[] []       மின்னூல் வெளியீடு   www.freetamilebooks.com       மின் நூல் ஆசிரியர்  ஜோதிஜி திருப்பூர் அட்டைப்படம் (Design Making) http://avargal-unmaigal.blogspot.com/  அட்டைப்படம் புகைப்படம் உரிமை Henk Oochappan  https://www.facebook.com/oochappan (முறைப்படி அனுமதி பெற்றது) உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0   கிரியேட்டிவ் காமன்ஸ்.   எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.         ஒவ்வொரு வருடமும் நம் சூழ்நிலையும், நம் மனோநிலையும் மாறிக் கொண்டேயிருக்கின்றது. மொத்தத்தில் நாம் அனைவரும் இங்கே சூழ்நிலைக் கைதிகள் தான். நாம் மாறவே கூடாது என்று நினைத்தாலும் கூட மாற்றங்கள் நம்மைத் தள்ளிக் கொண்டே இருக்கின்றது. சென்ற வருடம் சந்தித்த நண்பர்கள் எப்படி இந்த வருடம் இப்படி மாறிப் போனார்? என்ற ஆச்சரிய கேள்விகள் உருவாவதும் இதனால் தான்? ஆனால் என் வாழ்க்கையில் என் காலத்திற்கும் பிறகும் என் குழந்தைகளின் தலைமுறை தொடர்ச்சியில் யாராவது ஒருவருக்கு முழுமையாக நன்றிக்கடன் பட்டு இருப்பார்கள் என்று என்னால் சுட்டிக் காட்டக்கூடிய என் இனிய நண்பர் இராஜராஜன் அவர்களுக்கு இந்த மின் நூலைச் சமர்ப்பிக்கின்றேன். https://www.facebook.com/rajasekaran.rr  []   நூலைப் பற்றி…. ஜோதி கணேசனின் எழுத்து நடை எளிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். (மற்றவர்களின்) அந்தரங்கம் கேட்பதற்கும்/படிப்பதற்கும் சுவாரசியமாகயிருக்கும், அதுவும் ஜோதிஜி எழுத்தில் இரட்டிப்பு சுவையாயிருக்கும். ஆரம்பமே, பாலுமகேந்திராவின் கதாநாயகி போலிருக்கும் நாகமணி அவர்களின் சுவரில்லாத சித்திரங்களின் கதை (நன்றி:K.பாக்கியராஜ்). அதில் நாகமணி, அவரது அம்மாவை கடலளவு நேசித்து பின்னர் மலையளவு வெறுத்தது (நன்றி: நா.முத்துகுமார்) முக்கிய கருவாயிருந்தாலும், இடையிடையே ஆசிரியர் கூற்றாக ஜோதிஜி சொல்லும் செய்திகள், அருமையான வாழ்வியல் உண்மைகள்.   உதாரணமாக, “இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்... திரைப்படம், பாடல்கள், ... ஆனால் இருவரும் பிரிவதற்கு எப்போதும் பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது” என்று இன்றைய உலகின் இயல்பை சொல்லுகிறார். ஆண்களுக்கான இவ்வுலகில் பெண்கள் தங்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் வென்றெடுத்தாலும், இன்னும் அவர்களின் நிலை போராட வேண்டியதாகவேயிருக்கிறது என்பதை நாகமணியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அடுத்ததாக, ஜோதிஜியின் டைரிக் குறிப்புகள் பகுதியில் அவரது தென்மாவட்ட பயணங்கள், பூர்வீகத்தின் மீதான காதல், மனைவி மற்றும் மகள்களிடம்  அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்  அனுபவங்கள் ஆகியவற்றை தற்கால அரசியல்  மற்றும்  சமூக சூழ்நிலைகளை ஒட்டி அதற்கான காரணிகளை அலசும் விதமாக மிகவும் நுட்பமாக எழுதியிருக்கிறார். “ஊர் காதல்” என்று அவர் வழக்கமான நினைவிடை தோய்தலை மட்டும் எழுதாமல் குளித்தலையைத் தாண்டும் போது ஆற்றுக்குள் வரிசையாக நிற்கும் லாரிகளை குறிப்பிட்டு, மணல் மாபியா நீரோடும் ஆற்றை, லாரியோடும் தடமாக மாற்றியதை பதிவு செய்கிறார். அன்பும் அக்கறையும் மிகுந்த தந்தையாக மகள்களிடம் அவர்களின் பள்ளி மற்றும் கல்வியை பற்றிய உரையாடல், ஆசிரியர்களிடம் குழந்தைகளின் கல்வி குறித்து பேசுவது போன்றவற்றை எழுதும் போது இன்று நடைபெறும் நீட் தேர்வு குறித்தான விவாதங்களின் பின்னணியில் உள்ள செய்திகளை நமக்கு புரியவைக்கிறார்.   “போதி மரம்” என்ற தலைப்பில் சமூகத்தில் எவ்வளவுதான் பிரச்சினைகளும், அவலங்களும் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு இருந்தால் நன்றாக வாழலாம் என்ற செய்தியை அவருடைய மகள்களுக்கு மட்டும் உணர்த்தவில்லை, வாசிக்கும் எல்லோரையும் உணரவைக்கிறார். நிறைவாக "நான் யார்" என்ற தலைப்பில் தன்னுடைய தலைமுறை, தனக்கு முந்தைய இரண்டு தலைமுறை என்று மொத்தமாக மூன்று தலைமுறையினரை பற்றி எழுதியிருக்கிறார். ஒரு தம்பி கேட்டுக்கொண்டதின் பேரில் எழுதியதாக குறிப்பிடும் இப்பதிவில், அவரது அம்மா அவரை "வீணாய்ப் போன புத்திசாலி" என்றதாக சொல்லும் வாசகம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழில் இன்று எந்தவொரு பொருளாதார லாபத்தையும் எதிர்பாக்காமல் அனுபவங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கும் எல்லாரும் எதிர் கொள்ளும் வாசகம். மோகன். அமெரிக்கா. https://www.facebook.com/udoitmohan          என் வார்த்தைகள்……… ரகசியத்தை வெளியே பகிர்தல் ஆகாது. அந்தரங்கம் புனிதமானது என்கிறார்கள். ஆனால் எவையெல்லாம் அந்தரங்கம்? எது ரகசியம் என்பதற்கு அளவுகோல் உள்ளதா? எது வரைக்கும் அது அந்தரங்கம் என்ற எல்லைக்குள் வருகின்றது? குறித்து யாராவது நம்மிடம் சொல்லியிருக்கின்றார்களா? நாம் எதையெல்லாம் மற்றவருக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்று நினைக்கின்றோமா அவையனைத்துமே ரகசியமாகப் பார்க்கப்படுகின்றது. அதையே அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்றது.   குடும்பத்தலைவர், தலைவி, மகன், மகள் என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு.  இதன் தொடர்ச்சியாக நாட்டை ஆள்பவர்கள் வரைக்கும் அந்தரங்கம் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. தற்போதைய நவீன தொழில் நுட்ப வசதிகளில் அந்தரங்க ரகசியங்கள் தான் அதி விரைவாக வெளியே வந்து விடுகின்றது. வீட்டுக்குள் தனியறையில் குளிக்கும் ஒரு இளம்பெண் ஏன் தன்னை அலைபேசியில் அவரின் நிர்வாண கோலத்தைப் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது? அலைபேசியில் அழித்தாலும் அது அழியாமல் எங்கங்கோ பரவும் வாய்ப்பு உள்ளது என்பதனை அறியாத அந்தப் பெண்ணுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்.? ஒரு அரசியல்வாதி பேசிய அலைபேசி உரையாடல் வெளியே வரும் போது அவரின் பதவியே பறிபோகின்றது. ஆனால் நான் இந்த மின் நூலில் முகம் சுளிக்க வைக்க மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பற்றியோ, அதற்குப் பின்னால் உள்ள அசிங்கத்தைப் பற்றியோ பேசவில்லை. என் மனதோடு இருந்த பல விசயங்களைப் பற்றி பேசியுள்ளேன். இவ்வுலகில் ரகசியம் என்பதே இல்லை. நம் மனதை விட்டு மற்றவர்களுடன் உரையாடும் ஒவ்வொரு விசயமும் ரகசிய தன்மை இழந்துவிடுகின்றது. இதையே நான் பொதுவில் வைத்துள்ளேன். இந்த மின்னூல் வழியாகப் பல ரகசியங்களை உரையாடியுள்ளேன். நான் வாழும் சமூகம், சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பாதிக்கும் அரசியல், அதனை ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகள், அவர்களின் கொள்கை அதற்குப்பின்னால் உள்ள அவர்களின் கொள்ளை சார்ந்த சுயநலங்களைப் பற்றிப் பேசியுள்ளேன். நம் வாழ்வில் குழந்தைகள் அறிமுகமானதும் அவர்களுக்கும் நமக்கும் உண்டான அதிக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல் மற்றும் பார்வை சார்ந்த ரகசியங்களைப் பகிர்ந்துள்ளேன்.   இந்த வருடம் நான் வாழும் சமூகம் என் பார்வையில் உள்ளது? என் குடும்ப உறவுகளில் உண்டான மாற்றங்கள் அதற்குக் காரணமாக இருந்த சமூகம் மற்றும் அரசியலைப் பற்றிப் பேசியுள்ளேன். இது வரையிலும் என்னுடைய மின் நூலில் நெடுங்கதை என்று எதையும் எழுதியதில்லை. இதில் ஒரு நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து ஒரு நெடுந்தொடர் கொடுத்துள்ளேன். உறவுகளும், அதற்குப் பின்னால் வெளியே பகிர முடியாத சிக்கல் சார்ந்த ரகசியங்களைப் பேசியுள்ளேன். சில ஏற்புடையதாக இருக்கும். பல இதையெல்லாம் எழுதி என்ன ஆகப் போகின்றது? என்ற கேள்வியைக் கூட உங்களுக்குள் எழச் செய்யும்? நாம் வாழும் போது நாம் வாழ்ந்த சமூகத்தை அவரவர் மொழியில் எழுதி வைப்பது அவசியம் என்று கருதியதால் வலைபதிவில் எழுதிய கட்டுரைகளைச் செப்பனிட்டு என் ஒன்பதாவது மின் நூலாக உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன் . என் எட்டு மின் நூலுக்கு நம்ப முடியாத ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1,75,000 க்கும் அதிகமான நண்பர்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது நண்பர் சீனிவாசன் மேற்பார்வையில் நடக்கும் இந்தத் தளத்தில் உள்ள எண்ணிக்கை மட்டுமே. வெவ்வேறு தளங்களில் என் மின் நூல்கள் வெளியாகி உள்ளது. இது தவிர வாட்ஸ் அப் வாயிலாகக் கண்களுக்குத் தெரியாத நண்பர்கள் மூலம் பலருக்கும் சென்று கொண்டிருக்கும் தகவல்களை இணையத் தள நண்பர்கள் வாயிலாக அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. இதுவே தொழில் நகர வாழ்க்கையில் இடைவிடாத கடமைகளுடன் என் குடும்பத்தினருக்காக மட்டும் நான் வாழும் வாழ்க்கையோடு சேர்த்து எழுத்துலகத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகின்றது. மாதம் தோறும் யாரோ சிலர் என் மின் நூலைப் படித்து விட்டு விமர்சனக் கடிதங்களை இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் ஆர்வத்திற்காகவும் தொடர்ந்து எழுத விரும்புகின்றேன். வாசிப்பனுபவம் கொண்ட ஒவ்வொரு நண்பர்களுக்கும் இந்த மின் நூலைக் காணிக்கையாக்குகின்றேன். நன்றி. வணக்கம். நட்புடன் ஜோதிஜி. திருப்பூர். தேவியர் இல்லம். 27.10.2017     நெடுங்கதை -  ஒரு தாயின் மரண சாசனம். (1) சென்னையிலிருந்து திருப்பூருக்கு வருவதற்காகச் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். முன் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டி திறப்பதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது. என் கையிலிருந்த புத்தகச் சுவாரஸ்யத்தில் என்னருகே வந்து அமர்ந்த பெண்னை நான் கவனிக்க வில்லை. வினோதமான நறுமணம் என் நாசியைத் தாக்க மெதுவாக நிமிர்ந்து பார்த்தேன். அவருடைய இளமையும் முக வசீகரமும் கவர்வதாய் இருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்த போது லேசாக முறுவலித்தார். நானும் புன்னகைத்து விட்டு மறுபடியும் புத்தகத்தில் மூழ்கிப் போனேன். இடைவிடாமல் கைபேசியில் பேசிக் கொண்டேயிருந்தார்.   அவர் வைத்திருந்த இரண்டு அலைபேசிகளிலிருந்தும் மாறி மாறி அழைப்புகள் அவருக்கு வந்தபடியே இருந்தது. என்னுடைய முழுக் கவனத்தையும் வாசிப்பில் கொண்டு போக முடியவில்லை. எனக்கு அறிமுகமில்லாதவர்களுடன் பேசும் பழக்கமில்லை. அவரை அசுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டேயிருந்த எனக்கு திருப்பூரிலுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை சொல்லி " அவர்கள் எப்போது நம்முடைய சாம்பிள் பீஸ் தருவார்கள்?" என்ற போது தான் அவரை முழுமையாகக் கவனிக்கத் தொடங்கினேன். நான் கையில் வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேறு பக்கம் திருப்பி வேடிக்கை பார்ப்பது போல் அவர் உரையாடலை கவனிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்த அலைபேசி உரையாடலில் திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட டையிங் நிறுவன பெயரை சுட்டிக் காட்டி பேசிய போது நேரிடையாகவே அவருடன் பேசிவிட வேண்டுமென்ற ஆவல் உருவானது. பெண் என்பதால் யோசித்துக் கொண்டிருந்த போது ரயில் பெட்டி திறக்கப்பட என்னுடைய படுக்கை இருக்கையில் போய் அமர்ந்த போது மற்றொரு அதிர்ஷ்டம் என்னைப் பார்த்துச் சிரித்தது. அந்தப் பெண்ணின் இருக்கையும் எனக்கு நேர் பக்கம் இருந்தது. அவர் மடிக்கணினியைத் திறந்து அரைமணி நேரம் பார்த்து முடித்து விட்டு அலைபேசிகளைக் கொண்டுவந்திருந்த பையில் வைத்து விட்டு என்னை நோக்கினார். நீங்களும் திருப்பூரா? என்ற அவரின் கேள்வி எனக்குத் திகைப்பாய் இருந்தது. என்னுடைய பதிலை எதிர்பார்க்காமலேயே " நீங்கள் மனைவியுடன் உரையாடியதை வைத்தே கண்டு கொண்டேன். காரணம் அந்த நேரத்தில் திருப்பூரில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்." என்றார்.   எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் இருந்தது. தன்னுடைய வேலைகளைக் கவனித்துக் கொண்டே தன்னருகே சுற்றிலும் உள்ள விசயங்களையும் கூர்மையாகக் கவனிக்கும் அவர் எனக்குச் சற்று வினோதமாகத் தெரிந்தார். பாலு மகேந்திரா கதாநாயகிகளைப் போல இயல்பான கருப்பு நிறமும் வெள்ளை நிற சுடிதாருமாய்ப் பக்கத்து விட்டு பெண்மணி போலவே தெரிந்தார். பேச்சில் தெளிவும் நாகரிகமும் இருந்தது. என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அவரே உரையாடலைத் தொடங்கினார்.           (2) பெண் நட்பு நட்பு, தோழமை, பிரியம், பரஸ்பர புரிந்துணர்வுகள் போன்ற பல வார்த்தைகள் சம காலத்தில் வலுவிழந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளர்களாக மாறி வரும் உலகில் புனிதமான உறவுகளுக்குண்டான அர்த்தங்களும் மாறிக் கொண்டே வருகின்றது.. ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் சொத்துக்காக அடித்துக் கொள்வது முதல் பாரபட்சம் காட்டும் பெற்றோர்கள் வரைக்கும் அவரவருக்குண்டான அவசிய தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு போலித்தனமாக முகமூடி அணிந்து கொண்டு தான் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.   எந்த இடத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத போது உருவாகும் அன்பு என்பது சாகும் வரைக்கும் நம்மோடு தான் இருக்கும். சாசுவதமென்பது நம் கையில் மட்டுமே. சாகாவரம் கூட நம்முடைய வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது..பழமொழிகள், அறிவுரைகள் என்பதைவிட ஒவ்வொருவரின் அனுபவங்கள் கொடுக்கும் பாடத்திற்கு இணையான வேறு ஏதும் உலகில் உண்டா? இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்.. திரைப்படம், பாடல்கள், ஓவியம், அரட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், மற்ற கெட்ட பழக்கங்கள் என்று ஒரே பாதையில் இரு நபர்களைக் கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் இருவரும் பிரிவதற்கான காரணங்களைப் பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது. நான் ரயில் பயணத்தில் சந்தித்த பெண்ணுக்கும் எனக்கும் முன் பின் பழக்கமோ வேறெந்த வகையிலும் அறிமுகமோ இல்லை. அவருடன் நான் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானதற்கு முக்கியக் காரணம் திருப்பூர். திருப்பூர் சார்ந்த நபர் என்றதும் அந்த எண்ணம் இயல்பாகத் தோன்றியது. நான் பேசத் தொடங்கியதும் அதுவே தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ச்சியாக நீட்டித்துக் கொண்டு செல்ல ஆடை உலகமே காரணமாக இருந்து. அரட்டை என்பதில் தொடங்கி இருவருக்குள்ளும் இருந்த ஏராளமான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வது வரைக்கும் முடிவில்லாத நிலையாகப் போய்க் கொண்டிருந்தது. அவர் என்னைப் பற்றி விசாரித்து முடித்ததும் அவரின் அறிமுகம் தொடங்கியது. அப்போது தான் அவரின் தற்போதைய நிலை குறித்துப் புரிந்து கொள்ள முடிந்தது   அவரின் பெயர் நாகமணி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆடைகள் பிரிவின் இந்திய பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். .உலக நாடுகளைச் சுற்றி வருவதென்பது இவரைப் போன்றவர்களுக்கு உள்ளூர் சுற்றுவது போல. வாங்கும் சம்பளம் பெரும்பாலும் அமெரிக்கன் டாலரில் தான் இருக்கும். வரி பிரச்சனையில்லாத வாழ்க்கை. வாங்கும் சம்பளத்தை வசதிகளுக்காகத் தொலைக்க வேண்டிய அவசியமில்லாமல் எல்லாவிதங்களிலும் வீடு தேடி வரும் வாழ்க்கையைப் பெற்றவர். இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்கள் போலவே இங்கு நடந்து கொள்வார்கள். இரண்டு காரணங்கள். ஒன்று திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவரைப் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். மற்றொன்று இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெளிநாட்டுக் கலாச்சாரத்தை ஒத்ததாகவே இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் உரையாடல் அவரின் பதவி குறித்து நான் மனதில் வைத்திருந்த அத்தனைக்கும் எதிர்மாறாய் இருந்தது. அவர் பேசிய வார்த்தைகளில் அவசியமில்லா தருணங்களைத் தவிர ஆங்கில வார்த்தைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்குப் பாசாங்கு இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார். எங்களின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. உள்ளேயிருந்த மற்ற நான்கு பேர்களும் வயதானவர்களாக இருந்த காரணத்தால் அவர்களின் உறக்கம் என்னை யோசிக்க வைத்தது. ஆனால் அவர் மடை திறந்த வெள்ளம் போல உற்சாகமாக ஒருக்களித்துப் படுத்தபடியே என் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். ரயில் பெட்டியின் உள்ளே எறிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் அவரின் கற்றைச் சுருள் முடிகள் புதுக் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தது. அவரின் இயல்பான தமிழும் எதார்த்தமான வார்த்தைகளும் எனக்குள் இருந்த அவர் குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.   பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் தந்திரங்கள், தரம் குறித்த எதிர்பார்ப்புகள், திருப்பூரில் வாழ்ந்தவர்களின் சரித்திரங்கள், வீழ்ந்தவர்களின் தரித்திர பட்டியலுமாய் இருவரின் பேச்சுகளும் தண்டவாள ரயில் போல ஓரே மாதிரியான சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அவரின் உலக அறிவுக்கும் என்னுடைய உள்ளூர் அறிவுக்கும் பெரிதான இடைவெளிகள் தோன்றாமல் இருக்க இருவருமே மனதிற்குள் வியப்புக்குறியை குறித்துக் வைத்துக் கொண்டிருந்தோம். பேச்சு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. சொந்த வாழ்க்கை பகிர்தல் தொடங்கியது. வெவ்வேறு பாலினமாக இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கை இருவருக்கும் பொதுவானதாக இருக்க அதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியாய் இருந்தது. குடும்பம், குழந்தைகள் என்று பேசத் தொடங்கிய போது அவரின் முகமும் மாறத் தொடங்கியது. தொடங்கியதும் தொடர விரும்பியதும் அவராக இருந்தாலும் தொழில் குறித்து உரையாடிய போது இருந்த அவரின் வேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது. நான் உணர்ந்து ஒதுங்க நினைத்த போதிலும் பெண் குழந்தைகள் என்றதும் அவர்களைப் பற்றி மிக ஆர்வமாய் விசாரிக்கத் தொடங்கினார். இது போன்ற குறுகிய பயணங்களில் உருவாகும் நட்பென்பது வினோதமானது. சில சமயம் விபரீதம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடும். இதை மனதில் நினைத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் வேறு விதமாகக் கேட்டேன். "உங்களுக்கு நிச்சயம் காலையில் நிறைய வேலைகள் இருக்கும். தூங்குங்களேன்" என்றேன். அதற்கு அவரின் பதில் வேறுவிதமாக இருந்தது. "அது என்ன உங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசி விட்டு என் குடும்பக் கதையைக் கேட்க விரும்பமில்லையா?" என்றார். ஆமாம் இல்லை என்று சொல்லத்தெரியாமல் மையமாகப் புன்னகைத்தேன். அவரே தொடர்ந்தார். "உங்களுக்கு விருப்பம் என்றால் வாசல்படிக்கு அருகே சென்று பேசலாமா?" என்றார் பயமும் படபடப்புமாய் ரயில் பெட்டியின் இரண்டு வாசலுக்கும் நடுவில் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தோம். ரயிலின் வேகம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. இரண்டு பக்கமும் வெளியே தெரிந்து கொண்டிருந்த வெளிச்சம் இருட்டு, ரயில் சத்தம், என்று அத்தனையும் ஒரு கணம் என் காதில் கேட்கவில்லை. காரணம் அந்தப் பெண்மணி வீசிய வெடிகுண்டு. வெடிகுண்டு வந்து என்னைத் தாக்கியது. "என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி" என்று தொடங்கினார்..                                 (3) கதை சொல்லும் நேரமிது   நாகரிக வாழ்க்கை தோன்றியிராத ஆதிவாசிகளுக்கு உரையாடல்கள் தேவையில்லாமல் இருந்தது. அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க அவர்கள் எழுப்பிக் கொண்டிருந்த சப்தங்களே போதுமானதாக இருந்திருக்கக்கூடும்.. ஓஓஓஓஓ........ ஆஆஆ....... போன்ற சப்தங்களே அவர்களின் வாழ்க்கை முழுக்கப் பரவியிருந்தது. இந்தச் சப்தங்களே அவர்களின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான உரையாடல்களை ஒழுங்கு படுத்தியிருந்தது. தாங்கள் வாழ்ந்த குகை போன்ற அமைப்பில் இருந்த பெண்களுக்கு வேட்டைக்குச் சென்ற தங்களுடைய தலைவன் திரும்பி வரும் வரைக்கும் எவருடன் பேசியிருப்பார்கள்? ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்த அந்தப் பேரமைதி அவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கும்?   உரையாடல் கலை நாகரிகத்தை விரைவுபடுத்தியிருக்கிறது என்ற உண்மையைப் போலவே அவசியமற்ற உரையாடல் இரு நாடுகளைப் பகையாளியாகவும் மாற்றி விடுகின்றது என்பதும் உண்மை தானே? சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்? ஆனால் இன்றைய காலகட்டத்தில் உரையாடல் என்பதுக் கலை மட்டுமல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியத் திருப்புமுனையை உருவாக்குவதாக இருக்கிறது. அதுவும் எதிரெதிர் பாலினம் என்றால் கரம் சிரம் புறம் பார்க்க வேண்டியதாய் உள்ளது. கண்கள் எங்கே கவனிக்கிறது என்பதில் தொடங்கிப் பேசும் கருத்துக்கள் எங்கங்கே தாவுகின்றது என்பது வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் மறைமுகக் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏறக்குறைய அவஸ்தை உரையாடல்களைத் தாண்டி தங்களுக்கான இருப்பை இருவருமே தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. பாலியல் தொழிலாளியின் மகள் என்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அவர் கூறிய அந்தச் செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை. நம்பக் கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை. ஒருவரின் அந்தரங்கத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருக்கலாம். அத்தனையையும் கவனித்துப் பிறகு பழக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காட்டுக்குள் சென்று வாழ வேண்டியது. ஆனால் என்னுடைய பார்வையில் வேறுவிதமாகத் தெரிந்தார்.   ஒரு அமைப்பை உடைத்து வந்த புதிய மனுஷியாகவே தெரிந்தார். ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள வில்லை. காரணம் அவர் என்னை இப்போது அதிகமாகக் கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் நான் என்ன செல்லப் போகின்றேன் என்பதில் ஆர்வமாய் இருப்பது போலத் தெரிய நான் பேச்சை மாற்றுவதில் குறியாக இருந்தேன். "சரிங்க. அப்புறம்?" என்று பொதுவாகப் பேசிவைக்க அவர் முகம் மாறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பட்டென்று வெடித்தார். "இப்ப உங்கள் பார்வையில் வேறுவிதமா தெரிகிறேனா? " என்றார். உரையாடல் தடம் மாறிக்கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன். கேட்க விருப்பமில்லையென்றாலும் பிரச்சனை. கேட்டாலும் உச் கொட்டியே ஆக வேண்டிய அவஸ்யம். இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடலாமென்று பேசத் தொடங்கினேன். "நாம் இரண்டு பேரும் கடந்த இரண்டு மணி நேரமா பேசியிருப்போம். அதற்குள் உங்களின் முப்பது வருட அனுபவத்தையும் நான் எப்படிப் புரிந்து கொண்டுருப்பேன்னு நினைக்கிறீங்க?" அவர் பதில் சொல்ல எத்தனிக்க அமைதிப் படுத்தி விட்டுத் தொடர்ந்தேன். "ஒரு நாடு அல்லது ஒரு தலைவனின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டால் நமக்கு எத்தனையோ விசயங்கள் கிடைக்கும். உங்களின் சோகம், துக்கம் போன்றவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன பெரிதான பிரயோஜனம் இருக்கப் போகின்றது. குறைந்தபட்சம் நீங்கள் சொன்னமாதிரி நிறைய நாளா தேடிக்கிட்டுருந்த புரிந்துணர்வு உள்ள ஆணாக நான் தெரிவதால் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கொட்டிவிடப் பாக்குறீங்கன்னு நினைக்கின்றேன்."   "நீங்களே உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் போய்ச் சொல்லிப்பாருங்க. யாரும் நம்ப மாட்டார்கள். நானே போய் ஒரு பெண் அறிமுகமான கொஞ்ச நேரத்தில் சொந்தக் கதை சோகக்கதையைப் பகிர்ந்துகிட்டார்ன்னு யார்க்கிட்டேயும் சொல்லமுடியுமா? நான் சொன்னாக்கூட என் நண்பர்கள் என்ன சொல்வார்கள். பெண் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கடைசியில் என்ன நடந்தது என்று வேறு வித அர்த்தத்தில் கேட்டு அர்த்தபுஷ்டியாய் பார்ப்பார்கள்" என்றேன். அவரின் வேகம் மட்டுப்பட்டது போல் தெரிந்தது. சற்றுநேரம் வெளியே ஓடிக் கொண்டிருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். மெல்லிய வெளிச்சத்தில் அவர் கண்களில் வடிந்து கொண்டிருந்த நீரைப் பார்த்து சற்றுத் தர்மசங்கடமாக இருந்தது. காயப்படுத்தி விட்டோமோ? என்று ஆற்றாமையாக இருந்தது. மனம் முழுக்க இருந்த அவரின் ஆதங்கத்தை ஏதோவொரு வழியில் இறக்கிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அவஸ்தையான சிந்தனைகள் அவருக்குள் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவரின் கண்ணீரைக் குறித்துக் கேட்டாலோ அது இன்னமும் அதிகப்படுத்துவதாக மாறிவிடும். அழுகை என்பது எனக்குப் பிடிக்காத விசயம். அதுவும் பெண்கள் கண்களில் இருந்து பொல பொலவென்று வரும் கண்ணீர் எனக்கு எப்போதும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அவருக்கு ஆறுதல் சொல்ல விரும்பாமல் இருக்கைக்குத் திரும்பி வந்து பைக்குள் வைத்திருந்த தின்பண்டங்களைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.   "எனக்கு நொறுக்குத்தீனி பழக்கமுண்டு. உங்களுக்குண்டா?" என்றேன். நான் அவரை இயல்பு நிலைக்கு மாற்று விரும்புவதைப் புரிந்து கொண்டு சிரித்து விட்டார். நான் நீட்டியதில் இருந்து முறுக்கை எடுத்துக் கொண்டார். மெதுவாக அவரை இயல்பு நிலைக்கு மாற்றி முடிந்த போது அவரின் கதை சொல்லும் நேரமும் தொடங்கியது. "நம்முடைய முன்னோர்கள் குறித்து நமக்குள் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் இருக்கும். ஆனால் எனக்கு முன்னால் என் குடும்பத்தில் இருந்த மூன்று தலைமுறைகளைப் பற்றித் தெரிந்த போது வியப்பாகத்தான் இருந்தது. காரணம் எங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகத் தவறாமல் வந்து கொண்டிருந்த குடிப்பழக்கம். தாத்தாவின் அப்பாவுக்குக் கள்ளு என்றால் கொள்ளைப்ப்ரியம். ஆனால் தாத்தாவிற்குச் சாராயமே போதுமானதாக இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு விஸ்கியை குடித்தால் தான் பொழுதே விடியும். அந்த அளவிற்கு மொடாக்குடியராக இருந்தார்." "எங்களின் குலத்தொழிலே இந்தத் துணிகளோடு தான் இருந்தது. கைத்தறி சேலைகள் முதல் பட்டுப்புடவை வரைக்கும் தாங்களே வடிவமைப்புச் செய்வது வரைக்கும் தொழில் ரீதியாக நல்ல நிலையில் தான் மூன்று தலைமுறையும் இருந்தது. ஆனால் அப்பாவிடம் தொழில் வந்த போது உருவான தொழில் போட்டிகளிலிருந்து அவருக்கு மீண்டுவரத் தெரியவில்லை. அவருக்கு மற்றொரு பிரச்சனை. என் அம்மாவின் அழகு. எங்கள் வீட்டுக்கு எவரும் எளிதில் வந்து விட முடியாது. அப்பா தொழில் மேல் வைத்திருந்த கவலைகளை விட அம்மா குறித்துத் தனக்குள் வைத்திருந்த மாயப் பிம்பங்கள் தான் அதிகமாகவிருந்தது. அதுவே எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்ற மாய வலைக்குள் அப்பாவைச் சிக்க வைத்துவிட்டது. என்னுடைய பள்ளி காலங்களில் ஒவ்வொரு நாளும் அம்மாவின் காயங்களைப் பார்த்தபடியே தான் சென்று கொண்டிருந்தேன். அதன் தாக்கம் என்னைப் பலவிதங்களிலும் படுத்தி எடுத்தது. என்னுடைய ஒரே தம்பியிடம் கூட இவற்றை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவனும் ஏறக்குறைய அப்பாவின் மறு உருவமாகவே இருந்தான்."   "பெண் என்பவள் அடுக்களைக்குள் இருப்பவள் என்ற அவர்களின் ஆணாதிக்கக் கருத்தை என்னால் உடைக்க முடியவில்லை. ஆனால் அம்மாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது. எந்தப் பிரச்சனைகளையையும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்." "அவரின் நோக்கமெல்லாம் என்னைக் கல்வி ரீதியாக மிகப் பெரிய இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். பட்ட காலிலே படும் என்பது போலப் பத்தாவது வந்த சேர்ந்த போது என்னைச் சுற்றி வந்து கொண்டிருந்த பையன்களின் பேச்சும் செயல்பாடுகளும் அப்பாவை நிறையவே யோசிக்க வைக்க என் படிப்பையும் நிறுத்தி விட்டார்." சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். நான் கூர்ந்து கவனிக்கிறேனோ என்பதைக் கவனிப்பது புரிந்தது. எந்த வியப்புக்குறியும் எனக்குள் இல்லாததைப்பார்த்து அவரின் முகத்தில் வித்தியாச ரேகைகள் தெரிந்தது. நான் கவனித்த போதிலும் வெறுமையாகப் போலித்தனமாகச் சிரித்து வைத்தேன். ஆறுதல் சொல்வேன் என்று நினைத்திருப்பாரா தெரியவில்லை. ஆனால் வேறுவிதமாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரின் கேள்வி உணர்த்தியது. "ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார் நான் பதில் சொல்ல முயற்சிப்பதற்குள் "என் அப்பா குணாதிசியத்தைத் தெரிந்து கொண்டு அப்புறம் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அப்பாவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். அது பாஸ்பரஸ் குண்டாக இருந்தது             (4) அப்பா மாற்றிய பாதை உலகத்தில் பிரபஞ்ச ரகசியத்தை கூடக் கண்டு பிடித்துவிடுகிறார்கள். ஆனால் எத்தனைப் பேர்கள் தங்களின் அப்பாவைப் பற்றி முழுமையாக உண்மையாகப் புரிந்திருக்கிறார்கள்? பாதி காலம் பயம். மீதி கொஞ்சம் வெறுப்புமாய் வாழ்ந்து வெளியே வந்து விட்ட பிறகு தான் முழுமையான அவரவர் அப்பா குறித்த புரிதலின் ஆரம்பமே தொடங்குகிறது. நான் அப்பாவாக ஆன பிறகு தான் என் அப்பாவைப் பற்றி முழுமையாக யோசிக்க ஆரம்பித்தேன்.   என் அப்பாவை விரும்பத் தொடங்கிய போது அவரும் இல்லை. அவரின் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் இவர் இப்போது அப்பாவைப் பற்றி மூச்சு விடாமல் பேசத் தொடங்கிய பிறகு கொட்டித் தீர்க்கட்டும் என்று அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரின் நீண்ட உரையாடலை முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது. அமைதியாய் இருந்தேன். பேசத் தொடங்கினார். " நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது சில சமயம் என் அம்மா பள்ளிக்கு வருவார். நானும் அம்மாவும் பள்ளிக்கு வெளியிருக்கும் மரத்தடியில் வெகு நேரம் பேசிக்கொண்டிருப்போம். அப்போது தான் அவர் முகத்தில் புதிய மலர்ச்சி தெரியும். சிறையை விட்டு பறவை போல அவர் பேச்சில் உற்சாகம் வழிந்தோடும். அம்மா பொதுவாக வீட்டில் இருக்கும் போது அதிகமாகப் பேசமாட்டார். ஆனால் நான் எந்த விசயத்தைப் பற்றி அவருனுடன் பேசினாலும் அவரின் தெளிவான கருத்தை எடுத்து வைப்பார். அதிகமாகப் படிக்கவில்லையே தவிர அவராகவே உணர்ந்த விசயங்களை நகைச்சுவையாக எடுத்து வைப்பார். எங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் என் தோழிகள் " யாரிவர்? உன்னோட அக்காவா?" என்று கேட்பார்கள். "அந்த அளவிற்கு அம்மா எப்போதுமே வசீகரமாய் இருப்பார். ஆடம்பர சேலைகளோ பெரிதான நகைகள் இல்லாத அவரின் முகம் எப்போதும் புன்னகையுடன் தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்துப் பெரிய திலகமிட்ட பிறகே தன்னுடைய அன்றாடக் கடமைகளைத் தொடங்குவார். அப்பாவும் அம்மாவும் எங்கேயும் சேர்ந்து போய் நான் பார்த்ததேயில்லை. "   "அம்மாவிடம் பல முறை கேட்டிருக்கின்றேன். சிரித்துக் கொண்டே மழுப்பி விடுவார். ஆனால் குடும்ப விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களையும் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். வீட்டில் என்னுடன் அதிகமாகப் பேசும் நேரமே தம்பியும் அப்பாவும் இல்லாத நேரமாகத்தான் இருக்கும். என்னுடைய தம்பியை ஒரு அளவிற்கு மேல் அம்மாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை மெதுவாகப் புரிந்து கொண்டேன். காரணம் அவன் எப்போதுமே அப்பாவுக்குப் பிடித்த பையனாக இருந்த காரணமே அவனிடம் ஒவ்வொரு கெட்ட பழக்கங்களும் வீடு வரைக்கும் வர ஆரம்பித்தது.. அதுவே ஏராளமான பிரச்சனைகளும் கொண்டு வந்து சேர்த்தது. . அப்பாவிடம் இது குறித்துக் கேட்ட முடியாது. அவர் ஒரே வார்த்தையில் முடித்து விடுவார். "அவன் ஆம்பிளை அப்படித்தான் இருப்பான்." என்று சொல்லிவிடுவார்.. "எனக்கு என் அம்மாவிடம் பிடித்த விசயமே, எது குறித்தும் புலம்புவதேயில்லை. பல சமயம் எனக்குச் சாப்பாடு கட்டிக் கொடுக்க வீட்டில் ஒன்றுமேயிருக்காது. அவசரமாய்ப் பக்கத்து டீக்கடையில் ஏதோ ஒன்றை வாங்கிப் பொட்டலத்தை என் பையில் திணித்து அனுப்பி வைத்து விடுவார். அம்மா என் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான் பல சமயம் என் பசியைப் போக்கியிருக்கிறது." "நானும் அம்மாவைப்போலவே இருக்க முயற்சிப்பேன். ஆனால் என் முகவாட்டம் அவருக்கு என் எண்ணங்களைக் காட்டி கொடுத்து விடும். பள்ளியில் மற்றவர்கள் அணிந்து வரும் உடைகளும், தோழிகளின் அலட்டல் பேச்சுக்களையும் வந்து சொல்லும் போது அம்மா ஒரே வார்த்தையில் சொல்லுவார்."   "உலகில் அனுபவிக்க வேண்டிய விசயங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய ஆசைகளைப் போலவே. ஆனால் அதற்கான தகுதிகளை நீ அடைய வேண்டுமானால் நம்மைப் போன்றவர்களுக்குக் கல்வி வேண்டும். நீ ஒரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்தச் சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு. உன் கவனத்தை வேறு எதிலும் மாற்றாதே" என்பார். எனக்குச் சற்று எரிச்சலாக இருந்தாலும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு மனதுக்குள் மறுகிக் கொள்வேன். "வீட்டில் அப்பா உருவாக்கும் ஒவ்வொரு சண்டைகளுக்கு வெவ்வேறு காரணங்கள். ஆனால் மொத்தமாகப் பார்த்தால் அவரின் ஆண்மையற்ற வீராப்பு தான் முதன்மையாக இருக்கும். ஓமக்குச்சி நரசிம்மன் போல உள்ள தோற்றத்தில் அவரின் குடியும் பீடிப்பழக்கமும் நிரந்தர நோயாளியைப் போலவே வைத்திருக்க அம்மாவின் வசீகரத்தை அவர் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்." "எனக்கு இது மெதுவாகப் புரிந்தாலும் அம்மாவிடம் கேட்க முடியாது. கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஒரே வார்த்தையில் என்னை அடக்கி விடுவார். "ஆம்பிளைங்றவங்க முன்னபின்ன தான் இருப்பார்கள். அது என்பாடு. உன்னோட வேலைப் படிக்கிறது மட்டும் தான். அதில் மட்டும் கவனமாயிரு" என்று அது குறித்துத் தொடர்ந்து பேச விடமாட்டார். பல முறை என் தம்பியே என் புத்தகங்களை ஒழித்துக் கிழித்து வேறு பக்கம் தூக்கி எறிவது வரைக்கும் நாங்கள் இருவருமே வீட்டுக்குள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்தோம். பலமுறை அம்மாவுடன் சண்டை போட்டிருக்கின்றேன். " எங்கேயாவது போய் விடுவோம். இந்த நரகம் போதுமென்று" அழைத்த போதிலும் அம்மா தெளிவாகச் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது.   " இக்கரைக்கு அக்கறை பச்சை. நீ நினைப்பது போலப் பெண்கள் தனியாக வாழ்வது சுலபமில்லை. படிப்பது, வாசிப்பது, கேட்பது என்பதற்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீ போகப் போகப் புரிந்து கொள்வாய்" என்று அன்பாக மிரட்டி மாற்றி விடுவார். "அப்பாவின் ஒரே பிரச்சனை அவரின் தாழ்வு மனப்பான்மை. அவரால் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. அவரின் தொடர்ச்சியான தொழில் தோல்விகளும், இழந்த சொத்துக்களும், உடல்நலம் குன்றியது என்று எல்லா நிலையிலும் அம்மா கூடவேயிருந்தார். ஆனால்...................." நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார். இப்போது ரயில் இடையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலுக்காக இருட்டுக்குள் நின்று கொண்டிருந்ததை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கழிப்பறைக்குச் செல்பவர்கள் வந்து சிலர் எங்களுடன் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுருநத்ர்கள். அவரின் பேச்சுத் தடைபட்டது. எங்கள் இருவரையும் கவனித்த சிலர் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதுவும் நடக்கின்றதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அவர்களும் தங்களின் படுக்கைக்குச் சென்றனர். ரயில் நகரத் தொடங்கியது. தொடர்ந்தார். "ஒரு தடவை அப்பா உடம்பு சரியில்லாமல் வீட்டுக்குள் இருமிக்கொண்டே படுத்திருந்தார். நான் வெளியே திண்னையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் தொடர்ச்சியான இருமல் கேட்க நான் வேகமாக உள்ளே ஓட அம்மா என்னைத் தடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அப்பாவின் கோப வார்த்தைகளும், அவர் இருமலை மீறி அம்மாவிடம் சண்டை போடுவது வரைக்கும் என்னால் கேட்க முடிந்தது. சற்று நேரம் மயான அமைதி. ஆனால் அம்மா என்னை நோக்கி வெளியே வந்த போது கையில் என்னுடைய பள்ளிக்கூடப் பைக்கட்டு மூட்டைகளுடன் மற்றொரு சிறிய பையில் தேவையான துணிகளும் இருந்தது..   " இனி இந்தாளுகூட வாழமுடியாது. வா நாம வேற எங்கேயாவது போய்ப் பிழைத்துக் கொள்வோம்" என்று என் பேச்சை எதிர்பார்க்காமல் என் கையைப் பிடித்துக் கொண்டு ஏறக்குறைய தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தார். வந்து நின்ற பேருந்தில் ஏறி ரயில்நிலையத்துக்கு வந்தோம். அது கோயமுத்தூர் செல்வதாக அருகே இருந்தவர்கள் சொன்னார்கள். சீட்டு கூட எடுக்காமல் அமர்ந்திருந்த அம்மாவை அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போலப் பார்த்தேன். காரணம் அவர் முகத்தில் அப்படியொரு ரௌத்திரம் தெரிந்தது. இதுவரைக்கும் அம்மாவின் முகத்தில் நான் கோபத்தின் சாயலைக்கூடப் பார்த்ததில்லை, ஆனால் இப்போது முற்றிலும் புதிய மனுஷியாகத் தெரிந்தார். என்ன நடந்தது என்று நான் கேட்ட போது "சமயம் வரும் போது சொல்கின்றேன்" என்று தன்னை இயல்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தார். ரயில் ஓடத் தொடங்கியது. எங்களின் வாழ்க்கைப் பாதையும் மாறத் தொடங்கியது.                               (5) வழியா இல்லை பூமியில்? எங்களை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் நிலைய காவல் அதிகாரியைப் போலவே நாங்கள் இருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி மற்றொரு நபரும் எங்களருகே வந்து நின்றார். எனக்குப் படபடப்பாய் இருந்தது. நடைமேடையில் கண்ணுகெட்டிய வரைக்கும் யாருமில்லை. எறிந்து கொண்டிருந்த குழல் விளக்கு வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் பளிச்சென்று தெரிந்தோம். எங்களருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அங்கிருந்த நிலையை எவர் பார்த்தாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். காரணம் அடுத்த ரயில் வருவதற்கு நீண்ட நேரம் இருந்தது. நான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டது போலவே அம்மாவும் புரிந்து கொண்டு தயாராகியிருந்தார். இந்த இரவு நேரத்தில் ரயில் நிலையத்தை விட்டு எங்களுக்கு வேறெங்கும் செல்லவும் வாய்ப்பில்லை.   எங்களருகே வந்து நின்றவருக்கு நாற்பது வயது இருக்கலாம். கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்து அந்த நடு இரவிலும் அப்போது தான் குளித்து வந்தவர் போலிருந்தார். அவரின் பணக்காரத் தோற்றத்தை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களருகே வேறு எவரும் இல்லாததால் அம்மாவிடம் வந்து நின்றார். வரவேண்டிய ரயிலைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு அது குறித்துத் தெரியாது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அறிமுகமானவர் போலவே அவருடன் சற்று தள்ளி நின்று உரையாடிக் கொண்டிருந்தார்.   அம்மாவை நோக்கி வந்த காவல்துறையினர் என்னருகே வந்து நின்றனர். சற்று நேரம் என்னைப் பார்த்து விட்டு "எங்கம்மா போறீங்க" என்றார் அதோ அம்மா என்று பொதுப்படையாக நான் கையைக் காட்ட சரியென்றபடி நகர்ந்தார். என மூச்சே அப்போதுதான் மீண்டும் சீரானது.. இயல்புக்கு மாறாக அம்மா அந்தக் கதர்சட்டையுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதைப் பசி மயக்கத்திலும் தூக்க கலக்கத்திலும் கவனிக்கும் ஆர்வமில்லாமல் அருகே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சோர்வாகச் சாய்ந்திருந்தேன். கடைசியில் அவர் ஒரு அட்டையை அம்மாவிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார். அம்மா சிரித்தபடியே என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். பேசி விட்டுச் சென்றவர் எங்களின் மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பப் போகின்றார் என்பதை அறியாமல் என்னருகே வந்தமர்ந்த அம்மாவிடம் "தூக்கம் வருதும்மா" என்றேன்.   விடியும்வரையிலும் அம்மா என்னைப் படுக்கவைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்த கழிப்பறையில் சுத்தம் செய்து கொண்டு கதர்ச்சட்டை கொடுத்துச் சென்ற நிறுவனத்திற்குக் காலை பத்துமணிக்குச் சென்ற போது அந்த நிறுவனத்தின் பிரமாண்டம் பயமுறுத்துவதாக இருந்தது. ஏறக்குறைய ஆயிரம் பேர்களாவது பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடும். வரவேற்பறையில் அம்மா கொடுத்த அட்டையைப் பார்த்த போது ஒருவர் உடனடியாக அந்தக் கதர்ச்சட்டை அறைக்கே அழைத்துச் சென்றார். ஏற்கனவே சொல்லிவைத்திருப்பார் போல.. என்னை வரவேற்பறையில் உட்கார வைத்து விட்டு அம்மா மட்டும் உள்ளே சென்றார். எங்களது வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறந்தது. அதே சமயத்தில் துயரத்தின் சூறைக்காற்றும் ஜன்னல் வழியே புகத் தொடங்கியது. வெளியே வந்த அம்மா சிரித்துக் கொண்டே வந்தாலும் "அனுபவம் இல்லாமல் வேலையில் சேர்க்க முடியாது" என்ற செய்தியோடு வந்த போது என்னுடைய பயம் அதிகமானது. அம்மாவின் தன்னம்பிக்கையை நான் அறிந்திருந்த போதிலும் அப்போதுள்ள சூழ்நிலையில் எங்கள் கையில் அதிகப்படியான பணமேதுமில்லை. ஆனால் அம்மாவின் அசாத்தியமான துணிச்சலில் அன்றே ஒரு தங்கும் விடுதி அமைந்தது...வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் பெண்களுக்கான விடுதி. அம்மா சில தொலைபேசி எண்களை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு எதிலும் ஆர்வமில்லாமல் அறைக்குத் தூங்கப் போய்விட்டேன். இரவு நேரத்தில் அறைக்கு வந்த அம்மா கையில் சாப்பாடும் மற்ற அவசியமான பொருட்களும் இருந்தது. மூன்று மாதங்கள் கடந்த போது அம்மா எனக்குச் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் அவருக்கும் சொல்லும் அளவிற்கு மாறிப் போகத் தொடங்கியது. இடையே சற்று வசதியான வீட்டுக்குக் குடி புகுந்தோம். அம்மா தொடக்கம் முதலே என்னை வேலைக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். சில சமயம் நடுஜாமத்தில் வந்து சேருவார். அரைத்தூக்கத்தில் இருக்கும் எனக்கு அம்மாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது. அதை வேறு விதமாக எனக்குப் புரியவைத்தார் "இரண்டு வருடங்கள் உனக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றேன்.. அதற்குள் விட்டுப் போன படிப்பை முடித்து விடு.. மற்ற திறமைகளையும் கற்றுக் கொள், அம்மாவைப்பற்றிக் கவலைப்படாதே. நீ என்னுடன் நிறையப் பேச வேண்டும் என்று நினைப்பது எனக்குப் புரிகிறது. அதற்கான சமயங்கள் வரும் போது பேசுவோம். இப்போது உன் வாழ்க்கை எனக்கு நிறைய முக்கியம். அதை விட நீ உன் காலில் தனித்து நிற்பது அதை விட முக்கியம் " என்றார். . என்னால் அம்மாவை எதிர்க்கமுடியவில்லை. வீட்டுக்கு அருகில் இருந்தவர்களோடும் பழக முடியவில்லை. பெரும்பாலும் குடும்பத்துடன் காலையில் அவசரமாக வேலைக்குச் சென்று விட்டு இரவு வீட்டுக்குத் திரும்புபவர்களாக இருந்தார். எவர் தலையாவது தென்பட்டால் சிரித்துக் கொண்டே அறிமுகம் செய்து கொள்ள முயற்சித்தாலும் அவர்கள் பேச விரும்பும் திரைப்படம் நெடுநதொடர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாத காரணத்தால் ஒதுங்க வேண்டியதாக இருந்தது. வேறு வழியில்லை என்பதாக மறுபடியும் புத்தகமும் கையமுமாக மாறத் தொடங்கினேன். இப்போது அம்மா கூட என்னுடன் அதிகம் பேசுவதில்லை. அம்மாவின் வேறுபட்ட நடவடிக்கைகளையைம் கேள்விகளாகக் கேட்க மனமில்லாமல் என்னை மாற்றிக் கொண்டேன்.   ஆனால் எனக்குள் இருந்த உறுத்தல்கள் வெறும் கேள்விகளாகவே இருந்தது. அம்மா சொன்னபடியே தவறவிட்ட படிப்பை அஞ்சல் வழியே படித்தபடியே திருப்பூருக்குள் இருந்த "கார்மெண்ட் டெக்னாலஜியை" சான்றிதழ் படிப்பாகப் படித்து முடித்தபோது முழுமையாக இரண்டு வருடங்கள் கடந்துபோயிருந்தது. இடையே கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள், ஆங்கிலப்பயிற்சி என்று அம்மா சொன்னபடியே என்னை வளர்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அந்தப் பூகம்பம் எங்கள் வீட்டைத்தாக்கியது. எப்போதும் அம்மா வேலைக்குச் சென்றபிறகு தான் நான் வெளியே செல்வதுண்டு. நான் பயின்று கொண்டிருந்த வகுப்புகள் முடித்து வீட்டுக்கு வர மாலை நேரமாகிவிடும். அன்று காலை வகுப்புகளை முடித்துவிட்டு வயிற்று வலியின் காரணமாக மதியமே வீட்டுக்குள் திரும்பிய போது வீட்டுக்குள் அம்மாவுடன் அந்தக் கதர்ச்சட்டை நபரும் இருந்ததைப் பார்த்த போது நான் தேடிக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கும் அம்மா எனக்காகச் செலவழித்துக்கொண்டு பணத்திற்கான விடைகளுக்கும் அர்த்தம் புரிந்தது. இரண்டு நாட்கள் அம்மாவுடன் நான் பேசவில்லை. எதுவும் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. அம்மா இரவு நேரங்கழித்து வந்த காரணத்தால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். மனம் வெறுமையாயிருக்க அருகேயிருந்த பூங்காவிற்குச் செல்ல விரும்பி எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த சந்தின் வழியே நடந்து கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி தான் வந்த டாக்ஸிகாரருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பலரும் சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களைக் கடந்து செல்ல முற்பட்ட போது அங்கு நடந்து கொண்டிருந்த உரையாடல்களை ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் அந்தப் பெண்மணியை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஓட்டுநருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்..   ஆனால் ஆண்டவன் எனக்கென்றே அனுப்பி வைத்த ஜீவன் என்பதை அறியாமல் ஏதோவொரு துணிச்சலில் அந்தப் பெண்மணி அருகில் சென்று "நான் ஏதும் உங்களுக்கு உதவுமுடியுமா என்று பார்க்கின்றேன்" என்று கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டிருந்தவர் என்னுடைய ஆங்கிலப் பேச்சைக் கேட்டு மொத்தமாக இந்தியாவைப்பற்றி ஒரு பாட்டு பாடித்தீர்த்தார்.   அவர் சுவீடனிலிருந்து இந்தியா வந்திருந்தார். அவர் ஸ்வீடீஸ் கலந்து பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளத் தனிப்பயிற்சி தேவைப்பட்டது. ஓட்டுநரை அனுப்பிவிட்டு அவருக்கு வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து நகர்ந்த போது என் கையைப் பிடித்துக் கொண்டார். "இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இருக்க முடியுமா?" என்றார். காரணம் அந்த அளவிற்கு நொந்து போயிருந்தார் என்பதோடு மொழிப் பிரச்சனை வேறு அவரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவர் பேசும் ஸ்வீடீஸ் கலந்த ஆங்கிலம் கேட்பவர்களுக்குப் புதுத் தேவபாஷை போலவேயிருந்தது. காரில் சென்று கொண்டிருந்த போது என்னைப் பற்றி விசாரித்தார். குறிப்பாக நான் வாங்கியுள்ள "கார்மெண்ட் டெக்னாலஜி" படிப்பை மனதில் குறித்துக் கொண்டு அவர் செல்ல வேண்டிய நிறுவனங்களுக்கு என்னையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றார்.   இரவில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் என்னைத் தங்க முடியுமா? என்று கேட்ட போது முதல் முறையாக அம்மாவை விட்டுத் தங்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அவருக்கு ஏதோவொரு வகையில் என்னைப் பிடித்து விட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிர்ஷ்டமா? அல்லது எனக்கு வரவேண்டிய வாய்ப்புக்கான நேரமா என்று புரியாமல் அன்று இரவு முழுவதும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டேன். ஒரு முழுநீள பெயருடன் இறுதியில் மரியா என்று முடிந்த அவரின் பெயரை சுருக்கமாக மரியா என்று அழைக்கச் சொன்னார். மரியா சமீபத்தில் இந்தத் துறையில் நுழைந்ததும், அறிமுகம் இல்லாமல் திருப்பூர் வந்ததும் போன்ற பலவிசயங்களைப் பகிர்ந்து கொண்டார். சுவீடனின் ஒரு தங்கும் விடுதியில் வரவேற்பாளர் பதவியில் இருந்த மரியா கணவர் இறந்த பிறகு ஏதாவது சாதிக்க வேண்டுமென்று நோக்கத்தில் இந்த ஆடைத்தொழிலை தேர்ந்தெடுத்து இறுதியாக இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார். பங்களாதேஷ், பாகிஸ்தான் என்பதை மத நாடாகப் புரிந்துகொண்டு சீனாவுக்குச் சென்று தரமில்லாத விசயங்கள் பரிசாகக் கிடைக்க "போதுமடா சாமி" என்று பலரிடம் கேட்டு திருப்பூர் பற்றிக் கேட்டு வந்து இருப்பதைப் புரிந்து கொண்டேன். சுவீடனில் அவர் இருந்த குறிப்பிட்ட பகுதியில் ஆடைக்கான சந்தை நல்ல விதத்தில் இருந்தாலும் சரியான நபர்கள் இல்லாத காரணத்தால் பக்கத்து நாடுகளில் இருந்தது வாங்கிக் கொள்ளை லாபத்திற்கு விற்றுக் கொண்டிருப்பதையும் அவர் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன். ஆனால் இந்தியாவைப்பற்றி அவருடைய நண்பர்கள் பலரும் சொல்லக்கேட்ட பயங்கரக் கதைகள் பயமுறுத்துவதாக இருக்கத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த பயணம் சில நாட்களுக்கு முன் இங்கே கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதுவே இன்று என்னுடனான பாதிவழி சந்திப்பு வரைக்கும் நடந்து முடிந்து விட்டது.. அவர் தங்கியிருந்த விடுதியில் அறிமுகமான அத்தனை நிறுவனங்களும் மரியா போன்ற தொடக்க முயற்சிகளை ஏளனப்படுத்திவிட விடுதியில் இருந்த சிலரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். வெளிநாட்டுப் பெண்மணியாக இருந்தாலும் ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்து செலவழிக்கும் குணாதிசியம் விடுதியில் இருந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கண்டும் காணாமல் ஒதுங்கி விட்டனர். மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தனிப்பட்ட முறையில் வெளியே வந்து வண்டி பிடித்து வந்துள்ளார் என்பதைக் கேட்ட போது அவரின் துணிச்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதுவே என் தொடர்பை அவருக்கு உருவாக்கிக் கொடுக்க "தெய்வமே நன்றி" என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். நானும் அதே சூழ்நிலையில் தான் இருந்தேன். ஆனால் நான் காட்டிக் கொள்ளவில்லை. நான் அவருடன் விடுதியில் தங்கியிருந்த போது அம்மா என்னைத் தேடிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்த போதும் நான் எடுக்கவில்லை. மரியா கேட்ட போது நண்பர்களின் அழைப்பு என்று பல விதமாக மாற்றிச் சொல்லி வைத்தேன். என்னுடைய குடும்பத்தினர் வெளியூரில் இருக்கிறார்கள் என்பதாக அவரை நம்ப வைத்து ஜெயித்தேன். காரணம் அம்மாவுக்கும் எனக்கும் இடையே இவர் நுழைந்து என் மனதை மாற்றிவிடுவோரோ என்று பயம் எனக்குள் இருந்தது. நள்ளிரவு வரைக்கும் விட்டு விட்டு அம்மா அடித்துக் கொண்டிருந்த அலைபேசி நான் இரண்டு முறை தவிர்த்த போதும் கூட மறுபடியும் அடித்துக் கொண்டிருந்தார். இறுதியாக அந்த நள்ளிரவில் "என்னைத் தேடாதே. நான் இனிமேல் வரமாட்டேன்" என்று குறுஞ்செய்தி கொடுத்த பிறகே நின்றது.   என் மனதில் அம்மா மேலிருந்த வன்மத்தை அன்று தான் புரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் இருந்த இடைவெளியை நான் பேசிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்மணியின் எதிர்காலத் திட்டங்கள் நிரப்பக்கூடியதாக இருந்தது. மொத்தத்தில் மரியாவுக்குத் திருப்பூர் தவிர இந்தியாவில் மற்ற பகுதிகளுக்கும் செல்லக்கூடிய நம்பிக்கையான ஆள் ஒருவர் தேவையாக இருந்ததைப் புரிந்து கொண்டேன். அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருந்த அசாத்தியமான மனதைரியம் அன்று கை கொடுத்தது. நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விசயங்களையும் என்னால் சாதிக்க முடியுமென்று மரியாவை நம்ப வைத்து அதிலும் வெற்றி பெற்றேன். அம்மாவைப் பல விதங்களிலும் வெறுத்த அளவிற்கு என்னால் மனதளவில் மறக்க முடியாமல் மறுகிக் கொண்டிருந்தேன். ஆனால் என் பிடிவாதமே முன்னால் நின்றது. நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அம்மாவின் குணாதிசியமே மேலோங்கி நின்றது. நான் ஈடுபட்ட ஒவ்வொரு முயற்சிகளையும் அம்மாவை நினைத்துக்கொண்டே ஈடுபட்டேன். அடுத்த மூன்று நாட்களும் மரியாவுடன் விடுதியில் தங்கியிருந்தேன். மரியா மூலம் நான் கற்றுக் கொண்ட பல விசயங்கள் ஏராளமான புதிய நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே, அடுத்த ஒரு வருடத்திற்கு எனக்கு உதவியாய் இருந்தது. மரியா எனக்கு அளித்த பொறுப்புகளுடன் அவர் கொடுத்து விட்டுச் சென்ற பணத்தை வைத்துக் கொண்டு அலுவலகமும் வீடுமாய் இருந்த அமைப்பில் திருப்பூரில் இரண்டாவது வாழ்க்கையைத் தொடங்கினேன்.   இடையே ஒரு முறை அம்மா நான் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு வந்து அழைத்தார். தவிர்க்கப் பார்த்தேன். என்ன காரணமென்றே எனக்குத் தெரியவில்லை. மொத்தத்தில் என் அம்மாவாக இல்லாமல் வேறொரு ஜீவனாகத் தெரிந்தார். . "உன்னுடன் ஒரு மணி நேரம் மட்டும் பேச வேண்டும்" என்றார். நான் மறுத்து விட்டேன். ஆனால் அம்மா என்னைத் திட்டாமல் நகர்ந்தது இயல்புக்கு மாறாய் இருந்தது. அம்மா கெஞ்சிய வார்த்தைகளுக்கு எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. மொத்தத்தில் நான் அவரைப் பொருட்படுத்தவேயில்லை. கடைசியாகச் செல்லும் போது ஒன்றைச் சொல்லிவிட்டு சென்றார். "என் மனப்பாரம் குறைந்தது. இனி நீ ஜெயித்து விடுவாய்" என்றார். அப்போது அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. உலகில் மிக வலிமையான ஆயுதமென்பது புறக்கணித்தல். வார்த்தைகளும் ஆயுதங்களும் கொடுக்காத வலியைப் புறக்கணித்தல் என்பது பல மடங்கு வலிமையானதாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நான் எத்தனைத் தவறான முடிவை எடுத்தேன் என்பதை அம்மா இறந்த பிறகு என் கைகளுக்கு வந்த அவரின் கடித மரண சாசனம் எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு சமயத்திலும் நான் கற்றுக் கொண்ட தொழில் அனுபவங்கள் என்னை அடுத்தபடிக்கு எளிதாக நகர்த்திக் கொண்டிருந்தது. மொத்தத்தில் என்னுடைய தொழில் வாழ்க்கையின் முதல் வருடம் மரியா என்னிடம் எதிர்பார்த்ததை விட அற்புத பாதைக்குக் கொண்டு செலுத்தியது. மரியாவிற்கு என் அசாத்தியமான உழைப்பு கொடுத்த லாபங்கள், நான் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடித்த ஒழுக்க விதிகள், நிறுவனங்களைக் கையாண்ட விதங்கள் என்று ஏராளமான ஆச்சரியக்குறிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மரியாவுக்கு உருவாக்கிக் கொண்டிருந்தது.   