[] [cover image] காதலும் கண்ணீரும் கொல்லால் எச்.ஜோஸ் FreeTamilEbooks.com CC BY-NC-SA-ND காதலும் கண்ணீரும் 1. காதலும் கண்ணீரும் 1. என்னுரை 2. அணிந்துரை 2. பகுதி 1 3. பகுதி 2 4. பகுதி 3 5. பகுதி 4 6. பகுதி 5 7. பகுதி 6 8. பகுதி 7 9. பகுதி 8 10. பகுதி 9 11. பகுதி 10 12. பகுதி 11 13. பகுதி 12 14. பகுதி 13 15. பகுதி 14 16. பகுதி 15 17. பகுதி 16 18. பகுதி 17 19. பகுதி 18 20. பகுதி 19 21. பகுதி 20 22. பகுதி 21 23. பகுதி 22 24. பகுதி 23 25. பகுதி 24 26. பகுதி 25 27. பகுதி 26 28. பகுதி 27 29. பகுதி 28 காதலும் கண்ணீரும் காதலும் கண்ணீரும்   கொல்லால் எச்.ஜோஸ்   joseharichandran@gmail.comதமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC BY-NC-SA-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Kadhalum_Kanneerum} என்னுரை [] காதல்… முட்கள் நிறைந்த ரோஜாச் செடியில் பூக்கும் அழகிய ரோஜா பூ போல, காட்டு பூச்செடியில் பூக்கும் அழகழகான பல வர்ண புஷ்பங்கள் போல முரடன், நல்லவன், கெட்டவன், அன்பானவன், கோபமானவன், பொறாமைக்காரன் என பாரபட்சமின்றி அத்தனை பேர் உள்ளத்திலும் அரும்பவே செய்கிறது இந்த காதல் எனும் அற்புத உணர்வு. காதல் மனிதனுக்கு மட்டும் சொந்தமானதும் அல்ல. மழைக்கு மண் மீது காதல், சூரிய ஒளிக்கு பூமி மீது காதல், கடல் அலைக்கு கரை மீது காதல், காற்றிற்கு மரம் செடி கொடிகள் மீது காதல், பசுவிற்கு அதன் கன்று மீது காதல், காகத்திற்கு அதன் குஞ்சுகள் மீது காதல் காதல் இப்படியாக பூமி மீது பொதுவானது காதல் இன்றி பூமி சுழல்வது கூட சாத்தியம் ஆகாது. மனிதர்களின் காதல் சற்று வித்தியாசமானது அதுவும் இந்த இளமையில் தோன்றும் காதல் வரமா? சாபமா? என்று பல நேரம் பிரித்தறிய முடியா வண்ணம் விசித்திரமானது. காரணம் காதலித்து மனமொத்து திருமணம் செய்து கொண்டவர்கள் வீட்டிலும் சண்டை வருகிறது பிரிவு வருகிறது கோபம் வருகிறது விவாகரத்தும் வருகிறது. எனில் அங்கு உண்மையான காதல் இருந்திருக்கவில்லை வயது கோளாறோ இல்லை உடல் சார்ந்த தேவைகள் முன்னிலை படுத்தப்பட்டதன் விளைவாக இருக்கலாம் இவை. வீட்டை எதிர்த்து திருமணம் செய்தவர்களில் ஜெயித்தவர்கள் உண்டு. அதை விட தோற்றவர்கள் தான் அதிகம். இங்கு ஆசை ஆசையாய் அந்த பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் ஆசை நிராசை ஆகிறது. அவர்கள் அன்பு வீணாய் போகிறது. அவர்கள் உள்ளம் கொதிக்கிறது. மனம் வலிக்கிறது. அப்படி பெற்றோர்களின் எதிர்ப்பை மீறிப்புறப்படும் ஒரு வைகா, ராகவ் எனும் காதலர்களின் கதையை சொல்லியிருக்கிறேன். முன் பின் யோசிக்கா அவர்களது அவசர காதல் அதனால் வரும் பின்விளைவுகள். அதனால் வரும் பாதிப்புகள். அதிலிருந்து அவர்கள் படித்த பாடங்கள் என எதார்த்தத்தை இயல்பாக சுவையாக சொல்ல முயன்றிருக்கிறேன். சரியா? தவறா? என்பதை படித்துவிட்டு எனக்கு தெரியப்படுத்துங்கள். இது போல் இன்னும் சில எழுத அவை எனக்கு உந்து சக்தியாய் இருக்கும். காதல் செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை புரிந்து கொண்டு காதலியுங்கள் என்கிறோம். இக்கதைக்கு அணிந்துரை எனும் அன்புரை வழங்கிய திரு. பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. முகநூலில் இக்கதையை தொடராக எழுதிய நேரத்தில் வாசித்து ஊக்கப்படுத்திய என்னுடை முகநூல் நண்பர்களுக்குமென் இதய நன்றிகள். அன்புடன், கொல்லால் எச். ஜோஸ் 14-9-18 Joseharichandran@gmail.com Whatsup: +919486593651 அணிந்துரை [] கொல்லால் எச். ஜோஸ் இவரிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன், முக நூல் மூலம் எனக்கு நட்பு ஏற்பட்டது. என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து, அதற்கு தவறாமல் பின்னுட்டம் இடுவார். அந்த பின்னூட்டங்கள் சம்பிரதாயத்திற்காக இல்லாமல், உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கும். அதன் காரணமாகவே, இவரின் பின்னூட்டத்தை நான் மிகவும் விரும்புவேன். முகநூலை, பொழுதுபோக்கிற்காக இல்லாமல். அதனூடே, சமூதாயத்திற்கு பயன்தரக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்துவதே என்னுடைய நோக்கம். ஜோஸ் அவர்களுக்கும், இதே எண்ணம் இருப்பதால் இவருடைய பதிவுகளை தவறாமல் வாசித்து, அதற்கு என்னுள் ஏற்படும் மன உணர்வுகளை, அவருடைய பதிவில் பின்னூட்டமாக தெரிவிப்பேன். இப்படியாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர அன்பும், நட்பும் ஏற்பட்டுள்ளது. வெளிப்பார்வைக்கு ஒரு சாதாரண தோற்றமுடைய இளைஞர். ஆனால், அகத்திலோ அன்பானவர் பண்புகள் நிறைந்தவர் அதிகம் ஏட்டுக்கல்வியை கற்கவில்லை எனினும் வாழ்க்கையை நன்கு கற்றிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை, அதில் கற்றுக்கொண்ட பாடத்தையும் தனக்குள் புதைத்துக்கொள்ளாமல், அதை அடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டும் என்பதில் ஆர்வமுடன் இருப்பவர். அதிகம் நூல்களை வாசிப்பவர் அவர் வாசித்த நூல்கள் குறித்து, அவ்வப்போது முகநூலில் பதிவிட்டு, மற்றவர்களும் அதை வாசிக்க தூண்டுபவர். ஒரு குறிப்பிட்ட கருத்தை முன் வைத்து பதிவுகளை செய்யாமல். தொடர்கதைகள் அல்லது தொடர்கள் மூலம், தன்னுடைய கருத்துக்களை இந்த சமூதாயத்திகு விருந்தாக படைக்கிறார். இவருடைய பதிவுகளில் கிராமத்து மண் வாசனை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் பின்னிப்பிணைந்திருக்கும். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக அருமையாக படம்பிடித்து காண்பிப்பார். ஒவ்வொரு தொடரிலும், நிச்சயம் ஒரு வாழ்வியல் கருத்தும், சமூதாய கருத்தும் பொதிந்திருக்கும். அப்படியான ஒரு கதை தான் இந்த குறுநாவலும். தனது தாய், தந்தையரால் செல்லமாக ஆசை ஆசையாய் வளர்க்கப்பட்டு, வருத்தமறியா துடுக்குத்தனத்துடன் வலம் வரும் ஒரு இளம்பெண் அவளுக்கு ஏற்படும் காதலையும், அதன் பின் அவள் எதிர்கொள்ளும் வாழ்வையும், மிக எதார்த்தத்துடன் சொல்லியிருக்கிறார். இதை முகநூலில் வாசித்து, வியந்திருக்கிறேன். நீங்களும் வாசியுங்கள். தொடர்ந்து இந்த இளைஞனை ஊங்களுடைய வாசிப்பின் மூலம் ஊக்கப்படுத்துங்கள். பின்னாளில் பெரிய அளவில் சாதனை படைப்புகளை இவர் சமுதாயத்திற்கு வழங்குவார் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னமும் ஜோஸ் அவர்களை, நான் நேரில் சந்திக்கவில்லை. வாய்ப்பு ஏற்படின் நிச்சயம் சந்திக்கிறேன். அன்புடன்… பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி பகுதி 1 வைகா தகதகவெனத் தங்கம் போல் மின்னுவாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் மாநிறத்தில் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகாகத் தான் இருப்பாள். அவள் காந்த கருவிழி கண்களோ தண்ணீரில் நீச்சலடிக்கும் குளத்து மீன்களை எல்லாம் நமக்கு நினைவு படுத்தாது. ஆனால் நேரிய பார்வை சீரான கண்களுடன் சிறப்பாக தான் இருப்பாள். அவள் கூந்தல் தொடை தொடும் அளவு நீளமாகவோ மயில் தோகை போன்று அடர்த்தியாகவோ பெண்கள் பொறாமைப்படும் அளவுக்கொன்றும் அத்தனை ஆடம்பரமாக ஆரவாரமாக இருக்காது. ஆனால் ஒற்றை ஜடை பின்னலிட்டு வந்தாலும், கூந்தலை விரித்துவிட்டு ஒய்யாரமாய் நடந்து வந்தாலும் அழகாகத் தான் இருக்கும். அவள் நெற்றி அரைவட்ட பௌர்ணமி நிலவை ஒத்து இருக்கும் என்றால் கவிகள் தங்கள் கற்பனை மாதரசிகளை குறித்துப் பாடும் பொய்யில் நீங்கள் இதையும் சேர்த்துவிடக்கூடும். உண்மையை சொல்வதென்றால் அவள் நெற்றி நீள்வட்டமாகவும் இல்லாமல் சதுரமாகவும் இல்லாமல் குங்குமத்தில் சிறப்பாய் பொட்டொன்று வைத்து வந்தால் அழகு. அதன் அழகோ பருவ வயது பையனின் நெஞ்சாங்கூடு வரை ஊடுருவிச் செல்லும் என்பதை மறுக்க முடியாது. அவள் கன்னங்கள் காஷ்மீர் ஆப்பிள் போல் கலராக கவர்ச்சியாகவெல்லாம் இருக்காது. ஆனால் சிரித்தால் குழிவிழும் அவள் கன்னம் அக்குழிக்குள் இளவட்டம் சிலரின் இதயமும் விழுந்துவிடாது என்று நாம் அறுதியிட்டு கூறுதல் அரிது. அவள் மூக்கு திறமையான ஓவியனின் கைவண்ணத்தில் கலக்கும் பேரழகு மூக்கு போலோ செய்து வைத்த செப்பு சிலையின் எழிலான மூக்கு போல் செவ்வனே இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்காக அவள் மூக்கு கிளி மூக்கு போல் கூராகவோ இல்லை சைனாகாரர்களின் மூக்கு போல் சப்பையாகவோ இருக்காது. குறையொன்றும் சொல்ல முடியா அளவான வளமான மூக்கு வைகாவினுடையது. அவள் பற்களோ பற்பசை விளம்பரத்தில் வரும் அழகிகளின் பற்களை போல் பளிச்செனவெல்லாம் இருக்காது. அதற்காக வெத்தலை போட்டு கறை படிந்த பாட்டியின் பல்லை போல் இருக்கும் என்று யாரும் தவறாக எண்ணவும் வேண்டாம். வரிசை மாறாமல் சுட்ட சங்கு போல் வெண்மையாய் தான் இருக்கும். அவள் உதடுகளோ சிரிக்கையில் விரிந்த ரோஜா மலரையோ, சிரிக்காமல் இருக்கையில் மலராத கமல மலரையோ நினைவுபடுத்தாது நமக்கு. ஆனால் இக்குழந்தை சிரித்தால் எத்தனை அழகாய் இருக்கும்! என்று நமை ஏங்க வைக்கும் சிறு குழந்தையின் உதடும் சிரிப்பும் அவளுடையது. அவள் உதட்டு சிவப்போ கோவைப்பழத்தை ஒத்திருக்கும் என்றொன்றும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கோவைப்பழமே கோபப்படக்கூடும். ஆனால் அதற்காக அவள் உதடு அமாவாசை இருட்டு போலிருக்கும் என்று யாரும் தவறாக எண்ணிவிடவும் வேண்டாம். அதிகாலை விடியலின் சூரியனை சுற்றிச் சிவந்திருக்கும் வானின் நிறத்திற்குச் சற்று குறைவாகவோ கூடுதலாகவோ இருக்கக் கூடும். அவள் கழுத்தோ முத்துக்குளித்து கடலிலிருந்து மீனவர் எடுத்துவரும் வலம்புரிச் சங்கை எல்லாம் நினைவுபடுத்தாது நமக்கு ஆனால் அவள் கழுத்து வழவழப்பாக வடிவாக அழகாகத்தான் இருக்கும். இறைவன் படைப்பில் அவள் அழகுகள் கூட கூடுதலுமின்றி குறைவுமின்றி அவள் அழகுக்கு அழகு சேர்த்துக்கொண்டு பெண்மையின் அடையாளத்தை சொல்லி அவளை சிறப்பித்துக்கொண்டே தானிருக்கும். அவள் இடையோ வஞ்சிக்கொடியையோ மல்லிக்கொடியையோ நினைவுபடுத்தாது நமக்கு. ஆனால் இவ்விடைக்கு இவ்வுடலைச் சுமக்கும் பலமிருக்கிறதா? என்று நமை கூட ஒரு நிமிடம் யோசித்து வியப்படைய வைக்கும். அவள் நின்றால் கோயில் சிற்பம் போலோ, நடந்தால் அசைந்து வரும் தேர் போலெல்லாம் இருக்காது. ஆனால் அவள் நின்று கொண்டிருந்தாலும் சரி நடந்தே வந்தாலும் சரி அவளை ஒரு நிமிடமேனும் பார்க்காமல் செல்பவர் கண்களில் எதேனும் குறை இருக்கக் கூடும் என்று நாம் தாராளமாய் சொல்லி விடலாம். நான் சொல்லும் இந்த வைகா பேரழகி என்று சொல்லமுடியாது. ஆனால் நான் சொன்னதை வைத்துப் பார்த்தால் சுமாரான ஒரு அழகி என்று வேண்டுமானால் நீங்கள் எண்ணிக்கொள்ளலாம். நீங்கள் எப்படி எண்ணிக்கொண்டாலும் சரி; அவள் சுமாரான அழகி என்பதே உண்மை. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வைகா கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவி. ஆனால், நாம் சொல்லும் அத்தனையும் பொய்! பொய்! இவளொரு பேரழகி, இப்பிரபஞ்சத்தின் அழகின் மொத்த உருவம் என சொல்லவும் நாமெல்லாம் இவளைக் குறித்து இல்லை, இருக்காது, நினைவுபடுத்தாது என்றதெல்லாம் இல்லவே இல்லை! அவள் அப்படித்தான் அழகென்றால் வைகா தான்! அவள் மட்டும் தான்! என்று அடித்துக்கூறவும் ஒருத்தன் இருந்தான். அவன் தான் இக்கதையின் கதாநாயன் “ராகவ்…” பகுதி 2 ராகவ்… லெமன் நிறம், குறும்பு பார்வை, அரும்பு மீசை, விரிந்த தோள்கள், பரந்த மார்பு, கல கலப்பான பேச்சு, யோ… யோ… ஸ்டைலில் வான்நோக்கி கூராக நிற்கும் தலைமுடி, பின்மண்டையில் சிறு பங்க் வேறு, காதில் ஒரு வெள்ளிக்கம்மல், கையில் எந்தப் பூசாரியும் கொடுக்காத எதற்குக் கட்டியிருக்கிறான் என்றே தெரியாத கயிறுகள் சில, ஆங்காங்கே கிழிந்த நிலையில் ஜீன்ஸ் பேன்ட், கை மசிஸ்சில்ஸ் தெரிவது போல் பனியன். ஒரு கையில் மொட்டைத் தலையை மறைக்கத் தலையில் ஒரு துண்டை கட்டியபடி கண்ணை மூடி நெஞ்சை விரித்து விட்டத்தை நோக்கியபடி ஆள்காட்டி விலையும் சுண்டு விரலையும் மட்டும் நிமிர்த்து வைத்தபடி இருக்கும் ஆன்மீக அரசியல்வாதி ரஜினியின் படத்தைப் பச்சை குத்தியிருப்பான். மறுகையிலோ சிரித்தபடியே யாரையோ கையை சூண்டிக் காட்டுவது போலிருக்கும் நடிகர் விஜய் படத்தைப் பச்சை குத்தியிருப்பான். எப்போதும் ஊரில் ரோட்டோரமாய் இருக்கும் மதிற்சுவரொன்றில் நண்பர்களுடன் அவனைக் காணலாம். வேலைக்குச் செல்வதில் பெரிய ஆர்வம் எதுவும் இல்லை. அதற்காக எந்த வேலையும் அவனுக்குத் தெரியாது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். ஆட்டோ ஓட்டுவான், கார் ஓட்டுவான், பைக் ஒன்றை மொத்தமாகப் பிரித்து போட்டுப் பொருத்துமளவு அவனிடம் திறமை உண்டு. பரோட்டா அடிப்பான், சில நிகழ்ச்சிகளுக்குப் பிரியாணி கூடச் சமைத்து கொடுத்திருக்கிறான். பிழைக்க வேண்டிய வழிகள் அத்தனையும் கைவசம் உண்டு ஆனால் பிழைக்கும் வழியைத்தான் இன்னும் அவன் கண்டுபிடித்திருக்கவில்லை. ஊரில் உள்ளவர்களே அவன் வேலைக்குச் சென்று பார்ப்பது அபூர்வம். அவனிடம் குறைகள் சில இருந்தாலும் இந்தக்கால இளம் பெண்ணொருத்தி அவனைக் காதலிக்க தேவையான தகுதிகள் அத்தனையும் அவனிடம் நிரம்ப இருக்கவே தான் செய்தது. அபூர்வமாக அன்றைக்குத் திருமண வீடொன்றிற்குப் பிரியாணி சமைக்கப் போன போது தான் வைகாவை முதன் முதலாகக் கண்டான். அன்றைக்கு அவள் பச்சை நிற தாவணியும், சிகப்பு நிற பாவாடையும் அணிந்திருந்தாள். சாரம் சாரமாக மல்லிகைப் பூ சூடியிருந்தாள். அவள் கழுத்தில் மெலிதாய் ஒரு தங்க சங்கிலி கிடந்தது. கையில் தங்கத்தில் சில வளையல்களும் கிடந்தது. காலில் தங்கத்திலே கொலுசும் கிடந்து சிணுங்கியது. ஓரிருமுறை தூரத்தில் அவள் சென்றதை பார்த்திருந்தான் ராகவ். அவன் மனம் படபடக்க துவங்கியிருந்தது. அன்றைக்கு அதிர்ஷ்டம் அவன் பக்கம் தான் இருந்தது. சிறு குழந்தை ஒன்று பாயசம் கேட்க அதற்கு பாயசம் வாங்கித் தர தான் சமையலறை பக்கம் வந்தாள் வைகா. இருவரது முதல் சந்திப்பும் அங்கு தான் நிகழ்ந்தது. அங்கு நின்ற மற்ற அனைவரையும் அண்ணா என்று முறை வைத்து அன்பொழுக அழைத்தவள் இவனை மட்டும் ஏனோ அப்படி அழைக்கவில்லை. பாயசம் வாங்கிச் சென்றவள் அந்தத் திருப்பத்தில் திரும்பிச் சென்ற நேரம் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து குழந்தையிடம் சிரித்து பின்னால் வந்திருந்த தன் கூந்தலை முன்னால் தூக்கி போட்டுப் போனாள். ஐயோ! அவள் பார்த்த அந்த ஒற்றைப் பார்வை அன்றைக்கு அவன் வைத்த பாயசத்தை விட ஆயிரம் மடங்கு இனித்தது அவனுக்கு. அன்றைக்குடன் அவன் காலையும் மாலையும் அமர்ந்திருந்த மதிற்சுவர் இடம் மாறியது. அவள் கல்லூரி செல்லும் வழியில் கொக்கு போல் அவளுக்காய் காத்திருக்க துவங்கினான். கையில் ரோஜாப்பூவுடன் அவள் பின்னே கால்கடுக்க நடக்க வேண்டிய அவசியத்தை அவள் அவனுக்கு வழங்கவே இல்லை. சில தினங்கள் ரசிப்பான பார்வை. “பிடித்திருக்கிறதா?” என்ற அவனது ஒற்றைக் கேள்வி அத்துடன் அவர்கள் காதல் வாழ்க்கை இனிதே ஆரம்பமானது. சில நாட்களுக்குள்ளாக உயிருக்குயிரான காதலர்களாக மாறிப்போனார்கள். ஓரக்கண்ணால் ரசித்த அவனை ஒய்யாரமாய் அவன் அருகிலிருந்த ரசிக்கத் துவங்கினாள். அவர்கள் காதல் வேகமாக அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி முன்னேறியது. பார்க், பீச், சினிமா என்று தங்கள் காதலை வேகமாக வளர்க்கத் துவங்கினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவர்கள் காதல் வளர்ந்து வந்தது. எல்லையில்லா காதல் வானில் இணைபிரியா இளம் காதல் ஜோடியாக இன்பம் சூழ சிறகு விரித்து உயரே உயரே பறக்க துவங்கினர். அவர்கள் காதலிக்க துவங்கி முழுதாக மூன்று மாதம் கூட முடிந்திருக்காது. அதற்குள்ளாக இவர்கள் காதலோடு சந்தோஷமாகச் சுற்றி திரிவதைப் பொறுக்காத காதலுக்கு எதிரான ஸ்லீப்பர் செல்கள் யாரோ சிலர் வீட்டில் பற்ற வைத்துவிடப் பிரச்சனை சிறு தீப்பொறி விழுந்து கொழுந்து விட்டு எரியும் வைக்கோற் போர் போல அவள் வீட்டில் பயங்கரமாக பற்றியெரியத் துவங்கியது… பகுதி 3 வைகாவின் வீட்டில் பிரச்சனை கொழுந்து விட்டு எரிய துவங்கியது. யார் அவன்? அவனுக்கு உன்னை பற்றி என்ன தெரியும்? அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்? உன் மீது எங்களின் கனவு என்ன? உன்னுடைய வாழ்க்கை எப்படி எல்லாம் மாறவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம். நீ என்னவென்றால் வீடு இல்லாத, நிலம் புலம் என எதுவுமோ அற்ற ஒருத்தனை காதலிக்கிறேன் என்று வந்து நிற்கிறாய். கல்யாணத்திற்கு அப்புறம் சோறு என்ன காதல் போடுமா? காதல் கத்தரிக்காய் என்று சினிமா வசனத்தை பேசித்திரியாமல் ஒழுங்காக போய் படித்து நல்லாகும் வழியைப்பார் இல்லையென்றால் படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் வீட்டிற்குள்ளே கிடக்க வேண்டி வரும் என்று எச்சரித்தனர் பெற்றோர். அம்மா அப்பாவின் ஆலோசனைகளும் திட்டலும் எச்சரிப்பும் அவளுக்கு பெரிதாய் படவில்லை. அவர்கள் வளர்த்து ஆளாக்கியவர்கள் அவர்கள் சொல்வதில் அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால் தெரிந்தவன், தெரியாதவன், சொந்தக்காரன், மாமான், மச்சான், மாமி, பக்கத்து வீட்டு ஆன்டி என கண்டவனெல்லாம் வந்து ஆலோசனை சொல்வதை தான் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளாளுக்கு வந்து ஆலோசனை எனும் பெயரில் தன் கழுத்தறுத்து தனை வாட்டி வதைப்பதை அவள் விரும்பவே இல்லை. அப்பா அம்மா முதற்கொண்டு அவனும் அவன் காதலும் வேண்டாம்! வேண்டாம்! என்று சொல்ல சொல்ல அவளுக்கு அவன் தான் வேண்டும்! அவன் மட்டும் தான் வேண்டும்! வாழ்ந்தால் அவனுடன் தான் வாழ வேண்டும்! எனும் எண்ணம் வெறியாக அவளுள் ஆழமாக வேர் பிடிக்க துவங்கியது. வீட்டிலுள்ளவர்கள் மேலோ சொந்தங்கள் மேலே அவளுக்கு பெரிய வருத்தமேதுமில்லை. இந்த வீட்டில் போட்டுவிட்டார்கள் பாருங்கள், அவர்கள் மட்டும் கையில் கிடைத்தால் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஏன் இருவர் காதலிப்பது இச்சமுதாயத்திற்கு பிடிக்கவில்லை? மனமொத்த இருவர் காதலித்து கல்யாணம் செய்து கொள்வது அத்தகைய பெரும் பிழையா? பணமும் பதவியும் உள்ளவர்கள் மட்டும் தான் உலகில் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்களா? 18 வயதானால் ஓட்டு போட உரிமை உள்ள ஒரு நாட்டில் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட இல்லையா? என்ன அநியாயம் இது? இந்த வயசுல காதலிக்காம வேற எந்த வயசுல காதலிப்பதாம்? இந்த வயசில எல்லா பெருசுங்களும் காதல் கல்யாணம்ன்னு பண்ணீட்டு தலையும் தாடியும் நரச்சப்புறம் வெட்டியா திண்ணைல உக்காந்து அடுத்தவன் கதையை பேசி உண்மை காதலர்கள் மனதை சிதைத்து அவங்கள பிரிக்க பாக்குறாங்க. காதலிக்க வாய்ப்பு கெடைக்காம போன பெருசுங்க தான் வெட்டியா உக்காந்து காதலை எதிர்க்கிறேன்ங்ற பெயர்ல மனித மனங்களை எரிக்கிறார்கள். என தன்னுடைய காதல் வேகத்தில் தன் காதலை எதிர்த்த அத்தனை பேரையும் மனதிற்குள் திட்டி தீர்த்தாள். அன்று தன் கணவனுக்காக கண்ணகி மதுரை மாநகரையே எரித்தாள். அந்த சக்தி மட்டும் இன்று இந்த வைகாவிற்கு இருந்திருந்தால் தன்னுடைய காதலை எதிர்க்கும் அத்தனை பேரையும் சந்தேகமேயின்றி இவளும் எரித்திருப்பாள். சில நாட்களுக்கு பின்பேனும் வீட்டில் அவனைப்பற்றி நல்லவிதமாகப் பேசி சம்மதம் வாங்கிவிடலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நாளுக்கு நாள் வீட்டில் பிரச்சனை அதிகமாகிறது. அவனைப் பற்றி புதிது புதிதாய் குற்றங்களைக் கொண்டு வந்து அடுக்குகின்றனர். அவனைப் பற்றி தீர விசாரித்தோம் அவனுக்கென்று யாரும் இல்லை. அவனுக்கென்று எதுவும் இல்லை. வேலை வெட்டிக்கென்று எதற்கும் அவன் போகிறதுமில்லையாம். அதுமட்டுமல்ல நீ நினைப்பது போல் நீ ஒருத்தி மட்டுமல்ல அவனுக்கு காதலி. நீ நினைப்பது போல் அவன் அத்தனை நல்லவனும் அல்ல. அவனுக்கு வேறு பெண்களுடனும் தொடர்பு இருக்கிறதாம். இப்படிப் பட்டவனை நம்பி உன்னை எப்படி கட்டிவைப்பது. இருபது வருடம் வளர்த்து ஆளாக்கிய எங்களுக்கு தெரியும் உன்னை யாருக்குத் திருமணம் செய்து வைப்பதென்று. சொன்னா கேள் வைகா, மனதை மாற்றிக்கொள்! என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி பார்த்தனர். இவையெல்லாம் தலையில் ஏறும் மனநிலையிலா இருக்கிறாள் அவள். அவள் காதல் போதையின் உச்சத்தில் இருந்தாள். அவளுக்கு அவளது பெற்றோர்கள் கூறிய அறிவுரை அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவும், விழலுக்கு இறைத்த நீர் போலவும் வீணாகவே தான் போயிற்று. இந்த உலகில் அவனுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருந்தாள்; ஆனால் வேறு எதற்காகவும் அவனை மட்டும் இழக்க அவள் தயராகவே இல்லை. அத்தகையவளுக்கு இவர்கள் சொல்லும் அத்தனையும் தங்கள் காதலை பிரிக்க அவர்கள் செய்யும் சூழ்ச்சியாகவே தான் தெரிந்தது. அவனை வெறுக்கவைப்பதற்கு இவர்கள் செய்த பிரயத்தனங்கள் அத்தனையும் அவன் மீதிருந்த அவள் காதலை எள்ளளவும் குறைக்க முடியவில்லை. மாறாக அவள் காதல் பாறாங்கல்லில் கொத்தப்பட்ட எழுத்துக்கள் போல அழிக்க முடியாவண்ணம் அவளது உள்ளத்தில் ஆணித்தனமாக பதிந்து கொண்டிருந்தது. அப்படியே நாட்கள் சில நகர்ந்தது. இவள் கொஞ்சமேனும் மாறியிருப்பாள் என்று எண்ணியிருந்த அவள் அப்பாவிற்குக் கல்லூரிக்கு சென்றவளை திடீரென தியேட்டரில் வைத்து அவனுடன் பார்த்ததில் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். வீட்டிற்கு வந்த தன் மகளைக் கடிந்து கொண்டார். அவள் மனம் மாறுவது போலில்லை. ஆத்திரத்தில் எதாகிலும் செய்ய வேண்டும் போலிருந்தது அவருக்கு. சிறுவயது முதலே யார் கையும் படாமல் தன் மகளைச் செல்லமாக வளர்த்து வந்த காரணத்தால் அக்கோபத்திலும் கூட அவரால் அவளை அடிக்க முடியவில்லை. விரக்தியின் உச்சத்தில் அருகில் இருந்த கத்தியை எடுத்தார் தன் கையையே கிழித்து கொண்டு தன் மகளைத் தண்டித்தார். அவரின் ரத்தமல்லவா அவள்; விடுவாளா என்ன?! மறுநாள் காலையில் நுரைதள்ளிய வாயுடன் விசமருந்தி படுத்துக்கிடந்து தன் தந்தைக்குப் பதிலுக்கு பதில் செய்து விட்டாள் வைகாவும்… பகுதி 4 இரண்டு தலைமுறைகளாக அவர்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகளே இல்லை.