[] உன்னை நீ அறிவாய்! நிர்மலா ராகவன் freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 உன்னை நீ அறிவாய்! 1. உன்னை நீ அறிவாய்! 2. 1.வெற்றிப்பாதையில் முட்கள் 3. 2.தன்னம்பிக்கை 4. 3.தாரக மந்திரம் 5. 4.பயம் 6. 5.சமர்த்தா, கர்வியா? 7. 6.குழந்தைகளும் விஞ்ஞானிகள்தாம் 8. 7.வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப்போவது 9. 8.நேர்மையும் வாய்மையும் 10. 9.ஆண்களுடன் போட்டியா? 11. 10.பதின்ம வயதினர் 12. 11.குடும்பத்துள் ஏன் போட்டி? 13. 12.புகழ்ச்சியும், துணிவும் 14. 13.வதையைத் தடுக்க சில வழிகள் 15. 14.ஆத்திரக்காரனாக வளரும் குழந்தை 16. 15.கறுமை நிறம் 17. 16.நிமிர்ந்து நில்லுங்கள் 18. 17.வீட்டைவிட்டு ஓடிப்போவது 19. 18.தவற்றைத் தவற்றால் திருத்த முடியுமா? 20. 19.வாழ்வின் மறுபக்கம் 21. 20.காதுகொடுத்துக் கேளுங்கள் 22. 21.மல்லிகையும், தாம்பத்தியமும் 23. 22.வயதுக்கேற்ற வளர்ச்சி 24. 23.தெரியக்கூடாத ரகசியங்களல்ல 25. 24.கண்கண்ட தெய்வமா? 26. 25.ஒழுக்கத்தைக் கற்பிப்பது 27. 26.ஆரம்பம் எப்போது? 28. 27.அறிவுத்திறன் வளர 29. 28.பொது இடங்களில் குழந்தைகள் 30. 29.பாராட்டும், கண்டனமும் 31. 30.நல்லவனாக இரு! 32. 31.பெற்றோரின் அங்கமல்ல 33. 32.பாதுகாப்பு யாருக்காக? 34. 33.மரியாதை 35. 34.தனித்து வாழும் தாயும் மகனும் 36. 35.நட்பும் அதிகாரமும் 37. 36.முழுமையான கல்வி 38. 37.தற்காலத்தில் பழமொழிகள் 39. 38.நாட்டியத்தால் நாமடையும் நன்மைகள் 40. 39.முதுமையில் இளமை 41. 40.படிப்பும் சுதந்திரமும் 42. 41.நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா? 43. 42.வளர்ப்பு முறையில் வித்தியாசம் 44. 43.தாம்பத்தியத்தில் தலைவலி 45. 44.பொறுத்துப்போகவேண்டுமா, ஏன்? 46. 45.வருங்கால மனைவி 47. 46.தற்காலத்தில் பண்டையகாலக் கருத்துகள் 48. 47.பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் 49. 48.போட்டி மனப்பான்மை 50. 49.அச்சம் -வெற்றி - தன்னம்பிக்கை 51. 50.நிறைய நண்பர்களா! 52. 51.சுய விமரிசனம் 53. 52.அடுக்கடுக்காக வெற்றி பெறும் வழிகள் 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks உன்னை நீ அறிவாய்! உன்னை நீ அறிவாய்! (உளவியல் கட்டுரைகள)   நிர்மலா ராகவன   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் & அட்டைபடம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   நன்றி: வல்லமை.காம் 1.வெற்றிப்பாதையில் முட்கள் கேள்வி: எந்தச் சமயத்திலும் பிறரை நோகடிக்கக் கூடாது என்பது சரிதானா? எல்லோரிடமும் சிரித்துப் பேசுவது சிலருக்கு மட்டும் எப்படி கைவருகிறது? பதில்: இப்படி நடப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள் என்று சொல்ல முடியாது. எப்போதும் சிரிப்பது, அதுவும் உரக்கச் சிரிப்பது, மகிழ்ச்சியின் அறிகுறி என்று அர்த்தமாகாது. சிறு வயதில் தாய், தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகிய எல்லாரிடமும் பாராட்டு பெற விரும்பிய ஒரு பெண் பிறருக்கு என்ன பிடிக்கும் என்று குறிப்பால் அறிந்து, அதன்படி நடக்கிறாள். யாரையாவது எதிர்த்தால், அதற்காகத் திட்டு விழும், தன்னை ‘நல்ல பெண்!’ என்று புகழமாட்டார்கள் என்று புரிந்து போகிறது. அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு காரியமுமே பிறர் என்ன சொல்வார்களோ என்ற அடிப்படையில்தான் இருக்கும். பெரியவளாக ஆன பின்னரும், இதே போக்கு தொடர்கிறது. ‘எனக்கு எதிரிகளே கிடையாது. எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாள். இவளுக்கு எதிரிடையான பெண் ஒருத்தியே எடுத்துக்கொள்வோம். அவளைக் கண்டனம் செய்பவர்கள்தாம் அதிகம். 1 ‘உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’ 2 ‘நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’. 3 ‘உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’ இந்த மாதிரி கேள்விக் கணைகளைத் தொடுத்து, யாராவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்களா? கவலையை விடுங்கள். பிரச்னை உங்களிடம் இல்லை. கேட்டவரிடம்தான். ‘ஏன் என்னால் முன்னுக்கு வரவே முடியவில்லை?’ என்று வருந்துபவர்கள், பிறர் தம் முன்னேற்றத்தைத் தடுக்க எந்தெந்த வழிகளை எல்லாம் கையாளுவர் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய நைச்சியமான பேச்சால் பாதிப்பு அடையாமல் இருக்க முடியும். (1)‘கர்வி’ என்று நம்மை ஒருவரைப் பழித்தால், நம்மிடம் ஏதோ சிறப்பு இருக்கிறதென்று எதிராளி உணர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்தச் சிறப்பே நம் பலமாக, வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக ஆகவிடாமல் தடுக்கும் முயற்சி இந்த ஏளனம் கலந்த குற்றச்சாட்டு. பிறரை ஓயாது பழித்துவிட்டு, ‘ஏனோ ஒருவருக்கும் என்னைக் கண்டால் பிடிப்பதில்லை!’ என்று புலம்புவார்கள் இத்தகையவர். இல்லாவிட்டால், தன்னைப்போன்ற இன்னொருவருடன் நெருங்கிய நட்பு கொண்டு, பிறரைப் பழிப்பதிலேயே நிறைவு கண்டுவிடுவர். கதை: நான் ஒரு புதிய பள்ளிக்கு மாற்றலாகிப் போனேன். இரு சீன ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து, என்னை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள், ‘நீ புதியவள். உனக்கு ஒன்றும் தெரியாது,’ என்பதுபோல. இத்தனைக்கும் எனக்கு முன் அனுபவம் இருந்தது. நான் பட்டதாரி ஆசிரியை, அவர்களைவிட உயர்ந்த பதவி வரிசையில் இருந்தேன் என்ற ஆத்திரமாக இருக்கலாம். பொறுக்கிறவரை பொறுத்துவிட்டு, அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினேன். பின்பு, ‘என்னையும் உன்னைமாதிரி முட்டாள் என்று நினைத்தாயா?’ (You think I am stupid like you, aah?”) என்று ஒருத்திக்குப் பதிலடி கொடுத்தேன், ஒரு முறை. அவர்கள் பேசும் முறையையே கையாண்டதால், அவர்களுக்கு என் ஏளனம் புரிந்தது. அவ்விருவர் முகத்திலும் ஒரே ஆத்திரம். ஆனால், அவர்களுக்கு மேலே எதுவும் பேசும் தைரியம் இருக்கவில்லை. அதன்பின் என்ன! போலியான, திகட்டும் அளவுக்கு பணிவுதான் என்னிடம்! 2. ‘நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’. பிறரது எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் பொறுப்பில்லை. நாம் சொல்வதையோ, செய்வதையோ பிறர் ஏற்றுக்கொள்ள முடியாதது நம் தப்பா? பல பெரியவர்கள் இம்மாதிரி பேசி, தம் குழந்தைகளை, ‘தாம் நொந்தாலும் பரவாயில்லை, பிறரை நோகடிக்கக்கூடாது,’ என்பதுபோல் என்றுமே சுயமாகச் சிந்தித்து நடக்கும் திறனில்லாது பழக்கிவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளும் பிறருடைய உணர்ச்சிக்கே மதிப்பு கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசப் பழகுகிறார்கள். பிறர் சொல்வது சரியோ, இல்லையோ, அதை ஆமோதித்து ஏற்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிகிறது. இக்குழந்தைகள் பெரியவர்களானதும், தாமே ஏதாவது செய்ய முயன்றுவிட்டு, அதுவும் பிழையாகிப் போனால் என்ன ஆகும்? ஒரேயடியாகக் கூசிப்போய், பிறருடைய பழிக்கும், கேலிக்கும் அஞ்சி, புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சலை இழந்துவிடுகிறார்கள். ‘நான் போட்டியில் எல்லாம் கலந்துகொள்ள மாட்டேம்பா. வெற்றி பெறாவிட்டால், கேவலம்!’ என்று பெருமை பேசுவார்கள். அவர்களைப்போலவே பலரும் இருப்பதால், தாம் செய்வதுதான் சரி என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வெகு சிலரே வெற்றிப் பாதையில் பீடுநடை போடுவது இதனால்தான். தலைமைப் பொறுப்பு வேண்டுமெனில், சுய சிந்தனை அவசியம். எதிர்ப்புக்கு அஞ்சக்கூடாது. நமக்குச் சரியெனப்பட்டதை, அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவரை, துணிந்து செய்ய வேண்டும். ‘எனக்காக இதைச் செய்யக்கூடாதா!’ என்று நமக்கு உடன்பாடில்லாத காரியங்களைச் செய்யத் தூண்டுபவர் நம் நலனிலும், நிம்மதியிலும் அக்கறை கொண்ட நண்பரே அல்லர். கதை: ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். அதை அளித்தவர் பெரிய அதிகாரி. ஒவ்வொருவரிடமாகப் போய், அவர்களை வற்புறுத்தி, மது குடிக்க வைத்தார். கூட இருந்தவர்களும் குடிக்காதவர்களைக் கேலி செய்தார்கள். என்னருகே வந்தார். என்னைவிடப் பத்து வயது பெரியவரான அவர் எதுவும் பேசுமுன், ‘குடிப்பதை விட்டுவிடுங்கள் என்று நான் சொன்னால் கேட்பீர்களா?’ என்று சாந்தமாக, நான் அவரைக் கேட்டேன். ‘Of course not!’ என்று ஆணித்தரமாகப் பதில் வந்தது. ‘நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்பேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?’ என்று நான் கேட்க, அவர் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். அதிலிருந்து எனக்கு ரொம்ப மரியாதை! (3) ‘உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’ தன்னம்பிக்கை இல்லாத எவருக்குமே நாம் வித்தியாசமாக இருந்தால், பயம் உண்டாகும். எப்படியாவது தங்களைப்போல் மாற்றிவிட பெருமுயற்சி செய்கிறார்கள். நாம் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்த்துவதுபோல, ‘சுயநலமி,’ ‘அகம்பாவம் பிடித்தவள்’ என்று பல பெயர்களைச் சூட்டுவர். அவர்களை லட்சியம் செய்யவே கூடாது. கொஞ்சம் புத்திசாலியான வேறு சிலர், ‘உங்கள் புத்திசாலித்தனத்துக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று, புகழ்வதுபோல் குழி பறிப்பர். ஒரு வேளை, அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று யோசித்து, அவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது வீண். பழியையும், வருத்தத்தையும் நாம் ஏற்காத பட்சத்தில், அவை சொன்னவரையே போய்ச் சேரும், சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல். நாமும் எப்போதும்போல் நிமிர்ந்தே நடக்கலாம். அச்சத்தாலோ, பொறாமையாலோ நம்மை முதலில் ஏற்காதவர்களே என்றாவது நம் உதவி தேடி வருவார்கள். ‘என்னைப் பழித்தாயே!’ என்று குத்திக் காட்டாது உதவலாம். 2.தன்னம்பிக்கை ‘என் பிள்ளை நான் எது சொன்னாலும் கேட்பதில்லை!’ ‘செவிடா?’ ‘இல்லை, திமிர்!’ ‘பிள்ளைக்கு என்ன, பதினாறு வயசா?’ ‘ஒன்றரை!’ குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதனுக்கு இரு வெவ்வேறு குணங்கள் உண்டு. அவை, சுதந்திரம், பாதுகாப்பு. தன் தள்ளுவண்டியிலிருந்து இறங்கி, வாகனங்கள் விரையும் தெருவில் ஓட முயற்சிக்கும் குழந்தை, எங்கோ ஓடும் நாயைப் பார்த்து மிரண்டு, அம்மாவின் காலைக் கட்டிக்கொள்ள ஓடிவரும். நான்கு வயதுக்குள் 80% அறிவு (I.Q) வளர்ந்துவிடுகிறது. அதற்குள் ஒருவர் தன் உருவம், குணநலன், திறமை ஆகியவற்றில் திருப்தி கொள்ளும்போது தன்னம்பிக்கை பிறக்கிறது. குழந்தை குளிப்பாட்டியவுடன், அதன் கையையோ, உச்சியையோ முகர்ந்துவிட்டு, ’ஹை! ஜோரா, வாசனையா இருக்கியே!” என்று பாராட்டினால்தான், எவ்வளவு மகிழ்ச்சி அதன் முகத்தில்! சிறு வயதில் தன்னைப்பற்றி ஆராய குழந்தைகளுக்குத் தெரியாது. வீட்டுப் பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள். அவர்கள் வயதுக்குரிய வேலையைக் கொடுத்து, அவர்கள் அதை எப்படிச் செய்தாலும் பாராட்டுவது உசிதம். அடுத்த முறை, நீங்கள் ஏதாவது வேலை செய்யும்போது பெருமையுடன் ‘உதவிக்கு’ வருவார்கள் – அதை நீங்கள் உபத்திரவம் என்று கருதினாலும். மூன்று வயதுக் குழந்தைக்குக்கூட சப்பாத்தி தயாரிக்கும்போது, கையில் குழவியைக் கொடுத்துவிட்டு, பலகையில் ஒட்டாதிருக்க, அம்மா திருப்பிப்போடலாம். ஒவ்வொரு முறையும், பாராட்ட மறவாதீர்கள். சாப்பிடும்போது, ஞாபகமாக, ‘இன்னிக்கு குழந்தைதான் ரொம்ப உதவி செஞ்சான்!’ என்று அவனெதிரேயே பாராட்டுங்கள். ஒரு சிறுவன் தான் குடிப்பதற்காக வைத்திருந்த பாலைக் கொட்டிவிட்டான் என்று அம்மா ஆத்திரப்படலாம். ‘முட்டாள்! ஒரு காரியத்தை உருப்படியாகச் செய்யத் தெரியாது!’ அடித்தாலோ, திட்டினாலோ கீழே கொட்டின பால் திரும்பி வந்துவிடுமா? அடுத்த முறை பாலைக் கையில் எடுக்கும்போது, கொட்டிவிடப் போகிறதே என்ற பயம்தான் உண்டாகும். தான் முட்டாள் என்று அம்மாவே சொன்னாளே என்ற தாழ்மை உணர்வும் ஏற்படும். மாறாக, ‘போனால் போகிறது. அடுத்த தடவை ஜாக்கிரதையாகக் குடி!’ என்று நாம் அனுதாபம் காட்டினால், ஏற்கெனவே பயந்த குழந்தைக்கு ஆறுதலாக அமையும். பொது இடம் ஒன்றில் ஒரு தாய் தன் இரண்டு வயதுப் பெண்ணிடம் கூறிக் கொண்டிருந்தாள்: “சரசு ராங்கி! ஒன்னை யார்கிட்டேயாவது குடுத்துட்டு, தம்பிப் பாப்பாவை மட்டும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்!” தாயை ஒட்டி நின்றிருந்த அச்சிறுமி சரசு, எதுவும் புரியாது, தாயையே பார்த்தாள். தான் என்னமோ வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, நாலைந்து தடவை அதையே கூறினாள், அப்பெண்மணி. குழந்தையின் முகத்தில் பயம் தெரிந்ததும், சிரிக்க ஆரம்பித்தாள். அந்தக் குழந்தைக்கு ஏனோ தைரியமே இல்லை என்று என்றாவது புகார் சொல்வாள். என் மாணவன் ஒருவன், பதினோரு வயதிலிருந்து தனக்கு அடிக்கடி மூச்சிளைப்பு வருவதாகக் கூறினான். பத்து வயதாக இருந்தபோது, இனி அவனுடைய மூன்று தம்பிகளையும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவன் பொறுப்பு என்று தந்தை கூறிவிட்டாராம். அவனாலோ அவர்களை அடக்க முடியவில்லை. தான் தந்தை எதிர்பார்த்தபடி இல்லையே என்ற வருத்தம் என்றான். தன் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறார் அந்த அப்பா. வயதுக்கு மீறிய உழைப்பைச் சிறுவர்களுக்குக் கொடுத்தால், அது வதை. அவனுக்குப்பொறுப்பு வராது. தன்னம்பிக்கைதான் குறையும். குழந்தைகள் சொல்லாலோ, செயலாலோ தப்பு செய்கிறார்கள் என்றால், அது அறிவீனத்தால் அல்ல. எது சரி, எது தப்பு என்று அவர்களுக்குத் தெரியாததால்தான். எந்தப் புதிய காரியத்தையும் முதலில் விளக்கிச் சொல்லிவிட்டு, இயன்றால் செய்தும் காட்டிவிட்டு, அப்படியும் தவறு நேர்ந்தால், அது அனுபவக்குறைவால். தப்பு செய்ததற்காக ஏளனம் செய்யாமல், எதனால் தப்பு விளைந்தது, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று விளக்க வேண்டும். ‘யாருக்கு அவ்வளவு பொறுமை இருக்கு!’ என்று கோபப்படுகிறீர்களா? உங்கள் பொறுமைதான் குழந்தையின் நல்ல எதிர்காலத்துக்கே வழிவகுக்கும். ‘என்னால் எதையும் நன்றாகச் செய்ய முடியும். அதனால்தான் அம்மா உதவிக்குக் கூப்பிடுகிறாள். நான் நல்லவன். பிறருக்கு உதவுவேன்,’ என்றெல்லாம் தன்னைப்பற்றியே நல்ல அபிப்ராயம் கொண்டு வளருபவன் புதிய மனிதர்களையோ, பழக்கமில்லாத சூழ்நிலையையோ கண்டு அஞ்சி விலகுவதில்லை. தான் பல விஷயங்களையும் கற்க வேண்டும் என்று, எந்த வயதானாலும் ஆர்வத்தோடு செயல்பட்டு வெற்றி பெற முடிகிறது. பெற்றோர் பெருமையுடன் பிறருக்குத் தம்மை அறிமுகப்படுத்தி, வணக்கம் தெரிவிக்கவோ, கைகுலுக்கவோ பழக்கப்படும் குழந்தை பிறரையும், கூடவே தன்னையும் மதிக்கக் கற்கிறது. தம்மைத்தாமே மதித்து நேசிப்பவர்கள்தாம் பிறரையும் மதிக்கவும், அவர்கள்பால் அன்பு செலுத்தவும் பக்குவம் அடைகிறார்கள். ‘நான் நல்ல பிள்ளை. இல்லை?’ என்று ஒரு குழந்தை அடிக்கடி கேட்கும். அது தற்பெருமையால் அல்ல. தான் நினைப்பது சரிதானா என்று அறியும் விதம். மலர்ந்த முகத்துடன் ஆமோதியுங்கள். குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு இறுகும். 3.தாரக மந்திரம் கேள்வி: பிரச்னையே இல்லாத மனிதன் எங்கே இருக்கிறான்? குருவின் பதில்: இடுகாட்டுக்குப் போய் பார்! பிறப்பிலிருந்த இறக்கும்வரை ஒன்று மாற்றி ஒன்று மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது. ‘பத்திரமின்மை’ (insecurity) என்றார் ஒரு மருத்துவர். ‘ஒங்களுக்குமா!’ என்று வியந்து கேட்டேன். ‘நானும் மனிதன்தானே?’ என்ற டாக்டருக்குக் கொள்ளைப்பணம். முதுகு வலி என்றால், வீட்டில் சுருண்டு படுத்துக் கொள்வதில்லை. சுடுநீர் போத்தலை (hot water bag) சட்டைக்குள் கட்டிக்கொண்டு வருவார். எல்லாருக்கும் பிரச்னைகள் உண்டு. ஆனால், அவைகளை எதிர்கொள்ளும் விதத்தில்தான் நாம் மாறுபடுகிறோம். ‘மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ!’ இது நம்மில் அனேகருக்குத் தாரக மந்திரம். அவரவரும் இப்படியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், தம்மைப்பற்றி யோசிக்க ஏது நேரம்! ABC விதி நான் A என்று வைத்துக்கொள்வோம். என்னிடம் B யைப்பற்றி குறை கூறுகிறான் C . பிறகு, B -யிடம் போய், ‘A மோசம்!’ என்கிறான். இத்தகைய வம்பர்களை அருகில் நெருங்க விடக்கூடாது. அப்படியே அவர்கள் விடாப்பிடியாக யாரையாவது குறை கூறினாலும், எந்த உணர்ச்சியோ, அல்லது ஆர்வமோ காட்டாது, நாம் மௌனமாக இருந்தால், அவர்களுக்கே அலுத்துவிடும். ‘இது பிறருடன் ஒத்துப்போகாது!’ என்று நம்மைப் பிறரிடம் பழிக்கப் போய்விடுவார்கள்! குறை கூறுவதையே பழக்கமாகக் கொண்டிருப்போர், தாம் குறை என்று எதையாவது நினைத்து வருந்துவதை மறைக்க இப்படிப் பேசுகிறார்கள். இல்லையேல், தமக்குச் செவிசாய்ப்பவர்களால் கிடைக்கப்போகும் ஆதாயத்தை எண்ணி. அதுவும் இல்லாவிடின், ‘இவள் நம்மைப்போல இல்லையே!’ என்ற பொறாமையால், அச்சத்தால். தம்மைப்போன்றே எல்லாரும் இருக்கவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பால். (விடுங்கள்! அவர்களுக்கும்தான் வம்படிக்க ஏதாவது விஷயம் வேண்டாமா? பாவம்!) இதெல்லாம் புரிந்தால், பெரிய விடுதலை. (‘அவளுக்கு என்ன குறை?’ என்று யோசித்து நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டாம்). நாமும் பிறரை – அவர் அருகில் இல்லாதபோது – குறை சொல்வதை விட்டுவிட்டால், நம்மைப்பற்றி பிறர் அவதூறு பேசுவது நம்மைப் பாதிக்காது. நேரமும் மிச்சமாகும். அந்த நேரத்தை பலனளிக்கும் நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்தலாமே! 4.பயம் கேள்வி: என் பிள்ளை என்னை வேலைசெய்ய விடாமல் படுத்துகிறான். அவனை என்ன செய்து திருத்துவது? பதில் கேள்வி: உங்கள் பிள்ளைக்கு மூன்று வயதுதானே? எது ஒன்றும் ஒரு ஒழுங்கு முறையுடன் அடுக்கி வைத்திருப்பதைக் காணவே பொறுக்காது சிறு குழந்தைகளுக்கு. டப்பாவில் இருக்கும் பருப்பைக் கீழே கொட்டிவிட்டு, அல்லது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிமணிகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, பெருமையுடன் தாயின் கையைப் பிடித்துகொண்டு அழைத்துப்போய் காட்டுவார்கள்! அதிர்ச்சியடைந்த தாய், திட்டினாலும், மிரட்டினாலும், மறுநாளும் அதே தொடரும். ஆனால், தண்டனையால் பெற்ற பய உணர்வு மட்டும் நிலைத்திருக்கும். தம்மைச் சுற்றிலும் இருப்பவற்றை அறியும் நோக்கத்துடன்தான் குழந்தைகள் அவர்கள் வீட்டிலுள்ள சாமான்களிடம் தம் ’கைத்திறமையை’க் காட்டுகிறார்கள் என்று நமக்குப் புரிந்தால், ஆத்திரமடைவதற்குப் பதில் சிரிப்போம். மூன்று வயதுக்குப்பின், ஒரு பொருளை வேண்டுமென்றே நாசமாக்கினால் (உடையும் என்று தெரிந்தே, கண்ணாடியாலான பூச்சாடியைக் கீழே போடுதல்), கண்டிப்பது சரி. ஆனால், ‘நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்று பழித்தலாகாது. நாம் அளிக்கும் எந்த தண்டனையும் குழந்தை செய்த காரியத்திற்கு ஏற்ப இருக்கவேண்டும். இல்லாவிட்டால், ‘ஏதாவது செய்தால்தானே அடி விழுகிறது! ஒன்றுமே செய்யாமல் இருந்துவிடலாமே!’ என்று தோன்றிப்போகிறது அவர்களுக்கு. நீங்கள் தெரியாத்தனமாக குழந்தையின் காலை மிதித்துவிட்டால், ‘ஏன் வழியிலே ஒக்காந்திருக்கே?’ என்று பழியைத் திருப்பாமல், ‘ஸாரி,’ என்று உங்கள் தவற்றை ஒத்துக்கொண்டு பாருங்கள். நல்லது, கெட்டது எதையும் தன்னையும் அறியாது கிரகித்துக்கொள்ளும் குழந்தை, தான் பாலைக் கொட்டிவிட்டால், ‘ஸாரி,’ என்று மன்னிப்பு கேட்கும், சுமார் மூன்று வயதில். ‘நான் சொல்வதை அப்படியே செய். இல்லையேல், அடி!’ குழந்தைகளின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால் மட்டும் பெற்றோர் தம் விருப்பத்திற்கேற்றமாதிரி அவர்களை ஆட்டிப் படைக்கக் கூடாது. அடி, உதைக்குப் பயந்து குழந்தைகள் அப்போதைக்குப் பணிந்தாலும், இத்தகைய பெற்றோரிடம் அவர்களுக்கு மதிப்போ, பாசமோ ஏற்படாது. எப்போதும் பயமுறுத்தப்படும் சில குழந்தைகள் நாளடைவில் பயங்கொள்ளியாக ஆகிறார்கள். எதிலும் பயமும், ஆர்வமின்மையும் கொண்டால், வாழ்வில் முன்னேறுவது ஏது! வீட்டிலேயே அவர்களுடைய ஆர்வம், உணர்வுகள் எல்லாம் ஒடுக்கப்பட்டுவிடும்போது, கல்வி நிலையங்களிலும் இவர்களுக்கு எதிலும் ஆர்வம் உண்டாகாது. ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாகி, மேலும் தண்டனை அடைய நேரிடும்போது, பெரியவர்கள் அனைவர்மேலேயும் கசப்பும், அவமரியாதையும் ஏற்பட்டு விடுகிறது. தம்மையொத்த பிறர் செழிப்பாக வாழ்வதைக் காணும்போது, காலங்கடந்து இவர்களுக்கு பெற்றோர்மீது ஆத்திரம்தான் வருகிறது. ‘பயந்தவன்தான் பிறரை பயமுறுத்துவான்!’ என்பது மனோவியல் கூறு. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் கதை படித்திருப்பீர்கள். ஐந்து வயதாக இருந்தபோது, ஏதோ விஷமம் செய்தான் என்று, அவன் தந்தை சிறைச்சாலை அதிகாரியாக இருந்த தனது நண்பரிடம் சொல்லி, ஓரிரவு முழுவதும் பாலகனை அதில் அடைத்துவைக்கச் செய்திருக்கிறார். தான் அப்போது அடைந்த பயத்தை ஆக்ககரமான வழியில், சைகோபோன்ற திரைப்படங்களை எடுத்து, பிறரையும் திகிலடையச் செய்தார் அந்த இயக்குனர். வேறு சில குழந்தைகள், தம் பயத்தை மறைத்துக்கொண்டு, பிறரை அதிகாரமாக நடத்துகிறவர்களாக வளர்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டிருப்பவர்களின் பால்யப் பருவத்தை ஆராய்ந்தோமாகில், சிலர் கருவிலிருக்கையிலேயே வன்முறையை அனுபவித்து இருப்பது தெரியவரும். குண்டுச் சத்தம், அவல ஓலம் போன்றவற்றை, போர்க்காலங்களில் பிறந்த சிசு தாயின் வயிற்றிலிருந்தே கேட்டிருக்கும். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவும், தெளிவும் இல்லாத நிலையில், இடைவிடாத ஊசிப்பட்டாசு சத்தம் கேட்டாலோ, தொலைகாட்சியில் ஏதாவது பயங்கரமான நிகழ்ச்சியைப் பார்த்தாலோகூட பயந்து உருளும். இம்மாதிரியான சூழ்நிலையைத் தவிர்ப்பதுடன், ‘பயப்படாதே. இதுக்கும், நமக்கும் சம்பந்தமில்லை!’ என்று கருவிடம் எண்ண அலைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள் இத்துறை ஆராய்ச்சியாளர்கள். ‘நீ தைரியசாலி!’ என்று ஒவ்வொரு நாளும் தட்டிக் கொடுக்கப்பட்டு வளருபவர்களுக்கு எப்போதாவது பயம் எழலாம். அது இயற்கை. ஆனால், புதிய செயல்களில் ஈடுபடும்போது முதலில் சறுக்கினாலும், துணிந்து அதில் முனைப்புக் காட்டுவார்கள். தோல்வியினால் இவர்களுக்குப் பயமோ, வெட்கமோ கிடையாது. செய்த பிழையிலிருந்து கற்று, வெற்றிக்கு மேல் வெற்றி பெறும் இவர்களைப் பார்த்து, பிறர்தான் அஞ்சுவார்கள்! 5.சமர்த்தா, கர்வியா? கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா? கர்வத்தால் இல்லை. தன் நல்ல குணத்தைத் தானே உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சி அது. குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்த்தால் எப்படி! வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். ‘நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான். சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, ‘உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும். பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் ‘வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது? குழந்தைகளைப் புகழ எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன! குளித்துவிட்டு வரும்போது, ‘பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், ‘தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், ‘யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும். சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள். ‘பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி. இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பாவம்! நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பேர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை. ‘எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், ‘நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லித்தா?’ என்று ஏசுவார். நான் ஒரு முறை துணிந்து, ‘எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன். எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச்சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்? ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை கணக்கில் சந்தேகம் கேட்க அவரை நாடினேன். நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதித்தேன். வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை! அன்று கற்ற பாடம், தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல என்பதே. தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ‘எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!’ என்று கேட்பதில் என்ன வெட்கம்? சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். ‘என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். ஆனால், ‘எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல!) அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும். 6.குழந்தைகளும் விஞ்ஞானிகள்தாம் நம்மைச் சுற்றி இருப்பவைகளை அறிவதுதான் விஞ்ஞானம். இந்த விந்தைக்குத்தான் ஐம்புலன்களும் பயன்படுகின்றன. தாய் அணைத்தால், பிறந்த குழந்தை உடனே அழுகையை நிறுத்திவிடும். ஏனெனில், அவளுடைய மணம் அதற்குப் பரிச்சயமான ஒன்று. கண்களைத் திறந்த உடனேயே வெளிச்சம் இருக்கும் திசையை நோக்கித் தலையை திருப்பும். கிலுகிலுப்பையால் ஓசை எழுப்பினாலோ, தாய் அருமையாகப் பேசினாலோ, அழுகையை மறந்து பார்க்கிறது. எது கையில் அகப்பட்டாலும் இறுகப் பற்றிக்கொள்கிறது. அதாவது, நுகர்தல், பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி இருப்பவைகளை அறிய முயல்கிறது. தவழத் தொடங்கியதும், தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும், பூச்சியையும் துரத்திப் பிடித்து, வாயில் போட்டுக்கொள்ளப் பார்க்கும். தாய் தடுத்தால், ஒரே ரகளைதான். (இந்தப் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! சுவை என்பதை பின் எப்படித்தான் அறிவதாம்!– குழந்தை வெறுத்துப்போய் அழுவதன் அர்த்தம் இதுதான்). குழந்தைகளுக்கு அறிவு வளருவதற்குப் பல்வேறு அனுபவங்கள் அமைய வேண்டும். அவைகளை நாம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நான்கு நாள் குழந்தையாக இருந்த என் பேரனை நான் முழங்காலிலிட்டுக் குளிப்பாடும்போது, அலுப்பாக இருந்தது. யாருக்காவது, எதையாவது சொல்லிக் கொடுத்தே பழக்கமில்லையா? இயல்பாக, சோப்புக்கட்டியை எடுத்து, குழந்தையைத் தொட வைத்தேன். ‘இது கெட்டியா இருக்கு, பாத்தியா? Solid!’ பிறகு நீரில் அவன் கையை அளையவிட்டு, ஓசை எழுப்பி, ‘இது Liquid. எப்படிச் சத்தம் கேக்கறது, பாரு!’ பின்பு, கையை என் மூக்கின்கீழ் கொண்டுவந்து, ‘இது Gas. ஹை! காத்து மாதிரி இருக்குடா!’ என்று ஆரம்பித்தேன். வீட்டில் குழந்தை முதன்முதலாகக் குளிக்கும் அழகைப் பார்க்க வெளியே நின்றிருந்த என் குடும்பத்தினர் பெரிதாகச் சிரித்தார்கள், “இப்போதுமா physics?” என்று. நான் அயரவில்லை. அதற்குப் புரிகிறதோ, இல்லையோ, எனக்குப் பொழுது போயிற்று. நாலைந்து நாட்கள் அதே பாடம்தான். கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற சிசுவிடம் பேசுவது முட்டாள்தனமோ என்று தோன்ற, அடுத்த நாள் எதுவும் பேசாது, நீரை மொள்ள ஆரம்பித்தேன். குழந்தையின் தோள் உயர உயர எழுந்தது, ‘இன்று ஏன் என் கையை எதன்மேலும் வைக்கவில்லை?’ என்று கேட்பதுபோல். அனைவரையும் கூவி அழைத்து, “என்னைக் கேலி செய்தீர்களே! இப்போது பாருங்கள்!” என்று என் வெற்றியைக் காட்டினேன். கண் மூடி இருந்தால் என்ன! தொடுதல், கேட்டல் இரண்டும்தான் இருக்கின்றனவே! மூன்று மாதக் குழந்தையிடம், “குருவி கீச்சுக் கீச்சுனு கத்தறதே! கேக்கறதா?” என்று நாம் எடுத்துக் கொடுத்தால், உன்னித்துக் கவனிக்கும். ஸ்கூட்டர், ஆகாய விமானம், ரயில் போன்ற வாகன ஒலிகளையும் இப்போது அறிமுகப்படுத்தலாம். ‘வயதானால், தானே தெரிந்துவிட்டுப் போகிறது! இதையெல்லாமா சொல்லிக் கொடுப்பார்கள்!’ என்கிறீர்களா? குழந்தை தானே தெரிந்து கொள்வதற்குமுன் நாம் சொல்லிக்கொடுத்தால், அதன் செவிப்புலன் கூர்மையாகி, ஆர்வம் அதிகரிக்கும். இதனால்தான் பிறந்த குழந்தைகளிடம் பேசும்போது, நீட்டி முழக்கி, நாமே குழந்தைபோலப் பேசுகிறோம். சிதம்பரத்தில் இசை நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவரது ஒன்றரை வயதுக் குழந்தை பேசவேயில்லை என்பதைக் கவனித்து, ‘நீ குழந்தையுடன் பேசமாட்டாயா?’ என்று அவருடைய இளம் மனைவியிடம் கேட்க, ‘அவள் பேசினால், நானும் பேசுவேன்,’ என்ற பதில் வந்தது. நான் குழந்தையிடம் என் பாடத்தை ஆரம்பித்தேன். “நேத்திக்கு கோயிலுக்குப் போனியா? அப்பாகூட போனியா? ஸ்கூட்டரிலே போனியா? ஸ்கூட்டர் எப்படிப் போச்சும்மா? டுர்..!‘வாக்கியங்கள் சிறியதாக இருந்தால் நலம். குழந்தை மகிழ்ந்து சிரித்து, ’டுர்..!’ என்றாள். அதுவரைக்கும் பேசாதவள், அன்று தூக்கத்தில் பாடினாள் என்று மகிழ்ந்தார்கள் பெற்றோர். இரு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தால், அதில் சிறு குழந்தையின் கவனம் போகாது. அசையாமல் கிடக்கும். அதுவே, தன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்கள் என்று தெரியும்போது, புரிகிறதோ, இல்லையோ, மனமகிழ்ச்சியைக் காட்ட, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும். குழந்தை மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார், ‘ஒங்களைமாதிரி பாட்டிகிட்டே வளர்ற பிள்ளைங்கதான் நல்லாப் பேசும்!’ வளவளவென்று பேசவேண்டாம். ஆனால், மொழித் திறனையாவது வளர்த்து வைப்போமே! எட்டு வயதுக் குழந்தைகள் நிறைய பேசும். சற்று கண்டித்து, ‘வாயைவிட கண்ணையும், காதையும் அதிகமாகப் பயன்படுத்து,’ என்று இப்பருவத்தில் அறிவுரை கூறலாம். எதையும் கூர்ந்து கவனித்தல் விஞ்ஞானத்துக்கு இன்றியமையாத திறன். பார்ப்பவைகளை எல்லாம் விளக்குங்கள். வீட்டுக்கு வெளியே நடக்கும்போது, “கீ..ழே புல்லு – பச்சைக் கலர்.., மே..லே வானம். அது நீ..லம். பச்சை, நீலம். சூரியன் பாத்தியா? கண்ணைக் கூசலே?” இப்படி விளையாட்டுப்போல், நமக்கு எளிதான, ஆனால் குழந்தை அறிந்திராதவற்றை ஒவ்வொன்றாக விவரித்தால், குழந்தை மகிழும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனுடன், வளர்ப்பவர்கள்மீது கொண்டுள்ள நெருக்கமும் அதிகமாகும். இதேபோல், மரத்தாலான சாமான்கள், உலோகப்பொருட்கள், துணி போன்றவைகளைத் தொட்டுத் தடவி, தட்டி ஓசையெழுப்பினால், சருமத்தின் ஆர்வமும் தூண்டப்படாதா! சூடான, கூரான, அல்லது மின்சாரம் கசியும் பொருளைத் தொட்டு வைத்தால் என்ன ஆவது என்ற பதைப்புடன், ‘ஒண்ணையும் தொட்டு. விஷமம் பண்ணக்கூடாது!’ என்று மிரட்டுகிறாள் தாய். (‘தாய்’ என்று இங்கே குறிப்பிடுவது பொதுப்படையாகத்தான்). எதையும் அறியவேண்டும் என்ற ஒரு குழந்தையின் இயல்பான ஆர்வத்துக்குத் தன்னையும் அறியாமல் முட்டுக்கட்டை போடுகிறாள். மாறாக, கைபொறுக்கும் சூட்டில் ஒருவயதுக் குழந்தையின் விரல் நுனியை வைத்து, ‘ஊ..!’ என்று சொல்லிக் கொடுத்தால், வலி ஏற்படுத்தும் அனுபவம் இது என்று புரிந்துகொள்ளும். கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால், ‘ஊ..!’ என்று வலியைப் புலப்படுத்தும். எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அமைய, ‘இது எப்படிப்பா?’ என்று ஒரு குழந்தை கேட்கும்போது, ‘அம்மாவைக் கேளு,’ என்று அப்பா பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுகிறார். அம்மாவோ, ‘ஒனக்குப் பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே பொழுது சாஞ்சுடும்!’ என்று ஏளனத்தில் இறங்குகிறாள். ஏதோ, நம்மையும் மதித்துக் கேட்கிறானே என்று, நமக்குத் தெரிந்த வகையில் எளிமையாகச் சொல்லிக் கொடுத்தாலே போதும். பெரிய விளக்கம் எலாம் தேவையில்லை. எப்படியும், ஒரு குழந்தைக்குத் தெரிவதைவிட நிறையத்தான் தெரிந்திருக்கும் நமக்கு. எதையும் அறியும் ஆர்வத்தைத் தூண்ட இது போதும். வயதானால், தானே ஆசிரியர்களைக் கேட்டுத் தம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள். ஆசிரியர்களும் பெற்றோர் மாதிரித்தானா! கவலையை விடுங்கள். வாசகசாலைகள் இருக்கவே இருக்கின்றன! நம் அறியாமையால், அல்லது அலட்சியத்தால் இயற்கையாகவே அமைந்த ஐம்புலன்களின் ஆற்றல்களை நாம் கணிசமாகக் குறைத்து அல்லது அழித்து விடுகிறோம். இளமையிலேயே ஆர்வம் குன்றிவிட்டதால், பள்ளிப்பருவம் வந்தாலும், இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இருப்பதில்லை. ‘என் தாய் முட்டாள்!’ என்று சில மாணவிகள் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு மனம் நொந்திருந்தால், அப்படிக் கூறுவார்கள்! உங்களைவிட அனுபவசாலியாக உங்கள் மகனோ, மகளோ ஆகும்போது, தாம் கற்று அறிந்ததை ஆர்வத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். முற்பகல் செய்யின்… Tags: விஞ்ஞானி, ஆர்வம், ஐம்புலன்கள் 7.வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப்போவது கேள்வி: நான் பள்ளிப்படிப்புடன் என் கல்வியை நிறுத்திவிட்டேன். அது தெரிந்தே என் அழகுக்காக என்னைக் காதலித்து மணந்தவர், இப்போது ‘மேலே படி,’ என்று உயிரை வாங்குகிறார். எனக்கு விருப்பமில்லை. முதலிலேயே ஒரு பட்டதாரியைத் தேடிப் பிடித்திருக்க வேண்டியதுதானே? விளக்கம்: பெரும்பான்மையான திருமணங்களில் ஏற்படும் பிரச்னையே இதுதான். எல்லா வேலைகளுக்கும் முன் அனுபவம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் இருவர் இணைந்து குடும்பம் நடத்த மட்டும் கிடையாது. சில வருடங்கள் காதலித்திருந்தாலும், ஒரே வீட்டில், இரவு பகலாக சேர்ந்திருந்தால், பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஒன்றாக வளர்ந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளுக்குள்ளேயே சண்டை பூசல் வருவதில்லையா? அதுபோல்தான். தனக்கு வரப்போகும் மனைவி வாளிப்பான உடலழகுடன், படிப்பு, செல்வம் எல்லாவற்றிலும் சிறந்திருக்க வேண்டும் என்று ஆண் கனவு காண்கிறான். பெண்ணுக்கோ, பெரிய உத்தியோகம், ஆடம்பரமான வாழ்க்கை இதெல்லாம் கொண்ட ஆண்தான் கணவனாக வரவேண்டும் என்ற ஆசை. அழகான பெண் மனைவியாக அமைந்தால், அத்துடன் திருப்தி அடைய முடிவதில்லை. ‘நண்பருடைய மனைவி இன்னும் அதிகமாகப் படித்திருக்கிறாளே! புத்திசாலித்தனமாகப் பல விஷயங்களை விவாதிக்கிறாளே!’ என்ற போட்டி மனப்பான்மை எழுகிறது. தன் கனவுப்படியே பெரிய உத்தியோகஸ்தனை மணந்தவளோ, அவருக்குத் தன்னைக் கவனிக்கவோ, கொஞ்சவோ நேரமே இல்லையே என்று ஏங்கி வாடுகிறாள். ஓயாமல் குறை கூற, அவர் பயந்து, நண்பர்களை அதிகமாக நாடுகிறார். ஆனால் எப்போதும்போல, விளையாட்டு, அரசியல், பெண்கள் என்று கலகலப்பாகப் பேச முடிவதில்லை. ‘பெண்’ என்றாலே மனைவி ஞாபகம் வர, வாயடைத்துப்போகிறது! ‘கலகலப்பான பெண்’ என்று மகிழ்ந்து ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் மௌனச்சாமியான ஒருவன். அவளை மனைவியாக்கிக் கொண்டதும், ‘என்ன இவள், வாய் ஓயாமல் பேசுகிறாளே!’ என்ற அலுப்பு தோன்றும். பொதுவாக, முதலில் ஈர்த்த குணமே பிறகு வெறுப்பை விளைவிக்கும். இதனால், கல்யாணத்துக்குமுன் ஏற்படும் அனுபவங்களை வைத்து, பிறகு நடக்கப்போவதை கணிக்க முடியாது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சிப்பார்கள். இதைவிட ஒரு நாயைப் பூனையாக்குவது எளிது. இந்த முயற்சி ஒரு மாரத்தான் பந்தயம் போலத்தான். முதலில் மெதுவாக ஆரம்பிக்கும். சிறிது பொறுத்து, தன் பலமும், ’எதிரி’யின் பலகீனமும் புரிந்துபோக, வேகம் அதிகரிக்கும். எப்படியும் மாற்ற முடியாது என்று புரிந்தவுடன் ஏமாற்றம் எழ, அதுவே ஆத்திரமாக மாறுகிறது. மிகச் சிலரே தமக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ‘எனக்குப் பிடித்தவைகளில் (இசை, நாட்டியம், சித்திரம் வரைதல், இலக்கியம் – எவ்வளவு இல்லை!) அவருக்கும் நாட்டம் இருக்க வேண்டும். என்னை ஊக்குவித்து, பக்கபலமாக இருப்பவரையே நான் மணக்க விரும்புகிறேன்’ என்று கூறும் பெண் புத்திசாலி. தான் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவை என்று புரிந்து வைத்திருக்கிறாள். (இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே துறையில் இருக்கும் இருவருக்குமிடையே போட்டி எழாதா? அடுத்தவரின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாமல், விட்டுக்கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள்?) ‘கூட்டுக் குடும்பத்தில் என் பெற்றோரை அன்பாகப் பராமரிக்கும் பெண்தான் வேண்டும். மற்ற தகுதிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று நிபந்தனை விதிக்கும் ஆண் அபூர்வம். இவர்களைப் போன்றவர்களுக்குத் தெரியும், எப்படிப்பட்ட துணையால் தங்களது வாழ்க்கையில் அதிகமான பிரச்னைகள் எழாது என்று. பரஸ்பர மதிப்புடன், ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்கள். ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே உள்ள உடலமைப்பின் வித்தியாசத்தால் ஆரம்பத்தில் ஈர்ப்பு ஏற்படலாம். ஆனால், இருவருடைய உளவியலும், உணர்ச்சிபூர்வமான நடத்தைகளும் வெவ்வேறு. அது புரியாததால்தான் கோபமோ, பயமோ ஏற்படுகிறது. நண்பர்களுக்கிடையே புரிந்துணர்வும், அதனால் மற்றவரை ஏற்பதும் எளிது. தம்பதிகளுக்கு ஏனோ இது கைவரவில்லை. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயலுகிறார்கள். ஒருவரைப் புரிந்துகொள்ள இயலாதபோது, அவரை ஏற்பது மட்டும் இயலுமா? திருமணமான புதிதில் இருந்ததுபோல் யாரும் இருப்பதில்லை, பத்து, இருபது வருடங்களுக்குப்பின். இதனால் ஏமாற்றம் அடையாது, ‘தானும் ஒன்றும் அப்படியே நிலையாக இருந்து விடவில்லையே!’ என்ற ஞானோதயம் பெறவேண்டும். உங்கள் கணவர் பூதம் மாதிரி இருந்தாலும், அவரை நீங்கள் ஆணழகர் என்று நினைத்தால், அதுதான் உண்மை அன்பு. நான் பார்த்த தம்பதிகளிலேயே மிக ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருந்தவர்கள் என் பள்ளித்தோழியின் பெற்றோர். தந்தை உயரமாக இருப்பார். பெரிய உத்தியோகம், நல்ல அழகர். தாய்க்குக் கூனல், முகம் சற்று கோணலாக இருக்கும். அடிக்கடி சமையலறைக்குள் நுழைந்து, மனைவியின் தோளைக் கட்டிக்கொண்டு ஏதாவது கேட்பார். தான் செய்வது எல்லாவற்றையும் அவளைக் கலந்து ஆலோசிப்பார். பிறருக்காக ஆடும் நாடகமாகத் தெரியவில்லை. அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து நடந்ததாலோ, என்னவோ, மனைவியைக் கண்டால் உயிர் அவருக்கு. அறுபது வருடங்களுக்கு மேலாகியும், இவர்கள் என் மனதில் நிற்கிறார்கள். Tags: போட்டி, தம்பதி 8.நேர்மையும் வாய்மையும் கேள்வி: என் தந்தை என்னைப்பற்றி (வயது 17) புகழ்ச்சியாகப் பிறரிடம் கூறுகிறார். அது எல்லாமே உண்மையாக இருக்காது என்று தெரிந்தும், அவர்களும் ஏன் அதை நம்புவதுபோல் நடிக்கிறார்கள்? பதில்: உங்கள் தந்தைக்குத் தன் குடும்பத்தைப்பற்றி எல்லாரும் நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற ஆதங்கம். அனேகமாக அவரது நண்பர்களும் இப்படி இருப்பதால், மற்றவருக்குத் தலைகுனிவு ஏற்படாதவகையில், அவர் கூறும் பொய்யைப் பெரிதுபடுத்துவதில்லை. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தாயோ, தந்தையோ இப்படி ஒன்றைப் பத்தாக்கிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, ‘நம் பெற்றோர் சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும்,’ என்று பிள்ளைகள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். பொய் பேசுவது தவறில்லை என்ற குணம் பெரியவர்களிடமிருந்து படிந்துவிடும். பெற்றோர் எவ்வழி, பிள்ளைகள் அவ்வழி. குழந்தைகள் உண்மையே பேசவேண்டும், நேர்மை தவறாது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டாமா? பெற்றோரை நம்ப முடியாதவர்கள் அவர்களிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள மட்டும் வருவார்களா? சில பெற்றோர், ‘நான் உன் வயதாக இருந்தபோது..,’ என்று அளப்பார்கள், ஏதோ தாம் பெரிய ஹீரோவாக இருந்ததுபோல். பிள்ளைகளுக்கு அறிவும், உற்சாகமும் ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு. ‘அப்பாவோட கட்டுக்கதையையெல்லாம் யார் நம்புவார்கள்! சும்மா எங்களை ஏமாத்தற வேலை! மரியாதைக்காகக் கேட்டுவைப்போம்,’ என்று என் மாணவர்கள் என்னிடம் சொன்னபோது, எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. (நான் முதன்முதலில் அவர்கள் வகுப்புக்குள் நுழைந்ததும், மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயத்துடன் என்னைப் பார்த்தார்கள். அது எனக்குப் புதிய அனுபவம். நான் சீன மாணவிகளுக்குத்தான் பெரும்பாலும் ஆசிரியையாக இருந்து வந்திருந்தேன். அவர்களது பயத்தைப்போக்க, நான் நிறைய பேசினேன். மூன்றாம் நாள், ‘நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்!’ என்றான் ஒரு மாணவன். அது பாராட்டுதல்போல் ஒலிக்கவில்லை. அவனுடைய கணிப்பு. அவ்வளவுதான். அவன் பிற ஆசிரியைகளின் வகுப்பில் வாயே திறக்கமாட்டானாம். அதன்பின், தாமே வந்து, வந்து, தங்களைப் பாதிக்கும் விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். நான் படித்து அறிந்ததைவிட, என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளிடம் கற்றது அதிகம். கலிகாலத்தில் நல்லவர்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாக, பொய்யும் பித்தலாட்டமும் செய்பவர்கள்தாமே செல்வந்தர்களாக இருக்கிறார்கள்? பிள்ளைகளை எதற்கு நல்லவர்களாக நடக்கப் பழக்க வேண்டும் என்று சில பெற்றோர் கேட்க நினைப்பது புரிகிறது. போலியாக வாழ்பவனுக்குள் எப்பவும் ஒரு பயம், நிம்மதியின்மை இருக்கும் – தன் செல்வம், பதவி, அதிகாரம், ஏதோ ஒன்று கைவிட்டுப் போய்விடுமோ என்று. Being good is its own reward. இருப்பினும், சிறு குழந்தைகளிடம் அவ்வப்போது பொய் சொல்லாதவர் யார்! நன்றாக அலங்கரித்துக்கொண்டு முக்கியமான ஓர் இடத்துக்குப் புறப்படுகையில், ‘நானும் வருவேன்,’ என்று அழும் குழந்தையிடம், ‘டாக்டரைப் பார்க்கப் போகிறேன்,’ என்று சொல்கிறாள் தாய். ‘நாளைக்கு உன்னையும் அழைத்துக்கொண்டு போகிறேன்,’ என்று சமாதானமும் சொல் கிறாள். எப்படியும், சிறிது நேரத்தில் குழந்தை அதை மறந்து விளையாட ஆரம்பித்துவிடும். இப்படிப் பொய் சொல்வதால் எந்த தீங்கும் விளைவதில்லை என்றே தோன்றுகிறது. ஏதாவது விஷமம் செய்துவிட்டு, குற்ற உணர்ச்சி பெருக, பெற்றோரிடம் வருவான் குழந்தை. ’தப்பு என்று புரிந்து, பயமும் உண்டானபின், தண்டனை எதற்கு! ‘போனால் போகிறது! தெரியாமல் செய்துட்டே!’ என்று அனுதாபம் காட்டினால், மனத்தளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் பெற்றோரை நாடத் தயங்கமாட்டார்கள். எந்த வயதாக இருந்தாலும், பிள்ளைகள் செய்த செய்கையைப் பிறர்முன் அம்பலப்படுத்துவது கூடாது. அது அவர்களை அவமானப்படுத்துவதாகும். தனியாக அழைத்து, கண்டனம் இல்லாமல், அவர்கள் செய்தது ஏன் தவறு என்று சொல்லலாம். சிறு, சிறு குற்றங்களையும் உடனுக்குடன் கண்டித்து, தண்டிக்க வேண்டும் என்று நினைத்து நடப்பார்கள் சில பெற்றோர். பெரிய குற்றங்கள் செய்யாதிருக்கும் வழியாம்! தாம் எதற்காகத் தண்டிக்கப்படுகிறோம் என்பதே புரியாத வயதில், ‘அப்பா அம்மாவிடம் சொன்னால்தானே அடி விழப் போகிறது!’ என்று.எதையும் மறைக்கப் பார்ப்பார்கள் சிறுவர்கள்.’ ஆறு வயதுக்குமேல் ஆன குழந்தைகளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். வாரம் பூராவும் நன்றாகப் படித்தால், ஞாயிறன்று கடற்கரைக்கோ, மிருகக்காட்சி சாலைக்கோ அழைத்துப்போவதாக ஆசை காட்டியிருந்தீர்களா? அதன்படி நடந்தால்தான், நீங்கள் அடுத்தமுறை ஏதாவது சொன்னால் நம்பத் தோன்றும். ஆனால், அன்று பேய்மழை என்று வைத்துக்கொள்வோம். காரணத்தை விளக்கி, ஒத்திப் போடுங்கள். இது சிறுவர்களுக்கும், அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை. ஒரு தாய், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பியதும், அவனுடைய உடைமைகளைச் சோதனையிட்டு, அங்கு தட்டுப்படும் சிகரெட் டப்பாக்களை தூக்கி எறிவதாகப் பெருமையுடன் என்னிடம் சொல்லிக்கொண்டாள். ‘வாராவாரம் இப்படி நடக்கும். அவனும் என்னை எதுவும் கேட்கமாட்டான். நானும் ஒன்றும் சொல்ல மாட்டேன்!’ இப்படிப்பட்ட தாயை மகனால் மதிக்க முடியுமா என்று என் யோசனை போயிற்று. பெற்றோரின் நேரிடையான, அல்லது இத்தாய் செய்ததுபோல் மறைமுகமான எதிர்ப்பே தீய பழக்கங்கள் தொடர உந்துதலாக அமைகிறது. பெரியவர்கள் எதிர்த்தால், தாம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெருமை பிள்ளைகளுக்கு எழும். தொடர்ந்து அதையே செய்வார்கள். இன்னொரு பிள்ளை, ‘அம்மா! நான் சிகரெட் பிடிக்கிறேன்!’ என்று கூறினானாம், மனசாட்சியின் தொல்லை தாங்காது. தான் செய்வது தவறு என்ற உறுத்தலால்தானே அன்பான தாயிடம் அதைச் சொல்கிறான்! இது புரிந்து, நீண்ட பிரசங்கம் செய்யாது, ‘சரி. ஆனா, போதைப்பழக்கம் வேண்டாம்! பத்திரம்!’ என்றபடி அவள் நகர்ந்துவிட்டாள். பல ஆண்டுகள் கழித்து, ‘நீங்க ரொம்ப மோசம்மா. அன்னிக்கு சிகரெட் பிடிக்கிறதா நான் சொன்னபோது நீங்க திட்டல. எனக்கு சுவாரசியமே போயிடுச்சு. விட்டுட்டேன்!’ என்றான் மகன் குறும்புச் சிரிப்புடன்! பதின்ம வயதினர் சிறுவர்களிலும் சேர்த்தியில்லை, வளர்ந்த பெரியவர்களும் இல்லை. பொருளாதார சுதந்திரம் கிடையாதுதான். இருந்தாலும், தம் உடலில் ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், ‘நான் இன்னும் சிறுகுழந்தை இல்லை!’ என்று முரண்டு பிடிப்பார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் கொடுத்து, தீய பழக்கங்கள், கெட்ட நண்பர்கள் ஆகியவற்றால் விளையக்கூடும் அபாயத்தை, வருமுன் காப்பது போன்று சொல்லித் தருவது நல்லது. எந்தப் பழக்கமும் முற்றியபின் மாற்றுவது கடினம். நீங்கள் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சரியாகப் பேசி, விளையாடிச் செய்திருந்தால், எதிர்த்துப் பேசாமல் கேட்டுக்கொள்வார்கள். பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலைத்திருக்கும். Tags: விஷமம், தண்டனை, விளையாட்டு 9.ஆண்களுடன் போட்டியா? கேள்வி: ‘நீ ஒன் தம்பியோட போட்டி போடக்கூடாது. என்ன இருந்தாலும், அவன் ஆம்பளை!’ என் தாய் அடிக்கடி இப்படிக் கூறுகிறார். இது நியாயமாகப் படுகிறதா? பதில்: நிச்சயம் நியாயம் இல்லை. பருவப்பெண் இருட்டில் தனியாக வெளியே போனால், ஏதாவது அபாயம் விளையலாம் என்று அஞ்சினால், பெண்ணுக்குப் புரியும் வகையில் தாய் அதை விளக்க வேண்டும். நெடுங்காலமாகவே பெண்கள் ஆண்களுக்கு அடங்கினவர்களாகவே வாழ்ந்துவிட்டார்கள். இப்போது தங்களுடைய உயரிய நிலையில் மாற்றம் வந்துவிடுமோ என்று ஆண்களுக்குக் கலக்கம் உண்டாவது இயற்கைதான். ஒரு காலத்தில், ‘அது எப்படி பிள்ளை பெற பெண்ணால் மட்டுமே முடிகிறது!’ என்று அதிசயித்த ஆண்கள், அவளுக்கு ஏதோ மாந்திரிக சக்தி இருக்கிறது என்று நம்பினார்களாம்! பல ஆண்கள் அவளுக்குக் குற்றேவல் புரிந்து, பிறக்கும் குழந்தைகள் யாருடையது என்று ஆராயாது, பேதமின்றி வளர்த்தார்களாம். உண்மை நிலவரம் புரிந்ததும், ஒரே எரிச்சல் – தாம் எவ்வளவு முட்டாள்களாக, அடங்கிக் கிடந்திருக்கிறோம் என்று. பெண்ணை அடக்குவதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. குகையில் பலர் சேர்ந்து வாழ்கையில், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்தால், அந்த ரத்த வாடையைப் பிடித்துக்கொண்டு காட்டு விலங்குகள் வந்து, எல்லாரையும் வேட்டையாடும் அபாயம் உண்டே! ஆகவே, அவள் அத்தருணங்களில் தனித்து இருக்க நேர்ந்தது. அதுவே பின்னர், வீட்டு விலக்கு, தீட்டு, சுத்தமில்லை என்ற ’பழி’களை அவள் சுமக்கும்படி ஆகிவிட்டது. இயற்கையாக நிகழும் ஒன்று என்னமோ அவள் குற்றம் என்பதுபோல் சிலர் நடத்தத் தலைப்பட்டார்கள். இப்படி, சிறுகச் சிறுக பெண்ணின் நிலை தாழ்த்தப்பட்டுவிட்டது. ஒரு பெண் ஆண்குழந்தையை ஈன்றெடுத்தால், மிகுந்த பெருமிதம் அடைவாள். அவனுக்கு நிறைய சலுகைகள் உண்டு. ‘பெண்’ என்றால் சற்றே தாழ்ந்தவள் என்ற மனநிலைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கும் தாய், தான் பெற்ற பெண் குழந்தைக்கும் அதே மனநிலையைப் போதிக்கிறாள். ‘ஆண் எது செய்தாலும் அதைப் பொறுத்துப்போவது பெண்ணின் கடமை!’ என்று வளர்க்கப்படும்போது, எந்தவிதமான வதையையும் ஏற்கிறாள் பெண். எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஒரு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்தவள். சிறு வயதிலிருந்தே பல ஆண்களினால் பாலியல் வதைக்கு ஆளானாள். அது வதை என்றே அவள் உணரவில்லை என்பதுதான் சோகம். ‘எல்லாரும் என்னைக் கொஞ்சுகிறார்கள்!’ என்று பெருமைப்பட்டுக் கொள்வாள், என்னிடம். கல்வியால் சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பெற்ற ஒரு பெண், ‘எனக்கு மட்டும் ஏன் தாழ்ந்த நிலை?’ என்று எதிர்க்கும்போது, ஆண்கள் அதிருப்தியுடன் முணுமுணுக்கலாம். ஆனால் எதிர்க்க மாட்டார்கள். அதைச் செய்வதற்குத்தான் பெண்கள் இருக்கிறர்களே! எல்லாப் பெண்களுமாகச் சேர்ந்து, தங்களிடமிருந்த மாறுபட்டிருக்கும் பெண்ணை ‘வழிக்கு’க் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ’பிறருடன் ஒத்துப்போக வேண்டும்!’ என்று மிரட்டுகிறார்கள், இல்லை, கெஞ்சுகிறார்கள். புறம் பேசுவது, பழி சுமத்துவது, எதிரியைப்போல் பாவிப்பது என்று பல வழிகளைக் கையாண்டு, அவளை மாற்ற முயற்சிக்கிறார்கள். ‘எல்லாம் படிப்பால் வருவது! பெண்களைப் படிக்க வைத்தால் இப்படித்தான்!’ என்று அவள் பெற்ற கல்வியறிவையே தூற்றுகிறார்கள். படிப்பறிவு இருந்தாலும், நிறைய பெண்களுக்கு இம்மாதிரியானவர்களை எதிர்த்து நீண்ட காலம் போராடும் மனோபலம் கிடையாது. தாமும் அவர்களுடன் சேர்ந்து, பிற பெண்களைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். ஆண்களோ, தமக்குப் போட்டியாகப் பெண்கள் வந்துவிட்டால், தாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்குமே என்று, ‘நீங்க திறமையோட இவ்வளவு செய்யறீங்களா! இனிமே நாங்கதான் புடவை கட்டிட்டு, சமைக்கப் போகணும்!’ என்று பெண்களைப் புகழ்வதுபோல, தம் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள். மலேசியாவில், கணவன் மனைவியை அடிப்பதே பல இந்தியப் பெண்கள் விவாகரத்து கோருவதற்குக் காரணமாக இருக்கிறது என்று புள்ளி விவரங்களுடன் நான் எழுதியபோது, ‘ஒரு வேளை, நீங்க ஒங்க கணவரை அடிக்கிறீங்களோ?’ என்று என்னிடம் கேலியாகக் கேட்டவர்கள் உண்டு. நான் சிரித்தேன், கேட்டவரின் மடமையை எண்ணிப் பரிதாபப்பட்டு. தம்பதிகளில் யாராவது ஒருவர் இன்னொருவரை அடித்தால்தான் குடும்பம் நடக்குமா, என்ன? கொஞ்சம் நட்பு, கொஞ்சம் வாய்ச்சண்டை என்றுதானே எல்லாக் குடும்பமும் இருக்கும்! (‘எங்களுக்குள்ளே சண்டையே வராது!’ என்று பெருமையுடன் சொல்பவர்கள் – ஒன்று, பொய் சொல்கிறார்கள், இல்லை, யாராவது ஒருவர் அமைதியை நாடி, விட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார், உள்ளுக்குள் புழுங்கியபடி). ஒரு தாய், தனது மகன், மகள் இருவரையும் பாரபட்சமின்றி நடத்தி, வீட்டு வேலையைச் சமமாகப் பிரித்துக் கொடுத்து, தவறு செய்பவர் யாராக இருந்தாலும் கண்டித்து நடத்தினால், ‘தான் அபூர்வமான பிறவி!’ என்ற தலைக்கனம் அந்த மகனுக்கு வராது. ‘விளையாட்டு’ என்றெண்ணி தங்கையை ஓயாது மட்டம் தட்டும் சிறுவனிடம், ‘நீ இப்படி நடத்தினால், எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று அவள் ஏற்பாள். நாளை கல்யாணமானதும், கணவனும் அவளை இப்படி நடத்தும்போது, உணர்ச்சி பூர்வமான வதையை அவள் ஏன் ஏற்கிறாள் என்று நீ வருத்தப்பட நேரிடும்!’ என்று விளக்குங்கள். அதிர்ச்சி ஏற்பட, தன்னை மாற்றிக்கொள்வான். பிற பெண்களையும் மதிக்கக் கற்பான். மட்டம் தட்டியோ, பயமுறுத்தப்பட்டோ ஒரு பெண் வளர்க்கப்பட்டால், தன்னம்பிக்கை அற்றுப்போய்விடுமே! அவளுடைய முழுத் திறமைகள் எப்படி வெளிவரும்? 10.பதின்ம வயதினர் கேள்வி: என் மகளைச் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக, அவள் விருப்பப்படியெல்லாம் நடக்கப் பழக்கிவிட்டேன். ஆனால், பதினைந்து வயதிலும் தன் விருப்பப்படிதான் நடப்பேன், நான் எதுவும் கேட்கக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள். டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது? விளக்கம்: பால்ய விவாகமும், தந்தையின் தொழிலையே கற்று, மகன் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டபோதும், ‘பருவ வயது 13 - 18’ என்றெல்லாம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் குழந்தைகளாகக் கருதப்பட்டார்கள். (ஆனால், அந்தந்த வயதுக்கு மீறிய பொறுப்புகளும் அவர்கள்மீது திணிக்கப்பட்டன). சுமார் 65 ஆண்டுகளாகத்தான் பதின்ம வயதினர் குழந்தைகளும் இல்லை முதிர்ச்சியுற்ற பெரியவர்களும் இல்லை, இவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய உளவியலைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வயதினர், ‘நியாயம்’, ‘அநியாயம்’ என்ற முறையில்தான் எந்த பிரச்னையையும் அணுகுவர். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். உடலிலும், மனதிலும் மாற்றம். ஆனால், இதைச் சரிவர விளக்குவார் யாருமில்லை. ‘இதையெல்லாமா சொல்லித் தருவார்கள்!’ என்று கூசியபடி விளக்கினால், இந்த விஷயத்தில் வேண்டாத ஆர்வம்தான் வரும். அபாயமான விளைவுகளை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடத் தூண்டும் துணிச்சலும் இந்தப் பருவத்தினருக்கு இயற்கையிலேயே எழுகிறது. இதையெல்லாம் புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும் ஒரு பொருட்டாக மதித்துப் பெற்றோர் நடக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, யாராவது வீட்டில் இருக்க வேண்டுவது அவசியம். எப்போதாவது வெளியில் போகவேண்டிய அவசியம் நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு – எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், சாப்பிட என்ன, எங்கே வைத்திருக்கிறீர்கள் – இப்படி. இதைப் படிக்கும்போது, பெற்றோர் தம் கூடவே இருப்பதுபோல உணர்வார்கள் குழந்தைகள். ‘என் மகள் (வயது 17) வெளியே போகும்போது, நான் கேட்காவிட்டாலும், போகுமிடத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போகிறாள். அவளுடைய சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்து வைக்கிறாள்!’ என்று என்னிடம் கூறி அதிசயப்பட்டாள் என்னுடன் வேலை பார்த்த ஒரு மாது. என்னைவிட ஏழு வயது பெரியவள். இந்த தாய், மகள் சிறுமியாக இருந்தபோது, இதேபோன்ற கரிசனத்தை (நான் சீக்கிரமே திரும்பி விடுவேன், அனாவசியமாக கவலைப்படக்கூடாது), மரியாதையை அவளுக்கு வழங்கியிருக்கிறாள் என்று ஊகித்துச் சொன்னேன். தான் பெற்றதைத் திருப்பி அளிக்கிறாள் பெண். இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது? பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் நண்பர்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். பண்டிகை நாட்களின்போது, நண்பர்களை வீட்டுக்கு அழைக்கச் சொல்லுங்கள். ஒரு சிலர், உங்கள் குடும்பத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் மரியாதை, தைரியம், ஒழுக்கம் போன்ற சில கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். அவர்களைப்பற்றிப் பிறகு பேசுங்கள். ஆத்திரமின்றி, நட்புணர்வோடு. நாம் கொண்டிருக்கும் அக்கறை குழந்தைகளுக்குப் புரியும். உதாரணமாக, ஒரு பெண் பதினைந்து வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்கிறாள். அவளுடன் ஊர்சுற்றுவதில் ஒத்துப்போகாத தோழியை ‘பழைய காலம்! அம்மாவின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து போகிறவள்!’ என்று பலவாறாகப் பழிக்கிறாள். திரும்பத் திரும்ப இப்படியே செய்தால், எவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாள். அவள் நினைத்தபடியே, பெண்ணும் அம்மாவுடன் சண்டைக்குப் போகிறாள், ‘என் வயதொத்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் சந்தோஷமா இருந்தா ஒங்களுக்குப் பொறுக்காதே! என் சிநேகிதிகளோட அம்மா இவ்வளவு மோசம் இல்லே!’ என்று. தாய் தானும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினால், காரியம் கெட்டுவிடும். ஏன் தெரியுமா? பதின்ம வயதுப் பையனாக இருந்தால், முன்பின் யோசியாமல், ஏதோ உணர்ச்சிவசத்தில் தப்பு செய்கிறான். வயது வந்தவர்களோ, நன்றாக யோசித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நிறையப் புகழ்ந்து, அவளை வசப்படுத்தப் பார்ப்பார்கள். பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு உடல் வளர்ந்திருக்கிற அளவுக்கு உலக விவரம் புரிவதில்லை. மனதளவில் அவள் குழந்தைதான். யாராவது, ‘ஒன்னைப் பாத்தா சின்னப்பொண்ணா தெரியல. என்னமா வளர்ந்திருக்கே! எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே! புத்திசாலி!’ என்றெல்லாம் புகழும்போது, மயங்கிவிடுகிறாள். (எத்தனை வயதானாலும், நம்மை முகத்துக்கு நேர் புகழ்கிறவர்கள் ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்துத்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படி யாராவது புகழ்ந்தால், ‘நன்றி,’ என்றுவிட்டு, போய்க்கொண்டே இருக்க வேண்டும். பத்து வயதிலேயே உங்கள் குழந்தைக்கு இதைச் சொல்லிவைங்கள். அதிகம் ஏமாற மாட்டார்கள்). இப்படி, உலகத்தின் நடப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், பெண் யோசிக்க ஆரம்பிக்கிறாள். எப்போதும் நம் நன்மையைத்தான் கோருவாள் தாய் என்ற நம்பிக்கையுடன், ‘ஓ! அதான் என் ஃப்ரெண்ட் என்னைப் பாத்து பொறாமைப்படுகிறாளா!’ என்று தெளிந்து, எந்தக் குழப்பத்திலும் சிக்காமல் தப்புகிறாள். ஆம், ‘சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடப்பவர்கள் எப்போதும், தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். எது சரி, எது தவறு என்று விளக்க ஒரு பெண்ணோ, பிள்ளையோ தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டாம். உங்களுடன் தனியாகப் பிரயாணம் செய்யும்போதோ, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போதோ, பொதுவாக இந்த வயதினருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும், அவைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லுங்கள். உதாரணமாக, சிறு வயதிலிருந்தே தாயிடம் அனுமதி கேட்டு விளையாடப் போகும் வழக்கமுடைய பெண், ‘இருட்டுவதற்குள் வர வேண்டும்,’ என்று தாய் சொன்னபடி நடந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து வயதிலும், ‘என் சிநேகிதி வீட்டில் ஒரு பார்ட்டி. டீன் ஏஜ் பையன்களும் வருவார்கள். நான் போகட்டுமா?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? ‘எங்க காலத்திலே..,’ என்று ஆரம்பித்தால், ‘போர்!’ என்று முகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள். ‘ஆண்பிள்ளை,’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஏதேதோ கற்பனை செய்து, அதிலேயே பயந்து கத்தும் தாய் தன் மகளின் மதிப்பில் தாழ்ந்து விடுகிறாள். ‘வேண்டாம். அப்பா கோபிப்பார்,’ என்னும் தாயோ தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாள். முன்கூறியபடி விளக்கிவிட்டு, ‘ஒனக்கு என்மேல வருத்தம். தெரியும். இன்னும் நாலு வருஷம் போனா, நான் ஒன் நன்மைக்குத்தான் சொன்னேன்னு புரியும்!’ என்று, அவளுடைய உணர்வுக்கு ஆதரவு கொடுத்துப் பேசுங்கள். (‘உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது,’ என்று கூறினால், நம்மை எவ்வளவு எதிர்ப்பவரும் சற்று அடங்கிவிடுவார்). உணர்ச்சிபூர்வமான இந்த வயதினர் தெரியாத்தனமாக ஏதாவது பிழை புரிந்துவிட்டு, ஆத்திரமும், அவமானமும் அடைவது சகஜம். தவறு செய்வது மனித இயல்பு என்று ஒவ்வொரு முறையும் பக்கபலமும், பாதுகாப்பும் அளியுங்கள். முடிந்தால், அந்த வயதில் நீங்கள் அதேபோல் எதையாவது செய்துவிட்டு, அதை மறைக்கப் பார்த்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்குப் பிடித்த தேங்காய் துவையலை கல்லுரலில் அரைக்கச் சொன்னார்கள் என் பாட்டி. அவர்கள் புளி நிறையப் போடுவார்கள். எனக்குப் புளித்தால் பிடிக்காததால், பாதியை எடுத்து, கல்லுரலின் பின் பக்கத்தில், சுவரருகே ஒட்டிவிட்டேன், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி. ‘புளிப்பே இல்லையே! பாதி புளியை ஒளிச்சு வெச்சுட்டியா?’ என்று பாட்டி சந்தேகப்பட்டுக் கேட்டபோது, ‘இல்லவே இல்லை,’ என்று சாதித்து விட்டேன்! பொய்தான். என்ன செய்வது! அது பாட்டிக்கும் புரிந்ததால்தானே சிரித்தார்கள்! என் வயதில் அவர்கள் என்ன செய்தார்களோ! 11.குடும்பத்துள் ஏன் போட்டி? கேள்வி: ‘நீ அப்பா பிள்ளையா, அம்மா பிள்ளையா?’ என்று யார் கேட்டாலும், என் இரண்டு வயது மகள், ‘அப்பா பிள்ளை!’ என்று பளிச்சென்று சொல்கிறாள். அப்படியானால், அம்மா முக்கியமில்லையா? விளக்கம்: அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தையின் அன்பில் போட்டியா, இப்படி ஒரு கேள்வி எழ! இருவருடைய பராமரிப்பு, அன்பு, அறிவுரை – இவை எல்லாமே குழந்தைகளுக்கு அவசியம்தானே! சிறு வயதிலேயே குழந்தை புரிந்து கொள்கிறது, அப்பா தூக்கிக் கொண்டிருந்தால், ‘அப்பா பிள்ளை,’ என்றும், அம்மா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தால், ‘அம்மா பிள்ளை,’ என்றும் சொல்ல வேண்டும் என்று. (அப்போதுதானே தன்னையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்!) அம்மா வேலையாக இருக்கும்போது விஷமம் செய்தால், திட்டுகிறாள். அதனால், அப்பாவின் பக்கம் சாய்கிறது. தானே இன்னும் இரண்டு வயது போனால், அம்மாவைப்போல் தானும் ஒரு பெண்தான் என்று புரிய, அவளைப்போல் நடக்க முயலும். விடுங்கள். குழந்தைகள் செய்வது, சொல்வது எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமாகவா சிந்திக்கிறார்கள்! சிறு வயதில், உடன்பிறந்தாருடன் போட்டி போடுவது பிறவிக்குணம். அது வேறு விஷயம். ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணத்துடன், தம்மையுமறியாது, சிறு வயதிலிருந்தே அக்குணத்தை வளர்க்க முற்படுகிறார்கள் பலரும். ‘தம்பி பாத்தியா, எவ்வளவு சமர்த்தா சாப்பிடறான்! இத்தனைக்கும் ஒன்னைவிடச் சின்னவன்!’ என்று நான்கு வயதான பையனிடம் சொல்லிப் பாருங்கள். அவனால் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. பதிலுக்கு, தம்பியின் முதுகில் ஒன்று வைக்கிறான், ‘நீ ஏன் சமத்தா இருக்கே? என்னை மாதிரி இரேன்!’ என்று! போட்டி மனப்பான்மையால் விளையும் தீமை – பொறாமை. எல்லாக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்காது, பாரபட்சத்துடன் நடத்துவதால் வரும் வினை இது. தான் எப்படியாவது எல்லாரையும்விட, எப்போதும், உயர்த்தியாகவே இருக்க வேண்டும் என்ற வெறியாலும் போட்டி வருகிறது. இதுவே பழக்கமாகப் போய்விட, பெரியவர்களான பின்பும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பொறாமை கொண்டு, அவர்களை வார்த்தைகளால் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்குத் தங்களுடைய வெற்றிகளால் திருப்தி அடைந்துவிட முடிவதில்லை. பிறரைத் தாழ்த்தினால்தான் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி. ஒரு குடும்பத் தலைவன் இப்படி போட்டி மனப்பான்மையோடு வளர்ந்திருந்தால், தன் மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் போட்டி. சிலர் அவனது குணம் புரிந்து விட்டுக்கொடுக்கலாம். அனேகமாக, குடும்பத்தில் பிளவுதான் வரும். எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உத்தியோகத்தில் இருந்தார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியை, ‘முட்டாள்’ என்று பழிப்பார். அவள் பட்டதாரி. முதல் வகுப்பில் தேறியவள். ஆனால், அவரைப்போன்று மூன்று பட்டங்கள் பெற்றிருக்கவில்லை. தான் அவரைவிடத் தாழ்ந்தவள்தான் என்று அவர் எவ்வளவு மட்டம் தட்டியபோதும் பொறுத்துப்போனாள். இம்மாதிரியானவர்களின் தாம்பத்திய உறவு எவ்வளவு லட்சணமாக இருக்கும்! இன்னொரு குடும்பத்தில் மனைவி ஏதோ சிறப்புப் பெற்றிருக்கிறாள். ‘இவன் நம்மைவிட மேலானவன் என்று நினைத்துவிடப் போகிறானே!’ என்று கணவனின் நண்பர்கள் அச்சம் கொண்டு, காரியத்தில் இறங்குவர்: ‘இனிமேல், நீதான் அவள் பெயரை உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும்!’ ‘எப்படித்தான் இப்படி ஒரு மனைவியை பொறுத்துப் போகிறாயோ! இப்படியே விட்டால், உன்னை மதிக்க மாட்டாள், பார்!’ ‘நம் மனைவியைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லையே!’ என்ற பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டால் போயிற்று. இல்லையேல், தாழ்வு மனப்பான்மையுடன் மனைவியை எதிர்த்துக்கொண்டே இருப்பான். கணவனது பக்கபலம் இல்லாது, அவனுடைய எதிர்ப்பையும், ஏளனத்தையும் தாங்க வேண்டியிருந்தால், ஒரு பெண் ஆக்ககரமாக ஏதாவது செய்யவே துணியாது, யோசிக்கும் நிலை வந்துவிடக்கூடும். பல பெண்கள், ‘கல்யாணத்துக்குமுன் நிறைய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது நேரமில்லை,’ என்று சொன்னாலும், உண்மைக் காரணம் அதுவாக இருக்காது. உள்ளுக்குள் புழுங்குவாள். ஆக, கணவன் தான் மனைவியைவிட உயர்வு, அல்லது தாழ்வு என்று நினைப்பதால் குடும்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத விரிசல்தான் உண்டாகும். பேரும், புகழும் கொண்ட ஒருவனிடம், ‘உங்கள் மனைவியின் ஊக்குவிப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், அவன் ஆண். அவனுடைய திறமை, உழைப்பு போன்றவை இயல்பானது என்று கருதப்படுகிறது. என்னை ஒரு வானொலி பேட்டியின்போது, ‘உங்கள் கணவரின் ஒத்துழைப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று கேட்டபோது, ‘நான் இதற்குப் பதில் சொல்ல மாட்டேன். எந்த ஆணையாவது நீங்கள் இப்படிக் கேட்டிருக்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டேன். ‘யாருமே ஊக்குவிக்காம நீங்க இந்த அளவுக்கு மேலே வந்தீங்களா?’ என்று இரைந்தார் பேட்டி எடுத்தவர். (ஒரு பெண்ணின் வெற்றியைக் கண்டு அச்சம் அடைகிறவரோ?) ‘உங்கள் கேள்வியைச் சற்று மாற்றி,’ யார் உங்களை ஊக்குவித்தது?‘என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்,’ என்றேன். பிறர் மகிழ்ச்சியடைவார், பாராட்டுவார் என்று ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால், தொடர்ந்து அதைச் செய்யும் ஆர்வம் குன்றிவிடும். நம் திருப்திக்காக, மனநிறைவுக்காகச் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கிறது. ‘என் மனைவி வாழ்வில் உயர்ந்தால், அது எனக்கும் பெருமைதானே! இதில் என்ன போட்டி!’ என்று ஒருவர் எண்ணி நடந்தால், அக்குடும்பத்தில் பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலவும். அவர்களது குழந்தைகள் பெற்றோரைவிட இன்னும் மேலான நிலைக்குப் போவார்கள். இவர்களுக்கு, ‘அம்மாவா, அப்பாவா?’ என்ற பாகுபாடு, அதனால் விளையும் குழப்பங்கள் இராது. மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கே உரிய பயன்பாடு உண்டு. கண் முக்கியமா, கால் முக்கியமா? எது உயர்வு, எது மட்டம்? இதேபோல், தாய், தந்தை, மகன், மகள் எல்லாரும் குடும்பத்தின் வெவ்வேறு அங்கங்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒவ்வொருவரின் தனித்தன்மையும், பலமும் மற்றவருடையதுடன் இணைந்து, மேலும் வலுப்படும். சில குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களுமே பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவதன் ரகசியம்: போட்டியின்மை, ஒத்துழைப்பு. 12.புகழ்ச்சியும், துணிவும் கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று மூன்று வயதுக் குழந்தை ஒருவன் அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா? குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்த்தால் எப்படி! நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். ‘நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான். அடிக்கடி கேட்டு, உறுதிப்படுத்திக் கொள்கிறான். இது கர்வம் என்று அர்த்தமில்லை. சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, ‘உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. தமக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று மனம் நொந்துவிடும். அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் ‘வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது? குழந்தைகளைப் புகழ விஷயங்களா இல்லை! குளித்துவிட்டு வரும்போது, ‘பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், ‘தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், ‘யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ – இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும். சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள். ‘பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி. இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பாவம்! போலிப் பாராட்டை எதிர்க்கும் துணிவு இவர்களிடமில்லை. துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பேர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை. ‘எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், ‘நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லித்தா?’ என்று ஏசுவார். நான் ஒரு முறை துணிந்து, ‘எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன். எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச்சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்? ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை கணக்கில் சந்தேகம் கேட்க அவரை நாடினேன். நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதித்தேன். வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை! அன்று கற்ற பாடம், தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல என்பதே. தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். ‘என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். ஆனால், ‘எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல!) அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும். 13.வதையைத் தடுக்க சில வழிகள் கேள்வி: ஒருவரை அவருக்கு அச்சமூட்டும், அல்லது பிடிக்காத விதத்தில் நடத்துபவர்கள் எதில் சேர்த்தி? விளக்கம்: வதைப்பவர்கள் சிறு வயதில் வதைக்கு ஆளானவர்களாக இருப்பார்கள். வளர்ந்த பின்னர், தம்மை எதிர்க்க உடலிலோ, மனத்திலோ சக்தி இல்லாதவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதால், தமது சக்தி பெருகிவிட்டதாக நினைப்பார்கள். சரி எது, தவறு எது என்று தெரியாத பிராயத்தில், குழந்தைகளுக்கு. எது ஒன்றையும் தமக்குத் தோன்றிய முறையில் செய்து பார்க்க சுதந்திர உணர்வு எழும். ‘இது குழந்தைகளின் இயல்பு!’ என்று புரிந்து விடமாட்டார்கள் சிலர். அவர்களை வன்முறையால் தண்டித்து, சிறுமைப்படுத்துவார்கள், அல்லது ‘சாமி கண்ணைக் குத்துவார்!’ என்று பயமுறுத்துவார்கள். ‘குழந்தைகள் தப்பே செய்யாமலிருக்கத்தான் அப்படிச் செய்கிறோம்!’ என்று இவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஓயாது பயமுறுத்தலுடன் வளர்க்கப்படும் குழந்தை இயற்கையாக எழும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் எதிர்நோக்கும்போது அச்சமும், ‘பெற்றோர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தோமே, ஏன் எதிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பமும் அடைகிறான். உடல் வதை, பாலியல் வதை, உணர்ச்சிபூர்வமான வதை என்று பலவிதமான வதைகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்குமுன், கோலாலம்பூர் பெரிய ஆஸ்பத்திரியிலும், யூனிவர்சிடி ஆஸ்பத்திரியிலும் ஏதாவதொரு வதைக்கு உள்ளாகி சேர்க்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படையில், ஓராண்டில் பெரும்பாலும் தந்தைமார்கள் (30), அடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் (22), தாய்மார்கள் (14), தாயின் காதலன் (7) ஆகியோர் உடல் ரீதியாக (ஆயுதங்களால் அடிப்பது, சிகரெட்டால் சுடுவது) போன்ற உடல் வதைகளைச் செய்பவர்கள் என்ற தெரிய வந்தது. குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைகூடக் கவனிக்காது நடக்கும் பெற்றோர் குழந்தைகளை உணர்ச்சிபூர்வமாக வதைக்கிறார்கள். இன்னும் பிறர் தாம் செய்வது வதை என்றே புரியாது நடக்கிறார்கள். என்னிடம் ஒருவர் கேட்டார்: ‘என் மகளை என் விருப்பப்படி நடத்த எனக்கு உரிமை கிடையாதா? அவளுக்கு வேண்டியதை எல்லாம் நான்தானே கொடுக்கிறேன்!’ பெற்ற மகளையே பாலியல் வதைக்கு உள்ளாக்கிய தந்தை ஒருவரும் இதே விவாதத்தைத்தான் எழுப்பினார் என்று என் நெருங்கிய தோழி (சமூக நல இலாகாவில் உயர்பதவி வகித்தவள்) என்னிடம் கோபமும், ஆச்சரியமும் கலந்த தொனியில் தெரிவித்திருக்கிறாள். தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது ஒரு பெற்றோரின் கடமை. அதற்குப் பிரதிபலனாக தாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது விதண்டாவாதம். தனது மூன்று வயதுக் குழந்தையை இரும்புச் சங்கிலியால் – பலரும் பார்க்க, வீட்டு வளாகத்தில் – அடித்த என் எதிர்வீட்டுக்காரி, ‘உன்னிடம்தான் தப்பு இருக்கிறது. அதற்கு நான் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். எல்லாம் உன் நன்மைக்காகத்தான்!’ என்று ஒவ்வொரு முறை அடித்த பின்னரும் தான் மகளிடம் சொல்வதாக என்னிடம் பெருமையாகச் சொன்னாள். எனக்கு வாயடைத்துப் போயிற்று. அந்தக் குழந்தை தன் வயதொத்த பிற குழந்தைகளை அடிக்கும். மகள் செய்த சிறு விஷமத்தைக்கூட (தானே கத்திரிக்கோலால் முடி வெட்டிக்கொண்டதை) பிறரிடம் கூறிச் சிரிப்பாள் அத்தாய். சிறுமி அவமானப்பட்டு அழுவாள். பெண் குழந்தைக்கு ஒரு முறை முடியை வெட்டிவிட்டு, ’அழகாக இருக்கிறாய்! என்று யாராவது பாராட்டினால், தினமும் தானே வெட்டிக் கொள்வாள்! அழகாக இருக்க வேண்டாமா! கத்தரிக்கோலை ஒளித்து வைப்பதுதான் ஒரே வழி. ஐந்து வயதானால், சற்று விவரம் புரியும். நம் குழந்தைகள் செய்த ‘குற்றங்களை’ மிகைப்படுத்தி, பிறருடன் பகிர்ந்துகொள்வது சொல்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாகப் படலாம். ஆனால், இம்முறையால் தன்னம்பிக்கை குன்றி வளரும் குழந்தைகள், தம்மையும் அறியாமல், வதை செய்யும் ஒருவரையே காதலனாகவோ, கணவனாகவோ வரிக்கிறார்கள். காதலன் தன்னைப் புகழ்வதால், மதிமயங்கி, அவனுடனேயே இருக்கிறார்கள், வதையைப்பற்றி எவரிடமும் கூறாது. முதல் முறை அடித்து, உதைத்ததும், பெண்கள் பயந்து விலகுகிறார்கள். ஆனால் இவர்கள் விடுவதில்லை. ‘தயவு செய்து என்னை விட்டுப் போய்விடாதே! நீதான் என் உயிர்! என்னை மன்னிப்பாயா?’ என்று கடிதம் எழுதுவார்களாம். இதையே தினசரியில் விளம்பரமாகக் கொடுத்தவனும் உண்டு! திரும்பத் திரும்ப அவர்கள் கெஞ்சும்போது, மனமிரங்கி, உறவைப் புதுப்பித்துக்கொள்ள நம்பிக்கையுடன் வருவார்கள். அதன்பின், வதை அதிகரிக்கும். பெண்களுடைய பலமும் குன்றிக்கொண்டே வரும். தப்பு தன்மேல்தான் என்று எல்லாவற்றையும் பொறுத்துப் போவார்கள். தினசரியில் கடிதம் எழுதினவன், ஐந்தே வாரங்களுக்குப்பின், காதலியை அடித்தே கொன்றானாம். இந்தச் சம்பவம் நடந்தது தென் அமெரிக்காவில், பெரு என்ற நாட்டில். உலகிலேயே பெண்கள் அதிகமாக கொடும் வதைபடும் நாடு (61%) இது. குடும்பத்தில் நடப்பது நான்கு சுவற்றுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பது காலத்துக்கு ஒவ்வாதது. இதனால் குற்றம் புரிபவர்களின் துணிச்சல்தான் அதிகரிக்கிறது. சில ஆண்கள் ‘பெண்’ என்றாலே இளக்காரம் என்றெண்ணி, முரட்டுத்தனமாக வளர்கிறார்கள். ‘என் மேல் சாமி வந்துவிட்டது,’ ‘குடித்திருந்தேன்,’ என்பதெல்லாம் பொய்ச்சாக்கு. தாம் செய்வது பிறருக்கு என்ன துன்பம் விளைவிக்கும் என்பது தெரிந்தே செய்பவர்கள் இவர்கள். திருந்தவே மாட்டார்கள். சட்டம் தண்டித்தால்தான் உண்டு. ஒரு குழந்தையைப் பிறர் வதைக்காமலிருக்க தாய் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. குழந்தை ஆணோ, பெண்ணோ, அவர்களது உடலைப் பிறர் எப்படித் தொடலாம் , எப்படித் தொடக்கூடாது என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். நான்கு வயதுக் குழந்தையின் கன்னத்தைத் தடவுவது சரிதான். ஆனால் வயதுக்கு வந்த பெண் உடலுறவைப்பற்றி புரிந்துகொள்ளாமல் இருப்பாளாகில், அவளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு ஆண் – நண்பன், உறவினர், அண்டை வீட்டுக்காரர் – அப்படித் தொடுவது தவறு என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாள். தந்தை இல்லாத பெண்ணோ, தாய் அருகில் இல்லாது, அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது எளிது. வதைக்கு உள்ளாகும் சிறுமிகளிடையே திடீரென சில மாற்றங்கள் தென்படும். ஓயாமல் அழுவது, சோம்பி இருப்பது, ஓயாது தொணதொணப்பது அல்லது அதிகாரமாக நடப்பது, மிகுந்த ஆத்திரத்துடன் நடப்பது, காரணமில்லாமல் திருடுவது, சாமான்களை உடைப்பது, அடிக்கடி ஐஸ் கட்டிகளைச் சாப்பிடுவது – இதில் ஏதாவது இருந்தால், வீட்டிலோ, பள்ளியிலோ ஏதாவது ஒரு வகையில் வதைக்கப்படுகிறார்கள் என்று கொள்ளலாம். சில சமயம், அக்குழந்தைகளிடம் நிறையப் பணம் புழங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாலியல் வதை செய்துவிட்டு, ஐந்தோ, பத்தோ கொடுத்து, அவர்கள் வாயை அடைக்கிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய சமாசாரம். இம்மாதிரியான குழந்தைகளை ஏதாவது கதை எழுதச்சொன்னாலோ, அல்லது படம் வரையச் சொன்னாலோ, அவர்கள் மனதின் வேதனை வெளிப்படும். வாய்ச்சொல்லாக வர்ணிக்கத் தெரியாதவர்கள் படம் மற்றும் எழுத்து வடிவில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள். அன்பான குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் வதைப்பட்டாலும், பெற்றோரின் ஆதரவால் நீண்ட காலப் பாதிப்பு இல்லாமல் தப்புகிறார்கள். சில சமயம், உளவியல் நிபுணர்களின் உதவியும் தேவைப்படலாம். பிள்ளைகள் மனக்குழப்பத்துடன் காணப்பட்டால், அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுங்கள். ‘யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று, யாராவது எதையாவது செய்தார்களா?’ என்று அனுதாபத்துடன் விசாரித்து, அவர்கள் மனந்திறந்து பேசும்போது, ஆதரவு கொடுக்க வேண்டும். ‘பிறருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என்று அஞ்சாது, ‘இதில் உன் தப்பு எதுவுமில்லை!’ என்று பலமுறை அழுத்திக் கூறுங்கள். வதைத்தவர்தான் குற்றவாளி என்று புரிந்து போனால், அவர்களுடைய சோகம், குற்ற உணர்வு, அவமானம் எல்லாவற்றிலிருந்தும் நிரந்தர விடுதலை கிட்டும். 14.ஆத்திரக்காரனாக வளரும் குழந்தை கேள்வி: சில பிள்ளைகள் எளிதாக ஆத்திரம் அடைகிறார்கள். மனோநிலை சரியாகத்தான் இருக்கிறது. எதனால் இப்படி? விளக்கம்: பெற்றோரில் ஒருவர் மிகுந்த கோபக்காரராக இருந்தால், குழந்தையும் ஆத்திரக்காரனாக வளரும். சிறு குழந்தைகள் ஓயாது அழுதால், அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பசி, தூக்கம், உடல் நலமின்மை, எதையாவது பார்த்துப் பயந்துபோவது – இவைகளோடு, பொழுது போகாமல் அழுவதும் உண்டு. அழுகைதான் அவர்கள் மொழி. கூர்ந்து கவனித்தால், இப்படி அழுதால், இன்னது தேவை என்று புரிந்துகொள்ள முடியும். அணைப்பினால் அழுகையை உடனடியாக நிறுத்த முடியும். நாமும் பதட்டப்பட்டு, இல்லை, ஆத்திரப்பட்டு, குழந்தைகளையும் ஆத்திரக்காரர்களாக வளர்ப்பது எதற்கு? இரண்டு வயதுக்கு மேற்பட்ட எந்தக் குழந்தையும் தான் இனியும் பச்சைக்குழந்தை இல்லை, அதுதான் நடக்கவும், பேசவும் தெரிகிறதே என்று எண்ணிக்கொள்ளும். தன் சுதந்திர உணர்வை வெளிக்காட்டுவதேபோல், ‘வேண்டாம்,’ ‘மாட்டேன்,’ என்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தும். மற்றபடி, அர்த்தம் புரிந்து பேசும் வார்த்தைகளில்லை. தாம் சொல்வதை உடனுக்குடன் கேட்கவில்லை என்றால் சில பெற்றோர் ஆத்திரம் அடைகிறார்கள். இவர்களுக்கு தம் வயதிலும், அனுபவத்திலும் மிகுந்த பெருமை. அதை அதிகாரமாகக் காட்டிக்கொள்வர். ‘என் பேச்சைக் கேட்காது, எதிர்த்துப் பேசுவதா!’ என்று சிறு குழந்தைகளின்மேல் ஆத்திரப்படலாமா? இந்த ‘குற்றத்துக்காக’ சிறுபிள்ளைத்தனமாக பெற்றோர் தண்டிக்கும்போது, தான் செய்த தவறு என்ன என்றே புரிவதில்லை குழந்தைக்கு. சின்னக் குழந்தையை அடித்தாலோ, திட்டினாலோ, பெற்றோருக்குத் தன்மேல் அன்பில்லை என்றெண்ணி அஞ்சும். வருந்தி அழும். இதனால்தான், தன்னை அடித்த தாய் மீண்டும் அணைத்துச் சமாதானம் செய்யும்வரை அழுகை ஓய்வதில்லை. அடிப்பது ஒரு வினாடி என்றால், சமாதானப்படுத்த அரை மணி பிடிக்கும். இந்த அவதிக்கு, சின்னத் தவறுகளைக் கண்டும் காணாமலிருக்கலாம்! ஏழெட்டு வயதுக் குழந்தைகளுக்கு இத்தகைய நடத்தை குழப்பத்தை விளைவிக்கும். ‘நான் எந்த தப்பும் செய்யவில்லையே! அப்பா ஏன் அடிக்கிறார்? அம்மா ஏன் கத்துகிறாள்?’ இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது, சமாளிக்க முடியாத எது நேர்ந்தாலும், ஆத்திரப்படுவதுதான் வழி என்று நிச்சயித்து, அதன்படி நடக்கிறார்கள். முதல் குழந்தை பிறந்ததும், அதை நல்லவிதமாக வளர்க்கவேண்டும், தன்னால் முடியாத சிகரங்களையெல்லாம் அதைத் தொட வழி வகுக்க வேண்டும் என்று பல கனவுகளைக் காண்பார்கள் சில இளம் பெற்றோர். அதனால் படபடப்பும், பயமும் உண்டாவதுதான் கண்ட பலன். ஏனெனில், குழந்தைகளும் வளர வளர, அதே உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள். என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் வந்து கேட்டாள், “நான் பாடங்களை நன்றாகப் படித்துக்கொண்டுதான் ஒவ்வொரு பரீட்சைக்கும் வருகிறேன். வினாத்தாளில் வரும் எல்லாக் கேள்விகளுக்குப் பதில் தெரியும். ஆனால், எழுத முடியாமல் போகிறது. ஏனிப்படி, டீச்சர்?” என்று. கலக்கத்தில் அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. ஒரு முறை, நான் அவள் வகுப்பு மாணவிகளைக் கோபித்தபோது, விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள் – என் மனம் நொந்து விட்டதே என்று! எவ்வளவு தூரம் அவள் தன் தாயை நேசித்தால், ஆசிரியையும் அப்படியே பாவித்து நடப்பாள்! “நீ மூத்த பெண்ணா? மிக நன்றாகப் படித்து, உன் தாயைப் பெருமைப்படுத்த நினைக்கிறாயோ?” என்று கேட்டேன். அவள் ஒப்புக்கொண்டாள். தான் செய்வதெல்லாமே பெற்றோரைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற ஓயாத கவலையால் இவளால் தன் முழுத்திறமையையும் காட்ட இயலாது போய்விட்டது. பரீட்சைக்குப் போகும்போதும், எழுதும்போதும் மனம் நிச்சலனமாக அல்லவோ இருக்க வேண்டும்! இவளைப்போல் தம் மனக்குறையைப் பிறரிடம் சொல்லி, அதைப் போக்கும் வழியை நாடுபவர்கள் அரிது. சிலர் தம் குறையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி, அதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள். ‘ஏனோ இப்படி எதிலுமே வெற்றி பெற முடியவில்லையே!’ என்பவர்களது ஏக்கமும், நிராசையும் காலப்போக்கில் ஆத்திரமாக மாற வாய்ப்புண்டு.. இப்படி எழும் ஆத்திரத்தைப் பிறர்மீது காட்டுவோரும் உண்டு, தம்மீதே காட்டிக் கொள்பவர்கள் கூடாத சகவாசம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாடுகிறார்கள் – தம்மையே அழித்துக்கொள்ள விரும்புவதுபோல. பெரியவர்களுக்கு எரிச்சல் வர எத்தனையோ காரணங்கள்; மேலதிகாரியின் அவமதிப்பு, போக்குவரத்து நெரிசல், பணத் தட்டுப்பாடு இப்படி. அதை வெளிக்காட்டும் வகை புரியாது, பிள்ளைகளை வடிகாலாக ஆக்கிக் கொள்வது என்ன நியாயம்! சில பெற்றோர் தம் வயதொத்தவர்களுடன் அரட்டை அடித்து, ஓய்ந்து வீட்டுக்கு வரும்போது, பிள்ளைகளைக் கவனிப்பது எங்கே! இன்னும் சிலர் மனத்தளவில் குழந்தைப் பருவத்திலேயே தங்கிவிட்டவர்கள். அவர்களுடைய நினைப்பெல்லாம் கடந்த காலத்திலேயே இருக்கும். ‘அப்பா என்கூடப் பேசியதுகூட இல்லை, அக்காதான் அவருக்குச் செல்லம்,’ என்றெல்லாம், எப்போதோ சிறுவனாக இருந்தபோது நடந்ததைச் சொல்லிச் சொல்லி மாய்வார்கள். இதனால் நிகழ்காலத்தின் சுவையான சம்பவங்களை அனுபவிக்க முடியாது போய்விடுகிறது. சமீபத்தில் ஒரு மாது என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் பேசினால் ஆறுதலாக இருக்கிறது என்றார். ‘என் கணவர் முன்கோபி. ஒன்றுமில்லாததற்கெல்லாம் கெட்ட வார்த்தை உபயோகிப்பார். அவர் போய்விட்டார். இப்போது, இரு மகன்களும் அவர் மாதிரியே இருக்கிறார்கள்! எனக்கு எங்காவது தனியாகப் போய்விட வேண்டும்போல இருக்கிறது!’ என்று பிரலாபித்தார். ‘எங்கப்பா எப்பவும் திட்டுவார், அடிப்பார்,’ என்று இவரது மகன்கள் சிறு வயதில் தம் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கலாம். நாம் யார்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கிறோமோ, அவர்கள் மாதிரியே ஆகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம். ‘நாம் ஏன் இப்படி ஆனோம், நம் பிள்ளைகளும் நம்மைப்போலவே இளமைப் பருவத்தைக் குழப்பத்திலும், ஆத்திரத்திலும் கழிக்க வேண்டுமா?’ என்று நிறைய யோசித்தால், மாற வழியுண்டு. குழப்பத்தை வெளிக்கொணர, நம் மனதில் தோன்றியவற்றை எழுத்தாக வடிக்கலாம். இல்லையேல், படமாக வரையலாம். எழுதுவதும், வரைவதும் மிகச் சிறந்த வடிகால்கள். மனதில் நிம்மதி பிறந்தால் கோபமும், ஆத்திரமும் பறந்துவிடாதா! 15.கறுமை நிறம் கேள்வி: சில நாடுகளில் உள்ளவர்கள் சிவப்பாக, வெளுப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழர்கள் கறுப்புதான். யார் செய்த பாரபட்சம் இது? விளக்கம்: ஃபிசியோக்னோமி (PHYSIOGNOMY) என்ற விஞ்ஞானப்பிரிவு உலகின் வெவ்வேறு பாகங்களில் பிறக்கும் மனிதர்கள் ஏன் நிறத்திலும், உருவ அமைப்பிலும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது. மலேசியா, இந்தோனீசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள், இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பூமத்திய ரேகை வரைபடத்தின் குறுக்கே, அல்லது மிக அருகில் இருக்கும். அதனால் சூரிய வெப்பம் அதிகமாக, இந்நாட்டு மக்களை இயற்கைச் சீற்றத்திலிருந்து காக்கவேபோல், அவர்களது சருமத்தில் மெலனின் என்ற வேதியப் பொருள் அமைந்திருக்கிறது. இது நமக்குக் கிடைத்த பேறு. நாம்தான் புரியாமல், நொந்து கொள்கிறோம். மலேசியாவில் உச்சிவேளையில், பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணிவரை வெள்ளைக்காரர்கள் வெற்றுடம்போடு வெளியில் திரிந்தாலோ, ‘சூரியக் குளியல்’ என்ற பெயரில் அரை நிர்வாணமாக வெயிலில் காய்ந்தாலோ, அவர்களுக்குச் சருமப் புற்று நோய் வரும் சாத்தியக்கூறு நூறு சதவிகிதம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியனின் கிரணங்கள் பட்டாலே வியாதி வரும் என்ற நிலை எவ்வளவு கொடியது! இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வெள்ளையர்கள் இருந்தும், ஓட்டப் பந்தயங்களில் இந்நாடுகளைப் பிரிதிநிதிப்பவர்கள் கறுப்பர்களாகவே இருப்பார்கள். கவனித்திருக்கிறீர்களா? கதை: சில வருடங்களுக்கு முன், ஒரு இத்தாலிய நாட்டு மூதாட்டி என் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, என் கரத்தைத் தோளிலிருந்து கீழ்வரை தடவினாள். நான் நீச்சல் குளத்திற்குத் தினமும் போய், நீச்சலடிப்பேன். இயற்கையான பழுப்புடன் சிவப்பு கலந்த நிறமாக சருமம் மாறி இருந்தது. ‘எவ்வளவு அழகான நிறம்! இதற்கு எவ்வளவு கொடுத்தாய்?’ என்று ஏக்கத்துடன் அவள் கேட்டபோது, எனக்குச் சிரிப்புப் பொங்கியது. அப்போதுதான் அறிந்தேன், சருமத்தை TAN செய்வதற்கான சலூன்கள் இருக்கின்றன, அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் என்று. நாம் வெள்ளைக்காரர்களைப் பார்த்து பிரமிக்கிறோம். அவர்கள் நம் நிறத்தை மெச்சுகிறார்கள்! மலேசிய பினாங்குத் தீவு, லங்காவித் தீவு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளில், தங்கள் தோல் பழுப்பு நிறமாக மாற வேண்டும் என்று மிக விரும்பி, வெள்ளைக்காரர்கள் ரசாயனக் குழம்பை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, மிகக் குறைவான ஆடை அணிந்து, (நிர்வாணமாக இருக்க அனுமதி கிடையாது), காலைத் தலைமேல் வைத்துக்கொள்ளாத குறையாக சாய்வு நாற்காலிகளில் படுத்தபடி உறங்குவதையோ, புத்தகம் படிப்பதையோ காணலாம். பல நாட்கள், அதுவும், பல மணி நேரம் இப்படித் ‘தவம்’ புரிந்தால்தான் சருமத்தின் வெண்மையோ, சிவப்போ சிறிதேனும் மாறும். அவரவர் அடிப்படை உணவுகூட தட்ப வெப்பத்தைப் பொறுத்தே அமைகிறது. வெப்ப நாடுகளில் வாழ்வோர் மிளகாய், மசாலை வகைகளை உணவில் சேர்ப்பதால் வியர்வை வெளியாகிறது. குளிர் பிரதேசங்களிலோ நிறைய உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள். புலால், வெண்ணை, பீர் போன்ற கொழுப்பு நிறைந்த ஆகாரம் உடலை ஓரளவாவது குளிரிலிருந்து பாதுகாக்கிறது.. வட சீனாவில் குளிர் அதிகம். அங்குள்ளவர்களின் சருமம் தடிமனாக இருப்பதுடன், ஆண்களின் முகத்தில் ரோமம் அவ்வளவாக வளராது. (மலேசிய சீனர்கள் தினமும் சவரம் பண்ணிக்கொள்ளும் அவசியமே கிடையாது). பெண்களுக்கோ புருவம் வளருவதில்லை. அதனால், அவர்கள் தினமும் வரைந்து கொள்வார்கள், அல்லது TATTOO முறையில் (பச்சை குத்திக்கொள்வதைப்போல) நிரந்தரமாகச் செய்துகொள்வார்கள். மலேசியாவுக்கு வந்து சில தலைமுறைகள் தெருக்களில் வியாபாரம் செய்யும் சீனர்கள் சற்றே கறுத்து விடுவர். இல்லையேல், சூரிய வெப்பம் இவர்களைப் படாத பாடு படுத்தும். இங்குள்ள சீனப் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, ‘உனக்கென்ன! நீ நல்ல நிறம்!’ என்பார்கள். அவர்கள் எல்லாருமே சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமாகத்தான் தோன்றுவார்கள் நமக்கு. அதிலும், உயர்வு, மட்டம்! இங்கு சரும நோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் சீனர்கள்தாம். நான் தொழுநோயைப்பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டபோது கிடைத்த தகவல் இது. இப்போது கோலாலம்பூரில் பார்க்குமிடமெல்லாம் சீன மருத்துவர்களின் சரும வைத்திய நிலையங்கள்! ஆப்பிரிக்கவாழ் கறுப்பர்களில் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு கறுப்பாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அழகாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, தமது கருமை நிறம் இயற்கை அளித்த வரப் பிரசாதம் என்று. ஆனால், ஆங்கிலக் காலனித்துவத்துக்கு அடிமைப்பட்ட இந்தியர்களும், பிற நாட்டவரும்தான் வெள்ளைக்காரர்களின் மனோ நிலையைப் பின்பற்றி, தம்மைத் தாமே மட்டமாக எடை போட்டுக் கொள்கின்றனர். ஒருவரை மனோதத்துவ ரீதியாக வீழ்த்த அவரிடம் இருக்கும் நிறையையே குறையெனப் பழித்தது வெள்ளைக்காரர்களின் சாமர்த்தியம். அதை நம்பி, இன்றளவும் நம்மை வருத்திக்கொள்வானேன்! 16.