[] அப்பாவி விஷ்ணு ராஜலட்சுமி பரமசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை அப்பாவி விஷ்ணு Copyright © 2014 by Creative Commons Attribution 4.0 International License.​. This book was produced using PressBooks.com. Contents - அப்பாவி விஷ்ணு - ஆசிரியர் - 1. சரித்திரம் படைத்த ராசி - 2. ராசி--டீக்கடை - 3. விஷ்.........விஷ்.........விஷ்............ - 4. ஸ்மார்ட் ராசி - 5. காபி with விஷ்ணு - 6. ராசி " சூப்பர் சிங்கர் "ஆகிறாள் - 7. "You Tube"ல் ராசி - 8. விஷ்ணுவின் கணக்கு - 9. ராசியின் ஆசை 1 அப்பாவி விஷ்ணு [AV] இது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் மின்னூல் . இந்த நூலில்  அறிமுகமாகும்  ராசி- விஷ்ணு  தம்பதி   என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில்  ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு   கொடுக்கும் விஷ்ணுவைப்  பரிதாபத்துக்குரியவராய்  சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களயே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில்  பொருத்திப்  பார்ப்பதை  தவிர்க்க முடியாது. ராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல  , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே! விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள்  ரசித்துப் படித்து விட்டு  ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள். அதனாலேயே இந்த நூலிற்குப் பெயர்  ” அப்பாவி விஷ்ணு ” என்று பெயரிட்டிருக்கிறேன்.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும்   இவர்கள் இருவரையும்  நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை  எவ்வளவு சங்கடப்படுத்தினாலும்  ராசிஅவரின் காதல் மனைவி. இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை. இந்த மின்னூல் ஒரு ஆரம்பமே. இவர்களின்  அட்டகாசங்கள்  தொடர்ந்து  வெளியிட ஆசை. அதற்காக உங்களின் மேலான ஆதரவை  எதிர் நோக்குகிறேன். இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,free tamil ebooks teamஇல்  இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி. ராஜலட்சுமி பரமசிவம் உரிமை :  Copyright © 2014 by Creative Commons Attribution 4.0 International License. யாவரும் படிக்கலாம், பகிரலாம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com 2 ஆசிரியர் ராஜலட்சுமி பரமசிவம் என்னைப் பற்றி………. நான் ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் குடும்பத் தலைவி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. . சமீப காலமாக  இணையத்தில்  எழுதி வருகிறேன். அதன்  மூலம்  பல வாசக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் அவர்கள் கொடுக்கும் ஊக்கம்  என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. அவர்களுக்கு என் நன்றி என் தந்தையின்  எழுதும் ஆர்வம் என்னையும் விடவில்லை . என் அம்மாவோ என் எழுத்துக்களின்  தீவிர  விசிறி.  .அம்மாவினுடைய கருத்தையும் சில சமயங்களில்  நான் கட்டுரையாக்கியிருக்கிறேன். ஆகவே நான் எழுதுவதற்கு காரணமான என் பெற்றோருக்கு  முதல்  நன்றி. சிறு வயதில் எனக்கு நிறைய கதைகள் சொல்லி என் கற்பனைத் திறத்தை வளர்த்த என் சித்தப்பாவிற்கும் இத்தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். என் எழுத்துக்களின் முதல் விமரிசகரும், அங்கங்கே திருத்தங்கள் செய்து என் பதிவுகளை செம்மைப்படுத்திக்  கொடுப்பவருமான என் கணவருக்கும் நன்றி. இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  [IMG_5657]     வலைப் பதிவு ; http://rajalakshmiparamasivam.blogspot.com மின்னஞ்சல் -  rajisivam51@gmail.com   [pressbooks.com] 1 சரித்திரம் படைத்த ராசி [] ராசியின் வரலாறு  என்றதும்  ஏதோ  மீன ராசி அன்பர்களுக்கும், மேஷ ராசி நேயர்களுக்குமான  ராசியை பற்றி சொல்லப் போகிறேன்  என்று  நினைக்கிறிர்களா? அவசரப் படாதீர்கள். இந்த ராசி என்   பள்ளி நாட்களிலிருந்து  எனக்கு  ஆருயிர்த்தோழி .இப்பொழுது திருமணமாகி சென்னையில்  தான் குப்பை கொட்டிக் கொண்டு  இருக்கிறாள் . அவ்வப்போது சந்திப்பது வழக்கம். அப்படித்தான்  அன்று அவள் வீட்டிற்கு சென்ற போது அவளும், அவள் மூன்று வயதுப் பேரனும்  National Geographic  சேனலில்  பிங்குவோடு பிங்குவாக ஒன்றிப்  போயிருந்தார்கள். ” அட, உனக்கு  எப்போதிலிருந்து இந்த ஆர்வம்.? ”  இது நான். ” இதில் ஆர்வம் இப்பொழுதான் வந்தது போல் கேட்கிறாய்? ”  என்றாள்   ராசி. ” திருநெல்வேலிக்கே அல்வாவா? என்னிடமே உன்  பூகோள  சரித்திர ஆர்வத்தை பற்றி சொல்கிறாயே ” என்றதும் சிரித்து விட்டு ” இப்ப எதுக்கு அதெல்லாம் ”  என்றாள் . பள்ளியில் நாங்கள்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் நெருங்கிய தோழிகளானோம்.  ராசி அப்படி ஒன்றும் படிப்பு வராதவள் இல்லை. கணிதமும்,   அறிவியலும் அவளுக்குத் தண்ணி பட்ட பாடு தான். இந்த பூகோளமும் , சரித்திரமும் இருக்கிறதே , அது தான் அவளை பாடாய் படுத்தும் .புற முதுகிட்டு ஓடும். இவளும் விரட்டி விரட்டி தான் பி(ப)டிப்பாள்.அனால்  இரண்டும் அவளை டபாய்க்கும். கௌசல்யா டீச்சரும்  எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்தார். ஒன்றும் பலனில்லை. கௌசல்யா டீச்சர் கிளாசில்  இவள் முக்கால் வாசி நாட்கள்  ”கொர் ,கொர் ” தான்.அப்புறம் எப்படி  இவளுக்கு அசோகச் சக்கரவர்த்தியைப் பற்றித் தெரியப்போகிறது? ” எப்படி உனக்கு மட்டும்  இப்படி தூக்கம் வருகிறது  கௌசல்யா டீச்சர் கிளாசில் ” என்று கேட்டால் ”  நான் என்னடி செய்யட்டும் ?     டீச்சர் கிளாஸ் எடுத்தால்  எனக்கு கண்களை  கட்டுதே. ” என்பாள் . பரிட்சை சமயத்தில்,”அசோகர்  மரங்கள் நட்டார்.குளங்கள் வெட்டினார். ” என்று உருப் போட்டுக் கொண்டு இருப்பாள் . மனதில் பதிந்தால் தானே! அதில் எரிச்சலாகி,” இந்த அசோகரை   யாரடி  மரங்கள் வைத்து  குளம் வெட்டச் சொன்னது? ” என்று புலம்புவாள் .அசோகர் அவளுடைய சோகக்கதையைக்  கேட்டால் அவரே  தான் வைத்த மரத்தை வெட்டிதள்ளி விட்டு ” இது போதுமா? இன்னும் கொஞ்சம் வெட்டணுமா? ” என்று கேட்பார் என்றே தோன்றும் . கௌசல்யா  டீச்சர்  எப்படியாவது   இவளை  வரலாற்றுப் பேராசிரியையாய்   ஆக்க வேண்டும்  என்று  கங்கணம்  கட்டிக் கொண்டது  போல் அப்ப, அப்ப  கேள்விகள் கேட்டு அவளைப்  படிக்க வைத்து விடலாம் என்று மனப்பால் குடித்தார். ஒரு நாள்  அவர்  ஒரு உலக வரைபடத்தை   ஆணியில் மாட்டி விட்டு . ” ராசி இங்கே வந்து  அசோகர்  சாம்ராஜ்யத்தை  இந்த ஸ்கேலால்  தோராயமாக காட்டு ”  என்றார். உடனே  ராசி ” கிடு கிடு ” வென்று படம் அருகில் போனாள் . போன வேகத்தில்   ஸ்கேலை எடுத்து  கரெக்டாக சீனாவில் ஒரு முட்டை வடிவம் போட்டு விட்டு திரும்பினாள் . சீனாவுக்கு  மட்டும் இது தெரிந்தால்  இவ்வளவு நேரம் நம்முடன் ஒரு போரே  உண்டாகியிருக்கும்.பின்னே? அசோகர் சாம்ராஜ்யத்தை சீனாவில் உருவாக்கியது  மட்டுமல்லாது  அங்கே ஒரு முட்டை வேறு, இவள் வரலாற்றுப் பாடத்தில் வாங்குவது போல். வந்த கோபத்தில்  ராசியை வகுப்புக்கு  வெளியே  நிற்க வைத்து விட்டார். நிற்க வைத்ததில்  அவருக்கே வந்தது கேடு. அந்த சமயம் பார்த்து  தலைமை ஆசிரியர்  அந்த பக்கம் வர ,ராசியைப் பார்த்து ,” என் வெளியே நிற்கிறாய்” என்று கேட்க அவள்   வெறும்” திரு திரு “. கௌசல்யா டீச்சர் வெளியே வந்து விவரத்தைக் கூற ,டீச்சரை தலைமை  ஆசிரியர் கடிந்து கொண்டு “இன்றைய வகுப்பையும் மிஸ் செய்தாள்  என்றால் என்னாவது என்று கேட்க ”  வேறு வழியில்லாமல்  டீச்சர் ராசியை உள்ளே அமர செய்தார். இதற்கெல்லாம் ராசி ஒன்றும் அசரவில்லை. அதென்னவோ அவளுக்கு வரலாறும் பூகோளமும்  எட்டிக்காய் தான்.சுட்டுப்  போட்டாலும்  வராது  அவளுக்கு. குப்தர்கள், மௌரியர்கள், எல்லோருக்கும் ஒருவர் பாக்கியில்லாமல்     சஹஸ்ரனாம  அர்ச்சனை செய்வாள்  ராசி. அவர்கள் எல்லோரும் பாவம் அவர்கள் போர்களில்  வாங்கிய விழுப்புண்களை விட  அதிகம்  இவளிடம் திட்டு வாங்கியது. அவளுக்கு  கிழக்கிந்திய கம்பெனி மீது  தான் தாங்கொணா கோபம் ..