[] []     ஆதி மருத்துவர் சவர தொழிலாராக்கபட்ட வரலாறு  கோ ரகுபதி      அட்டைப்படம் : அசார் - azarudeena163@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                          உள்ளடக்க அட்டவணை பதிப்புரை 4  முன்னுரை 7  நன்றி 9  1. அம்பட்டர் அன்றைய மருத்துவர் 11  2. சவரத் தொழிலாளியாக்கப்பட்ட வரலாறு 21  3. சமூக உறவு :அன்றும் இன்றும் 26  4. தலித்துகளுடனான முரண்பாடு 33  5.மருத்துவர் போராட்டமும் எதிர் வன்முறையும் - 1924-2004 37  6. சலூன்: பகுத்தறிவுப் பிரச்சார மையம்  53  7. தலைவர்களும் இதழ்களும் 56  8. ஒடுக்குமுறையை உணர்தலும் போராடுதலும்  60  முடிவுரை 65  துணைநூற்பட்டியல் 67  பின்னிணைப்புகள் 71  பதிப்புரை   வேளாண்மையை  மையமாகக் கொண்ட பேரரசுகள் உருவாகிய பின்னர், இம்மண்ணில் திணை சார்ந்து உருவாக்கப்பட்ட அறிவு மரபுகள், பொருளாதாரப் பரிமாற்ற முறைகள் உழவை மையப் படுத்திய சேவைப் பொருளாதார வழிமுறைகளாக உருமாற்றம் அடைந்து படிப்படியாக சேவைத் தொழில்களாகவும் மாற்றம் பெற்றன. அதுவரை பொருளாதார ரீதியில் தனித்துவத்துடன் விளங்கிய மற்ற சமூக மக்கள் (குறுநில அரசுகள்) 'Autonomy'யை (தன்னாட்சியை) இழந்து போனதுடன், வேளாண் சமூகத்தின் கீழ் அடிமைச் சமூகமாக மாறிப்போயினர்.  இத்தகைய படிமுறைகள் நடைபெற்றுவிட்ட பின்னர், மரபுவழிப் பொருளாதார வாழ்முறைகளைக் கொண்ட இனக்குழுக்கள் சாதியக் குழுக்களாகவும் ‘பரிணாம வளர்ச்சி’ பெற்ற காலகட்டத்தினைப் புரிந்துகொள்வது சிக்கலானது என்பதைவிட அதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை. மேலும், இச்சாதியக் குழுக்கள் இயல்பாகவே வைதீக நெறிக்குக் கட்டுப்பட்டவையாகவும், வைதீக நெறியின் துதிபாடிகளாகவும் மாற்றம் பெறத் தொடங்கிய போது, அவை நம் சமூகத்தின் சுயமான அறிவுமரபுகளையும் பாரம்பரியங்களையும் மதிப்பீடுகளையும் அழித்தொழிக்கவும் செய்தன. மரபான அறிவு மரபு அறிவியல்களுக்கு எதிராக ‘ஆன்மீகம்' என்று விளக்கப் படுகிற சொல்லாடல் முன்மொழியப் பட்டு இந்த அழித்தொழிப்பு நடந்தேறியது; நடந்தேறி வருகிறது.  முக்கியமாக ஒரே இடப்பரப்புக்குள் திணை சார்ந்தும் தொழில் சார்ந்தும் பல்வேறு இனக்குழுக்களாகச் செயல்பட்ட குழுக்களுக்குள் நான் மற்றவர், (Egox Other), நான் X நீ, (I x You) என்ற வரையறைகள் அதிகாரம் சார்ந்த சொல்லாடல்களாக, கதையாடல்களாக உற்பத்தி செய்யப்பட்டன. இன்றளவும் நம்மிடைய சமத்துவ சமுதாயம், சகோதரத்துவ சிந்தனைகள் உருவெடுக்காமல் இருப்பதற்கு நான் - மற்றவர் (the other - அவன், அவள் / அவர்கள் ) என்கிற இந்த அகச் சொல்லாடலே அடிப்படையாக அமைவதைக் காண முடிகிறது. இந்தியச் சமூகம் ஏகப்பட்ட குழப்பங்களுடனும் சிக்கல்களுடனும் ஒருவருக்கொருர் வஞ்சினம் மிக்கவர்களாகவும் விளங்கிய காரணத்தினால் வியாபாரத்திற்காக வந்த ஐரோப்பியர்கள், படிப்படியாக நம்மை ஆளுபவர்களாக மாறியதில் வியப்பொன்றும் இல்லை, அதே சமயம் ஐரோப்பிய சமூகம், இந்தியா போன்ற ஆசிய, ஆப்பரிக்க சமூகங்களைக் குறித்து மனங்கொண்டிருந்த கருத்துருவங்களை நிரூபிப்பவர்களாகவே நம்முடைய செயல்பாடுகளும் அமைந்தன. இந்தியாவில் அவ்வப்போது நிலவிய சமூகக் கொடுமைகளைப் பார்த்து அதிர்ந்து போன ஆங்கிலேயர்கள் அதற்கான தீர்வுகளை நோக்கிப் பயணித்த போது, அம்முயற்சிகள் அனைத்தும் ‘இந்துமதத்தின்’ உள்விகாரங்களில் தலையிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆங்கிலேயர்கள் இம்மாதிரியான சீர்திருத்த முயற்சிகளை அரசியல் செயல்பாடுகளாக வளர்த்தெடுக்க முன்வரவில்லை.  அதேசமயம் ஆங்கிலேயர்களின் காலனியாட்சிக் காலத்தில் நம்முடைய மரபான பொருளாதார வழிமுறைகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்திய சமூகக் குழுக்கள் பின்பற்றி வந்த மரபான வாழ்க்கைமுறைகளுக்கு மாற்றாக, அவர்கள் நவீன தொழில் மயப்படுத்தப்பட்ட தொழில்முறைகளை அறிமுகம் செய்தனர். விவசாயத்தில் நாம் பின்பற்றி வந்த அரிசி, கோதுமை போன்ற பயிர்களைக் காட்டிலும், ஐரோப்பிய நாடுகளின் வாணிபத்திற்குத் தேவையான பருத்தி, தேயிலை, காபி போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்ய ஆதரவான நிலைப்பாடுகளை மேற்கொண்டனர்.  வேளாண்மை போன்ற மரபான வாழ்வாதாரத் தொழில்களைப் போன்றே நம்முடைய மரபான மருத்துவ முறைகளும் மிகச் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டன. சித்த மருத்துவம், நாட்டுமருத்துவம் போன்ற பல்வேறு விதமான மருத்துவமுறைகளை நம்முடைய சமூக மக்கள் பின்பற்றி வந்திருக்கின்றனர். காலனியாட்சிக்காலம் அறிமுகம் செய்த ‘அலோபதி’ எனப்படுகின்ற ‘அறிவியல்’ மருத்துவம் நம்முடைய மருத்துவ மரபுகளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது.  இந்திய வரலாற்று ஆய்வுக் கழக இளம் ஆய்வாளர் திரு. கோ. இரகுபதி மேற்கொண்ட "ஆதிமருத்துவர் : சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு" என்கின்ற இந்த ஆய்வு, நம்முடைய மரபான மருத்துவ முறைகளைப் பின்பற்றி வந்த ‘நாவிதர்' சமூகம் குறித்த வரலாற்றுச் சொல்லாடல்களை முன்வைக்கின்றது. எந்த விதமான வரலாற்றுப் பதிவுகளும் எந்த விதமாத எழுத்துப் பதிவுகளும் இல்லாத ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் குறித்து, அவர் முன்வைத்திருக்கின்ற ‘கதையாடல்' தமிழ்ச் சூழலில் மிக முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை . ஆதி மருத்துவ சமூகமாக முன்மொழியப்படுகின்ற 'நாவிதர் / மருத்துவர் சமூகம்' காலனிய ஆட்சிக்கு முன்பே தனக்கான உரிமைகளையும் நியாயங்களையும், தருக்கங்களையும் இழந்து, சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளை நூலாக வெளியிடுவதில் வல்லினம் பெருமிதம் கொள்கிறது.  இந்நூலினை வல்லினம் வெளியீடாக வெளிவருவதற்கு சம்மதம் தெரிவித்த திரு. கோ.ரகுபதி அவர்களுக்கும் இந்நூல் சிறப்பான முறையில் வெளிவர பல வகையிலும் துணைநின்ற திரு. ஆ. தனஞ்செயன் (துறைத்தலைவர், நாட்டார் வழக்காற்றியல் துறை, பாளையங்கோட்டை) அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்நூலினைச் சிறந்த முறையில் கணினி அச்சு செய்துள்ள திரு. நா. சுந்தர், நூலாக்கம் செய்துள்ள ஜோதி எண்டர்பிரைசஸ் திரு. கணேச மூர்த்தி ஆகியோரும் நன்றிக்குரியோர்.  அடித்தள மக்களின் வரலாறுகளை மீட்டுருவாக்கம் செய்து வெளிக்கொண்டு வருவதில் பெரிதும் ஆர்வம் காட்டி நெறிப்படுத்திவரும் வல்லினம் பதிப்பாளர் திருமதி க. புனிதா அவர்களை தமிழ்ச் சமூகம் என்றும் நினைவில் கொள்ளும்.  - மகரந்தன்  5 ஜூலை , 2006 புதுச்சேரி                                        முன்னுரை   சாதி குறித்த ஆய்வுகள் காலனிய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. முதலில், அவர்கள் சாதிகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்தனர். சேவைச் சாதிகளில் ஒன்றான மருத்துவச் சாதி குறித்தப் பதிவுகள் The Madras Country A Manual (Nelson, 1.H.1989;73) என்ற நூலில் உள்ளது, இது 1868ல் வெளியிடப் பட்ட து. இதன் பின்னர் Castes and Tribes of Southern India (Thurston, 1993; 32 - 44) என்ற நூலில் நெல்சன் குறிப்பிட்டதனைவிடவும் சற்று விரிவாக உள்ளது. இந்நூல் 1909ல் வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர், 'Service Relationship between Barbers and Villagers - In a Small Village in Ranpur (Nityananda Patnaik, 1960: 737 - 742) என்ற கட்டுரை வெளியானது. நெல்சன், தர்ஸ்டன் ஆகியோர் மருத்துவச் சாதி குறித்த பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளனர். பட்நாயக், மருத்துவச் சாதிக்கும் ஆதிக்கச்சாதிக்கும் உள்ள சமூகப் பொருளாதார உறவுகள்; எவ்வாறெல்லாம் அச்சாதியினர், ஆதிக்கச் சாதியினரிடம் பணிபுரியும் போது வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள்; ஒடுக்கப்படுகிறார்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்துள்ளார்.  நெல்சன், தர்ஸ்டன், பட்நாயக் ஆகியோருக்குப் பின்னர், மருத்துவச் சாதி குறித்த கட்டுரைகளோ அல்லது நூற்களோ வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், சமூக அறிவியல் அறிஞர்கள் தங்களின் ஆய்வுகளினூடே அச்சாதி குறித்துப் பலரும் பேசியுள்ளனர். பல பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர், விஸ்வநாத கண்டராதித்தன்,  ‘சோறு போடுங்காயீ' என்ற கட்டுரையினை (புதிய பார்வை 2005; 1-15) எழுதியிருக்கிறார். மருத்துவச் சாதி குறித்த பல பத்தாண்டுகள் மறதியினை இவர் ஞாபகப்படுத்தியிருக்கிறார். இந்த ஞாபகத்தில் அவர், மருத்துவச் சாதி குறித்துச் சொல்லப்படாத சில செய்திகளைக் கூறியிருக்கிறார்; அதே சமயம் சொல்லப்பட வேண்டியவற்றில், அவருக்கே மறதி ஏற்பட்டிருக்கிறது; இருப்பினும், அந்த மறதியே, நான் மருத்துவச் சாதி குறித்த வரலாற்றினை ஞாபகப்படுத்துவற்கான விதையாய் அமைந்துவிட்டது. விஸ்வநாத கண்டராதித்தன், தன் கட்டுரையின் இறுதியில், 'தன்னலமற்ற இவர்களின் வாழ்க்கை முறையை கிராமப்புற வரலாற்றில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டோமென்றால் வர இருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் கிராம முன்னோர்களின் மரபு, பண்பாடு, கலாச்சாரம் இவற்றைச் சொல்லாமல் விட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்தவர்கள் ஆகிவிடுவோம்' (24) என்று ஞாபகப்படுத்தியிருக்கிறார். நம் கிராம முன்னோர்களின் மரபு, பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் அவர் கூறியிருப்பது, மருத்துவர், வண்ணார் போன்ற சேவைச் சாதிகளுக்கும்-ஆதிக்கச் சாதிகளுக்கும் உள்ள உறவு 'அண்ணன், மாமா' உறவு என்கிறார். இந்த உறவினைக் கூறுவதன் மூலம் அவர், மருத்துவச் சாதியினர் ஆதிக்கச் சாதியினருக்குச் செய்த பணிகள் அனைத்தும் அருந்தொண்டு'; ஆதிக்கச் சாதியினருக்கும் மருத்துவச் சாதியினருக்கும் இடையேயான உறவு 'சுமூகமானது'; இதுவே, 'கிராமத்தின் உயரிய பண்பாடு' என்கிறார். ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலைக்காகப் போராடிய அம்பேத்கர், பெரியார் உட்படப் பலரும் இந்தக் கிராமக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும்; சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இவ்விடத்தில், விஸ்வநாத கண்டராதித்தனின் 'மறதியானது, கிராம அமைப்பு தகர்க்கப்பட வேண்டும், சீர்திருத்தப்படவேண்டும்' என்று மேற்கூறப்பட்டுள்ள சிந்தனையாளர்கள் கூறியது ஏன் என்ற கேள்விக்கான பதிலைத் தேட மறந்ததேயாகும். இந்நூல், மருத்துவச் சாதி மக்களின் பார்வையில், 'கிராம அமைப்பு முறையினை' அதாவது, 'ஆதிக்கச் சாதியினரை' ஆராய்கிறது; மருத்துவச் சாதியின் கடந்த கால வரலாற்றினைத் தேடுகிறது.  இந்த ஆய்வினைத் தொடங்குவதற்குப் புதுமைப்பித்தனின் 'நாசகாரக் கும்பல்' என்ற சிறுகதை ஒரு சிக்கல் நிறைந்த புள்ளியாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள்போல் இவர்கள் பெருமளவில் மதம் மாறவில்லை என்பதாலும், அவர்கள் மீதான ஒடுக்குமுறை பரந்த அளவில் பேசப்படாத காரணத்தினாலும் சிக்கலின் முடிச்சினை அவிழ்க்க வேண்டும் என்பதற்காக மருத்துவச் சாதி முதியவர்களை நாடினேன். அவர்கள் எனக்கு தாமிரவருணி ஆற்றங்கரையோரக் கிராமங்களை அடையாளப்படுத்தினர், முதலில் அக்கிராமங் களை நோக்கிப் பயணித்தேன். 'தாமிரவருணி நதிக்கரை' என்றாலே எப்பொழுதும் அது ‘ஆதிக்கத்தின் குறியீடாகவே’ இருந்து வருகிறது என்பதை உணர்ந்தேன். பின்னர் தமிழகத்தில் பல கிராமங்களுக்கும் என் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பயணங்களில் சிக்கலின் முடிச்சுகள் பிரியத்தொடங்கின; மறுபுறம் 'சவரத் தொழிலாளியாக்கப்பட்ட ஆதிமருத்துவர்களின்’ முகங்கள் எழுந்துக் கொண்டிருந்தன. அந்த முகங்கள் மனிதச் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்பவைகளாகவும், மனித உடல்களில் கை, கால், மூக்கு போன்ற பாகங்கள் துண்டான போதிலும் அதனை ஒட்ட வைத்து அந்த உடலுக்கு இயக்கம் தருபவைகளாகவும், எழுத்தறிவு மறுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு பகுத்தறிவினைப் புகுட்டுபவைகளாகவுமே தெரிந்தன. அதே சமயம் அந்த முகத்தின்மீது அசிங்கங்களை ஆதிக்கக்கூட்டத்தினர் வீசிய போது அந்த முகம் தனது சவரக்கத்தியாக்கப்பட்ட அறுவைக் கத்தியாலேயே அதனைத் தடுத்தது. ஒருவரின் முகத்தைக் கண்டு அவரின் குணத்தைப் பட்டியலிட்டுவிடும் அந்த அறிவு ததும்பும் முகங்களில் என் கண்ணுக்குப் புலப்படாத முகங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அவைகளைத் தோண்டிக் கண்டுபிடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன என நம்புகின்றேன். இருப்பினும், தற்போது நான் கண்டெடுத்த முகங்களையே, 'ஆதி மருத்துவர்: சவரத் தொழிலாளராக்கப் பட்ட வரலாறு' என்ற நூலாக தமிழ்ச் சமூகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளேன். நான் அறிந்த வரையில் மருத்துவச் சாதி குறித்த நூல் என்ற முறையில் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் இதுவே முதல் நூலாக இருக்கக்கூடும். மருத்து வச் சாதியினரைப் 'பாரம்பரிய சவரத் தொழிலாளர்கள்' என்று கூறுவதை மறுப்பதில் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான வரலாற்றினை உரிய ஆவணங்களை முன்வைத்து விவாதித்துள்ளேன்.  - கோ.ரகுபதி  இளம் ஆய்வாளர், இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி .  ஆய்விடம்: மனோன்மணியம் சுந்தரனார்   பல்கலைக்கழகம், திருநெல்வேலி மின்னஞ்சல் : ragupathi_ksc@yahoo.co.in                            நன்றி   * என்னுடைய ஆய்வு முயற்சிகளுக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்து வரும் எனது நெறியாளர் முனைவர் கா.அ.மணிக்குமார் அவர்களுக்கு பேராசிரியர் வரலாற்றுத் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) நன்றி. *இந்நூலினை வாசித்து திருத்தங்களைச் செய்ததோடு மட்டுமின்றி இந்நூல் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக வல்லினம் மகரந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு நூல் வெளியாவதற்குத் துணை நின்ற பேராசிரியர் ஆதனஞ்செயன் (துறைத்தலைவர், நாட்டார் வழக்காற்றியல் துறை, பாளையங்கோட்டை) அவர்களுக்கு நன்றி. *இந்நூலை முதலில் முழுவதுமாக வாசித்து திருத்தங்களைச் செய்த ஆய்வு மாணவி ப. சித்திரலேகா (இயற்பியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்களுக்கு நன்றி. . *மேலும், நூலை வாசித்தல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகளைச் செய்து கொடுத்த,  *பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் (தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) *விரிவுரையாளர் மணிகோ. பன்னீர் செல்வம் அவர்கள் (மனோ கல்லூரி, நாகம்பட்டி) செ. அருட்செல்வன், விரிவுரையாளர், தொடர்பியல் துறை, இரா , அருண்குமார், விரிவுரையாளர். தொடர்பியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்.  *திரு. வைகை. குமாரசாமி அவர்கள்,  * திருமதி குதனம்மாள் அவர்கள் (முன்னாள் பொறுப்பு முதல்வர், ராணி அண்ணா கல்லூரி, திருநெல்வேலி) * ந. கவிதா அவர்கள் (முதுகலை மாணவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு நன்றி. *இந்நூல் உருவாக்கத்திற்கு பல உதவிகள் செய்த விரிவுரையாளர் ச. சாமுவேல் ஆசிர்ராஜ் அவர்கள் (மேலாண்மைத் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) *இணைப் பேராசிரியர் சி.லஷ்மணன் அவர்கள் (சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை) *விரிவுரையாளர் அ.செல்லப் பெருமாள் அவர்கள் (நாட்டார் வழக்காற்றியல் துறை, பாளையங்கோட்டை) *பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் (இயற்பியல் துறை, சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை) *திரு. சின்னப்பராஜன் அவர்கள் (Senior Correspondent, UNI, மதுரை)  *விரிவுரையாளர் த.சினிமோள் அவர்கள் (மனோ கல்லூரி, சங்கரன்கோவில்) *விரிவுரையாளர் வெ. விமலா ரமணி அவர்கள் (ஆங்கிலத் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி) *ஆய்வு மாணவர்கள் ச. ஜெரோம் சாமராசு அவர்கள் (சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை) . *ஜெ. பாலசுப்பிரமணியம் அவர்கள் (சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ) *அ. ஜெகநாதன் அவர்கள், மதுரை. வா. இரத்னமாலா அவர்கள் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)  * மு. சதிஷ்குமார் அவர்கள் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கும் நன்றி. *கள ஆய்வின் போது, போராட்டம் நடந்த ஊர்களையும்; போராளிகளையும் அடையாளப்படுத்திய சொக்கலிங்கம் (74) குழந்தைவேலு (88), முத்துராசு(73), நடராசன் 73), கதிரேசன் (75), ஜெசுபாலன் 54), தங்கவேல் (47) ஆகியோருக்கு நன்றி .  * ‘அம்பட்டன் அன்றைய மருத்துவன்' என்ற என்னுடைய கட்டுரையை வெளியிட்ட புதிய கோடாங்கி, பண்டிதம் ஆகிய இதழ்களுக்கு நன்றி. * நூலுக்கான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சேகரித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ’வெள்ளாள - பார்ப்பன ஒடுக்குமுறைகளுக்கெதிராக அன்றைய மருத்துவர்களின் கலகங்கள்' என்ற தலைப்பில் வல்லினம் இதழுக்கு அனுப்பியக் கட்டுரையினை வாசித்துவிட்டு மகரந்தன் அவர்கள் அதனை வெளியிடுவதற்கு முன்வந்தார். அடித்தள மக்கள் ஆய்வுகளில் அதிக கவனம் குவித்து வரும் வல்லினம் வாயிலாக இந்நூல் வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நூலினைச் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ள அவருக்கு என் நன்றி  - கோ.ரகுபதி                                                     1. அம்பட்டர் அன்றைய மருத்துவர்   அம்பட்டர், நாவிதர், நாசுவர், பரியாரி, பண்டுவர், பண்டிதர், குடிமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் மக்களை ''பாரம்பரிய பார்பர்கள்" (traditional barber) என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 'பார்பர்' என்ற சொல் முடி வெட்டுதல், சவரம் செய்தல் ஆகிய பணிகளைச் செய்வோரைக் குறித்து நிற்கிறது. Saturday Review என்ற இதழ்,  பார்பர்கள் சவரத்தை முதன்மைத் தொழிலாகச் செய்து வாழ்பவர்களாகக் குறிப்பிடுகிறது (quoted in, The Modern Review, 1919:70). Traditional barber என்பதின் பொருள் "பாரம்பரிய சவரத் தொழிலாளிகள்” என்பதாகும். ஆனால் இதை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால்,  ’பாரம்பரியம்' வரலாற்றுக்குச் சில திறவுகோல் களைத் தரலாம், ஆனால் பாரம்பரியமே வரலாறாக இருக்காது' (1979;1)  என்கிறார் ஆட்ரே . எனவே, ’பாரம்பரியம்' என்பதற்கான இவ்விளக்கம் நாம் மேற்குறிப்பட்ட மக்களை, பார்பர்கள் எனக்குறிப்பிடுவதின் மீது, சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அவர்கள் எந்தக் காலத்திலிருந்து முடி வெட்டுதல், சவரம் செய்தல் முதலான பணிகளைச் செய்துவருகின்றனர் என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவதன் மூலம் அம்மக்களின் உண்மையான வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யமுடியும். இதனை அறிவதற்கு முடிவெட்டுதல், சவரம் செய்தல் ஆகிய வழக்கங்கள் தோன்றிய காலத்தினை முதலில் காண்போம்.  கொண்டை X மொட்டை மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்  பழித்தது ஒழித்து விடின் – என்பது வள்ளுவரின் குறளாகும் (குறள் எண் 280).  உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் என்பது இதன் பொருளாகும். தீயொழுக்கத்தைக் கடைபிடித்தவர்கள் மொட்டையடித்திருக்கலாம், சடை வளர்த்திருக்கலாம். இங்கு மழித்தலும் நீட்டலும் யாருடைய பண்பாடாக இருந்துள்ளது என்ற கேள்வி எழுகிறது. துறவிகளில் தலைமயிரை மழிப்போரும் - நீட்டிக் கொள்வோரும் உண்டு. திராவிட இனக்குழுக்களின் சாமியார்கள் தங்கள் தலைமயிரை மழித்துக் கொள்வதில்லை. இதற்கான காரணத்தினை ஆராயும் கேரள அறிஞர் மாம்மென் (K.Mammen), தலைமயிரை கத்தரித்தால் எதிர்காலத்தில் நடக்கும் செயலைக் கணிக்கிற தங்களுடைய (பூசாரி) மதிநுட்பமான சக்தி முழுவதுமாக மறைந்துவிடும் – என்னும் நம்பிக்கையே காரணம் என்கிறார். அத்துடன், புனிதமானவர்கள் தலைமயிரைக் கத்தரித்தால் இரண்டு ஆபத்துக்கள் நேரிடும்.  1) தலையிலிருக்கும் பரிசுத்த ஆவிக்கு இடைஞ்சல் ஏற்படும். 2) மயிர், கெட்ட புத்தி உள்ள மனிதர்களால் அவருக்கெதிராக  மந்திரம் செய்வதற்குப் பயன்படுத்தப்படலாம் (1942; 199) என்று மேலும் கூறுகிறார். திராவிட இனக்குழுச் சாமியாரின் பண்பாட்டிற்கெதிராக, இந்து மதத்தின் குறியீடாகக் கருதப்படும் சங்கரரின் மயிர்மழித்தல் குறித்து டி.எம்.பி மகாதேவன், சங்கரர் சன்னியாசி; ஆகவே அவர் மழித்த தலையுடையவராய் இருந்தார் (1994;9) என்கிறார். மனு. பிராமணனுக்குத் தலையை முண்டம் செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோர்க்கு உயிர்த் தண்டனையே உண்டு (2000;136)  என்கிறார் திருலோக சீதாராம். இதிலிருந்து தலைமயிர் மழிப்பதில் உள்ள திராவிட, இந்துமத ஆன்மீகவாதிகளின் நிலைப்பாடுகள் எதிரெதிர் நிலையிலிருந்ததினை அறியமுடிகிறது. இனி, பொது மக்களிடம் இருந்த 'மயிர்மழித்தல் வழக்கம்' குறித்துக் காணலாம்.  மயிலை சீனி. வேங்கடசாமி, தலைமுடியினைக் கத்தரித்துக் கொள்ளும் வழக்கம் இல்லை என்பதற்குப் பின்வருமாறு விளக்கங்கள் கொடுத்துள்ளார்.    காம்பறத் தலைசிரைத்(து) உன் கடைத்தலையிருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ்பணல் அரங்கத்தானே என்பது தொண்டரடிப் பொடி ஆழ்வார் அருளிய திருமாலை 38ஆம் பாசுரமாகும். இதில் ’தலை சிரைத்து' என்பதற்கு பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் வருமாறு: தலைமயிராகிறது தான் அபிமான ஹேதுவிறே கோமுற்றவர்(?) தண்டிக்குமிடத்தில் தலையைச் சிரைக்கிறது -  என்கிறார் மயிலையார் 2001:42).  வி.கனகசபை எழுதிய ’ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்' என்ற நூலில் தமிழர்களிடத்தில் தலைமுடியினை கத்திரித்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை என்கிறார். அதற்கு அவர், தூய தனித் தமிழரிடையே., அவர்கள் தலைமயிரை வெட்டுவ தில்லை. அதை இயற்கை வளர்ச்சியளவுக்கே வளரவிட்டனர். அல்லது ஒரு புறமாக அதில் ஒரு பெரிய முடியிட்டுக் கட்டினர். இந்தத் தலையின் முடியைக் கட்ட உயர் வகுப்பினர் பளபளப்பான நீலமணிகள் கோத்த நிறமார்ந்த இழைகளைப் பயன்படுத்தினர் என்று விளக்கம் தருகிறார். மேலும், பார்ப்பனர்கள் தம் தலைமயிரைக் குறுகத்தறித்தனர். ஆனால் தலையுச்சியில் ஒரு குடுமியை விட்டு வைத்தனர். ஒரு தமிழ்ப் புலவர் குதிரையின் தலையில் உள்ள குறுமயிருக்குப் பார்ப்பன இளைஞர் தலைமயிரை உவமை கூறியுள்ளார் (2003; 185-186)  என்கிறார். கொண்டையைக் ’குறுகக் கத்தரித்தல்' என்பது பார்ப்பனர்களின் பண்பாடாகவும், அவ்வாறு செய்யாதிருந்திருப்பது தமிழர்களின் பண்பாடாகவும் இருந்தது என்பதை மயிலை சீனி. வேங்கடசாமி , வி.கனகசபை ஆகியோரின் கூற்றுக்கள் தெளிவாக்குகின்றன.  விஜயநகர ஆட்சிக் காலத்தில் குயவர், நாவிதர், நெசவாளர்கள் போன்ற தமிழ்ச் சாதியினர் பார்ப்பனர்களைப் போல் கொண்டை வைத்துக் கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது (Ramasamy, Vijaya 1965,421). மேலும், இவர்கள் இக்காலங்களில் பார்ப்பனர்கள் பின்பற்றும் வழமைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளைப் பெற்றுள்ளனர். இதில் பார்ப்பனர்களைப் போல் கொண்டை வைப்பதற்கான உரிமையினையும் பெற்றிருக்கலாம். இவ்விடத்தில், பார்ப்பனர்களின் கொண்டையின் வடிவம் எவ்வாறு இருந்தது? என்ற கேள்வி எழுகிறது, கத்லீன் கஃப். பார்பர் சாதி ஆண்கள் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாதோரின் உடல் மயிர் மற்றும் தலையின் முன் பகுதியிலுள்ள மயிரை மாதத்திற்கு இரண்டு முறை மழித்தனர்,  பார்ப்பனரல்லாதோர் சதுரம் வடிவத்திலும் மயிர் மழித்திருந்தனர் (1981 182-3) என்று குறிப்பிடுள்ளார், இதிலிருந்து பார்ப்பனர்களின் கொண்டை வடிவத்தை தெளிவாக அறிய முடிகிறது மேலும்? விஜயநகர ஆட்சிக் காலத்தில் பார்ப்பனரல்லாதோர், ‘பார்ப்பனர்களைப் போல் கொண்டை வைத்துக் கொள்வதற்கான’ உரிமைகளைப் பெற்றிருக்கலாம் என்று மேலே குறிப்பிட்டுள்ள ‘யூகமும்’ உறுதியாகிறது. ஆனால் பார்ப்பனர்களைப் போல் அரைநிலா வடிவத்தில் அல்லாமல் சதுரம் வடிவத்தில்தான் மயிர் மழித்துக் கொள்வதற்கு அனுமதிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், பார்ப்பனரல்லாதோரைப் பொறுத்த மட்டிலும் நாம் இங்குக் கவனிக்க வேண்டியதானது, அவர்களுக்குத் தலையின் முன்பகுதியில் சிறிதளவு மயிரை மழித்துவிட்டுக் கொண்டையிட்டுக் கொள்வதற்கான வழங்கப்பட்ட உரிமையாகும். எனவே பார்ப்பனரல்லாதோர் விஜயநகர ஆட்சிக் காலத்திலிருந்துதான் மேற்கண்ட முறையில் கொண்டையிட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என உறுதிபடக் கூறலாம்,  பார்ப்பனர்கள், எந்தக் காலத்திலிருந்து தலைமயில் மழித்துவிட்டுக் கொண்டையிட்டுக் கொள்கின்ற வழமையினைப் பின்பற்றத் தொடங்கினர் என்பதைக் கூற இயலவில்லை, எனினும், பார்ப்பனரல்லாதோருக்கு முன்பிருந்தே அந்த வழமையினைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது மட்டும் உறுதி பார்ப்பனர்கள் ஏன் தங்கள் தலைமயிரை அரைநிலா வடிவத்தில் மழித்தனர் என்பது குறித்து இங்குக் காண்பது அவசியம், பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாதோர் சமூகத்தின் மீது தங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும் புதிய வழமைகளைப் பின்பற்றுவது அல்லது ஏற்கனவே பின்பற்றி வந்த வழமைகளைக் கைவிடுவது என்ற செயல்பாட்டினைக் கடைபிடித்து வந்திருப்பதை வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றுக்கு டி.என்.ஐா வின் 'பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்' என்ற நூல் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதிலிருந்து பார்ப்பனர்களின் மயிர் மழித்து கொள்ளும் வழமையினை ஆய்வு செய்தால் தமிழ்ச் சமூகத்தின் மீது தங்களின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கானக் குறியீட்டுக் செயல்பாடுகளில் ஒன்றாகவே அதனைக் கருதலாம். எனவே, தலையின் முன்பகுதியில் சிறிதளவு மயிர் மழித்தல் என்ற குறியீட்டுச் செயல்பாடு தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் நடைபெற்ற ஒரு பண்பாட்டு நிகழ்வாகும், இது, பார்ப்பனர்களுக்கு ’ஆதிக்கத்திற்கான’ச் செயல்பாடாகவும், பார்ப்பனரல்லாதோருக்கு ’சுயமரியாதைக்கான’ப் போராட்டமாகவும் இருந்திருக்கின்றன. இவ்விடத்தில், பார்ப்பனரல்லாதோர் என்ற வரையறைக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்துக் கொள்ள இயலாது. ஏனென்றால், 1930களில் தாழ்த்தப்பட்ட மக்கள் முடிவெட்டிக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்க. இதனை  பின்வரும் பகுதியில் காணலாம். மேற்கண்ட ஆய்வில் இரண்டு விடைகள் கிடைத்துள்ளன. 1) தலையின் முன்பகுதியில் சிறிதளவு மயிரை மழித்துவிட்டு கொண்டையிட்டுக் கொள்ளுதல் என்ற வழமை சமூகக் கட்டமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையானப் பண்பாட்டுச் செயல்பாடாகும். 2)பார்ப்பனர்களுக்கு ’ஆதிக்கத்திற்கானதாகவும்' பார்ப்பனரல்லாதோருக்கு 'சுயமரியாதைக்கானதாகவும்' இருந்திருக்கின்றன. அந்த செயல்பாடு. மயிர் மழிப்பதற்கென்றே ஒரு பிரிவினரையும் உற்பத்தி செய்தது.  இது, பார்ப்பனர்/மேல்சாதியினர், பார்ப்பனரல்லாதோர்/ ஒடுக்கப்பட்ட சாதியார் ஆகியோரை இனம் பிரித்துக் காண்பதற்கான பண்பாட்டுக் குறியீடாக இருந்திருக்கிறது எனலாம். இனக்குழுச் சமூகத்திலும் தலைமயிரின் அமைப்பானது, ''வேறுபட்ட இனக்குழுக்களை இனம் காண்பதற்கானக் குறியீடாக இருந்திருப்பதனை" எல்.ஏ.கிருஷ்ண ஐயர் கூறியுள்ளார் (1965;867-871) என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. எனவே, இதிலிருந்து இனக்குழு மக்களோ அல்லது நிலவுடைமைச் சமூக மக்களோ இன்று முடிவெட்டிக் கொள்வது மாதிரி அன்று முடிவெட்டிக் கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பதினை அறியலாம்.  பொதுவாக, தமிழ் மக்களிடத்தில் தலைமயிர் முழுவதையும் மழித்துக் கொள்கிற வழக்கம் உள்ளது. இறப்புச் சடங்கின் ஒரு பகுதியாக தாய்/தந்தை கணவன்/இவ்வுறவுடையோர் இறந்து விட்டால் மொட்டையடித்துக் கொள்வது மரபு. மேலும், கோயில்களுக்குச் சென்று மொட்டையடிக்கிற பண்பாடும் மக்களிடத்தில் உள்ளது. 'தெய்வக்குத்தம்', 'தண்டனை' ஆகிய காரணங்களினால் மொட்டையடித்துக் கொள்வதும் மக்களிடத்தில் காணப்படுகிறது. கோயில்களிலும், இறப்புச் சடங்குகளிலும் நாவிதச் சாதியினரே மொட்டையடிக்கும் பணியினைச் செய்து வருகின்றனர். விதவைகளின் தலைமயிரை நீக்குகின்ற வழமை மேல்சாதியினரிடத்தில் உள்ளது. மகாராட்டிராவில், பார்ப்பன விதவைகளின் தலைமயிரை பார்ப்பனர்களே மழித்துள்ளனர் (Insight, 2005 45). மொட்டையடிக்கும் வழக்கம் பார்ப்பனர்களுக்கு மனு வழங்கிய தண்டனை முறையிலிருந்து தோன்றினாலும், அயோத்திதாசர் போன்றவர்கள், இறப்புச் சடங்குகள் உட்படப் பல நிகழ்ச்சிகளில் மொட்டையடிக்கின்ற பண்பாடு சமண, பவுத்தத் துறவிகளின் தலை மயிர் நீக்கும் செயல்பாடுகளிலிருந்தேதான் (1999:444-5) தோன்றியதாகக் கூறுகிறார். இதிலிருந்து மொட்டையடிக்கும் வழக்கம் தமிழ் மக்களின் ’தொடர் செயல்பாடல்ல' என்று முடிவு செய்யலாம். முடி வெட்டுதல்  கொண்டை வைத்திருப்பதனையே வழமையாகக் கொண்டிருந்த மக்கள் இன்றைய நவீன காலத்தில் பல வடிவங்களில் முடி வெட்டிக் கொள்வதைப் பொதுவான வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மாற்றம் எக்காலத்திலிருந்து நிகழத் தொடங்கியது என்ற வரலாற்றினை இங்குக் காண்போம். கள ஆய்வில் ஈடுபட்டபோது, இன்று முடிவெட்டும் பணிகளைச் செய்து வருகிற முதியவர்களும் பல சாதியினைச் சேர்ந்த முடிவெட்டிக் கொள்ளும் முதியவர்களும் குறிப்பாக சுமார்  60 முதல் 70 வயதிற்கு மேற்பட்டோர் தங்களின் தந்தைகள். தாத்தாக்கள் கொண்டைதான் வைத்திருந்தனர் என்று தெரிவித்தனர். ஆனால், கொண்டையில் முன்பகுதியில் சிறிதளவு மயிர் மழிப்பது விஜயநகர ஆட்சிக் காலத்தில் தொடங்கியிருக்கிறது என்பதனை ஏற்கனவே பார்த்தோம். இன்றைய 'கிராப்' 'போலீசு கட்' போன்ற வடிவங்களில் முடி வெட்டிக் கொள்வதானாது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது என்பதனைக் கள ஆய்வில் அறிய முடிந்தது. காலனிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் படை மற்றும் காவல் பணியிலிருந்தவர்கள், அவர்களின் கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள், கல்வி கற்றவர்கள் ஆகியோர் தங்கள் தலைமுடியினை வெட்டிக் கொள்ளத் தொடங்கினர். இதனைப் பின்பற்றி பொது மக்களும் தங்கள் தலைமுடியினை வெட்டத் தொடங்கினர். எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது நாவலில், என்னா தோழா உன்னும் குடுமியே வெச்சிக்கின்னு?' என்று ரங்கசாமி தான் அம்மாசியை முடிவெட்டிக் கொள்வதற்கு ஒரு கடைக்குக் கூட்டிக் கொண்டு போனான். நான்கூட நாடகக்காரன் தான் தோழா. எனக்குத் தெரியாத உடுக்கடிப் பாட்டுங்க கிடையாது. நீ கம்முன் வா. பாக்கவே நல்லால்ல,  நீ காட்டுலேர்ந்து எறங்கினவம் மாதிரி கீற |  என்றும், பறக்குடிகளில் முடி வெட்டிக்கொள்வது என்றால் பாக்காங் கிழவன்தான் (2001; 99-100) என்றும் குறிப்பிட்டுள்ளார். பாக்காங் கிழவன்தான் முடிவெட்டிக் கொண்டான் என்றால், இதன் பொருள், காலனிய ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் பொருளாதாரத்தில் மேன்மையடைந்த பின்னர் முடிவெட்டிக் கொள்ளத் தொடங்கினர் என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும் இக்காலங்களில் நாடகக்காரர்களும் முடிவெட்டிக் கொள்ளத் தொடங்கினர் என்பதனையும் அறியமுடிகிறது. காலனிய ஆட்சியினாலும், முடி வெட்டிக் கொள்வதற்கான பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதனாலும் கிபி 20ம் நூற்றாண்டு முதல் முடி வெட்டிக் கொள்வதும், அதுவே ஒரு தனித்த தொழிலாகவும் மாறியது. (The Encyclopedia Americana, vol. 622) ஆனால் காலனிய ஆட்சிக் காலத்தில் அனைத்துச் சாதியினரும் முடி வெட்டிக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அச்சாதியினரின் சுயவிருப்பம் என்பதனைவிடவும் ஆதிக்கச் சாதியினரின் ’பண்பாட்டு ஆதிக்கம்' எனலாம். இதற்கு வலுவான சான்றாக 1930களில் ராமநாதபுரம் கள்ளர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த ஆண்கள் முடி வெட்டிக் கொள்ளக்கூடாது என்று தடைவிதித்திருந்ததாக ஹட்டன் குறிப்பிட்டுள்ளதனைக் கூறலாம் (ஏ.பி.வள்ளிநாயகம்,2004;11). இத்தகவலானது இக்காலத்தில்தான் கள்ளர்கள் முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடம் தருகிறது. மேலும், ராமநாதபுரம் பகுதியில் ஆதிக்கச் சாதியாக இருக்கும் கள்ளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், அவர்கள் மீது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்தவும் மேற்குறிப்பிட்ட தடைவிதியினை விதித்திருக்கலாம். இவ்விடத்தில் நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள, பார்ப்பனர்கள் போல் குயவர், நாவிதர், நெசவாளர் போன்றோர் கொண்டை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற தடையினையும் ஒப்பீடு செய்தால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோர் மீதும், கள்ளர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் செலுத்தியது பண்பாட்டு ஆதிக்கம் என்பது வெளிப்படும். ஆனால் பார்ப்பனியமயமாக்கலை மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட சாதிகள் முடிவெட்டிக் கொள்ளவும், சவரம் செய்து கொள்ளவும் தங்களுக்கென அதற்கான சாதியினை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தொண்டை மண்டலத்தில் இரண்டு கிராமங்களில் நுண் ஆய்வு மேற்கொண்ட சிவக்குமார், சித்ரா சிவக்குமார் ஆகியோர், சமசுகிருதமயமாக்கலை மேற்கொண்ட பறையர்கள் தங்களின் சவரப் பணிகளுக்காக செங்கல்பட்டிலிருந்து பார்பர் சாதியினை வரவழைத்ததாகக் (1969;277) குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னர் அவர்கள் தங்களுக்குள்ளாகவே முடியை வெட்டிக் கொண்டனர் என்கின்றனர் அவர்கள். கத்லீன் கஃப்,  பார்ப்பனரல்லாத கிராமத்தினருக்கு சேவகம் செய்த பார்பர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாரம்பரியமாக பணிபுரிய மறுத்து வந்ததினால் அவர்கள் தங்களுக்கென பார்பர் சாதிகளை ஏற்படுத்திக் கொண்டனர் (1918; 183) என்கிறார். இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்ற பகுதிக்கு சுமார் 1கிமீ. தூரத்திலிருந்து வரவழைக்கப்பட்டனர்.  முகச்சவரம்   இனி, முகச்சவரம் செய்து கொள்வது குறித்துக் காணலாம். மனித சமூகம் முகச்சவரம் செய்து கொண்ட வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு, நமக்கு அதிக அளவிலான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை, எனினும் கிடைத்திருக்கும் ஒரு சில குறிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அது ஒரு சில குறிப்புகள் என்பதனால் அல்ல, மாறாக அக்குறிப்புகளின் தன்மையினால் ஆகும். Saturday Review என்ற இதழ், உலகம் மழிப்போர் நீட்டுவோர் எனப் பிரிந்திருக்கிறது. சீனர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் மழித்துக் கொள்வோர் ஆவர். முகமதியர்கள் நீட்டிக் கொள்வோர். உலக வலராற்றிலேயே பார்பர்களால் அலெக்சாண்டரே அதிகம் பயனடைந்துள்ளார். அவருடைய இளைஞர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகமயிர்களை மழித்துக் கொள்ளச் செய்தார். அறிஞர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது (1919:70-71) என்று குறிப்பிடுகிறது. படைவீரர்கள் போராடுகிற பொழுது அவர்களின் முகமயிர் எதிரிப் படையினர் எளிதாக இழுத்துத் தாக்குவதற்கு ஏதுவாகவே இருக்கும். (இது தலைமயிருக்கும் பொருந்தும்) இன்றையச் காலங்களிலும் ஒருவர் மற்றொருவரைத் தாக்குகிற பொழுது, தலைமயிர் அல்லது முகமயிரை இறுகப்பிடித்துக் கொண்டு தாக்குவதனைக் காணலாம். எனவே, பொதுவாகப் படைவீரர்களுக்கு முகமயிர் மழிப்பது தேவையானதாக இருந்ததனால் அவர்கள் முகச்சவரம் செய்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இவ்விளக்கம் தமிழ் இந்திய படைவீரர்களுக்கும் பொருத்தமானதேயாகும். இனி, நாம் முகமயிர் மழிக்கும் வழக்கம் பொது மக்களிடத்தில் இருந்தது குறித்துக் காணலாம்.  தமிழகத்தில் கம்மாளர் சாதியினர் தங்களின் சமூக மேல் நிலையாக்கத்தின் போது, பார்ப்பனர்களைப் போல் முகச்சவரம் செய்து கொண்டதாக (1993;106) பேட் என்னும் ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளார். சமூகக் கட்டமைப்பில் பார்ப்பனர்களுக்குச் சமமாக தாங்களும் வரவேண்டும் என்று கருதிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளையே பின்பற்றினர். அவற்றுள் ஒன்றுதான் கம்மாளர்கள் முகச்சவரம் செய்து கொண்டது. மேலும் ஹட்டன், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது எடுத்த புகைப் படங்களை அந்நூலில் இணைத்துள்ளார். (பின்னிணைப்பு 1 ஐ காண்க). இப்புகைப்படங்களில் காணப்படும் மக்கள் பலரும் தலை மயிரை வெட்டவோ முகச்சவரம் செய்து கொண்டிருக்கவோ இல்லை. இன்றும் பழங்குடியினர்களாக வாழும் மக்களிடையே குறிப்பாக, நரிக்குறவர்களிடையே தலை மயிரை வெட்டுதல் மற்றும் முகம்மழித்தலை அரிதாகவே காண்கிறோம். தோடர் இன மக்கள் மிகச் சமீப காலங்களிலிருந்து தான் ஒப்பனை செய்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். (பின்னிணைப்பு 2ஐ காண்க).   இதுவரையில் நாம் விவாதித்ததிலிருந்து, தலையின் முன்புறத்தில் சிறிதளவு மயிரை மழித்துக் கொள்வதும் பார்ப்பனர்களைப் போல் கொண்டை வைத்துக் கொள்வதுமாகிய இவ்வழக்கம் விஜயநகர ஆட்சிக் காலத்திலிருந்து உருவாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். தலைமுடியை வெட்டிக் கொள்வதும், முகச்சவரம் செய்து கொள்வதும் ஆங்கிலேயர் ஆட்சியினாலும், பார்ப்பனியமயமாக்கலை முன்னெடுத்ததாலும் உருவான வழக்கங்கள் ஆகும். பார்ப்பனரல்லாத சாதிகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒப்பனைப் பண்பாட்டில் பார்ப்பனமயமாக்கலை மேற்கொண்டது ஒருபுறம் தங்களின் சமூக மரியாதைக்கான நிகழ்வாகவும், மறுபுறம் சவரத் தொழிலாளி என்று ஒரு சாதியை உருவாக்கியிருக்கிற நிகழ்வாகவும் ஆகியது. எனவே, நமக்குக் கிடைத்த தரவுகளிலிருந்து ஆராய்ந்ததில், விஜயநகர ஆட்சிக் காலத்திலிருந்துதான் சவரத் தொழிலுக்கென ஒரு தனித்த சாதி உருவாகியிருக்கிறது என நம்பலாம். இங்கு நம்மிடம் எழுகின்ற அடுத்த கேள்வியானது, இன்று சவரத் தொழில் செய்துவரும் சாதிகள் விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பணிகள் எவை? இக்கேள்விக்கான பதிலைத் தேடுவோம்.   ஆதிபட்டர்/ மருத்துவர் எட்கர் தர்ட்சன் தனது நூலில் அம்பட்டர்களின் பணிகளாக பூசை மற்றும் சடங்கு செய்தல், மருத்துவம் பார்த்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார். கள ஆய்வில், அம்பட்டர் சாதியினைச் சேர்ந்த முதியவர்கள்  நாங்கள் மனிதர்களுக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் அக்காயத்தினருகே இருக்கின்ற உரோமங்களை நீக்கிவிட்டுப் பின்னர் மருந்திட்டு குணப்படுத்தினோம். இச்செயல்பாடே எங்களைச் ‘சிரைத்தல்' தொழிலுக்குள் தள்ளிவிட்டதென்றனர். இதிலிருந்து பூசை செய்தல்; மருத்துவம்; முடிதிருத்துதல் ஆகிய தொழில்களுக்குள் நெருங்கிய உறவும் தொடர்பும் இருக்கிறது . என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த உறவினைக் காண்பதன் மூலம் இன்றைய சவரத் தொழிலாளர்கள் அன்றைய காலங்களில் செய்த பணிகள் என்ன என்பதினைக் காண முயலுவோம்.  ‘பூசாரி' என்பவர், கோயிலில் கடவுளிடம் மக்களின் குறைகளை எடுத்துக் கூறுதல், அர்ச்சனை செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு இடைத்தரகராகவே இன்றைய காலங்களில் புரிந்து கொள்ளப்படுகிறார். ஆனால் ஆதிகாலப் பூசாரிகளின் பணிகள் இன்று உள்ளது போல் இருந்திருக்கவில்லை. எனவே இங்கு ஆதிகாலப் பூசாரிகளின் சடங்குகள் குறித்துக் காண்போம். ஜார்ஜ் தாம்ஸன், மந்திரச் சடங்குகள் குறித்து,  இனக் குழுவின் மக்கள் தொகையில் நிறைய இழப்பு ஏற்பட்டு மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டால் அந்நியர் களைத் தங்கள் இனத்தில் சேர்த்துக் கொண்டு இழப்பை ஈடுகட்டுவது வழக்கமாக இருந்து வந்தது. இவ்வாறு அந்நியர் களைத் தம் இனத்தில் சேர்த்துக் கொள்ளும்போது செய்யப் படும் சடங்கு பருவமெய்தல் சடங்கு போலவே இருந்தது. அந்நியன் முதலில் இறப்பது போலவும் பின்பு தம் இன உறுப்பினனாகப் பிறப்பது போலவும் பாசாங்கு செய்வான் (2005:21),  என்கிறார்.  ஆதிகால மனிதன் தனது உணவு முதலான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு, பாவனைகள் செய்தனர்; மந்திரங்களையேப் பாடினர் என்கிறார் சட்டோபாத்யாயா. இதனைச் செய்பவர்கள் மந்திரவாதிகள் எனப்பட்டனர். மேலும் அவர்,  ஆதிகால மனிதன் தனது அனைத்துத் தேவைகளுக்கும் சடங்கு களையே செய்தான். இத்தகைய சடங்குகள் பொருள் முதல் கூறுகளைக் கொண்டிருந்தது. மேலும் மந்திரங்களைச் செய்த புராதன மந்திரவாதிகளில் இருந்து பிற்காலப் பூசாரிகள் உதித்தார்கள் (1999; 83, 52, 271) என்கிறார். இதிலிருந்து நாம் ஆதிகாலப் பூசாரிகளே மனிதர்களின் பொருட் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக இருந்துள்ளனர் என்பது தெளிவு. இனி, அப்பூசாரிகள் மனிதனுக்கு நோய் ஏற்பட்ட போது என்ன செய்தனர் என்பதை ஆராய்வோம்.  ஆதிகால மனிதர்களிடத்தில் ஒருவனுக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணம் கடவுள், பேய், பிசாசு போன்றவைகளே என்று நம்பினர். அவனுக்கு நோய் ஏற்படும் போது மருத்துவச் சடங்கே செய்யப்பட்டது (ஜார்ஜ் தாம்ஸன், 2005;21). இது குறித்து ஜார்ஜ் தாம்ஸன் பின்வருமாறு விளக்குகிறார்:  நோயாளி, ஒரு மந்திரவாதியினால் சிகிச்சை செய்யப்பட்டு, குணமடைகிறான். இந்த மந்திரவாதிக்கு மாயக்காரன், மருத்துவன், சூன்யக்காரன் அல்லது யோகி என்று பல பெயர்கள் உண்டு. மந்திரவாதி, நோயாளியின் உடம்பில் புகுந்துள்ள பேயின் பெயரை உச்சரித்து, மந்திரங்கள் சொல்லி, கடைசியில் பேயைக் கட்டுப்படுத்தி நோயாளியின் உடம்பிலிருந்து வெளியேறச் செய்கிறான். இத்தகைய மந்திரச் சடங்குகள் செய்வதன்  மூலமாக அவன் பேயை ஓட்டிவிடுகிறான் (1981;114)  என்கிறார். திராவிட மக்களிடத்தில் பூசாரி என்பதற்கான விளக்கத்தினை மாம்மென்,  பூசாரி என்ற வார்த்தை மருத்துவம், மந்திர சக்தி, பேய் விரட்டுதல் ஆகியப் பணிகளை உள்ளடக்கியதே (1942 199) என்கிறார். இந்நூல் ஆசிரியர், கள ஆய்வின் போது, தனது இளமைக் காலம் முதல் பூசை மற்றும் மருத்துவப் பணியையும் செய்துவந்த பள்ளர் சாதியைச் சார்ந்த சோலமலை என்ற பூசாரியைக் காண நேர்ந்தது (25.12.2005). தென்னிந்திய சாதிகள் குறித்த இனவரைவியல் தரவுகளைப் பதிவு செய்துள்ள எட்கர் தர்ஸ்டன் சில சாதிகள் பூசாரிகளாகவும் மந்திரவாதிகளாகவும் மருத்துவர்களாகவும் இருந்ததனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இனவரைவியல் தரவுகளைச் சேகரித்த காலத்தில் தமிழகத்தில் பறையர்களில் வள்ளுவன் எனப்படுவோர் பூசாரிகளாக இருந்துள்ளனர். மலபார், கொச்சின், திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் பறையர்கள் முழுக்க முழுக்க மந்திரவாதிகளாக இருந்திருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் பாணர், பள்ளர், அம்பட்டர் போன்ற சாதிகளைச் சேர்ந்தோர் பூசாரிகளாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, மருத்துவத்தின் ஆரம்பக் கட்டம் கடவுள், பேய் பிசாசு என்றும் அதற்குத் தீர்வு மருத்துவச் சடங்கு என்றும் கருதலாம். இன்று அம்பட்டர், பாணர், பள்ளர், பறையர் எனப்படும் சாதிகளே அன்றைய காலங்களில் பூசாரிகளாகவும், மருத்துவர்களாகவும் இருந்து அப்பணிகளைச் செய்தனர் என்பது தெளிவு. இவ்விடத்தில் இந்நூலில் மையமான ஆய்வாகச் செய்யப்படும் சாதியான அம்பட்டர்களிடத்தில், ‘அம்பட்டர்' என்பது ‘ஆதிபட்டர்’ என்பதின் திரிபு என்ற கருத்து வழக்கத்தில் இருப்பதனை இங்குக் குறிப்பிடலாம். ‘ஆதிபட்டர்’ என்ற பெயர், ‘அம்பட்டர்களே ஆதிபூசாரிகள்', 'ஆதி மருத்துவர்கள்' என்று கருதுவதற்கு இடம் தருகிறது. மேலும், உலக அளவிலும் மருத்துவத்தினைச் சமயத் துறவிகளே செய்திருக்கின்றனர் (Das Mohan, 1929: 164-165). இதற்கு நேர்மாறாக பார்ப்பனப் பூசாரிகள் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். இவர்கள் மருத்துவம் செய்திருக்கவில்லை, அதனைப் புறக்கணித்தனர். (Dharmatheertha, 2004). ஆனால் பவுத்தத் துறவிகள் மருத்துவம் செய்தலை, அச்சமயத்தின் கொள்கையாகக் கொண்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம், பவுத்த சமயமும், அம்பட்டர், பாணர், பறையர், பள்ளர் போன்ற சாதிகளைச் சேர்ந்த பூசாரிகளும் ஒத்த கருத்துடையவர்களாகவும், இவர்களுக்கெதிரான கருத்துடையவர்களாக பார்ப்பனப் பூசாரிகள் இருந்திருக்கின்றனர் என்பதனை அறியலாம் (Baber, Zaheer, 1998,48)  கடவுள் பேய் போன்றவற்றிற்கும் அப்பாற்பட்டு அன்றைய மனிதர்களுக்கு நோய் ஏற்பட்ட போது அதனைத் தீர்ப்பதற்கான மருத்துவர்கள் ஆதிகால மருத்துவர்களான பூசாரிகளிடமிருந்தே தோன்றியிருக்க வேண்டும். காலரா, அம்மை நோய் போன்றவற்றிற்கு மக்கள் கடவுளையும், பூசாரிகளையுமே நாடினர். ஆனால் வெட்டுக்காயங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் குணப்படுத்துவதற்கு அதற் குரிய முறைகள் தேவையாயிருந்தன. வெட்டுக் காயங்கள், எலும்பு முறிவு போன்றவை பெரும்பாலும் போர்கள் நடைபெறுகின்ற சமயத்தில்தான் ஏற்பட்டிருக்கும். இதனைக் குணப்படுத்துவதற்கான முறையினை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஆரம்பக்கால மருத்துவர்களான பூசாரிகளே ஈடுபட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தது குறித்து பண்டைய வரலாற்றறி ஞரான, டி.டி.கோசாம்பி,  போரில் அல்லது நோயில் மூக்கிழந்தோருக்கு மாற்று மூக்குகள் வைத்து ஒட்டுறுப்பு அறுவை முறை, சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய , நாவிதரின் கண்டுபிடிப்பே (1989; 32), என்று கூறுகிறார். அன்றைய மருத்துவர் - பூசாரியான அம்பட்டர் / நாவிதர்கள் மருத்துவத்தினை ஆரம்பகாலக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றுள்ளனர். கன்னியாகுமரி உட்பட பல பகுதிகளில் சாணார் எனப்படும் நாடார்கள் எலும்பு முறிவு சிகிச்சை செய்தனர்; செய்துவருகின்றனர். பவுத்தர்களின் காலத்தில்தான் அறுவை சிகிச்சையானது மெய்யான அறிவியலோடு முதன் முதலில் தோன்றி வளர்ச்சியடைந்ததாக (1929; 263) வாட்ஸ் குறிப்பிடுகிறார். மேலும் நாவிதர் சமூகத்தினைச் சேர்ந்த உபாலி என்பவர் பவுத்தச் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார் (டி.டி.கோசாம்பி, 1989,199, சட்டோபாத்யாயா,1999;138). பவுத்தச் சமயத்தோடு ஒத்த கருத்தினைக் கொண்டிருந்த ஆதிபட்டர்கள் அச்சமயத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை முறையினைக் கண்டுபிடித்திருக்கலாம்.  மருத்துவ சிகிச்சையில் அச்சிகிச்சையின் தேவைக்காக மயிர் மழித்தலும் அவசியமாய் இருந்துள்ளது. பண்டையக் காலங்களில் அறுவை சிகிச்சைப் பயிற்சியின் போது உரோமம் உள்ள தோலில் பயிற்சி பெறுவதும் ஒன்றாகும் (Krishnamurthy, 1956: 566). இவ்விடத்தில் அறுவை சிகிச்சையின் போது மயிர்மழிக்கின்ற முறையே பிற்காலத்தில் நாவிதர்களை சவரத் தொழிலுக்குள் தள்ளியதாக அம்மக்களிடம் உள்ள வாய்மொழி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்மாற்றத்திற்கான சமூக அரசியல் காரணிகளைக் கடந்தகால வரலாற்றுப் பின்னணியிலிருந்து இரண்டாம் இயலில் காணலாம். மேலே நாம் விவாதித்ததிலிருந்து ஆதிகாலப் பூசாரிகள் மருத்துவர்களாக இருந்ததுடன், அவர்களிடத்திலிருந்தே அறுவை சிகிச்சையாளர்களும் தோன்றியுள்ளனர் என்பதை அறிந்து கொள்கிறோம். இந்த அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டதிலும் அதன் வளர்ச்சியிலும் பார்ப்பனர் உட்பட இதர மேல்சாதியினர்களுக்கு எந்தவித பங்கும் இருந்திருக்கவில்லை. இதற்கான காரணத்தினை சட்டோபாத்யாயா,  உடலை முதன்மைப்படுத்தியதால்தான் தந்திரர் ரசவாதம், ரசாயனம் (வேதியியல்) போன்ற அறிவியல்களை வளர்க்க முடிந்தது. வைதிகர் தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை. பிணங்களை வைத்துக் கீழ்ச் சாதியாரே அறுத்து ஆராய்ந்தார்கள். இதை மேல்சாதியார் தீட்டாகக் கருதியதால் ஒதுங்கினார்கள். தவிர தந்திரரின் 'சவ சாதனா' மனித உடல் பற்றி அவர்கள் அறிய உதவியது. இன்றும்கூட (1959) பிணத்தைத் தொட மேல்சாதியார் மறுப்பதால் அறிவியலை மறுக்கிறார்கள் (1999;80-81) என்கிறார். பார்ப்பனர்கள் கண்டிப்பாக மருத்துவத்தில் ஈடுபடக் கூடாது என்ற விதிகளும் இருக்கின்றன. மேலும் பார்ப்பனச் சட்டங்கள், மருத்துவர்களை விபச்சாரிகளைவிடவும் இழிவானவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், மதிப்பற்றவர்களாகவும் கருதுகின்றன (Chattopadhyaya, 1978:29-31) என்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் நாம் மேல்சாதியர்களுக்கு மருத்துவ அறிவு அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை அறிவு கிடையாது எனலாம். இன்றைய காலங்களிலும் மேல் சாதியினர் தனது சாதியின் புனிதம் காரணமாக அவர்கள் மருந்து தயாரிப்பதில் எலும்புகளைத் தீண்டுவதில்லை. இதற்கு மிகச் சமீபத்திய சான்று, ஹரிதுவாரில் உள்ள திவ்யா என்ற மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேல்சாதியினர் தனது சாதியின் காரணமாக எலும்புகளைத் தொட மறுத்ததனால் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கதாகும் (The 4 Hindu, 8. 01.06:9).  மருத்துவத்தின் ஆரம்பக் கட்டமான மருத்துவச் சடங்கில் தொடங்கி அறுவை சிகிச்சை கண்டுபிடித்தல் வரை ஒடுக்கப்பட்ட சாதிகளான அம்பட்டர், பாணர், பறையர், பள்ளர், நாடார் போன்ற சாதிகளின் பங்கே முக்கியமானது. எனவே, நாம் இச்சாதியினரைத் தமிழ்ச் சமூக மருத்துவத்தின் முன்னோடிகள் எனலாம். இவ்விடத்தில் 'மருத்துவக் கண்டுபிடிப்பிற்கு வித்திட்டவர்கள் மேற்கூறப்பட்ட சாதிகளின் ஆண்களா? அல்லது பெண்களா?' என்ற கேள்வி முக்கியமானதாகும். ஆதிகாலத்தில் சடங்குகளைப் பெண்களே முன்நின்று நடத்தினர் (சட்டோபாத்யாயா, 1999; 7) என்பதன் மூலம் அவர்களே அன்று மருத்துவமும் செய்தனர் என்பது வெளிப்படுகிறது. இன்றும் கிராமங்களில் ’பாட்டி வைத்தியம்’ என்ற பெயர் புழக்கத்தில் இருப்பதே அன்று பெண்களே மருத்துவம் செய்தனர் என்பதற்கு எடுத்துக் காட்டாகும். மேலும் ஒடுக்கப்பட்ட பள்ளர், பறையர் போன்ற சாதிகளில் அப்பெண்களே தங்கள் சாதியினருக்குப் பிரசவம் பார்த்துக் கொண்டதும், பார்ப்பதும், இடைநிலைச் சாதிகள் மற்றும் மேல் சாதியினருக்கு அம்பட்டப் பெண்களும் பாணர் பெண்களும் பிரசவம் (தர்ட்ஸன் எட்கர், 1909; 29-42) பார்த்தனர், பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் பிரசவம் பார்ப்பதில் சுகாதார மையத்தினைச் சேர்ந்த பெண்களோடு அம்பட்டர் பெண்களும் இணைந்து அப்பணிகளைச் செய்து வருகின்றனர் (கள ஆய்வு, உசிலம் பட்டி). அம்பட்டர் சாதிப் பெண்கள் இன்றும் பல கிராமங்களில் பிரசவம் பார்த்து வருவது என்பது, ஆதிகாலத்தில் மருத்துவத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்து இன்று வரையில் தக்கவைத் துள்ளதின் எச்சமாகும்.  எனவே பூசாரிகளே ஆதிகால மருத்துவர் ஆவார். ஆனால், இன்று மருத்துவத் தொழிலை இழந்துவிட்டனர். பல கிராமங்களில் பூசாரிகளிடம் அவர்கள் அன்று மருத்துவம் செய்ததற்கான சில எச்சங்கள் நிலவுகின்றன. கிராமக் கோயில் கொடை விழாக்களின் போது சாமியாடியிடம், (இவர்கள் பெரும்பாலும் அக்கோயில் பூசாரிகளாக இருப்பர்) கொடைவிழாவில் பங்கேற்கின்ற மக்கள் தனது நோய் உட்படப் பல குறைகளைக் கூறும் பொழுது பூசாரி ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அக்குறை தீர்ந்துவிடும் என்று கூறுவார். இதனால் குறைகேட்பவர் சற்று ஆறுதலடைவார். மேலும் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அதற்குக் காரணம் கடவுள், பேய், பிசாசு ஆகியவையே என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது (Rizvi, 1991;179 - 188). இத்தகைய நம்பிக்கை ஏற்பட்டால் நோயாளியின் உறவினர்கள், நோயாளியை பூசாரியிடம் அல்லது மந்திரவாதியிடம் அழைத்துச் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது. இதற்குத் தமிழ் மக்களிடம் புழக்கத்திலுள்ள ’நோய்க்கும் பார், பேய்க்கும் பார்' என்ற பழமொழியே சாட்சியாகும். நோய்க்குப் பார்க்கும் மருத்துவர்கள் இன்று பொருள் முதல் கூறுகளைக் கொண்டவர்களாகவும், பேய்க்குப் பார்க்கும் பூசாரிகள் கருத்து முதல் கூறுகளைக் கொண்டவர்களாகவும் மாறிவிட்டனர். தமிழ் மக்கள் இன்று நோய்க்கு மருத்துவர்களிடமும், பேய்க்கு பூசாரிகளிடமும் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர்.  இந்த இயல் முழுவதும் நம் ஆய்விலிருந்து கிடைக்கும் விடைகளானது, 1) ஆதிகால இப்பூசாரிகளே மருத்துவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இதனை அம்பட்டர்கள் மட்டுமின்றி பாணர், பறையர், பள்ளர், நாடார் போன்றோரும் செய்திருக்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சையினைக் கண்டுபிடித்ததும், அதனை வளர்த்ததும் அம்பட்டர்கள் என்னும் அன்றைய மருத்துவர்கள் ஆவர். இவர்களுக்கு சமண பவுத்த மதங்கள், அதற்கான அடித்தளத்தினை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.  2) பார்ப்பனியமயமாக்கலை மேற்கொண்ட சாதிகளினால் மருத்துவச் சாதிகளிடத்திலிருந்து, அதுவும் குறிப்பாக அம்பட்டர்களிடமிருந்து சவரத் தொழிலாளர்கள் உருவாகி யிருக்கின்றனர். இனி நாம் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட அம்பட்டர்கள் எந்தக் காலத்தில் சவரத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர் என்பதனை அடுத்த இயலில் ஆராயலாம்.                                                 2. சவரத் தொழிலாளியாக்கப்பட்ட வரலாறு   நாம் கடந்த இயலில் இன்று சவரத் தொழில் செய்துவரும் சாதியினர் கடந்த காலங்களில் மருத்துவம் செய்து வந்தனர் என்பதனைக் கண்டோம். இப்பகுதியில் அச்சாதியினரிடமிருந்து மருத்துவத் தொழில் அபகரிக்கப்பட்ட வரலாற்றினைக் காண்போம். இதனை அறிந்து கொள்வதற்கான புள்ளியினை மருத்துவ சாதியினரிடம் மிருந்தே தொடங்குவோம். கள ஆய்வில் தரவுகள் சேகரித்த போது, மருத்துவச் சாதி முதியவர்கள் பெரும் பாலானோர் இரண்டு வாய்மொழி வரலாற்றினை முன்வைத்தனர்.  1. மனிதனுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ அந்த வெட்டுக் காயம் அல்லது புண் குணமாவதற்கு அதனைச் சுற்றியிருக்கும் உரோமங்களை நீக்கிவிட்டுப், பின்னர் அதில் மருந்திட்டுக் குணப்படுத்தி வந்தோம். இந்த மயிர் மழிக்கும் முறை பிற்காலத் தில் எங்களைச் சவரத் தொழிலுக்குள் தள்ளியது. 2. அக்காலத்தில் எங்களுக்கும் (மருத்துவர்கள்) ஆன்மீகவாதிகளுக்கும் இடையே போட்டி நிலவியது. நாங்கள், மக்களுக்கு உண்டாகும் நோய்களை அதிகப் பொருட் செலவின்றி மிக எளிமையாகக் குணப்படுத்தி வந்தோம். ஆனால் ஆன்மீகவாதிகள் மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்குக் கடவுள், சாஸ்திரம் என்று கூறி அதற்கு அதிகப் பொருட்களையும் மக்களிடமிருந்து வசூலித்தனர். இதனால் மக்கள் ஆன்மீகவாதிகளிடம் மருத்துவம் செய்வதனைக் குறைத்துக் கொண்டனர். இது, அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது கடும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதுவே எங்களுக்கிடையேயான போட்டிக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகவாதிகளுக்கு எங்கள் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது, எங்களை ஒழிக்கத் திட்டமிட்டனர். இச்சூழலில் அரசன் ஒருவனுக்குத் தீராத நோய் ஏற்பட்டது. நாங்கள் அவருக்குத் தொடர்ச்சியாக மருத்துவம் செய்து வந்தோம். ஆனால், ஆன்மீகவாதிகள், அரசனைச் சந்தித்துச் 'சில மந்திரங்களை உச்சரித்து வந்தால் உங்கள் நோய் குணமாகும்' என்றனர். அரசன் அதனையும் செய்தார். எங்களின் சித்த மருந்து மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தது. இக்காலத்தில் அவர் மந்திரமும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் நோய் குணமானது. இதற்குக் காரணம் ஆன்மீக வாதிகளின் மந்திரம் தான் என்று நம்பி, ஆன்மீகவாதிகளின் வேண்டுகோளை ஏற்று அரசன் எங்களை (மருத்துவர்கள்) எண்ணெய்ப் பாத்திரத்தில் போட்டுப் பொசுக்கினான், கழுவிலேற்றிக்கொன்றான். இதற்குப் பயந்து பலர் சைவத்துக்குச் சென்றனர்" இவை அம்மக்களிடம் உள்ள வாய்வழிச் செய்திகளாகும்.  இங்கே, அந்த ஆன்மீகவாதிகள் யார்? என்ற கேள்வி எழுகிறது. அந்த ஆன்மீகவாதிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையேயான போட்டி என்பது அவ்விருவரும் வேறு வேறு மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதனைப் புலப்படுத்துகிறது. மேலும், அவர்களை ஆன்மீகவாதிகள் என்று கூறுவதன் மூலம், இவர்கள் சார்ந்திருந்த மதம் பொருள்முதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதும் தெளிவு. இத்தரவில் உள்ள 'கழுவேற்றினர்' என்ற வார்த்தை அந்தப் பொருள்முதல்வாதிகள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான திறவு கோலையும் தருகிறது. மருத்துவச் சாதி மக்களிடத்தில் இருக்கும் மேற்கூறப்பட்ட வரலாறானது தமிழகத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்ட வரலாற்றுடன் முழுமையாகப் பொருந்தி நிற்கிறது. அபகரித்தலின் முதல் கட்டம் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் வேதாரண்யத்தில் தங்கியிருந்த சமயம், பாண்டிய நாட்டில் சமண இருள் சூழ்ந்திருந்தது; மங்கையர்க்கரசி மட்டும் சைவ நெறியைப் பின்பற்றியிருந்தார் என்கிறது பெரியபுராணம். இந்நிலையில் பாண்டிய அரசன் கூன்பாண்டியனை வெப்பு நோய் தாக்கியதால், சமணர்கள் அவருக்கு மருத்துவம் செய்து வந்தனர். இச்சமயத்தில் சைவர்கள் மங்கையர்க் கரசியின் உதவியுடன் "சதிச் செயலில்” ஈடுபட்டு கூன்பாண்டியனைத் தங்களின்பால் இழுத்து, பின்னர் சமணர்களைக் கழுவேற்றினர்.  (2000,457-477). சமணர்களைப் படுகொலை செய்வதற்கு மருத்துவம் காரணமாக இருந்திருப்பதனைப் பெரியபுராணம் கூறுகிறது. இதே வரலாற்றினைத்தான் மருத்துவச் சாதியினரும் தாங்கள் வீழ்த்தப்பட்டதற்குரிய காரணமாகக் கூறுகின்றனர். தமிழ்ச் சமூக அமைப்பில் சைவத்தால் வளர்க்கப்பட்டதே சித்த மருத்துவம் என்று கூறப்பட்டு வருகிறது. அறிவியலான சித்த மருத்துவத்திற்கும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சைவசித்தாந்தத்திற்கும் நட்புறவு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. இது குறித்து தேவ. பேரின்பன்,  சைவசித்தாந்துக்கும் - சித்த மருத்துவத்துக்கும் எந்த தத்துவத் தொடர்பும் இல்லை. சித்த மருத்துவத்தின் இயல்பு சைவ சித்தாந்தத்தின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்துவிடவில்லை (2005; 14) என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கதே.  ஆதிகால மருத்துவர்களான பூசாரிகளின் மருத்துவச் சடங்கில் பொருள்முதவாதக் கூறுகளே நிரம்பியுள்ளன என்கிறார்கள் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, ஜார்ஜ் தாம்சன் போன்ற அறிஞர்கள். மருத்துவத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஆதிகாலப் பூசாரி மருத்துவர்களே வித்திட்டிருக்க முடியும். இவர்கள், மருத்துவத்தில் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் பொருள்முதல்வாதிகளோடுதான் இயல்பாகவே இணைந்திருக்கமுடியும்; கருத்துமுதல்வாதத்தை அடிப்படை யாகக் கொண்ட சைவத்தோடு இணைந்திருக்க முடியாது. இவாட்ஸ், முதன்முதலில் பவுத்த காலத்தில்தான் மருத்துவம் அறிவியல் பூர்வமான வளர்ச்சியடைந்தது என்கிறார் (1929;262). சுந்தரி மோகன்தாஸ், இருபதாம் நூற்றாண்டின் செவிலித்தாய்கள் பவுத்த செவிலித் தாய்களையே பின்பற்றி இருப்பதாகக் கூறுகிறார் (1929,164) மேலும் டிபானர்ஜி, கே.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலரும் மருத்துவத்தின் வரலாற்றினை ஆயுர்வேதத்திலிருந்து எடுத்துக் கூறினாலும் பல ஆதாரங்களை பவுத்தத்திலிருந்துதான் முன் வைக்கின்றனர். அறுவை சிகிச்சை முறையானது பவுத்தக்காலத்தில்தான் வளர்ச்சியடைந்ததுள்ளது (Krishnamurthy, 1966:563) டிடிகோசாம்பி, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை முறை நாவிதரின் கண்டுபிடிப்பு என்கிறார். (1989;32) மேலும் அவர், பவுத்த சங்கத் தலைவர்களின் மரபு வரிசையில் முதல் இடத்தைப் பெற்றவர் உபாலி. அவர் சங்கத்திற்குள் சேர்வதற்கு முன்பு, சாதியில் தாழ்ந்த நாவிதராக இருந்தவர். ஆனால், அவர் சாக்கியர் என்பதும் கிட்டத்தட்ட உறுதி என்கிறார். (1989;199). டிபானர்ஜி, பவுத்த காலத்தில் "சமூக மருத்துவம்” இருந்ததாகக் கூறுகிறார் (1974; 1333). 'சமூக மருத்துவம்' என்பது சமண பவுத்தர்களின் "அரசியல் பொருளாதாரத்திற்கானது அல்ல” என்பது வெளிப்படுகிறது. மருத்துவச் சாதியினரிடம் உள்ள தாங்கள் மக்களுக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையாக மருத்துவம் செய்துவந்தோம் என்ற   வாய்மொழி வரலாறானது சமண-பவுத்தத்தின் சமூக மருத்துவத்தோடு பொருந்திச் செல்கிறது. எனவே, மருத்துவ சாதியினரிடத்தில் இருக்கின்ற வாய்மொழி வரலாறு பல கோணங்களிலும் சமண - பவுத்தத்தோடு ஒருநிலைப்பட்டுச் செல்வதானது, மருத்துவச் சாதியினர் சமண பவுத்தக் காலத்தில் அவர்களோடுதான் ஐக்கியப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த ஐக்கியம், சமண - பவுத்த சமயங்கள் அறிவியல் அடிப்படையிலான மருத்துவ வளர்ச்சிக்கு அளித்துவந்த முக்கியத்துவத்தினால் உருவாகியிருக்கலாம்.  ஆன்மீகவாதிகளான சைவர்கள், வைணவர்கள், வைதீகர்கள் ஆகியோர் தமிழகத்தில் சமணர்களை "மொத்தம் மொத்தமாக” கழுவிலேற்றி கொடூரப் படுகொலைகள் செய்தனர் என்பதிலிருந்து, அவர்கள் பிரதானமாக சமண மருத்துவர்களைக் கொன்றொழித்துள்ளனர் என்பது பெரியபுராணத்திலிருந்து தெரிய வருகிறது. இந்த  ‘மொத்தப் படுகொலைக்கு' அஞ்சிய சமண மருத்துவர்கள் சைவத்தில் இணைந்தனர்; பலர் சவரத் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதுவே, வரலாற்றில் மருத்துவச் சாதியின் மீது நடத்தப்பட்ட முதல் ஒடுக்கு முறையாகும். சைவ-வைணவ - வைதீகர்களால் மொத்தப் படுகொலை செய்யப்பட்ட சமண மருத்துவச் சாதியினர் எந்தக் காலம் முதல் சவரம் செய்யத் தொடங்கினர்? முதலில் யாருக்குச் சவரம் செய்தனர்? என்பது கேள்விக்குரியது. மருத்துவர்களை சவரத் தொழிலுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளிய சைவ - வைணவ-வைதீகர்கள் தங்களுக்கு மயிர் மழிக்கும் பணியைச் செய்ய வைத்திருக்கலாம். அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே தங்கள் தலையில் சிறிய பகுதியை மழித்திருந்தனர். எனவே சவரத் தொழிலுக்குள் திணிக்கப்பட்ட மருத்துவர்கள், முதலில் பார்ப்பனர்களுக்கு மயிர் மழிக்கும் பணியைச் செய்திருக்கலாம்.  அபகரித்திலின் இரண்டாம் கட்டம் சைவ-வைணவ - வைதீகர்கள் அனைத்து மருத்துவர்களையும் உடனடியாக சவரத்தொழிலுக்குள் புகுத்தியிருக்கவில்லை. மருத்துவர்கள், மருத்துவப் பணியோடு மயிர்மழித்தல் பணியையும் இணைத்தே செய்துவந்துள்ளனர். ஏனென்றால், மருத்துவம் செய்வதில், மயிர் மழித்தலும் அவசியமானதாக இருந்துள்ளது; இருக்கிறது. ஆனால் அம்மருத்துவர்கள், மருத்துவர், மயிர் மழிப்போர் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், திருவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் (வெள்ளாளர்கள்) குறித்து ஆய்வு செய்த கமலா கணேஷ், மருத்துவர்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது குறித்து,  எந்த பார்பர் குடும்பமும் உள்நாட்டு மருத்துவத்தில் நிபுணராகிக் கொள்ளலாம், ஆனால் ஒரு முறை அம்மருத்துவத்தில் நிபுணரான பின்னர் பார்பர் தொழிலினை செய்யக்கூடாது, அது தாழ்வு (1972;70)  என்று பதிவு செய்துள்ளார். இதிலிருந்து, சைவ வெள்ளாளர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கோட்டைப் பிள்ளை சாதியினர், சமூக மருத்துவர்களை, ’மருத்துவர்’ என்றும் ’மயிர்மழிப்பவர்’ என்றும் இரண்டாகப் பிரித்துள்ளனர் என்பது தெளிவு. மருத்துவர்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காலத்தினை கமலா கணேஷ் குறிப்பிடவில்லை. மருத்துவர்களை, மருத்துவர்; மயிர்மழிப்பவர் என்று இரண்டாகப் பிரித்ததில், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைகளுக்கு இருந்த அதே சிந்தனை ஆங்கிலேயர்களுக்கும் இருந்திருக்கிறது. இனி அந்த வரலாற்றினைக் காண்போம். பார்பர்கள் உலக அளவில் மருத்துவத்தில் குறிப்பாக அறுவை சிகிச்சையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இதனால் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் படிப்படியான அங்கீகாரத்தினைப் பெற்றனர். 1505ம் ஆண்டு பாரீஸ் பல்கலைக்கழகம் பார்பர் - சர்ஜன்களைப் பேராசிரியர்களாக நியமனம் செய்தது. இங்கிலாந்தில் 1540ல் பார்பர்கள் அறுவை சிகிச்சையாளர்கள் சங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர். ஆனால் நடைமுறையில் முடி வெட்டுதலையும் சவரம் செய்தலையும் செய்துவந்த பார்பர்கள் அறுவை சிகிச்சைப் பணி செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. பிரான்சில் 1743ம் ஆண்டிலும், இங்கிலாந்தில் 1745ம் ஆண்டிலும் அறுவை சிகிச்சையாளர்கள் பார்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். 1800ம் ஆண்டில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து மேற்கூறப்பட்ட பிரித்தல் இறுதியாக நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர் பார்பர்கள் முடிவெட்டும் தொழிலை மட்டும் செய்யத் துவங்கினர். (The Encylopedia of Americana, vol. 3, 225 ) மருத்துவர்களை இரண்டாகப் பிரித்து ஒருவரை மருத்துவராகவும் மற்றொருவரை சவரத் தொழிலாளியாகவும் மாற்றிய வரலாற்றில் இந்திய மேல் சாதியின் மூளையும் வெள்ளையர்களின் மூளையும் ஒன்றாகவே சிந்தித்திருக்கிறது. இனி, நாம் தமிழக வரலாறுக்குள் செல்வோம். இறுதிக் கட்டம் சமூக மருத்துவர்கள் மருத்துவப் பணியிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்ட சூழல் காலனியக் காலத்திலிருந்து தொடங்குகிறது. தொழிற் புரட்சியானது நிலவுடைமைச் சமூக பொருளாதார அரசியல் மீது மட்டுமின்றி மக்கள் சுகாதாரத்தின் மீதும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியது (Banerji, 1978,925). எனவே தொழிற்புரட்சி தோற்றுவித்த நோய்களைக் குணப்படுத்த மேலைநாட்டு மருத்துவம் மிகவேகமாக வளர்ந்தது. இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டத்தின் அடிப்படையில் 1830களிலிருந்து அலோபதி மருத்துவப் பயிற்சியளிக்கப்பட்டது. 183ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்கப்பட்டது (Caplan, Lionel, 1977; 200. இக்கல்லூரியிலிருந்து பயிற்சி பெற்ற மேல்நாட்டவரும் உள்நாட்டவரும் மக்களுக்கு மருத்துவம் செய்தனர். ஆனால் இந்திய மருத்துவத் துறைகளில் மேல்தட்டுப் பதவிகளை பிரிட்டிஷ் மருத்துவர்களே வகித்தனர் (Jeffery, Roger, 1978, 102). இவர்களின் மருத்துவத் தொழிலானது இராணுவம், ஆட்சிப் பணி அதிகாரிகள், ஐரோப்பிய வணிகர்கள் போன்ற மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே கிடைத்தது (Banerji., 1978;926). கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைகளை மருத்துவச் சாதியினைச் சேர்ந்த ‘தாதிகள்' எனப்பட்ட பெண் மருத்துவர்களும், வைத்தியர்கள் எனப்பட்ட மருத்துவச் சாதி ஆண்களும் பார்த்தனர் (KrishnSwami 1947; 424). மருத்துவச் சாதி பெண் மருத்துவர்களையும் பயிற்சி யளிக்கப்பட்ட பெண் மருத்துவர்களையும் இணைத்துப் பிரசவம் பணிகளை மேம்படுத்துவதற்காக 1923ம் ஆண்டு காலனியாட்சியாளர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் மருத்துவச் சாதி ஆண்களை மருத்துவப் பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை. காலனியாட்சியாளர்களின் மேற்குறிப்பிட்ட முயற்சியானது பயிற்சியளிப்பதற்கான போதிய வசதியின்மையின் காரணமாகத் தோல்வியிலேயே முடிந்தது. (மேலது, பக்.425). இதன் பின்னர் 1924ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்குவதற்காக, மீண்டும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன (Muraleedharan, 1987,323-334). ஆங்கிலேயர்களின் இம்முயற்சியானது மருத்துவச் சாதியின் மருத்துவப் பணிகள் மீது பாதிப்பினை ஏற்படுத்த ஆரம்பித்தது. அதாவது, ஆங்கிலேயர்கள் தொடங்கிய மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவச் சாதியினர் மீது ஆதிக்கம் செலுத்திவந்த ஆதிக்கச் சாதியினரே பயின்றனர். விவசாயத்தினைப் பிராதானத் தொழிலாகக் கொண்டிருந்த சித்பவன் பார்ப்பனர்களில் 335% மருத்துவத் துறைக்குச் சென்றனர். (Patterson, 1970387). சென்னை நகரத்தில் மட்டும் கிறித்தவர்கள் அவர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானோர் (disproportionate) செவிலியர், மருத்துவர் மற்றும் ஆசிரியைப் பணிக்குச் சென்றனர் என்கிறார் பதர்கார் (quoted in Caplan, Lionel, 1977; 206) மருத்துவச் சாதியினர் மேல் சாதியினரும் அல்ல குறிப்பிடத்தகுந்த அளவிற்குக் கிறித்துவத்திற்கு மாறியவர்களும் அல்ல. எனவே, அவர்கள் காலனியாட்சியாளர்களின் மருத்துவக் கல்வியினைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், இக்காலங்களில் மருத்துவச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் போராடி வந்த பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் சித்த மருத்துவத்தினைப் பாதுகாப்பதற்காகக் கடும் போராட்டங்களை நடத்தியதோடு மட்டுமல்லாமல், மருத்துவச் சாதியினர் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஆகவே, மருத்துவச் சாதியினர் ஆங்கிலேய மருத்துவக் கல்வியினைக் கற்றுக்கொள்ளவில்லை.  காலனிய அரசு தனக்கு விசுவாசமான இந்தியர்களை உருவாக்குவதற்குத் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களுக்கு மருத்துவக் கல்வியும் வழங்கியது. காலனிய வெளியேற்றத்திற்குப் பின்னர் மேற்கத்தியக் கல்வி கற்றோரே அதிகாரத்தினையும் கைப்பற்றினர் (Banerji, 1978;926). இந்த மேட்டுக்குடி வர்க்கம் இந்திய அரசாங்கத்தைச் செயல்படுத்துவதில் காலனிய நிர்வாக முறைகளையே பின்பற்றியது; இது மருத்துவத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது (மேலது). இருப்பினும் இந்த ஆளும் வர்க்கம் உள்நாட்டு மருத்துவச் சாதிப் பெண்களைச் செவிலித்தாய்களாக மாற்றுவதற்குப் பல முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்நாட்டு மருத்துவச் சாதிப் பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் திட்டத்திற்குக் குறைந்த எண்ணிக்கையிலான மாநிலங்களே முன்னுரிமை கொடுத்தன. மேலும் அத்திட்டத்தினைப் புறக்கணித்த மாநிலங்களும் உண்டு. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திர பிரதேஷ், ஆந்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ் மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் பார்வையிடப்பட்டன. ஹிமாச்சல் பிரதேஷ், உத்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ் மற்றும் பீகாரில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஹிமாச்சல் பிரதோஷத்தில் மட்டும் இப்பயிற்சி அளிக்கப்பட்டது, ஆனால் அது மருத்துவச் சாதிப்பெண்களுக்கு இல்லை (Brey, 1971:41-52). ஆனால் யூனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்புகளின் சுகாதாரத் திட்டத்திற்கான கூட்டுக் குழுவானது 197ம் ஆண்டு 70% பிரசவங்கள் உள்நாட்டு மருத்துவச் சாதிப்பெண்களால் பார்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. (மேலது, 45-46). மேலும் மருத்துவச் சாதி ஆண்களின் பல பணிகளிலும் மருத்துவத்தன்மை இணைந்தே இருந்தது என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து நாம், காலனிய ஆட்சிக்குப் பிந்தையக் காலத்திலும் உள்நாட்டு மருத்துச் சாதியினரின் மருத்துவத் தொழில் முற்றாக ஒழிந்துவிடவில்லை என்பதனை புரிந்து கொள்ளலாம்.  இப்பின்னணியில் நாம் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வோம். சென்னையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தினை இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் 31.08.1981ல் திறந்து வைத்தார். அப்போது அவர்,  ’இந்தியாவில் ஓராண்டிற்கு 14,000 மருத்துவர்களும், 9,000 செவிலித்தாய்களும் படித்துப் பட்டம் பெறுகிறார்கள். ஆனால் செவிலித்தாய்களின் தேவையானது மருத்துவர்களின் எண்ணிக்கையிலிருந்து மூன்று மடங்கு ஆகும் (Thomas, 1989;2782) என்றார். மருத்துவச் சாதிப் பெண்கள் 70% பிரசவங்களைப் பார்க்கிற சூழல் நிலவிக் கொண்டிருக்கையில், இவ்விழாவில் மருத்துவச் சாதிப்பெண்களைச் செவிலித்தாய்களாகப் பயிற்சியளிப்பது குறித்து எதுவும் யாராலும் பேசப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். இவ்விடத்தில், பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் ஆரம்ப காலங்களில் கல்லூரியின் முதல்வர்களாவும், பேராசிரியர்களாகவும் மருத்துவச் சாதியினரே பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களிடம் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மாணவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் மீண்டும் மருத்துவச் சாதியினருக்கு அங்கு பேராசிரியர் உட்பட இதர பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. (மேலைநாடுகளிலும் இவ்வாறு நடந்துள்ளது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்திக் கொள்க) ஆனால் இந்த ஆளும் வர்க்கங்களின் மருத்துவச் சாதியினர் மீதான கரிசனம் எவ்வாறு இருந்தது என்பதனை அறிந்து கொள்வதற்கு 18.08.1960ல் தமிழக சட்டமன்ற கேள்வி - பதில்களை இங்கு முன்வைப்போம். சட்டமன்ற நிகழ்வு 156கே. எஸ்எம் அண்ணாமலை: கனம் பொது மராமத்து அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் அளிப்பாரா  அ) சர்க்கார் உத்திரவு எண் 1953 (ஹரிஜன் வெல்பர்) தேதி 9 6-1960ன் படி சலவைத் தொழிலாளி, க்ஷவரத் தொழிலாளிகளுக்குத் (?) தரப்படுகின்ற உதவிகள் மற்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமா? ஆ) அப்படியானால், எப்போது? மாண்புமிகு பிகண்ணன்: (அ) மற்றும் (ஆ) இத்திட்டம் சேலம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து சேலம் மாவட்டத்தின் அதன் வெற்றியைக் கவனித்த பின்னர் கவனத்தில் கொள்ளப்படும். கே.- எஸ்.