நிமிர்ந்து நில்லுங்கள் கேள்வி: தாய்நாட்டைவிட்டு அயல்நாடுகளில் வாழ்பவர்களில் பலர் ஏன் சுலபமாகக் கோபம் அடைகிறார்கள்? விளக்கம்: ‘இந்தியாவை விட்டு வெளியேறினால், நாம் இரண்டாந்தாரப் பிரஜைகள்தாம் (SECOND CLASS CITIZENS). இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால்தான் நிம்மதியாக இருக்க முடியும்,’ என்று ஒரு விமானி என்னிடம் பல ஆண்டுகளுக்குமுன் கூறினார். அயல்நாடுகளில் வாழ நேரிடும்போது நமது கலாசாரத்துக்கு மாறுபட்ட பிறரைப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் அச்சமும், அவர்களுடன் நெருங்கிப் பழக தயக்கமும் வருகிறது, எங்கே நம்மிடையே அவர்கள் காணும் வித்தியாசங்களில் குறை கண்டுபிடித்து விடுவார்களோ என்று. சாதி, இனம் முதலிய பாகுபாடுகள் ஒருவரது தகுதியைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யாது. அப்படி எண்ணுபவர்கள் சிறுபிள்ளைத்தனமானவர்கள். ஒவ்வொரு மனிதனும், ‘நான் உயர்ந்தவன்!’ என்று ரகசியமாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறான். இதனால் பாதிக்கப்பட்டவர்களோ தாழ்வு மனப்பான்மைக்கும், அது விளைவிக்கும் பொறாமைக்கும் ஆளாகிறார்கள். நம்மை ஒத்தவர்கள் மேலே போய்விட்டால், நாம் கீழேயே தங்கிவிடுவோமோ என்ற பயத்தில், ஒரே இனத்தைச் சார்ந்தவருக்கே குழி பறிக்கும் அவலமும் இதனால்தான் விளைகிறது. பிற நாட்டில் வாழ்பவர்கள் சிறுபான்மையினர். ‘நமக்கு பிரத்தியேகமான சலுகைகள் இல்லையே!’ என்று மறுகி, அதைப்பற்றிப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்தினால், பலம் தான் குறைந்துபோகும். நிறைய சலுகைகள் கொண்ட அந்நாட்டு மக்களைப்பற்றி அவதூறாகப் பேசினால், அதைக் கேட்டு ஆமோதிக்க நாலு நண்பர்கள் கிடைக்கலாம். இதனால் என்ன பயன்? நேரமும், சக்தியும்தான் விரயம். அதிருப்தி அடைய நிறைய காரணங்கள் இருப்பினும், நம்மால் மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம். ஒரு எச்சரிக்கை: பொறுக்க முடியாத எல்லாவற்றையும் ‘விதி,’ ‘பொறுமை’ என்று ஏற்கக்கூடாது. இது கையாலாகாதவர்கள், அல்லது பயங்கொள்ளிகளின் வீண் பேச்சு. பொறுமையும் ஒரு நாள் மீறும். அப்போது, வன்முறை பிறக்கும். நம்மையே அலசிப் பார்த்து, நமது நல்ல குணங்களை வரிசையாக எழுதி, அவைகளில் நிலைத்திருத்தல் வேண்டும். ‘வேண்டாதவை’ என்று நாம் கருதும் குணங்களையும் எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாகக் கழித்தால், மனோதிடம் பிறக்கும். நாளடைவில், இருக்குமிடத்தில் முன்னேற்றம் மட்டுமின்றி, நிம்மதியும், மகிழ்வும் உறுதி. பிற நாட்டில் கல்வி பயிலும், அல்லது வேலை பார்க்கும் இடங்களில் நம் மனதை நோகடிக்கவேயென பலர் காத்திருப்பார்கள். நம் தன்மானத்தைப் போக்கும் வழியில் எவராவது ஏதேனும் சொன்னால், அசட்டுச் சிரிப்புடன் அதை ஏற்றுக் கொண்டுவிட்டு, அவர் தலைமறைந்ததும் அடுத்தவரிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகாதீர்கள். எதிர்த்துச் சண்டை போடுங்கள். உடனுக்குடன்! அதன்பின், அவரைக் கண்டால் ஒதுங்கிவிடுங்கள். ஒரு கதை. ‘உன் பெண்களுடன் எந்த மொழியில் பேசுகிறாய்?’ கேட்டது என்னுடன் வேலைபார்த்த சீன ஆசிரியை. நான், ‘தமிழ்! அதுதானே என் தாய்மொழி!’ என்றதும், ‘You are so chauvinistic! (’வெறித்தனமானவள்’) என்று பழித்தாள். நான் எதுவும் பதிலளிக்கவில்லை. தான் வெற்றி பெற்றதாகவே அவள் நினைத்திருக்கட்டும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டேன். சில நாட்கள் பொறுத்து, ‘உன் பெண்களுடன் என்ன மொழியில் பேசுகிறாய்?’ என்று தற்செயலாகக் கேட்பதுபோல் கேட்டேன். ‘சீனம்தான். IT IS NATURAL! வேறு எப்படிப் பேசுவதையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது,’ என்று கனப் பெருமையுடன் கூறினாள். ‘அது என்ன, நான் என் தாய் மொழியில் பேசினால் chauvinistic, நீ பேசினால் மட்டும் natural?’ என்று தாக்கினேன். அவள் முகம் ‘செத்துவிட்டது’. அதன்பின், என்னுடன் மோதமாட்டாள். ‘இப்படியெல்லாம் எதிர்ப்பேச்சுப் பேச பயமாக இருக்கிறதே! இது அவமரியாதை இல்லையா?’ என்கிறீர்களா? மரியாதை கொடுக்கத் தெரிந்தவரிடம்தான் அன்புடன் பணிந்து போகவேண்டும். ‘ஒருவன் உன் கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டு!’ என்பதெல்லாம் இந்தக் காலத்திற்கு உதவாது. நட்பையோ, அதிகாரத்தையோ காட்டி, தெரிந்தே நம்மை அவமதிப்பவர்களிடம் அவர்களைப்போலவே நடந்தால்தான் அவர்களுக்கு உறைக்கும். நிமிர்ந்த நடையுடன், வளையாத உடலும், நேர்ப்பார்வையுமாக, நீங்களே உங்களை மதிப்பதைக் காட்ட வேண்டும். அப்போதுதான் பிறர் உங்களை அவமதிக்கத் தயங்குவர். ஒருக்கால் உங்களை அவமரியாதையாக நடத்தினாலும், நீங்கள் பொறுத்துப் போகமாட்டீர்கள். எவருக்குமே, ‘உன் ஒவ்வொரு சொல்லும், செயலும் இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று பிறரது போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. இது மனப்புழுக்கத்தில் கொண்டுவிடும். பிறர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டுமென்றால், நமக்கெல்லாம் எதற்கு தனித் தனியாக மூளை? பிறர் சொல்வது அவர்களைப் பொறுத்தவரை நல்ல அறிவுரையாக இருக்கலாம். நாம் புழங்கும் சூழ்நிலை, பழகும் மனிதர்கள் இவற்றுக்கு ஏற்ப, நாமே நம் அனுபவத்திற்கு ஏற்ப முடிவெடுப்பதுதான் சரி. இதனால் தவறுகள் ஏற்படலாம். அதனால் என்ன! அதே தவற்றை மறுமுறை செய்யாதிருந்தால், தானே அது நல்ல அனுபவமாகி விடுகிறது! உங்கள் சுதந்திரமான போக்கையும், அதனால் விளையும் தன்னம்பிக்கையையும் பொறுக்காது, நீங்கள் எப்போதோ செய்த தவற்றையே திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டலாம் சிலர். ‘பொறாமை பிடித்தவர்களின் பிதற்றல்’ என்று அவர்கள் பேச்சைப் புறக்கணியுங்கள். பிறருடைய பாராட்டையும், மதிப்பையும் எப்போதுமே பெறவேண்டும் என்று நாம் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, போட்டி போடுவது ஆரோக்கியத்திற்குக் கேடு. உங்களுடனேயே நீங்கள் போட்டி போடுங்கள். ஒரு முறை செய்ததை அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். அப்போதுதான் உங்களை யாராலும் அசைக்க முடியாது. 17.வீட்டைவிட்டு ஓடிப்போவது கேள்வி: விவரம் புரியாத வயதில் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவது ஏன்? விளக்கம்: ஓர் அறிக்கையின்படி, மலேசியாவில் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினெட்டு வயதானவர்களில் நான்கு பெண்களாவது வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்கள். பிடிபட்டவர்கள் புனர்வாழ்வு இல்லங்களில் ஒரு வருடம்வரை வைக்கப்படுகிறார்கள். (எந்த நாடாக இருந்தால் என்ன, சிறுவர், சிறுமிகளின் மனநிலை ஒத்ததாகத்தானே இருக்கும்!) இப்படிப்பட்ட ஓர் இடத்திற்கு (பலத்த சிபாரிசுடன்) நான் போயிருந்தேன். சாதாரணமாக வெளிமனிதர்கள், அதிலும் ஆண்கள், இங்கு நுழையவே முடியாது. அவசர புத்தியுடன், அடுத்து என்ன செய்வது என்று புரியாத இளம்பெண்கள்! அவர்களைத் தீய வழிக்கு ஆசைகாட்டி இழுத்துச் செல்ல பிறருக்கு எத்தனை நேரமாகும்! பொதுவாகப் பேசப்படுவதுபோல், காதலுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் இல்லை இந்த இல்லத்தில் இருப்பவர்கள் என்று அறிய முடிந்தது. என்னுடன் மிகவும் அன்புடன் பழகினார்கள். பிறகுதான் புரிந்தது காரணம்: வீட்டில் இவர்களுக்கு அன்பு கிடைக்கவில்லை என்று ஏங்கியிருக்கிறார்கள்! நான் பல மணி நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, ‘போகாதீர்கள்,’ என்று என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட மனக்குறைகள்: ’ஓயாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். (இதுதான் முக்கியக் காரணம்). ‘நான் எங்கும் போகக்கூடாது. எவருடனும் பேசக்கூடாது’ – உணர்ச்சிபூர்வமான வதை. ‘என் பெற்றோருக்கு என்னுடன் பேச நேரமில்லை. வேலைதான் அவர்களுக்கு முக்கியம்!’ முதலில் கோபத்துடன், ‘அவளுடைய நன்மைக்காகத்தானே உழைக்கிறோம்? காலம் இருக்கிற இருப்பில், வயதுப்பெண்ணை வெளியில் அனுப்பிவிட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமா?’ என்றெல்லாம் தம்மேல் குற்றம் வராமல் பார்த்துக்கொள்வார்கள் பெற்றோர். ஆனால், தவறு என்னவோ அவர்கள்மேல்தான். உண்மைக் கதை: அவ்விடத்தில் என் பழைய மாணவிகள் இருவர் இருந்ததாக தலைவி கூறினார். அப்பா, அம்மா இருவரின் பெயரையும் இணைத்து, புதிய மாதிரிப் பெயர்களாக இருந்ததால், நான் உடனே இனம் கண்டுகொண்டேன். அடுத்தடுத்த வருடங்கள் என் வகுப்பு மாணவியாக இருந்தவர்கள். பதினான்கு வயதில் ஆண்களைப்போல் கிராப்புத்தலை! வகுப்பில் ஆசிரியையின் கவனம் முழுவதும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைத்து, ஓயாத எதிர்ப்பு. (‘அவளைக் கவனிக்காதீங்க, டீச்சர்,’ என்று பிற மாணவிகள் எனக்குப் புத்தி சொல்லும்வரை நான் புரிந்து கொள்ளவேயில்லை). பள்ளியில் பொறுக்க முடியாத நடத்தையுடன், அவளைக் கவுன்சிலரிடம் அனுப்பியபோது, நான் முகம் கொடுத்துப் பேசாதது மிகவும் வருத்துகிறது என்றாளாம். என்ன பிரச்னை என்று யாருக்கும் புரியவில்லை. ‘உன் அப்பாவை என்னை வந்து பார்க்கச்சொல்லு!’ என்று நான் மிரட்டியதும், அம்மாவிடம் கெஞ்சி, ‘அப்பா அடிப்பார். நீங்களே வந்துவிடுங்கள்,’ என்றிருக்கிறாள். அந்த இளம் தாயே இதை என்னிடம் சொன்னாள். சகோதரிகள் இருவரும் பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஓடி, தெருக்களில் ஐம்பது காசுக்குத் தங்களை விற்றுக் கொண்டிருந்ததால், காவல் துறையினரிடம் பிடிபட்டிருந்தனர். ‘பரீட்சை எழுதப்போகிறோம்,’ என்று காவலுடன் சென்றவர்கள், மீண்டும் தப்பியோடிவிட்டனர் என்றெல்லாம் இல்லத்தலைவி விவரித்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராணுவத்தில் இருந்த அவர்களுடைய தந்தை எம்மாதிரியான கொடுமைக்கு அவர்களை ஆளாக்கியிருந்தால், இரு பெண்களும் இப்படிச் சீரழிந்து போயிருப்பார்கள் என்று யோசித்தேன். ‘பாலியல் வதை என்றில்லை. அவர்களால் பொறுக்க முடியாத எதுவாகவாவது இருக்கலாம்,’ என்றார் நான் சந்தேகம் கேட்ட ஒரு உளவியல் நிபுணர். குழந்தைகளுடன் பேசுவது என்பது, ‘சாப்பிடு,’ ‘குளி’ என்பதுடன் நின்றுவிடுவதில்லை. எந்த வயதினருக்கும் அவர்களுக்கே உரிய தனிப்பட்ட பிரச்னைகள், கவலைகள் இருக்கும். அவர்களுடன் பேசாவிட்டால், பிரச்னைகளை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இடியோசை கேட்டு நடுங்கும். ‘இதில் பயப்பட ஒன்றுமில்லை. சும்மா, பட்டாசு!’ என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை, ‘பட்டாசு!’ என்று கைதட்டி ஆர்ப்பரிக்கும். ‘சிறுவர்களுடன் அப்படி என்ன பேசுவது!’ என்று அலுத்து, பல குடும்பங்களில் சிறுவர்கள் அருகில் இருப்பதைப் பொருட்படுத்தாது, வெட்டிப் பேச்சிலும், தமக்குச் சம்பந்தமே இல்லாத பிறரைப்பற்றிய வம்பிலும் பொழுதைக் கழிப்பார்கள். குழந்தைகளுக்கும் அதே குணம்தானே படியும்? வயதுக்கு மீறிய எண்ணங்கள் எழ, நல்லது, கெட்டது புரியாது குழப்பம் அடைகிறார்கள். பெரியவர்கள் பேசும்போது, சிறுவர்களை அங்கிருந்து விலகச் சொல்ல வேண்டும் என்ற விதி இதற்குத்தான். சிறுவர்களுடன் பேச எவ்வளவு சமாசாரங்கள் இருக்கின்றன! ஓர் அல்ப உதாரணம்: நீங்கள் சிறுவயதில் செய்த அசட்டுத்தனங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே! அதனால் அவர்களுக்குச் சிரிப்பு வருமே தவிர, உங்களை மட்டமாக எடைபோட மாட்டார்கள். உண்மையே பேசக் கற்பார்கள். ‘என் பேத்திக்கு மரியாதையே கிடையாது,’ என்று ஒரு மூதாட்டி என்னிடம் குறையாகச் சொன்னார். கோயிலில், ஒரு சிறுமி என் காலைத் தொட்டு ஆசி பெற்றதைப் பார்த்து வந்த வார்த்தைகள். மரியாதை கற்றுக்கொடுக்கும் வழியா இது! உடனே , ‘அவள் நல்ல பெண்தான். அவளிடம் அப்படிச் சொல்லி விடாதீர்கள்,’ என்றேன். பத்து வயதுச் சிறுமி பாட்டி தன்னைப்பற்றிப் பிறரிடம் மட்டமாகச் சொல்லி விட்டார்களே என்று வருந்துவாள். தான் அப்படித்தானோ என்று அவள் எண்ணம் போகும். சற்றுப் பொறுத்து, அந்தச் சிறுமியின் தாய் விடைபெறும்போது, ‘டீச்சருக்கு நமஸ்காரம் பண்ணு. காலைத் தொட்டு நல்லா பண்ணணும்,’ என்று விரிவாக விளக்க, அவள் அப்படியே செய்தாள். ஞாபகமாக, ‘இவள் செய்ததை உன் அம்மாவிடம் சொல்!’ என்று அந்தத் தாயிடம் சொன்னேன். தம் குடும்பத்தினரைப் பற்றிக் குறையாகச் சொன்னால், தான் அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று நினைப்பார்கள், இதனால் இளையவர்களை உசுப்பி நல்வழிப்படுத்தலாம் என்றோ நினைப்பது தவறு. வேறு ஒருவருடன் ஒப்பிடப்படும்போது, குழந்தைகள் ரோஷம் அடைந்து, முன்னேறுவது கிடையவே கிடையாது. வேடிக்கைக் கதை ஒன்று; ‘அந்தப் பிள்ளையைப் பாருடா. எவ்வளவு நல்லா படிக்குது!’ என்று தன் தந்தை அடிக்கடி சொன்னதில், முதல் வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிர்வீட்டுப் பெண்ணை பார்க்கப் பார்க்க, காதல் வசப்பட்டு, கல்யாணமும் செய்துகொண்டு விட்டதாக ஒரு நண்பர் சொல்லிச் சிரித்தார். ‘வேறு சாதி’ என்று தந்தை ஆட்சேபிக்க, ‘நீங்க சொன்னதைத்தானே செய்தேன்!’ என்ற இவர் மடக்கினாராம்! நாம் ஒவ்வொருவரும் ஒரு தனி ஆத்மா. ஒருவரைப்போல் இன்னொருவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயலாத காரியம். இது புரியாமல், அடித்தோ, ஓயாது ஏசிப் பேசியோ ஒரு சிறுவனை இன்னொருவனைப்போல மாற்ற நினைப்பது அவனைச் சிறுமை உணர்ச்சிக்குத்தான் ஆளாக்கும். முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என்று ஒவ்வொரு எண்ணுக்கும் (ORDINAL NUMBER) பிரத்தியேகமான குணங்கள் உண்டு. முதல் குழந்தை நிதானமாக, பொறுமையாக இருக்கும். பெற்றோர்கள் பார்த்துப் பார்த்துச் செய்வதில், எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற முனைப்பு இருக்காது. இரண்டாவது குழந்தையின்போது, பெற்றோருடைய ஆர்வம் சற்றுக் குறைந்திருக்கலாம். அதனால், போட்டி உணர்வு மிகுந்திருக்கும். துணிச்சலாக எதையும் அடித்துப் பிடித்து வாங்கும். அதிகப் பொறுமை இல்லாததால், சண்டைபோட அஞ்சாது. பத்து மாதக் குழந்தையே பெரியவளின் முடியைப் பிடித்து இழுக்கும். பிறப்பிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் கொண்ட குழந்தைகளை ‘ஒரே மாதிரி இருங்கள். அண்ணா எவ்வளவு சாந்தமாக இருக்கிறான். நீயும் இருக்கிறாயே, பிடாரி!’ என்றோ, ‘உன்னைவிடச் சின்னவள்! எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாள்!’ என்றோ ஒப்பிடுவது ஒருவரை வருத்தும்; மற்றவரை கர்வியாக, அல்லது குற்ற உணர்வு கொண்டவராக மாற்றும். தாவர வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம். மல்லிகைச் செடியில் இலைகளை மட்டும் களைந்தால், செடி மீண்டும் துளிர்த்து, நிறைய மொட்டுக்கள் விடும். இப்படி ரோஜாச் செடியில் செய்து பார்த்திருக்கிறீர்களா? செடி செத்து விடும். ரோஜாவின் கிளைகளையே வெட்ட வேண்டும். (இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை: ஒரு சிறு மொட்டைக் கிள்ளி எடுத்துவிட்டால், அந்த இடத்தில் நிறைய மொட்டுக்கள் கட்டும்). உணர்ச்சிகள் நிரம்பிய மனித இனத்தில் மட்டும் வெவ்வேறு குணங்கள் கொண்ட இருவரை ஒரே மாதிரி நடத்துதல் சரியா? நம் எதிர்பார்ப்பை ஒட்டியே குழந்தைகள் வளர்கிறார்கள். தகுதிக்குட்பட்ட வேலையை ஒரு சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு, ‘உன்னால் இது முடியும்!’ என்று ஊக்குவித்துப் பாருங்களேன். உங்கள் நம்பிக்கை பொய்க்காது. நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும், முயற்சி செய்ததையாவது பாராட்ட வேண்டும். அடுத்த முறை, நீங்கள் இட்ட பணியை உற்சாகத்துடன் செய்ய முன்வருவான். ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னபின், அதைச் சிறுவர்களிடமே விட்டுவிடுதல் சிறந்தது. ‘அப்படிச் செய், இப்படிச் செய்,’ என்று அடிக்கடி குறுக்கிடுவது பெரியவர்களின் குறைவான தன்னம்பிக்கையைத்தான் காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் சுயமாகச் சிந்திக்க விடாது குறுக்கிடுவதால், குழந்தைகளுக்குத் தம் திறமையிலேயே சந்தேகம் எழாதா! பெரியவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறோமா? இல்லையே! பின், சிறுவர்கள் மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அவர்களுக்கு இயற்கையாக எதில் திறமையோ, ஆர்வமோ இருக்கிறது என்றறிந்து, அதில் முன்னேற ஊக்கமளித்தால், ‘வீடே சொர்க்கம்!’ என்று உணர மாட்டார்களா! 18.தவற்றைத் தவற்றால் திருத்த முடியுமா? கேள்வி: ஒரு குழந்தை செய்யும் தவற்றை இன்னொரு தவற்றால் திருத்த நினைப்பவர்களைப்பற்றி..? விளக்கம்: குழந்தைகளுக்குத் தாம் செய்வதில் சரி எது, தவறு எது என்றெல்லாம் ஆராயத் தெரியாது. தவற்றுக்குத் தண்டனை கிடைத்தாலும், எங்கே தவறு செய்தோம் என்றும் புரியாது. சற்று பெரிய குழந்தைகளானால், தாம் செய்தது குற்றமே இல்லை என்று அவர்கள் நினைக்கும்போது தண்டனை அளித்தல் எதிர்மாறான விளைவைத்தான் அளிக்கும். உண்மைக் கதை: இரண்டு வயதான அந்தக் குழந்தை தெருவில் தனது மூன்று சக்கர சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். பக்கத்திலேயே அவனுடைய தாய். எதிரே அவனைவிடச் சற்றுப் பெரிய நண்பன், சாங், தனது சைக்கிளில் வர, வேடிக்கை என நினைத்துச் சிரித்தபடி, குறுக்கே போய், ‘ஆக்சிடெண்ட்!’ என்று கத்தினான். அவனும், சைக்கிளும் விழுந்தார்கள். (தொலைகாட்சி விளம்பரங்களில் பார்த்து ரசித்தது). தாய் சிரித்தபடி அவனைத் தூக்கிவிட்டாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சாங்கின் தந்தை ஆக்ரோஷமாக அங்கு வந்தார். ‘அவன் எவ்வளவு சின்னப் பையன்! உன்னால் கீழே விழுந்துவிட்டான், பார்!’ என்று பையனின் காதைப் பிடித்தார். ‘ஸாரி சொல்லு!’ பையன் முறைத்தான். அவன்தானே திடீரென்று குறுக்கே வந்தான்? தான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! ‘இப்போ கேக்கறியா, இல்லே..,’ தான் கொடுக்கும் தண்டனை என்னவாக இருக்கும் என்று சொல்லாமலே விட்டார். அதற்கும் சாங் மசியவில்லை. ஆத்திரத்துடன், மகனை ஒரு கையால் தூக்கினார். அவனது வாகனத்தை இன்னொரு கையால் இழுத்தபடி வீட்டுக்குள் நுழைந்தார். வயதுக்குரிய வளர்ச்சி இல்லாதிருந்த அந்தப் பையன் இன்னும் சுருங்கிப்போனான் – கிடைக்கப்போகும் தண்டனையை நினைத்து. வீட்டுப் பாடம் பண்ணாவிட்டாலோ, எதிர்த்துப் பேசினாலோ அடிக்கடி கிடைப்பதுதானே! அடுத்த ஒரு மணி நேரம் அவனை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைப்பார். அசையக்கூடாது. வாயே திறக்கக்கூடாது. என்ன அவசரமானாலும், நகரக்கூடாது. அன்று சாப்பாடு வாயிலும் மண். ’YOU ARE GROUNDED! ‘ என்று கொக்கரிப்பார் தந்தை. அப்பாவின் தண்டனை சரியா, தப்பா என்று ஆராயும் வயதில்லை அவனுக்கு. அவர் செய்ததுபோல், தான் சொன்னதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்று நண்பர்களை அதிகாரம் செய்ய ஆரம்பித்ததில், அவனுக்கு நண்பர்களே இல்லாமல் போனார்கள். அவனுடைய சிறிய உருவத்தைப் பிறர் கேலி செய்ய ஆரம்பித்தனர். தெருவில் பலர் பார்க்க நடந்த ‘விபத்தை,’ ‘ஏதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டு!’ என்று விட்டிருந்தால், சமாசாரம் அத்துடன் முடிந்திருக்கும். வயதானவர் ஒருவரின் அதிகாரப் போக்கால், மகனை இன்னும் தனிமைப்படுத்திவிட்டார். தாயையாவது தன் வழிக்குக் கொண்டுவருவதற்கு அவனுக்கு ஓர் உபாயம் புலப்பட்டது. எல்லாவற்றிற்கும் சிறுபிள்ளைபோல் சிணுங்கி, மூக்கால் அழுவான். சாப்பிடப் படுத்த, அம்மா தனது கவனிப்பை அதிகரித்துக்கொண்டாள், ‘குழந்தை ஏனோ வளரவே இல்லையே!’ என்ற தாபத்துடன். (இதெல்லாம் இந்தத் தாய் என்னுடன் பகிர்ந்துகொண்டது). சாங்கின் பெற்றோர் இருவரும் வெளி உத்தியோகத்திற்குப் போகிறவர்கள். சுமார் பன்னிரண்டு மணி நேரம் வீட்டில் இருக்கவிடாது செய்யும் வாகன நெரிசல், மற்றும் வேலை. அவனை இந்தக் காலத்து நாகரீகத்தின் சின்னம் என்று கூறலாம். அதாவது, தான் மகனுடன் அதிக நேரம் கழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி பெற்றவளுக்கு. அதை ஈடுகட்ட, அவனுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்கள், மற்றும் கார்ட்டூன் வீடியோக்கள் பரிசளிப்பாள். தந்தையோ, ஒரே மகன் எங்கே கெட்டுவிடுவானோ என்ற அச்சத்துடன், தனக்குத் தோன்றிய விதத்தில் அவனுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறார்! அம்மா வாங்கி வந்ததிலேயே சாங்கிற்கு மிகவும் பிடித்த கார்ட்டுன் படம் டாம் அண்டு ஜெர்ரி. ஜெர்ரி என்ற குட்டி எலியானது, டாம் என்ற பூனைக்குப் பைத்தியம் பிடிக்கும் அளவுக்குப் பிராணனை வாங்கும். இது குழந்தைகளுக்குப் பெரிய வேடிக்கை. எலியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பாடத்தால், பெரியவர்களை தம்மால் இயன்றவரை துன்புறுத்துவது விளையாட்டு என்று தோன்றிப்போகிறது. தம்மையும் அறியாது, தண்டனையைக் கேட்டு வாங்குகிறார்கள். தப்பு செய்தால், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாடத்தைப் புகட்ட நினைத்திருக்கலாம் சாங்கின் தந்தை. ஆனால், கீழே விழுந்த குழந்தையோ, அதன் தாயோ அவன் விழுந்ததைப் பொருட்படுத்தவுமில்லை, காயம் எதுவும் படவில்லை என்ற பட்சத்தில், சாங்கிற்குக் கிடைத்த தண்டனை அதீதம்தான். நடந்ததில் தன் தவறு ஏதுமில்லை என்று புரிந்ததால், சாங் ஒரு முடிவுக்கு வருகிறான்: இந்தப் பெரியவர்களே நியாயமற்றவர்கள்! மணிக்கணக்காக மூலையில் நின்று, சிறுநீர் கழிக்கக்கூட நகரமுடியாதபடி செய்வது என்ன கொடுமை! ஒரு சிறுவன் தன்னைப்பற்றி மட்டமாக நினைக்கவும், பெற்றோரை அலட்சியப்படுத்தவும் இம்முறை வழிவகுக்கிறது. பெற்றோரிடம் தோன்றிய அவமரியாதையும், வெறுப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமும் பரவுகிறது. பிறர் குறைகூறும்போது, ‘நாங்கள் அவனை எவ்வளவோ கண்டிப்பாகத்தான் வளர்த்தோம்!’ என்று காலங்கடந்து புலம்புவதில் என்ன பயன்! திட்டோ, ஒரே ஒரு அடியோ அவ்வளவு பாதிப்பை உண்டாக்காது. அதுகூட எதற்கு! ‘அவன்தான் சின்னப் பையன்! இன்னொரு முறை, அவன் குறுக்கே வந்தால், நீ சைக்கிளை ஒடித்துக்கொண்டு வேறு பக்கம் போய்விடு!’ என்ற அறிவுரையே போதுமே! ‘மன்னிப்பு கேட்க முடியாதா! உனக்கு மரியாதை தெரியவில்லை!’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டே இருந்தால், அதன்படியேதான் ஆவார்கள் சிறுவர்கள். தவறு செய்தால், ஏன் அக்காரியம் தவறு என்று விளக்கலாம். இரண்டு வயதுக் குழந்தைகூடப் புரிந்துகொள்ளும். நான் லட்சணமாக குழந்தை வளர்த்த கதை: என் பேரன் கைதவறி தன் பானத்தைக் கீழே கொட்டிவிட்டான். பெரிதாக அழ, ‘போனால் போகிறது!’ என்று நான் சமாதானப்படுத்தினேன். ‘ஓ, இது செய்யக்கூடிய காரியம்தானா!’ என்று நினைத்தவன்போல், மறுநாள் மெனக்கெட்டு அதைக் கொட்டினான். ஆள்காட்டி விரலை நீட்டி, ‘நோ!’ என்ற ஒரே வார்த்தையில் என் எதிர்ப்பைப் புலப்படுத்தினேன். மூன்றாவது நாளும் அப்படியே செய்ய, பொத்தென்று முதுகில் ஒன்று வைத்தேன். அவன் அழவில்லை. என்னையே பார்த்தான். அன்பைக் கொட்டி, கதைகள் சொல்லி சாதம் ஊட்டும் பாட்டி அடிப்பதென்றால், அது செய்யக்கூடாத காரியம் என்று புரிந்திருக்க வேண்டும். அன்றுடன் அந்த விஷமம் நின்றது. புரியாத குழந்தையாக இருந்தால், (உ-ம்: உங்களுக்குப் பிடித்தமான கண்ணாடிப் பொருளை உடைத்தல்) பெரிதுபடுத்தாமல் விடுவதுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது. ஏனெனில், இந்த வயதிலிருந்துதான் தான் எவ்வளவு நல்லவன், புத்திசாலி என்றெல்லாம், பெரியவர்களின் பாராட்டிலிருந்து உணர ஆரம்பிக்கிறது குழந்தை. பொருளை மீண்டும் வாங்கலாம். ஆனால் உடைந்துவிட்ட மனத்தை..? 19.வாழ்வின் மறுபக்கம் கேள்வி: தந்தையை இழந்து நிற்கும் ஒரு சிறுவனுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது? விளக்கம்: பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தால், தன் நண்பன் இறந்துவிட்டான் என்பதைக் கேட்டு அதிர மாட்டான். அவனைப் பொறுத்தவரையில், வாழ்வும், சாவும் இரவு, பகல் போலத்தான். ஒன்று மாற்றி ஒன்று வந்தே தீரும். ‘நேத்திக்குத்தானே செத்துப்போனான்? இன்னிக்கு ஏன் ஸ்கூலுக்கு வரலே?’ என்று அப்பாவித்தனமாகக் கேட்பான். அப்படிப்பட்ட குழந்தையிடம் ‘மரணம்’ என்றால் என்னவென்று விளக்க வேண்டுவது அவசியம். ‘தாத்தா செத்தா ஏன் எல்லாரும் அழறா? ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போங்களேன்!’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் என் மகன். மரணத்துக்கும், நோய்க்கும் வித்தியாசம் புரியவில்லை. தெருவில் விரைந்த கார்களினால் நசுக்கப்பட்டு, உருத்தெரியாது கிடக்கும் தவளையை சசிக்கு இப்படி அறிமுகப்படுத்தினேன்: ‘இந்த தவளை செத்துப்போச்சு. தாத்தா மாதிரி! நடக்க முடியாது – கால் இல்லே..,’ என்ற ரீதியில் ஆரம்பித்தேன். நாளடைவில், அவனுக்கு அது ஒரு விளையாட்டாய் ஆயிற்று. ‘FROG செத்துப்போச்சு. பாக்க முடியாது – கண் இல்லே, நடக்க முடியாது, பேச முடியாது, காது கேக்காது’ என்று ஒப்பிப்பான். மரண பயம் போயிற்று. அந்த ஆண்டே தான் சாகப்போகிறோம் என்று தெரிந்திருந்தது சசிக்கு. கதை: எனக்குத் தெரிந்த ஒருவர் எதிர்பாராவிதமாக (தூக்கத்திலேயே, 34 வயதில்) இறந்தபோது, அவரது ஒரே மகனுக்கு எட்டு வயது. அவர்களிடையே இறுகிய பிணைப்பு இருந்தது. இயந்திர கதியில் தந்தைக்கான ஈமச்சடங்குகளைச் செய்தாலும், மரணம் என்றால் என்னவென்று சரியாகப் புரியாத பருவம். முப்பது பிராயம்கூட நிரம்பாத தாயுடன், வீட்டுக்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் அழுது புலம்பியதைக் கண்ட பையனுக்கு ஒன்றுதான் புரிந்தது: இனி தான்தான் வீட்டில் ஆண்பிள்ளை. அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பாவை இனி பார்க்கவோ, பேசவோ முடியாது என்ற நிதரிசனம் வருத்தமளிப்பதாக இருந்தாலும், அழுதால், அம்மாவின் துக்கம் அதிகரிக்கும் என்றெல்லாம் தோன்றிப் போயிற்று. அடுத்த பத்து வருடங்கள் அவன் மிக பொறுப்பாக நடந்துகொண்டு, கல்வியிலும் சிறந்து, தாய்க்கு மகிழ்ச்சியூட்டப் பார்த்தான். ஆனால் அவளோ! ‘இப்போதெல்லாம் என் மகன் யார்கூடவும் பேசறதே இல்லே!’ என்று ரகசியக் குரலில் தெரிந்தவர்களிடமெல்லாம் எடுத்த எடுப்பிலேயே சொல்லி வருத்தப்படுவாள். உற்றாரின் சாவு தன்னைப் பாதிக்கவில்லை என்பதுபோல் காட்டிக்கொள்பவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். அவனுடைய வளர்ச்சியில் ஏதோ ஒரு குறை ஏற்பட்டு விடுகிறது. ‘துக்கம்’ என்றிருந்தால், அழுதுதான் தீர்க்க வேண்டும். வேறு வழியே கிடையாது. சில சிறுவர்கள் துக்கத்தை கோபத்தின்மூலம் வெளிப்படுத்துவார்கள். கோபம் – தம்மை இப்படி நிராதரவாக விட்டுவிட்டுப் போனவர்மேல்; தம்மீதும், பிறர் மீதும் – அந்த மரணத்தைத் தடுக்கத் தெரியாத குற்றத்துக்காக. ‘எனக்கு ஒரு பாதிப்பும் இல்லையே!’ என்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். ஆனால், உள்ளுக்குள் சொல்லத் தெரியாத உணர்வுகளுடன் குமைவார்கள். நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், ‘ஒங்கப்பா போயிட்டார்’ என்று மொட்டையாகக் கூறுவது சரியல்ல. எதனால், மாண்டவர் உடலை எங்கே கொண்டு போனார்கள், என்ன செய்தார்கள் – இப்படி. இல்லாவிட்டால், துக்கமும், குழப்பமும் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள் கவுன்செலர்கள். குழந்தைகளோ, பெரியவர்களோ, மரணம் ஒருவரை ஆட்டுவிக்கும் விதமே தனி. கதை: என் பக்கத்து வீட்டில் குடியிருந்த நூருல் (உண்மைப் பெயரில்லை) என்ற மலாய் பெண்மணி தன் சோகக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள். அவளுடைய ஒரே மகன் பத்து வயதாக இருந்தபோது, ஏதோ நோய் கண்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். இவள் கூடவே இருந்தாள். ஆனால், இஸ்மா அருகில் இல்லாத சமயம், அவன் உயிர் பிரிந்துவிட, அவளிடமிருந்து மகனுடைய மரணம் மறைக்கப்பட்டது. ஏற்கெனவே இருதயம் பலகீனமாயிருந்தவளுக்கு ஏதேதோ மருந்து கொடுத்துத் தூக்கத்திலேயே ஆழ்த்திவிட்டார்கள் – அவளால் அந்த துக்கத்தைத் தாங்க முடியாது என்றெண்ணிய குடும்பத்தினர். அவள் கண்விழித்தபோது, மகனின் உடல்கூட இல்லை. அவனை இனி என்றுமே பார்க்க முடியாது என்ற செய்திதான் கிடைத்தது. அந்த அதிர்ச்சி தாங்கமுடியாது, பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப்பற்றிப் பேசுவாள். பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும், அவளுடைய மகனைப்பற்றி யாராவது பேச்செடுத்தாலே கதறி அழுவாளாம். அவளுடைய குடும்பத்தினர் இதைத் தலைக்குனிவெனக் கருதினர். அவளுடைய மகள், ‘என் தம்பியைப்பத்தி ஒங்ககிட்ட சொல்லிப் புலம்பி இருப்பாங்களே! எங்கம்மாவுக்குப் பைத்தியம், ஆன்ட்டி!’ என்று முகத்தைச் சுளித்தபடி என்னிடம் கூறினாள். அந்த இளம்பெண்ணுக்குப் புரியவில்லை ஒரு தாயின் மனம். (நீரில் மூழ்கிவிட்ட என் மகனுடைய உடலைக் கட்டிக்கொண்டு அவள் கதறியபோது எனக்குப் புரிந்தது – அவ்வளவு காலமாக வெளிவராத துக்கம் இப்போது அவள் நேசித்த இன்னொரு சிறுவனது மரணத்தில் பீறிட்டுக் கிளம்புகிறது என்று). ஒரு குழந்தையோ, தாயோ இறந்தால் பெரியவர்கள் எப்படி அதைத் தாங்கிக்கொள்ள முயலும்? (என்னை நன்றாகக்கூடத் தெரியாத சிலர் நேரில் என்னிடம் கேட்ட கேள்வி இது). நான்: இறந்த நபருடன் நீங்கள் ஒன்றாக இருந்திருப்பீர்கள். அதில் எந்த தருணத்தில் அவரது இழப்பை பெரிதும் உணர்கிறீர்கள்? கூடவே இருந்த தாயை இழந்த மாது : நானும், அம்மாவும் பால்கனியில் உட்கார்ந்து ஒன்றாகப் பேசிக்கொண்டு டீ குடிப்போம். இப்போது தனியாக இருந்தால், அழுகை வருகிறது. நான்: எப்போதும்போல இரண்டு கப் டீ போட்டு, ‘அம்மா! இது உங்களுக்கு,’ என்று சொல்லுங்கள். அம்மா எதிரில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அன்று நடந்ததில் உஙளைப் பாதித்ததைப் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். பிறகு டீயைக் கீழே கொட்டிவிடலாம். சில நாட்கள் இப்படிச் செய்தால், மனம் சற்று லேசாகிவிடும். சிலர் பார்க்குமிடங்களில் எல்லாம் இளமையில் எதிர்பாராவிதமாக மாண்டவரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். பார்ப்பவர்கள், ‘யாரிது? என்று கேட்க, கடந்தவைகளை ஒரு விவரம் குறையாமல் கூற, துக்கம் மீண்டும் மீண்டும் மேலெழுமே! துக்கத்தைத் தாளமுடியாது போனால், நெருங்கிய உறவினர்களிடம், நாம் சொல்வதை அப்படியே புரிந்துகொள்ளக்கூடிய நண்பர்களிடம் மாண்டவரைப்பற்றிப் பேசுவது அவசியம். பேசும்போது கண்ணீர் பெருகினாலும், ஆறுதல் அளிக்கும் வழி இது. ’எந்த துக்கமும் ஒன்றரை வருடங்களுக்குமேல் இருக்காது. தானே கதையாகிடும்,’ என்றார் என் தாய், எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில். நான் ஒப்ப மாட்டேன். மனத்தடியில் ஒரு பொறி இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதாவது நினைவு எழும்போது, துக்கமும் கிளர்ந்து எழும்– காலமெல்லாம். 20.காதுகொடுத்துக் கேளுங்கள் கேள்வி: இடைநிலைப் பள்ளியில் பயிலும் சிலரை வீட்டிலோ, பள்ளியிலோ அடக்கவே முடிவதில்லை, ஏன்? விளக்கம்: வீட்டில் புரிந்துணர்வு இல்லாது, தண்டனை மட்டுமிருந்தால், எழும் ஆத்திரத்தை ஆசிரியர்களிடம் காட்டுவார்கள். அல்லது, சுந்திரம்’ என்ற பெயரில், சிறுவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துப்போவது. பொதுவாக மத்திம வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே மரியாதை, ஒழுக்கம் என்று தகுந்த குணங்களைப் பழக்கி இருப்பார்கள். பெற்றோரிடம் அன்பு செலுத்தும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களிடமும் அதேபோல் அன்பைச் செலுத்த முடியும்.அதனால் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எளிது. ஆசிரியர்களுக்கும் அவர்களைப் பிடித்துப்போகும். மாணவர்களும், ஆசிரியர்களும் வெவ்வேறு சமூக நிலைகளிலிருந்து வந்தவர்களாக இருந்தால், பிரச்னைகள் முளைக்கும். பல்லின நாடாக இருந்தால், பிறரின் கலாசாரம் புரியாது போகலாம். தன் கோணத்திலேயே ஒரு ஆசிரியர் அவர்களைக் கணித்தால், அவர்களது போக்கு எப்படிப் புரியும்? எரிச்சலும், ஆத்திரமும்தான் எழும். கதைகள்: நான் வேலை பார்த்த பள்ளியில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இந்திய (தமிழ்) மாணவர்களே இருந்தார்கள். ‘கவுன்செலிங்’ என்ற பெயரில் அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வேலை ஃபரூக் (உண்மைப் பெயரில்லை) என்ற ஒரு மலாய் ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. வயதில் மூத்தவர்கள் ஏதாவது கேட்டால், அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. இது புரியாது, எதற்காவது தான் திட்டும்போது அவர்கள் தன்னையே பார்த்தால், ‘என்ன முறைக்கிறே?’ என்று அவர்களை மூன்று நாட்கள் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் (சஸ்பெண்ட்) செய்துவிடுவார். தமிழர்கள்தாம் மிக அதிகமாக தண்டிக்கப்படுகிறார்கள் என்றறிந்து, நான் ஃபரூக்கிடம் நியாயம் கேட்டேன். ‘எனக்கு அவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, CIKGU (செகூ. மலாய் மொழியில் ஆசிரியை). இனி நீங்களே அவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள்!’ என்று பொறுப்பைத் தட்டிக்கழித்தார். அடுத்த நாளே நான்கு பேர் என்னிடம் அனுப்பப்பட்டனர். ‘கவுன்செலிங்கா?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டபோதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது. மணிக்கணக்காக குற்றம் சாட்டி, புத்தி சொன்னால் யாரால்தான் தாங்க முடியும்! அந்த பயம்தான் அவர்களுக்கு! கவுன்செலிங்குக்கு வரும் எந்த மாணவரும் தானே விரும்பி வருவதில்லை. பள்ளி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய ‘குற்றம்’ செய்துவிட்டால், கவுன்செலிங் ஆசிரியரிடம் அனுப்புவார்கள். அவரோ, அவர்களது இனம், மதம், கலாசாரம் என்று எல்லாவற்றையும் அலசி, அவர்களைச் சிறுமைப்படுத்துவார். எந்த மதம், எந்த இனம் என்றெல்லாம் கணக்கில்லை. எல்லாவற்றிற்கும் இவைகளிலிருந்து மேற்கோள் காட்டுவார். அதிகாரம் செலுத்துவதே இன்பமானதாக, சுயபலத்தைக் கூட்டுவதாக இருக்க, ‘ஆலோசனை’ என்ற பெயரில் தான் சொல்வததால் மாணவர்கள் பயனடைவார்களா என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது. ‘அவர்களை அழ வைக்கவேண்டும். அதன்பின், நமக்குத்தான் வெற்றி!’ என்று உதவித் தலைமை ஆசிரியை என்னிடம் சொல்ல, அதிர்ந்து போனேன். (இரு காதணிகள் அணிந்து இருந்ததால், ஒரு பெண்ணைப் பலர் சூழ்ந்துகொண்டு, ‘இது நமது மதத்திற்கு விரோதம்!’ என்று ஒரு மணிக்குமேல் திரும்பத் திரும்பக் கூற, தாக்குப்பிடிக்க முடியாது கதறினாள்). என்னிடம் வந்த மாணவர்கள் தயங்கியதில் என்ன ஆச்சரியம்! ஒரு காலி அறையில் எங்கள் உரையாடல் நடந்தது. தமிழில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் முகங்கள் சற்றே தெளிந்தன. ‘நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்கள் பேசுங்கள். நான் கேட்கிறேன்,’ என்றேன். மெள்ள மெள்ள, அவர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நடுவில் ஒருவன், ‘அக்கா,’ என்று அழைத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டான்! அவர்கள் பிரச்னையைக் கேட்டு நான் சிரிக்காத குறை! ஆனால், அவர்கள் வயதில் அது பெரிது. பள்ளி வாசலிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தானாம். அதைப் பார்த்த இன்னொருவன், ‘GIRL FRIEND-ஆ ?’ என்று கேலியாகக் கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிவிட்டது: ‘ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாமா, இல்லே, கூட ஆள் சேர்த்துக்கிட்டு வர்றியா?’ நாள் குறிக்கப்பட்டது. இவர்கள் கட்சியை பலப்படுத்த, வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களும் கைச்சண்டையில் சேர்ந்துகொண்டனர். நான் தலையில் கைவைத்துக்கொண்டேன். ‘உங்களுக்கெல்லாம் என்னப்பா, தமிழ்ப்பட ஹீரோன்னு நினைப்பா?’ பெருமையுடன் புன்னகைத்தார்கள். ‘ஹீரோ சண்டை போட்டா, எட்டு இலக்கத்தில பணம் சம்பாதிக்க முடியும். நீங்க அவங்களைமாதிரி நடந்தா, மாட்டிப்பீங்க!’ அதன்பின், பொதுப்படையாகப் பேசினேன் – கல்வியின் முக்கியத்துவம், சமூக, பொருளாதார நிலையைக் கல்வியால் எப்படி உயர்த்த முடியும் என்று. ‘ஒங்க இளமையை ஏன் இப்படி வீணாக்கிறீங்க!’ என்று நான் அயர்ந்தபோது, என் முகத்திலிருந்த சோகம் அவர்களிடமும் பிரதிபலித்தது. அதன்பின், பிற ஆசிரியர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதைப்பற்றி, வகுப்பில் எது காணாமல் போனாலும், அவர்கள் புத்தகப்பைகளைச் சோதனை போடுவது என்று பல தகவல்களை நான் கேளாமலே என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களது பெற்றோர் பள்ளியில் தம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், படிப்பின் முக்கியத்துவம் எதுபற்றியும் கலந்து பேசுவதில்லை என்றும் கேட்டறிந்தேன். விடைபெற்றபோது, அவர்கள் முகத்தில் நிம்மதி கலந்த சிரிப்பு. நான் திட்டவில்லை, உபதேசம் செய்யவுமில்லை. அதன்பின், அவர்களின் நடத்தையில் நல்ல மாறுதல் தெரிந்தது. நான் எங்காவது போய்க்கொண்டிருந்தால், ஓடி வந்து வணக்கம் தெரிவிப்பார்கள். சில சமயம் நான் முதலில் வணக்கம் தெரிவித்து, அவர்களுடைய ஆச்சரியத்துக்கு அடிகோலி இருக்கிறேன். ‘நல்லாப் படிக்கிறீங்களா? பள்ளி இறுதியாண்டு பரீட்சையில என்ன வாங்குவீங்க?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, ஒரு மாணவன் செல்லமாக முறைத்தான்.‘ஃபர்ஸ்ட் கிளாஸ்தான்!’ இன்னொரு பள்ளி, மாணவ மாணவிகள் தாமே ஓர் ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தம் மனக்குறைகளை வெளியிடலாம் என்று அறிவித்தது. ஒரு மாணவி தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதால் குடும்பம் படும் கஷ்டங்களைக் கூறினாள். (முதலில் தாயின் அனுமதி பெற்றிருந்தாள் இந்த மலாய் மாணவி). எல்லா வகுப்புகளிலும் அடங்காத வேற்றின மாணவன் ஒருவன் தானே வலிய வந்து, அதே போன்ற கதையைச் சொன்னான். அதற்குள் எனக்கு அக்கலாசாரம் பழகிவிட்டிருந்தது. ‘அப்பா இன்னொரு பொண்ணோட உறவு வெச்சுக்கிட்டிருந்தா, அது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே இருக்கிற பிரச்னை. நீ உருப்படற வழியைப் பாரு!’ என்றேன். ‘நாளைக்கே கல்யாணமானா, எப்படியோ குழந்தை பிறக்கும். (பதின்ம வயது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த வாக்கியம் இது!) மனைவியோட சினிமாவுக்குப் போக, டாக்டருக்குப் போக, எல்லாத்துக்கும் பணம் வேண்டாம்? படிச்சாதானே நிறைய காசு சம்பாதிக்கலாம்?’ இந்த மாணவன் அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுப் போனான். என் பாடமாகிய பௌதிகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற முடியவில்லையே என்று அழுதான். (‘விடு! நானே நல்ல விதமாக பாசாகி இருக்க மாட்டேன்!’ என, அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது). அந்த ஆண்டின் இறுதியில், ‘என்னை மரியாதையுடன் நடத்திய ஒரே நபர் நீங்கள்தான்!’ என்ன்று சொல்லிவிட்டுப் போனான். பல மாணவ மாணவிகள் தயங்காது என்னிடம் வந்ததற்குக் காரணம் நான் என்னை அவர்கள் நிலையில் பொருத்திப் பார்த்ததால்தான் (EMPATHY) என்று நினைக்கிறேன். ‘அந்த இந்திய ஆசிரியைகிட்ட என்ன ஓயாம பேச்சு? எதுவாக இருந்தாலும், என்கிட்ட வந்து சொல்லேன்!’ என்று ஓர் ஆசிரியை அழைத்ததாகச் சொல்லி, ‘அவங்ககிட்ட யார் போவாங்க! ஏதாவது சொன்னா, பள்ளிக்கூடம் பூராவும் டமாரம் அடிச்சுடுவாங்க!’ என்று கசப்புடன் தெரிவித்தாள் இன்னொரு மலாய்ப் பெண். நான் வேற்றினமாக இருந்தது அவளைப் பாதிக்கவில்லை. தான் அந்தரங்கமாகச் சொல்வது ரகசியமாகவே வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. நாம் ஒரு நாட்டுக்குப் போவதற்குமுன், அவர்களுடைய கலாசாரத்தைப்பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும். இல்லையா? அதே போல், ஆசிரியர்கள் தம் பொறுப்பில் இருக்கும் மாணவர்களின் பின்னணிபற்றியும் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம். ஆசிரியப் பயிற்சியின்போது சொல்லிக் கொடுப்பது பரீட்சை எழுத மட்டுமில்ல. அதை நடைமுறையிலும் கடைப்பிடித்தால்தான் ஆசிரியர், மாணவர் இரு சாராருக்குமே நிறைவு, நீண்டகாலநன்மை. 21.மல்லிகையும், தாம்பத்தியமும் கேள்வி: எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. தினமும் வேலை முடிந்து வருகையில் நான் மல்லிகைச் சரம் வாங்கி வரவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். மல்லிகைப் பூவிற்கும், தாம்பத்தியத்துக்கும் அப்படி என்ன உறவு? விளக்கம்: தந்தையோ, தாயோ வேலை நிமித்தம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் போகிறார்கள். திரும்பி வரும்போது, அவர்கள் தின்பண்டமோ, விளையாட்டுச் சாமானோ வாங்கிக்கொண்டு வந்தால் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தான் அருகில் இல்லாதபோதும், தன்னைப்பற்றிய நினைவு வைத்திருக்கிறார்களே! இதேபோல்தான் ஒரு பெண்ணும். கணவன் அலுவலகத்தில் பல பெண்களுடன் பழகக்கூடும். இருந்தாலும், தன் நினைவாகவே இருந்திருக்கிறார் என்ற அற்ப ஆறுதல். இத்தகைய பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்றே தோன்றுகிறது. கணவன்மேல் ஒருவித ஆக்கிரமிப்பு. என் உறவினர் பெண் வேறு மாதிரி சொன்னாள். எப்பொழுதாவது கணவர் மல்லிகைச் சரம் வாங்கி வந்தால், அன்று அவளை நாடுகிறார் என்று அர்த்தமாம். வாய்விட்டுச் சொல்ல முடியாததை குறிப்பால் உணர்த்துகிறாராம்! இந்திப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும், நடனப் பெண்கள் இருக்குமிடத்தில் உட்கார்ந்திருக்கும் வில்லன் தன் கரத்தில் மல்லிகைச் சரம் சுற்றியிருப்பான். அடிக்கடி அதை முகர்ந்து பார்த்துக்கொள்வான். ஒரு இயந்திரியத்தைத் தன் வசப்படுத்தினால், மற்றவைகளும் நன்கு செயல்படும் என்று காட்ட எண்ணினார்களோ பட இயக்குனர்கள்?! (சிலருக்கோ, மல்லிகையின் நறுமணம் தலைவலி உண்டாக்குகிறதே?) தாம்பத்தியமே சிக்கல்தான். கதை 1; ஒரு நண்பர், ‘உங்களிடம் ஒரு விஷயம் கேக்கணுமே!’ என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தார். அவருடைய நண்பர் ஒருவர் வருத்தமாக இருந்தாராம். நண்பர்கள் சிலர் என்ன ஆயிற்று என்று கேட்க, மனைவிக்கு தாம்பத்திய சுகத்தில் விருப்பம் போய்விட்டது என்றார் நான்: ’உங்கள் நண்பருக்கு என்ன வயது? ‘நாற்பத்து ஐந்து!’ நண்பர்களெல்லாம் தமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று அஞ்சியவர்களாய், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, ‘கொஞ்சம் அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கிப்போ!’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் போனவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிட்டார், முகத்தைத் தொங்கப் போட்டபடி. ‘ஏங்க பொண்ணுங்க இப்படி, புரிஞ்சுக்க முடியாதபடி, இருக்காங்க?’ என்று என் நண்பர் என்னைக் கேட்டார். எல்லாப் பெண்களையும் புகழ்ச்சியாலோ, பரிசுப்பொருட்களாலோ வழிக்குக்கொண்டுவர (வீழ்த்திவிட?) முடியாது. நாற்பதுக்கு மேல் ஆன பெண்ணிற்கு உடல் உபாதைகள் இருக்கலாம். பெண் மருத்துவரைப் பார்த்தால் விளங்கும். இல்லை, கணவன்மேல் ஏதாவது மனத்தாங்கலாக இருக்கலாம். கதை 2: கணவன் தமிழ்ப்படங்களில் ‘கவர்ச்சி நடனம்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளில் பெண்கள், ஆண்கள் மனத்தைத் தூண்டவேபோல் இடுப்பையும், மார்பையும் ஆட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டுத் தன் அருகில் வருகிறார். அது தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று வலிய வந்து என்னிடம் சொன்னார் ஒரு மாது. ‘விரதம்,’ என்ற சாக்கில், தனியே பாயில் உறங்குவாராம். கணவன் மனைவிக்குள் பிரச்னை இருந்தால், வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. நிறைய கத்தலும், அழுகையும் தவிர்க்க முடியாதது. ஆனால், பலன் கிடைக்கும். கதை 3: கணவன் தன்னை நெருங்குவதைத் தவிர்த்தாள் அந்த இளம்பெண். ஓயாமல் குற்றம் கண்டுபிடிப்பவன் தன்மேல் இன்னும் அதிகமாகக் குற்றம் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம்தான் அவளுக்கு. ‘இரவு எட்டு மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிடுகிறாள்!’ என்று அக்கணவன் என்னிடம் குறைபட்டுக்கொண்டான். ‘ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்று அடிக்கடி மனைவியை மிரட்டுவதாகவும் சொன்னான். இருவருக்குமே நிம்மதி இல்லை. இத்தனைக்கும், காதல் திருமணம்! அப்பெண் பாலியல் வதைக்கு ஆளானவள். ஆண்கள் என்றாலே ஒருவித மிரட்சி. இதைக் கணவரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். கணவனும் அடிக்கடி, அவளை ‘முட்டாள்,’ என்று பழிப்பதைக் கண்டேன், அவர்கள் இல்லத்தில் சில தினங்கள் தங்கியிருந்தபோது. ஏற்கெனவே தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று உள்ளுக்குள் புழுங்குகிறவள்! அவளை இன்னும் மட்டம் தட்டினால்? பழியை அவன்மீது திருப்பினேன். வேண்டுமென்றே அவளுக்குப் புரியாத விதத்தில், பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலம் பேசுவது, பழிப்பது எல்லாவற்றையும் சுட்டிக் காட்டினேன். அவனுக்கு என்மேல் காட்டம். தான் ரொம்ப உயர்ந்தவன் என்பதுபோல் மனைவியை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவன், அல்லவா? ஆனாலும் அவன் தன்னை மாற்றிக்கொண்டான். அடுத்த ஆண்டே, தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தாள் அப்பெண். அவன் மல்லிகைப்பூ வாங்கி வந்து அவளை மயக்கினானா என்று தெரியவில்லை. எது எப்படியோ, தளர்நடை போட்டுக்கொண்டிருந்த தாம்பத்தியம் வலுவாயிற்று. 