[] []   கலைஞரின் சரித்திரம்  -வாழ்க்கை வரலாறு    கொல்லால் எச். ஜோஸ்    அட்டைப்படம் – முஹம்மது நயீம் ( வேட்டை மின்னிதழ் ) - vettai007@yahoo.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே    உரிமை  - Creative Commons Attribution Non Commerical No derivatives                உள்ளடக்கம் என்னுரை 5  அணிந்துரை 7  பகுதி - 1 9  பகுதி - 2 13  பகுதி - 3 17  பகுதி - 4 21  பகுதி - 5 25  பகுதி - 6 29  பகுதி - 7 33  பகுதி - 8 36  பகுதி - 9 40  பகுதி - 10 43  பகுதி - 11 47  பகுதி - 12 51  பகுதி - 13 55  பகுதி - 14 59  பகுதி - 15 63  பகுதி - 16 67  பகுதி - 17 71  பகுதி - 18 75  பகுதி - 19 78  பகுதி - 20 82  பகுதி - 21 85  பகுதி - 22 88  பகுதி - 23 91  பகுதி - 24 94  பகுதி - 25 98  என்னுரை []     கலைஞர் ,  கிட்டதட்ட முக்கால் நூற்றாண்டு காலம் தமிழ் சமூகம் உச்சரித்த பெயர். அது பாராட்டவாக இருந்திருக்கலாம் அல்லது விமர்சிக்கவாகவும் இருந்திருக்கலாம். எல்லாரையும் போல் அவரது வாழ்க்கை வரலாற்றையும் படிக்கும் ஆர்வத்தில் படிக்க துவங்கினேன் பிடித்திருந்தது.   படித்தறிந்த போது கலைஞரை தமிழகம் முழுமையாய் அறிந்து கொள்ளாமலே போய்விட்டதோ என்று வருத்தமாக இருந்தது. அவரது வாழ்வை சிலருக்கு சொல்லும் வண்ணம் சுருக்கமாக எழுதினால் தான் என்ன எனும் எண்ணம் உதித்த போது சரி தவறு என்பதைத் தாண்டி அதைச் செய்யலாம் என்று துணிந்து முகநூலில் தொடராக தொடர்ந்து எழுதினேன்.  நான் திமுக காரன் அல்ல கலைஞரை எழுத நான் திமுக காரனாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.  எப்படி மீனவன் ஒருவன் கடலை தனக்கானதென உரிமை கொண்டாட முடியாதோ!  எப்படி சூரியனை நான் வணங்குகிறேன் அதனால் சூரியன் எனக்குத் தான் சொந்தம் என ஒரு சிலர் மட்டும் சொல்லிக்கொள்ள முடியாதோ!  காற்று, நீர் இப்படி இயற்கையின் சக்திகளை கொடைகளை எவரொருவரும் தனியாகச் சொந்தமென கொண்டாட முடியாதோ!  கலைஞரும் அப்படியே!  அவர் திமுக தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழர்களுக்கானவர்.   கலைஞரை எனக்குப் பிடிக்கும் ஏன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அது ஒரு வேளை எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் இல்லாத, அவரை பற்றிய செய்தி இல்லாத பத்திரிக்கை பார்க்காததன் விளைவாக இருந்திருக்கலாம். சிறு வயதுகளில் சச்சின் செய்திகளைத்தவிர்த்து அவரது கேள்வி பதில் பேட்டிகளை படித்ததன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம். அல்லது அவரது பேச்சு, எழுத்து என எதுவோ அவர்பால் எனை ஈர்த்தது. அப்படியே அவரை எனக்கு மிகவும் பிடித்து போனது.  எனக்குப் பிடித்த கலைஞரை இங்குள்ள அத்தனை பேருக்கும் பிடிக்குமா என்றால் நிச்சயம் இல்லை. என்னைப் பிடிக்கும் என்பதற்காக என் நண்பர்களாகிய நீங்கள் நிச்சயம் அவரைப் படிக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்.  ஆனால் ஒன்று சொல்வேன், கலைஞர் உங்களைப் போல என்னைப் போல சாதாரணக்குடும்பத்தில் பிறந்து இன்று அவர் தொட்ட துறையிலெல்லாம் குன்றிலிட்ட விளக்காய் ஜொலித்தவர், ஜெயித்தவர்.  அவரும் மனிதர் அவர் நூறு சதவிகிதம் சரியானவர் நல்லவராகத்தான் இருந்தார். அவர் தவறே செய்ததில்லை. அவரிடம் குறைகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதற்காக அவர் மீது கண்மூடித்தனமாக தொடுக்கப்படும் விமர்சன கணைகள் அத்தனைக்கும் அவர் பொருத்தமானவரும் அல்ல.   பிடிக்காத கடவுள் கூட நம் விமர்சனத்திற்குத் தப்பிக்க முடியாத போது கலைஞர் எம்மாத்திரம்.   ஆனால் அவர் வாழ்வு அத்தனை பேருக்கும் ஒரு பாடம். எனக்குப் பிடித்தவர் பிடிக்காதவர் என்பதைத்தாண்டி வாழ்வில் ஜெயித்தவர். வரலாற்றில் இடம் பிடித்தவர் எனும் முறையில் அவரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.   நீங்களும் படியுங்கள்.  திருக்குவளையில் அவர் பிறந்ததிலிருந்து 1969 ஆம் ஆண்டு அவர் முதல்வர் ஆகி இந்திராவின் 'எமர்ஜென்சியை' துணிந்து எதிர்த்து, மிசா கொடுமைகளை அனுபவித்தது வரையுள்ள பகுதியை இந்த முதல் பாகத்தில் எழுதியுள்ளேன் தொடர்ந்து அவரது வழ்வின் மற்ற நிகழ்வுகளையும் எழுத வேண்டும் என்பது என் பேராவல்.  வாருங்கள் தோழர்களே, நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த சரித்திர நாயகன் கலைஞரின் வரலாற்றை நாம் இணைந்து படிப்போம். இந்நூலுக்குரிய தகவல்களை கலைஞர் எழுதிய அவர் சுயசரிதையான ’நெஞ்சுக்கு நீதி’யிலிருந்தும் மற்ற சில நூல்களிலிருந்தும் சேகரித்திருக்கிறேன்.  இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று எழுதித்தர வேண்டுமென்று கலைஞரின் காதலன் பொன்மார் தரணிபதி சாரிடம் கேட்டதும் சற்று தயங்கியபடியே ஒத்துக்கொண்டாலும் தனக்குக் கலைஞர் மேலிருக்கும் அளவு கடந்த மரியாதையையும் பாசத்தையும் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துப் புறப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு அணிந்துரையை நிரப்பியிருக்கிறார். அவரது அன்பில் நெகிழ்ந்தேன். அவர் அன்பிற்கும் அழகிய அணிந்துரைக்கும் நன்றிகள் கோடி.   இந்த மின்நூலுக்குரிய அட்டை படத்தைக் கேட்டதும் மகிழ்வுடன் ஒத்துக்கொண்டு காலதாமதமின்றி அழகிய முறையில் வடிவமைத்துக்கொடுத்த வேட்டை மின்னிதழ் ஆசிரியர் முஹம்மது நயீம் அவர்களுக்கும் எனது அன்பின் நன்றிகள்.   இதை முகநூலில் தொடராக எழுதிய போது வாசித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.   நிலைத்து வாழ்க பன்முகவித்தகர் கலைஞர் புகழ்.  அன்புடன்,  கொல்லால் எச். ஜோஸ்  Joseharichandran@gmail.com               அணிந்துரை []     தம்பி ஜோஸ் ஒரு நாள், 'சார் நான் சுருக்கமாக எழுதியிருக்கும் கலைஞரின் வரலாற்றை ஒரு மின்நூலா கொண்டு வரலாமென்று இருக்கேன் அதற்கு நீங்க அணிந்துரை எழுதவேண்டுமென்று' மெஸஞ்செரில் கேட்டப்போ எனக்கு இன்ப அதிர்ச்சி. உடனே நான் அதெல்லாம் என் தகுதிக்கு மீறிய காரியம் என்று மறுப்பு கூற பரவாயில்லை எழுதுங்க சார்ன்னு தம்பி பதில் அனுப்பினார். பிறகு யோசித்தேன், இதை எழுத எனக்குத் தகுதியுள்ளதா என்று. தலைவரின் மேல் நான் கொண்டுள்ள சொற்களால் சொல்ல இயலாத அன்பு, பாசம், மதிப்பு, கவுரவம் மற்றும் தம்பியின் மேல் எனக்கிருக்கும் அன்பு மற்றும் அவர் எழுத்துகளின் மேல் நான் கொண்டுள்ள பிரியம் எனக்கு அந்த தகுதி உண்டென்றே உணர்த்தியது. இந்த அணிந்துரையானது இந்த மின்நூலுக்கு பெருமை சேர்ப்பதோ, சான்றளிப்பதோ அல்ல. மாறாக நான் உளமார போற்றும் தலைவரும் என் அன்பிற்குரிய தம்பியும் எனக்களித்த வரம் இதை எழுதுவதென்பது. தம்பி ஜோஸ், புத்தகங்களைப் பற்றி எழுதும் பதிவுகளை  மிகவும் விரும்பி ரசித்துப் படிப்பவன் நான். அப்படிப்பட்டவர் என் மனம் கவர்ந்த (என் மனம் மட்டுமா தமிழகத்தில், இல்லை இல்லை உலகிலுள்ள  பெரும்பாலான தமிழர்களின் மனங்களை கவர்ந்தவராயிற்றே) தலைவரின் வரலாற்றைச் சுருக்கி எழுதுகிறார் என்றால் இன்னும் சொல்ல வேண்டுமா, இந்த பதிவுகள் தொடராக முகநூலில் வந்த பொழுது ஆவலுடன் மிகவும் ரசித்துப் படித்தேன். இந்த அணிந்துரை எழுதுவதற்காக மொத்தமாக மீண்டும் இரு முறை படித்தேன். அது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். கலைஞர் பாலகனாய் இருக்கும் போது அவரது வீட்டில்  இரு முறை திருடர்கள் திருட வந்ததை நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார், பின்பு தலைவர் பள்ளியில் இடம் பிடிக்கச் செய்த போராட்டம், பள்ளி தேர்வில் தோல்வியடைவோம் என்று தெரிந்து அதை எதிர்கொள்ள நண்பருடன் சேர்ந்து தனது முதல் திரைக்கதை வசனத்தில் அரங்கேற்றிய நாடகமென்று சுவையாக எழுதப்பட்டிருக்கிறது. மாணவனாக இருந்த பொழுதே தலைவர் பனகல் அரசர் பற்றிய கட்டுரையால் ஈர்க்கப்பட்டது, பிறகு இந்தி மொழி திணிப்புக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டது, கையெழுத்து இதழ் தொடங்கியது அதற்காக வீட்டிலேயே திருடியது எனப் பல சுவையான அரிய தகவல்களைச் சுவைப்படத் தொகுத்தளித்திருக்கிறார் ஜோஸ். பிறகு அண்ணாவுடனான தொடர்பு, திருச்சி கழக தோழர்களின் மேல் அண்ணாவிற்கு ஏற்பட்ட வருத்தம் அதைத் தீர்த்து வைத்த கலைஞர், சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று கலைஞர் வலியுறுத்தி அண்ணாவைச் சம்மதிக்க வைத்தது எனப் பல சுவையான தகவல்கள்  தெரியவருகிறது இதைப் படிப்பதால் நமக்கு. அதைத்தொடர்ந்து அண்ணாவின் மறைவு, பிறகு கலைஞர் முதல்வரானது எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியதின் பின்னணியை விவரிக்கிறது இந்த மின்நூல் மேலும் எமர்ஜென்சியை கழக அரசு எதிர்த்தது, ஆட்சியை இழந்தது என்று அன்றைய வரலாற்றை இதைப் படிக்கையில் உணர முடிகிறது. இப்படியாகப் பல நூறு பக்கங்களில் அடங்கியுள்ள கலைஞரின் வரலாற்றை படித்து சுருக்கி, சுவை குறையாமல் நமக்காகத் தந்திருக்கிறார் இந்த இளம் எழுத்தாளர். கலைஞரை ஒரு அரசியல் தலைவராகப் பார்க்காமல், ஒரு தனி மனிதராகப் பார்த்தாலும் எப்பேர்ப்பட்ட உழைப்பாளி எத்தனை திறமைகள் படைத்தவர் , பேச்சாளர், எழுத்தாளர், திரைக்கதை வசனகர்த்தா, நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர் எளிமையாக வாழ்ந்தவர், எளிமையாக அணுகக்கூடியவர் என்ற பல சிறப்புகளைப் பெற்றிருந்தவர் என்றாலும், அவரை போல் தூற்றப்பட்டவர் யாருமில்லை நம் தமிழகத்தில். இந்த பதிவைப் பதிவிடும் போதே இதற்குப் பல கீழ்த்தரமான பின்னூட்டமிட்டார்கள் சிலர். அது நம் சாபக்கேடோ. அதில் சில பேரேனும் திருந்தக்கூடும் இந்த நூலைப் படித்த பிறகு. அவர்கள் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் தலைவரின் புகழுக்கு எந்த பங்கமும் இல்லை. நிலைத்து நிற்கும் அவரின் புகழ். அதற்குத் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட கூட்டமும், அன்று அவரின் இறுதிச் சடங்கில் உற்ற உறவினர் என்றே பலராலும் எண்ணும் படி பல காரியங்களைச் செய்து கடைசியில் அவரின் நினைவிடத்தில் மண்ணையும் அள்ளி போட்ட அந்த இளம் பெண் அதிகாரியே சாட்சி. வாழ்க கலைஞரின் புகழ். என்னைப் போன்ற சோம்பல் படைத்தவர்களுக்காகத் தலைவரின் சரித்திரத்தைச் சுருக்கி எழுதித்தந்து மகிழ்வித்த தம்பி ஜோஸுக்கு வாழ்த்துகள். விரைவில் அவரது வாழ்வின் மற்ற நிகழ்வுகளையும் நமக்காகச் சுவைப்பட எழுதித் தருவார் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன். உங்கள் அன்பன்,   பொன்மார் தரணிபதி.                                கலைஞரின் சரித்திரம் பாகம் - 1 பகுதி - 1   திருக்குவளையில் கலைஞர் திருக்குவளை என்பது அக்கிராமத்தின் பெயர். திருவாரூர் மாவட்டத்தின் பல சிறு கிராமங்களில் ஒன்று அது. கோயில்கள், சோலைகள், வயல் வரப்புகள், குளங்கள், அடங்கிய இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அது. 1924 க்கு முன்பு வரை திருவாரூரில் சிலருக்கு இப்படியொரு கிராமம் இருப்பது தெரிந்திருந்தாலே அது ஆச்சர்யம். அவ்வாண்டில் தமிழகம் போற்றும் தலைமகன் ஒருவனைப் பெற்றெடுத்தது அக்கிராமம். அதன் காரணமாக அவருடன் சேர்த்து அக்கிராமத்தின் பெயரும் புகழும் கூட தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவியது. பிறந்த மண்ணால் பெருமைப்படுபவர்களும் உண்டு.  சிறந்தவர்களைப் பெற்றெடுத்து மண் பெருமைப்பட்டுக்கொள்வதும் உண்டு. திருக்குவளை கலைஞரைப் பெற்றெடுத்து இதில் இரண்டாம் வகையில் தன்னை இணைத்துக்கொண்டது. எழில் கொஞ்சும் அக்கிராமத்தில் தான் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் இருவருமாக இணைந்து இனிதாக இல்லறம் என்னும் நல்லறம் நடத்தி வந்தனர். அஞ்சுகம் அம்மையார் வீட்டைப் பார்ப்பதோடு தன் கணவனார் உழைப்பிற்கும் உதவி வந்தார். முத்துவேலரோ உழைப்பதுடன் கவிதைகளும் சில நாடகங்களும் கூட படைத்திருந்தார். இப்போது புரிகிறது தானே கலைஞருக்கு கவிபாடும் திறமை மரபணுக்கள் மூலம் அவருக்குள் கடத்தப்பட்டதென்பது. அவர்கள் ஏழைகளும் அல்லர் அதற்காக பெரும் செல்வந்தர்களும் அல்லர். ஓரளவுக்கு வசதியானவர்களே. ஓரளவுக்கென்றால், தங்கள் பிள்ளைக்கு பள்ளி தலைமையாசிரியரையே வீட்டுக்கு அழைத்து டுயூசன் சொல்லித் தருமளவுக்கு வசதியும் செல்வாக்கும் அவர்களுக்கு இருந்தது. வீடு தேடி பாடம் சொல்லிக்கொடுக்க வந்த அந்த ஆசிரியருக்கு அவர்கள் ஊதியமாகக் கொடுத்தது காசல்ல பசும்பாலும் அரிசி உட்படப் பருப்பு வகைகளும் தான். முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் ஒற்றுமையாகத் தான் இருந்தனர். மகிழ்ச்சியாகவும் தான் வாழ்ந்தனர். எல்லாம் சரி, ஆனால் அவர்களுக்கு ஒரு குறை இருந்தது. அதாவது திருமணம் முடித்து ஆண்டுகள் சில ஆகியும் அவர்களுக்கு பிள்ளைச்செல்வம் இல்லாமலிருந்தது. அவர்கள் அதற்காக ஏறாத கோயில்லை இருக்காத விரதம் இல்லை. அவர்களைக் கடவுள் கைவிடவில்லை. ஆம், அவர்கள் அப்படித்தான் நம்பினர். அஞ்சுகம் அம்மையார் தொடர்ந்து இருமுறை கருவுற்றார்கள் இரண்டு முறையும் பெண் குழந்தைகள். இப்போது மீண்டும் அவர்களுக்கொரு வருத்தம் குலம் காக்க பிள்ளைகள் ஆயிற்று கொள்ளி வைக்க மகன் இல்லையே. மீண்டும் அதே வேண்டுதல்கள், நேர்ச்சைகள், அதே விரதங்கள். மீண்டும் கருவுற்றார்கள் இம்முறை அவர்கள் நம்பிய கடவுள் அவர்களைக் கைவிடவில்லை. 1924 ஜீன் 3 பின்னாளில் கலைஞர் என்றும் சுமக்க முடியாதளவுக்கு பல பட்டங்களையும் வாங்கிக்குவித்த மு. கருணாநிதி அவதரித்தார். இன்னும் கலைஞர் குழந்தை தான் நடக்கக்கூடப் பழகியிருக்கவில்லை. ஏணித்துணி கட்டி உலகம் அறியாமல் நல்லது கெட்டது அறியாமல் தாயின் தாய்ப்பால் குடித்து தரையில் உருண்டு புரண்டு விளையாடிக்கிடந்த பருவம். அக்கால கட்டத்தில் தான் ஒருநாள் திருடன் அவர்கள் வீட்டில் புகுந்துவிட்டான்.   வந்த திருடர்கள் 'திருடர்களிலும் பிச்சைக்கார திருடர்கள் போலும்' கலைஞர் தன் நூலில் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் செய்ததும் கலைஞர் சொல்லுக்கு ஏற்றபடி தான் இருந்திருக்கிறது. வந்த திருடர்கள் வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்களுடன் தாயின் தாலிக்கொடியையும் கலைஞரின் ஏணைத்துணியையும் கூட அவிழ்த்து அடித்துச் சென்று விட்டனர். தாலி போனதில் தாய்க்கு மகா வருத்தம். சிறுவன் கருணாநிதி கத்தி கூச்சல் போடாமல் அமைதியாகக் கிடந்து தன் உயிரைக்காப்பாற்றிக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. பின்னாட்களில் அம்மா அன்றைக்கு அவர் அழாததற்காகக் கலைஞரிடம் பல முறை சொல்லி சிலாகித்த நிகழ்வது. அதைப் போன்று இன்னொரு முறையும் திருடன் அவர்கள் வீட்டில் புகுந்திருக்கிறான். இம்முறை வந்த திருடன் ஏமாந்தே போனான். வீட்டிலுள்ளவர்கள் விழித்துக்கொள்ள உண்டியல் என எண்ணியவன் கோயிருக்கு நேந்து மொட்டையடித்துப் பாதுகாப்பாய் வைத்திருந்த கலைஞரின் தலைமுடியைத் தூக்கி கொண்டு ஓடி விட்டான். அப்படியெனில் அந்த திருடன் ஏமாளி தானே. சிறுவன் கலைஞர் இதோ, திருக்குவளை கிராமத்தில் அரைக்கால் டவுசர் அணிந்து சிறுவர்களுடன் விளையாடிக்களிக்கும் சிறுவன். இதோ 'வித்யாரம்பம்' என்ற பெயரில் ஆடம்பரமாக விழா போல் கொண்டாடி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுவன். பள்ளியில் சென்று 'அரிநமோத்து சிந்தம்' என்று இந்து முறைப்படி கைவிரல் தேயத் தேய மணல் தரையில் எழுதிப் பழகும் சிறுவன். ஊருக்குச் செல்லும் வழியே வழித்துணையாகப் பயத்துக்கு மருந்தாக 'சிவாய நம! ஓம் நம சிவாய!' எனச்சொல்லிச் செல்லும் சிறுவன். எப்போது முடி வளரும் மொட்டைப் போடலாம் எனக் காத்திருந்து கோவில் கோவிலாக சென்று மொட்டையடிக்கப்பட்ட கடவுள் நம்பிக்கையில் ஊறிப்போன அன்பு பெற்றோரின் ஆசை மகன் சிறுவன். பத்து வயதில் தன் வீட்டு மாட்டுத் தொழுவத்தையே மேடையாக்கி தன் தந்தை கதை சொல்லி தனக்கு பிடித்த அர்ச்சுனன், கர்ணன் வேசம் போட்டு தன் ஊர் மக்களைக் கவர்ந்து அவர்களிடம் கைதட்டல் வாங்கிய சிறுவன். சிறுவன் கருணாநிதியிடம் தான் எத்தனைக் குறும்பு, எத்தனைக் குதுகலிப்பு, எத்தனை திறமை. அங்கு அவனிடம் அரசியல் இல்லை அங்கு அவனிடம் நாத்திகம் இல்லை. அவனுக்குக் கொள்கை இல்லை அவனுக்குச் சுயமரியாதையும் அவசியமில்லை. அவனிடம் அன்பு செலுத்தும் அம்மா அப்பா உற்றார் உறவினர் சுற்றும் சூழல் நண்பர்கள் என பெரும் பேறு பெற்றவன் அச்சிறுவன். யப்பப்பா! கிராமத்துச் சிறுவன் கலைஞரிடம் தான் எத்தனை மகிழ்ச்சி. தன் வாழ்வின் ஆகச்சிறந்த நினைவுகளைக் கொடுத்த தருணங்கள் அல்லவா அவை. எத்தனை உயர்ந்த பதவிகளை அடைந்த பின்பும் ஊருக்குப் போகையில் குழந்தை போல் மாறி அருகிலிருப்பவர்களுடன் தன் பால்யத்தைப் பகிர்ந்து கொள்ளும் பசுமையான நினைவுகளைக் கொடுத்த ஊர் அல்லவா இந்த திருக்குவளை. கலைஞர் திருக்குவளையில் பிறந்ததால் தான் இத்தனை மகிழ்ந்திருந்தாரா? இல்லை, திருக்குவளை தான் கலைஞர் எனும் பொக்கிஷத்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அவரை இத்தனை மகிழ்ச்சியாக வைத்திருந்ததா? விடை கூறுதல் சற்று கடினம் எனினும் இரண்டிலும் உண்டு உண்மை. தன் போராட்ட வாழ்வின் முதல் அத்தியாயத்தை தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் பள்ளியில் தான் துவங்கி வென்றார் கலைஞர்.   திருவாரூரில் கலைஞர் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசை கனவுகளோடு திருவாரூருக்கு வருகிறான் சிறுவன் கருணாநிதி. இப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அங்கு எந்த வகுப்பில் சேருவதாக இருந்தாலும் தேர்வெழுத வேண்டும். வயதின் அடிப்படையிலும் அழைத்து வந்த ஆசிரியர் கொடுத்திருந்த வாக்கின் அடிப்படையிலும் ஏழாம் வகுப்புக்குரிய முதல் படிவ தேர்வை எழுதினான். தோல்வி; சரி ஏழாம் வகுப்பு கிடைக்கவில்லை பரவாயில்லை இரண்டாம் படிவ தேர்வெழுதினான் ஆறாம் வகுப்பில் சேருவதற்குரியது அது. பாவம் அதுவும் தோல்வி. தேர்வில் தோல்வி இனி பள்ளியில் இடம் கிடைக்காது முடிவாகத் தெளிவாக சொல்லி விட்டார்கள். பள்ளியில் சேராமல் ஊருக்குத் திரும்பினால் அவமானம் நண்பர்கள் கேலி செய்வார்கள். யோசித்தான் நேராக ஓடினான் தலைமையாசிரியரின் அறைக்கு அவரிடம் நடந்ததைச் சொல்கிறான். தான் கிராமத்தில் படித்தவன் அது நகரத்துப் பள்ளிக்கூடம் தேர்வில் தோல்வியுற்றதற்கான காரணமாக அதையும் சொல்லி பார்க்கிறான் எப்படியேனும் தன்னை ஐந்தாம் வகுப்பிலேனும் சேர்த்துக்கொள்ளக் கேட்கிறான் கெஞ்சுகிறான். தலைமையாசிரியர் மறுக்கிறார். கலைஞர் வாழ்வின் முதல் போராட்டம் அங்கு அப்போது துவங்கியது. அவரிடம் அப்பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கோபத்தில் சொல்கிறான் "என்னை நீங்கள் பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் உங்கள் கண் முன்னாலேயே எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழுந்து சாகப்போகிறான்" மிரண்டு போகிறார் ஆசிரியர். சிறிது யோசித்தவர் அவன் முதுகில் தட்டிக்கொடுக்கிறார். தன் விருப்பத்தில் வெற்றி பெறுகிறான் அச்சிறுவன். போராடிக் கிடைத்த முதல் வெற்றியுடன் வெளியே வருகிறான் தனக்காக காத்திருக்கும் தன் தந்தையைக் கட்டியணைத்து ஆனந்தகூத்தாடி போராடி வென்ற தன் முதல் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தான் அவன். அவருக்கு அப்போது எங்கே தெரிந்திருக்கும் தான் இறந்த பின்பு ஆறடி இடத்திற்காகக் கூட போராடித் தான் அவர் ஜெயித்தாக வேண்டும் என்பது. அங்கு தான் அப்பள்ளியில் தான் தனக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுத்தந்த "பனகல் அரசர்" எனும் ஐம்பது பக்க கட்டுரை வடிவிலான துணைபாட புத்தகம் அவனுக்குக் கிடைத்தது. அவனது வகுப்பில் அவன் ஒருவனே அதை முழுமையாக மனனம்செய்து வைத்திருந்தான். அப்படி கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த அந்த "பனகல் அரசர்" புத்தகம் சொல்வது தான் என்ன? இயற்கையாகவே நமக்குள் ஒரு கேள்வி எழுகிறதில்லையா. முதன் முதலில் இந்திய மாநில சுயாட்சி சட்டமன்றம் 1921 ல் துவங்கப்பட்டது. அதன் முதல் மந்திரி சபையின் முதல் அமைச்சராக நீதிக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஏ. சுப்பராயலு பொறுப்பேற்றார். அவர் அந்த ஆண்டிலே இயற்கை எய்தி விடவே அடுத்து முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்தவர் தான் பனகல் அரசர் அவரது ஆட்சிக் காலங்களில் திராவிடர்களுக்காகச் செய்தது என்ன? அதன் சாதனைகளை விளக்கிச் சொல்வதாக இருந்தது அந்தப் புத்தகம். இங்குக் கலைஞர் பனகல் அரசரின் சாதனைகளை படித்து ஆசிரியரின் பாராட்டை பெற்றுக்கொண்டிருந்த அந்த வேளையிலேயே நீதிக் கட்சியின் ஆட்சி விழுந்து ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் எழும்பியது. அவர் இந்தியைத் தமிழர்களை கொண்டு படிக்க வைத்துவிட்டே மறுவேலை என்பதில் குறியாக இருந்தார். அதற்கெதிராக அவருக்கெதிராக தமிழகம் திமிறி எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் ஹிந்தியை எதிர்க்கும் குழுவிற்கு தலைமை ஏற்றிருந்தார் தந்தை பெரியார். ஹிந்தி தமிழகத்தில் இல்லாமையால் வெளியூர் வந்து முட்டி மோதி ஹிந்தி கற்றுக்கொண்டதில் ஹிந்தியைத் தமிழகத்தில் வரவிடாதவர்கள் மேல் நிரம்பக் கோபமுண்டு தனிப்பட்ட முறையில் எனக்கு.  கலைஞர் மீதும் கோபமும் வருத்தமும் உண்டு. எனினும் எங்கள் மீது திணிக்கப்படும் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம். எங்கள் தாய் மொழி அது போதும் என்று முழங்கி அதற்காகத் தமிழர்கள் செய்த தியாகம் அறிந்து கொள்கையில் மெய்சிலிர்க்கத்தான் செய்தது. சுகமான பேச்சு சுவையான உவமை கைவிரல்களில் புள்ளி விவரம் எளிமையான தோற்றமும் கொண்ட சி.என். அண்ணாதுரை என்ற ஆளுமை தன் பேச்சாற்றலின் மூலம் தமிழகம் முழுவதும் அந்த கால கட்டங்களில் தான் அறிமுகமாகிக்கொண்டிருந்தார். தமிழகம் முழுவதும் ஹிந்திக்கெதிராய் தலைவர்கள் மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்க திருவாரூர் வீதிகளில் தன்னுடைய பதினான்கு வயதில் சத்தமின்றி தலைவன் ஒருவன் உருவாகிக்கொண்டிருந்தான். என்னுடைய பதினான்கு வயதில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கிறேன். நேரம்கிடைத்த போதெல்லாம் கிரிக்கெட் விளையாடினேன். பொழுது போகாத போது பத்திரிக்கை படித்தேன். அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ஓடி ஓடிச் சென்று தொலைக்காட்சியில் படங்களைப் பார்த்தேன். முப்பத்து ஐந்து மதிப்பெண்ணுக்குக் குறைவில்லாது எடுத்து ஒவ்வொரு தேர்விலும் வெற்றி பெற்றேன். அவ்வப்போது அம்மா அப்பாவிற்கு உழைப்பதில் உதவி செய்தேன். நிம்மதியாக பத்து மணி நேரம் தூங்கினேன். சாதாரணமான கிராமத்து சிறுவன் ஒருவனின் வாழ்க்கை நான் வாழ்ந்திருக்கிறேன். உங்களில் பலரும் சிற்சில மாறுதல்களுடன் இவ்வயதில் இப்படியாகவே இருந்திருக் கூடும். ஆனால் பதினான்கு வயதில் கலைஞர். தலைவர்கள் பேச்சை கேட்டார். ஹிந்தி எதிர்ப்பில் முழு வீச்சில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மாணவர்களை ஒருங்கிணைத்தார். "சிறுவர் சீர்திருத்த சங்கம்" "இளைஞர் சங்கம்" போன்ற பல பெயர்களில் மாணவர்களைக் குழுவாக ஒருங்கிணைத்து அவர்கள் முன் சொற்பொழிவாற்றினார். "வாருங்கள் எல்லோரும் போருக்கு சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டி திருப்பிடுவோம்" என்ற வரிகளில் துவங்கும் புரட்சி பாடல் எழுதினார். இப்பாடலை முழங்கியபடி சக மாணவர்களை ஒருங்கிணைத்து அதற்கு தலைமைதாங்கி திருவாரூர் வீதிகளில் மாலை வேளைகளில் ஊர்வலம் நடத்திச் சென்றார். ஹிந்தி எதிர்ப்பு துண்டு அறிக்கையைத் தனது ஹிந்தி ஆசிரியர் கையிலே கொடுத்து தன் துணிச்சலை நிரூபித்தார். அதற்காக ஹிந்தி பாடத்தை வாசிக்கச் சொல்லி தலைச்சுற்றும் அளவுக்குக் கன்னத்தில் அடிவாங்கி  பழிவாங்கப்பட்டார். அதோடு பயந்துவிடவில்லை அவர் முற்றும் முழுதாய் ஹிந்தி வகுப்பையே புறக்கணித்தார். இதெல்லாம் தன் பள்ளிப்பருவமான பதினான்கு வயதில் கலைஞர் செய்தது. தொன்னூற்றி நான்கு வயதிலல்ல கலைஞர் தலைவர் பதினான்கு வயதிலே அவர் தலைவர் தான். விளையும் பயிர் முளையிலே தெரியும் சும்மா சொல்லி வைக்கவில்லை நம் முன்னோர்.                     பகுதி - 2   பதினைந்து வயதில் "மாணவ நேசன்" எனும் கையெழுத்து பிரதி மாதம் இரண்டு வீதம் நடத்திக்காட்டி எழுத்து மீது தனக்கிருந்த காதலைச் மாணவப்பருவத்திலேயே சொல்லியவர் கலைஞர். அது தான் அந்தத் துண்டு பிரதி தான்  பின்னாளில் "முரசொலி" எனும் போர்வாளாக தமிழகமெங்கும் கழகத்தினர் வீடுகளில் ஜெயகோஷம் எழுப்பியபடி தேடிவந்தது. கலைஞருக்குக் கலைஞர் உட்பட எண்ணிலடங்கா சிறப்பு பெயர்கள் உண்டு. ஆனால் அவர் பேனா பிடித்த ஆரம்பக்காலத்தில் அவர் அவருக்கு வைத்துக்கொண்ட புனைப்பெயர் 'சேரன்'. கதர் ஆடை அணிந்து வந்த கம்யூனிஸ்ட் ஒருவரின் ஆலோசனையின் பேரில் "மாணவர் சம்மேளனம்" எனும் ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் அமைப்பாளன் கலைஞர் தான். அதன் போக்கு சரியாய் படவில்லை அவருக்கு. இப்படியே போனால் அவர் வாழ்வு காங்கிரசிலோ கம்யூனிஷ்டிலோ  போய் நின்று விடும் போலிருந்தது. ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கம் தொலைத்து யோசித்தவர் மறுநாள் சம்மேளனத்தை கலைத்தார். சம்மேளனத்தின் பணம் மொத்தம் நூறு கையில் இருந்தது. அதில் இருபத்தி ஐந்து ரூபாயை உறுப்பினர்கள் சிலருக்கு திருப்பித் தந்தார். மீதமிருந்த பணத்திற்குரியவர்கள் "சம்மேளனத்தினை கலைத்து விடு பிரச்சனையில்லை பணம் உன்னிடமே இருக்கட்டும்" என்றனர். அன்றைக்கு மாலையே "தமிழ் மாணவர் மன்றம்" என்ற புதிய அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. பணம் கையிலிருந்தவர்கள் அதன் உறுப்பினர் ஆனார்கள். கலைஞர் வெளியில் தெரியவும் பல பொதுக்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் அந்த அமைப்பும் ஒருவகையில் அவருக்கு உதவிற்று. "சத்திய சோதனை"யில் மகாத்மா காந்தியடிகள் கூடத் தான் திருடியதாக எழுதியிருக்கிறார். இங்குக் கலைஞரும் இரு முறை திருடியதாக சொல்லியிருக்கிறார். காந்தியடிகள் திருடியதன் தேவையும் கலைஞர் திருடியதன் தேவையும் இரு கோணங்களிலானது. கலைஞர் சொந்த காரியத்திற்காகவோ சொந்த தேவைக்காகவோ திருடவில்லை. மாறாக தங்கள் அமைப்பு மூலம் இருமுறையும் சொற்பொழிவாற்றவந்தவர்களுக்கு திரும்பிப் போகிறதற்குரிய வழிச்செலவு பணத்திற்காகவே வேறு வழியின்றி திருடியிருக்கிறார். திருடினார் சரி! வெளியில் போயா திருடினார்? இல்லை, முதன் முறை சிறிது பழுதாகியிருந்த தனது தங்க கைச்செயினையே தனது அம்மாவிற்குத் தெரியாமல் திருடி அடகு வைத்துவிட்டார். இரண்டாவது முறை தனது அன்பு மனைவியார் பத்மாவின் வெள்ளி சந்தனக் கிண்ணத்தை திருடிச்சென்று தனது நண்பனிடம் கொடுத்து அதையும் அடகு வைத்துவிட்டார். முதல் திருட்டை பின்னாளில் தன் தாய் தந்தையரிடம் ஒப்புக்கொண்டு தன்மனதில் இருந்த பாரத்தை இறக்கி அவர்கள் துக்கத்தையும் ஆற்றிவிட்டார். ஆனால் இரண்டாவது திருட்டை சொல்லி விடுவதற்கு முன் தனது அன்பு மனைவியார் இயற்கை எய்தி விட்டார்கள். அதன் பின்பு கூட அடகு வைத்தவர்களிடத்தில் போய் அதை மீட்க முயன்றிருக்கிறார் ஆனால் அவர்களோ அதை உருக்கிவிட்டிருந்தனர். கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் நன்றாக எழுதுவார் அது உலகிற்கே தெரிந்தது தான். அவர் கதை வசனம் சொல்லி தன் நண்பனை நடிக்க வைத்து தன் சொந்த வாழ்வில் ஜெயித்த ஒரு கதையுண்டு. அவர் பள்ளி பாடத்தில் மூன்று முறை தோல்வியுற்று படிப்பைப் பாதியில் விட்டவர் அது நமக்குத் தெரியும் தானே. பள்ளி பாடத்தை ஒதுக்கி வைத்து விட்டு மனிதன் குடியரசு பத்திரிக்கை படித்தால் எப்படி ஜெயிப்பார். பின்னாட்களில் தான் என்ன ஆகப்போகிறோம் என்பதை உணர்ந்து படித்த தீர்க்கதரிசி போலும் அவர். அப்படியாக இரண்டாவது முறை தேர்வெழுதி அதன் முடிவிற்காகக் காத்திருந்த தருணம். அடுத்த நாள் முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. வீட்டிலுள்ளவர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் இவர் ஜெயித்து விடுவார் என்று. இவருக்குத் தெரிந்து போயிற்று தோல்வியுறுவோம் என்பது தெரிந்து இரவில் வீட்டை விட்டுச் சென்று விடுகிறார். பெற்றோர் தேடி பரிதவிக்கிறார்கள். நண்பன் தென்னனுக்கு கடிதம் எழுதி வீட்டில் சொல்ல சொல்கிறார் தான் இன்ன இடத்தில் பத்திரமாக இருப்பதாக. தென்னனிடம் காசை கொடுத்து கலைஞரை அழைத்து வரச் சொல்லி விடுகிறார்கள் அவரது அருமை பெற்றோர்கள். கலைஞர் வீட்டை விட்டுச் சென்றது தோப்புத்துறை எனும் ஊருக்கு அங்கு இராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள். அதை வைத்து கலைஞர் இராணுவத்திற்குப் போக பெயரைக் கொடுத்ததாகவும் தென்னன் வந்து அவரைப் பெரும்பாடு பட்டுத் தடுத்து அழைத்து வந்ததாகவும் தென்னனுக்கு கலைஞரால் கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுக்கப்படுகிறது. தென்னன் அவர் பெற்றோர் முன் நடிப்பில் தன் திறமையைக் காட்டக் கலைஞரின் பெற்றோர் அக்காக்கள் எல்லோரும் கலைஞரை கட்டிக்கொண்டு தோல்வியை மறந்து திரும்பி வந்ததற்காய் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார்கள். பின்னாட்களில் தன் பேனா மூலம் தமிழகத்தையே அழவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவருடைய முதல் கற்பனை ரசனையாய் வெளிப்பட்ட இடம் அதுவே. இக்காலகட்டங்களில் தான் முதன் முதலில் 'நட்பை'பற்றி பள்ளி மேடையில் பேசி ஆசிரியர்களின் பாராட்டைப்பெற்று ஒரு பேச்சாளனாகவும் வளர்ந்தார். தன்னுடைய முதல் நூலான 'கிழவன் கனவு' வெளிவந்து தன்னை ஒரு எழுத்தாளனாகவும்  மெருகேற்றிக்கொண்டதும் இக்காலகட்டங்களே. தன்னுடைய முதல் நாடகமான 'பழனியப்பன்' மழையால் நஷ்டமடைந்து போக அதை விற்று நூறு ரூபாய் சம்பாதித்து கடனை அடைத்திருக்கிறார் கலைஞர். அண்ணா நடத்திய பத்திரிக்கையான "திராவிட நாடு" பத்திரிக்கையில் கலைஞர் எழுதி அனுப்பிய 'இளமை பலி' கட்டுரை வெளியானது. தொடர்ந்து இன்னும் சில கட்டுரைகளையும் அனுப்பியிருந்தார் கலைஞர். திருவாரூர் வந்த அண்ணா இந்தக் கட்டுரைகளுக்கு சொந்தக்காரரான கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று அழைத்து வரச்சொன்னார். கருணாநிதி எனும் படிக்கும் வயது வாலிபனை அவர் அங்கு எதிர்பார்க்கவில்லை. தன் தாய் தந்தையரிலும் அதிகம் தான் போற்றி மதிக்கும் அண்ணாவை அங்கு தான் கலைஞர் முதன் முதலில் சந்தித்தார். அன்பொழுக பேசிய அவர் "இனி நீ கட்டுரை எழுதி எனக்கு அனுப்பாதே ஒழுங்காகப் படி!" என்று அறிவுரை கூறி அனுப்பினார். கலைஞர் வாழ்வில் தன்னுடைய அறிவாசான் அண்ணா பேச்சை கேட்காமல் போன இடங்கள் இரண்டுண்டு. இரண்டுமே அண்ணாவுக்கும் சேர்த்தே பெருமை தேடித்தந்தது. அதில் ஒன்று தான் எழுதாதே என்று சொல்லியும் கலைஞர் எழுதியது. 1944 ஆம் வருடம் கலைஞருக்கு பத்மாவதியுடன் திருமணம் இனிதே நடந்தேறியது. திருமணத்திற்குக் கலைஞர் போட்ட ஒரே நிபந்தனை திருமணம் சுயமரியாதை திருமணமாக நடக்க வேண்டும் என்பதே. வயது நிரம்பிய ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடப்பது இயல்பே. திருமணத்திற்குப் பிறகு பொறுப்புகள் கூடுவதும் இயல்பு தானே. பொறுப்புகள் என்பது தேவை, தேவையை நிறைவேற்றத் தேவை பணம். இதுவரை கலைஞரின் வாழ்வு கட்சி, அரசியல், எழுத்து, சொற்பொழிவு இப்படியே சுழல்கிறது. கல்யாணம் முடிந்த கையோடு கூட பத்து நாள் சொற்பொழிவாற்ற சுற்றுப்பயணம் சென்ற கட்சி வெறியர் அவர். நாட்கள் நகர்ந்தது ஆண்டு ஒன்றானது. அவருக்கு நிரந்தர வேலை என்று ஒன்று இல்லை அது தமது அருமை துணைவியாரையும் சேர்த்து வாட்டியது. ஒருவனுக்குக் கீழ் வேலை செய்வதென்பது கடுங்காவல் பெற்ற சிறைகைதியின் மனநிலை. ச்சீ! அப்படியொரு வேலையை அவரால் யோசித்துப்பார்க்கவும் முடியவில்லை. தெரிந்த வேலை எழுத்து, பேச்சு, அரசியல். இதைத்தவிர வேறொன்றும் தெரியவுமில்லை. இது அன்றைக்கு ஒருவன் குடும்பத்தோடு வாழ போதுமானதாக இல்லை. யோசித்தார் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு ஒன்று வந்தது. அதாவது, இவரது முதல் நாடகமான 'பழனியப்பன்' அதை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டார்களே அந்த நாடக நிறுவனம் அவர்களே நடிக்க அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுப் போனார் கலைஞர் ஆனால் அங்கும் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது தான் எழுதும் நாடகங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டே நாடக நிறுவனத்தில் இணைந்தார். போதுமான வருமானம் நாடக நிறுவனத்துக்கு வரவில்லை வருத்தம் தான் அதற்குரிய காரணம் அக்குழுவில் உள்ள நடிகர் நடிகைகள் அல்ல மறாக அக்குழுவின் பெயர் 'திராவிட நடிகர் கழகம்' என்பது. பெயரில் திராவிடம் இருப்பதாலேயே பலரால் வெறுக்கப்பட்டிருக்கிறது அந்நாடக நிறுவனம். இந்நாடகத்திற்குத் தலைமை வகிக்க ஒருமுறை அண்ணா வந்திருந்தார். அவரிடத்தில் சென்று நாடக மன்ற உரிமையாளர் பத்து ரூபாய் கேட்ட கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது. அவர் புறப்படும் நேரம் தன்னைப் பார்த்து "கருணா போய் வருகிறேன்" என்றதை தன் நெஞ்சில் பசுமையான நினைவாகப் பதிந்து வைத்திருக்கிறார் கலைஞர். இந்நாடக நிறுவனம் மூலம் கட்சியின் கொள்கைகளும் பரப்பப்பட்டது. இதில் இணைந்ததில் கலைஞருக்கு மன ஆறுதல் தந்தது இது ஒன்று மட்டுமே. இரவினில் நாடக நடிப்பு! பகலினில் மாநாடு வேலை! இப்படியாகத்தான் கலைஞர் இருந்தார் புதுச்சேரிக்கு நாடகம் போட சென்ற இடத்தில். அங்கு இவர்களது நாடகத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருந்தது. அங்குச் சென்றவர் இரண்டொரு கட்டுரைகளும் 'தொழிலாளர் மித்ரன்' இதழுக்கு எழுதினார். காங்கிரசார் இதை எழுதியது யார் என்பதைக் கவனித்தனர். இவரைக் கவனிக்க தக்க தருணமும் பார்த்து காத்திருந்தனர். மாநாடு துவங்கியது பெரியார், அண்ணா, அழகிரிசாமி வந்திருந்தனர் மாநாட்டுக்கு. வெளியே காங்கிரசாரின் கூச்சல் தொடர்ந்தது "திராவிடத் தலைவர்களே திரும்பிப் போங்கள்" என்பதே அவர்கள் ஒலி நாதமாக இருந்தது. "வா என்றழைப்பது தான் தமிழர் பண்பு! போ என்று கூற காரணம் யாதோ!" என்று துவங்கி அறிஞர் அண்ணா உரையொன்று ஆற்றினார். உரை முடிந்து கழக கொடி உயர்ந்தது சற்று நேரத்திற்குள் கொடி வீழ்ந்தது. மாநாடு மேடை கலவர மேடையானது. பொறுப்பாளர்கள் வந்த தலைவர்களை கிடைத்த வழிகளிலெல்லாம் பத்திரமாக அனுப்பி வைத்தனர். பாரதிதாசன், காஞ்சி கல்யாணசுந்தரம் உடன் கலைஞரும் அறைகளுக்குத் திரும்பி சென்று கொண்டிருக்க அவர்களை ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது மூவரும் திசைக்கொருவராகினர். லாடம் அடிக்கப்பட்ட பூட்ஸ் ஒன்றால் அன்றைக்குப் பதம் பார்க்கப்பட்டார் கலைஞர். அடிகள் மிதிகள் அவமானங்களினூடே தான் தலைவன் உருவாகிறான் கலைஞரும் அவ்வழியே. அன்றைக்கு அதன் பிறகும் விடாமல் கலைஞரை புதுச்சேரி வீதிகளில் துரத்தி துரத்திச் சென்று அடித்தது அக்கும்பல். கலைஞர் இறந்தார் என்றே கருதி வீதியில் வீசிவிட்டுச் சென்றார்கள் அவர்கள். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்த கலைஞர் ஒரு முதிர்ந்த தாயார் மற்றும் சிலர் உதவியுடன் மீண்டிருக்கிறார். அவர் மீண்டும் தலைவர்களை சந்திக்கக் கிளம்ப தயாரான போது இப்படியே போனால் கண்டுபிடித்து அடித்து விடுவார்கள் என்பதை உணர்ந்து அவர் ஒரு முஸ்லீம் போல் வேடமணிந்து பெரியார் முன் சென்று நின்றிருக்கிறார். கலைஞரைக் கண்ட பெரியார் அவரை ஆரத்தழுவிக்கொண்டு அக்கரையாய் நலம் விசாரித்து அவர் கரங்களாலேயே கலைஞரின் காயத்திற்கு மருந்திட்டு அவர் மாணவனாகக் குடியரசு இதழ் இணை ஆசிரியராகப் பணிக்கு அமர்த்திக்கொண்டார். 'வலிகளிலிருந்து தான் வழிகள் பிறக்கின்றன' இதற்குக் கலைஞர் வாழ்வின் இச்சம்பவமும் ஓர் உதாரணம். அங்குக் கலைஞர் பெரியாரிடமிருந்து கற்றது பெற்றதும் ஏராளம். குடியரசு பதிப்பில் அவரையும் கட்டுரைகள் எழுத அனுமதித்தார் பெரியார். முதல் கட்டுரை வெளியான போது ஊரெல்லாம் கொண்டு திரிந்து டீக்கடைகளிலும் மனிதர்கள் கூடும் இடங்களிலும் அவர்கள் கண்ணில் படும் இடங்களில் வைத்து விட்டு யாரெல்லாம் எடுத்துப் படிக்கிறார்கள் படித்து விட்டு என்ன விமர்சனம் சொல்கிறார்கள் என்று ஆவலோடு கவனித்த ஆரம்பக் கால எழுத்தாளரான கலைஞரின் எழுத்து தமிழகமெங்கும் தங்கு தடையின்றி பரவத் துவங்கியது. அங்கு அவருக்குச் சம்பளம் ரூபாய் 40 சாப்பாடு இதர பிற செலவுகள் போக தன் அன்பு மனைவி பத்மாவிற்கு கணிசமான தொகையொன்றை அனுப்பி கண்ணியமிக்க கணவனாக மாறினார் அவர். அப்படி ஒரு வருடம் அங்கேயே உருண்டோடியது. அப்போது தான் 'ராஜ குமாரி' எனும் திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. மகிழ்வோடு வாழ்த்தி வழியனுப்பினார் பெரியார். கலைஞர் வாழ்வில் புதிய அத்தியாயம் ஒன்று இனிதே ஆரம்பமாகியது.                                                 பகுதி - 3   ராஜ குமாரி திரைப்படத்திற்கு வசனம் எழுதச்சென்றார் கலைஞர். அப்படத்தில் தான் ராமச்சந்திரன் என்பவர் நடிகராக (ஹீரோவாக) அறிமுகமானார். பின்னாளில் அவர் தான் எம்.ஜி.ஆர் எனவும் மக்கள் திலகம் எனவும் தமிழக மக்களால் போற்றி மதிக்கப்பட்டவர். அப்போதெல்லாம் கலைஞருக்கும் எம்.ஜி. ஆருக்கும் விவாதம் நடக்கும் அவர் காந்தியைப்பற்றி பேசுவார். கலைஞர் அண்ணாவைப்பற்றி பேசுவார். கலைஞருடன் கூடிய ஆரோக்கியமான விவாதத்தின் விளைவால் கழகத்தில் இணைந்தார் எம்.ஜி.ஆர். அந்தக் காலகட்டத்தில் கோவைக்கு அருகில் உள்ள சிங்காநல்லூர் எனும் கிராமத்தில் பத்து ரூபாய் வாடகையளித்து குருவிக்கூடு போன்ற சிறு வீட்டில் மனைவி பத்மாவுடன் வாழ்ந்து வந்தார் கலைஞர். அங்கு அந்த சிறு வீட்டில் வைத்து அவர் எழுதிக்குவித்தது ஏராளம். அதை அவரே பெருமிதமாக சொல்லியிருக்கிறார். அங்கு வசித்து வந்த அந்த நேரத்தில் தான் தனக்கு அறிவூட்டி ஆளாக்கிய அவரது தந்தை நோயினால் பிடிக்கப்பட்டார். மனைவியுடன் அவரைக்காணச்சென்றார் கலைஞர். அவருடனே அவரது இறுதி நாட்களில் தங்கியும் இருந்தார். அப்போது தான் அவர் வசனம் எழுதிய திரைப்படமான 'ராஜ குமாரி' வெளியானது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கலைஞரின் படத்தை பார்க்க வேண்டும் எனும் ஆசை கொண்டு தியேட்டருக்கு வந்து விட்டார் அவரது அப்பா. அவருக்கு அப்போது கண்களில் காட்சி தெளிவாக இல்லை. அவரால் சினிமாவை பார்த்து ரசிக்க முடியவில்லை. ஆனால் தன் மகன் எழுதிய வசனத்தைக் காது குளிரக் கேட்டுவிட்டு வாழ்வில் வெற்றி பெறப்போகும் மகனை மனமார வாழ்த்தி விட்டே இவ்வுலகிற்கு விடைகொடுத்தார். சிங்காநல்லூரில் மனைவியுடன் தொடர்ந்தது கலைஞரின் வாழ்வு. ஒரு நாள் கலைஞர் தன் மனைவி பத்மாவை அடித்தார்! ஏன் அடித்தார்?! இரண்டு மைல் தூரம் அவரே தலையில் அரிசியைச் சுமந்து சென்று மாவரைத்து வந்திருக்கிறார். கணவனுக்கு வருமானம் குறைவு தன் கணவன் கஷ்டம் உணர்ந்து குடும்பம் போற்றியவள் அந்தப் புண்ணியவதி. மனைவி மீது அதீத அன்பு வைத்திருந்தன் காரணமாக நீ ஏன் இத்தனை தூரம் இந்த பாரத்தை தூக்கி நடந்து சென்றாய் என்று கேட்டு அடித்திருக்கிறார் கலைஞர். மற்றொரு முறை கலைஞர் மனைவியிடம் கோபித்துக்கொண்டு காலையில் எதையும் சாப்பிடாமல் கிளம்பிவிட்டார். இரண்டு மைல் தூரம் தாண்டிச்சென்ற கலைஞரை கையில் காப்பி டம்ளரோடு வந்து அவருக்குக் காப்பியை கொடுத்துச் சென்றார் அவர் மனைவி பத்மா. கலைஞரின் கோபம் தன் மனைவி பத்மாவின் பரிசுத்த அன்பின் முன் பரிதாபமாய் தோற்ற நிமிடம் அது. பெரும் தலைவர்கள், கலைஞர்கள், அறிவாளிகள் அத்தனை பேர் வாழ்வின் ஆரம்ப காலகட்டங்களிலும் பெரிய ஏமாற்றங்கள் சிறு சிறு தோல்விகள் விரக்திகள் நிழந்து விடுவது உண்டில்லையா. அது போல கலைஞரின் வாழ்விலும் ஏமாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு. அப்போது அவர் 'அபிமன்யு' என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். அதைக்காணத் தனது மனைவி, நண்பர்களை அழைத்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்றார். திரையில் படத்திற்கு பங்காற்றியவர்களின் பெயர் பட்டியல் எழுதிக்காட்டப்பட்டது. அதில் கலைஞரின் பெயர் விடுபட்டிருந்தது. கலைஞர் அதை அப்படியே விட்டு விடவில்லை. போய் சம்மந்தப்பட்டவர்களிடம் ஏனெனக்கேட்டார் "இன்னும் கொஞ்சம் புகழ் உனக்கு வரட்டும் போடுகிறோம்" என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. பொறுமையை இழந்தார் கலைஞர் முன் பின் யோசிக்கவில்லை. உன் பிழைப்பே எனக்கு வேண்டாம் என்று பெரிய சினிமா நிறுவனமான அதை கை கழுகிவிட்டு கோவையை விட்டே புறப்பட்டு திருவாரூருக்கு மனைவியுடன் சென்றுவிட்டார். கோவையிலிருந்து கலைஞர் கிளம்பியதில் அதிகம் வருந்தியவர்கள் கழகத்தினர் தான் காரணம் அவர் அங்கிருந்தவரைச் சொற்பொழிவுகள், மேடைப் பேச்சுகள், பொதுக்கூட்டங்கள், திருமணவிழா பேச்சுகள் எனக் கட்சி உறுப்பினர்களை உற்சாகமாக வைத்திருந்தார். ஊருக்குப் போன பின்பு துண்டுத்தாளாக வெளியிட்டுக்கொண்டிருந்த 'முரசொலி' யை அச்சாக்கிக் கொண்டுவரலாம் எனும் எண்ணம் உதித்தது. ஒரு பத்திரிக்கை துவங்கி அதை வளர்த்தெடுக்க இவ்வளவு கஷ்டம் உண்டா?! எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது அவர் முரசொலியை ஆளாக்கப்பட்ட பாடுகளைப் படித்தறிகையில். பணம் கையில் இல்லை ஆனாலும் கடன் கிடன் வாங்கி அச்சாக்கிவிட்டார். மூன்றாவது பிரதிக்கே தள்ளாடத்துவங்கியது முரசொலி. பாராட்டுகள் வந்து குவிந்தது! அது மட்டும் போதுமா என்ன ஒரு வார இதழ் நடத்தி ஜெயிக்க?! போதிய வருமானம் இல்லை. அதை நிறுத்தும் எண்ணமும் இல்லை முரசொலி அவர் மூச்சில் கலந்திருந்தது. அதன் தேவைக்கு வீட்டுப் பொருட்கள் இரையானது. மனைவியின் தங்க தாலிச்செயின் மஞ்சள் கயிறாக மாறியது. பத்மா சிரித்த முகமாய் தன் கணவன் கஷ்டத்தை தன் கஷ்டமாகத் தாங்கிக்கொண்டார். சரியான இடத்தில் பத்திரிக்கையை நேரத்தோடு கொண்டு போய் சேர்க்க வேண்டும். வேலைக்கு ஆள் வைக்க வசதியில்லை. தலையில் சுமந்தபடியே பல மைல்கள் நடந்து கொண்டு போய் சேர்த்திருக்கிறார் கலைஞர். இன்றைக்குப் பிரம்மாண்டமாய் காணும் முரசொலிக்குக் கலைஞர் தன் நேரம், உழைப்பு அதனுடன் தன் மூச்சையும் கொடுத்து வளர்த்து சென்றிருக்கிறார். அன்றைக்கு அவர் இதயம் கூட முரசொலி... முரசொலி... என்றே துடித்திருக்கும். மனுசன் அத்தனை நேசித்திருக்கிறார் முரசொலியை. அதன் காரணமாகத்தான் அவரால் முரசொலியை தன் மூத்த மகன் எனவும் சொல்ல முடிந்திருக்கிறது. 