எம் அண்ணாமலை: இந்த சலவைத் தொழிலாளர்களுக்கும், க்ஷவரத் தொழிலாளர்களுக்கும் என்ன சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? மாண்புமிகு பிகண்ணன்: சலூன் வைத்துள்ளவர்களுக்கு ஒரு சலூனுக்கு ரூ.250 வீதம் கொடுக்கப்படுகிறது. சலவைத் தொழிலாளர்கள் லாண்டரி வைத்திருந்தால் ஒரு லாண்டரிக்கு ரூ150 வீதம் கொடுக்கப்படுகிறது. டெயிலரிங் ஷாப் வைத்துநடத்துகிறவர்களுக்கு ரூ.400 கொடுக்கப்படுகிறது. இக்கேள்வி பதிலானது மருத்துவச் சமூகத்தினரைச் சவரத் தொழிலாளிகளாக மாற்றுவதிலே அதிகக்கவனம் செலுத்தியுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. காலனிய ஆட்சிக் காலம் தொடங்கி சுதந்திர இந்திய அரசுகளின் ஆட்சிக்காலமான இன்று வரை, உள்நாட்டு மருத்துவச் சாதியினரை மருத்துவர்களாக மாற்றுவதற்குத் திட்டவட்டமான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. சமண பவுத்தக் காலத்திற்குப் பின்னர் மருத்துவம் அதிகாரம் சார்ந்ததாகவும், பொருளாதாரத்தைக் குவிக்கின்ற தொழிலாகவும் மாறியது. அன்று முதல் காலனிய ஆட்சிக் காலம், அதன் பின்னர் சுதந்திர இந்தியா எனப் படிப்படியாக மருத்துவத் தொழில் மருத்துவச் சாதியிடமிருந்து அபகரிக்கப்பட்டு விட்டது. இவ்விடத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முதலாளியச் சமூகம் குறித்து கூறியிருப்பதனை நினைவு கூறலாம். இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்குமுரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும், வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது  கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது (1975:46) எனக் கூறியுள்ளனர். நாம் இவ்வாறு கூறலாம், இந்தியச் சாதிமுறை உள்நாட்டு மருத்துவர்களைக் கூலியுழைப்பாளர்களாகக்கூட மாற்றாமல், மாறாக அவர்களிடமிருந்து மருத்துவ அறிவையும் - தொழிலையும் அபகரித்துவிட்டது *.   * அழுத்தம் ஆசிரியருடையது                    3. சமூக உறவு :அன்றும் இன்றும்   தமிழக நிலவுடைமைச் சமூக அமைப்பில் பல்வேறு சேவைச் சாதிகள் இருந்தன. அச்சாதிகளுள் மருத்துவப் பணிகளை அம்பட்டர், நாவிதர், நாசுவர், குடிமகன், பரியாரி, பண்டுவர், பண்டிதர் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட அழைக்கப்பட்டுவரும் சாதிகளைச் சேர்ந்தோர் (இனி மருத்துவர்கள்) செய்தனர். ஆனால் இவர்கள் ஆதிக்கச் சாதியினரால் ’டாக்டர்’, ’மருத்துவர்’ என்று அழைக்கப்படவில்லை. மருத்துவர்கள் தனது இருப்பிடத்திலிருந்து கொண்டே மருத்துவப் பணியைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆதிக்கச் சாதியினரால்  “ஊர்க்குடிமகன்" என்று தேர்வு செய்யப்பட்டவரே மருத்துவம் உட்பட பல பணிகளைச் செய்துவந்தார். இவர் தனித்தும், தன்னுடைய உறவினர்களோடு இணைந்தும் ஊராருக்குச் சேவை செய்தார். மருத்துவச் சாதியில் மருத்துவத்தினை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களும் இருந்தனர். இனி, ஊர்க் குடிமகன் தேர்வு முறை, அவரது பணிகள் - கூலி போன்றவை குறித்துக் காணலாம். இங்கு இடைநிலை - மேல்நிலைச் சாதிகளை ’ஆதிக்கச் சாதியினர்' என்று வகைப்படுத்திக் கொள்வோம். இடைநிலை - மேல்நிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்த மருத்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களான பள்ளர், பறையர்களைத்தீண்டத்தகாதவர்களாகக் கருதி அவர்களுக்குச் சேவகம் செய்ய மறுத்தனர். அதே சமயம் பள்ளர், பறையர் ஆகிய சாதியினர் தங்களுக்குச் சேவகம் செய்துவந்த சாதிகள் மீது ஆதிக்கம் செலுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென சேவகம் செய்த மருத்துவச் சாதியிலிருந்து பள்ளர்   பறையர்களை ஆய்வு செய்தால் அவர்களும் ’ஆதிக்கச் சாதியினரே'. பள்ளர் - பறையருக்குச் சேவகம் செய்ய மறுத்த மருத்துவச் சாதியின் உறவு முரண்களைத் தனியாக ஆய்வு செய்வோம். இப்பகுதியில் இடை மேல்நிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்த மருத்துவச் சாதிகள் குறித்துக் காணலாம். இவர்கள் செய்த செய்துவரும் சேவகத்தினை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, மருத்துவம் சார்ந்தது. இரண்டாவது சடங்கியல் தொடர்பானது, மூன்றாவது ஒப்பனையாகும். இன்று கிராமப்புற கட்டமைப்பு சிதைந்துள்ளதால் நிலமானியக் காலத்தில் ஆதிக்கச் சாதிகளுடன் அவர்கள் கொண்டிருந்த சமூகப் பொருளாதார உறவுகளையும், இன்றைய காலங்களில் நிலவுகின்ற உறவுகளையும் தனித்தனியாகக் காண்போம். முதலில் நிலமானியக் கால உறவுகளைக் காண்போம்.  குடிமகன் நியமனம் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் இரண்டு மூன்று குடும்பங்கள் முதல் அதிகபட்சம் 10/15 குடும்பங்கள் வரையில் மருத்துவர்கள் வசித்து வந்தனர் (Gough, Kathleen, 1981;20) இவர்களின் வசிப்பிடங்கள் ’அம்பட்டர் தெரு', 'நாசுவக் குடி’ முதலிய பெயர்களில் அழைக்கப்பட்டன. இது, ஆதிக்கச் சாதியினரின் வசிப்பிடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவகம் செய்த பரியாரிகளின் வீடுகளும், தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடத்திலிருந்து சற்றுத் தொலைவில்தான் அமைந்திருந்தது (Beteille, Andre, 1971; 38). கிராமங்களில் இவர்களுடைய மக்கள் தொகை எண்ணிக்கையானது, அவர்கள் எச்சாதியினருக்குச் சேவகம் செய்கின்றனரோ அச்சாதியினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதாவது ஆதிக்கச் சாதியினருக்குப் பணிவிடைகள் செய்கின்ற அளவுக்கு அமைந்திருந்தது. இவர்களின் எண்ணிக்கை போதாமையாக இருந்தால் ஆதிக்கச் சாதியினர் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்தனர்.  திருநெல்வேலி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒவ்வொரு சாதிக்கென்று வெள்ளாள நாவிதர், மறநாவிதர், இடைநாவிதர் என்று தனித்தனியாகச் சேவகம் செய்தனர்; செய்கின்றனர். இதர மாவட்டங்களில் மேல்நிலைச் சாதி - இடைநிலைச் சாதி தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்குத் தனித்தனியாக மூன்று பிரிவான மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் பெரும்பாலான பணிகள் அனைத்துச் சாதிகளுக்கும் பொதுவாகவும் சில பகுதிகளில் வேறுபட்டும் இருக்கின்றன. மருத்துவர்கள் கிராமத்திற்குப் பொதுவாகவும், சில குடும்பங்களுக்கு மட்டுமாகவும் சேவைகள் செய்தனர். ஊருக்குப் பொதுவாகச் சேவகம் செய்யும் மருத்துவர்  “குடிமகன்" எனப்பட்டார். "குடிமகன்" பணியினைப் பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்தினர் அல்லது அவரது நெருங்கிய ரத்த உறவு கொண்ட குடும்பத்தினர் செய்தனர். அப்பணி பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வந்தபோதிலும், அப்பணியை அம்மருத்துவர் தன்னுடைய 'சுயவிருப்பத்தின்’ அடிப்படையில்தான் செய்கிறார் என்பதை வெளிக்காட்டுவதற்கு, ஆதிக்கச் சாதியினர் ஆண்டில் ஒருநாள் கூடி, கடந்த காலத்திய சாதக பாதகங்களை எடுத்துரைக்குமாறு அம்மருத்துவரிடம் கூறுவர். அவரும் கூறுவார். பின்னர், இந்த ஆண்டு உனக்கு இவ்வளவு கூலி, இவை இவை தரப்படும்' என்று ஆதிக்கச் சாதியினர் பட்டியலிட்டுக் கூறுவர். அம்மருத்துவர் அதற்கும், 'சரி, இந்த ஆண்டும் நான் பணி செய்கிறேன்' என்று கூறுவார். இவ்வாறு தேர்வு செய்யப்படும், ஊர்க் குடிமகன் தனது வீட்டில் சமையல் செய்யமாட்டார்; அது அவருடைய சுயவிருப்பம் அல்ல. அவர் சேவகம் செய்கின்ற ஆதிக்கச் சாதியினர் வீடுகளில்தான் சோறு வாங்குவார். இது 'ஊர்ச் சோறு' எனப்படும். குடிமகனாகப் பணிசெய்பவருக்குக் குறைந்த தானியமும், குறைந்த கூலியும் கொடுத்து, அதனை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான, அதாவது அவருடைய உழைப்பினைச் சுரண்டுவதற்கான ஒரு ஏற்பாடே ஊர்ச் சோறு கொடுத்தலாகும். ஊர்க்குடிமகன் தேர்வு செய்யப்படுவதில் ஒரு சனநாயகக் கூறு. இருப்பதாக வெளிப்புறத்தில் தெரியும். ஆனால், அம்மருத்துவரால் ஆதிக்கச் சாதியினரின் முன்னிலையில் அவர்களுடைய நல்ல - கெட்ட செயல்களை வெளிப்படையாகக் கூறமுடியாது; அவ்வாறு ஆதிக்கச் சாதியினரில் ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் அவர் மீண்டும் தாக்குதலுக்குள்ளாவார். குடிமகன் தேர்வு என்பது நடைமுறையில், அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் அமைவதில்லை. குடிமகன் தேர்வில், 'ஆதிக்கச் சாதியினரின் விருப்பமே', 'மருத்துவர்களின் விருப்பம்'; மருத்துவர் ஒப்புதல் கொடுத்தார் என்பதைவிடவும், பலர் முன்னிலையில் ஒப்புதலைப் பிடுங்கினர் என்றே கூறலாம். இந்த ’ஒப்புதலைப் பிடுங்கிய' செயலினை மேல்நிலை - இடைநிலை - தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் அனைவருமே செய்தனர். ஆனால் பல ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கென மருத்துவச் சாதியினரைக் கொண்டிருக்கவில்லை என்பதனையும் நினைவுபடுத்திக் கொள்க.   1) நேரடி மருத்துவம்  நிலமானியச் சமூக அமைப்பில் மருத்துவத் தொழிலினைப் பெரும்பாலும் அம்பட்டர், நாவிதர், நாசுவர், குடிமகன், பரியாரி, பண்டுவர், பண்டிதர் என்று அழைக்கப்பட்டவர்களே செய்தனர். அவர்களுள், மருத்துவத்தினை மட்டுமே செய்தோரும் உண்டு; சடங்கு மற்றும் சவரத் தொழிலுடன் மருத்துவத்தினையும் சேர்த்துச் செய்தோரும் உண்டு. இப்பிரிவினரே எண்ணிக்கையில் அதிகமானவர்கள். மருத்துவத்தினை, நோய்களுக்கு மருந்துகள் கொடுத்து நீக்குதல்: கடவுளுக்குப் பரிகாரங்கள் செய்வது போன்ற முறைகளால் செய்தனர். மருந்துப் பொருட்களை அவர்களே உற்பத்தி செய்தனர், பிற சாதியினர் அதனைத் தயாரித்துக் கொடுப்பதும் உண்டு. (Kumar, Dharma, 1987,380). தமிழகத்தில் பறையர், வள்ளுவப் பறையர்கள் போன்ற சாதியினர் மருந்து தயாரித்துக் கொடுத்துள்ளனர் (சொக்கலிங்கம், 74).  ’மருத்துவச்சி' என்று அழைக்கப்படும் மருத்துவச் சாதிப் பெண்கள் தாங்கள் சேவகம் செய்கின்ற மேல்சாதியினர் குடும்பங்களில் பின்வரும் பணிகளைச் செய்தனர்: 1. ’பூப்பெய்தும்’ இளம் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்குத்  தேவையான உணவுப் பொருட்களைத் தயாரித்துக் கொடுத்தல், 2. 'கருவுற்றிருக்கும்’ பெண்களுக்குக் கரு ஆரோக்கியமாக வளர்ச்சியடைவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், 3. பிரசவம் பார்த்தல், குழந்தைக்குச் சங்கு மூலம் பால் ஊற்றுதல், 4. பிரசவமடைந்த நாளிலிருந்து தாய் தினமும் குளிப்பதற்குத் தேவையான வேம்பு, நொச்சி, ஆடாதோடா போன்ற மருத்துவக் குணமுள்ள இலைகளைத் தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்துக் குளிப்பதற்குக் கொடுத்தல். 5. அப்பெண்கள் குளித்து முடித்ததும் நல்லமிளகு அரைத்து கொடுத்தல். 6. குழந்தையைப் பாதுகாத்தல் போன்ற பணிகளைத் தொடர்ந்து சில மாதங்கள் செய்தனர். இப்பணிகளின் நோக்கம் தாய்க்கும் சேய்க்கும் நோய் வராமல் தடுப்பதே ஆகும். (தகவல்: பத்மாதேவி (58), ஞானசுந்தரி (54)).  மருத்துவச் சமூக ஆண்கள் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்தவப் பணிகளைச் செய்தனர். சில நோய்களுக்குக் காரணம் பேய், பிசாசு போன்வற்றின் தாக்கம் என்று கருதினால், அதனை விரட்டும் சடங்கினையும் இவர்கள் செய்தனர். இவர்கள் மருத்துவம் செய்கின்ற போது நோயாளியும் அவரது குடும்பத்தாரும், அவர்கள் ஆதிக்கச் சாதியினராக இருந்தபோதிலும், மருத்துவர்கள் என்ன சொல்கின்றனரோ அதனைக் கேட்கவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே மக்களிடத்தில் எத்தைச் சொல்வானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி   என்ற பழமொழியும் புழக்கத்திற்கு வந்தது. மருத்துவச் சாதியினர் ஆதிக்கச் சாதியினருக்கு மேற்கண்ட மருந்துவங்களை நோயாளி - மருத்துவன் என்று நிலையில் செய்ததால், அதனை நேரடி மருத்துவம் என்று வரையறுத்துக் கொள்வோம். இந்த நேரடி மருத்துவப் பணிக்கு ஆதிக்கச் சாதியினர் தங்களுடைய பொருளாதார வசதிக்கேற்ப உடனடியாக மருத்துவர்களுக்குக் கூலி கொடுத்தனர்.    2) சடங்கு - மருத்துவம்   சடங்கியல் பணிகளை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை இன்ப-துன்ப நிகழ்ச்சிகளில் நிகழ்த்தப்பட்டவை / நிகழ்த்தப்படுபவை. இந்நிகழ்ச்சிகளின் போது, மருத்துவச் சாதியினர் தாங்கள் சேவகம் செய்கிற வீட்டிற்குச் சில நாட்களுக்கு முன்னரே வந்து, அங்கேயே தங்கியிருந்து பின்வரும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பது நடைமுறைகளாகும். சில சடங்குகள் மருத்துவச் சோதனைகளுக்காகவே செய்யப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. 2.1) பூப்பு - திருமணம்   1) ஒரு குடும்பத்தில் பெண் பருவமடைந்ததும் அச்செய்தியினை  அப்பெண்ணின் உறவினர்களுக்கு தெரிவித்தல். 2) இதற்கான சடங்கு நிகழ்ச்சியின் போது பார்ப்பனருக்கு உதவியாய் இருத்தல் 3) ஒரு குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதும் அச்செய்தியினை வெற்றிலை பாக்குடன் திருமண வீட்டாரின் உறவினர்களுக்குத் தெரிவித்தல் 4) திருமணத்தின் போது பந்தல்கால் நடுதல்; ஏனைய சில சடங்குகளைச் செய்தல், சடங்கு செய்கின்ற பார்ப்பனருக்கு உதவியாக இருத்தல். ஆனால், மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் முத்தரையர், கள்ளர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளின் திருமண வீட்டில் மருத்துவச் சாதியினருக்கு எந்த விதப் பங்கும் இல்லை. திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் - சேலம் - மாவட்டங்களில் ஆதிக்கச் சாதியினரின் திருமண நிகழ்வுகளில் பார்ப்பனருக்கு உதவியாக இருந்து பணியாற்றுவார், பார்ப்பனரின்றித் தான் மட்டுமே இருந்தும் மணச் சடங்குகளைச் செய்வர் (Thurston Edgar, 1993,34, Ghurey G.3.1994:1-2, 27, தூபே 1996 08, சுப்பிரமணியன், 1997:48 - 50)  5) திருமணத்தின் போது, மணமகனுக்கு ’மாப்பிள்ளைச் சவரம் செய்தல்' என்ற பெயரில் மணமகனின் அந்தரங்கப் பகுதியிலிருக்கும் மயிரை மழிக்கின்ற சமயத்தில் மணமகனின் உடல் ஆரோக்கியம் சோதனை செய்யப்படும். இது மாப்பிள்ளைச் சவரம் எனப்படும் (விசுவநாத கண்டாராதித்தன், 2005, 22). மருத்துவச் சாதிப் பெண்கள் மணப்பெண்ணுக்குச் சேலை கட்டிவிடுவது போல், அப்பெண்ணின் உடல் ஆரோக்கியத்தினை அறிந்து கொள்வார் (சிவக்குமார், சித்ரா சிவக்குமார், 1979: 2771). மேலும் மணப்பெண்ணின் 'கூச்ச சுபாவமும்’ அறிந்து கொள்வதற்கு சேலை கட்டிவிடுகின்ற சடங்கு நிகழ்த்தப்பட்டது. கூச்ச சுபாவத்தினை அறிந்து கொள்வதன் மூலம் அப்பெண் கணவனுக்கு அடங்கி நடப்பவளா? இல்லையா? என்பதும் அறியப்படும் (ஞானசுந்தரி, (54), 05062005). மாப்பிள்ளைச் சவரமும், சேலை கட்டிவிடுதலும் சடங்கு என்ற அடிப்படையிலேயே உடல் ஆரோக்கியத்தைச் (physical normalcy) சோதனை செய்யவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. 6) திருமண நிகழ்ச்சியன்று திருமணக் குடும்பம் மற்றும் அக்குடும்பத்தினரின் உறவினர்களுக்குக் கால் கழுவுதல் (Patnaik, Nityananda, 1960;739-741), விருந்தினர்கள் உண்ட பின்னர் எச்சில் இலைகளை எடுத்தல் (Shama K.L, 197373), அவர்கள் அமர்ந்து விருந்துண்ட இடத்தினைச் சுத்தம் செய்தல் (சி.சுப்பிரமணியன், 1997;48) விருந்தின் போது உறவினர்கள் கைகழுவுவதற்குத் தண்ணீர் கொடுத்தல் : 7) மங்கலச் சங்கு ஊதுதல் (கள ஆய்வு , 01.05.05), சீர் வரிசைப் பொருட்களை சுமந்து செல்லுதல் (Patnaik, Nityananda, 1960739 741) 8) இன்ப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் மேளம் வாசித்தல் 9) திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமகனின் கையில் கட்டப்பட்டிருக்கும் மஞ்சள் கயிற்றை அறுத்தல் (தொபரமசிவன், 1997; 120).  திருமண நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர், மணமகன் அல்லது மணமகளுக்கு முறையே சவரம் செய்தல், சேலை கட்டுதல் என்னும் சேவைகள், மறைமுகமாகச் செய்யப்பட்ட மருத்துவச் சோதனைகளே ஆகும். எனவே, இதனை மறைமுக மருத்துவம் என்று கூறலாம். இப்பணிகளுக்கெனப் புத்தாடைகள், தேங்காய்-பழம் போன்றவற்றுடன் சிறிதளவு பணமும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களின் மணமகன் மற்றும் மணமகளின் உடல் ஆரோக்கியத்தினைச் சோதனை செய்தல், பிரசவம் பார்த்தல் உட்பட இதர நேரடி மற்றும் மறைமுக மருத்துவத்தினை தாங்களாகவே செய்து கொண்டனர் என்பது கள ஆய்வில் தெரியவந்தது.  2.2) இறப்பு 1) இறப்புச் செய்தியினை உறவினர்களுக்குத் தெரிவித்தல் 2) குழிவெட்டுதலுக்கான ஏற்பாடுகளைச் செய்தல் 3) ஆண் பிணத்தை ஆணும், பெண் பிணத்தை பெண்ணும் Gornuun. Gigou (Kolenda, Pauline, 1991:80) 4) இறப்புச் சடங்கினைப் பார்ப்பனரின்றித் தானே செய்தல் மற்றும் சாவுச் சங்கு ஊதுதல்  5) பிணத்திற்குச் சவரம் செய்தல்  6) இறந்தவரின் வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் தலைமயிர் மழித்தல் 7) பிணம் எரித்தல் - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிணம் எரிப்பதற்குக் கட்டை அடுக்குதல், அதை மண் வைத்துப் பூசுதல் உட்பட அனைத்துப் பணிகளையும் மேல்நிலை - இடை நிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்த - செய்கின்ற மருத்துவச் சாதியினரே செய்கின்றனர். விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் மேற்குறிப்பட்ட பணிகளைத் தொட்டி என்ற சாதியினரோடு இணைந்தும் செய்கின்றனர். 8) சவச் சடங்கு முடிந்த பின்னர் சில நாட்கள் கழித்து மேலும் சில சடங்கு செய்தல். நற்குடி வெள்ளாளர் என்ற சமுதாய மக்களிடம் கருமாதிச் சடங்கில் மருத்துவச் சாதியினர் ஒருசிறு துணிக்குடில் அமைத்து அதன் முன்பு புரோகிதர் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மந்திரம் சொல்வர் நாராயன் பிள்ளை , 1997; 165). இறப்புச் சடங்கு முடிந்த பின்னர், இறப்புச் சடங்கில் குழிவெட்டுதல் முதல் பல பணிகளைச் செய்தவர்களுக்கான கூலி மருத்துவர் மூலமே கொடுக்கப்பட்டது. இப்பணத்தைக் கிராமத்தில் உள்ள முதியவர் அல்லது நாட்டாண்மை போன்றோர்கள் 'இழவு வீட்டில்' (இறப்பு நடந்த வீடு) தலைகீழாகப் போடப்பட்ட உரலில் அமர்ந்து கொண்டு, பணம் வாங்கும் மருத்துவரின் முகத்தைப் பார்க்காமல் தனது இடதுகையால் கொடுப்பார். இடது கையால் பணம் கொடுப்பது என்பது இழவு வீட்டில் மட்டுமே உள்ள நடைமுறையாகும் (தகவல்: பத்மாதேவி, 29.01.05, திநாராயன பிள்ளை, 1997:162). இதில், மருத்துவர்களுக்கு எதுவும் கூலியாகக் கொடுக்கப்படுவதில்லை. இறப்புச் சடங்கில் பிணத்திற்கு அவரது உறவினர்கள் ’வாய்க்கரிசி' போடுகிற பொழுது வாய்க்கரிசிப் பெட்டியில், சில்லறை போடுவார்கள் இதனை மருத்துவர் எடுத்துக் கொள்ளலாம். மேல்நிலைச் சாதியினர் 16ம் நாளன்று தங்கள் வீட்டின் முற்றத்தில் இறப்புச் சடங்கு செய்யும் போது, விரிக்கப்படும் 'மாத்து' துணியில் (இத்துணி சடங்கு செய்யும் மருத்துவச் சாதியார் விரிப்பது வழமை) இறந்தவரின் உறவினர்கள் சில்லறைக் காசுகள் போடுவார்கள். இக்காசுகளை மருத்துவச் சாதியினர் எடுத்துக் கொள்ளலாம். நற்குடி வெள்ளாளர்களிடத்தில், சவத்தை பாடையிலேற்றிக் கொண்டு செல்லுகிற போது, உறவினர்கள் வீட்டுக்கு முன் நிறுத்தி மருத்துவச் சாதியினருக்கு மரக்காலில் நெல் வழங்கப்படும். நெல் இல்லாதவர்கள் பணம் கொடுப்பார்கள் (தி நாராயண பிள்ளை , 1997;162) சங்கு ஊதுதல்: பல சாதியினர் தங்களின் இன்ப-துன்ப நிகழ்ச்சிகளின் போது சங்கு ஊவதுவற்குத் தடை இருந்தது, இத்தடை விஜயநகர ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டு சங்கு ஊதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. (Ramasamy Vijaya 1985;435) இதிலிருந்து மருத்துவச் சாதியினர் பல ஆதிக்கச் சாதியினருக்கு விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர் மங்கலச் சங்கு, இறப்புச் சங்கு ஆகியன ஊதியிருக்கவில்லை. 3) ஒப்பனை 1) மாதம் ஒன்று இரண்டு முறைகள் முகச் சவரம் செய்தல் : சவரம் செய்து கொள்பவர் தானியம் வழங்கும் அளவிற்கேற்பவே ஒருமுறையோ/இருமுறையோ சவரம் செய்யப்படும் (Gough, Kathleen, 1981:182-3, Srinivas, 1996:45) மாதம் ஒருமுறை தலை மயிர் கத்தரித்தல். சவரம் செய்தல் ஆகியவற்றை ஒவ்வாத நாட்கள் எனக்கருதப்படும் தினங்களில் செய்து கொள்வது கிடையாது. (மேலது) 2) மாதமாதம் அந்தரங்க மயிர் மழித்தல்: இது, மழிப்பவரையும் மழிக்கப்படுபவரையும் தவிர பிற யாரும் அறியாதவாறு மிக ரகசியமாகவே செய்யப்படும். மேல் சாதியினரில் இருபாலருக்கும் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இடைநிலை - தாழ்த்தப்பட்ட சாதிகளிடத்தில் இவ்வழமை இருந்ததாகத் தெரியவில்லை.  3) கை மற்றும் கால் நகங்களை வெட்டுதல் : இப்பணிகள் பெரும்பாலும் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளின் அருகேயுள்ள, மரத்தடி அல்லது மருத்துவரின் வீட்டின் பின்புறம், அல்லது ஆதிக்கச் சாதியினரின் வீட்டின் கொல்லைப்புறம் போன்ற இடங்களில்தான் நடந்தன. சவரப் பணிகளுக்கான கூலி உடனே வழங்கப்படவில்லை. குழந்தைக்கு மொட்டை அடிக்கும் சடங்கில் கூலியாக ரூ.2, துண்டு, தேங்காய் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது (Ganesh, Kamala, 1992:70). மேற்கூறப்பட்ட பல பணிகள் சடங்குகளாகவே செய்யப்பட்டுள்ளன. சடங்குகள் செய்கிற பொழுது மருத்துவர்கள் கூறும் கட்டளையை ஏற்றுக் கொண்டு அதனை அமுல்படுத்துவர் ஆதிக்கச் சாதியினர். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவருக்குத்தான் பாதகம் உண்டாகும் என்ற நம்பிக்கை இருப்பதனால், சடங்கு செய்கின்ற சமயத்தில் மருத்துவர் கூறுவதை ஆதிக்கச் சாதியினர் கேட்டாக வேண்டும். சாதி எண்ணிக்கையிலும் பொருளாதாரத்திலும் வலுவற்ற மருத்துவர்கள் கூறுவதைப் பெரும் கூட்டமான ஆதிக்கச் சாதியினர் ஏற்றுச் செயல்படுவதன் காரணமாகவே "குலத்தில் சிறியவன், கூட்டத்தில் பெரியவன்” என்றொரு பழமொழி வழங்கத் தொடங்கியது (தகவல் ஞா. ஸ்டீபென்). கொத்தடிமை முறை  ஊர்க் குடிமகன் என்ற பெயரில் பணி செய்கின்ற மருத்துவச் சாதியினருக்கு அளிக்கப்பட்டிருந்த மானிய நிலம் (Maclean, 1987:166 -8), ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வழங்கப்படும் தானியங்கள், அவ்வப்பொழுது செய்யப்படும் சில சடங்கு நிகழ்ச்சியின் போது மருத்துவர்களுக்குக் கிடைக்கும் சில்லறைகள், தினமும் இரவு நேரங்களில் 'ஊர்ச் சோறு’ எடுத்தல் போன்றவை அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்தனவா? என்ற கேள்விக்குக் கள்ள ஆய்வில் பதில் கிடைக்கவில்லை. பிறப்பு - இறப்பு - பூப்பு - திருமணம் போன்ற சடங்குகளில் வழங்கப்படும் கூலி கிராமத்திற்குக் கிராமும், ஒரே கிராமத்தில் குடும்பத்திற்குக் குடும்பமும் வேறுபடும். டிடிகோசாம்பி, ஒவ்வொரு தொழில் வகையிலும் ஒரு குடியை மட்டுமே ஒரு கிராமம் வைத்துக் காப்பாற்ற முடியும் (1989; 37). -  என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி.  …..வண்ணார், நாவிதர் போன்ற ஏவலாளர்களும் ஊராரின் இக்குறைந்த பங்கிலேயே தங்கள் வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய வேண்டியதாய் இருந்தது (1995;39)   என்கிறார். இதன்மூலம், மருத்துவச் சாதியினர் கிராம வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிக்குள்ளேதான் வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. மானிய நிலங்கள் இடைநிலைச் சாதியினருக்குச் சேவகம் செய்துவந்த மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. நிலவுடைமைக் கட்டமைப்பில் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்த இவர்கள் சமூகத்தில் இழிவாகக் கருதப்பட்டனர். எட்கர் தர்ட்ஸன் அம்பட்டர் புனிதமற்றவராகக் கருதப்பட்டதாகக் கூறுகிறார் (1993; 39) ஆதிக்கச் சாதியினர் வெளியில் செல்கிற பொழுது மருத்துவர்கள் எதிரே வருவதுகூடக்கெட்ட சகுனமென்று நம்பினர்; அவர்கள் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்தனர். பார்ப்பனர்கள், - மருத்துவர்களிடமும் அறுவை சிகிச்சை செய்பவர்களிடமும் உணவு வாங்கி உண்ணக் கூடாதென்று வஸிஷ்டர், கெளதமர் மற்றும் மனு முதலானவர்களின் சட்டங்கள் கூறுகின்றன (Chattopadhyaya, 1978;29). மருத்துவர்களின் தொடுதல் மேல்சாதியினரை அசுத்தப்படுத்துவது குறித்து எம்.எஸ், சீனிவாஸ் பின்வருமாறு கூறியுள்ளார், சவரத்தொழிலாளர் மற்றும் சலவைத் தொழிலாளர்களின் பணிகள் அழுக்கினைக் கையாளும் வேலையில் ஈடுபடுவதால் அவர்களது தொழில் அசுத்தமாகிறது. உடலிலிருந்து நீக்கப்படும் மயிர் மற்றும் நகத்தினைத் தொடுவதால் அதனைத் தொடுபவர்கள் அசுத்தத்திற்குள்ளாகிறார். அதே நேரத்தில் சவரத் தொழிலாளர்களின் தொடுதலும் மேல் சாதியினைரைத் தீட்டுப்பட்டவர்களாகக் கருதச் செய்கிறது (1996: 59). மென்ச்சர், மருத்துவச் சாதியினரை "அரைத் தீண்டத்தகாத (Semi - untouchable) சாதி" என்கிறார் (1998; 39). பொருளாதார மற்றும் சமூக அளவில் சுரண்டலுக்கும் இழிவுகளுக்கும் உள்ளான மருத்துவச் சாதியினருக்குக் கிராமங்களில் இயங்கிய எந்த ஒரு நிர்வாகத்திலும் பிரதிநிதித்துவம் கிடையாது. இவர்கள் தங்களுடைய நிறை-குறைகளை ஆதிக்கச் சாதியினரிடம் மட்டுமே கூற முடியும். ஊர்க் குடிமகன் தேர்வு முதல் கூலி, சமூக மதிப்பு ஆகிய கட்டுமானங்கள் வரையில் மருத்துவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டே வந்தனர். மேலும், இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று எதுவென்றால், ஊர்க் குடிமகன், 'குடிமகன் பணி’யிலிருந்து வெளியேறவே முடியாது என்பதுதான். ஆனால், நிலவுடைமையாளர்கள் தங்களுக்கென மட்டும் வைத்திருக்கும் குடிமகனை, தாங்கள் நினைத்த நேரத்தில் பணியிலிருந்து நீக்கவும், மற்றொருவரை பணியில் அமர்த்திக் கொள்ளவும் செய்தனர் (Patnaik, 1960; 737-742) இது, மருத்துவர்களுக்கு வேலைப் பாதுகாப்பின்மை இருந்ததனைக் காட்டுகிறது. நிலவுடைமைக் காலத்தில் ஊர்க் குடிமகனின் நிலை கொத்தடிமை முறையிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. ஊர்ச் சோறு எடுக்கும் முறையானது, 'நாங்கள் தருகின்ற உணவை சாப்பிட்டுக் கொண்டு எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவகம் செய்து கொண்டே இரு' என்பதாகும். மேலும், இம்முறை மருத்துவர்கள் தங்களுக்கென உணவுகூட சுயமாகத் தயாரித்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்து கிறது. மருத்துவச் சாதியினரிடம் சிறிதளவு பணம் இருந்தும்கூட அவர்களின் உணவு உண்ணும் ருசியானது ஆதிக்கச் சாதியினராலேயே தீர்மானிக்கப்பட்ட செயல் இந்திய சாதி அமைப்பின் கொடூர முகங்களையேக் காட்டுகிறது. ஊர்ச் சோறு கொடுக்கும் வழமை தமிழகத்தில் முற்றிலுமாக மறைந்து விடவில்லை. இன்றும் இந்தியாவின் பல கிராமங்களிலும் மருத்துவர் சாதியினர் நிலவுடைமைக் கால கொத்தடிமை வாழ்க்கையினையே வாழ்ந்து வருகின் றனர். அரசு இவர்களை கொத்தடிமைகள் என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரிசாவில் நடைபெற்று வருகிறது (Frontline, November, 15) என்பதனை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும். (பின்னிணைப்பு 3-ஐ காண்க).  காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து கிராமக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்ட போது அது மருத்துவச் சாதியின் மீது சாதகமான விளைவு களை ஏற்படுத்தியிருக்கவில்லை. காலனிய ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டங்களுக்குப் பணிபுரிய தமிழ்நாட்டுச் சாதிகள் இடம் பெயர்ந்து சென்ற போது, மருத்துவர்களும் சென்றனர். அவர்கள் அங்கும் தமிழ்நாட்டில் செய்த அதே பணிகளைத்தான் செய்தனர் (Pfafenberger, 1982;34-59, Jayaraman, 1964: 395). தங்களை ஒடுக்கு முறையிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடிய மருத்துவர்களைத் தவிர இதர மருத்துவர்களின் சமூகப் பொருளாதார - அரசியல் நிலைகள் முன்பு போலவே தொடர்ந்தன. ஆனால் காலனியத்திற்குப் பின்னர் பல மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. இது மருத்துவர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல; ஆதிக்கச் சாதியினரே ஏற்படுத்தினர். அதாவது, ஆதிக்கச் சாதியினர் அனைவரும் விவசாயம் செய்யவில்லை, விவசாயக் கூலிகளாகவும் இல்லை. காலனிய ஆட்சிக் காலக் கல்வியைக் கற்றுக் கொண்டு பல்வேறு பணிகளுக்குச் சென்றனர். இதனால், ஊர்க் குடி மகனாகத் தேர்வு செய்யப்படும் மருத்துவருக்கு ஆண்டுதோறும் தானியம் வழங்குவதற்கு ஒரு கிராமத்திலுள்ள எல்லாக் குடும்பங்களிலும் தானியம் இருப்பதில்லை . மருத்துவம்-சவரப் பணிகளுக்கும் சேர்த்துதான் தானியம் கூலியாகக் கொடுக்கப்பட்டது. காலனிக்குப் பிந்தைய இளம் தலைமுறைகள் தங்களுடைய சிகை அலங்காரப் பண்பாட்டில், முன்பு கிராமப்புறங்களில் முடி வெட்டிக் கொண்ட வடிவங்களை விரும்பாமல் பல்வேறு புதிய வடிவங்களைத் தேர்ந்தெடுத்தனர். மேலும், கிராமப்புறங்களில் அந்த வாய்ப்புகள் இல்லாததால் நகரங்களிலுள்ள சலூன் கடைகளுக்குச் செல்லத் தொடங்கினர். பெண்களின் பிரசவம், உடல் ஆரோக்கியம் உட்பட பல மருத்துவத் தேவைகளுக்காகப் படித்த மருத்துவர்களை நாடிச் சென்றனர். இங்கே மருத்துவச் சாதிப் பெண்கள் மற்றும் ஆண்களின் மருத்துவப் பணி பறிக்கப்பட்டது. இதனால் திருமண - இறப்புச் சடங்குகளைத் தவிர மருத்துவச் சாதியினருக்கு வேறு பணிகள் இல்லாமல் போனது. இத்தகையச் சடங்குகள் செய்வதற்குத் தற்போது கூலியாகப் பணம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கள ஆய்வு செய்யப்பட்ட போது, இரண்டு மாற்றங்களைத் தெளிவாகக் காணமுடிந்தது: 1. தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவகம் செய்த மருத்துவர்கள் கிராமங்களில் இல்லை. இவர்களின் இறப்புச் சடங்கினை நகரங்களில் குடியிருந்து வரும், அல்லது வேறு கிராமங்களில் வசித்து வரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான மருத்துவச் சாதியினர் செய்துவருகின்றனர். இதற்குக் கூலியாக பணம் கொடுத்துவிடுகின்றனர்: 2. இடைநிலைச் சாதிகளுக்கென இறப்புச் சடங்கு செய்கின்ற சாதியினர் முன்பு வசித்த கிராமங்களில்தான் இன்றும் வசித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலக்கால், பாப்பாபட்டி போன்ற கிராமங்களில் வசித்து வரும் மருத்துவர்கள் அக்கிராமங்களிலேயே சலூன் கடைகள் நடத்திவருகிறார்கள். இவர்கள் தங்கள் சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சவரம் செய்வதில்லை. மேலக்காலில் சலூன் கடை நடத்தி வரும் ஜெயராஜ் (77), “நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சவரம் செய்வது இல்லை” என்றார். ஏன் என்று கேள்விக்கு, "அது அப்படித்தான்'' என்றார். மேலும், ’இவர் தனது மகனை இத்தொழிலுக்குள் வரவிடமாட்டேன்' என்றும் கூறினார். இவரைப் போல் பல மருத்துவர்களும் தங்கள் வாரிசுகளைச் சவரத் தொழில் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலைச் சாதியினர் இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். இடைநிலைச் சாதியினரே கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் மருத்துவச் சாதியினர் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிவருகின்றனர். பிற்படுத்தப் பட்டோர் நலக்குழுவின் அறிக்கையில் மருத்துவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங்களில் மருத்துவச் சாதியினர் தங்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கெதிராகப் பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்திற்குச் செல்லமுடியாத நிலையிலேயே உள்ளனர். (முத்துராசு, (74), 231005) கிராமங்களில் சடங்கு செய்தல், சவரம் செய்தல் ஆகிய வேலைக்களுக்குக் கூலியாகப் பணம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கூலியும் தற்போது அவர்களுக்குக் கிடைப்பது குறைந்து கொண்டே வருகிறது. வாய்க்கரிசிப் பெட்டியில் சில்லறைக் காசுகள் போடுவது வேண்டாம் என்கிற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது (ஜெயகுமாரி, 2001; 253-4). மேலும், சில இறப்புச் சடங்குகள் செய்வதற்கு அழைப்பதையும் தவிர்த்து வருகின்றனர். ஆதிக்கச் சாதியினரிடத்தில் ஏற்பட்டுள்ள மேற்கூறப்பட்ட மாற்றங்களில் முன்னது மருத்துவர்களைச் சுரண்டுகிறது, பின்னது அவர்களுக்குப் பணமே கொடுக்கக்கூடாது என்ற சாதி இந்துக்களின் உளவியலை வெளிப்படுத்துகிறது. சில சடங்குகளுக்கு அழைக்கப்படுவது, சவத்தைக் குளிப்பாட்டி, சவரம் செய்து சுத்தமாக பரலோகத்திற்கு அனுப்புவதென்பது, இறந்து போனவரின் (ஆதிக்கச் சாதி குடும்பத்திற்கு நன்மை உண்டாகட்டும் என்ற சுய நலனே ஆகும். மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் இருப்பதால் இவர்களால் பல கிராமங்களில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியைக்கூட அடையமுடியாத நிலையே நிலவுகிறது. இன்றைய கிராமங்களில் மருத்துவச் சாதியினர் மிக மோசமான சமூகப் பொருளாதார - அரசியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். பிற ஒடுக்கப்பட்ட சாதிகளோடு ஒப்பிடுகையில் இவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குத் தீர்வு காண, ஒடுக்குமுறைகளைப் பேசுவதற்கும் போராடுவதற்கும் சாதிய ரீதியாலான எந்த அமைப்புகளும் இல்லாததால் மெளமனமாக இருக்கின்றனர்.      4. தலித்துகளுடனான முரண்பாடு   சேவைச் சாதியில் மருத்துவச் சாதியினருக்கும் அவர்கள் சேவகம் செய்கின்ற சாதிகளுக்கும் உள்ள உறவானது ’பரஸ்பர ஒத்துழைப்பு' கொண்டது, (தூபே, 1996,106 - 109, விஸ்வநாத கண்டாராதித்தன், 2005, 21-24) என்று கூறுவோர் உள்ளனர். மற்றொருபுறம், மருத்துவச் சாதியினர், தலித்துகளைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதி ஒடுக்குகின்ற சாதியினர் என்ற கருத்தும் உள்ளது. 'பரஸ்பர ஒத்துழைப்பு' என்ற சொல் இருவர்களுக்கிடை யேயான பின்னிப்பிணைந்த பாசப்பிணைப்பினை வெளிப்படுத்துகிறது. மருத்துவர்கள் தலித்துகளை ஒடுக்குகின்றனர் என்னும் கருத்தினை நடைமுறையில் மருத்துவச் சாதியினரின் யதார்த்த வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு ஆராயாலாம்.  நிலவுடைமைச் சமூக அமைப்பில் மருத்துவச் சாதியினர் மீதிருந்த, தீண்டாமை - சுரண்டல் போன்ற ஒடுக்குமுறைகள், காலனிய ஆட்சிக்குப் பிந்தைய காலத்தில் மிகுதியானதைக் கடந்த இயலில் கண்டோம். அவ்வியலில் பார்த்ததனைவிடவும் கூடுதலான வன்முறைகளை மருத்துவச் சாதியினர் சந்தித்தனர்; சந்தித்து வருகின்றனர். அவற்றை இங்கு முதலில் வரிசைப்படுத்திக் கொள்வோம்.  1. ஆண்டுக்கு ஒருமுறை கூலியாகக் கொடுக்கப்படும் தானியம் முதல் ரக நெல் அல்ல; ‘பொக்கு' தானியங்களைக் கலந்து கொடுத்துவிடுவர். 2. 2 அன்றாடப் பணிகளுக்கு வருகிற பொழுது, தாமதமாக வந்தால் ஆதிக்கச் சாதியினரின் ‘வசை' பாடல்களைக் கேட்கவேண்டிய நிலை ஏற்படும்.  3)   சடங்கு செய்கிற போது சில தவறுகளைச் செய்தால் ஆதிக்கச் சாதியினரின்      கைகள் "பதம்” பார்த்துவிடும். இது பெரும்பாலும் இறப்பு நிகழ்ச்சிகளின் போது நடைபெறும். சவத்தை அடக்கம்/எரிப்பதற்கான பணிகள் நடைபெறும் போது, ஆதிக்கச் சாதியினரில் பலரும் மது போதையில் இருப்பது வழமை. ஆனால், சடங்கு செய்கின்ற மருத்துவச் சாதியார் அச்சமயத்தில் மரு அருந்தக்கூடாது. இச்சமயத்தில் சடங்கு செய்வதில் தாமதம் அல்லது தவறு ஏற்பட்டால் மருத்துவச் சாதியினர் தாக்கப்படுவர். அவ்வாறு தாக்கப்பட்டால் 'மது குடித்த போதையில் அடித்துவிட்டான் நீ வருத்தப்படாதே’ என்று சமாதானம் கூறுவார்கள். தமிழகக் கிராமங்களில் மேல்சாதியார் கீழ்சாதியாரை, கணவன் மனைவியை, ஒரே சாதிக்குள் மேல்வர்க்கத்தினர் கீழ்வர்க்கத்தினரைத் திட்டமிட்டுத் தாக்கினாலும் (பெரும்பாலான தாக்குதல்கள் திட்டமிட்டே நடைபெறும் போதையில் அடித்துவிட்டான் என்று ஆளும் வர்க்கம் சமாதானம் கூறும்.  4) ஆதிக்கச் சாதியினர் வீடுகளில் இன்ப துன்ப நிகழ்ச்சிகள் திட்டமிட்டு / எதிர்பாராமல் நடைபெறும். அதே சமயத்தில் அவ்வூர் மருத்துவச் சாதியாரின் - குறிப்பாக, ஊர்க் குடிமகனாகப் பணி செய்பவருக்கு இன்ப / துன்ப நிகழ்ச்சிகள் திட்டமிட்டு / எதிர்பாராமல் நடைபெற்றால் அவர் அந்நிகழ்ச்சிக்குச் செல்வது முடியாது; ஆதிக்கச் சாதியினர் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை. இன்ப / துன்ப நிகழ்ச்சிகளுக்கு உள்ளான குடும்பத்தினர் ஊர்க் குடிமகனுக்கு ரத்த உறவுகளாக இருந்தாலும் சரி, அவர் ஆதிக்கச் சாதியினருக்குச் சடங்குகளைச் செய்து முடித்த பின்னரே அவரது சொந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்லமுடியும். கள ஆய்வின் போது, பல முதியவர்கள் இதனைக் கூறித் தங்களின் வருத்தங்களையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். 5) 'ஊர்ச் சோறு’ எடுப்பதற்காக ஆதிக்கச் சாதியினரின் வீடுகளுக்கு அன்றாடம் மருத்துவச் சாதிப் பெண்களே செல்வர். ஆதிக்கச் சாதியினர் தத்தம் குடும்பங்களுக்குத் தேவையானது போக மீதமிருப்பதினைக் கொடுப்பதே ஊர்ச் சோறு. ’சோற்றுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டோம், சோறு இன்னும் சமைக்கவில்லை, சோறு தீர்ந்துவிட்டது' என்பது போன்ற காரணங்களைக் கூறிச்சோறு எடுக்க வரும் பெண்களின் மனதைப் புண்படுத்துவதும் அப்பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் வழக்கமாகிவிட்டிருந்தன. மேலும், கிராமங்களில் மிகச் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதால் அச்சமூகப் பெண்களிடம் பலரும் தவறாக நடந்து கொண்டனர். இக்காரணமே அவர்களைக் கிராமங்களை உதறித்தள்ளவிட்டு நகரங்களுக்குக் குடிபெயரச் செய்தது (சொக்கலிங்கம், 74).   மேற்கூறப்பட்டவை பொருளாதாரச் சுரண்டல் முதல் பாலியல் வன்முறைகள் வரையில் அன்றாடம் நடைபெற்ற நிகழ்வுகளாகும். ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிய மருத்துவச் சாதியினர் மற்றொருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதோராகக் கருதி அவர்களுக்குச் சவரம் செய்ய மறுத்தனர். ஏன் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சவரம் செய்ய மறுத்தனர்? இதனை மருத்துவச் சாதியினரே சுயமாகச் செய்தனரா / செய்து வருகின்றனரா? இதற்கான பதிலை வரலாற்றில் நடந்த சில சம்பவங்களை முன்வைத்து ஆராயலாம். சம்பவம் 1  கங்கை ஆற்றின் கரையில் அமர்ந்திருந்த சவரத் தொழிலாளியிடம் தீண்டத்தகாத சாதியினைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சவரம் செய்யுமாறு கோரினார். அவர் என்ன சாதி என்பதனைக் கேட்காமலேயே முடிவெட்டத் தொடங்கினார். அச்சமயம் அங்கு வந்த மற்றொரு சவரத் தொழிலாளி,  ’இவன் ஒரு புதால்கர்', நீ ஏன் அவனுக்கு முடி வெட்டுகிறாய்? நீ அவனுக்கு முடி வெட்ட வேண்டியதில்லை என்றார். உடனடியாக முடி வெட்டுவதினை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார். அவருடைய உறவினர்கள் சிலர் தீண்டத்தகாதவனைத் தொட்டுவிட்ட காரணத்தினால் அவனுக்கு தீட்டு ஏற்பட்டு விட்டதாகக் கூறினர். இதனால் அவர் தீட்டு நீக்கம் செய்யும் தர்மாதிகாரியைச் (Dharmadhikari)? சந்தித்து அவரிடம் தனக்கு தீட்டு நீக்கக் கோரினார். (Kotani, Hiroyuki, 1999: 248-9) சம்பவம் 2  பறையர் என்பதைத் தெரியாமல் இளம் அம்பட்டர் ஒருவர் அவருக்குச் சவரம் செய்ததற்காகத் தீட்டுக் கழித்தார் (Thursto, Edgar, 1993:38) சம்பவம் 3  கொட்டக்குடி கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளி முடிதிருத்த மறுத்ததால் காவல் துறையினர் அவர் மீது வழங்குப் போட்டு, சப் - மாஜிஸ்ட்ரேட் தண்டனை விதித்தார். ஆனால், அதன்பின் சாதி இந்துக்கள் ஹரிஜனங்களைச் சாவடிக்கு வரவழைத்து அந்த முடி திருத்தும் தொழிலாளியை அவர்கள் கூப்பிட்டால் கூட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்கள். (அம்பேத்கர், தொகுதி 9. 1999; 180)  முதல் இரண்டு சம்பவங்களிலும் தீண்டாமையின் தன்மை மிக  இறுக்கமாக இருந்திருப்பது தெரிகிறது. இக்காலங்களில் மருத்துவச் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டத்தகாதோர் என்ற கருத்தினைக் கொண்டிருந்திருக்கலாம் என்று உறுதியாக நம்பலாம். இக்கருத்தானது அவர்களிடத்தில் மனதளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தலித்துகளைச் சுரண்டியதாகவோ, வன்முறையில் ஈடுபட்டதாகவோ பதிவுகள் இல்லை; ஆனால், முடி வெட்ட மறுத்தனர். தெரியாமல் முடி வெட்டியதால் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதி சுத்தப்படுத்தியது என்பது, அன்று மிகக் கடுமையான இறுக்கத்தோடு சமூகத்தில் நிலவிய சுத்தம் - அசுத்தக் கோட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட விளைவாகும். தீண்டத்தகாதோன் என்று தெரியாமல் சவரம் செய்த காரணத்தினால் ஏற்பட்ட தீட்டினை நீக்கவில்லை எனில், சவரம் செய்தவர் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார். எனவே, அன்று நிலவிய சமூக நிர்ப்பந்தமே மருத்துவச் சாதியினரைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதை தடுத்தது. மேற்குறிப்பிட்ட முதல் இரண்டு சம்பவங்கள் முறையே 1795 மற்றும் 1909 அல்லது அதற்கு முன்னரே நடைபெற்றிருக்கிறது. இக்காலங்களில் தீண்டாமைக்கெதிரான எந்தச் சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.  ஆனால், மூன்றாவது சம்பவமானது, சமூக ரீதியான ஒடுக்கு முறைக்கு எதிராகச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தற்குப் பின்னர் நிகழ்ந்ததாகும். இச்சம்பவத்தில் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத மருத்துவச் சாதியைச் சேர்ந்தவர் தண்டனைக் குள்ளாகிறார். இதனால் ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டுகின்றனர். ஒருவேளை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டியிருந்தால், அவர் ஆதிக்கச் சாதியினரால் ஒடுக்கப்படுவது உறுதியாகவே நடைபெற்றிருக்கும். இச்சம்பவங்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மருத்துவச் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்ட மறுத்தது என்பது அவர்களின் சுயமுடிவல்ல; மாறாக இந்து சமயமும் ஆதிக்கச் சாதியினரும் அவர்களைக் கட்டுப்படுத்தியதனால் ஏற்பட்டதாகும். இதனை மேலும் விளக்குவதற்கு நாம் சமீப காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களை எடுத்துக் கொள்வோம்.  இன்றைய காலங்களில் தீண்டாமைக்கெதிராகவும், மனித உரிமையினைப் பாதுகாக்கவும் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இன்றும்கூட மருத்துவச் சாதியினர் சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒப்பனை செய்ய மறுக்கின்றனர். வேலூர் மாவட்டம் கத்தியவாடியிலும் (மக்கள் களம், ஜூலை 05; 2) பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையிலும் மக்கள் களம், ஜூலை 05; 34) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒப்பனை செய்ய மறுத்து வருகின்றனர். இச்செயலுக்கு அங்கு வசிக்கின்ற ஆதிக்கச் சாதியினர்தான் காரணம் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்ட மறுக்கும் சலூன் கடைகளில் முடிவெட்டக்கோரி விவசாயச் சங்கத்தினர் போராடினர். அச்சங்கம், தலித் மக்களுக்கு முடிவெட்டாமல் அவர்களைப் புறக்கணிக்கும் இது போன்ற தீண்டாமையினைக் கடைபிடிக்கும் கடைகளை இழுத்து மூடக்கோரியும், தலித்துகளுக்கு முடி வெட்ட வேண்டும் என்றும் போராட்டம் நடத்தியது. இங்கு சலூன் கடையினை மூட வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா? என்று பரிசீலனை செய்ய வேண்டும். சலூன் கடைக்காரரைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டக்கூடாது என்று தடை போடுவது அங்குள்ள ஆதிக்கச் சாதியினர்தான் என்று மேலே கூறினோம். எனவே, விவசாயச் சங்கத்தின் போராட்டமும் ஆதிக்கச் சாதியினருக்கு எதிராகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், சலூன் கடைக்கு எதிரான போராட்டமானது, ஆதிக்கச் சாதியினரின் கைப்பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டிருக்கும் மருத்துவச் சாதியினரை மேலும் ஒடுக்குகிறது. சலூன் கடையை இழுத்து மூடவேண்டும் என்ற கோரிக்கை அக்கடையின் உரிமையாளரின் பொருளாதாரத்தினை முடக்கும் செயலாகும்.  மருத்துவச் சாதியினருக்கு எதிரான இத்தகைய போக்கு மேலும் விவாதத்திற்குரியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் ஆதிக்கச் சாதிகளின் வன்முறைக்கு எதிரான இயக்கங்கள் இங்கு நடைபெறுகின்றன; அது எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது வேறு விடயம். ஆனால், அதே வன்முறை மருத்துவச் சாதியினர் மீதும் நடத்தப்பட்டும் அதற்கெதிரான போராட்டம் மட்டுமல்ல - அவர்களின் மீதான ஒடுக்குமுறை பற்றியும் பேசப்படாமலேயே உள்ளது. அவர்களின் மீதான சமீபகால் ஒடுக்குமுறைகள் சிலவற்றை இங்குக் காணலாம்.   சம்பவம் 1  திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தினைச் சேர்ந்த அங்கப்பன் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்தார். அவர் தான் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தைத் தனது வயதான தந்தையிடம் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவருக்கு அவ்வாகனத்தைத் தனது கிராமத்திற்குக் கொண்டு செல்ல பயம். காரணம், அரசு அலுவலராகப் பணிபுரியும் அவர், நன்றாக ஆடையணிந்து கிராமத்திற்குள் செல்லும் போதெல்லாம் ஆதிக்கச் சாதியினர் அவரைக் கிண்டல் செய்துள்ளனர். நன்றாக ஆடையணிந்து சென்றதற்கே கிண்டல் செய்த மேல் சாதியினர், இரு சக்கர வாகனத்தில் சென்றால் என்ன செய்வார்கள் என்று பயந்தார். இதனால், இவர் திருநெல்வேலியிலிருந்து மாலை நேரத்தில் புறப்பட்டு சங்கரன்கோவில் சென்று, அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு வீட்டிற்குச் சென்று தனது தந்தையிடம் தான் வாங்கிய அப்புதிய வாகனத்தைக் காண்பித்தார். பின்னர், அதிகாலையில் எழுந்து திருநெல் வேலிக்குப் புறப்பட்டார். இதில் நாம் கவனிக்க வேண்டியதானது, 1) அவர் தனது கிராமத்திற்குச் சென்று, திரும்பி வரும் வரை ஒருவிதப் பதற்றத்துடன் இருந்தது. 2) இந்த நடுக்கம், ஆதிக்கச் சாதியினர் அவரைக் கிண்டல் செய் வதனைவிடவும், தாக்குவதனைவிடவும் மிகக் கொடூரமானது. இது மேல் மற்றும் இடைநிலைச் சாதி இந்துக்கள் ஏற்படுத்தியிருக்கும் குரூரமான உளவியல் வன்முறையாகும். இச்சம்பவம் 1980களில் நடந்தது. சம்பவம் 2  திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பள்ளர்கள் மருத்துவச் சாதியைச் சேர்ந்த ஒருவரை 1990களில் மிகக் கொடூரமான முறையில் தாக்குகினர். அவரைத் தாக்கியவர் மீது காவல்துறையில் புகார் கொடுப்பதற்காக விசுவநாததாஸ் பேரவையின் மாநிலத் தலைவர் முத்துராசு, வன்முறைக்குள்ளானவரை சந்தித்தார். ஆனால் புகார் கொடுத்தால் மீண்டும் தாக்கப்படுவோம் என்று அஞ்சி புகார் கொடுப்பதற்கு மறுத்துவிட்டார்.  மேற்கூறப்பட்டுள்ள இரண்டு சம்பவங்களிலும் ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறைக்கு மருத்துவச் சாதியினர் உள்ளாவது வெளிப்படை இதனை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்த இயலாத நிலையிலேயே உள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, கிராமங்களில் உள்ள அவர்களின் சொற்ப அளவிலான மக்கள் தொகையே ஆகும். இத்தகைய நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்ட மருத்துவச் சாதியினர், தங்களைத் தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முறையிட்டு வருகின்றனர். (பின்னிணைப்பு 4 -ஐ காண்க). தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒப்பிடுகையில், இவர்களின் சமூக நிலையே மிகவும் மோசமாக உள்ளது. இவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் வெளியில் அதிகம் பேசப்படாமலேயே இருப்பதற்கு அவர்கள் பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும். இதனால் இவ்வொடுக்குமுறைகள் பொதுத்தளத்தில் விவாதிக்கப்படாமலேயே உள்ளன. தீண்டாமைக்கெதிராகவும், சாதி ஒழிப்பிற்காகவும் போராடி வருகின்ற இயக்கங்கள் இதனைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இதன் பொருள், இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவச் சாதியினரைப் பிற்படுத்தப்பட்ட, அதாவது மேல் சாதியினராகவே கருதுவதாகும். பல பத்தாண்டுகளுக்கும் முன்னர் தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத்தகாதவர்களாகவே கருதிய அதே மருத்துவச் சாதியினர், இன்று அதனைத் தவறென உணர்ந்துள்ளனர். இம்மாற்றம் இன்று கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே தலித் இயக்கங்கள் தீண்டாமை - சாதிய ஒடுக்கு முறை - சாதி ஒழிப்பு இயக்கங்களில் மருத்துவச் சாதியினரைத் தனது நேச சக்தியாகவே அணுக வேண்டும். ’தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத்தகாதோர்' என்று கருதுகின்ற சில மருத்துவச் சாதியினரும் தங்களின் கருத்தினை மாற்றிக் கொள்வது அவசியமாக உள்ளது.  அடிக்குறிப்பு   1. இக்காலங்களில் ஒருவர் என்ன சாதி என்று தெரிந்த பின்னரே சவரம் செய்யப்பட்டார். இது சலூன் கடைகளிலும் இருந்தது.  2. தர்மாதிகாரி என்ற சமூகப் பதவி அரசு நிர்வாகத்திற்குட்டபட்டது அல்ல. சில பார்ப்பனக் குடும்பங்களின் ஆண்வாரிசுகள் பரம்பரை பரம்பரையாக இப்பதவியினை வகித்து வந்தனர். இத்தர்மாதிகாரி உள்ளூரின் சாதியக் காட்டுமானத்தை தக்கவைப்பதற்கான 'பிராயச் சித்தச்’ சடங்கினை செய்துவந்தார். இப்பிராயச்சித்த நிகழ்ச்சியின் போது தீட்டுக்குள்ளான நபர் தர்மாதிகாரியிடம் "தோஷப் பத்திர”த்தினை (dosha patra - the statement of sin} கொடுப்பார். தர்மாதிகாரி, அந் நபரிடம் தீட்டு நீக்கியதற்கான "சுத்தி பத்திர”த்தினைக் (Suddhi patra - the Certificate of purification) கொடுப்பார்.                    5.மருத்துவர் போராட்டமும் எதிர் வன்முறையும் - 1924-2004   எவெனொருவன் கீழ் நிலையிலுள்ள தன் இனத்திற்கும், தன் நாட்டிற்கும், தன் மொழிக்கும், தன் சமயத்திற்கும் வேலை செய்கிறானோ அவனே உண்மையான மனிதனாவான். தன் சுற்றம் தன் வீடு, தன் பிள்ளைகள் என்றெண்ணி இனமாவது, நாடாவது என்று தன்னலம் பேசி விலகி நிற்பவன் மனிதனேயல்ல, அவன் நெல்லினுள் பதர் போன்றவன் - -பண்டிதர் எஸ்.எஸ் ஆனந்தம்  கடந்த சில பத்து ஆண்டுகளாகவே வரலாற்று அறிஞர்கள் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்ட வரலாற்றினை எழுதுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இக்கவனம் பெரும்பாலும் தலித் மக்களின் வரலாற்றினைப் பதிவு செய்வதி லும் குவிந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவச் சாதியினர் கிராமப் புறங்களில் தலித் மக்களுக்கு ஒப்பான ஒடுக்கு முறையினையும் தீண்டாமையினையும் சந்தித்தனர்; சந்தித்து வருகின்றனர். இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றிருப்பதற்கான சமூகப் பொருளாதாரச்சூழல்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அது, குறித்த பதிவுகள் கட்டுரை வடிவிலோ அல்லது நூல் வடிவிலோ, தமிழ்ச் சூழலில் எழுதப்படவில்லை எனலாம்; ஆனால் போராட்டங்களை மையப்படுத்தி இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. புதுமைப் பித்தனின் 'நாசகாரக் கும்பல்’ என்ற தமிழ்ச் சிறுகதையும், முல்க் ராஜ் ஆனந்தின் 'பார்பர்களின் தொழிற்சங்கம்' என்ற ஆங்கிலச் சிறுகதையும் போராட்டத்தை மையப்படுத்தியே படைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களின் போராட்டத்தையும் - மதமாற்றத்தையும் கருவாகக் கொண்டே நாசகாரக்கும்பல் படைக்கப் பட்டுள்ளது. இக்கதையே மருத்துவர்களின் போராட்ட வரலாற்றைத் தேடுவதற்கு அடிப்படையாக அமைந்தது. புதுமைப்பித்தன், இக்கதையின் ஆரம்பத்திலேயே போராட்டம் நடந்த இடத்தை 'அழகிய நம்பியாபுரம்' என்று குறிப்பிட்டுவிட்டு, அவ்வூர் திருநெல்வேலி மாவட்ட வரைபடத்தில் இல்லை என்கிறார். எனவே, அவர் குறிப்பிட்டிருக்கின்ற அழகியநம்பியாபுரம் புனைப்பெயராக இருக்கலாம். ஆனால் அக்கதையில் குறிப்பிட்டிருக்கும் போராட்டத்தைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. நாசாகாரக் கும்பலை எடுத்துக் கொண்டு ஆய்வை மேற்கொண்ட போது, மருத்துவச் சாதியினர் போராட்டம் நடத்தியதாக நமக்குத் தெரிகிறது. எனவே, நாம் இப்பகுதியில், தமிழகத்தில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக மருத்துவச் சாதியினரால் நடத்தப்பட்ட போராட்டம்; அதற்கெதிராக ஆதிக்கச் சாதியினர் நடத்திய எதிர் வன்முறை, போராட்டத்தால் ஏற்பட்ட சாதக பாதக விளைவுகள் ஆகியவற்றை ஆராய்வோம். இப்போராட்ட வரலாற்றைக் காலனிய ஆட்சிக் காலம், காலனியத்திற்குப் பிந்தைய காலம் எனப் பிரித்து ஆய்வினை மேற்கொள்வோம். இழிவுகளுக்கெதிரான முதல் போராட்டம் - 1924 மருத்துவச் சாதியினர் ஆதிக்கச் சாதியினருக்குச் செய்துவந்த பணிகளைச் சமூக உறவுகள்: அன்றும் இன்றும் என்ற பகுதியில் பட்டியலிட்டிருந்தோம். அப்பணிகள் தங்களை இழிவு படுத்துவதாகக் கருதினர். குறிப்பாக, மாப்பிள்ளைச் சவரம், இறப்புச் சடங்கில் சவத்திற்குச் சவரம் செய்தல்-பிணம் எரித்தல் ஆகியவற்றை இழிவென்றும், அதனைச் செய்வதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் முயற்சி செய்தனர். இத்தகைய முயற்சிகள், கள ஆய்வில் கிடைத்த தகவலின்படி, திருநெல்வேலி நகரத்தில் வெள்ளாளர்களுக்குச் சேவகம் செய்துவந்த ’வெள்ளாளநாவிதர்' என அழைக்கப்பட்ட பிரிவினரால் முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் அவர்களால் 'சுயமாக' தொடங்கப்பட்டது என்றும், பண்டிதர் ஆனந்தம் அப்போராட்டத்திற்கு வித்திட்டார் என்றும் கருத்துக்கள் அம்மக்களிடத்தில் நிலவுகின்றன. பண்டிதர் ஆனந்தம் 1927ம் ஆண்டு சென்னையில், ’சென்னை மாநில மருத்துவர் சங்கம்' என்ற ஓர் அமைப்பினைத் தொடங்கினார் (பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தம் - வைரவிழா மலர், 1966). இவ்வமைப்பின் மூலம் அவர் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து மருத்துவச் சாதியினர் தாங்கள் இழிதொழில் செய்வதைப் புறக்கணிக்குமாறு கோரினார். இக்காலத்தில் திருநெல்வேலி நகரத்தின் சாலியர், மாதாக் கோயில், மாதாப்பூங்குடி, கருவேலங்குண்டம் ஆகிய தெருக்களில் வசித்த மருத்துவச் சாதியினர்  வெள்ளாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ’இழிவு வேலைகள் செய்யமாட்டோம்' என்று போராடினர் (குழந்தைவேலு (88), 06.05.05) இதனையறிந்த பண்டிதர் ஆனந்தம் திருநெல்வேலிக்கு வந்து, மருத்துவச் சாதியினர் அனைவரையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவர்களது இல்லங்களில் சந்தித்துப் போராட்டத்தைத் தொடரும்படியும், அதற்கு, தான் முழு ஒத்துழைப்புத் தருவதாகவும் உறுதியளித்தார். இதனால் ’வெள்ளாள - பார்ப்பனர்களுக்கு இழிவு வேலை செய்ய மாட்டோம் என்ற போராட்டம்’ வலுப்பெற்றது. இவர்களைப் பின்பற்றி பொற்கொல்லர்களுக்குச் சேவகம் செய்து வந்த மருத்துவர்களும், இழிவு வேலைகள் செய்யமாட்டோம் என்று போராடத் தொடங்கினர். இதனால் வெள்ளாளர்களும் பார்ப்பனர்களும் மருத்துவர்களைத் தாக்குவதற்குத் திட்டம் தீட்டினர். இதையறிந்த பின்னரும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியோடு இருந்தனர். திருநெல்வேலி சாலியர் தெருவைச் சேர்ந்த ராசாமணி, முருகானந்தம் ஆகியோர்,  நாங்கள் செத்தாலும் இந்த இழிதொழிலைச் செய்யமாட்டோம் (சொக்கலிங்கம் (74), 17.04.05). என்று சபதமேற்றனர். சாதி இந்துக்கள் மருத்துவர்களைத் தாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்ததைக் கேள்வியுற்ற மருத்துவர்கள் பண்டிதர் ஆனந்தத்திற்குத் தெரியப்படுத்தவே, அவர் திருநெல்வேலிக்கு வந்தார். போராட்டக்காரர்களும் பண்டிதர் ஆனந்தமும் கூடி ஆலோசனை செய்தனர். இறுதியில், இழிவு வேலைகள் செய்ய மறுத்துத் தொடங்கப்பட்ட இப்போராட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்றால் அனைவரும் இலங்கைக்குச் சென்று அங்கு தொழில் செய்வதுதான் தற்போதைக்கு உள்ள ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தனர். இம்முடிவு மருத்துவர்களைத் தவிர இதர சாதியினருக்குத் தெரியாமல் பாதுகாக்கப்பட்டது. இறுதியில் போராட்டக்காரர்கள் அனைவரும் தங்கள் மனைவி மக்களை இங்கேயே விட்டுவிட்டு இலங்கைக்குச் சென்றனர். இதனால் வெள்ளாள - பார்ப்பனர்களுக்கும், பொற்கொல்லர்களுக்கும் சேவகம் செய்வதற்கு மருத்துவச் சாதியினர் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இப்போராட்டமே தமிழகத்தில் மருத்துவச் சாதியினர் இழிவு வேலைகளிலிருந்து விடுபடுவதற்காக நடத்திய முதல் போராட்டம் ஆகும்.  மருத்துவச் சாதியினர் இலங்கைக்குச் சென்றுவிட்ட செய்தியை மிகத் தாமதமாகவே அறிந்த சாதி இந்துக்கள் ஆத்திரமுற்று மருத்துவச் சாதி பெண்களையும், குழந்தைகளையும் தாக்கத் தொடங்கினர். அவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர், உணவுப் பொருட்களில் மண் எண்ணெய், மலம் போன்றவற்றைக் கலந்தனர், கிணறுகளில் தண்ணீ ர் எடுப்பதைத் தடுத்தனர் (சொக்கலிங்கம், (74), 17.04.05). பண்டிதர் ஆனந்தம் சாதிய இந்துக்களின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். 31.09.1924ல் சென்னை சவுந்தரிய மகாலில் ஐக்கோர்ட்டு நீதிபதி சர்.டி.சதாசிவ ஐயர் தலைமையில் கூட்டம் கூடி, திருநெல்வேலியில் மருத்துவச் சாதியினர் பிணம் எரித்தல் பணியைச் செய்ய மறுத்ததால் மேல்சாதியினரால் தாக்கப்படுவதனைத் தடுப்பது குறித்து விவாதித்தனர். பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம், மணி, திருநாவுக்கரசு முதலியார், சதாசிவ ஐயர், ஐகோர்ட் வழக்கறிஞர் எஸ். வேணுகோபால் செட்டியார், ஜேஎன்ராமநாதன், டிவிசுப்பிரமணியம் ஆகியோர்கள் மருத்துவர்கள் திருநெல்வேலியில் ஒடுக்கப்படுவது குறித்த இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், டாக்டர் நடேச முதலியார் திருநெல்வேலி மருத்துவர்கள் அநியாய கஷ்டங்களுக்கு உட்பட்டிருப்பதால், அக்கஷ்டங்களைப் பற்றி விசாரித்து மருத்துவர்களை கவர்மெண்டார் காப்பாற்றத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அதனை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். வேணுகோபால் செட்டியார் ஆமோதித்துப் பேசிய பின்னர் அத்தீர்மானம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது (தென்னிந்திய மருத்துவர்கள் சங்கம், பக். 28). திருநெல்வேலியில் மருத்துவச் சாதியினர் ஒடுக்கப்பட்டது குறித்து சென்னை சட்டசபைக் கூட்டத்தில் 4121924 அன்று டி. ஆதிநாராயண செட்டியார் கேள்வி கேட்டார். அதற்கு திருநெல்வேலியில் மருத்துவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு இயக்கம் நடந்து வருவது தெரியுமென்றும், திருநெல்வேலியில் மருத்துவர்கள் செய்துவந்த தொழில்களில் ஒன்றை நிறுத்தி விட்டதால் பொது ஜனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பது தெரியுமென்றும், ஆனால் மருத்துவருடைய சொத்திற்கோ உயிருக்கோ ஆபத்து வந்ததாகக் கவர்மெண்டாருக்குத் தெரியவில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது. இப்பதில் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கிறதென்று 17.12.1924 திருநெல்வேலி நகரம் சாலியர் தெரு மருத்துவர் மடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பண்டிதர் ஆனந்தம் பேசினார் (தென்னிந்திய மருத்துவர் சங்கம், பக் 28-29). திருநெல்வேலி நகரத்தில் தொடங்கப்பட்ட இப்போராட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையோர ஊர்களில் வசித்துவந்த மருத்துவச் சாதியினராலும் நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ரமணசமுத்திரம், இடைகால் போன்ற ஊர்களிலும், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஆத்தூர், ஆறுமுகமங்கலம், சேதுக்குவாய்த்தான், கொற்கை, காயல்பட்டினம், அம்மன்புரம் போன்ற ஊர்களில் வசித்து வந்த மருத்துவர்களும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்களும் இழிதொழில் செய்ய மறுத்துவிட்டு இலங்கைக்குச் சென்றனர். இவர்களை, ஏற்கனவே இலங்கைக்குச் சென்றிருந்த மருத்துவர்கள் அழைத்துக் கொண்டனர். இலங்கையிலும் மருத்துவர் சங்கம் அமைக்கப்பட்டது. இச்சங்கத்தினர் தமிழகத்தில் மருத்துவர்களைப் போராட்டம் நடத்த வைப்பதும், பின்னர் போராடுபவர்களை இலங்கை, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதுமான வேலைகளைச் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஆதிக்கச் சாதியினர் மருத்துவர்களைத் தாக்கத் தொடங்கினர். இத்தாக்குதலிலிருந்துத் தப்பித்துக் கொள்வதற்காகச் சிலர் மதம் மாறினர். ரமண சமுத்திரத்தில் உள்ள மருத்துவர்கள் சிலர் இசுலாம் மதத்திற்கு மாறினர். மேலும் மேல்சாதியினருக்குப் பணிகளைச் செய்வதனை விட்டுவிட்டு நெசவு செய்தனர் (வி.எஸ்.சுப்பையா, (81)8.07.05.).   புதுமைப்பித்தனின் நாசகாரக் கும்பலில் குறிப்பிடப்பட்டிருக்கும் முசுலீம் மதமாற்றம் ரமணசமுத்திரத்தில் நடந்தது என்று உறுதிப்படக் கூறுவதற்கு இடமில்லை. காரணம் அக்கதையில் மதம் மாறும் மருதப்பன் அவர் தாக்கப்படும் போது திருவைகுண்டம் காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றதாகக் கூறுகிறார். திருநெல்வேலிக்கு மேற்கே ரவணசமுத்திரமும், கிழக்கே திருவைகுண்டமும் இருக்கிறது. எனவே, இக்கதையை மட்டுமே வைத்து மதம் மாற்றம் நடந்த இடத்தை மிகச் சரியாகக் குறிப்பிட இயலாது. இப்போராட்டங்களின் போது வெள்ளாளர்கள் நேரடியாக மருத்துவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டனர்; சமூகப் புறக்கணிப்பு செய்தனர்; மானிய நிலங்களைத் திருப்பிக் கேட்டனர். ஆத்தூரில் மருத்துவர்களிடம் மானிய நிலத்தைக் கேட்ட போது, மருத்துவச் சாதியினர் ’இந்த நிலங்கள்' எங்களுக்கு ராணி மங்கம்மை கொடுத்தது, நாங்கள் அதனை உங்களுக்குத் தர மாட்டோம் என்று கூறிவிட்டனர் (நடராசன் (73) 02.06.05). திருவிடைமருதூர் கொடூரம் திருநெல்வேலி மாவட்டத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூர் அருகே உள்ள திருவிடைமருதார் மருத்துவச் சாதியினர் போராட்டத்தினைத் தொடங்கினர். இதனால் அவ்வூர் ஆதிக்கச் சாதியினர் மருத்துவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்ததால், குடிக்கத் தண்ணீர் மற்றும் உணவின்றி அவதிக்குள்ளானார்; வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தடுக்கப்பட்டனர். மிகவும் அச்சமடைந்த அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் ஒன்றாகக்கூடிய ஒரே வீட்டில் கத்திகளோடும் தடிகளோடும் இருந்தனர். பின்னர் பண்டிதர் ஆனந்தம் அவ்விடத்திற்கு இரவு நேரத்தில் வயல்வெளி வழியாக அழைத்து வரப்பட்டார். காரணம், அவ்வூர்ப் பார்ப்பனர்களும் இதர மேல்சாதியினரும் பண்டிதர் ஆனந்தம் குறித்து, இவன் திருநெல்வேலி ஜில்லாவையும் இப்படித்தான் கெடுத்து விட்டான் என்றும், நன்றாக அடிவாங்கப் போகிறான் என்றும் பேசிக்கொண்டனர். மேலும் ஆனந்தத்திடம் சிலர் நேரிடையாகவே, உன்மீது தான் இந்த ஊராருக்கு (மேல் சாதியினர்) கோபம் மிகுதியாக இருக்கின்றது; நீ உயிரோடு ஊர் போய்ச் சேர்  என்று கூறினர். இச்சூழலில், அவர் நண்பர்கள் இருவரோடு மாறுவேடத்தில் கடைத்தெருவிற்குச் சென்றார். இவரை அடையாளம் கண்டு கொண்ட மேல்சாதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டு தடிகளால் கடுமையாகத் தாக்கிவிட்டு ஒரு வீட்டில் போட்டுச் சென்றனர். அவ்வீட்டார் ஆனந்தத்தைத் தெரிந்திருந்த காரணத்தினால் அவருக்கு உதவி செய்தனர். பின்னர் அவர் வயல்வெளி வழியாக வேறொரு வீட்டிற்குச் சென்றார். அவ்வீட்டார் அவரை பக்கத்து ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு உதவினர். ஆனந்தம் அவ்வீட்டாரிடம் ஒரு புடவையை வாங்கிப் பெண் போல் வேடமிட்டுக் கொண்டு அவ்வீட்டில் உள்ள இளைஞரின் உதவியோடு கும்பகோணத்திற்குச் சென்றார். தன் நண்பர்கள் மூலமாக திருவிடைமருதூரில் உள்ள மருத்துவர்களின் அபாய நிலையினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் தெரிவிக்கச் செய்தார். காவல்துறையினர் அங்கு சென்று மேல்சாதியினர் மருத்துவர்களுக்கு எதிராக இருப்பதைத் தெரிந்து கொண்டனர்; ஆனால் அவர்களுக்கு உதவி செய்யாமல் சமாதானம் கூறிவிட்டு வந்தனர். மானத்தைப் பெரிதாக நினைத்த பலர் அவ்வூரை விட்டு வெளியேறிவிட்டனர் (தென்னிந்திய மருத்துவர் சங்கக் குறிப்புகள், பக்.25-27). திருவிடைமருதூரில் பண்டிதர் ஆனந்தம் கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னரும் அவர், மருத்துவச் சாதியினரை இழிவுகளிலிருந்து விடுதலையடையச் செய்கின்ற பணியினைத் தொடர்ந்தார். திருவிடை மருதூர் சம்பவம் எந்த ஆண்டு நடந்தது என்பதை அறிய முடியவில்லை. தற்போது கிடைத்திருக்கும் ஆவணத்தில் சம்பவம் நடை பெற்ற ஆண்டு குறித்த பதிவு இல்லை. திருவிடை மருதூரில் கள ஆய்வின் போது சம்பவத்தில் தொடர்புடையவர்களையோ அல்லது அது குறித்த செய்தியினை அறிந்திருப்பவர்களையோ காண முடியவில்லை. எனினும் இச்சம்பவம் திருநெல்வேலி போராட்டத்திற்குப் பின்னர் நடைபெற்றது என உறுதியாகக் கூறலாம்.  இந்தக் காலக்கட்டத்தில், தஞ்சாவூர் அருகே கும்மாப்பேட்டையில் மருத்துவர்களும் குயவர்களும், பொது இடத்தில் வசித்து வந்தனர். 1920களில் மருத்துவர்களின் தந்தை மற்றும் மகன்கள் மலயாவில் இருந்து பணம் அனுப்பியதால் அவர்கள் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்தனர். இதன் மூலம் கும்மாப்பேட்டையில் 5 ஏக்கர் நஞ்சை நிலம் வாங்கினர். அவர்களின் நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்தனர்; ஆனால், பார்ப்பனர்கள் இந்த நிலம் தங்களுக்கானது என்று கூறி மரம் வெட்டுவதனைத் தடுத்தனர். ஆனால் மருத்துவர்களும் குயவர்களும் அந்நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறினர். பார்ப்பனர்கள் அவர்களை வெளியேற்ற முடிவு செய்தனர். மருத்துவர்களும் குயவர்களும் வெளியேற மறுத்துவிட்டனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு நடந்தது. மருத்துவச் சாதியினர் கீழ் கோர்ட்டில் வெற்றி பெற்றனர். ஆனால் பார்ப்பனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் அவ்வெற்றியை முறியடித்தனர்; மருத்துவச் சாதியினரின் 4 குடும்பத்தினரையும் வெளியேற்றினர். அவர்கள் தஞ்சாவூருக்குச் சென்று சலூன் ஆரம்பித்து வாழத்தொடங்கினர். பார்ப்பனர்கள் தங்களுக்குச் சேவகம் செய்வதற்காக புதிய மருத்துவர்களை ஏற்படுத்திக் கொண்டனர் (Gough, Kathleen, 1981; 204.) ரெட்டியார்களின் சமூகப் பயங்கரவாதம் - 1926  திருநெல்வேலி மாவட்ட மருத்துவகுலச் சங்கத்தின் "சவத்திற்குச் சவரம் செய்யவும் அதனை எரிக்கவும் மறுத்தல்” என்ற தீர்மானத்தினைப் பின்பற்றி மூலக்கரைப்பட்டி மருத்துவச் சாதியினர் 1926ம் ஆண்டு ரெட்டியார்களுக்கு இழிதொழில் செய்ய மறுத்தனர். அக்காலத்தில், இங்கு 500 ரெட்டியார் குடும்பங்களுக்கு, 12 மருத்துவச் சாதிக் குடும்பங்கள் வசித்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆகும். தங்களுக்குச் சேவகம் செய்ய மறுத்த, மருத்துவச் சாதியினர் மீது ரெட்டியார்கள் வன்முறையில் ஈடுபட்டனர்; சமூகப் புறக்கணிப்பு செய்தனர்; பொதுக் கிணற்றில் குடிநீர் எடுப்பதினைத் தடுத்தனர். இதனால் அம்மக்கள் பிச்சாண்டி பண்டிதரின் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தொடங்கினர். ரெட்டியார்கள் அக்கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி மாசுபடுத்தினர். பின்னர் ஊற்றுத் தோண்டி அதில் சுமார் மூன்று மாத காலமாக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர் பிச்சன் பண்டிதருக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்ட முடிவு செய்தனர். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த, சுடலைமுத்துக் குடும்பன், மாடன், உதயன், ஈனன், சண்முகம் ஆகிய 5 பள்ளர் சாதியைச் சேர்ந்தோர் கிணறு தோண்டும் பணிகளைச் செய்துவந்தனர். அப்பணி முடிவடைவதற்குள் ரெட்டியார்கள் கிணறு வெட்டக்கூடாது என்று மிரட்டவே பள்ளர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். மருத்துவர்களின் வயல்களில் விவசாயப் பணி செய்து கொண்டிருந்த ஆதிதிராவிடர்களையும் பணி செய்யவிடாமல் துரத்தினர். (மாவட்ட கோர்ட் மாஜிஸ்ட் ரேட்டுக்கு அனுப்பப்பட்ட புகார் மனு, பக் 3) மருத்துவச் சாதியினரின் ஆடு மாடுகள் அரசு புறம்போக்கு நிலங்களில் மேய்வதைத் தடுத்தனர். மருத்துவச் சாதிப் பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டனர். அப்பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். கணபதி பிள்ளை என்பவர், 13.04.1926 அன்று அரசுக்குச் சொந்தமான குளத்தில் பிச்சைக்கார பண்டிதரின் மனைவி வேயிலு காந்தாள் குளித்த போது, அவரைக் குளிக்கவிடாமல் துரத்தினார்; அவரின் உலர்ந்த துணிகளை குளத்திற்குள் வீசினார். மேலும், மேற்குறிப்பிட்ட நாளன்று முத்தையா பண்டிதரை அக்குளத்தில் குளிக்கவிடாமல் தடுத்தனர். இரவு நேரங்களில் மருத்துவர்களின் வீடுகளில் கல் எறிந்தனர். நடைபாதையில் கூர்மையான முட்களைப் போட்டுவைத்தனர். பிச்சன் பண்டிதன் நிலத்தில் அவர் போட்டிருந்த உரங்களை 27.09.1926 அன்று மேல் சாதியினர் அள்ளிச் சென்று விட்டனர். இதனால் அவர் நாங்குநேரி காவல் துறையில் 01.10.1926 அன்று புகார் கொடுத்தார் (பின்னிணைப்பு 5-ஐ காண்க). மேலும் ரெட்டியார்கள் பல வகைகளில் மருத்துவச் சாதியினர்களின் செயல்பாடுகளை முடமாக்கினர் (சேரன்மகாதேவி மாஜிஸ்ட்ரேட்டுக்கு அனுப்பப்பட்ட புகார் மனு, 16.04.1926). தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் துறையில் புகார் கொடுத்தபோது அங்கு பாதுகாப்பிற்காக ஒரு தலைமைக் காவலர் உட்பட நான்கு காவலர்கள் அமர்த்தப்பட்டனர். இக்காவலர்கள் ரெட்டியார்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். (மாவட்ட கோர்ட் மாஜிஸ்ட் ரேட்டுக்கு அனுப்பப்பட்ட புகார் மனு, பக்2, 17.7.1926). ரெட்டியார்களின் சமூக வன்முறையையொட்டி அங்கு ஒரு காவல் அதிகாரி வந்து சென்ற பின்னர், சுப்பையா ரெட்டி, குருவையா ரெட்டி ஆகியோர், நீங்கள் பார்பர்கள், நாங்கள் பண்ணையார்கள் இருக்கிற பொழுது, எப்படி அரசாங்கத்திடம் முறையிடலாம். எங்களை எதிர்த்தால் உங்கள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம். உங்களுக்காக இந்தப் பகுதியில் யாரும் சாட்சி சொல்லப் போவதில்லை. எங்களுக்குக் கட்டுப்படவில்லை என்றால் உங்களை அழித்துவிடுவோம் என்று மருத்துவர்களை மிரட்டினர். (சேரன்மகாதேவி மாஜிஸ்ட் ரேட்டுக்கு அனுப்பப்பட்ட புகார் மனு, 16.04.1926 : 3). இப்பிரச்சனை தொடர்பாக மீண்டும் 16.11.1926 அன்று மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நான்குநேரியில் முகாமிட்டிருந்த போது புகார் கொடுக்கப்பட்டது. ரெட்டியார்கள், மருத்துவச் சாதியினர் மீது வன்முறையில் ஈடுபட்ட போது அவர்களுடன் வெள்ளாளர்களும், ஆசாரிகளும் இணைந்து கொண்டு தாக்கினர். மருத்துவச்சாதியினருக்காக வழக்கறிஞர் எம்.தேவதாசு வாதிட்டார். மருத்துவச் சாதியினர் 6 பேர், ரெட்டியார்கள் 11 பேர், வெள்ளாளர்கள் 2 பேர், ஆசாரிகள் 2 பேர் இவ்வழக்கில் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் இணைக்கப்பட்டிருந்தனர். இப்போராட்டத்தின் போது மருத்துவச் சாதியினர் நீதிமன்றம், காவல்துறை என அங்குமிங்குமாக அலைவதைப் பார்த்த ஒரு பாதிரியார்   அம்மருத்துவர்களிடம் அவர்கள் அலைவதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அவர்கள் காரணத்தினைக் கூறவே அவர்களுக்குத் தான் ஆதரவு தருவதாக உறுதியளித்தார். இதனால் அவர்களில் நடராசன், பரதேசி ஆகியோர் கிறித்துவ மதத்தினைத் தழுவினர் நடராசன் (73) 02.0605). மதம் மாறிய பிச்சைப் பண்டிதன் தனது பெயரை சவேரி பிச்சைப் பண்டிதன் என மாற்றிக் கொண்டார். இப்போராட்டத்தின் போது மருத்துவச் சாதியினர் ரெட்டியார்களின் வன்முறையினைச் சுமார் ஓராண்டுகாலம் சந்தித்து, அதனை எதிர் கொண்டு வெற்றி பெற்றனர். திருநெல்வேலி வெள்ளாளர் - பார்ப்பனர், திருவிடை மருதூர் பார்ப்பனர் - வாண்டையார் ஆகியோரைவிடவும் மூலைக் கரைப்பட்டி ரெட்டியார் - வெள்ளாளர் - ஆசாரிகளே மிகக் கொடூரமான முறையில் மருத்துவச் சாதியினருக்கு இன்னல்கள் செய்தனர்.  மூலைக்கரைப்பட்டியில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற மருத்துவச் சாதியினரின் மாநாடுகளும் கூட்டங்களும் கீழே தரப்பட்டுள்ளன.  01.09.1926ல் திருநெல்வேலி ஜில்லா மருத்துவர் சங்க முதல் மாநாடு 17.09.1926ல் பத்தமடை கூட்டம்  12.09.1926ல் தென்காசி தாலுக்கா மாநாடு 14.09.1926ல் கல்லிடைக்குறிச்சி கூட்டம் 16.09.1926ல் பாபநாசம் கூட்டம்  28.09.1926ல் திருநெல்வேலி மருத்துவர் மடத்தில் கூட்டம்  இதில் பண்டிதர் ஆனந்தம், டாக்டர் எம்பி சங்கரசுப்பு பிள்ளை, வி.எம்.சாமி பண்டிதர் உட்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பண்டிதர் ஆனந்தம் மருத்துவச் சாதி பெண்களும் ஆண்களும் கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும், மருத்துவ சமூக முன்னேற்றத்திற்கான வழிவகைகள் குறித்தும் பேசினார். 1926ல் மூலைக்கரைப்பட்டியில் மட்டுமல்லாது தமிழகத்தில் சேலம் பகுதி யிலும் இப்போராட்டம் நடைபெற்றிருக்கிறது. பண்டிதர் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மருத்துவச் சாதியினரை அணிதிரட்டிப் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். சலூன்: ஐக்கியத்தின் குறியீடு   மருத்துவச் சாதியினர் நடத்திய போராட்டத்தினால் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றமானது :  1) தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளாளர்கள் கருதிய இடை நிலைச் சாதிகளுக்கான மருத்துவச் சாதியினரைத் தீண்ட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது  2) சலூன் கடைகள் உதயமானது என்னும் இவ்விரு நிலைகளைக் குறிப்பிடலாம். வெள்ளாளர் - பார்ப்பனர்கள், பொற்கொல்லர் ஆகியோருக்குச் சேவகம் செய்து வந்த மருத்துவச் சாதியினர் அதனைச் செய்ய மறுத்துவிட்டதால், மேல்சாதியினர் திருவனந்தபுரத்திற்குச் சென்று அங்கிருந்து கோவிந்தன், கிருஷ்ணன், பாலன், நாராயணன், அப்புக் குட்டன் ஆகியோரை அழைத்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். புதுமைப்பித்தன் தனது நாசகாரக் கும்பல் கதையில் மருத்துவர்கள் இறப்புச் சடங்கு செய்ய மறுப்பதால் ''மலையாளத்து அம்பட்டென குடியேத்திப் புடுவோம்" என்று கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. வெள்ளாள - பார்ப்பனர் களைப் பின்பற்றிப் பொற்கொல்லர்களும் கேரளாவிலிருந்து ராகவன், கேசவன் ஆகிய இருவரது குடும்பத்தாரையும் அழைத்து வந்தனர். வெள்ளாள - பார்ப்பனர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் அவர்களின் எண்ணிக்கைக்கு போதுமானவர்கள் அல்லர். எனவே, கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் தேவைப்பட்டனர். இக்காலங்களில் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இடை நிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்து வந்த மருத்துவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வொடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நோக்கிக் கொண்டிருந்த சூழலில் திருநெல்வேலி நகரத்தில் மேல் சாதி இந்துக்களுக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்து, வெள்ளாள- பார்ப்பனர்களின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சேவகம் செய்வதற்காகத் திருநெல்வேலிக்கு வந்தனர். திருநெல்வேலி நகரத்தில் காட்சிமண்டபம் அருகே வேடர் தெருவில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். அங்கிருந்த வேடர்கள் எங்குச் சென்றனர் என்பது தெரியவில்லை. மருத்துவச் சாதியினர் குடியமர்த்தப்பட்ட பின்னர் அத்தெரு ‘ஜெயபிரகாஷ் தெரு' என புதிய பெயர் சூட்டப்பட்டது. இன்று இத்தெருவில் வசிக்கும் மருத்துவச் சாதியினர் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கயத்தாறு, கழுகுமலை, தென்காசி போன்ற பகுதிகளிலிருந்து இங்கு வந்தவர்களே. இவர்கள் அனைவரும் இடைநிலைச் சாதியினருக்குச் சேவகம் செய்து வந்தவர்கள். இவர்களை மேல்நிலைச் சாதி இந்துக்கள் ஒருபோதும் தீண்டியிருக்கவில்லை; ஆனால் தற் போது முதன் முறையாக அவர்களைத் தீண்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இது வெள்ளாள மருத்துவச் சாதியினர் நடத்திய போராட்டத்தின் விளைவாகும். மேல்சாதி இந்துக்கள் அழைத்து வந்த சாதியினர் சவரப்பணிகளை மட்டுமே செய்தனர். கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவர்கள் இறப்புச் சடங்கு செய்தல்,  பிணம் எரித்தல் ஆகிய பணிகளைச் செய்தனர். கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவரின் வாரிசான ராமகிருட்டிணன் என்பவர் வெள்ளார்களுக்கு மட்டும் இறப்புச் சடங்குகளை இன்றும் செய்து வருகிறார். (கள ஆய்வு 09.09.05).  