[] சீவக சிந்தாமணி (உரைநடை) டாக்டர் ரா. சீனிவாசன் [] 1991 01/17/18 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது [சீவக சிந்தாமணி (உரைநடை).pdf] (Upload an image to replace this placeholder.) உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். --------------------- ------------- --------------- [CC-Zero-badge.svg] [Blank.jpg] [CC-logo.svg] --------------------- ------------- --------------- Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.+ முன்னுரை “சீவகன் காவியத் தலைவன்; அவனைச் சிந்தா மணியே’ என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டி ருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்று கூறிவிட்டனர் என்று தோன்றுகிறது. இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள். அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும். கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர் முன்னோடி என்று கூற வேண்டி யுள்ளது. கம்பருக்கும் இவர் முன் மாதிரியாக விளங்கி யுள்ளார். இதன் தனிச் சிறப்பு ஏற்கனவே வழங்கி வந்த கதையை இவர் தன் கவிதையாற்றலால் அழகுபடுத்தி யுள்ளமை, சங்க இலக்கியப் பாடல்கள் அவற்றின் உவமை மரபுகள் வருணனைகள் இதில் மிகுதியும் இடம் பெற்றுள்ளன. எனவே சீவக சிந்தாமணி பழந்தமிழ் இலக்கிய மரபுகளைக் காத்துத்தரும் ஒரு பெட்டகம் என்று கூறலாம். காலத்தில் முற்பட்டது என்பதால் மொழி நடை சற்றுப் பொருள் உணர அரியதாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் விளக்கவுரை தந்துள்ளார். நச்சினார்க்கினியர் தரும் செய்திகள் மிகவும் அரியன. பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய இப்பேராசிரியர் இதற்கும் உரை தந்திருப்பது பல அரிய வழக்குகளை அறிய உதவுகிறது. இதனை உரைப்படுத்தி இதன் கதையை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சியே இது. கதை சுவை மிக்கது; வீரகாவியம், இதில் கூறப்படும் நீதிக் கருத்துக்கள் அருமையானவை; வாழ்க்கைக்குப் பயன் படுபவை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள் தரும் நீதிகளை இந்நூல் ஆங்காங்குத் தருகின்றது. அவற்றில் இல்லாத நீதிக் கருத்துகளும் புதுமையாக இதில் தரப்படுகின்றன. எனவே இது உரைநடையாக்கம் செய்வதால் தமிழ்ப் புதையலை வெளிக் கொணரும் பணி செய்ததாக ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. இதனை நேர் கவி பெயர்ப்பாக எழுதினால் அது பொழிப்புரையாகுமே அன்றி உரை நடையாக்கம் ஆகாது. எனவே இதன் உள்ளடக்கமும் செய்திகளும் சிதையாமல் அதற்கு வடிவம் தரவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் இதை நேர் கவிபெயர்ப்பாக அமைக்காமல் இக்காலப் போக்கிற்கு இயையச் சுவையும் அழகும் நயமும் மிக்க உரை நடை வடிவம் தரப்பட்டுள்ளது. மூல நூலினின்று இது அடிப்படையில் மாறுபட வில்லை; மாற்றும் உரிமையை எடுத்துக் கொள்ளவில்லை; அதன் உள்ளடக்கம் சிறிதும் வழுவாமல் புதிய வடிவம் தந்திருக்கிறேன்; அவ்வளவுதான். கதையின் இயக்கத்திற்குச் சில கூட்டல் கழித்தல்கள் தேவையாயின. முன்பின் இணைத்துக் கூற வேண்டுவதாக ஆயிற்று. இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உரைநடைத் தமிழ் வேறு: அக்காலத் தமிழ் வேறு; ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திருத்தக்கதேவர் சொல்நடையை இன்று எடுத்து எழுத இயலாது. உவமைகளும் ஒரு சில புதிது தேவைப்பட்டன. அந்த வகையில் மூல நூலினின்று சற்று வேறுபடுகிறது. இது சமண நூல் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. எந்தச் சமயமும் மனித தர்மத்தையே கூறுகிறது. அதைக் கூறும் முதல் மனிதன் வழிபடும் கடவுள் ஆகிவிடு கிறார். அவர் பெயரில் இக்கருத்துகளுக்கு ஒரு சமய நெறி என்ற முத்திரை தரப்படுகிறது. அதன் கருத்துக்கள் கொள்கைகள் மானிட சமுதாயம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருப்பதால் அவற்றை வேறு புதிய போக்கில் விளக்க வேண்டியது ஆயிற்று. காலத்துக்கேற்ற வகையில் அறிவுக்கு ஏற்கக் கூடிய வகையில் அவை இங்குக் கூறப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக் கூறப் புதிய உத்திமுறைகள் கையாளப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே பாரதம் இராமாயணம் இவற்றை உரை நடையாக்கம் செய்திருக்கிறேன். அவை மூல நூலினின்று எந்த வகையிலும் மாற்றம் பெறாத வகையில் அடியொற்றி எழுதப்பட்டன. இதனை அவ்வாறு எழுத முடியவில்லை. இதில் இருக்கின்ற இன்பச்சுவைப் பாடல்கள் மூலநூலில் உள்ள வடிவத்தில் படிப்பதுதான் தகும்; உரை நடையாக்கம் செய்தால் இழிசுவையாக அமையும். இதுவரையில் யாரும் இதன் கதையை உரைநடையில் தர முன்வரவில்லை; அந்தக் குறையை இது நிறைவு செய்கிறது; அவ்வகையில் இது ஓர் உரைநடைக் காவியமாகத் திகழ்கிறது. ரா. சீனிவாசன்  இறைவணக்கம் மூவா முதலா உலகம் ஒரு முன்றும் ஏத்தத்      தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி ஒவாது நின்ற குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப      தேவாதி தேவன் அவன் சேவடி சேர்து மன்றே - - திருத்தக்கதேவர் (மூன்று உலகமும் ஏத்தும் தன்மையன்; பேரின்ப வடிவினன்; உயர் குணங்கள் அனைத்தும் தாங்கியவன்; தேவர்களுக்கு எல்லாம் முதன்மையானவன்; அவன் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக) உள்ளுறை பக்கம் +----------------------:+-----------------------+----------------------:+ | 1. | நாமகள் இலம்பகம் | 9 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 2. | கோவிந்தையார் இலம்பகம் | 23 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 3. | காந்தருவதத்தையார் | 32 | | | இலம்பகம் | | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 4. | குணமாலையார் இலம்பகம் | 68 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 5. | பதுமையார் இலம்பகம் | 98 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 6. | கேமசரியார் இலம்பகம் | 118 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 7. | கனகமாலையார் இலம்பகம் | 125 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 8. | விமலையார் இலம்பகம் | 144 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 9. | சுரமஞ்சரியார் | 153 | | | இலம்பகம் | | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 10. | மண்மகள் இலம்பகம் | 163 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 11. | பூமகள் இலம்பகம் | 180 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ +----------------------:+-----------------------+----------------------:+ | 12. | முத்தி இலம்பகம் | 183 | | | | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . . . . . . . . . | | | | . . . | | +-----------------------+-----------------------+-----------------------+ சீவக சிந்தாமணி 1. நாமகள் இலம்பகம் சீவகனின் தந்தை சச்சந்தன் ஆவான்; அவன் ஆண்ட நாடு ஏமாங்கத நாடு ஆகும்; தென்னையும், கமுகும், மாவும், பலாவும், வாழையும் செழித்து வளர்ந்தன. வானம் பொய்க்காததால் தான தருமங்கள் சிறந்து ஓங்கின. கல்வி கற்ற சான்றோர்கள் நாட்டுக்கு அறிவொளி பரப்பினர். செல்வம் ஈட்டிய வணிகர்கள் தாம் ஈட்டிய செல்வத்தைப் பகுத்து அறம் வளர்த்தனர். கலைகளில் வல்ல காரிகையர் ஆடலும் பாடலும் நிகழ்த்தி மக்களை இன்பமுறச் செய்தனர். உழவர்கள் கள்ளுண்டு களித்துப் பள்ளுப் பாட்டுப் பாடி மகிழ்ந்தனர். நெல்லை மேய வந்த புள்ளினத்தை ஒட்டுவதற்கு அவர்கள கல்லைத் தேடவில்லை; காதில் அணிந்திருந்த குழையைக் கழற்றி அவற்றின் மீது வீசினர் என்றால் அவர்கள் செல்வச் சிறப்புக்கு இதைவிட வேறு ஒர் எடுத்துக்காட்டுத் தர இயலாது. சச்சந்தன் ஆண்ட நகரம் இராசமாபுரம் ஆகும். அகழிகளும், மதில்களும் அந்நகரைச் சுற்றி வளைத்துத் தக்க அரண்களாக அமைந்தன. நால்வகைப் படைகளுடன் நானிலம் போற்றும்படி அவன் ஆட்சி செய்து வந்தான். கட்டிளங் காளையான சச்சந்தன் தன் மாமன் மகளை மணம் செய்து கொண்டான்; அவள் உருவில் ஊர்வசியை நிகர்த்து இருந்தாள். எழில் நிறைந்த இப்பேரழகியை மணந்தவன்; அவளைப் பொழில்களுக்கு அழைத்துச் சென்று இடையறா இன்பம் நுகர்ந்தான். அவன் மனம் ஆட்சியில் செல்லவில்லை; அதனால் தன் நம்பிக்கைக்கு உரிய அமைச்சன் கட்டியங்காரனை விளித்துச் சிறிது காலம் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் தருவது என்று தீர்மானித்தான். கட்டியங்காரன் அழைப்பிக்கப்பட்டான். “நீ இதற்கு அட்டி ஒன்றும் கூறக்கூடாது” என்று முன்னுரை கூறினான். “அவ்வளவு மட்டி அல்ல நான்; நான்கு தலைமுறைகளாக அமைச்சியல் அறிந்த குடும்பத்தில் பிறந்தவன்; எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் தான் மெய்ப்பொருள் என்று சொல்லிப் பழகியவன் யான்; சொல்லுங்கள் கேட்கிறேன்” என்றான். “சுமை என்றாலும் அது அமையும் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஒய்வில் செல்ல விரும்புகிறேன். சாய்வதற்கு நீ உதவ வேண்டும்; நான் வந்து பொறுப்பேற்கும் வரை இந்த ஆட்சியை நீ ஏற்றுத் தாங்கி நடத்தவேண்டும்; நம்பிக்கை நட்சத்திரம் நீ; அதனால் தம்பி என உன்னை மதித்துத் தருகிறேன்; ஏற்று நடத்துக” என்றான். ஆட்சி அவனிடம் தரப்பட்டது. அவன் வேண்டா விருப்போடு பதவியை ஏற்றுக்கொண்டான். அந்தப் பூனை பால் குடிக்காது என்று நம்பினான். சச்சந்தனை இல்லற இன்பம் ஈர்த்தது; நாட்டின் நல்லறத்தை மறந்து விட்டான். தோள்வலி காட்டி ஆட்சியைச் சுமக்க வேண்டியவன் வளையலுக்கு வளைந்து தாழ்ந்து விட்டான். கதைகள் பல பேசினர்; விடுகதைகள் பல விடுத்து வினாக்கள் தொடுத்தனர். நாடகம் நயந்தனர்; இன்னிசைப் பாடல் கேட்டனர். அந்தப்புரத்தில் சுந்தரிகள் வந்து அவனைச் சந்தித்து அரசியைப் புகழ்ந்து வந்து உரையாடினர். சிலம்பு ஒலியும், வளையல் ஒலிகளும், மேகலை ஒலியும் செவிகளில் விழுந்து இனிய சங்கீதத்தைத் தந்தன. மாலைப்பொழுது ஆடவேண்டிய விளையாட்டை இடைவேளையிலும் தொடர்ந்தனர். கவலை என்பது என்ன என்று தெரியாமல் அவளை அவன் இன்புஊட்டி வந்தான்; அவளும் அவன் மீட்டும் கீதத்துக்கு யாழின் நரம்புகளாகச் செயல்பட்டாள்; நாதம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இடையில் நரம்பு அறுந்து விட்டது போன்ற கீறல் உண்டாகியது. “என்ன ஏதோ மாதிரியாக இருக்கிறாயே ?” என்றான். “எனக்கு ஏதோ புதிய அச்சம் தோன்றுகிறது; ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை.” “காரணம் ?” “நீங்கள் கவலை இல்லாமல் வெய்யில் படாமல் குளிரில் உறைந்து கிடைக்கின்றீர். எந்தக் கடமையிலும் நாட்டம் இல்லாமல் இங்கு வாட்டமின்றி இருக்கின்றீர்; ஏதோ எங்கோ ஒட்டை விழுந்துவிட்டது போல் தோன்றுகிறது.” “கோட்டை விடுவேன் என்று நினைக்கிறாயா” “செல்லும் கோடு நேர்க்கோடாக இருப்பது போல் தெரியவில்லை.” “கலைகள் அறிந்த உனக்குக் கணக்குக் கூடத் தெரியுமா?” “கனவு சாத்திரம் கற்றிருக்கிறீர்களா?” என்றாள். “ஒய்வாக இருக்கும்போது அதையும் கற்றிருக்கிறேன்.” “யான் கண்ட கனவு; அதன் பலன் கூற முடியுமா?” “விடுகதை விடுத்த எனக்கு இந்த இடுகதை விடுவிக்க இயலும்” என்றான். “அசோகமரம் ஒன்று நன்கு செழித்து வளர்ந்தது; திடீர் என்று அது பட்டுப்போகிறது; அடிமரம் காய்ந்து விடுகிறது. அந்த இடத்தில் புதிய செடி ஒன்று முளைக்கிறது. அதன் தலை முடியில் எட்டு மாலைகள் விழுந்து அதை அழகு செய்கின்றன. இது நான் கண்ட கனவு” என்றாள். “பழமை அழிகிறது; புதுமை தோன்றி வளர்ந்து சிறப்படைகிறது. இதுதானே வாழ்க்கை நியதி” என்று விளக்கினான். “உங்களை இது எந்த அளவில் பாதிக்கும்?” என்று கேட்டாள்; அவளுக்கு மேலும் விளக்கம் தர அவன் விரும்ப வில்லை. “கனவுகள் பலிப்பதும் உண்டு; பலிக்காமல் போவதும் உண்டு” என்று மழுப்பினான். “சோதிடம் போன்றதுதான் இது” என்று அமைதிப்படுத்தினான், நாட்கள் சென்றன; உழுதவன் நிலத்தின் விளைச்சலைக் காண்கிறான்; அவளோடு கழித்த நாட்கள் பழுது ஆகவில்லை; கன்னிமை கனிந்து தாய்மையாகிறது; பெண்மையின் உயர்வுக்குக் காரணமான தாய்மை அவளை வந்து அடைந்தது; வெறி கொண்டு விலங்காக வாழ்ந்தவன் நெறிகாண முயன்றான். புலன் இன்பம் நுகர்ந்தவன் தன் புலன் அறிவு செயல்படத் தொடங்கியது; அவள் உருமாற்றம் அவன் உள்ளத்தைத் திருத்தியது. அவள் தோள்கள் மெலிந்தன; வாய் விளர்த்தது; கண் பசந்தது. முலைக்கண் கரிந்தது; செப்புப் போன்ற அவள் கொங்கை பால் சுமந்தது. இடை பருத்தது: சூல் உற்றாள்; அதனால் அவள் இள நலம் தொலைந்தது. அவனுக்கும் கவர்ச்சி குறைந்தது. அவள் வயிற்றை அவ்வப்பொழுது உதைத்து உயிர்த் துடிப்பைக் காட்டி வந்த மதலையின் எதிர்காலம் அவன் கண்முன் நின்றது. கட்டியங்காரன் ஆட்சியைத் தராவிட்டால், எதிரியாக மாறிப் போர் தொடுத்தால் அந்த நினைவு அவனை அலைக்கழித்தது. தான் அழிந்தாலும் தன் மனைவியையும் வயிற்றில் உருவாகும் உதயகுமரனையும் அப்புறப்படுத்த வேண்டும்; அவர்கள் தப்பித்துச் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ற உபாயத்தைத் தேடினான். மயனுக்கு நிகரான தச்சனை அழைத்து மயிற் பொறி ஒன்று செய்து தருமாறு வேண்டினான். அது பறக்கும் தட்டாக இருக்கவேண்டும் என்று விரும்பினான். சிற்ப நூல் வல்லவன் தன் கற்பனை கொண்டு ஒப்பனை மிக்க மயிற் பொறி ஒன்றைப் பழைய கந்தல் துணிகளையும், பருத்தியையும், அரக்கையும், நூலையும், பிசினையும், மெழுகையும் வைத்து நன்கு பக்குவமாகச் செய்து தந்தான். அதை இயக்குவதற்குத் தக்க விசைப்பொறிகளையும் அமைத்துக் கொடுத்தான். அதனை மேலே செல்லவும் கீழே இறக்கவும் திருகுவதற்கு வேண்டிய கருவிகளைப் பொருத்தி வைத்தான். ஏழே நாளில் இதை அழகுறச் செய்து முடித்தான். அதில் ஏறி மேலே செல்லவும், விண்ணில் பறக்கவும், கீழே இறங்கவும் தக்க பயிற்சியும் தந்தான்; ஆபத்துக் காலத்தில் தப்பித்துச் செல்ல அவளைத் தகுதி படைத்தவள் ஆக்கி வைத்தான்; அவளுக்கு அது உல்லாசப் பயணமாகவும் இருந்தது. கட்டியங்காரன் அமைச்சர் அவையைக் கூட்டினான். அவர்கள் ஆமோதிப்பு உரையை எதிர்பார்த்தான். ஆட்சியைச் சில நாள் ஏற்று நடத்தினான். அதில் கிடைக்கின்ற ஆதாயங்களை அறியத் தொடங்கினான். ஏன் இதைத் தானே தொடர்ந்து நடத்தக்கூடாது என்ற யோசனை தோன்றுகிறது. நீர் வெள்ளத்தில் நீந்திச் சுகம் காணும் வேந்தன் நிச்சயம் கரை ஏறித்தான் ஆகவேண்டும். அக வாழ்க்கையில் அகப்பட்டவன் புறப்பொருள் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமாட்டான்; வந்து திரும்பக் கேட்டால் என்ன சொல்வது? “உங்கள் கருத்து யாது?” என்று கேட்டான். “இல்லை என்று மறுத்துச் சொன்னால் என்ன?” என்று துணிந்து கேட்டான். “இதனை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்; நிழல் நிஜமாக ஆக முடியாது; சட்டம் இடம் தராது; அது மட்டுமல்ல; இது நம்பிக்கைத் துரோகம். மனைவியைப் பாதுகாத்துக் கொண்டிரு என்று சொன்னால் அவளை உடன் பிறந்த சகோதரியாக நினைக்க வேண்டும். அன்றி அவளை ஏன் தன் இன்பத்துக்குத் துணையாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைப்பது தவறு. தீட்டிய மரத்தையே கூர்பார்ப்பது போன்ற செய்கை இது; நீதி நூல்கள் இதற்கு இடம் தராது; பிறன் மனைவியை நினைப்பவன், கன்னியைக் காமத்தில் கலக்கியவன், நன்றி கொன்றவன், அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சன் இவர்கள் எல்லாம் இம்மையில் குட்ட நோயில் கெட்டு அழிவார்கள். இறந்த பின் நரகத்தில் இடர்ப்படுவார்கள்” என்று அறிவுரை கூறிப் பார்த்தனர். அவன் தேறுவதாக இல்லை; அவன் மைத்துனன் மதனன் கண் சிவக்கப் பேசினான்; “பண் மிகுக்க எங்களுக்கு ஏற்பப் பாட வேண்டியவர்கள் நீங்கள், அறம் சிறக்கப் பேசுவது தகாது; ஆண்டவர்கள் நாங்கள்; எங்கள் சொற்களைத் தாண்டிப் பேசுவது ஏற்க முடியாது; படை எடுத்துப் பாரைக் கட்டிக் காப்பது எம் திட்டம்; அதனால் சச்சந்தன் அடையப் போவதும் கட்டம்; இது எங்கள் இட்டம்” என்று கூறி முடித்தான். அவர்களைத் தடுக்க முடியாமல் போய்விட்டது அந்த அமைச்சர் வட்டம். போர்முரசு கொட்ட வைத்தான்; இரு திறத்துப் படைகளும் திரண்டன; அரசன் இருந்த அந்தப்புரத்தையும் அதைச் சுற்றி இருந்த அரணினையும் சூழ்ந்தனர். புகையைக் கண்டு நெருப்பு அணுகிவிட்டது எனச் சச்சந்தன் அறிந்தான். விசயையின் வயிற்றில் வளரும் மாணிக்கத்தைக் காக்கும் பொறுப்பினை உணர்ந்தான். வாள் கொண்டு போருக்குப் புறப்பட்டவன் ஆள் அனுப்பி விசயையை மயிற் பொறியில் ஏறிச் செல்லுமாறு அறிவித்தான். விசயை மயிலேறிச் செல்லும் முருகன் ஆனாள்; அது பறக்கும் தட்டாகப் பறந்து சென்றது; அக நகர் விட்டு விண் நோக்கிப் புறநகர் நோக்கிச் சென்றது; போர் மூண்டுவிட்ட செய்தியை அங்குச் செவியில் வந்துவிழுந்த பேர் ஒலி அறிவித்தது; அது அவலக் குரலாக மாறியது; அரசன் இறந்துவிட்டான் என்பதை அவளால் அறிய முடிந்தது. விசையை முடுக்க மாட்டாமல் விசயை அசைவற்றுப் போனாள்; பொறி தானாகக் கீழே இறங்கியது. கதிரவன் கால் சாய்ந்து காரிருளைத் தோற்றுவித்தது. இருள் சூழ்ந்த சூழல்; தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஈம எரி ஒளி தந்து கொண்டிருந்தது. அழகியர் ஆடல்களைக் கண்ட அவள் பேய்கள் கூத்தினைக் கண்டாள். அவற்றின் நிழல்கள் எங்கும் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன; ஆந்தைகள் அலறின; கோட்டான்கள் கூவின; நரிகள் ஊளை இட்டன; அதனால் அந்த இடம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவிடம் என்பதை அறிந்தாள்; முற்றிய கரு வயிற்றில் இருக்க விரும்பவில்லை; மருத்துவர் உதவி வந்தால்தான் வெளியே தலை காட்டுவேன் என்று அது வேலை நிறுத்தம் செய்யவில்லை. இந்த உலகத்தைக் கண் திறந்து பார்க்க நினைத்தது. அங்கேயே அவள் அக்குழந்தையைப் பிரசவித்தாள்; அதன் அழுகுரல் கேட்டு அவள் அகம் மலர்ந்தாள். அந்த இடுகாட்டில் நடு இரவில் அவளுக்குப் பக்கத்துணை யாரும் இல்லை என்பதைத் தெய்வமே தாங்கிக் கொள்ள விரும்பவில்லை. புறங்காட்டில் காவல் தெய்வமாக இருந்த பெண் தெய்வம் ஒன்று சண்பகவல்லி என்ற பெயரில் கூனி வடிவில் அங்கு வந்து உதவியது. பழகிய முகம் போல் இருந்தது; அது தெய்வம் என்பதை விசயை அறிந்திலள். இருண்ட அவள் வாழ்வில் மின்னல் கீற்றுப்போல அந்தச் சின்னகுழந்தை அவளுக்கு ஆறுதல் தந்தது. வாழ்க்கையில் ஒளி கிடைத்தது போல இருந்தது; நாட்டைப் பிரிந்தாள்; கணவனை இழந்தாள்; துயரத்தில் உழந்தாள்; அந்த நிலையில் அவனைக் கண்டு மகிழ்ந்தாள்; கேட்டது தரும் கற்பகத்தரு போலவும், வேட்டது கொடுக்கும் காமதேனு போலவும் நல்கும் ஒளிமிக்க சிந்தாமணியாக அவன் அவளுக்கு விளங்கினான். கண்ணே மணியே என்று கொஞ்சாமல் தன் வாழ்க்கைக்கு ஒளி காட்டும் சிந்தாமணியே என்று அழைத்து மகிழ்ந்தாள். கொஞ்சும் சூழ்நிலையில் அவள் இல்லை; அஞ்சும் சூழ்நிலையில் அவள் கிடந்தாள். உதவிக்கு வந்த தெய்வம் அவளுக்கு வழி காட்டியது. அலமந்து நடந்து செல்வதற்கு அல்ல; அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அறிவிக்க. “அரச மகன் பூமித்தாய் பெற்ற திருமகனாக அவதரித்துள்ளான்; முடிவிடத்தை முதலிடமாகக் கொண்டான். பிறப்பினால் ஒருவர் உயர்வு அடைவதில்லை. வளரும் சிறப்பினால்தான் அவன் மேன்மை அடைவான். இங்கே வெட்டிக்குப் போட்டு வைத்தால் இங்கே காவல் காக்கும் வெட்டியான்தான் எடுத்துச் சென்று வளர்ப்பான்; அதிகமாகப் போனால் அவன் ஒரு அரிச்சந்திரன் ஆக முடியும்; நீ அவனை எப்படி வளர்க்க முடியும்? கட்டியங்காரன் அறிந்தால் முளையிலேயே களைந்து விடுவான். அதனால் அவனைத் தக்கவரிடத்து விடுவதுதான் நீ செய்யத்தக்கது” என்று கூறினாள். அறிவு மிக்க அன்னையாகையால் குழந்தையைச் செல்வச் செருக்கு மிக்கவரிடம் ஒப்படைக்க ஒருப்பட்டாள். பேழையிலே வைக்கப்பட்ட கன்னனைப் போல் அவன் அங்கே கிடத்தப்பட்டான். தேர் ஒட்டி எடுத்து கன்னனைப் பேரும் புகழும் வாய்த்த மன்னன் ஆக்கினான்; அதே போலக் கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் தன் மகவைப் பறி கொடுத்துவிட்டுத் தறிகெட்டு வந்து கொண்டிருந்தவன் அங்கே கிடத்தப்பட்ட குழந்தையைக் கண்டான்; வறியவனுக்குத் தனம் கிடைத்தது போலவும், விழியற்றவனுக்கு ஒளி கிடைத்தது போலவும் அவன் மகிழ்ந்தான்; தன் மனைவி சுநந்தையிடம் தந்து அவள் சிந்தையில் தோன்றிய துயரைத் துடைக்க முடியும் என்று முடிவு செய்தான். அந்தக் குழந்தை கையில் அரச மோதிரம் இருந்தது; அதை அவன் அன்னை போட்டு வைத்தாள். கள்ளக் காதலில் உள்ளம் பறிகொடுத்தவள் சுமக்க மாட்டாமல் இறக்கி வைத்த சுமை அல்ல அது; அரச மகனாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டான். அந்தக் குழந்தையை அவன் கையில் எடுத்த போது அது தும்மியது; அப்பொழுது கம்மிய குரலில் ‘சீவ’ என்று மறைந்திருந்த விசயை வாழ்த்திய ஒலியைக் கேட்டான். சீவன் இழந்த அவளுக்கு இவன் சீவனாக அமைந்தான். இறந்த மகவைப் புதைக்க வந்தவன் அதைப் புதைத்து விட்டுப் புதையல் கிடைத்ததைப் போல இப்புதியவனை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி விரைந்தான். பத்து மாதம் வயிற்றில் சுமந்து காத்த மகவை இறக்கி வைத்து அதைக் கண்டு மகிழ வேண்டியவள் அதனை மார்போடு அணைத்துப் பாலூட்டக் காத்திருந்தவள். வாய் திறந்து அழாத அந்தக் குழந்தையைச் சடமாகக் கண்டவள்; இப்பொழுது மனம் திடப்படுத்திக்கொள்ளப் புதிய செய்தி கொண்டு வந்தான். “அவன் ஆயுள் கெட்டி; விழித்துக் கொண்டான்” என்று அவளிடம் சொல்லி அக்குழவியைக் கொடுத்தான். தன் மழலைச் செல்வம் தன்னிடம் சேர்ந்துவிட்டது என்பதால் அவள் மகிழ்ந்து அவனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள். செத்தவன் உயிர் பிழைத்தான் என்ற செய்தி வியப்பும் மகிழ்ச்சியும் விளைவித்தது. பறை அடித்த இடத்தில் முழவு ஒலித்தது. மகிழ்ச்சி ஆரவாரம் பெருகியது. கந்துக்கடன் மகன் பிழைத்தான் என்ற செய்தி கட்டியங்காரன் காதுக்கு எட்டியது. கந்துக்கடன் அவனுக்கு நெருங்கிய பந்துவைப் போலப் பழகியவன், நாமாவளி பாடி நல்ல பெயர் எடுத்தவன். அதனால் அவனும் பொன்னும், வாழ்த்துரையும் அனுப்பிவைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். வந்தவர்க்கு எல்லாம் பொன்னும் பொருளும் வாரித் தந்து தன் மகிழ்ச்சி வெள்ளத்தைக் கந்துக்கடன் தெரியப்படுத்தினான். சிறையில் தேவகி வயிற்றில் பிறந்த கண்ணன் யசோதையால் வளர்க்கப்பட்டதைப் போல இடுகாட்டில் பிறந்த சீவகன் சுநந்தையால் எடுத்து வளர்க்கப்பட்டான். இராசமாபுரம் கோகுலம் ஆகியது, பிறக்கும் குழந்தை சிறப்படைய அதற்குப் பெயர் சூட்டி அவனைப் பெரியோன் ஆக்க விரும்பினர்; சீவகன் என்ற பெயரே சிறந்தது என்று கந்துக்கடன் கழறச் சுநந்தை அதற்குத் தடை சொல்லவில்லை; செல்வக்குடியில் அவன் வளர்ந்தமையின் செவிலித் தாயர் அவனைச் செம்மையாகச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்தனர்; செவிக்கு வீரம் மிக்க கதைகளைச் சொல்லி அவனைப் புவிக்கு நாயகன் ஆக்க வழி செய்தனர். தாலாட்டி வளர்த்தபோது அவனுக்கு இசைக் கலை அறிமுகம் ஆகியது. முக்கால் தேரைச் செலுத்த வைத்து அவனை நடைபயிலச் செய்தனர்; யானை, தேர், குதிரை இவற்றின் பொய்ம்மை வடிப்புகளில் அவனை அடியெடுத்து வைக்கக் கற்றுத்தந்தனர். ஊர்திகளைத் தள்ளி உரம்கொண்ட நெஞ்சும் உடலும் பெற்றான். பூக்களில் தாமரை போன்றும், விண்மீன்களிடையே ஒளிவீசும் திங்களைப் போன்றும், அடர்ந்து எதிர்ப்பதில் சிங்கம் போன்றும் ஆற்றலோடும் வீரத்தோடும் தனித்துச் செயல்பட்டான். மழலை மொழி பேசி மகிழ்வித்த அவனுக்கு எழுதப்படிக்கக் கற்றுத்தர விரும்பினர். அவனை ‘மையாடுக’ என்று சொல்லி ஒலை தந்து எழுத வைத்தனர். ஆரம்பக்கல்வி ஆறாம் வயது வருவதற்குள் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் நாமகள் இலம்பகம் ஆகியது. சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம் என்பதற்கு ஏற்பத் தொடர்ந்து கல்வி கற்றான். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்னும் குறட்பாவின் கருத்துப்படி அவன் கற்கவேண்டிய நூல்களைக் குற்றமறக் கற்றான்; சான்றோர்கள் நூல் வழியாகத் தெரிவித்த அறக் கருத்துக்களை அவன் ஆழ்ந்து கற்று ஒழுக்கத்தால் சிறந்த நன்மகனாக வளர்ந்தான். கல்வி கேள்விகளில் சிறந்ததோடு ஆன்ற ஒழுக்கம் மிக்கவனாக வளர்ந்தான். வயதுக்கேற்பப் படிப்பும் கலைகளும் கற்றான்; வீரனாவதற்கு வேண்டிய வித்தைகளைப் பெற யானை ஏற்றம், குதிரை ஏற்றம், மற்போர், விற்போர் முதலிய படைக்கலப் பயிற்சிகளைக் கற்று நிகரற்ற வீரம் உடையவனாகத் திகழ்ந்தான். யாழ், குழல் முதலிய இசைக் கலைகளிலும் தேர்ந்தவனாக விளங்கினான். கல்வி நலனும் படைப்பயிற்சியும் கற்ற அக்காளையை அவன் ஆசிரியராக விளங்கிய அச்சணந்தி என்பார் அருகு அழைத்து அன்பு குழையப் பேசி எதிர்காலத்தை வரைபடம் காட்டி அறிவுறுத்தினார். அவர் இராசமா புரத்தில் நீண்ட காலம் தங்கியவர்; அதனால் அவர் அங்கு நடந்தவை எல்லாம் கேட்டு அறிந்தவராக இருந்தார். கந்துக்கடன் இல்லத்துக்கு வந்தபோது சீவகனின் தாய் சுநந்தை அவரை இன்முகம் காட்டி நல்வரவு தந்து அவர் பசிக்கு உணவு அளித்துக் களைப்பைப் போக்கினாள்; பச்சிளம் குழந்தையாக இருந்த இந்தப் பவித்திரனைக் கண்டதும் அவர் இதுவரைதான் உழந்து வந்த யானைத் தீ என்னும் நோய் நீங்கப் பெற்றுப் பொலிவோடு விளங்கினார். அன்பும் பண்பும் மிக்க அந்தக் குடும்பத்தில் அடி எடுத்து வைத்தபோதே அவர் நோய் நொடி நீங்கி நலம்மிக்க யாக்கை பெற்றார். அது அவருக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. காலைக் கதிரவனைப் போல ஒளி வீசிய அந்த வாலைக் குமரனுக்குத் தான் அறிந்த படைக்கலப் பயிற்சியைக் கற்றுத்தருவதில் பெருமை கண்டார். நாள் செல்லச் செல்லச் அவன் நாட்டு இளவரசன் என்பதையும். அறிந்து கொண்டார். எனவே அவனுக்குக் கல்வி கற்பிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டார். இதுவரை சீவகன் அறியாத சில உண்மைகளைக் கதை சொல்வது போல அவனுக்கு எடுத்து உரைத்தார், “நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்க வேண்டும். இந்த நாட்டின் ஆட்சி சீர்குலைந்து இருக்கிறது, காரணம் தெரியுமா? மன்னவன் மக்களுக்கு உயிர் போன்றவன்; அவன் வறியவன் காக்கும் வயல் போல மக்களைக் காக்க வேண்டும். நாடு என்பது நிலத்தால் சிறப்புப் பெறுவது இல்லை; அது மேடு ஆயினும் சரி, காடு ஆயினும் சரி; விளையும் நிலமாயினும் சரி; விளையாத கரம்பு நிலமாயினும் சரி; அதனால்மட்டும் மக்கள் வளமுடன் வாழ்வது இல்லை; அதை ஆளும் அரசன் நாட்டைச் செம்மையாக ஆட்சி செய்தால்தான் செழுமை சேரும்; அறம் நிலைக்கும்; மக்கள் மக்களாக வாழ்வர்.” “உண்பதற்கு உணவும், உடுக்க உடையும், வாழ வசதிகள் மட்டும் இருந்தால் போதுமா! மாந்தர் ஒழுக்கம் மிக்கவராக வாழ வேண்டும்; இன்று எந்த நிலையில் நாடு இருக்கிறது; தலைவன் ஒழுக்கக் கேடனாக இருக்கிறான். காமக் கணிகையரை ஏமமாக அடைந்து இன்பக் கேளிக்கையில் ஈடுபட்டு நாட்டுப் பொருளை நாசம் ஆக்குகிறான். நல்லோர் உரைகளை நாடாது அல்லோர் இழி சொற்களைக் கேட்டு நெறி தவறுகிறான்.” “இந்த நிலை மாறவேண்டும். அப்பொழுதுதான் நாடு சீர்ப்படும்” என்று கூறினார். “அவன் நாட்டு அரசன் ஆயிற்றே, அவனை எப்படி அகற்றமுடியும்?” “அதுதான் இல்லை; இதிலே ஒரு வரலாறே அடங்கி இருக்கிறது. இந்த நாட்டை ஆண்டவன் சச்சந்தன் என்பவன்; அவன் ஆட்சிக் காலத்தில் நாடு சீராக இருந்தது. அவன் வயதில் இளைஞன், அதனால் அவன் ஒரு தவறு செய்துவிட்டான். அவன் மாமன் மகளை மணந்து ஆட்சியை இந்தக் கட்டியங்காரனிடம் ஒப்புவித்துத் தன் புது மனைவியோடு இன்பமாகக் காலம் கடத்தினான். கட்டியங்காரன் அப்பொழுது அமைச்சனாக இருந்தான். அவன் அரசனைக் கொன்று ஆட்சியைத் தனது உடைமையாக்கிக் கொண்டான்.” “அரசனுக்குப் பிள்ளை குட்டி எதுவும் பிறக்க வில்லையா?” “புத்திசாலித்தனமாக மயிற்பொறி ஒன்றில் தன் மனைவியை ஏற்றி அனுப்பினான்; அது இடுகாட்டில் இறங்கியது; அங்கே அவன் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.” “அவன் உயிரோடு இருக்கிறானா? அவன் என்ன செய்கிறான்?” “ஏறக்குறைய உன் வயதுதான் இருப்பான். அவன் எங்கே வளர்கிறானோ என்ன செய்கிறானோ அவன் தாய் என்ன ஆனாளோ எதுவும் தெரிய வாய்ப்பில்லை” என்றார். “ஐயா! அவன் இருக்குமிடம் சொன்னால் அவனை அழைத்து வருவேன்; இவனை எதிர்த்து ஆட்சியை அவனிடம் ஒப்புவிப்பேன்; மக்களைப் புரட்சி செய்யச் சொல்லித் துண்டி விடுவேன்” என்றான். “அவசரப்படாதே; இன்னும் ஒரு வருஷம் போகட்டும்; அதற்குப் பிறகுதான் இவனை எதிர்க்க முடியும்” என்றார். “முதலில் அவனை எப்படித் தேடுவது? அதைச் சொல்லுங்கள்” என்றான். “நீ நேரே வீட்டுக்குப் போ; நிலைக் கண்ணாடி முன் நில், அதில் ஒருவன் நிழலாடுவான். அவன்தான் அந்த இளைஞன், அரச மகன்; சீவகன்” என்றார். “அவசரப்படாதே; நீ இப்பொழுது கந்துக்கடனின் மகன்; பிறப்பால் அரசமகனாயினும் அதற்கு வேண்டிய சிறப்புகள் உன்னிடம் இல்லை; அதற்கு வேண்டிய தகுதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்; அரச மகளிரை மணந்து அவர்கள் துணை கொண்டு படை திரட்டி அவனை எதிர்க்க வேண்டும். நீ இப்பொழுது தனி மனிதன்; தனிமரம் தோப்பாகாது; படைத்துணை இல்லாமல் அவனை எதிர்க்க இயலாது; காலம், இடம், துணைவலி மூன்றும் சேரும்போது எதிர்க்கவேண்டும்” என்று அறிவுரை கூறி அவனை விட்டுப் பிரிந்தார். அவர் தம் வரலாற்றை அவனுக்கு எடுத்துக் கூறினார். வெள்ளிமலை என்னும் பகுதியில் வாரணவாசி என்னும் ஊருக்கு அரசனாக இருந்தவர்; தவம் செய்ய வேண்டி நாட்டைத் தம் மகனிடம் ஒப்புவித்துத் தென்புலம் நோக்கி வந்தார். வரும்போது யானைத் தீ என்னும் நோய் அவரை வாட்ட அது தீரப் பல தலங்களும் சுற்றி வந்தார். இராசமாபுரம் வந்த பிறகு சுநந்தையின் கைச்சோறு உண்ட பின் தன் மெய்ச்சோர்வு நீங்கி நோயற்ற வாழ்வை அடைந்தார். அதற்குக் கைம்மாறாகவே சீவகனுக்குப் படைக்கலப் பயிற்சி அளித்தார். இவ்வரலாற்றைச் சொல்லிச் சீவகனிடம் விடைபெற்றார். 