என்னுடைய கேள்விக்குறியான வாழ்க்கை சூத்திரத்தை மொத்தமாய் மாற்றியது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மரியா என்னுடன் தொழிலுக்கு அப்பாற்பட்டு மிகவும் நெருங்கியிருந்தார்.. நான் சுவீடன் நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டாகப் பணியில் இருந்த போது என்னைச் சுற்றியிருந்த ஆள் அம்பு சேனைகள் வளர்ந்த போதிலும் கூட என் தனிமை கூட்டை உடைத்துக் கொண்டு வரவில்லை. எவர் மீதும் அன்பில்லாமல் எந்த இலக்குமில்லாமல் அன்றாடக் கடமைகளும் வாழ்க்கையின் அதன் போக்கிலேயே போய்க் கொண்டிருந்தேன். எனக்கு வந்து கொண்டிருந்த எந்த வசதிகளையும் நான் அனுபவிக்க விரும்பவில்லை. ஒவ்வொன்றும் வங்கியில் தூங்கிக் கொண்டிருந்தது. ஓய்வு நேரத்தில் கோவையில் மாலை நேர எம்பிஏ படிப்பில் சேர்ந்து அதன் மூலம் என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். ஆர்ப்பாட்டமில்லாத என் வாழ்க்கையின் ஆணி வேராக இருந்த அம்மாவிற்குப் பிறகு சுவீடன் பெண்மணி ஆழமாக ஊடுருவினார். தொழிலுக்கு அப்பாற்பட்டு என்னை மகள் போலவே பாதுகாக்க அவரின் சாதாரணத் தொழில் வாழ்க்கையை என்னால் சாம்ராஜ்ய வாழ்க்கையாக மாற்ற முடிந்தது. ஓய்வில்லாத எனது ஒவ்வொரு நாளும் என் வயதின் அதிகரிப்பை உணர்த்தாமல் உருண்டோடிக் கொண்டிருந்தது. 2009 25 செப்டம்பர் அவசர வேலையென்று மரியா அழைத்திருந்தார். நான் சுவீடன் சென்றபிறகு தான் மரியா வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டேன். அவருக்குள் இருந்த புற்று நோய் அவரை முழுமையாக மாற்றியிருந்தது. தலைமுடிகள் உதிர்ந்து எலும்பும் தோலுமாய் விகாரமாய் இருந்தார். அவருக்கு இருந்த நோய்கள் குறித்து எனக்குத் தெரியுமே தவிர இந்த அளவிற்குக் புற்றுநோய் நோயின் தாக்கம் இருக்குமென்பதை அன்று தான் முதன் முதலாகப் புரிந்து கொண்டேன். எதற்காக நம்மை அழைத்தார்? என்பதை யோசித்துக் கொண்டு மருத்துவமனையில் அவரருகே அமர்ந்திருந்தேன். அவரால் அதிகம் பேசமுடியவில்லை. கண்களில் இருந்து நீர் தொடர்ச்சியாக வழிந்து கொண்டிருந்தது. தலையணைக்குக் கீழே இருந்து ஒரு ஒட்டப்பட்ட கவரை எடுத்துக் கையில் கொடுத்து விட்டு என் உள்ளங்களையில் முத்தமிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென்று கண்களால் கேட்ட போது சைகையில் "நீ ஊருக்குச் சென்றதும் பிரித்துப் பார்" என்றார். அதேநாள் இரவில் என் மின் அஞ்சலுக்குச் சென்னையிலிருந்த மற்றொரு நபரிடம் இருந்து செய்தி வந்தது. சென்னையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைப் போட்டு என் அம்மா இறுதிக் கட்டமாக உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. ஆனால் சுவீடனில் உள்ள சூழ்நிலையில் அங்கேயே ஒரு வாரம் இருக்கும்படி உருவாக அம்மா குறித்த விசயங்களை மறந்து போனேன். செப் 27 அன்று மரியாவின் ஜீவன் மரணத்தை தழுவியது. அடுத்த மூன்று நாட்கள் என்னால் நகரமுடியவில்லை. காரணம் மரியா இறக்கும் தருவாயில் பல விசயங்களைச் செய்து இருப்பதை நான் சென்னை வந்த போது தான் புரிந்து கொண்டேன். மரியா இறந்து போன துக்கத்தை மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவித்தது.   அவர் கொடுத்த கவர் கூடப் பிரிக்கப்படாமலேயே இருந்தது. வேலைகள் அத்தனையையும் முடித்து சுவீடனிலிருந்த சென்னைக்கு வந்து அம்மா இருப்பதாகத் தகவல் வந்த மருத்துவனைக்குக் சென்று பார்த்த போது அம்மா இறந்து மூன்று நாட்களாகிவிட்டது என்றனர். ஒரு சேவை மையம் அடக்கம் செய்துள்ளார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். அந்த மையத்தைத் தேடிச் சென்றபோது அம்மா கொடுக்கக் சொன்னதாக ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தனர். மரியா இறந்த செப் 26 அன்றே என் அம்மாவும் இறந்து இருப்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். அழ கூடத் தெம்பில்லாமல் தங்கியிருந்த விடுதிக்கு வந்த போது இப்போது என் கையில் இரண்டு கவர்கள் இருந்தது. மரியா, அம்மா இருவரும் எழுதி வைத்திருந்த கவர்களை அப்போது தான் அடுத்தடுத்துப் பிரித்தேன். முதலில் மரியா கொடுத்த கவரை.பிரித்துப் படித்து முடித்த போது அழுவதா சிரிப்பதா என்று தோன்றாமல் எதிரேயிருந்த சுவ்ற்றை வெறித்துக் கொண்டிருந்தேன். ஐரோப்பிய யூனியனில் வளர்ந்து கொண்டிருக்கும் மரியாவின் நிறுவனத்தில் 40 சதவிகித பங்குதாரராக என்னை நியமித்திருந்தார். இறுதி முடிவென்பது என்னுடைய ஒப்புதல் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதாக அவர் மகனுக்குத் தனிப்பட்ட குறிப்பாக எழுதியிருந்தார். அது தொடர்பாகப் பல வித ஆவணங்கள் உள்ளேயிருந்தது. . அடுத்து அம்மாவின் கடிதத்தை எடுத்த போது குற்ற உணர்வில் என் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே உணரமுடிந்தது. பிரிந்து போன மகளுக்கு இறந்து போன உன் அம்மா எழுதியது என்று அந்தக் கடிதத்தைத் தொடங்கியிருந்தார்.                      (6) ஒரு தாயின் மரண சாசனம்… பிரிந்து போன மகளுக்கு இறந்து போன அம்மா எழுதியது. நம் இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியை நிரப்பக்கூடியதாய் இந்தக் கடிதம் இருக்குமென்று நம்பி இதை எழுதத் தொடங்குகின்றேன். என்னுடைய விருப்பமில்லாமல் பதினைந்து வயது இடைவெளியை எவரும் பொருட்படுத்தாமல் திருமணம் என்ற அலங்கோலம் நடந்த போது முதல் முறையாக இறந்தேன். ஆண்மையற்ற ஒழுக்கமற்ற கணவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு இரவுமே செத்துக் கொண்டிருந்தேன். உடலால் மட்டுமே வாழ்ந்த என் வாழ்க்கையில் உன் வருகையும் நீ என்னைப் புரிந்து கொண்ட பிறகு தான் உண்மையிலேயே வாழத் தொடங்கினேன்.   ஆனால் இதைபடிக்கும் போது இந்த உடல் கூட நெருப்பில் கலந்து சாம்பலாய் மாறிப் போயிருக்கும். ஆனால் நீ சுவாசிக்கும் காற்றில் கலந்து உன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் உன் அம்மாவை இதைப் படித்து முடித்த பிறகாவது புரிந்து கொள்ள முயற்சிப்பாயா மகளே? இன்னும் சில மணி நேரத்திலோ அல்லது சில நாட்களிலோ நான் இருக்கப் போவதில்லை. என்னுடைய நோயின் தாக்கம் எனக்கான விடுதலையைத் தெளிவாகப் புரியவைத்திருக்கிறது. என்னுடைய உயிர்ப்பறவை இந்தக் கூட்டிலிருந்து சிறகடிக்கப் போகின்றது. நீ என்னருகே இல்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. எவரையும் சார்ந்து வாழாமல் என் உதவி இல்லாமலேயே நீ சென்ற உயரம் என்பது என்னால் நம்ப முடியவில்லை. உச்சியில் இருக்கும் உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட ஆசை. இந்த அம்மாவின் வார்த்தைகளைப் படித்து முடித்த பிறகாவது என்னை நினைத்துப் பார்ப்பாயா மகளே? இந்தக் கடிதம் ஏதோவொரு சமயத்தில் உன் கைகளில் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏராளமான கேள்விகளைச் சுமந்து கொண்டிருக்கும் உனக்கு என்னுடைய இந்த வார்த்தைகள் சில புரிதல்களை உருவாக்கக்கூடும். இது நான் சேர்த்த சொத்துக்களை இட்டு நிரப்பிய வார்த்தைகள் அடங்கிய உயில் சாசனம் அல்ல. ஆனால் என் கருவில் சுமந்து உயிர் மூச்சில் வைத்துப் பார்த்த உன்னை இழந்து விட்டேனோ என்ற ஆதங்கத்தில் அவசரமாய் எழுதுகின்றேன், அவசரமாய் என்னை விட்டு நீ பிரிந்தாலும் நான் எதிர்பார்த்ததை விட ஏராளமான ஆச்சரியத்தை எனக்குத் தந்துள்ளாய். நான் உன் அப்பாவை முழுமையாகப் புரிந்து கொண்ட தருணத்தில் கணவன் என்ற மனிதனை எதிர்க்காதே முற்றிலும் புறக்கணித்து விடு என்று வாழத் தொடங்கினேன்.   நான் வாழ்ந்த வாழ்க்கையைப் போலவே நீயும் அதையே கடைபிடித்து என்னைக் கலங்க வைத்து விட்டாயே மகளே? உன் அப்பாவுக்கும் எனக்கும் நடந்த பாதி விசயங்களை உன் பார்வைக்குப் படாமல் மறைத்து வைத்தேன். காரணம் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டால் உன் பார்வையும் வாழ்க்கையும் மாறிவிடுமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்தேன். நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்கள் தான் ஏராளமான தாக்கத்தை உருவாக்கும். உன் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு தான் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டேன். பலமுறை நீ என்னிடம் கேட்ட வெளியேறிவிடலாமென்ற நோக்கத்தையும் இதனால் தான் புறக்கணித்தேன். இன்றைய உலகம் விஞ்ஞானச் சமூக மாற்றத்தில் மனித இனம் பெருமையாக வளர்ந்திருந்தாலும் அடிப்படை மனித குணாதிசியங்கள் மாறவில்லை, மிருகங்களை விடக் கேவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணால் அத்தனை சீக்கிரம் வெளியே வந்து விட முடியாது. ஒரு பெண்ணின் எல்லைகள் என்பது ஒரு வட்டத்திற்குள் தான் இருக்கும் என்பது போன்ற பல விசயங்களை நான் எப்படிப் புரியவைத்தாலும் உன்னால் புரிந்து கொள்ள முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை மகளே? ஆனால் உன் அப்பா அறுபது வயது கிழவனுக்குப் பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னைத் தாரை வார்க்க நினைத்த போது தான் எனக்குள் இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைத்துக் கொண்டு உன்னையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்குள் நுழைந்தேன். நம் இருவரையும் இனிதே வரவேற்ற திருப்பூர் நீ என்னை விட்டுப் பிரிந்து போவதற்கும் காரணமாக இருந்து விட்டதடி மகளே?   திருப்பூர் ரயில் நிலையத்தில் நம்மை நோக்கி வந்த காவல்துறையினர் கையில் சிக்கினால் விசாரணையில் தொடங்கி விபரமாகக் கையாண்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் கதர்ச்சட்டை ஆசாமியிடம் வலியச் சென்று பேசினேன். அவர் சட்டை மட்டும் தான் கதராக இருந்தது. உள்ளே இருந்த இதயம் காமுகனாக இருந்தது. உன்னை அமர வைத்து விட்டு அவர் அறைக்குச் சென்ற போது அவர் போட்ட ஒப்பந்தத்தை நீ கேட்டால் துவண்டு விடுவாய் என்று மறைத்தேன். அடுத்த மூன்று மாதத்தில் நான் வேலை தேடிச் சென்ற நிறுவனங்களில் வேலைக் கிடைத்தது. ஆனால் பார்த்த வேலைகளோடு நான் எதிர்பார்க்காத வேலைகளும் செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்கள் மேல் தவறில்லை. என்னைக் காத்துக் கொள்ள வெளியேறிய போதும் கல்வி அறிவு இல்லாமல் தகுதியான வேலைகளில் அமர முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன். பல பெண்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு இடத்திலும் அலங்கோலமாகத்தான் இருக்கிறது மகளே? சிலர் விருப்பம் இல்லாத போது கூட நிர்ப்பந்தம் மூலம் மாற்றப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் பலருக்கும் வேறு வழியில்லாமல் இதிலும் ஒரு விதமான சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இயல்பாக வாழும் பெண்களும் பலரும் இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்தவரைக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் மன உளைச்சல் வேறு வழியே வந்து தாக்கிக் கொண்டே தான் இருக்கிறது. மொத்தத்தில் தொழில் நகரங்களில் ஒவ்வொரு பெண்ணுமே நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அழகு கவர்ச்சி போன்ற சொல்லுக்குத் தகுதியான பெண்களின் உண்மையான திறமைகள் சமூகத்தில் இரண்டாம் பட்சமாகி விடுகின்றது என்பதை அப்போது தான் முழுமையாகப் புரிந்து கொண்டேன்.   ஜாதி,மதம், நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சொல் இந்தப் பாலுணர்வு உணர்ச்சிகள் தான். பருவநிலை பொறுத்து புணர்ந்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடும் மிருகத்தையும் மனித இனத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை. வெவ்வேறு ஆசைகளுக்கு அடிபணிந்து அலங்கோல வாழ்க்கை வாழும் பெண்கள் ஒரு பக்கம். வெறியை மனதில் வைத்துக் கொண்டு வெளிவேஷம் போடும் ஆண்கள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் வாழும் எண்ணிக்கை சொற்பமானது. என் அழகும், இளமையும் உன் அப்பாவுக்குத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. ஆனால் என்னுடைய தொழில் வாழ்க்கை போராட்டத்தில் அதுவே என்னைப் பலவிதங்களிலும் படாய் படுத்தி எடுத்தது. பல காமாந்த ஆண்களிடம் தப்பி வந்த எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. வேறுவழியே தெரியாமல் மீண்டும் அந்தக் கதர்ச்சட்டையிடம் தான் அடைக்கலம் தேடிப் போனேன் மகளே? நான் எதிர்பார்த்ததை விட என்னை நன்றாகவே வைத்துக் கொண்டார். உன் அப்பா எனக்குப் பிரச்சனையாக இருந்ததைப் போல அவர் குடும்ப வாழ்க்கையில் தொடக்கம் முதலே அவர் மனைவியே அவருக்கு எதிரியாக இருந்து தொலைக்க அவரும் ஏதோவொன்றை தேடிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன். எங்களுக்குள் உருவான தொடர்பில் உன்னுடைய அடிப்படைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. அதுவே உன் சிறகுகளைப் பலப்படுத்த உதவியது. நீ அவருடன் சேர்த்து என்னை நம் வீட்டில் வைத்துப் பார்த்த போது கூட நான் வெட்கப்படவில்லை. நீ எந்த நோக்கத்தில் எங்களைப் பார்த்து இருப்பாய் என்பதைப் பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. தியாகம் என்ற வார்த்தையை இந்த இடத்தில் நான் எழுதிவைத்தால் நீ சிரித்து விடுவாய். ஒழுக்கம் தவறிய பாதையில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த வார்த்தைக் கொண்டு எழுதி வைத்தாலும் படிப்பவர்களின் பார்வையில் நான் ஏளனமாகத்தான் தெரிவேன். ஆனால் என் நோக்கமென்பது உன்னைச் சுற்றியே இருந்ததால் என் எல்லையைத் தீர்மானித்துக் கொண்டு அவரையே சார்ந்திருக்கத் தொடங்கினேன். சரி தவறு என்ற வார்த்தைகளோ, விவாதம் செய்யவோ எனக்கு விருப்பமில்லை. உன் அப்பா என்ற ஆண் தொடங்கி வைத்த பயணம். ஆனால் மற்றொரு ஆண் மூலம் அது முடிவடைந்ததாகக் கருதுகின்றேன். எல்லோருமே இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாமா என்ற கேட்பாய்? அவரவர் சூழ்நிலை? அவரவர் அனுபவம்? அதற்கான பலன்களையும் அவர்களே தான் அனுபவிக்க வேண்டும். மற்றொரு பெண்ணின் சாபமா? அல்லது என்னுடைய விதி முடிய வேண்டிய நேரமா தெரியவில்லை. அதையும் நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் இந்த உலகில் நமக்கு முன்னால் வாழ்ந்த பலரின் தியாகத்தால் தான் நீயும் நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீ உணர்வாயா மகளே? அம்மா நேர்மையாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும்? என்பது நீ யோசிப்பது புரிகின்றது. வேறொன்றும் நடந்திருக்காது. நீயும் என்னைப் போலவே ஏதோவொரு நிறுவனத்தில் அடிமட்ட ஊழியராக உள்நுழைந்து உன்னை நீ நிரூபித்துக் காட்டுவதற்குள் உன்னையே இழந்திருக்கக்கூடும். நான் பார்த்த தொழில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு பெண்படும் பாடுகளை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன். எந்த வகையில் பார்த்தாலும் பெண்களுக்குக் கல்வி தான் முதல் ஆயுதம். அதற்குப் பிறகு தான் மற்றது எல்லாமே என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் தான் நான் உன்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டு உன் பாதையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டேன். நீ என்னைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி யோசித்தே மன உளைச்சல் அடைந்தால் உன் இலக்கை நீ எப்படி அடைவாய் மகளே?   பேசாத வார்த்தைகளும், மௌனமும் உருவாக்கும் சக்தி என்பதை ஒரு பெண் புரிந்து கொண்டால் எப்படி மாறுவாள் என்னைப் போலவே நீயும் உதாரணமாய்த் தெரிகின்றாய். ஆனால் அவற்றை நேர்மறை எண்ணமாக மாற்றிக் கொண்ட நீ எனக்கு மகள் அல்ல. எனத் தாய் போலவே மாறி என்னைத் தவிக்க வைத்து விட்டாய் மகளே? உன்னுடைய பார்வையில் நான் ஆசை நாயகியோ அல்லது வாழ்க்கையின் அசிங்க நாயகியோ எதுவாகயிருந்தாலும் நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து அமைதியாக இப்போது உன்னிடமிருந்து நான் விடைபெறுகின்றேன். என்னுடைய இலக்கென்பது நான் பட்ட துன்பங்கள் உன்னை வந்து சேரக்கூடாது. உன் வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் தான் விட்டுப் போன உன் கல்வியில் உன்னைக் கவனம் வைக்கச் சொன்னேன். ஆனால் படிக்கும் கல்வி மட்டும் ஒழுக்கத்தைத் தந்து விடாது. வளர்ப்பு, சூழ்நிலை என்ற பல காரணிகள் உண்டு. இதற்கு மேலாகச் சுய சிந்தனைகள் கூர்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை நான் புரியவைக்க வாய்ப்பு கொடுக்காமலேயே நீயே சுயம்புவாய் மாறி இன்று உயரத்தில் இருப்பதை நினைத்து பெருமையாய் இருக்கு மகளே? என்னுடைய அசிங்க பக்கங்களை உன்னிடம் காட்டாமல் அமைதி காத்தேன். உனக்குள் இருக்கும் கோபங்கள் நியாயமானது தான். ஆனால் எல்லா நியாயங்களுக்குப் பின்னாலும் ஒரு சிறிய அளவு அநியாயமும் கலந்து தான் இருக்கும் மகளே? உள்ளூர் பார்வையில் நான் உணர்ந்த வாழ்க்கையில் நான் எழுதும் இந்த எழுத்துக்கள் உலகப் பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்கும் உனக்குப் புரிவதில் சிரமம் இருக்காது., சரி தானே மகளே?   நேர்மை, உண்மை, சத்தியம், ஒழுக்கம் போன்ற பல வார்த்தைகள் இன்று வலுவிழந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் காரணங்கள். அவசர உலகில் ஆறுதல் சொல்லக்கூடக் கூலி கேட்கும் உலகில் நான் அடைக்கலம் புகுந்த கதர்ச்சட்டை என்னைக் கண்ணியமாகவே வைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உருவான குடும்ப, தொழில் வாழ்க்கை சூறாவளியை பொருட்படுத்தாமல் என்னைக் கவனமாகப் பாதுகாத்தார். என்னை விட உன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவையெல்லாம் நீ அறியாதது. ஆனால் இந்த அன்பு தான் அவருக்கு இறுதியில் வினையாக மாறியது. வாகன விபத்தில் மாட்டிய அவரை "செத்துத் தொலையட்டும்" என்று புறக்கணித்த அவர் மனைவியை விட நான் பெருமைப்படக்கூடியவள் தான். தகவல் கிடைத்த நான் அவசரமாய் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது தான் எங்களின் விதியின் விளையாட்டு நேரமும் அங்கிருந்து தான் தொடங்கியது. அவசர உதவிக்காக நுழைந்த அவருக்குச் சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய்க் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்? அவருடைய ஆள் அம்பு சேனைகள், பணபலம் என்று பின்னால் வந்து நின்றாலும் அவர் அறியாமல் எனக்குக் கொடுத்த அந்த உயிர்க் கொல்லியை சுமந்தபடி வாழும் சூழ்நிலையில் மாறிப் போனேன். அவர் சில மாதங்களுக்கு முன் உலகை விட்டுச் சென்று விட்டார். இதே இப்போது நானும் அவர் சென்ற காலடித் தடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன் மகளே? நான் இதுவரைக்கும் உனக்கு அறிவுரை என்று எதுவுமே சொன்னதில்லை. நீயும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியதும் இல்லை. நீ சென்று கொண்டிருக்கும் உயரங்களைப் பலர் மூலம் நான் கேட்டறிந்து என் துயரங்களை மறந்த நாட்கள் பல உண்டு. உன்னுடைய ஒழுக்கமும், அயராத உழைப்பும் பணத்தைக் கொடுத்தது.   நீ பெற்ற வசதிகளை அனுபவிக்கும் பொருட்டு நான் உன்னைத் தேடி வரவில்லை. என் நோய் குறித்து உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவே வந்தேன். ஆனால் உன்னுடைய புறக்கணிப்பை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டு திரும்பி வந்தேன். உனக்கு வாழ்த்த வார்த்தைகளைத் தேட வேண்டிய அவஸ்யமில்லாமல் உன் ஆளுமையைப் பார்த்து அதிசயமாய்த் திரும்பி வந்தேன். உன்னைச் சுமந்த இந்த வயிற்றுக்கு வாலிப சந்தோஷத்தை தந்தது மகளே? இறைவன் உன்னோடு இருந்து உன்னைக் காக்க வேண்டும் என்று வாழ்த்த மாட்டேன். கட உள் என்பது உள்ளே தான் இருப்பது. நீ அதை உணர்ந்ததோடு உன்னையும் அறிந்து உலகத்தையும் புரிந்து நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. நீ அடுத்த ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக வர வேண்டும் மகளே? உன் வயிற்றில் நான் பிறக்க வேண்டும் தாயே? இதற்கு மேல் எழுத என்னால் எழுத முடியவில்லை. எழுதாத வார்த்தைகள் ஆயிரம் பக்கத்தில் சொல்ல வேண்டியதற்குச் சமமடி மகளே. விடைபெறுகின்றேன். உன் அம்மா. (இந்த உறவை இன்னமும் மனதில் வைத்திருப்பாய் தானே?) ரயில் வெளிச்சத்தில் படித்து முடித்து விட்டு அந்தக் காகிதத்தை அவரிடம் கொடுத்தேன்.   இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. திருப்பூர் ரயில் நிலையம் மூன்று மொழிகளில் எங்கள் இருவரையும் வரவேற்றது. அவருக்கான வாகனம் வந்து நின்றது. என் வாகனத்தை நோக்கி நகர்ந்த போது என் பெயர் சொல்லி அழைத்தார். அடுத்த அரைமணி நேரம் ஆள் அரவமற்ற அந்த ரயில் நிலைய முகப்பில் வேறு சில விசயங்களையும் பேசினார். நான் வீட்டுக்கு என்னுடைய வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர் என்னிடம் பேசிய விசயங்களை நினைத்துப் பார்த்தேன்........... "ஆண் என்பவன் எல்லா இடங்களிலும் அவனுக்குப் பிடித்த சூழ்நிலை அமைந்திருந்தால் தன் பாரத்தை இறக்கி வைத்து விடுவான். அறிமுகம் இல்லாதவர், அச்சப்படக்கூடியவர் என்பதைப் பற்றிப் பிறகு தான் யோசிப்பான். ஆனால் பெண் என்பவள் அத்தனை சீக்கிரம் எந்த இடத்திலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்கள் குறித்த அச்சமும் சமூகம் குறித்த பயமும் இன்னும் பல காரணங்களால் தன்னை அத்தனை சீக்கிரம் வெளியே காட்டிக் கொள்வதில்லை". "ஆனால் பெண் என்பவளை எந்தவிதமாகப் பார்த்தாலும் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுமே அன்புக்கு ஏங்குபவளாகத்தான் இருக்கிறாள். தன்னைப் புரிந்து கொள்ள எவராவது கிடைக்க மாட்டார்களா? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தன்னைக் குறுக்கிக் கொண்டு வாழும் ஆணோ பெண்ணோ ஏதோவொரு சமயத்தில் மொத்தமாகத் தன்னைப் பற்றி எவரிடமோ கொட்டிவிடுவதுண்டு." "ஆனால் எனக்கு அதற்கான சந்தர்ப்பந்தங்கள் அமைந்ததுமில்லை. உருவாக்க விடுவதுமில்லை. நீங்கள் ரயிலில் ஏறி அமர்ந்ததும் உங்கள் மனைவியிடம் குழந்தைகளிடம் பேசிய வார்த்தைகளை உங்களை அறியாமல் கவனித்த போது என் மனோரீதியான கவனம் உங்கள் மேல் விழுந்தது. "   "நான் சார்ந்திருக்கும் பல நிறுவனங்கள் என்னைப் பல விதங்களிலும் கண்காணித்து இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் என்னை இட்டு நிரப்பி விடுவதுண்டு." "எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் என் உள்ளாடை முதல் தெரியும் இடுப்பு வரைக்கும் அளவெடுக்கும் வரைக்கும் ஆண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன். நீங்கள் நல்லவரா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் முயற்சித்துக் கொண்டிருப்பது மட்டும் புரிகின்றது." "அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பல நிறுவனங்களில் நான் பார்க்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்விக்கான கட்டண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். காரணம் ஆண்கள் என்பவர்களுக்கு எந்தச் சூழ்நிலையும் சாதகமாக அமையும் அல்லது உருவாக்கிக் கொள்ளலாம். " "ஆனால் பெண்களுக்குச் சற்றுக் கடினம் தான். இது இந்தியா மட்டுமல்ல. நான் பார்த்த வெளிநாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. பெண்கள் எழுதலாம், ஆடலாம், பாடலாம், படிக்கலாம். பிடிக்காத கணவன் என்றால் வெளியேறி தனக்கான வாழ்க்கையை வாழலாம். ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. " "எழுத்தாளராக, விஞ்ஞானியாக, அதிகாரியாக, அரசில் உயர் பதவியிலும் கூட இருக்கலாம். ஆனால் அவருக்குப் பின்னாலும் முன்னாலும் ஒரு ஆண் பார்வை இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் வலிமை மட்டுமல்ல உள்ளத்தின் வலிமையும் என் பார்வையில் ஆண்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் நான் அறிவேன். இவ்வளவு அறிவீலிகளா? என்பதையும் பல இடங்களிலும் பார்த்து இருக்கின்றேன். "   "ஒரு ஆண் தன்னை எந்தச் சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகளையும் அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் பெண்கள்? ஒவ்வொரு பெண்ணுமே தனக்கு பிடித்த சூழ்நிலை, தான் விரும்பும் குணாதிசியம் உள்ள கணவன் காதலன் என்று ஆசைகளால் அவஸ்த்தைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமைதியைக் கையாண்டு கவிழ்த்து விடும் ஆண்களைப் போலவே அத்தனையும் இழந்தாலும் திருந்தாத பெண்களையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்." "நான் சந்திக்கும் நபர்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் சூழ்நிலையை அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை வைத்துத் தான் அவர்களை மதிப்பீடு செய்கின்றேன்." மரணத்தினால் பாவங்கள் அழியும் அந்த மரணத்தினால் பல சாபங்கள் தீரும்... நாகமணியின் அம்மா குறித்து யோசித்த போது நான் சமீபத்தில் கோவை மின் மயானத்தில் கேட்ட பாடல் என் நினைவுக்கு வந்தது. யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்த போது தூங்கிக் கொண்டிருந்த என் குழந்தைகளின் மேல் பார்வையை ஓட விட்டேன். சில எண்ணங்களும் ஒரு சில வைராக்கியமும் எனக்குள் உருவானதை என்னால் உணர முடிந்தது. முற்றும்                         அந்தரங்கம் 2   என் டைரிக் குறிப்புகள்                                 (1) தென்பாண்டி சீமையிலே பிறந்த ஊருக்கருகே சாக்கோட்டை என்றொரு சிறிய ஊர் உண்டு. பழமைவாய்ந்த ஒரு பெரிய கோவிலும் அதனைச்சுற்றிலும் கிராமங்களும் உண்டு. முக்கியமாக வருடந்தோறும் நடக்கும் தேர்த்திருவிழா. ஒரு வாரம் முழுக்க நடக்கும். சிறிய, பெரிய கோவில் என்று விசேடத்தில் சுற்றியுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கிராமவாசிகளை ஒன்று சேர்க்க வைக்கும். எங்கள் வீட்டிலிருந்து இந்தக் கோவிலுக்கு வரும் வழியில் தான் கருமான் பட்டறைகள் இருந்தன. காலப்போக்கில் இதுவே தற்போது லேத் என்கிற நிலைக்கு மாறியுள்ளது. ஊருக்குள் அரிசி ஆலைகள் அதிகமாக இருப்பதால் சுற்றியுள்ள அத்தனை கிராமத்தில் உள்ள விளைந்த நெல்லுக்குரிய சந்தை இந்த இடத்தில் உள்ள பொட்டலில் தான் நடக்கும். காலை நான்கு மணியளவில் சென்று பார்த்தால் நூற்றுக் கணக்கான வண்டிகள் நெல்மூட்டையோடு நின்று கொண்டிருக்கும்.   அதிகாலையில் தொடங்கும் வியாபாரம் காலை ஏழுமணிக்குள் விலை பேசப்பட்டுக் குறிப்பிட்ட அரிசி ஆலைகளில் இறக்கி வைத்து விட்டுச் சென்று விடுவர். இந்தப் பொட்டலுக்கு அருகே இருக்கும் ஆலமரத்திற்குக் கீழே தான் சில கருமான் பட்டறைகள் இருந்தன. மாட்டுக்கு லாடம் கட்டுபவர் முதல் இளைப்பாறி விட்டுச் செல்பவர் வரைக்கும் அத்தனை பேர்களையும் இந்த இடத்தில் பார்க்க முடியும். இந்தப் பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம் இரும்பை பழுக்கக் காய்ச்சி அடித்துக் கொண்டிருக்கும் சப்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டேயிருக்கும். யாரோ ஒரு சிறுவன் துருத்தியை இடைவிடாது இயக்கிக் கொண்டிருப்பான். நவீனங்கள் இல்லாத காலத்தில் ஒரு கம்பி வழியே கட்டப்பட்ட துணி குழாய் போல மாற்றப்பட்டு நெருப்பின் அருகே சென்று சேர்ந்திருக்கும். துணியின் முடிவில் ஒரு சிறிய தகர வடிவில் காற்றைத் தள்ளும் எந்திரமும் இருக்க இதை இயக்கத்தான் அந்தப் பையன் ஒரு கயிற்றை மேலும் கீழே இழுத்தபடியே இருப்பான். இதைப் பலமுறை பார்த்துள்ளேன். ஆனால் அங்கேயிருந்து வரும் சப்தமென்பது காது சவ்வை கிழிக்கும்படி இருக்கும். ஐந்து நிமிடங்கள் இந்த இடத்தில் இருந்தாலே நமக்குத் தலைவலி வந்து விடும். கடந்து செல்லும் போது பலமுறை யோசித்துள்ளேன். எப்படி இவர்களால் ஒரு நாள் முழுக்க இந்தச் சப்தத்தில் இருந்து கொண்டே வேலை செய்ய முடிகின்றது? காரைக்குடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் பல இடங்களில் சில்வர் பட்டறைகளும், சொம்பு, குடங்கள் தயாரிக்கும் வெங்கல பட்டறைகளும் நிறைய இருந்தன. இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது. இந்தச் சந்தின் உள்ளே நுழைந்து வெளியே வந்தால் பல மணி நேரம் நம் காதில் ணங் ணங் என்று சப்தம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அங்கே வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம் எந்த மாறுதலும் இருக்காது.   