வாயை மூடிக் கொண்டு இங்கிலாந்திலேயே இருக்க வேண்டியது தானே? யார் இங்கே வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டார்கள் ? அதனால் தானே இந்திய சுதந்திரப் போராட்டம் வந்தது. அது வரலாற்றுப் புத்தகத்தில் பாதியை அடைத்துக் கொண்டு விட்டதே. அதோடு இந்த வருடங்களை யார் நினைவில்  வைத்துக் கொள்வது? சொல்லுங்கள் . வட்ட  மேசை மாநாடு  ஒன்றா, இரண்டா. எத்தனை இருக்கிறது? எந்த எந்த வருடங்கள் ? ஏதோ மேசையில் அமர்ந்தோம், சாப்பிட்டோம் என்று போகாமல் எதையோ  பேசி .வைத்து என் உயிரை வாங்குகிறார்கள்  என்று புலம்புவாள். இது மட்டுமா? பானிபட் யுத்தத்தோடு  இவளுக்கும் யுத்தம் தான். முதலாம் பானிபட் , இரண்டாம் பானிபட்  வருடங்களை   நினைவில்   வைத்துக் கொள்ள அவள் எவ்வளவோ முயற்சித்தும்  பாவம் தோற்றுத்தான் போனாள் .இதில் சமாதான உடன்படிக்கைகள்  வேறு அவளை குழப்பும். மகாத்மா காந்தி கூட  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக  இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றும் ,இவள்  நம் இந்திய சுதந்திரப் போராட்ட  வரலாற்றை    படிப்பதைப்  பார்த்தால் . கௌசல்யா டீச்சர் ஒரு முடிவுக்கு வந்தாற்   போல்   இருந்தார்  அன்று. ” ராசி   உனக்கு என் மேல் என்ன கோபம். ஏன்  வரலாறு மட்டும்  வரமாட்டேன் என்கிறது?  மற்ற  பாடங்களை  நன்றாகவே படிக்கிறாய். எப்படியாவது பாஸ் செய்து விடு . ” என்று பாவமாய்  கெஞ்சினார். “நான் என்ன டீச்சர் செய்யட்டும் . நானும்  கசப்பான  வல்லாரை கீரையை  கூட சாப்பிட்டு தான் வைக்கிறேன்.  ஆனாலும்  ……..”என்று  கண்களில் நீர் முட்ட , குரல் உடைந்து பேசினாள் . தேர்வு நெருங்க நெருங்க  ராசியை விட, அவள் பெற்றோர் ,எல்லாரைவிடவும் கௌசல்யா  டீச்சர்   தான்  ஒரே டென்ஷனில் இருந்தார் என்று சொல்ல வேண்டும். தேர்வு முடிவு வந்தது . ராசிக்கு  தன கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. அவள் நம்பர் பேப்பரில் வந்து விட்டது.அப்படிஎன்றால்   சரித்திரத்திலும்  அவள் பாஸ் தானே! கௌசல்யா டீச்சர்   சொன்னது தான்  பன்ச்  ”  ராசி,   நீ வரலாறு பாஸ்  செய்து   சரித்திரம் படைத்து   விட்டாய்  ” என்று. image courtesy—google. 2 ராசி--டீக்கடை   []  ” ராசியின் டீக்கடை ” என்றதும்  ராசி எதோ டீக்கடைக்கு போய் சண்டை  எதுவும் போட்டு விட்டாளோ , அதைப் பற்றியோ, என்று தானே நினைத்தீர்கள்.   கரெக்டாக சொல்லி விட்டேனா?   ஆனால் அது தான் இல்லை. ராசி coffee shop  எதுவும் ஆரம்பிக்கிறாளோ? அதுவும் கிடையாது. தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும் . ராசி என்றைக்கும் போல், அன்றும் சாப்பிட்டு முடித்தவுடன் ,கிச்சன் வேலை  முடித்து , கதவு எல்லாம்  பூட்டியிருக்கிறதா , என்பதை ஒருமுறைக்கு இருமுறை,  நன்றாக பூட்டில் தொங்கி  விட்டுப்(பூட்டியிருக்கிறதா  என்பதை செக் செய்கிறாளாம்) படுத்துக் கொண்டாள்.  வாரப் பத்திரிகை கையில் .. டிவியில் அவள் கணவர்  IPL பார்த்துக் கொண்டிருந்தார். டிவியில் ஒரு கண்ணும், புக்கில் ஒரு கண்ணுமாக இருந்தவள்  அப்படியே தூங்கி விட்டாள் . திடீரென்று  முழிப்பு தட்டியது.  லைட்  அணைந்திருந்தது. மேட்ச்  முடிந்து விட்டது  போலிருக்கிறது,  என்று நினைத்துக் கொண்டு கணவரைப் பார்த்தாள் .அவரோ   நித்திராதேவியின்  ஆதிக்கத்தில்  .. மீண்டும் தூங்கப் பிரயத்தனப் பட்டாள் .  ஆனால் வந்தால் தானே ! வயதாவதாலோ என்னவோ ஒரு முறை  விழிப்பு  வந்தால்…………  அவ்வளவு  தான். லேசில் தூக்கம்  வருவதில்லை. அன்றும் அப்படித்தான். கிர் ……………………………………….. என்ற   ஏசியின்  சத்தம்  ரூமை  நிறைத்தது. எழுந்து லைட்டைப் போட்டு புக் படிக்கலாமா ? வேண்டாம்  ……கணவர் தூங்குகிறாரே  என்று நினைத்துக் கொண்டு பேசாமல் படுத்திருந்தாள் . மெல்ல  தூக்கம் வரும் போலிருந்தது.   கர …..கர …..கர் கர் ….என்று  ஏதோ சத்தம்.  யாரோ  கதவு  தாழ்ப்பாளை  திறப்பது போல் …….. அரைத் தூக்கத்திலிருந்த  ராசி இப்பொழுது  நன்றாகவே  முழித்துக் கொண்டாள். யாராவது   திருடனாயிருக்குமோ? மெதுவாக  கணவரைத்   தொட்டாள் . திடுக்கிட்டு முழித்த அவர்   ,” எத்தனை  வாட்டி  சொல்வது?  நான்  மாத்திரை எல்லாம் சாப்பிட்டு விட்டேன்.பேசாமத் தூங்கு “என்று  சொல்லி  விட்டு  திரும்பிப்  படுத்து  விட்ட இடத்திலிருந்து  தூக்கத்தைத்  தொடர்ந்தார். திரும்பவும்  அதே சத்தம்  ” கர்  கர்  ” என்று. ராசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.நிச்சயமாக திருடனாகத்தானிருக்கும்   என்று தீர்மானித்து  விட்டாள் .  பேசாமல்   போலிசிற்கு  போன் பண்ணி விடலாம்  என்று  தீர்மானித்தாள்.எதற்கும் ஒரு முறை தன கணவரை கேட்டு விடலாம்  என்று தீர்மானித்தாள் . இப்படித் தான் முன்பொரு முறை தன  voterr id cardஐக்  காணோம் என்று  நேராக போலீசில் கம்ப்ளெயின்ட்  கொடுத்த கதையெல்லாம் நினைவிற்கு வந்தது.அன்று அவள் வாங்கிய திட்டு இருக்கிறதே அது இந்த ஜென்மத்திற்கு போதும் . என்ன வேண்டுமானாலும், திட்டி விட்டு போகட்டும். “என் கணவர் என்னைத் தானே திட்ட முடியும்.”  என்று நினைத்துக் கொண்டு அவரை எழுப்பினாள் . ” திடுக்  ” என்று என்று முழித்துக் கொண்ட அவர் இன்னும்  தூக்க மாத்திரை ஆதிக்கத்திலிருந்து  முழுதும் விடுபடவில்லை. ராசிக்கோ பதட்டம். கத்திப் பேச வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு   “ஹஸ்கிடோன்”இல்   திருடன்  போல் தெரிகிறது. போலிஸ்………..என்று முடிக்கவில்லை. அவ்வளவு தான்  விஷ்ணுவோ (அதாங்க அவள் கணவர் பெயர்) ” என்னது  போலீசா ” “இந்த நேரத்திலா?” என்று பெரிய குரலில் பதறினார்.அவர் குரலை அடக்கி விட்டு உன்னிப்பாக கவனிக்க சொன்னாள்  ராசி. ‘ஏ சி’ யின் ” கிர் ”  சத்தத்தைத் தவிர  வேறெதுவும் கேட்கவில்லை, இப்போது. “பார் , ஒன்றுமேயில்லாததற்கு  எல்லாம் போலிசை கூப்பிடுவது  உனக்கு பிழைப்பாகப் போய் விட்டது.” என்று கத்தி விட்டு,  விஷ்ணு திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்கினார். சரி ஒரு வேளை   எலியாக இருக்குமோ ? ஆனால் வீட்டில் எலியே இல்லையே .இன்று புது வரவோ  என்று நினைத்து அமைதியாக படுத்தாள்  ராசி.. ‘ஏ சி’ சத்தத்துடன், கணவர்” கொர் ” சத்தமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது. ஒரு விதத்தில்  இந்த  சத்தம்  அவளுக்கு  கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது  எனலாம். ஒரு நிமிடம் தான்  .திரும்ப  கர்…….  கர்………… இப்பொழுது மெல்லிய குரலில்  யாரோ பேசுவது கேட்டது. எங்கேயிருந்து வருகிறது  என்று  கவனிக்க ஆரம்பித்தாள் . கிச்சனிலிருந்து தான்  வருகிறது  என்று புரிந்தது.  கிச்சனில் யாரோ இருக்கிறார்கள்   என்று பயந்து   ” பர பர “என்று முழித்துக் கொண்டே படுத்திருந்தாள் . அவள் கணவர் திரும்பி படுத்தவர் இவளுடைய பேய்  முழியைப் பார்த்து ,”இன்னும் தூங்கலையா?” என்றார். ” இல்லை . யாரோ கிச்சனில் இருப்பது போல் தெரிகிறது “–ராசி ” கிச்சனிலா?  ?அங்கே என்ன இருக்கிறது? சாபிடக்கூட  ஒன்றும் உருப்படியாக இல்லை. எனக்குத் தான் தலைஎழுத்து  .திருடனுக்கு என்ன வந்தது? அவன் ஏன்  உன் சாப்பாட்டை   சாப்பிடுகிறான்.அதுவும் மீதி தான், பிரிட்ஜ்ஜில் இருக்கும் .” என்று நிலைமையின் தீவிரம் புரியாமல்  அந்த நேரத்திற்கு  ஜோக் அடித்தார். ராசிக்கோ  கோபம். அதற்கு மேல் பயம் வேறு. விஷ்ணுவிற்கு  ராசியைப் பார்த்தால்  பாவமாக இருந்தது போலிருக்கிறது. சரி. எழுந்து வா. கிச்சனில் போய் பார்க்கலாம்  என்றார். இவளுக்கோ  அவரைத் தனியாக அனுப்பவும்  பயம் .கூட போகவும் பயம். தைரியத்த வரவழைத்துக்  கொண்டு , கையில்  எதையாவது   எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்தாள் (திருடனை அடிக்கத்  தான்).அருகில் விசிறி கிடந்தது. அதை எடுக்கப் போனாள் . விஷ்ணுவோ “விசிறி எதுக்கு. அவனுக்கு விசிறவா?பேசாமல் வா.”என்றார். நல்ல வேளையாக  இரண்டு நாட்களுக்கு முன்னால்  ப்ளம்பர்   வேலை செய்தது  நினைவு வர  கட்டிலடியில் இருந்த   GI  பைப் (பிவசி  பைப் இல்லை) துண்டு ஒன்றை  எடுத்துக்  கொண்டு விஷணு  பின்னாடியே  சென்று கதவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். “இந்த வீரத்திற்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை”  என்று  சலித்துக் கொண்டே விஷ்ணு  கிச்சன் கதை திறக்க  இவள்  பைப்பை ஓங்கி அடிக்க அது பெரும் சத்தத்துடன்  தரையில் விழுந்தது.”