2. கோவிந்தையார் இலம்பகம் ஆசிரியர் அச்சணந்தி அகன்றபின அவர் காட்டிய வழியே மேலும் கல்வியும் கலைகளும் கற்று எல்லாத் துறைகளிலும் வல்லவனாக விளங்கினான்; வீணை வித்தகனாகத் திகழ்ந்தான். ஞானம், அழகு, வீரம் மூன்றும் அவனிடம் முழு அளவு நிலவின. சுநந்தைக்கு மற்றொரு மகன் நந்தட்டன் என்பான் பிறந்து இவனுக்கு உற்ற துணைவனாகச் செயல்பட்டான். இராமனுக்கு வாய்த்த இலக்குவனாக அவன் நிழற்போல அவன்பின் தொடர்ந்தான்; கந்துக்கடனுக்கு வாழ்க்கைத் துணைக்கு சுநந்தையும், சுகத்துக்குச் சில கணிகையரும் வாய்த்தனர். வெள்ளைக் கணக்கில் கட்டிய மனைவி என்றால் கருப்புக் கணக்கில் விருப்பமுள்ள மாதர்களாக இவர்களை வைத்துக் குடும்பம் நடத்தினான்; விளைவு நபுலன் விபுலன் என்ற நன்மக்கள் இருவர் அவன் பெயரைச் சொல்லினர். இராம காதையில் இராமனுக்கு வாய்த்தது போல் தம்பியர் மூவர் வாய்த்தனர். பதுமுகன் என்பவனும் புத்திசேனன் என்பவனும் இவனது வலது கரமாகச் செயல் பட்டனர். தம்பியரும் தோழர்களும் அறிவு மிக்க அமைச்ச ராகவும், செயலாற்றும் வீரர்களாகவும் செயல்பட்டனர். வேளைக்குச் சோறு, துணிமணிகள்; அடிதடி, நாளைக்கு ஒரு நாடகம்; கவலையில்லாத கட்டவிழ்ந்த வாழ்வு இவர்களைக் கவ்வியது. இராசமாபுரத்தில் பேசுவதற்கும், பேசிச் சிந்திப்ப தற்கும், சிந்தித்துச் செயல்படுவதற்கும் அவ்வப்பொழுது ஏதோ சில நிகழ்ச்சிகள் தோன்றாமல் இல்லை. தோட்டத்துக்குக் காவல் இல்லையென்றால் பூப்பறிக்க யார் வேண்டுமானாலும் வரலாம்; காய்த்து முதிர்ந்த கனிகளைப் பறித்துச் சென்றால் தடுத்து நிறுத்த ஆள் இல்லாத அலங்கோல ஆட்சியாகக் கட்டியங்காரன் ஆட்சி இருந்தது. கொள்ளையடித்துக் குட்டி அரசு நடத்தும் வேடுவர்கள் சிலர் இந்த இராசமாபுரத்தைச் சூழ்ந்தனர்; நகரின் புறப்பகுதிகளில் காட்டில் புல்லை மேய்வதற்கு ஊர் எல்லை கடந்து இடையர்கள் தம் மாடுகளை ஒட்டிச் சென்றனர். வேடுவரை எதிர்க்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. அந்த மாடுகளை அவ்வேடுவர்கள் வளைத்துக் கொண்டனர். போரில் இளைத்து ஊர் திரும்பியவர்கள் அப்பசுக்களின் உரியவரிடம் வந்து செய்தி அறிவித்தனர். வீட்டுக்கு வரும் ஆநிரைகளை எதிர்பார்த்துக் குரல் கொடுத்து ஏங்கும் கன்றுகளை வீட்டு மகளிர் கட்டிக் கொண்டு அழுது ஆறுதல் கூறினர். பசுவை இழந்த இடையர் அரசனிடம் சென்று அவன் கடை வாயிலில் நின்று முறையிட்டனர்; குறை கேட்டவன் படைகளை அனுப்பி நிரை மீட்டு வருக என்று ஆணையிட்டான். அவன் மைத்துனன் மதனன் தலைமையில் அரசனின் படை வீரர்கள் திரண்டு சென்றனர். முரட்டு வேடுவர்களை விரட்டி அடிக்க முடியாமல் அவரவர் தம் உயிரைப் பெரிதாக மதித்து உடம்புக்கு ஊறு இன்றி ஊர் திரும்பினர். பசுக்களைப் பறி கொடுத்தவர்கள் செய்வது அறியாது கலக்கம் அடைந்தனர்; இடையர்களின் தலைவனாகிய நந்தகோன் அவற்றை மீட்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்; ஊரில் இந்தச் சோம்பேறி இளைஞர்கள், “மாடு போனால் மறுபடியும் ஈட்டிக் கொள்ளலாம். இதற்காக யார் போரிடுவது” என்று சோர்ந்துவிட்டனர். நந்தகோனின் மகள் அழகில் மிக்கவள். அவளை அடைவதற்கு அந்தச் சேரியில் இருந்த இளைஞர் ஆர்வம் கொண்டிருந்தனர். ‘எருதுகளின் கூரிய அம்பினை அஞ்சுபவனை இடையர் பெண் விரும்பமாட்டாள்’ என்று அவர்கள் வீரம் மதிக்கப்பட்டது. வீரத்திருமகனையே இடைப் பெண்கள் விரும்பினர். “வீரம் மிக்கவனுக்கு அவள் தாரம் ஆவாள்” என்று நந்தகோன் பறையறைவித்தான். ஆநிரையை மீட்டுக் கொண்டு வரும் வீரத்திருமகனுக்குத் தன் மகள் உரியள் எனவும், அவளோடு வரிசை என்ற பேரால் பசுக்கள் ஈராயிரமும் பொற்பாவைகள் ஏழும் தருவதாகவும் உரைத்தான். அந்த ஊர் இளைஞர்கள் செய்தி கேட்டார்கள். “கோவிந்தை” என்ற அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ளக் காத்திருந்தவர்கள் எல்லாம் காத தூரம் ஓடினார்கள். “கட்டி வெண்ணெய் போன்ற காரிகை கோவிந்தையானாலும் சரி, கொட்டிய முல்லை போன்ற நிறம் உடைய அரமகளிர் ஆயினும் சரி; வெட்டி வீழ்த்தும் செயல் உடைய வேடுவரை எதிர்க்க நம்மால் முடியாது” என்று விதிர்விதிர்த்து ஒடுங்கினர். சீவகனின் தோழர்களும், தம்பியரும் இச்செய்தி கேட்டனர். புதுமுகம் என்றால் நகைமுகம் காட்டும் பதுமுகன் சீவகனிடம் வந்து போர் தொடுப்போம் என்று துண்டினான். “நம்மால் இயலுமா” என்று சிந்தித்துப் பார்த்தனர். “அழகி ஒருத்தி கிடைப்பாளே” என்று அங்கலாய்த்தான் பதுமுகன். “அதற்காக நாம் வைரக் கத்தியில் கழுத்து அறுத்துக் கொள்ள முடியுமா? யோசித்துச் செயல்படுவோம்” என்றான் புத்திசேனன். அரச இரத்தம் சீவகன் உடம்பில் ஓடியது; குடி மக்கள் அவலம் தீர்ப்பது தன் கடமை எனக் கருதினான். “அந்நியர்கள் வந்து சூறையாட தந்நிலை மறந்து அடி பணிவதா? இது நம் ஆண்மைக்கு இழுக்கு” என்று கூறிப் படை திரட்டினான். கட்டியங்காரனது படைவீரர்களை அடித்துத் துரத்திய வேடுவர் சீவகன் தனி ஒருவன் தானே இவனை வெல்வது எளிது என்று துணிந்து முன் வந்தனர்; அவர்கள் தமக்கு நிகரற்றவர் என்பதால் அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்தான். கத்தியின்றி இரத்தமின்றிச் செய்த யுத்தமாக அது இருந்தது. அவர்கள் உயிர் பிழைத்தது போதும் என்று சொல்லி, பிடித்து வைத்த பசுவின் கூட்டத்தைக் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் தம் பகைவர்கள் அல்ல என்பதால் அவர்களை மன்னித்து விட்டான். அவர்கள் அது முதல் அந்த நகர் இருக்கும் திசை நோக்கித் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பசு நிரைகள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன; அவை தம் கன்றுகளை நினைத்துக் கொண்டு மடியில் நிறைத்திருந்த பாலை அடி வயிற்றில் சுமந்து அவற்றிற்கு ஊட்ட விரைந்தன. அவற்றைக் கண்ட பாவையர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு சீவகனைப் பாராட்டினர். நந்தகோன் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது; ஊரவர் ஆநிரைகள் வந்து சேர்ந்தமை, மற்றும் அரமகள் அனைய தன் மகளுக்கு உகந்த கணவன் நேர்ந்தமை, இவ்விரண்டும் காரணம். அவன் உள்ளக் குமுறலைச் சீவகன் முன் அள்ளிக் கொட்டினான். “தம்பீ! இதைக்கேள்; கேட்டபின் மறந்துவிடு; உன்னிடம் சொல்லத் தேவையில்லை; எனினும் சொல்லாமல் இருக்க முடியவில்லை; நாங்கள் கொடுங்கோன்மை மிக்க கட்டியங்காரன் ஆட்சியில் அகப்பட்டுக் கொண்டோம். பால் பொங்கிய இந்த நாட்டில் இப்பொழுது வறுமை குடிகொண்டுவிட்டது; நீர் நிறைந்த நாடு இது, அதனை வளைப்பதே நியதியாகக் கொண்டு வாழ்கிறான். இந்தக் கட்டியங்காரன், சச்சந்தன் அவன் ஒரு அரிச்சந்திரன்; அவன் மனைவி சந்திரமதி சுடுகாட்டில் தன் மகனை விற்று விடடு யாருக்காவது அடிமையாக இருக்க வேண்டும். அந்தச் சுந்தரி பெற்ற சுதந்திரன் இன்று எங்காவது வளர்ந்து கொண்டு இருக்க வேண்டும்; உன்னைப் பார்க்கும்போது அவன் நினைவுதான் எங்களுக்கு வருகிறது; ஏறக்குறைய உன் வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறோம். நிச்சயம் அவன் வளர்ந்து தந்தை இழந்த நாட்டை மீண்டும் பெறுவான் என்று நம்புகிறோம். அவன் ஒருவன்தான் இவனை வெல்ல முடியும். ஏன் என்றால் அவனுக்கு நாட்டு மக்கள் தக்க ஒத்துழைப்புத் தருவார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த நம்பிக்கை இருக்கிறது; காரிருள் என்றும் வானத்தை மூடிக் கொண்டு இருக்க முடியாது. கொடுங்கோல் மன்னர்கள் நீடித்து இருந்தார்கள் என்று சரித்திரம் பேசியதே இல்லை; ஏதோ உன்னைப் பார்த்ததும் இந்த எண்ண அலைகள் எழுந்து மோதுகின்றன. உன்னிடம் இதைச் சொல்ல வேண்டும் போல் இருந்தது; ஏன் இவன் இதெல்லாம் பேசுகிறான் என்று நினைக்கலாம்; மன்னித்துவிடு; அதிகம் பேசி இருந்தால். இது பொது விஷயம், நாட்டு அரசியல்; இனிச் சொந்த விஷயத்துக்கு வருகிறேன்.” “நாங்கள் இடையர் குலத்தில் பிறந்தவர்கள்; கண்ணன் யாம் வழிபடும் கடவுள்; அவனுடைய பெயரைத் தான் எனக்கு வைத்தார்கள். கோவிந்தன் என்று என்னை அழைப்பார்கள். எனக்கு வாய்த்த மனைவி மகா குணவதியாவாள்; நான் கிழித்த கோட்டை அவள் தாண்டியது இல்லை; பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்பார்கள்; அதற்கு அவள் இலக்கணமாக விளங்குவாள். பையன் பிறப்பான் என்று தான் எதிர்பார்த்தேன். பெண் பிறந்து விட்டாள், பையன் பிறந்திருந்தால் அவன் இந்தச் சொத்துகளுக்கெல்லாம் வாரிசாக வந்திருப்பான். பெண் என்றதும் என் மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்; திருமகளே எங்கள் வீட்டில் குடி பெயர்ந்ததுபோல இருந்தது. அவள் பிறந்ததும் எங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளே வந்தன. இன்றைக்கு இதே ஊரில் பெரும் புள்ளியாக நான் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மகள்தான். அவள் பிறந்த அதிருஷ்டம்; சிரித்த அவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனாலே தொட்ட இடம் எல்லாம் பொன்னாக விளைந்தது. இரு நூறு பசுக்கள் என் பாட்டனார் வைத்திருந்தார். என் தந்தை இரண்டாயிரமாகப் பெருக்கினார்; இப்பொழுது என்னிடம் இருபதினாயிரம் பசுக்கள் உள்ளன. மாடு தான் செல்வம். நிலம் நீர் இவற்றில் விளையும் பயிர்கள் ஒரு நாட்டின் அடிப்படைச் செல்வம். மாடுகள் அதற்கு அடுத்ததாகக் கூறலாம். பொன்னும் மணியும் இல்லாமல் இருந்தாலும் உயிர் வாழ்ந்து விடலாம். பாலும் சோறும் இல்லாமல் இருந்தால் யாரும் வாழ முடியாது.” “இவ்வளவு செல்வம் இருக்கிறது. இந்த ஊரிலேயே நான்தான் இடையர்களின் தலைவன். என் ஒரே மகளைத் தக்கவனுக்கு மணம் முடித்துத் தர விரும்புகிறேன்.” “என் மகளைப் பற்றிச் சொன்னால்தான் உங்களுக்குத் தெரியும். வெண்ணெய் போன்று இனியள்; பால் போல் தீஞ்சொல்லினள், வெண்ணெய் உருக்கிய பசு நெய்போல் தளதளத்த மேனியள். கரும்பு வில் பார்த்திருக்கிறாயா? அதைப் பார்க்கவே வேண்டியதில்லை; அவள் இரு புருவங்களைப் பார்த்தால்போதும். கயல் விழி என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? சிலர் அவளைக் ‘கயல்விழி’ என்றே கூப்பிடுகிறார்கள். கட்டமைந்த மேனி, தொட்டால் துவண்டு விடும் இடை, அழகுக்காகவே அவளை ஆராதிக்கலாம்; கோயில் சிலைபோல அவள் வடிவம் இருக்கும். இதெல்லாம் நான் சொல்லக்கூடாது. என்றாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இந்தப் பேரழகியை நீ மணந்தால் அவள் பெருமகிழ்வு கொள்வாள்; என் மனைவி கோதாவரி அவள் அப்படியே உடம்பு பூரித்து விடுவாள். பெண்ணைப் பெற்ற பயன் அவள் அடைந்தவள் ஆவாள்.” “சாதி இடை நிற்கும் என்று நினைக்கிறாயா? அவள் உன் பெண் சாதியாகிவிட்டால் அப்புறம் சாதியைப் பற்றியே பேச இருக்காது. நாம்தான் சாதிகளைப் பற்றிப் பேசுகிறோம்; கடவுள்கள் எங்கே சாதியைப் பாராட்டுகிறார்கள். வள்ளியின் கணவன் பேரைச் சொன்னால் உள்ளம் குளிர்வது இயற்கை முருகன் குறமகளை மணந்து கொண்டானே அந்த உறவைக் கண்டித்துப் பார்வதி ஒரு வார்த்தையும் சொன்னதில்லையே! உனக்குத் தெரியும் தேவேந்திரன் மகள் தெய்வயானையை அவன் ஏற்கனவே மணந்திருக்கிறான்; அவளை விட வள்ளியின் மீது தான் முருகனுக்குக் கொள்ளை ஆசை, நப்பின்னை கேள்விப்பட்டிருக்கிறாய்; அவள் எங்கள் சாதிப் பெண்தான்; கண்ணன் அவளை மணந்து சுகப்படவில்லையா? சாதிகள் இல்லை என்று சொல்வதற்கு ஒரு பாரதி தேவை இல்லை; முக்கியமாகப் பெண் பிடித்து விட்டால் அப்புறம் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம்; நீ ஒரு முறை அவளை வந்து பார்த்தால் அதற்கு அப்புறம் நீ மறுக்க மாட்டாய்” என்று தொடர்ந்து பேசினான். தொடர்ந்து பேசுவது கேட்பதற்கு இனிமையாக இருந்தது. தான் அரசமகனாக இருந்து அவசரப்பட்டு முதல் தேர்வு கோனாரின் மகளையா மணப்பது என்று எண்ணினான். மற்றொன்று சேலை கட்டி விட்டாலே அவளுக்குத் தாலி கட்டிவிடலாம் என்ற வெறி அவனிடம் இல்லை; காதலித்தவளையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்க் காதலை அவன் அறிந்தவன். அதனால் அவளை ஏற்க அவன் இசையவில்லை. அதை எப்படி நாகரிகமாகச் சொல்வது? “ஐயா! என் நண்பன் பதுமுகன்; அவன் உன் மகளைப் பார்த்து இருக்கிறான்; அவளை மணப்பதற்கு அவன் ஆசைப்படுகிறான். பையன் அழகாக இருப்பான்; சொன்ன பேச்சுக் கேட்டு நடப்பான்; வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கத்தக்கவன்; அந்த மாதிரி இடம் வேண்டுமென்று அவன் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறான்; பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் அவனுக்கு நீண்ட நாள் ஆசை; அவள் சொன்னால் கேட்பான்; என் தந்தை கந்துக்கடன் கொஞ்சம் பிற்போக்குவாதி; செட்டிக் குடும்பத்திலேயே செட்டாக நகைபோட்டு வரும் திட்டமிட்ட சொத்து உடைய பெண்ணைத்தான் கட்டி வைக்க விரும்புவார்; அம்மா சம்மதிக்க வேண்டும். அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையே நான் மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உடையவர்கள்; சொத்துக் கணக்குகள் போட்டால் இந்தச் செட்டிமார்களோடு இடையன்மார்கள் நீங்கள் போட்டி போட முடியாது; உழவர்கள் நெல் விளைவிக்கலாம்; நீங்கள் பால்பண்ணை வைக்கலாம்; எனினும் இடைத் தரகர்களாக இருக்கும் வணிக மக்கள் தாம் பணக்காரர் ஆகி வருகிறார்கள். அவர்களோடு நீங்கள் போட்டி போடமுடியாது. அதைப்பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டு அந்தப் பழக்கம் எனக்கும் வந்துவிட்டது. பதுமுகனுக்குத் தருவதாக இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்றான். “பெண்ணை ஒரு சொல் கேட்க வேண்டாமா?” “பசுக்களைக் கொண்டு வரும் வீரன் யாராக இருந்தாலும் ஒன்று தானே! அவள் வேறு எப்படி எதிர் பார்க்கமுடியும்? அவள் அப்பா சொற்படி கேட்டு நடக்கும் அடக்கமான பெண் தானே ! இதற்குமேல் உங்கள் விருப்பம்” என்றான். அவர் அவசரப்படவில்லை; மனைவி கோதாவரியைக் கருத்துக் கேட்டார். “அவளைக் கேளுங்கள்” என்று கை காட்டிவிட்டாள். “அம்மா! நீ என்ன சொல்கிறாய்?” தந்தையின் வினா இது. “நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றாள் மணப்பெண். “சிறுசுகள் நாம் எவ்வளவு அடக்கிவைத்தாலும் பெரிசுகளின் கட்டுதிட்டங்களுக்கு எங்கே கட்டுப்படுகிறார்கள்.” “பிடித்திருக்கிறதா?” “நாங்கள் ஏற்கனவே பலமுறை சந்தித்து இருக்கிறோம். காதலித்தும் இருக்கிறோம் என்று சேர்த்துச் சொல்லச் சொல்கிறீரா அப்பா”. “வேண்டாம்”. மணம் நிச்சயிக்கப்பட்டது. பதுமுகன் மறுப்புச் சொல்லவில்லை; நண்பன் விரும்பியபடி நல்ல மாப்பிள்ளையாக நடந்துகொண்டான். மணச்சடங்கு முடிந்தது; இருவரும் சந்தித்துக் கொண்டனர். “ஏற்கனவே என்னை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான். “இல்லை; பொய் சொன்னேன். எனக்கு உங்களைப் பிடித்திருந்தது; அதனால் அப்படிச் சொன்னேன்” என்றாள். அவள் சுறுசுறுப்பை அறிய முடிந்தது அவனால். “நான் பார்த்திருக்கிறேன்; அதனால்தான் ஒப்புக் கொண்டேன்” என்றான் அவன். “நாங்களும் அப்படித் தான். பசுவைப் பார்த்துத்தான் விலை பேசுவோம்; மடியையும் தொட்டுப் பார்ப்போம்” என்று நகைத்தாள். ஏழு பொற்பாவைகளையும் இந்த நற்பாவைக்குச் சீதனமாகத் தந்தான். ஈராயிரம் பசுக்களை அவனுக்கு உரிமையாக்கினான். அவன் கோன் ஆகமுடியாவிட்டாலும் கோனார் ஆகும் சிறப்பினைப் பெற்றான். “என்னை உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா” என்று கேட்டாள். “இதோ என் கையில் உன்னைப் பிடித்து இருக்கிறேன்” என்று கூறினான். சிரிப்பு அலைகள் எழுந்தன. 3. காந்தருவ தத்தை இலம்பகம் கந்துக்கடன் இராசமாபுரத்தில் செல்வச் சிறப்புமிக்க பெரு வணிகனாக இருந்தான். அவனுக்கு நிகராக மற்றோர் வணிகன் சீதத்தன் என்பவன் திரை கடல் ஒடித் திரவியம் தேடுவதில் நாட்டம் கொண்டான். கடல் கடந்து சென்று பல புதிய தீவுகளுக்கு இராசமாபுரத்து விளை பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அவனோடு படகோட்டிகளும், தொழில் செய் கம்மியரும், நெருங்கிய உறவினரும் சேர்ந்து செல்வர். பதுமை நிகர் அவன் மனைவி பதுமை பேரழகுடையவள். ஆனால் மகப்பேறு இல்லாத குறை அவர்களை வாட்டியது. அந்தத் துன்பத்தையும் மறக்க அவன் அவ்வப்போது வெளி ஊர்கள் செல்வதில் மனநிறைவு கண்டான். ஆட்களையும் உறவினர்களையும் உடன் வர வழக்கம் போல் அழைத்தான். அவர்கள் உள்ளது போதும் எதற்காகக் கடலுக்குச் சென்று உடம்பு கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பேசினர். “ஊக்கம் இருந்தால்தான் ஆக்கம் வரும்” என்றும், “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்றும், “போகிற உயிர் கடலில்தான் போகும் என்று இல்லை; இங்கேயே திடீர் என்று சாகின்றவர் பலர் உள்ளனர்” என்றும் பேசி அவர்களை ஊக்குவித்தான். அவர்களுள் ஒரு சிலர் தம் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டுப் புதிய ஊர்களைக் காண்பதற்கு அவனுடன் சென்றனர். சங்குகள் திரியும் கடலில் சென்று புதிய ஒரு தீவினை அடைந்தனர். அத்தீவின் தலைவன் இவனை வரவேற்று இவனுக்கும், இவன் ஆட்களுக்கும் விருந்து வைத்து உபசரித்தான்; ஆடலும் பாடலும் அவர்களை மயக்கின. அழகிகள் சிலரை அவனுக்கு அனுப்பி வைத்தனர். புதுப்புது மங்கையர் மதுவகைபோல அவனுக்குக் கிளர்ச்சி உண்டு பண்ணினர். ஊரில் இருந்தால் வனப்புமிக்க இவ் வனிதையர் வாய்ப்பது அருமை என்பதால் அங்குத் தங்கி இன்புற்று நாட்கள் சில கழித்தான். கட்டிய மனைவி போல அவர்கள் கொட்டி வைத்த பூவாக இல்லை; மொட்டு மலரும் அரும்பாக அவனுக்கு மணம் ஊட்டினர்; பிரிய மனம் இல்லாமல் அத்தீவினை விட்டு வெளியேறினான். கொண்டு வந்த பண்டங்களை அங்கே இறக்கிப் போட்டு விட்டுக் கிடைத்தற்கரிய மணிகளையும், பொன்னையும், விலையுயர் முத்துகளையும், யானைத் தந்தங்களையும், அகில் சந்தனம் முதலிய விலைமிக்க பொருள்களையும் மரக்கலத்தில் நிரப்பிக் கொண்டு புறப்பட்டான், தீவின் தலைவன் அவனுக்கு வழி அனுப்பிவைத்தான். விரைவில் இவ்விலைமிக்க பொருள்களைக் கொண்டு சென்று தம் ஊரில் குவித்து மற்றைய வணிகர்கள் எல்லாம் பொறாமைப்படும்படி வாழ்க்கை நடத்தலாம் என்று கனவு கண்டான். இவன் வருகைக்காகக் காத்திருக்கும் பதுமையை அடைந்து இந்தப் புதுமைகளைக் காட்டினால் அவள் அடையும் மகிழ்ச்சியை எண்ணிப் பார்த்தான். பழங்கள் போதை தரும், மனைவி அத்தகைய இன்பத்தைத் தரக் காத்துக் கிடந்தாள். அவள் அணைப்பில் பிரிவுக்குப்பின் பெறும் இணையற்ற சுகத்துக்கு ஏங்கிக் கிடந்தான். எதிர்பார்க்கவில்லை; வானத்து நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன; நிலா ஒளி வீசியது; நீலக்கடல் வழக்கம் போல் அலைகளை எழுப்பி ஒலம் இட்டுக் கொண்டிருந்தது; காற்றில் மேகம் புகுந்தது; அலைகள் மேல் எழுந்தன; காற்றும் மழையும் கலந்து கொண்டன. இவன் ஏறிச் சென்ற மரக்கலம் கவிழ்ந்துவிட்டது. அவன் கட்டிய கனவுகள் எல்லாம் கொட்டிவைத்த உப்புக்களங்கள் ஆயின. உயிருக்கே மோசம் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தான். உடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியவில்லை. அவர்கள் அத்தனை பேரும் நடுக்கடலில் ஆழ்ந்து நாசம் ஆகிவிட்டார்களா தப்பித்துக் கொண்டார்களா தெரியவில்லை. சும்மா இருந்தவர்களை எழுப்பிக் கொண்டு வந்து அவர்கள் உயிர் இழக்கத் தான் காரணமாக இருந்ததை எண்ணிக் கவலையும் அச்சமும் கொண்டு மனம் தளர்ந்தான். உடன் வந்தவர் மறைந்து விட்டனர், ஓட்டைப் படகின் கட்டுமரத்துண்டு ஒன்று மட்டும் இவனுக்காகத் தெப்பமாகியது. கண்ணுக்கு எட்டிய துாரம் கடல் நீர் தான் நீண்டு தெரிந்தது. இவன் ஏறிய கட்டுமரத்தின் ஒரு துண்டு அவனுக்குக் கரை ஏறமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியது. அதனைப் பிடித்துக் கொண்டு திக்கு முக்காடித் திக்குத் தெரியாத ஒரு மணல் மேட்டில் ஒரு பகுதியை அடைந்தான். நீர், மணல் இவை இரண்டைத் தவிர வேறு எதுவும் அவன் கண்களில் காணவில்லை. கொண்டு வந்த பொருளை எல்லாம் மீண்டும் அலைகள் நிரம்பிய கடலில் வீழ்த்திவிட்ட அழிவு நினைத்து மனம் அழுங்கினான். உள்ளதைக் கொண்டு உவகையோடு வாழலாம் என்று சொல்லிய தன் உத்தமி வீட்டுத் துணைவி பதுமையை நினைத்து வருந்தினான். இலம்பாடு நாணுத்தரும் என்று பேசிய நிலை குறித்துச் சிந்தித்தான். அவள் கழுத்தில் பூண்டிருக்கின்ற தாலி அதையாவது காப்பாற்ற இயலுமா என்று ஏங்கினான். இங்கே உணவும் ஆதரவும் இன்றி உயிரை உதிர்க்க வேண்டி விடுமோ என்று அஞ்சினான். சற்றுத் தொலைவில் ஒரு பொழிலைக் கண்டான். ஞாழலும், புன்னையும் பூத்துக் கிடந்தன. நண்டுகள் பக்கத்தில் இருந்த அன்னத்தைக் கண்டு மருண்டு ஒதுங்க வில்லை; அந்த அன்னங்கள் அவற்றைக் கண்டும் காணாமல் தவயோகிகளைப் போல அவற்றைத் தின்னாமல் விட்டு வைத்தன; பூத்த மலர்களை உடைய பொழிலையும், அதை அடுத்து இருந்த அகிம்சா மூர்த்திகளாக விளங்கிய அன்னப் பறவைகளையும் கண்டதும் அவனுக்கு உயிர் தப்ப முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. யாராவது அங்கு வந்து தன்னைச் சந்திப்பார்களா என்று எதிர்பார்த்தான். உடனே வனதேவதை ஒருத்தி வந்து அவனுக்கு அன்னமிட்டு ஆதரிப்பாளா என்ற ஆவல் எழுந்தது; காட்டு மனிதர்கள் வேட்டையாடுவோர் வந்தால் மூட்டையை அவிழ்த்துக் காட்டு என்று சொன்னால் என்ன செய்வது; பொருள் இல்லை என்பதால் அவர்கள் அருள் காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. விண்ணில் இருந்து யாராவது தேவதூதன் வந்து தன்னை அழைத்துச் சென்று விருந்து வைத்தால் எப்படி இருக்கும் என்ற சின்ன ஆசையும் தோன்றாமல் இல்லை. அவன் எதிர்பார்த்தபடியே வித்தியாதர நாட்டு வாலிபன் ஒருவன் வித்தியாசமான உடையில் தன் முன் வந்து தோன்றினான். “ஐயா! எம்மினும் நீர் வித்தியாசமாக இருக்கிறீரே இந்தத் தீவின் தலைவரோ நீர்?” என்று கேட்டான். “வித்தியாதரன் யான்; விஞ்சையர் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்” என்றான். “நீயும் என்னைப்போல் கலம் கவிழ்த்துவிட்டுக் கலங்கி நிற்கிறாயா?” என்று கேட்டான். “கலங் கவிழ்ந்து நிலம் தேடி வந்திருக்கின்ற உன் அவலம் துடைக்க வந்தேன்” என்றான். “என் மனைவி விரதங்கள் கொண்டவள்; வெள்ளிக் கிழமை தோறும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வருவாள். அவள் செய்த நல்வினைதான் என்னைக் காத்தது” என்றான். “மனைவியை மதிக்கின்ற அந்த மதி நலம் தான் உன்னைக் காத்தது. ஏதோ சில அதீத நன்மைகளை அடையவும் நீ இங்கே வந்து சேர்ந்திருக்கலாம் அல்லவா” என்றான் வந்தவன். “கையில் காசு இல்லாமல் யான் இனி என்ன செய்ய முடியும்; வக்கு இல்லாத என்னை யார் அக்கரையோடு கவனிப்பார்கள். ஆள் வழக்கற்ற இந்த அருஞ்சுரத்தில் நீள் வடிவம் உடைய உன்னைக் கண்டதே யான் செய்த தவம்” என்றான். “கவலைப்படாதே, இழந்த பொருள் ஓங்கவும், உழந்த துன்பம் நீங்கவும் யான் உதவுவேன்; என்னோடு வான் வழியே வா; என் தலைவன் முன் உன்னைக் கொண்டு சென்று சேர்ப்பேன்; அவன் உனக்கு எல்லா நன்மையும் செய்வான்; உன் மரக்கலமும் அதில் உள்ள மானுடமும் உன்னை வந்து அடையும்” என்றான். மந்திரத்தால் மாங்காய் விழாது என்று சொல்லுபவர்கள் மடையர்கள்; மாங்காய் விழும் என்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்தது. பக்கத்திலே ஒரு ஆட்டுக்கிடாய் நின்று இருந்தது. அதற்கு இறக்கைகளும் இருந்தன. அதைக் கண்டு இவனுக்கு வியப்பு உண்டாகியது. “இதில்தான் நீர் இறங்கி வந்தீரா?” என்றான். “இது வான ஊர்தி; விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் எதை வேண்டுமானாலும் பறக்க வைக்கமுடியும்; எங்கள் வித்தியாதர உலகில் இப்படிப் பல புதிய படைப்புகள் கண்டு பிடித்திருக்கிறோம்” என்றான். “எங்கள் இராசமாபுரத்தில் கூட மறைந்த மன்னன் சச்சந்தன் மயிற்பொறி ஒன்றைச் செய்து அதில் நாட்டு அரசியை ஏற்றி அனுப்பினான்; அதில் ஏறித்தான் விசயமாதேவியும் உயிர் தப்பினாள்” என்றான். “அது மயிற்பொறி, ஒருவர் தான் போக இயலும்; இது ஆட்டுக்கிடாய்; நாம் இருவரும் ஏறிச் செல்லலாம்” என்றான். சீதத்தன் ஆட்டுக்கிடாயின் பின் பக்கம் இருந்தான்; அவனுக்கு முன் பக்கம் அந்த விந்தையன் அமர்ந்தான். நம் நாட்டு இக்காலத்தில் ஸ்கூட்டரில் செல்வதைப் போல ஏறி அமர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் விண்வழியே வட திசை நோக்கிச் சென்றனர். மலைகளும் குன்றுகளும் மேலே இருந்து கீழே பார்க்கும்போது அவை மாடுகளும் ஆடுகளும் போலக் காட்சி அளித்தன. மேகங்கள் இவன் ஏறிச் சென்ற விமானத்தின் கீழ்த் தவழ்ந்து சென்றன, அந்தப் பயணமே அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவ்விமானம் ஒரு மலையையும் அதில் இருந்த சோலையையும் அடைந்தது. அங்கே அவன் பசியைப் போக்கக் கனிகளும் நீர் வேட்கையை நீக்கத் தெளிந்த நீரும் கிடைத்தன. அவற்றை உண்டு உடம்பு குளிர்ந்தான். அங்கே குங்குமம், சுரபுன்னை, சந்தனம் முதலிய மரங்கள் காட்சிக்கு இனிமை தந்தன. “இம்மலைகளில் கற்களே இல்லையா?” என்றான். “எல்லாம் வெள்ளிக் கட்டிகள்; அதனால் இதனை வெள்ளிமலை என்பார்கள்.” “இந்த நகர்?” “இதுதான் எம் தலைவன் ஆட்சி செய்யும் வித்தியாதர நகரம்; இது அமராவதியினும் அழகியது” என்று கூறி அவ்வணிகனைக் கலுழவேகன் இருக்குமிடம் அழைத்துச் சென்றான். “உன் பெயர் கேட்க மறந்து விட்டேன்.” “தரன் என்று அழைப்பார்கள் என்னை” என்றான். வித்தியாதர அரசனின் அரண்மனைக்குச் சீதத்தன் அழைத்துச் செல்லப்பட்டான். கலுழவேகன் தன் பட்டத்து அாசி தரணியோடு வீற்றிருந்தான். முறுவல் பூத்த முகம்; அவன் வருகையை வரவேற்று “அமர்க” என்றான். “உம் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். “வியப்பாக இருக்கிறதே” என்றான் சீதத்தன். “நமக்குள் சாதிபேதம் தேவையில்லை; உம் மூதாதையர் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள்; நம் இரு குடும்பத்தினருக்கும் தொடர்பு தொன்று தொட்டுள்ளது. நாம் அரசன் வணிகன் என்ற பேதம் பாராட்டத் தேவை இல்லை. நாம் உறவினர் ஆகிவிட்டோம்” என்றான். தனக்கு மகளோ மகனோ இல்லையே எப்படி உறவு கொள்ள முடியும் என்று சிந்தித்தான்; கொடுக்கல் வாங்கல் இல்லாமல் உறவு எப்படிக் கிடைக்க முடியும் என்று வியந்தான். “நமக்குள் கொடுக்கல் வாங்கல்” “இனித் தொடரப்போகிறது” என்றான். “எனக்கு மகன் மகள் யாரும் இல்லையே” என்றான். “எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” “இரண்டாவது தாரமா” “உனக்கு இல்லை;அவளை உன் மகளாக நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்.” “என் மனைவிக்கும் ஒரே ஏக்கம்; ஒரு மகள் இருந்தால் எவ்வளவு மகிழலாம் என்று சொல்லுவாள்; நான் கொண்டு சென்ற பொருளைக் கொண்டு புதுப்புது நகைகள் செய்து வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு மகளைப் பெற வேண்டும் என்று என்னைத் தொல்லைப் படுத்துவாள்.” “நீ என்ன செய்ய முடியும்.” “அதனால் என்னிடம் விரும்பி வருவாள்; நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புவாள்; வயிற்றைத் தொட்டுப் பார்ப்பாள், சாப்பிட்ட மாதிரி இருக்கவே இருக்காது; அவள் பசி தீரவே இல்லை.” “வளர்ந்த மகள் உனக்குத் தருகிறேன்; நீ கொண்டு சென்று தக்கவனுக்குத் தந்து அவனை மருமகனாகக் கொள்க. எனக்கு ஆதரவாக இருக்கும்” என்றான். “இவள் விலை போகவில்லையா?” “தக்க விலை கிடைக்கவில்லை. அவளைக் கட்டிக் கொள்ள மன்னர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அவள் ஒரே பிடிவாதமாக இருக்கிறாள். இராசமாபுரத்துக்குப் போகவேண்டும். அங்கே தான் தனக்கு மாப்பிள்ளை கிடைப்பான் என்று சொல்கிறாள்.” “காரணம்” “அவளுக்குச் சாதகம் கணித்தவர்கள் அப்படிச் சொல்லி விட்டார்கள்; அதை அவளும் நம்புகிறாள்; எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஆழப் பதிந்து விட்டது.” “அம்மா என்ன சொல்கிறார்கள்?” “அரசியா? துரத்தில் எப்படி நம் பெண்ணை அனுப்புவது? ஏதாவது ஆனால் எப்படி நாம் போய்ப் பார்க்கமுடியும்? மகளை விட்டு எப்படிப் பிரிந்து இருக்க முடியும்” என்று கூறுகிறாள். “அதுசரி, எப்பொழுது ஆனாலும் அவள் இன்னொரு வீட்டுக்குப் போக வேண்டியவள் தானே! இராசமாபுரத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே” என்றான் சீதத்தன். “இந்த ஊரில் பிள்ளைகள் பார்க்க லட்சணமா இருப்பார்கள்; ஆனால் படிப்பு சூனியம்; அவனவன் தனக்குப் பிரியமானவளோடு காதல் கொண்டு காந்தருவ மணம் செய்து கொள்வான்; கேட்டால் ‘காதல் மணம்’ என்பார்கள். பெரியவர்கள் சம்மதம் தரும் வரையிலும் காத்துக்கொண்டிருக்க முடியாது என்பார்கள். அவசரப் படுவார்கள். அப்புறம் விவாகரத்து செய்துவிடுவார்கள். அது இந்த நாட்டுப் பழக்கம். இதை ‘காந்தருவ மணம்’ என்று சொல்லி மற்றவர்களும் இப்பொழுது பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.” “இந்த ஊரில் இளைஞர்கள் அழகானவர்கள். இத்தகைய அழகு எங்கள் ஊரில் எங்கே கிடைப்பார்கள்?” “அழகைப் பற்றி அவள் கவலைப்படவில்லை; படித்த மாப்பிள்ளைதான் வேண்டும் என்கிறாள். இப்பொழுது பெண்களுக்கு அது பழக்கமாகிவிட்டது. தன்னைவிட அவன் கற்றவனாக இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.” “எவ்வளவு படித்தவனாக இருக்கவேண்டும்?” “இசையிலே வல்லவனாக இருக்கவேண்டும். என் மகள் வீணை வித்தகி ஆவாள். அவள் பாடும் குயில்; தன்னிலும் இசையில் வல்லவனாக இருக்க வேண்டும் தன் கழுத்தில் மலையிடுபவன் என்கிறாள்.” “நான் என்ன செய்யவேண்டும்?” “இதோ என் மகளை அழைக்கிறேன். அவளோடு நீங்களே பேசிக் கொள்ளலாம்.” காந்தருவதத்தை கலுழவேகனின் மகள்; அவள் தந்தை அழைக்க அங்கு வந்து நின்றாள். சீதத்தன் விழித்த கண்ணை மூட மறந்து விட்டான்; பிறகு நினைவு வந்தது தான் தேவன் அல்ல என்று; இமை மூடினான்; திறந்தான்; ஒழுங்காக நடந்து கொண்டான். அவள் தந்தையையும் தாயையும் பார்த்தான்; தாயை அவள் அப்படியே உரித்து வைத்திருந்தாள். “உங்களைப் போலவே இருக்கிறாள்” என்று பாராட்டினான். தாரணிக்கு உள்ளம் குளிர்ந்தது. அந்தப் பாராட்டுத் தனக்குத்தான் என்பதில் அவள் சற்றுக் கருவமும் கொண்டாள். அழகுத் தெய்வம் தன் கண்முன் நிற்பது போல இருந்தது; எங்காவது ஏதாவது குறை இருக்கிறதா என்று பார்த்தான்; சிற்பி செதுக்கிய சிலை போல மூக்கும் விழியுமாக இருந்தாள்; இடை மட்டும் மிகவும் மெலிந்திருந்தது; அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தமிழ்க் கவிஞர்கள் சொல்லி இருப்பது நினைவுக்கு வந்தது; மூடி வைத்திருக்கும் அழகை எல்லாம் அவனால் ஊடுருவிப் பார்க்க இயலாது; கவர்ச்சி உடையவள் என்பதை அறிந்தான். வீட்டுக்கு அழைத்துச் சென்றால் பதுமை அனுமதிப்பாளா என்ற மெல்லிய அச்சம் அவனைக் கிண்டியது. மகள்தானே! அவள் மறுக்க மாட்டாள் என்று மனம் உறுதி செய்து கொண்டான். “என்னம்மா படித்து இருக்கிறாய்?” “இசை பயின்று இருக்கிறேன்.” “அதில் இசைபெற வேண்டும் என்று விரும்புகிறாயா?” “திசை எங்கும் என் புகழ் பரவ வேண்டும்; அந்த ஆசை உள்ளது” என்றாள். “இசை கற்றதால் இசைக் கலைஞனையே மணக்க விரும்புகிறாயே அது சலிப்புத் தட்டாதா?” “மன ஒற்றுமை ஏற்பட அதுதான் வழி; ஒருவரை ஒருவர் மதிக்க முடியும்; இன்ஜினியர் டாக்டரைக் கட்டிக் கொண்டால் முரண்பாடுகள் தான் நிகழும்; இது கலை உலகம்; மற்றவர்கள் எம் நுண்ணிய உணர்வுகளை மதிக்க மாட்டார்கள்; வீணை கொண்டு பாடத் தொடங்கினால் “அடுப்பில் புகை எழுகிறது; நீ எழுந்து கவனி” என்றால் நான் என்ன செய்ய முடியும்? அலுத்து வரும் கணவனுக்கு யாழ் எடுத்து இசை கூட்டினால், “நீ வேறு வந்து அறுக்க வேண்டுமா? அதைத் தூக்கிக் குப்பையிலே போடு” என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்”. “இந்த வெள்ளிமலை எனக்கு அலுத்துவிட்டது அழகு மட்டும் இருந்தால் போதுமா? ஆரவாரமும் இருக்க வேண்டும்; செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அதைக் கொண்டு தொழில்கள் வளர்ப்பதைக் காண வேண்டும். கறியும் சோறும் படைத்து உண்பதால் மட்டும் பயன் இல்லை; அதைச் சமைக்கும் தொழிலிலும் பங்கு கொள்ள வேண்டும்; இங்கே வருபவர் வீட்டு மாப்பிள்ளையாக ஒட்டிக் கொள்ளவே வருவார்கள் அல்லது அலங்கார பொம்மையாக என்னை வைத்து அழகு பார்ப்பார்கள். வீரம் மிக்க செயல்கள் ஆற்றித்தரும் இளைஞனுக்கு யான் தாரமாக வேண்டும்; அவனுக்குப் புகழ் சேர்க்க நான் உறுதுணையாக நிற்க வேண்டும். கண்ணுக்கு நிறைந்தவனாக இருந்தால் மட்டும் போதாது; மண்ணுக்கு உதவும் மாவீரனாகத் திகழ வேண்டும்; அந்த ஆசைகளுக்கு இந்தக் காந்தருவ உலகில் வாய்ப்பு அமைவதில்லை. அதனால் தான் யானும் என் தந்தை விருப்பப்படி உம்மோடு வர விழைகின்றேன்” என்றாள். “கொண்டு வந்த பொருளையும், என்னை அண்டி வந்த இளைஞரையும் இழந்து நிற்கிறேன். இந்த எளிய நிலையில் திரும்பிச் செல்வது என்றால் விரும்பத்தக்கது அன்று” என்றான். “அவை நீ விட்டு வைத்த இடத்திலேயே கட்டி வைத்திருக்கிறோம். இவை எல்லாம் எங்கள் கட்டுவித்தை; நீ கலத்தில் வருகிறாய் என்று எங்களுக்குத் தெரியும்; உன்னை மடக்கிப் பிடிக்கவே இந்த இடக்கினை விளைவித்தோம்” என்றான். “நாங்கள் மந்திர சக்தியால் இவற்றைச் செய்து முடிக்கிறோம்; விஞ்ஞான உலகம் இதை எதிர்காலத்தில் செய்துகாட்டும்; தூர இருந்தே கப்பல்களைக் கவிழ்க்கும் நுண் கருவிகளை இந்த உலகம் காணத்தான் போகிறது. இன்று நாங்கள் விரைவில் பறக்கும் விமானங்களைப் படைத்து இருக்கிறோம். எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றை எல்லாம் கண்டு பிடிக்கும்; எங்கள் கற்பனையில் காண்பவை எல்லாம் அறிவு உலகம் ஆக்கித் தரும்” என்றான் கலுழவேகன். அங்கு ஒரு சில நாட்கள் வித்தியாதர அரசனின் விருந்தினனாகத் தங்கி இருந்தான். காந்தருவதத்தை அவனோடு புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டாள். பெற்றவளால் இப்பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் நீர் முத்துப்போல் தொத்திக் கொண்டு விழலாமா வேண்டாமா என்று காத்துக்கிடந்தது. கண்ணுவ முனிவரின் ஆசிரமத்திலிருந்து பிரிந்து செல்லும் சகுந்தலையின் தாய் ஆனாள். அவள் கற்றவள் ஆதலின் கலங்கவில்லை. தாயைத் தழுவிக் கொண்டு விடை பெற்றாள். கலுழவேகன் அவள் தாய்க்கு ஆறுதல் கூறினான். “சங்கு ஈனும் முத்து அது கடலிலேயே தங்குவது இல்லை. கரை ஏறி அதைக் கண்டெடுக்கிறவர்க்கே பயன்படுகிறது. அதை அவர்கள் ஆரமாகக் கோத்து மகிழ்கின்றார்கள்; முத்து இருக்க வேண்டிய இடம் கத்தும் கடல் அலையில் இல்லை. அது மங்கையர் மார்பில் தங்கி அவர்கள் அங்க அழகுகளுக்குத் துணை செய்யும் போதே பெருமை பெறுகிறது.” “யாழிலே யிறக்கும் இசை யாழுக்குப் பயன்படுவது இல்லை; அது நுகர்பவருக்கே பயன்படுகிறது. மலையுளே சந்தனம் பிறக்கிறது. அது அரைத்துப் பூசிக் கொள்பவர்க்கே மணம் ஊட்டுகிறது. எண்ணிப் பார்த்தால் உன் மகளும் உனக்கு அத்தகையவளே.” “நீயும் ஒரு காலத்தில் கன்னிப் பெண்ணாக இருந்தாய்; அன்னையின் மடியில் அழகாகத் தவழ்ந்து வளர்ந்தாய், அண்ணாந்து ஏந்திய வளர்இளமுலை தளரும் என்பதற்காகத் தாய் வீட்டிலேயே இருக்க முடிந்ததா! இங்கே வந்த பிறகுதானே நீ தாய்மை அடைந்தாய். பெண்ணுக்கு முதற்பிறப்புத் தாய்வீடு; மறுபிறப்புக் கணவன் வீடு; அவள் அங்கே சுதந்திரப் பறவையாக இந்த உலகத்தைக் காணவேண்டும்; காதல் ஒருவனைக் கைப்பிடித்தே காரியம் யாவையும் சாதிக்க வேண்டும்; அவளை மகிழ்வோடு அனுப்பு, அயல் நாட்டுப் படிப்புக்கு நம்நாட்டு இளைஞர்கள் சென்று வருகிறார்கள். மண வாழ்க்கை என்பது கூட ஒரு புதிய பள்ளிதான். ‘குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற நம் நாட்டுப் பாவேந்தன் சொல்லிக் கேள்விப்படவில்லையா? அவள் அங்குத் துணைவேந்தனாக இருந்து ஆட்சி நடத்துவாள்; வழி அனுப்பிவை” என்றான். தரன் என்பவன் பூவால் அலங்கரிக்கப்பட்ட விமானம் கொண்டு வந்து நிறுத்தினான்; பலர் அவளுக்குத் துணையாக ஏறினர். வீணாபதி என்ற பேடி ஒருத்தி அவள் நெருங்கிய தோழியாக இருந்தவள். யாழிசையில் கூறுபாடுகளை எல்லாம் நன்கு அறிந்தவள். அவளையும் உடன் செல்க என்று அனுப்பி வைத்தான். தத்தை இசை பழகப் பயன் படுத்திய யாழ்க்கருவிகள் பலவற்றையும் உடன் அவள் எடுத்துச் சென்றாள். பெற்று வளர்க்க வேண்டிய சிரமம் இன்றி மகள் பேறாக உற்றுத் தன்னை அடைந்த அந்தக் கற்ற ஒருத்தியை அழைத்துக் கொண்டு பழைய தீவைச் சென்று அடைந்தான். அங்கே அவன் ஏறிவந்த மரக்கலம் கரையில் பழைய தீவிலேயே விடப்பட்டு இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியோடு எந்தவிதக் குறையும் இன்றி இவன் வருகைக்காகக் காத்துக் கிடந்தனர். விமானத்தில் இருந்து இறங்கும் புதிய மனிதர்களைக் கண்டு அவர்கள் வியந்தனர். கையில் வீணையோடு இறங்கிய வித்தகியைக் கண்டு அவர்கள் மெத்தவும் திகைத்தனர். விண்ணில் இருந்து இறங்கியதால் பண்ணில் இசைபாடும் கலைமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினர்; அவள் வயதில் குறைந்தவளாக இருந்ததால் பிரமனின் மனைவி அல்லள் என்பதைக் கண்டு கொண்டனர். நான்முகன் உடன் வராததால் இவள் மானுட மகள்தான் என்பதை அறிந்தனர்; காந்தருவ நாட்டுக் காந்தாரப் பண்பாடும் இசைக்குயிலோ என்று வியந்தனர்; அவள் தத்தை மொழி பேசுவதால் இவள் காந்தருவ தத்தையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தனர். வித்தியாதர நாட்டில் காந்தருவ தத்தை என்ற பேரழகி ஒருத்தி இருக்கிறாள் என்றும், அவள் வீணை வித்தகி என்றும் கேள்விப்பட்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கையில் அத்தகைய பேரழகியைக் காண முடியுமா என்று ஏங்கி இருந்தனர். வாணிபம் செய்ய வந்த இடத்தில் வான் நிலவு போன்ற வடிவ அழகியைக் கண்டு அவர்கள் வியப்பு உற்றனர். சீதத்தன் வாய் திறந்து பேசுவான் என்று எதிர்பார்த்தனர். இவனும் அவர்கள் எப்படிப் பிழைத்தார்கள் என்று அறிய ஆவல் உடையவனாக இருந்தான். “கடலில் கலம் முழுகவில்லையா?” என்று கேட்டான். “காற்றடித்தது உண்மை, மழை பொழிந்தது உண்மை; ஆடியது உண்மை; பிறகு என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியவில்லை; அது கரை வந்து சேர்ந்தது; கலக்கமில்லாமல் இருக்கிறோம்; உம் நிலைக்குத்தான் வருந்தி இருந்தோம்” என்றனர். “அதை ஏன் கேட்கிறாய்? கானல் அடுத்த சோலை ஒன்றில் கட்டுமரம் என்னைக் கரை சேர்த்தது; அங்கே கலுழவேகனின் கையாள் தரன் என்பவன் என்னை அழைத்துச் சென்றான்; வித்தியாதரர் நகரைக் கண்டேன். இந்த வீணையரசியை நம்மோடு அனுப்பி வைக்கிறார்கள்” எனறான். அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தார்கள், இராசமாபுரத்தில் ஒரு இசைவிழா நடக்கும் என்றும், அதில் அவள் பாட வருகிறாள் என்றும் நம்பிக்கையோடு இருந்தார்கள். நாடக நட்சத்திரங்களை நயந்து காண்பதுபோல் அவளிடம் அணுகிப் பழக விழைந்தனர்; அவள் அவர்களிடம் அதிகம் பேசாமல் நாண் உடை நங்கையாகச் சாண் நின்றே பழகினாள். மரக்கலம் ஏறி நிலக்களம் அனைவரும் அடைந்தனர்; அழகிய இள நங்கையோடு சீதத்தன் வந்து இறங்கியதும் புது நாடகம் வந்தது போல் மக்கள் அதைப் பற்றியே பேசத் தொடங்கினர். “சீதத்தன் அழகியைத் தட்டிக் கொண்டு வந்து விட்டான்; இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்தச் சிறுமை” என்று அவன் பெருமையைக் குறைத்துப் பேசினர். பதுமையின் காதினைக் கடித்தனர் சிலர்; அதனைக் கேட்டு அவள் துடிதுடித்துப் போனாள். அவர் அப்படிப்பட்டவர் அல்லர்” என்று சொல்லி அவர்களை அகற்றி வைத்தாள்; வந்தவுடன் வெடிகுண்டு வெடித்தது. “பொட்டிட்டுத் தட்டுக்காட்டி உங்களை வரவேற்கட்டும்மா?” என்றாள். கையில் தட்டில் ஆலத்தியும் கர்ப்பூரமும் ஏந்தி வந்து நின்றாள். “அம்மா தாயே! வலது கால் வைத்து வாடி அம்மா” என்று வரவேற்பு அளித்தாள். தத்தைக்கு இந்த வித்தை