எப்போதும் போல ஒவ்வொருநாளும் அதே பணியை இடைவிடாது செய்து கொண்டிருப்பதைப் பார்த்துள்ளேன். ஆச்சரியமாய்ப் பார்த்துள்ளேன். திருப்பூருக்குள் நுழைந்த தொடக்கத்தில் நவீனங்கள் உள்ளே வராத சூழ்நிலையில் அறவு (நிட்டிங்) எந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கும் இடங்களில் சப்தங்களுடன் பலரும் உள்ளே பணிபுரிந்து கொண்டிருப்பர். அந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கும் பஞ்சுப் பொதிகளையும்,அதை சுவாசித்துக் கொண்டே பணிபுரியும் வேலையாட்களையும் பார்த்த போது மனதில் இனம் புரியாத சோகமும் பயமும் உருவாகும். . இன்று பலவிதமான பெரிய எந்திரங்கள், அது தரும் காதைப் பதம் பார்க்கும் ஒலிகள் என்று எத்தனையோ பார்த்துப் பார்த்து அத்தனையும் பழக்கமாகிவிட்டது. சாலைப் போக்குவரத்தில் முன்னும் பின்னும் துரத்தும் ஒலிகளும் சப்தமும் நடுக்கத்தை உருவாக்கி வீடு வந்து சேரும் வரையிலும் உடம்பில் ஒருவிதமான படபடப்பை உருவாக்குவது வாடிக்கையாக மாறிவிட்டது. ஏறக்குறையச் சப்தமே வாழ்க்கை. நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இது போன்ற இரைச்சலோடு தான் வாழ்ந்தாக வேண்டும் என்று சூழ்நிலையை மனம் இயல்பாக ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால் சமீபகாலமாகப் பணத்தேடல்களை விட மனம் சார்ந்த தேடல்களும் பழக்கத்தில் வந்து விட இரைச்சல் இல்லாத இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று மனதில் ஒவ்வொரு சமயமும் தோன்றிக் கொண்டேயிருக்க தென் மாவட்ட சுற்றுப்பயணம் இயல்பாக அமைந்தது.   கல்லூரி படிக்கும் வரையிலும் மதுரைக்கு ஒரு முறை வந்துள்ளேன். தேர்வு தாள் குளறுபடிக்காக வந்த அனுபவம் மட்டுமே இருந்தது. திருப்பூரிலிருந்து ஊருக்குச் செல்ல மதுரை வழியே சென்றால் கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அந்த வழியே பயணிப்பதில்லை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பல தடவை பல்வேறு காரணங்களாக மதுரை சென்றபோதிலும் மதுரையைத் தாண்டியுள்ள எந்த ஊருக்கும் சென்றதே இல்லை.   குறிப்பாகத் தென் மாவட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற வத்தலக்குண்டு தொடங்கி அந்தப் பக்கம் உள்ள எந்த ஊரும் எனக்கு அறிமுகமே இல்லை. செய்தித்தாள்களில் படிப்பதோடு சரி. தொழில் நகரங்களில் ஞாயிறு மட்டுமே சற்றுச் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியும். அதுவும் பலசமயம் மறுக்கப்படும் அபாயமும் உண்டு. நமது தனிப்பட்ட தேவைகள் தான் இது போன்ற பயணத்தைத் தீர்மானிக்கின்றது. தனிப்பட்ட முறையில் ஆசைகளுக்காக என்று எந்த ஊருக்கும் செல்ல சமய சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. நானும் ஆசைப்படுவதும் இல்லை. தொடக்கத்தில் கோவில்கள் மேல் இருந்த ஆசையும் பற்றும் பல ஊர்களுக்குப் பயணிக்க வைத்தது. அதுவும் முடிவுக்கு வந்தது. ஊர்கள், நாடுகள் குறித்துப் பலவற்றையும் படிக்கப் படிக்கத் தமிழ்நாட்டில் உள்ள இதுவரையிலும் பார்க்காத ஊர்கள் மேலிருந்த ஆசைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தென் மாவட்டத்தில் தேனியில் தொடங்கி ஏழெட்டு ஊர்களுக்கு நண்பரோடு இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றி வந்த போது இயற்கையோடு வாழும் அவர்களின் வாழ்க்கையை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.   சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்ட அனுமதிக்காமல் பல இடங்களில் இரண்டு பக்க சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் அளவோடு பணிபுரிந்து விட்டுப் பணிவோடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சாலை வசதிகள் சிறப்பாகவே உள்ளது.   இரண்டு நாள் பயணத்தில் முழுமையாக இந்த ஊர்களை உள்வாங்க முடியவில்லை என்ற போதிலும் சுற்றிய ஒவ்வொரு மணி நேரத்திலும் உடம்பில் உள்ளூர ஊடுருவிய காற்றும் மழையும், பனியும் சாரலும், நரம்பு மண்டலத்தைத் தாக்கிய சுகம் அடுத்த ஒரு வாரத்திற்குப் போதுமான சக்தியைத் தந்தது. சக்கையாக மாறியிருந்த மனதில் இனம் புரியாத எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்ததை உணர்ந்து கொள்ள முடிந்தது. சில மாதங்களுக்கு முன்னால் நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட போது அவர் மகனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மகன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி உரையாடும் போது சொல்லிக் கொண்டே வந்தார். அங்கே சுரங்க தொழிலில் உள்ளவர்களும், மற்ற குறிப்பிட்ட துறைகளில் இருப்பவர்களும் வருடத்தில் நான்கு மாதங்கள் தாங்கள் பணிபுரியும் வேலையை விட்டுவிட்டு நாடு நாடாகச் சுற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன போது நமது இந்தியச் சூழலை நினைத்துக் கொண்டேன்.   வாழ்க்கையில் பாதித் தூரம் வந்து விட்ட பயணத்தில் தமிழ்நாட்டின் பாதிப் பகுதிகளைக் கூட இன்னமும் முழுமையாகப் பார்க்காத இந்த வாழ்க்கையில் இந்தியாவின் முழு விஸ்தீரணத்தை எங்கே எப்படி உணர்ந்து கொள்ள முடியும்? நான் பயணித்து வந்து தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்து வந்த போது என் கண்களில் பசுமை தான் நிறைந்திருந்தது. எங்கெங்கு காணினும் பசுமையடா? என்ற எண்ணமே என் எண்ணத்தில் மேலோங்கியிருந்தது. அப்போது தான் எங்கள் வீடடில் எங்கள் அனுமதியில்லாமல் வளர்ந்து கொண்டிருந்த செடியும் என் நினைவில் வந்து போனது.       (2) போதி மரம் "தயவு செய்து இந்தச் செடியை வெட்டி விடாதே" என்று மனைவியிடம் கெஞ்சலாகக் கேட்டு அந்தச் செடியைக் காப்பாற்றி வைத்திருந்தேன். நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு காலையில் கழிப்பறைக்குச் செல்லும் போது அந்தச் செடியைக் கண்டேன். சந்து போன்ற பகுதியில் சுவரின் ஓரமாகச் சிமெண்ட் தரையிலிருந்து அந்தச் செடி முளைத்திருந்தது. அதுவும் சுவரின் ஓரமாக அருகே இருந்த சிமெண்ட் பைப் விரிசலின் இடைவெளியில் கிடைத்த துளி அளவு ஓட்டைக்குள் இருந்து அந்த விதை ஜனனமாகியிருந்தது. ஒரே ஒரு பச்சை இலை என்னை வரவேற்றது. ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வாரங்கள் கழித்துப் பார்க்கும் போது நாலைந்து இலைகளுடன் அழகான ஒரு குறுஞ்செடியாக மாறி பச்சை பசேல் என்று என்னைப் பார்த்துச் சிரித்தது. சுவரின் ஓரமாக அந்தச் செடி வளர்ந்த காரணத்தினால் சுவரில் விரிசல் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் மனைவி அந்தச் செடிக்கு தூக்குத் தண்டனை நாள் குறித்து இருந்தார். முதல் நாள் இரவில் வெளியே அமர்ந்து குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் எண்ணத்தைச் சொன்ன போது திடுக்கிட்டுப் போனேன்.   சில வாரங்களுக்கு முன்னால் தான் வீட்டில் மற்றொரு படுகொலை நடந்திருந்தது. வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. வீட்டின் உரிமையாளர் பெண்மணி அந்த மரத்தைப் பற்றி அவ்வப்போது புலம்பலாகப் பேசிக் கொண்டிருப்பார். தினந்தோறும் உதிரும் சருகுகள் அவருக்கு வேலை வைத்துக் கொண்டிருந்தது. என்னால் தினமும் கூட்டிப் பெருக்க முடியவில்லை. இந்த மரத்தை வெட்டினால் தான் சரியாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லியிருக்க அந்தச் செய்தி என் காதுக்கு வந்து சேர்ந்த போது அதிர்ச்சியடைந்தேன். மறுநாளே அவரிடம் சென்று "அந்த மரத்தை வெட்டிவிட வேண்டாம்" என்று வேண்டுகோள் வைத்தேன். மனைவியும் அவரும் சிரித்தனர். ஒரு நாள் மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்து சேர்ந்த போது சுத்தமாக மொட்டையடிக்கப்பட்டுத் தூர் மட்டும் மிஞ்சியிருந்தது. எங்கள் வீட்டின் சந்தின் முனையில் நுழைந்த எனக்குத் தூரத்தில் பார்த்த போதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இவர்களிடம் பேசி பலன் இல்லை என்று நினைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் மனம் துக்கத்தை மனதிற்குள் கொண்டாடிவிட்டு கடந்து வந்து விட்டேன். பல வருடங்கள் வளர்ந்த மரம். நிழல் தந்து அந்த இடத்தையே குளுமையாக வைத்திருந்தது. சருகுகள் வேலை வாங்க ஒரே முடிவில் முடித்து விட்டார்கள். ஊரில் வாழ்ந்த போது அம்மா, அக்காக்கள் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்தின் சருகுகளையும் தினமும் கூட்டிப் பெருக்கும் நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. நானும் தம்பிகளும் கூடப் பல முறை கூட்டிப் பெருக்கியிருக்கின்றோம். குளுமையாக இருந்த நாட்கள் இன்று வரையிலும் மனதில் பசுமையாக உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் போது நாம் தினந்தோறும் இழக்கும் இழப்புகள் கணக்கில் அடங்கா? தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதர்களும் இங்குள்ள அமைப்புகளும் ஒவ்வொரு காரணம் வைத்துள்ளார்கள். அரசாங்கம் சாலை விரிவாக்கம் செய்கின்றோம் என்று 50 வருடங்கள் வளர்ந்த மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்து விடுகின்றார்கள். இந்தச் செயலில் ஈடுபடும் அதிகாரிகளிடம் பேசிப் பாருங்கள்? முதலில் பேசவே மறுப்பார்கள். அப்படியே பேசினால் கூட எகத்தாளமாகப் பேசுவார்கள். ஈரம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள்? நாம் இங்கே வாழ வேண்டுமென்றால் பலவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். பேசிக் கொண்டிருந்த போது குழந்தைகளிடம் கேட்டேன். "அந்தச் செடியைப் பார்த்தீர்களா?" என்று. ஒருவர் மட்டும் கவனித்திருந்தார். ஆனாலும் அதனை அவர் பொருட்படுத்த தயாராக இல்லை. அடுத்த இருவரும் அப்போது தான் பார்க்க ஓடினார்கள். மனதில் குறித்துக் கொண்டேன். காலையில் தாமதமாக எழுவதும், மனைவியிடம் திட்டி வாங்கிய பின்பு ஆடி அசைந்து குளியல் அறைக்குச் செல்லும் இவர்கள் எதையும் கவனிப்பதில்லை என்பதனை உள்வாங்கிக் கொண்டேன். விடாத வேதாளம் போல மூவரிடமும் அலுவலகம் செல்லும் போது ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றேன். அந்தச் செடி மூலம் என்ன உணர்ந்தீர்கள்? என்ன கற்றுக் கொண்டீர்கள்? நான் அலுவலகம் முடித்து இரவு வந்ததும் எனக்குச் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். எப்போதும் போல நான் கேட்ட கேள்வியை மறந்து விட்டனர். இரவு சாப்பாடு முடிந்து தூங்கச் சென்றவர்களிடம் மறக்காமல் கேட்டேன். அப்போதும் நாளை பேசிக் கொள்ளலாம் என்று அவசரம் அவசரமாகத் தப்பிப்பதில் குறியாக இருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்து காலைவேளையில் அந்தச் செடிக்கு அருகே நின்று கொண்டு வந்த ஒவ்வொருவரிடமும் இந்தச் செடி மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள்? என்ற கேள்வியைக் கேட்ட போது இனி தப்பிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பதிலைத் தந்தனர். மூத்தவர் மட்டும் நான் நினைத்திருந்ததற்கு அருகே வந்து பதில் அளித்தார். "போராடினால் வெற்றி நிச்சயம்" என்றார். அடுத்த இருவரும் "நிறையக் கஷ்டப்பட்டு வளர்கின்றது" என்றார்கள். சரி இரவு வந்ததும் பேசுகின்றேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டேன். உனக்கு அறிவு இருக்கா? உன் தலையில் களிமண்ணா இருக்கு? ஏன்டா இது கூட உனக்குப் புரியலையா? போன்ற கேள்விகளை நாம் படித்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சொல்லி பல முறை கேட்டு கடந்து வந்திருப்போம். நம்முடன் படித்த பலரையும் பரிகசித்த ஆசிரியரை, சக மாணவ மாணவியரைப் பார்த்து பயந்த காலத்தை இப்போது யோசித்துப் பார்த்தாலும் வியப்பாகவே உள்ளது. இன்று வரையிலும் அறிவு என்றால் என்ன? அதன் அளவு கோல் தான் என்ன? என்பதனை இன்று வரையிலும் நம்மால் அறுதியிட்டுக் கூற முடியுமா? சிந்தனை செயலாக்கம் என்பது இயற்கையில் உருவாகக்கூடிய ஒன்றா? அல்லது சூழ்நிலையின் காரணமாக இயல்பாகவே வரக்கூடியதா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு சமயத்திலும் நான் பதில் தேடிக் கொண்டேயிருப்பதுண்டு. படு பயங்கர மக்கு என்று ஒதுக்கப்பட்ட பலரும் இன்று கோடீஸ்வர்களாக இருக்கின்றார்கள். படிப்பில் சுட்டி என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் இன்று மாதந்திர சம்பளத்திற்குள் வாழ்க்கையைப் பணயம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.   நாம் பார்க்கும் அரசியல்வாதியை நம்மால் திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள முடிகின்றதா? ஒரு அமைச்சராவது ஒரு மாநிலத்தை நிர்வாகிக்கக் கூடிய திறமையுள்ளவர் என்று நம்மால் அடையாளம் காட்ட முடியுமா? இவர்கள் எப்படி ஐஏஎஸ் முடிந்தவர்களை, மற்ற அதிகாரிகளை வேலை வாங்க முடியும்? அவர்கள் எழுப்பும் வினாக்களை எப்படிச் சமாளிப்பார்கள்? எந்த அளவுக்கு நிர்வாகத்திறமையைக் கற்றிருப்பார்கள்? போன்ற பலவற்றை யோசித்தாலும் அத்தனையும் மக்களாட்சி தத்துவம் என்பதற்குள் அடங்கி விடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் படிக்காதவன் முதலீட்டில் கட்டப்பட்ட கல்லூரிகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர் மாத சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா? என்ற அச்சத்தில் தான் வாழ வேண்டியுள்ளது. இதனையே குழந்தைகள் விசயத்தில் பல சமயங்களில் யோசித்துப் பார்ப்பதுண்டு. இவர்கள் மூவரும் பிறந்த அந்தக் கணத்தில் அவர்கள் அழுகை என் காதில் விழுந்த நொடிப் பொழுது முதல் இன்று வரையிலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கவனித்தே வருகின்றேன். எத்தனை பேர்களால் இப்படி முடியும்? என்று யோசித்துள்ளேன். அவர்களின் படிப்படியான வளர்ச்சியைக் கவனித்தவன் என்ற முறையில் இன்று ஏராளமான ஆச்சரியங்களும், அதிசியங்களும் ஒருங்கே எனக்குக் கிடைத்துள்ளது. "ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதனை அவனிடம் கற்றுக் கொண்டு வாங்க" என்று என் அம்மா எனக்குக் கொடுத்த உயர்ந்த பட்ச அங்கீகாரம் இன்று காற்றில் பறந்து விட்டது. காரணம் இவர்கள் முழுமையாக மாறியுள்ளார்கள். அதில் ஒரு படி தான் இப்போது இந்தச் செடி குறித்து அவர்களிடம் கேட்ட கேள்விகளும்.   எல்லாமே இவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதால், விரும்பிய அனைத்தும் இதுவரைக்கும் கிடைத்த காரணத்தால் இவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு விதமாக அமைந்துள்ளது. கடைசியாக அவர்களிடம் சொன்னேன். "நான் பயன்படுத்துப் பீரோவில் ஒரு வாசகம் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளேன். அதனைப் படித்துப் பாருங்கள்" என்றேன். இருவர் வேகமாகச் சென்று பார்த்து விட்டு உரக்கப் படித்தார்கள். "பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல. தன்னம்பிக்கை".       (3) நடைபயிற்சி திடீரென்று பைத்தியம் பிடித்து விடும்? என்ன காரணமென்று மனம் உணர்வதற்குள் விருப்பங்கள் ஆர்வமாய் மாறி உடலும் உள்ளமும் அதே சிந்தனைக்குத் தயாராகிவிடும். திருமணத்திற்கு முன்பு தங்கியிருந்த இடத்திற்கு அருகே இரவு நேரங்களில் மதுக்கடைகளுக்கு அருகே மீன் பொறித்து விற்கும் வண்டிகள் அதிகமாக இருக்கும். என்னுடன் அறையில் இருந்தவர் தீவிர அசைவ பிரியர். கூட்டலும் கூட்டலும் சேர்ந்தால் என்னவாகும். பையில் உள்ள பணமெல்லாம் கழித்தல் ஆகும் தானே? விடாமல் தினந்தோறும் வெறித்தனமாகத் தின்று தீர்த்தோம். காலமாற்றத்தில் அருகே உள்ள அணையில் உள்ள தண்ணீர் வற்ற இப்போது தெருவுக்குத் தெருவுக்குப் பிராய்லர் கோழித் துண்டை பலவிதங்களில் வண்டிக்கடைகளில் பொறித்து விற்கின்றார்கள். தினந்தோறும் இரவு அலுவலகம் விட்டு வரும் வழியில் பலவித கோழிக்கடைகளைக் கடந்து தான் வீட்டுக்கு வந்து சேர வேண்டும். பலவிதமான வாசனைகளைக் கடந்து வீட்டுக்கு வந்து சேர்கின்றேன். சில சமயம் என்னை நானே கட்டுப் படுத்த முடியாமல் ஒவ்வொரு கடையாக ஏறி சுவையறிந்து, எரிச்சலாகி வெறுத்து ஒதுக்கி இப்போது எந்தக் கடைக்கும் போவதில்லை.   அமெரிக்காவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எண்ணெய் அரசியல் என்பது பெட்ரோல் ஆகும். இதைப்போல இந்தியாவில் தற்போது நடுத்தரவர்க்கம், ஏழை மக்கள் என்ற பாரபட்சமின்றிச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்றொரு விஷ யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்களை அழித்து ஒழித்துச் சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் என்று பலவித எண்ணெய்கள் சந்தையில் நாள்தோறும் கவர்ச்சிகரமான பெயருடன், விளம்பரங்களுடன் அணிவகுத்து வருகின்றது. சராசரி குடும்பத்தின் அடிப்படை உணவு பழக்கத்தையே வந்து கொண்டிருக்கும் விளம்பரங்கள் மாற்றி விட்டது. ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதும் 90 சதவிகிதம் குரூட் ஆயிலில் இருந்து தயாரிக்கப்படுவது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்? ஆனால் அந்த எண்ணெய்யைக் கூடப் பயன்படுத்திக் கீழே கொட்டி விட மனசு இல்லாத வண்டிக்கடைக்காரர்கள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் போது வாங்கித் தின்னும் உணவின் தரம் எப்படியிருக்கும் என்பதனை யோசித்துப் பாருங்கள்? பொறிக்கும் எண்ணெய் என்பது காலாவதியாக வேண்டியது என்பதனை மாற்றி அதனையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். திரும்பத் திரும்ப அதே எண்ணெய் பயன்படுத்தும் போது அது விசமாக மாறிவிடுகின்றது. உணராத மக்கள் கோழியில் சேர்க்கும் நிறமூட்டிகள் மற்றும் சுவைகளுக்காக விசத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.   என்ன சாப்பிட்டாலும் உள்ளே தங்க விடாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் எனக்கு இருப்பதால் உடல் ரீதியான பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் வயதாகும் போது எச்சரிக்கை மணி அடிக்குமே? அப்படித்தான் நடைப்பயிற்சி என்ற பழக்கம் சில மாதங்களுக்கு முன்னால் மனதில் உருவானது. பள்ளியில் படித்த காலம் முதல் இன்று வரை விளையாட்டு, உடற்பயிற்சி சார்ந்த எந்த விசயங்களிலும் ஈடுபாடு வந்ததே இல்லை. எனக்கு மட்டுமல்ல. குடும்பத்தில் எவரும் அந்தப் பக்கம் தலைவைத்து படுத்ததே இல்லை. கடைசித் தம்பி மட்டும் கல்லூரியில் படிக்கும் போதே என்சிசி பக்கம் சென்று உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என்று தடம் மாறி கடைசியில் இந்திய ராணுவத்தில் அலுவலகப் பணிக்கு தேர்வான போது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் எனக்கு உணவில் மேல் இருந்த ஈடுபாடு இதுபோன்ற உடல் சார்ந்த பயிற்சியில் உருவானதே இல்லை. இப்போது உருவானதற்குக் காரணம் அலுவலகத்தில் ஒருவர் தனது அலைபேசியில் வைத்திருந்த செயலியைக் காட்டி பேசிக் கொண்டிருந்தார். ஸ்போர்ட்ஸ் ட்ராக் என்ற செயலியின் செயல்பாடுகளைப் பற்றிச் சொன்ன போது கொஞ்சம் ஆர்வம் பிறந்தது. எத்தனை கிலோ மீட்டர் நடக்கின்றோம்? எத்தனை அடிகள் நடந்தோம்? இது போன்ற பல சமாச்சாரங்கள் அதில் இருக்கச் சிறிதாக ஆர்வம் உருவானது. நாளை முதல் காலை நான் வாக்கிங் போகப் போகிறேன்? என்று வீட்டில் வந்து சொன்ன போது பெரிய நகைச்சுவை சமாச்சாரத்தைக் கேட்டது போல நான்கு பேர்களுமே சிரித்தார்கள். காரணம் நம் ஜாதகம் அப்படி. எனக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஆகா....... இவர்கள் சிரிக்கின்றார்களே? என்று காலையில் எழுந்து முதல் வேலையாகச் செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டு சிறிய இலக்காகத் தீர்மானித்து விட்டு ஸ்போர்ட்ஸ் ட்ராக்கர் செயலியை இயக்கிவிட்டு என் நடைப்பயிற்சியைத் தொடங்கினேன்.   வீட்டுக்கருகே உள்ள பாதையைத் தீர்மானித்து விட்டு தினந்தோறும் வந்து செயலியைக் கவனித்த போது அதிகபட்சமாக நான்கு கிலோமீட்டர் என்று காட்டியது. அது சார்ந்த பல சமாச்சாரங்களைக் (எரித்த கலோரிஅளவுகள்) காட்டியது. வீட்டில் இதனைக் காட்டி பெருமையாகச் சொன்ன போது மற்றொரு பிரச்சனை உருவானது. எரித்த கலோரிக்குச் சமமாகக் குழந்தைகளுக்கு வாங்கி வைத்துள்ள தின்பண்ட சமாச்சாரங்களை எடுத்த விளாசித் தள்ள ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தூங்கும் போது மறக்காமல் தங்கள் தின்பண்ட சமாச்சாரங்களை எடுத்து ஒளித்து வைத்து விட்டே தூங்கத் தொடங்கினார்கள். மனைவி சிரிக்க என் நடைப்பயிற்சி சில வாரங்களில் முடிவுக்கு வந்தது. நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்த்திருந்தாலும் நம்மிடம் உள்ள அடிப்படை அறிவு என்பது என்றுமே மாறாது. ஒவ்வொரு சமயத்திலும் அது வெளிப்பட்டே ஆகும். அது குடும்பம், வாழ்ந்த சூழ்நிலை, பழகும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கம், நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நியாயங்கள். அதன் மூலம் உருவாகும் தர்க்க வாதங்கள் என்று நமக்கு நாமே நம்மையறியாமல் குறிப்பிட்ட மாற்ற முடியாத குணாதிசியங்களை வாழ் நாள் முழுக்க வளர்த்துக் கொண்டே வருகின்றோம். இதைத்தான் இன்று ஜாதியின் பெயரால் இழிவுப் படுத்துகின்றார்கள். மதத்தின் பெயரால் சுட்டிக் காட்டுகின்றார்கள். வணங்கும் கடவுளை வைத்துப் பரிகாசம் செய்கின்றார்கள். மொத்தத்தில் எல்லா இடங்களிலும் மனிதன் என்பவன் ஒவ்வொரு காலகட்டத்தில் தனித்தீவாகத் தான் இருக்கின்றான். கட்டாயத்தின் பேரில் குடும்பம் என்ற அமைப்பும், அதன் மூலம் உருவாகும் சமூக நிர்ப்பந்தம் நம்மை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. இந்த வித்தியாசங்களை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நான் உணர்ந்தே வந்துள்ளேன். நான் குறுகிய காலம் நடைப்பயிற்சி என்ற பெயரில் நான் வேடிக்கை பார்த்த அந்த அதிகாலை சமூகத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்              (4) ஒரு சேவலும் நான்கு கோழிகளும் அதுவொரு ஞாயிற்றுக்கிழமை......... அன்று தான் முதன் முறையாக நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். ஞாயிறு என்பது எனக்கு விசேட தினம். ஆறு நாட்கள் யாருக்கோ உழைத்து, எவருடனோ விருப்பமின்றி உறவாடி, பலவித வேடங்கள் போட்டு எனக்கான சுயத்தை மறந்து வாழும் எனக்கு ஞாயிறென்பது எனக்கான தினம். ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலையில் விழிப்பு வந்து விடும். முதல் நாள் இரவு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் மனம் சொல்லிவைத்தாற்போல ஐந்து மணி அளவில் உடம்பை எழச் செய்துவிடும். சனிக்கிழமையன்றோ வீட்டில் நான்கு பேர்களும் ஒரு வசனத்தைத் தூங்கப் போவதற்கு முன்பு மறக்காமல் சொல்வார்கள். "நாளை காலை எங்கள் யாரையும் ஏதாவது தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு?" என்று மிரட்டல் தொனியில் எச்சரிப்பார்கள். காரணம் ஒவ்வொரு ஞாயிறும் அவர்களுக்கு அதிக நேரம் தூங்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை.   ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மீது எப்போதும் எனக்குக் கனிவுப் பார்வை உண்டு. எட்டரை மணிக்கு உள்ளே வந்து மீண்டும் எட்டரைக்கு வீட்டுக்குச் செல்லும் இவர்களின் மற்ற கடமைகளை எப்படி முழுமையாகச் செய்ய முடியும்? என்பதே இதன் அடிநாதம். அவசரம் அவசரமாக ஓடிவந்து, உள்ளே வந்து கைரேகை பதித்துப் பத்தரை மணிக்கு விடப்படும் தேநீர் இடைவேளையில் அவசரகதியில் அமர்ந்து அவர்கள் கொண்டு காலை உணவை உண்ணும் போது மனம் வலிக்கும். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. மணிச் சப்தம் ஒலிக்கும் போது பாத்திரங்களைக்கூடக் கழுவ நேரமிருக்காமல் ஓடி வருவார்கள். பல முறை கவனித்துள்ளேன். அதையே வீட்டுக்கு வந்து குழந்தைகளிடம் வந்து சொல்லும் போது எளிமையாகப் பதில் சொல்வார்கள். "நீங்க தானே மேனேஜர். உங்கள் முதலாளியிடம் சொல்லி கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டியது தானே?" பதில் பேசாமல் நகர்ந்து விடுவேன். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரப்படைப்புச் சமூகம் உருவாக்கி வைத்துள்ளது. அதுவொரு வேடம் என்றாலும் அந்த வேடத்தில் எந்தளவுக்குத் திறமையாக நடிக்கக் கற்றுக் கொண்டவர்களால் மட்டுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நடிக்கத் தொடங்கும் போது சுயம் கழன்று விடும். அறம் என்பது மறந்து விடும். அதிகப் பணமிருப்பவர்களுக்கும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைத் தேடுபவர்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்றால் அலுவலகத்திற்குச் செல்லும் போது உடைகள் மாற்றத் தொடங்கும் போதே உள்ளே உள்ள நடிகனுக்குத் தேவைப்படும் ஒத்திகையையும் ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும்.   பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொழிற்சாலையில் வேலையிருக்கும். நான் கிளம்பும் வரைக்கும் மூன்று பேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். ஆச்சரியமாகவும், அயர்ச்சியாகவும் இருக்கும். தொடக்கத்தில் குறைந்தபட்சம் குழந்தைகளையாவது இந்தப் பழக்கத்தில் மாற்றிவிட முடியுமா? என்று முயற்சித்த போது குடும்பம் மொத்தமாக எதிரணியில் நின்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி குண்டுக்கட்டாகத் தூக்கி சபையை விட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள். அப்பொழுதே புரிந்து விட்டது. சபாநாயகர் மனைவியின் சோம்பேறித்தனத்திற்கு மூன்று உறுப்பினர்களும் ஒட்டு மொத்த ஆதரவு தெரிவித்த பின்பு சுயேச்சை உறுப்பினர் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? இதுவும் ஒரு வகையில் நல்லதாகப் போய்விட்டது. காலைக்கடன்கள் முடித்து விட்டு எழுதத் தொடங்கினால் அந்த வாரத்திற்குத் தேவையான விசயங்களை அடுத்த நான்கு மணி நேரத்தில் எழுதி முடிக்க வசதியாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக முழித்து வெளியே வந்து நிற்கும் போது நான் பிழைகள் திருத்திக் கொண்டிருப்பேன். இடையிடையே அந்த வாரத்தில் வந்த அரசியல் சார்ந்த காணொலிக் காட்சிகளைப் பார்த்து முடித்து இருப்பேன். மற்ற நகரங்களில் எப்படியோ? ஆனால் திருப்பூரில் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பெரும்பணம் படைத்த முதலாளிகளும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருப்பது என்ற பழக்கத்திற்கு அடிமையாகத் தான் உள்ளனர். மற்ற துறைகளில் உள்ள முதலாளிகள் வாழ்க்கையை அனுபவிக்கப் பல வித முன்னேற்பாடுகளை மாதந்தோறும் வருடந்தோறும் செய்து அதன்படி வாழ்ந்தாலும் இங்குள்ள முதலாளிகள் பதட்டமும் பரபரப்புமாகவே வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.   இந்தக் கூட்டத்தில் பழகியே தொடர்ந்து வேலை செய்வது என்ற பழக்கம் எனது இயல்பான குணாதிசியமாகவே மாறிவிட்டது. இது தான் எங்கள் வீட்டுச் சபாநாயகருக்கும் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உருவாக முக்கியக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. இதே பழக்கம் இன்று குழந்தைகளுக்கும் தொற்றி ஞாயிறென்றால் பத்து மணி வரைக்கும் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பல முறை ஆச்சரியமாக ஆழ்ந்து தூங்கும் இவர்களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருப்பேன். ஒரு சலனம் இருக்காது. வெளியே ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வாகனங்களின் சப்தங்கள் எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்யாது. அப்போது தான் தூங்கச் சென்றது போல இவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். பள்ளி செல்லும் நாட்களில் நாள் தோறும் அதிகபட்சம் பத்து மணிக்குள் ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்று விடும் இவர்கள் சரியாக ஆறு மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்கள். எட்டு மணி நேரமும் முழுமையான தூக்கம். ஆனால் இதனையும் மீறி ஞாயிற்றுக் கிழமையென்றால் கூடுதல் போனஸ். இவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காக வாக்கிங் செல்ல அழைப்பு விடுப்பேன். அது காற்றில் கேட்ட கேள்வியாக மாறிவிடும். கேலியாக மாறுவதற்குள் வெளியே நடக்கத் தொடங்கி விடுவேன். வீட்டுக்குள் பலவற்றை மாற்ற முயற்சித்துள்ளேன். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். காரணம் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தாலும் என்னவாகும்? ஒவ்வொரு முறையும் சேவலில் கம்பீரமான கொக்கரக்கோ சப்தம் கூடக் கெக்கெக்கே என்று சிரிப்பொலியில் மறைந்து விடுகின்றது.   வீட்டுக்குள் இருக்கும் மூன்று குழந்தைகளும் இன்று வளரும் பெண்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் பள்ளி ஆண்டு விடுமுறை தினங்களில் என்னை விட்டு பிரியும் தருணங்கள் நான் அடையும் அவஸ்த்தைகள் இருக்கின்றதே? அப்போது தான் இந்த வாழ்க்கையின் பல பரிணாமங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதைப் பற்றி பேசுவோம்....             (5) பாலைத்திணை   நான்கு பேர்களும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். வண்டியை வீட்டின் முன் நிறுத்தும் போது எப்போதும் போலக் கத்திக் கொண்டு மேலே விழுவது போல வந்தார்கள். ஆனால் அதை ரசிக்கும் மனோநிலையில் நானில்லை. வரவேண்டிய கொரியர் ஒன்று வராதது முக்கியக் காரணமாக இருந்தது. ஊருக்குச் செல்லும் போது கட்டாயம் கையில் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன். சென்னையில் உள்ள நண்பர் உறுதியளித்து இருந்தார். நிச்சயம் இரண்டு மணிக்குள் கிடைத்து விடும் என்று சொன்னார்கள் என்றார்.   கடந்த மூன்று மாதங்களில் இந்தக் கொரியர் சேவைகளின் உள்ளார்ந்த அத்தனை விசயங்களையும் பார்த்த காரணத்தால் எனக்கு நம்பிக்கை வரவில்லை. வெளியே காத்திருந்தவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன். நானே போய் வாங்கி விடுகின்றேன் என்று மறுபடியும் திருப்பூருக்குள் மத்திம பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தை நோக்கி மன உளைச்சலோடு சென்ற போது உள்ளே கழிவிரக்கம் மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்ததை என்னால் உணர முடிந்தது. போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டே உள்ளே மனசாட்சி நக்கல் விடுவதை உணர முடிந்தது. என்னமோ பெரிய பாசக்காரன் இல்லை என்று சொன்னாய்? ஊருக்குக் கிளம்பும் குழந்தைகளை அனுப்பி வைக்க மனமில்லாமல் ஏன்டா இப்படிச் சோர்ந்து போயிருக்கிறாய் என்று கேட்டது. கேலியாகத்தான் எனக்குத் தெரிந்தது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து இன்னோருவன் வருவானே? அப்போது வளர்ந்த மரத்தை வேறொரு இடத்தில் பிடுங்கி நட வேண்டியிருக்குமே? என்று மனம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. உள்ளே இருந்த மொத்த கோபமும் கொரியர் அலுவலகத்தில் முன்னால் அமர்ந்திருந்த பெண் மேல் கொட்ட பதில் பேசாமல் அமைதியாக வந்த பார்சலை எடுத்துக் கொடுத்தார். கோடை விடுமுறையில் ஊருக்கெல்லாம் எங்கேயும் செல்ல மாட்டோம் என்றவர்கள் இரண்டு நாளில் மாறிவிட்டார்கள் என்பதே எனக்கே ஆச்சரியமாக இருந்தது.   அங்கே யூபிஎஸ் இருக்காது, கணினி இருக்காது என்று ஆயிரெத்தெட்டு வக்கணையாகப் பேசிய மூவரும் இதோ இப்போது நாங்கள் ரொடியாயிட்டோம். நீங்க தான் லேட்டு என்கிறார்கள். மனைவி என்னை உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்திருப்பார் போலும். "உங்களுக்குப் பொறுக்காதே, வருஷத்திலே ஒரு முறை தான் போக முடிகிறது. உங்களுக்கு மனசே வரலையே" என்றார். நானே அவளுக்குப் பலமுறை அறிவுரை சொன்னது இப்போது என் நினைவில் வந்து போனது. "பாசம் வைக்காதே. கடமை என்பதாக உன்னை இப்போதே மாற்றிக் கொள். நாளை இவர்களின் தன்மை மாறும் போது உன்னால் தாங்க முடியாது. நான் பலவற்றையும் கடந்து வந்து விட்டேன்". என்று பெரிய தத்துவஞானி போலச் சொன்ன எனக்கு இப்போது உண்மைகள் உரைத்தது. எனக்கே என் மனோபாவம் வினோதமாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. சார்ந்து வாழுதல் என்பதும் சேர்ந்து வாழுதல் என்பதும் எப்போது தொடங்கியிருக்கும் என்று சிந்திக்கத் தோன்றியது. குறிப்பிட்ட கால கட்டத்தில் குடும்பத்தினர் எவருடனும் தொடர்பு கொள்ளாமல் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. முரட்டுத்தனமாக வேகத்தில் பயணித்த வாழ்க்கைச் சுவடுகள் தந்த காயங்கள் ஒவ்வொன்றும் நினைக்கத் தோன்றியது. ஆனால் திருமணம் என்பதும் அரவணைக்க, ஆறுதல்படுத்த ஒரு கரம் என்பதையும் மீறி வேறு ஏதோவொரு புள்ளியில் இணைத்து வைத்து விடுகின்றது.   பரஸ்பரம் புரிந்து கொண்டவர்கள், புரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் ஆத்மார்த்த அன்புக்குள் சிக்கிக் கொண்டவர்கள் எப்போதும் வழி தவறுதில்லை. நானே பலமுறை வெறுத்துப் பேசியிருக்கின்றேன். அக்கா வீட்டுக்காரரைத் திட்டியிருக்கின்றேன். "எனக்கும் மட்டும் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தி யிருக்காவிட்டால் இன்னும் கூடப் பல படிகள் வாழ்வில் ஏறியிருக்க முடியும்" என்று சொல்லியிருக்கின்றேன். ஆனால் அலுவலகத்தை விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்று மாறிப்போன எண்ணத்தில் வாழும் என்னை மனைவி தான் பலமுறை வெறுப் பேற்றியிருக்கிறாள். "ஒவ்வொருத்தனும் எங்கெங்கோ சுற்றி அலைந்து விட்டு வருகிறார்கள். என்னை உசுரெடுக்கத்தான் வேகமாக வந்து சேர்கிறீர்கள்" என்று அலுத்துப் போய் சொல்லியிருக்கிறாள். காதில் வாங்காமல் எங்கே சாப்பாடு? என்று கேட்டவனைச் சிரிப்போடு முறைப்பாள். "மொத்த குடும்பமே தீனிக்குடும்பம்" என்று சொல்லிக் கொண்டே பரிமாறும் போது அலுவலக மன உளைச்சல் அந்தச் சாப்பாடு ருசியில் மாறிப் போயிருக்கும். ஏறக்குறைய இரைச்சலோடு வாழப் பழகி விட்ட தற்காலச் சமூகம் போலவே மனம் நிலையில்லாமல் தவிக்கின்றது. மனைவி ஊருக்குக் கிளம்பிவிட்டாள் என்ற குதுகலிக்கும் சராசரி மனிதனாக இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தால் சீண்டிக்கொண்டே இருக்கப் பழகிவிட்ட வாழ்க்கையில் இப்போது வீடென்பது மயான அமைதி போலவே இருக்கிறது. வெளியில் அடித்த மண்ணெல்லாம் வீட்டுக்குள் கிடக்கத் துடைப்பம் எங்கே என்று தேடிக் கொண்டே இருக்கிறேன். வீட்டை இன்று கூட்டவில்லையா? என்று குறை சொல்லிக் கொண்டு உள்ளே நுழைபவனுக்கு இரண்டு நாளில் குப்பையாக இருக்கும் வீட்டுக்குள் சுத்தம் செய்ய மனமில்லாமல் வந்து அடிக்கும் காற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். திடீரென்று சமையல் கட்டில் உள்ளே நுழைந்து தேவைப்பட்டதைத் தேடி அலை பாயும் கைகளைப் பிடித்துத் தள்ளி "நீங்க அங்கே போய் உட்காருங்கள். நான் கொண்டு வந்து தருகின்றேன்" என்று முதுகை பிடித்துத் தள்ளுபவள் இல்லாது சமையல்கட்டில் கழுவாத பாத்திரங்கள் சேர்ந்து கொண்டேயிருக்கச் சோர்ந்து போய் இருக்கின்றேன். "அப்பா செய்திசேனலைத்தவிர உங்களுக்கு வேறு எதுவுமே பிடிக்காதே" என்று கத்திக் கொண்டே ரிமோட்டை தூக்கிக் கொண்டு சென்றவளைக் கெஞ்சி வாங்கிய கைகள் இப்போது சும்மா கிடக்கும் ரிமோட்டை சீண்ட மனமில்லாத மூன்று நாட்களாக அவர்கள் வைத்த இடத்திலே இருக்கிறது.. மூன்று நாட்களாகச் சுருட்டி வைக்காமல் ஒரே இடத்தில் விரித்துக் கிடக்கும் பாயில் அப்படியே சாய்கின்றேன். அடித்த காற்றில் மண் உள்ளே வந்து விழுந்திருக்கும் போல. வியர்வையில் கசகசத்த உடம்பைக் கழுவ மனமில்லாத நிலையில் தலை சாய்த்தால் வராத தூக்கத்தைச் சபித்துக் கொண்டே வெளியே வந்து அமர கதவைத் திறந்த போது காத்திருந்த ஈசல் கூட்டம் உள்ளே கூட்டமாகப் பறந்து வந்தது. இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஈசலின் வாழ்க்கை என்னவாகும் யோசித்துக் கொண்டே வீட்டின் வெளியே இருந்த வேப்பமரத்தைப் பார்த்த போது பறந்த வந்த இலை என் முகத்தில் வந்து விழுந்தது.   பழுப்பேறிய அந்த இலை உதிர்ந்து என் அருகே வந்து விழுந்தது. அந்த இலை தான் இந்த வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகள் ஏதும் தேவையின்றி எனக்குப் புரியவைத்தது.. யோசித்துக் கொண்டே வீட்டின் வாசலில் தனியாக அமர்ந்திருந்தேன்.  அப்போது தான் பக்கத்து வீட்டில் தெருக் குழாயில் இருந்து வழிந்தோடும் சப்தம் கேட்டது. வயலில் பாயும் நீர் போல தெரு முழுக்க நீர் ஓடிக் கொண்டிருந்தது. வேகமாக ஓடினேன்............             (6) தண்ணீருக்குக் கையேந்தும் நாள் வரும்? வெளியே பேரருவி சப்தம் கேட்டது. தெருவில் இருந்த குழாயில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் மொத்தமும் அருகே இருந்த சாக்கடையில் கலந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் இரண்டு கதவுகளையும் திறந்து கொண்டு வெளியே வருவதற்கு முன்பே எனக்குப் பதட்டம் வந்தது. நடைப்பயிற்சியைத் தொடங்குவதற்கு அன்று அதிகாலையில் எழுந்து விட்டேன். பக்கத்து வீட்டின் முன்பு இந்தக் காட்சியைப் பார்த்த போது கோபத்தில் நடைப்பயிற்சியை மறந்து விட்டு குழாய் அருகே சென்ற போது தான் புரிந்தது. அந்தக் குழாயில் மேல்பகுதி முழுவதும் கழட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் வரும் பகுதியில் ஒரு திருகாணி மட்டும் இருந்தது. அதுவும் நசுக்கப்பட்டு இருந்தது. வயல் பகுதிகளில் பயன்படுத்தும் பம்புசெட் ல் வருகின்ற நீரின் அளவைப் போல மொத்த தண்ணீரும் வீணாகிக் கொண்டிருந்தது.   திருப்பூரில் நான் வசிக்கும் பகுதி வித்தியாசமானது. இன்று வரையிலும் தமிழகக் கிராமங்களில் தீண்டாமை கொடுமையுண்டு என்று ஆதங்கப்படுவோர் அநேகம் பேர்கள் உண்டு. அதுவே நகரமயமாக்கலில் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நகரங்களில் வசிப்பவர்களை அது வேறுவிதமாகத் தாக்கும். பெருநகரங்கள், தொழில்நகரங்கள், வளர்ந்து வரும் நகரங்களில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் உங்கள் வசிப்பிடங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் அதனை உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதிகப் பணம் உள்ளவர்கள், பணம் உள்ளவர்கள், பணம் அன்றாட வாழ்க்கை வாழ மட்டும் சம்பாரித்துக் கொண்டு வாழ்பவர்கள், பணம் இல்லாதவர்கள் என்ற அடுக்கு நம் கண்ணுக்குப் புலப்படும். பெரும் கோடீஸ்வரர்கள் வாழும் பகுதிகளில் சாலை வசதிகள் முதல் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அரசாங்கத்தால் அன்றாடம் தெளிவாகப் பராமரிக்கப்படும். அதுவே படிப்படியாகக் குறைந்து கடைசியில் உள்ளவர்களுக்கு ஏனோதானோ என்று தான் அரசாங்க சேவைகள் கிடைக்கும். ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதியில் மேலே சொன்ன நான்கு அடுக்குகளும் கலந்து இருக்கின்றார்கள். இதனை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கே வசிக்கின்றோம். நடைபயிற்சி தொடங்கிய போது தான் ஒவ்வொரு பகுதியில் இருந்த வீடுகளையும், மற்ற சமாச்சாரங்கள் அனைத்தும் முழுமையாகக் கண்டறிந்தேன். எத்தனை எத்தனை வேறுபாடுகள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.   எங்கள் வீட்டுக்கு அருகே தொழிலாளர் குடியிருப்பு உண்டு. அங்கே பத்து ஓட்டு வீடுகளில் பல ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் மது போதையினால் உருவாகும் சண்டை சச்சரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு வாரமும் கவனித்தே வந்துள்ளேன். வீட்டுக்குள் இருந்தால் சந்தின் தொடக்கம் முதல் மற்றொரு சந்தின் இறுதிப் பகுதி வரைக்கும் கலந்து கட்டிய கெட்ட வார்த்தைகள் காற்றில் கலந்து வந்து கொண்டேயிருக்கும். இது வாரந்தோறும் நடக்கும் நிகழ்வு என்பதால் எங்கள் வீட்டுக்குச் சுற்றிலும் இருப்பவர்கள் கண்டும் காணாமல் கடந்து போய்க் கொண்டிருப்பார்கள். அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு முடிந்து குழந்தைகளுடன் வெளியே அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் போது சண்டை தொடங்கி விட்டால் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விடுவார். நான் மட்டும் அங்கே அமர்ந்து நடந்து கொண்டிருக்கும் காட்சியின் ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துக் கொண்டிருப்பேன். அடிதடி, கூச்சல், இரைச்சல், பெண்களின் கதறல் என்று காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் காலையில் பார்த்தால் நடந்த சுவடே இல்லாமல் இயல்பான வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பியிருப்பார்கள். மற்ற வீடுகள் அனைத்துக்கும் மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர் குழாய் இருக்கும். வீட்டுக்குள் இல்லாதவர்களுக்குத் தெருவில் இருக்கும். குறிப்பிட்ட வீடுகள் இந்தக் குழாய் என்று பாகம் பிரித்து இருப்பார்கள். சற்று வசதிபடைத்தவர்களுக்கும் இந்தத் தொழிலாளர் குடியிருப்புக்கும் சண்டை சச்சரவாகவே இருந்து வந்தது. நான் பலமுறை அலுவலகம் செல்லும் போது பார்த்துக் கொண்டு செல்வேன். கணவன்மார்கள் அலுவலகத்திற்குக் காரில் சென்ற பிறகு சுகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைக்குள் நுழைந்தே ஆக வேண்டிய பெண்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். அது பலசமயம் கலவரமாக முடியும். ஒருமுறை நகர்மன்ற உறுப்பினர் எங்கள் சந்தின் வழியே வந்த போது எங்கள் வீட்டின் முன்னால் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருக்கின்றார்? என்பதனை மனைவி என்னுடன் சொன்னபோது வேகமாக அவரிடம் சென்று தினந்தோறும் இங்கே தண்ணீருக்காக நடக்கும் பிரச்சனைகளைப் புரிய வைத்து "தொழிலாளர் குடியிருப்புக்கு அருகே ஒரு குழாய் அமைத்துக் கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்தேன். காரணம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அவரிடம் சொன்ன போது அது நடக்காமல் இருந்ததை உணர்ந்தே கொஞ்சம் அழுத்தமாகப் பேசினேன். அண்ணே நிச்சயம் செய்து தருகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவரை தொடர்ந்து அலைபேசி வழியாக நினைவு படுத்திக் கொண்டிருந்தேன். ஆச்சரியமாகச் சில வாரங்களில் குழாய் மாட்டப்பட்டு ஒரு சுபயோக தினத்தில் தண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பிறகு தான் பிரச்சனை வேறு விதமாக மாறத் தொடங்கியது. பத்துக் குடும்பங்கள் என்பதால் சற்று பெரிய அளவிலான குழாயை மாட்டிக் கொடுக்க அது பிரச்சனையின் ரூபத்தை அதிகமாக்கியது. ஒவ்வொரு பகுதியிலும் இருந்த குடிநீர்க் குழாயை பராமரிக்கத் தனியாக ஒருவரை நகர் மன்ற உறுப்பினர் நியமித்திருந்தார். அவர் ஊமையும் கூட. இரவில், நள்ளிரவில்,அதிகாலையில், காலையில் என்று மிதிவண்டியில் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு இருக்கும் திருகாணி போன்ற அமைப்பில் இருக்கும் சமாச்சாரத்தைத் திறந்து விட்டு அவர் வைத்திருக்கும் பெரிய விசில் மூலம் சப்தம் எழுப்புவார். அந்தச் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெருவில் உள்ள குழாய்க்கு ஓடி வருவர். இது நடைமுறையில் இருக்கும் சமாச்சாரம்.   அவர் சப்தம் எழுப்பிவிட்டு அடுத்தப் பகுதிக்குச் சென்று விடுவார். இங்குத் தான் பிரச்சனை தொடங்கியது. மற்ற இடங்களிலும் குடிநீர் குழாய் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் குடியிருப்பில் உள்ள குழாயில் உள்ள மேல்பகுதி ஒரு குடிகாரன் போட்ட ஆட்டத்தில் தனியாகக் கழன்று விட்டது. அதை மறுபடியும் மாட்ட முடியாமல், வேறு வாங்கவும் முடியாமல் துணியைச் சில நாட்கள் கட்டி வைத்திருப்பார்கள். பல சமயம் அப்படியே வைத்திருக்கத் தண்ணீர் வந்ததும் அப்படியே கொட்டத் தொடங்கி விடும். மற்ற வீடுகளில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து விட்டுச் சுகமாகத் தூங்கிப் பழகிவிடும் பெண்கள் மத்தியில் இரவில், நள்ளிரவில் வேலை முடித்து வந்து படுக்கச் செல்லும் தொழிலாளர்கள் காலை நேரத்தில் குறிப்பாக விசில் சப்தம் கேட்டு எழுவதில்லை. சில நாட்கள் அவர்களிடம் பகல் நேரத்தில் அங்கேயிருந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தேன். சில சமயம் வீட்டுக்குள் சென்று கத்திப் பார்த்த போதும் எவரும் கதவைத் திறந்து வெளியே வந்தபாடில்லை. தன்னிலை மறந்து தூங்குபவர்களின் உலகம் வேறுவிதமாக இருந்தது. அன்று காலை பதட்டமாய் வேகமாகச் சென்று போராடிய போது அணிந்திருந்த உடைகள் அனைத்தும் நனைந்து விட்டது. ஐந்து நிமிடமாகப் போராடிக் கொண்டிருந்த போது என்னைப் பார்த்த மனைவி வீட்டுக்குள் இருந்த ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை வைத்து மேலே உள்ள வால்வு போன்ற பகுதியைத் திருகி தண்ணீர் வருவதை நிறுத்தினேன். அடுத்த உலக யுத்தம் என்பது தண்ணீரை அடிப்படையாக் கொண்டது என்று சூழலியாளர்கள் கணக்கீடு வைத்துச் சொல்கின்றார்கள்.   ஆனால் தமிழர்கள் போல உலகளவில் மடச்சாம்பிராணிகள் வேறெங்கும் இருப்பார்களா? என்பது சந்தேகம். இது தொழிலாளர்கள் குடியிருப்புச் சம்மந்தப்பட்ட விசயமல்ல. நடைபயிற்சியின் நான் பார்த்த வீடுகளில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கொடுமையுண்டு. மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர்க்குழாயை எந்திரம் வைத்து அளவுக்கு மீறித் திருடுபவர்கள், பெரிய அளவிலான குழாய் வைத்து அந்தத் தண்ணீரை வீட்டுக்குள் வைத்திருக்கும் வாகனங்களைக் கழுவி கொண்டிருப்பவர்கள், வீட்டுக்குள் முன்னால் உள்ள தலைகளைத் தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்கின்றோம் என்று மொத்த நீரையும் வீணாக்குபவர்கள் என்று பட்டியல் பல மைல் நீளம். இங்குப் பணக்காரன் , ஏழை என்று இரண்டு பிரிவாக இருந்தாலும் சுயநலத்தின் அளவுகோல் இடத்திற்குத் தகுந்தாற் போல மாறியுள்ளதே தவிரத் தனி மனித சுயநலம் எந்த இடங்களிலும் குறைந்தபாடில்லை. நாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்கள். அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோக்கி தேவையற்ற கேள்விகள் வந்து தாக்காது என்பதனை அவர்கள் தெளிவாக உணர்ந்தே வைத்துள்ளார்கள். இன்று வரையிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமப்புறங்களில் இதன் கொடுமையை நன்றாக உணர முடியும். எந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதனைக் கண்டு கொள்வதில்லை. ஆனாலும் நாம் பிறந்த ஊர் என்ற பாசம் மட்டும் இன்று வரையிலும் மாற்ற முடியாததாக உள்ளதே?                          (7) ஊர் காதல் ஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்வொரு ஊராகத் தாண்டி வரும் போது எத்தனையோ நினைவுகள். 25 வருடங்களில் உருவான மாற்றங்கள். மாற்றங்களின் ஊடாக மாறிய வாழ்க்கை. காரைக்குடியில் இருந்து கரூர் வரும் வரைக்கும் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளுற பிரவாகமாக ஊறிக் கொண்டேயிருக்கும். கரூர் எல்லையைத் தொட்டு, அந்த நகரைத் தாண்டி நகரும் போது மனத்தின் தன்மை மெதுமெதுவாக மாறிக் கொண்டேயிருக்கும். ஏன் இப்படி? ஒவ்வொரு முறையும் இப்படியிருக்கின்றதே? இது நாமே கற்பனை செய்து வைத்திருக்கின்றோம் போல என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாலும் நான் பயணிக்கும் ஒவ்வொருமுறையும் இதே தான் அனுபவமாக எனக்குக் கிடைக்கின்றது.   இதுவே அலுவலக வேலையாகச் சென்னை சென்று திருப்பூர் வரும் போது உருவான எண்ணங்களை யோசித்துப் பார்த்தால் வேறு விதமாக உள்ளது. ஊரிலே வாழும் உறவுகளுடன் நாம் முரண்பட்டு நிற்கலாம். முந்தைய தலைமுறை சேர்த்துச் சொத்துக்கள் நாம் வாழும் காலத்தில் இழந்ததாக இருக்கலாம். மாறிப் போன ஊரில் நமக்கென எந்த அடையாளமும் இல்லாமல் கூடப் போயிருக்கலாம். ஓடித்திரிந்த தெருக்களில் நடமாடும் மனிதர்களின் முகங்கள் அனைத்தும் அந்நியர்களாக இருக்கலாம். இது தான் நான் பிறந்த ஊரா? என்று கேள்விகள் ஆயிரம் உள்ளுக்குள் தோன்றினாலும் எவருக்கும் பிறந்த ஊர் நினைவென்பது சுகமானது. அது எப்போதும் நம் உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது. நாம் வாழும் ஊரில் வசதியாக வாழ்ந்தாலும் அடிப்படையில் நாமும் ஒரு வந்தேறி தான். நாம் வாழும் ஊரில் நாம் பணிபுரிகின்ற தொழிலுக்கேற்ப ஒவ்வொரு நாளும் மனத்தின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது. பேச்சு, உடைகள், நடைமுறை பழக்கவழக்கங்கள் எல்லாமே மாறிக் கொண்டே வரும். நான் திருப்பூர் வந்து 25 வருடங்கள் முடிந்து விட்டது. மிச்சம் மீதி இல்லாமல் உள்ளும் புறமும் எல்லாமே மாறி விட்டது. ஆனாலும் என் சொந்த ஊர் காதல் இன்னமும் மாறவில்லை. நிறைவேறாத காதல் போல உள்ளேயே எங்கேயோ ஒரு ஓரத்தில் உள்ளது. குற்ற உணர்ச்சிகள் கலந்த இனம் புரியா ஏக்கத்துடன் மறக்க முடியாத நினைவுகளாய் அங்கங்கே உள்ளது. உள்ளுற இருக்கும் அந்த ஏக்கத்தை ஏதோவொரு காரணத்தைச் சொல்லி துடைத்தெறிய வேண்டியதாக உள்ளது. இனி அங்கே வாழ வாய்ப்பில்லை. இங்குள்ள வசதிகள் அங்கே கிடைக்காது. குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் எல்லைகளைத் தாண்ட வேண்டுமென்றால் இங்கே தான் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நம் தியாகம் தான் பெரிது என்று இதே போல ஏராளமான காரணங்களை நாம் நமக்குள்ளே அடுக்கி வைத்திருக்கின்றோம்.   பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் வாழும் ஒவ்வொருவரும் அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் கடமைகளும் கடமைக்குப் பின்னால் உள்ள அழுத்தங்களும் தான் பதிலாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. பெற்ற மகள் திருமணமாகிச் சென்றபிறகு மனதிற்குள் உருவாகும் வெறுமையை வார்த்தைகளாக வாசித்துள்ளேன். இப்போது அந்த எண்ணங்கள் படிப்படியாக உள்ளே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வயது ஏறும் போது அந்த வருடங்களிலும் பல்வேறு சூழ்நிலைகளில் நான் எடுத்த புகைப்படங்களைச் சமயம் கிடைக்கும் போது எடுத்துப் பார்ப்பதுண்டு. மாறிய முகங்கள் மௌனமாய்ச் சிரிக்கும். தோற்றப் பொலிவு மாறி இதுவும் நீயே தான் என்று கேலி பேசும். மாறிய முகங்களுடன் பெற்ற வெற்றியும் தோல்வியும் வரிசையாக எண்ணங்களில் வந்து மோதும். சேர்த்த பணமும், இழந்த பணமும் பக்கவாட்டில் வந்து நிற்கும். வாங்கிய வசவுகள் பலசமயம் எட்டிப்பிடிக்க முடியாத வசதிகள் என்று ஒவ்வொன்றாய் நம் மனக்கண்ணில் வந்து நிற்கும். ஆனால் எல்லாமே கடைசியில் கணக்கில் அடிப்படையில் மாறும். இங்கே வாழ்க்கை சிலருக்கு மட்டுமே வாழ அனுமதிக்கின்றது. பலருக்கும் உருளவைத்துக் கொண்டிருக்கின்றது. வேலை தேடுதல், வேலையின்மை, தகுதிக்கேற்ற வேலையில் இல்லாமல் தரமான மனிதர்களின் அறிமுகம் இல்லாமல் தடுமாறி, விழுந்து, எழுந்து, புரண்டு வெளியே சொல்லமுடியாத வார்த்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அடிப்படை வசதிகளைத் தக்க வைப்பதில் 70 சதவிகித மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றதை இழந்து விடக்கூடாது என்ற கவனமும் பெற வேண்டியதை விரைவில் பெற்று விட வேண்டும் என்ற அவசரமும் கலந்த வாழ்க்கையைத் தான் இங்கே ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாழ்ந்த ஊருக்கும் வாழும் ஊருக்கும் உண்டான இடைவெளியே வெறுமனே 300 கிலோமீட்டர் தான் என்றாலும் கடல் தாண்டி வாழும் அனுபவங்கள் தான் எனக்குக் கிடைக்கின்றது. பேசும் மொழி, வாழும் கலாச்சாரம் என்று எல்லாவகையிலும் புதிய தேசத்தில் வாழும் வாழ்க்கை தான் என்பதாக எனக்குத் தோன்றுகின்றது.   இது அவரவர் வாழும் ஊரை வைத்தே முடிவு செய்து கொள்ள முடியும். உடலும் மனமும் வாழ்ந்த ஊருக்குத் தகுந்தாற்போல மாற்றம் கொண்டாலும் ஆழ்மன எண்ணங்கள் இத்தனை வருடங்கள் ஆன போதும் இன்னமும் மாறாமல் அடம்பிடிக்கும் ஆச்சரியத்தை இந்த முறை ஊர் சென்று திரும்பி வரும் போது உணர்ந்தேன். திருப்பூரில் இருந்து திருச்சி வரைக்கும் தான் ரயிலில் விரும்பிய நேரத்தில் செல்ல முடியும். அதே போல வரும் போது இவ்வாறு இதே ரயிலில் வரமுடியும். ஆனால் நீண்ட தூர பேருந்துப் பயணம் என்பது உடம்புக்கு வெறுக்கக்கூடியதாக உள்ளது என்பது வெறுமனே வார்த்தையாகச் சொல்லிவிட முடியாது. நம் ஆரோக்கியத்தில் அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியும். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது உடம்புக்குக் கிடைக்கும் அவஸ்தைகளை மீறி அரசு பேருந்தில் பயணிக்கும் கலவையான மனிதர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் இன்னமும் மாறாமல் இருக்கின்றது. ஓரளவுக்கேனும் நம் உடம்புக்குச் சுகத்தைக் கொடுத்து பழக்கி விட்டோம் என்ற எண்ணம் ஒவ்வொருமுறையும் ஊருக்குச் சென்று வரும் அப்பட்டமாக உணர்த்துகின்றது. வயல்களையும், வரப்புகளையும், காடு, செடி, கொடி என்பதனை புகைப்படங்கள் பார்த்து ரசித்தே பழகிவிட்ட நியூரான்களுக்கு நிஜத்தை ரசிக்கமுடியாத நிலைக்குத் தள்ளிவிட்டதோ என்று இந்த முறை நினைத்துக் கொண்டேன்.   முன்பெல்லாம் குளித்தலையைத் தாண்டும் போது பக்கவாட்டில் தெரிந்த காவேரி ஆற்றைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்து போனது. இப்போது வாசித்த வார்த்தைகளின் அடிப்படையில் மணல் மாபியா குறித்தே யோசித்துக் கொண்டிருந்தேன். இயல்பாக அனுபவிக்க வேண்டிய அழகும் அங்கே இல்லாமல் போய்விட்டது. ஆற்றுக்குள் வரிசையாக நிற்கும் லாரிகளை எண்ணிக்கையாகப் பார்க்கத் தோன்றியது. கிராமத்து மனிதர்கள் இன்னமும் பல இடங்களில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றார்கள். எதையும் காரணகாரியத்தோடு யோசித்துப் பழகாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். அன்றாடம் நடக்கும் அரசியல் அசிங்கம் அவர்களைத் தாக்குவதில்லை. அது குறித்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் புழங்கும் செய்தித்தாள்களும், வாராந்திர பத்திரிக்கைகளும் அத்தனை பெரும்பாலான பேர்களைச் சென்றடைவதில்லை. இதற்குப் பின்னால் எத்தனையோ சமூகவியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு இதுவே முக்கியமானதாக உள்ளது என்பதாகத்தான் எனக்குத் தெரிகின்றது. இணையதளங்களில் வரும் செய்திகள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. பத்தில் எட்டு பேர்கள் அப்படியெல்லாம் இருக்கின்றதா? என்ற எண்ணத்தில் இருப்பதால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர். இங்கே நாள்தோறும் லட்சக்கணக்கான பேர்கள் இணையத்தில் எழுதும் எந்தச் சிந்தனைகளும் சேர வேண்டியவர்களுக்கு இங்குச் சேரவே இல்லை. இங்குச் சிலருக்கு சிந்திப்பதே வாழ்க்கையாக உள்ளது. பலருக்கும் சிந்திக்கவே நேரம் இல்லாமல் இருப்பதால் இந்த வாழ்க்கையின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பெரிய அசம்பாவிதங்கள் இன்னமும் நடக்காமல் இருக்கின்றது. அதற்கு உங்கள் பார்வையில் புரட்சி, எழுச்சி, மக்களின் அறியாமை என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். திருச்சி வந்ததும் சதாப்தி ரயில் தடதடத்து திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது குழந்தைகள் (இப்போது அவர்கள் பெண்கள்) ஆசுவாசமாக இருந்ததைப் பார்த்து அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன். "ஊர்ப்பயணம் பிடித்திருந்ததா?" "பிடித்திருந்ததுப்பா." "இந்தப்பக்கம் வந்துடலாமா?" வேகமாக மூவரும் மறுத்துத் தலையாட்டினார்கள்.                                     (8) உரிமைக்குரல் ஒலிக்கட்டும்.   "நாம் வாழ்ந்த பழைய வாழ்க்கை தான் சிறப்பு" என்ற வாசகத்தை இன்று உச்சரிக்காத வாய்கள் குறைவாகவே இருக்கும். இனி முடியுமா? என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் ஒரே வரியில் சொல்லிடமுடியும். "இனி அதற்கு வாய்ப்பே இல்லை". சக்கரம் சுழலுகிறது. மேலேறியது இறங்கத்தான் செய்யும்? ஆனால் எப்போது என்று எவரால் சொல்ல முடியும்? வளமையான சாம்ராஜ்யங்கள் அழிந்த போது அடுத்த அரசு உருவானது. மற்றொரு மாற்றம். மாறியபடி பயணம் செய்த காலம் பல மாறுதல்களையும் கூடவே அழைத்து வந்தது. இன்று இங்கு வந்து நின்றுள்ளோம். அடுத்த மாற்றம் ஒரு மாத்திரையில் கூட வரக்கூடும். மொத்த சத்துக்களையும் ஒரு விழுங்கலில் முடித்து விடுவோம். அப்போது நாம் இருப்போமா? இயற்கை வேளாண்மை, இயற்கைப் பொருட்கள் என்று எத்தனையோ விளம்பரங்கள் நம்மை வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. அவை அனைத்தும் முன்பிருந்தபடியே இருந்த இயற்கையான விதங்களில் வந்ததா? யாருக்கும் தெரியாது?   நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பியவர்கள் வாங்குகின்றார்கள். விற்றவர்கள் பணக்காரனமாக மாறிவிடுகிறார்கள். காலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு தூங்கும் வரைக்கும் நாம் பயன்படுத்தும் மொத்த பொருட்களில் உள்ள சமாச்சாரத்தில் 90 சதவிகிதம் செயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்களுடன் தான் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள். சரியா? தவறா? போன்றவற்றை நாம் இங்கே அலசப்போவதில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தால் புகையின் ஊடாகத்தான் நம் வாழ வேண்டியுள்ளது. எல்லா இடங்களிலும் பரவியுள்ள அசுத்தங்களைத்தான் உணர வேண்டியுள்ளது. தற்காலத்தில் கெமிக்கல் என்பது ஒரு வார்த்தையல்ல. அது இன்றைய வாழ்க்கையின் அடித்தளம். சுய திருப்திக்காகப் பல பொருட்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நதிமூலம், ரிஷிமூலத்தை ஆராய்ந்தால் அதுவும் ஏதோவொரு இடத்தில் செயற்கையுடன் உறவாடித்தான் வெளியே வந்திருக்கும். நம் நாட்டில் வாழ்வதற்கு முக்கியத் தகுதி ஒன்று உண்டு. எப்போதும் உத்தேசமாகப் பேசிப் பழக வேண்டும். ஆணித்தரமாகப் பேசி விட்டால் மாட்டிக் கொள்வோம். அறிவோடு பேசி விட்டால் குழப்பமும் அத்தோடு அதிக எதிரிகளும் உருவாகி விடுவார்கள். இதனால் தான் நடுத்தரவர்க்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டுவதில்லை. குழந்தைகளையும் அந்த வட்டத்திற்குள் தான் வளர்க்க நினைக்கின்றார்கள். லட்சியம் பெரிதா? லட்சம் பெரிதா? என்று கேட்டுப் பாருங்கள். லட்சம் பேர்களும் லட்சத்தை மட்டும் தான் கைகாட்டுவார்கள். அதனால் இன்று என் குழந்தை சம்பாத்தியம் லட்சத்தில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் விரும்புகின்றார்கள்.   அதற்குத் தான் இங்கே இத்தனை அடிதடி. இயற்கை, செயற்கை என்று எல்லாமே பின்னுக்குப் போய் வாழ முந்திக் கொள் என்பது இன்றைய தத்துவமாக மாறியுள்ளது. அந்த வாழ்க்கையைத் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்கொள்கிறார்கள். காற்று ஒரு பக்கம் அடிக்கும் போது எதிர்காற்றில் நாம் பயணித்தால் என்னவாகும்?   முதலில் குழந்தைகளின் மாறிப் போன குணாதிசியங்களில் இருந்தே தொடங்குகின்றேன். பேருந்து பயணத்தை முழுமையாக வெறுக்கின்றார்கள். இதன் காரணமாக வெளியே செல்ல மறுக்கின்றார்கள். எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் முதன்மையாக ரயில் வசதி இருக்கின்றதா? என்பதனைத் அலசி ஆராய்கின்றார்கள். நமக்கே தெரியாத தொழில் நுட்ப வசதிகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார்கள். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியுமா? என்று பாருங்கள் என்று ஆலோசனையை அள்ளி வழங்குகின்றார்கள். வசதியில்லாத பேருந்துகளும், நெருக்கியடித்த மனிதர்களும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லா இடங்களிலும் தனக்கான வசதிகளைத் தேடுகின்றார்கள். வார்த்தைகளாக, வாக்கியங்களாக வாசிக்கும் எந்தச் செய்திகளும் அவர்களுக்குப் பாதிப்பை உருவாக்குவதில்லை. பள்ளி ஆசிரியைகள் சொல்லும் புராஜெக்ட் வேலைகளில் இயற்கை சார்ந்த விசயங்களைப் படமாக, விளக்கமாக விவரித்து எழுதி, செய்து கொண்டே கொடுப்பவர்களிடம் இயற்கை குறித்துப் பேச முடிவதில்லை.   அவர்கள் வாழ்க்கையைக் கோடு பிரித்து வைத்துள்ளதாகவே தெரிகின்றது. "என் தேவை மதிப்பெண்". அதற்காக நான் இதைச் செய்கின்றேன். "என் வசதி என் உரிமை". அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நான் கேட்பதை உருவாக்கித் தருவது உங்கள் கடமை. என்பது போன்ற வாக்குவாதங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும். எல்லாவற்றுக்கும் பின்னால் உள்ள காரணங்கள் ஒன்றே ஒன்று தான். வறுமை, பசி, பட்டினி, சோகம், வெள்ளம், துயரம், கவலைகள் போன்ற எதுவும் தாக்காது வாழும் எந்தக்குழந்தைக்கும் எது குறித்த பாதிப்பும் பதட்டங்களை உருவாக்குவதே இல்லை. பத்து வயதிற்குள் கோவில், விசேடங்கள் என்று கலந்து கட்டி இவர்களைக் கூட்டிச் சென்ற இடங்கள் அனைத்தும் மறந்து விட்டது. அன்று கார் இருந்தது. அருகாமைப்பள்ளி என்ற வசதியின் பொருட்டு வாழும் இடத்தில் கார் தேவையில்லை என்று விற்று விட்டேன். இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற ரீதியில் தான் அவர்களின் பேச்சுத் தொடங்குகின்றது. நீர்வீழ்ச்சிகள் கவர்ந்த அளவுக்குக் காடுகள் கவர்வதில்லை. உயிருள்ள விலங்குகளை விடத் தீம் பார்க் விசயங்களைத் தான் விரும்புகின்றார்கள். பழங்களை விடப் பழச்சாறு விருப்பமானதாக உள்ளது. செயற்கை பானங்கள் அதீதமாய் விரும்பப்படுகின்றது. தூரப் பயணமென்றாலும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட வேண்டும். வசதிகளுக்காக அழிக்கப்படும் காடுகள் குறித்து ஆர்வமில்லை. அதற்குப் பின்னால் உருவான நிகழ்வுகள் அதன் மூலம் கிடைக்கு வசதிகள் தான் முக்கியமாகத் தெரிகின்றது. ஆரவாரங்கள் என்பது உற்சாகத்தின் பாதை. ஆனால் உற்சாகம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தால் உள்ளும் புறமும் அலுத்துவிடாதா? யோசிக்கத் தெரியவில்லை என்பதனை விட அதைப் பற்றித் தற்போது யோசித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எல்லாவற்றிலும் எளிதான வழியை இயல்பாகக் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார்கள்.   சுய விருப்பங்கள் என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை என்பதனை இவர்களைப் பார்த்து தான் கற்றுக் கொண்டுள்ளேன். பயிற்சி இல்லாமல் பலவித படங்களை நொடிப் பொழுதில் வரையும் மகளிடம் பாடக்கற்றுக் கொள் என்றால் பழிப்பு காட்டிவிட்டு நகர்கின்றார். உற்சாகமாக அரட்டை அடிக்கும் அடுத்த மகளிடம் பேச்சுப் போட்டில் கலந்து கொள் என்றால் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் போதுமே? என்று நக்கல் விடுகின்றார். பள்ளியில் விளையாடப் போகும் மகளுக்குக் கடினமாக உழைக்கும் கால்பந்து விளையாட்டு அளவுக்கு யோகா என்பது வெறுக்கக்கூடியதாக உள்ளது. அமைதியின் அழகை ரசிக்கும் மனமில்லை. இயல்பாக வாழப் பழக்கம் இல்லாத சூழ்நிலை உருவாக்கிய தாக்கங்கள் ஒவ்வொன்றையும் இவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மூலமாகவும் பார்க்கின்றேன். இது தலைமுறை இடைவெளி மட்டுமல்ல. இங்கு ஐம்பது வயதை நெருங்கி வாழும் ஒவ்வொருவரும் அடுத்த இரண்டு தலைமுறையுடன் வாழ்ந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இடைவெளி உருவாகாமல் இருக்க வேண்டுமென்றால் இயல்பான விசயங்களை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் முரண்பாடுகள் முண்டியடிக்காமல் இருக்கும். அவசரம், உடனே, இப்போதே போன்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அது நரம்பை அதன் இயல்பை பலிகிடாவாக்கும் சமாச்சாரங்கள். மூளைகளின் வேகம் அதிகமாக அதிகமாக உள்ளே சுரக்கும் திரவங்கள் என்ன விளைவுகளை எதிர்காலத்தில் இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கப் போகின்றதோ? என்பதனை பல முறை யோசித்துள்ளேன். வீட்டில் மட்டுமல்ல. குழந்தைகளின் தோழிகள், அவர்களின் நடவடிக்கைகள், பணிபுரியும் இடங்களில் நான் பார்த்த, பழகிய நபர்கள் அடங்கிய மொத்த சமூகத்தின் பாதிப்பாகவே இதனைப் பார்க்கின்றேன்.   குத்து, வெட்டு, ரத்தம் பீய்ச்சியடிக்கும் காட்சிகளை நாம் சிறுவயதில் பார்த்தால் என்ன மனநிலையில் இருந்தோம் என்பதனை இப்போது யோசித்துப் பாருங்கள். ஆனால் இன்றைய குழந்தைச் சமூகம் அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுள்ளது. அதற்குப் பின்னால் உருவாக வேண்டிய பாவம், பரிதாபம்,வருத்தங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது.   அறிவால் யோசித்து அறிவால் பிரித்து வாழும் குழந்தைகளின் வாழ்க்கையில் ரசனைகளுக்கு இடமேது? கிராமங்கள் என்றாலே வாழத்தகுதியற்ற இடம். வாய்ப்புகள் இல்லாத பகுதி என்ற எண்ணம் உருவாகிவிட்டது. சுத்தமான காற்று, நெருக்கடி இல்லாத வாழ்க்கை என்று பேசத் தொடங்கும் போதே ஏன் வசதிகளை நாம் மறுக்க வேண்டும்? அதற்கான உழைப்பு இருந்தால் போதுமே? என்று கேள்வி கேட்கும் குழந்தைகளிடம் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்? குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிய வைக்க வேண்டும் என்று எத்தனையோ ஆலோசனைகள் தினந்தோறும் உங்களையும் என்னையும் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் என் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு என்பது வேறுவிதமாகத் தெரிகின்றது. ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும், அதற்குப் பிறகு அந்தக் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் உருவாகும் பல விதமான மாற்றங்களைக் கடந்த சில வருடங்களாக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன்.   வீட்டில் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பாடங்களே கதியென்று இருந்தார்கள். புத்தங்களைப் பாதுகாத்தார்கள். படிக்க எதுவும் இல்லாத போதும் அதனைக் குழந்தைகள் போலக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆறாம் வகுப்பு தொட்டது முதல் மனம், குணம் எல்லாமே மாறத் தொடங்கியது. சுதந்திரம் குறித்துப் பேசுகின்றார்கள். விமர்சனங்களை வைத்துத் தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். பதின்ம பருவத்தில் உருவாக்கும் ஹார்மோன் குறித்து, அதன் குதியாட்டம் என்னன்ன விளைவுகளை ஒரு குழந்தைக்கு உருவாக்கும் என்பதனை பல முறை மனைவியிடம் எடுத்துச் சொல்வேன். ஆனால் அவர் புரிந்தும் புரியாமலும் குழந்தைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார். கடைசியில் மனைவியின் குற்றச்சாட்டு என் மேல் வந்து நிற்கும். "மூன்று பேரையும் கெடுத்து வச்சுட்டீங்க. கண்டதையும் பேசி அவர்களை முழுமையாக மாற்றிவிட்டீங்க" என்பார். இந்த இடம் தான் முக்கியம். குறிப்பிட்ட வட்டத்திற்கு நான் வாழ்ந்தேன். எல்லையை மீற எனக்கு யாரும் உதவவில்லை. அதற்கான வழியும் எனக்கும் தெரியவில்லை. எதைப் பார்த்தாலும் அச்சம். எங்குத் திரும்பினாலும் பயம். ஒழுக்கம் மட்டுமே உன்னை உணர்த்தும் உயர்த்தும் என்று வளர்க்கப்பட்ட என் வாழ்க்கைக்கும் என் குழந்தைகள் வாழும் சூழ்நிலையும் வெவ்வேறானது. கல் மண்ணாக மாறுகின்றது. கால அளவு தான் வித்தியாசம். ஆனால் குழந்தைகளின் மாற்றங்கள் மட்டும் உடனே நடந்து விடுகின்றது. மேலைநாடுகளில் பதின்ம வயதுக் குழந்தைகளின் வாழ்க்கை வேறு விதமாக உள்ளது. ஆனால் இங்கே ஆதிக்கமாகப் பார்க்கப்படுகின்றது. "முளைத்து மூணு இலை விடல" என்ற வாசகத்தைச் சொல்லாத அம்மா அப்பாக்கள் நம் நாட்டில் அரிது.   குழந்தைகள் வளரும் போதும், வளர்ந்த பின்பு உருவாகும் முரண்பாடுகளில் முதலில் பலியாவது தகப்பன்மார்களே. தகப்பனின் ஈகோ என்ற சுயமரியாதை முதலில் அடிவாங்கத் தொடங்குகின்றது. குடும்ப வாழ்க்கையில் தாங்கள் செலுத்தும் ஆதிக்கம் மூலமே வாழ்ந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் கிடைக்கும் ஆப்பு என்பது குழந்தைகள் சொந்தமாக யோசித்துக் கேள்வி கேட்கும் தருணம் தான். நீங்க ஏன் அலுவலகம் தாமதமாகச் செல்றீங்க? ஏன் இன்று செல்லாமல் இருக்குறீங்க? ஏன் வரும் போது இதனை வாங்காமல் வந்தீர்கள்? என்று தொடங்கும் கேள்விகள் கடைசியில் கேலியாக மாறத் தொடங்குகின்றது. என் அலுவலகம், தொழிற்சாலை, பழகும் மற்ற எவர்களுடன் அதிகமாகப் பேச முடியாத சமூகம் சார்ந்த பொதுவிசயங்களை மூன்று பேருடனும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. ஆனால் எதை எப்போது சொன்னோம் என்று மறந்து இருந்து இருப்போம். கனகச்சிதமாகக் குறிப்பிட்ட விசயங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். என் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டிலை எடுத்துப் பார்த்தவர்கள் இன்று வரையிலும் நக்கல் நையாண்டி தான். சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவேன். நான் படித்த சூழ்நிலையை, எனக்கு வழங்கப்பட்ட வசதிகளை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை தப்ப முடியாத தருணங்களும், தாவிப் பாய்ந்து ஓடும் நிகழ்வுகளும் வீட்டில் அன்றாடம் நடக்கும் வாடிக்கையான நிகழ்ச்சியாக உள்ளது. காரணம் என் அப்பாவுடன் அன்று பேச எனக்குப் பயம். இன்று இவர்களுக்கோ அப்பா என்பவர் மற்றொரு தோழன். ஆனால் நாம் இந்த மாற்றங்களைக் கண்டு பயந்து சாகின்றோம். இனி என்ன ஆகப் போகின்றதோ? என்று அஞ்சுகின்றோம். ஆனால் குழந்தைகளிடம் உருவாகும் மாற்றங்கள் நம்மைக் கேட்டு வருவதில்லை. ஆசிரியர்கள், உடன்படிக்கும் தோழிகள், பழகும், பார்க்கும் நபர்கள் என்ற கலந்து கட்டி வர எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிலே கற்றுக் கொள்கின்றார்கள்.   இவை அனைத்தையும் விடச் சமகாலத்தில் வளர்ந்த தொழில்நுட்ப வசதிகள் தான் அவர்கள் வாழ்க்கை தீர்மானிக்கின்றது. மாற்றுகின்றது. தவறு, சரி என்று இனம் பிரிப்பதில்லை. இளங்கன்று பயமறியாது என்ற வார்த்தைகள் இருபது வயது வரைக்கும் பொருந்தும் அல்லவா? குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பல முறை அவரவர் ஆசிரியர்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. நாம் ஆசிரியர் குறித்து மனதிற்குள் உருவாக்கி வைத்து இருக்கும் மரியாதை சார்ந்த பயங்கள் எல்லாமே இன்று அடிவாங்கி விட்டது. உன் வேலை உனக்கு? என் வேலை எனக்கு? என்று கொடுக்கல் வாங்கல் கணக்காகவே இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு உள்ளதாக எனக்குத் தெரிகின்றது. குழந்தைகளின் குணாதிசியங்களில் பெரும்பங்கு வகிப்பது ஆசிரியர்கள் தான் பலவிதங்களில் காரணமாக உள்ளார்கள் என்பதனை பலமுறை கவனித்துள்ளேன். தற்போது எந்த ஆசிரியர்களும் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. பாடங்களுக்கு அப்பாற்பட்டுப் பேசுவதில்லை. பொதுவிசயங்கள் குறித்து உரையாடல் அறவே இல்லை என்பது தான் முக்கியமாகத் தெரிகின்றது. இதற்குப் பின்னால் மாறிய பள்ளிக்கூடச் சூழ்நிலைகள் பெரிதாக இருந்தாலும் ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துப் பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை அல்லது அது குறித்த அக்கறையில்லை. வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை நம்பாத எவரும் பெற்ற வெற்றிகளைக் கடைசி வரைக்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றீர்களா? அடைகாத்து வைத்திருக்கும் சொத்துக்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தி விட்டு இறந்து போய்விடலாம்.   ஆனால் பெற்ற சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வாங்கியவருக்கு அருகதை வேண்டுமே? ஆனால் எந்தத் தனியார் பள்ளிக்கூடமும் ஆசிரியரின் பொது அறிவு குறித்துக் கவலைப்படுவதில்லை. கல்வியென்பது மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே என்று தீர்மானமாக மாறிய பின்பு பொது வாசிப்பு என்பது தேவையில்லாதது போல் ஆகிவிட்டது. 23 வயதில் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேரும் ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியை விடத் தற்போது குழந்தைகளின் மனோபாவம் மிஞ்சுவதாக உள்ளது. இதில் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. லகானைப் பிடித்துக் கையாள வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் கையாலாகத்தனத்தில் கோட்டைவிட்டு விடுகின்றார்கள் என்பதனை பலமுறை பலவித அனுபவங்களில் வாயிலாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நகர்ப்புறங்களில் வளரும் குழந்தைகள் சிறு நகரங்கள், கிராமங்களில் வளரும் குழந்தைகளைவிடப் பல்வேறு விதங்களில் தினந்தோறும் மாறிக் கொண்டே வருகின்றார்கள். நல்லதும் கெட்டதும் கலந்தே வருகின்றது. ஆனால் எல்லாப் பொறுப்புகளிலும் பெற்றோர் இடம் வந்து தான் சேர்கின்றது. தடுமாற்றம் இங்கே இருந்து தான் தொடங்குகின்றது. அளவு கடந்த ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு தகுதிக்கு மீறி, தன் வருமானத்தை உணராமல் பள்ளிப்படிப்பில் தங்கள் சேமிப்பைக் கொட்டும் பெற்றோர்கள் அனைவரும் கண் இருந்தும் குருடர்களாகத்தான் எனக்குத் தெரிகின்றார்கள். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது "நான் என்னவாகப் போகின்றேன்?" என்று அவர்களாகவே சொன்னார்கள். இப்போது "மாற்றங்கள் பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம்" என்கிறார்கள். "உன் முடிவு உன் கையில்" என்ற சுதந்திரம் கொடுத்தபிறகு அவர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்றால்?                   (9) வெளிச்சம் தேடும் பறவைகள்  பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் என்னுடன் படித்த சிலரை பல சமயம் நினைத்துக் கொள்வதுண்டு. அவர்கள் படிப்பதே தெரியாது. படிப்பு குறித்த பயமிருக்காது. அலட்டல் இல்லாமல் மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு வந்து அசத்துவார்கள். ஆச்சரியமாக இருக்கும். நன்றாக விபரம் புரிந்தபின்பு இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ந்த போது நாம் வாழும் சூழ்நிலையும், குடும்பத்தின் பொருளாதார நிலையும் முக்கிய பங்கு வகிப்பதாக புரிந்து கொள்ள முடிந்தது. இதிலும் அனிதா போன்ற விதிவிலக்குகள் உண்டு. சிறு, குறு கிராமங்களைச் சார்ந்த வாழும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் வேலைகளையும் செய்து அத்துடன் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இங்கே பெரும்பாலனோர் இருக்கின்றார்கள். படிப்பு என்பது வீட்டில் செய்ய வேண்டிய ஐந்து வேலைகளில் அதுவும் ஒன்று. ஆனால் இன்று விவசாய வேலைகள் குறைந்து, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் என்று மாறிய சூழ்நிலையில் அனைவரின் வேலைத்தன்மையும் மாறிவிட்டது. தனி நபர்களின் பொருளாதார வசதிகள் பெருகியுள்ளது.   அவரவர் பயன்படுத்தும் வசதிகளைப் பொறுத்து வாழ்க்கைதரமும் மாறியுள்ளது. பரம ஏழைகள் ஏழைகளாக மாறியுள்ளனர். ஏழைகள் நடுத்தரவர்க்கமாக மாறியுள்ளனர். நடுத்தரவர்க்கம் மேம்பட்ட உயர் நடுத்தரவர்க்கமாக மாறியுள்ளனர். பள்ளிப்படிப்போடு தனிப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அறிவின் தன்மை மாறியுள்ளது. தற்போது படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர வேறொன்றும் வேலையில்லை என்கிற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. வீட்டில் ஒருவர் மட்டும் சுமார் ரகம். காரணம் அவர் எதிர்பார்க்கும் சூழ்நிலை பள்ளியில் இல்லை. செயல்முறைக் கல்வியில் அவர் ஆர்வமாக இருக்கின்றார். ஆனால் பள்ளி எதிர்பார்ப்பதோ மனப்பாடம் என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்த அவர் மறுதலிக்கின்றார். உன்னால் முடிந்தவரைக்கும் முயற்சி செய் என்று கட்டாயப்படுத்தாமல் ஒதுங்கி விட்டேன். மற்ற இருவரும் போட்டிகளில் முந்தி வரக்கூடியவர்கள். படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த விரும்பாத சுகவாசிகள். பள்ளி எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டவர்கள். ஒவ்வொருமுறையும் இவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கும் போது நான் பழகிய பல நண்பர்களின் நினைவு தான் எனக்கு வந்து போகும்.  கூடவே இவர்களின் தனிப்பட்ட திறமைகளும் ஆச்சரியமளிக்கும். உங்கள் மகள் விளையாட்டில் மிகச் சிறப்பாக உள்ளார். நீங்க கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தால் என்னால் அவரை நல்ல இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று ஒரு முறை மகளின் உடற்பயிற்சி ஆசிரியர் அலைபேசியில் என்னிடம் கேட்ட போது எனக்கே சற்று குழப்பமாக இருந்தது. அவர் முதலில் கராத்தே பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்புறம் என்சிசி தொடர்ச்சியாக என்எஸ்எஸ் என்று ஏதோவொரு பக்கம் மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்தார். இப்போது விளையாட்டு என்கிற செய்தி வந்து சேர்ந்தது.  என்னடா இது? இத்தனை நுணுக்கமாக இவர்களை கவனித்துக் கொண்டிருக்கின்றோமே? நம்மால் இதை யூகிக்க முடியவில்லையே? என்று யோசித்துக் கொண்டு வீட்டில் வந்து கேட்ட போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரிடன் தனிப்பட்ட ஆர்வம் கலந்த பல விசயங்களை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.   நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆசிரியர் பின்னால் செல்லத் தொடங்கினார். ஓட்டப்பந்தயத்தில் தொடங்கியது. கால்பந்து விளையாட்டில் வந்து நின்றது. மாவட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு வரும் போது எனக்கு குழப்பம் தான் மிஞ்சும். இன்னும் இரண்டு நாட்கள் தான் பரிட்சை உள்ளது. இவர் என்ன எழுதப் போகின்றார்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் மதிப்பெண்களைப் பார்த்தால் 90 சதவிகிதத்தில் வந்து நிற்கும்.   படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு படிக்கும் இவரின் தோழிகள் வாங்கும் 98 சதவிகிதம் மதிப்பெண்களை இவருடன் ஒப்பிடவே மாட்டேன்.  கணக்கில் எடுத்துக்கொண்டால் அவர்களைப் போல இரண்டு மடங்கு திறமை உள்ளவராக நினைத்துக் கொள்வேன். மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் இந்த மதிப்பெண்கள் வாங்கும் போது நிச்சயம் இது தனிப்பட்ட திறமை தான் என்பதை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். ஹிந்தி என்பதற்காக தனியாக அனுப்பி வைத்தேன். பாடம் சொல்லிக் கொடுத்த பெண்மணி பாடத்தை விட பணத்தில் மட்டும் குறியாக இருந்தார். குழிக்குள் கால் வைத்தாகி விட்டது என்று பொறுமையாக இருந்தோம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தேர்வுக்கு அனுப்பாமல் அடுத்த தேர்வு காலகட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு இழுத்துக் கொண்டே சென்றார்.   கடைசி இரண்டு மாதங்கள் படித்து எழுதினார். ஒவ்வொரு இடத்திலும் தனிப்பட்ட நபர்கள் உருவாக்கும் நெருக்கடிகளையும் மீறி தன் தகுதியை நிரூபித்துக் கொண்டே வருவதை கவனித்துள்ளேன்.   கவனித்தல் என்பது வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கும். ஆனால் கவனித்த பின்பு உள்வாங்குதல் தான் மாணவரின் அறிவுத்திறனில் முக்கிய பங்கு வகிக்கும். ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆசிரியர் நடத்தும் பாடங்களும், அவர் சொல்லித்தருகின்ற விசயங்களை மாணவர்கள் எப்படி கவனித்தார்கள் என்பதனை விட எந்த அளவுக்கு உள் வாங்கினார்கள் என்பதில் தான் அந்த ஆசிரியரின் வெற்றி தொடங்குகின்றது. இந்த இடத்தில் ஆசிரியரின் திறமையை நம்மால் உணர முடியும். மாணவர்களால் உள்வாங்க முடியவில்லை என்றால் ஆசிரியரின் தவறு அது. மாணவர்களின் சிந்தனைகளை அவரால் ஒருங்கே ஒரு புள்ளியில் கொண்டு வரமுடியவில்லை என்றே அர்த்தம். இது இயல்பான பழக்கமாக உருவாகின்றதா? அல்லது அவரவர் ஆர்வத்தின் அடிப்படையில் வளர்கின்றதா? என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் உள்ள மூவரின் வெவ்வேறு குணாதிசியங்களை வைத்து நானே பலவித கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொள்வதுண்டு. என்னை, என் மனைவியை வைத்து என் குழந்தைகளின் அறிவுத்திறனை ஒப்பிடவே முடியவில்லை. அவர்களின் வளர்ந்த சிந்தனைகள் வேறுவிதமாக உள்ளது.   ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையை விட வீரியமாக உள்ளது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் தற்போதைய தலைமுறை என்பது இதுவரையிலும் பார்த்திராத வினோத கூறுகளைக் கொண்டிருக்கின்றது.  காரணம் படிப்படியாக வளர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சி. நாம் கடந்து வந்த ஒவ்வொரு நூற்றாண்டுகளையும் அதன் வளர்ச்சி சார்ந்த சாதக பாதக அம்சங்களையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள். படிப்படியான வளர்ச்சியாகத் தான் இருந்து இருக்கும்.  ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் உருவான அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு நூற்றாண்டு வளர்ச்சியை தனது காலாண்டு பருவத்தில் செரித்து தின்று விட்டது.   இதனால் சாதகமும் உள்ளது. பாதகமும் உள்ளது. சிந்தனைத் திறனின் தன்மை மாறியுள்ளது. எவற்றுக்கெல்லாம் நாம் மூளையைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தோமோ அதனை கருவிகள் கையாளத் தொடங்கி விட்டது. கருவிகளுக்குத் தேவைப்படும் கட்டளைகளை உருவாக்க மட்டுமே மனித சிந்தனை தேவைப்படுவதாக உள்ளது. பத்து சதவிகித  உழைப்பென்பது 90 சதவிகித அறிவைப் பெற்றுள்ளதாக மாற்றப்பட்டு விடுகின்றது. இது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த நம்ப முடியாத மாற்றம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு ஒரு முறையாவது இவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்வதுண்டு. காரணம் வருடந்தோறும் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். வருகின்ற ஆசிரியர் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிப்பதில்லை. நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் ஒரு பக்கம்.  அவர்களின் தனித்திறமை தள்ளாடத் தொடங்கும் போது அது மாணவர்களின் மூலமாக, பெற்றோர்கள் வாயிலாக நிர்வாகத்திற்கு சென்று சேர பிரச்சனைகள் உருவாகத் தொடங்கி விடும்.  மாறி வந்த புதிய ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேசுவதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செல்வதில்லை. பத்து நிமிடம் பேசும் போதே ஆசிரியரின் தரத்தை ஓரளவுக்கு யூகித்துக் கொள்ள முடிகின்றது. இனி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அமைதியாக வந்துவிடுவதுண்டு. சிறிய தொழிற்சாலைகளின் அடுத்த கட்ட வளர்ச்சியான பெரிய நிறுவனமாக மாறும் என்பது பொதுவிதி. அது ஆச்சரியமல்ல. அது தான் உண்மையான வளர்ச்சி. ஆனால் கல்விக்கூடங்கள் நிறுவனமாக மாறும் போது அடிப்படைத்தன்மை மாறி மாணவர்களை எந்திரமாக மாற்றும் பணியைச் செய்ய தொடங்கிவிடுகின்றது. இதனை கண்கூடாக கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின் மூலம் பார்த்து வருகின்றேன். தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் பணம் வரும் வாய்ப்பை உருவாக்க முடியுமா? என்று ஒரு கல்விக்கூடம் யோசிக்கும்பட்சத்தில் அங்கே என்ன நிகழும்? அது தான் இப்போது தமிழ்நாடு முழுக்க நடந்து வருகின்றது, இவர்களின் தனிப்பட்ட திறமைகள் தேவையில்லாமல் போய்விடுகின்றது. திறமைகள் உள்ள குழந்தைகள் ஏன் நமக்கு தேவையில்லாத வேலை? என்று யோசிக்கத் தொடங்கும் போதே அவர்களும் சராசரி மாணவராக மாறிவிடுகின்றார்கள். இதையும் மீறி பெற்றோர்களும் குழந்தைகளும் உணர்வு பூர்வமாக ஒன்றினைந்து வாழும் குடும்பத்தில் தனித்திறமை கொண்ட குழந்தைகள் தங்கள் தனித்தன்மையை ஒவ்வொரு சமயத்திலும் வளர்த்துக் கொண்டே வருகின்றார்கள்.   