1947 - ல் பாரதம் இந்தியா பாகிஸ்தான் எனும் இரட்டைத் தேசங்களாக சுதந்திரம் பெற்றது. அதுவரை ஒன்றாகப் பணியாற்றிய பெரியார், அண்ணா என்ற இருபெரும் தலைவர்களின் பிரிவிற்கான முதல் விதையும் அதில் தான் விழுந்தது. பெரியார், இது இந்தியருக்குத் துக்க நாள் என்றார். அண்ணா, இது இந்தியருக்கு இன்ப நாள் என்றார். மனக்கசப்பு வளர்ந்தது. அதில் ஆதாயம் தேடியவர்கள் அதற்கு நீரூற்றி உரம் போட்டு வளர்க்க நினைத்தனர். அவர்கள் இருவரையும் இருகண்களாக நேசித்த உண்மை தொண்டர்கள் அவர்கள் பிரிந்துவிடக்கூடாது என்று விரும்பினர் வேண்டினர். அவர்களை உளமார நேசித்த கலைஞரும் முரசொலியில் கட்டுரைகள் எழுதினார். தவறெனத் தெரிந்தவர்களை தனது பேனாவால் குத்தினார் கலைஞர். குற்றம் இழைத்தவர்களுக்கு வலித்தது. அதன் விளைவு தி க வினர் சிலராலேயே முரசொலி இதழ் ஆங்காங்கு எரிக்கப்பட்டது. அந்தக் காலகட்டம் கலைஞரின் வாழ்வில் பெரும் போராட்டமான கால கட்டம். முரசொலியை முன்னுக்குக் கொண்டுவர போராட்டம். அரசியலில் போராட்டம். எழுத்துலகில் போராட்டம். கட்சிக்குள் தலைவர்களுக்குள் போராட்டம். எல்லாவற்றிற்கும் மேலாக முதற் பிரசவத்தோடு மனைவி பத்மா உயிருக்குப் போராடினார்கள். மற்ற அத்தனை போராட்டங்களிலும் பிற்காலங்களில் வென்று நிலைத்து நின்றார் கலைஞர். ஆனால் மனைவி காலனோடு நடத்திய போராட்டத்தில் தோற்றுப்போனார். மூன்றாண்டு இல்லற வாழ்வுடன் தன்னுடைய இருபதாம் வயதிலேயே முத்து எனும் மகனைக் கலைஞருக்கு கொடுத்துவிட்டு பிரசவத்தோடு இணைந்து வந்த காய்ச்சல் எனும் அரக்கனால் பத்மா எனும் மாணிக்கம் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டது. பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர்களுக்கு மனைவி, குடும்பம், பிள்ளைகள் அத்தனை பேரும் இரண்டாம் பட்சம் தான். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மருத்துவர்களால் மனைவி கைவிடப்பட்ட நிலையிலும் கூட வாக்களித்தபடி கலைஞர் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு பேசச் சென்றார். பேசிவிட்டு கலைஞர் திரும்பி வரும் வேளையில் தன் மனைவி பேச்சை மட்டுமல்ல தன் மூச்சையும் நிறுத்தியிருந்தார்கள். தன் கஷ்டகாலத்தில் எல்லாம் தன் தோளோடு தோள் நின்றவர்கள். கேட்டபோதெல்லாம் முகமலர்ந்தபடியே தன் நகைகளைக் கணவனுக்கு தூக்கிக் கொடுத்தவர்கள். தன் கணவனை உலகே புகழ்ந்து வியக்கையில் அதைக் காணும் பாக்கியமின்றி பாதியிலேயே அவரை விட்டுச்சென்ற துர்பாக்கியவதியாகி போனார் கலைஞரின் பத்மா. தயாளு அம்மாள் தயாளு கருணாநிதி ஆன கதை பத்மாவை பறிகொடுத்த கலைஞருக்கு குழந்தையான மு.க முத்துவை முன்னிட்டு மற்றொரு திருமணத்தை நடத்தி வைக்கக் குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதற்கு ஒத்துக்கொண்ட கலைஞர் பெருந்தனம் உள்ள வீட்டுப் பெண் வேண்டாம் பெரும் குணம் உள்ள வீட்டுப் பெண் போதும் என்று முடிவாக தெளிவாகச் சொல்லி விட்டார். அதற்குக் காரணத்தையும் தன் நூலில் விரிவாக சொல்லியிருக்கிறார் கலைஞர். அவர் சொன்னபடி பெண் பார்க்க குடும்பத்தினர் போனார்கள் சில பெண்களைப் பார்த்தார்கள் அதில் தயாளு அம்மாளைப் பிடித்திருந்தது அவர்களுக்கு. நான் பெண் பார்க்க வரப்போவதில்லை பெண்ணின் புகைப்படம் இருந்தால் வாங்கி வரச்சொல்லி விட்டார் கலைஞர். அவர்கள் அதுவரை பெண்ணை புகைப்படம் எடுத்ததில்லை ஆகத் திருமணத்திற்கு முன் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கும் அந்த வாய்ப்பும் பறிபோனது அவருக்கு. அவள் அப்படி இருப்பாள் இப்படி இருப்பாள் என்ற அக்காள்களின் வர்ணனையோடு திருமண நாள் நெருங்கியது. எல்லாம் சரி தான் திருமண செலவிற்கு பணம் வேண்டுமே அதற்கு என்ன செய்வது. அதற்கும் ஒரு வழி யோசித்தார் கலைஞர். 'தூக்கு மேடை' என்றொரு நாடகத்தை எழுதி அதை அண்ணா முன்னிலையில் திருச்சியில் அரங்கேற்றி விட்டார். அதிகம் எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்தது ரூபாய் எண்ணூறு தான். கூடக் கொஞ்சம் கடனை கிடனை வாங்கி திருமண ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். அழைக்கப்பட்டவர்கள் வந்தார்கள். அழைக்காமல் கூட ஒரு கூட்டம் அவ்வீதி வழியே சென்றது. அக்கூட்டம் மீண்டும் ஹிந்தியைத் தூசி தட்டிக் கையிலெடுத்த காங்கிரஸ் கட்சிக்கெதிரான ஆர்ப்பாட்டக் கூட்டம். வந்தவர்களை வரவேற்றபடி வாசலில் நின்றிருந்தார் கலைஞர். அதுவரை அங்கிருந்த கலைஞரை திடீரெனக் காணவில்லை. பெண் தயாராகிவிட்டாள் மாப்பிள்ளையைக் காணவில்லை. அட, இங்கு இப்போது நின்ற மாப்பிள்ளை எங்கப்பா? இப்போது பார்த்தேனே! சற்று நேரத்திற்கு முன்பு கூட பார்த்தேனே! இதென்ன மாயம் மாப்பிள்ளையை எங்குத் தேடியும் காணவில்லை. இத்தகைய பல குரல்கள் திருமண வீட்டில் எதிரொலித்தது. சற்று நேரத்தில் திருமணம். அட, இந்த மாப்பிள்ளை எங்கு தானப்பா போனார். மாப்பிள்ளையைக் காணாது திருமணவீடு பயத்துடன் பரபரப்பானது. மாப்பிள்ளையான கலைஞர் வெளியே ஹிந்தி எதிர்ப்பு கூட்டத்தை கண்டதும் தான் மாப்பிள்ளை தனக்கு இன்னும் சற்று நேரத்தில் திருமணம் என்பதையும் மறந்து அவர்களுடன் கோஷம் போட்டபடி சென்றுவிட்டார். சில விசயங்கள் மனிதர்கள் இரத்தத்தில் ஊறிவிடுவதுண்டு என்று சொல்வார்கள் அது இது தான் போலும். ஒருவழியாக அவரைத் தேடிப்போய் நண்பர்கள் அழைத்து வர முயல்கையில் ஆர்ப்பாட்டம் முடிந்து அவரே திரும்ப வந்துவிட்டார். பெண் வீட்டார் எல்லாம் இன்றைக்கும் கோஷமும் கொடியுமா? முறுமுறுத்தார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கலைஞர் மணமேடையில் ஏறினார். தயாளு தான் பாவம்! திருமணத்திற்குத் தயாராகி ஒரு மணி நேரத்திற்கு மேல் திருமணத்தன்றைக்கே காக்க வைத்துவிட்டார் கலைஞர். அவருக்காக தன் வாழ்நாள் முழுமையும் இது போல பலமுறை காத்திருக்க வேண்டும் என்பதற்கான ஒரு ஒத்திகை தான் அது என்று பிற்காலத்தில் அவர் எண்ணியிருக்கக்கூடும். மணமகன் வந்தாயிற்று மணமகள் தான் ஆல்றெடி மணமகனுக்காகக் காத்திருக்கிறாளே இனியென்ன திருமணம் என்று தானே எண்ணிக்கொள்வீர்கள் அது தான் இல்லை. அப்போது அங்கு ஒரு புதிய பிரச்சனை உதித்தது. அதாவது திருமணத்திற்கு யார் தலைமை தாங்குவது என்பது பிரச்சனைக்கு காரணம். இதென்னடா ஒரு கல்யாணத்துக்கு பிரச்சனை மேல் பிரச்சனை முதலில் மாப்பிள்ளையை காணோம் இப்போது மாப்பிள்ளை வாந்தாயிற்று தலைமை தாங்குவதில் இரு தரப்பினருக்குள் பிரச்சனை. கலைஞர் யோசித்தார் அவர் தான் சமயோஜிதி ஆயிற்றே. இவர்களை இப்படியே விட்டால் கல்யாண வீட்டை கலவர வீடு ஆக்கிவிடுவார்கள் என்பதை உண்ர்ந்தார். மைக்கை பிடித்தார் தனது கர கரத்த குரலில் "பெரியோர்களே! நண்பர்களே! என விளித்துத் துவங்கினார் சங்க இலக்கியங்களில் காதல் தலைவன் காதல் தலைவி என்று தான் பார்த்திருக்கிறோம். ஆகவே இந்த மணவிழாவிற்கு நானும் என் மனைவியும் தான் தலைவனும் தலைவியும் இப்போது நாங்கள் மாலையை மாற்றிக்கொள்கிறோம்." என்றபடி திருமணத்தை முடித்துக்கொண்டார் கலைஞர். சண்டை போட்டவர்களுக்கு பழம் பாயசத்தோடு அறுசுவை உணவு அளித்து இனிதே அனுப்பி வைத்தனர். தான் தலைவர் தான் என்பதை தனது இரண்டாவது திருமணத்திலும் நிரூபித்து தயாளுவை கைபிடித்துக்கொண்டார் கலைஞர். 1949 - ஆண்டு ஜீலை ஒன்பதாம் தேதியும் தமிழகத்தில் ஒரு திருமணம் நடந்தது. அன்றைய தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த திருமணம் அது. பல விளைவுகளை உருவாக்கிய திருமணமும் அது. எத்தனையோ பேர்களின் வேண்டுகோள், அறிவுறுத்தல், அன்புறுத்தர் அத்தனையும் மீறி பெரியார் மணியம்மையை மணமுடித்தார். அத்திருமணத்தின் காரணமாகத்தான் திக என்ற தாய்கழகத்திலிருந்து திமுக என்ற புதியதோர் குழந்தை பிறந்தது. திக விலிருந்து பெரியாரையே நீக்கிவிடுவோம் என்ற சிலரது யோசனைக்கு அண்ணா செவிசாய்க்கவில்லை. அது நடவாத காரியம் நடக்கக் கூடாத காரியம் என்பதை உணர்ந்திருந்தார். அவர் அறிவாளி உணர்ச்சிகளுக்கு வேலை வழங்காமல் அறிவுக்கு வேலை வழங்கினார். விளைவு புதிய கழகம் கண்டார். 1949 செப்டம்பர் 17 திமுக உதயமானது. உதயமான இரண்டே மாதத்திற்குள் 700 க்கும் மேற்பட்ட கிளை கழகங்கள் 50000 திற்கும் மேலான உறுப்பினர்கள் கழகத்தில் சேர்ந்து வலுவான ஓர் இயக்கமாகத் தன்னை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திக்கொண்டது.                         பகுதி - 4   கலைஞரும் கவியரசரும் "எனக்கு வரமும் சாபமும் தூக்கம் தான்" என்றிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன் தன் சுயசரிதையான வனவாசத்தில். இதை இங்கு சொல்ல காரணம் உண்டு தொடர்ந்து படிக்கையில் உங்களுக்கும் புரியும். கலைஞரும் கவிஞருக்குமான நட்பும் பழக்கமும் 'மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனம்' எனும் சினிமா நிறுவனத்தில் வைத்தே கிடைத்தது. அங்கு கவியரசர் பாட்டெழுத வந்தார் கலைஞர் வசனம் எழுதச்சென்றார். இருவரது நட்பும் அங்கு மலர்ந்தது. ஏனோ இறுதிவரை அவர்களால் அதே நட்போடே நீடிக்கமுடியவில்லை அது கசப்பின் அனுபவம் அதை இப்போது விடுவோம் அவர்களது சூடான சுவையான அழகான ஆரம்பகாலத்தை மட்டும் இப்போது ரசிப்போம். அண்ணா கழகத்தை துவங்கி அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்துகையில் இருவரும் சேலத்தில் இருந்தார்கள் ஒன்றாக சென்னைக்கு புறப்பட்டார்கள். கையில் போய்வரும் அளவே காசு இருக்கிறது. கூட்டம் முடிந்தது அண்ணாவுடன் கலைஞர் சென்றார். அறைக்கு கவிஞர் வந்து தூக்கத்தை தொடங்கினார். நடு ராத்திரியில் கலைஞர் அறைக்கு வந்தார். கவிஞரை அழைத்தார். பக்கத்து அறைகளில் படுத்திருந்தவர்கள் எழும்பி வந்து 'ஏனையா! நடுராத்திரி வந்து தொந்தரவு செய்கிறீர்' என்று புத்திமதி சொல்லும் வரை கவிஞர் எழும்பி வந்து கதவை திறக்கவில்லை. இப்போது கவிஞர் எழும்பி வந்து அறையை திறந்து கொடுத்தபடி மறுபடியும் படுத்துக்கொண்டார். காலையில் இவர்கள் காலை உணவருந்தி விட்டு விட்டுச்சென்ற இரு பாத்திரங்கள் கலைஞரின் கட்டிலின் மேல் இருக்கிறது. அதை எடுத்து ஒதுக்க எண்ணிய கலைஞர் பாத்திரத்தை கையில் எடுத்தார். அதன் அடியில் இருந்த கருநாகப்பாம்பின் குஞ்சொன்று தலை நீட்டி கலைஞரை எட்டிப் பார்த்தது. கலைஞர் கத்தி கவிஞரையும் எழுப்பி விட்டார் இருவரும் கத்தியபடி வெளியே வந்தனர் விடுதியின் ஊழியர்கள் வந்து பாம்பை அடித்து தூக்கி போட்டுவிட்டு இது குட்டி இன்னும் இது போல் சிலது இங்கு இருக்கலாம் என்று பீதியை கிளப்பிவிட்டு சென்றுவிட்டனர். பாம்பைக் கண்டால் தான் படையும் நடுங்குமே கலைஞருக்கும் பயம் வந்தது. தூக்கம் போனது மெல்ல கவிஞரிடம் "என்னுடைய கட்டிலில் பாம்பை பார்த்தால் பயந்து விட்டேன். நீர் இதில் மாறி படுத்துக்கொள்ளும்" என்றார். "பாம்பை பார்த்தால் உமக்கு இத்தனை பயமா?" என வீரமாய் பேசிய கவிஞர் கடைசி வரை மாறிப்படுக்கவேயில்லை பேசிய பேச்சுக்கு மாறிப் படுத்துவிடுவார் என்று எண்ணிய கலைஞரின் காதுகளில் அவரது குறட்டை ஒலி தான் வந்து சேர்ந்தது. மறுநாள் விடிந்தது இனி சேலத்திற்கு செல்ல வேண்டும். சரியான காசே இருக்கிறது அவர்களிடம். அதை பற்றி யோசிக்காமல் கவிஞர் போய் மூன்றாம் வகுப்புக்கு பதில் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு எடுத்து வந்து விட்டார். மதிய சாப்பாட்டுக்கும் இருந்த காசும் போயே போச்சு. "ஏனையா மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு எடுத்திருக்கக் கூடாதா?" என்றதற்கு "என்னிடம் ரெண்டணா இருக்கிறது சமாளிப்போம்" என்று கவிஞர் சொன்னார். இருப்பதை வைத்துச் சமாளித்து தானே ஆக வேண்டும் வேறுவழி?   சரி சமாளிக்கலாம் எனும் எண்ணத்தோடு தங்களது இருக்கையில் போய் அமர்ந்தனர். அவர்கள் அருகில் உள்ள இருக்கையில் அறுபது வயது மதிக்கத்தக்கப் பழைய ஜமீன்தார் ஒருவர் வந்தமர்ந்தார். வந்தவர் இவர்களது அரசியல் பேச்சையும் இவர்களுடன் உரையாடுவதையும் விரும்பினார். சரியான கால இடைவெளியில் ஆப்பிள், காப்பி, சாப்பாடு அத்தனையும் உள்ளே தள்ளுகிறார். ரொம்ப நல்லவர் போலும் அவர். உங்களுக்கு வேண்டுமா? என்று மட்டும் ஒருவார்த்தை கேட்கவில்லை. என்ன செய்வது சாப்பாடு தான் வாங்கக் காசில்லை. சாப்பிட்டது போல் காட்டிக்கொள்ளக் காசு இருந்தது. அதாவது கவிஞரிடம் ரெண்டணா இருந்தது தானே அதில் ஆளுக்கொரு வெற்றிலை பீடா வாங்கி வாயில் போட்டுக்கொண்டனர். ஜமீன்தார் முன் பந்தாவாக போய் அமர்ந்தனர். இரயில் சேலம் போய் சேர்ந்தது. அன்றைக்கு மனைவி தயாளுவும் தாயார் அஞ்சுகமும் மருமகன் முரசொலியும் வந்து அவர்களுக்காய் காத்து நின்றனர். காரணம் அடுத்த நாளிலிருந்து சேலத்தில் அவர்களைக் குடி புகுத்தக் கலைஞர் திட்டம் வைத்திருந்தார். கலைஞரும் கவிஞரும் இரயிலை விட்டு இறங்கியதும் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டு அவர்களிடமிருந்ததை வாங்கிச் சாப்பிட துவங்கிவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டே அவர்கள் பட்டினியான கதையை தன் தாயாரிடம் சொல்லி சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். கலைஞரும் கலைவாணரும் கலைஞர் தான் எழுதிய 'மந்திர குமாரி' நாடகத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளரின் வேண்டுகோளின் பேரில் திரைப்படத்திற்குரிய வகையில் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார். அதை அவர்கள் சிறந்த முறையில் வெளியிட்டார்கள். படமும் சிறப்பாக வந்திருந்தது. அந்தப் படத்தில் வரும் பார்த்திபன் எனும் கதாப்பாத்திரம் சொல்லும் ஒரு வசனமான "கொள்ளை அடிப்பது ஒரு கலை" என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டார்கள் அவரது எதிர்கட்சிக்கார நண்பர்கள். அதை மேடை போட்டு முழங்கி தனக்கும் தான் சார்ந்திருந்த கட்சிக்கும் எதிராக அவ்வசனத்தை வைத்து பிரச்சாரம் செய்தார்கள். படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக அதிகமாக வசூலும் அதிகமாகிக்கொண்டே சென்றது. அப்படி 'மந்திர குமாரி' ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமானது. சேலத்திற்கு வந்திருந்த கலைவாணர் அந்தப்படத்தைப் பார்த்தார். பார்த்துவிட்டு அவர் எடுக்கவிருக்கும் 'மணமகள்' எனும் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதித்தர வற்புறுத்தினார். அதற்குக் கலைஞரும் ஒப்புக்கொண்டார். இதற்கு வசனம் எழுத "எவ்வளவு வேண்டும்?" எனக் கேட்டார் கலைவாணர். அவர் எவ்வளவு வற்புறுத்திக்கேட்டும் கலைஞர் இவ்வளவு வேண்டும் என்று சொல்லவில்லை. உடனே ஒரு துண்டு சீட்டில் எதையோ எழுதி கலைஞரிடம் கொடுத்தார். அதைக் கலைஞரிடம் படிக்கச்சொன்னார் அதில் நான்கு சைபர் (0000) போட்டிருந்தது. இப்போது கள்ளம் கபடமற்ற ஒரு சிரிப்புடனேயே கேட்டார் "இது போதுமா?" கலைஞரும் சிரித்தபடியே "போதும்" என்றார். ஆச்சர்யத்தோடே "இது போதுமா?!" என்றபடி அந்தச் சீட்டை வாங்கி "இதில் இப்போது நான் 'ஒன்று' போடப் போகிறேன் அதை முன்னால் போடவா? பின்னால் போடவா?" எனக் கேட்டார். அதற்குக் கலைஞர் "அது உங்கள் விருப்பம்" என்றார். அந்த ஒன்றைப் பின்னால் போட்டு அந்தத் துண்டு சீட்டைக் கலைஞரிடம் கொடுத்தார். 00001 என்றிருந்தது அதைக் கையில் வாங்கிய கலைஞர் அதை அப்படியே அவரிடம் திருப்பிக்காண்பித்தார். இப்போது அது 10000 என்றானது. அதைப் பார்த்த கலைவாணர் "ஆகா, என்னையே ஏமாற்றிவிட்டீர்களே" என்று கூறி வயிறு குலுங்க சிரித்தார். கலைவாணரின் இறுதி நாட்கள் வரை அப்படியான புன்னகையுடனேயே அவர் கலைஞரிடம் பழகியிருக்கிறார் என்பதைக் கலைஞர் பெருமிதத்தோடு பல இடங்களில் பகிர்ந்திருக்கிறார். கலைஞரிடம் கார் வந்த கதை அன்றைக்குக் கலைஞருக்கு காய்ச்சல் முடியாமல் படுத்துக்கிடந்தார் வீட்டில். அவருக்கு உடம்பு சரியில்லாததை அறிந்து அவரைக்காண சில திரைக் கலைஞர்களுடன் கலைவாணர் வந்தார். காய்ச்சலால் படுத்துக் கிடக்கும் கலைஞரைச் சீட்டாட அழைத்தார் அவர். மறுத்தார் கலைஞர். "படுத்தே கிடந்தால் களைப்பும், சோம்பலும், நோயும் அதிகமாகும்" எனக்கூறி வற்புறுத்தி அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார். இவர்கள் வீட்டில் அவ்வவ்போது பொழுதுபோக்காகச் சீட்டாடுவது உண்டு. "ஆட்டத்திற்கு ஆயிரம்" என்றார் கலைவாணர். "என்னிடம் அவ்வளவு இல்லை ஆட்டத்திற்கு நூறு வைத்துக்கொள்ளலாம்" என்றார் கலைஞர். "இல்லை பரவாயில்லை குறைவானதை நான் போடுகிறேன்" இது கலைவாணர். ஆட்டத்திற்கு ஆயிரம் ஆட்டம் தொடங்கியது அன்றைக்குக் கலைஞர் கரம் ஓங்கியது. கலைவாணர் உட்பட அத்தனை பேரும் அவரிடம் தோற்றனர். மொத்தம் ஐயாயிரம் அவர் ஜெயித்தார். ஜெயித்த காசு மொத்தத்தையும் வாங்கிக்கொண்டார் கலைவாணர். மறுநாள் மிச்சக்காசையும் அவரே போட்டு அழகான கார் ஒன்றைக் கலைஞர் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார். அந்த காரில் அவரே கலைஞரை அழைத்துக்கொண்டு ஸ்டுடியோவிற்கு சென்றார். அதை போன்று இன்னொரு நாள் கலைவாணருடைய வீட்டிற்குக் கலைஞர் சென்றார். அவருடைய காருக்கு பெட்ரோல் இல்லாமலிருந்தது அவருடைய ஓட்டுநர் கலைவாணருடைய மேலாளர் ஒருவரிடமிருந்து பெட்ரோல் கார்டு ஒன்றை வாங்கி பெட்ரோல் போட்டார். "இனிமேல் இப்படியெல்லாம் கலைவாணர் வீட்டுப்பணத்தை அழிக்காதே" என்றபடி அந்த மேலாளர் கார்டை கொடுத்தார். இது கலைஞர் காதுகளுக்கு வரவில்லை. இச்செயலால் தன் எஜமான் பூரித்துப் போவார் என்றெண்ணிய அந்த மேலாளர் கலைவாணரிடமே  போய் சொல்லி விட்டார். பதறிப்போனார் கலைவாணர். அப்போது அவர் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய 'மருமகள்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த ஒப்பனையைக் கூடக் கலைக்காமல் அப்படியே கலைஞர் வீட்டுக்குச் சென்றார். அங்குக் கலைஞர் இல்லை. தன்னுடைய மேலாளர் செய்த தவறுக்கு கலைஞரின் தாயிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவரிடம் ஆயிரம் பெட்ரோல் கார்டுகளை கொடுத்து விட்டு "எவ்வளவு வேண்டுமானாலும் தம்பியை பெட்ரோல் போட்டுக்கொள்ள சொல்லுங்கள்" என்று கூறி விட்டு வந்தாராம் கலைவாணர். வந்த வேகத்தில் அந்த மேலாளரை வேலையை விட்டுத் தூக்கியும் விட்டாராம். நட்பென்றால் இப்படி இருக்க வேண்டும்; படிக்கும் போது நமக்கும் தோன்றுகிறதில்லையா. இப்படியொரு நட்பு வரமெனும் எண்ணம் நம்மைச் சுற்றி வட்டமிடுகிறதில்லையா. இப்படியொரு நட்பு நமக்கும் அமைந்தால் எப்படி இருக்கும் யோசிக்கவே ஜில்லென்று இருக்கிறது தானே. அந்த கார்டுகளை எல்லாம் கலைஞர் திருப்பிக்கொடுத்து விட்டார். ஆனால் அவருடைய அந்தப் பரிசுத்தமான அன்பை மட்டும் தன் நெஞ்சத்தின் ஆழத்தில் பாதுகாத்து வைத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்தும் கலைவாணருடனான நட்பை அதன் ஆழத்தைச் சொல்லும் இன்னும் சில நெகிழ்வான அவர் நெஞ்சில் பசுமையாய் இருக்கும் ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் நினைவுகளையும் தன் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி நூலில் பகிர்ந்திருக்கிறார். கால ஓட்டத்தில் கலைவாணருக்கு சிலை அமைத்தது. கை சிவக்க சிவக்க வாரி வழங்கிய அந்த வள்ளலை இறுதிக் காலத்தில் ஏழ்மை பிடித்து வாட்டியது. அவரைப் பிடித்துக்கொண்ட பொல்லாத அந்த கெட்ட பழக்கம். கலைவாணரின் வாழ்வு கலைஞர்களுக்கொரு பாடம் என்று அவரைப்பற்றித் தான் பகிர்ந்தது என அவரை பற்றி நிறைய நிறைய நிறைவாய் சொல்லியிருக்கிறார் கலைஞர்.   கலைஞருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை அது நமக்கெல்லாம் தெரியும். சரி தான், அது இருக்கட்டும். ஒரு வேளை அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருந்தாலும் அவருக்கு அண்ணாவை விடக் கடவுளைத்தான் அதிகம் பிடித்திருக்கும் என்று நாம் யாரும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஒரு மனிதனால் இன்னொரு மனிதனை இவ்வளவுக்கு நேசிக்க முடியுமா?! கலைஞர் அண்ணாவை நேசிப்பதைப்பார்த்து வியந்து போனேன். ஒரு வைர வியாபாரி தான் வாங்கிச் சேகரிக்கும் விலையேறப்பெற்ற ஒவ்வொரு வைரக்கற்களையும் எப்படி பாதுகாப்பாய் தன் பெட்டிக்குள் பூட்டி வைத்துப் பாதுகாப்பானோ அப்படியே தன்னைப்பற்றி அண்ணா சொல்லிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தன் நெஞ்சுக்குள் பத்திரமாய் தொலைந்து போகா வண்ணம் வண்ண வண்ண நினைவுகளாய் சேர்த்து சேகரித்து வைத்திருக்கிறார் கலைஞர். அது சரி, சம்மந்தமே இல்லாமல் இங்கு அண்ணாவைப் பற்றி சொல்கிறேனே என்று நீங்கள் எண்ணக்கூடும். சம்மந்தம் இல்லாமலில்லை சம்மந்தம் இருக்கிறது. "என் வாழ்க்கை ஏட்டில் அண்ணா என்ற அந்தப் புனிதமான எழுத்துக்கள் ஆங்காங்கு ஒளிவிட்டுக் கொண்டிருப்பது போல் கலைவாணர் என்ற வார்த்தையும் சுழன்று வந்து கொண்டிருக்கும்." இப்படி கலைவாணரைக்குறித்து தன் நூலில் மனிதரில் தான் அதிகம் நேசிக்கும் அண்ணாவோடு ஒப்புமைப்படுத்தியிருக்கிறார் கலைஞர். இதை என்னால் சாதாரணமாக பார்க்க முடியவில்லை. தான் கலைவாணர் மீது கொண்ட அன்பை, பிரியத்தை, நேசத்தை, நட்பைக் காட்டத்தான் அண்ணாவுடன் அவரையும் இணைத்துச் சொல்லியிருப்பதாய் காண்கிறேன். அது கலைஞர் மீது அன்பும் அக்கரையும் நட்பும் பாராட்டிய கலைவாணருக்கு கலைஞர் கொடுத்த மரியாதையும் நன்றியும் என்று மறுக்காமல் சொல்லிவிட முடியும்.                                       பகுதி - 5   தூத்துக்குடியைச் சார்ந்த கழக தோழர் கே.வி.கே சாமியைப் பற்றி அவர் கட்சிக்காய் உயிர் நீத்த உன்னதம் பற்றி பத்தி பத்தியாய் எழுதியிருக்கிறார் கலைஞர். அண்ணா, சதிகாரர்கள் பதிவிருக்கிறார்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை! என எச்சரித்தும் எதிரிகள் உருட்டுக்கட்டைக்கும் கைவாள்களுக்கும் சின்னாபின்னம் ஆக்கப்பட்ட கட்சியின் தொண்டன் கே.வி.கே சாமிக்கு தன் நூலில் கனமான கண்ணீரஞ்சலி செலுத்தியிருக்கிறார் கலைஞர். ஒரு சம்பவம், திருச்சி கழகத் தோழர்களிடையே பிரிவு; கட்சிக்குள் பிளவென்றால் கட்சியை மக்கள் மதிப்பார்களா என்ன? அங்கு கட்சிக்கென்ன மரியாதை இருக்கும்? அதன் காரணமாக கட்சியின் செல்வாக்கு சரிந்து கிடந்தது. அண்ணாவின் வெற்றியின் தாரக மந்திரமே அன்பும் அரவணைப்புமே ஆனால் இம்முறை அண்ணாவே அதைக் கைவிடும்படி ஆகிவிட்டது என்றும் சொல்லலாம் ஆக்கி விட்டார்கள் என்றும் சொல்லலாம். அத்தகைய சூழ்நிலையில் அவரை அங்குப் பேச அழைக்கிறார்கள் கழக தோழர்கள் அதனால் தோழர்களிடையே ஒற்றுமை ஓங்கும் என்பது அவர்கள் தரப்பு நியாயம். மறுக்கிறார் அண்ணா; நீங்கள் முதலில் போங்கள் போய் ஒற்றுமையாய் கட்சி பணிகளைச் செய்து மக்கள் நம்பிக்கையைப் பெறுங்கள் பிறகு நான் வருகிறேன் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார் அண்ணா. கலைஞர் உட்பட மற்றவர்களின் பரிந்து பேசலுக்கும் அவர் செவி மடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கொரு ஆலோசனை சொன்னார் அவர். நான் வரவில்லை அதற்குப்பதில் கட்சியைப் பலப்படுத்த தம்பி கருணாநிதியை அழைத்துச் செல்லுங்கள் என்றார். அண்ணா வர மறுத்ததற்காய் பராங்குசம் எனும் நிர்வாகி அழுதுகொண்டே சென்றார். இத்தகைய சூழலில் கலைஞரிடம் வந்த ஒரு செய்தி அவர் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தது. அது அண்ணா திருச்சிக்கு வர மறுத்ததால் அவர் மீது உள்ள வருத்தத்தில் கழகத்தை விட்டே கழக தோழர்கள் சிலர் சென்று விட்டால் என்ன என்று யோசிப்பதாக இருந்தது. அதை அறிந்ததும் தோழர்களைக்காண ஓடோடிச்சென்றார் கலைஞர். அங்குச் சென்று அவர்களுக்கு அண்ணாவைப் புரிய வைத்தார். இதோ பாருங்கள்! அண்ணா கழகத்தின் கழக தோழர்களின் மீது கொண்ட பற்றால் பாசத்தால் தான் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார் நீங்கள் உண்மையாய் உழையுங்கள். நீதியின் பக்கம் அண்ணா நிற்பார் அவர் தீர்ப்பு நியாயமாய் இருக்கும் என்று தைரியமூட்டி சிதற இருந்த தோழர்களை பத்திரமாய் மீட்டெடுத்தார். அதன் விளைவு! கட்சிக்குள் புதிய வேகம் பிறந்தது புதிய முயற்சி அல்லது கட்சிக்குள் புதிய புரட்சி பிறந்தது என வேண்டுமானாலும் அதைச் சொல்லலாம். அதாவது ஒவ்வொரு நாளும் கலைஞரை ஆட்டோ ரிக்சாவில் அழைத்துச்சென்று அறுபது எழுபது இடங்களில் கொடியேற்ற வைத்து திருச்சியில் குற்றுயிராய் கிடந்த கட்சிக்குப் புத்துயிர் அளித்தார்கள் தோழர்கள். அச்செயல் திருச்சியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது. இறுதியில் ஆண்டொன்று கழிந்து எந்த திருச்சிக்கு வர மாட்டேன் என்று மறுத்தாரோ அண்ணா அதே திருச்சிக்கு நெசவாளர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் நெசவாடைகளை விற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தின் சார்பாக நெசவாடைகளை விற்க அவரே சென்றார். அதன் பின் அதே திருச்சியில் வைத்தே தான் 1956 ஆம் ஆண்டில் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி தோழர்களை மகிழ வைத்தார் அண்ணா. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து மத்திய அரசின் பிரநிதிகள் யார் தமிழகத்திற்கு வந்தாலும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தொடங்கியது கழகம். அப்போது தஞ்சைக்கு வருகை புரிந்த ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டத்திட்டம் தீட்டினார்கள். ஆனால் தஞ்சையில் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை இந்தத் திட்டத்தை கைவிடலாம் என்றார் பெரியவர் நீலமேகம். அதற்குக் கலைஞர் இல்லை கழக தோழர்கள் சிதறிக்கிடக்கிறார்கள் அவர்களை ஒன்று படுத்த வேண்டும் ஒன்று படுத்தி போராடினால் வெற்றி நிச்சயம் என்று தொடர்ந்து இருபத்தி ஆறு நாட்கள் தஞ்சையில் சூறாவளியாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு நாளும் பல மேடைகளில் பேசி சொன்னது போல் கழக கண்மணிகளை இணைத்து விட்டார். இறுதியில் கறுப்புக்கொடி காட்டும் தினம் வந்தது. கலைஞரை முன்கூட்டியே கைது செய்ய எண்ணிய போலிசார் இரயில் நிலையத்தில் அவரைக் கைது செய்யக் காத்திருக்க கலைஞரோ காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி இரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று மறுநாள் கறுப்புக்கொடி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் அப்படி அப்போராட்டத்தை ஜெயிக்க வைத்தார். மனிதர்கள் அளவுக்கதிகம் உழைத்தால் பரிசு கிடைக்க வேண்டுமே கலைஞருக்கும் கிடைத்தது 'புளூரசி' எனும் கொடிய நோய். அந்நோயின் காரணமாக சாவின் விளிம்பு வரை சென்று திரும்பினார் கலைஞர். அவரைப் பார்க்க சென்ற அண்ணா "ஏன் இப்படித் தொடர்ந்து ஒரு மாதம் கூட்டங்களில் பேசுகிறாய்?" என்று கடிந்து கொண்டார். கொட்டு வாங்கினாலும் மோதிரக்கையால் கொட்டு வாங்க வேண்டும் என்ற சொலவடை ஒன்று நமது தமிழில் உண்டு தானே அண்ணாவால் தான் கடிந்து கொள்ளப்பட்டதையும் அவ்வாறே எடுத்துக்கொண்ட கலைஞர் அதை மகிழ்வாய் தன் நூலில் பகிர்ந்திருக்கிறார். நமக்கெல்லாருக்கும் தெரியும் கலைஞர் வசனத்தில் சிவாஜி பட்டையைக் கிளப்பிய படம் 'பராசக்தி.' ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு நாடகம் நடித்திருக்கிறார்கள் அதன் பெயர் 'பரப்பிரம்மம்'. இந்த நாடகம் ஒரு கல்லூரியின் நிதி வசூலுக்காக நடத்தப்பட்டது. இந்த நாடகம் உருவாகவும் ஒரு காரணம் இருக்கிறது அதைப் பின்னால் வாய்ப்பு கிடைக்கையில் பார்ப்போம். இப்போது அருகில் இருக்கும் திருச்சிக்கு நாடகத்தை முடித்த கையோடு ஆகாய விமானம் ஏறிச்செல்லும் கலைஞரை பின் தொடர்வோம். . இத்தனை அவசரமாக கலைஞர் எங்கு எதற்குத் தான் செல்கிறார்?! கல்லக்குடியில் கலைஞர் தமிழகத்தில் கழகத்தின் சார்பாக எத்தனையோ போராட்டங்களை கலைஞர் நடத்தியிருந்தாலும் மக்கள் மனதில் முத்தாய் பதிந்து போன கல்லக்குடி போராட்டத்திற்குத் தான் அன்றைய இரவு அத்தனை வேகமாய் ஆகாய மார்க்கமாய் கிளம்பினார் கலைஞர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒருவன் எத்தனை மகிழ்ச்சியோடு எத்தனை ஆர்வமோடு எத்தனைப் பரபரப்போடு எத்தனை உள்ளக்கிளர்ச்சியோடு அந்த மெடலை வாங்கச்செல்வானோ அத்தனை ஆர்வத்தோடு அதை விடக் கூடுதல் ஆவலோடு டால்மியாபுரத்தை நோக்கிச் செல்கிறார் கலைஞர். இப்போராட்டத்திற்குக் கலைஞர் இத்தனை ஆர்வமாய் கிளம்பிச்செல்ல காரணம் இல்லாமல் இல்லை. அண்ணா எனும் தான் நேசிக்கும் தலைவன் கல்லக்குடி போராட்டத்திற்கு தலைமை தாங்க தன் தம்பியாகிய கலைஞர் மேல் நம்பிக்கை வைத்து அனுப்பினார் அதன் காரணமே கூடுதல் உத்வேகத்துடன் கிளம்பினார் கலைஞர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி தன் அண்ணாவுக்குப் பெருமை சேர்த்தார் கலைஞர் என்பது வரலாறு. போராட்டத்திற்கு முந்தைய நாட்கள் மாவட்டத்தில் சூறாவளி பிரச்சாரங்கள் நடைபெற்றது. பெயரை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஊர் ஊராகக் காலை மாலை இரவு என்று நேரம் காலம் பாராமல் மேடை போட்டும் தெருமுனைகளில் நின்றும் விளக்கப்பட்டது. இப்போராட்டத்திற்காக தனியாகப் போராட்டத் திட்டம் வகுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. தங்கள் பெயர்களை கொடுக்க ஆயிரக்கணக்கில் மக்களும் கழக தோழர்களும் வந்து குவிந்தார்கள்.  அதில் ஐநூறு பேர் மாத்திரமே தேர்வு செய்யப்பட்டார்கள்.   போராட்டத்திற்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளைக்குறித்த எண்ணங்களும் போராட்ட ஆயத்தங்களும் ஜரூராக நடைபெற்றது. போராட்டத்திற்குரிய நாள் விடிந்தது. இடைதனில் உறை வாள் இல்லை கைகளில் ஈட்டி இல்லை தங்களைத் தற்காத்துக்கொள்ள பரிஜை இல்லை நெஞ்சில் மார்கவசமும் இல்லை அதிகாரம் செய்ய தளபதி இல்லை ஆணையிட அரசன் இல்லை. இவை அத்தனைக்கும் பதிலாக தங்களுள் ஒருவராக கலைஞர் இருந்தார். அவர் பின்னால் பெரும்படையொன்று தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற நெஞ்சில் உறுதி பூண்டு கண்களில் போராட்ட வெறிகொண்டு வாயில் கல்லக்குடி கல்லக்குடி என்று ஊரே அதிரும் வண்ணம் முழங்கியபடி முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. அன்றைய போராட்டத்தின் நாயகர்கள் மொத்தம் இருபத்தி ஐந்து பேர். அதற்குத் தலைவர் கலைஞர். ஒவ்வொரு குழுவாக ஐந்து ஐந்து பேராக போராட்டத்தில் கலந்து கொள்வதென்பது தீர்மானம். மக்கள் படை சூழக் கலைஞர் படை இரயில் நிலையம் போய் சேர்ந்தது. போய்ச் சேர்ந்த வேகத்தில் இரயில் நிலைய பெயர் பலகையில் கல்லக்குடி என்று எழுதி ஒட்டியது. இப்போது இரயில் மறியலுக்கான நேரம் முதலில் கலைஞர் உட்பட முன்னவர்கள் ஐந்து பேரும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தனர். அதிகாரிகள் வந்தனர் பேசிப்பார்த்தனர் பிரயோஜனமில்லை. ஆவன செய்யச்சொல்லி படுத்துக்கிடப்பவர் முன் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை தெளிவாய் புரிந்தது. எனினும் தாழ்மையாய் பேசினர் தயவாய் பேசினர் அதிகாரமாய் பேசினர் அசரவேயில்லை கலைஞர் படை. இறுதிக் கட்டம் என்ன தான் செய்கிறார்கள் பார்க்கலாம் என்ற படி "All right" என்று இரயில் என்ஜின் ஓட்டுநருக்கு சமிக்ஞை கொடுத்து விட்டு நகர்ந்தனர் அந்த அதிகாரிகள். இரயில் தடதடவென புறப்பட்டது. கூடி இருந்த பெருங்கூட்டம் மக்களின் இதயம் என்ன நடக்கப்போகிறதோ என்று படபடவென அடித்துக்கொண்டது. கல்லக்குடி பெயர் எழுதி ஒட்டிய பலகையை இறுதியாக ஒரு முறை கலைஞர் பார்த்தார் கல்லக்குடி எனும் பெயருக்காய் உயிர் நீர்க்கப் போகிறோம் எனும் திருப்தியில் கலைஞர் பட்டாளம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது. தடதடவென புறப்பட்டு வந்த இரயில் தலைக்கு அருகில் வந்து நின்றது. உயிருக்கு அஞ்சி எழும்பி ஓடாத கலைஞரின் புகழ் தமிழகமெங்கும் பட்டொளி வீசிப்பறந்தது. நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள் என்றனர் அதிகாரிகள். சரி, என்றபடி கைதுக்கு ஒத்துழைத்தது கலைஞர் படை. அருகில் நின்ற அடுத்த அணி ஆட்களிடம் கேட்டனர் அவர்களும் செய்யப்போவதை சொல்ல நீங்களும் கைது செய்யப்படுகின்றீர்கள் என்றனர். கலைஞருடன் போராளிகளும் இரயில்வே சிறை காவலில் இருக்கக் கவிஞர் கண்ணதாசன் தலையில் மூன்றாம் படை போராட்ட களத்திற்கு புறப்பட்டது. அதில் தான் பெரும் விபரீதங்கள் அரங்கேறியது. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் டால்மியாபுரத்திலே இருவர் சுருண்டு விழுந்து இறந்தனர். அன்றைக்கு தூத்துக்குடியில் நடந்த இரயில் மறியலில் நான்கு பேர் போலிஸாரின் துப்பாக்கி குண்டிற்கு உயிர் நீத்தனர். காவலில் வைக்கப்பட்டார் கலைஞர் முதலில் இரயில்வே காவல் நிலையத்தில் அதன் பின்பு அங்கிருந்து அரியலூர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பிறகு நீதிமன்றத்தால் ஆறுமாத சிறை தண்டனைப் பெற்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள் கலைஞரும் கழக தோழர்களும்.   கல்லக்குடி போராட்டத்தை அதைச் சுற்றி நடந்த நிகழ்வுகளைக் கலைஞர் அணு அணுவாய் ஒவ்வொரு நிகழ்வுகளையும் விடாது சுமார் நாப்பது பக்கங்களுக்கு மேலேயே எழுதி வைத்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்தது கலைஞர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு முதலில் இரயில்வே சிறைக்கூடத்தில் இருந்து வெளியே நடந்த துப்பாக்கி சூட்டின் காரணமாக உணவு உண்ணாமல் பட்டினி ஆனது. அரியலூர் சிறைச்சாலையில் கொடுத்த உணவை மனிதர் என்ன விலங்குகள் உண்ணும் தகுதியே இன்றி உண்ண முடியாமல் விட்டது. அங்குக் கொடுத்த கழிவறை எனும் மகாக் கொடுமையை அனுபவித்தது. திருச்சிக்குப் பிரயாணமான இரவு ஓட்டை காரில் பயணம் செய்து தொப்பலாக நனைந்து ஒரு டீ இப்போது கிடைக்காதா என ஏங்கியது என அத்தனை அத்தனையையும் அடுக்கடுக்காய் தன் சுயசரிதையில் எழுதி வைத்திருக்கிறார் அவர். இவையெல்லாவற்றையும் அழுத படியோ இல்லை உள்ளம் உடைந்த படியோ படிப்பவர்களிடம் பரிதாபம் தேடும் படியோ அவர் எழுதி வைத்திருக்கிறாரென்றா நினைக்கிறீர்கள்? அது தான் இல்லை. அவர் பட்ட பாடுகளைப் படிப்பவர்கள் வயிறு வலிக்க விழுந்து விழுந்து சிரிக்கும் வண்ணம் ரசனையாக மகா ரசனையாக நகைச்சுவையாக எழுதி வைத்திருக்கிறார். தன்னுடைய அழுகையைக் கூட அடுத்தவர்களுக்குச் சிரிப்பாக மாற்றித்தரும் வல்லமை பெரும் அறிவாளிகளுக்கே சாத்தியம். அப்படி தன்னை பெரும் அறிவாளி என்று தன் எழுத்தின் மூலம் தன் அனுபவத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் கலைஞர். கலைஞர் தன்னுடைய முதல் மந்திரி சபையை அமைத்தார். எங்கு தெரியுமா? சிறையில்!                                       பகுதி - 6   சிறையில் கலைஞரின் மந்திரிசபை சிறையில் அடைக்கப்பட்ட கலைஞருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அங்கு தான் கலைஞர் தனது முதல் ராஜாங்கத்தைத் தனது முதல் மந்திரி சபையை அமைத்தார். திறமைசாலிகளும் இயல்பிலே தலைமை பண்புள்ளவர்களும் நீர்க்குமிழி போல எத்தனை ஆழத்தில் கொண்டு போய் விட்டாலும் வெளியே வந்தே தீருவார்கள். எத்தனைப் பெரிய இருட்டில் கொண்டு போய் விட்டாலும் அங்கிருந்து கொண்டும் அவர்கள் வைரமாய் ஜொலிப்பார்கள். அதற்கு நல்ல உதாரணம் கலைஞர். அதற்குச் சிறையில் அவர் ஆளுமை செலுத்திய விதமே சாட்சி. சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தது சி. பி பிளாக் எனும் இரு பகுதிகள். அவர் அமைத்த மந்திரி சபையின் அங்கத்தினர்களுக்கு என்ன வேலை என்பதை தனித்தனியாக விளக்கத் தேவையில்லை பெயரைப் படித்தால் உங்களுக்குப் புரியும். ஜல ஸ்தாபன மந்திரி, உணவு மந்திரி, கடித போக்குவரத்து மந்திரி, கைதிகளின் பிரச்சனைகளை ஜெயிலரிடம் எடுத்துச்செல்ல உள்நாட்டிலாகா மந்திரி, சுகாதாரத் துறை மந்திரி, ஒரு பிரதம செயலாளர் இவரது வேலை சிறையிலும் வெளியிலும் நடக்கும் நிகழ்வுகளைத் தலைவருக்கு எடுத்துச் சொல்லுதல். ஆச்சா! மந்திரி சபை ஆச்சா! இத்துடன் நிற்கவில்லை அவரது ராஜாங்கம் இது போக மக்கள் மன்றமும் பேச்சு மன்றமும் தினந்தோறும் கூடும். இந்த மன்றத்து நிர்வாகிகள் அத்தனை பேரும் சிறைப்பட்டிருந்த கழக தோழர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அங்கேயும் ஜனநாயகத்தை நிலை நாட்டியிருக்கிறார் கலைஞர். இப்படி இவர்கள் தங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள அது ஜெயிலர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வேலை எளிதானது. பரஸ்பரம் ஒத்துழைப்பதன் மூலம் இவர்கள் தேவையும் நிவிர்த்தி ஆனது. அவர்களுக்கும் இவர்களால் எவ்வித தொல்லைகளும் நேராமல் போனது. "சிறையில் தரப்படும் பெரிய தண்டனை உணவு; சிறையில் பெருங்குற்றம் அதைச் சாப்பிட மறுப்பது;" இது கலைஞரின் சிறை உணவைக்குறித்த ஒரு ஹைக்கூ ஒரு தொடருக்கிடையில் இருக்கட்டும் இதுவும். மல்லிகைப்பூ சாரத்தின் இடையில் சொருகப்பட்ட ஒற்றை கனகாம்பரம் பூ போல. ஒருவன் என்ன தான் ஏட்டுக்கல்வியறிவு பெற்றிருந்தாலும் பட்டறிவு பெற்றால் தான் அதன் வலி புரியும். அதன் எதார்த்தம் உணர முடியும். கலைஞரும் சிறைச்சாலை சென்றதனால் தான் அங்குள்ள தண்டனை கைதிகளுக்கு சில அத்தியாவசிய தேவைகளை இனம் கண்டார். பிற்காலத்தில் ஆட்சி கட்டிலில் அவர் அமர்ந்த போது சிறை கைதிகளுக்காக அவர் செய்ததை ஐந்து பக்கம் அளவுள்ள சாதனையாக கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறார். அது அவர் அரசியல் சாதனைகளில் எப்போதும் ஜொலித்துக்கொண்டிருக்கும் . சிறை அனுபவத்தின் சிறு சிறு அசைவுகளையும் மனுசன் செதுக்கி வைத்திருக்கிறார் தன் நூலில். அங்குள்ள ஒவ்வொரு நாள் வேலையையும் அவரது ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும் கூட விரிவாக விளக்கமாக ஸ்வாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறார். தகுதியானவனின் தகுதியை கண்டுபிடித்து அவனைச் செழுமைப்படுத்துவதே ஒரு தலைவனின் வேலை. கலைஞரும் அவ்வேலையை திறம்பட செய்திருக்கிறார் சிறையில். பேச்சு மன்றங்கள், மாறுவேடப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி, இசைப்போட்டி, பேச்சுப்போட்டி எனப் பல தரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன அதற்கு நடுவர்கள் உண்டு வெற்றி பெற்றவர்களுக்கு 'கல்லக்குடி பதக்கம்' எனும் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போட்டி வெற்றிக்குரிய விருது வெளியே வந்த பின் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வழங்கப்படும். இப்படிப் பல திறமையான பேச்சாளர்களை அவர் உருவாக்கி அனுப்பினார். கிடைத்த அந்தச் சிறை நாட்களையும் பயனுள்ளதாக மாற்றிக் காட்டினார் அவர். இதைப் படித்து வருகையில் இதென்ன சிறையா? இல்லை எதேனும் சுற்றுலாத் தலமா? என்று நமக்குத் தோன்றுகிறது தானே. சிறைக்குள் கைதிகளுக்கு ஞாயிறு விடுமுறை உண்டு அந்தத் தினங்களில் கிடைத்த வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கி அரங்கேற்றப்பட்டவை தான் இவை. சிறையிலே பட்ட பல வலிகள், அனுபவித்த கொடுமைகள், குடும்பம் கழகம் இவற்றைப் பிரிந்து வந்த வருத்தங்கள் இருந்தது உண்மை தான். அதிலெல்லாவற்றைக் காட்டிலும் கலைஞருக்கும், கலைஞருடன் சிறை தண்டனைப் பெற்றவர்களுக்கும் அதிக வலியைக்கொடுத்தது அங்கிருந்து தோழர்கள் பிரிந்து விடுதலையாகி செல்லத் துவங்கியது தான். அங்கு அடைக்கப்பட்டிருந்த கழகத்தினர்களுக்கு மூன்று மாதத்திலேயிருந்து ஆறு மாதம் வரை தண்டனை அதனால் தான் அவர்கள் இப்படியாக தனித்தனியாக பிரிந்து செல்ல நேர்ந்தது. கலைஞருக்கும் முதலில் கைதானவர்களுக்கும் தான் அதிகபட்சமாக ஆறு மாதத்தண்டனை. அவர்களுக்கு பிரிவுபச்சாரமாக பிறவிப் பேச்சாளரான கலைஞரால் நாலு வார்த்தை முழுமையாகப் பேசி அனுப்பக்கூட முடியாமல் நா தழுதழுக்க அவர்களைக் கட்டிக்கொண்டு அழுது அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு அங்குள்ள இறுதி நாட்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிப்போகக் கலைஞருக்கு புத்தக வாசிப்பும், எழுத்தும், வேப்பமரத்தடியில் அமர்ந்து நண்பருடன் இனிமையான கதைகளுமாய் நாட்கள் நகர்ந்தது. 