எல்லாம் விளங்கவில்லை; புதிதாக வந்தால் இராசமாபுரத்தில் இப்படி வரவேற்பார்கள் என்று நினைத்தாள். “வீட்டுக்கு வரும் மருமகளை வரவேற்பது போல் வரவேற்கிறாயே” என்று கேட்டான் சீதத்தன். “மணமக்களை வரவேற்கிறேன்; எனக்குத் துணை இல்லை என்று புதிதாக அழைத்து வந்திருக்கிறீர்கள். அதனால் வரவேற்கிறேன்; வயதில் குறைந்தவள்; வாலிப மங்கை, அவள் இனி எனக்குத் தங்கை” என்றாள். “தன் கையைக் கொண்டு தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டால் யாரும் தடுக்க முடியாது.” “இவள் காந்தருவ நாட்டு மங்கை என் கை வெறுங்கை, நீ ஏறி இருப்பது முருங்கை, இவள் நம்மகள்”. “மகளா? புது உறவாக இருக்கிறது”. “பெண்ணொருத்தி பிறக்க வேண்டுமென்று நீ எண்ணி வந்தாயே! இனிமேல் பிறந்து இனிமேல் வளர்ந்து இனிமேல் எப்படி என்ன செய்ய முடியும்? கடையில் இவள் கிடைத்தாள்” என்றாள். “என்ன விளையாடுகிறீர் கடையில் வாங்கும் சரக்கா இவள், இவள் மிடுக்காக இருக்கிறாள்; எனக்குக் கடுக்காய் கொடுக்கிறீர்” என்று வெடுக்கெனப் பேசினாள். “கலுழவேகனின் மகள்; இவள் பெயர் காந்தருவ தத்தை அவளுக்கு மணமகன் ஒருவனைத் தேடி அவனை மாப்பிள்ளையாக்க வேண்டும், அதற்காகத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.” “இவளுக்கு இடையே இல்லையே” “நடை இருக்கிறது; அதனால் அவளுக்கு இடை இருக்கத்தான் வேண்டும்; படைப்பு அப்படி” “எனக்கு மட்டும் ஏன் இந்தப் புடைப்பு: உரல் போன்ற இடுப்பு; இது உங்களுக்குப் பிடிப்பு” என்று கேட்டாள். “நீதான் என் இருப்பு; அதற்கு இல்லை மறுப்பு; அதை விடு. அவளை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான். “கண்டவர் பேசிய பேச்சு என்னை உண்மையைக் காணாதபடி செய்துவிட்டது; அவளை ஏற்பதில் எனக்கு இகழச்சி இல்லை; அதில் ஏற்படும் பெரும் புகழ்ச்சி, ஊரவர் மருள, அரசனும் இதற்கு அருள, அழகிய மணி மண்டபம் அமைத்துத் தண்ணிர்ப் பந்தல் வைப்போம்.” “தண்ணிர்ப்பந்தல் எதற்கு?” “தவறுதலாகச் சொல்லிவிட்டேன்; மனப்பந்தல் வைப்போம்; சுயம் வரத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம்”. “அப்படியானால் இவள் யாரை விரும்புகிறாளோ அவளை அவள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று தானே பொருள்.” “ஆமாம்; அப்படித்தான்.” “அவள் கொடுத்து வைத்தவள்; அந்த மாதிரி என் தந்தை ஏற்பாடு செய்திருந்தால் உங்களைத் தேர்ந்து எடுத்திருக்க மாட்டேன்” என்றாள். “ஆமாம் அரசர்கள் வந்து வரிசையாக நின்று உன் மாலைக்குக் கழுத்தை நீட்டி இருப்பார்கள்.” “வேடிக்கையாகச் சொல்கிறேன்; அப்பொழுதும் உங்களைத்தான் தேர்ந்து எடுத்திருப்பேன்” என்றாள். இருவரும் சிரித்தனர். “இவளை நம் வீட்டில் தங்க வைக்கலாம்.” “வேண்டாம்; வயதுப் பெண்; வாய்க்கு வந்தபடி கதை கட்டுவார்கள். கன்னி மாடத்தில் விட்டு வையுங்கள் அவளும் சுதந்திரமாக இருக்கமுடியும்” என்றாள். “நீ சொல்வதும் உண்மைதான்; அவள் சுகமாகப் பாடிக் கொண்டிருப்பாள். நம் நித்திரை கெடும்; ஆட்கள் வேறு அதிகம்; இந்தக் கூட்டத்தை இங்கு வைத்துச் சமாளிக்கவும் முடியாது” என்றான். தத்தை கன்னிமாடத்தில் தங்க வைக்கப்பட்டாள். சீதத்தன் படுக்கச் சென்று ஒய்வு கொண்டான். பிரிந்தவர் கூடினர்; என்றாலும் பேசிக் கொண்டே பொழுதைக் கழித்தனர். பொழுது விடிந்தது; மற்றைய கருமங்களைத் தம் ஆட்கள் கவனிக்கச் சென்றனர்; சீதத்தன் கட்டியங்காரனைப் பார்த்துவரச் சென்றான்; பெரியவர்களைப் பார்க்கும்போது வெறுங்கையோடு போக முடியாது; எதுவும் இல்லை என்றால் பச்சை எலுமிச்சம் பழமாவது கொண்டு போக வேண்டும் என்பதை அறிந்தவன். தீவில் இருந்து கொண்டு வந்த விலை மிக்க கற்களைக் கொண்ட அணிகலன்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவனுக்குக் காணிக்கையாக்கினான். “கடல் கடந்து வணிகம் செய்யச் சென்றேன்”. “ஈட்டியது ?” “மிகுதிதான்; அதைவிடக் காட்டத்தக்கது ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்.” “எடுத்துக்காட்ட இயலுமா?” “இல்லை; நம் நாட்டவர்க்ககு காட்ட ஒர் அழகியைக் கொண்டு வந்து இருக்கிறேன்.” “கணிகையாயின் எனக்கு அவளைக் காணிக்கை ஆக்கிவிடு” என்றான். “கலுழவேகனின் காரிகை அவள்; அவள் ஒரே மகள்: வித்தியாதர அரசனின் மகள்; அவளுக்கு மணம் முடிக்க வேண்டும்; வீணை நாயகி அவள்; அவளை வெல்பவனே அவளுக்கு வாழ்க்கை நாயகனாக முடியும்; இசைப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்; அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும்.” “அனுமதி என்ன வெகுமதி கூடத் தருகிறேன். இசை விழா ஒன்று நம் ஊர்மிசை நடந்தால் அது நமக்குத் தானே புகழ், பல தேசத்து மன்னர்கள் அவர்கள் இங்கு வந்து இசைப் போட்டியில் பங்கு பெறுவர்; பாடினால் அவர் அவர்களுக்குப் பரிசு, தோற்றால் அவர்கள் வெறும் தரிசு; தக்கபடி ஏற்பாடுகள் செய்க, அதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி; நானும் பங்கு பெறுவேன்; எனக்கு அவள் கிடைப்பாள்; என்ன செய்வது? நான் முந்திப் பிறந்து விட்டேன்; வயது ஒத்து வராது; மேலும் இசைபாடக் கற்றிலேன், வசைபாடிப் பழகிய யான் எப்படி இசைபாட முடியும்; மற்றும் அவள் எனக்கு இசையாள்; கலுழவேகன் மாபெரும் மன்னன்; படை வலிமிக்கவன்; அவனை நட்பில் கொண்டால் அதைவிடப் பெட்பு வேறு இருக்கமுடியாது; தக்க சமயத்தில் அவன் நமக்குப் பயன்படுவான்; இந்த ஊரில் பெண்ணைக் கொடுத்து விட்டால் அவன் இங்கு அடிக்கடி வந்து போவான்; அதனால் நமக்குப் பெருமைதானே! அறிவிப்புத் தாளில் என் தலைமை என்பதைத் தவறாமல் பொறித்து வை; இந்த ஊரில் முத்தமிழ் மன்றங்கள் இருக்கின்றன. அதில் நற்றமிழ் பேசப்படுகிறது. அதற்குக் கூட்டமே வருவது இல்லை. இசையவர் பாடல் பாடி மகிழ்விக்கவும், ஆடல் நங்கையர் ஆடிக் காட்டவும் அழகிய மாமணி மண்டபம் இல்லை, அந்தக் குறையும் தீர்ந்துவிடும். காந்தருவதத்தை பாடுகிறாள் என்றால் கூட்டம் இடம் கொள்ளாது. அரசர்கள் ஒரு புறம்: வணிகர்கள் ஒருபுறம், வீரர்கள் ஒரு புறம்; மங்கையர் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம், பின்னணிப் பாடகர் முன்புறம்; இப்படித் தக்க ஏற்பாடுகள் செய்துவிடு. எனக்கு நடு இடம் ஒதுக்கிவிடு; கட்டாயம் வந்துவிடுகிறேன்” “அவளுக்குக் கண்ட இடத்தில் வெட்டுஅட்டைகள் வைத்து விளம்பரம் செய்யுங்கள்; நான் கையெடுத்துக் கும்பிடுவது போல் எனக்கும் இந்த அட்டைப் படங்களை அமையுங்கள்; வரவேற்பதுபோல இருக்கும்” என்றான். “மறுபடியும் வந்து உங்களை அழைக்கிறோம்” என்றான் சீதத்தன். “பொறுப்புகள் என்றால் தட்டிக்கழித்து விடுவேன்; இசை விருப்புகள் என்றால் தவறாமல் வந்துவிடுவேன். நம் இசை மண்டபத்தில் முதுமைகளை வைத்து ஆடவைக்காதீர்கள். பதுமைகளை வைக்கவேண்டிய இடம் அது. இசை, பாட்டு, நடனம் இதெல்லாம் எனக்குத் தெரியாது. உருப்படியாக நல்ல உருப்படிகளை அழைத்து விழாக்களை அமைக்கவும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அனுப்பினான். “தத்தை எப்படிப் பாடினாலும் அத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பெருங்குடி மக்கள் எல்லாம் முன் வரிசையில் வந்து அமரட்டும்; தலைப்பாகை உள்ளவர்களுக்கு முதலிடம் தரவும்; தலை காய்ந்தவர்களை எல்லாம் பின்னால் தள்ளி விடுங்கள்”. “சிவந்த இதழை உடைய சீமாட்டிகளுக்கு முன்னிடம் தந்துவிடு; அவர்கள் தோளில் அழகுப் பை தொங்கவிட்டுக் கொண்டு வருவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள். செட்டி விட்டுப் பெண்கள் செட்டாக நககைகள் போட்டுக் கொண்டு வருவார்கள்; அவர்களை மிகவும் கெளரவமான இடத்தில் அமரவையுங்கள், சரிகை வேட்டி தலைப்பாகைகள் பணம்படைத்தமைக்கு அடையாளங்கள்; அவர்களை எனக்குப் பின்னால் அமரச் செய்யுங்கள்; அரச குமாரர்கள் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்; அவர்களுக்கு என்று ஒரு தனியிடம் விட்டு வையுங்கள்; இசை வல்லவர்கள் நாட்டியக்காரர்கள் அவர்கள் எங்கு உட்கார வைத்தாலும் கவலைப்பட மாட்டார்கள்; நிச்சயம் அந்த மேடையில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் புகையிலை வெற்றிலை வாங்கி வையுங்கள்; மென்று கொண்டே குதப்புவார்கள்; வெளியிலே அங்காடி வைக்க இடம் ஒதுக்கி வையுங்கள்; வெளி ஊர்க்காரர்கள் தங்குவதற்கு விடுதிகளைக் கட்டி வையுங்கள்; சோலை உலாவுதற்கு வசதிகள் செய்து வையுங்கள்; இராசமாபுரத்துப் பேரழகு கண்டு அவர்கள் பேசிக் கொண்டே செல்ல வேண்டும்.” இவ்வாறு அடுக்கிக் கொண்டே சென்றான். எப்படியும் இந்த விழா நடத்துவதற்கு இடம் கொடுத்ததே பெரிது எனச் சீதத்தன் பெருமகிழ்வு கொண்டான். கொண்டு வந்த பொருளில் பெரும்பங்கை மண்டபம் கட்டுவதற்கும், வசதிகள் செய்து தருவதற்கும் வாரி இறைத்தான். யானைகளில் செய்தி அறிவிப்போரை ஏற்றிப் பறை அறிவித்துச் செய்தி செப்பினான். அரசன் கட்ட யங்காரன் பல நாட்டு அரசர்களுக்கும் ஆளை அனுப்பி ஒலை போக்கினான். பெண்டிரும் ஆண்மை விரும்பிப் பேதுறும் பேரழகியை யாழிசையில் வென்று மணக்க விரும்புபவர் வருக! இவ்விழாவிற்கு வருகை தருக! என்று செய்தி செப்பினர். போட்டியில் பங்கு கொள்ள வந்தவர் சிலரே எனினும் பாடியதைக் கண்டு மகிழ வந்தவரே மிகுதியாயினர். தேனை மொய்க்கும் வண்டு என மாந்தர் வந்து மொய்த்தனர். மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தில் மின்னின் இடையும் அன்ன நடையும் உடைய தத்தை வந்து சேர்ந்தாள்; அவளுக்கு நெருங்கிய தோழி வீணாபதி முதற்கண் அவைக்கு வந்து திரையை விலக்கி முன் வந்து நின்றாள். நாடகங்களில் கட்டியங்காரன் ஒருவன் வந்து நடக்க இருப்பவற்றை நகைச் சுவைபடப் பேசுவான். அதுபோல இந்த நகையாளி அங்கு வந்து நின்றாள். அழகி என்றாலே வாய் திறக்கும் வாலிபர்கள் முதல் காட்சியே முழுக்காட்சியாகக் கண்டு மகிழ்ந்தனர். அவள் வேண்டுமென்றே அவை யோரை மயக்கும் வகையில் புன்முறுவல் காட்டி நின்றாள். அவள் சிரிப்பே காமவலையின் விரிப்பாக இருந்தது. ஒருவன் சொல்கிறான் “இவள் தோளைப் பார்த்தீர்களா ! இவை மூங்கில்கள்” என்றான். மற்றொருவன் சொன்னான் “அவள் துணைப் புருவங்கள் வில்லே” என்றான். இன்னொருவன் பேசினான் “வாயே கடலில் விளையும் பவளம்” என்றான்; இன்னொருவன் கூறினான். “மேனி மாந்தளிர்” என்றான். மற்றொருவன் புதிய கண்டுபிடிப்பாகச் சொன்னான். “எல்லாம் இருக்கிறது. ஆனால் தனம் இல்லாத வறுமையைப் பாருங்கள். குத்தி முனைத்திருக்க வேண்டிய இடம். அங்குச் சுத்தமாக இருக்கிறது. இதைப்பத்தி என்ன சொல்லுகிறீர்கள்” என்றான். “தழை சுமப்பது பிழை என்று விட்டுவிட்டாளா என்ன” என்று ஒருவன் கிண்டல் செய்தான். கவிஞன் ஒருவன் முன்னால் இருந்தான் “இது அச்சுப் பிழை” என்றான். “விளங்கவில்லை” என்றான் அவன் நண்பன். “பிரமன் படைப்பில் நேர்ந்த அச்சுப் பிழை” என்றான். “அவசரப்பட்டுப் பிறந்து விட்டாள்” என்றான் மற்றொரு நண்பன். “காகிதப்பூ பார்க்கலாம்; முகர முடியாது” என்றான் அந்தக் கவிஞனின் நண்பன். அவர்கள் அவளைக் கண்டு சிரிக்க இவ்வாறு பேசினார்கள்; அவர்கள் வயிறு வெடிக்க அவள் மேடை மீது இருந்து பதில் சொன்னாள். “என்னைப் படைத்த போது எமன் வந்து கேட்டுக் கொண்டான். “முற்றிய வடிவில் வெளியே அனுப்பாதே கற்றவர்கள் கூடக் கருத்து அழிந்து உயிர் இழப்பர்; எனக்கு வேலையே இல்லாமல் போய்விடும்” என்று முறையிட்டான்” “அதனால் பிரமன் கொம்பு மழுங்கிய யானையாக என்னை அனுப்பிவிட்டான். என்னால் யாருக்கும் எந்த வம்பும் இல்லை” என்றாள். இதைக் கேட்டு அவையே சிரிப்பில் ஆழ்ந்தது. “காந்தருவத்தையோடு வந்த தோழி வீணாபதி பேடிப் பெண்” என்று பேசி அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். அவளைத் தொடர்ந்து தவள மேனியை உடைய தத்தை மேடைக்கு வந்தாள்; இமை கொட்டாது அவளையே பார்த்து அவள் அழகில் ஆழ்ந்தனர்; “அவள் பாடவே வேண்டாம்; பாடினால் மேடையை விட்டு உள்ளே போய் விடுவாள்” என்று அஞ்சினர். ஒவ்வொரு வினாடியும் அவளைப் பார்ப்பதில் கழித்தனர்; பாவையே அன்ன அவளைக் கண்டு அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப அவளை நயந்தனர்; மகளிர் அவள் உடுத்தியிருந்த சேலை, அணிந்திருந்த கலன்கள், கூந்தல் முடிப்பு, இதழ்ச் சிவப்பு இப்படித் தனித்தனியே கூறுபடுத்திப் பேசினர். காளையர் அவள் தந்த வளர்ச்சியில் வந்த கிளர்ச்சியைப் பேசினர். குழந்தைகள் அவர்கள் பழகிய பொம்மையைப் போல அந்த அம்மை இருப்பதாகப் பேசிச் சிரித்தனர்; கலைஞர்கள் அவள் வாயசைவை எதிர் பார்த்தனர்; ரசிகர்கள் பாட்டொலி கேட்கச் செவிகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டனர். இசை இலக்கணம் சிறிதும் தவறாது குரலில் எந்தவிதக் கோளாறும் இன்றிக் கோயில் மணியில் ஒலிக்கும் நாதம் போல் கணிர் என்று பாட்டிசை கிளம்பியது; புருவம் நிமிரவில்லை; விழிகள் பிறழவில்லை; மிடறு வீங்கவில்லை; பற்கள் வெளியே காட்டவில்லை; அங்க அசைவுகள் இன்றிப் பாடல்கள் தங்கு தடையின்றி வெளிவந்தன; அவள் மீட்டிய வீணையின் நாதத்துக்கும் வாயில் இருந்து வெளிவந்த கீதத்துக்கும் அவர்களால் வேறுபாடு காண முடியவில்லை. “வாய் திறந்து இவள் பாடினாளோ நரம்பொடு வீணைதான் நாவில் நவின்றதோ” என்று வியந்து பாராட்டினர். ஆயிழையாகிய தத்தை பாடியபோது இசையை விரும்பும் பறவைகள் ஆகிய கின்னரம் எங்கிருந்தோ ஓடிவந்து அந்த அரங்கில் புகுந்தன; மற்றவர்கள் பாடிய போது பறையொலி கேட்ட அசுணம்போல் அவை பதை பதைத்து வெளியேறின. அரசர்கள் தோற்றனர்; அவர்களை அடுத்து அந்தணர்கள் தோற்றனர்; அதற்குப்பின் வணிகர்கள் தோற்றனர். சாதி அடிப்படையில் பாடகர்கள் வரிசைப் படுத்தப்பட்டனர். சூறைக்காற்றுக்கு ஆற்றாது தலைசாய்ந்து கரிந்த தாமரைகள் போன்று அவர்கள் சாம்பினர்; இந்த இசை விழா ஆறு நாட்கள் நடந்தன. வீறுகொண்டு அவளை வெல்லத் தக்க இளைஞர்ஏறு யாரும் முன்வரவில்லை. சீதத்தன் செய்வது அறியாது திகைத்தான்; பதுமையும் மனம் கலங்கினாள். “அவளைக் கொத்திக்கொண்டு போக எந்தத் தத்திப் பையலும் வரவில்லை” என்று அவள் கவலைப் பட்டாள். விழாவிற்குத் தலைமை தாங்கிய கட்டியங்காரனும் நிலைமை அறிந்து வருந்தினான். “இவளைக் கட்டிக்கொண்டு போக எந்தத் தறுதலையும் கிடைக்க மாட்டான்” என்று உறுதியாக முடிவு செய்துவிட்டான். “மற்றும் ஒருநாள் பார்ப்பது. இல்லை என்றால் மூட்டை கட்டி அவளை அவள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது” என்ற முடிவுக்கு வந்தான். “விலை போகாத பண்டத்தை ஏலமா போட முடியும். போட்டிகள் வைக்காமல் யாராவது ஒருவன் அவளுக்கு மாலையிடலாம் என்று சொல்லலாம்” என்று எண்ணிப்பார்த்தான். அப்படிச் சொன்னால் “இந்த முட்டாள் பயல்கள் எல்லாம் அங்கேயே வெட்டிக் கொண்டு மடிவார்கள்” என்று அதைக் கைவிட்டான். “சீதத்தன் ஒரு மடையன், வீண் வம்பை விலைக்கு வாங்கி வந்துவிட்டான்; அந்தக்கொடி படர்தற்கு ஏற்ற கொம்பன் யார் வரப்போகிறான்” என்று பேசிக் கொண்டார்கள். “கணித்துச் சொல்லியவன் துணிந்து சொல்லியது தவறாது” என்ற நம்பிக்கை தத்தைக்கு இருந்தது. வந்திருந்த சொத்தைகளைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அரச குடும்பத்திலே இருந்தே பரிசுப் பொருளுக்கு உரியவன் வரவேண்டும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. பாஞ்சாலியின் கதை அவள் அறிந்ததே, மாபெரும் மன்னர்கள் கூடியிருந்த மண்டபத்தில் திரிபன்றியை எய்து வீழ்த்தக் கூடிய ஒரு வீரன் மன்னர் கூட்டத்தில் இருந்து வரவில்லை. அந்தணர் வேடத்தில் ஒரு அருச்சுனன் வராமல் போகமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. நாட்டு மக்கள் கட்டியங்காரனை வெறுத்தனர்: ஆட்சி ஒழுங்காக இருந்தால்தான் கலைகள் வளரும் மக்கள் அமைதியான வாழ்வு பெற்றிருந்தால்தான் அவர்கள் இசையை நாடுவர்; கொடுங்கோல் மன்னன் குடியிருப்பில் கடுங்கண் உடைய புலி கூட வாழ விரும்பாது. முற்றுப் பெறாத கதையாகி விடுமோ என்று வாசகர்கள் அஞ்சினார்கள். இது நாட்டுக்கே அவமானம் என்று கருதினர். இந்தச் செய்தி சீவகனுக்கு எட்டியது; காந்தருவ தத்தையை மணக்க வேண்டும் என்ற வேட்கை தோன்ற வில்லை. அந்நிய நாட்டில் இருந்துவந்த ஒருத்தி தன்னிகர் அற்றவள் என்று தருக்கி நடந்து செல்வதை அவன் மானப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டான். அதனால் தான் போட்டியில் பங்கு கொள்வது என்று முடிவு செய்தான். என்றாலும் அவன் தந்தை அவையில் முந்திக்கொண்டு உட்கார்ந்திருப்பதை அறிந்து மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்க அறிவும், திறமையும் மிக்க செயலும் உடைய புத்திசேனனை அவர் அனுமதி கேட்டு அறிந்துவர அனுப்பினான். கந்துக்கடனுக்குத் தன் மகனைப் பற்றி ஒரளவு தெரியும். கணிகையர் நடத்தும்ஆடல் அரங்குகளுக்கு அவன் சென்று வருவது அவன் அறிந்தது. முருங்கை முற்றினால் அது கடைக்கு வந்துதான் தீரும்; வயது முற்றியவன் அவன் காமக் களியாட்டங்களுக்குத் தன்னை ஈடுபடுத்தக் கூடும். அது தவிர்க்கப்பெற வேண்டுமானால் தத்தையைப் போல் அறிவுமிக்க அழகியை மணப்பது தக்கது என்று முடிவு செய்தான். அதனால் அவன் மறுப்புச் சொல்ல முன் வரவில்லை. என்றாலும் இந்தமாதிரி சூழ்நிலைகளில் அவன் தற்காப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்தான். “அரசமகன் அழகி ஒருத்தியை மணக்கிறான் என்றால் மற்றைய சாதிக்காரர்கள் அடங்கிக் கிடப்பார்கள்: ஏனைய மன்னர்கள் வாய்மூடிக்கொண்டு அது தக்கது என்று கூறி வாழ்த்திவிட்டு வழி பார்த்துக்கொண்டு போவார்கள். வணிக மகன் ஒருவனுக்கு வாய்ப்பு வருமானால் அவர்கள் வாயைப் பிளப்பார்கள். கீழ்ச்சாதிக்காரன் மேல் சாதிப் பெண்ணை மணப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதுமட்டுமல்ல; கட்டியங்காரன் விட்டுக் கொடுக்க மாட்டான்” என்று யோசித்தான். நாகமாலை என்ற கணிகை ஒலை எழுதி அவனுக்கு இச்செய்தி தெரிவித்தாள். “சீவகன் அநங்கமாலையைத் தொட்டு அவளோடு தொடர்பு கொண்டான். வண்ணப்பொடிகளை வகையாக எப்படிப் பூசுவது என்பதை அறிந்தவன். அவள் நாட்டிய அரங்கு ஏறும் முன் அவளுக்கு வண்ணம்பூசி அவள் எண்ணத்தைத் துாண்டி இருக்கிறான்; ஒப்பனை செய்வதில் அவன் கற்பனை அதீதமானது. அவனை எப்படியாவது அடைவது என்று ஆசையை அவள் வளர்த்துக் கொண்டாள்”. “இதனை அறிந்த கட்டியங்காரன் அநங்க மாலையைக் கண்டித்துப் பார்த்தான். தன் இச்சைகளுக்கு அவள் இணங்க மறுத்தபோது பச்சையாக அவளை இழுத்து வந்து கொச்சைப்படுத்தினான். அவள் நிச்சயம் தான் ஒரு நாளைக்குச் சீவகனை அடைவது உறுதி என்று வாய்விட்டுக் கதறினாள். அதனால் அவன் அவளைக் குதறினான். அவன் உள்ளத்தில் சீவகன்பால் தீராப்பகை கொண்டிருக்கிறான் என்பதை நாகமாலை அறியும் ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. கட்டியங்காரன் நாகமாலையின் படுக்கை அறைக்கு வந்தபோது அவன் தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் வெளிப்படுத்தினான். “சீவகனை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன்” என்று அவளிடம் சூள் உரைத்து இருக்கிறான். அதனால் இங்கே வரும்போது சீவகன் தக்க பாதுகாப்போடு வரவேண்டும்” என்று ஒலையில் எழுதி அனுப்பினாள். அவள் தோழி ஒருத்தி அதைக் கொண்டுவந்து கந்துக்கடனிடம் தந்தாள். செய்தி கேட்ட சீவகன் “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது; அந்த ஒநாய் நம்மை ஒன்றும் செய்யாது; அஞ்சவேண்டியதில்லை” என்று அறிவித்து அனுப்பினான். சீவகன் அவைக்கு வந்ததும் அரங்கமே களைகட்டியது; கட்டியங்காரன் பார்த்தான்; வியர்த்தான்; “இந்த முரட்டுக்காளை இங்கே ஏன் வந்தது? அவளை இவன் தட்டிக் கொண்டு போகக்கூடும்” என்று அஞ்சினான்; அவையைக் கலைத்துவிடலாம் என்றும் சிந்தித்தான்; இருந்தாலும் அவனுக்கு ஒரு நம்பிக்கை இவனால் அவளை இசையில் வெல்லமுடியாது என்று. “அரசர்கள் எல்லாம் கடையைக் கட்டிவிட்டுப் போய் விட்டார்கள்: வணிகமகன்; இவனுக்குக் கூட்டல் கழித்தல் தெரியுமே அன்றி வகுத்தல் பெருக்கல் எப்படித் தெரியும்? இசையை இவன் எப்படி எங்கே சுற்றிருக்க முடியும்? அப்படி இசையில் வல்லவனாக இருந்திருந்தால் அநங்கமாலையின் நாட்டியத்தின்போது தன் பாட்டியல் கலையைக் காட்டி இருக்கலாமே” என்று அவன் அசதியாக அமர்ந்திருந்தான். காமனை ஒத்த கட்டிளங் காளையாகிய சீவகனைக் கண்ட காரிகையர் காந்தருவதத்தையைக் கடிந்து கொண்டனர். “கொடுத்து வைக்காதவள்; கெடுத்துக் கொண்டாள்; இசைப்போட்டியில் அவன் வெல்லாவிட்டால் அவள் அவனை இழப்பது உறுதி, அவள் தனக்குத் தானே வேலி போட்டுக் கொண்டாள்” என்று பேசியவர் பலர். “வெற்றி தோல்வி அவளிடத்தில் தானே இருக்கிறது; அவள் விட்டுக் கொடுத்தாலும் விட்டுக் கொடுப்பாள்; இசையில் தோற்றால் அவள் வாழ்க்கையில் வெற்றி பெறுவாள்” என்று ஒரு சிலர் தம் கருத்தை வெளிப்படுத்தினர். மேடையில் இருந்த இசைவாணி காந்தருவ தத்தை இவ் இளைஞனைப் பார்த்து அவன் அழகில் மயங்கினாள். இசையில் தான் வென்று விட்டால் என்ன செய்வது என்று அஞ்சினாள். வேண்டுமென்றே தோற்று அவனை அடையும் கீழ்மைக்கு அவள் செல்லத் துணிய வில்லை. அது அவள் பெருமைக்கு இழுக்கு இசையில் தன் புகழை நிலை நாட்டுவதில் இருந்து அவள் பின்வாங்க விரும்பவில்லை. அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்ள விழையவில்லை. விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை. அது தன்னைத் தானே அழித்துக் கொள்வதாகும்” என்று முடிவு செய்தாள். விதியின் விரல்கள் எப்படி எழுதுகிறதோ அதன்படி நடப்பது என்று உறுதி கொண்டாள். அவளுக்கு வீணாபதியின் மேல் அடக்க முடியாத கோபம். வீணாபதி என்ற பெயருக்கு ஏற்ப அவள் காலத்தை வீண்படுத்துகிறாள் என்று நினைத்தாள். “இனி பொறுப்பதில்லை” என்று எரிந்து விழுந்தாள். “யாழ் எடுத்துக் கொடு” என்றாள். பாழ்பட்ட அவள் அவசரத்தை அறியவில்லை; விதி முறைப்படி அவன் இசைப் புலமையை அறியத் தேர்வுகள் வைத்தாள்; அவன் இசைஞானி என்பதை வசையற உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற உயர் சிந்தனையும் அவளுக்கு இருந்திருக்கலாம். அவன் முறைப்படி யாழ் மீட்டினால் மட்டும் போதாது; அதன் அமைப்புகளையும் அவன் காட்ட வாய்ப்புகளை ஏற்படுத்தினாள். பல் வகை யாழ்க் கருவிகளை ஒன்றன்பின் ஒன்று எடுத்து முன் வைத்தாள். “இந்த யாழ் அறிவற்றவர்களைப்போல மெல்லிதாக இருக்கிறது” என்று கூறினான். மற்றொன்று வைத்தாள். “இது அழுகல், அழுமூஞ்சிகளைப் போன்றது. இது” என்றான். மற்றொன்று வைத்தாள். “இது வடுப்பட்டது; சான்றோர்கள் தம் சால்பு குன்றியது போன்றது” என்றான். மற்றொன்று காட்டினாள். “கரிந்தது; இடிபட்டு முறிபட்டது” என்றான். இப்படி வைத்ததற்கு எல்லாம் ஏதாவது குறை காட்டிக் கழித்தான். புடவைக் கடையில் பெண்கள் ஒதுக்குவது போல் ஒவ்வொன்றாக ஒதுக்கி வைத்தான். ஒரு யாழ் தத்தையைத் தொடுவதுபோல் இருந்தது அவனுக்கு, “நங்கையின் நலத்தது” என்றான். இதைக் கேட்டதும் தத்தையின் உள்ளம் குளிர்ந்தது. யாழுக்குத் தன்னை உவமித்து மதிக்கிறான் என்று கொண்டாள். நங்கை என்று தன்னைச் சொன்னானா பொதுவாக ஒரு மங்கையக் குறித்தானா என்று தடுமாறினாள்; என்றாலும் அவன் ரசனையை மதித்தாள். மகளிரை மதிக்கும் மாண்பு அவனிடம் உள்ளது என்று அறிந்தாள். மூக்கு மட்டும் சற்று எடுப்பாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதுபோல் அவ் யாழின் நரம்பில் மயிர் ஒன்று சிக்கிக் கிடப்பதை எடுத்துக் காட்டினான். அருகில் இருந்த தன் தம்பி நபுலனிடமிருந்து புதிய நரம்பைவாங்கி அதில் மாட்டினான். அவன் இசை ஞானம் அறிந்தவன் என்பதை இச் செயல் எடுத்துக் காட்டியது. யாழ் எடுத்து இசை கூட்டினான். காதற் பாட்டுப் பாடுவது என்று தொடங்கினான். அதுவே அவள் நெஞ்சைத் தொடும் என்பதை அறிந்தான். பெரியவர்கள் தெய்வீகப் பாடல்களை விரும்பலாம்; இளைஞர்கள் காதற் பாட்டைத் தான் விரும்புவார்கள் என்பதை அவன் அறிந்தவன், பிரிவால் வாடும் காதலியின் நெஞ்சைச் சித்திரித்து அவள் நெஞ்சம் நெகிழப் பாடினான். கூட்டத்திலிருந்து கைதட்டல் கிளம்பியது. இவன் இசையில் இளவரசன் என்று புகழ்ந்தனர். இளையராஜா வாழ்க என்று வாழ்த்தினர். அடுத்து அவள் பாடும் முறை வந்தது. அவளும் அவனுக்கு நிகராக இளவேனிற்பருவம் குறித்துப் பாடினாள். அவன் பாடல் கார் காலத்துத் தலைவியின் மன நிலையைச் சித்திரித்தது. அது பிரிவைக் காட்டியது இவள் பாடல் இளவேனிற் பருவத்தில் கூடி மகிழும் இனிய காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒசையை விட்டுப் பொருளில் ஆழ்ந்தாள். அவள் மனம் சிதைந்தது; ஒரு முகமாக அவளால் மனத்தை நிறுத்த முடியவில்லை; காதல் உணர்வு மிக்கு அவளை அலைக் கழித்தது; நாணம் அவளைக் கை விட்டது; நிறை கரை புரண்டது; யாழை நெகிழ்ந்து கீழே விட்டாள், அவன் தோளில் சாய்ந்து தன் வசம் இழந்தாள். ஊடலில் தோற்பவர் கூடலில் வெற்றி பெறுவது போல இசையில் தோற்றவள் காதலில் வெற்றி பெற்றாள். பட்டுப் போன்ற அவள் மேனி தன் தோள்களில் பட்டதும் அவனுக்கு ஒரு புது வகைக் கிளர்ச்சி ஏற்பட்டது. போரில் தினவு கண்ட அவன் தோள்கள் காதலில் விறு விறுப்பைக் கண்டது. அவளைக் கட்டி அணைக்க அவன் தோள்களுக்கு ஆணையிட்டான். ஆரவாரம் வானை எட்டியது; பெண்கள் தாமே அவனை அடைந்தது போன்று பெருமகிழ்ச்சி காட்டினர். நம்பியை அடைய அவள் தவம் செய்தவள் என்று பாராட்டினர். மன்மதனையும் ரதியையும் அவர்கள் நேரில் கண்டது போன்று மகிழ்ந்தனர். சிறு கீறலும் படாத கனியை அவன் பெற்றான் என்று மூரல் கொண்ட மகளிர் பேசினர். அவன் தோள்கள் இதுவரை எந்தக் கன்னியையும் தோய்ந்ததில்லை என்றனர், கோவிந்தையை அவள் தந்தை மணக்க வற்புறுத்தினார். அவன் மறுத்துவிட்டதும் நல்லதாகப் போயிற்று. ஆக்கப் பொறுத்தவன் ஆளப் பொறுத்தான்; ஆய மகள் அவள் பால்மணம் மாறாதவள் என்பதால் அவன் விரும்பவில்லை; அவளைப் பற்றி அவள் தந்தை எப்படி அறிமுகம் செய்தார் தெரியுமா?” “வெண்ணெய் போல் தொட இனிமையானவள், பால் போல் இனிய சொல்லினள்; பசும் நெய் போல் மேனியை உடையவள் என்று அறிமுகம் செய்தார். “இப்பொழுது இவளைப் பிடித்தது எதிர்பாராத ஒன்று; இவள் தந்தை செல்வச் சிறப்பும் ஆட்சி உயர்வும் பெற்ற மாமன்னன்; அவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் கொடுப்பான்; மந்திர சக்தி வாய்ந்தவன்; படைபலம் மிக்கவன்; எதையும் அவன் துணையால் சாதிக்க முடியும்; மாமனார் வீடு பெரிய இடம்; எந்தக் குறையும் இல்லை; பெண்ணும் கற்றவள்; இசையில் வல்லவள்; அறிவு நிரம்பியவள், பொறுமை மிக்கவள்; கருவம் என்பது சிறிதளவும் இல்லாதவள்; அவன் இனி எத்தனை பேரை மணந்தாலும் இவளுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது; அந்த மாதிரிப்பெண் இந்தப் பக்கம் கிடைக்காது” என்று பாராட்டிப் பேசினார்கள். “அவள் ஒழுங்காகக் குடும்பம் நடத்த வேண்டுமே.” “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” “கந்தருவப் பெண்கள் இவனைவிடப் பேரழகர்கள் கிடைத்தால் அவர்கள் பின்னால் போய்விடுவார்களே” “இவனைவிட மேலானவர் யாரும் கிடைக்க மாட்டார்கள், மன்மதனே வந்தாலும் இவனிடம் அழகில் மண்டி இட வேண்டியது தான். முருகனைப் போன்ற அழகும் வீரமும் படைத்தவன்; அவனை விட்டு எந்தப் பெண்ணும் பிரியமாட்டாள்” என்று இந்த மணத்தைப் பற்றிப் பல கோணங்களிலும் விமர்சித்தனர். நிலவின் ஒளி கட்டியங்காரனைச் சுட்டு எரித்தது; அதனால் அவனிடம் புகை கிளம்பியது. “எங்கே வந்தாலும் இந்த இளைஞன் போட்டிக்கு வந்து விடுகிறான்; எந்த அழகியும் இவனை விட்டு வைக்க மாட்டாள் போல் இருக்கிறது. அநங்கமாலையை என்னிடமிருந்து நீக்கியவன் இவளோடு இவன் வாழக் கூடாது” என்று அழுங்கினான்; மனம் புழுங்கினான். அங்கு வந்திருந்த அரச குமாரர்களைத் துண்டி விடுவது என்று திட்டமிட்டான்; அவர்களும் அவள் கிடைக்க வில்லையே என்று வெந்து கொண்டிருந்தனர். “மனோன்மணிய நாடகத்தில் சீவக வழுதி படை வீரர்களை நோக்கி நாட்டுப் பற்றை ஊட்டிச் சொற் பெருக்கை நிகழ்த்தியது போல இவன் அவர்களை விளித்து அவர்கள் மானத்தைத் துரண்டி விட்டான். தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் வழக்குத் தொடுப்பது போல் இவன் புதிய வழக்கைக் கிளப்பினான். “அடிப்படையில் இந்தப் போட்டி நியாயமற்றது; பாட்டுப்பாடுகின்றவனுக்குத் தான் ஒரு பெண் உரிமை என்றால் பாகவதர்கள் எல்லாம் அரச குமாரிகளை அடை வதற்கு ஆர்வம் காட்டுவர்; மன்னவன் மகள் மாற்றாள் ஒருவனுக்குப் போவதை உங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது; இது மன்னர் மரபுக்கே ஒரு அறை கூவல் ஆகிறது.” “வரலாறு காணாத நிகழ்ச்சி இது. இராமன் சீதையை மணந்தான் என்றால் அவன் வில்லை வளைத்த பின் அவளை வளைத்தான்; அருச்சுனன் இலக்கை வீழ்த்தி விட்டே தன் இலக்கை அடைந்தான்; நளன் காதலித்தவளுக்குத் தன் கழுத்தை வளைந்து கொடுத்தான். சுயம்வரம் என்றால் வீரம் அல்லது காதல் அடிப்படையில் இருக்க வேண்டும்; பாட்டுப்பாடினான்; அதற்காக அவளை அவன் மாலை இடுவது மரபுக்கு ஒவ்வாது.” “முதலில் அவனை வென்று தொலைத்து விடுங்கள். பின் நீங்கள் என்ன செய்வது என்று யோசித்து முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது ஆள் அவனை முதலில் தூக்கி எறியுங்கள்; அதற்குப்பின் இங்கேயே ஒரு களம் அமைத்துத் தருகிறேன்; நீங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வலிமை மிக்கவன் அவளை அடையலாம். வலிமையே வெல்லும் என்பது வாழ்க்கை நியதி, சிறிய மீனைப் பெரியமீன் விழுங்குகிறது; மானைப் புலிவேட்டை யாடுகிறது; தொழிலாளியை முதலாளி ஏய்க்கிறான். எளியோரை வலியார் வாட்டுவதுதான் உலக முறை நியதி முதலில் செயலில் இறங்குங்கள்.” “இவனை எப்படி எதிர்ப்பது என்று யோசனை செய்கிறீர்களா, இவன் தனியாள்; நண்பர் உறவினர் யாரும் இல்லை; அவர்கள் எல்லாம் வாணிபத் தொழிலினர். சண்டை என்றால் அவர்கள் அங்கே மண்டை உடையும் என்று அஞ்சுவார்கள். அவர்கள் சிகப்பு மையைக் கண்டால் கூட சிப்பாய் என்று அஞ்சும் பீப்பாய்கள். இவனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; யாழ் எடுத்து மீட்டும் கை அவனது, வில் எடுத்து விறல் காட்டத் தெரியாதவன். விழித்து எழுங்கள்; அழித்து ஒழியுங்கள்” என்று வீரவசனம் பேசினான். அவர்களுக்கே நயப்பாசை தோன்றியது; இந்த அற்பப் பையலை ஒழித்து விட்டால் அவள் நமக்குக் கிடைப்பாள் என்ற சொற்ப ஆசை அவர்களைத் துாண்டியது. அவரவர்கள் கத்தியும் சுத்தியும் எடுத்துக்கொண்டு சீவகனை வளைத்தனர். மறைந்திருந்த அவன் தம்பியரும் தோழர்களும் படைகளோடு வந்து அவனுக்கு அரணாக நின்றனர்; முரண்பட்டவர்கள் அத்தனை பேரும் அரண் தேடி நான்கு திசையும் ஓடினர். இசை மண்டபமே மணமண்டபம் ஆகியது. மன்னர் கூட்டம் ஒட்டம் பிடித்தது. நகரமாந்தர் இருந்து மண விழாவினை நடத்தித் தந்தனர். காந்தருவ தத்தையை மணந்த அவன் அவள் காந்த சக்தியால் இழுக்கப்பட்டவன் ஆனான். அவள் அதீதமான அறிவுடையவள் என்பதை அறிந்தான்; அவள் புற அழகில் மயங்குவதைவிட அவள் அறிவு ஆற்றலில் தன்னைப் பறி கொடுத்தான். யாழும் வாய்ப்பாட்டும் இணைந்து இனிமை ஊட்டுவது போல அவ்விருவரும் இணைந்து இன்பம் பெற்றனர். அவள் யாழ் ஆனாள், அதை மீட்டும் வில்லாக அவன் செயல்பட்டான். செய்தி அறிந்த கலுழவேகன் சீர்கள் அனுப்பி அவன் தன் வாழ்த்தினைத் தெரிவித்தான். எங்கோ வடபுலத்து இட்ட கயிறு கடலில் அடித்துக் கொண்டு தென்புலத்துக்கு வந்து ஒரு நுகத்தடியின் துளையில் தானாக வந்து அகப்பட்டுக் கொள்வதைப் போல வட புலத்திலிருந்து வந்த நங்கை சீவகனை மணாளனாகப் பெற்றாள். அவனும் அந்தக் காதல் கலப்பை வியந்து பாராட்டினான். “உன்னுடைய தாயும் தந்தையும் யான் முன் அறிந்ததில்லை; நீயும் இதற்கு முன் யார் என்று தெரியாது; வானத்திலிருந்து பொழியும் நீர் வையகத்தில் விழும் போது செம்மண்ணோடு அது கலக்கிறது அதற்குப் பிறகு அதைப் பிரித்துக் காண முடியாது. அது போல நம் நெஞ்சம் தாமே கலந்து விட்டன” என்று பாராட்டினான். “காதல் என்பது தொடக்கத்தில் உடல் உறவால் ஏற்படுகிறது; எனினும் அது உள்ள உணர்வால் ஒன்றுபடுகிறது” என்று கூறி இல்லற இனிமையை நுகர்ந்தனர். 