ஆனால் இவர்களின் தனித்திறமைகள் வளர்வதற்கு நாம் எந்த அளவுக்கு பாடுபட வேண்டும்? இருண்ட உலகத்திற்குள் வெளிச்சம் தேடும் வாழ்க்கையை எப்படி கையாள வேண்டும் என்பதனைப் பற்றி பார்க்கலாம்?             (10) எழுந்து நிற்கலாம் வா?   மேலைநாடுகளில் கல்விக்கூடங்கள் என்பது சிறைக்கூடங்கள் அல்ல. அதுவொரு களம். பயன்படுத்திக் கொள்பவர்களின் திறமையைப் பொறுத்து வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு. அரசியல் கலக்காத உலகமிது. எந்தக் காலத்திலும் அரசியல் உள்ளே நுழைய முடியாதபடி ஒழுங்குபடுத்தி வைத்துள்ளார்கள். மாறிக் கொண்டேயிருக்கும் உலகை உள்வாங்கிக் கொண்டே மாறிக் கொண்டே வருவதால் மாணவர்களின் தகுதியும் திறமையும் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட முடியாத உயரத்தில் எப்போதும் உள்ளது. அங்கே தனி மனித வாழ்க்கை வசதிகள் என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் பிரதிபலிக்குமே தவிர அது பள்ளி, கல்லூரிக்குள் வந்து நிற்காது. சிறகுகளைக் கத்தரிக்காமல் வானத்தை எட்டிப்பிடிக்க ஆதரிக்கும் உலகமது. மேலைநாட்டுக் கல்விமுறைகளில் மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கூடுதல் தகுதி. விளையாட்டு மட்டுமல்ல. தனிப்பட்ட திறமைகளைக் கண்டறியும் கூட்டமும் உண்டு. அதனை வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வமும் கலந்த கல்வியது. ஆர்வமும் ஆரோக்கியமும் ஒன்றே கலந்து இருப்பதால் மன ரீதியான எழுச்சியும் இயல்பான ஒன்றாக உள்ளது. கடவுள் உண்டு இல்லை என்ற கூட்டமும் உண்டு. ஆனால் அறிவியல் அதனை விட நமக்கு முக்கியம் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒன்று மற்றதுடன் உரசுவதில்லை.   ஆனால் இங்கே? ஒட்டி வைத்த மரத்தில் ஒடிக்கப்பட்ட கிளை போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது.   குறிப்பிட்ட எல்லைக்குள் வளர்க்கப்படும் ஒருவித சோதனைச்சாலை. ஆன்மீகத்தை அறிவியலுடன் கலப்பார்கள். அறிவியலுக்கும் ஆதாரம் தேவையில்லை என்று வாதிடுவார்கள். வரலாறு என்பது சில சமயம் திணிக்கப்பட்டதாக இருக்கும். பல சமயம் நம்ப முடியாததாக இருக்கும். மொத்தத்தில் மாற்றுச் சிந்தனைகள் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் உருவாக்கப்படும் பாடத்திட்டம் என்பது பல் இல்லாத கிழவனுக்கு வழங்கப்படும் பக்கோடா போலவே இருக்கும். படிப்பவனுக்குப் புரியாது. புரிந்தவனுக்கும் குழப்பமே மிஞ்சும். வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இவர்கள் வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இடையே தான் நம் மாணவர்கள் போராடிப் பெற்ற அறிவுடன் தான் இன்று உலகமெங்கும் சென்று வெல்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் தனித்திறமையை எங்கே போய்க் காட்டுவது? அதுவும் இங்குள்ள அரசியலில் எல்லாமே விற்பனைக்கு என்ற சூழ்நிலையில் தான் பல மாணவர்கள் கருகிப் போகின்றார்கள்.   இந்திய விளையாட்டுத்துறை என்பது காசு பார்க்கும் கூட்டத்தால் ஆளப்படுவது. குறிப்பிட்ட வட்டம், குறிப்பிட்ட நபர்கள் என்ற எல்லையை உடைக்க முடியாத கூட்டத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தனி ராஜ்ஜியம் அது. எந்த விளையாட்டின் மூலம் வருமானம் அதிகமாகக் கிடைக்குமோ? அதுவே தேசிய விளையாட்டாகப் பார்க்கப்படுகின்றது. இன்று வரையிலும் ஊதிப் பெருக்கப்பட்ட கிரிக்கெட் முன்பு வேறெந்த விளையாட்டும் பேசப்படுகின்றதா? மகளிடம் ஒவ்வொருமுறையும் இங்குள்ள விளையாட்டிற்குப் பின்னால் உள்ள அரசியல் தகிடுதத்தங்களைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆனாலும் அவர் ஆர்வத்தை மட்டுப்படுத்துவதில்லை. மகள் "நான் நாளை இங்கே விளையாடச் செல்லப்போகின்றோம்?" என்று முதல் நாள் சொல்லிவிட்டுச் செல்லும் போது என் மனதில் பல கேள்விகள் வந்து எழும். ஆனால் இந்தச் சமயத்தில் அவரின் விருப்பத்திற்கு ஏன் தடை சொல்ல வேண்டும் என்று அனுமதி கொடுப்பதுண்டு. ஒருவரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவத்தை விடப் பள்ளிப் பருவம் தான் முக்கியமானது. நினைவுகளால் வாழ்ந்து பார்க்கக்கூடிய அத்தனை விசயங்களும் பள்ளிப்பருவத்தில் தான் கிடைக்கும். கல்லூரிப் பருவம் என்பது அடிப்படைக் கடமைகளும் சேர்ந்தே இருப்பதால் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. பள்ளிப்பருவத்தில் எனக்கான ஆர்வம் புத்தகங்களில் மட்டும் இருந்தது. ஆனால் இவர்களின் ஆர்வம் எல்லாவற்றிலும் கலவையாக உள்ளது. இதன் காரணமாகப் பெற்றோர்களுக்குத் தான் கூடுதல் சுமையாக உள்ளது. நடுத்தரவர்க்க பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணமென்பது உணவு, உடைகள், தங்குமிட வசதிகளை விடத் தற்போது குழந்தைகளில் கல்விக்குத்தான் பெரும்பங்கு செலவளிக்க வேண்டியதாக உள்ளது. இதற்கு மேல் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு நடுத்தரவர்க்க பெற்றோர்களும் பெரிய வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.   குழந்தைக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதனை விடக் கற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் செலவளிக்கும் தொகை கணக்கில் அடங்கா? ஒரு பக்கம் பள்ளிக்கூடங்கள் காட்டும் ஆசை வார்த்தைகள். மறுபக்கம் பெற்றோர்களின் தனக்கான "கௌரவம்" என்ற பெயரில் காசைக் கரியாக்கும் தான் தோன்றித்தனம். இவை எல்லாமே மற்ற மாணவர்களை, பெற்றோர்களைப் பல விதங்களில் பாதிப்பு உண்டாக்கவே செய்கின்றது. இப்போதைய சூழ்நிலையில் தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. தனிப்பட்ட நபர்கள் வரைக்கும் எதையெல்லாம் காசாக்க முடியும் என்ற கலையில் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள். மாதம் எட்டு வகுப்புகள். கணக்குப்பாடம் மட்டும். ஆனால் தொகையோ 5000 ரூபாய். இதே போல ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக என்று பெரிய வன்முறையே நடந்து கொண்டிருக்கின்றது. எல்லாவற்றிலும், எப்போதும் காசு பார்க்க மட்டுமே என்கிற சூழ்நிலையில் தான் இங்கே மாணவர்களின் தனித்தகுதிகள் என்பது செல்லாக்காசாக மாறிவிடுகின்றது. மகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் ஒவ்வொன்றையும் அமைதியாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. பள்ளிக்குப் பெருமை வேண்டும். விளையாட்டு ஆசிரியருக்குத் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும். ஆனால் பள்ளி செய்ய வேண்டிய கடமைகளோ, அதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளோ பெற்றோர்கள் எதிர்பார்க்கக் கூடாது.   நாம் அழைத்துச் செல்ல வேண்டும். நாமே அழைத்து வர வேண்டும். செல்லும் இடங்கள் தூரமாக இருந்தால் அதற்கெனத் தனிக்கட்டணம். ஒவ்வொரு நிலையிலும் இங்கே காசு தான் பேசுகின்றது. காசு தான் தீர்மானிக்கின்றது. அதிகமாக யோசித்தால் இந்த வாழ்க்கை அலுத்துவிடும். ஊழல் மட்டுமே நீக்கமற நிறைந்திருப்பதால் எதார்த்தம் புரிந்து எந்தப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பலிகிடாவாக்க முயற்சிப்பதே இல்லை. 'முடிந்தவரைப் படி. முயற்சி எடுத்துப் படி. ஏதோவொரு ஏணியைப் பிடித்துக் கொள். எப்படியாவது தொற்றிக் கொள். ஏதோவொரு இடத்தை அடைந்து விடு' இங்கே உள்ள வாழ்க்கை இதுவே தான். மாணவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள், தன்னம்பிக்கை கதையைச் சொல்லி மாணவர்களைத் தளர வேண்டாம் என்று உற்சாகப்படுத்த நினைப்பவர்களுக்கும் கூட இங்குள்ள எதார்த்தம் புரிந்தாலும் ஏன் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டே வென்றவர்களின் கதையைப் பற்றி மட்டுமே விலாவாரியாகப் பேசுகின்றார்கள். எவரும் தோல்விகளைப் பற்றிப் பேசுவதில்லை. தோல்விகள் கற்றுத் தரும் பாடங்களைப் பற்றிக் கலந்துரையாடல் செய்வதில்லை. ஏன்? எதற்கு? எப்படி? என்ற வார்த்தைகளே இன்றைய கல்விச்சூழலில் தேவையில்லாத வார்த்தைகளாக மாறிவிட்டது. அவர்களுக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை? என்ற கேள்வியை நாம் நினைத்துப் பார்த்து இருப்போமா? இன்றைய குழந்தைகள் இந்தக் கேள்வியை எளிதாக முன் வைக்கின்றார்கள். ஆனால் துணிந்து எதிர்த்து நின்று கேட்பதில்லை. வெட்டி வெட்டி வளர்க்கும் போன்சாய் மரங்கள் போலச் சிறிது சிறிதாக அவர்களை மாற்றி நாங்கள் சொல்வதை மட்டுமே செய் என்பதான கீழ்ப்படிதல் நிலையை மட்டுமே ஒவ்வொரு பள்ளிக்கூடமும் உருவாக்கி வைத்துள்ளது.   எங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நடக்கும் விவாதங்கள் பள்ளிக்கூடம் சார்ந்த பொது நிர்வாகம் பற்றியதாகவே இருக்கும். பலரின் தகுதியை அதன் மூலம் உருவான விளைவுகளைப்பற்றியே பேசுவோம். ஒவ்வொருவருக்கும் என்ன செலவாகின்றது? என்பதனை பொது விவாதமாக மாற்றிப் பேசுவோம்? ஏன் அரசாங்கம் அரசுப்பள்ளியை வளர்ப்பதில் இருந்து பின்வாங்கியது என்பதனை புரிய வைப்பதுண்டு. காரணக் காரியங்களையும் அதன் விளைவுகளைப் பற்றி முடிந்த வரைக்கும் புரிய வைக்க முயற்சிப்பதுண்டு.     அரசு பள்ளிக்கூடங்கள் தோல்வியானதற்கு முக்கியக் காரணங்கள் பலவுண்டு. ஆனால் எல்லாவற்றிலும் முதன்மையானது மக்களின் மாறிய பொருளாதாரச் சூழல். மேலைநாடுகளில் வர்க்க பேதமுண்டு. நீ வெள்ளை. நீ கருப்பு என்ற இனப்பாகுபாடு உண்டு. இந்த இரண்டுக்குள் நின்று விடும். ஆனால் இங்கே சாதி, மதம், பணக்காரன், ஏழை, கோடீஸ்வரன், அதிகாரம் பெற்றவன் என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாலைகள் உண்டு. அவரவர் அந்தந்த சாலைகளை விட்டு வெளியே பயணிக்க விரும்புவதே இல்லை. தனக்கான அடையாளம் என்பதனை தொடக்கத்தில் சாதி வழியே பார்த்தவர்கள் இன்று தாங்கள் வைத்துள்ள பணம் மற்றும் வசதிகள் வழியே நிரூபிக்க விரும்புகின்றார்கள். "என் குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்" என்பது பழங்கதை. இன்றோ "என் குழந்தை இந்தப் பள்ளியில் படிக்கின்றார்" என்பதே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது.   பள்ளி என்பது கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது என்று தொடங்கியதோ? அன்றே அரசு பள்ளிகளைத் தீண்டாத் தன்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்படத் தொடங்கியது. அதற்கு மேலும் அரசே வெளிப்படையாகச் செய்யக்கூடிய ஊழல் காரணமாக அரசுப் பள்ளிகளின் தரம் அதலபாதாளத்திற்குச் செல்லத் துவங்கியது. ஆனால் இன்னமும் அங்கங்கே மூச்சைப் பிடித்துக் கொண்டு தரத்தை மேம்படுத்தும் அரசுப் பள்ளிகளை ஆதரிக்க மனமில்லாத அதிகாரவர்க்கம் மறைமுகமாகப் பெற்றோர்களைத் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கம் தள்ளுவதைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பாடத்திட்டம். கற்பிக்கும் முறைகளில் வேறுபாடுகள். இதற்கு மேலாக இந்த மொழியை நீ படித்தே ஆக வேண்டும் என்ற அரசின் ஆணவபோக்கு என்று எட்டுத் திசைகளும் சேர்ந்து மாணவர்களைச் சோர்வடையச் செய்கின்றதோ இல்லையோ பெற்றோர்களின் மன உளைச்சலை இந்த அரசும், அதிகாரவர்க்கமும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. குழந்தைகளின் பாடப்புத்தகங்களை, பாடத்திட்டங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பார்பபதுண்டு. மிரண்டு போயுள்ளேன். எட்டாம் வகுப்புப் பாடங்கள் நான் கல்லூரியில் படித்த பாடங்கள். எல்லாம் சரி? ஆனால் பாடங்களை நடத்தும் ஆசிரியரின் தகுதி தானே இங்கே முதன்மையாகப் பேசப்பட வேண்டும்? பெரிய பள்ளிக்கூடம், பிரபல பள்ளிக்கூடம் என்று எந்த இடத்தில் நம் குழந்தைகளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அங்குள்ள நிர்வாகத்தின் தன்மையைப் பொறுத்து, பாடம் நடத்தும் ஆசிரியர் வைத்தே ஒரு மாணவரின் சிறப்பு வெளியே தெரியவரும். இவர்களின் மனோநிலையைத் தெரிந்து கொள்ள ஒரு முறை "ஏன்டா உங்கள் பள்ளியில் புதிதாகத் தொடங்கிய சிபிஎஸ்சி எப்படி இருக்கு?" என்று கேட்டேன்.   அப்போது தான் சில உண்மைகள் புரிய வந்தது. பெற்றோர்கள் ஆசைப்பட்டுச் சேர்ந்த குழந்தைகள் அடுத்த வருடமே பாரத்தைத் தாங்க முடியாமல் மீண்டும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்திற்கே வந்த கொடுமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனது குழந்தைகளின் அறிவுத் திறன் என்ன? என்பதையே உணர்ந்து கொள்ள முடியாத பெற்றோர்கள் நடத்தும் வன்முறையாட்டம் இது. சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்பது கடினமல்ல. அது தொடர்ச்சியாகப் பயிற்சியில் கொண்டுவர வேண்டியது. திடீரென்று கடலில் தள்ளி உனக்கு நீச்சல் தெரிந்தால் நீந்தி வா? என்று சொன்னால் நீச்சலே தெரியாதவனின் நிலை எப்படியிருக்கும்? அப்படித்தான் இங்கே அரசு நடத்தும் பரிட்சைகளும், தேர்வுகளும் உள்ளது. கோவையில் பணிரெண்டாம் வகுப்புக் கட்டணம் (இரண்டு வருடத்திற்கும் தங்கும் விடுதிக் கட்டணம் உட்பட) மூன்று லட்சம் ரூபாய் என்பதனைக் கேட்கும் போதே திகைப்பாக உள்ளது. அதன் பிறகு கல்லூரி மூன்று ஆண்டுகள். அதன் பிறகே அவருக்கான துறை சார்ந்த படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்து இயல்பான கலைக்கல்லூரி பட்டம் வாங்குவதற்குச் சிறப்பான பள்ளி மற்றும் கல்லூரி என்ற பெயரில் ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தபட்சம் ஆறு லட்சம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். ஆனால் இதன் மூலம் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் அந்த மாணவ மாணவியருக்குக் கிடைக்கும் என்பது எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது தான் இப்போதைய நிதர்சனம். பத்துலட்சம் லஞ்சம் கொடுத்து மாதம் 15000 ரூபாய் வேலைக்குச் செல்லும் ஒருவரின் வாழ்க்கைக்கும், ஒரு பட்டப்படிப்பு படிக்க ஆறு லட்சம் ரூபாய் செலவளிக்கும் ஒரு நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைக்கும் இடையே உள்ளது தான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். நாம் தான் உண்மையான அரசியலைப் பேச விரும்புவதில்லை. நாம் தான் பேச வேண்டியதை விட்டு பேசக்கூடாதவற்றைத் தானே இங்கே எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கின்றோம்?   நாம் பேச வேண்டியதைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா?           (11) பயணங்கள் கண்டறியும் பாதைகள்  பேசித் தீரா விசயங்களில் ஒன்று குழந்தைகள் வளர்ப்பு. அது இடம், வாழும் வாழ்க்கை, சூழ்நிலை பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும் விசயமிது. என் குழந்தைகள் , குழந்தைகளுடன் பழகும் தோழியர்கள், குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடம், அங்கு நிலவும் தற்போதைய நிலையை வைத்து ஓரளவுக்கு நான் யூகிக்கும் அனைத்து விசயங்களும் சரியாகவே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சென்னையில் உள்ள சூழ்நிலை திருப்பூர் வாழ்நிலைக்குப் பொருந்திப் போகாது. அதே காரைக்குடியைச் சுற்றியுள்ள கல்விச்சூழலை அங்குள்ள சமூக வாழ்க்கை தான் தீர்மானிக்கின்றது. இதைத்தான் இங்குள்ள கல்வியாளர்கள் ஒரு மாணவரின் அறிவை ஒரு தேர்வு தீர்மானித்து விடாது என்கிறார்கள். அதிலும் நீட் போன்ற சம்மந்தம் இல்லாத பாடத்திட்டங்களின் வழியே கேட்கப்படும் கேள்விக்கான பதிலை தனிப்பட்ட பயிற்சியின் மூலமே மாணவர்கள் அணுக முடியும். அது நன்மையை விடக் கெடுதலையே அதிகம் கொண்டு வந்து சேர்க்கும் என்று வாதிடுகின்றார்கள்.   சமச்சீர்க் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வியில் தனிப்பட்ட பள்ளிகள் தனக்கென்று சேர்த்து வைத்துப் பாடத்திட்டம் அடங்கிய கல்வி, மத்திய அரசு பாடத்திட்டம், கேந்திரயா வித்தியாலயா பாடத்திட்டம், நவோதயப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத் திட்டம் என்று இந்தியா முழுக்க ஏன் இன்று தமிழகம் முழுக்கக் கல்வி என்பது எது திசை? எது இலக்கு என்று தெரியாமல் எங்கங்கோ மாணவர்களை இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இது சிறப்பா? அது சிறப்பா? என்று ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய வருமானத்தை, சேமிப்பை தங்கள் குழந்தைகளுக்காகப் பந்தயக்குதிரைகளில் பணம் கட்டுவதைப் போலக் கட்டுகின்றார்கள். மொத்தத்தில் கல்வியென்பது கடைச்சரக்கு போல மாறியுள்ளது. இருப்பவனுக்கு ஒரு மாதிரியாகவும், பணம் இல்லாதவனுக்கு வேறொரு மாதிரியாகவும் இங்கே கிடைக்கின்றது. பாடத்திட்டத்துடன் கல்வி நிலையங்கள் வழங்கும் பிற வசதிகள் இன்று பெற்றோர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது. வணிகமயமாகிவிட்ட கல்வியைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் வணிக நிறுவனங்கள் விரும்பும் வார்ப்பு போலவே இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அறிதல் என்பது பின்னுக்குப் போய்ப் பிழைத்தல் என்பது முக்கியமாக மாறியுள்ளது. குழந்தைகள் மேல் வைத்துள்ள அன்பு என்பது மாறி அவர்களின் இறுதி இலக்கு இதுவாக இருக்க வேண்டும் என்று எப்போது ஒரு பெற்றோர் நினைக்கத் தொடங்கினார்களோ? அன்றே குடும்பத்தின் அடிப்படை அறம் காணாமல் போய்விட்டது. நான் வெளியே பார்க்கும் பெற்றோர்கள், பழகும் நண்பர்களின் குடும்பம் அவர்களின் குழந்தைகளைக் கையாளும் விதம் போன்ற பலவும் என்னைப் பயமுறுத்துவதாக உள்ளது. தலைமுறை இடைவெளி என்பது ஒரு பக்கம் என்றாலும் இயல்பான வாழ்க்கைக்குத் தேவையானவற்றின் அளவு கோல் படிப்படியாக மாறிக் கொண்டே வருவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.   பலசமயம் நாம் தனித்து இருக்கின்றோமோ? தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றோமோ என்று நாம் குற்றவுணர்ச்சியுடன் யோசிக்கும் அளவிற்கு வெளிப்புற சமூகம் என்பது வேறொரு பாதையில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் ஆரோக்கியம் மாறியுள்ளது. அவர்களின் உணவுப் பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. யோசிக்கும் திறன் குறைந்து வாசிக்கும் பழக்கம் மாறி புதுயுகத்தில் இப்போதைய கல்விச்சூழல் வினோத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அடுத்த வருடம் வீட்டில் ஒருவர் பத்தாம் வகுப்பு செல்லப் போகின்றார். இதுவரையிலும் மதிப்பெண்கள் குறித்த அக்கறையை உருவாக்காமல் வளர்த்து வந்த எனக்கு இனி அந்த மதிப்பெண்கள் தான் அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றது என்ற எண்ணமே ஏராளமான அச்சத்தை இப்போதே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. கேள்விகள் கேட்டுப் பழகிய அவர்களின் செயல்பாடுகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றது. உங்களிடம் எதிர்பார்ப்பது இது மட்டுமே? என்று திரும்பத் திரும்பப் பள்ளிகளில் சொல்லப்படும் விசயங்கள் தான் அவர்கள் மனதில் பதிகின்றது. ஒரு நாளில் அதிகபட்ச நேரம் பள்ளியில் இருக்கும் அவர்களின் குணாதிசியம் என்பது அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியர்களின் குணத்தை வைத்தே உருவாகின்றது என்பதனை என்னால் நன்றாக உள்வாங்க முடிகின்றது. நாம் தற்போது உள்ள கல்வித்சூழலில் கற்றலில் காணும் குறைபாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்தாலும் கேட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் போதும் என்ற நிலைக்கே தள்ளப்படுவதால் வேறு எதுவும் இங்கே தேவையில்லை என்ற நிலைக்கு வந்து நிற்கின்றார்கள்.   இன்று நீட் என்ற மருத்துவக்கல்விக்கு என்று கொண்டு வரப்பட்ட தேர்வுக்குப் பிறகு தமிழகத்தில் பலதரப்பட்ட குரல்கள் பல இடங்களில் இருந்து எழுகின்றது. அத்தனை பேர்களும் நம் உரிமை. நம் தேர்வு என்கிற ஒற்றைவாக்கியத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். ஆனால் கடந்த மூன்று ஐந்தாண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டம் குறித்தோ, தனியார் பள்ளிகள் அரசு கொள்கைகளை மீறி வசூலிக்கும் அடாவடித்தனம் குறித்தோ யாரும் வாய் திறப்பதே இல்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கொள்கை என்பது எத்தனைச் சிறப்பாக இருந்தாலும் அதில் ஊழல் என்பது சிறிதளவு இருந்தால் கூட அதற்குப் பெயர் கொள்கை அல்ல. கொள்ளை என்றே பொருள். ஆனால் இன்று கல்வி என்ற பெயரால் கொள்ளை தான் நடந்து கொண்டிருக்கின்றது. அதுவும் மாணவர்களின் அறிவு என்பதனை ஒரு வட்டத்திற்குள் வைத்து நடத்தப்படும் கொள்ளை. நம்மால் இதைப் பற்றிப் பேச முடியாது. பேசக்கூடியவர்களும் அவரவர் தனிப்பட்ட நலன் பொறுத்தே பேசுகின்றார்கள். காரணம் வியாபாரிகள் லாபத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். கல்வி வியாபாரிகளின் லாபத்திற்காகப் பலிகிடாவாக மாறும் மொத்த பெற்றோர்களும் இன்னும் சிறிது காலத்தில் தங்கள் குழந்தைகளுக்காகத் தகுதிக்கு மீறிச் செலவழித்து அதன் இறுதிப் பலனையும் பெற முடியாத சோகத்தில் தான் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கப் போகின்றார்கள். காரணம் தங்களின் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு, வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு, சமூகத்தில் உள்ள உயர் பதவிகளுக்கு உண்டான வேலை வாய்ப்பு என்ற இந்த மூன்று கொள்கைகளில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்கின்றார்கள். பள்ளிக்கூடக் கட்டணம் தங்கள் தகுதிக்கு மீறியதாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலை தான் தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.   பள்ளிக்கட்டணம், சிறப்புப் பயிற்சி கட்டணம் என்று ஒவ்வொரு கட்டணமாகக் கட்டி வளரும் மாணவ சமுதாயத்தில் எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும்? மத்திய, மாநில அரசாங்கத்தின் உயர் கல்விக்கூடங்களில் படிக்கும் 90 சதவிகித மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விடுகின்றார்கள். அதிகாரவர்க்கத்தின் உயர்நிலை பதவிகளுக்குத் தேர்வு எழுதும் பத்து லட்சம் மாணவர்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் மட்டுமே வருடந்தோறும் தேர்ச்சியடைந்து அந்தப் பதவியை அடைகின்றனர். இதன் படிம நிலைகளை ஒவ்வொரு தேர்வின் மூலமும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும். மொத்தத்தில் நல்ல பதவி, நல்ல சம்பளம் என்கிற விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளியே வரும் அனைத்துத் துறை சார்ந்த படிப்புகளையும் கணக்கிட்டால் அதிகபட்சமாக ஐந்து சதவிகித மாணவர்களே தேறுவார்கள். மற்றவர்கள் படித்துப் படிப்புக்கு தொடர்பில்லாத துறைகளில் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். நான் வாழும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியும் பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள் நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த வேலையில் தான் இருப்பேன். இப்படித்தான் என் வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற அவர்களின் மாணவ கனவு கருகிப் போய் வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற பரிதாப நிலைக்கு வந்து சேர்ந்து விடுகின்றார்கள். தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வந்தவர்களுக்கு மற்றொரு மிகப் பெரிய பிரச்சனையும் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் கல்விக்காக வாங்கிய வங்கிக் கடன், தனியார்களிடம் பெற்ற கடன் என்ற பெரிய சுமையையும் சேர்ந்து சுமக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.   இங்கே எவருக்கும் சொந்தத் தொழில் ஆர்வமும் இல்லை. தமிழகத்தில் அதற்கான சூழ்நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொன்றும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், பணம் அதிகமாக வைத்திருப்பவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. சிறு தொழில்கள் குறித்தோ, மற்ற தொழில்நுட்ப விசயங்களில் ஆர்வம் செலுத்தி அதன் மூலம் மேலே வந்துவிடுவோம் என்ற எண்ணமே இல்லாத மாணவ சமூகத்தின் எண்ணத்திலும் நோக்கத்தில் எளிதில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே நம் கல்விச் சூழல் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. பணத்தை வைத்துக் கொண்டு அதனைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் அதிகாரத்தின் கீழ் நாம் வாழக் கடமைப்பட்டவர்கள். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நம் குழந்தைகளை மன உடல் ரீதியாக ஆரோக்கியத்தை அளிப்பதே முதன்மையாக இருக்க வேண்டும். என் தாத்தா என் அப்பா எப்படி உருப்படப் போகின்றார்? என்று கவலைப்பட்டார். என் அப்பா நான் எங்கே உருப்படப் போகின்றேன் என்று ஆதங்கமாய்ப் பேசினார். என் தாத்தாவுக்கு அவர் வாழ்ந்த சூழ்நிலையில் அவருக்காக எல்லையைத் தொட்டார். என் அப்பாவும் அவருக்கான எல்லையைத் தொட முடிந்தது. காரணம் வாழும் வரைக்கும் அவர்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியமும், எதையும் எதிர் கொண்டு வாழும் மன ஆரோக்கியமும் கை கொடுத்தது. நானும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் குழந்தைகளுக்கும் அதையே கற்றுக் கொடுக்க விரும்புகின்றேன். அப்படித்தான் கற்றுக் கொடுத்தும் வருகின்றேன்.   அவர்கள் வாழும் சூழ்நிலையைக் கைக்கொண்டு அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எந்நாளும் எனக்குண்டு. போட்டி நிறைந்த உலகில் போட்டிகளால் மட்டுமே வளர்நது கொண்டிருக்கும் உலகில் நாம் வெல்ல வேண்டுமென்றால் நமக்கான ஆரோக்கியம் முதன்மையாகத் தேவைப்படுகின்றது. நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம். மற்றவற்றை அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையில் பெறக்கூடிய அனுபவங்கள் வழி நடத்தும். வழி காட்டும். (முற்றும்)       வலைதளத்தில் எழுதத் தொடங்கிய போது என் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதித் தான் எழுதவே கற்றுக் கொண்டேன். என் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்தையும் எழுதியுள்ளேன்.  ஆனால் பரிவை குமார் என்ற தம்பி அவர் தளத்தில் என்னைப் பற்றி என்று தலைப்பு கொடுத்து ஒவ்வொருவரையும் எழுத வாய்ப்பு கொடுத்தார். அப்போது தான் முதல்முறையாக என் முந்தைய மூன்று தலைமுறைகளையும் பற்றி யோசித்து மொத்தமாக நான் யார்? என்பதனைப் பற்றி எழுதினேன். உங்கள் பார்வைக்காக.  []   நான் யார்? "வாழ்க்கை என்பது ரசனையாகப் பார்க்க வேண்டியது. குறுகிய காலத்திற்குள் வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு சம்பவம்" என்று யாராவது உங்களிடம் வந்து சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? வாழ்க்கையை அனுபவிக்கப் பணம் வேண்டுமே? பணம் என்ற காகிதத்தால் கட்டப்படும் வீடு தான் வாழ்க்கை என்பதாக மாறியுள்ளது. விபரம் தெரிந்த நாட்கள் முதல் அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை, வறுமை, துன்பம் போன்ற எதையும் வாழ்க்கையில் இதுவரையில் பார்த்ததில்லை. பணம் குறித்த வெறித்தனமும் மனதில் தோன்றவும் இல்லை. மக்கள் பெரும்பான்மையாக நம்பும் இந்தப் பணம் சார்ந்த கொள்கையைப் புறக்கணித்தே வந்த காரணத்தால் இன்று வரையிலும் நான் பிறந்த குடும்பமும் சரி, மனைவி வழி சொந்தங்களின் பார்வையிலும் இன்று வரையிலும் "அந்நியன்" போலவே தெரிகின்றேன்.  