சலூன் கடைகளும் இக்கால கட்டத்தில்தான் உருவானது. வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட இம்மருத்துவர்களில் சிலர் சலூன் கடை அமைத்துச் சவரம் செய்யத் தொடங்கினர். திருநெல்வேலியில் முதன் முதலில் நெல்லையப்பர் கோயிலிருந்து கிழக்கே சுமார் 100மீ தூரத்தில் தெப்பக்குளம் அருகே சொக்கப்பனை முக்கு என்ற இடத்தில் தென்காசியைச் சேர்ந்த மாரி என்பவர் 1920களின் கடைசிப் பகுதியில் சலூன் கடை ஆரம்பித்தார். இதன் பின்னர் திருநெல்வேலி நகரத்தைச் சுற்றிப் பல சலூன்கள் உதயமாயின. சலூன் கடைகளின் தோற்றத் தினால் இதற்கு முன்னர் ஆற்றுக்கரையோரங்களில் சவரம் செய்யப்பட்டு வந்த "பட்டறை" முறை அழியத் தொடங்கியது; வீடுகளுக்குச் சென்று சவரம் செய்வதும் குறையத் தொடங்கியது. இச்சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்டோர், நாடார் ஆகிய சாதிகளுக்குச் சவரம் செய்ய மறுக்கப்பட்டது. வெள்ளாள - பார்ப்பனர் அல்லாத சாதியினர் சலூன் கடைகளில் சவரம் செய்தால் உடனே சலூன் கடைகள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டன. சலூன் கடைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் உருவாகிய முதலாளிய சமூகத்தின் விளைவு அல்ல; அது மருத்துவச் சாதியினர் விடுதலைக்காக நடத்தியப் போராட்டத்தின் உற்பத்தியாகும்.  தமிழகத்தின் வடமாவட்டத்தில் ஜெயங்கொண்டான் என்ற ஊரில் கேரகுநாதன் என்பவர் பண்டிதர் ஆனந்தத்தைச் சந்தித்து மருத்துவர் குல சங்கம் ஆரம்பித்தார். மேலும் 15.02.1947ல் ஜெயங்கொண்டான் தாலுகா மாநாட்டையும் நடத்தினார். அதன் பின்னர் அப்பகுதியில் உடையார்பாளையத்தில் பொன்னுசாமி என்பவரைச் சலூன் கடை திறக்கச் செய்தார். அங்குள்ள ஜமீன்தார் சலூனைத் திறக்கவிடாமல் தடுத்தார். ரகுநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சர் ஆகியோருக்குப் புகார் கொடுத்தார். காவல்துறையினர் தலையிட்டுச் சலூன் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் (கே. ரகுநாதன், பண்டிதம் - ஆக்2002). ஏன் ஜமீன்தார் சலூன் திறப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் முக்கியமானதாகும். மருத்துவச் சாதியினர், ஆதிக்கச் சாதியினரின் இருப்பிடத்தைத் தேடிச் சென்று சவரம் செய்வது ஒரு விதத்தில் தங்களை அடிமைப்படுத்துவதாக கருதிய அவர்கள் அதிலிருந்து விடுபட முயற்சி செய்தனர். ஆதிக்கச் சாதியினர் வீடுகளுக்குச் சவரம் செய்வதற்கு ஒரு சிறிய பெட்டியில் சவரக் கருவிகளைச் சுமந்து கொண்டு செல்வதை, "பெட்டியை எடுக்காத" என்று கிண்டலாகவும், போர்குணத்துடனும் கண்டித்துவந்தனர். சவரம் செய்ய வேண்டும் என்றால் தங்களின் இருப்பிடத்தைத் தேடி வரட்டும் என்ற நோக்கில்தான் சலூன் கடைகள் ஆரம்பித்தனர். இதனை ஆதிக்கச் சாதியினர் பல ஊர்களிலும் எதிர்த்தனர். முல்க் ராஜ் ஆனந்தின் பார்பர்களின் தொழிற்சங்கம் என்ற கதையை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இக்கதையில் வரும் சந்து ஆதிக்கச் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று சவரம் செய்ய மறுத்துவிட்டு, மருத்துவச் சாதியினருடன் கூட்டாக இணைந்து நகரத்தில் சலூன் கடைகளை ஆரம்பித்தார். சாதி இந்துக்கள் சவரம் செய்ய விரும்பினால் தங்களின் சலூன் கடைகளுக்கு வரட்டும் என்று முடிவெடுத்தனர். எனவே, சலூன் கடைகள் தோற்றம் பெற்றதானது, சாதிய ஆதிக்கத்தின் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு வழிமுறையாக இருந்தது. மேலும், பண்டிதர் ஆனந்தம் சலூன் கடைகளுக்குத் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் விடுமுறை அறிவிக்க வேண்டும், இதன் மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான மருத்துவச் சாதியினரின் ஒற்றுமையை அறிவிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டு, அதனை அமுல்படுத்த வேண்டும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார் (சிவ பாலன், பண்டிதம், நவ 2004, 2-3). இது முறையாகச் செயல்படுத்தப்பட்ட போது இதனைக் கண்ட ஆதிக்கச் சாதியினரும், தொழிற்சங்கங்கத்தினரும் அதனைத் தங்களுக்கு வழிகாட்டுதலாக எடுத்துக் கொண்டனர். முல்க் ராஜ் ஆனந்தின் 'பார்பர்களின் தொழிற்சங்க'க் கதையில், மருத்துவச் சாதியினரால் உருவாக்கப்படும் “ராஜ்கோட் மாவட்ட பார்பர் சகோதரர்களுடைய முடிதிருத்தும் - சவர சலூன்” என்ற தொழிற்சங்கத்தை அங்குள்ள இதர ஊக்கமான தொழிற்சங்கத்தினர் பின்பற்றியதாகக் கூறியிருப்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, சலூன் கடையின் தோற்றமும் அதற்கு ஒருநாள் விடுமுறையும் மருத்துவர்களின் போராட்டத்தையும் ஒற்றுமையையும் தமிழ் சமூகத்திற்குப் பகிரங்கமாக அறிவிக்கும் ஒரு குறியீடாக இருந்தது எனக்கூறுவது மிகையல்ல.  காலனிய ஆட்சிக் காலத்தில் கரூரில் மருத்துவச் சாதியினர் முதலியார்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தினைக் கரூரிலுள்ள சலூன் கடைகள் அறிவித்துக் கொண்டிருந்தன. கரூர் பகுதியில் முதலியார் சாதியினர் இன்ப நிகழ்ச்சிகளில் மேளம் வாசிப்பார். ஆனால், இவர்கள் மருத்துவச் சமூகத்தினர், கீழ் சாதியினர் என்று கூறி அவர்களின் வீட்டு வைபவங்களுக்கு மேளம் வாசிக்க மறுத்தனர். இதனால் கரூரிலுள்ள மருத்துவர்கள், பெரு நோய்க் காரர்கள், முதலியார்கள் உள்ளே நுழையக் கூடாது – என்று மரப்பலகையில் எழுதித் தங்களின் சலூன்களில் தொங்க விட்டிருந்தனர். இதனை ஒரு முறை கரூர்ப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்த தந்தை பெரியார் பார்த்திருக்கிறார். இதற்கான காரணத்தினை பண்டிதர் ஆனந்தத்திடம் பெரியார் கேட்ட பொழுது, பண்டிதர்,  முதலியார் சாதியினர் எங்களுக்கு மேளம் வாசிக்க மறுத்ததால் நாங்களும் அவர்களுக்குச் சவரம் செய்ய மறுத்து வருகிறோம்  என்று கூறினார். தந்தை பெரியார் இச்செய்தியினை 22.05.1944ல் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவர் சங்க மாநாட்டில் பின்வருமாறு பேசினார்:  இந்த நாட்டிலே பிறந்துவிட்ட காரணத்தால் இந்தச் சமுதாயம் மருத்துவச் சமூகத்தை மிகவும் இழிவாக நினைக்கிறது. இதை நாம் மறக்கக்கூடாது - மறைக்கக்கூடாது, எவ்வளவுக்கெவ்வளவு தாழ்வை இழிவை மறைத்து வைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு கேடுதான் சூழும். நன்றியறிதலற்ற மக்கட் சமுதாயத்திலேயே பெருங் கூட்டமான நீங்கள் தாழ்மையாகக் கருதப்படுகிறீர்கள். நம் நாடு என்று சொல்லப்படுகிற இங்கு என்ன காரணத்தாலோ - பிற்பட்ட நிலைக்குச் செல்ல வேண்டும் மென்று உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை என்ன? அனுபவித்ததென்ன? என்று துருவிப் பார்த்து அவற்றை மீண்டும் பெறலாம் என்பதில் தேசிய குழுவிற்கும் - பண்டித குழுவிற்கும் கருத்து சொல்லுகிறதேயொழிய இன்றிருக்கின்ற நிலைக்கேற்ப உலகத்தோடு முன் செல்லலாம் என்கின்ற அறிவும் - உணர்ச்சியும் ஏற்படுகிறதே இல்லை. இதன் பயனாகவே உங்களுக்கு மட்டும் சமுதாயத்தில் இழிவு இருக்கிறது என்பதல்லாமல் ஜாதி இந்துக்கள் என்று சொல்லப்படும் எங்களுக்கும் சமுதாயத்திலே தாழ்த்தப்பட்ட நிலையே உள்ளது. நம்மைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் - நம்மினின்றும் வேறான அயலார் ஆகிய கூட்டத்தார் இன்று நம்மைச் சுரண்டி பிழைக்கக் காத்திருக்கிறார்களே தவிர நம்முடைய இழிவுகள் ஒழிய அவர்களால் யாதொரு உதவியும் இல்லை. எனவே, கட்டுப்பாடான உணர்ச்சியுள்ள வாலிபர்களைக் கொண்ட பெருங்கூட்டமான நீங்கள் கிளர்ச்சி செய்து உங்கள் சமூகத்தைக் கரையான் போல் அழித்துவரும் இழிவைத் தொலைத் தொழிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் முடி எடுக்கிறவர்கள் என்றும் சவரம் செய்கிறவர்கள் - முக அலங்காரம் பண்ணுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறீர்கள். இவற்றில் இழிவு சிறிதளவும் இருப்பதாக நான் கருதவில்லை . ஆனால் நீங்கள் அத்தொழில் செய்கிறீர்கள் என்பதற்காக உங்களை இழிவாகக் கருதுவதுதான் மடமை. இன்றைய தினம், பலரும் சொந்தமாகச் சவரம் செய்து கொள்கிறார்களே. ஆகவே, இத்தகைய இழிவு வகுப்பிற்கு ஏற்பட்டதே ஒழிய தொழிலுக்கு ஏற்பட்ட இழிவு அல்ல. - - கரூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததை நேரில் கண்டு சந்தோஷமடைந்தேன். ஒவ்வொரு சவரக் கடையிலும் பெருவியாதிக்காரரும் - மேள வாத்தியக்காரரும் உள்ளே நுழையக்கூடாது என்று நோட்டிஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. காரணம், மேள வாத்தியக்காரர் தங்களை உயர்ந்த சாதியார் என்று கருதி உங்கள் வீடுகளில் மேளம் வாசிக்க மறுத்ததே என்று சொல்லப்பட்டது. இது மட்டும் போதாது எவனொருவன் உங்களை இழிவுபடுத்துகிறானோ அவன் உள்ளே நுழையக்கூடாதென்று நோட்டிஸ் போடுங்கள். இதில் தவறு ஒன்றுமில்லை. துணிவு வேண்டும், சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். ஒரே சாதிதான் சவரத் தொழிலை நடத்துகிறது; நடத்த வேண்டும் என்ற நிலை ஒழிய வேண்டும்" (பண்டிதம், ஏப்ரல் 2003, மே 2003). கரூர் மருத்துவர்கள் போராடியது போல், வடமாநிலத்திலும் மருத்துவர்கள் இத்தகைய போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதை பிளண்ட் குறிப்பிட்டுள்ளதாக லூயி துமோ தனது நூலில் குறிப்பிட் டுள்ளார் (1998;176). தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் 1950களில் திருவையாறு இசைக் கல்லூரியைச் சேர்ந்த வீராசாமிப் பிள்ளை, மருத்துவர்களுக்கு மேளம் வாசிக்கக்கூடாது என்று கூறியதால் பலரும் மருத்துவச் சாதியினருக்கு மேளம் வாசிக்க மறுத்து விட்டனர். இதற்குப் பதிலடியாக மருத்துவச் சாதியினரும் மேல்சாதியினருக்குச் சவரம் செய்ய மறுத்தனர். இதனால், மேல்சாதியினர் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மருத்துவச் சாதியினரை அழைத்து வந்தனர். மருத்துவர்களும், தங்களுக்கு மேளம் வாசிப்பதற்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்தனர் (கோவிந்தராசு, 04.09.05). இலங்கை சலூன் : போராட்டத்தைத் திட்டமிடும் மையம் தமிழகத்திலிருந்து போராட்டம் நடத்தி இலங்கைக்குச் சென்ற மருத்துவர்கள் அங்கும் மருத்துவர்களுக்கான சங்கத்தைக் கட்டியெழுப்பினர்; தொடர்ந்து போராடினர். இலங்கைக்குச் சென்ற மருத்துவர்கள் தங்கள் மகன்களை இலங்கைக்கு அழைத்துக் கொண்டனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பலரும் இலங்கையில் கல்வி கற்றனர். இலங்கையில் தமிழக மருத்துவர்களால் நடத்தப்பட்ட சலூன் கடைகள் தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கான வழிமுறைகளையும், அப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிப்பதற்கான போராட்டக் களமாக மாறி விட்டது. நடராசன் (73) 1940களில் தனது 11-வது வயதில் இலங்கைக்குச் சென்றார். அங்கு அவரது தந்தை இலங்கை கண்டியில் சலூன் கடை நடத்தினார். இவர் இலங்கையில் தான் கண்ட நிகழ்வுகளைப் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்:  அங்கு மருத்துவர் சங்கம் இருந்தது. நான் சிறியவனாக இருந்த போது கொழும்பு கடைக்கு (சலூன்) திருநெல்வேலியிலிருந்து ராமையா என்பவர் வந்து பேசினார். அவர் “நமக்கு ‘ஐம்பட்டர்கள்' என்று பெயருண்டு என பண்டிட் ஆனந்தம் கூறுவார்", என்று கூறினார். கண்டியில் நடந்த கூட்டத்தில் அனைவரி டமும் கையெழுத்து வாங்கப்பட்டது. கையெழுத்து கோணல்மாணலாக இருந்தது. இதனைப் பார்த்த பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம், "நாமெல்லாம் கோட் சூட் அணிந்து கொண்டு இப்படிக் கையெழுத்துப் போடக்கூடாது. நன்றாகக் கையெழுத்துப் போடவேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு இரவு டியுசன் கிளாஸ் நடத்துங்கள்" என்றார். இதனால் சிதம்பரம் பிள்ளை கோபமடைந்தார். இவருக்கு பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் கடிதம் போட்டார். அதில், ''நான், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு பேசினேன்”, என்று எழுதியிருந்தார். இக்கடிதத்தை சிதம்பரம்பிள்ளை முத்துராஜ் வீட்டில் (வண்ணார்பேட்டை) வைத்து என்னிடம் காட்டினார். பண்டிட் எஸ். எஸ். ஆனந்தம் 1927 அல்லது 1928ல் ஒரு மாநாடு நடத்தினார். 64 கார்கள் வைத்து அவரை ஊர்வலமாக அழைத்து வந்துனர். அந்த மாநாட்டிற்கு  “அகில இலங்கை மருத்துவர்கள் மாநாடு" என்று பெயர். அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, எங்க மாமா கண்டியில் பிளாட்பார டிக்கெட் வைக்க வேண்டும் என்று கூறினார். பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் ராஜா போல் வந்தார். மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. இவர் 1950களில் தமிழகத்திற்கு வந்துவிட்டார். ஆவுடையப்பன் (75) என்பவர் தன் நினைவுகளைப் பின்வருமாறு கூறினார்: நான் 9வது வயதில் இலங்கைக்குச் சென்றேன். அங்கு 12ம் வகுப்பு வரை படித்தேன். 1946ல் அகில மருத்துவர் மாநாடு கொழும்பு நகராட்சி மன்றத்தில் நடந்தது. இதில் 263 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டில், மருத்துவத் தொழிலை உயர்வாகச் செய்ய வேண்டும், சவரம் செய்வது இடையில் வந்தது, மருத்துவ சாதிப் பெண்கள் பிரசவம் பார்க்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் இலங்கையில் "நாம்" என்ற பத்திரிகையை நடத்தினேன். மருத்துவர்களுக்காக “பிரம்மநாயகம்” என்ற மருத்துவச் சாதியைச் சேர்ந்தவர் உண்டியல் கடை நடத்தினார். மருத்துவர்களுக்கென ஒரு வங்கியும் இருந்தது. காலனிய ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தின் நோக்கம் "இழிவுகளிலிருந்து” விடுபடுதல் என்பதாகும். அவர்கள் இழிவு என்று கருதியவற்றில் மாப்பிள்ளைச் சவரம் / கால்சவரம், சவத்திற்கு சவரம் செய்தல் - எரித்தல் ஆகியன அடங்கும். கள ஆய்வின் போது பெரும்பாலான முதியவர்கள் மாப்பிள்ளைச் சவரம் குறித்து எதுவும் கூறவில்லை . சொக்கலிங்கம் (74) என்ற முதியவர் மட்டும்தான் திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில், மாப்பிள்ளைச் சவரத்திலிருந்து விடுபடுதலும் இலக்காக இருந்தது என்றார். இதிலிருந்து மாப்பிள்ளைச் சவரம் குறித்துக் கூறுவதைக்கூட அவர்கள் இழிவாகக் கருதுகின்றனர் என்பது புலப்படுகிறது. இழிவுகளிலிருந்து விடுதலை அடைவதற்கான போராட்டத்தில் பெரும்பாலும் பங்கேற்றது மேல்சாதி இந்துக்களான வெள்ளாளர், பார்ப்பனர், ரெட்டியார் போன்ற சாதிகளுக்குச் சேவகம் செய்து வந்த பிரிவினர் ஆவர். இவர்களோடு இடைநிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்துவந்த மருத்துவர்களும் இணைந்திருந்தனர். மருத்துவர்கள் எந்த இழிவுகளிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்று உறுதியேற்றனரோ, அந்த இழிவுப் பணிகளானது மேல்சாதி இந்துக்களுக்கு நன்மை பயப்பதாக அவர்கள் கருதினர். இறந்தவர்களை குளிப்பாட்டி சவரம் செய்து சுத்துமாக பரலோகத்துக்கு அனுப்பினால் அவரது ஆத்மா சாந்தி பெறும், இறந்தவரின் குடும்பத்தார் வாழ்க்கைக்கும் இறந்து போனவரால் பாதகம் ஏதும் ஏற்படாது என்பது மேல்சாதி இந்துக்களின் நம்பிக்கை. ஆதலால், இறந்தவர்களைச் சுத்தப்படுத்துதல் என்பது சடங்கியலாகச் செய்யப்பட்டு வந்தது. இச்சடங்கினைச் செய்ய மறுப்பது என்பது மேல்சாதி இந்துக்களின் வளமான வாழ்வுக்குக் குந்தகம் விளைவிப்பதாகும். மருத்துவர்கள் தங்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக எந்த 'இழிவு வேலைகளைக்’ கைவிடுவதற்காகப் போராடினார்களோ, அந்த இழிவு வேலைகள் தங்களது பொருளாதார வளத்தைச் சிதையாமல் பாதுகாத்துக் கொள்ளும் என்று மேல்சாதி இந்துக்கள் நம்பினர். அதாவது, மருத்துவர்கள் எச்சடங்கியல் பணிகளை விட்டொழிக்கப் போராடினார்களோ அச்சடங்கியல் பணிகள் தங்களின் பொருளாதார வளத்திற்கானது என்பது மேல்சாதி இந்துக்களின் நம்பிக்கை. மருத்துவர்களுக்குச் சடங்குகளை விட்டொழிப்பது சாதகமானது, மேல் சாதி இந்துக்களுக்குப் பாதகமானது. மேல்சாதி இந்துக்களின் சடங்கு நன்மை தரும் என்பது கருத்தியல் சார்ந்த நம்பிக்கையாகும். ஆனால் மருத்துவர்கள், சடங்கு குறித்து எந்த அபிப்பிராயங்களுக்கும் இடம் தராமல், சடங்காகச் செய்யப்படும் அப்பணிகளை "இழிவு" என்று கருதினர். எனவே, சவச் சடங்கிற்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் முற்போக்கானது. ‘சவச் சடங்கில் சீர்திருத்தம்’ வேண்டும் என்ற கட்டுரையொன்றினை மயிலை சீனி. வேங்கடசாமி குடியரசு இதழில் (06.11.1932) எழுதியுள்ளார். இக்கட்டுரையில், சவச்சடங்கைப் பற்றிய சீர்திருத்தத்தில் ஒருவரும் கவனம் செலுத்தவில்லை. சவச்சடங்கைச் சீர்திருத்த வேண்டுமானால் பகுத்தறிவுச் சீர்திருத்தக்காரர்களாகிய சுயமரியாதை இயக்கத்தினரால்தான் முடியும். ஏனென்றால் வைதீகர்கள் சீர்திருத்தத்திற்கு உடன்படமாட்டார்கள்; பொது ஜனங்களோ பழைய வழக்கம் என்று சொல்லிப் பழமை பாராட்டுவார்கள். அரசாங்கத்தாரோ என்றால் சமய சம்பந்தமான விஷயங்களில் தலையிடமாட்டோம் என்று சொல்லிவிடுவார்கள். ஆகவே, இந்தச் சீர்திருத்தப் பொறுப்பு சுயமரியாதை இயக்கத்தின் மேல் விழுகிறது (ப168) என்றும், இந்துக்களில் சில வகுப்பார் தங்கள் பிணங்களை உட்கார வைத்து முகத்தைத் திறந்தபடியே வீதிகளின் வழியாகக் கொண்டு போகிறார்கள். இவ்விதப் பிணங்களைத், தெருவில் போகிற ஜனங்கள் பார்க்கும் போது ஒருவித அருவருப்பு உண்டாகிறது. பிணங்களின் விகாரமான முகத்தைப் பார்க்க யார்தான் இஷ்டப்படுவார்கள்? பிணத்தின் சொந்தக்காரர்களுக்கு விகாரமாகத் தோன்றாது. ஆனால் மற்ற பொது ஜனங்கள் பிணங்களின் முகத்தைத் தெருக்களில் காணும்போது அருவருப்படைகிறார்கள். அன்றியும் இறந்து போனவர் தொத்து வியாதிகளினால் இறந்திருக்கலாம். அப்படிப்பட்ட பிணங்களை வீதிகளில் திறந்தபடியே கொண்டு போவது எவ்வளவு மோசமான காரியம் பாருங்கள் (ப168) என்று கூறியுள்ள வேங்கடசாமி சில சீர்திருத்தக் கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். பிணங்களைப் பெட்டிக்குள் வைத்து கொண்டு செல்ல வேண்டும், சடங்குகளில் எவ்விதமான வாத்தியங்களும் கூடாது, பொரி இறைத்தல், வாய்க்கரிசி இடுதல், குடம் உடைத்தல் முதலிய மூடச்சடங்குகள் அனாவசியம், புதைப்பதைவிட எரிப்பதே மேலானது (பக்.169-170) என்கிறார். பிணங்களின் திறந்த முகத்தைப் பார்ப்பதற்கே பொது ஜனங்களுக்கு 'அருவருப்பாக இருக்கிறதென்றால், இயற்கையாகவும், நோயினாலும் இறந்து போனவர்களுக்குச் சவரம் செய்த செய்து வருகின்ற மருத்துவர்களுக்கு எந்தளவுக்கு அருவருப்பாக இருந்திருக்கும்; இருக்கும். மேலும், பிணங்களை எரிக்க வேண்டும் என்று கோரும் வேங்கடசாமி, யார் எரிப்பது? பிணங்களை எரிக்கின்ற மருத்துவர், வெட்டியான் போன்ற சாதிகளைக் கொண்டா? அல்லது அந்தந்தச் சாதியினரா? என்பது குறித்து எதுவும் கூறவில்லை . 1920களில் இருந்து, இறந்த பிணங்களுக்கு சவரம் செய்ய மாட்டோம், பிணம் எரிக்க மாட்டோம்' என்ற போராட்டம் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இக்கட்டுரை வெளியானது. ஆனால் வேங்கடசாமி சவத்திற்குச் சவரம் செய்தல் - எரித்தல் குறித்து எதுவும் பேசாமலிருப்பதானது, அவரின் ’தேர்ந்தெடுத்த மறதி' எனக் கருதலாம். மேலும் அவர், "சவச்சடங்கின்  சீர்திருத்தத்திற்கு வைதீகர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்”, என்கிறார். ஆனால் தமிழகம் முழுவதும் இழிதொழில் செய்ய மாட்டோம் என்று போராட்டம் நடத்திய போது அதற்கெதிரான ஒடுக்குமுறையில் முன்னின்ற சாதிகளானது தங்களை ‘சைவர்கள்' என்று அழைத்துக் கொள்கின்ற வெள்ளாளர்கள், பார்ப்பனர்கள், ரெட்டியார்கள், ஆசாரி, வாண்டையார் ஆகியனவாகும். எனவே, சீர்திருத்த முற்போக்கு அறிஞராகக் கருதப்படும் சீனி. வேங்கடசாமி, மருத்துவர்களின் சவச்சடங்கு செய்ய மறுத்த போராட்டத்தில், ஒரு பிற்போக்குவாதியாகவே திகழ்கிறார். எனவே, சவச் சடங்கில் சீர்திருத்தம் என்பதில் முற்போக்கான பாத்திரத்தையும் போராட்டங்களையும் நடத்தியது மருத்துவர்களே. சவச் சடங்கில் இருந்து மருத்துவர்கள் விடுதலையடைந்து விட்டதால் மேல்சாதி இந்துக்கள் தங்கள் பிணங்களுக்குச் சடங்கு செய்வதினை நிறுத்திவிடவில்லை. மேல் சாதி இந்துக்களுக்கென சேவகம் செய்துவந்த மருத்துவர்கள் அப்பணிகள் செய்ய மறுத்து வெளியேறிய பின்னர், ஆதிக்கச் சாதியினர், கேரளாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மருத்துவர்களையும், இடைநிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்து வந்த மருத்துவர்களையும் சவச் சடங்குப் பணிகளைச் செய்ய வைத்தனர். இப்பணிகளைச் செய்ய முன்வந்த மருத்துவர்களுக்குச் சலுகைகள் கிடைத்தன; அன்று செய்ய மறுத்துப் போராடிய மருத்துவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாயினர், பல இன்னல்களையும் சந்தித்தனர். வடமாநிலங்களில், மேல் சாதியினர் சாப்பிட்ட எச்சில் தட்டுகளைக் கழுவ மறுத்து மருத்துவர்கள் போராடியபோது, தட்டுக் கழுவ முன்வந்த மருத்துவர்களுக்குச் சலுகைகளையும்; மறுத்தவர்கள் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர் கொண்டனர் (Sharma, 1973; 73). எனவே, ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட சாதிகள் சடங்கு செய்தலையும், மேல்சாதிகளோடு உள்ள சடங்கியல் ரீதியான உறவுகளையும் அறுத்தெறிவது விடுதலைக்கான முன் நிபந்தனையாகும்.  இப்போராட்டத்தில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் தங்களுக்குள் கட்டுக்கோப்புடன் ஐக்கியமாயிருந்தனர். இந்த ஐக்கியமானது, மூலக்கரைப்பட்டியில் ரெட்டியார்களுடன் வெள்ளாளர்களும் ஆசாரிகளும் இணைந்து கொண்டு தாக்கியபோதும், இத்தாக்குதலுக்கு காவல்துறை உடந்தையாக இருந்தபோதிலும் மருத்துவர்கள் அதனைத் துணிவுடன் எதிர்த்து நின்றதன் மூலம் அறியலாம். மூலக்கரைப்பட்டியில் ரெட்டியார்கள் மட்டுமே 500 குடும்பங்கள், மருத்துவர்கள் 12 குடும்பங்கள் மொத்தம் 60 பேர் என்று அவர்களின் எண்ணிக்கையினை ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததனை இப்போராட்டத்தோடு இணைத்து நினைவுபடுத்திக் கொள்க. ரெட்டியார்களின் பல்வேறு சமூகப் பொருளாதாரக் கொடூரங்களைச் சந்தித்த போதும், மருத்துவர்கள் அவர்களுக்கு இறப்புச் சடங்கு செய்ய மறுத்துப் போராடியது மருத்துவர்களின் துணிச்சல், உறுதியான ஐக்கியம் ஆகியவற்றையே வெளிப்படுத்துகிறது. இத்துணிச்சலுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியதற்கும் ‘இலங்கைக்குச் செல்வது' என்பது ஒரு வெற்றியின் குறியீடானது. அவர்கள் இலங்கைக்குச் சென்றதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களை ‘ஒடுகாலி’ என்று கூறுவது இயலாது. அன்று காலனிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு இருந்ததால், இலங்கைக்கு மருத்துவர்கள் மட்டுமல்ல தமிழகத்திலிருந்து பெரும்பாலான சாதியினர் சென்றனர். ஆனால் மருத்துவச் சாதியினருக்கு இலங்கை விடுதலைக்கான இடமாக மட்டும் இருந்திருக்கவில்லை. இலங்கை, தமிழகத்தில் எவ்வாறு எந்த ஊரில் போராட்டம் நடத்துவது, எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து விவாதிக்கும் இடமாக இருந்திருக்கிறது. பண்டிதர் ஆனந்தம் உட்படப் பலரும் இலங்கைக்குச் சென்று அங்குள்ள சலூன் கடைகளில் கூட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இலங்கையில் சலூன் கடைகளின் எண்ணிக்கை மெள்ள மெள்ள கூடிக் கொண்டேயிருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை. சலூன் கடை என்பது ஆதிக்கச் சாதிகளின் வீடுகளுக்குச் சென்று சவரம் செய்ய மறுக்கின்ற போராட்டத்தின் விளைபொருள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இலங்கையில் சலூன் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதன் பொருள் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும். இலங்கையில்தான் பெரும்பாலான மருத்துவர்களின் வாரிசுகள் படித்தனர். படிக்காத வாரிசுகள் பலரும் அங்குதான் சவரத் தொழிலைக் கற்றுக் கொண்டனர். தமிழக மருத்துவச் சமூகத்தினைப் பொறுத்தமட்டிலும், இலங்கை அவர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட ஒரு விடுதலைப் பிரதேசமாகும். அப்பிரதேசம் தமிழக மருத்துவர்களின் போராட்டம். விடுதலை, முன்னேற்றம் போன்றவற்றைத் தீர்மானித்தது.  காலனிய ஆட்சிக்குப் பின்னர், இலங்கையில் வசித்த மருத்துவர்களுக்குச் சில சிக்கல்கள் ஏற்பட்டன. இலங்கை அரசாங்கம் இந்தியர்களை வெளியேறக் கூறிய போது தமிழக மருத்துவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றால் என்ன தொழில் செய்வது? யாருக்குச் செய்வது? என்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் அவர்கள் தமிழ் நாட்டு மேல் சாதி இந்துக்களுக்கு மட்டும் பணிகள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். தமிழகம் வந்த அவர்கள் கேரள மாநிலம் மற்றும் சென்னை, பம்பாய் போன்ற நகரங்களுக்கும் சென்று சலூன் கடைகள் ஆரம்பித்தனர். இவர்களின் இந்த இடப்பெயர்ச்சியானது திட்டமிட்டுத்தான் நடந்திருக்க முடியும். இந்த இடப் பெயர்ச்சியை அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தேடிக் கொண்டது என்பதைவிடவும், மேல்சாதி இந்துக்களுக்கு எந்தப் பணிகளும் செய்வது கூடாது என்ற உறுதிப்பாட்டின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும். இதற்குப் பின்னர் மிகப் பெரும் அளவில் போராட்டங்கள் நடந்திருக்கவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம், அவர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட விடுதலைப் பிரதேசமான இலங்கையிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதேயாகும். இந்த வெளியேற்றத்தால், தமிழகத்தின் போராட்டத்தினை திட்டமிடுதல், இழிதொழில் செய்ய மறுத்து வெளியேறுபவர்களின் குடும்பங்களுக்குப் பொருளாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல் எனப் பல பணிகளை இலங்கையிலிருந்து செய்து வந்த ’தலைமைக் குழு' உடைந்து போனது. இக்குழு தமிழகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படவில்லை. இவர்கள் தனித்தனியான தொடர்பில்லாத தீவுகளாகவே மாறிவிட்டனர். இருப்பினும், மேல்சாதி இந்துக்களுக்கு எந்தப் பணியையும் செய்யவில்லை; பெரும்பாலும் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து திரும்பிய செல்லையா தனது சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சியில் சலூன் கடை ஆரம்பிக்க இருந்தார். இதனையறிந்த மருத்துவர்கள் அவரின் முயற்சிக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். இதை மீறியும் அவர் கடை திறந்துவிட்டார். இதனால் இதர மருத்துவர்களால் கண்டனத்திற்கு மேல் எதுவும் செய்ய இயலாமற்போனது. ஆனால் செல்லையாவின் வாரிசுகளுக்குத் திருமணம் என்று வந்த போது மருத்துவர்கள் அவருடன் திருமணச் சம்பந்தம் செய்துக் கொள்ள முன்வரவில்லை; மறுத்துவிட்டனர். இதனால் செல்லையா கல்லிடைக்குறிச்சியில் மருத்துவர்களின் எதிர்ப்பையும் மீறித் திறந்த சலூன் கடையை அடைத்துவிட்டார், மேலும் கேரளாவிற்குச் சென்றார். இதன் பின்னர் அவரது வாரிசுகளுக்குத் திருமணம் நடைபெற்றது. உள்ளூரில் சலூன் கடை திறந்த செல்லையாவை சமூகப் புறக்கணிப்பு செய்ததற்கான அடிப்படை நோக்கமே மேல் சாதி இந்துக்களுக்குப் பணிகள் செய்யக்கூடாது என்பதின் உறுதியே ஆகும். அன்று இலங்கையில் சலூன் கடைகள் நடத்திவிட்டு, பின்னர் இந்தியாவில் பல பகுதிகளில் அத்தொழில் செய்துவந்த மருத்துவர்கள் தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் தங்களின் வாரிசுகளையும் கல்வி கற்க வைத்து வேறு தொழில்களில் ஈடுபட வைத்தனர். 1920களில் இழிதொழில் செய்ய மறுத்துப் போராடிய பிரிவினர் 1920 முதல் 1950கள் வரைத் தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தங்களின் வாரிசுகளையும் சாதிய ஒடுக்குமுறையிலிருந்தும், சாவுச் சடங்கு போன்ற இழிதொழில்கள் செய்வதிலிருந்தும் விடுவித்துவிட்டனர். காலனியக் காலத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்திலேயே மருத்துவர்களின் வெற்றியோடு முடிவுக்கு வந்து விட்டது.  காலனியத்திற்குப் பிந்தைய போராட்டங்கள் காலனியத்திற்குப் பின்னர் பண்டிதர் ஆனந்தம் பல மாநாடுகளை நடத்தினார். ஆனால் மிகப்பெரும் அளவிலான போராட்டங்கள் காலனிய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்று நடைபெற வில்லை. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசிடம் முறையிடத் தொடங்கினர். அத்தகைய கோரிக்கையில் முக்கியமானது மருத்துவச் சமூகத்தை (சவரத் தொழிலாளர், நாதசுரக் கலைஞர்) ஆகியோரை தாழ்த்தப்பட்ட பழங்குடியினப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்பதாகும். இக்கோரிக்கையினை நிறைவேற்றுவதற்காக 1969ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவிலிருந்து மருத்துவச் சமூகத்தினர் சுமார் 1500 பேர் ஊர்வலமாகச் சென்று பண்டிதர் ஆனந்தம், அய்யாசாமி, டாக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் முதலமைச்சர் கருணாநிதியிடம், தங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவில் சேர்க்கு மாறு கோரினர் (சுதேசமித்திரன், 15, 10, 1969 பக்). அமைப்பு ரீதியாக இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் சில கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் தாங்களாகவே ஆதிக்கச் சாதியினருக்குச் சேவை செய்ய மறுத்தனர். காஞ்சிபுரம் பகுதி கிராமப்புறங்களில் திருவிழாக் காலங்களில் பிராமணரல்லாதோர் ஆதிக்கச் சாதியினர் வீட்டிற்குச் சென்று அவர்களை மரியாதையாக வணங்க வேண்டும். இந்த வழமையினை 1950களின் தொடக்கத்தில் மருத்துவச் சாதியினர் கைவிட்டுவிட்டனர். இதனால் ஆதிக்கச் சாதியினர் சவரம் செய்து கொள்வதற்காக நகரத்திற்குச் சென்றனர் (Mencher, 199884-50). திருநெல்வேலி மாவட்டம் செண்பகராமநல்லூரில் வெள்ளாளர்களுக்குச் சேவகம் செய்து வந்த மருத்துவர்கள் 1950களின் தொடக்கத்தில், ’இறந்தவர்களுக்குச் சங்கு ஊதமாட்டோம்', என்று போராடினர். அதில் வெற்றி கண்ட அவர்கள் பின்னர் படிப்படியாகப் பல சடங்குப் பணிகளை நிறுத்திவிட்டு அவ்வூரைவிட்டு வெளியேறிவிட்டனர் (ஆழ்வாரப்ப பிள்ளை, (83), 13.  105) பல கிராமங்களில் ஊர்ச் சோறு எடுக்கும் வழமையை நிறுத்தினர். ஊர்ச் சோறு எடுப்பதினைப் புறக்கணித்தல் என்பது அவர்கள் சேவகம் செய்கின்ற ஆதிக்கச் சாதியினரையே புறக்கணித்தல் என்பதாகும். இதனால் ஆதிக்கச் சாதியினர் ஏன் ஊர்ச்சோறு எடுக்க வரவில்லை? என்று மிரட்டுதல், அடித்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டனர். இருப்பினும் மருத்துவர்கள் பல கிராமங்களில் அவ்வழமையை நிறுத்தினர். கிராமங்களில் திருமணம் செய்து கொண்டால் ஊர் சோறு எடுக்க வேண்டிய நிலை வரும் என்று கருதி நகரத்தில் வசித்து வந்த மருத்துவச் சாதியினர் கிராமங்களில் மணஉறவு தேடுவதினை விட்டுவிட்டனர். மருத்துவர்களின் சாதி ரீதியான போராட்டமானது 1969ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டில் சில ஆண்டுகளாகச் செயல்படாமலிருந்த தமிழ்நாடு மருத்துவர் மத்திய சங்கத்தைச் செயல்படுத்துவதற்காகவும், பல வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இச்சூழலில், 18061972ல் மருத்துவச் சமூகத்திற்காகப் போராடிய பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தம் காலமானார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னர், பி. சங்கரசுப்பு தமிழகத்தில் படித்துப் பணிபுரியும் மருத்துவச் சமூகத்தினை ஒருங்கிணைத்து 'டீம்' என்றதொரு அமைப்பை உருவாக்கினார். இச்சங்கம் தமிழக அளவிலான அமைப்பாக 1977ம் ஆண்டில் மாறியது. இச்சங்கம், கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற மருத்துவச் சமூகத்தினரைக் கல்வி கற்க வைத்து முன்னேறச் செய்தல், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கையை அமுல்படுத்தக் கோருவது போன்றவற்றிற்காகப் போராடத்து வங்கினர். இதற்காக பண்டிதர் ஆனந்தத்தின் மகன் ஆனந்தகுமார், நடராசன் உட்பட பலரும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர். இக்காலங்களில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் நாவிதர், வண்ணார் ஆகியோரை அவர்கள் விருப்பத்துக்கு மாறாக இழிவான பணிகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தும் வழக்கம் 1955-ம் ஆண்டின் தீண்டாமை (குற்றச்) சட்ட வரம்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கூறியது. மேலும் மருத்துவச் சமூகத்திற்காக முன்வைத்த சில பரிந்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன. 1 ) பாளையங்கோட்டையில் உள்ள இந்திய மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்கும் போது இந்தச் சாதிக்கு என்று தனிச்சலுகை அளிக்கப்பட வேண்டும். முடிதிருத்தும் தொழிலில் ஒரு டிப்ளமோ படிப்புத் தொடங்க வேண்டும். – 2) சிகை அலங்காரக் கடைகள் தொடங்குவதற்கு அளிக்கப்படும் கடன் நகரங்களில் ரூ.1000 என்றும், பஞ்சாயத்து எல்லைகளில் ரூ 500 என்றும் இருக்கவேண்டும். 3) பேண்டு வாத்தியக் கோஷ்டி ஒன்றுக்கு 9 கருவிகள் தேவைப்படுகின்றன என்றும் இக்கருவிகளை வாங்குவதற்குக் கடன் வசதி அளிக்கப்பட வேண்டும் என்றும் வடஆற்காட்டில் கேட்டுக் கொண்டார்கள். 4) இச்சாதியைச் சேர்ந்த பெண்களுக்குப் பரம்பரையாகவே மகப்பேறு மருத்துவ வைத்தியத்தில் நல்ல தேர்ச்சி இருந்து வந்திருக்கிறது என்கிற காரணத்தினை முன்னிட்டு மருத்துவமனைகளில் ஆயாக்களையும், நர்சுகளையும் தேர்ந்தெடுக்கும் போது இச்சாதிப் பெண்களுக்குத் தனிச்சலுகை கொடுக்க வேண்டும்.  5 தங்களை ஷெட்யூல் சாதியினராகக் கருத வேண்டுமென்று இவர்களும் முறையிட்டார்கள். ’மற்ற மாநிலங்களில்' இச்சாதியினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று கேட்டு எழுதியிருந்தோம். எந்த மாநிலத்திலும் சவரத் தொழிலாளர்கள் ஷெட்யூல் சாதியினராக நடத்தப்படுவதில்லை. எனவே, நாங்கள்  மேலும் வலியுறுத்தக் கூடிய நிலையில் இல்லை - - என்று அவ்வறிக்கை கூறுகிறது. இவ்வறிக்கையில் பல இடங்கள் மருத்துவர்களின் வாழ்க்கை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு ஒப்பாக இருக்கிறது என்கின்றன. ஆனால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்காக வலியுறுத்தக்கூடிய நிலையில் இல்லை என்று அவ்வறிக்கை கூறியிருப்பதானது கேள்விக்குரியதாகவே இருக்கிறது.  1970களில் சிவகங்கையைத் தலைமையிடமாகக் கொண்டு ’தமிழ்நாடு மருத்துவர் நல உரிமைச் சங்கம்' செயல்பட்டது. இச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த பதிவுகள் கிடைக்கவில்லை . 1980களில் ஜெயங் கொண்டத்தில் மருத்துவர்கள் வசித்த பகுதி இழிவான பெயரால் அழைக்கப்படுவதை எதிர்த்து அந்நகர் மருத்துவர் சங்கத் தலைவராக இருந்த கே.ரகுநாதன் அத்தெருவின் இழிபெயரை நீக்கிவிட்டு, புத்தர் தெரு என்று மாற்றினார் (பண்டிதம், ஆக செப் 2002;12-13), திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியில் செட்டியார்களும் வன்னியர்களும் ஆதிக்கச் சாதியினராவர். இவ்வூரில் மருத்துவர்கள் ஊர்வேலை செய்ய மறுத்துவிட்டதனால் ஆதிக்கச் சாதியினர் மருத்துவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்தனர். வேறு ஊரிலிருந்து மருத்துவர்களை ஊர் வேலைக்குக் கொண்டு வருவதற்கு முடிவு செய்தனர். ஆனால் வக்கம்பட்டி மருத்துவர்கள், மேல்சாதியினர் எங்கிருந்து மருத்துவர்களை அழைத்து வந்தாலும் அவர்கள் நிச்சயம் நம் உறவினர்களாகத்தான் இருப்பார்கள்; எனவே, அவர்களிடம் நாங்கள் ஊர் வேலை செய்ய மறுத்துப் போராடி வருகிறோம்; நீங்கள் இங்கு வரவேண்டாம், என்று கூறி அவர்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.   இந்நிலையில் மேல்சாதியினர் தாங்களாகவே மருத்துவர்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் வக்கம்பட்டி மருத்துவர்கள், 'ஊர் வேலை செய்யமாட்டோம்' என்று கூறி நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றனர். அவ்வூரில் மருத்துவர் குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் ஆதிக்கச் சாதியினர் இறப்பு நிகழ்ச்சிக்கு வரும்பொழுது மருத்துவர்கள் தரையில் படுத்துக் கொண்டு அவர்கள் அனைவரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற மரபைச் செய்ய மறுத்தனர். தங்கவேல் என்பவரின் தந்தை 1985ம் ஆண்டு இறந்த பொழுது அவரைத் தவிர அவருடன் பிறந்த சகோதரர்கள் மட்டுமே ஆதிக்கச் சாதியினரின் காலில் விழுந்து வரவேற்றனர். தங்கவேலிடம், 'நீ காலில் விழுந்து வணங்க வேண்டாம்' என்று அவருடைய சகோதரர்கள் கூறிவிட்டனர், காரணம் தங்கவேல் ஐடிஐ படித்தவர். காலில் விழுந்து வணங்கிய தங்கவேலின் சகோதரர்கள் சவரத் தொழில் செய்து வருபவர்கள். 