4. குணமாலையார் இலம்பகம் இராசமாபுரத்தில் வணிகக் குடியில் பிறந்த வனிதையர் குணமாலையும் சுரமஞ்சரியும் ஆவர். அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறக்கவில்லை; எனினும் அவர்கள் இரட்டையர் என்று சொல்லும்படி இணைந்து வாழ்ந்தனர். இருவரும் பெருங்குடி வணிகரின் மகளிர் ஆவர். நெருங்கிய நட்பினர்; ஆயினும் அவர்கள் உரையாடும் போது எதிர்க் கட்சிக்காரர்கள் போல் முரண் பட்டுப் பேசுவர்; எதற்கெடுத்தாலும் ‘ஒட்டு’ என்று கூறி வெட்டிப்பேசுவர்; வெற்றி பெறுபவள் மற்றவர்களுக்கு இது தர வேண்டும் என்று பந்தயம் வைத்து வேகமாகப் பேசுவது வழக்கம். ஒரு சிறு கதை; மயிலும் கருடனும் இணைபிரியாத சிநேகிதர்களாகப் பழகினர்; நாம் இருவரும் செறிந்த நட்பினால் நம்மையாரும் பிரிக்க முடியாது என்று பேசிக் கொண்டிருந்தன. பேசி முடிப்பதற்குள் அவற்றின் கண் முன்பு ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது: “அதை நான் தான் குத்துவேன்; எனக்குத்தான் சொந்தம்; நான் முதலில் பார்த்தேன்” என்றது மயில், கருடன் சொல்லியது “பாம்பு தீராதபகை, அதைக் குத்திக் கொல்லும் உரிமை எனக்குத் தான் உண்டு” என்று ஆணையிட்டுக் கூறியது; இச்சண்டையில் பாம்பு தப்பித்துக் கொண்டது. இவை இரண்டும் அதற்குப் பிறகு பேசியதே இல்லை. ஊரிலே திருவிழா; இளவேனிற் பருவம் வந்தது. ஆட வரும் பெண்டிரும் குடும்பம் குடும்பமாகச் சோலையையும் அருகிருந்த நீர் அருவியையும் நாடிச் சென்றனர். சோற்று மூட்டை கட்டிக்கொண்டு வேற்று நாட்டுக்குச் செல்வது போல் சென்றனர். சிறப்பாக அரும்புகள் அங்கே விரும்பிச் சென்றனர். சுரும்புகள் அவற்றை நாடிச் சென்று வட்ட மிட்டன. கன்னியர்கள் அன்னையரின் காவலைக் கடந்து தன் ஆவல் தீரக் காதலிக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது; மனமானவர்கள்; வீட்டில் ஒரே மாதிரி உணவு உண்டவர்கள்; அதே உணவை வேறு வகையில் சுவைத்து உண்டனர்; பத்தினிப் பெண் ஆனாலும் அவள் வந்து பத்துமினியாகக் காட்சி தந்தாள். சோலை நிழல்களில காதலர்கள் பேசிக் கதைகள் அளந்தனர்; காரணம் இல்லாமலே சிரித்தனர். சிடுமூஞ்சிக் கணவர்கள் கூடச் சிரித்து விளையாடிக் குதூகலம் அடைந்தனர். முத்துப்பல்லக்கில் பிறர் சுமக்கச் சென்றனர் இளங் கன்னிகைகள்; மற்றவர் பாடிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும், குதிரை பூட்டிய தேர்களிலும் அவரவர் அந்தஸ்த்துக்கு ஏற்ப அங்குச் சென்று குழுமினர். காளைப் பருவத்து இளைஞர்கள் தம் தோழருடன் இயற்கைக் காட்சியோடு இனிய மகளிரைக் கண்டு மகிழ இதை வாய்ப்பாகப் பயன்படுத்தினர்; சிட்டுக் குருவிகள் பறக்கின்றன என்று பட்டுப் பூச்சிகளைச் சுற்றி வட்டமிட்டனர். குணமாலை தான் கொண்டுவந்திருந்த சுண்ணத்தை எடுத்துக் காட்டி அதன் பொன் வண்ணத்தைச் சிறப்பித்துப் பேசினாள். தான் கைப்பட சமைத்த சமையல் என்று பெருமை பேசும் இல்லத்து அரசிகள் போல அவள் இது தன் கைப்பட அமைத்த சுண்ணம் என்று அதன் வண்ணத்தைப் பாராட்டினாள். அதனால் தன் கைத் திறனையும், கலைத்திறனையும், சுவைத்திறனையும், அழகின் உணர்வினையும் அதிகப்படுத்திப் பேசினாள்; மயில் கருடன் கதையாயிற்று. ‘நீ நாட்டுப்புறத்துப் பெண்; நாகரிகம் அறியாத கட்டுப் பெட்டி, உனக்கு என்ன தெரியும் அழகியல்பற்றி. இந்தச் சுண்ணத்தைக் கொண்டு நீ யாரையாவது உன் பக்கம் இழுக்க முடியுமா, இதை வைத்து நீ ஒரு ஆடவனைக் கவர்ந்து விட்டால் உனக்கு நான் தோற்றவள் ஆவேன். இது நான் இடித்த சுண்ணம்; இதையும் அதையும் வைத்து அனுப்புவோம்; யார் எதற்கு அடிமையாகின்றனர் பார்ப்போம்” என்றாள் சுரமஞ்சரி. தோழியர் தடுத்துப் பார்த்தனர்; சூது ஆட்டம் இது; நாம் பூசிக் கொள்ளும் அழகுச் சாதனை இது; இதை வைத்தே சூதாடுவது தீது. இதனால் பகை வளரும்; உம் நகை கெடும்; இது உங்களுக்கு மிகை” என்று வகையாக எடுத்துக் காட்டினர். “முடியாது; இரண்டையும் தனித்தனித் தட்டுகளில் எடுத்துச் செல்லுங்கள்; வழியில் தட்டுப்படுகின்ற கட்டிளங் காளைகளிடம் காட்டுங்கள்; அவர்கள் தீர்ப்புக் கூறட்டும்; எது உயர்ந்தது என்று. உரைக்கட்டும்” என்றனர். ஒட்டு என்று வைத்தவர் அதற்கு ஈடாகப் பணயமும் வைத்தனர்; “தோற்றவர் இவ் அருவியில் நீராடுதல் கூடாது; கோடிப் பொன் கொட்டி அளந்து அருகன் கோயிலுக்குத் தரவேண்டும்” என்றாள் சுரமஞ்சரி; அதனைக் குணமாலை மறுக்கவில்லை. செம்பொன் கொடியனைய சேடியர் இருவர் தனித் தனித் தட்டு ஏந்திக் காளையர் சிலர் முன் நீட்டினர்; அவர்கள் தட்டைப் பார்க்கவில்லை. “இதைப் பாருங்கள்” என்றனர். “உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்” என்றனர். அவர்கள் சிரித்தனர். “எம்முடைய தலைவியர் பெரிய வீட்டுப் பெண்கள்; அவர்களுக்கு இந்தச் சிறிய விளையாட்டுகள் பொழுது போக்கு அவர்கள் தம் கையால் இடித்துப் பூசிக் கொள்ளும் சுண்ணம் இது; எது இவற்றில் சிறந்தது என்று கேட்கின்றனர்.” “நாங்கள் வணிகச் சிறுவர்கள்; கோமுட்டி சாட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறீரா? யாரையும் புண்படுத்த மாட்டோம். முன் பக்கம் பார்த்தால் செட்டியாருடையது; பின்பக்கம் பார்த்தால் ரெட்டியாருடையது என்று சொல்லிப் பழக்கம். அதனால் கோமுட்டி சாட்சி என்ற சொல் வழக்கே உண்டாகி விட்டது. இது சிறப்பாக இருக்கிறது என்றால் மற்றொருவர் விறைப்பார்கள்; எங்களுக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு: நாங்கள் நல்ல பிள்ளைகள்” என்றார்கள். “நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” என்று அவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள். “உங்கள் முடிவுதான் என்ன?” “இரண்டும் நன்றாக இருக்கிறது” “இதைச் சொல்லவா உங்களிடம் வந்தோம்” “மற்றொன்று சொல்கிறோம்; சுண்ணம் எப்படி இருந்தால் என்ன? அதைப் பூசிக் கொள்பவர் வண்ணம் அழகாக இருந்தால் அதுவே மெச்சத்தகுந்தது” என்றனர். “ஆகா! பெரிய கண்டுபிடிப்பு, நீங்கள் நாடக வசனம் எழுதத்தான் தகுதி, யாரைக் கேட்டால் நல்ல தீர்ப்புக் கிடைக்கும்?” “அப்படிக் கேளுங்கள்; சொல்கிறோம். சீவகன் அவனைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! காந்தருவ தத்தையோடு வீணைப் போட்டியில் கலந்து கொண்டவன்; அவன் இந்த மாதிரி விவகாரங்களில் கைதேர்ந்தவன்; அநங்க மாலைக்கு அவன் ஒப்பனை செய்தவன்; அவன் பல நிறச் சுண்ணங்கள் அப்பியவன்; அவனைக் கேட்டால் தப்பாமல் சொல்வான். அது மட்டுமல்ல; அவன் மணந்து கொண்டது காந்தருவ நாட்டுப் பசுங்கிளி. அவன் எண்ணத்தைக் கேளுங்கள். அவன் திண்ணமாகத் தீர்ப்புக் கூறுவான்” என்று கூறித் தப்பித்துக் கொண்டனர். “என்ன இந்தப் பிள்ளைகள் மோசமாக இருக்கிறார்கள்; ரசனையே இல்லாதவர்கள்” என்று விசனமாக அவர்களை விட்டு “இசை ஞானி” என்ற பெயர் வாங்கிய இளவரசன் சீவகனிடம் சென்றனர். சேலைகள் தன்னை நோக்கி வருவதை வேலைத் தாங்கிய வீரனாகிய சீவகன் பார்த்தான். “ஐயா! ரசிகர் தலைவரே! உம்மால் அழகை ரசிக்கத் தெரியுமா?” என்று கேட்டனர். “உங்களை ரசிக்க முடியாது; அழகை ரசிக்கத் தெரியும்” என்றான். “அழகு அதிகம் இல்லாததால் தானே இந்த அடிமைத் தொழில் செய்கிறோம். பூக்களை ரசிக்கத் தெரியுமா?” என்று காட்டினாள். “பாக்களை ரசிப்பேன்; திருத்தக்க தேவர் எழுதும் கவிதைகள் என் உயிர்” என்றான். “அதனால் காமச்சுவை என்பது உமக்குக் கைவந்த கலையாக இருக்கும் எனக் கருதுகிறோம்.” “கவிச்சுவையில் அதைக் காணும்போது அது தவறு இல்லை; புவிச்சுவையில் தான் காணக் கூடாது” என்றான். “பூக்களிள் ரசிகன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்”. “யாரோ திரித்துச் சொல்லி இருக்கிறார்கள்; பூவையர் என்பதை மாற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.” “சரி சுண்ணத்துக்கு வருகிறோம்; எது நலம் வாய்ந்தது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?” “கோடையில் இடித்துத் துகள் செய்தது வாடை மிகுந்து வீசும்; மாரியில் இடித்தது மங்கிப் போகும்” என்றான். “அதை எப்படிப் பிரித்து அறிவது?” “பூக்களின் ரசிகர்கள்; இங்கு இந்தச் சோலையில் சதா சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விட்டால் அவர்கள் அதைத் தொட்டால் அது உயர்ந்தது என்று கருத்தாகும்.” “அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” “உங்கள் தலையில்” “என்னய்யா கிறுக்காகப் பேசுகிறீர்” “சுருக்கமாகப் பேசினேன்; உங்கள் தலையில் என்ன சூடி இருக்கிறீர்கள்.” “பூக்கள்” “அதைச் சுற்றித் திரிவது யார்?” “ஒன்று வண்டுகள்; இல்லாவிட்டால் சில மண்டுகள்”. “அந்த வண்டுகளைத் தான் நான் சொல்கிறேன். மனித சாதியில் நான்குவகை சாதி உண்டு; அதே போல் வண்டிலும் நான்கு இனங்கள் உண்டு, வண்டு, ஞமிறு, தேன், சுரும்பு என்பவையாகும். இவை மானிடர்போல் ஒரு பக்கம் சாயமாட்டார்கள்; நீதிபதிகளை நீங்கள் விலைக்கு வாங்கி விடலாம்; இந்த அம்பிகாபதிகளை நீங்கள் விலைக்கு வாங்க முடியாது”. “வழக்குமன்றம் தொடரலாமே”. “நீதிபதிகள் நால்வர்; இதை உங்கள் மொழியில் சொன்னால் ‘கூட்டுநீதிபதிகள்’ என்பீர்கள்; அவற்றிற்கு இந்தப் பொடியை ஊட்டிப் பார்த்தால் அவை உண்மையைக் காட்டிவிடும்” என்றான். சுண்ணப் பொடியை மேலே தூவினர்; குணமாலையின் துகள் காற்றில் மேலே பறந்தது; சுரமஞ்சரியின் துகள் ஈரச் சுமையில் தரையில் இறங்கியது. இதைக் கண்டு வியந்தனர். “அது பறக்கும் விமானம்; இது இறங்கும் விமானம்” என்றான். “எது உயர்ந்தது?” “உயரத்தில் பறப்பது” “எப்படிச் சொல்கிறாய்?” “கோடையில் உலர்ந்தது மேலே சென்றது; மாரியில் ஈரம்பட்டது; அது சோர்வு கண்டது; கீழே படிந்தது.” “முடிவு?” “வண்டுகள் மேலே பரவிய சுண்ணத்தைச் சுற்றி அவற்றைச் சுவைத்தன; சுரமஞ்சரியின் சுண்ணத்தைத் தொடவே இல்லை; அதனால் வண்டுகள் தந்த தீர்ப்பு இது” என்பதைக் காட்டினான். “அது எப்படி நீங்கள் வண்டுகளை விளித்தீர்” “வண்டுகளுக்குத்தான் மணத்தைக் கண்டு சொல்ல முடியும். நீங்கள் திருவிளையாடற் புராணம் படித்திருக் கிறீர்களா?” “நாடகம் பார்த்திருக்கிறோம்” “நக்கீரருக்கும் சிவனார்க்கும் நடக்கும் வாதம்; தன் காதலியின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையா என்பது அந்த வாதம்; அந்தப்பாட்டுச் சொல்கிறேன் கேளுங்கள். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறிஎயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே” “நீ பல பூக்களைச் சுற்றி வந்திருக்கிறாய்; என் தலைவியின் கூந்தலைவிட மணமுள்ள பூ நீ கண்டது உண்டோ” என்று வினவுகிறான் அந்தப் பாட்டுக்குரிய தலைவன்” “அதைப் படித்ததால் தான் இது நினைவுக்கு வந்தது. வண்டுதான் எதையும் கண்டு சொல்ல முடியும் என்பதை அப்பாட்டுக் கொண்டு நான் அறிந்தேன்” என்றான். “கற்ற கல்வி உனக்குக் கை கொடுத்து உதவி இருக்கிறது” என்று அத்தோழியர் பாராட்டிச் சென்றனர். பதில் கடிதம் வரும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் களைப் போலச் சேடியர் தக்க தீர்ப்புக் கொண்டு வருவர் என்று இருவரும் காத்துக் கிடந்தனர். குணமாலைக்குத் தான் வெற்றி என்று அறிவித்தனர். சுரமஞ்சரிக்கு வந்தது கோபம்; ஏற்பட்டது மனஸ்தாபம். “அவன் என்னைவிட உன்னைத்தான் ரசிக்கிறான்; இந்தச் சுண்ணத்தைக் கொண்டு அவன் பாராட்டுதலை நீ பெற்றுவிட்டாய். அவனிடத்தில் பாடம் படிக்க நீ போட்ட விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீ கெட்டிக் காரியாகிவிட்டாய்; பந்தயத்தில் வென்று விட்டாய்.” “குணமாலையார் என்ற பெயரைக் கேட்டே அவன் முடிவு செய்து விட்டான்” என்று குற்றம் சாற்றினாள். “சுரமஞ்சரி என்று பெயர் வைத்து என் பெற்றோர்கள் தவறு இழைத்து விட்டனர். சாதகம் பார்த்துக் கணிப்பது போல அவன் உனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கி விட்டான் எனக்கு அது பாதகம் ஆகிவிட்டது. மாலைக்கு ஒரு காலம் வந்தால் மஞ்சரிக்கும் ஒரு காலம் வரும்; அடைந்தால் அவனை அடைவேன்; இப்பொழுது மனம் உடைவேன்; காமன், அவன் வில் அது விடும் கணை என்னைத் தொடாது. கன்னிமாடம் இனிச் சேர்வேன்” எனறாள். “ஆடவன் என்றால் அவன்தான் ஆடவன்; மற்றவர்களை மதித்துக் கண்ணெடுத்தும்பாரேன்” என்றாள். “மண்ணுக்குள்ளே சில மாதர் உன் நல்ல அறிவைக் கெடுத்துவிட்டார்கள்; கண்ணுக்கு இனியவன் என்கிறாய்; அதனால் அவனைக் காதலிப்பது இயற்கைதான்; அதனால் மனம் புண்ணாகும்படி நீ புழுங்கினால் பயன் என்ன?” என்றாள் குணமாலை. “அவனுக்கு உன்னைப் பிடித்து விட்டது; நீ புளியங் கொம்பைப் பற்றிக் கொண்டாய்; அதனால் களிப்பு மிக்க வாழ்வு பெறப் போகிறாய். உன்னைப்பற்றி அவன் பிறரை விசாரித்து இருப்பான்; நான் அவசரக்காரி ஆவேசக்காரி என்று கூறி இருப்பார்கள்; அதை அவன் விசாரிக்காமலேயே எடுத்துக் கொண்டிருப்பான். நீ குணக்குன்று; நான் மணற்குன்று; நீ நிறைகுடம்; நான் அரைவேக்காடு, நீ அகல் விளக்கு நான் ஒளி விளக்கு நின்று எரிவாய், நான் அணைந்து எரிவேன் என்று அறைந்திருப்பார்கள்.” “நீ சொல்லித்தான் தெரிகிறது; அவன் என்னைக் காதலிக்கக் கூடும் என்று, என்னிடம் பார்த்து மகிழ ஏதோ இருப்பதாகச் சொல்கிறாய்; அதையும் காட்டியும் விட்டால் போகிறது” என்றாள். “மறைத்து என்ன பயன்; நீ விறைத்து இருந்தாலும் அவன் தன் காதலை உரைத்து உன்னை வளைக்காமல் இருக்கப் போவது இல்லை; ஒரு பார்வை; அது போதும் சுட்டும் விழியில் கட்டிப் போடலாம்; காதல் என்பது ஒட்டு வியாதி; நீ கிட்டே போனால் அது ஒட்டிக் கொள்ளும்; ஒரு சின்ன பூ ஒன்று போதும்; அதை நெகிழ்த்துவிடு. ஒடிவந்து அதை எடுத்துக் கொடுப்பான்; பூவே பூச் சூடவா என்று அழைப்பான்; அதுகூட உனக்குத் தேவை இல்லை; வெறும் பொடி போட்டே நீ மயக்கி விட்டாய்; சுண்ணம் அவனை மயக்கும் சொக்குப் பொடியாகி விட்டது, அதுவே நீ விடும் காதல் துாதாகி விட்டது. அது ஏதுவாகப் பேச்சுவார்த்தை தொடரும்; அவன் தொடுக்கப்போகும் இரண்டாவது பூ நீ” “இல்லாத காதலை நீ உன் சொல்லாலே உண்டாக்குகிறாய்; உனக்காகவே வாய்ப்பு வரும்போது காதலிக்கிறேன்” என்றாள். “மறைத்து என்ன பயன்; அவன் மேல் உனக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது. ஏழுநாள் இசை விழா நடந்தது. ஏழாம் நாள் மட்டும் நீ அங்கு அடி எடுத்து வைத்தாய். அன்று அவன் பாடுகிறான் என்பதால்தானே. தத்தை பாடியபோது உன் கைத்தாளம் ஏன் மடங்கி விட்டது? அவன் பாடும்போது மட்டும் உன் உடம்பே அசைபோட்டது ஏன்?” “இசைஞானி” என்று இசைத்து மற்றவர்கள் பரவசப்பட்டபோது நீ ஏன் உன் கையிலிருந்த துாசினைத் தட்டிக் கொண்டு இருந்தாய். அப்படி நீ கைதட்டினால் அவன் வந்து உன்மெய்தட்டுவான் என்ற ஆசைதானே காரணம்.” “அவள் அவனுக்கு மாலையிட்டபோது நீ ஏன் மவுனம் சாதித்தாய்! வாழ்த்த மேடை ஏறி உன் வாய்திறந்து சொல் முத்துக்களை உதிர்த்து இருக்கலாமே! நீ அடித்த கல் குறி தவறவில்லை; அதுகாய்மீது பட்டு உன் மடியில் வந்து விழுந்து விட்டது; மாங்காய் உனக்குப் புளிக்கப் போகிறது” என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உரையாடினாள். அவள் பகைபாடிப் பகர்ந்த அத்தனை வசைகளும் அவை உள்ளத்தில் காதலைப் புகைய வைத்தன. அவை அவள் காதலுக்குத் துாபம் போட்டதுபோல் இருந்தன. நிச்சயம் அத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்று எண்ணத் தொடங்கினாள். எட்டாத கனியாகுமோ என்றும் எண்ணிப் பார்த்தாள்; அந்தச் சின்ன ஆசையை உண்டாக்கியதால் மஞ்சரியை வாழ்த்தினாள். சுரமஞ்சரி காதலில் தோல்வியுற்றவர் சரண் அடையும் சரணாலயம் ஆகிய கன்னிமாடத்தில் இருந்து தனிமையில் இருக்க விரும்பினாள். தன் தந்தையிடம் சொல்லித் தானே ஏன் ஒரு கன்னிமாடம் கட்டித் தரச் சொல்லக்கூடாது என்று துணிந்தாள். அவனை நெஞ்சில் வைத்து வழிபட அது ஒரு ஆலயமாக அமையும் என்று கருதினாள். அதுமட்டுமின்றித் தன்னைப் போல் அடிபட்டு முடம்பட்டுப் போன இளஞ்சிட்டுகள் வந்து தங்குவதற்கு அது ஒரு கூடாக அமையுமே என்றும் நினைத்தாள். தமிழ் நாட்டுத் தவச் செல்வியாகச் சென்றவள் அரபு நாட்டு முழுமையாக வீடு வந்து சேர்ந்தாள். தில்லித் துருக்கர் செய்த வழக்கத்தைப் பின்பற்றினாள்; வானத்து மதியைக் கரிய மேகங்கள் மறைத்து விட்டன. நீராடி வரச் சென்றவள் போராடி வீடு திரும்பினாள். இணைச் செருப்பாகச் சென்றவர்கள் தனிச் செருப்பாக வீடு சேர்ந்தாள். “மற்றொருத்தி எங்கே?” என்று சற்றுக் கவனித்த அவள் தாய் இந்தக் கேள்வியை விடுத்தாள். “நேற்றுவரை இருந்த உறவு இன்றுவரை நீடிக்கவில்லை” என்றாள் அவள் தோழிகளுள் ஒருத்தி. “என்னடி? என்ன நடந்தது? ஒரே பல்லவிக்கு இரண்டு பேர் சரணம் பாட ஆரம்பித்தார்களா” என்றாள். “இல்லை; அவள் மட்டும் தான் அதை இப்பொழுது பாடப் போகிறாள்; எனக்கு இடமில்லை” என்றாள் சுரமஞ்சரி. “சுண்ணத்தின் காரணமாக இருவரும் எண்ணம் வேறுபட்டனர்” என்று தோழியர் விளக்கினர். “அவளுக்கு முகமூடி ஏன்” என்றாள் மஞ்சரியின் தாய். “மற்றவர்கள் யாரும் தன் முகத்தைப் பார்க்கக் கூடாது! தான் மட்டும் இரண்டு துளைகள் கண்ணுக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவர்களைப் பார்க்கப் போகிறாளாம்” இது தோழியின் விடை. “கன்னிமாடம் ஒன்று தனக்காகக் கட்டித் தரவேண்டும்; அன்னியர் யாரும் அங்கே வரக் கூடாது” என்றாள். “கட்டிக் கொடுக்க வேண்டியவள் நீ அங்கே ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி?” “என்னை அழவிடு; அழுவதற்கு ஒரு இடம் வேண்டும்; அதற்குத்தான் நான் தனி இடம் கேட்கிறேன்” எனறாள். “சிரிப்பதற்கு இடம் கிடைக்கும்வரை சீராக அவள் அங்கேயே இருக்கட்டும்” என்று அவள் மனப் போக்கின் படி அவள் தாய் விட்டு விட்டாள். “தந்தையிடம் சொல்; அந்தத் தெருவழியே ஆடவர் யாரும் வரக் கூடாது; இதை அரசனிடம் சொல்லி ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றாள். இந்தக் காலத்தைப் போலவே சிலவற்றைக் காசு கொடுத்தால் சாதிக்கும் காலமாக அது இருந்தது. அவள் தந்தை கட்டித் தங்கத்தைக் கொண்டு போய்க் கட்டியங்காரனுக்குத் தந்து அனுமதி வாங்கி வைத்தான். “ஒநாய்கள் வரக் கூடாது; அவற்றிற்கு வழிஇல்லை” என்று ஒரு பலகை மாட்டி வைக்கப்பட்டது. ஆடவரை உள்ளிருந்தவர்கள் சன்னல் வழியாக எட்டிப்பார்த்துக் கொள்ள முடிந்தது. அது மிகப் பழைய கட்டிடம்; அதில் சிற்பங்கள் செதுக்கி இருந்தனர். இரண்டு சிற்பங்கள் இருந்தன; கிழக்கையும் மேற்கையும் பார்த்தன; இது ஆண் இது பெண் என்று தோழி வேறுபடுத்திக் காட்டினாள். “சிற்பங்களில் கூடவா பேதம் இருக்க வேண்டும். இந்த ஆண் சித்திரத்தை அகற்றி விடு” என்று ஆணையிட்டாள்; மருந்துக்குக் கூட ஒரு மல்லிகைப்பூ அங்கு வைக்கப்படவில்லை. அவர்களுக்குப் பொழுது போகாத நேரத்தில் “ஆண்கள் இல்லாமல் குழந்தை பெற முடியுமா? ஏன் பெற முடியாது. வழி என்ன?” இந்த மாதிரி நவீன ஆய்வுகளில் மனம் செலுத்தினர். தனக்கு என ஒதுக்கிவிட்ட திரை அரங்கில் அவள் கால் சலங்கை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஆட எழினியின் திரைகள் நீக்கப்படவில்லை. இது அவள் நிலை. குணமாலை நிலை வேறு. யானை என்றால் அதற்கு மதம் பிடிக்கவில்லை என்றால் அது யானையே ஆகாது. அதுவும் அரசனின் யானை என்றால் அதிக மதம் பிடிக்க வேண்டும்; கட்டியங்காரன் யானை என்றால் அது கட்டுக்கு அடங்காது. அது யாரை வேண்டுமானாலும் குத்தலாம். அதைத் தாங்காமல் மற்றவர்கள் கத்தலாம்; அதைத் தடுக்க யாரும் முன் வரவில்லை. குணமாலை முத்துச் சிலிகையில் வந்து கொண்டிருந்தாள். யானையைக் கண்டதும் அதைச் சுமந்தவர்கள் அலறி பொத்து என்று போட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த யானையைத் தடுத்து நிறுத்த எந்தப் பாகனும் அங்கு நிற்கவில்லை. யானைக்குப் புதுவிதமான ஆசை பிறந்தது. அணைக்க அல்ல; அவளை அடித்துக் கொல்ல. “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்; கந்த கோட்டத்துள் வளரும் கந்த வேளே” என்று ஒரு ஆண்டி அந்தப் பக்கம் பாடிக் கொண்டு சென்றான். அதை ஆராய்ந்து கொண்டு அவள் பல்லக்கில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்த யானை தன்னைத் துதிக்கையால் வளைத்துக் கொண்டிருந்தபோது அந்தப்பாட்டுக்குப் பொருள் இவளுக்கு விளங்கியது. கத்துவதற்கும் முடியாமல் அவளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பக்கத்தில் இருந்த தோழி ஒருத்தி “ஆடவர் எவரும் இல்லையோ” என்று கூவி அழைத்தாள். அங்கு நடந்து கொண்டிருந்த பாதைவாசிகள் அதைக் கேட்டுத் தம்மை அல்ல என்று மதித்துக் கொண்டனர். ஆட்டு மந்தையில் இருந்து ஒரு சிங்கம் திடீர் என்று பாய்ந்து அந்த யானையின் கையில் இருந்த மாலையை எடுத்து விட்டு அது அதன் கையகத்துப் புகுந்தது. குணமாலை அவனைக் கண்டாள். தான் அகப்பட்டதற்கும் அவள் துடிக்கவில்லை. இந்தப் புதிய ஆடவன் தனக்காகப் பிணை தந்தது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இளைஞன்தான் தன் சுண்ணத்தைப் பாராட்டியவன் என்பதைப் பின்னால் கேட்டு அறிந்து கொண்டாள். யானையோடு அவன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்கள் அவளுக்கு உயிர் போய் வந்து கொண்டிருந்தது. இதய அறுவைச் சிகிச்சை நடக்கும்போது என்ன ஆகுமோ என்று வெளியே காத்துக் கிடக்கும் உறவினராக அவள் ஆனாள். அந்த யானை அடக்கப்பட்டது. அது பிரம்படிக்கு அஞ்சும் பள்ளி மாணவனைப் போல மண்டியிட்டது. அங்குசம் கொண்டு அதனை அடக்கி வைத்தான். பாகர்கள் ஒதுங்கி நின்றனர். வீட்டில் அடங்காத பிள்ளையை ஊரார் அடக்கியதைக் கண்டு அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அவள் எண்ணிப்பார்த்தாள்; சுரமஞ்சரி இந்த விபத்தில் சிக்கி இருந்தால் அவள் அதிருஷ்டக் காரியாகி விட்டு இருப்பாள்; அந்த வாய்ப்புத் தனக்குக் கிடைத்ததே என்று மகிழ்ந்தாள். தன் உடம்பெல்லாம் உராசிக் கிடந்தது. அதில் வெளியிட்ட குருதிச் சிதறல் அவளுக்கு வீரன் தன் மார்பில் காணும் வடுவாகக் கொண்டு மகிழ்ந்தாள். அவன் தன்னை இட்டு இழுத்தபோது அவள் துவண்டு விழுந்தாள்; அவன் கட்டி அணைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி ஏங்கினாள். தோழியர் வந்து சூழ்ந்தனர்; அவள் வடுக்கண்டு துயரத்தில் ஆழ்ந்தனர். “சொன்னால் கேட்டாயா? தனியாகப் போகக் கூடாது என்று சொன்னேனே” என்று அம்மா பழைய பல்லவியைப் பாடினாள். “அந்த யானை பொல்லாதது; அது போனமாதம் தான் பல்லில்லாக் கிழவியின் பற்கள் அத்தனையும் நொறுக்கி விட்டது” என்று பழைய கதையைப் பேசினாள். எதிர்பாராத சந்திப்பாகச் சீவகன் அதனைக் கொண்டான். சுண்ணத்தின் வண்ணத்தில் அவள் சுந்தர முகத்தைக் கண்டவன் இப்பொழுது நேரில் கண்டதை எதிர்பார்க்காத சந்திப்பாகக் கொண்டான். யாரோ ஒரு கன்னிப் பெண் அதனால் அவளைக் காக்கக் கருதி யானையை எறிதல் களைக்குக் கடன் என்றுதான் முனைந்தான். அந்தக் கன்னி இவளாகத்தான் வரவேண்டும் என்று எழுதி இருந்ததே அந்த எழுத்தைத்தான் மீண்டும் மீண்டும் வாசித்தான்; அவள் கழுத்தை அந்த யானை நெரித்து இருந்தால் என்னவாகி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான். அவள் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாகி இருப்பாளே என்று தவித்தான். வீணையில் தத்தையை வென்றதை அவன் விறலாகக் கொள்ளவில்லை. யானையை அடக்கி அவளைக் காத்ததே வெற்றி என்று நினைத்தான். அவள் பார்த்த மோனப் புன்னகையில் அவள் எத்தனை எண்ணங்கள் பொதித்து வைத்தாள் என்று எண்ணிப் பார்த்தான். நோய் நோக்கு விளைவித்தவள் அது தீரும் மருந்தும் அவள் நோக்கே என்று வள்ளுவம் பாடினான். அந்த யானையின் கூரிய கொம்பினைவிடத் திரையிட்டு மறைத்துவைத்த வம்பே கூரியது என்று எண்ணத் தொடங்கினான். மதங்கொண்ட யானைக்கு அவள் அணிந்திருந்த கச்சு முகபடாம் என்று கருதினான். அந்தக் கச்சு மட்டும் இல்லை என்றால் தன் நெஞ்சு தன்னிடம் மிச்சம் பட்டிருக்காது என்று நினைத்துப் பார்த்தான். தனிமை அவனை வாட்டியது; சோலைக் கிளியைக் காண அவன் உள்ளம் துடித்தது; மாலை வேறு வந்தது; அது மயக்கம் தந்தது. அக்கம் பக்கத்தவர் அடிக்கடி வந்து அவன் மோனத் தவத்தைக் கலைப்பதை அவன் விரும்பவில்லை. அவளைப் பற்றி அமைதியாக நினைத்துக் கொண்டு அந்த அலைகளில் நீந்தி விளையாடி ஊர்ப் புறத்துச் சோலையில் சென்று ஒரு மேடைமீது அமர்ந்தான். கூட்டில் வந்து அடங்கும் பறவைகள் முணுமுணுத்துக் கொண்டு திட்டிக்கொண்டு இருப்பது போல ஒலிகள் எழுப்பிச் சின்னக் குழந்தைகளின் கன்னக்குமிழிகளைக் காட்டிக் கொண்டிருந்தன. கேள்விகளை விட்டு விட்டுத் தேர்வுகளைப் பற்றியே எண்ணி வருத்தப்படும் மாணவனைப் போல அவனிடம் பேசாமல் வீடு வந்தமைக்கு மனம் நொந்து கொண்டு தேள் கொட்டியதைப் போலத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது அறிந்த தாய் அதைக் கேட்டுத் கொலைக்காது மூடியை எடுக்காத பாத்திரமாக அவளைப் பார்த்தாள். யானைக்காக இவள் பானைச் சோற்றில் ஒருபருக்கை கூடச் சாப்பிடாமல் இருக்கத் தேவை இல்லை; அவள் இளமை நினைவுகள் அவள் முன் நின்றன. “யாரைக் கண்டாய், பேரைச் சொல்வாய்” என்று கேட்பது அநாகரிகம் என்று சொல்லி அவள் அழுகைச் சுதந்திரத்திற்குத் தடையுத்தரவு போட விரும்பவில்லை. “எப்படியும் அவள் சொல்லித்தான் தீர்வாள்; கிளி இருக்கிறது; அதனிடம் பேசித் தன் துயர் ஆற்றிக் கொள்வாள்” என்று மனம் அமைதி கொண்டாள். ஆரம்பப் பள்ளிச் சிறுவன் போல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அவள் மவுனத்தைக் கலைத்தது. அவள் தீட்டிய சித்திரம் கண்டு அவள் மனப்போக்கின் விசித்திரத்தை அறிந்து கொண்டது. குறிப்பறிந்து செயல்பட்டது. நேரே யானையை அடக்கிய வீரன் இருந்த சோலையை முகவரியைக் கேட்டு யாரையும் விசாரிக்காமல் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழிக்கேற்ப இவன் நிச்சயம் சோலையில் தான் இருப்பான் என்பதைத் துணிந்து அங்குச் சென்றது. “கன்னியர் உற்ற நோய் கண்ணினும் இனியவர்க்கும் எடுத்து உரையார்; யானும் என் வாயால் இதை எடுத்துச் சொல்லமாட்டேன் கற்றவன் நீ உற்ற நிகழ்ச்சியைக் கொண்டு சற்று எண்ணிப் பார்த்து நீயே அறிந்து கொள்ள வேண்டும்.” “ஒரு பெண்ணைத் தொட்டுவிட்டால் யாரும் அவளைக் கட்டிக் கொள்ளமாட்டார்கள். நீ மெதுவாக அவளைப் பிடித்து இழுத்து இருக்கலாம்; நீ அவளை இறுகத் தழுவி அவளைக் கசக்கி விட்டாய்; அவள் மிகவும் மெலிந்து விட்டாள். அவளை நீ தான் மணக்க வேண்டும், அது இந்த உலகியல்” என்றது. “கசக்கினேன்; முகர வில்லையே” என்றான். “நுகரலாம்; அதை எடுத்து உரைக்கத்தான் பறந்து வந்தேன்; சிறகு பெற்றுவந்தேன்; சிறகு பெற்றதன் பயன் இன்று தான் கண்டேன்” என்றது. “அஞ்சல் முடங்கல் எடுத்து வந்த அஞ்சுகமே! அவள் சுகம் விரும்பி அவளை மணப்பேன்; அவள் தந்தை பேராசைக்காரனாக இருந்தால் பொன்னும் பொருளும் கொண்டு வந்து பரிசமாகக் குவிப்பேன். இனி அவளுக்குத் தவிப்பு ஏன்? அவளுக்காக என்றும் காத்திருப்பேன்” என்று சொல்லி அனுப்பினான். “ஆழ்க் கடலுக்கு அப்பால் அசோக மரத்தின் அரு நிழலில் சோகமே வடிவம் கொண்டிருந்த அணங்குக்கு அன்று அனுமன் இராமன் தந்த கணையாழி தந்தான். அது அவள் சோகத்தை மாற்றியது; அதேபோல நீயும் இந்த மோதிரத்தை அன்பின் அடையாளமாக அவளிடம் கொடு” என்று சொல்லிச் செய்தியை ஒலையில் பொறித்து அனுப்பினான். “உன் நண்பர்களுக்குத் தோழன் நீ அவளுக்கு நீ தோளன்; உன் தோள் துணையாகத் தான் அவள் துயில முடியும். நாள் கடத்தாதே” என்று சொல்லிவிட்டு விண் வழியே விரைந்தது. வானத்து வீதியை அவள் விழிகள் பார்த்துக் கொண்டு காத்திருந்தன. சென்ற கிளி கொண்டு வரும் செய்தி யாதாக இருக்குமோ எனக் கவன்று இருந்தாள். பச்சையாக எது தெரிந்தாலும் அது கிளி என நினைத்தாள். பச்சை என்ற பெயரைக் கேட்டாலே அவள் பசி தீர்ந்தது போல் ஆயினாள். பறந்து வந்த கிளி கொண்டு வந்த செய்தி கேட்பதற்கு முன் அதற்கு அடிசில் ஊட்டினாள்; பால் பிசைந்து சோறு காட்டினாள். அதுகொண்டு வந்துகொடுத்த மோதிரத்தை வாங்கித் தன் முலைக் குவட்டில் வைத்து, மகிழ்ந்தாள். கிளியை மெல்லப் படுக்க வைத்து, ‘உறங்குக’ என்று சொல்லித் தடவிக் கொடுத்தாள். தினந்தோறும் இதைப் போன்ற வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அந்தக் கிளி எண்ணிப் பார்த்தது. பாலும் சோறும் பாங்காய்த் தந்திடுவாள் என்று மனநிறைவு கொண்டது. காதலுக்காக யார் யாரையோ தூதுவிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறது; மேகத்தைத் தூதுவிட்டுக் காதலிகள் தம் சிநேகத்தைத் தெரிவித்தது அதுக்குத் தெரியும். நளன் அன்னத்துக்குத் தந்த செய்தியும், தமயந்தி தூது அனுப்பியதும் நளவெண்பா என்னும் நூலில் படித்திருக்கிறது; தென்மதுரையில் கோயிலில் குடி கொண்டிருக்கும் அழகர்பால் தூது விட்ட அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலையும் கிளி படித்திருக்கிறது. அதற்குப் பிறகு தான் கிளிகளுக்கு இந்த உத்தியோகம் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர் சொல்ல அதையும் கேட்டிருக்கிறது. குணமாலையின் தாய் நேரத்துக்கு நேரம் டி.வி. திருப்பிக் கிரிக்கட்டு ஸ்கோர் கேட்பது போல அடிக்கடி வந்து அவள் நிலையைக் கேட்டு அறிந்து வந்தாள். கிளியைக் கேட்டு அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள ஆவல் காட்டினாள். எனினும் இந்தச் சிறு பிள்ளையிடம் அவ்வளவு தூரம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அடக்கிக் கொண்டாள். நாளைக்கு அது தன்னை மதிக்காது என்பது தெரியும். மேலும் அது தொலை பேசியில் இருவர் பேசிக்கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்பது போல் ஆகிவிடும்; தன் நிலையைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. மூலவரையே கேட்டுவிட்டால் போகிறது; அவள் துயரத்துக்கு மூல காரணம் யார் என்று தெரிந்து கொள்ள முற்பட்டாள். “இன்று மூன்றாம் பிறை யாயிற்றே; பிறை தொழப் போகவில்லையா” என்று கேட்டாள். “இறையை வழிபட்டுவிட்டேன்; பிறையை வழிபடத் தேவை இல்லை” என்றாள். அவள் பேச்சு மணமானவள் போல் இருந்தது; “கற்புடைய பெண்டிர் தெய்வத்தைத் தொழத் தேவை இல்லை” என்று வள்ளுவர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது. “உன் மாமன் மகன் பெண் கேட்க வரப் போகிறான்; உன்னைச் சீர் செய்து கொள்” என்றாள். “அவன் சீர்களை மறுத்துவிடு; அவன் பேரையே சொல்லாதே” என்றாள். “அவன் ஒற்றைக் காலில் நிற்கின்றான்; உன்னையே தான் கட்டிக் கொள்வேன் என்கிறான்.” “மற்றொரு கால் என்ன ஆயிற்று?” “அவனைக் கேட்டு வந்து சொல்கிறேன்; அவன் பெரிய பணக்காரன்; அது தெரியுமா?” “அளவோடு தான் அன்று நம் வீட்டில் அவன் சாப்பிட்டான்” “அவன் இப்பொழுது வீடு மனை தோட்டம் கடை காணி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்” என்றாள். “யானையிடமிருந்து என்னைக் காத்த வீரனுக்கே யான் மாலையிடுவேன்” என்றாள். “வீரனுக்கே மாலையிட்டால் நம் ஊர் செட்டிப் பிள்ளைகள் நிலை என்ன ஆவது?” “ஈரமுள்ளவர் எத்தனையோ பேர் அவர்களுக்குத் தாரமாகக் காத்துக் கிடப்பார்; என்னை விடு” என்றாள். தந்தை வந்தார்; செய்தி சொன்னாள். “அவன் என்ன சாதி ?” “நம்ம சாதிதான்” “சாதிக்குள்ளேயே கொடுக்கக் கூடாது; கலப்பு மணம் தான் செய்விக்க வேண்டும் என்றிருந்தேனே” “இது சாதி மணமும் இல்லை; கலப்பு மணமும் இல்லை; காதல் மணம்” என்று விளக்கம் தந்தாள். “என்னைவிட அவள் முன்னேறி விட்டாள்” என்று அவர் தம் கருத்தைக் கூறினார். ஏற்கனவே மணமனையில் உட்கார்ந்து பழகியதால் மணச் சடங்குக்கு விளம்பரம் அதிகம் தேவை இல்லாமல் இருந்தது. எப்பொழுது இந்தச் சடங்குகளிலிருந்து விடுபட்டு அவளைச் சந்திக்கப் போகிறோம் என்று காத்திருந்தான். இனிய மண முழவு ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மலர்மாலை சுமந்து அவனுக்கு அது அலுத்து விட்டது. அவர்கள் இருவரும் காதல் இன்பத்தில் மூழ்கினார்கள் என்றால் அது வழக்கமான விளக்கமாக அமையும். இன்பக் களிப்பில் இணைந்தார் என்றால் அது பொருத்தமாக இருக்கும். தாரும் மலையும் மயங்கின என்றால் அதைவிட அழகாக இருக்கும்; அரவு இரண்டும் பின்னிக் கொண்டு இணைந்தன என்றால் அது சிலப்பதிகாரக் காவியமாக மலர்ந்து விடும். அது அவர்கள் சொந்த விஷயம். அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அதிகம் சொல்லத் தேவை இல்லை. ஒரு தலைவி சொன்னாளாம். “காலைப் பொழுது வந்தால் அது தன் தலைவனைப் பிரித்துவிடும்” என்று, “தோள் தோய் காதலரைப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தது” என்று சொன்னாளாம். இங்கே வைகறை வரவில்லை; கட்டியங்காரன் ஆட்கள் வந்து தொலைந்தனர். சீவகன் காந்தருவ தத்தையை மணந்தபோது. கட்டியங்காரனால் தடுக்க முடியாமல் போய்விட்டது. குணமாலை அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவள் தெருவில் நடந்தாலே போகும் வண்டிகள் சலனமற்று நின்றுவிடும் என்றனர்; அவளைப் பார்ப்பதில் மனம் செலுத்தி ஊர்திகளை நிறுத்தி விட்டனர்; அதனால் சில வண்டிகள் மோதிக் கொண்ட அசசெய்தி அவனுக்கு எட்டி இருக்கிறது. இருதார மணத்தடை மசோதா கொண்டு வந்திருந்தால் இதைத் தடுத்து இருக்கலாமே என்று எண்ணிப் பார்த்தான். அது தனக்கே ஒரு வேளை இடையூறாக அமையுமோ என்று அதைக் கைவிட்டான். கணிகையர் கணக்கில் எடுப்பது இல்லை என்பதால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்டான். அப்படி ஒரு சட்டம் போட்டிருந்தால் சீவகன் ஒருவனாலேயே அந்நாட்டுக் கன்னியர் எதிர்த்திருப்பர் என்பதை அவன் எண்ணிப் பார்க்கவில்லை. இந்தக் குணமாலை அவளை இவன் தட்டிக் கொண்டு போவதை எப்படி விட்டு வைக்க முடியும். ஏதாவது குற்றம் அவன் மீது சுமத்த வழி இருக்கிறதா என்று பழி நோக்கி இருந்தான். அவனைப் பார்க்க யானைப்பாகர்கள் வெளியே காத்து இருந்தனர். “யார் அங்கே!” “பாகர்கள்” “செய்தி?” “யானை மறுக்கிறது. உணவு உட்கொள்ள வெறுக்கிறது” “கரும்பு கொஞ்சம் அதிகம் கொண்டு வந்து போடுவது தானே” “அதையும் அது விரும்ப வில்லை” “காரணம் ?” “அது தன் கற்புக்குப் பங்கம் வந்து விட்டது என்று தனிமையில் புலம்பிக் கொண்டு இருக்கிறது” “யார் அதைக் கெடுத்தது” “சீவகன் அதைத் தொட்டுவிட்டான்; அதனால் அது புலம்புகிறது” “அரசயானை யாயிற்றே அதை எப்படி அவன் தொடலாம்” “மதம் கொண்டது; எங்களால் அடக்க முடிய வில்லை” “இதற்கு நீங்கள் எப்படிச் சம்மதித்தீர்கள்” “நாங்கள் உயிருக்கு அஞ்சி அந்த இடத்தை விட்டு நீங்கி வெகுதூரம் போய்விட்டோம், அவன் ஏதோ யாரோ ஒரு பெண்ணை ஆசைப்பட்டிருக்கிறான்; அவள் அந்த வழியாக வந்து கொண்டிருந்தாள்” “உருப்படி நன்றாக இருந்ததால் வளைத்து உம்மிடம் சேர்க்க அசுவனி நினைத்தது; இவன் தடுத்துவிட்டான்” “இது இராச துரோகம்; அவனைக் கட்டிப் பிடித்து வாருங்கள்” என்று படைத் தலைவர்களுக்கு ஆணையிட்டான்; பக்கத்தில் இருந்த அவன் மைத்துனன் மதனன் தக்க படையுடன் கந்துக்கடன் இல்லம் நோக்கிச் சென்றான். புகை படிந்த கண்ணோடு நகை அணிந்த அந் நங்கை நல்லாள் சோறு சமைத்துப் பரிமாறிக் கொண்டு இருந்தாள். புதுப் புடவை என்றும் பாராமல் அதிலேயே கையைத் துடைத்துக் கொண்டு அதனைக் கரியாக்கிக் கொண்டாள்; நெருப்பைத் தீண்டியதால் சூடு வேறு பட்டுக்கொண்டது; தானே துழந்து அட்ட தயிர்க்குழம்பை அவனுக்கு ஊற்றிப் பரிமாறிக் கொண்டு இருந்தாள்.” “இது மிகவும் சுவைக்கிறது” என்றான். “இது நானே சமைக்கிறது” என்றாள். அவள் முகத்தில் எழுந்த முறுவல் கண்டு அவன் முகம் நுட்பமாக மலர்ந்தது. ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு’ என்ற குறளின் விளக்கத்தை அவளிடம் அறிந்து பாடம் படித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் மதனின் தடியாட்கள் அடியாட்கள் போல் வந்து நின்றனர். சிப்பாயைக் கண்டு அஞ்சிய காலம் அது; வீட்டுப் பாயை மடக்கி வைத்துவிட்டு வெளியே வந்தான்; அவளும் தன்சேலையைச் சரிசெய்து கொண்டு பின்னணியில் வந்து நின்றாள். “அசையக் கூடாது” என்றான். காப்புக்கலையாத அவன் கைகளுக்குக் காப்பு இட அழைத்தனர். நந்தட்டனிடம் பதுமுகனைக் கொண்டு படை திரட்டுக என்று குறிப்புக் காட்டிவிட்டு மதனன் அருகில் வந்தான். அவன் சீவகனை நெருங்க அஞ்சி அகன்று நின்றான். “உன்னை அழைத்து வர அரசன் ஆணை” என்றான். சம்பிரதாயம் கருதிக் கந்துக்கடன், “அரசன் அழைத்தால் போய்த்தான் தீரவேண்டும்; மறுக்காதே; அது நல்ல பிள்ளைக்கு அழகு அல்ல” என்றான். சுநந்தையும் “அப்பா சொல்லைக்கேட்பதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்” என்றாள். அவனும் வேறுவழி இல்லாமல் நல்ல பிள்ளையாக நடக்க முயற்சி செய்தான். அவனுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று நண்பர்களை விட்டு ஊரைக் கொளுத்திக் குழப்பம் விளைவித்து அவர்களைத் திசை திருப்பிவிட்டுத் தான் தப்புவது; அடுத்தது காந்தருவதத்தையின் மந்திர சக்தியால் அவர்களிடமிருந்து தப்பிச் செல்வது; மற்றொன்று தன் நண்பன் சுதஞ்சணன் அவன் உதவியால் தப்பித்து வெளியேறுவது; அவர்கள் விருப்பப்படி விட்டால் அங்கே கொண்டு போய் முட்டிக்கு முட்டி அடித்துப் பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பது உறுதி. மறுபடியும் ஒரு கோவலன் கதை நடக்காது என்பதற்கு உத்தரவாதமும் இல்லாமல் இருந்தது. வெட்டுண்ட உடலை எடுத்துவைத்துத் தத்தையும் குணமாலையும் வந்து அழுது கொண்டிருக்க வேண்டியது தான். தலைமாட்டில் ஒருத்தி, கால்மாட்டில் மற்றொருத்தி, இந்த அநாகரிகத்தைத் தடுக்க அவன் யோசித்துத் தீர வேண்டியது ஆயிற்று. அக்கம் பக்கம் கூட்டம் வந்து கூடிவிட்டது. பல திறப்பட்ட மக்கள் அங்கு வந்து கூடிவிட்டனர். அவர்களுக்கு இது காணத்தக்க காட்சியாக இருந்தது. இப்பொழுதுதான் திருமணம் ஆயிற்று; புதுமாப்பிள்ளை அவனைக் காவலர் வந்து இழுத்துப் போகிறார்கள் என்றால் அந்தக் காட்சியை மறுபடியும் காணமுடியாது. மேலும் சீவகன் ஊரறிந்த பிள்ளை; தத்தையோடு பாடி வெற்றி கண்டவன்; யாருக்காவது ஏதாவது கெடுதி என்றால் ஓடோடி வருவான். அவன் அந்தத் தெருவுக்கே ஒரு அரண் போல இருந்தான். நந்தகோனின் மாடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தவன்; கள்வர் என்றால் அந்தப் பக்கம் வரவே அஞ்சுவர்; எப்பொழுதும் அவனைச் சுற்றிக் காளையர் சூழ்ந்து கொண்டிருப்பர். சில சமயம் அவன் பேட்டை ரவுடியாகத் தென்பட்டான். பெண்ணைப் பெற்றவர்களுக்கு அவன் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பிஞ்சு உள்ளங்கள், அவனிடம் மனம் பறி கொடுத்துவிட்டுச் சரியாகவே துரங்குவது இல்லை. இவனை உள்ளே தள்ளிவிட்டால் நிம்மதியாகவும் இருக்கலாம் என்று எண்ணியவர்கள் உண்டு; பொது மக்கள் என்பவர்களே ஒரு கலவை இனம்; இப்படியும் இருப்பார்கள்; அப்படியும் இருப்பார்கள். அது மாதிரி கூட்டம் அது. ஒருவர் ஆரம்பித்தார், “சீவகன் ரொம்பவும் நல்ல பிள்ளையாயிற்றே ஒருவர் ஜோலிக்கும் போகமாட்டானே” என்றார். “யானையின் துதிக்கையைத் தொட்டுப் பிடித்தான்” என்று குற்றம் சாற்றினர் காவலர்கள். “யாராக இருந்தாலும் என்ன ? கை தொட்டுப் பிடிப்பது குற்றம்தான்” என்றார் அவர் நடுத்தர வயதைக் கடந்தவர். “கூடாது தான்” என்று தலையசைத்தார்; தலை யசைத்தே பழக்கம் உடைய தலைவர் அவர். “யானை வளைத்துப் பிடித்த பெண்ணை இவன் தொட்டு இழுத்தான்” “இது மிகத் தவறு” என்றான் மென்மையான குரல் படைத்த மெல்லியலான் ஒருவன், “கட்டியங்காரன் கைப்பிடிக்கும் பெண்ணுக்கு எல்லாம் இவன் மைதீட்டுகிறான். அநங்கமாலைக்கு இவன் சொக்குப் பொடி போட்டு அவளை மயக்கிவிட்டான்” என்றான் ஒருவன். “இவன் பழைய குற்றவாளி, இவன் இதற்கு முன்னும் நிறைய வழக்குகளில் பதிவாகி இருக்கின்றான்” என்றான். கொஞ்சம் வயதான காவலாளி. “இந்தமாதிரி ஆட்களை வெளியே விட்டு வைக்கக் கூடாது; நாங்கள் குறுக்கிடமாட்டோம்” என்று ஒட்டு மொத்தமாகக் குரல்தந்தனர்; இராஜதுரோகம் நினைக்காத வெகுஜனங்கள் இவர்கள், பொதுமக்கள் என்றால் என்ன என்பதை அறிய இவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. தடுத்து நிறுத்த ஒரு பெண்மணி வீராங்கனையாகக் குரல் கொடுத்தாள். “ஒருத்தி யானையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு உயிருக்குப் போராடுகிறாள். பேடிகளைப் போல மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்; அப்பொழுது ஒர் இளைஞன் தன் உயிரைப் பணயம் வைத்து அவளைக் காக்கின்றான் என்றால் அவனைப் பாராட்டுவதைவிட்டுத் தளைப்படுத்துவது அநீதி, அக்கிரமம், அட்டுழியம்” என்று கத்தினாள். இவள் தான் “ஆடவர் இல்லையோ” என்று முன்குரல் கொடுத்தது, சீவகனைக் காப்பாற்றத் தூண்டியவள்; கோயில் மணிபோல் அவள் ஒலி கணிர் என்று கேட்டது. பக்த கோடிகள் பஜனை செய்வதை விட்டு அவளையே உற்று நோக்கினர்; “அவள் சொல்வதும் நியாயமாகத் தெரிகிறதே” என்று சுருதிக் கட்டை மாற்றிப் போட்டனர். “அதுதான் உண்மை; இவனை அரசர் பாராட்டிப் பரிசுதரவே அழைக்கிறார்” என்று அவர்களுக்கு மாற்றுக் குரலில் பேசினர் காவலாளிகள். தத்தை அமைதியாக இருக்கவில்லை. இவர்கள் சூழ்ச்சியை அறிந்தவளாய் இவனை மீட்பது என்று முடிவு செய்தாள். எனினும் அது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்று அடங்கிவிட்டாள். சீதை அனுமனிடம் கூறினாள் “இராவணனை என் சொல்லினால் சுட முடியும்; அது இராமன் வில்லுக்கு மாசு: அதனால்தான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அதே போன்ற நிலையில்தான் தத்தை அகப்பட்டாள். அவள் அவசரப்படவில்லை. அவன் தோழர்கள் இவன் ஆணைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தப்பிச் செல்லத் தன் தோழர் துணை வேண்டாம் என்று கருதினான்; அதுபெரும் போரில் கொண்டு சென்று விடும். ஆசிரியர் அச்சணந்தி ஓர் ஆண்டு பொறுக்கவும் என்று கூறியது அவன் நினைவுக்கு வந்தது. சிலுவையில் அறைய ஏசு நாதரை இந்த யூதர்கள் கட்டி இழுத்துச் செல்ல நினைத்தனர். அவர்கள் தன்மேல் கையை வைப்பதை அவன் தாங்கிக் கொள்ள விரும்பவில்லை. அவன் நினைவுகள் சுதஞ்சணன் பக்கம் சென்றன. கூப்பிட்ட குரலுக்கு வராத வேலையாள், தாகத்தைத் தீர்க்காத தண்ணிர், தரித்திரம் அறியாத பெண்டிர், வறியவர்க்கு ஈயாத செல்வம், ஒழுக்கம் தராத கல்வி, ஆபத்துக்கு உதவாத நண்பர் இருந்தும் பயன் இல்லை என்று எண்ணினான். அந்த இடத்தை விட்டு அகன்று போக நண்பனின் உதவியைத் தான் நாடவேண்டும் என்று எண்ணினான். சுதஞ்சணனின் இடது கண் துடித்தது; நண்பன் இடுக்கண் உற்றிருக்கிறான் என்பதை அறிந்தான். காற்றும் மழையும் துணையாகக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு வந்து அவனைச் சுற்றியிருந்த காவலர் கண்ணில் மண்ணைத் தூவினான். அடுத்த கணம் சீவகன் அங்கு இல்லை. காவலர் அவனைத் தேடி அலைந்தனர். அவர்களுக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டான் என்று மதனன் அறிந்தான். வேறு வழியில்லை. கட்டி இழுத்து வந்தவனை வெட்டி வீழ்த்தி இருக்கலாமே என்று வருந்தினர். எப்பாவமும் அறியாத அப்பாவி ஒருவன் அந்த வழியே சென்று கொண்டிருந்தான். அவனை வெட்டிச் சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்து வைத்தான். கட்டியங்காரன் சீவகனைக் கட்டிப் பிடித்து வருவர் என்று காத்திருந்தான். கட்டிய கையினனாக அவனை வெட்டி முடித்து விட்டதாகக் கயிறு திரித்தான் மதனன். “ஏன் அவனை உயிரோடு அழைத்து வரவில்லை” என்றான். “திமிறினான்; அதனால் தீர்த்து விட்டேன்” என்றான். “அதுவும் நல்லது தான்; இங்கே வந்தால் கோவலனைக் கொன்ற பழி நம்மை வந்து சேரும்” என்றான். “அவன் முகத்தையாவது காட்டி இருக்கலாமே” என்றான். “அவன் முகத்தில் நீங்கள் விழிப்பதை நான் விரும்ப வில்லை” என்றான். சுதஞ்சணன் சீவகனால் உதவப்பட்டவன். இராசமாபுரத்தில் சாபத்தின் விளைவாக அவன் ஒரு சொரிநாயாகத் திரிந்து கொண்டிருந்தான். அந்த நாய் சோற்றுப் பானையில் தலையிட்டு எச்சில் படுத்தியது. அதற்கு உரிய வேள்வி அந்தணர் கேள்வி கேட்பவர் இல்லாமல் அடித்துத் துரத்தினர். அது அங்கிருந்து குளத்தில் விழுந்து உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தது. சீவகன் கருணையோடு அதை எடுத்து மந்திரம் ஒதி நல்வாழ்வு அளித்தான். அதனால் அவன் சாபம் தீர்ந்து தன் வித்தியாதர உலகை அடைந்தான். ரயில் பணத்தில் டிக்கட்டு இல்லாமல் பயணம் செய்த போது அவனுக்கு உதவிய பயணியின்பால் கொள்ளும் நட்பு இருவரிடம் மலர்ந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை நினைத்தால் தான் வந்து உதவுவதாக அவனுக்கு உறுதி அளித்திருந்தான். தினைத்துணை செய்த நன்றியை அவன் பனைத்துணையாகக் கொண்டான். அந்த நட்புதான் இவனுக்கு இப்பொழுது கைகொடுத்தது. 5. பதுமையார் இலம்பகம் விமானத்தில் சென்றவன் கீழே இறங்கவே இல்லை. அது போய்க்கொண்டே இருந்தது. “எப்படி நிறுத்துவது” என்று கேட்டான். “வெள்ளிமலைக்குப் போனால்தான் இறங்கலாம்” என்றான். சுதஞ்சணன் வாழுமிடமும் வெள்ளிமலைதான் என்பது தெரிந்து கொண்டான். வித்தியாதரர் அனைவரும் வெள்ளிமலை வாசிகள்; தேவர்கள் அனைவரும் பொன்னுலக வாசிகள் என்ற வேறுபாட்டை அறிந்து கொண்டான். அங்கே அழகிய பெண்கள் இருந்தனர். அதனால் அது அவன் அரண்மனை என்று தெரிந்து கொண்டான். “இத்தனை பேரை எப்படிக் கட்டி மேய்க்கிறாய்?” என்று கேட்டான். “கொஞ்சம் கஷ்டம்தான்; இருந்தாலும் தேவைதான்” என்றான். “இதனால் என்ன நன்மை?” என்று கேட்டான். “ஒன்று தூங்கிக் கொண்டிருந்தால் அதைத் தட்டி எழுப்பத் தேவையில்லை; சிரமம் குறைவு” என்றான். அவன் சொல்வது புதுமையாக இருந்தது. அந்த ராணிகள் எல்லாம் இவனை வந்து சுற்றிக் கொண்டார்கள். “இவன் தான் என் நண்பன் சீவகன்”. “பூலோகத்தில் இருப்பவர் எல்லாம் இவரைப் போலவே அழகாக இருப்பார்களா?” “மறுபடியும் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்” என்றான். ஏன் இந்தக் கேள்வி கேட்டோம் என்று ஆயிற்று. இவனுடைய புகழ் ஏற்கனவே அங்குப் பரவி இருந்தது. யானையை அடக்கிய வீரன் என்பதால் இவன் யானையை அடக்குவது போல உருவம்; பக்கத்தில் குணமாலை போன்ற ஒரு பெண் வடிவம்; அவளை இவர்கள் பார்த்ததில்லை; அதனால் போன்ற என்று சொல்ல வேண்டியது; இணப்பு உருவத்தை அவர்கள் தம் மார்பில் பச்சைகுத்திக் கொண்டார்கள். தத்தையை வென்ற வித்தகன் என்பதால் அவனைக் கொண்டு இசைவிழா நடத்தி வைக்கக் குழுமினர். அண்மையில் அவனுக்கு ‘இசை ஞானி’ என்று வழங்கிய பட்டமும் அங்கு ஒளிபரப்பு ஆகி இருந்தது. எல்லோரும் இப்பொழுது அவன் வகுத்துக் கொடுத்த இசையைப் பாடுகின்றனர் என்று கேள்விப் பட்டனர். அவர்களும் தம் இசைக்கருவிகளை மாற்றிப் பெருக்கிக் கொள்ள நினைத்தனர். ஆர்மோனியப் பெட்டி, வீணை. யாழ் என்பவற்றோடு நின்றவர்கள் எது எது சப்தம் செய்யுமோ அந்தக் குப்பை எல்லாம் கொண்டுவந்து வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்து ஒரு ஆளை உட்கார வைத்தார்கள். கேட்டால் காலத்தின் மாற்றம் என்கிறார்கள். காதல் பாட்டைப் பாட வைத்து இளைஞர்கள் கிறங்கினார்கள். பக்திப் பாடல்களைக் கேட்டு முதியவர்கள் உறங்கினார்கள்; சொல்லத் தெரியவில்லை; அதாவது கண்மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தனர். அந்த ஊர்ப்பெண்கள் யார்மீதும் அவன் கையை நீட்டவில்லை. அதற்கு நேரமும் இல்லை; காந்தருவதத்தை ஒரு வித்தியாதரப் பெண்; அவள் கணவன் என்பதால் மரியாதை காட்டி அவர்களும் ஒதுங்கிக் கொண்டனர். அவன் தனிமையில் தத்தை பற்றியும் குணமாலை பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் அவன் கண்களில் மிதப்பதுபோலவே அவனுக்குத் தோன்றியது. அவன் ஏக்கத்தை அறிந்த சுதஞ்சணன் அவன் தூக்கத்தைக் கலைக்கத் தொடங்கினான். “ஒரு ஊரில் ஒரு நாட்டாண்மைக்காரன் இருந்தான். அவன் தன் கடமையை மறந்து ஏதோ சிந்தனையில் கிடந்தான்” என்று தொடங்கினான். ஏதோ கதை சொல்கிறான் என்று சீவகனும் காது கொடுத்துக் கேட்டான். “அவன் தன் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தான். நரி ஒன்று வந்து நாட்டாண்மைக்காரன் நான்தான் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு ஊராரை மருட்டிக் கொண்டு வேளைக்கு ஒரு கிடாய் தின்னக் கேட்டது.” “தட்டிக் கேட்க நாட்டுத் தலைவன் இல்லை; நரி இட்டதுதான் சட்டம்; மக்கள் அந்த நரியை எதிர்க்க முடியாமல் தவித்தனர்.” “அவர்கள், சூழ்ச்சி மிக்க சிறு நரியின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்று பேசத் தொடங்கினர்” என்றான். உடனே இவன் தூங்கி எழுந்தவனாய், “ஏன் அந்தத் தலைவன் என்ன ஆனான்?” என்று கேட்டான். “ஏதோ பழைய நினைவுகளில் கடமையை மறந்து அவன் துரங்கிக் கொண்டிருக்கிறான்” என்றான். உடனே நினைவுகளில் இருந்து எழுந்து தன் கடமை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். “அந்தக் கட்டியங்காரனை அடித்து நொறுக்க வேண்டும்” என்றான் சீவகன். “கவலைப்படாதே நானே சென்று அவனை அழித்து நாட்டை உனக்குப் பிடித்துத் தருகிறேன்” என்றான். “நண்பனிடம் கடன் வாங்கலாமே தவிர மொத்த மூலதனத்தை அவனிடம் எதிர்பார்க்கக் கூடாது; அது என் ஆண்மைக்கு இழுக்கு” என்றான். “உண்மைதான்; உழைப்பவனுக்குத்தான் தெய்வம் முன் வந்து உதவும், தெய்வத்தையே உழைக்க இதுவரை யாரும் சொன்னதில்லை” என்றான். “காலம், இடம், துணை இம்மூன்றையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்பவனே வெற்றி பெறுவான்” எனறான். “உண்மைதான்; அதுவரை நாடுகளையும் மனிதர்களையும் காணவேண்டும். இன்னும் ஓராண்டுவரை தலை காட்டக் கூடாது என்று அச்சணந்தி ஆசிரியரும் கூறி இருக்கிறார். நான் பல தேயமும் காண விரும்புகிறேன்.” “பயணத்துக்குக் கட்டுச்சோறு கட்டித் தருகிறேன்” என்றான். அவனுக்கு மூன்று மந்திரங்களை உபதேசித்தான். “வழிப்பயணத்துக்குப் பயன்படும்” என்றான். அவன் செல்லும் தேயத்தையும், கடக்கும் வழிகளையும் குறித்து விளக்கமாகக் கூறி வழி அனுப்பினான். கிணற்றுத் தவளையாக வாழ்ந்த சீவகன் அடிவானத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவனாக மாறினான். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று பாடிய கவிஞன், “மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்று பாடத் தொடங்கினான். சுதஞ்சணன் வழிகாட்ட அவன் காடும் மலையும் பல கடந்து நாடுகள் பல கண்டான். அந்தப் பயணத்தில் முதல் கல் மேட்டுநிலம் ஒன்றில் வேட்டுவரை அவன் சந்தித்தது ஆகும். இங்கே கையில் வேலும் அம்பும் தாங்கிய இவ்வேடுவர்கள் அவற்றை வைத்துவிட்டு மொந்தையில் கள்ளும், இலையில் ஊனும் கொண்டு தின்று மகிழ்ந்து ஆடிப் பாடிக்கொண்டிருந்தனர். அவ்வகையில் அவர்கள் உலகை மறந்து உயரும் கவிஞர்களாக மாறினார்கள். அவர்கள் கவிதைகளைப் பாராட்டிய அவன் அதன் உள்ளடக்கத்தை விமரிசனம் செய்தான். குடியும் ஊனும் உடம்புக்கு வலிமை தரும் என்றாலும் அவை மனத்துக்கு மென்மை தரும் என்று விமரிசனம் செய்தான்; இவன் செய்த விமரிசனம் அவர்கள் பழைய போக்கை மாற்றியது. அதனால் அவர்கள் அர்த்தமுள்ள அருக மதம் என்ற நூலாசிரியர்களாக மாறினார்கள். “போதை தரும் குடியை விட்டால் போதம் தரும் ஞானம் வரும்” என்று உரைத்தான். “எப்படி?” “ஊன் உண்டால் நரகத்தின் கதவுகள் திறந்து வைத்திருக்கும், அங்கே தான் போக வேண்டும்; குடியால் புத்தி தடுமாறும்” என்றான். அந்தக் காலத்தில் குடி குடியைக் கெடுக்கவில்லை; அதனால் அதை அவனால் கூற முடியவில்லை. அவர்கள் இந்த அச்சுறுத்தலை ஏற்க இசையவில்லை. “உயிர்க்கொலை பாவம்; உலக உயிர்கள் நம் உடன் பிறப்புகள்; அவற்றிற்கு ஊறு விளைவிப்பது படைப்பை அவமதிப்பது ஆகும்” என்றான். “மாந்தர் மட்டும் சட்டதிட்டங்கள் வகுத்துக்கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும்போது இவற்றிற்கும் அந்த உரிமை இல்லையா?” என்று கேட்டான். மனித நேயம் என்பது விரிந்து உயிர்கள் நேயம் என்ற எல்லைக்குச் செல்ல வேண்டும் என்று உணர்த்தினான். “புளிப்பு எதுவும் போதை தரும்; அதைக் குடிக்கும் போது அறிவு மங்குகிறது; உணர்வுகள் மேல் ஓங்குகின்றன; அதைத்தான் மகிழ்ச்சி என்கிறாய்” என்று விளக்க ஆரம்பித்தான். அந்தக் காலத்தில் விஷம் கலந்து யாரும் மதுவை விற்கவில்லை. அப்படிக் கலந்து இருந்தால் சிலர் செத்து இருக்கலாம். அதை எடுத்துக் காட்டி மதுவின் கொடுமையை விளக்கி இருக்கலாம்; அத்தகைய கொடியவர்கள் சமூக விரோதிகள் மக்களைச் சுரண்டும் பெருச்சாளிகள் அந்தக் காலத்தில் இல்லை. அதனால் அவற்றைக் காட்டி அவனால் அச்சுறுத்த முடியவில்லை. வெறும் அறிவுரைகளே அவர்களைத் திருத்தின. என்றாலும் அவர்தம் வேட்டுவத் தொழில் விட்டு எந்தப் புதிய தொழிலைச் செய்வது என்று அவன் கூற முற்படவில்லை. பிறகு அதன் தலைநகராகிய சந்திராபம் என்ற ஊரை அடைந்தான். புறநகரில் அடியெடுத்து வைத்தபோது மக்களின் மகிழ்ச்சி ஒலி அவனை வரவேற்றது. ஊருக்குள்ளே அரங்கு ஒன்றில் ஆரணங்கு ஒருத்தி சும்மா இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தாள். இவள் ஏன் இப்படி ஆடுகிறாள் என்று கவனித்தான். பிறகு விளங்கியது அது ஒரு நாட்டிய விருந்து என்று. அழையா விருந்தினனாக அங்கே நுழைந்தான். இவன் அழகனாக இருந்ததால் அவனை அழைத்து முன்னே இடம் தந்து உட்கார வைத்தனர். அநங்கமாலையின் நினைவு வந்தது. “இவள் யார்?” என்று அரங்கில் ஆடியவளைப் பற்றி அடுத்து இருந்தவனை விசாரித்தான். அவன் அந்த அரங்கின் காரியதரிசி போலச் சுருசுருப்பாகச் செயல்பட்டான். எல்லோரும் அவனிடம்தான் வந்து பேசிச் சென்றார்கள். “தேசிகப் பாவை” என்றான். அது அவள் இயற் பெயரா பொதுவாக நாட்டியப் பெண்ணுக்கு வழங்கும் பெயரா என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. மறுபடியும் கேட்டான். “அவள் பெயர்” “தேசிகப் பாவை” என்றான். அவள் ஆடலைவிட அவள் அவனுக்குக் கவர்ச்சி தந்தாள். இதைப் போன்ற பெண்களை அவன் இராசமா புரத்தில் பார்த்திருக்கிறான். இதைப் போன்ற நாட்டியக் காரி அழகி அநங்கமாலை; அவளுக்கு அடுத்தது இவள் என்று மதிப்பிட்டான். அவளும் இவனையே அடிக்கடி பார்த்து நோட்டம் விட்டாள். அவள் ஆட்டத்திற்கு இது ஆட்டம் கொடுத்தது. சற்றுத் தாளம் பிசகினாள். அதற்கு அவள் இவனிடம் நாட்டம் செலுத்தியதால் தான் என்பதை அரங்கின் செயலாளன் அறிந்தான். “யார் இவன்?” என்ற வினா அவனுக்கு ஏற்பட்டது. அவனோடு பேச வேண்டும் பழகவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. மின்னல் ஒளிபோல் அவள் பார்வை சீவகன் மீது பட்டு இவன் நெஞ்சைத் தொட்டது. முடிந்ததும் அவளைச் சந்தித்துப் பேசி முகவரி கேட்கலாம் என்று இருந்தான். அதற்குள் அரசமகன்; அவன் பெயர் உலோகபாலன்; அடுத்து அமர்ந்திருந்தவன்; இவனைத் தன் விருந்தினனாக அழைத்தான். இவன் அரசமகன் என்பதைச் சீவகன் அறிந்தான்; அவன் இவனை விடுவதாக இல்லை. இருவரும் தேநீர் அருந்திப் பேசிக் கொண்டிருந்தனர் என்று கூற முடியாது. ஏன் எனில் அந்தக் காலத்தில் தேநீர் அமுலில் இல்லை; ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள். “உனக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டான். “இராசமாபுரம் சென்றிருந்தேன். அங்கே சீவகனுக்கும் தத்தைக்கும் இசைப்போட்டி நடந்தது. அதற்கு யானும் சென்றிருந்தேன். அப்பொழுது சீவகன் பாடிய பாட்டு எனக்குத் தெரியும்; அது என்னை அப்படியே கவர்ந்து விட்டது” என்றான். “சீவகனை நீ பார்த்திருக்கிறாயா?” “அந்த மேடைமீதுதான் பார்த்திருக்கிறேன்; வீரம் மிக்கவன்; அங்கு அவனை வளைத்த அரசர்களை எல்லாம் புறமுதுகிடச் செய்தவன். வீணை வித்தகன்; அந்தத் தத்தை அவனிடம் ததிங்கிணத்தோம் போட்டாள்; ஒன்றும் நடக்கவில்லை.” “அதுதான் அவள் அவனிடம் தோற்றுவிட்டாள்.” “அதற்கப்புறம்?” “இன்னொருத்தி வந்து மாட்டிக் கொண்டாள். குணமாலை. அவளை யானையின் பிடியிலிருந்து காப்பாற்றினான். அவன் அவள் பிடியில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் கட்டியங்காரன் அவன் மீது காழ்ப்புக் கொண்டான்; அவனைக் கட்டிப்பிடித்து வருக என்று கூறினான்.” “அவன் தப்பித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான்” என்று முடித்தான். அவன் பாடிய அந்தப்பாட்டைப் பாடமுடியுமா என்று கேட்டான். “பாடுவேன்; இன்னமும் கூட்டம் வந்து கூடும்; மற்றும் இங்கே யாரும் பெண்கள் இல்லை என்று சொல்; பாடுகிறேன்” என்றான். “ஏன் அப்படி?” “அவர்கள் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்; அப்புறம் அவர்களை அகற்ற முடியாது” என்றான். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது அரண்மனை ஏவலன் ஒருவன் வந்தான். “தங்கையை அரவு தீண்டிவிட்டது” என்றான். “அவள் மாண்டு விட்டாளா?” என்று கதறிக் கொண்டு ஓடினான், பிறகு தெரிந்தது அவள் உயிர் ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறது என்று. மந்திரம் மருத்துவம் அவளிடம் தோற்றுவிட்டன. உலோகபாலனுக்கு ஒரு நினைவு ஓடியது; தன்னுடன் பேசியவன் கந்தருவனாக இருக்கலாம்; அவனுக்கு மந்திரம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்து அவனை அழைத்து வர ஆள் அனுப்பினான். பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவன் தங்கையைப் பற்றி ஏற்கனவே அவன் கேட்டு இருக்கிறான்; அவள் கொஞ்சம் அழகாகவே இருப்பாள் என்று வழியில் பேசக் கேட்டு இருக்கிறான். தான் ஒரு பெரிய மருத்துவன் போல் நடித்தான்; கையைப் பிடித்தான்; மார்பைத் தொட்டான்; கன்னத்தைக் கிள்ளினான்; விழிகள் மூடிக் கொண்டிருந்தன. “கன்னி நாகம் கடித்தது” என்றான். கன்னியை நாகம்தான் கடித்தது என்று மற்றவர்கள் உரைத்தார்கள். “இல்லை, இளநாகம் அவளைக் கடித்தது” என்றான்; “நச்சுப்பல் அச்சுப்பதிவு ஆகவில்லை; மேற்பல்தான் தொட்டு இருக்கிறது” என்றான். சுதஞ்சணன் கற்றுத் தந்த மந்திரங்களில் ஒன்று நஞ்சு ஏறினால் இறக்கிவிடுவது என்பது; அது இப்பொழுது அவனுக்குக் கை கொடுத்தது. விழித்தாள்; விழிகள் சூரியனைக் கண்டன; அவள் தாமரை ஆனாள்; காதல் பார்வை என்பதை ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். “உன் பெயர்?” “பதுமம்” என்றாள். “அரவு என் கையைத் தீண்டிவிட்டது” என்று மருத்துவரிடம் உரைப்பது போல் அவள் குழைந்து மிழற்றினாள். அவள் முகத்தைப் பார்த்தான்; மதி அவன் நினைவுக்கு வந்தது; நிறைமதியாக இருந்தாள்; அது கறைமதி, அரவு அதற்குப் பகை, இவள் முகம் பிறைமதியாக இருந்ததால் அரவுக்குப் பகை இல்லை, அதனால்தான் முகத்தைத் தொடவில்லை; கரத்தைத் தீண்டியது” என்று தனக்குள் கூறிக் கொண்டான். முகத்தோடு முகம் வைத்து முன்னுரை கூறினான். கரத்தோடு கரம் தொட்டுத் தொடர்கதை யாக்கினான். அவள் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை; நாடி பார்க்க அவளை அவன் நாடினான். “உன் தங்கை பிழைத்தாள்” என்றான். “அதனால்தான் உன்னை அழைத்தேன்” என்றான். “யானை குணமாலையைக் கூட்டுவித்தது. நாகம் இவளைக் காட்டுவித்தது” என்று தனக்குள் கூறிக் கொண்டான். காதல் என்ற ஆபத்துக்கு ஏதாவது இப்படி விபத்துகள் தேவைப்படுகின்றன என அவன் அறிய முடிந்தது. “அவள் நட்டு வைத்த முல்லை முளைவிட்டு நகை காட்டியது. அதைக் காண இவள் ஓடோடிச் சென்றாள். வழியில் ஒரு குரவம் பூத்து அழகு தந்தது. வண்டுகளும் தேனீக்களும் அதைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அது அவளைக் கவர்ந்தது. பூவைப் பறிக்க அருகில் சென்றாள்; அப்பொழுதுதான் அரவு வந்து அவளைக் கரவு செய்தது” இந்தச் செய்தி அங்குப் பேசப்பட்டது. இவை உலோகபாலன் கேட்டு அறிந்தான். “நல்ல காலம்; இந்தப் புதிய இளைஞனால் அவள் பிழைத்தாள்” என்று அவன் மகிழ்ந்தான். கோயில் சிலைகளைக் கண்டிருக்கிறாள்; அங்குத் தூண்களில் ஆண்வடிவம் என்றால் அவள் அவற்றைக் காண்பதை அவள் நாணம் தடுத்தது. அத்தகையவளின் நாணம் அவளிடம் தங்குவதற்கு நாணி அவளை விட்டு அகன்றது. நிறையை விளித்தாள்; என்குறையைத் தீர்க்காத நீ என்னைவிட்டு விலகு என்று அதற்கு விடுதலை அளித்தாள்; அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் படித்த படிப்பை எல்லாம் பறக்க விட்டது. அவள் நிலை கொள்ளவில்லை; அவன் அந்தப்பக்கம் வந்தால் பார்க்கலாமே என ஆசைப்பட்டாள். அவன் காலடி சப்தம் ஏதாவது கேட்டாலே ‘யாரடி போய்ப்பார்’ என்று தன் தோழியை அனுப்பிவைத்தாள். அவனுக்காகத் தன் தமையன் அழைத்த விருந்துக்கு அடுக்களையில் இருந்து அவளே சமைத்து அனுப்பினாள். “சமையல் நன்றாக இருந்தது” என்றான். “என் தங்கையின் கைத்திறன்” என்றான். “முதலிலேயே சொல்லி இருக்கலாமே” என்றான் “எதற்காக” “"பாராட்டி இருக்க மாட்டேன்” என்றான்; அதன் நுட்பம் அரச இளைஞன் அறிந்து கொள்ள இயலவில்லை. கதவு இடுக்குகள் எவ்வளவு பயன் உடையவை என்பதைக் கண்டு அவற்றைப் பயன் படுத்திக் கொண்டாள். தானே நேரில் சென்று “நான் தான் சமைத்தேன்” என்று கூறலாம் என்று துடித்தாள்; அரச மகள் என்பதால் அஞ்சி அடங்கினாள். அவனைத் தான் எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று துடித்தாள். அத்தான் என்று அழைக்க வேண்டும் என்று பித்தான நினைவுகள் அவளைக் கவ்வின. தன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு அவளே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் வேதனைப் பட்டாள். ‘இதுவோ அன்னாய்! காமத்தியற்கை; புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்’ என்று தன் தோழியிடம் எடுத்து உரைத்தாள். அவனும் அவளைப் பற்றிப் பற்பல கற்பனைகளில் ஆழ்ந்தான். “காணி நிலம் வேண்டும். அங்கே ஒரு மாளிகை கட்டி முடிக்க வேண்டும். கீற்றும் இளநீரும் தரும் தென்னைகள் சுற்றியும் வைக்க வேண்டும். கத்தும் குயிலோசை காதில்பட வேண்டும். அங்கே இந்தப் பதுமம் பத்தினியாக வந்து தன் பக்கத்தில் இருக்க வேண்டும்” என்று கற்பனையில் ஆழ்ந்தான். நீலத் திரைக் கடலில் தன் மோனக் கனவுகளில் அவள் நீந்தி விளையாடுவதைக் கண்டான். கோல அழகுடைய அந்தக் கோயில் புறாவைப் பிடித்துக் கவிதைகள் சொல்லலாமே என்று ஆசைப்பட்டான். “உயிர் கொடுத்தேன் என்பதற்காக அவள் உடலை நான் எப்படிக் கேட்க முடியும்? எந்த மாமன் மகனோ உறவு பேசி அவளை இழுத்துக் கொண்டு போனால் என்ன செய்வது?” முன்பின் தெரியாத உனக்கு எப்படி எங்கள் மகளைத் தர முடியும்? முகவரி இல்லாத மானாவாரி நீ; உனக்கு எப்படி எங்கள் மகளை வாரித் தர முடியும்? எப்படித் தாரை வார்த்துத் தரமுடியும் என்று முகம் திரித்துப் பேசினால் என்ன செய்வது?” “அவள் மட்டும் விரும்பினால் போதுமா? அது போதும். அது முதற்படி, அதன்பின் எல்லாம் நடக்கும் அவள் சொற்படி, அதுதான் செய்யத்தக்க உருப்படி, நிச்சயம் உண்டாகும் சாகுபடி, அதற்குப் பிறகு நடப்பது விதிப்படி” என்று எண்ணியவனாய் அந்த ஊரில் ஒதுக்குப்புறத்தில் இருந்த ‘காதலர் சோலை’ என்ற பூஞ்சோலைக்குத் தனியனாகச் சென்றான். அவனுக்கு ஒரு நப்பாசை; அவளுக்கும் தன்னைப் போல் ஒரு தப்பாசை வந்து இந்தப்பக்கம் திருப்பு முனையாக ஆக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்காதா என்று அங்கலாயததான். மின்னல் கொடி ஒன்று கன்னல் மொழியாளின் வடிவத்தில் அவன் எதிர்பார்த்தபடியே வந்து நின்றது. அவளோடு வால் நட்சத்திரங்கள் போன்று அவள் தோழியர் உடன் வந்திருந்தனர். “பதுமையே! நாங்கள் அந்தப் பக்கம் சென்று ஏதாவது புதுமை இருக்கிறதா என்று பார்த்து வருகிறோம்; நீ இங்கே சற்று இளைப்பாறுக, அதுதான் காதல் ஆறு; உன் தலைவனை நீ அடைந்து சேரு” என்று சொல்லிவிட்டு அவளை விட்டு ஒதுங்கி ஒரம் கட்டினர். “தமிழ்க் காதல்” என்ற நூலைப் படித்துச் சீவகன் இயற்கைப் புணர்ச்சி என்ற தலைப்பில் சுழன்று கொண்டிருந்தான். அடுப்பாரும் இன்றித் தடுப்பாரும் இன்றி ஒத்த அழகும், பண்பும் நலமும் உடைய தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுக் கூடும் முதல் சந்திப்பு இது என்று படித்துக் கொண்டிருந்தான். அவள் அவன் முன் வந்து நின்றாள்; சடங்குகள் எல்லாம் தொடங்கின; அவள் மேனியைத் தொட்டான்; கூந்தலை வருடினான்; அவளுக்குக் கிளுகிளுப்பு உண்டாக்கினான்; அந்தச் சடங்கை மெய் தொட்டுப் பயிறல் என்ற வாக்கியத்தால் படித்து அறிந்தான். ‘யான்பெற்ற இன்பம் யார் பெற்றார்?’ என்று அவள் நலம் பாராட்டினான்; இடையில் தொடங்கி நடுவுக்கு வந்து முடிவுரை தந்த அவன் வருணனைகள் அவளைத் தலை குனிய வைத்தன. முத்து என்றான் அவள் பேசும்போது; முகை என்றான் அவள் நகைக்கும் போது; வில் என்றான் அவள் புருவ வளைவைப் பார்த்தபோது; வேல் என்றான் அவள் விழிகள் அவனை வருத்தியபோது, கரும்பு என்றான் அவளை முழுதும் விரும்பியபோது, கோங்கம் என்றான் அவள் இணைக் கொங்கைகளைக் கண்டபோது; இப்படி அடுக்கிக் கொண்டே போனான். அவளுக்கே அதில் ஒரு சலிப்பு ஏற்பட்டது. அவன் அடுக்கிக் கொண்டிருக்கும் போது “உன்கவிதை முடிப்பதற்குள் என் தோழியர் வந்து கவிந்து கொள்வார்கள்” என்றாள்; இனி அறுப்பது இல்லை என்று இருவரும் முடிவுக்கு வந்தவர்கள் போல் ஒருவரை ஒருவர் முழுவதும் அறிந்து கொண்டனர். மறுபடியும் அதே இடத்தில் பலமுறை வந்து சந்தித்தார்கள்; இதற்கு இடந்தலைப்பாடு என்று தமிழ்க் காதல் என்ற அந்நூல் பெயர் தந்தது. தோழியர் துணை கொண்டு அவர்கள் அடைந்த கூட்டத்தை அது தோழியர் கூட்டம் என்று பெயர் கொடுத்தது. தமிழ்க் காதல் படிக்கப்படிக்க அவனுக்குச் சுவை தந்தது. அந்நூல் அவனுக்குப் பொழுது போக்க அந்தச் சோலையில் மிகுதியும் பயன்பட்டது. அவனைத் தேடிக்கொண்டு யாரோ “மச்சானைப் பார்த்தீர்களா” என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்தார்கள். இந்த மலைவாழைத் தோப்பில் தன்னைத் தேடுவார் யார் என்று கவனித்தான். உண்மையிலேயே மச்சான் ஆகக் கூடிய உலோகபாலன் அங்கு வந்து சேர்ந்தான். அச்சம் சிறிது அலைக்கழித்தது. தமிழ்க்காதல் என்ற நூல் சிறிது மறைத்து வைத்தான். “என்ன நூல்?” என்று கேட்டான். “தமிழ்க் காதல்”; என்றான். “தமிழ்க்காதல் என்றால் எனக்குக் காட்டக்கூடாதா? ஏன் எனக்கு அதை மறைக்கிறாய்?” “எதுவரை படித்திருக்கிறாய்?” என்று தொடர்ந்தான். “இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கியிற் கூட்டம் இதுவரை முடித்து விட்டேன்.” “இனி என்ன இருக்கிறது?” என்றான். “அறத்தொடு நிற்றல்; அதாவது தலைவி தனக்கும் தலைவனுக்கும் உள்ள கூட்டத்தைத் தன் தோழிக்கு எடுத்து உரைப்பாள்; அவள் செவிலிக்குச் செப்புவாள்; அவள் தாய்க்கு உணர்த்துவாள்; தாய் அவள் தமையனுக்கும் தந்தைக்கும் அறிவிப்பாள்” என்றான் சீவகன். “அந்தப்பகுதிகளை யான் படித்து விட்டேன்; என் தங்கை எங்களுக்கு அறிவித்துவிட்டாள்; எம் தந்தையும் உடன்பட்டு விட்டார். இனிக் கற்பியல்தான்” என்றான். தமிழ்க்காதல் அதி அற்புதம் என்று விமரிசித்துக்கொண்டு இருவரும் வீடுவரை பேசிக்கொண்டே சென்றனர். மணம் சிறப்பாக நடந்தது. அவன்பக்கம் சுற்றம் இல்லையே என்று பெண் வீட்டாருக்கு வருத்தம் தான்; இருந்தாலும் அதை அவர்கள் பெரிது படுத்தவில்லை. இரவுகளில் ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதைகளில் ஒரு சிலவற்றைப் படித்து இன்பமாகப் பொழுது போக்கினர். அவளும் விழித்துக் கொண்டு அவனோடு அக்கதைகளை ரசித்தாள். பகலில் பொழுது போவது சிரமமாக இருந்தது. புதுப்புதுச் சமையல், அவியல், துவையல் இந்தக் கலவைகள் நாவுக்குச் சுவை பயந்தன; மாலைகளில் நாடகம் நயந்தும், பாடல்களைக் கேட்டும் இனிமையாகப் பொழுது போக்கினர். எதுவும் இல்லையென்றால் அவர்கள் தம் இனிய நினைவுகள் ஒன்று இரண்டு பேசி மகிழ்ந்தனர். “உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள். “சொன்னால்தானே தெரியும்” “நான் சின்ன வயதில் முல்லைச் செடி ஒன்று நட்டு வைத்தேன்” “அது முறுவல் காட்டி இருக்கும்” “அது எப்படி உமக்குத் தெரியும்?” “அதைப் பார்க்கத்தானே நீ சென்றாய்” “அப்பொழுதுதான் அந்த நாகம் கடித்தது; துடிதுடித்து விட்டேன்; முடிந்தது என் வாழ்க்கை என்று மயங்கி விழுந்து விட்டேன்.” “நானும் அப்படித்தான் மயங்கி விழுந்து விட்டேன்; மறுபடியும் கதையைத் தொடர்ந்து சொல்.” “அந்த முல்லை வயதுக்கு வந்தது” “உனக்கு என்ன பைத்தியமா?” “பூப்பு அடைந்தது; அதைத்தான் அப்படிச் சொன்னேன்” “அதை ஒரு மகிழ்ச்சி மிக்க விழாவாகக் கொண்டாடினேன்; ஒரு பெண் வயதுக்கு வந்தால் எப்படி எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படிக் கொண்டாடினோம்” “அதில் உனக்கு என்ன மகிழ்ச்சி” “அந்தப் பெண்ணின் தாய் நான் தானே; நட்டுவைத்த முல்லை பட்டுப் போகாமல் பூ ஈன்றது என்றால் எனக்குப் பெருமகிழ்ச்சி தானே.” “அதை ஏன் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” “அதைச் சென்று நான் பார்க்கவே இல்லை; அதற்குள் குரவம் பூ ஆசை என்னை இழுத்தது; அரவும் என்னைத் தொட்டுவிட்டது” என்றாள். “பழைய கதைதானே” இருவரும் “பிக்நிக்” சென்றனர். முல்லைக் கொடி இவள் நட்டு வைத்த பொற்கொம்பினைத் தழுவிக் கொண்டு இருந்தது. “இதற்குள் மணமும் ஆகிவிட்டது போல இருக்கிறதே; கொழு கொம்பினைத் தழுவிக் கொண்டு இருக்கிறது” என்றான். “அதுவும் நம்மைப்போலத்தான்” என்றாள். சற்றுத் தொலைவில் பாம்புகடித்த அந்தச் சரித்திர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அடைந்தனர். அவள் சொன்னாள்; “அன்றும் இப்படித்தான்; இந்தக் குரவத்தைச் சுற்றி வண்டும் தேனும் உறவு கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன.” என்றாள். “அதுவும் நம்மைப்போலத்தான்; வேட்கை தீரவில்லை” என்றான். ஊர் புதிது; உற்ற துணைவி புதிது; உணவு புதிது; அவை ஒவ்வொன்றும் புதிது புதிதாக இருந்தன பாரதியின் கவிதைகளைப் போல. இடைவேளை, ஒரு நாள் வெளியே இளநீர் பருகிவிட்டு வந்தான். “ஏன் எங்குச் சென்றிருந்தீர்?’ என்று கேட்டாள். “ஒருவருக்கு நான் கடன் பாக்கி; அதை முடித்து வந்தேன்” என்றான். “நன்றிக்கடன்; முதன்முதலில் எனக்கு எதிர்ப்பட்டவள் ஒருத்தி; அவளைப் பார்க்கத்தான் வந்தேன்; நீ கிடைத்தாய்” “நல்ல சகுனம்; சுமங்கலியா?” “அவளைச் சுமங்கலியாக்க முயன்றேன்; சுகம்மட்டும் தந்தேன்.” “யுகம் வரை பேசலாம்; விளக்கிச் சொல்லுங்கள்” “தேசிகப்பாவை அவளோடு பேசிவிட்டுச் சொல்லி விட்டு வந்தேன்.” “என்னிடம் ஏதோ மறைக்கிறீர்கள்”. எல்லாப் பெண்களும் பேசுவதுபோல அவளும் பேசினாள். “உரைக்கின்றேன்; ஒரு நாள் கூத்து; அவ்வளவுதான்” “இது?” “எங்கள் ஊரில் இது சகஜம், சீவகன் தெரியுமா? அவனும் அப்படித்தான்; அநங்கமாலையோடு கொஞ்சம் தொடர்பு உண்டு; பாவம் அவள் அவனுக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கிறாள்; அவன் ஊரை விட்டுப்போய் விட்டான்; இந்தக் கதை எல்லாம் உன் அண்ணனுக்குச் சொல்லி இருக்கின்றேன்; சீவகனே இப்படிச் சில்லரை விஷயங்களில் ஈடுபடுகிறான் என்றால் நான் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். சீவகனுக்கு ஒரு அநங்கமாலை; எனக்கு உங்கள் ஊர்த் தேசிகப் பாவை” என்றான். “நேசிப்பதில் தவறு இல்லை. அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை” என்று அவள் அதைத் தொடரவில்லை. ஊடலுக்கு இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தினாள்; அதனால் அவன் கூடலுக்கு அது தடையாக நிற்கவில்லை. என்னதான் ஒரு திரைப்படம் பிரமாதம் என்றாலும் அதை எப்படித் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அவனால் அங்கு நீடித்து இருக்க முடியவில்லை. அவன் பயணம் அங்கிருந்து தொடர்ந்தது. அவன் வழக்கம்போல் மிகவும் கொடியவனாகவே நடந்து கொண்டான்; அவளிடத்தில் ‘போய் வருகிறேன்’ என்று ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. விடியற் பொழுது; அது தோள் தோய்ந்த காதலனை வாள்போல் பிரித்துவிட்டது. தேடித் தேடிப் பார்த்தாள்; தேசிகப்பாவையின் வீட்டுக்கும் ஆள் அனுப்பிப் பார்த்தாள். “அவர் வந்துபோய் விட்டார்” என்று அவள் சொல்லி விட்டாள். இந்தச் செய்தியை அவள் தன் தாய்க்கு அறத்தொடு நின்றாள்; தாய்க்குச் சொல்ல அவள் தன் கணவனுக்கும் மகனுக்கும் சொல்லக் காணவில்லை என்று அனைவரும் கண் கலங்கினர். அவள் தாய் “மகளே! இந்தக் கடல் ஏன் உப்புக் கரிக்கிறது தெரியுமா?” என்று கேட்டாள். “தெரியாது” என்றாள். “மங்கையர் அழுத கண்ணிர்தான்; பிரிந்தவர் அடைந்த வேதனையின் விளைவுதான்” என்றாள். அதைவிட அவளுக்கு ஆறுதல் கூறக்கூடிய மொழிகள் வேறு அமையவில்லை. பதுமையின் தந்தை நரபதி ஆளைவிட்டுத் தேடினார்; தேடிய அவர்கள் ஊரின் எல்லையை அடைந்து அவனைச் சந்தித்து உரையாடினர். அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிய வில்லை; மாறுவேடம் கொண்டிருந்தான்; அவர்கள் அவன் தான் என்று தெளிவு கொள்ள இயலவில்லை. “உன்னைப் போல் ஒருவன்” என்றான் அவர்களுள் ஒருவன். “ஒருவனைப் போலவே ஒன்பது பேர் இருப்பார்கள். அது படைப்பின் இயல்பு” என்றான். “அரசமகளைக் கட்டிக்கொண்டு இப்பொழுது தொடர்பு வெட்டிக்கொண்டு போய்விட்டான்” “அவனா ! இப்பொழுதுதான் என்னிடம் பேசி விட்டுச் சென்றான். இன்னும் ஒன்பது மாதத்தில் வந்து அழைத்துப் போகிறேன்; யாராவது தேடிக்கொண்டு வந்தால் சொல்லி விடு என்று கூறிவிட்டுச் சென்றான்” “நீ அவனை ஒன்றுமே கேட்கவில்லையா?” “கேட்டேன்; இப்படி விட்டுப் பிரியலாமா என்று கேட்டேன். என்ன செய்வது? என் தாய் உடல் நலம் இல்லாமல் இருக்கிறாள்; அவளைப் பார்க்கப் போக வேண்டும்; சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள். நீ சொல்லிவிடு என்று கூறிவிட்டுச் சென்றான். பார்த்தால் நல்லவனாக இருக்கின்றான்; கடமைகள் காத்துக் கொண்டிருக்கும். அவன் கண்ணியமானவன் தான்; இதை அவர்களிடம் கூறி விடு என்று சொல்லிச் சென்றான்” “நாடகமே இந்த உலகம்” “என்ன செய்வது இப்படியும் நடிக்க வேண்டி இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே நடந்தான். 