தொழில் சார்ந்த விசயங்களில் அதிர்ஷ்டம் என்ற தேவதை தூரத்தில் இருந்தபடியே தான் கவனிக்கும். ஆனாலும் தேவையான ஒவ்வொன்றும் அந்தந்த சமயங்களில் கிடைத்துவிடும். வீட்டில் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் கேள்வி கேட்கும் வாழ்க்கை வாழ்ந்தாலும் என்னைக் கேலியாகப் பார்க்கும் வாழ்க்கை அமையாமல் இருந்தது தான் என் அதிர்ஷ்டம். நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்தவர்கள், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் 90 சதவிகித மனிதர்கள் எவருமே வெற்றியாளர்களாக வாழ்ந்தது இல்லை. இங்கு நான் வெற்றி என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது அவரவர் அடிப்படைத் தேவைகளைப் போராட்டமின்றி இயல்பாகப் பெறுதல். இதற்கு மேலாகத் தாங்கள் உழைத்த உழைப்புக்கு உண்மையிலேயே கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம். ஆனால் இவை இரண்டுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் 10 சதவிகித மக்களுக்குக் கிடைத்து இருந்தால் கூட அது ஆச்சரியமாக உள்ளது. ஏன் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சூழ்நிலைகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இங்கு தான் "என் கதை" என்ற வார்த்தைகளும், "என்னைப் பற்றி" என்ற சுயதேடலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இங்கு எவரும் தன்னைப் பற்றி முழுமையாக எழுத விரும்புவதில்லை. இதன் காரணமாக முக்கியப் பிரபல்யங்கள் எவருமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த  விரும்புவது இல்லை. ஆனால் தம்பி குமார் என்னிடம் கோரிக்கை வைத்த "அண்ணா உங்களைப் பற்றி எழுதுங்கள் " என்ற வாசகம் அடங்கிய மின் அஞ்சலை வாசித்த போது நேர்மையாக நம்மால் எழுத முடியுமா? என்று யோசித்தே பல வாரங்கள் கடந்து விட்டது. கடந்த பத்தாண்டுகளாக எழுதும் ஆர்வம் வந்த பிறகே எங்கள் குடும்பப் பின்னணி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன தான் நான் வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டினாலும் ஒவ்வொரு இடத்திலும் என் குணாதிசியங்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதனை மறுக்க முடியாது. இதன் காரணமாகவே என் முந்தைய தலைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.  உறவினர்களை ஒவ்வொரு விசேட நிகழ்ச்சியில் சந்திக்கும் போதெல்லாம் நான் பல கேள்விகள் எழுப்புவதுண்டு. ஆனால் எவரும் முழுமையான தகவல்களைப் பரிமாறத் தயாராக இல்லை. காரணம் அவர்களுக்கு அது குறித்த ஆர்வமும் இல்லை. வாழ்ந்து மறைந்தவர்கள் எவருமே சிறப்பான செயல்களைச் செய்தவர்களாகவும் இல்லை. இதற்கு மேலாக நம்மவர்களுக்கு வரலாறு என்பது பிடித்தமானதாக இல்லை. கசப்புகள் என்பதனை மறக்கவே விரும்புகின்றார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுக்கப் போராட்டத்துடன் தான் வாழ்ந்து முடித்து மறைந்துள்ளார்கள். நவீனங்கள் ஆட்சி செய்யும் தற்காலத்தில் கூட வாசிப்பு ஆர்வம் என்பதே 90 சதவிகித மக்களுக்கு இல்லை என்பதோடு இதெல்லாம் தெரிந்து உனக்கு என்ன ஆகப் போகுகிறது? பிழைக்கிற வழியைப் பார்? என்ற ஒரு பதிலைத்தான் அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற் போலச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றார்கள். சரி, நாம் தான் தவறான விதமாக யோசிக்கின்றோம்? இவர்கள் பணம் சார்ந்த விசயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் நினைத்த வசதிகளை அடைந்துள்ளார்களா? என்று கேள்வி கேட்டால் அதிலும் முழுமையான தோல்வியைத் தான் தழுவியுள்ளார்கள். ஆக மொத்தத்தில் பணத்தைப் பற்றி மட்டும் யோசித்து, அதன் பின்னாலே அலைந்து அத்தனை பேர்களும் நிராசையுடன் தான் மறைந்துள்ளார்கள்.  இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே என்னைப் பற்றி யோசித்த போது என் தலைமுறைகளைப் பற்றி நான் அறிந்த தகவல்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். அதன் பிறகே என் சமகால வாழ்க்கையைக் கோர்த்து வைக்க முடியும் என்று நம்புகின்றேன். தாத்தாவின் அப்பா பெயர் ரெங்கசாமி. அவரைப் பற்றி எந்தத் தகவலையும் என்னால் திரட்ட முடியவில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்பட்டேன். அவர் பெயரோ, அவர் பின்புலம் குறித்தே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை என்பதில் இருந்து குடும்பச் சங்கிலி தொடங்குகின்றது. இவர்கள் முந்தைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கீழ் உள்ள மடத்துப்பட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ளார்கள். அடிப்படை விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். தாத்தாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரியுடன் மடத்துப்பட்டியில் வாழ்ந்து வந்தாலும் பஞ்சம் பிழைப்பது போல நான் பிறந்த புதுவயல் கிராமத்திற்குத் தாத்தா மட்டும் தன் மனைவியுடன் இடம் பெயர்ந்துள்ளார். இந்தக் கிராமம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. இப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய ஊர் காரைக்குடி. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்து விட்டார். இவருடன் ஒரு வருடம் நெருங்கிப் பழகியுள்ளேன். ஆனால் இவர் எவருடனும் ஒட்ட மாட்டார். இவர் பெயர் சுப்பையா. இவர் என்னுடன் பழகியதற்கு முக்கியக் காரணம் பள்ளிவிட்டு வந்ததும் இவருக்கும் தினந்தோறும் மாலை சிற்றுண்டி கொண்டு போய்க் கொடுக்கச் செல்வேன். அப்போது அவரைத் தவிர மற்ற அத்தனை பேர்களையும் பற்றியும் குற்றச்சாட்டாக வைக்கும் பல விசயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட இனிப்புப் பட்சணத்தை வாங்கித் தின்று விட்டு வந்து விடுவதுண்டு. அப்போது இவர் யார்? இவர் பின்புலம் என்ன? என்பதெல்லாம் கேள்வி கேட்கத் தெரிந்ததில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாம் இல்லை.  கிராம பின்புலத்தைக் கொண்டு வளரும் சிறுவர்களுக்கு என்ன தான் பத்திரிக்கைகள் வாசித்தாலும் வெளியுலகத்திற்கும் அவர்களின் அடிப்படைச் சிந்தனைகளுக்கும் எப்போது ஒரு பெரிய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். அப்படித்தான் என் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரைக்கும் எனக்கும் இருந்தது. நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நெறிப்படுத்த எவரும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல் வாசிப்பு என்பது வெறித்தனமான ஆர்வமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்து முடித்துப் புதிய புத்தகங்கள் எப்போது வரும்? என்று நூலகரிடம் கேட்கும் அளவிற்கு வாசிப்பு என்பது உயிர்மூச்சு போல என்னுள் இருந்தது. கல்லூரி சென்ற போதும், சென்னையில் ஒரு வருடம் வாழ்ந்து பின்னர்த் திருப்பூர் வந்து சேர்ந்து 25 வருடங்கள் முடிந்த போதும் இன்னமும் அடிப்படைச் சிந்தனைகள் கிராமத்துவாசியாக உள்ளது. இந்த இடத்தில் தான் அவரவர் வாழ்ந்த குடும்பத்தின் தாக்கம் பங்கு பெறுகின்றது. காரணம் என் இன்றைய குணாதிசியங்கள் எங்கே இருந்து தொடங்கியது என்றால் அடிப்படையில் தாத்தாவின் மரபணுவில் தொடங்கி அப்பாவின் மரபணு ஆழப்பதிந்து இன்று உன்னால் இதற்கு மேல் உன் சுபாவத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்கிற வரைக்கும் வந்து நிற்கின்றது. தாத்தா புதுவயல் கிராமத்தில் வந்து சேர்ந்து கையில் வைத்திருந்திருந்த பணத்தை வைத்து சிறிய சிறிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். என் பாட்டியைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கு முக்கியக் காரணம் உண்டு. அவர் வாழ்வில் நடந்த சில ஆச்சரியமான சம்பவங்கள். என் தாத்தாவிற்கு அவரின் கடுமையான முயற்சியின் பலனாகப் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் கடைசியில் மூன்று ஆண் குழந்தைகள் மட்டும் மிஞ்சியது. அதிலும் ஒரு சுவராசியம் என்னவென்றால் முதலாவது, இரண்டாவது குழந்தைகள் குறுகிய காலத்தில் இறந்து விட மூன்றாவதாக இவர்கள் ராமேஸ்வரத்தில் கடலில் நின்று மடிப்பிச்சை ஏந்தி இந்தக் குழந்தை தங்க வேண்டும். உன் பெயரை வைக்கின்றோம் என்று சொல்லி பிறந்தவர் இராமநாதன். இவர் தான் என் அப்பா. அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடக் காசியில் போய் வேண்டு கொள் வைத்துப் பிறந்தவர் சித்தப்பா காசி விஸ்வநான். அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடத் திருவண்ணாமலை போய் வேண்டுகோள் வைத்துப் பிறந்தவர் கடைசிச் சித்தப்பா அண்ணாமலை. மூன்று பேர்களும் கடைசி வரைக்கும் ஆரோக்கியமாக இருந்தார்கள். மூன்று பேர்களும் இப்போது இல்லை. இந்தச் சுவராசியத்தை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த போது வேறு சில தகவல்கள் கிடைத்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர்கள். பத்து வயதில் ஒரு பெண் குழந்தை இறந்து விட்டது. ஆறு ஆண்கள். ஆறு பெண்கள். இயற்கை சரியாக அதன் வேலையைச் செய்துள்ளது? அதே போலக் கடைசிச் சித்தப்பாவுக்குப் பத்துக் குழந்தைகள். இவர்கள் இருவரும் தன் அம்மா சொன்ன வாக்கின்படி எக்காரணம் கொண்டு "கருத்தடை மட்டும் செய்யக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் அயராது பாடுபட்டு ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கினார்கள். நடுவில் உள்ள சித்தப்பா மட்டும் "போங்கடா நீங்களும் உங்க சபதமும் " என்று வேறுபக்கம் ஒதுங்கி விட இரண்டு ஆண் குழந்தைகளுடன் தப்பித்து விட்டார்.  இதே போல அம்மாவின் குடும்பத்திலும் மற்றொரு சுவராசியம் உண்டு. அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள். ஆனால் மற்ற அத்தனை பேர்களும் குறுகிய காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டனர். அம்மா ஒருவர் மட்டுமே பிழைத்துள்ளார். பாட்டி (அம்மாவின் அம்மா) பயந்து கொண்டு 16 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் மூத்த அண்ணன் பிறந்த போது அம்மாவின் வயது 18. இன்று வரையிலும் அம்மாவிடம் (அப்பாவின் அம்மா) பாட்டியைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் பூரிப்போடு பலவற்றைச் சொல்வார். ஆனால் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவர் பற்கள் நறநறக்கும். காரணம் அப்படிப்பட்டவர் தாத்தா? இன்று சாதி என்ற வார்த்தைகளை வெறுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் இந்தச் சாதி என்ற கட்டமைப்பு பல குணாதிசியங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் செய்யும் தொழில், அவர்கள் சார்ந்த உறவு முறைகளின் பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாய வழிபாட்டு முறைகள் எனக் கலந்து கட்டி குறிப்பிட்ட குணாதிசியங்களை உருவாக்கியதாக இருக்கும். இது சரி? தவறு? என்ற வாதத்திற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் செட்டியார் என்ற சமூகம் என்பது எதிலும் முரட்டுத்தனம் காட்டாத அமைதி வாழ்க்கையை விரும்பக்கூடிய சமூகத்தைக் கொண்டவர்கள் கொண்ட வாழும் அமைப்பு. ஆனால் தாத்தாவின் குணம் நேர்மாறானது. அப்பட்டமான முரடன். அதுவும் நான் நினைப்பது நடக்காவிட்டால் திரைப்படங்களில் பார்ப்பது போலக் குறிப்பாகப் பெண்கள் மேல் அதீத வன்முறை பிரயோகம் தான். அடித்தவர் மயக்கம் வந்து சாய்ந்தபிறகே அவர் சாமியாட்டம் நிற்கும். மூன்று பையன்களையும் அப்படித்தான் வளர்த்தார்.   அதற்கு மேலாகத் தன் மனைவியையும் அப்படித்தான் வைத்திருந்தார். இவருக்கு இந்தக் குணாதிசியம் உருவாகக்காரணம் என்ன? என்று அம்மாவிடம் கேட்ட போது "அந்த முரடனைப் பற்றிக் கேட்டு மேலும் மேலும் என் கோபத்தைக் கிளறாதே?" என்று முடித்து விட்டார். தாத்தாவின் முரட்டுத்தனம் எந்த அளவுக்கு நீண்டு இருந்தது தெரியுமா? என் பாட்டி இறப்பதற்கு முன்னால் வாழ்ந்த கடைசி ஐந்து வருடங்கள் மனநலம் பிறழ்ந்து இறக்கும் தருவாயில் தான் இருந்துள்ளார். அவர் மனநலம் பிசகி இருந்த போது நான் இரண்டு வருடக்குழந்தை. அம்மா கொல்லைப்புறத்தில் வேறேதோ வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாட்டி என்னைத் தூக்கிக் கொண்டு அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடுவில் என்னைப் படுக்க வைத்துக் கொண்டு ரயில் வந்தவுடன் உனக்குக் காட்டுகின்றேன் என்கிற அளவுக்கு இருந்துள்ளது. அந்தப் பக்கமாக ஆடு மேய்க்க வந்தவர்கள் பாட்டியை இழுத்துக் கொண்டு என்னையும் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துள்ளார். இதனையும் தாண்டி பாட்டி கடைசி வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்குக் காரணம் என் அம்மா வரிசையாகப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள். பேரக்குழந்தைகள் மேல் அலாதியான ஈடுபாடு. கணவரிடம் கிடைக்காத அத்தனை பிரியங்களையும் ஒவ்வொரு குழந்தைகள் மேல் திகட்ட திகட்டப் பகிர்ந்துள்ளார். இதே போல அம்மாவின் அம்மாவிற்கும் தனது பேரக்குழந்தைகள் மேல் அதிக ஈடுபாடு. காரணம் இரண்டு பாட்டிகளும் குழந்தைகள் என்பதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுக்கப் பணயம் வைத்திருந்த அபாக்கியசாலிகள். தாத்தாவின் குணாதிசியம் அவர் பெற்ற பையன்களில் இரண்டு பேருக்கு வந்து விட்டது. அப்பாவும், இரண்டாவது சித்தப்பாவும் அக்மார்க் முரடன்கள். அவரவர் மனைவிகள் பட்ட பாடுகள் அதுவொரு தனிக்கதை. குறிப்பாக என் அம்மா மூத்த மருமகள் என்ற பெயரில் அவர் உழைத்த உழைப்பு என்பது இன்றைய பெண்கள் உழைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் பத்துப் பெண்கள் செய்ய வேண்டிய வேலைக்குச் சமமாகவே இருக்கும்.  தாத்தா என் கணக்குப்படி அடிப்படைக் கல்வி அதாவது எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருப்பார் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் அப்போது பள்ளி இல்லாத காரணத்தால் அருகே உள்ள கண்டனூரில் தான் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் படித்துள்ளார்கள். மூன்று பேர்களுமே படிப்பில் சுமார் ரகம் தான். பத்தாம் வகுப்பை முடித்து விட்டு ஆளை விட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டார்கள். ஆனால் அப்பா தலையெடுத்தபிறகு தான் கடைகள், வயல்கள், சொத்துக்கள் என்று விரிவாக்கம் நடந்ததுள்ளது. 200 மடங்கு உழைப்பாளி. அதே சமயத்தில் தாத்தா போல முரட்டுத்தனம். எடுத்தவுடன் கை வைப்பது தான் அவர் கொள்கை. நான் பள்ளிக்கூடம் முடிக்கும் வரையிலும் பசுமாடு, காளைமாடு, ஆடு என்று பிராணிக்கூட்டம் ஒரு பக்கம், இவர்களைக் கவனிக்க வேலையாட்கள் மற்றொரு பக்கம், இதைத்தவிர வயல்வேலைகளுக்கு ஒரு கூட்டம், கடை வேலைகளுக்கு என்று வேலையாட்கள் கூட்டம். இது தவிர வருடந்தோறும் வந்து கொண்டிருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை. கூட்டுக்குடித்தனம். இப்போது யோசித்துப் பார்த்தாலும் அம்மா எப்படி இத்தனைக்கூட்டத்தையும் சமாளித்தார் என்று வியப்பாகவே உள்ளது. காலை, மதியம், இரவு மூன்று வேலையும் குறைந்தபட்சம் 40 பேர்களுக்காவது அடுப்பு எறிந்து கொண்டேயிருக்கும். வெள்ளிக்கிழமை தவிர அத்தனை நாட்களும் அசைவம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தது. பக்தி, ஒழுக்கம், உழைப்பு இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த கூட்டத்தில் நான் இவர்களின் குணாதிசியத்தில் இருந்து வெளிவர 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. என்னுடன் பிறந்து ஆறு சகோதரிகளும் இன்று வரையிலும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கூடப்பிறந்த ஐந்து சகோதரர்களும் தெளிவான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அடிப்படைப் பிரச்சனைகள் எதுவுமில்லை. அதிகப்படியான ஆசைகளையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை. பட்டதாரிகள், முதுநிலைக்கல்வி என்று அப்பா தன் அடிப்படைக்கடமைகளைத் தெளிவாகவே செய்துள்ளார். எங்கள் குடும்பத்தில் மூன்று பேர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் என்னைத் தவிர வேறு எவருமே வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள். வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் என்று பயணப்பட்டதில்லை. உள்ளுருக்குள் தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொண்டவர்கள். வெளிநாடுகள் வரைக்கும் அலைந்து திரிந்த எனக்கு அவர்களின் எண்ணங்கள் ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கே என்னைப் பார்க்கும் போது ஆதங்கமாகத் தெரியும். முந்தைய தலைமுறைகள் போலத் தங்கள் உலகம் என்பது தாங்கள் வாழும் பகுதிக்குள்ளேயே முடிந்து விடும் என்று இன்றுவரையிலும் ஆழமாக நம்பிக் கொண்டு இருப்பவர்கள். இந்த ஒரு குணாதிசியமே இவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய அகழியை உருவாக்கிப் பிரித்து வைத்துள்ளது. நான் எவருடனும் நான் அதிகம் ஒட்டுவதில்லை. அதே சமயத்தில் விலகி நிற்பதுமில்லை. தேவைப்படும் சமயங்களில் தலையைக் காட்டிவிட்டு நகர்ந்து வந்து விடுவதுண்டு. எனக்கு முன்னால் என்னைப் பற்றி எவரும் பேசவே பயப்படுவார்கள். காரணம் தாத்தா, அப்பாவிடம் எனக்கு மட்டும் வந்து சேர்ந்த அந்த முரட்டுத்தன ஜீன் மூலக்கூறு.  தாத்தா, அப்பாவைப் பற்றிப் பேசிய போல இரண்டு பாட்டிகள் மற்றும் என் அம்மாவைப் பற்றிச் சொல்ல சில வார்த்தைகள் சில உண்டு. மூன்று பெண்களுமே அக்மார்க் உச்சகட்ட பிடிவாதம் கொண்டவர்கள். கணவன் என்பவன் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவன் என்ற அவர்களின் அடிப்படைக் கொள்கை அடிவாங்க அவர்களின் மாற்ற முடியாத பிடிவாதங்களை ஆண்வர்க்கம் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி உள்ளனர். இயற்கையிலேயே தாய்வழி சமூகமாக இருந்த அமைப்பு இன்று தந்தைவழி ஆதிக்கச் சமூகமாக மாறினாலும் இன்று என் மனைவி வரைக்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவே விரும்புகின்றார்கள். மேலே சொன்ன இரண்டு தலைமுறைகளின் மொத்த குணாதிசியங்கள் என்னிடமும் இருந்தது. இவர்கள் தங்கள் ஆளுமையை வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம் மட்டும் தான் காட்டியுள்ளனர். நான் பள்ளி முதல் திருப்பூர் வாழ்க்கையின் முதல் பத்து வருடங்கள் வரைக்கும் வெளி இடங்களிலும் எதற்கும் அஞ்சாத கலகக்காரனாகவே இருந்துள்ளேன். திருப்பூர் வாழ்க்கையில் தொடக்கக் காலத்தில் என் குடும்பத்தைச் சம்மந்தப்படுத்தித் தவறாகப் பேசிய முதலாளியைத் துணி வெட்டப் பயன்படுத்தும் கத்திரி மூலம் குத்தப் பாய்ந்துள்ளேன். உடன் பணிபுரிந்தவர்கள் தாங்கள் செய்த தவறுகளை என் மேல் சுமத்தி தப்பிக்கப் பார்த்த போது வெளுத்து வாங்கியுள்ளேன். நேர்மைக்கு மதிப்பு இல்லாத தொழில் நகர வாழ்க்கையில் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அத்தனை அழுத்தங்களும் உள்ளே வன்முறையாக மறைந்து இருந்ததை உணர்ந்து என்னை மாற்றிக் கொள்ள நிறையவே பிரயாசைப்பட்டுள்ளேன். இதன் காரணமாகவே குடும்பம் என்பதும், பெண்களை நமக்குக் கையாளாத் தெரியாது? என்ற பயத்தின் காரணமாகவே திருமணம் என்பது கூட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். அப்பா இறப்பும், குடும்பத்தினர் என்னால் படக்கூடிய துயரங்களும் மனதில் வலியை உருவாக்க 33 வயதில் குடும்பத்தினர் பார்த்து வைத்திருந்த வசதியான அழகான பெண்களைப் புறந்தள்ளி இயல்பான என் குணாதிசியத்தை மாமனாரிடம் தெரியப்படுத்தித் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தேன். என் நான்காவது அக்கா மூலம் பார்த்த வரன் இது. குடும்பத்தினர் இன்னும் சிறப்பான வசதிகளைக் குறிப்பாக அரசு பதவியில் உள்ள பெண்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். அவர்கள் விருப்பங்களை மீறியே செயல்பட்டேன்.  என் விருப்பப்படி, என் கட்டளைப்படி தான் மனைவி இருக்க வேண்டும் என்ற முரட்டுத்தனம் எனக்குப் பல இழப்புகளைத் தனிப்பட்ட பொருளாதார வாழ்க்கையில் உருவாக்கினாலும் இன்று மூன்று குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து விசயங்களும் மற்ற குடும்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எதிர்பார்த்தற்கு மேலே நிறைவாக மனைவி மூலம் கிடைத்துள்ளது. மனைவியைப் பற்றி எல்லாக் கணவர்களும் அவர் இறந்த பின்பு தான் பிரிவு சோகம் தாங்காமல் எழுத்துலகில் பகிர்கின்றனர். ஆனால் என் மனைவி ஒரு வகையில் பரிதாபப்பட வேண்டிய ஜீவன். காரணம் கடைசிக் குழந்தையாக அவர்கள் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் எது குறித்த அக்கறையும், கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர். என்னுடன் வாழத் தொடங்கியதும், அடுத்தடுத்துக் குழந்தைகள் வந்து சேர உழைக்க வேண்டிய உழைப்பும், அவருக்குள் இருக்கும் இயல்பான சோம்பேறித்தனமும் ஒன்றை ஒன்று கேள்விக் கேட்கத் தொடங்கி விட்டது? என் மனைவியும் நான் பிறந்த குடும்பத்தைப் போலவே சில விசயங்களில் வாழ விரும்புவர். வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்பவர். உலக நியதிகளை மீறி வாழ விரும்புவனுடன் வாழ்க்கைத் துணையாக இருந்தால் என்ன நடக்கும்? அது தான் திருமணமான தொடக்கத்தில் நடந்தது.  ஆனால் இரட்டைக்குழந்தைகள் மற்றும் அடுத்த வருடமே அடுத்தக் குழந்தை என்று வந்ததும் நிறையவே தடுமாறிவிட அத்தனை இடங்களிலும் நானே தாயுமானவன் போல இருந்தேன். அவரால் சமாளிக்க முடியவில்லை என்ற போதும் அத்தனை பாரங்களையும் நானே சுமந்தேன். காரணம் தொழில் வாழ்க்கை அழுத்தங்கள், நேர்மைக்குக் கிடைக்காத மரியாதை, தொழில் நகர மனிதர்கள் உருவாக்கிய வெவ்வேறு விதமான குணாதிசியங்கள் என்று அனைத்தும் என்னை அழுத்திக் கொண்டே இருக்க அனைத்தையும் இனம் பிரிக்கத் தெரியாமல் தோல்விகளையும், இழப்புகளையும் அவர் மேல் காட்ட முட்டல், மோதல் என்று வாழ்க்கை ரணகளமாக மாறியது. குழந்தைகள் வளர வளர என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். இன்று நம்பமுடியாத அதீத திறமைகள் கொண்ட குழந்தைகள் கொடுக்கும் அடியையும், வார்த்தைகளுக்கும் பயந்து கொண்டு அப்பா என்ற என் பதவியைக் காப்பாற்ற அப்பாவியாக மாறிப் போனது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. கடந்த பத்தாண்டுகளாக முதலாளிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி மற்றும் அதற்கேற்ற வசதிகள். ஆனால் நான் முதலாளியாக மாற முயற்சிக்கவே இல்லை. காரணம் முதல் தலைமுறை அல்லது இரண்டாவது தலைமுறை என்று எவராக இருந்தாலும் தொழிலதிபர் என்பது எளிதானது அல்ல. பணம் சார்ந்த எண்ணங்களில் உள்ள தீவிரம் தான் உங்களை வேலைக்காரனாக அல்லது முதலாளியாக மாற்றுகின்றது என்று உறுதியாக நம்புகின்றேன். நமக்கு எத்தனை ஆசை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இயற்கையான சுபாவம் பலவற்றுக்கு ஒத்துழைக்காது. எனக்குக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதற்குப் பின்னால் உள்ள நிதர்னம் புரிந்தது,  திருப்பூரில் உள்ள அத்தனை முதலாளிகளும் முதல் தலைமுறை தொழிலதிபர்கள். அவர்கள் தலைமுறையில் பணம் ,வசதி வாய்ப்புகள் என்பதனையே இந்தத் தலைமுறையில் தான் பார்க்கின்றனர். ஒரு தொழில் விரிவாக்கத்திற்கு இரண்டு முக்கிய விசயங்கள் தேவை. ஒன்று போட்டியில் வெல்லும் அளவிற்கு நிர்வாகத்திறமை மற்றும் குழுவினர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு. இரண்டாவது தனக்குச் சமமாக எவரையும் வளர விடாமல் தடுப்பது. இரண்டாவது தான் திருப்பூர் தொழிலில் நடந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் கூட இங்கே நேர்மையான முறையில் தொழில் செய்து வளர்ந்தவர்கள் இல்லை. தொழில் கொள்கைகள் என்பது மனித இரத்தங்களைச் சுவைக்கும் மனப்பான்மைக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று புரியத் தொடங்கிய போது என் பண வேகம் குறைந்து மன வேகத்தை என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன். மேலும் என் தொழில் வாழ்க்கையில் நிர்வாகம் சார்ந்த விசயங்களில் எதற்குமே அஞ்சாத குணமென்பது ஒவ்வொரு சமயத்திலும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியுள்ளது. பத்துப் பேர்கள் எதிரியாக மாறி என் வீழ்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் யாரோ ஒருவர் என்னிடம் உள்ள நேர்மையான குணாதிசியத்தைக் கண்டு உதவியுள்ளனர். அது நம்பமுடியாத அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவியுள்ளது. என்னுடன் பணிபுரிந்தவர்களில் 90 சதவிகித பேர்கள் இப்போது எவருமே திருப்பூரில் இல்லை. அவர்கள் அத்தனை பேர்களும் சமய சந்தர்ப்பங்களை அப்போதைய சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள். ஆனால் சூழ்நிலையை விட ஒழுக்கத்தையும், நேர்மையையும் நம்பிப் பயணப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் காயம்பட்டு வளர்ந்தேன். இது இன்றைய என் அமைதியான வாழ்க்கைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.  ஒவ்வொரு சமயத்திலும் ஆயிரம் பேர் கொண்ட தொழிலாளர்கள் கொண்ட அமைப்பை கண்ணசைவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. வாழ்வின் தொடக்கம் முதல் என்னைச் சுற்றி சகோதரிகள் அதிகம் இருந்த காரணத்தால் திருப்பூரில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னுடன் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மேல் மயக்கம் உருவானது இல்லை. இயல்பாகவே பெண்கள் என்னிடம் நெருங்க முடியாத நபராக என் குணாதிசியம் இருந்த காரணத்தால் ஒழுக்கம் சார்ந்த விசயங்கள் என் வளர்ச்சிக்கு உதவியது. காரணம் திருப்பூரில் பெண்கள் என்பது எளிதான விசயமாகும். ஆனாலும் நான் எவருடனும் அதிகம் ஒட்டுவதில்லை. காரணம் என் அம்மா என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லும் வாசகத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.   "நான் பெற்ற 12 லேயும் அதிகப்படியான திறமைசாலி நீ தாண்டா? வீணாய்ப் போன புத்திசாலி நீ மட்டும் தாண்டா?" என் அம்மாவுக்கு வாழ்க்கை என்பது நான் சேர்த்து வைத்துள்ள சொத்தில் அடங்கியுள்ளது. ஆனால் எனக்கோ என் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. காரணம் எனக்குப் பின்னால் பிறந்தவர்கள் கூடப் பலவிதமான நோய்களில் தடுமாறுகின்றார்கள். எனக்கே என் பசியை அடக்க முடியாமல் மனைவியின் திட்டுதலை (தற்போது குழந்தைகளின் மிரட்டலை) பொருட்படுத்தாமல் ருசியான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வாழ்கிறேன்.   வாசித்த உங்களுக்கு தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள். நன்றி. ஜோதிஜி திருப்பூர் தேவியர் இல்லம்.                            எனது முதல் படைப்பாக வந்த டாலர் நகரம் புத்தகம் விகடன் குழுமத்தால் 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.   டாலர் நகரம் - கிடைக்கும் இடங்கள் மகேஸ்வரி புத்தக நிலையம். திருப்பூர். அலைபேசி எண் - 944 200 4254   DISCOVERY BOOK PALANCE. Chennai. http://discoverybookpalace.com/  Cell No (Mr. Vediappan – 99 40 44 66 50)   ஜீவா புத்தகாலாயம் நூல் உலகம். https://www.facebook.com/noolulagamdotcom/  Phone: 04286 223 233 நான் எழுதிய என் முதல் புத்தகம் (டாலர் நகரம்) குறித்து ஜுனியர் விகடன் விமர்சனம்.     []   நான் இது வரையிலும் எழுதியுள்ள (மின் நுல்) தலைப்புகள். []   வாசிக்க சொடுக்க வேண்டிய தளம் http://freetamilebooks.com/authors/jothiji-tiruppur/  தொடர்பு கொள்ள மின் அஞ்சல் powerjothig@yahoo.com  Face BooK ID - https://www.facebook.com/jothi.ganesan