரிப்பதா அல்லது அவலத்தை நினைத்து நொந்து கொள்வதா என நம்மைத் திணறடிக்கிறார் ஜோதிஜி. உதாரணம்: “இங்கே மின்சாரம் முதல் சம்சாரம் வரை காபந்து செய்து தான் வாழ வேண்டியிருக்கிறது”. திருப்பூரைப் பற்றி வெறும் செவிவழிச் செய்தியாகவேக் கேள்விப்பட்டு, தொலைக்காட்சி செய்திகளில் எப்பொழுதாவது காட்டப்படும் சாயப்பட்டறை கழிவுகள் குறித்து தேநீர்க்கடைகளில் பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும்,கல்லூரிப் படித்து முடிக்கும் வரையிலும் மாலை ஏழு மணிக்குச் சாப்பிட்டு, எட்டு மணிக்கெல்லாம் முக்தி நிலைநாட்டி, பத்து, பத்தரைக்கெல்லாம் நடுச்சாமம் காணும் வரம் பெற்ற ஜோதிஜி போன்ற அன்பர்களுக்கும் இப்புத்தகம் வன்மையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இப்புத்தகம் தென்மாவட்டங்களிலிருந்து திருப்பூருக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் வலுக்கட்டாயமாகப் பயணச்சீட்டுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டிய விழிப்புணர்வு மருந்தாகும் அத்தனை தகுதிகளையும் பெறுகிறது. புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களை அந்தத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே அச்சு ஊடகத்தில் சொல்வதற்கும் அசாத்தியத் துணிவும், நேர்மையும் கண்டிப்பாக வேண்டும். தான் சந்தித்த அத்தனை சிரமங்களிலும் நேர்மை தவறாது நின்று, இன்று துணிவாக இன்னார் தான் தவறு செய்கிறார்கள், இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள் என்று தன் அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளைச் சொல்லும் ஜோதிஜி நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். புத்தகம் வெளிவருவதற்கு முதல் நாளே தமிழ்நாட்டின் மிகப் பரபரப்பான இடத்தில், சில நிமிடங்கள் மட்டும் புத்தகத்தினைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஷங்கர் படம் போல் பிரம்மாண்டமான விஷயங்களையெல்லாம் அலசிக் காயப்போடும் புத்தகத்தின் அட்டைப்படம் சத்தில்லாத மனோபாலாவைப் போல் இருப்பதாகத் தோன்றியது. அந்தச் சில நிமிடங்களிலும் கவர்ந்தது புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள். திருப்பூர் பூராவும் புழுதி மண்டலத்தில் அலைந்து திரிந்து புகைப்படங்கள் எடுத்திருக்கும் அன்பர் வள்ளியூர் குணாவிற்கும் பாராட்டுக்கள். மதுரை சம்பத் நண்பர் ஜோதி கணேசன் அவர்களின் அனுபவ சிதறல்களின் தொகுப்பான “டாலர் நகரம்” புத்தகத்தின் மீதான விமர்சனத்தைப் பதிவு செய்வதற்கு முன்பாக இதை எழுத இத்தனை நாட்களா என நண்பரின் அன்பு கலந்த கோபத்தை எதிர்பார்த்து முதலில் வணக்கம் சொல்லிப் பேசத் துவங்குவது போல் மன்னிக்கவும் என்ற சொல்லோடு எழுத விழைகிறேன். ஒரு பேச்சாளரின் வெற்றி என்பது எதிரே அமர்ந்திருப்பவர்களைக் கவரும் வண்ணம் தடங்கலின்றி பேசுவதோடு இன்னும் சிறிது பேசமாட்டாரா என்று எண்ணும் வண்ணம் விரைவாக முடிப்பதில் இருக்கிறது. அதே போல் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது வாசிக்கத் துவங்கியவுடன் ஒரு சில அத்தியாயங்களையாவது வாசித்துவிட்டு பின்னர்தான் கீழே வைக்கும் வண்ணம் அந்தப் புத்தகம் அமைவதுதான். அந்த வகையில் ஜோதிஜியின் எழுத்து நடை என்பது நிச்சயமாக வாசிப்பவரை சலிப்படையாமல் தன்னோடு பயணிக்க வைத்திருக்கிறது. திருப்பூர் எனது சொந்த ஊர்- காரைக்குடி நான் (பழிவாங்கும்) ஊர் மாற்றமாக மாற்றப்பட்டு பாச்சுலர் வாழ்க்கையில் 2 வருடம் பணிபுரிந்த ஊர். இரண்டு ஊர்களும் அதில் தெரிவித்துள்ள பல இடங்களும் அறிமுகமானவை என்பதால், புத்தக நடையோடு பயணிக்க ஒரு ஈர்ப்பை அளித்தது. உண்மை சுடும் என்ற போதிலும், யதார்த்தங்களை அப்படியே சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும். இன்றும் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிற திருப்பூரில் கால் ஊன்றி வெற்றி பெறுவதற்காகக் கடந்து வந்த அனுபவங்களை வரிசையாகத் தொகுத்திருக்கிறார் நண்பர். பணம் நிறைய இருந்தும் முறையான திட்டமிடல் இன்மையால் சரிந்து கொண்டிருந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் தாம் பொறுப்பேற்று, தொய்விற்குக் காரணமாக இருந்தவர்கள் முதலாளியின் சொந்தங்கள் என்ற போதிலும் அவர்களை அகற்றிவிட்டு லாபத்தை நோக்கி, வெற்றியை நோக்கி இட்டுச் சென்றவுடன் முதலாளியின் மனைவியின் தலையீடு- அதனைத் தொடர்ந்து தான் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்பதெல்லாம் இயன்றளவிலும் பல உழைப்பாளிகளுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதுதான். இருப்பினும் அவற்றை எழுத்து வடிவில் காட்சிப் படுத்தியிருந்த விதம் தொழிலாளர்களுக்குப் பாடம் கற்றுத் தருவது போல் பல முதலாளிகளையும் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நிச்சயமாக அதுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி. எழுத்தாளர் சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்தும் என்ற தலைப்பை முன்னிறுத்தி அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள்- பருத்தி