இருந்த விரதங்கள் வேண்டிய அவர்கள் வேண்டுதலின் பலனாக கிடைத்தவள் தான் இந்த வைகா. அக்காரணத்தால் தான் தங்கள் குல தெய்வமான வைகாத்தம்மாளின் பெயரையே வைகா என்று இவளுக்குச் சூட்டி அழகு பார்த்தனர். ஒரு குடும்பத்திற்கே ஒற்றை மகள் அதனால் தான் அவள் மீது அத்தனை அன்பும் பிரியமும் வைத்து வளர்த்து வந்தனர். இத்தனை பாசத்தோடும் பரிவோடும் வளர்த்து வந்தவளை இப்படி பாதியிலேயே பறித்தெடுக்கவா வைகாத்தம்மா இவளை எங்களுக்குக் கொடுத்த என்று அலறியடித்தபடி அவளை வாரியெடுத்துக்கொண்டு மருத்துவமனையிலே கொண்டு போய் சேர்த்தனர். சில தினங்களுக்கு பின் போன உயிர் திரும்ப வந்தது வைகாவிற்கு மட்டுமல்ல, அக்குடும்பம் முழுமைக்கும் தான். ஆனால் அவள் உயிர் என்னமோ அவனிடமே இருந்தது. அவள் இதயமோ அவனை எண்ணிய துடித்தது. அவள் மனமோ நொடியும் அவனை விட்டகல மறுத்தது. தன்னைச் சுற்றி இத்தனை பேர் ஆறுதலாக அவளுக்கு இருந்தும் அவள் தனிமையை உணர்ந்தாள். அவள் அவனின் அருகாமைக்காய் ஏங்கித்தவித்தாள். அவள் உடம்பு சரியானது. அவள் குடும்பம் சகஜ நிலைக்குத் திரும்பியது. அவன் வேண்டாம் என்பதில் மட்டும் அவர்களிடம் எவ்வித மாறுதலும் இல்லை. இனியும் விட்டிலுள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்கள் எனும் நம்பிக்கை அவளுக்கு அறவே அற்றுப் போயிற்று. இவர்களின் சம்மதம் கானல்நீர் தான் என்பதுக் கண்கூடாக புரிந்தது. கல்லும் காலத்தால் கரையக்கூடும் ஆனால் அவர்கள் இதயம் மட்டும் அவள் காதலுக்காய் இளகாது என்பது தெள்ளென தெளிவாய் விளங்கிற்று. இனி காத்திருந்து பலனில்லை என்பதை உணர்ந்தாள். இங்குள்ள நிலையைக் கண்ணீரோடு சொன்னாள் அவனுக்கு. நீ இல்லையென்றால் செத்திடுவேன் என்று கதறினாள். நான் இருக்கிறேன் நீ கவலையை விடு என்று மறுமொழிக் கூறினான். சில தினங்களுக்குப் பின் அழைத்தான் தயாராக இருக்கச் சொன்னான் இன்றைக்கே அவளை அழைத்துச் செல்வதாகவும் சொன்னான். இரவு என்ன செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு வெளியே வர வேண்டும்? எப்படி வர வேண்டும்? எனும் அவனுடைய திட்டத்தை அவளுக்கு விளக்கினான். முடிவில் உன்னுடைய நகைகளையும் வீட்டில் இருக்கும் பணத்தையும் எடுத்து வரச் சொன்னான். காதலித்த நாட்களில் கட்டின புடவையோடு வந்தால் போதும் என்றவன் இன்றைக்கு இப்படிச் சொல்கிறானே என்று அவள் யோசிப்பதற்குள், எனக்கு வர வேண்டிய பணம் எதுவும் வரவில்லை அது மட்டுமல்ல அது உன்னுடைய நகை; நீ எதுக்கு அவங்களுக்கு விட்டு கொடுத்துட்டு வரணும் உன் வீட்டிலுள்ளதும் உன்னுடைய பணம் தான் அதை எடுத்து வருவதில் என்ன தப்பு? என்று காதல் கிறக்கத்தில் இருக்கும் அவள் மனதிற்கு ஹெராயின் ஊசி இன்றியே மயக்கத்தைக் கொடுத்தான். அவன் சொன்னதற்கெல்லாம் சரி சரி என்றாள். திட்டப்படி சரியாக இருப்பேன் என்றாள். அவன் வேண்டும் என்ற ஒன்றைத் தவிர வேறெதையும் யோசிக்கும் மனநிலையில் அவளில்லை. இரவு நடுநிசி ஆனது இருமுறை ஆந்தை அலறுவது போல் சத்தம் கேட்டது. அப்போது ஒரு இருசக்கர வாகனம் ஒன்று அவ்வழியே சென்றது அவள் வீட்டைக் கடந்து சென்றதும் மூன்று முறை விட்டு விட்டு ஒலியெழுப்பி சென்றது. இது தான்! அவன் சொன்ன அடையாளம் இது தான்! அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பேக் ஒற்றை கையில் எடுத்துக்கொண்டாள். சத்தம் எழுப்பிக் காட்டி கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாகக் கொலுசை கழட்டி பையில் வைத்துக்கொண்டாள். திருடச் செல்பவளை போல மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து வீட்டின் கதவை மெல்லத் திறந்து வெளியே வந்தாள். வீட்டின் வெளியே யாரோ ஒருவரின் காலடி சத்தம் கேட்டது. வைகா, நீ ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பையுடன் இப்படி வருவாய்; அது எனக்கு நன்கு தெரியும்; அதனால் தான் உறங்காமல் உன் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைப் போல அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றது அவள் வீட்டு நாய். ஊரார் முன்னிலையில் அப்பா, அம்மா, சொந்த பந்தங்களுக்கு கண்ணீரோடு விடை சொல்லி கணவன் கைபிடித்துச் சென்றிருக்க வேண்டியவள். நடுநிசி வேளையில் திருடியை போல தன் செல்ல நாயிடம் மட்டும் தான் தனக்குப் பிடித்தவனுடன் போகிறேன் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எதுவும் புரியாத அது பொறுமையாக அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தது. அதனிடம் அதிக நேரத்தைச் செலவிடாமல் அதன் முதுகைத் தடவி அதற்கு முத்தமொன்று கொடுத்துவிட்டு பெரிதும் சிரமப்பட்டு வீட்டின் மதிலைத் தாண்டி குதித்து ஓடினாள். மதிலைத் தாண்டி குதித்து வந்தவளை தன் கரம் பிடித்து காரினுள் அழைத்துக் கொண்டான் ராகவ். பாதுகாப்பான கரங்களுக்குள் தனை ஒப்படைத்ததாக எண்ணி பெருமிதம் கொண்டாள். அவன் தோள் சாய்ந்து பயணிக்கையில் அவள் செய்தது தவறென்றோ பெரும் குற்றமெனும் குற்றவுணர்ச்சியோ துளியும் அவளுக்கு வரவில்லை. அது அவளுடைய வாழ்வின் மிக முக்கியமான பயணம். அது தெரியும் அவளுக்கு. ஆனாலும் எங்குச் செல்கிறோம் என்றோ, என்ன செய்ய வேண்டும் என்றோ எதைக்குறித்தும் ஒருவார்த்தையும் அவனிடம் அவள் பேசவில்லை. அவன் என்ன செய்தாலும் சரி; எது செய்தாலும் சரி; அவன் எங்குச் சென்றாலும் சரி; சாய்ந்து கொள்ள அவன் தோள் கிடைத்தால் மட்டும் போதும், என்ன? எங்கே? எது? என்றே கேட்காமல் அவனுடன் உலகின் கடை கோடிக்கும் செல்லத் தயராக இருந்தாள். அவன் திட்டப்படி வாகனம் காற்றைக்கிளித்தபடி சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. காற்று சிலு சிலுவென காரினுள் சீட்டியடித்துக்கொண்டிருந்தது. நிலவு அவர்களுக்கு வழிகாட்டி, அவர்கள் செல்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. விடிந்த பிறகு நடக்கப் போகும் களேபரங்கள் எதையும் அறியாத அவளது பெற்றோர் அன்றிரவு நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்தனர்… பகுதி 5 அவனுடைய திட்டப்படி அதிகாலை வேளையில் நண்பன் ஒருவனின் ஊரைச் சென்றடைந்தது அவர்களது வாகனம். அங்கிருந்தது அவர்களை அழைத்துச் செல்ல அந்த நண்பனே வந்து காத்திருந்து அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கு வைத்துக் குளித்து முடித்து உணவருந்தி அவளுக்காக வாங்கி வைத்திருந்த புது பட்டுப்புடவையைக் கட்டி அவளிடம் கிளம்ப சொன்னான். ஆடை மாற்றி தயார் ஆகி வந்தவள் போகும் போது கேட்டாள் “நாம எங்க போறோம் ராகவ்?” “ரெஜிஸ்தார் ஆபிஸ்” “கல்யாணம் பண்ணிக்கவா?” “ஆமா! ஏன் பயமா?” “பயமா? எனக்கா? நீ அருகில் இருக்கும் போதா? ச்சீ! ச்சீ!” “அப்றம் ஏன் குரல்ல ஒரு தடுமாற்றம்?” “தெரியல டா ராகவ்..! நீ என்னைய நல்லா பாத்துப்பியாடா” “ஏன் சந்தேகமா?” “அப்டி இல்ல… சும்மா கேட்க தோணிச்சு” “கவலய விடுடா… என்னோட அம்மா போல உன்னைய நான் பாத்துப்பேன் டா… நாம நல்லா இருப்போம்” என்றான். அதற்குப் பதிலாக எதோ பேச எண்ணியவளுக்கு அதன் பின் பேச்சு வரவில்லை நா தடுமாறிக் குழைந்தது கண்கள் குளமானது. லேசாக அவன் மார்பில் சாய்ந்தாள், இதமாக இருந்தது அவளுக்கு. “டேய் ராகவ்! கொஞ்சிக் கொண்டு நிக்குற நேரம் இல்ல இது. வா! நிறைய வேலை இருக்குது.” என நண்பனின் அதட்டல் சத்தம் வர, அவனுக்குத் தெரியாது முந்தானையால் தன் கண்களைத் துடைத்தபடி வைகா ராகவுடன் காரில் ஏறிக்கொண்டாள். காரில் இன்னும் சில நண்பர்கள் இருந்தனர். கார் உறுமிக்கொண்டே புகையை கக்கியபடி வாகன நெரிசலுக்கிடையே புகுந்து நகர்ந்தது. கார் சென்று கொண்டிருந்த வழியில் எதிர்ப்பட்டது ஒரு திருமண ஊர்வலம் மணப்பெண்ணும் பையனும் சிரித்துப் பேசியபடி அருகருகில் ஒட்டி இருக்க அவர்களுக்கு முன் பேண்டு வாத்தியம் முழங்குகிறது. இருவரிசையாக வரிசை மாறாமல் நடந்து செல்கிறார்கள் பேண்டு வாத்திய கலைஞிகள். பேண்டு வாத்திய குழுவில் இருப்பது அத்தனை பேரும் பெண்களே. அவர்களைச் சுற்றி அவர்கள் சொந்த பந்தங்கள் கலகலவெனப் பேசி சிரித்தபடி நடந்து செல்கிறார்கள். அந்தப் பச்சை சட்டைக்காரரைக் கவனித்தாள் வைகா. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பதுமை போல் மணமகன் அருகில் மணப்பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்த நேரம் அந்தப் பெரியவர் மனதில் ஒரு வித பூரிப்பு ஏற்பட்டு அது அவர் முகத்தில் தெரிந்ததை உணர முடிந்தது அவளால். அது அவள் அப்பாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே புரிந்தது அவளுக்கு. மனதிற்குள் சிறு வலி ஒன்று வந்தது. தன்னைக் குறித்து தன் திருமணத்தை குறித்து தன்னுடைய அம்மாவும் அப்பாவும் கண்ட கனவெல்லாம் வரிசையாய் வந்து போனது. மேலை தெரு தவில், காவேரி இன்னிசை குழுவின் பாட்டுக் கச்சேரி, ஊரே மெச்சுமளவு தடபுடல் விருந்து, ஆயிரம் ஆதரவற்ற பிள்ளைகளுக்காவது ஒருநேர உணவு, எனத் தான் கண்ட கனவுகளை சொல்லி மகிழும் அப்பா. பீரோ முழுவதும் வாங்கிக் குவித்திருந்த பட்டுப் புடவை, சேர்த்து வைத்திருந்த நகை, நட்டுக்கள், ராசியான நகையெனக்கூறி புதிதாக பாலீஷ் போட்டுக் கொண்டு வந்த பாட்டியுடைய பாரம்பரிய நகை என ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்துச் சேர்த்து வைத்திருந்த அம்மாவின் ஆசை கனவுகள் என அத்தனையும் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர அவளையறியாமல் ஒரு வெறுமை அவளைத் தொற்றிக்கொண்டது. அவள் கண்கள் பனித்தது. காருக்கு வெளியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவளை தட்டி அழைத்து என்ன என்பது போல் தலையசைத்துக் கேட்டான் ராகவ். அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து அவன் தோளில் சாய்ந்தாள். அவனுக்குப் புரிந்தது அவள் மனநிலை. அவளுடைய கன்னம் தட்டி, தலை வருடி, அவள் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டான். இப்போது அவள் எண்ணம் எல்லாம் வேறு மாதிரி மாறிப்போனது. இதற்கெல்லாம் காரணம் நம் அம்மாவும் அப்பாவும் தானே! அவர்கள் மட்டும் நம் காதலுக்கு ஒப்புக்கொண்டிருந்தால் நாம் இப்படி ஓடிவர வேண்டிய அவசியம் வந்திருக்குமா? அவர்கள் கனவுகள் அத்தனையும் கலைந்து போயிருக்க வேண்டியது வந்திருக்குமா? நாம் நமது திருமணத்தை குறித்துக் கண்ட கனவுகள் எல்லாம் இப்படி கனவாகவே போயிருக்குமா? எல்லாக் கஷ்டமும் அவர்களாலே தான் வந்தது. அவர்களால் மட்டுமே தான் வந்தது! இது நம்முடைய வாழ்க்கை. நாம் தான் முடிவெடுக்க வேண்டும். இருபது வருடம் வளர்த்தார்கள் சரி; இனி வாழப்போகும் மிச்ச வாழ்க்கை இதுதானே பின் ஏன் பிடித்தவனுடன் வாழ மறுக்க வேண்டும். பிடிவாதம் பிடித்தார்கள் நாம் புறப்பட்டு வந்துவிட்டோம். இதில் நாம் வேறு என்ன தான் செய்து விட முடியும். இனி வரும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அவமானங்களையும் அவர்களும் அனுபவிக்கட்டும். என்று எண்ணிய போது அவர்கள் மீது இயல்பாக வந்திருக்க வேண்டிய இரக்கமும் பாசமும் போய் கோபமும் வெறுப்பும் முன்புக்கு இப்போது இன்னும் அதிகரித்தது. இப்படியாக பற்பல எண்ண ஓட்டங்களில் இருந்தாள் வைகா. ராகவ்விற்கோ ஒரே ஒரு எண்ணம் மட்டுமே யாருமில்லை என்றிருந்தோம் காதலித்தவளையே கரம் பிடிக்க போகிறோம். இனி நம் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது எனும் எண்ணம் அவன் உள்ளத்திற்கு ஒருவித கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருந்தது. அவர்களின் இத்தகைய எண்ண ஓட்டங்களின் நடுவே அவர்கள் வாகனம் ரெஜிஸ்தார் ஆபிஸை எட்டியது… பகுதி 6 ரெஜிஸ்தார் அலுவலகம் வந்தவர்களை அவனுடைய இன்னும் சில நண்பர்கள் வரவேற்றார்கள். வாழ்த்துகளையும் சொல்லிக்கொண்டார்கள். அக்கூட்டத்தில் முப்பத்தி ஐந்து நாப்பது வயது மதிக்கதக்க ஒரு ஜோடியை வைகாவின் சித்தி, சித்தப்பா என்று சொல்லி செட் பண்ணி அவர்களை வைகாவிற்கு அறிமுகப்படுத்தினார்கள். ரெஜிஸ்தார் அலுவலகத்தின் சுவற்றில் “வாய்மையே வெல்லும்” என்ற வாசகத்தின் கீழ் மகாத்மா காந்திஜி சிரித்துக்கொண்டிருந்தார். அவர் ஒருபுறத்தில் அம்பேத்காரும், மறுபுறத்தில் சுபாஷ் சந்திர போஸ்சும் வருபவர்களை உற்று பார்ப்பது போன்றே நின்றுகொண்டிருந்தனர். அதன் கீழே ஒரு நாப்பத்தி ஐந்து வயது மதிக்கதக்க பெண்ணொருவர் அமர்ந்திருக்கிறார். பார்வைக்கு எளிமையாக தெரிகிறார், அவர் கண்களில் உண்மை தெரிகிறது, முகத்தில் சாந்தம் தெரிகிறது, பேச்சில் தெளிவு தெரிகிறது. மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறார். கழுத்தில் சிலுவை டாலர் அணிந்த செயின் ஒன்றை போட்டிருக்கிறார். இடது பக்க மார்பில் “இந்திய பணிக்கு இளைஞர்களே வருக” என்ற வாசகம் பொறித்த விவேகானந்தர் பால்ஜை குத்தியிருக்கிறார். அவருடைய டேபிளில் “எம்மதமும் சம்மதம்” என்ற வாசகத்துடன் மும்மத அடையாளங்களுடன் ஒரு போட்டோ இருந்தது. மூக்கு கண்ணாடியை உயர்த்தி ஒருமுறை வந்தவர்களை ஆராய்ந்தார். ஆராய்ந்துவிட்டு, “நீங்கள் இருவரும் யார்? பெண்ணுக்கு சொந்தமா? இல்ல, பையனுக்கு சொந்தமா?” என்று அந்த செட்டப் சித்தி சித்தப்பாவை பார்த்துக் கேட்டார். “நாங்க பொண்ணோட பக்கம் தான் மேடம் இவ சித்தி நான் அவ சித்தப்பா” “ஏன் அம்மா அப்பா இல்லியா?” “இருக்காங்க, அவங்க வரல” அவர்களிடமிருந்து பார்வையை திருப்பி வைகாவிடம் “என்ன லவ்வா?” “ஆம்!” என்பதற்கடையாளமாய் தலையசைத்தாள் வைகா. “எத்தன மாசமா இவன உனக்கு தெரியும்?” “மூணு மாசமா மேடம்!” “என்னனென்ன தெரியும் அவன பத்தி?” “எல்லாம் தெரியும்!” “மூணு மாசத்துக்குள்ள எல்லாம் தெரிஞ்சிடிச்சா?!” “சரி, உனக்கு யாரும் இல்லையா” இது ராகவை பார்த்து. “இல்லை மேடம்” “என்ன படிச்சிருக்க?” “எட்டாவது பெயில்” “வீடு, சொந்த பந்தம்” “எதுவும் இல்ல மேடம்” “வேலை?” “இனி தான் தேடணும்” “அப்போ இவள எப்டி காப்பாத்த போற?” “நம்பிக்கை இருக்கு” “நம்பிக்கை சோறு போட்டுடுமா என்ன?!” என ராகவிடம் கேட்டு விட்டு அவர்கள் சார்பாக வந்திருந்த அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தார். அங்கு நின்ற யாரிடமும் பதிலில்லை. ஒரு நிமிடம் அங்கு நிசப்தம் நிலவியது. வைகாவும் ராகவும் தலைகுனிந்து நின்றனர். நண்பர்களும் மற்றவர்களும் திருதிருவென விழித்துக்கொண்டு நின்றனர். அந்நிசப்தத்தை நீடிக்க விரும்பாமல் அவரே தொடர்ந்தார் “நீங்க யாரு? இவங்க சித்தி, சித்தப்பாவா?” “ஆமா மேடம்” “மூணு மாசம் போதுமா? ஒருத்தன பத்தி முழுசா தெரிஞ்சு அவன் கூட ஓடிவர” அவர்களிடமும் இக்கேள்விக்கு பதில் ‘மௌனமே.’ “சரி, அம்மா அப்பா கிட்ட சொன்னீங்களா? அவங்க ஏன் வரல?” “சொன்னோம் எப்படியோ போகட்டும்ன்னு சொன்னாங்க. அதனால தான் நாங்க வந்திருக்கோம்” “நீங்க எந்த தைரியத்துல வந்தீங்க? சொந்த வேலை இல்ல, வீடு இல்ல, அவனுக்கென்று தனியா எதுவும் இல்ல, வெறும் மூணு மாச பழக்கம் அதுல அவன பத்தி என்ன தெரிஞ்சிருப்பா? என்ன புரிஞ்சிருப்பா? உங்க பொண்ணு இப்டி ஒருத்தன் கூட ஓடிப்போனா நீங்க ஒத்துக்குவீங்களா? இது போல ரெஜிஸ்தார் மேரேஜ் பண்ணி வைக்க தான் ஓடிப்போய் மொத நிப்பீங்களா? இது உங்களுக்கு வயசு கோளாறா படல? உங்களுக்கு புத்திமதி சொல்ல தோணல? இருபது வருசம் வளத்து ஆளாக்குனவங்கள தூக்கி எறிஞ்சிட்டு இப்டி வந்து நிக்குறாளே இது தப்பா படல? அப்பா அம்மா ஆதரவு இல்லாம யார் உதவியும் இல்லாம அவங்க சாபத்த வாங்கி கட்டிகிட்டு இவங்க நல்லா வாழ்ந்திட முடியுமா?!" என ஒற்றை மூச்சில் படபடவென படபடத்து முடிக்க அங்கு நின்ற யாரிடமும் பேச்சு மூச்சில்லை ஒரே அமைதி! மகா, அமைதி! அடுத்து அவர் ராகவை பார்த்து எதையோ சொல்ல துவங்கினார். ஆனால் அதற்குள் முந்திக்கொண்டாள் வைகா. “மேடம் நீங்க போலீஸா? இல்ல ரெஜிஸ்தாரா? நாங்க இங்க உங்ககிட்ட கவுன்சிலிங்காக வரல. கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கோம். எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம். முடிஞ்சா கல்யாணத்த பண்ணி வைங்க. இல்லேன்னா சொல்லுங்க நாங்க வேற இடம் பாத்துக்கிறோம். நான் மேஜர் எனக்கு மனசுக்கு பிடிச்சவன கட்டிக்குற உரிமை உண்டுங்றது உங்களுக்கு தெரியும்ன்னு நெனைக்கிறேன்.” என அவர் முகத்திலறைந்தாற் போல் சொன்னாள் வைகா. அதற்கப்புறம் அந்த ரெஜிஸ்தார் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ரெஜிஸ்தாரின் பேச்சைக்கேட்டு வெலவெலத்து போயிருந்த ராகவ் மற்றும் அவன் நண்பர்கள் முகமெல்லாம் வைகா பேசியதை கேட்டு மலர்ந்தது. அவள் பேச்சை கேட்ட பின் ராகவின் நண்பன் ஒருத்தன் அவன் காதில் சொன்னான் “இவள கட்டிக்க போற நீ யோகக்காரன்டா” அவன் அப்படி ராகவின் காதில் சொன்னது அவளுக்கும் கேட்டுருக்க வேண்டும். அப்போது அவள் முகத்திலும் மெலிதாய் அரும்பியது பெருமையுடன் கூடிய நணம் கலந்த ஓர் புன்னகை. ஆனால் சித்தப்பா சித்தி என்று வந்தவர்கள் முகத்தில் அந்த ரெஜிஸ்தாரின் பேச்சை கேட்ட பின் ஓர் குற்றவுணர்ச்சி தொக்கி நின்றது. அதற்கடுத்து வேகமெடுத்தது ரெஜிஸ்தார் அலுவலக நடைமுறைகள். சற்று நேரத்திற்கெல்லாம் ரெஜிஸ்தார் ஆபிஸ் நடைமுறைகள் முடிந்தது. அந்த ரெஜிஸ்தார் முன்னிலையிலேயே இருவரும் மாலையை மாற்றி கணவன் மனைவி ஆகிக்கொண்டர். அவ்விடம் விட்டு புறப்பட்டு செல்கையில் அந்த ரெஜிஸ்தார் வைகாவை அழைத்து தன் கண்ணில் இருந்த மூக்கு கண்ணாடியை கழட்டி கிழே வைத்துவிட்டு “நீ என்னோட பொண்ணு போல இருக்கேம்மா நல்லா இரும்மா” என்றார். அவ்விடம் விட்டு போன வைகா திரும்ப அவரிடம் வந்து “நாங்க நல்லா இருப்போம்மா” என்றபடி அவர் காலில் விழுந்தாள். தூக்கியெடுத்து ஆரத்தழுவி அனுப்பி வைத்தார் அந்த ரெஜிஸ்தார்… பகுதி 7 மனிதர்கள் இறந்து போன வீடுகள் மட்டுமல்ல மகளொருத்தி ஓடிப்போன வீடு கூட இழவு வீடுபோலவே தான் காட்சியளிக்கும். இங்கு வைகா ஓடிப்போனதன் மறுநாள் அவள் வீடும் அப்படியே தான் இருக்கிறது. காலைலேயே சிலநொடிகள் அவளை காணாது தவித்தனர் அவளது பெற்றோர். பயமும் படபடப்புமாக அக்கம் பக்கம் எங்கும் தேடிப்பார்த்தனர். இறுதியாக அவள் மேசை மீதிருந்த கடிதம் தான் அவர்களுக்குச் சொன்னது அவள் தனக்கு விருப்பமான வாழ்க்கை வாழப்போவதாகவும் உங்களை விட அவன் என்னை நன்றாகப் பார்த்து கொள்வான் எனும் நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் எழுதியிருந்தாள். அவளுடைய நகையையும், பணத்தையும் எடுத்துச் செல்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்த நேரம் இடிந்து போனது அக்குடும்பம். அம்மா கதறியழுதார். தம்பி தேம்பி தேம்பி அழுதான். அப்பாவோ வேரோடு சாயும் மரம் போல் சுவரோடு சாய்ந்து விழுந்தார். அடுத்த சில மணித்துளிகளுக்குள்ளாக அவர்கள் தெரு முதல் அவ்வூர் எங்கும் குமாரவேல் மகள் வைகா ஓடிப்போன கதை தான் பேச்சாக இருந்தது. கீழே விழுந்தவர் மெல்ல எழுந்து சாய்ந்து அமரும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டார். அம்மாவோ கண்ணீரும் கவலையுமாக வீட்டின் ஒரு மூலையில் முடங்கிப் போனார். தம்பியோ கலங்கிய நெஞ்சுடன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கிறான். ஊருக்குள் அதற்குள்ளாகப் பலரும் காதும் மூக்கும் வைத்துப் பேச துவங்கினர். தண்ணீர் பிடிக்க வந்த ஒரு கூட்டம் பெண்கள் இது அவர்கள் பல வருடக் காதல் என்கிறார்கள். பெண் கர்ப்பிணி என்கிறார்கள். இதெல்லாம் வீட்டுக்குத் தெரிந்தே தான் நடந்திருக்கிறது! இல்லையென்றால் வீடு இப்படி அமைதியாகவா இருக்கும்! என்கிறார்கள். இன்னும் தங்கள் தங்கள் கற்பனைக்கு தகுந்தபடியும், தங்கள் மனதின் குரூரத்தையும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். இங்கு இவர்கள் இப்படி என்றால், இது காலையில் டீக்கடை பெஞ்சில் சேர்ந்த கூட்டம் “பொண்ணுக்கு பிடிச்சிருந்தா கட்டி வெச்சிருக்க வேண்டியது தானே ஓய்” இது ஒரு குரல். “பெண்ணுக்கு பிடித்தது அத்தனையும் செய்ய முடியுமா ஓய்?” இது இன்னொரு குரல். “இப்போ மானம் மரியாதை போச்சே இதற்கு அந்த பொண்ண புடிச்சவனுக்கே கட்டிவெச்சிருந்தா அதாச்சும் மிஞ்சியிருக்குமே” “அதெல்லாம் சரி தான், அந்த பயல பத்தி உமக்கு ஒண்ணும் தெரியாது ஓய்! அவன் சுத்த பிராடு பய. அவன் இந்த வயசிலேயே குடியும் கூத்தியாளுமா சுத்தி திரியிறான் அவனுக்கெப்டி குடுக்க முடிம்னாரு ஒருத்தரு.” “இதெல்லாம் உண்மையா?” அப்பாவியா கேட்டார் இன்னொருத்தர். “அப்படி தான் எல்லாரும் சொல்றாங்க” “நடந்தது நடந்து முடிஞ்சாச்சு பொண்ண கொண்டு போனவன் பாதிலே விட்டுட்டு ஓடப்போறானோ? இல்ல வெச்சு காப்பாத்த போறானோ?” “எல்லாம் அந்த எம்பெருமானுக்குத் தான் வெளிச்சமென்று” சொல்லி முடித்தார் ஒருத்தர். அடுத்தவர் மீண்டும் எதையோ தொடங்குகிறார்… இந்த குரூப்பெல்லாம் வெறும் வாயை வெச்சே மாசக்கணக்கா மெல்லுற குரூப் இப்போது அல்வா மாதிரி சமாச்சாரம் கெடச்சிருக்கு சும்மா விட்டுடுமா என்ன? அவங்க விடிய விடியப் பேசி தீர்ப்பாங்க இவங்கள விட்டுட்டு மறுபடியும் வைகா வீட்டுக்குப் போனா அங்க அவ அப்பா போண் சுக்கு நூறா உடஞ்சு கெடக்குது. ஆறுதல் சொல்லுறேங்ற பேர்ல போண்ல பேசின சொந்தங்களும், உறவுகளும் ஆளாளுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், குற்றங்களையும் அள்ளி விட விரக்தியில போண எறிஞ்சு ஒடச்சிட்டு விட்டத்த வெறித்து பாத்துட்டு இருக்காரு அவரு. இதை அறிந்து வந்த பக்கத்து வீட்டு மாமியோ வைகாவின் அம்மாவிடம் “பாத்தியாடி! செல்லம் கொடுக்காத, செல்லம் கொடுக்காதன்னு சொன்னா கேட்டியா? இப்போ ஊரெல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்கி தந்திட்டு அவ போயிட்டா… இப்போ என்ன பண்ண போற? என்ன பண்ண போறிங்கன்னு நெருப்புல எரிஞ்சிட்டு நிக்குறவன் தலையில சம்மட்டியால அடிக்கிறது போல வலி மேல வலியேத்துறா அந்த மாமி. அடுத்து என்ன பண்ணண்ணு தெரியாம அந்தக் குடும்பம் நிலை குலஞ்சு போயிருந்தப்போ தான் குமாரவேலோட ஆத்ம நண்பன் பரமேசுவரன் வந்தான். அவர்கள் இருவராலும் தங்கள் முகங்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியவில்லை. வைகாவின் அப்பாவின் முகத்தில் தெரிந்த மொத்த வலியும் அப்படியே பரமேசுவரன் முகத்திலும் தெரிந்தது. அவராகவே அருகில் இருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார். வந்து சிறிது நேரம் யாரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே பேச்சை துவங்கினார் வேறு பக்கமாக சாதாரணமாகப் பேச்சை துவங்கியவர் இறுதியில் “ஏன்டா! நீயே இப்படி ஒடஞ்சு போய் உக்காந்து இருந்தா எப்டிடா? உன்ன பாத்து இல்ல அவங்களும் அவங்களை தேற்றணும். மகனும் பள்ளிக்கு போகாம இங்க நிற்கிறான்” என்றவர் அப்போது அவனைப் பார்த்து “உனக்கு என்னடா பிரச்சனை? நீ ஏன்டா பள்ளிக்கூடம் போகல?” என்று அவனிடம் கேட்டு விட்டு மீண்டும் அவரிடம் ”டேய், ஊர் உலகத்துல நடக்காததா நடந்து போச்சு விடுடா மனச தேத்திப்போம் அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றார். அதுவரை அமைதியாக இருந்தவர் “நான் இவ இப்படி பண்ணுவான்னு நெனைக்கலடா அவ மேல உயிரையே வெச்சிருந்தேன் இப்படி தூக்கி எறிஞ்சிட்டு போவான்னு… துவங்கியவரால் முழுதாக அவ்வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. சிறு பிள்ளை போல அவர் தோள் சாய்ந்து அழத் துவங்கினார். அப்போது அரவணைத்த அந்த நண்பனின் கரங்களில் தாயின் பாசமும், தந்தையின் தேற்றுதலும் தெரிந்தது… பகுதி 8 அழுது கொண்டே தோள் சாய்ந்த தன் நண்பனின் தோள்களை ஆதரவாய் தட்டிக்கொடுத்தவாறே “விடுடா விடுடா நாம என்ன நெனச்சாலும் எல்லாம் விதிப்படி தான் நடக்கும். நடந்தது நடந்து போச்சு காவல் நிலையம் போய் ஒரு புகார் குடுத்திட்டு வருமோம்டா” என்றார். தன்னைத் தேற்றிய நண்பனிடம் “பரவாயில்ல வேலைக்கு நேரமாச்சுல்ல நீ போ… நான் பாத்துக்கிறேன்” என்றார் குமாரவேல். “உன்னை இந்த நிலைமையில் விட்டுட்டா! நல்லா இருக்கேடா கத! என்னோட அப்பா இறந்த அன்னைக்குச் சொந்த பந்தங்கள் எல்லாம் தள்ளி நிற்க கைல பத்து பைசா இல்லாம நான் தவிச்சு நின்னப்போ உன்னோட மனைவி நகையை அடகு வெச்சு தானே காசோட வந்து கடைசி வரை என் கூட இருந்து அத்தனையும் பண்ண நானும் மனுசன் தான். பழச எல்லாம் மறந்து போற மனுசன் இல்ல. தன்னோட விருப்படி வாழுறேன்னு போனவ உன் மக மட்டுமில்ல என்னோட மகளும் தான் வாடா போகலாம் ஆக வேண்டியத பார்க்கலாம்” என்றார். அப்போது தன் நண்பனிடம் அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால் நல்லவர்களும் நன்றி மறவாத நண்பர்களும் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்று மட்டும் மனதில் எண்ணிக்கொண்டார். அதுவரை மூலையில் கண்ணீரோடு முடங்கிக் கிடந்த வைகாவின் அம்மா தண்ணீர் எடுத்து வந்து “இந்தா தண்ணி குடிங்க அண்ணா” என்று கொடுத்தார். அந்த ‘அண்ணா’ என்ற ஒன்றை வார்த்தைக்குள் கடலளவு அன்பும் மலையளவு நன்றியும் கலந்திருந்தது. சிறிது நேரத்தில் இருவருமாகக் காவல் நிலையம் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அடுத்த கட்ட சோதனை தொடங்கியது. “எங்க பொண்ண நேத்தைலேருந்து காணல ஐயா” “அவளுக்கு எதும் லவ் கிவ்” தயங்கியபடியே “உண்டு” “அந்தப் பையன் ஊர்ல இருக்கானா?” “இல்ல ஐயா, அவன் கூட போறதா எழுதி வெச்சிட்டு தான் போயிருக்கா” உடனே அந்த போலீஸ்காரர் “ஏட்டையா!” எனப் பக்கத்தில் இருந்தவரை அழைத்தார் அழைப்பைக் கேட்டு திரும்பியவர் சத்தமின்றி சிரித்தார். அக்காட்சியைக் கண்ட நேரம் கத்தி படாமலே அவர்கள் உடலிலிருந்து ரத்தம் வந்தது. உடன் வந்த நண்பருக்கு மனசாட்சி இல்லா அவர்கள் அச்செயல் கண்டதும் உடல் சூடாகிறது. அடுத்து கேள்வி “எத்தன மாசமா பழகுறாங்க?” “இப்போது கொஞ்ச நாளாத்தான் சார்” “கொஞ்ச நாளுக்குள்ளயே ஓடிப்போற அளவுக்கு ஆகிப்போச்சா உண்மைய சொல்லுங்க பொண்ணு… என இளுத்ததும் நண்பருக்குப் புரிந்தது அவர் அடுத்து என்ன கேட்க போகிறார் என்று. ச்சை! நீங்க எல்லாம் மனுசங்களா? பொண்ண காணோம்ன்னு மனம் செத்து ஒருத்தன் புகார் குடுக்க வந்தா இவ்வளவு கீழ்த்தனமா தான் நடந்துக்குவீங்களா? நாளை உங்க வீட்ல கூட இது போல நடக்காதென்று உத்தரவாதம் சொல்ல முடியுமா? காக்கி சட்டைய போட்டதும் மனசாட்சிய கீழ கழட்டி போட்டுடுவீங்களா? இப்படி பேசுற உங்களுக்கு காவல்துறை உங்கள் நண்பன்னு சொல்லிக்க வெக்கமாயில்லை! என்றபடி, நாங்க ஊர்ப் பெயர் தெரியாத அனாத பயலுகன்னு நெனச்சு தான் எங்க கிட்ட எகத்தாளமா பேசுகிறீர்களா?! யார் கிட்ட பேசுறீங்க? MP, MLA கிட்ட பேசுறீங்களா? இல்ல ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் கிட்ட பேசுறீங்களா? அவன் எங்க கூட படித்தவன் தான். இல்ல உங்க மேலதிகாரி Dsp ராஜகோபால் சார உங்க கிட்ட பேசச் சொல்லவா? எனக் கொதித்தெழுந்து சட்டைப்பையிலிருந்து கைப்பேசியை எடுக்கவே தான் அவர்களுக்குப் புத்தி வந்தது. மூளை விழித்துக்கொண்டது. “இல்ல, மன்னிச்சிடுங்க சார். விசாரணைக்காகத் தான் கேட்டோமே ஒழிய உங்கள கஷ்டபடுத்துற எண்ணம் எங்களுக்கு இல்ல என்று சமாளித்தபடி நீங்கப் புகார் குடுங்க சார் நாங்க தேடி கண்டுபிடிச்சுக்கிறோம். பொண்ணு போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்டார். “அவசரத்தில் எடுத்து வரல” “சரி பரவாயில்ல அடுத்து வரும்போ எடுத்து வந்தா போதும்” என்று கூறி அவர்களை அனுப்பி விட்டனர். இவர்கள் வெளியேற எத்தனித்த போது பரமேசுவரனை பார்த்து “சார் நாங்க பேசின எதையும் மனசில வெச்சுக்காதீங்க” என்றனர். “சரி, சரி வறவங்க கிட்டக் கொஞ்சம் கண்ணியமாகவும் கனிவாகவும் நடந்துக்கோங்க” என்று அறிவுரை வழங்கியபடி வெளியேறினர். வெளிய வந்ததும் “ஏன்டா! இவர்கள் எல்லாரையும் உனக்குத் தெரியுமா? என்று வைகாவின் அப்பா கேட்டார். “யாருக்குடா தெரியும்! அமைதியா இருந்தா இவனுங்க தலைக்கு மேல ஏறுவானுங்டா. அதான் சும்மா அடிச்சு விட்டேன்” “ஒருவேள பேச சொல்லியிருந்தா?” சிரித்தபடியே “அதெல்லாம் சமாளிச்சிருவேன்டா” என்றார். அவருடைய அச்சிரிப்பையும் சமயோசித புத்தியையும் நினைத்ததும் தன்னையறியாமலே சிரிப்பு வந்தது வைகாவின் அப்பாவிற்கு. அக்கொடுந்துயரிலும் சிரித்த முகமாய் இவர்கள் இருவரையும் பார்க்கையில் “மரணவலியிலும் கூடச் சிரிக்க வைக்க நண்பன் ஒருவனால் மாத்திரமே முடியும்” என்று எங்கோ நான் படித்த வாசகமே எனக்கு நினைவிற்கு வந்தது… பகுதி 9 பதிவு திருமணத்தை முடித்துவிட்டு ரெஜிஸ்தார் அலுவலகத்தை விட்டு வெளியே தம்பதியாய் வந்தனர் ராகவும் வைகாவும். வந்தவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டனர் அவர்கள் நண்பர்கள். மதிய உணவை ஒரு உணவகம் போய் சாதாரணமாக முடித்துக்கொண்டனர். அத்துடன் அவர்கள் அத்தனை பேரும் விடைபெற்றுச் செல்ல இவர்கள் மட்டும் எழில் மிகு கடற்கரை சிற்ப நகரம், கல்லில் கலை வண்ணம் கண்ட தமிழர் நகரம், தமிழகத்தின் புகழை உலகிற்குப் பரப்பி நிற்கும் நகரம், கற்சிலைகளின் பேரதிசயம், ஆறாம் நூற்றாண்டிலேயே ஸ்தாபிக்கப்பட்ட பல்லவர்களின் கலைகளின் தாயகம், வதாபி சென்று சாளுக்கியர்களை வென்ற மாமல்லரின் பெயரால் நிர்மாணிக்கப்பட்ட மகாபலிபுரம் நகரை நோக்கிப் புறப்பட்டனர். அருகில் அவனிருக்க அவளுக்குக் கவலையென்பது இல்லாமல் போனது. இவ்வுலகில் எதையும் சமாளிக்கும் பலம் இருப்பதாய் உணர்ந்தாள். எல்லையில்லா இன்பத்தையும் உணர்ந்தாள். முதன் முதலில் மகாபலிபுரம் நகருக்குச் செல்லப்போகிறாள். தான் திரும்ப திரும்பப் படித்திருந்த கல்கியின் “சிவகாமியின் சபதம்” நாவலின் ஊரைக் காணப்போகிறாள். ஆயனார் வடித்த கற்பதுமைகளை கண்டு மகிழப்போகிறாள். காதல் அழிந்தாலும் காலத்தால் அழியாமல் ஆங்காங்கே ஜீவ களைபொருந்திய கற்சிலைகளாய் நிற்கும் சிவகாமி தேவியைக் காணப்போகிறாள். எத்தனை நாள் அழுதிருப்பாள் கைகூடாமல் போன சிவகாமியின் காதலுக்காய். வெற்றி பெற்ற தன்னுடைய காதலுடன், எதிர்ப்புகளை மீறி கரம் பிடித்த தன் காதல் கணவனுடன் கற்சிலைகளின் காதல் ததும்பும் அந்நகருக்குள் காலடி எடுத்து வைக்க அடங்கா ஆர்வத்துடன் பயணித்துக்கொண்டிருந்தாள். ஒருவழியாக மகாபலிபுரம் வந்து சேர்ந்தார்கள். விகசித்த விழிகளுடன் கல்லில் கடைந்த சிற்பங்களை விழுங்குபவளைப் போல பஸ்சில் இருந்து கொண்டே தன்னை மறந்து ரசித்துக்கொண்டே சென்றாள். பஸ்சிலிருந்து இறங்கியவர்கள் நேராக தங்கும் விடுதியொன்றில் அறையொன்றைப் பதிவு செய்யப் போய் நின்றனர். தங்கும் விடுதியைத் தேடி சென்றவர்களைச் செயற்கையான சிரிப்புடன் வரவேற்றாள் வரவேற்பு பகுதியில் அமர்ந்திருந்த அழகிய இளம் பெண். “எப்படிப் பட்ட அறை வேண்டும்? குளிரூட்டப்பட்ட அறை, சதாரண அறை, இரண்டு கட்டில் உள்ள அறை, ஒற்றைக் கட்டில் உள்ள அறை…” எனத் தனது பணியைத் தனது மெல்லிய கனிவான குரலில் சொல்லிக்கொண்டே சென்றாள். வந்தவர்களை விட்டு விடக்கூடாது என்பதும் வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகமின்றி வேலை செய்ய வேண்டும் எனும் எண்ணமும் அவர்களிடம் அவள் பேசுவதிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் தெரிந்தது. அவள் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க ராகவோ வைகாவின் காதருகில் சென்று மெல்லிய குரலில் சொன்னான் “ஒரு கட்டில் உள்ள அறையே போதும் இல்ல.” " ச்சீ!" என்றபடி வெட்கத்தில் சிணுங்கி சிரித்தாள் அவள். இப்போது மறுபடியும் அவள் காதருகில் சென்று “அந்தப் பெண் அழகா இருக்கிறா இல்ல” அதைச் சொல்லிய அடுத்த நொடி இவன் அலறினான். அதைக்கண்டு மெலிதாய் புன்னகைத்த அந்த வரவேற்பு பெண் இப்போது மெல்லிய குரலில் கேட்டாள் “என்ன சார் ஹீல்ஸ் ரொம்ப பெருசா?” என்று வலியில் அவள் கேட்டது இவனுக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது வைகா மெலிதாய் தன் வாய் மூடிச் சிரித்தாள். அவளிடமிருந்து சாவியை வாங்கிச் சென்று அறையைத் திறந்தனர். இரண்டு கட்டில் உள்ள அறையையே தேர்ந்தெடுத்தனர். அறைக்குள் போனதும் முதல் வேலையாக இரண்டு கட்டிலையும் ஒன்றாக்கினான் ராகவ். அவள் போய் சாளரம் ஒன்றைத் திறந்தாள் சிலு சிலுவென கடற்காற்று வந்து சீட்டியடித்தது. தூரத்தில் நீலத்தை போர்த்தியபடி முடிவிலா கடல் தெரிந்தது. அதில் சிதறிய நட்சத்திரங்கள் போல் சில கப்பல்களும் சிதறிய சிறு முத்துக்கள் போல் சில படகுகளும் தெரிந்தது. கடலில் செல்பவர்களுக்கு கரையேறப் பாதை காட்டக் கலங்கரை விளக்கம் கம்பீரமாய் நிற்பது தெரிந்தது. கடற்கரை மணலில் சில சிறுவர்கள் கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்டவை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சிறுவர்கள் உண்டு பண்ணும் பல விதமான சத்தம் அவளுக்கு எவ்வித மனமடிவையும் கொடுக்கவில்லை மாறாக மனதிற்கு ஒருவித மகிழ்வையே தந்தது. ஆங்காங்கே சிலைகளையும் காண முடிந்தது. அருகில் எங்கோ சிற்பம் செய்யும் கூடம் இருக்கிறது என்பதைக் காற்றில் கலந்து வந்த கல்லுளியும் சுத்தியலும் உண்டு பண்ணும் சத்தம் அவளுக்கு சொல்லிற்று. சாளரத்தை ஒட்டியபடியே கீழிருந்து மேலேறி வந்த மல்லி மலரின் கொடியொன்றையும் கண்டாள். காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது அக்கொடி. இத்தகையதொரு கொடிக்குத் தான் தன் தேரை கொடுத்திருப்பாரோ பாரிவள்ளல் என்றெண்ணிச் சிரித்தாள். அதில் ஒற்றை மல்லி அரும்பியிருந்தது அது இன்னும் மொட்டாகவே தான் இருந்தது. அதை முதலில் தொட்டுப்பார்த்தாள், அதன் பின் அருகில் சென்று நுகர்ந்தும் பார்த்தாள் இதுகாறும் இல்லா பெருமணமாக அது அப்போது மணத்தது அவளுக்கு. அறைக்குள் தன் பார்வையைத் திருப்பினாள் சொல்வதற்கு பெரிதாய் எதுவும் இல்லை. ஒரு மின்விசிறி, ஒரு மேஜை, இரு நாற்காலி, அவன் இணைத்துப் போட்ட கட்டில், இரு தலையணை, அதைப் போர்த்தியபடி இருக்கும் பலவர்ண துணி, சுவரில் சில இயற்கை எழில் கொஞ்சும் படங்கள் அவ்வளவு தான். அச்சுவர் சித்திரத்தில் புலியிடமிருந்து தப்பிச் செல்லும் புள்ளி மானொன்றின் படம் இருந்தது அதைப் பார்த்தாள். பார்த்ததும் ‘அப்பாடா’ என நிம்மதி பெருமூச்சுடன் திரும்புகையில், இன்னொரு படத்தில் சிறுத்தையின் பிடியில் சிக்கிய வரிமானொன்றை கண்டு பதறினாள். சரியாக அந்நேரம் ராகவ் அவள் பின்னாலிருந்து வந்து அவள் இடையோடு இழுத்தணைத்தான். அடுத்த நொடி திறந்திருந்த சாளரம் மூடிக்கொண்டது. அறைக்குள் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்தது. தலையணை இடம் பெயர்ந்தது. மெத்தை சல சலத்தது. கட்டில் அசைந்தது… பகுதி 10 எதிர்த்து நின்ற மல்லர்களை எல்லாம் வென்று மாமல்லன் எனும் பட்டத்துக்குரியோன், வாதாபி சென்று புலிகேசியை ஒழித்து வதாபி மாநகரையே தீக்கிரையாக கொடுத்தோன், பரந்து விரிந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் வேந்தன், சிம்ங்க கொடியை தன் கொடியாக கொண்டு நீதி நெறி வழுவாமல் நல்லாட்சி புரியும் மாமன்னர், மகாபலிபுரத்தை சிற்ப நகரமாக நிர்மானித்து கொண்டிருக்கும் கலையை போற்றி வளர்க்கும் எங்கள் நரசிம்மவர்ம சக்ரவர்த்தி, நகர்வலம் வருகிறார் நகர்வலம் வருகிறார் பராக்… பராக்… என கூவிக்கொண்டே முரசை தாம் தூம் என்று அடித்து விட்டு செல்கிறான் கட்டியக்காரன் ஒருவன். நகர் பரபரப்பாகிறது மக்களின் பார்வை ராஜபாட்டையிலேயே பதிகிறது. சற்று நேரத்திற்குள் வானளாவ ஜய கோஷங்கள் முழங்க பட்டத்து யானை மீது அம்பாரி அமைத்து அதில் அமர்ந்து நகர்வலம் வருகிறார் மாமன்னர் நரசிம்மவர்மர். மக்கள் கூட்டம் அலைமோதுகிறது அவர்களை கட்டுப்படுத்த திணறுகிறார்கள் சேவகர்கள். மன்னர் அருகில் வந்து கையசைத்ததும் ஆச்சர்யம்! மக்கள் பெருவெள்ளத்திற்குள் அத்தனை அமைதி! ஒரு குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு பெருஅமைதி. அவ்வமைதியின் நடுவே மக்களை நோக்கி கேட்டார் நரசிம்மவர்மர் “நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக தானே இருக்கிறீர்கள்” “வானம் மும்மாரி பொழிகிறது நீதி நெறி வழுவா உங்கள் ஆட்சியில் ஒருகுறையின்றி சிறப்பாக வாழ்கிறோம் வேந்தே” என்று ஒற்றை கோஷமாக பதில் வந்தது மக்களிடமிருந்து. “உங்களுக்கு எதேனும் புகார்கள் இருந்தால் தாராளமாக இப்போது சொல்லலாம்” என்றார் மன்னர். மன்னர் நகர்வலம் வரும்போது வழக்கமாக கேட்கும் கேள்வியே இது எப்போதுமே இக்கேள்வி பதிலின்றி அர்த்தமற்றதாகவே போவது வழக்கம். ஆனால் இம்முறை கண்களில் கண்ணீர் வழிந்தோட இளம் பெண்ணொருத்தி புகார் ஒன்றுடன் வந்து நின்றாள். நரசிம்மவர்மர் முன் வந்து நின்றது வேறு யாருமல்ல நம்முடைய கதையின் கதாநாயகி வைகாவே தான். அவளை பார்த்து அரசர் “என்னுடைய ஆட்சியில் ஒருவரின் கண்களில் கண்ணீரா! அதுவும் இளம் பெண்ணொருத்தி கண்களில் கண்ணீரா? பெண்ணே எதற்கு அழுகிறாய்? சொல், உன் கண்ணீருக்கு என்ன காரணம்? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்!” கருணையுடன் அரசரின் கட்டளை பறந்தது. வதாபி வென்று உலகெல்லாம் பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் பரப்பிய வேந்தே, எனது அரசே, காதல் செய்யும் இவ்வேழையின் காதலை பிரிக்க பார்க்கிறார்கள். மட்டேன், மறக்கவே மாட்டேன் என்றால் மிரட்டுகிறார்கள். காதல் செய்வது அத்தனை பெரும் குற்றமா? மன்னவா!." “என்னது! எனது நாட்டிலே காதலுக்கு எதிரிகளா? யாரங்கே! இப்பெண்ணின் காதலுக்கு எதிர் நிற்பவர்கள் யாரென்று பாருங்கள். யாராக இருந்தாலும் சரி அவர்களை தேர்கால்களில் கட்டி தெருத்தெருவாய் இழுத்து சென்று சிங்கத்தின் கூண்டுக்குள் போட்டுவிடுங்கள்.” என்றதும், அலற துவங்கினாள் வைகா “அரசே! அது வேண்டாம்! அது மட்டும் வேண்டவே வேண்டாம்! அவர்கள் எனை பெற்று வளர்த்த எனது பெற்றோர் அவர்களை என் காதலை ஏற்றுக்கொள்ள வைத்தால் மட்டும் போதும் என்று கதறியது நரசிம்மவர்மருக்கு கேட்வில்லை மாறாக பக்கத்தில் படுத்து கிடந்த ராகவிற்கே கேட்டது. அதை கேட்டு விழித்தான் ராகவ். விடிந்தது பொழுது. அத்துடன் அவள் கனவும் கலைந்தது. அடுத்த நாள் காலை இருவரும் கரம் கோர்த்தபடி கற்சிற்பங்களின் எழிலை தரிசிக்க கிளம்பினர். காலை கதிரவன் புத்தொளி வீசிக்கொண்டிருந்தான் அவ்வொளியில் சிற்பங்கள் எல்லாம் ஜீவகளை பொருந்தி காட்சியாகின்றன. செய்து வைத்திருக்கும் சிறு யானைகளை காண்கிறார்கள். அதில் ஏறி அமர்ந்து கொள்கிறான் ராகவ். தனி நாடு இல்லாத, கையில் செங்கோல் இல்லாத, இடையில் உறைவாள் இல்லாத ராஜகுமாரனாக தெரிகிறான் ராகவ். நாட்டியமாடும் தோரணையில் நிற்கும் பெண் சிற்பத்தின் அருகே செல்கிறாள் வைகா. அவள் அதைப்பார்த்து அப்படியே அபினயம் பிடித்து நிற்கிறாள். உயிரற்ற ஒரு சிற்பத்தையும் உளியின்றி சுத்தி இன்றி பிரம்மன் செவ்வனே செதுக்கி அனுப்பிய தனது சிங்கார சிற்பத்தையும் ஒரே நேரத்தில் கண்டு ரசித்த ராகவ் அவ்வழகில் மயங்கி கற்சிவைபோல் சமைந்து நிற்கிறான். அச்சிலையை கண்டதும் மனதில் யோசித்து கொள்கிறாள். இது தான் கல்கியின் “சிவகாமியின் சபதத்தில்” வரும் மாமல்லரின் காதலி சிவகாமி தேவியாக இருக்குமோ? இச்சிலைகள் தான் கல்கி சொல்லும் ஆயனார் வடித்த சிற்பமாக இருக்குமோ? ஒரு வேளை ஆயனாரும் சிவகாமியும் கல்கியின் கற்பனை கதாபாத்திரங்களாக இருந்தால்?! இருந்தால் என்ன?! அப்படி கற்பனை கதாபாத்திரங்களாக இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே கல்கியின் அக்காப்பியம் அவர்களை ஊன், உடல், உயிர், உணர்ச்சி உள்ள மனிதர்களாக தானே நம்முன் காட்டியது. அவர்கள் மூலமாக தானே கல்கியின் பேனா மூலமாக தானே அக்காலகட்டத்ததை நாம் கண்டு களித்தோம். கற்பனை என்றாலும் எதுவென்றாலும் இச்சிலைகளை உருவாக்கிய மொத்த பேர்களின் ஒற்றை உருவமாக நாம் ஆயனாரை கொள்வோம். இங்கிருக்குக்கும் ஜீவகளை பொருந்திய சிற்பங்களினூடாக நாம் அக்காலத்தில் வாழ்ந்த பெண்களின் மொத்த உருவாக சிவகாமி தேவியையோ காண்போம் என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ரசித்து அவன் கரம் பிடித்து நகர்ந்தாள். அன்றைய பொழுது முழுவதும் அங்குமிங்குமாக தன் காதல் கணவன் கரம் பிடித்து அவன் தோள் சாய்ந்து கதைகள் பேசி வாழ்வின் வசந்த நொடிகளை இன்பத்தின் எல்லையையே அன்றைய தினம் அவனுடன் அனுபவித்தாள். நேரம் அந்தியாகிக்கொண்டிருந்தது. அறைக்கு செல்ல இருவருக்கும் மனமில்லை. இருவரும் சூரியன் அஸ்தமனமாகும் மனோகர காட்சியை கடலின் அலையின் இசையுடன் கடலின் கரையில் படுத்து கிடந்து ரசித்தனர். அவ்வப்போது கடல் அலைகள் வந்து அவர்கள் கால்களை நனைத்து சென்றது அது ஜிவ்வென்று இருந்தது அவர்களுக்கு. இருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை சிறிது இடைவெளி விட்டு பணற்பரப்பில் படுத்து கிடந்தனர். அவர்கள் கரங்கள் கோர்க்கப்பட்டிருந்தது. சற்று நேரத்திற்குள் பகலவன் மறைந்து அரைவட்ட நிலவு வானில் ஏறியது. அதன் வெள்ளொளியை இயற்கையின் கொள்ளை அழகை எத்தனை நேரம் அப்படியே ரசித்து கொண்டு கிடந்தார்களோ தெரியாது. விசில் ஊதும் சத்தம் அவர்கள் காதுகளை வந்து சேர்ந்தது அப்போதே ரசனை உலகிலிருந்து நிஜவுலகிற்கு வந்தனர் அக்காதலர்கள். உடன் டார்ச் லைட் வெளிச்சமும் தங்கள் முகங்களை வந்து தாக்கியது. வந்தது யார்? என்று உணர்ந்து சுதாரித்து கொள்வதற்குள் இரவு நேர ரவுண்ஸ் வந்த போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். அவர்கள் இதய துடிப்பு அதிரிக்க துவங்கியது. இனி என்ன நடக்க போகிறதோ எனும் பயம் அவர்களை ஆட்கொண்டது. வைகாவின் கை கால்களே நடு நடுங்க துவங்கியது… பகுதி 11 எதிர்பாராத நேரத்தில் காவலர்களை பார்த்ததும் பயந்து போய் நிற்கிறார்கள் ராகவும் வைகாவும் வைகா முழுவதுமாக நிலைகுலைந்தே போய்விட்டாள். ராகவ் சமாளித்துவிடலாம் எனும் தைரியத்தோடே தான் நிற்கிறான். காவலர்கள் அருகில் நெருங்கியதும் அவர்களிடமிருந்து அதிகாரதோரணையோடு வருகிறது கேள்வி “யார் நீங்கள்? உங்களுடைய வீடு எங்கே? இங்கே எங்குத் தங்கியிருக்கிறீர்கள்? இந்த நடுராத்திரியில் இந்தக் கும்மிருட்டில் இங்கென்ன வேலை உங்களுக்கு? உங்கள் உறவு முறை என்ன? என அடுக்கடுக்காய் சாரைசாரையாய் கேள்விக்கணைகளை தொடுக்கப் பயத்தில் நடுங்கியே போய்விட்டாள் வைகா. சுதாரித்துக்கொண்ட ராகவ் “வணக்கம் சார், நான் ராகவ் இது என்னோட மனைவி வைகா. நாங்கள் புதிதாக திருமணம் முடித்தவர்கள் இங்கு ஹனி மூன் கொண்டாட வந்திருக்கிறோம்.” “அதெல்லாம் இருக்கட்டும் தம்பி. இங்க கல்யாணம் பண்ணாம கூடக் கனி மூன் கொண்டாட வரும் ஜோடிகள் நிறைய இருக்கு. இவ உன்னோட பொண்டாடீங்றதுக்கு என்ன ஆதாரம்?” “இதோ அவள் கழுத்தில் நான் கட்டின தாலி தான்” “இது இங்க வரும் எல்லார் கழுத்திலேயும் தான் இருக்கு” “இதுமட்டுமில்ல கல்யாணத்தப்போ எடுத்த போட்டோ இருக்கு சார்” எனக் காலையில் எடுத்த போட்டோ சிலவற்றைக் காட்டினான். “ஏன் வீட்டை எதிர்த்துக் காதல் கல்யாணமா?” “இல்ல சார்! கல்யாணம் சிம்பிளா போதுமென்று இப்படி பண்ணிக்கொண்டோம். எனக்கு அப்பா அம்மா இல்ல போட்டோவுல இருக்கிறது இவளோட அம்மா அப்பா