[] 1. Cover 2. Table of contents காலம் மறைத்த மக்கள் காலம் மறைத்த மக்கள்   சு.சோமு   sundaram.somu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kaalam_maraitha_makkal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation முன்னுரை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம் இது. எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்னும் எழுத்தாளர் எழுதிய கேஸ்பக் என்னும் பழைய உலகத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பில் இரண்டாவது கதை இது. கேஸ்பக்கில் சிக்கிய தன் முதலாளியின் மகனை மீட்க வேண்டித் தேடுதல் வேட்டைக்குக் கிளம்பும் ஒரு வேலைக்காரன் அங்கு ஆதி காலத்தில் பூமியில் இருந்த மனிதர்கள் போல நாகரிகம் அடையாத பல்வேறு மனித இனங்களைச் சந்தித்து எவ்வாறு ஊர் திரும்புகிறான் என்பது பற்றிய கதை. ஒவ்வொரு இன மனிதர்களின் பண்புகள் பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் விவரித்து இருக்கிறார் ஆசிரியர். அத்தியாயம் - 1 போவன் டைலரின் கையெழுத்தால் ஆன அவன் சரித்திரத்தை அவனது அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுப்பதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு நான் பயணித்து வந்திருந்த போதிலும் மனதில் லேசான சந்தேகம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது அது உண்மையாக இருக்குமா என்று. கல்லூரி நாட்களில் அவன் அடித்த லூட்டிகள் ஏராளம். அனைவரையும் எளிதில் ஏமாற்றி விடும் சாமர்த்தியசாலி. சாண்டா மாநகாவில் டைலர் நூலகத்தில் அமர்ந்திருக்கும் போது நான் முட்டாள் தனமாய் உணர ஆரம்பித்தேன். நேரடியாகக் கொண்டு வருவதற்குப் பதில் அந்தக் காகிதங்களை எல்லாம் விரைவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கலாமோ என்று நினைத்தேன். பிறர் என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்குப் பிடிக்காது. எனக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். அது அடுத்தவர் மேல் இருக்கும் வரை எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும். மூத்த டைலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று ஒவ்வொரு மணி நேரமும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக ஹானலூலுவில் இருந்து வந்த நீராவிப் படகு தொரியாதோர் என்று பெயரிட்ட அவரது உலாப்படகு வரும் தேதி குறித்த செய்தியுடன் வந்தது. அந்தச் செய்தி வந்தே கிட்டத்தட்ட 24 மணி நேரங்கள் கடந்து விட்டன. வீட்டில் இருந்த அவரது உதவியாளர் உறுதி அளித்தார் தொரியாதோர் நிச்சயம் குறித்த நேரத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கும் என்று. ஏனெனில் கடவுள் செயல் தவிர தன் எஜமானரின் எண்ணத்திற்குத் தடை போடுவது வேறெதுவும் இல்லை என்று உறுதியாகச் சொன்னார் அவரைப் பற்றி நன்றாகத் தனக்குத் தெரியும் என்பதால். தொரியாதோரின் தந்திக் கருவியில் தகவல் அனுப்பும் பகுதியும் தாளிடப் பட்டிருக்கிறது அவசர ஆபத்துச் சமயங்களில் உபயோகப் படுத்த மட்டும் என்பதால். அதனால் வேறெதுவும் செய்வதற்கில்லை காத்திருப்பதை தவிர. நாங்கள் அந்தக் கட்டுரையில் உள்ள ஆபத்துக்களையும் வினோதமான நிகழ்வுகளையும் பற்றி நீண்ட விவாதம் செய்தோம். அமெரிக்க ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் பணிபுரிய வேண்டி போவன் டைலர் சென்ற அவரது கப்பல் வெடிக்கண்ணியால் வீழ்த்தப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். நானும் நியூ யார்க் அலுவலகத்துக்கு தந்தி அனுப்பி லா ர்யூ என்ற பெயருடைய பெண் பயணம் செய்த செய்தியையும் உறுதிப் படுத்தி விட்டேன். மேலும் காப்பாற்றப் பட்டவர்களின் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை. அது போல அவர்களின் உடல்களும் கிடைக்கவில்லை. ஆங்கிலேயப் படகினால் அவர்கள் காப்பாற்றப் பட்டதும் சாத்தியமானதுதான். எதிரியின் யூ-33 கப்பலை அவர்கள் கையகப்படுத்தியதும் கூட ஓரளவு நம்பி விடக் கூடியதுதான். பென்சனின் துரோகத்தாலும் ஏமாற்றத்தாலும் அவர்களின் ஆபத்து நிறைந்த பயணமானது தென் பசிபிக் கடலில் தூரத்தில் எங்கோ விட்டு விட்டது உணவு இல்லாமலும் நீர் நஞ்சாக்கப்பட்டும். கற்பனையே செய்ய முடியாத அந்த இடங்களைப் பற்றிய அவனது ஒவ்வொரு நிகழ்வின் விளக்கங்களும் நம்பும்படியாகவே இருந்தன. கேப்ரோனா என்பது கிட்டத்தட்ட ஒரு கட்டுக்கதை என்றே நம்பப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மீகாமன் ஒருவர் அதைத் தேடிச் சென்றார். போவனின் கட்டுரையைப் பார்த்தால் அது உண்மையாய் இருக்கும் போல் தெரிகிறது. இருந்தாலும் அவனுக்கும் நமக்கும் நடுவில் பல மைல் தூரத்திற்குக் கடல் பரந்து இருக்கிறது. ஆம் அவன் சொன்னது எங்களை யோசிக்க வைத்தது. அது மிகவும் சாத்தியமற்றது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இருந்தாலும் அங்கிருக்கும் எதுவும் சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லி விட முடியாது. அவன் குறிப்பிட்ட கேஸ்பக்கின் வினோதமான மரங்கள் விலங்குகள் ஒரு அடர்த்தியான வெப்பமான வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மிக அதிகமாகச் சூடாக்கப்பட்ட கேஸ்பக்கின் பள்ளத்தாக்குகள் மீசோசோயிக் யுகங்களில் இருந்தது போல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் உலகம் முழுமையும் கூட அப்படி இருந்திருக்கலாம். டைலரின் உதவியாளரும் கேப்ரோனி மற்றும் அவரது கண்டுபிடிப்புகளைப் பற்றியும் கேள்விப் பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அவரை முழுமையாக நம்பவில்லை என்றும் தெரிவித்தார். ஒரே ஒரு செய்தி மட்டும்தான் விளக்குவதற்குக் கடினமாக இருக்கிறது. டைலர் சந்தித்த அங்கே இருக்கும் பல்வேறு இனங்களிலும் குழந்தைகளே இல்லை என்று சொன்னது மட்டும்தான். அவனது கட்டுரையில் நம்ப முடியாத ஒன்று அது மட்டும்தான். வளர்ந்தவர்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம்! சாத்தியமற்றது. பிராட்லி மற்றும் அவனுடன் சென்ற மற்ற ஆங்கில மாலுமிகளுக்கு என்னவாகி இருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தோம். அவர்களில் இருவரின் கல்லறைகளை டைலர் கண்டறிந்திருந்தான். இன்னும் எத்தணை பேர் இறந்திருப்பார்கள். லா ர்யூ போன்ற சின்னப் பெண் தன்னுடன் இருந்தவர்களை எல்லாம் இழந்த பின் கேஸ்பக்கின் அந்தக் கொடூரமான உலகில் எப்படித்தான் காலம் தள்ளுகிறாளோ. உதவியாளர், நாப்ஸ் இன்னும் அவளுடன் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டார். இந்த விசித்திரமான கதையின் உண்மையை அமைதியாக ஒத்துக்கொண்டது போல் நாங்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். “நான் ஒரு முட்டாள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனாலும் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அந்தப் பெண்ணை இப்போது என்னால் காண முடிகிறது. அவளது பக்கத்தில் நாப்ஸ் அமர்ந்து கொண்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான விலங்கினங்களின் தொல்லைகளில் இருந்து அவளைக் காத்துக் கொண்டு இருக்கிறது. மனிதக் குரங்கு போன்ற க்ரீமால்ட்டி மனிதர்கள் தங்களது அழுக்கடைந்த குகைகளில் வாழ்வதையும், பெரிய டெரோடாக்ட்டில் பறவைகள் கனமான காற்றில் தங்கள் வவ்வால் போன்ற சிறகுகளை விரித்துப் பறப்பதையும், பனியுகத்திற்கு முன் தோன்றிய காடுகளின் கனத்த இருளில் பிரமாண்ட டினோசார்கள் தங்களது பெருத்த உடம்பை ஆட்டிக் கொண்டு செல்வதையும், தந்தையிடம் இருந்து மகனுக்கு வாய் மொழியாகவே சொல்லப்பட்டு எழுதப்படாத மனிதனின் சரித்திரம் முடியும் வரைக்கும் பரப்பப்பட்ட ஆதி மனிதனின் கற்பனைப் பாத்திரம் என்று அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுக்கும் வரை கட்டுக்கதை என்றே நம்பி இருந்த ட்ராகன்களையும் என்னால் முழுமையாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்று விளக்கினார் உதவியாளர். “மிகவும் ஆச்சர்யமான விஷயம் இது, உண்மையாக இருக்கு பட்சத்தில்.” என்று பதில் அளித்தேன். “ஒருவேளை அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். டைலர் லா ர்யூ அவர்களைச் சுற்றி ஆபத்துகள் எப்போதும் நிறைந்திருக்கும். பிராட்லியும் அவனது சில கூட்டாளிகளும் கூட உயிரோடு இருக்கலாம். போவனும் அந்தப் பெண்ணும் மீதி இருக்கும் மாலுமிகளைக் கண்டு பிடித்திருப்பார்கள் என்றே நம்பத் தோன்றுகிறது. இறுதியாக போவனுக்குத் தெரிந்து ஆறு பேர் இருந்திருக்கிறார்கள் பிராட்லி, ஓல்சன், வில்சன், விட்லி, ப்ராடி மற்றும் சிங்க்ளர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தால் ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கும். இல்லையென்றால் ரொம்ப காலம் தாக்குப்பிடிப்பது சிரமம்.” “அந்த ஜெர்மன் கைதிகள் மட்டும் யூ-33 - ஐக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போவன் அவர்களை நம்பி இருக்கக் கூடாது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் ஒருவேளை இந்நேரம் வெற்றிகரமாகத் தப்பித்துக் கீல் நகரை அடைந்து இந்த நிமிடத்தில் கூட பெருமையோடு இரும்புச் சிலுவைகளைச் சுமந்து கொண்டும் இருக்கலாம். கேஸ்பக்கில் எண்ணெய்க் கிணற்றில் இருந்து பெருவாரியாகக் கிடைத்த பின் நீரும் தேவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு அந்தச் செங்குத்தான மலைப் பாறைகளைத் தாண்டி அவர்கள் தப்பித்துச் செல்வது மிகவும் எளிதாகி விட்டது அவர்களுக்கு.” “எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை.” என்றார் உதவியாளர். “ஆனால் சில நேரம் அவர்கள் கைகளில் ஒப்படைத்து விட வேண்டியதாய் இருக்கிறது” “ஆம்” என்று நான் உறுமினேன். “அவர்களிடம் ஒப்படைப்பதை விட சந்தோசம் வேறெதுவும் கிடையாது!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது தொலைபேசி ஒலித்தது. உதவியாளர் எடுத்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது முகம் வெளிறியது தாடை கீழே இறங்கியது. “அடக் கடவுளே” என்று சொல்லிக் கொண்டே தொலைபேசி முனையை வைத்தார் மந்திரித்து விட்டது போல். “அப்படி இருக்காது” “என்ன” என்று கேட்டேன். “திரு.டைலர் அவர்கள் இறந்து விட்டார்” என்று சோகமான குரலில் சொன்னார். “அவர் நேற்று கடலில் திடீரென்று இறந்து விட்டார்” அடுத்த பத்து நாட்களும் டைலரின் உடலை அடக்கம் செய்வதிலும் அவரது மகனைத் தேடும் பணிக்குத் தயார் செய்வதிலும் கழிந்தன. இறந்த டைலரின் உதவியாளரான திரு. டாம் பில்லிங்ஸ்தான் அனைத்தையும் செய்தார். அவர் வேகமானவர், ஆற்றல் மிக்கவர். வேலையை ஆரம்பிப்பதிலும் முடிவெடுப்பதிலும் மிகவும் திறமையானவர். இது போன்ற வேகமான இளைஞனை இதுவரை நான் பார்த்தது இல்லை. அவர் வக்கீல்கள் நீதி மன்றங்கள் அனைத்தையும் கையாண்ட விதம் என்பது ஒரு சிற்பி களி மண்ணில் இருந்து உருவங்களை எளிதாக வடிப்பது போல் இருந்தது. போவன் டைலருடன் கல்லூரியில் கூடப் படித்தவர் அவர். தேவாலயத்தில் ஒரு சகோதரனாகவும் இருந்தவர். ஆனால் அதற்கு முன் டைலரின் பெரிய மாட்டுப் பண்ணைகளில் ஏழை மாடு மேய்ப்பவராக இருந்தார். மூத்த டைலர் தனது ஆயிரக்கணக்கான வேலைக்காரர்களில் இருந்து இவரைப் பொருக்கி எடுத்து உருவாக்கினார். இல்லை, டைலர் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பின் அவர் தன்னையே உருவாக்கினார் என்றும் சொல்லலாம். இளைய டைலரும் தன தந்தையைப் போலவே பிறரைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவராதலால் பில்லிங்க்ஸைத் தன் நண்பனாக்கிக் கொண்டார். அந்த இருவரின் நட்பு அவ்வளவு ஆழமானதாக இருந்ததால் தன் நாட்டுக் கொடியை விட டைலருக்காக உயிரைக் கொடுக்கும் அளவு தன் நண்பனை மதித்தார். இருந்தாலும் பில்லிங்ஸ் துதி பாடுபவராக என்றைக்கும் இருந்ததில்லை. நான் பொதுவாக யாரையும் அதிகமாக புகழ்வதில்லை. ஆனால் இந்த பில்லிங்ஸ் நான் சந்தித்த மனிதர்களிலேயே சாதாரணமாக ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ அதற்கு மிக அருகில் வந்து நிற்கிறார். டைலர் தன் மகனைக் கல்லூரிக்கு அனுப்பு முன் நீதிநெறி என்ற சொல் பற்றி அறிந்திருக்க மாட்டார். இருந்தாலும் அவர் தன் வாழ்வில் ஒரு அமெரிக்க நன்மகன் பயன்படுத்த வேண்டிய நீதி நெறிகளில் ஒன்றைக் கூட தாண்டி இருக்க மாட்டார். பத்து நாட்கள் கழித்து திரு.டைலரின் உடல் தொரியாதோரில் வந்து சேர்ந்தவுடன் நாங்கள் பசிபிக் கடலில் கேப்ரோனாவைத் தேடி புறப்பட்டோம். மீகாமன் மற்றும் தொரியாதோரின் குழுவினரையும் சேர்த்து நாங்கள் அதில் 40 பேர் இருந்தோம். வெல்லவே முடியாத பில்லிங்ஸ்தான் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தார். கேப்ரோனவைத் தேடிய எங்கள் பயணம் நீண்ட நெடியதாய் சுவாரஸ்யமில்லாததாய் இருந்தது. ஏனெனில் உதவியாளர் தேடி எடுத்து வந்த அந்தப் பழைய வரை படம் துல்லியமானதாக இருக்கவில்லை. ஒரு வழியாக அதன் இறுக்கமான பெருஞ்சுவர்கள் கடலின் பனி மொத்தத்தில் இருந்து எட்டிப் பார்த்தவுடன் எங்கள் மனதில் ஒரு கேள்வி. நாங்கள் வந்த இடம் தெற்கு பசிபிக் கடலா இல்லை அண்டார்க்டிகாவா என்று. ஏனெனில் அங்கு பனிமலைகள் மிகுந்திருந்தன. கடுங் குளிராய் இருந்தது. பயணம் முழுவதும் கேப்ரோனாவை அடைந்த பின் கேஸ்பக்கில் எப்படி நுழைவது என்ற கேள்வியை மட்டும் உறுதியாகத் தவிர்த்து வந்தார். போவன் டைலரின் கூற்றுப்படி ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. பூமிக்கடியில் ஓடும் கேஸ்பக்கின் அந்த ஆற்றின் முகத்துவாரம்தான் உட்புக முடியாத செங்குத்தான பாறைகளைத் தாண்டிய பள்ளத்தாக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான ஒரே வழி. டைலர் தன் கூட்டாளிகளுடன் உள்ளே செல்ல முடிந்ததென்றால் அவர்களிடம் இருந்த நீர்மூழ்கிக் கப்பல்தான் காரணம். ஆனால் தொரியாதோரால் நீரில் மூழ்கிச் செல்லவும் முடியும் அந்த மலைகளைத் தாண்டி மேலே பறக்கவும் முடியும். ஜிம்மி ஹாலிஸ் மற்றும் காலின் ஷார்ட் இருவரும் வெகு நேரமாய் வெட்டியாய் விவாதம் செய்து கொண்டே வந்தார்கள் இந்தத் தடைகளைத் தாண்டுவது எப்படி என்று வித விதமான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் பில்லிங்ஸ் எதைத் தெரிவு செய்வார் என்று கேலிக்கிடமான பந்தயம் வைத்தார்கள். கேப்ரோனா பற்றிப் பேச்சு வளர ஆரம்பித்ததும் பில்லிங்ஸ் அனைவரையும் கூப்பிட்டார். “இதைப் பற்றிப் பேசுவதே வீண்.” என்றார் அவர். "அந்தத் தீவைக் கண்டுபிடிக்கும் வரை. அதன் கரையை அடைந்து முழுவதும் ஆராய்ந்து பார்க்கும் வரையில் நாம் சொல்லக் கூடியதெல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே. டைலரின் கட்டுரையில் இருந்து கேப்ரோனாவின் கடற்கரையைப் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஒரு படத்தை வரைந்து வைத்திருந்தனர். அதில் எந்த இருவரது படங்களும் ஒத்துப் போவதற்கான வாய்ப்பு மிகவும் கம்மியே. அதே போல் அதில் எதுவும் நாம் கண்டுபிடிக்கப் போகும் கேப்ரோனாவின் கடற்கரையை ஒத்திருக்கவும் வாய்ப்பே இல்லை. என்னைப் பொறுத்தவரை அந்த மலைப்பாதைகளைக் கடப்பதற்கு என்னிடம் மூன்று திட்டங்கள் இருக்கின்றன. அதைச் செயல்படுத்தத் தேவையான அனைத்துப் பொருட்களும் இந்தப் படகின் சரக்கு அறையிலேயே இருக்கின்றன. மின் துளைக் கருவி ஒன்று உள்ளது. அதே போல் நிறைய நீர் புகா கம்பி வடங்களும் இருக்கின்றன. கரையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தொரியாதோரை நிறுத்திய பின் அங்கிருந்து மலைப் பாறைகளின் மேல் வரை செல்லுமளவு அவைகள் இருக்கின்றன. அரை இன்ச் அளவுள்ள இரும்புக் கம்பிகள் இருக்கின்றன. அதை வைத்து ஏணியமைத்து அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் சென்று விடலாம். அது மிகவும் நீண்ட கடினமான அபாயகரமான வேலைதான் ஓட்டை போட்டு ஏணியின் கம்பிகளை எல்லாம் மாட்டி கீழிருந்து மேலே செல்வது. இருந்தாலும் சாத்தியமே. “என்னிடம் உயிர் காக்கும் பீரங்கி ஒன்று இருக்கிறது. அதை வைத்து ஒரு இரும்புக் கம்பியை மேலே அனுப்பலாம். ஆனால் அதற்கு யாராவது மேலே இருக்க வேண்டும். ஏனெனில் அதன் கொக்கி சரியாக பாறையின் இடுக்கில் மாட்டாமல் சரிந்து விழுந்து விடலாம்.” "மூன்றாவது திட்டம்தான் சரியாக வரும் என்று நினைக்கிறேன். நாம் கிளம்பும்போது படகில் ஏற்றி வைத்த கனமான பெட்டிகள் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். உனக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும். ஏனெனில் அவைகளில் என்ன இருக்கிறது என்று நீ கேட்டாய். ஒவ்வொரு பெட்டியிலும் பெரிய H என்ற எழுத்து இருப்பதைப் பற்றியும் நீ கருத்து சொல்லி இருந்தாய். அந்தப் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் நீர் மேல் செல்லும் விமானங்களின் பாகங்கள் இருக்கின்றன. போவனின் கட்டுரையில் சொல்லப்பட்ட கடற்கரையில், அதாவது அந்த மனிதக் குரங்கு போன்று இருந்த உயிரினத்தின் உடல் இருந்த கடற்கரையில், அதை ஒன்று சேர்க்கலாம் என்று எண்ணுகிறேன் தேவையான அளவு இடம் இருக்கும் பட்சத்தில். இல்லையென்றால் நமது படகின் மேல் தளத்தில் அதை ஒழுங்கு படுத்தி பக்கவாட்டில் இருந்து கீழே இறக்கலாம். அதன் பின் நான் கயிறு மற்றும் கப்பியை எடுத்துக்கொண்டு மலை உச்சிக்கு செல்வேன். அதன் பின் மற்றவர்களை எல்லாம் மேலே ஏற்றுவது மிகவும் சுலபம். இல்லையேல் நான் பலமுறை திரும்ப வந்து அனைவரையும் தடுப்புச் சுவர் தாண்டி உள்ள பள்ளத்தாக்கிற்குக் கூட்டிச் செல்லவும் முடியும். இதெல்லாம் எனது முதல் வேவுப் பணியைப் பொறுத்தே இருக்கிறது. அன்று மத்தியானம் நாங்கள் கேப்ரோனாவின் உயர்ந்த மலைகளைச் சுற்றி மெதுவாகப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தோம். “இப்பொழுது பாருங்கள்.” என்று சொன்னார் பில்லிங்ஸ் நாங்கள் தலையை உயர்த்தி ஆயிரம் அடிகள் உயர்ந்து நின்று கொண்டிருக்கும் அந்த மலைகளை எங்கள் கண்களால் அளந்து கொண்டிருக்கும்போது. “இதையெல்லாம் தாண்டுவதற்கு நாம் கற்பனை செய்து வைத்திருந்த யோசனைகள் எல்லாம் எவ்வளவு வீண் என்று இப்போதாவது புரிகிறதா.” என்று சொல்லியபடியே அவனது கட்டை விரலை நீட்டி மலையை அளந்தான். "அதன் மேல் ஏணி அமைத்து ஏறுவதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். இவ்வளவு உயரம் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை நான். நமது பீரங்கி அந்த மலைத் தொடர்களில் இருக்கும் மிகச் சிறு உயரத்தில் இருக்கும் மலையில் பாதியைக் கூட தொட முடியாது. நீர் விமானத்தைத் தவிர வேறு எந்த திட்டத்தைப் பற்றியும் பேசுவது வீண். அந்தக் கடற்கரையைக் கண்டுபிடித்து உடன் வேலையை ஆரம்பித்து விட வேண்டியதுதான். மறுநாள் பின் காலைப் பொழுதில் கண்காணிப்பாளர் ஒரு மைல் தூரத்தில் அலை ஒன்று வருவதாகக் குறிப்பிட்டார். நாங்கள் அதை நெருங்கிக் கொண்டிருக்கும் போது குறுகிய அந்த கடற்கரையில் மோதி அது உடைந்து கொண்டிருந்தது. சிறிய படகைக் கீழிறக்கி 5 பேர் இறங்கினோம். அப்போது பனி போல் குளிர்ந்த நீரில் மூழ்க வேண்டி இருந்தது. அப்படி மூழ்கும் நேரத்தில் சில எலும்புகளைக் காண நேர்ந்தது. அவைகள் பரிணாமத்தில் மனிதக் குரங்குகளின் மேலும் மனிதர்களுக்குக் கீழும் இருப்பது போல் தோன்றியது. மலையின் அடிவாரத்தில் அவைகள் கிடைத்தன. பில்லிங்க்ஸும் திருப்தி அடைந்தான் மற்றவர்கள் போல். இதுதான் போவன் குறிப்பிட்டிருந்த கடற்கரை என்று. விமானத்தைக் கட்டுவதற்கும் நிறைய இடம் இருந்தது. முடிவு ஒன்று எடுத்து விட்டபடியால் செயல்படுத்த யோசிக்கவேயில்லை. அதனால் H என்று குறியிடப்பட்டிருந்த அந்தப் பெரிய பெட்டிகளை எல்லாம் மத்தியானத்திற்குள் இறக்கி விட்டோம். அவைகளைப் பிரிப்பதற்கு மும்முரமாக இறங்கி விட்டோம். இரண்டு நாட்களில் அதைத் தயார் செய்து ஒழுங்கு படுத்தி விட்டோம். அதில் கப்பி கயிறு உணவு நீர் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் ஏற்றி விட்டோம். அதன் பின் ஒவ்வொருவரும் தான்தான் அவருடன் செல்ல வேண்டும் என்று கெஞ்சினோம். ஆனால் அவர் யாரையும் கூட்டிச் செல்லவில்லை. அதுதான் பில்லிங்ஸ். ஒரு மனிதனால் செய்ய முடிந்த ஆபத்தான அல்லது கடினமான வேலை இருந்தால் அதைத் தானே செய்து விடுவார். அவருக்கு உதவி தேவைப்பட்டால் கூட யாரும் ஆர்வமுள்ளவர்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. அந்த வேலையைத் திறம்படச் செய்யும் ஆட்களை அவரே தெரிவு செய்து அழைத்துச் செல்வார். தன்னார்வ சேவை அமைப்புகளின் அடிப்படையே தவறு என்று சொல்லக்கூடியவர். ஒட்டு மொத்தக் குழுவின் திடத்தையும் விசுவாசத்தையும் பலவீனப்படுத்தி விடும் என்ற நம்பிக்கை உள்ளவர். நீரின் எல்லை வரை நாங்கள் அந்த விமானத்தைத் தள்ளிக் கொண்டு சென்றோம். பில்லிங்ஸ் விமானி இருக்கையைப் பொருத்தினார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று மனதைத் திடப்படுத்திக்கொள்ள ஒரு கணம் தயங்கி நின்றார். ஜிம்மி ஹாலிஸ் ஆயுதங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தார். கைத்துப்பாக்கி சுழல் துப்பாக்கி போக விமானத்தின் முன் புறம் ஒரு இயந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் குண்டுகளும் சரியாய் இருந்தன. கேஸ்பக்கின் ஆபத்துக்கள் பற்றி போவன் எழுதி இருந்த குறிப்புகள் நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு உதவியாய் இருந்தன. ஒருவழியாக எல்லாம் தயாராகி விட்டது. விசைப்பொறி இயக்கப்பட்டது. கடலில் விமானத்தைத் தள்ளினோம். சிறிது நேரத்தில் அது கடலில் வழித்துக் கொண்டு சென்றது. அதன் பின் கடல் பரப்பில் இருந்து மெதுவாக மேலே எழுந்தது. அதன் பின் ஒரு அகலமான திருகுசுருள் போன்று சுழன்று வேகமாகப் பறக்க ஆரம்பித்தது. எங்களுக்கு மேல் நீண்ட உயரத்தில் ஒரு வட்டமிட்டது. அதன் பின் மலை உச்சியைத் தாண்டி மறைந்து விட்டது. நாங்கள் அமைதியாக அந்த மலை உச்சியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது ஹாலிஸ் தலைமைப் பொறுப்பில் இருந்தான். அடிக்கடி தனது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். “கடவுளே.” என்று விளித்தான் ஷார்ட். “அவரிடமிருந்து இப்பொழுதெல்லாம் செய்தி வந்திருக்க வேண்டுமே” ஹாலிஸ் பதற்றத்துடன் சிரித்தான். “அவர் சென்று பத்தே நிமிடங்கள்தான் ஆகிறது” என்று அறிவித்தான். “ஒரு மணி நேரம் ஆனது போல் இருக்கிறது” என்று மறித்தான் ஷார்ட். “என்ன அது. நீ கேட்டாயா. அவர் சுடுகிறார். இயந்திர துப்பாக்கியின் சத்தம். கடவுளே. இங்கே நாம் பல்லாயிரம் மைல் தொலைவில் இருக்கும் பாட்டிகள் போல் உதவ முடியாமல் இருக்கிறோம். நம்மால் எதுவும் செய்ய இயலாது. என்ன நடக்கிறதென்றும் தெரியாது. ஏன் அவர் நம்மில் ஒருவரைக் கூட அழைத்துச் செல்லவில்லை” ஆம், அது இயந்திர துப்பாக்கியேதான். ஒரு நிமிடமாவது தொடர்ந்து கேட்டோம். அதன் பின் அமைதியானது. அது நடந்து 2 வாரங்கள் ஆகி விட்டன. அன்று முதல் பில்லிங்ஸிடம் இருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அத்தியாயம் - 2 நான் மலைச் சிகரங்களுக்கு மேலே பறக்கும்போது கண்ட கேஸ்பக்கின் என் முதல் அனுபவத்தை என்றும் மறக்க மாட்டேன். பனி மூட்டத்துக்குக் கீழே மங்கலாகத் தெரிந்த நிலப்பரப்பை நோக்கினேன். குளிர்ந்த அண்டார்க்டிக்கின் காற்று கேஸ்பக்கின் வெப்பமான ஈரப்பதமுள்ள வளி மண்டலத்துடன் கலப்பதால் அங்கே ஒரு புகை மண்டலமாகக் கட்சி அளித்தது. அதனால் அது மெல்லிய நாடா போன்று நீர்த்திவலைகளைப் பசிபிக் கடலில் நீண்ட தூரம் பரப்பியது. மிக பிரமாண்டமான பாவியல் ஓவியம் போல அது காட்சி அளித்தது. சித்திரப்படாம் முழுவதும் பச்சை பழுப்பு கருஞ்சிவப்பு மஞ்சள் வண்ணங்கள் பூசி அதற்கு நடுவில் அடர் நீலத்தில் நாட்டுக்குள் இருக்கும் கடல். வெறும் வண்ணத் திவலைகள் கொட்டும் பனி மூட்டத்திற்கு நடுவில் உருவங்களாய்க் காட்டியது. நான் மலையடிவாரத்திற்கு மிக அருகில் சென்று ஒரு வட்டமடித்தேன். பல மைல்களுக்குத் தரையிறங்கும் அமைப்பே எங்கும் தென்படவில்லை. பின் சற்றுத் திரும்பி ஒரு பிரமாண்டமான மலைச் சரிவின் அடி வரை சென்றேன். அங்கும் எந்தவித பாதுகாப்பான இடமே கிடைக்கவில்லை. இப்போது மிகவும் தாளப் பறந்து கொண்டிருந்தேன். தரை இறங்கும் இடம் தேடும் வேளையில் கீழிருக்கும் பல்வேறு உயிரினங்களையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தீவின் தென்கோடி வரை சென்று விட்டேன். அங்கே ஒரு ஆற்றின் கிளை நிலத்தின் வெகு தூரம் வரை பரவி இருந்தது. அதன் நீரில் முழுவதும் கருமை நிறத்தில் ஏகப்பட்ட உயிரினங்கள் மிதந்து கொண்டிருந்தன. அவைகள் என்னவென்று அறிய முடியாத உயரத்தில் இருந்தேன் நான். ஆனால் நிலம் நீர் இரண்டிலும் வாழக்கூடிய பிசாசுகள்தான் எல்லாம் என்பதை மட்டும் உணர முடிந்தது. நிலமும் அதே அளவு உயிர்ப்போடு இருந்தது. ஊர்வன தவ்வுவன ஓடுவன பரப்பன என அனைத்து உயிரினங்களும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தன. நான் அவ்வாறு கீழே மும்முரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளைதான் பறப்பன ஒன்று தன் வேலையை என் மீது காட்ட ஆரம்பித்து விட்டது. முதல் அறிகுறி என்னவென்றால் திடீரென்று மேலிருந்து கதிர் ஒளி மறைக்கப்பட்டது. நான் சட்டென்று மேலே பார்க்கும்போது ஒரு பயங்கரமான பறவை ஒன்று என்னை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது. அது முழுவதும் எண்பது அடிக்குக் குறையாமல் இருக்கும், அதன் நீண்ட பயங்கரமான அலகில் இருந்து அதன் குட்டையான கடினமான வால் நுனி வரை. அதே அளவு அதன் சிறகுகளின் பரவலும் இருக்கும். அது நேராக என்னை நோக்கி வந்தது. அதன் சத்தம் விமானத்தின் சுழல் விசிறியையும் தாண்டிக் கேட்டது. அது நேராக இயந்திரத் துப்பாக்கியின் முனைக்கு வந்தது. நானும் அதன் நெஞ்சுப் பகுதியில் சுட்டேன். இருந்தாலும் என்னை நோக்கி வந்தது. அப்போது நான் இன்னும் கீழே இறங்கித் திரும்ப வேண்டி இருந்தது. நான் கிட்டத்தட்டத் தரையை தொட்டு விடும் சூழ்நிலை. அது என்னை விட்டுவிட்ட தூரம் ஒன்றும் 12 அடி இருக்காது. நான் எழுந்த போது அது திரும்பவும் என்னை நோக்கிப் பறந்து வந்தது. அப்போது கிட்டத்தட்ட மலை உச்சிக்குச் சென்று விட்டேன். இதமான குளிர்ச்சியான காற்று வீசியது. அங்கே திரும்பிக் கீழே இறங்கி விட்டது. சண்டை மற்றும் துரத்துவதில் மனிதனுக்கு இருக்கும் ஆசையினால் உந்தப்பட்ட நான் அதன் பின்னே செல்வதற்கு ஆயத்தமானேன். நானும் வட்டமடித்துக் கீழே இறங்கினேன். கேஸ்பக்கின் வெப்பமான வளி மண்டலத்தில் நுழைந்தவுடன் அது திரும்பவும் என்னை விரட்டியது. எனக்கும் மேலே பறந்து என்னை விழுங்க வந்தது. அப்போது எனது இயந்திரத் துப்பாக்கி 45 பாகை கோணத்தில் அதனைக் குறி வைத்து இருந்தது. இதைப் போல அருமையான தருணம் கிடைக்கவே கிடைக்காது. ஏனெனில் விமான ஓட்டியால் அந்தக் கோணத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. என்னுடன் துணைக்கு யாராவது வந்திருந்தால் அந்தப் பறவையை எந்தக் கோணத்திலும் சுட்டு வீழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது எப்போதும் மேலே இருந்து தாக்குவதால் என்னுடைய குண்டு மழையில் நனைவதற்கு எப்போதும் தயாராகவே வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நடந்த சண்டையின் பின் திடீரென்று மல்லாக்கத் திரும்பி வேகமாகக் கீழே விழுந்தது. கல்லூரியில் போவனும் நானும் ஒரே அறையில்தான் தங்கி இருந்தோம். அவனிடம் இருந்து படிப்பிற்கு அப்பாற்பட்டு நிறையக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். கேளிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தாலும் அவன் நல்ல படிப்பாளி. அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு அம்சமே புதைபடிமவியல்தான். பழங்காலத்தில் பூமியில் இருந்த விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறான். அதனால் எனக்கும் அந்தக் காலத்திய மீன்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் மிருகங்கள் ஊர்வன பாலூட்டிகள் என்று அனைத்தும் தெரியும். என்னைத் தாக்கிய அந்தப் பறவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டெரோடாக்ட்டில் எனும் பறவை. போவன் தன் கட்டுரையில் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பதற்கு அது மட்டும் போதுமானதாய் இருந்தது. எனது முதல் எதிரியை வீழ்த்தி விட்ட பின், நான் திரும்பவும் தரை இறங்க அந்த மலையடிவாரத்தில் ஒரு இடம் தேடி அலைய ஆரம்பித்தேன். அதன் மறு முனையில்தான் எங்கள் கூட்டாளிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். என்னிடம் இருந்து வரும் வார்த்தைக்காக அவர்கள் எவ்வளவு ஆவலாய்க் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் கவலையைத் தீர்ப்பதற்கும் நானும் அதே போன்ற ஒரு ஆவலில்தான் இருந்தேன். அவர்களையும் எங்கள் பொருட்களையும் கேஸ்பக்கின் உள்ளே எடுத்துச் சென்று டைலரைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையை ஆரம்பித்து விட வேண்டும். அந்தப் பறவை விழுந்த கொஞ்ச நேரத்தில் ஒரு டஜன் பயங்கரமான உயிரினங்கள் என்னைச் சூழ ஆரம்பித்து விட்டன. பெரியதும் சிரியதுமாய் இருந்தன. ஆனால் அனைத்திற்கும் என்னைக் கொல்வது மட்டுமே நோக்கம். என்னால் அவை அனைத்தையும் எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் வேகமாக மேலே எழுந்து கொஞ்சம் குளிர்ச்சியான இடத்திற்குப் பறந்தேன். அங்கு அவைகள் என்னைப் பின் தொடரவில்லை. அதன் பின் போவனின் குறிப்புகளை நினைவு படுத்திப் பார்த்தேன். அவன் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டு இருந்தான். வடக்கு திசை நோக்கிச் செல்லச் செல்லக் கொடூரமான ஊர்ந்து செல்லும் விலங்குகள் கம்மி என்று. அதனால்தான் தெற்கில் மனிதர்கள் வாழ்வது இயலாது. ஆதலால் வடக்கில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்துத் தரை இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதன் பின் தொரியாதோருக்குச் சென்று மற்றவர்களையும் பொருட்களையும் எடுத்து வரலாம். இரண்டு இரண்டு பேராகக் கூட்டி வந்து அந்த இடத்தில் விட்டுவிடலாம். நான் வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல எனக்குள் தேடும் மனோபாவம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. சிறிது எரி பொருளை வைத்தே கேஸ்பக் முழுவதும் சுற்றிவிட்டு அவர்கள் இருக்கும் கடற்கரையை அடைந்து விடலாம் என்று தோன்றியது. அந்த நேரத்தில் போவன் அல்லது அவனது கூட்டாளிகள் யாரையாவது கண்டு பிடித்து விட நேரிடலாம் என்றும் தோன்றியது. நாட்டிற்குள் இருக்கும் அந்த பிரமாண்ட கடலைப் பார்த்தவுடன் அதைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று பேராவல் என்னுள் எழுந்தது. அதைக் கடக்கும் போது அதன் இருபுறமும் ஒரு தீவு இருந்தது. ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும். ஆனால் அவைகளை ஆராய்ச்சி செய்வதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அந்தக் கடலின் கரை வழியே இன்னும் செல்லச் செல்ல மலையடிவாரத்திற்கும் கடலுக்கும் நடுவில் உள்ள மேற்கில் இருப்பதைக் காட்டிலும் குறுகி இருந்த நிலம் ஒன்று வெளிப்பட்டது. அது மலைகள் சூழ்ந்த பரந்த வெளி உடைய நாடு. அருமையான இறங்கும் இடங்கள் இருந்தன. தூரத்தில் வடக்கில் ஒரு கிராமம் இருக்கிறதென்று எண்ணுகிறேன். இருந்தாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நிலத்தை நெருங்கும் வேளையில் நிறைய மனித உருவங்கள் புல் வெளியில் ஒருவனைத் துரத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் சிறிது கீழே இறங்கும் போது விமானத்தின் விசிறிச் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தார்கள். ஓடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றார்கள். அதன் பின் அருகில் இருக்கும் மரங்களுக்குப் பின் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அப்போது திடீரன்று எதோ ஒன்று கனமாக என் மேல் பாய்ந்தது. மேலே பார்த்தபோது கேஸ்பக்கின் இந்த பகுதியிலும் பறக்கும் பல்லிகள் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அது எனது வலது பக்க இறக்கையை பதம் பார்த்தது. அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அப்படியே வேகமாக விழுந்தால்தான் உண்டு. ஏற்கெனவே நான் தரைக்கு அருகில் இருந்ததால் அது மிகவும் ஆபத்தானதாகி விடும். ஆனாலும் அதில் இருந்து சேதமில்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் வழியாக ஒரு பெரிய மரத்தை நெருங்கிச் சென்று கொண்டிருந்தேன். மரத்தையும் அந்தப் பறவையையும் ஒரே நேரத்தில் கடந்து விட எத்தனிக்கும் நேரம் ஆபத்தில் முடிந்தது. விமானத்தின் ஒரு இறக்கை மரத்தின் பெரிய கிளை ஒன்றில் மோதியது. அதனால் விமானம் அந்தர் பல்டி அடித்து கட்டுப்பாடு இல்லாமல் மற்ற கிளைகளில் மோதி உடைந்து நொறுங்கி நாற்பதடிக்கும் மேலே அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நின்றது. பெரும் இரைச்சலுடன் சீறிக்கொண்டு எனது விமானம் தஞ்சம் அடைந்திருந்த மரத்தின் அருகில் வந்து இருமுறை வட்டமடித்து விட்டு தனது இறகுகளை விரித்து தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தது. அப்போது யோசித்தேன் பிறகு தெரிந்து கொண்டேன், காடுகள்தான் இது போன்ற பேராபத்துக்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத இடம் என்று. ஒரு கடல் விமானம் போலவே இந்த பறவையும் தன் நீண்ட இறகுகள் மற்றும் பருத்த உடம்பினாலும் மரங்களுக்கு நடுவில் தேவை அற்றதுதான். ஓரிரு நிமிடங்கள் என் உடைந்த விமானத்தைப் பற்றிக் கொண்டு இருந்தேன். இப்போது அதை உபயோகப்படுத்த முடியாத அளவு நொறுங்கி விட்டது. சபிக்கப்பட்ட இந்த பேராபத்தை நினைத்து என் மூளையே மழுங்கி விட்டது. போவன் மற்றும் செல்வி லா ர்யூவைக் காப்பாற்றும் அனைத்துத் திட்டங்களும் இந்த விமானத்தைப் பொறுத்தே இருந்தன. சில குறுகிய நிமிடங்களில் எனது சொந்த சாகச விறுப்பினால் அனைவரது நம்பிக்கைகளையும் நொறுக்கி விட்டேன். மீதி தேடுதல் வேட்டையின் எதிர்காலத்தில் இது என்ன விளைவு ஏற்படுத்தும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. என்னுடைய முட்டாள் தனத்தினால் அவர்களது உயிர்களும் தியாகம் செய்யப்பட்டு விட்டன. என் விதி முடிந்து விட்டது என்பது கண்கூடு. உண்மையைச் சொல்லப் போனால் என்னை விட என் நண்பர்களை நினைத்துத் தான் அப்போது மிக வருந்தினேன். இப்போதும் கூட அந்த மலைச் சிகரங்களுக்கு அப்பால் எனது கூட்டாளிகள் படபடப்புடன் காத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அவர்களை பயமும் பீதியும் ஆட்கொள்ளும். அவர்களுக்கு என் நிலைமை தெரிய வாய்ப்பே இல்லை. அவர்கள் மலை ஏற முயற்சி செய்வார்கள் என்பது மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதன் பின் அவர்களில் மீதி இருப்போர் வீட்டிற்கு திரும்பிச் சென்று விடுவார்கள் கவலையோடும் துயரத்தோடும். வீடு! பற்களைக் கடித்துக் கொண்டு அந்தச் சொல்லை மறந்து விட நினைத்தேன். ஏனெனில் இதன் பின் எப்போதும் பார்க்க முடியாத ஒரு பொருள். போவன் மற்றும் அந்தப் பெண்ணின் நிலைமை? நான் அவர்களையும் ஆபத்திற்குள்ளாக்கி விட்டேன். அவர்களைக் காப்பாற்ற ஒரு முயற்சி நடந்தது என்பது கூட அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. ஒருவேளை அவர்கள் இன்னும் உயிரோடு இருந்தால் அழிந்து கொண்டிருக்கும் மிச்சங்களான இந்த பிரமாண்டமான கல்லறையில் தொங்கிக் கொண்டிருக்கும் விமானத்தை வந்து பார்த்து யோசித்து ஆச்சர்யப்படுவார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியப்போவதில்லை. எனது குற்றமுடைய சுயநலத்தால் டாம் பில்லிங்ஸ் அவர்களது விதியை அழுத்தி மூடி விட்டான் என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதில் எனக்கு ஒரு அற்ப மகிழ்ச்சியே. இப்படியான வீணான கவலைகள் என்னைக் கெட்ட வழியில் ஈர்த்து விட்டிருந்தன. ஒரு வழியாக அவைகளை உதறித் தள்ளிவிட்டு என் மனதில் இருந்து அகற்றப் பார்த்தேன். தற்போது இருக்கும் சூழ்நிலையில் என்னால் முடிந்தளவு முயற்சி செய்து தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கிச் செல்ல முடிவெடுத்தேன். நான் அந்த விபத்தில் வெகுவாக காயம் அடைந்து இருந்தேன். இருந்தாலும் உயிரோடு தப்பித்தது பெரும்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். விமானம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அதனால் மிகவும் கஷ்டப்பட்டு ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அதில் இருந்து இறங்கி மரத்தின் வழியாகக் கீழே வந்தேன். எனது நிலை மிகவும் மோசம். எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையில் 60 மைல் அகலத்தில் ஒரு நீண்ட நெடிய உள்நாட்டுக் கடல் இருக்கிறது. அதன் பின் கிட்டத்தட்ட 300 மைல் தொலைவுள்ள நிலம் கடலின் வட திசையில் இருக்கிறது. இவ்வளவு ஆபத்துகளுக்கு நடுவில் நான் நன்றாகக் குழம்பிப் போயிருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். கேஸ்பக்கில் இன்று நான் நிறைய அனுபவித்து விட்டேன். அதனால் இதன் ஆபத்துக்களைப் பற்றி போவன் எழுதியது ஒன்றும் மிகையல்ல என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. உண்மையைச் சொல்லப் போனால் அந்தக் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன்னே இவைகளுக்கு அவன் பழகி விட்டிருப்பான். அதனால் அவன் கொஞ்சம் கம்மியாகவே எழுதி இருப்பது போல் தோன்றுகிறது. அந்த மரத்தின் அருகில் நான் நின்றிருக்கும் போது-மரம், இது நிலக்கரியாகி பல லட்சம் வருடங்கள் ஆகி இருக்க வேண்டிய மரம்- பீதி கிளப்பும் உயிரினங்கள் நிறைந்திருந்த கடலைப் பார்த்தேன் - அந்த உயிரினங்கள் எல்லாம் கடவுள் ஆதாமைப் பற்றி நினைக்கும் முன்னே படிமங்களாகி இருக்க வேண்டியவை. இதில் இருந்து மீண்டு வெளி உலகையும் என் நண்பர்களையும் பார்க்கும் வாய்ப்பிற்கு ஒரு சிறு பீர் கூட கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கும் வழிகளில் எல்லாம் கஷ்டப்பட்டு பயணிக்க உறுதி பூண்டேன். என்னிடம் தேவையான அளவு வெடி மருந்துகள் இருந்தன. தானியங்கி துப்பாக்கி மற்றும் சுழல் துப்பாக்கியும் இருந்தன. பின்னது கிட்டத்தட்ட ஒரு இருபது எங்கள் படகில் அடுக்கப்பட்டிருந்தன போவன் கேஸ்பக்கில் இருந்த பெரிய மிருகங்களின் பலத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபடியால். இங்கிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் அந்தக் கொடூரமான ஊர்வனவற்றின் நரம்பு மண்டலம் மிகவும் கீழான நிலையில் இருப்பதால் அவைகளின் செயல்பாடுகள் இறந்த பின்னும் பல நிமிடங்கள் தொடர்வதுதான். இதைப் பற்றி நான் சிந்தித்தது கம்மிதான். ஏனெனில் சட்டென்று எங்கள் திட்டங்களின் மேல் வெறுப்பு படர்ந்தது. மிகவும் கோபத்தோடு என்னையே நான் கடிந்து கொண்டேன் எனது முட்டாள்தனமான கோழைத்தனமான முடிவுக்காகத் தேவை இல்லாமல் அற்ப ஆயுளுடன் முடிவடைந்த எனது ஆய்வுப்பயணத்திற்காக. நான் முற்று முழுதாக போவனைத் தேடும் வேலையில் இருந்து நீங்கி விட வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் நான் நினைத்தது போல் இங்கிருந்து கிட்டத்தட்ட 300 மைல்களாவது கேஸ்பக்கின் பரப்பைக் கடந்துதான் மலை அடிவாரத்தையே அடைய முடியும். அதன் பின் தான் எனது நண்பர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு தூரம் கேஸ்பக்கின் உயிரனங்களைப் பற்றித் தெரியாத ஒருவன் கடப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இருந்தாலும் நம்பிக்கை முழுவதுமாக இழக்கவில்லை. எனது கடமை என் முன்னால் தெளிவாக இருக்கிறது. என் உயிர் இருக்கும் வரை அதை நான் தொடர வேண்டும். அதனால் நான் வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். இந்த நாடு நான் செல்லும் வழியெங்கும் மிகவும் ரம்மியமாக இருந்தது. அதே அளவு அசாதாரணமாகவும் இருந்தது. கிட்டத்தட்ட பூமிக்குச் சம்பந்தமில்லாத என்று சொல்லி விட்டேன். மரங்கள் பூக்கள் செடிகள் எதுவுமே நான் பார்த்த பூமிக்குச் சம்பந்தமில்லாமல்தான் இருந்தன. மிகவும் பெரிதாக நிறங்கள் கண்களைப் பறிக்கக் கூடியதாய் வடிவங்கள் மயக்கக் கூடியதாய் இருந்தன. சில தாவரங்கள் மனித மிருக உருவங்களை உருவாக்கி இருந்தன. அவைகள் அனைத்தும் இந்த மண்ணின் அழகையும் ரசனையையும் மெருகூட்டின. அதற்கு நடுவில் ஒரு பிரமாண்டமான கள்ளிச் செடி கவலை தோய்ந்த மொஹாவே இந்தியன் போல காட்சி அளித்தது. இதற்கு அப்பால் கதிரவன் மிகப் பெரிய செந்நிற வட்டமாக மின்னியது. அசுரத்தனமான உலகில் ஒரு அசுரத்தனமான கதிரவன். அதன் ஒளியை கேஸ்பக்கின் ஈரமான காற்று சிதறடித்தது. சூடான ஈரமான காற்று சோம்பேறியாய் இந்த பிரமாண்டமான உயிர்களின் தாயின் மார்பில் அமர்ந்திருந்தன. இயற்கையின் மிகப் பெரும் அடைகாக்கும் கருவி போல் இருந்தது. என்னைச் சுற்றி அனைத்து திசைகளிலும் உயிர்கள் நிறைந்து இருந்தன. மரத்தின் மேலும் அதன் உடற்பகுதியிலும் அவைகள் சுற்றிக் கொண்டிருந்தன. கடலின் நெஞ்சுக்குள்ளும் விரிந்த மோதிக் கொள்கிற வட்டங்களில் அவை தன்னைக் காட்டிக்கொண்டிருந்தன. ஆழத்தில் இருந்து அவை துள்ளிக் குதித்தன. வலது பக்கம் அடர்ந்து இருந்த காட்டிற்குள்ளும் அவைகளின் சத்தத்தைக் கேட்க முடிந்தது. அவைகளின் முணுமுணுப்பு ஓயாமல் ஏற்ற இறக்கமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தது. அதை உடைத்துக் கொண்டு காட்டுக் கூச்சல் அல்லது இடி முழக்கம் கேட்டு பூமியை அதிர வைத்தன. பார்வைக்குப் புலப்படாத கண்கள் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன, சத்தமே இல்லாமல் சில பாதங்கள் பின் தொடர்கின்றன என்ற விவரிக்க இயலாத உணர்ச்சிகளை நினைக்கும் போதே பயமாய் இருந்தது. நான் பதற்றமாகவோ மிதப்பாகவோ இல்லை. ஆனால் கடமையின் பாரம் என்னை வெகுவாக அழுத்தியது. அதனால் வழக்கத்துக்கு மாறாக நான் கவனமாக இருக்க வேண்டி இருந்தது. நான் எப்போதும் இடம் வலம் பின் புறம் என்று எல்லா பக்கங்களிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றேன். எனது துப்பாக்கியும் தயார் நிலையிலேயே இருந்தது. மரங்களின் நிழல்களுக்கு நடுவில் மங்கலாக எதோ ஒரு மனித உருவம் ஒரு மறைவில் இருந்து இன்னொரு மறைவிற்குத் தாவியது. ஒரு முறை கிட்டத்தட்ட உறுதியாய்ச் சொல்லி இருப்பேன், இருந்தாலும் முடியவில்லை. பெரும்பாலும் நான் காட்டில் வட்டமடித்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது வந்த வழியிலேயே திரும்ப வந்தேன். அந்த இருட்டின் ஆழத்திற்குள் செல்ல விரும்பவில்லை. சில நேரங்களில் காட்டின் சில கிளைப் பாதைகளில் சென்றேன். அது கிட்டத்தட்ட கடலின் முனை வரை கொண்டு போய் விட்டது. வினோதமான விலங்குகளின் ஆபத்துக்களும் இன்னும் வினோதமான மனிதர்களும் ஒரு வகையில் ஆபத்து இல்லை என்ற போதிலும் காட்டை விட்டு வெளியே வந்த போதுதான் எனக்கு நிம்மதி பெருமூச்சு கிடைத்தது. வடக்கில் ஒரு மணி நேரம் வரை நடந்திருப்பேன். இன்னும் அதே போன்ற உணர்ச்சிகளால் தொல்லை மிகுந்து இருந்தன. எதோ ஒரு மிருகம் பின் தொடர்வது போல் இருந்தது. நான் திரும்பிப் பார்த்தவுடன் அருகில் இருக்கும் மரத்தின் பின்னோ அல்லது புதர்களிலோ சென்று மறைந்து விடுகின்றன. நூறாவது முறையாக அப்படி ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது ஒரு மிருகம் வேகமாக என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. அது தன்னை இனிமேல் மறைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. சிறு புதர்களுக்கு அடியில் வேகமாக வந்தது. அது என்னவாக இருந்தாலும் அது தைரியமாக என் மேல் பாய்ந்து விட வேண்டும் என்று நினைத்து விட்டது. அது என் கண் முன் வரும் போது அது தனியாக வரவில்லை என்பதும் தெரிந்தது. அதன் பக்கத்திலேயே சில அடி தூரத்தில் இன்னொன்றும் அந்த இலைகள் சூழ்ந்த காட்டினுள் முளைத்தது. வேட்டையாடும் விலங்குகள் அல்லது மனிதர்கள் என்னைத் தாக்க வருகிறார்கள் என்பது நன்றாகப் புரிந்து விட்டது. கடைசியாக ஆடிக் கொண்டிருந்த செடியின் பின்னிருந்து முன்னால் ஒரு உருவம் வெளிப்பட்டது. நான் துப்பாக்கியை எனது தோள்பட்டையில் ஏந்தி அது வெளிப்படும் திசையை நோக்கிக் குறி வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அது என் மேல் வேகமாகப் பாய்ந்தது. ஆச்சர்யமும் திகிலும் என் முகத்தில் தெரிந்திருந்தால் நான் முட்டாளாக தெரிந்திருப்பேன். துப்பாக்கியைக் கீழிறக்கிக் கொண்டே என்னை நோக்கி வேகமாக முன்னேறி வரும் மெலிந்த உடல்வாகு கொண்ட அந்தச் சிறு பெண்ணை அப்பாவியாகக் பார்த்தேன். ஆனாலும் அதே போல் இறங்கிய துப்பாக்கியோடு நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவள் தன் தோள்களுக்கு அப்பால் பயத்துடன் நோக்கினாள். நான் அவளைப் பார்த்த அதே இடத்தில் இப்போது இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரிய பூனை ஒன்று நின்று கொண்டிருந்தது. முதல் பார்வையில் அது ஒரு பட்டாக்கத்திப் பல் புலி போலத் தெரிந்தது. ஏனெனில் அது மிகத் பயங்கரமாகத் தெரிந்தது. ஆனாலும் அது பழங்காலத்தின் கொடிய அரக்கன் என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும் சாகசம் வேண்டும் ஒரு வேட்டைக்காரனின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் அளவு பயமுறுத்துவதாய் இருந்தது. அதன் கண்கள் இறுக்கமாக கொடூரமாக இருந்தன. அதன் பரந்த வாயின் மேல் அந்தக் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மடிந்து இருந்த அதன் உதடுகள் உறுமலை வெளிப்படுத்தியபோது அதன் கோரமான பற்களைக் காட்டியது. என்னைப் பார்த்ததும் கட்டுக்கடங்காத அதன் வேகத்தைக் குறைத்து மெதுவாக எங்களை நோக்கி வந்தது. அந்தப் பெண்ணிடம் ஒரு நீண்ட கத்தி இருந்தது. அதனால் என் இடது புறம் தைரியமாக எதிர்த்து நின்றாள். என்னை நோக்கி ஓடி வரும்போது எனக்குப் புரியாத மொழியில் எதோ கத்திக் கொண்டே வந்தாள். இப்போது திரும்பவும் பேச ஆரம்பித்தாள். அவள் சொன்னது நிச்சயமாக எனக்குப் புரியவில்லை. ஆனால் அவளது பேச்சு இனிமையாக இருந்தது. பண்படுத்தப்பட்ட சொற்கள். அதில் பயம் சிறிதும் இல்லை. இப்பொழுது அதை எதிர்கொண்டு நிற்கையில் அது ஒரு பெரிய சிறுத்தை என்பது புரிந்தது. சரியான கோணத்தில் சுட வேண்டும் என்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் இம்மாதிரி பெரிய மிருகங்களை முன் புறம் சுட்டால் அதற்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல் அமைந்து விடும். அது வேகமாகப் பாய்ந்து வரவில்லை என்பது ஒரு வகையில் அனுகூலம்தான். அதன் தலையில் தாழ்ந்தும் அதன் முதுகு தெரியவும் நடந்து வந்து கொண்டிருந்தது. அதனால் ஒரு நாற்பதடி தூரத்தில் கழுத்தையும் தோள்பட்டையையும் இணைக்கும் இடத்தில் அதன் முதுகெலும்பைக் கவனமாகக் குறி வைத்தேன். அதே நேரத்தில் என் எண்ணத்தைப் புரிந்து கொண்டது போல் தலையைத் தூக்கி என் மேல் பாய வந்தது. அதன் முன் நெற்றியில் சுடுவது என்பது வீண். அதனால் சற்று விலகிச் சுட்டேன். நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து மென்மையான முன்புறம் கொண்ட குண்டும் அதில் உள்ள வெடி மருந்தின் அழுத்தமான ஆற்றலும் சேர்ந்து அதனைச் சற்று நேரம் தாமதப் படுத்தும் அந்த நேரத்தில் இரண்டாவது சூடு நிகழ்த்தலாம் என்று எண்ணினேன். துப்பாக்கிச் சூட்டின் பலனாக அந்த முரட்டு உருவம் காற்றில் மேலெழும்பி அந்தர் பல்டி அடித்துக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் உடனே எழுந்தும் கொண்டது. விழுந்து எழும் அந்தச் சில வினாடிகளில் அது தனது இடது பாகத்தை முழுவதும் காட்டியது. அதன் இதயத்தை எனது இரண்டாவது குண்டு கிழித்தது. இரண்டாவது முறை கீழே விழுந்து எழுந்து என்னை நோக்கிப் பாய்ந்தது. கேஸ்பக் உயிரினங்களின் ஆற்றல் இந்த வினோத உலகில் ஒரு அதிசயிக்கத்தக்க விஷயம். உலகில் வேறெங்கும் இல்லாத கற்கால உயிரினங்களின் நரம்பு மண்டலங்களின் சிறுமையை அது பறைசாற்றுகிறது. மூன்றடி தூரத்தில் இருக்கும் போது மூன்றாம் முறையாகச் சுட்டேன். அதன் பின் கதை முடிந்தது என்று நினைத்தேன். அது திரும்பி என் காலடியில் படுத்து இறந்தது. எனது இரண்டாவது குண்டு அதன் இதயத்தை முழுவதும் கிழித்து விட்டதை என்னால் உணர முடிந்தது. இருந்தும் அதனால் கோபத்தோடு என் மேல் பாய்ந்து வர முடிந்திருக்கிறது. மூன்றாவது குண்டைச் சுடாமல் இருந்திருந்தால் அது சாவதற்குள் என்னை அது கொன்றிருக்கும் போவன் சொன்னது போல் அது தான் இறந்ததை அறிவதற்குள். இப்பொழுது அந்தச் சிறுத்தை தான் இறந்ததை முழுவதும் அறிந்திருக்கும். அதனால் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவள் என்னைப் புகழத் தயாராக இருந்தாள். நிச்சயமாக வெறும் சின்ன ஆச்சர்யம் அவள் கண்களில் இல்லை. உண்மையைச் சொல்வதென்றால் அவளுக்கு நான் வைத்திருந்த துப்பாக்கி மிகவும் பிடித்து விட்டது. நான் பார்த்த விலங்குகளிலேயே மிகவும் அருமையானதாக அவள் இருந்தாள். அவள் அணிந்திருந்த கொஞ்ச நஞ்ச ஆடைகளும் அவள் அழகை மிகவும் அதிகரித்துக் காட்டின. பதப்படுத்தப்படாத சின்னத் தோல் துண்டு ஒன்று அவளது இடது தோள்பட்டையில் இருந்து வலது மார்பகம் வழியாக இடது பின்புறம் சென்று பின் வலப்பக்கம் உள்ள உலோகத்தால் ஆன ஒரு பட்டி, முழங்காலில் இருந்து மேலே அவள் காலைச் சுற்றி இருந்தது. அதன் மேல்தான் அந்தத் தோலின் கீழ் பகுதி இணைக்கப்பட்டிருந்தது. அவளது இடையில் தளர்ந்த வார் ஒன்று இருந்தது. அதன் நடுப் பகுதியில்தான் அவளது கத்தி வைக்கும் உறை பொருத்தப்பட்டிருந்தது. அவளது வலது கையில் தோள்பட்டைக்கும் முழங்கைக்கு நடுவில் ஒரே ஒரு வளை இருந்தது. அதே போல் நிறைய வளையல்கள் இடது முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை இருந்தன. எதிரி யாராவது கத்தியை எடுத்துத் தாக்கும் போது முகத்திலோ நெஞ்சிலோ பட்டுவிடாமல் பாதுகாப்பதற்குத்தான் அவைகள் என்பதைப் பின்னால் அறிந்தேன். அவளது கனமான கூந்தலை நிறுத்தி வைக்க உலோகத்தாலான பட்டி ஒன்றை பயன்படுத்தி இருந்தாள். அதில் இருந்து ஒரு முக்கோண வடிவில் ஒரு ஆபரணம் அவளது முன் நெற்றியில் தொங்கியது. இந்த ஆபரணம் ஒரு பெரிய ரத்தினக்கல் போல் இருந்தது. அவள் ஆபரணத்தின் அனைத்து உலோகங்களும் செம்பு கலக்காமல் அடிக்கப்பட்ட தங்கமாகும். அதன் மேல் முத்துச் சிப்பிகளாலும் வேறு பல கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவளது இடது தோள்பட்டையில் இருந்து ஒரு சிறுத்தையின் வால் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் கால்களில் வலுவான காலணிகள் அணிந்திருந்தாள். கத்திதான் அவளது ஒரே ஆயுதம். அது இரும்பால் செய்யப்பட்டது. அதன் பிடி மிருகத்தின் தோலால் சுற்றப்பட்டிருந்தது. தோலை இறுக்கிப் பிடிக்க இரும்பால் ஆன மூன்று ஊசிகள் தைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் பகுதியில் சின்னத் தங்கக் குமிழும் இருந்தது. நாங்கள் இருவரும் எதிரெதிர் நின்று கொண்டிருந்த அந்தச் சில வினாடிகளில் இவ்வளவையும் தெரிந்து கொண்டேன். அதே போல் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனித்தேன். அவள் மிகவும் அழுக்கடைந்திருந்தாள். அவளது முகம் கை கால்கள் உடை என்று அனைத்திலும் சேறு வியர்வை படிந்திருந்ததன. இவ்வளவு இருந்தாலும் இவளைப் போன்ற ஒரு அழகான நேர்த்தியான உருவத்தை எங்கும் பார்த்ததில்லை. அவள் அழகை வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். நான் ஒரு எழுத்தாளனாக இருந்திருந்தால் அவளது அம்சங்கள் கிரேக்க நாட்டினது என்று சொல்வேன். எழுத்தாளனாகவோ கவிஞனாகவோ இல்லாததால் ஒரு சராசரி அமெரிக்கப் பெண்ணிடம் இருக்கும் அனைத்துச் சிறப்பான அம்சங்களையும் சேர்த்து வைத்தவள் என்று சொல்வதுதான் அவளுக்குச் சரியான நீதியாக இருக்க முடியும். கிரேக்கக் கடவுள்கள் கூட ஆடு போன்ற அமைப்பு உள்ளவர்கள். இல்லை அந்தச் சேறு கூட அவள் அழகை மறைக்க முடியாது. ஒப்புமை இல்லாத பேரழகி அவள். “காலு?” என்று அதிகரிக்கும் தொனியில் கேட்டாள். போவனின் கட்டுரையில் காலு என்பவன் மனிதர்களின் பரிணாமத்தில் மேல் இருப்பவன் என்று படித்திருந்ததால் நான் என்னைக் கை காட்டி அதே வார்த்தையைத் திரும்பக் கூறினேன். பின் அவள் சாதாரணமாக பேச ஆரம்பித்து விட்டாள். ஆனால் எனக்குத்தான் அவள் சொல்லிய ஒரு வார்த்தை கூட புரியவில்லை. அவள் பேசிய நேரம் எல்லாம் அந்த காட்டை நோக்கியே அவள் பார்வை இருந்தது. இறுதியாக அவள் என் கையை அழுத்தி அந்தத் திசையைச் சுட்டிக் காட்டினாள். திரும்பி நான் பார்த்தபோது முடிகள் நிறைந்த ஒரு மனிதனைப் போன்ற ஒருவன் எங்களை கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தக் காட்டினுள் இருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள் ஒரு இருபது பேராவது இருக்கும். அவர்கள் அனைவரும் எவ்வித ஆடையும் உடுத்தி இருக்கவில்லை. அவர்கள் உடல் முழுவதும் முடி போர்த்தி இருந்தது. அவர்கள் தங்கள் கால்களால் நின்று கொண்டிருந்த போது கைகள் தரையைத் தொடவில்லை என்றாலும் கிட்டத்தட்ட மனிதக் குரங்கு போலவே இருந்தார்கள். முன் புறம் வளைந்து நீண்ட கரங்களுடன் மனிதக் குரங்கின் அம்சமாகவே இருந்தார்கள். அந்தக் குறுகிய கண்களும் தட்டையான மூக்குகளும் நீளமான மேல் உதடுகளும் வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் பற்களும் அவர்களின் அவலட்சணத்தைப் பறை சாற்றின. “ஆலுக்கள்!” என்றாள் அவள். நான் போவனின் கட்டுரையை அடிக்கடி திரும்பப் படித்திருக்கிறேன். அதனால் அவர்களைப் பற்றி எனக்கு உடன் தெரிந்து விட்டது. ஆதி மனிதனின் கடைசிச் சுவடுகளை நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். மறந்து போன உலகின் ஆலுக்கள். பேசத் தெரியாத ஆதி மனிதன். “காசோர்!” என்று கத்தினாள் அவள். அப்போது அனைவரும் உளறிக்கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்கள் வினோதமான உறுமல் மற்றும் குரைக்கும் ஒலி எழுப்பிக் கொண்டு எங்களை அணுகிக் கொண்டிருந்தனர். அவர்களது ஆய்தம் இயற்கை தந்தது மட்டுமே. அவர்களது வலிமையான தசைகள் மற்றும் பெரிய பற்களும்தான். இருந்தாலும் வேறேதும் பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் அவைகள் மட்டுமே எங்களை வீழ்த்த போதும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் எனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களின் தலைவனை நோக்கிச் சுட்டேன். அவன் ஒரு கல்லைப் போன்று வீழ்ந்து விட்டான். மற்றவர்கள் திரும்பி ஓட்டமெடுத்தார்கள். திரும்பவும் அந்தப் பெண் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள். துப்பாக்கியின் முனையை வருடிக் கொடுத்தாள். அவ்வாறு செய்யும் போது அவளது விரல்கள் என் விரல்கள் மீது பட்டன. அது ஒருவித சிலிர்ப்பை என்னுள் ஏற்படுத்தியது. ஏனெனில் எந்தவொரு பெண்ணையும் நான் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன என்பதையே அது காட்டுகிறது. அவள் தன் மெல்லிய குழைந்த குரலில் ஏதோ சொன்னாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் வட திசையைக் கை காட்டி நடக்க ஆரம்பித்தாள். நான் அவளைப் பின் தொடர்ந்தேன். ஏனெனில் நான் போக வேண்டியதும் அதே திசைதான். தெற்காக இருந்தாலும் நான் அவளைப் பின் தொடர்ந்திருப்பேன். விலங்குகள் ஊர்வன மற்றும் பாதி மனிதர்களுக்கு நடுவில் ஒரு மனிதத் துணை கிடைத்திருப்பதென்பது ஒரு வரம் அல்லவா. நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அவள் நிறைய பேசிக் கொண்டே வந்தாள். எனக்கு அது புரியவில்லை என்பதை அவளால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. அவளது வெள்ளி மணி போன்ற சிரிப்பு மகிழ்ச்சியாக ஒலித்தது. நானும் அவளிடம் பேச முயற்சி செய்தேன் என் மொழி அவளுக்கு மிகவும் பரிச்சயமானது போல். பல முறை அவள் எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதால் அவள் தன் உள்ளங்கையை மடக்கி என்னை நோக்கி “காலு” என்றாள். பின் எனது நெஞ்சையோ கையையோ தொட்டு “ஆலு, ஆலு” என்று கத்தினாள். அவள் என்ன சொன்னாள் என்று எனக்குப் புரிகிறது. ஏனெனில் போவன் கட்டுரையில் சொன்னது போல் அந்த எதிர்மறை சைகைகள் மற்றும் அவள் திரும்பத்திரும்பச் சொன்ன அந்த இரு வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்று எனக்குத் தெரியும். நான் காலு இல்லையென்றும் பேசாத அந்த ஆலு மனிதன் என்றும் சொன்னாள். ஒவ்வொரு முறை அதை சொல்லும் போதும் சிரித்துக் கொண்டே இருந்தாள். அவளது சிரிப்பு அவ்வளவு வசீகரமாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் நானும் அவளுடன் சேர்ந்து கொண்டேன். நான் பேசுவது அவளுக்குப் புரியாமல் இருப்பதையும் அவள் பேசுவது எனக்குப் புரியாமல் இருப்பதையும் பார்த்து அவள் ஆச்சரியப்படுவதும் இயற்கையானதே. பரிணாமத்தில் மிகவும் கீழே இருக்கும் கேஸ்பக்கின் பேச ஆரம்பித்த முதல் மனிதனான கழி மனிதர்களில் இருந்து தங்க இனமான காலுக்கள் வரை அனைவரது மொழிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றன பரிணாம வளர்ச்சியின் மாற்றங்களைத் தவிர. காலுவாக இருக்கின்ற அவள் போலுக்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குத் தன் மொழியைப் புரிய வைக்கவும் முடியும். அதே போல் கோடரி ஈட்டி அல்லது வில் மனிதர்களிடமும் உரையாட முடியும். மனிதக் குரங்குகளான ஹோலுக்கள், ஆலுக்கள் மற்றும் நான் இவர்களிடம் மட்டுமே அவளால் பேச முடியாது. அவளது அறிவுத் திறனில் இருந்து எனக்கு என்ன தெரிகிறதென்றால் நான் ஹோலுவும் அல்ல ஆலுவும் அல்ல. மனிதக் குரங்கும் அல்ல பேசத் தெரியாத மனிதனும் அல்ல. இருந்தாலும் அவள் ஏமாற்றம் அடையவில்லை. எனக்கு அவள் மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். போவன் மற்றும் தொரியாதோரில் என்னுடன் வந்த கூட்டாளிகள் பற்றி நான் கவலைப் படாமல் இருந்திருந்தால் அந்த உரையாடல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணி இருப்பேன். நான் எப்போதும் பெண்களின் மனிதனாக இருந்ததில்லை. இருந்தாலும் அவர்களுடன் இருப்பதை விரும்புவேன். எதிர் பாலினத்தவரிடம் கல்லூரியிலும் அதன் பின்பும் நட்பு கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட பெண் மட்டுமே என்னை விரும்புவாள் என்பதால் நான் யாரிடமும் இதுவரை உறவு வைத்துக் கொண்டது கிடையாது. என்னைவிட மிகவும் அருமையாக அதைக் கையாளும் பிறரிடம் அதை விட்டு விடுகிறேன். பெண்களின் சமூகத்தில் இருந்து எனது இன்பத்தை நான் வேறு விதத்தில் எடுத்துக் கொள்கிறேன் ஆடல், கோல்ப் விளையாட்டு, படகு செலுத்துவது, குதிரை விளையாட்டு, டென்னிஸ் இது போன்ற விளையாட்டுகளின் மூலம். இந்த அரை நிர்வாண சிறு காட்டுமிராண்டியுடன் இருக்கும் போது எனக்குக் கிடைக்கும் இந்த புதிய ஆனந்தம் இதுவரை நான் கண்டிராத புது விதமாக இருந்தது. அவள் என்னைத் தொடும்போது வேறெந்தப் பெண் என்னைத் தொடும் போது கிடைத்த இன்பத்தை விட மிக அதிகமாக உணர்ந்தேன். என்னால் அதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் அது காதலின் அறிகுறி என்று புரியத் தேவையான அளவு நான் வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் இந்தக் கேவலமான அழுக்கான சிறு காட்டுமிராண்டியை நான் காதலிக்கவில்லை. உடைந்த சீரற்ற நகங்களும் உடல் மேல் அப்பி இருந்த சேறும் முதலில் எந்த வண்ணத்தில் இருந்ததென்றே சொல்ல முடியாதபடி அதில் ஒட்டி இருந்த பச்சைச் செடிகளும் கொண்ட இவளை நான் காதலிக்கவில்லை. அவ்வளவு அருவருப்பாக இருந்தாலும் அவளது உறுதியான சீரான வெள்ளைப் பற்களும் வெள்ளி போன்ற சிரிப்பும் ராணி போன்ற நடையும் அவளுடன் பிறந்த நேர்த்தியைப் பறை சாற்றியது. அந்தச் சேற்றின் அழுக்கு கூட அதை மறைக்க முடியாது. நாங்கள் ஆற்றங்கரையை அடைந்தபோது கதிரவன் கீழே இருந்தான். அது ஒரு மலையின் அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. எங்கள் பயணம் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது இந்த மண்ணில் எந்தவொரு பயணத்தையும் போல். எங்களை எப்போதும் பின் தொடர்ந்து கொண்டிருந்த பலதரப்பட்ட விலங்குகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை எல்லாம் விவரித்து உங்களைக் கழுத்தறுக்காமல் விட்டுவிட்டேன். எப்பொழுதும் கவனமாகவே இருந்தோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் தொடர்ச்சியான கவனமே இங்கு உயிரின் விலையாகும். அவள் மொழியைப் புரிந்து கொள்வதில் நான் சற்று முன்னேறி இருக்கிறேன். நிறையத் தாவரங்கள் மரங்கள் புற்கள் விலங்குகள் ஊர்வனவற்றின் கேஸ்பக் பெயர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கடல், ஆகாயம், ஆறு, மலை, கதிரவன் மற்றும் மேகங்களுக்கான வார்த்தைகளையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆம் நான் அவளை நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கின்றேன். திடீரென்று எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. அவளது பெயர் என்னவென்று இதுவரை எனக்குத் தெரியாது. அதனால் என் நெஞ்சில் கையை வைத்து “டாம்” என்றேன். பின் கேள்வி கேட்பது போல் எனது இரு புருவங்களை மேலே தூக்கினேன். அவள் தன் கையை அவளது அடர்ந்த கூந்தலுக்குள் விட்டுக் கொண்டு புரியாமல் தவித்தாள். நான் அதே போல் ஒரு டஜன் தடவை அவளிடம் கேட்டு விட்டேன். “டாம்” என்று அவளது தெளிவான இனிமையான குழைந்த குரலில் சொன்னாள். என் பெயரைப் பற்றி எனக்கு பெரிய அளவு அபிப்பிராயம் இல்லை. ஆனால் அதை அவள் சொல்லிய போது என் பெயர் அவ்வளவு அழகாக இருந்தது. அதன் பின் அவளுக்குச் சட்டென்று பொறி தட்டியது. தன் நெஞ்சில் கையை வைத்து “அஜோர்!” என்றாள். “அஜோர்!” என்று நான் சொன்னேன். அவள் அதைக் கேட்டுக் கைகொட்டிச் சிரித்தாள். எங்கள் இருவர் பெயரும் எங்களுக்குத் தெரிந்து விட்டது. அதுவே ஒரு பெரிய திருப்தியாய் இருந்தது. எனக்கு அவள் பெயர் பிடித்திருந்தது. அவளுக்கும் அது மிகவும் பிடித்து விட்டதென்று எண்ணுகிறேன். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாள். நாங்கள் அந்த ஆற்றை ஒட்டி இருந்த மலைச் சரிவிற்கு வந்து சேர்ந்தோம். அது அங்கே இருந்து ஒரு முகத்துவாரம் வழியாக அந்த உள்நாட்டுக் கடலில் கலந்தது. மலைப் பாறைகள் தேய்ந்தும் உடைந்தும் போயிருந்தன. ஒரு இடத்தில் மேலே தொங்கிக் கொண்டிருந்த பாறையில் பல அடிகள் நீளம் உள்ள ஒரு பெரிய ஓட்டை தெரிந்தது. அதை எங்கள் இரவைக் கழிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கே சிறு கற்கள் எல்லா இடத்திலும் சிதறிக் கிடந்தன. அதை வைத்து வாயிலில் தடுப்பு செய்யலாம். அதனால் அங்கே நின்று அந்த இடத்தை அவளிடம் காட்டினேன். இங்குதான் இரவு நாம் தங்க வேண்டும் என்பதை அவளுக்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன். நான் சொன்னதை அவள் புரிந்து கொண்டவுடன் அவள் சம்மதித்தாள் கேஸ்பக்கில் சொல்வதைப் போல. என் துப்பாக்கியைத் தொட்டுத் தன்னைப் பின் தொடரச் சொல்லிவிட்டு ஆற்றை நோக்கிச் சென்றாள். கரையில் ஒரு கணம் நின்றாள். அவள் வாரையும் கத்தியையும் கழற்றித் தன் பக்கத்தில் கீழே போட்டாள். அதைத் தொடர்ந்து அவளது ஆடையின் கீழ் புறத்தைக் காலில் மாட்டி இருந்த உலோகப் பட்டியில் இருந்து விடுவித்தாள். அது அவளது இடது தோள்பட்டையில் இருந்து சட்டென்று நழுவித் தரையில் விழுந்தது. அது அவ்வளவு இயற்கையாக சாதாரணமாக வேகமாக நடந்தது. அதைப் பார்த்து நான் நீரில் இருந்து நிலத்தில் குதித்த மீனைப் போல் துள்ளினேன். என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டு ஆற்றில் குதித்தாள். அங்கு அவள் குளித்தாள் நான் காவல் காத்துக் கொண்டிருந்தேன். ஐந்து பத்து நிமிடங்களில் அவள் திரும்பி வந்தாள். அப்போது அவளது அழகான வெண்மையான மென்மையான தேகம் பளிச்சென்று மின்னியது. துவட்டிக் கொள்ள எதுவும் இல்லாததைப் பற்றிய கவலையே இல்லாமல் தன் உடையை அணிந்து கொண்டாள். என்னைப் பொறுத்த வரையில் அது தேவையானதாக இருந்திருக்கலாம் ஆனால் அவள் அதைப் பற்றிக் கவலைப் படவே இல்லை. இரவு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது. நான் மிகவும் களைத்துப் போயிருந்ததால் நான் கால் மைல் தூரம் திரும்பிப் போய் ஒரு சின்னப் புல் வெளியை அடைந்தேன். அங்குதான் கொஞ்ச நேரத்துக்கு முன் மறிமான் மற்றும் சிறு குதிரைகளைப் பார்த்தோம். அங்கே ஒரு சிறு மானைச் சுட்டு வீழ்த்தினேன். குண்டுச் சத்தம் கேட்டவுடன் மற்ற விலங்குகள் தெறித்துக் காட்டிற்குள் ஓடின. ஆனால் அங்கிருந்த இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு அது கொண்டாட்டமாகி விட்டது. அவைகள் மேல் பாய்ந்தன. என் வேட்டைக் கத்தியை எடுத்து அதன் பின் கால்களில் இருந்து மாமிசத்தை வெட்டி எடுத்தேன். அதன் பின் குகைக்குத் திரும்பி விட்டேன். அங்கே விழுந்து கிடந்த மரச் சுள்ளிகளைப் பொறுக்கினேன். அஜோர் எனக்கு உதவி செய்தாள். தீ மூட்டுவதற்கு முன் கற்களை வைத்து தடுப்பு செய்து கொண்டேன். இரவு விலங்குகளிடம் இருந்து காப்பதற்காக. நான் தீக்குச்சியை வைத்து தீப்பற்ற வைக்க முயன்ற போது அஜோரின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சியை என்றும் மறக்க முடியாது. எந்த ஒரு மனிதனின் முகத்திலும் அவ்வளவு ஆச்சர்யங்களை விதைக்கும் இறைவனின் மர்மமான விளையாட்டுக்களைக் கண்டு ரசிக்கும் அஜோரின் முகத்தில் பரவும் அந்த உணர்ச்சிகள் கண்டு. அஜோருக்கு நவீன காலத்திய நெருப்புப் பற்ற வைக்கும் முறை பற்றித் தெரியாதென்பது நன்கு விளங்குகிறது. எனது கைத் துப்பாக்கியும் சுழல் துப்பாக்கியும் மட்டுமே அதிசயங்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இந்தச் சிறு குச்சிகளின் மாய உரசல் நெருப்பு உண்டாக்குகிறது என்பதும் இன்னொரு அதிசயம்தான். கறி அந்த நெருப்பில் வெந்து கொண்டிருந்த போது அஜோரும் நானும் மீண்டும் பேச முயற்சி செய்தோம். இருந்தாலும் நிறைய சைகைகளும் ஒலிகளும் மட்டுமே எழுப்பியபடி இருந்ததால் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இல்லை. அதன் பின் அஜோர் மிகுந்த ஆர்வத்தோடு எனக்கு அவளது மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். அவள் போலுக்கள் பயன்படுத்துவது போன்ற மிக எளிமையான கேஸ்பக்கின், அல்லது உலகின் என்று கூட சொல்லலாம், முதல் மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். அது மிகவும் சிரமம் என்று சொல்லிவிட முடியாது. அவளுக்கு எனது மொழி தெரியாதது ஒரு பிரச்சினை என்றாலும் அவள் கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவள் மிகுந்த நுண்ணறிவு படைத்தவளாக இருந்தாள். நாங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் இன்னும் சில கட்டைகளைப் போட்டேன் நெருப்பு அணைந்து விடாமல் இருக்க. மேலும் காட்டு விலங்குகள் அந்த நெருப்பைத் தாண்டி வராமல் பாதுகாப்பாகவும் இருக்கும். அதற்கு முன் இருவரும் அமர்ந்து கொண்டோம், அஜோர் தன் பாடத்தைத் தொடர்ந்தாள். கேஸ்பக்கின் உயிரினங்கள் தங்களது வினோத ஒலிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தன. புலிகள் சிறுத்தைகள் சிங்கங்களின் உறுமல் முனகல் சத்தங்கள், நரிகள் ஓநாய்கள் காட்டு நாய்களின் குரைப்பு ஊளைச் சத்தங்கள், பிடிபட்ட உயிர்களின் கிறீச்சிடல்கள் அதைப் பிடித்த பெரிய ஊர்வனவற்றின் சீற்றங்கள் எல்லாம் கேட்டன. மனிதனின் ஒலிகள் மட்டும் அமைதியாய் இருந்தன. அனைத்து திசைகளில் இருந்தும் இந்தக் கொடூரமான கச்சேரிகள் ஏற்ற இறக்கங்களுடன் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அதிகரிக்கும் சப்தங்கள் ஒரு கணம் இந்த பூமியையே புரட்டிப் போட்டு விடும். நான் என் பாடத்திலும் ஆசிரியரிடமும் மிகுந்த கவனத்தோடு இருந்ததால் அந்த ஒலிகள் ஒரு கணம் முழுவதும் மறைந்து பேரமைதியாகி விடுவது போல் தோன்றும் மறு கணம் அதைப் பற்றிய பேராச்சர்யம் எழும். அந்த அழகிய பெண்ணின் பேச்சும் முகமும் என் மேல் அதிக ஆர்வத்தோடு சாயும் சில வார்த்தைகளின் அர்த்தத்தை விவரிக்கும் போதும் சரி செய்யும் போதும். எனது ஐம்புலன்களும் அப்படியே அதில் லயித்துக் கிடக்கும். நெருப்பின் ஒளி உயிரோட்டமுள்ள அவளது அழகிய கண்களில் பட்டு மின்ன வைத்தது. அவளது கைகளின் மெல்லிய அசைவுகளுக்கு அந்த ஒளி புத்துயிர் ஊட்டியது. வெண்ணிறப் பற்களின் மேல் பட்டுத் தெறித்தது. உடலில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை மினுக்கியது. மென்மையான நேர்த்தியான தோலின் மேல் பட்டுப் பளபளப்பாக்கியது. மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வத்தை விட அந்த விலங்கின் அழகின் மேல் அதீத ஆர்வம் கொண்டு விட்டேன் என்று பயமாக இருந்தது. எப்படி இருந்தாலும் நான் அன்றிரவு நிறையக் கற்றுக் கொண்டு விட்டேன். அதில் ஒரு பகுதி புதிய மொழியறிவாக இல்லாவிட்டாலும். நான் எப்படியும் கேஸ்பக்கின் மொழியை விரைந்து கற்று விட வேண்டுமென்பதில் அஜோர் மிகுந்த உறுதியோடு இருந்தாள். உலகின் முதல் பெண்ணிடம் தோன்றி வழி வழியாக அனைத்துப் பெண்களிடமும் பரவி வந்த ஒரு பெண்ணின் இயல்பில் ஒன்றைப் பார்த்ததாக எண்ணினேன் அவளது விருப்பத்தில், அது ஆர்வம். நான் அவளது மொழியைப் பேசிவிட வேண்டும் என்று நினைத்து விட்டாள். என் மேல் இருந்த ஒரு ஆர்வத்தை நிறைவு செய்வதற்காக. அந்த ஆர்வம் அவளிடம் வெடிக்கும் அளவு நிரம்பி விட்டது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவள் ஒரு சராசரியான உயிரோட்டமுள்ள கேள்விக்குறி. அவளிடம் கேள்விக் கணைகள் ததும்பி இருந்தன. நான் பேசாவிட்டால் அதைத் தீர்க்க முடியாது. அவளது கண்கள் ஆர்வத்தால் மின்னின. அவளது கைகள் செறிவான சைகைகளால் வேகமாக இயங்கின. அவளது சிறிய நாக்கு காலத்துடன் போட்டியிட்டது. எவ்வளவோ முயன்றும் பலனில்லை. கேஸ்பக் மொழியில் மனிதன் மரம் மலை சிங்கம் இது போன்ற பல வார்த்தைகளைச் சரியாகச் சொல்ல முடிந்தது. ஆனால் அந்த அகராதி என்னவோ ஏமாற்றமளிக்கக் கூடியதாய் இருந்தது. அது உரையாடலுக்கு உதவவில்லை. அதனால் கோபம் தலைக்கேறி உள்ளங்கையை மடக்கித் தன்னால் முடிந்தளவு என் நெஞ்சில் பலமுறை ஓங்கிக் குத்தினாள். அதன் பின் உட்கார்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுவாள் நிலைமையை உணர்ந்து. அவள் எனக்குச் சில வினைச் சொற்களைக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவளே அந்தச் செயலைச் செய்து காண்பித்து அந்த வார்த்தையையும் திரும்பத் திரும்ப உச்சரித்தபடி. நாங்கள் அதில் அவ்வளவு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருந்ததால் வெளியில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அஜோர் திடீரென்று நிறுத்தி “கஜோர்” என்று கத்தினாள். அவள் அப்போது “ஜூ” என்றால் நிறுத்து என்பதையும் சொல்லிக் கொடுத்தாள். அதனால் அவள் கஜோர் என்று கத்தி நிறுத்தியவுடன் அது எனது பாடத்தின் ஒரு பகுதி என்று எண்ணி விட்டேன். ஒரு கணம் கஜோர் என்றால் கவனமாயிரு என்பதையே மறந்து விட்டேன். அதனால் நானும் ஆவலுடன் திரும்பச் சொன்னேன். ஆனால் அவளது முகத்தில் எழுந்த உணர்ச்சியைப் பார்த்ததும் என்னைத் தாண்டி அது செல்வதைப் பார்த்ததும் அவள் குகை வாயிலைக் கை காட்டியதும் நான் சட்டென்று திரும்பினேன். எதோ ஒரு முகம் அந்தச் சிறிய பொந்தின் வழியாக இரவினூடே எட்டிப் பார்த்தது. அது ஒரு பிரமாண்டமான கொடுமையான கோபமான கரடியின் முகம். அரிஸோனாவில் உள்ள வெள்ளை மலைகளில் வெள்ளித்தடங்களில் நடந்து போயிருக்கிறேன். அப்போது அதுதான் மிகப்பெரிய கொடூரமான விலங்கு என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த மோசமான விலங்கின் முகத்தைப் பார்க்கும் போது நான் இதுவரை கண்டிருந்த மிகப் பெரிய விலங்கின் தோற்றம் புதிய நாட்டின் நாய் போலாகி விட்டது. எங்கள் நெருப்பு குகைக்கு உள்ளேயே இருந்தது. அதில் இருந்து வெளியேறும் புகை கற்குவியலுக்கு நடுவில் இருந்த ஓட்டைகள் வழியாக மலைச் சரிவில் வெளியேறியது. குகையின் வாயிலில் சில பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த போதிலும் அது முழுவதும் வாயிலை மூடவில்லை. இருந்தாலும் அதன் வழியாக பெரிய மிருகங்கள் வந்து விட முடியாது. அதனால் நான் அந்த நெருப்பை மட்டுமே பெரிதும் நம்பி இருந்தேன். ஏனெனில் அதைத் தாண்டி இரவில் உலவும் மாமிசம் உண்ணும் விலங்குகள் அருகில் வராது. அதில் இப்போது ஒரு சிறிய தவறு நடந்து விட்டது. அந்தப் பெரிய கரடியின் மூக்கு நெருப்புக்கு ஒரு அடி தூரத்தில்தான் இருந்தது. அந்த நெருப்பும் இப்பொழுது குறைந்து விட்டது நான் பாடத்தில் மிகவும் கவனம் செலுத்தியபடியால் அதில் கட்டைகளை இட மறந்து விட்டேன். அஜோர் தன் கத்தியைச் சுழற்றினாள். எனது துப்பாக்கியின் மீது கை காண்பித்தாள். அதே நேரத்தில் அவளது பேச்சில் எந்தவித பயமோ நடுக்கமோ தோன்றவில்லை. மிகவும் சாதாரணமாகப் பேசினாள். அந்தக் கரடியின் மீது சுடுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தாள் என்று எண்ணுகிறேன். ஆனால் வேறு வழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் குறியாய் இருந்தேன். ஏனெனில் எனது பலம் வாய்ந்த குண்டுகள் கூட அதை இப்போது கோபப்படுத்தி விடும் அளவுதான் செயல்படும். அது உள்ளே வந்து விடும் வாய்ப்புதான் அதிகமாகி விடும். சுடாமல் நான் மேலும் சில கட்டைகளை எடுத்து வந்து நெருப்பில் போட்டேன். புகையும் நெருப்பும் அதன் முகத்தில் பட்டபோது அது சற்றுப் பின் வாங்கியது மிகவும் பயங்கரமாக உறுமியபடியே. இன்னும் என்னால் அந்த இரு அருவருப்பான வெளிச்சப் புள்ளிகள் வெளியில் கும்மிருட்டில் மின்னியதைப் பார்க்க முடிந்தது. அதன் பயம் கிளப்பும் உறுமல்கள் தொடர்ந்த படியே இருந்தது. சில நேரம் அது எங்கள் சிறிய குகையைப் பார்த்தபடியே நின்றிருந்தது. நான் எனது மூளையைக் கசக்கியபடி இருந்தேன் வேறு எதாவது செய்து அதை விரட்டி விட முடியுமா என்று. அது ஒரு முடிவுடன் எங்களை நோக்கி வந்தால் வாசலில் இருக்கும் கற்கள் அட்டைப் பெட்டிகள் போல் எளிதில் உடைந்து கரடி நேராக எங்கள் மேல் பாய்ந்து விடும். அஜோருக்கு என்னளவு துப்பாக்கியின் திறன் பற்றிய அறிவு இல்லாததால் அதன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துக் கரடியைச் சுடுவதற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள். ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் ஒரே குண்டில் அதை நிறுத்த முடியாது என்று. அதைக் கோபப்படுத்தி விடும் என்பது மட்டும் 100 சதம் உண்மை. அதனால் காத்து இருந்தேன், அந்த காத்திருத்தல் பல யுகங்கள் போல் இருந்தது, அந்தக் கொடூரமான வெளிச்சக் கண்கள் எங்களைக் கவனிப்பதைப் பார்த்தபடியே. நாங்கள் நடுங்கி உட்கார்ந்திருந்த குகையின் மலையையே அதிர வைக்கும் அளவு பூமியின் அடியில் இருந்து எழுவது போன்று அதிகரித்தபடியே எழும் கூக்குரல்கள் கேட்டபடி இருந்தன. இறுதியில் அந்த விலங்கு திரும்பவும் எங்கள் குகை நோக்கி வந்தது. கட்டைகள் அதிகமிட்டு நன்றாகக் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூட அதை ஒன்றும் செய்யவில்லை இப்போது. நாங்கள்தான் கிட்டத்தட்ட வெந்து விட்டோம் உள்ளிருந்து. அது ஓட்டைக்கு மிக அருகில் வந்து தனது வாயைப் பிளந்தது. ஒரு கணம் நின்று பின் வாங்கியது. நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அது எங்களை விடுத்தது வேறு எதாவது எளிதில் கிடைக்கும் உணவை வேட்டையாடலாம் என்றெண்ணிச் சென்று விட்டது. நெருப்பு அதற்கு மிக அதிகம் ஆகி விட்டது என்று எண்ணுகிறேன். ஆனால் எனது ஆனந்தம் சிறு நேரம்தான் நிலைத்தது. ஒரு நிமிடம் கழித்து என் இதயம் அப்படியே நின்று விட்டது. ஏனெனில் அதன் பிரமாண்டமான பாதம் குகை வாயிலில் அசைந்தது. அதன் பாதம் மிகப்பெரிய வடைச் சட்டி போல் இருந்தது. மெதுவாக அதன் பாதம் வெளியில் இருந்த பாதி வாயிலை மூடியிருந்த பெரிய கல்லை ஆட்டியது. தள்ளியும் இழுத்தும் பார்த்தது. அதன் பின் இழுத்து ஒரு பக்கமாகத் தள்ளியது. திரும்பவும் அதன் தலை தெரிந்தது. இப்பொழுது குகைக்குள் கொஞ்ச தூரம் முன்னேறி இருந்தது. இருந்தாலும் அதன் பெரிய தோள்கள் குகைக்குள் வர முடியவில்லை. அஜோர் எனதருகில் எனது தோள்பட்டையை உரசியபடி வந்தாள். அவளது உடம்பில் சிறு நடுக்கம் பரவியது போல் எனக்குத் தோன்றியது. அதைத் தவிர வேறு எதுவும் பயம் இருப்பது போல் தெரியவில்லை. தன்னிச்சையாக எனது இடது கையை எடுத்து அவளது தோள்பட்டையை அணைத்து இறுக்கிக் கொண்டேன். அவளது பயத்தைப் போக்கும் எண்ணம்தான் அதில் மேலோங்கி இருந்தது தவிர மோகத்தினால் அல்ல. இருந்தாலும் சாவின் விளிம்பில் இருக்கும் போது கூட அந்தத் தொடு உணர்ச்சி என்னுள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பின் அவளை விட்டு விட்டு எனது துப்பாக்கியை எடுத்தேன். அதற்குப் பிறகும் நேரம் கடத்துவது வீண் என்று முடிவெடுத்தேன். என்னால் முடிந்தளவு சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது அது எங்களை நெருங்குவதற்குள். ஏற்கெனவே அது இரண்டாவது பாறையையும் பெயர்த்து விட்டது. இப்பொழுது உண்டான ஓட்டையில் அதன் முழு உருவத்தையும் உள்ளே நுழைத்து விட முயற்சி செய்தது. அதன் இரு கண்களுக்கு மத்தியில் கவனமாகக் குறி வைத்தேன். எனது வலது கை விரல்கள் அழுத்தமாக மடங்கின சுட்டு விரல் தானாக பின்னால் சென்றது கைத் தசைகளின் செயலினால். குறி தவறாமல் குண்டு தன் இலக்கை அடைந்தது. துப்பாக்கி சிறிதும் ஆடி விடாமல் இருக்க என் மூச்சை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். நான் நிலையாக அமைதியாக பயிற்சியின் போது சுடுவது போல் நின்றேன். சுடுவதற்கு முன்பே அது சரியாக இருக்கும் என்று என் மனக்கண்ணில் தெரிந்தது. எனக்குத் தெரியும் நான் இலக்கு தவறவில்லை என்பது. கரடி முன்னேறி வரும்போது இன்னொரு இலக்கில்லாத குண்டின் மேல் விசை அழுத்தியது. அதே நேரத்தில் முற்று முழுதான நரக சத்தம் இல்லாத ஒரு ஒலி கேட்டது. கரடி தொடர்ச்சியான உறுமல்கள் எழுப்பிய வண்ணம் இருந்தது. அதன் இரைச்சலும் ஆற்றலும் இது வரை இல்லாத அளவு இருந்தது. மேலும் குகையில் இருந்தும் பின் வாங்கியது. எதனால் அப்படி நடந்தது என்பதை ஒரு கணம் என்னால் அறிய முடியவில்லை அதன் இரை கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது ஏன் அந்தக் கரடி சட்டென்று பின் வாங்கியது. எதுவும் செய்யாத துப்பாக்கி விசையை வெறுமனே அழுத்தியதற்கு ஏன் இப்படி பயந்து பின் வாங்க வேண்டும் என்பதே அற்பத்தனமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை. அதன் பின் முனகல் உறுமல் ஒலிகளுக்கு நடுவில் பெரிய உடல் தரையில் மோதும் ஒலியும் கேட்டது நிலம் சிறிது ஆடும் வரை. அந்தக் கரடியின் பின் புறம் இருந்து வேறு எதோ பெரிய விலங்கு தாக்கி இருக்க வேண்டும். அவை இரண்டும் தங்களுக்குள் யார் பெரியவன் என்ற சண்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சிறிது இடைவெளி விட்டு, அந்த நேரங்களில் போட்டியாளர்களின் பலத்த மூச்சு விடும் சத்தம் கேட்டது, சண்டை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்தது. அதன் பின் சத்தம் மெது மெதுவாகக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போனது. சைகைகள் மற்றும் எங்களுக்குப் புரிந்த பொதுவான வார்த்தைகளையும் சேர்த்து அஜோரின் யோசனைப்படி அந்த நெருப்பை வாசல் வரை தள்ளி வைத்து விட்டேன். அதனால் விலங்குகள் நெருப்பை நேரடியாகக் கடந்துதான் உள்ளே நுழைய முடியும். அதன் பின் அந்தச் சண்டையில் ஜெயித்த விலங்கு வந்து தனது பரிசை எடுத்துச் செல்வதற்காகக் காத்திருந்தோம். வெகு நேரம் வாசலில் கண்களை ஒட்டிக் காத்திருந்தும் வேறெந்த விலங்கும் வரவில்லை. இறுதியில் அஜோரைத் தூங்குமாறு சைகை செய்தேன். அவளுக்கு உறக்கம் தேவை என்பது புரிந்தது. அவளுக்குப் பாதுகாப்பாக நான் விழித்துக் கொண்டிருந்தேன் மறுநாள் காலை வரை. அவள் எழுந்ததும் நான் உறங்க வேண்டும் என்று வற்புறுத்தினாள். சிரித்துக் கொண்டே அவளது கத்தியை எடுத்து வேகமாக என்னை நோக்கி வந்தாள். அத்தியாயம் -3 நான் எழுந்த போது நன்றாக விடிந்திருந்தது. அஜோர் குத்துக்காலிட்டு மான் கறியை மரக்கரியின் குவியலில் போட்டு வாட்டிக் கொண்டிருந்தாள். நம்பினால் நம்புங்கள், புது நாளின் விடியலைப் பார்த்ததும் எழுந்தவுடன் மான் கறி சமையலின் இனிமையான வாசனை நுகர்ந்ததும் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புது நம்பிக்கை பிறந்தது. நேற்றைய இரவு நடந்த கொடூரங்கள் எல்லாம் மறைந்து போயின. மெல்லிய தேகம் கொண்ட அழகான முகம் கொண்ட அந்தப் பெண்ணும் ஒரு காரணமாக இருக்கலாம். அவள் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் அவளது நேர்த்தியான பற்களைக் காட்டிக் கன்னங்களில் மகிழ்ச்சியின் அறிகுறியான குழி விழ. இதுவரை பார்த்திராத அருமையான காட்சி. அப்போதுதான் நான் நினைத்துப் பார்த்தேன். அவள் கல்வி பயிலாத ஒரு காட்டுமிராண்டி என்றும் பரிணாமத்தில் என்னை விட மிகவும் கீழிருக்கிறாள் என்றும் எண்ணி வருத்தமடைந்தேன். எடுத்தவுடன் என்னை வெளியில் அழைத்துச் சென்றாள். அங்கு இரவு கரடியிடம் இருந்து நாம் எப்படிக் காப்பாற்றப்பட்டோம் என்பதைக் காண்பித்தாள். அங்கே ஒரு பெரிய பட்டாக்கத்திப் பல் புலியின் தோலும் உடலும் நாடா போன்று கிழிக்கப்பட்டிருந்தது. எங்களது குகையில் இருந்து சிறிது தூரத்தில் அதே போல் கிழிக்கப்பட்ட குடல்கள் உருவப்பட்ட பெரிய குகைக்கரடியின் இறந்த உடலும் கிடந்தது. இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரு பட்டாக்கத்திப் பல் புலியினால் ஒருவன் உயிர் காப்பாற்றப்படுவது என்பது ஒரு வினோதமான அனுபவம். ஆனாலும் அது நடந்திருக்கிறது. என் கண் முன்னே அதற்குச் சாட்சியங்கள் இருக்கின்றன. கேஸ்பக்கின் விலங்குகள் அவ்வளவு பெரியவை. அதனால் எந்நேரமும் தின்று கொண்டிருந்தால்தான் அவைகளின் தசைகள் வலுப் பெறும். அதன் பலனாக அவை எந்த விலங்கின் கறியையும் உண்ணும். தன் கண்களில் படும் எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தாக்கி விடும். இரண்டாவது கூற்றின்படி, புதைப்படிமவியல் மற்றும் இயற்கை ஆராய்ச்சியாளர்களுக்கும் இதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன், என்னவென்றால், குகையில் வாழும் கரடி பட்டாக்கத்திப் பல் புலி சிங்கங்கள் மற்றும் பெரிய மாமிசம் உண்ணும் ஊர்வன விலங்குகள் அனைத்தும் ஒரே நாளில் இரு கொலைகள் செய்யும். காலை ஒன்று இரவு மற்றொன்று. அவை உடனே அதன் அனைத்து மாமிசத்தையும் தின்று விடுகின்றன. அதன் பின் படுத்துச் சில மணி நேரங்கள் உறங்குகின்றன. நல்லவேளையாக அதன் எண்னிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றன. இல்லையென்றால் கேஸ்பக்கில் எந்தவொரு விலங்கும் உயிரோடு இருக்காது. அதன் அகோரப் பசிதான் அவைகளின் எண்ணிக்கையை மற்ற விலங்குகள் உயிரோடு இருப்பதற்குத் தேவையான அளவு குறைத்து வைத்திருக்கிறது. இனப்பெருக்க காலத்தில் கூட பெரிய ஆண் விலங்குகள் பெரும்பாலும் தன் இணையைக் கடித்துச் சாப்பிட்டு விடுகின்றன. எப்போதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து தன் குட்டியை கூடச் சாப்பிட்டு விடுகின்றன. மனித மற்றும் அரை மனித இனங்கள் எப்படி இத்துணைக் காலம் கடந்தும் இவைகளிடம் மாட்டாமல் தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது என் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம். காலை உணவு முடிந்ததும் அஜோரும் நானும் வடக்கு நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். நாங்கள் சற்றுத் தூரம் கடந்த உடனே எங்களைக் கையில் கம்புகளுடன் வந்த மனிதக் குரங்குகள் தாக்க ஆரம்பித்தன. ஆலுக்களை விட பரிணாமத்தில் ஒரு படி மேலே இருந்தார்கள். அஜோர் அவர்களை போலு, கழி மனிதன், என்று சொன்னாள். கைத் துப்பாக்கியின் ஒரு சூட்டில் ஒருவன் விழுந்தான் மற்றவர்கள் அனைவரும் மறைவிடம் தேடி ஓடி விட்டார்கள். ஆனால் அந்த நாளில் பல தடவை அவர்கள் தொந்தரவு செய்தார்கள். அவர்களின் நாட்டைக் கடந்து ஸ்தோலு, அல்லது கோடரி மனிதன், நாட்டை அடையும் வரை. அவர்கள் முடி கம்மியாகவும் மனிதர்கள் போல நிறைய அம்சங்களும் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் எங்களை அழித்து விட அவ்வளவு ஆர்வமாய் இருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் எங்கள் மேல் மிக ஆர்வமாய் இருந்தார்கள். எங்களைச் சிறிது தூரம் பின் தொடர்ந்தார்கள். மிக நெருங்கி வந்து ஆராய்ச்சி செய்தார்கள். அவர்கள் எங்களை அழைத்தார்கள். அஜோர் அவர்களுக்கு பதில் சொன்னாள். ஆனால் அதில் அவர்கள் திருப்தி அடையவில்லை. அதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டத் தொடங்கினார்கள். அதன் பின் எங்களைத் தாக்கவும் தயாராகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். திடீரென்று ஒரு மான் புதரில் இருந்து எங்கள் முன் வந்து நின்றது. எங்களுக்கும் உணவு தேவைப்பட்டது. கிட்டத்தட்ட மதியம் ஒரு மணி ஆகி விட்டது. எனக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் எனது துப்பாக்கியை எடுத்து ஒரே சூட்டில் அதை வீழ்த்தினேன். அதைப் பார்த்தவுடன் அவர்களின் உணர்ச்சியில் மின்சாரம் பாய்ந்தது போல் ஆகி விட்டது. அதனால் அவர்கள் சண்டையிடும் எண்ணத்தைக் கை விட்டு விட்டார்கள். எங்கள் வழியை மறைத்து நின்றவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அன்றிரவு நாங்கள் ஸ்தோலு நாட்டில் ஒரு ஓடைக்கு அருகில் தங்கினோம். அங்கே ஒரு சின்ன குகை கிடைத்தது. அது மிகவும் மறைவாய் இருந்தது. அதனால் எந்தவொரு விலங்கும் அடைய முடியாது. மான் கறியை உண்ட பின் அஜோர் பறித்து வந்த சில பழங்களையும் உண்டோம். அதன் பின் அந்தச் சிறு ஓட்டையில் தவழ்ந்து உள்ளே சென்றோம். அதன் வாயிலில் இதற்காகவே நான் எடுத்து வந்த குச்சிகள் மற்றும் கற்களை வைத்து பலமான தடுப்பைக் கட்டினேன். அந்த ஓடையில் நீந்தாமல் எந்தவொரு விலங்கும் வந்து சேர முடியாது. அதனால் தாக்குதலில் இருந்து மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். அந்தக் குகை மிகவும் சிறியது. மேற் கூரை மிகவும் உயரம் குறைந்து இருந்ததால் நிற்கக் கூட இயலவில்லை. தரையும் மிகவும் குறுகலாக இருந்ததால் எப்படியோ இருவரும் ஒட்டிக்கொண்டு இருந்தோம். ஆனால் நாங்கள் இருவரும் மிகவும் சோர்ந்து இருந்ததால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பாதுகாப்பு உணர்ச்சி அவ்வளவு இருந்ததால் அஜோருக்குப் பக்கத்தில் படுத்தவுடன் நான் தூங்கி விட்டேன். அதன் பின்னர் மூன்று நாட்கள் எங்கள் முன்னேற்றம் மிக மிக மெதுவாகச் சென்றது. அதில் கிட்டத்தட்ட பத்து மைல்கள் கடந்திருந்தாலே அதிசயம்தான். அந்த நாட்டில் மிக அதிகமான விலங்குகள் நிறைந்திருந்தன. எங்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த விலங்குகளிடம் இருந்து தப்பிப் பிழைப்பதற்காகப் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் மறைந்திருக்க நேர்ந்தது. ஊர்வன விலங்குகள் இங்கு கம்மியாக இருந்தன. ஆனால் மாமிசம் உண்ணும் விலங்குகள் மிக அதிகமாகக் காணப்பட்டன. தென்பட்ட ஊர்வனவும் மிக பிரமாண்டமாக இருந்தன. அந்த மிகப் பெரிய கடலின் ஓரத்தில் உள்ள நாணல்களை உரசியபடி வந்து நின்ற மிகப் பிரமாண்டமான அந்த உயிரினத்தை என்னால் மறக்கவே முடியாது. அதன் உயரம் 12 அடிக்கும் மேல் இருக்கும். அதன் மிக நீளமான வால் மற்றும் கழுத்தினால் கிட்டத்தட்ட 75 முதல் 100 அடி நீளமாவது இருக்கும். அதன் தலை மட்டும்தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சிறியதாய் இருந்தது. அதன் உடம்பில் எந்தவிதமான கவசங்களும் இல்லை. ஆனால் அதன் மிக பிரமாண்டமான உருவம் அச்சம் கொள்ளும் தோற்றத்தைக் கொடுத்தது. கேஸ்பக்கில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து புரிவது என்னவென்றால் இந்த மாதிரி விலங்குகள் நம்மைப் பார்த்தால்தான் தாக்கும். அதனால் நான் துப்பாக்கியைத் தூக்கிய அதே வேளை ஒரு பெரிய நாணலுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டேன். அதைப் பார்த்து அஜோர் சிரித்தாள். ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு அதனை நோக்கிக் கத்திக் கொண்டே ஓடினாள். அதன் சிறு தலையை நீண்ட கழுத்துக்கு மிகவும் மேலே தூக்கி முட்டாள்தனமாக யார் கத்துகிறார்கள் என்றபடியே பார்த்தது. இறுதியாக அதன் கண்கள் சிறு உருவமான அஜோரைப் பார்த்தது. அவள் தன் குச்சியை அதன் தலை மீது எறிந்தாள். ஒரு ஆட்டின் கணைப்பைப் போல் சத்தம் இட்டுக் கொண்டு சட்டென்று நீரில் இறங்கி மூழ்கி விட்டது. கல்லூரியில் படித்த பாடங்களையும் போவனின் புத்தகங்களில் நான் படித்த புதைபடிமவியல் பக்கங்களையும் மெதுவாக நினைவு படுத்திப் பார்க்க ஆரம்பித்தேன். மேல் ஜுராசிக் காலத்திய டிப்ளொடொக்கஸ் என்னும் மிருகம்தான் நான் இப்போது பார்த்தது. ஹேட்சர் மற்றும் ஹாலண்ட் ஆகிய இருவரும் கண்டுபிடித்த படிமங்களில் இருந்து நேரில் பார்த்த உண்மையான உருவம் எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்று நினைக்கும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. டிப்ளொடொக்கஸ் நிலத்தில் வாழும் மிருகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது நிலத்திலும் நீரிலும் வாழும் என்பது இப்போதுதான் தெரிகிறது. அதன் பிறகு நிறைய அது போல் பார்த்தாகி விட்டது. ஒவ்வொரு முறையும் அது கடலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது எதாவது தொந்திரவு ஏற்படும்போதெல்லாம். அதன் பிரமாண்டமான வாலைத் தவிர அதற்கு உடம்பில் வேறு பெரிய ஆயுதங்கள் ஏதுமில்லை. அதை வைத்துக் கொண்டு அது குகையில் வாழும் பெரிய கரடியைக் கூட எளிதில் வீழ்த்தி விட முடியும். ஆனால் அது மிகவும் எளிமையான முட்டாள்தனமான மென்மையான விலங்கு. கேஸ்பக்கில் இருக்கும் உயிரினங்களில் இப்படியொரு விளக்கம் வேறெந்த உயிரினத்துக்கும் பொருந்தாது. குகைகளோ வேறெந்த மறைவிடங்களோ கிடைக்காததால் மூன்று நாட்கள் நாங்கள் மரத்தில் உறங்கினோம். அங்கே பெரிய விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து தப்பித்து விட்டோம். ஆனால் சிறிய பறக்கும் ஊர்வன விலங்குகளும், பாம்புகளும், சிறுத்தைகளும் நிரந்தரமாகத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகள் எந்தவிதத்திலும் நிலத்தில் திரியும் பெரிய மிருகங்களுக்குக் குறைவானது இல்லை. மூன்றாவது நாள் முடியும் வேளையில் நானும் அஜோரும் சரளமாகப் பேசக்கூடிய அளவு வந்து விட்டோம். அது மிகப் பெரிய நிம்மதி கொடுத்தது குறிப்பாக அஜோருக்கு. அதனால் நான் அவளை அனுமதிக்கும் போதெல்லாம் என்னிடம் கேள்வியாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அது எப்போதும் முடியாது அல்லவா. ஏனெனில் நாங்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நான் எவ்வளவு வேகமாக கேஸ்பக்கின் நிலப்பரப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிக் கற்றுக் கொள்கிறேன் என்பதில் இருக்கிறது. அதற்கு நானே நிறைய கேள்விகள் கேட்க வேண்டியது இருக்கிறது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது அவள் பேச்சைக் கேட்டு அவளுக்கு பதில் சொல்வது. அவளது கேள்விகள் பெரும்பாலும் மிக அப்பாவித் தனமாய் இருந்தன. நான் கேஸ்பக்கின் பிரமாண்ட தடுப்புகள் தாண்டிய உலகைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அவளது கேள்விகளில் அவ்வளவு ஆச்சர்யங்கள் நிரம்பி இருந்தன. ஆனால் ஒரு முறை கூட என்னை அவள் சந்தேகிக்கவில்லை எவ்வளவு அதிசயமானதாக இருந்தாலும். கேஸ்பக்கில் இருக்கும் இந்த உயிரினங்களைத் தாண்டி வேறெதுவும் கற்பனை செய்து கூட பார்த்திராத அவளுக்கு எல்லாமே ஆச்சர்யம்தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவளுடைய பல கேள்விகள் கபடமில்லாதவையாக இருந்தன. அதில் அவளது நுண்ணிய அறிவும் புத்திசாலித்தனமும் தென்பட்டது. அவளது வயதுக்கும் அனுபவத்துக்கும் அது மிக அதிகமாகத் தோன்றியது. மொத்தத்தில் எனது காட்டுமிராண்டி எனக்கு நல்ல தோழியாகவும் சுவாரஸ்யமானவளாகவும் தோன்றினாள். எங்களது வழிகள் ஓரிடத்தில் இணைய நேர்ந்ததற்கு அடிக்கடி அந்த அன்பு நிறைந்த விதிக்குத்தான் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தேன். அவளிடம் இருந்து கேஸ்பக்கை பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். போவன் டைலருக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்த ஒரு விஷயம் மட்டுமே இன்னும் புரியாத புதிராக இருந்தது. உள்நாட்டுக் கடலின் இருபுறமும் நாங்கள் சந்தித்த மனிதக் குரங்குகள், அரை மனிதர்கள் மற்றும் முழு மனிதர்கள் இவைகளுக்குக் குட்டிகளே இல்லாத அந்த விஷயம்தான். அஜோர் எனக்கு விளக்க முயற்சி செய்தாள். அவ்வளவு இயற்கையான விஷயத்திற்கு ஏன் விளக்கம் தேவை என்று அவள் நினைத்திருக்கலாம். காலுக்களுக்குச் சிறிய அளவில்தான் குழந்தைகள் இருந்தன என்று சொன்னாள். தானும் ஒரு காலத்தில் குழந்தையாய் இருந்தவள்தான் என்றும் எல்லோரும் “ஆதியில் இருந்து வந்தவர்கள்” என்று சொன்னாள். அந்த வாக்கியத்தைச் சொல்லும் போது தெற்கை நோக்கிக் கைகளை விரித்தபடிச் சைகை செய்தாள். அவள் எனது காதுகளில் வந்து கிசுகிசுத்தபடி பேசினாள். அதே நேரத்தில் பெரும்பாலும் ஆகாயத்தை ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டே பேசினாள். “நீண்ட காலம் என் தாய் என்னை வியரூவிடம் இருந்து மறைத்து வைத்தாள் அது காற்றில் இருந்து இரவில் இறங்கி வந்து என்னை ஊவோவிற்கு எடுத்துச் சென்று விடாமல்”. அப்படிச் சொல்லும் போது அவளுள் இருந்த குழந்தை நடுங்கியது. அவளை மேலும் சொல்லும்படி செய்ய முயற்சி செய்தேன். ஆனால் வியரூவைப் பற்றியும் அது வாழுமிடமான ஊவோவைப் பற்றியும் சொல்லும்போது அவளது அச்சம் மிகவும் உண்மையாக இருந்ததால் இறுதியில் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இருந்தாலும் வியரூ பெண் குழந்தைகளை மட்டும்தான் எடுத்துச் செல்வது புரிந்தது. எப்போதாவது “ஆதியில் இருந்து வந்த” பெண் காலுக்களையும் அது எடுத்துச் செல்கிறது. அது மிகவும் புரியாத புதிராகவும் கற்பனைக்கு எட்டாததாகவும் இருந்தது. இருந்தாலும் எனக்கு ஒரு சிந்தனை தோன்றி விட்டது. அந்த வியரூ ஒரு கற்பனைப் பாத்திரமாக இருக்கும் என்று. அவளது இனத்தின் எங்கும் இருக்கும் அனைத்தும் அறியும் கடவுள் மற்றும் சாத்தான்களாக அவை இருக்கக் கூடும். இதில் இருந்து காலுக்களுக்கு ஒரு மத நம்பிக்கை இருந்ததும் தெரிய வந்தது. மேலும் கேள்விகள் கேட்டதில் இருந்து அதை அறிய முடிந்தது. அஜோர் லுவாட்டா பற்றி மிகவும் மரியாதையாகப் பேசினாள். அது ஒரு வெப்பம் மற்றும் உயிருக்கான கடவுள். அந்த வார்த்தையே வேறு இரு வார்த்தைகளில் இருந்து உருவானது. லுவா என்றால் கதிரவன், ஆட்டா என்றால் முட்டை, உயிர், இளைய மற்றும் இனப்பெருக்கம் என்று அர்த்தம். லுவாட்டாவை அவர்கள் பல்வேறு வடிவங்களில் கும்பிடுகிறார்கள் என்றாள். நெருப்பு, கதிரவன், முட்டை, வெப்பம் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த பலவிதமான பொருட்களின் வடிவில் அதைக் கும்பிடுகிறார்கள். நான் தீ மூட்டும் போதெல்லாம் கவனித்து இருக்கிறேன். அஜோர் தனக்கு முன்னால் இருக்கும் காற்றில் இரு சம பக்க முக்கோணத்தை வரைவாள். அதே போல் முதன் முதலாகக் காலையில் கதிரவனைப் பார்த்த போதும் அதையே செய்வாள். முதலில் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நாங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்ததும் அவளது மத சம்பந்தமான மூடப் பழக்கங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள். ரோமன் கத்தோலிக்க மதத்தினர் சிலுவை வரைவது போல் அவள் முக்கோணம் வரைகிறாள். எப்பொழுதும் முக்கோணத்தின் சிறு பக்கம் மேலே இருப்பது போல் வரைவாள். இதையெல்லாம் விவரித்த பின் அவளது வளையல்கள் மீதிருக்கும் அலங்காரங்கள், கத்தியின் பிடி, அவளது வலது கால் முட்டிக்கு மேலிருக்கும் வளைந்த பட்டி போன்றவற்றைக் காண்பித்தாள். அதில் எல்லாம் கிட்டத்தட்ட அதே முக்கோணங்களின் வடிவமைப்பு இருந்தன. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவள் விவரித்த போது அதன் உண்மையான பொருள் சட்டென்று எனக்குப் புரிந்தது. நாங்கள் இப்போது பாண்ட்லுக்களின், ஈட்டி மனிதர்களின், நாட்டில் இருக்கிறோம். போவன் தன்னுடைய கதையில் இவர்கள் மேல் பேலியோலிதிக் காலத்தில் வாழ்ந்த க்ரோ-மெக்னன் என்ற மனிதர்கள் போல் இருப்பதாகக் கூறி இருந்தான். அதனால் அவர்களைப் பார்க்க நான் மிகவும் ஆவலாய் இருந்தேன். நானும் ஏமாற்றம் அடையவில்லை. அவர்களைப் பார்த்தேன். நாங்கள் ஸ்தோலுக்கள் நாட்டை விட்டுக் கிளம்பினோம் அதன் பின் காட்டு விலங்குகளின் தடுப்புகளைத் தாண்டி இரு நாட்கள் பயணித்தோம். ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமாகவே முகாமிட நினைத்தோம். ஏனென்றால் அங்கு கிழக்கும் மேற்குமாக மலைத்தொடர்கள் இருந்தன. அங்கு நிறைய குகைகள் இருக்கும் என்ற காரணத்தால்தான் அங்கு தங்க நினைத்தோம். நாங்கள் இருவரும் மிகக் களைப்பாக இருந்தோம். சிறிய குகைகளைப் பார்த்தவுடன் அதில் தடுப்புகள் எளிதில் அமைக்கலாம் என்று தோன்றியவுடன் அங்கே தங்கி மறு நாள் காலை செல்லலாம் என்று மனதில் தோன்றியது. ஒரு சில நிமிடங்களிலேயே அந்த மலைச் சரிவில் உயரத்தில் எங்களுக்கு ஏற்றாற் போல் இருந்த குகையைக் கண்டு பிடிக்க முடிந்தது. பக்கவாட்டில் நடந்து போகும் விளிம்பில் இருந்த அந்த குகை எங்கள் சமையல் நெருப்பை மூட்டுவதற்கும் ஏதுவாக இருந்தது. அதன் துளை மிகச் சின்னதாக இருந்ததால் படுத்து ஊர்ந்து கொண்டுதான் உள்ளே செல்ல முடிந்தது. ஆனால் உள்ளே மேற் கூரை உயரமாகவும் இடம் விசாலமாகவும் இருந்தன. ஒரு சுள்ளியைப் பற்ற வைத்துச் சுற்று முற்றும் பார்த்தேன். நான் பார்த்தவரை அந்த குகை மலைச் சரிவு வரை நீண்டிருந்தது. எனது கைத் துப்பாக்கி, சுழல் துப்பாக்கி மற்றும் குண்டுகள் நிறைந்த வார் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு அஜோரைக் குகையில் விட்டுவிட்டு நான் கீழே சென்று அடுப்பெரிக்கச் சுள்ளிகள் பொறுக்கச் சென்றேன். குகையை அடைவதற்கு முன் எங்களிடம் கறியும் பழங்களும் இருந்தன. என்னிடம் இருந்த குடுவையில் குடி நீரும் இருந்தது. அதனால் எங்களுக்குத் தேவையானது எரிபொருள் மட்டுமே. முடிந்த அளவு அஜோருக்கு ஒய்வு கொடுத்து விடுவது என் வழக்கம். அதனால் அவளைக் குகையில் விட்டு விட்டு நான் மட்டும் தனியே சென்றேன். அவள் மிகவும் களைப்பாக இருந்தாள். இருந்தாலும் கீழே விழுந்து விடும் வரை என்னுடன் வர அவள் நிச்சயம் விரும்புவாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு விசுவாசம். அவள் உலகிலேயே மிகச் சிறந்த தோழி. அவள் என் இனமாக இல்லையே என்று நினைக்கும் போது சில நேரம் மகிழ்ச்சியாகவும் சில நேரம் வருத்தமாகவும் இருந்தது. இருந்திருந்தால் நிச்சயம் அவள் மேல் காதல் வயப்பட்டிருப்பேன் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல். அதனால் நாங்கள் இருவரும் இரு ஆடவர்கள் போல் சுற்றினோம். இருவரும் அடுத்தவர் மேல் மரியாதையோடு வேறு எவ்வித உணர்வுகளும் இல்லாமல். மலையடிவாரத்தில் மூங்கில் மரங்கள் குறைவாக இருந்தன. அதனால் நான் இன்னும் சற்று தூரம் செல்ல நேர்ந்தது. கேஸ்பக் போன்ற ஆபத்துக்களும் மரணங்களும் நிறைந்த ஒரு உலகில் நான் செய்த அந்தச் செயல் எவ்வளவு மடத்தனம் நிறைந்தது என்பதைச் சற்று நேரத்தில் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மடத்தனம் இருக்கவே செய்கிறது. ஆனால் என்னிடம் அன்று அதிகமாகவே இருந்தது. ஏனெனில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் அந்தக் காட்டுக்குள் தனியாகச் சென்றேன். நான் அதற்கான விலையைக் கொடுக்க நேர்ந்தது, மக்கள் தங்கள் முட்டாள் தனத்திற்கு எப்போதும் கொடுப்பது போல. விறகுகள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்த போது நான் தலையைக் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரிய உருவம் என் மேல் விழுந்து அழுத்தியது போல் தோன்றியது. மண்டியிட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அந்த உருவத்தைப் பிடித்து விட்டேன். அவன் ஒரு நிர்வாணமான மனிதன். பாம்புத் தோலால் செய்த கோவணத்தைத் தவிர அவன் எதுவும் அணிந்திருக்கவில்லை. பாம்பின் தலை முழங்கால்கள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் ஒரு கல் பதிக்கப்பட்ட ஒரு கம்பு வைத்திருந்தான். கல்லால் ஆன கத்தியும் கோடரியும் கூட வைத்திருந்தான். அவனது கருப்பு முடியில் பலவித நிறங்களில் இறகுகள் இருந்தன. நாங்கள் முன்னும் பின்னும் முட்டிக் கொண்டிருக்கும் போது அவனை மெதுவாக என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருந்தேன். ஆனால் அவனது கூட்டாளிகள் சில பேர் ஓடி வந்து என்னைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் பின் புறமாக என் கைகளை நீண்ட விலங்குத் தோல்களால் கட்டி என்னை ஆழமாக நோட்டம் விட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் வளர்ச்சி அடைந்த மனித இனம் போலவே இருந்தார்கள். அவர்களில் சிலர் ஸ்தோலு மனிதர்கள் போல் நிறைய முடிகளோடு இருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்குப் பெரிய தலைகள் இருந்தன. அருவருக்கத்தக்க உடல் அமைப்புகள் இல்லை. ஸ்தோலு, போலு, ஆலு மனிதர்கள் போல் ஒரு சிலர் மனிதக் குரங்கு போல் இருந்தனர். அவர்கள் உடனே என்னைக் கொன்று விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் செய்யவில்லை. அதற்குப் பதில் அவர்கள் என்னிடம் விசாரணை செய்தார்கள். அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை என்று. ஏனெனில் நான் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள், கேலி செய்தார்கள். “காலுக்கள் உன்னை விரட்டி விட்டார்கள்.” என்று அவர்கள் கத்தினார்கள். “அங்கே நீ திரும்பிப் போனால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள். இங்கே இருந்தாலும் நீ இறந்து விடுவாய். ஏனெனில் நாங்கள் உன்னைக் கொன்று விடுவோம். இருந்தாலும் நாங்கள் நடனமாடக் போகிறோம். நீயும் எங்களுடன் சேர்ந்து ஆடு, உன் இறுதி ஆட்டத்தை.” அவர்கள் சொன்னது கொஞ்சம் நிம்மதி தருவதாய் இருந்தது. ஏனெனில் என்னை உடனே கொலை செய்யப் போவதில்லை. அதனால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். அவர்கள் என்னை மலைச்சரிவின் பக்கம் அழைத்துச் சென்றார்கள். அதை நெருங்கும் போது நான் கவனித்தேன், அஜோரின் ஒளிரும் கண்கள் அந்தக் குகையில் இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அவள் என்னைப் பார்த்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் மலையடிவாரத்தைச் சுற்றி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு தேன் கூடு போல் அவ்வளவு குகைகள் நிறைந்து இருந்தன. அங்கே அவர்களின் இன மக்கள் குகைகளிலும் தரையிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட நூறு பேர் இருப்பார்கள். நிறையக் பெண்கள் இருந்தார்கள். ஆனால் குழந்தைகள் யாரும் இல்லை. இதுவரை நான் பார்த்த கோடரி, ஈட்டி மனிதர்கள், ஆலுக்கள் மற்றும் மனிதக் குரங்குகளைக் காட்டிலும் அந்தக் பெண்களுக்கு மார்பகங்கள் அழகாக இருந்தன. சொல்லப் போனால் கேஸ்பக்கில் இருக்கும் மனிதர்களில் பரிணாமத்தில் கீழே இருக்கும் மனிதர்களில் பெண்களுக்கு இருக்கும் மார்பகங்கள் ரொம்பக் சின்னதுதான். ஆலுக்கள் மற்றும் மனிதக் குரங்குகளிடம் அவைகள் தெரிவதே இல்லை. போலு ஸ்தோலுக்களிடம் கொஞ்சம் வளர்ந்து இருக்கும். அதன் பின்னர் பரிணமித்தவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈட்டி மனிதர்களின் பெண்களிடம் பாதி வளர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு போதும் பால் கொடுத்ததற்கான அறிகுறிகளே தென்படவில்லை. குழந்தைகளே அங்கு தென்படாதபோது அது ஆச்சர்யமான விஷயமும் இல்லை. சில பாண்ட்லு பெண்கள் மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களில் பெண்கள் ஆண்கள் இருபாலரும் குண்டாய் இருந்தாலும் சமச்சீராய் இருந்தனர். அதில் சிலர் ஸ்தோலுக்கள் போல் இருந்தாலும் இன்னும் சிலர் நிச்சயம் அழகாய் இருந்தனர் அவர்களின் உடம்பில் முடி சிறிதும் இல்லாமல். ஆலுக்கள் அனைவரும் தாடியோடு இருந்தனர். போலுக்களில் பெண்களுக்கு அது மறைந்திருந்தது. ஸ்தோலு ஆண்களிடம் தாடி மிகவும் சிறியதாய் இருந்தது. பாண்ட்லுக்களிடம் அதுவும் இல்லை. அவர்களின் பெண்களின் உடம்பில் சிறிது முடிகள் காணப்பட்டன. அந்த இன மக்கள் என் மேல் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். பெரும்பாலும் எனது உடைதான் அவர்களை ஈர்த்தது. அதைப் போல் அவர்கள் பார்த்ததே கிடையாது. அவர்கள் என்னை இழுத்தார்கள், தள்ளி விட்டார்கள். சிலர் என்னை அடிக்கவும் செய்தார்கள். ஆனால் இன்னும் கொடூரமாக எதுவும் செய்யவில்லை. முடிகள் நிறைந்திருந்தவர்கள் மட்டும்தான் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இறுதியில் என்னைச் சிறை பிடித்தவர்கள் ஒரு பெரிய குகைக்கு என்னைக் கூட்டிச் சென்றார்கள். அதன் வாயிலில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. தரையில் ஒரே குப்பை மண்டிக் கிடந்தது. நிறைய விலங்குகளின் எலும்புகள் சிதறிக் கிடந்தன. இறந்த மனித உடல்களின் அழுகிய நாற்றம் மூச்சை அடைத்தது. அங்கே என் கைக் கட்டுகளை அவிழ்த்து விட்டு எனக்குச் சாப்பிடக் கொடுத்தார்கள். பாதி வெந்த நிலையில் இருந்த காட்டு ஆட்டின் கறியை கொஞ்சம் சாப்பிட்டேன். பாம்பு இறைச்சியில் செய்யப்பட்ட குழம்பு ஒன்று சாப்பிட்டேன். அதில் வட்ட வடிவில் நீளாமாய்க் கிடந்த மாமிசங்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது. சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் அந்த குகையில் இருந்த ஒரு கிணற்றை நோக்கி இழுத்துச் சென்றார்கள். அந்த குகையில் இருந்த பல இடுக்குகளில் தீப் பந்தத்தைச் செருகி வைத்திருந்தார்கள். அதன் சுவர்களில் ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. அதில் காட்டு ஆடுகள், பட்டாக்கத்தி புலி, செம்மான், குகைக் கரடி, ஹையனோடான் மற்றும் பல கேஸ்பக் விலங்குகள் வண்ண ஓவியங்களாய் இருந்தன. பெரும்பாலும் நான்கு விதமான பழுப்பு நிறத்தில் அவை பாறையில் கிறுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் அந்த மிருகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருந்ததால் மிக அருகில் சென்று பார்த்தால் ஒழிய அவை என்னென்ன விலங்குகள் என்று கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் அதில் ஓவியரின் கைவண்ணம் மிக அருமையாகவே இருந்தது போவன் இவர்களை க்ரோமெக்னான் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டி எழுதி இருந்தது போலவே. நியூ மற்றும் லே போர்டல் என்ற இடங்களில் உள்ள குகைகளில் இன்னும் அந்த மறைந்து போன மனிதர்களின் சித்திரங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. பாண்ட்லுக்களிடம் வில் அம்புகள் இருக்கவில்லை. அது ஒன்று மட்டும்தான் அவர்களின் மேற்கு ஐரோப்பிய வழித்தோன்றல்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது. என் நண்பர்கள் யாராவது கேஸ்பக்கில் எனது சாகசங்கள் பற்றிப் படிக்க நேர்ந்தால் நிச்சயம் அவர்கள் சலித்துப் போக மாட்டார்கள். அப்படிச் சலிக்க நேர்ந்தால், ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். எனக்குப் பின்னாளில் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் எனது நினைவுகளை நான் எழுதி வைத்திருக்கிறேன். அதனால் என் கண்களில் பட்ட எனக்கு பிடித்த விஷயங்களை நான் எழுதி வைக்கிறேன். வேறு யாரும் பொது மனிதர்கள் இதைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனது நண்பர்கள், வேறு சில ஆராய்ச்சியாளர்கள் இதைப் படிக்க நேரலாம். எனது தத்துவங்களுக்காக அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. என் தாழ்மையான விளக்கம் என்னவென்றால், அவர்கள் பார்ப்பது ஒரு விளக்க முடியாத எல்லையில்லாத ஒரு விஷயத்தினை விளக்க முற்படும் ஒரு சிறிய மனதின் தடுமாற்றங்களே. அந்தக் குகையின் ஒரு இடைவெளியில் என்னைக் கடத்தியவர்கள் நிறுத்தினார்கள். எனது கைகள் மீண்டும் கட்டப்பட்டன. இப்பொழுது என் கால்களும் கட்டப்பட்டன. அப்போது என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்போது, கேஸ்பக்கின் பல்வேறு இனங்களின் மொழிகளில் இருந்த ஒற்றுமையால் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிறதே என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவர்கள் நான் எங்கிருந்து வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் நான் சொல்வதன் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும். இறுதியில் அவர்கள் நாளை நடக்கும் இறுதி நடனத்துக்கு வருவதாகச் சொல்லி விட்டு என்னை அங்கே விட்டு சென்றார்கள். அவர்கள் தீப் பந்தத்தை எடுத்துச் செல்லு முன் நான் கவனித்தேன் அவர்கள் என்னை குகையின் இறுதி மூலை வரை எடுத்துச் செல்ல வில்லை. அங்கிருந்து ஒரு இருண்ட பாதை எனது சிறையைத் தாண்டி பாறைகளின் மையத்துக்கு இட்டுச் சென்றது. அவ்வளவு பிரமாண்டமான பாதாள அறை ஒன்றைப் பார்த்ததும் ஆச்சர்யப்படுவதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை. அதில் கிட்டத்தட்ட ஒரு நூறடி தூரம் ஏற்கெனவே பயணித்து வந்திருக்கிறேன். அதில் இருந்து இன்னும் பல பாதைகள் கிளைகளாய்ப் பிரிந்து செல்கின்றன. அந்த மலைப் பாறை முழுவதுமே ஒரு தேன் கூடு போன்று பல குகைகள் கொண்டதாய் இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் இந்த இன மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டனர். அதனால் அங்கு தொலைவில் இருக்கும் மற்ற குகைகளில் கொடூர விலங்குகள் இருக்கலாம். அவைகள் பாண்ட்லுக்கள் பயன்படுத்தாத வேறு பாதைகளைப் பயன்படுத்தி உள்ளே வந்து வெளியே செல்லலாம் என்பதை நினைக்கும் போதே நடுக்கமாய் இருந்தது. நான் தேவை இல்லாமல் எப்போதும் பயப்பட்டதே கிடையாது. இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையை எடுத்துக் கொண்டால் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். எனது நாடி நரம்புகள் ஆடித்தான் போய் விட்டன. நாளை ஏதோ ஒரு பெயர் தெரியாத வகையில் நான் இறக்கப் போகிறேன் அந்தப் காட்டு மனிதர்களின் கேளிக்கைக்காக. ஆனால் நாளைய தினத்தை விட இன்றுதான் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் போல் தெரிகிறது. கொடூரமான விலங்குகள் மற்றும் ராட்சத பல்லிகள் சுற்றும் ஒரு நிலத்தில் வாழும் மர்மமான பயங்கரங்கள் செய்யும் மனிதர்கள் நிறைந்த குகையில் கை கால்கள் கட்டுண்டு மையிருட்டில் இருப்பது எவ்வளவு கொடுமை. எந்நேரமும், அது இப்போதும் இருக்கலாம், எதாவது ஒரு சத்தமே எழுப்பாத விலங்கு ஒன்று எனது வாடையைக் கண்டுபிடித்து எதாவது ஒரு குகை வழியில் வந்து என்னைத் தாக்கலாம். எனது கழுத்தைத் தூக்கி அந்த கும்மிருட்டில் எதாவது ஒளிரும் இரு கண்கள் தெரிகிறதா என்று பார்த்தேன். அவைகள் என்னைச் சாப்பிட வந்த மிருகமாக இருக்கலாம். எனது துருப்பிடித்த மூளையின் கற்பனை அவ்வளவு உண்மையானது போல தோன்றியதால் எனது நெற்றியில் இருந்து குளிர்ச்சியான வியர்வை வழிந்தோடியது எனதருகில் ஒரு மிருகம் நின்று கொண்டிருப்பதாய் நினைத்து. மயானம் போன்ற அமைதியில் இருந்த அந்தக் குகையில் வேறெந்தச் சத்தமும் எழவில்லை பல மணி நேரம் கடந்த பின்னும். பல யுகங்கள் கடந்தது போல் இருந்த அந்தக் கால இடைவெளியில் எனது கற்பனையில் கடந்த கால நினைவுகள் வந்து போயின. எனது அனைத்து நண்பர்களின் கூட்டம் மற்றும் நாளை சிதைந்து போய் விடக்கூடிய பல நினைவுகள். எனது கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேர்ந்த எனது முட்டாள்தனத்தை நினைத்து நான் வருத்தம் அடைந்தேன். அவர்கள் இந்நேரம் எவ்வளவு தூரம் முன்னேறி இருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் இன்னும் அந்த மலைப் பாறைகளைத் தாண்டித்தான் இருப்பார்களா எனது வரவை நோக்கி. இல்லையேல் கேஸ்பக்கில் நுழைய எதாவது வழி கண்டு பிடித்திருப்பார்களா? பின்னதுதான் சரி என்று என் மனதுக்குத் தோன்றியது. ஏனெனில் எனது கூட்டாளிகள் தங்கள் கொள்கைகளில் இருந்து எளிதில் பின் வாங்கும் ஆட்கள் கிடையாது. அவர்கள் ஏற்கெனவே என்னைத் தேட ஆரம்பித்திருப்பார்கள். இருந்தாலும் என்னைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறு துப்பு கூடக் கிடைத்திருக்காது. நான் ரொம்ப சீக்கிரமாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். கேஸ்பக்கின் அந்த உள் நாட்டுக் கடலின் கரையில் சுற்றுவதற்கு ஒரு சாதாரண மனிதனால் முடியாது. அவ்வளவு ஆபத்துக்கள் இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நிழலிலும் நிறைந்து இருக்கும்போது சாதாரண மனிதர்கள் வாழ்வதே மிகவும் சிரமம்தான். அன்றில் இருந்தே நான் எனது நம்பிக்கையை இழந்து விட்டேன். இந்த நாட்டின் எல்லையை திரும்பவும் தொடுவேன் என்று சிறிதும் நம்பிக்கை இல்லை. ஒட்டு மொத்தத் தேடுதல் வேட்டையும் வீண் என்பது நன்றாகப் புரிந்து விட்டது. போவனும் அவனது மனைவியும் இத்துணைக் காலங்களாய்ப் பிழைத்திருக்கும் வாய்ப்பும் சிறிதும் இல்லை. ப்ராட்லி