(நல்ல வேளை டைல்ஸ் பிழைத்தது) “நல்லா  பாத்துக்க ” ஒருத்தரும் இல்லை. சும்மா ” :தொண தொண “ ன்னு தூக்கத்தை கெடுக்கக் கூடாது  என்றார் விஷ்ணு. ராசி  கேஸ் சிலிண்டருக்கருகில் குனிந்து பார்த்தாள் .மேலே பரணில் கண்களை நன்றாக ஓட விட்டாள் . விஷ்னுவோ ,” எதுக்கும் பிரிட்ஜிலும்   ஒரு பார்வை பார்த்து விடு ”  என்று நக்கலடிக்க , ராசி அவரை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு போய்  படுத்துக் கொண்டாள். ஆனாலும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது ,”கொஞ்ச நேரத்திற்கு முன் யாரோ பேசினார்கள்.” என்று. மொபைலில் மணி பார்த்தால் . இரவு மணி ஒன்று. தூக்கம் அவுட் . விஷ்ணு தூங்கி  பத்து நிமிடம்  ஆகியிருக்கும். திரும்பவும்  பேசும் சத்தம் கேட்டது. விதி விட்ட வழி என்று  பேசாமல்  இருக்கலாம் என்றால் இந்தப் பாழாய் போன பயமும் பேப்பரில் படிக்கும்  கொள்ளை சம்பவங்களும்  ராசியைப் பாடாய்  படுத்தின. அப்ப பார்த்தா இந்த  கரண்ட்டும் போய் தொலைய வேண்டும். இப்ப எங்கும் நிசப்தம். கதை தீட்டிக் கொண்டாள்  ராசி. ஆனால்   தலை வரை  போரத்தின  போர்வையை மட்டும் எடுக்க இல்லை. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அரை மணி ஆகியிருக்கும். கரென்ட் வந்தபாடில்லை. போர்வையை எடுக்கலாம் என்றால்  பயமாய் இருக்கிறது. இத்தனைக்கும் விஷ்ணுவோ கும்பகர்ண தூக்கம் . எவளவு  நேரம் போர்த்திக்கொண்டு இருப்பது? கரெண்ட் வேறு இல்லை. வியர்வையில் குளித்துவிட்டாள் ராசி. தைரியத்தையெல்லாம்   திரட்டிக் கொண்டு  மெதுவாக போர்வையை விலக்கினால்  ………இது என்ன  தன்  கால் மாட்டில்   யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதைப், போல் தலை மட்டும்  தருகிறது. கண்ணெல்லாம்  காணோம்.  டிவி யில்  பார்த்தது போல்  ஏதாது பேயாய் இருக்குமோ? வீட்டிற்கு பக்கத்தில் ,ஒரு வயதான பெண்மணி இரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்தது நினவிற்கு வந்தது.(எதெல்லாம் நினைவிற்கு  வரக்கூடாதோ அதெல்லாம் தான் நினைவு வந்து தொலைக்கிறது) நிஜமாகவே பேயறைந்தாற்   போல் இருந்தது   ராசிக்கு. நல்ல வேளையாக விஷ்ணுவிற்கு  முழிப்பு வந்தது.  ”பகலில்  கரெண்ட் கட் செய்வது போதாது என்று இப்ப ராத்திரியிலுமா ? உஸ்…….ஹப்பா ….. என்னமாய் வியர்க்கிறது “ என்று சொல்லிக் கொண்டே  டக்கென்று ராசியின்  கால்மாட்டில் கட்டிலில் சொருகி  வைத்திருந்த  விசிறியை உருவினார் விஷ்ணு. . அட..சீ……விசிறியா என்னை பயமுறுத்தியது  !  என்று சலித்துக் கொண்டாள்  ராசி மனதில். அரண்டவன்  கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்  —உண்மையானது. கொஞ்ச நேரத்தில் கரெண்டும் வந்தது. ஏசி   எல்லாம்   வேலை  செய்ய ஆரம்பித்தது. மெதுவாகத்  தூக்கம் கண்ணை இழுத்தது ராசிக்கு. திரும்பவும்  சத்தம் . இப்பொழுது  கட்…கட்….கர் …..என்று கூடவே  யாரோ  ஒரு பெண் குரல்  வேறு ராகம் போட்டு  அழுவது  போல். ராசிக்கும் பயத்தில் அழுகையே வந்தது. ஏதோ  பேய்  தான் என்று  உறுதியாகி விட்டது  ராசிக்கு.  காலையில் எழுந்ததும்  பக்கத்து கோவில் குருக்களைக்  கூப்பிட்டு  ஒரு கணபதி ஹோமம்   செய்ய வேண்டியது தான் என்று  தீர்மானித்துக் கொண்டாள். இப்போதைக்கு…….காக்க காக்க கதிர்வேல் காக்க , நோக்க நோக்க நொடியில் நோக்க………  என்று சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தாள்.  அப்படியே உறங்கியும் போனாள் . ராசி  எழுந்திருக்கிறாயா?  என்று அவள் கணவர் எழுப்பியதும் தான்  அவளுக்கு முழிப்பே வந்தது. (பின்னே விடியற்காலை மூன்று  மணி வரை  பேய்  உரையாடல்  கேட்டு பயந்து கொண்டிருந்தால்  இப்படித்  தான் 7 மணி வரை தூக்கம் வரும் ) அவசர அவசரமாக  எழுந்து வாசல் தெளித்து கோலம்போட்டு  , காபி போட்டுக் கொண்டிருக்கும் போது  விஷ்ணு வந்து டேபிளில் உட்கார்ந்து Hindu  பேப்பரை விரித்தார்.திடீரென்று  ” அன்பே  சுகமா…….” என்று fm ல் அருமையான  பாட்டு வழிய ஆரம்பித்தது. விஷ்ணு  உடனே  ,” உன் டீக்கடை  ரேடியோவை  அதற்குள் போட்டு விட்டாயா. தினம் இந்த டைனிங் டேபிளை   ஒரு டீகடை பென்ச்  மாதிரி ஆக்கி விடுகிறாய் ” என்று புலம்பினார். நாம் ஒன்றும் ரேடியோவை ஆன் செய்யவில்லையே என்று ராசி குழம்பும் போதே  அதுவே ” டக் ”  என்று நின்றது. ஓ   லூஸ்  காண்டாக்ட் ………. சட் என்று மீண்டும்   ” உன்   வீட்டுத் தோட்டம் சுகமா” என்று குசலம் விசாரித்தார்   திருமதி  சாதனா சர்கம்   ரேடியோ  வழியாக. விஷ்ணு டக்கென்று பிடித்தார். “உன் வேலை தான். நேற்று ராத்திரி ரேடியோ ஆப் செய்யாமல் படுத்திருக்கிறாய். லூஸ் காண்டாக்ட்டில்  உன்  தூக்கம் என் தூக்கம்  எல்லாம்  கெட்டது.” விஷயம் புரிந்ததும்  ராசிக்கு  அப்பாடி…….என்றிருந்தது. இப்பொழுதெல்லாம்  ராசி கதவெல்லாம் செக்  செய்யும் பொது ரேடியோ  off செய்திருக்கா? என்றும்  பார்க்கிறாள். image courtesy—google 3 விஷ்.........விஷ்.........விஷ்............ [] ராசி  மணியைப் பார்த்துக் கொண்டே  சாம்பார்   தாளித்துக் கொண்டிருந்தாள் கடுகு வெடிப்பதன் மணமும், கறிவேப்பிலை  மணமும் சேர்ந்து  வீடே  சாம்பார்  மணத்தில்  மிதந்து கொண்டிருந்தது. தயிர் வடைக்கு , கொத்தமல்லி   நறுக்கி  வைத்துக் கொண்டாள். சாப்பிடும்  முன்பாக  போட்டுக் கொள்ளலாம் என்று  நினைத்துக்கொண்டே   கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.. ” பார்க்க சகிக்கவில்லை இப்பொழுது “  என்று நினைத்துக் கொண்டாள். “எப்பொழுது நீ பார்க்கும்படியாக இருந்திருக்கிறாய் ” என்று கேட்ட மைண்ட் வாய்சை  அலட்சியம்  செய்தபடி  லைட்  மேக்கப்புடன்,  வந்து டீவி  முன்னால்  அமர்ந்தாள் . ஜன்னல்  வழியாக, விஷ்ணுவின் கார்   வருகிறதா என்று டிவியில் ஒரு கண்ணும், வெளியே ஒரு  கண்ணுமாக இருந்தாள் . விஷ்ணு தன்  நண்பர்களை  மாலை தேநீருக்கு  அழைத்து  வருவதாக  சொல்லியிருந்தார்.(விஷ்ணு  ராசியின் கணவர்  என்பது முந்தைய பதிவைப்   படித்தவர்களுக்குத் தெரியும் ) அதற்குத் தான் ராசி  தயார் செய்து காத்திருந்தாள் . டிவியின்  “முந்தானை முடிச்சில் ” அவள் சிக்கியிருக்கும் போது. ,கார் ஹாரன் சத்தம் கேட்டது. டிவியின் ” அழுகையை ” நிறுத்தி விட்டு  கதவைத் திறந்தாள் . உள்ளே விஷ்ணுவும்  அவர் நண்பர்களும் நுழைந்தனர். எல்லோரும் சக அலுவலர்கள்.  இரண்டு ஆண்கள்  இரண்டு பெண்கள். எல்லோரையும்   ராசிக்கும் , ராசியை எல்லோருக்கும், அறிமுகப் படுத்தி வைத்தார் விஷ்ணு . எல்லோருக்கும் , ஐஸ்   வாட்டர்  எடுத்து  வர  உள்ளே சென்றாள்  ராசி. இரண்டு பெண்களும்  அவள் பின்னோடியே  வந்தனர். “ஷைபி , நீ இதை எடுத்து வா”  என்று  டம்ளரை பிரியா கொடுத்தாள். உன் பேர்  என்ன  சொன்ன ?   விசாரித்தாள்  ராசி. ஷைபியா , ஆனால் எல்லோரும் என்னை  ஷைபி என்று தான் செல்லமாக கூப்பிடுவார்கள்  ஆண்டி(aunty)  என்றாள்   அவள். (அத்துடன் அவள்  நிறுத்தியிருக்கலாம். விதி விளையாட ஆரம்பித்தது  அவள் நாவில்.) ஏன்   “விஷ்  ” சார்   கூட   அப்படித் தான்  கூப்பிடுவார்  என்ற போது ராசி      “ஓ ………..” நான் ஆண்டி(aunty) …….  ஆனால் அவர்….. “விஷ் ” ……. ஷாமே…….. ” விஷ் “. ஷைபியாவை  சற்றே  உற்றுப் பார்த்த  ராசிக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. பருவப் பெண். அழகாக இருக்கிறாள்  என்று நினைத்துக் கொண்டாள். சற்று நேரத்திற்கு முன்பாக”  பாக்க சகிக்கலை “என்று சொன்ன மைண்ட் வாய்ஸ், இப்ப  சமாதானப் படுத்தியது , பருவத்தில் எல்லாமே அழகு தான் .நீயும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தாய் என்று. பெண்ணிற்கே உரிய ஜாக்கிரதை உணர்வு ,சற்று தூக்கலாகத் தெரிய ஆரம்பித்தது  ராசியிடம் . எல்லோரும் சிறிது நேரம் உரையாடிக்  கொண்டிருந்தனர். ராசி எல்லோர்  குடும்பங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்  . “ஷைபி “  உன்  கணவர்  எங்கே வேலை பார்க்கிறார் ? –  ராசி ஏதோ  ஜோக்கைக்  கேட்டது போல்  விழுந்து விழுந்து சிரித்து விட்டு “தெரியாது. கேட்டுத்  தான் சொல்ல  வேண்டும் ”என்றாள்  ஷைபி ஓ ………….இன்னும் திருமணமாகவில்லை , நினைத்தாள்   ராசி.(அதற்கென்ன  இவ்வளவு சிரிப்பு) அதற்குள் பிரியா  “இவள் இப்படித்  தான் .எப்பவுமே ஒரே “கல கல” தான்.