[] சதுரங்கம் நூல் பெயர்: சதுரங்கம்(கவிதைகள்) ஆசிரியர்: ப.மதியழகன் மின்னஞ்சல்: mathi2134@gmail.com கைபேசி: 9597332952 வாட்ஸ்அப்: 9384251845 பதிப்பு: மார்ச் 2018 வெளியீடு: freetamilebooks.com மின்னூலாக்கம்: ப.மதியழகன் அட்டைப்படம்: ப.மதியழகன் Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work       உள்ளடக்கம் இதைத்தவிர வேறெதுவுமில்லை ஜீவனம் முற்றுப்புள்ளி வானமற்ற வெளி ஒற்றை ரோஜா வளர்பிறை கோபுரம் தாங்கி சித்திரம் சுடரொளி வானம் பின்தொடர்தல் கல்வீச்சி கைமுளைத்த காற்று மன்மதன் பாணம் உதிரச்சுவடுகள் கண்ணாமூச்சி பால்யபொழுதுகள் காகிதத்தில் புதைந்தழியும் கனவு சுமை சின்ன சின்ன வட்டங்கள் குறளி வித்தை சாத்தானின் கரங்கள் பாழ்நிலம் ரோகி அழைப்பு பிறை பிறிதொன்று தருணம் தருணம் வெறி கொண்ட பேரலைகள் கை பிணைப்பு விருட்சம் அதிதி கங்காளி கனவு பிராயம் ஒளிவட்டம் சதுரங்கம் பணயம் யார் மையம் யாளி துளித்துளியாய் பரிசு தரிசனம் முகவரி நிசி பள்ளிப்பிராயம் மழைத்தவம் மழை புஷ்பம் தொலைந்து போனவர்கள் தீர்த்தக்கரை திருஷ்டி பிழைப்பு பித்து கைவண்ணம் துயில் அவர்கள் இதுவல்ல வட்டத்துக்குள் வாழ்க்கை கடவுளும் கண்ணீர்த்துளிகளும் நேற்று இன்று நாளை கதைக்குதவாத கலை ஒருமழை நாள் குட்டிக்கதைகள் ரேகை தூளி நாதம் நீர்ச்சுழி ஆயத்தம் பாற்கடல்     இதைத்தவிர வேறெதுவுமில்லை   கவிதை மொழியை இன்னும் கூர்மையாக்கி இருக்கிறேன் இந்தக் கவிதை தொகுப்பில். படைப்பாளனுக்கு ஆழ்ந்த வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை முதல் தொகுப்புக்கு பின்பு தான் உணர்ந்தேன். கவிதைக் கடலைக் கண்டு பிரம்மித்துப்போய் கரையிலேயே நின்ற நான் துணிந்து கடலில் இறங்கினேன். இப்போது சமுத்திரத்தின் அலைகளினூடே மிதக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.   கவிதையை எழுதிய கவிஞனுக்கு புரிபடாத அர்த்தங்கள் வாசகனுக்கு புரிபடக்கூடும். கவிதைக்கும் உளவியலுக்கும் சம்பந்தம் உண்டு. வாசகனின் உள்ளிருக்கும் மொட்டை மலரச் செய்ய கவிதையால் மட்டுமே முடியும். பால்யத்தில் மழையின் ருசியை அறியாதவர்கள் எவர் இருக்கக்கூடும். பதின் வயதுகளில் இயற்கையின் பேரழகுக்கு மனதை பறிகொடுக்காதவர்கள் எவர் இருக்கக்கூடும். கோடை மழை வரும்போது இடிமின்னல் இருக்கக்கூடும். அது இந்தத் தொகுப்பிலுள்ள கவிதை மழைக்கும் பொருந்தும்.   சிப்பி மழைத்துளிக்காக காத்திருப்பதைப் போல தவமிருந்து கவிதை செய்திருக்கிறேன். முத்தைத் தேடித்தான் தமிழக்கடலில் மூழ்குகிறேன் பல சமயம் கிளிஞ்சல்களே கைகளுக்கு அகப்படுகிறது. இந்தக் கவிதை தொகுப்பில் முத்துக்களை கண்டெடுப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்காது.   கோயிலுக்குள் நுழையும் முன்பு காலணிகளைக் கழட்டி வைத்து விடுவீர்கள் அல்லவா. இப்போது என் மனக்கோயிலுக்கு நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் கண்ணுக்கு கற்சிலை தெரிந்தால் வாசிக்கும் நிமிடங்கள் நரகமாகும். உங்கள் கண்ணுக்கு தெய்வம் தெரிந்தால் வாசிக்கும் நிமிடங்கள் சொர்க்கமாகும்.   பால்யம் கொண்டாடப்பட வேண்டிய பருவம் என பதின் வயதுகளில் தான் அறிந்து கொள்கிறோம். உங்கள் கைகளில் தவழும் இந்த்க் கவிதை தொகுப்பும் பால்யம் போன்றதொரு கண்ணாடிப் பாத்திரமே. கடைகளில் பார்த்து ரசித்ததை பத்திரப்படுத்த வீட்டுக்கும் வாங்கி வரலாம். மற்றவரும் மகிழட்டுமே என எண்ணி பரிசுப் பொருளாகவும் கொடுத்து வரலாம். இதோ நான் பிடித்துக் கொண்டிருந்த ராட்சசக் குடையை மடக்கிக் கொள்கிறேன். நனையுங்கள், கவிதை மழையில் நனைவதற்கு கச்குமா என்ன?     ப்ரியமுடன்                                                தேதி:      06.03.2018 ப.மதியழகன் 115,வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி – 614001. திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு கைபேசி:9597332952 whatsapp:9384251845 மின்னஞ்சல்: mathi2134@gmail.com     ஜீவனம்   விழியோரத்தில் கசியும் கண்ணீர்த் துளிகள் கண்விழித்த் பின்பு உணரும் உறக்கத்தின் லயிப்பு அந்தி நேரத்து ஆகாயத்தில் விடைபெறும் சூரியன் விடிகாலையில் விடைபெறும் புல்லிதழ்களில் படிந்துள்ள பனித்துளி பள்ளி என்றவுடன் விடைபெறும் குழந்தைகளின் குதூகலம் கருக்கலில் விடைபெறும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டி எதையோ சொல்லத்துடிக்கும் வானில் வர்ணஜாலம் காட்டும் வானவில் சற்று நேரத்தில் மறைந்தாலும் கண்ணைவிட்டு அகலாது குடையில் விழும் மழைத்துளியும் ஸ்பரிசத்தை நனைக்கும் மழைச்சாரலும் விவரிக்க இயலா செய்தியை செவிதனில் சொல்லிடும் முதுமையடைந்த மனிதர்கள் தங்களது ஞாபகச் சுவடுகளை மீட்டியபடியே வலம் வருவார்கள் வீதிகளில் நாள்தோறும் பேருந்து நிறுத்தமருகில் கையேந்தும் பிச்சைக்காரன் தனது கனவுகளில் யாருக்கு பிச்சையிடுவான்.               முற்றுப்புள்ளி   விரைந்து போகும் ரயில் வண்டியை ரசிக்கத் தொடங்கியது தான் ஆரம்பம் அரிதாக செல்லும் ஆகாய விமானம் பின்னே ஓடுவதில் அலாதிப் ப்ரியம் கருப்பசாமி கோயில் கடா வெட்டில் சாமியின் ஆகிருதியை அண்ணாந்து பார்ப்பதில் ஒரு குதூகலம் அரவம் கண்ட போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்ள கற்றுக் கொடுத்த அங்கையற்கண்ணி அக்கா மேல் தொடரும் நேசம் அலை ஒதுக்கித்தள்ளும் ஒன்றுக்கும் உதவாத பொருட்களை பொறுக்குவதில் நண்பர்களிடையே போட்டா போட்டி எப்போது பார்க்க நேர்ந்தாலும் கண்ணாலம் கட்டிக்கிறியா என்னை என்று கேட்டு கன்னம் சிவக்க வைக்கும் பாட்டி கனவில் வேறு வந்து தொலைக்கும் தென்னந் தோப்பையே சுற்றிக் கொண்டு திரிந்தால் தேறமாட்ட என்று பட்டணத்துக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்த சொந்த பந்தங்களை என்னவென்று சொல்ல.     வானமற்ற வெளி   மேக முகட்டில் சிவப்புச் சூரியன் வானமற்ற வெளியில் சிதறும் ஒளி நீரின் இருப்பு நிலத்தின் உயிர்ப்பு தூண்டிலின் மாட்டிய மீனின் நிலை கரையை முத்தமிடாமல் பயந்தோடும் அலை மலையடிவாரத்தில் பெய்யும் மழை முகில் ரூபத்தில் நகரும் ஜலம் உருவத்தைவிட உயர்ந்து நிற்கும் நிழல் பெளர்ணமி நிலவை கண்கொட்டாமல் பார்க்கும் நட்சத்திரங்கள் பகலைத் துரத்தும் இரவு இரவுக்கும் உண்டு முடிவு.   ஒற்றை ரோஜா   பிரியமானவர்களிடம் எல்லாம் விடைபெற்றுக் கொண்டேன் ஓர்நாள் ஒற்றை ரோஜாவோடு உன்னைப் பார்க்க வந்தேன் அந்த ரோஜா உனக்காக மலர்ந்ததல்ல என்று நீ மறுதலித்தாய் வருத்தத்துடன் நான் விடைபெற்றுச் சென்றேன் உனது பார்வைகள் தான் பல்கலைகழகத்தில் எனைப் பட்டம் வாங்க வைத்தது அந்த தேவதையை வாழ்வினிலே தொலைத்தேன் இதயத்தைப் பறித்துக் கொண்ட அவள் இரக்கமற்றவளாய் இருந்தாள் அன்று ரோஜாவை ஏற்க மறுத்த அவள் இன்று மலர் வளையத்தோடு வந்து உட்கார்ந்திருந்தாள் என் சடலத்தின் அருகில்.   