6. கேமசரி இலம்பகம் பல்லவ தேசத்தை விட்டு நல்லவனாகத் தொடர்ந்து நடந்தான்; அவன் பயணத்தின் அடுத்த தலைப்பு தக்க நாடு; தக்கநாட்டில் ஏமமா புரம் என்ற நகரை அடைந்தான். அந்த ஊரில் ஒரு அங்காடி இருந்தது; அங்கே விடலைகள் இளநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அந்தக் காளைப் பருவத்தினர் மிடுக்காகவும் துடுக்காகவும் இருந்தனர். அவர்களைப் பார்த்து “இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்று கேட்டான். “பெண்கள்” என்றார்கள்; அவர்கள் கண்கள் கிண்டல் பேசின. “விளையாடுகிறீர்களா?” என்றான். “கலியாணமாகாத பெண்கள்; உள்ளூர்க்காரர்கள் நாங்கள்; இங்கே காத்துக்கிடக்கிறோம்; அவர்களுக்கு எங்களைப் பிடிக்க வில்லையாம்; வெளிநாட்டுச் சரக்குத் தான் அவர்களுக்குக் கிக், நீ போனால் சிக்கிக்கொள்வாய்” என்றார்கள். இவனை அவர்கள் சற்றுப் பொறாமையோடு பார்த்தனர். இவன் அழகாக இருப்பதால் அவர்கள் இப்படிப் பேசினார்கள். “ஏதாவது ஒரு முகவரி சொல்ல முடியுமா?” “சுபத்திரன் கடை என்றால் எவரும் சொல்லி விடுவார்கள். காதில் கடுக்கன் போட்டிருப்பார். அவருக்கு ஒரே பெண், கேமசரி என்பது அவள் பெயர்; எங்கள் ஊர்க்கூந்தல் தைல வியாபாரிகள் அவள் படத்தைப் போட்டுத்தான் விளம்பரம் செய்கிறார்கள்; கூந்தல் அழகி அவள்.” “நாங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தோம். எங்களை எல்லாம் பார்த்தால் அவளுக்கு ஆண்பிள்ளைகளாகப் படவில்லை. நீ போய்ப்பார்; வாழ்த்துகிறோம்” என்று சிரித்துப் பேசி அவனுக்கு அந்தக் கடைக்குச் செல்வதற்கு வழி காட்டினார்கள். அவர்கள் தூண்டியதால் இதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டான். கடைத்தெரு வழியாக நடந்தான்; அந்தத் தெருவிலேயே அதுதான் பெரிய கடையாக இருந்தது. சரிகைத் தலைப்பாகை கட்டியிருந்தார்; திலகர் போன்ற கட்டு அது. பச்சையப்பரும் அப்படித்தான் கட்டி இருந்தார். ஏன் வ.உ. சிதம்பரனாரும் தலைப்பாகை வைத்திருந்தார் என்று தெரிகிறது. இவன் போனவுடன் அதை மாட்டிக் கொண்டு இருந்தார். அவர் வழுக்கைத்தலை; அதனால் இது அதை மறைக்க அமைந்த சாதனமாகத் தெரிந்தது. தொப்பி, தலைப்பாகை இவற்றின் சரித்திரமே இதுதான் என்பதை அறியமுடிந்தது. அவர்கள் சொன்னபடி காதில் கடுக்கன் கலங்கரை விளக்கமாக இவனுக்கு அடையாளம் காட்டியது. அந்தக் கடைதான் என்று முடிவு செய்தான். நிறம் சிவப்பு; நிச்சயம் இவனுக்கு மகள் ஒருத்தி அழகாக இருப்பாள்; அவள் சிவந்திப்பூ என்று கற்பனையில் கண்டான்; அவள் இனிக் காணப்போகும் மத்தாப்பு என்பதை அறிந்து கொண்டான். பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில் கூட்டிச் சொல்லெல்லாம் தெரியச் சொல்லி “நல்வரவு ஆகுக” என்று விளம்பரம் காட்டி அவனை வரவேற்றார். “வாப்பா! எந்த ஊர்? புதுசு போல இருக்கு” என்றார். அவர் பேச்சே ஒரு தினுசாக இருந்தது. அவர்கள் சொல்லியபடி இவருக்கு ஒருமகள் இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான். “உனக்குக் கலியாணம் ஆச்சா?” என்றார். ரொம்பவும் அநாகரிகமாக நடந்து கொண்டதுபோல் தோன்றியது. நடிகையை வயது கேட்பது போலவும், முதியவர்களைப் பார்த்து உடல் நலமா என்று அடிக்கடி விசாரிப்பது போலவும், புதிய மனிதரைச் சந்திக்கும்போது உன் வருவாய் என்ன என்பது போலவும் இந்த வினா இருந்தது. அதற்கு அவன் பதில் சொல்லக் கடமைப்பட வில்லை. சிரித்துக்கொண்டான். அவரும் தொடர்ந்து அதைப் பற்றிக் கேட்கவில்லை. வீட்டு முன்னால் ஒரு பாவை இருந்தது. உற்றுக் கவனித்தான்; அது அவர் மனைவி என்று தெரிந்தது; அந்த வீடு ஒரு ஓவியம் போல அழகாக இருந்தது. நூலைப் போலத்தான் சேலை என்ற பழமொழி அவனுக்கு நினைவு வந்தது. சில வீடுகளில் பெண் பார்க்கச் செல்கிறார்கள். மாமியாராக வருகிறவர்களைத் தவறாக மணப்பெண் என்று தான் கருதிவிட்டதாகச் சென்றவன் பேசிச் சிரித்து நகையாடுவது உண்டு. நிச்சயம் இவர் மகள் பேரழகி என்பதற்கு இவள் ஒரு முன்னறிவிப்பாக அமைந்தாள். வழக்கம் போல உணவு, விருந்து, பிறகு நாடகம்; பூச்சுமை ஒன்று முன் வந்து நின்றது. நாணத்தாலா அல்லது பூவின் சுமையாலா தெரியவில்லை; அவள் நாணித் தலைசாய்ந்தாள். நாணத்தில் ஏற்பட்ட மற்றைய கோணங்களை ரசித்தான். “என் மகள் இதுவரை யாரைக் கண்டும் வெட்கப்பட்டதில்லை” என்றாள் அவள்தாய். இப்பொழுது அது கெட்டது என்று அறிந்தான். “எத்தனையோ கற்கள் விட்டு எறிந்திருக்கிறேன்; கற்கள் தாம் மிச்சம்; காய் கீழே விழுந்தது இல்லை” என்றார் வீட்டுக்கு உரியவர். “சமைக்கச் சமைக்கக் கொட்டி வச்சதுதான் மிச்சம்” என்று அதற்கு விளக்கம் தந்தாள் அவர் துணைவியார். இலைகள் எடுத்துப் போட்டனர். அந்த வீட்டில் மங்கலம் தங்கியது. அவள் மனைமாட்சியைப் பெற்றாள்; அவள் அன்னை அகம் மகிழ்ந்தாள்; தந்தை எடை கொஞ்சம் கூடிவிட மருத்துவர் பருக்காமல் கவனித்துக் கொள்ள அறிவுரை தந்தனர். “இரவிலேகூடச் சாப்பிடுவதில்லை” என்றார். “நல்லதுதான்” “வெறும் பலகாரம்தான்; பத்து இட்லி எட்டுப் பூரி” என்றார். அவர் பூரிப்புக்கு அந்தப் பூரிகள் காரணம் இல்லை என்பது மருத்துவருக்குத் தெரியும். “ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும், போகப்போக மெலிவு ஏற்படும். பெண்ணைப் பெற்றவர் நிச்சயம் கண்ணைக் கசக்கும் நாள் வரும்” என்று கூறி மருத்துவர் “வேறு வைத்தியம் தேவையில்லை இளைக்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டோமே என்று வருத்தப்பட்டான். “பரவாயில்லை; அவளுக்கு எந்த விலையும் கொடுக்கலாம்” என்று மன நிறைவு கொண்டான். விட்டுப்பிரிய வேண்டுமே; தொட்டுத் தாலி கட்டியாகி விட்டது; அந்த வேலியைக் கடப்பது எப்படி? காலம் சிறிது காத்திருந்தான். மிகப் பொறுமையாக நடந்து கொண்டான்; சொல்லாமல், வீட்டை விட்டு வெளியேறினான். சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்; ஊரைக் கூட்டிப் பஞ்சாயத்து வைத்திருப்பார்கள். “மாப்பிள்ளை ! உனக்கு என்ன குறை வச்சேன்; பெண்ணைக் கண்கலங்காமல் காப்பாற்றுவீர்கள் என்று தானே கட்டிக் கொடுத்தேன்; வேண்டுமென்றால் இன்னும் இரண்டு லட்சம் பொன் கேளுங்கள் தருகிறேன்” என்று அவர் பண நோக்கில் பேசித்தான் வாணிபன் என்பதைக் காட்டிக் கொள்வார். தாயோ என்றால் “என்னமோ, தெரியலை; இவள் எப்படி நடந்து கொண்டாளோ? மாப்பிள்ளை மனம் கோணும்படி நடந்து கொண்டாளோ” என்று வேறுவிதமாகக் கணக்குப் போட ஆரம்பித்து இருப்பாள். அவளோ என்றால் கயிற்றை உத்தரத்தில் மாட்டி வைத்துவிட்டுப் “பிரிந்தால் உயிர் தரியேன்” என்று பேச வாய்ப்பு உள்ளது; “நீங்கள் இங்கே திரும்பி வரும்போது என் எலும்பைத் தான் பார்ப்பீர்கள்; அது கூடக் கொளுத்தி விட்டு இருப்பார்கள்” என்று மிரட்டி இருப்பாள். அதனால்தான் இவன் சொல்லாமல் வெளியேறினான். அவர்களும் நாள் செல்லச்செல்ல அடங்கி அமைந்தார்கள். “மாலைவாரார் ஆயினும் காலை காண்குவம்; வருவர்” என்று அவள் மாதவியைப் போலத் தினம் தினம் சொல்லிக் கொண்டு நாட்களைக் கடத்தினாள். தக்க நாடு இன்னும் முடியவில்லை; வழிப்பயணத்தில் அவனுக்குத் தக்க துணைவன் ஒருவன் கிடைத்தான். “உன் மனைவியர் எனைவர்?” என்று புதியவன் கேட்டான். “நால்வர்” என்றான். அவன் சற்றுப் பொறாமையும் பட்டான்; பரிதாபமும் பட்டான். “ஏன் கஷ்டமா ?” “நான் ஒருத்தியைக் கட்டிக்கொண்டு வேதனைப் படுகிறேன்” என்றான். “நால்வரை மணம் செய்து கொண்டால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள்; நாம் நிம்மதியாக இருக்க முடியும்” என்றான். “நால்வரும் ஒன்று சேர்ந்து விட்டால்” நகைச்சுவையை உண்டாக்கியது. தானம், சீலம், தவம், இறைவழிபாடு ஆகிய இந்நால்வர் சேர்ந்து நல்வினை என்ற ஒரு மகனைப் பெற்றுத் தருவர்; அதுவே வீடு பேற்றிற்குரிய வழியும் தரும்” என்றான். “இவன் பேசும் தத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. நிஜத்துக்கு வரமுடியுமா?” என்றான். “தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி என நால்வர் என் மனைவியர்” என்றான். “அங்கங்கே அவர்களை விட்டு வைத்திருக்கிறேன். பிள்ளைகள் பிறக்கவில்லை” என்றான். “அளவோடு மனைவிகளைப் பெற்றால்தான் வளமோடு வாழ முடியும்” என்றான். அவன் மேலும் பேசினான், “தானம், தருமம், சீலம், இறைவழிபாடு இவை இந்தச் சின்னவயதில் தேவைதானா! வயதானால் பார்த்துக் கொள்ளலாமே” என்றான். “அப்படித்தான் பலபேர் நினைக்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் அதிருஷ்டம்; கட்டினவள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டார்கள். எண்பது எட்டிப்பார்க்கிறது; பதினெட்டைத் தேடுகிறான்; வாங்கி வைத்தான்; பொட்டலத்தைப் பிரித்துக் கூட பார்க்க முடியவில்லை. அதற்குள் அவன் மருத்துவரின் கைப் பாவையானான்; அவர் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார். அவர் கைமீறிப் போய் விட்டது. மெய்தள்ளாடிக் கபம் கட்டிக்கொண்டது; அவர் சபம் சாயவில்லை. அவன் இளமையில் கேட்டிருக்கிறான். தானம் செய்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று; வீட்டில் பொன் முடிச்சு ஒன்று பத்திரப்படுத்தி இருந்தான்.” “கடைசி நாட்கள் என்பதால் கருணை மிகுந்த சுற்றத்தினர் அவனை வந்து சுற்றிக் கொண்டனர். இப்பவோ பின்னையோ எப்பவோ என்று காத்துக் கிடந்தனர். தன் அன்புக்கு இனிய இளைய தாரத்தை அழைத்து “இதோ அதை எடு” என்று கையால் சைகை காட்டி அப்பொன் முடிச்சை எடுத்துவரக் குறிப்புக் காட்டினான்.” “கயல்விழி படைத்த அந்த முயல் குணம் படைத்தவள் “ஐயா, விளம்பழமா கேட்கிறீர். இந்த நிலையில் உடம்புக்கு ஆகாதே” என்று சொல்லை மாற்றினாள். மற்றவர்களும் நம்பி விட்டார்கள். மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்றார்கள்.” “இவள் மாதிரி தான் எல்லாரும் இருக்க வேண்டும்; எவ்வளவு பொறுமை! நினைத்தாலே அது பெருமை; அந்தக் கிழவன் கேட்டது எல்லாம் கொடுக்காமல் சிறுபிள்ளையைக் கண்டித்து வளர்ப்பது போல் அவரைக் கட்டுப்படுத்திக் காக்கின்றாளே இவளல்லவா சதி அனுசூயை, நளாயினி இவள் கால் தூசுக்குக் கூடப் பெற மாட்டாள்” என்று பாராட்டினார்கள். சதி அனுசூயை என்று ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை.” “அப்புறம் அவன் தருமமே செய்ய முடியவில்லை. அவள் கருமமே வெற்றி கொண்டது; அவனுக்கும் அவள் கருமம் செய்தாள்” என்று பேசி இந்த மாதிரி விஷயங்களுக் கெல்லாம் கடன் வைக்கக் கூடாது என்று அவனுக்கு உணர்த்தினான். பின் அவனை விட்டுப் பிரிந்தான். 7. கனகமாலையார் இலம்பகம் அவன் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாடு அடைகின்றான் என்றால் இடையில் ஏதாவது ஒரு காடு இடையிட்டது; அவன் நடைப் பயணத்துக்கு யாராவது சோணகிரி பேச்சுக்குத் துணை கிடைத்து வந்தான். இப்பொழுது கிடைத்தவன் இந்த நாட்டுத் தத்துவ நூல்களை அதிகம் படித்துவிட்டுத் தன்னடக்கம் கொண்டவனாக விளங்கினான். கிழக்கிலிருந்து மேற்குச் செல்லக் கூடிய தத்துவங்களில் முக்கியமானது புலனடக்கம்; இதை அடக்கி விட்டால் உலகத்தையே வென்று விடலாம்; அடுத்த உலகத்துக்கும் பதிவு செய்து வைக்கலாம் என்பது போன்ற சிந்தனைகள் அவனிடம் குடி கொண்டிருந்தன. விஞ்ஞானம் வளராத காலம்; அதனால் இந்த ஞானங்கள் அவர்களிடம் மிகுந்து இருந்தன. ஒருவகையில் இந்தத் தத்துவங்கள் தன்னைக் காத்துக் கொள்ளப் பயன் பட்டன. கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ளாமல் விரட்டி அடிக்கும் நல்லியல்புக்குத் துணை செய்தன. இந்தத் தத்துவ மேதை ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டான். அவள் தன் பெயர் அநங்கமா வீணை என்றாள்; கொஞ்சம் சுமாராக இருந்தாள்; தளதளத்த மேனி; பளபளத்த முகம்; கலகலத்த பேச்சு; அவளுக்குத் தீராப்பசி; கட்டான உடல்; தொட்டால் சுகம் தரும் வடிவம்; அணைத்துச் சுகம் காணத்தக்கவள்; நிறம் அதுவும் பிரமாதம்தான்; மாஞ்சிவப்பு; அது அவள் கவர்ச்சிக்குத் துணை செய்தது. “சற்றே திரும்பிப் பார் பிள்ளாய்” என்றாள். “சந்நிதானம் தரிசிக்கலாம்” என்று தொடர்ந்து பேசினாள். அவளை நிதானமாகப் பேசும்படி கேட்டான். “நான் ஒருத்தி நிற்கிறேன். உன்னைப் பார்க்கிறேன்; உனக்காகக் காத்துக் கிடக்கிறேன்; நீ பார்த்துக்கொண்டே இருக்கிறாய்; அது உன்னால் எப்படி முடிகிறது” என்று கேட்டாள். மாயப்பிசாசு தன்னை மருட்டுவதாக நினைத்தான். “இதோ பாரு; இங்கே யாரும் இல்லை; நீயும் நானும் தான்; பயப்படாதே; வெளியே சொல்ல மாட்டேன்!” என்றாள். அவன் கற்ற கல்வி, பெற்ற ஞானம் அவனைத் தடுத்தன. “உன்னைப் போல் ஏமாளியை நான் பார்த்ததில்லை; மேல் விழுந்து நெருங்குகிறேன்; நீ ஒதுங்கி ஒதுங்கி ஒடுங்குகிறாய்; ஆள் அழகாக இருந்து பயன் இல்லை; ஆண்மையும் இருக்க வேண்டும்” என்றாள். ‘ஆண்மை’ என்ற சொல் அவனைத் துண்டி விட்டது செயல்பட அல்ல; தான் கற்ற கல்வியை அவளிடம் எடுத்துப் பேச. “ஆண்மை என்பது எது? வீரம் தான் ஆண்மை; தன்னடக்கம் தான் பேராண்மை, ஒழுக்கம் அது விழுப்பம் தரும். எளிது என்று மற்றொருவன் மனைவியை அடைகிறவன் தீராப்பழிக்கு ஆளாவான்; நீ பிறன் மனைவி; உன்தாலி அது காட்டுகிறது. அந்த வேலியைத் தாண்டும் கேலிக் கூத்து என்னிடம் காண முடியாது. பிறன் மனைநயவாமை தான் ஆண்மை; அது தான் அறம், ஆன்ற ஒழுக்கமும் ஆகும்.” “அது மட்டுமன்று; கன்னி ஒருத்தியைக் காமத்தியில் கலக்கியவன் குட்ட நோயில் விழுவான்; நீ கன்னி அல்ல இருந்தாலும் முன் பின் அறியாத வழிப்பயணி, உனக்குப் பாதுகாப்புத் தர வேண்டியவன் நான்; நானே உன் மடியில் கைவைத்தால் அது கீழ்மையாகும்.” “எங்கள் நாட்டு அறிவு மேதை ஒருவர் சொல்கிறார். இந்த இளைஞர்கள் கவிஞர்களின் வருணனைகளுக்கு அடிமையாகிறார்கள். ஆசைகளை வளர்த்துக் கொள் கிறார்கள்; பெண் அதில் ஏதோ புதையல் இருப்பதாகக் கருதுகிறார்கள். இன்பம் அவளிடம் புதைந்து கிடக்கிறது. என்று சொல்லிச் சொல்லிப் பழக்கி விட்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த மயக்கம் ஏற்படுகிறது என்றார் அவர்.” “இந்த யாக்கை நரம்பினால் கட்டப்பட்டது. இதன் சேர்க்கை விரும்பத் தக்கது அன்று; இது எல்லாம் வெறும் மாயை, அது மட்டுமல்ல, ஒரு மயக்கம்.” “கரிக்குருவிக்குக் காக்கை பொன்னிறமாகத் தோன்றும்; காமத்தில் கரிகட்டை போல் இருக்கும் ஒரு நரிக்குறத்தி கூட அவனுக்கு ஒரு ரதிதேவியாகி விடுவாள்.” “நான் விரத ஒழுக்கம் உடையவன்; என் சரிதமே வேறு. நான் வழக்கமாக இந்த வழி நடக்கும் காட்டு வழிப்போக்கன்; அழகிய தமிழில் சொன்னால் வனசரிதன்” என்றான். “அடி முட்டாளாக இருக்கிறாயே! உன்னை நான் கட்டிக் கொள்ளச் சொல்லவில்லை. ஒரு சின்ன விளையாட்டு; அவ்வளவு தான்; அதற்கப்புறம் நீ யாரோ நான் யாரோ! வாய்ப்பைத் தவறவிடுகிறாய்.” “அதற்கு வேறு ஆளைப் பார்க்கலாம்.” “வேறு ஆள் என்னைப் பார்த்து அதற்கப்புறம் தான் இங்கு வந்திருக்கிறேன்; வித்தியாதரன் கேள்விப்பட்டிருக்கிறாயா! விண்ணில் ஊர்பவன்; அவன்தான் என்னைக் கவர்ந்து இழுத்துச் சென்றான்; அந்தப் பாவி காரியம் முடிப்பதற்குள் அவன் மனைவி வந்து தடுத்து விட்டாள். அவளால் என்னைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; “முதலில் அவளை விட்டுவிட்டுவா” என்று ஒரே கத்தல்; அதனால்தான் அவன் என்னை இங்கே விட்டு இந்தச் சிக்கல்” என்றாள். “அதெல்லாம் மேலிடத்து விஷயம்; என்னிடம் சொல்லாதே; இங்கு நில்லாதே” என்று விசுவாமித்திரனாக நின்றான்; ஆனால் மேனகையைக் கெடுக்கவில்லை. சீவகன் இவனைப் பார்த்தான்; இவன் ஒரு தனிமனிதன். இப்படி நடந்து கொண்டதற்குக் காரணம் என்ன? இப்படியும் ஒரு சிலர் ஒழுங்காக இருப்பதால்தான் ஒழுக்கம் என்ற சொல்லுக்கே மரியாதை மதிப்பு ஏற்படுகிறது என்பது அறிந்தான். “சபாஷ் பாண்டியா” என்று பாராட்டினான். தத்துவங்கள் பயன் உடையவை. அதனால்தான் மனிதர்கள் தவறு செய்வதில்லை என்று தெரிந்து கொண்டான். இது இந்த மண்வாசனை, காலம் காலமாக வரும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள்; கற்பு என்பது பெண்ணுக்குமட்டும் உரிய கட்டுப்பாடு; கடமைப்பாடு அன்று, ஆண்களுக்கும் உரிய நல்லொழுக்கம் என்று முடிவு செய்தான். பிறன்மனை நயவாத பேராண்மையைப் பாராட்டினான். “தம்பி! உன்னைப் பாராட்டுகிறேன். இக் கால இளைஞர்களுக்கு நீ வழி காட்டி, வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்று தவறுகிறவர்களுக்கு நீ கை காட்டி: பெண் மட்டுமல்ல; பொருளிலும் இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் நாடு முன்னேறும். எளிது எனப் பிறர் பொருள் நச்சி ஊழல் செய்கின்ற அதிகாரிகள் இதை உணர வேண்டும். நாட்டின் அரசியல் கேட்டுக்கு இந்த ஊழல்தான் நச்சு மரம்; இதை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்று எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கருத்துகளை அவனிடம் எடுத்து உரைத்தான். இவனைச் சந்தித்த சில விநாடிகளுக்குள் இவனுக்கு எதிர்மறையாக மற்றொருவனைச் சந்தித்தான். அவன் மனைவியை இழந்தவனாகப் பிரலாபித்துக் கொண்டிருந்தான். “ஐயா! என் மனைவி அழகாக இருப்பாள். கண்ணுக்கு இனியவள்; பண்ணுக்கு உரியவள்” “என்னய்யா ஏலம் போடுகிறீர்” “ஒலம் இடுகிறேன்” “வழி தவறிவிட்டாள்; என் விழிகள் அவளைத் தேடிக் கொண்டிருக்கின்றன” என்றான். சீவகனுக்குத் தெரிந்தது; வழி தவறியவள் யார் என்று. “அவள் எப்படி இருப்பாள்?” “எங்கே பிரிந்தாய்? என்ன ஆனாள்” என்று கேட்டான். “அவள் உயர்குடிப் பெண்; பிறந்த வீடும் செல்வம் மிக்கது; புகுந்த என் வீடும் வசதி மிக்கது; சோமவார விரதம் முதல் எல்லா விரதங்களையும் விடாமல் பூஜை வழிபாடுகள் தவறாமல் செய்யும் உத்தமி அவள்” என்றான். அவன் அறியாமை கண்டு வியந்தான். “காசு பத்து நீட்டினால் இந்திரன் மகளும் சுந்தரன் பின்னால் போய்விடுவாள்; இதுதான் பெண்ணின் இயல்பு” என்றான் சீவகன். “பத்தினிப் பெண் அப்படிப்பட்டவள் அல்ல; தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொல் காத்துச் சோர்வில்லாதவள்.” “கணவனுக்காக அவள் உயிரையும் விடுவாள்” என்றான் அவன். “சரி என்ன ஆயிற்று? என்ன நடந்தது?” “நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் வந்து கொண்டிருந்தோம்: தண்ணிர் வேண்டும் என்றாள் குடிக்க.” “இதோ வருகிறேன்; இருக்க” என்று சொல்லிவிட்டுப் போனேன். “வந்து பார்க்கிறேன் அவள் நிழல் கூட அங்கு இல்லை.” “நீ படித்தவனாக இருக்கிறாய்; இப்படிக் கலங்குவது சரியல்ல” என்று கூறினான். “உன் மனைவிதானே உனக்கு வேண்டும்! நான் ஒரு வழி சொல்கிறேன் கேள்” என்றான். “என்ன சொன்னாலும் செய்கிறேன்” “அவள் பெயர் என்ன?” “அநங்கமா வீணை” என்றான். யார் அவள் என்பதைச் சீவகன் அறிந்தான். “அந்தப் பெயரை உச்சரித்துக் கொண்டு கண்மூடிக் கொண்டு நில்; அதுவே தாரகமந்திரம்; தானாக அவள் வந்து நிற்பாள்” என்றான். இவன் இந்தப் புதிய நாம மந்திரத்தைச் செபித்துக் கொண்டு இருந்தான். வைராக்கியம் உடையவனைச் சந்தித்துத் தோல்வி கண்டு அதனால் சோர்வு கொண்டிருந்த அந்த வழிப்போக்கியைப் பார்த்துச் சீவகன் விளித்தான். இவன் அழகன்; அதனால் மதிப்புத் தந்தாள்; ஒரு முறை பாடம் கற்றுக் கொண்டாள்; அதனால் அவள் சீவகனிடம் வாலாட்டாமல் குழைந்து நின்றாள். “யார் நீ? அந்தப் புதிய ஆளிடம் பேசிக் கொண்டிருந்தாயே எதற்காக?” “அவர் என் கணவரின் நண்பர்; அவரை எங்காவது பார்த்தீர்களா என்று விசாரித்தேன்.” என்று நடித்தாள். “உன் கணவனை நான் காட்டிக் கொடுக்கிறேன்” அவிழ்த்துவிட்ட எருதுகளை மறுபடியும் வண்டியில் பூட்டி விட்டான். வாழ்க்கை என்ற வண்டியை மறுபடியும் இருவரும் சேர்த்து இழுக்கத் தொடங்கினர். அவன் இவனைக் கையெடுத்துக் கும்பிட்டான்; வழி தவற இருந்தவள் விழிபெற்று உயர்ந்தாள். இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அவன் கண்டு தெளிந்தான். அடுத்த இடம் மத்திமதேயம் என்று அறிய முடிந்தது. ஏமாமாபுரத்தை அடைந்தான். அவன் அங்கே அந்த ஊர்ப் புதுமாப்பிள்ளை என்று தெரிந்தது; அந்த ஊரைப்பற்றித் தனக்குத் தேவையானவற்றை மட்டும் தெரிந்து வைத்திருந்தான். தன்னோடு கல்யாணச் சாப்பாடு சாப்பிட சீவகனை அழைத்தான். “அது உடம்புக்கு ஒத்துக்காது” என்று சொல்லி விட்டான். “ஏன்?” என்றான். “வீட்டு உணவு உண்டுதான் பழக்கம்; அடிசிற்கு இனியாள்; படிசொற் கடவாத பாவை; அவள் வடித்துக் கொட்டிப் பரிமாற உண்டு பழக்கம்; தாய்க்குப் பின் தாரம்; மற்றவர்கள் எல்லாம் நமக்குப் பாரம்; அவர்களுக்கு உறவு என்பது ஒரு வியாபாரம். உன்னோடு வந்தால் இவன் ஏன் வந்தான் என்று கேட்காமல் இருக்கமாட்டார்கள்; வெள்ளையும், சள்ளையுமாக இருக்கிறான். ஒசி சாப்பாடு; என்று ஏசாமல் இருக்கமாட்டார்கள்” என்றான். “இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்றான் சீவகன். “பெண்கள் கொஞ்சம் அழகாக இருப்பார்கள்” “கொஞ்சம் தானா?” “மற்றவர்களைவிடக் கூடுதலாக இருப்பார்கள் என்று சொன்னேன்” என்றான். “எதை வைத்து இப்படிச் சொல்லுகிறாய்? என்று கேட்டான். “அதனால்தான் இங்கே வந்து பெண் எடுத்து இருக்கிறேன்” என்றான். அதிலே அவனுக்கு ஒரு மனநிறைவு இருப்பது உணர்ந்தான். அழகிய மனைவி வாய்த்தாலே அது ஒரு பெருமைக்கு உரியது என்பதை அவன் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டான்; இவன் தொட்ட இடமெல்லாம் அழகின் உறைவிடம் என்று எண்ணும்போது இவனும் பெருமை அடைந்தான்; இவனுக்குள்ளேயே ஒரு ஆய்வை மேற்கொண்டான்; வீணை வித்தகி தத்தை; பண்பின் உறைவிடம் குணமாலை; புதுமை தந்தவள் பதுமை; செல்வமகள் கேமசரி இவர்களில் யார் பேரழகி என்று ஆராய்ந்து பார்த்தான்; ஆனால் முடிவு செய்ய இயலவில்லை. அவன் எப்படித் தன் மனைவி அழகி என்பதை முடிவு செய்தான் என்பதை அறிய ஆவல் கொண்டான். “எதை வைத்து உன் மனைவி அழகி என்று முடிவு செய்தாய்?” என்று கேட்டான். “மனத்துக்குப் பிடித்து இருந்தது” என்று பதில் சொன்னான். “அனைவரும் அழகிகளே” என்று இவன் முடிவுக்கு வந்தான். இப்படி அழகைப் பற்றி இவன் விசாரணையில் இறங்கியவனாய்த் தென்றல் வீசிய இளஞ் சோலைக்குச் சென்று அங்கே எதிரே இருந்த தடாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனத்திரையில் காவியத்தின் ஒவியம் ஒன்று நிழலாடியது. இராமன் சீதையுடன் வனவாசம் சென்றான்; வாசம் மிக்க மலர்கள் சூடிய சீதையுடன் பொழிலின் நீர்த்துறை அருகே நடந்து சென்றான். இலக்குவன் அங்கு இல்லை அவர்கள் தனிமையைக் கெடுக்க அன்னம் ஒன்று சீதையின் நடை கண்டு ஒதுங்கியது; அதைக் கண்டு புதியதோர் முறுவல் பூத்தான். அந்த அழகிய காட்சியை நினைத்தான்; தன் மனைவியர் அழகில் அவன் நாட்டம் செலுத்தினான். கவிதையில் படித்த அன்னத்தை நேரில் கண்டான்; அது அவ்வனிதையரின் நடையை நினைவுக்குக் கொண்டு வந்தது. அதைவிட அதன் தொடர்ந்த காட்சி அவன் உணர்வுகளைத் துண்டியது. அன்னம் ஒன்று நீர்த்துறையை நாடியது; அதன் பக்கத்தில் ஒரு மீசை வைத்த அன்னம் அதன் கணவன் என்று சொல்லத்தக்க வகையில் அதன் முன்தானையைப் பிடித்துக் கொண்டிருந்தது. நீரின் நிழலில் வேறு ஒரு அன்னத்தின் பெடையைப் பார்த்தது; அதை இந்த மீசை வைத்த அன்னம் பிடித்து இழுப்பதைப் பார்த்து விட்டது. வந்ததே கோபம். அங்கே தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி அவர்கள் எல்லாம் வந்து நின்றுவிட்டார்கள். “என்னய்யா! உனக்கு ஒரு சின்னவீடு கேடா! நீரில் ஒளித்து வைத்தால் எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா” என்று உருமியது அந்தப் பெண் அன்னம். “அது உன் நிழல்” என்றது. ஊடல் தீர்ந்தது; கூடல் நாடகத்தில் அவை இணைந்தன. அதற்குமேல் அவனால் தனிமையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பிரிவு அவனை வாட்டியது. தத்தையைவிட குணமாலைதான் அவனை மிகவும் வாட்டி விட்டாள். அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. தாய்க்கு அழும் குழந்தையைத் தான் எடுத்துக் கொள்ளத் தோன்றும்; தத்தை பிரிவைத் தாங்கிக் கொள்வாள்; குணமாலை வயதில் இளையவள்; அழுகை அவள் முத்திரை; பானை கண்டு மருண்டபோது அவலம் தான்; தொடர்ந்து ஒப்பாரி தான்; அவளை நினைக்கும்போது இவன் மனம் மிகுந்த வேதனையை அடைந்தது. விரகதாபம் அன்று; ஆன்ம நேயம் என்றால் அது அதிகமான வார்த்தை; இணைப்பிணைப்பு: உள்ளம் உறவாடியது; இவன் நினைவு ஒரு உரு எடுத்து அவள் அருகில் செல்கிறது; பின்புறம் அணுகிச் சென்று மெல்ல நீவி அவளைத் தொட்டு அதிர்ச்சி அடையாதபடி அவளை மெல்ல அணைக்கிறான்; அது வெறுங்கனவு ஆகிவிடுகிறது. சற்றுமுன் கற்ற இளைஞனுக்கு இவன் ஆறுதல் கூறி இருந்தான். “பிரிந்தவளை நினைத்து வேதனைப்படுகிறாய்; நீ படித்தவனா” என்று கேட்டான். அதே கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறான். “அஞ்சனக் கோல் கண்ணுக்கு மைதீட்டுமே யன்றி அது தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தெரியாது. அறிவுரையும் அப்படித்தான்; மற்றவர்களுக்குச் சொல்லப் பயன்படுமே தவிர அது தனக்குப் பயன்படாது” என்று தெளிந்தான். அச்சணந்தி ஆசிரியர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டு தன்னை அதட்டுவது போல் இருந்தது. “தம்பி; இன்னும் சில மாதம் பொறுத்துக் கொள்” என்று சொல்வது போல இருந்தது. அச்சணந்தி பார்த்திபனுக்குத் தேரில் இருந்து கீதை மொழி கூறிய கண்ணனாகக் காணப்பட்டார்; ‘கடமை பெரிது; அதற்கு முதலிடம் தருக’ என்று கூறுவது நினைவுக்கு வந்தது. பார்த்திபன் மறுபடியும் கடமை வீரனாக மாறினான். தானும் ஒரு மனிதன்தான்; நினைவுகள் வருவது இயல்பு தான் என்று கூறி அந்தக்காதல் நினைவுகளுக்கு இறக்கைகள் பூட்டி அவற்றை மனம் போன போக்கில் பறக்க விட்டான். சின்ன வயதில் அவன் மற்றவர்களோடு மாந்தோப்புக்குச் செல்வது உண்டு; உரியவர்களுக்குத் தெரியாமல் மரம் ஏறிக் காய் பறித்ததும் உண்டு; அப்பொழுது அகப்பட்டுக் கொண்டு திண்டாடியதும் உண்டு; மற்றவர்கள் அவனை மாட்டி விட்டு வேடிக்கை பார்த்ததும் உண்டு; கந்துக்கடன் மகன் என்பதால் அவர்கள் மன்னித்தது மட்டும் அல்ல, மடி நிறையப் பழங்கள் கட்டித் தந்து ‘அப்பாவிடம் கொடு’ என்று சொல்லி அன்பு காட்டிய நிகழ்ச்சியும் உண்டு; வேண்டுமென்றால் அடிக்கடி வந்து போ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்; விலகி நின்றவர்களுக்கு அது வியப்பைத் தந்தது. “ஏண்டா மரம் ஏறினால் அவர்களே மடி நிறையக் கட்டிக் கொடுப்பார்களா?” என்று கேட்டனர். பார்த்தால் தெரியவில்லையா?” என்று பதில் சொன்னான். மறுநாள் அவர்கள் முயன்று பார்த்தார்கள்; சரியாக மாட்டிக் கொண்டார்கள். “நேற்று என்னைவிட்டு ஓடிவிட்டீர்களே! அதற்கு இது ஒரு பாடம்” என்று சொல்லி அவன் முன் இருந்து அவர்களை விடுவித்தான். இங்கே அந்த ஊர் அரச புத்திரர்கள் உச்சிக் கிளையில் ஒதுங்கி இருந்த கனியை நச்சியவர்களாய்க் குறி வைத்துக் கல் எறிந்து கொண்டிருந்தனர்; வைத்த குறிகள் அத்தனையும் தப்பி விட்டன. சீவகன் சென்றான்; ஒரே அடியில் அது அவர்கள் மடியில் விழும்படிச் செய்தான். ‘வைத்த குறி தப்பாத வைத்தியலிங்கம்’ என்று அவர்கள் பாராட்டத் தொடங்கினார்கள். அருகில் வந்ததும் அவர்கள் குரல் கம்மியது; மராமரம் ஏழினையும் வீழ்த்திய இராமன் என்று அவர்கள் அவன் மதிப்பை உயர்த்தினர். இவன் விற்பயிற்சி உடைய விசயனோ என்று வியந்தனர். இவனைச் சந்தித்தவன் பெயரும் விசயன் ஆகும். இவன் பெரிய வீட்டுப்பிள்ளை என்பதை அறிந்தான்; தன் இளமை நாட்களை அவன் கவனத்துக்கு வரப் பேச்சுத் தொடுத்தான். “எந்த ஊர்?” “இராசமாபுரம்” “சீவகனைத் தெரியுமா? “அவன் என் நண்பன், நாங்கள் இருவரும்தான் அச்சணந்தி ஆசிரியரிடம் விற்பயிற்சி பெற்றோம். அவன் கந்துக்கடன் மகன்; அவர் வீட்டில்தான் அச்சணந்தி தங்குவார்.” “துரோணனுக்கு ஒரு அருச்சுனன்போல சீவகன் அவருக்கு நான் ஒரு ஏகலைவன்; ஒருமுறை கற்றுக் கொடுத்தால் அப்படியே பிடித்துக் கொள்வேன். அவருக்கு என் மேல் மிகுந்த பிரியம்; எங்காவது போய் விற்பயிற்சி கற்றுக் கொடுத்துப் பிழைத்துப் போ என்று வாழ்த்தி அனுப்பினார். என் கட்டை விரலை அவர் வாங்கவில்லை; அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அங்கங்கே புதிய புதிய நகரங்களுக்குச் சென்று மன்னர் மக்களுக்கு விற்பயிற்சி பயிற்றுவிப்பேன்; இது என் தொழில்” என்றான். அவன் அவர்கள் தந்தை நரபதியிடம் அழைத்துச் சென்றனர்; விசயனைப் பார்க்கும்போது உலோகபாலன் நினைவுக்கு வந்தான். இங்கே ஒரு பதுமை ஏன் இருக்கக் கூடாது என்ற புதிய ஆசையும் கிளைத்தது. அமராவதி மாடத்தில் இருப்பதை இந்த அம்பிகாபதி பார்த்தான்; விட்டு இருந்தால் நூறு பாடல் பாடி இருப்பான்; அவ்வளவு அழகு; அவள் எங்கிருந்தோ கொள்ளையடித்துத் தன்னிடத்தில் வைத்திருந்தாள். “என்ன பார்க்கிறாய்” என்றான் விசயன். “மாடப்புறா” என்றான். “அது என் தங்கையோடு வந்து விளையாடும்” என்றான். “என் மக்கள் ஐவர்” என்றான் நரபதி. “பஞ்சபாண்டவர்கள் போல் இருக்கிறது” என்று நகைத்துப் பேசினான். “அவர்களுக்கு விற்பயிற்சி தரும் துரோணராக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை; மாடப்புறாவை அடிக்கடி அங்குச் சந்திக்கலாம். இங்கேயும் ஒரு தமிழ்க் காதல் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று நம்பிக்கை கொண்டான். பணக்காரப் பெண்ணைக் காதலிக்கின்ற கதாநாயகனை பங்களாவின் வெளிவீட்டில் தங்க இடம் கொடுப்பதைப் போல இவனைப் பூஞ் சோலைக்கு நடுவே ஒரு குடில் தந்து ஆசிரம வாசியாக ஆக்கி வைத்தனர். அதுவும் அவனுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. பூவையர் அங்கு வராமல் இருக்கமாட்டார்கள். அவர்களுள் இந்தப் பாவையும் வரலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இவனால் சும்மா இருக்க முடியவில்லை; அந்தத் தோட்டத்துப் பூக்களை நோட்டம் விட்டான்; அவற்றைப் பறித்து வைத்துச் செண்டுகளையும் மாலைகளையும் தொடுத்துக் கொண்டிருந்தான். சேடி ஒருத்தி அவனைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தாள். “பூந்தோட்டக் காவல் காரா” என்று பாடிக் கொண்டே அங்கே வந்தாள். அவள் தன்னைத் தான் விளிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான். “தங்கள் ஏவல் யாதோ?” என்றான். “இவ்வளவு அழகாகப் பூத் தொடுக்கிறாயே எப்படி?” என்று கேட்டாள். “பாவையர் பூச்சூடி வருவர். அவர்களைக் கவனிப்பதை விட இந்தப் பூக்களைத் தான் ரசிப்பேன், இராசமாபுரத்தில் காந்தருவ தத்தை என்ற வித்தியாதர மகள் இருக்கிறாள். அவள் சீவகனை மணந்தவள். அவன் என் அண்ணன் மாதிரி; அவளோடு அவள் தோழியர் பலர் வருவர். அவர்கள் வந்து என்னைச் சீண்டுவார்கள். நான் அவர்கள் சூடிய மலர்களைக் கீண்டுவேன்; அந்தப் பழக்கம்” என்றான். “என் தலைவி பூக்களை மிகவும் நேசிப்பாள்; அவளுக்குச் செண்டு கட்டித் தர முடியுமா?” “இந்த அம்பிகாபதி பாமாலைகளைத் தொடுக்க அறியான்; பூமாலைகளைத்தான் தொடுப்பான்; அவற்றை நீ அவளுக்குப் பாமாலையாகக் கொடு” என்றான். அதனோடு அவளுக்கும் தெரியாமல் காதற் கவிதை எழுதிச் செருகி அனுப்பிவைத்தான். பதில் கடிதங்களும் அவள் கட்டி அனுப்பிய செண்டுகளில் வந்தன; இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். வில் தொழில்பயிற்சி முடிந்ததும் அவர்கள் விற்பன்னர்கள் என்பதை நாடறிச் செய்ய விழா எடுத்தனர். அவர்கள் கற்ற வித்தைகளைப் பார் அறியக் காட்டி அரங்கேற்றினர்; அரங்கேற்றம் நடந்தது. அரசன் நரபதி வில்லாசிரியனுக்குச் சொல்மாலை சூட்டினான். பாராட்டுரை தெரிவித்தான்; அவனுக்குக் ‘கனகமாலை’யைச் சூட்ட விரும்பினான். “இராசமாபுரத்து இளைஞன் நல்லாசிரியர்; இவருக்குப் பூமாலையை விடக் கனகமாலை சூட்ட விரும்புகிறேன்” என்று பார் அறியச் சொன்னான். பொன்னால் ஆனமாலை அவனுக்குக் காத்திருந்தது என்று அவையோர் கருதினர்; பூமாலையோடு அமராவதி அங்கு வந்தாள். வியப்புடன் விழித்தனர்; ‘கனகமாலையா’ என்று அவள் பெயரைச் சொல்லினர். சீவகனுக்கு இது புதுமையாக இருந்தது. எதிர்பாராத பரிசு அவனுக்குக் கிடைத்தது. தன் மாணவனே தனக்கு மைத்துனனாக வாய்த்தான். கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு, காளை சீவகனுக்குக் களிப்பு: எங்குச் சென்றாலும் இவனுக்கு ஒருத்தி மாலையிட்டு வரவேற்கக் காத்திருந்தாள்; வில் கற்றவன் அதனால் கிடைத்தது இந்தச் சிறப்பு. எதிர்பாராது அங்கு அவன் தம்பி நந்தட்டன் வந்து சேர்ந்தான். இது அதைவிட இருந்தது மிக்க வியப்பு. “எப்படி வந்தாய்?” என்றான். “செப்படி வித்தை” “காந்தருவ தத்தை ?” “அவர்கள்தாம் நீ இருக்குமிடம் காட்டினார்கள்” என்றான். தம்பியைக் கண்டு இராசமாபுரத்தையே கண்ட மகிழ்ச்சியை அடைந்தான். பெற்றோர்களைப் பற்றி விசாரித்தான். கந்துக்கடனும் சுநந்தையும் அடைந்த வருத்தம்; அதன் திருத்தம் இவைபற்றிப் பேசினான். “குணமாலை?” “நாள் ஒற்றி அவள் விரல்கள் தேய்ந்து விட்டன. தினந்தோறும் சுவரில் தன் விரலில் மைதீட்டி அதில் ஒற்றி நாள் எண்ணுவாள்” என்றான். பால்காரி சாணம் கொண்டு பால் கணக்கு எழுதுவது போல் இருந்தது. “காந்தருவ தத்தை ?” “அவர்கள் கலங்குவதில்லை; கேட்டால் நெஞ்சத்தில் எம் காதலர் துலங்குகிறார் என்கிறார்”. “அது எப்படி உனக்குத் தெரியும்?” “சூடாக எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். என் நெஞ்சில் அவர் இருக்கிறார் சூடு படக்கூடாது என்று கூறுவாள்” என்றான். அவள் ஒரு முடங்கலை எழுதி அனுப்பி இருந்தாள்; அதை அவன் தனித்து இருந்து படிக்கத் தொடங்கினான். “அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன். வடியாக் கிளவி மனம் கொளல் வேண்டும்.” “என் தந்தை அனுப்பிய வரிசைச் சீர்கள் எழுத்தில் அடங்கா; அவை அத்தனையும் வீட்டில் அடக்கி வைத்துள்ளேன். பொன்னும் மணியும் ஆடை புதிது அடுக்கியவை பலப்பல; கொண்டு வந்த ஆள் தரன்; அவனிடம் இங்கே நடந்தது எந்தச் செய்தியும் எடுத்துரைக்கக் கூடாது என்று அவனுக்கு எடுத்துச் சொல்லி இந்தக் குடும்பப் பெருமையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டேன். “கட்டியங்காரன் அட்டுழியங்கள் எதையும் எடுத்துக் கூறாதே; அது பழிப்பும் இழிப்பும் தரும் என்று அவனிடம் கூறி அனுப்பினேன்.” “குணமாலையைத் தணிப்பது ஒரு தனிக்கலை; அவள் பிரிவிற்கு ஆற்றாள். இருள் நீடிக்கிறது என்பாள்; திங்களைக் கடிவாள்; பகலே நீ சிறியை என்று அதனிடம் கொள்கிறாள் இகலே; மேகலை தான் அணியாமல் “ஏன் ஏகலை” என்று எடுத்தெறிவாள். அணிகள் எதையும் அவள் அணுகுவது இல்லை; அணிகலம் இல்லாத இயல்புநவிற்சியே அவள்; அதுதான் கவிதைக்கு ஒரு தனி அழகு; இதுதான் உண்மை. அவள் முகம் மதி என்று நீ புகழ்ந்து இருக்கிறாய்; அது மழையும் பொழிகிறது; காரணம் அவள் கூந்தல் மேகம் என்று நீ கூறியதால். மார்பில் முத்துக்கள் அணிவது இல்லை; அவள் கண்ணர்த் துளிகள் அவளுக்கு அழகிய முத்தாரம். கண்கள் கருங்குவளை என்பாய்; அவை கசங்கி இருக்கும்போது செங்குவளையாகிச் சிவந்து அரி பரந்து விழிக்கின்றன. நாளை வருவாய் என்று நாள்பல கடத்தினேன்; ‘நாளை என்பது ஏன் வருவதே இல்லை’ என்று கேட்கும் வினாவுக்கு இதுவரை விடைசொல்ல இயலவில்லை. புதிது; புதிது கிளைப்பது மரத்துக்கு அழகுதான்; என்றாலும் கிளைத்துக் கொண்டே போனால் அடிமரம் இளைத்துப் போகும். அதனால் சுமக்க இயலாது. இந்த அடிமரம் தாங்கள்தான்; கடமையை முடிக்கக் கடுக வந்து ஆவன செய்க, அதுதான் யான் வேண்டுவது; வணக்கம்” என்று எழுதி முடித்து இருந்தாள். கலையரசியின் விலையில்லா மாணிக்கத்தைக் கண்டு அதன் ஒளியில் தன் எதிர் காலத்தில் நாட்டம் காட்டி விரைவில் வீடு திரும்ப விழைந்தான்; சாதிக்க வேண்டியவை அவனுக்காகக் காத்துக் கிடந்தன. நாட்டைக் கொள்ளையடிக்கச் சிற்றரசர் வந்து வளைத்துக் கொண்டதாக ஒரு செய்தி வந்தது; நந்தட்டனை அழைத்துக்கொண்டு போர்முனை சென்றான். எதிரே பதுமுகன் புத்திசேனன் மற்றும் அவன் தோழர்கள் இவனுக்கு எதிரிகளாக நின்றனர்; இவன் காலடியில் அம்பு ஒன்று அது வணங்கியது. “நாட்டு அரசன் ஏமாங்கத இளைஞன் சீவகன் காண்க” என்று ஒலை ஒன்று அதனோடு ஒட்டிக் கிடந்தது. ‘பதுமுகன்’ என்று அவன் பெயர் அம்பில் பொறிக்கப்பட்டு இருந்தது. வெள்ளைக் கொடியை உயர்த்தி அவன் தோழர்கள் அமைதி விரும்புவதை அறிவித்தனர். ஏன் இவர்கள் நாடகப் பாங்கில் நடந்து கொண்டனர் என்பது விளங்கவில்லை. “நேரே சொல்லிவிட்டு வந்திருக்கலாமே” என்று வினாவினான். “நீ இங்கே எந்தப் பெயரில் இருக்கிறாயோ விராட பருவத்துக் கதை வேறு விதமாக இருக்குமே என்று அஞ்சி இந்த உபாயத்தைத் தேடினோம்” என்றனர். “என்னை ஏமாங்கதத்து இளவரசன் என்று எப்படிக் கூறுகிறாய்” என்று கேட்டான். “உன் தாய் விசயமா தேவியைப்பற்றி என்றைக்காவது நீ கவலைப்பட்டது உண்டா?” என்று கேட்டனர். அவர்களுக்கு என்று இவ்வளவு செய்திகள் எப்படித் தெரியும் என்று வியந்தான். புத்திசேனன்தான் துப்புக் கண்டு இருக்க வேண்டும் என்று மதிப்பிட்டான். “துப்பறியும் சாம்புவே செய்தி என்ன?” என்று கேட்டான். “உன் தாயைக் கண்டோம்; உரையாடினோம்; தவப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள்” என்றான். பள்ளியில் தங்கி இருக்கிறாள் என்பதை அறிந்தான். “தண்ட காரணியத்தில்” என்றனர். அடுத்த கட்டம் தண்டகாரணியம் நோக்கி அனை வரும் பயணம் செய்தனர்; கனகமாலை விரும்பி அவனுக்கு விடை கொடுத்தாள். அவள் தந்தையும் எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ஏழு கோடி கிடைத்தது போலப் பெரு மகிழ்வு கொண்டார்; ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியருக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டோம் என்ற சின்ன வருத்தம் இருந்தது; அவன் ஒரு நாட்டின் ஏக சக்கரவர்த்தி மகன் என்று அறிந்ததும் தனக்கு ஒரு கவுரவம் அடைந்தது குறித்துப் பெருமை கொண்டான். யாராவது கேட்டால் “என் பெண்ணை ஒரு பெரிய இடத்தில் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. விசயனும் அவனை விடை கொடுத்தனுப்பும்போது புதுச் சட்டை போட்டுக் கொண்டிருந்தான். “என்னடா புதுச்சட்டை?” என்று அவன் தந்தை கேட்டார். “மைத்துனரை வழி அனுப்புகிறேன்” என்றான். “பிரிவதில் கலக்கம். வீரன் மனைவி என்பதில் ஒரு விளக்கம், அவள் நிலை அந்தச் சூழ்நிலையில் மிக உயர்ந்து விட்டது. அவன் நினைவு வரும்போதெல்லாம் அந்தப் பூஞ் சோலைக்குச் சென்று அங்கு மகிழ்ந்து குலவி இருந்த பழைய நாட்களை எண்ணி மகிழ்ந்தாள். அந்தச் சோலை அவளுக்கு ஒரு சித்திரமாகத் தெரிந்தது; விரைவில் அவனைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். கவிஞர்களை வைத்துச் சோகக்குரல் எழுப்ப முடியாத நிலையில் மிகவும் தெம்போடு இருந்தாள். 