ஒரே சிரிப்பு தான். இவள் கூட  இருந்தால்  நேரம் போவதே தெரியாது ” என்று பிரியா சொன்னதை ராசி அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது விஷ்ணுவிற்கு  புரிந்து விட்டது. எதையாவது சொல்லி அவர் சமாளிப்பதற்குள்  ஷைபியா  தொடர்ந்தாள் .”நானும் பார்க்கிறேன். ஒருவர் கூட மாட்டுவதாகத் தெரியவில்லை  .ஏன் ” விஷ் “ஷிடம் கூட என்  லவ்  அப்ளிகேஷன்   இருக்கிறது.  ஆனால் அவர் தான்  ஏக  பத்தினி  விரதத்தை  முறிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது.”என்றாள் . விஷ்ணு ராசி முகத்தைப் பார்க்கத் தாயாராகவேயில்லை. புயல் சின்னம்  மையம் கொண்டிருப்பதை  அவரால் உணர முடிந்தது. ” விஷ்  சார் ,, நீங்கள் இப்ப சொல்லுங்கள்  நான் ரெடி ” இது ஷைபியா . ” உஷ்……உஷ்…….. “  இது பிரியா. ” அதெல்லாம் ஆண்டி(aunty ) தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.”  மீண்டும் ஷைபியா . “சரி ,  எல்லாம்   ரெடி செய்து வைத்து விட்டு  சொல்கிறேன்.  சாப்பிடலாம் ” என்று சட்டென்று உள்ளே சென்றாள்   ராசி. உள்ளே சென்று, எல்லோருக்கும்  மசால் தோசை , சுடச்சுட  ரெடி செய்து விட்டு  எல்லோரையும்  சா ப்பிடக் கூப்பிட்டாள் . “aunty”   உங்கள் சாம்பார் வாசனை , சும்மா கமகம , என்று ஊரையே  தூக்கியடிக்கிறதே  என்று சொல்லிக்  கொண்டே  எல்லோரையும் முந்திக் கொண்டு ஷைபியா   டேபிளில் உட்கார்ந்தாள் . எல்லோரும் மெல்லிய உரையாடலுடன்  சாப்பிட , ஷைபியா   மட்டும்   வெங்கலக் கடையில்  யானை  புகுந்தாற்போல்   ஒரே  சத்தம். எல்லோரையும் பேர் சொல்லி சார் என்றாள் . யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால் ராசிக்கு என்னவோ  அவள் மூச்சுக்கு  முன்னூறு  முறை” விஷ்  விஷ் “என்று சொல்வதும்  எல்லோரும் அவளை “ஷைபி  ஷைபி ” என்று கூப்பிடுவதும் , என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு   என்று தான் தோன்றியது  ராசிக்கு. விஷ்னுவிற்கு  தெரியும்  இன்று  ராசியிடம்   மையம் கொண்டிருக்கும் புயல் கரையை கடக்க  இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று. எல்லோரும்  அவள்  சிற்றுண்டியை  வானளாவ புகழ்ந்து தள்ளி விட்டு விடை பெற்றனர்.ராசி மிச்சம் இருக்கும் வேலையெல்லாம் முடிக்க  போனாள் . ” டமால் டமால் ” என்று ஒரே சத்தம். விஷ்ணு கண்டுகொள்ளவேயில்லையே.சைனாவில்  ஏற்பட்ட  பூகம்பத்தின்  aftershocks  தம் வீடு  வரை  இருக்குமோ  என்னமோ! துலக்க வேண்டிய பாத்திரங்கள் தான்   பெரும் சத்தத்துடன்  சிங்கில்  விழுந்து கொண்டிருந்தது. யார்  மேல் கோபித்து கொள்வது என்று  புரியவில்லை. விஷ்  ….விஷ்…… என்று விசிலடித்தார் போல்,   பேசிய ஷைபியா வை கோபித்துக் கொள்வதா  அல்லது விஷ்ணுவையா? சாமான்கள்   “விஸ்….  விஸ்……”  என்று  பறந்தன இப்பவும் ஒரு ரியாக்ஷனும்  இல்லை,  கணவரிடமிருந்து. நேராக  ஹாலிற்கு வந்தாள் . டிவியிலிருந்து  கண்ணை  எடுக்காமலே ” என்ன சொல்லு ?” என்றார். “ஒன்றும் இல்லை.  ஏன்  ஒருத்தரும் உங்கள் ஆபிஸில்  அந்தப் பெண்ணை கண்டிக்க மாட்டீர்களோ?” ‘ இப்படித் தான்  “விஷ் விஷ்” என்று விசிலடித்துக் கொண்டிருப்பாளோ?’ “ஐயோ !…. அவள் சும்மா  கல கல என்று பேசுவாள். மற்றபடி நல்ல பெண் ,” என்று சர்ட்டிபிகேட்  கொடுத்தது தான்   தாமதம் , தொம் தொம் என்று குதித்தாள்   ராசி.(வார்த்தையில் குதித்ததை நிஜமாகவே குதித்தால்…….நினைத்தாலே நடுக்கமாயிருந்தது விஷ்ணுவிற்கு ) அவள் நல்லவள் என்றால்……………அப்ப,  நான்.. என்று முறைத்தாள் நான்  ஒன்றும்  பேசவில்லை, என்று  எழுந்து போய் விட்டார்  விஷ்ணு . மறு நாளிலிருந்து  வீட்டில்   மௌன  யுத்தம்  ஆரம்பமானது. காபி  டேபிளிற்கு வந்தது. ஒரு” நங்  ” (நீராகாரமாயிருந்தது. ஈ விழுந்தால்  சுதாரித்து எழுந்து ‘ கேட் வாக் ‘ செய்யும்.) சிறிது நேரத்தில் இன்னொரு” நங்”. இட்லியும் சட்னியுயம். சாப்பிட்டால் காது  மூக்கிலிருந்தெல்லாம் நீர் வந்தது.(சட்னியில் ராசியின் கோபம்  காரமாயிருந்தது) அவருக்கு பிடிக்காத  பாகற்காய், வாழைத்தண்டு .. இத்யாதி……… சமையலில்.இது  சாம்பாரா , இல்லையில்லை ,ரசம்….இல்லை….. பட்டிமன்றமே  நடத்திவிடலாம் ! மயான அமைதி வீட்டில். ஒரு விதத்தில்  இது   விஷ்ணுவிற்கு  சௌகர்யமாயிருந்தது. இது தான் சாக்கென்று அவர் பாட்டிற்கு  ஆபீஸ் ,டிவி, பேப்பர்  என்று நிம்மதியாக இருந்தார் . ராசிக்கோ கோபம்  கொஞ்சமும் குறைவதாய் இல்லை. எப்படி சமாதானம் செய்வது, என்றே புரிய வில்லை ,விஷ்ணுவிற்கு இத்தனை வயதிற்கு மேல் இதென்னடா தொல்லை  என்று தோன்றியது அவருக்கு. இவ்வளவு வருடங்களாகியும்  இவளைப் புரிந்து  கொள்ள முடியவேயில்லையே  என்று தன்னையே கடிந்து கொண்டார். இந்த  கண்ணாமூச்சி  ஆட்டம் ஒரு வாரம் ஓடியது. ஞாயிற்றுக் கிழமையும் வந்தது.  கொஞ்சம்  வீடு  சகஜ நிலைக்குத் திரும்பும் போலிருந்தது. காலை ஒரு எட்டு மணியிருக்கும் .போன்  சிணுங்கியது . எடுத்தது  ராசி. எதிர் முனையில்  ஷைபியா . “ஆண்டி  எப்படி இருக்கீங்க. நான் இப்ப  அங்கே வரணுமே  என்றாள் .”விஷ்  சார்” இருக்கிறாரா ” என்று  கேட்டு ராசியின் BP யை  எகிற வைத்தாள் . ம் ம் ………ராசி சொன்னது. “அப்படிஎன்றால் கதவை திறங்கள்.” ஓ …………..  வந்தே விட்டாளா? என்று நினைத்துக் கொண்டே போய் கணவரிடம் உங்கள் ” விஷ்….. “(அழுத்தமாக)  வந்திருக்கிறாள்  “என்று கடுகடுத்து விட்டு  உள்ளே சென்று விட்டாள் . விஷ்ணு தான் போய் கதவை திறந்தார். புயலாக  நுழைந்தாள்  ஷைபியா . “ஆண்டி” எங்கே சார் ?.இருவரும் ஒன்றாக நில்லுங்கள்.நமஸ்காரம் செய்ய  வேண்டும்  “என்று கூறிக் கொண்டே கல்யாணப் பத்திரிக்கையை நீட்டி  விட்டு  “சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று தான் யாரிடமும் சொல்லவில்லை.உங்களுக்குத்தான் முதல் இன்விடஷன்”  என்று   அவள்  சொல்லிக் கொண்டிருக்கும் போதே , ராசி உள்ளேயிருந்து எட்டிப்பார்த்து  கூலாக   “ஒரு நிமிடம் இரும்மா .இதோ  வருகிறேன் “  என்று உள்ளே சென்றவள்  வெற்றிலை பாக்கு ஒரு ப்ளவுஸ்பிட்  சகிதம்  தாம்பூலம் கொடுத்து  ஆசீர்வதித்தாள் . பத்திரிக்கையை  படித்து , கண்டிப்பாக கல்யாணத்திற்கு வருகிறேன் என்று சொன்ன  ராசியை  ஆச்சர்யமாகப் பார்த்தார் விஷ்ணு. ” விஷ்  சார் நான் கிளம்புகிறேன் “என்று சொன்ன ஷைபியாவிற்கு  ராசி ” பாத்து ஜாக்கிரதையாக   போய்ட்டு  வாம்மா “  என்று சொன்னதும் விஷ்ணுவிற்கு மயக்கம்  வராத குறை தான். அவள்போனவுடன்  ராசி ரொம்பவும் சகஜமாக” சரி வாங்க சாப்பிடலாம்  என்றாளே  பார்க்கலாம்  ,,,,விஷ்ணு கீழே விழாமல் இருக்க  சுவற்றை பிடித்துக் கொண்டார். இப்ப ” விஷ் “  டர்ன் . முறைத்துக் கொண்டார். என்னை நம்பாமல் தானே இத்தனை  கலாட்டா செய்தாய்” “இதற்கு பெயர்  வெறும் “  possessiveness “  உங்களுக்குப் புரியவேயில்லை “விளக்கம்  கொடுத்தாள்  ராசி. இதற்கெல்லாம்  மசியவேயில்லை   விஷ்ணு . முகம் கொடுத்தும்   பேசவேயில்லை  . ஆனால் மனதிற்குள் “ஆமாம்.  புரியவேயில்லை தான் . கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் ………” சொல்லிக் கொண்டார். இந்த  ஊடல் எப்ப   முடியும்? இன்னொரு பதிவில்  நாம்  ராசி தம்பதியை சந்திக்கும் போது  கண்டிப்பாக ராசியாகி விடுவார்கள் . அடுத்த கலாட்டா  என்னவாயிருக்கும்……….. பி .கு.  விஷ்ணுவின்  மேல் பரிதாபப் பட்டு யாரும்   அவருக்கு  அனுதாப மன்றம்  ஆரம்பிக்க   வேண்டாம். விஷ்ணுவும் ராசியும் கற்பனை கதாபாத்திரங்களே. image courtesy—–google. 4 ஸ்மார்ட் ராசி [] வெள்ளிகிழமை அன்று  கோவிலுக்கு  போய்   கொண்டிருந்தேன். அமைதியாய்  என் கைப்பிடிக்குள்   இருந்த  மொபைல்  ” உயிரே ….. உயிரே…….என்று பாடத் தொடங்கியது. அவசரமாய் எடுத்து பார்த்தால் ” Rasi  Calling “. ” சொல்லுடி “. ” நான் பேசுவது கேட்கிறதா ? ” ” கேக்குதே ” என்றேன் . ” நல்லா   கேக்குதா ” ” இது  என்னடா தொல்லை? ம்.. ரொம்ப நல்லா கேக்குது ” என்று நான்  சலித்துக் கொள்ள அவளோ .” என் பையன்  அன்னையர்  தினத்திற்கு எனக்கு புது போன்  வாங்கிக் கொடுத்திருக்கிறான் ” நான் நாளைக்கு வீட்டிற்கு வந்து  காட்டுகிறேன். ” என்று முடித்தாள்  ராசி. மறு நாள் மாலை வந்தாள்   samsung போனுடன். ” ஓ ….