தான்.” செட்டப் சித்தியும் சித்தப்பாவும் இங்கு அம்மா அப்பா ஆகிப்போயினர். இப்போது தான் வைகாவிற்கு நிம்மதி பிறந்தது இனி தங்களை எதுவும் செய்ய மாட்டார்கள், செய்ய முடியாது என்று திடமாக நம்பினாள். அவள் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணமாக உன்னோட கைப்பேசியை குடுமா உங்க வீட்டில் பேசி கன்பார்ம் பண்ணிக்கிறோம். என்று சொல்லி தங்கள் புத்தியை காட்டிவிட்டனர் காவலர்கள். மீண்டும் பயத்தில் உள்ளமெலாம் நடுங்க ராகவை பார்த்துக்கொண்டே கைப்பேசியை கொடுத்தாள். அவன் தெளிவாகவே நின்றான் அவனைப் பார்த்து சற்று ஆறுதலடைந்தாள் வைகா. கைப்பேசியை வாங்கிய காவலர் அதில் அப்பா என்றிருக்கும் எண்ணிற்கு தன்னுடைய கைப்பேசியிலிருந்து அழைக்கிறார் முழுநீளமாக அழைப்பு மணி ஒலிக்கிறது. எதிர்முனையில் கைப்பேசியை எடுக்கிறார்கள் எடுத்தவரிடம் இவர்கள் காவலர்கள் அல்லவா திமிராகவே, “ஹலோ, நீங்க யாரு?” “ராத்திரி 11 மணிக்கு போண போட்டு நான் யாரா! நீ யாருயா? உனக்கு என்ன வேணும்?” “கொஞ்சம் மரியாதையா பேசுங்க” “ராத்திரி 11 மணிக்கு போண போட்டு யாருண்ணே தெரியாம தொந்தரவு பண்றவனுக்கு என்ன மரியாத வேண்டி கெடக்கு” “தொந்தரவு எதும் இல்ல சார். சந்தேகம் ஒண்ண சரிபண்ணணும் உம் பெயர் என்னம்மா சொன்ன வைகா சார் ஆமா வைகான்னு யாரயாச்சும் தெரியுமா உங்களுக்கு?” படபடப்புடனே மரியாதையாக “சோறி… சோறி சார்… அது என்னோட பொண்ணு தான் சார். அவளுக்கு என்ன சார்?” “பயப்படாதீங்க ஒண்ணுமில்ல. அவள மகாபலிபுரத்துல ஒரு பையன் கூடப் பார்த்தேன்…” “இப்போது தான் கல்யாணம் ஆகுது. கொஞ்ச நாள் புள்ளைங்க தனியா இருக்கட்டுமேன்னு நான் தான் அனுப்பி வெச்சேன். எதும் பிரச்சனையா சார்?” “இல்ல சும்மா ஒரு தகவலுக்காக தான். நீங்க தூங்குங்க என்றபடி தொடர்பை துண்டித்து விட்டு புள்ளையை கூட்டீட்டு போப்பா. ராத்திரி நிறைய நேரம் வெளிய சுத்தாதீங்க. இதொன்னும் அவ்ளவு நல்ல ஏரியா இல்ல” என்று அறிவுரை கூறியபடி அவர்கள் நடக்கத் துவங்கினர். அவர்கள் போனதும் வைகாவிற்கு உண்மையை அறியாமல் தலையே வெடித்துவிடும் போலிருந்தது “என்னாச்சு? யார் கிட்ட பேசினாங்க? பேசினவங்க என்ன பேசினாங்க?” என அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்க அவள் ஆர்வத்தை அறிந்து கொண்ட ராகவோ “ஏன் பதறுற நீ? பொறு பொறு அறையில போய் சொல்றேன்.” பொறுமை இழந்த வைகாவோ “இப்போ சொல்ல போறியா இல்லியாடா” என மிரட்ட உடனே ரகசியத்தை உடைக்கவேண்டுமானால் “நீ லஞ்சம் தர வேண்டி வருமே” என்றான். “லஞ்சமா! என்ன வேண்டுமாம் துரைக்கு?” “வேறென்ன இனிப்பா ஒற்றை முத்தம் தான்” “ஒன்றென்ன இந்தா பத்து வெச்சுக்கோ” என்றபடி அவனைக் கட்டிக்கொண்டு முகம் முழுவதும் முத்தத்தைப் பதித்தாள். அதைக் காண வெட்டகப்பட்டது போல சில விண்மீன்கள் பிளிங் பிளிங் என மின்னி மின்னி மறைந்தன. முத்தத்தை வாங்கியவன் தெம்பாக தெளிவாகச் சொன்னான் “அவசியமற்ற பிரச்சனை எதுவும் வந்தா சமாளிக்க உன் மொபைல்ல என்னோட நண்பன் நம்பர அப்பாங்ற பெயர்ல சேவ் பண்ணி வெச்சிருந்தேன் பேபி! எப்படி நம்ம ஐடியா? என்ற படி தன் கையை மடக்கி மசில்ஸ்சை பெருக்கி நிற்க,”டேய் கள்ளா! நீ பெரிய ஆள் தான் டா" என்றபடி அவன் கையை செல்லமாக அடிக்கிறாள். இப்போது அவன் கையை கடிக்கப் போக அவன் ஓடத் துவங்குகிறான் பின்னாலிருந்து இவளும் துரத்தி ஓடுகிறாள். இருவரும் நிலவொளியில் மணற்பரப்பில் குழந்தைகள் போல குதுகலமாய் ஓடுகிறார்கள். ஓடத் துவங்கி சில சிமிடங்களுக்குள் பின்னாலிருந்து சிலர் இவர்களைத் துரத்தி வருகிறார்கள். யார்? எதற்கு? என்றெல்லாம் தெரியாது. கையில் கத்தி, அருவா, உருட்டுக்கட்டை போன்ற கொலைகார ஆயுதங்கள் இருக்கின்றன. பிடிங்கடா! கொல்லுங்கடா! என்று கத்தியபடி ஆக்ரோஷமாக துரத்துகின்றனர். காரணமேயின்றி தங்களைத் துரத்துபவர்களை கண்டதும் வேர்க்க விறு விறுக்க தங்கள் கரங்களை கோர்த்தபடி இன்னும் வேகமாக ஓடுகிறார்கள். வைகாவால் அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வைகா வேகம்… வேகம்… என்றபடி அவன் அவளை அவசரப்படுத்தி இழுத்துக்கொண்டு ஓடுகிறான். நமை துரத்துவது யாராக இருக்கும்? ஊரில் உள்ள நம்முடைய எதிரிகள் யாராவதாகத் தான் இருக்குமென்று ராகவ் நினைத்துக் கொண்டே ஓடுகிறான். அப்பா அன்றைக்கே சொன்னார் அவனைக் கட்டினாய் என்றால் இருவரையும் கொன்று போடப்போகிறேன் பாருங்கள் என்று. ஒருவேளை இவர்கள் அவர் அனுப்பிய ஆட்களாகத் தான் இருக்குமென்று வைகா நினைக்கிறாள். இப்படிப்பட்ட சிந்தனைகளினூடே ராகவும் வைகாவும் எத்தனை வேகமாக ஓடியும் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. துரத்துபவர்கள் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தனர்… பகுதி 12 யாருக்கு பயந்து ராகவும் வைகாவும் இப்படி வேகமாக வேர்க்க விறு விறுக்க ஓடிக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் இவர்களை தாண்டி ஓடுகிறார்கள். அவர்கள் இவர்களை நெருங்கிவர இனி அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றுணர்ந்து பயத்தில் கரம் கோர்த்தபடியே அப்படியே இருவரும் உட்கார்ந்து கொள்கிறார்கள். ஆனால் துரத்தி வந்தவர்களோ அதே வேகத்தில் முன்னால் ஓடுபவனை துரத்திப்பிடிக்கும் வேட்கையில் இன்னும் வேகமாக ஓடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் ராகவ் மற்றும் வைகாவின் கண்களை விட்டு மறையும் வரை அவர்களையே வெறித்து பார்த்துக்கொண்டு நின்று விட்டு தாங்கள் இருவரும் ஏமாந்ததை எண்ணி சிரிக்கிறார்கள். சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு அவர்களுக்கு சிரித்தே கண்ணில் நீர் வந்து விட்டது. வைகாவோ வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்கிறாள். சற்று நேரத்தில் மணலில் விழுந்து புரண்டு புரண்டு சிரிக்கிறார்கள் இருவரும். அன்றைக்கு அறைக்கு சென்றனர். அடுத்த சில தினங்கள் கடற்கரை நகரை காதலுடன் இன்பமாக சுற்றி வந்தனர். நுரை பொங்க ஓயாமல் அடிக்கும் கடல் அலை போல அவர்கள் வாழ்வில் இன்பமும் குறைவின்றி நிறைவாய் தொடர்ந்து அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே தான் இருந்தது. அவர்கள் தங்கியிருந்த விடுதியின் அதே தளத்தின் மூலையில் ஒதுக்குபுறமாக இருக்கும் அறையை வைகா வந்ததிலிருந்தே கவனித்துக்கொண்டே தான் இருக்கிறாள். புதிது புதிதாக ஆண்கள் அவ்வறைக்கு செல்வதும் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வருவதையும் அவ்வப்போது பார்ப்பாள். உற்று கவனித்து கேட்டால் சிலசமயம் சன்னமான குரலில் உள்ளே பெண்களின் சத்தமும் கேட்கும். சந்தேகம் வந்ததிலிருந்தே அவ்வறையின் மர்மத்தை பற்றி ராகவிடம் கேட்பாள் அவனும் இப்போ சொல்கிறேன் அப்றம் சொல்கிறேன் என்று இளுத்தடித்துக்கொண்டே அவளை சமாளித்து வந்தான். இன்றைக்கு இதுவரை பார்த்திராத ஒருநபர் அவ்வறையிலிருந்து வெளியேறி செல்கிறான். அவனுக்கு டாட்டா காட்டுவது போல் வெளியே தெரிகிறது ஒரு பெண்ணின் கரம். அதை வைகா கண்டாள். அக்கரத்திற்குரிய பெண்ணோ “அடிக்கடி இந்த பக்கம் வாங்க” என்று சொல்வது தெளிவாக கேட்கிறது அவளுக்கு. அவனோ காண்பவர்கள் அருவருக்க தக்க வகையில் குழைந்து சிரித்துவிட்டு சரியென்று சொல்லி கிளம்புகிறான். எதேச்சையாக கண்ட இக்காட்சியினூடே வைகா ராகவை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். இம்முறை அவ்வறையின் மர்மத்தை பற்றி அறியாமல் இவனை விடுவதாக இல்லை. வேறுவழியின்றி ராகவும் அவள் காதில் எதையோ சொன்னான். அதை கேட்டவள் வாய்பிளந்து முகத்தை கோட்டி “அச்சச்சோ கருமம் கருமம் என்றபடி ஏன்டா! நாம வேற விடுதிக்கு போய்டலாம் வாடா!” என்று அவனை அழைக்கிறாள். அவனோ ”இங்கு எல்லா இடத்திலும் இப்படி தான்! இதெல்லாம் இங்கு சகஜம்! நாம தான் கண்டுகிடாம போகணும்” என்றபடி அவளை அழைத்துச் சென்றான். அவளுக்குத் தான் கண்டதை நம்பவோ, அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ளவோ, ஜீரணித்துக்கொள்ளவோ முடியவில்லை. ஒழுக்கம் கெட்ட வாழ்வை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சில தினங்கள் தாண்டியது கையில் கொண்டு சென்ற காசும் கரைய துவங்கியது. எப்படியும் ஒரு நாள் ஊருக்குச் சென்று தான் ஆக வேண்டும். ஆகவே ஊருக்குக் கிளம்புவோம் என்று முடிவெடுத்தனர். போனதும் நேராக எங்கு செல்வது என்று யோசித்தான் ராகவ். காவல் நிலையத்தில் வைகாவை காணோம் என்று நிச்சயம் புகார் அளித்திருப்பார்கள். நான் அவளைக் கடத்தி செல்லவில்லை கல்யாணம் பண்ணத்தான் அழைத்துச் சென்றேன் என்று சொல்லி கொடுத்த புகாரையும் ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும். ஆகவே நேராக காவல் நிலையம் செல்வது ஒன்றே வழியும் பாதுகாப்பும் என்று தீர்மானித்தான். நண்பர்களிடம் கேட்டான் அவர்களும் அதையே வழிமொழிந்தனர். காதலுடன் சுற்றி திரிந்த அச்சிற்ப நகரை விட்டுக் கிளம்ப அவர்களுக்கு மனமே இல்லை. கடலை கண்டு திரும்பும் சிறுகுழந்தையொன்று கைநிறைய சிப்பியை சேகரித்து கிளம்புவது போல அவர்கள் மனமெல்லாம் அங்கிருந்து கிடைத்த மகிழ்ச்சியை சுமந்து கொண்டு கிளம்பியது. சில நண்பர்கள் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். ஊரில் சில நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தனர் அவர்கள் காலையில் காவல்நிலையம் வருவதாய் வாக்கு கொடுத்திருந்தனர். வாகனம் கிளம்பியது. அது சாலையில் செல்கிறதோ இல்லை நடுகாட்டில் பயணிக்கிறதோ என்று அறிந்து கொள்வது கடினமாக இருந்தது. அத்தனை தரத்தில் இருந்தது தமிழ்நாடு சாலை. சீரான வேகத்தில் கதகளி நிகழ்த்தியபடி வாகனம் போய்க்கொண்டிருக்க நன்றாக தூங்கி கொண்டிருந்தான் ராகவ். அவனை திடீரென தட்டி எழுப்பிய வைகா தன்னுடைய கனவுகள் ஒவ்வொன்றாக அவனிடம் சொல்ல துவங்கினாள். ”நம்ம காதல எதுத்த எல்லார் முன்னாலேயும் நல்லா வாழ்ந்து காட்டணும் ராகவ். காச காரணம் காட்டி தானே நம்ம காதலை எதுத்தாங்க நாமளும் நெறைய சம்பாதிச்சு அவங்க எல்லாம் பொறாமை படுற அளவு வாழணும் சரியாடா. காதலித்து கல்யாணம் பண்ணவங்க எப்டி வாழுறாங்க பாருண்ணு! ஊரே சொல்ற அளவுக்கு முன்மாதிரியா வாழணும் சரியாடா” என்றாள். சிரித்தபடி மௌனமாக தலையசைத்தான் அவன். ”அப்றம் நான் படிப்ப தொடர போறேன் ராகவ். கலேஜ் முடிச்சு கலெக்டருக்கு படிக்க போறேன் அது தான் என்னோட லட்சியம்” என்றாள். ”சரி” என்றபடி தோளோடு சேர்த்து அவளை அணைத்துக்கொண்டான் ராகவ். அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் தொலைக்காட்சி திரையில் “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குதுங்ற சூரிய வம்சம்” படத்தோட பாடல் ஓடி கொண்டிருந்தது. அடுத்த நாள் நடக்க போகும் கலவரங்களை காணும் ஆவலில் மெல்ல மெல்ல சூரியன் வானில் வந்துதித்துக் கொண்டிருந்தான்… பகுதி 13 காவல் நிலையம் செல்ல தீர்மானித்ததும் அங்கு வைத்து வைகாவின் பெற்றோர் மற்றும் அவள் சொந்தங்களால் தனக்கு பிரச்சனைகள் வரக்கூடும் என்று எதிர்பார்த்தான் ராகவ். ஆனால் வைகா தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பது தெரியும் அவனுக்கு. வைகா தன் பக்கம் நிற்கும் வரை வேறெந்த பிரச்சனையாலும் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்று பரிபூரணமாக நம்பினான் அவன். அங்கு நடக்கப் போகும் சம்பவங்களை ஒருவாறு யூகித்திருந்தாள் வைகா. என்ன ஆனாலும் சரி, ராகவ்விற்கு ஒன்றென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வது யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பது எனும் முடிவோடே தான் அவளும் இருந்தாள். ஆனால் வைகாவின் பெற்றோர் மனநிலையோ உலையில் போட்ட அரிசி போல கொதித்துக் கொண்டிருந்தது. பொத்திப் பொத்தி வளர்த்தோம். உயிரையே அவள் மீது வைத்திருந்தோம். அவளைக் குறித்து என்னவெல்லாம் கனவுகள் கண்டிருந்தோம். அத்தனையும் நாசமாக்கி வெறும் மூன்று மாதத்தில் அவள் மனதைக் கெடுத்து நம்மை எல்லாம் தூக்கி எறிந்து செல்லுமளவு அவளை மாற்றியிருக்கிறான் என்று ராகவ் மீது கடுங்கோபத்தில் இருந்தனர் அவர்கள். அதுமட்டுமா, ஊரில் எத்தனை மரியாதையோடு வாழ்ந்தோம். அத்தனையும் காற்றில் போனது. கொஞ்ச நஞ்சம் இருந்த மானமும் இதோ இன்றைக்குக் காவல் நிலையம் வந்து நிற்கும் நிலையில் அதுவும் போயிற்று. இதற்கெல்லாம் காரணம் யார்? அவன் தான் அவன் ஒருத்தன் தான். ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த சிறு பெண்ணின் மனதைக் காதல் கருமம் என்று கெடுத்த பாவி பயல் என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே வந்திறங்கினர் காரிலிருந்து ஜோடியாக ராகவும் வைகாவும். கழுத்தில் தாலி, நெற்றியில் குங்கும பொட்டுமாய் அவன் அருகில் வைத்து அவளைக் கண்டதும் அவள் அப்பாவின் கோபம் எல்லை மீறிப்போனது. அவர் அருகில் நின்ற அத்தனை பேரையும் மின்னலைப் போல கடந்து சென்று ராகவை சட்டையோடு பிடித்துக்கொண்டார். பிடித்தவர் “இப்படி என் மக மனதைக் கெடுத்து அவளை அழைத்துச் சென்று அவள் வாழ்க்கையை பழாக்கிடியே பாவி” எனக் கேட்டுக்கொண்டிருக்க எங்கிருந்து தான் வைகாவிற்கு அத்தனை கோபம் வந்ததோ தெரியாது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து வந்துவிட்டாள். வந்தவள் தன் அப்பாவின் கையை பிடித்து “என் புருசன் உடம்பில கைவைக்க நீங்க யாரு? இப்போ கையை எடுக்கலேன்னா மரியாதை கெட்டுடும்” என்றாள் அத்தனை கோபமாக. அதை அவர் மட்டுமல்ல அவருடன் வந்திருந்த யாரும் எதிர்பார்க்கவேயில்லை. வைகாவா இப்படிப் பேசுவதென்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்றனர் அத்தனை பேரும். எப்படி வளர்ந்த பெண் வைகா. அப்பா அப்பா என்று அவர் காலையே சுற்றிச் சுற்றி வந்தவள். ஒருநாள் கூட அப்பாவை காணாமல் தூங்கமாட்டாள். எத்தனை நேரம் ஆனாலும் சரி அப்பாவிற்காய் காத்திருந்து அவருடன் ஒன்றாக உணவருந்தி அன்றைய நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒன்று விடாமல் அவரிடம் ஒப்புவித்தாலன்றி நிம்மதி அடையா பேதையவள். அப்பாவிற்கு ஒன்றென்றால் துடிதுடித்துப் போகும் அந்த வைகா தான் இப்போது இப்படிப் பேசிநிற்கிறாள். எப்படி மாறிப்போனாள்; காதல் எப்படி மாற்றிப்போட்டது அவளை; மூன்று மாதம் மூன்றே மாதம் பழகியவனுக்காய் தூக்கி எறிந்துவிட்டாள் இருபது வருடம் வளர்த்து ஆளாக்கியவரை. காதல் கண்ணை மறைக்கக் கண் மண் தெரியாமல் பேசிவிட்டாள். அவளுடைய அப்பேச்சைக் கேட்டதும் அவர் பிடி தளர்ந்தது. யார் யாரோ அவருக்கு ஆதரவாய் குரல் கொடுத்தனர். அது எதுவும் அவர் காதுகளில் விழவில்லை. அவரது நண்பன் பரமேசுவரன் அவளை அடிக்கவே பாய்ந்து விட்டார். அது கூட அவர் கண்களில் காட்சியாகவில்லை. அத்தனையையும் இரும்புத் திரையென அவள் பேசிய வார்த்தைகள் மறைத்து நின்றது. அடுத்து அவர் யாரையும் பார்க்கவில்லை எதையும் பேசவில்லை. நேராகக் காவல் நிலையத்திற்குள் சென்றார். “அவள் தன் இஷ்டம் போல் போகட்டும் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும் நான் எங்குக் கையொப்பமிடவேண்டும்” என்று காவல் அதிகாரியிடம் வினவினார். அவர் சொன்ன இடத்தில் கையொப்பமிட்டார். சிதைந்த உள்ளத்துடன் திரும்பிப்பார்க்காமல் நேராகப் பார்த்து நடக்கத் துவங்கினார். கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுக அவர் பின்னால் சென்ற வைகாவின் அம்மாவோ சற்று தூரம் சென்றதும் நின்று ஒருமுறை திரும்பி அவளைப் பார்த்தார். கோபம் கொப்பளிக்க ராகவின் கரத்தைப் பற்றிக்கொண்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் வைகா. கன்னத்தில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரை தன் முந்தானையில் துடைத்துவிட்டு முந்தானையை ஒரு உதறு உதறி வீசிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கினார். அவர் முகம் இப்போது சிவந்து இறுகி இருந்தது. திரும்ப அவர் திரும்பி வைகாவை பார்க்கவேயில்லை. தன்னுடைய வாழ்க்கையின் ஆதாரமாக மூலகாரணமாக இருந்த அத்தனை பேரையும் பகைத்துக்கொண்டு தன் காதல் கணவன் கரம் பிடித்து புது வாழ்க்கை வாழச்சென்றாள் வைகா… பகுதி 14 தன்னுடைய காதலை எதிர்த்தவர்களை எல்லாம் வேண்டாமென ஒதுக்கித் தள்ளி விட்டு தன் காதலன் கரம் பிடித்த வைகா தன் காதல் கணவனுடன் தன் வாழ்வின் புது அத்தியாயத்தைத் துவங்கினாள். ஊரின் நடுவே வாடகைக்கு ஒரு வீடெடுத்து தங்கினர். வாழ வேண்டும் எனும் வேகம் எல்லாருக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் வெறி அவர்களுள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. அவர்களுக்கென்று யாரும் இல்லை ஆனால் அவர்களுக்குள் காதல் இருந்தது. அப்போதைக்கு அது அவர்களுக்கு அசுர பலத்தை கொடுத்தது. காதலுடன் வாழ்வு மகிழ்வாகவே துவங்கியது. மனிதர்களின் மனமும் மனித வாழ்வும் எப்போதும் ஒன்று போல் இருப்பதே இல்லை. அவன் தினசரி வேலைக்குப் போய் வந்தான். அவள் வீட்டை கவனித்துக் கொண்டாள். இணைபிரியா புள்ளி மான்கள் போலும், வண்ணமயமாய் வானைச் சுற்றி வட்டமிடும் வண்ணத்துப் பூச்சி போலும், வானமே எல்லையென வட்டமடிக்கும் ஜோடி புறாக்கள் போலும் காதலுடன் வாழ்வை ரசித்து வாழத் துவங்கினர். இன்பம் ஒன்றே வாழ்வென எண்ணி மகிழ்ந்தனர். கோயில், கடைத்தெருவென வீட்டை விட்டு வெளியே எங்குச் சென்றாலும் அவன் கரம் கோர்த்தே சென்றாள். இவள் காதலை எதிர்த்த யாரேனும் இவளுக்கு எதிர்ப்படுவார்களேயானால் நெஞ்சை நிமிர்த்து வெற்றி புன்னகையொன்றை இதழில் தவழவிட்டு ஒரு ஏளனப் பார்வையோடு அவர்களைக் கடந்து செல்வாள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு நாட்கள் நகரத் துவங்கியது. அவர்கள் காதல் வாழ்வுக்கு அர்த்தம் கிடைத்தது. ஆம், அவள் தாய்மையடைந்தாள். வீட்டின் நிலைக்கதவில் சாய்ந்து நின்று கொண்டு வேலைக்குச் சென்று திரும்பிய அவனுக்குத் தான் முழுகாமல் இருக்கிறேன் என்பதை வெட்கம் கலந்த புன்னகையோடு அவள் சொன்னதே கொள்ளை அழகு தான். அதைக் கேட்டவன் அவளைக் கட்டியணைத்தான், முத்தமிட்டான், மகிழ்ச்சியில் திளைத்தான். நண்பர்களுக்குத் தான் தகப்பன் ஆகப் போகிறேன் என்பதைச் சொல்லித் திரும்புவதாய் சொல்லிச் சென்றான். அவள் அவனை அப்போது அனுப்பியிருக்கக் கூடாது! தன் காதல் வாழ்வில் தன்னுடைய கண்களிலிருந்து முதல் கண்ணீர் துளி விழப்போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்க நியாயம் இல்லை தான். அறிந்திருந்தால் அப்போது அவள் அவனை நிச்சயம் அனுப்பியிருக்க மாட்டாள். என்ன செய்வது நடக்கப் போவதை அறிந்து செயல்பட யாரால் தான் கூடும்?! அவனை அனுப்பி விட்டு விட்டு அவனுக்குப் பிடித்தது ஒவ்வொன்றாய் சமைக்க துவங்கினாள் கூட சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்ள பாயசத்தையும் வைத்தாள். வேலைகள் அத்தனையும் முடித்துவிட்டு அவனுக்காய் காத்திருக்க துவங்கினாள் காத்திருந்தாள்! காத்திருந்தாள்! காத்துக்கொண்டே இருந்தாள்! ஆனால் அவன் வரவில்லை. நேரம் தாமதமாக அலைபேசியில் அவனை அழைத்தாள் ஒருமுறையல்ல பலமுறை அழைத்தாள். அழைப்பை அவன் எடுக்கவும் இல்லை. என்ன ஆயிற்றோ எனும் பயம் ஒருபுறம். யாரிடம் விசாரிப்பது எனும் எண்ணம் இன்னொரு புறம். இந்த அமாவாசை இருட்டில் இந்த ராத்திரியில் தனிமையில் எப்படித் தேடி செல்வது? எங்கேயென்று தேடிச்செல்வது? எனும் குழப்பம் இன்னொரு புறமுமாக துக்க முகத்தோடு அவனுக்காய் காத்திருந்தாள். நீண்ட நேரத்திற்குப் பிறகு தெருமுனையில் நாய் ஒன்று குரைத்தது. அவள் தேடிக்கொண்டிந்தவன் தான் வந்தது. ஆனால் வருவதோ நாலுகாலில். அதிர்ச்சியும், வருத்தமும், வலியும் ஒருசேரக் கதவை திறந்தாள். குப்பென்று வந்து அடித்தது சாராய நெடி பழக்கமில்லையாதலால் குமட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. இப்போது அவள் சண்டை போட்டாலோ எதும் பேசினாலோ அவன் தலையில் ஏறும் நிலையில் அவன் இல்லை என்பதை உணர்ந்தாள். ஒருவாறு மனதையும் வந்த குமட்டலையும் சமாளித்துக்கொண்டு அவனைச் சாப்பிட அழைத்தாள். நண்பர்கள் வற்புறுத்தினார்கள் நான் சாப்பிட்டு விட்டேன் நீயும் சாப்பிட்டு படு என்றவன் வீட்டின் வரவேற்பறையிலே தொப்பென விழுந்தான். இவனை எழுப்பி அறையில் படுக்க வைக்க முயல்வது வீண் வேலை என்பதை உணர்ந்தாள். அவன் நிலையைக் கண்டதும் மனம் கனத்து நிறைந்தது. தனியாக உண்ண மனமின்றி உணவை எடுத்து குப்பை தொட்டியில் கொட்டினாள் உடன் அவள் கண்களிலிருந்து இரு துளி கண்ணீரும் விழுந்தது… பகுதி 15 வைகாவை மணம் முடித்த பின் மாறித்தான் போயிருந்தான் ராகவ். அவள் அன்பும் காதலும் அவனை மாற்றித்தான் வைத்திருந்தது. வாழ்வில் சில விசயங்கள் விரும்பியோ விரும்பாமலோ மாறிவிடுவதுண்டு. ராகவிற்கும் அப்படியே தான் அன்றைய ஒரு நாள் கொண்டாட்டம் அவனைப் பழைய நண்பர்களிடமும் பழைய வாழ்க்கைக்கும் திருப்பியது. அதுவரை தான் உண்டு, தன் வீடு உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தவன் அதன் பின் அடிக்கடி தன் நண்பர்களைச் சந்தித்தான். பல நாள் தள்ளாடியே வீடு வந்து சேர்ந்தான். அவன் வேகமாக மாறத்துவங்கினான் அவர்கள் காதலும் அத்தனை வேகமாய் அவள் கண்களின் வழியே கண்ணீராய் உருகத் துவங்கியது. வேலைக்கு விருந்துக்குப் போவது போல எப்போது விரும்பினானோ அப்போது போக துவங்கினான். தேவை அதிகரித்தது. வரவு குறைந்தது அதனூடே பிரச்சனைகளும் தலை தூக்கத் துவங்கியது. “உனக்கு என்னாச்சு ராகவ்! ஏன் இப்படி மாறிட்ட? உன்னால குடிக்காம இருக்கவே முடியாதா?” எனக் கண்ணீரோடு அவள் கேட்பாள். “நாளையிலேருந்து குடிக்க மாட்டேன்” என்பான் பதிலுக்கு. இரண்டு நாள் அவள் கண்ணீர் அவனைத் தண்ணீர் அண்டைப் போகவிடாமல் தடுக்கும். மீண்டும் நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு வரும் நிலை உருவாகும் அத்தனையும் மாறிப்போகும். “இன்றைக்கு ஏன் ராகவ் குடித்தாய்?” “நண்பர்கள் வற்புறுத்தினார்கள்” “அவங்கள விட்டுத் தொலைக்க வேண்டியது தானே” “அதை நீ சொல்லாத” என்ற படி கையில் கிடைத்ததை எடுத்து எங்கேனும் எறிந்துவிட்டு வெளியே சென்று விடுவான் எப்போது வருவான் என்றெல்லாம் சொல்ல முடியாது. நமை நம்பி வந்தவள் தனிமையில் இருப்பாளே எனும் எண்ணம் துளியும் கிடையாது அவனுக்கு. ஏன்டா சண்டை போட்டோம் என்று அவளே வருந்தும்படி ஆகிப்போகும் அவளுக்கு. மீண்டும் சில நாட்கள் நன்றாக இருப்பான். மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடுவான். ஒழுங்காக வேலைக்குப் போக மாட்டான். ஏன் வேலைக்குப் போகவில்லை என்றால் உடம்பு சரியில்லை என்பான். வா டாக்டர் கிட்ட போகலாம் என்றால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சாக்கு போக்கு சொல்வான். ஆனால் வேலை இருந்தாலும் அதற்குச் செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரிவான். அவனது மாற்றத்தினூடே அவளுக்கு வாழ்வு வலிக்கத் துவங்கியது காதல் கசக்க துவங்கியது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவனைப் பற்றி அவனுடைய பழைய வாழ்வைப் பற்றி சொன்னதொன்றும் அத்தனை நல்லதாகவும் இல்லை. தூரத்தில் அப்பா அம்மா வேண்டாம் வேண்டாம் என்று தலையிலடித்து சொன்னது நினைவில் வந்தது. ஆனாலும் அவள் அவனை வெறுக்கவில்லை மாறுவான்; வாழ்வு மாறிவிடும் என்றே நம்பினாள். அவன் கரம் பிடித்து நெஞ்சை நிமிர்ந்து ஏளன புன்னகையோடு நடந்து சென்ற வீதியில் இப்போது தனிமையில் நடக்கலானாள். அத்தனிமை அவளுக்குக் கொடுமையாய் தெரிந்தது. எனினும் இப்போதெல்லாம் அதையே விரும்பினாள். தெரிந்தவர்கள் முகம் பார்க்க வெட்கமாக இருந்தது. அவர்களைக் கண்டு தலைகுனிந்து நடக்கத் துவங்கினாள். அதன் பிறகு நீண்ட நாள் அங்கு அவளால் இருக்க முடியவில்லை. அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக வீடு மாறிப்போனாள். அதற்கு இருவேறு காரணங்கள் அவளிடம் இருந்தது. ஒன்று யார் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு இருந்தாளோ அவர்கள் முன் கூனி குறுகி நடப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது அவளுக்கு பெரும் அவமானமாக இருந்தது. இன்னொரு காரணம் இடம் மாறிப்போனால் பழைய நண்பர்களையும் குடியையும் விட்டு விடுவான் எனும் ஒரு நப்பாசை தான். ஆனால் குடிகார நண்பர்கள் என்றைக்கு தங்கள் நட்பை இழக்கத் தயாராக இருந்தார்கள். முன்புக்கு இப்போது அவர்கள் கூடுகை இன்னும் அதிகரித்தது. தேவையென்றால் வைகாவை விட்டுவிடத் தயாராக இருந்தான் எக்காரணம் கொண்டும் குடியையும் அவன் நண்பர்களையும் விட்டுவிட அவன் தயாராய் இல்லை. அவன் அவளை அலட்சியப்படுத்தத் துவங்கினான். ஆனால் வைகாவோ அவனுக்குத் தகுந்தது போல் தன்னை மாற்றிக்கொள்ளத் துவங்கினாள். அல்லது மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டாள். தனியார் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு போய்க்கொண்டிருந்தவள் இப்போது அரசு மருத்துவமனைக்குச் செல்ல துவங்கினாள். கஷ்டங்கள் எப்படி அவளைத் துரத்திய போதும் வீட்டிற்குப் போக வேண்டும் எனும் மட்டும் அவளுக்கு வரவே இல்லை. அதை அவள் யோசிக்கவும் இல்லை. வீட்டிலிருந்தும் யாரும் அவளைக் கண்டு கொள்ளவும் இல்லை. கவலைகளும் கஷ்டங்களும் இருக்கிறதென்பதால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன் பணியை செவ்வனே செய்து கொண்டேதாருந்தது நகர்ந்து கொண்டிருந்த நாட்களினூடே அவளுடைய பிரசவகாலம் நெருங்கிக்கொண்டிருந்தது… பகுதி 16 பெண்குழந்தைகளுக்கு முதல் நண்பனும் முதல் ஹீரோவும் அப்பா தான். அன்பான அப்பா நிச்சயம் பெண் குழந்தைகளுக்கு வரமே. நல்ல தோழனாக சின்னஞ்சிறு கதைகள் சிரித்துப் பேசி மகிழும் அப்பாக்கள் வாய்த்து விட்டால் அம்மா கூட அவருக்கு அடுத்துத் தான். இதெல்லாம் எப்போது வரை? இவளும் தாய்மை அடையும் வரை மட்டுமே! அப்பா எத்தனைப் பாசமானவராகவோ, எத்தனை அன்பானவராகவோ, எத்தனை நெருக்கமான நண்பனாகவே இருந்தாலும் மகள் அம்மா ஆகப்போகும் தருணம் அவள் பார்வையும் அவள் தேவையும் அம்மாவைச் சுற்றியே இருக்கும். அதற்குக் காரணம், மிக எளிது! வயிற்றில் குழந்தை வளர வளர உடம்பில் பல மாறுதல்கள் வரும். கூட, மனதில் பலவித பயங்களும் சந்தேகங்களும் எழும். அதற்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளும் சொல்லும் ஆயிரம் ஆலோசனைகளையும் விட, அம்மாவின் அரவணைப்பும் அம்மா சொல்லும் ஒற்றை ஆலோசனையுமே அவளுக்கு அப்போது அவசியமும் அவள் மனதிற்கு பெரும்பலமும். காதல் கரைய கண்ணீர்களினூடே வைகாவின் வாரிசும் அவள் வயிற்றில் வேகமாக வளர்ந்து கொண்டு வந்தது. இப்போது வைகாவிற்கும் அப்படியே தான் ஆயிரம் சந்தேகங்கள் உண்டு. பற்பல பயங்கள் உண்டு. அம்மாவும் தான் உண்டு. என்ன செய்வது ஆலோசனை வழங்கவோ ஆதரவளிக்கவோ அவர் தம் கரங்கள் தான் அருகில் இல்லை. இல்லை என்பதை விட வேண்டாம் என்று இறுக பற்றிப் பிடித்திருந்த அவர் கரங்களை உதறித் தள்ளிவிட்டாள் என்பதே சரி. கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம் அவசரப்பட்டு விட்டோம். இதோ, இப்போது அவஸ்தை படுகிறோம் என்று தனையேக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அதற்கு அவளே நீதியை வழங்கிச் செய்த தவறுக்கு தண்டனையாய் இவற்றை ஏற்றுக்கொள்ளத் துவங்கினாள். அவள் வருத்தமெல்லாம் மாறிப்போன ராகவால் தான். அவனாவது அவளுக்கு ஆறுதலாய் இருந்திருந்தால் இத்தனை வருத்தம் அவளுக்கு வந்திருக்காது. விதி வரும் வழியில் எது வந்து குறுக்கே நிற்க முடியும். என்று விதி மீது பழியை போட்டுத் தன்னை தேற்றிக்கொள்வாள் வைகா. வீட்டில் ராகவ் இல்லா நேரமொன்றில் அவளுக்குப் பிரசவ வலி வந்தது. அவளுடைய நீண்ட நேர அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவளை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அறிந்து வந்தவன் அப்போதும் அரைப் போதையில் தான் இருந்தான். உயிர் போய் உயிர் வந்தது வைகாவிற்கு. சிரித்தமேனிக்கு சுகப்பிரசவம் என்று சுகமாய் சொல்லிக் கடந்து சென்றார் மருத்துவர். மயக்கம் தெளிந்த போது அருகில் தொட்டிலில் குயிலின் ஓசையை விட, வீணையின் நாதத்தை விட மெல்லிய சுகமான குரலில் தேவதை ஒருத்தி அழுது கொண்டு கிடந்தாள். அவளைக் கண்ட மாத்திரத்திலே அவள் குரலை கேட்ட மாத்திரத்திலே வைகாவின் வலியெல்லாம் பறந்து போனது. அச்சு அசல் அவனைப்போலவே இருக்கிறாள். அதே மூக்கு, அதே நெற்றி, அதே கண், அதே வாய் ஒரு மாறுதலுமில்லை அவனே தான். அப்போதே ஆசையாய் அள்ளியெடுத்து முத்தமொன்று கொடுக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவளால் சுயமாக எழும்ப முடியவில்லை அவளுக்கு உதவ யாருமில்லை. ஆசை மட்டுமே நெஞ்சில் இருந்து, கனத்தது! பிரசவகாலத்தில் பெண்ணொருத்திக்கு கிடைக்கக்கூடாதது ‘தனிமை’. அது பெருங்கொடுமை அதையும் இப்போது வைகா அனுபவிக்கத் துவங்கினாள். உதவிக்கு யாருமில்லை எனினும் ராகவும் பகலில் இருக்க மாட்டான். வேலைக்குப் போகிறேன் சாக்கில் ஊர்சுற்றப் போய்விடுவான். தன் உடம்புக்குச் சுடுதண்ணீர் வைக்க வேண்டும். அழும் குழந்தையை தூக்க வேண்டும். குழந்தையின் துணியை அடிக்கடி மாற்றி விட வேண்டும். குழந்தையைக் கழுகி சுத்தப்படுத்த வேண்டும். எதற்கும் அவளுக்கு ஆள் இல்லை. அவளுக்கென்று அங்கு யாருமேயில்லை. கிட்டதட்ட அனாதை போல, என்ன கிட்டதட்ட அனாதை போல! அனாதையாகவே தான் ஆகிப்போனாள் வைகா தனது மகளுடன். அருகில் கிடந்த பெண்ணிற்கும் முதல் பிரசவம் தான் அவளை எப்படிக் கவனித்து கொள்கிறார்கள் அவள் குடும்பத்தார். அக்குழந்தையை எப்படி எல்லாம் கொஞ்சுகிறார்கள் எப்போதும் கையிலேயே கொண்டு திரிகிறார்கள் தாத்தா, பாட்டி, மாமா, மாமி எனத் தொட்டிலில் கிடத்தக் கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். தன்னுடைய குழந்தையோ அழுது அழுது அதுவாகவே அடங்குகிறது. அதனுடன் சேர்ந்து தானும் அழுதாள். யாரேனும் தன் குழந்தையையும் தூக்க மாட்டார்களா? கொஞ்சி விளையாட மாட்டார்களா? என்று ஏங்கத் துவங்கினாள். அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி அனாதையாய் ஆதரவற்றவர்களாய் அரசு மருத்துவமனையில் கிடக்க வேண்டியவர்களா நாமும் நமது மகளும். நம் வீட்டாரின் அனுமதியுடன் திருமணம் முடித்து தலைப்பிரசவம் அவர்கள் பார்த்திருந்தால் இந்நிலை நமக்கு வந்திருக்குமா என்று எண்ணி நொந்து போனாள். அப்போதெல்லாம் அவள் தலையணையை ஈரமாக்கியது அவள் கன்னங்கள் வழியே உருண்டோடிய கண்ணீர். கடவுள் நல்லவன். இந்த உலகில் யாருமற்றவர்களுக்கு உதவ சிலரை அவன் முன்கூட்டியே அனுப்பியிருப்பான். அப்படி அவன் தனக்காக அனுப்பியதாய் வைகா எண்ணிய சிலர் அம்மருத்துவமனையில் அவளுக்கு உதவவும் இருக்கத் தான் செய்தார்கள்… பகுதி 17 யாருமற்று மருத்துவமனையில் தனித்து தவித்துக் கிடக்கும் வைகாவிற்கு உதவ வேண்டியே கடவுள் வெள்ளையாடை அணிவித்து புவிக்கு அனுப்பி வைத்ததாய் அவள் எண்ணி மகிழ்ந்தவர்கள் அம்மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு செவிலியர்கள். அதில் ஒருத்தி வெள்ளையாய், ஒல்லியாய், உயரமாய் இருப்பாள். கலகலவென நன்றாகச் சிரித்து பேசுவாள் நேரம் கிடைக்கையில் அவ்வப்போது வந்து அக்கரையாய் உதவுவாள். இவள் உதவ இன்னொரு காரணமும் உண்டு வீட்டிற்குத் தெரியாமல் இவளும் ஒருவனைக் காதலிப்பது தான் அஃது. இன்னொருத்தி அமைதியான சுபாவமுள்ளவள் சுருள் முடி மாநிறத்தில் அழகா இருப்பாள். அவள் பேசும் தமிழே அத்தனை அழகு. அவளும் தேவையெனில் ஓடிஓடி வந்து உதவுவாள். அவளுக்கு ஒரு குழந்தை உண்டு. ஆகவே குழந்தை பெற்று வளர்த்து வருவதன் கஷ்டம் புரிந்தவள் ஆக, அவளும் உதவியை உண்மையாய் உள்ளத்திலிருந்து செய்து வந்தாள். இவ்விடம் இயல்பாக நமக்கு ஒரு கேள்வி வரும் இப்படி அன்பு பாராட்டவும் உதவிசெய்யவும் இருவர் இருக்கையில் அவளுக்கென்ன கவலை?! அவள் மகிழ்ச்சியாக அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று, கேள்வி நியாயம் தான்! அதில் உண்மை இல்லாமலும் இல்லை தான். ஆனால், இவள் இருப்பது அரசு மருத்துவமனை அங்கு பணிபுரியும் செவிலியர்கள் அவர்கள். பத்து பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் அவர்கள் இருவரையே பணிக்கு அமர்த்தி நியாய தர்மம் பேசுகிறது அரசு. அங்கு எதுவுமே ஒழுங்காக இருக்காது இருப்பினும் இவர்கள் சமாளித்தாக வேண்டும். அதிகம் இம்மருத்துவமனைக்கு வருபவர்கள் படிக்காத பாமரர்கள் அவர்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாது. தன்னுடைய மனவழுத்தங்களை எல்லாம் தன்னுள் வைத்துக்கொண்டு பொறுமையாக அவர்களுக்கு பலமுறை சொல்லிப் புரிய வைக்க வேண்டும். கோபத்தை இவர்களிடம் காட்ட முடியாது காட்டினால் எளிதாகச் சிடுமூஞ்சி எனும் பட்டப்பெயர் வந்துவிடும். இன்னொரு பெரும்பிரச்சனை வேலை நேரத்தில் பல மருத்துவர்கள் தாங்கள் வெளியே தனியாக வைத்திருக்கும் கிளினிக்கை கவனிக்கச் சென்றுவிடுவார்கள். அவர்கள் வேலையில் சிலவற்றை இவர்கள் செய்தாக வேண்டும். அவர்கள் இங்கு இல்லாததன் உண்மைக் காரணத்தை யாரிடமும் சொல்ல முடியாது. சொல்லி விட்டால் பழிவாங்கும் படலம் துவங்கிவிடும். அவர்கள் செய்கைகளை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாவற்றிற்கும் மேல் செவிலியர்கள் கொஞ்சம் அழகாக இருந்துவிடக் கூடாது. கருணையோடு அவர்களால் கவனிக்கப்படும் நோயாளிகள் முதல் அவர்களைப் பார்த்துக்கொள்ள வருபவன் வரை அத்தனை பேரின் அருவருப்பான பார்வைக்கு இலக்காக வேண்டியிருக்கும். அவர்களிடம் தன்னை காத்துக்கொண்டு அவர்களுக்கே உதவிகள் செய்ய வேண்டும். செவிலியர் வேலை கூட பல நேரம் நாய் பொளப்பு தான் என்பதை உள்ளுக்குள் எண்ணி நொந்து கொண்டே தன் குடும்பச் சூழலை எண்ணி தன் வேலையைத் தொடர வேண்டும். இவ்வேலை நிச்சயம் ஒரு சேவை தான் அதில் மற்றுக்கருத்தேயில்லை. அம்மா மனைவியைத் தவிர்த்து அழுகிய நம் உடலை முகம் சுளிக்காமல் துடைத்துச் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்பவர்கள் அவர்கள். அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் அதை விட நம்மவர்களால் அவர்களுக்கு வரும் சங்கடங்கள் ஏராளம். என்பதை வைகா அருகிலிருந்து கொண்டு நன்கு புரிந்து வைத்திருந்தாள் அதன் காரணமாக அவர்களிடம் அதிகம் அவளால் உதவிக் கேட்கவும் முடியவில்லை. இருக்கும் வேலைகளுக்கிடையில் அவர்களால் முழுமையாய் உதவி செய்யவும் முடியவில்லை. தன் உடல் நிலையில் அவளாலும் அவளையும் அவள் குழந்தையையும் சரியாகக் கவனிக்க முடியவுமில்லை. இந்தப் பிரச்சனைகள் மட்டுமல்லாது அவர்களுக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்தது அது அவர்களுடைய சூப்பர்வைஸர். இவளுடைய அம்மா வயதிருக்கும் அவருக்குக் கொஞ்சம் உடம்பு, கடினமான குரல், குணமும் கொஞ்சம் கடினம் தான். அவர்கள் தங்கள் வேலைகளைப் போட்டுவிட்டு வைகாவிடம் வந்தால் அவர்களுக்குத் திட்டு விழும் அந்தச் சாக்கில் வைகாவிற்கும் சகட்டுமேனிக்கு திட்டு விழும் “காதல் கீதல்ன்னு சுத்துறப்போ தெரிஞ்சிருக்கணும் வீட்ட வீட்டு ஓடுறப்போ யோசிச்சிருக்கணும்” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வைகாவிற்கு வலிக்கும் படியே வலிக்கட்டும் என்றே சொல்லி வைப்பார் அவர். அம்மா வயதுள்ளவர் அவர் அம்மா சொல்வதை போன்று கேட்டுக்கொள்வாள் வைகா. இப்போதெல்லாம் அவளுக்குக் கோபம் வருவதில்லை. கொஞ்சம் எதார்த்தம் புரிந்திருந்தது. அவர் சொல்லுவது வலிக்கும் ஆனால் எதுவும் வைகாவின் மனதைப் பாதித்ததில்லை அவர் சரியாக தானே சொல்கிறார். அவர்கள் சொல்வதில் எந்தத் தவறும் தான் இல்லையே. அவர்கள் என்ன சும்மாவா இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் யாருமேயில்லாமல் தனிமையில் இருக்கும் தனக்கு தன் தவறை தன்னிடம் நேரடியாகச் சொல்லி சண்டை போடும் ஒரு உறவு தேவைப்படுவது போலிருந்தது. அதுவே தனக்காகவும் ஒருவர் இவ்வுலகில் இருக்கிறார் எனும் எண்ணத்தைக் கொடுத்தது. எனவே அவர் சண்டை போடும்போதெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொள்வாள். அது அவள் மனதைப் பாதிக்கவில்லை மாறாக மனதிற்கு ஒரு ஆறுதல் போலவே இருந்தது. இப்படியெல்லாம் சண்டை போடுகிறார்கள் என்பதால் அவர்கள் அத்தனை கெட்டவர்களும் அல்ல. வைகா பார்க்காத நேரமெனில் அவர்கள் செய்யும் உதவிகளைக் கண்டும் காணாமலும் இருந்துவிடுவார். அம்மருத்துவமனையை விட்டு வைகா வீடு செல்லும் பொழுது யாருமற்ற தன் மகளுக்கு முதல் விளையாட்டு பொம்மையை அவர்கள் தான் வாங்கிக் கொடுத்தனுப்பினார்கள். அவர்களுக்கு மனதார நன்றி சொல்லி திரும்பினாள் வைகா. அப்படியாக வயிற்றில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த வைகா அதற்கு நான்கிரட்டியாக மனதில் பாரத்தை ஏற்றியபடி வீடு வந்து சேர்ந்தாள்… பகுதி 18 மகளின் வருகையினூடே அவர்களின் தேவைகளும் அதிகரித்தது. ஆனால் அதற்குரிய எந்த பொறுப்புகளும் ராகவிற்கு வரவில்லை. அவள் ஆலோசனைகளும் அவள் கண்கள் சிந்திய கண்ணீர் துளிகளும் வீணாகவே தான் போய்க்கொண்டிருந்தது. அவன் திருந்திவிடுவான் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து விடுவோம் தோற்ற இடத்தில் மீண்டும் ஜெயித்து காட்டி விடுவோம் எனும் நம்பிக்கை கிட்ட தட்ட அவளை விட்டு போயே போயிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வு மீது வெறுப்பு ஏற்பட துவங்கியது அவளுக்கு. அப்படியே சில மாதங்கள் கடந்தது. ஒருநாள் வீட்டில் சல்லி பைசா இல்லை. குழந்தைக்கு பால் வாங்கவும் முடியவில்லை. பக்கத்து வீட்டு மாமியிடமிருந்து கைமாற்றாய் வாங்கிய காசும் சொல்லிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. அதற்காக அவரும் வந்து வாயில் வந்தபடி திட்டிவிட்டு சென்றார். அன்றைக்கு கடும் எரிச்சலில் இருந்தாள் வைகா. அன்றைக்கும் ராகவ் குடித்துவிட்டு வரவே கோபத்தின் உச்சிக்கு சென்றாள் அவள். அதுவரை இல்லாத வண்ணம் அன்றைக்கு அவனுடன் சண்டை போடத் துவங்கினாள். அவள் நியாயமான கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் ஈட்டி போல் அவன் நெஞ்சைத் தைத்தது. அவள் வார்த்தைகளால் அவனுக்கு வலித்தது. என்றைக்குமே இப்படி எல்லாம் பேசாதவள் ஏன் இன்றைக்கு இப்படி பேசுகிறாள்? இப்படி ஏன் எரிந்து விழுகிறாள்? என்பதை யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. இருந்த போதை அவனையும் கோபத்தின் உச்சிக்கு அழைத்து சென்றது. எத்தனைக் குடித்தாலும் எத்தனை நிதானம் இழந்து வீடு வந்தாலும் இதுவரை அவனும் வைகாவை அடித்ததில்லை. அவனென்ன அவன் அவளுக்கு நியாபகம் வந்த பின் அவளை யாருமே அடித்ததில்லை. இப்போது கோபத்தில் பளார் என்று கன்னத்தில் அறைந்து விட்டான். அவன் அடிப்பான் என்பதை எதிர்பாராத வைகா நிலைதடுமாறி அருகில் ஓடிக்கொண்டிருந்த ஜெயலலிதா அரசு அளித்த மின்விசிறியை தள்ளிவிட்டுக்கொண்டு கலைஞர் அரசு அளித்த தொலைக்காட்சி பெட்டியில் மோதி கீழே விழுந்தாள். கோபத்தில் மீண்டும் கத்திக்கொண்டு வெளியே சென்றுவிட்டான் ராகவ். தரையில் விழுந்து அடிபட்டதில் மண்டைவீங்கியது. விழுந்தவள் விழுந்த இடத்தில் கிடந்து கொண்டே விம்பி விம்பி அழுது கொண்டிருந்தாள். கன்னத்தில் கைவைத்து பார்த்தாள் அவன் கைவிரல் அப்படியே பதிந்திருந்தது. உதட்டோரம் ரத்தமும் லேசாக வந்திருந்தது. ரத்தத்தைப் பார்த்ததும் ஓவென கதறியழுகிறாள் வைகா. இப்போது அவள் இப்டி கத்தி அழுவதற்கும் ஓர் காரணம் இருக்கத் தான் செய்தது. அப்போது அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வு என்று நியாபகம் அதில் ஒரு பாடத்தில் தோற்றுப் போய்விட்டாள். தோற்றுப் போய் வீடு வந்தவளை கோபத்தில் திட்டிக்கொண்டே அம்மா அடித்தாள். அம்மா அடித்ததில் லேசாக ரத்தம் வந்து விட்டது. இவள் உடம்பில் ரத்தத்தைப் பார்த்தது தான் தாமதம் எங்கிருந்து தான் அவள் அப்பாவிற்கு அத்தனை கோபம் வந்ததென்று தெரியாது. அவர் அப்படி கோபப்பட்டு அதுவரை வைகா பார்த்ததேயில்லை. கோபத்தில் அப்படிக் கத்திக்கொண்டு தன் மனைவியை வீடு முழுக்க துரத்தி துரத்தி அடித்தார். வைகா அழுதுகொண்டே அப்பாவை பிடித்து சமாதானம் பண்ணி அவரை இழுத்துவரும்வரை அம்மாவை அவர் விடவேயில்லை. இதோ, இன்றைக்கு அடிபட்டு கேட்பாரற்ற அனாதையாகக் கிடக்கிறாள். ஒரு ஆதரவில்லை ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை. சொல்லி அழ கூட ஒரு மனிதரில்லை. நினைக்கும் போது நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. அழுவதற்கும் அவளால் முடியவில்லை அழுது அழுது அவள் கண்ணீரும் தீர்ந்திருந்தது. துக்கம் பீறிட்டு வந்தது. அழுது அழுது கிடந்தவள் திடீரென வேகமானாள் எதையோ நினைத்தவளாய் கண்ணீரை துடைத்துக்கொண்டாள் கலைந்து கிடந்த கூந்தலை வாரிமுடிந்து கொண்டாள். பின்னால் கிடந்த முந்தானையை எடுத்து கோபமாய் இடையில் சொருகினாள். வெறி வந்தவள் போல் எதையோ தேடுகிறாள். அவள் பார்வையும் அவள் தேடலும் அவளெதோ விபரீத முடிவை எடுத்ததை போன்றே தெரிகிறது. ஆம், நமது யூகம் சரிதான்! அவள் தற்கொலை செய்து கொண்டு தன் கசந்து போன காதல் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறாள். அவள் பார்வையில் பட்டது அவளது துப்பட்டா ஒன்று அதைக் கையில் எடுத்துக்கொண்டாள். வேகமாக சென்று ஒரு நாற்காலியை எடுத்து வந்தாள் விறு விறுவென மின்விசிறியை இணைத்திருந்த கம்பியில் கட்டினாள். கழுத்தில் போட சுருக்கையும் போட்டுவிட்டாள். இனி கழுத்தில் மாட்டி தொங்க வேண்டியது மட்டுமே பாக்கி. அப்போது அவள் வேறு எதையுமே யோசிக்கவில்லை. யோசிக்க விரும்பவும் இல்லை. சாக வேண்டும் என்ற ஒன்றைத் தவிர! அந்நேரம் அவள் குழந்தை அழுதது. அப்போது அக்குழந்தை அழுதிராவிட்டால் அக்குழந்தையின் தலையெழுத்தும் நமது கதையின் போக்கும் கூட மாறியிருக்கும். அக்குழந்தையின் அழுகுரல் நிமிட நேரமொன்று அவளை யோசிக்க வைத்தது. அந்நிமிட நேர யோசனை முட்டாள்தனமான தனது முடிவை மாற்ற வைத்தது. யாரோ அடித்து அழுவதை போல அப்போது அக்குழந்தை தனது அழுகையின் வேகத்தை அதிகரித்தது. கழுத்தில் போட எடுத்த துப்பட்டாவை தூக்கி வீசிவிட்டு மகளை கையில் தூக்கியெடுத்து மார்போடணைத்து அழுதாள். அழுது கொண்டே “என்னை மன்னிச்சுக்கோ நான் சாக மாட்டேன்; உனக்காக வாழ்வேன்” என்றாள். அப்போது அக்குழந்தை சிரித்தது. அவள் சொன்னது புரிந்து கொண்டு சிரித்ததா இல்லை அவளைப் பார்த்து சிரித்ததா என்று நமக்கு தெரியாது; ஆனால் அது சிரித்தது. அப்போது வைகாவிற்கு அதுவே தேவையாக இருந்தது. அது சிரித்தது மாத்திரமல்ல கூட போனஸ்ஸாக முதன் முதலாக அவளை “அம்மா” என்று அழைத்தது. முதல் முறை அவளுக்கு சரியாக புரியவில்லை இரண்டாம் முறை மீண்டும் “ம்மா” என்று அழைத்தது. மகிழ்ச்சியில் உச்சி குளிர்ந்து உள்ளம் பூரித்து போனாள். யோசிக்காமல் எத்தனை பெரிய முட்டாள் தனத்தை செய்யத் துணிந்ததை எண்ணி நொந்தாள். கொஞ்ச நேரத்திற்கு முன் தாங்க முடியா சங்கடத்தில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாகப் பெருகியது. ஆனால் இப்போது பாருங்கள் மகள் ‘அம்மா’ என்றழைத்த ஆனந்தத்தில் கண்ணீர் வழிகிறது. மனித வாழ்வு தான் எத்தனை விசித்திரமானது! நிமிட நேரத்தில் தான் மனித மனநிலையும் அவர்தம் வாழ்வும் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது! பல குடும்பங்களில் கணவன் மனைவிகளுக்கிடையே சண்டைகளும், சச்சரவுகளும், உரசல்களும், பிரிந்து விடலாம் எனும் எண்ணங்களும் வரும்போதெல்லாம் அவர்கள் பிரிந்து