8. விமலையார் இலம்பகம் தோள் மேல் தோள் வைத்துத் தோழனாகப் பழகியவனிடம் இப்பொழுது தம்மை அறியாமல் ஆண்டான் அடிமை என்ற முதலாளித்துவத் தொழிலாளி உறவு அமைந்தது. தெய்வமும் அடியாரும் என்ற நிலை என்று சொன்னால் ஓரளவு அதை உயர்த்தியதாக அமையும். ‘தலைவரே’ என்று புதிய அரசியல் மொழியில் சொன்னால் அதைவிடப் பொருத்தமாக அமையும். ‘அண்ணாச்சி’ என்று இதுவரை அழைத்து வந்தவனை என்னாச்சு என்று கேட்க முடியாமல் கண்ணியத்தோடு பழக வேண்டி நேர்ந்தது. அது அவனுக்குத் தலைவலியாக இருந்தது. அவனுக்கு வாள் பாய்ச்சமுடியாத கவசம் மாட்டினர். ஏனெனில் அது தற்காப்புக்குத் தேவை என்பதால். கருங்கல் என்று நினைத்து வந்தது வைரக் கல்லாக மாறிவிட்டது. அதைக் காக்கும் பொறுப்பு அவன் நண்பர்களுக்கு மிகுதியாகிவிட்டது. அனைவரும் விசயையின் தவப்பள்ளியை அடைந்தனர். “செவ்வி அறிக” என்று செப்பிச் செல்வன் பது முகனை முன்னால் அனுப்பி வைத்தனர்; துறவிகள் குடில் என்பதால் அங்கே காவல் காக்கக் காவலர்யாரும் நிறுத்தி வைக்கப்படவில்லை. எனினும் அமைதியே அந்தச் சூழ் நிலையைக் காத்து வந்தது. அன்புக்கடல் இரண்டும் சங்கமம் ஆகும் சந்திப்பை அவர்கள் கண்டனர். பேழையில் விட்டது பெரும் பிழை அல்ல என்று குந்தி தேவி அறிந்தாள்; தன் முன் ஏழ்மையைக் காணவில்லை; தோழமை மிக்க இளைஞருடன், சீவகன் நிற்பதை விசயமாதேவி கண்டு மகிழ்ந்தாள். கட்டியங்காரன் பாண்டியன் நெடுஞ்செழியன் அல்ல; கண்ணகியாக நின்று வழக்காட, அதனால் அவள் ஆறி அடங்க வேண்டியதாக ஆயிற்று, நீறு பூத்த நெருப்பாக இருந்தாள். பெற்ற மகனைப் பெரியோன் ஆக்கினாள். அவனை வைத்துக் கொடியோனை ஒழிக்க உருவாக்கிக் கொண்டாள். எனவே அவனைப் பார்த்தபோது கொள்ளி வைக்க ஒரு மகன் கிடைத்தான் என்று பெருமகிழ்வு கொண்டாள்; தனக்கு அல்ல; தன் பகைவன் கட்டியங்காரனுக்கு. காதல் திருமகளாகக் காட்சி தந்து சச்சந்தன் ஆட்சி யின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவள் வீரத்திருமகளாக மாறினாள். கண்ணகி போல கொதித்து எழாவிட்டாலும் சாணக்கியனைப் போல அறிவோடு பேசினாள்; அறிவின் சிகரத்தை அவள் எட்டிப் பிடித்தாள். கன்னனைக் கண்ட குந்தியின் தனங்களில் தாய்மை முதிர்ந்து நனைத்தது. தாய்மை அவனைத் தாலாட்டியது. அன்பு மழையில் சீவகன் நனைந்து விட்டான். தாய்ப் பசுவை முட்டிப் பால் அருந்தும் பசுங்கன்று ஆனான்; குழைந்தான்; மனம் விழைந்தான் “அம்மா” என்று இனிய கீதம் அவன் நாதத்தில் எழுந்தது. முதலில், சோகத்திலேயே அவள் சுயசரிதம் தொடங்கினாள். “வாள் ஏந்திய மன்னனைக் களத்தில் இழந்தேன்; காட்டிலே உன்னை உய்த்தேன்; நான் பிறப்பால் என் செய்கையால் கயமை அமையவில்லை. சூழ்நிலை என்னைக் கயத்தி என்று பேசும்படி ஆக்கிவிட்டது. பெற்றவள் பாசம் இன்மையால் உன்னைத் துறக்க வில்லை; கற்றவர் கையில் நீ சென்று உற்ற கலைகளை அறிந்து வீரத்திருமகனாக வளரவேண்டும் என்று பிரிந்தேன்; நற்றவம் நாடி நற்பேறு அடைய இத் தவப் பள்ளியை யான் நாடவில்லை; காலம் வரும்வரை காத்திருப்போம் என்றுதான் இந்தச் சூழ்நிலையை நாடினேன். எனக்கு இது ஆறுதல் இல்லமாக அமைந்தது. என் வாழ்க்கை இரண்டும் கெட்ட நிலையில் ஆகி விட்டது. பகையையும் முடிக்கவில்லை; என் வாழ்நாள் மிகையையும் முடிக்கவில்லை. செய்வது யாது? வகை தெரியாது தவிக்கின்றேன். இடை மகன் வெட்டிப் போட்ட பச்சைமரம் என் வாழ்க்கை; அது சாகவும் செய்யாது; தழைக்கவும் செய்யாது” என்று கூறினாள். ஊர்வசியாக இராசமாபுரத்து அந்தப்புரத்தில் அடி யெடுத்தவள் தவசியாக இங்கே இருந்து அறிவுரை கூறி னாள். அரசு பின்னணியும், தவத்தின் அறிவு மாட்சியும் இயைந்து அவளை ஒரு ராஜரிஷியாக ஆக்கியது கண்டு வியந்தான். அவள் அறிவுரைகள் ஒவ்வொன்றும் முத்துகளாக ஒளி விட்டன. அவன் தன் மாமன் மகளை மணக்கவேண்டும் என்று கூறினாள். உறவுக்காக அல்ல; அவள் அழகுக்காகவும் அல்ல; வலிமைக்காக தன் தமையன் கோவிந்தன் ஒரு சிற்றரசன்; அவனிடம் தக்க படைத் துணை இல்லா விட்டாலும் அது தொழில் தொடங்குவதற்கு உதவும் மூலதனம் என்பதை அறிந்து இவ்வாறு கூறினாள். அடுத்தது ஒற்றரைக் கொண்டு உற்றநிலை அறிய வேண்டும் என்று கூறினாள். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வஞ்சனையைச் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் என்று உரைத்தாள். அருள் நெறி கண்ட அவள் பொருள் நெறி அறிந்து பேசினாள்; பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லை என்பதை வற்புறுத்திக் கூறினாள். “பொருள்தான் பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும். பொன் இருந்தால் பொருபடை திரட்டலாம்; படை இருந்தால் பகையை வெல்லலாம்; பகை வென்றால் எல்லா நன்மையும் அடையலாம்; இடமும் காலமும் ஆராய்ந்து தக்க துணையோடு சென்று கட்டியங்காரனை வீழ்த்துக” என்று ஆணையிட்டாள். பிறந்த மண்ணைக் காணச் சிறந்த தன் தோழர்களோடு விரைந்தான். தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கண்டு அவர்கள் துயர் தீர்த்தற்கு இராசமாபுரம் ஏகினான். தனக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் இல்லமாக விளங்கிய தவப்பள்ளியை விட்டு விசயை தன் பிறந்த வீடு நோக்கிச் சென்றாள். அவன் தன் அன்னையின் அரிய செயலை நினைத்துப் பார்த்தான்; கணவனை இழந்த கைம்பெண்கள் நடந்து வந்த பாதையை அவள் பின்பற்றவில்லை. அறுத்து விட்டு அமங்கலமாக வாழ்வில் பொலிவிழந்து மேலும் நலிவு அடைவதற்குத் தாய் வீடு போய்ச் சேரவில்லை. தான் எடுத்த கொள்கை செயல்படும்வரை தவப் பள்ளியில் இருந்து சிந்தித்துப் பொறுமையாகச் செயல்பட்ட தாயின் பேருள்ளத்தை வியந்தான். அறுத்து விட்டதாலேயே அனைத்தையும் இழந்து விட்டதாக நினைக்கப் பழக்கப்படுத்தப்பட்ட இந்த நாட்டில் அது ஒரு இழப்பே தவிர அதுவே பிழைப்பு அன்று என்று அறிந்து அவள் நடந்து கொண்டாள். இத் தனி நிலை பாராட்டத்தக்கது என்று மதிப்பிட்டாள். கணவன் மனைவி இவர்கள் வாழ்க்கைத் துணைவர்களே அன்றி அவர்களே வாழ்க்கை அல்ல; இந்த வகையில் விசயை உலகுக்குப் புது வழி காட்டியவளாய்த் திகழ்ந்தாள். தேநீர் குடிக்க வெளியே செல்லவில்லை; பொழிலில் அவர்களை இருக்கவைத்து அவன் ஊரைச் சுற்றிவரச் சென்றான். புத்திசேனன் சீவகன் அரசமகன் ஆதலின் அவனைத் தனியே அனுப்புவது தக்கது அன்று என்று நினைத்தான்; பதுமுகன் அவன் மெய்க்காவலன் ஆகச் செயல்பட்டான். “நீ தனித்துப் போவது சரி இல்லை” என்றான் பதுமுகன். “எனக்கு அந்த உரிமை இருக்கிறது” என்றான். “நீ அரசமகன் என்று அறிந்த பிறகு அந்த உரிமையை இழக்க வேண்டியதுதான்” “அப்படி என்றால் இந்த அரசப்பொறுப்பே வேண்டாம்” என்றான். “மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்; அதனால் இது விரும்பத்தக்க பதவி அல்ல” என்றான். “மற்றவர்களுக்காவே வாழ வேண்டியிருக்கிறது; தனி மனிதன் சுதந்திரம் பறிபோகிறது” என்றான். “பதவி; அதன் தண்டனை இதுதான்” என்றான் பது முகன். “நான் இப்பொழுது அரசன் இல்லை; உம்முடைய தோழன். அந்தக் காலத்தில் நான் ஆடமுடியாது; இப்பொழுது சிறிது விளையாடி விட்டு வருகிறேன்” என்றான். ஏதோ விளையாட்டு அரங்கத்திற்குச் செல்வதுபோல இவன் காதல் சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. சில நாட்களாக அவன் மனநிலை சரியாக இல்லை. அன்னையைப் பார்த்த பிறகு மிக நல்லவனாக இறுகி விட்டான். சிரிக்கும் சந்தர்ப்பங்களும் குறைந்துவிட்டன; கல கலப்பு அவனை விட்டு அகன்று விட்டது. குடிகாரனுக்கு வேட்கை வெறி வந்து விட்டால் எங்கே சரக்குக்கிடைக்கிறது என்பதை அவன் தேடாமல் இருப்பது இல்லை. இளமை முறுக்கு; கிறுக்குகள் அவனுக்குத் தேவைப்பட்டன. சோலைகளுக்குச் சென்றால் மயில்கள் வந்து அங்குத் தோகை விரித்தாடும். அவற்றின் அழகைக் கண்டு ரசிக்கச் சோலைநோக்கிச் சென்றான். அதற்குள் சாலையில் ஒரு விஷயத்தைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவன் மனத் திரையில் தக்கநாட்டின் குரவ மரமும் அதைச் சுற்றிய வண்டுகளும் நினைவுக்கு வந்தன. “அவையும் நம்மைப் போலத்தான்” என்று அவள் உரைத்த சொற்கள் நாத ஒலியாக ஒலித்துக் கொண்டு “இந்த வண்டுகள் பூக்களைச் சுற்றுகின்றன. பூக்கள் ஏன் வண்டினை நாடுவது இல்லை” என்று சிந்திக்கத் தொடங்கினான். ‘கற்பு’ என்ற வரையறையை இந்தப் பூக்கள் பின் பற்றுவதால் அவை தாமே தேடிச் செல்வது இல்லை; காதலன் வரவை எதிர் நோக்கி நிற்கின்றன. மனிதச் சட்டம் அங்கு விதிக்கப்படாததால் அவை திரெளபதிகள் ஆகச் செயல்படுகின்றன; வரையாது அள்ளி எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. இந்தமானுடன் தான் இந்தக் கற்பு என்பதைப் பற்றிக் கழறுகின்றான்; அது அவன் உயர்ந்த மனோ நிலை என்று மதித்தான். தான் இப்படி இந்த வண்டுகளைப் போலப் புதிய புதிய மலர்களை நாடுவது தக்கதுதானா என்று சிந்திக்கத் தொடங்கினான். சட்டமும் சம்பிரதாயங்களும் தடுக்காத வரை அது தவறு இல்லை என்று முடிவுக்கு வந்தான். பந்து ஒன்று அவன் முன் வந்து விழுந்தது. யாரோ சிறு பிள்ளைகள் விளையாடுகிறார்கள் என்று அதை எடுத்தான் எடுத்துக் கொடுக்கலாம் என்று; பூப்பந்தாக இருந்ததால் அது பூவையர்க்கே உரியது என்று அறிந்தான். தோட்டத்தில் இருந்த பூங்கொடி ஒன்று அசைந்து வருவதைப் பார்த்தான். வந்த பூவிற்குச் சிறகுகள் முளைத்து விட்டன என்பதைக் கண்டான்; முதன் முறையாகப் பூ உலகில் இது ஒரு புரட்சி என்று நினைத்தான். வண்டை நோக்கிப் பூ வருவது புதுமையாக இருந்தது. “வருக” என்றான்; அவனால் அவ்வாறு கூறாமல் இருக்க முடியவில்லை. “தருக” என்று அவள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் கொடுத்திருப்பான்; அவள் மகிழ்ந்திருப்பாள். வேலியைத் தாண்டி வெள்ளாடு உள்ளே சென்று விட்டது; அதைப் பிடிக்க அவன் உடன் தாவவில்லை. வாசல் வழியே போவதுதான் வழி என்று கொண்டான். அவள் அணிந்திருந்த நகைகள் அவள் வணிகன் மகளாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய உதவின; இவளும் ஒரு கேமசரிதான். முறைப்படி அணுகி னால் அவள் தந்தை உரைப்படி அவளை மணந்து அவளைத் தனியறையில் சந்திக்கலாம் என்று சிந்தித்தான். சோர்வோடு தினமும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெறுங்கையோடு வரும் கடை முதலாளி, விமலைக்குத் தந்தை நிப்புதியின் கணவர்; இன்று கையில் இனிப்பும், பையில் பூவும், கூடையில் பழமும், அவற்றோடு ஒரு பையனையும் பிடித்துக்கொண்டு வருவது புதுமையாக இருந்தது. உள்ளே சென்று தன் மனைவியுடன் பேசினான்; மகள் ஒற்றுக்கேட்டாள். “விடாதீர்கள்” என்றாள் வீட்டுக்கு உரியவள். “யாரோ ஒரு திருடனைத்தான் அப்பா பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். அதனால்தான் விடாதீர்” என்று சொல்வதாகக் கருதினாள். அவன் தன் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பது அவள் நேரில் பார்த்தபோது அறிந்தாள். வடிவுக்கரசியாக அவள் முன் நிறுத்தப்பட்டாள். அந்தப் புனைவுக்கு அவர்கள் இது வரை பூட்டிக் காத்த நகைகள்தான் வகை செய்தன. ‘மணப்பெண்’ என்றால் அவளுக்குச் சில சம்பிர தாயங்கள் பின்பற்றப்படுகின்றன. போருக்குச் செல்கிறவன் என்றால் காக்கிச் சட்டை அணிவது போல் பணக்கார வீட்டுப் பெண்கள் பூண்களைத் தலையிலிருந்து கால் வரை மாட்டி வைக்க அவள் சுமக்கவேண்டியது ஆயிற்று. பந்தாடிக் கொண்டிருந்த நிலையில் எல்லாம் இறுக்கக் கட்டப்பட்டுக் கோயில் தூணின் சிற்பம்போல் காட்சி தந்தாள். இப்பொழுது அம்மன் சந்நிதி தரிசனம் அவனுக்குக் கிடைத்தது. நெற்றியில் குங்குமம் அதற்குக் காரணம் ஆகியது. வழக்கமான அறிமுகங்கள் நடந்தன; அது முன் நிகழ்ச்சியில் சிறிது மாறுபட்டு இருந்தது, “இவள் ஒரே மகள்; கொஞ்சம் விளையாட்டுப் புத்தி; பெரியவர்களைத் தாக்கிப் பேசுவாள், மேலாக்குப் போடுவது மூக்குத்தி இந்தமாதிரி இவளுக்குப் பிடிக்காது. வரைச் சித்திரம் போல் காட்சி அளிப்பாள்; கோடுகள் தெரிய வேண்டும் என்பதில் இவளுக்கு ஒரு ஆசை” இவை எல்லாம் அப்பா சொன்னவை அல்ல; அம்மாவின் திருவாயால் மலர்ந்தவை. “சில விஷயங்களில் முனைப்பு” என்றாள். அது அவனுக்கு மட்டும் விளங்கியது. அவள் விருப்பம்போல் ஆடைகள் குறைத்துக் கொள்ள அவன் அனுமதி வழங்கினான். அவன் அவளைப் பாராட்டினான். “நீயும் தவறு இல்லை; நின்னைப் பந்தாட விட்ட எவரும் தவறிலர் நீ வருவது முன் அறிவிப்புச் செய்யாத அரசனே தவறு உடையவன்” என்று அவள் முனைப்பைச் சுட்டிக் காட்டினான். “தெரிந்திருந்தால் என்ன செய்வீர்,” என்றாள். “அந்தப் பக்கம் தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்.” “இப்பொழுது எந்தப் பக்கமும் தலைவைத்துப் படுக்கலாம்” என்றாள். “பந்துமட்டும் தெருவில் வந்து விழாமல் இருந்தால் நாம் சந்தித்திருக்க முடியாது” என்று அவன் பூப்பந்துக்கு நன்றி தெரிவித்தான். அங்கே அவள் விளையாடுவதற்குப் பந்து கிடைக்க வில்லை; ஊடலில் அவனை வைத்து விளையாடினாள். 9. சுரமஞ்சரி இலம்பகம் அடிபட்ட மான் நொண்டிக் கொண்டே நடந்தது; காமன் அம்பினால் துளைக்கப்பட்டு வேதனை தாங்க முடியாமல் குணமாலையின் உயிர்த்தோழி சுரமஞ்சரி மோனத்தவம் செய்து கொண்டிருந்தாள். அசுவனி என்ற அந்த யானை மீது அவளுக்கு அடங்காத கோபம். போயும் போயும் இந்தக் குணமாலைதானா அதன் கண்களுக்குப் புலப்படவேண்டும். அது முரட்டு யானை மட்டும் அல்ல; குருட்டு யானையும் கூட தன்னையும் அப்படித் துாக்கி எறிந்திருந்தால் அவன் வந்து தாங்கி இருப்பானே என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள் அவள். கன்னிமாடத்தில் இதுபோல் அடிபட்ட மான்கள் பலர் அவளுக்குத் துணையாக இருந்தனர். காதலிலே தோல்வி அடைந்தவர் சரண் புகும் சரணாலயமாக இருந்தது. தனக்கு என்று அமைத்துக் கொண்ட அந்தக் கோட்டை அதன் ஒட்டை வழியே பல நோயாளிகள் வந்து அமைதி தேடினர்; சூடுபட்ட பூனை பால் குடிக்க அஞ்சுகிறது. பால் விருப்புதான்; இனிப்புதான்; என்றாலும் ஒரு முறை வாய்வைத்துக் குடித்து அது சூடுபட்டு விட்டது. அதே மனநிலையில்தான் சுரமஞ்சரி அந்த மாடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்தால் அந்தச் சூழ்நிலை அவளுக்குப் பருவ நினைவுகளைத் துண்டியது. அவள் தந்தை ஒரு மாதிரி, வேளை நாழிகை பார்ப்பது இல்லை; ஆரம்பத்தில் தன் மனைவியிடம் காட்டிய அன்பையும் ஆசையையும் விளக்குத் திரிபோல் எரிய விட்டுக் கொண்டிருந்தார். மற்றும் அடிக்கடி சுற்றத்தினர் தெரிந்தவர்கள் திருமண இதழ்களைக் கொண்டு வந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லாம் அவள் அந்த வீட்டுப் பிரச்சனையாகி விட்டாள். “என்னங்க உங்க பெண்ணுக்கு?” “இந்தக் கேள்விகள் துளைத்துக்கொண்டே இருந்தன. இவளும் இளைத்துக் கொண்டே வந்தாள். காதல் தோல்வியுற்றவர்கள் புகும் சரணாலயத்தில் இவளும் புகுந்து கொண்டாள். அவளுக்குத் தன்னைப் பற்றியே ஒரு அச்சம். மறுபடியும் இது போன்ற மனத்தாக்குதல் வருமோ என்று அஞ்சி வைத்தியரிடம் காட்டினார்கள். “இவள் ஏதோ ஒர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறாள்; மறுபடியும் இந்த மாதிரி அதிர்ச்சி வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டனர். மருத்துவ மனையில் நிரந்தரமாகத் தங்க முடியாது; அதற்காக அவள் நிரந்தரமாக அக்கன்னிமாடத்தில் வைக்கப்பட்டாள். பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு வகை மன நிம்மதி ஏற்பட்டது. “வயது பெண் அது இஷ்டமாக விட்டு விடுவதுதான் நல்லது” என்று வந்த வரன்களை எல்லாம் தரமற்றவை என்று தள்ளிப்போட்டு வந்தனர். ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற உஷாவாக இவள் பெயர் எடுத்தாள். வாழ்க்கையை விட்டு ஒடி எந்த ஆட வரையும் சந்திப்பதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டவளாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாள். அடிக்கடி பெண் கேட்க வருபவரிடம், “அவள் அல்லி அரசாணி; அருச்சுனனுக்குத்தான் கழுத்தை நீட்டுவாள்” என்று சொல்லி வந்தார்கள். அவள் மட்டும் அடிக்கடி சுபத்திரைக்கு ஆள் அனுப்பி விசாரித்து வந்தாள்; அவள் குங்குமப் பொட்டுடன் பொலிவுடன் இருப்பதாக அறிந்தாள். அதனால் அருச்சுனன் தீர்த்த யாத்திரையில் இருந்து இன்னும் திரும்பி வரவில்லை என்று உறுதியாக இருந்தாள். தத்தையைக் கண்டவர் இந்தச் செய்தியை வந்து சொல்லிக் கொண்டிருந்தனர். தீர்த்த யாத்திரை முடிந்து வந்த அருச்சுனனிடம் அல்லியைப் பற்றி மெல்லக் கிளர்ந்தனர். அவன் தோழர்கள். அதற்கு வேண்டிய சூழ்நிலை வந்தது. பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவது உண்டு; மார்பில் குங்குமம் அப்பிக் கொள்வது உண்டு; நானம் கமழ்வது உண்டு; இவன் மார்பு சிவந்து காணப்பட்டது. “எந்தப் போர்க்களத்தில் இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். “இவள் நம் ஊர்ப் பெண்தான்; இதுவரை கவனிக்காதது என் தவறு தான்” என்றான். “நீ தொட்ட இடமெல்லாம் பொன் ஆகிறதே; எப்படி?” என்று கேட்டார்கள். “அவர்கள் விரும்புகிறார்கள் நான் என்ன செய்வது” என்றான். “நான் எவ்வளவோ முயற்சி செய்கிறேன்; ஒருத்தி கூடச் சீண்டமாட்டேன் என்கிறாளே” என்றான் புத்தி சேனன். “உன் மீது புளியோதரை வாசனை வீசும்; அய்யர் மகன் நீ அதனால் இந்த வாசனை” என்றான். அவன் பிறப்பைச் சுட்டிப் பேசினான். புத்திசேனனைத் தமிழில் அவர்கள் ‘அறிவு’ ‘அறிவு’ என்று கூப்பிட்டார்கள். ‘அறிவழகன்’ என்று நீண்டிருந்த பெயர் குறுகி அறிவு ஆகியது. அடிக்கடி இப்படி ஏதாவது பேசித் தொளைப்பான்; அதனால் அதை ‘அறுவை’ என்று மாற்றி விட்டார்கள். “ஏண்டா” அல்லிக் குளத்துக்கு மட்டும் ஏன் போகத் தயங்குகிறாய்; நீச்சல் அடிக்கப் பயமா என்று கேட்டான். அவன் கூச்சல் கேட்டுப் பின் விவரம் அறிந்தான். “சுரமஞ்சரியா!” “அது ஒன்று தான் பாக்கி, அதையும் முடித்து விடுகிறேன்” என்றான். “அப்படியானால் உனக்கு ஒரு ‘கலைமாமணி’ பட்டம் தருகிறோம்; விழாவும் எடுப்போம்” என்றான். “அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது” “புதிய பட்டம்” “காமதிலகன் என்று கூறுவோம்” என்றான் அறுவை. மன்னர் திலகமாக வேண்டியவனை இப்படி அவர்கள் மடக்கிப் போட்டனர். சுரமஞ்சரியின் மூடிய கதவு திறக்க அங்கே ஒரு முதியவன் வந்து நின்றான்; அவன் அந்த ஊருக்குப் புதியவனாகவும் இருந்தான். “உன்னை யார் உள்ளே விட்டது” என்று அங்கே ஒரு குண்டுமணி தடுத்தாள். “பசி” என்றான். ”இங்கே ஆடவர்கள் வரக்கூடாது. மகளிர் மட்டும்’ என்று போடப்பட்டுள்ள பேருந்தில் நீ எப்படி வரலாம்?” என்றாள். “முதலில் ஒட்டுநரையும் நடத்துனரையும் மாற்றுங்கள்” என்றான். “அம்மா ஆணை, எந்த ஆடவரையும் அனுமதிக்கக் கூடாது” என்றாள். “கிழவன்; மூப்பினால் தளர்ந்தவன்; என்னைக்கண்டு நீங்கள் இளம் பிஞ்சுகள் அஞ்சுகிறீர் என்றால் உங்கள் மனத் திண்மை உறுதி இதற்கு அர்த்தமே இருக்காது.” “நிச்சயமாக யாரும் என்னைக் கண்டு மோகிக்க மாட்டார்கள்” என்றான். “காய்ந்த மாடு; கோரைப் புல்லையும் தின்னும்” என்று கூறி நகைத்தாள் அந்தக் குண்டுமணி. இருவரும் சிரித்தனர். “சட்ட இலாக்காவுக்கு எழுதித்தான் அவர்கள் கருத்துக் கேட்டுப் பின்தான் உன்னை அனுமதிப்போம்” என்றாள். இந்தச் சிக்கல்களைத் தீர்க்க வாசலுக்கு அடுத்த அறையில் நிரந்தரமாக ஒரு வழக்கு அறிஞர் அமர்த்தப்பட் டிருந்தார். அவர் “பரவாயில்லை; உள்ளே விடலாம்; சட்டம் என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல; அதன் நோக்கம் அறிந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்” என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார். அவர் உச்சிக் குடுமி வைத்திருந்ததால் அவர் சொற்களுக்கு மதிப்புத் தர வேண்டியது ஆயிற்று. சீவகன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். சாப்பாடு போடப்பட்டது; வயிறார உண்டான். “தூக்கம் வருகிறதே” என்றான். படுக்கை அறைக்கும் அனுமதிக்கப்பட்டான். யாழ் எடுத்து இசை வாசித்தான்; அவ்வளவுதான்; அக்கம் பக்கத்து வீட்டு ஆண்கள் எல்லாம் இங்கே ஓடிவந்துவிட்டார்கள்; ஏன்? அவர்கள் மனைவிமார்கள் வீட்டில் இல்லை; அவர்கள் சிவனைக் கண்டு தெருவுக்கு ஓடிவந்த ரிஷிபத்தினிகள் ஆகிவிட்டனர்; எல்லோரும் இங்கே ஓடிவந்து விட்டார்கள் இந்த இசையைக் கேட்க “இது அக்கிரமம்’ என்று கத்த ஆரம்பித்தார்கள். இதை விசாரிக்கச் சுரமஞ்சரி ஓடோடி வந்தாள். “இந்தக் கிழவன் இசை கேட்டு வீட்டுக்குமரிகள் அங்கே தம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே இல்லை என்றதும் அவர்களுக்குத் திக்கென்று ஆகிவிட்டது. இங்கே வந்து குவிந்து விட்டார்கள்” என்று அறிவிக்கப்பட்டது. அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஒருவாறாக அவரவர் தத்தம் வீடு போய்ச் சேர்ந்தனர். அங்கே சரண்புகுந்த சரணாலயங்கள் இந்த இசையைப் பாடுக என்று வேண்டினர். காய்ந்த நிலம் ஈரம் பட்டுத் தளிர்க்கத் தொடங்கியது. அவர்கள் நினைவுகள் பசுமையை நோக்கி நகர்ந்தன; அந்தக் கன்னிமாடம் மூட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. புல்லைத் தேடி மான்கள் வெளியேற நிச்சயித்து விட்டன. அவர்கள் மீண்டும் மீண்டும் பாடவேண்டினர். சுரமஞ்சரி “இந்த வயதில் ஏன் இங்கு வந்தீர்?” என்று அவனைக் கேட்டாள். “குமரியாட” என்றான். “அதனால் என்ன நன்மை?” “மூப்புப் போகும்” என்றான். இவள் வாய்விட்டுக் கேட்க வெட்கப்பட்டாள். அவன் பாடிய பாட்டு சீவகன்பாடிய பாட்டாக இருந்தது. அவள் குறிப்பறிந்து அவள் தோழியர், “எம் தலைவிக்காக ஒரு பாட்டு” என்றனர். “நீங்கள் என்ன தருவீர் அதைக்கேட்டு” என்றான். “வேட்டது தருவோம்” என்றனர். “எழிற்பாவை வேண்டும்” என்றான். “வைத்து விளையாடவா” என்றார்கள். “களித்து மகிழ்ந்திட” என்றான். “பொற்பாவை தானே; தருகிறோம் பாடு” என்றனர். அவன் சிவன்பாடிய சாம கீதத்தை யாழ் இசைத்துப் பாடினான். பாபநாசம் சிவன் அல்ல; பரமசிவன் பாடிய பாட்டு அது. சுரமஞ்சரி அசுணப் பறவையானாள்; அந்த இசையில் மயங்கினாள்; நிறுத்தினால் அவள் உயிர் போகும் என்று இருந்தது; அவள் நினைவுகள் உணர்வுகள் துண்டப்பட்டன. சீவகனை அப்படியே ஒடிப்போய் இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று வேகம் கொண்டாள்; தாகம் நீடித்தது; இந்தக் கிழவன் சீவகனாக இருக்கக்கூடாதா என்று ஏங்கினாள்; துடிதுடித்தாள். “காமனை வேண்டிச் சாமகீதம் பாடி இறைவனை அடைவேன்” என்றாள். “நீ சென்று வழிபடு; உன்னை அங்கு வந்து ஆட் கொள்வான்” என்று சொல்லிவிட்டுச் சீவகன் விடை பெற்றான். சீவகனைப் பற்றிய சிந்தை அவளுக்கு மொந்தைக்கள் ஆகியது; அந்த மயக்கத்தில் அவள் தான் பேசுவது இன்னது என்று தெரியாமல் பிதற்றினாள். வந்தவன் யாரோ மந்திரவாதி என்று அங்கு இருந்தவர் பேச ஆரம்பித்தனர்; அவன் அவளுக்கு வெறி ஏற்றி விட்டான்; அவன் சாம்புராணி புகைபோடும்போதே தெரியும். இவளை ஆட்டி வைக்கப் போகிறான் என்று, சீவகனை மறந்து அவன் காற்றுப்படக்கூடாது என்று சன்னலை அடைத்துக் கொண்டவள் வெட்ட வெளியில் ஒட நினைக்கிறாள்; விட்டால் துணிகளைக் கிழித்துக் கொள்வாள்போல இருக்கிறது. காமன் கோயிலுக்குச் செல்ல மறுத்தவள் அங்குப் போக வேண்டும் என்று வற்புறுத்துவதைக் கண்டு வியப்பு அடைந்தனர்; மணிமேகலைபோல அட்சயபாத்திரம் ஏந்தி ஆருயிர்க்கெல்லாம் இரங்கி மாபெரும் துறவியாவாள் என்று எதிர்பார்த்தனர். ஆட்டனத்தியை நினைத்து அலமந்த ஆதிமந்தி போலப் பேதுறுவது வியப்பைத் தந்தது. ஆட்டன் அத்தி என்பவன் சிறந்த ஆடற்கலைஞன்; அவனைக் காதலித்தவள் ஆதிமந்தி என்ற அழகி, அவனைக் கடல் அலைகள் அடித்துக் கொண்டு போக அவனை நினைத்து அழுது அரற்றித் தெய்வத்திடம் முறையிட்டு அவனைத் திரும்பப் பெற்றாள் என்பது கதை; அத்தகைய ஆதிமந்தியின் நிலையை இவள் அடைந்துவிட்டாள் என்று தோழியர் பேசிக் கொண்டனர். எப்படியோ இவள் காமன் கோயிலுக்குச் செல்லப் போகிறாள் என்ற செய்தி பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிய அவர்கள் அன்றைய காலை ஏட்டில் இச்செய்தியை வெளியிட்டு விடவே மாலையில் சாலை இருபுறமும் தலைவர்களைக் காண நிற்கும் கட்சித் தொண்டர்களைப் போல இளைஞர்கள் அழகாக உடுத்திக்கொண்டு அங்கங்கே இடம் பிடித்து நின்றனர். சிலர் இடம் இல்லாமல் போகவே மரத்தில் ஏறிக் குரங்குகள் ஆயினர்; அவர்களுள் ஒருவனுக்குத் தவறி விழுந்து அடிபட்டது என்ற செய்தி மறுநாள் வந்தது. காமன் கோயிலுக்கு முதியவர்கள் யாரும் செல்வதில்லை. பொதுவாகக் கன்னிப் பெண்கள்தான் அங்குச் சென்று வழிபடுவது வழக்கம்; அதற்காகவே அங்கு இளைஞர்கள் செல்வர்; தின்பண்டம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக்கொண்டு நிற்பர்; இவளைப் பார்க்க வேண்டுமென்று கூட்டம் கூடிவிட்டது. கட்டியங்காரன் காவலர்களுக்கு அந்தக் கூட்டத்தைச் சமாளிப்பது அரும்பாடு ஆகிவிட்டது. சுரமஞ்சரி வழிபட்ட கோயில் என்று அதற்கு இப்பொழுதும் கதை வழங்கப்படுகிறது. கலியாணமாகாத பெண்கள் அங்குச் சென்று ஆசை மரம் சுற்றிக் கல்லில் கயிறு கட்டித் தொங்கவிட்டு வருகிறார்கள். இப்பொழுதும் ஆண்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். பலத்த பாதுகாப்போடு அவள் உள்ளே சென்றாள்; அவள் நேருக்குநேர் மோதிக் கொண்டாள்; இடைத்தரகர் யாரும் இல்லை; அர்ச்சகர்கள் அந்தக் கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை; ஏனெனில் பக்தர்கள் இறைவனிடம் வாய்விட்டு முறையிட முடிவதில்லை. “காமனே! என் உயிருக்கு ஏமம் ஆகிய சீவகனைக் கொண்டு வந்து நிறுத்து; உனக்கு இங்கே பொன்னினால் ஆகிய தேரையும் கரும்பு வில்லுக்கு இரும்புப் பூணையும் செய்து தருகிறேன்; அம்மா ரதியே நீயாவது சீமான் காமனிடம் என் குறையைச் சொல்லக் கூடாதா?” என்று முறையிட்டாள். ஒரு குரல் எழுந்தது. “பெண்ணே நீ கண்ணை மூடிக்கொண்டு போ; உன் எதிரே அவனே வந்து முட்டிக் கொள்வான்” என்று குரல் எழுந்தது. தெய்வம் பேசியது. இப்படிச் செய்திகள் அடுத்த நாளில் எங்கும் பரவின. அவ்வளவுதான்; ஆத்திகர்கள் எல்லாம் கூடிக் கண்டனக் கூட்டம் நடத்தினர். “தெய்வம் பேசாது; இது ஏதோ மோசடி” என்று கண்டனக்குரல் எழுப்பினார்கள். இதற்கே இப்படி என்றால் கடவுளைக் கண்டேன் என்றால் யார் இந்த உலகத்தில் நம்பப் போகிறார்கள். அதனால்தான் கண்டவர்கள் இதுவரை வெளியில் சொன்னதில்லை என்று தெரிகிறது. சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணம் நடந்தது; அவன்தான் சீவகன் என்ற செய்தி மறைக்கப்பட்டது. பெற்றோர்கள் நிச்சயித்த மணமகன் ஒருவனை அவள் விரும்பி மணம் செய்து கொண்டாள் என்று பேசும்படி வதந்தி பரப்பி விட்டார்கள். நண்பர்கள் அவனுக்குக் காமதிலகன் என்று பட்டம் சூட்டிப் பாராட்டினார்கள். “கோட்டைக்குள் எப்படி உள்ளே புகமுடிந்தது?” என்று அவனை ஒரு வினா கேட்டான் அறிவழகன். “கிழவனாகப் போய் உருமாறினேன்” என்றான். “அது எப்படி முடிந்தது?” என்று வியந்தனர். சுதஞ்சணன் கற்றுக் கொடுத்த மந்திரசக்தி இது; எனக்குக் கற்றுக் கொடுத்த இரண்டாவது மந்திரம்; தேவைப்படும் போது உருக்கரந்து மாறலாம்; எல்லாம் மந்திரம் தான். அந்தக் காலத்தில் ஒப்பனை செய்து கொள்ளத் தாடி இருந்தாலும் இவன் அதனை நாடவில்லை. “மற்றொரு மந்திரம் என்ன?” என்று கேட்டனர். “மகளிர்க்கு நான் காமனாகக் காட்சி அளிப்பேன்” என்றான். “நீ உண்மையிலேயே காமன் தானே” என்று பாராட்டினர். சுரமஞ்சரி அவனிடம் பெருமையாகச் சொன்னாள். “தெய்வம் என்னிடம் பேசியது” என்றாள். அவன் சிரித்தான். “ஏன் உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள். “உண்மை உறுதியாக இருக்கும் போது நம்பிக்கைக்கு இடமே இல்லை” என்றான். அவளுக்கு வியப்பாக இருந்தது. “எல்லாம் உங்கள் ஏற்பாடா?” என்று கேட்டாள். “அறிவழகன் அவன் தான் கோயில் உருவச்சிலையின் பின் குரல் கொடுத்தது. நாடகங்களில் பின்னால் இருந்து குரல் கொடுப்பது வழக்கம்; அந்த உத்திதான் அவன் புத்தியில் உதயமானது” என்றான். “வெளியே சொல்லாதீர்கள்” என்றாள். “கதவை மூடு” என்றான். 