ஸ்மார்ட்  டச்  போனா? “  கேட்டேன். “ஆமாமடி  , என்னைப் போலவே என் போனும் ஸ்மார்ட் ”  பெருமையடித்துக் கொண்டாள். “எனக்குத் தெரியாதா  நீ எவ்வளவு ஸ்மார்ட் ?” (மனதிற்குள்   சரித்திரம் படைத்த ராசி   பதிவு  வரி , வரியாக ஓடியது.) சட்டென்று  அவள்  போன்  “கிணிங் கினிங்  “என்று இனிமையாய்  இசைக்க ராசியோ அதையே  முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் . ” ஏய் போனை  எடுத்துப் பேசு, யார் போனில்? “என்றது நான். ஒரு பதிலும் இல்லை. எட்டிப் பார்த்தேன்.” Husband calling , Husband calling ” என்று அலறுவது  போல்  ப்ளாஷ்  அடித்தது. ” என்ன ஆயிற்று? ஏன்  போனை எடுக்கவில்லை?  ” என்றேன். ” அதுவா……. எப்படி எடுப்பது என்பது மறந்து விட்டது “என்றாளே  பார்க்கலாம் . “என்ன மறந்து விட்டதா?…….” ” சரி , இப்ப என்ன செய்வதாக உத்தேசம் ? விஷ்ணுவிற்கு  அவசரமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால்…………”முடிக்கவில்லை நான் . சட்டென்று கைப்பைக்குள் இருந்த பழைய   போனை எடுத்து கணவருடன் பேச ஆரம்பித்து விட்டாள் . ” பக் ” என்று சிரித்து விட்டேன்.சிரிப்பை அடக்க முடியவில்லை. ( இதில் இவளும்  இவளுடைய போனும் ” ஸ்மார்ட்டாம்  ஸ்மார்ட்.”) “சரி . contact list எல்லாம் யார்  லோட்  செய்தது “என்று கேட்டதற்கு  எல்லாம்  தன்  மகன் செய்து  தந்து விட்டான் என்றாள் கர்வமாக . (” இதிலொன்றும் குறைச்சலில்லை   ” நினைத்துக் கொண்டேன்.) ” சரி அவனிடமே கேளேன்  எப்படி போனை எடுப்பது “   என்றேன். ” இரு என்னை தொந்திரவு செய்யாதே “என்று எரிச்சல்  பட்டுக் கொண்டு சிறிது நேரம் யோசித்து பின் , “ஞாபகம்….  வந்திருச்சு……. ” என்று கமலஹாசன்  மாதிரி  ராகம் பாடினாள் . “என்ன?” என்றேன் ” கால் வந்தால் swipe செய்ய வேண்டும் ,” என்று சொல்லிக் கொண்டே  , அப்பொழுது பார்த்து வந்த போனிற்கு  பதிலுரைத்தாள். யார் என்றதற்கு  ”ஒரு பொண்ணு  கிரெடிட்  கார்ட் வாங்கிக்கிறையா”  என்று கேட்டார்  என்றாள் . “இதை  சரியாக எடு. கணவர்  கூப்பிட்டால்  கோட்டை விடு “நினைத்துக் கொண்டேன். ” உன்  நம்பரிலிருந்து கால் செய்யேன் எனக்கு  ”. என்று சொன்னேன் (எனக்கும் இந்த ஸ்மார்ட்  போனை உபயோகித்துப் பார்க்க ஆசை வந்தது) என் நம்பரை தன்  விரல்களால்  தொட்டாள் . நானும் என் மொபைலையே  பார்த்துக் கொண்டிருந்தேன். ம்ஹூஉம்……… என்ன ஆச்சு என்று எட்டிப் பார்த்தால், ” you dont have an internet connection  to connect to vonage ” என்றிருந்தது. “இது  என்ன? ” என் பையன் தான்  சொன்னான் .” நீ    பைசா செலவில்லாமல்  இன்டர்நெட் மூலமாக  பேசலாம் ” ” ஆனால் என்னுடன் நேற்றெல்லாம் பேசினாயே internet இல்லாமலே   ” ” அது தான் எனக்கும்  புரியவில்லை “குழம்பினாள்   ராசி. நானும் போனை வாங்கி  எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு கால்  கூ ட செய்ய முடியவில்லை.என் விரல் பற்றி எரிந்தது தான் மிச்சம். நான் என் தோல்வியை  ஒப்புக் கொண்டு அவளிடமே அவள் ஸ்மார்ட் போனை  கொடுத்தேன். என்ன செய்வது ? சரி வா  சூடாக தோசையாவது  சாப்பிடலாம் வா என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனேன். ” டிங் டாங் ” காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்தால் , கீழ வீட்டு மகேஷ்., சாப்ட்வேர் இஞ்சினியர் . “ஆண்டி, அம்மா சாவி கொடுத்தார்களா? என்றான். இல்லையே  ! ” சரி, அம்மா வரும் வரை உட்காரு “  என்று சொல்லி விட்டு உள்ளே போனேன். அவன் உட்கார்ந்து  டிவி பார்த்துக் கொண்டிருக்க , ராசியோ  புது போனைப் பற்றிப் புலம்பி தீர்த்தாள் . பாவமாய் இருந்தது அவளைப் பார்க்க . மகேஷிடம் கேட்டுப் பார்க்க  முடிவு செய்து அவனிடம் இந்தப் போனைக் கொடுத்தோம். அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டு  ”எனக்குத்  தெரியவில்லை . samsung service centre ற்கு  கொண்டு போனால்  சரியாவதற்கு  சான்ஸ் இருக்கு ” என்றான், டாக்டர்   “பேஷண்டை  அட்மிட் செய்யுங்கள் சரியாகி விடும் “  என்பது போல். அதற்குள் அவன் அம்மா  வர ,அவன் சென்றான். இதுவும் தோல்வியா? அதற்குள் ராசி,”  இந்த சின்னப் போனை சரி செய்ய முடியல இவனெல்லாம் என்ன  ஸாப்ட் வேர்    இன்ஜினியர் ? ” என்று அர்ச்சித்து விட்டு  சுடசுட காபியைக் குடித்தாள் . போய்விட்டு வருகிறேன் என்று விடை பெறும் சமயத்தில்  மீண்டும் “டிங் டாங்” மீண்டும் மகேஷ். ” ஆண்டி , இப்பொழுது தான் என் நண்பனிடம்  உங்கள் போனைப் பற்றிய தகவலை சொன்னேன்.அவன் எப்படி சரி செய்வது என்று சொன்னான்”. “நான்  மீண்டும்  முயற்சி செய்யட்டுமா ? “என்று பவ்யமாய் கேட்க , எனக்கு ராசியின் அர்ச்சனை நினவு வந்தது. “உங்கள் போனை கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி  ஒரு ஐந்து நிமிடம் இங்கேயும் அங்கேயுமாக  கைகளால்  ஸ்வைப்  செய்து,    சரி செய்தான் . ஒரு கால்  வேறு செய்து  சரியாகி விட்டது என்றன். ” ரொம்ப  தாங்க்ஸ் ” என்று பல தடவை மகேஷிற்கு நன்றி சொல்லத் தவறவில்லை  ராசி . பிறகு   தன்  கணவரை  போனில் கூப்பிட்டு சொன்னாளே  பார்க்கலாம் , . ” அப்பாடி ஒரு வழியாக  சரி செய்து விட்டேன். நான் ஸ்மார்ட் தானே  ” என்றாளே  பார்க்கலாம் . என்ன……நீ சரி செய்தாயா ……..அசந்து போனேன். நிஜமாகவே நீ ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)…… 5 காபி with விஷ்ணு [] சமையலா……என் கணவருக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது. நான் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. என்று பெருமை பட சொல்லும் மனைவிகள் நிறைய. இப்படி தான் ராசியும்  அடிக்கடி சொல்வாள். “என்னவருக்கு சமையலறைக்கு  எந்தப் பக்கம் போக வேண்டும் என்று கூடத் தெரியாது ” என்று பெருமையடிப்பாள் . இத்தனை நாள்  ,’மேடம் ‘இப்படியே பெருமையில் ஓட்டிக் கொண்டிருந்தாள் . விஷ்ணு ,ஒருமுறை காபி போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது . அவர் பட்ட பாடு  இருக்கிறதே ……….படியுங்கள்….. படிக்க  படிக்க காபி போடுவதில்  இருக்கும் சிரமங்கள் எல்லாம் உங்களுக்குப்  புரியும்.. ஒரு நாள் காலையில்  எழுந்திருக்கும் போது லேசான தலைவலியாயிருந்தது ராசிக்கு. அந்த வலியுடனே காபி ,டிபன், மத்தியான  சாப்பாடு எல்லாம் விஷ்ணுவிற்கு கொடுத்தனுப்பி விட்டு, இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டுப்  போய் படுத்தவள் தான்  . மாலை மணி ஐந்திற்கு விஷ்ணு ஆபிஸிலிருந்து வரும் போது தான் எழுந்தாள் . ஊரெல்லாம் பரவியிருக்கும்  ஃளு  ஜுரம்   ராசியையும்  ’ விஸிட் ‘அடிக்க  வந்திருப்பது.., அவள்  முகத்திலே  தெரிந்தது . ” காலை ஓரளவு உடம்பு சரியாகிவிடும் “என்ற நினைப்பில்  ஒரு லாரி  மண்ணையள்ளிப் போட்டது,  இறங்காத ஜுரம். காலை  மணி 7.30 க்கு  தான் முழிப்பே வந்தது ராசிக்கு. ” இவர் என்ன செய்கிறார் ‘”  பார்த்தாள்  ராசி. நியுஸ் பேப்பரில்  தலை அமுங்கியிருந்தது. ” கொஞ்சம் காபி குடித்தால் தேவலாம் ” முனகினாள் ராசி. ( அவள் நாவில் சனி  ”டென்ட் ‘ அடித்திருந்தார்  போலிருக்கிறது) ‘ காபி கேட்கிறாளே ” நினைத்தார் விஷ்ணு. காபி போடுவது  என்ன பெரிய  விஷயம்.  (இது…………இது தான்…இந்த நினைப்பு  தான்   அவர்  காபிக்கு உலையாய் வந்தது. )    ” இதோ போட்டுக் கொண்டு வருகிறேன்.” என்று  சொல்லிக் கொண்டே  லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு  போர் வீரனைப் போல் சென்றார்.,அடுக்களைக்குள். எங்கிருந்து ஆரம்பிப்பது…………..? ஸ்டார்டிங்  ட்ரபிள் . முதலில் எது ? டிகாக்ஷன் போடுவதா? பால் காய்ச்சுவதா? மாபெரும் சந்தேகம். ஆரம்பமே  இப்படி  தன்னம்பிக்கையில்லாமல் இருந்தால்  எப்படி….யோசித்துக் கொண்டே,  டிகாக்ஷனில் ஆரம்பிப்போம் என்ற மிக முக்கியமான  முடிவையெடுத்தார். முதலில் அதற்குத் தேவையான சாமான்களை எடுத்தார். தண்ணீர் ஒரு பாத்திரத்தில்.. காபிபொடி …..எங்கே …? தேட ஆரம்பித்தார். ” எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறாள்  ராட்சசி ”   செல்லமாக திட்டிக் கொண்டே தேடினார். அப்பாடி……….சாம்பார்  பொடி பாட்டிலுக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருந்த காபிப் பொடி பாட்டிலை ஒரு வழியாய்   கண்டு பிடித்தார். 3 ஸ்பூனா?….. 4 ஸ்பூனா ?…… யோசித்து  ஒரு வழியாக  ” குன்ஸா “வாக போடத் தீர்மானித்தார். அவசரத்திற்கு ஸ்பூன் கிடைக்காததால்  ஒரு கரண்டியை ” சிங்க் “லிருந்து  அரை குறையாய் கழுவி  பாட்டிலுக்குள்  ஒரு ஈராக் ….