1995ம் ஆண்டு தங்கவேலின் சித்தப்பா இறந்த சமயத்தில் படித்தவர்கள், சவரத் தொழில் செய்பவர்கள் என அனைவரும் மேற்குறிப்பிட்ட வணங்குதலைச் செய்ய மறுத்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிக்கச் சாதியினர் இதனை எதிர்த்தனர். மருத்துவர்கள் காலில் விழுவதில்லை என்பதில் உறுதியாக இருந்த காரணத்தினால் அவர்களால் எதுவும் செய்ய முடியாமற் போனது. பின்னர் காலில் விழுந்து வணங்கும் மரபு நின்று போனது (தங்கவேல், 47, 10.09.05) - - 1980களில் மருத்துவர்களைத் தமிழகம் முழுவதும் ஒருங் கிணைக்கும் பணியில் சென்னியவிடுதி வைத்தியநாதன் செயல்பட்டார். இவர் 1987-ம் ஆண்டு மருத்துவர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆனார். இவர் பொறுப்பேற்றவுடன் 1988ல் மதுரையில் மாநாடு நடத்தினார். மருத்துவச் சமூக மக்களின் விடுதலைக்குப் போராடிய அதே சமயம் அம்மக்களைச் சீர்திருத்துவதற்கான பணிகளையும் செய்து வந்தார். குறிப்பாக, மருத்துவச் சமூக இளைஞர்கள் குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். "  தனது 50வது பிறந்த நாள் அன்று அவர், 'எனக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் ஒரு சபதம் ஏற்க வேண்டுகிறேன். நான் இனிமேல் குடிப்பதில்லை என்று சபதம் ஏற்று அதையே எனக்கு பரிசாக அளிக்க வேண்டுகிறேன். என்று கூறினார். (பண்டிதம், அக் 2004). மருத்துவச் சமூக மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரிப் பல போராட்டங்களை நடத்தினார் (சமுதாய மடல், நவம்பர், 1995) 27.12.1999 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளி இசக்கி என்பவரின் மகள் வேலம்மாள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளான போது இவர் தமிழகத்தின் பல பகுதிகளில் அச்செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான பணிகளைச் செய்தார். திருநெல்வேலியில் 05.03.1999 அன்று அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது (சமுதாய மடல், ஏப்ரல், 1999:1). தஞ்சை மாவட்டம் நெய்தலூர் என்ற கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளி கருப்பையன் மகன் அன்பரசன் தன் தந்தை இறந்த பின்னர் அடிமை வேலை செய்யமாட்டேன் என்று கூறியதற்கு, 'ஊர் வேலை செய்யவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது, என்று மிரட்டப்பட்டார். இப்பிரச்சினையில் வைத்தியநாதன் தலையிட்டார். தனது செயல்பாடுகளைத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஆந்திரா, பம்பாய் என விரித்துக் கொண்ட வைத்தியநாதன் 25.12.2001ல் மரணமடைந்தார்.  சடங்குகளுக்கெதிரான போராட்டம்  காலனிய ஆட்சிக்குப் பிந்தைய மருத்துவர்களின் அமைப்பு ரீதியான போராட்டத்தில்,  அவர்களைத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும், அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிகளை மருத்துவச் சமூகப் பெண்களுக்கு வழங்க வேண்டும் (தினமலர், 05.07.01)  ஆகிய இரண்டு கோரிக்கைகளும் முக்கியமான இடம்பிடித்துள்ளன. ஆனால் அரசு இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக, அவர்களுக்குச் சலூன் கடைகள் வைப்பதற்கான கடன் உதவிகளை மட்டுமே காலனிய ஆட்சிக்குப் பிந்தைய சுதந்திர அரசுகள் செய்திருக்கின்றன. மருத்துவத் தொழிலில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களின் கோரிக்கையினைப் புறக்கணித்து வருகிறது. காரணம், இன்றைய நவீனச் சூழலில் மருத்துவம் அதிகாரம் சார்ந்ததாகவும், பொருளாதாரம் குவியும் தொழிலாகவும் இருந்துவருகிறது. எனவே, அரசு, மருத்துவச் சாதியினருக்கு மருத்துவத் தொழிலில் முன்னுரிமை அளிக்க மறுக்கிறது. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மருத்துவச் சாதிப் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலித்தாய்களோடு இணைந்து பிரசவப் பணிகளைச் செய்துவருகின்றனர். இவர்களுக்கு மாதம் சில நூறு ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது. இப்பணம் சரியாகக் கிடைக்காத காரணத்தினால் உசிலம்பட்டிக்கு உட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியத்தினைச் சேர்ந்த மருத்துவச் சாதிப் பெண்கள் அரசுக்குப் புகார் அனுப்பியுள்ளனர் (கள ஆய்வு. செல்லம்பட்டி, பாப்பாபட்டி, 18.09.05). உசிலம்பட்டி ஒன்றியம், பாப்பாபட்டியில் மருத்துவச் சமூகத்தினைச் சேர்ந்தவர் ஓலைச் சுவடி மூலம் மருத்துவம் செய்து வருகிறார். மருத்துவச் சாதியினர் மருத்துவம் செய்வதென்பது இன்றும் பல கிராமங்களில் இருக்கின்றது. ஆனாலும் அரசு இவர்களுக்கு மருத்துவத்துறையில் முன்னுரிமை அளிக்க மறுத்து வருகிறது.  மருத்துவத் துறையில், மருத்துவச் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளித்தல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தல் ஆகிய கோரிக்கைகளுக்கான போராட்டம் கூட வலுவாக நடத்தப்படாமல் இருக்கிறது. காலனிய ஆட்சிக் காலத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்துடன் ஒப்பிடும் பொழுது இன்று அவர்கள் தங்களுக்குள் ஐக்கியமின்றியே இருக்கின்றனர். மேலும் இவர்களிடையே பல பிரிவுகளும், பகைமைகளும் உருவாகியுள்ளன. இது பெரும்பாலான சாதிகளிடம் இன்று உள்ள நடைமுறைதான். மேலும் அன்று பண்டிதர் ஆனந்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, சலூன் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப் படுவதில்லை. இதற்குக் காரணம் இன்றைய பொருளாதாரச் சூழல் அவர்களின் ஒற்றுமையைக் குலைத்து வருகிறது என்பதே. அவர்கள் தங்களின் "சமூக விடுதலை" என்பதைவிடவும் "தனிநபர்களின் பொருளாதார முன்னேற்றம்” என்பதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர். சில தனிநபர்கள் குடும்பங்கள் பொருளாதாரத்தில் வலுவடைந்ததும் தங்களை மருத்துவச் சாதியிலிருந்து விடுவித்துக் கொண்டு நாடார், ஆசாரி, வெள்ளாளர் போன்ற சாதிகளுடன் ஐக்கியமாகி விட்டனர் என்பதைக் கள ஆய்வில் அறிய முடிந்தது. இசை அறிஞரான ஆபிரகாம் பண்டிதர் மருத்துவச் சாதியைச் சேர்ந்தவர் என்ற கருத்து தஞ்சாவூர் உட்படப் பல ஊர்களிலும் நிலவுகிறது. இது குறித்துத் தஞ்சாவூரில் வசித்துவரும் அவருடைய குடும்பத்தாரிடம் கேட்டபோது அவர்கள் தங்களை நாடார் சாதியினர் என்றே கூறினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாயர்களுக்குச் சேவகம் செய்து வந்த விளக்குதலை நாயர் என்ற பிரிவினர் விளக்குதலையை நீக்கி விட்டு நாயராகவே மாறிவிட்டனர். இவ்வாறு சாதிமாற்றம் செய்து கொண்டவர்கள் ஆதிக்கச் சாதியினருடனே திருமண உறவையும் ஏற்படுத்திக்கொண்டனர்.   மருத்துவர்களின் ஐக்கியத்தின் வலுக்குன்றி இருந்தாலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்குச் சமீபத்திய எடுத்தக்காட்டாக, 02.07.02 அன்று வேதாரண்ய ஒன்றிய மருத்துவர் சங்கப் பொதுக்குழுவில் 'மங்கல', 'அமங்கல ' நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் பங்கேற்பது இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பின்னர் அவ்வூரில் மேல்சாதிக்காரர் ஒருவர் இறந்து விட்டார். மருத்துவச் சமூகத்தினர் அப்பிணத்திற்குச் சவச் சடங்கு செய்ய மறுத்தனர். இதனால் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்து அமுல் படுத்துவதில் முன்னணியாகச் செயல்பட்ட ஜெயராமன் என்பவரை 'மருதுபாண்டியர் இளைஞர் அமைப்பை’ச் சேர்ந்தோர் கொலை செய்யும் நோக்கில் 26.10.02 அன்று அவரது வீடுவரை வந்தனர் (பண்டிதம், பிப்ரவரி 03,15. இதனால் பல்வேறு புகார்கள் அரசுக்கு அனுப்பப்பட்டன. பின்னர் 28.04.03 அன்று தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் போன்றவற்றுடன் இணைந்து மருத்துவச் சமூகத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் (பண்டிதம், ஏப் மே 03; 17) சிவகங்கை மாவட்ட மருத்துவச் சங்கத்தினர் பிணத்திற்குச் சவரம் செய்வதில்லை என்று தங்களின் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர் (தினத்தந்தி, 13.03.03) 02.09.2003 அன்று திருச்சி மெயின் கேட் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கக் கூட்டத்தில்,  இறந்த பிணங்களுக்குச் சவரம் செய்வதற்குத் தடைவிதித்துத்  தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். 12.10.2004 திண்டுக்கல் மாவட்ட மருத்துவர் சமூகச் சங்கக் கூட்டத்தில், மத்திய அரசு எங்கள் இனத்தின் அவல நிலையை மாற்ற தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும், தமிழகக் கிராமப் பகுதிகளில் மருத்துவர் இனமக்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும். தீண்டத்தகாதவர்களாகவும் நடத்தப்படுகிறார்கள்; எனவே, இவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (பண்டிதம், அக்.04; 17). இத்தகைய தீர்மானங்கள் எவற்றைச் சுட்டுகின்றன என்றால், பண்டிதர் எஸ்.எஸ் ஆனந்தம் 1920களில் இழிவுச் சடங்குகளை விட்டொழிப்போம் என்று ஊன்றிய முற்போக்கு வித்துக்கள் மருத்துவச் சாதியினரின் உள்ளங்களில் கனலாய் இருக்கிறன; அது தமிழகத்தின் பல பகுதிகளிலும் தீர்மானங்களாய் வெடித்துக் கிளம்புகின்றன. ஆதிக்கச் சாதியினர் மருத்துவச் சாதியினர் மீது அத்தகைய சடங்குகளைத் திணிக்கும் வரை அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்வது தவிர்க்க இயலாதது. அடிக்குறிப்பு: * உண்டியல் கடை என்பது காலனிய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்த பணப்பறி மாற்றம் செய்து கொள்ளும் முறையாகும். இலங்கையில் வேலை செய்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், தமிழ்நாட்டில் வசித்து வரும் தனது குடும்பத்தாருக்குப் பணம் அனுப்புவதற்கு விரும்பினால் இலங்கையிலுள்ள உண்டியல் கடைக்காரரிடம் அப்பணத்தைக் கொடுத்துவிடுவார். மேலும் தான் கொடுத்த பணத்தின் தொகையைக் குறிப்பிட்டு தன் குடும்பத்தாருக்குக் கடிதம் அனுப்பி விடுவார். இதனைக் பெற்றுக் கொண்ட அக்குடும்பத்தார், தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கையில் உண்டியல் கடை நடத்துபவரின் குடும்பத்தாரிடம் அக்கடிதத்தினைக் காண்பித்து பணம் பெற்றுக் கொள்வர். இலங்கையில் ஒருவரிடம் பணம் செலுத்தினால் அத்தொகையினை தமிழ்நாட்டில் பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடே உண்டியல் கடையாகும். உண்டியல் கடை நடத்துபவருக்கு பணம் செலுத்துபவர்கள் தரகு கொடுப்பர்.                                        6. சலூன்: பகுத்தறிவுப் பிரச்சார மையம்    தமிழகத்தில் முடிவெட்டுதல், சவரம் செய்தல், முக அழகுபடுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறும் இடங்கள் பார்பர் ஷாப், சலூன், ஹேர் டிரஸ்சிங் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, பார்பர் ஷாப் என்ற சொல் இன்றைய முதியவர்களிடத்திலும், சலூன், ஹேர் டிரஸ்சிங் ஆகிய வார்த்தைகள் இன்றைய இளைய தலைமுறையினரிடத்திலும் உள்ளன. முடி வெட்டுதல், சவரம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும் இடத்தினை அதற்கான தமிழ்ப் பெயரோடு அழைக்காமல், தமிழ் மக்கள் பார்பர் ஷாப், சலூன் என அழைப்பது ஏன்? இதற்கான வரலாற்றுப் பின்னணிகளை ஆராய்வதே இப்பகுதியின் நோக்கமாகும்.  'பார்பர்' என்ற சொல் 'பார்பா' என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும். சலூன் என்பது பிரெஞ்சுச் சொல்லாகும். உலக அளவில் சலூன் என்று  அழைக்கப்பட்ட இடங்களில் பொதுவாக படித்தவர்கள், கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோர் சங்கமித்து ஆன்மீகம், தத்துவம், அரசியல் விவாதங்களையும் உரையாடல்களையும் நடத்தினர். சில சலூன்கள் அரசியல் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டன (The Encyclopedia Americana, vol. 241). மேலும் விளையாட்டு, நடனம், சவரம் போன்றவையும் நடைபெற்றன. The Oxford English Dictionary, vol. 9, 57). சலூன்களின் வரலாறு 17ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது (The Encyclopedia Americana, vol. 24: 160). பார்பர் ஷாப் கருத்துப் பகிர்வு, புறம் சொல்லுதல், சவரம் செய்தல் போன்றவை நடைபெறும் மையமாக இருந்துள்ளது (The New Encyclopedia Britanica, vol. 1; 887).  தமிழகத்தில் ஆறு குளக்கரையோரங்கள், மரத்தடிகள், ஆதிக்கச் சாதியினரின் வீடுகள், மருத்துவச் சாதியினரின் வீடுகள் ஆகிய பகுதிகளில்தான் ஒப்பனை செய்யப்பட்டன. இவ்விடங்கள் பலரும் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. இங்கு முடி வெட்டுவதற்கு அல்லது சவரம் செய்வதற்கு வருபவர்கள் அன்றைய நடப்பு நிகழ்வுகள் உட்பட பல செய்திகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். இது முடி வெட்டுபவருக்கும், முடி வெட்டப்படுபவருக்கும் இடையிலேயானது மட்டுமின்றி அங்கே முடி வெட்டுவதற்காகக் காத்திருக்கும் நபர்களும் இப்பரிமாற்றத்தில் பங்கேற்பது உண்டு. இத்தகவல் பரிமாற்றங்களைக் காலனியக் காலத்தில் ஆங்கிலேயர்கள் கண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் அவர்கள் முடிதிருத்தும் மருத்துவச் சாதியினரைப் ’பார்பர்' என்று அடையாளப்படுத்தினர் எனக் கருதலாம். மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கத்திற்கெதிராகப் போராடிய மருத்துவச் சாதியினர் படிப்படியாக நகரங்களில் அப்பணிகளைத் தனி அறைகளில் செய்யத் தொடங்கினர். இதனால் கிராமங்களில் மேற்குறிப்பிட்ட அனைத்து இடங்களிலுமிருந்து சவரம் செய்வது மறையத் தொடங்கியது. ஆனால் பழைய இடங்களில்  நடைபெற்றுவந்த அதே உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.   அரசியல் பிரச்சாரம்   இச்சலூன்களில் நடைபெறத் தொடங்கிய கருத்துப் பரிமாற்றங்களின் பண்புகளில் மாற்றம் பெற்றன. அதாவது, மருத்துவச் சாதியினர் தங்கள் மீதான ஒதுக்குதல் மற்றும் ஒடுக்குதலுக்கெதிராக அவர்கள் தங்களை சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காங்கிரசு இயக்கம் ஆகியவற்றில் இணைத்துக் கொண்டனர். அவ்வியக்கங்கள் வெளியிடும் பத்திரிகைகள், பிரசுரங்கள், இதர தினசரி பத்திரிகைகள் போன்றவற்றைத் தங்கள் சலூன்களுக்கு வரவழைத்தனர். இதனால் சலூன்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உரையாடல், சுயமரியாதைக்கான தேடல், காலனிய ஆட்சிக்கு எதிரான சிந்தனை ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளும் களமாக மாறின. ஆனால் அதே சமயம் பழைய தனிப்பட்ட உறவுகள், சண்டை சச்சரவுகள் குறித்த பரிமாற்றங்களும் தொடர்ந்தன. சலூன்களில் ஏற்பட்ட இப்பண்பு மாற்றம், அலங்காரம் செய்வதற்கு வருகின்ற நபர்களைத் தாங்கள் காத்திருக்கும் நேரத்தில் அங்கு இருக்கின்ற பத்திரிகைகள் மற்றும் பிரசுரங்களைப் படிக்க வைத்தன. மேலும் சலூன்களுக்கு பத்திரிகை வாசிப்பதற்காகவும் மக்கள் வரத்தொடங்கினர். இதனால் சலூன் கடைகள் அதன் இயல்பிலேயே அறிவினை அரசியலை, ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களைப் பரப்புகின்ற மையமாக மாறிவிட்டன.  பெரியண்ணன் என்பவர் சலூன் கடைகள் குறித்து, பகுத்தறிவு இயக்கம் தமிழகத்தில் வேரூன்ற நம் சகோதரர்களின் தொழிற்கூடங்களே காரணமாக இருந்தன. அய்யாவின் அறிவுரைப்படிதான் பகுத்தறிவு, குடியரசு முதலிய பத்திரிகைகளை நம் சகோதரர்கள் தொழிற்கூடங்களில் போட்டு, வருவோரிடமெல்லாம் பிரசாரம் செய்தார்கள். இவ்வாறுதான் தமிழகத்தில் அறிவியக்கம் வளர்ந்தது என்கிறார் (டீம், 161977, 7).  எழுத்தாளர் டொமினிக் ஜீவா, எனது சவரக் கடை என்பது ஒரு சர்வகலா சாலையாகும். ஏனெனில், இங்கு கற்றுக் கொடுக்கப்படுவதும் உண்டு, கற்றுக் கொள்வதும் உண்டு (பண்டிதம் 2003; 10-11) என்று கூறியதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.  பெரியண்ணன் பகுத்தறிவு இயக்கம் வேரூன்ற காரணமாயிருந்தது சலூன் கடைகள் என்று கூறியிருப்பது பொதுவுடைமை இயக்கத்திற்கும் பொருந்தும். இதனைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே இன்றும் சலூன் நடத்திவரும் முதியவர்களின் அன்று முதல் இன்று வரையிலான அனுபவங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். இத்தகைய முதியவர்கள் தற்போது மிக அரிதாகவே சலூன் நடத்திவருகின்றனர்.  திருநெல்வேலி நகரத்தில் சலூன் நடத்தி வருபவர் சொக்கலிங்கம் (70). இவரது தந்தை அவர் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனது கிராமத்திலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி நகரத்தில் சொக்கலிங்கம் 1950களில் ஒரு சலூன் ஆரம்பித்தார். ஆரம்பக் காலங்களில் இவர் தனது சலூனிற்கு 'தினமணி' பத்திரிகை வாங்கிவந்தார். இக்காலத்தில் அவர் தன்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் தினமணி பத்திரிகையை நிறுத்திவிட்டு, அவ்வியக்கம் வெளியிட்டுவந்த ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளை வாங்கத் தொடங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்ட பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இயக்கத்தில் இணைந்தார். இதனால் அவ்வியக்கம் வெளியிட்டு வந்த தீக்கதிர் பத்திரிகையினை வாங்க ஆரம்பித்தார். இன்றுவரை அவர் 'தீக்கதிர்’ பத்திரிகையினை வாங்கி வருகிறார். இங்கு வருகின்ற இடதுசாரி இயக்கத்தினைச் சேர்ந்தவர்களும் அவ்வியக்கத்தினைச் சேராதவர்களும் ’தீக்கதிர்’ பத்திரிகையைப் படிக்கின்றனர். அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதும் இங்கு நடைபெறுகிறது. மேலும், இச்சலூன் இடதுசாரி இயக்கத் தோழர்கள் சந்திப்பதற்கான மையமாகவும் விளங்குகிறது. சொக்கலிங்கம் இச்சலூனிற்கு ''கஸ்ட்ரோ" என்று பெயர் வைத்துள்ளார். சொக்கலிங்கம் நடத்தி வரும் சலூனில் இன்று அன்றாடம் நடைபெற்றுவரும் நிகழ்வுகள், காலனியக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுயமரியாதைப் போராட்டம், இடதுசாரி இயக்கத்தின் போராட்டம், காங்கிரசின் சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றோடும், அன்றையக் காலத்தில் இருந்த சலூன்களில் நடைபெற்றுவந்த அப்போராட்ட உரையாடல் களோடும் ஒப்பிட்டால், அன்றைய சலூன்களின் செயல்பாடுகளின் பண்புகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இச்செயல்பாடுகளைக் கண்டுகொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள் மேல்நாட்டு பார்பர் ஷாப் அல்லது சலூன் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் இயங்கிவந்த முடி வெட்டும் இடங்களுக்கு ’பார்பர் ஷாப்' அல்லது ’சலூன்' என்று பெயரிட்டுள்ளனர் என்பதை நம்பலாம். இதுவே, ’பார்பர் ஷாப்’ அல்லது ’சலூன்’ ஆகியவற்றிற்கான வரலாறாகும்.  ஆரம்பக் காலங்களில் பார்பர் ஷாப் என்று மட்டுமே அழைக்கப்பட்டது. இன்று பலரும் சலூன்களுக்குத் தங்களின் விருப்பத்திற்கிணங்கப் பெயர்கள் சூட்டியுள்ளது போல் அன்று யாரும் பெயர்கள் சூட்டியிருக்கவில்லை. இப்பெயர்கள் சூட்டுவதானது காலனிய ஆட்சிக் காலத்திற்குப் பிந்தைய பழக்கமாகும். காலனியத்திற்குப் பின்னர் சலூன் கடை உரிமையாளர்கள் அரசியல் இயக்கம் சார்ந்த பத்திரிகைகளும், வெகுசனப் பத்திரிகைகளும் வாங்கிவருகின்றனர். சுமார் 1980கள் வரை மார்க்சு, பெரியார், அண்ணா, மு.கருணாநிதி போன்ற தலைவர்களின் புகைப்படங்களையும் தங்களின் சலூன்களில் ஒட்டிவைத்திருந்தனர். ஆனால் எம் ஜி ஆர் படங்கள் ஒட்டிவைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் நடத்திவருகின்ற சலூன் கடைகளில் சினிமா கதாநாயகர் - நாயகிகளின் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சிப்படங்களே உள்ளன. மேலும் பல சலூன்களில் பாடல்கள் ஒலிக்கின்ற நவீனக் கருவிகள், தொலைக்காட்சிப் பெட்டி முதலானவை உள்ளன. இம்மாற்றங்களானது மருத்துவச் சாதியினரின் சுயவிருப்பத்தால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக இவை இன்றைய அரசியல் பொருளாதாரத்தின் விளைவினால் ஏற்பட்ட மாற்றங்களாகும்.  இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இளம் தலைமுறையினர் தங்களை அழகு படுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் சலூன் கடைகள் அதிக வருமானம் தருகின்ற தொழிலாகவே மாறிவிட்டது. இதனால் மேல் சாதியினரும் சலூன் கடைகளை நடத்துகின்றனர், ஆனால் அவர்கள் முடிவெட்டும் தொழிலைச் செய்வதில்லை. அதே சமயம், மேல்சாதிப் பெண்கள் பெண்களுக்கான அழகு நிலையங்களைத் தாங்களே நடத்திக்கொண்டு முடி வெட்டும் பணியையும் செய்து வருகின்றனர். ஒரு தொழில் இழிவாகக் கருதப்பட்ட போதிலும் அத்தொழில் அதிகப் பொருளாதாரத்தை தருகின்றது என்று தெரிந்தால் மேல் சாதியினர் அத்தொழில் மீது  தங்களின் கவனத்தைக் குவிக்கத் தொடங்கிவிடுவர். அந்த அடிப்படையில் மேல் சாதியினர் இன்றைய காலங்களில் முடிவெட்டும் தொழிலில் அதன் உரிமையாளராக இருப்பது வியப்புக்குரியதல்ல. கோயில்களில் மயிர் மழிக்கின்ற பணியினை மருத்துவச் சாதியினர் செய்த போதிலும் மழிக்கப்பட்ட மயிர் கோடிகோடியாகப் பணத்தைக் குவித்து வருகிறது. இதனால் மேல் சாதியினர் மழிக்கப்பட்ட மயிரினை ஏலம் எடுக்கும் தொழிலில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுகின்றனர். இன்று மழிக்கப்பட்ட மயிர் ஓர் கருப்புத் தங்கமாக மாறிவிட்டது. (பின்னிணைப்பு -ஐ காண்க). சலூனைப் பொருத்தமட்டிலும் நாம் கவனிக்க வேண்டியதானது, மேல் சாதியினரே அதிகம் பங்கேற்கும் அழகி மற்றும் அழகன் போட்டிகள் சலூனிடமிருந்து அதன் பகுத்தறிவுப் பிரச்சாரச் செயல்பாட்டினை சீரழித்து வருகின்றன என்பதே. இந்தச் சீரழிவு சலூன் மீது மட்டும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை; அது தமிழ்/இந்தியச் சமூகத்தின் பகுத்தறிவின் மீதும் அமிலத்தை ஊற்றிக் கொண்டிருக்கிறது.                                     7. தலைவர்களும் இதழ்களும்   மருத்துவர் சமூகத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் பலரும் முன்னணிப் பங்கு வகித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தேராகிய பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம், எம். அய்யாச்சாமி, டாக்டர். ஆனந்த குமார், சென்னியவிடுதி வைத்தியநாதன், முத்துராஜ், நடராசன் ஆகியோரின் வாழ்க்கை குறித்து சில குறிப்புகள் மட்டும் இங்கு காண்போம். இந்தச் சிறு குறிப்பானதுகள் ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்படுகிறது. பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் இவர் 16.03.1876 அன்று தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் ராஜயோகி சாமிநாதன் - திருமதி கமலம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். தன்னுடைய இளமைக் காலங்களில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மருத்துவ நூல்களை ஆர்வமாகப் படித்தார். சைவத்தின் மீது அதிக ஈடுபாட கொண்ட இவருக்கு நந்தன் மீது ஈடுபாடு அதிகம். திருமண வாழ்வைத் தள்ளிப் போட்டு வந்த இவரை உ.வே.சாமிநாத அய்யரிடம் அழைத்துச் சென்றனர் அவரது பெற்றோர். உவேசா. அய்யரின் ஆலோசனைகளைக் கேட்ட இவர் திருமண வாழ்விற்குச் சம்மதித்தார். மனைவிக்கு நோய் ஏற்பட்டதால் அவரோடு வாழக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியதால் திண்டுக்கல்லைச் சேர்ந்த அம்மாக்கண்ணு அம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். காலனியக் காலத்தில் அழியும் நிலையிலிருந்த சித்த மருத்துவத்தை மீட்டெடுத்தார். இசை, கூத்து, நாடகம் போன்ற கலைகளில் ஈடுபாடு கொண்ட இவர் தம் மக்கள் தமிழ் மொழி கற்று சித்த மருத்துவம் செய்ய வேண்டும் என்று தான் பேசிய கூட்டங்களில் கூறிவந்தார். மருத்துவர் சாதி விடுதலைக்கு இவரே தமிழகம் முழுவதும் விதைகளை விதைத்தார். இந்த விடுதலைப் பயணத்திற்கு தடையாய்த் தன் உறவினர்கள் இருந்தாலும் அவர்களை இவர் வெறுத்தார். இவரின் சகோதரி திண்டுக்கலில் வசித்திருக்கிறார். இவரின் கணவர் உயிர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். தன் சாதி குறித்து வெளியே கூறிக் கொள்ளாத இவர் வேறொரு சாதியில் ஐக்கியமானார். இதனால் பண்டிதர் அவ்வப்போது திண்டுக்கல் மருத்துவர் சங்கக் கூட்டத்திற்கு அல்லது மருத்துப் பணிக்காக சென்றாலும் சகோதரி வீட்டிற்குச் செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் என்பதே அவர் தன் சமூக மக்களின் விடுதலையோடு ஈடுபாடாக இருந்ததிற்கான சாட்சியாகும்.  சித்த மருத்துவத்தைக் காப்பாற்றிய பண்டிதர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார். பெரியார், ராஜாஜி ஆகியோர் இவருக்கு நெருக்கமான நண்பர்கள். பெரியாருக்குப் பெரியார் என்று பெயர் சூட்டியதே ஆனந்தம் என்ற கருத்து உள்ளது. இவர் மருத்துவர் சமுகத்தினர் இழிவாக நடத்தப்படுவது குறித்து அறிந்ததால் அச்சமூக மக்கள் விடுதலைக்காகப் போராடினார். பல்வேறு தாக்குதல்களையும் எதிர்கொண்டு சமாளித்து இறுதிக் காலம் வரை போராடிய பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் 18.06.1972ல் மரணமடைந்தார். எம். அய்யாச்சாமி   இவர் 06.05.1913ம் ஆண்டு மதுரையில் முத்தையா - பேச்சியம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தனது இளமைக் காலங்களில் மருத்தவர் சமுக மக்களின் நரக வாழ்வினை எண்ணி மனம் வெதும்பிய அய்யாச்சாமி இளம் வயதில் மருத்துவ பாலகர் சங்கத்தை நிறுவி அதன் செயலாளராகச் செயல்பட்டார். 1933ல் சுயமரியாதை வாலிபர் சங்கச் செயலாளரானார். 1935ல் தென்னிந்திய மருத்துவர் வாலிபர் சங்கத்தின் செயலாளரானார். தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராடினார். சலூன்களுக்கு உரிமம் வாங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றுக் கொண்டார். 1947ல் மதுரை மாநகர் தி.க. துணைத் தலைவராகவும், 1949ல் அதன் தலைவராகவும், 195ல் மதுரை மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருந்தார். சினிமா மற்றும் நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவரது ’இன்பக் கனவு' நாடகம் பிரபலமானது. திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து 1955ல் விலகி காங்கிரசில் இணைந்தார். பின்னர் தனது சுயசாதியான மருத்தவர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.  1957ல் மதுரை மருத்துவர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் ஒன்றை மருத்துவச் சமூக மக்களுக்காக நிறுவி அம்மக்கள் கடனுதவி பெற்று பொருளாதார மேம்பாடடைவதற்கான பணிகளைச் செய்தார். 1960ல் மதுரை மருத்துவர் மத்திய சங்கத் தலைவராகவும், தமிழக மருத்துவர் மத்திய சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் தேர்வு பெற்றார். டீம் என்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். மருத்துவச் சமூகத்தாரைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பல போராட்டங்கள் நடத்தினார். தமிழ்நாடு மேல்சபை உறுப்பினர் பதவியும் வகித்த அய்யாச்சாமி 1977ம் ஆண்டு காலமானார்.  டாக்டர் ஆனந்தகுமார்  இவர் பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தத்தின் மகன் ஆவார். டீம் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றப் பயணம் செய்து மருத்துவர் சமூக முன்னேற்றத்திற்காகப் போராடினார். மருத்துவ சமூகத்தாரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பல போராட்டங்கள் நடத்தினார். இவரோடு பல பகுதிகளுக்கும் சேது சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த நடராசன் சென்றார். சென்னியவிடுதி வைத்தியநாதன்   சென்னியவிடுதி வைத்தியநாதன் 20.10.1950ல் அசிதம்பரம் - மீனாட்சி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். 1970களில் உழவர் விவாதக் குழு என்ற அமைப்பு மூலம் பொது சேவை செய்துவந்தார். பட்டு வளர்ச்சி கூட்டுறவு சங்கத்தில் தலைவராகச் செயல்பட்டு வந்தார். இப்பதவியிலிருந்து விலகிவிட்டு மருத்துவர் சாதிக்குப் பாடுபடும் சங்கத்தில் இணைந்தார். 1987ம் ஆண்டு இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரானார். பின்னர் தமிழகத்தின் பல பாகங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து மருத்துவ சாதி மக்களை ஒருங்கிணைத்தார். 1988ல் மதுரை, 1990 திருச்சி, ஆகிய இடங்களில் மருந்துவர் சங்க மாநாட்டினை நடத்தினார். மாநாட்டினை நடத்திய இவரே, அது பொருளாதார விரயத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று உணர்ந்தார். தன் வேதனையைப் பின்வருமாறு கூறினார்; கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடு இவைகளினால் நம் மக்கள் சக்தியும், பொருளும் விரயமாகிறதே தவிர பயன் என்பதே இல்லை. நமது கூட்டங்களில், மாநாடுகளில் பெரும்பாலும் திமுகவை நீங்கள்தான் வளர்த்தீர்கள் என்று ஒரு அழிக்க முடியாத முத்திரையை பல ஆண்டுகளாகப் பதிக்கப்பட்டு இருக்கிறோம். இதை யாரும் மறுக்கவே முடியாது. அரசு மாறிய போதும் நாம் எந்தச் சலுகையையும் பெறவில்லை. எந்த அரசு வந்தாலும் அரசியல் சார்பற்ற சங்கம், ஆளுகின்ற கட்சிக்கு ஆதரவு என்று தீர்மானம். இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும் மேற்குறிப்பிட்டுள்ள வைத்தியநாதனின் வரிகள் அவர் மாநாடுகள் நடத்துவது, ஆளும் ஆட்சிக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றுவதை விட்டுவிட்டு நடைமுறையில் மருத்துவர் சாதி முன்னேற்றத்திற்கான பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளதை வெளிப்படுத்துகிறது. அவர் அத்தகைய முயற்சிகளையும் மேற்கொண்டார். மருத்துவச் சமூக இளைஞர்களை வெளிநாட்டிற்குத் தொழில் செய்வதற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில் அவர் தனது சாதிக்காக நடத்திய பத்திரிகை பெரும் பொருளாதார நடவடிக்கைக்கு உள்ளானது. இதனை அவர் அச்சமூகத்திற்கு பின்வருமாறு தெரியப்படுத்தினார்; பத்திரிகை மூலம் பணி செய்ய விரும்பி 17 ஆண்டு காலமாக மிகவும் சிரமத்தில் பொருள் இழப்பில் பேப்பர் நடத்தி வருகிறேன். ஆதரவு குறைவு, ஆதரவு தராதவர்கள் மிக அதிகம். நான் மிகவும் சாதாரணமானவன். ஆனால் சக்திக்கு மீறிய பொருள் இழப்பில் இன்று இருக்கிறேன். நம் சாதி பத்திரிகையை நம்மவர்களே அலட்சிம் செய்வது எனக்கு வேதனைதான். வேம்பு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதையாரும் விரும்பி சாப்பிடுவதில்லை அது போல நம்மவர்களுக்கு சமுதாய மடல் வேம்பாய் உள்ளது. ஒவ்வொரு இதழும் ஓர் தலைப் பிரசவம் போல் வெளிவருகிறது வைத்தியநாதன் தனது ஐம்பதாவது பிறந்த நாள் அன்று தனது சாதி இளைஞர்களிடம், ''நான் இனிமேல் குடிப்பதில்லை என்று சபதம் ஏற்று அதையே எனக்கு பரிசாக அளிக்க வேண்டுகிறேன்" என்றார். இந்த அளவுக்குப் பொருளாதாரம் விரயமாவதை விரும்பாத அவர், பத்திரிகையினால் தன் சக்திக்கு மீறிய பொருளாதாரத்தை இழக்க நேரிட்டது. இச்சுமையை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை . இதனால் அவர் தன் வாழ்க்கைக்கு 25.12.2001 அன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். முத்துராசு  இவர் 1932ல் திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லூரில் வைத்தியக் குடும்பத்தில் பிறந்தார். இடதுசாரி இயக்கத் தொழிற் சங்கத்தில் பணியாற்றிய இவர், அதிலிருந்து விலகி ’தமிழ்நாடு தியாகி விஸ்வநாததாஸ் பேரவை' என்ற அமைப்பினை 1990களின் ஆரம்பத்தில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். இப்பேரவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தமிழ்நாடு அரசு, சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் உருவச்சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்துப் பல போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி அடைந்தார். மருத்துவச் சாதி மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிவருகிறார்.  இவருடைய தாத்தா வைத்தியர் சுப்பிரமணி பண்டிதர், திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் விநாயகர் கோயிலைக் கட்டினார். இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டப் பின்னர், பல ஆண்டுகளாகப் பிற சாதியினர் 'நாசுவ விநாயகர்' என்றே அழைத்தனர். ஆனால், தற்போது அப்பெயர் மறைந்து வருகிறது; அனைத்துச் சாதியினரும் வணங்குகின்றனர். கடவுள் நம்பிக்கையற்ற முத்துராசு, தனது தாத்தா கட்டிய கோயில் என்பதால் இன்றும் அக்கோயிலை, பராமரித்து வருகிறார். ராம ஜவகர்  16.02.1946ல் பிறந்த இவர் அரசுத் துறையில் பணிபுரிந்தார். 1962ல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1986ம் ஆண்டு இந்து முன்னணி இயக்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1977ல், 'டீம்' சங்கத்தில் இணைந்தார். இச்சங்கத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சிதறுண்டு இருந்த பல்வேறு மருத்துவச் சாதியனர்களின் சங்கங்களை ஒரே குடையின் கீழ் அணிதிரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இவர் 10.02.1999ல் இறந்துவிட்டார். பத்திரிகைகள்  ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களின் சமூக விடுதலைக்கான ஆயுதமாக பத்திரிகையை நடத்தியுள்ளனர்; நடத்துகின்றனர். மருத்துவர் சமூகமும் அந்த ஆயுதத்தை வலுவாகவே எடுத்துள்ளனர். காலனியக் காலம் முதல் இன்றுவரை அவர்களால் 13 பத்திரிகைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் நமக்கு கள ஆய்வின் போது 7 பத்திரிகைகளைச் சேகரிக்க முடிந்தது.  1) மருத்துவன் (1929) பண்டிதம் எஸ்.எஸ். ஆனந்தம்  2 வழிகாட்டி  திருச்சி மனச்சநல்லூர் மாணிக்கம் – 3) அம்பட்டன்  பெயர் தெரியவில்லை  4) நாம்  ஆவுடையப்பன் 5) டீம்  ஏ.வி.பி.இளங்கீரன் 6) சமுதாய மடல் (1989) சி.வைத்தியநாதன் 7) சமுதாயக் காவலன் சி.வைத்தியநாதன் 8) ஒற்றுமைக் குரல் (1992) பி.செல்வராஜ் 9) சோலை மலர் (1997-1999) ஆசனா ஐ.தங்கவேல் 10) பண்டித ஆனந்தம் (2000-2002)  ஆசனா ஐ.தங்கவேல் 11) மருத்துவர் சமூக முரசு (2003)  எஸ்.எம்.சாமி   12) பண்டிதம் (2003) (2003) ஆசனா ஐ.தங்கவேல் 13) ஆனந்தர் குரல்  ஏ.வி.பி. இளங்கீரன் பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் மருத்துவன் (PHYSICIAN) என்ற பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்தார். இப்பத்திரிகை மருத்துவச் சமூக விடுதலைக்கான குரல்களையும் சித்த மருத்துவத்தைக் காப்பாற்றுவதற்கான வழிகளையும், பல மருத்துவ முறைகளையும் பதிவு செய்தது. இப்பத்திரிகை எந்த ஆண்டு தொடங்கப்பட்டு எந்த ஆண்டில் நின்று போனது என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் 1929ல் வெளியான பத்திரிகையின் முகப்புத் தோற்றம், அவ்விதழில் வெளியாயிருந்த தென்னிந்திய மருத்துவர் சங்கத்தின் ஆண்டு வரவு - செலவு கணக்கு, மருத்துவர்கள் மீதான ஒடுக்கு முறைகள் குறித்த இப்பதிவுகள் போன்றவை கள ஆய்வில் கிடைத்தன. (பின்னிணைப்பு 7-ஐ காண்க) வழிகாட்டி, அம்பட்டன், நாம் ஆகிய பத்திரிகைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் வெளிவந்திருக்கிறன. இதர பத்திரிகைகள் காலனிய ஆட்சிக்குப் பின்பு வெளியாகியுள்ளன. இப்பத்திரிகைகளில் மருத்துவச் சாதியினரின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள், சவரத் தொழிலாளர் சங்கக் கூட்டங்கள், அச்சாதியினைச் சேர்ந்தோரின் இன்ப துன்ப நிகழ்ச்சிகள் குறித்தச் செய்திகள் போன்றவை பிரதானமாக இடம்பிடித்துள்ளன. அனைத்துப் பத்திரிகைகளும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவர் சங்கம் சார்ந்தது. டீம், மருத்துவர் சாதியிலுள்ள படித்துப் பணிபுரிபவர்களால் வெளியிடப்பட்டது. இப்பத்திரிகளைகள் பெரும்பாலும் அம்பேத்கர், பெரியார், மார்க்சு போன்றோரின் கருத்துக்களை ஆதரிப்பவையே. எல்லா பத்திரிகைகளிலும் நோய்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண்டிதம் இதழில் அம்பேத்கர், பெரியார், மார்க்சு போன்றோரின் கருத்துக்கள், ரஷ்யச் சிறுகதைகள் முதலானவைகள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. இதன் ஆசிரியர் ஆசனா ஐ.