22.வயதுக்கேற்ற வளர்ச்சி ‘குழந்தை’ என்று கூறும்போது நம் நினைவுக்கு வருவது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம். சுமார் பதினெட்டு வயதில் அவர்களது உடல் வளர்ச்சி பரிபூரணம் அடைவதுவரை அவர்களுடைய மனப்போக்கும் சிறிது சிறிதாக விசாலமடைகிறது. இதில் ஏதாவது தடை ஏற்பட்டால், மனவளர்ச்சி அந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது. குழந்தை பிறந்து இரண்டு வயதுவரை தன்னைச் சுற்றி உள்ள உலகை ஐம்புலன்களின் உதவிகொண்டு அறிய முனைகிறது. ஒளியோ, ஒலியோ இருக்கும் திசையை நோக்கித் தலையைத் திருப்பும் முதலில். பிறகு, கைக்கெட்டுவதை எல்லாம் எடுக்க முனையும். எந்த ஒரு பொருளும் தின்னத் தகுந்ததா இல்லையா என்று அறிவதில்தான் இந்த வயதினருக்கு ஆர்வம். மற்றபடி, தானும் தாயின் ஒரு பகுதிதான் என்பதுபோல்தான் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நடந்துகொள்ளும். இரண்டு வயதுவரை யார் உணவூட்டினாலும் உட்கொள்ளும் குழந்தைகள் அதன்பின், தாமும் ஒரு தனிப்பிறவி என்று உணர்கிறார்கள். பிறர் சொல்வது சரியாக விளங்காது. தமது செய்கையால் பிறருக்கு ஏற்படும் விளைவுகளும் இவர்கள் அறிவுக்கு எட்டாத சமாசாரம். இருந்தாலும், உலகமே இவர்களைச் சுற்றித்தான் இயங்குகிறது என்று எண்ணம் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு யார் வந்தாலும், தம்முடன் விளையாடத்தான் வருகிறார்கள் என்றெண்ணி மகிழ்வார்கள். தனக்குக் கிடைத்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம் இந்த வயதில் கிடையாது. இந்த அறிவை நாம்தான் புகட்ட வேண்டும்.. ஒரு டப்பாவில் பிஸ்கோத்தோ, சாக்லேட்டோ போட்டு, ‘எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நீயும் சாப்பிடு!’ என்று இரண்டு வயதுக் குழந்தையின் கையில் கொடுங்கள். பெரியவர்கள் பேச்சை மறுப்பின்றி ஏற்கும் குழந்தை அதை அப்படியே கடைப்பிடிக்கும். தின்பண்டத்தை வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் நன்றி தெரிவித்து, குழந்தையின் ‘தாராள’ மனப்பான்மையைப் பாராட்டினால், நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடும். (‘சாக்லேட்டா? ஐயோ, வேண்டாம்! குண்டாகிடும். ஏற்கெனவே, சர்க்கரை வியாதி!’ என்றெல்லாம் பிகு பண்ணாது, வாங்கிக்கொள்ளுங்கள். தின்ன வேண்டிய அவசியமில்லை. பிறகு டப்பாவிலேயே போட்டுவிடலாம். தான் கொடுக்கும்பொது வாங்கிக்கொள்ள மறுப்பது குழந்தையின் மனதை நோகடிக்கும். நிலவரம் புரியாது, அழுகையில் உதடு பிதுங்கும்). பிறர் வீட்டுக்கு அழைத்துப் போகும்போது உங்கள் குழந்தை அவர்கள் வீட்டுச் சாமான்களை எடுத்து ஆராய்ச்சி செய்கிறானா? கண்ணாடிச் சாமானாக இருந்தால், கைதவறி கீழே விழுந்துவிட உடைந்தும் போகலாம். ‘வளர்க்கத் தெரியாமல் வளர்த்திருக்கிறீர்களே!’ என்பதுபோல் முறைப்பவர்களை அலட்சியம் செய்யுங்கள். ஏன் தெரியுமா? காரண காரியம் புரியாத வயது ஏழுவரை. அதாவது, பிறர் பொருளை எடுப்பது தவறு என்று புரியாது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். வெளியே அழைத்துப்போவதற்கு முன்பே, ‘இன்னொருவர் வீட்டுச் சாமான்களில் கை வைக்கக்கூடாது!’ என்று எச்சரித்து விடுங்கள். அதேபோல், மற்ற குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் ஒன்றை எடுத்துக்கொண்டு, தன்னுடையதுதான் என்று அடம் பிடிக்கிறானா? ‘மானம் போகிறதே!’ என்று குழந்தையை அடித்தோ, திட்டியோ செய்வதைவிட, ‘உனக்கும் இதேமாதிரி வாங்கித் தருகிறேன்!’ என்று நல்லவிதமாகச் சொல்லலாம். அப்படியும் மசியாவிட்டால், பேச்சை மாற்றுங்கள். குழந்தைகள் கவனம் அதிக நேரம் ஒன்றில் நிலைத்திருக்காது. ‘ஜூவில அன்னிக்கு சிங்கம் பாத்தோமே!’ என்று சம்பந்தம் இல்லாது எதையாவது ஆரம்பியுங்கள். அவ்வளவுதான்! அழுகை மாறி, உற்சாகம் பீறிடும் குழந்தையிடம். கடைவீதியில் பார்ப்பதை எல்லாம் கேட்கிறானா? ‘உனக்குத்தான் வீட்டில் நிறைய இருக்கிறதே!’ என்று சொன்னால் சமாதானமாகிவிடுவான். ஒரு கடைக்காரர் என் நான்கு வயது மகனிடம், ‘இது வேணும்னு அம்மாகிட்ட கேளு!’ என்று ஏதோ விளையாட்டுச் சாமானைக் காட்டி, தூண்டிவிட்டார். குழந்தை கேட்டால், தாய் மறுப்பது கடினம் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.. அவனோ, ‘ஆத்தில நெறை..யா இருக்கு!’ என்று பதிலளிக்க, அவர் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார். எனக்கு ஒரே பெருமை. ‘சமத்து!’ என்று அவனை வாயாரப் பாராட்டினேன் – அவர் தலைமறைந்ததும்! ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளும் உயிரும், உணர்ச்சியும் கொண்டவை. அதனால்தான் தம் கரடிப் பொம்மையையும், விளையாட்டுக் காரையும் சரிசமமாகப் பாவித்துப் பேசி விளையாடுவார்கள். இதில் அசட்டுத்தனம் எதுவுமில்லை. இந்தக் குணத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கதை: என் பேரனுக்கு மூன்று வயதானபோது, டவுனுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். திடீரென்று பெரிதாக அழுதான். நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரில் காலைக் கிழித்துக் கொண்டதில், ஆழமான காயம். நடந்தது தன் தவறா, இல்லையா என்று புரியாது, குற்ற உணர்ச்சியோ (‘அடி கிடைக்குமோ?’) அல்லது அவமானமோ எளிதில் அடையும் பருவம் இது. அதனால், பழியைத் திசைதிருப்பி விடுதல் நன்று. நான் பின்னோக்கி நடந்தேன். ‘இந்த ஸ்கூட்டரா ஒன் காலில ரத்தம் வர வைச்சது? எதுக்கு குழந்தை போற வழியில நின்னே?’ என்று வீராவேசமாகக் கேட்டபடி, அதை நான்கு போடு போட்டேன். அவன் அழுகை மறைந்தது. வலியை மறந்தான். என் போக்கைப் பார்த்து, சில இளைஞர்கள் தம் கண்களையே நம்ப முடியாது வெறித்தனர்! ‘பார்த்தா நார்மலா இருக்கா! வாகனத்தோட சண்டை போடறாளே! ஒரு வேளை, லூசோ?’ என்று அவர்கள் நினைத்தது எனக்குப் புரிந்தது. அவர்களுக்காக ஸ்கூட்டருக்கு இன்னும் இரண்டு அறை விட்டு, ‘ஒன்னோட வலி சரியாப் போச்சு!’ என்று குழந்தையிடம் கூவினேன். என் வார்த்தைகளை நம்பி, நொண்டியபடி நடந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவசரமாக, பிளாஸ்திரி வாங்கி ஒட்டினேன். சில குழந்தைகள் குளிக்கப் படுத்துவார்கள். ‘ஒன்னோட வாத்து குளிக்கணுமாம்!’ என்று குளியலறைக்குப் போனால், குழந்தையும் ஆர்வத்துடன் பின்னால் வருவான். ஏழிலிருந்து பதினோரு வயதுவரை வேறு மாற்றங்கள். தாழ்வு மனப்பான்மைக்கும், சுறுசுறுப்புக்கும் இடையிலான போட்டி. இந்தப் பருவத்திலும் பெற்றோர் தொடர்ந்து, ‘நீ புத்திசாலி. நல்ல பையன்!’ என்று (அளவோடு) பாராட்டினால், தன்னம்பிக்கை வளரும். பிறருடைய மன ஓட்டம் புரியத் தொடங்கும். ‘இப்படிச் செய்தால் இன்னது நடக்கும்,’ என்ற தெளிவு பிறக்கும். தான் அடித்தால் பிறருக்கு வலிக்கும், இன்னொருவர் பொருளை அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்றெல்லாம் புரியும். பதினோரு வயதுக்குமேல் தனக்குரிய வேலை, தனது நிலை, தான் ஆற்றவேண்டிய பங்கு முதலியவை தெரிய வேண்டும். அப்போதுதான் பொறுப்பும், அதை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் ஏற்படும். ஆனால், நான்கில் ஒருவர்தான் அறிவிலும், எண்ணங்களிலும் முதிர்ச்சிகொண்ட இந்த நிலையை அடைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ‘எனக்கு வேலை செய்யப் பிடிக்காது அதனால், என் குழந்தைகள் வேலை செய்தாலும் எனக்கு மனசாகாது,’ என்று கூறும் தாய், தன்னையுமறியாது குழந்தைக்குத் தீங்கு இழைக்கிறாள். தலைமைப் பொறுப்பு இவர்களுக்கு எளிதில் கைவராது. ஒரு குழந்தை வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது, அதைப் பெரிதுபடுத்தி, ஏளனம் செய்தால் குழப்பம்தான் விளையும். உதாரணமாக, பொது இடங்களில், இரண்டு வயதுக் குழந்தை கைகால்களை உதைத்துக்கொண்டு அழலாம், ‘ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடு,’ என்று. வயதுக்குரிய நடத்தைதான் அது. அதற்காக நாம் அவமானப்படத் தேவையில்லை. பசி, தூக்க வேளையில் வெளியில் அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால், பத்து வயதுச் சிறுவன் அப்படி நடந்துகொண்டால், எங்கோ தவறு விளைந்திருக்கிறது என்று அர்த்தம். தாய் தந்தையரின் ஓயாத சண்டை, குழந்தையை அவர்கள் நடத்தும் முறை, வீட்டுக்கு வெளியே குழந்தை அடையும் அனுபவங்கள் – இப்படி எத்தனை காரணங்கள் இல்லை, குழந்தையின் மனவளர்ச்சியைத் தடை செய்ய! சிறுபிள்ளைத்தனம் கொண்ட பெரியவர்கள் அந்தந்த வயதுக்கேற்ப வளர்ச்சி அடையாது இருந்திருப்பார்கள். பழையதை அலசி, தடைகள் ஏற்படக் காரணமாக இருந்தவைகளை ஏற்றாலே தெளிவும், மனப்பக்குவமும் அடையலாம். ஆனால், கடந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. நிகழ்காலத்திலேயே கவனம் கொண்டிருப்பவன்தான் முன்னேறுகிறான். 23.தெரியக்கூடாத ரகசியங்களல்ல மூன்று வயதுவரை ஆடையின்றி வீட்டுக்குள் ஓடியாடிக் கொண்டிருந்த பையனுக்கு மழலையர் பள்ளிக்குப் போனதும் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. ‘பெண்கள் ஏன் தனி டாய்லெட்டுக்குப் போகிறார்கள்?’ டிராயரைச் சரியாகப் போட்டுக்கொள்ளத் தெரியாமல் அவன் வெளியே வர, ‘ஷேம், ஷேம்!’ என்று அவனையொத்த பிற மாணவர்கள் இணைந்து பாட, குழப்பம் அதிகரித்தது. விரைவில், அவனும் அவர்களைப்போல நடக்கக் கற்றான். வீட்டில் குட்டித் தம்பிக்கு அம்மா டயாபர் மாற்றும்போது, ‘ஷேம், ஷேம்!’ என்று சொல்லிச் சிரித்தான். தன்னைப்போலவே பிறருக்கும் கண், காது எல்லாம் இருக்கின்றன என்றவரை அவனுக்குப் புரிந்தது. அம்மாவுக்கும் ‘ஷேம் ஷேம்’ இருக்குமோ? அன்று அம்மா குளிக்கப் போகையில், ‘நான் ஒன் ஷேமைப் பாக்கணும்,’ என்றபடி, தானும் உள்ளே நுழையப்போனான். ‘இந்த வயசிலேயே கெட்டுப் போயிட்டியா?’ என்று அம்மா கண்டபடி திட்டியிருந்தால், அந்த நிகழ்ச்சி அவன் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து, ஏதாவது பிரச்னையில் கொண்டுவிட்டிருக்கலாம். அவளோ, அவனை மெல்லத் தள்ளிவிட்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். பின்பு, அப்போதுதான் குளித்திருந்த ஒரு பெண் குழந்தையின் நிர்வாணமான உடலைக் காட்டி, ‘இது பொண்ணு. நீ பையன்!’ என்று விளக்க, அவன் வாயை மூடியபடிச் சிரித்தான். அந்த வயதில் புதிய அனுபவங்கள் எல்லாமே வேடிக்கை. பெரியவர்களுக்கு மட்டும் மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது என்ற ஆர்வம் மூன்று, நான்கு பெண் குழந்தைகளுக்கு உண்டாகும். தற்செயலாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, பேச்சை மாற்றிவிடலாம். அவர்களும் மறந்து விடுவார்கள். ஆனால், பிறர் சிரிக்கிறார்களே என்று அதைப்பற்றியே பேசுவதும் சரியல்ல. பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் வேண்டாத முயற்சி இது. ஏன் மாத விலக்கு வருகிறது என்று புரியாது, உதிரப்போக்கால் தான் இறந்துவிடுவோமோ என்று பயந்ததாகப் பல பெண்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். நான் பதினான்கு வயது மலாய் மாணவிகளிடம் கலந்து பேசியபோது, வயதுக்கு வந்ததும், ‘இனி பையன்களுடன் அதிகம் பேசாதே!’ என்று மட்டும் தாய்மார்கள் அறிவுரை வழங்கியதாகச் சொன்னார்கள். வேறு ஒன்றும் சொல்லவில்லையாம். நான் ஒரே வரியில் உடலுறவை விளக்கினேன், எந்தவித உணர்ச்சியுமில்லாது. (விஞ்ஞானப் பாடத்தில், குரலில் உணர்ச்சி காட்டாது தகவல்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்). ‘இவ்வளவுதானா! இதற்கு என்ன, இவ்வளவு ஆர்ப்பாட்டம்!’ என்றாள் ஒரு மாணவி. பழமைவாதிகளான பெற்றோர், ‘தானே தெரிந்துவிட்டுப் போகிறது!’ என்ற அசிரத்தையுடன், என்ற ரீதியில் உடலுறவைப்பற்றிப் பேசவே மறுப்பார்கள். ஒரு குடும்பத்தில், பதின்ம வயது ஆண் ஒருவன் பெண்ணைப்பற்றியோ, இல்லை, பெண் ஆண்களைப்பற்றியோ பேசுவது தகாது என்பதுபோல் நடந்துகொண்டால், பிள்ளைகள் குழம்பி விடுவார்கள். கல்யாணத்துக்குப் பிறகு பிரச்னைகள் ஏற்படலாம். 30, 35, 45 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான மூன்று பெண்கள் என்னிடம் கூறியது: ‘அவர் என்னைத் தொட வந்தபோது, ’இதெல்லாம் தப்பு’ என்று நான் என் கணவரிடம் மன்றாடினேன். அவர் வாரக்கணக்கில் என்னுடன் இதைப்பற்றி என்னிடம் பேசினார்’. தம்மை எவ்வளவு அறிவிலிகளாக வளர்த்திருக்கிறர்கள் பெற்றோர் என்று அவர்கள் மீதும், தம்மீதும் ஆத்திரம் அவர்களுக்கு. பதினெட்டு வயதுப்பெண் ஒருத்தி இப்படித்தான் குழந்தைத்தனம் மாறாமல் இருந்தாள். தில்லியில் பஸ்ஸில் போகும்போது எல்லா ஆண்களும் தன்னை ஏன் இடிக்கிறார்கள் என்று குழம்பி, என்னிடம் ரகசியமாகக் கேட்டாள். பெற்றோரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாது, ‘நான் இனி பஸ்ஸில் போக மாட்டேன். கார் வாங்கிக் கொடுங்கள்,’ என்று நச்சரித்திருக்கிறாள். அவள் தாயிடம் விசாரித்தேன். நான் நினைத்தபடியே, தாய்க்கு ஆண்-பெண் உறவைப்பற்றி அவளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பெண்ணிடம் நான் விளக்கிச் சொல்லி, புண்ணியம் கட்டிக்கொண்டேன்! அந்தப் பெண் சர்வசாதாரணமாக, ‘எங்கம்மாவுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் தெரியாது,’ என்றாள். முன்காலத்தில், கூட்டுக் குடும்பங்களாக இருந்தபோது, அக்கா, அத்தை என்று யாராவது ஒரு பெண்ணின் கர்ப்பம், பிரசவம் நிகழும். பன்னிரண்டு வயதில் ரகசியமாக வைக்கப்பட்டவை லேசாகப் புரிய ஆரம்பிக்கும். இப்போது அப்படியா! பெற்றோர் நாணிக் கோணாமல் எடுத்துச் சொன்னால், அதை ஏற்பார்கள் குழந்தைகள். இல்லாவிடில், தவறான முறைகளில் நண்பர்களிடமிருந்து கற்கும் அபாயம் இருக்கிறது. ஒரு குழந்தையின் இயற்கையான ஆர்வமும், தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற பெருமையும் புரியாது, அலட்சியமோ, அவமதிப்போ செய்தால், அதன் பாதிப்பு பல வருடங்கள் நிலைக்கும். படித்த கதை: கவுன்செலராக (COUNSELLOR – நாடி வருபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) பணியாற்றிய ஒரு பாதிரியார் தனது புத்தகத்தில் எழுதியிருந்தது: “எனக்கு நினைவு தெரிந்த நாளாக, ‘கண் எங்கே?’ என்று யாராவது கேட்டால் கண்ணைச் சிமிட்டி, ‘கை?’ என்று கேட்டபோது பெருமையுடன் கையைத் தூக்கிக் காட்டியிருக்கிறேன். மூன்று வயதில், யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால், புதிய உறுப்பு இதுதான் பெருமையுடன் அதைக் காட்டி, அதன் பெயரும் எனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். அதிர்ச்சியும், அவமானமுமாக, என் பெற்றோர் என்னை அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவார்கள். அப்போது, எனது ஆண் உறுப்பு ஒரு அவமானச் சின்னம்தான் என்று தோன்றிப்போயிற்று. அதனால், சிறுநீர் கழிப்பதுகூட கஷ்டமாக ஆகியது. நான் செய்யும் காரியம் யாருக்கும் தெரியக்கூடாது என்று குழாயைத் திறந்துவிடுவேன். வளர்ந்து பெரியவனானதும்கூட இதே நடத்தை தொடர்ந்தது. குழாய்த் தண்ணீர் ஓசை இருந்தால்தான்தான் சிறுநீர் கழிக்க முடிந்தது”. தமது அந்தரங்கமான பாகங்களின் பெயர்களோ, அல்லது அவைகளின் பயன் என்ன என்றோ குழந்தைகளுக்குத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுவது இயற்கை. ஒரு குழந்தை எப்போது தனக்குப் புரியாத ஒன்றைப்பற்றி அறிய விரும்பி, கேள்வி கேட்கிறதோ, அப்போதே அது பதிலுக்கும் தயார் என்பதை உணரலாம். எளிமையான, அதிர்ச்சி தராத விதத்தில் விளக்கினால், குழப்பமின்றி, மன ஆரோக்கியத்துடன் வளரும். 24.கண்கண்ட தெய்வமா? கேள்வி: கணவன் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும், இந்தக் காலத்திலும் சில பெண்கள் பொறுத்துப்போவது ஏன்? பிறருக்கு அன்பையும், தனது சேவையையும் ஓயாது அளிப்பதே நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்ற போதனை சமீப காலம்வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தமிழ் இலக்கியத்திலும் கணவனுக்குப் பணிவிடை செய்யும் பெண் கல்லையும் வேக வைப்பாள், அவள் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்றெல்லாம் (ஆண்கள்?) சொல்லி வைத்திருக்கிறார்களே! இதையெல்லாம் கேட்டும், படித்துமுள்ள குடும்பத்தின் மூத்த பெண்டிர் (அத்தை, பெரியம்மா, அம்மா போன்றோர்) தாம் அதைக் கடைப்பிடித்து, இளையவர்களையும் அப்படியே பழக்குகிறார்கள். சிறுமிகள் எதையும் ஆராயும் திறனின்றி, மூத்தவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறார்கள். காலங்கடந்து, கொடுமைக்காரரான கணவனால் புழுவுக்கும் கேவலமாக நடத்தப்படும்போது, இவர்களால் தம்மை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. ஒரு கதை. ‘என் கணவரைக் கொன்றுவிடலாமா என்று பார்க்கிறேன்!’ ‘என் கணவர்மேல் எனக்கு ஒரே காதல்! என்ன ஆனாலும், அவரை விவாகரத்து செய்ய மாட்டேன். கல்யாணம் என்பது எவ்வளவு புனிதமான ஒன்று!’ முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறாள் சாருமதி (உண்மைப் பெயரல்ல). படித்து, உத்தியோகம் வகித்த இப்பெண்மணி, தமிழும், ஆங்கிலமும் சரளமாகப் பேசுகிறாள். இவளுடைய ஆரோக்கியமான மனநிலை திருமணத்திற்குப்பின் கணவரது வதையால் சீர்குலைந்தது. ஓயாத அழுகை, ஆத்திரம், பயம் என்ற எதிர்மறை உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டதன் விளைவாக, சிகிச்சைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். ‘உங்கள் கதை பிற பெண்களுக்குப் பாடமாக இருக்கும்,’ என்று தனது கவுன்சிலர் (COUNSELLOR) கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, தானே என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்). ‘எங்க பெற்றோருடையது பெயர் வாய்ந்த குடும்பம்!’ என்று அடிக்கடி கூறிக்கொண்டாள், தனது புதிரான செய்கைக்கு நியாயம் கற்பிப்பதுபோல். சாருமதியின் பிரச்னைதான் என்ன? தனக்கென ஒரு குடும்பம், குழந்தைகள் என்று பலகாலம் ஏங்கி நின்று, தனது நாற்பத்து நாலாவது வயதில் வருங்காலக் கணவரைச் சந்தித்து இருக்கிறாள். கதிர்வேலு முதல் மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டவர். பத்து வயதில் ஒரு மகள். ‘ஏன் உங்களை விட்டுப் போய்விட்டாள் அந்த மனைவி?’ என்ற சாருமதியின் கேள்விக்கு அவர் பதில்கூறாது மழுப்பினாலும், அவள் மேற்படிப்பு படிக்க விரும்பியதை ஒப்பாது, அடித்துப் புரட்டியதாக அறிந்தாள். அதனால் அவள் மனம் தளரவில்லை.‘கல்யாணம் என்று ஒன்று ஆனால் போதும்,’ என்ற நிலைக்கு வந்திருந்தாள். ‘நான் ஆதர்ச மனைவியாக, அவருக்கு விட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தால், எங்களுக்குள் ஏன் பூசல் வரப்போகிறது?’ என்ற அசட்டு நம்பிக்கையுடன் கதிர்வேலுவின் கரம்பிடித்தாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ‘கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற என் ஆர்வத்தை அவ்வளவு வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாதோ?’ என்ற சந்தேகம் எழுந்தது. ஏன் தெரியுமா? அன்பும், கனிவுமாக இருந்த காதலர் கணவனானதும் மாறிப்போனார். திருமணமாகி ஒரே வாரத்தில் தன் குரூர விளையாட்டுக்களை ஆரம்பித்தார். எடுத்ததற்கெல்லாம் அடி, உதை. கண்ட கண்ட படங்களைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு இரவும் கட்டாய உடலுறவு. முடிந்தவுடனே மனைவியைப் படுக்கையின் கீழே தள்ளி, அடித்து உதைப்பாரென்று சாருமதி விவரித்துக்கொண்டே போக, எனக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. ஒரு நல்ல மனைவிக்கு அடையாளம் கணவனுக்குக் கீழ்ப்படிதல் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை சாருமதிக்கு. ஆனால், மனைவியின் மிரட்சியில் இன்பம் காணும் கணவரை ‘கண்கண்ட தெய்வம்’ என்று ஏற்றுக்கொள்வதில் புத்திசாலித்தனமோ, நற்பண்போ எங்கே இருக்கிறது? ‘நீங்கள் என்ன செய்தாலும், உங்களை விட்டுப்போக மாட்டேன்!’ என்பாளாம் கணவனிடம். அனுதினமும் கணவன் தன்னை நாடுவதில் பெருமை வேறு! அணைப்பவர் அடிப்பதால் என்ன மோசம் என்று எண்ணினாலும், உடலும், மனமும் ஒருங்கே சோர்ந்தன. முதல் தாரம் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாளே என்று எல்லாப் பெண்களின்மேலும் ஆத்திரமாக இருந்திருக்க வேண்டும் கதிர்வேலுவுக்கு. ஒரே மகளும் தாயுடன் தங்கவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதில், எல்லா ஆத்திரமும் அப்பாவியான சாருமதியின்மேல் திரும்பியது. மகளும் தந்தைபோலவே இருந்தாள். தந்தையின் வீட்டுக்கு வந்து தங்கியபோது, மாற்றாந்தாய் தன்னை மாடியிலிருந்து உருட்டி விட்டுவிட்டாள் என்று அபாண்டமாகக் கூறினாள். எதற்கும் வன்முறையையே கையாண்ட கதிர்வேலுவுக்கு இப்படி ஒரு நல்ல சாக்கு கிடைத்தால் விடுவாரா? மனைவியை மேலும் துன்புறுத்தினார். அவளோ, ‘கடவுளே, என்னை விதவையாக்கி, நிம்மதி கொடேன் என்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். இல்லாவிட்டால், நான் சாக வேண்டும்,’ என்கிறாள் விரக்தியின் உச்சத்தில். உடனே, ‘கடவுள் இருக்கிறார்! எல்லாருக்கும் நியாயம் வழங்குவார்!’ என்று தத்துவம் பேசி, தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்கிறாள். விவாகரத்து? ‘அப்படிச் செய்தால், பெற்றோருக்குத் தலைகுனிவாகிவிடும், ஆகவே கூடாது,’ என்கிறாள். அவளுடைய உறவினர்கள், ‘முட்டாள்’ என்று பழிக்கிறார்களாம், அவளுடைய இயலாமையை எள்ளி நகைத்து. நியாயம்தானே? நடந்ததில் கணவர் மட்டுமா பொறுப்பு? என்ன அக்கிரமம் இழைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வளைந்து கொடுத்த சாருமதிக்கும் பங்குண்டுதானே? தான் வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லாருடனும் கலகலப்பாகப் பேசி, அனுசரித்து நடந்துகொள்பவள் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவளின்மேல் எனக்குப் பரிதாபம் எழவில்லை. எரிச்சலாகத்தான் இருந்தது. ‘நீங்கள் முதலிலேயே எதிர்த்திருந்தால், இப்படி வருடக்கணக்கில் வதையைத் தாங்கிக்கொள்ள நேர்ந்திருக்குமா?’ என்று கேட்டேன். ‘நான் எதிர்த்துக் கேட்டால், இன்னும் மூர்க்கமாக ஆகிவிடுகிறாரே!’ என்று பதிலளித்தாள், அச்சத்துடன். ஆகாத காரியமாகப் பேசுகிறாள்: ‘யாராவது மூன்றாம் மனிதர் எங்களிருவருடன் உட்கார்ந்து பேசி, நியாயத்தைப் போதித்தால், நான் எவ்வளவு நல்ல மனைவி என்று என் கணவர் உணர்வாரோ!’ சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள். ஆனால், தன் வாழ்வில் ஒரு நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் துணிவில்லை. நடந்ததில் தனது தப்பும் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் சாருமதியின் தன்மானம் இடங்கொடுக்கவில்லை. படித்திருந்து என்ன பயன், தன் வாழ்வில் உள்ள சீர்கேட்டை முனைந்து சீர்படுத்திக்கொள்ளாவிட்டால்? சமூகம் என்ன சொல்லும், பெண்ணின் குணநலன் என்றெல்லாம் சாக்குபோக்குச் சொல்லி எந்த இன்னலையும் பெருமையுடன் தாங்கும் சாருமதி போன்ற பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது. தானும் ஒரு மனிதப்பிறவி, நிம்மதியும், அமைதியும் நிறைந்த வாழ்வை நாட தனக்கும் உரிமை இருக்கிறது என்று ஒவ்வொரு பெண்ணும் நம்பி, அதன்படி நடந்துகொண்டாலே ஒழிய, கதிர்வேலுக்களை ஒழிக்க முடியாது. 25.ஒழுக்கத்தைக் கற்பிப்பது கேள்வி: குழந்தைகளுக்கு எப்படி ஒழுக்கத்தைப் புகட்டுவது? விளக்கம்: வீட்டில் பெரியவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து குழந்தைகள் தாமே ஒழுக்கத்தைக் கற்கிறார்கள். அதை விட்டுவிட்டு, ஓயாத போதனைகளாலும், வன்முறையாலும் இது முடியாத காரியம். கதை 1: ஒரு நீர்வீழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு சீன மாது தன் இரண்டு வயதுப் பெண்குழந்தையிடம், ‘எவ்வளவு அழகா இருக்கு, பாத்தியா? மேலேயிருந்து எவ்வளவு வேகமா கொட்டுது!’ என்று காட்டிக்கொண்டிருந்தாள். அத்துடன் விட்டிருக்கலாம். ‘நீ விஷமம் பண்ணினா, அதிலே தூக்கிப் போட்டுடுவேன்!’ முதலில் மகிழ்ந்து சிரித்த குழந்தை தாயின் மிரட்டலைக் கேட்டு அச்சத்துடன் தலையைப் பின்னால் இழுத்துக்கொண்டாள். இது கண்டிப்பாக ஒரு குழந்தையை ஒழுக்கப்படுத்தும் வழியல்ல. பயமுறுத்தல் நாளடைவில் ஒரு குழந்தையை எதற்கும், யாரிடமும் பயப்படச் செய்யுமே தவிர, நாம் விரும்பும் நல்ல குணங்களை வளர்க்காது. சில ஆசிரியர்கள் ‘என் கடமையை எவ்வளவு ஒழுங்காகச் செய்கிறேன், பார்!’ என்பதுபோல், காரணமின்றியே தண்டிப்பார்கள். போதிப்பது என்ன? ஒழுக்கமா, ஒழுங்கீனமா? கதை 2: ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து, சொற்பொழிவொன்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓர் ஆசிரியை கையில் பிரம்புடன், ஒவ்வொரு மாணவனின் பின்புறத்திலும் ஓங்கி அடித்தபடி நகர்ந்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்த தாய் ஒருவர், ‘அவர்கள் மௌனமாகத்தானே இருக்கிறார்கள்! எதற்கு அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘அடித்தால்தான் இப்போது பேசவே கூடாது என்று புரியும் அவர்களுக்கு!’ என்றாளாம். குழந்தைகளின் மன வளர்ச்சி, மனோதத்துவம் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் சரியாகத் தெரியாத காலத்தில், ஓயாது அடித்தாலும், பழித்தாலும் ஒரு சிறுவன் ஒழுங்காகிவிடுவான் என்று நம்பினார்கள். அந்த வழியில் வளர்க்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றளவும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். ‘நான் அம்முறையால்தான் உருப்படியாக வளர்ந்தேன்!’ என்பார்கள். இவர்கள் மனோபலம் மிகுந்தவர்கள் என்பதில்லை. தங்கள் பலகீனத்தை அதிகாரத்தால் மறைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். இதனால், வீட்டில் அடி வாங்காது, நல்ல விதமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தங்கள் ஆற்றலிலேயே ஐயம் எழுந்துவிடாதா! அதிகார வர்க்கத்தின்மேலேயே வெறுப்பை வளர்த்துக் கொள்பவர்களும் உண்டு. கதை 3: என் பதினான்கு வயது மாணவன், அடுனன் (ADNAN), கேட்டான்: ‘செய்வது தப்பு என்று தெரியும். இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டினால், ஏன் சில ஆசிரியர்கள் ஆத்திரப்படுகிறார்கள்?’ நான் மெல்லச் சிரித்தேன். ‘அவர்களை POWER CRAZY (அதிகார வெறி கொண்டவர்கள்) என்கிறோம்!’ தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டான் அடுனன். ‘அப்படிப்பட்ட ஆசிரியர்கள் நம் பள்ளியில் நிறைய பேர் இருக்கிறார்கள்!’ என்றான், வயதுக்கு மீறிய அறிவுடன். பிறகு, ‘நான் இப்படிப்பட்ட ஒருவருடைய பாடத்தைச் செய்யாமலிருந்தால் என்ன ஆகும்? காரணமில்லாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்!’ தனக்குப் பிடிக்காத ஆசிரியரைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரை மீறத் துணிகிறான்! ‘நீ படிப்பதும், தேர்ச்சி பெறுவதும் உனக்காகத்தான்!’ என்று புத்தி சொல்லிப்பார்த்தேன். அதைக் காதில்வாங்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. இறுதிப் பரீட்சைக்கு சேர்க்கப்படும் வீட்டுப் பாடத்தைச் செய்யாமல் விட்டுவிட்டான் அடுனன் என்று அந்த ஆசிரியர் பொது அறையில் அலறிக் கொண்டிருந்தபோதுதான் நடந்ததை அறிந்தேன். ‘ஒழுக்கம்’ என்ற பெயரால் அந்த ஆசிரியர் செய்த அனர்த்தத்தால் விளைந்த வினை! ஒரு வேளை, இந்தப் பையன் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடுவானோ என்ற பொறாமையில் விளைந்த அச்சமோ? (அந்த ஆசிரியர் பல முறை பதவிக்குறைப்பு கண்டவர்). பெற்றோரால் மிரட்டி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் எப்போது, எதற்குத் தண்டிப்பார்கள் என்றுகூடப் புரியாது என்பதுதான் சோகம். இம்மாதிரியான வளர்ப்பு முறையால் கற்பனைத்திறன் அறவே வளராது என்பது ஒரு பக்கம் இருக்க, குழப்பத்தில், பயத்தில், சுயமுயற்சியுடன் புதிதான எது ஒன்றைச் செய்யும் துணிவையும் இழந்துவிடுகிறார்கள். இவர்கள் ஆட்டுமந்தையைப்போல், தம்மைவிடத் துணிச்சலானவர்களைப் பின்பற்றுவார்கள். மேலதிகாரிகள் சொல்வதை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பார்கள். அதனால், தம்மீதே கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வார்கள். ஒரு பையன்(16) என்னிடம் கூறினான், ‘எங்கப்பா தினமும் திட்டுவார், அடிப்பார். எதுக்கு அடிக்கிறாருன்னே புரியாது!’ இந்தமாதிரி சந்தர்ப்பங்களில், கணவரை எதிர்த்தால், மகனுக்கு அப்பாமேல் மரியாதை போய்விடும் என்று சாக்குச்சொல்லி, தாய் கண்டும் காணாததுபோல் நடக்கலாமா? மகனைத் தனியாக அழைத்துப்போய், ‘ஒன்மேல ஒரு தப்பும் இல்லே. அப்பாவுக்கு இன்னிக்கு ஆபீசில ரொம்ப வேலை! இல்லை, மேலதிகாரி நாலுபேர் முன்னால் அப்பாவைக் கண்டபடி திட்டியிருப்பார். அந்த கோபத்தை ஒன்மேல காட்டுகிறார்!’ என்று விளக்கினால், பையன் தெளிவடைவான். இம்மாதிரியான பெற்றோர் இருந்தால், சிறுவர்கள் பள்ளி நண்பர்களிடம் தம் இயலாமையைக்கூறி ஆறுதல் தேடப் பார்ப்பார்கள். ஆனால், பிரச்னை என்னவோ தீராது. ‘இந்த அப்பாக்களே இப்படித்தான்!’ என்று நண்பர்கள் கசப்புடன் முடிவு செய்து, தங்களின் எண்ணிக்கையால் பலம் பெறுவதாக எண்ணுகிறார்கள். ’வேடிக்கை’என்று நினைத்து, வயதில் மூத்தவர்களை எதிர்க்கிறார்கள். தண்டனை பெற்றால், நடத்தை இன்னும் மோசமாகிறது. படிப்பில் அக்கறை அறவே போய்விடுகிறது. ஒன்றாகச் சேர்ந்து தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் இப்படித்தான். கதை 4: மன் லீ என்ற என் சீன மாணவி(17) வகுப்பில் கீழ்ப்படியாதவளாக இருந்தாள். காரணத்தை அறிய நான் அவளைத் தனியே அழைத்துப் பேசினேன். ‘நான் கொஞ்ச நாள் போதைப்பழக்கம் உள்ளவளாக இருந்தேன். இப்போது விட்டுவிட்டேன். ஆனால், அதையே சொல்லிச் சொல்லி, என் பெற்றோர் என்னைத் துன்புறுத்துகிறார்கள்!’ என்று ஒத்துக்கொண்டாள். உளவியல்படி, ஏழ்மை, பெற்றோருக்கிடையே ஓயாத சண்டை, ஒற்றுமையற்ற பெரிய குடும்பம், வன்முறையில் பிள்ளைகளைத் தண்டித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட மனதின் ஆரோக்கியம் குறைய வாய்ப்பிருக்கிறது. வீட்டில் பெரியவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருந்துவிட்டு, பிள்ளைகள் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நடக்கிற காரியமா? பெற்றோரின் சரியான கவனிப்போ, பாராட்டோ இல்லாததால்தான் மன் லீ தீய பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாள்! அது புரிந்து, மதிப்பெண்களுடன் அவள் பெற்றோருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினேன்: ‘மன் லீ நல்ல பெண். இப்போது இருக்கிறபடியே ஏற்றுக்கொள்ளுங்கள்’. வீட்டில் நிலவரம் சுமுகமாக ஆகியிருக்க வேண்டும். அதன்பின், அவள் ஒரேயடியாகச் சிரித்தபடி, எனக்கு உதவ எப்போதும் ஓடி வந்தாள்! மரியாதை குறையாது, பெற்றோர் அல்லது ஆசிரியரின் கருத்தை வெட்டி பேச அனுமதித்தால்தானே, இளம் வயதினர் மகிழ்ச்சியுடன் தம் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள்? மாறாக, அதிகாரம் செலுத்தி, பயத்தால் பணியவைக்க நினைத்துவிட்டு, ‘இந்தக் காலத்தில் எல்லா இளைஞர்களும் மோசம்!’ என்று சலித்துக்கொள்வதால் யாருக்கு என்ன லாபம்? 26.ஆரம்பம் எப்போது? கேள்வி: ‘என் பிள்ளைகளுக்கு அம்மாதான் எல்லாம்!’ என்று சில தந்தைமார்கள், நாற்பது வயதுக்குமேல், குறைப்படுவது ஏன்? விளக்கம்: தாயை, அவளுடைய இருதயத்துடிப்பை, எண்ணங்கள், உணர்ச்சிகள், குரல் எல்லாவற்றையும் ஒன்பது மாதங்கள் அதிகமாக அறிந்திருக்கிறார்களே! 1970-லிருந்து கருவின் உளவியல் (FOETAL PSYCHOLOGY) கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன்படி, மனைவி வயிற்றிலிருக்கும் (ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட) கருவிடம் தந்தை பேசியோ, பாடியோ செய்தால், அவருடைய குரல் பழகிவிடும் பிறக்கப்போகும் குழந்தைக்கு. இம்மாதிரிச் செய்த ஒரு தந்தையின் பரவசத்தைக் கேட்போமா? “என் மகள் பிறந்ததும் நான் ஏதோ பேசினேன். அந்தக் குழந்தை உடனே தலையைத் திருப்பி, என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்தது, ‘ஓ, நீதானா நான் அடிக்கடி கேட்ட குரல்!’ என்பதுபோல்!” அப்பா என்பவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பவர், அல்லது ‘ஒழுக்கம்’ என்ற பெயரில் மகன்களைக் காரணமின்றித் தண்டித்து தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்பவர் என்று பிள்ளைகள் மனதில் படியும்படி நடந்துகொள்வது பழங்கால வளர்ப்புமுறை. ‘நான் கண்டிப்புடன் பிள்ளைகளை வளர்க்கிறேன்!’ என்ற பெருமையுடன் இப்படிச் செய்தால், இருபாலரிடையேயும் அன்பு எப்படி வளரும்? இதனாலேயே கடைசி காலத்தில் பெற்றோரைச் சுமையாகக் கருதுகிறார்கள் பிள்ளைகள். (ஒரு தந்தை இப்படி வளர்த்ததில், மூன்று மகன்களுக்கும் புத்தி பேதலித்துவிட்டது என்று படித்திருக்கிறேன்). காரணமின்றி அடியும், உதையும் வாங்கி வளர்ந்தவர்கள் தாமே தந்தையாகும்போது, மென்மையான உணர்வுகளை வெளிக்காட்டுவது ஆண்மைக்கு இழுக்கு என்பதுபோல் நடந்துகொள்வர். அவர்கள் வளர்ந்ததுபோலவேதான் மகன்களையும் வளர்ப்பார்கள். (அனேகமாக, பெண் குழந்தைகள் அடி, உதை வாங்குவதில்லை). தாம் சிறுவயதில் பட்ட துன்பங்களைப் பிள்ளைகளும் படக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்வது வெகு சிலரே. அதற்காக, மகன்கள் என்ன செய்தாலும் தண்டிக்காமல் (திட்டாமல்) விட்டால், அப்படியும் அவர்கள் உருப்படப் போவதில்லை. குழந்தையின் பரிபூரணமான வளர்ச்சிக்கு சரி எது, தவறு எது என்று உணர்த்தத் தவறுவது எப்படி அன்பாகும்? ஓயாத தண்டனை பெற்று, அல்லது ’எது செய்தாலும் சரிதான்! என்று இவ்வாறு வளர்க்கப்படுபவர்கள் இருவருமே தம்மிடம் ஏதோ குறை இருப்பதாக உணர்வார்கள். உலகில் போட்டி, பொறாமை, அமைதியின்மை எல்லாம் நிலவக் காரணமே பெரும்பான்மையான மனிதர்கள் தங்களைக் குறைவாக எடை போட்டுக்கொண்டு, பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பதால்தான். அன்பு என்பதைப் பரிபூரணமாகப் பெறாவிட்டால், நம்முள் மறைந்துகிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர முடியாது போய்விடுகிறது. போதாத குறைக்கு, ‘ஆத்மாவின் நினைவுகள்’ (SOUL MEMORY) என்று, கருவாக இருக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமாகப் பதிந்துபோன உணர்ச்சிபூர்வமான அனுபவங்கள் வேறு! தாயின் ஓர் அங்கமாக விளங்கும் கரு ஆரம்பித்திலிருந்தே அவளுடைய நினைவோட்டத்தையும், அவ்வப்போது ஏற்படும் அனுபவங்களையும், அதனால் விளையும் உணர்ச்சிகளையும் தனதாக்கிக் கொள்கிறது. இவை ஆயுள் முழுவதும் ஒருவனுடன் இருக்கும், அவனே அறியாமல். ஹிப்னாடிச முறையில், ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளவைத்து, ஒருவர் கருவாக இருந்தபோது பெற்ற அனுபவங்களை மீண்டும் பெறச் செய்யலாம். உதாரணமாக, விமானத்தில் பறக்கவோ, அடுக்குமாடி வீட்டு மேல்தளத்துக்குப் போகவோ அதீதமான பயம் கொண்ட ஒருவர் கருவாக இருந்தபோது தாய் மாடியிலிருந்து உருண்டு விழுந்திருக்கலாம். அல்லது, ‘உன்னைப் பிடித்துத் தள்ளுகிறேன், பார்!’ என்று எவராவது தாயை மிரட்டி, அப்படி நடந்திருக்காவிட்டாலும், அப்போது தாய் அடைந்த பயத்தைக் கருவும் அனுபவித்து, தனதாக்கிக் கொள்கிறது. இதைத்தான் காரணமற்ற பயம் (PHOBIA) என்கிறார்கள். ஆனால், காரணம் என்னவோ இருக்கிறது. சில பெண்கள் கர்ப்பமடைந்திருக்கும்போது, ‘இது பெண்ணாக இருந்துவிடக் கூடாது,’ என்று யாராவது சொல்வதைச் செவிமடுத்த கருவினுள் தான் எவருக்கும் வேண்டாதவள் என்ற எண்ணம் பதிந்து விடுகிறது. இம்மாதிரியானவர்கள்தாம் தற்கொலையை நாடுகிறார்களாம். ஆகவே, தாம் பெற்றிருக்கிற குழந்தைகளையே காப்பாற்ற முடியாதவர்கள் அன்பையும், பாதுகாப்பையும் பெற முடியாத பிள்ளைகளை உலகிற்குக் கொண்டுவருவதைக் காட்டிலும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது உகந்தது. ஒரு கர்ப்பிணி நிறைமாதமாக இருக்கையில், கனமான பொருள் அவள் வயிற்றில் விழுந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் கருவிற்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டாலும், அவளடைந்த அச்சம் அதைப் பற்றிக்கொள்ளுமே! ‘இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை!’ என்று எண்ணங்கள் அல்லது வார்த்தைகள்வழி கருவிடம் ஆதரவாகத் தெரிவித்தால், பின்விளைவுகள் இருக்காது. உருவான போதிலிருந்தே தகுந்த அன்புடன், வதைபடாது வளர்க்கப்படும் குழந்தைகள் அன்பு, அறிவு, ஒழுக்கம் ஆகிய தன்மைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ‘அறிவு’ என்பது புத்தகங்களிலிருந்து கிடைப்பது மட்டுமல்ல. நல்ல இசை மற்றும் நுண்கலைகளும் அறிவை வளர்க்கும். இனிய பேச்சும், இசையும் கேட்டு வளர்ந்தவர்கள் தாம் பெற்ற அன்பையும், அறிவையும் பரப்புவார்கள். இம்மாதிரியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க உலகில் கொடுமைகள் குறைந்து, சமரசம் நிலவும். ஆரம்ப காலத்தில் உலகம் அப்படித்தான் இருந்ததாம். குறையோ, மனவருத்தமோ இல்லாது, ஒவ்வொருவரும் தமது ஆற்றல்களை அஞ்சாது வெளிப்படுத்தும் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள். கற்பனை செய்யும்போதே ஆனந்தமாக இல்லை? கடந்து போனவைகளை நீங்களேகூட ஆத்திரப்படாது, யாருக்கோ நடந்ததுபோல, பலமுறை நினைத்துப் பார்த்தால், தெளிவு பிறக்கும். தடைகள் விலக, உங்கள் திறமைகள் வெளிப்படும். 27.அறிவுத்திறன் வளர கேள்வி: அரைகுறையான கல்வித்திறனுள்ள குடும்பத்தினர் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதுமா? விளக்கம் மனிதனின் மூளை கருவிலிருக்கும்போதே வளர ஆரம்பிக்கிறது. நான்கு வயதுக்குள் 80% வளர்ந்துவிடுகிறது. கருவிலிருக்கும் குழந்தை எப்படி, எல்லாவிதத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை ஆராய, ஒரு விஞ்ஞானப்பகுதியே இருக்கிறது, FETOLOGY என்ற பெயரில். கருவிற்கு நன்கு அறிமுகமான ஒரு ஒலி தாயின் இருதயத் துடிப்பு. ஆகவே, பயம், அதிர்ச்சி, கோபம் முதலிய எதிர்மறை உணர்ச்சிகளுக்குத் தாய் ஆளாகும்போது, அவளது நாடித் துடிப்பு அதிகரிக்க, கருவும் அதே நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவ்வளவு ஏன், தந்தை தாயுடன் உடலுறவு கொள்ளும்போது வன்முறையைப் பிரயோகித்தால், கருவுக்குள் உண்டாகும் அதிர்ச்சி ஆயுள் பூராவும் அதன் குணத்தைப் பாதிக்கும். வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் இம்மாதிரி, பிறக்குமுன்னரே அதைத் தாயின்வழி தாமும் அனுபவித்திருப்பார்களாம். கதை: அனாதை ஆசிரமத்தில் இருந்த ஒரு குழந்தையை எவ்வளவோ அன்புடன் ஓர் ஏழைத் தாய் வளர்த்தும், குண்டர் கும்பலில் சேர்ந்து, ‘நான் பிறரைக் கொல்லுமுன் அவர்கள் கண்ணில் தோன்றும் பயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது!’ என்று என்னிடம் கூற அதிர்ந்தேன். அவன் தாய் அவனை அடித்ததே கிடையாது என்றான். அவனுக்குள் பின் எப்படி இவ்வளவு குரூரமான புத்தி வந்தது என்று யோசித்தேன். ‘கருவே கதையானால்’ என்ற சிறுகதை பிறந்தது. ஒரு குழந்தையின் மூளையும் பிற பாகங்களும் கருவிலேயே வளர ஆரம்பித்து விடுகின்றன. அதாவது, எதையும் புரிந்து கொள்ளக்கூடிய திறன், உணர்வுகள் யாவும் குழந்தை தனி உருப்பெற்று பிறக்குமுன்னரே அதற்கு உண்டு. கேட்கும் திறன் இருப்பதால், ஒரு கர்ப்பிணி நிறையப் புத்தகங்கள் படிக்கும்போது, புத்தகத்தின் பக்கங்கள் திருப்பப்படும் ஓசை கருவிற்கும் பழகிப்போவதால் அது விரும்பத்தக்க ஒலியாக ஆகிவிடும். சிறுவருக்கான கதையை தாய் திரும்பத் திரும்ப உரக்கப் படித்தால், அது கருவின் மனதில் படியும். பிறந்தபின், அதே கதை திரும்பப் படிக்கப்படும்போது, குழந்தை அதை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப பால் குடிப்பதை உணர முடியும் என்கிறார் டேவிட் சேம்பர்லின் (1994) என்கிற கரு மனோதத்துவ நிபுணர். வேறு புதிய கதைகளில் இக்குழந்தை ஆர்வம் காட்டுவதில்லையாம். ஆறு மாதங்களாவது தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளை வியாதிகள் எளிதில் அண்டாது. அறிவுத்திறனும் வளரும். (பால் அதிகம் சுரக்க, கர்ப்பிணிப்பெண்கள் பூண்டை வதக்கிச் சாப்பிடலாம். அந்த வாசனை பிடிக்காதவர்கள் பாதம்பருப்பை ஊற வைத்து, தோலை நீக்கிச் சாப்பிடலாம்). மூளைக்குப் போதிய உந்துதல் கிடைக்காதபோது சிறு குழந்தைகள் அழுதபடி இருப்பார்கள் – தாயின் கவனத்தைக் கவர, அல்லது பொழுதுபோக. ‘ஏன் இந்த அசட்டு அழுகை?’ என்று அவர்களைத் திட்டி என்ன பயன்? எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை அவர்களுக்கு விளக்கலாம். கதைகள்: என் பேரனுக்கு இரண்டு மாதங்களாக இருந்தபோது, ஒரு பேரங்காடியில் தள்ளு வண்டியுடன் நான் லிஃப்டுக்காகக் காத்திருந்தேன். புதிய அனுபவம் எவருக்குமே சற்று அச்சத்தை விளைவிக்கும், இல்லையா? அதனால், ‘இப்போ உள்ளே போகப்போறோம். கொஞ்சம் குலுங்கும். பயப்படாதே!’ என்று கண்ணை மூடிக்கொண்டிருந்த குழந்தையிடம் சொன்னேன். நான் தானே பேசிக்கொள்வதாக நினைத்து ஒருவர் என்னைப் பார்த்தார். பிறகு குழந்தையைப் பார்த்தார். ‘இதனுடன் என்ன பேசுகிறாய்?’ என்று என்னை மீண்டும் ஒரு அருவருப்புடன் கூடிய பார்வை! நான் லட்சியமே செய்யவில்லை. வேறொரு முறை நாங்கள் வெளியூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். என் மாப்பிள்ளை தன் எட்டு மாத மகனைத் தூக்கிக்கொண்டிருந்தார். நான் குழந்தையிடம், ‘நிறைய பேர் அங்கேயே தங்கப்போறா. அதுக்காகத்தான் படுக்கை, பெட்டியெல்லாம் தூக்கிண்டு போறா, பாரு!’ என்று விளக்கினேன். குழந்தைக்குப் புரியுமா என்ற சந்தேகமே இருக்கவில்லை. அப்பாவின் கையிலிருந்து என்னிடம் தாவினான் பேரன். (என் குழந்தைகளுடன் அப்படித்தான் பேசினேன். உடனுக்குடனே பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், மூன்று வருடங்கள் கழித்து, பேசும் திறன் வந்ததும், ‘அன்னிக்கு நீலப்புடவை கட்டிண்டு இருக்கறச்சே சொன்னியே..?’ என்று ஏதாவது சந்தேகம் கேட்பார்கள்). எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டிலுள்ளவர்களே அறிவைப் போதிக்க முடியும்? தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும்போது எளிதில் புரியும், சுவாரசியமாகவம் இருக்கும். ஆணோ, பெண்ணோ, படித்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும், மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் வரும், ஏமாற்றத்தினால் விளையும் அதிருப்தி மற்றும் குற்றங்களைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் அனேகமாக எல்லா நாடுகளும் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றன. வட அமெரிக்காவில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகள் படிப்பிலும், சமூகத்திலும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று இவர்களை முன்னுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஒரு மாநிலம் தாய்மார்களுக்கு ஆங்கிலப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது. எட்டு மாதங்களுக்குப்பின், குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு, தாய்மார்கள் அப்புத்தகங்களைப் புரட்டுவார்கள். (அவர்களுக்கு ஆங்கில மொழி தெரியாது). வீட்டிலுள்ள பிறர் என்ன செய்தாலும், அதை அப்படியே பிடித்துக்கொள்ளும் குழந்தை தானும் புத்தகத்தைத் தொடுகிறது. வாயிலும் வைத்துக்கொள்கிறது, அது தின்னத் தகுந்ததுதானா என்று. எதையும் வாயில் போட்டுப்பார்ப்பது குழந்தைகளின் பிறவிக் குணம். ஓரிரு மாதங்களில் தானே புத்தகத்தைக் கையில் எடுத்து, ஏதாவது ஒரு படத்தையே உற்றுப் பார்க்கிறது. இதற்காக, அமெரிக்காவில் ‘தலையணைப் புத்தகம்’ என்று பருமனாக, துணியால் புத்தகங்கள் செய்கிறார்கள். காகிதத்தைப்போல் எளிதில் கிழியாது. அழுக்கானால் துவைக்கலாம். பூ, பழவகைகள், மிருகக் காட்சிசாலை, குட்டி மிருகங்கள் என்று, குழந்தைகளுக்குப் பிடித்த படங்கள் பெரிய அளவில். அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். படிக்காத பெண்களின் குழந்தைகள்கூட புத்திசாலிகளாக வளர இயலும்போது, படித்த நாமும் ஒவ்வொரு குழந்தையின் திறன்களையும் முழுமையாக வளர்க்க வேண்டாமா? 28.பொது இடங்களில் குழந்தைகள் கேள்வி: பெற்றோர் வெளியே போகும்போது தானும் வருவேன் என்ற் அடம் பிடிக்கிறான் எங்கள் குழந்தை. ஆனால் பொது இடங்களுக்கு அவனை அழைத்துப் போனால், அடக்கவே முடிவதில்லையே, ஏன்? விளக்கம்: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளால் பெரியவர்களைப்போல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. சில நிமிடங்களுக்குமேல் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதும் அவர்களால் இயலாத காரியம். அலுப்பு ஏற்படும். அது என்ன சில நிமிடங்கள்? இரண்டு வயதான குழந்தை நான்கிலிருந்து பத்து நிமிடங்கள்வரைதான் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும். அதாவது, அதன் வயதை இரண்டிலிருந்து ஐந்துவரை பெருக்கினால் கிடைக்கும் நேரம். நான்கு வயதான பிள்ளையின் படிப்பில் செலுத்தும் கவனம் அதிக பட்சம் பத்து நிமிடங்கள்தான். பசி, தூக்கம், அதிக வெப்பம் அல்லது குளிர் முதலியவை வேறு அவர்களை அலைக்கழிக்குமே! அதனால்தான் சண்டித்தனம் செய்கிறார்கள். விளையாடுவது போன்ற பிடித்த காரியமாக இருந்தால் நேரம் அவர்களைப் பாதிக்காது. சிறு குழந்தைகளை பூங்கா, கோயில் போன்ற இடங்களைத் தவிர வேறு எங்கு அழைத்துப்போனாலும் நமக்குத்தான் தொந்தரவு. உறவினர் வீடுகளுக்கோ, திருமண வைபவங்களுக்கோ அழைத்துப்போனால்கூட, ‘அம்மா நம்மை மறந்துவிட்டு வேறு யார்கூடவோ பேசுகிறாளே!’ என்று ‘வழிவார்கள்’. ‘நேரமாச்சு. வீட்டுக்குப் போகலாம்,’ என்று தொணதொணப்பாரகள். ‘பிறர் முன்னிலையில் மானம் போகிறது!’ என்று, பற்களைக் கடித்துக்கொண்டு தாய் முறைத்தாலோ, திட்டினாலோ குழந்தையின் அடம் மேலும் அதிகரித்துவிடும். வெளியே அழைத்துப் போவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வந்தால், அங்கு வித்தியாசமாக அமைந்திருப்பவற்றைக் காட்டி விளக்குங்கள். தொங்கும் விளக்கு, பூந்தொட்டியில் பிளாஸ்டிக் செடிகள், மீன் தொட்டி இப்படி அவர்கள் பார்த்திராதது ஏதாவது இருக்குமே! குழந்தைகளின் ஆர்வம் வளர்ந்து அறிவு பெருகுவதுடன், ஒழுக்கப் பிரச்னை எழாது. வயதேற ஏற, புது அனுபவங்களை அச்சமின்றி நாடுவார்கள். நமக்குச் சாதாரணமாகத் தோன்றுபவைகூட குழந்தைகளுக்கு அபூர்வம்தான். நாம் காட்டினால் ஒழிய, தானே ஒரு பொருளைப் பார்த்து, அது ஏன் அங்கே இருக்கிறது என்று அலசும் திறன் அவர்களுக்கு ஏது! உதாரணமாக, ஒரு கோயில் அர்ச்சகர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி மந்திரங்கள் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ‘கோயில்ல எத்தனை பேர், பாத்தியா? எல்லாருக்கும் காதில விழணுமே! அதான் அவர் குரல் பெரிசா கேக்க மைக். அதோ!’ ஒரு முறை சொல்லிக் கொடுப்பதைக்கூட மறக்காமல் நினைவில் பதித்துக்கொண்டு, ‘மைக் பாரு!’ என்று மறுமுறை உங்களுக்கே காட்டும், பெருமையுடன்! உங்களுக்குத் தெரியாது என்றல்ல, தனக்குத் தெரிந்ததை வெளிக்காட்டிக் கொண்டால், உங்கள் பாராட்டைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில்தான். புகழ்ந்து வைங்களேன்! காசா, பணமா! கதை: ஒரு கர்ப்பிணி தன் உடல் நிலையைப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் போகுமுன், ‘இன்னிக்கு டாக்டர்கிட்ட போறோம். ரொம்பப் படுத்தாம, சமர்த்தா இரு!’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பரிசோதனையின்போது அவளுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், கரு அதனால் பாதிக்கப்படாமல், உருளாமல் ஒத்துழைத்தது! அந்தக் குழந்தை ஒன்றரை வயதில் பேச ஆரம்பித்தது. புரியாவிட்டாலும், ‘அப்படியா? நல்ல வேடிக்கை!’ என்று சிரித்து வைப்பார்கள் குடும்பத்தினர். பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்ப நாமும் இடையிடையே கொஞ்சம் பேசுவது பரஸ்பர மதிப்பை, அன்பை வளர்க்கும் அல்லவா? அதுபோல், குழந்தை பேசுவதை நாம் கவனிக்கிறோம் என்று காட்டிக்கொண்டால், அதன் தன்னம்பிக்கையும் வளரும். ஆனால், பாலர் பள்ளியிலோ, ஆரம்பப் பள்ளியிலோ ஆசிரியர்கள் இத்தகைய மாணவர்களை ‘தலைவலி’ என்று கருதுவார்கள். ஏனெனில், இவர்களுக்குச் சராசரி மாணவர்களைவிட நிறைய தெரிந்திருக்கும், அதிக வேகமாகப் புரியும். ஆசிரியர்கள் ஏன் அம்மாவைப்போல் புகழுவதில்லை என்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. புதிதான சூழ்நிலை, வித்தியாசமான மனிதர்கள்! இவை எந்த வயதிலுமே குழப்பம் விளைவிப்பதுதானே! அதன் விளைவாக குழந்தை வீட்டிலும் முரண்டு செய்தால், நல்ல விதமாக விசாரித்து, அனுசரணையாக இருத்தல் நலம். நாளடைவில் உலகைப் புரிந்து கொள்வான். 29.பாராட்டும், கண்டனமும் கேள்வி: குழந்தைகள் தவறு செய்தால் திட்டவோ, அடிக்கவோ கூடாதா? விளக்கம்: எத்தனை வயதுக் குழந்தை, என்ன தவறு என்ற கேள்வி எழுகிறதே! எட்டு மாதமேயான குழந்தை எந்த சாமானையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். அடித்தால் அதற்கு என்ன புரியப் போகிறது? ஒரு விரலால் நாம் அதன் கையில் தட்டினாலே போதுமானது. அதற்கே ஏதோ உயிர் போகிறாற்போல் கதறும். பண்டைக்கால வளர்ப்புமுறை ஒருவரின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுப்பதல்ல என்று உளவியல் கூறுகிறது. எதற்கெடுத்தாலும் பிறர்முன் திட்டுவதும், குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதும் ஒருவர் கூனிக் குறுகவோ, அல்லது எதிர்ப்பு மனப்பான்மையை வளர்க்கவோதான் செய்யுமே தவிர, அவர்கள் மேலும் சிறப்பாக எதையாவது செய்ய வழிவகுக்காது. உதாரணமாக, ஒரு பெண் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்தாலும்கூட, ‘இவளுக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது. எப்பவும் கண்ணாடிமுன்னால உட்கார்ந்து அழகு பார்த்துக் கொண்டிருப்பா!’ என்று சொல்வது, பெரியவர்களைப் பொறுத்தமட்டில் அவள் இன்னும் அதிகமாக வேலை செய்யத் தூண்டுவதாக இருக்கலாம். ஒரு வேளை, தம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகக்கூட இருக்கலாம். அப்பெண்ணுக்கோ, ‘எவ்வளவு செய்தாலும் இவர்களுக்குத்தான் திருப்தி இல்லையே! எதற்காக வேலை செய்ய வேண்டும்!’ என்றுதான் தோன்றிப்போகும். ஓயாமல் திட்டப்படும் குழந்தை பிறருடன் கலகலப்பாகப் பேசுவதற்கோ, அல்லது எந்தக் காரியம் செய்வதற்கோ ஒரேயடியாகத் தயங்கும். ‘ஏற்கெனவே எல்லாவற்றிற்கும் வசவுதான்! எதற்கு இன்னும் திட்டு வாங்க வேண்டும்?’ என்றுதானே எண்ணம் போகும்! அப்படி ஒரு குழந்தை எதுவும் செய்யத் தயங்குவதும் பெற்றோரின் கணிப்பில் பெரிய தவறாகிவிடும். ‘என் பிள்ளை எல்லாவற்றிற்கும் வெட்கப்படுவான்!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் கூறுவார்கள், அது சிலாகிக்க வேண்டிய குணம் என்பதுபோல். ‘இப்படித்தான் இருக்க வேண்டுமோ?’ என்று எண்ணம் போக, ஒருவர் அப்படியே நடக்கத் தலைப்படுவர். தன்னம்பிக்கை குறைவதால்தான் இளைஞர்கள் பலவித சமூகக் கேடுகளுக்கும் ஆளாகின்றனர் என்பது தெரிந்த விஷயம். பொதுவாக, தவறு செய்தால் திட்டுபவர்கள் ஒரு குழந்தை அல்லது சிறுவன் நல்லவிதமாக ஏதாவது செய்தால் புகழ்வது கிடையாது. புகழ்ந்தால், தன்னைவிட சிறப்பானவன் என்று கர்வம் கொண்டு, தன்னை மதிக்காமல் போய்விடுவானோ என்ற பயம்தான் காரணம். இதனாலேயே, சில பெற்றோர் புகழவேண்டிய தருணங்களில்கூட இகழ்வதைப்போலப் பேசுவார்கள். கதை: ஆலிஸ் (சீனப் பெண்) காரணமில்லாமலே அம்மாவிடம் அடி வாங்குவாள். கையால் அல்ல, இரும்புத் தடியால். எல்லாம் கல்வியில் இன்னும் சிறக்க வேண்டும் என்றுதான். (தான் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும் திருப்தி அடையாது, தந்தை தண்டித்துக்கொண்டே இருந்ததால், தானே அவருடைய கையெழுத்தைப் போட்டு விடுவாராம்; பின் நன்கு படித்து, பெரிய உத்தியோகம் கிடைத்தபோது அவருடன் பேசுவதையே தவிர்த்துவிட்டதாகவும் ஒரு அன்பர் என்னிடம் கசப்புடன் தெரிவித்தர்). மீண்டும் ஆலிஸ் கதை. பதின்மூன்று வயதுவரை காரணமின்றி அடித்துவிட்டு, அதன்பின் தோழமையுடன் பழக ஆரம்பித்தாளாம் அவள் தாய். இப்போது மகள் அவள் எதிர்பார்த்தபடியே பள்ளியில் சிறந்திருப்பது அவளுக்குத் தன் வளர்ப்புமுறை சரிதான் என்ற எண்ணத்தைக் கொடுத்திருந்தது. தன்னைப்பற்றி நினைப்பதே தகாது என்று வளர்ந்திருப்பதால், ஆலிஸ் போன்ற பெண்கள் தனிமையில் மட்டும் சிறிது யோசிக்கிறார்கள். தமக்குள் பார்ப்பது – தன்னம்பிக்கை இல்லாமல், எதற்கும் பயப்படும் ஒரு பெண். அதற்கு நேர்மாறாக இருப்பதாக, அலட்டலாக, வெளியில் காட்டிக்கொள்வார்கள். அடுத்த முறை ஆலிஸ் பெருமையுடன் தன் மதிப்பெண்களைக் காட்டியபோது, புகழாமல் வளர்த்ததால்தான் மகள் நல்ல விதமாக வளர்ந்திருக்கிறாள் என்ற பெருமை எழுந்தது தாய்க்கு. ’நீயெல்லாம் வகுப்பில் முதல் மாணவியா! ரொம்பத்தான் கர்வப்பட்டுக் கொள்ளாதே!” என்று ஏசிவிட்டு, “உன் வகுப்பில் மற்றவர்களெல்லாம் எவ்வளவு மக்கு என்று இப்போதுதான் புரிகிறது!’ என்றாளாம்! தன் திறமையில் கர்வப்பட்டுக் கொள்வது தகாது என்று சிறு வயதில் தாய் சொல்ல, அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, இயற்கையாக எழுந்த பெருமையை அடக்கக் கற்கிறார்கள் சிறுவர்கள். நான் சிலரைப் புகழ்ந்தால், அவர்களிடமிருந்து ஏதாவது ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்துடன் இல்லை. உண்மையாகப் பாராட்டப்பட வேண்டியது என்று எனக்குத் தோன்றியதைச் சொல்வேன். அப்போது அவர்களது கைகள், முகம் எல்லாம் இறுகுவது ஏன் என்று யோசித்திருக்கிறேன். புகழ்ச்சியால் எழும் பெருமையை அடக்கும் முயற்சியோ? அப்படி இல்லையேல், நாம் புகழ்ந்ததை மறுப்பார்கள். ஒரு பெண்மணி ஏதோ விசேடத்திற்காகத் தேடி அலைந்து மிக உயர்ந்த பட்டுப்புடவை வாங்கினாள். அன்று பலரும் அவள் புடவையைப் புகழ, ‘ஏதோ பழசு! எடுத்துக் கட்டிக்கொண்டேன்!’ என்றாளே பார்க்கலாம்! அடக்கமாம்! புகழ்ச்சியை ஏற்பது தற்பெருமை அல்ல. கௌரவமாக ஏற்று, ‘நன்றி!’ என்று சொல்லிவிட்டுப் போனால் ஆயிற்று. அதற்கு ஏன் இவ்வளவு சுயக்கட்டுப்பாடு? சில ஆசிரியைகளும் இம்முறையைப் பின்பற்றுகிறார்கள். முதல் வகுப்புப் படிக்கும் ஒரு குழந்தையிடம், ‘உன் மூக்கு அழகாக இருக்கிறது. உன் கண்ணும் அழகாக இருக்கிறது. உன் கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?’ என்று தினமும் கேட்டாள் ஓர் ஆசிரியை. ஆசிரியை என்ன சொல்ல வருகிறாள் என்பதே சிறுமிக்குப் புரியவில்லை. அன்புடன் வளர்க்கப்பட்டிருந்ததால், ‘டீச்சருக்குப் பைத்தியம்!’ என்று தன் தாயிடம் சொல்லிச் சிரித்தாள். ‘கையெழுத்தைத் திருத்திக்கொள்!’ ஆரம்பப்பள்ளிச் சிறுவர்களின் நோட்டுப் புத்தகங்களிலும், விடைத்தாள்களிலும் காணப்படும் ஒரு வாசகம். எப்படித் திருத்திக்கொள்வது என்பதை விளக்கினால்தானே பலன் கிட்டும்? ‘நடுக்கோட்டில் எழுதாது, கோட்டின் மேலேயே எழுது. எழுதியதை அடிக்கடி அடிக்காதே. சற்று யோசித்து, நிதானமாக எழுது’ – இப்படி ஆக்ககரமாக அறிவுரை கூறினாலாவது பலன் கிடைக்கும். ஆசிரியர்கள் தம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்தால், மாணவர்களும் மாறப்போவதில்லை, ஆசிரியர்களுக்கும் நிராசைதான், தம் உத்திகள் பலிக்கவில்லையே என்று. குழந்தைகள் தாங்கள் செய்வதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல் செய்யும். அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. எதையும் நகைச்சுவையுடன் அணுகினால், அவர்கள் சிரிப்பார்கள். திரும்பச் செய்ய மாட்டார்கள். குழந்தைகள் எப்படியெல்லாம் பெரியவர்களை மீறலாம் என்று ஆழம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். சிறு பிழை என்றால், கவனிக்காமல் விட்டு விடலாம். தண்டித்தே ஆக வேண்டுமென்றால், செய்த பிழைக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும். செய்த தவற்றையே மீண்டும் செய்யும்போது, கவனிக்காமல் விடுவதும் சரியல்ல. பிள்ளைகளுக்கான எல்லைகளை வகுத்துக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 30.நல்லவனாக இரு! ஒரு மாணவன் என்னிடம் கேட்ட கேள்வி: ‘நல்லவனாக இரு! (BE GOOD) என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால். நல்லவனாக இருப்பதென்றால் எப்படியென்று தெரியவில்லையே!’ விளக்கம்: எது நல்லது என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும். உதாரணம் 1: பிள்ளைச் செல்வத்தில் சிறந்து, ஆனால் பொருட்செல்வமின்றி வாடும் குடும்பத்தில் பெற்றோர் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. அதனால், மூத்த குழந்தை வீட்டு வேலைகளைச் செய்வதுடன், தன் தம்பி தங்கைகளையும் பார்த்துக்கொண்டால், ‘நல்ல, பொறுப்பான பிள்ளை’. இவன் பெரியவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, அத்துமீறாமல் நடக்கிறான். சுயநலனைப்பற்றி நினைத்தும் பாராது, பிறருக்காக உழைக்கிறான். பள்ளியிலும் பிறருக்கு உதவுவானே தவிர, தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறியோ, சுயநலமோ கிடையாது. இத்தகைய மாணவர்களால் நிறைய மதிப்பெண்கள் பெறமுடியாது. சிலர் அதைப் பெரிது பண்ணாமல் ஏற்பார்கள். வேறு சிலருக்குத் தம் பெற்றோர்மீது ஆத்திரம் எழும் – தம்மை இப்படி வளர்த்ததற்காக. இப்படிப்பட்டவர்களில் ஒருவன் என்னைக் கேட்டான்: ‘நாங்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்குவதில்லை என்று ஆசிரியர்கள் எங்களைக் கேலி செய்கிறார்கள், திட்டுகிறார்கள். அதெப்படி மற்றவர்கள் நிறைய மார்க் வாங்குகிறார்கள், டீச்சர்?’ ஒரு முறை, நான் உடல்நிலை சரியில்லாதபோது அந்த வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். ஏதோ எழுத்து வேலை கொடுத்தபோது, பலரும் அதைச் செய்யாது, உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘டீச்சருக்குத்தான் குரல் கம்மி இருக்கிறதே! எப்படித் திட்ட முடியும்!’ என்ற மிதப்புடன். ஒரு மாணவன், அவர்களைவிட உரக்க, ‘ஹேய்! டிச்சருக்கே, பாவம், உடம்பு சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சத்தம் போட்டு, அவர்களை இன்னும் கஷ்டப்படுத்துகிறீர்களே!’ என்று இரைந்தான். அதன்பின், வகுப்பில் அப்படி ஒரு நிசப்தம்! உரக்கப் பேசியவர்களின் தலை குனிந்தது. அதுவே ‘சிறந்த’ மாணவர்களின் வகுப்பில் ஆசிரியைகளுக்கு மைக்ரெய்ன் தலைவலியோ, காய்ச்சலோ, ‘பாடம் நடத்துங்கள்!’ என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்களுக்கு மார்க்கு குறைந்துவிட்டால் என்ன செய்வது! இப்போது, நான்: வாழ்க்கையில் கல்வியும், பெரிய உத்தியோகமும் அனைத்துமில்லை. மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களிடம் நிறைந்திருக்கிறது. வருங்காலத்தில் உங்கள் குடும்பம் உங்களால் மகிழ்ச்சியாக விளங்கும்! உதாரணம் 2: பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒரே பிள்ளையாக இருந்தால், தாய் கரிசனமாக, வயிறு கொள்ளாத அளவுக்கு உணவு போட்டு, எல்லாவற்றையும் அவன் சாப்பிட்டு முடித்தால், மகிழ்ந்து பாராட்டுகிறாள்: ‘நல்ல பிள்ளை!’ ஆனால், பார்ப்பவர்கள் ‘குண்டு!’ என்று கேலி செய்வதால் ஒடுங்கிப் போகிறான். பிறருடன் கலந்து பழகத் தெரியாது போகிறது. இப்படியெல்லாம் வித்தியாசமாக வளர்க்கப்பட்டுவிட்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனால், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும். புத்தகங்களைக் கரைத்துக் குடித்த மாணவன் பாராட்டுக்கு உரியவனாகிறான். ஏனெனில், அவன் பரீட்சைகளில் நிறைய மதிப்பெண்கள் பெற்றால், நாளிதழ்களில் போடுவார்கள். அதனால் பள்ளியின் மதிப்பும், ஆசிரியர்களின் மதிப்பும் உயருமே! கதை: நான் குறுகிய காலம் வேலை பார்த்த பள்ளியில் ஒரு மாணவி (16) வகுப்பறையில் மின்விசிறியைச் சுழலவிட்டால், உடனே எழுந்துபோய் நிறுத்தி விடுவாள். ஒரு முறை எங்கள் வகுப்பிற்கு வந்திருந்த மேலதிகாரிக்காக நான் மின்விசிறியைச் சுழலவிட்டபோதும் அப்படியே செய்தாள். நான் கேட்டபோது, ‘எனக்குப் பிடிக்காது!’ என்றாள் திமிராக. ‘பிடிக்காவிட்டால், இடத்தை மாற்றிக்கொள்!’ என்றேன். அவள் முகத்தில் ஒரே ஆத்திரம் – தன் விருப்பு வெறுப்பை மீறி ஒருவர் நடக்கலாமா என்பதுபோல். பிற ஆசிரியைகளிடம் விசாரித்தபோது, ‘அவள் பள்ளியிலேயே மிகச் சிறந்த மாணவி!’ என்றார்கள் சர்வ சாதாரணமாக. அதனால், எல்லாரும் அவளுக்கு விட்டுக்கொடுத்தே பழகிவிட்டார்கள். நான் தலைமை ஆசிரியையிடம், ‘உங்கள் பள்ளி சிறந்தது என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், குணமில்லாமல், கல்வி இருந்து பயனில்லை. யாராக இருந்தாலும், தவறு செய்தால் திருத்தியாக வேண்டும்,’ என்று சொன்னேன். தலைமை ஆசிரியை என்னை எதிர்க்கவில்லை. தானும் பிற ஆசிரியைகளும் செய்த தவற்றை ஒத்துக்கொண்டாள் போலும்! முகத்தில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது. சில குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புகழப்பட்டு வளர்ந்திருப்பார்கள். தம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு, எந்தக் காரியத்தையும் பிறரைவிட மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். இவர்களால் தோல்வியை ஏற்கவே முடியாது. உடைந்து போய்விடுவார்கள். மாணவ மாணவிகளின் திறமைக்கு ஏற்ப, வெவ்வேறு வகுப்புகளில் பிரிக்கப்பட்டால், அத்தகைய வகுப்பில் நுழையும்போதே ஒரு வித பதற்றத்தை உணரமுடியும். நான் காரணத்தைக் கேட்டபோது, ‘எல்லா ஆசிரியர்களும், ’உங்களைத்தான் இந்தப் பள்ளி பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்கள் எல்லா பாடங்களிலும் 80%-க்குமேல் வாங்கவேண்டும்! என்று சொல்கிறார்கள். பயமாயிருக்கிறது!’ என்றார்கள். இந்தமாதிரி எதிர்பார்ப்பே அவர்களை சராசரிக்குச் சற்றுக் குறைவாகவே தேர்ச்சி பெற வழிவகுக்கும். வேறு சிலர் அறிவாளிகளாக இருந்தாலும், எல்லாவற்றிலும் பிறரைத் தோற்கடிப்பதை விரும்ப மாட்டார்கள். போட்டி மனப்பான்மை வெறியாக மாறிவிடும்போது நட்பு கிடைப்பது துர்லபம் என்று அறிந்தவர்கள் இவர்கள். ‘எனக்கு வகுப்பில் முதல் மாணவியாக ஆகப் பிடிக்காது. தலையை நிமிர்த்திக்கொண்டு, எல்லாரையும் அலட்சியப் பார்வை பார்த்துக்கொண்டு! ஐயே!’ புத்திகூர்மையான மாணவ மாணவிகள் இப்படிக் கூறுவதைக் கேட்டுச் சிரித்திருக்கிறேன். பிறருக்கு உதவினால் நல்லவர் என்பார்கள். ஆனால், நாம் உடலில் வலுவின்றி இருக்கும்போது, ‘பிறர் கேட்கிறாரே!’ என்று உதவ முற்படுவது அறிவீனம். நம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டால்தானே பிறரைக் கவனித்துக்கொள்ள சக்தி இருக்கும்! அது சுயநலம் என்று அர்த்தமில்லை. ‘நீங்கள் யாரைப்போல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?’ என்று என்னை ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். ‘என் போட்டி என்னுடன்தான்!’ என்று பதிலளித்தேன். போட்டி வெறி, அதனால் உண்டாகும் பதற்றம், பகைமை இவையெல்லாம் இன்றி நாம் வாழ்வில் முன்னேற முடியாதா, என்ன! இம்மாதிரியான எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகும்போதுதான் நோய்வாய்ப்படுகிறோம். சமையலோ, எழுதுவதோ, சித்திரம் வரைதலோ, எதுவாக இருந்தாலும், எப்போதையும்விட நாம் இன்று செய்வது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். இது நம்முடனேயே போட்டி போடுவது. நாம் விரும்பியபடியே நடந்தால், நிறைவாக இருக்கும். 31.பெற்றோரின் அங்கமல்ல கேள்வி: பல சிறுவர்கள் வகுப்பறையில் பதில் சொல்லத் தடுமாறுகிறார்களே, ஏன்? விளக்கம்: அவர்கள் பெற்றோரின் ஒரு அங்கமாக வளர்க்கப் பட்டிருப்பார்கள். பிள்ளைகளுக்கும் தனித்துவம் உண்டு என்று ஒப்புக்கொண்டு, அவர்களது திறமைகளை ஊக்குவிக்க பெற்றோர் முன்வர வேண்டும். கதை 1: ‘புத்திசாலியான மாணவர்கள்’ என்று பெயரெடுத்த மலாய் பையன்கள் ஒரு வகுப்பில் இருந்தார்கள். ஆனால், நான் என்ன கேள்வி கேட்டாலும், அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். போட்டிகளில் கலந்துகொள்ளவும் அஞ்சுவதாகத் தெரிவித்தார்கள். காரணத்தையும் அவர்களே தெரிவித்தார்கள்: ‘நாங்கள் ரொம்ப ஒடுக்கப்பட்டுவிட்டோம்!’ அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலோ, போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலோ பெற்றோர் வருந்துவார்களாம். தம்மிடம் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோரை ஏமாற்ற விரும்பாது, தோல்வி அளிக்கக்கூடிய எதையும் தவிர்க்கிறார்களாம்! கதை 2: ‘என் பெண் தானே நீச்சல் பழகிவிட்டாள். எங்கே, ’கோச்’சிற்குக் காட்டு!’ என்று ஒரு சீன மாது தன் மகளிடம் கூறினாள். சோனியாக இருந்த அப்பெண் தன் உடம்பை குறுக்கிக்கொண்டாள். இடம்: கோலாலம்பூரிலுள்ள ஒரு நீச்சல் குளம். தாய் விடுவதாயில்லை. இன்னும் கொஞ்சம் புகழ்ச்சி. பின், வற்புறுத்தலில் இறங்கினாள். பெண் மேலும் விறைத்துப்போனாள். சிறிது பொறுத்து, பெண்களது குளியலறையில், தாயின் குரல் மட்டும் உரக்க ஒலித்தது. ‘நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்போ? அம்மா சொன்னபடி கேக்க முடியாதோ?’ என்று பலவாறாகத் திட்டி, சிறுமியை அடிக்க ஆரம்பித்தாள். அவளோ, அழாமல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாள். அங்கிருந்த சிலர் தலைகுனிந்தபடி, விரைந்து வெளியேறிவிட்டோம். எல்லாம் நாகரீகம் கருதிதான்! இத்தாய் செய்த தவறென்ன என்று பார்க்கலாமா? தன் மகளுடன் தன்னை அடையாளப் படுத்திக் (IDENTIFY) கொண்டிருக்கிறாள். அந்த சின்னப் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் உண்டு, அவளுடைய வெட்கமான சுபாவத்தைச் சட்டைசெய்யாது, அவளை தனக்குப் பெருமை தேடித் தர முடுக்குகிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. நீண்டகால விளைவு: பெண் மேலும் மேலும் ஒடுங்கிப்போவாள். தாயின் கை ஓங்க, ‘எவ்வளவு திட்டினாலும், அடித்தாலும், இவள் உருப்படவில்லையே !’ என்ற நிராசையும் எழும். இன்னொரு தாய் தன் மகளை அறையில் வைத்து பூட்டிவிட்டாள், இரண்டு நாட்கள். சாப்பாடும் கிடையாது. எல்லாம் அவள் தாய் எதிர்பார்த்தபடி மதிப்பெண்கள் வாங்கிவில்லையென்றுதான்! பெண் தன் பள்ளித்தோழிகளிடம் சொல்லி அழுதது என் காதுகளுக்கு எட்டியது. தாய்மார்கள் தாம் பெற்ற பெண்கள் தங்களை மிஞ்சவேண்டும் என்று பேராசையுடன் அவர்களைப் பிடித்துத் தள்ளினால், தாயையும் எதிர்க்கத் துணிவில்லாது, தம்மையும் குறைவாக மதிப்பிட்டுக்கொண்டு, அதனால் மனமுடைந்து போகிறார்கள், அந்த பரிதாபத்துக்குரியவர்கள். பதினாறு வயதான சீனப் பெண்கள் பலர் மனநிலை லேசாகப் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சில காலம் கழிப்பதாக ஒரு சமூக சேவகி என்னிடம் தெரிவித்தாள். நல்ல விதமாகச் சொல்லியோ, திட்டியோ, அல்லது மனம் போனபடி தண்டித்தோ தாம் பிறரிடம் பெருமையாகப் பேசிக்கொள்வதற்குத் தம் குழந்தைகளைக் கருவியாகப் பெற்றோர் உபயோகப்படுத்தினால் எதிர்மறையான விளைவுகள்தான் உண்டாகும். எல்லாக் குழந்தைகளும் படிப்பிலும், பலவிதமான கலைகளிலும் கண்டவர் மெச்சும்படி விளங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா! வயதில் பெரியவர்கள் அப்படித்தான் இருக்கிறோமா? பின், குழந்தைகள் மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? தப்பித் தவறி ஒரு குழந்தை முன்னுக்கு வந்துவிட்டால், அது அவனுடைய பெற்றோரின் ஊக்குவிப்பால் மட்டும்தான் என்று பலரும் கருதி, பெற்றோரைப் பாராட்டுவார்கள். அப்படிச் செய்வதால், சிறுவர்களுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள மறுப்பதாக ஆகாதா? இதனால் சிறுவயதினருக்குச் சற்று ஏமாற்றம் எழ, எதையும் முனைந்து செய்யும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. இல்லையேல், ‘இதைச் செய்தால், எனக்கு என்ன பரிசு கிடைக்கும்?’ என்ற ரீதியில் அவர்களது எண்ணம் போகிறது. பொழுதுபோக்காக இருந்தாலும், அதனால் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று வர்த்தக ரீதியில்தான் கணக்கு பார்ப்பார்கள். (‘உங்களுக்கு எழுத்தில் நிறையப் பணம் வருவதில்லையா? பின் ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்பவர்களை இந்த ரகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஆத்ம திருப்தி என்பது அவர்களுக்குப் புரியாத சமாசாரம்.). சிறுவயதினர் பெற்ற வெற்றியை மனமாரப் பாராட்டும் வகையில், ‘வாழ்த்துகள்! நீ புத்திசாலி!’ என்று புன்சிரிப்போடு சொன்னால்கூடப் போதும். மேலும் துணிந்து புதிய முயற்சிகளில் ஈடுபட ஊக்கம் பிறக்கும். கதை 3: நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பெங்களூர் நகரெங்கும் நடைபெறும் பேச்சுப் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் செல்வார் என் தலைமை ஆசிரியை. தமிழ் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருந்தேன். ஆனால், அப்போது என் ஆங்கிலம் அரைகுறை. சில பெரிய வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாது, தமிழில் எழுதிவைத்திருப்பேன். போட்டிக்குப் பிற பள்ளிகளிலிருந்து வந்த பெண்கள், ‘எங்க பள்ளிக்குப் பரிசு கிடைக்கலே. டீச்சர் ரொம்பத் திட்டுவாங்க. பயமாயிருக்கு!’ என்று என்னிடம் கூறியபோதுதான், வெற்றி பெறாதது திட்டு வாங்கக்கூடிய சமாசாரம் என்றே எனக்குப் புரிந்தது. நானும் அன்று வெற்றி பெறவில்லை. அதற்காக மனமுடைந்து போகவோ, பயப்படவோ இல்லை. என்னை அழைத்துப்போயிருந்த எனது தலைமை ஆசிரியை, மிஸ்.கோகுல் தாஸ், என் தோளில் கைபோட்டு அணைத்து, ‘நீ நேருமாதிரி குரலை மாற்றிப் பேசினாயே! அதை எல்லாரும் ரசித்தார்கள். எப்படி கைதட்டினார்கள்!’ என்று என் பேச்சிலிருந்த ஒரு சிறு நல்ல விஷயத்தைப் பாராட்டினார்கள். கதை 4: திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்த ஒருவர் தன் அந்தரங்கத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்: ‘என் பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்கள். அதனால் நானும், என் மனைவியும் தனித்திருக்கும் தருணங்களில் உற்சாகமோ, ஆர்வமோ, மகிழ்ச்சியோ எதுவுமில்லை. ’இன்றாவது ஒரு குழந்தையை உற்பத்தி செய்ய முடியுமா?’ என்பதுபோல் யோசிப்பதில் அலுப்புதான் மிஞ்சுகிறது!’ வயதேற, ஏற, பிறர் என்ன சொல்வார்கள் என்று யாரும் கவலைப் படுவதில்லை. உடல் வலிமை குன்றிய அந்த பிராயத்தில் அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும்தான் முக்கியமாகப் படுகிறது. ஏனோ, இவைகளுக்காகத்தான் அவர்களது குழந்தைகளும் ஏங்குவார்கள் என்பது அப்போதும் புரிவதில்லை! பேரக்குழந்தைகளை பெற்றுத் தருகிறார்களோ, இல்லையோ, இந்த விஷயத்திலாவது தாம் பெற்ற பிள்ளைகளை அவர்கள் போக்குப்படி நடக்க விடுவோம் என்று ஏன் அவர்களுக்குத் தோன்றுவதில்லை? 32.பாதுகாப்பு யாருக்காக? கேள்வி: நாம் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்தால், அது அவர்களுக்கு நன்மைதானே? ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? விளக்கம்: சிறு பிராயத்திலிருந்தே மனிதனுக்கு முரணான இரு குணங்கள் இருக்கின்றன. ஒன்று சுதந்திரம், இரண்டாவது பாதுகாப்பு. உதாரணமாக, ‘நான் பெரியவன்! தானே அம்மா கை பிடிக்காமல் நடக்க முடியும்!’ என்பதுபோல் தனியாக ஓடும் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று, குரைத்தபடி ஓடும் நாயைப் பார்த்தால், அம்மாவை ஓடி வந்து கட்டிக்கொள்ளும். இந்த இயற்கையைப் புரிந்துகொண்டு, குழந்தையை வழிநடத்திச் செல்ல வேண்டும். ஒரு தாய்க்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளும்கூட ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு குழந்தை பசி வந்தால், பிராணன் போகிறமாதிரி அலறும். இன்னொன்று வெறுமனே முனகும். ஜீன் வித்தியாசப்படுவதால், ஒவ்வொன்றும் தனி ஜீவன்தான். இது புரியாது, தனி மனிதனின் நன்மையைவிட பொதுநலனே முக்கியம் என்று வளர்க்கப்படும்போது, ஒருவனின் தனித்தன்மைகள் வெளிப்பட வாய்ப்பு இல்லாது போகிறது. எப்போதும் பாதுகாப்பாக உணர்ந்தாலும், சுதந்திரம் கிடைப்பதில்லை. ‘வயது முதிர்ந்ததும், எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா?’ இப்படி யோசிக்கும் தாய், மகன் தன்னைப் பாதுகாப்பான் என்ற எதிர்பார்ப்புடன், ‘பாசம்’ என்ற பெயரில் குழந்தைப்பருவத்திலிருந்து அவன் தன்னையே சார்ந்து, எதற்கும் நாடும்படி, வேண்டியதை எல்லாம் கவனித்துச் செய்வாள் – மகனுக்கு எத்தனை வயதானாலும். முதலில் சௌகரியம் என்று பட்டது இப்போது இரு தரப்பிலும் ஆத்திரத்தை விளைவிக்கும். குழந்தை தாயை எதிர்த்து, தானே தன் காரியங்களைச் செய்ய முற்படும்போது, இத்தகைய தாய் நொந்து போகிறாள் – தன்னை உபயோகமானவள் என்று மகன் நினைக்கவில்லையே என்று. மகன் விரும்புவதெல்லாம் சிறிது சுதந்திரம். அவ்வளவுதான். அது அவளுக்குப் புரியவில்லை. ஒரு சிறுவன் தானே தனது காரியங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பது அகம்பாவத்தால் அல்ல. ‘என்னாலும் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையைப் பெற. இது புரிந்து, அபாயமற்ற காரியங்களில் அவனைத் தன் போக்கில் விட்டு, சிறு தவறுகள் நிகழும்போது, அவைகளைப் பெரிதுபடுத்தாது, எப்படித் தடுப்பது என்று சொல்லிக் கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால், எந்த வயதிலுமே புதிய காரியங்களைச் செய்யத் தயங்குவான் – எங்கே தவறு நிகழ்ந்து, பிறரது கேலிக்கு ஆளாக வேண்டி வருமோ என்று. குழந்தை சுயமாகச் சிந்திக்கும் சூழ்நிலைகளை ஒன்றரை வயதிலிருந்தே சிறுகச் சிறுக உருவாக்குங்கள். ‘இன்னிக்கு இந்த சட்டை போட்டுக்கறியா, இல்லே இதுவா?’ ‘உனக்கு மைலோ வேணுமா, ஹார்லிக்ஸா?’ குழந்தை முதலில் ரொம்ப யோசிக்கும். ‘மைலோ பிரௌன் கலர். ஹார்லிக்ஸ் வெள்ளையா இருக்கு, பாத்தியா? எது வேணும்?’ காலையில் ஒன்று, மாலையில் மற்றொன்று என்று பெருமையாகத் தேர்ந்தெடுக்கும். குழந்தை காலையில் ஹார்லிக்ஸ் கேட்டு, நீங்கள் தவறாக மைலோ கொடுத்தால், தன் கருத்து மதிக்கப்படவில்லையே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். வெள்ளை நிறத்தில் சிறிது பிரௌன் கலந்தால், அந்த விஷயத்திற்கு ஒரு நல்ல முடிவு கட்டிவிடலாம். குழந்தைகளை ஏமாற்றுவது எளிது. பொதுவாக எல்லாக் குழந்தைகளுமே தங்கள் வயதுக்கு மீறிய செயல்களை செய்ய முற்படுகிறார்களே, ஏன் தெரியுமா? தங்கள் எல்லை எவ்வளவு என்று அறியும் முயற்சி அது. அவ்வப்போது வாய் வார்த்தையாகக் கண்டிக்க வேண்டுவது அவசியம். ‘குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று நீண்ட காலம் விட்டுக்கொடுத்தால், பிறகு அடக்க முடியாது. குழந்தைகளுக்கு விளையாடுவதைத் தவிர மற்ற எல்லாமே அநாவசியம்தான். குளிப்பது, பல் துலக்குவது போன்ற அவசியமானவற்றைக்கூட செய்ய மறுக்கும் குழந்தைகள் உண்டு. ‘பல் தேய்ச்சாதானே பல் முத்து மாதிரி மின்னும்! இல்லாட்டா பூச்சி வரும்!’ என்று ஆசை காட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டியதுதான். பள்ளிக்கூடத்துக்குப் போக அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய படிப்பாளிகள் ஆவதுபோல்தான்! தான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே என்று ஆத்திரப்பட்டு அடித்து மசியவைத்தால், ‘நான் ஒரு பயந்தாங்குளி!’ என்று பெருமை பேசுகிறவர்களாகிறார்கள். இவர்களால் தனித்து எதையும் செய்ய துணிவில்லாததால், தம்மைப்போன்ற பிறரையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுபோல் நடப்பார்கள். தம்மைப்போல் இல்லாது, சிறு வயதிலேயே போதிய சுதந்திரம், பாதுகாப்பு என்று அன்புடன் வளர்ந்தவர்களைக் கண்டு பொறாமை எழுகிறது. அவர்களை மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பழித்து, தங்களைப்போல் மாற்ற எண்ணுவார்கள். அவர்களுக்கு வேண்டியது நட்பு. அதனால் கிடைக்கும் பலம், பாதுகாப்பு. ஆனால், சண்டையில் துவங்குவார்கள். பிறர் நம்மிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்பதுதான் பெருந்தன்மை. எல்லாரிடமும் இருக்கும் குற்றம் குறைகளையே பார்த்துக் கொண்டிருந்தால், நட்பும், உறவும் எப்படி வளரும்? 33.மரியாதை கேள்வி: குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிப்பது சரிதானா? விளக்கம்: ‘என் குழந்தைகள் என்னைப்போல இல்லை. ரொம்ப தைரியசாலிகள்!’ பணிவு, அடக்கம், மரியாதை என்ற பெயர்களில் தாம் அளவுக்கு மீறி ஒடுக்கப்பட்டு விட்டோம் என்ற மனக்குறை உடையவர்கள் பெருமையாகப் பேசுவது இது. பழையகால வளர்ப்பு முறை தவறு என்பது அவர்கள் வாதம். சமயம் கிடைத்த போதெல்லாம் மேலதிகாரிகளுக்கு அடிவருடிகளாக, தம் புகழை ஒன்றுக்குப் பத்தாக தாமே பாடிக்கொண்டு, எதிரி என்று தோன்றுபவர்களை எல்லாம் மிரட்டலும், அவதூறும் பிரயோகித்து அவர்கள் தம் நிகராகவோ, அல்லது தம்மை மிஞ்சாதிருக்கவோ செய்து – இன்னும் என்னென்னமோ செய்தால்தானே பிள்ளைகள் முன்னுக்கு வர முடியும் என்றுதான் தற்காலத்தில் பலரின் சிந்தனையும் செல்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற அறிவாற்றலும், நேர்மையும் இருந்தால் மட்டும் பிழைக்க முடியுமா? தில்லுமுல்லு செய்யக்கூட அளவில்லாத துணிச்சல் வேண்டும்தானே? ஆனால், சுய லாபத்துக்காகப் பிறரிடம் போலி மரியாதையுடன் நடந்துகொள்பவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். அவனிடமும் அப்படியே பொய்யாக நடப்பவர்களிடம் ஏமாந்துவிடுகிறான். நாளடைவில், இது புரிய. விரக்திதான் மிஞ்சும். கதை 1: என் மலாய் மாணவி நோர்லேலா (14) சற்றும் மரியாதை இல்லாமல், எதிர்த்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பொறுக்க முடியாமல் போய், ஒரு சக ஆசிரியையிடம் அவளைப்பற்றிக் கேட்டேன். ‘மலாய்க்காரர்களுக்கு மரியாதை ரொம்ப முக்கியமாயிற்றே! இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?’ நோர்லேலா எங்களுடன் வேலை பார்க்கும் ஒரு வயது முதிர்ந்த ஆசிரியையின் மகள் என்று அவள் கூற, ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறருக்கு நற்குணம் போதிக்க வேண்டிய ஓர் ஆசிரியை அதெப்படி தன் மகளை இப்படிப் பழக்கி இருப்பாள்? பெண்ணின் தாய் சற்று வருத்தத்துடன் என்னிடம் சொன்னாள்: ‘பெரியவர்கள்முன் வாயே திறக்கக்கூடாது எனபதுபோல் என்னை வளர்த்தார்கள். அதனால், நான் பெரியவர்கள்முன் வாயடைத்துப் போய்விடுவேன். என் மகளும் அப்படிப் போய்விடக்கூடாது என்றுதான் அவளுக்கு அளவற்ற பேச்சு சுதந்தரம் கொடுத்தேன். இப்போது எல்லா ஆசிரியைகளும் அவளைக் குறை கூறுகிறார்கள். வீட்டிலும் அப்பா, அம்மா, உடன்பிறந்தோர் எல்லாரையும் மரியாதை இல்லாது பேசுகிறாள். என்ன செய்வது என்றே புரியவில்லை!’ நாகரீக யுகத்தின் குழப்பம் இது. அதிகம் படிக்காத தாய், ‘என் மகன் பேசறதும், கேக்கறதும் எனக்கே புரியலே!’ என்று பிறரிடம் பெருமையாகச் சொல்கையில், தன்னையுமறியாது, மகன் அவளை மட்டமாக எடைபோட வழிவகுக்கிறாள். தான் பெற்று வளர்த்த பிள்ளை புத்திசாலி என்ற மிதமிஞ்சிய பெருமையுடன், அவன் வயதினரான பிறரை மட்டம் தட்டிப் பேசினால்கூட மகனுக்கும் அந்தப் போக்குதான் வரும். பெரியவன் ஆனதும், அவனைவிடத் தாழ்ந்தவர்கள் எல்லாரையும் –பெற்றோர் உட்பட – அலட்சியம் செய்வான். ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தால்தான் என்ன? அவனைப்போன்ற கல்வியறிவோ, செல்வமோ இல்லாததால் மட்டுமே பெற்றோர் அவனைவிடத் தாழ்ந்தவர்கள் ஆகி விடுவார்களா, என்ன? கதை 2: ‘உங்களுக்கு எது வேணுமோ, வாங்கிக்குங்கம்மா!’ என்று அன்பும், மரியாதையுமாகச் சொல்லிவிட்டு, ஒரு நகைக்கடை வாசலில் நின்றுகொண்ட ஓர் இளைஞனைப் பார்த்தேன். படித்து, நல்ல உத்தியோகம் பார்ப்பவனாகத் தெரிந்தான். அவனுக்கு நேர்மாறான தோற்றத்தில் தாய். ஏழ்மையிலேயே காலமெல்லாம் உழன்றிருப்பவளாகத் தெரிந்தாள். தனது இல்லாமையிலும் மகனைப் பரிவுடன் நடத்தி, அவனுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பண்புகளைப் போதித்திருக்க வேண்டும்.. தான் முன்னுக்கு வந்தது தன் சுய முயற்சியால் மட்டுமல்ல, தன் பெற்றோருக்கும் அதில் முக்கியப் பங்குண்டு என்று ஒத்துக் கொண்டிருக்கிறான் மகன். தன் நன்றியை இப்படி வெளிக்காட்டுகிறான். இச்சம்பவத்தை நான் கண்டு பல வருடங்களாகியும், இப்போது நினைத்தாலும், பூரிப்பாக இருக்கிறது. இன்னொரு தாய், ‘இவர்களால் எனக்கு என்ன லாபம்?’ என்ற வியாபார நோக்கில்தான் குழந்தைகளைப் பார்க்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளிடம், நீ நிறையப் படித்து, பெரிய வேலை கிடைத்ததும், நான் உனக்குச் செய்ததை எல்லாம் மறக்காதே!’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். இதில் அன்பு எங்கே இருக்கிறது? முதலில் பெற்றோரிடமிருந்து அன்பைப் பெறாததால், வளர்ந்தபின்னர் அவர்கள் அளிக்காத அந்த அன்பைத் திருப்பி அளிக்க முடிவதில்லை அப்பிள்ளைகளால். தன்னைச் சம்பாதித்துப்போடும் ஒரு கருவியாகத்தான் அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்ற எண்ணம் கசப்பைத்தான் விதைக்கும். இத்தகையவர்களால் போலி அன்பைத்தான் காட்ட முடியும். வாழ்க்கை எவ்வளவுதான் நாகரீகம் அடைந்தாலும், இரக்க குணம், அன்பு, பிறரிடம் மரியாதையாக நடத்தல் போன்ற பண்புகளுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. மனிதர்களிடம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவை இவை. உலகில் 8% மனிதர்கள்தான் அடுத்த வேளை உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் எப்படிக் கிடைக்கப்போகிறது என்று பரிதவிக்காமல் இருக்கிறார்களாம். இது புரிந்து, ‘இப்படி ஒரு வளமான, அன்பான குடும்பத்தில் பிறக்க நீ எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். அதற்கு ஈடாக, பிறருக்கு உதவி தேவைப்படும்போது, வலியப்போய் செய்!’ என்று அறிவுரை சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் சுயநலமின்றி வளர்வார்கள். ஆனால், சோம்பேறிகளுக்கோ, ஏமாற்றுக்காரர்களுக்கோ உதவி செய்வது அநாவசியம். ‘பிறரிடம் மரியாதையாகப் பழகு,’ என்று ஒரு சிறுவனிடம் சொல்வதைவிட, அதை நம் போக்கில் காட்டினால், அவனும் அப்படியே நடப்பான். இங்கும் ஓர் எச்சரிக்கை தேவைப்படுகிறது. வயதானவர்கள் தாறுமாறாக (உ-ம்: பாலியல் வதைக்கு உட்படுத்துவதுபோல்) நடந்து கொண்டால், அதைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை; தாராளமாக எதிர்க்கலாம், ஏனெனில், அவர்கள் மரியாதைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்பதையும் வலியுறுத்த வேண்டும். இப்படிச் செய்தால், அநீதியைத் தட்டிக் கேட்கும் தைரியம் என்றென்றும் குன்றாது நிலைக்கும். 34.தனித்து வாழும் தாயும் மகனும் கேள்வி: ஒரு பெண்ணும், கணவரும் நான்கு வருடங்களுக்குமுன் சட்டப்படி பிரிந்துவிட்டார்கள். பணப்பிரச்னை கிடையாது. ஆனாலும், தாயுடன் இருக்கும் மகன் (14) யாருக்கும் அடங்காது வளர்கிறானே, அவனை எப்படித் திருத்துவது? விளக்கம்: வீட்டில் முன்போல் சண்டை பூசல் இல்லாது அமைதி நிலவினாலும், தாய் தந்தையர் ஒருவரை ஒருவர் விட்டு நிரந்தரமாகப் பிரிந்தது தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக் கலங்குவார்கள். என் மாணவன் ரித்வான் அந்தப் பையனைப்போல்தான். தானே வந்து, வெவ்வேறு சமயங்களில் அவன் என்னிடம் கூறியது: 1 நான் பிறந்திருக்கவே கூடாது. 2 நான் ஏன் அப்பாவுடன் சேர்ந்து வாழக்கூடாது? 3 ‘இந்தச் சட்டையைத்தான் நீ இன்று போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தும் அம்மா மாறவே மாட்டார்கள்! அவன் கூறியதில் கசப்பு, சுயவெறுப்பு, இயலாமை, ஏமாற்றம், கேலி எல்லாம் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும் குழந்தைகளை வளர்க்கும் விதமே வேறு. உதாரணம்: ஒரு எட்டு வயதுப் பையனிடம் தாய்,‘குளிக்கப் போ!’ என்றால், ‘ஏன்?’ என்று கேட்பான். அதற்கு அவள் நீளமாக ஏதாவது சொல்வாள். அனேகமாக, அது அவனை மட்டம் தட்டுவதுபோல் இருக்கும். அப்பாவோ, தந்தையோ, ‘கேள்வி கேட்காதே, போ!’ என்று அதிகாரமாகச் சொன்னால், குளியலறைக்கு ஓடுவான்! பதின்ம வயதுப் பையன்களுக்குத் தம் உடலில் ஏற்படும் மாறுதல்களையும், அதனால் எழும் உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம்தானே பகிர்ந்துகொள்ள முடியும்! தந்தையுடன் வாரம் ஓரிரு நாட்கள் கழிக்கும் பையன் அவர் கட்டுப்படுத்தாது, தன்னைப் புரிந்து, அனுசரணையாக நடத்துவதை விரும்புவதில் என்ன அதிசயம்! (எப்போதும் கூடவே இருக்கும் தந்தைமார்கள் இப்படி இருக்கிறார்களா என்பது யோசிக்கத்தக்க விஷயம்). ஒரு குழந்தை வழக்கமாக, தந்தை மிரட்டினால் தாயிடமும், தாய் திட்டினாலோ, தொணதொணத்தாலோ தந்தையிடமும் ஆதரவு நாடுவான். தாயுடன் தனித்து வாழும் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு இல்லையே! போதாக்குறைக்கு, கணவனை எக்காரணத்திலோ பிரிந்து வாழும் தாய் அவருக்குப் பிறந்த மகனும் அவரைப்போல் ஆகிவிடக்கூடாது என்று பெரும் முயற்சி எடுத்துக்கொள்வாள். ‘இவனாவது கடைசிக்காலத்தில் தன்னை மீண்டும் தனியாக விட்டுப் போய்விடக்கூடாதே!’ என்று அவளே அறியாது ஒரு பயம் உண்டாகிறது. அதனால் அவன் தன்னை எப்போதும் நாடப் பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறாள். அவனுடைய அத்தியாவசிய தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ளும் வயது அவனுக்கு வந்திருந்தாலும், குழந்தையாகவே அவனைப் பாவித்து, ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்கிறாள். ‘நான் செய்வது எல்லாமே அவனுடைய நன்மைக்குத்தான்!’ என்று எல்லாரிடமும் சொல்லிக்கொள்கிறாள். தான் இவ்வளவு அருமையாக நடத்தியும், மகன் ஏன் நன்றியில்லாமல் எதிர்ப்புக் காட்டுகிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சிறு விஷயங்களில்கூட ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால், அதனால் விளையும் ஆத்திரத்தில் எல்லா விதிகளையும் மீறுவது மனித சுபாவம். பதின்ம வயதினரிடம் அவர்கள் எதை எப்படிச் செய்யவேண்டும் என்று பெற்றவள் ஓயாமல் கூறினால், ‘எனக்கு எதற்குத் தனியாக மூளை?’ என்ற ரீதியில் எண்ணத் துவங்குவார்கள். கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார், இல்லை, குடித்துவிட்டு அடிக்கிறார், சம்பாத்தியம் எல்லாவற்றையும் சூதாடியே அழிக்கிறார் – இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதிகள் பிரிய முடிவு செய்யும்போது, தம் கோபத்திலேயே உழன்று கொண்டிருக்காது, தம் செய்கையால் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும்தான் என்று உணரத் தவறி விடுகிறார்கள். ஒருவர் தமக்கு இழைத்த பாதிப்பை எக்காலத்திலும் பெண்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இது அவர்களது இயல்பான குணம். (அதனால்தான் கணினி பெண்ணினம் என்று சொல்லப்படுகிறது!) ‘உன் அப்பாவால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன், தெரியுமா?’ என்று சொல்லிச் சொல்லி மகனை வளர்க்கிறாள் தாய். மகனோ, தந்தைமேல் கொண்டுள்ள பாசம் ஒரு புறம், தன்னை வளர்க்கும் தாயின் மனதையும் நோக அடிக்கக்கூடாது என்ற தீர்மானம் மறுபுறம் என்று அலைக்கழிக்கப்பட்டு, யார்பக்கம் சாய்ந்தாலும் மற்றவருக்குத் துரோகம் செய்வதுபோல் ஆகிவிடுமே என்று குழம்புகிறான். சகநண்பர்களிடம் தன் வேதனையைச் சொன்னால் புரிந்துகொள்வார்களோ, இல்லை, பரிதாபப்படுவார்களோ என்று இப்படிப்பட்ட சிலர் தனித்திருக்க முற்படுவார்கள். பொதுவாகவே, தாமடைந்த துயரத்தை, தம் மனக்குழப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முயலுபவர்களின் மனநிலையில் நம்மைப் பொருத்திக்கொண்டு, அதிகம் குறுக்கே பேசாது, வேண்டாத அறிவுரையும் கூறாது கேட்டுக்கொள்வது அவர்கள் ஓரளவு நிம்மதி பெற, தம்மைத்தாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும். ‘என்னால் அப்பாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. நாங்கள் பிரியப்போகிறோம். எனக்கு அவர் கணவராக இல்லாது போனாலும், உனக்கு என்றும் அவர் அப்பாதான்!’ என்பதுபோல் முதலிலேயே குழந்தைகளிடம் விளக்கிவிட்டால், அவர்களுடைய குழப்பம் ஓரளவு தீரும். வயது முதிர்ந்தவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்றுதான் எல்லாக் குழந்தைகளும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் தவறு செய்வார்கள், அதை அவர்கள் வழியில் திருத்திக்கொள்வார்கள் என்று புரிந்துகொண்டால், நடந்ததில் தனக்குப் பங்கில்லை என்ற தெளிவு பிறக்கும். எல்லாரையும் எதிர்க்கும் குணமும் மறையும். 35.நட்பும் அதிகாரமும் கேள்வி: விளையாடும்போது குழந்தைகள் ஏன் ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்? தம் குழந்தைகளுடன் தோழமையுடன் பழகுவது பெற்றோரால் முடிந்த காரியமா? குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது பிற்காலத்தில் பிறருடன் பழக ஒரு பயிற்சி. வெற்றி, தோல்வி இதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தம்மை வீட்டில் நடத்தும் விதத்தில் பிறரை நடத்துவார்கள். ஏழு வயதுவரை சுயநலம் மிகுந்திருக்கும். அதனால், பிறருக்கு விட்டுக்கொடுப்பது அவர்களுக்குக் கைவராத கலை. கதை: திருமணமாகி பல வருடங்களுக்குப்பின் பிறந்த குழந்தை என்பதால், ஏஞ்சல் என்று பெயரிட்டு, தம் பெண்ணை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் அவளுடைய பெற்றோர். அவள் கேட்ட எதையும் மறுத்ததில்லை. தான் ஓர் அற்புதமான பிறவி என்று தோன்றிப் போயிருக்கவேண்டும். எட்டு வயதில், தான் பிற சிறுமிகளுடன் விளையாடும்போது, அதே அதிகாரத்தை மற்றவர்களிடம் பிரயோகித்தாள் ஏஞ்சல். அவள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ள அவர்கள் மறுக்க, தெருவின் குறுக்கே நின்றுகொண்டு, ‘நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கேட்காவிட்டால், காரில் அடிபட்டு சாகப்போகிறேன்!’ என்று மிரட்டியிருக்கிறாள். சில குழந்தைகள் பயந்து, வீட்டில் தெரிவித்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அதற்குப்பின் அவளுடன் விளையாடத் துணியவில்லை. ‘என்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று தனிமையில் அழத்தான் முடிந்தது அவளால். அவளால் மாறவும் முடியவில்லை. ஏனெனில், வீட்டில் தொடர்ந்து ராஜபோகம்தான். குழந்தைகள் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டால், பெரியவர்கள் கண்டும் காணாததுமாதிரி இருந்து விட வேண்டும். ஏனெனில், சிறிது நேரத்தில் அதை மறந்து, நட்பாகப் பழகுவார்கள். அதேபோல், குழந்தைகள் விளையாட்டில் தோல்வி அடைந்தால், அது பெற்றோருக்குத் தலைகுனிவு என்பதில்லை. குழந்தைகள் தம் வயதுக்கேற்ப நடக்கும்போது, அதற்காக ஏன் வெட்கப்பட்டு, அவர்கள் நடத்தைக்கு நியாயம் கற்பிக்க வேண்டும்? அவர்கள் தவறிழைக்கும்போதெல்லாம் தாமே சிறுமைப்பட்டு விட்டதைப்போல் குறுகி, குழந்தைகளைப் பழிப்பது தகாது. தம் அறிவையெல்லாம் குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குப் புகட்டிவிட வேண்டும் என்று எண்ணுபவர்கள்போல, ‘இப்படி விளையாடு,’ ‘இந்தச் சாமானை வைத்து விளையாடு,’ என்று தொணதொணப்பது ஒழுக்கம் கற்பிக்கும் வழியில்லை. ஒன்றுமே சொல்லாமல் குழந்தையை அதன் போக்கில் விளையாடவிட்டால் போதும். அதன் சிந்தனைத்திறன், ஆர்வம், தன்னம்பிக்கை எல்லாம் வளரும். அப்படியின்றி, தாயின் மறு உரு குழந்தை என்பதுபோல் நடத்தினால், ‘அம்மா சொற்படி நடந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். வசவும் கிடைக்காது!’ என்று நினைக்கத் தலைப்படுவார்கள் குழந்தைகள். அறியாப் பருவத்தில் அடக்கு முறையை அன்பு என்று நினைத்து கீழ்ப்படிந்தவர்கள், வயது ஏறியதும், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்கின்றனர். தாம் ஏதோ விதத்தில் பலவீனமாக இருப்பதாக உணர்கிறார்கள். பிறர் சொற்படி நடந்தே பழகிவிட்டவர்களுக்கு சுயமாக எதையும் செய்யத் துணிவிருப்பதில்லை. அப்படியே செய்தாலும், அதிகாரமான பாவனை. தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்ட தாய், தந்தை, அல்லது இருவர்மேலும் தீராத ஆத்திரம் கொள்கிறார்கள். அந்த பரிதாபத்துக்குரியவர்களின் மறைவுக்குப் பின்னரும் ஆத்திரம் என்னவோ மறைவதில்லை. தான் இன்னும் விவரம் அறியாப்பிள்ளை இல்லை, நல்லது, கெட்டது அறியும் வயதாகிவிட்டது, எதுவானாலும் பொறுப்பு தன்னுடையதுதானே என்றெல்லாம் சிந்தனை போக, பதின்ம வயதினர் பெற்றோரை எதிர்க்கிறார்கள். அறிவோ, அனுபவமோ அதிகம் இல்லாத நண்பர்களுடன் கூடிப் பழகுகிறார்கள். ‘நாம் இவ்வளவு விரட்டும்போதே கெட்ட பழக்கங்களும், கூடா நட்பும் ஏற்பட்டு விடுகின்றன. ஒன்றுமே சொல்லக்கூடாதா?’ என்று சிலர் யோசிக்கலாம். ‘உன் ஃப்ரெண்ட்ஸ்கூடப்போறபோது, எப்படியோ டிரெஸ் பண்ணிக்க. என்கூட வரபோது, அதுவும் கோயிலுக்கோ, கச்சேரிக்கோ வர்றபோது சூடிதார், இல்ல புடவைதான்! பெரியவங்க பேசறபோது குறுக்கே பேசக்கூடாது!’ – இப்படி சற்று விட்டுக்கொடுத்து, ஆனால் அதே சமயம் கண்டிப்பையும் விடாது கூறுங்கள். உரத்த குரலில், அதிகாரமாக இல்லை. சாதாரணமாகப் பேசுவதுபோல். அதைக்கூடப் பொறுக்காது, பிள்ளைகள் கத்தினால், ‘நான் நல்ல விதமாகச் சொன்னேனே!’ என்று பொறுமையாகச் சுட்டிக் காட்டுங்கள். இருவரும் சேர்ந்து கத்தினாலோ, அல்லது ஒருவர் பயந்து வாயை மூடிக்கொண்டாலோ, மனக்கசப்புதான் மிஞ்சும். இந்த நியதி எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். எந்த வயதுக் குழந்தையானாலும், பொறுமையோடு அணுக வேண்டும். கதை: ‘எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று எரிச்சலுடன் அடிக்கடி கூறிவந்தாள் ஒரு தாய். குழந்தை விஷமம் பண்ணினால் தன் பொறுமை மீறி, படபடப்பு ஏற்பட்டுவிடும் என்று ஆறு வயதான பின்னரும், ‘ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அடி!’ என்று மகனைப் பழக்கியிருந்தாள். தாய் கவனிக்காதபோது, நெருப்புக்குச்சியைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பான் சிறுவன்! அவனுக்கும்தான் பொழுது போக வேண்டாமா? குழந்தை விழுந்தால் அதன் உயிரே போய்விடும் என்பதுபோல், ‘ஓடாதே! விழுந்துடுவே!’ என்று பல பெற்றோர் எச்சரிக்கிறார்கள். நடக்கப் பழகும்போது, கீழே விழாதவர்கள் யார்? அவர்கள் கீழே விழுந்தால், அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுங்கள். தாய் பதட்டப்படும்போதுதான் அது குழந்தைகளையும் தொற்றிக் கொள்கிறது. பரிவுக்காக அதிகமாக நடிப்பார்கள். குழந்தைகள் விளையாடப் போகுமுன், ‘நீ சமர்த்து! சண்டை போடாம விளையாடுவே!’ என்று முன்னெச்சரிக்கையாக, ஆனால் புகழ்ச்சிபோல சொல்வது, ‘மற்ற குழந்தைகளை அடிக்கக்கூடாது!’ என்ற எதிர்மறையான அறிவுரையைவிட நல்ல பயனளிக்கும். அன்பாக இருக்கும் தாயிடம் குழந்தைகள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். (’ஒரு பையன் என்னைக் கேலி செய்தான். நான் அவனை உதைச்சேன்!’) அவனுக்குத் தெரிந்த வகையில் எதிர்த்திருக்கிறான். அது புரிந்து, அவனுடைய மனநிலையில் உங்களை வைத்துப்பாருங்கள். ஒரேயடியாக புத்தி சொல்ல வேண்டாம். அதுபோல், ‘உங்கள் செவிகளுக்கு மட்டும்!’ என்று பகிர்ந்துகொள்வதைப் பிறரிடம் கூறுவது அவனை அவமானப்படுத்துவதாகும். உங்கள் அறிவுரையைப் புரிந்துகொள்ளாது மீறி, தவறிழைக்கிறான். மனம் வருந்தி, அதை உங்களிடமும் சொல்கிறான். அப்போது, ‘நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இப்படி ஆகியிருக்குமா?’ என்று இடித்துரைக்கவும் வேண்டாம். அவர்களே குழம்பிக் கொண்டிருக்கும்போது, எதுவும் பேசாது, கேட்டுக்கொள்வதே அன்பின் அடையாளம். நட்பும் வளரும். வீட்டில் காட்டும் நட்புதான் வெளியுலகத்திலும் தொடரும். 36.முழுமையான கல்வி கேள்வி: பதின்ம வயதினருக்கு இயற்கையாகவே கர்ப்பம், குழந்தைப்பேறு இவைகளைப்பற்றித் தெரியாதா? விளக்கம்: சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நண்பர்களிடமிருந்து அரைகுறையாக அறிவார்கள். பெற்றோரோ, ஆசிரியரோ தகுந்த முறையில் சொல்லிக்கொடுப்பதுபோல் ஆகாது. விஞ்ஞான பாடத்தை ஒட்டி, தொலைகாட்சியில் கர்ப்பத்தைப்பற்றிய ஒரு வீடியோ காண்பித்தேன் என் மாணவிகளுக்கு. அவர்கள் குழம்பிப்போனார்கள். ‘கருவின் தலை மேலே இருக்கிறது. ஆனால், பிறக்கும்போது எப்படி தலை கீழே வருகிறது?’ என்று ஒருத்தி கேட்டாள். எனக்கு அவளைவிட ஆச்சரியம். ‘உனக்குத் தம்பி, தங்கைகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டேன். ‘ஆம்,’ என்றாள். ‘அம்மா வயிற்றில் அவர்கள் இருந்தபோது, நீ தொட்டுப் பார்த்ததில்லை?’ ‘அம்மா விடமாட்டார்கள். ஏன் தலை வேறு விதமாக வெளிவருகிறது என்று அவர்களுக்கே தெரியாது!’ கரு வயிற்றில் உருளும், தாயின் தொப்புளுடன் அதன் தொப்புள் கொடி இணைந்திருக்கிறது, அதன்வழிதான் ஆகாரத்தின் சத்து கருவுக்குள் சென்று அது பெரிதாக வளரச் செய்கிறது என்றெல்லாம் விளக்கினேன். எனக்கு இன்னொரு சந்தேகம் முளைத்தது. மாத விலக்குபற்றிதான். தவறான உணவை உட்கொள்ளுவதால், அல்லது பாவம் செய்ததால் என்று சிலர் நினைத்திருக்க, பிறர் அதைப்பற்றி எதுவும் தெரியாதென்றார்கள். ஆண்களுடன் கைகுலுக்கினால் கர்ப்பம் அடைவோமா என்ற சந்தேகம் சிலருக்கு. ரகசியமாகக் கேட்டார்கள். மாணவர்களோ, பெண்களுடன் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று கேட்டார்கள். ‘கூடாது’ என்ற விஷயத்தில்தான் இளைஞர்களின் ஆர்வம் அதிகரிக்கும். உலகில் பாதி பேர் இன்னொரு பாலர் என்றிருக்க, ஒரு பெண் ஆண்களைப் பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ள முடியுமா, என்ன? என் வகுப்பறையில் பையன்கள் ஒரு புறமும், பெண்கள் இன்னொரு புறமும் உட்கார்ந்திருந்தார்கள். வகுப்பில் இருப்பவர்களுடன் மட்டும் பேசுவார்கள். ‘பிறரைப் பார்த்தால், ஹலோ என்று சொல்லுங்கள். மரியாதையாகப் பழகுங்கள். விசில் எல்லாம் அடிக்கக்கூடாது,’ என்றேன். அவரவர் மேசைக்கு ஏதாவது கனமான சாமானைத் தூக்கிப்போக வேண்டியிருந்தபோது, ‘டீச்சர்! பெண்களுக்கு உதவலாமா?’ என்று அனுமதி வேண்டுவார்கள் சில துணிச்சலான பையன்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிய இயற்கையான ஆர்வம் இருக்கிறது. அதைச் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். பெண்களுடன் பேசுவதே தவறு, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று வளர்த்தால், நாற்பது வயதுக்கு மேலாகியும், பெண்களைப் பார்த்தால் விடலைப் பையன் மாதிரிதான் நடந்துகொள்வார்கள். கதை: எனக்குப் பத்து வயதானபோது, எங்கள் வீட்டு மாடியில் சேஷாத்ரி என்று ஒரு பையன். என்னைவிட இரண்டு வயது பெரியவன். என் அண்ணனுடன் அவன் விளையாட வரும்போது, நானும் கலந்துகொள்வேன். (அவர்களுடன் மோதி, எந்த விளையாட்டிலும் நான் ஜெயித்ததில்லை. முதலில் தோற்பது நானாகத்தான் இருக்கும். இதனாலேயே பையன்களுக்கு என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப் பிடிக்கும்! ‘அழுகுண்ணி ஆட்டம்!’ என்று அழுதபடியே நானும் விளையாடுவேன்). ‘இனிமே சேஷாத்ரியோட விளையாடாதே. பாவம், அவனோட அப்பா அடிக்கிறார், பொண்களோட என்ன விளையாட்டுன்னு!’ என்ற என் தாயார் கூறியபோது, எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் என்னுடன் விளையாடக் கூடாது? நான் வீட்டு வாசலில் நின்றிருந்தால், சேஷாத்ரி தலையைச் சற்று அதிகமாகவே குனிந்துகொண்டு விரைந்துவிடுவான். எனக்கு ரோஷமாக இருக்கும். அவன் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடுவேன். அவன் தலை இன்னும் அதிகமாகக் குனியும். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்: விவரம் அறியாப் பருவத்திலேயே பெண்களைப் பார்ப்பதுகூட இழுக்கு என்பதுபோல் வளர்க்கப்பட்ட ஒருவன் பெண்களுடைய குணாதிசயங்களைப்பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியாதே! மனைவியுடன் நட்புடன் பழக முடியுமா? பழகத் தெரியாததானால்தான் பலர், ‘நான் ஆண்!’ என்று, பெருமிதத்துடன் மனைவியை அடக்கியாள நினைக்கிறார்களோ? 37.தற்காலத்தில் பழமொழிகள் கேள்வி: எக்காலத்திலோ தக்கதென கடைப்பிடிக்கப்பட்டு வந்த கருத்துகள் தற்காலத்துக்கும் உகந்தைவையில்லை என்று சாதிக்கிறார்களே சிலர்? விளக்கம்: ஓரளவு சரிதான். பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்க்கையின் தன்மை. இதை ஏற்காது, நம்மில் பலர் பழமைவாதிகளாக இருப்பதில்தான் பெருமை கொள்வார்கள். மூதாதையர் காலத்து நடைமுறைகளையும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி, காலத்துக்கு ஒவ்வாத தம் நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முனைவார்கள். முன்னேற்றம் என்பது நல்லதொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வது. பணக்காரராக ஆவது, புகழுடன் விளங்குவது, கல்வியில் சிறப்பது என மனிதனுக்கு மனிதன் மாறுபடும் ’முன்னேற்றம்’என்பதன் பொருள். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பதைச் சிலர் வலியுறுத்த, பலரும் கைப்பிடித்து வருகின்றனர். இதனால் நமது வாழ்க்கைத்தரம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். மேன்மேலும் புகழ், பொருளுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று தோன்றிவிடும். புதிய பாதைகளில் என்னென்ன இடர்பாடுகள் எதிர்ப்படுமோ என்ற பயமும் இதற்கு அடிப்படைக் காரணம். வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்து, ‘ஏன் நான் மட்டும் முன்னேற்றமே அடையாமல், பின்தங்கியே இருக்கிறேன்?’ என்று வாடுபவர்கள் பலர். சிறு வயதில், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், அது ஒருவருடைய இயற்கையான திறன்களை மழுங்கடித்து, மனநலனையே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், எதற்குப் பொறுத்துப்போவது? கதை: ஒரு பையனுக்குச் சிறுவயது முதலே சித்திரம் வரைவதில்தான் ஆர்வம். அதிகம் பேசாது, ஓயாது வரைவான். பார்ப்பதையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் அப்படியே வரையும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது. அவனுடைய தந்தையைப் பொறுத்தவரை அவன் நேரத்தைப் பள்ளிப்படிப்பில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும். மற்ற செயல்கள் எல்லாம் வீண். அவன் காகிதத்தையும், பென்சிலையும் எடுத்தாலே இரைவார். பையன் பயந்து, பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தான். கண் பார்வை கெட்டது. அப்பா வெளியில் போனால் தைரியமாக வரைவான். அவர் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து குடும்பத்தினர் எல்லாரும், ‘அப்பா வர்றார்!’ என்று அடக்கிய குரலில் எச்சரிப்பார்கள். உடனே ஒளிந்து வரைவது வழக்கமாகப் போயிற்று. தாயோ, ‘பருவ வயதில் பெண்களையே வரைகிறானே!’ என்று கவலைப்பட்டு அரற்றினார்களாம். ‘அது தவறோ?’ என்று, இயற்கையாக எழுந்த கற்பனையை அதன்பின் விலக்க, ‘பெண்கள்’ என்றாலே குழப்பம்தான் எழ ஆரம்பித்தது. தனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்ய ஏதோ தீய பழக்கத்தில் ஈடுபட்டதைப்போல அவன் மறைந்து செய்தது அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, பிற்காலத்தில் வாழ்வையே நரகமாக்கியது. கலைஞர்கள் மென்மையான குணம் படைத்தவர்கள். அவர்கள் மனதை நொறுக்குவது பிறருக்குப் பலத்தை அளிப்பதுபோல் இருக்கும். அதனால் முனைந்து செய்வார்கள். ‘நான் அப்படித்தான் வரைவேன்!’ என்று நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்திருக்க வேண்டும்,’ என்றேன். காலங்கடந்து, வருத்தத்துடன் தலையை அசைத்தார் அந்த நபர். . இயற்கையாக அவருக்கு அமைந்திருந்த திறனில் உலகப்புகழ் பெற்றிருக்க முடியும். அது தெரிந்திருந்தும், தந்தைக்காக விட்டுக்கொடுத்தது எவ்வளவு கொடுமை! எழுதுவதும் அப்படித்தான். ஆண்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு ஆபாசமாக எழுதினாலும் பிறர் பொறுத்துப் போகிறார்கள். ஆனால், ஒரு பெண் ஆணை வர்ணித்தோ, ஆண்-பெண் உறவைப்பற்றி விரிவாக எழுதினாலோ சர்ச்சைக்குள்ளாகிறாள். கற்பனை என்பது இருபாலருக்கும் பொது. இதில் என்ன ஆண், பெண் வேறுபாடு? ‘என் கணவர் அப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று தடை போடுகிறார்!’ என்று பல பெண் எழுத்தாளர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது எழுதும் பெண்கள்தாம் தொடர்ந்து எழுதமுடியும். (ஆரம்பத்தில் நான் கற்பழிப்பைப்பற்றி ஒரு கதை எழுதி, ‘எங்கம்மா இதை அனுப்ப விடமாட்டா. நீங்க என்ன சொல்றேள்?’ என்று கேட்டேன். ‘கற்பனைதானே? அதனால் என்ன!’ என்றுவிட்டார். அதைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர், ‘இது கற்பனைக்கதைதான். உண்மைச் சம்பவமில்லை’ என்று அடியில் ஒரு குறிப்பு எழுதப்போய், பலர் என் கணவரை விசாரித்தார்களாம், ‘அது என்ன ஸார், அடியிலே அப்படி எழுதியிருக்காங்க?’ என்று! இறப்பைப்பற்றியும்தான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அது என்னவோ, நான் பல தடவை செத்துப்பிழைத்தவள் என்று எவரும் நினைப்பதில்லை!) நல்ல வேளை, ‘பெண்ணுக்கு படிப்பு எதற்கு?’ என்ற காலம் போய்விட்டது. உயர்கல்வி பெற்று, உத்தியோகமும் பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம். வாழ்வில் முன்னேற அவசியமானது கல்வி. ஆணோ, பெண்ணோ, தன்னை நாடுபவர்களுக்கு சுய நம்பிக்கையையும், சொந்தக்காலில் நிற்கும் துணிவையும் அளிக்கிறது. ஆனால், படித்த பெண் தனது வருவாயில் பெரும்பகுதியைக் கணவனிடம் கொடுத்துவிடுவது பதிபக்தியா? அப்படிச் செய்தால், மனைவியின்மீது ஆண் கொண்டுள்ள அதிகாரமும், ஆக்கிரமிப்பும் இன்னும் அதிகமாகாதா! ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று ஏதோ மந்திரம்போல, பழைய திரைப்படத்தின் தலைப்பை மூதறிஞர் உரைபோல கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்களைக் கேட்கிறேன், கொடுமைப்படுத்துவது தெய்வத்தின் தன்மையாகுமா? ‘எனக்குத் திரைப்படங்கள் பிடிக்காது. அதனால், நீயும் பார்க்க்க்கூடாது!’ என்று மிரட்டும் ஆண் எதில் சேர்த்தி? ‘அவருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? நீபாட்டில் போயேன்!’ என்று ஒரு மாதுவிடம் கூற, “கணவர் திட்டினால்?” என்று பயந்தாள். அவரை மீறிப்போனால், அவள் கெட்டவளாகி விடுவாளா? ஆக்ககரமாக எதுவும் செய்யத் துணிவோ, அறிவோ இல்லாதவர்களுக்குத்தான் இத்தகைய பழமொழிகளினால் பலம். நமது துனபங்களை நாமே களைய முன்வராது போனால், வேறு யார்தான் அதில் அக்கறை காட்டுவர்? ஒரு குடும்பத்தைச் செவ்வனே நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. இதை ஒருவர் உணரத் தவறும்போது, மற்றொருவர் தக்க முறையைக் காட்ட வேண்டுவது அவசியம். கணவனின் வருவாய்க்கு மேலேயே செலவு செய்யும் பெண்ணாகட்டும், மனைவி என்பவள் தன் தாழ்மை உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் என்பதுபோல் அவளை கீழ்த்தரமாக நடத்தும் கணவனாகட்டும், இவர்களுக்குத் தக்க முறையைக் காட்டுவது ஒருவருக்கொருவர் செய்யும் கடமை, உபகாரம். ‘குடும்பத்தில் சச்சரவு எதற்கு?’ என்று விட்டுக்கொடுத்துவிட்டு, கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கணவனின் அடி, உதைகளை ஏற்று, ‘பொறுமையுடையார் பூமி ஆழ்வார்,’ என்று பிதற்றுவது மடமை. கோலாலம்பூரில் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் கணவரால் வதைக்கப்பட்டவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த பல தமிழ்ப்பெண்கள் மற்றும் படித்து உத்தியோகம் பார்க்கும் மலாய்ப்பெண்கள் இவர்கள்தாம் என்பது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இவர்கள் காவல் துறையினரால் அங்கு கொண்டு விடப்பட்டவர்கள். (வசதியான குடும்பத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண்களை எப்படியெல்லாம் வதைத்தாலும், கணவரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்புறம் குடும்ப கௌரவம் என்ன ஆகிறது!) சீனப்பெண்களை கணவன்மார்கள் வதைப்பதே இல்லையா?! இல்லத் தலைவி என் ஆச்சரியத்தைக் கண்டு நிலைமையை விளக்கினாள். என் சீனத்தோழிகளும் அதை உறுதிப்படுத்தினார்கள்: ‘எங்களுக்குச் சிறு வயது முதலே சொல்லிக் கொடுப்பார்கள், ’நீ சம்பாதிப்பது எல்லாவற்றையும் அப்படியே தூக்கி உன்னை மணப்பவனிடம் கொடுத்துவிடாதே. அவன் குடி, சூதாட்டம், மாது என்று எல்லாவற்றையும் அழித்துவிடுவான். புத்திசாலித்தனமாக அதில் சிறு பங்கையாவது எங்கேயாவது பதுக்கி வை,’ என்று!’ என் சீன மாணவி (17) ஒருத்தியும் அதையே கூறினாள். எங்கப்பா ரொம்ப மோசம். அம்மாவை அடிப்பார். எனக்கு பதினஞ்சு வயசானபோது, ‘நீங்க எல்லாம் கொஞ்சம் பெரியவங்களா ஆகணும்னுதான் இத்தனை வருஷமா பொறுத்துட்டு இருந்தேன். இப்போ, தனியா போறேன்,’ என்று சொல்லிவிட்டு அம்மா போய்விட்டாள். மலேசியாவில், மற்ற இரண்டு இனப்பெண்களும் தம் சம்பாத்தியத்தைக் கணவரிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபடத் தெரியாது மாட்டிக்கொள்வார்களாம். வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருந்தாலும், ‘விதி’ என்று ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகுமா? அளவுக்கு மீறிய பொறுமையுடன் எந்த அநியாயத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், வாழ்வில் பிடிப்பு குன்றி, நாளடைவில் நடைப்பிணமாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே! ‘நீங்கள் எழுதுவதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடந்தால், குடும்பத்தில் சண்டை வருமே!’ என்று ஒருவர் சந்தேகம் தெரிவித்தார். எத்தனை காலம்தான் சண்டை போடுவார்கள்! மாற்ற முடியாது என்று புரிந்துபோனதும், தானே விட்டுக்கொடுத்து விடுவார்கள். நம் வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. திறமைக்கு ஏற்ப, நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, யார் எதிர்த்தாலும், பழித்தாலும் சட்டைசெய்யாது, தீவிர முயற்சியுடன் அதில் இறங்கினால் வெற்றி காண்பது உறுதி. .முயற்சியுடையார். இகழ்சியடையார். 38.நாட்டியத்தால் நாமடையும் நன்மைகள் கேள்வி: என் மகள் (30 வயது) கணவனின் கொடுமை தாங்காது, தன் ஐந்து வயதுப் பெண்குழந்தையுடன் சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டாள். குழந்தைக்கு எதைக்கண்டாலும் பயம், கூச்சம். அவளை (உளவியல் நிபுணர்களின் துணையின்றி) சரிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? இருவருமே முறைப்படி நாட்டியம் கற்பதால் பலன் அடையலாம். நாட்டியம் ஒருவித யோகம். உடலையும், மனதையும் ஒருமைப்படுத்துவது. அதனால் அதை பக்தி மார்க்கம் என்றும் கூறலாம். நாட்டியத்தில் தா-தா-தை என்றெல்லாம் காலைத் தரையில் ஓங்கியடிப்பார்கள் இல்லையா? அது அக்குப்ரெஷர். மூளையில் இருக்கும் நியூரான்களை இயக்கும். கணக்குப் பாடம் எளிதாகும். ஆடும் சமயத்தில் வேறு எந்த நினைவும் எழாது. இதனால் ஞாபகசக்தி பெருகும். நாட்டியத்துடன் இசையும் சேர்ந்திருப்பதால், தாழ்மை உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து நாளடைவில் விடைபெறலாம். சிறுமிகள் பலர் நாட்டிய வகுப்பில் இருப்பார்களே! எல்லாரும் ஒரே வகுப்பில், ஒரே விஷயத்தைக் கற்கும்போது, தானாகவே நெருக்கம் உண்டாகும். சிறுகச் சிறுக கூச்ச சுபாவம் மறைந்து, பிறருடன் கலந்து பழக முடியும். எவருக்குமே தன்னம்பிக்கை அதிகரிக்க, எந்த இடர்ப்பாட்டையும் தாங்கும் சக்தி வருவதோடு, புதிய சவால்களை ஏற்கவும் தயாராக முடியும். நாட்டியம் ஆடுவதால் உடலுக்குப் பயிற்சி என்பதால், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தனக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வதால்,. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. ஆதலால், பருமனாகும் அபாயமும் இல்லை! குழந்தைகளுக்கு அபாரமான கற்பனைத்திறன் உண்டு. நாட்டிய நாடகம் போன்றவற்றில் பங்கு ஏற்பதால், அத்திறன் மேலும் சிறக்க வழியிருக்கிறது. ஒரு சிறிய பாட்டில், ‘அரக்கன்’ என்று வரும் இடத்தில் கண்ணைப் பயங்கரமாக உருட்டிய ஒரு சிறு பெண் பலராலும் பாராட்டப்பட்டாள். அதன்பின், அந்த இடம் வருமுன்னரே மேடையில் அவள் உற்சாகமடைந்ததைக் கண்டிருக்கிறேன். (அதற்குமுன் அவளை யாரும் எதற்கும் புகழ்ந்ததில்லை).‘என்னிடம் இவ்வளவு திறமை இருக்கிறதா!’ என்று வியந்ததுபோல், அவளது தன்னம்பிக்கை கூடியது. ஆனால் ஒன்று. பாடுவது பாட்டுக்காக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒருவரின் இசையில் பாவம், பக்தி இராது. அதேபோல், நாட்டியமாடுவதால் நடனமணி எவ்வளவு சிறப்புப் பெறுகிறாள் என்பது முக்கியமில்லை. (குழந்தைகளை மன்னிக்கலாம்). அவர்களிடமும், ‘நீ நன்றாக ஆடுகிறாய். அழகாய் இருக்கிறாய். இது தெரிந்த விஷயம்தானே! பிறர் இதையெல்லாம் புகழ்ந்தால், ரொம்ப மகிழ்ந்துவிடாதே. ’நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு! இல்லாவிட்டால், கலை உன்னை விட்டுப்போய்விடும்,’ என்று அறிவுரை கூறி வளர்த்தால், கர்வம் இல்லாமல் வளர்வார்கள். இந்த ஒழுக்கத்தினால், அவர்களால் பல விஷயங்களிலும் வெற்றி பெற முடியும். சரியான முறையில் கையாண்டால், நாட்டியம் மன அமைதியை அளிக்க வல்லது. தன்னையே உணரச் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால், அமைதி எப்படிக் கிடைக்கும்? The emphasis should be on the dance, not the dancer. பலரும் தம் தனிப்பட்ட புகழுக்கும், பொருளுக்கும் நாட்டியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது போட்டி, பொறாமை, அதனால் விளையும் சச்சரவுகளையே எழுப்பாது? ஏதாவது ஒரு காரணத்துக்காக (பேச்சு, பாட்டு, நாட்டியம்) மேடை ஏறுபவர்கள் முதலில் அச்சத்துக்கு உள்ளாவார்கள். உலகப் புகழ் பெற்ற இசை வல்லுனர்களும், நாட்டியமணிகளும்கூட, ‘மேடை ஏறுமுன் எனக்குள் அட்ரினலின் (adrenaline) ஏகமாகச் சுரந்துவிடும். அதனால் படபடப்பாக இருக்கும். அப்போதுதான் என்னால் நன்றாகச் செயல்பட முடியும்!’ என்று கூறியதாக நீங்கள் படித்திருக்கலாம். இது stage fright அல்லாமல் வேறென்ன! பயம் இல்லாவிட்டால், நிகழ்ச்சி இன்னுமே சிறப்பாக இருக்கும். தன்னை முன்னிறுத்தி, கலையை இரண்டாம்பட்சமாகக் கருதுவதால் வந்த வினை இது. யோகாசனம் அமைதியை அளிப்பது, ஆரோக்கியத்தை அளிப்பது, பயில்பவர்கள் விரைவாக மூப்பு அடைய மாட்டார்கள் (retards the decay of cells) என்றெல்லாம் என் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (விளையாட்டாகத்தான் செய்ய ஆரம்பித்தேன். உடனே, மூளை நன்றாக செயல்பட்டது கண்டு, ‘கல்லூரி நாட்களிலேயே ஆரம்பித்திருக்காமல் போய்விட்டோமே!’ என்ற ஏக்கம் பிறந்தது. நாற்பது வயதுக்குமேல்தான் மூப்பைப்பற்றி அறிந்தேன்). விளையாட்டு வீரர்கள் முதலில் குனிந்து, நிமிர்ந்து என்று பல்விதப் பயிற்சிகள் செய்வதைப்போல், வகுப்பிலும் நாட்டியம் ஆடுமுன் செய்தால், உடலில் எந்த வலியும் ஏற்படாது. முதலில் சிறிது உடற்பயிற்சி (stretching exercises), பிறகு சூரிய நமஸ்காரம் என்று ஆரம்பித்தால், களைப்பின்றி வெகு நேரம் ஆட முடியும். மாறாக, ஆரம்பித்தவுடனேயே ஒரு பாடலுக்கு குதித்து ஆடத் துவங்குவதால், காலில் சுளுக்கு, தோள்வலி என்று ஏடாகூடமாக ஏதாவது ஆகும். தவறான ’போஸ்’களாலும் இதே விளைவுதான். நாட்டியம் என்றால், கை முத்திரைகளும் அதில் அடங்கும் அல்லவா? ஒவ்வொன்றுக்கும் தனிப் பலன்கள் உண்டு. உதாரணமாக, ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டி, மற்ற இரண்டையும் கட்டை விரலுடன் சேர்த்துப் பிடித்தால், கண்ணுக்கு நல்லது. ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்! இப்போதெல்லாம், நவீன யுகம், எங்கும் பரபரப்பு என்றெல்லாம் கூறி, ஒரு பாடலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அதிவேகமாக ஆடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லதல்ல. மூச்சிறைக்கும் என்பதோடு, அது இருதயத்துக்கும் ஊறு விளைவிக்கும். (unnatural bio-rhythm). எந்த வயதினரும் நாட்டியம் பயிலலாம். மேடையேறுவதே குறிக்கோளாக இல்லாதவரை, நாட்டியத்தால் ஒருவர் பயனடைவது உறுதி. அப்படி மேடையேற வாய்ப்பு இருக்கிறவர்களும், தம் சுயமதிப்பையே பெரிதாக எண்ணாமல், நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், பார்ப்பவர்களையும் அந்த அமைதியும், ஆனந்தமும் சென்றடையும். 39.முதுமையில் இளமை கேள்வி: என் சொற்ப சம்பாத்தியத்தில் நான் நல்ல புடவை வாங்கிக்கொண்டால், பட்டப்படிப்பு படித்த என் மகள், ‘45 வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா?’ என்று பழிக்கிறாள். மகனும், ‘என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்னை என் அக்காளா என்று கேட்கிறார்கள். மானம் போகிறது!’ என்று கடிந்துகொள்கிறான். என்ன செய்வது? விளக்கம்: நீங்கள் செய்வதுதான் சரி. மூப்பு வரும்போது வரட்டுமே! நாமாக அதைத் தேடிப் போவானேன்! ‘உங்களுக்கு முதுமையே வேண்டாமா?’ என்று யாராவது கேட்டால், ‘அது வருகிறபோது வரட்டும். நாமாக வரவழைத்துக் கொள்வானேன்! என்ன அவசரம்!’ என்று சொல்லிவிட்டுப் போங்களேன்! உங்கள் மகனும், மகளும் பெருமைப்பட வேண்டிய விஷயம் உங்கள் இளமைத் தோற்றம். மாறாக, பொறாமையும், அவமானமும் அடைகிறார்கள்! என் மகள் தமிழ்நாட்டில் ஒரு புடவைக்கடைக்குப் போய், ‘எங்கம்மாவுக்கு ஒரு புடவை காட்டுங்க,’ என்று கேட்க, அறுபது வயதுக்குமேல் ஆனவர்கள் என்று உத்தேசித்து, பழுப்பு நிறமாகக் காட்டினாராம் கடைச் சிப்பந்தி. இவள் அயர்ந்துபோனாள். ஏன், வயதானவர்கள் வண்ண வண்ணமாக உடுத்தக்கூடாதா? இளமையில், பிறரைக் கவரத்தான் அழகாக உடுத்தினோமா, என்ன! எல்லார்போலவும் இருக்கவேண்டும் என நம் சொந்த விருப்புவெறுப்புகளை அலட்சியம் செய்வது கொடுமை. ஐம்பது வயதில் திடீரென குண்டாகிவிட்ட நெருங்கிய சொந்தக்காரியிடம், ‘உடம்பைப் பாத்துக்கோ. ஏதாவது உடற்பயிற்சி செய்யக்கூடாதா!’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன். ‘ம்? B.P, ஷுகர் எல்லாம் வரவேண்டாமா?’ என்றாள் பதிலுக்கு. கிண்டலாகப் பேசுவதாக நினைப்பு. சில வருடங்களிலேயே, அவளுக்கு மூட்டு வலி. இன்னும் மிக வயதானவர்களைத் தாக்கும் ஏதேதோ உபாதைகள். மன அழுத்தம் என்று மருந்துகள் வேறு. எப்போது வயதாகும், வியாதிகள் வரும் என்று எதிர்பார்த்து, ‘அது இயற்கை!’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தால், வேறு எப்படி நடக்கும்? இந்தியாவில், சில உறவினர் பெண்கள் என்னைக் கேட்டார்கள், ‘நீங்கள் என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?’ வயதாகிவிட்டால், மருந்துகள் உட்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தீர்மானித்துவிட்டவர்களைப் பார்த்து எனக்கு வியப்பும், பரிதாபமும்தான் எழுந்தன. ஆரோக்கியமாக இருக்க வழிகளா இல்லை? எனக்குத் தெரிந்த ஒரு 65 வயது சீனப் பெண்மணி, அவ்வப்போது முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போவார். போய்வந்ததும், ‘இளமையாகக் காட்சி அளிக்கிறோமே!’ என்ற உற்சாகம் பெருக, ‘எங்காவது வெளியே போகலாமா?’ என்று சிறுபெண்போலத் துள்ளுவார். இளமைக்காலத்தில் வசதி குறைவாக இருந்ததால் எதையும் அனுபவிக்க முடியாது போய்விடுகிறது சிலருக்கு. நாற்பது வயதானபிறகு, வசதி வருகிறதென்று வைத்துக்கொள்வோம். ஆசைப்பட்டதை அப்போது அனுபவிக்க என்ன தடை? அதற்கென இன்னொரு பிறவி எடுத்தா வரமுடியும்? விருப்பப்படி கௌரவமான உடை அணியலாம். அது ஒரு பொருட்டேயில்லை. நமக்கு நம் மகிழ்ச்சி முக்கியம்தானே? சுய நிம்மதியைவிட, ‘பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்றே தமது ஒவ்வொரு சொல்லையும், செயலையும் அளப்பவர்கள், ‘சமூகம் விதித்தபடிதான் நாம் வாழ வேண்டும்!’ என்று வாதிடலாம். இப்படிப்பட்டவர்கள் சொல்வதை – நாம் பெற்ற குழந்தைகளே ஆனாலும் – பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சமூகம் என்பது என்ன? நானும், நீங்களும்! நாம் மாறினால், தானே சமூகமும் மாறிவிட்டுப்போகிறது! ‘எனக்கு வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது. என் வாழ்க்கை அவ்வளவுதான்!’ என்று விரக்தியுடன் பேசி நடந்துகொள்பவர்கள் வாழ்வில் ஒரு பிடிப்புமின்றி, இயந்திரத்தனமாக காலத்தை ஓட்ட வேண்டியிருக்கும். அவர்களுக்கும் மகிழ்ச்சி கிடையாது, அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களால் நிம்மதி கிடையாது. இவர்களுக்கு மாற்றத்தை நாடும் துணிச்சல் இல்லை. மாறாக, தம் வித்தியாசத்தாலேயே வெற்றியைப் பிடித்திருக்கும் பிறரைப் பழிப்பதில் நிறைவு அடையும் கோழைகள். போதாத குறைக்கு, கூட இருப்பவர்களைச் சதா தொணதொணத்துக் கொண்டிருப்பதிலும், மட்டம் தட்டுவதிலும் அற்ப திருப்தி அடைவார்கள். (அதனால்தான், கிழப்பாட்டிமாதிரி தொணதொணக்காதே!’ என்று இளையவர்களைத் திட்டுகிறோம்). இன்னதென்று புரியாத சூனியத்தை மறக்க இன்னொரு வழி அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல். இப்பழக்கத்தால் ஆரோக்கியம் மேலும் கெடும் என்பதை எவரும் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை. சாப்பிடும் நேரத்தில் மட்டும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். தம்மை மாற்றிக்கொள்ள விரும்பாது, வெற்றியும், மகிழ்ச்சியுமாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, ‘என்னால் மட்டும் ஏனோ எதிலுமே பெயர் போட முடியவில்லையே!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதால் என்ன பயன்! நாம் ஒவ்வொருவரும் இறுதி மூச்சு விடும்வரை நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு நல்ல வழியில் வாழ்ந்தால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இல்லாவிட்டால் சுமைதான் –நமக்கும், பிறருக்கும். ‘நாற்பது வயதுக்குமேல் அழகாக அலங்கரித்துக்கொள்வதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறர்கள்?’ என்று 65 வயது ஜெர்மனி நாட்டுப் பெண்மணி ஒருவரைக் கேட்டேன், முன்பு ஒரு முறை. உலகளாவிய நிலையில், மிகப் பெரிய உத்தியோகம் வகித்து வந்தவர் அவர். யோசிக்காமல் பதிலளித்தார்: ‘காலையில் என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, ஒரு அழகான, இளமையான முகத்தைப் பார்க்கத்தான் விரும்புகிறேன்!’ சிலரின் வெற்றியின் ரகசியம் இதுதான் – தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் பிறரது ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்தல். 40.படிப்பும் சுதந்திரமும் கேள்வி: பதினைந்து வயதாகியும் என்னை இன்னும் சிறுபையனைப்போலவே நடத்துகிறார்கள் என் அம்மாவும், தாத்தாவும். ‘படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள். ஏன்தான் பள்ளிக்கூடம் போகவேண்டுமோ என்று இருக்கிறது. எப்போதுதான் நான் சுதந்திரம் பெறுவது? விளக்கம்: சுதந்திரம் என்றால் மனம்போனபடி நடத்தல் என்பதல்ல. பெற்றோர் அனுமதிப்பதும், ஏதாவது ஒன்றைச் செய்யச்சொல்வதும் வயதைப் பொறுத்தது. நடக்க ஆரம்பித்த ஒன்றரை வயதுக் குழந்தைகூட தான் தனியாக நடக்க வேண்டும் என்று விரும்பி, நெரிசலான தெருக்களில் தாயின் கையை விட்டுவிட்டு ஓடப்பார்க்கும். இது சுதந்திரம் வேண்டும் ஒவ்வொரு மனிதனின் இயற்கையான தன்மை. அதற்காக, குழந்தையை அதன் விருப்பப்படி விடமுடியுமா? படிக்கும் வயதில், சிறுவர்கள் தமது எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்தால், தாத்தா பாட்டி சொல்படியும் நடக்க வேண்டும். இரு தலைமுறைகளுக்குமுன் இவர்கள் மட்டுமின்றி, அத்தை, மாமா, பெரியம்மா என்று இன்னும் பலரையும் திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. வயதில் மூத்தவர்கள் அனுபவம் மிகுந்தவர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, நல்லவை, தீயவைகளை அவர்களிடமிருந்து கற்க வேண்டும் என்ற நிலை. அனுபவிக்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், பலதரப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள இம்முறை வழிவகுத்தது. நான் பார்த்தவரை, பதினெட்டு வந்துவரை ஆண்பிள்ளைகளுக்குச் சிறுபிள்ளைத்தனம் மாறுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதையோ, அல்லது கடிகாரம், ரேடியோ போன்ற ஏதாவது சாமானைப் பிரித்துப்போட்டு, பின் அதைப் பொருத்துவதையோதான் பெரும்பான்மையான பையன்கள் விரும்புவர். படிக்கவோ பிடிக்காது. (ஓயாது மனப்பாடம் செய்பவன் சகநண்பர்களின் கேலிக்கு உள்ளாகிறான் என்பதும் காரணமாக இருக்கலாம்). விவரம் புரியாத அந்தவயதில், பெற்றோரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. நல்ல பழக்கங்கள்கொண்ட நண்பர்களை நாடவேண்டுவது அவசியம். நம்மைக் காரணமின்றி ஓயாமல் புகழும் நண்பர்களும், அல்லது நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களும் நம்மையும் கீழே இறக்கிவிடக்கூடும். நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பது அந்தத் தருணத்தில் இன்பகரமாகத் தோன்றலாம். பிரபலமான நடிகர்கள் படங்களில் புகை பிடித்தால், கம்பெனிக்கு வியாபாரம். நடிகர்களுக்கும் கொள்ளைப்பணம். ஆனால், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்துடன், பணமும், நேரமும் அல்லவா வீணாகிறது! எனக்குத் தெரிந்த பல ஆண்கள் (வயது: 14 - 50) ‘நல்லவேளை, நான் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சையில் நல்லபடியாக பாஸ் பண்ணவில்லை. இல்லாவிட்டால், காலேஜிலே படிச்சுத் தொலைச்சிருக்கணும். ’படி, படி’ என்று அம்மா, பாட்டி எல்லாரும் உயிரை வாங்குவார்கள்!’ என்று என்னிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் ஏற்பட்டது. வாழ்வில் நன்றாக முன்னுக்கு வந்திருக்கக் கூடியவர்கள்! பெரியவர்களின் தொணதொணப்பு பொறுக்க முடியாது, தம் முன்னேற்றத்துக்குத் தாமே முட்டுக்கட்டு போட்டுக்கொண்டவர்கள்! இந்தக் கோணத்தில் அணுகினால், பிள்ளைகளுக்குப் படிக்கப் பிடிக்காததற்கு பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணமாகிறார்கள். பிள்ளைகள் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்தில் அமரவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டால் மட்டும் போதுமா? சிறுவர்களின் மனநிலையை உணரவேண்டாமா! திட்டுவதாலோ, அடிப்பதாலோ சிறுவர்களை மாற்றிவிட முடியாது. சற்று பயந்து, கொஞ்சகாலம் அடங்கியிருந்தாலும், ஊக்குவிப்பு என்பது உள்ளார்ந்ததாக இருந்தால்தான் எடுத்துக்கொண்ட எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்யும் உந்துதல் ஏற்படும். ‘நான் நன்றாகப் படித்து, வாழ்வில் உயருவேன். எல்லாவற்றிலும் வெற்றி பெற முயற்சி செய்வேன்!’ என்று தீர்மானம் செய்துகொள்ளும் சிறுவர்கள் எந்தவித ஏளனப் பேச்சையும் அலட்சியம் செய்ய முடிகிறது. கதை: ‘எனக்குக் கதைப்புத்தகம் படிக்கவே பிடிப்பதில்லை!’ தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தவன் உறவுக்கார, பதின்ம வயதுப் பையன். ‘கதைதான் என்று என்ன! புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு, கார், ஆகாய விமானம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்று எதையாவது படியேன்!” என்றுவிட்டு, “ எல்லா விளையாட்டும் விளையாடு! அம்மாவுக்குத் தேங்காய் துருவிக்கொடுப்பதைவிட நண்பர்களுடன் விளையாடுவது முக்கியம்!’ என்று அழுத்தமாகக் கூறினேன். (அவன் தாய் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்). அவனும் மகிழ்ச்சியுடன் அந்த அறிவுரையைக் கடைப்பிடித்து, I.I.T கல்லூரியிலேயே இரண்டாவது மாணவனாக வந்தான். உயர்ந்த உத்தியோகமும் கிடைத்தது. ‘நாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். நீ பெரியவன் ஆனதும், இதேபோன்ற வாழ்க்கைத்தரம் அமைய வேண்டுமானால், அது உன் கையில்தான் இருக்கிறது. அதற்கு நீ இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்!’ என்று ஒரு தாய் நல்லவிதமாக எடுத்துச் சொன்னால், பதின்ம வயதுப் பையன்கள் புரிந்துகொள்வார்கள். தாத்தா பாட்டியாக இருந்தால், ’நீ நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் நல்ல நிலை அடையமுடியும். நாங்கள் புத்தி சொல்வது உன் நன்மைக்காகத்தான்! நாளைக்கு உன் குடும்பம்தானே மகிழ்ச்சியாக இருக்கும்! நாங்களா அனுபவிக்கப்போகிறோம்! என்று கூறினால் பலனிருக்கும். ஆனால், ஓரிரு தடவை மட்டுமே சொன்னால் போதும்! அதைவிட்டு, ஓயாது தொணதொணத்தால், அவர்களை மீறத்தான் தோன்றும் எவ்வயதினருக்கும். அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றி, படிப்பு, படிப்பு என்று உயிரை விட்டுக்கொண்டால், அலுப்புடன், அச்சமும் விளையாதா! அதைச் சீராக்க, விளையாட்டும், மற்ற பொழுதுபோக்கும் அவசியம். அவைகளை விடக்கூடாது. சமீபத்தில் நான் படித்த தகவல்: தற்கால சீனாவில் பல்கலைக்கழகத்தில் நுழைவது மிகக் கடினம். கல்லூரிப்படிப்பு மட்டுமே பெரிய உத்தியோகத்துக்கு வழிவகுக்கும். இல்லாவிட்டால், அவர்களுடைய பெற்றோர்கள்போல், கட்டட வேலைக்கோ, தோட்டத் தொழிலாளியாகவோதான் போக முடியும். பல்கலைக்கழகத்தில் நுழைய மிகக் கடினமான பரீட்சை நடத்தப்படுகிறது. இப்பாடங்களைப் பயில சீனாவின் கிழக்குப்பகுதியில் ஒரு விசேடமான (ரகசியப்) பள்ளி இருக்கிறது. இங்கு 20,000 பேர் பயில்கிறார்கள். இல்லை, இல்லை, உருப்போடுகிறார்கள். காலை 6.20 - இரவு 10.50 வரை பாடங்கள். (ஐயோ!) தங்கும் விடுதியில் எல்லா மாணவர்களும் நுழைந்து விட்டார்களோ என்று உறுதி செய்துகொள்ளும் வகையில், அவர்கள் கைரேகையைப் பதித்தால்தான் அறைக்குள் புகமுடியும். பள்ளியிலும், ஊரிலும் மாணவ மாணவிகளின் எல்லாவித நடத்தையும் கேமராமூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் கவனத்தைக் கலைத்துவிடக்கூடிய கணினி, தொலைபேசி, வீடியோ ‘ஆர்கேட்’ போன்ற எதுவும் அந்த ஊரிலேயே கிடையாது. ஆணும், பெண்ணும் கூடிப்பேசுதல், காதல் – மூச்! தாம் பெற்ற ஒரே செல்வங்களும் தம்மைப்போன்றே வறுமையில் வாடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், பெற்றோர் இரவு பகலாக இரண்டு வேலை பார்த்து, (குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவனுக்காக நிறையச் சம்பளம் கட்டி), இதில் சேர்க்கிறார்கள். விடுதியில் அம்மாவோ, தாத்தாவோ மாணவனுடன் தங்கலாம். ஆனால், அவர்களுடைய பதட்டமும் மாணவர்களப் பற்றிக்கொள்ள, சிலர் தற்கொலை செய்துகொண்டதில் ஆச்சரியமென்ன! நல்லவேளை, நமக்கு இந்தக் கெடுபிடிகள் எல்லாம் கிடையாதே என்று நாம் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான். பொதுவாக, பரீட்சைக்கு முதல் நாள் இரவு கண்விழித்துப் படிக்காது, வார இறுதிகளில் அந்தந்த வாரப் பாடத்தை படித்து வருவது நன்று. ஒரு முறை வகுப்பில் கேட்டது அல்லது படித்தது இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் இருக்குமாம். திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் படித்தால், அதற்காக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் குறுகிவிடும். பரீட்சைக்கு முன்னால் ஒரு பார்வை பார்த்துக்கொண்டாலே போதும். பரீட்சைகளைத் திருப்திகரமாக எழுதி முடித்ததும், விடுதலை உணர்வுடன் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கப்போகலாமே! முடியாது, மாட்டேன்! கேள்வி: சுயநலம் தகாது என்ற முறையில் என்னை வளர்த்தார்கள். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, மிக மரியாதையாகத்தான் நடந்து வந்திருக்கிறேன். இப்போது, நாற்பத்தைந்து வயதில் எதையோ இழந்துவிட்டதைப்போன்ற ஏக்கம் ஏற்படுகிறதே, ஏன்? விளக்கம்: பிறர் சொல்வதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்றால், நமக்கு எதற்கு தனித்தனியாக மூளை? நம் நலனைப் பேணினால்தான் பிறர் நலனில் அக்கறை செலுத்த முடியும். இதை ஏனோ பலரும் மறந்துவிடுகிறார்கள். தன் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த தாத்தா ஒருவர், போகிற போக்கில், ‘அம்மா சொல்றதைக் கேளு!’ என்று தன் பேத்திக்கு அறிவுரை கூறிப்போனார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதும், அவர்கள் கூறுவதை இம்மிபிசகாது கடைப்பிடிப்பதும் ஒன்றல்ல. அவர்களது கூற்றை ஏற்க முடியாவிட்டால், மரியாதையுடன் மறுக்கலாம். அந்த சுதந்தரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே இருக்கிறதே! சிறுவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் கொடுத்து, அவர்களது எண்ணங்கள் சரிதானா என்று அவர்களுடன் அலசுவதே நல்ல முறை. அப்படி இல்லாவிட்டால், ஏனென்று விளக்கினால், ஏற்பார்கள். சில இல்லங்களில், யோசிக்கத் தெரிந்த சிறுமிகள் வாயைத் திறந்து ஏதாவது பேசினாலே, ‘வாயாடாதே! ராங்கி!’ என்று பெற்றோர் அடிப்பதுண்டு. இவர்களைப் போன்றவர்கள், தம்மையுமறியாது, குழந்தைகளின் தனித்தன்மையை ஒடுக்கிவிடுகிறார்கள். இரண்டு வயதான குழந்தைகளை ‘TERRIBLE TWOS” என்று வர்ணிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எளிதில் பிறருக்கு அடங்க மாட்டார்கள். எது சொன்னாலும், ’மாத்தேன், போ!’ என்ற பதில்தான் வரும். இதுதான் மனிதனின் பிறவிக்குணம். ஆனால், சுயமாக எது செய்தாலும் கூடாது என்ற நிலை. நமக்கு இயற்கை அளித்திருக்கும் வரப்பிரசாதமான கற்பனைத்திறன், சிந்திக்கும் ஆற்றல் பலருக்கும் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்டு விடுகிறது பெரியவர்கள் சொற்படி மட்டுமே நடப்பதால்தான். குழந்தைகள் சுவற்றில் கிறுக்குவது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. வரையப் பிடித்த குழந்தைகள் தம்மைத் தாமே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்றெல்லாம் பகுத்தறியத் தெரியாத வயது அது. அச்செயல் வீட்டின் அழகைக் குலைப்பது என்று நாம் எடுத்துக்கொண்டால், அது யார் தவறு? ‘சுவற்றில் கிறுக்காதே!’ என்று ஒரு சிறுமி ஓயாது கண்டிக்கப்பட்டால், தன் காலில் வரைந்துகொள்ள ஆரம்பிப்பாள். அப்படி ஒரு அடக்க முடியாத எழுச்சி கிளம்பும் அந்த வயதில். அவளுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, காகிதத்தைக் கொடுக்க வேண்டும். எதையாவது உருண்டையாகப் போட்டுவிட்டு, ‘கோழி’ அல்லது ‘புலி’ என்று பெருமையுடன் காட்டும்போது, ’புத்திசாலி என்று சொல்லிவைக்க வேண்டியதுதான். நாம் சொல்வதை நம்பி, தன்னம்பிக்கை வளர, திறமைசாலியாக ஆகிவிடுவாள். இப்படி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி எட்டு வயதிலேயே சித்திரத்திற்கு வண்ணம் பூசும் (பெரியவர்களுக்கான) போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றாள். நீதிபதி, ‘இவளுடைய வண்ணச் சேர்க்கை எனக்கே தோன்றாத ஒன்று!’ என்று புகழ்ந்திருக்கிறார். இரண்டிலிருந்து நான்கு வயதுவரை சில குழந்தைகள் தனிமையை நாடி, தாமே பேசிக்கொண்டு இருப்பார்கள். ‘என்ன பேசறே?’ என்று கேட்டால், ‘கதை சொல்கிறேன்!’ என்ற விளக்கமும் கிடைக்கும்! யாரிடம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாகப் பிறரிடம் வெளிப்படுத்தத் தெரியாத வயதல்லவா! அப்போது காற்றோ, சுவரோதான் உற்ற நண்பன். அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு அது. ‘இதுக்குப் பைத்தியமா!’ என்று அயராது, குழந்தையைத் தன்போக்கில் விட்டுவிட்டால், கற்பனைத்திறன் மேன்மேலும் பெருகும். தனிமையை நாடுவது என்பது குழந்தைகள் தங்களைப் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சி. அவர்களுக்குப் பிறரைப் பிடிக்காது என்றில்லை. பெரியவர்கள் அப்படித் தவறாக எடுத்துக்கொண்டு, ‘ஏன் பிறருடன் ஒத்துப்போவதில்லை?’ என்று பலவாறாக அவர்களை மாற்ற முயற்சித்தால், குழந்தைகளுக்கு குழப்பம்தான் எழும். ‘உனக்குப் பிடித்ததைச் சொல்வதோ, செய்வதோ சுயநலம். அது கெடுதல்!’ என்று வளர்ப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதானே! நமக்குப் பிடித்தது, வேண்டியது என்னவென்று நம்மைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? எந்தக் குழந்தையும், உலகம் தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும். தனக்குப் பிடித்த தின்பண்டம் ஒன்றை தானே தின்று தீர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தையிடம் பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று போதிக்கலாம். அதைவிட்டு, ‘சுயநலம் பிடித்தது!’ என்று திட்டுவதோ, பழிப்பதோ நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராது. எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சில குழந்தைகளுக்குப் பலர் பேசும் இடத்தில் தானும் உட்கார்ந்திருக்கப் பிடிக்கும். எவர் சொல்வதையும் கேட்டு நடந்து, நல்ல பெயர் எடுக்க முனையும். இப்படி வளர்க்கப்படுகிறவர்கள் பெரியவர்களானதும், பிறரும் தாம் சொல்வதையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி நினைத்தது நடக்காவிட்டால், ஆத்திரமடைகிறார்கள். வேறு சிலரோ, எந்த வயதிலும் பிறர் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க முடியும் என்ற நிலைக்கு உள்ளாகி, அதனால் விரக்தி அடைகிறார்கள். இவர்கள், ‘என்னால் முடியாது!’ என்று சொல்லிப் பழகாதவர்கள். உலகில் இத்தகையவர்கள் பலர் இருக்கிறார்கள் போலும்! ’SAY NO‘ என்று புத்தகங்களே போடுகிறார்கள்! சர்வாதிகாரம் மிகப் பெரிய குடும்பங்களில் வேண்டுமானால் அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தன் தனித்தன்மையை இழக்காது வாழ்வில் சிறக்க, கடமை உணர்ச்சி, பொறுப்பு, சுயநலம் எல்லாம் சரியான விகிதங்களில் இருத்தல் அவசியம். இக்குணங்களில் ஏதாவது ஒன்று மட்டும் மிகையாக இருக்கும்போது ஒரு மனிதனுக்கு பிறரிடம் அவன் எதிர்பார்க்கும் மரியாதையோ, பாராட்டோ கிடைக்காது. தாழ்மை உணர்ச்சி மிக, ‘என்னிடம் என்ன குறை?’ என்றெல்லாம் எண்ணம் போவதால், நிம்மதியும் போய்விடுகிறது. தீர்வு: ‘முடியாது!’ ‘மாட்டேன்!’ என்று சொல்லிப் பழகுங்கள். ஆனால் மரியாதை குன்றாது. வேண்டுமானால், சற்றுப் பொறுத்து, ஏன் என்று விளக்கலாம். உங்களை உங்களுக்கே பிடிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தினர்மேல் அன்பு செலுத்த முடியும். 41.நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா? கேள்வி: இடைநிலைப்பள்ளி மாணவனான நான் எது செய்தாலும், அதில் ஏதாவது தப்பு கண்டுபிடித்து, கண்டனம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என் தாய். அவர்கள் சொல்லும் வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமாம். எனக்குப் பித்துப் பிடித்துவிடும்போல இருக்கிறது. எங்கள் இருவரில் யாரிடம் கோளாறு? பதில்: நிச்சயம் உன்மேல் ஒரு தவறுமில்லை. ஹெலிகாப்டர் எப்படி ஒரே இடத்தில் சுற்றுமோ அதுபோல தம் குழந்தையை ஓயாது கண்காணிக்கும் உங்கள் தாய் போன்ற பெற்றோரை ஹெலிகாப்டர் பெற்றோர் என்று வர்ணிக்கிறார்கள். ‘பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்றஞ்சி, மிகுதியாக கவனம் செலுத்தி, மகன் எது செய்யும்போதும் கூடவே இருப்பார்கள் சில பெற்றோர். ‘அப்போதுதானே அவனைப் பிறர் மெச்சுவார்கள்!’ என்று அவர்கள் எண்ணியதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும். நாளடைவில், எதற்கும் அம்மாவின் கையை எதிர்பார்க்கும் நிலை வரும் பையனுக்கு. சுதந்தரமாக எதையும் செய்துகொள்ள சோம்பல், ஒரு கையாலாகாத்தனம். பிற்காலத்தில் தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் இழப்பு, தோல்வி, ஏமாற்றம் முதலியவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தைப் பலர் இப்படித்தான் – பெற்றோரின் மிகையான அக்கறை, பாதுகாத்தல், கண்காணிப்பு முதலியவற்றால் –இழந்துவிடுகிறார்கள். . பெற்றோர், அல்லது ஒரு சிறுவனைப் பார்த்துக்கொள்ளும் தாத்தா-பாட்டி, வெவ்வேறு காரணங்களால் இப்படி ஆகிவிடுகிறார்கள். 1.நிறையப் படித்திருக்காதவர்களாக இருந்தால், தாம் அடையமுடியாத வெற்றிகளைத் தம் பிள்ளைகளாவது அடையவேண்டும் என்ற வெறியே இவர்கள் போக்கை நிர்ணயிக்கிறது. 2.பிறர் குழந்தைகள் எதையும் செவ்வனே செய்து முடிப்பதைக் கண்டு, தாம் பெற்றவை அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இன்னொரு காரணம். எங்காவது தொய்வு ஏற்பட்டு, தோல்வி அடைய நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அவர்களது கலக்கம் பிள்ளைகளையும் தொத்திக்கொள்கிறது என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. 3.தனது பிள்ளை செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தப்பு கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவருக்குத் தாழ்மை உணர்ச்சி மிகுந்திருக்கும். ‘என்னைப்போல்தானே என் மகனும் இருப்பான்!’ என்று அர்த்தமற்ற கவலை சூழ, அவன் அப்படி ஆகாதிருக்க பெருமுயற்சி எடுத்துக்கொள்வதாக எண்ணி, குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். உண்மையில், அவனை அவன் போக்கில் விட்டால் இன்னும் வேகமாக முன்னேறுவானே! 4.பிள்ளைக்கு எத்தனை வயதானாலும், அவனைச் சின்னக் குழந்தையாகவே பாவித்து, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வது அன்பு மிகுதியால் அல்ல. எங்கே மகன் பெரியவன் ஆனதும் தன்னை நிராதரவாகவிட்டுப் போய்விடுவானோ என்ற இனம்புரியாத பயம். அல்லது, ‘குழந்தைதானே!’ என்ற சப்பைக்கட்டு, எந்த வயதிலும். கதை: அந்த எட்டு வயதுப் பையனுக்கு ஒவ்வொரு வேளையும், அம்மா அல்லது பாட்டி சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டுவார்கள். யாராவது கேட்டால், ‘அவன் ரொம்ப நிதானமாகச் சாப்பிடுவான். கீழே ஒரேயடியாக இறைப்பான்!’ என்று காரணம் சொல்வார்கள். பல சிறுவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும், அந்த இடத்தை அவர்களையே சுத்தம் செய்யச்சொன்னால், சில ஆண்டுகளில் கீழே சிந்தாது சாப்பிடப் பழகுவார்கள். எந்த வயதிலும், சிறுவன் தானே ஒரு காரியத்தை ஏதோ தனக்குத் தெரிந்த விதத்தில் செய்துவிட்டு, அது சரியாக இல்லாதுபோனால், அதை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கலாம். தோல்வி அடைந்தாலும், அதிலிருந்து கற்கலாம் என்ற அறிவைப் புகட்ட வேண்டுவது பெற்றோரின் கடமை. அதைவிட்டு, செய்வதற்கு முன்னரே எதற்குக் கண்டனம்? இபம்மாதிரியான சிறுவர்கள் திருமணமான பின்னரும் மனைவி தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது, இவர்களும் ஹெலிகாப்டராகி விடுகிறார்கள். ‘உடம்புக்கு ஏதாவது வந்தால், என் கணவர் குழந்தையாகி விடுவார்!’ என்று பெண்கள் பெருமையாகப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பெருமையாகத் தோன்றுவது நாளடைவில், எரிச்சலைத்தான் உண்டுபண்ணும். சிறு வயதில் (ஹெலிகாப்டர்) பெற்றோர் சொல்வதை அப்படியே கடைப்பிடித்து நடந்துவிட்டு, பின் அதே அதிகாரத்தை கொண்டவனுக்கு அளிக்கிறார்கள் பெண்கள். இம்மாதிரியான பெண்கள் தம்மை அப்படி வளர்த்த பெற்றோரை வெறுப்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ‘உன்மீது உன் தாய் அவ்வளவு பாசமாக இருந்தார்களே! நீ இப்படி அவர்களை ஓயாமல் பழிப்பது நன்றாக இல்லை!’ என்று நான் நாற்பதுக்கு மேற்பட்ட ஒருத்தியைக் கண்டித்தபோது, அவளுக்கு அழுகை வந்துவிட்டது. ‘என் நிலையிலுள்ள எல்லாருமே இப்படித்தான், தெரியமா?’ என்று பதிலளித்தாள், வீம்புடன். ஓயாது தொணதொணத்தாலும், பெற்றோருக்கு தம் பெண்ணின் நலனில் இருந்த அக்கறை அவளை அதிகம் புரிந்துகொள்ளாத கணவனுக்கும் இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம். ‘முட்டாள்!’ என்று பிறர் எதிரிலேயே மனைவியை எதற்கெடுத்தாலும் பழிப்பார் அந்தப் ‘பெரிய’ மனிதர். மனைவி எது செய்தாலும், அவர் சொன்னபடிதான் இருக்கவேண்டும். அவளும் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டாள். எப்போதும் கணவரது சுகத்தையே அவள் நாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், தன் ஆற்றலை அவள் முழுமையாக வெளிக்கொணர முடியாது தடுத்துவிட்டார். தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற அச்சமாகக்கூட இருக்கலாம். திருமணமான புதிதில் இம்மாதிரி ஒரேயடியாக விட்டுக்கொடுத்த பெண்கள், சில வருடங்களுக்குப்பின் வெறுமையாக உணர்கிறார்கள். மனம் சஞ்சலமடைய, உடல் உபாதைகளும் எழுகின்றன. தம்பதியர் இருவரில் யாராவது ஒருவரோ, அல்லது இருவருமேயோ விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால், சண்டை வராமலிருக்கலாம். ஆனால், மகிழ்ச்சி இருக்குமா? ஓர் ஆங்கிலேயத் தம்பதி வீட்டுக்குப் போயிருந்தேன். ‘எனக்கு ஒரு டம்ப்ளர் கொண்டு வா,’ என்று கணவர் ஏவ, பத்து வருட காலம் அவருடன் இணைந்திருந்த மனைவி, ‘தானே போய் எடுத்துக்கொள்!’ என்று அயராமல் பதிலளித்தாள். எனக்கோ ஒரே திகைப்பு. இளவரசி டயானா தன் திருமணத்தின்போது, OBEY (கீழ்ப்படிகிறேன்) என்ற வார்த்தையை நீக்கச் சொன்னதுதான் நினைவு வந்தது. இப்போதெல்லாம் இளம்பெண்கள், இல்வாழ்வில் தோழமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நட்பில் ஒருவரையொருவர் தட்டிக் கேட்கலாம், திருத்தலாம். புரிந்துணர்வு இருக்கும். இருவருக்குமிடையே ஒரு நல்ல இடைவெளி அமையும். தாம் விரும்பியதை விரும்பியபடி செய்துவிட்டு, அதை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வர். இதை விட்டு, ஓயாமல் மற்றவர் செய்வதைக் கண்காணிப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டு, அதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறுவதுபோல் இருக்குமே! இம்மாதிரியான அம்மா-பிள்ளை, அல்லது கணவன்-மனைவி உறவால் யாருக்கு இன்பம்? 42.வளர்ப்பு முறையில் வித்தியாசம் கேள்வி: இரு தலைமுறைகளுக்குமுன் சிறு குழந்தைகளுக்கு மூத்தவர்கள் விளையாட்டு காட்டி வளர்த்தார்கள். இப்போது வளர்க்கும் முறைதான் குழந்தைகள் வளர்வதில் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா? விளக்கம்: ஒரு சிறு குழந்தைக்கு ஆகாரம் தூக்கத்திற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது. தானும் ஒரு உயிர் என்று பிறர் புரியவைத்தல் குழந்தைக்கு பாதுகாப்பும், களிப்பும் ஒருங்கே ஊட்டக்கூடியது. ‘குழந்தைக்குத்தான் பேசத் தெரியாதே!’ என்று மௌனமாகவே அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, அதனுடைய கண்ணைப் பார்த்துப் பேசுதல் நல்லது. ஏதாவது கதைதான் பேசவேண்டும் என்பதல்ல. வாயால் விதவிதமான ஒலிகள் எழுப்பினால்கூடப் போதும். நம் முகத்தில் இருக்கும் அன்பும் சிரிப்பும் குழந்தையையும் தொத்திக்கொள்ளும். மாறாக, அழவைப்பதையும், அச்சத்தை விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும். நமக்கு வேடிக்கையாக இருப்பது மற்றவருக்கு ஒவ்வாததாக இருந்தால், அதில் என்ன வேடிக்கை? அன்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரிகிறது. பிறருக்கோ, குழந்தை ஒரு விளையாட்டுப் பொருள். அவ்வளவுதான். குழந்தையை மகிழ்விப்பது எளிது. ஏனோ இது பலருக்கும் புரிவதில்லை. ‘உன் மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டு!’ என்பதுபோல், “என்ன பண்றே? சமத்தா தூங்கினியா?” என்றால்கூடச் சிரிக்கும். இரண்டு நாய்கள் ஒன்றையொன்று துரத்துவதைப் பார்த்தால், நமக்கே பயமாக இருக்கும். ஆனால், அதை மறைத்து, ‘ஒண்ணுமில்லே. ஓடிப் பிடிச்சு விளையாடறது!’ என்று சொன்னால், பயமின்றி, பெரிய சிரிப்புடன் குழந்தை அந்த ‘விளையாட்டை’ ரசிக்கும். இதுதான் அளவுகோல். குழந்தை சிரித்தால் நாம் செய்வது அதற்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். பிறந்ததிலிருந்தே குழந்தையின் பெயரை நீட்டி முழக்கி அழைத்தால், அடுத்தமுறை, தன்னைத்தான் விளிக்கிறார்கள் என்று புரிந்து, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டுவதில்லை. நீங்கள் சமையலறையில் வேலையாக இருக்கும்போதோ, அல்லது கணினி வேலையைப் பார்க்கும்போதோ குழந்தையை அருகிலேயே படுக்க வைத்து, அவ்வப்போது அதன் பெயரைக் கூப்பிட்டுப் பாருங்கள். உற்சாகமாகக் காலை உதைக்கும். தன்னுடன் யாரோ உறவாடுகிறார்கள் என்ற உணர்வில் தனிமையாக உணராது. (இம்மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தைக்கு, சில வருடங்களுக்குப்பின், பள்ளி ஆசிரியைக்கே கற்றுக்கொடுக்கும் அளவுக்கு கணினி அறிவு வளர்ந்திருப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்). கதை: என் மகன், சசி, உட்கார ஆரம்பித்ததும், நான் சமைக்கும்போது அவனுக்கு ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தைக் கொடுத்துவிடுவேன். தரையில் மோதி, அது எழுப்பும் ஒலிதான் அவனுக்கு விளையாட்டு, மகிழ்ச்சி. அம்மா கண்ணெதிரிலேயே இருக்கிறாள் என்ற நிறைவும் பாதுகாப்பாக உணரச் செய்திருந்தது. நான்கு வயதில் அவன் நீரில் மூழ்கி இறந்ததும், அப்போது எங்களை வீட்டுக்கு வருகை புரிந்திருந்த என் தாயார், ‘இவ்வளவு பெரிய பாத்திரம் எப்படி நசுங்கியது?!’ என்று நம்பமுடியாது கேட்டபோது, நானும், மகளும் சேர்ந்து புன்னகைத்தோம், ஒரு சந்தோஷகரமான நினைவில். ‘அது சசியோட விளையாட்டுச் சாமான்!’ என்றேன். ஓருயிர் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்றால், உயிரற்ற பொருட்கள் என்னவானால் என்ன! தலை நிற்க ஆரம்பித்ததும், சுமார் மூன்று மாதங்களான குழந்தைக்கு, ‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு,’ என்று ஆட்டுவார்களே பாட்டிமார்கள்? இது வெறும் விளையாட்டில்லை. குழந்தைகளின் முதுகெலும்பு பலப்பட வைக்கும் தேகப்பயிற்சி. நாம் தொடுதலும், தான் ஆடுவதும் குழந்தையை மகிழ்விப்பது. அதைக் காட்ட ஒரேயடியாகக் குதிக்கும். இதேபோல் இன்னொன்று, ‘தென்ன மரத்திலே ஏறாதே!’ முதலில் கூறியது பக்கவாட்டில் ஆடுகிறதென்றால், இது நம் கணுக்காலில் உட்காரவோ, நிற்கவோ வைத்திருக்கும் குழந்தையை மேலும் கீழுமாக குழந்தையைத் தூக்கிப்போடுவது. இந்தப் பாட்டெல்லாம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், முதல் இரண்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டே சமாளிக்கலாம். மேலும் கீழுமாக இருக்கும் தொனிதானே குழந்தைகளுக்கு வேண்டும்! இம்மாதிரியான அங்க அசைவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்கள் கலகலவென்று சிரித்தால், அது தன்வசம் இழக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இப்படி நிகழ்காலத்திலேயே இருப்பது குழந்தைகளுக்கே கைவந்த விஷயம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்தது, பிடிக்காதது வேறுபடும். பெண்குழந்தைகள் ரொம்ப அருமையாக வளர்க்கப்படும்போது, மேற்கூறிய விளையாட்டுகளால் பயந்து அழும். நம் அனுபவங்களில் சிலவற்றையும் குழந்தையுடன் பகிரலாம். ஸ்விட்ச்சைப் போட்டால் மின்சார விளக்கு எரியும். இது நமக்குத் தெரியும். எட்டு மாதக் குழந்தையின் பிஞ்சு விரலை ஒரு ஸ்விட்ச்சின்மேல் வைத்து, நம் விரலால் அதை அமுக்கிவிட்டு, ‘ஹை! லைட் எரியறதுடா!’ என்று ஒரேயடியாக ஆச்சரியப்படுங்கள். குழந்தைக்கு எதையோ சாதித்துவிட்டதில் பெருமை தாங்காது. மகிழ்ந்து சிரிப்பான். அதுவே தினமும் அவன் காத்திருந்து செய்யும் வேலையாகப்போகும். நடக்கத் தெரிந்த குழந்தையானால், தான் பக்கத்தில் இருப்பதையே பொருட்படுத்தாது, நாம் வேலையில் மும்முரமாக இருக்கும்போதுதான் படுத்தும். அதாவது, நம் கவனத்தை ஈர்க்க ஏதாவது குளறுபடி செய்யும். திட்டி என்ன பயன்! ‘என்னையும் கொஞ்சம் கவனியேன்!’ என்ற அதன் சொல்லத் தெரியாத வேண்டுகோளைப் புரிந்துகொள்ளாதது நம் தப்புதானே? முன்பு, ஒவ்வொரு கூட்டுக்குடும்பத்திலும் பொழுதுபோவது குழந்தைக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. யார் மடியிலாவது உட்கார்ந்திருக்கும். எவராவது தூக்கிக்கொண்டு விளையாட்டுக் காட்டுவர். குழந்தையும் கலகலப்பாகப் பேசக் கற்கும். இப்போதோ, டிவி-தான் உற்ற தோழன். கொஞ்சம் வளர்ந்ததும், கணினி. தனியாக அறையில் அமர்ந்து, தன்பாட்டில் ஏதோ செய்துகொண்டிருக்கும் சிறுவன்! யாரைக் குற்றம் சொல்வது? 43.தாம்பத்தியத்தில் தலைவலி கேள்வி: எங்களுக்குக் கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் கணவர் என்னுடன் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறார். தினமுமே எங்களுக்குள் சண்டை வருகிறது. இதை எப்படித் தடுப்பது? விளக்கம்: என்னதான் வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், நம் விருப்பத்திற்கேற்ப ஒருவரை மாற்ற முடியாது. நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதுதான் முடிந்த காரியம். பெரிய மனதிருந்தால், மற்றவருடைய குறைகளை அப்படியே ஏற்கலாம். கணவன்-மனைவியருக்குள் ஏன் சண்டை பூசல் வருகிறது? 1. ஒருவர் பேசும்போது, மற்றொருவர் தன்பாட்டில் ஏதாவது செய்துகொண்டிருப்பது. உதாரணமாக, கணவரோ அல்லது மனைவியோ தொலைகாட்சியில் கவனத்தைப் பதித்தபடி, மற்றவர் பேசும்போது அசுவாரசியமாக ‘உம்’ கொட்டியபடி இருத்தல். பத்திரிகையைப் படிப்பதில் ஆழ்ந்திருத்தல், கைத்தொலைபேசியில் வேறு யாருடனோ உரையாடுவது இதெல்லாம்கூட தொடர்பைத் தகர்க்கும். ‘தன்னைக் கவனிக்கிறாரா (கவனிக்கிறாளா), பார்!’ என்ற ஆத்திரத்தை விளைவிக்கும். இப்படி எதிலாவது ஈடுபட்டிருந்தாலும், அதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டுக் கவனிப்பது நம்முடன் பேசுபவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. ஒருவர் முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, இடைமறித்து ஏதாவது பேசுவது, ‘நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்ற வகையில் அலட்சியப்படுத்துவது – இதெல்லாமே சண்டைக்குக் காரணமாக அமையும். தலையை லேசாக அசைத்து, ஒருவர் கூறுவதை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமா என்று அவர் கூறியதில் சந்தேகம் கேட்பது உசிதம். நாம் கவனிக்கிறோம் என்பதை உடல் மொழியால் காட்டுவது: தலையைச் சற்றே குனிந்து, காதை ஒருவர் பக்கம் திருப்பிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானால், அவருக்கு நம்மிடம் மேலும் பேச உற்சாகமாக இருக்கும். 2. நம் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, பிற வேலைகளைச் செய்வதே தலையாய கடமையாக எண்ணிச் செய்வதுதான் நல்ல பெண்ணுக்கு அழகு என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (அல்லது, வளர்க்கப்பட்டிருக்கிறோம்). அப்படி நடந்தால், நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அந்த ஆத்திரம் வேறு பக்கம் திரும்பும். கதை: நான் வீட்டிலும், வெளியிலும் வேலை பார்த்த காலத்தில், சனிக்கிழமையானால் காரணமின்றி குழந்தைகளிடம் எரிந்து விழுவேன். அவர்கள் சிரித்தபடி, ‘நாங்கள் இன்று சமைக்கிறோம். நீ எழுதும்மா!’ என்பார்கள். அவர்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். அதன்பின், ஒவ்வொரு சனியும் எங்கள் வீட்டில் நூடுல்ஸ்தான்! மேக்கியையும், மசாலாவையும் சேர்த்துப்போட்டு, நீரில் கொதிக்கவைத்தால், ஆயிற்று சமையல்! நானும் உற்சாகமாக விடுமுறை நாட்களை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். நீதி: உங்களுக்கு எழுதவோ, படிக்கவோ பிடிக்குமானால், அதை அடியோடு விடத் தேவையில்லை. வாரம் சில தினங்களாவது சற்று நேரத்தை ஏதாவது ஒரு பொழுதுபோக்கிற்காக ஒதுக்கலாமே! பெரிய தியாகிபோல் உங்களை எண்ணிக்கொள்ளாது, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசினால் புரிந்துகொள்ள மாட்டார்களா, என்ன! 3. பரஸ்பர நம்பிக்கை ‘நான் ஏதாவது நடிகையின் அழகைப் புகழ்ந்தால்கூட என் மனைவிக்குக் கோபம் வருகிறது!’ என்றார் என்னுடன் வேலை பார்த்த நண்பர். என்னிடம் கேட்டார், ‘அவளுக்குக் கண் அழகா இருக்கும். ரொம்ப குறைச்சலா டிரெஸ் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாளே! அவ பேர் என்ன?’ நான் சிரித்தபடி பதில் சொன்னேன். (நீங்களும் ஊகித்திருப்பீர்கள்). இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது! எங்கோ இருக்கும் அந்த நடிகை இவரை ஒரு கூட்டத்தில் இனம் கண்டுகொள்ளப்போகிறாளா, என்ன! கதை: ‘நமக்குத் திருமணமாவதற்குமுன் நான் பல பெண்களுடன் பழகியிருக்கிறேன்!’ என்று ஒருவர் தான் காதலித்து மணந்த மனைவியிடம் வெள்ளைமனத்துடன் கூறினாராம் – காதலிக்கும் இருவருக்குள் எவ்வித ரகசியமும் இருக்கக்கூடாது என்று நினைத்ததால். அதுதான் அவர் செயுத தவறு. அவள் அவரை அதன்பின் நம்பவே மறுத்துவிட்டாள். அனுதினமும் மனைவி ஏவிய சொல்லம்புகளைப் பொறுக்காது, விவாகரத்து பெற்றுவிட்டதாக என்னிடம் வலிய வந்து கூறினார். ‘நான் அவளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், என் மணவாழ்க்கை ஏன் பொய்த்தது?’ என்றவரிடம் அனுதாபம்தான் காட்டமுடிந்தது என்னால். தனது, அல்லது வாழ்க்கைத்துணையின், கடந்த காலத்தையே ஒருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அதேபோல், வருங்காலக் கனவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதும் நிகழ்காலத்தைப் பாதிப்பதுதான். 4. நம்மையே நாம் ஏற்காதபோது, நம் உணர்ச்சிகளை மதிக்காதபோது, மகிழ்ச்சி இராது. ‘எப்போதும் என்ன யோசிப்பீர்கள்?’ என்று நான் சிலரைக் கேட்டேன். ஒரு பெண்மணியின் பதில்: ‘தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துச் சிரிக்காவிட்டால், மனமுடைந்து போய்விடுவேன்! நாம் என்ன தப்பு செய்துவிட்டோம்?’ என்ற கேள்வி நாளெல்லாம் மண்டையைக் குடையும். தன்னைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்ற கவலையிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு என்றுமே நிம்மதி கிடையாது. ஏனெனில், எல்லாருமே அவர்களைப்பற்றி ஒரேவிதமான எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்களே! தீர்வு: ‘நான் இப்படி நடப்பதுதான் எனக்கு ஏற்றதாக, நிம்மதியை அளிப்பதாக இருக்கிறது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும்,’ என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு சிலர் துக்கம், இழப்பு, தனிமை முதலியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வது இழுக்கு என்று நினைப்பார்கள். கதை: ஒரு கூட்டுக்குடும்பத்தில் பத்து வயதான சிறுவன் இறந்து ஒரு மாதத்திற்குள் தீபாவளி கொண்டாட்டம் தடபுடல் பட்டது. ‘அவன் விதி அவ்வளவுதான்!’ என்று விட்டேற்றியாகப் பேசினார்கள். அக்குடும்பத்தில், பெற்ற தாய் உள்பட, யாருக்குமே சிறிதளவுகூட துக்கம் இருந்திருக்காதா? ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்? எங்கள் உறவினர் ஒருவருக்கு நான்கைந்து குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள் இறந்தனவாம். ஆனால், தாயார் எந்த உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாது, தன் கடமைகளைச் செய்துவந்தாள். வீட்டிற்கு மூத்த மருமகள் என்ற முறையில், அதுதான் அவளிடம் எதிர்பார்க்கப்பட்டது. இம்மாதிரி தமது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, உள்ளுக்குள்ளேயே மறுகுபவர்கள் ஆத்திரம், குற்ற உணர்வு, அவமானம் என்று தமக்கே புரியாத பல்விதமானவைகளுக்கு ஆளாகிறார்கள். பிறரிடம் ஓயாது குற்றம் காண்பது, பழிகூறுவது, காரணமில்லாது கோபப்படுவது, அல்லது உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிவிடுவது – இதெல்லாம் வேண்டாத விளைவுகள். இம்மாதிரி தருணங்களில், துணைவர் (துணைவி) தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவர் கடமை என்று எண்ணுவார்கள். நடக்கிற காரியமா! அப்படி ஒருவர் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால், கூட இருப்பவருக்கும் நிம்மதி போய்விடும். பித்துப் பிடித்துவிடுவது போலிருக்கும். ‘இது அவர் வந்த வழி!’ என்று தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். 4. மணமானவர்கள் மனத்தாங்கல் இல்லாது நட்புடன் பழக, வீட்டு வேலைகளையும், செலவுகளையும் பகிர்வது நல்லதொரு வழி. இருவருமே உத்தியோகம் பார்க்கும் நிலையில் மட்டுமல்ல; நாள்பூராவும் வீட்டிலேயே அலுத்துச் சலித்து வேலை பார்க்கும் மனைவிக்கு சிறிது உதவி செய்தால் அவளுடைய நன்றியையும் அன்பையும் பெறலாம். 5. ‘கல்யாணம்தான் ஆகிவிட்டதே! இனி என்ன!’ என்று தம்பதிகள் அலட்சியமாக இருந்தால் உறவு எப்படி பலப்படும்? வாரத்தில் ஒரு நாளை ஒதுக்குங்கள் – இருவரும் எங்காவது தனியாக ஊர்சுற்ற. முதல் நாளும், மறுநாளும் சண்டை போடலாம்! தாம்பத்திய உறவுகளில் இருக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியாது. அப்படி ஒரு நிலை இருந்தால், அவைகளைப்பற்றி எந்நேரமும் நினைத்தோ, பிறரிடம் பேசிப் பேசியோ ஆறுதல் தேட நினைக்காது, வேறு ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவதுதான் நிம்மதிக்கான வழி. 44.பொறுத்துப்போகவேண்டுமா, ஏன்? சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், ‘எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16). இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், ‘பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, – இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே! சுருங்கச் சொன்னால், கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, ‘நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள். ஒரு முதிய மாது, ‘நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! ’முண்டை’ என்று அவர் திட்டினாருடி!‘என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (’கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?) ‘அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள். அவள் சொன்னதுபோல், வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்துத்தான் நம்பிக்கையோடு பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ? ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்! கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை. ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல. கதை: சுகன்யாவின் தாய் இப்படித்தான். தந்தையோ குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார். அவரைக் கண்டு நொந்துபோய், ‘எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள். இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, ‘அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழ்கிறாள். காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், ’பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள். ‘தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன். ‘நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து. ‘ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன். ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது. இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது. வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), ‘நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்! உலகில் எட்டு சதவிகிதத்தினர், ‘அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள். எதுதான் நல்ல தாம்பத்தியம்? மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது. குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், ‘உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, ‘பெண்ணின் வேலை’, ‘ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்வது, ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற தன்மைகள் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும். அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள். இருவரில் ஒருவராவது, ‘நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார். பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும். 45.வருங்கால மனைவி கேள்வி: நான் இருபது வயது மாணவன். என் நண்பர்கள் பதினேழு வயதிலேயே girl friends தேடிக்கொண்டார்கள். ஆனால் அப்போது ஏற்பட்ட காதல் எதுவும் நிலைக்கவில்லை. அதிகப் பிரச்னையற்ற இல்லற வாழ்வு அமைய எத்தகைய பெண்ணை மணக்க வேண்டும்? கேள்வி: பலே! உனக்கு வயதுக்கு மீறிய அறிவும், நிதானமும் இருக்கிறதே! பெற்றோரின் குறுக்கீடு அதிகம் இல்லாவிட்டால், தனக்குப் பொருத்தமான பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஓர் இளைஞனுடையதாகிறது. முதலிலேயே சிறிது பழகுவதால், ஒருவருக்கு மற்றவரது குணாதிசயங்கள் புரிய வாய்ப்புண்டு. ஆனால், காதலிக்கும் காலத்தில் மிக ஜாக்கிரதையாக, தமக்கு இல்லாத நல்ல குணங்களைக்கூடக் காட்டி மயக்கும் ஒருவர் (ஆணோ, பெண்ணோ), கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார். அப்போதுதான் ஏமாற்றம், கோபம் எல்லாம் எழுகின்றன. பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவுடன் காதல் கொள்வது, அப்படிப் பார்த்த பெண்ணைத் துரத்தி அடிப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. புதினங்களில் படித்திருப்பீர்கள். ஒரு பெண் வாசகசாலையிலிருந்து கட்டுப்புத்தகங்களை எடுத்து வருகிறாள். அப்போது தற்செயலாக அவள்மேல் மோதி, மன்னிப்பு கேட்கிறான் – வேறு யார்? – கதாநாயகன்தான்! குனிந்து, அவளுடைய புத்தகங்களைத் திரட்டியும் கொடுக்கிறான். இது போதாதா, இருவருக்குமிடையே காதல் மலர! (எதிரில் வந்து மோதுபவர்கள்மேல் எல்லாம் காதல் வருமா? யோசிக்க வேண்டிய விஷயம்). இதெல்லாம் எப்படி நிலைக்கும்? எனக்குத் தோன்றும் சில பொது விதிகளை அலசலாமா? சில இளைஞர்களுக்கு நான் அறிவுரை(?) கூற, அவர்களால் திருமண வாழ்க்கையைத் தாக்குப்பிடிக்க முடிகிறது. 1. புகழ்ச்சி ஏதாவது ஆதாயம் இருந்தால்தான் புகழ்வது என்றாகிவிட்டதே இன்றைய உலகம்! ஆணோ, பெண்ணோ, அதிகம் புகழ்கிறவரை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிடக் கூடாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடக்கூடும். ‘நீ எவ்வளவு அழகா, கம்பீரமா இருக்கே! வயதுக்கு மீறிய அறிவு உனக்கு!’ என்று பேசி, அனுபவம் இல்லாதவர்களை மயக்குவது எளிது. இப்படிப் பேசுகிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2. வயது அதிக வயது வித்தியாசம் நல்லதல்ல. ஏனெனில், கணவர் மனைவியை ஒரு குழந்தைபோல் பாவித்து, அருமையாக நடத்துவார். இதைப் பெண்கள் விரும்ப மாட்டார்கள். (சமவயதினராக இருந்தாலும், பெண்கள் சீக்கிரம் வயதானவர்கள்போல் தோற்றம் அளிப்பார்களே!) 3. பொருளாதாரம் பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் என்றால் குடும்ப அந்தஸ்து ஏறக்குறைய சமமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். (தமிழ்ப்படங்களில்தான் வேலைக்காரன்மேல் காதல் கொள்வதெல்லாம் நடக்கும். அபூர்வமாக, குடும்ப நிலை சரியாக இல்லாத பெண்களும் இப்படி நடந்துகொள்வதுண்டு). பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு முதலில் காதலன் செய்வதெல்லாம் உகந்ததாகப்பட்டாலும், நாளடைவில், இரு குடும்பங்களுக்குமிடையே இருக்கும் வித்தியாசம் பெரிதாகப்படும். ஏமாற்றம் விளைவது இப்படித்தான். வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த பெண்ணோ மலைத்துப்போவாள். ஆடம்பரமான வாழ்க்கை நடத்தும் புக்ககத்தினரின் ஏளனத்துக்கு ஆளாகக்கூடும். இல்லையேல், காணாததைக் கண்டதுபோல், செலவழிப்பாள். சம்பாதித்துப்போடும் கணவன்பாடுதான் கஷ்டம். தட்டிக் கேட்டால், குடும்ப அமைதி கெடும் என்று பெருமூச்சுடன் விட்டுக்கொடுத்துப் போகும் கணவன்மார்களை நான் அறிவேன். 4. கல்வித்தகுதி ஆணுக்கும், வருங்கால மனைவிக்கும் கல்வியிலும் ஏறக்குறைய சமநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாக அமர்ந்து, எல்லா விவகாரங்களையும் அலசமுடியும். ஒருவரது நண்பர்களுடைய உரையாடலில் மற்றவர் கலந்துகொள்ள முடியும். எத்தனை நாட்கள்தான் காதல் வாசகங்களையே நம்பியிருக்க முடியும்! 5. உத்தியோகம் கணவனுடைய உத்தியோகத்தைப்பற்றி மனைவிக்கு ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரே உத்தியோகத்தில் இருப்பவர்களானால், பேசுவதற்கு, கலந்தாலோசிப்பதற்கு, நிறைய சமாசாரங்கள் இருக்கும். ஆனால், போட்டி எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கதை: கணவன், மனைவி இருவருமே பிரபலமான பின்னணிப் பாடகர்கள். ‘உங்களுக்குள் போட்டி, பொறாமை வருகிறதா?’ என்று நான் அந்த இளைஞரைக் கேட்டேன். ‘இப்போது இருவருக்குமே நிறைய வாய்ப்புகள் வருவதால், போட்டி இல்லை!’ என்று பதிலளித்தார். அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டால், மனைவியின் முன்னேற்றம் எரிச்சலைத் தரும் என்றாரோ? 6. தோழமையை வளர்ப்பது கணவன், மனைவி இருவருமே தத்தம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டால், தோழமையும், நெருக்கமும் வளரும். ஆனால், அதை ‘பலகீனம்’ என்று தவறாக எண்ணி, அதிகாரம் செலுத்த முயலும் துணையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுவது அவசியம். 7. வெளியழகு எதற்கு? அழகை மட்டும் கண்டு மோகித்து மணந்துவிட்டு, ‘இவளுக்குப் பிறருடன் பழகவே தெரியவில்லை. முட்டாள்!’ என்று, காலங்கடந்து பழிப்பானேன்! அதோடு, அழகு என்ன, நிலைக்கக்கூடியதா? கதை: ஒரு விருந்தில் புதிதாகத் திருமணமான அந்த தம்பதியரைச் சந்தித்தேன். ‘எங்களுடையது காதல் திருமணம்!’ என்று பெருமையாகக் கூறிய அத்தமிழர் மிக அழகாக இருந்தார். அவருடைய மனைவி ஒரு சீனப்பெண். ஒரே பார்வையில், ‘குண்டு!’ என்றுதான் தோன்றும். களையான முகம் என்றுகூட வர்ணிக்கத் தோன்றாது. வயதுக்கு மீறிய முதிர்ச்சி முகத்தில். சாதாரணமாக, காதல் திருமணம் என்றால் அழகுதான் முதலிடம் வகிக்கும் என்று நினைத்தவர்களுக்கு இந்தத் தொடர்பு அதிசயமாக இருந்தது. எல்லாரும் கலந்து பேசியபோது அந்தப் பெண்ணும் அவ்வப்போது கலந்துகொண்டாள். எங்கள் முடிவு: இவள் மிக நல்ல அம்மாவாக இருப்பாள்! எப்படி அந்த முடிவுக்கு வந்தோம் என்றெல்லாம் அலசத் தோன்றவில்லை. அந்த இளைஞருடைய தாய் அன்பானவளாக, பரிவானவளாக, பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பவளாக இருக்கவேண்டும். தன் தாயைப் போலிருந்த ஒருத்தியை விரும்பி மணந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை நிச்சயம் இன்பகரமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. 8. ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுபவர் சிறு சிறு விஷயங்களுக்காக அதிக உணர்ச்சிவசப்பட்டு, மகிழ்ச்சி, கோபம், ஆத்திரம் போன்ற குணங்களை வெளிப்படுத்துபவர் ஆணோ, பெண்ணோ, அவரை மணந்தால், வாழ்க்கை SEE-SAW போலிருக்கும். அமைதி, நிதானம் இதெல்லாம் இவர்களுக்குப் பிடிபடாதவை. என்றுமே சிறுபிள்ளைத்தனம் மாறாது இருப்பவர்கள். பதின்ம வயதுப் பையன்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியைகள்மேல் பித்தாக இருப்பார்கள். தன் காதலியாகவே ஆசிரியையை மதித்து, வீட்டில் அவளைப்பற்றி ஓயாமல் பேசுவார்கள். ஒரே நாளில் பல முறை வணக்கம் தெரிவிப்பார்கள்! ‘எனக்கு ஒரு மனைவி வந்தால், அவள் இந்த ஆசிரியைமாதிரியே இருக்கவேண்டும்!’ என்று கனவு காண்பார்களாம். ஒருவர் என்னிடம் பகிந்துகொண்டது இத்தகவல். ஆனால், ஓர் ஆசிரியையின் அறிவு முதிர்ச்சி, மனப்பக்குவம் எத்தனை இளம்பெண்களுக்கு இருக்கும்? 9. நடிகைமாதிரி வேறு சிலர், எப்போதும் புடவை உடுத்து, ஒற்றைப் பின்னலும், தலைநிறையப் பூவுமாக திரைப்படங்களில் தாம் கண்ட நடிகைபோல் வருங்கால மனைவி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். என்னைக் கேட்டால், இதுவும் ஒருவிதக் கட்டுப்படுத்துதல்தான். அவர்கள் விருப்பப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்து, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டால், அன்பு குன்றிவிடுமா? சண்டை ஆரம்பிக்குமோ? 10. எதிர்பார்ப்பு பெற்றோருக்கு ஒரே பிள்ளையானால், ‘என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’ என்று முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிடுவது நலம். ‘இன்னும் பத்து வருடங்கள் கழித்தும், இவளுடன் (இவருடன்) சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்!’ என்று தோன்றினால், துணிந்து மணம் புரியலாம். இருப்பினும், காலப்போக்கில் குணம் மாறலாம். யாரும் என்றும் ஒரேமாதிரி இருப்பதில்லை. இப்படியெல்லாம் பொறுக்க ஆரம்பித்தால், அறுபது வயதுவரை பிரம்மச்சாரியாகவே காலம் கடத்த வேண்டியதுதான் என்பவர்களுக்கு: மணக்குமுன் விழிப்பாக இரு. மணந்தபின், அரைக்கண்ணை மூடிக்கொள்! (BENJAMIN FRANKLIN) 46.தற்காலத்தில் பண்டையகாலக் கருத்துகள் கேள்வி: எக்காலத்திலோ தக்கதென சான்றோர் சொல்லிவிட்டுப்போன கருத்துகள் தற்காலத்துக்கும் உகந்தைவைதானா? விளக்கம்: பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்க்கையின் தன்மை. இதை ஏற்காது, நம்மில் பலர் பழமைவாதிகளாக இருப்பதில்தான் பெருமை கொள்வார்கள். மூதாதையர் காலத்து நடைமுறைகளையும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி, காலத்துக்கு ஒவ்வாத தம் நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முனைவார்கள். காலம் அதேபோல் இன்றும் இல்லையே! முன்னேற்றம் என்பது நல்லதொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வது. முன்னேற்றம் என்பதன் பொருளே மனிதனுக்கு மனிதன் மாறுபடும் – பணக்காரராக ஆவது, புகழுடன் விளங்குவது, கல்வியில் சிறப்பது இப்படி. ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பதைச் சிலர் வலியுறுத்த, பலரும் கைப்பிடித்து வருகின்றனர். நமது வாழ்க்கைத்தரம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். மேன்மேலும் புகழ், பொருளுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள் இவர்கள். புதிய பாதைகளில் என்னென்ன இடர்பாடுகள் எதிர்ப்படுமோ என்ற பயமும் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம். வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்து, ‘ஏன் நான் மட்டும் முன்னேற்றமே அடையாமல், பின்தங்கியே இருக்கிறேன்?’ என்று வாடுபவர்கள் பலர். சிறு வயதில், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், அது ஒருவருடைய இயற்கையான திறன்களை மழுங்கடித்து, மனநலனையே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், எதற்குப் பொறுத்துப்போவது? கதை: ஒரு பையனுக்குச் சிறுவயது முதலே சித்திரம் வரைவதில்தான் ஆர்வம். அதிகம் பேசாது, ஓயாது வரைவான். பார்ப்பதையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் அப்படியே வரையும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது. அவனுடைய தந்தையைப் பொறுத்தவரை அவன் நேரத்தைப் பள்ளிப்படிப்பில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும். மற்ற செயல்கள் எல்லாம் வீண். அவன் காகிதத்தையும், பென்சிலையும் எடுத்தாலே இரைவார். பையன் பயந்து, பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தான். கண் பார்வை கெட்டது. அப்பா வெளியில் போனால் தைரியமாக வரைவான். அவர் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து குடும்பத்தினர் எல்லாரும், ‘அப்பா!’ என்று அடக்கிய குரலில் எச்சரிப்பார்கள். உடனே ஒளிந்து வரைவது வழக்கமாகப் போயிற்று. தாயோ, ‘பருவ வயதில் பெண்களையே வரைகிறானே!’ என்று கவலைப்பட்டு அரற்றினார்களாம். ‘அது தவறோ?’ என்று, இயற்கையாக எழுந்த கற்பனையை அதன்பின் விலக்க, ‘பெண்கள்’ என்றாலே குழப்பம்தான் எழ ஆரம்பித்தது. தனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்ய ஏதோ தீய பழக்கத்தில் ஈடுபட்டதைப்போல அவன் மறைத்துச் செய்தது அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, பிற்காலத்தில் இல்லற வாழ்வையே நரகமாக்கியது. ‘நான் அப்படித்தான் வரைவேன்!’ என்று நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்திருக்க வேண்டும்,’ என்றேன். காலங்கடந்து, வருத்தத்துடன் தலையை அசைத்தார் அந்த மனிதர். இயற்கையாக அவருக்கு அமைந்திருந்த திறனில் உலகப்புகழ் பெற்றிருக்க முடியும். அது தெரிந்திருந்தும், தந்தைக்காக விட்டுக்கொடுத்தது எவ்வளவு கொடுமை! கலைஞர்கள் மென்மையான குணம் படைத்தவர்கள். அவர்கள் மனதை நொறுக்குவது பிறருக்குப் பலத்தை அளிப்பதுபோல் இருக்கும். அதனால் முனைந்து செய்வார்கள். எழுதுவதும் அப்படித்தான். ஆண்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு ஆபாசமாக எழுதினாலும் வாசகர்கள் பொறுத்துப் போகிறார்கள். ஆனால், ஒரு பெண் கதாநாயகனை வர்ணித்தோ, ஆண்-பெண் உறவைப்பற்றி விரிவாக எழுதினாலோ சர்ச்சைக்குள்ளாகிறாள். கற்பனை என்பது இருபாலருக்கும் பொது. இதில் என்ன ஆண், பெண் வேறுபாடு? பெண்களுக்கு மொழிவன்மை ஆண்களைவிட அதிகம் என்கிறது உளவியல். ஆண்குழந்தைகளோ, கைகளால் செய்வது எதையும் பெண்களைவிடச் சிறப்பாகச் செய்வார்கள். இது புரியாது, பொறாமையாலோ, இல்லை, ‘எங்கே நம்மை மிஞ்சிவிடுவாளோ!’ என்ற பயத்தாலோ எதிர்க்கும் ஆண்களின் கண்டனத்தைப் பொருட்படுத்தாது எழுதும் பெண்கள்தாம் தொடர்ந்து எழுதமுடியும். நான் எழுத ஆரம்பித்தபோது, கற்பழிப்பைப்பற்றி ஒரு கதை எழுதி, ‘எங்கம்மா இதை அனுப்ப விடமாட்டா. நீங்க என்ன சொல்றேள்?’ என்று என் கணவரின் ஒப்புதலைக் கேட்டேன். ‘கற்பனைதானே? அதனால் என்ன!’ என்றுவிட்டார். அதைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர், ‘இது கற்பனைக்கதைதான். உண்மைச் சம்பவமில்லை’ என்று அடியில் ஒரு குறிப்பு எழுதப்போக, பலர் என் கணவரை விசாரித்தார்களாம், ‘அது என்ன ஸார், அடியிலே அப்படி எழுதியிருக்காங்க?’ என்று! இறப்பைப்பற்றியும்தான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அது என்னவோ, நான் பல தடவை செத்துப்பிழைத்தவள் என்று எவரும் நினைப்பதில்லை! ஒருமுறை, ‘திருக்குறளில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள். பேசி முடித்ததும், ஒருவர் எழுந்து, ‘திருவள்ளுவர் பெண்களின் பேச்சைக் கேட்டு ஆண்கள் நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்க வேண்டும்!’ என்று விண்ணப்பித்தார். ‘அந்தக் காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கவேண்டிய கட்டாயம். வெளியுலகைப்பற்றி அதிகம் தெரியாமலிருந்திருக்கலாம். இப்போதும் அப்படியா?’ என்று நான் பதிலளித்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக பெண்கள் தலைக்குமேல் கையை உயர்த்தித் தட்டி, தம் ஆதரவைத் தெரிவித்தார்கள்! நல்ல வேளை, ‘பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற காலம் போய்விட்டது. உயர்கல்வி பெற்று, உத்தியோகமும் பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம். வாழ்வில் முன்னேற அவசியமானது கல்வி. ஆணோ, பெண்ணோ, தன்னை நாடுபவர்களுக்கு சுய நம்பிக்கையையும், சொந்தக்காலில் நிற்கும் துணிவையும் அளிப்பது கல்விதான். களவாடவோ, அழிக்கவோ முடியாதது. ஆனால், படித்த பெண் தனது வருவாயில் பெரும்பகுதியைக் கணவனிடம் கொடுத்துவிடுவது பதிபக்தியா? அப்படிச் செய்தால், மனைவியின்மீது ஆண் கொண்டுள்ள அதிகாரமும், ஆக்கிரமிப்பும் இன்னும் அதிகமாகாதா! ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று ஏதோ மந்திரம்போல, பழைய திரைப்படத்தின் தலைப்பை மூதறிஞர் உரைபோல கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்களைக் கேட்கிறேன், கொடுமைப்படுத்துவது தெய்வத்தின் தன்மையாகுமா? ‘எனக்குத் திரைப்படங்கள் பிடிக்காது. அதனால், நீயும் பார்க்க்க்கூடாது!’ என்று மிரட்டும் ஆண் எதில் சேர்த்தி? ‘அவருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? நீபாட்டில் போயேன்!’ என்று ஒரு மாதுவிடம் கூற, ‘கணவர் திட்டினால்?’ என்று பயந்தாள். அவரை மீறிப்போனால், அவள் கெட்டவளாகி விடுவாளா? ஆக்ககரமாக எதுவும் செய்யத் துணிவோ, அறிவோ இல்லாதவர்களுக்குத்தான் சில பழமொழிகளினால் பலம். நமது துன்பங்களை நாமே களைய முன்வராது போனால், வேறு யார்தான் அதில் அக்கறை காட்டுவர்? ஒரு குடும்பத்தைச் செவ்வனே நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. இதை ஒருவர் உணரத் தவறும்போது, மற்றொருவர் தக்க முறையைக் காட்ட வேண்டுவது அவசியம். கணவனின் வருவாய்க்கு மேலேயே செலவு செய்யும் பெண்ணாகட்டும், மனைவி என்பவள் தன் தாழ்மை உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் என்பதுபோல் அவளை கீழ்த்தரமாக நடத்தும் கணவனாகட்டும், இவர்களுக்குத் தக்க முறையைக் காட்டுவது ஒருவருக்கொருவர் செய்யும் கடமை, உபகாரம். ‘குடும்பத்தில் சச்சரவு எதற்கு?’ என்று விட்டுக்கொடுத்துவிட்டு, கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கணவனின் அடி, உதைகளை ஏற்று, ‘பொறுமையுடையார் பூமி ஆழ்வார்,’ என்று பிதற்றுவது மடமை. கோலாலம்பூரில் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் கணவரால் வதைக்கப்பட்டவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த பல தமிழ்ப்பெண்களும், படித்து உத்தியோகம் பார்க்கும் மலாய்ப்பெண்களும் மட்டும்தாம் என்பது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைக்குப்பின் காவல் துறையினரால் அங்கு கொண்டு விடப்பட்டவர்கள். (வசதியான குடும்பத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண்களை எப்படியெல்லாம் வதைத்தாலும், கணவரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்புறம் குடும்ப கௌரவம் என்ன ஆகிறது?) மலேசியாவில் மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் பிரதானமாக விளங்குகின்றனர். ‘சீனப்பெண்களை கணவன்மார்கள் வதைப்பதே இல்லையா?!’ இல்லத் தலைவி என் ஆச்சரியத்தைக் கண்டு, நிலைமையை விளக்கினாள்: “சீனப்பெண்களுக்குச் சிறு வயது முதலே சொல்லிக் கொடுப்பார்கள்,‘நீ சம்பாதிப்பது எல்லாவற்றையும் அப்படியே தூக்கி உன்னை மணப்பவனிடம் கொடுத்துவிடாதே. அவன் மது, மாது, மாஜோங் (சூதாட்டம்) என்று எல்லாவற்றையும் அழித்துவிடுவான். புத்திசாலித்தனமாக அதில் சிறு பங்கையாவது எங்கேயாவது பதுக்கி வை!’ என்று”. என் சீன மாணவி (17) ஒருத்தியும் அதை உறுதிப்படுத்தினாள்: “எங்கப்பா ரொம்ப மோசம். அம்மாவை அடிப்பார். எனக்குப் பதினஞ்சு வயசானபோது, ‘நீங்க எல்லாம் கொஞ்சம் பெரியவங்களா ஆகணும்னுதான் இத்தனை வருஷமா பொறுத்துட்டு இருந்தேன். இப்போ, தனியா போறேன்,’ என்று சொல்லிவிட்டு அம்மா எங்கேயோ போய்விட்டாள்”. மலேசியாவில், மற்ற இரண்டு இனப்பெண்களில் பலர் தம் சம்பாத்தியம் முழுவதையும் கணவரிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபடத் தெரியாது மாட்டிக்கொள்வார்களாம். (விவாகரத்து கோருவதில் இந்தியப்பெண்கள் முதலிடம் வகிக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்குமுன் என் வேண்டுகோளுக்கு இணங்கி, எனக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம்). ‘நீங்கள் எழுதுவதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடந்தால், குடும்பத்தில் சண்டை வருமே!’ என்று ஒருவர் சந்தேகம் தெரிவித்தார். எத்தனை காலம்தான் சண்டை போடுவார்கள்! மாற்ற முடியாது என்று புரிந்துபோனதும், தானே விட்டுக்கொடுத்து விடுவார்கள். முடியாவிட்டால் விலகி, அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருந்தாலும், ‘விதி’ என்று ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகுமா? அளவுக்கு மீறிய பொறுமையுடன் எந்த அநியாயத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், வாழ்வில் பிடிப்பு குன்றி, நாளடைவில் நடைப்பிணமாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே! நம் வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம் திறமைக்கு ஏற்ப, நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, யார் எதிர்த்தாலும், பழித்தாலும் சட்டைசெய்யாது, தீவிர முயற்சியுடன் அதில் இறங்கினால் வெற்றி காண்பது உறுதி. முயற்சியுடையார். இகழ்ச்சியடையார். 47.பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் கேள்வி: நான், என் கணவர் இருவரும் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். எங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் பணிப்பெண் இருக்கிறாள். குழந்தை முன்போல் சிரித்து விளையாடுவதில்லை. என்ன செய்வது? விளக்கம்: ‘நம் குழந்தையை யார் பார்த்துக்கொண்டாலும் சரிதான், நமக்கு வேலை மிச்சம்!’ என்ற மனப்போக்கு பெற்றோருக்குக் கூடாது. கதை 1: அய்னுல் ஒரு பணக்கார வீட்டுப் பணிப்பெண். அவளை நம்பி வீட்டு நிர்வாகத்தையும், குழந்தை ரஃபீடாவையும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, பெற்றோர் நிச்சிந்தையாக இருந்தது அய்னுலுக்குச் சௌகரியமாகப் போயிற்று. அக்குடும்பத்தினர் கவனியாமல் என்றிருந்ததால், வேலைக்காரப்பெண் தானே ஒரு பெரிய நிலைக்கு வந்துவிட்டதைப்போல நடக்கத் தொடங்கினாள். தினமும் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த பூங்காவில் குழந்தையை அவள் தூக்கி வருவாள். ஒரு மாலை நேரத்தில், அந்த ஒருவயதுக் குழந்தை தளர்நடையுடன் எதிரில் வந்துகொண்டிருந்த என்மேல் மோத, அதன் மர்ம பாகத்தில் அடிக்கத் தொடங்கினாள். நான் தடுத்தபோது, ‘உங்களுக்குத் தெரியாது. இவள் ரொம்ப நாட்டி!’ என்று பதில் வந்தது. சிறு குழந்தைகள் யார் எது செய்தாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். பிறரிடம் சொல்லவும் தோன்றாது. பெற்றோர் தன்னைவிட்டு, வேலைக்குப் போகும் ஒவ்வொரு காலையும் சிறுமி பயம் பெருக, கதறி அழுவாள். ‘என்னமோ, இவளை நாம் புறக்கணிப்பதுபோல்தான் நாடகமாடுகிறாள்!’ என்று தமக்குள் பேசிச் சிரித்தபடி வெளியே போய்விடுவார்கள். ரஃபீடாவுக்குப் பன்னிரண்டு வயதாகியது. வீட்டில் யாருமில்லாதபோது பணிப்பெண்ணின் வதை கடுமையாகிக்கொண்டே வந்தது. பிறர் இருக்கையில், தன் பொறுப்பிலிருந்த பெண்ணிடம் மிக இனிமையாகப் பேசுவாள். ஒரு நாள், ‘இன்னும் கொஞ்ச நேரம் விளையாடப்போகிறேன்!’ என்று வீடு திரும்ப மறுத்த பெண்ணை நையப்புடைத்து, வெறிபிடித்தவளாக அவள் முடியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள் அந்த பணிப்பெண், அய்னுல். சற்று தொலைவில் அமர்ந்திருந்த நான், ‘அவளை விடு!’ என்று கத்தியதை அய்னுல் லட்சியம் செய்யவேயில்லை. இந்தக் கொடுமையைப் பார்த்தான் விளையாட வந்திருந்த ஒரு நான்கு வயதுப் பையன். தன்னையே அந்தச் சிறுமியின் இடத்தில் வைத்தவனாக அவன் பெரிதாக அழத் தொடங்க, என்னால் அதற்குமேலும் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களருகே போய், அய்னுலின் கையை இறுகப் பற்றி, மிரட்டினேன். ஒருவழியாக அவள் அடங்கினாள். சற்று பொறுத்து, அவர்கள் வீட்டு வாசலிலேயே அவள் தாயை அழைத்து, “அய்னுல் உங்கள் மகளை ரொம்பக் கொடுமை செய்கிறாள்!” என்று ரகசியக் குரலில் விவரிக்க, தாய்க்கு ஒரே அதிர்ச்சி. அடுத்த முறை, ரஃபீடாவுடன் பெற்றோர் இருவரும் வந்திருந்தனர். “உங்கள் மெய்ட் எங்கே?” என்று யதார்த்தமாக விசாரித்தேன். “போய்விட்டாள்!” என்று தந்தை வெறுப்புடன் கூறினார். நான் விழித்ததைப் பார்த்து, “அவளைத் திருப்பி அனுப்பிவிட்டோம்!” என்றார். முகம் அவமானத்தில் இறுகியிருந்தது. ‘எப்படியோ மகள் வளர்ந்தால் சரி!’ என்ற நினைப்புடன், பணிப்பெண்ணை அவள் போக்கில் விட்டது யார் தப்பு என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட அவமானம் அது. இப்படிப் பணிப்பெண்களால் வதைபடும் சிறுமிகள் அளவற்ற பயத்துக்கு ஆளாகிறார்கள். எதற்கும் சண்டை, இல்லாவிட்டால் ஓட்டம். தன்னைவிடச் சிறியவர்களுடன் விளையாடும்போது, ரஃபீடாவின் அதிகாரமான போக்கை பிற குழந்தைகளால் பொறுக்க முடியவில்லை. அதனால் யாரும் அவளுடன் விளையாட வராததால், தனித்துப் போனாள். பரமசாதுவாக, உடலைக் குறுக்கிக்கொண்டு, இன்னொரு பணிப்பெண்ணுடன் வர ஆரம்பித்தவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சிறுவயதிலேயே ஏதேதோ அனுபவித்ததால், பிறரை நம்ப்பி, தொடர்பு கொள்வதே இவளைப்போன்ற குழந்தைகளுக்கு முடியாத காரியமாகிப் போகிறது. ‘யார் எப்படிப் போனால் என்ன, நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் சரி!’ என்ற விட்டேற்றியான போக்கு பலருக்கும் இருப்பதால்தான் எல்லாவிதமான அநியாயங்களும் தொடர்ந்து நடக்கின்றன. இதை உணர்ந்து, சிங்கப்பூரில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் ரகசிய காமரா வைத்துக் கண்காணித்தார்கள். அவர்கள் குழந்தையை பணிப்பெண் துன்புறுத்துவது தெரியவந்தது. சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தார்கள். கதை 2: என் மகளைச் சிறுவயதில் ஒரு பணிப்பெண்ணின் கண்காணிப்பில் விட்டுவிட்டு, வேலைக்குப் போவேன். நட்புடன் பழகும் பக்கத்து வீட்டுக்காரி, ‘நீ இல்லாதபோது, குழந்தை அழுதபடியே இருக்கிறது!’ என்றபோது, விழித்துக்கொண்டேன். எங்கள் வீட்டில் வேலைபார்த்த ஒரு மாது, என் பெண்களை உட்கார வைத்து, முகத்திற்கு பவுடர் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, பொட்டிட்டு என்று விரும்பிச் செய்வாள். அவர்களோ, அவள் அந்த அலங்காரப் பொருட்களை எடுத்தாலே வேறுபுறம் தலைதெறிக்க ஓடுவார்கள். என்னிடம் புகார் செய்தபோது, “வேண்டாம்னா விடுங்களேன்!” என்று நான் அலுத்துக்கொண்டேன். விளையாட்டு ஒன்றுதான் சிறுகுழந்தைகளுக்குப் பிடித்தமானது. நமக்குப் பிடிக்கிறதே என்று அவர்களை கட்டாயப்படுத்துவானேன்! குழந்தைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம். ஏதாவது புதிய விளையாட்டுச் சாமானையோ, உடையையோ எடுத்துக்கொண்டு, தன்னைப் பார்த்துக்கொள்ளும் ‘அக்கா,’ அல்லது ’ஆன்ட்டி’யிடம் மகிழ்ச்சியுடன் அதைக் காட்ட எடுத்து ஓடினால், அவள் குழந்தையை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்கிறாள் என்று புரிந்துகொள்ளலாம். கதை 3: மரியா என்ற பணிப்பெண் அசோக் பிறந்ததிலிருந்து வீட்டோடு இருந்து கவனித்துக்கொள்கிறாள். ‘அக்கா’ என்று அவள்மேல் பாசமாக இருந்தான். அவள் பிற வேலையில் ஏதாவது தவறு செய்துவிட்டால், எஜமானி கடிந்துகொண்டபோது, நான்கு வயதான பிள்ளை, ‘அக்கா அசடா!’ என்று முதலில் அயர்ந்துபோனான். ஓரிரு வருடங்களில், தானும் அதிகாரமாக நடக்கத் தொடங்கினான். ‘நான் வளர்த்த பிள்ளை என்னையே மட்டமாக நினைக்கிறதே!’ என்று வேதனயாக இருந்தாலும், அவனுடைய சொற்கணையைத் தாங்குவதைத்தவிர வேறு வழியில்லை அவளுக்கு. “‘கத்தாமல் சொல்லேன்!’ என்று கெஞ்சுகிறேன். அசோக் கேட்பதில்லை!” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் மரியா. இது எஜமானி செய்த தவறு. குழந்தையைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்பவளை மரியாதையாக நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்திருந்தாலும், அவளைத் தனியே அழைத்து கண்டித்திருக்கலாம். அதைவிட்டு, பிள்ளை எதிரிலேயே அவளைத் தரக்குறைவாக நடத்தியதால் அவனுக்கு அவளிடம் மரியாதை போயிற்று. போதாத குறைக்கு, தாயிடமும் நெருக்கமான உறவு கிடையாது. ஏனெனில், அவனை வளர்ப்பதில் அவள் அதிக கவனம் செலுத்தவில்லையே! இம்மாதிரி வளரும் பையன்கள் புத்திசாலிகளாக, ஆனால் கர்வமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். சற்றுப் பெரியவர்களானதும், அம்மா, ஆசிரியை யாருக்கும் அடங்குவது கிடையாது. “BROUGHT UP BY SERVANTS,” என்று அவர்களைக் குறிப்பிடுவோம். அவர்களுக்கு வயதில் மூத்தவர்களை மதிக்கத் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. 48.போட்டி மனப்பான்மை கேள்வி: வாழ்வில் முன்னேற்றமடைய போட்டி மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம்தானே? விளக்கம்: போட்டி மனப்பான்மை இயற்கையிலேயே எழும் ஒன்றுதான். ஆனால், தானே முதன்மையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டு, எப்போதும், எல்லோருடனும் போட்டி போடுவது நல்லதல்ல. அக்குணம் பகைமையைத்தான் வளர்க்கும். தாய் தன் தம்பியையோ, தங்கையையோ கவனிக்கும்போதும், கொஞ்சும்போதும், தன்னையும் கவனிக்கச் செய்ய ஏதாவது விஷமம் செய்வது சிறு குழந்தைகளின் இயல்பு. ஒன்றரை வயதுக் குழந்தை தன்னைவிடச் சிறிய சகோதரியின் கண்ணைக் குத்தப் பார்க்கும். போர்வையை விலக்கும். ஏதோ, அதற்குத் தெரிந்த வகையில், தன் மனப்புழுக்கத்தை வெளிக்காட்டும். அதற்காக தண்டிக்கப்பட்டால், பொறாமை மூளும். தாம் பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் பெற்றோர் குழந்தைகளிடையே ஒற்றுமையை வளர்க்கத் தவறிவிடுகிறார்கள். கதை 1: நான் படிக்கும்போது, எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவுக்கு வந்திருந்தவளின் சொற்பிரயோகத்தைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அழகாக, சிவப்பாக இருந்த தன் இரண்டாவது மகளை அத்தாய், ‘ராஜாத்தி!’ என்று வாய்க்கு வாய் அழைத்துக் கொஞ்சுவாள். அப்போது அதற்கு ஐந்து வயதிருக்கும். மூன்று வயது மூத்தவளையோ, ‘மூதேவி!’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள். இம்மாதிரி வளர்க்கப்பட்ட இரு குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்வோமா? அதீத செல்லம் கொடுக்கப்படும் குழந்தை திமிராக, அல்லது சோம்பேறியாக வளரக்கூடும். எல்லாவித மனிதர்களையும் புரிந்துகொண்டு சமாளிக்கும் திறன் அதற்கு வராது – தன்னையே உயர்வு என்று எண்ணி வளர்ந்ததால். மட்டம் தட்டப்படும் குழந்தை தன்னம்பிக்கை குன்றித் தவிக்கும். என்னதான் பெரிய உத்தியோகத்திற்குப் போனாலும், நீடித்த நல்லுறவுகளைப் பெறமுடியாது தவித்துப்போகும். தான் ஏதோ வகையில் இழிந்தவள் என்று நம்பும் பெண் தங்கைக்கே விட்டுக்கொடுத்து விடுவாள். தோல்வியைக் கண்டு அஞ்சுவாள். அல்லது, தங்கையை மீற வேண்டும் என்ற வீம்புடன் மிகக் கடுமையாக உழைப்பாள் – அப்படியாவது அம்மாவின் அன்பைப் பெற முடியாதா என்ற ஏக்கத்தில். கதை 2: ஒரு மலையாளப் பெண் எழுத்தாளர் இப்படித்தான் தந்தையின் அன்பைப் பெற முடியாது, தான் எதிலாவது ஜெயிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்ததாகப் படித்தேன். பெரும் புகழ் அவளைத் தேடி வந்தது. இந்தக் கதையை நான் கூறியபோது, ஒரு மாணவன், “அப்போது அப்பா அவளிடம் அன்பாக இருந்தாரா?” என்று ஆவலுடன் விசாரித்தான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவனுடைய தந்தை மூத்தவனான இவனிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று சொல்லியிருக்கிறான். இவனுடைய தம்பியைக் கண்டால் உயிரை விடுவாராம். “அந்த எழுத்தாளர், ‘அப்பாவுக்கு என்னைப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன!’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாளாம்!” என்று கதையை முடித்தேன். எல்லாக் குழந்தைகளிடமும் ஏதாவது திறமை இருக்காமல் போகாது. ஒரே தாயின் வயிற்றில் உதித்திருந்தாலும், எந்த இரு குழந்தைகளும் ஒரேபோல் இருப்பதில்லை. அவர்களை அப்படியேதான் ஏற்கவேண்டும். ஒப்பிடுதல் எதற்கு? கதை 3: “எங்கம்மா என் அக்காளையே எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைக் கவனிப்பதே கிடையாது!” என்று என்னிடம் குறைப்பட்டாள் என் நெருங்கிய தோழி, தேவகி. சற்று கோபத்துடன், “SHAME ON YOU!” என்று உரிமையுடன் திட்டினேன். அவளுடைய அக்காளின் மூளை வளர்ச்சி ஐந்து வயதிலேயே நின்றுவிட்டதென்று அப்பா, தன் பொறுப்பிலிருந்து விலகிக் கண்காணாமல் போய்விட்டார். அக்காளுக்கு தானே எதுவுமே பண்ணிக்கொள்ளத் தெரியாது. வயது முதிர்ந்த தாயின் பாரமும் வேதனையும் புரியாது, இருபத்தெட்டு வயதாகியும் தேவகி தன் தமக்கையுடன் போட்டி போடுவதும் மனித இயல்புதான். கதை 4: என் தோழி மேரியின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) மகன் ஜோசப்புக்குப் பிறவியிலேயே ஆடிசம் (AUTISM). சரியாக நடக்க முடியாது, பிறருடன் பழகத் தெரியாது. தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருப்பான். ஆனால், அவன் நீரில் பாய்ந்தால், மீன் தோற்றுவிடும். குட்டிக்கரணம் அடித்தபடி நீஞ்சுவான். அவனுடைய உடல் வளர்ச்சிக்கென மாதம் ஒருமுறை அவனைக் கடலுக்கு அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் மேரி. ‘நீருக்கடியில் உங்கள் மகன் ஏதேதோ வித்தைகள் செய்வது பார்ப்பவர்களுக்குப் பயமாக இருந்தாலும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டான்!’ என்று மருத்துவர்கள் அவளுக்குத் தைரியம் அளித்திருந்தார்கள். ஜோசப்புக்காக பெற்றோர் நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது கண்டு அவனுடைய அண்ணன் பொறாமைப்படவில்லை. அவனுடைய போட்டி மனப்பான்மை வேறு விதத்தில் செயல்பட்டது. “என் மூத்த மகன் ஜோசப்புக்கு நேர் எதிரிடை! எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக இருக்கிறான்!” என்று மேரி சற்றுப் பெருமையுடன் கூறியபோது, நான் விளக்கினேன்: “நீங்கள் கஷ்டப்படுவதைச் சகிக்காது, அவன் தன்னை வருத்திக்கொள்கிறான் – தன்னாலாவது பெற்றோர் சிறிது இன்பம் அடையட்டும், அவர்கள் தன்னையும் கவனிப்பார்களே என்று!” மேரியின் வாய் பிளந்தது, திகைப்பால். சிறிது நேரத்திற்குப்பின், “ஜோசப் இப்படி இருப்பது அவன் தப்பில்லேயே!” என்றாள், குரல் கம்ம. “இனி நான் அவனைக் கவனித்துப் பார்க்கிறேன்!” என்றாள். “அவனுடன் கலந்து பேசுங்கள். அவன் மற்ற சிறுவர்களைப்போல் வளரட்டும். தம்பிக்கும் சேர்த்து அவன் சாதிக்க நினைப்பது நடக்கிற காரியமா!” என்றேன். கதை 5: தாயற்ற தம் இரு குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுவது அவசியம் என்று உணர்ந்தவர் அந்த தந்தை. வயது வித்தியாசம் அதிகம் இல்லாத நிலையில், குழந்தைத்தனமாக, தம்பி செய்த விஷமத்தை தந்தையிடம் சொன்னால், அவருக்குத் தன்னை அதிகம் பிடித்துப்போய்விடும் என்று கணக்குப்போட்டாள் சிறுமி. ஆனால் நடந்ததோ! ‘ஏன் விஷமம் செய்தாய்?’ என்று மகனை அடித்தவர், ‘இன்னொருவரைப்பற்றிக் கோள் மூட்டுவாயா?’ என்று மகளையும் அதேபோல் அடித்தார்! இப்போது அப்பா அவர்கள் அஞ்சும் நபராக, எதிரியாகிவிட(!), குழந்தைகள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்தது. போட்டி, பொறாமை அறவே இல்லை. ஒருவரின் வெற்றியில் இன்னொருவர் மகிழ்ந்தனர். இதைத்தானே அப்பாவும் விரும்பினார்! குழந்தைகளுக்குள் எழும் போட்டி மனப்பான்மையும், பொறாமையும் பெற்றோர்களால்தான் அதிகரிக்கிறது. தன் குழந்தை எதிலாவது வெற்றி பெற்றால் அளவுக்கு அதிகமாக குதூகலிக்கும் அன்னையும், அவன் ஏதாவது போட்டியில் வெற்றி பெறாவிட்டால் விம்மி விம்மி அழும் தாய்மார்களும் தம் நிறைவேறாத கனவுகளையும், ஆசைகளையும் தாம் பெற்ற குழந்தைகள்மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். இதைப் புரிந்து வைத்திருப்பதால், தோல்வி அடையும்போது பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சிக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள். தொலைகாட்சியில் சிறுவர்களுக்கான போட்டிகளைப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகும். சாமர்த்தியமாகப் பதிலளிக்கும் குழுவை பொறாமையுடன் வெறிக்கும் பிற அணிகள் தோல்வியைத்தான் கவ்வுகிறார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ‘நம் பள்ளியின் பெருமை உங்கள் கையில்தான் இருக்கிறது! கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும்!’ என்று ஒரு பெரிய பாரத்தை அவர்கள் தலையில் சுமத்தியிருப்பார்கள் பள்ளியில். ஓரணிக்குள்ளேயே, ‘நான் மட்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். எல்லாரும் என்னையே பாராட்ட வேண்டும்,’ என்று ஒவ்வொருவரும் நினைத்து, தமக்குள்ளேயே போட்டி போட்டு நடந்தால், எந்தப் போட்டியிலும் வெற்றிபெற முடியாது. ஒரு குழுவுக்காக எல்லாரும் தம்மால் இயன்றவரை உழைக்க வேண்டுமேயன்றி, தம் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பெரிதாக நினைக்கக்கூடாது. தொலைகாட்சியில், ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற போட்டி நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். அமைதியாக, சிரித்த முகத்துடனேயே பங்கெடுத்துக்கொள்ளும் சிறுவர்கள்தாம் வெல்கிறார்கள். இவர்கள் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற துணிவுடன் வருகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டில் ஏதாவது ஒன்று போட்டிகளில் கிடைக்கலாம் என்ற தெளிவு இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்கள் தோல்வியுற்றால் வசை பாடமாட்டார்கள் என்பதும் இவர்களது தன்னம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். இவர்கள் ஒரு காலத்தில் தலைவர்களாகும் திறன் பெற்றிருப்பார்கள். வெல்லாவிட்டாலும், வெற்றி பெற்றவர்களை மனமார வாழ்த்தும் பெருந்தன்மை இவர்களைப் போன்றவர்களுக்கு உண்டு. போட்டி மனப்பான்மை நமக்குள் மறைந்துகிடக்கும் திறமையை வெளிக்கொணர வேண்டும். மனிதத்தன்மையை வளர்க்கவேண்டும். இதை உணர்ந்தால், முன்னேறுவது உறுதி. 49.அச்சம் -வெற்றி - தன்னம்பிக்கை கேள்வி: நாம் சொல்வதை ஏற்கமுடியாது, சிலருக்குக் கோபம் வருவது ஏன்? விளக்கம்: பிறரது கூற்றை ஏற்க முடியாவிட்டால், இவர்களுக்குத் தம் மேலேயே சந்தேகமும், அதனால் அச்சமும் எழுகின்றன. தன்னம்பிக்கை குறைய, கோபம் வருகிறது. கோபம் அச்சத்தின் வெளிப்பாடுதானே! வெற்றி பெற்றால் தன்னம்பிக்கை வளர்கிறது. ஆனால், வெற்றி அடைய தேவையானது தன்னம்பிக்கை. சற்று முரணாக இல்லை? ஒவ்வொருவருக்கும் சொல்வதும், செய்வதும்தான் சரி என்ற எண்ணம் உண்டு. தம்மைப்போலவே தான் சந்தித்துப் பேசும் அனைவரும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. நாம் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாகத்தான் செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படை எண்ணமே தன்னம்பிக்கையைத் தகர்க்கப் போதுமானது. தன்னம்பிக்கை என்றால் அகம்பாவம் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை மிகுந்த பெண் ‘கர்வி’ என்று பழிக்கப்படுகிறாள். இதனாலேயே பல பெண்களும் பயந்து, நிம்மதியாக வாழ எண்ணி, தம் தனித்துவத்தை இழந்து, பெரும்பான்மையானவர்களைச் சார்ந்து நடக்கத் தலைப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், சராசரியாகத்தான் இருக்க முடியும். ‘என்னால் முடியாது!’ என்று பயந்து, ஒரு காரியத்தைச் செய்யத் தயங்குவர் பலரும். ‘உன்னால் இதெல்லாம் முடியாது!’ என்று பிறரும் சேர்ந்து தூபம் போடுகிறார்கள். எல்லாவற்றையும் மீறி, நல்லபடியாக அதை முடித்துவிட்டால் பெருமையும், மகிழ்வும் கலந்த உணர்வு தோன்றுகிறதே, அது தன்னம்பிக்கை. கர்வமில்லை. ஒருவரின் பயமே அவர்கள் சுயநம்பிக்கை அடைய தடையாக இருக்கிறது. அத்துடன், பிறரின் (வேண்டாத) குறுக்கீடுகள் வேறு. ‘உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொள். பிறரைப்போலவே நடக்காதே!’ (BRUCE LEE). ‘செய்துதான் பார்ப்போமே!’ என்று துணிந்து இறங்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, மனம் தளராது தொடர்ந்து செய்ய வேண்டும். தவறாகப்போன முடிவுகளைக் கண்டு அஞ்சிய விஞ்ஞானிகள் எவருமில்லை. வெற்றி நிச்சயமில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், வருடக்கணக்காக அவர்கள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால்தான் இன்று நாம் பல மின்சாதனங்களை அனுபவிக்கிறோம். எதையும் சவாலாக எண்ணி, அதை எதிர்கொள்ளும் மனோதிடம் அவர்களுக்கு இருந்தது. ‘பிறர் என்ன நினைப்பார்கள்?’ என்ற பெருங்கவலைதான் பலரையும் அவர்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டி, முன்னேறவிடாது தடுக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கும் அதே கவலை இருக்காதா! பிறரிடம் என்ன குறை காணலாம் என்றே பார்த்துக்கொண்டிருக்கும் சிலரை அலட்சியம் செய்வது நல்லது. ‘போகிறார்கள், அவர்களுக்கும்தான் வாயில் போட்டு மெல்ல அவல் வேண்டாமா!’ என்று பெருந்தன்மையாக விட்டுவிடலாமே! ‘நான் குண்டாக இருக்கிறேன்!’ ‘நான் பயந்தாங்கொள்ளி!’ ‘என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை!’ என்று சிலர் மூக்கால் அழுவார்கள். ஊக்குவிப்பு என்பது ஒருவருக்குள்ளேயே தோன்றினால்தான் நிலைக்கும். எது செய்யவும் பயந்து, காலத்தை வீணடித்துவிட்டு, சுயவெறுப்பு கொள்வது எதற்கு? பயம், கையாலாகாத்தனம், அதனால் விளையும் பொறாமை போன்ற குணங்கள்தாம் பிறரைப்பற்றித் தாறுமாறாகப் பேச வழிவகுக்கின்றன. வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் பயமும், கவலைகளும் இருக்காதா, என்ன! ஆனால், அவர்கள் தம்மிடம் இல்லாததையே நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதில்லை. நமக்கு வாய்த்த உடல், மனம் இரண்டையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நமக்கே நம்மை பிடிக்காவிட்டால், வேறு யாருக்குத்தான் பிடிக்கப்போகிறது? (ஆனால், இதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகமே நம்மைச் சுற்றித்தான் இயங்குகிறது என்பதைப்போல் சுயநலம் பெருகிவிடக்கூடும்). எல்லோரிடமும் ஏதாவது திறமை இருக்கும். அதைப் பயன்படுத்தித் திருப்தி அடையும் மனம் வேண்டும். ‘எனக்குப் பிடிக்கிறது. நான் செய்கிறேன். இக்காரியத்தைச் செய்யும்போதே நிறைவாக இருக்கிறது. வெற்றி, தோல்வியைப்பற்றியோ, பிறர் சொல்வதைப்பற்றியோ கவலையில்லை!’ என்று தன்னம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்தான் வெற்றி அடைகிறார். 50.நிறைய நண்பர்களா! கேள்வி: ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பது நல்லதுதானே? விளக்கம்: எண்ணிக்கையைவிட,  அந்த நண்பர்கள் எவ்வளவு தூரம் நமக்கு ஏற்றவர்கள் என்பதுதான் முக்கியம். நாம் பலருக்கும் உதவி புரிந்துகொண்டே இருந்தால் பலரும் தம் நட்பை நாடுவர். ஆனால், எல்லாருமே நமக்கு நன்மைதான் புரிவார்களா?  ஆகவே நல்ல நண்பர்களைத்தேர்ந்தெடுப்பது அவசியம். நண்பர்களுக்குள் நேர்மையும், நம்பிக்கையும் அவசியம். எதிரே இருப்பவர் தன்னைப்பற்றி என்ன நினைத்துவிடுவாரோ என்ற கலக்கம் இல்லாது, மனதின் ஆழத்திலிருப்பதை ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தால், அவர் நல்ல நண்பர். அவர் நம் வெற்றியில் பெருமை கொண்டு, தாமே எதையோ சாதித்துவிட்டதைப் போன்று மகிழ்பவர். நாம் மனதைவிட்டு ஏதாவது சொல்லும்போது அநாவசியமாக இடைமறிக்காது, கவனமாகக் கேட்பவர். நம்மிடம் இருக்கும் பலவீனங்களைப் பெரிதுபடுத்தாது, அவைகளுடன் நம்மை ஏற்பவர். நம்மிடத்தில் இருக்கும் குணங்களே இன்னொருவருக்கும் இருப்பதைக் கண்டபின் ஏற்படுவதே உண்மையான நட்பு. இரு தரப்பினரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பலரும் தாம் கவனிக்கப்பட ஒரு நல்ல வாய்ப்பு நட்பின்மூலம்தான் என்று கருதும் காரியவாதிகளாக இருக்கிறார்கள். ஒருவர் பணமோ, புகழோ அடைந்துவிட்டால் அவரைப் புகழ்ந்து பேசியும், பரிசுப்பொருட்கள் அளித்தும், அடிக்கடி தொடர்புகொண்டும் அவர்களை நெருங்கிக் கொள்வார்கள். அதன்பின், ‘இன்னார் என்னுடைய நண்பர்!’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமையாகப் பேசுபவார்கள். போனால் போகிறது என்று இதையெல்லாம் அலட்சியம் செய்துவிடலாம். ஆனால், கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கேற்றபடி நம்மை வளைக்க முயலுவார்கள். சுருங்கச் சொன்னால், இத்தகையவர் முதலில் நம் பின்னாலேயே வந்து, பின்னர் அவர்களை நாம் பின்தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மனிதன் ஒரு தீவில்லை!’ (MAN IS NOT AN ISLAND) என்று சொல்வதுண்டு. குழந்தைப்பருவத்திலிருந்தே நண்பர்களை நாடும் குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால், நமக்கு உண்மையானவர்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் புரிவதில்லை. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், ‘இன்றும் என் சிநேகிதன் என்னுடன் சிநேகமாக இருப்பானோ, என்னவோ!’ (Will he ‘friend’ me today?) என்று பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுமுன் தாயிடம் சொல்லிக் கவலைப்படுவர்! தமக்குத் தெரிந்த வகையில், மிட்டாய், ரப்பர், சிறிய விளையாட்டுச் சாமான்கள் என்று பரிசுகள் கொடுத்து, பிறரைத் தம் வசப்படுத்த முயற்சிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். இருந்தாலும், உடன் படிப்பவர்களைக் கண்டு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதை அவர்களால் தவிர்க்க இயலாது. கதை: முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கண்ணனிடம் அவனுடன் படிக்கும் மாணவிகள் பாடங்களில் சந்தேகம் கேட்டு வருவது வழக்கம். அவன் அவர்களை இழிவாக நடத்தவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம். அவனுடைய நண்பர்களுக்கோ அவன் பலருக்கும் பிடித்தவனாக ஆகிவிட்டானே என்ற வயிற்றெரிச்சல். அதை வேறு விதமாகக் காட்டிக்கொண்டார்கள். ‘உனக்கு GIRL FRFIEND இருக்கிறாள், டோய்!’ என்று கேலி செய்ய, அவமானம் தாங்காது, கண்ணனுக்கு ஒரே அழுகை! அந்த வயதில் இது பெருமைக்குரிய சமாசாரம் இல்லை. சிறு பெண்களும் இப்படித்தான். மலேசியாவில் காலை ஏழரை மணிக்கே பள்ளிக்கூடம் ஆரம்பமாகிவிடும் என்ற நிலையில், எல்லாப் பெண்களுக்குமே அவர்கள் விருப்பை அலட்சியம் செய்து, தலைமயிரைக் குட்டையாகத்தான் வெட்டி வைத்திருப்பார்கள் தாய்மார்கள். இப்பெண்கள் நீண்ட பின்னலைக் கொண்ட ஒரு சிறுமியிடம், ‘உனக்குத் தலையில் பேன் இருப்பதால்தான் முடி இப்படி வளருகிறது!’ என்று கேலி செய்வதன்மூலம் அந்த வருத்தத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். ‘என் ஃப்ரெண்ட்ஸ் கேலி செய்கிறார்கள்!’ என்று எதற்காவது ஒரு குழந்தை தாயிடம் முறையிடும்போது, ‘இவர்கள் உன் நண்பர்களே இல்லை!’ என்று அடித்துச் சொல்லலாம். அச்சமயத்தில் குழந்தையிடம் இருக்கும் சிறப்பை விளக்குவது அவனுக்குத் தெம்பை ஊட்டுவது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாது பழகுவதும், உதவி செய்வதும்தான் உண்மையான நட்பு. கதை: என் மகன் அகால மரணம் அடைந்ததும், என் மனக்குமுறல்களை அனுதினமும் கேட்க என்னுடன் பணிபுரிந்த ஒரு சீன மாது நேரம் ஒதுக்கினாள். பேசும்போது நான் அழுதால் அவளுக்கும் கண்ணீர் வந்தது. நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டவளிடம் எனக்கு ஆழமான நட்பு ஏற்பட்டது. இப்படி சில மாதங்கள் கழிந்தபின், என்னை அவளுடைய மதத்திற்கு மாற்ற பெரும் முயற்சி எடுத்துக்கொண்டாள். ‘என் மதம் மாறினால், என் மகன் திரும்பக் கிடைத்துவிடுவானா?’ என்று நான் மறுத்துவிட, அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்குப்பின் நான் பேச முயன்றால், சிடுசிடுப்பாள். என் மனம் அமைதியடைய அவள் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால், அந்த நட்பிற்கு இப்படி ஒரு விலை நிர்ணயிக்க வேண்டுமா? அதன்பின் அவள் மாற்றலாகிப் போய்விட்டாள். என்றாவது சந்தித்துக்கொண்டபோது, பழைய நெருக்கமோ, அந்த நட்பில் விளைந்த மகிழ்வோ இருக்கவில்லை என்பது வருத்தமான சமாசாரம். அவளைப் பொறுத்தவரையில், நான் அவளுக்குத் தோல்வியைத் தந்தவள். உண்மையான நண்பர்கள் நிழலைப்போல நம்மைத் தொடர வேண்டுவதில்லை. என்றாவது சந்தித்துக்கொண்டாலும், முகமன் இல்லாமல் உரையாடலை ஆரம்பிக்க முடியும். நாம் சொல்லவந்ததைப் புரிந்துகொள்வார் நண்பர். அவ்வப்போது ஏற்படும் மௌனத்திலும் ஓர் அலாதி அமைதி நிலவும். நல்ல நண்பன் நம்மிடம் மறைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர வேண்டாமா! அதைவிட்டு, ‘நான் உன் நண்பன் என்றால், நான் சொல்வதை நீ அப்படியே ஏற்காமல் மறுத்துப் பேசுவாயா?’ என்று ஆரம்பித்தால், BLACKMAIL செய்கிறார் என்று அர்த்தம். இந்த வசனத்தால்தான் பல இளவயதினர் மது அருந்துதல், போதைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்திருக்கின்றனர். வேறு சிலர், ‘இவன் நல்லவன்தான். சரியான சகவாசம் இல்லாததால் கெட்டுப்போய்விட்டான். நான் திருத்தி விடுவேன்!’ என்று நம்புகிறார்கள். பிறகென்ன! பன்றியுடன் கன்றும் கெட்ட கதைதான். நம்மால் பிறரை நல்வழிப்படுத்துவதைவிட, அவர்களால் நாம் கெடுவது எளிது. எல்லாரும் மகாத்மா ஆகிவிட முடியாது. இதற்குத்தான், ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பொதுவாக, மனிதன் மாறுதலை விரும்புவதில்லை. (THE ONLY ONE WHO LIKES A CHANGE IS A WET BABY!). ஏனெனில், புதிய இடத்தில் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களோ என்ற கலக்கம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு – அது பள்ளியோ, அலுவலகமோ – மாறிப்போகும் நிலை வரும்போது, நம்மை அதிகமாக வெளிக்காட்டாது இருப்பது அவசியம். முதல் சில நாட்கள் குறைந்த அளவில் பேசுவது நல்லது. பிறர் நம்மை எடைபோடக் காத்திருப்பார்கள். அப்போது நம்மை வீழ்த்திவிடுவது எளிது. வலுவில் வந்து நட்பு கொள்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல. புதிதாக ஒரு அலுவலகத்தில் பதவியேற்ற மேலதிகாரிகூடத் தன் கீழ் உத்தியோகம் பார்க்கும் ஒருவருடன் மிகுந்த தோழமையுடன் பழக முயற்சிப்பார். அதற்கும் ஏதாவது உட்காரணம் இருக்கும். அந்த அலுவலகத்தில் இருக்கும் பிறரைப்பற்றி அறிய இதைவிட எளிய சந்தர்ப்பம் கிடைக்குமா, என்ன! ஆனால், சற்று காலை ஊன்றிக்கொண்டதும், நண்பராக இருந்தவர் மாறிப்போவார். அதிகாரத்தைச் செலுத்தி, நம் மனதை நோகடிப்பார். மேலே கூறி இருப்பதெல்லாம் கணவன் மனைவியருக்கும் பொருந்தும். ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், தம்பதியருக்குள் தோழமையும், அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையும் எப்படிக் கிடைக்கும்? (ஆனால், எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்வதால் பல தம்பதியருக்குள் விரிசல் விழுந்திருக்கிறது. பத்திரம்!) 51.சுய விமரிசனம் அபய முத்திரை இந்துக்கோயில் சிலைகளில் இந்த முத்திரையைப் பார்த்திருப்பீர்கள். பக்கவாட்டில் இருக்கும் வலது உள்ளங்கை வெளியில் தெரிய, விரல்கள் மேல் நோக்கி அமைந்திருக்கும். பயம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் அபயம். அதாவது, ‘பயமின்றி இரு, உன்னைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன்!’ என்று ஒருவருக்கு உணர்த்தி, அவரை அமைதிப்படுத்துவது இந்த அபய முத்திரை. இதைக்கொண்டு புத்தர் ஒரு மதயானையைக் கட்டுப்படுத்தினாராம். எல்லா புத்தர் சிலைகளிலும் இம்முத்திரையைக் காணலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராஜரின் வலது கரமும் இப்படித்தான் அமைந்திருக்கும். அபய முத்திரையைக் காட்டி, நமக்கு நாமே நல்லது செய்துகொள்ளலாம். எதற்காக என்கிறீர்களா? நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, தவறிழைத்துவிட்டு அதையே நினைத்துக்கொண்டு ஆரோக்கியத்தைப் பாழடித்துக்கொள்ளாமலிருக்க. நம்மை நாமே மன்னித்துக்கொள்ள. சுய விமரிசனம் பொழுதைப் போக்க உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என்று பலரைப்பற்றியும் (வேண்டாத) விமரிசனங்கள் செய்வது பலரது பழக்கம். இதனால் தாம் பேசுவதிலும், செய்வதிலும் மற்றவர்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிப்பார்களோ என்ற பயம் எழுகிறது. எப்போதும் நம்மையே நாம் விமரிசித்துக்கொண்டு, நமது குறைபாடுகளை பறைசாற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா? நாம் செய்வது நமக்குச் சரி என்று பட்டால் போதாதா? குற்ற உணர்வு குற்ற உணர்வு சிறு பிள்ளைக்கும் உண்டு. அம்மாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்துவிட்டு, திருதிருவென குழந்தை முழிப்பது இதனால்தான். ‘குழந்தை தெரியாமல் செய்துவிட்டது!’ என்று பெருந்தன்மையுடன் அதன் காரியத்தைப் பெரிதுபண்ணாது விட்டுவிட்டால், குழந்தை அநாவசிய பயமின்றி வளரும். அதைவிட்டு, திட்டியோ, அடித்தோ, இன்னும் கூறப்போனால், ‘அவர்கள் வீட்டிலே நீ அழகான கண்ணாடி ஜாடியை உடைத்தாயே!’ என்று நீண்ட நாட்கள் அதையே சொல்லிக் காட்டிப் பழித்துக்கொண்டு இருந்தால் பெரியவர்கள் தம் பலம் பெருகிவிட்டதாக எண்ணலாம். ஆனால், நாளடைவில், தான் செய்வது எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் குறைவுள்ளது என்ற சிறுமை உணர்வு எழும். ‘நான் ஏனோ இப்படி இருக்கிறேனே!’ என்ற சுயபச்சாதாபமும் எழும். பெற்றோர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் குழந்தைகள் மனதில் நச்சை விதைத்துவிடுவார்கள். அண்மையில், ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வகுப்பில் பேசினான் என்பதற்காக அவனுடைய ஆசிரியர் பிற மாணவர்களை அவனுடன் சேரக்கூடாது என்றாராம். அப்பையன் வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை முயற்சிவரை போய்விட்டான். இது நடந்தது மலேசியாவில். அவன் செய்தது அப்படி ஒன்றும் பழிக்கக்கூடிய காரியம் இல்லை, ஆசிரியர்தான் அதிகார பலத்தால் தவறிழைத்தவர் என்று புரியும் வயதாகவில்லை அவனுக்கு. உருவத்தில் கோளாறா? ‘குண்டு,’ ‘வழுக்கை’ என்றெல்லாம் பிறர் கேலி பேசும்போது சிரித்து வைத்தாலும், சிறுமை உணர்ச்சி எழுவதைத் தடுக்கமுடியுமா? அதை மறைக்க, தம்மைத்தானே கேலி செய்துகொள்வார்கள். இது தம்மையுமறியாது, பிறரை உயர்த்திப் பேசும் வழியும்கூட. பொதுவாக, எந்தக் குடும்பத்திலும் இரண்டாவது மகன் மூத்தவனைவிட உயரமாக இருப்பான். தங்கை அக்காளைவிட உயரமாக இருப்பாள். இதுவும் இயற்கைதான். இதற்கெல்லாம் அவமானத்தால் சுருங்குவது எதற்கு? கதை ‘நான் தனியா எங்கேயும் போகமாட்டேம்பா. எல்லாரும் என்னையே முறைச்சுப் பாப்பாங்க. அழுகை வரும்!’ பதினாறு வயதில் என்னுடன் படித்த அருள்மேரி கூறியது இது. அவளுடைய ஐந்தடி எட்டங்குல உயரத்தைப் பார்த்து சிநேகிதிகள் பிரமித்தாலும், அவளுக்கு வித்தியாசமான அந்த உயரமே பெரிய குறையாக, அவமானகரமாக இருந்தது. எப்போதுமே இரண்டு, மூன்று பேர் அவளுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள். சராசரிக்கு அதிகமான உயரங்கொண்ட பெண்ணும், அதற்குக் குறைவான ஆணும் தங்களை ஏதோ விதத்தில் தாழ்ந்தவர்களாக நினைத்து வருந்துகிறார்கள். கதை இந்திரன் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. உருவம் மட்டும் குள்ளம். எதற்காவது தப்பு கண்டுபிடித்து எல்லாருடனும் – பலர் பார்க்க – சண்டை போடுவார். ‘Shorty’ என்று எல்லாரும் அவரை முகத்திற்கு நேரேயே குறிப்பிட்டது அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கலாம். தன்கீழ் வேலை செய்தவர்கள் எந்தவித தவறும் செய்யக்கூடாது என்று எதிர்பார்த்தார். நடக்கக்கூடிய காரியமா அது! யார்தான் தவற செய்யவில்லை? அலுவலகத்தில் மட்டுமில்லை. யார் வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் குற்றம் கண்டுபிடிப்பார். இதனால் அவருக்கு உற்ற நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை. எல்லாரும்தான் பயந்து ஓடினார்களே! மதுவே உற்ற தோழன் என்றாக, மனைவி, குழந்தைகளுக்குக்கூட அவரிடம் மரியாதை போயிற்று. அவருக்குக் கீழிருந்த ஒருவர் தன் நேர்மையான உழைப்பு, மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம் ஆகியவற்றால் அரசாங்க விருதுகளைப் பெற்றபோது, ‘எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே!’ என்றார் ஆற்றாமையுடன், தான் எங்கு தவறு செய்தோம் என்று புரியாது. இந்திரன் போன்றவர்களுக்கு அபய முத்திரை அவசியம். ‘நான் குள்ளமாக இருந்தால் யாருக்கு என்ன வந்தது? இயற்கையை எதிர்த்துப் போராட முடியுமா!’ என்று, குறைகளுடன் தன்னைத்தானே ஏற்றால், பிறரையும் மதிக்கும் குணம் வருமே! கோபத்தை விடு, முன்னேறலாம் நாம் செய்த காரியத்தில் நிறைவு இல்லாவிட்டால், அதைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் ஆத்திரம் வருகிறது. சண்டை போடத் தோன்றுகிறது. நான் ஆங்கில தினசரி ஒன்றிற்கு இந்திய இசை, நாட்டிய விமரிசகராக இருந்தபோது, கலைஞர்களின் தரத்தை அலசி, பாராட்டத் தக்கவைகள் பலவற்றைக் குறிப்பிட்டிருந்தாலும், ஓரிரண்டு குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக அவர்கள் கோபத்துக்கும், தீராப்பகைக்கும் ஆளாகி இருக்கிறேன். அதிலிருந்து, ‘உலகப் புகழ் வாய்ந்தவர்கள்’ என்ற பெயர்பெற்றவர்களைப்பற்றி மட்டும் எழுத ஒப்புக்கொள்வேன். எதற்கு வம்பு! சுமாரான ஒரு நடன ஆசிரியை தன் நிகழ்ச்சிக்கு வந்து அதைப்பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள், தொலைபேசிமூலம். “நான் எப்படி எழுதுவேன்னு தெரியுமில்லையா?” என்று கேட்டு அவளை யோசிக்கவிட்டு, பிறகு, “எழுதணுமா?” என்று சமாதானமாகக் கேட்டேன். அவள் பயந்து, “பரவாயில்லை. சும்மா வாங்க,” என்றாள். அவளுக்கே தன் திறமையில் நம்பிக்கை இல்லைபோலும்! பள்ளியில் படிக்கும்போது, ‘பிழைதிருத்தம்’ என்று பண்ணினோம். அடுத்த முறை அதே தவறுகள் வராது பார்த்துக்கொண்டபோது, மதிப்பெண்கள் கூடின. நாம் வளர்ந்து பெரியவர்களானதும் அக்குணம் ஏன் மாறியது? வயதான கோளாறா? வயதானவர்களுக்கு – தம்மைத் தாமே ஏற்க – அபய முத்திரை மிகவும் உபயோகமானது. ‘இளம் வயதில் இருந்த உடல் வலிமை, உத்தியோகம், வருமானம் எதுவுமே இப்போது இல்லையே!’ என்ற வருத்தம் ஏற்பட, அது மனைவியின்மேல் ஆத்திரமாக மாறுகிறது. அவள் எது சொன்னாலும், தன்னைப் பழிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள். “என் கணவருக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். ஓயாமல் படிப்பார்,” என்றாள் ஒரு சிநேகிதி. நான் சில இணையதளங்களைப்பற்றிக் கூறினேன். பதிலாக, “அவ்வளவுதான்! கத்த ஆரம்பித்துவிடுவார். நான் என்ன சொன்னாலும் அவருக்குப் பிடிப்பதில்லை!” என்றாள். மேற்கண்ட வசனத்தை வெவ்வேறு நாடுகளிலிருந்த பல பெண்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பெண்களுக்கு இயற்கை உபாதைகள் பன்னிரண்டு வயதிலிருந்தே ஆரம்பித்து, பிள்ளைப்பேறு காலங்களிலும் தொடர்வதால், முதுமையின் தளர்ச்சி அவர்கள் மனதை அவ்வளவாகப் பாதிப்பதில்லையோ? எழுத்தாளர்களும் சுயவிமரிசனமும் தன்னைத்தானே விமரிசித்துக்கொண்டு, தான் செய்தது நிறைவாக இல்லை என்று ஒப்புக்கொள்ளும் குணம் எழுத்தாளர்களுக்கு மிக அவசியம். ‘இரவு பகலாக எழுதினேனே! இதில் சிலவற்றைக்கூட அடிக்க மனம் வரவில்லையே!’ என்று தான் எழுதியதன்மேல் காதல் கொள்பவர்களின் எழுத்து வாசகர்களுக்கு நிறைவைத் தராது. பத்திரிகை ஆசிரியர்களின் தொழிலே அதுதான் என்பதை புரிந்துகொள்ள விரும்பாது, ‘நான் கஷ்டப்பட்டு எழுதினதை கன்னாபின்னான்னு சுருக்கிட்டான்!’ என்று புலம்பும் எழுத்தாளர்கள் உண்டு. ‘இது அநாவசியம். அல்லது, தவறு!’ என்று நம்பகமான ஒருவர் விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது அதை எப்படி சரிப்படுத்தலாம் என்று யோசித்தால்தானே முன்னேற முடியும்? ஒரு துறையில் எத்தனை ஆண்டுகால அனுபவமாக இருந்தாலும், தவறுகளைத் தவிர்க்க முடியாது. ‘நான் என்ன கடவுளா, தப்பே செய்யாமலிருக்க!’ என்று மன்னித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆரோக்கியமாவது கெடாமலிருக்கும். அபய முத்திரை இருக்கவே இருக்கிறது! 52.அடுக்கடுக்காக வெற்றி பெறும் வழிகள் கேள்வி: வாழ்வில் வெற்றி பெறத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ஏன் சிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகிறது? விளக்கம்: ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்யவேண்டாமா! வெற்றிக்கு வேண்டிய குணாதிசயங்கள் முதல் வெற்றிதான் மிகக் கடினமானது; அதற்குப்பின் நஎதில் வேண்டுமானாலும் வெற்றி பெறுவது எளிது என்று சொல்வதுண்டு. ஏனெனில், ஒரு காரியத்தில் வெற்றி பெற அறிவு இருந்தாலும், அது மட்டும் போதாது. குறித்த காலத்துக்குள் செய்து முடிப்பது, பிறருடன் இனிமையாகப் பழகத் தெரிந்து வைத்திருப்பது போன்ற வேறு பல குணங்களும் அவசியம். இவை இயற்கையாக அமையாவிட்டாலும் பழகிக்கொள்ளலாம். புகழ்ச்சியால் மண்டைக்கனம் அன்பு காட்டுகிறோம் என்றெண்ணி, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் சிறுவயதினரை வெகுவாகப் புகழ்வதுகூட அவர்களது வளர்ச்சிக்குத் தடைதான். கதை: எங்கள் இடைநிலைப்பள்ளியில் ஒரு வகுப்பின் கடைசிப்பிரிவில் இருந்த பதின்ம வயது மாணவ மாணவியர் எல்லாப் பாடங்களிலும் பின்தங்கி இருந்தார்கள். ஆனால் அவர்கள் முகம் வசீகரமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு ஒரு முறை பென்சில் சீவ வைத்திருந்த சிறிய கருவியின் பின்னாலிருந்த கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர் பெண்கள்! பையன்களோ, பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து அவ்வப்போது தலை சீவிக்கொண்டிருந்தார்கள்! இவர்களை ‘அழகு’ என்று பெற்றோரும், உறவினரும் சிறுவயது முதல் கொண்டாடி இருக்கவேண்டும். இவர்களுக்கு வெற்றி தோல்வியைப்பற்றிய சிந்தனை கிடையாது. தம் அழகிலேயே நிறைவடைந்துவிட்டார்கள், பாவம்! அடுக்கடுக்காக வெற்றி பெற பாராட்டையும், வாய்ப்புகழ்ச்சியையும் ஏற்கத் தெரியவேண்டும். இல்லாவிடில், முதல் வெற்றியுடன் நின்றுவிடும். கதை: ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன், விமரிசகர் என்ற முறையில். குழுவில் சிறப்பாக நடனமாடிய ஒரு பதின்ம வயதுப் பையனை தனியே அழைத்துப் பாராட்டினேன். அவனுக்குப் பெருமை தாங்கவில்லை. மறுநாள் அதே நிகழ்ச்சியில் அந்தப் பையன் ஆடியது ஏமாற்றத்தைத்தான் விளைவித்தது. ஏனென்றால், இவனுக்குப் பாராட்டை நல்ல விதமாக ஏற்றுக்கொள்ளத் தெரியவில்லை. தான் பெரிய மேதாவி என்று உடனே தலைக்கனம் வந்துவிட்டது. அசிரத்தையாக ஏதேதோ ஆடிவிட்டான். நானும் ஒரு பாடம் கற்றேன்: புகழ்ச்சியில் கஞ்சத்தனம் காட்டப் பழகினேன். இசைக்கலைஞர்கள் கர்வத்துடன் பாடினால், ராகம், ஸ்வரம் ஆகியவைகளுக்கு உயிர் கொடுக்கும் இசைத்தேவதைகளுக்கு அங்கங்களில் குறைபாடு உண்டாகிவிடுமாம். திருவிளையாடல் படத்தில் பாலையா ஏற்று நடித்த ஹேமநாத பாகவதர் பாத்திரம் நினைவுக்கு வருகிறதா? எந்தக் கலையானால் என்ன! ஒருவர் புகழ்ந்தவுடனே கலைஞருக்கு ஏற்படும் கர்வமும், திமிரான போக்கும் அவருடன், பிறரையும் பாதிக்கும். ‘ஒருவர் புகழ்ந்தால், மகிழ்ச்சியாக இருக்கிறதே! அது எப்படித் தவறாகும்?’ என்கிறீர்களா? மகிழ்ச்சி வேறு, பெருமையால் எழும் கர்வம் வேறு. தான் மிகவும் சிறந்திருக்கிறோம் என்று பிறரை ஓயாது மட்டம் தட்டிக்கொண்டிருப்பவன் விரைவில் வீழ்வான். அவனுடைய திறமையை வியந்து அவனை முதலில் நெருங்கியவர்கள்கூட அஞ்சி விலகுவார்கள். ஒரே துறையில் இருப்பவர்களைப்பற்றி தரக்குறைவாக கருத்துகள் தெரிவிப்பது எப்போதுமே அபாயகரமானது. வெற்றிக்கு முட்டுக்கட்டை வெற்றி பெற்றவனிடம் பலரும் நெருங்குவார்கள். வேறென்ன, ஆதாயம் தேடித்தான்! தன் நலன் நாடும் நண்பர்கள் என்று இவர்களை நெருங்கவிட்டால், அவர்கள் சூடு காய்ந்து, இவனையே எரித்துவிடும் அபாயமும் உண்டு. (பிரபலமான நடிகர்கள் இப்படி ஏமாந்துபோய், மிகுந்த வருத்தத்துடன் பிறரை எச்சரித்திருக்கிறார்கள். படித்திருக்கிறீர்கள், அல்லவா?). நண்பர்களாகப் பழகுபவர்களே இப்படி என்றால், வெளிப்படையாகவே தம் பகைமையைச் சொல்லாலும், செயலாலும் காட்டிக் கொள்பவர்களைப்பற்றிக் கூற என்ன இருக்கிறது! இதனால்தானோ என்னவோ, வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள் பலர். சராசரியாக இருந்தால்தான் பலரும் நட்புடன் பழகுவார்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு. ஆனாலும், எதிலும் வெற்றி அடைய முடியவில்லையே என்ற ஆதங்கம் இல்லாமல் போகாது. அதைத் தணித்துக்கொள்ள தம்மைப்போல் இல்லாது, துணிச்சலாக நடந்து வெற்றி பெற்றவரைப் பழிப்பதில் ஒரு குரூர திருப்தி அடைகிறார்கள். இவர்களுக்கெல்லாம் அஞ்சுவது மடமை. சவாலுக்கு அஞ்சினால் புதிய அனுபவங்கள் கிட்டுமா? பாதுகாப்பான நிலையிலிருந்து வெளியே வர தயக்கம், புதிய சூழ்நிலைகளில் என்னவெல்லாம் அனுபவிக்க நேரிடுமோ என்ற அச்சம் போன்றவைகளால் ஆட்டுவிக்கப்பட்டால், வெற்றி எப்படிக் கிட்டும்? BRAIN STORMING எந்தத் துறையில் வெற்றி பெறும் சாத்தியக்கூறு இருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, நம் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களும் ஆலோசனை வழங்குவார்கள். முடிவெடுத்துவிட்டால், துணிந்து இறங்க வேண்டும். முதல் நாள் இரவே அடுத்த நாள் நாம் செய்யப்போகும் காரியங்களைப்பற்றி திட்டமிடுவது நல்லது. உறக்கத்தில் நல்ல எண்ணங்கள் நம் திட்டத்துடன் சேர்ந்து பலப்படுத்தும். உடனுக்குடன் வெற்றியா? எடுத்த எடுப்பில் பெரிய வெற்றிகளுக்கு ஆசைப்படுவது பேராசை. அப்படியே அமைந்தாலும், அது நிலைப்பது கடினம். “எழுத்தாளர்களுக்கு வெற்றி கிடைக்க மிகவும் தாமதமாகும் – நாற்பது ஆண்டுகள்கூட ஆகின்றன!” என்று குஷ்வந்த் சிங் கூறுவார். வெற்றி என்பது உடனுக்குடன் கிடைக்காது. இது புரிந்து, பல தோல்விகளைப் பொருட்படுத்தாமல் செய்யும் காரியத்தில் ஆரம்பத்திலிருந்த அதே ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் நாம் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறோம். அடிமேல் அடி வைத்து, நிதானமாக, ஆனால் இலக்கினைத் தவறவிடாது செல்வோமானால் வெற்றி உறுதி. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !