[] 1. Cover 2. Table of contents உயிர்த்திரளின் ஆதார விதி மற்றும் சில கட்டுரைகள் உயிர்த்திரளின் ஆதார விதி மற்றும் சில கட்டுரைகள்   வெ. சுரேஷ்   sureeven@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ச. ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/uyir_thiralin_aathara_vithi_matrum_sila_katturaigal} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ச. ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: S.Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/uyir_thiralin_aathara_vithi_matrum_sila_katturaigal This Book was produced using LaTeX + Pandoc சோ மீ மின்னூல் பகிர்வுகள் - 1 © காப்புரிமைக் கூற்று: காப்புரிமை ஆசிரியருக்கே உரியது. எனினும், படைப்பியக்கப் பொதுவெளியில் இருத்தப்படும் இந்நூலின் உள்ளடக்கத்தை எவரும் விலையில்லா பகிர்வாய் எங்கும் எவ்வடிவிலும் உரிய காப்புரிமைக் குறிப்பளித்து பயன்படுத்திக் கொள்ளலாம். பிற பயன்பாடுகளுக்கு sureeven@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 19.10.2018, விஜயதசமி முகப்பு புகைப்படம் – Bhaskaranaidu  பதிப்பாசிரியர் குறிப்பு நண்பர் சுரேஷிடம் உள்ள ஒரு குணம் வித்தியாசமானது. அதுவரை பேசியதை வைத்து அவர் குறிப்பிட்ட ஒரு கதை, கட்டுரை அல்லது புத்தகம் பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று ஊகித்து வைத்திருப்பேன். ஆனால் அவர் படித்து முடித்ததும் சொல்வது நான் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு முறையும் அவர் ஆச்சரியப்படுத்துகிறார். உண்மையில் சுரேஷ் நடுநிலைவாதியல்ல. அவருக்கு சற்று ஆணித்தரமான விருப்பு வெறுப்புகள் உண்டு- ஆனால் அவை அவரது ரசனை மற்றும் அனுபவத்தின் வெளிப்பாடுகள். மற்றபடி, அவர் எதைப் படிக்கிறாரோ, அந்த விஷயத்தில் தனிப்பட்ட நட்பு அல்லது பகைமை வேலை செய்வதில்லை. “நம்மைப் புகழ்ந்த ஒருவரைப் பற்றி எதிர்மறையாக எழுத வேண்டிய நிலை வந்தால் நாம் என்ன செய்வோம்?” என்று அவர் சென்ற முறை சந்தித்தபோது கேட்டார். சங்கடமான கேள்விதான்.  நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று நினைக்கிறேன், ஆனால் சுரேஷ் ஏதாவது சொல்லி விடுவார் என்பது நிச்சயம். சமநிலையின்மை அவருக்கு ஓர் உறுத்தலாக இருக்கிறது. சில சமயம் அதுவே அவர் எழுதவும் காரணமாகிறது. சரியோ தவறோ, இதுதான் சுரேஷ், இப்படித்தான் அவர் நினைக்கிறார், என்று நம்பிக்கை வைத்து அவர் எழுதுவதை வாசிக்கலாம்.  மிகச் சிலரைக் குறித்தே இப்படிச் சொல்ல முடிகிறது. என்னுரை 2011ம் ஆண்டு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்த சமயம் அது. அந்த ஆண்டின் விருது சு.வெங்கடேசனின் முதல் நாவலான காவல் கோட்டத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை நான் சில மாதங்களுக்கு முன்தான் படித்து முடித்திருந்தேன். அதைப்பற்றி என் அலுவலக நண்பர் பாஸ்கருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “சார், இப்ப பேசிட்டிருந்ததை அப்படியே கம்பியூட்டர்ல அடிச்சு குடுத்துருங்க சார், ஒரு இணைய இதழ்ல இதப்பத்தி ஒரு கட்டுரை கேக்கறாங்க, அனுப்பிச்சிரலாம்,” என்றார். “அய்யயோ, அது எனக்குத் தெரியாது,” என்றேன். “சரி, இல்லன்னா கைல எழுதிக் கொடுத்துடுங்க,” என்றார். நான், சின்ன வயசுல பள்ளியில கட்டுரை எழுதினது தவிர வேற எழுதியதே கிடையாது.என்று பதற, “சும்மா முயற்சி செய்யுங்க சார்,” என்றார். பல ஆண்டுகளாக படித்துக் கொண்டு இருந்தவன் என்றாலும், படித்தது குறித்து எழுதவேண்டும் என்று தோன்றியதே இல்லை, அதுவரை.  ஆனால், அன்று என்னவோ அதைச் செய்தால் என்ன என்று தோன்றியது. அப்படி ஆரம்பித்ததுதான் படித்தவற்றைப் பற்றி எழுதும் பழக்கம். எனது முதல் கட்டுரை ‘காவல் கோட்டம்’ நாவல் பற்றியதுதான். நான் எழுதிக் கொடுக்க, நண்பர் பாஸ்கர், தட்டச்சு செய்ததை ஸ்ரீதர் நாராயணன் ‘பண்புடன்’ சிறப்பிதழில் வெளியிட்டார். பின் ஒரு ஆறு மாதங்கள் வரை நான் எழுதிக் கொடுக்க, அவர் தட்டச்சு செய்து கட்டுரைகள் மெதுவாக இணைய இதழ்களில் வெளிவந்தன. பின் எப்படியோ நானே தட்டச்சு செய்து பழகிக் கொண்டேன். 2012ல் தொடங்கி இந்த ஆறு வருடங்களில், சுமார் 75 கட்டுரைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. அச்சு இதழ்களுக்கு அனுப்பத் தோன்றியதே இல்லை (அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதும் வேறு விஷயம்).  ஒரு விஷயம் குறித்து எழுத வேண்டுமெனில் அவ்விஷயம் குறித்து நமக்குள் உண்டாகியிருக்கும் எண்ணங்களை முறையாக தொகுத்துக் கொள்ள வேண்டும். அந்த முறை எனக்கு 2010 ஆண்டு வரை கைவரவில்லை. அதற்கு முயலவுமில்லை. 2010-11ல் மாறியது என்னவென்றால், எழுத்தாளர் ஜெயமோகனுடனான நேரடி பழக்கம். அவரது தளத்தை நான் 2008 முதல் வாசித்து வந்தாலும், அவரை 2010ல் கோவையில் ஒரு சந்திப்பில் நேரடியாகச் சந்தித்து அறிமுகம் ஆனேன். பின்பு ஊட்டி காவிய முகாமுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் போய் வந்தேன். தனிப்பட்ட முறையில், கோவையில், விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில், என்று நிறைய முறை அவரை நண்பர்களுடன் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது உரையாடல்களின் வழியேதான், எண்ணங்களை தொகுத்துக் கொள்ளும் முறை எனக்கு புலப்பட்டது என்று சொல்லவேண்டும். ஒரு விஷயத்தை பிறர் சொல்லிக் கேட்டதும் அதை அவதானிப்பது, ஒரு உரையாடலில் ஈடுபடுவது, பின் அந்த உரையாடலே ஒரு அழகான கட்டுரையாக உருமாறுவது, என்ற ரசவாதம் நிகழ்வதை பல சமயங்களில் அவரிடம் கண்டேன். அது எனக்கு ஒரு முக்கியமான கதவை திறந்தாற்போல் இருந்தது. பின் படிக்க நேர்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் உருவாகும் கருத்துக்களை எழுதிவிட முடிந்தது. பின் அவரது, ‘சொல்புதிது’ குழுமத்தில், தொடர்ந்து என் கருத்துக்களை முன்வைத்து பல நண்பர்களுடன் உரையாடினேன். கருத்துக்களை ஓரளவு கோர்வையாகவும் பிறர் புரிந்து கொள்ளும்படியும் சொல்ல முடிகிறது என்ற நம்பிக்கை வந்தது. ஜெயமோகனுடனான நேரடி பழக்கம் இருந்திராவிட்டால், நான் எழுதியிருக்க மாட்டேன் என்றே சொல்ல வேண்டும் (இந்தப் பழியையும் அவர் மேல் சுமத்த முடிகிறது!). எனவே அவருக்கு என் நன்றி உரித்தாகிறது. கூடவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.     பின், கோவையில் நண்பர் தியாகு நடத்தி வரும் தியாகு நூல் நிலையத்தில் இந்த காலகட்டத்தில்தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பர்கள் ஒன்று கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பழக்கம் உருவானது. அது இன்றும் வெற்றிகரமாக தொடர்கிறது. அந்த உரையாடல்களும், கருத்து பரிமாற்றங்களும் என் எழுத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. அந்த வகையில், தியாகுவுக்கும், அங்கே வரும் நண்பர்கள், மித்ரன், அமரநாதன், ரமேஷ், அன்பழகன், சிவக்குமார், செந்தில்,, சதீஷ், கோணங்கள் ஆனந்த், பெங்களூர் ஆனந்த், ராமசந்திர சர்மா, கோகுல் பிரசாத், வடகரை வேலன், கார்த்தி சுப்பராமன், ஆகிய நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள், எம். கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், வ.ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உண்டு. தொடர்ந்து என்னை எழுதச் சொல்லிக் கொண்டிருக்கும் நண்பர் பாஸ்கரின் வற்புறுத்தலில் தொடங்கிய பழக்கம் இன்று சுமார் 75 கட்டுரைகளை எழுதும் வரை வந்திருக்கிறது, அதாவது ஏறத்தாழ மாதம் ஒரு கட்டுரையேனும் எனும் விதத்தில். பாஸ்கர், இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் சார் என்றே எப்போதும் ஆதங்கப்படுகிறார். அவர் சொல்வது போல் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்தான். இப்போது ஒரு இரண்டு ஆண்டுகளாக முகநூலிலும் பொழுது கழிகிறது. அதையும் தாண்டித்தான் எழுத வேண்டும், அதற்கு படிக்க வேண்டும், இதற்கிடையே ஒரு சிறுகதையும் எழுதினேன். இனி, அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வீடு, அலுவலக வேலைகள் இருக்கவே இருக்கின்றன. பார்ப்போம், எதுவரை போகுமோ அதுவரை போகட்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். ஒன்று நிச்சயம், எழுதத் துவங்குவதிற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. இள வயதில் ஆரம்பித்துவிட்டால் மிக நல்லது. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. Better Late than Never என்பது இருக்கவே இருக்கிறது. என் கட்டுரைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நான் எப்படியோ அப்படியே அவையும். இதுவரை எழுதியுள்ள சுமார் 75 கட்டுரைகளில் பெரும்பாலானவை, புத்தக அறிமுகம்/ விமரிசனம் என்ற வகையிலேயே அடங்கும். அவற்றைத் தவிர, விளையாட்டு பற்றிய (கிரிக்கெட், டென்னிஸ்) கட்டுரைகளும் உண்டு. சில ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன் என்பதைப் பார்க்கிறேன். இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் கட்டுரைகளில் கிரிக்கெட் பற்றிய மூன்று, டென்னிஸ் பற்றிய ஒன்று, இடம் பெற்றுள்ளன. மீதி கட்டுரைகள் புத்தக அறிமுக/ விமரிசனக் கட்டுரைகள்தாம். ஆனால், புத்தகங்கள் பல்வேறு வகைப்பட்டவை. இவை இலக்கிய படைப்புகள், வரலாறு, பொருளாதாரம், தன்வரலாறு, ஆளுமை என்று கலந்து கட்டி அமைந்திருக்கின்றன. ஆம், நான் ஒரு கலந்து கட்டி ஆசாமி, ஒரு பொருளை எடுத்துக் கொண்டு தீவிரமாக அதிலேயே கவனம் செலுத்திப் படிப்பது என்பது எனக்கு கைவராத கலை. ஒன்று படித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு பொருளில் ஆர்வம் ஏற்பட்டு அங்கே தாவி அதைப்பற்றி படிக்கத் தொடங்கிவிடுவேன். ஆகையால், இந்தக் கட்டுரைகளும் அப்படி கலந்து கட்டி இருப்பதே இயல்பானது. இவை அனைத்துமே, பண்புடன், சொல்வனம், பதாகை, ஆம்னிபஸ் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தவை. வெளியிட்ட அவர்களுக்கும், எழுத வற்புறுத்தி, தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர் [] இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த இடது கை சுழல்பந்து வீச்சாளர் யார் என்று கேட்டால், எந்தவொரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனும் உடனடியாக பிஷென் சிங் பேடி என்று சொல்லிவிடுவான். இன்னும் அதிக வயதானவர்கள், வினூ மன்காட்டின் பெயரைச் சொல்லக்கூடும். இவர்கள் இருவருக்கு பிறகுதான், திலீப் தோஷி, மனீந்தர் சிங், வெங்கடபதி ராஜு, பிரக்யான் ஓஜா, ரவி சாஸ்திரி, போன்றவர்களைச் சொல்ல முடியும். ரகுராம் பட், சுனில் ஜோஷி, போன்றவர்களும் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார்கள். இந்தியாவுக்காக ஆட முடியாமற் போன சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களும் உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள் ராஜேந்தர் கோயல், பத்மகர் ஷிவால்கர், ராஜிந்தர் சிங் ஹான்ஸ், சுனில் சுப்ரமணியம், வாசுதேவன், திவாகர் வாசு. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வங்கர் பாலூ. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனை புள்ளிவிவரங்களே சாட்சி. மொத்தம் 33 முதல் தர ஆட்டங்களில் (இந்தியாவின் டெஸ்ட் மாட்ச் காலத்துக்கு முன்னால் விளையாடியவர்) 179 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். அதைவிட பிரமிக்கத்தக்கது, அந்த விக்கெட்டுகளுக்கான அவரது சராசரி வெறும் 15.21 ஓட்டங்கள்தான். இந்த 33 ஆட்டங்களில் 17 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேலும், ஒரு மேட்சில் 10 விக்கெட்டுகளை 4 முறையும் வீழ்த்திய சாதனை புரிந்தவர் அவர். இதை ஒரு மட்டையாளரின் சாதனையாக மாற்ற வேண்டுமென்றால், 33 ஆட்டங்களில் 17 சதங்களும் 4 இரட்டைச் சதங்களும் என்று சொல்லலாம். 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வங்கர் பாலூ. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். பாலூவின் கல்வி பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் 1892 வாக்கில் பூனா கிரிக்கெட் கிளப்புக்கு மாறியிருக்கிறார். அது ஐரோப்பியர்களுக்கான ஒன்று. அங்கும் அந்த கிளப்பின் ஆடுகளத்தை பராமரிக்கும் பணியையே அவர் செய்து வந்தார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் மாதம் ஒன்றுக்கு 4/-ரூபாய், அவ்வப்போது இடது கை சுழல் பந்து வீச்சிலும் ஈடுபட்ட பாலூவின் திறனைக்கண்ட திரு. டிராஸ் என்பவர், அவரை அங்கு நடைபெறும் வலைப் பயிற்சிகளில் தொடர்ந்து பந்து வீசச் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, அப்போது அங்கு மிகத் திறமையான மட்டையாளராக இருந்த ஜெ.ஜி. க்ரெய்க் என்பவருக்கு அதிகமும் பந்து வீச ஈடுபடுத்தப்பட்டார். கிரெய்க்,  தன்னை பாலூ அவுட்டாக்கும் ஒவ்வொரு முறையும், அவருக்கு எட்டணா கொடுத்தாகச் சொல்லப்படுவதுண்டு. இப்படி ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக வலைப்பயிற்சியில் தன் பந்து வீச்சை சீராக்கிக் கொண்டார் பாலூ. ஆயிரக்கணக்கான பந்துகளை வீசிய பாலூவை ஒரு முறைகூட மட்டை பிடிக்க அந்த ஐரோப்பியர்கள் அனுமதித்ததில்லை. ஏனெனில், அது உயர்குடிகளுக்கு மட்டுமேயான உரிமை. அதனாலேயே மட்டை பிடிக்கும் திறன் இருந்தும், இந்த அனுபவக் குறைவினால், அவரால் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகப் பரிமளிக்க முடியாமற் போய்விடுகிறது. இது பாலூவை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. அச்சமயம், பூனாவில் இருந்த ஒரு இந்து கிரிக்கெட் கிளப், ஐரோப்பிய கிரிக்கெட் கிளப்புடன்  பந்தயத்தில் ஆட முனைந்திருக்கிறது. அந்த பந்தயத்தில், அந்த இந்து கிளப்பின் சார்பாக பாலூவை விளையாட வைக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதிலிருந்த சனாதன பிராமண உறுப்பினர்கள் அதனை எதிர்த்திருக்கின்றனர். ஆனால், அங்கு உறுப்பினர்களாக இருந்த சில தெலுங்கு வகுப்பினர் மற்றும் முற்போக்கான சில பிராமணர்களின் பிடிவாதத்தால் பாலூ, அந்த இந்துக் கிளப்பிற்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூனா கிளப்பின் இந்தச் செயல் அன்று பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பூனாவின் முற்போக்கு சக்திகளுக்கு பெரும் உற்சாகத்தையும், பூனாவின் இளைஞர்களிடையே சமத்துவம் குறித்த புதிய விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது. மைதானத்தில் மற்றவருக்கு சமமாக பாலூ விளையாடினாலும், அதற்கு வெளியே ஒரு போதும் மற்றவர்களுக்கு சமமாக நடத்தப்பட்டதில்லை. விளையாட்டு வீரர்களான ஐரோப்பியர்களும் இந்து உயர்சாதியினரும் பெவிலியனுக்குள்ளே உயர்தர பீங்கான் தட்டுகளிலும் கோப்பைகளிலும் உணவருந்தினாலும் பாலூவுக்கு எப்போதும் பெவியனுக்கு வெளியே மண் குடுவைகளும் தட்டுகளுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அவரது உயர் தர பந்து வீச்சும் அவர் எடுத்த விக்கெட்டுகள் தந்த வெற்றிகளும் அவரை அவரது அணிக்கு இன்றியமையாத ஒரு வீரராக்கின. மெல்ல மெல்ல, அவரது திறன், அவரது சாதியின் காரணமாக அவர் இழிவுபடுத்தப்பட்ட மனோபாவத்தை மாற்றி அணிக்குள் அவருக்கு மற்றவர்களுக்கு சமமான அந்தஸ்தையும் வழங்கியது. 1896ம் ஆண்டு பாலூ தன் குடும்பத்துடன் பம்பாய் நகருக்கு குடிபெயர்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று. அப்போது பூனாவில் பரவிய பிளேக் நோய். இன்னொன்று அவரது விசேஷ திறனுக்கு ஒரு பெரிய நகரம் வழங்கக்கூடிய வாய்ப்புகள். பம்பாயில், ராணுவப் பணியில் சேர்ந்த பாலூ, அங்கு புதிதாக துவக்கப்பட்ட பராமனந்த தாஸ் ஜீவன்தாஸ் இந்து ஜிம்கானா கிளப்புக்காக விளையாட அதன் அணித்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிச்சயமாக நிறைய எதிர்ப்புகளையும் மீறித்தான் என்பதை சொல்லவே வேண்டாம். ராணுவ சேவை முடிந்து, வெளியே வந்த பாலூவை பம்பாய் பிரார்- மத்திய இந்திய ரயில்வே கம்பெனி, அரவணைத்துக் கொண்டது. அதன் அணிக்காகவும் முன்சொன்ன கிளப்புக்காகவும் விளையாடினார் பாலூ. அந்த சமயத்தில்தான், 1906ம் ஆண்டு துவங்கி 1942-43ம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் அட்டவணையில் மிக முக்கியமாக விளங்கிய பம்பாய் நாற்தரப்பு போட்டி (Bombay Quadrangular ) எனும் தொடர் துவங்கியது. முதலில் பம்பாய் ஐரோப்பியர்களுக்கும் பார்ஸிகளுக்கும் இடையேயான போட்டியாகத் துவங்கி, பின் ஒரு இந்து அணியும் பங்கேற்க முத்தரப்பு போட்டியாக மாறியது. 1906ல் முதன் முறையாக, இந்து அணி ஒன்று பார்சி அணியை போட்டியில் சந்திக்க அழைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களால், பார்சி அணி அந்த அழைப்பை ஏற்கவில்லை. அப்போது பம்பாய் ஜிம்கானா அணி எனும் ஐரோப்பிய அணி அந்த அழைப்பை ஏற்று இந்து அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக, இந்து அணி, 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐரோப்பிய அணியை தோற்கடித்தது. அந்த அணியின் நட்சத்திரம் பாலூதான். அங்கிருந்து துவங்கிற்று பாலூவின் புகழ்ப் பயணம். 1907ல் இந்துக்கள் அணி, பார்சிக்கள் அணி, ஐரோப்பியர்கள் அணி ஆகியவற்றுக்கான முத்தரப்பு போட்டியாக மாறுகிறது இது. 1906-07ல் தொடங்கி, 1911-12 வரை தொடர்ந்து இந்துக்களின் அணியே வெற்றி பெற்றது. பிறகும் அதன் ஆதிக்கம் தொடர்ந்தது. இந்த அனைத்து வெற்றிகளின் பின்னும் மிக முக்கியமான சக்தியாக இருந்தவர் பாலூதான். இது தவிர 1911ல் இங்கிலாந்து சென்று விளையாடிய ஒரு இந்திய அணியிலும் இடம் பெற்றார் பாலூ. மிக மோசமாக விளையாடி படுதோல்வியடைந்த அந்த அணியிலும் மிகச் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்தி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது திறனுக்காக பல ஆங்கிலேய கவுண்ட்டி அணிகள் தமது அணியில் அவருக்கு வாய்ப்பளிக்க முன்வந்தபோதிலும், அவர் அவற்றை ஏற்கவில்லை. அதன் பின் பாலூ 1922ல் ஒய்வு பெறும் வரை, இந்து அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரராகத் திகழ்ந்து அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தார் பாலூ (இதற்கிடையே 1912ல் ஒரு முஸ்லீம் அணியும் சேர்க்கப்பட்டு நாற்தரப்பு போட்டியாக மாறுகிறது இந்த ஆட்டம்). இத்தனை பெரிய சாதனையாளராக இருந்தும், அந்த அணியை தலைமை தாங்கி நடத்த தடையாக அவரது சாதி இருந்து வந்திருக்கிறது. 1913லிருந்தே பல குரல்கள் அவரை அந்த அணியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த எழுந்தாலும், பெரும்பாலும் பிராமணர்கள் நிறைந்திருந்த அந்த கிளப் அதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை.  1920ஆம் ஆண்டு அவர் வாழ்வில் முக்கியமான ஒன்று. அவரது சகோதரர், பல்வங்கர் கண்பத் காலமானார். அதே ஆண்டில், முஸ்லீம் அணிக்கு எதிரான போட்டியில் பாலூ அணியில் இருந்து நீக்கப்படுகிறார். அதற்கு அவரது வயது காரணமாக சொல்லப்படுகிறது. அது பெரும் சர்ச்சையைக் கிளப்புகிறது. மக்களும் தேர்வாளர்களும் இந்த முடிவினை ஏற்றுக் கொள்வதில்லை. வேறு வழியில்லாமல் பார்ஸிகளுக்கு எதிரான அடுத்த போட்டியில் பாலூ சேர்க்கப்படுகிறார். அப்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கிறது. அணியின் வழக்கமான தலைவர் எம். டி. பய் உடல் நலம் குன்றிய நிலையில், அவருக்கு பதிலாக இன்னொரு பிராமண மட்டையாளரான ட.பி. தியோதர் (தியோதர் கோப்பைக்கு அந்தப் பெயர் வழங்கிட காரணமாக விளங்கிய ஆட்டக்காரர்), அணியின் தலைவராக அறிவிக்கப்படுகிறார். இதைக்கண்ட பாலூவின் சகோதரர்களும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் ஆட்டக்காரர்களுமான விட்டலும், சிவராமும் அணியிலிருந்து விலகுகின்றனர். இது பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்துகிறது. நல்ல வேளையாக, பந்தயத்துக்கு முன் உடல் நலம் தேறிய எம்.டி. பய் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கிறார். அவருக்கு பதிலாக தலைவராக அறிவிக்கப்பட்ட தியோதர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, பாலூ துணைத் தலைவராக இடம்பெற்றார் அணியின் தலைவராக இருந்த எம்.டி. பய் (இவரும் ஒரு பிராமணர்) அந்த ஆட்டத்தின்போது வேண்டுமென்றே நீண்ட நேரம் களத்தில் இறங்காமல், துணைத் தலைவரான பாலூ, களத்தில் தலைமை தாங்க வழி வகுத்தார். அதன் பின் பாலூவின் இளைய சகோதரரான பல்வான்கர் விட்டல் 1923ம் ஆண்டு இந்து அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1926 வரை வெற்றிகரமான தலைவராக விளங்கினார். பாலூவின் வாழ்வில் மிக முக்கியமாக விளங்கிய இந்தத் தொடர் இந்திய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முக்கியமாக மஹாத்மா காந்தி இந்தத் தொடருக்கு எதிராக குரல் கொடுத்தார். மத அடிப்படையிலான அணிகளைக் கொண்டு விளையாடப்படும் இந்த தொடர், வேற்றுமைகளையும், இந்து-முஸ்லீம் வெறுப்பையும் வளர்த்து வந்தது என்பது அவரது குற்றச்சாட்டு. 1937ல் இந்த நான்கு அணிகளின் கூடவே இதர பிரிவினர், பௌத்தர்கள், யூதர்கள், இந்திய கிறித்துவர்கள், ஆகிய பிரிவினரைக் கொண்ட இன்னொரு அணியும் இந்தத் தொடரில் பங்கேற்க, pentangular தொடராக மாறுகிறது. ஆனால், இந்திய சுதந்திரம் நெருங்கும் சமயத்தில் ஏற்பட்ட தீவிரமான மத வேற்றுமைகள், கலவரங்கள் போன்றவற்றுக்கு இந்தத் தொடரும் ஒரு காரணமாக கருதப்பட்டு 1946ல் இந்தத் தொடர் கைவிடப்பட்டு, பிரதேசவாரியான அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது ஒரு தனி வரலாறு. அது ஒருபுறமிருக்க, நாம் பாலூவைத் தொடர்வோம். தன் விளையாடும் நாட்களின் இறுதிக் காலத்தில் அம்பேத்கரை சந்தித்து அவருக்கு நண்பராகிறார் பாலூ. அரசியல் ஆர்வமும் அவரைத் தொற்றிக் கொள்கிறது. தலித் சமூகத்தின் பெரும் நாயகனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பாலூவை அடையாளம் காண்கிறார் அம்பேத்கர். பம்பாய் சைடென்ஹாம் கல்லூரியின் அவ்வளவு பிரபல்யமில்லாத விரிவுரையாளரான அம்பேத்கர், பாலூவுக்கு பாராட்டு விழாக்கள் எடுத்து சிறப்பித்திருக்கிறார். ஆனால் காலப்போக்கில், அம்பேத்கரிடமிருந்து மெல்ல விலகி காந்தியின் ஆதரவாளராகிறார் பாலூ. 1932ல் வழங்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்திற்கெதிரான காந்தியின் உண்ணாவிரதத்தினை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் பாலூ. சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரின் பாதையை விடவும் காந்தியின் வழியே சிறந்தது என்றும் நம்புகிறார் அவர். பின் இந்து மஹாசபாவில் ஐக்கியமாகிறார் பாலூ. பாலூவும் தமிழகத்தின் எம்.சி.ராஜாவும் இணைந்து அம்பேத்கரை எதிர்த்து ராஜா –மூஞ்சே ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட ஒன்றை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக, வேறு வழியின்றி காந்தியுடன், சமரசத்துக்கு இறங்கி வந்த அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். அதன் பின் 1933ல் பம்பாய் முனிசிபல் கவுன்சில் தேர்தல்களில் இந்து மகாசபாவின் வேட்பாளராக களத்தில் இறங்கும் பாலூ சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். பின் மீண்டும் 1937ல் புதிதாக உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியில், அம்பேத்கருக்கு எதிராக போட்டியிட்டு இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். தலித்துகள் வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறை காரணமாக இந்து சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகி விடக்கூடாது என்றும் அந்த முறை அமலுக்கு வந்தால் அது நடக்கும் என்றும் தீர்மானமாகக் கருதிய காந்தியின் கருத்தை ஆதரித்த பாலூ,காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடாமல் ஏன் இந்து மகாசபையின் வேட்பாளராக நின்றார் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இன்று வலுப்பெற்றிருக்கும் இந்து அமைப்புகளும் அவரை ஒரு தலித் முன்னோடியாக ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்பதும் விடை இல்லாத கேள்வியாக இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் விடை அவரது முழுமையான ஒரு வாழ்க்கை வரலாறு வெளியாகும்போது தெரிய வரலாம். இப்போதைக்கு இவரைப்பற்றி நசிருதின் ஷா தொகுத்தளித்து சசி தரூர், போரியா மஜூம்தார் ஆகியோர் பங்கு பெற்றிருக்கும் 6 நிமிட ஆவணப்படம் ஒன்று யூ. ட்யுபில் உள்ளது. https://www.youtube.com/watch?vXBuTo0AsT1M இதற்குப் பிறகான பல்வங்கர் பாலூவின் வாழ்க்கை குறித்து அதிக விவரங்கள் பொது வெளியில் இல்லை. ஜூலை, 1955ல் அவர் மறைந்தபோது, இந்திய பாராளுமன்றத்தின் மற்றும் பம்பாய், மாநில சட்டசபையின் அனைத்து தலித் உறுப்பினர்களும் மும்பை சாண்டா க்ரூஸ் மயானத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் என்ற தகவல் மட்டும் கிடைக்கிறது (இந்தக் கட்டுரையும் கூட ராமச்சந்திர குஹாவின் புத்தகம் ஒன்று மற்றும் விக்கிப்பீடியா கட்டுரையின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கிறது. பாலுவைப் பற்றிய போதுமான தகவல்கள் ஆங்கில மொழியிலோ, தமிழிலோ பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை). பல்வங்கர் பாலூவின் கிரிக்கெட் வாழ்வு/ சாதனைகள் குறித்து ராமச்சந்திர குஹாவின் சிறந்த விளையாட்டு எழுத்துக்கான பரிசு பெற்ற “A Corner of a Foreign Field — The Indian History of a British Sport” எனும் நூலில் விரிவாகக் காணலாம். இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை விவரிக்கும் அந்த நூலில் பல்வங்கர் பாலூவே கதாநாயகன் என்றுகூட சொல்லலாம். சென்ற நூற்றாண்டின் மிகத் துவக்கத்திலேயே ஒரு தலித் வீரர் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்தியும், புகழ் பெற்று விளங்கியிருந்தும்கூட, இன்றளவும் இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தலித் வீரர்களின் எண்ணிக்கை ஒரு கை விரல்களின் அளவுகூட இருக்காது என்பதே உண்மை. பல்வங்கர் பாலூவின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் ஏதும் ஆங்கிலத்திலோ மராத்தியிலோ வெளிவந்திருக்கிறதா என்று தேடுவதும், அப்படி இருக்கும் பட்சத்தில் அது தமிழில் மொழி பெயர்க்கப்படுவதும் மிகவும் அவசியமானவை. இன்றைய சூழலிலும் நிலவும் சாதிய உணர்வுகள் மற்றும் ஒடுக்குமுறையின் விளைவாக தன்னம்பிக்கையிழந்து மனமொடிந்து உயர்நிலைக் கல்வி பயிலும் தலித் மாணவர் தற்கொலைகள் சில செய்திகளாக வருகின்றன. தலித்துகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தபோதிலும் கல்வியிலும் வாழ்வாதார வளங்களிலும் முன்னேறும்போது பல்வகைப்பட்ட எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி உள்ளது. இதை பிறச் சமூக இளைஞர்களும் புரிந்து கொள்ளும் வகையில், பல்வங்கர் பாலூ போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியது அவசியம். சொல்வனம், மார்ச், 2017 ஒளிப்படம்: விக்கிபீடியா சேவாக் - முல்தானின் சுல்தான் [] இறுதியில் சேவாகிற்கும் இப்படித்தான் முடிந்திருக்கிறது. ஒரு சர்வதேச போட்டியில், அரங்கு நிறைந்த மைதானத்தில், விசிறிகளின் முன்,  அமர்க்களமான சதமோ அல்லது நினைவில் நிற்கும் ஷாட்களைக் கொண்ட ஒரு ஆட்டமோ இல்லாமல் விஸ்வநாத், டிராவிட், லக்ஷ்மண் போன்ற பிற மகத்தான ஆட்டக்காரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வைப் போலவே, டெஸ்ட் போட்டி மைதானத்துக்கு வெளியே முடிந்திருக்கிறது. நினைவில் நிற்கும் கிரிக்கெட் வாழ்வினைக் கொண்டவர்கள் எல்லோருக்குமே நினைவில் நிற்கும் பிரிவு உபசாரம் அமைவதில்லை. அதிலும் இப்போது இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா திணறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சேவாக் மைதானத்துக்கு வெளியே ஓய்வு பெறுவதில் ஒரு முரண் உள்ளது.  இந்திய மட்டை வரிசையை பலப்படுத்த சேவக்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல கடிதங்களை விளையாட்டு இணைய இதழ்களில் பார்க்க முடிகிறது. இதுவே அவர் இன்னும் காலாவதியாகி விடவில்லை என்பதற்கு சாட்சியம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களின் பிரியத்துக்கும் , மரியாதைக்கும் உரிய வீரர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் அவர்களின் பேரபிமானத்துக்குரிய, காதலுக்குரிய வீரர்கள் என்று கணக்கெடுத்தால், கடந்த 35 வருடங்களில் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகியோரே முன்னிற்பர். இவர்களுள் கபில் தேவ் முதன்மையாக ஒரு பந்து வீச்சாளர். சச்சின் தன் கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி வரையில் அதிரடி ஆட்டக்காரர் என்றாலும், பிற்பகுதியில் சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சேவாக் தன் முதல் சர்வதேச ஆட்டத்திலிருந்து கடைசி ஆட்டம் வரை தன் பாணியை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. வெற்றியோ தோல்வியோ அவரது ஆட்டத்தின் தன்மையும் பாணியும், ஒரு போதும் மாறாதது. சொல்லப் போனால் சேவாக்கின் பிரவேசமும் ஒரு ஆல்ரவுண்டர் என்ற அளவிலேயே இருந்தது.  ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் என்பதைவிட, Bits and pieces ஆட்டக்காரராகவே அவர் இந்திய ஒரு நாள் அணிக்குள் வந்தார். கொஞ்சம் ஆப் ஸ்பின் பந்துவீச்சு, மற்றும் அதிரடியாக விளையாடக் கூடிய பின்வரிசை ஆட்டக்காரராகவே அவர் அறிமுகமானார். முதலிரண்டு போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை. அவர் தன் முத்திரையைப் பதித்தது, 2001 மார்ச்சில் மிக பலம் வாய்ந்த ஸ்டீவ் வாஹின் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக. அந்த ஒருநாள் பந்தயத்தில் சேவாக் 54 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார். இது தவிர, ஹெய்டன், ஸ்டீவ் வாஹ், மற்றும் டேமியன் மார்ட்டின் ஆகிய முன்னணி மட்டையாளர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த புள்ளி விவரங்களை விட முக்கியமானது, அவர் அடித்து ஆடிய விதம். அதே வருடத்தின் நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, தென்னாப்பிரிக்க மண்ணில் தன் முதல் சதமடித்தார். அந்த பந்தயத்தில் சொற்ப ஓட்டங்களிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்துவ்விட்டபோதும், சச்சினுடன் ஜோடி சேர்ந்து சேவாக் ஒரு சதம் விளாசினார். அப்போது பார்த்தவர்கள், ஆடுகளத்தின் இரண்டு பக்கங்களிலும் சச்சினே விளையாடுவதைப் போன்று உணர்ந்தனர். சேவாக்கின் ஆட்டமும் தோற்றமுமேகூட சச்சின் போலவே இருந்தது. ஆனால் சேவாக் தனித்துவமிக்க ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மட்டையாளர் என்பது விரைவிலேயே தெளிவாகியது. இந்திய மட்டையாளர்கள் எப்போதுமே தமது மணிக்கட்டின் சுழற்சிக்கும் லாகவத்துக்கும் ப்ரசித்தமானவர்கள். மற்ற பிரபல மட்டையாளர்களின் இந்த மணிக்கட்டுத் திறன், முக்கியமாக கால் திசையில் பந்தை திருப்பக் கூடியதாகவே இருக்கும். ஆனால் சேவாக் அந்த ஒரு ஆட்டத்தில், ஆப் சைடில் பந்துகளை விரட்டத் தன் மணிக்கட்டுகளை உபயோகித்த விதம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. மிடில் ஸ்டம்பில் கூட அல்ல லெக் ஸ்டம்பிலும் அதற்கு வெளியிலும் வந்து விழுந்த பந்துகளைக் கூட அவர் ஆப் சைடில் பாயிண்ட் மற்றும் , தேர்ட் மான் ஆகிய நிலைகளுக்கு நடுவே எல்லைக் கோட்டுக்கு விரட்டினார். உண்மையில் முதலில் அப்படி ஆடிய சில ஷாட்டுகள் மட்டையின் விளிம்பில் பட்டுப் போனதாகவே நினைத்தேன் . ஆனால் தொடர்ந்து பார்த்தபோதுதான், அவர் மட்டையின் முகத்தை தன் மணிக்கட்டுகளை உபயோகித்துத் திருப்பும் அந்த லாகவத்தைப் பு ரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் வாஹுமே கூட பிரமித்துப் போனார். ஒரு கட்டத்தில் அவர் அந்த குறிப்பிட்ட இடத்தில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டுவதை தடுக்க இரண்டு தடுப்பு வீரர்களை அமர்த்தினார். ஆனால் அந்த இருவரையும் மீறி சேவாக் பந்தை பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டே இருந்தார். அன்று ஆரம்பமானது சேவாகுடனான பிணைப்பு. ஆஹா, டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் எத்தனை எத்தனை அற்புதமான ஆட்டங்கள்! சேவாக்கை ஒரு தனிச் சிறப்பு மிக்க மட்டையாளர் ஆக்குவது என்ன என்று பார்ப்போம். பொதுவாக சிறந்த மட்டையாளராக ஆவதற்கு இள வயதிலிருந்தே பயிற்சியாளர்கள் மட்டையாளர்களை Vயில் ஆடச் சொல்லுவது வழக்கம். இந்த V என்பது, மட்டையாளரின் காலடியில் தொடங்கி, மிட் ஆன், மற்றும் மிட் ஆப் என்ற நிலைகளுக்கு இரு கோடுகள் போட்டால் வருவது. பந்தை இந்த V க்குள் மட்டுமே செலுத்தி ஆட முயற்சிக்கும்போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் குறையும் என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் தனிச்சிறப்பு வாய்ந்த சேவக் போன்ற மட்டையாளர்களுக்கு இது பொருந்தாது. அப்படிச் சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும்; சேவாக்கிற்கும் ஒரு V உண்டு, அது அவர் நிற்கும் இடத்திலிருந்து கவர் பாய்ண்ட் என்ற நிலைக்கும் தேர்டு மான் நிலைக்கும் இரு கோடுகள் போட்டால் வரக்கூடிய ஒரு பிரத்தியேக V . இந்த V க்குள் பந்தை அடித்து தவறாமல் எல்லைக் கோட்டுக்கு விரட்ட மிக முக்கியமானது கூர்மையான கண்பார்வை, பந்து வீசப்படும் அளவை மிக விரைவில் அனுமானிக்கும் திறன். மிக இளக்கமான மணிக்கட்டுகள் மற்றும் மிக முக்கியமாக கண்ணுக்கும் கைகளுக்கும் இடையேயான இணக்கம். இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார் சேவாக், இந்த நிலைகளுக்குள் பந்தை தரையோடு மட்டுமல்ல, நினைத்த மாத்திரத்தில் அந்தத் தடுப்பு வீரர்களின் தலைக்கு மேலும் தூக்கி அடிக்கும் திறன் பெற்றிருந்தார் அவர். அது மட்டுமல்லாமல் மைதானத்தின் எந்த இடத்திற்கும் பந்தை விரட்டக்கூடிய ஒரு ஆல்ரவுண்ட் ஆட்டத்திறனும் அவருக்கு உண்டு. ஒரு நல்ல மட்டையாளரின் துவக்க அசைவுகள் என்பது சற்றுப் பின்னால் நகர்ந்து ஸ் டம்புகளின் குறுக்காக வருவது என்பதே கிரிக்கெட்டின் பாலபாடம் (Back and Across Movement). ஆனால் சேவாக்கின் எந்த ஆட்டத்திலும் அவர் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை. நின்ற இடத்தில் நிலையாக நிற்பதும், பந்தின் அளவையும் திசையையும் அனுமானித்து, தன் இடது காலை விலக்கிக்கொண்டு, கைகளை வீசி அடிக்க இடம் உண்டாக்கிக் கொள்வதுமே அவரது மட்டையடி உத்தி.  இந்த விதத்தில் அவரே அவருக்கு ஒரு பயிற்சிப் புத்தகம் என்று சொல்லலாம். கிரிக்கெட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் சி.எல்.