10. மண்மகள் இலம்பகம் கந்துக்கடன் வீட்டில் அழுகைக்குரல் கேட்டது; அக்கம் பக்கம் வந்து துக்கம் விசாரிக்கக் கூடி விட்டனர். யாராவது அவர்களுக்காகவாவது செத்துத் தீர வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. “கந்துக்கடன்தான் ஈமக்கடனுக்கு ஆளாகிவிட்டான்” என்று வந்து விசாரித்தனர். அவன் கொழுக்கட்டைபோல் இருப்பதைப் பார்த்து அவன் மனைவி சுநந்தைதான் கண்மூடி இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். விசாரிப்பதற்கும் எளிமையாகி விட்டது. “நேற்றுவரை நன்றாக இருந்தார்களே! பட்டுப் புடவை உடுத்திக் கோயிலுக்கு வந்தார்களே; பொட்டும் பூவும் வைத்த அவர்களைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருப்பார்களே” என்று அவர்கள் தோற்றத்தை ஏற்றமுடன் பேசினார்கள். “போகும்போது நம்மிடம் சொல்லி விட்டா போகிறார்கள்” என்று முன்னுரை கூறினான் கந்துக்கடன். “ஏனுங்க அப்படிச் சொல்றீங்க?” “நேற்றுக் கோயிலுக்குப் போனதாகச் சொன்னார்கள் என்னிடம் சொல்லிவிட்டா போனார்கள் என்று கேட்டேன். அவ்வளவு தான்.” “சொல்லாமல் போயிட்டாங்களா?” “போகலை, வீட்டிலே இருக்கிறார்கள்” என்றான். யார் போய்விட்டார்கள் என்று கேட்பது அநாகரிகமாக இருந்தது. அவர்கள் வீட்டைத் துருவித்துருவிப் பார்த்தனர். “என் தந்தைக்கு இன்று திதி; அவர் சென்றது இந்தத் தேதி, அது அவர் விதி, அவரை நினைத்துக் கொண்டு அழுதோம்” என்றனர். பழைய செய்தி இதில் எந்த சுவாரசியமும் காணவில்லை. “இவ்வளவு தானா!” “அதுக்குத்தான் அழுதோம்” “எங்களால் அழமால் இருக்க முடியவில்லை.” கந்துக்கடனின் கடமையுணர்வையும் தந்தையின் பால் அவர் வைத்திருந்த மரியாதையையும் பற்றிப் பேசி வியந்து சென்றனர். இந்த அழுகைக்குக் காரணம் என்ன? சீவகனின் தலைத் தோற்றம்; அவன் வீட்டுக்கு வந்ததும் சுநந்தை வாய்விட்டு அழுதுவிட்டாள். துக்கம் தாளவில்லை. ஒருவர் அழுதால் அதற்குக் காரணமே தேவை இல்லை; மற்றவர்கள் கண்ணிர் விடுவது வழக்கம். இந்த வியாதியால் எழுந்த அவலக்குரல் அது, இது வெளியே தெரிந்தால் சீவகன் வந்து விட்டான் என்பது கட்டியங்காரனுக்குத் தெரிந்து விடும்; பிடி ஆணை அவனுக்காகக் காத்துக் கிடக்கிறது; அரச விருந்தினனாகச் சகல மரியாதைகளோடு வந்து அழைத்துச் சென்று விடுவர். அதனால் தான் அழுகைக்குக் காரணத்தை வெளியே சொல்லமுடியாமல் ஒரு பொய்யை அவிழ்த்து விட வேண்டி நேர்ந்தது. கந்துக்கடன் ஒரு வியாபாரி, அதனால் இது அவனுக்குச் சொல்லித் தரத் தேவை இல்லை; தப்புவதற்கு இது உபாயமாக உதவியது. குணமாலை சிறிது நேரம் பேசாமல் ஒதுங்கி இருந்தாள். நீண்ட நாள் பிரிந்திருந்த் குழந்தை பிகு செய்து கொண்டு தாயை அடைவதைப் போல அவள் ஒதுங்கி நின்றாள். அவனைப் பார்ப்பதிலேயே அவள் நேரம் பாதி கழிந்தது. அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. எனினும் அழுவதற்குச் சுநந்தைக்கு முன்னுரிமை கொடுத்து விட்டதால் அதனை அடக்கிக் கொண்டாள். சுநந்தை கொட்டில் நாடி வரும் கன்றுக்குட்டியை அணைக்கும் பசுவானாள். முன்னைவிட அதிகம் வளர்ந்து பசுமையாக இருப்பதாகப்பட்டது. எவ்வளவோ கேள்விகள் கேட்க விரும்பினாள். அவளால் ஒன்றும் கேட்க முடியவில்லை. விசயையைப் பார்த்த பிறகு அவனை அறியாமலேயே பாசம் சிறிது குறைந்தவனாகக் காணப் பட்டான். வளர்ந்து விட்டவன்; அதனால் ஏற்பட்ட மாறுதல் என்று அவள் நினைத்துக் கொண்டாள். மூத்த மகன் என்பதால் அவனுக்குத் தனி மரியாதை, அந்த மரியாதை கந்துக் கடனால் சீவகனுக்கு அளிக்கப் பட்டது. தத்தை ஆரவாம் செய்யாமல் தன் மகிழ்ச்சியை அவள் அணிந்திருந்த புத்தாடையிலும் அணிகளிலும் காட்டினாள். மணப்பெண் போலக் காட்சி அளித்தாள். வீட்டைப் பெருக்கிக் கோலமிட்டுச் சீர் செய்து அழகு காட்டினாள். நாமகள் என்று சொல்லும்படி அவள் நா இனிய சொற்களை மிழற்றிக் கொண்டு இருந்தன. வந்தவர்களை வருக என்று கூறி அளவோடு சிரித்து அகமகிழ வைத்தாள். குணமாலை சந்திக்கத் தத்தை வாய்ப்பு அளித்தாள். “என்னால் தான் உங்களுக்கு இந்த விளைவு” என்று வளைத்துப் பேசினாள் அவல அழகி. “உன்னால் தான் இவ்வளவும்; நான் அடைந்த சிறப்புகளுக்கே நீ தான் காரணம். கட்டியங்காரன் என்னைச் சிறைப் பிடிக்க முயலாவிட்டால் நான் என் தாயைக் கண்டிருக்க முடியாது. புதுப் புது மலர்களைப் பறித்து அழகு பார்த்து இருக்க முடியாது. படைவன்மை மிக்கவனாக வளர்ந்திருக்க முடியாது” என்று கூறினான். “அதனால் உன்னை மிகவும் மதிக்கிறேன். துன்பத்தைத் துடைப்பதற்கு எழுகின்ற போராட்டம் தான் வாழ்க்கையின் உயிர்த் துடிப்பு” என்றான். அவள் நாள் ஒற்றித் தேய்ந்த விரலைப் பார்த்தான்; சித்திரம் எழுதும் கோல் போல் அது தேய்ந்து கிடந்தது. “உங்களை நினைத்து ஒவியம் எழுதிக் கொண்டிருந்தேன்” என்றாள். அதில் சிறப்பான சித்திரமாக யானையைச் சீவகன் அடக்கி அவளைக் காத்தது இருந்தது. அதை வீட்டு முகப்பில் பெரிதாக்கி மாட்டி வைத்திருந்தாள். இதுதான் நான் எழுதும் உங்கள் கதைக்கு முகப்பு அட்டை என்றாள். கற்பனை மிக்க அவ்வோவியம் ஒப்பனை மிக்கதாக இருந்தது; நூலுக்கே முகப்பு ஓவியம்தான் அழகு தருவது என்று பாராட்டினான். அவளிடம் விடை பெற்று அவளை அட்டில் களத்துக்கு அனுப்பிவிட்டுத் தத்தையின் கட்டில் அறைக்கு வந்தான். “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வலிமை கூட்டினாய். அந்த இன்ப இசையில்தான் திக்கு விசயம் செய்து பக்கத் துணைகளைச் சேர்த்தேன்” என்றான். “இனிமேல்தான் உம் கடமை இருக்கிறது. கட்டியங் காரனை ஒழித்து வாகை சூட வேண்டும்” என்றாள். அவன் சுற்றுப் பயணத்தில் சுக அனுபவங்களைப் பேசாமல் ஏனையவற்றை மட்டும் எடுத்துக் கூறினான். மற்றும் நெருக்கமானவரிடம் ஒன்று இரண்டு உரையாடி அவர்களை மகிழ்வித்தான். இவனை எடுத்து வளர்த்த செவிலியர் அவர்கள் குடும்ப நலனைக் கேட்டு அறிந்தான். அவன் தோழர்களோடு சின்ன வயதில் சுற்றி விளையாடிய ஆலமரத்தைச் சென்று பார்த்து விட்டு வந்தான்; படித்த பள்ளியிடம் பாசம் காட்டுவதுபோல அது இருந்தது. அதன்பின் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் தோழருடன் பயணத்தைத் தொடர்ந்தான். மாமன் கோவிந்தனைக் காண்பதற்கு விதேய நாட்டுக்குச் சென்றான். அங்குச் செல்வதற்கு மற்றும் ஒரு காரணம் இருந்தது. தன் மாமன் கோவிந்தன் தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டி அவனிடம் ஆட்சி ஒப்புவிக்கப் போவதாகவும் செய்தி வந்தது. மாமன் உறவு தனித் தன்மை வாய்ந்தது தான். அந்த உறவை வளர்க்க ஆசைக்கு ஒரு மகளும் பெற்றிருந்தான். இந்த ஆசை என்பது யாரைக் குறிக்கும்? விளக்கம் இதுவரை யாரும் கூறவில்லை; தான் ஆசைப் படுவதற்கு ஒரு மகள் மாமன் பெற்றிருந்தான் என்று அவன் கணக்குப் போட்டான். விதேய நாட்டில் முதல் விழாவாகக் கோவிந்தன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டினான். அவ்விழாவில் பட்டத்து மன்னர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். மட்டற்ற மகிழ்ச்சியில் நாடு திளைத்துக் கொண்டிருந்தது. அவ்விழாவிற்கு நேரில் வர இயலாதவர்கள் வாழ்த்துச் செய்திகள் அனுப்பி இருந்தார்கள். அவற்றுள் முதற் செய்தியாகக் கட்டியங்காரன் அனுப்பிய ஒலை வாசிக்கப்பட்டது. அதை கோவிந்தன் மிகப் பெருமையாகக் கொண்டான்; சீவகன் ‘அதைப் படிக்கக்கூடாது’ என்று மறுப்புத் தெரிவித்தான். “இது என்னுடைய விழா; உன் மறுப்பை ஏற்க முடியாது; பொறுப்பாக நடந்து கொள்” என்றான். அவன் தன்னை அவமதித்ததாக நினைத்தான்; அந்த விழாவில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அந்தக் கடிதம் படிக்கப்பட்டது; இரைச்சலில் முழுச் செய்தி அறிய முடியவில்லை. சில வரிகள் மட்டும் தெளிவாகக் கேட்டனர். “சச்சந்தன் சாவுக்கு நான் தான் காரணம் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்; அது உண்மையல்ல அரச யானை மதம் கொண்டு கட்டு மீறியது; அதைக் கட்டி அடக்க ஆள் இல்லை; அவசரப்பட்டுச் சச்சந்தன் அதன் போக்கினை மாற்ற அதனோடு முரண் கொண்டான்; அது தன் தலைவன் ஆயிற்றே; தன் வாழ்வுக்கு அவன்தான் காரணம் என்பதையும் மறந்து நன்றி கொன்றது. அதை நான் எப்படிச் சொல்வேன்? மரணம் சம்பவித்தது. ஆட்சிக்கு ஆள் தேடினேன்; அரசி காற்றில் விடும் பட்டம் ஆயினாள்; மயிலுர்தியில் எங்கோ சென்று விட்டதாகக் கூறினார்கள்.” “அவர்களுக்கு ஒரு மகன் அல்லது மகள் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் ஆட்சியை ஒப்புவிக்கக் காத்திருக்கிறேன். அவர்கள் அடிச்சுவடே தெரியவில்லை.” “விசயமா தேவி அங்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கத்தை இயம்புக; பாவம் அவர் பெற்ற குழந்தை என்ன ஆயிற்றோ! தனியாகத்தான் வந்திருக்கிறார்கள் என்று ஒற்றர் வந்து உரைத்தனர். அவர்களுக்கு என் அனுதாபச் செய்தியைச் செப்புக.” “உம் மகனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. இனி நாம் நல்லிணக்கத்தோடு அரசியல் உறவு கொள்வோம்; திறைப்பொருள் தந்து என் இறை யாண்மை ஏற்றுக் கொள்” என்று எழுதியிருந்தது. “அவ்வாறே செய்வோம்” என்று அவை அறியக் கூறினான்; ‘கப்பம் கட்டுவதே செப்பம் உடையது’ என்று வந்த தூதுவரிடம் சொல்லி அனுப்பினான். சீவகன் அக்கூற்றை ஏற்பதாக இல்லை; அவ்வளவும் பொய் என்று தனியே பேசி இருவரும் வாதிட்டுக் கொண்டனர். “நீ வயதில் சிறியவன், கேட்பார் பேச்சுக் கேட்டு நீ தவறாக எதையும் நினைக்கிறாய்; ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது? கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்; பழமையைப் பற்றி நாம் ஏன் ஆராயவேண்டும்; அவனிடம் உறவு கொள்வதுதான் நமக்கு ஆதாயம்; அதுதான் ஒப்புக்கொள்ளும் இந்தச் சமுதாயம். பகைகொண்டு உன் தந்தை அழிந்ததைப் போல் எங்களையும் அழியச் சொல்கிறாயா? நாம் அவனை எதிர்க்க முடியுமா! அவன் பெருநிலம் ஆளும் வேந்தன்; யான் சிற்றரசர்களில் ஒருவன்; எதிரியின் வலிமை நம் வலிமை இவற்றைச் சீர்தூக்கித்தான் செயல் பட வேண்டும். இன்று இந்த நிலையில் அவனோடு நல்லுறவு கொள்வது தான் நயக்கத் தக்கது” என்று கூறினான். சீவகன் ஆத்திரப்படவில்லை; கருத்து வேறு பாட்டுக்கு மதிப்புத் தந்தான். பொறுத்திருந்து பார்ப்பது தக்கது என்று அடங்கினான்; அன்னை விசயமாதேவியின் அறிவுரைக்குக் காத்திருந்தான். அரச அவை நீங்கி அரண்மனை வந்து சேர்ந்தான். அவன் தாயை விட அவன் வருகைக்கு, ‘அவன் எதிர்காலம்’ காத்திருந்தது. தன் அண்ணனின் முடிசூட்டு விழா நடந்ததும், தனக்கு மாலை சூட்டும் விழா நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மாமன் மகள் இலக்கணை. அவளைப் பார்த்ததும் அவனுக்குப் புது ஆசை கிளம்பியது. அது அவனுக்கு உரிய தனி இயல்பு; அழகி என்றால் அவன் ஆராதனை செய்து பழகியவன்; விழாவிற்கு அவளும் வந்திருந்தாள்; அவள் கோலம் மணப் பெண்ணை நினைவூட்டியது. “என்னப்பா பார்க்கிறாய்!” என்றாள் விசயை. “மாமன் மகள்; அதனால்தான்” என்றான். “என்ன பார்க்கிறாய்?” என்று மறுபடியும் கேட்டாள். “நெடுமரமாக வளர்ந்திருக்கிறாளே அதனால்தான் பார்க்கிறேன்” என்றான். “என்னைப் பனைமரம் என்கிறார். அத்தான்” என்று குழைந்தாள் கோவிந்தன் மகள் இலக்கணை. “படிக்கத் தெரியுமா?” என்று கேட்டான். “ஏன் கேட்கிறாய்?” “நெடுமரமாக நிற்கிறாளே அதனால்தான்” என்றான். “நீட்டு ஒலை வாசிக்கா விட்டாலும் வீட்டு வேலை ஒழுங்காகச் செய்வாள்” என்றாள். “அவள் உனக்கு ஒர் இலக்கியமாக இல்லா விட்டாலும் வாழவேண்டிய வழிகள் அறிவிக்கும் இலக்கணமாக இருப்பாள்” என்றாள். இலக்கணை என்பதன் பொருள் விளங்கியது. “இலக்கணத்தையே இலக்கியமாக்க முடியும் சுவை கூடினால்” என்று கணக்குப் போட்டான்; அவளை அடைவதைப் புது இலக்காகக் கொண்டான். அதற்குள் மாமன் கோவிந்தன் அங்கு வந்தான். “மருமகனுக்கு என்மேல் கோபம்” என்று சொல்லிக் கொண்டே வந்தான். “நீர் இவ்வளவு கோழையாக நடந்து கொள்வீர் என்று எதிர்பார்க்கவில்லை” “ஏழைகளிடம் கோழமை அமைவது இயற்கை; அதை மாற்ற முடியாது” என்றான் கோவிந்தன். “நீ உன் வீரத்தைக் காட்டு; இங்கே இலக்கணையை வேட்டு இங்குக் குழைந்து கொண்டிருந்தால் பயன் இல்லை” என்றான் மாமன். அவனுக்கு மாமன் மீதும் வெறுப்புத் தோன்றியது; இதுவரை யாரும் தன்னை எதிர்த்துக் கூறியது இல்லை. தருமன் போர்க்களத்தில் அருச்சுனனைக் கடிந்து கொண்டான், “நீ கைகட்டிக் கொண்டிருந்தால் வெற்றி தானாக உன் காலடியில் விழும் என்று எதிர்பார்க்கிறாயா? உனக்குக் காண்டீபம் எதற்கு” என்று அவசரப்பட்டுக் கேட்டு விட்டான். தன்னை இகழ்ந்தாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான்; தன் வில்லை இகழ்ந்தது அவனால் பொறுக்க இயலவில்லை. உடனே வில்லின் அம்பு குறி வைக்கத் தருமன் மீது பாய்ந்தான். கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். இது பாரதக் கதை. அதே வேகம் சீவகனுக்கு வந்துவிட்டது. “இப்பொழுது சொல் அந்தக் கட்டியங்காரன் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்” என்று முழக்கம் செய்தான். “அந்த வீரத்தைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்; அவசரப்படுவதில் பயனில்லை.” “என் மகளை உனக்கு மணம் முடிக்க விரும்பவில்லை;” என்றான். ஆறியவன் சீறும் நிலையில் நின்றான். அவள் நினைவுகள் பழமைக்குச் சென்றன. சின்ன வயதில் யாராவது நீ யாரைக் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்று அவளைக் கேட்டால் ‘மாமன் மகனை’ என்று மனப்பாடம் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்று பொம்மை வைத்து விளையாடிய நாட்களில் அந்தப் பொய்மை வடிவங்களில் ஒன்றில் தன்னை வைத்துக் கண்டாள். மற்றொன்று சீவகனை வரித்தாள். அவள் தாவணிக் கனவுகளில் அவனைத் தவிர வேறு யாரும் இடம் பெற்றதில்லை. ஆற்றங்கரையில் மணலில் வீடுகட்டி விளையாடிய நாட்களில் இரண்டு வடிவங்களை மணலில் செய்து வைத்தாள். ஆற்றின் அலை ஒரு வடிவைக் கலைத்து விட்டது. அங்கேயே உட்கார்ந்து கொண்டு அழுது ஒலமிட்டாள். “ஏன் அழுகிறாய்?” “மாமன் அவனைத் தண்ணிர் அடித்துக் கொண்டு போய் விட்டது” என்று கண்ணிர் விட்டிருக்கிறாள். தன் தோழிப்பெண்களுடன் கூடல் இழைத்தல் என்ற விளையாட்டை விளையாடிய போது எல்லாம் “அவனை அடைய முடியுமா” என்று கூடல் இழைத்து விளையாடி இருந்தாள். தான் கேட்ட கதைகளில் எல்லாம் அது வீரப் போர் என்றால் அதில் அவனையே வைத்துக் காணுவாள்; அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று நம்பிக்கை கொள்வாள்; அவன் வெற்றி பெற வேண்டும் என்று கதை முடியும் வரை காது கொடுத்துக் கேட்பாள். தத்தையைச் சீவகன் யாழில் வென்ற செய்தி கேட்ட போது அதே போலத் தன்னை வெல்லவும் தன் மாமன் மகன் வருவான் என்று கனவு கண்டவள்; அப்பொழுது அவன்தான் சீவகன் என்பது அவளுக்குத் தெரியாது. மாமி வந்ததும் சிவகாமி சரிதத்தை அவள் வாயில் கேட்டிருக்கிறாள். அந்தக் கதையில் வரும் சிதம்பரம் அவன் தான் என்று எண்ணிக் கற்பனையில் ஆழ்வாள். சீவகனைப் பற்றி விசயமாதேவி பேசும் போது எல்லாம் அவள் பதுமையாகி இருக்கிறாள். அவனை அடைய வேண்டும் என்பதில் அவள் கொண்ட ஆசையைக் கொள்ளை ஆசை என்றுதான் கூறவேண்டி இருந்தது. இலக்கணைக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆற்றங் கரையில் நீர் அலை தான் கட்டி வைத்த கோட்டையைக் கலைத்து இழுத்துச் சென்றது மறுபடியும் நினைவுக்கு வந்தது, அந்த நீர் அலை இன்று தந்தையின் சொல் அலை. விசயை குறுக்கிடவில்லை; அது பெற்றவன் உரிமை என்று மதிப்புத் தந்தாள். அவள் தாய் கொதித்தாள்; பானையில் இருந்த தட்டை மாமன் அகற்றினான்; கொதி அடங்கியது. “என் தங்கையை உறவு கருதி உன் தந்தைக்குக் கொடுத்தோம்; அதே தவறு மறுபடியும் செய்ய விரும்பவில்லை. என் மகள் வீரன் ஒருவனுக்கே உரியவள்; திரிபன்றி ஒன்று இலக்காக வைப்பேன்; நீ விசயனாக விளங்க வேண்டும்” சீவகனுக்கு அது பெருமையாக இருந்தது. “தத்தையை எப்படி மணந்தாய்?” என்றான் மாமன். “வீணையில் வென்று” “குணமாலையை?” “யானையை அடக்கி” “இவற்றைத்தான் நாட்டிலே இப்பொழுது கதையாகப் பேசுகிறார்கள்; நீ பந்தாடியவளையும், தோட்டத்தில் சந்தித்தவளையும், காதல் கொண்டவளையும் மணந்தது சரித்திரம் அல்ல; அவை உன் தனிப்பட்ட சாதனை, பெருமை சேர்ப்பவை அல்ல” என்றான். அவளைக் குதிரைமீது வைத்து இழுத்துச் சென்று சமியுக்தையாக ஆக்க நினைத்தான். இது அவன் முயற்சியைக் கைவிடும்படி செய்தது. மாபெரும் கவிஞனைப் பார்த்து நீ ஒரு வீரகாவியம் பாடு என்றால் அவன் எப்படி மகிழ்வு கொள்வானோ அத்தகைய மகிழ்ச்சி கொண்டான். “இந்தச் சுயம்வரத்தை உன் பிறந்த மண்ணில் ஏற்பாடு செய்வேன்; கட்டியங்காரனுக்கு ஒலை எழுதி அவனைக் கொண்டே தக்க ஏற்பாடுகள் செய்வேன்; அவன் தலைமையில்தான் இந்த விழா நடக்கும்” என்றான். சிந்தித்துப் பார்த்தான்; அந்தச் சிறிய நரியை அங்கே சந்திக்கமுடியும் என்ற ஆவேசம் அவனை ஆட்கொண்டது. அவளை மாலையிட்டு மணப்பதைவிட அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இரணியனைக் கொல்லும் நரசிம்மமாக மாறலாம் என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான். கோவிந்தன் சுயம்வரத்துக்கு மன்னர்களுக்கு ஒலை அனுப்பி வைத்தான்; கட்டியங்காரனுக்கும் அனுப்பி வைத்தான். கட்டியங்காரனுக்குத் தனக்கு ஒரு நிறைவு விழா நடத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோவிந்தன் தன்னை மதிக்கிறான் என்றால் அதனால் நாட்டின் உள்பகை, எதிர்ப்புகள் மறையும் என்பதால் அவன் மகிழ்ச்சி மிகுந்தது. வசிட்டர் வாயால் மகரிஷி பட்டம் பெறக் காத்திருக்கும் விசுவாமித்திரன் ஆனான். மன்னர் திரண்டனர்; சுழலும் பன்றியின் உருவினை அவர்கள் வில்லின் அம்பு வீழ்த்தத் தவறிவிட்டது. தோல்வியை அவர்கள் மடியில் கட்டிக் கொண்டனர். ஏற்கனவே தத்தையின் போட்டிக்கு வந்து திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்டவர்கள் மறுபடியும் ஒரு தோல்வி, கட்டியங்காரன் மீது அவர்கள் வெறுப்புக் காட்டினர். அவன் வீர உரைகளுக்குச் செவி சாய்க்க அவர்கள் காத்திருக்கவில்லை. யானையின் மீது சீவகன் வந்தான். அது அரச யானை அசுவனிவேகமாக இருந்தது. அது இவனிடம் விசுவாசம் காட்டியதைக் கட்டியங்காரனால் நம்பவே முடியவில்லை; அதனை அடக்கி அதன்மீது இவன் வந்தது அதிர்ச்சியாக இருந்தது; என்றாலும் சினத்தைக் காட்ட வில்லை. கந்துக்கடன் மகன் சீவகன் அங்கு எப்படி வந்தான் என்று வியந்தான். கூட இருந்தே மதனன் குழிபறித்து விட்டான் என்பதை உணர்ந்தான். தத்தையை மணந்தான்; குணமாலையை வனைந்தான்; இன்னும் எத்தனை பேரை இவன் மணப்பது? அநங்கமாலை இன்னும் படியவில்லை; கீழ்ப்படிய மறுத்துவிட்டாள்; அது வேறு இவனுக்குத் தாக்கம். செத்தவன் எப்படி உயிர் பிழைத்தான்? இவன் இத்தனை நாள் எங்கு இருந்தான்? எப்படி இங்கு வந்தான்? எல்லாம் புதிராக இருந்தன. மதனன் பக்கத்தில இல்லை; பிறகு விசாரிக்கலாம் என்று ஒதுக்கிவைத்தான். “வணிகன் மகன் வனிதையை மணக்கலாமா” என்று ஒரு வினா எழுப்பினர். “சாதிகள் இல்லை; நீதிகள்தான் நிலவும்” என்றான் கோவிந்தன். திரிபன்றி வீழ்த்தப்பட்டது; கட்டியங்காரனின் ஆட்கள் சீவகன் மீது பாய்ந்தனர். அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ‘பொதுமக்கள்’ அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்கள் கையில் தக்க படைக் கருவிகள் வைத்திருந்தனர். “யார் இவர்கள்?” ஒன்றுமே புரியவில்லை கட்டியங்காரனுக்கு. மக்கள் தனக்கு எதிரியாக மாறுவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை; புரட்சி ஓங்கியது. விசயமாதேவி அரங்கில் தோன்றினாள்; மக்களுக்கு அது வியப்பைத் தந்தது. சீவகன்தான் தன் மகன் என்பதை அறிவித்தாள். கட்டியங்காரன் தன் முன் சச்சந்தன் இருப்பதை அறிந்தான். தன் சரித்திரத்தை முடிக்க அவன் கையில் எழுத்தாணி இருப்பதைக் கண்டான். செய்ந்நன்றி மறந்த தனக்கு உய்தி இல்லை என்பதை அறிந்தான். கொடுங்கோலன் வீழ்ந்தான் என்ற ஆரவாரம் எங்கும் எழுந்தது. அவன் வஞ்சகம் நெஞ்சில் மறைந்திருந்தது; அதைத் தேடிச் சீவகனில் கை வேல் பாய்ந்து அவனைத் துளைத்தது. மண்ணுக்கு வேந்தனாகச் சீவகன் முடிசூட்டப் பெற்றான். வாசகர்களுக்கு ஏன் கோவிந்தன் அவ்வாறு நடந்து கொண்டான் என்பது எப்படி விளங்க வில்லையோ அதே நிலைதான் சீவகன் அடைந்தான். அந்தக் கூட்டத்தில் கலுழவேகனின் ஆட்களும், உலோக பாலனின் ஆட்களும் எப்படி ஏன் திரண்டு இருந்தனர் என்பது விளங்காமலேயே இருந்தது. எப்படி அவர்கள் திடீர் என்று படை வீரர்களாக மாறினர் என்பதும் விளங்காமல் இருந்தது. கட்டியங்காரன் எழுதிய கடிதத்தைக் கோவிந்தன் நம்பி விட்டானா! அல்லது அவன் பேசியது வெறும் நாடக உரையா என்பதும் விளங்காமல் இருந்தது. “ஏன் தன்னிடம் அவன் மனத்தில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி இருக்கக்கூடாது?” திட்டமிட்டுக் கட்டியங்காரனை வலையில் சிக்க வைத்துக் கொலை செய்தது போலத் தோன்றியது. இருந்தாலும் மாமன் செயல்கள் அத்தனையும் நன்மையில் முடிந்தன என்பதால் அவன் மீது கொண்ட சினம் தணிந்தவனாய்க் காணப்பட்டான். விசயமாதேவியை அணுகிப் பேசிய போதே விடுகதைகளுக்கு விடைகள் கிடைத்தன. “முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று முன் கூறி இருந்தேன்; இதைத்தான் நான் செய்தேன்; என் தமையனுக்கும் நான்தான் இந்தத் திட்டத்தை வகுத்துத் தந்தேன்; கட்டியங்காரன் அவன் அனுப்பிய ஒலை அது சூழ்ச்சி என்பது எங்களுக்குத் தெரியும்; பச்சைப் பிள்ளைகள் அல்ல நம்பி விடுவதற்கு.” “வஞ்சனையைச் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் என்று இந்த நாடகத்தை நடித்தோம்; கட்டியங் காரனும் மேடைக்குத் தக்க படையோடுதான் வந்திருந்தான்; என்னைச் சிறைப்படுத்தி இருப்பான்; திடீர் என்று நீ வந்து களத்தில் இறங்குவாய் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.” “நாங்கள் சுயம்வரத்தை விதேய நாட்டில் உன் மாமன் ஊரில் நடத்தவில்லை; தெரிந்துதான் செய்தோம்; நாங்கள் அனுப்பிய ஒலைகள் திரிபன்றி எறிவதற்கு அல்ல; அந்த நன்றி கொன்ற மனிதப்பன்றியை அழிக்கத்தான்; காலம், இடம், தக்கதுணை மூன்றும் இருந்தால்தான் வெல்ல முடியும் என்று சொல்லி இருந்தேன். காலத்தையும் இடத்தையும் நாங்கள் வகுத்துக் கொண்டோம். நாம் மகள் கொண்ட அரசர் மூவருக்கும் படைகள் அனுப்பி வைக்க ஒலைகள் அனுப்பி வைத்தோம். அவர்கள் உருக்கரந்து மண்டபத்தில் அவனைச்சுற்றி இடம்பிடித்து இருந்தனர்.” “உன்னிடம் ஏன் இவற்றை அறிவிக்கவில்லை என்று கேட்கலாம்; உன்னை நம்பாமல் அல்ல; உன் தனி ஒருவன் ஆற்றலுக்கும் வீரத்திற்கும் சுமை தரக்கூடாது என்பதால்தான். தனி ஒருவனாக நின்று பகையை முடிக்க முடியும் என்று நீ வீரம் பேசுவாய்; பாரதத்தில் கன்னன் மாவீரன் தான்; எனினும் அவன் தோல்வி அடைந்தது ஏன்? தக்க துணையை அமைத்துக் கொள்ளாததனால், வீடு மரை இகழந்தான்; சான்றோரை அவமதித்தான்; தனி ஒருவனாக நின்றான்; உடன் இருந்த சல்லியனையும் இகழ்ந்தான்”. “வாழ்க்கையில் நாம் தனி நின்று எதையும் சாதித்து விட முடியும் என்று நினைத்தால் தோல்விதான் நேரும். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று கூறுவதை மறக்க முடியாது. நாட்டு மக்களையும் தூண்டி விட்டால் தான் உட்பகை எழாமல் தடுக்க முடியும்; அதற்காகத்தான் நான் மேடை ஏறினேன். வில்லம்பு மட்டும் வெற்றி தராது; சொல்லம்புக்கும் அத்தகைய ஆற்றல் உண்டு; நாம் நினைப்பதைத் தெளிவாக ஒழுங்குப்படுத்திப் பிறர் ஏற்கும் படிச் சொன்னால் இந்த ஞாலமே நம் பணியைக் கேட்கும்; நாநலம் என்பது நயக்கத்தக்கது. அதனை நான் மேற்கொண்டேன்”. “பெண் களத்தில் இறங்காவிட்டாலும் அவள் கூரிய அறிவு செயலாற்றும்; கட்டியங்காரன் எனக்குப் பகைவன்; அவனை ஒழிப்பதில் எனக்கும் பங்கு உண்டு; அதைச் செய்து முடித்தேன்” என்றாள். ‘கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து; மற்றதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து’ என்ற குறள்தான் அவன் நினைவுக்கு வந்தது. தன் அன்னையின் உரை கேட்டு அவன் வியந்து போனான்; இது தன் வெற்றி என்ற ஆணவம் அவனை விட்டு மறைந்தது; போர் என்பதே கூட்டு முயற்சி; அதில் அனைவர்க்கும் பங்கு உண்டு என்று உணர்ந்தவனாய் வீரர்களுக்கு விருதுகள் தந்து பாராட்டினான். களத்தில் வடுப்பட்டவர்களுக்கு வாழ்வு அளிக்கத்தக்க உதவிகள் செய்தான். 11. பூமகள் இலம்பகம் களத்தில் வீரர்களுக்குத் தலைமை தாங்கிய விசயனும், உலோகபாலனும் சீவகன் அரசு ஏற்கும் விழாவிலும் பங்கு ஏற்றனர். கலுழவேகன் நேரில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அவன் பிரதிநிதிகளை அனுப்பி விழாவைச் சிறப்பித்தான். நாடு சுதந்திரம் அடைந்தது. “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாடி ஆரவாரித்தனர். சுதந்திரம் பெற்று விட்டால் மட்டும் போதாது; இந்த நாட்டைச் செம்மையுறக் காக்கும் பொறுப்பினை உணர்ந்தான். தேர்தல்கள் என்று வைத்து மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்து அவர்கள் நாட்டுக்கு ஆவன செய்வது தக்கது என்றாலும் அந்த முறைகள் அக்காலத்தில் இடம் பெறவில்லை என்பதால் இவனே தக்கவர்களை நியமித்து ஆட்சியைச் செம்மைப்படுத்தினான். நாடு நலமுற விளங்க வேண்டும் என்றால் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் தேவை என்பதை உணர்ந்து இவற்றைப் பெறத்தக்க வழிகளைத் தேடினான். உட்பகை வெளிப்பகை நேராதபடி தக்க காவலரை அமைத்துச் சட்டத்தை ஒழுங்கு படுத்தினான்; நீதியும் நேர்மையும் மக்கள் நல்வாழ்வும் அவன் பெரிதும் போற்றினான். தெய்வ நண்பனான சுதஞ்சணன் வந்து வாழ்த்துக் கூறினான். தன் மண்மீது கால் வைப்பதில் அவன் தறுகண்மை கொண்டான்; சித்திர மண்டபத்தில் கொலு வீற்றிருந்து ஆட்சி செய்தான் என்றாலும் அவனை ஆளாக்கி வீரன் ஆக்கியது ஆற்றங்கரையில் இருந்த ஆலமரமே, அங்கே அவ்வப்பொழுது சென்று பழைய நினைவுகளில் பொழுது போக்குவது உண்டு; அது நூறு வருஷங்களாக அங்கே இருந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டார்கள்; அங்கே மற்றவர்கள் தங்கி நிழல் பெற வேண்டிய வசதிகள் செய்து தந்தான். அரசு என்பது ஈட்டலும் ஈட்டியவற்றை வகுத்தலும் என்பது அறிந்து அவன் நாட்டுப் பொருளை அறவழிகளில் செலவிட வழி வகைகள் செய்தான். நாட்டில் தொழில் வளம் பெருக இளைஞர்களுக்கு மூலதனம் வழங்கினான். தன் நெருங்கிய தோழர்கள், உறவினர்கள் நண்பர்கள் என்பதற்காக அவன் பதவிகள் வழங்கவில்லை. அதற்காகவே அவர்களையும் ஒதுக்கவில்லை; தக்கவர்களுக்கும், அறிவு மிக்கவர்களுக்கும் செயலாற்றல் படைத்த செம்மல்களுக்கும் உயர் பதவிகள் தந்தான். அவர்களும் அதற்குத் தக்கபடி பொறுப்புடன் நடந்து கொண்டனர். தன் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்குக் காரண மானவர்களை மதித்துச் சிலைகள் எழுப்புவதற்கு பதிலாக அற நிறுவனங்கள் என்ற பெயரால் அறச் செயல்களுக்கு ஆக்கம் தந்தான். சுதஞ்சணன், தன் தாய்க்கு உதவிய காடு உறை தெய்வம், அச்சணந்தி ஆசிரியர், தன் தாய் விசயமா தேவி, கந்துக்கடன், சுநந்தை, சீதத்தன் இவர்கள் பெயரில் மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் கட்டி மக்கள் மன நோய், உடல்நோய் நீக்க அமைத்துத் தந்தான். விசயமாதேவி தவப்பள்ளிகளைப் பெருக்கி அவற்றை ஆறுதல் இல்லங்கள் என்று பெயரிட்டுக் காணார், கேளார், கால் முடப்பட்டோர், முதியோர் இவர்கள் தங்கும் இட மாக மாற்றினாள். கன்னிமாடங்களில் தனிமையையே துணையாகக் கொண்டு வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிய இளம் பிஞ்சு களுக்குத் தக்க வாய்ப்பளித்து மணம் செய்வித்தும், பொருள் உதவி செய்தும் நல்ல குடி மக்களாக ஆக்கினான். தவசிகள் என்றும் யோகிகள் என்றும் சொல்லிக் கொண்டு தியானத் தில் மூழ்கியவர்களை இந்த உலகத்தில் அவர்கள் செய்யத் தக்க பணிகள் உள எனக் காட்டித் தொண்டு நிறுவனங் களில் பங்கு கொள்ளச் செய்து அவர்கல் வாழ்க்கையில் சுறுசுறுப்பை ஏற்படுத்தினான். அவன் இலக்கணையை மணந்தான் என்பதையும், எண்மரோடு வாழ்ந்தான் என்பதையும், ஒவ்வொரு வாழையும் ஒரு குலை ஈன்றது என்பதையும் சொல்வது கதைக்குத் துணை செய்யாது என்பதால் அவற்றை விவரிக்கவில்லை. மூத்த மகனுக்குச் சச்சந்தன் என்று பெயரிட்டு அவனும் மளமள என்று வளர்ந்து பெரியவன் ஆனான் என்பது கதைக்குத் தேவையான செய்தியாகிறது. ஏனெனில் அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டி நந்தட்டனிடம் ஆட்சியை ஒப்புவித்து சீவகன் விடுதலை பெற்றான் என்பதைச் சொல்லியாக வேண்டியுள்ளது. ஒரு செய்தி விடப்பட்டுவிட்டது. அநங்கமாலை என்ற பழைய சிநேகிதி அவனை வந்து பார்த்தாள். தான் அநங்கமாலையின் தோழி என்று தெரிவித்தாள் அவன் சிரித்தான். “பழகியவரை மறக்கும் பண்பற்றவன் அல்லன்நான்” என்று சொல்லி அவளைத் தான் மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தினான். அவன் அவளுக்கு ஒரு கலையரங்கு கட்டித் தந்து நாட்டியக் கலை கற்றுத்தரும் ஆசிரியை ஆக்கி உயர்வுபடுத்தினான். அது அனைவரும் அறிந்து பாராட்டும் செய்தியாக அமைந்தது. இராசமாபுரத்தில் அவன் தோற்றுவித்த கலைப்பள்ளி இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள். 12. முத்தி இலம்பகம் எதிர்பாராத நிலையில் தவம் செய்யச் சென்ற அச்சணந்தி ஆசிரியர் அங்கு வந்து சேர்ந்தார். இவன் அடைந்த வெற்றிகள் கேட்டு வாழ்த்துத் தெரிவித்தார். அருச்சுனன் களத்தில் நின்று வில்லைக் கீழே போட்டு விட்டு அயர்ந்த நிலையில் கண்ணனை விழித்துப் பார்த்தான்; அந்த நிலையில்தான் சீவகன் இருந்தான். “அறிதோறும் அறியாமை இதில் உள்ள இன்பம் குறைந்துவிட்டது. எல்லாம் பழமையாகி விட்டது” என்றான். “முதுமையின் அறிகுறி இது; முதிர்ந்து அறிவு பெறுகிறாய் என்பதற்கு இது அடையாளம்” என்றார். “எல்லாம் யோசித்துப்பார்க்கையில் உண்பதும் உறங்குவதாக முடியுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.” “வாழ்க்கைக்கு நாம் தான் பொருள் காண வேண்டும்; புதிய கடமைகளில் இறங்க வேண்டும்; உன் பார்வையும் மாற வேண்டும்” என்றார். “எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை” என்று அவரிடம் கூறினான். “காரனம் ?” “அந்த நிகழ்ச்சியைப் பிறகு கூறுகிறேன்; இந்த ஆட்சியை என்மகன் மூத்தவன் சச்சந்தனுக்குத் தந்து விட்டேன்” என்றான். “அந்த நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிவிட்டது; எண்ணிப்பார்க்கிறேன்.” “இங்குத் துறவிகள் வருகிறார்கள்; வாழ்க்கையின் தத்துவங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். திருத்தக்கதேவர் எழுதிய நூல் ஒன்றனையும் படித்தேன், அவர் இளமை, செல்வம், யாக்கை நிலையாமையை அதில் வற்புறுத்துகிறார்; அழகிய மனைவியரை அக்காவிய நாயகன் பிரிந்து விடுகிறான்; அவர்கள் அதற்கு வருந்தி அழும் அழுகை, நெஞ்சைப் பிளக்கிறது; அவனை நம்பித்தானே அவர்கள் அவனை மணந்து கொண்டார்கள். அவர்களைக் கைவிட்டுத் துறவு கொள்வது நியாயமா! எனக்கு ஏதோ கொடுமை இழைப்பதுபோல் தோன்றுகிறது. அந்த நூலைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை” என்றான். “அவர் வாசகங்கள் உன்னால் அறிய முடியாமல் இருக்கலாம்; நோக்கத்தை நீ அறிவது நலம்.” “அறம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிலையாமைகளை நம் பெரியோர்கள் வற்புறுத்துகிறார்கள்.” “நிலையாமையை உணர்வதால் நாம் இருக்கும் வாழ் நாளைத் தக்கபடி பயன்படுத்துவோம். அதற்காகத்தான் இவ்வறங்களைக் கூறுகிறார்கள்.” “இந்தத் தத்துவங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் அவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.” “வாழ்க்கை நிலைத்த ஒன்று. பொய்யாய்ப் பழங்கதை யாய்ப் போனது என்பது வறட்டு வேதாந்தம்.” “வாழ்க்கை ஒரு நீரோட்டம் போன்றது. அதனை யாரும் தடை செய்ய முடியாது.” “குழந்தை வாலிபன் ஆகிறான்; வாலிபன் முதியவன் ஆகிறான். இவை பருவ மாறுதல்கள்; இவை ரசாயன மாறு தல்கள், மரணம் என்பது இயற்கை நியதி. அதுதான் உலகத்தை இளமையாக்கி வைத்துள்ளது. நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பேசுவது அதுதான் இந்த உலகத்தின் பெருமையே; தனிப்பட்டவர் மறையலாம். ஆனால் மனிதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும், இயற்கையின் படைப்பு அழியாத ஒன்று.” “செல்வம் என்பது கல்வி, கேள்வி, பொருள் மட்டுமல்ல; மக்கள், மனைவி, குடும்பம் இவை அத்துணையும் செல்வமே. மனிதருக்குப் பயன்படுபவை அனைத்தும் செல்வம் ஆகும். இந்த இயற்கைப் படைப்பே மாபெரும் செல்வம் ஆகும். மனிதன் எவற்றைப் போற்றுகிறானோ அதுதான் செல்வம் எனப்படுகிறது” என்று விளக்கினார். அவன் மனத்தில் அரித்துக் கொண்டே இருந்த காட்சி இதுதான். அவன் தன் இன்னுயிர்த் துணைவியருடன் சோலைக்கு இனிது பொழுது போக்கச் சென்றிருந்தான். மந்தியின் ஊடலைத் தீர்க்க அதன் நந்தியாகிய ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்று பறித்துச் சுளைகளை எடுத்துத் தந்தது. அது தின்பதற்கு முன் அதனினும் உரிமை உடைய தோட்டத்துக்குக் காவலன் அதைத் துரத்தி விட்டு அவன் அதைத் தன் மனைவிக்குத் தந்தான். இந்தக் காட்சி அவனைச் சிந்திக்க வைத்தது. கட்டியங்காரன் கையில் இருந்து தான் பறித்துக் கொண்ட ஆட்சி நாளைக்கு யாருக்கோ என்று என்ணினான். வலியார் எளியோரை அடித்து நொறுக்குவதும், அவர் தம் உடைமையைச் சூறையாடுவதும் இயற்கையாகி விட்டது என்பதை உணர்ந்தான். இதனால் இரண்டு உண்மைகள் அவனுக்கு விளங்கின. பொருள் கை மாறும் என்பது; மற்றொன்று வலிமையே வெல்கிறது என்பது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் அவன் சிந்தனையைத் தூண்டின; அதனால்தான் அவனுக்கு வாழ்க்கையில் விரக்தியும் வெறுப்பும் ஏற்பட்டன. இதை அவரிடம் கேட்டு விளக்கம் கேட்டான். “பொருளுக்கு அழிவு இல்லை; உடைமையைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டியுள்ளது. எதுவும் தனது உடைமை என்ற பற்றுள்ளம் நீங்க வேண்டும்; எதையும் நாமே வைத்துக் கொள்ள வேண்டும் எனகிற பேராசை தவறானது ஆகும்.” “மற்றொன்று வலிமைதான் வெல்லும் என்ற நியதியை மாற்றி அனைவரும் வாழ வேண்டும் என்ற சிந்தனை தோன்ற வேண்டும். எளியோரை வலியோர் வாட்டுவது ஒழிய வேண்டும். அவரவர் உரிமையோடு வாழ வழி வேண்டும். இதுதான் இந்த நிகழ்ச்சி அறிவுறுத்துவது” என்று உணர்த்தினார். காதறுந்த ஊசியும் கடை வழியே வாராது காண் என்ற புலம்பலும், கடைசிவரை யாரோ என்ற கதறலும் அர்த்த மற்றவை என்பதை உணர்ந்தான். கொள்கைப் பிடிப்பு அவசியம் என்பதை உணர்ந்தான்; துறவு என்ற பெயரால் தப்பித்துக் கொள்ள நினைப்பது உலகத்தை ஏமாற்றுவது ஆகும். பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளச் சமயம் நெறிகள் கற்றுக் கொடுக்கின்றன என்பது தவறான கருத்தாகும். தன் பழைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்தான். தான் விட்டுச் செல்லும் வாழ்க்கையைத் தொடரும் தன் மதலையர் சுமைதாங்கிகள் ஆகின்றனர்; இளையதலை முறை பொறுப்புகளை ஏற்கக் காத்துக்கிடக்கின்றன. அவர்களை வாழ்த்தினான். தன் வாழ்வுக்கு உறுதுணையாக இருந்த தோழர்களின் நட்பினை மதித்தான்; நட்பு அதற்காகச் செய்யப்படுகின்ற தியாகங்கள் இவற்றைப் போற்றினான். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி இந்த உலகத்தை வாழ வைக்கும் உழவர்களையும், தொழிலாளர்களையும், போர்க்களத்தில் குருதி சிந்திப் போராடும் வீரர்களையும், நன்மைகள் நிலைக்க அறம் போதித்த ஆசான்களையும், அழகும் இனிமையும் சேர்க்கும் இசை ஆடற் கலைஞர்களையும், செந்தமிழ்க் கவிதைகளைப் புனைந்து இவ்வுலகத்தைச் சீர் பெறச் செய்யும் கவிஞர்களையும் மதித்தான். தன் இனிய மனைவியரைப் பற்றி நினைக்கும்போது அவர்கள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத்தந்த ஆசான்கள் என்று போற்றினான். “பெண்மை வாழ்க” என்று வாழ்த்தினான். ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கும் பெண் பின்னால் இருக்கிறாள். அவள் துணை என்பதைத் தன் தாய் விசயமாதேவியைக் கொண்டும், மனைவி காந்தருவதத்தையைக் கொண்டும் உணர்ந்தான். பருவ மாறுதல்களுக்கு ஏற்ப அவன் பார்வையும் மாறியது. காமனும் ரதியுமாக வாழ்ந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டான். தன் மனைவியர் இப்பொழுது சிறுவர்களின் அன்னையர்கள் என்று பார்க்கும்போது அவர்கள் தாய்மை கண்முன் நின்றது. அவர்கள் முன்னிலும் பெருமை உடையவர்கள் என்பதை உணர்ந்தான். அழகால் தன்னைக் கவர்ந்தவர்கள் தாய்மை என்ற தியாகத்தால் உயர்ந்திருப்பதை அறிந்தான். மெல்ல மெல்லப்பற்றுகள் நீங்கி அன்பும் அறனும் மிக்க இல்வாழ்க்கையின் முதிர்ச்சியாக அருள்விளக்கம் கண்டான். தான் மனித தர்மத்துக்குத் துணை நின்று உலகக் குடிமகனாகவும், அறிவும் ஒழுக்கமும் சிந்தனையும் மிக்க சான்றோனாகவும் திகழ்ந்தான். இறுதி மூச்சுவரை மானுடத்துக்கு உழைப்பதே தன் கடமையும் அறமும் ஆகும் எனக்கொண்டான். சாவைப்பற்றி அவனுக்குச் சிந்திக்கவே நேரம் இல்லாமல் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து காட்டினான். உலகம் போற்றும் உயர் அறிவாளன் என்ற புகழுக்கு உரியவன் ஆயினான். இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது^([1]). இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )^([2][3]) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Xato - Rocket000 - Be..anyone - Patricknoddy~commonswiki - HoboJones - Mecredis - Balajijagadesh - Fleshgrinder ------------------------------------------------------------------------ 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html Landmarks 1. Table of Contents 2. சீவக சிந்தாமணி (உரைநடை) 3. இம்மின்னூல் பற்றி 4. Cover