மற்றும் நூல்களின் சந்தையை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதையும் அது உள்ளாடை தொழிலை எப்படி நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது என்பதும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. சாயப்பட்டறைகளின் மீது நீதிமன்ற நெருக்கடி காரணமாக டேப்ரிக்கார்டரில் pause பட்டனை அழுத்தியது போல் தற்காலிகமாகத் திருப்பூரின் இயக்கங்கள் நின்றுள்ளது என்ற போதிலும், பல்லாண்டு காலமாக முதலாளிகள்- அரசியல்வாதிகள், சாயக் கழிவுகளை வெளியேற்றுவதில், அவற்றை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்து இரசாயனக் கடுமையைக் குறைக்கக் காண்பித்து வந்த அலட்சியப் போக்கே இந்த நிலைக்குக் காரணம் என்ற சாடலைச் சரியாக முன்வைத்துள்ளார். திருப்பூரில் உள்ளாடை தொழிலில் இருப்பவர்களைப் பொறுத்தவரை அந்த நகரிலேயே சாயமேற்றல் நடைபெற்றால்தான் தொழில் தடங்கலின்றி தொடரும் என்கிற சுயநலம் இயல்பாக மேலோங்கி நிற்கும். ஆனால் மாறாக ஜோதிஜி அந்தத் தொழிலை வழிநடத்தும் பணியில் இருந்த போதும் சமூக அக்கறை மேலோங்கி விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்களின் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கும் உணர்வு நிச்சயமாகப் பாராட்டுக்குரியதே. திருப்பூரில் 80களில் 90களில் தொழிற்சங்க இயக்கங்கள் பலவற்றை நான் கண்டிருக்கிறேன். முறைசார்ந்த தொழில், முறை சாரா தொழில் எதுவாக இருப்பினும் உரிமைக்குக் குரல் எழுப்புவது என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அவற்றைப்பற்றி ஜோதிஜி ஒன்றும் எழுதவில்லையே என்பது எனக்குச் சற்று குறையாகத் தெரிந்தது. மேலும் தொழிலைச் சார்ந்த, நகரைச் சார்ந்த தொடர் கட்டுரைக்கு நடுவே குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகள் கையாண்ட விதம் பற்றி எழுதியிருந்தது இந்தக் கட்டுரைத் தொடரில் சற்று ஒட்டாமல் இருக்கிறதோ என முதலில் எனக்குத் தோன்றியது. ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் தொழிலாளியாக, சிறு முதலாளியாக, அரசு மற்றும் அரசுத் துறை பணியாளராக யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டம் என்பது குழந்தைகளுக்கு நல்ல கல்வி பயிற்றுவித்து அவர்களைத் தன்னை விட மேம்படுத்த வேண்டும் என்பதுதான் வாழ்க்கை ஓட்டத்தில் அனைவரின் முக்கிய குறிக்கோள் ஆகும். அந்த வகையில் தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்து, அவற்றைப் பயன்படுத்தும் போது ஏற்படும் உறவுகளின் நெருக்கம் குறித்து, இன்று பலர் ஆங்கிலக் கல்விக்குச் சென்று பெற்றவர்களும் குழந்தைகளும் பிரிந்து நின்று மின்னஞ்சல் தொடர்போடு நின்றுவிடுவதையும் பளிச்சென்று சுட்டிக்காண்பித்திருப்பதால், அது இந்த வாழ்க்கையோடு இணைந்த தொடரில் அவசியமான ஒன்றே என நிறைவாக இருந்தது. மொத்தத்தில் நம்பி கை வைத்து நாணயமாய் நடந்து உண்மையாய் உழைத்தால் உயர்வும் வெற்றியும் நிச்சயம் என்பதை இந்த அனுபவத் தொடர் நிறைவாகச் சொல்லியிருக்கிறது. பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு சந்தைப்படுத்துகிற பிரசுரங்கள் பலவற்றின் நடுவே துணிவோடு இதைப் பிரசுரமாகக் கொணர முடிவெடுத்த திரு மலைநாடன், 4தமிழ்மீடியா குழுமத்திற்குக் கண்டிப்பாகப் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். சிறப்பான புத்தக வடிவமைப்பு, தேவையான புகைப்படங்கள் ஆகியவை நன்றாக இருந்தது. நண்பர் ஜோதி கணேசனின் எழுத்துக்கள் இன்னும் பல வெளிவர வாழ்த்துக்களுடன் தோழமையுள்ள ஸ்ரீ.சம்பத் மதுரை. வெட்டுக்காடு ரவி நண்பர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தகத்தை 27-1-2013 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கிடைக்கப் பெற்றாலும் தொடர்ந்து வார இறுதி பயணங்கள் மற்றும் வேலை காரணமாகப் புத்தகத்தை உடனே படிக்க இயலவில்லை. இந்த வாரத்தில்தான் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்திலுள்ள ஒரு சில பகுதிகளை ஜோதிஜியின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். புத்தகமாகக் கையில் வைத்துக்கொண்டு படித்தபோது ஒரு நாவலைப் படிக்கும் ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படித்து விட்டேன். காரணம்… அவ்வளவு அனுபவங்கள், தகவல்கள் அடங்கிய புத்தகம். உலகம் தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞனாக ஒரு மஞ்சள் பையுடன் 1992 ஆம் ஆண்டில் திருப்பூருக்கு வரும் ஜோதிஜியின் ஆரம்பக் கால அனுபவங்களுடன் நம்மைத் திருப்பூர் நகரத்தின் பின்னலாடை நிறுவனங்களின் உள்ளே அழைத்துச் செல்கிறார். ஒரு சாதாரணத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, சூபர்வைசர், மேலாளர், சொந்தத் தொழில், தற்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பொது மேலாளர் (General Manager) என்று உயர்ந்திருக்கும் ஜோதிஜி தனது கடந்த இருபது ஆண்டுக் கால வாழ்க்கை பயணத்தில் திருப்பூரின் வளர்ச்சி,வீக்கம், பிரச்சனைகள், பின்னடைவு ஆகியவற்றைப் பற்றி ஆழமாக, துல்லியமான தகவல்கள், புகைப்படங்கள் வாயிலாகத் தெரிவிக்கிறார். திருப்பூர் நகரத்தின் பல முகங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விளங்குகிறது டாலர் நகரம். அப்பாவி இளைஞனாக இருந்ததால் ஆரம்பக் காலத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் திருப்பூரை நோக்கிப் படையெடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தன் அனுபவங்களை மட்டும் அல்லாமல் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் கருணாகரன் என்ற கிராமத்துச் சிறுவன் காஜா பட்டன் அடிக்கும் குழந்தை தொழிலாளியாகத் திருப்பூருக்கு வந்து இன்று பல கோடி நிறுவனத்தின் அதிபராக வளர்ந்திருப்பது. கிராமத்திலிருந்து திருப்பூருக்குத் தொழிலாளியாக வந்து 100 கோடி நிறுவனத்திற்கு முதலாளியாக உயர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களால் இன்று தெருவில் நிற்கும் வாழ்ந்து கெட்ட ஆறுமுகம் ஆகிய இருவர்களைப் பற்றிய பதிவுகள் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள். திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் என்பது பெரும்பாலும் முதலாளிகளின் மேற்பார்வையில் தொழிலாளர்களை ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 14 மணி நேரம் கசக்கிப் பிழிந்து வரைமுறை இல்லா வேலை வாங்குதல் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. மனித வளத்துறை (Human Resources) என்பது பெரும்பாலான நிறுவனங்களில் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன, சூபர்வைசர்கள், மேலாளர்கள் தொழிலாளர்களை நடத்தும் முறைகள், பெண்களுக்குக் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள், அதை குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்ட பெண்கள், “பணம் துரத்திப் பறவைகள்” என்ற அத்தியாத்தில் கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் படித்த போது மனம் மிகவும் கனத்து விட்டது. நாம் தினசரி செய்திகளில் பார்த்து, படித்துக் கடந்து செல்லும் திருப்பூர் சாயப் பட்டறைகள் பற்றிய பிரச்சினைகள், அரசாங்கப் பஞ்சு வணிக ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மாற்றங்கள், அன்னியச் செலாவணி ஏற்ற இறக்கங்கள், அன்னிய முதலீடு ஆகியவர்களைப் பற்றி மிகத் தெளிவாகப் பல பாகங்களில் விளக்கிச் சொல்லியிருப்பது மிகவும் பாரட்டக் தக்கது. “டாலர் நகரம்” புத்தகத்தைப் படித்த பிறகு திருப்பூர் பின்னலாடை தொழில் இயங்கும் முறை பற்றி முழுமையாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஜோதிஜி தன் சுயசரிதை கலந்த திருப்பூரின் ஆவணமாக இந்தப் புத்தகத்தை ஒரு கலவையாக எழுதியிருக்கிறார். இதனால் படிக்கும்போது சில இடங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கின்றது. இந்த சிறு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் “டாலர் நகரம்” திருப்பூர் மற்றும் பின்னலாடை தொழில் பற்றிய மிகச் சிறந்த ஆவணப் புத்தகம் !!! கொக்கரக்கோ..!!! - சௌம்யன் இதுவரை சினிமா விமர்சனம் கூட ஒன்றிரண்டு எழுதியிருக்கின்றேன் ஆனால் புத்தக விமர்சனம் என்று எதையும் தனிப் பதிவாக நான் எழுதியதில்லை. காரணம் ஒரு புத்தகம் என்பதே, ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றிய விமர்சனம் அல்லது கருத்து அல்லது பதிவு அல்லது ….. என்கிற போது, அந்த நூல் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட விடயம் பற்றிய தனிப்பட்ட கருத்தை விமர்சனம் செய்வது என்ன நியாயம் என்பது என் நிலைப்பாடு! அதே போன்று தான் இந்த “டாலர் நகரம்” புத்தகம் பற்றியும் எனது நிலைப்பாடு என்றாலும், என்னுடைய சக இணையப் பதிவர், ஒரு நூலாசிரியராக புதுப் பரிமாணம் எடுத்திருக்கும் இந்த நூல் பற்றி எழுதுவது என் கடமையாகும். அதாவது அது பற்றிய எனது கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வது என்பது, தமிழ் எழுத்துலகுக்கு இணைய உலகம் புடம் போட்டுத் தந்து கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களைப் பற்றிய கருத்துக்களை அல்லது விமர்சனங்களைப் பகிர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தான் இந்த நூல் விமர்சனத்தை எழுத முன் வந்திருக்கின்றேன். நடப்பு கால மாணவச் சமுதாயத்திற்கு வாசிப்பு அனுபவம் என்பது மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட இல்லை என்கிற அளவிற்கே இருக்கிறது என்பதாகச் சமீபத்தில் எல்லோராலும் பரவலாகக் கவலைக்குரிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இன்றைய தேதியில் 35 வயதினைத் தாண்டியவர்களில் பெரும்பாலானோருக்குச் சம காலத்திய இளைஞர்களோடு ஒப்பிடும் போது இந்த வாசிப்பு அனுபவம் இன்றைக்கும் சற்று அதிகமாகவே இருப்பது கண் கூடு. இதற்குக் காரணம், அப்பொழுது வாஸந்திகளும், சிவசங்கரிகளும், சுஜாதாக்களும், பால குமாரர்களும்….., பேரிலக்கியம், புண்ணாக்கு என்றெல்லாம் பீற்றிக் கொண்டிருக்காமல், வாசிப்பவர்களுக்கு அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய நடையில் எழுதியது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது. சமீப