ஆர். ஜேம்ஸ் மேற்கிந்திய ஆட்டக்காரர் பிரான்க் வோரலின் ஆட்டத்திறன் பற்றி இப்படி கூறுவார். “அவரிடம் என்னென்னத் திறன்கள் இருந்தனவோ அவை அனைத்தையும் அவர் முழுமையாக பயன்படுத்தினார். அவரிடம் எந்தத் திறன்கள் இல்லையோ அது அவருக்குத் தேவைப்படவில்லை” என்று. அந்தக் கூற்று முழுமையாக சேவாக்கிற்கும் பொருந்தும். 1980கள் வரை உலகெங்குமே துவக்க ஆட்டக்காரர்கள் என்போர், காவஸ்கர், பாய்காட், போன்று நிதானமாக விளையாடக் கூடியவர்களாகவே இருந்தார்கள்,மேற்கிந்தியத் தீவுகளின், பிரெட்ரிக்சும், க்ரீனிட்ஜுமே விதிவிலக்கு எனலாம். இந்தியாவைப் பொருத்தவரை பாரூக் இஞ்சினீர் துவக்க ஆட்டக்காரராக இறங்கிய சமயங்களில் வேகமாக ரன் எடுக்கக் கூடியவராக இருந்தார். ஆனால் அப்படி அமைந்த சந்தர்ப்பங்கள் குறைவு. 80களின் மத்தியில் ஸ்ரீகாந்த் வந்தார். அடித்து ஆடும் ஒரு புதுப்பாணி ஆட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்குப் பின் நவ்ஜோத் சிங் சித்துவும், ஒரு ஆக்ரோஷமான துவக்க ஆட்டக்காரர் என்றாலும், அவர் இரண்டே இரண்டு கியரில் விளையாடக் கூடியவர். போட்டால் கட்டை அடித்தால் சிக்ஸர் என்று. ஸ்ரீகாந்தின் ஆட்டம் மிகவும் chancy என்று சொல்லக் கூடியதாக இருந்தது.  சேவாக் துவக்க ஆட்டக்காரராக டெஸ்ட் போட்டிகளில் இறங்குவதற்கு முன், சிவசுந்தர் தாஸும் தீப் தாஸ் குப்தாவுமே இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்தனர். இவர்களுக்குப் பின் வருபவர் ராகுல் டிராவிட். அந்த காலகட்டத்தில், நானெல்லாம், இந்தியாவின் மட்டை ஆட்டத்தைப் பார்க்க இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்து சச்சின் இறங்கினார் என்று தெரிந்தால் மட்டுமே தொலைக்காட்சியை ஆன் செய்வேன். அந்தத் தருணத்தில்தான் 2002ல் , இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், திடீரென்று சேவாக்கை துவக்கக் ஆட்டக்கரராக களமிறக்கினார், கங்குலி. அதற்கு முன் அவர் இங்கிலாந்தில் விளையாடியதில்லை. துவக்க ஆட்டக்காரராக, இறங்கியதுமில்லை. ஆனால் அதுவெல்லாம் அவருக்கு பொருட்டேயல்ல. அந்த ஆட்டத்தில் 96 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அந்த நாளின் ஆட்டம் முடிய ஓரிரு ஓவர்களே இருந்த தருவாயில், இடக்கை சுழல் பந்து வீச்சாளர் ஆஷ்லி கைல்சின் ஒரு ஓவரில் ஏற்கெனவே 10 ரன்களுக்கு அவரை விளாசியிருந்தபோதும், மீண்டுமொரு சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்தார் சேவாக். அதுதான் சேவாக் என்று கட்டியம் கூறிய ஆட்டம் அது. அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே துவக்க ஆட்டக்காரராக தன முதல் சதத்தை அடித்தார். அன்றிலிருந்து இந்தியாவுக்கு துவக்க ஆட்டக்காரரகவே களமிறங்கினார். பின்னர் நிகழ்ந்தது வரலாறு. தன் ஆட்டத்தின் மூலம் சரிந்து விழுந்து கொண்டிருந்த டெஸ்ட் ஆட்டத்தின் மீதான பார்வையாளரின் கவனத்தையும் சேவாக் மீட்டெடுத்துக் கொடுத்தார் என்றே சொல்லலாம். பின்னர் சௌரவ் கங்குலி தன் தலைமைக் காலத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி நினைவு கூர்கையில், சேவாக்கை துவக்க ஆட்டக்காரராக மாற்றியது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார். இந்தப் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் அமைந்த மட்டையாளர் வரிசையே இந்திய  கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்று எனக் கூறலாம். சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மண் மற்றும் சேவாக் ஆகிய இந்த பஞ்சரத்னங்கள் இந்திய கிரிக்கெட்டின் ஒளிமிகுந்த பக்கங்களை எழுதினார்கள். இதில் மற்ற நால்வரைக் காட்டிலும் மட்டைத் தொழில்நுட்பத்தில் குறைந்தவர் என்று கருதப்பட்டார் சேவாக். ஆனால் இந்த காலகட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளின் பின்னணியில், முக்கியமாக இருந்தது அவரின் ஓட்டங்களும் அவற்றை அவர் பெற்ற வேகமுமே என்று சொல்ல வேண்டும். இந்திய மட்டையாளர்கள் ஒரு இன்னிங்க்சில் அடித்த 10அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் மூன்று 319, 309, 293, ஸ்கோர்கள் சேவாக் அடித்தவை. தவிர அவரது சராசரியான 49.34 என்பதும் கங்குலி மற்றும் லக்ஷ்மண் ஆகியோரை விடவும் அதிகம். அவர் ரன் குவிக்கும் வேகம் அவரை ஒரு நாள் போட்டிகளுக்கும், 20/20 போட்டிகளுக்கும் மிக மிகப் பொருத்தமானவர் என்று நினைக்க வைத்தாலும், ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் என்றாலும், டெஸ்ட் போட்டிகளிலேயே அவர் அதிகம் சோபித்தார் என்றே சொல்ல வேண்டும். இதில் அவர் அவர் காலத்தின் இன்னொரு அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கிற்கு நேரெதிர். கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஒருவரது ஆட்டத்திறனைக் கணிக்க எண்கள் மற்றும், புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல என்பது வழக்கு.சேவாக்கின் ஆட்டத்தின் எண்களும், புள்ளி விவரங்களுமே அவர் இந்தியாவின், உலகத்தின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று நிரூபிக்கும் என்றாலும், அவை முழுக்கதையை , அவர் ஆடும்போது ரசிகர்களுக்குக் கிடைக்கும் அந்த விறுவிறுப்பையும், அனுபூதியையும் சொல்லவே சொல்லாது. இவற்றையெல்லாம் மீறி இன்னுமோர் விஷயம் உண்டு. இரு நாடுகளுக்கிடையேயான ,ஒரு விளையாட்டுப் போட்டி என்பது சுடுதல் இல்லாத போர் என்று கருதப்படுவதுண்டு (War minus shooting ). அதிலும் இந்தியா- பாகிஸ்தான், இந்தியா-இலங்கை ஆகிய போட்டிகளில் ஒரு கூடுதல் கூர்மை உண்டு. அதிலும் 80களில் பாகிஸ்தானின் சஹீர் அப்பாஸ், மியாந்தாத், சலிம் மாலிக், முடசர் நாசர், போன்ற மட்டையாளர்களிடம் எல்லாம், இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் பட்ட அவஸ்தைகள் ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் விசிறிக்கு ஏற்படுத்திய காயங்களுக்கெல்லாம், சேவாக் முல்தானில் அடித்த அந்த 309 ரன்கள் அருமருந்தாக அமைந்தது. அதே சமயம், இந்திய மட்டையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னர், சக்லைன் முஷ்டாக்கை அந்த ஆட்டத்தில் சேவாக் எதிர்கொண்ட விதத்தில், அவர் 200 ரன்களுக்கும் மேல் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அந்தப் பந்தயமே அவரது டெஸ்ட் வாழ்வின் கடைசி ஆட்டமாகவும் முடிந்தது. பாகிஸ்தானுடன் மேலும் இரு இரட்டைச் சதங்களையும் அடித்தார் சேவாக். அதைப் போலவே இலங்கையில் நம் இந்திய மட்டையாளர்கள் சோபித்தது குறைவுதான். 2008ல் புதிதாக வந்த மர்மப் பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிசும் பழைய பகைவரான முரளிதரனும் மற்ற இந்திய மட்டையாளர்களை திணறடித்தபோதும், சேவாக அவ்விருவரையும் அலட்சியமாக எதிர்த்து ஆடினார். ஒரு போட்டியில் இந்திய முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோரான 330 ரன்களில் அவர் மட்டுமே 201 ரன்கள் குவித்திருந்தார். அந்த போட்டியில் இந்தியா ஒரு ஆறுதல் வெற்றியையும் பெற்றது. பின்னர் இலங்கை அணி இந்தியா வந்தபோது மும்பையில் அதற்கெதிராக அவர் பட்டையைக் கிளப்பி அடித்த அந்த 293 ஓட்டங்களும் ஒரு அலாதி திருப்தியைத் தந்தன. 2007 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா முதல் சுற்று ஆட்டத்தில்  வங்கதேசத்திடம் வீழ்ந்தது. பின்னர் இலங்கையிடமும் தோற்று காலிறுதிக்குகூடத் தகுதி பெறாமல் திரும்பி வந்தது. மீண்டும் 2011 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வங்க தேசத்துடன் டாக்காவில் மோதியது இந்தியா. 2007ன் நினைவுகள் மறையவில்லை. ஆனால் அந்த ஆட்டத்தில் சேவாக் 175 ரன்கள் குவித்தார். இந்தியா எளிதாக வென்றது. பழிக்குப்பழி என்பது போல் இலங்கையை இறுதி போட்டியில் சந்தித்து கோப்பையையும் வென்றது.  அவர் காலத்தில் உலகிலேயே சிறந்த அணியாக விளங்கிய ஆஸ்திரேலியா அணிக்கெதிராகவும் சேவாக் சோடை போனதில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை, ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக அடித்த இரு சதங்கள். 2003-4 தொடரில் மெல்போர்னில் அவர் அடித்த அந்த 195 ரன்கள் ஒரு விதம் என்றால், 2007-8 தோடரில் அடிலைடில் இரண்டாவது இன்னிங்க்சில் அடித்த சதம் முற்றிலும் வித்தியாசமானது. அந்தத் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. தலைவர் கும்ப்ளேவின் வற்புறுத்தலின் பேரில் கடைசியாக சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. பின் பெர்த்தில் நடந்த அந்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த வெற்றியில் அவர் இரண்டு இன்னின்க்சிலும் கணிசமாக ஓட்டங்கள் எடுத்து தன் திறமையை நிரூபித்தார். நான்காவது போட்டி அடிலெய்டில் . இரு அணிகளுமே முதல் இன்னிங்க்சில் ஏறக்குறைய சமமான ஸ்கோரை எடுத்திருந்தன. சொற்ப ரன்களே முன்னிலையில் இருந்த இந்தியா சில விக்கெட்டுகளை இழந்து, தோற்று விடும் அபாயத்தில் இருந்தபோதுதான் சேவாக் இதுவரை அவர் ஆடியிராத ஒரு அற்புதமான தற்காப்பு ஆட்டம் ஒன்று ஆடி ஆட்டம் காக்கும் சதம் ஒன்றை அடித்தார். ஒரு விதத்தில் அதுவே அவரது சிறந்த சதம் என்று கூட சொல்லலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரடித்த 319 ரன்கள் ஒரு சாதனை என்றால், சதத்தில் முடியாத ஒரு ஆட்டமும் அவரது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று. சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் நான்காவது இன்னிங்க்சில் 387 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கியது இந்தியா. நிச்சயம் தோல்விதான் என்று நினைத்த சமயத்தில், புயல் வேகத்தில் 68 பந்துகளை மட்டுமே சந்தித்து 83 ரன்கள் அடித்து வெளியேறினார் சேவாக். அந்த ஆட்டம் உருவாக்கிய உற்சாக வேகத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஊக்கம் அதல பாதாளத்திற்கு சரிந்தது. பின் டெண்டுல்கர் சதமடிக்க இந்தியா ஒரு நம்ப முடியாத வெற்றியைப் பெற்றது. சச்சின் அந்த வெற்றிக்கு சேவாக்கின் ஆட்டம்தான் முதல் காரணம் என்றார். சேவாக்கின் இந்த தனிச்சிறப்பு மிக்க மட்டைத்திறன்,  2010க்கு பின் திடீரென்று சரிவுக்கு உள்ளானது. ஆனால் அதில் அவ்வளவு ஆச்சரியம் இல்லை. ஏனெனில், அவரைப் போன்ற மட்டை பிடித்தலின் அடிப்படை தொழில்நுட்பத்தில் பலமில்லாத, கண் கை ஒருங்கிணைப்பும், உள்ளுணர்வும் பொருந்திய ஆட்டக்காரர்களின் சரிவு எப்போதுமே திடீரென்று வருவதே. Reflexes எனப்படுவை சற்றுக் குறைந்தாலும், அது அவர் ஆடும் பாணிக்கு பெரும் ஆபத்தாக முடியும். அதுவே சேவாக்குக்கும் நடந்தது. வேகப்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளங்களில் சற்றே நிதானமாகிவிட்ட அவரது கண் கை வேகமும், நகர்வுகளில் ஏற்பட்ட நிதானமும், அவருக்குப் பகையாகின. 2010ம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சேவாக் 6 இன்னிங்சுகளில் ஒரே ஒரு அரை சதமே அடித்தார். அது ஒரு தற்காலிகப் பின்னடைவு என்று எண்ணியவர்களுக்கு, 2011 இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சொல்லப்போனால் 2011 இங்கிலாந்து போட்டித் தொடரில் இந்தியாவின் பஞ்சரத்னங்களில் டிராவிட் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எவருமே சோபிக்கவில்லை. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த சேவாக் மூன்றாவது டெஸ்டில் தனது டெஸ்ட் வாழ்வில் முதல் தடவையாக இரண்டு இன்னின்க்சிலும் பூஜ்யம் பெற்று வெளியேறினார். அடுத்த போட்டியிலும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. 4 போட்டிகளிலும் இந்தியா தோற்றது. கேள்விகள் எழத் தொடங்கின, நல்லவேளையாக அடுத்த தொடர் பலவீனமான மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியாவில் நடைபெற்றது. அந்தத் தொடரிலும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும், ஒரு நாள் போட்டிகளியில் 219 ரன்கள் அடித்து உலக சாதனை புரிந்தார். ஆனால் அதன் பிறகு 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சேவாக் ஒரே ஒரு அரை சதமே அடித்தார். அடுத்து வந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் சேவாக்குக்கு சிறப்பாக அமையவில்லை. 8 இன்னிங்சுகளில் இரண்டே இரண்டு அரை சதங்கள் அடித்தார். அதுவும் அவரது வழக்கமான ஆட்டம் போல இல்லை. அதன்பிறகு இந்தியாவில் நடந்த இங்கிலாண்டுடனான தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாகவே விளையாடினார். பந்துவீச்சாளர்கள் இதற்குள் சேவாக்கின் பலவீனம் ஒன்றை கண்டுபிடித்து அதை உபயோகிக்க தொடங்கி விட்டிருந்தனர். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே அவருக்கு மட்டையை சுதந்திரமாக வீச வாய்ப்பு தராமல், சற்று வெளியே இருந்து உள்நோக்கி வரும் இன்ஸ்விங்கர் பந்துகளையே அவருக்கு அதிகமும் போட்டனர். அதிகரித்துவிட்ட தன் வயதினால் வேகத்தை சற்று இழந்திருந்த சேவாகுக்கு இந்த வகை பந்துகள் மிகுந்த சிரமத்தைக் கொடுத்தன. இந்த பலவீனத்தை சமாளிக்க பயிற்சிகள் எடுத்துக் கொள்வதில் அவருக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சேப்பல் சேவாக்கிற்கு பயிற்சிகளின் மீது இருந்த ஈடுபாட்டுக் குறைவினை வெளிப்படையாகவே கண்டித்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் சேவாக் டென்னிஸ் ஆட்ட மேதை ஜான் மெக்கென்ரொவுடன் ஒப்பிடத் தகுந்தவர். மெக்கென்ரொவும் பயிற்சிகளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர். இருவருமே Naturally Gifted என்ற வரிசையில் வருபவர்கள். அவர்களின் மேதைமை பயிற்சியினால் வருவதல்ல . அவர்களையும் அறியாது, உள்ளிருந்து பீறிடும் ஓர் ஊற்று அது. குறைந்தால் குறைந்ததுதான். அந்த நிலையை சேவாக் 2011ம் ஆண்டின் இறுதியில் அடைந்திருந்தார். அதோடு அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிந்தது. அதற்குப் பின் நினைவில் நிற்கக்கூடிய ஆட்டமென்றால் அது சென்ற வருட IPL அரையிறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அவர் விளாசித் தள்ளிய அந்த ஆட்டம் ( 58 பந்துகளில் 122 ரன்கள்) பழைய சேவாக்கை நினைவில் கொண்டு வந்தது. தோனிக்கும் அவருக்கும் எப்போதுமே பெரிய இணக்கம் இல்லாதிருந்த நிலையில் அது சேவாகுக்கு ஒரு தனிப்பட்ட திருப்தியையும் அளித்திருக்கக் கூடும். ஒருவகையில் அது அணையும் விளக்கின் கடைசி சுடர் என்றே சொல்ல வேண்டும். ஆனால் மேலே சொன்னவை மட்டுமே சேவாக் குறித்த ஒரு முழுமையான சித்திரம் அல்ல. தனித்திறன் மிக்க அவரது பேட்டிங் ஒரு பந்து வீச்சாளராக அவரது திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்ததுவிட்டது என்று கூறலாம். சமயங்களில் சில பந்தயங்களில் ஹர்பஜன் சிங்குடன் மறுமுனையில் சேவாக் தன் ஆப் ஸ்பின் பந்துவீச்சில் ஈடுபடும்போது, சேவாக்கே ஒரு classical off spinnerன் திறனைப் பெற்றிருந்தார் என்று நினைக்கத் தோன்றுவதுண்டு. குறிப்பாக அவரது பந்து வீசும் திசை எப்போதும், ஹர்பஜன் போல லெக் ஸ்டம்பின் மீது அல்லாமல் ஆப் ஸ்டம்ப் மற்றும் அதற்கு சற்று வெளியே என்று ஒரு செவ்வியல் ஆப் ஸ்பின்னர் போல அமைந்தது. 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்சில், அவர் இடது கை ஆட்டக்காரரான ஆடம் கில்க்ரிஸ்ட்டை கால்களைச் சுற்றி பௌல்ட் ஆக்கியது, இன்னமும் கண்களில் நிற்கிறது. பேட்டிங் பௌலிங் மட்டுமல்லாமல் எதிரணியினரின் வாய் வீச்சுக்கும் ஈடு கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தார் சேவாக். நிறைய போட்டிகளில் இப்போது வழக்கமாக ஆகியிருக்கும் அந்த sledging எனும் குத்தல் பேச்சுகளில் எதிரணியினர் ஈடுபடும்போது, அதற்கான சேவாக்கின் எதிர்வினை, அவர்களையும் ரசித்து சிரிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது. ஒரு புகழ் பெற்ற உதாரணம், முல்தானில் பாகிஸ்தானுக்கெதிரான அந்த 309 ரன்கள் எடுத்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், ஷோயப் அக்தர், வரிசையாக எகிறு பந்துகளையே வீசி, ஒவ்வொரு பந்தின் முடிவிலும், சேவாக்கை ஹூக் சாட் அடிக்குமாறு ஏளனத்துடன் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். அதற்கு சேவாக்,சொன்ன பதில் அவரைச் சுற்றியிருந்த பாக் வீரர்களையும், வெடித்து சிரிக்க வைத்தது. சேவாக் சொன்னது இதுதான்- இவரென்ன பௌலிங் போடுகிறாரா அல்லது பிச்சை கேட்கிறாரா? என்றாராம். அதே போல் அவர் மிகப்பெரிய ஒரு இன்னிங்க்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போதுகூட, அலட்சியமாக பழைய இந்திப் படப் பாடல்களைப் பாடிக்கொண்டே ஆட்டத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல இருப்பார் எனக் கூறப்படுவதுண்டு. ஒரு முக்கியமான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் டிராவிட்டுடன் இணைந்து ஆடிக் கொண்டிருந்த வேளையில், திராவிடிடம் ஓவர்களுக்கு இடையேயான இடைவெளியில், வெகு கவனமாக ஒரு இந்திப பாடலைக் குறிப்பிட்டு இது எந்தப் படத்தில் வருவது என்று கேட்டபோது, தான் பேச்சிழந்து நின்றதாக திராவிட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அதேபோல் மனதில் பட்டதை மறைக்காமல் பேசியவர் சேவாக். ஒரு முறை முதல் விக்கெட்டுக்கான உலக ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப்பை தாண்ட இருந்த வாய்ப்பை இழந்தபோது , அது பற்றியும், அந்த ரிக்கார்டுக்கு சொந்தக்காரர்களான இந்தியாவின் வினு மன்கட் மற்றும் பங்கஜ் ராய் பற்றியும் கேட்டபோது, மிக எதார்த்தமாக, அது பற்றி எதுவும் தெரியாதென்றும் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்றும் பதிலளித்தார். இந்த மனதில் உள்ளதை தயங்காமல் வெளியில் சொல்லும் அவரது பழக்கமே, அவரது பிற்கால கிரிக்கெட் வாழ்வில், அவருக்கும் தோனிக்கும் சில பிரச்னைகளை எழுப்பியது என்றும், அதனாலேயே அவர் சில வாய்ப்புகளை இழந்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் வரலாற்றின், சென்ற கணத்தின் சுமைகள் இல்லாமல், ஆடும் அந்தக் கணத்தில் முழுமையாக ஈடுபட்டு ஆடும் திறன் பெற்றிருந்த அவர் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. பிரபல கிரிக்கட் எழுத்தாளர் முகுல் கேசவன், சேவாக்கின் இந்த ஒரு பண்புக்காகவே அவரை ஒரு Zen Master of Batting என்று வர்ணித்தார். தன்னளவில் பரபரப்பையே அடையாத, அதை ஒருபோதும் காட்டிக் கொள்ளாத, எப்போதும் நிதானமான , சிரித்த முகத்துடன் இருந்த சேவாக் பார்ப்பவர்களுக்குத்தான் எத்தனை, விறுவிறுப்பையும், பரவசங்களையும் அளித்தார்! தொழிற்முறை ஆட்டக்காரர்களில் ஒருவராகவே இருந்த போதிலும் ஒரு விளையாட்டு அளிக்கும் பரவசத்துக்காகவே அதை விரும்பி விளையாடும் ஒரு அசலான அமெச்சூர் ஆட்டக்காரர் அவர். நஜாப்கரின் நவாபாக இருந்து முல்தானின் சுல்தானான சேவாக் போன்ற பிறிதொரு ஆட்டக்காரரை இனி நாம் காண்பது அவ்வளவு சீக்கிரத்தில் இருக்காது என்று மட்டும் சொல்லலாம். சொல்வனம், அக்டோபர் 2015 வி ராம்நாராயண் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள் [] இந்தியா 1983ல் உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் பணம் கொழிக்கும் கேளிக்கைத் தொழிலாக உருவாவதற்கு முன் இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை இன்றுபோல இவ்வளவு நேர நெருக்கடி மிகுந்ததாக இருக்காது. 70களில் ரஞ்சி கிரிக்கெட் ஆட்டங்களுக்கே 20-30 ஆயிரம் பேர் மைதானத்துக்கு வருவதுண்டு. மாவட்ட அணிகளுக்கு இடையே நடக்கும் எஸ்.எஸ். ராஜன் கோப்பை போட்டிகளுக்கே கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வருவதுண்டு. ஒரு முக்கியமான காரணமாக தொலைக்காட்சி என்பது இல்லாமல் இருந்ததாக இருக்கலாம். ரஞ்சி ஆட்டங்கள் தவிர தமிழக இலங்கை அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறும் எம். ஜே. கோபாலன் கோப்பை ஆட்டமும் உண்டு. இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாக மாறும் வரை இந்தக் கோப்பைக்கான ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 1974 அல்லது 75ல் என்று நினைக்கிறேன், கோவையில் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமான ஒரு போட்டி நடைபெற்றது. அப்போது இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியல்ல. ஆனாலும் அந்த அணியின் பந்துல வர்ணபுர, வெட்டிமுனி, அனுரா டெனிகூன் போன்ற வீரர்கள் தமிழகத்தில் பிரபலம். மென்டிஸ் மற்றும் டயஸ் இருந்தார்களா என்று நினைவில்லை. இந்திய அணி என்றழைக்கப்பட்ட கலந்து கட்டிய அணியில் பிரதானமாக தமிழக வீரர்களே இருந்தாலும், நட்சத்திர அந்தஸ்து பெற்ற விஸ்வநாத், சலீம் துர்ரானி உள்பட சில முக்கியமான, பிரபல இந்திய வீரர்களும் உண்டு. ரசிகர்கள் எந்தப் பக்கமிருந்து சிக்சர் கேட்டார்களோ அந்தப் பக்கம் எல்லாம் துர்ரானி சிக்சர் அடித்தது இன்னமும் நினைவில் உள்ளது. அந்த ஆட்டத்தைப் பார்த்த பிறகு, ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து நான் முதன்முதலாக ஒரு ரஞ்சிக் கோப்பை பந்தயத்தைக் கோவையில் பார்த்தேன். ஆந்திரா- தமிழ்நாடு அணிகளுக்கிடையேயான ஆட்டம் அது. அந்த ஆட்டமே தமிழகத்தின் வி.வி. குமார் எனும் பந்து வீச்சாள மேதையின் கடைசி ஆட்டங்களில் ஒன்று என்பது அப்புறமாகத்தான் தெரிந்தது. அவரைவிட அன்று எனக்கு அதிகம் பிடித்த ஆட்டக்காரர்கள் வெங்கட்ராகவன், மைக்கேல் தால்வி, வி. சிவராமகிருஷ்ணன், பரத் ரெட்டி மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர்தான். 70களின் ரஞ்சிக் கோப்பை பந்தயம் இப்போது போல இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடப்படவில்லை. மண்டல ரீதியாக விளையாடப்பட்டது. தென் மண்டலத்தில் மூன்று ஜாம்பவான் அணிகள்- தமிழ்நாடு, ஐதரபாத், மற்றும் கர்நாடகா. கேரளமும் ஆந்திரமும் நோஞ்சான் அணிகள்.கோவா அணி அப்போது இல்லை. போட்டி முதலில் சொன்ன மூன்று அணிகளுக்குள்தான். இவற்றில் ஏதாவது இரண்டு அணிகள்தான் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தமிழ்நாடு அணி அப்படித் தகுதி பெறாவிட்டால் அந்த ஆண்டு சோபை குன்றிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓரிரு ஆண்டுகள் தவிர பெரும்பாலும், தமிழக அணி கர்நாடகத்தை வெல்லும், ஐதரபாதிடம் தோற்கும். தமிழகத்தை வெல்லும் ஐதராபாத் அணி கர்நாடகத்திடம் தோற்கும். நான் கவனித்த தமிழ்நாடு- ஐதராபாத் ஆட்டங்களில் தமிழகத்தின் தோல்விக்குக் காரணமான ஒரு பந்து வீச்சாளர் வி.ராம்நாராயண். தமிழ்நாட்டுக்கு வெங்கட்ராகவனும், வி.வி. குமாரும் என்றால், கர்நாடகத்துக்கு பிரசன்னாவும், சந்திரசேகரும். ஆனால், ஹைதராபாத்துக்கு என்றால் என் நினைவில் வி.ராம்நாராயண் மட்டும்தான். கர்நாடகத்தின் பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிவிடும் தமிழக மட்டையாளர்களான வி. சிவராமகிருஷ்ணன், டி .ஈ. ஸ்ரீநிவாசன், ஜப்பார் ஆகியோர் ஏனோ ராம்நாராயணிடம் பதுங்கினர். அப்போது அவர் ஒரு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்றே நினைத்திருந்தேன். தமிழகத்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தியதால் அவரை எனக்குப் பிடிக்காது. சிறிது காலம் கழித்தே, சொல்லப் போனால் அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே, அவர் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்று தெரிந்து கொண்டேன். அதை விட முக்கியமாக, அவர் என் மிக விருப்பத்துக்குரிய ஆட்டக்காரர்களின் ஒருவரான தமிழக துவக்க ஆட்டக்காரர் வி. சிவராமகிருஷ்ணனின் அண்ணன் என்பதையும் தெரிந்து கொண்டேன். சிவராமகிருஷ்ணனைப் போலவே ராம் நாராயணும் மிக அழகாக இருப்பார். சற்றே டெனிஸ் லில்லியின் சாயல் உண்டு. இதையெல்லாம் இப்போது சொல்வதற்குக் காரணம், அந்த வி.ராம்நாராயண் எழுதியுள்ள “Third Man- Recollections from a Life in Cricket”, எனும் மிக சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததுதான். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நிறைய சாதனைகள் புரிந்த சச்சின், கங்குலி, காவஸ்கர், கபில்தேவ் ஆகியோரின் சுயசரிதைகளில் இருக்கும் சுவாரசியங்கள் ஒருவிதம். எவ்வளவோ முயன்றும், போதுமான திறன் இருந்தும், ஏனோ இந்திய அணியில் இடம்பெற முடியாத நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலுமுண்டு. அவர்கள் சிந்திய வியர்வையும், கொடுத்த உழைப்பும் வெற்றி பெற்ற எந்தவொரு வீரர்களுடையதையும்விட குறைந்ததில்லை. விரும்பிய உயரத்தை அடைய முடியாமல் போய்விட்ட இந்த வீரர்களின் சுயசரிதையின் சுவாரசியம் வேறொரு விதம். சொல்லப்போனால் இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் இணையான திறன் பெற்ற நூற்றுக்கணக்கான ரஞ்சி வீரர்கள் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இந்த இடத்தைக்கூட அடைய முடியாமல் போய்விட நேரும் வீரர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு என்பதும். இந்த வலி தரும் வேதனையை வைத்துப் பார்க்கும்பொழுது ராம்நாராயணனின் இந்தப் புத்தகம் மிக கசப்பான நினைவுகளின் பட்டியலாக மாறிவிடக்கூடிய அபாயத்தைத் தவிர்த்திருப்பதே அதன் முதன்மைச் சிறப்பு. வருத்தம் தெரிகிறது, ஆனால் கசப்பு இல்லை இவரது புத்தகத்தில். அதற்கான காரணங்கள் என்றால் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான அவரது காதலும், அவரது குடும்பப் பின்னணியும், புகழ்பெற்ற மனிதர்களின் அண்மையும், அவர்களின் மென்மையான பக்கத்தையும், மேன்மையான குணநலன்களையும் இனம் கண்டுகொள்ளும் அவரது திறனும் என்று சொல்லத் தோன்றுகிறது. தவிர, இன்றைய தினங்கள் அளவுக்குப் பணம் அவ்வளவு வராத ஆட்டமாக கிரிக்கெட் இருந்ததும், அது அளிக்கக்கூடிய ஒரு விச்ராந்தியான மனநிலையும் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கும் ஒரு மனநிலையும்கூட ஒரு காரணம் என்று சொல்லலாம். சென்னையில் மைலாப்பூருக்கும் தேனாம்பேட்டைக்கும் இடையே உள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் (இன்றைய வீனஸ் காலனி) அமைந்திருந்த அவரது வீட்டின் அருகே அவரது சகோதரர்களுடனும், பல கசின்களுடனும் ஆடி மகிழும் கிரிக்கெட் ஆட்டத்துடன் துவங்குகிறது ராம்நாராயணின் நினைவுகள். அந்தக்காலத்து சென்னையில் அவர் வாழ்ந்த பகுதிகளை அழகாக எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறார். அங்கிருந்து சென்னையின் பல்வேறு கிளப்களின் போட்டிகளில் விளையாடி பின் கல்லூரி அணிகளில் இடம் பிடித்து சென்னைப் பல்கலைக்கழக அணியில் இடம் பெறுவது வரையிலான போராட்டத்தை நல்ல நகைச்சுவையுடன் தருவதோடு, அந்த நாளைய சென்னை கிரிக்கெட் சூழலின் விரிவான ஒரு வரைபடத்தையும், பலதரப்பட்ட ஆளுமைகளையும், ரசனையோடு சொல்கிறார் ராம்நாராயண். 1960களும் 70களும் பல்கலைக்கழக அணிகளில் இடம்பெறுவதே கனவாக இருந்த காலங்கள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ரோஹின்டன் பாரியா கோப்பை மிகப் பிரபலமானது. அந்தக் கோப்பைக்கான ஆட்டத்தில் நிகழ்த்திய சாதனைகளின் அடிப்படையில்தான் சுனில் காவஸ்கர் 1971ல் மேற்கிந்தியத் தீவுகளோடு விளையாடுவதற்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார். பின் நிகழ்ந்தது வரலாறு. அத்தகைய பெருமைபெற்ற ஒரு கோப்பைக்காக விளையாடும் சென்னைப் பல்கலைக்கழக அணியில் இடம்பெற்றதே ராமின் முதல் சாதனை. அங்கும் அவருக்கான இடம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. ஏனென்றால், ராமின் கிரிக்கெட் வாழ்வு முழுவதும் அவருக்கு முன்னால்  நந்தி போல நின்ற வெங்கட்ராகவன் பல்கலைக்கழகங்களிருந்து வெளியேறும்வரை ராம் காத்திருக்க வேண்டியதாகிறது. இது அவரது கிரிக்கெட் வாழ்வில் மறுபடி மறுபடி நிகழும் விஷயமாக மாறிப்போவதே ராம் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதன் பின்னணி. தமிழ்நாட்டு அணியில் வெங்கட் என்றால் தென்மண்டல அணியில் பிரசன்னாவும் சேர்ந்து கொள்கிறார். போதாததற்கு சந்திரசேகர் வேறு. பல்கலைக்கழக அணிகளில் பங்கு பெற்று பலரது கவனத்தைக் கவர்ந்து சென்னையின் முக்கியமான கிரிக்கெட் கிளப்புகளில் இடம் பெற்றாலும், தமிழக ரஞ்சி அணியில் இடம் பிடிப்பது ராமைப் பொருத்தவரை ஒரு கனவாகவே போய்விடுகிறது. காரணம் வெங்கட்டும், வி.வி. குமாரும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை கிடைப்பதன் மூலம் ஆந்திரத்துக்கு செல்லும் ராம் அந்த அணிக்கு விளையாடக் கிடைக்கும் வாய்ப்பால் ஹைதராபாத் வந்து சேர்ந்து தன் இருபத்து எட்டாம் வயதில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்கு தேர்வாவது வரை உள்ள பகுதிகள் வலியும் சுவாரசியமும் மிகுந்தவை. இவை இந்தப் புத்தகத்தின் முதற் பகுதி. ஹைதராபாத் அணிக்கு விளையாடும் அனுபவங்களை விவரிப்பதே இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பகுதி என்று சொல்லலாம். இதில் ஓரளவுக்கு ராமின் கனவுகள் நிறைவேறுவதைப் பார்க்க முடிகிறது. அவர் தன் கலையின் மதிப்பை இந்தியாவின் மிகத் திறமையான பல ஆட்டக்காரர்களோடுப் பொருத்திப் பார்க்க முடிகிறது. தவிர, பட்டோடி, ஜெயசிம்மா, அபித் அலி, அப்பாஸ் அலி பெய்க் போன்ற நட்சத்திர இந்திய ஆட்டக்க்காரர்களோடு தோளோடு தோள் உரசி விளையாடவும் அவர்களால் மதிக்கப்படுவதுமான ஒரு அற்புத வாய்ப்பைத் தரும் இந்தப் பகுதியில், ராமின் உற்சாகத்தையும், விளையாட்டின் சூழ்நிலையை வர்ணிக்கும் விதங்களில் ஆட்ட நுணுக்கங்களில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவுத் திறனையும் ரசிக்க முடிகிறது. தன் புகுந்த வீடான ஹைதராபாதுக்காகத் தன் பிறந்த வீடான தமிழ்நாட்டுடன் மோதும் ஆட்டங்களில் தன்னை நிரூபிக்க அவர் முனையும் கூடுதல் முனைப்பையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, அந்த ஆட்டங்களில் எல்லாம் அவர் சோபிக்கவே செய்திருக்கிறார். நான் முன்னே சொன்ன மாதிரி அதுவே அவரை அன்றெல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காமலிருக்கக் காரணம். இந்தப் புத்தகத்தின் மூன்றாவது சிறு பகுதி தன் கலையான ஆஃப் ஸ்பின் பந்து வீச்சைக் குறித்து அவர் விளக்கும் அற்புதமான பகுதி. ஒரு சுழல் பந்து வீச்சாளரின் அளவு தீர்மானிக்கப்பட்டது, திசை மட்டுமே தெரிவு என்ற பிரசன்னாவின் புகழ்பெற்ற வாசகத்தினை (For a spinner, length is mandatory and Line is optional) எடுத்துக்கொண்டு, அவர் அதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று தன் அனுபவங்களின் அடிப்படையில் தடுப்பு வியூகங்களின் அமைப்பையும் விளக்கி ராம் எழுதுவது இளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தரமான ஆஃப் ஸ்பின்னருக்கான மிகச் சிறந்த ஒரு தடுப்பு வியூகம் என்பது தென்னிந்தியாவில்தான் உருவாகி வந்திருக்க வேண்டும் என்று ராம் சொல்கிறார். ஆங்கிலேயரின் விளையாட்டிற்கு தென்னகத்தின் கொடை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ராம் சுழல்பந்து வீச்சை, கலை என்று சொல்வதில்லை, அதற்கு பதில் வித்தை (கிராஃப்ட்) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். தன் சக ஆட்டக்காரர்கள் மற்றும் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களைக் குறித்தும் ராம் எழுதுவது இந்த நூலின் நான்காம் பகுதி. இதில்தான் எத்தனை விதமான விளையாட்டு வீரர்கள்! நாம் முன்பே பார்த்திருந்த பட்டோடி, ஜெயசிம்மா, அபித் அலி, அப்பாஸ் அலி பெய்க் தவிர, கோவிந்தராஜ், நோஷிர் மேத்தா, கிருஷ்ணமூர்த்தி, அப்பாஸ் அலி பெய்கின் சகோதரரான முர்தாசா அலி பெய்க், நரசிம்ம ராவ் முதலான பல ஹைதரபாத் ஆட்டக்காரர்களைப் பற்றி அழகான சித்திரங்களைத் தருகிறார். பின் தனியாக, ஹனுமந்த் சிங், சலீம் துர்ரானி ஆகியோரைப் பற்றி எழுதிவரும் ராமின் எழுத்து, அந்தக் காலகட்டத்தின் தலைசிறந்த சுழல் பந்து விற்பன்னர்கள் பேடி, பிரசன்னா, வெங்கட், சந்திரசேகர் போன்றவர்களைப் பற்றி எழுதும்போது ஒரு தனி உயரத்தை அடைகிறது. குறிப்பாக சந்த்ரசேகரையும், அனில் கும்ப்ளேவையும் ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் பகுதி இந்த நூலின் சிகரம் எனலாம். அதேபோல், கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் சொற்தேர்வினைக் குறித்தும் ராம் வியந்து பாராட்டுகிறார். பேடியை ஆங்கிலத்தில், “A poetry in motion,” என்று சொன்னவரையும், மைக்கேல் ஹோல்டிங்கை, “The Whispering Death,” என்று சொன்னவரையும் சுட்டி, இருவரில் யார் சிறந்த வர்ணனையாளர் என்று வியந்து கேட்கிறார். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வர்ணனையாளர்கள் என்று கருதப்படும் ஜான் ஆர்லட் (John Arlott), நெவில் கார்டஸ் (Neville Cardus) ஆகியோரையும் ராம் ரசித்து மகிழ்ந்திருக்கிறார். இந்தியச் சுழல்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, ஆங்கிலச் சுழல்பந்து வீச்சாளரான (ஒரு பந்தயத்தில் மிக அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் (19 விக்கெட்டுகள்)) ஜிம் லேக்கரைப் பற்றியும் ஒரு அழகான சித்திரத்தை ராம் கொடுத்திருக்கிறார். ராமைப் போலவே அசாத்தியமானத் திறமை இருந்தும் இந்தியாவுக்காக என்றுமே விளையாட முடியாமற்போன மிகச் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களான ராஜீந்தர் கோயல், ஷிவால்கர், ராஜீந்தர் சிங் ஹான்ஸ் ஆகியோர் குறித்தும் இரண்டே இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே ஆடிவிட்டு, அதற்குப்பின் வாய்ப்பே தராமல் மறுக்கப்பட்ட, தமிழக லெக் ஸ்பின்னர் வி.