இல்லை …இல்லை….ஈரக்  கரண்டியால்   எடுத்தார். எடுத்தபின் தான் எங்கே போடுவது  என்ற நினைப்பு வந்தது. கீழே குனிந்து காபி பில்டரை எடுக்கப் போனார். இதென்ன? கும்பகோணம் அடுக்கு கேள்விப் பட்டிருக்கிறோம் . காபி பில்டரில் கூடவா எடுக்கப் போனவர் கையில் பட்டு எல்லாம் உருண்டோடியது. காபி பில்டரின் டாப்பும், பாட்டமும்  உறவு முறித்துக் கொண்டன. காபி பில்டரை ஜோடி சேர்ப்பதற்குள்  இவர் ஜோடி   குரல் கொடுத்தாள். ” இன்னுமா காபி போடலை? ” “இதோ….  இரண்டு நிமிஷம்……. கொண்டு வருகிறேன்.”  என்றார் விஷ்ணு. ஒரு வழியாக ஜோடி சேர்த்த பில்டரில் காபி பொடியைப்  போட்டு தண்ணீரை எடுத்து கேசில் வைத்து  தண்ணீர்  கொதிக்க காத்துக்  கொண்டிருந்தார். “ட்ரிங்,….. ட்ரிங் ” மீண்டும்  ”ட்ரிங்,…. ட்ரிங்”. சமையலறையிலிருந்து  வேகமாகப்  போய் போனை எடுத்தார். போனில் அவர் நண்பர் அப்பாசாமி. “இன்னைக்கு நியுஸ்  படித்தீர்களா விஷ்ணு?” தேர்தல் கூட்டணி  பக்கம்  பேச்சுத் திரும்பியது. சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது உரையாடல். சமயலறையிலிருந்து ஒரே கமறும் வாசனை . விஷ்ணுவிற்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது ‘ கேஸ் ‘ல் தண்ணீர் வைத்தது. விழுந்தடித்து ஓடினார். அதற்குள் எல்லாமே கைமீறிப் போய்விட்டது  தெரிந்தது.பாத்திரம் தீய்ந்து போயிருந்தது. அடுக்களையில் ஏதோ  ஏ .பி. நாகராஜன்  பட ஷூட்டிங்க்   நடப்பது போலிருந்தது . ஒரே புகை மண்டலம். சாவித்திரி ,”கோமாதா……எங்கள் குலமாதா……என்ற பாட்டு பாடிக் கொண்டே வருவார்   போலிருந்தது  . அதற்குள் ராசி வேறு ,” ஒரு காபி போடுவதற்குள்  என்ன பாடு இது? ” என்ற புலம்பல். ஜன்னலைத் திறந்து எல்லா புகையையும் விரட்டு ,விரட்டு. என்று விரட்டி விட்டு. மீண்டும் ” கேசில் “வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு மணியை நிமிர்ந்து பார்த்தார் விஷ்ணு. மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தண்ணீரை பில்டரில்  ஊற்றி விட்டு  ஹாலிற்கு வந்து ஆபிசிற்கு போன் செய்து ,   அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டார். பின்னே…. காபி போட வேண்டாமா? அதற்குத் தான். டிகாக்ஷண்  இறங்கியிருக்கும். அதை வைத்து காபி கலந்து விட்டு,  குளிக்கப் போகலாம் என்று அடுக்களைக்கு சென்றார். டிகாக்ஷன் இறங்கியிருந்தது. ஆனால் சமையல் மேடையில் தான்.  இவர் பில்டரை சரியாக ஃ பிட்  செய்யவில்லையா? இல்லை ஜோடி மாற்றம் செய்து விட்டாரா என்பது  புலனாகவில்லை. சரி, முதலில் டிகாக்ஷ்ணாய் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கு(?) அணைகட்ட தீர்மானித்து, பிடி துணியை தேடினார். கண்டு பிடித்தார் . போட்டு துடைத்தார். பிடிதுணி என்று தாம் போட்டது”ராசியின்  பிளவுஸ்” என்பது பிறகு தான் அவருக்குப் புரிந்தது. ” இருக்கு தனக்கு மண்டகப்படி “என்று புரிந்தது விஷ்ணுவிற்கு. ” என் பிளவுஸ் உங்களுக்குப்   பிடி துணியா ” என்று பொசுக்கி விடுவாள். என்ன செய்வது?  சட்டென்று அந்தத் துணியை அழகாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு   குப்பைத் தொட்டியில் போட்டார். (” கொலைக்கான  துப்பை”  மறைப்பது போல்). சரி.’  காபி என்னாச்சு” மீண்டும் ராசியின் கேள்வி .அவளால் முடியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு நேரம் சமயலறையில் ஆஜர் ஆகியிருப்பாள். “இருக்கும் டிகாக்ஷனில் முதலில் ராசியின்  வாயை அடைத்து விடுவோம்” என்று பிரிட்ஜில் இருந்த பாலைஎடுத்து காய்ச்ச அது  விஷ்ணுவை அன்னப் பறவை என்று நினைத்ததோ என்னவோ , தண்ணீரும் பாலுமாய்  கட்டி கட்டியாக பிரிந்து போனது. இப்ப என்ன செய்வது? யோசித்தார். அதற்குள் ” டிங் டாங் ” போய் கதவைத் திறந்தார் விஷ்ணு. ‘வாசலில் கொரியர். கையெழுத்து போட்டு வாங்கிவிட்டு  கதவை மூடப் போன விஷ்ணுவின் கண்களில் பட்டது   பால் பை. ஓ ………இன்றைய பாலை எடுக்கவேயில்லையோ?பிரிந்தது பழைய பாலா ….. நினைத்துக் கொண்டே , புது பாலை  காய்ச்சி  டிகாக்ஷனை எடுத்து  ஊற்றப் போனார். மெதுவாக சாய்த்தார்……….இன்னும் கொஞ்சம்..இன்னும் கொஞ்சம்…. என்று கவிழ்த்தே விட்டார். ம்ஹூம்…….ஒன்றுமே  வரவில்லை . எல்லாம் தான் மேடையில் ஆறாகப் பிரவாகமெடுத்து ஓடி விட்டதே ! இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை. சூடான பாலில் பூஸ்ட்  கலந்து  ராசிக்கு கொடுத்து விட்டு , குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் ” உனக்கு உடம்பிற்கு நல்லது என்று  பூஸ்ட் போட்டிருக்கிறேன் “என்று கூறினார். ராசி குடித்து விட்டு , அவர் தடுத்தும் கேட்காமல் ” இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நானே  போய்  மற்ற வேலைகளை  பார்க்கிறேன்  ” என்று போனாள்  ராசி.” வெகுநேரமாகியும் வரவில்லை ராசி. (மயங்கி விழுந்து விட்டாளோ ?) பின்னே குருக்ஷேற்ற யுத்தம் நடந்த ரண பூமி போலல்லவா இருக்கிறது   சமையல் மேடை? “காபி  போடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை” புரிந்தது விஷ்ணுவிற்கு . ராசியின் காபியை  என்னவெல்லாம் பேர் சொல்லி கிண்டலடித்திருக்கிறோம். சுடு தண்ணீர், கழனித் தண்ணீர் , பானகம்……என்றெல்லாம் சொல்லியிருக்கிறோமே. “அதற்கு சரியான தண்டனை  தான்.”  நினைத்துக் கொண்டார் விஷ்ணு. ஒன்றை விஷ்ணு மட்டுமல்ல,   நாமெல்லோரும் கூட  மறந்து விட்டோமே? ஆனால் ,ராசி………தேடிக் கொண்டிருக்கிறாள்  அவளுடைய   மயில் கழுத்து கலர் பட்டுப்புடவைக்கான பிளவுசை. ராசியிடம் நான் சொல்ல மாட்டேன் அவள் பிளவுஸ் பிடிதுணியான ரகசியத்தை. உஷ்……….நீங்களும் யாரும் சொல்லி விடாதீர்கள். குடும்பத்தில் நம்மால் குழப்பம் வர வேண்டாம். . [] image courtesy—google. 6 ராசி " சூப்பர் சிங்கர் "ஆகிறாள் []      பொறுப்புத் துறப்பு இப்பதிவில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே!கற்பனையே!கற்பனையே! இது மாதிரி யார் வாழ்விலாவது நிகழ்ந்திருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானது. ________________________________________ நல்ல தூக்கத்திலிருந்தார்  விஷ்ணு. திடீரென்று தூக்கம் கலைந்தது. யாரோ அலறும் குரல் கேட்டது. ” ராசி, ராசி ” கூ ப்பிட்டார் விஷ்ணு. பதிலையே காணோம். பார்த்தால் படுக்கையில் ராசியைக் காணோம். ராசிக்குத் தான் ஏதாவது ஆகிவிட்டதோ என்று அலறியடித்துக் கொண்டு  படுக்கையிலிருந்து , விழாத குறையாக எழுந்தார். லுங்கியை , கைகளால் இறுக்கிக் கொண்டே, அவசர அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தார் விஷ்ணு. ஹாலில் ராசி சம்மணக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு குனிந்து எதையோ கைகளால் திருகிவிட்டுக் கொண்டிருந்தாள்  ராசி.. என்ன என்று பார்த்தார் விஷ்ணு …பார்த்தால் சுருதிப் பெட்டி. ” என்ன செய்கிறாய்  இந்த காலங்கார்த்தாலே. மணியைப் பார் நாலரை தான் ஆகிறது  ” “அதுவா……….. நான் சாதகம் செய்கிறேன்.” ” சாதகமா?” “ஆமாம். சாதகம் செய்தால் தானே  மறந்து போன  பழைய சங்கீதம்  பிடிபடும்” ( பிடிபட்டது  விஷ்ணுவிற்கும்  , அலறல் சத்தத்தின் ரகசியம்) “எதற்கு இப்ப போய் சாதகம் எல்லாம் . பேசாமல் படேன்”  என்றார் விஷ்ணு. ” அப்புறம் எப்படி  சூப்பர் சிங்கரில்  பாடுவது? என்றாளே பார்க்கலாம். தலையை சுற்றி கீழே விழாமல் இருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டார் விஷ்ணு. “இளம் வயதினர் தான்  பாட முடியம் என்று நினைக்கிறேன்” என்றார் விஷ்ணு ஈனஸ்வரத்தில் . ” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்ப கூட  நடுத்தர வயதினைக் கடந்த  ஒருவர் கலக்கிக் கொண்டிருக்கிறாரே ” என்று கூறி விட்டு சுருதி கூட்ட ஆரம்பித்தாள் . ஸ ……………ப ……………….. (பயங்கர  அபஸ்வரம்  என்பது விஷ்ணுவிற்கு புரியவில்லை. ஆனால் ” நாராசமாக இருக்கிறது ”    ,சொல்லவில்லை. நினைத்துக் கொண்டார்.) தன் தலையெழுத்தை நொந்து கொண்டே மீண்டும் போய் படுத்தார் விஷ்ணு. காதில் இந்த அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்க அப்படியே தூங்கியும் போனார். முழிப்பு வந்தபோது மணி ஏழு. எழுந்து  போய்  தன்  வேலைகளை முடித்துக் கொண்டு, டிபன் சாப்பிட  டேபிளிற்கு வந்தார் . அங்கே நீளமாய்  பள்ளிக் கொண்டிருந்தது பிரெட் .