மற்றும் அவனுடன் சென்ற மாலுமிகளும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. என்னுடன் வந்த சிறந்த கூட்டாளிகள் ஒரு வேளை கடலின் வட திசைக்குள் நுழைந்து விட்டால் ஒரு நாள் அவர்கள் எனது விமானத்தின் உடைந்த பாகத்தை தென் திசையில் இருக்கும் அந்தப் பெரிய மரத்தின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண இயலும். அதற்கு வெகு முன்பாகவே எனது எலும்புகள் இந்தக் குகையின் குப்பைக் குவியல்களுக்கே நடுவில் கலந்து விடும். எனது கற்பனை மற்றும் உண்மையான எண்ணங்களுக்கு நடுவில் ஒரு நேர்த்தியான தெளிவான கண்களுடைய, வலிமையான நேரான அழகான பெண்ணின் உருவம் வந்து போனது. ஒரு ராணியின் மிடுக்கும் சிறுத்தையின் சீற்றமும் கொண்டவள் அவள். எனது நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்தான் இருந்தாலும் இந்த வினோதமான காட்டுக்கொடி இவளின் விதியை எண்ணித்தான் நான் மிகவும் கலங்கினேன். இந்த அதி பயங்கர உலகில் ஒரு வழிப்போக்கனின் மேல் இருக்கும் பாசத்தை விட அது ஒன்றும் அதிகமில்லை என்று இவளுக்காக பலமுறை என் மனதை நானே தேற்றி இருக்கிறேன். அவளது எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு அரற்றிய நேரத்தில் நான் எனது நிலைமையை மறந்தே போய் விட்டேன். எனது கட்டுக்களை அவிழ்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். இங்கே இருந்து தப்பித்தால்தான் அவளை உடனே காப்பாற்ற முடியும். அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் கொடூர விலங்குகளைப் பற்றிச் சிறிது மறந்திருந்தேன். அப்பொழுது வேறொரு பாதையில் மலைச்சரிவில் மையத்தில் இருந்து துல்லியமாகக் கேட்ட ஒரு சத்தம் என் நெஞ்சைப் பிசைந்தது. மெதுவாக முன்னேறி என்னை நோக்கி வரும் காலடி ஓசை. என் வாழ்க்கையில் இது போன்று ஒரு பயங்கரத்தை நான் அனுபவித்ததில்லை. கை கால்கள் கட்டுண்டு இருளில் பாண்ட்லுக்களின் குகையில் கிடக்க எதோ ஒரு விலங்கு என்னைப் புசிப்பதற்காக வரும் நொடியில் தோன்றும் அதி பயங்கரமான திகிலை என்றும் அனுபவித்ததில்லை. உடம்பெங்கும் வியர்வை மிகவும் குளிர்ச்சியாக வழிந்தோடியது. எனது தசைகள் அச்சத்தில் துடித்தன. அவை துடிப்பதை என்னால் துல்லியமாக உணர முடிந்தது. மிகவும் பரிதாபகரமான கோழைத்தனத்தின் அருகில் இதுவரை நான் சென்றதாய் ஞாபகம் இல்லை. இருந்தாலும் சாவதற்கு எனக்கு அச்சம் இல்லை. ஏனெனில் எப்போதோ நான் தொலைந்து விட்டதாக முடிவெடுத்து விட்டேன். கேஸ்பக்கில் ஒரு சில நாட்கள் இருப்பவர்களுக்கு நன்றாகப் புரிந்து விடும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்பது. நீரிலும் நிலத்திலும் காற்றிலும் உயிர்கள் நிறைந்து இருந்தாலும் மறு நொடியே வேறோர் உயிர் அவைகளைக் கபளீகரம் செய்து விடும். உயிர் இங்கு மிகவும் மலிவானது பூமியில் இருப்பதைப் போல். சொல்லப் போனால் இந்த அண்டத்தின் மிக மலிவான படைப்பு என்றால் அது உயிராகத்தான் இருக்கும். இல்லை, நான் சாவதற்கு அச்சப்படவில்லை. உண்மையில், நான் சாக வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் இந்த பயங்கரத்தில் இருந்து கொஞ்ச நேர வாழ்க்கையில் இருந்து விடுதலையாவது கிடைக்கும். அந்தக் கொடூர விலங்கு என்னை அடித்துக் கொன்று புசிக்க வரும் வரை காத்திருப்பதுதான் தாங்க முடியவில்லை. இப்பொழுது அது எனக்கு மிக அருகில் வந்து விட்டது. அதன் மூச்சுகாற்றைக் கூட என்னால் உணர முடிந்தது. பின் அது என்னைத் தொட்டுத் தடவிச் சட்டென்று தெரியாமல் தொட்டு விட்டது போல் பின்னால் பாய்ந்தது. வெகு நேரம் மயான அமைதியில் உறைந்தது அந்த குகை. பின் அந்த விலங்கின் நடமாட்டத்தை என்னால் உணர முடிந்தது. மீண்டும் என்னைத் தொட்டது. எதோ ஒரு முடியற்ற கை என் முகத்தைத் தடவிச் சென்று என் சட்டையின் கழுத்துப் பட்டையில் நின்றது. அதன் பின் மெதுவாக ஆனால் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளோடு ஒரு குரல் ஒலித்தது. “டாம்!” நான் கிட்டத்தட்ட மயக்கமடைந்து விட்டேன் என்று நினைக்கிறேன். அதன் எதிர் விளைவு அவ்வளவு ஆற்றல் மிகுந்ததாக இருந்தது. “அஜோர்!” என்று எப்படியோ சொல்லி விட்டேன். “அஜோர். என் அன்பே, இது நீயாக இருக்க முடியுமா” “டாம்” என்று கதறிக் கொண்டே என் மேல் விழுந்து அணைத்துக் கொண்டாள். அவளுக்கு அழத் தெரியும் என்று அன்றுதான் எனக்கு தெரிந்தது. அவள் பேசியபடியே எனது கட்டுக்களை அவிழ்த்தாள். பாண்ட்லுக்கள் என்னைப் பிடித்து இழுத்துச் செல்லும் வேளையில் காட்டுக்குள் இருந்து வெளியே வருவதை குகையில் இருந்து பார்த்ததாகச் சொன்னாள். அவர்கள் குகைக்குள் நுழையும் வரை எங்களைப் பின் தொடர்ந்ததாகச் சொன்னாள். அந்தக் குகையானது நாங்கள் இருந்த குகைக்கு அப்படியே எதிர் புறம் இருந்தது. அவர்கள் உறங்கும் வரை எதுவும் செய்ய இயலாது என்பதால் வேகமாக எங்கள் குகைக்குச் சென்று விட்டாள். மிகவும் சிரமப்பட்டு அவள் குகையை அடைந்து விட்டாள். வழியில் ஒரு மலைச் சிங்கம் கிட்டத்தட்ட அவளை வளைத்து விட்டது. அதைக் கேட்டதும் என் உடம்பு நடுங்கியது. எனக்காக எவ்வளவு பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறாள். அவள் நடு இரவு வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாள். அப்போதுதான் பெரும்பாலான விலங்குகள் தங்கள் இரையை வேட்டையாடி முடித்திருக்கும். அதன் பின் நான் சிறை பட்டிருக்கும் குகைக்கு வந்து என்னை விடுவிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள். எனது சுழல் மற்றும் கைத் துப்பாக்கிகளை அவள் பயன்படுத்த முடியும் என்று சொன்னாள் நான் உபயோகப்படுத்தும் போது கவனித்திருந்ததால், என்று என்னிடம் விவரித்தாள். பாண்ட்லுக்களைப் பயமுறுத்தி என்னை விடுவிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தாள். மிகவும் துணிச்சலான பெண்! தன் உயிரையே பணயம் வைத்து என்னைக் காப்பாற்ற வந்திருக்கிறாள். ஆனால் எங்கள் குகைக்கு வந்த சிறிது நேரத்தில் தூரத்தில் கேட்ட சத்தத்தை வைத்து பாண்ட்லுக்கள் வேறு ஏதோ வாயில் வழியாக அதே குகைக்குள் நுழைந்திருக்கலாம் என்று நினைத்தாள். அங்கிருந்து வளைந்து செல்லும் பாதைகள் வழியாக அந்தக் கும்மிருட்டில் எப்படியோ என்னை வந்து கண்டு பிடித்து விட்டாள். அவள் இங்கு வருவதற்கு மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும் பள்ளங்கள் நிறைந்தது இந்தக் குகை. உண்மையில் மூன்று முறை அவ்வாறு பள்ளங்களில் விழுவதில் இருந்து தப்பித்து வந்திருக்கிறாள். வேறு வலி இல்லாமல் பயங்கரமான அந்த இடங்களில் தன உயிரைப் பணயம் வைத்துக் கடந்து வந்திருக்கிறாள். அவள் சொல்லச் சொல்ல என் உயிரே நடுங்கியது எனக்காக இவ்வளவு தூரம் பணயம் வைத்து வந்ததால். எனது துப்பாக்கிகளையும் கையோடு தூக்கி வந்தது அவளது ஆபத்துக்களை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கும். ஏனெனில் அதையெல்லாம் தூக்கிச் சென்று அவளுக்குப் பழக்கம் இருந்திருக்காது. நான் அவள் முன் மண்டி இட்டு அவளது கையில் முத்தமிட்டிருப்பேன் மரியாதையின் அடையாளமாக. அதைச் சொல்வதிலும் எனக்குக் கூச்சம் இல்லை. ஆம் அவள் என் கட்டுக்களை அவிழ்த்த பின் அவளது சாகசங்களைக் கேட்டபின் அதேதான் செய்தேன். மிகத் துணிச்சலான அஜோர்! கடந்தகால இருண்ட உலகில் இருந்து ஓர் அதிசயமான பெண். அவளை இதுவரை யாரும் முத்தமிட்டிருக்கவில்லை. ஆனால் அதில் இருந்து அன்பின் வெளிப்பாட்டைப் புரிந்து கொண்டிருக்கிறாள். ஏனெனில் அவளும் தன் உதடுகளை வைத்து என் முன்நெற்றியில் முத்தமிட்டாள். எனக்குள் திடீரென்று உத்வேகம் பிறந்து அவளை அப்படியே கட்டியணைத்து முத்த மழை பொழிய வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஆனால் அது அவள் தன் உயிரையே துச்சமென செய்த தியாகத்திற்கு இழுக்காகி விடும். இல்லை, அஜோர் தன் தாயிடம் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வோடு என்னிடமும் இருக்க வேண்டும். அவளுக்குத் தாய் இருக்கிறாளா என்பதே இப்போது எனக்குச் சந்தேகமாக இருந்தது. அவள் குழந்தையாய் இருந்த போது தன் தாய் தன்னை மறைத்து வைத்தாள் என்று சொல்லி இருக்கிறாள் ஒரு முறை. அதனால் தாய் என்ற ஒரு உறவு கேஸ்பக்கில் இருக்குமா என்றே சந்தேகம்தான். போலு க்ரோலு இவர்களின் மொழியில் அம்மா என்பதற்கு ஒரு வார்த்தையும் இல்லை. அவர்கள் ஆட்டா, கோர் ஸ்வஜோ போன்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். இனப்பெருக்கம், ஆதியில் இருந்து என்பதுதான் அதன் பொருள். அப்போது தென் திசையில் கை காட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் தாய் என்பவர் இல்லை. அதன் பின் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் குகைக்கு வந்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அது எங்கள் குகை இல்லை. அதன் பின் தான் புரிந்தது மிகவும் சிக்கலான தேன் கூடு போன்ற குகைகளில் நாம் தொலைந்து விட்டோம் என்று. அதன் பின் வந்த வழியே சென்று ஆரம்பித்த இடத்திற்கே செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் இன்னும் அதிகமாகக் குழம்பிப் போய்நின்றோம். அஜோர் மிகவும் திகைத்துப் போய் விட்டாள். எங்கள் நிலையை எண்ணிய பயத்தால் அல்ல. கேஸ்பக்கில் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு குணாதிசயமான திசை காட்டியோ உதவியாளரோ இல்லாமல் எங்கும் செல்லக் கூடிய குணம் அன்று தனக்கு உதவவில்லையே என்று திகைத்தாள். நாங்கள் இருவரும் கை கோர்த்துக் கொண்டு ஊர்ந்தபடி சென்றோம் குகையில் இருந்து வெளியேற எதாவது வழி கிடைக்குமா என்று பார்த்தபடியே. இருந்தாலும் ஒவ்வொரு அடியும் எதாவது ஒரு பள்ளத்தில் இழுத்து மலையடிவாரத்தில் கொண்டு போய் விட்டு விடலாம் என்ற புரிதலும் மனதின் ஓரத்தில் இருந்தது. இல்லையேல் சுற்றிச் சுற்றிக் களைத்து இறந்தும் போக நேரலாம். அந்த கும்மிருட்டு! கிட்டத்தட்ட தெரிவது போல் இருந்தாலும் மிகவும் மோசமாக இருந்தது. என்னிடம் தீக் குச்சிகள் இருந்தன. மிகவும் கடினமான சூழலில் ஒன்றிரண்டு குச்சிகள் பொருத்தினேன். இருந்தாலும் தேவைப்படும் என்று பத்திரப் படுத்தி வைத்துள்ளேன். அதனால் மெதுவாக ஊர்ந்து கொண்டே சென்றோம். எங்களால் முடிந்த அளவு ஒரே திசையை நோக்கிச் சென்றோம் எதாவது ஒரு வழி நம்மை வெளி உலகிற்கு இட்டுச் செல்லும் என்ற அதீத நம்பிக்கையில். நான் ஒரு முறை தீக்குச்சியைப் பற்ற வைத்தபோது பாறைகளின் சுவற்றைப் பார்த்தேன். அதில் ஓவியங்கள் எதுவுமில்லை. மேலும் மனிதர்கள் இவ்வளவு தூரம் மலைக் குகைகளில் வந்ததற்கான தடயங்களே இல்லை. காட்டு விலங்குகளின் பாதச் சுவடுகளும் கிடைக்கவில்லை. நாங்கள் எவ்வளவு நேரம் அந்த கும்மிருட்டான பாதைகளில் சுற்றிக் கொண்டிருந்தோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் கடினம். கிட்டத்தட்ட செங்குத்தான சரிவில் ஏறினோம் எங்களுக்குக் கீழே அடியே காண முடியாத பள்ளம் இருக்கிறது என்ற நினைப்பில். எப்போது அதில் விழுவோம் என்றே தெரியாமல் சென்று கொண்டே இருந்தோம். மேலும் தாகத்தினாலும் பசியினாலும் எப்போதும் விழுந்து இறந்து விடும் ஆபத்தும் இருக்கிறது. இவ்வளவு சிரமங்களுக்கு நடுவிலும் அஜோர் தவிர்த்து வேறு யாராவது உடன் இருந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கும். அவளது தைரியம் குறை சொல்லாமல் ஏற்கும் மனோபாவம் விசுவாசம் யாருக்கு வரும். அவள் நிச்சயம் தளர்ந்து போய் தாகத்திலும் பசியிலும் துவண்டு போய் இருப்பாள். இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியோடு பயணித்தாள். அவளுக்கு பயமாய் இருக்கிறதா என்று கேட்டேன். இங்கே வியரூ வந்து கூட்டிச் செல்ல முடியாது என்று பதில் அளித்தாள். அப்படியே பசியில் இறந்தாலும் நான் அருகில் இருப்பதால் கவலை இல்லை என்றாள். அப்படிப்பட்ட இறப்பில் அவளுக்கு நிம்மதியே என்றும் கூறினாள். அப்படி அவள் சொன்னது எனக்கு ஒரு நாய் தனது உரிமையாளனுக்குக் காட்டும் விசுவாசம் போல் இருந்தது. என்னால் சத்தியம் செய்ய முடியும் அதைத் தவிர வேறு எண்ணம் தோன்றவில்லை என்று. நாங்கள் அந்தக் குகையில் சிறைப்பட்டது ஒரு நாளா இல்லை ஒரு வாரமா என்பது தெரியாது. இப்பொழுதும் கூட எனக்குத் தெரியாது. மிகவும் பசியாகவும் களைப்பாகவும் இருந்தது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. இரு முறை நாங்கள் உறங்கினோம். அதன் பின் எழுந்தோம் ஒவ்வொரு முறையும் பலவீனமாய். சில இடங்களில் அந்த குகைப் பாதைகள் தொடர்ச்சியாக மேலே சென்ற வண்ணம் இருந்தன. அது எங்கள் இதயத்தை உடைப்பது போல் இருந்தது ஏற்கெனவே நாங்கள் இருந்த நிலையில். இருந்தாலும் அதில் இறுக்கமாகப் பிடித்தபடி சென்றோம். சில நேரம் தடுமாறிக் கீழே விழுந்தோம். எங்கள் உடம்பைத் தூக்குவதற்கே சக்தி இல்லாமல் விழுந்தோம். இறுதியில் எப்படியோ எழுந்து நின்றோம். முதலில் எங்கே சென்றாலும் கைகோர்த்தபடியே சென்றோம் பிரிந்து விடாமல் இருக்க. ஆனால் அஜோர் வெகு வேகமாகத் தன் ஆற்றலை இழந்து விட்டபடியால் அவளை இடுப்பில் அணைத்தபடி சென்றேன். நான் இன்னும் எனது ஆயுதங்களை சுமந்தபடியேதான் இருந்தேன். ஆனால் துப்பாக்கிகள் முதுகில் தொங்கியபடியால் எனது கைகள் சும்மாதான் இருந்தன. நானும் மிகவும் களைத்தபோது அஜோர் ஆயுதங்களைக் கீழே எறிந்து விடச் சொன்னாள். ஆனால் அது இல்லையென்றால் கேஸ்பக்கில் தற்கொலைக்குச் சமம் என்று கூறி விட்டேன். அவைகளுடன் இங்கேயே இறப்பது ஒரு வகையில் உத்தமம். ஒரு வேளை நாம் தப்பித்து வெளியே செல்ல நேர்ந்தால் அது நிச்சயம் உதவும். ஒரு சமயம் அஜோரால் நடக்கவே முடியவில்லை. அப்போது நான் அவளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். அவள் தன்னை இறக்கி விடும்படிக் கெஞ்சினாள். வெளியேறும் வழி கிடைத்தபின் தன்னை வந்து கூட்டிச் செல்லும்படிக் கூறினாள். ஆனால் அவளுக்குத் தெரியும் எனக்குத் தெரியும் என்பதும் அவளுக்குத் தெரியும் அவளை இங்கே விட்டுச் சென்றால் திரும்ப வந்து அவளைக் கண்டுபிடிப்பது என்பது இயலாது என்று. இருந்தாலும் அவள் வற்புறுத்தினாள். ஒன்றிரண்டு அடிகள் கூட எடுத்து வைப்பதற்கு உடம்பில் ஆற்றல் இல்லை என்னிடம். அதன் பின் உட்கார்ந்து ஐந்து பத்து நிமிடங்கள் இளைப்பாறிய பின் தான் மீண்டும் செல்லவே முடியும். ஆனால் எந்த உந்து சக்தி என்னை உந்தித் தள்ளியது என்று சொல்ல முடியவில்லை. என் முயற்சி நிச்சயம் தோற்றுப் போகும் என்று தெரிந்தும் நான் நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நாங்கள் இறந்து விட்டதாகவே எண்ணிக் கொண்டு விட்டேன். இருந்தாலும் நான் இழுத்துக் கொண்டே சென்றேன் ஒரு கட்டத்தில் எழுந்து நிற்க முடியாமல் போகும் வரை. அதன் பின் ஒவ்வொரு இன்ச்சாகத் தவழ்ந்து கொண்டே இருந்தேன் அவளையும் இழுத்துக் கொண்டு. அவளது இனிமையான குரல் பலவீனத்தால் இப்போது கேட்கவே இல்லை. என்னை மட்டும் காப்பாற்றிக் கொள் என்று கெஞ்சிய சத்தமும் இப்போது முனகலாய் வந்தது. அவள் என்னைப் பற்றி மட்டுமே நினைத்தாள். நிச்சயம் அவளை என்னால் அங்கே விட்டுச் செல்ல முடியாது நான் எவ்வளவுதான் அப்படியே நினைத்திருந்தாலும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அவளை விட்டுச் செல்ல வேண்டுமென்றே நினைக்கவில்லை. அதன் பின் அவளிடம் நான் சொன்னது வெகு எளிமையாக யதார்த்தமாக வந்து விழுந்தது என் உதடுகளில். அதைத் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது. சாவு இவ்வளவு அருகில் இருக்கும்போது மக்கள் சாகசம் செய்யத் துணிவார்களா. “அப்படி ஒரு நிலையில் நான் வெளியேறுவதையே விரும்பவில்லை, அஜோர்” என்றேன். நாங்கள் ஒரு பாறையில் இளைப்பாறிக் கொண்டிருந்தோம். அஜோர் என் மீது சாய்ந்து இருந்தாள். அவள் தலை என் நெஞ்சில் சாய்ந்திருந்தது. அவளின் அழுத்தத்தை என்னால் உணர முடிந்தது. ஒரு கை பலவீனமாக என் கையைத் தடவிக் கொண்டிருந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. வார்த்தைகளும் தேவைப்படவில்லை. சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டு நாங்கள் மீண்டும் எங்கள் தேவை இல்லாத பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். ஆனால் நான் வெகு வேகமாக பலவீனப்படுவது போல் உணர ஆரம்பித்தேன். அவ்வளவுதான் முடிந்தது என்று நினைத்தேன். “இதற்கு மேல் முடியாது, அஜோர். என்னால் முடிந்த அளவு வந்து விட்டேன். சிறிது நேரம் உறங்கினால் ஒரு வேளை மீண்டும் செல்ல முடியும்.” என்றேன். ஆனால் அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும். முடிவு நெருங்கி விட்டது. “சரி. உறங்கு” என்றாள் அஜோர். “நாம் இருவரும் உறங்குவோம்–இறுதியாய்” அவள் என்னருகில் நகர்ந்து வந்தாள். அந்தக் கடினமான பாறையில் என் கையைத் தலையணை போல் வைத்து அவளது தலைக்கு அடியில் வைத்தேன். மீதி இருக்கும் சிறிது ஆற்றலைப் பயன்படுத்தி அவள் உதடுகளில் என் உதடுகளைப் பதித்துச் “சென்று வருகிறேன்” என்று முணுமுணுத்தேன். அதன் பின் என் நினைவு மங்கியது. அதன் பின் ஒரு கொடூரமான கனவு கண்டு சட்டென விழித்தேன். அந்த கனவில் நான் முழுகிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டேன். மங்கிய பகல் வெளிச்சத்தில் குகையில் இருப்பது போலவும் ஒழுகிக் கொண்டிருக்கும் நீர் வழிந்து நானும் அஜோரும் படுத்திருக்கும் இடத்தில் ஒரு சிறு குளம் கட்டி இருப்பது போலவும் தோன்றியது. நான் சட்டென்று விழித்து அஜோரைப் பார்த்தேன் அது என்ன நிலையைக் காட்டும் என்ற அச்சத்தில். ஆனால் அவள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் மெதுவாக. அதன் பின் அந்த ஒளி எங்கிருந்து வந்திருக்கும் என்று ஆராயத் தொடங்கினேன். அது நாங்கள் இருந்த பாதையின் ஒரு வளைவில் இருந்து வந்தது. அதன் கீழே பெரிய செங்குத்தான பள்ளம். இரவில் நாங்கள் இருவரும் இதைத் தவிர்க்கத்தான் பலவீனமாய் இருந்தோமோ என்று சந்தோஷப்பட்டேன். ஒரு வேளை நாங்கள் எங்களுக்கு முன் இருக்கும் எந்தப் பாதையிலும் இன்னும் சற்று தூரம் சென்றிருந்தால் அதுதான் எங்கள் இறுதிப் பயணமாய் இருந்திருக்கும். இப்போதும் கூட நாங்கள் இறந்து போகலாம். ஆனாலும் பகல் வெளிச்சத்தில் இறப்போம். இந்த கொடூரமான கும்மிருட்டை விட இது சற்று மேல். நான் எழுந்து பார்த்தேன். உறக்கம் எனக்குச் சற்று ஆற்றல் கொடுத்திருந்தது. அங்கிருந்த நீரைக் குடித்த பின் இன்னும் உற்சாகம் அடைந்தேன். அவள் தோளைத் தட்டி எழுப்பினேன். ஆனால் அவள் கண்களைத் திறக்கவில்லை.நான் சிறிது நீரைக் கைகளில் எடுத்து அவளது உதடுகளில் வழிய விட்டேன். அது அவளது உயிரை க் கொஞ்சம் மீட்டுக் கொடுத்தது. அதனால் கண்களைத் திறந்து என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “என்னாச்சு. நாம் எங்கிருக்கிறோம்.” என்றாள். “நாம் இந்தப் பாதையின் முடிவில் இருக்கிறோம்.” என்று பதில் சொன்னேன். “பகல் வெளிச்சம் வெளி உலகில் இருந்து உள்ளே சற்று தூரத்தில் வருகிறது. நாம் பிழைத்து விட்டோம் அஜோர்” அவள் எழுந்து அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அதன் பின் பெண்ணுக்கே உரிய உணர்ச்சியில் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். அது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான். ஆனால் அதன் பின் இன்னும் பலவீனப்பட்டுத்தான் போனாள். நான் அவளைக் கைகளில் அணைத்துத் தேற்றினேன் என்னால் முடிந்த அளவு. இறுதியில் என் உதவியுடன் அவள் எழுந்து நின்றாள். என்னைப் போல் அவளும் உறக்கத்தில் இருந்து எழுந்ததால் சிறிது ஆற்றல் கிடைத்திருந்தது. இருவரும் தட்டுத்தடுமாறி வெளிச்சத்தை நோக்கிச் சென்றோம். அந்தப் பாதையின் முதல் திருப்பத்தில் ஒரு ஓட்டை இருந்தது அதன் பின் பளிச்சென்ற ஆகாயம். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு நீர் கசிந்து எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் உதவியது. குகை ஈரமாகவும் குளிர்ச்சியாகவும் மாறி விட்டது. ஆனால் வாசலுக்கு அருகில் வரும்போது கேஸ்பக்கின் சூடான காற்று எங்களை வருடியது. அந்த மழை நீரும் கூட குகையின் இருட்டான பகுதியை விட வெது வெதுப்பாய் இருந்தது. இப்போது நீர் கிடைத்தது, வெப்பம் கிடைத்தது. கேஸ்பக் இன்னும் சற்று நேரத்தில் நிச்சயம் இறைச்சியும் பழங்களும் கொடுக்கும். ஆனால் நாங்கள் வெளியில் வந்து பார்த்தபோது இந்த மலை உச்சியில் இருந்தோம். அங்கே விலங்குகள் கிடைப்பது அபூர்வம். இருந்தாலும் அங்கு மரங்கள் இருந்தன. அதில் இருந்து கிடைத்த பழங்களை வைத்து எங்கள் உண்ணா நோன்பை முடித்து வைத்தோம். அத்தியாயம் - 4 நாங்கள் அந்த மலை உச்சியில் இரு நாட்கள் ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றினோம். ஒரு சிறிய விலங்கு ஒன்றும் கண்டோம். அதனால் இறைச்சியும் கிடைத்தது. எங்கள் தாகத்தைத் தணிக்க மழை நீர்க் குட்டையும் இருந்தது. நாங்கள் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே கதிரவன் எட்டிப் பார்த்தான். அதன் வெம்மையில் சமீபத்திய நிகழ்வுகளினால் ஏற்பட்ட எங்களைப் போர்த்தி இருந்த சோர்வுகளையும் உதறி விட்டோம். மூன்றாவது நாள் காலையில் கீழிருக்கும் பள்ளத்தாக்கிற்குச் செல்வதற்கு வழி கிடைக்குமா என்று ஆராய ஆரம்பித்தோம். எங்களுக்கு நேர் கீழே வடக்கில் ஒரு பெரிய குளம் இருந்தது. அதில் பாண்ட்லு பெண்கள் ஆழமில்லாத இடத்தில் அமர்ந்து இருந்தது நன்றாகத் தெரிந்தது. மலை அடிவாரத்திற்கு மிக அருகில் பாண்ட்லு ஆண்கள் கூட்டமாக வடக்கு நோக்கி வேட்டையாடச் சென்று கொண்டிருந்தார்கள். மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. உள்நாட்டுக் கடலின் ஒரு கரை மேற்கில் மங்கலாகத் தெரிந்தது. தென்மேற்கில் உள்ள பெரிய தெற்குத் தீவு எங்கள் முன் தெளிவாகத் தெரிந்தது. வட கிழக்கில் அஜோர் நடுக்கத்துடன் கூறிய வியரூவின் உலகமான ஊவோ தெரிந்தது. அது ஏரியின் மறு முனையில் இருந்ததால் மிகத் தெளிவாகத் தெரியவில்லை. அது கிட்டத்தட்ட அறுபது மைல் தொலைவு இருக்கும். நாங்கள் இருந்த உயரத்தில் வளி மண்டலம் தெளிவாக இருந்தால் அது தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால் கேஸ்பக்கின் காற்று ஈரப்பதத்துடன் கனமாக இருந்ததால் தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாகத் தெளிவற்றதாய் இருந்தன. ஊவோவில் இருந்து கிழக்கில்தான் தனது தேசம், அதாவது காலுக்களின் தேசம், இருப்பதாக அஜோரும் தெரிவித்திருந்தாள். அந்த மலைச் சரிவின் தென் எல்லையைச் சுட்டிக்காட்டி அதன் தெற்கில்தான் க்ரோலுக்களின், வில் அம்பு மனிதர்களின், தேசம் இருக்கிறது என்று சொன்னாள். நாங்கள் பாண்ட்லு மற்றும் க்ரோலு மக்களின் நாடுகளைக் கடந்துதான் அவள் இடத்திற்குச் செல்ல முடியும். அதாவது 35 மைல் எதிரி நாடுகளின் நிலத்தைக் கடக்க வேண்டும். அதில் நினைத்தே பார்க்க முடியாத அபாயங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலும் நமது சக்திக்கு மீறியவை கூட இருக்கின்றன. எனது விமானம் மட்டும் இருந்திருந்தால் இருபது நிமிடங்களில் அவளது இடத்திற்குச் சென்று விட முடியும். இறுதியில் ஒரு வழி கண்டுபிடித்தோம். மலைச் சரிவில் இருந்து இறங்கி அது நேராக ஒரு ஒற்றையடிப் பாதையில் வழுக்கி விட்டது. அந்தப் பாதையில் ஏதோ ஒரு காலத்தில் விலங்குகள் நடமாட்டம் இருந்தது போல் தடயங்கள் இருந்தன. நான் முதலில் அஜோரை இறக்கி விட்டேன். அதன் பின் நானும் சறுகினேன். அப்படிச் சறுக்கியபோது என் தலைமுடி நட்டுக் குத்தலாக விறைப்பாய் நின்றது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அந்த வீழ்ச்சி மிகவும் உயரமாய் இருந்தது. அதுவும் போக அந்த ஒற்றையடிப் பாதையும் மிகவும் குறுகலாக இருந்தது. அதில் இருந்து தவறினால் நேராகக் கீழிருக்கும் பாறையில் மோத வேண்டியதாய் இருக்கும். ஆனால் அங்கு அஜோர் என்னைப் பிடித்துச் சரியாக வழி நடத்தியதால் நான் நிதானமாகச் செல்ல முடிந்தது. அதன் பின் அங்கிருந்து நாங்கள் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். அதன் பின்னும் இரண்டு மூன்று மோசமான இடங்கள் இருந்தன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அவ்வளவு கடினமாக இல்லை அந்த மலை இறக்கம். நாங்கள் பாண்ட்லுக்களின் குகையின் மேற் பகுதியை அடைந்து விட்டோம் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல். இங்கிருந்து மிகவும் மெதுவாகச் சென்றோம் அவர்களின் கூட்டத்தில் இருந்து யாரும் குறுக்கிடக் கூடாது என்பதற்காக. பாண்ட்லு குகைகளில் பாதி தூரத்தைக் கடந்து வந்திருப்போம். அப்போது ஒரு மிகப் பெரிய உருவம் எங்கள் முன் வந்து நின்றது அங்கிருந்து சிறிதும் முன்னேற முடியாமல். “யார் நீங்கள்” என்று கேட்டான். அவன் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டான். எனக்கும் அவன் யார் என்று தெரிந்து விட்டது. அன்று என்னைக் கடத்திச் சென்று குகையில் அடைத்துக் கைகளைக் கட்டி விட்டவர்களில் ஒருவன் இவன். என்னைப் பார்த்த பிறகு அவனது பார்வை அஜோரிடம் சென்றது. அவன் ஒரு நல்ல மனிதனாகத் தெரிந்தான். அவனது கண்கள் தெளிவான தீர்க்கமானதாக இருந்தன. நல்ல நெற்றியும் உடல் வாகும் கொண்டவனாக இருந்தான். ஏறக்குறைய நான் பார்த்ததிலேயே கேஸ்பக்கின் பரிணாமத்தில் மேலோங்கியவனாக இருந்தான், அஜோரைத் தவிர்த்து. “நீ உண்மையான காலு.” என்று அஜோரைப் பார்த்துச் சொன்னான். “ஆனால் இவன் வினோதமான வார்ப்பாக இருக்கிறான். காலுவின் முகம் இருக்கிறது. ஆனால் அவனது ஆயுதங்களும் உடம்பில் அணிந்திருக்கும் வினோதமான தோல்களும் காலுக்கள் போல் இல்லை. கேஸ்பக் போலும் இல்லை. யார் இவன்?” “அவன் டாம்” என்று சுருக்கமாக அஜோர் சொன்னாள். “அப்படி யாரும் இங்கு இல்லை.” என்று தீர்க்கமாகப் பதில் கூறினான் அவனது ஈட்டியை எங்கள் முன் குத்துவது போல் நீட்டிக் கொண்டு. “என் பெயர் டாம்” என்று நான் பேச ஆரம்பித்தேன். “நான் கேஸ்பக் நாட்டின் எல்லை தாண்டிய ஒரு தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன்.” அது அவனைச் சமாதானப் படுத்தும் என்று எண்ணினேன். நானும் எனது குண்டுகளைச் செலவு செய்ய விரும்பவில்லை. மேலும் அந்தச் சத்தத்தில் அவனது கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் விரும்பவில்லை. “நான் அமெரிக்காவில் இருந்து வருகிறேன். அதைப் பற்றி நீ கேள்விப் பட்டிருக்க மாட்டாய். எனது நாட்டில் இருந்து வந்து காணாமல் போன வேறு சிலரைத் தேடி நான் இங்கு வந்திருக்கிறேன். உன் மீதோ உனது மக்கள் மீதோ எனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாம் நம் வழியில் அமைதியாகப் போய் விடுவோம்” “நீ அங்கு போகிறாயா?” என்று வட திசை நோக்கிக் கை காட்டியபடியே கேட்டான். “ஆம்” என்று நான் பதில் அளித்தேன். அவன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி. இறுதியாகப் பேச ஆரம்பித்தான். “அது என்ன?” என்று கேட்டான். “அப்புறம் அது என்ன?” என்று முதலில் என் சுழல் துப்பாக்கியைக் காட்டினான் பின் எனது கைத் துப்பாக்கியைக் காட்டினான். “அவைகள் ஆயுதங்கள்” என்றேன். “தூரத்தில் இருப்பவர்களைத் தாக்கக் கூடிய ஆயுதங்கள்” நான் தூரத்தில் இருந்த குளத்தில் நீராடிக் கொண்டிருந்த பெண்களைச் சுட்டிக்காட்டினேன். “இதை வைத்து” எனது துப்பாக்கியை ஆட்டி “அங்கிருக்கும் எத்தணை பெண்களை வேண்டும் என்றாலும் என்னால் கொல்ல முடியும் இங்கிருந்து அசையாமல்.” அவன் புரியாமல் விழித்தான். இருந்தாலும் நான் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன். “இதை வைத்து” என்று எனது சுழல் துப்பாக்கியை வலது உள்ளங்கையால் பிடித்தபடியே சொன்னேன் – “அங்கே தூரத்தில் இருக்கும் உங்கள் வீரர்களைக் கொல்ல முடியும்” என்று எனது இடது கையை தூரத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் சிறிய உருவங்களாய் வடக்கில் தெரிந்த அவனது கூட்டாளிகளைச் சுட்டிக் காட்டினேன். அவன் அதைக் கேட்டு பலமாய் நகைத்தான். “செய்” என்று ஏளனமாய்க் கத்தினான். “அதன் பின் நீ சொல்லும் வினோதமான கதைகள் அனைத்தையும் நான் நம்புகிறேன்” “ஆனால் நான் அவர்களில் யாரையும் கொல்ல விரும்பவில்லை.” என்றேன். “நான் ஏன் கொல்ல வேண்டும்” “ஏன் கூடாது” என்று கேட்டான். “அவர்கள் உன்னைச் சிறை பிடித்தபோது நிச்சயம் உன்னைக் கொன்றிருப்பார்கள். இப்போதும் உன்னைப் பிடித்தால் நிச்சயம் கொன்று போட்டு விடுவார்கள். அதே நேரத்தில் உன்னைச் சாப்பிட்டும் விடுவார்கள். ஆனால் அதே நேரத்தில் நீ ஏன் அதை முயற்சி செய்ய மாட்டேன் என்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் நீ சொன்னது அனைத்தும் பொய். உனது ஆயுதம் தூரத்தில் இருந்து கொல்லாது. அது ஒரு விந்தையான இரும்புக் கம்பி அவ்வளவுதான். எனக்குத் தெரிந்தவரையில் நீ ஒரு கீழான போலுவாகத்தான் இருக்க முடியும்.” “நான் உனது ஆட்களையே கொல்ல வேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்?” என்று கேட்டேன். “அவர்கள் இனி மேலும் எனது ஆட்கள் கிடையாது” என்று பெருமிதமாகச் சொன்னான். “நேற்றிரவு, நள்ளிரவில், எனக்கு அழைப்பு வந்தது. இப்படி என் தலைக்கு வந்தது” என்று சொல்லி அவன் தன் இரு கைகளைத் தட்டினான். “அதனால் நான் விழித்தேன். அதற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். இன்று நான் ஒரு க்ரோலுவாகி விட்டேன். இன்று நான் காஸ்லூப்பாக் செல்கிறேன். (மனிதர்கள் யாருமில்லாத நாடு.) க்ரோலுவிற்கும் பாண்ட்லுவிற்கும் நடுவில். அங்கே நான் எனது அம்பு வில் மற்றும் கேடயத்தைப் பயன்படுத்துவேன். செம்மான்களை வேட்டையாடுவேன். அதன் தோலில் செய்த மேலாடையைப் போட்டுக் கொள்வேன். அதுதான் எங்கள் சொத்துக்களின் அடையாளம். இதெல்லாம் செய்தபின் எங்கள் க்ரோலு தலைவரிடம் செல்வேன். அவர் நிச்சயம் மறுத்துப் பேச மாட்டார். அதனால்தான் அந்தக் கீழான பாண்ட்லுவை நீ கொல்ல வேண்டும் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால். எனக்கு எந்தவித அவசரமும் இல்லை.” “ஆனால் நீ ஏன் என்னைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டேன். அவன் குழப்பமடைந்தான். இறுதியில் என்ன சொல்வதென்று தெரியாமல் கைவிட்டுவிட்டான். “தெரியவில்லை” என்று ஒத்துக் கொண்டான். “அதுதான் கேஸ்பக்கின் வழக்கம். நாங்கள் கொல்லவில்லை என்றால் கொல்லப்படுவோம். அதனால் தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாரையாவது பார்த்தால் முந்திக் கொண்டு கொன்று விடுவதுதான் வழக்கம். இன்று காலை அனைவரும் வேட்டையாடச் செல்லும் வரை நான் எனது குகையில் ஒளிந்து கொண்டேன். ஏனெனில் நான் க்ரோலு என்று தெரிந்தவுடன் என்னைக் கொன்று விடுவார்கள். அவர்கள் என்னைக் காஸ்லூபாக்கில் பார்த்தாலும் கொன்று விடுவார்கள். க்ரோலுவும் அதே போல்தான். நான் எனது க்ரோலு ஆயுதங்கள் மற்றும் மேலாடை பெறுவதற்குள் என்னைப் பார்த்தால் அவர்களும் என்னைக் கொன்று விடுவார்கள். உன்னால் முடிந்தால் நீயும் கூட என்னைக் கொன்று விடுவாய். அதனால்தான் தூரத்தில் இருந்தும் மற்றவர்களைக் உன் ஆயுதம் கொல்லும் என்று நீ சொல்வது பொய் என்று எனக்குத் தெரியும். அது உண்மையாய் இருந்திருந்தால் நீ எப்போதோ என்னைக் கொன்றிருப்பாய். இங்கே வா! நான் இன்னும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்தப் பெண் அழகாக இருக்கிறாள். அதனால் இவளை மட்டும் நான் என்னுடன் க்ரோலு நாட்டிற்குக் கூட்டிச் செல்கிறேன்” அப்படிச் சொல்லிக் கொண்டே அவன் தன் ஈட்டியை நீட்டிக் கொண்டு முன்னேறி வந்தான். எனது துப்பாக்கி எனது இடுப்பில் தயாராக இருந்தது. அவன் அவ்வளவு அருகில் இருந்ததால் அதை என் தோளுக்கு உயர்த்தக் கூடத் தேவை இல்லை. விசையை அழுத்தினால் மட்டும் போதும். அவனைப் பரலோகத்திற்கு நினைத்த நேரத்தில் அனுப்பி விடலாம். இருந்தாலும் நான் தயங்கி நின்றேன். ஒரு மனித உயிரை எடுப்பது என்பது எனக்கு மிகவும் கடினமாய் இருந்தது. இந்தக் காட்டு மனிதனிடம் எனக்கு எந்தவித முன் விரோதமும் இல்லை. ஒரு காட்டு விலங்கு போலத்தான் இப்போது அவன் என்னிடம் நடந்து கொள்கிறான். இறுதி வரை எப்படியாவது தடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அஜோர் எனது தோளிற்கு அருகில் நின்றிருந்தாள். அவள் கத்தி அவளிடம் தயாராக இருந்தது. அவன் தன்னை அவனோடு கூட்டிச் செல்வான் என்ற எண்ணம் அவளது உதடுகளில் ஒரு பரிகாசப் புன்னகையை ஒட்டி வைத்திருந்தது. நான் அவனைச் சுட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது எங்களுக்குக் கீழே இருந்த பெண்களின் கூச்சல் சத்தம் ஒரு சேரக் கேட்டது. அதனால் அவன் ஒருக் கணம் தயங்கி நின்று கீழே பார்த்தான். அவனைத் தொடர்ந்து அங்கே நடந்த குழப்பத்திற்கு என்ன காரணம் என்று நானும் கண்டேன். அந்தப் பெண்கள் குளத்தில் இருந்து மெதுவாகக் குகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான குகை சிங்கம் ஒன்று அவர்கள் முன் வந்து நின்றது. அது அவர்களுக்கும் மலைச் சரிவிற்கும் நடுவில் அந்தக் குறுகலான ஒற்றையடிப் பாதையில் நின்றது. அந்தப் பாதைதான் குளத்திற்கு இட்டுச் செல்லும். அதைக் கண்டவுடன் பயங்கரக் கூச்சலுடன் அவர்கள் மீண்டும் குளத்தை நோக்கி ஓடோடிச் சென்று கொண்டிருந்தார்கள். “அதனால் எந்தப் பலனும் அவர்களுக்கு ஏற்பட போவதில்லை.” என்று சொன்னான் அவன். அவனது குரலில் கொஞ்சம் உற்சாகம் ததும்பியது. “அவர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. அந்தச் சிங்கம் அவர்கள் மீண்டும் வரும் வரை காத்திருந்து அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரையும் கவ்விக் கொண்டு சென்று விடும். அங்கே ஒருத்தி இருக்கிறாள்” என்று அடுக்கினான். கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்தோடு “அவள் என் பின்னால் க்ரோலு தேசத்திற்கு வருவதாக வாக்களித்திருந்தாள். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சேர்ந்தே இருந்தோம்.” அவன் தன் ஈட்டியை தன் தலைக்கு மேல் தூக்கி அந்தச் சிங்கத்தை நோக்கி எறிவது போல் சைகை செய்தான். “அவள் சிங்கத்திற்கு மிக அருகில் இருக்கிறாள்.” என்று முணுமுணுத்தான். “அது அவளைக் கொன்று விடும். அவள் எப்போதும் என்னுடன் வரவே முடியாது. நடக்கவே நடக்காது. எந்த ஒரு வீரனும் அவ்வளவு தூரம் எந்தவித ஆயுதத்தையும் எறிய முடியாது” அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் அந்த விலங்கைக் குறி பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பேசி முடிக்கும்போது நான் துப்பாக்கியின் விசையை அழுத்தினேன். நான் குறி பார்த்த இடத்தில் சரியாக அதன் முடியை உரசிக் கொண்டு குண்டு பாய்ந்தது. அதன் தோள் பட்டையின் பின் இருந்த முதுகுத் தண்டை உடைத்து அதன் இதயத்தைக் கிழித்தது. அந்த ஒற்றையடிப் பாதியிலேயே அது இறந்து விழுந்தது. அந்தப் பெண்கள் அனைவரும் சிங்கத்தைப் பார்த்த அதே பயத்தை இப்போது துப்பாக்கிக் குண்டின் மீது வைத்தார்கள். அந்தப் பெரும் சத்தம் சிங்கத்தை வீழ்த்தியதும் ஒருவாறு ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். அதன் இறந்த உடல் நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். சுட்ட மறு கணமே நான் அவனைப் பார்த்தேன். அவன் என்னைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு அதிசயமாக என்னைப் பார்த்தான். “உன்னால் அதைச் செய்ய முடிந்திருந்தால் நீ ஏன் என்னை இதுவரை கொல்லாமல் விட்டு வைத்தாய்?” என்று வினவினான். “நான் முன்பே சொன்னேன். உன்னிடம் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை. முன் விரோதம் இல்லாத ஆட்களைக் கொலை செய்வது எனக்குப் பிடிக்காது” ஆனால் அவனுக்கு அந்தக் கருத்து மண்டையில் ஏறவில்லை. “நீ கேஸ்பக் மனிதன் இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.” என்று சொன்னான். “ஏனெனில் எந்த ஒரு கேஸ்பக் மனிதனும் இப்படியொரு சந்தர்ப்பத்தை விட்டு விட மாட்டான்.” இவனது இந்தக் கூற்று சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதைப் பின்னால் கண்டு பிடித்தேன். மேற்குக் கரையில் இருக்கும் மனிதர்களும் கிழக்கில் இருக்கும் க்ரோலுவும் கூட அவன் சொன்னது போல் இவ்வளவு ரத்தம் காணத் துடிக்கும் ஆட்கள் இல்லை. “பின் உனது ஆயுதம்!” என்று அவன் தொடர்ந்தான். “நீ பொய் சொல்கிறாய் என்று நான் நினைத்த போது உண்மைதான் பேசி இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று “நாம் நண்பர்களாய் இருப்போம்!” என்றான். நான் அஜோரை நோக்கி “இவனை நம்பலாமா?” என்று கேட்டேன். “ஆம்” என்று அவளும் பதில் அளித்தாள். “நிச்சயம். அவன் நண்பர்கள் ஆகலாம் என்று கேட்கவில்லையா என்ன?” அந்த நேரத்தில் எனக்கு கேஸ்பக்கின் ஆதி மனிதர்களுக்கு நம்பிக்கையும் விசுவாசமும் மட்டுமே இரு வலிமையான குணாதிசயங்கள் என்று தெரிந்திருக்கவில்லை. பொய் பித்தலாட்டம் துரோகம் இவைகளில் தேர்ச்சி பெருமளவு அவர்களிடம் அந்தளவு கலாச்சாரம் வளர்ந்திருக்கவில்லை. “நாம் அனைவரும் சேர்ந்தே வடக்கு நோக்கிச் செல்லலாம்.” என்று தொடர்ந்தான் அந்த வீரன். “நான் உங்களுக்காகச் சண்டை செய்கிறேன். நீங்கள் எனக்காகச் சண்டை இடுங்கள். நான் இறக்கும் வரை உங்களுக்குப் பணி செய்வேன். இறந்து விட்டாள் என்று நான் கைவிட்ட சோ-ஆலை நீ காப்பாற்றி இருக்கிறாய்.” என்று சொல்லிக் கொண்டே தனது ஈட்டியைத் தூர எறிந்தான். தன் இரு கைகளாலும் கண்களைப் பொத்திக் கொண்டான். நான் அஜோரை நோக்கி என்ன இது என்று விசாரிப்பது போல் பார்த்தேன். தன்னால் முடிந்தவரை அவளும் விவரிக்க ஆரம்பித்தாள். இதுதான் கேஸ்பக்கின் நம்பிக்கை உறுதி மொழி என்று சொன்னாள். “இதன் பின் என்றும் அவனைப் பார்த்து நாம் பயப்படத் தேவை இல்லை.” என்று சொல்லி முடித்தாள். “நான் என்ன செய்வது” என்று கேட்டேன். “அவன் கண்களில் இருந்து அவன் கைகளை எடுத்து அவனிடம் அந்த ஈட்டியைக் கொடு” என்றாள். அதே போல் நான் செய்தேன். அவன் மிகவும் மகிழ்ந்தான். அதன் பின் நான் அவனது நட்பை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் நீ என்ன செய்திருப்பாய் என்று கேட்டேன். நான் கண்டு கொள்ளாமல் சென்றிருந்தால் கண்களில் இருந்து மறைந்ததும் மீண்டும் நாம் பரம எதிரிகளாய் மாறி விடுவோம் என்று இருவரும் சொன்னார்கள். “ஆனால் என்னால் அவனை எளிதில் கொன்றிருக்க முடியும்” என்று சொன்னேன். “ஆம்” என்று பதில் அளித்த அவன் “ஆனால் தன் சுய அறிவுள்ள எந்த மனிதனும் தான் நம்பாதவன் முன் குருடனாய் இருக்க மாட்டான்” அது எனக்கு ஒரு சரியான பாராட்டு. அதில் இருந்து எனது புதிய நண்பனின் விசுவாசத்தை நான் எவ்வளவு தூரம் மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அவன் எங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கு இந்த உலகம் அத்துப்படி. அதே போல் அவனும் மிகத் தைரியமான போராளி. இவனைப் போல் இன்னும் பலரை நான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் எனக்குள் தோன்றியது. இப்பொழுது அந்தப் பெண்கள் எல்லாம் மலைச் சரிவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தோமர் என்ற அந்த வீரன் அவர்களுக்கு முன் நாம் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினான். ஏனெனில் அவர்கள் நம்மைச் சிறைப் பிடிக்க நினைப்பார்கள். நிச்சயம் அஜோரை விடவே மாட்டார்கள். அதனால் அந்தக் குறுகலான பாதையில் நாங்கள் விரைவாகச் செல்ல ஆரம்பித்தோம். அந்தப் பெண்களுக்குச் சற்று முன்னதாகவே நாங்கள் மலையடிவாரத்தை அடைந்தோம். எங்களை நிற்கச் சொல்லி அவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் நாங்கள் விரைவாக எட்டு வைத்தோம். அவர்களிடம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால். அப்படி ஒன்று நடந்தால் அவர்களில் சிலர் உயிரை இழக்க நேரலாம். நாங்கள் ஒரு மைல் தூரம் சென்றிருப்போம். அப்போது தோமர் பேர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டது. அங்கே ஒரு பெண் வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்ததும் மிக அழகாகத் தெரிந்தாள். அவளைப் போன்றே நான் கேஸ்பக்கில் பார்த்த அனைத்துப் பெண்களும் மிக இளமையாகவே இருந்தனர். “அது சோ-ஆல்” என்று கத்தினான் தோமர். “அவளுக்கென்ன பைத்தியமா இப்படி என்னைத் தொடர்ந்து வருவதற்கு” சற்று நேரத்தில் அந்தப் பெண் எங்கள் முன் நின்றாள் மூச்சு வாங்கியபடி. அவள் என்னையோ அஜோரையோ சிறிதும் கண்டு கொள்ளவில்லை. தோமரை விழுங்கியபடியே பார்த்தவள் “நான் பிழைத்து விட்டேன், நான் பிழைத்து விட்டேன்” என்று கதறி அழுதாள். “சோ-ஆல்” என்று மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. “ம்” என்று தொடர்ந்தாள். “நான் குளத்தை விட்டு நீங்கிய சிறிது நேரத்திலேயே அந்தச் சத்தம் கேட்டது. ஆனால் அதற்குக் காரணம் நீதான் என்பது எனக்குத் தெரியாது. உன் கண்களிலேயே தெரிகிறது. தோமர், தோமர். நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம்.” என்று சொல்லிக் கொண்டே தன் இரு கைகளையும் வீசி அவனை அணைத்தாள். மனதை மிகவும் கவரும் செயல் அது. அதைப் பார்த்தாலே தெரிந்தது அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகப் பழகியவர்கள் என்று. மேலும் கேஸ்பக்கின் வினோதமான பரிணாமக் கொள்கையின் படி அந்த நிகழ்வால் இருவரும் விலகப் போகிறோம் என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். இப்பொழுதுதான் இதைப்பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. கேப்ரோனாவின் தடுப்பரண்களான மலைத் தொடர்களுக்கு அப்பால் நடக்கும் இவ்வளவு அருமையானதொரு நடைமுறையைப் பற்றி நான் பத்தில் ஒரு பங்கு கூடத் தெரிந்து கொண்டதில்லை. இப்போதும் கூட தெரிந்து கொண்டேனா என்பதும் சந்தேகம்தான். தோமர் சோ-ஆலுக்கு நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தான். நான்தான் அந்தச் சிங்கத்தை கொன்றதாகவும் அவளது உயிரைக் காப்பாற்றியதாகவும் கூறினான். அஜோர் எனது ஆள் என்றும் தன்னைப் போல் அவளும் இருவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தான். முதலில் அஜோரும் சோ-ஆலும் எதிரும் புதிருமான பழகாத பூனைகள் போல் இருந்தனர். ஆனால் விரைவில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டனர் ஒரு ஆயுத உடன்படிக்கை ஏற்பட்டது போல். அதன் பின் மிக அந்நியோன்யமான தோழிகளாகி விட்டனர். சோ-ஆல் வலிமையான அழகான பெண்ணாய் இருந்தாள். வலிமையிலும் பாய்ச்சலில் ஒரு பெண் புலி போன்ற தோற்றம் இருந்தது. அதே நேரத்தில் இனிமையான பெண்மையும் அவளிடம் குடி கொண்டிருந்தது. அஜோரும் நானும் அவளிடம் மிகுந்த அன்பு காட்டினோம். அவளும் அதே போல் எங்களிடம் அன்பு காட்டினாள். தோமர் கிட்டத்தட்ட ஒரு மனிதனாய் இருந்தான் - காட்டுமிராண்டி என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் நிச்சயம் மனிதனில்லை. தோமர் உடன் பயணித்ததால் பயணம் மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. அஜோரும் நானும் எங்கள் வழியில் தனியாகச் செல்லவில்லை. அவர்கள் இருவரும் தங்கள் க்ரோலு நாட்டிற்குள் செல்வதற்கு முன் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் உடைகள் சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நாங்கள் அவர்கள் உடனே இருந்தோம். அதனால் அவர்களிடம் மிகவும் ஒட்டுதலோடு பழகி விட்டோம். அதனால் பிரிய வேண்டிய நேரத்தை எண்ணி மிகவும் வருத்தமடைந்தோம். அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்த பின் நாங்கள் தனியே பயணத்தைத் தொடர வேண்டுமே என்று எண்ணிக் கலங்கினோம். க்ரோலு இன மக்கள் நிச்சயம் என்னையும் அஜோரையும் நட்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தோமர் மிகவும் பயப்பட்டதால் நாங்கள் அவர்களைத் தவிர்க்க வேண்டியதாயிற்று. அவர்களுடன் நட்பு பாராட்ட முடிந்திருந்தால் எங்களுக்கு மிகவும் சவுகர்யமாய் இருந்திருக்கும். ஏனெனில் அவர்களது நாடு காலுவின் நாட்டிற்கு அருகில்தான் இருந்தது. அவர்களது நட்பினால் அஜோரின் ஆபத்துக்கள் எல்லாம் தொலைந்து விடும் நானும் எனது நெடும் பயணத்தில் பாதியை முடித்திருப்பேன். நான் இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது நான் எப்படி மீதிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து என் நண்பர்களைப் பார்ப்பேனோ தெரியவில்லை. தீவின் மேற்குக் கரையில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல ஆபத்துக்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும் வினோதமான ஊர்வன விலங்குகளின் பூமியை நெருங்கும் வரை. ஆலு மற்றும் ஹோலுக்களின் பயங்கரங்கள் தீவின் தென்கோடியில் அதிகம். அதன் பின் எனது கூட்டாளிகளை நான் கண்டுபிடிக்கவில்லை என்றால் எனக்கு என்னவாகும். எனக்குத் தெரிந்து கேஸ்பக்கில் எந்தவொரு பகுதியிலும் என்னால் சிறிது காலம் கூட வசிக்க முடியாது. என் குண்டுகள் தீர்ந்த மறு நொடி நான் இறந்ததற்குச் சமம். காலுக்கள் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அஜோரால் கூட அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே வைத்து கொள்வோம், அங்கிருந்து என்னால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சென்று சேர முடியுமா என் நண்பர்களைக் கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில் காலுக்களின் நாட்டிற்கு திரும்ப முடியுமா. சந்தேகம்தான். இருந்தாலும் நான் அஜோரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அவளும் விதியை நம்புகிறவள்தான். கேஸ்பக்கில் தேவைப்படுவது போல் வெளி உலகின் முழு கிறித்துவனுக்கும் தேவைப்படக் கூடிய ஒரு தத்துவம்தான் அது. அத்தியாயம் - 5 பாண்ட்லுக்களின் மலைச் சரிவில் உள்ள குகைகளை விட்டு நீங்கிய பின் ஒரு நாள் இரவில் ஒரு பாதுகாப்பான குகையில் நெருப்பிற்கு முன் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது சோ-ஆல் ஒரு கேள்வி கேட்டாள் அதற்கு முன் எனக்கே அஜோரிடம் கேட்கத் தோன்றியிராத அந்தக் கேள்வியை. அவள் ஏன் தன் இன மக்களை விட்டுத் தெற்கில் ஆலுக்கள் இருக்கும் இடத்திற்கு இவ்வளவு தூரம் நான் அவளைக் கண்ட இடத்திற்கு வந்தாள் என்று கேட்டாள். முதலில் அஜோர் பதில் சொல்லத் தயங்கினாள். இறுதியில் அவள் பேச ஆரம்பித்தாள். முதன் முறையாக நானும் அவளது தோற்றம் குறித்த கதையைத் தெரிந்து கொண்டேன். எனக்காக, நான் கேஸ்பக் மனிதனாக இல்லை என்பதால், அவள் நீண்ட நெடிய விவரங்களுடன் விவரிக்க ஆரம்பித்தாள். “நான் ஒரு கோஸ்-ஆட்டா-லோ” என்று ஆரம்பித்து என்னை நோக்கித் திரும்பினாள். "கோஸ்-ஆட்டா-லோ என்பது முட்டையில் இருந்து வராத ஒரு பெண், அதனால் ஆதியில் இருந்து இருப்பவள் (கோர்-ஸ்வ-ஜோ). நான் எனது தாயின் மார்பில் இருந்து வந்த குழந்தை. காலுக்களுக்கு மட்டும்தான் இப்படி நடக்கும் எப்போதாவது. வியரூ பெரும்பாலானவர்களைக் கூட்டிச் சென்று விடும். ஆனால் என் அம்மா என்னை மறைத்து வைத்தார்கள் ஆதியில் இருந்து வந்தவர்கள் போல் தோற்றம் வரும் வரை. அதனால் வியரூவிற்கு அடையாளம் தெரியவில்லை. எனக்கு என் தாய் தந்தை இருவரையும் தெரியும். என் தந்தை காலுக்களின் தலைவராக இருந்தார். அவரது பெயர் ஜோர். அவரும் என் தாயும் ஆதியில் இருந்து வந்தவர்கள். அதில் ஒருவர், என் தாயாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏழு சுழற்சியையும் சந்தித்து விட்டார்கள் (கிட்டத்தட்ட எழுநூறு வருடங்கள்). அதனால் அவர்களின் குழந்தைகள் கோஸ்-ஆட்டா-லோவாக இருக்கலாம். அதாவது நீ சொன்ன கூற்றுப்படி உங்கள் இனக் குழந்தைகள் பிறப்பது போல் நானும் பிறந்தேன். அதனால் மற்றவர்கள் போல் இல்லாமல் என் குழந்தைகளும் என்னைப் போலவே இருப்பார்கள். பரிணாமத்தின் உயர்ந்த இடத்தில. அதனால் என் இன ஆண்கள் என்னை அடைய விரும்பினர். ஆனால் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. அதில் விடாப்பிடியாக இருந்தவன் து-சீன். அவன் மிகப் பெரும் போராளி. அவனைப் பார்த்து என் தந்தையே நடுங்குவார். ஏனெனில் அவன் என் தந்தையிடம் இருந்து தலைவர் பதவியையும் பிடுங்கி விடுவான் என்று அவர் நினைத்தார். புதிதாக வந்த காலுக்கள் நிறைய பேர் அவனை ஆதரித்தார்கள். க்ரோலு இனத்தில் இருந்து புதிதாக காலுவாகி வந்தவர்கள் அனைவரும் அவன் பின்னால் சென்றனர். அவர்கள் எண்ணிக்கை பழைய முதிய காலுக்களை விட அதிகம் என்பதால் து-சீனின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அதனால் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என் தந்தையிடம் இருந்து தலைவர் பதவியைப் பறிக்க நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் என்னை விரும்பியதால் சிக்கல் இன்னும் அதிகமானது. நான் அவனைச் சிறிதும் விரும்பவில்லை. இப்படி இருக்கும் போது ஒரு நாள் என் அப்பாவின் காதுகளுக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அவன் வியரூவுடன் தொடர்பில் இருக்கிறான் என்று. ஒரு வேட்டுவன் காட்டில் இருந்து இரவில் வெகு தாமதமாக திரும்பி வந்து கொண்டிருந்த அவன் வியரூவுடன் து-சீன் ஆளரவம் இல்லாத தனி இடத்தில் கிராமத்தில் இருந்து வெகு தூரத்தில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். அவர்கள் பேசியது இவன் காதுகளுக்கு தெளிவாகக் கேட்டிருக்கிறது. “நீ எனக்கு உதவி செய்தால் நான் உனக்கு உதவி செய்வேன். காலுக்கள் மத்தியில் இருக்கும் அனைத்துக் கோஸ்-ஆட்டா-லோக்களையும் உன்னிடம் இப்போதும் எதிர்காலத்திலும் ஒப்படைக்கிறேன். ஆனால் அதற்குப் பதில் நீ எங்கள் தலைவர் ஜோரைக் கொன்று அவனைப் பின்பற்றும் அனைவரிடத்திலும் ஒரு பயத்தைக் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும்” “என் தந்தை இதைக் கேட்டதும் மிகவும் கோபம் கொண்டார். ஆனால் அவர் என்னை நினைத்தும் பயப்பட்டார். நான் ஒரு கோஸ்-ஆட்ட-லோவாக இருந்ததால். அதனால் அவர் கேள்விப்பட்டதை என்னிடம் சொன்னார். து-சீனிடம் இருந்து தப்பிப்பதற்கு இரு வழிகள் உள்ளன என்றார். ஒன்று நீ து-சீனுடன் செல்ல வேண்டும். அதன் பின் அவன் உன்னை வியரூவிடம் கொடுக்க விரும்ப மாட்டான். குரூரமான அந்த உடன்படிக்கையைத் தொடர விரும்ப மாட்டான். அப்படிச் செய்தால் அவன் வம்சமும் அழியும். மற்றோர் வழி, நீ தப்பிச் செல்ல வேண்டும், அவன் தண்டிக்கப்படும் வரை. அதனால் நான் இரண்டாவது உபாயத்தைத் தேர்ந்தெடுத்தேன். தெற்கு நோக்கித் தப்பி ஓடினேன். காலுவின் நாட்டில் இருந்து சென்று விட்டால் வியரூவின் தொந்தரவும் இருக்காது. அவர் காலுக்களில் மேலானவர்களை மட்டுமே விரும்புவார். இதற்கு இரண்டு அருமையான காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆரம்பத்தில் இருந்தே வியரூ மற்றும் காலுக்களுக்கு நடுவில் பொறாமை இருந்திருக்க வேண்டும் யார் உலகை ஆள்வது என்று. பொதுவான அபிப்ராயம் என்னவென்றால் பரிணாமத்தில் எந்தவொரு இனம் தன் வம்சத்தின் இரு பாலாரையும் உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெறும் இடத்திற்கு முதலில் வந்து சேருகிறதோ அந்த இனம்தான் மற்ற அனைத்து உயிரினங்களையும் ஆளும். வியரூதான் முதலில் தன் இனத்தின் பிள்ளைகளை உருவாக்கியது. அதன் பின் காலுவில் இருந்து வியரூவாவது குறைந்து மறைந்து போனது என்ன காரணம் என்றே தெரியாமல். ஆனால் வியரூ ஆண் பிள்ளைகளை மட்டுமே பெற்றது. அதனால்தான் எங்களிடம் இருந்து பெண்களைத் திருடிக் கொண்டு செல்கின்றனர். மேலும் கோஸ்-ஆட்டா-லோக்களைத் திருடிச் சென்றால் தாங்களும் இரு பாலினத்தவரையும் பெறும் ஆற்றல் கிடைக்கும் அதே நேரத்தில் எங்கள் இனத்தின் ஆற்றலும் பறி போகும். ஏற்கெனவே காலுக்கள் ஆண் பெண் இரு பால் பிள்ளைகளையும் பெறுகிறோம். ஆனால் வியரூ எங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதால் சில குழந்தைகளே வளர்ந்து வாலிபப் பருவம் அடைகின்றனர். பெண் குழந்தைகளும் வெகு சிலரே திருடப்படாமல் இருக்கின்றனர். இது மிகவும் வினோதமான ஒரு சூழல். எங்களது பரம எதிரி எங்கள் இனம் மொத்தத்தையும் அழிக்க விரும்பவில்லை. ஏனெனில் அப்படி அழித்தால் அவர்களும் அழிந்து போக நேரும்.” “எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அனைத்து கோஸ்-ஆட்டா-லோக்களும் வளர்ச்சி அடைந்திருந்தால் நாங்கள் இவ்வுலகில் ஒரு வலிமையான இனமாக மாறி இருப்போம். எங்களுக்கு முன் அனைவரும் மண்டி இட்டு வணங்கி இருப்பர்.” அஜோர் எப்போதும் கேஸ்பக் தாண்டி வேறெதுவும் இல்லாதது போலவே பேசுவாள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை இன்னும் அவள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதே போல் இந்தச் செங்குத்தான மலைப்பாறைகள் தாண்டியும் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குப் புரியவில்லை. நான் வேறு ஒரு உலகில் இருந்து வந்திருக்கிறேன் என்றே அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அது எங்கு இருக்கிறது அங்கிருந்து நான் இங்கு எப்படி வந்தேன் என்பதைப் பற்றியெல்லாம் அவளது அழகான தலை சிந்திக்க மறுக்கிறது. "அதனால் நான் ஓடி வந்து ஒளிந்து கொண்டேன். மலைச் சரிவு தாண்டி காலு நாட்டில் இருந்து தெற்கு நோக்கி க்ரோலு நாட்டில் வந்து தங்கி இருக்கிறேன். இது மிகவும் ஆபத்தானதுதான். இருந்தாலும் வேறு வழி இல்லை." “மூன்றாம் நாள் இரவு எனது நாட்டிற்கு அருகில் உள்ள மலைக் குகையில் தங்கி இருந்தேன். அதன் மறு நாள் க்ரோலு நாட்டிற்குள் நுழைவதாக எண்ணி இருந்தேன் அங்குதான் வியரூவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று எண்ணி. ஆனால் அதை விட மிகப் பயங்கரமான விலங்குகள் மிகுந்த ஆபத்துக்களை விளைவித்தன. இருந்தாலும் ஒரு கோஸ்-ஆட்டா-லோவிற்கு எந்தவொரு விதியும் சிறந்ததே வியரூவின் பிடியை விட. ஏனெனில் அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை.” “நான் வெகு நேரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறு சத்தம் கேட்டு விழிக்க நேர்ந்தது. நிலா நல்ல வெளிச்சமாய் வாசலை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. அங்கே வியரூவின் நிழலைக் கண்டேன். அங்கிருந்து வெளியேற வழியேதும் இல்லை. குகை குறுகலாக இருந்தது. நுழை வாயிலும் குறுகலாகவே இருந்தது. நான் அப்படியே அமைதியாய் இருந்தேன். அது இங்கே ஓய்வெடுக்கவே வந்திருக்கிறது நிச்சயம் அதன் பின் சென்று விடும் என்று நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து இருந்தேன். என்ன இருந்தாலும் அது என்னைத்தான் தேடி வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.” "நான் மூச்சு விடாமல் காத்திருந்தேன். அது மெதுவாக ஊர்ந்து என்னருகில் வருவதைக் கவனித்தபடி. குகையின் இருட்டின் நடுவில் அதன் பெரிய கண்கள் ஒளிர்ந்தன. இறுதியில் அதன் கண்கள் என்னை நோக்கியே இருப்பது புரிந்தது. ஏனெனில் வியரூவின் கண்களுக்கு இருட்டில் சிங்கம் புலியை விடக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு சில அடிகள்தான் இருக்கும். அப்போது வியரூவை நோக்கி ஒரு பைத்தியம் போல் கத்திக் கொண்டே அதன் மேல் பாய்ந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று எண்ணினேன். அது சுத்த பைத்தியக்காரத்தனம்தான். தற்காலிகமாக நான் வெற்றி அடைந்திருந்தாலும் வியரூ நிச்சயம் மேலிருந்து என்னைப் பின் தொடர்ந்து வந்து நிச்சயம் கைப்பற்றி இருக்கும். ஆனால் அது முன்னேறி வந்து சட்டென்று என்னைப் பிடித்து விட்டது. நான் கொஞ்சம் திமிறினாலும் அது என்னைக் கட்டுப்படுத்தி விட்டது. அந்தச் சண்டையில் அதன் வெள்ளை உடை கிழிந்து விட்டது. அதனால் அதற்கு பெரும் கோபம் வந்து விட்டது. அதனால் ஆத்திரத்தில் அதன் இறக்கைகளை வேகமாக அசைத்தது. “அது என் பெயரைக் கேட்டது. ஆனால் நான் பதில் சொல்லவில்லை. அதனால் அதன் கோபம் தலைக்கேறியது. இறுதியில் அது என்னைக் குகை வாசலுக்குத் தரதரவென்று இழுத்துச் சென்று என்னைக் கைகளில் எடுத்துக் கொண்டு தனது பெரிய இறக்கைகளை விரித்து அந்த அகால நேரத்தில் வானத்தில் பறந்தது. நிலவொளியில் ஒளிர்ந்த நிலப்பரப்பு என்னை விட்டு விலகுவதை நான் பார்த்துக் கொண்டே சென்றேன். அதன் பின் கடல் கடந்து வியரூவின் நாடான ஊவோவிற்குச் சென்றோம்.” ஊவோவின் மங்கலான நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னே விரிய ஆரம்பித்தது. அப்போது எனக்கு மேல் விர்ரென்று இறக்கை அடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. அந்த வியரூவும் நானும் ஒரே நேரத்தில் மேலே பார்த்தோம். அங்கே இரண்டு பிரமாண்டமான ஜோவூக்கள் (பறக்கும் ஊர்வன விலங்குகள், டெரோடாக்ட்டில்) எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. வியரூ சட்டென்று வளைந்து செல்லும் போது கிட்டத்தட்ட கடல்மட்டத்தைத் தொட்டு விட்டது. அதன் பின் வேகமாகத் தெற்கு திசையை நோக்கிச் சென்றது அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக. அந்தப் பெரும் விலங்குகளும் எவ்வளவு பெரிதாக இருக்கின்றனவோ அந்தளவு வேகமாகவும் பறந்தன. ஆனால் வியரூக்கள் அவைகளை விட வேகமானவை. எனது எடையையும் சேர்த்தே அது மிக வேகமாக பறந்து அவைகளை முந்திச் சென்றது. இருந்தாலும் அதை விட வேகமாக அதனால் பறக்க முடியவில்லை. வேகமாக வீசும் காற்றை விட வேகமாக நாங்கள் தென் திசையில் கடல் கரையை ஒட்டிப் பறந்தோம். சில நேரம் நாங்கள் வெகு உயரத்திற்குப் பறந்தோம். அங்கே காற்று மிகவும் குளிராக இருந்தது. கீழே இருக்கும் உலகம் மங்கிய கோடுகள் போல் தெரிந்தன. ஆனாலும் அந்த விலங்குகள் எங்கள் பின்னாலேயே தொடர்ந்தன." "நாங்கள் வெகு தூரம் பயணித்து விட்டோம் என்று நன்றாகத் தெரியும். என் முகத்தில் அறையும் காற்றின் வேகமே சொல்லி விட்டது நாங்கள் எவ்வளவு வேகமாகச் செல்கிறோம் என்று. ஆனால் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு கட்டத்தில் வியரூ தன் பலம் குறைவதை உணர்ந்தேன். ஒரு ஜோவூ கிட்டத்தட்ட எங்களை நெருங்கி விட்டது. அதனால் அந்த வியரூ சட்டென்று திரும்பி மேற்குப் பக்கம் வளைந்தது. மேலும் மேலும் அவைகள் இடப் பக்கம் திருப்பிக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் அது கீழே இறங்கிக் கொண்டே இருந்தது. அதன் மூச்சும் பயங்கரமான சத்தத்துடன் கேட்டது. அதன் வலிமையான சிறகுகளும் இப்பொழுது மிகவும் பலமிழந்தது. நாங்கள் தரையில் இருந்து கிட்டத்தட்ட பத்து அடி இருந்திருப்போம். அப்போது அவைகள் எங்களை வளைத்து விட்டன. அது காட்டின் விளிம்புப் பகுதி. ஒரு ஜோவூ வியரூவின் வலது சிறகைப் பிடித்தது. அது தன்னை விடுவிக்க வேண்டி என்னை விட்டுவிட்டது. அதனால் நான் நிலத்தில் விழுந்து விட்டேன். பயத்துடன் நான் காட்டை நோக்கி ஓடினேன் ஒரு நல்ல மறைவிடம் தேடி. அங்கே இவைகளில் யாரும் என்னருகில் வரவே முடியாது. என்னைக் கவரவும் இயலாது. பிறகு நான் திரும்பிப் பார்க்கும் வேளை அந்த இரண்டு ஊர்வன விலங்குகளும் அந்த வியரூவைக் கிழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. “நான் தப்பித்தேன். இருந்தாலும் தொலைந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். காலுவின் நாட்டில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறேன் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. அதன் பின் பாதுகாப்பாக என் நாட்டிற்குத் திரும்ப முடியுமா என்று கூட நான் அறிந்திருக்கவில்லை” “மறு நாள் காலை பொழுது புலர்ந்தது. வெகு விரைவில் விலங்குகள் தங்கள் பசிக்கு வேட்டையாடக் கிளம்பி விடும். என்னிடம் ஒரே ஒரு கத்தி மட்டுமே இருந்தது. என்னைச் சுற்றி வினோதமான நிலம் இருந்தது. பூக்களும் செடி கொடிகளும் மரங்களும் புற்களும் கூட என் வட நாட்டை விட மிகவும் வித்தியாசமாக இருந்தன. இப்போது எனக்கு முன்னால் அந்த வியரூவை விடக் கொடூரமான ஒரு விலங்கு இருந்தது. உடம்பு முழுவதும் முடியுடன் நேராக நிற்கவே சிரமப்படும் ஒரு விலங்கு நின்றது. அதைப் பார்த்து பயந்து நான் ஓட்டம் எடுத்தேன். பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் எனது முன்னோர்கள் சந்தித்த மறைவான ஆபத்துக்களில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் ஓடினேன். என்னை விடாமல் அந்தக் காட்டு விலங்கு துரத்திக் கொண்டே வந்தது. அதன் பின் அதே போன்று இன்னும் சில விலங்குகளும் என்னைத் துரத்த ஆரம்பித்தன. அவர்கள் பேசாத மனிதர்களான ஆலுக்கள். அவர்களிடம் இருந்துதான் நீ என்னைக் காப்பாற்றினாய், டாம். அதன் பின் உனக்கு நான் செய்த சாகசங்கள் பற்றியெல்லாம் தெரியும். அதை எல்லாம் திரும்பவும் உனக்காகச் செய்வதற்கு சித்தமாய் இருக்கிறேன். ஏனெனில் அது என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதால்.” அவள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்காக நான் அவளைப் பாராட்டுகிறேன். அவள் ஒரு வலிமையான சிறு பெண் என்று எனக்கு நன்றாகப் புரிந்தது. யாரும் அவளுடைய நட்பை மிகவும் விரும்புவார்கள். ஆனால் அவள் என்னைத் தொடும் போது அவளது சாகசங்கள் என்னைக் கிளர்ச்சி அடையச் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். அது மிகவும் அசவுகர்யமாக இருந்தது. ஏனெனில் அது காதலை நினைவூட்டியது. எனக்குத் தெரியும் இது போன்ற ஒரு அரை வேக்காட்டுக் காட்டு மிராண்டியை நான் காதலிக்க முடியாது என்பது. அவள் வியரூவைப் பற்றிச் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இன்று வரை அது ஒரு புராணக் கதையில் வரும் பாத்திரம் என்று நினைத்திருந்தேன். அஜோர் அதைப் பற்றி முதலில் சொல்லும்போது மிகவும் பயந்தாள். அதனால் அவளிடம் அதைப் பற்றி நான் மேலும் பேசவில்லை. இருந்தாலும் வியரூ என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே இருந்தது. வியரூவைப் பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். இருந்தாலும் அதைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை இப்போது. ஏனெனில் நாங்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் எங்களின் வாழ்வைப் பாதுகாப்பதிலேயே சென்று விடுகிறது. கேஸ்பக்கின் உயிரினங்களின் முக்கிய தொழிலே அதுதான், வாழ்வதற்கான தொடர்ச்சியான போர். தோமரும் சோ-ஆலும் க்ரோலு நாட்டிற்குச் செல்லத் தயாராகி விட்டனர். அதனால் அவர்களை நாங்கள் நீங்கும் நேரம் வந்து விட்டது. அவர்களுடன் சென்றால் இன்னும் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியது வரும். அவர்களையும் அது பேராபத்தில் இட்டுச் சென்று விடலாம். ஆனால் அனைவரும் எப்போதும் நண்பர்களாக இருப்பதாகவே வாக்களித்தோம். யாருக்காவது உதவி தேவை என்றால் கேட்க வேண்டும் அவ்வளவே. அவர்களின் விசுவாசத்தை என்றும் சந்தேகிக்கவே முடியாது அவர்களை மிகவும் பத்திரமாகக் க்ரோலு கிராமத்திற்கு நாங்கள் அழைத்து வந்து விட்டதால். இன்றுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் கடைசி நாள். இன்று மத்தியானம் நாங்கள் பிரிய வேண்டும். தோமாரும் சோ-ஆலும் க்ரோலு நாட்டிற்குச் சென்று விடுவார்கள். நானும் அஜோரும் திரும்பிச் செல்ல வேண்டும் அம்பு விடும் அந்த கூட்டத்தினரின் கண்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால். அவர்கள் இருவரும் மிகவும் பதட்டமாக இருந்தனர் புதிய மனிதர்களைச் சந்திக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால். இருந்தாலும் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தனர். ஒரு கூட்டத்தில் சேர்வதை எப்போதும் அவர்கள் வரவேற்பதால் தங்களுக்கு ஒரு பிரச்சினையும் நேராது என்று கூறினர். முதலில் இருந்த இடத்தைத் தாண்டிச் செல்லச் செல்ல மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே செல்வதும் ஒரு காரணமாய் இருக்கலாம். தென் முனையில் ஹோலு அல்லது மனிதக் குரங்குகள் வசிக்கின்றன. அதன் பின் ஆலுக்கள். அவர்கள் ஹோலுக்களை விட எண்ணிக்கையில் குறைவு. அதே போல் போலுக்கள் ஆலுக்களை விடக் குறைவு. ஸ்தோலுக்கள் போலுக்களை விடக் குறைவு. அப்படியே சென்றால் க்ரோலுக்கள் எல்லோரையும் விடக் குறைவு. இங்கிருந்து இந்த விதி மாறுகிறது. காலுக்கள் க்ரோலுக்களை விட அதிகம். அஜோர் என்னிடம் விவரித்தது போல் இதன் காரணம் என்னவென்றால் பரிணாமம் காலுக்களுடன் முடிவடைகிறது. அவர்களுக்கு நடுவில் வளர்ச்சி குன்றியவர்கள் இல்லை. கோஸ்-ஆட்டா-லோக்களும் காலுக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களும் சேர்ந்தே இருக்கிறார்கள். காலுக்கள் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை முழுவதும் இருக்கிறார்கள். மாமிசம் உண்ணும் ஊர்வன விலங்குகளும் வட திசையில் மிகவும் கம்மியே. தென் கோடியில் பலரைக் கொடூரமாகக் கொல்லும் அதி பயங்கரமான பூனை இன விலங்குகளும் குறைவுதான். இப்போது கிட்டத்தட்ட கேஸ்பக்கின் பரிணாம தத்துவம் பற்றி ஓரளவு எனக்குப் புரிந்து விட்டது. இவர்களுக்கு நடுவில் குழந்தைகள் ஏன் இல்லை என்பதற்கான காரணமும் ஓரளவு தெரிந்து விட்டது. ஆதியில் இருந்து வந்த பின் கேஸ்பக்கின் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் பரிணாமத்தின் ஒவ்வொரு படியிலும் செல்ல நேர்கிறது. அந்தப் படி நிலைகளில்தான் முதலில் தோன்றிய உயிரில் இருந்து இந்த பூமியில் தோன்றிய மனிதர்கள் வரை அனைவரும் பல யுகங்களாய்ப் பயணித்து வந்திருந்தனர். ஆனால் ஒரே ஒரு கேள்விதான் இன்னும் புதிராகவே இருக்கிறது. எது ஆதியில், கோர்-ஸ்வ-ஜோவில் உயிரைப் படைக்கிறது. நான் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். ஆலுக்களின் நாட்டில் இருந்து வடக்கு நோக்கி செல்லச் செல்ல நிலம் சிறிது சிறிதாக மேலேறிக் கொண்டே செல்கிறது. இப்போது நாங்கள் கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து ஒரு நூறடி உயரத்திலாவது இருப்போம். காலுக்களின் நாடு இன்னும் உயரமாய் குளிராய் இருக்கும் என்று அஜோர் சொன்னாள். அதனால்தான் அங்கு ஊர்வன விலங்குகள் கம்மியாக உள்ளன. கீழ்நிலை விலங்குகளின் வகைகள் மற்றும் தோற்றங்களில் இருக்கும் மாற்றங்கள் மனிதனின் பரிணாம நிலைகளைக் காட்டிலும் அதிகமாய் இருந்தன. குள்ளமான குதிரை கடினமான தோல்களுடன் வலிமையுள்ள மட்டக் குதிரையாக இருக்கிறது க்ரோலு நாட்டில். நான் சிறு சிங்கம் மற்றும் புலிகளை அதிகமாகக் கண்டிருக்கிறேன். பெரியதும் இன்னும் இருக்கின்றன. முடிகள் அதிகம் கொண்ட காட்டு யானைகளும் நிறைய உள்ளன. அதே போல் புதிர்நெறிப் பற்கள் கொண்ட விலங்குகளின் வகைகளும் மிக அதிகமாக இருந்தன. இந்த விலங்குகள், இவைகளிடம் இருந்து என்னைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும், தென் கோடியில் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அவைகள் க்ரோலு காலு நாடுகளில் விவரிக்கவே இயலாத காரணங்களால் அவைகளின் பெரிய உருவங்களை எப்படியோ புகுத்தி விட்டன. இருந்தாலும் அவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவே. அவைகள் ஆரம்ப நிலை உயிர்களாக இருக்க வேண்டும். கேஸ்பக்கில் அவைகள் கிட்டத்தட்ட அழிந்து விடும் சூழலில் இருக்கின்றன. ஆனால் அவைகள் எங்கிருந்தாலும் எல்லாவித உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. அப்போது நண்பகல் இருக்கும். தோமரும் சோ-ஆலும் விடை பெற்றுக் கொண்டிருந்தனர். நாங்கள் க்ரோலு கிராமத்தில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. ஒரு வகையில் நாங்கள் நினைத்ததை விட அருகில் சென்று விட்டோம். இப்பொழுது அஜோரும் நானும் கடற்கரையை நோக்கித் திரும்பிச் செல்ல வேண்டும். எனது நண்பர்கள் இருவரும் நேரடியாக க்ரோலு நாட்டின் அதிபதியைக் காணச் செல்ல வேண்டும். அஜோரும் நானும் ஓரிரண்டு மைல் தூரம் சென்றிருப்போம். அடர்ந்த காட்டில் இருந்து கிட்டத்தட்ட வெளியே சென்று விட இருந்தோம். அப்போது நான் கண்ட காட்சி என்னைச் சட்டென்று பின் வாங்கி மறைவிடம் நோக்கி இழுத்தது. அதே நேரத்தில் அஜோரையும் இழுத்துக் கொண்டேன். அங்கே பாண்ட்லு வீரர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பெரிய கடுமையான முகம் கொண்டவர்கள். அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் திசையைப் பார்த்தால் அவர்கள் தங்கள் குகைக்குத் திரும்பி கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. நாங்கள் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் நிச்சயம் எங்களை அவர்கள் பார்க்காமலேயே கடந்து சென்று விடக் கூடும். இப்போது அஜோர் என்னை இடித்தாள். “அவர்களிடம் ஒரு கைதி இருக்கிறான்” என்று கிசுகிசுத்தாள். “அவன் ஒரு க்ரோலு” அதன் பின் நான் அவனைப் பார்த்தேன். நான் பார்த்ததிலேயே முழுதாக வளர்ந்திருந்த முதல் க்ரோலு அவன். பார்ப்பதற்கு அருமையாய் இருந்த ஒரு காட்டுமிராண்டி அவன். உயரமாய் நேராய் ஒரு அரச குடும்பத்தைப் போல் இருந்தான். தோமரும் அழகானவன்தான். ஆனால் இவனது உடம்பின் ஒவ்வொரு அங்கமும் பரிணாமத்தில் ஒரு படி மேலே இருந்தன. தோமர் இப்பொழுதுதான் க்ரோலுவாகப் போகிறான். ஆனால் இவன் பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில் இருந்தான் கிட்டத்தட்ட ஒரு காலுவாக. “அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்” என்று நான் அஜோரிடம் முணுமுணுத்தேன். “மரணத்தின் நடனம்” என்று பதில் சொன்னாள். அதைக் கேட்டு என் உள்ளமே குலுங்கியது. இப்பொழுதுதான் நான் அதில் இருந்து தப்பிப் பிழைத்து இருக்கிறேன். மிகவும் பாதுகாப்பாக பயங்கரமான அனைத்துக் கட்டங்களையும் தாண்டி வந்த ஒரு மனிதன் இப்படி அநியாயமாக அதே இலக்கின் காலடியிலேயே உயிரை விடுவதென்பதே ஒரு கொடூரம். நான் எனது துப்பாக்கியை எடுத்து அதில் ஒரு பாண்ட்லுவை நோக்கிக் குறி வைத்தேன். அவனைச் சுட்டால் இன்னொருவனும் சாவான். ஏனெனில் அவனுக்கு நேர் பின்னாடி இன்னொருவன் இருந்தான். அஜோர் எனது கையைத் தொட்டாள். “என்ன செய்யப் போகிறாய். அவர்கள் அனைவருமே நம் எதிரிகள்” என்றாள் அவள். “நான் அவனை மரணத்தின் நடனத்தில் இருந்து காப்பாற்றப் போகிறேன். எதிரியோ இல்லையோ.” என்று பதில் அளித்தபடியே துப்பாக்கி விசையை அழுத்தினேன். உடன் அந்த இரு பாண்ட்லுக்களும் குப்புற விழுந்தார்கள். அஜோரிடம் சுழல் துப்பாக்கியைக் கொடுத்து விட்டு எனது கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குழம்பிப் போய் இருந்த கூட்டத்தை நோக்கிச் சென்றேன். அவர்கள் எங்கும் ஓடவில்லை கேஸ்பக்கின் சில கீழ்நிலை மனிதர்களைப் போல இல்லாமல். என்னைப் பார்த்ததும் பேய் போல் கூச்சலிட்டுத் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் தலைகளுக்கு மேல் சுழற்றிக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள். அந்த க்ரோலு அமைதியாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தான். அவன் தப்பிப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அவனது கால்கள் கட்டப்படவில்லை. அவன் பக்கத்திலும் வேறெந்த பாண்ட்லுக்களும் காவல் நிற்கவில்லை. ஒரு பத்து பாண்ட்லுக்கள் என்னை நோக்கி வந்தனர். ஒரு மனிதன் மூன்று எண்ணுவதற்குள் நான் மூன்று பேரைச் சுட்டு வீழ்த்தினேன். அதன் பின் எனது சுழல் துப்பாக்கி இடது தோள்பட்டைக்கருகில் பேசியது. அப்போது ஒருவன் பல்டி அடித்து உருண்டு உருண்டு விழுந்தான். துணிவான பெண் அஜோர்! அவள் அதற்கு முன் எப்போது துப்பாக்கியால் தன் வாழ்நாளில் சுட்டதில்லை, நான் அவளுக்குக் குறி பார்த்து விசையை இழுக்காமல் எவ்வாறு நெருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருந்த போதிலும். அவள் அதைப் பலமுறை பயிற்சி செய்திருந்தாலும் இவ்வளவு அருமையான குறிவல்லவளாக இவ்வளவு சீக்கிரம் தேறுவாள் என்று நான் நினைக்கவில்லை. ஆறு பேரை எளிதாகச் சாய்த்து விட்டோம். மீதி இருந்த ஆறு பேரும் சிறு புதர்களுக்குள் சென்று பதுங்கிக் கொண்டு அடுத்து எப்படித் தாக்குவது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்படியே சென்று விட வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டேன். ஏனெனில் எனது குண்டுகளை நான் வீணடிக்க விரும்பவில்லை. அவர்கள் யாராவது திரும்பத் தாக்க வந்து விடுவார்கள் என்றும் பயமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே மிகவும் அருகில்தான் இருந்தார்கள். ஒருவன் திடீரென்று தனது ஈட்டியை எறிந்தான். அதன் வேகம் நான் பார்த்ததிலேயே அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. அவன் அப்போது முழுவதும் நேராக நின்று கூட அதை எறிந்திருக்கவில்லை. அந்த ஆயுதம் பாதி வழியில் இருக்கும் போது நேராக ஒரு அம்பு போல் அஜோரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது நான் என் வாழ்க்கையில் சிறந்த சூட்டை நிகழ்த்தினேன். நான் சற்றும் குறி பார்க்கவில்லை. தற்காப்பை விடச் சிறந்த ஒரு உணர்ச்சியில் என்னையும் அறியாமல் என் கை சுட்டது. அஜோர் ஆபத்தில் இருக்கிறாள்! அதே நேரத்தில் எனது துப்பாக்கி சரியான கோணத்தில் இருக்க அதில் இருந்து கிளம்பிய வெடி மருந்து தீப்பொறி கக்கிக் கொண்டு துப்பாக்கிக் குழலில் இருந்து குண்டு செல்லும் திசையைக் காட்டிக் கொண்டே சென்றது. ஈட்டியின் முனை சிதறியதால் அது தன் பாதையில் இருந்து விலகியது. ஏமாற்றத்தினால் பெரிதாகக் குரைத்து விட்டு அவர்கள் அனைவரும் தெற்கு நோக்கி மறைவிடத்தில் இருந்து எழுந்து ஓடி விட்டனர். நான் அஜோரைப் பார்த்தேன். அவள் கண்கள் விரிய முகம் வெளிறிப் போய் இருந்தது. மரணத்தின் கோரப் பிடி அவளைப் பிடித்து விலகியது. அதன் பின் ஒரு சிறிய புன்னகை உதட்டில் தோன்றியது. அவள் கண்களில் ஒரு பெருமிதம் குடி கொண்டது. “என் டாம்” என்று சொல்லி என் கைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் “என் டாம்” என்று மட்டுமே சொன்னாள். பின் சற்று என் கைகளை அழுத்தினாள். அவளது டாம்! எனது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று சுழன்றது. இது மகிழ்ச்சியா இல்லை பீதியா. இருக்கவே முடியாது. நான் உடனே என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன் முரட்டுத்தனமாக. “வா!” என்று அவளை அழைத்துக் கொண்டு க்ரோலு கைதியை நோக்கிச் சென்றேன். அந்தக் க்ரோலு எங்களை அலட்சியமாகப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். நாங்கள் அவனைக் கொன்று விடுவோம் என்று நினைத்திருப்பான். அப்படியே நினைத்திருந்தாலும் அவன் பயப்பட்டது போல் தோன்றவில்லை. அவனது கண்கள் எனது கைத்துப்பாக்கியையும் அஜோர் வைத்திருந்த சூழல் துப்பாக்கியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவனது கைக் கட்டுகளை நான் அவிழ்த்தேன். அப்படிச் செய்யும் போது அவனது முகத்தில் ஆச்சர்யம் ததும்பியது. அவன் புதிராக என்னைப் பார்த்தான். “நீங்கள் என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான். “உன்னை விடுதலை செய்கிறேன்.” என்று பதில் அளித்தேன். “விரும்பினால் உன் வீட்டிற்கு நீ செல்லலாம்” “ஏன் நீ என்னைக் கொல்லவில்லை?” என்று கேட்டான். “என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை.” “நான் ஏன் உன்னைக் கொல்ல வேண்டும்? நான் எனது மற்றும் இந்த இளையவளின் உயிரைப் பணயம் வைத்து உன்னைக் காப்பாற்றி இருக்கிறேன். ஏன் நான் அதைத் திரும்ப எடுக்க வேண்டும்?” நிச்சயம் நான் இளையவள் என்று அவளைச் சொல்லவில்லை. ஏனெனில் கேஸ்பக் மொழியில் அதற்கு நிகரான சொல்லே இல்லை. அதனால் அதை மொழி பெயர்க்கும் போது எனக்கான முழு சுதந்திரத்தையும் நான் வழங்கிக் கொண்டேன். ஒரு அழகான இளம் பெண்ணை எப்போதும் “அவள்” என்ற பதத்தால் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அது அந்தளவு பொருத்தமாக இருக்காது. அந்தக் க்ரோலு என்னையே உறுத்துப் பார்த்தான் ஒரு நிமிடம். அதன் பின் பேச ஆரம்பித்தான். “வித்தியாசமான தோல் உடைய மனிதனே, நீ யார்?” என்று கேட்டான். “உனது அவள் ஒரு காலு. ஆனால் நீ காலுவும் அல்ல, க்ரோலு பாண்ட்லு போன்றவர்களும் அல்ல. உன்னைப் போல் ஒருவனை இதுவரை நான் பார்த்ததும் இல்லை. வீரத்தில் வலிமையானவனாகவும் எதிரியில் கருணை நிரம்பியவனாகவும் இருக்கிறாய்” “அது ஒரு பெரிய கதை” என்று நான் பதில் அளித்தேன். “இருந்தாலும் சுருக்கமாக சொல்வதென்றால், நான் கேஸ்பக் மனிதன் அல்ல. நான் இந்த மண்ணுக்குப் புதியவன். மேலும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கெல்லாம் எதிரியும் அல்ல. நான் இங்குள்ள மனிதர்கள் யாருக்கும் எதிரியாக இருக்க விரும்பவில்லை ஒருவனைத் தவிர. அவன் து-சீன்.” “து-சீன்” என்று அவன் ஆச்சர்யத்தோடு உச்சரித்தான். “நீ து-சீனின் எதிரியா. எப்படி” “ஏனெனில் அவன் அஜோரைத் தொந்தரவு செய்கிறான்.” என்று பதில் அளித்தேன். பின் “அவனை உனக்குத் தெரியுமா” என்று வினவினேன். “அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை” என்று அஜோர் பதில் அளித்தாள். “து-சீன் க்ரோலுவிடம் இருந்து வெகு காலத்திற்கு முன்பே பிரிந்து விட்டான் வேறு ஒரு பெயருடன். வேறொரு இனத்திற்குள் செல்லும் முன் இப்படித்தான் எல்லோரும் செய்வார்கள். அவனுக்குத் து-சீன் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் க்ரோலு காலுக்கள் நடுவில் எந்தவித ஒட்டுறவும் கிடையாது.” அந்த வீரன் புன்னகைத்தான். “து-சீன் சென்று வெகு காலம் ஆகி விடவில்லை” என்றான். “அவனை நான் மறப்பதற்கு. கேஸ்பக்கின் பழங்காலச் சட்டங்களை எல்லாம் உடைத்தெறிவதற்கு அவனே புறப்பட்டு விட்டான். அவன் ஒரு க்ரோலு பெண்ணிடம் உறவு வைத்திருக்கிறான். அவன் காலுக்களின் தலைவனாக ஆகி விடலாம். ஆனால் அவன் க்ரோலுக்களிடம் உதவி கேட்டு வந்தான்” அஜோர் வெளிறிப் போய் விட்டாள். அது நம்பவே முடியாததாக இருந்தது. க்ரோலு காலுக்கள் எப்போதும் நட்புடன் பழகியதில்லை. கேஸ்பக்கின் காட்டுச் சட்ட திட்டங்களில் அவர்கள் எப்போதும் முரட்டுத்தனமான எதிரிகளாகவே இருந்தார்கள். அனைத்து இனங்களும் அப்படித்தான் அங்கு தங்களைக் காத்துக் கொள்ள முடியும். “க்ரோலு அவனிடம் சேர்ந்து கொள்வார்களா?” என்று அஜோர் கேட்டாள். “அவர்கள் என் தந்தையான ஜோரின் நாட்டின் மீது போர் தொடுப்பார்களா?” “க்ரோலுவின் இளையவர்கள் எல்லாம் அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.” என்று பதில் சொன்னான் அந்த வீரன். “ஏனெனில் அப்பொழுதுதான் அவர்கள் விரைவில் காலுவாகி விட முடியும் என்று நம்புகிறார்கள். சாதாரணமாக பல ஆண்டுகள் பொறுமையாய்க் காத்திருப்பதை விட ஒரே அடியில் அங்கு சென்று விட விரும்புகிறார்கள். முதியவர்களான நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். நீங்கள் அவர்களது இடத்திற்குச் சென்று அந்தத் தங்க மனிதர்களின் ஆடை அணிகலன்களை அணிந்தாலும் அதற்கான பருவம் வரும் வரை காலுவாகி விட முடியாது என்பதை உணர்த்தினோம். அப்படியே இருந்தாலும் அவர்கள் ஒரு முழுமையான உண்மையான காலு இனமாகி விட முடியாது. ஏனெனில் அவர்களில் சில பேர் என்றுமே எழுந்து விடும் வாய்ப்பும் கிட்டாமல் போகலாம். காலுவின் நாட்டை எப்போதாவது சென்று கொள்ளை அடித்து வாழலாம். ஆனால் அதைப் பிடித்து வைத்துக் கொண்டு பாதுகாக்க நினைப்பது முட்டாள்தனம். என்னைப் பொறுத்தவரை அந்த அழைப்பு வரும் வரை நிம்மதிதான். அனால் அது எந்நேரம் வேண்டுமானாலும் வரலாம்.” “உன் பெயரென்ன?” என்று அஜோர் கேட்டாள். “சால்-ஆஸ்” என்றான் அந்த மனிதன். “நீதான் க்ரோலுக்களின் தலைவனா?” என்று தொடர்ந்தாள். “இல்லை. அது ஆல்-டான். அவன்தான் கிழக்குப்புறம் இருக்கும் க்ரோலுக்களின் தலைவன்.” என்று பதில் அளித்தான் சால்-ஆஸ். “அவன் எனது தந்தையின் நாட்டைக் கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறான். இல்லையா?” “துரதிர்ஷ்டவசமாக அவன் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறான்.” என்று பதில் அளித்தான் அவன். “அவன் தன்னை ஒரு பாட்டுவாகத்தான் இன்னும் நினைக்கிறான். நான் பாண்ட்லு இனத்தில் இருந்து வந்ததில் இருந்தே அவன் தலைவனாய் இருக்கிறான். இவ்வளவு ஆண்டுகளாய் அவனிடம் எந்தவித மாற்றத்தையும் நான் காணவில்லை. அவன் இன்னும் பாண்ட்லுவாகத்தான் இருக்கிறான், க்ரோலுவாக மாறிவிடவில்லை. இருந்தாலும் அவன் நல்ல தலைவன். பலசாலியான வீரன். து-சீன் அவனைத் தன் வயப் படுத்தி விட்டால் காலுக்கள் ஒரு க்ரோலுவின் தலைமையின் கீழ்தான் வாழ வேண்டி இருக்கும். ஏனெனில் ஆல்-டான் தலைமைக்கு கீழே எந்தவித பதவியையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதனால் வெற்றிகரமாக அங்கு அவன் கால் பதித்து விட்டால் லேசில் பின் வாங்க மாட்டான்.” நான் அவனிடம் பாட்டுவென்றால் என்னவென்று கேட்டேன். இதற்கு முன் அந்தச் சொல்லைக் கேள்விப்படவில்லையென்பதால் கேட்டேன். அதை அப்படியே மொழியாக்கம் செய்தால், அதன் அர்த்தம் ஆனது, முடிந்து விட்டது, கடந்து விட்டது, இனி எதுவும் செய்ய இயலாது, என்று பொருள் படும். கேஸ்பக்கில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்க அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்து ஒரு உண்மையும் புலனாகிறது. எல்லோரும் தங்கள் இனத்தில் இருந்து காலுவாகி விடவும் முடியாது. சிலர் ஆலுவையே தாண்டுவதில்லை. மற்றும் சிலர் போலுக்களாகவும் ஸ்தோலுக்களாகவும் பாண்ட்லூக்களாகவும் க்ரோலுக்களாகவும் தங்கள் வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள். ஹோலுவின் முதல் தலைமுறையினர் ஆலுவாக முடியும். ஆலுவின் இரண்டாம் தலைமுறையினர் போலுவாகலாம். போலுக்கள் பாண்டலு ஆவதற்கு மூன்று தலைமுறைகள் தேவைப்படும். இப்படியே பார்த்தோமானால் க்ரோலுக்களின் பெற்றோர்கள் ஆறாம் தலைமுறையினராய் இருப்பார்கள். இவ்வளவு தூரம் விளக்கிய பின்னும் எனக்கு இன்னும் அது முற்றிலும் விளங்கவில்லை. ஏனெனில் குழந்தைகளே இல்லாமல் எப்படி ஒரு இனத்தில் பல தலைமுறைகள் இருக்க முடியும். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்பக்கின் பரிணாம வளர்ச்சியையும் இனப்பரவுதலையும் கட்டுப்படுத்தும் வினோதமான சட்டங்கள் பற்றிய வெளிச்சக்கீற்று என்னுள் பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு காட்டு இன மக்களின் வசிப்பிடங்களில் எப்போதும் அருகில் இருக்கும் வெது வெதுப்பான குட்டைகளுக்குக் கேஸ்பக்கின் பரிணாம வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று எனக்கே ஏற்கெனவே நன்றாகத் தெரியும். எதோ ஒரு இயற்கை விதிக்கு உட்பட்டு அந்தக் கொழ கொழப்பான பச்சை நிற நீரில் தினமும் நீராடும் பெண்களுக்கு அதில் எந்தவிதமான மகிழ்ச்சியோ உடல் தூய்மையோ கிடைத்து விடப்போவதில்லை. இருந்தாலும் ஒருவித மத அடையாளமாகவே அதை அவர்கள் செய்கிறார்கள். இருந்தபோதும் அப்பொழுது நான் கடலில் இருந்தேன். அஜோரும் எனக்கு விவரிக்க முடியவில்லை. ஏனெனில் அவள் பயன்படுத்திய சொற்கள் எனக்குப் புரியவில்லை. அவளால் அதற்கு மேல் விவரிக்கவும் இயலவில்லை. நாங்கள் அப்படி நின்று பேசிக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு அருகில் இருந்த புதரின் அசைவிலும் அருகில் இருந்த மரங்களுக்கு அருகில் ஏற்பட்ட ஒலியினாலும் நாங்கள் திகைத்துத் திரும்பினோம். அங்கே ஒரு நூறு க்ரோலு வீரர்கள் எங்களைச் சுற்றி வளைத்து விட்டனர். அவர்கள் சால்-ஆசை நோக்கிச் சரமாரியாகக் கேள்வி கேட்ட வண்ணம் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது கனமான விற்களில் நீண்ட கூரிய அம்புகள் பூட்டப்பட்டிருந்தன. அவர்கள் என்னையும் அஜோரையும் பார்த்த பார்வையில் முதலில் ஒரு ஆவல் தெரிந்தது. பின்னர் ஒரு சந்தேகமும் படர்ந்தது. ஆனால் சால்-ஆசின் கதையைக் கேட்ட பின் எங்களிடம் நட்பாய்ப் பழகினார்கள். ஒரு பெரிய காட்டுமிராண்டிதான் அனைத்தையும் பேசினான். அவன் ஒரு பெரிய மலை போன்று இருந்தாலும், சரியான அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தான். “இவர்தான் ஆல்-டான், எங்களது தலைவர்” என்று அறிமுகப் படுத்தினான் சால்-ஆஸ். அதன் பின் அவன் எனது கதையைக் கூறினான். ஆல்-டான் நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் அந்த நிலத்தைப் பற்றியும் அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தான். அந்த வீரர்களும் எங்களது பதிலைக் கேட்பதற்கு அருகில் குழுமி விட்டனர். பலவிதமான அவநம்பிக்கையான குரல்கள் எழும்பின அவர்களைப் பொறுத்தவரை வேறோர் உலகமான ஒன்றைப் பற்றி நான் பேசும்போதும், பெருங்கடலைத் தாண்ட படகைப் பயன்படுத்தியது பற்றிப் பேசும்போதும், ஜோ-ஊவைப் போன்ற ஒரு விமானத்தில் ஏறி செங்குத்தான மலைப்பாறைகளைத் தாண்டியது பற்றிப் பேசும்போதும். நீரிலும் செல்லும் விமானத்தைப் பற்றி நான் குறிப்பிட்டவுடனே பலத்த சந்தேகங்களைக் கிளப்பினார்கள். அப்பொழுதுதான் அஜோர் எனக்கு உதவி புரிந்தாள். “நான் எனது இரு கண்களால் அதைப் பார்த்தேன்!” என்று சொன்னாள். “அவர் ஜோ-வூவுடன் அதில் பறந்து சண்டை போடுவதை நான் பார்த்தேன். ஆலுக்கள் என்னைத் துரத்தி வந்தனர். இதைப் பார்த்ததும் பயந்து ஓடி விட்டனர்.” “யார் இவள்.” என்று ஆல்-டான் திடீரென்று கேட்டான். அவனது கண்கள் அஜோரைக் கோபமாய்ப் பார்த்தன. ஒரு கணம் அங்கே ஒரு அமைதி நிலவியது. அஜோர் என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் கேள்வி தொக்கி நின்றது. மனதில் ஏற்பட்ட ஒருவித வலியோடு என்னைப் பார்த்தாள். “யாருடைய அவள்” என்று திரும்பவும் கேட்டான். “அவள் என்னவள்” என்று பதில் சொன்னேன். எந்தவொரு விசை என்னை அப்படிச் சொல்லத் தூண்டியது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடம் கழித்து அப்படிச் சொன்னதற்காக நான் மகிழ்ந்தேன். ஏனெனில் அஜோரின் மகிழ்ச்சியான மற்றும் பெருமிதமான முகமே எனக்கொரு வெகுமதி கொடுத்தது போல் இருந்தது. ஆல்-டான் அவளையே சிறிது நேரம் பார்த்து விட்டு என்னிடம் திரும்பினான். “உன்னால் அவளை வைத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டான். அவன் குரலில் ஒருவித ஏளனம் தொற்றிக் கொண்டிருந்தது. நான் எனது உள்ளங்கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டே சொன்னேன் என்னால் முடியும் என்று. அவன் எனது நடவடிக்கையைக் கவனித்தான். உறையில் இருந்து துருத்திக் கொண்டிருந்த அந்தத் தானியங்கித் துப்பாக்கியை நான் ஏந்தி இருப்பதைக் கவனித்தவன் மெல்லப் புன்னகைத்தான். பின் தன் தலையைத் திருப்பி கர்வத்தோடு வில்லைத் தூக்கி அம்பைப் பொருத்தி நாணை வெகு தூரம் இழுத்தான். அவனது வீரர்களின் முகங்கள் ஆணவப் புன்னகை பூத்திருந்தன. அவனை அமைதியாக அனைத்துக் கண்களும் நோக்கின. அவனது வில்தான் அவர்களிடையே மிகவும் பெரிது. வலிமையானதும் கூட. அதை வளைப்பதற்கும் அவனை விட்டால் வலிமையானவனும் அங்கு இல்லை. ஆல்-டான் அவனது இடது கையின் சுட்டு விரலை அம்பின் கல்லால் ஆன கூரிய நுனி தொடும் வரை வில்லை வளைத்தான். அது அவனுக்கு அவ்வளவு எளிமையான விஷயமாக இருந்தது. அதன் பின் அதைத் தனது வலது கண்ணுக்கு நேராக வைத்து ஒரு கணம் குறி பார்த்து விட்டு அம்பை எய்தான். அது பாய்ந்து நின்ற நேரம் ஒரு ஐம்பதடி தூரத்தில் இருந்த மரத்தினைத் துளைத்துப் பாதி மரத்தின் மறுபுறம் வெளியே நின்றது. ஆல்-டானின் வீரர்கள் மனம் நிறைய பெரும் நிறைவோடு என்னைப் பார்த்தார்கள். அதன் பின் அந்தத் தலைவன் இங்கும் அங்கும் ஓடினான். தனது கரங்களை மடக்கிப் பலம் காண்பித்தான். கடற்கரை விளையாட்டில் பரிசுக்காகப் போராடும் வீரன் ஒருவனைப் போல் இந்த உலகத்திற்குத் தன் வீரத்தைப் பறைசாற்றினான். அஜோருக்கு அது ஒரு சிறிய பொழுது போக்காக இருந்திருக்கும். அதற்கு உடனே ஒரு பதிலடி தேவைப்பட்டது. அதனால் ஒரே மூச்சில் நான் எனது துப்பாக்கியை எடுத்தேன். எடுத்தவுடன் சட்டென்று இன்னும் ஆடிக் கொண்டிருந்த அந்த அம்பை நோக்கிச் சுட்டேன். வெடிச் சத்தம் கேட்டவுடன் அந்த க்ரோலு வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைத் தூக்கினார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்கள் நிலைமை புரிந்து உள்ளே வைத்தனர். பின் எனது கண்கள் நோக்கும் திசையில் அந்த மரத்தை உற்று அவர்கள் கவனித்தனர். அங்கே அம்பைக் காணவில்லை. மரத்தில் ஒரு ஓட்டைதான் இருந்தது எனது குண்டு சென்ற பாதையைக் காட்டிக் கொண்டு. என்னைக் கேட்டால் அது மிகவும் அருமையான சுடல் என்றுதான் சொல்வேன். இல்லையெனில் தேவைதான் அந்த குண்டைச் சரியாகப் பயணிக்க வைத்திருக்கிறது. எனக்கு அப்போது ஒரு நல்ல சுடல் தேவையாய் இருந்தது. எனது மேன்மையைப் போருக்குத் தயாரான இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு நடுவில் நான் நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம். அதன் பலன் உடனடியாகத் தெரிய ஆரம்பித்தது. ஆனால் அது எனக்குச் சாதகமாக இருக்குமா என்பதுதான் புரியவில்லை. நான் அவனுக்குத் தொந்திரவு தராத ஒரு உயிர் என்று போனால் போகிறதென்று என்னை விட்டு விடுவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் முக பாவங்கள் எனக்குச் சாதகமாக இல்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனெனில் அவனது இடத்திற்கே வந்து அவனது வீரர்களுக்கு முன் அவனது வித்தையிலேயே அவனைத் தோற்கடித்ததை யாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒரு அகம்பாவத்தை எந்த ஒரு மன்னன், காட்டுமிராண்டி அல்லது ஒரு நாகரிக மனிதன்தான் மன்னித்து ஏற்றுக் கொள்வான். அவன் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு அவனுடனான நட்பைத் துண்டித்து அஜோருக்காகவாவது அப்படியே என் வழியில் சென்று விடலாம் என்று நினைத்தேன். அப்படிச் செய்தபோது அவன் கைகளைக் குறுக்கே மறித்துத் தடுத்தான். பின் அவனது வீரர்களும் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். “இதுக்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன். ஆல்-டான் பதில் சொல்வதற்குள் எங்களுக்காக சால்-ஆஸ் தனது குரலை உயர்த்திப் பரிந்து பேசினான். “இதுதான் க்ரோலு இனத் தலைவன் ஆல்-டானின் நன்றி உணர்ச்சியா?” என்று கேட்டான். “உனது வீரர்களில் ஒருவனை பாண்ட்லு மக்களின் மரண நடனத்தில் இருந்து காப்பாற்றியதற்கு இது தான் நீ கொடுக்கும் பரிசா?” ஆல்-டான் ஒரு கணம் அமைதியாக இருந்தான். பின் அவனது இமைகள் இயல்பு நிலைக்கு வந்தன. கஷ்டப்பட்டு ஒரு புன்னகையைத் தவழ விட்டுச் சொன்னான். “இந்தப் புதியவனுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேராது. அவன் நமது கிராமத்தில் இன்று தங்கி விருந்து சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்பதைச் சொல்லத்தான் நான் தடுத்தேன். நாளைக் காலை அவன் இங்கிருந்து செல்லலாம். ஆல்-டான் அவனைத் தடுக்க மாட்டான்.” எனக்குத் திருப்திகரமாகவே இல்லை. இருந்தாலும் க்ரோலு கிராமம் உள்ளே எப்படி இருக்கிறதென்று பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. ஆல்-டான் ஏமாற்றுக்காரனாக இருந்திருந்தாலும் இன்றைக்குக் காலையில் நான் இருந்த நிலையை விட இது ஒன்றும் பெரிதில்லை. சொல்லப் போனால் கிராமத்தில் இருந்து இன்றிரவு அஜோருடன் தப்ப வேறு எதாவது வழிகளும் கிடைக்கலாம். இப்பொழுது எங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் போர் வீரர்களிடம் இருந்து சேதப்படாமல் தப்பிப்பதும் சுலபமல்ல. அதனால் அவனது நேர்மையைச் சந்தேகிப்பது அவனுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக அவனது அழைப்பைக் கண்ணியமாகச் சரியான தருணத்தில் நான் ஏற்றுக் கொண்டேன். அவனது மன நிறைவு அவனைப் பார்த்தாலே தெரிந்தது. நாங்கள் அவனது கிராமத்தை நோக்கிச் செல்லும்போது அவன் எனது அருகிலேயே வந்தான். எனது நாட்டைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தான். மக்கள் எப்படி இருப்பார்கள் அவர்களது பழக்க வழக்கங்கள் எப்படி என்று. நாங்கள் மிருகங்களின் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் பகலிலும் இரவிலும் தெருவில் நடந்து போக முடியும் என்று சொன்னதே அவனுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. வெறுமனே மனிதர்களைக் கொல்வதற்கு நாங்கள் பெரும் ராணுவம் வைத்திருக்கிறோம் என்று சொன்னதை அவனது எளிமையான மனத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. “எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது” என்றான். “உங்களைப் போன்ற ஒரு கொடூரமான உலகில் வாழவில்லை என்று. இங்கே கேஸ்பக்கில் ஆண்கள் வேறு ஒரு இனத்தின் ஆண்களைச் சந்திக்கும் போது மட்டுமே சண்டை இடுவோம். அவர்களது ஆயுதங்கள் முதலில் மிருகங்களை வேட்டை ஆடுவதற்கும் தற்காப்பிற்கும் மட்டுமே பயன்படுத்துவோம். உங்கள் மனிதர்களைப் போல் மனிதர்களைக் கொல்வதற்கென்றே ஆயுதங்கள் தயாரிப்பதில்லை நாங்கள். உங்கள் நாடு உண்மையில் ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடாகத் தான் இருக்க வேண்டும். அதில் இருந்து நீ தப்பித்துப் பாதுகாப்பான கேஸ்பக்கிற்கு வந்தது உனது நல்வினைதான்” இது முற்றிலும் ஒரு புதுமையான நிறைவான கண்ணோட்டமாக இருந்தது. ஆல்-டானிடம் நான் கிளம்புவதற்கு முன் இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் போரைப் பற்றிச் சொன்ன பின் அது தவறாகவே தெரியவில்லை. நாங்கள் க்ரோலு கிராமத்திற்குச் செல்லும் வழியெல்லாம் மிருகங்களின் தொந்திரவு தொடர்ந்தது. அதி பயங்கரமான விலங்குகள் எங்களைப் பயமுறுத்தின. ஆல்-டான்தான் ஒவ்வொரு விலங்கையும் கவனித்துக் கொண்டான் என்பதைச் சொல்லவே தேவை இல்லை. நீட்டிய ஈட்டியை எடுத்துக் கொண்டு ஓடுவதாகட்டும் பெரிய அகலமான கம்பை எடுத்து மிருகங்களைக் குத்துவதாகட்டும் எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்து கொண்டே இருந்தது. அதெல்லாம் எங்கள் உரையாடலைப் பாதிக்கவே இல்லை. இருமுறை அவனது கூட்டாளிகள் காயம்பட்டனர் ஒரு முறை ஒரு மிகப்பெரிய காண்டாமிருகத்தால் அவனது வீரன் ஒருவன் கொல்லப்பட்டான். அது நடந்து முடிந்ததும் ஏதும் நடக்காதது போல் நாங்கள் தொடர்ந்தோம். இறந்த மனிதன் உடலில் இருந்து ஆயுதங்கள் அகற்றப்பட்டதும் அவனை அப்படையே விட்டு விட்டுச் சென்று விட்டோம் மாமிசம் உண்ணும் விலங்குகள் அவனைக் கவனித்துக் கொள்ளும் என்பதால். ஒரு ஆங்கிலேய வேட்டைக்காரனைப் பொறாமையால் கன்னம் சிவக்கும் அளவுக்கு அந்த விலங்குகள் இவர்களுக்கு விருந்து படைத்தன. உண்மையில் அவர்கள் அந்தக் காண்டாமிருகத்தின் கறியைத் தேவையான அளவு வெட்டி எடுத்து வீட்டிற்குக் கொண்டு சென்றனர். அந்த வேட்டையில் அவர்கள் மிகவும் களைப்புற்று இருந்தாலும் காண்டாமிருகத்தின் கறி மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதால் அப்படிச் செய்தார்கள். அதன் தோலையும் வெட்டி எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டனர். ஏனெனில் அதை வைத்து அவர்கள் செருப்பு தைக்கவும் கேடயங்கள் மற்றும் கத்திகளுக்கான உறையாகவும் மேலும் பலவிதத்தில் கடினமான தோல்கள் தேவைப்படும் அனைத்து உபயோகங்களுக்காகவும் அதனைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் கேடயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதிலும் அன்று அவர்கள் பட்டாக்கத்திப் புலியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அதனைப் பயன்படுத்திய விதத்தைப் பார்த்ததில் இருந்துதான். அந்தப் பெரிய உருவம் புதர்களுக்கு நடுவில் இருந்து திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தது. அது அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு அங்கே படுத்திருந்திருக்க வேண்டும். உடன் அந்த வீரர்கள் எய்த ஈட்டிகள் அதன் மேல் அவ்வளவு வேகமாக மழை போல் பொழிந்தன. எய்த வேகத்தில் அவைகள் அந்தப் புலியின் உடலைக் கிழித்து வெளியே வந்தன. மேலும் அந்தப் புலியே பல்டி அடித்து உருண்டு விழுந்தது. மிகவும் அருகாமையில் இருந்ததால் ஈட்டியை எறிய வேண்டியதாய் இருந்தது அம்புகளுக்குப் பதில். புலி வீழ்ந்த பின் அதன் மேல் அம்புகளைச் சரமாரியாக எய்தனர். அந்த மிருகம் அவ்வளவு வலி வேதனையிலும் சால்-ஆஸை நோக்கிப் பாய்ந்தது. நான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடியே பார்த்திருந்தேன். ஏனெனில் அதைச் சுற்றி வளைத்த வீரன் ஒருவன் நடுவில் இருந்ததால் எனது துப்பாக்கியை எடுத்துச் சுடவும் முடியவில்லை. ஆனால் சால்-ஆஸ் தயாராக இருந்தான். அவனது வில்லைத் தூர எறிந்து விட்டுப் பெரிய நீள் வட்ட வடிவிலான கேடயத்தை எடுத்து அதனுள் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டான். அதன் நடுவில் ஆறு இன்ச் அளவிற்கு ஒரு சிறிய ஓட்டை இருந்தது. இடது புறத்தில் கைப்பிடியும் வலது புறத்தில் கத்தியையும் ஏந்திக் கொண்டிருந்தான். ஈட்டி மற்றும் அம்புகள் ஏற்படுத்திய பெரும் காயங்களுடன் அந்தப் பெரிய உருவம் அவனை நோக்கி வந்தது. அவன் அப்படியே பின் புறமாகப் படுத்து தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டான். அது அவனருகில் வந்து அந்த காண்டாமிருகத் தோலால் செய்யப்பட்ட அந்தக் கேடயத்தைக் கடித்தது. பிராண்டியது. சால்-ஆஸ் அந்த ஓட்டை வழியாகக் கத்தியை நுழைத்து அந்தக் காட்டு விலங்கின் முக்கியமான உறுப்புகளைக் குதறினான். நான் நடுவில் புகாமல் இருந்திருந்தாலும் அந்தச் சண்டை அவனிடம் நிச்சயம் போயிருக்கும். ஆனால் யாருமில்லாத ஒரு அருமையான திறந்த வெளி கிடைத்தவுடன் நான் அந்த மிருகத்தைச் சுட்டுக் கொன்றேன். சால்-ஆஸ் எழுந்த போது மேலே கையைக் காட்டி மழை வரப் போகிறது என்று சைகை செய்தான். மற்ற அனைவரும் ஏற்கெனவே கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டனர். அந்தச் சண்டை முடிந்து விட்டது. எதோ ஒரு இனம் புரியாத காரணத்தினால் எனக்கு எனது நண்பன் ஒருவன் தனது வீட்டின் தோட்டத்தில் ஒரு பூனையைச் சுட்ட சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. மூன்று வாரங்கள் தொடர்ந்து அதைத் தவிர வேறு எதுவும் அவன் பேசவில்லை. நாங்கள் கிராமத்தை அடைந்த போது கிட்டத்தட்ட இரவு சூழ்ந்து விட்டிருந்தது. அந்தக் கிராமம் பெரிய தடுப்பு வேலிகள் சூழ்ந்த இலைகளால் தைக்கப்பட்ட இரண்டில் இருந்து ஏழு வரை ஒரே இடத்தில் அமைந்த கூரை வீடுகளைக் கொண்டிருந்தது. அறுகோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தன அந்தக் குடிசைகள். மொத்தமாக இருந்த குடிசைகள் தேனீக் கூடுகள் போல் இருந்தன. ஒரு குடிசை ஒரு வீரனுக்கும் அவனது மனைவிக்கும். பல குடிசைகள் சேர்ந்து இருந்தால் அவைகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனது ஒவ்வொரு மனைவிக்கும் என்று பொருள். கிராமத்தைச் சுற்றி இருந்த வேலிகள் மரத்தாலான தடியான தூண்கள் போல் இருந்தன. அவைகளை உறுதியான சுவர்கள் போலாக்க அதன் கீழே காட்டுக் கொடிகள் நட்டு வைக்கப்பட்டு அவைகள் வளர வளர முன்னும் பின்னும் அந்த மரத் தூண்களுடன் பிணைக்கப்பட்டிருந்தன. அந்த மரங்களும் 30 பாகை வெளிப்புறமாகச் சாய்ந்திருந்தன. அதற்குச் செங்குத்தாகச் சிறு மரக் கட்டைகள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன. வெளியின் மேல் பல கோணங்களில் சிறு சிறு கம்புகள் குத்தி வைக்கப்பட்டு இருந்தன. கிராமத்தில் நுழைய ஒரே ஒரு வாயில்தான் இருந்தது. அது மூன்றடி உயரம் மூன்றடி அகலம். அந்த ஓட்டை உள்ளிருந்து மூடப்பட்ட கதவினால் ஆனது. அதன் கதவுகளில் ஆறு அடி நீளமுள்ள கனமான கட்டைகள் நீள வாக்கில் ஒன்றன் மேல் ஒன்றாக பதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்தபோது எங்களை அவ்வளவு விரோதமில்லாத வீரர்களும் பெண்களும் வரவேற்றனர். அவர்களிடம் சால்-ஆஸ் நாங்கள் அவனுக்குச் செய்த உதவியைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அதன் பின் அவர்கள் எங்களிடம் பாச மழை பொழிந்தனர். சால்-ஆஸ் அந்த ஊரில் பெருமை வாய்ந்தவனாக இருந்திருக்க வேண்டும். சிங்கம் மற்றும் புலிகளின் பற்களால் ஆன மாலைகள் உலர்ந்த மாமிசத் துண்டுகள் அழகாகப் பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோல்கள் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண் பாண்டங்கள் அனைத்தும் எங்கள் கைகளில் திணித்தார்கள். அவ்வளவு நேரமும் ஆல்-டான் எங்களையே கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சால்-ஆஸுக்கு நாங்கள் உதவியதால் எங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்களைக் கண்டு பொறாமையோடு கவனித்துக் கொண்டிருந்தான். இறுதியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட குடிசைக்கு வந்தோம். அங்கே எங்களுக்காகச் சில இறைச்சியைச் சமைத்தோம். அந்தப் பெண்கள் கொண்டு வந்த காய் கறியையும் சமைத்தோம். பசுக்களில் இருந்து கிடைத்த பாலினைச் சுவைத்தோம். அதுதான் கேஸ்பக்கில் முதன் முதலாக நான் சாப்பிட்டது. காட்டு ஆடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பாலாடைக் கட்டிகள் தேன் அவர்கள் கைகளால் திரிக்கப்பட்ட கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மெலிதான ரொட்டித் துண்டுகள் திராட்சை மற்றும் திராட்சை ரசங்கள் அனைத்தும் உண்டோம். தொரியாதோரில் இருந்து கிளம்பிய பின் எனக்குக் கிடைத்த அருமையான உணவு அது. தொரியாதோரில் போவனின் சமையல்காரர் பன்றிக்கறியை கோழிக்கறி போல மாற்றும் திறமை படைத்தவர். கோழிக்கறியை சுவர்க்கமாக மாற்றவும் வித்தை கற்று வைத்திருப்பவர். அத்தியாயம் - 6 இரவு உணவு முடிந்த பின்னர் நான் ஒரு சிகரெட்டைச் சுருட்டி வாயிலுக்கு முன் இருந்த விலங்குத் தோல்களின் மேல் நன்றாகக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டேன். அஜோர் என் தொடை மீது தலை வைத்துப் படுத்தாள். பெரும் மன நிம்மதி கிட்டியது போல் இருந்தது. இப்பொழுதுதான் ஒரு அமைதியும் பாதுகாப்பும் கிடைத்தது எனது விமானம் உடைந்து போன பின். எனது கை என்னவள் என்று அறிவித்த அவளது வெல்வெட் பட்டுப் போன்ற கன்னங்களை மெதுவாகத் தடவின. பின் அங்கிருந்து அவளது செழுமையான தலை முடிக்குச் சென்றது. அவளது அழகான தலையில் தங்கத்தாலான ஊசி ஒன்று முடியைக் கட்டி வைத்திருந்தது. அவளது மெல்லிய விரல்கள் எனது விரல்களை எடுத்து அவளது இதழ்களுக்கு அருகில் இட்டுச் சென்றன. அதன் பின் அவளை அப்படியே அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டேன். அவள் இதழ்களில் ஆழப் பதிய நீண்டதொரு முத்தம் கொடுத்தேன். அதுதான் முதல் முறையாக அஜோரிடம் நான் முழு ஈடுபாட்டோடு உறவு கொள்ள ஆரம்பித்தேன். நாங்கள் தனியாக இருந்தோம். அந்தக் குடிசை நாளைக் காலை வரை எங்களுக்கானது. இப்பொழுது வேலியைத் தாண்டி வாயிலை ஒட்டி வீரர்களின் சங்கேத ஒலிகளும் அதற்கு உள்ளிருந்த வாயிற்காப்பாளர்கள் கொடுத்த பதில் ஒலிகளும் கேட்டன. நாங்கள் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி இருக்க வேண்டும். அதில் சந்தேகமில்லை. அவர்கள் நாய்களின் குரைப்புகளுக்கு மத்தியில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். க்ரோலுவின் நாய்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன். அந்த கிராமம் முழுவதுமே நாய்கள்தான். மெலிந்த ஓநாய் போன்ற நாய்கள். மந்தைகளைப் பகலில் பாதுகாக்கும், வேலியைத் தாண்டி பசுக்கள் மேயும் போது, பத்து நாய்கள் ஒரு பசுவிற்கு. இரவில் அந்தப் பசுக்கள் எல்லாம் வெளியில் ஒரு கொட்டிலில் அடைத்து வைக்கப்படுகின்றன மிருகங்களின் தொல்லைகளில் இருந்து காக்க. சில நாய்களைத் தவிர மீதி இருப்பவை கிராமத்திற்குள் அழைத்துச் செல்லப்படுகின்றன. அந்தச் சில நன்றாகப் பழக்கப்பட்ட நாய்கள் கொட்டிலில் பசுக்களைப் பாதுகாக்கின்றன. பகலில் வேட்டையாடிய விலங்குகளின் கறியை அவைகள் நன்றாக உண்ணுகின்றன. வாயிலில் ஒலித்த கூக்குரல்கள் அடங்கிய சற்று நேரத்தில் அஜோரும் நானும் எழுந்து வெளியில் வந்தோம். அதே நேரத்தில் ஒரு குறுகிய சந்து வழியாக ஒரு வீரன் வெளிப்பட்டான். குத்து மதிப்பாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் குடிசைகளுக்கு நடுவில் இருக்கும் சிறு இடைவெளிகள்தான் க்ரோலு கிராமத்தின் தெருக்களாகத் தோன்றின. அவன் எங்களுக்கருகில் வந்து நின்றான். என்னைப் பார்த்துச் சொன்னான், ஆல்-டான் அவனது குடிசையில் என்னைச் சந்திக்க விரும்புவதாக. அழைப்பின் சொற்களும் அவனது தோரணையும் கண்டு எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. மனப்பூர்வமாக முன்னதும் மரியாதையாகப் பின்னதும் இருந்ததால் நானே விருப்பப்பட்டு அவனுடன் செல்ல ஆயத்தமானேன். அஜோரிடம் உடனே வந்து விடுவதாகச் சொன்னேன். குடிசைக்குள் நுழைந்ததுமே எனது ஆயுதங்களைக் கழற்றித் தனியே வைத்து விட்டேன். இப்பொழுது அவைகளை அஜோரிடம் கொடுத்து விட்டேன். அந்த வீரர்களும் தெருக்களில் வேட்டையாடும் கத்தி தவிர வேறெந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பதைக் கவனித்தேன். இதுவரை கேஸ்பக்கில் காணக்கிடைக்காத ஒருவிதமான அமைதியும் பாதுகாப்புணர்வும் மேலோங்கி இருந்தன அந்தக் கிராமத்தில். எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எனது புரிந்து கொள்ளும் தன்மையை மழுங்கடித்து விட்டனவோ என்ற ஐயம் ஏற்பட்டது. நான் பாதுகாப்பின் தாமரை மலரைச் சாப்பிட்டு விட்டேன். இனிமேல் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவை எல்லாம் மறைந்து விட்டன. அந்த வீரன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் தெருக்களில் அழைத்துச் சென்றான். பின்னர் இறுதியில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் வந்து நின்றோம். அதன் ஒரு முனையில் ஒரு பெரிய குடிசை இருந்தது. இங்கே பார்த்ததிலேயே மிகவும் பெரிதாக இருந்தது. அதன் வாயிலில் நிறைய வீரர்கள் இருந்தனர். அந்தக் குடிசையின் உட்புறம் விளக்கொளியில் வெளிச்சமாய் இருந்தது. உள்ளே நிறைய பேர் இருந்தனர். அங்கே நின்றிருந்த நாய்கள் எல்லாம் உண்ணியைப் போன்ற தடிமனில் இருந்தன. அருகில் சென்று கவனித்த போது அவைகள் என்னைத் தின்று விடுவதற்குத் தயாராய் இருந்தன. அவைகளின் மூக்குகளுக்குத் தெரிந்து விட்டன நான் ஒரு வேற்று மனிதன் என்று. எனது கூட வருபவனைப் பற்றி அவைகள் பொருட்படுத்தவே இல்லை. சபை போன்று தோற்றமளித்த அந்த இடத்தினுள் சென்றவுடன் கவனித்தேன் நிறைய வீரர்கள் குழுமி இருந்தனர். சரியாகச் சொல்வதென்றால் தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அந்த நீள் வட்டமான தரையின் ஒரு நுனியில் என்னை விட்டுச் சென்றான் அந்த வீரன். அதன் நடுவில் ஆல்-டான் நின்றிருந்தான். அவனுக்கருகில் ஒரு காலு இருந்தான். அதன் பின் நிறைய காலுக்கள் இருந்தனர். சுவர்களுக்கருகில் தீபங்கள் களி மண்ணால் செய்யப்பட்ட ஓட்டைகளில் பொருத்தப்பட்டிருந்தன. மரத்தால் செய்யப்பட்ட குடிசைகள் தீப்பிடித்து விடக் கூடாது என்பதால். வீரர்களுக்கு நடுவில் அங்குமிங்கும் காவல் நாய்கள் சுற்றிக் கொண்டே இருந்தன. அந்த வீரர்கள் அனைவரும் நான் நுழையும் போது என்னை ஆர்வமாகப் பார்த்தார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த காலுக்கள். அதன் பின் நடு வழியாக ஆல்-டானை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டேன். நான் அவனை நெருங்கிய போது ஒரு நாய் என் கால்களை மோப்பம் பிடித்தது. இன்னொரு நாய் என் மேல் பாய்ந்தது. அதன் நகங்கள் என்னைக் காயப்படுத்தி விடும் என்று அதனை நான் தள்ளி விட எத்தனித்த போது அந்த ஏர்டேல் இன நாய் என் மேல் ஆக்ரோஷமாகப் பாய்ந்தது. பற்கள் வெளியில் தெரிய அந்த முனகலும் பாதி மூடிய அந்தக் கண்களும் பின் பக்கமாக மடங்கிய அந்தக் காதுகளும் மனிதனின் சத்தங்களை விட அதிகமாகப் பேசியது. இங்கே இருப்பவன் ஒரு காட்டுமிராண்டி அல்ல ஒரு நண்பன் என்று. அதன் பின் எனக்கு விளங்கி விட்டது. ஒரு காலை வைத்து மண்டி இட்டு அதன் முன் அமர்ந்து அதன் கழுத்தில் என் கையை வைத்துத் தடவினேன். அது மகிழ்ச்சியில் முனகியது. அதுதான் நாப்ஸ், எனதருமை நாப்ஸ். போவென் டைலரின் நாப்ஸ். தனது உரிமையாளனுக்குப் பின் என்னை மிகவும் நேசிக்கும் நாப்ஸ். “இந்த நாயின் உரிமையாளர் யார்?” என்று ஆல்-டானை நோக்கிக் கேட்டேன். அந்தத் தலைவன் தனது அருகில் நின்ற காலுவைப் பார்த்துத் தலையைத் திருப்பி “அது காலுவாகிய து-சீனினுடையது.” என்று பதில் அளித்தான். “அது சாண்டா மாநகாவின் போவன் டைலரினுடையது.” என்று பதில் அளித்தேன். “எனக்கு இதன் முதலாளி எங்கே என்று தெரிய வேண்டும்” அந்தக் காலு தன் தோள்களைக் குலுக்கினான். “அந்த நாய் என்னுடையது.” என்றான். அது கோர்-ஸ்வ-ஜோவில் இருந்து என்னிடம் வந்தது. அது கேஸ்பக்கின் நாய் போல் இல்லை. மிகவும் அன்பாக இருக்கும். கோபமூட்டினால் கொலைகாரனாகி விடும். நான் யாரிடமும் இதைத் தர மாட்டேன். நீ சொல்லும் மனிதனை எனக்குத் தெரியாது." ஆக இவன்தான் து-சீனா! இவனிடம் இருந்துதான் அஜோர் தப்பித்து வந்திருக்கிறாள். இவனுக்கு அஜோர் இங்கிருப்பது தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் என்னிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்த பின் எனக்கு ஒருவாறு நிம்மதி ஏற்பட்டது. அதில் அவளைப் பற்றி எதுவுமில்லை. அவர்கள் எனது தாய் நிலமான அந்த வினோதமான உலகைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். கேஸ்பக்கில் எனது பயணம் பற்றியும் இங்கு வந்து விட்டபின் இனி என்ன செய்யப் போகிறாய் என்பது பற்றியும் பேசினர். அவர்களிடம் நான் உண்மையைச் சொல்லி விட்டேன். ஒளிப்பதற்கு எதுவும் இல்லை. எனது ஒரே நோக்கம் எனது நண்பர்களைக் கண்டு பிடித்து எனது தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதே. து-சீன் மற்றும் அவனது வீரர்களைப் பார்க்கும் போது அவர்களை ஏன் தங்க இனம் என்று சொன்னார்கள் என்று புரிந்தது. ஏனெனில் அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்தும் உருக்கி அடிக்கப்பட்ட தங்கம். அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆண்களாய் இருந்தனர். உயரமாய் நேராய் அழகாய். அவர்களின் தலை மேல் அஜோர் அணிந்திருந்தது போல் ஒரு தங்கப் பட்டை அணிந்திருந்தனர். அவர்களின் இடது தோள்பட்டையில் இருந்து காலுக்களின் சிறுத்தையின் வால் தொங்கிக் கொண்டிருந்தது. மான் தோலினால் ஆன சட்டையின் மேல், அதுதான் அவர்களின் பெரும்பான்மையான ஆடையாக இருந்தது, ஒரு மெல்லிய போர்வையும் போர்த்தி இருந்தனர். அது அவர்களுக்கு ஒரு காட்டுமிராண்டியாகத் தோற்றம் கொடுத்தாலும் மிகவும் அழகாக இருந்தது. கேஸ்பக்கில் முதல் தடவையாக நெய்தல் திறமையையும் பார்க்கிறேன். அஜோரிடம் அந்தப் போர்வை இல்லை. து-சீனிடம் இருந்து தப்பிக்கும் பொழுது அவள் இழந்திருக்கலாம். இந்த ஆண்களைப் போல் அவள் முழுவதும் தங்க ஆபரணங்கள் அணிந்திருக்கவுமில்லை. அந்தக் கூட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்தது. அதன் பின் ஆல்-டான் என்னை என் குடிசைக்குத் திரும்பச் சொன்னான். அவ்வளவு நேரமும் நாப்ஸ் என் காலடியிலேயே இருந்தது. நான் கிளம்ப ஆரம்பித்ததும் அதுவும் எழுந்து என் பின்னாலேயே வர ஆரம்பித்தது. து-சீன் அதனைக் கூப்பிட்டான். ஆனால் அது அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நான் கிட்டத்தட்ட அந்த அறையின் கதவிற்கு வந்து விட்டேன். அப்பொழுது ஆல்-டான் எழுந்து என்னைக் கூப்பிட்டான். “நில்” என்று சத்தமிட்டான். “நில், புதியவனே, காலுவான து-சீனின் விலங்கு உன்னையே பின் தொடர்கிறது” “அந்த நாய் து-சீனுடையது இல்லை” என்று நான் பதில் அளித்தேன். “அது நான் ஏற்கெனவே சொன்ன எனது நண்பனுக்குச் சொந்தமானது. அது அதனுடைய உரிமையாளனைக் கண்டுபிடிக்கும் வரை என்னுடன் இருப்பதற்கு விரும்புகிறது.” என்று சொல்லி விட்டு நான் எனது வழியில் நடக்க ஆரம்பித்தேன். நான் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தவுடன் என் பின்னால் ஒரே கூச்சல் சத்தம் கேட்டது. அப்போது ஒருவன் என்னருகில் குனிந்து “கசர்” என்று முணுமுணுத்தான். கசர் என்றால் கேஸ்பக் மொழியில் கவனம் என்று பொருள். அதைச் சொல்லியது தோ-மர். அப்படிச் சொல்லிவிட்டு சட்டென்று திரும்பிக் கொண்டான் வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக. அவனும் என்னைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவன். அதே நேரம் து-சீன் வேகமாக என்னை நோக்கி வந்தான். ஆல்-டான் அவன் பின்னால் வந்தான். இருவரும் மிகவும் கோபமாக இருந்தனர் என்பதைப் பார்த்தாலே தெரிந்தது. தனது ஆயுதத்தைப் பாதி உருவிக் கொண்டு து-சீன் பயங்கரக் கோபத்தோடு வந்தான். “அது என்னுடையது” என்று திரும்பவும் சொன்னான். “நீ திருடிச் சென்று விடுவாயோ” என்றான். “அது உன்னுடையது இல்லை. என்னுடையதும் இல்லை.” என்று பதில் சொன்னேன். “நான் அதைத் திருடிச் செல்லவும் இல்லை. அது உன் பின்னால் சென்றால் அதை நான் தடுக்கப் போவதுமில்லை. ஆனால் அது என் பின்னால் வர வேண்டும் என்றால், வரட்டும். நீ அதைத் தடுக்கவும் முடியாது.” நான் ஆல்-டானை நோக்கினேன். “இது சரியாகப் படவில்லையா?” என்று கேட்டேன். “அந்த நாயே தனது காப்பாளனைத் தீர்மானிக்கட்டும்.” து-சீன் ஆல்-டானின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் நாப்ஸின் கழுத்தைப் பற்றினான். நான் அதில் தலையிடவில்லை. தலையிட்டால் என்ன நடக்கும் என்று தெரியும். ஆம் அதுதான் நடந்தது. காட்டுத்தனமாக உறுமியபடியே மின்னலைப் போல் நாப்ஸ் அந்தக் காலுவை நோக்கியது. அவனது பிடியை உதறி விட்டு அவனது கழுத்தைக் கவ்வப் பாய்ந்தது. அவன் சட்டென்று திரும்பி முதல் தாக்குதலைத் தன் கையினால் ஒரு குத்து விட்டுத் தடுத்தான். அதன் பின் ஒரு கத்தியை எடுத்து நாப்ஸை எதிர் கொள்ளத் தயாரானான். நாப்ஸ் பாய்ந்திருக்கும் நான் எதுவும் சொல்லி இருக்காவிட்டால். நான் ஒரு மெல்லிய குரலில் அதனை அமரச் சொன்னேன். ஒருக் கணம் சற்று யோசித்தது. அதனது எதிரியைப் பார்த்து விரிந்த பற்கள் தெரியும் வாயினால் கோபமாக முறைத்தது. அது மிகவும் நன்றாகப் பழக்கப்பட்ட நாய். போவனைப் போல் என்னுடனும் ரொம்ப நாட்கள் வெளியில் சுற்றி இருக்கிறது. அதனால் மெதுவாக நடந்து என் பின்னால் சென்று நின்று கொண்டது. து-சீன் ஆத்திரத்தில் சிவந்த முகத்துடன் நிச்சயம் எங்கள் இருவரையும் எதாவது செய்திருப்பான் ஆல்-டான் அவனை ஓரமாக இழுத்துக் கொண்டு போய் அவன் காதுகளில் கிசுகிசுக்காமல் இருந்திருந்தால். அதன் பின் ஒருவித பொறுமலுடன் அந்தக் காலு அந்த மன்றத்தின் எனக்கு நேரெதிர் இருந்த வாயிலை நோக்கிச் சென்றான். நானும் நாப்ஸும் எனது குடிசையை நோக்கிச் சென்றோம். மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொது சால்-ஆசைக் கண்டேன். அவன் எனக்குத் தொட்டு விடும் தூரத்தில்தான் இருந்தான். எங்கள் கண்கள் அப்போது சந்தித்தன. நான் அவனை முக மலர்ச்சியோடு முகமன் கூறினேன். சற்று நின்று அவனிடம் பேச எத்தனித்தேன். ஆனால் அவன் என்னைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான். எனக்கு அவனது நடத்தை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதன் பின் யோசித்துப் பார்த்த போது தோ-மர் கூட என்னை எச்சரித்த போதும் என்னைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை என்பது புலனானது. அவர்களது நடத்தை எனக்குப் புரியவில்லை. எதாவது விளக்கம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு துப்பாக்கிச் சூடு வந்து என் எண்ணத்தைக் கலைத்தது. உடனே நான் ஓட ஆரம்பித்தேன். என் சிந்தனை கலவரப்படுத்தியது. ஏனெனில் இங்கிருக்கும் ஒரே ஒரு துப்பாக்கி அஜோரிடம் நான் விட்டு வந்தது மட்டும்தான். அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் என்னால் பயப்படுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. இருவகையான துப்பாக்கிகளையும் நன்றாகக் கையாளத் தெரிந்தவள் அவள். அதனால் தெரியாமல் சுட்டிருக்கவும் வாய்ப்பில்லை. அந்தக் குடிசையை நான் விட்டுச் செல்லும்போது இங்கு அவள் பாதுகாப்பாக இருப்பாள் என்றுதான் நினைத்தேன். ஆபத்து நேரப் போவதில்லை என்றே முழுமையாக நம்பினேன். நான் அந்த மன்றத்திற்குச் சென்றது து-சீன் வந்தது சால்-ஆஸ் தோ-மர் இருவரும் வினோதமாக நடந்தது எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது எனக்குள் சந்தேகம் அரும்பத் தொடங்கியது. க்ரோலு கிராமத்தின் அந்தக் குறுகிய சந்துக்கள் வழியாக வேகமாக ஓடினேன். என் இதயம் கிட்டத்தட்ட வாயின் அருகில் வந்து விட்டது போல் இருந்தது. திசைகள் தெரிந்து கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தச் சில வருடங்களில் அதை நான் மிக நுணுக்கமாகக் கற்றிருக்கிறேன். எனது ஊரில் சம வெளியிலும் பாலைவனத்திலும் மலைகளிலும் பயணப்பட்ட அனுபவம் எனக்கு நன்றாகக் கை கொடுத்தது. அதனால் வெகு எளிதாக நான் எனது குடிசையைக் கண்டு பிடித்து விட்டேன். நான் வாயில் அருகில் வந்தவுடன் அவள் பெயரைச் சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டே வந்தேன். எந்தவிதப் பதிலும் இல்லை. என் பையில் இருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியைப் பற்ற வைத்தேன். பற்ற வைத்ததும் மாமிச மலை போன்று இருந்த ஒரு ஆறு வீரர்கள் பல திக்குகளில் இருந்தும் என் மேல் பாய்ந்தார்கள். அந்தக் குச்சி எரிந்த அந்தச் சிறு நொடிப் பொழுதிலும் கூட அங்கு அஜோர் தென்படவில்லை. எனது ஆயுதங்களும் அங்கு இல்லை. அந்த ஆறு பேரும் என் மேல் பாய்ந்த போது ஒரு கோபமான உறுமல் அவர்களின் பின்னால் கேட்டது. நான் நாப்ஸை மறந்தே விட்டேன். கோபத்தின் மறு உருவமாய் க்ரோலுவின் வீரர்கள் ஆறு பேரின் மேலும் பாய்ந்து கிழித்து வெட்டிக் குதறி விட்டது அதன் குரூரமான பற்களால். அவர்கள் ஒரு நொடியில் என்னை அமுக்கி விட்டிருந்தனர். நாப்ஸ் இல்லை என்றால் அவர்கள் என்னை அங்கேயே அடைத்து வைத்திருப்பார்கள் என்பதைச் சொல்லவே தேவை இல்லை. அவர்களை உதறிவிட்டு நான் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போது நாப்ஸ் ஒவ்வொருவனாய்ப் பிடித்து இழுத்து வீட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொருவனும் தன் உயிரைக் கைகளில் பிடித்துக் கொண்டு இருந்ததால் என்னை அவர்கள் கவனிக்க நேரமே இல்லை. அதில் ஒருவன் என் தலை மேல் தனது கம்பை எடுத்து அடிக்க எத்தனித்தான். ஆனால் நான் அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டேன். அதன் பின் ஒரு நொடியில் சுதாரித்து எழுந்து விட்டேன். அப்படி எழும்போது அவனின் கையின் பிடி என்னிடம் இருந்தது. அதனால் அதை என் தோள்பட்டை வரை இழுத்துச் சட்டென்று அவனை அலேக்காகத் தூக்கிக் குடிசைக்கு வெளியே எறிந்து விட்டேன். அந்த மங்கலான வெளிச்சத்தில் நாப்ஸ் இன்னொருவனை முடித்து விட்டதை என்னால் பார்க்க முடிந்தது. ஒருவன் அமைதியாகத் தரையில் அமர்ந்திருந்தான். மீதி நான்கு பேரும் கத்தியை எடுத்து நாப்ஸிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். நான் எறிந்த அந்த வீரனின் ஒரு பக்கம் ஓடிச் சென்று அவனது கத்தியையும் அரிவாளையும் எடுத்துக் கொண்டேன். மறு கணம் அவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் காட்டுமிராண்டி மனிதர்களுக்கு நான் கொஞ்சம் கூட இணையில்லை. அவர்களது ஆயுதங்களுடன் அவர்களுடன் சண்டை இட்டால் நான் நிச்சயம் ஒரு மோசமான தோல்வியைத் தழுவி விட்டு இறந்து விட்டிருப்பேன் நாப்ஸ் மட்டும் இல்லை என்றால். அது மட்டும் அந்த நால்வருக்கும் ஈடு கொடுத்துச் சண்டை இட்டது. எந்தவொரு விலங்கும் இவ்வளவு வேகமாக இருந்து நான் பார்த்ததில்லை. அதுவும் அதன் ஆக்ரோஷமான தாக்குதல் போல் வேறெந்த மிருகத்திடமும் நான் கண்டதில்லை. அந்தத் தாக்குதல்தான் எங்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறது. அவர்களும் இந்த ஆக்ரோஷத்திற்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த வினோதமான விலங்கும் அதன் வினோதமான முதலாளியையும் பார்த்து ஆச்சர்யமடைந்திருந்தனர். இருந்தும் அவர்கள் யாரும் கோழைகள் இல்லை. நாங்கள் கூட்டாக வேலை பார்த்ததால்தான் அவர்களைத் தோற்கடிக்க முடிந்தது. நாங்கள் இருவரும் ஒருவனை நோக்கிப் போவோம். நாப்ஸ் கடிக்கும் போது நான் அவனின் மண்டையில் அரிவாளையும் கத்தியையும் வைத்துத் தாக்குவேன். கடைசியாய் இருந்தவனும் சாய்ந்து விட்டபிறகு மைதானத்தின் திசையில் இருந்து பல பேர் ஓடி வரும் சத்தம் கேட்டது. இப்பொழுது சிறை பிடிக்கப்பட்டால் நிச்சயம் சாவுதான். இருந்தாலும் இப்பொழுது என்னால் அஜோர் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் இந்த கிராமத்தை விட்டு வெளியேறவும் முடியாது. அவள் சிறை பட்டுக் கிடந்தால் அவளை விடுவிக்கவும் வேண்டும். இருந்தபோதும் இங்கிருந்து தப்பிக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கேயே இருந்து சிறை படுவது எனக்கும் அஜோருக்கும் எந்தவித பயனும் இல்லை எனபதே அது. நாப்ஸ் ரத்தக்கறையுடன் இருந்த போதும் மகிழ்ச்சியாக இருந்தது. அது என் பின்னால் தொடர்ந்து வர முதல் தெரு வழியாகச் சட்டென்று பாய்ந்து கிராமத்தின் வட திசை நோக்கிப் பயணித்தேன். நண்பர்கள் யாரும் உதவிக்கு இல்லாமல் தனிமையில் இந்தக் காட்டுமிராண்டிக் கிராமத்தின் இருட்டுத் தெருக்களில் வேட்டையாடப்பட இதை விடக் கையறு நிலை வேறெதுவுமில்லை. இருந்தாலும் பயத்தை அதிகரிக்காமல் அஜோரைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். அவளுக்கு என்ன ஆகி இருக்கும். எங்கே யாரிடம் சிக்கி இருப்பாள். இதையெல்லாம் கண்டு பிடிக்கும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே சந்தேகம்தான். அவளைக் கண்டு பிடிக்கப் போராடும் வழியில் என் உயிரைக் கொடுக்கவும் நான் சித்தமாய் இருக்கிறேன் என்பது மட்டும் உண்மை. ஆனால் ஏன்? என்னுடன் கேப்ரோனாவிற்குப் பயணித்த எனது நண்பர்கள் அதிலும் என் உயிர் நண்பன் போவன் டைலர் இவர்களெல்லாம் இருக்கும்போது. இதற்கு முன் எந்தவொரு உயிரினத்தின் பாதுகாப்புப் பற்றியும் முடக்கிவிடக் கூடிய பயமான இப்படியொரு உணர்ச்சியை நான் அனுபவித்ததில்லை. அது இப்பொழுது என்னை விரக்தியின் வெப்பத்திற்கும் பீதியின் குளிர்ந்த வியர்வைக்கும் நடுவில் என்னை மாறி மாறிச் சுழல வைத்துச் சித்திரவதை செய்தது இந்த அரை காட்டுமிராண்டிப் பெண்ணின் விதியை எண்ணித் தவிக்கும் போது. அவள் எனக்கு அப்படி என்ன மாயம் செய்து விட்டாள். என் மனம் சரியாக யோசிக்க விடாமல் எதாவது வசியம் செய்து விட்டாளா? அதைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள முழுவதும் மறுத்து விட்ட நிலையிலும் எதோ ஒரு பைத்தியக்காரத்தனம் எனது முடிவெடுக்கும் திறமையையும் பகுத்தறிவையும் சிம்மாசனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டது. நான் என்றும் இதுவரையிலும் காதல் வயப்பட்டதில்லை. இப்பொழுதும் காதல் வயப்படவில்லை. அந்த எண்ணமே முட்டாள்தனமாக இருந்தது. எப்படி தாமஸ் பில்லிங்ஸ் ஆகிய நான், அமெரிக்கத் தொழில் துறையின் அரசன் கலிபோர்னியாவின் மாபெரும் மனிதரான மூத்த போவன் ஜே டைலரின் வலது கரமாகிய நான் எப்படி இந்த இந்த - தொண்டையில் வார்த்தையே சிக்கிக் கொண்டது. எனது சுய அமெரிக்கத் தரத்தைப் பார்க்கும்போது இவளெல்லாம் ஒன்றுமே இல்லை. ஊரில், அவளது அழகு, மென்மையான இளம் தோல், நடை உடை பாவனைகள், அவளது மக்களின் நாகரீகம், அவளது வாழ்க்கை இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவளை ஒரு பட்டிக்காடு என்று எளிதில் முத்திரை குத்தி விடுவார்கள். டாம் பில்லிங்ஸ் ஒரு பட்டிக்காட்டின் மீதா காதல் கொண்டிருக்கிறான்! அதை நினைக்கும் போதே என் மனம் நடுங்கியது. அதன் பின் எனக்கு நினைவுக்கு வந்தது. மனத் திரையில் சட்டென வெளிச்சம் பரவி அஜோரைக் கடைசியாகப் பார்த்த அந்தக் காட்சி தோன்றியது. ஆல்-டானின் சபைக்குச் செல்லும் முன் அவளும் நானும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்தக் காட்சியை மீண்டும் வாழ்ந்து பார்ப்பது போல் உணர்ந்தேன். நான் எப்பேர்ப்பட்ட பொறுக்கி போலியானவன் என்பதை அந்த நிகழ்ச்சி உணர்த்த என்னையே நான் அறைந்து கொண்டிருப்பேன். எப்பொழுதும் நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று கர்வத்தோடு இருந்தவன் நான். நானும் நாப்ஸும் அந்த கிராமத்தின் இருட்டான தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கும் போது இதெல்லாம் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. எங்களைத் தெடிக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் காலடிச் சத்தங்கள் எங்களுக்கு அருகாமையிலேயே கேட்டுக் கொண்டிருந்தன. இவை மற்றும் இன்னும் பல விஷயங்கள் மறுக்க முடியாத அந்த உண்மையில் இருந்து தப்பிக்கவே முடியாது. எனது எண்ணங்களும் நம்பிக்கையும் சுற்றிப் படர்ந்திருந்த அந்த உருவம் அஜோரினுடையது. என் காதல் காட்டுமிராண்டி. என் கனவுகள் சட்டென்று உடைந்தன. ஒரு கரகரக் குரல் நாங்கள் கடந்து செல்ல வேண்டிய ஒரு குடிசையின் இருட்டினுள் இருந்து அழைத்தது. எனது பெயரை அது மெல்லியதாய் உச்சரித்தது. ஒரு மனிதன் அதனுள் இருந்து வெளியே வந்தான். நான் உருவிய கத்தியுடன் அவனை வரவேற்றேன். அவன் சால்-ஆஸ். “சீக்கிரம்!” என்று கத்தினான். “உள்ளே வா. இது என் குடிசை. இதை அவர்கள் தேட மாட்டார்கள்.” நான் தயங்கினேன். சில மணி நேரங்களுக்கு முன் அவன் நடந்த விதத்தை யோசித்துப் பார்த்தேன். எனது எண்ணத்தை அவன் படித்து விட்டது போல அவன் விரைந்து சொன்னான். “அந்த மைதானத்தில் என்னால் உன்னிடம் பேச முடியவில்லை. ஏனெனில் பிறகு உன்னைக் காப்பாற்ற முடியாமல் போய் விடும்படி அவர்கள் என்னைச் சந்தேகிப்பார்கள் என்பதால். ஆல்-டான் உனக்கெதிராகத் திரும்பி விட்டான். உன்னைக் கொன்று விடுவான் என்று எனக்குச் செய்தி கிடைத்தது. இது அந்தக் காலு இங்கே வந்த பிறகுதான் நடந்தது.” நான் அவனைப் பின் தொடர்ந்து அவனது குடிசைக்குள் நுழைந்தேன். நானும் நாப்ஸும் உள்ளே நுழைந்து பல அறைகளைக் கடந்து ஒரு சாளரம் இல்லாத ஒரு அறையினுள் நுழைந்தோம். அங்கே ஒரு சிறு அகல் விளக்கு அந்த மையிருட்டில் போராடிக் கொண்டிருந்தது. அதில் எரிந்த எண்ணையின் புகையைப் போக்குவதற்கு அறையின் மேலே ஒரு சிறு துவாரம் இருந்தது. இருந்தாலும் அந்த அறை அவ்வளவு தெளிவாக இல்லை. அங்கே சால்-ஆஸ் ஒரு இருக்கையைச் சுட்டிக் காட்டினான். அது ஒரு விலங்கின் தோல், தரையில் விரிக்கப்பட்டிருந்தது. “நான் உனது நண்பன்” என்றான் சால்-ஆஸ். "நீ எனது உயிரைக் காப்பாற்றினாய். பாட்டுவாகிய ஆல்-டான் போல நானும் ஒரு நன்றி கெட்டவன் அல்ல. நான் உனக்கு உதவி செய்வேன். என்னைப் போல் உனக்கு வேறு சிலரும் உதவி செய்யத் தயாராய் இருக்கிறார்கள் ஆல்-டான் மற்றும் அந்தத் துரோகி காலு து-சீனுக்கு எதிராய். “ஆனால் அஜோர் எங்கே இருக்கிறாள்?” என்று நான் கேட்டேன். அஜோருக்கு ஒரு ஆபத்து இருக்கும் போது என்னைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவே மாட்டேன். “அஜோரும் பாதுகாப்பாக இருக்கிறாள்.” என்று அவன் பதில் அளித்தான். “ஆல்-டான் து-சீனின் திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரிந்து விட்டது. அஜோர் இங்கிருப்பது தெரிந்த பின், து-சீன் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படிக் கேட்டான். ஆல்-டானும் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டான். ஆனால் அவளை அழைத்துச் செல்லும் வீரர்களுடன் தோ-மாரும் சென்றான். அஜோர் தற்காத்துக் கொள்ள முயன்றாள். அவள் ஒரு வீரனைக் கொன்றாள். அதன் பின் தோ-மார் அவளைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டான். அதன் பின் மற்ற சிலர் அவளிடம் இருந்து ஆயுதங்களை பறித்துக் கொண்டனர். அவன் மற்றவர்களைக் காயம்பட்ட அந்த வீரனைக்- அவன் ஏற்கெனவே இறந்து விட்டான்- கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு நீ வந்தவுடன் உன்னைச் சிறை பிடிக்கவும் உத்தரவிட்டுச் சென்று விட்டான். அவன் அஜோரை ஆல்-டானிடம் ஒப்படைத்து விடுவதாகவும் கூறிச் சென்றான். ஆனால் அவனிடம் கூட்டிச் செல்வதற்குப் பதில் தன்னுடைய குடிசைக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கே அவள் சோ-ஆலுடன் இருக்கிறாள். சோ-ஆல் தான் தோ-மாருடைய அவள். அதெல்லாம் வெகு வேகமாக நடந்து முடிந்து விட்டன. தோ-மாரும் நானும் மாமன்றத்தின் கூட்டத்தில் து-சீன் உன்னுடைய நாயை எடுத்துக் கொள்ள முயற்சித்த போது அங்கே இருந்தோம். நான் தோ-மாரை இந்த வேலை செய்ய உதவி கேட்டேன். அவன் உடனடியாக அந்த வீரர்களுடன் உனது குடிசைக்குச் சென்றான். நான் கூட்டத்தில் என்ன நடக்கிறதென்று கவனிக்க அங்கேயே இருந்தேன். உனக்கு உதவி எதாவது தேவை இருந்தால் செய்யலாம் என்று நினைத்தேன். அதன் பின் நடந்தது உனக்கே தெரியும்” அவனது விசுவாசத்திற்கு அவனுக்கு நன்றி தெரிவித்தேன். அதன் பின் என்னை அஜோரிடம் கூட்டிச் செல்லச் சொன்னேன். ஆனால் அதை இப்போது செய்ய முடியாது என்று சொன்னான். ஏனெனில் இந்த கிராமத்தில் உன்னைத் தேடிக் கொண்டு சுற்றுகிறார்கள். சொல்லப் போனால் அவர்கள் இங்கும் அங்கும் சென்று விசாரித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. இறுதியில் சால்-ஆஸ் தனது வீட்டின் வாயிலில் சென்று யாராவது தேடிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்கலாம் என்று நினைத்துச் சென்றான். அவனது வீடும் பல குடிசைகள் கொண்ட தொகுப்பாக இருந்தது. சால்-ஆஸ் நீண்ட நேரம் காணவில்லை. பல மணி நேரம் கடந்து விட்டிருந்தன. அது ஒரு முடிவில்லாத யுகம் போல் இருந்தது. எல்லா சத்தங்களும் அடங்கி விட்டிருந்தன. எனக்கு மிகவும் சஞ்சலமாய் இருந்தது அவன் இவ்வளவு நேரம் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டானே என்று. அப்பொழுது அவன் இன்னொரு குடிசை வழியாக உள்ளே நுழைந்தான். அவன் முகம் மிகவும் குழம்பிப் போய் இருந்தது. அவன் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்தது. “என்னாச்சு?” என்று கேட்டேன். “அவர்கள் அஜோரைக் கண்டு பிடித்து விட்டார்களா?” “இல்லை” என்று பதில் அளித்தான். “ஆனால் அஜோர் சென்று விட்டாள். நீ அவர்களிடம் இருந்து தப்பித்தது அவளுக்குத் தெரிந்து விட்டது. நீ இந்த கிராமத்தை விட்டுத் தப்பித்து விட்டாய் என்றும் அவள் நினைத்திருக்கிறாள். சோ-ஆல் கூட அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேலியின் மேலேறித் தப்பிச் சென்று விட்டாள். அவளிடம் ஒரே ஒரு கத்தி மட்டுமே இருந்தது.” “அப்படி என்றால் நானும் செல்ல வேண்டும்” என்று எழுந்து கொண்டே சொன்னேன். நாப்ஸ் எழுந்து தன் தலையை உலுக்கியது. அது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது நான் பேசும்போது. “சரி” என்று ஆமோதித்தான் சால்-ஆஸ். “நீ உடனே செல்ல வேண்டும். கிட்டத்தட்ட விடிந்து விட்டது இப்பொழுது. து-சீன் அவளைக் காலையில் தேடித் செல்ல இருக்கிறான்.” அவனின் காதுகளில் வந்து கிசுகிசுத்தான். "நிறைய பேர் உன்னைப் பின் தொடர்ந்து வந்து உன்னைக் காப்பதற்கு வருவார்கள். ஆல்-டான் ஜோரின் காலுக்களுக்கு எதிராக து-சீனை ஆதரிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறான். ஆனால் எங்களில் பலர் க்ரோலு மற்றும் கேஸ்பக்கின் சட்ட திட்டங்களை மனசாட்சி இல்லாமல் அழிக்க நினைக்கும் ஆல்-டானுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முடிவெடுத்து விட்டோம். லுவாதா எங்களுக்கு உத்தரவிட்டது போல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். நாங்கள் மட்டுமே வெல்வோம். எந்த பாட்டுவும் குறுக்கு வழியில் காலுவின் நிலத்தை துரோகத்தால் ஆயுதங்களால் அடைய முடியாது இந்த சால்-ஆஸ் உயிரோடு இருக்கும் வரை. உண்மையான க்ரோலுவாய் அதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் எங்கள் கூரிய குத்தீட்டிகளால். “நான் உங்களுக்கு உதவி செய்ய உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்று பதில் அளித்தேன். “எனது ஆயுதமும் குண்டுகளும் என்னிடம் இருந்திருந்தால் என்னால் உதவி செய்திருக்க முடியும். அது எங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?” “இல்லை” என்று சொன்னான் அவன். “அவைகள் மாயமாய் மறைந்து விட்டன. பின்,”சற்றுப் பொறு. நீயும் பாதி ஆயுதமும் மீதி உடையுமாய் இப்படியே வெளியே செல்லவும் முடியாது. நீ ஒரு காலுவின் நாட்டிற்குச் செல்கிறாய். அதனால் காலுவின் உடைகளோடு செல்ல வேண்டும். வா என்னுடன்." என்று என் பதிலை எதிர்பார்க்காமல் வேறொரு குடிசைக்குள் சென்றான். இங்கே ஒரு குவியலாய் ஆயுதங்களும் ஆடைகளும் ஆபரணங்களும் கிடந்தன. “உன்னுடைய வினோதமான அந்த உடையைக் கழற்றி விடு.” என்றான் சால்-ஆஸ். “நான் உன்னை ஒரு உண்மையான காலுவாக மாற்றுகிறேன். அவர்களில் நிறையப் பேரை நான் ஆரம்பத்தில் கொன்றிருக்கிறேன். இதுதான் அவர்களின் உபகரணங்கள்” அவன் கூறியதில் இருந்த உண்மை எனக்குப் புரிந்தது. எனது உடையும் கிட்டத்தட்டக் கிழிந்து விட்டிருந்தது. என் உடம்பில் பாதியை மட்டுமே மறைத்துக் கொண்டிருந்தது. அதனால் அவைகளைக் கழற்றி எறிவது எனக்கு ஒன்றும் சிரமமாய் இல்லை. அனைத்தையும் களைந்து விட்டு செம்மானின் தோலால் செய்யப்பட்ட அந்த உள்ளாடையை எடுத்து அணிந்து கொண்டேன். அதன் பின் சிறுத்தை வால், தங்கத்தாலான தலை முடி கட்டும் ஊசி, காப்பு, காலில் அணியும் காலுவின் ஆபரணங்கள் வாருடன், உரையுடன் கூடிய கத்தி, கேடயம், ஈட்டி, வில் அம்பு மற்றும் நீண்ட கயிறு. இப்பொழுதுதான் அந்தத் தனித்துவமான காலுவின் ஆயுதம் பற்றி முதன் முறையாக அறிந்து கொண்டேன். அது பதப்படுத்தப்படாத விலங்குத் தோல் கயிறு. மேற்குப்புற அமெரிக்காவிலும் எனது இளமைக் காலத்தில் மாடுகள் மேய்க்கவும் பயன்படுத்திய கயிறு. அதன் முனையில் தங்கத்தாலான சிறு வளையம் தூக்கி எறிவதற்குச் சரியான எடையில் கட்டப்பட்டிருந்தது. இந்தப் பாரமான வளையம்தான் எதிரியை நோக்கி மிகுந்த வேகத்தில் வீசி எறிந்து சுருட்டி இன்னொரு தடவை பயன்படுத்தலாம் என்று சால்-ஆஸ் விளக்கிக் கொண்டிருந்தான். வேட்டையிலும் சண்டையிலும் வளையம் மற்றும் சுருக்கு இரண்டையும் பயன் படுத்தலாம். பல பேர் ஒரு எதிரியையோ அல்லது விலங்கையோ சூழ்ந்து கொண்டால் சுருக்கு முனையை வீசுவார்கள். ஒரு வீரன் இன்னொரு எதிரியைச் சந்திக்க நேர்ந்தால் அந்த வளையத்தை வீசுவான். எனக்குத் துப்பாக்கி தவிர்த்து வேறெந்த ஆயுதம் கொடுத்தாலும் திருப்திகரமாக இருக்காது. அவன் அதை எனக்காக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கலாம். கயிறு சுற்றிச் சிறு வயது முதலே நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். என் உடைதான் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. இந்த உணர்ச்சியைச் சொல்ல வேண்டும் என்றால், நான் அம்மணமாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அது அவ்வளவு மெலிதாக லேசாக இருந்தது. இந்த கயிற்றின் பேர் என்ன என்று கேட்டேன். அது கா என்றான். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. காலுவென்றால் என்ன என்று. கயிறு மனிதன் என்று பொருள் படுகிறது. ஆடை அணிகலன்கள் அணிந்த பின் என்னைப் பார்த்தால் எனக்கே நம்ப முடியவில்லை. என் பின்னால் வில் அம்புகள் கேடயம் சிறிய ஈட்டி அனைத்தும் தொங்கிக் கொண்டிருந்தன. எனது இடுப்பின் நடுவில் கத்தி தொங்கியது. எனது வலது இடுப்பில் அரிவாள் இருந்தது. இடது புறம் கயிறு சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. வலது கையை வைத்து இடது தோள் பட்டையில் இருந்து ஈட்டியையோ அம்புகளையோ எடுத்து விட முடியும். இடது கை வில்லை எடுக்க முடியும் வலது தோளில் இருந்து. கேடயத்தை என் முன்னால் கொண்டு வர நான் நன்றாகக் குனிந்துதான் அதை எடுக்க முடியும். அந்தக் கேடயம் நீள்வட்ட வடிவில் பெரிதாக இருந்தது. அதை வைத்து முன்னால் சண்டையிடும் போது பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள முடியாது. மிருகங்களிடம் இருந்து தப்பிக்கவே அதைப் பயன் படுத்த முடியும். நெருக்கமாய் அணிந்த கை வளையங்கள் அனைத்தும் அரிவாள் ஈட்டி கத்தி அம்புகள் போன்றவற்றை முன்னால் வரும்போது தடுக்கப் பயன் படுகின்றன. ஆனால் பெரிய மிருகங்களிடம் இருந்தும் பல எதிரிகளிடம் இருந்தும் காப்பதற்கு இந்தக் கேடயமே நன்றாகப் பயன்படும். அதில் இடது புறம் ஒரு கைப்பிடியும் இருக்கிறது. ஒரு போர்வை மட்டும்தான் இல்லை மற்றபடி அனைத்தும் என்னிடம் இருக்கிறது. நான் சால்-ஆசை அவனது வீட்டில் இருந்து பின் தொடர்ந்து யாருமில்லாத க்ரோலுவின் அந்த இருட்டான பாதைகளில் நடந்தேன். அமைதியாக நாங்கள் ஊர்ந்து சென்றோம். நாப்ஸும் மிக மெதுவாக தனது முழங்காலில் நடந்தது. கிட்டத்தட்ட வேலியின் மிக அருகில் வந்து விட்டோம். இங்கே சால்-ஆஸ் எனக்கு விடை கூறினான். காலுக்களுக்கு மத்தியில் விரைவில் நாம் சந்திப்போம் என்று கூறினான். அவனுக்கு சீக்கிரமே அதற்கான அழைப்பு வந்து விடும் என்று உறுதியாய் நம்பினான். அவனது விசுவாசமான உதவிக்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். நான் காலுவின் நாட்டிற்குப் போகிறேனோ இல்லையோ நிச்சயம் இந்த உதவிக்குக் கைம்மாறு செய்வதற்கு என்றும் தயாராய் இருப்பேன் என்றேன். அவனும் நான் அவனது புரட்சிக்கு உதவுவேன் என்று திடமாய் நம்பினான். அத்தியாயம் - 7 சாய்ந்த வேலியின் சுவர்களில் ஏறித் தாவிக் குதித்துத் தப்பிப்பது என்பது மிகவும் சுலபமான காரியமே என்னைப் பொறுத்தளவில். ஆனால் நாப்ஸை நான் மேலே ஏறிய பின் கயிறைத் தூக்கிப் போட்டு அதனை மேலே இழுத்தேன். பின் அதனை மறு பக்கம் இறக்கி விட்டேன். இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்று அஜோரை இந்தப் புதிய உலகில் கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியமே. இருந்தாலும் முயற்சி செய்வது தவிர வேறெதுவும் தோன்றவில்லை. அவளது தந்தையிடம் அவள் பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டும் என வேண்டிக் கொண்டேன். விடியலின் முதல் வெளிச்சத்தில் நானும் நாப்ஸும் முன்னேறிக் கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. கொடூரமான விலங்குகள் குறைவாக இருந்தன வடக்கு நோக்கி செல்லச் செல்ல. மாமிசம் உண்ணும் விலங்குகள் குறையக் குறைய தாவரங்கள் உண்ணும் விலங்குகள் அதிகமாகத் தொடங்கின. இருந்தாலும் கேஸ்பக் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் அவை மிக அதிகமாகவே இருக்கின்றன மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு உணவு தருவதற்காக. நான் இங்கே கடந்து சென்ற காட்டு எருமைகள், மறி மான்கள், மான்கள், குதிரைகள் அனைத்தும் தெற்கில் இருப்பவைகளில் இருந்து பரிணாமத்தில் உயர்ந்தே இருந்தன. பசுக்கள் சின்னதாகவும் சதைப் பிடிப்பாகவும் இருந்தன. குதிரைகள் பெரிதாக இருந்தன. க்ரோலு கிராமத்தின் வடக்கில் அந்தக் குதிரைகளின் ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவைகள் கிட்டத்தட்ட பழைய அமெரிக்காவின் மேற்கில் இருக்கும் சம வெளிப் பகுதிகளில் இந்தியர்கள் வளர்த்த குதிரைகள் போலவே இருந்தன. சொல்லப் போனால் இன்றும் அவைகள் இந்தியர்களின் பராமரிப்பில் வளர்கின்றன. அவைகள் நல்ல குண்டாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. நான் அவைகளை மிகவும் ஆவலோடு பார்த்துக் கொண்டே இருந்தேன் ஒரு பழைய மாடு மேய்க்கும் வீரனாக. அவைகளின் கால்களில் லாடம் கட்டினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவைகள் மிகவும் கவனமாக இருந்தன. வில் அம்பு எய்யும் தூரத்திற்குள் நான் வரும் போதே அவைகள் மிகவும் எச்சரிக்கை அடைந்தன. கயிறு எரியும் தூரத்திலும் கூட அவைகள் கவனமாகவே இருந்தன. இருந்தாலும் எனக்குள் நம்பிக்கை இருந்தது. நான் தளரவில்லை. நண்பகலுக்கு முன் இரண்டு முறை எங்களை நரமாமிசம் சாப்பிடுபவர்கள் தாக்கினார்கள். என்னிடம் துப்பாக்கிகள் இல்லாத போதும் நாப்ஸ் இருந்ததால் எனக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அது து-சீனிடம் இருந்தோ அல்லது வேறு யாரோ காலுவிடம் இருந்தோ கேஸ்பக்கின் வேட்டையாடும் திறனைக் கற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவமும் அதற்குக் கை கொடுத்திருக்கும். ஆபத்தான எதிரிகளை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதன் மெலிதான உறுமலால் நான் எந்தக் காட்டு விலங்கையும் கண்ணால் காண்பதற்கு முன்னோ காதால் கேட்பதற்கு முன்னோ காட்டிக் கொடுத்து விடும். அது எங்கள் முன் தோன்றியவுடன் நாப்ஸ் கால்களைத் தட்டிக்கொண்டு ஓட்டம் எடுக்கும். அந்த விலங்கு அதைத் துரத்த ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் நான் எதாவது ஒரு மரத்தில் ஏறி ஒளிந்து கொள்வேன். எப்பொழுதும் அது அந்த மிருகத்திடம் மாட்டிக் கொண்டு கறி ஆகிவிடவே விடாது. அதன் மின்னல் வேகத்தில் எந்த விலங்கும் துரத்திப் பிடிக்கவே இயலாது. அந்த விலங்கு ஏங்கித் துரத்தி இறுதியில் ஆத்திரத்தில் கத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அந்த விலங்குகள் எனக்குக் கொடுத்த தொல்லைகளில் முதன்மையானது என்னவென்றால் தாமதம்தான். அவைகள் தங்களுக்குத் தேவையானது கிடைக்காத போது ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் வரை துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதன் பின் ஒரு வழியாக நாங்கள் கிழக்கு மேற்காகச் செல்லும் ஒரு மலைத் தொடரைக் கண்டோம். அவை கண்ணுக்கெட்டும் தூரம் வரை இருபுறமும் நீண்டிருந்தன. நாங்கள் க்ரோலு காலு நாடுகளின் இயற்கையான எல்லையைத் தொட்டு விட்டோம் என்பது புரிந்தது. அதன் தெற்கு முகத்தில் உள்ள மலைகள் மிக உயரமாய் இருந்தன. சில மலைகள் 200 அடிகள் வரை உயர்ந்திருந்தன கிட்டத்தட்ட செங்குத்தாய். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எந்தவிதப் பிளவுகளும் இல்லாமல் இருந்தன. இதை எப்படித் தாண்டுவது என்பது நிச்சயம் எனக்குப் புரியவில்லை. இங்கிருந்து கிழக்கில் தேடுவதா? அங்கே இதை விட இன்னும் பெரிதான மலைத் தொடர்களாய் இருந்தன சமுத்திரத்தை நோக்கி. இல்லை மேற்கில் உள்நாட்டுக் கடலை நோக்கியா? எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. அங்கே நிறைய வழிகள் இருக்கின்றனவா, இல்லை ஒன்றே ஒன்றுதான் இருக்கிறதா? எப்படிக் கண்டு பிடிப்பதென்பதே தெரியவில்லை. விதியை நம்புவதைத் தவிர வேறெதுவும் வழி கிடைக்கவில்லை. நாப்ஸ் ஒரு முறையோ இல்லை பல முறையோ இதைக் கடந்து சென்றிருக்கும் என்பதை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.நிச்சயம் அது என்னை வழி நடத்திச் செல்லும் என்று தோன்றவே இல்லை. அதனால் வேறெதுவும் வழி தெரியாத விரக்தியில் ஒரு முட்டாள் போல அதனிடம் கேட்டேன். “நாப்ஸ்” என்று அழைத்தேன். “எப்படித்தான் இந்த மலைத் தொடரை நாம் தாண்டுவது?” அதற்குப் புரிந்தது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் ஏர்டேல் வகை நாய்கள் மிகவும் புத்திசாலியானவை. அதற்குப் புரிந்தது போல் தெரிந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் அது என்னைச் சுற்றி வந்தது. பின் மகிழ்ச்சியாகக் குரைத்துக் கொண்டே மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தது. நான் அதனைப் பின் தொடரவில்லை என்ற போது கோபமாக என்னை நோக்கிக் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. பின் எனது கெண்டைச் சதையைக் கவ்விக் பிடித்துக் கொண்டு அது செல்ல வேண்டிய திசையை நோக்கி இழுத்தது. எனது கால்களில் ஆடை எதுவும் இல்லாததாலும் அதன் பற்கள் மிகவும் கூரியதாக இருந்ததாலும் வேறு வழி இல்லாமல் நான் அதனைப் பின் தொடர ஆரம்பித்தேன். கிழக்கோ மேற்கோ சரியான திசையாய் இருந்தால் சரி. அந்த மலையடிவாரத்தில் நாங்கள் நீண்ட தூரம் கடந்து விட்டோம். நிலம் ஏற்ற இறக்கமாய் இருந்தது. மரங்கள் ஆங்காங்கே இருந்தன. அதனருகே விலங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன தனியாக சிறு மற்றும் பெரு குழுக்களாக. இந்த உலகத்தின் நவீனமான மற்றும் அழிந்து விட்ட விலங்குகளின் கலவையான தொகுப்பு. ஒரு பிரமாண்டமான பெரணி மரத்தின் நிழலில் ஒரு பெரிய உடம்பு முழுவதும் மயிர் நிறைந்த யானை நின்று இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு பெரிய காட்டெருமை தந்தங்கள் கொண்டது போல் இருந்தது. அதனருகில் ஒரு காளையும் பசுவும் தங்கள் கன்றுடன் மேய்ந்து கொண்டிருந்தன. அதற்கு மிக அருகில் ஒரு தூசு தட்டிய ஓட்டையினுள் காண்டாமிருகம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. மான், மறி மான், எருமைகள், குதிரைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என்று அனைத்து விதமான விலங்குகளும் ஒரே இடத்தில இருப்பதைக் காண முடிந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு பெரிய தேவாங்கு தனது வால் மேல் அமர்ந்து கொண்டு முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு மரத்தில் இருந்த இலைகளைப் பறிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. நாம் மறந்து விட்ட பழைய உலகின் எச்சங்கள் இப்பொழுது நமக்கருகில் வந்து உரசி நிற்கின்றன. இங்கே டாம் பில்லிங்ஸ் ஆகிய நான், நவீனத்தில் நவீனமாகிய நான், பனியுகத்தின் முன் தோன்றிய மனிதர்களின் உடையில் நான் அவைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். என் முன்னால் அறுபது வயதான ஒரு விலங்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும் பொழுது நாப்ஸ் ஒரு அற்பமான விலங்காய்த் தெரிந்தது. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் நாப்ஸ் கவலைப்பட்டது போல் தோன்றவில்லை. நாங்கள் உள்நாட்டுக் கடலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது பறக்கும் விலங்குகள் நிறையப் பார்த்தோம். இன்னும் பலவிதமான பெரிய நீர்நில வாழ்வன விலங்குகளையும் கண்டோம். ஆனால் அதில் எவையும் எங்களைத் தாக்க முற்படவே இல்லை. கிட்டத்தட்ட நண்பகலில் ஒரு உச்சியைச் சென்று அடைந்திருக்கும் வேளை, நான் கண்ட ஒரு காட்சி என்னை அப்படியே உறைய வைத்தது. அடிக்குரலில் நாப்ஸை அழைத்து அமைதியாய் இருக்கச் சொன்னேன். அது உடனே முன்னங்கால்களை மடக்கி அமர்ந்து கொண்டது. நானும் அப்படியே குப்புறப் படுத்துக் கொண்டு அந்த காட்சியைக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு புதரின் பின்னால் இருந்து வீரர்கள் கூட்டம் தென் திசையில் இருந்து அந்தப் பாறைகளை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்கள் காலுக்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவர்களைத் தலைமை ஏற்று நடத்தி வந்தது து-சீன் என்பதும் தெரிந்தது. அவர்கள் குறுக்கு வழியில் வந்ததால் எங்களை முந்திச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நன்றாகவே கவனிக்க முடிந்தது. ஏனெனில் அவர்கள் இருக்கும் தூரம் ஒன்றும் அதிகம் இல்லை. அவர்களுக்கு மத்தியில் அஜோர் இல்லாதது கொஞ்சம் நிம்மதியை வரவழைத்தது. அவர்கள் ஏறிச் சென்ற பாறைகள் உடைந்து கடினமாக இருந்தன. கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் வரும் பாறைகள் சந்திக்கும் இடம் அது. ஒரு ஒடுங்கிய கணவாயாக அமைந்திருந்தது. அவர்கள் ஓரிடத்தில் சில நிமிடங்கள் மேலே ஏறிச் சென்றார்கள். அதன் பின் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்கள். கடைசியில் சென்றவனும் கண்களில் இருந்து மறைந்த பின் நான் மெல்ல எழுந்து அந்தக் கணவாயை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதனை நோக்கித்தான் நாப்ஸும் என்னை வழிநடத்திக் கொண்டிருந்தது. அதனை நெருங்கிய போது மிகக் கவனமாகச் சென்றேன். அவர்கள் அங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டும் இருக்கலாம். அவர்கள் அங்கு இளைப்பாறவில்லை என்றால் எனக்கு அவர்கள் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சமே இல்லை. ஏனெனில் அவர்கள் பின்புற கேடயம் ஈட்டி எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் கணவாயை அடைந்ததும் செங்குத்தாக ஒருவர் மட்டுமே மேலே ஏறும் ஒரு வழியைக் கண்டேன். நான் காலுக்களின் தலைவனாகச் சிறிது காலம் இருக்கக் கூடாதா என்று நினைத்தேன். தெற்கில் இருந்து வரும் ஒரு பெரும்படையையே இந்தக் கணவாயில் இருந்து கொண்டு வெறும் பனிரெண்டு பேர் சமாளிக்க முடியும். இருந்தும் இந்த இடத்தில் எந்தவிதக் காவலும் இல்லை. காலுக்கள் கேஸ்பக்கில் சிறந்த மனிதர்களாய் இருக்கலாம். ஆனால் அவர்கள் மிகவும் எளிதான ஒரு ராணுவ யுக்தியில் இவ்வளவு மோசமாக இருக்கிறார்கள். இராணுவ அறிவில் கற்கால மனிதர்கள் இவ்வளவு பின் தங்கியா இருப்பார்கள் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தற்போது இருக்கும் தலைமையோடு முரண்பட்ட அவனது படை ஒரு எதிரி நாட்டினுள் துளி அளவும் கவனமே இல்லாமல் நுழைவதைப் பார்த்தபோது என் கணிப்பில் து-சீன் மிகவும் கீழே சென்று விட்டான். ஆனால் ஜோரைப் பற்றி து-சீனுக்குத் தெரிந்திருக்கும். ஜோர் அங்கே காத்திருக்க மாட்டான் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருக்கும். இருந்தும் அவன் செய்தது மிகப் பெரும் தவறுதான். ஒரு சிறு படையை வைத்தே கேஸ்பக்கை என்னால் பிடித்து விட முடியும். நானும் நாப்ஸும் ஒரு வழியாக அந்தக் கணவாயின் மேலே ஏறி அதன் உச்சியை அடைந்தோம். அங்கே அவர்கள் காலுவின் நாட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். மலை உச்சியில் இருந்து ஐம்பதடிக்கும் சற்று அதிகமான தூரம் கீழே இருந்தார்கள். க்ரோலு நாட்டில் இருந்து ஒரு நூறு அல்லது நூற்றைம்பதடி உயரமாய் இருக்கலாம். சட்டென்று நிலப்பரப்பு மாறுபட்டது. மரங்கள் பூக்கள் மற்றும் புதர்கள் அனைத்தும் கடினத் தன்மை கொண்டதாக இருந்தன. காலுவின் போர்வை இரவு நேரத்துக்கு நிச்சயம் தேவைப்படத்தான் செய்யும். பிசின் மரமும் யூகலிப்டஸ் மரமும் அதிகமாய் இருந்தன. சாம்பல், கருவாலி, தேவதாரு மரங்களும் இருந்தன. மரங்களுக்கு நடுவில் வாழ்க்கை அடிதடியாய் இருக்கும். காடுகள் மிகவும் அடர்த்தியாய் இருந்தன. பிரமாண்டமான மரங்கள் அடர்ந்து இருந்தன. அந்த மலை உச்சியில் இருந்து பார்க்கும் போதே மரங்கள் நான் இருந்த இடத்திற்கு நூறடிக்கும் மேலே வளர்ந்திருந்தன. அவைகள் இருக்கும் தூரத்தில் பார்த்தாலே அவைகள் மிகவும் பிரமாண்டமாக இருந்தன. ஒரு வழியாக நான் காலுவின் நாட்டில் நுழைந்து விட்டேன். கேஸ்பக்கில் பிறந்திருக்காவிட்டாலும் நான் கோர்-ஸ்வ-ஜோ-ஆன ஆதியில் இருந்து வந்திருக்கிறேன். கேஸ்பக்கின் பரிணாமத்தில் கீழ் இருக்கும் மனிதர்களின் உறைவிடத்தில் இருந்து அனைத்து விதமான அபாயங்களையும் கடந்து வந்திருக்கிறேன். தோ-மர், சோ-ஆல் இருவரும் தாங்கள் பாண்ட்லுவில் இருந்து க்ரோலுவாக மாறும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்குமான பொருளை இப்பொழுதுதான் உணர்கிறேன். நான் பாட்டுவாக இல்லை என்பதற்காக ஒரு அற்ப மகிழ்ச்சி என்னுள் ஓடியது. ஆனால் அஜோர் எங்கே இருக்கிறாள்? என் முன்னால் இருந்த இந்த மாபெரும் நிலப்பரப்பை என் கண்கள் துழாவினாலும் என்னால் து-சீனின் வீரர்கள் மற்றும் இந்த நிலத்தின் விலங்குகள் தவிர வேறு யாரையும் பார்க்க இயலவில்லை. காடுகள் சூழ்ந்து மாபெரும் சமவெளிப்பகுதிகள் நிறைந்து இருந்தன கண்களுக்கு எட்டிய தூரம் வரை. ஆனால் எங்கும் அஜோர் அந்தச் சிறிய காலு தென்படவில்லை. என் அன்பிற்கினிய அந்தப் பெண்ணைக் காண்பதற்காக இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன். நாப்ஸுக்கும் எனக்கும் பசிக்க ஆரம்பித்தது. நேற்றிரவில் இருந்து நாங்கள் இன்னும் சாப்பிடவே இல்லை. எங்களுக்கு ஆடு, மான், மாடு என்று கீழே ஒரு பசித்த வேட்டைக்காரனுக்குத் தேவையான அனைத்து விதமான உணவுகளும் இருந்தன. அதனால் கிட்டத்தட்ட செங்குத்தாக இறங்கும் மலைப்பாதையில் நாங்கள் கீழே இறங்க ஆரம்பித்தோம். நாப்ஸ் என் பின்னால் வர நான் படுத்து ஊர்ந்து கொண்டே சென்றேன் ஒரு செந்நிற மான்கள் கூட்டத்தை நோக்கி. அவைகள் காட்டிற்கு அருகில் சமவெளியின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகள் அம்பின் எல்லையிலேயேதான் இருந்தன. அவைகளின் பின்னாலும் மரங்கள் மற்றும் புதர்கள் இருந்தன. அதனால் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் ஒரு ஐம்பதடி தூரத்தில் இருந்து ஒரு பெரிய கன்றுடன் இல்லாத மானைக் கொல்ல முடிந்தது. இருந்தும் துப்பாக்கி கையில் இல்லையே என்ற வருத்தம் இப்பொழுதுதான் அதிகமாகத் தாக்கியது. என் வாழ்வில் என்றுமே நான் அம்பு எய்திருக்கவே இல்லை.அம்பு எய்வது எப்படி என்று தெரியும். வில்லை ஏந்தி நாணை இழுத்துக் கவனமாக குறி பார்த்து எய்தேன். நாப்ஸைக் கூப்பிட்டுக் கொண்டே நான் அந்த மானை நோக்கி ஓடினேன். எனது அம்பு அந்த மானின் வலது புறத்தில் முழுவதுமாக ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் நாப்ஸும் அதை நோக்கி ஓடி வந்தது. அது எங்களைப் பார்த்ததும் ஓட எத்தனித்தது. நாப்ஸ் தனது கூரிய பற்களைக் கோரமாகக் காட்டிக் கொண்டும், நான் எனது கோடரியை ஏந்திக் கொண்டும் அதை நெருங்கிக் கொண்டிருந்தோம். அந்தக் கூட்டத்தில் மீதி இருந்த மான்கள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விட்டன. அடிபட்ட மான் மட்டும் நொண்டிக் கொண்டிருந்தது. நாப்ஸ் சட்டென்று அதன் கழுத்தைக் கவ்வியது. நான் வந்த போது அது மானைக் கீழே தள்ளி இருந்தது. நான் எனது கோடரியை எடுத்து அதன் கதையை முடித்து விட்டேன். நெருப்பு மூட்டவும் அதன் கறியைச் சமைக்கவும் எனக்கு நெடு நேரம் ஆகவில்லை. நான் எனது சமையலைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது நாப்ஸ் அதன் பச்சைக் கறியைச் சுவைத்துக் கொண்டிருந்தது. இது போலொரு உணவை ரசித்துச் சாப்பிட்டதில்லை நான். கடலில் இருந்து கிட்டத்தட்ட அந்தச் செங்குத்து பாறைகள் வரை இரண்டு நாட்களாக நான் தேடிக் கொண்டே இருக்கிறேன் அஜோர் தென்படுவாளா என்று. ஆனால் ஒவ்வொரு முறையும் வடக்கு நோக்கியே சென்று கொண்டிருந்தேன். அங்கே எந்தவிதமான மனிதர்களுமே தென்படவில்லை. து-சீனின் படையில் இருக்கும் வீரர்களைக் கூடக் காணவில்லை. அதன் பின்தான் எனக்குச் சந்தேகம் ஏற்படத் துவங்கியது. க்ரோலு கிராமத்தில் இருந்து அஜோர் சென்று விட்டாள் என்று சால்-ஆஸ் சொன்னது உண்மையாய் இருக்குமா? ஆல்-டானின் உத்தரவுப்படி அவன் ஏன் நடந்து கொண்டிருக்கக் கூடாது? அவனது அடி மனதில் அவமானத்தின் நெருப்பு படர்ந்திருக்கலாம். தான் கொல்ல நினைத்த ஒருவன் க்ரோலு கிராமத்திற்கு வந்த ஒரு விருந்தாளி அந்த கிராமத்தின் வீரனை நண்பனாக்கியது அவனுக்குப் பொறாமை ஏற்படுத்தி இருக்கலாம். க்ரோலு கிராமத்திற்கு இந்தக் கெடுதலும் செய்யாத ஒரு விருந்தாளி. அதனால் ஆல்-டான் செய்ய நினைத்ததை கேஸ்பக்கின் விலங்குகள் செய்யட்டும் என்று எண்ணித் தேவை இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபட என்னை இங்கு அனுப்பி விட்டானோ? எனக்குத் தெரியாது. நான் அதைப் பற்றி நினைக்க நினைக்க அஜோர் க்ரோலு கிராமத்தை விட்டு வெளியேறவில்லை என்பது மட்டும் உறுதி என்று தோன்றியது. அப்படி இல்லை என்றால் து-சீன் இங்கு ஏன் அவளை விட்டு விட்டு வர வேண்டும். அதுவும் புதிராக இருந்தது. மீண்டும் நான் கடலுக்கருகில் வந்து விட்டேன். காலுக்களின் நாட்டில் எனது இரண்டாவது நாள் அனுபவத்தில் நான் என் கண்கள் விரியும் அளவுக்கு மிகப் பிரமாண்டமான குதிரைகளைக் கண்டேன். அது செந்நிறமான உடலமைப்பைக் கொண்டது. அதன் பிடரி மயிர் கருப்பாக இருந்தது. அதன் முகம் நெருப்பு போல் பிரகாசித்தது. அவைகளது முன்னங்கால்கள் முழங்கால் வரை வெள்ளையாக இருந்தன. அவைகளது உயரம் கிட்டத்தட்ட 16 கையளவு இருந்தது. ஆண் குதிரைகளுக்கும் பெண் குதிரைகளுக்கும் உயரத்தில் அவ்வளவு வித்தியாசமில்லை. இங்கிருந்த நூற்றுக்கணக்கான குதிரைகளில் மூன்று நான்கு மட்டுமே ஆண் குதிரை. மற்றதெல்லாம் குட்டிகளாய் இருந்தன. அவைகளின் உடம்பில் இருந்த அடையாளங்கள் அனைத்தும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தன. வெகு காலங்களுக்கு முன் கலப்படமில்லாத இனங்களாய் இருந்திருக்க வேண்டும். க்ரோலுக்களின் சிறிய குதிரைகளே பெருமிதம் கொள்ள வைத்தன. ஆனால் இது போன்ற பெரிய குதிரைகள் மேல் நான் அங்கு வந்து இறங்கி இருந்திருந்தால் எனக்குக் கிடைத்திருக்கும் மரியாதையே தனிதான். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே அதில் ஒன்றைக் கவர்ந்தால் என்ன என்ற சிந்தனையும் உதிக்காமல் இல்லை. மேலும் ஒரு அழகிய நான்கு வயதுடைய ஆண் குதிரையைத் தேர்வு செய்யவும் எனக்கு அதிக நேரம் ஒன்றும் ஆகவில்லை. அந்தக் குதிரைகள் காட்டின் எல்லையில் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கேதான் நானும் நாப்ஸும் மறைந்து இருந்தோம். எங்களுக்கும் அந்தக் குதிரைகளுக்கும் நடுவில் இருந்த நிலத்திலும் பூக்கள் நிறைந்த செடிகள் இருந்ததாலும் மறைவதற்கு நல்ல வசதியாக இருந்தது. நான் தெரிவு செய்த குதிரை சில பெண் மற்றும் ஆண் குட்டிகளுடன் எனக்கு மிகவும் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்து சற்று விலகியே இருந்தது. “தாக்கு” என்று மெலிதாக நான் உத்தரவிட்டதைச் சட்டென்று புரிந்து கொண்ட நாப்ஸ் நிலத்தில் அப்படியே படுத்துக் கொண்டது. நான் கூப்பிடும் வரை அது நகராமல் அப்படியே இருக்கும் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும் வேறெதாவது எனக்கு ஆபத்து வராத வரை. நான் கவனமாக அந்தக் குதிரையை நோக்கிச் சென்றேன். அதற்கு ஒரு இருபதடி தூரத்தில் இருக்கும் ஒரு புதரின் பின் மறைந்து நின்றேன். இங்கே நான் எனது சுருக்குக் கயிறை ஒழுங்கு படுத்தித் தரையில் விரித்து வைத்தேன். புதரின் ஒரு பக்கத்தில் இருந்து கயிறை வீசி எறிந்து பிடிப்பதில் நான் கில்லாடியாக இருந்தாலும் வெளியில் வருவதற்குள் அது பின்னங்கால் பிடரியில் பட எதிர்த் திசையில் ஓடி விடும். ஆனால் நான் சட்டென்று அதன் அருகில் போய் நின்று அதனை ஆச்சர்யப்படுத்தினால் மெதுவாக தன் கழுத்தைத் தூக்கிப் பார்க்கும். அதுதான் எனது சுருக்கு கயிரைப் பயன் படுத்த மிகவும் ஏதுவாக இருக்கும். ஆம், அதை அற்புதமாகச் செய்து முடித்தேன். அது எனது திசையை நோக்கித் திரும்புவதற்காகக் காத்திருந்தேன். கிட்டத்தட்ட அப்படித்தான் தெரிந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த பெண் குட்டி ஒன்று தனது தலையைத் தூக்கிக் கணைத்தது. பின் எதிர்த் திசையில் ஓட ஆரம்பித்தது. எனது குதிரையும் அவைகளுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்து விட்டது. ஒருக் கணம் கடைசி நேரத்தில் எனது நம்பிக்கையே குலைந்து விட்டது போல் தோன்றியது. ஆனால் அவர்களது தற்போதைய பயம், பயமாக இருந்தால், குறைந்து விட்டதும் ஒரு நூறடி தள்ளித் திரும்பவும் மேய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அவைகளிடம் இருந்து ஐம்பதடி தூரத்தில் புதர்கள் எதுவுமே இல்லை. அதனால் எப்படிச் சுருக்குக் கயிறை வீசுவது என்று குழப்பமாக இருந்தது. நாற்பதடிக்கும் குறைவாக இருந்தால் நான் அருமையாகச் சமாளிப்பேன். ஐம்பதடி பரவாயில்லை. அதற்கும் மேல் என்றால் தலை விதியைப் பொறுத்ததுதான் அந்த அழகிய கழுத்தில் எனது சுருக்குக் கயிறு மாட்டுவது என்பது. அவ்வாறு நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருக்கும் வேளை கிட்டத்தட்ட அவ்வளவு தூரத்தில் நின்று எறியும் மன நிலைக்கு வந்து விட்டேன். என்னிடம் தேவைக்கு அதிகமாகவே கயிறு இருந்தது. அந்தக் காலுவின் கயிறு சுமார் அறுபதடி இருந்தது. என் பண்ணையாய் இருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருக்கும். ஒரு வார்த்தை சொன்னால் போதும். இந்தக் குதிரைகள் அனைத்தையும் வட்டமிட்டு என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கும். அப்போது எனக்குள் ஒரு மின்னல். நாப்ஸ் பண்ணையில் உள்ள விலங்குகளுடன் ஓடி இருக்கிறது ஒரு கோடை காலத்தில். பசுக்களுடன் ஒவ்வொரு நாளும் மாலையில் புல் வெளிக்கு அவைகளுடன் சென்று திரும்பவும் பால் கறக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து விடும். அதை மிகவும் சாதுர்யமாகவும் செய்திருக்கிறது. ஆனால் அது எப்போதும் தனியாகச் செய்ததில்லை. அதைச் செய்தும் ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இருந்தாலும் நான் இந்தக் கயிறைச் சுழற்றி எறிவதை விட நாப்ஸ் இந்த வேலையைத் திறம்படச் செய்து விடும். ஒரு முடிவுக்கு வந்தவனாய் நாப்ஸைத் தேடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அதைக் கூப்பிட்டு வந்து அந்த நான்கு குதிரைகள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு புதரின் பின் மறைந்து நின்றோம். இங்கே புதருக்குள் இருந்தே நேரடியாகப் பார்க்க முடிந்தது. நாப்ஸைப் பார்த்து அவைகளைக் கொண்டு வா என்று முணுமுணுத்தேன். மறு நொடியே அது பாய்ந்து சென்று விட்டது. ஒரு அகலமான வட்ட வடிவில் அவைகள் பின் வட்டமடித்தது. அதைப் பார்த்தவுடன் அந்தக் குதிரைகள் நாப்ஸிடம் இருந்து விலகி ஓட ஆரம்பித்தன. இருந்தாலும் இடம் அதிகமாக இருந்ததால் ஒருக்கணம் நின்று யோசிக்க ஆரம்பித்தன. நாப்ஸைக் கவனிக்க ஆரம்பித்தன தலையை மேலே தூக்கிக் கொண்டும் கணைத்துக் கொண்டும். அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது. அதன் பின் நாப்ஸ் அவைகளின் பின் சென்று மெதுவாக என்னை நோக்கித் தள்ள ஆரம்பித்தது. அது குரைக்கவில்லை. என்னை நோக்கி வர அவசரப்படவுமில்லை. அவைகளின் அருகில் வந்தவுடன், மெதுவாக நடக்க ஆரம்பித்தது. அந்த அழகிய குதிரைகள் அதனைப் பார்த்துப் பயப்படுவதற்கு பதிலாக ஆச்சர்யமடைந்தன. நாப்ஸ் மிக அருகில் வரும் வரையும் அவைகள் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அதன் பின் அவைகள் மெதுவாக நடக்க ஆரம்பித்தன செங்குத்தான கோணத்தில். இப்பொழுதுதான் ஆட்டம் ஆரம்பித்தது. நாப்ஸ் அவைகளைத் திருப்பத்தான் முயற்சி செய்தது. அது அந்த ஆண் குதிரையைத்தான் தேர்வு செய்திருந்தது. அதனால் மற்ற குதிரைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. அதனால் வளைக்கப்படுவதற்கு விருப்பமில்லாத நான்கு குதிரைகளைக் கட்டி வைப்பது சாத்தியப்படாது என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அதுவும் புத்திசாலித்தனமாகவே செயல்பட்டது. அந்த ஆண் குதிரையும் தான் எப்படித் தப்பிப்பது என்று தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால் அங்கே ஒரு ஓட்டப்பந்தயம் துவங்க ஆரம்பித்து விட்டது. அந்தக் குதிரை எவ்வளவு வேகமாக ஓடும். அது கால்களை மடக்கிக் காற்றினுள் பாய்ந்து செல்ல ரொம்ப நேரம் ஆகவில்லை. நாப்ஸ் அதனுடைய முன்னங்கால்களைத் தொடர்ந்து ஓடியது முடிந்தவரை அதனைக் கட்டுப்படுத்த வேண்டி. இப்பொழுது குரைக்க ஆரம்பித்தது. இரு முறை அதன் கால்களைக் கவ்வ எத்தனித்தது. ஆனால் அதனால் இயலவில்லை. ஒவ்வொரு முறையும் அது தொம்மென்று கீழே விழுந்தது. நாப்ஸின் விடா முயற்சியும் கை கொடுக்கத்தான் செய்தது ஒரு மேட்டின் மேலேறி அவைகள் கண்ணில் இருந்து மறையும் நேரத்தில். அந்தக் குதிரை வலது புறம் திரும்ப எத்தனித்தது. நாப்ஸ் அந்தக் கூட்டத்திற்கும் அதற்கும் நடுவில் இருந்தது. அதனுள் மற்ற சிறு குதிரைகள் கலந்து விட்டிருந்தன. நாப்ஸின் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருந்தபோது எதாவது காட்டு மிருகம் என்னைத் தாக்கி விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காட்டில் இருந்து சற்றுத் தூரம் தள்ளி இருந்தேன். சில ஆயுதங்கள் என்னிடம் இருந்தன. இருந்தாலும் அவைகளை எல்லாம் பயன்படுத்த என்னிடம் அனுபவமில்லை. க்ரோலு நாட்டில் இருந்து கிளம்பும் வேளையில் ஈட்டியை எப்படிப் பயன்படுத்துவது என்று சிறிது கற்று வைத்திருக்கிறேன். என்னுடைய எண்ணங்கள் ஒன்றும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவில்லை, கிட்டத்தட்ட கோழைத்தனம் என்று கூட சொல்லலாம், அஜோர் இதே இடங்களில் வெறும் கத்தியுடன் கிளம்பியதை நினைத்தால். எனக்குள் அவமானம் வந்து ஒட்டிக் கொண்டது. அப்படி எண்ணிக் கொண்டிருக்கும் வேளை என் மனம் நான் கிட்டத்தட்ட நிர்வாணமாய் இருப்பதை எண்ணித்தான் மிகவும் கவலை கொண்டது. நீங்கள் பட்டப்பகலில் நீளம் பத்தாத ஒரு செம்மானின் தோலை அணிந்து கொண்டு நடமாடி இருக்காவிட்டால் எனது கவலையின் ஆழத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. ஆடை அணிந்து பழக்கப்பட்ட ஒருவனுக்கு ஆடை தன்னம்பிக்கை கொடுக்கும். அது இல்லாவிட்டால் பேரச்சம் தோன்றும். இருந்தாலும் என்னை எந்த விலங்கும் தாக்கவில்லை. ஆனால் காட்டின் இருண்ட பகுதிகளில் பயங்கரமான உருவங்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. நாப்ஸ் நீண்ட நேரமாக வரவில்லை என்பதால் எனக்குள் கவலை அப்பிக் கொண்டது. அதற்கு ஏதும் நடந்திருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நான் எனது கயிறைச் சுருட்டி வைத்து விட்டு அதனைத் தேடித் செல்ல எத்தனித்தேன். அப்போது அந்தக் குதிரை எந்தப் புள்ளியில் மறைந்ததோ அதே புள்ளியில் தோன்றி வேகமாகப் பாய்ந்து வந்தது. நாப்ஸ் அதன் முன்னங்கால்களை ஒட்டி வேகமாக வந்து கொண்டிருந்தது. கிளம்பிச் செல்லும் வேளையில் இருந்த கோபமும் வேகமும் திரும்பி வரும்போது இரண்டு விலங்குகளிடமும் இல்லை. அந்தக் குதிரை என்னை நோக்கி வரும்போது மிகவும் களைத்து வந்தது. இருந்தாலும் ராஜ நடைதான். நாப்ஸும் அதே போல்தான் வந்தது. என் தங்கம் அது அப்படியே நேராக என்னை நோக்கிக் கூட்டி வந்தது. நான் புதரின் பின் இருந்து சுருக்கைத் தயாராய் வைத்திருந்தேன். இரண்டும் என்னை நெருங்கியவுடன் நாப்ஸ் தன் வேகத்தைக் குறைத்தது. அந்த இடை வெளியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அந்தக் குதிரையும் அதே போல் நடக்க ஆரம்பித்தது. இதே வேகத்தில்தான் அவைகள் என்னைக் கடந்து சென்றன. கயிறு வைத்திருந்த என் கை வேகமாக வீசியது. கயிறில் கட்டி இருந்த கம்பி நன்றாகக் கீழே இறங்கியதால் சுருக்கு நன்றாக விரிந்தது. அந்த அழகிய குதிரை வெகு லாவகமாகத் தன் கழுத்தை அதனுள் நுழைத்தது. உடன் அது செங்குத்தாகத் திரும்ப முயற்சித்தது. என் இடுப்பில் கட்டி இருந்த கயிறை நான் கெட்டியாகப் பிடித்து அதை நிலை நிறுத்தினேன். அது தன்னை விடுவித்துக் கொள்ள மிகவும் போராடியது. இதற்கிடையில் நாப்ஸ் மூச்சிரைத்துக் கொண்டு தன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எனதருகில் வந்து படுத்துக் கொண்டது. அது தன் வேலை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டது. அதனால் ஓய்வெடுக்க விரும்பியது. அந்தக் குதிரை நன்றாகப் போக்குக் காட்டியது. சில நிமிட போராட்டத்திற்குப் பின் அது தன் கால்களை விரித்து நின்று விட்டது. அதன் மூக்கு ஓட்டைகள் விரிந்த வண்ணம் இருந்தன. கண்கள் அகலத் திறந்து இருந்தன. அதனை நோக்கி வரும் என்னையே கவனித்தபடி இருந்தது. நான் கயிரைப் பிடித்தபடியே அதனை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஒரு டஜன் முறையாவது அது கயிறை அறுத்துக் கொண்டு ஓட முயன்று இருக்கும். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் அதனிடம் அன்பொழுகப் பேசிக் கொண்டே வந்தேன். ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் நான் அதன் தலையைத் தொட முடிந்தது. பின் அதன் பிடரியை வருடிக் கொடுத்தேன். கொஞ்சம் புல்லை எடுத்து அதற்குச் சாப்பிடக் கொடுத்தேன். எப்பொழுதும் நான் அன்பாகப் பேசத் தவறவில்லை. ஒரு பெரும்போரை நான் எதிர் பார்த்தேன். ஆனால் அதனைக் கட்டுப்படுத்த அந்தளவு மெனக்கெடவில்லை. காட்டிலேயே வளர்ந்திருந்தாலும் அது கொஞ்சம் மென்மையாகத்தான் இருந்தது. அதே நேரத்தில் புத்திக் கூர்மை உடையதாகவும் இருந்தது. அதனால்தான் நான் அதற்கு எந்தவிதக் கெடுதலும் செய்ய வரவில்லை என்பதை உடனடியாகப் புரிந்து கொண்டது. அதன் பின் எல்லாமே சுமூகமாக நடந்தது. அன்றைய பொழுது முடிவதற்குள் அது முன்னே செல்வதற்கும் நிற்பதற்கும் கற்றுக் கொடுத்து விட்டேன் அதன் தலையையும் காலையும் வருடிக் கொடுத்து. என் கைகளில் இருந்து புற்களைச் சாப்பிடவும் கற்றுக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் இருந்த பயத்தை நான் சாகடித்ததை அதன் பெரிய புத்திசாலியான கண்கள் வழியாகப் புரிந்து கொண்டேன். எனது காலுவின் கயிறின் நுனியில் இருந்த அந்த உலோகத் துண்டில் இருந்து ஊசி போல் வளைத்தேன். அதன் பின் அதனை ஒரு மிகப் பெரும் போராட்டத்திற்குத் தயார் செய்தேன். அதில் இருந்து அது வெற்றிகரமாக மீண்டு வருமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது என்னைக் கீழே தள்ளி விடத் துளியும் முயற்சி செய்யவில்லை. அதன் பின் அது அசுர வேகத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது. வேறெந்தக் குதிரையும் கடிவாளத்தின் பொருளையும் முழங்கால்களின் அழுத்தத்தையும் இவ்வளவு விரைவில் கற்றிருக்க முடியாது. நான் நினைக்கிறேன் அது மிக விரைவாக என் மேல் அன்பு செலுத்தவும் கற்று விட்டது என்று. நானும் அதன் மேல் அன்பு செலுத்துகிறேன். அதுவும் நாப்ஸும்தான் எனது ஆருயிர்த் தோழர்கள். நான் அதற்கு ஏஸ் என்று பெயரிட்டேன். எனது நண்பன் ஒருவன் இருந்தான் அதே பெயரில். அவன் விமானியாகப் பணியாற்றியவன். ஏஸும் விட்டால் பறக்கக் கூடிய விலங்குதான். நீங்களும் ஒரு குதிரை வளர்ப்பவராக இல்லா விட்டால் நான் சொல்வது உங்களுக்குப் புரியவே புரியாது, அதன் மேல் ஏறி உட்கார்ந்தவுடன் என் மனதில் தோன்றும் இன்ப உணர்ச்சிகள் எப்படிப்பட்டவை என்று. நான் ஒரு புதிய மனிதனாகவே மாறி விட்டேன். என் மனத்திண்மை அவ்வளவு இருந்தது. தனி ஒருவனாக இந்த கேஸ்பக்கையே பிடித்து விடலாம் போன்று இருந்தது. எனக்கு மாமிசம் தேவைப் படும்போது ஏஸின் மேல் அமர்ந்து விரட்டிச் சென்று சுருக்கைப் போட்டுப் பிடிப்பேன். எதாவது காட்டு விலங்கு எங்களைப் பயமுறுத்தினால் ஏஸின் மேல் அமர்ந்து வேகமாக அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவோம். ஆனால் பெரும்பாலும் அந்த விலங்குகள் எங்களைப் பயத்தோடு பார்க்க ஆரம்பித்தன. நானும் ஏஸும் கூட்டணி போட்டதால் அவைகளுக்குக் கேஸ்பக்கில் இதுவரை கண்டிராத எதோ ஒரு புதிய விலங்கைப் பார்த்தது போல் இருந்தது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நான் இந்தக் காலுக்களின் நாட்டின் தென் கோடியில் இங்கும் அங்கும் அலைந்து திரிந்தேன். எங்கும் ஒரு மனிதத் தலை கூடத் தென்படவே இல்லை. ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி முன்னேறிய வண்ணம் இருந்தேன். அஜோர் எங்காவது இருக்கக் கூடும் என்பதால் சல்லடை போட்டது போல் சலித்துக் கொண்டிருந்தேன். ஐந்தாவது நாள் ஒரு காட்டில் இருந்து வெளியே வந்தபோது ஒரு சிறு உருவத்தைப் பல பேர் தொடர்ந்து செல்வது தெரிந்தது. அது அஜோர்தான் என்பது எனக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர்கள் அனைவரும் என்னிடம் இருந்து ஒரு மைல் தொலைவில் இருப்பார்கள். அவர்கள் என் வழியைச் செங்குத்தாகக் கடந்து கொண்டிருந்தார்கள். அஜோரைத் தொடர்ந்தவர்கள் ஒரு நூறடி தள்ளி இருந்தார்கள். அதில் ஒருவன் மட்டும் மற்றவர்களை விட முன்னேறி இருந்தான். அவளை அவன் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தான். ஒரு சொல்லாலும் முழங்கால்களின் அழுத்தத்தாலும் ஏஸை நான் காற்றில் விரட்டிக் கொண்டிருந்தேன். நாப்ஸும் எங்களுக்கு மிக அருகில் தொடர்ந்து வர நாங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தோம். முதலில் அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. அஜோரை நெருங்க நெருங்க முதலில் வந்தவனின் பின்னால் இருந்தவர்கள் இது வரை என் வாழ்நாளில் நான் கேட்டிராத மாதிரி ஒரு கூச்சல் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரும் காலுக்கள். முன்னால் சென்றவன் து-சீன் என்பது உடனே எனக்குப் புரிந்து விட்டது. அவன் கிட்டத்தட்ட அஜோரை நெருங்கி விட்டான். இதுவரை கண்டிராத ஒரு பயங்கர வெறியோடு அவளை நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒரு கத்தியோடு சென்று கொண்டிருந்தான். அவனது எண்ணம் அவளைக் கொல்வதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிச்சயம் அவளைச் சிறை பிடிக்க அல்ல. என்னால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஏஸை இன்னும் வேகமாகப் போகச் சொல்வதைத் தவிர எனக்கு வேறெதுவும் புலப்படவில்லை. அந்த அருமையான விலங்கும் என் சொல்லுக்கு அழகாகச் செவி சாய்த்தது. ஒரு நான்கு கால் விலங்கு என்றாவது பறக்கும் என்றால் அது ஏஸாகத்தான் இருக்க முடியும் அன்று. வெறியோடு சென்று கொண்டிருந்த து-சீன் இன்னும் எங்களைக் கவனிக்கவில்லை. அவன் ஓரடி இடைவெளியில் இருக்கும் அந்த நேரத்தில் நான் ஏஸை அவர்களுக்கு நடுவில் ஓட்டினேன். சற்று இடது புறம் குனிந்து அந்தச் சிறிய காட்டுமிராண்டிப் பெண்ணை எனது கையில் அள்ளிக் கொண்டு சிட்டாய்ப் பறந்து விட்டேன். து-சீனின் பிடியில் இருந்து அவளைக் காப்பாற்றி விட்டோம். அவன் அதிர்ச்சியில் நின்றான். குழப்பத்தோடு பார்த்தவன் கோபம் தலைக்கேறியது. அஜோரும் குழம்பிப் போனாள். ஏனெனில் அவளுக்குப் பின்னால் இருந்து நாங்கள் வந்தோம். குதிரையில் ஏறும் வரை அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அவள் என்னைக் கொல்லத் தன் கத்தியை உருவினாள். நான் ஏதோ ஒரு புதிய எதிரி என்று அவள் நினைத்து விட்டாள். அவள் கண்கள் என்னைக் கண்டதும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள். சிறு விசும்பலுடன் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். மூச்சிரைக்க “டாம்! டாம்!” என்று அரற்றினாள். அதன் பின் ஏஸ் ஒரு குழியில் இடறி விழுந்தது. நாங்கள் இருவரும் அதன் தலைக்கு வெகு உயரத்தில் தூக்கி எறியப்பட்டோம். கேஸ்பக்கில் இருக்கும் பல சுனைகளில் ஒன்றில் அது கால் வைத்து விட்டது. சில நேரங்களில் அவை ஏரிகளாக இருக்கும், அதுவும் சிறு குளங்கள் போன்றவைதான். ஆனால் பெரும்பாலும் அதில் சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். இதில் பசுமையான புற்கள் வளர்ந்து மறைத்திருந்ததால் அதன் ஆபத்து தெரியவில்லை. ஏஸ் தன் கால்களை உடைக்காமல் இருந்தது பெரும் ஆச்சர்யம்தான். அது விழும் போது அவ்வளவு வேகமாய் விழுந்தது. தனது ஆரோக்கியமான நான்கு கால்களை வைத்தும் அந்தக் குழியில் இருந்து அதனால் எழுந்து கொள்ள இயலவில்லை. அஜோரும் நானும் முகங்கள் புல் தரையில் படும்படி விழுந்தோம். அதனால் மிகவும் ஆழம் செல்ல வில்லை. நாங்கள் எழ முயற்சி செய்யும்போது கால்களுக்குப் பிடிமானம் கிடைக்கவில்லை. அதே வேளை து-சீனும் அவனது ஆட்களும் எங்களை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து தப்பிக்க எந்த வழியுமில்லை. நாங்கள் சாவது உறுதி என்பது தெளிவாகத் தெரிந்தது. “என்னைக் கொன்று விடு!” என்று அஜோர் என்னிடம் கெஞ்சினாள். “என்னை வெறுக்கும் ஒருவனை விட நேசிப்பவனின் கைகளால் சாவதே மேல். நிச்சயம் அவனும் என்னைக் கொல்லத்தான் போகிறான். அவன் என்னைக் கொல்லச் சபதம் எடுத்திருக்கிறான். நேற்றிரவு என்னைக் கைது செய்து விட்டான். ஆனால் வழியில் அவனிடம் சண்டை போட்டுக் கத்தியால் குத்தி விட்டு நான் தப்பி விட்டேன். காயங்களுடன் கதற விட்டு முறியடிக்கப்பட்ட கைது நடவடிக்கையால் மனமுடைந்து அடிபட்ட விலங்காய் அவனை விட்டு விட்டு வந்தேன். இன்று அவர்கள் என்னைத் தேடிக் கண்டுபிடித்து விட்டனர். நான் ஓட ஓட அவன் என்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டே வந்தான். என்னைக் கொன்று விடு. என் அன்பே டாம். அதன் பின் உனது ஈட்டியில் நீயும் விழுந்து விடு. ஏனெனில் உன்னைப் பிடித்துச் சென்றால் உன்னைக் கொடூரமாகக் கொலை செய்வார்கள்.!” என்னால் அவளைக் கொல்ல முடியவில்லை. குறைந்தபட்சம் இறுதி வரையிலும். அதே போல் அதையும் நான் அவளிடம் சொல்லி விட்டேன். நான் அவளைக் காதலிப்பதாகவும் சொன்னேன். நான் இறக்கும் வரைக்கும் அவளுக்காகச் சண்டை இடுவேன் என்றும் சொன்னேன். நாப்ஸும் எங்களைத் தொடர்ந்தே வந்தது. தொடக்கத்தில் நன்றாக இருந்த அது நாங்கள் மூழ்கியதைப் பார்த்ததும் தத்தளிக்கத் தொடங்கியது. நாங்கள் இப்படித் தவித்துக் கொண்டிருக்கும் வேளை, து-சீனும் அவனது ஆட்களும் அந்தக் குழியின் ஓரத்திற்கு வந்து விட்டார்கள். அவர்களுடன் ஆல்-டான் மற்றும் பல க்ரோலு வீரர்களும் இருந்தார்கள். காலுக்களின் தலைவனாகிய ஜோருக்கு எதிரான உடன்படிக்கை வெற்றிகரமாக ஏற்பட்டு விட்டது என்பது புரிந்தது. இந்தக் கூட்டம் ஏற்கெனவே காலுவின் தலைநகரில் வெற்றி நடை போடுகிறது. எனக்கு வெறுமையாக இருந்தது நாம் அஜோரையும் அவரது தந்தை மற்றும் மக்களின் தோல்வி மற்றும் சாவில் இருந்து காப்பாற்றுவதற்கு எவ்வளவு அருகில் வந்து விட்டோம் என்று நினைத்துப் பார்க்கும் போது. இந்தக் குழியைத் தாண்டி அடர்த்தியான காடு இருந்தது. அதனுள் நுழைந்து விட்டிருந்தால் நிச்சயம் பாதுகாப்பாக இருந்திருக்கலாம். ஆனாலும் உண்மையில் நூறடியாகவே இருந்தாலும் இந்தச் சேற்றில் இருந்து அது நூறு மைல் தொலைவுதான். குழியின் ஓரத்தில் நின்று கொண்டு அவர்கள் எக்காளமிட்டனர். அவர்கள் எங்களைக் கை கொண்டு எட்ட முடியவில்லை. ஆனால் து-சீனின் கட்டளைக்குப் பின் அவர்களது விற்களில் அம்புகளைப் பொருத்தினர். முடிவு வந்து விட்டது கண் கூடாகத் தெரிந்தது. அஜோர் என்னை நெருங்கிக் கட்டிக் கொண்டாள். நான் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டேன். “நான் உன்னைக் காதலிக்கிறேன் டாம்!” என்றாள். “உன்னை மட்டும்”. என் கண்களில் இருந்து நீர் வடியத் தொடங்கியது. என் நிலை கண்ட சுய பச்சாதாபத்தினால் அல்ல. முழுவதும் காதலினால் நிரப்பப்பட்ட இதயத்தில் இருந்து வந்த கண்ணீர். அந்த இதயம் தனது காதல் கதிரவன் உதிக்கும் போதே மறைவதையும் பார்க்கும் மோசமான நிலை. துரோகம் செய்த காலுக்களும் க்ரோலு வீரர்களும் து-சீனின் சொல்லுக்கு எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள். அவன் சொன்னவுடன் அந்த அம்புகள் எங்களைக் கொல்வதற்குத் தயாராய் இருந்தன. அப்போது அந்தக் காட்டினுள் இருந்து ஒரு மனிதன் காதுகளுக்குக் கேட்க வேண்டிய இதமான ராகம் கேட்டது. இரண்டு துப்பாக்கிகள் விட்டு விட்டுக் கூர்மையாக படபடவென்று தன் விருப்பம் போல் ஒலித்தன. காலு மற்றும் க்ரோலு வீரர்கள் அனைவரும் வேரற்ற மரம் போல் அதே சகதியில் சாய்ந்தனர். இதற்கு என்ன பொருள். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு பொருள்தான் இருக்கிறது. ஹோல்லிஸ் மற்றும் ஷார்ட் குழுவினர் அந்தப் பாறைகளின் மேல் வெற்றிகரமாக ஏறி காலுக்களின் நாட்டின் வட திசையினுள் தீவின் மறு பக்கம் நுழைந்து விட்டார்கள். என்னையும் அஜோரையும் சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி விட்டார்கள். எனக்கு அவர்களின் அறிமுகம் தேவை இல்லை. ஏனெனில் துப்பாக்கிகளை ஏந்தி இருப்பவர்கள் எனது ஆட்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்த பின் எனது கண்கள் எனது நம்பிக்கையை உறுதி செய்தன. இதோ வந்து விட்டார்கள் எனது ஆட்கள். திறமைசாலிகள். அவர்களுடன் மெல்லிய தேகம் கொண்ட ஆயிரம் காலு வீரர்கள். அவர்களை வழி நடத்தி காலுக்கள் உடையில் இருவர் வந்தனர். இருவரும் உயரமாய் நேராய் இருந்தனர். அருமையான திரண்ட தசை கொண்டிருந்தனர். இருந்தாலும் அவர்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தனர். ஏஸ் தனது இன்னொரு இனத்தில் இருந்து எவ்வளவு வேறுபடுமோ அப்படி இருந்தது. அவர்கள் அருகில் வந்ததும் அஜோர் கைகளை நீட்டிக் கத்தினாள். “ஜோர், என் தலைவனே, என் தந்தையே” என்று. அதில் இருந்த மூத்தவர் ஓடி வந்து தன் கையை நீட்டி முழங்கால் அளவு அந்தச் சேற்றில் இறங்கினார். அதன் பின் அந்த மற்றோர் உருவம் என்னை நோக்கி வந்து என் முகத்தை உற்று நோக்கியது. அதன் கண்கள் விரிந்தது. எனது கண்களும்தான். நான் அழ ஆரம்பித்தேன். “போவன். கடவுளே, போவன் டைலரா இது” அவனேதான். என்னுடைய தேடலும் முடிந்தது. என்னைச் சுற்றிலும் எனது ஆட்கள் மற்றும் புதிய உலகைத் தேடித் சென்ற ஒரு மனிதன். எங்களைக் காப்பாற்ற மரங்களை வெட்டி ஒரு பாதை அமைத்தனர். அதன் பின் நாங்கள் காலுக்களின் நகரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். அஜோர் ஏஸின் மேலமர்ந்து அங்கு சென்றதும் அவளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. டைலர் ஹோல்லிஸ் ஷார்ட் மற்றும் அனைத்து அமெரிக்கர்களும் கால் முட்டி தேயத் தேய காலு கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அதே போல் பல நாட்கள் நடந்து சென்றோம். அவர்கள் அந்த செங்குத்தான மலைப்பாறைகளை எவ்வாறு கடந்தோம் என்பது பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் மூன்று எட்டு மணி நேர மாற்று நேரங்களில் தொடர்ந்து வேலை செய்தார்கள். இடையிடையே அரை மணி நேரம் இரு முறை ஒவ்வொரு மாறுதலுக்கும் இடையில் ஓய்வெடுத்துக் கொண்டனர். இருவர் தொரியாதோரில் இருந்த மின்னாக்கப் பொறியினால் மின்னூட்டம் செலுத்தப்பட்ட மின் துளையிடும் கருவிகளைக் கொண்டு நான்கு அடி இடைவெளியில் இரு துளைகள் இட்டனர் ஒரே சம தளத்தில். துளைகள் இரண்டும் சிறிது கீழ் நோக்கி இருந்தன. இந்த ஓட்டைகளில் இதற்காகவே கொண்டு வரப்பட்ட இரும்புக் கம்பிகள் நுழைக்கப்பட்டன. அவைகள் ஓரடி பாறையின் விளிம்பில் இருந்து நீட்டிக் கொண்டிருந்தன. அதன் மேல் ஒரு பலகை வைக்கப்பட்டது. அதன் பின் பணி நேர மாறுதலில் வந்தவர்கள் மேலும் இரு துளைகளை ஐந்தடி தூரத்தில் அமைத்தார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மேலே சென்றார்கள். இரவு நேரங்களில் தொரியாதோரின் பாவொளி விளக்கு வேலை செய்யும் இடத்தின் மீது பாய்ச்சப்பட்டது. ஒரு மணி நேரத்தில் பத்தடி விகிதத்தில் ஐந்து நாட்களில் அந்த மலையின் மீது ஏறி விட்டார்கள். அதில் கயிறுகள் இறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு தூக்கி செய்யப்பட்டது. அதன் மூலம் தொரியாதோரை இயக்குவதற்கு தேவைப்பட்ட இருவர் தவிர மீதி அனைவரும் மலைச் சிகரத்தை அடைந்தனர். அவர்கள் தேவைக்கு அதிகமாகவே ஆயுதங்கள் வெடி மருந்துகள் உபகரணங்கள் அனைத்தையும் மேலெடுத்துச் சென்றனர். ஊர்வன விலங்குகள் மிகுந்த அபாயகரமான தென் திசையில் நுழைந்து ஏற்பட்ட தோல்வியினால் அங்கிருந்து வடக்கு நோக்கி என்னைத் தேடித் சென்றனர். அவர்களிடம் துப்பாக்கிகள் அதிகம் இருந்ததால் அவர்களில் யாருக்கும் உயிர் இழப்பு ஏற்படவில்லை. ஆனால் அவர்களின் பாதை அவர்களால் கொல்லப்பட்ட கொடூரமான விலங்குகளின் சடலங்கள் நிறைந்து இருந்தன. அங்கிருந்து கஷ்டப்பட்டு வடக்கில் உள்ள காலுக்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். அங்கே அவர்கள் போவன் மற்றும் அவரது மனைவி இருவரையும் கண்டனர். போவன் நாப்ஸ் இருவரும் சந்தித்த வேளை நாப்ஸ் தன் நகங்களால் காலுக்கள் அளித்த அந்த உடையைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது. நாங்கள் காலுக்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்த போது லா ர்யூ எங்களை வரவேற்றாள். அவள் திருமதி டைலராக இருந்தாள் இப்போது. எனது ஆட்கள் அவர்களைக் கண்டு பிடித்த அதே நாளில்தான் தொரியாதோரின் எஜமானன் திருமணமும் நடந்திருந்தது. இருந்தும் லிஸ் போவன் இருவரும் கடவுள் தங்களை இணைத்து வைத்த பந்தத்தை விட மதச் சடங்குகள் செய்து வைத்திருக்காது என்று உறுதியாக நம்புகிறார்கள். பிராட்லி மற்றும் அவனது கூட்டாளிகள் யாரும் இதுவரை தென்படவில்லை என்று இருவரும் சொன்னார்கள். அவர்கள் தொலைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டபடியால் இனிமேல் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையே தொலைந்து விட்டது. காலுக்கள் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவர்களை நேரில் பார்க்கவில்லை டைனோசர் கோட்டையில் இருந்து கிளம்பிய சில மாதங்களுக்குப் பின். நாங்கள் ஜோரின் கிராமத்தில் இரு வாரங்கள் தங்கினோம். அதன் பின் தென் திசை நோக்கி எங்களுக்காகக் காத்திருக்கும் தொரியாதோர் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். இந்த இரண்டு வாரங்களில் சால்-ஆஸ் க்ரோலு கிராமத்தில் இருந்து வந்தான். இப்பொழுது அவன் முழுமையான காலுவாகி விட்டான். ஆல்-டானின் மீதி இருந்த வீரர்கள் க்ரோலு கிராமத்திற்குள் நுழைய முயற்சி செய்தபோது அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகச் சொன்னான். அதனால் சால்-ஆஸ் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் கிளம்பிய பின் நம்பிக்கைக்குரிய ஒருவனைத் தலைவனாக்கி விட்டு வந்தான். நாப்ஸ் போவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டது. நான் அஜோர் இருவரும் ஏஸின் மீதேறி காலுக்களின் அழகிய வட நாட்டைக் கண்டு வந்தோம். சால்-ஆஸ் அவனது நாட்டில் விட்டு வந்த எனது ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான். எனது உடைகள் மட்டும் கிடைக்கவில்லை. இருந்தும் காலுக்களின் உடை அணிந்த பிறகு எனது உடை தேவையாய் இருக்கவில்லை. ஒருவழியாக நாங்கள் கிளம்பும் நேரம் வந்து விட்டது. மறு நாள் காலை நாங்கள் தொரியாதோர் நோக்கிக் கலிஃபோர்னியாவிற்குக் கிளம்ப ஆரம்பித்தோம். அஜோர் என்னுடன் வர வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால் ஜோர் அவளது தந்தை அதற்கு உடன்படவில்லை. காஸ்-அட்டா-லோவாகிய அஜோரை விட்டுக் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை. ஏனெனில் அவளின் சந்ததிகள் ஒரு உயர்ந்த இனமாக உருவெடுப்பார்கள் என்று அவர் நம்புகிறார். வேறெந்தக் காலு பெண்ணை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம், ஆனால் அஜோர் வர மாட்டாள் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். பாவம் அவளது இதயம் சுக்கு நூறாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை அவள் எனது இதயத்தின் மீது வைத்திருந்த பிடியை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருந்தேன். அவள் இல்லாமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவளது கரங்களை நேற்றைய இரவு பற்றிக் கொண்டிருக்கும் வேளை அவள் இல்லாமல் என் வாழ்க்கை எப்படிச் செல்லும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவள் மேல் நான் தீராத காதல் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எனது காட்டுமிராண்டிப் பெண்ணை நான் காதலிக்கிறேன். பின் ஒரு வழியாக அவளைப் பிரிந்து எனது குடிசைக்குச் சென்று சிறிது நேரம் உறங்கலாம் என்று எண்ணினேன் நாளைக் காலையில் நீண்ட தூர பிரயாணத்திற்குத் தயாராக வேண்டி இருப்பதால். காலம் இந்தக் காயத்திற்கு நல்ல மருந்து இடும் என்று என்னை நான் சமாதானப் படுத்திக் கொண்டேன். எனது தாய் நாடு சென்றவுடன் அங்கு எனது கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். காலை நான் நினைத்ததை விட வேகமாய் வந்து விட்டது போல் தோன்றியது. எழுந்து காலை உணவை முடித்தேன். அஜோரை அங்கு காணவில்லை. இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டால் துன்பமில்லை என்றே நானும் நினைத்தேன். எனது ஆட்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். காலு வீரர்களும் எங்களுடன் வரத் தயாராய் இருந்தார்கள். நான் ஏஸின் லாயத்திற்குச் சென்று அதனிடம் சொல்லிவிட்டு வரக் கூட விரும்பவில்லை. நேற்று இரவு அதை அஜோரிடம் ஒப்படைத்தேன். அவர்கள் இருவரும் இப்பொழுது பிரிக்கவே முடியாதபடி ஒன்று சேர்ந்து விட்டனர். அதன் பின் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வீதியின் இரு மருங்கிலும் கற்களால் கட்டப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் நடந்தோம். அதன் பின் கல்லால் ஆன வாயில் சுவர் அந்த நகரைச் சுற்றி முழுவதும் எழுப்பப் பட்டிருந்தது அதையும் தாண்டி வெளியே சென்றோம். அங்கிருந்து காடு. அதற்குள் சென்றால்தான் காலு நாட்டின் வட எல்லையைத் தொட முடியும். அங்கிருந்து தென் திசை நோக்கிச் செல்ல வேண்டும். காட்டின் எல்லையில் இருந்து என் இதயத்தைக் கொண்டிருக்கும் அந்த நகரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அந்த பிரமாண்ட மதில் சுவர் தாண்டி நான் கண்ட காட்சி என்னை மேலே செல்லாமல் தடுத்தது. அங்கே ஒரு சிறிய உருவம் வாயில் கதவின் மேல் சாய்ந்து நின்றது. இந்த தூரத்தில் இருந்து பார்த்தபோது கூட அந்த உருவம் அழுத அழுகையினால் அதன் தோள்பட்டை குலுங்குவதைக் காண முடிந்தது. போவன் என்னருகில் இருந்தான். “சென்று வருகிறேன் போவன்” என்று சொன்னேன். “நான் திரும்பிச் செல்கிறேன்” அவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான். “சென்று வா” என்று சொன்னான். என் கையை எடுத்துப் பிடித்தபடி சொன்னான் “நீ இதை இறுதியில் செய்வாய் என்று தெரியும்” அதன் பின் நான் சென்று அஜோரின் கைகளை எடுத்து என் கைகளில் வைத்துக் கொண்டேன். அவள் கண்களில் வழிந்த நீரை முத்தமிட்டேன். பின் நாங்கள் இருவரும் கடைசி அமெரிக்கன் காட்டில் நுழைந்து மறைவதைப் பார்த்தபடி நின்றிருந்தோம். அருஞ்சொற்கள் உலாப்படகு - Yacht மீகாமன் – Captain நன்மகன் – Gentleman கம்பி வடம் - Cable கப்பி – Pulley விசைப்பொறி – Motor பாவியல் கலைத்திறம் - Impressionism சித்திரப்படாம் – Canvas புதைபடிமவியல் – Paleontology புதிர்நெறி – Labyrinth மின்னாக்கப் பொறி – Dynamo பாவொளி – Search light கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account