வி. குமார் குறித்த சொற்சித்திரங்களும் உண்டு. இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் டெண்டுல்கர்- திராவிட் விவாதத்தைப் போலவே, சொல்லப்போனால் இன்னும் அதிக வீரியத்துடன் 70களில் இருந்த விஸ்வநாத்-காவஸ்கர் விவாதத்தையும் குறிப்பிட ராம் தவறவில்லை. என்னதான் காவஸ்கரின் சாதனைகளை ராம் மதித்தாலும் அவரையே இதுவரை வந்த இந்திய மட்டையாளர்களில் தலைசிறந்தவர் என்று சொன்னாலும், பெரும்பாலான தென்னிந்தியர்களைப் போல காவஸ்கரைவிட விஸ்வநாத்தையே ராமுக்கும் அதிகம் பிடிக்கும் என்பதும் தெரிகிறது. ஒரு ரஞ்சி பந்தயத்தில் விஸ்வநாத்தின் விக்கெட்டை வீழ்த்தியதை பெருமகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்- அந்தக் காட்சிதான் இந்த நூலின் அட்டைப்படம்கூட. Third Man என்ற தலைப்பே அழகானது. கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தத் தேர்ட் மேன் என்னும் இடத்தில் அதிகம் பந்துகள் வராது (நான்கு நாள் ஐந்து நாள் போட்டிகளில்; ஒரு நாள் மற்றும் 20/20 போட்டிகளில் அல்ல). அதனால் ஆட்டத்தில் இருந்து சற்றே விலகி நின்று பார்க்கும் ஒரு வாய்ப்பு அளிக்கும் இடம். ஒருவிதத்தில் ராம் அந்த இடத்தில் நின்று சொல்கிறார் எனலாம். இன்னொரு விதத்தில், அவர் ஆடிய காலத்தில் தென் மண்டல கிரிக்கெட் அணியில் பிரபலமான இரு ஆஃப் ஸ்பின்னர்களான பிரசன்னா, வெங்கட் இருவருக்குப் பின்னால் (தரத்தில் அல்ல, கிடைத்த வாய்ப்பில்) இருந்த மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் ராம் என்பதைச் சொல்லும் தலைப்பு என்றும் கொள்ளலாம். ராமின் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டு, இன்றைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காலவெளியில் விளையாடப்பட்ட அந்த ஒரு ரொமாண்டிக் காலத்துக்கு கூட்டிசெல்லும் கால யந்திரம் என்று சொல்லலாம். அதனை மேலும் சிறப்பாக்குவது, இழந்த, கிடைக்காத வாய்ப்புகளின், சோகங்களைவிட, கிடைத்த வாய்ப்புகளின் சந்தோஷங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் இது அமைந்திருப்பது. அவர் விவரிக்கும் காலங்களின் கிரிக்கெட்டை நேரில் கண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான மலரும் நினைவுகள் அநுபவத்தைத் தரும். புதியவர்களுக்கு கிரிக்கெட்டின் களங்கமில்லாத ஒரு காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்தியாவின் கடந்தகாலத்துக்குரிய மகத்தான ஆட்டக்காரர்களையும் அறிமுகப்படுத்தும். நிச்சயமாக இன்றைய நாட்களைப் போலவே அன்றும் கிரிக்கெட் விளையாட்டில், அரசியல் உண்டுதான். அந்த இருண்ட பக்கங்களையும் ராம் சொல்கிறார். ஆனால் காலம் அந்தப் புண்களை ஆற்றியதன் விளைவாக மென்மையாகவே சொல்கிறார். சமயங்களில் ஒரு ஆட்டக்காரருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும்போது அவரது தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகிறது, அது சரியானதா என்பதைக் காலமே தீர்மானிக்கிறது. ராம் வாய்ப்பு கிடைத்தும் பெங்கால் அணிக்காக விளையாடாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வர முடிவெடுத்தது அவ்வளவு சரியானதல்ல என்பதைக் காலம் சொல்கிறது. ஆனால் தேர்வு செய்யும் வாய்ப்பு ஒரு முறைதானே வருகிறது? இதையும் ராம் தனக்கே உரித்தான விலகி நின்று பார்க்கும் பார்வையில் நிதானத்தோடு சொல்கிறார். இறுதியாக, உயர்நிலைக் கிரிக்கெட்டில் தான் பயணம் செய்யக்கூடிய தூரம் இனி அதிகமில்லை என்பதைத் தெரிந்து கொண்டு மீண்டும் சென்னைக்கே வந்து கிரிக்கெட்டின் மீதுள்ள காதலினால் மட்டுமே தன் 49வது வயது வரை கிளப் கிரிக்கெட்டில் ஈடுபடுவதும், தன் நெருங்கிய உறவினரான பி.என். சுந்தரேசன் நடத்தி வந்த ஸ்ருதி இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுவதையும் அதில் தனது மனைவி கௌரி- ஆம், கல்கியின் மகள் (ஆனந்தி) வயிற்றுப் பேத்தியும் எழுத்தாளருமான கௌரி ராம்நாராயண்தான்- அவர்களின் ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் ஒரு திருப்தியான வாழ்வினை மேற்கொண்டு வருவதனை விவரித்து முடிகிறது ராம்நாராயணின் இந்தப் புத்தகம். பொதுவாக முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் நூல்கள் மற்றொருவரால் எழுதப்படுபவை. ஆனால் ராம்நாராயணுக்கு அந்த அவசியமில்லை. அவரே ஒரு சிறந்த பத்தி எழுத்தாளர். தவிரவும், ஸ்ருதி இசை இதழின் ஆசிரியர், மற்றும் கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் கிரிக்கெட் பற்றித் தொடர்ந்து எழுதுபவர். அவரது ஆங்கில நடையின் சரளமும் அழகும் இந்த நூலின் சிறப்புகள். இந்த நூலுக்கு, தற்கால கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் சிறந்த இருவரான, ஹர்ஷா போக்ளே மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரின் முன்னுரைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. ராம் நாராயண் ஸ்ருதி இசை இதழின் ஆசிரியராவதில் அவரது அறியப்படாத இன்னொரு முகம் துலக்கம் பெறுகிறது. புத்தகத்தின் இறுதியில் கர்நாடக இசை மற்றும் ஹிந்தித் திரைப்பட இசை மீதான ஆர்வத்தையும், கிரிக்கெட் புத்தகங்கள் படிப்பதில் உள்ள ஆர்வத்தையும் சுருக்கமாக விளக்குகிறார். ராமின் தாயார், ருக்மிணி அவர்களே ஒரு தேர்ந்த கர்நாடக சங்கீதப் பாடகி. இள வயதில் ராமின் குடும்பத்தில் அனைவருக்குமே வாய்ப்பாட்டு கற்றுக் கொடுக்கப்பட்டாலும், கிரிக்கெட் விளையாடும் நேரமும் பாட்டு வகுப்பும் ஏககாலம் வந்ததால், கிரிக்கெட் விளையாடுவதையே தான் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிடுகிறார் ராம். இருப்பினும், சங்கீதத்தின் மீதான ஆர்வத்தையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கிறார். பீட்டில்சிலிருந்து ரவிசங்கர், நௌஷத், மதன் மோகன் ஆகியோரின் ரசிகராகவும் தான் இருப்பதைச் சொல்கிறார் ராம். மேலும், அவரது மனைவி கௌரி அவர்களும் ஒரு கர்நாடக இசைப் பாடகி என்பதும் இதில் அவருக்கு உதவியிருக்கிறது. எழுத்தின் மீதான தன் ஆர்வத்துக்கு தன் நெருங்கிய உறவினர்கள் பலரின் புத்தக ஆர்வத்தைக் கண்டு தானும் கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்ததாகச் சொல்கிறார் (அவை சாதாரணமானவை அல்ல- பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஸ்டீபன் லீகாக், ஆகியோரின் புத்தகங்கள், இந்தப் புத்தகங்களில் அடக்கம்). இது தவிர, 1992ல் சென்னை வரலாற்றாசிரியர் எஸ். முத்தையாவின் அறிமுகம் கிடைத்ததையும் முக்கியமான காரணமாகச் கூறுகிறார். இந்த நூலின் இறுதியில், சோபர்ஸ் அருகில் அமர்ந்து அவர் வாயால் அவரின் சில கிரிக்கெட் அனுபவங்களைக் கேட்டதும், எம். எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் ஆகியோரின் இசையை நெருக்கத்தில் அமர்ந்து கேட்பதற்கான நல்லூழ் அமையப் பெற்றதும் தனக்குக் கிடைத்த வரம் என்று ராம்நாராயண் சொல்லும்போது வரலாற்றில் தன் இடம் குறித்த கசப்பற்ற தன்னடக்கம் புலப்படுகிறது- ஆனால் வேறொரு காலத்தில், வேறொரு இடத்தில் ராம்நாராயண் மிகவும் கொண்டாடப்பட்டவராக இருந்திருப்பார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவருக்கு உண்டு. சொல்வனம், ஆகஸ்டு, 2015 தமிழ்நாட்டில் காந்தி – தி. சே. சௌ. ராஜன் [] காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்தது என்ன என்ற அம்பேத்கரின் புத்தகம் அது எழுதப்பட்டு வெளிவந்த காலத்தைவிட இன்று மிகப் பிரபலம். அம்பேத்கர் காந்தியைவிட இன்றைய இந்தியாவில் அதிக முக்கியத்துவம் பெறுவதை இது குறிக்கலாம். அந்த நூலுக்கு காந்தி எதிர்வினை ஆற்றவில்லை. க. சந்தானமும் ராஜாஜியும் எதிர்வினை ஆற்றினார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் இரு சிறு நூல்கள் எழுதி வெளியிட்டார்கள். அவை இப்போது தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அம்பேத்கருக்கு நேரடியான எதிர்வினை என்றில்லாமல் காந்தியின் அரிஜனத் தொண்டு குறித்து 1944ல் தமிழில் ஒரு நூல் வெளிவந்தது. அது தி. சே. சௌ. ராஜன் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி”. புகழ்பெற்ற புனே ஒப்பந்தத்துக்குப் பின் காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று பலவிதங்களில் பயணம் செய்து 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்திக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிய பாடுபடுமாறு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் காந்தி. அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் காந்தியோடு இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார் ராஜன். அங்கு தொடங்கி, காந்தியுடனேயே பயணம் செய்து, அவரது உரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்கிறார். காந்தியின் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்ற அந்தப் பயணத்தின் கதையை மிக சுவாரசியமாய் பதிவு செய்திருக்கிறார் ராஜன். 1931 டிசம்பரில், இரண்டாவது வட்டமேஜை மாநாடு முடிந்தவுடன் அம்பேத்கர் அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அரசு, (அதிகாரபூர்வமாக Depressed Classes என்றும், காந்தியால் அரிஜனங்கள் என்றும் அழைக்கப்பட்ட) தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இந்தியாவெங்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்துக்களிடையே பிரிவினையை  ஏற்படுத்தும் என்று அஞ்சிய காந்தி, அதனை எதிர்த்து எர்ரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அம்பேத்கருடனான பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 24 செப்டெம்பரில் புனே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. காந்தி தன் உண்ணாநோன்பை முடிக்கிறார். அதன் பின்னர் உடனடியாக செப்டம்பர் 30ம் தேதியே அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு  அணியை உருவாக்கிய காந்தி, அதன் பெயரை பின்னர் ‘அரிஜன சேவா சங்கம்,’ என்று மாற்றி, தீண்டாமை ஒழிப்பையும் அரிஜன முன்னேற்றத்தையும் தனது முதல் இலக்காகக் கொண்டு இந்தியாவெங்கும் பயணம் செய்து அரிஜன சேவா சங்கத்தின் நோக்கத்தை பரப்புரை செயகிறார். அதன் பகுதியாக அமைந்ததே இந்த நூலில் நாம் காணும் தமிழ்நாட்டுப் பயணம். இந்த முழு பயணத் திட்டத்தையும் காந்திக்கு வகுத்துக் கொடுத்தவர், அப்போது கோவை சிறையிலே இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். தீண்டாமை ஒழிப்பு எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அகில இந்திய சுற்றுப்பயணத்தின் துவக்கத்திலேயே தமிழகம் இடம்பெற்றுவிட வேண்டும் என்பது அவரது நோக்கம். “தீண்டாமைப் பேய் தலைவிரித்தாடியது தென்னாட்டிலேதான், ஆதலின் அடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பயணம், தமிழ்நாட்டிலே ஆரம்பமாவதே பொருத்தம், தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிந்ததென்றால், அகில இந்தியாவிலும் அது ஒழிக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. சுற்றுப்பயணத்தின் இறுதியில் தமிழ்நாடு இடம் பெற்றிருக்கும் என்றால், அது கடைசியில், பஞ்சாப், வங்காளம் போன்ற மாநிலங்களில் நடந்ததைப் போல சுருக்கப்பட்டிருக்கும், அதனாலேயே தமிழ்நாடு, துவக்கத்திலேயே இடம்பெற வேண்டும்,”என்று கருதிய ராஜாஜி, சிறையிலிருந்தபடியே தந்திகளின் மூலம் தொடர்ந்து போராடி, 1934, ஜனவரி மாதத்திலேயே காந்தியடிகளை தமிழ்நாடு வரச் செய்வதில் வெற்றி பெற்றார் என்கிறார் ராஜன். இந்த நூல் முக்கியமாக காந்தியின் பயண அனுபவங்களை பேசுகிறது என்றாலும், அந்தக் காலகட்டத்து மனிதர்களை, மக்கள் மனநிலையை வெளிப்படுத்துவதிலேயே முழு வெற்றி பெறுகிறது எனலாம். இந்தப் பயணத்தில்தான் எத்தனை, எத்தனை மனிதர்கள்- ராஜாஜி, ராஜன், காமராஜர், வைத்தியநாத அய்யர், தக்கர் பாபா, குமாரசாமி ராஜா போல் வரலாற்றில் நிலைபெற்றவர்கள் ஒரு புறம்; ஆனால், இவர்களுக்கு இணையான ஈடுபாடு கொண்டு தொண்டுகள் செய்திருந்தும்கூட, வரலாற்றிலிருந்து மறைந்து போன பல எளிய மனிதர்கள் பற்றிய குறிப்புகளே இந்த புத்தகத்தை மிக முக்கியமான ஒன்றாகச் செய்கிறது. தூத்துக்குடிக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் இடையே ஒரு குக்கிராமத்தில் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்காக, தன்னால் இயன்றதை, தன்னிடம் அன்று எவ்வளவு இருந்ததோ, அவ்வளவையும் அப்படியே கொடுத்துவிடும் ஒரு மளிகை கடைக்காரர்; சேலத்தில், காந்தி ஐயர் என்று அழைக்கப்பட்டு, ‘காந்தி ஐயர் ஓட்டல் கடை’ என்ற கடை வைத்து நடத்தி, அரிஜன முன்னேற்றத்துக்காக பல தொண்டுகளை புரிந்த ஒருவர்; சென்னையில், தன்னலமற்ற அரிஜன சேவை புரிந்து வந்த.கோடம்பாக்கம் கணேசன் என்று அழைக்கப்படும் ஒரு தொண்டர் (இவருக்காகவே, அந்தத் திட்டத்தில் முதலில் இடம்பெறாத சென்னைக்கு காந்தி வருகிறார்); காந்தியுடனேயே பயணம் செய்தவர்களில், பூட்டோ (ஆங்கிலத்தில் இவர் பெயரைக் குறிப்பிடவில்லை ராஜன்) எனும் ஜெர்மானியர் முக்கியமானவராக இருக்கிறார். நாஜி இயக்கத்திலும், ஹிட்லரிடத்திலும் பெரும் பற்று கொண்ட இவர், காந்தியின் அஹிம்ஸை வழியை அருகிருந்து பார்க்க ஆர்வம் கொண்டு அவரது குழுவில் இடம் பெற்றிருக்கிறார் என்பதுதான் எவ்வளவு அழகிய முரண். போதாததற்கு ஒரு இடத்தில், கூட்ட நெருக்கடியில் அகப்பட்டு கீழே விழுந்து, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்று மீள்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் மிக முக்கியமான பெயர்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய சுவாமி சகஜானந்தரையும் காந்தி சந்தித்து அவருடனே தங்கியிருக்கிறார். அந்த மளிகைக்கடைக்காரர், சேலம் காந்தி அய்யர், அவரது ஓட்டல், கோடம்பாக்கம் கணேசன், இவர்கள் எல்லாம் பின் என்ன ஆனார்கள், இவர்களின் குடும்பங்கள் இன்று எங்கே, அவர்களது தொண்டுக்காக அவர்கள் எங்காவது யாராலாவது நினைவு கூரப்படுகிறார்களா என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நம் மனதில் எழும் கேள்விகள். வரலாறு என்பது முகந்தெரியாத  பல லட்சக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து உருவாக்குவதுதான். பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும் இந்த நூலினைப் பற்றி எழுதப்போனால், எதை விடுவது எதை எழுதுவது என்ற திகைப்பே ஏற்படும். மிக முக்கியமான சம்பவம் என்றால், காந்தி குற்றாலத்தில் தங்கியது. அருவி கமிட்டியினர் காந்தியை அருவியில் குளிக்க அழைக்கின்றனர். காந்தியின் முதல் கேள்வி, இங்கு அரிஜனங்களுக்கு அனுமதி உண்டா, என்பதுதான். அருவியில் குளிக்க அவர்களுக்குத் தடை இல்லை என்றாலும், அங்கிருக்கும் சிவன் கோவில் முன் மண்டபம்  வழியாகவே அருவிக்கு செல்ல வேண்டுமென்பதாலும், அந்த வழி அவர்களுக்கு கோவில் கமிட்டியினரால் மறுக்கப்பட்டிருப்பதாலும் அவர்கள் அங்கு குளிக்க வழியில்லை என்று பதில் சொல்லப்படுகிறது. காந்தி அந்தக் கமிட்டியாருடன் வாதம் புரிகிறார். சின்னத் தம்பி என்ற ஒரு அரிஜன், மதம் மாறி ஜான் என்று ஆகிவிட்டாலோ, ராவுத்தர் என்று பெயர் சூட்டிக் கொண்டாலோ, அந்த வழியே போகலாம், ஆனால் சின்னத் தம்பி என்ற பெயருடன் போகக் கூடாது என்பது என்ன நியாயம் என்று கேட்கிறார். நீண்ட விவாதத்துக்குப் பின்னும் கோவில் கமிட்டியார் ஒத்து கொள்வதில்லை. அதனால், தானும் அங்கு குளிக்கப் போவதில்லை என்று புறக்கணித்து திரும்புகிறார் காந்தி. அதே போல கோவை போத்தனுர் அருகே திரு. அவினாசிலிங்கம் செட்டியாரின் ராமகிருஷ்ண கல்வி நிறுவனத்தைப் பார்வையிடப் போகிறார் காந்தி. அப்போது அங்கிருந்த ரயில்வே கேட் அவர் சென்ற காரின் மீது விழ மயிரிழையில் தப்பி உயிர் பிழைக்கிறார் (இதில் ஒரு சந்தேகம். இப்போது ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில், பெரிய நாயக்கன்பாளையம் தாண்டி அமைந்துள்ளன. போத்தனூர் அதற்கு நேரெதிர் திசையில் உள்ளது. முதலில் அங்கிருந்து பின் இங்கு வந்திருக்குமோ? கோவை வரலாற்று ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்). பல்வேறு இடங்களில் நேரமின்மை காரணமாக காரை நிறுத்தி மக்களுடன் உரையாட முடியாத சூழ்நிலையில் மக்கள் மற்றும் சில வன்தொண்டர்களின் எதிர்ப்பையும் சந்திக்கிறார் காந்தி, அவற்றையும் அவருக்கே உரித்தான புதுமையான பாணியில். ஓரிடத்தில் ஒரு தொண்டர் காருக்கு குறுக்காகப் படுத்துவிடுகிறார். எழுவதாகக் காணோம். நேரம் கடந்து கொண்டே போகிறது. பார்க்கிறார் காந்தி. காரை விட்டு இறங்கி இருளில் விடுவிடென்று நடக்கத் தொடங்கி விடுகிறார். அப்புறம் என்ன செய்ய? வழி விட்டுவிடுகிறார் அந்தத் தொண்டர். பின்னர் அவரையும் சமாதானப்படுத்துகிறார் மகாத்மா. படிக்கும்போதே மெய் சிலிர்க்க வைக்கும் இது போன்ற அனுபவங்கள் மேலும் சிலவும் உண்டு இதில். பெண்களுக்காக தனிக் கூட்டங்களும் போட்டிருக்கிறார் காந்தி. அந்தக் கூட்டங்களிலெல்லாம், போட்டிருந்த அத்தனை நகைகளையும் காந்தியின் ஒரு வார்த்தைக்காக கழட்டிக் கொடுத்த பெண்களை பற்றி படிக்கையில் கண்ணீர்  மல்குகிறது. அவ்வளவு வரவேற்புகளுக்கிடையிலும், சில இடங்களிலிருந்து இரு சாராரரிடமிருந்து எதிர்ப்பையும் சந்திக்கிறார் காந்தி. அவர்கள்,- வைதீகர்கள், மற்றும், சுயமரியாதைக்காரர்கள். இந்த இரண்டு தரப்பினருடனும் காந்தி உரையாடிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர்களைத் திருப்திப்படுத்த முடிவதில்லை. அதனால்தானோ என்னவோ, இது நடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னரே, 1939ல்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய சட்டமியற்றப்பட்டு நுழைய முடிகிறது. 1937ல் காங்கிரஸ் அரசு தமிழகத்தில் வந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால் காந்தியை எதிர்த்த இந்த இரு தரப்பாருமே, மிகுந்த நாகரிகத்துடனும், குறைவற்ற மரியாதையுடனும் காந்தியுடன் உரையாடினார்கள் என்பதனையும் ராஜன் பதிவு செய்கிறார். காந்தி மீது ஆதாரமில்லாத பல வசைகளும் குற்றச்சாட்டுகளும் தினந்தோறும் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் அவரது நோக்கத்தின் தூய்மையையும், அதில் அவர் கொண்டிருந்த, காட்டிய, தீவிரத்தையும், தமிழ் நாட்டு மக்கள் அவருக்கும் அவரது இயக்கத்துக்கும் அளித்த மாபெரும் வரவேற்பையும் விளக்கும் இது போன்ற நூல்களை படிப்பது மிக மிக அவசியம். அன்று தீண்டாமை ஒழிப்பில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்த தமிழகத்தின் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்து வருந்தாமல், இருக்க முடியவில்லை. இன்னொரு விஷயம், இந்த நூலில் வெளிப்படும், ராஜனின் காந்தி மீதான அப்பழுக்கற்ற பக்தியும் நம்பிக்கையும். இதைச் சொல்லும் அதே நேரத்தில், ராஜன், தன் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நினைவு அலைகள்’ நூலில் காந்தியைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை. 1937ல் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் டாகடர் ராஜன் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். சென்னை ராஜதானியின் ஒரிஸ்ஸா பகுதிகளில் ஏற்பட்ட காலரா நோய் பாதிப்புகளை நேரில் காண விமானத்தில் பயணிக்கிறார். காங்கிரஸ்  அமைச்சர்கள், கார், விமானப் பயணங்கள் மேற்கொள்ளுவதை ஆடம்பரம் என்று கண்டிக்கிறார் காந்தி. அப்போது ராஜன், காந்தியை ஒரு சின்ன மாகாணத்திலாவது ஆள  வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஆட்சியாளர்களின் கஷ்டம் புரியும். இப்படி வெளியிலிருந்து பேசிக் கொண்டேயிருப்பது சுலபம் என்று அங்கலாய்த்துக் கொள்கிறார். காந்தி தமிழ்நாட்டில் பயணம் செய்த மாதங்கள் பற்றிய ஒரு சிறு குழப்பமும் ஒன்று உள்ளது. இந்தப் புத்தகத்தின்படி, காந்தி 1934ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து மார்ச்சு 22ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. .ஆனால் இணையத்தில், Gandhiji’s Harijan Tour of Tamilnadu-என்ற ஒரு வலைப்பக்கத்தில், இதே பயணம் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு பாவண்ணன் எழுதியிருக்கும் சிறிய, அழகான, அதே சமயம் ஆழமான ஒரு முன்னுரையும் ராஜன் அவர்களின் முன்னுரையும் குறிப்பிடத்தக்கவை. இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாகவே சின்ன அண்ணாமலையின், ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ நூலில் வரும், தமிழ்நாடு காங்கிரசின் தீண்டாமை ஒழிப்பு போரை பற்றிப் படித்தால், காந்தியும் காங்கிரஸும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்தது என்ன என்ற கேள்விக்கு உண்மையான விடையினைக் காணலாம். சொல்வனம், மார்ச், 2017. சின்ன அண்ணாமலையின் இரு நூல்கள்- ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’, ‘கண்டறியாதன கண்டேன்’ [] இந்த இரண்டு நூல்கள் பற்றிய அறிமுகத்தை அவற்றிலுள்ள இரு சம்பவங்களோடு துவங்கலாம். இவை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட வேண்டியவை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். சிவஷண்முகம் பிள்ளை என்ற காங்கிரஸ்காரர் ராஜாஜியிடம் வருகிறார்.  “நான் சென்னை சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறேன். உங்கள் ஆசிர்வாதமும், ஆதரவும் வேண்டும்” என்கிறார். ராஜாஜி அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு எதிராக யார் போட்டியிடுகிறார்?” என்று கேட்கிறார். அவர் ஒரு பெயரைச் சொல்ல, ராஜாஜி, “அவரைவிட நீங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்கு தகுதி படைத்தவர் என்று நினைக்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்கிறார். வந்தவர், “நான் சென்னை நகரத்தின் துணை மேயராக இருந்திருக்கிறேன். அவையை நடத்திய நல்ல அனுபவம் உண்டு. என்னை எதிர்த்துப் போட்டியிடுபவருக்கு அது கிடையாது” என்று நிதானமாகச் சொல்கிறார். ராஜாஜி உடனடியாக, “நிச்சயம் என் ஆதரவு உங்களுக்குத்தான்.போய் வாருங்கள்” என்று சொல்லி விடுகிறார். அப்போது ராஜாஜியுடன் இருக்கிறார் ஒருவர். அவர் கேள்வி கொண்ட பார்வையுடன் ராஜாஜியைப் பார்க்க, ராஜாஜி அவரிடம், “வந்தவர், ஸ்ரீ சிவஷண்முகம் பிள்ளை. ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். என் கேள்விக்கு அவர் தன் பிறந்த வகுப்பைக் காட்டி ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்வாரோ என நினைத்தேன். அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன் பலத்தைச் சொல்லி ஆதரவு கேட்டார். நிச்சயம் அந்தப் பதவிக்கு இவர்தான் தகுதி என்று உறுதி செய்து கொண்டேன்” என்கிறார். உடன் இருந்தவர்தான் இந்த நிகழ்வைப் பதிவு செய்தவர். “சொன்னால் நம்பமாட்டீர்கள்” மற்றும் “கண்டறியாதன கண்டேன்” எனும் இந்த இரு நூல்களை எழுதியவர். இந்த நூலாசிரியர் பற்றிய சுவையான செய்தியும் இந்நூல்களில் உண்டு. 1942 ஆகஸ்டு புரட்சி நடக்கிறது. அப்போது திருவாடனை பகுதியில் கூட்டம் போட்டு மிகத் தீவிரமாகப் பேசியிருக்கிறார் நூலாசிரியர். அதற்காக, அவரை போலீசார் கைது செய்து திருவாடனை சிறையில் வைக்கிறார்கள். விஷயமறிந்த மக்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு சிறையை நோக்கி வருகிறார்கள். அதைக் கேள்விப்பட்டு மிரண்டு போயினர் போலீசார். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலை வேறு. இச்சமயத்தில் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று கைது செய்யப்பட்ட அவரிடமே யோசனை கேட்கிறார்கள். “பக்கத்திலேயே இருக்கும் உங்கள் பணிக் குடியிருப்புக்குச் சென்று விடுங்கள். உங்கள் உடுப்புக்களை மட்டும் காவல் நிலையத்தின் முன்னே போட்டுவிடுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார் அவர். அவர்கள் அப்படியே செய்கிறார்கள். வந்திருக்கும் கூட்டத்தின் தலைவர்களிடம் இவர் பேசி அமைதி காக்கச் சொல்கிறார். அடங்காத கூட்டம் லாக்கப் சாவியை ஒரு காவலரிடமிருந்து பெற்று லாக்கப்பைத் திறந்து அவரை விடுவிக்கிறது. ஆத்திரம் தாங்க முடியாமல், காவல் நிலையத்தைக் கொளுத்துகிறது. காவலர்களின் குடியிருப்பு பகுதிக்கும் கலவரம் செய்யப் போக எத்தனிக்கிறது. அவர்களைத் தடுக்கிறார் இவர். போலீஸார் கழட்டிப் போட்டிருந்த உடுப்புகளை எரித்துவிட்டு இவரைத் தோளில் ஏற்றிக் கொண்டு கோஷமிட்டுக் கொண்டே திரும்புகின்றது கூட்டம். அந்தச் சமயம் பார்த்து காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஒரு பெரும் போலிஸ் படையுடன் எதிரே வந்துவிடுகிறார். துப்பாக்கிச் சூடு நடக்கிறது. சிலர் இறக்கிறார்கள். இவருக்குக் கையில் குண்டு பாய்ந்து காயம். எப்படியோ பிழைத்து, காவல் துறையிடம் இருந்து தப்பி, சென்னை சென்று விடுகிறார். பின் அங்கிருந்து கம்பன் அடிப்பொடி சா. கணேசன், கல்கி முதலானோர் உதவியுடன் காசிக்கு ரயிலேறுகிறார். இடையில் இட்டார்சி ரயில் நிலையத்தில் சாப்பிடப் போகிறார். ஹோட்டல் விலை பட்டியல் பற்றித் தமிழில் விவாதிக்க, அங்கிருந்த சர்வர் “தமிழா?” என்கிறார்.  இவரிடமே திருவாடானை சம்பவம் குறித்து ஆர்வத்துடன் கேட்கிறார். அந்தச் சம்பவத்தின் நாயகனே இவர்தான் என்று அறிந்து பிரமித்துப் போகிறார். சாப்பாட்டுச் செலவை அந்த சர்வரே ஏற்றுக் கொள்கிறார். பின் அங்கிருக்கும் ஒரு தமிழரிடம் அறிமுகம் செய்கிறார். அந்தத் தமிழர் பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்யும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அந்த இன்ஸ்பெக்டர் (காவல் நிலைய எரிப்புக் குற்றவாளியான) இவரைத் தனது வீட்டுக்கே அழைத்துச் சென்று விருந்தளித்து மகிழ்கிறார். அப்போது அங்கே வரும் இன்ஸ்பெக்டரின் சிறு வயது மகனைக் கண்டு, அவன் பெயரை இவர் கேட்கிறார். அந்தச் சிறுவனின் பெயர் காந்தி. அதற்குள் மெட்ராஸ் மாகாணத்தில் இவர் தலைக்கு ரூபாய் பத்தாயிரம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவரது தந்தையை போலீசார் பிடித்து வைத்து விடுகிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இவர் நேராக வந்து சரணடைகிறார். கோர்ட்டில் 41 வருடங்களுக்கு எனத் தண்டனை விதிக்கப்படுகிறது. பிறகு ராஜாஜி வழக்கு நடத்தி, 8 மாத காலமாக  குறைக்கப்படுகிறது. வெளியே வந்து மீண்டும் தேசப்பணியைத் தொடர்கிறார். முதலில் சொன்ன சம்பவத்தில் ராஜாஜியுடன் இருந்தவரும், இந்தத் திருவாடானை ஜெயில் உடைப்பு சம்பவத்தின் நாயகரும் ஒருவரே. அவர்தான் ஸ்ரீமான் சின்ன அண்ணாமலை. இந்த நூல்களின் ஆசிரியரும் அவரே. ராஜாஜி, காமராஜ், ம.பொ.சி, கல்கி, சிவாஜி கணேசன், கண்ணதாசன், ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். தமிழ்ப் பண்ணை என்ற பதிப்பகத்தைக் கொண்டு பல அரியத் தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்தவர் இந்தச் சின்ன அண்ணாமலை. மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும், சின்ன அண்ணாமலை அவர்களின் “கண்டறியாதன கண்டேன்” மற்றும் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” எனும் இரு நூல்களில் விவரிக்கப்படுகின்றன. சொல்லப்போனால், இந்த இரு நூல்களைப் பற்றி எழுதத் தொடங்கினால், அவற்றில் சொல்லப்படும் சம்பவங்களில் ஒன்றிரண்டை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தவே முடியாதென்றே தோன்றுகிறது. அவ்வளவு சம்பவங்கள். சாகசங்கள். இவ்விரண்டில் “கண்டறியாதன கண்டேன்”  எனும் நூல் சின்ன அண்ணாமலை அதே பெயரில் முன்பு எழுதிய நூலையும், அவருடைய மற்றொரு நூலான “காணக் கண் கோடி வேண்டும்” என்கிற நூலையும் அடக்கிய தொகுப்பாகும். “கண்டறியாதன கண்டேன்” என்ற  நூல் முதன்மையாக, மேலே சொன்ன அந்த சிவஷண்முகம் பிள்ளை அவர்கள் சென்னை மாகாணத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், தென் தமிழ்நாட்டில் அவர் தலைமையில் நடந்த ஹரிஜன ஆலயப் பிரவேசம் பற்றியதாகும். 1946லிருந்து 1955 வரை மெட்ராஸ் ராஜதானியின் சட்டசபையிலும், பின் சென்னை மாகாணத்தின் அவையிலும், அவை நாயகராக விளங்கிய சிவஷண்முகம் பிள்ளை தலைமையில்தான் சுதந்திர காங்கிரஸ் அரசு தனது ஹரிஜன ஆலயப் பிரவேச நிகழ்ச்சிகளைத் தீவிரமாக முன்னெடுத்தது. அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும், சின்ன அண்ணாமலையும் கல்கியும் சிவஷண்முகம் பிள்ளையின் கூடவே பயணம் செய்து ஒவ்வொரு ஆலயத்தையும் கண்டு வந்திருக்கின்றனர். ஹரிஜன ஆலய பிரவேச நிகழ்ச்சி என்பது வெறும் சடங்காக நிகழ்த்தப்பட்டதோ என்ற சந்தேகம் உள்ளவர்கள், நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். அக்காலத்தில் கோவில் நுழைவு சீர்திருத்தம் உருவாக்கிய பெரும் எழுச்சியையும், ஹிந்துக்களிடையே அதற்கு இருந்த ஆதரவையும் பற்றி படிப்பது உண்மையில் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக உள்ளது. சிவஷண்முகம் பிள்ளை அவர்களின் பேச்சுகள், ஒரே சமயத்தில், ஹரிஜனங்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை நினைவுபடுத்தி, அவர்களை அதற்குத் தயார் செய்தன. அதே சமயத்தில், கேஸ்டிஸ்ட் இந்துக்களின் மனசாட்சியின் மீது தொடுக்கப்பட்ட கூரிய அம்புகளாகவும் அமைந்திருக்கின்றன. கல்கி சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த மேடைப்பேச்சாளரும் கூட என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவருடன் ஒரே மேடையில் பேசுகையில், அவருக்கு முன் சற்றும் தரம் குறைந்துவிடாமல், தனக்கே உரிய பாணியில், பேசியும், பாடியும், மக்களைக் கவர்ந்தவர் சின்ன அண்ணாமலை என்பதையும் இந்த நூலில் காண முடிகிறது. ஹரிஜன ஆலயப் பிரவேச நிகழ்ச்சியானது, ஹிந்துக்களை மட்டுமல்லாது, கிறுத்தவர்களையும் கவர்ந்து அவர்கள் ஆதரவையும் பெற்றிருந்திருக்கிறது. அதை மணப்பாடு கிராமத்தில் இந்தச் செயல் வீரர்கள் பெற்ற வரவேற்பில் நாம் காண முடிகிறது. “கண்டறியாதன கண்டேன்” எனும் நூலின் நாயகர்கள் இருவர். ஒருவர் சிவஷண்முகம் பிள்ளை. 1946லிருந்து 55 வரை மெட்ராஸ் ராஜதானியின் சபாநாயகராக பதவி வகித்தவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். இவர்தான் முதன் முதலில் சபாநாயகர் பதவி வகித்த ஹரிஜனர். ஆனால், சமீபத்தில், தமிழகச் சட்டமன்றத்தின் சபாநாயகராக திரு. தனபால் பதவியேற்றபோது, அவர்தான் தமிழகச் சட்டமன்ற வரலாற்றின் முதல் ஹரிஜன சபாநாயகர் என்று எல்லா பத்திரிக்கைகளும், அவர் சார்ந்த கட்சியும் கூறியது எப்படி என்பது தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாடு என்று  பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு என்ற அடிப்படையில் சொல்கிறார்கள் போல. இன்னொரு நாயகர் ராஜாஜி. அவரை “குல்லுக பட்டர்” என்றும் “குலக்கல்வியின் பிதாமகர்” என்றும், “சாதி அமைப்பை பாதுகாக்கவே முனைந்தவர்” என்றும் இன்று பிரச்சாரங்கள் நிலவுகின்றன. மாறாக, ஹரிஜன நலன் என்பது ராஜாஜிக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பது இந்த புத்தகங்களைப் படித்தால்தான் தெரியும். ஒருமுறை சிவஷண்முகம் பிள்ளையுடன் திருப்பதி செல்கிறார் ராஜாஜி. அங்கு மலை மீது ஏறக்கூட அன்று ஹரிஜனங்களுக்கு உரிமை இல்லை என்பதை அறிந்து வேதனையுடன் பிள்ளையிடம், “என் உயிர் போவதற்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல் ஓயமாட்டேன்” என்று சூளுரைக்கிறார் ராஜாஜி. அதே போல திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு முறை செல்லும்போது அங்கேயும் ஹரிஜனங்களுக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டவுடன், தானும் அந்தக் கோவிலுக்குள் நுழையமாட்டேன் என்று திரும்பிவிடுகிறார் ராஜாஜி. பின்னர் ராஜாஜி மீண்டும் முதல்வராக ஆனபிறகு, தமிழகப் போலீஸ் துறையில் உதவி சூப்பரிண்டண்ட் பதவி ஒன்று காலியாகிறது. அது ஹரிஜனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவி. அவ்விடத்துக்கு தகுதியுள்ள ஆள் கிடைக்கவில்லை என்றும் அதனால் இதர ஜாதியினருக்கு அப்பதவியைக் கொடுத்துவிடலாம் என்றும் ஆலோசனை சொல்லப்படுகிறது. ராஜாஜி அதை ஒப்புக்கொள்ளவில்லை. கக்கன், பிள்ளை ஆகியவர்களிடம் கலந்தாலோசித்து காவல் துறையிலேயே இருக்கக் கூடிய அரிஜன இளைஞர் ஒருவரை கண்டுபிடிக்க வைக்கிறார். கமிஷனர் அலுவலகத்திலேயே அவரை நேரடித் தேர்வு எழுதச் செய்கிறார். அதில் தேர்ச்சியடைந்தாலும், அந்த இளைஞருக்கு அந்தப் பதவிக்கான உடல்வாகு இல்லை. பிரச்சினை ராஜாஜியிடம் வருகிறது. “இதுவரை அவர் நல்ல சத்துள்ள உணவே உண்டிருக்க மாட்டார். அதனால் அப்படி இருக்கிறார். வேலையைக் கொடுத்து 6 மாதம் கழித்துப் பாருங்கள், வேலை தந்த தன்னம்பிக்கையும், நல்ல உணவும் அவர் உடலை தேற்றிவிடும்” என்கிறார் ராஜாஜி. அது போலவே நடக்கிறது. அந்த ஹரிஜன இளைஞர்தான் பிற்காலத்தில் புகழோடு காவல்துறை  உயர் அதிகாரியாக பணியாற்றிய சிங்காரவேலு அவர்கள். “கண்டறியாதன கண்டேன்” எனும் நூலின் இரண்டாம் பகுதி ராஜாஜி வங்காள மாகாணத்தின் கவர்னராக பதவியேற்றதை ஒட்டியும், தாகூரின் சாந்தி நிகேதனில், ஒரு தமிழ் இருக்கை அமைப்பதற்கான விழாவை ஒட்டியும், சின்ன அண்ணாமலை, டி. கே. சிதம்பரநாத முதலியார், மற்றும் கல்கி ஆகியோர் கல்கத்தா சென்று அங்கே அடைந்த அனுபவங்களின்  தொகுப்பு. அந்த சமயத்தில் எட்டையபுரத்தில் பாரதி மணி மண்டபம் அமைப்பதற்கான, நிதி திரட்டும் முயற்சியில், இம்மூவரும் ஈடுபட்டிருந்தனர் என்பதும், அதற்குக் கொல்கத்தா வாழ் தமிழர்கள் தந்த பெரும் ஆதரவையும், இவர்களது சாந்தி நிகேதன் அனுபவங்களையும், மிக மிக சுவாரஸியமாகச் சொல்லியிருக்கிறார் சின்ன அண்ணாமலை. “கண்டறியாதன கண்டேன்” எனும் இந்த நூல் இரு பெரும் முயற்சிகளை ஒட்டிய அனுபவங்களின் தொகுப்பு என்பதால் ஓரளவு சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், இரண்டாவது புத்தகமான “சொன்னால் நம்பமாட்டீர்கள்”  எனும் நூலில் சொல்லப்படும் அவர் வாழ்க்கை அனுபவங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வகைகளும், எப்படி விவரிப்பது என்ற பெரும் திகைப்பையே ஏற்படுத்துகின்றன. நான் முதலில் சொன்ன அந்தத் திருவாடானை சம்பவம் ஒரு பதச் சோறுதான். அதைப் போல சாகசமும், சங்கடமும், சந்தோஷமும் தரும் நூறு அனுபவங்கள் அவரது வாழ்வில் நடந்துள்ளன. ஒரு தனி மனிதனின் வாழ்வில் இவ்வளவு சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற முடியுமா, இவ்வளவு வகையான மனிதர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ள முடியுமா என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ராஜாஜியுடன் மட்டுமல்ல, காமராஜருடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை. எதிர்முகாமில் இருந்தாலும் அண்ணாத்துரையும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது. சிவாஜி கணேசன் ரசிகர் மன்றப் பேரவையைத் துவக்கி 7 வருடங்கள் அதன் தலைவராக இருந்தவர் சின்ன அண்ணாமலை. அதே சமயம், சிவாஜிக்கு எதிர்முகாமாகக் கருதப்பட்ட எம்ஜிஆரை அவரின் முதல் சமூகப் படமான திருடாதே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார். கண்ணதாசனுக்கு மிக நெருக்கமானவர். மபொசியின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து அவர் தோளோடு தோள் நின்று  போராட்டங்களில் பங்கு கொண்ட அனுபவங்கள் இந்நூலில் வருகின்றன. கலைவாணர் என்.எஸ்.கேவுடன் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அப்போது என்.எஸ்.கே பேசிய பின்பு கூட்டம் கலையாமல் தான் பேசுவதாக ஆயிரம் ரூபாய் சவால் வைக்கிறார். அதில் வென்று, அந்தக் கூட்டம் நடைபெற்ற சென்னை தக்கர் பாபா அமைப்புக்கே தான் வென்ற பணத்தை நன்கொடையாக வழங்குகிறார். (தக்கர் பாபா அமைப்பு ஹரிஜனங்களின் மேம்பாட்டுக்கான அமைப்பு.) ஈவெராவுடன் ஒரே மேடையில் பேசிப் பெற்ற 10 ரூபாயை பின்னர் வேறு ஒரு நிகழ்வில் ஈவெராவிடமே திருப்பி அளித்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட, காந்திஜியின் ஹரிஜன் பத்திரிக்கையின் தமிழ்ப்பதிப்புக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். ராஜாஜியின் பரிந்துரையின் பேரில் அந்தப் பொறுப்பை அவருக்குத் தரும்போது, “பொதுவாக ராஜாஜி யாருக்கும் சிபாரிசு செய்யவே மாட்டார். ஆனால், அவரே உங்களுக்கு சிபாரிசு செய்யும்போது, அதை  மதிக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் மஹாத்மா காந்திஜி. தமிழகத்தில் 50களில் காங்கிரஸை பலவீனப்படுத்திய முக்கியமான ஒரு நிகழ்வு காங்கிரஸில் உண்டான பிளவு. காமராஜரும் ராஜாஜியும் அந்தப் பிளவுபட்ட பிரிவுகளின் தலைவர்கள். அந்தப் பிளவின் போது  ராஜாஜியின் சார்பாக, அவரது மந்திரிசபைக்கு ஆதரவு  தரச்சொல்லி துணிச்சலோடும், உரிமையோடும் காமராஜரிடமே வாதிட்டிருக்கிறார், சின்ன அண்ணாமலை! அப்போது காமராஜர் ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமையிழந்து, “போ, போய்  அந்தக் கிழவரையே கட்டிக்கொண்டு அழு!” என்று சொன்னதாக எழுதியிருக்கிறார். சொன்னால் நம்பமாட்டீர்கள் ரக சம்பவங்களில் இதுவும் ஒன்று. அதிகார மையங்களுக்கும், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் இவ்வளவு அருகில் இருந்தும், தனக்கென தனிப்பட்ட முறையில் எதுவும் பெறாதவராகவே இருந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை.  இதை அவர் குடும்பம் அடைந்த வறுமையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அதை உறுதிபடுத்தும் சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். ராஜாஜி அமைச்சரவையில் இருந்த டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் ஒருமுறை இவரிடம், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார். “புத்தகப் பதிப்புத் தொழிலில் இருக்கிறேன்” என்று பதில் சொல்கிறார் இவர். “அது சரி. சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்கிறார் ராஜன். “மனைவியின் நகைகளை விற்றுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் நம்மவர். விஷயம் ராஜாஜியின் காதுக்குப் போகிறது. சின்ன அண்ணாமலையின் மனைவியிடம், இனிமேல் தன் கணவரின் தொழிலுக்காக நகைகளை கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார் ராஜாஜி! அப்படி தப்பித்தன சில நகைகள். அந்த நகைகளை “ராஜாஜி காப்பாற்றிய நகைகள்” என்று பயபக்தியோடு வைத்துக் காப்பாற்றுகிறார் சின்ன அண்ணாமலையின் மனைவி! இந்த அரசியல், பத்திரிகை அனுபவங்களுக்கிடையே கிங்காங்- தாராசிங் இருவரது போட்டா போட்டி காட்டா குஸ்தி காட்சிகளின் அமைப்பாளராகவும் இருந்து,அதற்காக பம்பாய் வரை சென்று போட்டிகள் நடத்தி, வெற்றிகரமான வசூல் சக்ரவர்த்தியாகவும் சின்ன அண்ணாமலை இருந்திருக்கிறார்.  இந்த மாதிரியான புத்தகங்களைப் பற்றி எழுதுவதில் உள்ள பெரிய சிரமமே இவற்றில் கொட்டிக் குவிந்திருக்கும், பல அற்புதமான சம்பவங்களில் எதை விடுத்து எதைச் சொல்வது என்பதுதான். இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரையில், அவரது தனிப்பட்ட வாழ்வின் சம்பவங்கள் அதிகம் இல்லை. அப்படி இடம் பெற்றிருக்கும் சம்பவங்களில் சுவாரசியமான இரண்டும், முக்கியமானது ஒன்றும்- இது தற்காலத்துக்கும் பொருள்படக்கூடிய சம்பவம். சுதந்திரம் கிடைத்த சில மாதங்களில் பம்பாய் செல்கிறார் சி.அண்ணாமலை. ஒரு இடத்தில் நிகழும் நாடக விழாவுக்குச் சென்றுவிட்டு மாதுங்கா செல்ல வேண்டும் கலவர நேரம். எந்த டாக்சியும் நிறுத்த முடியவில்லை. ஒரே ஒரு டாக்சி கிடைக்கிறது. ஓட்டுனரிடம், “நானும் இந்து நீயும் இந்து இந்துவுக்கு இந்து உதவி செய்,” என்று கெஞ்சுகிறார். அந்த ஓட்டுனர் மாதுங்கா வரச் சம்மதித்து அங்கு அவரை இறக்கி விட்டுவிட்டுச் சொல்கிறார். “நீங்கள் சொன்னது மிகச் சரி. நான் ஒரு இந்துவுக்கு கண்டிப்பாக உதவியாக வேண்டும். அப்போதுதான் நான் குர்ஆனில் சொல்லியிருக்கும் முசல்மானாக இருப்பேன்,” என்று. இன்னுமொரு சுவையான சம்பவம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மற்றும் சிவாஜிகணேசன் சம்பந்தப்பட்டது. ஒருமுறை நாகர்கோவிலில் உள்ள கவிமணியை சிவாஜியும் சி.அவும் சந்திக்கிறார்கள், “இவர் சிவாஜி கணேசன்,” என்று அறிமுகப்படுத்துகிறார் சி.அ. கவிமணி, “அப்படியா? சந்தோஷம், என்ன தொழில் பண்றீங்க?” என்று கேட்கிறார். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர் மிகச்சிறந்த நடிகர் என்று சி.அ விவரிக்கிறார். பின் சிவாஜி , “நாம் என்னவோ மிகப் பெரும் புகழ் பெற்றுள்ளோம் என்று நினைக்கிறோம். ஆனால் அறிஞர்களுக்கு நம்மைத் தெரியவில்லை. அதற்காக இன்னமும் சிறப்பாக பாடுபட வேண்டும்,” என்று சொல்கிறார். பின் நடப்பதுதான் சொன்னால் நம்பமாட்டீர்கள் மொமெண்ட். இது நடந்த ஒரு மாதத்திற்குள், கவிமணி கப்பலோட்டிய தமிழன் படம் பார்த்துவிட்டு, அதில் சிவாஜியின் நடிப்பை பாராட்டி ஒரு பெரிய கடிதம் சிவாஜிக்கு எழுதுகிறார்! இந்த நூலில் உள்ள முக்கியமான, என் மனதைத் தொட்ட சம்பவம் இது- இளவயதில், அவர் உள்ளூரில் தந்த தொந்தரவுகளைத் தாங்கமுடியாது (வேறு என்ன, காங்கிரஸ் ஆதரவு, கள்ளுக்கடை மறியல், காந்தியப் போராட்டங்கள்) அவரது தந்தை அவரை மலாயாவுக்கு அனுப்பிவிடுகிறார். அங்கு போயும் சின்ன அண்ணாமலை சும்மா இருக்கவில்லை. அங்கு இருந்த தமிழ்த் தொழிலாளிகளிடையே குடிப்பழக்கம் இருந்தது. அந்தக்  குடிப்பழக்கத்தை நிறுத்த, இந்தியாவில் தான் செய்து கொண்டிருந்த கள்ளுக் கடை மறியல் போராட்டத்தை மலாயாவில் தொடங்கி, அங்கே இருந்த தமிழ்ப் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்கள் சில கள்ளுக் கடைகளுக்குத் தீவைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரி,  இதற்குக் காரணமான நம்மவரை, “Bring that man  here” என்று உத்தரவு போடுகிறார். அப்போது பதினேழே வயதான சின்ன அண்ணாமலையை அவர் முன் கொண்டு நிறுத்துகிறார்கள். வியப்பு தாள  முடியாமல், “He is a boy !” என்று வியந்து கூவுகிறார் பிரிட்டிஷ் அதிகாரி. அதற்குப் பதிலாக நம்மவர் சொல்கிறார், “But, I am a father of a boy”. ஆம். அப்போது சின்ன அண்ணாமலைக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. அந்த வெள்ளைக்கார அதிகாரியால் வியப்பைத் தாங்க முடியவில்லை. உடனே தனது மனைவியை அழைத்து இவர் சொன்னதைச் சொல்கிறார். பிறகு உரையாடல் இப்படிப் போகிறது: “உனக்கு இப்போது என்ன வயது?” “பதினேழு.” “எப்போது திருமணம் ஆனது?” “13 வயதில்.” “13 வயதில் திருமணம் செய்துகொண்டு என்ன செய்வது?” “பிள்ளை பெறுவது!” என்று பதில். வெடித்துச் சிரித்தனர் பிரிட்டிஷ் தம்பதிகள். அடுத்த கேள்வி, “உன் பிள்ளை உன் போல சிவப்பா?” “நான் இன்னும் பார்க்கவில்லை.” “பார்க்க ஆவலில்லையா?” “பார்க்க ஆசையாய் இருக்கிறது.” “அப்படியிருக்கும்போது ஏன் இந்த மாதிரி வன்முறையில் எல்லாம் ஈடுபடுகிறாய்?” “நான் காந்தியவாதி. வன்முறையில் ஈடுபடவில்லை. கள்ளுக் கடையின் மேல் உள்ள வெறுப்பால் பெண்கள் அதற்குத் தீ வைத்துவிட்டனர். செய்யாத குற்றத்துக்காக என்னை தண்டிப்பது சரியா என்று மேன்மை தங்கிய சீமாட்டியிடம் கேட்கிறேன்.” சீமாட்டி சீமானின் காதில் ஏதோ சொல்கிறார். உடனே தண்டனை தீர்ப்பாகிறது. ஒரு மாத காலத்திற்குள் பிள்ளையைப் பார்க்க ஊர் போய்ச் சேர வேண்டும் என்பதே அது. அங்கிருக்கும் மற்ற ஆண்கள் உடனடியாக அவரை ஊருக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார்கள். மேலே சொன்ன சம்பவம் நகைச்சுவையுடன் கூடியது என்றால், சின்ன அண்ணாமலையும் அவரது மனைவியும் ராஜாஜி மீது வைத்திருந்த களங்கமற்ற மனமார்ந்த பக்தியோ நெகிழ்வூட்டக்கூடியது. ராஜாஜி ஒருமுறை சின்ன அண்ணாமலையின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, நம்மவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதும், “செட்டி நாட்டு இட்லி மிகவும் பிரபலமாயிற்றே. இரண்டு இட்லிகள் கொண்டு வாருங்கள்” என்கிறார் ராஜாஜி. “பிராமணரான நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுவது அபச்சாரமில்லையா?” என்று பயந்து கேட்கிறார் அண்ணாமலையின் மனைவி. அங்கு ராஜாஜி, தனக்கான தர்மத்தைக் கடைபிடிப்பவர்களே பிராமணர்கள் என்று அவருக்கும் மற்றவர்களுக்கும் விளக்கிச் சொல்கிறார். உண்மையான பிராமணர்களுக்கு இது மாதிரியான தடைகள் எதுவும் இல்லை என்றும் விளக்கி அங்கே சாப்பிடுகிறார் ராஜாஜி. அதிலிருந்து அவரது பரம பக்தையாகிவிடுகிறார் அண்ணாமலையின் மனைவி. அவரது மரணம் கூட ராஜாஜி ஆசீர்வதித்தது போல தீர்க்க சுமங்கலியாகவே நிகழ்கிறது. அதுவும் எப்படி? ராஜாஜி தனது வாழ்வின் இறுதியில் மருத்துவமனையில் இருக்கும் அதே சமயத்தில் சின்ன அண்ணாமலையின் மனைவியும் உடல்நலம் மிகவும் குன்றி இருக்கிறார். ஒருமுறை நோயின் தாக்கத்தில் நினைவிழந்து இருந்து மீண்டும் விழிக்கையில், தனது கணவர் எங்கே, என்று கேட்கிறார். “ராஜாஜியின் மரணத்தை அறிந்து அங்கே செண்டிருக்கிறார் உங்கள் கணவர்” என்று ஒரு உறவினர் சொல்லிவிடுகிறார். “என்ன! ராஜாஜி இறந்துவிட்டாரா?” என்று கேட்டவர் அப்படியே நினைவிழந்து இறந்தும் விடுகிறார். அந்த உத்தம மனைவியின் அரும் மரண நிகழ்வுக்குச் சற்றும் குறையாதது, சின்ன அண்ணாமலை அவர்களின் மரணமும். 1980ல் தனது பிறந்த நாள் மணிவிழாவின்போதே, அந்தச் சடங்குகள் நடந்துகொண்டு இருக்கையிலேயே மரணம் அடைகிறார் சின்ன அண்ணாமலை. அவ்வமயத்தில் கவிஞர் கண்ணதாசன் அந்த மரணத்தின் விசேஷத் தன்மையை, 60 வயது பூர்த்தியாகி, தான் பிறந்த அதே நாளிலும் கோளிலும் ஒரு மனிதன்  இறந்து போவதின் சிறப்பினை எழுதியதைப் படித்தது இன்னும் என் நினைவில் உள்ளது. ஒரு அசாதாரண வாழ்க்கையின் அசாதாரண முடிவு. உண்மையில், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அவநம்பிக்கை இருளில் இது போன்ற ஒரு லட்சியவாத காலகட்டத்தின் வாழ்க்கை அனுபவங்களைப் படிப்பது முற்றிலும் ஒரு பரவச அனுபவம். மட்டுமல்ல. ஏதோ ஒரு வகையில் சூழ்ந்திருக்கும் இருள் நிரந்தரமல்ல என்ற நம்பிக்கை  ஊட்டும் ஒளிமிகுந்த உணர்வுகளையும் நமக்கு அளிக்கும் உன்னத அனுபவம் என்றும் சொல்லலாம். இன்று சின்ன அண்ணாமலை போன்ற எத்தனையோ தியாகிகளின், செயல் வீரர்களின் நினைவுகள்  மங்கலாகிக் கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் இந்தப் புத்தகங்களை இன்றைய சூழலில் மிக அழகாக மறுபிரசுரம் செய்திருக்கும் சந்தியா பதிப்பகத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கூடவே இந்தக் கட்டுரைகள் முதன்முதலில் வெளிவந்த தேதி, மாதம், மற்றும் ஆண்டு விவரங்கள் கட்டுரைகளின் கீழே தரப்பட்டிருந்தால் சமகால வரலாற்றின் போக்கினை அறிந்து கொள்வதற்கு இன்றைய ஒரு இளம் வாசகனுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். அடுத்து வரும் பதிப்புகளில் இதைச் சேர்க்கவேண்டும் என்று பதிப்பகத்தாரைக் கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், இதிலிருக்கும் ஆசிரியர் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளக்கூடிய இதே ஆசிரியரின் மற்ற நூல்களையும், அவரது தமிழ்ப் பண்ணை பதிப்பித்த அந்த பழைய நூல்களையுமே கூட இந்தப் பதிப்பகத்தார் முனைந்து வெளியிட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்  கொள்ளத் தோன்றுகிறது. சொல்வனம், மார்ச், 2016 ஆபிரஹாம் எராலியின் இந்திய வரலாற்றுத் தொடர் நூல்கள் [] மணி பத்மம்  இந்தியாவின் நீண்ட வரலாறு பல சமயங்களில் சாபம் என்றே தோன்றச் செய்கிறது. ஆனாலும் இந்திய வரலாற்றின் மீதான ஆர்வம் வற்றுவதேயில்லை. இந்திய வரலாற்றைப் பேசும் புதிய ஒரு புத்தகம் குறித்துக் கேள்விப்படும்போது உடனே அதைப் படித்து விடத் தோன்றுகிறது. கடந்த வருடம் தமிழகத்தில் அதிகம் அறியப்படாத “உப்பு வேலி” என்ற நூல் அறிமுகமாகியது. The Great Hedge of India என்ற நூலின் தமிழ் மொழியாக்கம் அது. தமிழாக்கம் செய்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சேர்ந்த நண்பர் திரு சிறில் அலெக்ஸ். நூல் வெளியீட்டு விழாவினையொட்டி இந்தியா வந்திருந்த அதன் ஆசிரியர் திரு.ராய் மாக்ஸம் அவர்களுடன் கோவையில் உரையாட சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது வில்லியம் டால்ரிம்பிள் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் பதிலுரைக்கும்போது வில்லியம் டால்ரிம்பிளைவிட தான் ஆபிரகாம் எராலியின் எழுத்தை அதிகம் மதிப்பதாகக் கூறினார். நான் எராலியின் பெயரை அப்போதுதான் முதல்முறை கேட்கிறேன். ஆனாலும் எங்கோ ஒரு மணி அடித்தது. அந்தச் சந்திப்பு நடந்து சரியாக ஒரு மாதத்தில் எராலி அவர்கள் மறைந்து செய்திகளில் குறிப்பிடப்பட்டார். அவர் 80களின் இறுதியிலும் 90களிலும் நான் விரும்பி வாசித்து வந்த, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த, Aside ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியர் என்று அப்போது தெரியவந்தது. அதுதான் அந்த பரிச்சய மணியோசைக்குக் காரணம் என்று புரிந்து கொண்டேன். அவர் மறைவையொட்டி பெங்குயின் நிறுவனம் அவர் எழுதிய இந்திய வரலாற்று நூல்வரிசையை சிறப்புப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு நூல்கள். சிந்துவெளி நாகரிகம் தொடங்கி, மொகலாய பேரரசின் அந்திமக் காலம் வரை. விலை ஐநூற்றுக்கும் குறைவுதான். வழக்கம் போல எங்கள் நண்பர், ‘தியாகு நூல் நிலையம்’ தியாகு வாங்கிவிட்டார். வெகு வேகமாக முதல் நான்கு பாகங்கள் படித்து விட்டேன். உண்மையில் இப்போது, இவ்வளவு நாட்கள் இவரது புத்தகங்கள் பற்றிக் கேள்விப்படாமல்கூட இருந்தது குறித்து வெட்கப்படுகிறேன். புத்தகங்களில் தலைப்பில் உள்ள கவித்துவத்தையே முதலில் சொல்ல வேண்டும் முதல் புத்தகம் மணி பத்மம். அதாவது Gem in the Lotus . இந்தத் தலைப்பே இது யாரை முதன்மைப்படுத்துகிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆம், புத்தர்தான். பொதுவாகவே இந்திய வரலாறு என்பது புத்தருடன்தான் துவங்குகிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது சிந்து சமவெளி நாகரிகம் குறித்து தெரிய வருவதற்கு முன்னர் சொல்லப்பட்டதாக இருக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரிகம் குறித்து அறியப்பட்டது முதல் இந்திய வரலாறு அங்கிருந்து தொடங்குவதே மரபாக இருக்கிறது. ஆனால் எராலியின் முதல் புத்தகம் மணிபத்மம் (Gem In the Lotus) அதற்கும் முன்னால் இந்தியா மேற்கொண்ட பயணத்தோடு துவங்குகிறது. கோண்ட்வானா நிலப்பரப்பிலிருந்து இந்திய நிலப்பகுதி பிரிந்து வந்து ஆசிய நிலப்பகுதியோடு மோதி இமயமலையும் இன்றைய இந்திய நிலப்பரப்பும் உருவாவதில் தொடங்கி வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து சிந்துவெளி நாகரிகத்துக்கு வந்து சேர்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒழுங்கையும், அமைப்பையும் வியக்கும் எராலி இந்திய கலாசாரத்தின் பல பிற்கால அடையாளங்கள் அங்கிருந்தே தொடங்குவதைச் சுட்டிக் காட்டுகிறார். இதில் முக்கியமான ஒரு பார்வையாக அவர் முன்வைப்பது சிந்து சமவெளி நாகரிகம் என்பது, முதன்மையாக ஒரு utilitarian நாகரிகம் என்பதுதான். மிக அவசியமான தேவைக்கு மிகையாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட எந்த பொருளும் இதுவரை அங்கு கிடைக்கப் பெறவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். மிகத் திறமையாகவும், அக்காலத்தின் நோக்கில் உயர் தொழில்நுட்பத்துடனும், அமைக்கப்பட்ட வீதிகள், கப்பல் போக்குவரத்து பெரிதும் வளர்ந்திருப்பதைக் காட்டும் கருவிகள் போன்றவை எல்லாம் இருந்தும் அதன் சமகால எகிப்திய நாகரிகம் போல கலை அழகுடன் கூடியவை ஏதும் அங்கு இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போதும், இன்னமும் பொருள் கொள்ள முடியாத அந்த மொழியாலும், அந்த மக்கள் எத்தகையவர்கள் என்பதில் நாம் அறிந்து கொள்வதிலும் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது என்கிறார். எராலி வழமையான கி.மு. கி.பி. என்ற வகைமைக்குள் இந்திய வரலாற்றைப் பகுப்பதில்லை. இந்த முதல் புத்தகத்தில் மகதப் பேரரசின் துவக்கத்திலிருந்து- கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட ஓர் ஆயிரம் வருடங்கள்- கி.பி 6ம் நூற்றாண்டு வரை, இந்திய வரலாற்றின் செவ்வியல் காலகட்டம் என்று வரையரைக்கிறார். பின்னர் 7ம் நூற்றாண்டு தொடங்கி இன்னுமொரு நான்கு நூற்றாண்டுகள், அதே செவ்வியல் காலகட்டத்தின் மங்கிய நீட்சி என்கிறார். இந்தச் செவ்வியல் காலகட்டத்தின் முதல் பகுதி புத்தரின் வரலாற்றில் தொடங்கி, குப்தர்களின் காலம் வரை நீள்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய நாகரீகம் அதன் உச்சத்தில் இருந்தது என்பதே எராலியின் துணிபு. குப்தர்களின் காலம் பொற்காலம் என்று கருதப்படுவதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் ஆர்வமூட்டுபவை. அந்தக் காலக்கட்டம் அதற்கு முன்னால் உருவாகியிருந்த ஒரு காலகட்டத்தின் விளைவு என்கிறார். சொல்லப்போனால் அது ஒரு after glow என்பதே அவரது முடிவு. இதற்கு அவர் சுட்டும் காரணங்கள் சுவாரசியமானவை. இந்த முதல் மூன்று புத்தகங்களிலும், Gem in the Lotus, The First Spring -Part 1 , The First Spring Part II ஆகிய மூன்று புத்தகங்களில் எராலி இந்தியாவின் துவக்க கால வரலாற்றினைக் குறித்துச் சொல்வதை கீழ்க்காணுமாறு தொகுத்துச் சொல்லலாம். 1. இந்தியா சுமார் கி.மு.600 முதல் – கிபி. இரண்டாம் நூற்றாண்டு வரை ஒரு திறந்த சமூகமாக இருந்தது. மேலைநாடுகளுடன், குறிப்பாக, கிரேக்க, ரோம, பாரசீக சமூகங்களுடன் அது கலந்துரையாடியதன் விளைவே இந்தியாவில் பல தத்துவங்களையும் வரவேற்கும் போக்கு இருந்ததற்கு முக்கிய காரணம். 2. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார். 3 .வைதீக மதத்துக்கு எதிரான அவைதீக மதங்களான பௌத்த சமண, அஜீவக மதங்களின் தோற்றமும் அவை ஓங்கி வளர்ந்த காலகட்டமும் இதுதான். பொதுவாக நாம் இதுவரை அறிந்த வழமையான பாடப்புத்தக வரலாற்றுக்கு மாறாக, இம்மதங்கள் வைதீக மதத்துடன் பூசலிட்டதைவிட, தங்களுக்குள் பூசலிட்டுக் கொண்டதே அதிகம் என்று எராலி கண்டடைகிறார். முக்கியமாக புத்தரும், மகாவீரரும் கடுமையான சொற்களால் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டார்கள் என்பதும், அதைவிட அதிகமாக, ஆசீவக மதத்தின் நிறுவனரான, மாகாளி கோசலாவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்கள் என்றும் பல ஆதாரங்களை முன்வைத்து எராலி சொல்வது வியப்புக்குரிய ஒன்று. இத்தனைக்கும் கோசலாவும் மகாவீரரும், ஆறு வருடங்கள் வரை ஒன்றாகவே இருந்து பரப்புரை செய்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். 4. இந்தப் அறிவொளிக் காலத்தின் முடிவு, மகத சாம்ராஜயத்தின் முடிவின்போது மெல்லத் துவங்கிவிட்டாலும், இன்னுமொரு 500 ஆண்டுகள், ஏறத்தாழ கி.பி 6ம் நூற்றாண்டு வரை நீடித்து பின்னரே மறைந்தது என்பது அவரது வாதம். இந்த வீழ்ச்சிக்கான முக்கியமான காரணமாக அவர் சொல்வது ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடனான வணிகத்தின் வீழ்ச்சியும். இந்த வீழ்ச்சியே இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த பெரும் செல்வத்தை வற்ற வைத்து, ஒரு சிறந்த நகர நாகரிகமாக உருவாகியிருந்த இந்திய சமூகத்தை மீண்டும் ஒரு குறுகிய விவசாயச் சமூகமாக மாற்றியது என்கிறார் எராலி. கூடவே வணிகர்களின் மதங்களான பௌத்தமும் சமணமும் தங்கள் செல்வாக்கை இழந்தன என்கிறார். மிக அரிதான பார்வை இது என்று நான் நினைக்கிறேன். உலக வர்த்தகம் (globalization ) ஒரு நாட்டுக்கு நல்லதா இல்லையா என்று இன்னமும் முடிவு செய்யப்படாத காலமாகவே நம் காலம் இருக்கிறது. இந்த நிலையில், எங்கோ இருந்த ரோம பேரரசின் வீழ்ச்சி, இந்திய நாகரிகத்தை பொலிவிழக்கச் செய்தது என்பதை மிகவும் நம்பகத்தன்மையோடு விவரிக்கிறார். எராலி. 5. இந்தியாவின் இந்த பொருளியல் வீழ்ச்சி, அதை ஒரு உள்நோக்கிய சமூகமாக மாற்றி, சாதிப் படிநிலைகள் இறுகி, ஒரு தேங்கிப்போன சமூகமாக ஆக்கியதுதான் அடுத்த ஒரு ஐந்து நூற்றாண்டுகளின் கதை. இந்தத் தேங்கி போன சமூகம், பத்தாம் நூற்றாண்டுக்கு மேல் வந்த துருக்கிய- ஆப்கன் படையெடுப்புகளை எதிர்கொள்ள முடியாமல் எவ்வாறு முழுவதுமாக அவர்களுக்கு அடிபணிந்தது என்பதே இந்த நூல் வரிசையின் அடுத்த புத்தகம், The Age of Wrath விவரிக்கும் வரலாறு. இந்த இடத்தில் இங்கே செவ்வியல் காலகட்டம் முடிவுக்கு வருவது வட இந்தியாவில்தான் என்பதையும், தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் அவை இன்னும் ஒரு மூன்று நூற்றாண்டுகள் 13ம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்தது என்பதையும் எராலி குறிப்பிடத் தவறுவதில்லை. முதல் வசந்தம் என்ற தலைப்பின் கீழ் இரண்டு பாகங்கள் வருகின்றன. முதலாவது, அரசியல் மாற்றங்களைச் சொல்வது. இரண்டாவது அந்தக் காலகட்டத்தில், அதே அளவுக்கு முக்கியமான சமூக, அறிவியல், இலக்கிய, மற்றும் கட்டுமானக் கலைகளின் சாதனைகளை விளக்கும் ஒன்று. பாலி, பிராக்ருத மொழிகளைத் தாண்டி, சம்ஸ்க்ருதம் செவ்வியல் மொழியாக வளர்வதையும், மகத்தான இலக்கியங்கள் அதில் உருவாகியதையும் இந்தப் பாகம் விவரிக்கிறது. நாலந்தா, தட்சசீலம், ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியையும் சொல்கிறது. இவை எல்லாற்றையும்விட இன்றும் தொடரும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகளான சாதிகள் மற்றும் பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றைக் குறித்து எராலியின் கருத்துக்களே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையும், பெரும் விவாதங்களை உருவாக்குபவையும் என்று நான் நினைக்கிறேன். வர்ணங்களிலிருந்து சாதிகள் உருவாகி வரும் ஒரு இயல்பான பரிணாம வளர்ச்சி மிகவும் நம்பகமான வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. வர்ணங்களில் இருந்து தொழிற்குழுக்கள் (guilds) உருவானது ஒரு காலகட்டத்தில். அவை அகமண முறைக்கு மாறி, பின் இறுக்கமடைந்து சாதிகள் ஆனது என்பதே அவரது வாதம். இதற்கு பல சமூகவியல் ஆய்வாளர்களையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் இதில், சாதிகளின் தோற்றம் வளர்ச்சி ஆகியவை குறித்து மிகத் தீவிரமாக எழுதிய அம்பேத்காரின் ஆய்வுகளை அவர் எந்த இடத்திலும், குறிப்பிடுவதில்லை என்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்று. In Ancient India, There were Brahmins and there were brahmins, என்ற ஒரு விந்தையான வாசகத்தோடு தொடங்கி, இந்தியாவில் பிராமணர்களின் செல்வாக்கையும், அதனால் விளைந்த நற்பயன்கள் மற்றும் தீவினைகள் அனைத்தையும், விருப்பு வெறுப்பின்றி விவாதிக்கிறார். வேறெந்த ஒரு சமூக ஆராய்ச்சியாளருக்கும் சற்றும் குறையாத விதத்தில் எழுதப்பட்டச் சிறந்த கருத்துக்கள் எராலியுடையவை. முதல் வசந்தத்தின் இரண்டாம் பகுதியில், அக்காலகட்டத்தின் இலக்கியங்கள், கட்டிடக்கலை, ஆடைகள், உணவுகள், போன்றவற்றைக் குறித்த மிகச் சுவாரசியமான பதிவுகள் உண்டு. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் மிக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கட்டிட கலைகளில் காந்தார பகுதியின் கிரேக்க கட்டிட மற்றும் சிற்பக்கலைகளின் தாக்கத்தையும் விரிவாக சொல்கிறார் எராலி. மிக முக்கிய கவனம் பெறுபவை அசோக சக்கரவர்த்தியின் ஸ்தூபிகளும் பாறைகளில் செதுக்கப்பட்ட அவரது கட்டளைகளும். இலக்கியங்களைப் பற்றிய பதிவுகளில் ஒரு தமிழ் வாசகனாக எனக்கு மிகவும் மனநிறைவை அளித்தவை, எராலி இந்திய நாகரிகத்தைப் புரிந்து கொள்ள வேறெந்த வரலாற்றாசிரியரையும்விட மிக அதிகமாக குறள், நாலடியார், மற்றும் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுவது. இந்த மூன்று நூல்களின் தொடர்ச்சியாக அடுத்து வருவது இந்தியாவின் தற்காலத்தையும் மிக வலுவாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் காலகட்டமான 11ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரைக்குமான ஒன்று. இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளின் தாக்கம் இன்றைய இந்தியாவிலும் அரசியல் விளைவுகளை உண்டாக்குவதை நாம் அறிந்திருக்கிறோம். அந்தப் புத்தகமான The Age of Wrath ஒரு தனிக் கட்டுரையைக் கோரி நிற்பது. வரலாறு, வரலாற்றுவாதம், அவற்றின் பங்களிப்பு என்ன என்பதைக் குறித்து எராலி சொல்வது மிக முக்கியமானது. எந்த ஒரு வரலாற்றுச் சித்திரமும் ஓர் இடைக்கால அறிக்கையே என்கிறார் எராலி. இந்திய வரலாற்றில் நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்கள் நிச்சயம் ஏராளம் உண்டு. அதே சமயம், வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் உள்ளன. இரண்டையுமே திறந்த மனதுடன் நேர்மையாக பார்க்கவும் முன்வைக்கவும் வேண்டியுள்ளது. பல சமயங்களில் இந்தத் நேர்மையும், உண்மையை மட்டுமே முன்வைப்பதில் உள்ள நோக்கும் தற்காலத்தில் சில சமூக அரசியல் கொந்தளிப்புகளைக்கூட உருவாக்கலாம். ஆனாலும் ஒரு வரலாற்றாசிரியன் அந்தப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க முடியாது. ஒரு சீனப் பழமொழி சொல்வதைப்போல விரல் சுட்டும் நிலவைப் பாராமல் விரலைப் பார்ப்பதால் பலன் இல்லை என்கிறார், எராலி. “A historian sees with an impersonal eyes. But speaks with a personal voice. A historian cannot be bothered with political correctness.” இது இந்தியா வரலாற்றுத் தொடரின், அடுத்தடுத்து இருக்கக்கூடிய இரண்டு புத்தகங்களுக்கும் முக்கியமாகப் பொருந்துபவை. இந்தப் புரிதலோடு, இந்ததொடரின் அடுத்த நூல்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம். சொல்வனம், மார்ச் 2016 II சீற்றத்தின் காலம் பொது சகாப்தத்தின் இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளின் துவக்கத்தில் இந்திய வரலாறு, குறிப்பாக வட இந்திய வரலாறு, ஒரு திருப்புமுனையைச் சந்திக்கிறது. அதுவரையில் இல்லாத அளவில் இந்தியா சில அந்நிய சமூகங்களின், அந்நிய சிந்தனைகளின், வாழ்க்கை முறையின் ஊடுருவல்களையும் படையெடுப்புகளையும் எதிர்கொண்டது. அதுவரையில் இல்லாத அளவுக்கு, அது இந்திய வரலாற்றையும் இந்திய சமூகத்தையும் புரட்டிப் போட்டது. இந்த காலகட்டத்தை விவரிக்கும் நூல்தான் எராலியின் “சீற்றத்தின் காலம்” – The Age of Wrath என்ற நூல். உண்மையில், Wrath என்ற சொல்லுக்கு, பேரழிவை உண்டாக்கும் சீற்றம் என்ற ஒரு பொருளையும் க்ரியாவின் தமிழ் அகராதி தருகிறது. இந்த நூலைப் பொருத்தவரையில் அந்த விளக்கமே மிகப்பொருத்தமானது எனலாம். 11ம் நூற்றாண்டில் முகமது கஜினியின் இந்திய படையெடுப்புகளில் துவங்கி, 16ம் நூற்றாண்டில் மீண்டும் பாபர் இந்தியாவை வென்றது வரை வட இந்தியாவும் தக்காணமும், ஓரளவு தென் இந்தியாவும், சந்தித்த பேரழிவுகளை கவனத்தில் கொண்டால், அந்தக் காலகட்டத்தை பேரழிவுகளின் காலம் என்று சொல்வது பொருத்தமானதுதான். வரலாற்று காலக்கட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்திய நிலப்பகுதி அந்நிய சமூகங்களின் வருகையை சந்தித்துக் கொண்டேதான் இருந்திருக்கிறது. 10ம் நூற்றாண்டு வரை நடந்த இந்த வருகைகளுக்கும் 11ம் நூற்றாண்டில் இருந்து துவங்கிய துருக்கிய-முஸ்லிம் மதத்தினரின் படையெடுப்புகளுக்கும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது என்கிறார் எராலி. அந்த வேறுபாடுகள் எவையென்றும், அவை இந்தியாவை எப்படி பாதித்தன என்பதையும் விரிவாகச் சொல்கிறது இந்நூல். அதுவரை இந்தியாவுக்கு வந்த சமூகங்கள் பெரும்பாலும் இந்தியாவைப் புகலிடமாக தேடி வந்தவை, அல்லது தாம் இருக்கும் இடத்தைவிட மேம்பட்ட ஒரு வாழ்விடத்தைத் தேடி வந்தவை. அவை இந்திய நாகரிகத்தைவிட சற்றே குறைந்த அளவு வளர்ச்சி பெற்றவை, இந்தியா வந்து இங்கிருந்த உயர் கலாசாரத்துடன் இணைந்து தம்மை மேம்படுத்திக் கொண்டவை, இரண்டறக் கலந்துவிட்டவை. ஆனால் முதல் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபின் நடந்த வரலாற்று நிகழ்வுகள் அப்படிப்பட்டவை அல்ல. சொல்லப்போனால், இந்தப் படையெடுப்புகள் மிகப் பிரபலமான மஹ்மூத் (ஆங்கிலத்தில் Mahmudதான்) கஜினியின் படையெடுப்புக்கு முன்பே துவங்கியவை. 8ம் நூற்றாண்டில் சிந்து பகுதியை ஊடுருவி படையெடுத்து வந்த அராபியரான முகமது பின் காசிம் அன்று புதிதாக உருவாகி வந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர், ஓங்குமுகத்தில் இருந்த ஒரு கலாசாரத்தின் பின்னணியில் வந்தவர். அவர் இந்தியாவில் வாழ இடந்தேடி வரவில்லை. மாறாக வென்றடக்க வந்தார். சொல்லப்போனால் அவர் நாடு பிடிக்கும் ஆசையில் இந்தியா வரவில்லை. ஒரு வணிகத் தகராறைத் தீர்க்கவே வந்தார் என்று நம்ப வேண்டியுள்ளது. அன்றைய சிந்து பகுதியின் இந்து அரசரான தாஹர், அடிக்கடி வந்து கொண்டிருந்த அரபிக் கப்பல்களைக் கொள்ளையடித்துவந்த கடற் கொள்ளையர்களைத் தடுக்கத் தவறியதோடு மறைமுகமாக அவர்களை ஊக்குவிக்கவும் செய்தார் என்றும் இலங்கையிலிருந்து அரேபியா திரும்பிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து பல முஸ்லிம் பெண்களையும் ஆண்களையும் சிறை பிடித்திருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு பதிலடி கொடுக்கவே முகமது பின்காசிம் அன்றைய முஸ்லிம் உலகத்தின் தலைவரான கலீபாவின் ஆசிகளோடு சிந்துப் பகுதியின் மீது படையெடுத்து வந்தார். அப்போது முகமது பின் காசிமின் வயது 17தான். முதலில் அவர் தஹாருக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார்- சரணடைந்து விடும்படியாகவும், இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும். ஆனால் தாஹர் சரணடையாமல் எதிர்த்து நின்றார். படுதோல்வி அடைந்தார். அதற்குப் பின் நடந்தவை குறித்து பல மாறுபட்ட பதிவுகள் இருக்கின்றன என்கிறார் எராலி. பொதுவாக, காசிம் கௌரவமாகவே நடந்து கொண்டார் என்றும், மிக அவசியமான தேவைகளைத் தவிர சூறையாடலில் ஈடுபடவில்லை என்பதுமே உண்மை என்றும் எழுதுகிறார் அவர். ஆனால், ராஜகுடும்பத்தை மிகக் கடுமையாக தண்டித்தார். தாஹரின் ஒரு பெண்ணை மணந்து கொண்டு மற்ற இரு பெண்களை கலீபாவுக்கு பரிசாக அனுப்பி வைக்கிறார் (வெற்றி கொண்ட பொருட்களின் ஒரு பகுதியை கலீபாவுக்கு அனுப்புவது அன்று கடைபிடிக்கப்பட்ட இஸ்லாமிய நியதி). இது அவரின் தீயூழ் ஆகிறது. அந்த இளவரசிகள் கலீபாவிடம் காசிம் தங்களிடம் முறை தவறி நடந்துகொண்ட பின்னரே அனுப்பி வைத்ததாகச் சொல்ல, கடும் கோபம் கொண்ட கலீபா, காஸிமின் ஆசன வாயைத் தைத்து மூட்டைக் கட்டி தன்னிடம் அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார். கலீபாவின் உத்தரவுக்குப் பணிகிறார் காசிம். காசிமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்பட்டவுடன், தாங்கள் சொன்னது உண்மையில்லை என்கின்றனர் இளவரசியர். அவர்களும் கொல்லப்படுகின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாவிட்டாலும், காசிம் காலிபாவின் ஆணைப்படியே கொல்லப்படுகிறார் என்பதும், அது சிந்து மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் நேசிக்கப்பட்ட மன்னராகவே இருந்தார் என்பதும் உண்மை என்கிறார் எராலி. பாடப் புத்தக வரலாற்றில் அதிகம் இடம் பெற்றிராத இது போன்ற தகவல்களை தருவது இந்த நூலின் சிறப்பு. சொல்லப் போனால் இந்த நூலைப் பற்றி எழுதும் ஒருவருக்கு, இது மாதிரியான சம்பவங்களைச் சொல்வதா, படையெடுத்து வந்தவர்களின் வம்சாவழிப் பட்டியல்களை சொல்வதா, அல்லது அவர்களின் தொடர் வெற்றிக்கான காரணத்தை இந்த நூல் அலசுவதை விரிவாக எழுதுவதா என்று திகைக்க வைக்கும் அளவுக்கு தகவல்கள் நிறைந்த களஞ்சியம் இது. எனினும் தொடர்ச்சியாக வந்த படையெடுப்பாளர்களின் வரிசையை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். மஹ்மூத் கஜினி: காசிமுக்குப் பின் சிந்து பகுதியில் முஸ்லீம்களின் ராஜ்யம் பெரிதாக வளராமல் அங்கங்கே சிதறுண்டு சிறு அரசுகளாகத்தான் நீடிக்கிறது. அதற்குப் பின் கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகளுக்குப் பிறகு வருவதுதான் கஜினியின் படையெடுப்பு. இங்கும் நாம் அதிகம் அறிந்திராத இன்னொரு படையெடுப்பு அதற்கு முன்னர் நிகழ்கிறது. அதற்கு காரணமாக அமைவது கஜினியின் தந்தை சாபுக்திஜின் நாடு பிடிக்கும் ஆசை. அவர் 10ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் பஞ்சாப் மீது படையெடுக்கிறார். பஞ்சாபின் மன்னன் உடனான போரின் துவக்கத்தில் அவர் தோல்வியையே சந்திக்கிறார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்போது அடித்த ஒரு பனிப்புயல் அவருக்கு உதவ, இறுதியில் அவர் வெல்கிறார் (இதே மாதிரி ஒரு பனிப்புயல் முதலாம் ஆங்கில- ஆப்கானிய போரின்போது ஆப்கானியர்களுக்கு உதவியது என்ற குறிப்பையும் தருகிறார் எராலி). அந்தப் பனிப்புயல் சாபுக்திஜின் தன் மந்திர சக்தியால் உருவாக்கியது என்றே ஜெயபாலனின் படை வீரர்கள் நம்பி பீதியுற்றதால் தோல்வியடைகின்றனர், என்கிறார் எராலி. ஜெயபாலனுக்கே அவரது நாட்டைத் திருப்பித்தந்து திறை செலுத்த ஆணையிட்டுத் திரும்பிவிடுகிறார் சாபுக்திஜின். அதற்குப் பின் நிகழ்ந்ததுதான் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிவிடுகிறது. ஜெயபாலன் கப்பம் கட்டுவதை நிறுத்திவிடுகிறார். ஆங்காங்கே இருந்த சில சிற்றரசர்களை துணைக்குச் சேர்த்துக் கொள்கிறார். இப்போது அரசனாகியிருக்கும் மஹ்மூத் கஜினிக்கு இது ஆத்திரமூட்டுகிறது. அதற்குப் பின் என்ன நடந்ததோ, அது தொடர்ந்து ஒரு 600 ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருந்தது. வடமேற்கு கணவாய் வழியாக வந்த மஹ்மூதின் கட்டுக்கோப்பான சிறிய படை, தன்னைவிட பலம் வாய்ந்த இந்திய பகுதி படைகளை சிதறடித்து வெற்றி கண்டது. ஆனால் மஹ்மூதுக்கு இந்தியாவில் நிலைத்து நின்று ஆட்சி புரிய விருப்பமில்லை. அதன்பின் அவன் பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்துத் திரும்பவே மீண்டும் மீண்டும் படையெடுத்து வந்தது நாம் அனைவரும் அறிந்த கதை. கஜினியின் சோமநாதபுரம் கோவில் கொள்ளை வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்றது. பின்னர் இன்றுவரை பல சர்ச்சைகளுக்கு இடமளிப்பது. கஜினி ஏன் இந்தக் கோவிலைத் மீண்டும் மீண்டும் தாக்கினார் என்பதற்கான காரணங்களில் மிக முக்கியமானது கோவிலின் பெரும்செல்வமே என்கிறார் எராலி . அந்தக் கோவிலின் லிங்கத்தை உடைக்காமல் இருப்பதற்காக அவருக்கு பெருந்தொகை ஒன்று பேரம் பேசப்பட்டது. ஆனால் அதற்கு இசையாத கஜினி அதை உடைத்து பேரம் பேசப்பட்ட தொகையைவிட பல மடங்கு அதிகமான விலைமதிப்புள்ள கற்களை அந்த லிங்கத்தின் உள்ளிருந்து எடுத்துக் கொண்டார் என்ற தகவலையும் தருகிறார் எராலி. இன்று வரையிலும் பெரும் சர்ச்சைக்கு இடமளித்துவரும் கஜினியின் செயலுக்குப்பின் இருந்த காரணங்கள்தான் என்ன? நிச்சயமாக மதம் ஒரு முக்கிய காரணம். ஆனால் அதைவிட முக்கியமானது பொருளாசைதான் என்பதே எராலியின் முடிவு. இந்து கோவில்களை மட்டுமல்ல, மசூதிகளையும், குறிப்பாக, இஸ்மாயிலிகளுடையதையும், ஷியா பிரிவினருக்கு உரியவற்றையும் டைத்தெறிவதில் கஜினி தயக்கம் காட்டவில்லை. கஜினியின் படையெடுப்புகளின் மிக முக்கியமான ஒரு விஷயம், அவரது படைகளில் பல இந்துக்களும் இருந்தது. இன்னொன்று, அவர் ஒருபோதும் இந்திய பகுதிகளை வென்று ஆள நினைக்கவில்லை. காஃபிர் என்று நம்பியவர்களை வெல்வதும் கொள்ளையடிப்பதுமே அவரது முதன்மை நோக்கம். சோமநாதபுரம் கோவிலைத் திரும்பிக் கட்டியதை குறிக்கும் ஒரே ஒரு சம்ஸ்க்ருதக் கல்வெட்டுத் தவிர கஜினியின் படையெடுப்புகள் குறித்த உள்ளூர்ப் பதிவுகளே இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் எராலி. நமக்கு கிடைத்திருப்பதெல்லாம் அவருடன் வந்த, அவரைப் போற்றி பாராட்டிய புலவர்கள் சொல்வதுதான். இதில் எவ்வளவு மிகை எவ்வளவு உண்மை என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்லவே முடியாது என்பதும் எராலியின் முடிவு. இந்த புலவர்களின் கற்பனையில் உருவான சுவாரசியமான தகவல் என்று, கஜினி பிறந்தபோது சிந்து பகுதியில் ஒரு கோவில் தானாகவே இடிந்து விழுந்தது என்ற ஒரு கதையையும் எராலி குறிப்பிடுகிறார். இந்திய பகுதிக்கு ஒரு கொடுங்கோலனாகவே காட்சியளித்த கஜினி உண்மையில் அவரது ஆட்சிக்குட்பட்டப் பிரதேசங்களில் நல்லாட்சியையே வழங்கினார் என்பதும் கலைகளிலும் கல்வியிலும் ஆர்வம் கொண்ட ஒரு மன்னனாகத் திகழ்ந்தான் என்பதும் இந்நூல் தரும் தகவல்கள். ஆனால் இதற்கான ஆதாரமும் அவரைப் போற்றி பாராட்டிய புலவர்கள் சொல்வதுதான் என்பதால் இதிலும் எவ்வளவு மிகை எவ்வளவு உண்மை என்பதை நாம் தீர்மானிப்பதற்கில்லை. இக்காலகட்டத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, இந்திய மன்னர்கள் தம் வரலாற்றையும் விட்டுச் செல்லாதது ஒரு சிக்கலாய்த்தான் இருக்கிறது. இந்திய பகுதிகளில் பேரழிவுகளை நிகழ்த்திய கஜினி சாகும்போது மனநிலை சரியில்லாமல் போய், தான் கொள்ளையடித்த செல்வங்களைத் திரும்பத் திரும்பக் கண்டு மனம் வெதும்பி அழுது இறந்தார் என்பதிலிருந்து நாம் என்ன பெற்றுக் கொள்வது? தில்லி சுல்தானிய வம்சங்கள்: மஹ்மூது கஜினிக்குப் பிறகு அவரது சாம்ராஜ்யம் சரிகிறது. அவரது வம்சத்துக்கும், ‘கூர்’ எனப்பட்ட பகுதியில் உருவாகிவந்த வம்சாவழியினருக்கும் உருவான பகையில் கோரி என்றழைக்கப்பட்டவர்கள் கை மேலோங்கி, அவர்கள் கஜினியின் சாம்ராஜ்யத்தை முற்றிலும் அழித்தனர். அந்த வம்சத்தில் வந்த முகமது கோரி, கஜினியைப் போலவே இந்தியா மீது தன் பார்வையைத் திருப்பினார். கஜினியைப் போலவே அவர் பல இந்திய பகுதிகளை எளிதில் வென்றபோதும் தில்லி பகுதியை ஆண்டு வந்த பிரித்திவி ராஜிடம் முதல் போரில் தோற்கிறார். பிறகு நடந்த இரண்டாவது போரில் வென்று தில்லியைப் பிடிக்கிறார். இங்குதான் தில்லி சுல்தானியம் உருவாகிறது. அடுத்த 350 ஆண்டுகளுக்கு வட இந்தியாவில் ஆதிக்க சக்தியாக விளங்கிய தில்லி சுல்தானியத்தை உருவாக்கிய முகமது கோரி வாரிசுகளற்றவர். சாம்ராஜ்ஜியத்தை தன் துருக்கிய இன அடிமைகளுக்குப் பிரித்துக் கொடுத்தவர். அதன் தில்லி பகுதிக்கு அதிபரானவர்தான் அவரது பிரதான அடிமைகளில் ஒருவரான குத் புதின் ஐபக். அவரது வம்சம் மாம்லுக் வம்சம் என்றழைக்கப்பட்டது. மாம்லுக் என்றால் அடிமைகள் என்று அர்த்தம், எனவே தில்லி சுல்தானியமும் அடிமை சுல்தானியம் என்று அழைக்கப்பட்டது. தில்லி சுல்தானியத்தின் காலத்தில் ஐந்து வம்சங்கள் அரச பதவியை கைப்பற்றுகின்றன. முதலில் குத்புதீன் ஐபக் ஸ்தாபித்த மாம்லுக் அடிமை வம்சம். இரண்டாவது கில்ஜி, மூன்றாவது துக்ளக், பிறகு சய்யிது மற்றும் கடைசியாக லோதி வம்சங்கள். இவற்றில் முதல் நான்கும் துருக்கிய வழி வந்தவை, கடைசி வம்சம் ஆப்கான் வழியிலானது. இவர்கள் ஏறக்குறைய 350 ஆண்டுகள் இந்தியாவின் கணிசமான பகுதியை நேரடியாக ஆட்சி புரிந்தும் மற்ற பகுதிகளில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்தியும் இருந்த இந்தக் காலகட்டம் இந்தியாவின், முக்கியமாக வட இந்தியாவின் சீரழிந்த காலகட்டம் என்றே சொல்ல வேண்டியுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணமாக எராலி சொல்வது அரசியல் ஸ்திரத்தன்மையற்றதாக டில்லி சுல்தானியம் விளங்கியது என்பது. ஒரு சிறு கணக்கு- மிகச் சரியாக 320 ஆண்டுகள், 1206 முதல் 1526 வரை கோலோச்சிய தில்லி சுல்தானியத்தின் தலைமை பொறுப்பில் 32 அரசர்கள் இருந்தனர். இதில் அடிமை வம்சத்தின் கியாசுத்தின் பால்பன் 21 ஆண்டுகள் ஆண்டதையும், கில்ஜி வம்சத்தின் அலாவுதீன் கில்ஜி 26 ஆண்டுகள் மற்றும் பைரோஸ் ஷா துக்ளக் 37 ஆண்டுகள் ஆண்டதையும் கழித்தால் மீதமுள்ள 236 ஆண்டுகளில் 30 மன்னர்கள் ஆள்கிறார்கள். ஒவ்வொரு மன்னரின் ஆட்சிக்காலமும் சராசரியாக 10 ஆண்டுகளுக்கும் குறைவு. சில சுல்தான்கள் சில மாதங்களே, ஏன், சில நாட்களேகூட ஆண்டிருக்கிறார்கள். இது அக்கால அரசியல் ஸ்திரத்தன்மையை குலைத்ததோடு, எப்போதும் போர் இருக்கும்படியான ஒரு சூழலையும் கொண்டிருந்தது. மக்கள் நிலையாமையின் அச்சத்தில் உழன்றார்கள் என்கிறார் எராலி. இதற்குப் பின் வந்த மொகலாய வம்சத்தின் முதல் இருநூறு ஆண்டுளில் 7 மன்னர்களே ஆண்டனர் என்பதைப் பார்க்கும்போது இது மேலும் துலக்கமாக விளங்கும் என்கிறார் அவர். இந்த 320 வருட கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளை உருவாக்கிய சுல்தான்கள் என்று எராலி, பால்பன், அலாவுதீன் கில்ஜி, பிரோஸ் ஷா துக்ளக் ஆகியோரை மட்டும்தான் சொல்ல முடியும் என்கிறார். இவர்களது ஆட்சிக்காலத்தில் மட்டும்தான் ஒப்புநோக்க ஓரளவு அமைதியும், ஸ்திரத்தன்மையும் இருந்தது என்றும் மக்கள் ஓரளவாவது நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்றும் சொல்கிறார். பால்பனைப் பற்றிச் சொல்லும்போது, துருக்கிய இனக்குழுக்களிடையே தலைவன் என்பவன் சமமானவர்களில் முதல்வன் என்று அதுவரை இருந்த நிலையை மாற்றி, சுல்தான் என்பவன் கேள்வி கேட்க முடியாத அதிகாரம் கொண்ட முழுமுதல் தலைவன் என்று ஆக்கியது கியாஸுத்தின் பால்பன்தான் என்கிறார் எராலி. தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள தில்லியில் அவர் கட்டியதுதான் பிரம்மாண்டமான சிவப்பு மாளிகை. அதன் பின் அதுவே சுல்தான்களின் தலைமையிடமாகியது. அரச பதவி என்பது தெய்வீகத் தன்மை பொருந்தியது என்று அந்த இனக்குழுவில் நிலைநாட்டியது பால்பனின் சாதனை. அதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த 40 பேர் கொண்ட பிரபுக்களின் அவையை முற்றிலுமாக துடைத்தெறிந்து இதை சாதித்த பால்பன் இரும்புக்கரம் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை 21 ஆண்டுகள் அளித்தார். அவருக்குப்பின் வந்த குழப்பமான காலகட்டத்திற்குப்பின் சுல்தானாக வந்தவர் அவருடைய படைத்தளபதிகளில் ஒருவரான ஜலாலுதீன் கில்ஜி. இவரிலிருந்து கில்ஜி வம்சம் துவங்குகிறது. மிக இளகிய மனம் படைத்த அவர் தலைமைப் பதவியை மறுக்கிறார். ஆனால் படைத்தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒப்புக் கொள்கிறார். அதுவரை இருந்த சுல்தான்களிலேயே இளகிய மனம் படைத்த, மென்மையான சுல்தான் இவர்தான். பதவியேற்க தில்லி வந்து, சிவப்பு மாளிகைக்குள் நுழையும்போது குதிரையை விட்டு இறங்கி, தன் தலைவரான பால்பனை எண்ணிக் கண்ணீர் வடித்தபடி நடந்தே சென்று அரியணையில் அருகே முழந்தாளிட்டு தொழுதுவிட்டுப் பின்னரே அதில் அமர்கிறார். ஆனால் இளகிய மனமும், தன் துரோகிகளையும் மன்னிக்கும் குணமும் கொண்ட அவரது போக்கு சிற்றரசர்களுக்குப் பிடிப்பதில்லை. இருந்தும் 6 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார். இறுதியில் தன் மருமகனான ஜூனாகான் என்பவரால் கொல்லப்பட்டு இறக்கிறார். இங்கும் பிறரை நம்பும் குணம் அவருக்குப் பகையாகிறது. இந்த ஜுனாகான்தான் அலாவுதீன் கில்ஜி என்ற பெயரில் பட்டம் ஏற்றுக் கொண்டவர். தில்லி சுல்தானா வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆட்சியாளர் என்று ஆபிரஹாம் எராலி குறிப்பிடுவது அலாவுதீன் கில்ஜியைத்தான். அவரது ஆட்சிக்காலம் குறித்து மிக விரிவாக எழுதுகிறார்: தில்லி சுல்தானியம் தன் ஏகாதிபத்தியத்தை ராமேஸ்வரம் வரை விரிவாக்கியது; துவாரசமுத்திரம், வாரங்கல், மதுரை ஆகிய இடங்களையும் வெற்றி கொண்டு தன்கீழ் கொண்டு வந்தது என்று பல வெற்றிகள். இவருடைய அடிமையான மாலிக் காபூர் மிகத் திறமையான படைத்தளபதி. இவராலேயே அலாவுதீனின் தென்னிந்திய வெற்றிகள் சாத்தியமாகின. இவரால்தான் தென்னிந்திய கோவில்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டு ஏராளமான செல்வம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு தகவலின்படி அலாவுதீன் கில்ஜி, தேவகிரியை வென்று தில்லி திரும்பியபோது அவருடன் 17250 பவுண்டுகள் தங்கம், 200 பவுண்டுகள் முத்துக்கள், 28250 பவுண்டுகள் வெள்ளி மற்றும் 1000 பட்டுத்துணிகள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்றார். பொதுபுத்தியில் ஒரு கொடுங்கோல் அரசராகவே இன்று நிலைத்திருக்கும் அலாவுதீன் கில்ஜிதான் இந்தியாவில் இன்றளவும் தம் விளைவுகளை செலுத்திக் கொண்டிருக்கும் பல வரித்திட்டங்களையும், நில அளவைகள் மற்றும் சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தவர். வேளாண் மக்கள் நலன்களில் அக்கறை செலுத்தியவர். உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் அவசியத்தை உணர்ந்தவர். மிக விரிவான ஒற்றர் படையினை நிறுவி தனக்குத் தெரியாமல் எந்த ஒரு செயலும் தன் ராஜ்ஜியத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொண்டவர் என்றெல்லாம் அலாவுதீன் கில்ஜி பற்றிய மிக விரிவான சித்திரத்தைத் தந்திருக்கிறார் எராலி. இவ்வளவு சீர்திருத்தங்களையும், நிர்வாக நடைமுறைகளையும் கொண்டு வந்த அலாவுதீன், அடிப்படையில் எழுதப் படிக்காத தெரியாதவர் என்ற முரணையும் பதிவு செய்கிறார் எராலி. இந்த இடத்தில் இந்தியாவின் இஸ்லாமிய மன்னர்களில் இன்னொரு மகத்தான மன்னரான அக்பரும் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதையும் குறிப்பிடுகிறார். தன்னை இரண்டாவது அலெக்ஸ்சாந்தர் என்று அழைத்துக் கொண்ட, பல வெற்றிகளைக் கண்ட அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் எழுந்து வந்த கர்ண பரம்பரை கதைகள் ஏராளம். வடக்கே சித்தூர் ராணி பத்மினி (இவரைப் பற்றி ஒரு தமிழ்ப்படம் வந்தது, சிவாஜி, வைஜயந்திமாலா மற்றும் கில்ஜியாக பாலையா நடித்தது), தெற்கே துலுக்க நாச்சியார் என்று நிறைய எதிர்ப்புகள் அவர் காலத்தில் தோன்றின. அதே போல அவரும் மாலிக் காபுரும் இந்துக்களுக்கு எதிராக நடத்திய பல அழித்தொழிப்புகளும், பல கோவில்களை அழித்தது குறித்தும் ஏராளமான கதைகளும் உள்ளன. இந்த அம்சத்தை கடைசியில் பார்க்கலாம். ஆனால் அலாவுதீன் கில்ஜியின் இறுதி காலமும் மகிழ்ச்சியாக முடியவில்லை. அவர் உடல்நலம் குன்றி தளர்ந்தபோது வாரிசுத் தகராறுகள் தோன்றின. கில்ஜியின் மறைவுக்குப் பின் மீண்டும் குழப்பம், அந்த குழப்பங்கள் முடிவில் ஒரு புதிய சுல்தான், ஒரு புதிய வம்சம். அதுதான் கியாசுத்தின் துக்ளக்கும், அவரது துக்ளக் வம்சமும். அலாவுதீன் கில்ஜிக்கு பிறகான குழப்பத்தில் அலாவுதீன் கில்ஜி செயலற்று இருக்கும் சில காலம் மாலிக் காபூர் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார். அவர் இறந்தபின்பும் கூட அப்படி சில மாதங்கள் நடக்கிறது. மாலிக் காபூர் கொல்லப்படுகிறார். கில்ஜியின் இளம் மகன் ஒருவன் அரியணை ஏற்றப்படுகிறான். அதுவும் நீடிப்பதில்லை. அவரது வலிமை மிகுந்த தளபதிகளில் ஒருவரான குஸ்ரோகான் பதவிக்கு வருகிறார். அதுவும் தற்காலிகமே. முஸ்லிம் பிரபுக்களின் அதிருப்திக்கு ஆளான அவரை கில்ஜியின் ஆளுநர்களின் ஒருவரான காஜி மாலிக் மற்றும் அவரது மகன் பக்கீர் மாலிக் ஆகியோர் தூக்கியெறிந்துவிட்டு காஜி மாலிக், கியாசுத்தின் துக்ளக் என்ற பெயரில் பதவிக்கு வருகிறார். துக்ளக் வம்சம் உருவாகிறது. ஆனால் 1320லிருந்து 1325 வரையே அவரது ஆட்சி நடக்கிறது. ஒரு விபத்தில் அவர் இறக்கிறார். அவரது மகன் பக்கீர் மாலிக், முகமது-பின்-துக்ளக் என்ற பெயரில் அரியணை ஏறுகிறார். கியாஸுத்தீனின் இறப்பு வரலாற்றாசிரியர்களிடையே பெரும் விவாதத்துக்கு உள்ளான ஒன்று. அது விபத்து என்பாரும் உண்டு. அவர் மகனால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொலை என்பாரும் உண்டு. முகமது பின் துக்ளக் தன் வாழ்நாள் முழுதும் தந்தையைக் கொன்றவன் என்ற பழியை சுமந்தேதான் இருந்தார் என்றே எராலி சொல்கிறார். முகமது பின் துக்ளக் இந்தியாவின் மிக சர்ச்சைக்குரிய மன்னர். இவர்தான் நாம் எல்லோரும் அறிந்த தலைநகர் மாற்றத்தை நிகழ்த்தியவர் (தில்லி- தேவகிரி- தில்லி). அரசாங்க நாணயங்கள் வெளியிடுவதில் பல பரிசோதனைகள் செய்து பார்த்தவர். ஒரே சமயம் பெரும் குரூரத்தையும், பெரும் கருணையையும் வெளிப்படுத்தியவர் என்று ஒரு சர்ச்சை நாயகராகவே இன்றும் விளங்குகிறார். வரலாற்றாசிரியர்களான பரணி மற்றும் இபின் பதூதா ஆகியோர் இவர் காலத்தைக் குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் இன்னமும் இவர் ஒரு மேதையா அல்லது மனநிலை பிறழ்ந்தவரா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சந்தேகமற்ற ஒரு விஷயம் இவரது காலத்தில்தான் நடந்தது: டெல்லி சுல்தானியம் முன்னெப்போதும் இல்லாத ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விரிந்தது. 26 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சி, குழப்பத்துக்கும் பல்வேறு கலகங்களுக்குமே பிரபலமாக விளங்கியது. இறுதியில் இவரது சாம்ராஜ்யம் பிளவுண்டு, தக்காணத்தில் பாமணி சுல்தானியமும், அதற்கு கீழே, இந்தியாவின் தென்கோடி வரை பரவிய விஜயநகரப் பேரரசும் பிறந்தன. முகமது பின் துக்ளக்கின் இறப்புக்குப் பின் நடந்த குழப்பங்களுக்கு பின் வந்தவர் பிரோஸ் ஷா துக்ளக். முகமது பின் துக்ளக் எதுவெல்லாம் இல்லையோ அதுவெல்லாமாக பிரோஸ் ஷா விளங்கினார். தில்லி சுல்தானியத்தை மீண்டும் ஒரு வலிமையான அமைப்பாக மாற்றினார். 37 ஆண்டுகள் அரியணையில் இருந்தார். ஆனால் சுல்தானியத்தின் விஸ்தீரணம் குறைந்தது குறைந்ததுதான். பாமணி சுல்தானியமும், விஜயநகர பேரரசும் அதன் தெற்குப் பகுதியை நிரந்தரமாகப் பிரித்தே விட்டன. ஆனால் இவரது ஆட்சிக்காலம் ஒப்பு நோக்க அமைதியான ஆட்சிக்காலம் எனலாம். சில முக்கியமான சீர்திருத்தங்களிலும், அடிப்படை கல்வி போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. 1388ல் இவரது மறைவுக்குப் பிறகு மீண்டும் குழப்பங்களின் காலகட்டம் பிறந்தது. இதை அடுத்து இந்தியாவில் நடந்த ஒரு பேரழிவு, தைமூரின் படையெடுப்பு. சமர்க்கண்டைத் தலைநகரமாகக் கொண்ட மங்கோலிய இனத்தைச் சேர்ந்த, ஆனால் முஸ்லிம் மதத்தவனான தைமூர் கேட்டவர் நடுங்கும் பெயர் கொண்டவராக இருந்தார். இந்தியாவின் மீது அல்லது சீனத்தின் மீது படையெடுப்பு நடத்தலாமா என்று யோசித்து இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். ஆனால் இந்த நிலப்பரப்பை வென்று இங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அவரது நோக்கங்கள் இரண்டு. ஒன்று, ஒரு மாபெரும் கொள்ளை. இன்னொன்று, கூடுமானவரை காபிர்களைக் கொன்று காஜி என்ற பட்டத்தைப் பெறுவது (காஜி என்றால் இஸ்லாத்துக்காகப் போர் புரிந்தவர் என்பது அக்காலப் பொருள்). இரண்டையுமே அவர் அதிக எதிர்ப்பின்றி மிகச் சுலபமாக நிறைவேற்றிக் கொண்டார். அவர் இந்தியாவின் மீது பேரழிவு நிகழ்த்தினார், அவர் விட்டுச் சென்ற இடங்களெல்லாம் ரத்த ஆறு பெருகிற்று என்றே அக்கால வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர் தில்லியை விட்டு சமர்க்கண்டை நோக்கிச் செல்லும் வழியில், சர்வ சாதாரணமாக, போகிற போக்கில் 20000 மக்களை துண்டங்களாக வெட்டிக் கொன்றுவிட்டு சென்றார் என்கிறார் எராலி. தைமூர் நிகழ்த்திய பேரழிவுக்குப்பின் தில்லியில் ஆட்சிக்கு வந்த வம்சம் ஸய்யிதுகளின் வம்சம். இந்த வம்சம் குறித்தும், அதற்குப் பின் வந்த லோதி வம்சம் குறித்தும் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனலாம், ஒன்றைத்தவிர: லோதி வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோதியை வீழ்த்த தௌலத் கான் லோதி அழைத்த பாபர், தில்லி சுல்தானியத்துக்கு சாவு மணி அடித்து, மொகலாய வம்சத்தை நிலைநாட்டினார். இதுவே இக்காலகட்டத்தின் வரலாற்று பெருநிகழ்வு என்று சொல்லலாம். சுல்தானிய ஆட்சிக் காலத்தில் நடந்த ரத்தக்களரி நிறைந்த ஆட்சி மாற்றங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்று இஸ்லாத்தின் அடிப்படைகளை சொல்லலாம். முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்த மதத்தினரிடத்தில், இந்து மன்னர்களின் தெளிவான பரம்பரை வாரிசுக் கொள்கை இல்லை. போர்த்திறமை கொண்ட யார் வேண்டுமானாலும் சுல்தான் ஆகலாம் என்பதால் காபிர்களுக்கு எதிரான அறைகூவலுக்குச் செவி சாய்த்து படை திரட்டும் எவருக்கும் தன் வலிமையை நிலைநாட்ட வழி இருந்தது. எப்போதும் பூசல்களுக்கும் வாரிசுரிமைப் போர்களுக்கும் இவை காரணமாகின. இதே காலகட்டத்தில், விஜயநகர பேரரசின் இந்து மன்னர்களிடையேயும் ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரண்மனைச் சதிகளும் நடைபெற்றன. தில்லி சுல்தானியத்தின் துக்ளக் ஆட்சிக்குப் பிறகு தக்காணமும், தென்னிந்தியாவும் சுதந்திர அரசுகளாக செயல்படத் துவங்கின. தக்காணத்தை ஆண்ட பாமணி சுல்தான்கள் குறித்தும் அதற்கு தெற்கே துங்கபத்திரை நதிக்கரையிலிருந்து குமரி முனை வரை, சில சமயங்களில் இலங்கையிலும்கூட ஆட்சி செய்த விஜயநகர பேரரசு குறித்தும் இந்த நூலில் கணிசமான ஒரு சித்திரத்தையே தருகிறார் எராலி. என்றாலும், அடிப்படையில் இந்த நூல் தில்லி சுல்தானியத்தைக் குறித்ததுதான். வீழ்ச்சியின் காரணம் – எராலியின் ஊகங்கள்: தில்லி சுல்தானியத்தை ஸ்தாபித்த வெற்றிகளை அந்நிய மண்ணிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து எவ்வாறு பெற்றார்கள் என்பதும் அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிகள் ஏன் இங்கே எழவில்லை என்பதும் இந்நூலைப் படிப்பவர்களின் மனதில் இயல்பாக எழும் கேள்விகள். அதற்கான பதில்களை விரிவாக முன் வைக்கிறார் எராலி. 1. கி.மு. 600ம் ஆண்டுகாலம் முதல் இந்தியாவைப் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்றுச் சித்திரம், மிகச் சில சாம்ராஜ்யங்களையே காட்டுகிறது. பொது சகாப்தம் 9ம் நூற்றாண்டில் இந்தியப் பெருநிலம், பெரும்பாலும் பல்வேறு சிற்றரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தது. ஹர்ஷருக்குப் பிறகு வட இந்தியாவில் ஒரு பேரரசர் உருவாகவேயில்லை. எனவே வலிமையான ஒரு மைய அதிகாரம் என்பது இந்தியாவில் இருக்கவில்லை. ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருந்த, எப்போதுமே பல்வகைப்பட்ட இன, மொழி, வேற்றுமை மிகுந்த சின்னஞ்சிறு அரசுகள்தாம் இந்தியாவில் பல்கிப் பெருகியிருந்தன. அத்தகைய காலகட்டத்தில் கஜினி- கோரி படையெடுப்பு நிகழ்ந்தபோது, அது ஒரு புதிய ஆபத்து என்றோ அதன் தன்மை முற்றிலும் வேறுபட்டது என்றோ இந்த மன்னர்கள் நினைக்கவேயில்லை. ஓயாமல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தங்களை போலவே அவர்களும் இன்னொரு தரப்பு என்றேதான் நினைத்தனர். அதனால், ஒருங்கிணைந்த எதிர்ப்பை அவர்களால் துருக்கிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக காட்டவே முடியாமற் போனது. அவர்களைப் பொறுத்தவரை இன்னும் ஒரு போர், இன்னும் ஒரு போட்டியாளர் அவ்வளவுதான். இதன் சிறந்த எடுத்துக்காட்டு, உள்ளூர் வரலாற்றுத் தகவல்களிலும் இலக்கியங்களிலும் துருக்கிய படையெடுப்பு இடம்பெறவேயில்லை என்பது. துருக்கிய படையெடுப்பு குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களெல்லாம் அவர்களுடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய சித்திரங்கள். அவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் என்பதைவிட மன்னர்களின் பெருமையை விதந்தோதுபவர்கள் என்பதே பொறுத்தம். முகமது கோரி, பிரித்விராஜுடன் கடும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது பிரித்விராஜின் மாமனாரான கனோஜியின் மன்னர், ஜெயச்சந்திரனின் அவைப்புலவராக இருந்த ஸ்ரீஹர்ஷரின் படைப்புகளில் அந்த செய்தியே கிடையாது. ஜெயச்சந்திரனின் சம்யுக்தையை பிரிதிவிராஜ் கடத்திக் கொண்டு போய் மணந்தது ஜெயச்சந்திரனின் கோபத்துக்கு காரணம். யதார்த்தம் ஒன்றாக இருக்க இந்திய அரசர்கள் மற்றும் அரசவைகளின் நடப்பு முற்றிலும் வேறாக இருந்தது. 2. போர்த்திறனும் படைக்கலன்களின் மேன்மையும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு. பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் வாள் வீச்சு, அம்பு வீச்சு ஆகிய கலைகளில் பயிற்சி பெற்றிருந்தாலும் ஊடுருவி வந்த துருக்கி-ஆப்கனியப் படையினரின் விற்களும், ஈட்டிகளும் இங்கு இருந்ததைவிட மேம்பட்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்தன. குறிப்பாக அவர்களின் விற்கள், இரு மரத்துண்டுகளை உலோகப்பட்டையால் பிணைத்துச் செய்தவை. வெகுதூரம் அம்புகளை செலுத்துவதாக இருந்தன. அவை அவர்களுக்கு ஒரு பெரிய அனுகூலத்தைக் கொடுத்தன. 3. குதிரைப்படையும் யானைப்படையும். துருக்கிய -ஆப்கனியப் படைகளிடம் யானைப்படைகள் கிடையாது, அவை இந்திய படைகளிடம் இருந்தன. ஆனால், அவர்களிடம் இருந்த குதிரைப்படைகள் இந்திய குதிரைப்படைகளை விட மிகுந்த வல்லமை கொண்டிருந்தன. குறிப்பாக குதிரைகளின் தரம் மிக உயர்வாக இருந்தது. மேலும் குதிரைப்படை வீரர்களின் திறன் மிக மேலானதாக இருந்தது, அவர்கள் குதிரைகளுடனேயே பிறந்து வளர்ந்தது போல் தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள். மாறாக இந்தியர்களின் குதிரைகள் மட்டக்குதிரைகள்தாம். இவற்றைச் சமனப்படுத்திடும் அளவுக்கு இந்தியர்களிடம் யானைப் படைகள் இருந்தாலும், ஒரு உக்கிரமான போரில் யானைப் படைகள் உண்மையில் பின்னடைவுகளுக்குக் காரணமாகவே விளங்கின. எரியும் தீப்பந்தங்களுடன், வேகமாகப் பாய்ந்து வரும் குதிரைகளைக் கண்டு பின்வாங்கும்போது, யானைப்படைகள் தமது தரப்புக்கே பெரும் இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தின. இது அலெக்ஸ்சாந்தர் காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு உண்மை. ஆனாலும் இந்திய மன்னர்கள் அதிலிருந்து எதையும் கற்கவில்லை. 4. இன்னொரு முக்கியமான காரணம், நிலவமைப்பு. ஒரு உயரமான இடத்திலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து வரும் படைகள் எப்போதுமே ஒரு பெரிய அனுகூலத்தைக் கொண்டிருந்தன. இதனாலேயே படையெடுப்புகள் அங்கிருந்து இங்கேதான் நடந்தனவே ஒழிய இந்திய படைகள் இங்கிருந்து மேலேறி ஊடுருவ முடிந்ததில்லை. 5. புதிதாக உருவாகிவந்த மதத்தை பரப்புவது என்பதும் ஒரு முக்கியமான காரணியாக விளங்கிற்று. முக்கியமான தருணங்களில் தம் மதத்திற்காக போரிடுவதாக படைகள் நம்பினார்கள். வென்றால் மதத்துக்கான வெற்றி. தோற்று போர்க்களத்தில் இறந்தால், மதத்திற்காகப் போரிட்டு தோற்றதினால் கிடைக்கும் வெற்றி என்ற மனநிலை அவர்களை மிக உக்கிரமாகப் போரிட வைத்தது. மதம் ஒரு முக்கியமான ஒருங்கிணைத்தலை படைகளிடம் உருவாக்கியது. மாறாக, இந்திய ராஜ்புத்ரர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும், குழுவாகப் போரிடும் வல்லமையைக் காட்டிலும் தனிமனித சாகசத்தையே நம்பி நாடினார்கள். எதிரிகளைக் கொல்வதைவிட, வீர மரணம் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இது போரில் வெற்றியைவிட கௌரவமான தோல்வியையே அவர்களுக்கு கொடுத்தது. 6. அடுத்து, ஒரு அந்நியப் படையெடுப்பு என்ற வகையில் படையெடுத்து வந்தவர்கள் ஒரு சில ஆயிரம் பேர்களே. இங்கிருந்ததோ பல லட்சக்கணக்கானவர்கள். ஆனால், அவர்கள் ஆண்டார்கள். இவர்கள் அடங்கியிருந்தார்கள். இதற்கென்ன விளக்கம் இருக்க முடியும்? எராலியின் பார்வையில் இது இயல்பானதாகவே இருந்தது. ஏனெனில், முற்றிலும் வருணமயப்படுத்தப்பட்ட இந்திய சமூக அமைப்பில், ஆளப்படுபவர்கள், ஆள்பவர்களாக மாறும் சாத்தியமே இல்லை. அதனால், பெருவாரியான ஆளப்படும் மக்களிடையே, யார் ஆண்டாலும் அவர்களது அன்றாட வாழ்வில் அது எந்த அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில், சுல்தானாக இருந்தால் என்ன க்ஷத்ரிய குல அரசராக இருந்தால் என்ன என்ற விட்டேத்தி மனோபாவம், அவர்களை எந்தக் கிளர்ச்சிக்கும் தூண்டவில்லை. அவர்களிடத்தில் இருந்த பற்று என்பது முதன்மையாக தம் சாதி, அதிகம் போனால் தம் கிராமம் என்பதாகவே இருந்தது. 7. இன்னொரு வினோதமான காரணத்தையும், குறிப்பிடுகிறார் எராலி. அன்று இருந்த இந்தியர்கள் பலரும் இந்த நாட்டின் மீது இஸ்லாமிய படையெடுப்பு வருவதும் வெல்வதும் தவிர்க்க முடியாதது என்றும் அது தங்கள் புராணங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது என்றும் நம்பினர். குறிப்பாக, முகமது பின் காஸிமின் சிந்து பகுதி படையெடுப்பின்போது பௌத்தர்கள் போரில் தமக்கு விருப்பமில்லை என்பதையும் அது காலத்தின் கட்டளை என்பதையும் காசிமிடம் கூறிச் சரணடைந்தார்கள் என்ற ஒரு தகவலையும் சொல்கிறார். சுல்தான்களும் இந்துக்களும்: அடுத்த முக்கியமான ஒரு பொருள். சுல்தான்களின் ஆட்சியில் இந்துக்கள் நடத்தப்பட்ட விதம், அவர்களின் கோவில்கள் இடிக்கப்பட்டவை, ஜஸியா வரி விதிப்பு போன்றவை. இவை இன்றளவும், பகைமையை உருவாக்கவும், வளர்க்கவும் காரணமாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். இவை பற்றி எராலியின் பார்வை என்ன? முதன்மையாக, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் மத்தியகால மனோநிலையே இஸ்லாமிய சுல்தான்கள் கொண்டிருந்தனர். சுல்தான்கள் இஸ்லாமிய அரசைத்தான் அமைக்க முயன்றார்கள், அவர்கள் தம் புனித நூலின் அடிப்படையில்தான் செயலாற்றினார்கள். ஒரு இஸ்லாமிய தேசத்தில் முஸ்லிமற்றவர்களில் கிருத்துவர்களும், யூதர்களும் இயல்பாகவே பாதுகாக்கப்பட்ட குடிகளாவர். இவர்கள் அல்லாதவர்களைக் கையாள இரண்டு வழிகள்தான் இருந்தன- ஒன்று முஸ்லிமாக மாற்றுவது, அல்லது கொன்றொழிப்பது. முஸ்லிம் மதமாற்றம் நிறையவே நடந்தது. போரின்போது கொன்று ஒழிப்பதும் நடந்தது. ஆனால் போர்க்களம் தவிர்த்து, தைமூர் நடத்திய சில வெறியாட்டங்களைத் தவிர தேவையற்ற கொன்றொழிப்புகளில்லை என்றுதான் எராலி சொல்கிறார். ஒன்று, இங்கிருந்த இந்துக்களின் எண்ணிக்கை. அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. எனவே ஜஸியா எனும் வரி இந்துக்களின் மீது விதிக்கப்பட்டது. இந்த ஜசியா வரிகளை எதிர்த்து சில கிளர்ச்சிகள் (முக்கியமாக பிராமணர்களால்) நடந்தாலும் எத்தனையோ வரிகளில் இதுவும் ஒன்று என்ற விதத்தில் இது பெரிய எதிர்ப்பில்லாமல் செலுத்தப்பட்டது என்பதும், எல்லா காலங்களிலும் அது கெடுபிடியாக வசூலிக்கப்படவில்லை என்பதும் எராலி சொல்பவை. மேலும் பிராமணர்களுக்கான ஜசியா வரி பல சமயங்களில் விலக்கப்பட்டதும், அவர்களுக்காக மற்ற சாதியினர் வரி கட்டியதும் நடந்தது என்கிறார் எராலி. ஆளும் முஸ்லிம்களின் குறைவான எண்ணிக்கை காரணமாக, பெருமளவு இந்துக்களை சார்ந்தே ஆட்சி நடந்தது. அதிகார வர்க்கத்தின் உயர் மட்டங்களில், துருக்கிய ஆப்கானிய இனத்தவர் இருந்தாலும், அடுத்தடுத்த மட்டங்களில் மரபான இந்து சாதியினரே அதிகாரம் செலுத்தினார்கள் என்பதே உண்மை. பிராமணர்கள் பெரும்பாலும் தம் நிலையைக் காப்பாற்றிக் கொண்டார்கள் (சில சமயங்களில் கடுமையான தண்டனைக்கு இலக்காகும் இடத்தில் இருந்தாலும்). சுல்தான்கள் ஆட்சியில், பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவின் ஆளும் வர்க்கமான க்ஷத்திரியர்கள்தான். வணிகர்களும், விவசாயிகளும், கைவினைஞர்களும், பெருமளவு தம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாமலேயே வாழ முடிந்தது. இஸ்லாத்துக்கு மாறியவர்கள் எண்ணிக்கை என்றால் சுல்தான் ஆட்சி நடந்த காலத்துடன் ஒப்பிட்டால் அது குறைவானதாகவே இருந்தது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கட்டாய மதமாற்றம் என்பதுமே சில இடங்களில் நடந்தாலும், ஒப்புநோக்கக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்து சமூகத்தின் கடைசிப் படிநிலையில் இருந்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்றாலும் அங்கும் அவர்கள் கடைநிலையிலேயே இருக்கவேண்டித்தான் இருந்தது. இந்திய மேல்தட்டு மக்களில் பலர் தம் பதவியும் உயர்குடி வாழ்வும் பறிபோகாமல் இருக்கவும் ஆசைப்பட்டு மதம் மாறினர். தவிர, இஸ்லாமிய சூபிக்கள் மூலமாக மதம் மாறியவர்கள் கணிசமாக இருந்தனர். மொய்னுத்தின் சிஸ்டி, க்வாஜா நிஜ்ஜாமுதின் அவுலியா போன்ற சூபிக்களும் இந்தக் காலக்கட்டத்தில்தான் தங்கள் செய்தியைப் பரப்பினர். மதங்களை பொறுத்தவரை மிகவும் பாதிப்புக்கு உள்ளானது பௌத்தம்தான். பௌத்தம் தன் முதன்மையான இடத்தை ஏற்கெனவே இழந்திருந்தாலும், முஸ்லிம்களின் வருகை அதற்கு சாவு மணி அடித்தது. நாளந்தாவில் குத்புதீன் ஐபக்கின் தளபதி பக்தியார் கில்ஜியின் தலைமையில் நடந்த ஒரு வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான பிட்சுக்கள் (பிராமணர்கள் என்று தவறுதலாகக் கருதப்பட்டு) கொல்லப்பட்டனர். அந்த வளாகமே ஒரு கோவில் என்று தவறுதலாகக் கருதி எரியூட்டப்பட்டது. இந்த ஆட்சிக்காலத்தின்போது, கிழக்காசிய நாடுகளோடு பௌத்தம் வழி இருந்த தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இவை போன்ற சம்பவங்கள் பௌத்தத்தை இந்தியாவிலிருந்து சுத்தமாகத் துடைத்தெறிந்தது. சமணர்களும் எண்ணிக்கையில் குறையலாயினர். கோவில் இடிப்புச் சம்பவங்களுக்கு வருவோமேயானால், பல கோவில்கள் இடிக்கப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் எல்லாமே மதம் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக என்று சொல்ல முடியாது என்பதே என்பதே எராலியின் பார்வை. பெரும்பாலான கோவில்கள் அவற்றுக்குள் இருக்கும் செல்வங்களுக்காகவே அழிக்கப்பட்டன என்பதும் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்துவதற்காகவும் இடிக்கப்பட்டன என்பதும் அவர் கருத்து. இந்த இடத்தில் அவர், ராஜராஜன் மற்றும் ராஜேந்திரசோழன் ஆகியோரின் சாளுக்கிய தேச படையெடுப்புகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அங்கும் இதேபோல பல கோவில்களை சோழர் படை நிர்மூலம் ஆக்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். இஸ்லாமிய சுல்தான்களின் கோவில் இடிப்பும் ஒரே சீராகவே நடைபெற்றது என்றும் சொல்ல முடியாது. ஒரு சுல்தான் பதவிக்கு வந்த புதிதில் கோயில் இடிப்பு மிக அதிகமாகவும் (தம்மை நிரூபித்துக் கொள்ள), பின் மெல்லக் குறைவதுமாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா சுல்தான்களுமே புதிய கோவில்கள் கட்டுவதைத் தடை செய்தனர். மேலும் பல சுல்தான்களின் கொடூரமான நடத்தைக்கு ஒரு காரணம், எண்ணிக்கையில் குறைந்த ஒரு புதிய கூட்டம் தன்னை விட மிக அதிகமான எண்ணிக்கையில் வாழும் ஒரு மக்களை ஆளும்போது, தம்மைப் பற்றிய அச்சத்தை தோற்றுவிக்கவும், பரப்பவும், தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவும், கொடூரமான சம்பவங்களை நடத்தும் என்பதும் எராலி வைக்கும் ஒரு கோணம். இறுதியாக, இந்துக்களுக்கு எதிராக அக்காலகட்ட இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் நூல்களிருந்த வன்மம் சுல்தான்களின் வாள்களில் இல்லை என்பதே எராலியின் முடிவு. இதற்கு நிறையச் சான்றுகளைக் கொடுக்கிறார் அவர். உதாரணமாக, அலாவுதீன் கில்ஜி தேவகிரியின் ராமதேவரைத் தோற்கடித்தபின் அவரை மிகக் கௌரவமாகவே நடத்தி, ஆட்சியைத் திருப்பி அளித்திருக்கிறார். அதன்பின் கில்ஜியின் படைகளுக்கு உதவியாக தேவகிரியின் இந்து படைகள் ஹோய்சால மற்றும் பாண்டியர்களுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டது என்பதையும் குறிப்பிடுகிறார். அதேபோல சில சுல்தான்கள், இந்துக்கள் மீது அளவுக்கதிகமான கொடுமைகள் இழைத்தபோது, இஸ்லாமிய குருமார்கள் சிலர் இந்தச் செய்கை, இஸ்லாத்துக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய சம்பவங்களையும் எராலி குறிப்பிட்டிருக்கிறார். அப்படி சுட்டிக்காட்டிய ஒரு சம்பவத்தின்போது தன்னைக் குறைசொல்லும் உலாமாவை மிகக் கோபத்துடன் எதிர்கொள்கிறார் அலாவுதீன் கில்ஜி. அவரை மறுநாள் வந்து பார்க்கச் சொல்கிறார். மறுநாள், இனி ஒரு போதும் தாம் திரும்பி வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டு கில்ஜியின் அவைக்கு வரும் உலாமாவை பட்டு அணிவித்து, பரிசுகள் வழங்கி உண்மையைப் பேசியதற்காக கௌரவிக்கிறார் கில்ஜி. அதே போல மங்கோலியருக்கு எதிரான ஒரு போரின்போது அவர்களுக்கு உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லிக்கு அருகே இருந்த 30000 முஸ்லிம்களைக் கொன்று குவித்தார் அலாவுத்தின் கில்ஜி. மேலும், ஒன்றுக்கொன்று எதிராக போர் புரிந்து கொண்டிருந்த மன்னர்களில் இந்துக்களும் முஸ்லீம்களும் இருந்தனர் என்பது ஒரு உண்மை. விஜயநகர பேரரசர் தேவராயர் ஒரு தனி முஸ்லிம் படைப் பிரிவையே உருவாக்கினார் என்பதும் ஒரு தகவல். தவிர, விஜயநகர பேரரசும் பாமணி சுல்தான்களும் எப்போதும் போரில் ஈடுபட்டிருந்தாலும் சில சமயங்களில் வாரிசு உரிமை குழப்பங்களில் தலையிட்டு சமாதானம் பேசியதும் நிகழ்ந்திருக்கிறது. இருப்பினும், விஜயநகர இந்து அரசர்கள் தம் முஸ்லிம் பிரஜைகளை நடத்திய விதம் ஒப்பு நோக்க மேலானதாகவே இருந்தது என்பதையும் சொல்கிறார் அவர். அடுத்து, இந்த இருபெரும் மதங்களும் இங்கே சந்தித்துக் கொண்டதின் விளைவுகள் என்ன என்று ஆராயகிறார் எராலி. அதில் அவர், தத்துவரீதியாக ஒன்றை ஒன்று பாதிக்கவேயில்லை என்று சொல்கிறார். இந்து மதம், தன் பல்வேறு வடிவங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடும் இங்கு ஏற்கெனவே இருந்த ஒன்றுதான். இசுலாமையும் தன் பிரிவுகளில் ஒன்றாக உள்வாங்கிக் கொள்வதில் இந்து மதத்துக்கு எந்த தயக்கமும் இருந்திருக்க இடமில்லை. ஆனால், அதைத் தடுத்தது ஆப்கானிய அடையாளம் சார்ந்த மேலாதிக்க மனோபாவம்தான். அந்தந்த மதத்தின், மக்களின் வாழ்வேகூட தனித்தனி தளங்களில் இயங்கி வந்தன என்றும் சொல்கிறார் எராலி. இஸ்லாமியர்கள் பெரும்பாலும் நகரங்களிலும், இந்துக்கள் பெருமளவு கிராமங்களிலும் வாழ்ந்து வந்ததால் அவர்களிடையேயான தொடர்புகளே ஒரு குறைந்தபட்ச அளவுக்கு மேல் போகவில்லை என்பதும் அவர் கருத்து. சுல்தானிய ஆட்சியின் பாதிப்பு முக்கியமாக நிகழ்ந்த இடங்கள் கலைகள், கட்டுமானங்கள், மற்றும் மொழி சம்பந்தப்பட்டவை. கலைகளில், அக்காலகட்டத்தில்தான் ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் அடிப்படைகள் உருவாகின. இங்கு குறிப்பிட வேண்டிய ஒருவர் அமீர் குஸ்ரோ. அவர்தான் தபலா என்ற இன்று பிரபலமாக இருக்கும் தாள வாத்தியத்தை வடிவமைத்தார் என்பதும் ஹிந்துஸ்தானி மரபு இசைக்கு அஸ்திவாரமிட்டார் என்பதும் எராலியின் கூற்று. முதன் முதலாக இஸ்லாமிய பாணி கட்டிடங்கள் இந்தியாவில் கட்டப்படத் துவங்கின. தில்லி மட்டுமே மூன்று முறைக்கு மேல் கட்டப்பட்டது. வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்து கோவில்கள் கட்டப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது என்றாலும், தென்னிந்தியாவில் பல பழைய கோவில்கள் மன்னர்களால் விரிவாக்கப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான். ஆட்சியாளர்களின் மொழியாக பாரசீக மொழி பரவலாகியது, சம்ஸ்க்ருத மொழியைப் பின்னுக்குத் தள்ளியது. அதே சமயம், இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகள் இக்காலகட்டத்தில்தான் தோன்றின. கன்னட, தெலுங்கு மொழிகளில் முக்கியமான படைப்புகள் தோன்றின. தமிழின் காவிய இலக்கியங்களின் பொற்காலமும் இந்தக் காலம்தான். முக்கியமான சில சம்ஸ்க்ருத நூல்கள் பாரசீக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டாலும், அங்கிருந்து இந்திய மொழிகளுக்கு எதுவும் மாற்றப்படவில்லை என்பதும் ஒரு முக்கியமான உண்மை. முடிவு: பொதுவாக, இந்திய நாகரிகம் இக்காலகட்டத்தில் அடைந்தது தேக்கமும் சரிவுமே என்றுதான் எராலி கூறுகிறார். நிலையற்ற ஆட்சி, ஏராளமான போர்கள், அளவுக்கு மீறிய கொடுஞ்செயல்கள் ஆகியவை நிச்சயமாக இந்தியாவைப் பின்னுக்கு தள்ளின. பால்பன், அலாவுதீன் கில்ஜி , பிரோஸ் ஷா துக்ளக் ஆகியோரின் ஆட்சிக் காலங்களைத் தவிர மற்ற சமயங்களில் இந்திய பொருளாதாரமும் பெரும் சரிவை சந்தித்தது. மக்களில் பலர், போர்களுக்கு அஞ்சி காடுகளுக்கு சென்று மறைந்து வாழும் நிலையும் ஏற்பட்டது. ஐரோப்பா விழித்தெழும் காலத்தில் இந்தியா நீண்ட உறக்கத்துள் ஆழ்ந்தது. அதனாலேயே இந்த நூலுக்கு எராலி The Age of Wrath -‘பேரழிவுகளின் காலம்’, என்று பெயரிட்டிருக்க வேண்டும். 16ம் நூற்றாண்டின் இருபதுகளில் சுல்தானிய ஆட்சி ஒரு முடிவுக்கு வருவதற்கும் உள்ளிருந்து ஒரு கிளர்ச்சியும் எழாமல், மீண்டும் வட மேற்கிலிருந்து ஒரு படையெடுப்பு நிகழவேண்டி இருந்தது என்பதும் ஒரு வரலாற்று முரண். அந்தப் படையெடுப்பும், அதன் விளைவுகளுமே இத்தொகுப்பில் எராலி அடுத்து எழுதியிருக்கும், ‘கடைசி வசந்தம்’. இந்த நூலை இக்காலக்கட்டத்தில் படித்து உள்வாங்குபவர், மீண்டும் உலகம் அந்த மத்தியகால மனோநிலைக்கு போகாமல் இருப்பதையே விரும்புவார். தீவிரமான மதவெறியும், அதற்கு எதிராக அதே ரீதியிலான எதிர்வினையும், நாட்டை எதில் ஆழ்த்தும் என்பதற்கு ஒரு பாடமாகவே இந்நூலைப் பயில வேண்டும் என்று தோன்றுகிறது. மாறாக, இந்நூலிருந்து, வரலாற்றுச் சம்பவங்களுக்கு பழிக்குப் பழி தேடித் தீர்வு காண வேண்டும் என்ற படிப்பினைகளை ஒருவர் அடைவாரேயானால், அது இந்நூலுக்கு செய்யும் நியாயமாகாது, கண்டிப்பாக எராலியின் நோக்கத்துக்கும் நேரெதிரானதாகவே இருக்கும். ஆம்னிபஸ், ஆகஸ்ட், 2016 பொருளாதார கொள்கைகளும் வறுமையும் - ஒரு மாபெரும் தேடல் [] பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர் – அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது ஒரு ஆறுதல் மொழி போலத்தான் தோன்றுகிறது. “பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை” என்பது இருபதாம் நூற்றாண்டு தமிழ் திரைப்பட கவிஞர் வாலியின் மிகப் பிரபலமான வரி. இதுவும் யதார்த்த உண்மைக்குப் புறம்பான ஒரு ஆறுதல் மொழியாகத்தான் இருக்கிறது. ஏனெனில், நாமறிந்த ஏறத்தாழ இரண்டாயிர ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் பத்துக்கு ஒன்பது பேர் மிகக் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. எல்லா சமயங்களும் வறியவர்கள்பால் கருணை காட்டச் சொன்னாலும், வறியவர்களுக்கு தர்மம் செய்வதை மிகச் சிறந்த அறச்செயலாக வலியுறுத்தினாலும், வறியவர்கள் இல்லாத, வறுமை இல்லாத சமூகம் சாத்தியம்தானா என்று எங்கும் யாரும் சிந்தித்ததாகவே தெரியவில்லை. அது ஆன்மீக மதங்களின் வேலையில்லை என்று கூறலாம். அதற்கென்றே ஒரு தனி இயல் தேவைப்படுகிறது. பொருள், அதன் உற்பத்தி, அதன் பங்கீடு, பங்கீட்டு முறை, உபரிக்கான உரிமையை நிர்ணயிக்கும் அடிப்படை வழிமுறைகள் போன்றவற்றுக்கெல்லாம் தனியான ஒரு இயலின் தேவை பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் அவசியமானதாக உணரப்பட்டது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்ட பொருளாதார மாற்றங்களே இதற்கான காரணமாக இருந்திருக்கிறது. அதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொருள் உற்பத்தி, விநியோகம், பணம், அதன் மதிப்பு போன்றவை அப்போதுதான் விரிவாக விவாதிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் மிக உன்னிப்பாகவும் விரிவாகவும் அவதானிக்கப்பட்டன. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதனால் புதிதாய் உருவாகிய மிகத் தீவிரமான சமூக அவலங்களும் சிந்தனையாளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பின. இவர்களின் தொடர்ந்த உரையாடலில் பொருளியல் சிறப்பு கவனத்தைக் கோரும், தனித்தன்மை கொண்ட, ஆழமான அறிவுத் துறை என்ற கருத்து வலுபெற்றது. இன்றைக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார சிந்தனைகள் மற்ற அறிவுப்புல பிரிவுகளோடு போட்டியிட்டு, இன்று ஒரு முதன்மையான அறிவுத் துறையாகவே விளங்கிவருகிறது. “A Beautiful Mind” என்ற புத்தகத்தை எழுதிய ஸில்வியா நாஸரின் “The Grand pursuit – Search for an Economic Genius”, இப்பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றை மிக சுவாரசியமாக விவரிக்கிறது. பொருளாதார சிந்தனையின் வரலாறு என்று சொல்வதுகூட அவ்வளவு சரியில்லை. முதலாம் உலகப்போருக்கு முன் துவங்கி, இரு உலகப்போர்களுக்கு இடையேயான காலகட்டத்தில் சர்வாதிகார அரசு முறையாலும் த கிரேட் டிப்ரஷன் என்றழைக்கப்படும் பொருளாதார பின்னடைவாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரின் முடிவையொட்டி மலர்ந்த ஒரு பொற்காலத்தில் முகிழ்ந்த கருத்துருவின் (idea) கதையே இந்த நூல் என்று முகவுரையில் எழுதுகிறார் ஸில்வியா நாஸர். இந்தக் கருத்துரு ஒரு கேள்வி, அதன் தேடல், இதற்கான பதிலையே இலக்காகக் கொண்டுள்ளது – “எப்போதுமே பத்தில் ஒன்பது மனிதர்கள் வறுமையில் உழல விதிக்கப்பட்டவர்கள்தானா?”. எல்லாரும் எல்லாமும் பெற வழியுண்டா என்ற கேள்வியும் மனிதகுலத்தின் அரசியல் சவால் என்பது பொருளாதார திறன் (economic efficiency), சமூகநீதி, மற்றும் தனிமனித சுதந்திரம் என்ற மூன்றையும் வெற்றிகரமாக இணைப்பது எவ்வாறு என்ற வினாவுமே இந்தக் கருத்துரு விடை தேடி வளர்ந்த இரு திசைகள் என்கிறார் ஸில்வியா நாஸர். முதலாம் உலகப்போருக்கு முன் என்று ஏகதேசமாகச் சொன்னாலும் உண்மையில் இந்தக் கேள்வி 19ம் நூற்றாண்டின் 30களிலும் 40களிலும் கேட்கப்படத் துவங்கியதை இந்நூல் காட்டுகிறது. இது குறித்த தகவல்கள் வியப்பளிப்பனவாக உள்ளன – பொருளியலின் துவக்கத்துக்கு எந்த ஒரு பொருளாதாரச் சிந்தனையாளரின் பங்களிப்பும் காரணமில்லை. எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மற்றும் உலகின் முதல் புலனாய்வு இதழாளர் ஹென்ரி மேஹ்யூ ஆகிய இருவரின் விசாரங்களும் செயல்பாடுகளுமே பொருளியலின் அடிப்படை வினாக்கள் உருவாகக் காரணமாக இருந்தன என்று ஸில்வியா நாஸர் கவனப்படுத்துகிறார். தொழிற்புரட்சியின் தாயகமான இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் 1840களில் ஏழை பணக்காரர்களிடையே நிலவிய மிதமிஞ்சிய ஏற்றத்தாழ்வைத் தன் நாவல்களைக் கொண்டு முதன்முதலில் ஆவணப்படுத்தியவர் சார்லஸ் டிக்கன்ஸ். அவரது ‘ஆலிவர் ட்விஸ்ட்’, ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’ மற்றும் ‘எ டேல் ஆஃப் டூ சிடிஸ்’ முதலிய நாவல்கள் குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஏற்றத்தாழ்வைப் பதிவு செய்தன. லண்டனின் ஏழைத் தொழிலாளிகள் எதிர்கொண்ட பசியும் பற்றாக்குறையும் நோயும் நிறைந்த அன்றாட வாழ்வை விவரித்தாலும், இந்நிலைக்கு மாற்று உண்டா என்ற கேள்வியை டிக்கன்ஸ் எழுப்பியதை ஸில்வியா நாஸர் நேர்த்தியாகப் பதிவு செய்கிறார். ஆலிவர் ட்விஸ்ட் அந்த அநாதை விடுதியின் காப்பாளரிடம் கேட்கும் மிக இயல்பான, பசித்த கேள்வி, “எனக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?” (“Can I have some more, please?”), இந்தக் கேள்வியையே மனிதகுலம் வரலாறெங்கும் இப்புவியில் இயற்கையினிடத்தில் தொடர்ந்து கேட்டு வருகிறது. டிக்கன்ஸ் வெறும் நாவலாசிரியர் மட்டுமல்ல. அவர் தாம் வாழ்ந்து வந்தகால இங்கிலாந்தின், லண்டனின் சமூக வாழ்க்கையை மிக உன்னிப்பாக கவனித்தவர். மேலும், பிற அறிவுத்துறைகளில், குறிப்பாக அப்போது புதிதாகக் கிளைத்துக் கொண்டிருந்த பொருளியல் சிந்தனைகளைக் கூர்ந்து உள்வாங்கிக் கொண்டு அவற்றுக்கு எதிர்வினையாற்றி வந்தவர். ரிக்கார்டோவின் ‘பற்றாக்குறை அளவு ஊதியக் கோட்பாடு’ம் (Subsistence Wage Theory), மால்தூஸின் மக்கள்தொகை கோட்பாடும் டிக்கன்ஸை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்கியதாகத் தோன்றுகிறது என்றும், இதற்கு பதில் கூறும் வண்ணமே ’எ கிறிஸ்துமஸ் கரோல்’ நாவல் அமைந்துள்ளது என்றும் எழுதுகிறார் ஸில்வியா நாஸர். ஸில்வியா நாஸர் சித்தரிக்கும் விக்டோரியா காலத்து இங்கிலாந்து சமூகம் ஏறத்தாழ இன்றைய இந்திய சமுதாயச் சூழலை நினைவுபடுத்துகிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான மிகக் கடுமையான ஏற்றத்தாழ்வுகள், திருப்பூரை நினைவூட்டும் வியர்வைக் கிடங்குகள் (Sweatshops) என்று நிறைய ஒற்றுமைகள் இருப்பினும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. விக்டோரிய இங்கிலாந்தில் ஓட்டுரிமை சொத்துள்ள பிரிவினருக்கு மட்டுமே இருந்தது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டத்தையும் அதன் வெற்றியையும், இந்தப் பிரச்சினை அன்றைய இங்கிலாந்தின் சிந்தனையாளர்களை எதிரெதிர் தரப்புகளாகப் பிரித்ததையும் இந்த நூல் விளக்கமாக விவரிக்கிறது. தீவிரமான போராட்டத்தைத் தொடர்ந்து ஆலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட பின்னும், அவர்களைவிட பல மடங்கு அதிக எண்ணிக்கையிலுள்ள உதிரி தொழிலாளர்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டே இருக்கிறது. இந்த உதிரி தொழிலாளர்களில் ஒரு முக்கியமான பிரிவினரான, தையல் வேலை செய்யும் பெண்கள் (needlewomen) துணி/ ஆடை உற்பத்தி சாலைகளின் கடும் உற்பத்தி முறைகளில் (ஸ்வெட்ஷாப்) சிக்கியதோடு, மிகக் குறைந்த ஊதியத்துக்கும் உழைத்தனர். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இந்தப் பெண்களின் வாழ்க்கையைதான் ஹென்ரி மேஹ்யூ (Henry Mayhew)  பஞ்ச் பத்திரிகையில் தான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளில் விவரித்தார். இவரது கட்டுரைகள் இங்கிலாந்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பின. தற்போதைய தமிழ்நாட்டின் ’சுமங்கலித் திட்டம்’தான் நினைவுக்கு வருகிறது. அதே சமயத்தில், அதே லண்டனில் இன்னொரு புறம் செயல்பட்டுக் கொண்டிருந்த கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் எங்கல்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளைக் கணிசமாகப் பதிவு செய்யும் ஸில்வியா நாஸர், மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ’ (1847), மற்றும் எங்கல்ஸின் ‘கன்டிஷன் ஆஃப் தி இங்கிலீஷ் வர்க்கிங் க்ளாஸ்’ (1844), ஆகிய நூல்கள் வெளிவந்த பின்னணியையும் விவரிக்கத் தவறுவதில்லை. மரபார்ந்த இடதுசாரிகளுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கும் வகையில், மார்க்ஸை முக்கியமான ஒரு பொருளாதார வல்லுனராகவே ஸில்வியா நாஸர் கருதுவதில்லை. மார்க்ஸும் எங்கல்ஸும் வறுமை நிலை தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஒன்று, அதிலும் குறிப்பாக பணக்கார வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட புதிய ஒரு நிலைமை என்று வாதிட்டதை வலுவாக மறுக்கிறார் ஸில்வியா நாஸர். இவர்கள் இருவரும் முன்வைக்கும் முடிவுகளுக்கு மாறாக, நம்மால் அறிய முடிந்த வரலாறெங்கும் மனிதகுலத்தில் பத்துக்கு ஒன்பது பேர் மிகவும் வறிய சூழலில்தான் வாழ்ந்தனர் என்றும், தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருந்ததேயில்லை என்றும் வாதிடுகிறார் ஸில்வியா. இதற்குச் சான்றாக ஜான் ஸ்டூவர்ட் மில், ஆதாம் ஸ்மித் முதலானவர்களின் அவதானிப்புகளை அவர் முன்வைக்கிறார். மார்க்ஸ் இங்கிலாந்திலேயே வாழ்ந்து வந்தாலும், தன் காலகட்டத்தில், தன் கண்முன்னரே ஏற்பட்ட மாற்றங்களை,- உதாரணமாக, தொழிலாளர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்து வந்ததை, – தொழிலாளர்கள் வாழும் சூழலிலும், அவர்களது வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம் போன்றவற்றில் ஏற்படத் துவங்கியிருந்த உயர்வையும், கவனிக்கவேயில்லை என்றும், மார்க்ஸ் ஆங்கில மொழியைக் கற்க முயற்சித்ததே இல்லை என்றும், தன் வாழ்நாளில் அவர் ஒரு தொழிற்சாலையைகூட உள்ளே சென்று பார்த்ததில்லை என்றும் விவரித்து, அடுத்து வந்த தசாப்தங்களில் ஏற்பட்ட பொதுவான வாழ்க்கைத்தர ஏற்றம் மார்க்ஸின் கணிப்பைத் தவறென்று நிரூபித்தது என வாதிடுகிறார் அவர். மார்க்ஸுக்கு மாற்றாக அவர் இந்த நூலில் நவீன பொருளியலின் தந்தையாக மதிக்கப்படும், திறந்த பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்த ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் அவர் வழி வந்தவர்களின் வாழ்வையும் சிந்தனைகளையும், அச்சிந்தனைகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்படுத்திய தாக்கத்தையும் முன்வைக்கிறார். ஸில்வியாவின் பொருளியச் சிந்தனையாளர்களின் வரிசை இப்படி அமைகிறது : இங்கிலாந்தின் ஆல்ஃபிரட் மார்ஷல், பியட்ரிஸ் வெப் மற்றும் சிட்னி வெப், ஜே. எம். கெய்ன்ஸ், ஆஸ்திரியர்களான ஜோசப் ஷும்பீட்டர் மற்றும் ஃபிரடரிக் வான் ஹேயக், அமெரிக்கரான இர்விங் ஃபிஷர், ஜோன் ராபின்சன் மற்றும் அவரது மாணவராக அறியப்படும் இந்திய பொருளியல் மேதை அமர்த்யா சென். இவர்களின் வாழ்வையும் தத்துவங்களையும் தடுமாற்றங்களையும் விவரிக்கும் அதே சமயம் அவர்கள் சார்ந்த நாடுகளின் சமூக பொருளாதார வரலாற்றையும் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை) ஒரு குறுக்குவெட்டு தோற்றமாய் அளிக்கிறது இந்நூல். மேற்சொன்ன சிந்தனையாளர்களில் ஆல்ஃபிரட் மார்ஷல் மிகவும் மூத்தவர். ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறையான ஜெ. எம்.கெய்ன்ஸ், பியட்ரிஸ் வெப் மற்றும் அவரது கணவரான சிட்னி வெப் முதலானோரும் இங்கிலாந்தில் பல சமயங்களில் ஒருமித்தும் சில சமயங்களில் முரண்பட்டும் தங்கள் போருளியல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டதை விவரிக்கும் இந்நூல் அவர்தம் தனிப்பட்ட வாழ்க்கைச் சித்திரத்தையும் கணிசமான அளவுக்குத் தருகிறது. இந்த ஆங்கிலேய சிந்தனையாளர்களில் பியட்ரிஸ் வெப்பும் அவரது கணவர் சிட்னி வெப்புமே இடதுசாரிகள் என்று சொல்லப்படக் கூடியவர்கள். மக்கள் நல அரசு (Welfare State) என்ற கருத்தாக்கம் முதன்முதலாக பியட்ரிஸ் வெப்பிடமிருந்தே தோன்றியது என்று குறிப்பிடுகிறார் ஸில்வியா நாஸர். இச்சிந்தனையாளர் வட்டத்தில் சர்ச்சில், ஜோசப் சாம்பர்லைன், பெர்னார்ட் ஷா முதலான பிரபல ஆளுமைகள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஜோசப் சாம்பர்லைன் மற்றும் இளம் சர்ச்சிலின் ஆளுமைச் சித்திரங்கள் இந்நூலில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இவர்களுடன் தொடர்ந்து சிந்தனைப் பரிமாற்றத்தில் பங்கேற்ற அமெரிக்காவின் பல்துறை விற்பன்னரான இர்விங் ஃபிஷரின் வாழ்வும் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பிரச்சினைகளுக்கான விடையின் திறவுகோல் பணப்புழக்கத்தின் அளவே என்று தீவிரமாக நிறுவும் இர்விங் ஃபிஷர் கீழைத் தேய ஆன்மிக மரபில் நாட்டம் கொண்டவராகவும், அதன் அடிப்படையில் சுயமாக மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டு ஆரோக்கியம் பேணுதலில் கவனம் செலுத்தினார் என்பதும் நமக்கு சுவையான விஷயங்களாகும். ஆஸ்திரியாவில் பிறந்து உலகப் போரில் பங்கேற்ற ஷும்பீட்டரின் வண்ணமயமான காதலும் மணவாழ்வும் அவர் ஆஸ்திரிய அரசருடனும் இங்கிலாந்தின் முன்னணி சிந்தனையாளர்களுடனும் கொண்டிருந்த இணக்கமும் முரணும் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த காலகட்ட இங்கிலாந்தின் பொருளாதார சிந்தனையாளராகவும் தீவிர இடதுசாரியாகவும் ஜோன் ராபின்ஸனைக் காட்டும் இந்நூல், அவரது மாணவர் என்றறியப்படும் இந்தியர், அமர்த்யா சென் அவரது கருத்துகளை உரத்த குரலில் மறுக்காமலேயே, நலவாழ்வுப் பொருளியம் (Welfare Economics) என்ற புதிய ஒரு கோட்பாட்டை நிறுவியதையும் விவரிக்கிறார் ஸில்வியா நாஸர். மேலும், அமர்த்யா சென், ஒரு தேசத்தின் மக்கள் வாழ்தரத்தை மதிப்பிடும் அளவையாக, ஐ.நா. சபையின் மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index) உருவாகக் காரணமாக இருந்தார் என்பதும் இந்நூலில் கவனப்படுத்தப்படுகிறது. அமர்த்யா சென் தன் கல்லூரிப் பருவத்தில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததையும் அதனை மிகுந்த தீரத்துடன் போராடி வெற்றி கொண்டதையும் எழுச்சி தரும் வகையில் விவரிக்கிறார் ஸில்வியா. மேற்சொன்ன பொருளியல் சிந்தனையாளர்கள் அனைவரின் வாழ்க்கைச் சித்திரமும் சிந்தனைகளும் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தாலும் இப்புத்தகம் ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸையே முதன்மைப்படுத்துகிறது. இரு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில் மேற்குலகம் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் தேக்கத்துக்கும் (The Great Depression) கெய்ன்ஸின் பொருளாதார திட்டங்களே மாற்றாகவும் மருந்தாகவும் விளங்கியதை இந்நூலில் நாம் காண முடிகிறது. இந்த காலகட்டத்தில்தான் அரசு செலவீடு (Public Spending) என்ற கருத்தாக்கம் கெய்ன்ஸால் முன்வைக்கப்பட்டு, ஏறத்தாழ அனைத்து மேற்குலக ஜனநாயக நாடுகளும் மக்கள் நல அரசுகளாக மாறும் திசைக்குத் திரும்ப வழி செய்து கொடுத்தது என்பதையும் ஸில்வியா நாஸர் மிகத்தெளிவாக விவரிக்கிறார். இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது. ஆனால் அவர் இப்படி சொன்னதற்கு அடுத்த ஒரு நூறாண்டுகளுக்குள் இந்நிலை மாறி சராசரி தொழிலாளி ஒருவனின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துவிட்டதையும் புள்ளிவிவரங்களைக் கொண்டு இந்நூல் நிறுவுகிறது. மேற்குலகில் வாழும் ஒருவரின் ஆயுட்காலம் 1820களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1950களில் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. 1850ல் இருந்து 1950 வரையான ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த ஒரு நூறாண்டுகளில் கடும் வறுமையில் உழலும் மக்களின் எண்ணிக்கை ஆறில் ஐந்து பகுதியாகக் குறைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான உலக வரலாறு என்பது மேலதிக அளவிலான மக்கள் கூட்டம் கடும் வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பி மேலெழுவதே என்ற உண்மையைத் தக்க புள்ளிவிவரங்களோடு விளக்குகிறது இந்நூல். இந்நூலில் மிகச் சிறந்த மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில – “உலகில் நீராவி இயந்திரத்தால் ஏற்பட்ட தாக்கத்தைவிட பொருளியல் சிந்தனைகளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” – ஜே. எம். கெய்ன்ஸ் “இயற்கை வளத்தையும் மக்கள் தொகையையும் தொழில்நுட்ப தலைமையையும்விட பொருளியல் புரிதலே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது” – ஆல்ஃபிரட் மார்ஷல். “முதலியத்துக்கு முந்தைய விவசாய பொருளாதாரச் சமூகத்தில் போல்ஷெவிசம் வெற்றி காண நேர்ந்தது ஒரு குருட்டு அதிர்ஷ்டமன்றி வேறில்லை” – ஷும்பீட்டர். “நம்மில் இருக்கும் ஆன்மிகவாதியின் கவனத்தை ஈர்க்கும் மதம்தான் கம்யூனிசம்” – ஜே. எம். கெய்ன்ஸ். “செழிப்புநிலை அனுபவங்கள் தேசங்களுக்கு குறுகிய காலமே சாத்தியப்பட்டிருக்கின்றன. அதன் நீண்ட வரலாறு நெடிதும் மானுடம் மிகவும் வறிய நிலையில்தான் இருந்திருக்கிறது” – ஜே. கே. கால்பிரெய்த். வெகு உறுதியாகவே நாம் மையத்தின் வலப்புறத்தில் இந்த நூல் நிற்கிறது என்று சொல்ல முடியும். மனிதனின் பொருளியல் முன்னேற்றம் என்பது மிகப் பெரிய அளவில் திறந்த தாராளவாத பொருளாதார கொள்கைகளால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது என்ற முடிவுதான் இந்த நூல் விவரிக்கும் விஷயங்களின் உணர்த்தலாக இருக்கிறது. தீவிர இடதுசாரி சர்வாதிகார அரசுகளின் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகள் அதிக அளவில் மனிதகுலத்துக்கு தீமையையே விளைவித்தன என்ற முடிவும் இந்த நூலின் வாதமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, சோவியத் யூனியனின் கூட்டுப்பண்ணை திட்டம் நடைமுறையில் 60 லட்சம் உயிர்களை உக்ரெயீனில் கொள்ளை கொண்டதையும், சீனாவில் 1958-1962 வரையான நான்காண்டுகளின் “மாபெரும் முன்பாய்ச்சல்” (Great Leap Forward) என்ற திட்டம் ஏறத்தாழ ஒன்றரை கோடியிலிருந்து மூன்று கோடி உயிர்கள் வரை பலி கொண்டதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது (இந்தியாவில் வங்காள பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம்). சீனாவின் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி டெங் சியாவ் பிங்கின் தாராளவாத பொருளாதார கொள்கைகளாலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் 1990களில் மன்மோகன் சிங் நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பிறகே சாத்தியப்பட்டதையும் இந்நூல் குறிப்பிடத் தவறுவதில்லை. வலதுசாரி பொருளாதார கொள்கைகளில் குறைபாடுகள் ஒப்பு நோக்கக் குறைவாக இருந்தாலும், அவற்றையும் ஸில்வியா நாஸர் சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக அமெரிக்காவில் 1920 வருடத்துப் பெரும் வீழ்ச்சி (The Great Depression of 1920) என்றழைக்கப்படும் காலகட்டத்தில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பொருளாதார சிந்தனையாளர்களுமே அதைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து மீளவும் வழி காண இயலாதவர்களாகத் திணறியதையும் இந்நூல் பதிவு செய்கிறது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை மீண்டும் அமல்படுத்தும் இந்த காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூல் பொருளியல் ஆர்வலர்களால் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே என்று தோன்றுகிறது. இந்த நூலின் மிக முக்கியமான குறைபாடாக நான் காண்பது இது – இதைக் குறிப்பிடாமல் இந்த புத்தக மதிப்பீடு முழுமையானதாக இருக்காது : ஐரோப்பாவின், குறிப்பாக இங்கிலாந்தின் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு காலனியமும் பிரிட்டிஷ் பேரரசின் ஏகாதிபத்தியமும் அளித்த பங்களிப்பைக் குறித்து ஸில்வியா நாஸர் எதுவும் பேசுவதே இல்லை. இங்கிலாந்தின் தொழிற்புரட்சி இந்தியாவில் சுரண்டப்பட்ட செல்வத்தின் கொடை என்று நேரு தன் டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் குறிப்பிடுவார். இயந்திர புரட்சி முன்னரே ஏற்பட்டிருந்தாலும் தொழிற்புரட்சிக்குத் தேவைப்பட்ட அபரிதமான மூலதனத்தை பிரிட்டன் தன் காலனிய தேசங்களிலிருந்து சுரண்டியது என்பதும் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு இந்தியத் தொழிலாளர்களும், நெசவாளர்களும் ஓட்டாண்டிகளாக வேண்டியிருந்தது என்பதும் அவர்களின் நிலை இன்னமும் சீரடையவில்லை என்பதும் ஸில்வியா நாஸருக்கு கவனப்படுத்ததத்தக்க அளவுகூட முக்கியமாக இல்லை என்றே தெரிகிறது. அதேபோல், கடந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகாலத்தின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடும், முக்கியமாக, வளர்ந்த நாடுகளின் தேவைகளை நிறைவு செய்ய மூன்றாம் உலக நாடுகள் தம் வளங்களை இழந்து தம் மண்ணை மாசுபடுத்திக் கொள்வதையும் ஸில்வியா கருத்தில் கொள்ளவில்லை – இந்தப் புத்தகத்தையும் தாண்டி விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால், பொருளியல் திறன், சமூக நீதி, தனிமனித சுதந்திரம் என்ற மூன்று விழுமியங்களை நோக்கியே பொருளியலின் மகோன்னதத் தேடல் தொடர்ந்திருக்கிறது என்று சொல்லும்போது, ஸில்வியா நாஸர் கண்டுகொள்ளாமல் விட்ட மனிதர்கள், யாருக்காக இவை என்ற கேள்வியை எழுப்புபவர்களாக இருக்கின்றனர். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது டெங் சியாவ் பிங்கின் புகழ்பெற்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது – பூனை கருப்பா வெளுப்பா என்பதைவிட அது எலியைப் பிடிக்கிறதா என்பதுதான் கேள்வி. பொருளியல் ஒரு துல்லியமான அறிவியல் துறையல்ல என்று கூறுவதுண்டு. பொருளாதார வளர்ச்சியில் அரசின் இடையீடு எவ்வளவுக்கு இருக்க வேண்டும் என்பது விடையற்ற விவாதம். இடதுசாரி பொருளாதார கொள்கைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், முதலிய பொருளாதார கொள்கைகளின் மீதான அதிருப்தி பெருகிவரும் இக்காலகட்டத்தில் பொருளியல் திறன் (economic efficiency), சமூக நீதி, தனிமனித சுதந்திரம் ஆகிய மூன்றையும் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது எப்படி என்றும் இது சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பி விவாதிக்கும் ஒரு முக்கியமான தரப்பாக இந்நூல் விளங்குகிறது. பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற ராபர்ட் சாலோ கூறியதாக ஒரு மேற்கோளை ஸில்வியா நாஸர் முடிவுரையில் குறிப்பிடுகிறார் : “புதிய கேள்விகள் தினமும் எழுந்தவாறே உள்ளன, பழைய கேள்விகளுக்கான விடைகளைக்கூட மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது”. மனித வாழ்வின் மிக அடிப்படையான பொருளாதார பிரச்சினைகளுக்கு விடை தேடும் பொருளியலின் மகோன்னத தேடல் ஒரு முடிவற்ற பயணம் – இறுகிப்போன கோட்பாடுகள் தேவையற்ற சுமைகளாகவே இருக்க முடியும். ஸில்வியா நாஸரின் இந்தப் புத்தகமும் சில ஆண்டுகளுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட மாட் ரிட்லியின் ‘எ ரேஷனல் ஆப்டிமிஸ்ட்’ என்ற நூலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தொடர்ந்து விவாதிக்கப்படுவது இன்றைய சூழலில் மிக அவசியமாக இருக்கிறது. சொல்வனம், அக்டோபர், 2012. நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை [] தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க  ரசிகர்களின் ஆதரவு  இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து  மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள் மீது மக்களுக்கு என்றும் ஒரு அனுதாபமும் அன்பும் உண்டு என்றாலும், அவர்களின் மறுவாழ்வுக்கு அது ஒருபோதும் துணை நிற்கவில்லை. நடிகர்களைவிட நடிகையர்களின் மேலான வெகு மக்கள் ஈடுபாடு இன்னும் சிக்கலானது. நடிகர்கள் மீதான வழிபாட்டு மனோபாவம் நடிகைகள் மீது  கிடையாது. குஷ்புவுக்குக் கோவில் கட்டியது ஒரு விதிவிலக்கு. நடிகைகள் அவர்கள் அதிகம் ஏற்ற பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப காதலியாகவும், கவர்ச்சிக் கன்னியாகவும், சகோதரியாகவும் பார்க்கப்பட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒப்புநோக்க நடிகைகள் விரைவில் மறந்து போகக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். மேலும், நடிகர்களின்  திரை வாழ்க்கையின் மீதும் அவர்களிடம் மக்கள் கொண்டிருந்த அபிமானத்தின் மீதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை செலுத்திய செல்வாக்கை விட, நடிகைகளின் திரை வாழ்க்கை மற்றும் அவர்களின் மீதான அபிமானத்தின் மீது செலுத்தியது மிக அதிகம். இந்தப் பொதுவிதிக்கு விலக்காக அமைந்த ஒரு நடிகையும் உண்டு. அவர்தான் சாவித்திரி. அன்பே உருவான சகோதரி, அமைதியே உருவான மனைவி, குறும்பும் குதூகலமும் இருந்தாலும், கண்ணியமே மேலோங்கி நிற்கும் காதலி, இவையே அவரின் திரை முகங்கள். ஒரு அச்சு அசலான தமிழ் குடும்ப விளக்கு என்றால் ஒரு காலத்தில் அது சாவித்திரிதான். ஆனால் தனிப்பட்ட வாழ்வில், அவர் ஒரு துடுக்கான  ஆளுமையாகவும், சற்றே கர்வம் மிக்கவராகவுமாக இருந்தார் என்றும், திரையில் அவர் யாராக அதிகம் நடித்தாரோ, அப்படிப்பட்ட பெண்ணுக்கு இருக்கக்கூடாத பழக்கங்கள் அவருக்கு இருந்தன என்பதும் பின்னாளில் தெரியவந்தது. ஆனால் இந்த உண்மைகள் அவரின் மீதான மக்களின் அபிமானத்தை குறைத்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. அதில் சாவித்திரி மறைந்த விதம் ஒரு பங்காற்றியிருக்கலாம்.  இதெல்லாம் நான் பின்னாளில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று படித்து அறிந்து கொண்டது. என் இள வயதில் சாவித்திரி என்றால், அது மலர்களைப் போல் உறங்கும் பாசமலர், வணங்காமுடியில் அசத்திய நாடோடிப் பெண், அதே படத்தில் அவர் ஏற்று நடித்த கண்ணியமான ராஜகுமாரி. மகாதேவியில் ராவணன் சிறையிலிருந்த சீதையைப்போல அழகும், துயரும், மாட்சிமையும் வெளிப்படுத்திய முகம் கொண்டவர். பார்த்தால் பசிதீரும் படத்தில் கைவிடப்பட்ட அபலை, நவராத்திரியில் ஒன்பது சிவாஜிகளையும் ஒற்றையாக சமாளித்தவர். ஆடாமல் ஆடும் நளினம் கைவரப்பெற்றவர். நான் 70களின் பிற்பகுதிகளில் திரை அரங்குகளில், மூன்றாவது நான்காவது சுற்றாகக் காட்டப்படும் சாவித்திரியின் பழைய படங்களில் அவரது பளபளக்கும் விழிகளையும் நொடிக்கு நூறு பாவம் காட்டும் முக வசீகரத்தையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில்தான் அவரைப் பற்றிய மோசமான வதந்திகளையும் கேளிவிப்பட்டுக் கொண்டிருந்தேன். 80-81 காலகட்டத்தில் அந்த அழகு முகம், நீரிழிவு நோயாலும், காலம் தந்த துயரமான படிப்பினைகளாலும்,  ஒடுங்கிச் சிறுத்து நைந்து போன புகைப்படங்களையும் கண்டு கொண்டிருந்தேன். 1981ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அவர் மறைந்த செய்தி வந்தது. ஏறத்தாழ 9 மாதங்கள் கோமாவிலேயே இருந்து மீளாமல் மறைந்தார். தெரிந்த பெண்மணிகள் எல்லாம், ஐயோ பாவம், இப்படி ஒரு முடிவு வந்திருக்கனுமா, எல்லாம் அந்த ஜெமினியால் வந்த வினை, அவனை நம்பிக் கெட்டாள், என்று புலம்பித் தீர்த்தனர். யாருமே சாவித்திரி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட தீய பழக்கங்களுடன் கூடிய வாழ்வினைப் பழிக்கவில்லை. அவரை மறந்திருந்தவர்கள் கூட இப்போது அவரை நினைத்து உருகினார்கள். அன்று எனக்குத் தெரியவந்தது, சாவித்திரியின் தனிப்பட்ட கெட்ட பழக்கங்களோ அவர் வாழ்ந்த விதமோ ஒருபோதும் அவருக்கு இருந்த அந்த குடும்ப விளக்கு என்ற பிம்பத்தை உடைக்கவேயில்லை என்பது. உண்மையில் சாவித்திரி யார்? எப்படிப்பட்டவர்? அசாத்திய திறமை படைத்த நடிகை என்பது எல்லோரும் அறிந்தது. தமிழக வழக்கப்படி, நடிகர் திலகத்துக்கு ஈடான நடிகையர் திலகம் அவர். ஆனால் திரைக்குப் பின்னால் அவர் யார் என்பது குறித்து உதிரி உதிரியாக அன்றி ஏதும் படிக்கக் கிடைத்ததில்லை. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2015ல் வெளியாகியுள்ள நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதியுள்ள  ‘சாவித்திரி-  கலைகளில் ஓவியம்’ என்ற புத்தகம் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. சாவித்திரியின் வாழ்வை ஆதியோடு அந்தம் விவரிக்கும் இந்த நூல், தமிழ் சினிமாவுக்கே உரிய மிகை உணர்ச்சி நடையில் அமைந்திருந்தாலும், அவரது வாழ்க்கை குறித்த பல கேள்விகளுக்கு விடையளிப்பதாகவும், அந்தக் கால தமிழ் சினிமா, மற்றும் தமிழக அரசியல் சமூக நிலை குறித்தும் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதையும் சொல்ல வேண்டும். இன்னொரு சிறப்பம்சமாக சாவித்திரி பிறந்ததிலிருந்து துவங்கி ஒரு நேர்க்கோட்டில் செல்லாமல் திரைப்படங்களுக்கே உரிய வகையில் சென்னையின் லேடி வெலிங்டன் மருத்துவமனைக் காட்சியில் துவங்கி கடைசியில் அங்கேயே  வந்து முடிகிறது. இடையிலும், முன் பின் என்று சாவித்திரி வாழ்க்கைப் பாதையைக் காண்பித்தாலும், குழப்பம் இல்லாமல் தெளிவாகவே சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும். சாவித்திரி போன்ற ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்று நூலில் மக்கள் எதிர்பார்க்கும் அநேகமாக எல்லா தகவல்களையும் தொகுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பல இடங்கள் இப்படியும் நடக்குமா என்று வியக்க வைக்கின்றன. அவற்றில் முதன்மையாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆன  ஜெமினி கணேசனை சாவித்திரி கண்மூடித்தனமாகக் காதலித்தது. பின் ஒரு நாள் கொட்டும் மழையில், நள்ளிரவில் தன் வீட்டிலிருந்து வெளியேறி, தன்னந்தனியாக ஜெமினியின் வீட்டுக்குச் செல்லும் அவரை, ஜெமினியின் முதல்  மனைவி பாப்ஜி திறந்த மனதோடு வரவேற்று அடைக்கலம் தருவது. சாவித்திரி குறித்த அதிகம் தெரியாத, தெரிந்திருந்தாலும் மறந்து போன, பல விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவருவதும் இதன் சிறப்பு. சாவித்திரி சென்னையில் அபிபுல்லா சாலையில் வசித்து வந்தார். அருகே இருந்த காமராஜரின் மீது அளப்பரிய மரியாதையும் அபிமானமும் கொண்டிருந்த அவர் ஜெமினியுடன் சேர்ந்து காங்கிரசுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது எனக்கு புதிய செய்தியாக இருந்தது. வரவு செலவுகளை கவனமாக பராமரிப்பதில் கலைஞர்களுக்கு உள்ள கவனமின்மை புரிந்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் சாவித்திரிக்கு தன் ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் வாங்கிக் குவித்த நகைகளின் எண்ணிக்கை சுத்தமாக எவ்வளவு என்றே தெரியாது என்பதும், அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்து அவர்கள் அள்ளி எடுத்துக் கொண்டு போன நகைகள் எதற்குமே அவருக்கு கணக்கு ஒப்பிக்கத் தெரியவில்லை என்பதும் திகைக்க வைக்கும் ஒன்று. இந்த வருமான வரி சோதனை, 1965ல் திருவிளையாடல் படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற பின்னர் நடக்கிறது. அநேகமாக அந்த படத்தில் பங்கு கொண்ட அனைவரது வீட்டிலும் நடந்தது என்கிறார் நூலாசிரியர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்- இயக்குனர் ஏ.பி. நாகராஜனில் தொடங்கி, பங்கு கொண்ட நடிக நடிகையரில் அநேகமாக அனைவருமே காங்கிரஸ் மீது பற்றுள்ளவர்கள் என்பதையும், அந்த சமயத்தில் காங்கிரசே மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தது என்பதையும் பார்க்கும்போது இதை என்ன சொல்வது? இந்த வருமான வரிச் சோதனைதான் சாவித்திரியின் வாழ்க்கையில் மிகப் பெரிய  சோதனையாக அமைந்தது. அதில் ஏறபட்ட பணச்சுமையே அவரது மனமுறிவுக்குக் காரணமாக அமைந்தது என்கிறார் இன்பா. சாவித்திரியின் வாழ்க்கையில் இரு பெரும் நிகழ்வுகள், ஜெமினியோடு அவர் கொண்ட உறவும் பிரிவும். ஜெமினியோடு இருந்த உறவு எப்போதுமே தென்றலும் புயலும் மாறி மாறி அடித்த ஒன்று. தென்றலை விட புயலடித்த நாட்களே அதிகம். அதற்கேற்றார் போலவோ என்னவோ, 1964ல் தனுஷ்கோடி அழிந்த பெரும் புயலில் இவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டார்கள் என்பது எவ்வளவுப் பொருத்தம். அந்தப் புயல்கூட சாவித்திரியின் வாழ்வில் அதற்குப் பின் அடிக்கப் போகும் பல  புயல்களுக்கு ஒரு முன்னோடி போல அமைந்தது எனலாம். ஜெமினிக்கு எப்போதுமே சாவித்திரி பலரில் ஒருவர். ஆனால் சாவித்திரிக்கு ஜெமினி அப்படியில்லை. ஜெமினி அந்த நாட்களில் ராஜஸ்ரீ என்ற நடிகையுடன் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார் என்ற சேதியே அதனால்தான் அவர் ஜெமினியிடம் பிணக்கம் கொள்ள வைக்கிறது. இவர்களின் ஒன்றுபட்ட வாழ்வினை விரும்பாத சாவித்திரியின் நெருங்கிய உறவினர்களால் இந்தச் சூழல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு, அந்தப் பிரிவை நிரந்தரமாக்கி, சாவித்திரியின் செல்வத்தை சூறையாட வைக்கிறது. ஜெமினியையும் உறவினர்களையும், நம்பிக் கெடுகிறார் சாவித்திரி. இந்தச் சூழ்நிலையில்தான், ஜெமினி விளையாட்டாக பழக்கிக் கொடுத்த மதுப் பழக்கத்திற்கு  அடிமையாகிறார். நீரிழிவு நோயும் தாக்குகிறது. மீள முடியாத இறங்கு முகத்தில் செல்கிறது அவர் வாழ்க்கைப் பயணம். நோயால் பொலிவிழந்த முகமும் மருந்து மாத்திரைகளால் பெருத்த உடலும் கொண்ட சாவித்திரிக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நேரத்தில் எல்லோரும் செய்யும் தவறை சாவித்திரியும் செய்தார். தானே படங்களை தயாரிக்கத் தொடங்கினார். எப்போதுமே படங்களை இயக்குவதற்கான திறமையைக் கொண்டவர் என்பதும், சில வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதும் வேறு விஷயங்கள். ஆனால் படத் தயாரிப்புக்கும், செலவுகளைக் கண்காணிப்பதற்கும் தேவையான சூட்சுமம் கைவரப் பெறாதவர் அவர் என்பது அவர் எளிமையாக ஏமாந்ததிலிருந்து அறியலாம். சாவித்திரியின் தயாரிப்பு- இயக்கம் என்றவுடனேயே மனதில் தோன்றும் படம் பிராப்தம். முக மனசுலு என்ற மிக வெற்றிகரமான தெலுங்குப்படம் பின் மிலன் என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டு அங்கும் பெருவெற்றி பெற்றது. அதையே தமிழில் பிராப்தம் என்ற பெயரில் தயாரித்து, இயக்குகிறார் சாவித்திரி. முதலில் அதை இயக்குவதற்கு அவர் அழைப்பது வசனகர்த்தாவும் அவரது உண்மையான நலம்விரும்பிகளில் ஒருவருமான ஆரூர் தாசை. ஆனால் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கி தோல்வி கண்ட மோசமான அனுபவத்தால் அதை மறுத்து வசனம் மட்டும் எழுதுகிறார் தாஸ். ஜெமினி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க மறுத்து விட்டதுடன், அந்தக் கதை தற்காலத்துக்கு ஏற்றதல்ல என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஆனால் விதி வலியது அல்லவா? ஜெமினியின் பிரிவு நிரந்தரமானபின் அதை எடுத்தே தருவேன் என்று பிடிவாதத்துடன் எடுக்கிறார். தன் உண்மையான அன்னனனைப் போலவே பழகி வரும் சிவாஜியிடம் உதவி கேட்கிறார். பாசமலருக்குப் பின் சிவாஜியும் சாவித்திரியும் திருவிளையாடல் தவிர வேறு எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதை மக்கள் விரும்புவார்களா என்று தயங்குகிறார் சிவாஜி. சாவித்திரியின் வற்புறுத்தல் காரணமாகவும் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடனும் நடிக்க இசைகிறார். அந்தப் படத்தில் சிவாஜி சரியான ஒத்துழைப்புத் தரவில்லை, இழுத்தடித்தார், என்று சொல்லப்படுவதெல்லாம் வதந்திகளே என்று இந்த புத்தகம் தெளிவாக்குகிறது. மேலும், பரவலாக கருதப்படுவது போல அந்தப் படம்  வணிகரீதியாக அவ்வளவு பெரிய தோல்வியல்ல என்பதையும் காட்டுகிறது. சுமார் 6.5 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் 15 லட்சத்துக்கும் மேல் வசூலித்தது. குறைந்தபட்சம் மூன்று லட்சம் அதில் லாபமே வந்தது. ஆனால் அப்போது சாவித்திரியைச் சுற்றியிருந்த அவரது நெருங்கிய உறவினர்கள் -அவர் அக்கா, அக்காவின் கணவர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆகியோரின் சூழ்ச்சி காரணமாகவே இந்தப் பணம்கூட சாவித்திரிக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனுடன் சாவித்திரி தயாரித்து இயக்கிய விந்த சம்சாரம் எனும் தெலுங்கு மொழிப்படம் (வியட்நாம் வீடு படத்தின் தெலுங்கு பதிப்பு), பிராப்தம் வந்த அதே நாளில் வெளிவந்தது. அந்தப் படத்தின் மோசமான தோல்வியே சாவித்திரியை முடக்கியது என்கிறார் இன்பா. ஆக சாவித்திரியின் இரங்கத்தக்க நிலைக்குக் காரணம் பிராப்தம் படமோ சிவாஜியோ காரணமில்லை என்று மிகத் தெளிவாக காட்டுகிறது இந்த நூல். இதைவிட எல்லாம் அவரை பாதிப்புக்குள்ளாக்கியது, முன்னர் சொன்ன வருமான வரிச் சோதனை காரணமாக அவர் கட்ட வேண்டி வந்த வருமான வரிக்கு ஈடாக அவரது அபிபுல்லா சாலை வீடு ஏலத்தில் அவர் கையை விட்டுப் போன விஷயம். நிமிர முடியாத அடி அது. இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவு கூர வேண்டியது அவசியம். அதற்கு சற்று முன்னர் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது சாவித்திரி,  வீட்டில் இருந்த அத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டார். தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கும் தன்னிடம் இருந்த நகைகளை அணிவித்தார். அப்படி அணிந்து கொண்டு பிரதமர் சாஸ்திரியிடம் சென்று அத்தனை நகைகளையும் யுத்த நிதிக்காகக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அதற்குப்  பின்தான் வருமான வரிச் சோதனை. என்னவென்று சொல்ல! மேலும், மனதில் பட்டதைப் பட்டென்று பேசும் சுபாவமும் முன் கோபமும்  அவருக்கு உதவ முன்வருவதற்கு பிறரைத் தயங்க வைத்தன. அவரது வெளிப்படையாக பேசும் தன்மைக்கும் யார் குறித்தும் அச்சம் இல்லா போக்குக்கும் ஒரு உதாரணமாக, ஒரு முறை  வேட்டைக்காரன் படத்துக்குப் பின் அவரை எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கும்போது, தனக்கு வெறும் அலங்கார பொம்மையாக வந்து போக விருப்பமில்லை, என்று சாவித்திரி வெளிப்படையாகச் சொல்லி விடுவதை சொல்லலாம். ஆனால் இத்தனைக்கும் பின்னும் சாவித்திரி ஓய்ந்திருக்கவில்லை. தன் நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று முன்கூட்டியே தெரிந்தே என்னமோ, பதினாறே வயதான தன் மகளுக்கு தன்னுடைய நெருங்கிய உறவினரின் மகனுக்குத் திருமணம் செய்வித்துவிடுகிறார். மருமகன்  கோவிந்தராவ், அவரது மோசமான காலங்களில் அவருக்கு அமைந்த ஒரு நல்லூழ். பிறகு சொந்த வீட்டை இழந்த பின்னும் மனம் தளராமல், அண்ணா நகரில் ஒரு வீட்டுக்கு வாடகைக்கு குடி போய்  மீண்டும் பல படங்களில் நடிக்க தொடங்குகிறார். 1979ல் வந்த ஐ.வி. சசியின் அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் வரை அது தொடர்ந்தது. அந்தப் படத்தில் கமலுக்கு அம்மாவாக வரும் சாவித்திரி பழைய சாவித்திரிதான் என்று சத்தியம் செய்தால்தான் நம்ப வேண்டும். ஒரு கன்னடப் படத்தில் நடிப்பதற்காக, மகன் சதீஷுடன் மைசூரு சென்று திரும்பும் வழியில் பெங்களுரில் தங்கும் சாவித்திரி, விடுதி அறையில் இன்சுலின் போட்டுக் கொண்டபின் சாப்பிட மறந்த நிலையில், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், மயக்கமடைந்து அப்படியே கோமா நிலைக்கு போய்விடுகிறார். பிறகு ஒரு 19 மாதங்கள் அந்த நிலையிலேயே இருந்து மறைகிறார். இடையிடையே, தன மகள் வயிற்றுப் பேரன் வரும்போது மட்டும் அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததைக் கண்டதாக லேடி விலிங்டன் மருத்துவமனையின் செவிலிகள் சொல்லியதாக எழுதுகிறார் இன்பா. எப்பேர்ப்பட்ட ஒரு நடிகைக்கு என்ன மாதிரியான முடிவு. ஆனால் கடைசி காலத்தில் ஜெமினி அவரைக் கைவிடவில்லை. தன் வீட்டுக்குத்தான் அவரது உடலை எடுத்துச் சென்று அங்கிருந்தே அடக்கம் செய்ய வைக்கிறார். முதன்முதலில் தன்னந்தனியாக கொட்டும் மழையில் அந்த வீட்டுக்கு நள்ளிரவில் வந்து நின்றபோது அரவணைத்த அதே பாப்ஜி இப்போதும் சாவித்திரியின் இறுதி சடங்குகளில்  உதவுகிறார். சாவித்திரிக்கு பெரும் புகழ் வாங்கிக்கொடுத்த படம் பாசமலர், அதுவே அவரை தமிழ் நெஞ்சங்களில் ஒரு அன்புத் தங்கையாக நிலை நிறுத்தியது. சாவித்திரியின் தனிப்பட்ட வாழ்க்கை அந்தப் படத்தில் வரும் தங்கை பாத்திரம் போல இல்லை. கையிலிருந்ததை எல்லாம் தங்கைக்காக  இழந்து துன்பபப்பட்ட அந்த அண்ணன் பாத்திரம் போல அமைந்தது. ஆனாலும் இன்றும் சாவித்திரி எனும் பெயர் மரியாதையுடன் கூடிய கனிவுடனேயே நினைக்கப்படுகிறது. ஆந்திரத்திலிருந்த வந்த இரண்டாவது பானுமதி என்றே சாவித்திரியை  சொல்ல வேண்டும். பானுமதியிடமிருந்த அத்தனைத் திறமைகளும் சாவித்திரியிடமும் இருந்தன. சாவித்திரியும் சில படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். பிராப்தம் படம் ஒன்றுதான் அவர் இயக்கிய படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 6 படங்களை இயக்கியிருக்கிறார். பானுமதிக்கும் கிடைக்காத ஒரு பெருமை சாவித்திரிக்கு அமைந்தது. அவரது சொந்த ஊரில் அவரது நினைவில் அவரது உருவச் சிலை ஒன்றை  பொதுமக்கள் அமைத்துள்ளார்கள் என்பதே அது. மேலும் ஆந்திரப்பாடப் புத்தகங்களில் நடிப்பு எனும் கலையின் விளக்கம் என்பது சாவித்திரியே என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனபதையும் தெரிவிக்கிறது இன்பாவின் இந்த நூல். இதில் இடம்பெற்றுள்ள முன்னட்டையில் உள்ளது உட்பட அரிதான, அற்புதமான புகைப்படங்கள் இந்த நூலுக்குத் தனி அழகை தருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால், சில பிழைகளும் உள்ளன. சாவித்திரி 19 மாதங்கள் கோமாவில் இருந்ததாக சொல்கிறார் இன்பா. அதே சமயம், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1981ஆம் ஆண்டு  மே தினப் பரிசுகளை வழங்கிவிட்டு படப்பிடிப்புக்கு மைசூரு சென்று வரும் வழியில், பெங்களூருவில் கோமாவில் விழுகிறார் என்று வருகிறது. சாவித்திரி இறந்தது டிசம்பர் 26 1981 என்று இருப்பதால் அநேகமாக கோமாவில் விழுந்தது மே 1980 ஆக இருக்க வேண்டும். அதே போல சாவித்திரி நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவரது முழுப்பெயர் (சாவித்திரி கணேஷ் என்று ஆவதற்கு முன்) சாவித்திரி கொம்மா ரெட்டி என்றே குறிப்பிடப்படுகிறது. இன்னொரு விஷயம். சாவித்திரிக்கு கார்கள் மீது ஆர்வம் உண்டென்றும் அவர் சில பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றவர் என்று படித்திருக்கிறேன். ஆனால் அது பற்றி இதில் ஏதும் இல்லை. 28 வருடங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று 248 படங்களில் நடித்து (90 தமிழ்ப் படங்கள்), இன்றும் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் தென்னகத்தில் சிறந்த நடிகையென்றால் முதலில் வரும் சாவித்திரி இறக்கும்போது அவருக்கு 47 வயதுதான் ஆகியிருந்தது என்பதைப் படிக்கும்போது, மனம் கனத்துப் போய்விடுகிறது. கூடவே இதைப் படித்து முடித்ததும் பிறருக்கு பாடமாக அமைந்த சாவித்திரியின் வாழ்க்கைக்குப் பின்னரும் படிப்பினைகள் ஏதும் கற்றுக் கொள்ளாமல் அவர் வழியிலே சென்று மறைந்த இன்னும் சில நடிகைகள் என்னும் அந்த பரிதாபத்துக்குரிய பெண்களின் முகங்கள் நினைவில் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆம்னிபஸ், பிப்ரவரி, 2016 அசோகமித்திரன் - சன்னமான குரல் [] வண்ணதாசன் ஒரு புத்தக முன்னுரையில் தன் எழுத்தைக் குறித்துச் சொல்லும்போது “சன்னமான குரலில் வாதாடுவதைப் போல” என விவரித்திருப்பார். இந்தச் சன்னமான குரலில் என்ற வார்த்தைகள் நான் எப்போது முதன்முதலில் அசோகமித்திரனைப் பார்த்தேனோ அப்போதிலிருந்து எனக்கு அவரையே  நினைவூட்டும். அதற்கு முன் அவ்வளவு சன்னமான ஒரு குரலை நான் யாரிடமும் கேட்டதில்லை. அசோகமித்திரனை நான் முதன் முதலில் சந்தித்து ஒரு 25 வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். அலுவலக நண்பர்களில் இலக்கிய ஆர்வம் மிக்கவர்கள் ஒன்று சேர்ந்து மாதம் ஒரு முறை யாராவது ஒரு எழுத்தாளரை அழைத்து ஒரு நட்பான உரையாடல் – சந்திப்பு ஒன்றை நடத்திவந்தோம். அதற்கு நாங்கள் அழைத்த முதல் எழுத்தாளர் அசோகமித்திரன். மெலிந்த உருவம், அதைவிட மெலிந்த குரல். ஆனால் குறும்பும் கூர்மையும் கொப்பளிக்கும் பேச்சு. அப்போது  எக்ஸ்பிரஸ்ஸிலா அல்லது ஹிந்துவிலா என்று நினைவில்லை, அவரது ‘குருவிக்கூடு’ சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருந்தது. பரவலான கவனமும் பெற்றிருந்தது. பேச்சு அதைச் சுற்றியே ஆரம்பித்தது. எங்களின் பாராட்டுகளை மிகவும் கூச்சத்துடன் மறுதலித்துக் கொண்டே இருந்தார். அந்தக் கதையின் உண்மையான அர்த்தம் என்று நாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்லச் சொல்ல அதையெல்லாம் மறுத்துக்கொண்டே, அது ஒரு சாதாரணச் சம்பவம் என்னமோ எல்லோருக்கும் பிடித்துவிட்டது, என்ற ரீதியிலேயே பேசினார். ஒரு கட்டத்தில் அவரது அடக்கமான பதில்களில் பொறுமையிழந்து ஒரு நண்பர், எழுத்து என்பது ஆன்மீகமான தேடல் அல்லவா?, என்று உணர்ச்சியுடன் கேட்டார். சற்றே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அ.மி “எனக்கு….இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்கு கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன், அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம் எப்படித் தேடறது?” என்று சிரிக்காமல் சொன்னார். கேள்வி கேட்ட நண்பர் உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தோம். அவரது கூச்சத்தையும் அடக்கத்தையும் அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளைத் தடுக்கும் ஒரு கவசமாகவே அவர் பயன்படுத்தி வருகிறாரோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல வெகு இயல்பாகப் பேச ஆரம்பித்தார். அப்போது வெளியாகியிருந்த ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ சிறுகதைக்கான எங்கள் பாராட்டுகளைத் தன் கூச்சத்தைச் சற்றே களைந்து புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். பிறகு அவரை ஆட்டோ ஏற்றிவிட்டுத் திரும்பியபோது மிக நெருக்கமான ஒரு மாமாவையோ பெரியப்பாவையோ சந்தித்துப் பிரிந்த உணர்வு எங்கள் அனைவருக்கும். அதன்பிறகு அவரை அவ்வளவு நெருக்கத்தில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் சாஹித்ய அகடெமி விருது பெற்றதைத் தொடர்ந்து கோவை விஜயா வேலாயுதம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பாராட்டு விழாவில் அவரின் உரையைக் கேட்டேன். பேசிய அனைவருமே அவருக்கு மிகத் தாமதமாக அந்த விருது கிடைத்ததற்கும் தகுதி இல்லாத பலருக்கு அவ்விருது அளிக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துப் பேசினர். அ.மி தன் ஏற்புரையில் பேசியது எனக்கு முழுமையாக நினைவில்லை. சுருக்கமாகத்தான் பேசினார். வழக்கமான அவரது மெல்லிய குரலில் சொன்ன இரு விஷயங்கள் நினைவில் உள்ளன. “பாருங்கோ…. வருஷா வருஷம் ஒரு பரிசை யாருக்காவது கொடுத்தே ஆகணும் அப்படின்னா யாருக்காவது கொடுத்துண்டுதான் இருப்பா, அதுக்கெல்லாம் நாம கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை” என்றார். பிறகு யார் பேசியதற்கோ பதில் சொல்லும் வகையில், “இந்தக் கூச்சம்னு ஒரு விஷயம் இருக்கு பாருங்கோ அது மனுஷாகிட்ட இருக்கிற வரைக்கும் உலகம் ரொம்ப மோசமா போயிடாதுன்னுதான் நினைக்கிறேன். எவ்வளவு தப்பு பண்ணினாலும் அதைப் பெருமையா வெளில சொல்லிக்காம இருக்கறதுக்கும், நெறையப் பேருக்கு, சபலம் இருந்தாலும் ஒரு தப்பு பண்ண விடாம ஒரு கூச்சம் தடுக்கறதில்லயா, அது இருக்கறவரைக்கும் நமக்கு மனுஷா மேல இருக்கற நம்பிக்கைய விட்டுற வேண்டியதில்ல,” என்றார். அதன் பிறகு இன்று வரை அவரை நான் நேரில் பார்க்கவில்லை. என்னைத் துவக்கத்தில் அசோகமித்திரனின் எழுத்துக்களின் பால் ஈர்த்த விஷயங்களில் முக்கியமானது கிரிக்கெட். நான் முதன் முதலில் படித்த அவரது கதைகளில் ஒன்று ‘நாளை மட்டும்’ என்ற சிறுகதை. ஜாலி ரோவர்ஸ் அணியினரின் ஆட்டத்தைப் பார்க்க விரும்பும் ஒரு கீழ் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவனின் கதை. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு மளிகைக் கடையிலோ பாத்திரக்கடையிலோ தன் தந்தையால் வேலைக்குச் சேர அழைத்துச் செல்லப்படும், கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வமுள்ள, ஒரு பையனின் கதை. வேலைக்குச் சேர்ந்தபின் அவன் நினைத்துக் கொள்கிறான், “அந்தக் கடை முதலாளியைப் பார்த்தால் கிரிக்கெட் பார்ப்பவராகத் தெரியவில்லை, நாளை ஒரு நாள் மட்டும் ஜாலி ரோவர்ஸ் அணியின் ஆட்டத்தைப் பார்க்க அனுமதிப்பாரா என்று கேட்க வேண்டும்” என்று. கிட்டத்தட்ட அந்த பையனின் வயதிலேயே இருந்த எனக்கு மறுக்கப்படும் அந்த இளமை ஆசைகள் மனதை பிசைந்தன. ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவலிலும் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி ஆரம்பித்து அ.மி.யின் எழுத்துக்களில் என் மனதைப் பறிகொடுத்தேன். ‘கரைந்த நிழல்கள்’, ‘மானசரோவர்’, ‘தண்ணீர்’, ‘ஆகாயத் தாமரை’ போன்ற நாவல்கள்; ‘பிரயாணம்’, ‘இன்று’, ‘விடுதலை’, ‘மாலதி’, போன்ற குறுநாவல்கள்; ‘கடன்’, ‘புலிக்கலைஞன்’, ‘காந்தி’, ‘பிப்லப் சொவ்துரிக்கு ஒரு கடன் மனு’, ‘விமோசனம்’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘மாறுதல்’, ‘அப்பாவின் சிநேகிதர்’, ‘ரிஷ்கா’ போன்ற இன்னும் பெயர் மறந்த, நினைவிலிருக்கும் எண்ணற்ற சிறுகதைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ‘ஒற்றன்’ போன்ற ஒரு நாவலா கட்டுரையா என்று எளிதில் தீர்மானிக்க முடியாத எழுத்துவகைகளும் அதில் அடக்கம். அசோகமித்திரனின் புனைவுகள் குறித்து நிறையப் பேசியாகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது, மாறாக அசோகமித்திரன் எனும் அற்புதமான கட்டுரையாளர் குறித்து மிகக் குறைவாகவே பேசப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்களைப் பல்வேறு கோணங்களில் அலசும் அவரது கட்டுரைகளைப் படிக்கும்போது புனைவுகளை முழுமையாக ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலே கூட, தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன் என்று கண்டுகொள்ளலாம். அன்றாட வாழ்க்கையைக் குறித்தும் சினிமா குறித்தும் தான் நேரில் பழகிய மனிதர்கள் குறித்தும் அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையுமே ஒரு புதையல். இரு சோறு பதமாக அவரது ‘காலக்கண்ணாடி’ மற்றும் முழுக்க முழுக்கச் சினிமா குறித்த கட்டுரைகள் அடங்கிய ‘இருட்டிலிருந்து வெளிச்சம்’ ஆகிய இரு தொகுப்புகளைப் படித்தாலே அவரது அபுனைவு எழுத்துக்களின் வலிமையை உணரலாம். சக எழுத்தாளர்களான ஆதவனுக்கும் ஜானகிராமனுக்கும் அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகள் அந்த வகைக் கட்டுரைகளின் முதல் வரிசையில் வைக்கத்தக்கவை. சினிமாவைக் குறித்து அவர் எழுதியுள்ள ஏராளமான கட்டுரைகளில் ‘ஜெமினி’ வாசன் குறித்த கட்டுரைகளும், தமிழகப் பெண்களின் சினிமா ரசனை குறித்து மௌன ராகம் படத்தை முன்வைத்து அவர் எழுதிய ‘வந்தனை நிந்தனை சிந்தனை’ என்ற கட்டுரையும் தமிழ் சினிமாவை விமர்சிப்பது என்பது ஏன் மிக மிகச் சங்கடமானது என்று பேசும் ஒரு கட்டுரையும் சிகந்தராபாத் வாழ்க்கை குறித்த பல கட்டுரைகளும் எப்போது எத்தனை முறை படித்தாலும் அலுக்காதவை. இப்போது சமீபத்தில் வந்த ‘எவை இழப்புகள்’ என்ற கட்டுரைத் தொகுதியில் கூடப் பல சிறந்த கட்டுரைகள் உள்ளன. அதில் இலக்கியத்திற்கும் ஆன்மிகத்துக்கும் இடையே உள்ள அல்லது இல்லாத உறவை பற்றிய “ஆட்கொண்டவர்” என்ற ஒரு கட்டுரை கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகச் சிறந்த ஒன்று என்று கூறலாம். ஒரு முழு நேர இலக்கியவாதியாகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்தாலும் ஆன்மிகத் தளத்தில் உயர் நிலையை அடைய இலக்கியம் என்ற சாதனம் போதுமா என்ற ஆழமான சந்தேகம் அவரிடம் உள்ளதைக் காட்டும் கட்டுரை இது. அசோகமித்திரனின் நேர்காணல்களில் அவர் பதில் அளிக்கும் விதத்தில் இருந்தே அவர் பேட்டி எடுப்பவருக்குக் கொடுக்கும் மரியாதையை நாம் கணித்துவிடலாம். அவர் அளித்த பேட்டிகளிலேயே சிறந்ததாக நான் கருதுவது ‘சொல் புதிது’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியை. இந்தப் பேட்டியில்தான் தான் உறுதியாக நம்பிய சில விஷயங்களையும், எழுத்தில் பிரக்ஞையின் பங்கு குறித்தும் மிக அழகாகப் பேசியிருப்பார். அவர் தன் சிறுவயதிலேயே தன் ஆப்த வாக்கியமாகக் கண்டு கொண்டேன் என்று ஒரு வாக்கியத்தைக் கூறுகிறார். அது The futility of gratification of desire என்பதாகும். இந்த வாக்கியத்தின் தாக்கத்தை அவர் எழுதிய பல கதைகளில் பார்க்கலாம். அந்தப் பேட்டியிலேயே இலக்கியம் என்பதை வாழ்வின் குறைபட்ட வடிவமாகவே தான் பார்ப்பதாகக் கூறுகிறார். சமீபத்தில் காலத்தின் கருணையற்ற முன்நகர்வுக்குச் சாட்சி போல, சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கோடு அவர் வந்திருந்த ஒரு புகைப்படம் நெஞ்சை சற்றே அசைத்துவிட்டது. அந்தப் படத்தைப் பார்த்த அதே சமயம் பல ஆண்டுகளுக்கு முன் அவர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தி. நகரில் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த நினைவு நெஞ்சில் மோதியது. கூடவே தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டிருந்த 2014ம் ஆண்டுப் பொங்கல் மலரில் ‘வைரம்’ என்ற அவரது சிறுகதையைப் படித்தது மனதுக்கு ஆசுவாசம் அளித்தது. சொல்வனம், பிப்ரவரி, 2014 திரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண [] வரலாற்றுக்கு நோக்கம் இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. அது எங்கு, எதை நோக்கிப் போகிறது என்பதும் நாம் ஒரு போதும் அறிய முடியாதது. ஆனால் வரலாற்றைப் படிப்பதற்கும் வரலாற்றை நிறுவுவதற்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? இதுதான் முதுபெரும் கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா  நம்முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த நாவல் என்று பைரப்பா  கூறுகிறார்- 2010ல் வெளிவந்து, 5 மாதங்களிலேயே 17 பதிப்புகளைக் கண்டு சாதனை படைத்தது ‘ஆவரண’ எனும் இந்த கன்னட நாவல்.   பைரப்பா ஏறக்குறைய தன் 80வது வயதில் எழுதிய இந்நாவலின் பெயர் வேதாந்தத்தில் மாயையின் மறைத்தல் ஆற்றலான ஆவரண சக்தியைச் சுட்டுகிறது. வெளிவந்தவுடன் மிகத் தீவிரமான சர்ச்சைகளை எழுப்பிய இந்நாவல், கன்னட இலக்கிய உலகின் இரு துருவங்களான பைரப்பா மற்றும் அனந்தமூர்த்தி இருவருக்கும் இடையே பல பத்தாண்டுகளாகத் தொடரும் கொள்கை பனிப்போரின் ஒரு புது அத்தியாயம் என்றும் கூறலாம். பைரப்பாவின் ‘பருவம்’ மற்றும் ‘வம்சவ்ருக்ஷா’ ஆகிய நாவல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் பைரப்பாவைப் பற்றிக் கிடைத்த சித்திரத்திலிருந்து முற்றிலும் வேறானதொரு சித்திரம் ‘ஆவரண’வில் கிடைக்கிறது. ’பருவம்’ மகாபாரதத்தின் மாயமறுத்து அதைச் சாதாரண, யதார்த்த தளத்தில் அணுகிய நாவல். ‘வம்சவ்ருக்ஷா’ ஹிந்து சமூகத்தின் ஆழமான புண் போல ஆகிவிட்ட சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவல். இந்த இரண்டு நாவல்களும் பைரப்பாவை நிச்சயமாக ஒரு இந்துத்துவராகக் காட்டுவதில்லை. ஆனால் இப்போது ‘ஆவரண’ அவரை முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவவாதியாக வெளிப்படுத்துகிறது என்றே குற்றம் சாட்டப்பட இடம் கொடுக்கிறது.  அப்படி என்னதான் உள்ளது இந்த நாவலில்? உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன? அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா? இது போன்ற வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஒரு புறமும் தற்கால வாழ்வில் இந்து இஸ்லாம் மதத்தினருக்கிடையே உள்ள உறவையும், மதம் தாண்டிய திருமணங்கள் தனிமனிதர்கள்மீது ஏற்படுத்தும்  பாதிப்பையும் மறுபுறம் வைத்துப் புனையப்பட்டதே ‘ஆவரண’, அதாவது திரை. இதன் கதையை இப்படி சுருக்கிக் கூறலாம். ரஜியா என்ற லக்ஷ்மியும் அவரது காதல் கணவர் அமீரும் ஹம்பியில் ஒரு ஆவணப் படம் எடுக்கும் காட்சியோடு துவங்குகிறது நாவல். இருவருமே இடதுசாரி முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெரும்பான்மை இந்து- முஸ்லிம் திருமணங்களில் நடப்பது போலவே இந்துவான லக்ஷ்மியே ரஜியாவாக மாறுகிறாள். மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு வாழ்வதாகச் சொன்னாலும் காதலுக்காகவும் தன பெற்றோருக்காகவும் மதமாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி அமீரின் வலியுறுத்தலின் பேரில் லக்ஷ்மி எடுக்கும் முடிவு இது.  இடதுசாரி கலைஞர்கள் இருவரும் மத்திய அரசின் சார்பில் ஆவணப் படங்கள் எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள். ஹம்பியில் காணப்படும் சிதைந்த கோவில்கள் லக்ஷ்மியின் மனதை நெருடுகின்றன. சிதிலங்களைக் கண்டு ஆழமான பாதிப்புக்கு உள்ளாகும் லக்ஷ்மி தன் தந்தை சொன்னதை நினைத்துக் கொள்கிறாள். நம் கோவில்களை இடிப்பதைப் புனிதமாக நினைக்கும் ஒரு மகனை நீ பெற்றுக் கொள்வதை நான் விரும்பவில்லை, என்று அவர் சொல்லியிருக்கிறார். ஹம்பியின் இடிபாடுகள் குறித்த அமீரின் வழக்கமான முற்போக்கு இடதுசாரி முகாம் விளக்கங்கள் லக்ஷ்மிக்கு திருப்தியளிப்பதில்லை. மேலும் தாங்கள் எடுக்கும் அந்த ஆவணப்படத்தில் கோவில்கள் சிதைந்திருப்பதற்கான உண்மையான காரணங்களும் கூறப்படப் போவதில்லை- ஏனென்றால் அது மதவாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்ற வழக்கமான சிந்தனைப் போக்கால் முக்கியமான காரணங்கள் பூசி மெழுகப்பட்டு, சைவ- வைணவப் பூசல்கள்கூட ஒரு காரணமாகச் சொல்லப்படலாம் என்பது அவளை மேலும் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அந்த சமயத்தில்தான் தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு தன் கிராமத்துக்குச் செல்கிறாள் லக்ஷ்மி. அங்கு எதிர்பாராவிதமாக தன் தந்தையின் நூலகத்திலுள்ள புத்தகங்களும், இந்திய வரலாறு, அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு குறித்து நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் அவர் எழுதி வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளையும் ஆழ்ந்து படிக்கிறாள். அந்த வாசிப்பு அவளை ஔரங்கசீபின் ஆட்சிக்காலத்தைக் குறித்த ஒரு நாவலை எழுதத் தூண்டுகிறது. அதன்பின் பைரப்பாவின் நாவலில் லக்ஷ்மி எழுதும் நாவலும் அவளது வாழ்வும் மாறி மாறி சொல்லப்படுகிறது. நாவலுக்குள் வரும் நாவல் ஔரங்கசீப்பின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு முஸ்லிமாக மாற்றப்பட்டு, பின் திருநங்கையாக்கப்படும் ராஜஸ்தானத்து இளவரசன் ஒருவனின் கதை. அக்கதையின் வழியே ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடிக்கும் சம்பவம் மிக விரிவாக பதிவு செய்யப்படுகிறது. கூடவே அவளது கணவன் லக்ஷ்மியின் உண்மைத் தேட்டத்தால் அவளிடமிருந்து விலகி அவளுக்கு தலாக் கொடுப்பதையும் (இஸ்லாமிய முறைப்படி) இன்னொரு பெண்ணை மணப்பதும் அவர்களின் மகன் -அமெரிக்காவில் படித்து சவூதியில் வேலை செய்பவன்-, இஸ்லாமிய மத அடிப்படைவாத நம்பிக்கைகளுடன் இந்தியா திரும்புவதும் சொல்லப்படுகிறது.  ராஜபுதன இளவரசன் காயடிக்கப்பட்டு திருநங்கையாக மாற்றப்படுவதையே இந்த நாவலின் மையப்பார்வையாகச் சொல்லலாம். இந்திய நாகரிகத்துக்கு இஸ்லாம் செய்த தலையாய தீச்செயலின் குறியீடு என்றே இதை இந்நாவல் முன்னிறுத்துகிறது (இந்த இடத்தில் நைபாலின் புத்தகத் தலைப்பான ‘India - A Wounded Civilization’ தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது). மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்திய நாகரிகத்துக்கு பெரும் ஊறு விளைவித்தவர்களை தற்கால இந்திய அறிவுஜீவிகள் நாயகர்களாகக் கொண்டாடுவதையும் (உதாரணத்துக்கு ஔரங்கசீப்பின்  பெயரால் தில்லியில் உள்ள ஒரு பாதை), இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. எல்லாவற்றையும்விட அதிக சர்ச்சைக்குள்ளானது இதில் வரும் சாஸ்திரி என்ற இடதுசாரி முற்போக்கு அறிவிஜீவி பேராசிரியர் ஒருவரின் பாத்திரப் படைப்பு. தோற்றத்தை வர்ணிப்பதிலிருந்து செயல்பாடுகள் வரை சந்தேகத்துக்கிடமின்றி இப்பாத்திரம் யு. ஆர் அனந்தமூர்த்தியை அப்படியே நினைவுபடுத்துகிறது. மிகத் தெளிவாக அந்தப் பாத்திரத்தை ஒரு போலி மதச்சார்பின்மைவாதியாக முன்னிருத்துகிறது. திட்டவட்டமான ஒரு பார்வையையும் முடிவையும் முன்வைத்து எழுதப்பட்டது என்று வெளிப்படையாகவே தெரியும் இந்நாவலை வழக்கமான இலக்கிய அழகியல் அளவுகோல்களை வைத்து  எடைபோடுவது சாத்தியமேயில்லை. இதை நாவல் என்பதைவிட திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு விவாதக் களம் என்பதே அதிகம் பொருந்தும்.  இந்நாவல் மூன்று முக்கிய விவாதப் புள்ளிகளை கொண்டுள்ளது. ஒன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்தகாலத்தைப் பூசி மெழுகாமல் வெளிப்படையாகக் காட்டுவதன் மூலம் அது உலகின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என்று எச்சரிப்பது (இதன் வரலாற்று சான்றாவணங்கள் நிச்சயமாக சர்ச்சைக்குரிய ஒன்று என்றாலும், லக்ஷ்மி எழுதும் நாவலுக்கான பின் இணைப்புத் தரவுகளைக் கொண்டு பைரப்பா இதன் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்). இரண்டு, கிறிஸ்துவத்திலும் இந்து மதத்திலும் உருவான சீர்திருத்த இயக்கங்கள் போலல்லாமல் இஸ்லாமிய சீர்திருத்த முயற்சிகள் அதை மேலும் மேலும் அடிப்படைவாதத்தை நோக்கியே செலுத்துவதையும் இந்நாவல் கவனப்படுத்துகிறது.  இந்த நாவலின் மூன்றாவது விவாதப்புள்ளிக்கு, நாம் மீண்டும் முதலில் எழுப்பிய வரலாறு குறித்த கேள்விக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. வரலாற்றைப் படிப்பதற்கும் நிறுவுவதற்கும் நோக்கம் உண்டா என்பதே அது. இந்த நாவலின், அல்லது ஆசிரியரின் பார்வையில் இந்தியாவின் மத்தியகால வரலாறு என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும் பயங்கரவாதத்தாலும் இந்து நாகரிகம் சிதைக்கப்பட்டதேயாகும். இதை நாம் ஏன் மறைத்தும் திரித்தும் திரை போட்டு மூடவும் வேண்டும் என்பதே இந்நாவலில் எழுப்பும் முக்கிய வினா என்பதை அதன் ஆசிரியரே கூறுகிறார். இந்த மறைத்தலும் திரித்தலும் திரை போட்டு மூடுதலும் சமூக ஒற்றுமைக்கு எந்த அளவாவது உதவியிருக்கிறதா என்பதும் அவர் முன் வைக்கும் கேள்வி. இந்த மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லைதான். இந்நாவல் எழுப்பும் முதலிரண்டு விவாதப் புள்ளிகள் இன்று ISIS போன்ற அமைப்புகள் உருவாகி வருவதை வைத்துப் பார்க்கும்போது மேலும் அதிக முக்கியத்துவம்  பெறுகின்றன. ஆனால் அந்த மூன்றாவது புள்ளியான, வரலாற்றைப் பூசி மெழுகாமல் அப்பட்டமான உண்மையாகவே வைப்பது, என்ற வாதம் சிக்கலானது. இங்கு என்னைப் பொறுத்தவரையில் நம் மனம் இருகூறாகப் பிரிந்து வேறு வேறு நிலைகளே எடுக்கின்றன. நாம் என்னதான் நம்மைச் சாதி மத ரீதியான விஷயங்களில் நடுநிலைமையானவர்கள் என்று நினைத்துக் கொண்டாலும் சில சம்பவங்களில் நம் மன ஆழத்திலிருந்து வரும் உணர்ச்சிகள் நம்மையே வியப்பில் ஆழ்த்துபவை. சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வை நான் சந்தித்தேன்.  என் நெடுநாளைய நண்பரின் மனைவி நீண்ட நாட்களாக கிறித்துவ பெந்தெகொஸ்தே பிரிவு வழிபாட்டு முறையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். நண்பர் அவரது மனைவி இருவருமே இந்துக்கள்தான். கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் மத விஷயங்களில் நம்பிக்கையற்றவர். ஆனால் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன் ஒரு வியப்பான காட்சியை கண்டேன். எங்கள் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலிலிருந்து நண்பரின் மனைவி நெற்றி நிறைய திருநீறு குங்குமம் மற்றும் கையில் அர்ச்சனைத் தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரை அந்தக் கோலத்தில் கண்டவுடன் என் மனதில் உடனடியாக வியப்பு கலந்த மகிழ்ச்சியை உணர்ந்தேன்.  உடனேயே இன்னொரு மனம் ஏன் எனக்கு அதில் மகிழ்ச்சி என்ற வினாவை எழுப்பியது. உண்மையிலேயே நண்பர் மனைவியின் மன(த) மாற்றம் எனக்கு ஏன் மகிழ்ச்சியை தரவேண்டும்? நான் என்னைப் பற்றி இதுவரை மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றே நினைத்து வந்திருக்கிறேன். ஆனால் இந்த ஒரு விஷயம் என் மனதில் ஒரு கணம் மகிழ்ச்சியளித்தது எனக்கே பெரும் வியப்பாகத்தான் இருந்தது. மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் என் மதம் பிறர் மதம் என்னும் பேதம் சாகாமல் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் அடுத்த கணம் என்  பகுத்தறியும் மனம் அந்த மகிழ் உணர்வைக் கண்டித்து உதறித் தள்ளியதும் உண்மை. இது போலவே ஹம்பியிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பழைய இடிக்கப்பட்ட கோவில்களைப் பார்க்கும்போதும் அம்மாதிரியான செயல்களைப் பற்றி படிக்கும்போதும் நம் மனதில் கண நேரமேனும் பிறமதத்தார் மேல் ஒரு வெறுப்பு உண்டாவதே  உண்மை. ஆனால் அதை நீடிக்க விடாமல் செய்யும் பகுத்தறிவு நமக்கு வேண்டும் என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் வரலாற்றுச் சம்பவங்களின் மூலம் உண்டாகும் வெறுப்புணர்வுக்கு ஆட்படுவது நிச்சயம் பழிவாங்கும் உணர்வு வளர்வதற்கே வழி கோலும் என்பதையும், அப்படி ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்பதையுமே வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டுகிறது. இந்த இடத்தில் இரு வேறு மன்னர்களின் ஒரே மாதிரியான செயல்கள் அவர்களின் மதம் சார்ந்து நம் மனதில் வேறுவேறு உணர்வுகளைத் தொற்றுவிப்பதையும் குறிப்பிட வேண்டும். முகமது கோரி இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளின்மீது படையெடுத்து பெரும் அழிவை ஏற்படுத்திய நேரத்தில்தான் ராஜேந்திர சோழன் வடகிழக்கு இந்தியாவின் பகுதிகள் மீது படையெடுத்து பெரும் அழிவுகளை உண்டாக்கி கங்கை நீர் கொண்டுவந்து தான் கட்டும் ஆலயத்தின் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்திருக்கிறான். ஆனால் இன்றைய இந்தியாவில் கோரி ஒரு வில்லன். ராஜேந்திர சோழன் பட்டமேற்ற ஆயிரமாவது ஆண்டு சில தினங்களுக்கு முன்னர்தான் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதை எப்படி எடுத்துக் கொள்வது?  பக்கச்சார்புகளின் பெருமிதங்களோடும் கண்டனங்களோடும் வரலாறு அணுகப்பட்டு, அதன் உணர்வுகள் படிப்பினைகளாகி நடப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியச் சமூக பின்னணியில், வரலாற்றை பூசி மெழுகாமல் அப்பட்டமாக முன்வைக்க வேண்டும் என்ற பைரப்பாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஏனெனில், அறிவியல் ஆய்வுகளில் இருக்கும் தீர்மானமின்மை புனைவுகளில் சாத்தியமில்லை. நாவலை முடிக்குமிடத்து வெறுப்புணர்வு மனதில் சற்றே எழுந்தாலும் ‘கண்ணுக்கு கண் எனும் கொள்கை உலகை முற்றும் குருடாக்கும்,’ என்ற காந்தியின் வரியும், ‘பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்,’ என்ற வள்ளுவ வாக்குமே நமக்கு என்றும் வழிகாட்டக்கூடியவை என்றே தோன்றுகிறது.  ஆனால், மேலை நாட்டின் வரலாற்று ஆய்வுமுறை அறிவியல்பூர்வமானது என்றும், அத்தகைய ஆய்வு முடிபுகள் உண்மையை நிறுவுகின்றன என்றும் ஆகிவிட்ட இந்நாட்களில், அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் தொடரும் அறிவியல் உண்மைத் தேடலைப் போல், வரலாற்று உண்மைத் தேடலையும் யாரும் கைவிடப் போவதில்லை. இந்நிலையில், வரலாற்றைப் படிப்பதற்கும் நிறுவுவதற்குமான நோக்கம் எதுவாக இருப்பினும் நிச்சயமாக பழிக்குப் பழி என்ற உணர்வுக்கும் படுகொலைகளுக்கும் வழியமைத்து விடுவதாக மொழிபுகள் (narratives) இருந்துவிடக் கூடாது என்பதே முக்கியம். இந்த உணர்வு வரலாற்றாய்வாளர்களுக்கும் வரலாற்றைச் சுட்டி விவாதக்களத்தைக் கட்டமைக்கும் அறிவுஜீவிகளுக்கும்,  படைப்பிலக்கியவாதிகளுக்குமேகூட இருப்பது அவசியமாகிறது. மீண்டும் நைபாலின் காயம்பட்ட நாகரிகம் என்ற கருத்துருவாக்கம் நினைவுக்கு வருகிறது. புலி தன் காயத்தை நக்கி நக்கி, அதை ஆறாத ரணமாக்கி, தனக்கும் ரத்த வெறியேற்றிக் கொள்ளும் என்று சொல்லப்படுவதுண்டு. தொல்பெருமைகளைக் கொண்டாடும்போதும் சரி, அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு பலியாகி காயடிக்கப்பட்ட, தோற்ற தேசம் என்று தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும்போதும் சரி, ஒரு தேசம் அமைதி காண்பதோ ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டடைவதோ எளிதல்ல. ஆம்னிபஸ், ஆகஸ்ட், 2014 மோகமுள் - உயிர்த்திரளின் ஆதார விதி [] பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து இருப்பதில்லை. நம் பூஜை அறைகளில் தினமும் ஏற்றி வைக்கப்படும் குத்துவிளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதில் எண்ணை வடிந்து பச்சை பூத்துவிடுகிறது. வழக்கமாக நாள் கணக்கு வைத்துக்கொண்டு நாம் அவற்றை புளி போட்டுத் தேய்த்து விளக்குவதுபோல் இலக்கியப் படைப்புகளையும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் வாசிப்பில் இருக்கும்போதுகூட  உயர்ந்த இலக்கிய ஆக்கங்கள் தேய்வழக்குகளாகக் குன்றி விடுகின்றன. நண்பர்களுடனான விவாதங்கள் மட்டுமே புதிய வாசிப்புக்கான தேவையை உருவாக்குகின்றன.  அத்தகைய ஒரு விவாதத்தில் என்னுடன் முரண்பட்ட நண்பர்கள் சிலர், தி ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி  மீண்டும் சிந்திக்கத்  தூண்டினார்கள்.  அவர்களின் முக்கியமான விமர்சனம் தி.ஜா காமம் பற்றிய விசாரணைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதும், உன்னதமாக்கல் நிகழவில்லை என்பதும், யமுனா இதற்குத்தானா என்ற கேள்வியை அடைய நாவல் அனாவசியமாக நீள்கிறது என்பதுமாக இருந்தது.  அவர்களுக்கு நன்றி சொல்லி விவாதத்தின் தொடர்ச்சியாக என்னுள் எழும் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன், வாசகர்கள் இந்தப் பார்வையைத் தொடர் விவாதங்களின்மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. விவாதங்களே நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றான தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு துலக்கம் தருவதாக இருக்கும். எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் மோகமுள் ஏன் இன்னமும் ஒரு கல்ட் நாவலாக உள்ளது? அதைப் படித்த பலர் ஏன் மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள்? புதிதாக வாசிப்பவர்களையும் அது ஏன் கவர்கிறது? ஏன் புதிய வாசகர்களை தன்னுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது? இது நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு விடையளிக்க முயலலாம். அது தங்களை என்ன செய்தது என்று கூற முயற்சிக்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு நான் என்னாலான அளவுக்கு இப்படிச் சொல்கிறேன். இலக்கியம் என்பதுதான் என்ன? நான் அதை ஒரு நிகர் வாழ்வனுபவம் என்று சொல்வேன். நாம் வாழாத ஒரு வாழ்க்கையை நாம் உணர்ந்து பார்த்துக் கொள்வதற்கும், நாம் வாழும் வாழ்க்கையை, அதன் அழகிய, ஆழமான, மோசமான கணங்களை நாம் திரும்பி வாழ்ந்து  மதிப்பிட்டுக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி படைக்கும் புனைவு வடிவிலான மாற்று, ஆனால் இணை உலகம், நமக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அங்கு நாம் போகாத இடங்களுக்குப் போகிறோம், பார்க்காத காலங்களில் திளைக்கிறோம். இந்த நிகர் உலகம் எவ்வளவுக்கெவ்வளவு தன் நேர்மையைக் கொண்டு நம்பச்செய்வதாக  படைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நம் மனம் அதில் தோய்கிறது. இதில் அவரவருக்கான ஒரு பிரத்யேக  believing  point உண்டென்றும் நம்புகிறேன். ஒரு படைப்பை வாசிக்கும் மிகப் பெரும்பான்மையோருக்கு இந்த உணர்வை உண்டாக்கும் படைப்புகள் வெற்றிபெற்ற, கிளாசிக்ஸ் எனப்படும் படைப்புகளாகின்றன. சமீபத்தில் ஜெயமோகன் நல்ல இலக்கிய வாசிப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு நல்ல வாசகன் குறித்து அவர் சொல்லும் அந்த குறிப்புகளின் corollary மூலம் ஒரு நல்ல படைப்பைக் கண்டு கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவை கீழ்கண்டவாறு அமையக்கூடும். • ஒரு படைப்பில் உள்ள நிலக்காட்சி விவரணைகள் வாசகனின் கனவாய் விரித்து அக்கனவுள் அவனை வாழச் செய்ய வேண்டும். • கதைமாந்தர்களின் இயல்புகளைப் பற்றிய விவரணைகள்  அவர்களை உண்மையான மனிதர்களைபோல கண்முன் காட்ட வேண்டும். • உரையாடல்கள், அவற்றின் வழியாக அந்தக் கதாபாத்திரங்களின் மனம் எப்படி வெளிப்படுகிறது என்று காட்ட வேண்டும். • அப்புனைவுப் பரப்பில் வெளிப்படும் குறியீடுகளும் படிமங்களும் வாசகனைத் தன் கற்பனையால் பொருள்கொள்ளத் தூண்ட வேண்டும். மேற்காணும் இந்த அடிப்படைகள் அப்படியே பொருந்திப்போவதுதான்  மோகமுள்ளின் முதல் வெற்றி. நான் மோகமுள் படிப்பதற்குமுன் கும்பகோணம் போனதில்லை. ஆனால் அதை ஒரு முறை படித்தபின் அங்கு செல்ல ஏங்கினேன். தூக்காம்பாளையத் தெருவை கால்களால் அளக்க துடித்தேன். சாதாரண வாசகர்கள் மட்டுமல்ல பின்னாட்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளான பலருக்கும் இந்த ஏக்கம் உண்டென அறிந்திருக்கிறேன். இதைத்தான் எஸ்.ரா சொல்கிறார், “நான் ரஷ்யா போனதேயில்லை. ஆனால் சைபீரிய உறைபனியை நன்றாக அறிவேன், டால்ஸ்டாய் மற்றும் தஸ்த்யெவஸ்கி மூலமாக” என்று. மோகமுள் எனக்களித்தது ஒரு நிகர் வாழ்வனுபவத்தை, 1930-40களின் கும்பகோணத்தில் நான் வாழ்ந்தது போல ஒரு அனுபவத்தை. எனக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஊர் என் ஊர் ஆக மாறிய ரசவாதத்தை. இரண்டாவது, பெரும்பாலான வாலிபர்களுக்கு பெண்கள் மீது இருக்கும் இரு வகை ஈர்ப்பு.  சில பெண்கள் மீது நாம் காமுறுகிறோம், சில பெண்கள் மீது (பக்திப்) பரவசம் கொள்கிறோம். ஆனால் இரண்டாவதுக்கும் முதல் அடித்தளமே அடிப்படை என்று எப்போதாவது புரிந்துவிடுகிறது. இதை தி.ஜா மிகச் சரியாக பாபு மூலம் சொல்கிறார். சரி. பாபுவுக்கு என்ன பிரச்சினை? யமுனா மீதான உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதல். அதை காமம் கலவாத தெய்வீகக் காதல் என்று நினைத்துக் கொள்கிறான் (தங்கம் அவனுக்கு அளிப்பது வெறும் காமம்). அவனின் இன்னொரு ஆதர்சம் கர்நாடக சங்கீதம். அதன் உன்னதத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதில் உச்சத்தை அடைய வேண்டுமென்ற ஆவல். யமுனா மீதான காதல் தன் நம்பிக்கைக்கு மாறாக உடல் சார்ந்ததும்தான் என்பது பாபு உண்மையை எதிர்கொள்ளும் தருணம். ஆனால் அதனால் அந்த உறவு முடிவதில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, இருவராலுமே. இது அந்த நாவலின் ஒரு முக்கியமான இடம், ஆனால் அதுதான் உச்சக்கட்டம் என்றால் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவேன். அது அங்கே உன்னதமாக்கப் படவுமில்லை, இகழப்படவுமில்லை, அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. யமுனாவின் இதற்குத்தானா என்ற கேள்வியையே இந்த நாவலின் உச்சக்கட்டமாகவும் சாராம்சமாகவும் பார்ப்பது ஒரு கோணம்தான். அது முக்கியமாக விமர்சகர்களால் வைக்கப்பட்டது. ஒரு நாவலை அப்படிச் சுருக்கி வாசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பாபு தன்  இசைப்பயிற்சியை வளர்த்துக்கொள்ள மராட்டியப் பாடகர்களைத் தேடி போவது இன்னொரு உச்சகட்டம்.  பாபுவின் தந்தை  பாபு- யமுனா உறவை அங்கீகரிப்பது மற்றொன்று. அடுத்து, மோகமுள்ளில் அதன் பல்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படும் விதவிதமான வாழ்க்கை நோக்குகள் எனக்கு முக்கியமானவை. இசையே மூச்சாக வாழும் ரங்கண்ணா (ரங்கண்ணா ஒரு க்ளீஷே பாத்திரமாவது பின்னால் உருவானது. 60களில் தி .ஜா இந்த நாவலை எழுதுவதற்கு முன் அம்மாதிரி ஒரு பாத்திரம் தமிழ் நாவல்களில் உருவாக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்). தன் எளிமையான வாழ்வில் முழுமையை காணும்  பாபுவின் தந்தை வைத்தி, தஞ்சை மண்ணுக்கே உரிய நிலப்ப்ரபுத்துவ ஆணவமும் தளுக்கும் விருந்தோம்பலும் கொண்டிருக்கும் யமுனாவின் அந்த ஒன்றுவிட்ட சகோதரன். பாபுவின் கர்நாடக இசை குறித்த பார்வையையும் குரல் பயிற்சி குறித்த எண்ணங்களையும் மாற்றியமைக்கும் மராட்டியப் பாடகர்கள்,  அவர்களின் உரையாடல்கள், தங்கள் வாழ்க்கைக்கும் பயணங்களுக்கும் பின்னால் உள்ளதை அவர்கள் கூறுவது. பாலூர் ராமு எனும் ரங்கண்ணாவின் சீடரான புகழ்பெற்ற பாடகரின் பாத்திரம்,  உணர்ச்சிகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கும் ராஜம், அவன் பாபுவின் மீது கொண்ட  அபாரமான தோழமை. பாபுவின் வீட்டுக்கார பாட்டி, நீட்டி முழக்கும் மேலக்காவேரி சாஸ்த்திரிகள்.  கடைசியாகச் சொன்னாலும் மிக முக்கியமாக, யமுனா.  அவளின் அந்த fierce independence. எத்தனை அழகான கதாபாத்திரங்கள். நான் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு கதாபாத்திரம் மேலெழுந்து வந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு வாசிப்பில் யமுனா, ஒன்றில் வைத்தி, ஒன்றில் ரங்கண்ணா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் சேர்ந்ததுதான் மோகமுள். வெறும் இதற்குத்தானா  என்பதல்ல என்றே நான் நினைக்கிறேன்.  கூர்மையான வாசிப்பு என்ற பெயரில் காலம் செல்ல செல்ல அந்தக் கேள்வியின்மீது அழுத்தம் அதிகம் விழுந்துவிட்டதோ என்று எண்ணுகிறேன். இதுக்குத்தானா எல்லாம் என்று ஏமாற்றத்தில் ஓயும் கணங்களில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அங்கும் ஒரு எழுச்சியைக் கண்டு அது மேலும் விரிந்து வாழ்க்கையைத் தொடர்கிறது, புது அனுபவங்களைக் கண்டு கொள்கிறது. பல்திசைகளில் விரிவதுதான் உயிரோட்டத்தின் இயல்பு. இந்த உயிர்ப்புதான் மோகமுள்ளின் கதைக்களனாக, பாத்திரங்களாக, உரையாடல்களாக வெளிப்படுகிறது. இதனால்தான் தலைமுறை தலைமுறையாக மோகமுள் வாசிக்கப்பட்டும் விமரிசிக்கப்பட்டும் வருகிறது. உரையாடலில் நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார் - பாபுவின் மனதில் எப்போதும் இருக்கும் சங்கீதத்தின் ஸ்தூல உருவமே யமுனா, அவளைப் பிரிந்து இருக்கும் சமயங்களில் எல்லாம் பாபு பாடாமலேயே இருக்கிறான், என்று. அதுவும் ஒரு கோணம் என்று நினைத்துக் கொண்டேன்.  ஒரு நாவலின் நுண் தகவல்களை, விவரிப்புகளை எல்லாம் நீக்கி விட்டு நாம் சாராம்சம் என்றும் தரிசனம் என்றும் நினைக்கும் ஒரே புள்ளியை ஏற்றுக் கொண்டோ அப்படி ஒன்று இல்லையென்று நிராகரித்துவிட்டோ போவதுதான் முழுமையான வாசிப்பா என்று நான் சந்தேகப்படுகிறேன். கனிகள் விதைகளுக்காகத்தான். ஆனால் கனிகளின் வடிவமும் வண்ணமும் வாசமும் விதைகள் அளவுக்கே முக்கியமானவை. ஆனால் ஒரு எழுத்தில் வெளிப்படும் ஆதார கேள்வி என்ன என்று கேட்பதில் தவறில்லை. அது அவசியமும்கூட. நளபாகத்தில் ஒரு இடத்தில் வரும்- “ஒரு உயிர் என்ன செய்ய வேண்டும்? இன்னொரு உயிரை அணுகி அணைத்துக் கொள்ள வேண்டும்”. அவ்வளவுதான்.  மரப்பசுவையும், நளபாகத்தையும் படித்துவிட்டு ஒப்பிட்டு பார்க்கலாம். தி.ஜா.வின் ஆதாரக் கேள்வியின் மூலம் தெரிய வரும். ஆம்னிபஸ், மே, 2014 விம்பிள்டனை எதிர்நோக்கி [] ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டின் ஜூன் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மாலையும் பிரஞ்சு ஓபன் பந்தயத்தின் ஆடவர் ஒற்றையர் பந்தய இறுதி போட்டி நடைபெற்றது. ஜோகோவிச் மற்றும் முர்ரே மோதினார்கள். முர்ரே வென்றால் அவரது முதல் பிரஞ்சு ஓபன் பட்டம். ஜோகொவிச்சுக்கும் அப்படித்தான். ஆனால், மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களையும் ஏற்கெனவே வென்றவர் என்ற முறையில், இதை வென்றால் டென்னில் வரலாற்றில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் வென்ற 7வது ஆட்டக்காரராக ஆவார். அந்த பதற்றம் ஜோகோவிச் ஆட்டத்தில் தெரிந்தது. ஆயினும், அது நடந்தது. ஜோகோவிச் வென்றார். அது மட்டுமல்ல, சென்ற வருடத்தின் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், இந்த வருட ஆஸ்திரிலேய ஓபன் ஆகிய பட்டங்களையும் சேர்த்து இப்போது 4 கோப்பைகளும் அவர் வசம். இன்னும் இந்த ஆண்டு மிச்சமிருக்கும் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளையும் வென்றால், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில், ஒரே ஆண்டில் இந்நான்கையும் வென்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனைக்குரியவர் ஆவார் ஜோகோவிச். இதற்கு முன் இப்படி வென்றவர் ராட் லேவர். 1969ம் ஆண்டு இதை நிகழ்த்தினார். அதற்கு முன் 1962ம் ஆண்டிலும் இதைச் சாதித்தவர் இவர். இந்த இடத்தில் என் மனம் 80களில் பார்த்த சில பழைய பந்தயங்களை அசை போட்டது. 1989ம் ஆண்டு. விம்பிள்டன் அரை இறுதி போட்டி, இவான் லென்ட்லுக்கும், பெக்கருக்கும் இடையே. பெக்கர் அப்போதுதான் பதின்ம பிராயங்களைக் கடந்து கொண்டிருந்தார், லென்ட்ல் முப்பதுகளைத் தொட்டுக் கொண்டிருந்தார். பெக்கரின் ஆட்டம் இளஞ்சூரியனின் ஒளி என்றால் லென்ட்ல் அணையப்போகும் விளக்கின் இருளுக்கு எதிரான அதிதீவிர பிரயத்தனம். பெக்கர் 85, மற்றும் 86ம் ஆண்டுகளில் தன் பதின்ம வயதுகளிலேயே விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார். லென்ட்ல் இறுதி போட்டிகளில் 86ஆம் ஆண்டு பெக்கரிடமும் 87 ஆண்டு பேட் கேஷ் இடமும்  88ம் ஆண்டு அரை இறுதியில் மீண்டும் பெக்கரிடமும் தோற்றிருந்தார். கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளில் விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படுவது. “புற்கள் பசுக்களுக்கானவை”, என்று லென்ட்ல் சொல்லியிருந்தது அப்போது மிகப் பிரபலம். விம்பிள்டன் தவிர பிற அனைத்து முக்கிய கோப்பைகளையும் வென்றிருந்த லென்ட்ல் எப்பாடுபட்டேனும் ஒரு ஆண்டாவது அந்தக் கோப்பையைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருந்தார். நான் ஒரு லென்ட்ல் ரசிகன். அவரது விடாமுயற்சியும், பயிற்சியின் ஒழுக்கமும், அவரது சற்றே குறைந்த இயற்கைத் திறனை ஈடுகட்டும் மன வலிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் போட்டியை நானும் என்னுடன் ஷட்டில் விளையாடும் நண்பர்களும், சென்னை பூக்கடையில் இருந்த சென்னை தொலைபேசி அலுவலக மனமகிழ்மன்றத்தில் விளையாடியபடியே பார்த்துக் கொண்டிருந்தோம். மன்றத்தைப் பூட்டும் நேரத்தில், லென்ட்ல்  2-1 என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தார். நான்காவது செட்டிலும், பெக்கரின் புகழ்பெற்ற செர்வீசை  முறித்து முன்னணி பெற்றார். இன்னும் இரண்டே கேம்கள்தான் அவர் இறுதிச் சுற்றுக்குள் நுழைய மிச்சமிருந்தது. நிச்சயம் வென்று விடுவார் என்ற நம்பிக்கையுடன் தேனாம்பேட்டை அறைக்குச் செல்ல பஸ் பிடித்து வந்து அறையில் நுழைந்து தொலைக்காட்சி முன் உட்கார்ந்தால்- பெக்கர் புல்தரையில் உருண்டு புரண்டு ஒரு பந்தை திருப்பி அடிக்கும் காட்சி. இன்னுமா பந்தயம் முடியவில்லை என்று அதிர்ச்சியோடு பார்த்தேன். ஐந்தாவது செட். பெக்கர் லென்ட்லின்  சர்வீசை முறித்து, பந்தயத்தை வெல்ல செர்வ் செய்ய இருந்தார். பிறகென்ன மூன்று ஏஸ்களைத் தொடர்ந்து, லென்ட்லின் மட்டையில் பட்டுத் தெறித்து வெளியே விழுந்த ஒரு செர்வ் இடிபோல் லென்ட்லின் கனவைத்  தகர்ந்தது. “எனது மிகப்பெரிய அடுத்த இலக்கு, என் ஒரே இலக்கு, விம்பிள்டன் வெல்வதுதான்,” (“My next great goal, my only goal, is to win Wimbledon,”) என்று சூளுரைத்த லென்ட்ல், மூன்று முறை வென்றிருந்த, அவரது ஆட்ட பாணிக்கு இயல்பாய் பொருந்தியிருந்த பிரெஞ்ச் ஓப்பன் கோப்பையில் அடுத்த ஆண்டு கலந்து கொள்ளவில்லை. டென்னிஸ் வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவர், பிரஞ்சு ஓப்பன் கோப்பையை தியாகம் செய்து ஏழு வார கால கடும் பயிற்சிக்குப்பின் மீண்டும் விம்பிள்டன் வந்தார். பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரையிறுதிச் சுற்றில் எட்பர்க்குடன் மோதி நேர் செட்களில் தோற்றுப் போனார். மெக்கன்ரோ, கானர்ஸ் முதலான அமெரிக்கர்களின் ஆட்டத்தில் ஒரு வகை ஒபெராத்தன்மை இருக்கும், அவ்வளவு உணர்ச்சிகளை உச்ச குரலில் வாரியிறைப்பார்கள். எட்பர்க், விலாண்டர் போன்ற ஸ்காண்டிநேவிய ஆட்டக்காரர்களின் நளினத்தை வேறெவரிடமும் பார்க்க முடியாது – விலாஸ் போன்ற தென் அமெரிக்கர்கள் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். பெக்கர், தொண்ணூறுகளின் துவக்க ஆண்டுகளில் டென்னிஸ் உலகைக் கைப்பற்றிக் கொண்டிருந்த பதின்மபருவ வீரர்களின் உத்வேகத்துக்கும் எந்தப் பந்தையும் விரட்டித் திருப்பும் இளமை வேகத்துக்கும் முன்னோடி முகமாக இருந்தார் (ஜிம் கூரியர், மைக்கேல் சாங் போன்றவர்களை இப்போது பேசுவதில்லை என்றாலும் அவர்கள் மறக்கக்கூடியவர்களா? எண்பதுகளின் பிற்பகுதியும் தொண்ணூறுகளின் துவக்க ஆண்டுகளும் எத்தனை பரபரப்பான ஆண்டுகள்! கிழக்கு ஐரோப்பிய தேசங்கள் இரும்புத் திரைக்கு வெளியே வந்த, சோவியத் யூனியன் உடைந்த, கிறுகிறுக்கும் ஆண்டுகளின் புத்துணர்ச்சித் துடிப்பு இந்த இளைஞர்களிடம் இருந்தது- டென்னிஸ் அடுத்த, மிக இளம், தலைமுறைக்கு கைமாறி விட்டது என்று அறிவித்துக் கொண்டவர்கள் இவர்கள்). உணர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத, இறுக்கமான முகத்துடன், அன்றைய முன்னிலை டென்னிஸ் வீரர்களுடன் ஒப்பிட்டால் வயது முதிர்ந்த, லென்ட்ல் முந்தைய காலத்துக்குரியவராக, அப்போது காலாவதியாகிவிட்ட கிழக்கு ஐரோப்பிய கட்டுப்பாட்டின் முகமாக இருந்தார். ஆனால் இந்த இளைஞர்களுக்கு இல்லாத ஒரு நுட்பமான, யதார்த்தத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் நகைச்சுவையுணர்ச்சி அவருக்கு இருந்தது. அரையிறுதியில் எட்பர்க்கிடம் நேர் செட்களில் தோற்றபின் அவர் விம்பிள்டன் பார்வையாளர்கள் தன்னை ஆதரித்தது பற்றி இப்படிச் சொன்னார்- “அவர்கள் நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால் தவறான காரணங்களுக்காக; எனக்கு வயதாகிவிட்டது என்பது தெரிகிறது” (“They wanted me to win, but for the wrong reasons; it must mean that I’m old,” ) அப்போது மட்டுமல்ல, பின் ஒருபோதும் அவர் விம்ப்ள்டன் இறுதிப் போட்டிக்குக் கூடத் தகுதி பெறவில்லை. 1988ம் ஆண்டில் இன்னொரு வீரரின் கனவு கலைந்தது. மேட்ஸ் விலாண்டர் அந்த ஆண்டின் ஆஸ்திரேலிய, பிரஞ்சு ஓபன் பந்தயங்களை வென்றிருந்தார். விம்ப்ள்டன் வென்றால் அவருக்கும் கிராண்ட் ஸ்லாம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. காலிறுதி போட்டியில், தர வரிசையில் அவரைவிட பல படிகள் கீழே இருந்த மிலோஸ்லாவ் மெர்சீர் என்ற (அற்புதமான, Magician Mecir  என்று அழைக்கப்பட்ட) ஆட்டக்காரரிடம் நேர் செட்களில் தோற்றார். அதற்குப் பின் ஒருமுறை கூட அவர் விம்ப்ள்டன் போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இன்னும் சற்றுப் பின்னே சென்றால் 1984ம் ஆண்டின் பிரஞ்சு ஓபன் பந்தயத்தின் இறுதிபோட்டியில், உலக டென்னிஸ் வரலாற்றின் மகத்தான வீரர்களில் ஒருவரான மெக்கன்ரோவுக்கும் இது நடந்தது. தன் வாழ்நாளில் எப்போதும் வென்றிராத பிரஞ்சு ஓபன் கோப்பையின் இறுதி போட்டியில் லென்ட்லுக்கு எதிராக, 2-0 என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தார். அதுவரை எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் வெற்றி பெற்றிராத லெண்ட்ல் திடீரென்று விஸ்வரூபமெடுத்து மெக்கன்ரோவை வீழ்த்தினார். பிரஞ்சு ஓபன் பந்தயத்தை என்றென்றைக்கும் வெல்லவே முடியாதவரானார் மெக்கன்ரோ. மீண்டும், 1989ம் ஆண்டுக்கு வந்தால், அந்தக் காலகட்டத்தின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்டீபன் எட்பர்க், தான் ஒரு போதும் வென்றிராத பிரஞ்சு ஓபன் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் சாங்கை சந்தித்தார். ஒரு கட்டத்தில் 2-1 என்ற செட் கணக்கிலும் நான்காவது செட்டில் 4-2 என்றும் முன்னணியில் இருந்தார் எட்பர்க். மேலும் அந்தப் போட்டியில், சாங் சற்றே காயமுற்றிருந்த நிலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனாலும், விடாமுயற்சியுடன், விளையாடி எட்பர்க்கைத் தோற்கடித்தார். பின் எப்போதும் எட்பர்க் பிரஞ்சு ஓபன் பந்தயத்தை வெல்லவில்லை. மேலும் இரண்டு மகத்தான ஆட்டக்காரர்களான ப்யோன் போர்க் மற்றும் ஜிம்மி கானர்ஸ் ஆகியோரும் முறையே அமெரிக்க ஓபன் மற்றும் பிரஞ்சு ஓபன் பந்தயங்களை வெல்லவே முடியாமல் போனது. 1969ல் ராட் லேவர் நான்கு கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களையும் வென்றதற்குப் பிறகு அந்த சாதனையை அவருக்கு அடுத்த தலைமுறையினர் யாரும் செய்ய முடியவில்லை. பெடரர் வருவதற்கு முன்னால் டென்னிஸ் வரலாற்றிலேயே மகத்தான ஆட்டக்காரர் என்று கணிக்கப்பட்ட பீட் சாம்பிராசும் பதின்ம வயதிலேயே இரண்டு முறை விம்ப்ள்டன் பட்டம் வென்ற போரிஸ் பெக்கர் இருவருமே ஒரு முறைகூட பிரஞ்சு ஓபன் பந்தயங்களின் இறுதி போட்டிக்குத் தகுதி பெறவில்லை. ஆக, ராட் லேவர் 1962 மற்றும் 69ம் ஆண்டு சாதித்ததை, அதற்குப் பின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு யாராலும் சாதிக்க முடியவில்லை. 1999ம் ஆண்டு ஆந்த்ரே அகாசி அதைச் சாதித்தார். அதற்குப் பின் இந்த நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ரோஜெர் பெடரர், ரபேல் நடால், இப்போது, ஜோகோவிச் என்று மூவரே வென்றிருக்கிறார்கள்.. மனதில் எழும் கேள்வி, ஏன் இடைப்பட்ட 47 வருடங்களில் இந்த நால்வரைத் தவிர வேறு யாராலும் இந்த சாதனையை செய்ய இயலவில்லை?. அதில் மூவருமே கூட 2008ம் ஆண்டுக்குப் பிறகே இதைச் செய்தவர்கள். அப்படியானால் 70, 80, 90களில் உலக டென்னிசில் ஆதிக்கம் செலுத்திய கானர்ஸ், போர்க், மெக்கென்ரொ, லென்ட்ல், விலாண்டர்,  பெக்கர், எட்பெர்க், மற்றும் சாம்ப்ராஸ் போன்ற மகத்தான வீரர்கள் இதைச் செய்ய முடியவில்லை. அதற்குப் பின் இந்த 15 வருடங்களில் எப்படி மூன்று பேர் இதைச் சாதித்திருக்கிறார்கள்? என்ன மாறியிருக்கிறது? ஒவ்வொன்றாக ஆராயலாம். முதலில் ஆடும் களங்களின் தன்மை. ராட் லேவர் வென்ற காலகட்டத்தில், பிரஞ்சு ஓபன் போட்டியைத் தவிர மீதி மூன்று பந்தயங்கள் புல்தரையிலேயே ஆடப்பட்டன. 74ம் ஆண்டு வரை அமெரிக்க ஓபன் பந்தயங்கள் புல்தரையிலும் பின் 77 வரை களிமண் தரையிலும், 78 லிருந்து, செயற்கையிழைத் தரையிலும் (Deco Turf -11) ஆடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள், 1987 வரை புல்தரையிலும் அதற்குப் பிறகு 2007 வரை, செயற்கைத் தரை, Rebound Ace  என்ற ஒன்றிலும், பிறகு 2008 முதல் plexicushion என்ற செயற்கைத் தரையிலும் ஆடப்பட்டு வருகிறது. விம்பிள்டன் என்றும் மாறாமல் அதே புல்தரையில். ஒவ்வொரு களத்திலும் வெல்லச் சற்றே நுணுக்கமான, வேறுபட்ட  தனித் திறன்கள் தேவைப்பட்டன. வேகமான விம்பிள்டன் புல்தரையில், விரைவாக ஓடி ஆடும் திறனும், வலிமையான சர்வீஸ் மற்றும், பந்து எகிறும் தன்மை குறைவு என்பதால், வலைக்கு அருகே, முன்னோக்கிச் சென்று பந்து தரையில் விழுவதற்கு முன்னமேயே அதை அடித்து ஆழச் செலுத்தும் (volley)  திறனும் தேவை. அமெரிக்க ஓபனும், ஆஸ்திரேலிய ஓபனும் செயற்கையிழைத் தரையில் ஆடப்பட்டாலும்கூட ஆஸ்திரேலிய களம் சற்று வேகம் குறைவானது. பந்து எகிறும் உயரமும் அதிகமானது. இவற்றுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வகையில், பிரஞ்சு ஓபனின் சிவப்புக் களிமண் தரை, பொறுமையை சோதிக்கக் கூடியது. வேகத்தை உறிஞ்சி, ஒரு புள்ளி வெல்வதற்கே பந்தைப் பலமுறை மாறி மாறி அடிக்க வேண்டிய அவசியம் கொண்டது. மேலும் அங்கு பந்தை அடிக்கும்போது அதன்மேல் முடிந்த அளவு சுழல் ஏற்றி அடிக்கும் திறனும் முக்கியமானது. இந்த மாறுபட்ட களங்களில் வெற்றிகரமாக ஆடுவதற்கு தேவையான திறன்கள் அனைத்தும் ஒரே ஆட்டக்காரரிடம் சீராக இருக்கவில்லை. ஒவ்வொரு களத்திற்கும் அதற்கேற்ற  தனித்திறன் வாய்ந்த வீரர்கள்  இருந்தனர். உதாரணமாக, பிரஞ்சு ஓபன் போட்டியில் பலமுறை வென்ற செர்ஜி ப்ருகேரா, குஸ்தாவோ குர்டன், ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் ஒருபோதும் விம்பிள்டன்னிலோ, அமெரிக்க ஓபன் பந்தயங்களிலோ சோபித்ததில்லை. அதே போல, புல்தரையில் மிகச் சிறந்த வீரர்களாக விளங்கிய பெக்கர், எட்பர்க், சாம்பிராஸ் போன்றவர்கள் பிரஞ்சு ஓபன் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதற்கு விதிவிலக்காக விளங்கிய வீரரான போர்க் (6 முறை பிரான்சிலும், 5 முறை விம்பிள்டன் கோப்பையும் வென்றவர்) அமெரிக்க  ஓபனில் சாதிக்க முடியவில்லை. இன்றும் இந்த மாறுபட்ட களங்களிலேயே போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது அமெரிக்க ஓபனிலும் ஆஸ்திரேலிய ஓபனிலும் களத்தின் வேகம் குறைக்கப்பட்டு விட்டதாகவே காணப்படுகிறது. விம்ப்ள்டனில்கூட இப்போது உபயோகப்படுத்தும் (hundred  percent perenniel rye grass)  புற்கள், பந்தின் வேகத்தை முன்னை விட குறைத்து விடுகின்றன என்றும் தகவல்கள்  சொல்கின்றன. இன்று விளையாடும் பெரும்பாலான ஆட்டக்காரர்கள் களத்தின் பின்கோட்டின் (Baseline ) அருகே அல்லது அதற்குப் பின் தள்ளி நின்று பந்தை அடித்து ஆடும் ஐரோப்பிய வகை ஆட்டப் பயிற்சியே அதிகம் பெற்று வருகிறார்கள். செர்வ் செய்த உடனேயே அதைத் தொடர்ந்து வலையின் அருகே சென்று பந்தை எதிர்கொண்டு ஆடும் ஆட்டமே இன்று ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. volleyல் வலைக்கு அருகில் வந்து தரையில் படாது பந்தை வாங்கி, எதிர்ப்பக்கத்தில் ஆழமாக செலுத்துவது போலவே வலைக்கு மிக அருகிலேயே நிறுத்தவிடக் கூடிய drop volley, stop volley, மற்றும் dink volley  (மெக்கென்ரோ ஸ்பெஷல்) என்ற மூன்று வகைகளும் உண்டு, இவைகளும் இப்போது அழிந்து விட்டன. ஐரோப்பிய வகை ஆட்டம் தற்காப்பு ஆட்டம். ஆனால் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், ஆக்ரோஷமாக விளையாடும் முறையே பெரும்பாலும் பயிற்றுவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அங்கும் பயிற்சி முறைகள் மாறி ஐரோப்பிய வகை பயிற்சியே ஆதிக்கம் செலுத்துகிறதோ என்று தோன்றுகிறது. இதைச் சொல்லும்போது, ஐரோப்பிய ஆட்டத்தையும் இரண்டாகப் பிரிக்க முடியும் என்றும் சொல்லலாம். பெரும்பாலும், செக் குடியரசு, செர்பியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இத்தாலி மற்றும் பிரான்சு, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்த் போன்ற நாடுகளிலும், களிமண் தரை ஆட்ட பாணியே பிரபலம். இங்கிலாந்து, ஹாலந்து, மற்றும் ஜெர்மனியில் புல்தரைக் களங்கள்  இருந்ததனால், அங்கு உருவாகிய பெக்கர், ஹென்மன், ஜான் லாயிட், மைகேல் ஸ்டிச் ஆகியோர் அதிகமும் சர்வ் அண்ட் வொலி வீரர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்காக எட்பர்க், இவானிசெவிச் போன்ற ஸ்வீடன், க்ரோஷிய வீரர்களும் இந்த வரிசையில் உண்டு. அதே போல அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்து வந்த வீரர்களான கில்லெர்மோ  விலாஸ், நல்பண்டியன், க்யுர்டன் போன்ற வீரர்களும் களிமண் தரை வல்லுனர்களாக இருந்தனர். இதற்கு மாறாக ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் சற்றே வேறுவிதமாக, ஆக்ரோஷமாக விளையாடும் முறையே பெரும்பாலும் பயிற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பீட் சாம்பிராஸ், டாட் மார்டின், ராஸ்கோ டனர், ஆர்தர் ஆஷ் போன்றவர்கள் சர்வ் அண்ட் வொலி வீரர்கள். ஆஸ்திரேலியா டென்னிஸ் வல்லரசாக இருந்த காலம் ஒன்றுண்டு. நாம் முன்பு பார்த்த ராட் லேவர் தவிர, டோனி ரோச், ராய் எமெர்சன், ஜான் நியுகோம்ப், பேட்  காஷ் போன்ற ஆக்ரோஷமான வீரர்களைத் தந்த நாடு அது. கடைசியாக  ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சிறந்த ஆட்டக்காரர், பேட் ராப்டெர் (Pat Rafter ) லேட்டன் ஹூவிட் சில பட்டங்களை வென்றிருந்தாலும், அவரை அவர்களது உயரத்தில் வைக்க முடியாது (ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய டாட் வுட்பிரிட்ஜ்- மார்க் வுட்ஃபோர்ட் ஜோடி குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா டேவிஸ் கோப்பையில் மிக முக்கியமான சக்தியாக விளங்க இவர்களின் பங்களிப்பு காரணமாக இருந்தது). ஆனால் இப்போது அங்கும் பயிற்சி முறைகள் மாறி ஐரோப்பிய வகைப் பயிற்சியே ஆதிக்கம் செலுத்துகிறதோ என்று தோன்றுகிறது. மேலும் தற்சமயம் அமெரிக்காவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் வரும் வீரர்களும் ஐரோப்பிய பாணி ஆட்டத்தையே வெளிப்படுத்துகின்றனர். தற்போதைய டென்னிஸ் தரவரிசையின், முதல் 10 வீரர்களில் ஒரு அமெரிக்கரோ ஆஸ்திரேலியரோ கூட  இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்ற அமெரிக்க வீரர் ஆண்டி ராடிக். அவர் ஓய்வு பெற்றே தற்போது 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்குப்பின் வந்த அமெரிக்க வீரர்கள் மார்டி பிஷ் மற்றும் ஜான் ஐஸ்னர், இருவருமே எதிர்பார்த்த உயரங்களை எட்டவில்லை. ஆசிய விளையாட்டு முறை என்று ஒன்று தனியாக உருவாகும் அளவுக்கு டென்னிஸில் ஆசியா ஆதிக்கம் செலுத்தவில்லை என்றபோதிலும், ராமநாதன் கிருஷ்ணன், விஜய் அம்ரிதராஜ், மற்றும் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரும் தம் serve and volley ஆட்ட முறையிலேயே ஒரு தனித்துவமிக்க நளினத்தோடு டென்னிஸுக்கு ஒரு புதுப் பரிமாணத்தை அளித்தார்கள் என்று சொல்ல வேண்டும்.  ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி இன்று முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தாலும், தனித்துவமான ஆட்ட முறை ஒன்றும் அவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. இன்னும் சீனா தன் கவனத்தை டென்னிஸ் பக்கம் முழுமையாகத் திருப்பவில்லை. அப்படி செலுத்தினால், டேபிள் டென்னிஸில் pen hold என்பது போல போல டென்னிஸிலும் ஏதாவது ஒரு புது ஆட்ட முறை உருவாகலாம். ஆக, வேறுபட்ட ஆட்ட பாணிகளில் ஒவ்வொரு களத்துக்கும் அதற்கே உரிய வல்லுனர்கள் இருந்த நிலை மாறி, கிட்டத்தட்ட எல்லோருமே ஒரே பாணியில் ஆடுவதும் இன்று 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் ஒரே பாணி ஆட்டம் நிகழ்கிறது என்பதும் ஒரே வீரர் நான்கு போட்டிகளிலும் வெல்வதை சுலபமாக்கி விட்டது. மேலும் இன்னொரு முக்கியமான உண்மை, டென்னிஸ் சற்றே வயதானவர்களின் விளையாட்டு ஆகிவிட்டது. இன்று தர வரிசையின் முதல் பத்தில் இருப்பவர்களில், 25 வயதுக்குக் கீழே இருப்பவர் ஒரே ஒருவர்தான். முதல் ஐந்து வீரர்கள் அனைவரும் 28 வயதைக் கடந்தவர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் பெடரருக்கு வயது 34. ப்யான் போர்க் 11 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்று ஓய்வு பெற்றபோது அவருக்கு வயது 26 தான் என்பதைப் பார்க்கும்போது இன்று டென்னிஸ் எவ்வளவு தூரம் வயதானவர்களின் விளையாட்டாகிவிட்டது என்பது தெரியும். அதனாலேயே அதன் பிரபல்யமும் சற்று குறைந்து விட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. 16 வயதில், விம்ப்ள்டனும் 19 வயதில் அமெரிக்க ஓபனும், தன் 20 வயதிற்குள் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று விட்ட பெக்கர், சாம்பிராஸ், போர்க் போன்ற இளம் வீரர்கள் இன்று எங்கே? தொண்ணூறுகளில் உடைந்த எல்லைகள், இன்று திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக அரசியலை டென்னிஸ் போன்ற ஒரு விளையாட்டை வைத்து புரிந்து கொள்ள முடியாதுதான். ஆனால், முதியவர்கள் இன்று இளைஞர்களின் பேராற்றலை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதை ஒரு இணைச் சித்திரமாய் இங்கு வைத்துப் பார்க்க முடிகிறது. ஜோகோவிச் கிராண்ட் ஸ்லாம் வென்றதில் நிச்சயம் மகிழ்ச்சி என்றாலும், டென்னிஸ் இன்று ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட விளையாட்டாகவும் வயதானவர்களின் விளையாட்டாகவும் மாறி விட்டதில் சற்று வருத்தம் உண்டுதான். மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணம் போவோம். 1985… ஆந்த ஆண்டின் ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பந்தயத்தில் 19 வயதான ஸ்டீபென் எட்பர்க் 21 வயதான மாட்ஸ் விலாண்டரைத் தோற்கடித்து பட்டம் வென்றார். பின் பிரஞ்சு ஒபனில் விலாண்டர் லெண்ட்லை தோற்கடித்து பட்டம் வென்றார். ஆனால் அந்த வருட விம்ப்ள்டன் போட்டியில், இவர்களே முதியவர்கள் என்பது போல், 17 வயது நிறைவு பெறாத போரிஸ் பெக்கர் பட்டம் வென்றார். இந்த ஆண்டும், ஆஸ்திரேலியா பிரஞ்சு போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டையும் ஜோகோவிச்சே வென்றிருக்கிறார். ஜூன் நான்காம் திங்கட்கிழமை வழக்கம் போல விம்ப்ள்டன் போட்டிகள் துவங்கும், பெக்கர் போல் ஒரு புதிய துவக்கம் நிகழுமா? அதுவும் பந்தை அடித்துப் பின்தொடர்ந்து நெட்டை நெருங்கி, திருப்பியடிக்கப்பட்ட பந்து தரையைத் தொடுமுன் வழிமறித்து ஆழச் செலுத்தும் செர்வ் அண்ட் வொலிக்குரிய களம் இவர்களுக்கு இனி கிடைக்குமா? சொல்வனம், ஜூலை, 2016 புகைப்பட உதவி: palwankar baloo – Wikipedia  Sehwag – snapper san Ramnarayan – google books  Djokovich – Carine06 tss rajan – amazon.in  chinna annamalai – koottanchoru  age of wrath - Goodreads grand pursuit - Goodreads savitri – omnibus  asokamitran -  kaalam via solvanam avarana – flipkart  thi ja – solvanam  FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.