வளர்பிறை   கதை கேட்பதற்காக கூடியிருந்தார்கள் குழந்தைகள் எல்லா கதைகளுக்குள்ளும் நுழைந்து பார்த்தார்கள் எல்லா கதைகளையும் ரசித்துக் கேட்டார்கள் கதையில் வந்த செல்லப்பிராணிகளிடம் விளையாடிக் கழித்தார்கள் கருத்து எதுவும் சொல்லாத கதைகளே அவர்களுக்குப் பிடித்திருந்தது கதைகளுக்குள்ளும் கதை ஒளிந்திருப்பதை கண்டுபிடித்துக் காட்டினார்கள் நீரூற்று போல் உற்சாக வெள்ளம் பீறிட்டது கதைகளின் முடிவில் பெருத்த ஆரவாரங்களுக்கிடையே ஆகாஷ் அம்மா இறந்துட்டாங்களாம் அதான் அவன் வரலையென்று ஆசிரியரிடம் சொல்லித் தொலைத்தார்கள்.   கோபுரம் தாங்கி   பழுத்த இலைகளை உதிர்த்துச் சென்றது காற்று நரகல் தின்னும் பன்றியின் மீது ஒன்றுக்கிருக்கும் சிறுவன் அடுக்களையில் பாத்திரத்தை உருட்டும் திருட்டுப் பூனை விசேஷ நாட்களில் காகங்களுக்கு ஏற்படும் கிராக்கி வண்ணத்துப்பூச்சி பறக்கும் பாதைகளில் உதிர்த்துச் செல்லும் வண்ணங்களை தங்கப் பரிதி யாரும் களவாட முடியாத உயரத்தில் வெள்ளி நிலவு ரசிக்க யாருமின்றி காய்கிறது திண்ணைகள் ஒட்டுக் கேட்கின்றன தெருவின் ரகசியங்களை கோபுரம் தாங்கிகள் கோபுரங்களைத் தாங்குவதில்லை.   சித்திரம்   பேருந்து நகர்ந்தபடி இருக்கிறது கடந்து போன ஊர்களின் முக்கியத்துவம் பற்றியும் வரவிருக்கும் ஊர்களைப் பற்றிய சுவாரஸியமில்லாமலும் பயணிகள் அமர்ந்திருக்கின்றனர் பயணங்களை காதலிப்பவர்கள் எவரும் கைபேசி எடுத்துவர மாட்டார்கள் வயல்களில் அறுவடைக் காலம் என் பெயர் எழுதிய அரிசி எங்கு விளைந்திருக்கக்கூடும் போகும் வழியில் சிட்டுக்குருவியைப் பார்த்தேன் நகரத்தை விட்டு ஏன் தப்பிச்சென்றாய் எனக் கேட்டேன் மேகம் கறுத்தது மின்னல் வெட்டியது பேருந்துக்குள் சிலபேர் அர்ஜுனா என முணுமுணுப்பது காதில் விழுந்தது பணிக்காக வேறு ஊருக்கு பயணப்படுபர்கள் எல்லாம் சொந்த ஊரை மனதில் சுமந்து கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தனர்.   சுடரொளி   பரிதியை மேகம் மறைத்திடும் நேரம் மழை வரக்கூடும் பூவிதழ்களின் மேலே வண்டுகள் அமர்ந்து ரீங்காரம் பாடும் விடியலில் குயில் தனியாய் அமர்ந்து தனிமையை அருந்தும் நெல்மணிகளைத் தின்னும் புறா தூக்கியெறியப்படும் இரையைக் கூட கவண்கல்லாகவே நினைக்கும் ஆளரவமற்ற வீதி ஊருக்கு அந்நியமாக நம்மை உணர வைக்கும் கையிலேந்திய விளக்கு இருளைக் கிழித்து ஒளியைப் பரப்பும் வெளிச்சம் காட்டும் சுடரொளி தான் வீட்டையும் எரிக்கும்.   வானம்   வானமே இரவுக்கு விடை கொடுத்து பகலுக்கு குடை பிடிக்கும் மேகமே இரவின் எச்சிலாக மரங்களில் படிந்திருக்கும் பனித்துளியே ஆயைக் கோட்டையில் அழகு நிலா காய்கிறது குழந்தைகளுக்கு ஊட்டும் உணவை தின்று தானோ தினம் தினம் வளருகிறது பூமியில் உள்ள உயிர்களெல்லாம் உன்னை நோக்கி வளருகிறது தாகம் தீர்க்கும் மழை மட்டும் கீழ்நோக்கிப் பெய்கிறது சிதறிக் கிடக்கும் வைரங்களைப் போல் நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது இரவு என்ன நாத்திகனா ஏன் கறுப்பு ஆடை தரிக்கிறது தூரத்து இடி முழக்கம் மழையின் வரவை உணர்த்துகிறது யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களைப்போல் மரங்கள் தவம் கிடக்கிறது இரவுக்கு விடைகொடுக்க தயக்கமாக இருக்கிறது பகலில் தானே பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கிறது பகலை துரத்தும் இரவும் இரவை விரட்டும் பகலுமாக இருளுக்கும் ஒளிக்கும் இடையேயான போட்டியினால் தான் பூமி இன்னும் பிழைத்திருக்கிறது.           பின்தொடர்தல் எத்தனை விடியல்கள் காத்திருந்தேன் உனது வாய் எனது பெயரை உச்சரித்து அழைக்காதாயென்று மணலில் உன் பெயரை எழுதி வைத்து அலை வந்து தழுவுவதை ஏற்காது ஏங்கியிருக்கிறேன் வெண்மதியைப் போல் கைக்கெட்டாத தூரத்திலிருந்து என்மீது காதல் கணைகளைத் தொடுக்கின்றாய் அன்றலர்ந்த மலராக பேரெழிலுடன் மலர்ந்திருக்கும் உன்னை வலுக்கட்டாயமாக செடியிலிருந்து பிரிக்கும் எண்ணமில்லை எனக்கு மழை உன்னைத் தீண்டினாலும் தொட்டாற் சிணுங்கியாக சுருங்கிவிடுகிறது என் மனம் நிழலாய் உன்னைப் பின் தொடர்வேன் பொய்க் கோபத்துடன் நீ திரும்பிப் பார்க்கும் கணத்தில் உன்காலடியில் சரண் புகுவேன் ஒருநாள் உன்காலடி மீது என் காலடியை வைத்து நடந்து வந்து கொண்டிருந்தேன் நீ என் பாதச்சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்தாய்.   கல்வீச்சி   காலக்குளத்தில் கல்லெறிந்தேன் அலைகளின் ரசவாதம் அமிர்தப் பிரவாகம் கடிகார முள்குத்தி நாட்களின் பாதத்தில் உதிரம் வழியக் கண்டேன் சப்திக்காமல் அறைபுகுந்து ஒற்றன் வேலை செய்கிறது காற்று இரு கரைகளுக்கு நடுவே சிந்தா நதி பூமியின் நிழல் நிலாவை விழுங்கும் சர்ப்பம் போல் உடலை முறுக்கி பிளவுண்ட நாக்கை வெளியே நீட்டும் வாழ்க்கை மரண வீட்டு ரகசியங்கள் நிசப்தத்தில் கசியும் சுழித்து ஓடும் வெள்ளம் தூசி துரும்புகளை அடித்துச் செல்லும் அருகாமையில் மயானம் அன்றாடம் சவஊர்வலம் சேவல் கூவியது பொழுது புலர்ந்தது பரிதி சிரித்தது ஜனன மரணமில்லாத நாளுண்டோ என வானம்பாடிப் பறவை பாடிச்சென்றது       கைமுளைத்த காற்று   கதவைத் திறந்தேன் சுவர்க்கத்தின் படிக்கட்டுகள் என்னை வரவேற்றன இரவுக் கயிற்றினூடே நிலவுக்கு பாலம் அமைத்தேன் மழைக்கால மேகங்கள் என்னை நலம் விசாரித்தன ஐஸ்கட்டி காற்று உடம்பை ஊசிகளாய்க் குத்தியது எதிர்ப்படும் பெண்களின் வதனத்தை ரசிப்பது அனிச்சை செயலானது பிறப்பினூடே வந்து ஒட்டிக் கொண்டது கோரமுகம் சித்த பிரமை பிடித்த காற்று நடுநிசியில் நடமாடும் பசியக் காட்டில் வேட்டையாடித் திரிவதே விலங்கு.   மன்மதன் பாணம்   தூண்டிற்புழுவின் ருசி மாட்டிக்கொண்டது மீன் நீர்ச்சுனைகளில் தாகம் தீர்த்திடும் விலங்குகள் மரங்கள் உதிர்த்த சருகுகளை காற்று அப்புறப்படுத்தியது சலனமில்லாத குளத்து நீரில் வந்து குதிக்கும் சிறுவர்கள் சாளரத்துக் கம்பிகள் வழியே எனது அறையை எட்டிப் பார்த்தது நிலா வாடிப் போன மலருக்காய் துக்கம் அனுசரித்தன புஷ்பங்கள் சவப்பெட்டியில் கூட ஆயிரம் கேள்விகள் வந்தெனைக் குடையும் காற்று திரைமறைவு ரகசியங்களைச் சுமந்து செல்கிறது இரவு முழுவதும் கத்தும் சுவர்க்கோழிகள் விடியலைப் பார்க்காமலேயே செத்து மடிகின்றன மன்மதன் பாணம் குறி தப்பாமல் பாயும்.   