சென்றுவிடாமல் உறவுப் பாலமாய் அவர்களை இணைத்து காத்து நிற்பது அவர்கள் பெற்றெடுத்த மழலை செல்வங்களே என்பது மறுக்க முடியா உண்மை. ஆனால் வைகாவின் குழந்தையோ அதற்கும் ஒருபடி மேலே சென்று அவள் உயிரையே காத்து திருப்பிக் கொண்டுவந்துவிட்டது… பகுதி 19 வைகாவின் மகள் அங்கன்வாடிக்கு செல்லும் அளவு வளர்ந்தாள். அவளை அருகில் உள்ள அங்கன்வாடிக்கு அனுப்பி விட்டு வைகா வேலைக்குச் செல்ல துவங்கினாள். அதிலும் அவளுக்குப் பிரச்சனை வந்தது அதுவும் ராகவால் தான். வேலைக்குச் செல்லாதே என்றான். ஒத்துக்கொண்டாள், ஆனால் நீ ஒழுங்காக வேலைக்குச் சென்று விட்டு வந்து இதைச் சொல் என்றாள். அவனிடம் பதிலில்லை கை தான் நீளத்துவங்கியது. கொஞ்ச நாள் பொறுமை காத்தாள். இப்போதெல்லாம் அவன் கை அதிகம் நீளத்துவங்கியது. அவள் வேலைக்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையை மாற்றத்துவங்கினாள். அதிகரித்த தேவைகள் அவளால் நிவர்த்தியாகத் துவங்கியது. அவனால் வரும் பிரச்சனைகளும் அடிதடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தது. ஒருநாள் அதிக போதையில் அடிக்கப் பாய்ந்தான் பொறுமையிழந்தவள் எதிர்த்து நின்றாள். அடித்தான் திருப்பி அடித்தாள். இருப்பது போதையாயினும் திருப்பி அடித்ததும் அவனுக்கும் வலித்தது. கையை ஓங்கினான் கட்டையை எடுத்தாள். இப்போது கட்டையை எடுத்தான் இவள் கத்தியை எடுத்தாள். அடிப்பது நின்றது. கொஞ்ச நஞ்சம் அவர்களுள் இருந்த உறவும் கெட்டது. இருவருக்குமிடையேயான விரிசல் பெரிதானது. இறுதியில் இருவர் அறையும், இருவர் கட்டிலும் தனித்தனி ஆகிப்போனதில் வந்து நின்றது. உள்ளுக்குள் தனித்தனி தீவாகவும் ஊருக்கு மட்டும் கணவன் மனைவியாகவும் வாழத்துவங்கினர். வீம்புக்காக அல்ல வீட்டில் இருந்த தேவைகளை முன்னிட்டே வேலைக்குச் சென்றாள் வைகா. வேலைக்குச் சென்ற புதிய சூழல் மனதிற்குக் கொஞ்சம் இதமாகத் தான் இருந்தது அவளுக்கு. புதிய புதிய தோழிகள் கிடைத்தார்கள் அவர்கள் மனதைப் பகிர்ந்து கொள்ளவும் சிலதை கேட்டறிந்து கொள்ளவும் உதவினார்கள். கொஞ்சம் மனது லேசானது. குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள சிறிதளவு பணமும் வந்தது. அவள் வேலைக்குச் சென்றதன் நோக்கம் சரியாக இருந்தது. அவள் சரியான பாதையில் சரியாக பயணித்துக்கொண்டிருந்தாள். ஆனால் உடன் வேலை செய்யும் சில ஆண்களின் பார்வை வேறு மாதிரி இருந்தது. குடிகார கணவன் தேவை அதிகமுள்ள குடும்பம் சிறிய வயது ஒரு குழந்தையின் தாய் என்று சொல்ல முடியா அளவு அழகு… போதாது?! இது போதாது?! இவள் வளைந்து விடுவாள் வளைத்துப் போடலாம் எனக் கழுகு பார்வையுடன் அவளுக்காய் கண்ணி வைத்து ஆண்கள் சிலர் காத்திருக்க. இக்கால பெண்ணொருத்தி சறுக்கி விழுந்துவிட போதுமான அளவு காரணங்கள் அவள் வாழ்விலும் நிரம்ப இருக்கவே தான் செய்தது. கோவிலில் பூஜை செய்யும் ஒருத்தன் இதுவரை குடித்ததேயில்லை என்றால். அதில் அப்படி என்ன சிறப்பு இருந்துவிடக்கூடும். டாஸ்மாக்ல் வேலை செய்யும் ஒருத்தன் குடிக்காமல் இருந்தால் அது தானே சிறப்பு. மாணவன் ஒருவன் நன்றாகப் படிக்கிறான். வசதியான வீடு படித்த அம்மா அப்பா நல்ல பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறதெனில் அதில் அப்படி என்ன சிறப்பு இருந்துவிடக்கூடும். அப்பா இல்லை அம்மா மட்டுமே உண்டு அவருக்கு உதவியாய் வேலைக்குச் செல்கிறான். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிக்கிறான். நல்ல மதிப்பெண்ணும் எடுக்கிறான் என்றால் அம்மாணவன் தானே சிறந்தவன். அது போல தானே அன்பான கணவன், அக்கரையான குடும்பம், சொல்பேச்சு கேட்கும் குழந்தைகள், போதுமான அளவு செல்வம், நிறைவான ஒரு வாழ்வு வாழும் ஆணோ பெண்ணோ ஒழுங்காக இருக்கிறார்கள் என்பதில் அப்படி என்ன சிறப்பு இருந்துவிட முடியும். குடிகார கணவன், புரிந்து கொள்ள முடியா குணம், தினம் அடிதடி ரகளை, வாய்க்கும் வயிற்றுக்குமே கஷ்டப்படும் வாழ்வு இருப்பினும் அவ்விடத்தில் இருந்து கொண்டே ஒழுக்கத்தை உயிராக மதிப்பவர்கள் தானே சிறப்பானவர்கள். எனில் நமது வைகாவும் சிறப்பானவள் தான். அவள் தன் நோக்கத்தில் சரியாக இருக்கிறாள். யாரை அருகில் வைக்க வேண்டும் யாரைத் தூரத்தில் வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாள். தன்னிடம் நெருங்குபவர்களிடம் எச்சரிக்கையாகத் தான் இருக்கிறாள். எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரித்து, கண்டிப்பைக் காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்பை காட்டி ஒழுக்கத்தை உயிராக மதித்து தன் வாழ்வெனும் பாதையில் கம்பீரமாய் முன்னேறுகிறாள்… பகுதி 20 வைராக்கியமான இந்த வைகாவை பார்க்கும் நேரம் எங்கள் ஊரில் நடந்ததாக தாத்தா ஒருவர் சொல்லிய சம்பவமொன்று எனக்கு நியாபகம் வருகிறது. அதை இவ்விடம் நியாபகப்படுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இக்கதை நடந்து நூறு வருடத்திற்கு மேல் ஆகியிருக்க வேண்டும் ஏனென்றால் அவருடைய சிறுவயது பிராயத்தில் நடந்தது என்று அவர் சொல்லி கொடுத்தது எனக்கு. எங்கள் ஊர் அதிகம் பனையேறும் தொழிலையே நம்பி இருந்தது காலம் அது. பனையேறிகள் ஹீரோக்களாய் கொண்டாடப்பட்ட காலகட்டமும் அதுவே. அதைப் புரியும்படி சொல்வதென்றால் இன்றைக்கு எங்கள் ஊரில் போலீஸ், மிலிட்டரிகாரனுக்கு எப்படி மரியாதை இருக்கிறதோ அன்றைக்கு அப்படி பனையேறிகளுக்கு மரியாதை இருந்தது. இன்றைய எங்கள் ஊர் போலீஸ் மிலிட்டரிகாரனை பெண்வீட்டார் வலைவீசித் தேடி வந்து பெண் கொடுப்பது போல அன்றைக்குப் பனையேறி என்றால் தேடிச்சென்று பெண் கொடுத்தனர். அவனுக்கு வேலைக்குப் பஞ்சமில்லை. வருமானத்திற்கு வழியிருந்தது. சப்பாட்டுக்கே வழியற்ற காலம் அது உழைத்தால் உண்ணலாம் எனும் போது மகளைப் பெற்றவர்களுக்கு அது பெரிய விசயம் தானே. ஆகவே அக்காலத்தில் பனையேறிகள் ஹீரோக்களாய் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள் என்பதில் வியக்க எதுவுமில்லை. ஒரு பனையேறியின் மனைவியின் வாழ்வென்பது போராட்டம் நிறைந்த வாழ்வே. அவன் உழைப்பது போல் இரண்டு மடங்கு அவள் உழைத்தாக வேண்டும். ஒரு பனையேறி அதிகாலை இரண்டு மணிக்கே எழும்பி பனையேறி சென்றுவிடுவான் அவன் இரண்டு மணிக்கு எழும்புகிறான் என்றால் அவள் அவனுக்கு அரைமணி நேரம் முன்பாகவேனும் எழுந்தாக வேண்டும். காலம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பல்லவா இப்போது போல கணவன் ஒன்பது மணிக்கே வேலைக்குப் போனாலும் எதையும் சமைத்து கொடுக்காமல் தனக்கும் அவனுக்குமாக பிஸா ஆர்டர் பண்ணி விட்டு பக்கத்து வீட்டில் சென்று ஒருநாள் முந்தைய சீரியல் கதை பேச முடியாதல்லவா. அவன் வேலைக்குப் புறப்பட்டு சென்றதிலிருந்து துவங்கும் அவள் வாழ்வு அவனுக்கொரு கருப்பட்டி காப்பி போட்டு கொடுத்து அவனை அனுப்பி விட்டு அவள் தனது வேலையைத் துவங்குவாள். வருடம் பிள்ளை ஒன்றைப் பெற்றாக வேண்டும் எனும் கொள்கையை தேசிய கடமையாக நினைத்து அதற்காக மொத்த நாட்டு மக்களும் உழைத்த நேரமும் அதுவே அதன் காரணமாக வத வதவென வரிசையா படுத்துக் கிடக்கும் தங்கள் குழந்தைகளுக்கு கூழோ கஞ்சியோ ஏதேனும் தயாரிக்கத் துவங்க வேண்டும். அந்நேரம் பனையிலிருந்து கூவும் சத்தம் வரும் உடனே அக்கானி எடுக்க குடத்துடன் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓட வேண்டும். பதினொன்று மணிக்குள் பனையேறி தனது வேலையை முடித்து விட்டு இறுதியாக சில பனைகளிலிருந்து கள்ளை எடுத்து போதும் போதும் எனும்வரை குடித்து மிச்சத்தை விற்றுவிட்டு வருவான். இவள் அக்கானியைக் காய்ச்சி கருப்பட்டி தயாரிக்க வேண்டும். அக்கானியைக் காய்ச்சி கருப்பட்டி தயாரிப்பது என்பது எதோ அரை மணிநேரமோ ஒருமணிநேரமோ அக்கானியை அதற்குரிய பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சி இறக்கும் சமாச்சாரம் அல்ல. அது மணிக்கணக்காகக் காய்ச்ச வேண்டியது. அத்துடன் அவள் வேலை முடியவா செய்யும் அதைக் கொண்டு சந்தையில் விற்று காசாக்க வேண்டும். நிமிடமொன்றும் ஓய்வில்லா வாழ்க்கை பனையேறியின் மனைவியினுடையது. இது பனையேறி ஒருவனின் மனைவியின் ஒருநாள் கடமை. கூடப் பனையேறி கொஞ்சம் முரடனாகவும் இருந்தால் அவள் வாழ்வு நரகம் தான் என்று சொல்ல தேவையில்லை தானே. நாம் பார்க்கும் இந்தப் பனையேறியும் முரடன் தான். முரடு என்றால் அப்படியொரு முரடன். பனைமரத்தை விட கடும் முரடன் அவன் வாயால் பேசுவதை விட மனைவியை அடித்துவிட்டுப் பேசுவதே அதிகம். குடும்பத்திற்காக உழைக்கவும், அவனிடமிருந்து அடிபடவும் அவனுக்கு ஆண்டொன்றுக்குப் பிள்ளை ஒன்று பெற்று போடவுமே பிறப்பெடுத்து வந்ததாக எண்ணி ஜீவித்து வந்தாள் அவன் மனைவி. ஒருநாள் ஊராராக ஒன்றிணைந்து கோவில் ஒன்றிற்குச் செல்கிறார்கள். அங்கிருக்கும் பூசாரி அவர்களைப் பார்த்து சொல்கிறார் “இக்கோயிலுக்கு ஒரு விசேஷம் உண்டு மணமான பத்தினி பெண்கள் இக்கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தால் அதைக் கோயில் விளக்கில் ஊற்றி எரிய வைத்தால் நின்று எரியும்” என்கிறார். போனவர்கள் அத்தனை பேரும் தயங்கி யோசித்து நிற்கச் சட்டென யோசிக்காமலே இவள் தண்ணீர் எடுத்துக் கொடுக்க நின்று எரிந்ததாம் அவ்விளக்கு. அவன் அடித்த அடிகளோ செய்த, செய்யும் கொடுமைகளோ மனதளவில் கூட அவனுக்கு அவளால் துரோகம் நினைக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒன்று சொல்லலாம் ஒழுக்கம் என்பது வசதி பார்த்தோ வாழும் வாழ்வியல் பார்த்தோ வருவதல்ல அது மனித மனங்கள் சார்ந்தது. வளர்ந்து வந்த விதம் சார்ந்ததுவாக தான் இருக்க வேண்டும். இப்படியும் பெண்கள் இருந்திருக்கிறார்கள் அதுவும் எங்கள் ஊரிலே இருந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தான். இக்கதையை எனக்குச் சொன்ன தாத்தாவும் இறந்து விட்டார். இச்சம்பவத்திற்குரிய பாட்டி இறந்து புதைத்த இடம் கூட இன்று தெரியுமா என்பது சந்தேகமே. இதை எங்களுக்குச் சொன்ன தாத்தா இதைச் சொல்லும் நேரம் அவர் அப்பாட்டியைப் பற்றி சொன்ன ஒருவாசகம் “இவளையெல்லாம் கோவில் கட்டி கும்பிடலாம்டா” என்றது இன்னும் எனது மனதில் பசுமையாய் நிறைந்து நிற்கிறது. முன்பு ஒழுக்கம் கெட்டு வழிதவறி போன கோவலனுக்கு ஒரு கண்ணகி. அன்றைக்கு அந்த முரடன் பனையேறிக்கு ஒரு பாட்டி. இன்றைக்கு நம்பி வந்தவளை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ராகவிற்கு ஒரு வைகா. இது போல் இன்னும் ஆங்காங்கே வைகாக்கள் இருப்பதால் தான் நாம் சொல்லும் நமது ஒழுக்கமும், பண்பாடும், கலாச்சாரமும் ஆங்காங்கு இன்னும் உயிருடன் ஜீவித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியா உண்மை… பகுதி 21 அன்றைக்கும் வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் வைகா. வழியில் வைத்துத் தான் பார்த்தாள் அவளுடன் வேலை செய்யும் அக்கா ஒருத்தரையும் அவருடன் வரும் அவள் மகளையும். இருவரும் இணைந்து வருகிறார்கள், ஆனால் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை, இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவுமில்லை. இணைந்து நடந்து வருகிறார்கள் ஆனாலும் அவர்கள் மனம் இணைந்திருக்கவில்லை. எலியும் பூனையும் போலத் தான் அவர்கள் உள்ளம் இருக்கிறதென்பதை அவர்கள் முகம் சொல்கிறது நமக்கு. காரணம்! வேறென்ன? பெற்றோருக்கு பிடிக்காத காதல் தான்! அக்கதை வைகாவிற்கு நன்கு தெரியும். நமக்குத் தான் புதிது. அந்த அக்கா பலமுறை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள் தன் மகளின் காதல் குறித்து வைகாவிடம். சொல்லும் போதெல்லாம் தன்னை தான் அவ்விடத்தில் பொருத்தி நினைத்துக்கொள்வாள் வைகா. இவள் ஒத்துக்கொண்டால் இவளைக் கட்டிக்கொள்ள அந்த அக்காவின் அண்ணன் பையன் காத்திருக்கிறான். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லை சிறு வயது முதல் நன்கு தெரிந்தவன். வேலை செய்து கஷ்டப்பட்டு படித்து முன்னேறியவன். நல்ல வேலை கிடைத்திருக்கிறது. வசதி வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல குடும்பம் எல்லோருக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. இருவருக்கும் ஜோடிப் பொருத்தமும் சிறப்பாக இருக்கும். அவளைப் பற்றி இவர்கள் ஆயிரம் கனவுகள் கண்டு வைத்திருந்தால் அவள் எதோ ஒரு தேவாங்கு போலிருப்பவனைக் கைகாட்டி அவனைத் தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். அவன் ஊரில் கார் ஓட்டுபவன் ஜாதிக்கட்சியில் உள்ளவன். சாதிவெறி பிடித்த தலைவன் பேச்சைக் கேட்டு அடி தடிகளுக்கு சென்றதில் இதுவரையில் ஐந்து ஆறு வழக்குகள் அவன் மேல் உண்டு. இல்லாத கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை. சொன்னால் இவள் தலையில் ஏறவில்லை எல்லாம் காதல் கிறக்கம் பழைய வைகா போலவே. சில நல்ல குடும்பத்து பெண்கள், நன்கு படித்த பெண்கள் சரியாக தனக்குச் சற்றும் பொருத்தமேயில்லாத ஆண்களிடம் எப்படி தான் விழுந்து போய் விடுகிறார்களோ?! அப்படி தான் அவளும் விழுந்து கிடக்கிறாள். காதல் போதை அவள் கண்ணை மறைத்திருக்கிறது. தன் மூளையை வேலை செய்ய விடாமல் மழுங்கடித்து வைத்திருக்கிறது. ஒரு முறை ஒரே ஒரு முறை அவளை யோசிக்க வைத்துவிட்டாள் போதும். அதன் பின் அவள் பிழைத்துக்கொள்வாள். எப்படியேனும் அதைச் செய்ய தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தாள் வைகா. தன் நிலை அவளுக்கும் வந்துவிடக் கூடாது எனும் எண்ணம் கொண்டாள். லேசாக அவளுடன் பேச்சு கொடுத்தாள். நன்றாகத் தான் பேசினாள். சிறிது நேரத்திற்குள்ளாகவே அக்கா… அக்கா… என்று உரிமையாய் வைகாவிடம் ஒட்டிக்கொண்டாள். வைகாவின் குணம் அப்படி யாரும் எளிதில் அவளிடம் ஒட்டிக்கொள்வர். அம்மா எதோ வாங்கி வருவதாகச் சொல்லி அவளை வைகா வீட்டில் விட்டுச் சென்றது வைகாவிற்கு வசதியாகப் போனது. தேவையான தனிமை கிடைத்தது. வைகாவின் வீட்டில் சென்றதும் வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தாள் அவள். குடங்கள் சில உடைந்து கிடந்தன, கால் இல்லாத நாற்காலி, சொட்டலும் பொத்தலுமான பாத்திரங்கள் தன் வீட்டிற்கும் அவ்வீட்டிற்கும் சற்றும் பொருத்தமில்லை என்பதை உணர்ந்தாள். வீட்டுச் சூழல் சரியில்லை என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. அவள் முகம் மாறியதைக் கவனித்தாள் வைகா. அவள் வைகாவை பார்த்தாள் பார்த்ததும் அவளிடம் வைகா சொன்ன முதல் வார்த்தை “நானும் காதல் திருமணம் செய்து கொண்டவள் தான்” கண்களை நிலத்தில் நிறுத்தி “ஏன் இப்படி வீடும் வீட்டுப் பொருட்களும் கிடக்கிறது?” “பொருத்தமில்லாத காதல்; பொருந்தாத வாழ்க்கை; அதன் விழைவு இது” அவளுக்குப் புரிந்தது அக்காவிற்கு நம் காதல் தெரிந்திருக்கிறதென்று. “அவர் கெட்டவர் என்பது காதலித்த போது தெரியலியா?!” “இல்லியே, காதலித்த போது நன்றாகத் தான் இருந்தார். இவரைப் போல் நல்லவர் உலகில் இல்லை என்று தான் எண்ணியிருந்தேன். என்ன செய்ய கல்யாணத்திற்குப் பின்பு தான் ஒவ்வொன்றாய் தெரிய துவங்கியது.” “திருத்த முயற்சிக்கவில்லையா அக்கா?” பெருமூச்சொன்றுடன் “அழுது பார்த்தேன், கெஞ்சிப் பார்த்தேன், கொஞ்சிப் பார்த்தேன், கோபப்பட்டும் பார்த்தேன் முடிவு தோல்வி தான். முடிவில் முடியாதென்று விட்டு விட்டேன்” “காதலிப்பவன் எல்லாம் இப்படி இல்லைக்கா” “அப்படி தான் எல்லாப் பெண்களும் நம்பித் தொலைக்கின்றார்கள். அவனைப் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள ஆசைப்படுவதே இல்லை.” “காதல் கல்யாணம் பண்ண எல்லோரும் இப்படி தான் இருக்கங்களா என்ன?!” சற்று கோபத்துடனே, “பெரும்பாலும் இப்படியே” நிதானமாகவே சொன்னாள் வைகா. “ஏன் வீட்டிலுள்ளவர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில் பிரச்சனையே இல்லையா? அவர்கள் அத்தனை பேரும் சந்தோஷமா தான் இருக்கங்களா?!” “இல்லை! அங்கும் பிரச்சனைகள் உண்டு. ஆனால் தேவையென்று ஓடிச் செல்ல பெண்ணுக்குத் தாய் வீடு உண்டு. பையனை ஏனென்று கேட்க அவன் அப்பா அம்மா உண்டு. சொந்த விருப்பத்திற்கு வந்த பெண்ணிற்கு யார் தான் உண்டு?! அடங்காமல் திரியும் அவனை யார் கண்டிப்பது?” “அப்போ காதலும், காதல் கல்யாணமும் கூடாதிங்கிறீங்களா அக்கா?” “காதல் தவறில்லை, காதலிப்பதும் தவறில்லை. காதலித்தவனை எப்படி கரம் பிடிக்கப் போகிறோம் என்பதைக்குறித்த அறிவு அவசியம். காதலித்தவனை வீட்டார் அனுமதியுடன் கரம் பிடிப்பது சரி. நானும் காதலித்தவள் தான் காதல் கொடுக்கும் இன்பம் போல் இவ்வுலகில் வேறெதுவும் கொடுத்து விட முடியாது என்பதை உணர்ந்து அறிந்தவள் தான். காதல் கொடுக்கும் வலி போலும் வேறேதும் கொடுத்துவிடவும் முடியாது. காதலுக்காக உயிரையும் விடத்துணிந்தவள் நான் தெரியுமா உனக்கு?! காதலிக்காதவர் யார் தான் இருக்கிறார்கள்? ஆனால் நாம் யாரைக் காதலிக்கிறோம் என்பது முக்கியம். அவர் நமக்குப் பொருத்தமானவராக என்பது அதை விட முக்கியம். நமது விட்டிலுள்ளவர்களுக்கு பிடித்தவரா அதுவும் அவசியம். ஏனெனில் நாம் காதலிப்பது கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தான். மகிழ்ச்சி என்பது திருமணம் செய்து கொள்ளும் இருவர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல அது இரு குடும்பம் சம்மந்தப்பட்டது. நம்மை உயிராக மதித்து வளர்த்த அத்தனை பேரையும் அழ வைத்து விட்டு அத்தனை பேரையும் தூக்கி எறிந்துவிட்டு அவர்களைத் தலை குனிய வைத்து விட்டு நம்மால் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?! அப்படி சந்தோஷமாக வாழ்ந்து விட்டால் அது குடும்ப வாழ்வு அல்ல. வெறும் அது சுயநல வாழ்வே. அவர்களின் சாபமாக தான் இருக்க வேண்டும் அலங்கோலமான என் வாழ்வு" எனும் இடத்தில் வைகா கண்கலங்கி போனாள். பேசமுடியாமல் தன் பேச்சை நிறுத்தினாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை வைகாவின் தோள் மீது கைவைத்து “அக்கா” என்று மட்டும் அழைத்தாள். முந்தானையால் கண்ணீரை துடைத்துவிட்டு தன்னை தேற்றிய வைகா மீண்டும் தொடர்ந்தாள்… பகுதி 22 தன்னுடைய சோகக்கதையை நினைவுகூர்ந்த நேரம் தன்னை மீறி வந்த கண்ணீரை தன்னுடைய முந்தானையில் துடைத்துக்கொண்டு தன்னைத் தேற்றித் தொடர்ந்த வைகா அவளிடம் கேட்டாள், “எத்தன மாசமா இவனை உனக்குத் தெரியும்?” “ஒரு மூன்று மாசமா அக்கா!” “என்னனென்ன தெரியும் அவன பத்தி?” “எல்லாம் தெரியும் அக்கா!” “மூன்று மாசத்துக்குள்ள அத்தனையும் தெரிஞ்சிடிச்சா?!” ஆம், என்பதற்கடையாளமாய் தலையசைத்தாள் அப்பெண். இக்கேள்விகள் முன்பு ஒருமுறை கேட்கப்பட்டது தான். அன்றைக்குக் கேட்டது வைகாவிற்கு திருமணம் முடித்து வைத்த அந்த ரெஜிஸ்தார். பதில் சொன்னவள் வைகா. இன்றைக்குக் கேட்பது வைகா. பதில் சொல்வது அப்பெண் காலம் எப்படியெல்லாம் மனித வாழ்வை மாற்றிப்போடுகிறது பாருங்கள். “சரி அவனைப் பற்றி விசாரித்தறிந்தாயா?” “இல்லை” “வீட்டில் உள்ளவங்க அவன பத்தி என்ன சொன்னாங்க?” “கெட்டவன்” “நீ என்ன சொல்ற?” “அவன் ரொம்ப நல்லவன் அக்கா. எங்க காதல பிரிக்க இவர்கள் போடுற நாடகம் இது.” “சரி அவங்க பேச்சு நாடகமாகவே இருக்கட்டும். நீ அவனைச் சோதித்து அவன் சரியானவனா? உனக்கு பொருத்தமானவனான்னு பார்த்து கல்யாணம் பண்ணலாமே? அதில் தவறேதும் இல்லை தானே.” “சரி அக்கா! அவன் மேல நம்பிக்கை இல்லாம இல்ல நீங்க சொல்றதுக்காக பண்ணலாம். என்ன சோதனை பண்ணாலும் அதில அவர் ஜெயிப்பார் அக்கா. எங்க காதல் கைகூடும்.” “அப்படி நடந்த மகிழ்ச்சி. அதுக்கு என்னோட வாழ்த்து தான் முதல் வாழ்த்தா இருக்கும்” “நன்றிக்கா, எப்படி சோதிக்கிறதாம்? அதையும் நீங்களே சொல்லுங்க நான் அப்படியே செய்றேன்” “அவன் முகநூலில் இருக்கிறானா?” “ஆமா” “நீ?” “இருக்கிறேன்” “புதுசா பெண் பெயரில் பேக் ஐடி ஒன்றைத் துவங்கி அவனுடன் நட்பாகு, நட்பாகிட்டு சாட் பண்ணு. அப்றம் உனக்கே தெரியும் அவன் யாரென்று” “சரி” என்று கூறி சென்றாள் அப்பெண். அவளுக்குப் பரிபூரண நம்பிக்கை அவன் மீதும் அவர்கள் காதல் மீதும். இந்த உலகில் யாரும் அறிவுரைகளையும், ஆலோசனைகளை விரும்புவதேயில்லை. காதலிப்பவர்கள் எனில் சொல்லவே தேவையில்லை. ஆனால் அனுபவங்களை யாரும் அத்தனை எளிதில் உதறித் தள்ளுவதும் இல்லை. காதலித்துத் தோற்று போன வைகாவின் அனுபவம் அவள் மனதை அசைத்தது. அதுவே சோதித்து பார்க்கிறேன் எனும் மனநிலைக்கு அவளைக் கொண்டு வந்து நிறுத்தியது. அதுமட்டுமல்ல தன்னை போல் இன்னொருத்தர் அவஸ்தை பட்டு விடக்கூடாது எனும் அக்கரை வைகாவின் பேச்சில் தெரிந்தது. அதுவுமே தான் அவளை யோசிக்க வைத்தது. அம்மா, அப்பா, சொந்தம், பந்தங்களால் செய்ய முடியாததை வைகாவின் அனுபவம் செய்ய தூண்டியது. வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக நம்பிக்கையோடே வைகா சொன்னதை செய்தாள். புதிதாகப் பெண் பெயரிலே கணக்கு ஒன்றைத் திறந்தாள். அவனுக்கு நட்பழைப்பு அனுப்பினாள். சாட்டிங்கை துவங்கினாள். ஒன்றொன்றாய் அவனைப் பற்றி அறிந்து கொள்ளலானாள். கொஞ்ச நாளில் முழுமையாக அவனை விட்டு விலகினாள். அதன் பின் வைகா அவளிடம் அவனைப்பற்றிப் பேச வேண்டிய அவசியம் வரவில்லை. அவளுடைய திருமண பத்திரிக்கை வைகாவின் வீடு தேடி வந்தது. அதில் அவள் அம்மா அப்பா அத்தனை பேரும் விரும்பிய அவளுடைய மாமா பையனுடனே நிச்சயம் ஆகியிருந்தது. அவளுடைய திருமணத்திற்கு தன்னுடைய மகளுடன் சென்றாள் வைகா. அங்கு அவளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. வைகாவை பார்த்ததும் வாசலுக்கே ஓடிவந்து கட்டியணைத்து உள்ளே அழைத்துச்சென்றாள் மணப்பெண்ணின் தாய். மணமகனுடன் மணப்பந்தலில் நின்று கொண்டிருந்த பெண்ணும் நன்றி கலந்த பார்வையோடு அவளை இனிப்பாய் பார்த்தாள். மணப்பெண்ணுடன் வேறு இருவர் கூட வைகாவை அப்போது பார்த்தனர். வீட்டை விட்டு ஓடிவந்த பிறகு நேருக்கு நேர் அவளைப் பார்த்திராத வைகாவின் அப்பாவும் அம்மாவும் தான் அது. எதிர்பார்க்கவேயில்லை வைகா! அங்கு வைத்து அவர்களைப் பார்ப்போம் என்று எதிர்பார்க்கவேயில்லை அவள்! அவர்களை அவர்கள் முகத்தை நேராகப் பார்க்க முடியவில்லை அவளால் தலையை குனித்துக் கொண்டாள். அத்திருமணத்திற்குச் செல்கையிலும் வைகா சாதாரணமான சாரி ஒன்றையே கட்டியிருந்தாள். கைகளில் வளையல்கள் இல்லை. காலில் கொலுசும் இல்லை. கழுத்தில் சங்கிலிகள் இல்லவே இல்லை. தாலியில் பொட்டு தங்கம் கூட இல்லை. காலில் ஒரு செருப்பு கூட இல்லை. கண்ணைச் சுற்றிலும் உழைப்பின் பலனாக கருவளையம் ஒன்று உருவாகியிருந்தது. செந்தூரத்தில் ஒரு பொட்டு வைத்திருந்தாள் அதொன்றே அவளைக் களையாய் காட்டிக்கொண்டிருந்தது. வைகா இப்போதெல்லாம் தன்னை அழகாய் காட்டிக்கொள்வதில் அக்கரைக் கொள்வதே இல்லை. எங்குச் சென்றாலும் எளிமையாய் செல்வதே வழக்கம். தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருந்தாள். அதற்காக இன்றைக்கு வருத்தப்பட்டாள். அவர்கள் வருவது அறிந்திருந்தால் அவர்களிடம் தான் நன்றாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவேனும் கவறிங்ஙிலாவது எதாவது நகை நட்டுகள் வாங்கிப் போட்டு வந்திருப்பாள். என்ன செய்ய? இவர்கள் இத்திருமணத்திற்கு வருவார்கள் என்று கனவா கண்டாள் அவள்? சில ஆண்டுகளுக்குப் பிறகு எதேச்சையாக முகத்தோடு முகம் சந்திக்க நேர்ந்ததில் வைகாவின் மனமும் அவள் பெற்றோர் மனமும் பலவாறு சிந்திக்கத் துவங்கியது. வைகாவின் மகள் அவர்கள் யார் யாரென்று வைகாவை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். அவள் மனம் படபடத்துக்கொண்டிருந்தது … பகுதி 23 எதிர்பாராமல் திருமண வீட்டில் சந்தித்த தங்கள் மகள் வைகாவை அவள் பெற்றோரும் முழுமையாய் கவனித்தனர். அவளிடம் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. கூட அவள் சொல்லாமலே அவள் படும் துயரங்களும் புரிந்தது. அவள் சொல்லிச்சென்ற, எதிர்பார்த்துச்சென்ற வாழ்வல்ல அவள் வாழ்வது. தாங்கள் வேண்டாம் வேண்டாம் இப்படி ஆகிவிடும் என்று எச்சரித்த வாழ்வே தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று விளங்கியது. எங்கள் சொல் பேச்சு கேட்காமல் போனதால் தான் உனக்கு இந்நிலமை என்று அவர்கள் மனம் மகிழவில்லை. மாறாக அவள் நிலை அவர்களுக்குத் துக்கத்தை தான் தந்தது. மகள் கஷ்டப்படுகிறாள் என்பது புரிந்ததும் வலித்தது அவர்களுக்கு. எப்படியெல்லாம் செல்லமாக வளர்ந்தவள். வீட்டில் ஒரு நாள் கூட ஒரு வேலை கூட செய்யாமல் வளர்ந்தவள் வாழ்வு இப்படியா ஆக வேண்டும் என்றிருந்தது அவர்களுக்கு. அருகில் சென்று பேசத் தோன்றியது. கட்டியணைக்கத் தோன்றியது. நாங்கள் உனக்காக இன்னமும் இருக்கிறோம் என்று அவள் கன்னம் தட்டி ஆதரவாகக்கூற வேண்டும் போலிருந்தது. அவள் அம்மாவிற்கு அழுகையே வந்தது. ஆனால் அவர்களாக சென்று பேச முடியவில்லை எதோ ஒன்று அவர்களைத் தடுத்தது. அப்போது வைகா தங்களிடம் வந்து பேச வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். தங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் தங்கள் பேத்தியையேனும் அருகில் விடமாட்டாளா என்று ஏங்கினர். ஒருமுறை ஒரே ஒருமுறை அவளாக வந்து பேசிவிட்டால் போதும் தங்கள் கோபதாபங்களை மறந்து மன்னித்து மனதார அவளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால் வைகா பேசவில்லை, அவள் வைராக்கியக்காரி!. தோற்றுப்போய் அவர்கள் முன்னிற்க அவளால் முடியவில்லை. அவளுக்குப் புரிந்தது இனி இங்கு இருந்தால் தன்னுடைய பெற்றோருடன் பேசாமல் தன்னால் இருக்க முடியாது என்பது. இனியும் இங்குத் தாமதித்தால் அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்கும்படிக்கூறி அவர்கள் கால்களில் விழுந்து கதறிவிடுவாள் என்பதை உணர்ந்தாள். தன் வைராக்கியம் உடைந்து தூள் தூளாகி விடுவது நிச்சயம் என்பது புரிந்தது அவளுக்கு. மெல்ல எழுந்தாள் சாப்பிடவும் இல்லை, சாப்பிட விருப்பமும் இல்லை. மணப்பெண்ணிடமோ பெண்ணின் தாயிடமோ சென்று விடைபெற்றுக் கொள்ளவுமில்லை. மகளின் கையைப்பிடித்தாள் நேராக தன்னுடைய வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். முகமெல்லாம் மாறிப்போனது, கண்கள் நிறைந்தது, அவள் நெஞ்சு கனத்தது, மனமெல்லாம் தன் பெற்றோரே நிறைந்திருந்தனர். அவர்கள் தன் மீது பொழிந்த களங்கமற்ற அன்பு அவளை ஆட்கொண்டிருந்தது. குற்ற உணர்ச்சியால் மனம் குறு குறுத்தது எப்படி எல்லாம் தடுத்துப்பார்த்தனர். என்னவெல்லாம் சொல்லி பார்த்தனர் எதையும் கேட்கவில்லை. அவர்களையும் அவர்கள் ஆலோசனைகளையும் துளிகூட மதிக்கவில்லை. காதல்! காதல் தான் பெரிது! காதலன் தான் பெரிது! என்றெண்ணி அழியா அவமானத்தை அவர்களுக்குக்கொடுத்து வீட்டை வீட்டு ஓடிப்போய்விட்டோம். சொந்த விருப்பப்படி வந்து இன்றைக்குக் காதலிலும் வாழ்விலும் தோற்றுப்போய் நிற்கிறோம். தோற்றுப்போன முகத்தோடு அவர்கள் முன் அவளால் நிற்க முடியவில்லை. தோற்றுப்போய் அவர்கள் முன் மண்டியிட அவள் விரும்பவில்லை அதன் பொருட்டே கிளம்பிவிட்டாள். ஆனால் மனம் மட்டும் அவர்களைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. நினைவுகள் தன் பசுமையான பால்யகாலத்திற்கு திரும்பிச் சென்றது. கையைப் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த தன் அம்மாவின் கையை தட்டி “யாரம்மா அவர்கள்?” என்று கேட்டாள் அவள் மகள். நடந்து கொண்டிருந்த வைகா ஒருநிமிடம் நின்று தன் மகள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே சொன்னாள் “அவர்கள் உன் பாட்டி தாத்தாடா செல்லம்.” யாருக்குத் தெரியும்! ஒருவேளை அந்நேரம் தன் மகளை தன் தாயாகக் கண்டிருக்க கூடும் வைகா. யாரும் பார்ப்பதற்கு முன் தன் கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். அதை வேறுயாரும் கவனிக்கவில்லை ஆனால் அவள் மகள் கவனித்து விட்டாள் உடனே அவள் “ஏம்மா அழுற?” “கண்ணுல தூசி விழுந்துட்டுதுடா செல்லம்” என்று சமாளித்தாள் அவளை. “அவங்க பாட்டி தாத்தான்னா எப்டி? நம்ம வீட்டுப் பக்கத்து வீட்டுப் பாட்டி தாத்தா போலயா?” “இல்ல! உனக்கு நானும் அப்பாவும் போல எனக்கு அவங்க” “அப்போ அவங்க நம்ம வீட்டுக்கு வர்றதே இல்ல!” “அம்மா பெரிய தப்பு பண்ணிட்டேன். அதான் எம்மேல அவங்களுக்குக் கோபம் அதான் வர்றதில்ல” பிடித்திருந்த வைகாவின் கரத்தை விடுவித்துக்கொண்டு தன் இரண்டு கரங்களையும் அகல விரித்து “இவ்வளவு பெரிய தப்பா பண்ணீங்க அம்மா?” என்று கேட்டது அம்மழலை தன் மழலைமொழியில். அமைதியாக அதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டே அவள் கரங்களை கொஞ்சம் சுருக்கி “இவ்ளவு தப்பு தாண்டா” என்றபடி அவளை தூக்கியெடுத்து கன்னத்தோடு கன்னம் ஒட்டி முத்தமிட்டுக்கொண்டாள் வைகா. முத்தத்தை வாங்கிய அக்குழந்தை வைகாவின் கரத்திலிருந்து சற்று யோசித்துவிட்டு “அம்மா! அப்போ நான் எதும் தப்பு பண்ணி நீ பேசலேன்னா தப்பு பண்ண ஆள் தான் வந்து பேசணும்ப இப்போ நீ தானே தப்பு பண்ணிருக்க அப்போ நீயா போய் பேச வேண்டியது தானே” என்றது மழலை குணத்தோடு. வைகாவிடம் ஒரு சிறுமௌனம் மீண்டும் வாயாடி அம்மழலை அதை நியாபகப்படுத்தும் விதமாக “அம்மா” என்றது. அவள் முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே “மறுமுறை பார்த்தால் நிச்சயம் பேசுறேன் டா” என்றாள். அப்போது அவர்கள் ஒரு ஐஸ்கீரீம் கடையைக் கடந்து சென்று கொண்டிருந்தனர் அக்கடையைப் பார்த்துவிட்டாள் வைகாவின் சுட்டி மகள். “அம்மா கல்யாண வீட்டுக்கு கூப்டு போய் சாப்பாடு, நிறையக் கூட்டு பொரியல், பாயாசம், ஐஸ்கீரீம் எல்லாம் வாங்கி தர்றதா சொன்ன இப்போ எதுவுமே வாங்கி தராம வீட்டுக்கு கூப்ட்டு போற” என்று முகம் சுழித்தாள். வைகாவிற்கு புரிந்தது சிரித்துக்கொண்டே தன் மகளிடம் “உனக்கு ஐஸ்கீரீம் தானே வேணும் வாடி வாயாடி” என்றபடி ஐஸ்கீரீம் ஒன்றை அவள் கரங்களில் வாங்கிக் கொடுத்தாள். பதிலுக்குச் சிரித்துக்கொண்டே இரு முத்தங்களைப் பரிசளித்தாள் அவள். ஐஸ்கீரீமை ஒருமுறை அல்லது இருமுறை தான் சுவைத்திருப்பாள் ஐஸ்கீரீமிற்கு காசைக் கொடுக்க நின்ற தன்னுடைய அம்மா வைகாவை பார்த்து “அம்மா… அம்மா…” என்று அலறினாள் அவள் வைகா திரும்பிப்பார்த்ததும் “அதோ பாரம்மா நம்ம பாட்டி தாத்தா” என்றாள். வைகா திரும்பி பார்க்கையில் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது அவளது பெற்றோரின் வாகனம். தன் மகளும் தங்கள் பேத்தியும் சாப்பிடாமல் பசியோடு கிளம்பிச்சென்ற பின்பு அவர்களால் மாத்திரம் எப்படி வயிறு நிறைய சாப்பிட முடியும்?! இதோ அவர்களும் சாப்பிடாமலே கிளம்பிவிட்டார்கள் அது வைகாவிற்கு புரிந்தது. வைகாவின் மனதில் அவள் பெற்றோரும் அவள் பெற்றோர் மனதில் அவளுமே நிறைந்திருந்தனர். வைகா நின்ற கடையருகே ஒருஜோடி கிளியும் அதன் இரு குட்டி கிளிகளும் கீச் கீச் என மகிழ்ச்சியில் சப்தமிட்டபடி வானில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தது. அதை ஏக்கத்தோடே பார்த்துக்கொண்டிருந்தாள் வைகா… பகுதி 24 வழக்கம் போல் வேலைக்குச் சென்றாள் வைகா. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவள் வேலைக்குச் செல்லும் அந்நிறுவனம் அழகுபடுத்தப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு விடுமுறையில் சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கு வண்ண வண்ண பலூன்கள் கட்டிப்பறக்க விட்டிருக்கிறார்கள். வரிசை மாறாமல் கட்டிவிட்ட தோரணங்கள் காற்றில் அசைந்தாடுகின்றன. காரணம் கேட்டாள், நிறுவனத்தைத் துவங்கி நாப்பது ஆண்டுகள் முடிவதன் கொண்டாட்டங்கள் தான் இவையென்றறிந்தாள். மதியம்வரை வேலை அதற்குப் பின் கொண்டாட்டங்கள் துவங்கியது. அந்நிறுவனத்தை தற்போது கவனித்து வருவது முதலாளியின் மகன். அக்கொண்டாட்டத்திற்கு அந்நிறுவனத்தைத் துவங்கியவரான அவரது அப்பாவும் உடன் அவர் மனைவியும் வருகிறார்கள் என்றறிந்தாள். விழாவின் முக்கிய பகுதியாக அந்நிறுவனத்தை துவங்கியவர் பேசும் வேளை வந்தது. பெரிய பேச்சாளன் போலன்றி எளிமையாகத் தான் பேசினார் அவர். தன் அனுபவங்களையும் தன் வாழ்க்கையையும் குறித்தே அங்கு அவர் பகிர்ந்து கொண்டார். தான் அவ்விடத்தில் பிறந்தவன் அல்லவென்று தன் வாழ்வின் கதையை துவங்கினார். கையில் படித்த சான்றிதழ் கூட எங்கேனும் போய்வர ஒரு ஸ்கூட்டருடன் துவங்கிய தன் வாழ்வு இன்று ஐந்தாறு நிறுவனங்கள், சொந்தமாய் சில வீடுகள், வீட்டில் அத்தனை பேருக்கும் தனித்தனியாய் வாகன ஓட்டிகளுடன் வாகனம் என நீண்ட தன் வாழ்க்கை பாதையை சுருங்கச் சொன்னார். இன்று தனக்கு பல நண்பர்கள் உண்டு. சொந்த பந்தங்கள் அத்தனை பேரும் சுற்றிலும் உண்டு. உதவிக் கேட்பவர்கள் பலர் உண்டு. உதவியென்று போய் நின்றால் கண்ணை மூடிக்கொண்டு கூட கோடிகளில் கடன் கொடுக்க வங்கி மேலாளர்களும் உண்டு. ஆனால் தான் தன்னுடைய வாழ்வில் போராடிக்கொண்டிருந்த காலத்தில் தனக்கு உதவவும் தோளோடு தோள் நிற்கவும் தன்னம்பிக்கையாகவும் தடுமாறாமல் தாங்கி பிடிக்கவும் தன்னுடைய காதலுடன் காதலியும் மட்டுமே இருந்தாள். அவளால்… அவளால்… மட்டுமே தான் இன்று நீங்கள் காணும் என்னுடைய உயரம் அத்தனையும். அப்போது எனக்கு அவள் முக்கியமாகத் தெரிந்தாள். அவள் மட்டுமே முக்கியமாகத் தெரிந்தாள். எல்லோர் காதலுக்கும் போல் எங்கள் காதலுக்கும் எதிர்ப்பு வந்தது. யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் அப்போதும் அவளுக்கு மட்டும் என்னைப் பிடித்திருந்தது. யாரும் ஒத்துக்கொள்வது போலில்லை வா ஓடிப்போய்விடலாம் என்று அழைத்தேன். அவள் சொன்ன அவ்வார்த்தை தான் என்னை மாற்றியது இரவு பகல் பாராமல் உழைக்கத் தூண்டியது. வெற்றியாளனாயும் மாற்றியது. அவள் சொன்னது இது தான்… “எக்காரணம் கொண்டும் என் வீட்டிலுள்ளவர்களை தலைகுனிய வைத்துவிட்டு உங்களுடன் ஓடிவரமாட்டேன். ஏன் உங்களை என் வீட்டிலுள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை? காசு தானே காரணம்! நல்ல வேலை தானே காரணம்! அதைச் சம்பாதித்து விட்டு வாருங்கள். அதற்குள் எத்தனைப் பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்து அதுவரை நான் உங்களுக்காய் காத்திருப்பேன்” என்றாள். அதைச் சொல்லியபோது மேடையில் இருக்கும் அவர் மனைவியை அவர் ஒருபார்வை பார்த்தார் அவரோ தன் கண்களைத் துடைத்துக்கொண்டார். அந்நேரம் வைகாவும் அவர் மனைவியைப் பெருமையோடு ஒரு பார்வை பார்த்தாள். பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார் அவர் அவ்வார்த்தை தான் முன்னேற வேண்டும் எனும் வெறியையும் வேகத்தையும் எனக்குத் தந்தது. அதுவே தான் என்னை நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வைத்தது. முன்னேறவும் வைத்தது. எனக்காக காத்திருந்த காலங்கள் அவளுக்கும் அத்தனை எளிதானதாக இல்லை. அவள் தங்கை மணமுடித்துப் போன பின்பும் கூட எனக்காக காத்திருந்தாள். எத்தனைப் பிரச்சனை வந்த போதும் என் மேலிருந்த அவள் காதலும் நான் தான் வேண்டும் எனும் வைராக்கியமும் அவளை விட்டகலவில்லை. தொழிலில் ஜெயித்து நண்பர்கள் உதவியுடன் முதன் முதலாக இந்நிறுவனத்தைத் துவங்கிய பின் அவள் பெற்றோரே எனையழைத்து அவளை எனக்குக் கட்டி வைத்தனர். அவள் அருகில் இருக்க அன்று முதல் இன்று வரை காதலிலும், வாழ்வு, தொழில் என அத்தனையிலும் எனக்கு ஏறுமுகமே தொடர்கிறது என்று கூறி அமர்ந்தார். நினைவுப் பரிசுகளும் தொழிலாளர்களுக்கு இனிப்பும், பரிசுகளும் வழங்க விழா அத்துடன் முடிந்தது. அன்றைக்கு வழக்கமாக வைகா வீட்டிற்குச் செல்லும் நேரத்தைவிடச் சற்று சீக்கிரமாகவே கிளம்ப முடிந்தது. வாழ்விலும் காதலிலும் ஜெயித்த அந்த ஜோடி திருத்த முடியாத தனது கடந்த கால தவறுகளை எண்ண வைத்தது. கடந்து சென்ற காலங்களை நினைக்க வைத்தது. அவ்வெண்ணங்களால் மனமெல்லாம் ஒரு தனிமை குடிகொண்டது. அவ்வழியே போவதும் வருவதுமாய் பலரிருக்க அவளென்னமோ தனிமையான ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதை போன்று உணர்ந்தாள். மனம் எதோ ஒன்றை இழந்ததைப் போன்று ஓர் வெறுமையை உணர்ந்தது. தான் வீட்டிற்கு எப்போதும் செல்லும் பாதை வழியாக அல்லாமல் மாற்றுப் பாதை வழியாகச் செல்லத்துவங்கினாள். இப்போதெல்லாம் அவள் இப்பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், இவளும் ராகவும் காதலர்களாகச் சுற்றித்திரிந்த காலத்தில் இவ்வழியின் அருகில் உள்ள பூங்காவில் தான் அதிக நேரம் செலவழித்திருக்கிறார்கள். அப்பூங்காவை நெருங்கிச் சென்று பார்த்தாள் அங்கு பூத்துக் குலுங்கும் மரங்களும், செடிகளும் மகிழ்ச்சியாக அப்படியே இருக்கின்றன. அங்கிருக்கும் அழகிய இருக்கைகளும் அப்படி அப்படி இருக்கின்றன. அங்கிருக்கும் மனிதர்களும், குழந்தைகளும், காதலர்களும், ஏன் நீரூற்றுகளும் கூட மகிழ்ச்சியாய் இருக்கத் தான் மட்டும் மகிழ்ச்சியை இழந்து சோக முகமாய் இருப்பதாய் தோன்றுகிறது அவளுக்கு. பூங்காவினுள் நீண்ட நெடிய நாட்களுக்குப் பின் தனியாகச் சென்றாள் அவள். சிறிதாய் செயற்கை குளம்போலொரு நீரூற்று எதிரே இருவர் அமர்ந்துகொள்ளும் ஓர் இருக்கை. அவ்விருக்கைக்கு குடைபிடித்தாற் போல் சரியாக அதற்கு மேலொரு மகிழமரம் தாங்கள் காதலர்களாகச் சுற்றித்திரிந்த காலங்களில் நேரம் காலம் தெரியாமல் அவ்விருக்கையில் போய் அமர்ந்து கொள்வது தான் வழக்கம். இவர்கள் போகும் நேரம் வேறு யாரேனும் அவ்விருக்கையில் அமர்ந்திருந்தால் அப்படி கோபம் வரும் அவளுக்கு. இன்றும் அவ்விருக்கையில் இருவர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவ்விருக்கையில் அமர்ந்துகொண்டு காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்ததும் வைகாவிற்கு கோபம் வரவில்லை, வெறுப்பு வரவில்லை மாறாக அவர்களைப் பார்க்கையில் பொறாமை வந்தது. வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் வைகா. வைகா மட்டுமல்ல கிட்டத்தட்ட பூங்காவிலுள்ள அத்தனை பேர் கண்களும் அவர்களைத் தான் அஜ்ஜோடியைத் நோக்கிக்கொண்டிருந்தது… பகுதி 25 பூங்காவில் வைத்து வைகா பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்த அந்தக் காதலர் தலையில் மருந்துக்கும் ஒரு முடியில்லை. மீசையில் ஒற்றை முடியைக்கூடக் கறுப்பாக காண முடியவில்லை. முதுகில் கூன்விழுந்திருந்தது முகத்தில் சுருக்கங்களுக்கு குறைவேயில்லை. அவர் மனைவி தலை வெண்பஞ்சை போர்த்தியது போலிருக்கிறது. அங்கும் மருந்துக்கும் ஒற்றை முடி கறுப்பில்லை. ஆனால் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இருவரும் கறுப்பு பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரது வயதும் தொன்றுக்கும் நூறுக்கும் இடையில் இருக்கலாம். எனினும் அவர்கள் முகத்தில் களைக்கும், காந்திக்கும் ஒரு குறைவில்லை. அவர் முகத்தில் ஓர் கம்பீரம் தெரிகிறது. அவர்கள் முகத்திலோர் தெய்வீக அழகைக் காணமுடிகிறது. அவர்கள் கைகள் இரண்டும் பின்னி பிணைந்திருந்தன. அவர் எதோ அவர்கள் காதோரம் சொல்கிறார் வெட்கத்தோடு சிரித்து அவர் இப்போது அவர் காதில் பதிலுக்கு ஏதோ சொல்கிறார் இப்போது இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். வைகா என்ன அப்பூங்காவே பல்லில்லா அவர்களது அச்சிரிப்பில் சொக்கித்தான் போகிறது. அவர்கள் சிரிப்பை தானும் ரசிக்க வந்தது போல் அப்போது லேசாய் தென்றல் அவர்களைத் தீண்டிச்செல்கிறது அத்தென்றல் எங்கிருந்தோ பூக்களின் நறுமணத்தையும் சுமந்து வந்து அவர்களுடன் அத்தனை பேரையும் தழுவி செல்கிறது. அவர்கள் மேல் மகிழம்பூ பூமாரி சொரிந்து மகிழ்கிறது. அவர்கள் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தன் மகிழ்வைத் தெரிவிக்க எண்ணி மேலெழும்பிய நீரூற்று தோற்றுப்போய் திரும்புகிறது. அவர்கள் மீது அவர்கள் காதல் மீது கொண்ட பேரன்பின் காரணமாகத் தான் கதிரவனும் தன் கோபக்கதிர்களை பின்வலித்து மந்தகாரம் ஒன்றைப் பூமிமீது தவள விட்டிருப்பதாய் தோன்றியது. பறவைகள் சில அவர்களைக் கண்ட மகிழ்வில் கீச் மூச்சென அவர்களைக் குறித்தே எதோ கதை பேசிப் பறந்து செல்கின்றன. அவர்கள் இருவரையும் கண்ட மாத்திரத்திலே சலனமற்ற நீரூற்று போல் தனக்குள் ஓர் அமைதி வந்தமர்ந்துகொண்டது. ஆன்றோர் சான்றோர் சொல்லும் காதல் இதுதானோ காலையில் மலர்ந்து மாலையில் உலரும் பூப்போன்றது அல்ல காதல். இளமையில் துவங்கி இவர்கள் போல் இறுதிவரை உடன் வருவது தான் காதல் என்றெண்ணிக்கொண்டாள். அவர்கள் அருகினில் சென்று அவர்களிடம் பேசவேண்டும் போலிருந்தது. ஜெயித்த தங்கள் காதல் வாழ்க்கையின் சூட்சமத்தை கேட்டறிய வேண்டும் போலிருந்தது. அவர்கள் அருகினில் செல்ல தான் வாழ்ந்து கொண்டிருக்கும் காதலற்ற வாழ்வு அவளைத் தடுத்தது. சற்று நேரத்தில் அவர்கள் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு சென்றனர். அவர்கள் மெதுவாய் நடந்தனர் அது அவர்களது வயது மூப்பின் காரணமாக இருக்கலாம் அவர்கள் நடையில் சிறிது தள்ளாட்டம் தெரிந்தது அதற்கும் காரணம் அதுவே தான். ஆனால் அவர்களுக்கு ஊன்று கோல் தேவைப்படவில்லை. அவர்கள் பற்றிப்பிடித்திருந்த அவர்கள் கரங்கள் போதுமானதாக இருந்தது. அவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம் இருந்தது காதல் வாழ்வு அதை அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. கோர்த்திருந்த அக்கரங்களில் ஓர் அன்பு, ஓர் பாசம், ஓர் காதல் தெரிந்தது அது தான் இத்தனை காலம் அவர்களை இப்பூமியில் இம்மண்ணை ஒருத்தரையொருத்தர் புரிந்து கொண்டு நேசித்து வாழ வழிவகை செய்தது என்று புரிந்தது. அவர்கள் தலை மறையும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றாள் வைகா. அவர்கள் சென்ற பின் சுற்றும் முற்றும் பார்த்தாள் அப்பூங்காவில் இருந்த அத்தனை பேர் கண்களும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. அஜ்ஜோடி மீது ஒரு கணம் பொறாமை கொண்டாள். மறுகணமே அவர்களை நினைத்து நீண்ட அவர்கள் காதல் வாழ்வை நினைத்து பெருமை கொண்டாள். நோய்நொடி இன்றி பல்லாண்டு இப்புவனமதில் வாழ அவர்களுக்கு வழிவகை செய்துகொடு இறைவா என அவர்களுக்காய் பிராத்தனை செய்தாள். அவர்கள் சென்ற உடனே வீட்டிற்குச் செல்ல அவள் மனம் ஒப்பவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த இடம் ஒருகாலத்தில் மனம் முழுக்க காதலுடன் ராகவுடன் தான் அமர்ந்திருந்த இடம் அல்லவா. எத்தனை இன்பத்தைக் கொடுத்த நிமிடங்கள் அவை. உலகில் மற்றேதும் அவசியமில்லை மற்று யாரும் தேவையில்லை என்று எண்ணியிருந்த காலமல்லவா. மெல்லப் போய் அவ்விருக்கையில் அமர்ந்துகொண்டாள். இப்போது அவள் மனதில் காதலில்லை ஏக்கமும் வெறுமையும் மட்டுமே எஞ்சியிருந்தது. அவர்கள் அவ்விடம் விட்டுக் கடந்து சென்றதும் மனமெல்லாம் ஒருவித அமைதி அவளைச் சூழ்ந்துகொண்டது. கோவிலுக்குள் சென்று கருவறையில் இருக்கும் சாமியை பார்த்ததும் இருக்குமே அப்படி. சர்ச்சிற்கு சென்று ஜெபத்தை முடித்துத் திரும்புகையில் இருக்குமே அப்படி. மசூதியில் தொழுகையொன்றை முடித்து எழும்புகையில் இருக்குமே அப்படி. மெல்ல அந்தக் கைபிடியில் கையை வைத்தாள் அக்கைபிடியில் அவள் கைவைத்திருக்கையில் தான் தெரியாதது போல ராகவ் அவள் விரலைத் தொட்டு அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவள் கரத்தை பற்றிப்பிடித்தான். யப்பா! முதல் முறை அவன் கரம் பற்றிப் பிடித்தபோது கிடைத்த உணர்வை உள்ள கிளர்ச்சியை வார்த்தைகளுக்குள் அடக்கி விடுதலென்பது அத்தனை எளிதல்ல. சாமானியன் ஒருவன் பேனா விரல்களுக்குச் சத்தியமாக சாத்தியமேயில்லை. கன்னத்தில் தூசி இருப்பதாய் சொல்லி