காலமாகத் தோன்றியிருக்கும் இலக்கியவாதிகள், பேரிலக்கியவாதிகள், முன்நவீனத்துவவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்ற எழுத்தாளர்கள், சாமானிய வாசிப்பாளர்களை அல்லது மாணவப் பருவத்திலிருக்கும் இளைய சமுதாயத்தினரைப் போட்டுப் படுத்தி எடுத்து, புத்தகங்களைக் கண்டாலே அவர்களைக் காதத் தூரத்திற்கு ஓட வைத்தது தான் நடப்பு கால இளைஞர்களின் வாசிப்பு அனுபவத்தைச் செயலிழக்கச் செய்திருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. இந்த மாய பிம்பங்களை உடைத்தெறிந்து சாமானியர்களும் படித்துப் பயன்பெறும் அளவிலான எழுத்து நடையோடு அவ்வப்பொழுது சில படைப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் நண்பர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்த டாலர் நகரம் புத்தகமும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது என்பதை இங்குப் பதிவு செய்து விடுகின்றேன். தன் சுய சரிதம் போல எழுத முற்பட்டு, திருப்பூரின் கடந்த 20 வருடச் செயல்பாடுகளை, வளர்ச்சி - வீழ்ச்சிகளை தன் பார்வையின் ஊடாக பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர் ஜோதிஜி! திருப்பூர்வாசிகளுக்கும், திருப்பூரோடு தொழில்முறை உறவு வைத்திருக்கும் வெளியூர் வாசிகளுக்கும், உள்ளூரில் வேலை கிடைக்காமல் திருப்பூர் சென்று வேலையிலமர்ந்து புது வாழ்வைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அந் நகரைப் பற்றிய நல்லதொரு புரிதலைத் தரும் நூலாக இது அமைந்திருக்கிறது. இதெல்லாம் இந்நூலைப் பற்றிய பொதுவான பார்வைகள் என்றாலும், புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் கைப்பிடித்து திருப்பூர் தெருக்களின் ஊடாகவும், அங்குள்ள பல்வேறு வகை தொழில் கூடங்களின் உள்ளேயும் அழைத்துச் செல்வதைக் காணொளியின் ஊடாக காண்பது போன்ற பிரேமையை உண்டு பண்ணுவதை மறுப்பதற்கில்லை. இங்கு தான் ஜோதிஜியின், “சிறந்த எழுத்தாளர்” என்ற அந்தப் பிம்பம் அரங்கேற்றப் படுகிறது. உள்ளே சென்று இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக ஆராயும் பொழுது, சில இடங்களில் சில விஷயங்கள் ஆங்காங்கே தொங்கலாக நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. உதாரணத்திற்குத் தயாநிதி மாறன் செய்த எந்த மாதிரியான தவறு இந்தத் துறையை முடக்கிப் போடுகிறது என்பதற்கான விளக்கம் சுத்தமாக இல்லை. அதே போன்று பொருளாதார உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் கையெழுத்திட்டது எந்த விதத்தில் இந்தத் துறையைப் பாதித்தது என்பது பற்றியும் தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. ஒரு கட்டத்தில் அதே பொருளாதார உலகமயமாதல் நல்ல பலன்களைத் தந்து கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ராக்கெட் வேகத்தில் ஏற்றுமதி அளவு வளர்ந்திருப்பதையும் இந்தப் புத்தகத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது. ஜோதிஜி ஏதாவது ஒரு தளத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தன் பார்வையைப் படர விட்டு எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது வெவ்வேறு தளங்களின் நல்லது கெட்டவற்றையும் தெளிவாகப் பட்டியலிட்டு, அதன் மூலம் களையப்பட வேண்டிய குறைகளை அது எவ்வாறு களையப்பட வேண்டும் என்ற தீர்வோடு சொல்லியிருந்தால், இது ஒரு ஆகச் சிறந்த படைப்பாக, திருப்பூர் தொழில் துறையினருக்கான பொக்கிஷமாக அமைந்திருந்திருக்கும்! ஆனால் ஜோதிஜியிடம் இது பற்றிப் பேசிய பொழுது, 600 பக்கத்திற்கு எழுதப்பட்ட புத்தகம், சில பல காரணங்களால் இருநூற்றுச் சொச்சமாகக் குறைந்து விட்டது அதனால் ஏற்பட்ட விளைவுகள் தான் இதெல்லாம் என்று கூறியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். எந்தவொரு படைப்பாளிக்குமே தான் பிரபல்யம் ஆவதற்கு முன் வரும் ஆரம்பக்காலப் படைப்புகளில் இது போன்ற சங்கடங்கள் வருவது இயல்பு தான். தன்னுடைய அடுத்தடுத்த நூல்களில் ஜோதிஜி இவற்றையெல்லாம் இலகுவாகக் கடந்துவிடுவார் என்று நம்பலாம். அடுத்ததாக இன்னும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பொதுவாக ஒரு தேர்ந்த நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் உணரப்படுகின்ற ஒரு இழையில் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இயலாதபட்சத்தில், வேறு ஒரு அத்தியாயத்துடன் அது கண்டிப்பாக இணைக்கப்பட்டுவிட வேண்டும். மொத்தத்தில் அனைத்துப் பகுதிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்துடன் இணைப்பில் வந்து விட வேண்டும். அப்படியிருந்தால் தான் படிப்பவர்களுக்குத் தொண்டை நனைய நீர் குடித்த திருப்தி கிடைக்கும். இந்த நூலில் பல சம்பவங்கள் அப்படித் தொடர்பில்லாமல் அறுந்து போகும் நிலையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாகச் சொந்த ஊர் விவசாயச் சம்பவங்கள், பள்ளிச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். திருப்பூரைத் தவிர்த்து நம்மை வெளியில் கொண்டு செல்லும் போது கொஞ்சம் அசூயை வருகிறது. மேலும் எழுத்துப் பிழைகள் ஒரு எல்லையைக் கடந்து நம் கண்களை உறுத்துகின்றன. அது பதிப்பகத்தார் சரி