உதிரச்சுவடுகள்   குருதி கலந்த நீரைத்தான் குடிக்க வேண்டியிருக்கிறது இரத்தம் தோய்ந்த உடைகளைத்தான் உடுத்த வேண்டியிருக்கிறது ஈழத்து தாய்மார்களின் கண்ணீரில் தான் குளிக்க வேண்டியிருக்கிறது இரத்த வாடையை முகர்ந்து கொண்டே உண்ண வேண்டியிருக்கிறது போரில் இறந்து போனவர்களின் கல்லறை அருகே உறங்க வேண்டியிருக்கிறது யுத்தத்தில் கண்களை இழந்த தமிழர்களின் முகங்கள் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது ஈழத்துதமிழர்களின் கனவுகள் புதைக்கப்பட்டு முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறது தமிழினத்தை வேரறுக்க முயலும் கூட்டத்தை ஒன்றும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது அடிபட்ட பாம்பு தான் படமெடுக்கிறது ஒடுக்கப்பட்ட இனம் தான் விஸ்வரூபம் எடுக்கிறது நாளை நமது நாளாகும் என்ற நம்பிக்கை இன்னும் எம்மிடையே இருக்கிறது.   கண்ணாமூச்சி   பள்ளியிலே கற்று வந்த தமிழ்ப்பாடலை வீட்டில் வந்து முணுமுணுக்கும் சாக்லேட் கொடுத்து கொஞ்சினால் ஏபிசிடி சொல்லி அசத்தும் மழலை பேச்சில் தனது விருப்பங்களை மாலைகளாக கோர்க்கும் யாருக்கும் இடம்தராத படுக்கையறை கட்டிலில் பொம்மையை கட்டிப்பிடித்து உறங்கும் தூக்கத்தில் கண்ட கனவில் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கும் வானத்தில் தென்படும் ஏழு வர்ணங்களை ரசிக்கும் காற்றுடன் மழை வந்தால் துள்ளித் துள்ளி குதிக்கும் வாசலிலே அம்மாவின் குரல் கேட்டால் எந்த விளையாட்டையும் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்து கட்டியணைக்கும்.   பால்யபொழுதுகள்   பட்டம் விடுவது பம்பரம் சுற்றுவது விடியும் பொழுதெல்லாம் விளையாட்டுக்களிலும் அதைப் பற்றிய நினைவுகளிலும் கழியும் பள்ளிக்கூட வாத்தியாருக்கு இடது கையால் வணக்கம் வைத்து வாங்கிக் கட்டிக் கொள்வது சிதறுதேங்காய்க்காக சண்டையிடுவது தோட்டத்து மாமரத்தில் கல்லெறிவது குளத்தில் பனங்காயை தூக்கி எறிந்து அதைத் தொட சகாக்களுடன் போட்டியிட்டு நீச்சலடிப்பது இளவட்ட பசங்களின் சேஷ்டைகளை ரசிப்பது அவர்களின் காதலுக்கு தூதுவனாக இருப்பது விரக்தி ஏற்படும் தருணங்களில் பால்யத்தின் கனவுகளை அசைபோட்டவாறு இருப்பது அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரைப் போல் வாழ்க்கை கொடிய கணைகளால் எனது நெஞ்சத்தைத் தைத்தது ஓர்நாள் விடாது பெய்த மழையில் நனைய யோசித்த பொழுதே எனது பால்யம் தொலைந்தது.           காகிதத்தில் புதைந்தழியும் கனவு   எந்த விஷயத்திலும் தடுமாற்றம் இருக்கிறது காரியம் கைகூடுமா என மனம் அலைபாய்கிறது முதியவர்களின் அறிவுரைகளை உள்ளம் ஏற்க மறுக்கிறது மலராக மலர்ந்திருந்த மனைவிதான் இப்போது வண்டாக கொட்டுகிறாள் வீட்டு கணக்கு வழக்கு தெரியாத குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன பத்திரிகைகளை எடைக்குப் போட்டு பிள்ளைகளுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுக்கிறேன் சமூகத்திடமிருந்து தனித்து விச்ராந்தியாய் இருப்பதைப் பார்த்து ஊர் புரளி பேசுகிறது கோட்டி பிடித்து விட்டதென்று வாழ்க்கைக் கடலை கடக்க என்னிடம் தோணி மட்டும் இருக்கிறது துடுப்பில்லாமல் என் செய்வேன் விதிவழியே செல்லட்டும் என விட்டுவிட்டேன் வேறு என்ன செய்ய முடியும் கவிதை எழுதிக் குவித்த காகிதங்களை வைத்து.   சுமை   விரக்தியா சிகரெட் போதும் கோபமா சுவற்றில் அறையலாம் ஏக்கமா விட்டம் பார்க்கலாம் மயக்கமா வீட்டில் விளக்கேற்ற ஒரு மங்கை வரும் வரை விலக்கி வைக்கலாம் துக்கமா தாடி வளர்க்கலாம் சோகப் பாடல் கேட்கலாம் பொறாமையா உனக்கும் கீழே உள்ளவரைப் பார்க்கலாம் எதிர்பார்ப்பா ஜோதிடரைப் பார்க்கலாம் பயமா இருளைத் தவிர்க்கலாம் திகில் தொடர்களை பார்க்காமல் இருக்கலாம் வாழ்வா எனக்குப் புரியாமல் இருக்கலாம் புரிந்தவர்கள் வாய்மூடி மெளனித்து சைகைகளால் பேசலாம்.   சின்ன சின்ன வட்டங்கள்   நிகழ்வுகளுக்கு இடையேயுள்ள இடைவெளியில் கருக்கொண்டது பலவாகப் பிரியும் பாதையிலுள்ள ஒற்றைப் பனை மரத்தில் உருக்கொண்டது விதை வடிவம் பெரும் விருட்சத்தை தன்னுள் அடக்கியது சின்ன அலைகளெல்லாம் ஒன்று சேர்ந்து பேரலையாக எழுந்து கரையை முத்தமிட்டது வீசும் காற்றில் உதிரும் பழுத்த இலைகளில் வாழ்வின் அநித்யம் தெரிந்தது மழை தான் விழும் இடத்தை தனது முகவரியாக்கிக் கொண்டது நகரும் மேகத்தில் யானையின் உருவம் தெரிந்தது மொட்டை மாடியில் நிலா பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உட்கொண்டது பிச்சைக்காரன் தட்டில் சிதிறிக் கிடக்கும் சில்லறையாக வானில் நட்சத்திரங்கள் சிதிறிக் கிடந்தது. குறளி வித்தை   உடுக்கை சத்தம் காதடைக்க உரக்க உரக்க கூவுகிறான் காகிதங்களை கரன்சி நோட்டுக்களாய் மாற்றுவதாகவும் செத்தவனை உயிர் பிழைக்க வைப்பதாகவும் பாம்பின் விஷத்தை அரை நொடியில் முறிப்பதாகவும் சொல்லிக் கொண்டே சட்டைப் பையின் கனத்தை கண்களாலேயே அளக்கின்றான் காசு போடாதவர்கள் இரத்தம் கக்கப்போவதாய் ஜக்கம்மா சொன்னதாய் சொல்கின்றான் பயந்து கொண்டு போட்டவர்கள் பணத்தை இழந்து போனார்கள் குறளி வித்தைக்காரனோ கைப்பிடி திருநீற்றை வைத்துக் கொண்டு மாயாஜாலம் ஏதுமில்லாமல் சில்லறைகளை குவித்துவிட்டான் சற்றும் தாமதிக்காமல் இன்னொரு ஊர்நோக்கி விரைகின்றான் ஏமாறும் கூட்டம் எல்லா ஊர்களிலும் இருக்கும் என்றறிந்தவனாய் உடுக்கை அடித்து ஜக்கம்மாவை கூவி அழைத்துக் கொண்டே தன் பயணத்தைத் தொடர்கின்றான்.   சாத்தானின் கரங்கள்   சாத்தானின் கொடிய கரங்களில் பூந்தளிர்கள் அகப்பட்டன மனிதமற்ற மிருகத்தின் செய்கைகள் மிகக் கொடியதாக இருந்தன இன்னும் மலராத மொட்டுக்களை காமுகர்கள் கசக்கி எறிந்தனர் பால்யம் மாறாத முகங்களில் பீதி குடிகொண்டது கள்ளங் கபடமற்ற வெள்ளை உள்ளத்தில் உதிரத்தின் ரேகைகள் பதிந்தன வேட்டையாடுதலைப் போலே மனித உருவில் விலங்கும் கூட்டம் விரும்பியே செய்யும் காரியமிது பிள்ளைப் பிராயத்தில் சித்ரவதை அனுபவிக்கும் வேதனை அக்குழந்தையின் பால்யத்தை பறித்துவிடும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிகழ்வின் சுவடு மட்டும் வடுவாக மனதில் தங்கிவிடும் குற்றவுணர்ச்சி சிறிதுமின்றி ஈனப்பிறவியின் செய்கைகள் சமுதாயத்தை முற்றிலுமாய் சீரழித்துவிடும் இனி என்றென்றும் விழிப்போடு இருப்போம் அவர்களுக்கு அன்றன்றே தண்டனையைக் கொடுப்போம்.   பாழ்நிலம்   நத்தையைப் போல் நகருகிறது நிமிடங்கள் ஒவ்வொரு மணித்துளியும் ஊசிமுள்ளாய் உடலெங்கும் தைக்கின்றது அதீதமான எண்ணப் பிரவாகம் மனக்கலக்கத்தை உண்டாக்குகின்றது துயரச் சுமை தோளில் கனக்கின்றது வேங்கையை எதிர்கொள்ளும் புள்ளிமானைப் போல உள்ளம் தறிகெட்டு ஓடுகிறது விஷத்தை உட்கொண்டுவிட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும் மனிதனைப் போல மனம் கேவி அழுகிறது மன ஊசலாட்டத்தில் தடம்புரண்டு விடுவேனோ என்ற கவலை வந்தெனை வாட்டுகிறது வாழ்க்கையெனும் நாவல் தன் சுவாரஸியத்தை இழந்தது திறக்கப்படாத புத்தகத்திலுள்ள மரண வரிகளை மனம் படித்தது வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியிலொரு யுத்தம் தொடங்கியிருந்தது சமரில் வெல்பவர் பக்கம் சாய்ந்து தொலைப்பதென உள்ளம் முடிவெடுத்த போது உடல் உறங்கிப் போயிருந்தது.   