அதன்  காலடியில் ஜாம். என்ன புதுசாக இருக்கு? என்று விஷ்ணு வினவ “எனக்கு சாதக ம் செய்து முடிப்பதற்குள்,  நேரமாகிவிட்டது .அதனால் தான் பிரெட்.. கொஞ்ச நாள் பொறுத்துக்  கொள்ளுங்கள் ” –ராசி . “கொஞ்ச நா……ளா…..” மலைத்தார் விஷ்ணு.இது என்னடா கொடுமை என்று தோன்றியது . ராசியோ  பூஜை செய்ய ஆரம்பித்தாள் . கையில் பூக்களுடன்  கந்த சஷ்டிக் கவசம்  மிக  சத்தமாக சொல்ல ஆரம்பித்தாள் . ” காக்க….காக்க  ” என்று நிறுத்தி விட்டு இவரைப் பார்த்து ,”  சூலமங்கலம்  சகோதரிகளின் பாட்டு போல் பாடுகிறேனா” என்றதும் நிஜமாகவே அதிர்ச்சியில் உறைந்தார். ” ஆமாம் . எதற்கு உனக்கு இப்படி விபரீதமான ஆசையெல்லாம். எதற்கு திடீரென்று ஆரம்பித்தாய்? ” என்றார் விஷ்ணு. ” அதுவா……புது  பிளாட் பரிசாகக் கிடைக்கும். எனக்கும் சினிமாவில் பாட வேண்டும் என்று ஆசையிருக்கிறது.” எனக்குக் கூடத்தான்  நீ பாடக் கூடாது என்று ஆசையாயிருக்கிறது,  என்று சொல்லமுடியாமல் திணறி, ” அதற்காக………” என்று  இழுத்தார். ” அதற்காகத் தான் ,விட்ட பாட்டைப்  பிடிக்கிறேன் ” என்று சொன்ன  ராசியைப் பார்த்து,” ஏன் நாம் இப்ப இருக்கும் வீட்டிற்கு என்ன வந்தது. ?”  கேட்டார்  விஷ்ணு. ” வீட்டிற்கு ஒன்றுமில்லை. தானே வரும் ஸ்ரீதேவியை  யாராவது வேண்டாம் என்பார்களா? என்றாள் . ஏதோ அவள் சூப்பர் சிங்கர் ஆகிவிட்டது போலவும் ,பிளாட் ரிஜிஸ்டர் செய்ய கிளம்பும் போது , நான் ஏதோ வேண்டாம் ,என்று சொல்வது போலவும், ( எல்லாம் நினைப்புத் தான்) நினைத்துக் கொண்டார் விஷ்ணு. “அது  மட்டுமா?  A.R.Rahman  கூட என் பாட்டைக் கேட்டு  சினிமாவில் சான்ஸ் கொடுக்கலாம் ” என்று மேலே ,மேலே , ராசி சொல்லிக் கொண்டே போக , சிரிப்பதா , அழுவதா என்று புரியவில்லை விஷ்ணுவிற்கு. ” பானை விற்பவன்  ராஜகுமாரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு ராஜாவான கனவுக் கதை போலல்லவா இருக்கு ” என்று புலம்பிக்கொண்டே ஆபிசிற்கு கிளம்பினார் விஷ்ணு மாலை வீட்டிற்கு வந்ததும் இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது, சாதகம் செய்தாள் ராசி என்று நினைத்தீர்களா? இல்லை. அது தான் இல்லை. தன லேப்டாப்பில்,  ஏகப்பட்ட சினிமா பாடல்களை, டவுன்லோட் செய்து கொண்டிருந்தாள் ராசி. எல்லாம் பிராக்டீஸ்  செய்யத்தான். அடுத்து, விஷ்ணுவிற்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு ,”jabong” வலைத் தளத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். என்ன வேணும் உனக்கு? –இது விஷ்ணு. உடனே ராசி ,” எனக்குக் கொஞ்சம்கொஞ்சம் டிரஸ் வாங்க வேண்டுமே?’ நீ குமரனிலோ , நல்லியிலோ தானே எடுப்பாய்? இல்லை நான் சூடிதார், பேன்ட் எல்லாம் எடுக்க வேண்டும். பாடும் போது நானும் ஸ்டைலாக இருக்க வேண்டாமா? என்ற போது  நிஜமாகே அதிர்ந்தார். இவளுக்கு ஏதாவது  பைத்தியம்  பிடித்து விட்டதோ?இவள் பேண்ட்  போட்டால் யார் பார்ப்பது? நான் தான்  மாட்டிக் கொண்டேன் என்றால்….. முகம் தெரியாத அந்த அப்பாவி ஜட்ஜ்களை நினைத்து   பரிதாபப்பட்டார். இனிமேல் chemistry,physics என்று அவர்கள் ஏதாவது நினைப்பார்கள்……….இல்லை நினைக்கத் தான் முடியுமா. அதைவிடவும் இவள் குரலுடன் போராடப் போகும் வாய்ஸ்  ட்ரெய்னர் நிலையை நினைத்து ப்  பார்த்தார். படு பயங்கரமாயிருந்தது. ஆனால் ,இதெல்லாம்  அவள் போட்டியில், பல படிகளைத் தாண்டினால் தானே ! ,(கொஞ்சம் நிம்மதியளித்தது விஷ்ணுவிற்கு.) அவர்கள் தங்கள் விதியையல்லவா  நினைக்க வைத்து விடுவாள் போலிருக்கிறதே என்று நினைத்தார் விஷ்ணு. மேலே  தொடர்ந்தாள் ராசி. பாருங்களேன் மெலடி ரவுண்டிற்கு,  திருமதி  சாதனா சர்கம் பாடிய “அன்பே சுகமா?”  பாட்டு பிராக்டீஸ் செய்திருக்கிறேன் கேட்கிறீர்களா……என்றதும் இதிலிருந்து எப்படி தப்பிப்பது  என்று யோசித்தார் விஷ்ணு. “எனக்குக் கொஞ்சம் தலைவலியாய் இருக்கு. அப்புறம் கேட்கிறேன்.” என்று விஷ்ணு முடிப்பதற்குள்  போன்   ரீங்காரித்தது. ராசி எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.. அவளுக்குத் தான் போன் என்பது புரிய ,அவசரமாய் போய் படுத்துக் கொண்டு விட்டார்  விஷ்ணு. போனில் ராசி, யாரிடமோ தான் இன்று பாதி பிராக்டீஸ் செய்த, பாட்டைப் பற்றி பிரதாபித்துக் கொண்டிருந்தாள் . மெலடி ரவுண்ட் , ஃபோக் ரவுண்ட்  என்று ரவுண்ட் ,ரவுண்டாக சொல்லிக் கொண்டே போனாள். கடைசியாக அவள் சொன்னது தான் ஹை லைட் . Dance attack ரவுண்டிற்கு ……..(அதற்கு மேல் காதில் ஏறவில்லை விஷ்ணுவிற்கு.) Dance attack என்று கேட்டதுமே விஷ்ணுவிற்கு  heart attack வராதது தான் குறை. யாரது இவளை இப்படி உசுப்பேத்திவிடுவது. தெரிந்தால்  அவரை ஆள் வைத்தாவது இரண்டு தட்டு தட்டி வைக்க சொல்லலாம் என்று  தாதா மாதிரி நினைக்க  ஆரம்பித்தார். இதை எப்படி நிறுத்துவது ,புரிய வில்லை. வேண்டாம் என்று சொன்னால் இவள் இன்றே  vijay tv ஆபிசிற்கு போனாலும்  ஆச்சர்யப் படுவதற்கில்லை. யோசித்து,யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம். ஆபிசிலிருந்து வீட்டிற்கு, ஒரு பயத்துடனேயே, சென்றார் விஷ்ணு. ( டான்ஸ்  பிராக்டீஸ் ஏதாவது  செய்திருந்தால்  அதை அப்படி தவிர்ப்பது என்று தான்). உள்ளே நுழைந்ததும்  ”தெரியுமா உங்களுக்கு.  அர்ஜுன்  வருகிறான்  நாளைக்கு “. என்றாள் .  அர்ஜுன் அவர்கள் பேரன். பையன் வருகிறான். விடுதலை கிடைக்கும் என்று நம்பியிருந்தவரின்  நம்பிக்கையில் ஒரு லாரி மண். அவர்களெல்லாம் வந்து போகும் வரை  சாதகத்திற்கு  ரெஸ்ட் கொடுத்து விட்டேன்.. தொண்டைக்கும் ரெஸ்ட், அதிகமாக பேச மாட்டேன். (மருமகளுக்கு  அடிக்கிற அதிர்ஷ்டத்தை  பார்.நினைத்தார். விஷ்ணு.) மழலை கொஞ்ச ,கொஞ்ச மறுநாள் அர்ஜுன்  வந்தான். ஒருவாரம் வரை  ராசி ஒரு நிலையிலில்லை. ஒரே பாட்டு விவாதம் தான் மருமகளுடன். தொண்டைக்கு ரெஸ்டாவது ஒன்னாவது . சின்ன வயசுக்காரர்களிடம் கேட்டால் தான் நல்ல டிப்ஸ் கொடுப்பார்கள் என்று  அவள் மருமகள் ஆர்த்தியை  துளைத்துக் கொண்டிருந்தாள் . கோபம் கோபமாய் வந்தது விஷ்ணுவிற்கு. ஏதாவது செய்து மகனும் மருமகளும்  தன்னைக் காப்பாற்றுவார்கள் என்றால் ஆர்த்தி இன்னும் மோசமாக்கி கொண்ர்டிருக்கிறாளே  என்று நினைத்தார். தன்  கோபத்தை ஆர்த்தியிடமே சொன்னார் விஷ்ணு. அதற்கு ஆர்த்தியின்  பதிலென்ன  தெரியுமா? ” மாமி ‘ சூப்பர் சிங்கருக்கு ‘த் தானே போகிறேன் என்று சொல்கிறார்கள். ‘ மானாட மயிலாட ‘விலா  ஆடப் போகிறார்கள்”  என்றாளே  பார்க்கலாம். இப்படிவேற  ஒரு ஆசையா ….இவளுக்கு . ஏதாவது பழி தீர்த்துக் கொள்கிறாளோ  நம்மிடம்.  திறந்த வாயை மூடவில்லை விஷ்ணு. பி.கு. சூப்பர் சிங்கரில் ராசி ஜெயித்தாளா  இல்லையா என்று தெரிந்து கொள்ள ஆசையா ? அதிக நாள் இல்லை. சுமார் இரண்டு வருடங்கள் தான் காத்திருங்கள். ஏனென்றால் சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்து தானே சீனியர்ஸ்  ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு முடிவு தெரியும். அதுவரை விஷ்ணுவின் கதி…………. அவருக்கு, உங்களால்  ஆனது , என்ன யோசனையாயிருந்தாலும் …………..சொல்லுங்கள். விஷ்ணு  வரவேற்பார்… image courtesy—–google 7 "You Tube"ல் ராசி [] வலையுலகம் எங்கே திரும்பினாலும்   தீபாவளிப்  பற்றிய பதிவுகள் தான். சுப்பு  தாத்தா வலைக்கு சென்றால்  அவர் எந்தெந்த பதிவில் என்னென்ன பலகாரங்கள் கிடைக்குமென்கிறார். உஷாவோ  பலகாரப் போட்டி ஒன்று வைத்து  பலகாரம் சுடும் வழி  சொல்லித் தருகிறார். இப்படி எல்லோரும் எதையாவது பற்றி தீபாவளிக்கு  எழுத நாம் மட்டும் விடுவதா  . ராசி  தீபாவளிக்கு  ” மைசூர்  பாக் “ செய்ததைப் பற்றி எழுதுகிறேன். படித்துப்  பாருங்கள். இரண்டு  நாட்களுக்கு முன்பு  விஷ்ணுவிற்கு  பல் வலி இருந்தது.