தங்கவேல் ஒரு தனியார் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் பணிபுரிகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டே அதனை வெளியிட்டு வருகின்றார். மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள் அனைத்தும் பெரும்பாலும் மருத்துவர் சாதி மக்களுக்கிடையேதான் புழங்குகின்றன.                                        8. ஒடுக்குமுறையை உணர்தலும் போராடுதலும்    மருத்துவச் சமூகம் குறித்துப் பல கதைகள் படைக்கப்பட்டுள்ளன. நாம் இங்கு மருத்துவர் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழும் கதைகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். இக்கருவினை மையமாகக் கொண்ட கதைகளாகப் புதுமைப் பித்தனின் 'நாசகாரக் கும்பல்’, முல்க் ராஜ் ஆனந்தின் ’பார்பர்களின் தொழிற் சங்கம்', வண்ண நிலவனின் 'மயான காண்டம்' ஆகிய சிறுகதைகளைக் குறிப்பிடலாம். பொருளாதார ஒடுக்குமுறை நாசாகாரக் கும்பலில் மருதப்பன் என்ற பாத்திரம் மருத்துவர் சாதியைச் சேர்ந்தவர். இவர் இலங்கையில் சலூன் கடை நடத்தியதோடு அங்கு மருத்துவமும் கற்றுக் கொண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார். இலங்கையில் தொழில் செய்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்வடைந்துள்ளார். ஊருக்கு வந்த சமயத்தில் மூக்கன் என்பவரின் வயலை வாங்கவேண்டும் என்று விரும்புகிறார். தனது நிலம் வாங்கும் விருப்பத்தைச் சுப்புப் பிள்ளையிடம் கூறுகிறார். சுப்புப் பிள்ளையோ "இது உனக்கு வேண்டாம், அந்நிலத்தை பண்ணை யாரால் மட்டுமே வாங்க முடியும்" என்கிறார். ஆனாலும் மருதப்பன் தனது நிலம் வாங்கும் விருப்பத்தில் உறுதியாக இருக்கிறார். இதனால் சுப்புப் பிள்ளை அவ்வூர் பண்ணையார் சிதம்பர பிள்ளையிடம் மருதப்பன், உங்களையும் பிள்ளை சமூகத்தினையும் திட்டியதாக பொய் சொல்கிறார். இதனால் ஆத்திரமடைந்து பண்ணையாரும் சுப்புப் பிள்ளையும் விசுவநாதப் பிள்ளையைச் சந்தித்து அவரை அந்நிலத்தை வாங்கக்கூறவே, அவர் அதனை வாங்கிவிடுகிறார். நிலம் வெள்ளாளர்களால் வாங்கப்பட்ட செய்தி மருதப்பனுக்குத் தெரியவருகிறது. இச்சூழலில் வெள்ளாளர்களில் ஒருவரின் மனைவி இறந்துவிடுகிறார். சாவுச் சடங்கு செய்வதற்கு ஊர்க் குடிமகன் அழைக்கப்படுகிறார்; ஆனால் அவர் வரவில்லை. மீண்டும் குடிமகனை அழைக்கச் சென்ற பொழுது மருதப்பன், “அவர் இனி அந்த வேலையைச் செய்யமாட்டார்" என்று கூறிவிடுகிறார். வெள்ளாளர்களால் அனுப்பப்பட்டவர் மருதப்பன் கூறிய செய்தியை கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பண்ணையார் நீயெல்லாம் ''சாதி மறவனா"? என்று கூறி குடிமகனையும் மருதப்பனையும் அடித்து இழுத்துவரக் கட்டளையிடுகிறார்; அக்கட்டளை நிறைவேற்றப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரும் கட்டி வைக்கப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். மருதப்பனை அடித்த போது அவரின் இரண்டு பற்கள் விழுந்துவிடுகிறது; ரத்தம் வடிகிறது. இதனைப் பார்த்த குடிமகன் சாவுச் சடங்கினை செய்யத் துவங்குகிறான்; அவன் சாவுச் சங்கை ஊத ஆரம்பித்துவிடுகிறான். பலத்த அடியால் வலிதாங்க முடியாத மருதப்பனை அவரின் மனைவி அழைத்துச் செல்கிறாள். பின்னர் மருதப்பன் காவல்துறைக்குச் சென்று புகார் கொடுக்கக்கூடாது என்று மற்றவர்கள் மூலம் மிரட்டப்படுகிறார். இதையும் மீறி மருதப்பன் திருவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால் காவல்துறை புகாரை வாங்க மறுத்ததோடு அவரைத் திட்டி அனுப்புகின்றனர். திடீரென மருதப்பனையும் அவரது மனைவியும் காணவில்லை, வீடு பூட்டிக் கிடக்கிறது. இதனை அறிந்த பண்ணையார் மருதப்பன் இலங்கைக்குச் சென்றிருப்பான் என்று கருதுகிறார். அச்சமயத்தில் மரக்காயர் பண்ணையாரைச் சந்திக்க வருகிறார். அவரிடம், அவர்களால் வாங்கப்பட்ட நிலம் (மருதப்பன் வாங்க நினைத்த மூக்கனின் நிலம்) தன்னிடம் மூக்கனால் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மருதப்பனும் அவரது மனைவியும் இசுலாம் மதத்தைத் தழுவி இலங்கைக்குச் சென்றதாகவும் கூறினார். பண்ணையார் நிலப்பிரச்சினையினைக் கோர்ட்டில் சந்தித்துக் கொள்வோம் என்று கூறுவதோடு கதை முடிவடைகிறது. பண்பாட்டு ஒடுக்குமுறை முல்க் ராஜ் ஆனந்தின் பார்பர்களின் தொழிற் சங்கத்தில் வரும் சந்து என்னும் கதா பாத்திரம் பார்பர் சாதியைச் சேர்ந்தவன். இக்கதை அவனது மேல்சாதி நண்பனால் சொல்லப்படுகிறது. சந்துவின் தந்தை நோயினால் இறந்த பின்னர் அவன் சவரப் பணியினைச் செய்யத் தொடங்கினான். இப்பணியை தனது இளமைக் காலம் முதல் தனது தந்தையிடமிருந்து கற்றுக் கொள்கிறான். மேலும் இளம் வயதில் சில மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றிருந்தான். அடிக்கடி நகரத்திற்குச் சென்றுவரும் சந்து அங்கு பல வகையான ஆடைகள் அணிவதைத் தெரிந்து கொள்கிறான். அவன் நகரத்தில் பார்த்த பல் மருத்துவர் கள்ளன் கான் போல் ஆடை அணிய வேண்டும் என்று ஆசை. இதனைத் தனது நண்பனிடம் கூறுகிறான். சந்து நினைத்த மாதிரி அந்த வடிவிலான ஆடையை வாங்கிவிடுகிறான். அந்த ஆடையை அணிந்து கொண்டு சவரப் பணி செய்யும் நிலக்கிழார் வீட்டை நோக்கி நடக்கிறான். நிலக்கிழார் பார்ப்பனச் சாதியைச் சேர்ந்தவர். நடைபாதையில் மாட்டுச் சாணங்கள் மீதும், அழுக்குத் தண்ணீரிலும் தனது கால்கள் பட்டுவிடாமல் இருப்பதற்காக மிகக் கவனமாக நடந்து செல்கிறான். சந்து மருத்துவரைப்போல் ஆடையணிந்து கொண்டு தெருவில் நடந்து செல்லும் போது மக்களில் சிலர்தான் இருக்கின்றனர். சந்து நிலக்கிழாரின் வீட்டையடைந்ததும் அவரின் மகன் கைதட்டிக் கொண்டே உற்சாகத்தில் சந்துவின் வருகையை அறிவிக்கிறான். நிலக்கிழார் சந்துவை, ‘பன்றியின் மகன், பேயின் மகன்; நீ என் மதத்தை அசுத்தப்படுத்துகிறாய், வெளியே செல், உன்னுடைய கீழ்சாதிக்கு ஏற்ற ஆடையை அணிந்து கொள், என் அருகே வராதே', என்று கத்துகிறார். சந்து சிவந்த கண்களால் வெளியேறிவிடுகிறான். பின்னர் ஒரு கடையை நோக்கிச் செல்கிறான். கடைக்காரன் பொருளை எடை போட்டுக் கொண்டே மற்றொருபுறம் சந்துவைப் பார்த்து திட்டுகிறான், அழுக்குத் துணிகளை அணியக்கூறுகிறான். இச்சம்பவத்தின் போது, சந்துவின் கூடவே சென்றிருந்த அவனது மேல்சாதி நண்பனையும் சந்துவையும் நிலக்கிழாரின் வீட்டிலிருந்த ஒருவன் இழிவாகத் திட்டுகிறான். இவ்வார்த்தைகளை சந்து கேட்க நேரிடுகிறது. இதனால் சந்து வருத்தத்தோடு ஓடிவிடுகிறான். இதன் பின்னர் சந்து அவனை இழிவுபடுத்தியவர்களுக்குப் பாடம் புகட்ட உறுதி எடுக்கிறான். அவன் ஒரு சைக்கிள் வாங்கி அதனை ஒட்டிக் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறான். இதனைப் பார்த்த மேல்சாதியினர் அவனைக் கிண்டல் செய்கின்றனர். சந்து அவர்களின் கிண்டல்களுக்கிடையேயும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கிறான். ஒருசில நாட்களுக்குப் பின்னர் சந்துவும் அவனது நண்பனும் சந்தித்துக் கொள்கின்றனர். சந்து அவனது நண்பனுக்கு நிலக்கிழார் உட்படப் பலரின் சவரம் செய்யப்படாத முகங்களைக் காட்டுகிறான். அவர்களைப் பார்த்த நண்பன் உற்சாகத்தில் சிரிக்கிறான். சந்து அவனது நண்பனிடம் அவர்களின் அருகே சென்று அவர்களைக் கிண்டல் செய்யுமாறு கூறுகிறான். அவன் அவர்களருகே சென்று மிருகங்கள்! மிருகங்கள்! மிருகங்கள்! என்று கத்திக் கொண்டே வேகமாய் ஓடி, தப்பிச் சென்றுவிடுகிறான்.  சந்து மேல்சாதியினருக்குச் சவரம் செய்ய மறுத்து நடத்திக் கொண்டிருக்கிற போராட்டச் செய்தி வெளியே பரவியது. நிலக்கிழாரின் இளம் மனைவி அவர் முகச்சவரம் செய்யவில்லை என்றால் யாருடனாவது ஓடிப்போய் விடுவேன் என பயமுறுத்தியாக  வதந்தி பரவியது. இக்காலங்களில் சந்து நகரத்தில் நன்றாகத் தொழில் செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். கிராமத்தில் உள்ள முதியவர்கள் அவன் இக்குற்றத்தைச் (சவரம் செய்ய மறுப்பதால்) செய்து கொண்டிருப்பதால் சந்துவைச் சிறையில் அடைத்துவிடுவதாக அவனது தாயிடம் மிரட்டுகிறார்கள். பின்னர் அவர்கள் வெர்காவிலிருந்து தங்களுக்குச் சவரம் செய்வதற்குப் பார்பரை அழைத்து வந்தனர். சந்து நகரத்தில் ஒரு சலூன் கடையை பார்த்துவிட்டு, தானும் தனது மைத்துன்னும் இதர முதிய சவரத் தொழிலாளிகளுடன் ஆலோசித்து நகரத்தில் சலூன் கடையைத் தொடங்குவதென்றும்; மேல்சாதியினர் சலூன் கடைகளுக்கு வந்து சவரம் செய்து கொள்ளட்டும் என்றும் முடிவு செய்கிறான். இவர்களால் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட 'ராஜ்காட் மாவட்ட பார்பர் சகோதர்களின் ஹேர் டிரஸ்ஸிங் & ஷேவிங் சலூன் " அப்பகுதியில் உள்ள உழைக்கும் மக்களின் தொழிற்சங்களின் முன்னோடியாகும். சாதிகள் வேறு; மூளை ஒன்று  நாசகாரகும்பலுக்கும், பார்பர்களின் தொழிற்சங்கத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலில் இக்கதைகள் இரண்டும் காலனியக் காலத்தில்தான் எழுதப்பட்டன. நாசாகாரக் கும்பல் 1937ல் எழுதப்பட்டது (தகவல். குமாராசாமி, இக்கதை 1937ம் ஆண்டு தினமணி - தீபாவளி மலரில் வெளிவந்ததாக அவர் தெரிவித்தார்) பார்பர்களின் தொழிற்சங்கமும் காலனிய ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். (முல்க் ராஜ் எழுதிய அன்டச்சபிள், கூலி போன்ற பல கதைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் எழுதப் பட்டன. (The Hindu, Literary Review, 04.12.05; 2) நாசகாரக் கும்பல் அடிப்படையில் பொருள் சார்ந்த ஒடுக்குமுறையினை முன்வைக்கிறது. பார்பர்களின் தொழிற்சங்கமோ பண்பாடு சார்ந்த ஒடுக்குமுறையினை முன்வைக்கிறது. நாசகாரக் கும்பலின் மருதப்பன் பொருளாதார ரீதியில் வெள்ளாளச் சாதியைச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தான் பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டதற்கு அவரின் ’காரைவீடு' அடையாளமாக இருக்கிறது. இது மருதப்பனின் பொருளாதார உயர்விற்கான அடையாளமாக மட்டுமின்றி அவ்வூரை அடையாளப்படுத்துவதற்கான குறியீடாகவும் இருக்கிறது. பொருளாதாரச் சுதந்திரமடைந்த மருதப்பன் விருப்பப்பட்டு வாங்க நினைத்த நிலத்தை, வெள்ளாளச் சாதியினர் தந்திரமாகத் தடுக்கின்ற அனைத்து முயற்சிகளையும் மருதப்பன் உணர்கிறார். இந்த உணர்தல், தான் நிலம் வாங்கவிருக்கும் எண்ணத்தை அவர் சுப்புப் பிள்ளையிடம் வெளிப்படுத்துவதும், அதற்கு அவர் மருதப்பனின் விருப்பத்திற்கு எதிராக இருப்பதிலிருந்து தொடங்குகிறது. இந்த நிலம் பண்ணையாரால் மட்டும்தான் வாங்க முடியும் என்று சுப்புப் பிள்ளை கூறுகிற பொழுது, அக்கூற்று தன்னுள் மருதப்பனைத் தாழ்ந்தவன்; பண்ணையார் உயர்ந்தவர் என்ற பொருளையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கீழ்மைப்படுத்தலை உணர்தலும்; அதற்கு எதிரான குரலும் பின்வரும் பகுதியில் வெளிப்படுகின்றன, 'என்னய்யா, அவுகளுக்குப் பணமிருந்தா அவுகமட்டோடே; அவுக பண்ணையார்ன்னா கொடிகட்டிப் பறக்குதா? அதெத்தான் பார்த்து விட்ரணும்பா! நான் அதுக்கு அஞ்சுனவனில்லெ. நாளெக்கே முடிக்கேன். என்னதான் வருது பாப்பமே! என்று மருதப்பன் வெளிப்படுத்துகிறார்.  பார்பர்களின் தொழிற்சங்கத்தில் சந்து தனது தந்தை இறந்த பின்னர் சுயமாகத் தொழில் செய்கிறான்; பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் அடைந்து கொண்டிருக்கிறான்; நகரத்தில் மனிதர்கள் ஆங்கிலேயர்கள் போல் பல விதமாக ஆடையணிவதைக் காண்கிறான். இதனால் தானும் அவ்வாறு மாறவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது; அதை நிறைவேற்றுகிறான். அவனிடம் ஏற்படும் இந்தப் பண்பாட்டு மாற்றத்தை நிலக்கிழார் உட்பட மேல்சாதியினர் தன் நண்பன் உட்பட பலர் முன்னிலையில், அதனை மிருகத்தனம்', 'பேய்', 'பிசாசு' என்று திட்டுவதோடு மட்டுமல்லாமல் 'கீழ்சாதிக்கான' ’உனக்கான' ’அழுக்கான ஆடைகளை அணி', என்று கட்டளையிடும் போது, சந்து அவமானப் படுத்தப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் உணர்கிறான். இந்த ’உணர்தல்' சாதி ஆதிக்கத்திற்கெதிராக அவனைக் கிளர்ந்தெழச் செய்கிறது. மருதப்பன், சந்து ஆகியோர் மீதான ஒடுக்குமுறைகள் பொருளாதாரம், பண்பாடு என்று வெவ்வேறாக இருந்த போதிலும் அவ்வொடுக்குமுறைக்குக் காரணமாக இருப்பது அவர்கள் ”கீழ்சாதியினர்" என்பதே.  தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மருதப்பனும் சந்துவும் வெவ்வேறு உத்தி வடிவங்களைப் பின்பற்றுகின்றனர். மருதப்பன் எவ்வாறு ’வெள்ளாளச் சாதியினரால்’ ஒடுக்கப்படுகிறாரோ அதே போல் அவரும் வெள்ளாளச் சாதியினருக்கு எதிராகத் தன் சுயசாதியினரை அணிதிரட்டிப் போராடுகிறார்; மேல்சாதியினருக்குச் சாவுச் சடங்கு செய்வதற்கு மறுக்கிறார். பின்னர் வன்முறையால் அச்சடங்கை குடிமகனைச் செய்ய வைக்கின்றனர். சந்து மேல்சாதியினருக்குச் சவரம் செய்ய மறுத்து நகரத்தில் தொழில் செய்து பொருளாதார உயர்வடைகிறான். மேலும் தனது மேல்சாதி நண்பன் மூலம் அவர்களைக் கிண்டல் செய்கிறான். சந்துவின் போராட்டம் மேல் சாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், நிலக்கிழார் சவரம் செய்யவில்லையென்றால் அவரது மனைவி இன்னொருவனுடன் சென்றுவிடுவதாகக் கூறும் நிலைக்கு வந்துவிடுகிறது. எனவே, இரண்டு கதைகளிலும் சந்துவையும், மருதப்பனையும் வன்முறையால் ஒடுக்குவதற்கு முற்படுகின்றனர். இதில் சாதிக்குள் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை மறந்து ஆதிக்கச் சாதியினர் ஒன்றாகவும்,   மருத்துவச் சாதியினர் (இரண்டு பேர் மட்டுமே) ஒரு பிரிவாகவும் இணைந்து நிற்கின்றனர். பண்ணையாருடன் இணைந்து மருதப்பனுக்கு எதிராகச் சதிச்செயல்களில் ஈடுபடும் சுப்புப்பிள்ளை பண்ணையாரைவிடவும் பொருளாதாரத்தில் குறைந்தவர். மருதப்பனோடு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் குடிமகனும் மருதப்பனைவிட பொருளாதாரத்தில் குறைந்தவரே. பண்ணையாரோடு சுப்புப்பிள்ளை இணைந்து மருத்துவச் சாதியினருக்கு எதிராகச் சதிச்செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் கீழ்சாதி என்ற கருத்தியல் மட்டும் காரணமல்ல; மருதப்பன் பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டால் இதர மருத்துவச் சாதியினரும் அவரைப் பின்பற்றுவர்; மேல் சாதியினருக்கு அடிமை வேலை செய்ய மறுப்பார்கள்; அவ்வாறு மறுப்பதினைப் போராடுவதினைத் தற்போதிருக்கும் குடிமகன் மருதப்பனோடு இணைந்து செய்கிறார். குடிமகன் மேல் சாதியினருக்குச் சாவுச் சங்கு ஊதமறுத்தால், சடங்கு செய்யவில்லையென்றால் அது தங்கள் வாழ்க்கையே யே பாதிக்கும் என்ற கருத்தியல் அவர்களிடம் உள்ளது. இக்கருத்தியல் பொருளாதாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. அதாவது மருத்துவச் சாதியினர் செய்யும் சடங்குகள் மேல் சாதியினரின் பொருளாதாரத்திற்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. சடங்கு செய்யவில்லையென்றால் இறந்து போனவரால் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பது கருத்தியல் சார்ந்த நம்பிக்கை. எனவே அச்சடங்கினை மருத்துவச் சாதியினர் செய்ய வேண்டும் என்பதில் விடாப்படியாக இருக்கின்றனர் வெள்ளாளர்கள் (இது அனைத்துச் சாதியினருக்கும் பொருந்தும்). அவர்களின் இத்தேவையானது மற்றொருபுறம் மருத்துவச் சாதியினரைப் பொருளாதார - பண்பாட்டு ரீதியாக ஒடுக்கிவருகிறது. இந்த ஒடுக்குமுறையிலிருந்து மருத்துவச் சாதியினர் விடுபடுவதற்கு ஆதிக்கச் சாதியினருக்குச் சடங்கு செய்தலைப் புறக்கணித்தலும்; மறுத்தலும் தேவையாய் இருப்பதை இந்தக் கதைகள் மூலம் அறிய முடிகிறது.  நாசகாரக் கும்பலையும், பார்பர்களின் தொழிற்சங்கத்தினையும் இவை புனை கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சடங்கு செய்ய மறுத்து மருத்துவச் சாதியினர் போராடியது குறித்தும், நகரங்களில் தொழில் செய்யச் சென்றது குறித்தும் முற்பகுதியில் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்ட வரலாற்றில் பார்த்தோம். திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெள்ளாள ஊர்களில் மருத்துவச் சாதியினர் நடத்திய போராட்டத்தையே நாசகாரக்கும்பல் பதிவு செய்துள்ளது. இதில் குடிமகன் வன்முறையால் சடங்கு செய்ய வைக்கப்பட்ட பின்னர், வெள்ளாள சாதியினர் பலரும், சவத்துப் பயல்களைச் சரிக்கட்டிப் பாருங்க, இல்லாட்டா அங்கெயெப் போல் மலையாளத்து அம்பட்டனெ குடியேத்திப் போடுவோம்..  என்று ஆலோசனை கூறினர். திருநெல்வேலி நகரத்தில் வசித்த வெள்ளாளர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ய மறுத்தபோது அவர்கள் கேரளாவிலிருந்து மருத்துவச் சாதியினரை அழைத்து வந்த வரலாற்றினை இங்கு நினைவுப்படுத்திக் கொள்க. பார்பர்களின் தொழிற்சங்கத்தில் சந்து மேல் சாதியினருக்குச் சவரம் செய்ய மறுத்தபோது அவர்களும் வெளியூர்களிலிருந்து சவரம் செய்வதற்கு அழைத்துவந்தனர். அவருக்கு சந்துவுக்கு கொடுத்தக் கூலியைவிடவும் அதிகக் கூலி கொடுத்தனர். இந்த நிகழ்வுகள் மேல்சாதியினர் தங்களுக்கென அடிமைச்சாதிகள் இல்லாமல் வாழ்வதே இல்லை என்ற ’சாதிய உளவியலையே' வெளிப்படுத்துகிறது. இந்த உளவியல் இந்தியாவில் உள்ள அனைத்து ஆதிக்கச் சாதியினருக்கும் ஒன்றாகவே இருக்கிறது என்பதை இரண்டு கதைகளும் வெளிப்படுத்துகின்றன.  வண்ணநிலவனின் 'மயான காண்ட'த்தில் வரும் கதாபாத்திரம் செல்லையா பண்டிதர் ஒரு வெட்டியான். அவருக்கு இறந்தவர்களை எரிப்பது மட்டுமே தொழில். ஊரில் யாரும் இறக்கவில்லை என்றால் செல்லையா பண்டிதரை வறுமை கடுமையாகத் தாக்கிவிடும். இப்படைப்பில் அவருக்கு வேலையில்லாததால், அதாவது ஊரில் யாரும் சாகாததால் அவர் பட்டினியால் வாடுகிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கடும் வாய்ச் சண்டையும் நடைபெற ஆரம்பித்துவிடுகிறது. இதனால் மனைவி செல்லம்மா அழுது கொண்டிருக்கிறார். செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும் செல்லையா பண்டிதர் தனது சங்குகளை எடுத்துக் கொண்டு சுடுகாட்டில் இருக்கும் சுடலைமாடக் கோவிலில் தனது கஷ்டத்தைத் தீர்க்கக் கோரி நீண்ட நேரமாகச் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அங்கு ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த உண்டி யலை எடுத்துச் சென்றுவிடுவதோடு கதை முடிந்துவிடுகிறது. கதை கதையாசிரியர் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. கதையாசிரியர் செல்லையா பண்டிதனுக்கு "வெட்டியான் தொழிலைப் பரம்பரைத் தொழில்", "பரம்பரையாகச் சோறு போட்டு வந்திருக்கிற நன்றியுணர் வெல்லாம் செல்லுபடியாகாது" என்கிறார். மருத்துவச் சாதியைச் சேர்ந்த பலரும் பார்பர் ஷாப் வைத்துப் பொருளீட்டுவது இவருக்கு வருத்தமாக இருக்கிறது. காரணம் அத்தொழிலில் தினமும் வருமானம் கிடைக்கிறது. வெட்டியான் தொழிலில் அவ்வாறு இல்லை என்பதே. வேலை இல்லாத காரணத்தால் வீட்டில் சில நாட்களாய்ச் சமையல் செய்யவில்லை. தனக்கு வேலை கிடைக்குமா? யாராவது சாகமாட்டார்களா? என்று காத்துக்கிடக்கிறார். இறப்பு நிகழவில்லை; வறுமை தலைவிரித்தாடுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு மனைவி அழுது கொண்டிருக்கிற பொழுது, சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்த மாதிரி செல்லம்மாவை விட்டு விலகி, மண்சுவரில் கதவு நிலைக்கருகே பம்பரக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருந்த இரட்டைச் சங்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் செல்லையா பண்டிதன். செல்லம்மாவின் அழுகையில் இப்பொழுது முன்பைவிட கொஞ்சம் சுரத்து இறங்கியிருந்தது. சாய்மானத்திண்டின் மீது கிடந்த சிட்டைத் துண்டை எடுத்து இரண்டு சங்குகளையும் துடைத்தான். நன்றாகத் துடைத்த திருப்தி ஏற்பட்டவுடன் முதுகிலும் மார்பிலுமாக இரண்டு சங்குகளையும் தோளிலிருந்து தொங்கவிட்டுக் கொண்டு சொள்ளமாடசாமி கோவிலைப் பார்க்க நடந்தான்.  பின்னர், சொள்ளமாட கோவிலில் சென்று, 'சாமி எங்கஷ்டத்தை தீருமையா' என்று சத்தம் போட்டு ஆலமரமே அதிர்ந்து விழுகிற மாதிரி கத்திவிட்டு, தோளில் கிடந்த சங்குகளை எடுத்து வாயில் வைத்து மூச்செடுத்து ஊதினான். மரத்திலிருந்து நாரைகள் கிளைகள் முறிவது போல் சடச்டென்று இறக்கையடித்துக் கொண்டு பறந்தன. அக்கரையேறிவிட்ட வண்டிக்காரர்கள் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். வயிற்றுப் பசியையெல்லாம் வாய் வழியே காற்றாக்கி சங்குகளை ஊதினான். செல்லம்மா வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள். பண்டிதனின் சங்கொலி ஆற்றங்கரை மணல் ஆற்றுத் தண்ணீர், அக்கரையிலுள்ள பச்சை வயல் வெளிகள், வண்டிப் பாதை சுற்றிக் கொண்டு போகிற வெள்ளிமலைக் குன்று இதையெல்லாம் தொட்டுத் தாண்டிப் போய்க் கொண்டேயிருந்தது. அன்றைக்கு ரொம்ப அபூர்வமாய், ஒரு சங்கீதக்காரனைப் போன்ற கம்பீரத்துடன் மூச்சடைக்க, கண்களில் நீர் வழிய வழிய ஊதினான். மனசில் கொட்டிக் கிடந்த ஆவேசம் தீரும் மட்டும் ஊதிவிட்டு நிறுத்தினான் இந்த மாதிரி செல்லையா பண்டிதரின் தந்தை ஊதியதை அவர் தனது சிறுவயதில் பார்த்திருக்கிறார். இப்பொழுது செல்லையா பண்டிதரே ஊதுகிறார். அவர் ஊதுவதின் நோக்கமே தனது பசியை அடக்குவதற்குப் பொருள் வேண்டும் என்பதே பொருளீட்ட வேண்டுமென்றால் அவருக்கு வேலை வேண்டும். வேலை என்பதன் பொருள் யாராவது இறந்து போகவேண்டும் என்பதாகும். ஆனால் வேலை கிடைக்கவில்லை, அதாவது யாரும் சாகவில்லை. இதனால் கோயிலருகே ஆலமரத்திலிருந்த உண்டியலை பிடுங்கிச் சென்றுவிடுகிறார். இந்த உண்டியலைப் பிடுங்குதல் என்பதைத் திருட்டு என்று கூற இயலாது. வெட்டியான் வேலை பார்க்கும் பலரும் அவ்வேலையைத் தவிர இதர வேலைக்குச் செல்வதில்லை. ஆதிக்கச் சாதியினர் அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்வதினை அனுமதிப்பதில்லை. பிணம் எரிப்பதால் இவர்களுக்கு இதர வேலைகள் கிடைப்பது அரிது. சாவு என்பது அடிக்கடி நிகழ்வதில்லை. ஒவ்வொரு சாதியினரையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற அவர்களுக்கு ஆதிக்கச் சாதியினர் சாவு நேரம் தவிர இதர நேரங்களில் பொருளாதார ஏற்பாடுகளைச் செய்துத்தருவதில்லை. இதனால்தான் யாரைச் சார்ந்திருக்கிறாரோ அவர்களில் யாரும் சாகாததினால் வேலையின்றி வறுமையால் பட்டினியில் வாழ நேரிடுகிறது. இக்கதையில் வெட்டியானாக வரும் செல்லையா பண்டிதன் வறுமையால் வாழ்வதற்குக் காரணமே அவர் சார்ந்திருக்கும் சாதியினர் வேலை தர மறுத்ததினால் இறப்பு என்பது இயற்கையின் போக்குக்கே விட்டுவிட்டாலும், அவர் வாழ்வதற்குப் பொருளாதார ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மேல்சாதியினருக்கு உள்ளது. ஆனால் அவர்களுக்கு அந்தச் சிந்தனையே இல்லை. இதனால் ஏற்பட்ட கோபமும் போராட்ட உணர்வுமே செல்லையா பண்டிதரை உண்டியலை பிடுங்கிச் செல்லத் தூண்டியது. இது செல்லையா பண்டிதனின் போராட்டமே. மயான காண்டத்தில் வரும் செல்லையா பண்டிதரைப் போலவே நடை முறையில் பல வெட்டியான்களுக்கும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உண்டு. நெல்லை நகரத்தில் கள ஆய்வு செய்த போது பிணம் எரிக்கும் மருத்துவச் சாதியைச் சேர்ந்தவர் பலநாள் வேலையில்லாமல் வறுமையில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்தார். எனவே, இப்பகுதியில் நாம் ஆராய்ந்த புதுமைப்பித்தன், முல்க் ராஜ் ஆனந்த், வண்ணநிலவன் ஆகியோரின் நாசகாரக் கும்பல், பார்பர்களின் தொழிற் சங்கம், மயான காண்டம் ஆகிய கதைகள் புனைவுகள் மட்டுமல்ல, அவை யதார்த்தங்களையே பேசுகின்றன.                    முடிவுரை   இந்த நூல், ஆதி பூசாரிகள் மருத்துவர்களாக இருந்த காலத்திலிருந்து தொடங்கி, அவர்களிடமிருந்து மருத்துவத்தைப் பறித்தல், சவரத் தொழிலாளிகளாக்குதல் போன்ற ஒடுக்குமுறைகளையும் போராட்டங் களையும் ஆய்வு செய்துள்ளது. இதில் திராவிடர் X பார்ப்பனர் ஆகிய இரண்டு பிரிவினரும் எதிரெதிர் பண்பாடுகளையே கொண்டிருக்கின்றனர். இது எதிரெதிர் பண்பாடுகளுக்கிடையேயான போட்டியும் மோதலாகவும் மட்டுமின்றி, அறிவியலுக்கும் அதனை மறுப்பவர்களுக்கும் இடையேயான போட்டியாகவும் இருக்கிறது. இவ்விடத்தில் திராவிடர் என்பது அனைத்து தமிழ்ச் சாதிகளையும் குறித்தது என்று பொருள் கொள்வது கூடாது. காரணம், சைவ, வைணவர்களின் வாரிசுகளாகத் தங்களை இன்றும் அழைத்துவரும் பிரிவினர்களைத் திராவிடர் பட்டியலில் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்களாக நிறுத்துவது இயலாது. சைவர்களும் வைணவர்களும் பண்பாட்டு அளவில் பார்ப்பனர்களுக்கு எதிராக இருந்த போதிலும், மருத்துவ அறிவியலை வளர்த்த பவுத்த சமணர்களைப் படுகொலை செய்ததின் மூலம் அவர்கள் வைதீகர்களின் பக்கம் நின்று கொண்டே அறிவியலை மறுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அறிவியலை மறுத்த இந்தப் பிரிவினரே, அதாவது சைவ வெள்ளாளர்கள், பார்ப்பனர்கள் போன்ற மேல்சாதியினரே ஆங்கிலேயர்களின் வெளியேற்றத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்தனர். இவர்கள் தங்களின் ஆட்சியின் கீழ் உள்நாட்டு மருத்துவ அறிவியலை வளர்ப்பதற்குப் பதிலாகக் காலனிய மருத்துவ முறைகளையே வளர்த்தனர். இவர்களின் 'காலனிய மூளையே’ மருத்துவச் சாதியினரிடத்திலிருந்த உள்நாட்டு மருத்துவ அறிவியலை நிராகரித்தது, அவர்களை முழுவதுமாகச் சவரத் தொழிலாளிகளாகவே மாற்றிவிட்டது.  பவுத்த சமண படுகொலைக்குப் பின்னர் மருத்துவர்கள் உடனடியாகச் சவரத் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை . தமிழகத்திற்கு வந்த பார்ப்பனர்களின் தலைமயிர் மழிக்கும் செயல்பாடும், அதனைப் பின்பற்றித் தாங்களும் சமூகத்தில் மேன்மையான நிலையை எட்ட வேண்டுமென்று எண்ணிய சாதிகளின் பண்பாட்டுப் போராட்டமும் சவரத் தொழிலாளர்களை உற்பத்தி செய்தன. பார்ப்பனிய மாக்கல் என்ற பண்பாட்டுச் செயல்பாடு அவர்களது சமூக மேன்மைக்கான பண்பாட்டுச் செயல்பாடு என்ற அளவில் மட்டும் நின்றுவிடாது மருத்துவர்களை மயிர் மழிக்கின்ற சாதியாக மாற்றி, மயிர் மழித்தலே அச்சாதியின் ’பாரம்பரியத் தொழிலாகவும்' மாற்றி விட்டது. ஒரு சாதியின் சமூக மேன்மைக்கான பண்பாட்டுச் செயல்பாடு மற்றொரு சாதித் தோற்றத்திற்கான அடித்தளமாகவும், அதுவே, அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கான அடித்தளமாகவும் இருக்கின்றது. இங்கு, பார்ப்பனியப் பண்பாடு என்பது சமூக மேன்மையினை விரும்பும் சாதிக்குத் திறவு கோலாகவும், ஒடுக்கப்படும் சாதியின் மீது ஆதிக்கம் செலுத்தும் கருவியாகவும் மாறிவிடுகிறது. ஆகவே, பார்ப்பனியமயமாக்கல் என்பதை ஒடுக்கப்படுவதற்கென்று புதிய புதிய சாதிகளை உற்பத்தி செய்தல் என்று புரிந்து கொள்ளலாம். இந்தச் சாதி உற்பத்தி பார்ப்பனர்களால் மட்டுமல்ல பார்ப்பனரல்லாத திராவிட சாதிகளாலும் நிகழ்ந்துள்ளது.   ஒரு சாதி எதன் அடிப்படையில் ஒடுக்கப்படுகிறதோ அந்த அடிப்படையிலிருந்து விடுபடுவதே அச்சாதியின் விடுதலைக்கு வழிவகுக்கும். வெள்ளாள மருத்துவர்கள் எந்த இழிவுகளால் ஒடுக்கப் பட்டார்களோ அந்த இழிவுகளிலிருந்து விடுபடுவதற்காக, தாங்கள் வெள்ளாளர்களுக்குச் செய்துவந்த இழிவுப் பணிகளை முற்றிலுமாகச் செய்ய மறுத்தனர். இந்த இழிவுப் பணிகள், சமூகத்தில் மேல்சாதியினருக்கு ‘மேன்மையின்' குறியீடாகவும், வெள்ளாள மருத்துவர்களுக்கு 'கீழ்மையின்' குறியீடாகவும் இருந்தன. கீழ்மையின் குறியீட்டை விட்டொழிப்பதற்குப் போராடிய வெள்ளாள மருத்துவச் சாதியினர் சாதிய ரீதியாகவே அணிதிரண்டனர். இதில், அவர்களுக்கிடையே இருந்த உறுதியான ஐக்கியம், இலங்கையிலும் இந்தியாவிலும் நடந்த தொடர் போராட்டம் முதலியன அவர்களை கீழ்மையின் குறியீட்டிலிருந்து விடுதலை செய்தன. மருத்துவச் சாதி ஆண்கள்  தமிழகத்திலும் இலங்கையிலுமாயிருந்து போராட்டத்தினை வழி நடத்திக் கொண்டிருக்கையில் அப்போராட்டம் வெற்றியடைவதற்கு, மருத்துவச் சாதிப் பெண்களும் அவர்களின் வாரிசுகளும் ஆதிக்கச் சாதியினர் செய்த கொடூரங்களையும் தாங்கிக் கொண்டு, அதனையும் எதிர்த்து நின்றதிலிருந்து கீழ்மையின் குறயீட்டை விட்டொழிப்பதில் அச்சாதி முழுமையும் ஐக்கியப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. இப்போராட்டத்தில் வெள்ளாள மருத்துவச் சாதியினர் பார்ப்பனிய மயமாக்கல் பண்பாட்டினை மேற்கொள்ளாததால் அச்சாதிக்கெனப் புதிதாகச் சேவைச் சாதி உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால், மேல் சாதியினர் தங்களின் சேவைச் சாதியினை இழந்த போதிலும் தங்களின் மேன்மைக்கான குறியீட்டை கைவிடவில்லை. மேன்மைக்கானக் குறியீட்டுப் பணிகளைச் செய்வதற்காக ஏற்கனவே இடை நிலைச் சாதிகளுக்குச் சேவகம் செய்துவந்த மருத்துவச் சாதியினரை அபகரித்துக் கொண்டனர். இப்போராட்டம் வெள்ளாள மருத்துவர்களை விடுதலையடையச் செய்தது, ஆனால் அது மேல் சாதியினருக்கு எந்த வித இழப்பினையும் ஏற்படுத்தவில்லை. அவர்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு இங்கு இருக்கின்ற சாதியக் கட்டமைப்பு பாதுகாத்தது. இப்போராட்டமானது, பார்ப்பனியப் பண்பாட்டினைப் பின்பற்றாமலும், தனக்கென ஒரு அடிமைச் சாதியை உற்பத்தி செய்யாமலும் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இச்சாதிய அமைப்பில் இருக்கிறது என்பதனை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், இந்த சாதிய அமைப்பு மேல்சாதியினருக்கான அடிமைச் சாதிகள் இருந்து கொண்டிருப்பதையும் உத்திரவாதம் செய்து கொண்டிருக்கிறது.  காலனிய ஆட்சிக்குப் பிந்தைய போராட்டங்கள், இழிவுப் பணிகளைச் செய்வதிலிருந்து விடுதலையடைதல், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தல், தங்கள் பெண்களுக்கு மருத்துவமனைகளில் செவிலித்தாய் பணியில் முன்னுரிமை அளித்தல் என்பது போன்ற கோரிக்கைகளை முதன்மையானவையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் இக்கோரிக்கைக்களுக்கான போராட்டம் வலுபெறாமலிருக்கிறது. மேலும் அவர்களின் சாதிய இயக்கங்களும் பலகீனமான நிலையிலேயே இருந்து வருகின்றன. மருத்துவச் சாதியினரின் ஒற்றுமையின் குறியீடாக இருந்த 'சலூன் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுமுறை' என்ற செயல்பாடும் வலுவிழந்து கொண்டி ருக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாறாகக் கிராமப் புறங்களில் அவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து விடுதலை அடைவதற்கு அவர்கள் சாதி ரீதியான அணி திரட்டல்களில் அதிகக் கவனத்தைக் குவிக்காமல் ஒவ்வொரு வரும் தங்களின் வாரிசுகளைக் கல்வி கற்க வைத்து ஊர்க் குடிமகன் பணி செய்வதை யும் சவரப் பணியில் ஈடுபடுவதையும் நிறுத்தி வருகின்றனர். இது ஒருவிதத்தில் தனிநபர்களுக்கு விடுதலையினைக் கொடுத்த போதிலும் அது மொத்தச் சமூகத்திற்குமான விடுதலையாக இல்லை, நகரங்களிலும் கிராமங்களிலும் சவங்களுக்குச் சவரம் செய்தல் உட்படப் பல ’சடங்கியல்' பணிகளைச் செய்து வரும் மருத்துவச் சாதியினர் அதனை விட்டொழிப்பதற்கான போராட்டத்தினைத் தொடங்க வேண்டும், மறுபுறம் தங்களின் ’சமூக' மருத்துவப் பணிகளைச் செய்யத் தொடங்க வேண்டும் என்பதும் அவசியமானதே.                              துணைநூற்பட்டியல்   References 1. BABER, ZIAHEER, 1998. The Science of Empire, Scientific knowledge,  Civilization and Colonial Rule in India, Delhi: Oxford. 2. BANERJI, D. 1974. Social and Cultural Foundations of Health Services Systems,  Economic and Political Weekly, IX: 1333-43. 3. _1978. Political Dimensions of Health and Health Services. Economic and Political Weekly, XIII, 22: 924-28 4. BETEILLE, ANDRE, 1971. Caste, Class and Power Changing Patterns of Stratifications in Tanjore Village, London: Berkeley. 5. BREY HEALY,K. 1971. The Missing Midwife: Why a Training Programme Failed, South Asian Review, 5,1:41-52. 6. CAPLAN, LIONEL, 1977. Social Mobility in Metropolitan Centres: Christians in Madras city, Contributions to Indian Sociology, 11,1: 193-217. 7. CANTLIE, AUDREY, 1979. The Concept of Tradition. In Moore, R.J. (ed)Tradition and Politics in South Asia, New Delhi: Vikas. 8. CHATTOPADHYAYA, DEBIPRASAD, 1978. Science, Philosophy and Society, Socials Scientisi, 6,9: 3-36. 9. DHARMATHEERTHA, 2004. The Menace of Hindu Imperialism, Aloysius, G. (ed), Delhi; Media House. 10. DAS MOHAN, S. 1929. Evolution of The Nurse, The Modem Review, XLVI: 163-8. 11. GANESH, KAMALA, 1993. Boundary Walls-Caste and Women in a Tamil Community, Delhi: HPC 12. GHUREY, G.S. 1994. Caste and Race in India, Bombay: Popular Prakashan. 13. GOUGH, KATHLEEN, 1981. Rural society in Southeast Indian, London: Combridge. 14. IYER, KRISHNA, L.K. 1965. Structure of Hair as a Guild to Racial Classification, Journal of Indian History, XLII, III: 867-72. 15. JAYARAMAN.R. 1964. Caste and Kinship in a Ceylon Tea Estate, Economic and Political Weekly, XVI.4;393-97.  $160.00TG DULQUO 95  16. JEFFERY, ROGER, 1978. Allopathic Medicine in India- A Case of Deprofessionalisation, Economic and Political Weekly, XIII, 3:101-113. 17. _. 1978. New Pattems In Health Sector Aid, Economic and Political Weekly, XIII, 3: 1495-1503. 18. KAPOOR, SUBODH, 2003. Ancient Indian Sciences, Vol.I. India:Cosmo. 19. KOLENDA, PAULINE, 1991. Purity and Pollution. In Madan, T.M. (ed) Religion in India, New Delhi: Oxford. 20. KOTANI, HIROYUKI, 1999. Kingship, State and Local Society in the Seventeenth Century Deccan With Special Refference to Ritual Functions. In Karashima, Noboru, (ed) Kingship in Indian History, Delhi: Manohar. 21. KRISHNASWAMI, S.Y. 1947. Rural Problems in Madras-Monograph, Madras: Government Press. 22. KUMAR, DHARMA, 1987. The Forgotten Sector: Services in Madras Presidency in The First Half of The Nineteenth Century, The Indian Economic and Social History Review, 24,4:367-93. 23. LOUIS, DUMOUNT, 1998. Homo Hierarchies- The Caste System and its Implications, Delhi:Oxford. 24. MACLEAN, K.D. (ed) 1978. Manual Of The Administration Of The Madras Presidency, New Delhi: Asian Educational Services.  25. MAMMEN, K. 1942. Kerala Culture, its Genesis and Early History, Trivandrum. City Press. 26. MURALEEDHARAN, V.R. 1987. Rural Health Care In Madras Presidency: 1919-39, The Indian Economic and Social History Review, 24,3: 323-334. 27. MANOHARAN, S. 2001. Maruthuvar Christians. In Singh, K.S. (ed), People of India - Tamilnadu, Madras: Affiliated East West. 28. MENCHER, P.JOAN, 1998. Continuity and Change in An Ex-Untouchable Community of South India. In Mahar, Michael, J. (ed), The Untouchables in Contemporary India, New Delhi: Rawat. 29. MISRA, RAJALAKSHMI, 2001. Maruthuvar. In Singh.K.S. (ed), People of India - Tamilnadu, Madras: Affiliated East West. 30. NELSON, C.D. 1987. Manual of the Administration of Madras Presidency, New Delhi: Asian Educational Services, 31. NELSON, J.H. 1989. The Madras Country A Manual, Madras: Asian Educational Services. 32. PFAFFENBERGER, BRYAN, 1982. Caste In Tamil Culture- The Religious Foundations Of Sudra Domination in Tamil Sri Lanka, New Delhi: Vikas. 33. PATE, H.R. 1993. Tinnevelly District Gazetteer, Tirunelveli: Manonmaniam Sundaranar University. 34. PATNAIK, NITYANAND, 1960, Service Relationship Between Barbers And Villagers- In A Small Village In Ranpur, Economic and Political Weekly; XII, 20: 737-42. 35. PATTERSON, L.P. MAUREEN, 1970. Changing Patterson of Occupation Among Chitpavan Brahmans, The Indian Economic and Social History Review, VII, 3:375-96.  36. RAMASWAMY, VIJAYA, 1985. Artisans li! Vijayanagar Society, The Indian Economic and Social History Review, XXI1,4: 417-44. 37. RIZVI, S.N.H. 1991. Folk Concept of Health and Disease-A Case Study, The Eastem Anthropologist, 44,2: 179-88. 38. SASTRI RAMASWAMY, K.S. 2003. The Peoples of India, Vol.3, New Delhi: Cosmo. 39. SHARMA, K.L. 1973. Downward Social Mobility: Some Observtions, Sociological Bulletin, 22,1:59-77. 40. SIVAKUMAR, CHITRA and SIVAKUMAR, S.S. 1979. Class and Jati at Asthapuram and Kanthapuram- Some Comments Towards a Structure of Interests, Economic and Political Weekly, XIV, 7&8: 263-286. 41. SRINIVAS, M.N, 1996. Village, Caste, Gender and Method; Essays in Indian Social Anthropology, New Delhi: Oxford.  42. THOMAS, J.W. 1989. Tamil Nadu Health Priorities, Economic and Political Weekly, XXIV, 39:2182. 43. THURSTON, EDGAR, 1993. Castes and Tribes of Southern India, Vol. 1&6, Madras:Asian Educational Services. 44. WATTS,E. 1929. The Practice of Medicine in Ancient India, Babylon and Persia, The Modern Review, XLVI: 2637. 45. The Encyclopedia Americana, Vol.24 1992.Connecticut; Grolier Incorporated.  46. The New Encyclopedia Britannica, 1992. Chicago; Encyclopedia Britannica. 47. The Oxford Dictionary, 1978. London; Oxford Journals 48. Barbers, The Modern Review, 1919. XXV. 70-71. 49. The Todas, The Modern Review, 1907.1.195 - 199. 50. Insight, 1,7-8: 45-6. 51. Frontline, 2004. March 12, 66-72.   நெறித்துணை நூற்பட்டியல்   52. அம்பேத்கர் நூல் தொகுதி 9, 1999. 53. அழகிய பெரியவன், 2001. தகப்பன் கொடி, சென்னை : தமிழினி. 54 தாம்ஸன், ஜார்ஜ், 1981. மனித சமூக சாராம், சென்னை : சென்னை புக் ஹவுஸ். 55. தாம்ஸன், ஜார்ஜ், 2005. சமயம் பற்றி கோயம்புத்தூர்: விடியல். 56. ராசுகுமார், மே.து. சரவணன், ப. 2001. மயிலை சீன வெங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி 1 & 3, சென்னை : மக்கள் வெளியீடு. 57. கனகசபை, 2003. ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், சென்னை : பூம்புகார். 58. கண்டராதித்தன், விஸ்வநாத, 2005. சோறு போடுங்காயீ. புதிய பார்வை, ஏப்ரல் 1-15: 20-24. துணைநூற்பட்டியல் - 97  59. கோசாம்பி.டி.டி, 1989, பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு, சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 60. கிருஷ்ணமூர்த்தி, வெ. (தொகு) 1975. சோழர்கால உற்பத்தி முறை முதலிய கட்டுரைகள், சென்னை : ஆய்வு வட்ட வெளியீடு. 61. சீதாராம், திருலோக, 2000. மனுதர்ம சாஸ்திரம், சென்னை : அலைகள். 62. சட்டோபாத்யாய, தேவிபிரசாத், 1999. உலகாயதம் - பண்டைய இந்தியப் பொருள் முதல்வாதம் - ஓர் ஆய்வு, சென்னை: சவுத்விஷன். 63. சுப்பிரமணியன்.சி. 1997, கொங்குநாட்டு மங்கல வாழ்த்துப் பாடல்,  பெங்களூர்: தன்னனானே. 64. பேரின்பன், தேவ2006. சித்தர் ஆய்வும் சித்த மருத்துவ வரலாறும்,  கற்ப அவிழ்தம், 14,8:7-14. 65. பரமசிவன் தொ. 1997. அறியப்படாத தமிழகம், நாகர்கோவில்: காலச்சுவடு. 66. பெரியபுராணம், 2000. சென்னை : குகவதி வாரியார் பதிப்பகம்   67. மார்க்ஸ், ஏங்கல்ஸ், 1975. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, மாஸ்கோ : முன்னேற்றப் பதிப்பகம். 68. மகாதேவன், டி.எம்.பி., 1994. சங்கரர், இந்தியாநேஷனல் புக் டிரஸ்ட். நேஷனல் புக் டிரஸ்ட் 69. மருத்துவச் சமூகத்தைப் பற்றி தமிழ்நாடு பிற்படுத்தப்படோர் நலக்குழுவின் கருத்துரைகள், தமிழ்நாடு மருத்துவர் மத்திய சங்கம்.  70. தூபே, சரண்சி. 1996. இந்தியச் சமுதாயம், இந்தியா: நேஷனல்  புக் டிரஸ்ட் , நேர்காணல்கள் 71. குழந்தை வேலு (88), மருத்துவர், திருநெல்வேலி 72. சொக்கலிங்கம் (74), மருத்துவர், திருநெல்வேலி. 73. வி. எஸ். சுப்பையா (81), மருத்துவர், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம். 74. நடராசன் (73), மருத்துவர், சேதுசுப்பிரமணியபுரம், தூத்துக்குடி மாவட்டம். 75. கதிரேசன் (75), மருத்துவர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.  76. ராமகிருட்டினணன், மலையாள மருத்துவர், திருநெல்வேலி 77. ஆழ்வாரப்பப் பிள்ளை (83), வெள்ளாளர், செண்பராமநல்லூர், திருநெல்வேலி மாவட்டம். 78. மிக்கேல் (89), பறையர், டி.கே.சி.நகர், தூத்துக்குடி மாவட்டம்.   79. கோவிந்தராசு (63), மருத்துவர், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம். 80. தங்கவேல் (47), மருத்துவர், திண்டுக்கல், 81. ஜெயராஜ் (77), மருத்துவர், மேலக்கால், மதுரை மாவட்டம். 82. ஞானசுந்தரி (54), பள்ளர், சென்னை. 83. பத்மாதேவி (58), நாயர், அருமனை, கன்னியாகுமாரி மாவட்டம். 84. சோலைமலை {98), பள்ளர், அமச்சியாபுரம், தேனி மாவட்டம். கள ஆய்வு 85. செல்லம்பட்டி, பாப்பாரப்பட்டி, கொக்கிலிப்பட்டி, சொட்டத்தட்டி - மதுரை மாவட்டம். 86. அவினாசி, கோயம்புத்தூர் மாவட்டம். 87. அமச்சியாபுரம், தேக்கம்பட்டி, தேனி மாவட்டம். 88. திருவிடைமருதூர், சென்னிய விடுதி, தஞ்சாவூர் மாவட்டம். 89. அரசூர், விழுப்புரம் மாவட்டம். 90. வேடந்தாங்கல், ஊரப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம். 91. குத்தம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.                           பின்னிணைப்புகள் பின்னிணைப்பு - 1    []                 []                     []                     []                     பின்னிணைப்பு - 2    []     படம் 1, படம் 2, 1907-ல் The Modern Review இதழிலிலும் Frontline இதழிலிலும் வெளியானவை. 1907ல் வெளியான புகைப்படம் தொடர் இனமக்கள் தங்கள் தலைமுடியினை இயற்கையின் வளர்ச்சிக்கே வளர விட்டிருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது. இதனால் நாம் அவர்களிடம் 'சவரத் தொழிலாளி' என்பததொரு பிரிவினர் இருந்திருக்கவில்லை என உறுயாகக் கூறலாம். 2004ல் வெளியான புகைப்படம், அவர்கள் முடி வெட்டிக் கொள்ளுதல் முகச் சவரம் செய்து கொள்ளுதல் ஆகிய வழமைகளைக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது, இதனால் தோடர் இன மக்களிடம் 'சவரத் தொழிலாளி' என்பதொரு பிரிவினர் தோன்றிவிட்டனர் என்று கூற முடியாது. காரணம் அவர்கள் சலூன் கடைகளில் ஒப்பனை செய்ய தொடங்கியிருக்க வேண்டும். தங்களுக்குள்ளேயே முடி வெட்டிக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் (குறிப்பாக வடதமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென சவரத் தொழிலாளியை உருவாக்கிக் கொள்ளாமல் சலூன் கடைகளுக்கேச் சென்றனர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது,  []                     பின்னிணைப்பு - 3    சாதியத்தின் பயங்கரம் ஒரிசாவின் நன்செய் நிலங்களில் சாதியம் பரந்த அளவிலான அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. புவனேஸ்வரத்தின் புறநகர் பகுதியில் உள்ள கிராமச் சாலையில் மிதி வண்டியில் சென்ற காரணத்திற்காக ஒரு தலித் சிறுமி சாதி இந்துக்களால் கேவலப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குள், பூரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பார்பர் சமூகத்தினைச் சேர்ந்த ஐந்து பெண்கள் சாதி இந்துக்களால் வதைக்கப்பட்டனர். பூபன்பட்டி கிராமத்தில், கன்டாயத் சாதியினைச் சேர்ந்த ஆண்கள், செப்டம்பர் 19ந் தேதி அன்று நான்கு பெண்களை உதைத்து, ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி வீதி உலா வரவைத்தனர். சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சாதி இந்து வீட்டு திருமணத்தின் போது இவர்களின் கணவன்மார்கள் சம்பிரதாயப்படி ஒரு மணமகன் மற்றும் அவனது விருந்தினர்களின் கால்களை கழுவ மறுத்த காரணத்திற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அப்பெண்களை சித்திரவதைக்குள்ளாக்கிய பின்னர் சாதி இந்துக்கள் அவர்களை சமூகக் கூடத்தில் அடைத்து வைத்துவிட்டு, அக்கிராமங்களில் உள்ள நான்கு பார்பர் குடும்பங்களின் வீட்டைச் சூறையாடியனர். ''என்னை எனது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துப் போட்டு உதைத்தனர். என் மகளின் திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் எனது வீட்டிலிருந்து கொள்ளையடித்துச் சென்றனர்'', என்று பாதிக்கப்பட்ட பிரதிமா பாரிக் கூறினார்.  தங்களுக்கு நேர்ந்த இக்கதியினை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக புவனேஸ்வர் வந்துள்ள அப்பெண்கள், மீண்டும் தங்களின் வீடுகளுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். நாங்கள் எப்பொழுது எங்களின் வீடுகளுக்குச் திரும்பிச் செல்வோம் என்பது நிச்சயமற்றதாக உள்ளது.  “நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்” என்று பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான சாவித்ரி பாரிக் கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், அதில் 5 பேரை மட்டுமே இவ்வழக்கினை விசாரித்துவரும் பிரம்மகிரி காவலர்களால் கைது செய்ய முடிந்தது. இருந்த போதிலும், அந்த 5 பேரும் கூட ஜாமினில் விடப்பட்டனர்.  ஒரு மணமகன் மற்றும் அவனது விருந்தினர்களின் கால்களை கழுவாததால், 75 வயது முதியவர் உட்பட இரண்டு பேரை அடித்து சித்திரவதை செய்த வேறொரு சம்பவத்திற்காக பிரதிமாவின் கணவர் ஹடி பந்து பரிக் (51) மார்ச் மாதத்திலிருந்து தனது கிராமத்திற்குச் செல்லவில்லை. அச்சம்பவத்திற்கு பின்னர் பார்பர் குடும்பத்தவர்களைச் சமூக புறக்கணிப்பு செய்தனர். கிணற்றில் தண்ணீர் எடுப்பதை தடுத்ததோடு மட்டுமின்றி கடையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும் தடைவிதித்தனர்.  "நான் எனது கிராமத்திற்கு திரும்பிச் செல்ல பயப்படுகிறேன். ஏனென்றால் கன்டாயத் சாதியனர் என்னைத் தாக்குவார்கள்'', என்கிறார் ஹடி பந்து பரிக். "எங்கள் குழந்தைகள் கல்வி கற்றுவிட்டனர். அதனால் அவர்கள், பரம்பரையாகச் செய்துவந்த உயர் சாதியினரின் கால்களைக் கழுவுதல், திருமண விருந்தில் இலை எடுப்பது மற்றும் பாத்திரம் கழுவுதல் போன்றவற்றை செய்ய விரும்புவதில்லை.''  உண்மையிலேயே பூரியிலுள்ள இச்சாதியினைச் சேர்ந்தவர்கள், ஒடுக்குமுறைப் பழக்க வழக்கங்களை எதிர்த்து கடந்த பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். ஆனாலும் இப்பிரச்சினை தொடர்வதோடு மட்டுமின்றி சாதி இந்துக்களால் தண்டிக்கப்படவும் செய்கின்றனர். எல்லா கிராமங்களிலும் பார்பர்கள் சிறுபான்மையோராக இருப்பது அவர்களை வலிமையற்றவர்களாக்குகிறது. தற்போது பூபன்பட்டியில் 60 கன்டாயத் சாதிக் குடும்பங்களுக்கு 4 பார்பர் குடும்பங்களே உள்ளது.  பூபன்பட்டி மோதல் தனியானதொரு நிகழ்வன்று. மாவட்டத்தின் மற்றப் பகுதிகளான பூரி சடார் மற்றும் சத்யபடி ஆகியவற்றிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் எங்கள் சாதியினர் மீது நடந்துள்ளன'', என்கிறார் சனபெனகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜலந்தர் பாரிக் (40). இவர் 1992ம் ஆண்டு ஒரு மணமகன் மற்றும் அவனது உறவினர்களின் கால்களை கழுவ மறுத்தமைக்காக சித்திரவதைக்குள்ளானவர். பூரி மாவட்டத்தில் 1988ம் ஆண்டு மனிதத் தன்மையற்ற முறையில் ஜலந்தரின் தந்தையான பிராமர்பர் பாரிக்கின் முதுகின் மீது ஒரு உயர் சாதியைச் சேர்ந்தவன் உட்கார்ந்து அவரை அடித்துக் கொண்டே முட்டுக்களாலும் கைகளாலும் கிராமச்சாலைகள் வழியாக நடக்க வைக்கப்பட்டதே, பார்பர்கள் மீது நடத்தப்பட்ட முதல் வன்முறைத் தாக்குதலாகும். உடல் ரீதியான சித்திரவதைக்கும் பொது அவமதிப்புக்கும் உள்ளான எனது தந்தை மனநிலை பாதிக்கப்பட்டு சம்பவம் நடந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிட்டார்” என்றார் ஜலந்தர். பார்பர்களுக்காகப் போராடிய அமைப்புகள் 2003ம் ஆண்டு பூரி மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு முன் தர்ணா நடத்தினர். 271 நாட்கள் வரை நீடித்த இத்தர்ணாவினால் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, பார்பர்களை, சாதி இந்துக்கள் அவர்களின் கால்களைக் கழுவ நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்றும், ஆனால் பார்பர்கள் யாராவது விருப்பப்பட்டு அப்பணியை செய்தால் அதை யாரும் தடை செய்யக்கூடாது என்றும் ஒப்பந்தமானது. ஆனால் அப்பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. சாதி இந்துக்கள் வெளியூர்களிலிருந்து சடங்குகளைச் செய்வதற்காக தொலைதூரங்களிலிருந்து பார்பர்களை அழைத்து வந்தனர். மேலும் உள்ளுர் பார்பர்களின் மீதான ஒடுக்குமுறையோ தொடர்ந்தது.  இந்தக் காலக் கட்டங்களிலெல்லாம் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையினை இரண்டு சாதிகளுக்கிடையேயான மோதலாக மட்டுமே பார்த்ததோடு, பார்பர்களின் மீது திணிக்கப்பட்ட இத்தகைய வேலைகள் கொத்தடிமைத்தனமானது என்பதையும் நிராகரித்தது. "அவர்களை இதைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கக் கூடாது'' என்றார் பார்பர் சாதிக்காக போராடிவரும் ‘ஒடிசா கோட்டி முக்தி அந்தோலன்' என்ற அமைப்பின் ஆலோசகர் பக்கம்பர் பட்நாயக். பெரும்பாலான தேர்தல் அரசியல் கட்சியினர் மேல் சாதியினரின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு பார்களை காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை'', என்கிறார் அவர். பட்நாயக் இப்பொழுது புவனேஸ்வர் சிறையில் உள்ளார். அரசாங்கம் பார்பர்களை கொத்தடிமைகளாக அறிவிக்கும் வரை ஜாமீனில் வெளிவர மறுத்துள்ளார். இக்கோரிக்கையினை வலியுறுத்தி பார்பர் சாதியனரால் கடந்த செப்டம்பர் 4ம் தேதி நடத்தப்பட்ட அமைதிப் பேரணியினை முன்னின்று நடத்தியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.  "நீண்ட காலமாகவே, பார்கள் பல வழிகளில் ஒடுக்கப்பட்டும் அரசு அவர்களின் வாழ்க்கையையோ, சுதந்திரத்தையோ இன்றுவரை பாதுகாக்க முடியாமலிருப்பது தூரதிர்ஷ்ட வசமானது'', என்கிறார் ரபி பஹரா. இவர் அம்பேத்கர் லோகிய விசார் மஞ்ச்" என்ற அமைப்பின் செயலாளர். இவ்வமைப்பே இப்பிரச்சினையினை பல துறைகளுக்கும் கொண்டு செல்கிறது. ''பூபன்பட்டி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும்'' என்று அவர் கூறினார். பூபன்பட்டி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டது என்பதினை பூரி மாவட்ட நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும் என்று, ’ஒடிசா கோட்டி முக்தி அந்தோலன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாதி கசரிதா கூறினார். ''பார்பர்களுக்கு நேர்ந்த கதி ஊடகங்களில் விரிவாகப் பேசப்பட்ட பின்னரும் மாவட்ட நிர்வாகம் அதனை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. எங்களுக்கு இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேண்டும்" என்று அவர் கூறினார்.  கடந்த பல வருடங்களாக சாதி தொடர்பான வன்முறைகளின் அறிக்கைகள் இம்மாநிலத்தின் இதர பாகங்களிலிருந்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மார்ச், 2000ம் ஆண்டு பிரம்மகிரியிலுள்ள கடரோடங்கா கிராமத்தில் வண்ணார் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணத்திற்காக போட்டப்பட்டிருந்த பந்தலை சாதி இந்துக்கள் பிரித்தெறிந்தனர். 2004ம் ஆண்டு தென்கனல் மாவட்டத்தில் சிவன் கோயில் நந்திக்கு தண்ணீர் கொடுத்ததற்காக பேடா நாயக் என்ற தலித் உதைக்கப்பட்டார். நன்றி. பிரஃபுல்ல தாஸ், பிரண்ட்லைன், நவம்பர் 2005. 42-3.             பின்னிணைப்பு - 4   தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கம் திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் 27-C, சாலைத்தெரு திருநெல்வேலி - 627 003   *   தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மருத்துவ சமுதாய மக்களின் கோரிக்கை         தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கம்  திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் 27 - C, சாலைத் தெரு, திருநெல்வேலி - 5  உயர்திரு ________________________ அவர்கள், பாராளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்,  _______________________________  மதிப்பிற்குரிய ஐயா,  தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கம், திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டத்தின் சார்பாக, எங்கள் சமுதாய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை கடந்த 6-9-90 அன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தெம்பை, குமரி, சிதம்பரனார், மாவட்ட சுற்றுப்பயண வருகையின் போது, குற்றாலம் விருந்தினர் மாளிகையில் வைத்து, அவரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.  எங்கள் சமுதாய மக்கன் பல ஆண்டுகளாக, கிராமங்கள் பாலினம், நகரங்களிலும் அனுபவிக்கும் இன்னல்களை தாங்கள் நன்கு அறிவீர்கள். எங்கள் சமுதாயத்தின் இழிநிலையை இத்துடன் இணைத்துன்ன மனுவில் தெளிவுபட விளக்கி உள்ளோம். அதனால் எங்களது சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திட வேண்டி, பணிந்து கேட்டு உள்ளோம்.  எங்களது கோரிக்கைபை, தாங்களும் பரிவோடு கருத்தில் கொடு எங்கள் சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசுப் பணி, பொருளாதார நிலை போன்றவற்றில் எங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் (Scheduled caste) சேர்ப்பிக்க, சட்டமன்றத்தில் பாராளுமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டி தங்களை பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.  நன்றிகளுடன், தங்களின் உண்மையுள்ள   இடம் : திருநெல்வேலி – 3 தலைவர் நாள் : -10-90 தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கம்         தமிழ்நாடு மருத்துவ சமுதாய சங்கம் திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் __________ தமிழ் நாட்டைச் சேர்ந்த, சுமார் 10 லட்சம் மக்கட்தொகை கொண்ட மருத்துவர் (நாவிதர்) சமுதாய மக்கள், தங்களது இப்பாதைய தவித்த நிலையினின்னும் விடுபட்டு, சமூக பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு கல்வி, வேலை வாய்ப்பில் சலுகை பெற, தங்களது சாதியினை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, இந்த மனு சமர்ப்பிக்கப்படுகிறது.  மருத்துவர் (நாவிதர்) சமுதாய மக்களாகிய நாங்கள், தமிழ்நாடு முழுவதும், சவரத்தொழிலையே முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளோம். நாங்கள் ”மருத்துவர், தாவிதர், பண்டிதர், அம்பட்டர், மங்கலா, வேளக்கட்டனவர், வேளக்கட்டனநாயர், பரோணகாரி'' என்றும் இன்னும் பல பெயர்களைக் கொண்டும் அழைக்கப்பட்டு வருகிறோம்.  எங்கள் சமுதாயத்தின் நாட்டு வைத்தியர்களாகவும், நாதஸ்வரம் மற்றும் மேளம் அடிப்பவர்களாகவும் தொழில் செய்து வருகின்றனர். ஊர்களில் ஏற்படும் சாவு (மரணம்) பற்றிய செய்தியினை மற்ற ஊர்களுக்கு நேரில் சென்று தகவல் தந்து பின் இறுதியாத்திரை ஊர்வலத்தின் முன் சங்கு ஊதிச் சென்று, சுடுகாட்டில், மதச்சடங்குகள் முறைப்படி செய்து பிணத்தை புதைக்கவும், மற்றும் தகனம் செய்யும் தொழில் செய்பவராகவும் உள்ளனர். பிணத்திற்கும் கூட சவரம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  எங்கள் பெண்களில் பலர் ஊர்களில் நடைபெறும் 'பிரசவங்கள்’ பார்க்கும் மருத்துவச்சிகளாக இருந்து வருகின்றனர். ஆண்களோ தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும், மற்ற எல்லா சாதியினருக்கும் சவரம் செய்யும் தொழிலை மேற்கொண்டுள்ளனர். இது போன்ற வேலைகளுக்கு, மிகக் குறைந்த கூலி மட்டுமே தரப்பட்டு வருகின்றது.  எங்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சமூக மரியாதையானது தாழ்த்தப்பட்ட சமூக மக்களதை விட மிக மோசமாக உள்ளது. தாங்கள் உயிர்வாழ்வதற்காக, மற்ற சாதியினரையே பெரிதும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்களே, எங்களை 'அடிமைகளாக’ நடத்தி வருகின்றனர்.  உதாரணமாக, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் ஒரு கிராமத்தில் அல்லது காரில், ஒரு வீட்டில் சவரத்தொழில் செய்பவனாக இருந்தால், சிறிது நெல் அல்லது தானியம் என்ற மிகக்குறைந்த கூலிக்காக தன் வாழ்நாள் முழுவதும், சவரத் தொழில் செய்து, கொத்தடிமையாக இருந்து வரவேண்டியுள்ளது. அதற்கு மறுத்தால் அவனும் அவன் குடும்பத்தாரும், அவ்வூரைவிட்டே மிகக் கொடுமையான வழிகளால் வெளியேற்றப்படுகின்றனர்.  எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களோ, வேறு மாதிரியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் இரவில் ஊரில் உள்ள மற்ற சாதியினரின் வீடுகளுக்குச் சென்று இந்திய பழைய சோறு, மற்றும் உணவை கூவியாக பெற்று வருகிறார்கள். இது மாதிரியான உணவையே இலர்கள் பெரிதும் நம்பி தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு இரவில் செல்லும் பெண்கள் சிலசமயங்களில், பலவந்தப்படுத்தப்பட்டு தங்கள் கற்பையே இழக்கும் நிலைக்கும் ஆளாகின்றனர், ஆனாலும் மற்ற சாதியினர் அவ்வாறு உணவு அளிக்கவில்லையானால், இவர்களுக்கு 'பசி’ மட்டுமே சொந்தமாகிறது. ஆகவே அவர்கள் அனுசரித்தே செய்யவேண்டிய காலக் கட்டாயம் உள்ளது.  எங்கள் சமுதாய மக்கள், மேற்கூறிய கொடுமைகளிலிருந்தும், துன்பங்கள் கருத்தும், மரியாதை குறைவினன்னம் விடுபட்டு சமூக அந்தஸ்தோடு கூடிய வளமான வாழ்வு பெற, சில சலுகைகள் கேட்டு நாடு விடுதலையாக காலந்தொட்டு அதிகாரிகளையும், அரசையும் அணுகி வந்துள்ளனர். இதற்கு தங்கள் சாதியினை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறச் செய்ய கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு பலமுறை பலவழிகளிலும், தங்களது கோரிக்கைகளை எடுத்து முறையிட்டும், அரசினால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் முன் முறையிட்டும் இந்த நியாயமான கோரிக்கை இன்னும் ஏற்கப்படாமலேயே இருந்து வருகிறது.  கீழ்க்கண்ட பட்டியலிடப்பட்ட விவரங்கள் எங்கள் மருத்துவ சமுதாயத்தினர் எவ்வாறெல்லாம், சமூகத்தில், தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றார் என்பதை விளக்குகின்றன.  1) எங்கள் சாதி மக்கள், மற்ற சாதியினரின் வீடுகளுக்குச் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை, எப்போதாவது, அவர்களது பாத்திரங்களையோ, மற்ற பொருட்களையோ, இவர்கள் தொடநேர்ந்தால், அவற்றின் மீது தண்ணீர் தெளித்து அல்லது தண்ணீரால் கழுவி, அப்பாவத்தை நீக்கிய பின்னர், அவை மீண்டும் உபயோகிக்கப்படுகின்றன,  2) சில கிராமங்களில், இன்னமும், எங்கள் சமுதாய மக்கள் காலில் செருப்பு மற்றும் உடம்பில் சட்டை அணிய உரிமையில்லை, மேலும் வேட்டியும், கால் மூட்டுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற நிலை உள்ளது.  3) அது போன்றே அங்குள்ள சுமார் பத்து வயதிற்கு மேற்பட்ட எங்கள் சமுதாய சிறுவர்களை மற்ற சாதியினர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல விடாமல் தடுத்து சவரத் தொழிலையே மேற்கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர், வேறு தொழிலை செய்ய அனுமதிப்பது இல்லை.  4) கிராமப் பகுதிகள் மற்றும் நகர்ப் பகுதிகளில் எங்கள் சமுதாயம் மக்கள் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட வெளிப்புற பகுதிகளில் மட்டும் கூட்டமாக வசிக்க வேண்டும். ஊருக்குள் வசிக்க உரிமையில்லை 5) நகரப்பகுதிகளிலும் கூட எங்கள் சமுதாய மக்களுக்கு குடியிருக்க வாடகை வீடுகள், மற்ற சாதியினரால் மறுக்கப்படுகின்ற்ன. எப்படியோ மீதி கிடைத்தாலும் எப்போது இவர்களது சாதி வெளிப்படுகின்றதோ, அப்போதே வீட்டுச் சொந்தக்காரர்களால் வெளியேற்றப்படுகின்றனர், அதனால் இவர்கள் தங்களது சாதியினை மறைத்தும், மறைந்தும் வாழ வண்டியவர்களாக இருக்கின்றனர்.  1871 ல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு தன் அறிக்கையில் கீக்கண்டவாறு கூறியுள்ளது. "மருத்துவ சமுதாயத்தினர் பெரும்பாலும் விவசாயிகள் அல்ல. இவர்களிடம் குறைந்த அளவு நிலம் கூட இல்லை என்பது உண்மை.. ஒரு விவசாயியாகவோ தொழிலதிபராகயோ ஆகவேண்டும் என்ற இவர்களது முயற்சி மேல்சாதியினரால் முறியடிக்கப்பட்டு விட்டது. இவர்களது குறைவான மக்கட்தொகையின் காரணமாகவும், நலிந்த தலைமையின் காரணமாகவும் இவர்களால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை!  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சவரத்தொழில் செய்யும் எங்கள் சமுதாய மக்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினராலேயே கூட கொடுமைப்படுத்தப்படுகின்றனர், அதனால் தாங்கள் தாழ்த்தப்பட்ட நிலையிலும் “மோசமான” நிலையில் தான் உள்ளோம்.  எங்கள் சமுதாய மக்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள், அரசுப்பணியில் எங்களது பிரதிநிதித்துவமும் வெகு குறைவு. உதாரணமாக, Group 1 வேலைகளில் இதுவரை எவருமே நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது போன்றே மற்றப்பணிகளிலும் குறிப்பிடும் படியாக எவரும் தியானம் செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாகவும் எங்கள் இழிநிலையை எடுத்துக்கூற ஒரு MLA யோ அல்லது MP யோ எங்கள் சமுகத்தில் இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கிடைக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, சட்டசபையில் பிரதிநிதித்துவம் போன்ற சலுகைகள் எங்களுக்கும் கிடைத்தாலன்றி நாங்கள் முன்னேற வேறு வழியில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அளிக்கப்படும் சலுகைகள் எங்களுக்கு கிடைக்குமேயானால் கல்வி, அரசுப்பணி, வேலைவாய்ப்பு அரசியல் ஆகியவற்றில் எங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைப்பதோடு இவ்வுலகில் மற்ற சமுதாயத்தினர் போல், சுய மரியாதையுடன் வாழவும், விவசாயம் தொழில் ஆகியவற்றின் முன்னேறவும் முடியும் என்றும் உறுதியாக நம்புகிறோம்.  கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டும் உள்ள சவரத் தொழில் செய்யும். "காவாரா?' என்று அழைக்கப்படும் எங்கள் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையும் கருத்தில் கொண்டு தமிழ் நாடு முழுவதும் உள்ள இந்த சிறுபான்மையான “மருத்துவர்” சமுதாயத்தினரையும் தாழ்த்தப்பட்டோம் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எங்களது சமூக இழிநிலை நலிந்த நிலை. பொருளாதார தாழ்வு கல்வியில் பின்தங்கிய நிலை தீண்டாமை ஆகியவை நீங்கி, சமதர்ம சமுதாயம் நாங்கள் காண முடியும்.  மேலே கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மருத்துவர் சமுதாய மக்கள், தங்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களது சாதியின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து எங்களை கொத்தடிமை நிலையிலிருந்து, விடுவித்து, துன்பங்களைப்போக்கி சமூக பொருளாதார நிலையில் உயர்த்திட உதவுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டு கொள்கிறோம்,  மருத்துவ சமுதாய மக்கள்                                              பின்னிணைப்பு - 5     []     கல்யாணி நதியின் கரையில் வைத்து முடி மழித்திருக்கிறார்கள். இப்பொழுது திருப்பதியில் சுமார் 20 "கல்யாணகட்டகள்" உள்ளன. லாட்ஜுகளின் அருகே உள்ளவைகளில் மழிப்பதற்கு தலைக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் கோவிலின் அருகே இலவசமாக மழிக்கப்படுகிறது. ஒரு தலை மழிப்பதற்கு பத்து நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகிறது. தினந்தோறும் அரை லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வரும் இங்கே பார்பர்களின் ஷிப்ட் மாறும் அரை மணிநேரத்தை தவிர மீதி நேரங்களில் தலை மழித்தல் நடந்து கொண்டிருக்கும். இங்கே நான்கு ஷிப்டுகளில் 650க்கும் அதிகமான பார்பர்கள் வேலை செய்கிறார்கள். பார்பர்கள் வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிகிறார்கள்.  இவர்களின் சம்பளம் மோசமானதாக இல்லை. இங்கு எங்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது. இங்கே பார்பராக முடிந்ததில் மகிழ்ச்சயடைகிறேன். என்னுடைய அப்பா வெங்கட்டராயலுவும் இங்கே பார்பராக இருந்தார். எங்கள் சங்கத்தின் பெயர் நாயர் - பிராமண சேவா சங்கம். நான் பதினெட்டாம் வயதில் இந்த வேலைக்கு வந்தேன். எல் போர்டு வைத்துத் தொடங்கும் ஒருவருக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. 15 ஆயிரம் ரூபாய் வரை வாங்கும் வயதானவர்களும் இருக்கிறார்கள்', என்று குமார் வெங்கட்டராயலு (37) சிரித்துக் கொண்டு கூறுகிறார்.  கல்யாணக்கட்டகளில் பார்பர்கள் மொசைக், மார்பிள் தரைகளில் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். தண்ணீரால் தலையை நனைத்தப் பிறகு பக்தர்கள் சிறிது நேரம் தலைகுனிந்திருந்தாலே போதும் முடி மழிக்கப்படும். அருகிலேயே வைத்திருக்கும் பெரிய ஸ்டீல் பாத்திரங்களில் முடிகள் உடனேயே சேகரிக்கப்பட்டு பிறகு அவற்றை காய வைத்து தரம் பிரித்து சாக்குகளில் நிரப்பப்படும். இதற்கென நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். தலை முடியை குறிப்பாக 5 வகைகளாகப் தரம் பிரிக்கிறார்கள். 16 இஞ்ச்சிற்கும் கூடுதலான நீளமுள்ளவை, 8-16 இஞ்ச் நீளமுள்ளவை, 8 இஞ்ச்சிற்கும் கீழே, நரைத்த முடி, மிகச் சிறிய முடி (தெலுங்கில் – துக்கு) எனப் பிரிக்கப்படுகிறது. எல்லூர், பெங்களூர், சென்னை முதலான இடங்களைச் சேர்ந்த குறிப்பாக சுமார் பத்து பேர் முடியை ஏலத்தில் எடுக்கிறார்கள். இம்முடி மீண்டும் தொழிற்சாலைகளில் தரம் பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்த பின்னர் புகை போட்டு கட்டப்படும். 16 இஞ்ச்சிற்கும் அதிகமான நீளமுள்ள 200முடி இழைகள் ஒரு கட்டாகும். இதர வகைகளும் இது போன்று பிரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு கட்டின் விலை மட்டும் இத்தாலியில் 30 சென்ட். இது அமெரிக்காவிற்குச் செல்லும் பொழுதோ கட்டிற்கு 15 டாலர் கிடைக்கிறது. ஒரு கிலோ முடிக்கு                                                      பின்னிணைப்பு - 6 கறுப்புத் தங்கம் திருப்பதியில் வரும் பக்தர்களின் தலைகள் மின்னல் வேகத்தில் மொட்டைகளாய் மின்னுகிறது. நம்பிக்கையின் வேர்கள் திருப்பதியையும் தலைமுடியையும் இணைக்கிறது. இங்கே தலைமுடியையும் கொண்டை முடியையும் இணைப்பதோ கோடிகளின் வணிகம். கடந்த வருடத்தில் இந்தியா முடி. ஏற்றுமதி செய்ததில் திருப்பதியிலுருந்து மட்டும் கிடைத்த வருமானம் 30கோடி ரூபாய்க்கும் அதிகம். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஏலத்தில் மட்டும் 4 கோடி ரூபாய் ஈட்டியது. பொதுவாக இரண்டரை மாதத்திற்கு ஒருமுறை டெண்டர் அறிவித்து ஏலம் நடத்துகிறது. தலைகளுக்கு அலங்காரமான முடியை கடவுளுக்கு காணிக்கையாக சமர்பிப்பதோடு தனது அகங்காரத்தையும் சமர்பிப்பதாக இங்கே நம்பப்படுகிறது. விஷ்ணுவின் ஓர் அவதார வேளையில் அவர் தனது ஆடம்பரமான திருமணத்தை நடத்த குபேரனிடம் கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை அடைப்பதற்காக பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கையாக நல்குவதாகவும் திருப்பதியில் ஓரு ஐதீகம் உள்ளது. நம்பிகையின் மதிப்பைப் போன்றே திருப்பதியின் முடியின் மதிப்பும் உள்ளது. இங்கே பெயரளவிலும் முடி ஒரு புதையலாகவே பார்க்கப்படுகிறது. அதனால் பலத்தக் காவலில் முடி கிட்டங்கியை, ரிசர்வ் வங்கியின் லாக்கரைப் போன்று, பாதுகாத்துவருகின்றனர். திருப்பதியில் தலைமுடி “கறுத்த தங்கம்” என்று அழைக்கப்படுகிறது. நமது "கறுத்த தங்க"மான மிளகின் விலை நாளுக்குநாள் குறையும் பொழுது திருப்பதியின் "கறுத்த தங்க”த்தின் விலையோ நிஜத்தங்கத்தின் விலையையும் பின்னுக்குத் தள்ளுகிறது. முதல் தரத்திலுள்ள 1 கிலோ முடிக்கு பன்னாட்டுச் சந்தையில் 8 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ளது. திருப்பதியில் உண்டியல் வருமானத்தை அடுத்து மிக அதிகமான வருமானம் ஈட்டுவதாக தலைமுடி உள்ளது. இங்கே சராசரியாக 188 டன் முடி ஏலம் செய்யப்படுகிறது.  தலைமழிக்கும் இடத்திற்கு ''கல்யாணக்கட்ட” என்று பெயர். தெலுங்கில்  “கட்ட” என்றால் ஆற்றோரம் என்று பொருள். முன்னர் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மதிப்பு உண்டு. அமெரிக்க அழகு நிலையங்களில் தலை ஒன்றிற்கு செயற்கை முடி வைப்பதற்கு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இத்தாலியின் 'கிரேட் லெங்த் இன்டர்நேஷனல்' போலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் திருப்பதி ஏஜெண்டுகளிடமிருந்து தலைமுடியை வாங்குகிறார்கள். அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வருடத்தில் மட்டும் ரூ.202 கோடிக்கும் அதிகமாக அமெரிக்கா தலைமுடியை இறக்குமதி செய்தது. சீன முடியைவிட இந்திய முடிக்கு உலக அளவில் அதிகமான வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் ஐரோப்பிய முடிகளுக்குள்ள குணாதிசயங்கள் இந்திய முடிகளுக்கும் உள்ளதேயாகும். அதைவிடவும் ஹோலிவுட்டில் பல நடிகைகளுக்கு ஐரோப்பிய முடியைவிட கூடுதல் விருப்பம் இந்திய முடிகளால் உருவாக்கப்பட்டன. 'விக்' மீது உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க எப்படி முடி விலை அதிகரிக்காமல் இருக்கும்....  நன்றி; ராஜு மாத்யூ, மலையாள மனோரமா, திருவனந்தபுரம் பதிப்பு, 08.05.05.                      பின்னிணைப்பு - 7 []     []     []     []     []     []     []     []     []     []     []     []     []     []       []       []     []       []     []     []     []     []     []       []       []     []       []     []     []     []       []     []     இப்புகைப்படம் மருத்துவச் சங்க மாநாட்டின் போது எடுக்கப்பட்டது. இப்புகைப்படத்தினை டாக்டர் எஸ்.எஸ். நடராசன் கொடுத்தார். வயது முதிர்ந்த அவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்புகைப்படம் எந்த மாநாட்டின் போது எடுக்கப்பட்டது என்பதை அவரால் கூற இயலவில்லை.   []     3. 10, 1945ல் தூத்துக்குடி மாவட்டம் சேதுசுப்ரமணியபுரத்தில் நடைபெற்ற மருத்துவச் சாதியினரின் கூட்டத்தில் அவர்கள் தங்கள் பெயருடன் பண்டிதன் என்ற பெயரையும் இணைத்தே கையெழுத்திட்டிருப்பதனைக் காணலாம். []     தமிழ்நாடு மருத்துவர் நல உரிமைச் சங்கத்தினர் தங்களின் சங்க கூட்ட அறிவிப்பினை தபால் அட்டையில் அச்சிட்டு அனுப்பியிருப்பதனை படம் வெளிப்படுத்துகிறது.                          பின்னிணைப்பு - 12 []     இத்துண்டறிக்கை பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் அவரது மகன் ஆ. ஆனந்தகுமார் ஆகியோர் சித்த மருத்துவ வல்லுனர்களாக விளங்கியதை அறிவிக்கிறது. இத்துண்டறிக்கையினை வெளியிட்ட டாக்டர் எஸ்.எஸ். நடராசன் தான் வைத்திருந்த சித்த மருத்துவம் குறித்த ஓலைச் சுவடிகள் அனைத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார்.  பின்னிணைப்பு - 13    []     []   COMPULSORY SERVICE FROM BARBERS  A reference to veth (enforced service) by the potters of Gujarat has already appeared in the Harijan. The following letter from Shri Purushottam Parekh, Secretary to the Committee for the Removal of veth appointed by the Gujarat. Nayi Brahman Sabha, relates to veth which the nayis (barbers) are requried to perform in Gujarat. Their demands appear to be quite just and there should be no difficulty in complying with them.  “There are, in the villages of Gujarat, only two castes which have to undergo the harassment of veth ( enforced service) from amongst the so-called vasvays (artisan-settlers). They are the potter (kumbhan and the nayi (barber). Everywhere it is complusory for the kumbharto fetch water. But I shudder to describe the humiliating duties which the nayi is forced to render for a whole day.  "In the early morning he is required to present himself before the officer visiting the village. He waits upon him while he cleans his teeth and washes his mouth, giving him tooth-stick, water etc. Then he fetches milk and makes tea for him, and sweeps the premises. That over, he gives a massage to the officer and then the bath, and after-wards washes his clothes. Then he has to fetch from the market articles required for his mid-day meal. He has also to wash the utensils used by him during cooking and taking food. Then at 3p.m. he has to attend upon him again, for his evening tea. This entails the bringing of milk, sugar and tea powder, boiling the deeoction, serving it to the officer and again cleansing the vessels. Thereafter he must find cots, beds, and covers from various places in the village for the officer's sleeping arrangements at night, and arrange them properly. Then he brings again articles needed for the evening meal, and again cleanses the vessels. He has also to keep ready and kindle the lamps in the evening, and when the officer retires to bed at night he has to shampoo his legs. Thus it is nearly at midnight that he returns home after performing all these tasks. Thus for centuries past, there prevails in the large Statges of Gujarat this tyrannical veth by the village servants. The only return for this is an annual remuneration of Rs.8 to 10.    "There are usually about 10 to 15 houses of potters and barbers each in a village, and the members of both these castes have to suffer this unbearable harassment. We wonder how long it will be allowed to continue even with Congress leaders in office!  "I suggest that a paid nayi should be appointed for the village and so too a blacksmith, a carpenter, a kumbharand others. The blacksmith and the carpenter are not required to perform any duty when Government officers visit the village, but these artisans are necessary for the service of the peasants of the village, and when the villages were founded, they were expressly made to settle down there and lands were assigned to them. These lands must be deemed their rightful heritage.  "It is the nayis and the kumbhars who have to perform the veth. The kumbhars have to supply free of cost earthen pots and fetch water. In the same way, over and above the work of shaving and other services connected with the barber's profession, nayishave to render the above mentioned services. All these can be got done by payment of wages, and no one would have any objection if it is got done from a person of any other caste of community. He may be even a dharala or a waghari, a bajania or a mali, a kundior a brahman - who ever is willing to do it for the payment of wages offered. Instead of this, this compulsory service is being exacted from these communities by the rule of the rod. There have been agitations in the past to do away with it and it should now be done away with forthwith, and compulsory enforcement of veth must be penalized by law.  "Hundreds of years ago when the villages were founded, these communities were made to settle down there for the social and economic benefit of the people of the village concerned and in consideration of their services they were given small rent - free pieces of land in perpetuity in the village for their subsistence. These communities live in villages even today, and serve a useful purpose in the economic life of the people. But it is believed that the system of veth by nayis and kumbhars was introduced during the British regime. Hence there is no connection between those services and their occupancy rights. All the same, a vasavaya (artisan-settier) who is unwilling to perform the veth would be prepared to pay the ordinary assessment, if Government thinks it proper to demand it, as the price for doing away with this type of slavery."    Bombay, 9-11-48 (From the original in Gujarati) K.G. MASHRUWALA  இது, 19-12-19.48 (353-354)  தேதியிட்ட ஹரிஜன் இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.   இந்திய மாநிலங்களில் மருத்துவச் சாதியினரின் பெயர்கள்   தமிழ்நாடு  : மருத்துவர், நாவிதர், பரோபகாரி, வேலை   கட்டளையிட்டான்  கேரளா  : அம்பட்டர், மாராயன், நாயர், வேலகில்.  ஆந்திரா  : நாவி, மங்கல், கேலசி, ஹைசாம்  மகாராஷ்டிரா  : பாலந்து, நாபிக், கேலசி, நை பிராமின், பானந்து  உத்திரப்பிரதேசம்  : நைபாண்டே , தாகூர், நை பிராமின், பாண்டே பிராமின்  ராஜஸ்தான் : நை, செயின், நை பிராமின்.  டெல்லி  : நை, நை பிராமின், பண்டித ராஜன், மேக்தா, தாகூர்  காஷ்மீர்  : ஹசாம், நாபித், நை, நெள், சபிதா, பிராமின்  ஒரிசா  : பத்திரி, வரிக், பண்டார்  அஸ்ஸாம்  : நை, சந்துர வேதியர்  பீகார்  : தாகூர், ஹைசிம், நை, நாபித், நை, பிராமின்    நன்றி: பண்டிதம், நவம்பர் 2004; 11.   கள ஆய்வின் போது, அம்பட்டர், பரிகாரி, நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், புதிரைவண்ணார், ஆயவண்ணார், காவதி, குடிமகன் நாவிதர், மறநாவிதர், நாடார் நாவிதர், பர்மக்கிழவி, போன்ற பெயர்கள் மக்களிடம் புழக்கத்தில் இருப்பதைக் காண முடிந்தது.