1953 ல் கல்லக்குடி பெயர் மாற்றக்கோரித் துவங்கிய போராட்டம் 1967 ல் கழகம் ஆட்சி பொறுப்புக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே வெற்றியாகக் கனிந்தது. 1953 ஆம் நவம்பர் 21 ஆம் திருச்சி சிறையிலிருந்து ஆறுமாத கடுங்காவல் முடிந்து வெற்றி வீரராக வெளியே வந்தார் கலைஞர் அவரை கண்ணீர்மல்க ஆரத்தழுவி வரவேற்றார் கலைவாணர். சிறை மீண்ட அவருக்குத் திருவாரூரில் பாராட்டுவிழா நடைபெற்றது. சென்னையில் எழுப்பூர் இரயில்வே நிலையம் போய் இறங்கினார் கலைஞர். அதன் பின் மெயின்ரோடு வழியாகப் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று சென்றது. அதில் அமெரிக்கர் ஒருவரின் காரும் முன்னேற முடியாமல் தடைப்பட்டு நின்றது. அதிலிருந்த மனிதர் இதென்ன கூட்டம்? எதற்கிந்த ஊர்வலம்? என விசாரித்து அறிந்தார். அவ்வாறு விசாரித்தது வேறுயாருமல்ல கலைஞரின் மறைவிற்கு எந்த அமெரிக்க பாராளுமன்றம் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்ததோ அந்தப் பாராளுமன்றத்தின் அதிபராக இருந்த மதிப்பிற்குரிய நிக்சன் தான் அவர். 1953 ல் ஒருமுறை காரில் சென்ற போது விபத்து, சிறு விபத்து தான் அடிபட்டதும் சிறிதாக தான் அப்படி தான் நினைத்தார் கலைஞர். பின்பு தான் தெரிந்தது அதன் விபரீதம். மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள் குறைந்தது ஆறு மாதம் எழுதுதல் கூடாது, அரசியல் பொதுக்கூட்டங்கள் கூடாது. இவர் தான் ஓய்வறியா சூரியன் ஆயிற்றே சில மாதங்களிலே அரசியல் மற்றும் 'மணிமகுடம்' நாடகத்திற்காக எழுத்தும் துவங்கியது. எழுதிக்கொண்டிருந்தவருக்கு வலி உயிர் போகுமளவுக்கு வலி வந்தது. அலறித் துடித்தார் பல மருத்துவர்கள் வந்து பார்த்தனர் என்ன செய்தும் கண் சரியாகவில்லை. முத்தையா எனும் அப்போதைய புகழ் பெற்ற கண் மருத்துவர் வந்து பார்த்தார் எப்படியும் சரி பண்ணிவிட முடியும் என்று நம்பிக்கை அளித்தார். கண்ணில் மொத்தம் பன்னிரண்டு அறுவை சிகிட்சைகள் செய்தார். வலி பொறுக்க முடியாமல் தற்கொலை பண்ணிக்கொண்டால் என்ன என்று எண்ணுமளவு வலியின் தாக்கம் இருந்ததாக தன் நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர். கண் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார் கலைஞர் தனது கடமைகளில் மூழ்கினார். இந்த அனுபவத்தைத் தொடர்ந்து அவர் சிக்கிக்கொண்ட சிறு சிறு விபத்துகள் அவர் பயணித்த வழிகளில் கண்ட விபத்துகள் அவர்களுக்கு உதவியது என நிறையச் செய்திகளை பகிர்ந்திருக்கிறார் அவர்.   வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைஞரின் முதல் வெற்றி குளித்தலை 1957 திருச்சியில் நடந்த முதல் மாநில பொதுக்குழுவிற்கு வந்த கழக தோழர்கள் கழகம் தேர்தலில் நிற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நிற்கலாம் என்று லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஓட்டளித்ததன் பலனாக கழகம் தேர்தலில் போட்டியிடும் என்பதை அறிவித்தார் அண்ணா. கலைஞர் நாகை அல்லது தஞ்சை மாவட்டத்தில் போட்டியிட விரும்புவதாக அண்ணாவிடம் சொன்னார். கலைஞரைத் தொகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு வரச் சொல்லிவிட்டார் அண்ணா. கலைஞரும் சென்றார் சென்றவர் இரவு பன்னிரண்டு மணியளவில் நடந்த நாகை பொதுக்கூட்டத்தில் தான் நாகையில் போட்டியிடுவதாக அறிவித்தார். அறிவித்துவிட்டு சென்னை அறிவகத்திற்கு வந்தார். அங்கு அண்ணா தூங்கிக்கொண்டிருந்தார். 'நம் நாடு' பத்திரிகை அச்சாசி வெளியூர்களுக்குப் போய் கொண்டிருந்தது. அதில் வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியாகி இருந்தது. ஆவலோடு எடுத்துப்பார்த்தார் கலைஞர் அதில் அவருக்கு குளித்தலை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஐயோ! நான் நாகையில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு வந்து விட்டேனே எனப் பதறினார். நீண்ட நேர யோசனைக்குப் பிறகு இது அண்ணா எடுத்த முடிவு என கழக தோழர்கள் சொன்னார்கள் கலைஞரிடம். இனி யோசிக்க என்ன இருக்கிறது அண்ணாவே சொல்லியாயிற்று செய்தி நாகைக்குப் பறந்தது. கலைஞர் குழித்தலைக்கு கிளம்பினார். கழகம் முதன் முதலில் தேர்தலில் நிற்கிறது ஓட்டு கேட்கும் அனுபவம் புதிது. அதைக் குறித்து இப்படிச் சொல்கிறார் கலைஞர் "நான் தேர்தலில் நிற்கிறேன் எனக்கே வாக்களியுங்கள் என்று கேட்டது எனக்கு ஒரு வகை சங்கடமாகவும் புது வகை அனுபவமாகவும் இருந்தது." குளித்தலைத் தொகுதியில் கலைஞர் போட்டியிடும் நேரம் அவருக்கு அப்போது வயது முப்பத்து மூன்று இப்போதைய எனது வயதை விட ஒரு வயது தான் அப்போது அவருக்கு அதிகம். பத்து வருசமா வெளிநாட்டில் வேலை செய்யும் என்னை ஊருக்கு வெளியே பத்து பேருக்குத் தெரிந்தாலே ஆச்சர்யம். ஆனால் கலைஞரை அன்றைக்குக் கிட்ட தட்டத் தமிழக மக்கள் முழுமைக்குமே தெரிந்திருந்தது யோசித்துப் பார்க்கையில் இது என்னளவில் பெரும் ஆச்சர்யமாகவே தெரிகிறது. இன்னொரு புறம் யோசித்தால் உழைப்பு அவரது அயராத உழைப்பும் கழகத்தின் மீதும் அதன் தலைமை மீதும் அவர் கொண்டுள்ள பற்றும் பாசமும் தான் அந்த இளவட்ட வயதிலே அவரைத் தமிழகமெங்கும் அறியப்பட்ட தலைவராக காட்டியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தமிழகமெங்கும் அறியப்பட்டிருந்த கலைஞரை குளித்தலைத் தொகுதி மக்கள் பலரும் அறிந்திருக்கவில்லை ஆச்சர்யமாக இருக்கிறதா? இருக்கிறது, இன்னும் ஆச்சர்யங்கள் இருக்கிறது. தி மு க எனும் கழகம் இருப்பதே தெரியாமலும் அங்குக் கிராமங்கள் இருந்தன. ஆச்சர்யம் இதோடாவது தீர்ந்ததா என்றால் அதுவும் இல்லை. 1948 ல் இறந்தார் மகாத்மா காந்தியடிகள். 1957 ல் கூட அக்கிராமத்தில் பலருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. அத்தனை குக்கிராமங்கள் நிறைந்திருந்த தொகுதி தான் குளித்தலை. அங்கு தான் ஜெயித்து கம்பீரமாய் கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தார் கலைஞர். அதற்குக் காரணம், வேறென்ன? ஓய்வறியா அவரது உழைப்பு தான். நங்கவரம், நெய்தலூர், கவுண்டன் பட்டி போன்ற ஊர்களில் கலைஞரை மனமுவந்து மக்கள் வரவேற்றனர் காரணம் அங்கு விவசாய பிரச்சனை இருந்தது அதனைத் தீர்த்து தருவதாகக் கலைஞர் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஜெயித்த பின்பு கடும் போராட்டங்கள் நடத்தி அவர்களுக்கு வெற்றி வாங்கித் தந்தார் என்பது வேறு கதை. வெள்ளியணை எனும் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த முயன்று இரண்டு முறை தோல்வியுற்று மூன்றாம் முறை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்ல' என்பது போல் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து வேகவைத்த வாத்து முட்டையை நல்லமிளகு பொடி செய்து அதில் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த பாமரர்களிடமும் அரசியல் ஆர்வத்தை ஊட்டினார் கலைஞர். அதற்கு அவரது பேச்சும் அவரது தேர்தல் யுக்தியும் அவர்களது குழுவின் அயராது முயற்சியாலுமே சாத்தியமானது. பெண்களுக்கென்றும் பல திட்டங்களை அறிவித்தார் கலைஞர். அது போல ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது நான் உங்கள் வீடு தேடி வரும் போது உதயசூரியன் சின்னத்தில் கோலம் போட்டுத் தன்னை வரவேற்கக் கேட்டுக்கொண்டார். அது அடுத்த நாளிலிருந்து தொடர்ந்தது. அதன் விளைவைப் பாருங்கள். தண்ணீர் பள்ளி என்றொரு கிராமம் அக்கிராமத்தில் பெண்கள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப் பெட்டியில் ஒரு ஓட்டு கூட காங்கிரஸ் கட்சிக்கு செல்லவில்லை. முப்பத்து மூன்று வயதிலே பிரச்சாரத்தில் தனது அரசியல் சாணக்கியதனத்தைக் காட்டியதன் விளைவு தான் இதென்றால் யாரால் மறுக்க முடியும். இது இல்லாமல் இக்கிராமத்தில் விழுந்த ஒரு ஓட்டு கூட வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை. இது அகில இந்திய அளவில் சாதனை என்று அப்போது பேசப்பட்டது. இத்தேர்தலில் அண்ணா, கலைஞர் உட்பட மொத்தம் பதினைந்து பேர் கழகத்தின் சார்பாகக் கோட்டையில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தனர். நாவலர் நெடுஞ்செழியன், கவிஞர் கண்ணதாசன் உட்பட சிலர் தோற்றுப்போனது எல்லாருக்கும் வருத்தத்தையும் துக்கத்தையும் கொடுத்தது.                                             பகுதி - 7   வெற்றி பெற்ற பதினைந்து பேர் முதன் முதலாகச் சட்டசபைக்கு செல்ல அரசியல் ஆட்டங்கள் சூடு பிடிக்கத் துவங்கியது. காங்கிரஸ் கட்சி "வெறும் பதினைந்தா?" என ஏளனம் செய்தது. "பதினைந்து தானே என்று இகழ வேண்டாம் சிறந்த எதிர்க்கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நாட்டிற்கே நாங்கள் முன்னுதாரணமாய் இருப்போம் என்று பதிலடி" கொடுத்தார் அண்ணா. பதினைந்து உள்ள போது அண்ணா கர்ஜித்து சொன்னதைச் செயலில் செய்து காட்டியதை எண்பத்தி ஒன்பது வைத்திருக்கும் தற்போதைய தலைவர் நினைத்துப்பார்ப்பது நலம். கலைஞரின் சட்டசபை கன்னிப்பேச்சு தன்னுடைய குழித்தலை தொகுதி விவசாய பெருங்குடி மக்களின் கண்ணீரை எடுத்து வைப்பதாய் அமைந்தது. அப்பேச்சிற்குச் செவிசாய்க்கவில்லை அரசு. இரண்டொரு தினம் தாண்டி கலைஞர் பேச்சுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அண்ணா அவர்களும் தன் பேச்சில் நங்கரம் விவசாயிகளின் துயரை அடுக்கடுக்காய் எடுத்துச் சொன்னார் அதில் மகிழ்ந்தார் கலைஞர். அரசு கண்டு கொள்ளாததன் விளைவு நங்கவரம் மக்கள் பட்டினி போராட்டம் துவங்கினர் ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து இருபது நாட்கள் பட்டினியால் வாடி வெற்றி கண்டனர். அதற்குத் தலைமை தாங்கியவர் எனும் முறையில் அறிக்கை வெளியிட்ட கலைஞர் நங்கரம் மக்களின் போராட்டம் இன்றைக்கும் தமிழக மக்களுக்கு ஒரு முன்மாதிரி என்றிருக்கிறார் இந்நூலை எழுதிய எழுபத்து நாலு எழுபத்து ஐந்துகளில். உண்மை சொல்வதெனில் இன்றைக்கும் தேவை தான் அத்தகைய ஒற்றுமையான விவசாயிகளின் போராட்டங்கள். கழகம் சட்டசபைக்குள் காலடி எடுத்த வைத்த அந்த ஆண்டு தான் கலைவாணர் எனும் கலைச்சிகரம், தமிழக மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அந்த சிந்தனாவாதி தன் சிரிப்பையும் சிந்தனையையும் மறந்து மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு இவ்வுலக வாழ்வைத் துறந்தார். அத்துயரத்தை தன்னுடைய சொந்த துயராகவே கண்டார் கலங்கினார் கலைஞர். மீண்டும் வேகமாக ஹிந்தி தமிழகத்திற்குள் நுழைய முயற்சித்தது. அதை விட வேகமாக அதை உள்ளே நுழைய விட மாட்டோம் என்று முழங்கத் துவங்கினர் அண்ணாவின் கழகத்தினர். அதற்காகத் திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டைப் பெருமையாக சொல்கிறார் கலைஞர். தான் கண்டதிலேயே அன்றைக்குத் தான் அண்ணா அவர்கள் அதிக நேரம் பேசியதாக குறிப்பிட்டிருக்கிறார் அவர். இந்த மாநாட்டில் தான் அறிஞர் அண்ணா சொன்னார் "எங்களுக்கு இந்த உலகத்தில் இரண்டு எஜமானர்கள் தாம் உண்டு. ஒன்று எங்கள் மனசாட்சி. மற்றது இந்த நாட்டு மக்கள்." அன்றைக்கு அண்ணா சொன்ன இந்தப் பொன்மொழியை கட்சி கடந்து அத்தனை அரசியல்வாதிகளும் நினைவில் கொண்டு பணியாற்றினால் இந்நாடு எவ்வளவு சுபிட்சமாக இருக்கும். இந்த ஆண்டிலே தான் தென் தமிழகத்தில் நடந்த பெரும் சாதி கலவரத்தால் தமிழகமே தலை குனிந்து நின்றது. 1957 ஜனவரி 6 தமிழகம் வந்தார் அன்றைய பிரதமர் நேரு.  அவர் பெரியார், ஹிந்தி எதிர்ப்பிற்கெதிராக போராடிய கழகம், ம. பொ. சி அவர்களை அவர் தகுதிக்கு கீழிறங்கி விமர்சித்ததன் காரணமாக அவருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதென்று தீர்மானித்தது. அதற்கு கடும் முட்டுக்கட்டைகளைப் போட்டது அரசு. தலைவர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர். எனினும் கழகத்தினர் திரளாகக் கலந்து கொண்டு கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் அடக்குமுறையில் காயங்களும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன என்பது வேதனை. நமது  இன்றைய பிரதமர் மோடிக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு கழகம் மீண்டும் அத்தகையதொரு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நிகழ்த்திய பொழுது அத்தகைய உயிரிழப்பு சம்பவங்களும் அத்தகைய அடக்குமுறை சம்பவங்களும் நிகழாதது இன்றைய நமக்கு ஆறுதல். 1958 ல் கலைஞரால் எழுதி நடிக்கப்பட்ட 'உதய சூரியன்' நாடகம் அண்ணாவால் பெரிதும் பாராட்டப்பட்டது. அது காங்கிரஸ் கட்சிக்கெதிராக கழகத்திற்கு பெரும் பலமான பிரச்சார யுக்தி என்றே தோழர்கள் நம்பினார்கள் அத்தகைய வலிமையுடைய ஆயுதமாக இருந்தது அந்நாடகம். அந்நாடகம் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான் கழகத்திற்கு 'உதய சூரியன்' சின்னம் ஒதுக்கப்பட்டது என்பதில் கூடுதல் மகிழ்ந்தார் கலைஞர். அதே ஆண்டு நடந்த திருவாரூர் பொதுக்கூட்டத்திற்குக் கலைஞர் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கழகம் பொருளாதாரத்தில் தடுமாறிக்கொண்டிருந்த நேரம் அது. சிறப்பாக மாநாடு நடக்க வேண்டும் அதே நேரம் சிக்கனமாக நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் கலைஞர். மாநாட்டைச் சிறப்பாக நடத்தி அந்த மாநாட்டிலே தான் இருபதாயிரம் ரூபாய் எனும் அதுவரை இல்லாத அளவிற்குப் பெருந்தொகையை கழகத்திற்கு மிச்சப்படுத்திக் கொடுத்து கழகத்திற்கு புது பாதையைக் காட்டினார் கலைஞர். இந்தக் கால கட்டத்தில் தான் சம்பத் அவர்கள் அண்ணாவிற்கெதிராகவும் கழகத்திற்கெதிராகவும் உள்ளுக்குள்ளேயே யாருக்கும் தெரியாதென்று எண்ணி பிரச்சாரம் எனும் பெயரில் பிரச்சனைகளை உண்டு பண்ணிக்கொண்டிருந்தார். அது கலைஞர் காதுகளுக்கும் சென்றது. அண்ணாவின் காதுகளுக்கும் சென்றது எனினும் நேரில் கண்ணுறும் பொழுது அன்பு பாராட்டும் தன் தனி பண்பிலிருந்து அண்ணா அவர்கள் பிறழாததை பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர். அண்ணா கலைஞருக்கு அணிவித்த கணையாழி 1959 ல் கழகம் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதென்று தீர்மானித்தது. அத்தேர்தலுக்கு தேர்வுக்குழு தலைவர் கலைஞர். அந்த உரிமையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் கழகம் 90 இடங்களில் போட்டியிடும் என்று தீர்மானித்தார். காங்கிரஸ் கட்சி மட்டும் நூறு இடத்திலும் போட்டியிட மற்ற கட்சிகள் இருபது இடத்தில் கூட போட்டியிடத் துணியவில்லை. அந்நேரத்தில் தான் கழகம் 90 இடங்களில் போட்டியிட வேண்டும் எனத் துணிந்து இறங்கினார் கலைஞர். இந்தப் பரிந்துரையை பார்த்த அண்ணா மற்ற கட்சியினரைப் போல் இருபது முப்பது இடங்களில் போட்டியிட்டால் போதும் என்றார் கலைஞரிடம். கலைஞர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணா கோபத்தில் இவர் கொடுத்த பட்டியலைக்கூட வீசி எறிந்தார் அப்போதும் தன் முடிவில் கலைஞர் மாறவில்லை. தன் தம்பியின் முடிவிற்கு இறுதியில் அண்ணா ஒத்துக்கொண்டார். இறுதியில் அண்ணா கலைஞரை பார்த்துக் கேட்டார் "தம்பி, இதில் எத்தனைப் பேர் ஜெயிப்பார்கள் என்று எண்ணுகிறாய்?" "நிச்சயம் நாப்பதுக்கு மேல் அண்ணா" உறுதியான பதில். "சரி அப்படி நாப்பதுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் உனக்கு ஒரு கணையாழி அணிவிக்கிறேன்." தம்பியை உற்சாகப்படுத்த அண்ணாவின் சவால் அது. தனக்குள் இருந்த சிறு அவநம்பிக்கையால் வந்த சவாலாக கூட இருந்திருக்கலாம் அது. அத்தேர்தலில் பம்பரமாய் சுழன்று உழைத்தார் கலைஞர். அண்ணாவோ, காங்கிரஸ்ஸோ, ஏன் தமிழ்நாடே எதிர்பாரா வெற்றியைப் பெற்று அதை அண்ணாவிடம் சமர்ப்பித்தார். மொத்தம் வென்றவர்கள் நாப்பத்தி ஐந்து பேர். அந்த நாப்பத்தி ஐந்து பேரிடம் தோற்றவர்களுடன் அண்ணாவும் சேர்ந்து கொண்டார்.  மற்றவர்கள் கழகத்தின் கொள்கைகளுக்கு முன் தோற்றார்கள். அண்ணா தன் தம்பியிடம் கணையாழி பந்தயத்தில் தோற்றார். கடற்கரையில் நடைபெற்ற வெற்றி விழாக்கூட்டத்தில் கழகம் சென்னை மாநகராட்சியை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்று மக்களிடம் கேட்டு அறிவித்தார் அண்ணா. அக்கூட்டத்தில் தான் கலைஞருடன் தனக்கு நடந்த உரையாடலைச் சொன்னார் அண்ணா. சொல்லிவிட்டு தன் மனைவிக்காகக் கூட நகைக்கடை ஏறி இறங்காத அவர் கலைஞருக்காக சென்று கணையாழி வாங்கி வந்ததைச் சொல்லி அதை அவருக்கு அணிவித்தார். அணிவித்து விட்டுச் சொன்னார் "இந்த மோதிரம் அவரது உழைப்புக்குப் பலன் என்று அர்த்தமல்ல; மோதிரத்திற்கும் மேலான என்னுடைய உள்ளன்பை அவர் பெற்றிருக்கிறார் என்பதே அதற்குப் பொருள்." அத்தகைய அன்பைப் பெற்று தன் அண்ணாவின் இதய சிம்மாசனத்தில் உயர அமர்ந்து கொண்டு பெற்றுக்கொண்ட அந்தக் கணையாழியை ஒருமுறை சேலத்து மாநாட்டில் தவறவிட்டு தன் உயிரையே தொலைத்ததாக தேடி அலைந்தார் கலைஞர். அதன் பிறகு அவர் அதைத் தொலைக்கவே இல்லை. ஓவ்வறியா சூரியன் தன் அண்ணாவின் அருகினில் ஓய்வெடுக்கச் சென்ற போதும் அக்கணையாழியுடனேயே சென்றது. கம்யுனிஸ்ட் உதவியுடன் 'மதராஸ் கார்ப்பரேஷன்' க்கு தான் அண்ணாவின் கழகம் தலைமையேற்று மக்களுக்குப் பணியாற்ற துவங்கியது. அந்த மதராஸ் கார்ப்பரேஷனை 'சென்னை மாநகராட்சி' எனும் தமிழ் பெயர் சூட்டி அழகுபடுத்திக் கொண்டது கழகத்தின் ஆட்சி தான். அண்ணா அணிவித்த அந்தக் கணையாழி கலைஞர் நெஞ்சில் களிப்பையும் கழகத்தில் சிலர் நெஞ்சில் கலகத்தையும் வர வைத்தது. அதில் முக்கியமானவராக சம்பத் அவர்களைக் கலைஞர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த நேரத்திலேயே சம்பத் அவர்களுக்கு கட்சிக்குள்ளும் தோழர்களிடமும் எதிர்ப்பு பலமாக இருந்தது. அண்ணாவை எதிர்ப்பவரை எந்தத் தம்பி பொறுத்துக்கொள்வான். சம்பத்தோடு இணைந்து கவிஞர் கண்ணதாசன் அவர்களும் கழகத்தையும் அண்ணாவையும் தன்னையும் தாக்கிப் பேச துவங்கியிருந்தார். ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணாவைத் தாக்கிப்பேசிய கண்ணதாசனைக் கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவரே தாக்க முற்பட்டார் அதற்கு தன் தம்பிகள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று பதறியபடியே கட்டுரை மூலம் வேண்டுகோள் விடுத்தார் அண்ணா. கூடிய சீக்கிரத்திலே சம்பத் அவர்கள் தன்னுடைய அடிப்படை உறுப்பினர் பதவியைத்தவிர மற்றெல்லா பதவிகளையும் ராஜினாமா செய்தார். அந்த கால கட்டத்தில் தான் பொருளாளராக இருந்த கலைஞர் மீது அபாண்டமாகப் பழிச்சொல்  பரப்பப்பட்டது. அதற்குச் சரியான கணக்குகள் மூலம் அவர்களுக்குப் பதிலளித்தார் கலைஞர். தன்னைத் தவறாக சொன்ன அவர்களது தவறுகளை கணக்கு வாசிக்கும் பொதுத்தளத்திலே நிரூபிக்கவும் செய்தார். கழகத்தின் மிச்சப்பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டதையும் அண்ணா தன் நீண்ட கட்டுரையின் மூலம் தன் தம்பிகளுக்கு விளக்கியிருக்கிறார். அதையொட்டி சம்பத் அவர்கள் திடீரென உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அதையொட்டி கழக காவலர் கூட்டம் ஒன்றில் அண்ணா அவர்களின் விளக்கவுரை கேட்ட கவிஞர் கண்ணதாசனும் மற்ற சம்பத் குழுவில் இருந்தவர்களும் கண்ணீர் மல்க அண்ணாவின் கரங்களை தங்கள் கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டனர். அதன் பிறகு திமுக வரலாறு என்ற டி.கே பார்த்தசாரதி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அண்ணா அவர்களால் வர முடியாததைக் காரணம் காட்டி வெறும் இரண்டே மாதத்திற்குள் சம்பத் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பிரிந்து சென்ற சம்பத் அவர்களைத் திரும்ப அழைக்கும் வண்ணம் நீண்டவொரு உருக்கமான கட்டுரை எழுதினார் அண்ணா. அதனை அவர் பொருட்படுத்தவில்லை. பின்னாளில் கழகத்திற்கு வரப்போகும் பிரிவு சோதனைகளுக்கு முன்னோடியாக சம்பத் அவர்கள் 'தமிழ் தேசியக்கட்சி' என்றொரு கட்சியை துவங்கி 1962 தேர்தலிலும் குதித்தார். அத்தேர்தலில் சம்பத் உட்பட அத்தனை பேரும் படுதோல்வி அடைந்ததோடு அவரது கட்சியும் காங்கிரஸ்சில் கலந்து போயிற்று. சம்பத் அவர்களின் பிரிவால் கழகம் வலுவிழந்து போயிற்று என்று ஆருடம் கணித்த அத்தனை பேர் வாய்களையும் அடைத்த கழகம் அத்தேர்தலில் பதினைந்திலிருந்து தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐம்பதாக உயர்த்திக்கொண்டது. 1961 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து கழகம் சென்னையில் பேரணி ஒன்றை நடத்தியது. அதன் தீர்மானத்தின் நகல் இலங்கை தூதுவரிடம் வழங்கப்பட்டது. பகுதி - 8   1962 கழகம் சந்தித்த இரண்டாவது சட்டமன்ற தேர்தலில் பதினைந்தாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை ஐம்பதாக உயர்ந்தது எனினும் ஜெயித்தவர்கள் முகத்தில் மகிழ்ச்சியில்லை கழக தோழர்கள் மத்தியில் உற்சாகம் இல்லை. எல்லாரும் சோர்ந்து போயினர். காரணம்? தங்கள் அண்ணனின் தோல்வி. தங்களை தங்கள் கழகத்தைத் தாங்கும் தங்கள் தலைவனின் தோல்வியை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அத்தோல்வி கொடுத்த அதிர்ச்சியால் அவர்களால் அத்தனை எளிதில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? எந்நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காதவனாகத் தன்னை நம்பிய தன்னை நேசிக்கும் தன் தொண்டர்களை ஊக்குவிப்பவனாக மட்டுமே இருக்க வேண்டும் அவன் தான் காலம் கடந்தும் வாழுவான். அன்றைக்கு ஜெயித்தவர்களை வழியனுப்பும் விழாவில் தான் ஒரு தன்னிகரற்ற தலைவன் என்பதை அவ்விழா பேச்சின் மூலம் நிரூபித்தார் அறிஞர் அண்ணா. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானே அன்றைய அண்ணா அவர்களின் பேச்சின் ஒரு துளி "ஆளைத் தேள் கொட்டினால் 'ஆ'  என்று அலறுகிறான். அதனால் ஆளைவிடத் தேள் பெரியது என்று யாரும் சொல்லமாட்டார்கள். அதைப்போல நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று யாரும் கருதாதீர்கள்." என்று நம்பிக்கை ஊட்டி அனுப்பி வைத்தார் வெற்றி வாகை சூடி வந்த தனது தம்பிகளை. வெற்றிகள் மட்டும் தான் எப்போதும் மனிதன் வாழ்வில் ஏற்றம் தருமா என்ன?! தோல்விகள், துரோகங்கள், விபத்துகள், வலிகள், வருத்தங்கள், துயரங்கள் கூட மனித வாழ்வில் ஏற்றம் தருவதுண்டு. அண்ணாவின் அன்றைய தோல்வி தான் தமிழகம் எனும் நதியில் நீச்சலடித்துக்கொண்டிருந்தவரை தேசியம் எனும் கடலுக்கு அழைத்துச் சென்றது. சட்டசபை மூலம் என் தமிழகம் மட்டுமே கேட்டிருக்க வேண்டிய அண்ணா எனும் அறிஞர் பெருமானின் தன்னிகரற்ற குரல் இந்திய மாநிலங்களவையின் மூலம் ஒட்டு மொத்த தேசத்திலும் எதிரொலிக்கக் காரணமாக அமைந்தது. அதனால் சிறு தோல்வியால் நாமும் துவண்டு போய்விடத் தேவையில்லை. யாருக்குத் தெரியும் பெருவெற்றியின் பிறப்பிடமாக அண்ணா அவர்களின் வாழ்வில் அமைந்த இச்சிறு தோல்வி போல நம் தோல்விகளும் இருக்கலாமல்லவா?! அண்ணா எனும் ஞானி மாநிலங்களவையில் தன்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொண்டாரென்று தெரியுமா உங்களுக்கு? "தெருவோரத்து மனிதர்களின் பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன்." என்று தான் தன்னை நம் தேசத்திற்கு அறிமுகப்படுத்தினார் அண்ணா. எங்கும் விலைவாசி உயர்வு உணவுப் பஞ்சம். இது காங்கிரஸ் அரசின் கையாலாகத்தனம் எனக் கழகம் முழங்கியது. பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது சிறைக்கு அஞ்சவில்லை கழகத்தினர். அண்ணா, கலைஞர் உட்பட முதல் வரிசை தலைவர்களை சேர்த்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர். ஒரு சிறந்த எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அசுர பலத்தோடு இருந்த காங்கிரஸ்ஸையே கதறடித்த ஆரம்பக்கால கழகத்தை உதாரணம் காட்டலாம். இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இனி வரப்போகும் எதிர்க்கட்சிகளுக்கும் எப்போதும் முன்மாதிரியாக அண்ணா கால கழகம் இருக்கும். இப்போதுள்ள கழகத் தலைவர்கள் ஆரம்பக்கால கழக வரலாற்றைப் புரட்டுவது நன்மை பயக்கும். முதுகில் குத்திய சீனா 1962 ல் சீனா செய்த துரோகம் நாமெல்லாரும் அறிந்ததே. சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை 1961 ல் மதுரையில் நடந்த கழக மாநாட்டில் முன்கூடியே தீர்மானம் இயற்றி அறிவுறுத்தியது கழகம். நேரு அதைக் கண்டுகொள்ளவில்லை தோழன் தோழன் என்று தன் தோள் மேலேயே தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்தார் சீனாவை. அவர்களோ கொடுந்தேளாக மாறிக் கொட்டி குதறினார்கள். அக்காலகட்டத்தில் திராவிட நாடு கோரிக்கையில் மிகத்தீவிரமாக இருந்தது கழகம். எனினும் வலிய சண்டைக்கு வரும் எதிரியை விரட்டுவது முக்கியம் என்று எந்த நிபந்தனையும் இன்றி கழகம் தனது முழு ஆதரவை நேரு அரசிற்கு வழங்கியது. அதைப்போல் பாதுகாப்பு நிதி வசூல் கூட்டத்தில் கழகம் திரட்டிக்கொடுத்த தொகை ரூபாய் 35,000 த்திற்கு மேல். அன்றைக்கு ஒரு அரசியல் கட்சி சேர்த்துக்கொடுத்த வசூலில் இது ஒரு சாதனை என்றே இந்திய அளவில் பேசப்பட்டது. சீனா படையெடுத்து வந்து கழகம் தங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் போதும் இவர்களெல்லாரும் சிறையில் தான் இருந்தார்கள். மூன்று மாத சிறை தண்டனையை முடித்து முதலில் வெளியே வந்திருந்தார் அண்ணா. திருச்சியில் அடைக்கப்பட்டிருந்த கலைஞரை வரவேற்க அவரே நேராக வந்தார். சீனாவின் ஆக்கிரமிப்பை அடுத்து அக்டோபர் 26 ம் தேதி குடியரசு தலைவர் இராதாகிருஷ்ணனால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைக்குத் தான் கலைஞரும் விடுதலையாகி வெளியே வருகிறார். வெளியே வரும் கலைஞரை பார்த்து தனக்கே உரிய கேலிச்சிரிப்போடு நகைச்சுவையாக அண்ணா இப்படிச் சொல்கிறார் "நெருக்கடி நிலையை பிரகனடப்படுத்தி விட்டுத்தான் உன்னை வெளியே விடுகிறார்கள் பார்த்தாயா தம்பி?" அண்ணா சொல்லும் ஒவ்வொரு வாசகமும் கலைஞருக்கு திருவாசகம் தான் அவ்வார்த்தைகளையெல்லாம் தனது நெஞ்சாங்கூட்டில் பத்திரப்படுத்தியிருக்கிறார் கலைஞர். ஒரு தலைவனை எப்படி  நேசிக்க வேண்டும் என்பதற்கு அண்ணாவை நேசிக்கும் கலைஞரை தாராளமாக உதாரணம் சொல்லலாம். 26 ஆம் தேதி சிறை மீண்ட கலைஞர் பொதுக்கூட்டங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் என அத்தனையும் முடித்து விட்டு தன் வீடு திரும்ப 28 ஆம் தேதி இரவு நடு நிசி ஆனது. ஊர் உலகில் உள்ள தாய்மார்களை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் கலைஞர் தன்னை பெற்றெடுத்த தாயைக்காண சென்றார். அத்தாயோ தன் மகன் எப்போது வருவானோ என்று அவனைக் காணும் ஆவலில் கண்ணுறக்கமின்றி ஊர் உறங்கும் அந்நடுநிசி வேளையில் வெற்றிலை இடித்துச் சாப்பிட்டபடி தன் மகன் வருகைக்காய் வீட்டின் வராண்டாவில் காத்திருந்து அவரைக் கண்டு கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்கிறார். பொது வாழ்க்கைக்கென்று தன்னை அர்ப்பணித்தவர்களை தன் மகனாகவோ, தந்தையாகவோ, உறவாகவோ, துணையாகவோ பெற்றவர்கள் அவர்களை கை காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளலாமே தவிர அவர்களுடனான அன்பும் பாசமும் அவசியமான நேரத்தில் அரவணைப்பும் எல்லாம் கிடைத்தது பாதி மீதி இப்படி ஏக்கமுமாகத்தான் கழிந்து போகும் போல. 1962 சீனப்போரின் நினைவுகளினூடே 1971 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு போரையும் நினைவுகூர்ந்திருக்கிறார் கலைஞர். பாகிஸ்தான் அத்துமீறிய அந்தத் தினத்தில் தான் கலைஞர் தன்னுடைய முதல் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பினார். அவருக்கு வரவேற்பு அளிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கண்டன கூட்டமாக மாற்றக்கேட்டுக் கொண்டார் கலைஞர். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் பேசிய பேச்சுக்களை எதிர்க்கட்சிகள் திரித்தும் பொய்யாகவும் பிரச்சாரம் செய்ததாகக் கூறி வருந்தியிருக்கிறார் கலைஞர். 1963 ஆம் ஆண்டு தன்னை ஈன்றெடுத்த அஞ்சுகம் அம்மையாரைப் பறிகொடுத்தார் கலைஞர். தன் தாய் பிரிந்த காயத்தைக்கூட தன் பேனா முனை கொண்டே அவ்வலியைப் போக்க முயன்றிருக்கிறார் "அம்மா நீ பிரிந்ததை நான் நம்பவில்லை. நீ என்னைப் பிரியமாட்டாய்; நீ என்னோடு கலந்து விட்டாய்." என்று துவங்கும் ஒரு நீண்ட கட்டுரையை கண்ணீரில் வடித்து வைத்திருக்கிறார் கலைஞர். மோதிலால் நேரு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மகாத்மா காந்தியடிகள் பங்கு கொண்டது தனது துக்கத்தை பெருமளவு குறைத்தது என்று நேரு கூறியது போல டெல்லியில் மிக முக்கியமான அத்தனை அலுவல்களையும் விடுத்து தனது ஆருயிர் அண்ணாவும் தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தனக்கு ஆறுதல் மொழி கூறி தனது அம்மாவைப்பற்றி உருக்கமாகக் கட்டுரை தீட்டியதும் அவர் இதயத்திற்கு இதமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதே ஆண்டு இதே மாதத்தில் தான் சீனா இந்தியா மீது படையெடுத்ததைக்காரணம் காட்டி நேரு தலைமையிலான அரசு பிரிவினைவாதத்திற்கு எதிராக 16- வது சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இது திராவிட நாடு கோரிக்கையை நசுக்கும் விதமாகத் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்று தங்கள் தரப்பு நியாயங்களை அடுக்கி விளக்கியிருக்கிறார் கலைஞர். இது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க செய்த சதியென்றும் கடுமையாகச் சாடியிருக்கிறார் கலைஞர். அதே ஆண்டு மீண்டும் இந்தியை அரசு அலுவல் மொழியாக்க மத்திய அரசு தீவிரம் காட்டியது. அதற்குப் பதிலடியாக இதுவரை இல்லாத அளவுக்கு மிக அழுத்தமான நீண்ட கால போராட்டத்தை முன்னெடுக்கக் கழகம் தீர்மானித்தது. அப்போராட்டத்திற்கு கல்லக்குடி போராட்ட தலைவர் கலைஞரே தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போராட்ட தேதி குறிக்கப்பட்ட பின்பு தமிழகம் வந்த நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு கழகத்தினரிடையே இன்னும் கொந்தளிப்பையும் போராட்ட வேகத்தையுமே அதிகரித்தது. காங்கிரஸ்சை எதிர்க்க அண்ணா காந்திய வழியையே தேர்ந்தெடுத்தார் கழக காளைகள் அவர் வழியிலே அவர் போதித்த கண்ணியத்துடனே பயணப்பட்டுக்கொண்டிருந்தனர் என்பதைப் பெருமையாய் சொல்கிறார் கலைஞர். 1963 ஆம் ஆண்டு 6 ம் மாதம் நடந்த திருவண்ணாமலை இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மீது மக்களுக்கிருந்த வெறுப்பாகவே அதைக் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார். திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றி விழா கூட்டம் மேடையிலே அறிவித்தார் கலைஞர் 1967 தேர்தலுக்கு இப்போதே நாம் நிதி திரட்ட போகிறோம் நமது இலக்கு பத்து லட்சம்! வாய் பிளந்தது கழக தோழர்கள் கூட்டம். இதை அறிவிக்கப் போவது அண்ணாவிற்கும் தெரியாது. எதுவும் முட்டுக்கட்டைப் போட்டுவிடுவார் என்பதால் அவரிடமும் முன்கூட்டியே சொல்லியிருக்கவில்லை கலைஞர். பேசி முடித்து விட்டுக் கீழிறங்கி வந்த கலைஞரை பார்த்து அண்ணா கேட்ட முதல் கேள்வி. "பத்து லட்சம் நம்மால் சேர்க்க முடியுமா?!" அண்ணாவிற்கு மட்டுமல்ல கழக முன்னணியினர் அத்தனை பேருக்கும் அது சந்தேகமே. ஒருவேளை அன்றைய கால சூழ்நிலையில் அந்நிதியைக் கழகத்தால் சேர்க்க முடிந்தால் அது கழகம் நிகழ்த்தும் அற்புதம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை என்பது அத்தனை பேருடைய ஒத்தொருமித்த கருத்தாகும். கழகத்தின் பொருளாளர் எனும் முறையில் கலைஞர் அதை சவாலாகவே எடுத்துக்கொண்டு அதற்காகக் கடுமையாக உழைக்கத் துவங்கினார். அதே ஆண்டு மற்றுமொரு பிரச்சனை வந்தது. அது அண்ணாவிற்கு உடல் வேதனையைத் தந்தது அவருக்கு வந்த அந்த வலியோ கழக தோழர்களுக்கு தாங்கவொணா மனவேதனையைத் தந்தது. அண்ணாவிற்குப் பின் கழுத்தில் வந்த கட்டியை அறுவை சிகிட்டை மூலமே தான் அகற்ற முடிந்தது. அது அத்தனை பேரையும் துயர கடலில் ஆழ்த்திற்து. இந்திக்கெதிராய் நீண்டவொரு போராட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்காய் இரவு பகலாக உழைக்கவும் தோழர்களை திரட்டவும் செய்தது கழகம். கூடக் கொக்கரித்து வரும் திமிர்த்தனமான கட்டுரைகளுக்கு எதிர்கட்டுரைகளும் வழங்கத் தவறவேயில்லை கழகம். இந்தி எதிர்ப்பில் கழகத்திற்கு கட்சி பாகுபாடில்லை இந்தியைத் துரத்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கைக்கு யாரெல்லாம் கரம் கோர்க்க வலுசேர்க்கத் தாய் தமிழைக் காக்க புறப்படுகிறார்களோ அவர்களை அணைத்துக்கொண்டது  அரவணைத்துக்கொண்டது கழகம். அதன் காரணம் தான் 1963 சேலத்து மாநாட்டில் மறைமலையடிகள், திரு. வி. க, சோமசுந்தரனார் இன்னும் பல சான்றோர்களின் பொன்மொழிகள் மாநாட்டு சுவர்களிலும் அவர்கள் படங்களும் பத்திரிக்கைகளிலும் இடம் பெற்றது. இந்த கடும் கொந்தளிப்பான கால கட்டத்தில் தான் அரசியல் - கலை எனும் கலைஞரின் இருகண்களான இரு துறைகளிலிருந்தும் அவருக்கு இருவேறு சிறப்பு பரிசுகள் வந்தன.   ஒன்று, கலைஞர் வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக நூறு நாட்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்த 'இருவர் உள்ளம்' திரைப்படத்தின் வெற்றி விழாவை முன்னிட்டு கலைஞருக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது. அதை அவர் அப்படியே வாங்கி திருக்குவளையில் அஞ்சுகம் - முத்துவேலர் நினைவாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த தாய் - சேய் நல மருத்துவமனைக்கு அத்தொகையை நன்கொடையாக வழங்கினார். அடுத்து இந்தி எதிர்ப்பிற்காக மயிலாப்பூரில் கழக கூட்டம் ஒன்று நடந்தது அதில் வினோதமான பரிசு ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அது கறுப்பு - சிவப்பு பெட்டி வடிவில் அமைந்திருந்தது. அதற்குள் மூன்று பெட்டிகள் இருந்தது. முதல் பெட்டியில் கறுப்பு - சிவப்பு நிறமுடைய பதினைந்து குண்டு மணிகள். அடுத்த பெட்டியில் 51 குண்டுமணிகள் அதற்கடுத்த பெட்டியில் 151 குண்டு மணிகள். கழகம் அடுத்த பொதுத்தேர்தலில் ஆட்சியை பிடித்திட வேண்டும் எனும் முனைப்போடு வித்தியாசமாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பரிசை மிகவும் ரசித்தார் கலைஞர்.                                                   பகுதி - 9   அரசியல் சட்டத்தின் 16 வது விதியில் செய்யப்படும் திருத்தம் எனும் பெயரில் கொண்டுவரப்பட்ட பிரிவினைவாத தடுப்பு மசோதாவிற்கெதிராக சட்டசபையில் கலைஞர் எடுத்து வைத்த வாதத்தை அதில் உள்ள நியாயத்தை உலக அரங்கிலிருந்து, இந்தியா பாகிஸ்தான், பாகிஸ்தான் வாங்காளதேசம் வரைக்கும் பிரிந்து சென்றதைச் சொல்லி தன்னுடைய வாதத்தை வலுவாக்கியிருக்கிறார். நெல்லை மாநகரில் இந்தி எதிர்பிற்கெதிராக நிகழ்ந்த பொதுக்கூட்ட நிகழ்வொன்றில் "போராட்ட இரயில் புறப்பட்டுவிட்டது இந்தி ஆதிக்கம் நீடிக்கிறவரை இடையிலே அது நிற்காது." என்று அண்ணா அவர்கள் முழங்கினார்கள். அம்மாநாட்டில் தான் அண்ணாவின் அருங்கரங்களால் கலைஞருக்கு வீர வாள் ஒன்று போராட்டக்குழு தலைவன் எனும் முறையில் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தேனீயில் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவில் அண்ணாவின் அன்பூறும் கரங்களால் வெள்ளி வீரவாளும் கேடயமும் கலைஞருக்கு வழங்கப்பட்டது. அந்த விழா அரங்கில் கலைஞர் பேசிய பேச்சு இந்தி எதிர்ப்பு மீது அவருக்கிருந்த வைராக்கியத்தையும் அண்ணாவின் மீதிருந்த அளவிட முடியா அன்பையும் ஒருங்கே பிரதிபலித்தது. கலைஞர் அங்குப் பேசியவற்றில் சில துளி... "இந்த வீர வாளும் கேடயமும் நான் செய்து முடித்த காரியங்களுக்காய் கொடுப்பதாக நான் கருதவில்லை. நான் செய்ய வேண்டிய காரியங்களுக்காக இவற்றை அச்சாரமாகக் கொடுத்ததாகவே நான் கருதுகிறேன். வெள்ளி வாளை அச்சாரமாகக் கொடுத்தால் நீ செய்ய வேண்டிய செயல்களை முடித்த பிறகு தங்கவாள் அல்லவா பரிசு கேட்பாய்? என்று நீங்கள் யாரும் எண்ணிவிட வேண்டாம். இந்தி எதிர்ப்புப் போரில் நான் களச்சாவை அடைந்து என் உடல் மீது அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணீர் வடிக்கின்ற காட்சியை விடப் பெறும் பேறு எனக்கு உலகிலேயே வேறு ஒன்றும் கிடையாது." என்று இந்திக்கெதிராய் முழங்கி உருகியிருக்கிறார் கலைஞர். அன்றைய மேடையிலே அண்ணா பேசிய பேச்சும் மிக முக்கியமானது "வண்ணங்கள் பல இருந்தாலும், அந்த வண்ணங்கள் மூலம் நல்ல ஓவியத்தை உருவாக்க ஓவியப் புலவன் தேவை. அது போல ஒரு கட்சியில் பலதரப்பட்டவர்கள் இருந்தாலும், அவர்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் திறமையுள்ளவர்கள் வேண்டும். தம்பி கருணாநிதி அந்தச் சிறப்புகளை நன்கு பெற்றவர்களில் ஒருவர்." அன்றைய அண்ணாவின் கணிப்பு  மிகச்சரியாகவே தானே இருந்தது. அண்ணாவிற்குப் பிறகு அரைநூற்றாண்டுகள் கழகத்தை கட்டிக்காத்த பெருமை அவர் ஆளாக்கி வளர்த்தெடுத்த கலைஞருக்குத் தானே சொந்தம். இந்த ஆண்டில் தான் 'காமராஜர் திட்டம்' எனும் பெயரில் காமராஜர் கொண்டு வந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி பதவியில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் கட்சியை பலப்படுத்தப் பதவியைத்துறந்து கட்சி பணியாற்ற செல்ல வேண்டும். அதன் படி காமராஜர் உட்பட மொத்தம் ஆறு முதலமைச்சர்கள் பதவியைத் துறந்தார்கள். அத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கலைஞர். காமராஜர் காங்கிரஸ் தலைவராவதற்காகவே கொண்டுவரப்பட்ட சுயநலத் திட்டம் என்று பத்திரிக்கைகள் எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார். அது காங்கிரஸ்ஸை பலவீனப்படுத்தியதென்றும் பதவிக்கென்று உள்ளுக்குள் பெரும் பூசலல்ல புயலே அடித்ததென்றும் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர். இந்தத் திட்டம் காங்கிரஸ்சிற்கு கை கொடுத்ததா? என்பதை நாம் சரியாக சொல்லிவிட முடியாது. இதனால் நிறையச் சாதக பாதங்கள் உண்டு. ஆனால் இத்திட்டத்தின் மூலம் காமராஜர் இன்றளவும் புகழ்ந்து பேசப்படுகிறார் என்பது மட்டும் கழகத்தினரே மறுக்காத உண்மை.   இதே 1963 ம் ஆண்டு தான் இலங்கை அரசு தமிழை ஒதுக்கிவிட்டு சிங்களத்தை ஆட்சி மொழியாகக் கொண்டு வர முயற்சித்தது. சிங்களத்தைக் கொண்டு வருவதில் பிரச்சனை இல்லை தமிழை ஒதுக்குவதற்கு தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும் தவறவில்லை கழகம். 1963 அக்டோபர் 6 ல் 16 வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவிற்குக் குடியரசு தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இச்சட்டத்தை அடுத்து கழகத்தின் பொதுக்குழு கூடியது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடைமுறைக்கொத்த முடிவிற்குக் கழகம் வந்தது. கழகம் தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டது. பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தது. பிரிவினை கோரிக்கையை காரணம் காட்டி கழகத்தைக் கலைத்துவிடும் அபாயம் இருந்தது. அண்ணா விழித்துக்கொண்டார் கழகம் சுதாரித்துக்கொண்டது. பிரிவினை கோரிக்கையை கைவிட்டதற்கு வந்த விமர்சனங்களுக்கு அண்ணா சரியான பதிலடி கொடுத்தார். "கழகத்தைக் கிணற்றிலே தள்ளி சாகடிக்க நான் விரும்பவில்லை. பயம் அல்ல அந்தப் போக்கிற்கு காரணம், அளவற்ற பாசம், பற்று அந்தக் கழகத்திடம். அது போலவே நாட்டு பாதுகாப்பிலும் ஒற்றுமையிலும். தூண்டிலில் சிக்காத மீன் - வலையில் விழாத மான் ஆகியவை மீது அவற்றைப் பிடித்துத் தின்று விட எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு கோபம் கோபமாகத் தான் வரும் இது இயற்கை!’’ என்று விமர்சகர்களின் வாயடைத்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா. கலைஞரின் கலைப்பயணம் பராசக்தி திரைப்படம் தமிழகத்திலும் திரைத்துறையிலும் எத்தனைப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். இன்றைக்குக் கூட நடிகராக முயற்சிப்பவர்களைக் கலைஞர் எழுத்தில் சிவாஜி முழங்கிய ஓடினேன்... ஓடினேன்... வசனத்தைப் பேசச்சொல்லி இயக்குனர்கள் கேட்பதாக சொல்லக் கேட்கிறோம். அதன் பிறகு சில ஆயிரம் திரைப்படங்கள் தமிழிலே வந்திருந்தாலும் கூட இன்னும் அந்த வசனத்தின் மவுசு குறையவில்லை. ஆனால் அது வெளியான போது அவ்வசனங்களும் அப்படமும் எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. மேடைகள் வாயிலாகவும், பத்திரிக்கை, கட்டுரைகள் வாயிலாகவும் கடுமையான விமர்சன கணைகளை தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது கலைஞர். அப்படி அவர் நெஞ்சையே பதம் பார்க்க 'தினமணி கதிர்' பத்திரிக்கை வாயிலாகப் பாய்ந்த விமர்சன ஈட்டி தான் 'பரபிரம்மம்' எனும் தலைப்பில் எழுதப்பட்ட வசைமாரி கட்டுரை. கலைஞர் தான் வித்தகர் ஆயிற்றே தன்னை தாக்க வந்த அந்த ஈட்டியையே தன் ஆயுதம் ஆக்கிக்கொண்டார் அத்தலைப்பிலேயே எழுதினார் முழுக்க முழுக்க அரசியல் கட்சி வசனங்கள் சார்ந்து நாடகம் ஒன்று. அந்நாடகத்தைப் பல மேடைகளிலும் பல ஊர்களிலும் நடித்துக்காட்டினார் கலைஞர். பரபிரம்மம் கட்டுரை எழுதியவர் இந்த நாடகத்தைப் பார்த்திருந்தால் ஐயையோ நாமே ஒரு தலைப்பை கொடுத்து கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்துகொண்டோமே என்று நொந்து புலம்பியிருக்கக்கூடும். இந்த நாடகத்தைச் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த அன்றைக்கு இரவு தான் ஆகாய மார்க்கமாக அவசரமாக கல்லக்குடி போராட்டக்களத்தை ஆயத்தம் செய்ய சென்றதாக முன்பு பார்த்திருக்கிறோம். 1946 ல் 'ராஜகுமாரி' திரைப்படம் தான் கலைஞர் எழுத்து வசனத்தில் முதன் முதலில் வெளியானது. அதன் பிறகு 1963 ம் ஆண்டு வரை கிட்டதட்ட 17 ஆண்டுகள் ஓயாத போராட்டங்கள் அரசியலில் ஏறிய ஏற்றங்கள் அத்தனைக்குமிடையேயும் 'காஞ்சித் தலைவன்' வரை 23 படங்களுக்கு கதை, திரைக்கதையாகவும், வசனங்களாகவும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார் கலைஞர்.   ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் படைப்புகளில் மனநிறைவைத் தரும் படைப்புகள் நிச்சயம் இருக்கும். அது போல் கலைஞருக்கு தன் படைப்புகளில் நிரம்ப மகிழ்வைக் கொடுத்தது பெரும் மனநிறைவைக் கொடுத்தது சிலப்பதிகார காப்பியத்தை காலத்திற்கேற்றபடி அவர் மாற்றி அமைத்து வெள்ளித்திரை மூலம் மக்களுக்கு விருந்தளித்த 'பூம்புகார்' திரைப்படம் தான். அது முதன் முதலில் திரையிட்டு காண்பிக்கப்பட்ட நாள் கூட கழகத்தின் பிறந்த நாளும் பெரியாரின் பிறந்தநாளுமான செப்டம்பர் 17 தான் என்பதைச் சிலாகித்து எழுதியிருக்கிறார் ஒரு படைப்பாளியாய் கலைஞர். இந்தக் கதைக்கரு கலைஞர் இந்திக்கெதிராய் சிறையேகி சிறைப்பறவையாய் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த காலத்தில் தான் அவர் சிந்தையில் சிறகடித்துப் பறந்தது. இதற்குப் பிறகு வெளியானது தான் 'மறக்க முடியுமா?' திரைப்படம். இந்த மறக்க முடியுமா? திரைப்படம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல கலைஞருக்கும், முரசொலி மாறனுக்கும், ஏன் அமிர்தத்திற்கும் கூட மறக்க முடியாத திரைப்படம் தான். ஏனெனில்? அந்தப் படத்தில் தான் முரசொலி மாறன் இயக்குனர் எனும் புது அவதாரம் எடுத்தார். அமிர்தம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இப்படத்தில் தான் 'காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்' எனும் காலக் கப்பலாலும் மக்கள் மனதிலிருந்து கவிழ்த்து விட முடியாத பாடலை மெல்லிசை மன்னரின் இசையில் தீட்டினார் கலைஞர். தன்னைப் பெற்றதால் பெற்றவர்கள் மனம் குளிர்ந்து அவர்களைப் பெருமையடைய செய்வது ஒரு மகனின் கடமை எனலாம். கலைஞரைப் பெற்றது அவர் பெற்றோர் பெற்ற பெரும் பேறென்றால் அது மிகையன்று. 'முத்துவேல் - அஞ்சுகம் தாய் - சேய் நல விடுதி' என்று அவர்கள் பெயரிலே திருவாரூரில் மருத்துவமனையொன்றை நிறுவினார் கலைஞர். அதை நாவலர் தலைமையில் அன்றைய முதல்வரான பக்தவத்சலனார் கையால் திறந்து வைத்து தங்கள் பெற்றோரைப் போற்றி ஏழை எளியவர்களுக்கு உதவினார் கலைஞர். எழுத்து துறையில் கலைஞர் தொடாத இடம் இல்லை. வெற்றிக்கொடி நாட்டாத துறை இல்லை. அப்படிப்பட்ட அவரை 1966 ம் ஆண்டு 'பிராவ்தா' என்றொரு நாளேடு பேட்டிகண்டது. ஆயிரம் பேட்டிகள் கொடுத்தவர் அவர். பல பத்திரிக்கையாளர் அவரைச் சந்திக்க விரும்பித் தேடி சென்றதுண்டு. அவரைப் பேட்டி கண்டதைப் பெருமையாய் நினைத்ததுண்டு. அப்படிப்பட்டவர் தனை பேட்டிகண்ட அந்த இதழைப் பற்றி தனியாய் குறிப்பிட்டிருக்கிறார் பெருமிதமாய் குறிப்பிட்டிருக்கிறார் எனில் அதில் சிறப்பு இருப்பதும் இயல்பு தானே. இந்த ஏட்டைப்பற்றிய சில குறிப்புகள் : இது ரஷ்யாவிலிருந்து வெளியாகும் நாளேடு. இது அவர்களது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நாளேடும் கூட. அன்றைய தினத்தில் உலக அரங்கில் அதிகம் பிரதிகள் விற்பனையாகும் நாளேடுகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அதனுடைய தலைமை ஆசிரியர் இருவர் சென்னைக்கு வந்து கலைஞரை பேட்டிகண்டு சென்ற சிறப்பினை அவர்கள் கேட்ட கனியமுத கேள்விகளுக்குச் செந்தேனென பதிலளித்த அவரது பதில் மொழிகள் சிலவற்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார். "இந்திய - சோவியத் நல்லுறவில் உங்களுக்கு நாட்டம் உண்டா?" "உறவு கொள்வதை யார் தான் வெறுப்பார்கள்? என் மகன் ஒருவனுக்குக் கூட ஸ்டாலின் என்று தான் பெயர்." இப்படி பசுமையான பல கேள்விகள் அதற்கு இனிமையான கலைஞரின் பதில்கள் பல அதில் ஒன்று தான் இது.   பகுதி - 10   இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மொழி பற்றிய 17 வது சட்டத்தை எரிப்பது என்று கழகம் தீர்மானித்தது. அதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டது களங்கள் அமைக்கப்பட்டது. இரண்டு மூன்று கட்டங்களாக போராட்ட தினங்கள் அறிவிக்கப்பட்டது. அண்ணா அவர்கள் அப்போராட்டத்தைச் சென்னையில் துவங்குவதாகவும் கலைஞர் தஞ்சைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி அதை நடத்துவதாகவும் இருந்தது. இதற்காகத் தமிழகமெங்கும் கலைஞர் சுற்றுப்பயணங்கள் பொதுக்கூட்டங்கள் மூலமும் ஆங்காங்கு கழக பாசறை அமைத்தும் ஆதரவு திரட்டிக்கொண்டிருந்தார். முதல் போராட்டம் திட்டமிட்டபடி முடிந்தது அண்ணா கைது செய்யப்பட்டார்.  இரண்டாம் கட்ட போராட்டம் மதுரையில் நடந்தது. அதற்குக் கட்சி சார்பில் கலைஞர் பார்வையாளராகச் சென்றார். அங்கு ஐவர் அணி ஒன்று அப்போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போதே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கலைஞர் சென்னை திரும்பினார் கூட அவரைத் தேடி கைவிலங்கும் சென்றது. கலைஞர் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை பார்வையாளராகத்தான் இருந்தார் ஆனாலும் கைது செய்யப்பட்டார். கைது செய்ய அதிகாரிகள் வரும் போது அவர் தன்னுடைய கோபாலபுரம் இல்லத்தில் நாவலர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். நாவலர் வந்த அதிகாரிகளிடம் கேட்டார் "எதற்காகக் கைது செய்கிறீர்கள்?" "எங்களுக்குத் தெரியாது மேலிடத்து உத்தரவு" என்று பதில் வந்தது. மறுப்பேதுமின்றி வாழ்த்துகள் முழங்கச் சிறை சென்றார் கலைஞர். அச்சிறை வாசம் வெறும் ஆறு நாட்களிலே முடிவுக்கு வந்தது. 1959 ஆம் ஆண்டு வான்புகழ் கொண்ட வள்ளுவரின் திருவுருவப்படத்தை சட்டசபையில் திறக்க வலியுறுத்திப் பேசினார் கலைஞர். கண்டுகொள்ளவில்லை காங்கிரஸ் அரசு. ஆனாலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தியே வந்தார் கலைஞர். 1963 ஆம் ஆண்டு சட்டசபையில் திருக்குறளை உதாரணம் காட்டி அன்றைய முதல்வர் பக்தவச்சலனார் அவர்களை எப்படிப் பாராட்டியிருக்கிறார் பாருங்கள் "தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு" எனும் குறளைக்கூறி இம்மூன்றுக்கும் பொருத்தமானவர் பெரியவர் பக்தவத்சலனார் என்றவர் மீண்டும் இப்படியாகத் தொடர்ந்திருக்கிறார் துணிவைப் பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையைக் காப்பதில் டெல்லியை மிரட்டுவதில் அவருக்குச் சற்று துணிவு குறைவாக இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் அவர் யாருடைய துணிவிற்கும் இழைத்தவர் அல்ல என்று வள்ளுவன் துணையுடன் ஒரே போடாக போட்டிருக்கிறார் கலைஞர். அவரது கோரிக்கைகளின் பலனாக 1964 ஆம் ஆண்டு அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் தமிழர் உள்ளமெல்லாம் இனித்து கழித்திடும் வண்ணம் சட்டசபையில் வள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட இடத்திலிருந்து கல்வி மூலம் மிக உயர்ந்த இடத்திற்குத் தான் உயர்ந்து தன் மக்களையும் உயர்வடைய செய்ய வேண்டும் எனும் ஓயாத எண்ணம் கொண்டு அதற்காக தன் வாழ்நாள் முழுமையும் போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 1964 ம் ஆண்டு சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றிய திமுக கழகம் சென்னை நகராட்சியின் சார்பில் சிலை அமைத்து அவருக்குச் சிறப்பு செய்தது. நகைச்சுவை நடிகர் வடிவேல் அவர்களின் எண்ணற்ற நகைச்சுவை காட்சிகள் நம் நெஞ்சை விட்டு எப்போதும் நீங்காதவை அதில் ஒன்று தான் "இந்தச் சீப்பை மறச்சு வெச்சிட்டேன் பாஸ். இனிமே திருமணம் நின்றிடும்" என்று சொல்ற வசனம் வரும் நகைச்சுவை காட்சியும். இந்த வசனத்தை அரசியல் உதாரணத்திற்காகக் கலைஞர் தன் சுயசரிதையில் அப்போதே எழுதி வைத்திருக்கிறார். இதைப் படித்து நிமிர்கையில் கலைஞர் மனதில் பன்மடங்கு உயர்வாய் தெரிந்தார். பாரதிதாசன் எனும் பெருங்கவியையும், நேரு எனும் ஆசிய ஜோதியையும் 1964 ஆம் ஆண்டில் தேசம் இழந்தது. பாளைச் சிரிப்பு பசு நெய்யின் நறுமணம் வாளைமீன் துள்ளல் வரிப்புலியின் கனல் பார்வை எல்லாமே இணைந்திட்ட கவிதைச் சுரங்கமே பாரதிதாசன் என்று சொல்லி அவரைப் பெருமை படுத்தியிருக்கிறார் கலைஞர். இதைத்தொடர்ந்து அவரைப்பற்றிய நீண்டவொரு கவிதையையும் எழுதியிருக்கிறார். அவ்வாண்டில் பாவேந்தருக்கு அண்ணா அவர்கள் கையால் ரூபாய் 25000 - த்திற்குரிய பொற்கிழியும் பொன்னாடையும் போர்த்தப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது அந்தப் பொன்னாடை போர்த்தியே அவர் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. நேருவைப்பற்றி பிரிட்டிஷ் ஏடான 'டிரிபியூன்' "உலகின் மனசாட்சியாகவே அவர் விளங்கினார்" என்று புகழாரம் சூட்டியதைப் பெருமையோடு தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் கலைஞர். அதைத்தொடர்ந்து வானொலி மூலம் 'கீர்த்தி நிலைத்தது' எனும் தலைப்பில் பேசி அவரது அருமை பெருமைகளெல்லாம் எடுத்துச்சொன்னார் கலைஞர். வட சென்னை ராயபுரத்தில் வாங்கப்பட்ட கட்டடம் தான் 'அறிவகம்' எனும் பெயரில் கழகத்தின் முதல் தலைமையிடமாக அமைந்திருந்தது. அதன் பிறகு கழகத்தின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு சென்னை தேனாம்பேட்டையில் ஒரு கட்டிடம் வாங்கப்பட்டது. அதற்கு 'அன்பகம்' என்று பெயரிட்டு அதை திறந்து வைத்தார் அண்ணா. அத்திறப்பு விழாவிலே கலைஞரை பற்றி இப்படிச் சொன்னார் அவர். "இந்த அழகிய கட்டடம் நமது கழக வளர்ச்சியில் மேலும் ஓர் அத்தியாயம் ஆகும். தம்பி கருணாநிதி அவர்களைப் பொருளாளராகப் பெற்ற அன்றே இதைப் போன்ற பொருட்களை எல்லாம் அவர் சேர்ப்பார் என்று நம்பினேன்" என்றார் அண்ணா. அண்ணா தன்னைப்பற்றி வெறுமனே எதும் சொன்னாலே புல்லரித்து போகும் கலைஞர் இவ்வார்த்தைகளால் புளங்காகிதம் அடைந்தார் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?! "நீங்கள் தமிழைக் காப்பதற்காக இந்தி திணிப்பைத் தடுக்கக் கூடாதா?" என்று மிஞ்சி வந்து கெஞ்சி கேட்டார் சின்னச்சாமி எனும் திருச்சியை சேர்ந்த இளைஞர். அதைக் கேட்டும் கேட்காதது போல் சென்றவர் அன்றைய முதல்வர் பக்தவத்சலனார் ஆவர். அனுமதியின்றி முதல்வர் முன்வந்து பேசிய குற்றத்திற்காக அவரது பாதுகாப்பு படை அவனைக் கைது செய்தது. சில தினங்கள் காவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டான் சின்னசாமி. ஊர் செல்ல இரயில் ஏறினான். ஊர் சென்ற பின் தன் தாய் தமிழுக்காக எதாகிலும் செய்ய எண்ணினான். அவன் இருபத்தேழு வயது இளைஞன் வசதி வாய்ப்பற்ற இளைஞன் மனைவிக்கு இன்னும் வயது இருபத்தி ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. மகளுக்கு இன்னும் முழுமையாய் இரண்டு வயது நிரம்பியிருக்கவில்லை. அவன் கழகத்தின் உறுப்பினர் என்பதைத் தவிர வேறெந்த செல்வமோ செல்வாக்கோ அவனிடம் இல்லை. ஆனாலும் பெரிதாக வலுவாகத் தமிழுக்காக எதாகிலும் செய்ய எண்ணினான். அவனிடம் இருப்பதில் பெரிது அவனது உயிர் மட்டுமே அதைத் தமிழுக்காக கொடுக்கத் தீர்மானித்தான். தான் தமிழை எத்தனைத் தூரம் நேசிக்கிறேன் என்பதை தன் நண்பனுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினான். 1964 ஜனவரி 25 மறுநாள் குடியரசு தினவிழா அன்றைக்கு கையில் பெட்ரோல் கேனுடன் திருச்சி இரயில்வே ஸ்டேசன் சென்றான். தன்னைப் பெற்று வளர்த்து அன்பைக்கொட்டி ஆளாக்கிய அம்மா, சுயமரியாதை திருமணம் மூலம் தன் கரம் பிடித்த தன் பாசத்திற்குரிய மனைவி, தன் கழுத்தை கட்டிக்கொண்டு முத்தமிட்டு மகிழும் மகள் என யாருமே அவன் கண்முன் வரவில்லை. தமிழை விழுங்கக் காத்திருக்கும் இந்தி தெரிந்தது. அதைத் தடுக்க வேண்டும் எனும் வெறி மட்டுமே அவன் மனதில் குடியிருந்தது. அதே வேகத்தில் சென்றவன் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டான். தீக்குச்சியை உரசி தன் உடலை தீக்கு உண்ணக் கொடுத்தான். தீ தன்னைத் தீண்டி அழிக்கையிலும் அக்கொடும் வேதனையிலும் தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழங்கியபடியே கரிந்து தரையில் விழுந்து மாண்டான் சின்னச்சாமி எனும் தமிழ் தாயின் அந்தப் பெரிய 'சாமி.' அவன் மரணம் அவன் வீட்டாரை மட்டுமல்ல தமிழக மக்களையே விம்பி அழ வைத்தது. பொங்கி எழ வைத்ததது. ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆயினும் ஆட்சியாளர்கள் மனதில் தினையளவிலும் மாற்றம் வரவில்லை. அவர்கள் இன்னும் தமிழக மக்களின் இரத்தம் கேட்டார்கள் இன்னும் தமிழக இளைஞர்களின் உயிரைக்கேட்டார்கள். இல்லையென்றால் சின்னசாமி எனும் அந்தப் பெரிய 'சாமி' இறந்து சரியாக ஓராண்டில் அடுத்த குடியரசு நாள் முதல் இந்தி தான் ஆட்சி மொழி எனும் அறிவிப்பை ஆட்சியாளர்கள் வெளியிட்டிருக்க மாட்டார்கள் அல்லவா?! தன்னுடைய கழக கண்மணிக்காய் கழகமும் அழுதது. 2 - 12 -1964 ல் திருச்சி தேவர் மன்றத்தில் அவருடைய திருவுருவப்படம் கலைஞர் கரத்தால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு 1967 கழகம் ஆட்சி பொறுப்பில் அமர்ந்த போது அந்தத் தமிழ் நேசனுக்கு ஒரு நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. அதுவும் அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சரான கலைஞர் அவர்கள் கரங்களாலே திறந்து வைக்கப்பட்டது. அன்றைய நினைவுத்தூண் திறப்புவிழாவிற்கு சின்னச்சாமியின் அம்மா, மனைவி, சிறுமியான திராவிட செல்வி எனும் அவனுடைய மகள் வந்து நின்று அழுத காட்சி அத்தனை பேர் உள்ளத்தையும் உருக்குவதாக இருந்தது. சின்னச்சாமிக்கு பிறகும் கழகத்திற்கும் தமிழன்னைக்கும் பல இளைஞர்கள் கிடைத்தார்கள் இனியும் கிடைப்பார்கள். அன்றைக்கு அழுத அந்த அம்மாவிற்கும் மனைவிக்கும் அவனுடைய மகளுக்கும் அவன் இடத்தில் வேறு யார் தான் கிடைத்திருப்பார்கள்? அவர்களுடைய வாழ்வு அவனின்றி எத்தனைத் தூரம் வலியாக அமைந்திருக்குமோ?! அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். 'தமிழ் நாடு' என்று பெயர் மாற்றக் கழகம் விடுத்த கோரிக்கையை எள்ளி நகையாடியது அன்றைய காங்கிரஸ் அரசு. தமிழ்நாடு என்று பெயர் மாற்றினால் சோறு வருமா?  வீடு கிடைக்குமா? என்றெல்லாம் ஏளனப்படுத்தவும் தயங்கவில்லை அவர்கள். அவர்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் சர்க்காரின் செல்லப்பிள்ளையாக இருப்பதை மட்டுமே விரும்பினர். மத்தியில் ஆள்பவர்களின் மனம் நோகும் எந்தக் கோரிக்கையையும் இவர்கள் காது கொடுத்துக் கேட்பதையும் வெறுத்தனர். அதன் காரணத்தினால் தமிழ்நாடு கோரிக்கை அப்படிக் கிடப்பிலேயே போடப்பட்டது. அதைப் போன்று இக்கால கட்டத்தில் தான் அரிசிப் பஞ்சம் மற்றெப்போதும் இல்லாவண்ணம் தமிழகத்தில் தலைவிரித்தாடியது. ஆனால் அப்படியொன்று இல்லவே இல்லை என்று அன்றைய ஆட்சியாளர்கள் சாதித்தனர். மக்கள் இயலாமையில் பொருமினார்கள். 1964 ல் தான் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே 'சிரிமாவோ - சாஸ்திரி' ஒப்பந்தம் கையெழுத்தானது.   இந்த ஒப்பந்தத்தின் சாரம் என்னவென்றால் இலங்கையில் காலம் காலமாக வாழ்ந்தும் குடியுரிமை மறுக்கப்பட்டு வரும் தமிழர்கள் பத்து லட்சம் பேர்களில் ஐந்தேகால் லட்சம் பேர் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பல தவணைகளில் மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கிவிடும். எஞ்சியவர்களின் நிலை பற்றி பின்னர் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். இது தான் அந்த ஒப்பந்தத்தின் சாரம். தலை தலைமுறையாக அங்கு வாழ்கிறார்கள் தமிழர்கள். வெறும் மலையாகவும் மண்ணாகவும் கிடந்த பூமியைத் தேயிலை தோட்டங்களாகவும் விளை நிலங்களாகவும் மாற்றிய உழைப்பாளிகள் இவர்கள். இதுவரை தங்கள் தேசம் என்றிருந்தவர்கள் இதோ திடீரென்று முழைத்த ஒற்றை ஒப்பந்தத்தின் மூலம் இது உன் தேசமல்ல உனக்கென்று யாருமற்ற தமிழகத்திற்கு விருந்தாளியாக அல்ல அகதியாக ஓடிப்போ எனும் அநியாய ஒப்பந்தம் அது. இது ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு நிச்சயம் நிரந்தர தீர்வாகாது என்று தனது கடுமையான எதிர்ப்பைக் கழகம் தெரிவித்தது. ஏன் இந்த ஒப்பந்தத்தைக் குறித்து முன்பே தமிழக கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று வினவவும் தவறவில்லை கழகம். உங்கள் முதல்வர் பக்தவத்சலனார் தலைமையிலான அரசிடம் கலந்தாலோசிக்கப்பட்டது என்று மத்தியிலிருந்து பதில் வந்து சேர்ந்தது. பெரும் பூதமாக வெடித்த ஈழத் தமிழர் பிரச்சனைக்குரிய காரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஷச்செடியாக வளரத் துவங்கியது.                                           பகுதி - 11   இந்தி எதிர்ப்பு போராட்டம் "தென்னக மக்கள் தாமாக விரும்பாதவரை அவர்கள் மீது நாங்கள் ஒரு போதும் இந்தியைத் திணிக்க மாட்டோம்." பண்டித ஜவர்கலால் நேரு... இதைச் சொன்ன சமாதான புறா நேருவும் மறைந்தார். அவர் தென்னக மக்களுக்குக் கொடுத்த நம்பிக்கை மொழியையும் குழிதோண்டி புதைக்கும் வண்ணம் 1965 ஆம் ஆண்டு குடியரசு தினத்தோடு இந்தி நாட்டின் ஆட்சி மொழியாகும் எனும் அறிவிப்பு வந்து தமிழகத்தை கிளர்ந்தெழச் செய்தது. உடன் இந்தி பேசாத மற்ற மாநில மக்களையும் போராட தூண்டியது. இதன் விளைவாக இந்திக்கெதிராக கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அந்தக் குடியரசு தினத்தைத் துக்க நாளாக அனுசரிக்கக் கழக செயற்குழு தீர்மானித்து அறிவித்தது. கழகத்தைப் போல கேரளம், கர்நாடகம், ஆந்திரம், வங்காளம் முதலிய மாநிலங்களும் அந்த நாளைத் துக்க நாளாகவே அனுசரிக்க முடிவெடுத்தன. குடியரசு தினம் நெருங்கிக்கொண்டிருந்தது தமிழகம் எங்கனும் போராட்டத்திற்கு தயாராக இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனும் பெயரில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் உட்படக் கழக முன்னணியினர் பலரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் எங்கும் ஒருவித பதட்டம் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாணவ மணிகளும் போராட்டங்களில் இறங்கினர். அவர்கள் அமைதி முறையில் 25 ஆம் தேதியே போராட்டங்களை நடத்தினர். சென்னையில் சுமார் ஐம்பதாயிரம் மாணவ மாணவியர் சென்னை கோட்டைக்கு அணி அணியாக அணிவகுத்துச் சென்று இந்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கோரிக்கை மனுவினை அளித்திட முனைந்தனர். அன்றைக்கு மாலையில் சுமார் இரண்டு லட்சம் மாணவ மாணவியர் இணைந்து சென்னை கடற்கரையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அங்கு இந்தியை எதிர்ப்பதன் அடையாளமாக சில இந்தி புத்தகங்கள் எரியூட்டப்பட்டது. இப்போராட்டம் தமிழகம் எங்கனும் எதிரொலித்தது. ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு தாலூக்கா, ஒவ்வொரு தெருவிலும் மாணவர்கள் இறங்கிப் போராடினர். அப்போது தான் அந்த அமைதி போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அக்கலவரம் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது. மதுரையில் காங்கிரஸ் அலுவலகத்தை மாணவர்கள் ஊர்வலம் கடந்து செல்கையில் சில சமூக விரோதிகளால் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். அச்செய்தி தமிழகமெங்கும் காட்டுத் தீயென பரவிற்று. அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த மாணவர் உள்ளங்களில் கோபக்கனலை விதைத்தது. தமிழகம் சுதந்திரத்திற்கு பிறகு அதுவரை கண்டிடாத அளவிற்குரிய மிகப்பெரும் போராட்டத்திற்கு தயாராகத் துவங்கியது. குடியரசு தினத்தன்று துக்க தினத்திற்கு அடையாளமாக அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டது. அவை மாற்றுக்கட்சியினரால் அறுத்தெறியப்பட்டது. அன்றைய தினம் காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் கறுப்பு நிறம் அலர்ஜியாகிப்போனது. கறுப்புக் கொடியுடனோ கறுப்பு பால்ஜ் அணிந்தபடியோ யாரேனும் கண்களில் தென்பட்டால் துரத்தி துரத்தித் தாக்கினர். எங்கும் கலாட்டாக்கள் நடந்தது. அடி தடிகளும் பெரும்பான்மை இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. முரசொலி அலுவலகமும் தாக்கப்பட்டது. அன்றைய தினம் அதிகாலை வேளை இருள் கவிந்திருந்த நேரத்தில் தமிழுக்காய் தமிழ் மங்காது திளங்க தன்னைத்தான் எரிதழலுக்கு உணவாக்கி மாண்டார் சிவலிங்கம் எனும் கழக தோழர். அதே போல் அடுத்தநாள் காலை அரங்கநாதன் எனும் கழக தோழரும் தன் உடலுக்கு நெருப்பூட்டி வெந்து மடிந்தார்.   மாணவர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் 25 - 1 அன்று மாலை ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இங்குத் தடையிருப்பதாக கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வெள்ளையன் எதிர்ப்பை மீறி இத்தேசத்தில் மகாத்மா காந்திக்கு போராட உரிமை இருந்தது உண்மையென்றால் இந்தியை எதிர்த்துப்போராட எங்களுக்கும் அவ்வுரிமை உண்டு என கோஷித்து முன்னேறினர் மாணவர்கள். உங்கள் தடையை மீறுவதாக நீங்கள் கருதினால் தாராளமாகக் கைது செய்து கொள்ளுங்கள் என்று முழங்கினர் அவர்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் நியாயமான உணர்வுகளுக்கும் பரிசாக போலீசாரின் தடியடியே கிடைத்தது. அதோடு நில்லாமல் குண்டுகளும் அவர்களை நோக்கிப் பாய்ந்தது. அதில் அவ்விடத்திலேயே இராஜேந்திரன் எனும் மாணவர் மாண்டார். தமிழகத்தில் துவங்கிய இந்தி எதிர்ப்பு போர் மற்ற மாநிலங்களிலும் பரவியது. கர்நாடக மாநில மாணவர்களும் பெருமளவில் போராட்டத்தில் குதித்தனர். உண்ணா நோன்புகளும் மேற்கொண்டனர். ஆந்திராவில் மாணவர்கள் நிகழ்த்திய இந்திக்கெதிரான போராட்டத்தில் இரு மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். அசாம், கேரளா போன்ற மாநிலங்களிலும் போராட்டங்களும் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாகக் கடையடைப்புகளும் நடைபெற்றன. தமிழகத்தில் இப்போராட்டங்கள் பிப்ரவரி இரண்டாம் வாரத்திலும் நின்றபாடில்லை போலிசாரின் துப்பாக்கி தொடர்ந்து பொதுமக்கள் மாணவர்களின் இரத்தம் குடித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் பத்து பதினைந்து இடங்களில் துப்பாக்கி சூடு பலர் மரணம் எனும் செய்திகள் தமிழர்களின் நெஞ்சங்களில் வந்து பாய்ந்து நடுங்க வைத்தது. ஒட்டு மொத்த தமிழகத்திலும் வாடைக்காற்றில் இரத்தவாடையும் கலந்து வீசிக்கொண்டிருந்தது. இப்படி தமிழ் நாடே சுடுகாடாய் மாறிக்கொண்டிருக்க பிப்ரவரி இரண்டு அண்ணா, கலைஞர் உட்படத் தலைவர்கள் பலர் சிறை மீண்டனர். இந்திக்கெதிரான இப்போராட்டத்தில் தன் அருகில் இருந்த இந்தி எழுத்து பொறிக்கப்பட்டிருந்த தகவல் பலகையை சுட்டுப் பொசுக்கிய தன்மானமுள்ள தமிழ் உணர்வுள்ள போலீசாரும் இருந்தனர். "மாணவர்களை நான் சந்திக்க மாட்டேன் நான் எதற்காக அவர்களைப் பார்க்க வேண்டும்? மாணவர்கள் கல்லூரிக்கு வராவிட்டால் போகட்டும்; எனக்கு ஐந்து கோடி ரூபாய் மிச்சம்" என்றெல்லாம் பொறுப்பற்ற முறையில் பேசியவர் அன்றைய முதல்வர் பக்தவத்சலனார். அவரது அமைச்சரவை சகாக்களோ அதற்குப் பல படி மேலையே சென்று விட்டனர். "கறுப்புக் கொடி காட்டினால் கையை வெட்டுவோம்; காலை முறிப்போம்" "கறுப்பு ஆடை அணியும் பெண்களை நிர்வாணமாக்கித் துரத்துவோம்" "அண்ணாதுரையின் தலையை வெட்டி காமராஜர் காலடியில் வைப்போம்" என்றெல்லாம் அறைகூவல் விடுத்தனர். பின்னர் ஏன் தமிழகம் சுடுகாடு ஆகாது. மாணவர்களின் எழுச்சியும் விழும் மரணங்களும் கழக தலைவர்களையும் நிலைகுலையச் செய்தது. அண்ணா அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த அந்த வேளையிலே கலைஞர் வாழ்வில் மீண்டும் புது புயல் ஒன்று வீசத் துவங்கியது... கலைஞர் வாழ்வில் குறுக்கிட்ட புயலும், தென்றலும்  "பெட்டி படுக்கைகளுடனே நான் புறப்படலாமா?" என்று கேட்டார் கலைஞர் சிரித்தபடியே. "சரி" என்றார் வந்த காவல்துறை அதிகாரி. பெட்டி படுக்கையுடன் வரவா எனக் கலைஞர் கேட்டது பொதுக்கூட்டத்திற்கோ, 1967 வது ஆண்டைய பொதுத்தேர்தல் நிதி வசூலிப்பதற்கோ, சுற்றுப்பயணத்திற்கோ அல்ல மாறாகச் சிறைச்சாலைக்கு தான். கலைஞரின் வாழ்வில் இடியையும் அவ்விடியுடன் கூட நெஞ்செல்லாம் இனித்த தேனினிமையையும் ஒருங்கே கொடுத்த ஒரு சிறை பயணத்திற்கு தயாரானார். அவர் கைது செய்யப்படும் போது நேரம் நள்ளிரவைத் தொட்டுக்கொண்டிருந்தது. முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் பற்றியும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணமான அரசிற்கெதிராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவ மணிகளை முன்னணியில் நின்று போராட தூண்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றத்தைக் குறித்தும் அதிகாலை 1.30 மணிவரை விசாரிக்கப்பட்டார். கொஞ்ச நேரம் தூங்க அனுமதித்தார்கள். மீண்டும் காலை 4.30 மணிக்கு சிறை நோக்கிய அவர் பயணம் தொடங்கியது. சென்னையைத் தாண்டி கலைஞரை ஏற்றிச்செல்லும் காவல்துறையின் லாறி பறந்தது. ஆம்! இம்முறை கலைஞரை லாறியிலேயே அழைத்துச்சென்றனர். அவருக்கோ கடுமையான நெஞ்சு வலி அதைப் பற்றி கவலைப்படவில்லை காவல்துறை அதிகாரிகள். சென்னையிலிருந்து புறப்பட்ட லாறி அன்று மாலை மதுரையைச் சென்றடைந்தது. அங்கு அரசு மருத்துவமனை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டார் கலைஞர். இப்போதைய அவருடைய உடல் நிலையில் அவர் இனி பயணிக்க கூடாது என்ற அவருடைய எச்சரிப்பையும் மீறி மீண்டும் மறுநாள் காலையில் அதே லாறியிலே குண்டும் குழியிலும் விழுந்து குலுங்கிக் குலுங்கி அவருடைய பயணம் பாளையங்கோட்டை நோக்கித் தொடங்கியது. நெஞ்சுவலியோ அவரை படாய்ப்படுத்தி எடுத்தது. கலைஞருக்கு லாறிப்பயணம் கிடைத்தது அரசிடம் கார் இல்லாமல் இல்லை. வேறென்ன? பழிவாங்க வேண்டும் எனும் ஒற்றைக் காரணம் தான். கலைஞருக்குச் சிறை வாழ்வொன்றும் புதிதில்லை என்ற போதிலும் இம்முறை சற்று கடினமாகிப்போனது அவரது சிறை வாழ்வு. காரணம் அவர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். வார்டன் ஒருவர் முகத்தைத்தவிர வேறு மனிதர் முகங்களை அவர் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டிருந்தது. மனிதர்களைத் தான் காணமுடியவில்லையே தவிர கொடுந்தேள்களும், விஷப்பூச்சிகளும், பாம்பும், தோழனாகக் காயம்பட்ட ஒரு அணிலும் கூட அவரைக் காண அங்கு வருவதுண்டு. அணிலைத் தவிர மற்ற அனைத்தும் அவருக்குப் பீதியைத்தான் கொடுத்தன. இம்முறை கலைஞர் மீது 'இந்திய பாதுகாப்பு சட்டம்' பாய்ந்தது. இதில் ஒரு சிறப்பு உண்டு. இச்சட்டத்தின் மூலம் முதன் முதலில் கழகத்தவர்களில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் கலைஞர் தான் என்பதே அச்சிறப்பு. கலைஞர் மீது பாய்ந்த பாதுகாப்பு சட்டத்திற்கெதிராய் சட்டசபையிலும் ராஜ்யசபாவிலும் கண்டன குரல்கள் எதிரொலித்தன. அண்ணா அவர்களின் கேள்விக்கு ராஜ்யசபாவில் பதிலில்லை ஆளும் தரப்பிடமிருந்து. பூரானும், பாம்பும், தேளும் மட்டுமே இதுவரை வந்து பார்த்துச் சென்ற கலைஞரை ஒருவர் பார்க்க வந்தார். அவர் மாமேதை, பிறவி ஞானி, சிந்தனையைத் தூண்டும் தெகிட்டா தேனினிமை பேச்சுக்குச் சொந்தக்காரர் உள்ளத்தில் இறைவன் இல்லை என்று கலைஞர் கூறிய போதிலும் அவரை மட்டும் மனதிற்குள் பூட்டி வைத்துப் பூஜிக்கும் தன்னுடைய அண்ணா தன்னை காண வந்தார். நீண்ட பிரிவிற்கு பின் சந்தித்துக்கொண்ட தாயும் சேயும் போல அன்பால் பாசப்பிணைப்பால் சில நிமிடங்கள் பேச முடியாமல் தவித்து நின்றனர் அவர்கள் இருவரும். கண்கள் நிரம்பித் தளும்பி நிற்கும் குளத்து நீர் போல நிறைந்து நின்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி பேசத் துவங்கினர். அண்ணா கலைஞரை பற்றியே விசாரித்தார். அவர் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். அவருடைய உடல்நிலையைப் பற்றி அக்கரைக்காட்டினார். ஆலோசனை வழங்கினார். ஆனால் கலைஞரே அண்ணாவைப் பற்றியோ, கழக முன்னணியினர் பற்றியோ, தன் குடும்பத்தினர் பற்றியோ மறந்தும் விசாரிக்கவில்லை. அவர் கேட்டறிந்ததும் விசாரித்தறிந்ததும் கவலை கொண்டதும் அப்போது நடைபெற இருந்த தர்மபுரி இடைத்தேர்தலைப்பற்றி மட்டுமேயாக இருந்தது. "அந்தக் கவலையெல்லாம் உனக்கெதற்கு தோழர்கள் சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்கள். நீ உடம்பைப் பார்த்துக்கொள் தேவையெனில் தயங்காமல் மருத்துவரை அழைத்துக்கொள்" என ஆறுதல் மொழிகளை தாய்மையுணர்வோடு வழங்கிவிட்டு அண்ணா கிளம்பினார். அன்று மாலை திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் அண்ணா அவர்கள் "என் தம்பி கருணாநிதி இருக்கும் இந்தப் பாளையங்கோட்டை சிறை தான் நான் யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி" என்று உணர்ச்சி ததும்ப பேசினார். அன்றைக்கு அண்ணா அவர்கள் பேசிய இந்தப் பேச்சு கலைஞர் வாழ்வின் இறுதி நொடி வரை நெஞ்சில் தெவிட்டாத செந்தேனென தேனமுதென நீங்காமல் நிலைத்து நின்றிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அப்பேச்சோடும் முடித்துக்கொள்ளவில்லை அண்ணா தான் அப்போது ஆசிரியராக இருந்த 'காஞ்சி' இதழில் தம்பிக்கு மடல் எனும் பகுதியில் வெளியிட்ட நீண்ட கட்டுரையில் தன் நெஞ்சுக்கினிய தம்பி கருணாநிதியைப்பற்றி இப்படி எழுதியிருக்கிறார் "கருணாநிதியின் பேச்சுக்கும், எழுத்துக்கும் ஆட்சியாளர்கள் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது. ஒரு வெற்றிப்புன்னகை தன்னாலே தவழ்கிறது. தனிமை சிறையில் அடைபட்டு வாடும் தம்பி கருணாநிதிக்கு கழகத்தோழர்கள் காட்டும் நன்றியறிவிப்பு ஒன்று இருக்கிறது. தருமபுரி இடைத்தேர்தலில் வெற்றியை பெற்றுத்தருவோம் அதைவிட வேறு பெரிய மகிழ்ச்சி பொருள் அவனுக்கு இருக்க முடியாது" என்று குறிப்பிட்டு கலைஞர் மீது தான் கொண்ட அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணா. 4 - 4 - 1965 இன்னொரு வழக்கின் விசாரணைக்காகச் சென்னை அழைத்து வரப்பட்டார் கலைஞர். அதன் பொருட்டு "திரும்பி வருகிறேன் என் அறையை காலியாகவே வைத்திருங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தார். அந்தச் சிறைச்சாலை கொடுத்து வைத்தது அவ்வளவு தான் கலைஞரைப் பாதுகாக்கும் பேறு திரும்ப அதற்குக் கிடைக்கவேயில்லை. புதிய வழக்கின் விசாரணைக்குப் பின் கலைஞர் சில நாட்கள் சென்னை தனிமைச்சிறையிலே அடைக்கப்பட்டார். மனம் மாறிய பக்தவச்சலனார் அரசு பாதுகாப்பு சட்டப்பிரிவை ரத்து செய்ததன் காரணமாகக் கலைஞர் விடுதலையானார்.                                 பகுதி - 12   பத்து லட்சத்தை நோக்கிய கலைஞரின் தேர்தல் நிதிப் பயணம்  கழகத்தால் 1966 பிப்ரவரி 20 முதல் 27 வரை கொடிவாரம் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் புகைப்படம் போட்ட எண்ணற்ற கழக கொடிகள் அதற்காகத் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இப்படி கழக கொடிகள் விற்கப்பட்டதில் இருவேறு காரணங்கள் உண்டு ஒன்று மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மற்றொன்று கழகத்தின் தேர்தல் நிதி திரட்டும் பொருட்டு. பத்து லட்சத்தைத் தேர்தல் நிதியாகச் சேர்க்க வேண்டும் என்று கலைஞர் ஆழமாக யோசித்து முடிவு செய்திருப்பினும் அக்குறுகிய காலத்தில் அத்தொகை பெருந்தொகையாக அவர் முன் நின்று அவரையும் பயமுறுத்த தவறவில்லை. ஆனாலும் மனம் தளராது அதற்காக உழைக்கத் துவங்கினார். தேனீகள் எங்கிருந்தெல்லாமோ தேடிச் சேகரித்து கொண்டு வரும் ஒவ்வொரு சிறு சிறு துளி தேன் போல அவரும் அதற்காக ஓயாமல் உழைத்து ஒவ்வொரு காசாக கழகத்தினரின் உதவியுடன் ஊக்கமான பங்களிப்புடன் தேர்தல் நிதியாக சேகரிக்க துவங்கினார். அதற்காகக் கோவையில் ஒரு சுற்றுப்பயணத்திற்கு கிளம்பினார் கலைஞர். 1966 ஏப்ரல் 21 முதல் மே 1 வரை மொத்தம் பத்து நாட்கள் சுற்றுப்பயணம். அச்சுற்றுப்பயணத்தின் போது நாளொன்றிற்கு குறைந்தது பதினைந்து கூட்டங்கள் வீதம் கலந்து கொண்டார். மொத்தம் 150 க்கும் மேல் பொதுக்கூட்டங்களின் மூலம் பத்து லட்சம் மக்களுக்கு மேல் சந்தித்திருக்கிறார். தேர்தல் நிதியளிப்பு விழாவில் கொங்கு மண்ணின் மைந்தர்களான ஆடவரும் பெண்டிரும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கின்றனர் பணமாகவும் பொருளாகவும் தேர்தல் நிதியை. பெண்கள் கம்மல், கொலுசு, வளையல், கணையாழிகள் போன்ற தங்களது அணிகலன்களையும் கோழிகள், புறாக்கள், முயல்கள், முட்டை போன்ற தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்தனர். பொருட்களும் பிராணிகளும் உடனுக்குடன் அங்கேயே ஏலம் விடப்பட்டுத் தேர்தல் நிதியில் சேர்க்கப்பட்டது. அச்சுற்றுப்பயணத்தில் கண்ணமாநகரிலிருந்து எஸ். வி. மில் செல்லும் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தார் கலைஞர். வழியில் அவருக்கு கடும் தாகம் ஏற்பட்டது. காரை ஒரு தோட்டத்தின் அருகில் நிறுத்தினார்கள். விவரம் அறிந்த அவ்வூர்வாசி எலுமிச்சைபழச்சாறு பிழிந்து சர்பத் போட்டு அதை ஓடோடிக்கொண்டு வந்தார் கலைஞரிடம். கொண்டு வந்தவர் கழகத்தவரோ அரசியல் வாடையுடையவரோ அல்ல மாறாக எளிமையான விவசாயியாகத் தெரிந்தார். அவர் சர்பத்தை கலைஞரிடம் நீட்டக் கலைஞர் அவரிடம் விளையாட்டாகச் சொன்னார் இதை நான் குடிக்க வேண்டுமென்றால் நீங்கள் தேர்தல் நிதியாக பத்து ரூபாய் தர வேண்டும் என்று. அவர் பதிலுக்கு ஒரு வார்த்தையும் பேசவில்லை மாறாகப் புன்முறுவலுடன் வீட்டிற்குச் சென்று பத்து ரூபாய் எடுத்து வந்து கலைஞரிடம் கொடுத்து விட்டு தாய்மையுணர்வோடு "இப்போது குடியுங்கள்" என்றார். தன் நெஞ்சை விட்டு நீங்கா அந்நிகழ்வை அவ்வேழைமனிதரை நெகிழ்வாய் தன் சுயசரிதையில் நினைவு கூர்ந்திருக்கிறார் கலைஞர். அவர் கல்வியறி பெற்றவரோ என்னமோ? ஒருவேளை கல்வியறிப் பெற்றவராக இருந்து தன்னுடைய அந்நிகழ்வை மறக்காமல் குறிப்பிட்டு நெக்குருகி நிற்கும் தன்னுடைய முதல்வரை (இதை எழுதும் போது கலைஞர் முதல்வர்) தன்னுடைய அன்றைய நிகழ்வை நினைத்து அவரும் பெருமையோடு நெகிழ்ந்திருப்பார் இல்லையா! அந்த ஒற்றைச் சுற்றுப்பயணத்தின் மூலம் கழகத்தின் கருவூலத்திற்கு வந்து சேர்ந்த மொத்த தொகை ரூபாய் நாற்பத்தேழாயிரத்து ஐந்நூறு. 1966 ஆம் ஆண்டைய அண்ணாவின் பிறந்தநாளை கழகம் முப்பெரும் விழாவாகக் கொண்டாடியது. அதில் நாகூர் அனிபாவின் இசை, குமாரி விஜயா அவர்களின் கதா காலட்சேபம், குடந்தை சீனிவாசனின் வில்லுப் பாட்டு, இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனின் 'தென்பாண்டி வீரன்' நாடகம், இறுதி நாள் விழாவில் கலைஞர் எழுதி நடித்த 'காகிதப் பூ' நாடகம். அம்முப்பெரும் விழாக்கள் மட்டும் கழகத்திற்கு தேர்தல் நிதியாக ரூபாய் அறுபத்து ஏழாயிரத்தை அள்ளித்தந்தன. அத்தொகையுடன் முன்பு சேர்ந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய்க்குரிய ரசீதுகள் ஆகியவற்றை முறையே ஒரு சந்தன பேழைக்குள் வைத்து பொருளாளர் எனும் முறையில் அண்ணாவின் கரத்தில் ஒப்படைத்தார் கலைஞர். இனி தேர்தலுக்கு வெறும் நான்கு மாதங்கள் தான் இருக்கின்றன. ஆனால் இலக்கோ பத்து லட்சம். இருப்பதோ ஐந்தரை லட்சம் கழகம் தன் லட்சியத்தை அடையத் தேவை இன்னும் நான்கரை லட்சம். யோசித்தால் மலைப்பு தான் ஆனாலும் மனம் தளரவில்லை பொருளாளர் கலைஞர். அதற்கு நம்பிக்கை அளிப்பது போல கலைஞரின் நாடகமான 'காகிதப் பூ' விற்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக இருந்தது. அக்காரணத்தால் அந்நாடகம் ஊர் ஊராகப் போடப்பட்டது. தமிழகம் எங்கும் நடத்தப்பட்ட அந்நாடகத்தின் முதல் நாள் வசூல் மொத்தம் ஐம்பத்து ஒன்றாயிரத்தை தேர்தல் நிதியாக அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தது. கலைஞர் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று தான் 'ஊனமுற்றோர் மறுவாழ்விற்கான திட்டம்' அத்திட்டம் அவர் மனதில் விதையாக விழுந்தது கரூர் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் வைத்துத் தான். தங்கராஜ் என்பவர் தனது உண்டியலைக் கலைஞரிடம் ஒப்படைத்தக் காட்சி கலைஞருடன் அக்கூட்டத்தின் கண்களையே குளமாக்கியது. காரணம் அவர் கரம் இழந்த ஒரு மாற்றுத்திறனாளி. பல நல்ல திட்டங்கள் கலைஞருக்கு ஏ.சி அறைக்குள் உதித்திருக்கவில்லை மாறாகக் களத்தில் கஷ்டப்படுபவர்களின் வலியைக் கண்டுணர்ந்ததன் விளைவே அவை என்பதைப் படித்தறிகையில் மனதில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார் கலைஞர். அதைத்தொடர்ந்து திண்டிவனம் மற்றும் திருக்கோயிலூர் ஆகிய ஊர்களிலும் 'காகிதப் பூ' நாடகத்தை நடித்தார் கலைஞர். அந்நேரத்தில் வேறு வேலையாக மதுரை வந்த அவரது குடும்பமும் அவருடன் இணைந்து கொண்டது. அன்றைய திண்டிவனம் நாடகத்தில் மட்டும் மொத்தம் பதிமூன்றாயிரத்து இருநூற்று ஐம்பது கிடைத்தது. அந்த மகிழ்ச்சியோடு கிளம்பிய கலைஞரை தடுத்தது கொடும் புயல் காற்றுடன் துவங்கிய பேய்மழை. மதுராந்தகத்திற்கு பிறகு அவரது வாகனத்தால் முன்னேற முடியவில்லை. அவர்களை அருகில் இருந்த சிறு விடுதியொன்றில் விட்டுவிட்டு ஓட்டுனர் உணவு வாங்கிவரச் சென்றார். போனவர் சாலையில் விழுந்த மரங்களின் காரணமாக திரும்பி வரமுடியாமல் போயிற்று. இவர்கள் தங்கியிருந்த விடுதியில் தண்ணீர் தேங்கத்துவங்கியது கூட அருகில் வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள் தங்கள் வீடிழந்து இங்கு வந்து அடைக்கலம் புகுந்தனர். அக்கூட்டத்தில் ஒரு பெண் அன்றைக்கு இரவே ஒரு அழகிய பெண்குழந்தையை பெற்றெடுத்தாள். அன்றைக்குக் காலையில் கழகத்தோழர்கள் வந்து அவருக்கு உணவும் உதவியும் செய்து அவர் புறப்படும் போது தான் மதுராந்தகம் ஏரியில் கரைகள் உடைந்து வெள்ளம் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. அதைக்குறித்து அதனால் விவசாயிகள் படும் துயர் குறித்து கழக தோழர்கள் அவருக்கு விளக்கி சொல்லிச் சென்றனர். அதை அப்போது வேதனையோடு பார்த்து சென்றார் கலைஞர். காலம் போடும் கணக்கு தான் எத்தனை விசித்திரமானது! அடுத்த நான்கே மாதங்களில் பொதுபணித்துறை அமைச்சராகத் தானே வந்து அவ்வேரியைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்குரிய நிதியை ஒதுக்கி ஏரியைச் சீரமைத்து கொடுப்பார் என்று அவரும் நினைத்திருக்கவில்லை தான் அப்போது!. சைதாப்பேட்டை வேட்பாளர் ரூபாய் பதினோரு லட்சம் அண்ணா அவர்கள் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாயினும் அண்ணா அவர்களின் பேச்சோடு அந்நிகழ்ச்சி முடிவடைவதே வழக்கம். அதன் பிறகு யாரும் பேசும் மரபு இல்லை. 19 - 6 - 1966 அன்று தஞ்சையில் மாணவர்கள் மத்தியில் ஒரு மாநாடு. மாநாடு முடியும் தருவாயில் தான் கலைஞர் மாநாட்டு மேடைக்கு வந்து சேர்ந்தார். அப்போது தேனில் குழைத்தெடுத்த செந்தமிழ் சொல்லடுக்கி மாணவர்களின் செவிக்கு உணவளித்துக்கொண்டிருந்தார் அண்ணா. மாணவர்கள் தங்கள் சிந்தைக் குளிர சிந்தனை விரிவடைய அச்சொற்பொழிவைக் கேட்டு சிலாகித்துக் கொண்டிருந்தனர். அண்ணாவின் பேச்சு தான் இறுதி என்பது மரபாயிற்றே அதனால் தனக்கு பேசும் சுமை குறைந்ததாகக் கலைஞர் எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அண்ணாவோ கட்சி அலுவல்களிடையே கால தாமதமாக வந்த தன் பாசமிகு தம்பியும் பேச வேண்டும் மாணவர்களுக்கு எழுச்சியுரை ஆற்ற வேண்டும் என்று விரும்பி தன் பேச்சை இப்படி முடித்தார் "... நான் இத்துடன் முடிக்கவில்லை தம்பி தொடர்கிறான்" என்று அமர்ந்தார். அண்ணாவிற்குப் பிறகு முதன் முறையாக மைக்கை பிடித்திட்ட கலைஞர் தனது கரகர குரலில் இப்படித் துவங்கினார் "அறிஞர் அண்ணா அவர்கள் பேசிவிட்ட பிறகு நான் பேசுவது என்பது எனக்கு மிகவும் சங்கடமாகவே இருக்கிறது. அண்ணா பேசிவிட்டார்கள் என்றால் தமிழ்நாடே பேசிவிட்டதாக அர்த்தம். தமிழ்த் தாயே பேசிவிட்டதாகப் பொருள். மாணவர்களின் பொங்கும் உணர்ச்சியே பிரதிபலித்து விட்டதாகவும் பொருள்." என்று துவங்கி மாணவர்களை தன்பக்கம் திருப்பினார் கலைஞர். தேர்தல் நிதி திரட்டும் படலத்தின் ஒரு பகுதியாக மராட்டியம், குஜராத் மாநிலத்திலுள்ள மக்களை சந்தித்திடவும் பம்பாய், ஆமதாபாத் முதலிய நகரங்களில் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவும் கலைஞர் புறப்பட்டார். பம்பாய் தாராவி பகுதியைச் சென்றடைந்த கலைஞரை  காணக் கட்டுக்கடங்கா கூட்டம் கரைபுரண்டு வந்தது. வந்தவர்கள் கலைஞருடன் கைகுலுக்கிக்கொள்ள முயன்றனர். அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதற்கொரு உபாயத்தையும் பின்பற்றினர். அதாவது ஆளுக்கு ஒவ்வொரு ரூபாயாகக் கொடுத்துவிட்டு அவர் கரத்தை தொட்டுச்சென்றனர். உயர் ரக இத்தாலிய கோழி ஒன்று அங்கு நண்பர் ஒருவரால் தேர்தல் நிதிக்காக அளிக்கப்பட்டது. அது அப்போதே அங்கேயே ஏலம் விடப்பட்டது. அன்றைக்கே அக்கோழி ரூபாய் 192 க்கு ஏலம் போனது. மொத்தமாக பம்பாய்வாசிகள் அள்ளிக்கொடுத்த தேர்தல் நிதி பனிரெண்டாயிரம். அப்பயணத்தை முடித்து மறுநாள் காலைலேயே ஆமதாபாத் சென்று சேர்ந்திருக்க வேண்டிய கலைஞர் ஆகாயவிமானம் தாமதம் ஆனதன் காரணமாக மாலையில் ஏறத்தாள பன்னிரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகே அங்குச் சென்று சேர்ந்தார். எனினும் மக்கள் அவருக்காய் காலையிலிருந்தே கால் கடுக்க காத்திருந்தனர். அங்கும் அவருக்குப் பாதை அமைத்துக்கொடுக்கக் காவல்துறை திண்டாடிப் போகுமளவு மக்கள் குழுமினர். அங்கும் தேர்தல் நிதியாக ரூபாய் பதினொன்றாயிரத்து ஐந்நூறு திரண்டது. அங்கு மீதமுள்ள சுற்றுப்பயணத்தையெல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பினார் கலைஞர். ஒருநாள் அண்ணா கலைஞரிடம் "ஏறு காரிலே" என்றார். ஏன் எதற்கென்றெல்லாம் கேட்கவில்லை கலைஞர். சொன்னதை மட்டும் செய்தார். ஆனால் அண்ணா தாமாகவே சொன்னார் மாநாட்டுக்காக ஓர் இடத்தை நான் பார்த்து வைத்திருக்கிறேன் அதை உனக்கும் காட்ட வேண்டும். அங்கே தான் நாம் இப்போது போகிறோம். அண்ணா காட்டிய இடம் ஒரு சமநிரப்பற்ற கற்களும் மண் மேடுகளும் நிரம்பிய பகுதி எங்கும் முள்ளும் கள்ளியும் இரு ஆள் உயரமுள்ள மனிதர்களுக்குப் பயன்படா மரங்களுமாய் எதற்கும் உதவாத இடமாகக் காட்சியளித்தது. இங்கு தான் நாம் மாநாடு நடத்தப் போகிறோம் என்றார் அண்ணா. அவர் சொல்லிவிட்ட பின் அதற்கு மறுமொழியேது. மாநாட்டுக்கு இன்னும் பதினைந்தே நாள் தான் பாலைவனம் போலிருந்த அந்தப் பகுதி 'நீலமேகம் நகர்' எனும் புதுப்பெயரோடு அழகிய சோலைவனமாக மாறியது. 1966 டிசம்பர் 29 ல் கழகத்தின் நான்காவது மாநில மாநாடு நான்கு நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்றைக்குக் கழகத்தின் ஊர்வலத்தில் ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை கழகத்திற்கேத் தரப்போகிறோம் என்பதற்கு அச்சாரம் வழங்கியதாகவே மனித கடலென காட்சியளித்தனர். அம்மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய கலைஞர் இப்படிக்குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன் வந்து இவ்விடத்தை நீங்கள் கண்ணுற்றிருப்பீர்களேயானால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நெளியும் பாம்புகளும் ஊர்ந்து திரியும் நட்டுவக்காலிகளும் ஆக்கிரமித்திருந்த இவ்விடத்தின் அவலநிலை.   அண்ணாவின் ஆணைப்படி வெறும் பதினைந்தே நாட்களில் இவ்விடத்தை எழில் மிகும் பூமியாக மனிதர்கள் வந்துலவும் பூஞ்சோலையாக மாற்றிக்காட்டக் கழகத்தால் முடியுமென்றால் இந்த தமிழ்நாட்டை ஏன் அண்ணா தலைமையிலான எங்களால் மாற்றிக்காட்ட முடியாது. நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்! என்று கவினுற நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும் வண்ணம் பேசினார் கலைஞர். அம்மாநாட்டில் வைத்துத் தான் தேர்தல் நிதியாகக் கலைஞர் தலைமையில் கழகம் திரட்டிய ரூபாய் பதினொன்று லட்சத்தைக் கலைஞர் அண்ணாவிடம் வழங்கினார். இலக்கு பத்து லட்சம்தான் கலைஞரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் கழகத்தவர்களின் ஊக்கமான உற்சாகமான பங்களிப்பும் சேர்ந்து கலைஞரால் இலக்குக்கு மேல் ஒரு லட்சம் அதிகமாகச் சேர்க்க முடிந்தது. அதைப்பற்றி கலைஞர் பேசும் போது பத்து லட்சத்தையே முழுமையாக திரட்டிட முடியுமா என்று நானே நெஞ்சம் குழம்பிய நேரங்கள் உண்டு. அந்த இலக்கினையும் தாண்டி ஒரு லட்சம் கூடுதலாகவே கிடைத்ததை எண்ணும் போது எல்லாருக்குமே வியப்பு ஏற்படுவதில் வியப்பென்ன இருக்கிறது! என்றார். இதைப் பற்றி அண்ணா அவர்கள் பேசும் போது "...பதினோரு லட்சம் ரூபாயைத் தம்பி கருணாநிதி என்னிடம் தந்தார். தான் பேசும் போது அந்தத்தொகையைச் சேர்க்க முடியுமா என்று என் விழிகள் வியப்பால் விரிந்தன என்றார். தம்பி உனக்கு 'நிதி' என்று பெயரிட்டார்களே உன் தாயார் சும்மாவா இட்டார்கள்? தமிழ் மொழியில் உள்ள சொற்கள் அத்தனையும் பொருள் உள்ளவை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். உன் தாயார் உனக்கு நிதியென்று பெயரிட்டதே உன்னை நாட்டு மக்கள் நிதியாக பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று தான். இன்றைக்கு இந்தக் காட்சியை அவர்கள் பார்க்க நேர்ந்திருந்தால் உனக்கு இட்ட பெயர் வீணாகிவிடவில்லை என்று அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்" என்று உள்ளத்திலிருந்து கழக கண்மணிகளின் உள்ளத்தைப் பிரதிபலித்தார் அண்ணா. அம்மாநாட்டில் தான் அண்ணா ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயர்களாக அறிவித்தார். "சைதாப்பேட்டை..." என்றவர் ஒரு நிமிடம் அமைதியாக நின்றார். கூட்டம் கூர்ந்து அவரைக் கவனித்தது "ரூபாய் பதினோரு லட்சம்" என்று அறிவித்தார். அவர் கலைஞரைத் தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட கழக தோழர்கள் எழுப்பிய கரகோஷம் மாநாட்டுப் பந்தலையே அதிரச்செய்தன. அன்றைய அந்நினைவும் அக்காட்சியும் கலைஞர் உள்ளத்தில் சித்திரமாய் பதிந்து போயிற்று.                             பகுதி - 13   1966 ஆம் ஆண்டு தமிழகம் எங்கும் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மக்களுக்குப் பல இன்னல்கள் ஊறுகள் நேர்ந்தது. அன்றைய காங்கிரஸ் அரசு அப்பஞ்சத்தின் போது விரைந்து செயல்படத் தவறியது. தவறியதோடு மட்டுமல்லாமல் அப்படியொரு தண்ணீர் தட்டுப்பாடு இல்லவே இல்லை என்றும் அது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம் என்றும் சாதித்தது. அவதியுற்றிருந்த மக்கள் காங்கிரஸின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே தான் இருந்தனர். தண்ணீர் பஞ்சம் தீர்ந்ததும் மக்கள் அதை மறந்தனர். ஆனால் கலைஞர் அதை மறக்கவில்லை அதிலிருந்து பாடம் படித்தார் மக்களுக்குப் பயன்படும் வகையில் பிற்காலத்தில் அவரால் அமைக்கப்பட்டது தான் "குடிநீர் வாரியம்" அவ்வாரியம் அமைப்பதன் அவசியத்தைக் கலைஞருக்கு உணர்த்தியது அந்தத் தண்ணீர் பஞ்சமே. முதலாவது உலகத் தமிழ்க் கருத்தரங்க ஆராய்ச்சி மாநாடு 1966 ஏப்ரல் திங்கள் மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசினார். அம்மாநாட்டிற்கு முப்பத்தேழு நாட்டிலிருந்து இருநூறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து முதல்வர் பக்தவச்சலனார் தலைமையில் எதிர்க்கட்சி சார்பாக நாவலர் உட்பட ஒரு குழு சென்று சிறப்பித்து திரும்பியது. 1972 ல் எம்.ஜி.ஆர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் அந்த ஆண்டே தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது "ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்" என அறிவித்தது நமக்கெல்லாம் தெரிந்த தகவல். ஆனால் கலைஞர் - எம்.ஜி.ஆர் இடையே மனதளவில் முதல் பிரிவு 1966 ல் நிகழ்ந்தது. அவ்வாண்டைய நடிகர் சங்க தேர்தலில் கழகத்தின் உறுப்பினரான கழகத்தின் வெற்றி விரும்பியான லட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்றவர் வெற்றிபெற கடுமையாக உழைத்தார் எம்.ஜி.ஆர். அது கலைஞருக்கு பிடிக்கவில்லை மாறாக வெறுப்பைத்தந்தது. எம்.ஜி.ஆர் எத்தனை உழைத்தும் அத்தேர்தலில் இராஜேந்திரன் அவர்களின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இத்தேர்தல் பிரச்சனையை அண்ணாவின் பார்வைக்கும் கொண்டு சென்றார் கலைஞர். இராஜேந்திரன் அவர்களே வெற்றி பெற்று விட்டதால் இப்பிரச்சனையைப் பெரிது பண்ண வேண்டாம் என்ற பெரும் போக்கில் அவர் விட்டுவிட்டார். ஆனாலும் அத்தேர்தல் கலைஞருக்கு எம்.ஜி.ஆர் மீது கோபத்தையும் வெறுப்பையும் வரவைத்தது. அந்த வெறுப்பின் காரணமாக கலைஞர் சில காலம் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளையும் புறக்கணித்திருக்கிறார். தமிழகத்தின் மூன்றாவது சட்டசபை கூட்டத்தின் இறுதி தின உரையில் கலைஞர் இப்படிப் பேசியிருக்கிறார் "ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப்பார்த்து நான் கேட்கின்ற வரம் இதுவாகத்தான் இருக்கும். முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு! அந்த வரத்தைக் கேட்ட பிறகு அடுத்த வரமாக முதலமைச்சர் அவர்களுடைய பிடிவாத உள்ளத்தை போக்கிவிடு என்று தான் கேட்டிருப்பேன்." என்று முதலமைச்சர் அவர்களை பாராட்டவும் குறையைச் சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறார். இந்த பசுவைக் காக்க கிளம்பும் பசுவதை காவலர்களுக்குப் பசுவை விட மனித உயிர் மிக சாதாரணமாகத் தான் தெரியும் போல அது அன்றும் சரி இன்றும் சரி   அன்றைக்கு இந்தக் கூட்டம் கொல்ல முனைந்தது யாரைத் தெரியுமா? இன்றைக்கும் நாம் மதித்து வணங்கும் பெருந்தலைவர் காமராஜரைத்தான். 1966 நவம்பரில் 'பசுவைக் கொல்லாதே' என்று கிளம்பிய ஒரு கூட்டம் டெல்லியில் காமராஜர் இல்லத்தை முற்றுகை இட்டது. வீட்டைச் சூழ்ந்துகொண்டு கற்களால் தாக்குகிறார்கள் வீட்டிற்குத் தீ வைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. காமராஜரோ செய்வதறியாது திகைத்தபடியே வீட்டின் ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளிருந்து கொண்டார். இச்செய்தியை அறிந்த கோதண்டபாணி எனும் கழகத்தோழர் விரைந்தோடிச் சென்று கலகக்காரர்களுக்கு தெரியாவண்ணம் வீட்டினுள் புகுந்து அவர் இருந்த அறைக்கு வெளியே நின்றுகொண்டு தமிழில் பேசி அவருக்கு நம்பிக்கை அளித்து அவரை அழைத்துக் கொண்டு பின்வாசல் வழியாக வெளியேறி நடக்கவிருந்த பெரும் விபரீதத்தைத் தடுத்தார். அக்கொடுந்நிகழ்வுக்கு கழகம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. கட்சி பாகுபாடின்றி தமிழக தலைவர் காமராஜரைக் காப்பாற்றிய கழக கண்மணியை கழகம் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தது. அதே நேரம் அண்ணா அவர்களும் நாவலர் அவர்களும் தமிழகத்தில் கலகக்காரர்களால் தாக்கப்பட்ட போது காங்கிரஸ்ஸார் அதற்காக ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிக்காததோடு அதை ஏளனப்படுத்தியதையும் வருத்தத்தோடு தன் நூலில் பகிர்ந்திருக்கிறார் கலைஞர். நெருங்கி வரும் தேர்தலில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் பொருட்டு ஓரிடத்தில் கலைஞர் அடைந்துவிடாதிருக்கத் தேர்தலில் நிற்க வேண்டாம் என்றே முடிவெடுத்திருந்தார் அவர். இறுதி நேரத்தில் தான், தான் சென்னை சைதாப்பேட்டையில் நிற்பது அண்ணாவின் மூலம் உறுதியாயிற்று. சென்னையிலேயே கலைஞரை களமிறக்கியதிலும் காரணம் இருந்தது. கழகம் சேகரித்த நிதியை முறையாக பிரித்தளிக்க, பொருட்கள் வாங்கிட, பிரச்சாரம் ஒழுங்குபடுத்த என்று அண்ணா அவர்களால் திட்டமிட்டே கலைஞர் சென்னையில் நிறுத்தப்பட்டார். பிரச்சாரம் தமிழகம் எங்கும் சூடுபிடிக்க துவங்கியது. திமு கழகத்தின் பிரச்சார யுக்தியை 'டைம்ஸ்' ஏடு ஒரு கட்டுரையில் இப்படிப் பாராட்டி எழுதியிருக்கிறது. கழகத்தின் பிரச்சார யுக்தியே வேறானது. மிகப்பெரிய திறந்தவெளி திடலில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு மேடையில் நாடகம் ஒன்று நடைபெறுகிறது. அதை மக்கள்ப் பார்க்கிறார்கள் உள்ளம் உருகுகிறார்கள் மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். அந்த நாடகத்தின் பெயர் 'காகிதப் பூ' இது திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களில் ஒருவரால் எழுதப்பெற்று தமிழகமெங்கும் நடிக்கப்படுவதாகும். இந்த நாடகம் தொழிற்முறை தயாரிப்பு போலவே இருக்கிறது. நேரம் போவதே தெரியவில்லை கருத்தும் தெளிவாக இருக்கிறது. அது கலைஞர் எழுதி பின்னாட்களில் திரைப்படமாகவும் வெளிவந்து மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்துக்கொண்டது. சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் 'ஆனந்த விகடன்' கேலிச்சித்திரம் எனும் பெயரில் கீழான சித்திரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அண்ணா, ராஜாஜி உள்ளிட்ட திராவிட கூட்டணி கட்சி தலைவர்கள் கழுதை மீதேறி சட்டசபை போவதாக வரைந்திருந்தனர் வன்மத்தோடு. அதற்கு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் "காங்கிரஸ் வசமுள்ள இந்த கோட்டையைப் பிடிக்க குதிரைத் தேவையில்லை கழுதைப் போதும் என்று காங்கிரஸ் கட்சி கருதிவிட்டது போலும். எதிலே ஏறிப்போனால் என்ன? கோட்டைக்குப் போய் சேர்ந்தால் சரி!" என்று நகைச்சுவையுடன் நறுக்கெனப் பதிலடி கொடுத்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி தானே. கோட்டூரில் கொலைகாரர்களிடம் கலைஞர் 15 - 2 - 67 ஆம் நாள் தன்னுடைய தேர்தல் பணிகளை முடித்து விட்டு இன்னும் சில தேர்தல் அலுவலகங்களையும் பார்வையிட்டபடியே இரவு பதினொன்று மணிக்கு மேல் கலைஞரின் கார் கோட்டூரில் இருளைக்கிழித்தபடி சென்று கொண்டிருந்தது. அவரது காரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது மூன்று கார்கள்.   கோட்டூரில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்குச் செல்ல காரை நிறுத்தி இறங்கிய கலைஞரை பின்னாலிருந்து வந்த மூன்று கார்களிலிருந்தும் படபடவென வந்திறங்கிய குண்டர்கள் பளபளக்கும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்க தயாராகினர். உடன் இருந்த கழகத்தோழர்கள் சுதாரித்துக்கொண்டார்கள். அவர்கள் வேகமாகச் செயல்பட்டு கலைஞரை அருகில் இருந்த மாநகராட்சி மருத்துவமனைக்குள் தள்ளி பூட்டினர். பூட்டி விட்டு அவர்களோ குண்டர்களை எதிர்த்து நின்றனர். அவர்களைத் தாக்கி முன்னேறிய அந்தக் குண்டர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கி கதவுகளை உடைக்கத் துவங்கினர். வந்தவர்களிடம் கலைஞரை கொல்ல வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. அதற்காக அவர்கள் எதையும் செய்ய சித்தமாக இருந்தனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த கழகத்தின் இளம் தோழர் ஒருவர் கதவைத்திறந்து வந்து கலைஞரின் கரம் பிடித்துக்கொண்டு ஓடத்துவங்கினார். அதன் பிறகு அவ்விரவில் நடந்ததெல்லாம் இயக்குநர் இல்லாமல் கதையாசிரியர் இல்லாமல் வசனகர்த்தா இல்லாமல் அந்தக் குண்டர்களால் தமிழ் சினிமாவை மிஞ்சும் ஒரு திரைப்பட காட்சியே சம்பவித்துக் கொண்டிருந்தது. கலைஞரின் கரத்தை பிடித்துக்கொண்டு ஓடிய இளைஞன் கல்லும் முள்ளும் கரடும் முரடுமான பாதை வழியே கலைஞரை அழைத்துக்கொண்டு ஓடினான். கலைஞரின் காலில் முட்கள் தைத்தது கற்கள் கால்களை பதம் பார்த்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய ஓட்டம் வலிகளைப் பற்றி எண்ண வைக்கவில்லை. காரிருளில் ஓடிக்கொண்டிருந்தனர் அவர்கள். கலைஞரைக் காப்பாற்ற முடியுமோ முடியாதோ என்று எண்ணிய அந்த இளைஞன் கலைஞர் கரம் பற்றி பிடித்து ஓடிக்கொண்டிருக்கையிலேயே அழுது கொண்டே ஓடுகிறான். பின்னாலிருந்தே 'விடாதே பிடி! இவனைக் கொல்!' என்ற சத்தங்களுடன் அந்தக் கொலைகாரர்கள் தொடர்ந்து நெருங்கி வந்து கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்தவன் கலைஞரை ஒரு சிறு குடிசைக்குள் கொண்டு விட்டு விட்டு பின் வாசல் வழியாக ஓடிவிட்டான்.  அக்குடிசைக்குள் ஒரு இளம் தம்பதி குடியிருந்தார்கள். அவர்களிடம் ஒரு பச்சிளங்குழந்தை வெளிச்சம் கொடுக்க ஒரு சிறிய விளக்கு இவை மட்டுமே இருந்தது. அந்த இளைஞன் பெயர் சாரங்கன் அவன் கதவை தாழ்பாளிட்டான். கலைஞரை அவ்வீட்டிலிருந்த கயிற்று கட்டிலின் கீழ் படுக்க வைத்தான். அவர் மீது பழைய துணிகளைப் போட்டு அவரை மூடினான். குண்டர்கள் உண்டு பண்ணும் கூச்சல் குழப்பம் வெளியே பயங்கரமாக கேட்கிறது. அக்குடிசைவாசிகளை மிரட்டுகிறார்கள் குடிசைகளின் கூரைகளைத் தடிகளை கொண்டு தாக்குகிறார்கள் அந்தத் தடியர்கள். தாய்மார்கள் கதறுகிறார்கள். அந்நேரத்தில் தான் அவ்வீட்டிலிருந்த அந்த பச்சிளங்குழந்தை அழத் துவங்கியது. உடனே அந்தத் தாய் அக்குழந்தையின் வாயைப் பொத்திக்கொள்கிறாள். "ஐயோ! வேண்டாம் குழந்தையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கெஞ்சுகிறார் கலைஞர்" ஆனால் அப்பெண் கலைஞரின் சத்தத்திற்குச் செவிசாய்க்கவில்லை. தான் பெற்றெடுத்த தன் குழந்தையை விட ஆபத்தில் தன்னிடம் தஞ்சம் என்று அடைக்கலம் புகுந்த அதீதியை காப்பதே தர்மம் நியாயம் நீதி என்பதை அறிந்து வைத்திருந்த மறக்குல தமிழச்சி போலும் அவள்.  அப்போது கலைஞரை காப்பது ஒன்று மட்டுமே தன் தலையாய கடமையாக கொண்டு செயலாற்றினாள். அதற்காக அவள் எவ்விலையையும் கொடுக்க தயாரானாள். சாரங்கனும் அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டான். அவன் இதயத்துடிப்பு கலைஞர் காதுகளில் விழுகிறது. ஒருவேளைக் குண்டர்கள் குடிசைக்குள் நுழைந்து விட்டால் என்ன செய்வது? அதற்கும் சாரங்கன் மாற்றுத் திட்டம் ஒன்று வைத்திருந்தான். அதாவது கறுப்பு துணியணிந்து கொண்டு கலைஞர் கொல்லைப்புறம் வழியாக ஓடிவிட வேண்டும் என்பது தான் அந்த மாற்றுத்திட்டம். அந்த மாற்றுத் திட்டத்தை உபயோகிக்கும் அவசியத்தைத் தராவண்ணம் குண்டர்கள் அக்குடிசையினுள் நுழைந்து துழாவாமலே சென்று விட்டனர். கலைஞரைக் குண்டர்கள் துரத்திச்சென்றது அதன் பின் கலைஞர் மாயமாய் மறைந்தது என அத்தனை தகவல்களும் கலைஞரின் குடும்பத்தினர் மற்றும் அண்ணா, நாவலர் ஆகியோரிடம் அவ்விரவு வேளையிலேயே பறந்து சென்றது. என்ன ஆனார் கலைஞர் என்று தெரியாமல் குடும்பம் கதறத்துவங்கியது. அண்ணாவும் அழுது கொண்டே தன் தம்பிக்காய் தூங்காமல் இரவு முழுவதும் விழித்த படியே நல்ல செய்திக்காய் காத்திருந்தார். விடியற்காலம் ஐந்து மணிக்கு போலிசாரின் பூட்ஸ் காலடி சத்தமும் நடிப்பிசை புலவர் கே. ஆர் ராமசாமி அவர்களின் குரலும் கேட்கக் கலைஞர் வெளியே வந்தார். வெளியே வந்தவர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அங்கே அவருக்கோர் அதிர்ச்சி காத்திருந்தது. யார் யாரெல்லாம் தன்னுடன் காரில் வந்து தங்கள் உயிரையும் மதிக்காது கலைஞருக்காய் குண்டர்களுடன் எதிர்த்து நின்றார்களோ அவர்களைக் கைது செய்து போலிஸ் காவலில் வைத்திருந்தது. கோபம் கொண்ட கலைஞர் ஐ.ஜி க்கு போண் செய்து என்னுடன் வந்தவர்களைக் கைது செய்துவிட்டு என்னை மட்டும் ஏன் கைது செய்யாமலிருக்கிறீர்கள் என்றாராம். அதன் பிறகே அவர்களை விடுவித்தது காவல்துறை. அதற்கு மறுநாள் சாரங்கனையும் அவர் மனைவியையும் அண்ணா அவர்கள் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அண்ணியாரின் கரத்தால் புடவைகளை பரிசாக வழங்கினார். சாரங்கனின் தோள்களை தட்டிக்கொடுத்தவாறே நா தழு தழுத்த குரலில் "என் தம்பியைக் காப்பாற்றினாய் அப்பா" என்றார் அவர். கலைஞரின் வீட்டுக்கு வந்த சாரங்கனின் மனைவியின் காலில் விழுந்து "எனக்குத் தாலி பாக்கியம் கொடுத்த தாயே" என்று கதறிய தயாளு அம்மாளின் உள்ளக்கிடக்கை நன்றி காணிக்கையை எப்படி விவரிப்பது! அவர் மட்டுமல்ல எண்ணற்ற தமிழர்கள், எண்ணற்ற தமிழார்வலர்கள், எண்ணற்ற கழக உடன்பிறப்புகள் சார்பாக தயாளு அப்பெண்மணியின் கால்களில் விழுந்தார் என்று வேண்டுமானால் நாம் எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகும் கடலூரில் வைத்து ஒருமுறை 'கருணாநிதியே திரும்பிப்போ! இல்லையென்றால் வெட்டுவோம் குத்துவோம்' என்றெல்லாம் மிரட்டினர் பயங்கரவாதிகள். காவல்துறை வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர்களை அடித்துத் துரத்தி தக்கப் பாதுகாப்போடு அம்மாவட்டத்தின் எல்கை வரை கொண்டு சென்று கலைஞரை விட்டது. அப்படி கலைஞரை மரணம் நிழலெனத்தொடரவே செய்தது. இருப்பினும் கலைஞர் அசராமல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து கொண்டு தேர்தல் பணியாற்றியபடியே தான் இருந்தார்.                               பகுதி - 14   கழகம் கோட்டையை கைப்பற்றியது  "இன்னும் ஆறே நாள்! அதிகாரம் மாறும்!" என்று தேர்தல் மேடையில் கலைஞர் முழங்கியது இறுதியில் நடந்தே விட்டது. காங்கிரஸ் கட்சியினரின் கனவு தகர்ந்தது. கழகத்தின் கையில் ஆட்சி அதிகாரம் தவழ்ந்தது. இத்தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்ட கழகம் 138 இடங்களில் வென்று சட்டசபையில் தனி பெரும்பான்மைப் பெற்றது. அதைப்போன்று பாராளுமன்றத்திற்கு போட்டியிட்ட இருபத்தி ஐந்து கழக உறுப்பினர்களும் வெற்றி வாகைச் சூடி புதிய வரலாறு படைத்தார்கள். அந்தத் தேர்தலில் தான் தமிழகம் இன்றைக்கும் நினைத்து வருந்தும், துக்கப்படும், தலை கவிழ்ந்து நிற்கும் நிகழ்வான ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது சொந்த தொகுதி மக்களாலே தோற்கடிக்கப்பட்டதும் நடந்தது. அவருடன் காங்கிரஸ் அமைச்சர்களாக இருந்த ஒருவரைத்தவிர மற்ற அனைவருமே தோல்வியைத்தழுவினர். மொழிப்போர் முழக்கமும், உணவுப் பஞ்சமும், தண்ணீர் பஞ்சமும், கூடக் கழகத்தின் பிரச்சார யுக்தியுமாக காங்கிரஸ்ஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. அக்கால கட்டத்தில் அசுர பலத்தோடு இருந்த காங்கிரஸ் கட்சி அதன் பின் எப்போதுமே தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாமலே போனது. அத்தேர்தலை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அண்ணாவின் கழகப் படை இறுதியில் புதிய வரலாறு படைத்தது. தேர்தலில் வெற்றி அறிவிக்கப்பட்ட அவ்விடத்தில்  பேசிய கலைஞர் "இந்த வெற்றியை இப்போது நான் ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடினால் வெற்றி வாய்ப்பை இழந்தவரின் மனம் புண்படும் ஆகவே தோழர்களே கலைந்து செல்லுங்கள்" என்று கூறி அன்றைக்கும் தன் மனத்தின் விசாலத்தை நிரூபித்திருக்கிறார். 23 - 2 - 67 அன்றைக்கே கழகம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்த உடனே அண்ணா அவர்கள் கலைஞர் மற்றும் நாவலர், மதி அரங்கண்ணல் முதலானோரை அழைத்துக்கொண்டு இராஜாஜியை சந்திக்கச் சென்றார். இத்தேர்தலில் சட்டமன்றத்திற்கு அண்ணா அவர்கள் போட்டியிடவில்லை மாறாக அவர் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தார். இப்பொழுது அண்ணா முதல்வர் பதவியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா? இல்லை டெல்லிக்கே சென்று விடுவாரா? எனும் சந்தேகம் பலவாறு யூகமாகவும் வதந்தியாகவும் பரவ துவங்கியது. 1 - 3 - 1967 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அறிவிப்பின் மூலம் அத்தகைய சந்தேகத்திற்கும் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது கழகம். அன்றைய தினமே அத்தனை எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து அவர்கள் வாழ்த்தினை பெற்று வந்தார் அண்ணா. எல்லாம் ஆயிற்று அண்ணா அவர்கள் புதிய ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆளுநரைச் சந்திப்பது தானே முறை. முதன் முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர சென்றார் அண்ணா உடன் கலைஞரும் நாவலரும் இருந்தனர். ஆளுநரைச் சந்திக்க போகிறோம் வெறுங்கையோடா அவரைச் சந்திப்பது? எனும் எண்ணம் வந்த போது அவர்கள் ஆளுநர் இல்லத்தை நெருங்கி விட்டிருந்தனர். ஆளுநருக்கு எதை வாங்குவதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. காரை ஒரு கடையின் பக்கம் நிறுத்தினார்கள். அங்கிருந்து ஒரு எலுமிச்சம் பழமொன்றை வாங்கிக்கொண்டார்கள். அதுவோ வற்றிப்போன பழம்! இதைக் கொண்டு போய் ஒரு ஆளுநரிடம் எப்படிக் கொடுப்பது? அந்த எண்ணம் வரத்தான் செய்தது.  ஆனாலும் வேறு வழியில்லை அப்போது அவர்களுக்கு. அந்த எலும்மிச்சம் பழத்தை கைக்குள்ளே வைத்து மற்றவர்கள் கண்களுக்குப் பட்டு விடாமல் அதனை ஆளுநர் கையில் திணித்திருக்கிறார் அண்ணா. தலைவர்கள் வாழ்வில் நிகழும் இத்தகைய சிறிய விசயங்கள் கூட நமக்கு ஸ்வாரஸ்யத்தைத் தான் தருகின்றன. அங்கிருந்து அவர்கள் நேராகக் கிளம்பியது பெரியாரைக் காணத்தான். கலைஞர் தன் நூலில் "தந்தையைக்காணச் சென்றோம்" என்றிருக்கிறார். பதினெட்டு ஆண்டுகள் பிரிவிற்கு பின்பும் பெரியார் மீது அவர்களுக்கிருந்த அன்பும் மரியாதையும் கடுகளவேனும் குறையாதிருந்ததையே இவ்வாக்கியம் உணர்த்துகிறது. இருதரப்பினரின் சந்திப்பு உணர்ச்சிவயமாகவே காணப்பட்டது அத்தனை பேர் கண்களும் நனைந்தது. "என்னைக் கூச்சப்பட வைத்து விட்டீர்கள்" எனக் குழந்தை போல் கண்ணீர் மல்கக் கூறினார் பெரியார். கலைஞரும் அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெறுவதை அடுத்து பள்ளிப்பருவத்திலிருந்து தான் துவக்கி வளர்த்து வந்த முரசொலியின் ஆசிரியர் பொறுப்பை மாறனிடம் கொடுக்க நேர்ந்தது. முரசொலியின் பிரிவு அவருக்கு வலித்தது. அதை நெஞ்சுருகக் குறிப்பிட்டிருக்கிறார் மனிதர். கலைஞருக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டது. மொத்தம் எட்டு அமைச்சர்கள் அத்தனை பேரையும் அவர் தம் 'துறை'களையும் சொல்லி கலைஞர் இப்படிச் சொல்கிறார். "எந்தத் துறையை எங்களுக்கு ஒதுக்கினாலும் நாங்கள் அந்தத் துறையை சரிவர நிருவகிப்போம் என்ற தெம்பு எங்களுக்கு ஏற்பட அண்ணா 'துரை' தான் காரணம். அந்தத் துரையை நம்பினால் நாடு முன்னேறும்" என்று பேசினார் கலைஞர். 1967 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் தேதி அண்ணாதுரை தலைமையிலான அரசு பதவியேற்று தமிழகத்தில் புதியதொரு சகாப்தத்தைத் துவங்கி வைத்தது. கலைஞர் அமைச்சர் பொறுப்பை ஏற்கும் தருணம் எல்லா மகன்களையும் போல தன் வெற்றியைக்காணத் தனது தாய் அருகில் இல்லையே என்பதை நினைத்து கண்களில் கண்ணீர் மல்க நெக்குருகி நின்றார். அதன் பிறகு தன் சொந்த ஊருக்குச் சென்ற கலைஞர் அங்கு தான் ஆற்றிய உரையில் "நான் இங்கு அமைச்சரல்ல உங்களில் ஒருவன் என்றும் நான் கலைஞராக இருந்தவன் என்று சொல்லாதீர்கள் இப்போதும் எப்போதும் அப்படி இருப்பவன் தான்!" என்று கூறி ஊரோடு தனக்குள்ள உறவை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் கழகத்திடம் ஆட்சியைப் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி மொத்தம் தேசத்தில் கேரளம் உட்பட ஆறு மாநிலங்களில் எதிர்க்கட்சி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டது. புது சகாப்தம் துவங்கியது  கழகம் ஆட்சி கட்டிலில் ஏறிய உடன் செய்த வேலைத் தமிழக அரசின் இலச்சினையில் இருந்த 'மதராஸ் கவர்மெண்ட்' என்றிருந்த ஆங்கில சொற்களையும் 'சத்தியமே ஜயதே' என்றிருந்த வடமொழிச் சொற்களையும் தூக்கி ஏறிந்து விட்டு 'தமிழக அரசு' என்றும் 'வாய்மையே வெல்லும்' என்றும் செம்மொழியாம் தமிழில் மாற்றிப் பொறித்தது. அதுவே இலச்சினையில் நிலைத்தது. இனி எப்போதும் நிலைத்திருக்கும் அதனுடன் கழகத்தின் பெயரும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆட்சியை விட்டு இறங்கிய காங்கிரஸ் அரசு அன்றைக்குப் பல பைல்களை எரித்துவிட்டுச் சென்றது. அண்ணா அவர்கள் பழிவாங்கும் பொருட்டு அவர்களை வதைக்காமல் தன்னுடைய கண்ணியத்தினிமித்தம் பெரும் போக்காக அதை விட்டு விட்டார். கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஆரம்பக் காலத்தில் தான் குடிசை வீட்டு மக்கள் வெள்ளத்தில் பட்ட அவலத்தை நேரிலே கண்டதன் விளைவாக அவர் சிந்தனையில் உதித்தது தான் 'குடிசை மாற்று வாரியம்.' அதன் மூலம் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டி எழுப்பப்பட்டது. 50 ரூபாய் 60 ரூபாய் வாடகை கொடுத்து வாழ்க்கை நடத்தக் கஷ்டப்பட்ட ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் 10 ரூபாய் 15 ரூபாய்க்கு அவ்வீடுகள் கிடைத்து பயன் பெற்றனர். அன்றைய காலத்திலே 'ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி' எனும் பெயரில் அரிசி கழக அரசால் சென்னை மற்றும் கோவை நகரத்தில் சோதனை முறையாகக் கொண்டு வரப்பட்டது. அத்திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது. நிதி நிலைமை அரசிற்கு பெரும் சுமையாக மாறியதால் அப்போது கழகத்தால் அத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியாமல் போனது. கிட்டத்தட்ட நாப்பது ஆண்டுகள் தாண்டி கலைஞர் அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்து  அத்திட்டத்தை நிறைவேற்றியது. 22 - 4 - 67 ஆம் ஆண்டு கலைஞருக்கு 'தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்' சார்பில் திரைப்படத் துறையில் 'சிறந்த வசனகர்த்தா' விருது வழங்கப்பட்டது. அவ்விருது தன் பிரியமான அண்ணனின் கரத்தால் கிடைக்கப்பெற்றது. அவ்விருது வழங்கும் விழாவில் நடந்த ருசியான சம்பவம்... ஒவ்வொருவருடைய பெயரும் அறிவிக்கப்பட அவர்கள் மேடையேறி அண்ணாவின் கரத்தால் விருது வாங்கிச்சென்று கொண்டிருந்தர். கலைஞரின் முறை வந்தது கலைஞர் மேடையேறினார். அண்ணாவின் அருகில் போய் நின்றார். கலைஞருக்கு அணிவிக்கக் கொடுத்த மாலையை அண்ணா கலைஞருக்கு அணிவிக்காமல் தானே அணிந்து கொண்டு நின்றார். அந்நிமிடம் அரங்கமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. கலைஞர் தன் அண்ணனின் அன்பில் பூரித்துப்போய் நின்றார். சில நிமிடங்களுக்குப் பின்னர் கலைஞருக்கு மாலையை அணிவித்து விருதையும் வழங்கினார் அண்ணா. பின்னர் பேசும் போது இப்படியாகச் சொன்னார் "...கலைஞர்  கருணாநிதி அவர்கள் கலையில் ஈடுபாடு கொண்டு எதையும் நேர்த்தியாகச் செய்வது போலவே ஆட்சியிலும் கலையின் நேர்த்தியை இணைத்துக் காரியமாற்றி முன்னேற்றம் கண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் விருது பெறுவதால் நான் தனிப்பட்ட முறையில் பெருமை அடைவதை நீங்கள் அனுமதிப்பீர்கள்..." என்று உள்ளம் திறந்து உள்ளபடியே பாராட்டினார்கள். நன்றியுரை கூறிய போது கலைஞர் "...கடந்த மார்ச்  6 ஆம் நாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இதே மண்டபத்தில் நான் உறுதி மொழி எடுத்துக்கொண்ட அந்த நாளைவிட விருது பெற்ற இந்த நாளை நான் பெருமைக்குரிய நாளாகக் கருதுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாகப் பாசமுள்ள அண்ணனின் கையால் விருது பெற்றிருக்கிறேன் என்பதை எண்ணுகின்ற நேரத்தில் உள்ளபடியே நான் பெருமை அடைகிறேன்..." என்று கூறி முடித்தார். கலைஞன் ஒருவன் அவன் எந்தெந்த துறையிலெல்லாம் உச்சம் தொட்டாலும் தான் விரும்பி நேசித்துச் செய்யும் கலைத்துறையில் அவன் உயரம் செல்வதை, தான் அங்கிகரிக்கபடுவதையே அதிகம் விரும்புகிறான் அதிலே தான் அவன் அதிகம் மகிழ்ந்து பெருமைப்படுகிறான் என்பதைக் கலைஞர் வாழ்வின் இச்சம்பவத்திலிருந்து நாமும் உணரலாம். பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞரின் பார்வைக்கு அடையாறு-எல்பின்ஸ்டன் பாலம் ஆபத்தான நிலையில் இருக்கும் தகவல் வந்தது. அதைப் பார்வையிட்டு ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பாலத்திற்கு உடனடியாக முட்டுக்கொடுக்கும் பணியை முடுக்கி விட்டதோடு பின்னர் அகலமாக எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு எழிலாகக் கட்டி முடிக்கப்பட்டது அப்பாலம். கலைஞரின் கரத்தால் பொதுப்பணித்துறை அமைச்சராகத் துவங்கி வைக்கப்பட்ட அப்பணி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் கலைஞராலேயே திறந்து வைக்கப்பட்டது. தற்போது திரு. வி. க பாலம் என்று அழைக்கப்படுகிற பாலமே தான் அது. கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அந்தச் சூட்டோடு அவர் உள்ளத்தில் உதித்து நடைமுறைக்கு வந்தது தான் அரசு பேருந்துகளில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் பொய்யாமொழிப் புலவர் ஐயன் வள்ளுவனின் குறட்பாக்கள். அத்திட்டம் அறிவிற் சிறந்தோர், ஏழை எளியோர், அரசியல்வாதிகள், அரசியல் சார்பில்லாதோர் என அனைவரின் பாராட்டையும்ப்பெற்றது. கூவத்தை சீராக்கிட வேண்டும் எனும் சீரிய எண்ணம் அண்ணா தலைமையிலான அரசிற்கு நிறையவே இருந்தது. தங்களது முதல் பட்ஜெட்டிலேயே கலைஞரின் வற்புறுத்தலால் அதற்கு நிதி கூட ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்திட்டம் மட்டும் நிறைவேறியிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்!   தண்ணீர் ஓட்டத்தைச் சீர் செய்யக் கடல் நீரை உள்ளே கொண்டு வருகிறார்கள். அதற்காகத் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. துர்நாற்றம் போகிறது. அவ்வாற்றைச் சுற்றிலும் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. பொழுது போக்கிற்காக படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்காகப் படகுத்துறைகள் அமைக்கப்படுகிறது. கழிவு நீர் ஆற்றில் கலந்து விடாமல் அதற்கு மாற்றுத்திட்டம் வகுக்கப்படுகிறது. அப்பப்பா! அத்திட்டத்தை எண்ணிப் பார்க்கையிலே தான் எத்தனை இன்பம்! எத்தனை ஆனந்தம்! எத்தனை நறுமணம்! ஆனால் கூவத்தின் துரதிர்ஷ்டம் அத்திட்டம் கடைசிவரை கலைஞரின், கழகத்தின் கனவு திட்டமாகவே அமைந்து போனது தான் வேதனை. அடுத்து பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞரின் சிறப்பான திட்டம் பேருந்துகளை நாட்டுடைமையாக்கி போக்குவரத்து கழகத்தை அமைத்தது. "பஸ் அதிபர்கள் தேன் கூடு போன்றவர்கள்" என்ற காங்கிரஸ் உறுப்பினரின் எச்சரிக்கையையும் மீறி எதையும் அண்ணா தலைமையிலான அரசு சமாளிக்கும் சாதிக்கும் எனும் தன்னம்பிக்கை தைரியத்தோடு துணிந்து கலைஞர் இப்பணியைச் செய்து முடித்தார். அதே வேகத்தோடு தமிழக மக்கள் தண்ணீர் பஞ்சத்தின் போது பட்ட பாட்டினை மனதில் கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு 139 மைல் தொலைவிலிருந்த வீராணம் ஏரியிலிருந்து 'வீராணம் காவிரி நீர்த் திட்டம்' மூலம் குழாய்கள் அமைத்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து வரப்பட்டது. கழகம் ஆட்சிக்கு வந்ததும் நடைமுறைப் படுத்திய மிக முக்கியமான மூன்று திட்டங்கள். தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம். சுயமரியாதை திருமணச் சட்டம். இந்தி ஒழிப்பு தீர்மானம். என வந்த வேகத்திலேயே தங்கள் எதற்காகப் போராடினார்களோ எதை மக்களுக்குப் பெற்றுத்தருவோம் என்று சொல்லி ஆட்சி பொறுப்பில் அமர்ந்தார்களோ அதனைச் செய்ய துவங்கியது அண்ணா தலைமையிலான கழக அரசு.                               பகுதி - 15   1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஆட்சி மொழி சட்ட திருத்த மசோதா ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றிக்கொண்டது. அதனுடைய சாரம் வழக்கம் போல தான் இந்திக்காரன் கண்ணுல பால் மத்தவங்க கண்ணுல சுண்ணாம்பு. மீண்டும் தமிழ்நாடே கொந்தளித்தது மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பொருட்களின் மீது தங்களின் கோபத்தைக் கொட்டினர். பல இரயில் பெட்டிகளும் அவர்கள் கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. அத்தகைய உணர்ச்சிப் பூர்வமான சமயத்தில் மாணவர்கள் சென்னை சென்ரல் இரயில் நிலையத்தை முற்றுகை இடப்போவதாகக் கலைஞருக்கு தகவல் வந்தது. முற்றுகையும் போட்டனர். ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறார்கள் கிளர்ச்சி செய்யும் மாணவ மணிகள் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன் உயிரைக் கூட பறித்துக்கொள்ளலாம்! என்று மாணவர்களிடம் பேச செல்லும் கலைஞரை தடுத்தனர் அதிகாரிகள். அவர்கள் பேச்சுக்கு செவி மடுக்கவில்லை கலைஞர். என்ன ஆனாலும் பரவாயில்லை என்றபடி மாணவர்களைக் கண்டு பேசக் கிளம்பினார் கலைஞர். மாணவர்களின் மனதை மாற்றிவிட முடியும் எனும் நம்பிக்கையுடன் சென்றார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரயில் நிலையத்தை அதிரச்செய்து கொண்டிருந்தவர்கள் கலைஞரின் வாகனத்தைக் கண்டதும் ஓடிவந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். கலைஞர் நிலைமையை உருக்கமாக எடுத்துக் கூறினார். உங்கள் பின்னாலிருந்து கலகத்தை உண்டுபண்ண ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கிறது. அதைக் காரணம் காட்டி கழக அரசை டிஸ்மிஸ் செய்யும் திட்டமும் மத்திய அரசிற்கு உண்டு. இந்திக்கு ஆதரவான அரசல்ல அண்ணா தலைமையிலான இந்த அரசு இந்திக்கெதிராய் களங்கள் பல கண்ட கழக அரசு. என்றெல்லாம் பேசி மாணவர்கள் மனதை மாற்றி அவர்களைக் கலைந்து போக வைத்து பெரும் கலவரத்தை தன் சாமர்த்தியத்தால் தடுத்தார் கலைஞர். அச்சம்பவத்தை அதில் கலைஞரின் தைரியத்தை அவரது சாணக்கியதனத்தை நடுநிலையான இந்தியாவின் பல ஏடுகளும் மனம் திறந்து பாராட்டின. சாதனைகள் எத்தனை புரிந்திட்டவர் மனதிலும் புகழின் உச்சாணிக்கொம்பில் கால் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்திட்டவர் மனதிலும் தான் முதன் முதலாய் மேடையேறியதும் தனது முதல் அரங்கேற்றமும் எப்போதும் இனிமையாய் பசுமையாய் மனதில் நிறைந்தே தான் நிற்கும். அப்படி கவிஞராக கவிமன்றத்தின் தலைவராகக் கலைஞர் பல மேடைகளை அலங்கரித்திருந்தாலும் தான் கவிதை மன்ற தலைவராக முதல் முதலில் வீற்றிருந்ததையும் ஏடுகளில் மட்டுமே கவிதை எழுதி வந்தவர் தன் குரலில் மேடையிலும் கவிதை பொழிந்ததையும் எழிலுற இதயத்திலிருந்தே எழுதி வைத்திருக்கிறார் தன் நெஞ்சுக்கு நீதியில். 5 - 8 - 67 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தாரால் அக்கவியரங்கம் நடந்தப்பட்டது அது தான் கவிமன்ற தலைவராகக் கலைஞரின் முதல் அரங்கேற்றம். அம்மாதம் பதிமூன்றாம் தேதி அந்நிகழ்ச்சி வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து கலைஞர் பல கவியரங்கங்களுக்கு தலைவராக வீற்றிருந்து கவி பாடி மக்களை மகிழ்விக்கவும் செய்யத் துவங்கினார். அப்படி தஞ்சையில் நடக்கவிருந்த கவியரங்கத்திற்கு சென்ற வேளையில் தான் கலைஞர் வாழ்வில் வந்து சேர்ந்தது அக்கோர விபத்து. எதிரே வந்த டிராக்டருடன் கார் மோதியதில் கார் இரண்டு மூன்று பல்டி அடித்து விழுந்து நொறுங்கியது கலைஞருக்கு மூக்கு, முழங்கால், நெற்றி, மேலுதடு, முகம் என்று பலமான அடி அவரும் அவருடன் பயணித்த நண்பர்களும் அன்றைக்கு உயிர் பிழைத்ததே பெரும் ஆச்சர்யம் தான். தொடர்ந்து பின்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவரை எடுத்துக்கொண்டு திண்டிவனம் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அங்கிருந்து உயர் சிகிட்சைக்காய் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார் வழிகளில் வைத்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு கலைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செங்கோட்டைத் தாண்டி ஆம்புலன்ஸ் செல்லும் போது "அண்ணா வந்திருக்கிறார்" எனும் சொற்கள் கலைஞரின் செவிகளில் வந்து மோதின. வந்தவரை வரவேற்று அண்ணா என்று அழைக்க முடியவில்லை. எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்ய முடியவில்லை. கண் திறந்து அவரைப் பார்க்க முடியவில்லை. அவரிடம் எப்போதும் போல் சிரித்துப் பேச முடியவில்லை. அவர் நலம் விசாரிக்க முடியவில்லை. ஆயிரம் வலிகளுக்கிடையே கலைஞரின் இதயத்தில் மேலும் ஒரு வலி கூடிக்கொண்டது. அவரோ நா தழுதழுக்க "தம்பி தைரியமாக இரு!" என்று தன்னம்பிக்கையை அளித்தபடி அருகினில் தாயன்போடு அமர்ந்து கொண்டார். சென்னை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கலைஞர். நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்று வீடு திரும்பினார். தஞ்சையில் விபத்தால் முடங்கிய கவியரங்கை மீண்டும் சென்று தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த பிறகே நிம்மதி பிறந்தது கலைஞருக்கு. இரண்டாவது 'உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு' சென்னையில் பெரும் புகழோடு சான்றோர் ஆன்றோர் முன்னிலையில் பொலிவோடு நடந்தேறியது. வெளிநாடுகளிலிருந்து மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர் பெருமக்களும் தமிழகத்திலிருந்து மொத்தம் 190 அறிவிற்சிறந்தோர்களும் மற்ற மாநிலங்களிலிருந்து 30 தாய் தமிழில் தன்னிகரற்ற பெரியோர்களும் கலந்து கொண்டு அந்நிகழ்வுக்குச் சிறப்பு சேர்த்தனர். அந்த நிகழ்ச்சியில் தான் அண்ணா சாலை ரவுண்டானாவில் அண்ணாவிற்குச் சிலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாளில் திருவள்ளுவர், கண்ணகி முதல் பாரதியார், பாரதிதாசன் வரைக்குமுள்ள தமிழ் அன்னை பெற்றெடுத்த தமிழுக்குப் பெருமை சேர்த்த பெருமகனார்களுக்கு சென்னை கடற்கரையில் சிலை வைத்துச் சிறப்பு செய்யப்பட்டது. அந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியான மறத்தமிழர்களின் வீரத்தை விவேகத்தைச் சிறப்பை சொல்லும் அதைப் போற்றும் வண்ணம் அலங்கார ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வேளையில் கலைஞரின் காதுகளுக்கு இன்னொரு இன்பச் செய்தியும் வந்து சேர்ந்தது. அவருக்கும் இராசாத்தி அம்மாளுக்கும் கனிமொழி எனும் மகள் பிறந்தார் என்பதே அச்செய்தி. "கலைத் துறையிலும் கட்சி பணியிலும் இணைந்து நின்ற என் இன்னுயிர் துணையான ராஜி." என்று கலைஞர் தன்னுடைய மூன்றாவது மனைவியைக்குறித்து சுருக்கமாக தன் சுயசரிதையில் சொல்லியிருக்கிறார். 1968 ஆம் ஆண்டிலேயே கலைஞருக்கு அவ்வாண்டைய அவரது பிறந்தநாளில் சிலை வைக்கத் தீர்மானித்தார்கள் கழகத் தோழர்கள். அச்சிலையை அண்ணாவின் கையால் திறந்து வைக்க அனுமதியும் வாங்கிவிட்டனர் அவர்கள். அம்முயற்சியைக் கலைஞர் இப்போதைக்கு எனக்குச் சிலை நிறுவ வேண்டாம் ஐம்பது ஆண்டுகள் கூட வாழ்ந்து முடித்திராத எனக்கு அது பொருத்தமாக இருக்காது என்று தன்னடக்கத்துடன் கூறி அப்போது அதைத்தவிர்க்கச் சொல்லி தோழர்களை ஒத்துக்கொள்ளவும் வைத்துவிட்டார். அண்ணா மறைந்தார் கலைஞர் முதல்வர் ஆனார்  1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் விருந்தினராகவும் யேல் பல்கலைக்கழகத்தாரின் அழைப்பின் பெயரிலும் அண்ணா அமெரிக்க சென்றார். அங்கு யேல் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஐந்து நாட்கள் கலந்துரையாடினார். மாணவர்களின் கூரான கேள்விகளுக்கு முனை மழுங்காமலே பதிலளித்தார் அண்ணா. அதோடு நின்று விடாமல் அம்மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்பெடுத்து திருக்குறளின் புகழையும் பரப்பிவிட்டே இந்தியா திரும்பினார். மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது அறிவு பசிக்கு தீனிபோட்டுத் திரும்பிய அண்ணா அவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே மருத்துவ சிகிச்சைக்காக திரும்ப இங்கேயே வரப்போகிறார் என்பது அப்போது அங்கு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை தான். அண்ணாவை நோய் பிடித்தது  சில நாட்களாகவே அண்ணாவிற்கு கடும் வயிற்று வலி மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரிலும் வலியின் காரணமாகவும் ஓய்வில் இருக்கிறார் அவர். அப்போது தான் அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் 'டாக்டர்' பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதை தாமே நேராகச்சென்று வாங்கிவருவதாக யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக இருந்தார் அண்ணா. அண்ணியார் கலைஞருக்கு அழைத்து "நாங்கள் யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை நேராக சென்று பட்டம் வாங்கி வருவதில் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே தான் மரியாதை என்கிறார். நீங்கள் சொன்னால் உங்க அண்ணா கேட்பார்கள்" என்றார்கள். கலைஞர் நேராக அண்ணாவிடம் சென்று அவரது உடல் நிலையை எடுத்துச்சொல்லிப் போகவேண்டாம் என்கிறார். உங்களுக்குப் பதில் வேறு யாரேனும் வாங்கி வந்தால் போதுமே என்கிறார் கனிவும் பணிவுமாக. "அப்படியா சொல்கிறாய்..." என்றபடி புன்னகை புரிகிறார் அந்த அறிவு சூரியன். அப்புன்னகைக்குக் கலைஞரின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதே பொருள். அதோடு அவர் கலைஞரை விட்டு விடவில்லை. "நானும் சென்னையிலேயே இருக்கிறேன் நீயும் சென்னையிலே இருந்தால் எப்படி? நீ உடனே உன்னுடைய திட்டப்படி சுற்றுப்பயணம் புறப்படு!" என்று அவரை அனுப்பி விட்டார். அண்ணாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் புற்றுநோய் வந்திருக்கிறது எனும் ஒரு பெரும் அணுகுண்டை தூக்கி தமிழக மக்களின் தலையில் போட்டனர். கழகத்தவர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுதனர். தாய்மார்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு புலம்பித் தவித்தனர். நோய்க்குச் சிகிச்சை எடுக்க அண்ணா அவர்கள் அமெரிக்க புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்க அலை கடலென தமிழக மக்களும் கட்சி பாகுபாடு மறந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் திரண்டு வந்து அனுப்பி வைத்தனர். தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் வந்து தனது தனயனை அனுப்பி வைத்தார் பெரியார். கலைஞர், நாவலர் உட்பட சில நண்பர்களும் அண்ணாவை மும்பை விமானநிலையம் வரை சென்று வழியனுப்பித் திரும்பினர். அண்ணா அவர்களுக்கு 16 - 9 - 68 ல் அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அன்றைக்குத் தஞ்சையில் அவரது திருவுருவ சிலையைத் திறந்து வைத்து நெஞ்சுருகப் பேசினார் கலைஞர். ஏறத்தாள அறுபது நாட்களுக்குப் பிறகு அண்ணா அவர்கள் தாய் தமிழகம் திரும்பினார்கள். மக்கள் வெள்ளத்தின் நடுவே திறந்த ஜீப்பில் அமர்ந்தபடி தனக்கு இதுகாறும் ஆதரவளித்து வரும் மக்களின் வாழ்த்தைப்பெற்றபடி வீடு சென்று சேர்ந்தார். வீடு போனதும் அவர் மாடிக்குப் போனார் சற்று நேரத்தில் கலைஞர் மாத்திரம் மாடிக்கு வரும்படி அழைப்பு வந்தது. கலைஞர் போனதும் அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தைச் சட்டையை விலக்கிக் காண்பித்தார். அதிர்ந்து போனார் கலைஞர். அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அண்ணாவைக் கட்டிக்கொண்டு அழுதார். அண்ணா அவர்களும் அழுகையை அடக்க முடியாமல் தவித்தார். அண்ணா மீண்டும் பணியாற்ற துவங்கினார் எனினும் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமலே இருந்தார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி 'சென்னை மாநிலம்' 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் பெற்ற நிகழ்ச்சி தான். அதில் பேசும் போது அண்ணா அவர்கள் தன் உடல் நிலையைப்பற்றி மருத்துவர்கள் எச்சரித்ததை இப்படி உணர்ச்சிமயமாக பேசினார்கள் "...தமிழ்நாடு பெயர் மாற்ற மகிழ்ச்சி விழா நடைபெறும் இன்றைய தினம் நான் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேருமென்றால் இந்த உடல் இருந்தே பயனில்லை... ஒருவருக்கு வாழ்வில் இத்தகைய அனுபவம் ஒரு முறை தான் வரும் பல முறை வராது" என்றார். அண்ணாவின் இறுதி பொது நிகழ்ச்சி கலைவாணருக்கு சிலை திறந்து வைத்தது தான். அது போல் கலைவாணர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சி அண்ணாவின் படத்திறப்பு விழா தான். மனமொத்த நண்பர்கள் இருவரின் வாழ்விலும் இப்படி ஒரு ஒற்றுமை இயல்பாய் அமைந்தது வியப்பும் அவர்கள் தூய நட்பிற்கோர் எடுத்துக்காட்டுமன்றோ! அதன் பிறகு மீண்டும் அண்ணாவை நோய் எனும் பொல்லாத நாகம் விழுங்கத் துவங்கியது. அமெரிக்காவிலிருந்தும் மருத்துவர்கள் வந்தார்கள் எனினும் எவ்வித பயனும் இல்லை. 1969 பிப்ரவரி இரண்டாம் நாள் இரக்கமற்ற மரணம் அண்ணா எனும் ஜோதியை தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டது. தமிழகத்தை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு அண்ணா எனும் ஆளுமை வங்க கடல் ஓரம் நிரந்தர தூக்கத்திற்கு சென்று அமைதியாகி விட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த அன்றிரவே நாவலர் அவர்களை  முதலமைச்சராகக் கொண்டு தற்காலிக அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. அண்ணா இறந்து எட்டு தினங்களுக்கு பிறகு அதாவது 10 - 2 - 1969 அன்று நிலையான அமைச்சரவைக்குரிய தி மு கழக சட்டமன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க கழக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் "தி மு க சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் திரு மு. கருணாநிதி அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்" என்று தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த நாலவர் அவர்கள் அறிவித்தார். அண்ணாவின் வழியே அவர் தம்பி கலைஞர் கருணாநிதியும் பெரியார், இராஜாஜி, காயிதே மில்லத், காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்தைப் பெற்றுக்கொண்டு தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று தன் பணியைத் துவங்கினார்.                                       பகுதி - 16   "...யார் முதல்வராக வரவேண்டும் என்று பெரும்பாலானோருடன் கலந்து பேசிய போது கலைஞர் தான் வரவேண்டும் என்று அனைவரும் தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நானும் நீங்கள்தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினேன். இத்தனைக்குப் பிறகும் அவர் சம்மதிக்கவில்லை மாறனை அனுப்பி வைத்தார். கலைஞருக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம். அவரை தொல்லைப் படுத்தாதீர்கள் என்று மாறன் எங்களிடம் சொன்னார். இது கட்சிக்காக, மக்களுக்காக என்று நாங்கள் சொன்னோம்..." இது எம்.ஜி.ஆர் அவர்கள் 1-4-1969 ல் சென்னை ஆயிரம் விளக்கில் வைத்து நடைபெற்ற புதிய அமைச்சரவை பாராட்டு விழா கூட்டத்தில் பேசியது. கலைஞர் முதலமைச்சர் பதவியைத்தேடிப்போகவில்லை. அவரைத்தேடித் தான் அப்பொறுப்பு வந்தது என்பதற்கு ஒரு சான்று மேலே எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியது. கலைஞரை இதற்கு இணங்க வைக்க ஈரோடு சின்னச்சாமி தலைமையில் ஒரு குழு அவரை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தது. அதைப்போன்று கட்சியின் பல மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பிக்கள் எனக் குழுவாகச் சூழ்ந்து கொண்டு அவரை சம்மதிக்க வைத்திருக்கின்றனர். அதில் யாரெல்லாம் இருந்தார்கள் என்ற நீண்ட வரிசையொன்றைக் கலைஞர் தன் நூலில் பகிர்ந்திருக்கிறார். அண்ணா அவர்களின் மறைவு தமிழகத்தில் எத்தனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எடுத்தியம்பியிருக்கிறார் அவர். அவரது உடல் இறுதி மரியாதைக்காக மக்கள் பார்வைக்கு வைத்திருந்த இடத்திலேயே வந்து விழுந்து இறந்தார் தொண்டர் ஒருவர். தங்கள் அண்ணனை, தங்கள் தலைவரை இறுதியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டுமென எண்ணி கண்களில் கண்ணீரோடு முன்னேறியவர்களால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, அதைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கூட காவல்துறை வீச வேண்டியது வந்தது என்பதைக் கண்ணீரோடு எழுதி வைத்திருக்கிறார் கலைஞர். அதைப்போன்று அன்றைய தமிழக மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையில் அண்ணாவைக் காணச் சென்றார்கள் என்பது வரலாறு. அவர்கள் அத்தனை பேருக்கும் வாகன வசதிகள் சரிவரக் கிடைத்துச் செல்லவில்லை. கிடைத்த வழிகளில் எல்லாம் பயணித்தார்கள். அதைப்போன்று கிடைத்த இடங்களில் அமர்ந்தும் பயணித்தார்கள். அப்படி இரயிலின் மேல் அமர்ந்து சென்றவர்களில் ஒரேயடியாக நாப்பது பேர் மாண்டு போயினர். தலைவர்கள் அண்ணா அவர்களுக்கு எழுதிய இரங்கற் செய்திகள், அண்ணாவின் குடும்பத்தார் அவரை அவர் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டது அவர்களிடம், "அண்ணா வீட்டுக்கு மட்டும் தலைவரல்ல அவர் நாட்டுக்கும் தலைவர்" என எடுத்துரைத்து சென்னை மெரினா கடற்கரையிலே அவரை துயில் கொள்ளச் செய்தது என ஒவ்வொன்றாய் பகிர்ந்திருக்கிறார் கலைஞர். கலைஞர் ஒரு கவிஞர், கதாசிரியர், வசனகர்த்தா, ஒரு கட்சியின் தலைவர், முதல்வர் இப்படிப் பன்முகம் கொண்டவர். அப்படியான அவருக்குப் பல இடங்களிலிருந்தும் பல துறைகளிலிருந்தும் கடிதங்கள் வருவது இயல்பு. அப்படியாக வரும் கடிதங்கள் அத்தனையும் அவரை கவர்ந்து விடுவதில்லை. அப்படி அவரைக் கவர்ந்த தன் வாழ்நாளில் அவர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்த மூன்று கடிதங்களை தன் நெஞ்சுக்கு நீதியின் இரண்டாம் பாகத்தில் பகிர்ந்திருக்கிறார். அது மூன்றும் அறிஞர் அண்ணா அவருக்கு எழுதிய கடிதங்கள். அக்கடிதங்களும் கலைஞர், அண்ணா உறவை மட்டும் சொல்லும் சாதாரண உறவு சார் உபசரிப்பு முறை கடிதங்களல்ல, மாறாகக் கழகம் ஏறி வந்த படிக்கட்டுகளையும், பாதைகளையும், காலங்களையும் காட்சிப்படுத்தியிருக்கும் காலப் பெட்டகங்கள் அவை. அண்ணாவின் மறைவிற்குப் பின் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி வலுவாக இருந்தது. நாவலரா? கலைஞரா? தமிழக மக்களைப்போலத் தெளிவில்லாமல் தான் கலைஞரும் இருந்தார். அப்போது தான் அவருக்கொரு அழைப்பு வந்தது. அழைத்தது தந்தை பெரியார் அவர் அமர்ந்திருந்த கட்டிலிலே கலைஞரை அமர வைத்துக்கொண்டு நீண்ட நேரம் விவாதித்தார். அவர் வாதங்களின் முன்னால் கலைஞரின் மறுப்புகள் சக்தியிழந்து போயிற்று. குழப்பத்துடன் போன கலைஞர் கழகம் மற்றும் மக்களின் முடிவிற்கு சிரமேற்கும் முடிவோடு பெரியாரிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தார். வந்தவர் கட்சியின் சில முக்கியமானோருடன் நாவலர் இல்லத்திற்கு அவரைக்காணச்சென்றார். அவரிடம் நிலைமை விளக்கப்பட்டது அவர் முடிவாகவே சொன்னார் "இருந்தால் முதல்வராக இருப்பேன் இல்லையேல் எந்த அமைச்சர் பொறுப்பையும் ஏற்க மாட்டேன்" அவரை சமாதானப்படுத்தி அமைச்சரவையில் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 9-2-69 அன்று சட்டமன்ற தலைவர் எனப்படும் முதல்வர் பொறுப்புக்கான திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கலைஞர் பெயரை அமைச்சர் மதியழகன் முன்மொழிய அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். அடுத்து நாவலர் பெயரை எஸ்.ஜே. இராமசாமி முன்மொழிய வி.டி. அண்ணாமலை வழிமொழிந்தார். உடனே எழுந்த நாவலர் முதலமைச்சர் தேர்வுக்கான போட்டியிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். திமுக சட்டமன்ற குழு தலைவராகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனும் செய்தியைக் காத்து நின்ற செய்தியாளர்களிடம் நாவலரே அறிவித்தார்.   அடுத்த சில மணித்துளிகளில் தமிழக மக்கள் குழப்பம் விலகி தங்கள் புதிய முதல்வருக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை வழங்கத் தயாராகினர். "தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் கருணாநிதியா? மத்திய அரசோடு ஒத்துழைப்பாரா? தகராறு செய்யக்கூடியவர் எனக் கேள்விப்பட்டேனே!" என்றார் கலைஞர் முதலமைச்சராகப் போகிறார் என்ற செய்தி அறிந்த ஒருவர். அவர் வேறு யாருமல்ல அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தான் அது. அடுத்த சில மாதங்களுக்குப் பின் அண்ணாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கத் தமிழகம் வந்தார் இந்திரா காந்தி. அவ்விழா மேடையில் தான் கலைஞர் சொன்னார் "உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம். என்னைப்பற்றி பிரதமர் அச்சவுணர்வோ அல்லது ஐயப்பாடோ கொள்ளத் தேவையில்லை" என இன்றைக்கு வரை சொல்லப்படும் புகழ்பெற்ற வாசகத்தை முழங்கினார் முதல்வர் கலைஞர். பெப்ரவரி 16 தமிழகமெங்கும் அண்ணா நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. திமு கழகத்திலே இரண்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஒன்று கலைஞர் தலைமையில் இன்னொன்று நாவலர் தலைமையில் தனியாக. இப்படியான சூழ்நிலைகளைக் கவனித்து வருபவர்களுக்கு திமுக மேல் உண்மையான அன்பு அனுதாபம் உள்ளவர்களுக்கு திமுக விற்கு இது போதாத காலம் கழகம் பிரிவைச் சந்தித்து விடும் எனும் வருத்தம் வருவதில் வியப்பில்லை. அப்படி கழகம் பிரிந்து வலிமை குறைந்து விடக்கூடாது என்று எண்ணியவர்கள் பலர். அதில் பெரியாரின் பங்கும் மகத்தானது முக்கியமானது. நாவலரும் கலைஞரும் அவரிடம் பணிபுரிந்தவர்கள் அவரது மாணவர்கள் அந்த உரிமையிலும் கழகத்தின் மீதுள்ள நல்லெண்ணத்திலும் அவர் தனது பத்திரிக்கையான விடுதலையில் தொடர்ந்து இருவரும் பிரிந்து விடக்கூடாது நாவலர் அவர்கள் விட்டுக்கொடுத்து இணக்கமாகச் செல்ல வேண்டும் என்பது குறித்து கட்டுரைகள் எழுதினார். ஆனாலும் அவராலும் அவர்களது பிணக்கைச் சரி செய்ய முடியவில்லை. ஒதுங்கியிருக்கும் நாவலரைக் கட்சியிலிருந்து அறவே நீக்கி விடக் கூட சிலர் கலைஞரிடம் ஆலோசனை கூறினார்கள். அதற்குக் கலைஞர் "...நியாயமாக தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய முதல்வர் பொறுப்பு கிடைக்கவில்லை என்ற மனத்தாங்கல் நாவலருக்கு ஏற்படுவது இயல்பே என்று நான் கருதியதால் அவரை சமாதானப்படுத்தி கழகத்தை வலுக் குறையாமல் நடத்திச் செல்ல வேண்டும் என்று முனைந்து செயல்பட்டேன்..." என்று தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார் அவர். அண்ணாவிற்கான அமைதி ஊர்வலத்தை முடித்து நாவலர் அவர்கள் பேசிய பேச்சு மிகவும் முக்கியமானது. கழகத்தின் பிரிவில் மகிழத் தக்க தருணம் பார்த்திருந்தவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்காமல் எச்சரிக்கையாகவும் பொறுப்பாகவும் அன்றைக்குப் பேசினார் அவர்.   அதில் சில வரிகள்... "...எனக்கோ கலைஞர் கருணாநிதிக்கோ எள்ளளவும் ஒரு சிறிய கருத்து வேறுபாடும் இல்லை, இன்றைக்கும் இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு இரண்டு ரூபாய் அனுப்பி என்னைப் பேச அழைத்தவரே கலைஞர் கருணாநிதி தான். நானும் வெளியூர் சென்று பேசப்போகிறேன் என்று பெருமையுடன் ரயிலில் ஏறி புறப்பட்டதே கலைஞர் கருணாநிதியால் தான். ஒரு முறை கலைஞர் பிறந்தநாள் விழாவில் நான் கட்டுரை எழுதினேன். அறிவு, ஆற்றல், எழுத்து, பேச்சு, நடிப்பு, சினிமா, நாடகம் போன்ற துறைகளில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக கலைஞர் தான் என்று எழுதினேன். கலைஞர் கூட என்ன இப்படி எழுதி விட்டீர்களே என்று கேட்டார். ஆகவே அவருக்கும் எனக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு யாரும் எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. கழகத் தோழர்கள் எந்தவித பூசலுக்குப் பிளவுக்கும் இடம் கொடுக்காமல் அண்ணா   அமைத்த திமுக அரசைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்போடு இயங்கிட வேண்டும்..." என்று தெளிவான தீர்க்கமான ஒரு உரையை ஆற்றினார். அவ்வுரையினூடே கழகத்தைப் பிரித்து விடலாம், பிரிந்து விடும் என்றிருந்தவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தார். கலைஞர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏளனம் செய்யும் விதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் "மறைந்த முதலமைச்சருக்காக அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழு நாட்கள் முடிவதற்கு முன்பே ஆறாம் நாளில் கண்ணீர் வற்றுவதற்கு முன்பு புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்" என்றார். அதற்குச் சுடச்சுடப் பதில் அளித்த கலைஞர் "பண்டித நேரு மறைந்தபோது 12 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் நேரு மறைந்த மூன்றாம் நாளே லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காங்கிரஸ் இயக்கத்தினர் மறந்துவிடக்கூடாது" என்று தனது வரலாற்று அறிவாலும் சமயோஜிதத்தாலும் தக்க பதில் தந்து அவர் வாயைத்தைத்தார். கலைஞர் அரசு புதிதாகப் பதவியேற்று மாதம் ஒன்று கூட முடிந்திருக்கவில்லை. அதற்குள்ளாகவே அரசு மீது ஒரு கண்டன தீர்மானம் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. கீழ் வெண்மணி படுகொலை குறித்த கண்டன தீர்மானம் அது. அக்கொடுமை என்ன, எதனால் ஏற்பட்டது என்பது நாம் அறிந்ததே அதைத் தெளிவாக எழுதியிருக்கிறார் கலைஞர். அதைப் போன்று அந்த ஜாதிய படுகொலைக்குத் தலைமையேற்று அதை அரங்கேற்றியவர் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் கோபால கிருஷ்ண நாயுடு. இப்பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பிய போது அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி அவர்கள் கொடுத்த தக்க பதிலையும் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். சட்டசபையில் கொண்டுவந்த கண்டன தீர்மானத்திற்குப் பதிலளிக்கும் போது பேசிய கலைஞர் "...காங்கிரஸ் உறுப்பினர் அருமை நண்பர் ஜெயராஜ் அவர்கள் கீழ் வெண்மணியில் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்பட்ட ஆடவர், பெண்டிர், தளிர்கள் அத்தனை பேருக்குமாக கண்ணீர் வடித்து தனது ஆழ்ந்த சோகத்தைத் தெருவித்துக்கொண்டார். அதே நேரத்தில் அப்படி தீ வைத்துக் கொளுத்திய கொடும்பாவிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆக அவர்களுடைய கண்டனம் எந்த அளவோடு நின்று விட்டது பாருங்கள்" என்று பதிலளித்தார். சரி, கீழ் வெண்மணி படுகொலையின் முதல் குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயுடு என்ற நிலப்பிரபுவின் முடிவு எப்படி அமைந்தது தெரியுமா? இச்சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு படுகொலைசெய்யப்பட்டு அப்பாதக செயலுக்குப் பழி தீர்க்கப்பட்டார்.   அண்ணா இறந்த இந்த தருணத்தில் தமிழகத்தில் கிருபானந்தவாரியாருக்கெதிராக ஒரு பெரிய போராட்டமே நடந்தது. அதற்கு விதை போட்டது அவரே தான். எப்போதும் நிதானமாகப் பேசும் வாரியர் நெய்வேலியில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் பேசும் போது, "…ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்குப் போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்…" என்றார். கழகத்தார் கொதித்தெழுந்தனர் அம்மேடையே கலவரம் கண்டது. அவர் தக்கப்பட்டார். அவரது அப்பேச்சிற்கு அவர் வருத்தமும் தெரிவித்துக்கொண்டார். அவர் தாக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணியதை உணர்ந்த அவர் மீண்டும் ஓர் அறிக்கை வாயிலாக அதைத் தடுத்து நிறுத்தினார்.                                                       பகுதி - 17   எனக்கு எது இன்பம்? அடக்குமுறைகள், சிறைச்சாலைகள் மட்டுமல்ல எனது பொது வாழ்க்கையில் எத்தனையோ விதமான அராஜகங்களுக்கு ஈடுகொடுத்தும் விபத்துக்களைக் கடந்தும்  தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன் அதில் தான் எனக்கு இன்பம். 'கலைஞர்' கலைஞர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு ஒரு பாராட்டுவிழா கூட்டம் நடைபெற்றது அதற்குத் தலைமையேற்றவர் பேராசிரியர் அன்பழகன். உண்மையைச் சொல்வதென்றால் அப்போது அவர் முழுமையாகக் கலைஞரை தன் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. பின்பு சொன்னார் "தமிழினத்திற்குக் கலைஞரைத் தவிரத் தகுதியான தலைவர் யார் இருக்க முடியும்" என. தன் மனதில் பட்டதை எங்கேயும் எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனத் தெளிவாகச் சொல்லக்கூடியவர் அவர். அவருக்குக் கலைஞரால் கழகத்தைத் திறம்பட வழிநடத்திச் செல்ல முடியுமா எனும் ஐயப்பாடு இருந்தது. அது அத்தலைமை உரையிலும் எதிரொலித்தது. கூட்டத்தில் பேசிய பலர் முதலமைச்சர் கருணாநிதி எனப் புகழ்ந்தும் பேசினர். அத்தனைக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு இருந்தது. தன் உரையைத் துவங்கிய கலைஞர் இப்படியாகப் பேசினார்  "...இங்கு என்னை வாழ்த்திப் பேசிய பலர் முதலமைச்சர் கருணாநிதி என்று வாழ்த்திப் பேசினார்கள். ஆனால் நானோ இன்று 'முதல்' இழந்த கருணாநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். அண்ணா என்னும் முதலை இழந்து விட்டு உங்கள் முன் நிற்கிறேன். இந்த கூட்டத்திற்குத் தலைமை ஏற்றுள்ள பேராசிரியர் அவர்கள் என்னைத் தலைவராக அல்ல தளபதியாக மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று கூறினாலே போதுமானது. தளபதியை 'தளர்-பதி' ஆக்கிவிடாத அளவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்..." என்று கூறி முடித்தார். தொன்று தொட்டு நாம் வரலாறுகளிலும், புராணம், காப்பியங்களிலும் நட்புக்கு  எடுத்துக்காட்டுகளாகப் பலரைப் படித்திருக்கிறோம். இருபது இருபத்தோராம் நூற்றாண்டுகளில் பேராசிரியர் - கலைஞர் நட்பும் வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர்களை இணைத்துக்கொண்டு அணையா ஜோதியாய் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. வரலாறுகளில் இத்தகைய நட்பைப் படித்த நாம் நம் காலங்களிலும் கண்ணால் கண்டிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் இனிப்பான செய்தி. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் விமர்சனங்கள், தோல்விகள், பிரிவுகள், வலிகள் என எது வந்த போதும் அவர்கள் நட்பிற்கோர் பங்கம் வந்ததில்லை. அத்தனையிலும் கலைஞருக்குத் தோளோடு தோள் நின்ற உற்ற தோழன் பேராசிரியர். கலைஞரும் எந்த ஒரு இடத்திலும் பேராசிரியரை விட்டுக்கொடுத்து யாரும் பார்த்திருக்க, படித்திருக்க முடியாது. இறுதியாகக் கைதாங்கலாக வந்து தன் ஆருயிர் தோழனுக்காகத் தேம்பித் தேம்பி அழுது தன் இறுதி அஞ்சலியைச் செலுத்திச் சென்ற பேராசிரியர் அன்பழகனார் இன்னும் நம் கண்களுக்குள்ளே தான் நிற்கிறார். இன்னும் நூற்றாண்டுகள் தாண்டியும் மாணவர்கள் படித்தறிய வேண்டிய நட்பு கலைஞர் - பேராசிரியர் நட்பு. கலைஞர் முதல்வர் ஆன பிறகு முதல்முறையாக டெல்லிக்குப் பயணமானார். டெல்லியில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மற்றும் மத்திய அமைச்சர்களைக் கண்டு பேசினார் பிரதமருடனான பேச்சு மிகவும் திருப்தியாக இருந்தது. மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு மாநில அரசுக்குத் தாராளமாக இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். காமராஜர் ஆட்சி இழக்க முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழகத்தில் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த உணவுப் பஞ்சம். கழக ஆட்சியில் சற்று சீராகிக்கொண்டிருந்தது உணவு தட்டுப்பாடு. டெல்லி சென்ற கலைஞர் மத்திய உணவு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் பார்த்துப் பேசினார். அவர் உடனடியாக பத்தாயிரம் டன் அரிசியைத் தமிழ்நாட்டுக்கு முதல் தவணையாக அனுப்புவதற்கு ஆணை பிறப்பித்தார். மேலும் மூன்று சர்க்கரை ஆலைகளைத் தமிழகத்தில் ஆரம்பிக்கவும் ஒப்புதல் அளித்தார் அதன் பிறகு அன்றைய துணைப் பிரதமரும் மத்திய நிதி அமைச்சருமான மொராஜி தேசாய் அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார். போகும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐந்து நிமிட நேரம் தாமதம் ஆகிவிட்டது. "உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது. எனக்கு வேறு வேலையே இல்லையா?" தமிழகத்தின் பிரதிநிதியாகப் போனவர்களை அவர் இப்படியாகத் தான் வரவேற்றார். தமிழகத்தின் வறட்சி நிலையை எடுத்துக்கூறி அவரிடம் முதல் தவணையாக 5 கோடி ரூபாய் வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அவரோ "என் தோட்டத்தில் பணம் காய்க்கும் மரம் இல்லை" என்றார். அதற்குப் பதிலளித்த கலைஞர் "பணம் காய்க்கும் மரம் தான் உலகிலே இல்லையே! இல்லாதது எப்படி உங்கள் தோட்டத்தில் மட்டும் இருக்கும்" என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டனர். தலைவர்களின் சந்திப்புகள் கூட இப்படி ஏடாகூடமாக இருக்கும் என்பதைப் படிக்க வித்தியாசமாகத் தான் இருந்தது. கலைஞர் இதைக்குறித்துச் சொல்லும் போது மத்திய அரசு ஆண்டை மனநிலையிலிருந்து கொண்டு மாநில அரசை அடிமை நிலையில் வைத்திருக்க முனைவதன் விழைவு என்றிருக்கிறார். இவ்வெண்ணம் தகர்க்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறார். 1969 ஆம் ஆண்டு 'அப்பல்லோ 9' என்ற ராக்கெட்டை அமெரிக்க நாடு விண்ணில் பறக்க விட்டது. இதில் தான் முதன் முதல் மூன்று மனிதர்களை விண்வெளிக்கு ஏற்றி அனுப்பினார்கள். இதன் நீட்சி தான் சந்திரனில் மனிதன் கால் வைத்துத் திரும்பியது. இதுவரை விண்ணுக்குச் சென்ற ராக்கெட்டுகளில் இது சற்று வித்தியாசமானது எப்படி எனில் இந்த ராக்கெட் விண்ணில் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்ததும் இது இரண்டாகப் பிரியும் பிரிந்து தனித்தனியாகப் பூமியை சில மணி நேரங்கள் சுற்றும். அதன் பின்பு ஒன்று சேர்ந்து பூமிக்குத் திரும்பும். இதுதான் பயணத்திட்டம். அது தன் பயணத்தைத் சரியாக முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பவும் செய்தது. இந்த ராக்கெட்டில் பிரிந்து இணையும் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது அல்லவா, அதைக் கலைஞர் எதோடு  இணைக்கிறார் பாருங்கள். 1969 ல் தான் முதன் முதலாக இந்திராவுக்கும் மொராஜி தேசாய் அவர்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் வருகிறது. அதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரியும் சூழல் உருவாகிறது. பின்னாட்களில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடவும் செய்தது. விண்ணிற்குச் சென்ற 'அப்பல்லோ 9' விண்கலம் இணைந்து திரும்பியது. ஆனால் இரண்டாகப் பிரிந்த காங்கிரஸ் பின்னால் எப்போதும் இணையவேயில்லை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத இரு தண்டவாளங்கள் எப்படி இரயிலை இணைத்து பயணத்தை நமக்குச் சுகமாக்கித்தருகிறதோ அப்படியே கலைஞரும் ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாத இருவேறு வரலாறுகளை இணைத்துச்சொல்லி நம்மையும் தன் நூலுடன் ஒன்றி கலந்து ரசிக்க வைக்கிறார். "காங்கிரஸ் கட்சியை எதிர்த்து எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்திருக்கிறது. அதுவே காங்கிரஸ் கட்சிக்குள்ள பலத்தைக் காட்டவில்லையா?" என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர். அதற்குப் பதில் இப்படிச் சொன்னார் கலைஞர் "ஒரு வீட்டிற்குள் விஷ பாம்பொன்று நுழைந்து விட்டால் ஊரார் ஒன்று கூடி அதை அடித்துத் துரத்துகிறார்கள். அதற்கு அந்த பாம்போ எல்லாருமாக எனை அடிக்கிறார்களே எனக்கல்லவோ பலம் வந்து விட்டது என்றால் அது வேடிக்கையானதல்லவா" என்று சுவையாகவும் சூடாகவும் பதில் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பாஜக வைப்பற்றி ஒருவனை பத்து பேர் சேர்ந்து அடித்தால் அதில் யார் பலசாலி என்ற ரஜினி வாய்ஸ் மனதில் வந்து போகிறது. அப்போது முதல் இப்போது வரை இப்படிக் கேட்க ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கு ஸ்வாரஸ்யமாகப் பதில் கொடுக்கத்தான் கலைஞர் போல் இப்போதெல்லாம் தலைவர்கள் இல்லை. இப்படியாக எழிலுற தன்னுடைய வரலாற்றினூடே கழகத்தின் வரலாற்றை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றை அழகுறச் சொல்லி வந்த கலைஞர் ஒரு அத்தியாயம் முழுவதும் தனக்கு ஏற்பட்ட விபத்துகளைச் சுருக்கமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார். அதில் பல நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தில் சொன்னவை. புதிதாகச் சிலவற்றையும் சொல்லியிருக்கிறார். 1961 ஆம் ஆண்டு வண்டிப் பெரியாரில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றனர் கலைஞர் உட்பட அவரது சகாக்கள் சிலர். அது கேரளாவிற்கு உட்பட்ட பகுதி. எதிர்பாராதவிதமாக அக்கூட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. பாதுகாப்பைத் தர வேண்டிய கேரளா போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. கலகக்கூட்டத்தார் கலைஞர் அங்கிருந்து நகர முடியாமல் சூழ்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் குடி போதையிலிருந்த அவர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்ள அவர்களிடமிருந்து தப்பித்து வந்திருக்கிறார் கலைஞர். இன்னொன்று தலைப்பே 'ஆப்பக்கூடல் ஆபத்து' என்று இட்டிருக்கிறார் கலைஞர். அதாவது ஆப்பக்கூடல் என்னுமிடத்தில் நடந்த ஆபத்து. இந்த ஆபத்து என்பது சாதாரணமானதல்ல கொஞ்சம் விபரீதமாகியிருந்தால் கூட நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டிருக்க வேண்டியது விபத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலைஞரும் கழக முன்னணியினரும் அமர்ந்திருந்து சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டிருந்தனர். சுவையாகத் துவங்கி சூறாவளியாகச் சுழன்றடிக்கும் சிறந்த பேச்சாளன் ஒருவன் பேச்சு போல அமைதியாகச் சிறு சாரலுடன் துவங்கிய மழை பேய்க்காற்றுடன் பெருமழையாக உருவெடுத்தது. அம்மழை காற்றில் அந்த பிரம்மாண்ட மண்டபம் போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த மேடை அப்படியே சரிந்து விழுந்தது. அந்த ஆபத்திலும் நடந்த ஒரு நல்லது என்னவென்றால் மேடை சரிந்ததும் தானாகவே மின்சாரம் கட்டாகி விட்டது தான். சற்று நேரத்திற்கு பெருங்கூச்சல், குழப்பம், பெண்களின் அலறல், குழந்தைகளின் அழுகை சத்தம் என எங்கும் கேட்ட வண்ணமே இருந்தது. இத்தனை பெரும் ஆபத்து நிகழ்ந்தது. எனினும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. சிறு சிறு காயங்களுடன் அத்தனை பேரும் தப்பித்தனர். பெரும் விபத்தொன்றிலிருந்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்த கலைஞரை அவரது சகோதரி உட்பட உறவினர்கள் 'தெய்வாதீனமாகப் பிழைத்தாய்' என்று ஆனந்தத்தோடு அன்பொழுக வரவேற்றனர். இவ்வரவேற்பை அடுத்து கலைஞர் கேட்கிறார் ஒவ்வொரு விபத்துகள், இரயில் ஆபத்துகள், இயற்கை சீற்றங்கள், கடல் கொந்தளிப்புகள் போன்றவற்றிலிருந்ததெல்லாம் பிழைத்தவர்கள் தெய்வாதீனமாகப் பிழைத்தார்கள் என்றால் இவ்விபத்துகளில் இறந்தவர்கள்? போகிற போக்கில் தனது பகுத்தறிவு கொள்கைகளையும் தூவி விட்டே செல்கிறார் கலைஞர். கழகத்தில் இணைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசன் கழகத்தை விட்டு காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். அதற்குக் காரணமாக அமைந்த நிகழ்ச்சி என்பது 1953 ல் அவர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்து விட்டு வந்தது ஆகும். கழகத்தில் அவரை விரும்பாதவர்கள் அதை மிகப்பெரிய பிரச்சனையாக ஊதிப்பெரிதாக்கி அவர் கட்சியை விட்டு விலகும் படியே செய்துவிட்டனர். அவர் வெளியேறும் போது "என்னால் அவர்களைப் பின்பற்ற முடியவில்லை. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன்" என்று தன்னடக்கத்துடன் கூறியே கழகத்திற்கு விடை கொடுத்தார். அவரை கழகத்தை விட்டு வெளியேற்றியதில் பின்னாலிருந்து முக்கிய பங்காற்றியவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர். கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு சிவாஜி நடித்த 'கட்டபொம்மன்' நாடகத்தைப் பார்க்க வந்த அண்ணா அவர்கள் "தம்பி கணேசா! நீ எங்கிருந்தாலும் வாழ்க!" என்று வாழ்த்தியதையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் கலைஞர். 1953-ல் மும்முனை போராட்டத்தில் அண்ணா உட்படக் கழக முன்னணியினர் பலர் சிறைவாசம் ஏகிட கழகத்தின் பொறுப்பைக் கவனிக்க அண்ணா அவர்களால் அமர்த்தப்பட்ட நம்பிக்கைக்குரியவர் தான் ஏ. ஜி என்றிழைக்கப்படும் ஏ. கோவிந்தசாமி என்பவர். கலைஞரின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார் இவர். அவர் கழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் அவர் மறைவிற்குப் பின் அவர் மகள்களுக்குக் கழகமே முன்னின்று திருமணம் செய்து வைத்தது. மோசமாக வறுமையில் வாடிய அக்குடும்பத்திற்கு நிதி திரட்டி அளித்தது என அவரை பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார் கலைஞர். அவர் மரணப்படுக்கையில் இருந்த போது கலைஞரைப் பார்த்து "கலைஞர் அவர்களே! நான் இனி பிழைக்க மாட்டேன். என் இடத்தில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்கிக் கொள்ளுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும் அமைச்சராக்கி விடாதீர்கள். அது கட்சிக்குப் பெரிய துரோகமாகிவிடும். என் வார்த்தையை நான் இறந்த பிறகு தட்டி விடாதீர்கள்" என்று தன் இறுதி மொழியாக, இறுதி வேண்டலாகக் கூறினார். அதன் பிறகு சில நாட்களில் அவர் இறந்தும் போனார். அவர் சொன்னதைக் கேட்காமல் பண்ருட்டி ராமச்சந்திரனை மந்திரியாக்கினார் கலைஞர். ஏ.ஜி அவர்கள் சொன்னது அத்தனையும் கழகத்தின் சோதனை காலங்களில் மெய் என்றானது. பண்ருட்டியார் கலைஞரைக் கழகத்தைக் கைவிட்டு எம்.ஜி.ஆ ருடன் கரம் கோர்த்தார் என்பது பின்னாளைய வரலாறு. கோவையின் நீராதாரங்களில் ஒன்றான பரப்பிக்குளம் ஆழியாறு நதி நீர் பங்கீடு நீண்ட இழுபறிகளுக்கு பின் 1969 ம் ஆண்டில் தான் ஒப்பந்தம் இறுதியானது. 1969 கலைஞர் முதல்வராகப் பதவியேற்ற பின்பு தான் முதன்முதலாக எதிர்க்கட்சி தலைவர் பதவியும் அதற்கு வசதிகள் என்பதும் உருவாக்கப்பட்டன இதுவும் கலைஞரின் பெயர் சொல்லும் சாதனைகளுள் ஒன்று.    1969 ம் ஆண்டு கலைஞரின் வாழ்விலும் தமிழக வரலாற்றிலும் மிக முக்கியமானதொரு ஆண்டு ஏன்? எதனால்? தொடர்ந்து பார்ப்போம்.                                   பகுதி - 18   1969 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள் நடந்தது ஒன்று திமு கழகத்தில் நடைபெற்ற பொதுச்செயலாளருக்கான தேர்தல். மற்றொன்று இந்திய ஜனாதிபதிக்கான தேர்தல். இரண்டும் மிக முக்கியமான விளைவுகளை உருவாக்கிய தேர்தல்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக கழகத்தின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற இருந்தது. அதுவரை பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை என்பது கழகம் போட்டியின்றி ஏகமனதாக ஒருவரைத் தேர்வு செய்யும். அதுவரை அப்படியே நடைபெற்று வந்தது. ஆனால் அம்முறை நாவலர் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதாக முதலிலேயே அறிவித்தார். ஆட்சியும் கட்சியின் அதிகாரமும் ஒருவரிடத்தில் தான் இருக்க வேண்டும் இல்லையேல் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும் என்பதை அறிந்திருந்த கலைஞர் தானும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நாள் நெருங்கியது. கழகத்தில் செயலாளர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் மத்தியில் கலைஞர் பேசினார். அவர்களில் பெரும்பான்மையானோர் கலைஞருக்கு ஆதரவாக இருந்தனர். நாவலரைத் தனிமைப்படுத்துவதிலும் அவர்கள் குறியாக இருந்தனர். நாவலரைத் தனிமைப்படுத்துவதில் கலைஞருக்குத் துளியும் விருப்பமில்லை. கலைஞரின் எண்ணத்தை அறிந்த கழகத்தின் முன்னணியினர் சிலர் ஒரு குழுவாக இணைந்து ஒரு சமரசத் திட்டத்தோடு நாவலர் அவர்களை அணுகினர். அத்திட்டத்தின்படி அவைத்தலைவர் என்றிருந்த பதவிக்கு சில அதிகாரங்களைக் கூடுதலாக அளித்து தலைவர் என்றும் இப்போது இருப்பது போல் பொதுச்செயலாளர் என இரு பதவிகள் உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்த நாவலரை பத்து நிமிடங்கள் தான் கலைஞர் தனிமையில் சந்தித்துப் பேசினார் இருவரும் அந்த சமரச திட்டத்தை ஏற்றுக்கொண்டு கழக தொண்டர்கள் மகிழும் செய்தியோடு வெளியே வந்தனர். இந்த பொதுக்குழு தேர்தலில் தலைவராகக் கலைஞரும், செயலாளராக நாவலரும், பொருளாளராக எம்.ஜி.ஆர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்படியாகப் பிரிந்து போய்விடும் கழகம் என்றிருந்தவர்களுக்கு பேரிடியாகக் கழகம் ஒன்றிணைந்தது. அதைத் தமிழக மக்களோடு பெரியார் அவர்களும் வரவேற்றார். இப்படி கழகத்தின் தேர்தல் சுபமாக முடிந்தது எனில் காங்கிரஸ் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சி பூசல் ஜனாதிபதி தேர்தலில் புயலாக மாறி கட்சியை இரண்டாகப் பிளந்தது. ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க காங்கிரசின் ஆட்சி மன்ற குழு மற்றும் காரிய கமிட்டியின் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. மொத்தம் 7 பேர் அடங்கிய குழு அது. உணவு அமைச்சர் ஜெகஜீவன் ராமை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென இந்திரா காந்தி விரும்பினார். சபாநாயகர் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த வேண்டுமென மற்றொரு கருத்து குழுவில் கூறப்பட்டது. இரு வேறு கருத்துக்கள் வந்ததால் ஓட்டெடுப்பு நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக மொரார்ஜிதேசாய், சாவான், காமராஜர், பட்டில் ஆகிய நால்வரும் வாக்களித்தனர். ஆகவே அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இது இந்திரா காந்தி அவர்களுக்குப் பிடிக்கவில்லை. தொடர்ந்து அவரது நடவடிக்கைகளும் அவரது பேட்டிகளும் அதை உணர்த்திக்கொண்டிருந்தது. இப்படி காங்கிரசுக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி கிரி அவர்கள் தன்னிச்சையாகத் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். சுதந்திரம் பெற்றதிலிருந்து நாடு அப்படியானதொரு ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்தது இல்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி எதிர்க்கட்சிகளுக்கே இருந்தது. அதிலும் தி.மு.கவின் பங்கு முக்கியமானதாக இருந்தது. டெல்லியில் கூடிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலைஞரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த திட்டம் போட்டனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அதைத் திட்டவட்டமாக மறுத்த கலைஞர் "தமிழ்நாட்டு மக்களுக்கருகில் இருந்தே அவர்களுக்காற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் இருக்கிறது." என்று தான் அப்போட்டியில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். கழகத்தின் ஆதரவு வி.வி கிரி அவர்களுக்குத் தான் எனக் கலைஞர் அறிவித்தார். அவரது அக்குரலே எதிர்க்கட்சிகளின் மொத்த குரலாக ஒலித்தது. அத்தேர்தலில் வி.வி கிரி அவர்களே வென்றார். அம்முறை கழகத்தின் ஓட்டின் மதிப்பு 35,448 கிரி அவர்கள் சஞ்சீவ ரெட்டியை விட அதிகம் பெற்றது வெறும் 14,500 வாக்குகளே. அப்படி கலைஞர் சுட்டிக்காட்டியவர் கழகத்தின் ஆதரவோடு வென்றார். அதே 1969 ஆம் ஆண்டில் தான் நிலவில் மனிதன் காலடி வைத்துத் திரும்பினான். நிலவுக்குப் பயணித்த ராக்கெட் 'அப்பாலோ 11' அதில் பயணித்தவர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோர் ஆவர். சந்திரனில் முதன் முதலில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தார் என்று ஒரு மார்க் கேள்விக்கு விடையாகப் பள்ளிகளில் படித்தோம். ஆனால் கலைஞரோ பத்து மதிப்பெண் அளவுக்குரிய பதிலாக ராக்கெட் போனதிலிருந்து ஒவ்வொரு சிறு சிறு நகர்வுகளையும் எழுதியிருக்கிறார். அதைப்போன்று ஆம்ஸ்ட்றாங்ஙும் ஆல்ட்ரினுமாக இறங்கிய பின் அங்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் திறந்து வைத்தனர். அதில் "1969 ல் பூமி கிரகத்திலிருந்து மனிதர்களாகிய நாங்கள் முதன் முதலாக இங்கே வந்து கால் வைத்தோம். மனிதக் குலத்தின் நன்மைக்காகவே நாங்கள் வந்தோம்." என்று எழுதப்பட்டிருந்தது அதில் ராக்கெட்டில் பயணித்த மூவருடன் அன்றைய அமெரிக்க அதிபரான நிக்சன் ஆகியோரது கையெழுத்து இருந்தது.  வெற்றிகரமான பயணத்தை முடித்து இருபது பவுண்ட் கல் மண்ணை சேகரித்தபடி அங்கிருந்து ராக்கெட் பூமி வந்து சேர்ந்தது. சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட கல் நமது தமிழகத்திற்கும் வந்தது. சென்னை கோட்டையில் பல தரப்பினருடைய பார்வைக்கும் வைக்கப்பட்டது அக்கல். "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்று பாடியவர் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் அவர் தன் நாட்களில் வறுமையில் வாடினார் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழுக்காய் தன்னலமின்றி உழைத்த அப்பெருமகனாரின் வறுமையைத் துடைத்தவர் கலைஞர். அவருக்குத் தமிழக அரசு சார்பில் மாதம் 200 ரூபாய் வீதம் வாழ்நாள் முழுவதும் உதவித் தொகை வழங்கப்பட்டது. அதைப் போன்று பாரதியாரின் நண்பர் பரலி சு. நெல்லையப்பருக்கும் ருபாய் இருநூறு வீதம் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார் கலைஞர். நலிவுற்றிருந்த இன்னும் சிலருக்குக் கூட கலைஞர் இப்படியாக உதவியிருக்கிறார். கடவுளை மறுக்கும் கலைஞர் ஆட்சி தான் குன்றக்குடி அடிகளார் அவர்களை மேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்தது. அதற்காக ஆதீனம் சார்பில் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய நீதிபதி கைலாசம் அவர்களின் மனைவி தமிழ் புலமை வாய்ந்த சௌந்தரா கைலாசம் அவர்கள் "...கம்பனும் திருவள்ளுவரும் தான் தமிழுக்கு 'கதி' என்பார்கள் அந்த 'க'யும் 'தி'யும் அவரது பெயரிலேயே முதலும் கடையுமாய் அமைந்துள்ளன. தமிழ்த் தாயின் செல்லப்பிள்ளை அவர்..." என்று பாராட்டினார். கலைஞரின் கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தலின் பெயரில் தான் ஆகஸ்ட் 15 அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் மாநிலத்தில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றனர். அதன் பிறகு இன்று வரை அதுவே தொடர்ந்து வருகிறது. இனிமேலும் இதுவே தொடரும். இந்தியத் தேசத்தில் மக்களாட்சி நடைபெறும் காலம் வரையில் சில சாதனைகளில் கலைஞர் பெயர் இருக்கும். அதில் நிச்சயம் இதுவும் இடம் பெற்றிருக்கும். 'பிராந்தியச் செய்தி' மாநிலச்செய்தி என்றானதும் 'ஆகாஷ்-வாணி' வானொலி என்றானதும் கழக ஆட்சியின் முயற்சியின் விளைவுகளே ஆகும். காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்கியது. அதற்குக் கட்சிக்குள்ளிருந்தே கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மொரார்ஜி தேசாய் அவர்களை நிதி அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்து விட்டு இந்திரா காந்தி அவர்கள் 14 வங்கிகளைத் தேசிய மயமாக்கினார். அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைச் செய்துவிட்டு அண்ணாவின் திருவுருவப்படம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காகத் தமிழகம் வந்தார் பிரதமர். அவருக்குப் பிரமாண்ட வரவேற்பளித்த கழக அரசு அதை வரவேற்கும் வண்ணம் தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் 14 பொருட்களை அவருக்குப் பரிசாக அளித்து அத்திட்டத்திற்குத் தனது ஆதரவையும் வரவேற்பையும் காட்டியது. கலைஞரின் பஞ்சாப் பயணம்  குருநானக் அவர்களின் 500 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளக் கலைஞர் பஞ்சாப் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய கலைஞர் குருநானக் அவர்களைப் பற்றிய கவிதையொன்றை ஆங்கிலத்தில் எழுதி வாசித்தார். வெற்றிகரமாய் அமைந்த அப்பயணத்தைப் பற்றி பக்கம் பக்கமாக விலாவாரியாக எழுதியிருக்கிறார் கலைஞர். "நீங்கள் இறைவனுக்குப் பிடித்த பணியைச் செய்து வருகிறீர்கள்" இப்படி கலைஞரைப் பாராட்டியவர் யார் தெரியுமா? எல்லைக் காந்தி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட காபர்கான் அவர்கள் தான் அது. தன்னுடைய பொதுப்பணிக்காக இந்தியா முழுவதும் நிதி வசூலிக்க முடிவு செய்து தமிழகம் வந்த அவர் கலைஞரைச் சந்தித்து அப்படியாகப் பாராட்டிப் பேசினார். மறைந்து வங்காள விரிகுடாக் கடல் ஓரத்தில் துயில் கொண்டபடியே இன்றைக்கும் பலருடைய ஏச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் கலைஞரை இப்படியாகச் சிலர் நெஞ்சார பாராட்டியும் பேசியிருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார். எதற்காகத் தெரியுமா அக்கிளர்ச்சி? அத்தனை சாதியினரும் கோவில் கர்ப்ப கிரகத்திற்குள் பிரவேசித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். அதைப்போன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும். ஆனால் அக்கிளர்ச்சி நடைபெறவில்லை காரணம் அத்தனை சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தைத் தமிழக அரசு இயற்றப்போவதாகக் கலைஞர் அறிவித்தார். சொன்னதைப்போல 2-12-1970 அன்று சட்டப்பேரவையில் 'அர்ச்சகர் சட்டம்' கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. அதை எதிர்த்துப் பல வழக்குகள் நீதிமன்றங்களில் பதியப்பட்டது. தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாகவே வந்தது. நடைமுறையில் செய்யப்பட வேண்டிய காரியங்கள் எனும் பெயரில் அது நடைமுறைக்கு வராதபடி முடக்கப்பட்டு விட்டது. அதைக்குறித்து விடுதலை நாளிதழில் கி. வீரமணி அவர்கள் "அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி பலி" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றையும் எழுதினார். அச்சட்டத்தை எழுந்து நடமாட வைக்க வேண்டும் என்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அதன் பிறகு எத்தனை ஆண்டுக்காலம் கலைஞருக்குத் தேவைப்பட்டது என்பது நாமும் நாடும் நன்கு அறிந்ததே. அச்சட்டம் முடங்கிப் போக வேண்டிய சட்டம் அல்ல மாறாகக் கூனி குறுகிப்போயிருந்த பெரும்பான்மையான இந்திய மக்கள், சமுதாயத்தில் ஆலயத்தில் நிமிர்ந்து நிற்கப் பயன்பட வேண்டிய சட்டம். அதை எழுந்து நடமாட வைக்க வேண்டும் என்பதற்காக 1973 ஆம் ஆண்டு பெரியார் நாடு தழுவிய போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாகத் தீர்மானம் இயற்றினார். அப்போராட்டம் நடைபெறுவதற்கு முன்பதாகவே அவர் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார். பெரியாருக்கான இரங்கல் கூட்டமொன்றில் "பெரியார் மறைவதற்கு முன்பு அச்சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை என்பதால் பெரியாரை நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்து இருக்கிறோம்" என்றார் கலைஞர். கலைஞர் மரணம் அடைவதற்கு முன்பு அம்முள்ளை எடுத்துவிட்டுத் தான் மரணம் அடைந்தார் என்பதில் அவருக்கு நிச்சயம் பெருமிதம் இருந்திருக்கும்.   பகுதி - 19   திமுக வின் இதயகீதம் என்று கலைஞரால் வருணிக்கப்பட்ட ஐம்பெரும் முழக்கங்கள் இதோ, அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. 1970 பிப்ரவரி 22 ஆம் நாள் திருச்சியில் கலைஞரால் எழுப்பப்பட்டது இந்த ஒலி முழக்கம். இன்றும் கழகத்தில் ஒலிக்கும் முழக்கம் இது. திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கும் முறையை அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு துவங்கி வைத்தார். அப்படி 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் 'நீராரும் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலை தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகக் கலைஞர் அறிவித்தார். இப்பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமை திறம் வியந்து" எனும் வரியில் உள்ள ஆரியத்தைப் பழித்துக்கூறும் வரிகளை நீக்கிவிட்டு இசையமைக்கச் செய்தார் கலைஞர். இன்றும் அப்படியே தொடர்கிறது, தொடரும். இதற்கும் எதிர்ப்பும் கிளம்பியது. ஆதரவுகளும் பெருகியது. 1971 ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் கருத்திருமன் அவர்கள். பழகுவதற்கு இனிமையானவர் நல்ல மனிதர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளை யாராவது எடுத்துக் கூறினால் "அட, ஏனய்யா நாங்க செய்த தவறையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க? அதுக்குத்தான் நாங்க எதிர் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறோமே எங்க தவறை சொன்னா உங்கள் தவறு மறஞ்சிடுமா?" என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்பார் அவர். அப்படிப்பட்டவரிடம் கோவையில் வைத்து ஒரு காவலர் "நீங்கள்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டு அவரை அவமதித்து விட்டார். அப்பிரச்சனையைச் சட்டசபையில் எழுப்பிய அவர் "அப்படியானால் முதலமைச்சர் யார் என்று கூட எனக்கும் கேட்கத் தெரியும்!" என்று ஆத்திரத்துடன் கூறினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஒருவர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட அவமானங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்குப் பதிலளித்த கருத்திருமன் "அப்படியானால் அதே பண்பாட்டில் நீங்களும் இறங்கி இருக்கிறீர்களா?" என்று கேட்டார். அவ்வாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி "அச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். தெரிவித்து விட்டு இனி வரும் காலங்களில் அப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கியதோடு, எங்களை ஒரு காலத்தில் அப்படி நடத்தினார்கள் என்பதற்காக எங்கள் காலத்திலும் உங்களுக்கு அப்படி நடக்கிறது என்பது போலப் பதில் சொல்வது நல்ல மரபும் அல்ல நல்ல முறையும் அல்ல" என்றார். அதற்குச் சிரித்த முகத்துடன் எழுந்து பதில் சொன்ன கருத்திருமன் "முதலமைச்சர் விளக்கத்திற்கு நன்றி இதுதான் தமிழர் பண்பாடு" என்று கூறி அமர்ந்தார். நெஞ்சுக்கு நீதியின் இரண்டாம் பாகம் எழுதும்போது கழகம் அதிமுக விடம் ஆட்சியைப் பறி கொடுத்துவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தது. இதைச் சொல்கையில் சொல்கிறார் கலைஞர் "அந்தப் பண்பாடு எல்லாம் இப்போது எங்கே இருக்கிறது என்று தேட வேண்டி உள்ளது" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். 1970 ஜூலை மாதம் கலைஞர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். 'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' எனும் தமிழ் பெருங்குடி மக்களின் சொலவடை கலைஞரின் கண்ணுக்குச் சரியாய் பொருந்தும். அவரது ஒரே கண்ணில் இரு முறை விபத்து நேர்ந்தது. அதன் காரணமாகத்தான் அவர் கண்ணாடி அணிந்தார். கலைஞரின் அடையாளங்களில் ஒன்று அவர் அணிந்திருக்கும் கறுப்பு கண்ணாடி. ஆனால் அவரைப்பொறுத்தவரை அது அவரது வலி(மை)யின் அடையாளம். அந்த வெளிநாட்டுப் பயணத்தில் தன் கண்ணையும் பரிசோதிக்கலாம் என்று முடிவு செய்து பரிசோதித்தே திரும்பினார். இப்பயணத்தில் ரோம் நகர் சென்று போப் ஆண்டவரைச் சந்தித்திருக்கிறார் கலைஞர். இப்பயணத்தை "இனியவை இருபது" எனும் தலைப்பின் கீழ் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதினார். பின்னாளில் அவை புத்தகமாகவும் வெளியானது. தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தை முடித்து வந்த கலைஞரை வரவேற்கும் நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர் "...எங்குப் பார்த்தாலும் பொறாமை எங்குப் பார்த்தாலும் எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன. போட்டி, பொறாமை, சுயநலத்தின் காரணமாகக் கழகத்திற்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை எதிர்த்து பொடி  பொடியாக்குவோம். நேற்று வந்தவர்கள் எல்லாம் அரசியலில் புகுந்து கொண்டு கழகத்தை ஒழிப்பேன் என்று கூறுகிறார்கள்..." என்று முழங்கினார். இந்த இரண்டாம் பாகத்தைக் கலைஞர் எழுதும்போது எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டு ஆட்சிப் பொறுப்பிலிருந்தார். "இதை நான் இப்போது எழுதும் போது என்னுள் எத்தனை எத்தனை எண்ண அலைகள் எழும்புகின்றன தெரியுமா!" என்று வலியோடு எழுதியிருக்கிறார் கலைஞர். 1967 ஆம் ஆண்டு முதன் முதலில் அண்ணா தலைமையில் வெற்றி  வாகைசூடி ஏற்படுத்தப்பட்ட கழக ஆட்சியின் சட்டமன்றத்தை முழுமையாய் ஓராண்டு மீதமிருக்கும் போதே நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டமன்றத்திற்கும் தேர்தலை எதிர்கொண்டது கழகம். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து போயிருந்தது. காமராஜர் உட்பட்ட பல பழமையான தலைவர்கள் பழைய காங்கிரஸிலேயே நீடித்திருந்தனர். இந்திரா காந்தியின் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றே அறியப்பட்டது. கழகம் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்தது.    கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இந்திரா காங்கிரசுடன் தொகுதி உடன்பாடுகளில் முரண்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக இந்திரா காங்கிரஸ் கட்சி 10 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் போட்டியிட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தவர்களில் பக்தவத்சலம் அவர்களும் சுப்பிரமணியம் அவர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் 80 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டார்கள் கலைஞரோ 15 க்கும் குறைவான சட்டமன்றத் தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்றார் திட்டவட்டமாக. "இது எங்கள் சுயமரியாதைக்கே ஒரு சவால்" என்று சுப்பிரமணியம் அவர்கள் ஆத்திரத்துடன் கூறினார். அதற்குக் கலைஞரோ சிரித்தபடியே "எங்கள் இயக்கமே சுயமரியாதை இயக்கம்" என்றார். உடனுக்குடன் பதில் அளிப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான் என்பதை அப் பேச்சுவார்த்தையிலும் நிரூபித்திருக்கிறார் கலைஞர்.   இத் தேர்தலில் கழகம் 201 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது. காமராஜரும் ராஜாஜியும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்திருந்தனர். 1967 தேர்தலில் ராஜாஜி கழகத்துடன் கூட்டணி அமைத்து இருந்தார். இத்தேர்தலில் கழக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிய தீருவேன் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்று கையில் ஒரு வேலுடன் ஆவேசமாகக் கிளம்பினார். வடக்கே இந்திராகாந்தி தெற்கே கருணாநிதி இருவரையும் வீழ்த்துவதே எங்கள் நோக்கம் என அத்தேர்தலில் முழங்கியது பழைய காங்கிரஸ்.   இத்தேர்தலில் தான் திமு கழகம் சரித்திர சாதனை வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தம் போட்டியிட்ட 201 தொகுதிகளில் 184 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளைத் தவுடு பொடியாக்கி மக்கள் மனங்களை வென்று கோட்டைக்குள் கம்பீரமாய் கோலோச்சப்புறப்பட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் காமராஜர் போட்டியிட்ட கன்னியாகுமரி தொகுதியைத்தவிர்த்து மீதமுள்ள 39 தொகுதியையும் அள்ளியது திமுக கூட்டணிக் கட்சிகள். "உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை. என் மீது இருந்த பழி நீங்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது" என்று வாழ்த்து செய்தி அனுப்பினார் பெரியார். 'என் மீது இருந்த பழி நீங்கியது' என்று அவர் எழுதக் காரணம் இருந்தது. அதாவது அத்தேர்தல் கால கட்டத்தில் தான் சேலத்தில் வைத்து ராமர் உட்பட சில இந்து மத கடவுள்களின் சிலைகளை உடைத்தார் அவமதித்தார் பெரியார் என்று எதிர்த்தரப்பால் கடுமையான விமர்சனங்கள் கழகத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் அவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இத்தேர்தல் வெற்றி அறிவித்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் படப்பிடிப்பிலிருந்தார். அவர் இப்பெரும் வெற்றியை அறிந்ததும் அவசரமாக டெல்லி வந்து கலைஞரை தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஒரு கோரிக்கையையும் வைத்தார் அதாவது தன்னை "மெடிக்கல் மினிஷ்டர்" ஆக்கும் படியாகக் கூறினார். "நீங்கள் உடனே வாருங்கள் எல்லாம் நேரில் பேசிக்கொள்ளலாம்" என்று கலைஞர் அழைத்தார். அவர் கேட்டது இப்போது சுகாதாரத்துறை என்று அழைக்கப்படும் துறை ஆகும். அப்போது அப்படி ஒரு துறை இல்லை. அவரை அமைச்சர் ஆக்குவதில் பலருக்கு உடன்பாடு இல்லை. நாவலர் அவர்களும் அதை எதிர்க்கவே செய்தார். எனினும் கலைஞர் அவரை அமைச்சரவையில் சேர்க்க ஆர்வம் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் தான் நடித்துக் கொண்டே அமைச்சர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதில் உள்ள சட்டச் சிக்கல்களைத் திருமதி இந்திராகாந்தி அவர்களுடன் பேசி சரி செய்யும் படியும் கேட்டுக் கொண்டார். அதற்காகச் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எதிராகவே தான் கருத்துக்களைச் சொன்னார்கள் "படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்களேன்" என்று கலைஞர் கேட்டார். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அத்துடன் அமைச்சர் பதவி கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால் அக்கோபம் அவர் மனதின் ஆழத்தில் எரிமலை பிழம்பாக அவியாமல் எரிந்து கொண்டிருந்தது.                         பகுதி - 20   1971 ஆம் ஆண்டு நான்கு லட்ச ரூபாயில் திருவாரூர் தேரை ஓட வைத்தார் கலைஞர். அதில் பாதி பணம் திருவாரூர் தேர் ஓடும் சாலையைச் செப்பனிடுவதற்குச் செலவிடப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பெரியார் தலைமையில் அமைச்சர்களுக்கு நடந்த பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய கலைஞர் "பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடருவோம். அதே நேரத்தில் பக்தி பிரச்சாரத்தைத் தடுக்க மாட்டோம்" என்று கூறினார். கலைஞரின் 48 வது பிறந்த நாள் 'தொழுநோய் பிச்சைக்காரர் நல்வாழ்வு நாள்' என அறிவித்து அவர்களுக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடுதிகள் அமைத்து அவர்கள் குடும்பமுடன் வாழ வழிவகை செய்யப்பட்டது. அவர்கள் உடல் ஊனத்திற்குத் தகுந்தது மாதிரி வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இனி பிச்சை எடுக்காமல் தன்னந்தனியாக உழைத்து வாழ முடியும் என்னும் தன்னம்பிக்கை வந்தவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். "மனிதனை வைத்து மனிதன் இழுப்பதா? மனிதனா? மாடா?" என்றார் மகாத்மா காந்தியடிகள். அந்தக் கேள்விக்கு தன்னுடைய ஐம்பதாவது பிறந்த நாள் விழாவில் முடிவுரை எழுதினார் கலைஞர். கைரிக்க்ஷாக்கள் அரசாங்கத்தால் உரிய இழப்பீடு கொடுத்துத் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாகச் சைக்கிள் ரிக்க்ஷாக்கள் உழைப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவரது 52 வது பிறந்தநாளை ஒட்டி ஆதரவற்ற சிறுவர் சிறுமிகளுக்கான கருணை இல்லங்கள் தொடங்கப்பட்டன. அவைகள் ஆலயங்களுடன் இணைக்கப்பட்டு செலவினங்களை ஆலய நிர்வாகமும் அரசும் பகிர்ந்து கொள்ளும் முறையில் திட்டம் வகுக்கப்பட்டது. இப்படி சமுதாயத்தில் உள்ள மேடு பள்ளங்களைக் களையக் கலைஞர் தன்னுடைய பிறந்த நாளையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.       1973 ஆம் ஆண்டு பேருந்துகளை முழுமையாகத் தேசிய உடைமையாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு முதல்கட்டமாக நீலகிரி மாவட்ட பேருந்துகளை முழுவதுமாக அரசுடைமை ஆக்கினார். தமிழக அரசால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த மதுவிலக்கு சட்டம் 1973 ஆம் ஆண்டு மறுபடியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க அரசால் தான் மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டது என்பது வரலாறு. கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதுமாகும். அச்சம்பவத்தைக்குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார் கலைஞர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதை அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் காங்கிரஸ் மற்றும், இந்திய மாணவர் காங்கிரஸ் எனும் மாணவர்களின் அமைப்புகள் எதிர்த்தது. அதை விமர்சித்து அவர்களால் துண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அப்படி அவர்கள் அன்றைய தினம் பெரும் அமளிக்கு வித்திட்டார்கள். இருப்பினும் பெரும்பான்மையான மாணவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அன்றைக்குக் காலையில் விழாவில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. அன்றைக்கு மாலையில் போலீசாருக்கும் அந்த கலவர மாணவர்களுக்கும் இடையே சிறு கலகம் மூண்டது. அன்றைக்கு உதயகுமார் என்னும் மாணவர் குளத்தில் விழுந்து இறந்து விட்டார். இரண்டு நிகழ்ச்சிக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லை. ஆயினும் அரசியல் காரணங்களுக்காக அவை தொடர்புப் படுத்தப்பட்டன என்றிருக்கிறார் கலைஞர். உதயகுமார் மரணம் குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டார் கலைஞர். கல்லூரியில் படித்து பட்டம் பெறாத கலைஞருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா? என்பது தான் அன்றைய தினம் எழுப்பப்பட்ட பெரிய பிரச்சினையாகும். இதைக்குறித்து 'ஜனசக்தி' இதழில் தா. பாண்டியன் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையின் சில பகுதிகளைப் பகிர்ந்திருக்கிறார் கலைஞர் ஒரு முறை இலக்கிய மேதை மார்க்சிம் கார்க்கி பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேச மாணவர் பேரவை அழைப்பு விடுத்தது. பாரிஸ் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் பேசலாம் அந்த விதிப்படி மார்க்சிம் கார்க்கியிடம் நீங்கள் படித்த கல்லூரி எது? வாங்கியுள்ள பட்டம் என்ன? என்ற கேள்வி கடிதத்தை அனுப்பினார்கள். அவர் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் அல்ல. அதற்குப் பதில் இப்படியாக அவர் எழுதினார் "நான் உலகமெனும் பல்கலைக்கழகத்தில் மக்கள் என்னும் முடிவுறா இலக்கியத்தை கற்றுவரும் மாணவன்." இன்றைக்கு அதே பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மார்க்சிம் கார்க்கியின் படைப்புகள் பல இலக்கியத்தில் பாடப் புத்தகங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. நமது திருவள்ளுவருக்கும், கம்பனுக்கும், பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் பல்கலைக்கழகங்கள் தந்த பட்டங்கள் எது?    இதனால் கல்வி வேண்டாம் படிக்காத மேதைகளே மேல் என்று மொட்டையாக வாதிடுவதாகவும்  கொள்ள வேண்டாம். பட்டம் பெற்ற நவீன உயர் சாதி அகங்காரம்தான் அண்ணாமலை பல்கலைக்கழக குழப்பங்களுக்கு மூலகாரணம். இப்படி தா. பாண்டியன் அவர்கள் எழுதியது கலைஞருக்கு நெஞ்சுக்கு இதமாக இருந்தது என்று தனது நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். பிளவின் துவக்கம்  1971 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வெளிநாடு பயணமானார் கலைஞர். இம்முறை அமெரிக்க அரசின் அழைப்பினை ஏற்று அங்குச் சென்றார். அங்கு அவரது கண்ணிற்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகள், பல தலைவர்களைச் சந்தித்துப்பேசினார். அமெரிக்காவின் ஆர்லண்டோ நகருக்குச் சென்ற கலைஞர் அங்கு நடைபெற்ற கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவர் கண்டு ரசித்த மிகப்பெரிய நீரூற்று ஒன்றைக்குறித்து எழுதிய கவிதையொன்றை தன் நூலில் பகிர்ந்திருக்கிறார். அதன் இறுதி வரிகளை இப்படி முடித்திருக்கிறார் கலைஞர். "...நல்ல வேளை தனியாக ரசிக்கின்ற வாய்பெனக்கு தப்பினேன் அதனாலே! பெண்ணொருத்தி அருகிருந்தால் நீரூற்றின் வண்ணத்தைக் கணக்கெடுத்து - மறுநாளே வகைக்கு ஒன்றாக ஆடை கேட்பாள்." கலைஞர் அமெரிக்கச் சுற்றுப்பயணத்திலிருந்த போது தான் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தது. அதை அறிந்ததும் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க கழகத்தார் காத்திருந்தனர். அவரோ அக்கூட்டத்தைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கண்டனக்கூட்டமாக மாற்றச் சொன்னார். இப்போருக்குத் தமிழகம் சார்பில் ஆறு கோடி ரூபாய் நிதி திரட்டி பிரதமர் இந்திரா அவர்களிடம் வழங்கப்பட்டது. அதுவரை மற்ற அத்தனை மாநிலங்கள் இணைந்து வழங்கிய மொத்த நிதியே இருபத்தி ஐந்து கோடிகள் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த போரின் முடிவில் இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்ணைக்கவ்வி வங்கதேசம் உதயமானது. கழகம் 1972 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்து எம்.ஜி ஆரால் அதிமுக உதயமானது என்பது நாம் நன்கு அறிந்த தகவல் தான். ஆனால் அதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அதிலுள்ள சூழ்ச்சிகளை விவரித்திருக்கிறார் கலைஞர். இனி தமிழகத்தில் தனியாகக் காங்கிரஸ் கோலோச்ச முடியாது என்பதை உணர்ந்தார் இந்திரா. என்ன செய்யலாம்? கழகத்தை இரண்டாகப்பிரித்தால் அதன் பலம் குறையும் மீண்டும் தனது கட்சி ஆட்சிக்கு வரும் எனும் எண்ணத்தில் குமார லிங்கம் என்பவர் மூலம் கழகத்தை இரண்டாகப் பிளக்கத் தக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்த குமார லிங்கம் கழகத்தின் உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் சென்றவர். கழகம் கொடுத்த பதவிக்கு நன்றியை இப்படியாகத் திருப்பி செலுத்தியிருக்கிறார் அவர். முதலில் அவர்களது பார்வை திமுக விலிருந்த தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் மீது தான் விழுந்தது. ஆதித்தனார் அதற்கு இடம் தரவில்லை. அதன் பிறகு தான் அவர்களது பார்வை எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பியது. எம்.ஜி. ஆருக்கும் ஒரேயடியாகக் கழகத்தை விட்டுப் பிரிந்து செல்லத் துணிவில்லை விருப்பமில்லை. டெல்லியின் பரிவும் பயமுறுத்தல்களும் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. சில பேச்சு வார்த்தைகள் மிரட்டும் தொனியில் உள்ள சில (ரெய்ட்டு) செய்திகள் மெல்ல மெல்ல கிசுகிசுச் செய்திகளாகப் பத்திரிகைகளிலும் வரத் துவங்கியது. அந்தக் காலங்களில் கழகத்திற்குத் தீவிர விசுவாசி போல் தன்னை காட்டிக் கொள்ளும் விதமாக வாய்ப்பு கிடைத்த மேடைகளில் எல்லாம் பேசினார் எம்.ஜி.ஆர். 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8, 9 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் மாவட்ட கழக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ஒரு நீண்ட உரையை எம்.ஜி.ஆர் ஆற்றினார். அவற்றில் சில வரிகள்  "...அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது நமது கழகம். அவருடைய கொள்கைகளின் மீதும் இலட்சியங்களின் மீதும் பற்று வைத்துள்ள லட்சோப லட்சம் மக்களை நம்பித்தான் இருக்கிறது நமது கழகம். இப்படிப்பட்ட கழகத்தில் பூசலை உண்டாக்க நினைக்கிறார்கள். பிளவை உண்டாக்கப் பார்க்கிறார்கள் நடக்குமா? அப்படியே உண்டாக்கினாலும் கூட அதை எங்களுக்குள் தீர்ப்போமே தவிரச் சந்தைக்கும் வராது எங்களுக்குள் சச்சரவும் வராது.   தி.மு.க மக்கள் கட்சி இது தனிமனித கட்சி அல்ல அண்ணா அவர்கள் கழகத்தை உருவாக்கினார். கலைஞர் அவர்கள் இதனைக் கட்டிக் காத்து வருகிறார். கழகத்தைப் பிளவுபடுத்தச் சிலர் நினைக்கிறார்கள் அப்படி நினைப்போரின் நினைப்புக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன் கழகத்தைப் பிளவுபடுத்த எவரும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கப் போவதுமில்லை..." இப்படியாக அம்மாநாட்டில் உரையாற்றினார். அதன் பிறகு 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்பட படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர் வெளிநாடு சென்றார். அவரை வழியனுப்பி வைக்கக் கலைஞர் விமான தளம் வந்து வாழ்த்தி அனுப்பி வைத்தார். அது குறித்து பிறகு கட்டுரை எழுதிய எம்.ஜி.ஆர் "...அண்ணா அவர்கள் வந்திருந்து முன்பு மாலை அணிவித்த அதே விமான கூடத்தில் அண்ணாவைத் தேடினேன். அண்ணா இல்லை என்பது எனக்குத் தெரியாதா? நன்கு தெரியும்! ஆனாலும் உள்ளத்திலிருந்த எண்ணம் அண்ணா வந்து என்னை வாழ்த்தி வழி அனுப்ப வேண்டுமே என்பது! நான் அந்த பேராசையோடு சுற்றிலும் பார்த்தேன்!    சுற்றி அலைந்த கண்களுக்கு முன் அதோ வருகிறார்! அதோ அருகில் வந்துவிட்டார்! போலீஸ் அதிகாரிகள் அவரை என் அருகில் அழைத்து வர உதவினார்கள்! ஆமாம்! கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா என்னைத் தேடி வந்தார்..." இப்படியாக உருக்கமான நீண்ட ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இப்படியாகப் பிரிந்து சென்ற அந்த ஆண்டில் அன்பாக, பாசமாக, மிக நெருக்கமாக, உருக்கமாக வாய்ப்பு கிடைத்த மேடைகளிலும் கட்டுரைகளிலும் பேசியும் எழுதியும் இருக்கிறார் எம்.ஜி.ஆர் அதை அத்தனையும் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார் கலைஞர்.   பகுதி - 21   1972 ஆகஸ்ட் மாதம் 5, 6 நாட்களில் மதுரை மாவட்ட மாநாடு முரசொலி மாறன் தலைமையில் நடைபெற்றது. அதற்குரிய ஏற்பாடுகளை மதுரை முத்து கவனித்துக் கொண்டிருந்தார்.  அம்மாநாடு துவங்க இருப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் அவர்கள் கலைஞரை அவரது வீட்டில் போய் சந்தித்தார். அச்சந்திப்பின் போது அவருடன் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணியைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க விரும்புவதாகவும் அவர் மதுரை மாநாட்டிற்கு வருவார் அம்மேடையில் அவருக்கு முன் வரிசையில் இடம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் எம்.ஜி.ஆர்.   "ஏ, அப்பா! திராவிடர் கழகம் இதையெல்லாம் தாங்காது கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள்." என்று அறிவுறுத்தினார் கலைஞர். அத்துடன் அதை விடாத எம்.ஜி.ஆர் கலைஞர் அனுமதியுடன் மதுரை முத்துவை தொடர்பு கொண்டு பேசினார். இந்த மதுரை முத்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் தங்க வாள் கூட பரிசாக வழங்கி இருக்கிறார். அவரும் கண்டிப்புடன் அதை மறுத்துவிட்டார். லட்சிய நடிகர் என்று அழைக்கப்படும் இராஜேந்திரன் அவர்களும் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். அத்துடன் அவ்வெண்ணத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் கைவிட்டுவிட்டார். தான் விரும்பி கேட்ட அமைச்சர் பதவி மறுப்பு, தான் விரும்பிய பெண்மணியைக் கட்சியில் சேர்க்க மறுத்தது இப்படி அவர் மனம் புகைச்சல் அடைந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் தான் கழகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் என்பவர் அவருடைய நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை எதிர்க்கட்சி பத்திரிக்கையிலும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். அக்கடிதத்தில் மத்திய அமைச்சர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த சில ரகசிய தொடர்புகள் பற்றி எழுதியிருந்தார். இந்த ரகசிய தொடர்புகள் என்பது அந்நிய செலாவணி சிக்கல், வருமான வரி சிக்கல் போன்றவையாகும். இப்பிரச்சனை கழகப் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. சுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. கடிதம் எழுதியதை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் அவர். ஆனால் எம்.ஜி.ஆர் குறுக்கிட்டு "கட்சியில் நான் இருக்க வேண்டுமா? இல்லை சுப்பிரமணியம் இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யுங்கள்" என்றார் கோபத்தோடு. அவரது வற்புறுத்தலின் பேரில் எஸ்.எஸ்.எம் அவர்கள் ஐந்தாண்டுகளுக்குக் கட்சியின் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டார். அன்றைக்கு எம்.ஜி.ஆர் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டினார் எஸ்.எஸ்.எம் என்று நம்பப்பட்டது. பின்னாளில் தான் தெரிந்தது அது தான் உண்மை என்பது. இப்படியாக எம்.ஜி.ஆர் மனம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தாலும் மதுரை மாநாட்டில் கழகத்திற்கும் கலைஞருக்கும் ஆதரவாக மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார். அப்பேச்சிலிருந்து சில பகுதிகள் "...கலைஞர் அவர்களிடம் முன்பு இருந்த நிமிர்ந்த நடை இல்லை. மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்துப் பழகிவிட்டார். அவரது உடல் தான் குனிந்து இருக்கிறதே தவிர உள்ளம் குனியவில்லை. தன்னை அடக்கிக் கொண்டு அடக்கத்தின் உருவாக இருப்பதால் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு யாரையும் ஏளனமாகப் பேசக்கூடாது என்ற அடக்கச் சுபாவத்தை மேற்கொண்டிருக்கிறார். இதெல்லாம் அண்ணா அவர்கள் நமக்கு கற்றுத் தந்த பாடம் தான் காரணமாகும். இப்படி பேசிவிட்டு மக்களைப் பார்த்துக் கேட்டார், காங்கிரசார் இதனை ஊழல் ஆட்சி என்கிறார்களே ஊழல் ஆட்சியா இது? மக்கள் இல்லை இல்லை என்று பதில் முழக்கமிட்டனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு இது ஊழல் ஆட்சி அல்ல என்று முடிவு கூறினர். இப்படி ஆகஸ்ட் ஆறாம் தேதி பேசியவர் அடுத்த இரண்டே மாதத்தில் தான் கணக்கு கேட்கப்போவதாக பொது மக்களிடம் கூட்டம் ஒன்றில் பேசினார். எம்.ஜி.ஆர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்  1972 அக்டோபர் எட்டாம் நாள் சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழாவும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு "பாரத்" பட்டம் பெற்றமைக்கு பாராட்டு விழாவும் ஒன்றாக நடைபெற்றது. அதில்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசியதற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் முரண்பாடாகப் பேசினார் எம்.ஜி.ஆர் அப்போது அவர் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்தவர் போல் அங்குப் பேசினார். அவ்விழாவில் எம்.ஜி.ஆர் நிறையப் பேசினார் இறுதியில் இப்படியாகப் பேசி முடித்தார். "...ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான் சம்பாதிக்கிறான் நீ சம்பாதித்தால் கணக்குக் காட்டு. இதை எதிர்க்கட்சிகள் கேட்கவேண்டியதில்லை நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களைப் பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்த கேள்வியைத் தீர்மானமாக உருவாக்கி மக்களைச் சந்திப்பேன். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தித் தூக்கி எறிவோம். 15 ஆம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்.” என்று ஆவேசமாகப் பேசினார். எம்.ஜி.ஆர் அப்போது கழகத்தின் பொருளாளர். கட்சியின் பொருளாளர் ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசுவது எப்படிச் சரியானதாக ஆகும். அதுமட்டுமல்ல ஏற்கனவே கலைஞரால் 1969 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களது மனைவி, பிள்ளைகள், ஆகியவர்கள் தங்களது கணக்கை சட்டமன்றத்தில் வருடா வருடம் வைக்க வேண்டும் என்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்திரா காந்தியே நிராகரித்த அந்த சட்டத்தை நிறைவேற்றி அதன்படி கணக்கும் பெறப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் கழகத்தினரிடம் கணக்கு கேட்பேன் என்ற எம்.ஜி.ஆரோ முதலாமாண்டு மட்டுமே கணக்கு தந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளாகக் கணக்கு தரவேயில்லை 13 தடவை நோட்டீஸ் அனுப்பியும் கூட தரவில்லை.  என்பதுதான் விசித்திர முரண். சில உண்மைகள் ஊமைகள் ஆவதும் பொய்கள் காலம் காலமாக எழுந்து நிமிர்ந்து நடமாடுகிறதும் உண்டு. அதில் இன்றைக்கு வரைக்கும் சொல்லப்படும் நம்பப்படும் பொய்களுள் முதன்மையானதில் 'கலைஞரிடம் எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்' என்பதும் உண்டு. கழகத்தின் தலைமைச் செயற்குழுவில் மொத்தம் 31 உறுப்பினர்கள் உண்டு. அதில் 26 பேர் கையெழுத்திட்ட எம்.ஜி ஆருக்கெதிரான கண்டன தீர்மானக் கோரிக்கையுடன் கலைஞரையும் பொதுச்செயலாளர் நாவலர் அவர்களையும் சந்தித்தனர். அதில் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் எதிராகச் சமீபகாலமாகப் பேசி வரும் எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அந்த கோரிக்கை மீதான விவாதம் அன்றைக்கே நடந்தது. அனல் பறக்கும் விவாதத்தில் எம்.ஜி.ஆர் அவர்களைக் கழகத்திலிருந்து அறவே விலக்க வேண்டும் என்று உறுப்பினர்களின் பெரும் பகுதியினர் வாதாடினர். அவ்வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நாவலர் அவர்களும் என் வி என் அவர்களும் "...கழகப் பொருளாளர் பொறுப்பிலிருந்தும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உட்பட எல்லா பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக எம் ஜி ஆர் விலக்கி வைக்கப்படுகிறார். அவர் பெயரில் முறைப்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..." என்ற ஒரு அறிக்கையைத் தயாரித்துக் கொண்டு வந்தனர். அதைப் பார்த்த கலைஞர் "இப்போதைக்குச் செயற்குழு உறுப்பினர்கள் முறையீட்டைப் பெற்றுக்கொண்டதாகவும் அது குறித்து எம்.ஜி.ஆர் அவர்களிடம் தலைவரும் பொதுச் செயலாளரும் பேசுவதாக முடிவு செய்யப்பட்டதாகப் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தால் போதுமானது" என்றார். இதை ஒரு வழியாகக் குழுவிலிருந்தவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்குள் நாவலரின் அறிவுறுத்தல் படி என்.வி.என் அவர்கள் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்துவிட்டு வந்தார். "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கலைஞர் கேட்டார். அதற்கு நாவலர் சொன்னார் "நீங்கள் திடீரென்று இப்படி அமைதியாக மாறிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்துத் தான் உடனே கொடுக்கச் சொல்லி விட்டேன்." என்றார். அதைக் கேட்டதும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கரவொலி செய்து தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். அதன் பிறகு எம்.ஜி ஆருக்கு முறைப்படி விளக்கம் கேட்டு கழகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 12 தேதி கழகத்தின் செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய நாஞ்சில் மனோகரன் அவர்கள்  "எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டத்தில் பேசியது தவறு தான் என்றாலும் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதைக்குறித்து யோசிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் ஒரு நாள் அவருக்கு அவகாசம் அளிக்கலாம் என்று ஆலோசனை சொன்னார் கலைஞர். அடுத்த நாள் நாஞ்சில் மனோகரன் அவர்களும் முரசொலி மாறனுமாக இணைந்து எம்.ஜி ஆரைக்காணச் சென்றனர். வலிமை பெற்றுத் திகழ்கின்ற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்து விடக் கூடாதென்று அவரிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களது சமாதான பேச்சு வார்த்தைக்குப் பின் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கழகத்திற்குக் கடிதம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவர் வீட்டுத் தொலைப்பேசி மணி ஒலித்தது எடுத்துப் பேசினார் எம் ஜி ஆர் எதிர்முனையில் பேசியது யாரென்று தெரியாது. என்ன பேசினார்கள் என்பதும் தெரியாது. தொலைப்பேசி அழைப்பைத் துண்டித்தவர். சற்று நேரத்திற்கு முன்பு சொன்ன கடிதத்தைத் தர முடியாது என்றும் நடந்தது நடந்தது தான் என்று திட்டவட்டமாகக் கூறி அனுப்பினார். அதன் பிறகு கழகத்தின் பொதுக்குழு கூடியது எம் ஜி ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தின் மீது 310 பேர் அடங்கிய பொதுக்குழுவில் அன்றைக்கு வந்திருந்த 277 பேரும் செயற்குழுவின் முடிவினை ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றினர். அத்துடன் அத்தனையும் முடிந்தது. கழகத்தின் வரலாறு இரண்டாகப் பிளந்தது.                         பகுதி - 22   எம்.ஜி.ஆர் கழகத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்ட நேரத்தில் ஆவேசமாகவும் ஆக்ரோசமாகவும் பேசிய பல கழக நண்பர்கள் பின்னாட்களில் எம்.ஜி ஆரிடம் ஐக்கியமானார்கள். மக்கள் திமுக என்றொரு கட்சி கண்டு நாவலர் அவர்களும் அதிமுக வில் ஐக்கியமாகி அமைச்சர் பதவியும் பெற்றுக்கொண்டார் என்பதும் பின்னாளைய வரலாறு. மக்களிடம் போவேன் என்ற எம்.ஜி.ஆர் கழக அரசில் ஊழல் நடந்துள்ளதாக டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரிடம் மனு ஒன்றை அளித்தார். எம்.ஜி.ஆர் பிரிந்து தனிக்கட்சி கண்ட போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் மதியழகன் ஆவார். அவரை எம்.ஜி.ஆர் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். அவர் சட்டசபை மரபுகளை மறந்து எதிர்க்கட்சிகளுக்குத் துணை போகத்துவங்கினார். சட்டசபையில் கேள்வி நேரம் துவங்குவதற்கு முன்பு ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப முடியாது என்பது மரபு. ஆனால் அன்றைக்கு மதியழகன் கே.டி.கே. தங்கமணி எனும் கம்யூனிஸ்ட் உறுப்பினரை ஒழுங்கு பிரச்சனை எழுப்ப அனுமதித்தார். அன்றைக்கு விவாதங்கள் கார சாரமாக நடைபெற்றது. விவாதங்களில் எம்.ஜி.ஆர், கலைஞர் மற்றும் பலர் பங்கேற்றுப் பேசினார்கள். இறுதியாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டே முதலமைச்சருக்கு ஆட்சியைக் கலைத்து விட்டு மக்களைச் சந்திக்குமாறு யோசனை வழங்கினார் மதியழகன். அன்றைக்கு அவர் தன்னுடைய விருப்பப்படியே அன்றைய ஒற்றை நாளுடன் கூட்டத்தொடரை ஒத்தி வைத்தார். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாம் நாள் மீண்டும் தொடங்கும் என ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. அக்கூட்டத்தொடரின்போது 2 தீர்மானங்கள் சட்டசபையில் வைக்கப்பட்டது. முதலாவது கலைஞர் மற்றும் 185 உறுப்பினர்கள் ஆதரவுடன் சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். மற்றொன்று கழக ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அ.தி.மு.க வால் கொண்டுவரப்பட்டது. மதியழகன் மற்றும் அதிமு கவின் திட்டப்படி அமைச்சரவைக்கு ஆதரவாகக் குரல் வாக்கில் அதிகப்படியானவர்கள் வாக்களித்தாலும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவை நம்பிக்கை இழந்து விட்டது என்று கூறி அமைச்சரவையைக் கலைத்து விட வேண்டும் என்னும் திட்டத்தோடு அவைக்கு வந்தனர். சபாநாயகர் சட்டசபையில் அறிவித்து விட்டால் எதிர்த்துப் பேச முடியாது. சட்டப்படி தான் எதிர்கொள்ள வேண்டும் அது பெரும் சிக்கல். சுதாரித்துக்கொண்ட கழக அரசு சட்ட விதிகளை மேற்கோள்காட்டி சபாநாயகர் மீது அவரை மாற்றுவது தொடர்பான விவாதம் வரும் போது அதற்கு அவர் தலைமை ஏற்க முடியாது எனும் விதிகளின் படி அன்றைய விவாதத்திற்குத் துணைச் சபாநாயகர் சீனிவாசன் அவர்களைத் தலைமையேற்ற சொன்னது. ஆனால் அதிமுக வை சேர்ந்த உறுப்பினர்கள் அது கூடாது என்றும் தங்களது கோரிக்கையைத் தான் முதலில் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து அமளிக்கு இடையே சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் சபாநாயகரின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அவையின் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை உறுப்பினரின் ஆதரவோடு வெற்றிபெற்றது. அதன்பிறகு கலைஞரால் அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதுவும் வெற்றி பெற்று அப்போதைய சூழ்ச்சியை வென்றது கழக அரசு. இப்படி கட்சிக்குள் புயலும் பிரளயமும் நடந்து கொண்டிருந்தாலும் இலக்கியத்திற்கும் மக்களுக்கும் ஆற்ற வேண்டிய பணியைக் கலைஞர் அரசு திறம்படச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. 1972 தமிழ்ப் புத்தாண்டு அன்றைக்கு ராஜராஜ சோழனுக்குத் தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளியே சிலை ஒன்று நிறுவப்பட்டது. அவர் கட்டிய கோயிலுக்குள் அவருக்குச் சிலை வைக்க மத்திய அரசிடம அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. 1973 ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளில் சிலப்பதிகார காப்பியத்தை விளக்கும் சிலப்பதிகார கலைக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. 1974 ஆகஸ்ட் 18 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் எழில் மிகும் கட்டபொம்மன் கோட்டை திறந்து வைக்கப்பட்டது. 1972 மற்றும் 73 ஆம் ஆண்டு துவக்கத்தில் மூன்று பெரும் தலைவர்களைத் தமிழகம் இழந்தது. வேட்புமனு தாக்கல் செய்த பிறகு வாக்கெடுப்பு நடக்கும் நாள் வரைக்கும் தொகுதிக்குள் காலடி எடுத்து வைக்காமலே வெற்றி பெற்றவர் என்ற தனிச் சிறப்புப் பெற்ற காயிதே மில்லத் அவர்கள் மறைந்தார். "திரும்பப்பெற முடியாத ஆசி கூறுகிறேன்" என்று கலைஞரை வாழ்த்திய ராஜாஜி அவர்களும் காலமானார். அடுத்து அண்ணாவையும் கலைஞரையும் ஆளாக்கிய தந்தை பெரியார் காலமானர். தங்களை ஆளாக்கிய ஆசானுக்கு அரசு மரியாதை தர ஆணையிட்டார். அதன் காரணமாக தன்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டாலும் கவலையில்லை என்றார் துணிவோடு கலைஞர். இவர்களை பற்றி தன் நெஞ்சிலாடும் நினைவுகளை பக்கம் பக்கமாக பகிர்ந்திருக்கிறார் கலைஞர். 1967 முதல் 1976 ஜனவரி இறுதி வரை ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற கழக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு உள்ளார் கலைஞர். அதில் அண்ணா தலைமையில் சென்னை மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது. சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாகும் எனச் சட்டம் இயற்றியது. தமிழ்நாடு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இரு மொழி மட்டுமே இந்திக்கு இடமில்லை எனத் தடுத்து நிறுத்தியது என முத்தாய் மூன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்து அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் செய்த சாதனைகளாக "குடிசை மாற்று வாரியம், இந்தியாவிலேயே முதன்முதலாக போலீஸ் கமிஷன் அமைத்தது, பெண் போலீஸ் படையைத் தொடங்கியது, 1974 ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டசபையில் முன்மொழிந்து நிறைவேற்றியது வரை தன்னுடைய சாதனைகளை அடுக்கியிருக்கிறார். மாநில சுயாட்சிக் கொள்கையைச் சட்டசபையில் நிறைவேற்றிய அந்த நாளை தன்னுடைய அரசியல் வாழ்வில் பொன்னாள் என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். சட்டசபையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது, அதற்கு முன்பு 1973 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியது இவை டெல்லி அரசுக்குப் பிடிக்கவில்லை. லோக நாயக் ஜெயப்பிரகாஷ் என்பவர் இந்தியாவில் முழு புரட்சி இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அவருடன் கலைஞருக்கு இருந்த தொடர்பும் டெல்லிக்குப் பிடிக்கவில்லை. அலகாபாத் மாநாட்டுக்குக் கலைஞர் சென்றபோது ராமனின் விரோதி கருணாநிதி என்ற சுவரொட்டியை எங்கும் ஒட்டியிருந்தார்கள். ராமருக்கு விரோதி நானல்ல ராவணன்தான் என்பதைப் புரிந்து கொள்ளாத சிலர் இங்கு இருப்பது வியப்புக்குரியது ஆகும் என்று அங்குப் பேசினார் கலைஞர்.    1973 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் தேதி சட்டசபையில் "பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா" என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் போன்ற முக்கிய பொறுப்புகளில் பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுக் காலம் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. விசாரணை பொய்யானால் அப்படிப் பொய் குற்றம் சுமத்தியவருக்கு மூன்று ஆண்டுக் காலம் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படி வடிவம் பெற்றது அச்சட்டம். கழகம் மீது கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர் இதை 'கருப்பு மசோதா' என்று வர்ணித்தார். பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பின் இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றனர். இன்னும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் கணக்கு கேட்டதால் தான் எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார் என்பதை.   இந்தியாவில் எமர்ஜென்சி  1975 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுவே எமர்ஜென்சி இந்தியாவில் வருவதற்கு வழிவகை செய்தது. அதாவது 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தி அவர்கள் முறைகேடுகள் செய்து தான் வெற்றி பெற்றார் என்பதை ஏற்றுக்கொண்டு அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்த தீர்ப்பை இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி தீர்ப்பு வழங்கிய நீதிபதியிடம் இந்திராவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் எப்பொழுது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறாரோ அப்பொழுதே இந்த அவகாசம் முடிந்து விடும் என்றார். ஆனாலும் உச்ச நீதிமன்றம் சென்றார் இந்திரா. உச்ச நீதிமன்றத்திலும் இந்திரா காந்தி அவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. நாடு முழுவதும் இந்திரா காந்தி பதவி விலகக்கோரி கோரிக்கைகளும் போராட்டங்களும் நடந்தது. அப்போது அவர் தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்து இன்றைக்கு வரைக்கும் காங்கிரசுக்குத் தீராக்களங்கத்தை ஏற்படுத்தினார். அதற்கு அடுத்த நாளே தி.மு.க வின் செயற்குழு கூடி அதற்கு ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது. "இந்திரா காந்தி இந்தியாவில் சர்வாதிகாரத்திற்கான துவக்க விழாவை நடத்தி இருக்கிறார்" என்று துணிந்து கூறியது கழகம். இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு கட்சி எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் இயற்றிய பெருமை திமுக விற்குத் தான் உண்டு. எமர்ஜென்சியில் பத்திரிக்கைகளுக்குத் தணிக்கை வந்தது. பேச்சுரிமை மறக்கப்பட்டது. ஏன் கைது செய்யப்பட்டார்கள் எதற்குக் கைது செய்யப்பட்டார்கள் காரணம் சொல்லப்படவில்லை. யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பது கூட அறிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்கும் போக முடியாது அதற்காகவும் புதிய சட்டம் இயற்றப்பட்டது இந்தியாவில் இந்திராவின் சர்வாதிகாரம் ஆரம்பமானது. அதுவரை ஆலமரமாய் வேர்விட்டு கிளை பரப்பி கம்பீரமாய் நின்ற இந்திய ஜனநாயகம் அநியாயமாய் வெட்டி வீழ்த்தப்பட்டது.                             பகுதி - 23   நாட்டில் எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டு தனது சகாக்கள் சிறையில் வாடுகிறார்கள் என்பதைத் தாங்கிக்கொள்ள இயலாத காமராஜர் படுத்த படுக்கையானார் அவரைக் காண நாவலரும் கலைஞரும் சென்றனர். கண்கள் குளமாக காமராஜர் "தேசம் போச்சு! தேசம் போச்சு!" என்று உரக்கக்கூவினார். அழுதபடியே கலைஞர் காமராஜரைக் கட்டிக்கொண்டார். அவர்கள் இருவரையும் கண் கலங்கியபடியே தேற்றினார் அருகிலிருந்த நாவலர். "ஐயா! நீங்கள் சொன்னால் நாங்கள் ராஜினாமா செய்து விட்டு சர்வாதிகாரத்தை அழிக்க உங்கள் பின்னால் அணிவகுக்கத் தயார்" என்றார் கலைஞர். "பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்." என்று அறிவுரை கூறி அனுப்பினார் பெருந்தலைவர். நெருக்கடி நிலை பிரகடனம் தொடர்பாகப் பிரதமர் இருபது அம்சத் திட்டத்தை அறிவித்தார். மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் அதை அப்படியே நிறைவேற்றுவோம் என்று கிளி பிள்ளை போல் சொன்ன போது கலைஞர் மட்டும் சொன்னார் "இதோ பாருங்கள், நீங்கள் அறிவித்திருக்கும் இருபது அம்ச கோரிக்கையில் பல எங்கள் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டாகிற்று. நீங்கள் சொல்லாத பல மக்கள் நலப்பணிகள் கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது." என்று புள்ளி விவரத்தோடு தகவலையளித்து அவசரக்காலத்துக்கும் பயமில்லை இந்திராவிற்கும் பயமில்லை என்பதைத் துணிந்து சொன்னார். மற்ற முதல்வர்கள் எல்லாம் பிரதமரைப் பற்றிப் பேசினால் எழுதினால் மட்டுமல்ல முதல்வரைப்பற்றிப் பேசவோ எழுதவோ செய்தாலும் கைது எனச் சட்டங்களில் திருத்தங்கள் செய்து கொண்டிருந்த போது சென்னை கடற்கரையில் எமெர்ஜென்சியை எதிர்த்து ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எமெர்ஜென்சிக்கு எதிராக திமுக சூளுரை ஏற்றது. மேடையில் அமர்ந்திருந்தவர்களும் மக்களும் எழுந்து நிற்கக் கலைஞர் சொல்வதை மக்கள் திருப்பி முழங்கினார்கள் "... எந்த நிலையிலும் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் இந்தியாவின் மக்களாட்சி முறைக்குக் கேடு ஏற்படாமல் பாதுகாப்பதற்குத் தயங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்கிறோம். தேசத் தலைவர்கள் விடுதலை பத்திரிக்கையாளர்களின் நியாயமான உரிமைகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று இந்தியப் பிரதமர் அவர்களை தமிழ்நாடு மக்களின் இந்த மாபெரும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. வாழ்க ஜனநாயகம்!" இந்த நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் என்.வி.என் அவர்கள் காலமானார். இவர்தான் சென்னை மாவட்ட தி.மு.க கழகத்தின் முதல் செயலாளர். கழகத்தின் சட்டதிட்டங்களைத் திருத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவிற்கும் இவர்தான் செயலாளராக இருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இனி தான் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்து கொண்டு அவருடைய மகன்களான சோமு மற்றும் செல்வத்தின் கரங்களைக் கலைஞரின் கையோடு இணைத்து வைத்து "நீங்கள் கட்சிக்கும் கலைஞருக்கும் என்றைக்குமே துரோகம் செய்யக் கூடாது. துரோகம் நினைக்கவே கூடாது" என்று ஆணையிடுவித்தார். பிறகு கலைஞரைப்பார்த்து "நான் ஏதாவது என்னை அறியாமல் எப்போதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று கலைஞரை விட பதினோரு வயது பெரியவரான அவர் சொன்ன போது கண்ணீர் விட்டழுதார் கலைஞர். அடுத்து காந்தி பிறந்த நாளிலேயே அவசரக்காலத்தின் கொடுமைகளைக் கண்டு கலங்கிய காமராஜர் காலமானர். அன்றைக்குத் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம் மிஞ்ச அந்த அதிர்ச்சியிலே மாண்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள். அவரை காங்கிரஸ் தலைமையகத்திலே மக்கள் பார்வைக்காக வைத்துவிட்டு அங்கேயே அடக்கம் செய்யக் காங்கிரஸ்காரர்கள் ஆலோசித்த போது அதை மறுத்த கலைஞர் ராஜாஜி மண்டபத்தில் எடுத்து வந்து வைக்க உத்தரவிட்டார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவரது பூதவுடல் ராஜாஜி மண்டபம் வந்தது. பின்னர் அன்றைக்கு இரவு எட்டு மணி போல் மழையையும் பொருட்படுத்தாமல் கிண்டிக்கு அதிகாரிகளுடன் அவரும் சென்று வெளிச்சம் இல்லாததால் தங்கள் வாகனங்களைத் திருப்பி விட்டு அந்த வெளிச்சத்திலேயே இடத்தை தேர்வு செய்தனர். அடுத்த நாள் காமராஜர் இறுதி ஊர்வலத்திற்கு அவரது பூத உடலை இராணுவ அதிகாரிகளுடன் கலைஞரும் இணைந்து தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றினார். காமராஜர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர் புகழ் பாடியபடி நிற்கும் நிலைவாலயம் கட்டப்படும் என்று அறிவித்து அதைச் செய்தும் முடித்தார் கலைஞர். காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்தாலும், கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் கலைஞர் வைத்திருந்தார் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். 1975 கலைஞர் ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸின் சிலர் இந்திரா காங்கிரஸ் உடன் இணைவதற்கு முயன்றனர். வேறு சிலரோ அது காமராஜரின் விருப்பத்திற்கு மாறானது ஆகவே இந்திரா காங்கிரஸில் இணைவதைக்குறித்து நினைக்கவே கூடாது என்று தனித்துப் பிரிந்து நின்றனர். இப்படி காங்கிரஸ்ல் இரு பெரும் பிளவுகள் வளர்ந்து கொண்டிருந்தது. இந்திரா காங்கிரஸ்ல் ஸ்தாபன காங்கிரஸ் இணையாததற்கு திமுக தான் காரணம் என்று இந்திரா அவர்களுக்குத் தவறான தகவல் போனது. வள்ளுவர் கோட்டம் பணிகள் அத்தனையும் முடிவு பெற்று திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடந்தது. அம்மாதத்தில் தான் எமர்ஜென்சியால் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் வள்ளுவர் கோட்டம் அன்றைய குடியரசு தலைவர் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர். அது எப்படி அமைய வேண்டும் என்று முதல் திட்ட வரைபடம் வரைந்து கொடுத்தவர் கலைஞர். ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து செய்தார் இறுதியில் ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால் அவர் அந்நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூட படவில்லை. அது மட்டுமின்றி அடிக்கல் நாட்டிய போது அமைக்கப்பெற்ற அவர் பெயர் தாங்கிய பெயர் பலகை கூட அங்கிருந்து அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 28 வரை கோவை மாநகரில் கழகத்தின் ஐந்தாவது பொது மாநில மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தான் தேர்தல் உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதே தேதியில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநாடு சண்டிகரில் நடைபெற்றது அந்த மாநாட்டில் தேர்தலை ஓராண்டு காலத்திற்கு ஒத்திப் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள் எமர்ஜென்சியின் காரணமாக இந்திரா காங்கிரஸ் எதேச்சதிகாரமாக பெற்றுக்கொண்ட பயன்களில் இதுவும் ஒன்று. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதம் ஒன்றிற்கு பதிலளித்த பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் கட்டுப்பாடற்ற இரண்டு தீவுகள் இருப்பதாக தெரிவித்தார். அவர் சுட்டிக்காட்டியதில் ஒன்று கழகம் ஆட்சி புரியும் தமிழகம் இன்னொன்று ஸ்தாபன  காங்கிரஸ் ஆட்சி புரியும் குஜராத். இவை இரண்டும் தீவுகள் அல்ல இந்திராவின் எமர்ஜென்சி எனும் தீவிரவாத போக்கிற்கு துணை போகாத அரசுகள்.   அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பம்பாயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தது போல கழகமும் ஒழுங்காக நடக்காவிட்டால் அதற்கும் அதே கதி நேரலாம் என்று எச்சரித்தார். இதன் தொடர்ச்சியாக 1976 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி கழக அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டது. கழக ஆட்சி கலைக்கப்பட்ட அன்று வள்ளுவர் கோட்டம் மற்றும் காமராஜர் நினைவாலயம் சென்று அங்கு செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஆலோசனை வழங்கினார் கலைஞர் வழங்கிவிட்டு அன்று மாலையில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசும்போது சொன்னார் நான் முதலமைச்சராக இறுதியாக கலந்து கொள்ளும் விழா இதுவாகத்தான் இருக்க கூடும். அதற்கு அங்கிருந்தவர்கள் உணர்ச்சி பொங்க “அப்படி சொல்லாதீர்கள்” என்று ஒலியெழுப்பினர். அந்த விழாவினை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கலைஞரை அவரது மருமகன்களான அமிர்தம் மற்றும் செல்வம் இருவரும் சிரித்த முகமாக "ஆட்சியை கலைத்து விட்டார்கள்" என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். உடனே கலைஞர் "அப்பாடா சஸ்பென்ஸ் முடிந்தது” என்றார். உடனே அங்கிருந்த அரசு காரை தலைமைச் செயலகத்துக்கு எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டு தன்னுடைய வீட்டின் மாடிக்கு சென்றார். அவரைப் பார்த்த அவருடைய தனி அலுவலர்கள் அனைவரும் கதறி அழுதனர் "சே! இது என்ன பைத்தியக்காரத்தனம். தைரியமாக இருங்கள்!" என அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு மேலே சென்று நண்பர்களுக்கு தகவலைச் சொல்ல டெலிபோனை எடுத்தால் அது கட்டாகி இருந்தது. சில நிமிடங்களில் செய்தி சென்னை முழுவதும் பரவியது. மக்கள் பெருந்திரளாக அழுதபடியே கலைஞர் வீட்டு முன் குழுமினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விடுவது கலைஞருக்கு பெரும் சவாலாக தான் இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிராக அவரது மனைவிமார்களும், மகன்களும், மகள்களும், மருமகள்கள் என யாரிடமும் எந்த விதமான வருத்தமோ, வேதனையோ, அழுகையோ இல்லை அவர்கள் அத்தனை பேரும் இயல்பாகவே இருந்தனர். சற்று நேரத்தில் அவரது இல்லத்திற்கு போலீஸ் வந்தது. "என்ன விசேஷம் நான் கைதாக வேண்டுமா?" என்றார் கலைஞர். "இல்லை உங்கள் மகன் ஸ்டாலின்" என்றனர். "அவன் வீட்டில் இல்லை" என்றவர் "உங்களை வெறுங்கையோடு அனுப்ப வருத்தமாக இருக்கிறது. நாளைக்கு என்னை கைது செய்து செல்வதற்கு பதில் இன்றே அழைத்து செல்லுங்களேன்" என்றார். ஆட்சி கலைக்கப்பட்து என்றதை அறிந்த போது வராத துக்கம் மகன் ஸ்டாலினை கைது செய்யப் போகிறார்கள் என்றதும் கரும் மேகமென அவ்வீட்டை சூழ்ந்து கொண்டது. அப்போது ஸ்டாலினுக்கு திருமணமாகி நான்கைந்து மாதங்கள் தான் ஆகி இருந்தன. அவரது மனைவி துர்க்கா அப்போது ஓரிரு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் கலைஞர் காலில் விழுந்து கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறுவது போல் பேசிவிட்டு "எல்லாரும் எல்லாவித தியாகங்களுக்கும் தயாராக இருக்கவேண்டும்" என்று உரக்க சத்தமிட்டார் கலைஞர். மறுநாள் ஸ்டாலின் வந்ததும் கலைஞர் ஐஜிக்கு தொலைப்பேசி மூலம் அவரை அழைத்து ஸ்டாலினை அழைத்துச் செல்லச் சொன்னார். ஸ்டாலின் குளித்து முடித்து தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு கலைஞரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றுவிட்டு அந்த தெருவும், கலைஞரும், ஊரும் உறவுகளும் வேடிக்கை பார்த்து நிற்க போலீஸ் வேனில் ஏறிப் புறப்பட்டார். கூடி நின்றவர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். அன்றைக்குக் காலையிலேயே சிட்டிபாபு உட்படப் பல கழக காளைகள் கைது செய்யப்பட்டனர்.             பகுதி - 24   எமர்ஜென்சி  இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் "ஹிட்லர் ஆகிறார்  இந்திரா" என்றொரு கார்ட்டூனை  வெளியிட்டார் முரசொலி மாறன். அது பல வெளிநாட்டு பத்திரிக்கைகளிலும் வெளிவந்து தமிழகம் எமர்ஜென்சியை கடுமையாக எதிர்க்கிறது என்பதை உலகிற்கு உயர்த்தி காட்டியது. அத்தகைய மாறனை விடுவார்களா, அவரைத் தேடி இரவு பல லாரிகளில் போலீஸ் படை கலைஞரின் வீட்டை சூழ்ந்து கொண்டது. அவர் அப்போது அங்கு இல்லை டெல்லியில் இருந்தார். டெல்லியில் இருந்த மாறன் மறுநாள் காலையில்தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததும் ஐ ஜிக்கு தொலைபேசி மூலம் தகவல் சொன்ன கலைஞர் அவர் மிசா கைதியாக சிறைவாசம் செல்லும்போது கட்டி அணைத்து உச்சி மோந்து "சென்று வா" என்று வாழ்த்தி அனுப்பினார். நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரை அனுப்பி வைத்தனர். பிப்ரவரி 3 அது தான் அண்ணாவின் நினைவு நாள். அன்றைக்கு அண்ணா சதுக்கம் சென்று அங்கு அவருக்கு மலர்வளையம் வைக்கப்பட்டது. மிசாவில் எத்தனை பேர் கைதானார்கள் என்ற தகவல் வெளியிடக்கூடாது என்பதும் சட்டம். ஆனால் கலைஞரோ சாதூர்யமாக அன்றைக்கு அண்ணா சதுக்கத்திற்கு மலர்வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று மிசாவால் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை சூசகமாக வெளியிட்டார். ஆட்சி கலைக்கப்பட்டு மொத்தம் 25,000 திமுக தொண்டர்கள் மிசாவில் சிறைவைக்கப்பட்டனர். இன்னும் ஸ்தாபன காங்கிரஸ், கம்யூனிஷ்ட் மற்றும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையிலைடைக்கப்பட்டனர். சர்க்காரியா கமிஷன்  கழக அரசை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தியதை வரவேற்றது அ.தி.மு.க பிப்ரவரி 3 ஆம் தேதி கழக அமைச்சரவை மீது விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சர்க்காரியா அவர்கள் தலைமையில் சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இக்கமிஷன் எம்.ஜி.ஆர் அவர்கள் 1972 ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை தொடர போவதாக அறிவித்தது. நான்காண்டுகள் முன்பு ஏவிய அம்பு நன்கு ஓய்வெடுத்து விட்டு சீறி வந்து கலைஞரிடம் புறமுதுகிட்டு திரும்பி ஓடியது. கலைஞருக்கு அவர் வாழ்வில் நீங்கா பழி வாங்கித்தந்த செயல்கள் உண்டு. அவரை விட்டு நீங்காத புகழை வாங்கி தந்த செயல்களும் பல உண்டு. ஊழல் வழக்குகளில் சிக்க வைத்து அழியா பழிக்கு அவரை ஆளாக்க அனுப்பட்ட சர்காரிய கமிஷனால் எத்தனை முயன்றும் முரசொலி, அவரது வீடு என அவருக்குரிய அத்தனை இடத்திலும் சோதனை செய்தும், எமர்ஜென்சியை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டியும் கூட ஊழலை நிரூபிக்க முடியாமல் கலைஞருக்கு அழியா புகழைத்தான் தேடித்தந்தது. இக்கமிஷன் அமைக்கப்பட்டு நாப்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றைக்கும் கழகத்தவர்கள் சொல்ல கேட்கிறோம் "சர்க்காரியா  கமிஷனாலே முடியாததையா நீங்கள் செய்து விடப் போகிறீர்கள்." தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து முதல் 15 நாட்கள் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து மீண்டும் 15 நாட்கள் அவை நீட்டிக்கப்பட்டன. தமிழகம் எமர்ஜென்சி எனும் கசப்பை முழுமையாக அனுபவிக்க துவங்கியது. அம்மாதம் இந்திரா காந்தி அம்மையார் 13 ஆம் தேதி குடும்பமாக சென்னைக்கு வந்தார். கழக அரசு கட்டிமுடித்த காமராஜர் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். பிறகு 15 ஆம் தேதி ஸ்தாபன காங்கிரஸ் மற்றும் இந்திரா காங்கிரஸ் ஆகியவை இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்விழாவில் பேசும்போது ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்திற்கு தலா 500 கோடி கன அடி வீதம் மொத்தம் 1500 கோடி கன அடி நீர் தரப்போவதாக உறுதியளித்தார். இனி சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வராது என்று அடித்து பேசினார். அதன் பிறகு திமுக கழகமும் கருணாநிதியும் இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறார்கள் அவர்களுக்காக பிரச்சாரமும் செய்கிறார்கள். இது போன்ற பிரசாரங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதனால் இந்திய இலங்கை அரசுகளின் நட்புறவு கெடுகிறது என்று பேசி கைதட்டல் வாங்கி விட்டு சென்றார். தொடர்ந்து மிசா சட்டப்படி கழகத்தினர் மற்றும் அரசு கை காட்டுபவர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர். கூட கலைஞரை தனிமைப்படுத்துவதில் கவனமாக இருந்தனர். அவருடன் யாரெல்லாம் அவரது காரில் பயணப்படுகிறார்களே அவர்கள் அத்தனை பேரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். அவருக்கு விருப்பமான இரு ஓட்டுனர்கள் அதிகார வர்க்கத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து இருவரும் தங்கள் வேலையை விட்டு சென்றனர். அந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் என்பவர் அவருக்கு கார் ஓட்டும் பொறுப்பை ஏற்றெடுத்தார். காரில் பேசிக்கொண்டு போனாலே கைது செய்பவர்கள் காரை ஓட்டிச்சென்றால் விட்டு விடுவார்களா என்ன, அவரையும் மிசாவில் சிறைக்கனுப்பினார்கள். மற்ற மாவட்ட கைதிகளை விடச் சென்னையில் தான் மிசா கொடுமை மிக மிக அதிகமாக இருந்தது. அங்குதான் ஸ்டாலின், சிட்டிபாபு உட்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் நடந்த இத்தனை அராஜகத்திற்கு ஸ்டாலின் அங்கிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மற்ற இடங்களில் எல்லாம் மிசா கைதிகளை வாரம் ஒரு முறை குடும்ப அங்கத்தினர்கள் சந்தித்துக்கொள்ள அனுமதி இருந்தது. சென்னை சிறையில் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தினம் தினம் கழக கண்மணிகளின் பெற்றோர்களும், சகோதர சகோதரிகளும், அவர்கள் மனைவிகளும் கலைஞரின் வீடு வந்து அவரை சந்தித்து அவரிடம் கண்ணீர் மல்க இந்த அநியாயத்திற்கு தீர்வுக்காண முறையிட்டு விட்டுச் செல்வது வாடிக்கையானது. அவர்களைத் தேற்றி அனுப்பிக்கொண்டிருந்தார் கலைஞர். மாதம் ஒன்றானது எனினும் மிசா கைதிகளைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. கைதிகள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள் தாங்கொணா சித்திரவதைகளுக்கு ஆளாகிறார்கள் எனும் செய்திகள் கசியத் துவங்கின. கலைஞர் பொறுமை இழந்தார் ஐ ஜி யை அழைத்தார் "நாளை காலைக்குள் நீங்கள் மிசா கைதிகளைப் பார்க்க அவர்கள் உறவினர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் நான் சிறைச்சாலை முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்றார். அந்த மாலை சிறைக்கதவுகள் திறந்தது. அவர்கள் உறவினர்கள் மட்டும் சில நிமிடங்கள் சந்தித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஸ்டாலினைக் காண குடும்பத்தினருடன் கலைஞர் சென்றார். கையில் ஏற்பட்டிருந்த காயங்களை மறைப்பதற்காக முழுக்கைச் சட்டை அணிவித்து ஸ்டாலின் அழைத்து வரப்பட்டார். "அடித்தார்களா?" என்று கேட்டார் கலைஞர். ஸ்டாலினிடமிருந்து "இல்லை" என்ற பதிலே வந்தது. ஒரு வேளை உண்மையைச் சொல்லியிருந்தால் அன்றைக்கு மீண்டும் சிறையில் உள்ள அத்தனை கழகத்தினரும் அடித்து நொறுக்கப்பட்டிருப்பார்கள். மிசாக்கொடுமைகள்  மிசாக் கொடுமைகளைப் பற்றிப் படித்தாலே உடம்பெல்லாம் நடுங்கும் அளவு கொடுமைகள் அரங்கேறியுள்ளன. எந்த கேள்வியும் இன்றி சிறை அறைகளிலிருந்து இழுத்து வந்து ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நொறுக்கப்பட்டார்கள். அரசுக்கு யாரையும் கைது செய்துகொள்ளலாம். கைதிகளுக்கு சோற்றுடன் மண்ணையும் சிறுநீரையும் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். வட இந்தியாவில் ஒரு சகோதரனையும் அவனது சகோதரியையும் நிர்வாணப்படுத்தி போலீஸ் அதிகாரிகள் முன் அவர்கள் பாலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்ட கொடுமைகள் எல்லாம் இந்திராவின் எமர்ஜென்சி நிறைவேற்றியது. இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கூட இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்தி இருப்பார்களா என்பது தெரியாது. அந்த அளவுக்கு மிக மிக கீழ்த்தனமாக நடத்தியது இந்திராவின் மிசா.   சிறையில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் விளக்கமாக திமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து சிறையிலேயே மாண்டுபோன சிட்டிபாபு 'டைரி' எனும் தலைப்பில் எழுதியது பின்னால் புத்தகமாகவும் வெளியானது. சென்னை சிறைச்சாலை கொடூரங்களுக்கெல்லாம் காரண கர்த்தாவாக இருந்தவர் வித்யாசாகர் எனும் காவல்துறை அதிகாரி என்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எமர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சிக் கட்டில் ஏறிய எம்.ஜி.ஆரின் அதிமுக அரசு பதவியேற்றவுடன் அவருக்குப் பதவி உயர்வு வழங்கி அதற்குக் கூலியாக அவரை கவுரவித்தது. அடக்குமுறைகளும், ஒடுக்குமுறையும், அராஜகங்களும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்திலும் கலைஞர் முரசொலியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். இருபது வரி எழுதினால் நான்கு வரியே மிஞ்சும். அந்த அளவுக்கு சென்சார் மூலம் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் எழுத்தை முழுவதுமாகவே தடை செய்தார்கள். அதன் பிறகு கரிகாலனின் கேள்வி பதில்கள் எனும் பெயரில் 20 கேள்விகளுக்குப் பதில்கள் எழுதினார். அதுவும் சென்சார் செய்யப்பட்டது. பாதிக்குப் பாதி கூட ஒழுங்காக வெளியிடமுடியவில்லை. எமர்ஜென்சியின் சென்சார் எப்படி இருந்ததெனில் அண்ணாவை அறிஞர் அண்ணா என்றோ, காமராஜரைப் பெருந்தலைவர் காமராஜர் என்று எழுதினால் கூட அறிஞர் என்பதும் பெருந்தலைவர் என்பதும் சென்சார் மூலம் வெட்டப்படும் அளவுக்கு இருந்ததெனில் பார்த்துக்கொள்ளுங்கள். கலைஞருக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. கலைஞரைப் பற்றி அவதூறுகளும் கழகத்தைப் பற்றி பொய்களும் கட்டவிழ்த்து கணக்கின்றி விடப்பட்டன. அவைகளுக்குப் பதில் எழுத விடாமல் கலைஞரின் கரங்களோ கட்டப்பட்டன. இந்த சூழ்நிலையில் தமிழகமெங்கும் கலைஞர் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதனால் பிரச்சனைகளும் அவருக்கு மேலும் பாதிப்புகளும் வரும் என்று கூறி கழகத்தின் பலர் அதைத் தடைசெய்ய வலியுறுத்தினார்கள். அவரும் அப்போதைக்கு அதைத்தள்ளி வைத்தார். இந்த நிலையில் கட்சியில் சிலர் கலைஞர் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்னும் ஒரு கடிதம் எழுதி புலவர் கோவிந்தன் மூலம் அதை அவரது சகோதரிகளிடம் கொடுத்தனர். அதற்கு உருக்கமாகப் பதில் எழுதிய கலைஞர் "...நீங்கள் இப்படி ஒரு கடிதம் எழுதியதற்குப் பதில் ஒரு துளி விஷத்தைக் கொடுத்து இருக்கலாம். கழகம் நல்ல நிலைமையிலிருந்த போதெல்லாம் அதற்குத் தலைவனாக இருந்து விட்டு கழகத்திற்கு ஒரு ஆபத்து என்ற நேரத்தில் அதை விட்டுப் போவது அழகாகுமா என்றும் என்னை முழுவதும் உணர்ந்த புலவரே அப்படி எழுதலாமா?..." என்றும் கேட்டிருந்தார். அக்கடிதத்தைப் படித்த புலவர் கலைஞர் வீடு சென்று அவரைப் பார்த்து "நான் எழுதியிருந்தது உங்கள் கஷ்டங்களைக் காணச் சகிக்காமல் தானே அன்றி வேறு அல்ல. நீங்கள் தலைமையிலிருந்து விலகிக் கொண்டாலாவது உங்களுக்குத் தரும் தொல்லைகளைக் குறைத்துக் கொள்ள மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான்" என்று அழுது கொண்டே கூறினார். "இதனை விட இன்னும் எவ்வளவு தொல்லைகள் துயரங்கள் தரப்பட்டாலும் அதனை அனைவரும் ஒன்றாக இருந்து சந்திப்போம்" என்றும் தெளிவுபடுத்தினார் கலைஞர். கழகம் நல்ல நிலைமையிலிருந்த போதெல்லாம்  பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கழகத்தை விட்டு விலகிய பலர் இருந்தார்கள். அவர்களைக் குறித்தும் எழுதி வைத்திருக்கிறார் கலைஞர். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் கழக உடன்பிறப்புகள் பலர் கலைஞரைத் தினம் தினம் சந்திக்க வருவார்கள். அவர்கள் வேன்களையும், பேருந்துகளையும் வாடகைக்குப் பிடித்துக் கொண்டு வருவது வழக்கம். ஒரு கட்டத்தில் அப்படி வருவது அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. அப்படி வருபவர்கள் அவர்களது சொந்த ஊர்களிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.   போலீஸை ஏமாற்ற கழகத்தார் என்ன செய்தார்கள் தெரியுமா? திருத்தணி, திருப்பதி கோயில்களுக்குப் போவதுபோல் குடும்பம் குடும்பமாக வேன்களிலும் பேருந்துகளிலுமாக ஏறி வந்தார்கள். அப்படி வந்து இந்த மிசா கொடுமை காலத்தில் வளர்ச்சிக்குத் தேவையான நிதியை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் விதமாகக் கலைஞரிடம் கொடுத்துச் சென்றார்கள். "அப்படிப்பட்ட உண்மை தொண்டர்கள் இல்லாதிருந்திருந்தால் இப்போது இந்த கழகம் ஏது" என்று உணர்ச்சி மேலிடக் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர். இப்படிப்பட்ட கடும் சோதனைகளுக்கு மத்தியில் இந்திரா அரசு மாநிலக் கட்சிகளைத் தடை செய்ய உத்தேசிப்பதாக ஒரு செய்தி வந்தது. அதை அறிந்த எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றிருந்ததை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொண்டார். கழகத்தின் பெயரை மாற்றவும் பலர் பலவாறு ஆலோசனை வழங்கினார்கள். அதற்குக் கலைஞரும் பேராசிரியரும் தான் இறுதி வரை மறுப்பு தெரிவித்தனர். இந்த தகவல் லேசாக வெளியே தெரியத் துவங்கி மிசா கைதிகளாகச் சென்னை சிறையில் இருந்தவர்களிடமும் எட்டிற்று. "கழக தலைமையில் ஆகட்டும் அல்லது கழக பெயரில் ஆகட்டும் எந்த மாற்றமும் கூடாது" என உறுதியாகத் தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பினார்கள் அவர்கள். அதைப் படித்துக் காட்டிய கலைஞர் "வாழ்ந்தாலும் கழகத்தோடு வாழ்வோம். வீழ்ந்தாலும் கழகத்தோடு வீழ்வோம்." என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அதன்பிறகு கழக தலைமையையோ கழக பெயரையோ மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களுக்கு எழவில்லை. மிசா கொடுமைக்கு உட்பட்டு சிறையில் வாடிய கழக காளைகளின் குடும்பங்கள் பல ஏழைக் குடும்பங்கள். அவர்கள் வீட்டிற்கு மாதம் 200 ரூபாய் வீதம் வழங்கத் தீர்மானித்து அவ்வாறு வழங்கியது கழகம்.                                             பகுதி - 25   1975 ஆம் ஆண்டு கலைஞர் பிறந்தநாள் வந்தது. அன்றைக்குக் காலையில் யாருக்கும் தெரியாமல் தணிக்கை துறையின் அராஜகத்தை கண்டிக்கும்விதமாகப் பத்திரிக்கை தணிக்கை துறை அதிகாரியின் அலுவலகம் முன்பு உண்ணா நோன்பிருக்கத் தீர்மானித்தார் கலைஞர். வாகனத்தில் புறப்பட்டவர் யாருக்கும் தெரியாமல் துண்டு சீட்டுகளை அடித்து வைத்துக்கொண்டார். கையில் துண்டு சீட்டுடன் அண்ணா சாலையில் இறங்கி அவரே துண்டு சீட்டுகளை வினியோகிக்கத் துவங்கி விட்டார். மக்கள் வியப்பும் மகிழ்வும் கலந்து அவரை பார்த்தார்கள். போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. அங்கிருந்து நடந்து சென்று அண்ணா சிலைக்கு முன்பு சர்வாதிகாரத்துக்கு எதிரான வாசகங்களை இடிமுழக்கமெனக் கலைஞர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் அதைக்கேட்டு அவ்விடமே அதிரும் வண்ணம் முழங்கினார்கள். சற்று நேரத்தில் போலீஸ் வந்து அவர்களைக் கைது செய்தது. மறுநாள் சிறையில் மிசா கைதிகளுடன் பிறந்தநாள் கொண்டாடலாம் என்றிருந்தார் கலைஞர். முதலில் கலைஞரையும் அவரது மகன், மருமகன்களையும் விடுவிக்கத் தீர்மானித்த காவலர்கள் கலைஞரிடம் தங்கள் முடிவைச் சொன்னார்கள். விடுதலை என்றால் அனைவருக்கும் சிறை என்றாலும் அனைவருக்கும் என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டே வந்தார் கலைஞர். மறுநாள் கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூற அவரது வீட்டிற்குச் சென்ற மக்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். மிசாவில் கலைஞருக்கு வாழ்த்துக் கூறுவதும் தடைசெய்யப்பட்டது. தப்பிப்பிழைத்தவர்கள் காயங்களும் இரத்தங்களுடனும் அவரை வாழ்த்த வந்தனர். அவர்களைக்கண்டு உள்ளம் வெதும்பிய கலைஞர் கடுங்கோபத்தில் இங்கிருக்கும் இந்த சொற்ப பேருடன் கோட்டை நோக்கி ஊர்வலம் புறப்படப் போவதாக அறிவித்தார். அதன் பிறகே இனி யாருக்கும் தொல்லை இராது என்ற உறுதி மொழி காவல்துறையால் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்த சபாநாயகர் மதியழகனும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களும் கலைஞரைப் பதவி விலகச்சொல்லிக் கூச்சல் போட்டனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட எஸ்.எஸ்.ஆர் அவர்கள் கூச்சலை நிறுத்தாத காரணத்தால் கழகத்தினருக்கும் அவருக்குமிடையே சிறு மோதல் ஏற்பட்டது. அதைக் கொலை முயற்சி வழக்காக மாற்றி அதில் கலைஞர் பெயரையும் சேர்த்தது அடுத்து ஆட்சி பீடம் ஏறிய அதிமுக. அப்பொய் வழக்குகள் பொடி பொடியாக அவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கலைஞர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த எமர்ஜென்சி காலத்தின் ஜூன் மாதத்தில் தான் கலைஞர் திருச்சிக்கு அருகில் உள்ள திருமண வீடொன்றிற்குச் சென்றார். ரயிலில் சென்ற அவரை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் வந்து ஆரவாரத்தோடு வரவேற்றார்கள். மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்றார் கலைஞர். அத்திருமணத்திலும் அதன் பிறகும் கலைஞர் செல்லும் இடமெல்லாம் எமர்ஜென்சி கால வழக்கு நடத்துவதற்காக அவரிடம் நிதி வழங்கப்பட்டது. பெங்களூரில் நிதியளிப்பு கூட்டம் ஒன்று திட்டமிடப்பட்டது. அதற்காகப் பயணமானார் கலைஞர். ஆனால் அங்குச் சென்றதும் அக்கூட்டம் தடைசெய்யப்பட்டதாக அறிவித்தார்கள். ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாரை சாரையாக அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கே வந்து வரிசையாகக் காத்துநின்று அவரைக் கண்டு அவருக்கு நிதியளித்துச் சென்றார்கள். 1976 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் மண்டபங்களில் பேச அனுமதியளிக்கப்பட்டது. அப்படி முதல் கூட்டத்தில் பேச எழுந்துவந்த கலைஞர் "அன்பார்ந்த" என்று துவங்கியதும் மக்கள் கரவொலி எழுப்ப ஆரம்பித்தது ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது அடங்குவதற்கு. கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தி இறங்கி வரத்துவங்கினார். 1976 லேயே வட இந்தியாவில் மிசா அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் தமிழகத்தில் அவ்வாண்டு இறுதிவரை விடுவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து எந்த அடிப்படையில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து டில்லியில் 1976 டிசம்பர் 15 ல் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவுகள் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உலக அரங்கில் எமர்ஜென்சி அடக்குமுறையால் தன் புகழ் குன்றி தலை கவிழ்வதை உணர்ந்த இந்திரா இனியும் தாமதிப்பது தாங்காது என்பதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்து இறுதியில் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி வானொலி மூலம் உரையாற்றி நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் மாதத்தில் தேர்தல் என்று அறிவித்தார். அதன் பிறகு தமிழகத்திலும் அரசியல் மிசா கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். மிசா அராஜகத்தில் தமிழகத்தில் இருவர் தங்கள் இன்னுயிரை விட்டனர். அதில் ஒருவர் சிட்டிபாபு. மிசாவில் சிறை சென்று திரும்பும் அப்பாவி தமிழர்களை வரவேற்றபடி இப்போதைக்கு கலைஞரின் சரித்திரத்தின் முதல் பாகத்தை முடிப்போம். மீண்டும் சந்திப்போம் நீங்களும் நானும் நேசிக்கும் கலைஞரின் சரித்திரம் இரண்டாம் பாகத்துடன்.      வாசித்த உங்களுக்கு என் நேச வணக்கம். அன்புடன்,  கொல்லால் எச். ஜோஸ்