செய்ய வேண்டிய விஷயம். அடுத்தடுத்த பதிப்புகளில் அது சரி செய்யப்பட்டுவிடலாம். இதெல்லாமே நூலின் ஆசிரியர் நமது நண்பர் என்ற வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய, பொதுவாகச் சாதாரணமாக வாசிப்பவர்களுக்கு எளிதில் பிடிபடாத குறைகள் மட்டுமே! பொதுவாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய பார்வையாக நாம் வைக்க வேண்டுமானால், ஒரு அசாத்திய உழைப்பாளியின் அனுபவங்களைப் படித்து முடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு நம்மை ஒரு வித பிரமிப்பிலேயே ஆழ்த்திவிடுகிறது, என்பதைத் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எழுத்து நடையும், அவலங்களைக் கண்டு கொதிக்கும் அவரது கோபமும், படிக்கின்ற நம்மையும் அப்படியே தொற்றிக் கொண்டு விடுகிறது. கொஞ்சம் ஒதுக்கக்கூடிய நேரம் அமையப்பெற்றவர்கள், ஒரே மூச்சில் படித்து முடித்து விடக் கூடிய அளவிற்கு விறுவிறுப்பாகப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும், அதைப் பகிர்ந்திருக்கும் முறையும் அருமை. புத்தகத்தின் விலைக்கு அதிகமாகத் தரத்தைத் தந்திருக்கின்றார்கள். நல்ல காகிதம், பெரிய எழுத்துக்கள், வண்ணப் புகைப்படங்கள்…. இதெல்லாம் சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களில் இத்தனை பக்கங்களில் இந்த விலையில் நிச்சயம் வெளி வந்திருக்கவில்லை. அதனால் கொடுத்த காசுக்குப் பைசா வசூல்… தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார், தோழர் ஜோதிஜி…… வாழ்த்துக்கள்!! அபி அப்பா வெற்றிகொண்டான் விமர்சனம் இவரை திமுக உடன்பிறப்புகள் இணைய தள (திமுக) வெற்றி கொண்டான் என்று அழைக்கின்றார்கள். இவர் திட்டாத ஆட்கள் இல்லை. இவரைத் திடுக்கிடும் அளவுக்குத் திட்டித் தீர்க்காத ஆளுமில்லை. இரண்டு பக்கமும் கிராமத்து மஞ்சுவிரட்டு நடக்கும். சில சமயம் வார்த்தைகளின் எல்லைகள் மீறப்படும். வெற்றி கொண்டான் தனது பாணியை மாற்றிக் கொள்வதில்லை. பரஸ்பரம் வறுகடலை போலப் பொரியல், அவியல், துவையல் என்று கூகுள் ப்ளஸ் ல் களைகட்டும். இரவு நேரம் என்றதும் இவருடைய மூளையில் உள்ள ந்யூரான்களுக்கு சிறப்பான தகுதி வந்து விடும் போல. விசைப்பலகையில் அவர் அடிக்கும் வார்த்தைகளில் கவிச்சி வாடை எட்டிப்பார்க்கும். நீ ரத்தத்தைப் பரிசாகத் தந்தால் நான் என்ன தக்காளி சட்னியா தர முடியும் என்று பரஸ்பரம் வெட்டுக் குத்து என்று நடப்பதைப் படிப்பவர்கள் பயத்தோடு பார்க்க வேண்டும். என்னை விருமாண்டி கமல் என்று நினைத்துக் கொள்ளாதீர் என்று அவரே எனக்குச் சொல்லியுள்ளார். . என்னுடைய டாலர் நகரம் புத்தகத்திற்கு இவர் தனது கூகுள் ப்ளஸ் எப்போதும் போலக் கலாய்த்து, கவனித்து, அக்கறையோடு தனது பாணியில் விமர்சனம் எழுதியுள்ளார். அடிப்படையில் நல்ல ஆத்மா. ஆனால் இவரைக் கோபப்படுத்த வேண்டுமென்றால் கலைஞர் குறித்து உங்கள் மனதில் தோன்றியதை எழுதி இவர் பெயருக்கு டேக் செய்து விட்டு சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். ருத்ரதாண்டவம் என்பதைப் படங்களில் பார்த்து இருப்பீர்கள். இவர் விமர்சனத்தின் மூலம் பாய்ந்து பிராண்டும் நண்பர்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களே. இவரும் நல்ல நண்பரே. ஆனாலும் என்னையும் பல தடவை குத்திக்காட்டியிருக்கின்றார், ஆனாலும் நம் மீசையில் மண் ஒட்டாத மாதிரி மல்லுக்கட்டிப் போராடிப் பார்த்து ஒதுங்கி விடுவேன். ஒரு கட்சியின் உண்மையான தொண்டன் என்றால் எனக்குத் தெரிந்து இவர் தான். கலைஞரின் குடும்ப வாரிசுகள் கூட கலைஞர் மேல் இந்த அளவுக்குப் பற்று வைத்திருப்பாரா என்று சந்தேகமே. நல்ல எழுத்தாற்றல், கவனிப்பு மிக்க இவர் திறமை இவர் மண்டை முழுக்க நிறைந்திருக்கும் திமுக என்ற எழுத்திற்காகவே காணாமல் போய் விடுகின்றது. மற்றொரு உடன்பிறப்பிடம் இவரைப் பற்றிச் சொன்ன போது இவர் உங்கள் புத்தகத்திற்கு விமர்சனம் கொடுத்தால் அது நேர்மையாக இருக்கும் என்றார். திமுக தொண்டராக இவர் கலைஞரைப் பற்றிச் சிலாகித்து எழுதுவதைப் படிக்கும் போது நான் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவதுண்டு. இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது கூட அவர் விரல்கள் விசைப்பலகையில் ருத்ரதாண்டவம் ஆடப்போகின்றது ஏறக்குறைய இருவருக்கும் சமவயது என்பதால் நன்றி தொல்ஸ். அபி அப்பா டாலர் நகரம் புத்தகத்தின் விமர்சனப் பார்வை ஜோதிஜி! முழுவதும் படித்து முடித்து விட்டேன். நல்லா இருக்கிறது புத்தகம். திருப்பூர் பத்தி முழுமையாக புரிஞ்சுக்க உதவும் புத்தகம் என்பதோடு, அங்கே அந்தத் தொழிலின் வளர்ச்சி, வீழ்ச்சி என இருபக்கமும் புரிந்தது. . மேலும் மஞ்சள் பையுடன் ஒருவர் தன் சொந்த ஊரிலிருந்து போனா கூட மூளை இருந்தால், நல்ல குணாதிசயங்கள் இருந்தால் பிழைச்சுக்க இயலும் என்றும் அதற்குச் சரியான உதாரணம் நீங்கன்னு தெரிஞ்சுது. எழுத்துப்பிழைகள், கோர்வையாக இல்லாமை, சில மிகச்சில பிழைகள் … உதாரணமாகச் செயற்கை உரங்கள் என உங்கள் வயலில் எப்போதும் இருக்கும் யூரியா, பாலிடால், பாக்டம்பாஸ்ன்னு சொல்லியிருக்கிறீர்களே, அதிலே பாலிடால் உரம் அல்ல பூச்சிக்கொல்லி மருந்து…. இது போன்ற சின்ன சின்ன தவறுகள்…. இதைத் தவிர்த்து நிறைய நல்லா இருக்கிறது புத்தகம். எழுத்துப்பிழை என்பது உங்கள் குற்றம் இல்லை. மீதியெல்லாம் அடுத்தடுத்த புத்தகம் போடும் போது சரியாகிடும் அது போலப் புத்தகம் படித்து முடிக்கும் போது “அந்த”தனலெஷ்மி" தியேட்டர் கிட்டே முதன் முதலில் நீங்க குடிவந்த போது புத்தகமும் கையுமா குடோன்ல இருக்கும் போது ஒரு பொண்ணு வந்து பேச்சுக் கொடுத்ததே… அது தான் நீங்க லவ் பண்ணப் போகும் பெண் என்று கதை படிக்கும் எல்லாரும் நினைப்பார்கள். சுஜாதா ஒரு முறை சொன்னார். கதையில் அல்லது அதை விஷூவலா சொல்லும்போதோ சுவரில் இரு கடிகாரத்தை சூம் பண்ணினா அது சம்பந்தமா கதையிலே வரனும். கண்டிப்பா வரனும். சும்பெல்லாம் காமிக்க கூடாது. காமிச்சு வாசகனை அது பத்தியே குழம்ப வச்சா கதையில் நீங்கச் சொல்லும் மத்த பாயிண்ட் முக்கியமான இடத்திலே வாசகன் அந்தக் கடிகாரத்தைப் பத்தி தான் நினைத்துக்கொண்டு இதைக் கோட்டை விட்டுவிடுவான், என்றார். அது போல அந்தப் பெண் பாத்திரம் தேவையில்லை என்பது என் கருத்து அடுத்து ஒரு முக்கால்வாசிக்குப் பின்னே நீங்க மிளகாய் மூட்டை மேல் உட்கார்ந்து எழுதினது போல ஒரு காரம். காங்கிரசை உங்களுக்குப் பிடிக்கவில்லை. அது போலக் கருணாநிதியைப் பிடிக்கவில்லை…. ஜெயாவைப் பிடிக்கிறது… ஓகே… அதை நீங்க எழுதும் ஒரு ஆவணப் பதிப்பில் திணித்த மாதிரி இருக்கிறது. ஏன்னா 2 மணி நேர மின்வெட்டால் சாயத்தொழில் எல்லாம் சாகடிக்கப்பட்டது போன ஆட்சியில்ன்னு சொன்ன நீங்க… அடுத்து “ஆட்சி மாற்றம் பின்னரும் அது தொடருகிறது”னு பாலீஷ் போட்டீர்கள் பாருங்கள்… அங்க தான் நிக்குறீங்க. 2 மணி நேர மின்வெட்டு 3 மணி நேரமா ஆகியிருந்துச்சு அல்லது 4 மணி நேரமா ஆச்சுதுன்னா நீங்க இப்படி பாலீஷ் போட்டது ஓகே. ஆனால் 18 மணி நேர மின்வெட்டு எப்படில்லா அந்தத் தொழிலை பாதிச்சுதுன்னு விலாவாரியா ஒரு 4 பக்கம் சொல்லியிருக்க வேண்டாமா? ஏன் சொல்லலை? பாசம்…. அது போலச் சிதம்பரம், மன்மோகன்னு பெயரைக் குறிப்பிட்டு விளாசித் தள்ளிய நீங்க ஜெயா அம்மையாரைப் பத்தி மட்டும் மயிலிறகால் வருடி விட்டுட்டீங்க:-)) அது போல “all under one roof” பாலிசி சரியா தப்பாவென்று சரியா நெத்தியடியா சொல்லியிருக்கவேண்டும். சாலமன் பாப்பையா மாதிரி இவுக இப்படிப் பாதிக்கப்பட்டாக, அவுக அப்படி பாதிக்கப்பட்டாகன்னு இரண்டு பக்கமும் பேசிட்டு இருந்தீர்கள். காரணம் நீங்க முதலாளியா அல்லது தொழிலாளியா அல்லது இருவருக்குமான பாலமா என உங்களால் உங்களைக் கணிக்க முடியலை. இதான் நீங்க மழுப்பினதற்குக் காரணமென்று நினைக்கிறேன் ஒரு ஒரு தோல்விக்கும் அடுத்து உங்களைக் காப்பது உங்கள் கண்ணியமான குணாதிசயம் என்பது கண்கூடா தெரிகிறது. அதை எப்போதும் கைவிட வேண்டாம். நல்லதே நடக்கும். முதல் இன்னிங்ஸ் திருப்பூரில் முடிந்து ஊருக்குப் போய் பாட்டி வீடு வித்தக் காசிலே வெளிநாடு ஓடிப்போய் மீண்டும் அதே மஞ்சள் பையும் கட்டிய வேட்டியுமாய் ஊருக்குத் திரும்ப வந்து மீண்டும் திருப்பூர்… ஊஃப்ப்ப்… வெல்டன் ஜோதிஜி… என் வாழ்க்கைக்கதை படித்த மாதிரி ஒரு உணர்வு. அகலிகன் “டாலர் நகரம்” அடிப்படையில் பெயரே சரியானதாய் அமைந்துவிட்டிருக்கிறது அமெரிக்க டாலரைப்போலவே வெளிப்பார்வைக்கு மிகக் கவர்ச்சியானதாகவும் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் டாலருக்குப்பின்னால் பல கோரங்களும், கொடுமைகளும், அத்துமீறல்களும், அவலங்களும், சுரண்டல்களூம் இருப்பதுபோலவே திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சி வெளிப்பார்வைக்கு கவர்ச்சியானதாக இருந்தாலும் அது தன்னுள் பல குறைகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டுள்ளது. பாலகுமாரனின் வெள்ளைத்தாமரை பேப்பர் வியாபாரத்தை அக்குவேறாகவும், நெல்லுச்சோறு நிலக்கடலை வியாபாரத்தை ஆணிவேராகவும், தண்ணிர்துறை மைலாப்பூர் தண்ணிதுறை மார்கெட்டையும் எனக் கதாபாத்திரங்களின் தொழில் சார்ந்த விவரங்களையும் விளக்கங்களையும் மிகத்தெளிவாய் முன்வைக்கும். அதுவே அவர் படைப்புக்களின் வெற்றியும்கூட. அந்த வகையில் டாலர் நகரம் ஒரு தொழில் சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறது. (தாங்கள் இதையே கதாபாத்திரங்களை அதிகம் பயன்படுத்திப் பல கதைகளாகவும் முயற்சிக்கலாம் அல்லது ஆரம்ப அத்தியாயங்கள் போல் மற்ற அத்தியாயங்களிலும் உங்கள் பங்களிப்பு சார்ந்ததுபோலவே விவரித்திருக்கலாம், ஒரு நாவலுக்கான வடிவம் கிடைத்திருக்கும்). கோட்டா சிஸ்டத்தில் பெற்றுள்ள கோட்டாவின் அளவிற்குத்தான், நாட்டிற்குத்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாய் இந்தியா முழுவதும் பரவிய கோட்டா தரகர்கள் பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். சில ஏற்றுமதி நிறுவனங்களே தன் தேவைக்கு அதிகமான கோட்டாக்களைப் பெற்றுவைத்துக்கொண்டு இந்தக் கோட்டா தரகர்களுடன் கூட்டு களவாடி லாபம் பார்த்தகதை சில கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி தொழில் சார்ந்த தரவுகள் எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே ஒரு தொழிலில் 15 ஆண்டுகளாக இருப்பதனாலும் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் புதிதாய் தொழில்களை முனையப்போகிறவர்கள் அல்லது புதிதாய் ஒரு துறையில் பணிபுரிய விழைபவர்களை இப்படியான தரவுகள் கவரும் என்பதோடல்லாமல் அவர்களுக்கு இத்தரவுகள் உதவவும் செய்யும். ஆனால் இத்தொழில் சார்ந்த சமூக பிரச்சனைகளைத் துளியும் மறைக்காமல் அரசு மற்றும் அதிகாரிகள் செய்யும் அத்துமீறல்களையும் அலட்சியத்தையும் துணிவுடன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. தொடக்க சில அத்தியாயங்களைத்தவிர மற்றவை பெரும்பாலும் தொழில்சார்ந்த மற்றும் நகர் சார்ந்த பிரச்சனைகளைப் பேசியிருப்பதால் இயல்பாகவே வாசிப்பதில் ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. ( கூடவே அக்கறையில்லா அரசுகளின் கொள்கை முடிவுகளின்மீதும் கோபமும் வெறுப்பும்). திருப்பூரைச்சுற்றி உருவாகிவரும் புறநகர் பற்றியும் அதன் அடிப்படைவசதியின்மை பற்றியும் ஆதங்கப்பட்டுள்ளீர்கள் ஆனால் உலகெங்கும் அடித்தட்டு மக்கள் எல்லா அரசுகளாலும் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். சென்னையிலும்கூட சிங்காரச்சென்னை என்ற கான்செப்ட் அடிப்படையில் அன்றாடம் நகரைச்சார்து உழைத்துப் பிழைக்கும் அப்படியான மக்கள் சென்னைக்கு வெகுதூரம் மிகமிக மோசமான சூழ்நிலையில் குடியமர்த்தப்படுகிறார்கள். உண்மையில் நகரங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எனச் சொல்லாமல் சொல்லப்படும் செய்தி இது. ஆடை தொழில் சார்ந்த புத்தகமாக இருந்தாலும் மனிதர்களின் மனவுணர்வுகளையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. (அதிக இடங்களில் இல்லையென்றாலும் சாத்தியப்படக்கூடிய இடங்களில்) அதே சமயம் அன்றைய விவசாயமும் அதன் இயற்கை வழி உரச் சுழற்சியும் பற்றிய தகவல் இன்றைய விவசாய முறைகளையும் விவசாயியை நிலையையும் ஒப்பிட்டுக் காண்கையில் ரத்தக்கண்ணீர்தான். அ. முத்துக்கிருஷ்ணனின் “உழவின் திசைவழியே” என்ற ஆய்வுக் கட்டுரை ஒரு சிறந்த படைப்பு. முயற்சிக்கவும். கூடங்குளம் அணு உலை தொடர்பான அரசின் அத்தனை பொய்ப் பிரசாரங்களையும் தோலுரித்துக்காட்டும் “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற பெயரில் மக்களுக்கான விழிப்புணர்வு பதிப்பாக வெளிவந்திருப்பதைப்போல் (உயிர்மை பதிப்பகம் அ. முத்துக்கிருஷ்ணன்) சாயமே இது பொய்யடா தொகுப்பும் சாயப்பட்டறை கழிவுகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான மக்கள் பதிப்பாய் வெளியிடக்கூடிய முக்கிய பகுதி. நான் மிகவும் ரசித்தது. எல்லாக் காலங்களிலும் திறமையானவர்களை உதவிசெய்து வழியனுப்புவது மாதவன்போன்ற பள்ளித்தோழர்கள்தான். அந்தவகையில் மாதவன், முருகேஷ் கவர்ந்தார். (நம் ‘+’ ‘-’ களை அறிந்த பால்யகால நட்பு கடைசிவரை உடன்பயனிக்கும்) நம் ஆறாவது வயதில்தான் முதல் முதலாய் பள்ளிக்குச் சென்றோம் இன்று 3 வயது எப்படாமுடியும் என காத்திருக்கிறார்கள் பெற்றோர்கள் கொத்திக்கொள்ள PLAY SCHOOLஸும் வலைவிரித்துக் காத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் தன் குழந்தை முதலாவதாய் வரவேண்டுமென ஆசை அத்தனை பெற்றோர்க்கும் உண்டு ஆனால் அதற்கான வயதுக் குழந்தைக்கு இல்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் தன் குழந்தை முதல் ரேங்க் எடுத்திருந்தாலும் ஏற்கனவே முதல் ரேங்க் வாங்கிய குழந்தை இப்ப என்ன ரேங்க் என்ற அக்கறை எல்லாக் குழந்தைகளுமே குழந்தைகள்தான் என்பது புரிந்த கேள்வி, மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது. பணம் துரத்திப்பறவைகள் மற்றும் காமம் கடந்த ஆட்கள் வேண்டும் அத்தியாயங்கள் மக்களின் வறுமையும் அதன் விளைவான விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்கள் பற்றி மிகமிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கொடியது கொடியது வறுமை கொடியது அதனினும் கொடுமை இளமையில் வறுமை. வறுமை காரணமாய் இளமையிலேயே பணிச்சூழலுக்குத் தள்ளப்பட்டு அங்கே தன் குடும்பச்சூழலிலிருந்து மெல்ல விலகி தன் வாழ்க்கைப்போக்கை தானே தேர்ந்தெடுக்கும் நிலையை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி அதன் விளைவாய் ஏற்படும் கூடா நட்பு இவை சார்ந்த ஆட்களை என் உடனிருந்தவர்களிடமே கண்டிருப்பதால் உங்கள் பதிவுகள் புரிந்துகொள்ளமுடிந்தது. உண்மையில் எல்லோராலும் படிக்கப்படவேண்டியவை. தமிழாசிரியை கடிதம் முனைவர் சு உஷாராணி, தமிழாசிரியை ஸ்ரீ கே.கே. நாயுடு மேனிலைப்பள்ளி விமானநிலைய அஞ்சல் கோயம்புத்தூர் 641 014 வணக்கம் பொதுவாக எந்த நூலை நான் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டாலும் ‘அட்டை டூ அட்டை’ படிப்பது எனது வழக்கம். சமர்ப்பணம் படிக்கும் போதே நூலாசிரியர், சாமானிய முகம் கொண்ட சராசரி மனிதரல்ல என்பது புரிந்தது. என் சமகால இளைஞர் ஒருவர் நாலு முழ வேஷ்டியுடன் கையில் துணிக்கடை மஞ்சள் பையோடு, பிழைப்புத் தேடி நகரம் வந்தது……பாலகுமாரன் சுஜாதா என எழுத்துக்களில் தம்மைப் புதைத்துக் கொண்டது……. எங்கே இந்தக் கிட்டங்கி வேலையிலேயே சோம்பேறியாக மாறிக் காணாமல் போய்விடுவோமோ? எனச் சுதாரிக் கொண்டு வேற வேலை தேடி ஓடியது….. எனத் தொடக்கமே விறுவிறுப்பு. தன் வரலாறு என்பதைக் காட்டிலும், நாவலைப் போலக் கதை சொல்லும் உத்தி, நூலின் போக்கைச் சுவராசியமாகக் கொண்டு செல்கிறது. ஏற்றுமதி நிறுவனத்தில் நுழைந்து, உண்மையான கடும் உழைப்பால் உயர்ந்து, உடன் பணிபுரிபவரின் ஏமாற்று வித்தையில் சிக்கி, பண இழப்புக்காகக் காரணம் சுமத்தப்பட்டு அந்நிறுவனத்தை விட்டு வெளியே நேர்ந்தது… எனச் சொல்லிச் செல்லும் போதே, ஏற்றுமதி நிறுவன வேலைகள், நடைமுறைகள், ஆட்களின் பங்களிப்பு என அழகிய ஆடையை நெய்வது போலச் செய்திகளை இழையோட விட்டிருக்கும் பாங்கு ரசிக்க வைக்கின்றது. நூலாக இருக்கும் நிலையிலிருந்து ஆடையாக வடிவமைக்கப்பட்டுப் பெட்டியில் அடுக்கப்படுவது வரை மிகத் தெளிவாக விவரிக்கும் பாங்கு … துறை சார்ந்தவர்கள் பயன் பெறப் பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் அமையும். ஏற்றுமதி அரசாங்கம் விதிக்கின்ற கட்டுப்பாடுகள், தரகர்களின் வேலை என்பதெல்லாம் துறை சார்ந்த விஷயங்களாகவே இருப்பதால் ஜனரஞ்சக ரசிப்புத் தன்மை ஈர்ப்பிலிருந்து விடுபட்டு விலகியே நிற்கின்றன. தாய்மொழி மீது கொண்ட நேசம், குழந்தை தொழிலாளர் உருவாக்கப்படும் சூழலியல் காரணங்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத மனிதர்கள் மீது, ஒரு சக மனிதனுக்கு ஏற்படும் தார்மீகக் கோபம், அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வை விவரித்தல் என நூலின் பாதை பல தளங்களின் பயணிக்கிறது. ஒரு பக்கம் அரசின் கொள்கைகள்… மறுபக்கம் சாயக்கழிவு நீர் பிரச்சனைகள் என இரண்டுக்குமிடையே இன்றைக்குத் தடுமாறிக் கொண்டிருக்கும் திருப்பூரின் நிலையை இந்நூல் அப்பட்டமாக வெளிச்சம் போடுக் காட்டுகின்றது. அரசின் பொருளாதார ஒப்பந்தங்களால், நம் நாட்டு உற்பத்திக்கான மூலப் பொருள் பற்றாக்குறை ஏற்படுதல், உற்பத்தித் திறன் குறைவு, வெளிநாட்டு ஏற்றுமதி என இவர் விவரித்துள்ள செய்திகளைப் படிக்கும் போது ஒரு சராசரி இந்தியக் குடிமகனாய் நமக்கும் கூடக் கொஞ்சம் கோபமும் இயலாமை குறித்து கழிவிரக்கமும் தோன்றுகிறது. விரும்பும் துணியின் வடிவத்தை வடிவமைத்துத் தரும் நிட்டிங் இயந்திர அமைப்பை இவ்வளவு அருமையாக விவரிக்க முடியுமா? என்ன! வலையை விரித்தது யாராடா? தலைப்பில் பகவான கண் விழித்து பார்த்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார். பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார் என் இடைத் தொடர்களை அமைத்திருப்பது நகைச்சுவையும் நையாண்டியும் கலந்து மாறுபட்ட உத்தி. அமெரிக்கர்களின் வெளிப்படையான அணுகுமுறைச் சொல்லி எச்சரித்து வாழ்வில் உயர வழியும் காட்டப்பட்டுள்ளதை. உரம் போடாமல் வளர்த்த பஞ்சிலிருந்து உருவாக்கிய ஆடைகள் குறித்த இன்றைய நிலையைச் சொல்லும் போது இயற்கை வேளாண்மையை விவரிப்பது இவரின் இன்னொரு விவசாயி முகம் தெரிகிறது. “அடித்தட்டு வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ எவராயிருந்தாலும் தங்களை நம்பி வாழ்பவர்களுக்காகவே தங்களை வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டி கட்டாயத்தில் இருக்கிறார்கள்” “அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒருவிதம ஒரு விதமான அடிமை” நச்சென்ற வரிகள் தொழில் நிலையில் பலமுறை ஏமாற்றங்களை எதிர்கொண்ட போதும், நம்பிக்கையும் உழைப்பையும் மட்டுமே துணையாகக் கொண்டு முன்னேறிய ஒரு இளைஞனின் கதை திருப்பூரின் முதன்மைத் தொழிலை அலசி நன்கு ஆராய்கின்ற நூல். வாழ்வில் உயர, தொழிலில் உயர, இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகளை விவரிக்கும் சுய முன்னேற்ற நூல் தொழில் முனைவோர் கடைப்பிடிக்க வேண்டிய சூட்சுமங்களைச் சொல்லிச் செல்கின்ற நூல் டாலர் நகரத்தை எப்படி வேண்டுமானாலும் இப்படிப் பெயரிட்டு அழைக்கலாம். நான் இதுவரையிலும் படித்த புத்தகங்களில் இது போன்ற வடிவமைப்பில், வாசிப்பவனை மனதில் கொண்டு அழகான தாளில் தெளிவான பெரிய எழுத்துக்களில் கொண்டு வந்த 4 தமிழ் மீடியா குழுமத்திற்குத் தமிழ்ப் புத்தக உலகமும், புத்தகப் பிரியர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றார்கள். இது போல இன்னும் பல புத்தகங்களை இது போன்ற நேர்த்தியுடன் கொண்டு என் வாழ்த்துகள்.. ஜோதிஜி உங்களுக்கு நடைமுறை எதார்த்த வாழ்க்கையை வசமாக்கத் தெரிந்ததோடு, வார்த்தைகளையும் வசப்படும் வித்தையும் வாய்த்திருக்கிறது. என் வாழ்த்துகள் அன்புடன் சு உஷாராணி 21.3.2013 [C:UsersjothiDesktopடாலர் நகரம் - விமர்சனங்கள்.png] முழுமையாக வாசித்த உங்களுக்கு என் அன்பும் நன்றியும். டாலர் நகரம் புத்தம் வாங்க (மகேஸ்வரி புத்தக நிலையம். திருப்பூர்) 944 20 04 254 இணையத்தில் வாசிக்க 5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by Jothi G ஜ… https://www.amazon.in/dp/B07ZXJQH4T/ref=cm_sw_r_tw_dp_U_x_Xgk5Db165B2F0 via @amazonIN https://www.facebook.com/jothi.ganesan FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.