முதன் முதலாய் அவள் கன்னம் தொட்டது. கண்ணை மூடச்சொல்லி கன்னத்தில் எதிர்பாராத நேரத்தில் வாழ்வில் மறக்க முடியா முதல் முத்தம் பதித்தது. மனதிற்குள் மகிழ்ந்தாலும் அதற்காக அவனுடன் சண்டை போட்டது சில நாட்கள் அவனுடன் பேசாமலிருந்தது. அப்பப்பா! எத்தனை இன்பகரமான நாட்கள் அவை எத்தனை மனோகரமான நிமிடங்கள் அவை. அதை நினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது. அதற்கு நேர்மாறான இப்போதைய தன் வாழ்வை நினைக்கையில் நெஞ்சு கனத்தது வைகாவிற்கு… பகுதி 26 திரும்ப வரவே வராத ராகவுடன் மகிழ்ந்திருந்த அந்நாட்களை நினைக்கையில் வலித்தது வைகாவிற்கு. கானல் நீராய் போன தன் வாழ்வை யோசிக்கையில் உள்ளம் உருகியது. மகாபலிபுரத்தில் மகிழ்ந்திருந்தது. அவனுக்காக அத்தனை பேரையும் தூக்கியெறிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுயம் தெரியத்துவங்கியது. குடிக்கத் துவங்கியது. பெரும்குடிகாரன் என்பதை அறிந்து கொண்டது. தவறே செய்யாமல் வாங்கிகட்டிக்கொண்ட அடி, உதைகள். அடிக்குத் துணிந்து எதிர்த்து நின்றது. வாழ்வில் தனக்கு விடிந்திருக்கவே கூடாத அந்த மாலை. முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்து விட்டார் என்று புரளியை கிளப்பிவிட்ட அந்த மாலையே தான். அன்றைக்கு அப்படி சேனல்காரன்கள் புரளி கிளப்பிவிட போய்தானே வீட்டிற்கு சீக்கிரம் வந்து தொலைய வேண்டி வந்தது. அப்படி வந்ததால் தானே பொட்டு துணியின்றி எதோ ஒரு வெள்ளைத்தோல்காரியுடன்… ச்சை! இருப்பினும் ஏன் மனம் அவனை நினைக்கிறது? தொலைந்து போன வாழ்வு திரும்ப வராதா என்று ஏன் மனம் கலங்குகிறது? கணக்கு வழக்கின்றி அவன் நமக்கு கொடுமைகள் செய்தும் அவனையே மனம் ஏன் நினைக்கிறது? பைபிளில் வரும் கெட்டகுமாரனை போல மன்னிப்பு கேட்டு திரும்ப ஓடி வரமாட்டானா என மனம் ஏன் ஏங்குகிறது? இனி குழந்தைக்காக தான் நம்வாழ்வு என்றிருந்த மனதிற்குள் தான் ஏன் இத்தனை சலனம்?! சீதையைத் துரத்திய சூர்ப்பனகையை ராமன் மன்னித்துத் திருப்பி அனுப்பியிருந்தால் இராமாயணத்தில் அதன் பின் நிகழ்ந்த எதற்கும் அவசியமின்றி போயிருக்குமே. சூதில் தோற்ற தருமனை மன்னித்து பாண்டவர்களுக்கு ஒரு ஊரையாவது துரியோதனன் கொடுத்திருந்தால் இரத்த ஆறு ஓடிய குருஷேத்திர போர் ஏற்பட்டிருக்காதே. தேவையான நேரத்தில் மன்னிப்பை வழங்கியிருந்தால் நமது இதிகாசங்களின் போக்கு கூட மாறியிருக்குமே. தன் வாழ்வில் இனி துளிர்க்கவே முடியாது வேரோடு அழிந்து போயிற்று என்றிருந்த தன் காதல் இன்னும் மனதின் எங்கோ ஓர் மூலையில் இருப்பதை உணர்த்திச்சென்றது அம்மூத்த காதல் ஜோடி. நாமும் ஒரு முறை ஒரே ஒருமுறை கூட அவனை மன்னித்து விடுவோமா! ஒருமுறை கூட திருத்த முயற்சித்தால் தான் என்ன?! என்ற எண்ணம் அவள் உள்ளத்தைக் கவ்விக்கொண்டது. இறைவன் படைப்பில் இந்த மனம் தான் எத்தனை விசித்திரம். இறைவன் மனிதனுக்கு மன்னிக்கும் குணத்தையும் மறதியையும் மட்டும் தராது போயிருந்தால் பாதி பேர் கொலைகாரர்களாக சிறையிலும், மீதிப் பேர் பைத்தியக்கார மருத்துவமனையில் நோயாளிகளாக இருந்திருக்கக்கூடும். என்று எண்ணிக்கொண்டே நடக்கையில் சிலு சிலுவென வாடைக்காற்று பூவாசத்தை சுமந்து வந்து அவளை மோதிச்சென்றது. அக்காற்றோடு தூவான சிதறல்களும் கலந்து வந்து அவள் உடலுடன் உள்ளத்தையும் குளிர்வித்து சென்றது. அந்நிமிடம் தன் இருகரங்களையும் இடையோடு இறுக்கியணைத்து இயற்கையை நேசித்து பெருமூச்செறிந்தாள். அங்ஙனம் மன்னிப்பின் மகத்துவத்தை எண்ணிக்கொண்டு நடந்தவள் மனதில் மீண்டும் கோபமும், வேகமும், சோகமும், அவன் செய்த துரோகமும் வந்து அமர்ந்து கொள்ள உடனே தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டாள். நாமாக இனி எதையும் பேச வேண்டாம். அவனாக எப்போது வந்து பேசுகிறானோ பேசட்டும். தொலைந்து கொண்டிருப்பது நம் வாழ்வு மட்டுமல்ல அவன் வாழ்வும் சேர்ந்து தானே என்று முடிவு கட்டிக்கொண்டாள். ஆனால் பாருங்கள்! அவள் என்ன நினைத்தாளோ, எதை விரும்பினாளோ, எதற்கு ஆசைப்பட்டாளோ ஆச்சர்யமாக, மகா ஆச்சர்யமாக! அப்படி ஓர் சம்பவம் அவள் வாழ்வில் அன்று நடக்கத்தான் செய்தது. ராகவிடம் மாபெரும் மாற்றம் ஒன்று உருவாகத்தான் செய்திருந்தது… பகுதி 27 எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் குழப்பத்தோடும் பொடி நடையாய் நடந்து வீட்டில் போய் சேர்ந்த வைகாவை ஓடிவந்து கட்டியணைத்தாள் அவளது செல்ல மகள். கழுத்தைக்கட்டிக் கொண்டு வௌவால் போல் தொங்கியவளைக் கீழிறக்கி விட்டுவிட்டு “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல நீ போய் விளையாடு” என்று அவளை அனுப்பிவிட்டாள். துள்ளி குதித்தோடும் ஆட்டுக்குட்டி போல அவள் குதித்தோடினாள் பக்கத்து வீட்டிற்கு. சற்று நேரத்தில் ராகவ் வந்தான். அவன் வரும்போது எப்போதும் அவனுடன் இணைந்து வரும் சாராயநெடி இன்று அவனிடத்தில் இல்லை. முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது உடம்பில் ஆங்காங்கே இரத்தக்கறைகளுடன் சில காயங்களும் இருந்தது. வந்தவன் வைகாவை தேடினான் சமையலறையில் வேலையில் இருந்தாள் அவள். எழும்பி சமையலறைக்கே சென்றான் அவள் அருகில் சென்று சன்னமான குரலில் தயங்கியபடியே “வைகா” என்று அழைத்தான் திரும்பி பார்த்தாள். கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறான் ராகவ் பேச தயங்குகிறான் ஆனால் பேசும் முடிவில் இருக்கிறான். கண்களில் உண்மை தெரிகிறது. முகத்திலோர் கெஞ்சல் இருக்கிறது. அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தாள் அவள் எதையும் பேசவில்லை கசிந்துருகும் காதல் ஒன்று மட்டும் அவள் கண்களில் தெரிந்தது. அவன் அவள் முகம் பார்த்து அவள் கண்களையே பார்த்து “என்னை மன்னிப்பாயா வைகா? நான் இனி திருந்தி மனிதனாக வாழ ஆசைபடுகிறேன்” என்றான். எதிர்பார்த்த வார்த்தைகள் ஏங்கிய வார்த்தைகள் காதிற்கு இனிய தேனாய் இனித்தது. உள்ளமெல்லாம் கிளர்ந்தெழுந்தது அவனை அப்போதே கட்டியணைத்து அவன் மார்பில் சாய்ந்து அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. கசப்பான வாழ்வு கொடுத்த அனுபவத்தில் உள்ளத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கிக்கொள்ள நன்றாகவே பழகியிருந்தாள். மன்னிப்பாயா என்றவனிடம் “என்ன திடீரென்று?!” என்று ஓர் கேள்வியை கேட்டாள். “சில உண்மைகள் புரிந்தது” “இது போல பலமுறை ஆயிற்றே” “இம்முறை இறுதி. இனி சொல்ல மாட்டேன் என்னுடைய செயலிலிருந்து நீயே உணர்ந்து கொள்வாய்” இப்போது காதல் ததும்பிய கண்களுடன் ஆசையோடு அவனைப் பார்த்தாள். ஆங்காங்கு இருந்த காயங்களை கண்டாள். “என்ன ஆச்சு? எப்படி வந்தது இந்தக் காயங்கள்?”. “இது காயங்கள் இல்லை வாழ்க்கை பாடங்கள் வைகா. இதைப் பற்றி நீ கவலைப்படாதே சரியாகிடும்” எனச் சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அவளை ஏறிட்டுப் பார்த்தான். வைகாவும் அவனைப் பார்த்தாள். அவனுடைய மனதின் ஆழம் அறிவதற்காய் அவனிடம் சில கேள்விகள் கேட்டாளே ஒழிய அவள் விருப்பம் எல்லாம் அதுவாகவே தான் இருந்தது. அவன் சுற்றும் முற்றும் வீட்டைப் பார்த்தான் பொருட்கள் ஒன்றும் இல்லை வெளியே போகிறேன் வரும்போது தேவையானதை வாங்கி வருகிறேன் என்றான். வாசலை விட்டு கீழிறங்கியவனை அழைத்து மலர்ந்த முகத்தோடு “வரும்போது கொஞ்சம் மல்லிகைப்பூவும் வாங்கி வாங்க” என்றாள். சரியென்றபடி உற்சாகமாய் கிளம்பினான் அவன். அவன் தெருமுனையை தாண்டிச் செல்லும் வரை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள் வைகா. ராகவ் சும்மா ஒன்றும் மனம் மாறிவிடவில்லை பட்ட அவமானமும் கிடைத்த அடிகளுமே அவனை மாற வைத்தது. அவனுடன் ஓரணியாக இணைந்து குடிப்பவர்கள் நான்கு பேர். நண்பர்கள் தான் அவர்கள் குடிக்க மட்டும். பல நாள் காசிருக்காது அது போல் இன்றைக்குக் குடிக்க காசில்லை. ராகவிடம் எடுத்துவரச் சொன்னார்கள் வீட்டில் காசு இல்லை அதனால் இல்லை என்றான். மீண்டும் மீண்டும் இவனைக் காசை எடுத்துவரச்சொல்லி நச்செரிக்கவே சற்று கோபமாக ‘இல்லை’ என்றான். “காசும் இல்லை கோபம் வேறு” என்று சொல்லி சொல்லியே மூன்று பேருமாக போட்டுச் சாத்தினார்கள். கேட்க ஒரு பயல் இல்லை குடிகார பயலுவ சண்டை போடுகிறார்கள் நமக்கெதற்கு வம்பு என்றபடி வழியே போனவர்களும் தங்கள் பாதை வழியே சென்று கொண்டிருந்தனர். இது உண்மையான நட்பல்ல குடிகார நட்பு குலம் கெடுக்க வந்த நட்பென்பது பட்ட பிறகே புரிந்தது ராகவிற்கு. கிடைத்த அடிகள் பேதுமானதாய் இருந்தது அவன் யோசிக்கவும் திருந்தி வைகாவிடம் திரும்பி வரவும். கடைத்தெரு போனவன் முதலில் முடிவெட்டி சவரம் செய்துகொண்டான். அடுத்த நாளிலிருந்து வேலைக்குச் செல்ல இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையொன்றில் ஏற்பாடு செய்து கொண்டான். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கினான் வாங்கியவன் திரும்ப வீடு நோக்கி நடக்கத் துவங்கினான். தான் வழக்கமாகக் குடிக்க செல்லும் டாஸ்மாக் கடை அவனுக்கு எதிர்ப்பட்டது. அதன் மறைவில் அவனை அடித்த நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். அவனும் அவர்களைப் பார்த்தான்… அவர்களும் அவனை பார்த்தனர். ராகவின் மாற்றத்தில் மகிழ்ந்த வைகா உற்சாகமானாள். தான் கும்பிடும் சாமி தனை கைவிடவில்லை என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் ஆயிற்று உற்சாகமாய் இருக்கும் வைகாவை பார்த்து. வாயில் ஏதோவொரு காதல் பாட்டையும் முணுமுணுக்கத் துவங்கினாள். வீட்டில் உள்ள வேலைகள் ஒவ்வொன்றாய் முடித்தாள். வைகாவை வந்து பார்த்த மகளுக்கும் ஆச்சர்யம் தன்னுடைய அம்மாவை அத்தனை உற்சாகமாய் அவளும் இதுவரை பார்த்ததேயில்லையல்லவா அதனால். வைகா வேலைகள் அத்தனையும் வேகமாய் முடித்தாள். அவனுக்குப் பிடித்தது அத்தனையையும் சமைத்தாள். போய் குளித்துவிட்டு வந்தாள் வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் அதிகமாகவே பவுடர் பூசிக்கொண்டாள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அக்கரைக் காட்டினாள். இருந்ததில் புதிய னைட்டி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டாள். தனக்கு அருகில் படுக்கும் மகளை இன்றைக்குத் தரையில் படுக்க வைத்தாள். பக்கத்து அறையில் இருந்த அவனது தலையணையை எடுத்து வந்து தன் கட்டிலில் தன் தலையணை அருகே வைத்து விட்டு மெலிதாய் தனக்குள் சிரித்தாள். அச்சிரிப்பில் அப்படியோர் நாணம் கலந்திருந்தது. வேலைகள் அத்தனையும் முடித்தாயிற்று சாப்பாடும் தயாராகிற்று மகளும் தூங்கியாயிற்று. அவன் வரட்டும் அவனுடன் இணைந்து சாப்பிடலாம் என்று அவனுக்காய் காத்திருந்தாள். மணி எட்டானது அவன் வரவில்லை மணி ஒன்பதானது, பத்தானது அவன் வரவில்லை அவன் வரவேயில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது அவன் வரவில்லை தான் மீண்டுமொருமுறை ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உள்மனம் சொல்லி அழுததது. மனம் வலித்தது; வாழ்வு கசந்தது. அவள் பாட்டுக்கு தான் இருந்தாள். அவனாகத் தான் வந்து ஆசையாய் பேசினான். நம்பினாள்; இதோ மீண்டும் மோசம் போக்கிவிட்டான். இப்போது அவளுக்கு வாழப் பிடிக்கவில்லை வாழ்வே பிடிக்கவில்லை. எதோ நினைத்தவளாய் இருந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்தாள் தனக்கும் தன் மகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை பையொன்றில் எடுத்துக்கொண்டாள். தூங்கிக்கொண்டிருந்த மகளைத் தோள் மீது தூக்கி போட்டாள். இனி இவன் வேண்டாமென்று முடிவு கட்டினாள். அந்த ராத்திரியில் கால்போன போக்கில் நடக்கத் துவங்கினாள். முன்பு ஒருமுறை இதுபோல் நடுராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்புகையில் அவளுக்காய் ராகவ் காத்திருந்தான். இன்று அவனை விட்டுச் செல்கையில் அவளுக்காய் யாருமில்லை. எங்கே செல்ல வேண்டும் தெரியவில்லை. எப்படிச் செல்ல வேண்டும் புரியவில்லை. மகளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் விளங்கவில்லை. யாரிடம் செல்ல வேண்டும் தெளிவில்லை. எது நடந்தாலும் சரி இனி ராகவுடன் வாழ்வதில்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாள். அவனை விட்டு எங்கேனும் போய்விட வேண்டும் என்று தீர்மானித்தாள். இனி அவனிடம் ஏமாற அவள் தயாராக இல்லை. ஏமாந்து போகும் சக்தியும் அவளுக்கில்லை. போதும் அத்தனையும் போதும் என்றெண்ணி இதோ கிளம்பி விட்டாள். நடந்து கொண்டிருந்தவள் கண்களில் டாஸ்மாக்கடையொன்றின் பதாகை தென்பட்டது. வெள்ளை பின்புறத்தோடு பச்சை எழுத்துக்களோடு இன்னும் எத்தனை பேர் வாழ்வைக் கெடுக்க அக்கடை காத்திருக்கிறதோ எனும் வேதனையோடு பெருமூச்செறிந்தாள். தூக்கக் கலக்கத்தில் மகள் வைகாவின் கரம் பிடித்து நடந்து கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. வானில் ஆங்காங்கு சில விண்மீன்கள் மட்டும் முளைத்திருந்து அவை அவளை வேடிக்கை பார்ப்பது போலிருந்தது. எப்போதேனும் சில வாகனங்கள் அங்குமிங்கும் போய் கொண்டிருந்தது. இரவு நிசப்தத்தின் இடையே கேட்கும் சத்தம் பயங்கரமாய் தெரிந்தது. அதைத் தவிர வேறு எச்சத்தமும் எங்கும் இல்லை வைகா அவனை விட்டு வெகுதூரம் செல்லும் எண்ணத்தோடு நடந்து கொண்டிருந்தாள். அவள் முன் கறுத்த பெரும் பாம்பு போலச் சாலை வளைந்து நெளிந்து நீளமாய் கிடந்தது. அவள் மனமோ பறந்துகொண்டே பறவையொன்று பாறையில் போட்ட முட்டை போல உடைந்து சுக்குநூறாகிப்போயிருந்தது… பகுதி 28 மனமெல்லாம் வெறுமை சூழ வழியெங்கும் இருள் சூழ எதிர்காலம் சூனியமான நிலையில் நடந்து கொண்டிருந்தாள் வைகா. அவள் உடல் மட்டும் இங்கிருக்கிறதே ஒழிய அவள் உள்ளம் இவ்வுலகிலே இல்லை. இருந்திருந்தால் சாலையோரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் முனகல் சத்தம் அவளுக்குக் கேட்காமலா போயிருக்கும். அவளுக்குக் கேட்கவில்லையே ஒழிய அவள் மகளுக்கு அச்சத்தம் நன்றாகவே கேட்டது. அவள் அம்மாவின் கரத்தை அழுத்தி சத்தம் வந்த திசையை காண்பித்தாள். அத்திசையில் ஆங்காங்கே மல்லிகைப்பூ சிதறிக்கிடக்கிறது தரையில் கிடக்கும் அல்வாவை எறும்புகளும் ஈகளும் மொய்த்தபடி இருக்கிறது. சத்தம் வரும் பகுதி சாலையிலிருந்து சற்று சாய்வான பகுதி சாலையிலிருந்து பார்த்தால் அத்தனை எளிதில் கண்களுக்கு புலப்படாத பகுதியும் கூட இரவின் இருளும் சேர்ந்து கொள்ள எதுவும் தெரியவில்லை. அப்போது அவ்வழியே கடந்து சென்ற வாகனம் ஒன்றின் வெளிச்சத்தில் பார்த்தாள் யாரோ ஒருவர் அடிபட்டுக் கிடப்பது தெரிந்தது. சட்டையைக் கவனித்தாள் அது ராகவ் அணிந்து சென்ற சட்டை போலிருந்தது. பயத்தோடும் பதட்டத்தோடும் அது அவனாக இருக்கக் கூடாது எனும் பிரார்த்தனையோடு அருகில் சென்றாள். நடந்து முடிந்து விட்ட சம்பவங்களுக்கு பிரார்த்தனை செய்து பலன் என்ன?! அவள் பிரார்த்தனை பொய்த்தது அது ராகவே தான். அவனைத் தூக்கி மடியில் போட்டு அவள் கதறிய கதறலில் அருகில் கூடுகளில் துயில் கொண்டிருந்த பறவைகளும் கத்திக்கொண்டு பறந்தன. சில பறவைகள் கலைந்த தங்களது தூக்கத்தையும் பொருட்படுத்தாது வானில் வட்டமடித்தபடி வேதனையோடு அவள் அழுகையைப் பார்த்துக்கொண்டே சுற்றின. இரவு வேளை, சுயநினைவின்றி இரத்தவெள்ளத்தில் அடிபட்டுக் கிடக்கும் கணவன், தனியாய் குழந்தையுடன் வைகா. என்ன செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு. அவள் மூளை சிந்திக்கும் திறனை அறவே அற்றிருந்தது. சில நிமிடங்களுக்குப் பின் ஒரு வாகனம் வந்தது தலைவிரிகோலமாய் தன் கணவனுக்காய் நீதி கேட்டு மதுரை மாமன்னன் அரண்மனைக்குள் சென்ற கண்ணகி போல கண்களில் கண்ணீரோடு பதறிய படியே தனது கணவனுக்காய் உதவி வேண்டி சாலையில் வந்துகொண்டிருந்த மகிழுந்தை மறித்தாள். அவள் அங்கு அவர்களை எதிர்பார்க்கவில்லை வந்தவர்களும் அப்படி ஒரு சூழ்நிலையில் அங்கு அவளை எதிர்பார்க்கவில்லை. அவர்களைக் கண்டதும் வைகாவின் கதறல் இன்னும் பல மடங்கு அதிகரித்தது. கைகளால் முகத்தை மூடியபடியே கதறிக்கொண்டிருக்கும் வைகாவை பதறியபடியே ஓடிவந்து அணைத்துக்கொண்டனர் அவர்கள். எதேச்சையாய் அங்கு வந்தது வேறு யாருமல்ல அவள் பெற்றோர் தான். அத்தனை பேரின் மனக்கசப்புகளும் வலிகளும் மகளின் கதறலைக்கண்ட மாத்திரத்தில் மறைந்தது. இப்போது அனைவரது பிரார்த்தனையும் ராகவ் எனும் ஒற்றைப் புள்ளியில் வந்து நின்றது. வைகாவிடம் கடைத்தெரு போய்வருவதாய் சொல்லிச்சென்ற ராகவ் டாஸ்மாக் கடையின் மறைவில் நின்ற தன்னுடைய குடிகார நண்பர்களைக் கண்டும் சட்டை செய்யாமல் தான் சென்றான். ஆனால் அவர்கள் அவனை விடவில்லை. ஓடிவந்து குடிக்க அழைத்தனர் மறுத்தான் மன்னிப்பு கேட்டனர் மன்னித்தான். ஆனால் அவன் எதையும் மறக்கவில்லை. உண்மையெது பொய்யெது என்பது அவனுக்கு நன்கு புரிந்திருந்தது புத்தி தெளிந்திருந்தது. இனி தன்னை தொல்லை செய்யாமலிருக்கும்படி அவர்களிடம் கேட்டான். இனி குடியில்லா புது வாழ்வொன்றை வாழப்போவதாகச் சொன்னான். அவர்களிடமும் திருந்த சொன்னான். தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறான் இனி இவனை மாற்ற முடியாது என்றுணர்ந்து வேறு வழியின்றி அவனை அவன் வழியில் விட்டுவிட்டு அவர்கள் குடிக்க சென்றனர். அவர்களிடம் விடைபெற்றுச் சென்றவன் எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று மோதி சாலைக்கு வெளியே தூக்கி எறியபட்டு கிடந்ததைத்தான் வைகா கண்டாள். அவனைக்குறித்த தவறான புரிதலால் சரியான இடத்திற்கு வந்திருந்தாள் அவள். அவளுக்கு உதவ அந்நேரம் அவள் பெற்றோரே வந்திருந்து இறைவனின் திருவிளையாடலோ அல்லது விதியாகவோ தான் இருக்க முடியும். முகப்பு விளக்குகளை எரிய விட்டு முழு வேகத்தில் செல்லும் வாகனத்தில் முனங்கியபடியே வைகாவின் மடிமீது தலைசாய்த்து கிடக்கிறான் ராகவ். அவள், அவளது அப்பாவின் தோள்சாய்ந்திருக்கிறாள். அவர் கரம் அவளை அணைத்திருக்கிறது. அவன் காலை தன் மடிமீது தூக்கிவைத்தபடி அவள் தம்பி இருக்கிறான். பிரார்த்தனையில் ஈடுபட்டபடி அவள் அம்மா இருக்கிறார். ஓட்டுநரின் திறமையின் காரணமாக ஒரு மணிநேர பயணதூரம் பாதியாகக் குறைந்தது. இப்போது புதிய பரபரப்புகள் துவங்கியது. மருத்துவர்கள் அவனை அவசர பிரிவில் சேர்த்துவிட்டுப் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடுகிறார்கள். படத்தில் காண்பது போல் பலராக இணைந்து நின்று ஏதேதோ செய்கிறார்கள் துடித்து போகிறாள் வைகா. அவளைத் தேற்றுகிறார்கள் அவளது பெற்றோர். பரபரப்புகளிடையே இனி ராகவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று கூறி அவர்கள் நெஞ்சில் பால் வார்த்துச் சென்றார் மருத்துவர் ஒருவர். அதைக்கேட்ட வைகா நேராக ராகவையும் பார்க்கச் செல்லவில்லை மாறாக அங்கேயே அப்போதே அந்நொடியே சாஸ்டாங்கமாக அவள் பெற்றோர் பாதங்களில் விழுந்து கதறியழுதாள் மன்னிக்கச் சொல்லி சொல்லி அழுதாள். எதுவுமே புரியாத வைகாவின் மகளும் வைகாவிடம் சென்று அவளை எழும்பச் சொல்லி அழுகிறாள். தேம்பித் தேம்பி அழுதபடி அவள் பெற்றோரும் அவளையும் அவள் மகளையும் அள்ளியெடுத்து தங்கள் மார்போடு அணைத்துக்கொண்டனர். அப்போது அவர்கள் கன்னம் வழியே உருண்டோடிய கண்ணீரில் உப்பு மட்டுமல்ல மன்னிப்பும் கலந்தே தானிருந்தது. சில தினங்கள் போனது. வைகாவின் காதலுடன் கூடிய கவனிப்பாலும் சொந்தங்களின் அரவணைப்புடனும் ராகவ் முழுமையாய் தேறினான். அவர்களை அவர்களுடனயே இருக்கச் சொன்னார்கள் அவள் பெற்றோர். வைகாவிற்கு மனமிருந்தது அதைத் திட்டவட்டமாக மறுத்தான் ராகவ். ஆனால் அவர்கள் வீட்டிற்கு அருகிலே வீடொன்றை எடுத்துக் குடியேறினான். அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த கடைக்கே வேலைக்குச் சென்றான் சரியாக ஒருவருடம் கடுமையாக உழைத்தான். கொஞ்சம் காசு சேர்ந்தது வைகாவின் பெற்றோர் வங்கியிலிருந்து கடனுதவியும் தங்கள் நிலமொன்றையும் அவர்களுக்குக் கொடுத்தனர். தானே சொந்தமாக இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையொன்றைத் துவங்கினான் ராகவ். நன்றாகச் செல்ல துவங்கியது புதிய கடை மட்டுமல்ல தங்களுடைய புதிய வாழ்க்கையும் தான். இப்போது வைகா வேலைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டாள். தன்னுடைய பெற்றோரின் அரவணைப்பும் தனது கணவனின் காதலும் முழுமையாய் கிடைத்தது அவளுக்கு. தான் வீட்டை விட்டு ஓடியது தவறென புரிந்தது. அதற்குக் கிடைத்த தண்டனை தான் தான் பட்ட கஷ்டங்கள் என்று எண்ணிக்கொண்டாள். காதல் இரு தனிப்பட்ட மனிதருக்கானது மட்டுமல்ல அது இரு வீட்டார் இரு குடும்பம் இணைவது என்பது புரிந்தது. அப்படி இணையும் போதே அங்கு முழுமையான காதலும் அன்பும் இருக்க முடியும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தாள். குழந்தை பருவம் தவிர்த்து பெண்கள் கொள்ளை அழகாகக் காட்சிதரும் தருணம் அவர்கள் தாய்மை அடைத்திருக்கும் தருணம் தான். அந்த இரண்டு நிலைகளிலும் காண்பவர் கண்களில் கண்ணியம் மட்டுமே இருக்கும். இருந்தால் மட்டுமே அவர்களைக் குறைந்தபட்சம் மனிதரில் சேர்க்க முடியும். இதோ நடந்து வரும் கோயில் சிலையென வைகா நடந்து வருகிறாள். அவள் இரண்டாவதாகத் தாய்மை அடைந்திருக்கிறாள். ஒருகையை மகள் பிடித்திருக்கிறாள் மறுகையை அவள் அம்மா பிடித்திருக்கிறாள். தன் வாழ்வில் தான் பட்ட கஷ்டங்களிலெல்லாம் பெரும் கஷ்டமாக அவள் நினைத்தது யாருமற்ற ஆனதை போல் தனிமையாய் குழந்தையைப் பெற்றெடுத்து திரும்பியது தான். இனி அவளுக்கு அக்கஷ்டம் இல்லை சந்தேகம் கேட்கவும் சமாதானம் செய்யவும் தன் தாய் அருகில் இருக்கிறாள். இனி அவள் வாழ்வில் கண்ணீர் கரையும் ராகவுடனான காதல் மட்டும் நிலைக்கும், நிலைக்கட்டும். காதலும் கண்ணீரும் முற்றும் அன்புடன், கொல்லால் எச். ஜோஸ்