ரோகி   ரணத்தை நிணம் கசிய வீதியில் நின்றிருந்தேன் பாதசாரிகளின் பார்வைகள் விநோதமாயிருந்தது தனக்கு வந்து விடுமோ என அஞ்சி விலகினர் சிலர் சிலர் அருவருப்புக் கொண்டு மண்ணில் காறி உமிழ்ந்தனர் புண்ணிலிருந்து வீசிய வாடையை காற்று வாங்கிச் சென்று இன்னொருவர் நாசிக்குள் நுழைந்தது உச்சி வெயிலால் காயங்கள் எரிந்தன உடலின் மேல் மற்றொரு உடல் போர்த்தியது போலிருந்தது உடலின் கனத்தால் பாரம் தாங்க இயலாத தோணி ஆடுவது போல உடம்பு அங்குமிங்கும் அசைந்தது மரணம் வந்து விடுதலை தரும் வரை வேறு கதிமோட்சம் இல்லையென்று உள்ளம் புலம்பி அழுதது.   அழைப்பு   அன்றைய விடியல் மரண அழைப்பைக் கொண்டு வந்தது இன்றோடு என் காலம் முடிந்தது வாழ்வின் பொக்கிஷங்களை மனம் நினைத்துப் பார்த்தது இயற்கையின் பேரழகை கண்டு வியந்தது மனிதர்களின் மனோபாவம் மெல்லப் புரிந்தது மீண்டும் குழந்தையாகிவிட உள்ளம் தவித்தது சுவர்க்கத்தின் சாவி என் கையில் இருந்தது உலகத்துக்கும் எனக்குமான உறவு அறுந்தது உலக நாடகத்தில் திரை விழுந்தது இப்போது வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிந்தது வாழ்க்கையில் செய்த பாவத்தின் எச்சங்கள் என் கூடவே வந்தது அந்தகாரத்தில் தனிமையாய் இருப்பது என் அகங்காரத்தைக் கொன்றளித்தது மரணத்தின் சூட்சுமம் புரிந்தது என்னைச் சுற்றி சிறைக்கம்பிகள் முளைத்தது.   பிறை   நிலவற்று வானம் மூளியாய் இருந்தது வானத்துச் சந்திரனைக் காணாத குழந்தை யாரோ களவாடிவிட்டதாக அப்பாவிடம் புகார் கூறியது நிலா வளர்வதும், தேய்வதும் அதற்கு வியப்பைத் தந்தது விண்மீன்களை ஆகாய ஆடையின் துளைகளாக அது கருதியது பறவையின் பாஷை அதற்குப் புரிந்தது மழையை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தது பொம்மைகளுடன் படுத்துறங்கியது இரவுக்கனவுகள் விரியத் தொடங்கியது சொப்பனம் என்பதை அறியாமல் குழந்தை விளையாடிக் களித்தது கண்விழித்ததும் தன் கூட விளையாடிய கடவுளை தேடத் தொடங்கியது.   பிறிதொன்று   கோலமிட குனிந்தவள் மீது பனித்துளி விழுந்தது ஊரையே கழுவி துடைத்து வைத்திருந்தது நேற்றிரவு பெய்த மழை சகதியில் உழலும் பன்றிகள் சந்தன வாசனையை அறியாது நரகல் தின்னும் நாய் காலை வேளையில் குளத்துக் கரையையே சுற்றி வரும் காற்று கேட்ட கேள்விக்கும் விடைதெரியாமல் மரங்கள் இலை உதிர்த்தன வெண்மேகம் மயிலுக்கு என்ன துரோகம் செய்தது வீதியில் நடப்பவர்கள் மற்றவர் முகம் பார்த்து நடப்பதில்லை நெல் கொறிக்கும் சிட்டுக்குருவி எப்படி விளைந்ததென்று அறியாது.   தருணம்   பரிதியைக் காணோம் வானில் பரிதியைக் காணோம் வனத்தில் திசைதெரியாமல் தொலைந்ததா கள்வர்கள் கைகளில் அகப்பட்டுக் கொண்டதா எரிந்து எரிந்து சாம்பலாய்ப் போனதா ராட்சச பாறைகள் மோதி தூள் தூளாய் ஆனதா மக்களின் செயல்களைக் காணப் பிடிக்காமல் மலைகளின் இடையே ஒளிந்து கொண்டதா நிலவிடம் பந்தயம் கட்டித் தோற்றதா இருளைக் கிழித்து ஒளியைப் பரப்பும் வேலையில் அலுப்பு தட்டிவிட்டதா இயற்கைக்குப் பயந்து நடக்க முடியாதென மானிட இனத்தை முழுமையாக கைவிட்டு விட்டதா.   தருணம்   பரிதியைக் காணோம் வானில் பரிதியைக் காணோம் வனத்தில் திசைதெரியாமல் தொலைந்ததா கள்வர்கள் கைகளில் அகப்பட்டுக் கொண்டதா எரிந்து எரிந்து சாம்பலாய்ப் போனதா ராட்சச பாறைகள் மோதி தூள் தூளாய் ஆனதா மக்களின் செயல்களைக் காணப் பிடிக்காமல் மலைகளின் இடையே ஒளிந்த கொண்டதா நிலவிடம் பந்தயம் கட்டித் தோற்றதா இருளைக் கிழித்து ஒளியைப் பரப்பும் வேலையில் அலுப்புத் தட்டிவிட்டதா இயற்கைக்குப் பயந்து நடக்க முடியாதென மானிட இனத்தை முழுமையாக கைவிட்டு விட்டதா.   வெறி கொண்ட பேரலைகள்   சங்கிலியால் பிணைத்தது போன்று உறுமிக் கொண்டுள்ளது சீறிப் பாயும் அலைகள் வானுயர எழும்புகிறது பரிதி பார்ப்பதற்கு பயந்து மேகங்களுக்கிடையே பதுங்கிக் கொள்கிறது கடல் தனது கரங்களால் கட்டிடங்களை கபளீகரம் செய்கிறது கரையை மோதும் அலையின் வேகம் கண்டு உடம்பு நடுங்குகிறது வாகனங்களை உருட்டித் தள்ளியபடியே வெள்ளம் ஊருக்குள் நுழைகிறது வெறி கொண்ட வேங்கையென கடலலைகள் பாய்கிறது கடல் எல்லை தாண்டி வந்துவிட்டதை எண்ணி பறவைகள் அச்சம் கொள்கின்றன சடலங்கள் குவியலாக தண்ணீரில் மிதக்கின்றன பிணந்தின்னிக் கழுகுகள் வானில் வட்டமிடுகின்றன ஆழியின் கோரத்தாண்டவம் பேரழிவை ஏற்படுத்திச் சென்றது கடல் சென்ற தடத்தைப் பார்த்து மனித இனம் பேரச்சம் கொண்டது சமுத்திர சர்ப்பம் தனது பிளவுண்ட நாக்கை அடுத்து எப்போது நீட்ட இருக்கின்றது.   கை   நீங்கள் சந்தித்ததுண்டா அந்த ஒரு கையை இரவில் பூட்டைத் திறப்பதும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவதும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத் திறப்பதும் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குவதும் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றுவதும் கூலிக்காக முகம் தெரியாத நபர் மீது கத்தியை இறக்குவதும் செய்ய வேண்டிய கடமைக்கு லஞ்சம் கேட்பதும் ஊழல் பணத்தை வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைப்பதும் பணத்தை கறந்துவிட்டு பதுங்கி விடுவதும் போலித்தனமான சிநேகத்துடன் உங்கள் கரங்களைக் குலுக்கும் கைகள் இவைகளாகவும் இருக்கலாம்.   பிணைப்பு   ரசமிழந்த கண்ணாடி நிர்வாணமாய் நின்றது சொட்டும் பனித்துளிக்காக மரத்தை உலுக்கும் சிறுவர் குழாம் எவ்வளவு தண்ணீரை மொண்டு குளித்தாலும் மழையில் நனைந்த திருப்தியைத் தரவில்லை பந்தயத்தில் தோற்ற சிறுமி தண்டனையாக நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தாள் அறிவியல் அறியாத அம்மா அமாவாசையன்று நிலா ஓய்வெடுக்கும் என்று சொல்லி வைத்தாள் தன்னை நச்சரித்த பிள்ளைகளுக்கு பால்யத்தை மறக்கவே பயிற்றுவிக்கப்படுகிறோம் கல்விக் கூடங்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த அரும்புகளின் கவனத்தை அப்பா வாங்கி வந்த தின்பண்டங்கள் திசை திருப்பின.   விருட்சம்   கை நீட்டி யாசித்தது மரம் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை வழிநெடுகிலும் என்னிடம் பேசிக் கொண்டே வந்தது தான் மரமான கதையையும் தான் பார்த்த மனிதர்களையும் பற்றி மழையில் நனைவது குறித்து இருவரது விருப்பமும் ஒத்துப்போனது வசந்த காலத்தில் யாசகம் கேட்கும் நிலை எனக்கு ஏற்படாது என்றது வீட்டை அடைந்ததும் மரத்தைப் பிரிந்தது மனிதனைப் பிரிவதைவிட துக்கத்தை அளித்தது.   அதிதி   அற்றை நாளில் உயிர் குடிக்கும் வெளவால்கள் இருளைப் புசித்தன அடிபட்ட நாகம் படமெடுத்தது ஜன்னலோர இருக்கை செளகரியம் தான் வேலி காத்தான் முட்கள் கிழிக்கும் வரை கூடுகளுக்கு திரும்பிய பறவைகள் சட்டை செய்வதில்லை அதிதிகள் விட்டுச் சென்ற தடங்களை உச்சிவெயிலில் ஐஸ் கரையாவிட்டால் எப்போது அதை தின்று முடிப்பது கண்ணி வெடியில் கால்களை இழந்த இளைஞன் கனவு காண்கிறான் போர்களற்ற உலகை எந்தப் பெயரை கூறினாலும் எதிரொலிக்கிறது மலை இறந்தவர்களின் பெயரை கூவுவதில்லை திரும்பி வந்துவிட்டால் என்ன செய்வதென்ற அச்சத்தில்.   கங்காளி   முகில் படியேறி வந்தது மழையரசிக்கும், புவியரசனுக்கும் திருமணம் என்றது பத்தினி தெய்வம் படி தாண்டியது லெட்சுமணக் கோட்டுக்கு மதிப்பில்லாமல் போனது பேருந்து கிளம்பியது பேச்சியம்மனின் பிலாக்கணத்தை வழிநெடுகிலும் சொல்லிக் கொண்டு வந்தாள் பாப்பாத்தி எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறுவதில்லை ஊர் கதை பேசாமல் அந்தி சாய்வதில்லை எல்லா ஊருக்கும் எல்லை உண்டு எல்லையம்மன் உத்தரவைக் கேட்டுத்தான் ஊரில் எந்தக் காரியமும் நடக்கும் துறட்டிக்கு எட்டாத கொய்யாப்பழங்களை அணில் வந்து தின்றுவிட்டுப் போகும்.   கனவு   கனவு ஒன்றில் ஒரு சிறுவனோடு கைப்பிடித்து நடந்து சென்றேன் கனவுலகிற்கு அவன் புதியவன் போலும் எல்லாவற்றையும் கண்டு ஆச்சர்யம் அடைந்தான் முற்றிலும் கேள்விகளால் உண்டான பெரிய பந்தொன்றை எனக்குப் பரிசாகத் தந்தான் இறக்கையின்றி எவ்வாறு பறக்க முடிகிறதென்று எல்லோரிடமும் கேட்டான் பசியோ, களைப்போ இன்றி நீண்ட தூரம் நடந்தான் விடைபெறும் போது கனவுலகிலேயே இருந்துவிடலாகாதா என்ற ஏக்கம் அவன் கண்களில் தெரிந்தது.   பிராயம்   தட்டான் பிடிப்பதற்காக வெயிலை பொருட்படுத்தாது வேலியோரம் அலைவோம் ஒளிந்து விளையாடுவது காற்றாக இருந்தாலும் கண்டுபிடித்துவிடும் கண்கள் எங்களுக்கு காற்று வீசும் திசைக்கெதிராய் பனையோலை காற்றாடியை வைத்து அது சுற்றுவதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்போம் வாத்தியார் வருகிறார் என்பதற்காக பொதுகழிப்பிடத்தில் நுழைந்து அல்லல்பட்டது இன்னும் ஞாபகமிருக்கிறது பட்டம் கீழிறங்கி விடக்கூடாது என்பதற்காக வெட்டி இழுப்போம் நூல் அறுந்த பட்டம் காற்றுடன் கைகோர்த்துச் செல்லும் எங்களுக்கு வருத்தத்தை பரிசளித்துவிட்டு பால்யம் மறைந்த பதின் வயதுகளில் கோயில் திருவிழாவுக்கு வரும் தேவதைகளைக் கண்டு ரசிப்போம் ஆட்டுக் குட்டிகளை விழுங்கக் காத்திருக்கும் சர்ப்பத்தைப் போல சமூகம் எங்களை கூண்டுக்குள் அடைத்துவைத்து நகைக்கும் என்று நாங்கள் நம்பவேயில்லை.         ஒளிவட்டம்   மழை வலுத்தது உனது குடைக்குள் என்னை அழைத்தாய் ஏனோ அன்று குடைக்குள் இருந்தும் நனைந்து போனேன் நாய்களுக்குப் பயந்து என்னை துணைக்கழைத்தாய் என்னைக் கண்டதும் நாய்கள் வாலாட்டியதைக் கண்டு மெலிதாக இதழ் விரித்துச் சிரித்தாய் நீ நூறு ரூபாய் கொடுத்து சில்லறை கேட்டாய் கொடுத்தேன் நன்றி என்றாய் அன்று முதல் உண்டியலில் போட்டு வைத்த சில்லறைகளை உடைத்தள்ளி வருகிறேன் இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆக மறுக்கிறது என்றாய் பழுது நீக்கிக் கொடுத்தேன் வண்டியில் அமர்ந்து விடைபெற்றாய் நான் ஆயில் கறை படிந்த கைகளையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் அன்றைய பத்திரிகை செய்தியைப் பற்றி அலுவலகத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள் உன்னையும் பரபரப்பு தொற்றிக் கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் நீ என்னை பெயர் சொல்லி அழைத்தாய் உனது சிரசை சுற்றி ஒளிவட்டம் தோன்றலாம் நீ எனக்கு ஞானமளித்ததால்.   சதுரங்கம்   நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்துக் கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கை சங்கிலிகளால் என்னைப் பிணைத்துள்ளது நினைத்தபடி காரியங்கள் நடக்காத போது சரணாகதி தீர்வாகிறது அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது கையில் பற்றிய மரக்கிளையும் முறிந்தால் என் கதி என்னாவது சூழ்நிலைக் கைதியாய் விளையாட்டுப் பொம்மையாய் விதியின் கைப்பாவையாய் எத்தனை நாளைக்கு இருப்பது சதுரங்க விளையாட்டில் வெட்டுண்ட சிப்பாய்களுக்கு ராஜாவை காக்க முடியவில்லையே என்ற கவலை வருமா.   பணயம்   காற்றை நான் கோபிப்பதில்லை மிக இறுக்கமான மன நிலையில் தென்றல் வந்து கேசத்தை வருடிச் செல்லும் போது அம்மா ஞாபகம் வந்துவிடுகிறது வெளிச்சத்தின் குழந்தைகள் இருளுடன் போராடிக் கொண்டிருக்கின்றன என்னால் அதற்கு உதவ முடியவில்லை அவையும் உதவி கேட்கவில்லை காற்றுக்கு கை முளைத்து போவோர் வருவோரையெல்லாம் விழுங்க நேர்ந்தால் முதல் பலி நானாகத்தான் இருப்பேன் ஏனென்றால் காற்றுக்கு அனுமதி மறுத்து எத்தனையோ முறை இழுத்து சாத்தியிருக்கிறேன் அறைக் கதவுகளை வானவில்லின் வண்ணமெல்லாம் சேலையில் இருக்க வேண்டுமென்றால் இனி இந்தச் சேலையின் நிறத்தில் தான் வானவில் வருமென்றேன் புநகவண்டி என்னைச் சுமந்து புறப்பட தயாராக இருந்தது காரணமில்லாமல் நேற்று பார்த்த விபத்தொன்று ஞாபகம் வந்தது பேருந்தை தவறவிடுவதும் வாய்ப்புகளை நழுவவிடுவதும் வாடிக்கையாகிப் போன இவ்வாழ்க்கையில் எதையாவது பணயம் வைத்தால் தான் காவலிருக்கும் பிசாசு புதையலை விட்டுத்தரும் என்று புரிந்து வைத்திருக்கிறேன்.   யார்   நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரிக்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தைப் பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள் வன்முறையை எதிர்க்கும் திரைப்படத்தில் அரிவாள் தான் கதாநாயகன் பறவைகளின் எச்சத்தில் தான் அந்தக் காடுகளில் விருட்சங்கள் முளைத்தன உடலின் நிழல்போலல்லாமல் மனதின் நிழல் மண்ணில் விழுந்தால் நீங்கள் என்ன விலங்கென்ற புதிர் அவிழ்ந்துவிடும்.   மையம் நிர்மாலியப்படாத பூக்கள் தெய்வத்தின் திருமேனியை அலங்கரிக்கும் பால் வற்றிப் போன தாயின் முலை சப்பும் குழந்தை பள்ளிக்கூட வாசலில் வியாபாரியின் கைபட்டவுடன் புதுப்புது வடிவெடுக்கும் பஞ்சுமிட்டாய் ஏனோ சிறுவர்களை ஈர்க்கும் வாழை இலை அசைவைப் பார்த்து பயந்து போன சிநேகிதன் ஜுர வேகத்தில் உளறிக் கொண்டிருந்தான் பேயைப் பார்த்ததாக சிட்டுக் குருவியின் சீண்டல்களைப் பார்த்து செவ்வந்தியின் மனம் சிறகடிக்கும் அந்தி நேரம் கணவனின் வருகைக்காக முகம் கழுவி பவுடர் பூசி வாசலில் காத்திருக்கும் தோப்புக்காரன் தேங்காய் தலையில் விழுந்து கபாலம் சிதறி இறந்து போனான் உச் கொட்டிய கூட்டம் தேங்காய் சிரட்டை கூட ஈயமாட்டாரு போறப்ப என்னத்த எடுத்துகிட்டு போனாரு என்றது.     யாளி   தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போது தோன்றும் வட்டம் மெதுவாக சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும் ஒரு பிராணியே நாள்தோறும் சந்திரனின் தோற்றம் வளர்வதையும், குறைவதையும் கண்டு வியக்கும் குழந்தைகள் சிறிய அலைகள் முத்தமிட்டுச் செல்லும் பெரிய அலைகள் மணல்வீட்டை இடித்து சுவடில்லாமல் செய்துவிட்டுத் திரும்பும் இரவு, பகல்களாய் ஆனது வாழ்க்கை கனவுகள் மட்டும் இளைப்பாறுதல் தரவில்லை என்றால் கைதிகளாகிப்போவோம் புரியெனும் சிறைச்சாலையில்.   துளித்துளியாய்   நேற்றைய கனவில் நீ வந்தாய் மற்றவர்கள் பொறாமை கொள்ள உச்சி முகர்ந்து சென்றாய் உனது பாடலில் இழையும் சோகம் எதனால் தீர்ந்து போகும் சத்தமில்லாமல் முத்தம் கேட்டால் பொய் கோபம் கொண்டு முகம் திருப்பிக் கொள்கிறாய் இருளடைந்த வாழ்க்கையில் ஒளிச்சுடராய் நீ வந்தாய் சுவர்க்த்துக்குப் போகும் பாதையில் என்னை அழைத்துச் சென்றாய் நீல வண்ணத்தில் ஆடை அணிகிறாய் பறக்க நினைத்ததும் சிறகை விரிக்கிறாய் கானம் பாடியே மழையை அழைக்கிறாய் பேய் மழையில் தேகம் நனைக்கிறாய் காதல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறாய் புரியாமல் விழிக்கும்போது தலைகோதி விடுகிறாய்.   பரிசு   உன் பேரழகை கண்ணாடி தான் முதலில் காண்கிறதா மென்பஞ்சுப் பாதங்களை அலைகள் வந்து தழுபுகிறதா உனக்கு மட்டும் எப்படி மேகம் குடை பிடிக்கிறது கண்கள் வழியே எப்படி இதயத்திற்குள் நுழைய முடிகிறது உன்னால் கனவில் கூட முத்தத்தைத் தரவும் பெறவும் ஏன் மறுக்கிறாய் புத்தகத்திற்கு நடுவே வைத்த புகைப்படம் தொலைந்து போக நிழற்படத்தை தொலைத்ததற்காக எனது நிழல் என்னை வெறுத்தது சநிதிரனே தேயும் போது உனது முகம் மட்டும் எப்படி பூரண நிலவாய் எனது கவிதை வரிகளைவிட அழகாய் இருக்கிறது உன் குழந்தை முகம் நீ பரிசாகத் தந்த கைக்கடிகாரத்தை நான் கழட்டுவதே இல்லை.     தரிசனம்   உடலென்னும் கூண்டுக்குள் உயிர்ப்பறவை சிறை இருக்க சிறகிருந்தும் பறக்க விழையவில்லை சிறுநெல் மணிகளுக்கு ஆசைப்பட்டு பிறவாமல் பிறப்போம் இறவாமல் இறப்போம் கண்ணீர்க் கோடுகளால் காவியங்கள் பல படைப்போம் ஜாதகக் கட்டங்களில் என் இருக்கிறது ஒரு அடி எடுத்து வைத்தால் இமயமலை கூட இரண்டாய்ப் பிளக்கிறது நதி போகும் போக்கிலேயே போனால் கடல் போய்ச் சேர்வாய் எதிர் நீச்சல் போடு ஊர்வந்துச் சேர்வாய் மழைக்கு மேகமா முகவரி வந்து விழும் இடத்தில் தன்னைத் தொலைத்தழும் மழை வானத்து வெண்ணிலா சேதி பேசும் நாணத்தை விட்டொழித்து தென்றல் வீசும் விழிகள் நான்கும் ஒன்று கலக்கும் காதல் விதை முளைக்க சமயம் பார்க்கும் ராஜவீதியில் தேர் வலம்வரும் நி வடம் பிடித்தால் தெய்வம் உயிர் பெறும்.   முகவரி   பரிதியின் தங்க நிறம் கொஞ்ச நேர்த்தில் மாறிப் போகும் வைகளை நீல வானம் நிலவுக்கு விடை கொடுக்கும் நதிகளில் பாயும் வெள்ளம் சடலங்களைச் சுமந்து செல்லும் காற்றலைகளில் பரவும் ஒலி நிசப்தத்தைச் சிதறடிக்கும் கார்மேக ஊர்வலத்தைக் கண்டு மயில் தோகைவிரிக்கும் குட்டியைப் பறிகொடுத்த யானை குடியிருப்புகளை நாசப்படுத்துமு கூண்டுக்குள் இருக்கும் கிளி இரைக்காகச் சீட்டினை எடுத்துக் கொடுக்கும் அந்தகாரம் கவிந்த இருள் ஒளிக்கான தேவையை உணர வைக்கும் தூறல்கள் போடும் வானம் பருவகாலங்கள் ராகங்கள் பாடும் காற்றின் முகவரி கேட்டால் மரம் தெரியாது என்று தலையசைக்கும்.   நிசி   இலைகளற்று மூளியாய் நிற்கும் மரம் பீதியைக் கிளப்பியது கும்மிருட்டில் கள்வனைக் கண்டது போல் வெற்று வெளியைப் பார்த்து நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன தாகம் தணிக்க அடுக்களைக்கு போன என்னை வரவேற்றது திருட்டுப்பூனை தூக்கம் வராத இரவுகளில் மொட்டை மாடியில் வானம் பார்த்துக் கிடப்பது வழக்கம் படுக்கையில் தலையணை மட்டும் இருக்கட்டும் மனதிற்கு சஞ்சலம தரும் நிகழ்வுகள் வேண்டாமென்று வானம் போதனை செய்தது தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் எல்லோரிடமும் எப்படி இந்தச் சங்கதியை சொல்வது எனத் தெரியாமல் பள்ளிக்கூட மாணவனைப் போல் மலங்க மலங்க விழித்தேன் நான்.       பள்ளிப்பிராயம்   மதிய உணவருந்த வெறுங் கால்களுடன் தார் சாலையில் ஓட்டமெடுப்போம் பாடத்தை கவனிக்காமல் எப்போது மணியடிக்கும் என்று கடிகாரத்தை பார்த்திருப்போம் காசு கொண்டு வராதவர்களின் வயிற்றுப் பசியை புளிய மரம் தீர்த்து வைக்கும் மரக்கட்டையை மட்டையாக்கி கிரிக்கெட் விளையாடுவோம் குளத்து நீரை கலங்கடித்து குதித்து மகிழ்வோம் வாத்தியாருக்கு பட்டப்பெயர் வைத்து அவர் வீட்டின் முன்பு கத்துவோம் டூரிங் டாக்கீஸ் மணலில் அமர்ந்து கொண்டு கதாநாயகி தோன்றும் இடமெல்லாம் கைதட்டுவோம்.   மழைத்தவம்   எங்கே சென்றாய் மழையே இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு எங்கே சென்றாய் மழையே காற்றே கருணை கொள் கார்மேகத்தைக் கடத்திவந்து இந்த ஊருக்கு மேலே நிறுத்திவிடு வருண பகவானே மரங்களெல்லாம் இலையுதிர்த்து நிற்பதைப் பார் தளிர்க்கச் செய்ய தாராளமாய் தண்ணீர் பாய்ச்சு உன்னை வரவழைக்க கழுதைக்கு கல்யாணம் உன்னை உருக வைக்க இசை மேதைகளின் இன்னிசை கானம் மழை மகளே புவியரசன் உன் மீது மையல் கொண்டு தவிப்பதைப் பார் முத்தமிட்டு சங்கதி பேச உன்னை அழைப்பதைப் பார் ஆனந்த வெள்ளத்தில் நீ மிதக்கும் வேளையில் அருவியாய் நிலத்தின் மீது நீரை ஊற்று மழை தேவதையே உன் சிறகிரண்டையும் ஒடித்து விட்டனரா உன்னைத் தனிமைச் சிறையில் அடைத்துவிட்டனரா பயிர் செழிக்க உயிர் தழைக்க மனது வை மழையே விண்ணோடு எங்களால் சண்டையிட முடியாது வீண் பேச்சு கதைக்குதவாது வானம்பாடி கானம் பாடி வசந்தகாலத்தை அழைப்பது போல் நாமெல்லாரும் அழைத்திடலாம் காற்றில் மண்வாசம் வருது பாருங்கள் கிழக்கு திசை கறுக்கத் தொடங்குது பாருங்கள் மழைதேவியே வெயில் அரக்கனை சம்ஹாரம் செய்து கொண்டிருக்கின்றாயா உயிர்களுக்கு வரமருள துணிந்து விட்டாயா உனது வருகைக்கு இடியோசை கட்டியம் கூறுகிறதே மழைத்தாயின் மனதில் ஈரம் இருக்கிறது சற்று அண்ணாந்து வானைப் பாருங்கள் மின்னல் கண்ணைப் பறிக்கின்றது.   மழை புஷ்பம்   பிரிவு பற்றிய அச்சமோ அசெளகரியமோ எதுவும் தென்படவில்லை உன் முகத்தில் அடிக்கடி உள்ளங்கையை பார்த்துக் கொள்கிறாய் மென் பஞ்சுக் கரங்களை முத்தமிட விழைகிறேன் நான் வெளிர் நீலநிற சுடிதாரில் தேவதை போல் இருக்கிறாய் எனக்கு பிடித்த நிறத்தில் சுடிதார் அணிந்து வந்து ஏன் என்னை வதைக்கிறாய் உனது கேசத்தை வருடிச் செல்லும் காற்று என்னைப் பார்த்து கண் சிமிட்டுகிறது நான் கொடுத்து வைத்தவனென்று தூறலில் நனைவது உனக்குப் பிடிக்குமென்பதால் அடிக்கடி வானிலை அறிக்கையை பார்க்கிறேன் நான்.   தொலைந்து போனவர்கள்   சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீடடுக்காரருக்கு கனவுகள் இலவசம் ஞானம் தேடுபவர்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் வேட்டுச் சத்தத்தோடு வழியனுப்ப வேண்டுமென்று எந்த மனிதன் எழுதி வைத்தான் உதிரும் இலைகள் வெற்று வெளியில் வார்க்கும் கவிதை கடல் அதைக் கேட்டுக் கிறங்கியது வானம் ஊஞ்சலாடியது திருவிழாவில் தொலைந்தவர்களெல்லாம் அடுத்த திருவிழாவில் அகப்படாமலா போய்விடுவார்கள்.   தீர்த்தக்கரை   காற்றுக்கு தலைவணங்காத மரம் முறிந்து விழும் ஆற்றுப்படுத்த அம்மா இல்லாததால் குழந்தை அழும் கார்மேகம் முழக்கமிடும் மழை தானே நிலத்தின் வரம் வெண்மேகம் காற்றிலாடும் அலை வந்து கரையில் மோதும் சித்திரையில் வெயில் கொளுத்தும் தென்றல் வந்து சாந்தப்படுத்தும் திருவிழாவில் தேவதைகள் கூட்டம் காளையர்களின் ஏக்கப் பார்வை கண்டு சிரிக்கும் எத்தனையோ பூக்கள் பூக்கும் சில மட்டுமே உதிராமல் காய்க்கும் அதிகாலையில் கிழக்கு வெளுக்கும் மூடுபனி மெல்ல விலகும் குயில்கள் பாடும் அமுத கானம் கேட்பதற்கோ இணையைக் காணோம் நதிவெள்ளம் கடலைத் தேடும் பூக்கள் தேவகானம் பாடும் கண்ணில் உந்தன் பிம்பம் நிழலாடும் காதல் வந்தால் காலம் பறந்தோடும்   திருஷ்டி   உனது வார்த்தைகளை எந்த அகராதியிலிருந்து எடுத்தாள்கிறாய் பெய்ய மறுக்கிறது மழை முதல் துளியை உனது ஸ்பரிசத்தில் விழச்செய்து ஜென்ப சாபல்யம் அடையத் துடிக்கிறது உனது திருவடிகளை எனது வீட்டை நோக்கி திருப்ப மாட்டாயா உன்னை உரசிய தென்றல் மண்மீது ரதியை கண்டேன் என துள்ளிக் குதிக்கிறது தேவதை உலகம் களையிழந்து போயிருந்தது தேவி அவள் பிறந்து பூமிக்கு வருகை தந்ததினால் கோயில் பிரகாரத்தை வலம் வருகிறாய் தெய்வம் உனது வீட்டில் குடியிருப்பதை அறியாமல் ஊர்க்கண்ணெல்லாம் உன்மீது தான் அத்தையிடம் சொல்லி வைக்க வேண்டும் தினமும் திருஷ்டி கழிக்கச் சொல்லி.   பிழைப்பு   பள்ளிக்கூடத்திருந்து மதிய உணவு வேளையில் செருப்பில்லாத கால்களுடன் வெயில் சூடு பொறுக்க முடியாமல் வீடு வந்து சேருவோம் குளத்தில் தூண்டில் போட்டு கிடைத்த மீன்களை கிணற்றுக்குள் விடுவோம் சினிமா தியேட்டரில் அடுத்தபடம் இன்னதென்று பந்தயம் கட்டுவோம் சைக்கிள் டயருக்கு பஸ் பெயரை வைத்து ஊர் முழுக்க சுற்றுவோம் காற்றாடி வாங்க வீட்டில் கொடுத்த காசை தூக்கி எறிந்து விளையாடும் போது வீட்டுக் கூரையில் விழுந்துவிட பயந்துபோய் நின்ற என்னிடம் சுமதி அக்கா கொடுத்த இருபது பைசா என் உடலை காயங்களின்றி காப்பாற்றியது வெள்ளந்தி பேச்சும் விளையாட்டுப் புத்தியும் தொலைந்து போன பதின் வயதுகளில் புத்தகத்தில் படிப்பதை தேர்வில் வாந்தியெடுத்து வைப்பதே பிழைப்பாய் போய்விட்டது.   பித்து   சூசகமாய்ச் சொன்னார்கள் அவளுக்கு கோட்டி பிடித்துவிட்டதென பார்ப்பதற்கு நன்றாக்தான் இருந்தாள் ஆனால் அவிழ்ந்த கூந்தலும் கலைந்த சேலையும் அவளை அவ்வாறாக எண்ண வைத்தது காரணத்தை விசாரித்தால் கதையொன்று சொன்னார்கள் எல்லை அம்மனை அவமதிச்சா இப்படித்தான் ஆகுமென்றார்கள் எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அவளை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டால் மருந்தால் சரியாகாது ஆத்தா மனசு வைச்சாத்தான் தெளியுமென்றார்கள் எங்கும் செல்லமுடியாமல் சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவளை பார்த்துவிட்டு வந்த பிறகு இரவில் கண்ணுறக்கம் வரவில்லை.   கைவண்ணம்   தேகச் சுடர் வழியே தெரிகிறதா உள்ளொளி ஊமை வெளியைப் பற்றி ஏளனமாய் சிரிக்கிறது பாஷைகள் கரையோரம் இசைபாடி யாசகம் கேட்கும் அந்தக இளைஞன் வீணையை உயிர்ப்பித்ததற்காக நன்றி சொல்லும் கலைமகள் காற்றலைகளில் மிதந்து வரும் கானம் யாருடையது அண்டப் பேரண்டப் பெருவெளியில் உறங்குகிறான் ஒருவன் படைத்த களைப்பு நீங்க கனவு வழிப்பாதையில் திசைகளற்றுப் போகும் கணத்தில் ஒளிரும் மின்மினிப்பூச்சி யாருமற்ற இரவில் நிலவின் கிரணங்களைப் பருகும் மரங்கள் மறைப்பை அகற்றினர் வெண்திரையில் ஓவியனின் தூரிகை விளையாடியுள்ளதைக் கண்டு மயங்கினர்.   துயில்   குழந்தை அம்பாரி ஏற மறுத்தது மிட்டாயை வாங்க மறுத்தது பொம்மையை தூர எறிந்தது அதன் பார்வை துழாவத் தொடங்கியது அதன் கண்களில் நீர் கோர்த்தது மழலை மொழியில் ம்மா என்றது அம்மாவின் சேலையணிந்து சித்தி அதன் அருகில் வர அந்த வாசனையில் தன்னை இழந்தது அம்மா வரும் வரையில் அந்த நறுமண நெடியை நுகர்ந்து கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்தது.   அவர்கள்   அவர்கள் உங்களை மிரட்டலாம் ஏமாளிகள் எப்போதும் எதிர்த்துப் பேச மாட்டார்கள் அவர்கள் உங்களைத் திட்டலாம் திரும்பத் திட்டுவதற்கு வார்த்தைகளின்றி தவிப்பீர்கள் அவர்கள் நிரூபிக்க முயலலாம் உங்கள் தரப்பின் மீது உங்களுக்கே சந்தேகம் தோன்றலாம் அவர்கள் உங்கள் குடும்பத்தை ஏசலாம் முள்கிரீடம் தரித்த் ஏசுவைப் போல் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வீர்கள் அவர்கள் மேற்கோள் காட்டலாம் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை நீங்கள் அறிய மாட்டீர்கள் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கலாம் இழந்ததை விடவும் பத்திரமாக இருப்பதே மேல் என்று நினைப்பீர்கள் அவர்கள் பிளாக்மெயில் செய்யலாம் இதற்கு மேலும் மோதுவதற்கு அச்சப்பட்டு வீடு வந்து சேர்வீர்கள்.   இதுவல்ல   விட்டில் பூச்சி தீயில் மாண்டிடும் நடப்பதெதுவும் நம் கையில் இல்லை மாநகரத்தில் வாகனங்களெல்லாம் எங்கே விரைகின்றன வாழ்க்கையை திரைப்படமாகப் பார்க்கத் தெரிந்தால் நன்றாக இருக்கும் தீயென்றால் விரல் சுட்டுவிடுமா ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாய் மனதுக்குள் யார் பாடுவதோ கோயில் யானையின் ஆசிர்வாதத்தை குழந்தைகள் சொல்லி சொல்லி பூரிக்கும் ரத்தம் உறிஞ்சும் ராட்சச கொசுக்கள் உறக்கம் கெடுக்கும் உதவாக்கரைகள் கங்கையில் மிதக்கும் பிணங்களுக்கு சொர்க்கத்திலே இடமிருக்கு.   வட்டத்துக்குள் வாழ்க்கை   வாழ்க்கை சலிப்பூட்டுகிறது எத்தனை பகல்கள் எத்தனை இரவுகள் எத்தனை மனிதர்கள் ஏதோ இருப்பது போலும் ஒன்றுமே இல்லாதது போலும் தோன்றுகிறது தூரத்தில் கயிறுதானேயென்று அலட்சியமாக வந்தால் கிட்டத்தில் பாம்பாகிறது துரோகக் கழுகு என்னை வட்டமிடுகிறது எங்கு போயினும் மரண சர்ப்பம் என்னைத் துரத்துகிறது வாழ்க்கை வட்டம் நிறைவுறும் போது எனக்காக எதுவும் மிச்சமிருக்காது மாம்சம் சாம்பலாகும் நினைவுகள் சூன்யமாகும் இன்னார் இருந்தாரென்பதை இவ்வுலகம் சீக்கிரத்தில் மறந்து போகும்.   கடவுளும் கண்ணீர்த்துளிகளும்   வாழ்வு நதி வெள்ளம் கடல் மணல் நுரை வானம் வெளி காற்று வாயு அக்னி ஆகாயம் மண் மழை வெள்ளம் மனிதன் மனிதம் மானுடம் கருணை தயை இறைவன் கூடு இணை குஞ்சுகள் பருவம் தப்பி பெய்யும் மழை தாங்க முடியாத கடும் குளிர் பூமியை எரியூட்டியது போல் தகிக்கும் வெயில் ஏதோ நிகழ்வதற்கு அறிகுறியாய் நிசப்தம் இறைவனின் கண்களில் கண்ணீர் பலியாகப் போகும் அப்பாவி ஜீவன்களை எண்ணி…   நேற்று இன்று நாளை   நேற்று ஒன்றும் மோசமில்லை பரபரப்பு ஏதுமில்லை கடன்கூட வாங்கவில்லை மனைவி ஏசவில்லை குழந்தை படுத்தவில்லை தொழிலில் நஷ்டமில்லை இன்று ஒன்றும் புரியவில்லை கடவுளைக் காணவில்லை வியாபாரம் ஆகவில்லை கடன்காரன் தொந்தரவு தாங்கவில்லை நேரம் ஓடவில்லை இருளில் பயமுமில்லை நாளை நம்பிக்கை எதுவுமில்லை கனவு காண்பதில்லை தூர தேசம் போகும் திட்டமில்லை நிஜங்கள் அறையாமலில்லைய விபத்தை தடுப்பதற்கில்லை முற்றாக ஒன்றும் கைகூடவில்லை.   கதைக்குதவாத கலை   தினப்படி காரியங்கள் ஒழுங்காக நடப்பதில்லை வேலைக்கோ தொழிலுக்கோ போக மனமுமில்லை கையூட்டு கொடுத்து காரியம் சாதிக்கும் எண்ணமுமில்லை கவிதையை வைத்து காசு பண்ண முடியவில்லை விதி இப்படித்தான் என்றால் என் கதி என்னாவது நடராஜப் பெருமான் நன்றாகத்தான் ஆடுகிறான் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நான் நொந்து வாடுகிறேன்.   ஒருமழை நாள்   தூறலோடு ஆரம்பித்து ஊரை துவம்சம செய்தது மழை பரிதியை கார்மேகம் மறைத்ததால் கும்மிருட்டு குடை இவ்வளவு வேகம் ஆகாதென்று மனிதர்கள் காட்டும் கறுப்புக் கொடி வெள்ள நீர் காலணிகளை அடித்துச் செல்ல வெறுங்காலோடு வீடுவந்து சேர்ந்தோம் இடி, போர்க்களத்தில் சேனைகள் மோதுவது போல் கர்ஜனை செய்கிறது வானம் மழை நீரோடு மரங்கள் அளாவளாவியது வெள்ளொளியை பாய்ச்சி மனிதர்களை அச்சப்பட வைத்தது மின்னல் குளிர் காற்றால் எலும்புகள் கிடுகிடுத்தன ஆகாயம் மீண்டும் கறுத்தது இன்னொரு மழை ஆரம்பித்தது.   குட்டிக்கதைகள்   வாத்தியார் வகுப்பறைக்கு வந்தபின் தான் ஆரம்பிக்கும் ஆட்டமும் பாட்டமும் அவர் சொல்லும் கதைக்கு மகுடிப் பாம்பாய் மயங்கும் குழந்தைகள் அவருடைய ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்து ரசிக்கும அரும்புகள் சொந்த வாழ்வில் சோகம் இருந்தாலும் அதை குழந்தைகள் முன்பு வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார் அவருக்கு எங்கிருந்து கதைகள் கிடைக்கின்றன என வியக்கும் பள்ளிக்கூட பிஞ்சுகள் வகுப்பறைக்கு கதைகள் சுமந்து வரும் அந்த வாத்தியார் ஒருநாள் வரவில்லை செய்தி மட்டும் வந்தது அவர் விபத்தில் இறந்துவிட்டாரென்று அவர் சொல்லும் குட்டிக்கதை போல அவருடைய வாழ்க்கைக் கதையும் சீக்கிரத்தில் முடிந்தது குழந்தைகளுக்கெல்லாம் பெருவருத்தம் மயான ஊர்வலத்தில் அவர் கதை சுமந்து வரும் பாதையெல்லாம் பூக்களால் நிறைந்தது.   ரேகை   பூமியின் கைகளில் ரேகைகள் ஆயிரம் வானப் பெருவெளியில் தொலைந்தது வெண்ணிலா விழும் இடத்தைப் பொறுத்தே மழைக்கு முகவரி காற்றுக்கு சிறை மீனுக்கு வலை கவண்கல்லுக்கு பயந்து கோபுர உச்சியில் புறா நடுநிசியில் புழங்கும் பூனை ஆந்தையைக் கண்டு மிரளும் கண்கள் ஓடிக்கொண்டே இருக்கும் நதி ஓடப்பிடிக்காமல் தேங்கி நிற்கும் ஓடை மின்சார விளக்கொளியில் பிரகாசிக்கும் சாலை வாகன வேகத்தைக் கண்டு மிரண்டு சாலையைக் கடக்க அஞ்சும் கிழவி விடாயைக் குறைக்க முடியாமல் வீணாகும் வாழ்க்கை.   தூளி   வளர்ந்ததும் தொலைந்திடும் குழந்தைமை பற்றி யாருக்கும் அக்கறையில்லை பிஞ்சு நெஞ்சத்தில் நஞ்சை விதைக்காத மானிடர்கள் எவருமில்லை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவாவது சொல்லி இருப்போம் பேய்க் கதைகளை குடுகுடுப்பைக்காரனை பூச்சாண்டி எனக்காட்டி அச்சுறுத்தி சாப்பிட வைப்போம் எவ்வளவு கவனத்தோடிருந்தாலும் தவறுதலாகவாவது விஷத்தை விதைக்க வேண்டிவரலாம் கவனமாகக் கையாள வேண்டிய கண்ணாடிப் பாத்திரம் போன்றது பால்யம்.   நாதம்   சருகாகி உதிரும் இலைக்கு மெத்தை விரித்தது பூமி காற்று அதை கைப்பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தது கிளைகளெல்லாம் இசைக் கருவியாகி வேர்களின் பாடலை ஓயாமல் பாடியது பூக்களின் நறுமணத்தை முகர்ந்த வண்டுகள் தேன் குடித்து ரீங்காரமிட்டுச் சென்றன மொட்டுகள் இதழ்விரித்து வானம் ஆடை உடுத்திக் கொள்ளாததைப் பார்த்துச் சிரித்தது அக்கா குருவி கீதம் பாடி வசந்தகாலத்தை அழைத்தது திடீரென மழை பெய்து தேகத்தை நனைத்தது புல்லாங்குழலின் துளைகள் வழியே எப்படி புதுநாதம் பிறக்குது மேக ஊர்வலத்தில் தானும் கலந்து கொள்ள நதிவெள்ளம் துடித்தது.   நீர்ச்சுழி   பால்யத்தில் பதித்த முத்தங்களெல்லாம் பால் வீச்சமடித்தது துஷ்டி நிகழ்ந்த இடங்களில் ஒப்பாரி சத்தத்தைக் கேட்டு இவர் ஏன் தூங்குகிறார் என மனதில் கேள்வி எழும் மதிய வேளையில் திறக்கப்படும் டிபன் பாக்ஸிலிருந்து வரும் சாம்பார் மணத்தை முகர ஏங்குகிறது மனம் திரைப்படங்கள் உண்மை என்று நம்பிய காலங்களில் கதாநாயகனுக்காய் எங்கள் இதயத்தில் சிறிது இரக்கம் சுரக்கும் நேற்று வரை கூட விளையாடிய பெண்களுக்கு தாவணி போட்டவுடன் எப்படி நாணம் வந்தது என்று மனம் குழம்பித் தவிக்கும் பள்ளியில் நீளம் தாண்டுபவன் உயரம் தாண்டுபவனெல்லாம் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் தடைகளைத் தாண்ட முடியாமல் போனது தீராசோகம்.   ஆயத்தம்   எதேச்சையான சந்திப்புகளில் சம்பிரதாயமாக முகமன் கூறிக் கொள்கிறோம் ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு விடை பெறுகிறோம் தவிர்க்க இயலா தருணங்களில் சொற்களை மனவடுக்குகளில் பொருத்திப் பார்க்கிறோம் வேலைச் சுமையில் இதழ் விரித்து புன்னகை புரியக்கூட மறக்கிறோம் ஒவ்வொரு இரவும் அடுத்த நாளுக்கான ஆயத்தங்களுடன் தொடங்குகிறது பரபரப்பான காலை வேளையில் வீட்டிற்குள் நுழைந்த பட்டாம்பூச்சி காபி டம்ளரில் அமர்கின்றது   பாற்கடல்   மழை பெய்தாலும் நீ வருவாய் என நனைந்து கொண்டே காத்திருக்கிறேன் உன் கூந்தலை அலங்கரிக்க பூக்கள் தவம் இருக்கின்றன நீ வந்து வசித்தால் என் வீடு சுவர்க்கமாகாதா இப்போதும் நீ மணியோசை கேட்டுத்தான் எழுகிறாயா பறப்பதைப் போன்ற கனவில் திடுக்கிட்டு விழித்தெழுந்து றெக்கையைத் தேடி ஏமாற்றம் அடைந்து இருக்கின்றாயா பாற்கடல் அமிர்தத்தை பருகியதால் தான் தேவதையானாயா அலை ஒதுக்கிய கிளிஞ்சல்களை நீ ஏன் பொறுக்குகிறாய் மழை விட்ட பின்புதான் நீ குடை விரிக்கிறாய்.                           [photo.jpg]ப.மதியழகன்(28.3.1980)   திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. தற்போது மன்னார்குடியில் தனியார் மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.