மைலாப்பூரில்   இருக்கும்  பல் டாக்டரிடம்  போய்  ஆலோசனைக் கேட்டதில்,”உங்கள் பல் , ” பள்ளிக்  கொண்ட ரங்கநாதரைப்  போல்  கிடக்கிறது.” இப்போதைக்கு  வலி குறைய  மருந்து தருகிறேன். ஆனால் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு  வாங்க , பல்லை எடுத்து விடுகிறேன் ” என்று சொல்லியிருந்தார், உடனே  மைசூர்பாக்கினால்  பல் உடைந்து விட்டதா என்று குறுக்கு கேள்வி  கேட்காமல் தொடர்ந்து படியுங்கள் . கன்னத்தில் கையை வைத்து பல்லைத் தாங்கிக் கொண்டே விஷ்ணு   ,”ராசி ,உனக்குத் தெரியமா. ? இப்பொழுதெல்லாம்  பலகாரம் செய்யும்  முறை  You Tubeஇல்  பதிவேற்றுகிறார்கள். நீ தீபாவளிக்குப்  பலகாரம் செய்வதை நானும்  You Tube இல்  போடுகிறேன். அதனால் செய்முறையை  சொல்லிக் கொண்டே   “மைசூர்  பாக்”  செய் ” என்று  சொல்ல ராசிக்கு  உற்சாகம் தொற்றிக் கொள்ள ,  டிவியில்  ஒளிபரப்புவதாக நினைத்துக் கொண்டாள் . ‘ நாளைக்கு செய்யட்டுமா ‘என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். மறு நாள் வெண்டைக்காய் சாம்பார்,  சேனைக்கிழங்கு ரோஸ்ட் , சாலட் எல்லாம் டேபிளில் வைத்தாள் .பின் விஷ்ணுவைப் பார்த்து, ‘ டைனிங்  டேபிள் மேல் எல்லாம் இருக்கிறது .நீங்களே போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுங்கள்.. மைசூர்பாக்  செய்ய வேண்டுமில்லையா ? அதற்காக நான் பியூட்டி பார்லர் போய் வருகிறேன் . ” என்று சொல்லவும் விஷ்ணு  குழப்பதில் … ‘ பார்லருக்கா ? ‘ “ஆமாம். நீங்கள் தான்  You tube இல் போடுவதாக சொன்னீர்களே. அதற்காகத்  தான்.” பல்வலியுடன் சும்மா இல்லாமல் ,தானே எதையோ சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டதாகப் பட்டது விஷ்ணுவிற்கு. ‘ ஆனால் இனி மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை ‘  நினைத்துக் கொண்டார் விஷ்ணு. கிட்டத்தட்ட  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்தாள் ராசி. அவளைப் பார்த்தால் ஏதோ கல்யாண ரிசப்ஷ்னிற்கு  செல்பவள் போல் இருந்தாள்.  நல்ல கரு நீலத்தில் பட்டுப் புடைவை, மேட்சிங்  ப்ளவுஸ், கைகளில் நீல வளையல், கழுத்தில் நீலக்  கல் பதித்த அட்டிகை சகிதமாக வந்து நின்றாள் . ‘ அழகாகத் தானிருக்கிறாள் . ‘ நினைத்துக்  கொண்டார்  விஷ்ணு. ” ஆனால் ‘You Tube” என்று தானே சொன்னேன். அதுவும் மைசூர் பாக்  செய்வதைப் பற்றித் தானே .” விஷ்ணு  நினைத்துக் கொண்டிருக்கும் போதே ……. டைனிங் டேபிள்  அலங்காரமானது. அதன் மேல்   கடலை  மாவு , சர்க்கரை, நெய் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். இப்பொழுது  விஷ்ணு  வீடியோ ரெக்கார்டிங் ஆரம்பித்தார். ‘கிளாப்  ’செய்யாதது தான் பாக்கி. ராசி  கடலை மாவை ,சர்க்கரைப்  பாகில் போட்டு ,நெய்யையும், விட்டு கிளறிக் கொண்டிருக்க விஷ்ணு டைரக்டர் ஆனார் . அவள் மைசூர்பாக்  செய்வதை விடவும் அட்டிகையை சரி செய்வதற்கும், புடைவைத் தலைப்பு  அழகாய்  தெரிவதற்கும் பிரயத்தனப் பட்டாள் . ‘ இதில் எங்கே  மைசூர்  பாக்  நன்றாக வரப் போகிறது. இதை எதற்கு அப்லோட் செய்வது ? ‘நினைத்துக் கொண்டார். ஆனால் ராசி விட மாட்டாளே . Ipad உடன் இங்குமங்கும் அலைந்து பல கோணங்களில் ”  மைசூர் பாக் ” செய்வதைப்  படமாக்க முயற்சி  செய்யலானார். மைசூர் பாக் கிளறி, தட்டில் கொட்டி, துண்டு போட்டாகிவிட்டது.அதை ருசி பார்ப்பதையும் வீ டியோ  எடுத்தே ஆக வேண்டும்  என்று ராசி அடம்பிடிக்க  . ஒரு துண்டை எடுத்து விஷ்ணு கையில் கொடுத்து  வாயில் போடச் சொன்னாள்  ராசி. அவரை  ” Guninea Pig ”  ஆக்கியதோடு  நிற்கவில்லை ராசி.விஷ்ணு  ருசி பார்ப்பதை இப்பொழுது  ராசி படமாக்கிக் கொண்டிருந்தாள் . விஷ்ணு மைசூர்பாக்கை  வாயில் வைத்துக் கடிக்க  ’கடக்’ என்று சத்தம். கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே வாயில் என்னவோ கடிபட்டதே என்று எடுத்துப் பார்க்க , ரத்த வெள்ளத்தில்  பல். வாய் கொப்பளித்து விட்டு  வந்தார் விஷ்ணு.  பல் எடுக்க  மைலாப்பூர்  போக அவசியமில்லாமல் போய் விட்டது . ” மைசூர்பாக் ” வில்லனாகி விட்டது பல்டாக்டருக்கு. ஆனால் அதுவும் பதிவாகி விட்டதே .இதை எப்படி எடிட் செய்வது?  கீழ் வீட்டில் இருக்கும் மணி(software engineer) நினைவிற்கு வர  அவனிடம் ipad ஐக் கொடுத்து ,  எடிட் செய்து அப்லோட் செய்ய சொன்னாள்  ராசி. சிறிது நேரத்திற்கெல்லாம்  ’டிங் டாங்” பார்த்தால் மணி. ” எடிட் செய்து அப்லோடும் செய்து விட்டேன் ” என்று சொல்லிவிட்டு , எப்படி பார்க்க வேண்டும் என்றும்  சொல்லி சென்று விட்டான். அதற்குப் பிறகு ராசியை  கையில் பிடிக்க  முடியுமா.தீபாவளி வேலையுடன் அவ்வப்போது  You Tube ஐயும்  பார்த்துக் கொண்டேயிருந்தாள் . அன்று முழுக்க  ஐம்பது பேர்  பார்த்திருந்தார்கள் என்று  ஹிட்ஸ்  சொல்லியது. அதில் நாற்பத்தி எட்டு முறை  ராசியே பார்த்தது தானிருக்கும். வெறுத்துப் போனாள்  ராசி. அதைப் பற்றி  மறந்தும் விட்டாள் . இரண்டு நாட்களானது. அவளுடைய மெயிலைப் பார்க்கும் போது ஒரு விளம்பர நிறுவனத்திடமிருந்து  ”எங்கள்   விளம்பரத்தை  உங்கள் வீடியோவில்  போட்டுக் கொள்கிறோம்  .அதற்கு  சன்மானமும் தரப்படும்.  விருப்பமிருந்தால் தொடர்பு  கொள்ளவும்” என்று எழுதியிருந்தார்கள் இதை விஷ்ணுவிடம் சொல்ல இருவரும் திரும்பவும்  youtube பக்கம் செல்ல , பார்த்தால்  லட்சோப லட்சம் ஹிட்ஸ். அதில் கமெண்ட்ஸ் வேறு வந்திருந்தது. “இது என்ன கலாட்டா ”  நினைத்தார் விஷ்ணு. (“Gangnam  Style ” டான்ஸிற்கு  போட்டியாகிவிடுமோ?) ஷாலினி என்பவர்,” உங்கள் புடைவை  மிகவும் அழகாக இருக்கிறது ” என்று கமெண்ட் எழுதியிருந்தார். சரோஜா என்பவர்,”இந்த அட்டிகை நன்றாக இருக்கிறது. எந்தக் கடையில் இந்த டிசைன் கிடைக்கும் ? என்று கேட்டிருந்தார். லலிதா  என்பவர்  , உங்கள் தோடுகள்  கலர்   சரியில்லை  என்று நக்கீரராய்  மாறியிருந்தார். கணேஷ் என்பவர் ” உங்கள் கணவர் பல் எப்படி இருக்கிறது “என்று  விசாரிக்க . பல் டாக்டர் இந்த வீடியோவைத் தடை செய்ய கோர்ட் படி ஏறியிருக்கிறார். திரும்பவும்  வீடியோவைப் பார்த்தால் ,குறும்புக்கார மணி ,எடிட் செய்யாமலே  அப்லோட் செய்தது தெரிய வந்தது. இது எதைப் பற்றியும் கவலைப் படாத ராசி,  போனை எடுத்து தெரிந்தவர்களுக்கு எல்லாம்   தன்  வீடியோவிற்கு வந்த ஹிட்ஸ் பற்றி  தமுக்கு அடித்ததோடு , விளம்பரக் கம்பனிக்கு வேறு  மெயிலடித்துக் கொண்டிருக்கிறாள். ” இது எப்படி  இவ்வளவு ஹிட்ஸ் ? ” ராசிக்கே  ஆச்சர்யம்  தான். ஆனால் விஷ்ணுவிற்கோ  பயம் பிடித்துக்  கொண்டது. இது  எங்கே போய் முடியப் போகிறதோ  ?  ராசி தன்னை  ”வீடியோகிராஃ பராக்கி “விடுவாளே   என்கிற பயத்துடன் இருக்கிறார் விஷ்ணு. அவர் பயத்தைப் போக்குவீர்களா யாராவது? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்  எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். image courtesy—google. 8 விஷ்ணுவின் கணக்கு [] விஷ்ணு  காபி  போட்டது  படித்திருப்பீர்கள். கணக்குப் போட்டது தெரியுமா? படியுங்கள்…….. ” இந்த வருடம் எப்படியாவது  ராசியின் பிறந்தநாளை நினைவில்  வைத்து, அவளுக்கு நல்ல பரிசுப் பொருள்  ஒன்றைக் கொடுத்து ,அசத்தி விட வேண்டியது தான் ”  என்று நினைத்துக் கொண்டார்  விஷ்ணு. ஆமாம். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நினைத்துக் கொள்வார் விஷ்ணு. ஆனால்  கரெக்டாக மறந்து விடுவது, சகஜமாகிப் போனது விஷ்ணுவிற்கு. முதலில் எல்லாம் ராசிக்கு ஏமாற்றமாய் இருந்தது.  போகப் போக  பழகி விட்டது. ஒரு மாதம் முன்பிருந்தே  தனக்குத் தானே நினைவு  படுத்திக் கொண்டேயிருந்தார். என்ன வாங்குவது? யோசித்து  யோசித்து மண்டை குழம்பியது  தான் மிச்சம். சரி, அதற்குத் தான்  இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே என்று எப்பொழுதும் போல்  நினைத்துக் கொண்டார். அந்த நாளும் வந்தது. காலை  எழுந்ததும் சொல்ல வேண்டாம். மாலை வரை  சஸ்பென்ஸை  நீட்டித்து விட்டு  , பிறகு அவள் எதிர்பாராத சமயத்தில்  சொல்லலாம், என்று  சஸ்பென்ஸ் வைத்தார். காலை எழுந்ததும் ,அவருக்கு  வாழ்த்து சொல்ல வேண்டும் போல் தானிருந்தது. ஆனாலும்  அடக்கிக் கொண்டார்.  வேண்டாம் ,அவளை அவள் விரும்பும்  சேலையை  வாங்கிக் கொடுத்து விட்டு ,சொல்லலாம் என்று அமைதி கொண்டார். “காலை எழுந்ததிலிருந்து பார்க்கிறேன்.  ஒரே சிந்தனையில் இருக்கிறீர்களே! ” என்றாள்  ராசி. ” அதெல்லாம் ஒன்றுமில்லை,……….. ஒன்றுமில்லை ”  விஷ்ணு பதட்டமானார்.. அவரை  பார்த்து ,” என்ன என்றைக்குமில்லாமல் ஒரு மாதிரி பதட்டத்துடன்  இருக்கிறார் போல் தெரிகிறார். ” நினைத்துக் கொண்டு, ” உடம்பிற்கு ஒன்றுமில்லையே! ” கேட்டாள்  ராசி. ” நான் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று சொல்லியும்  சற்றே நம்பிக்கையில்லாமலே தான் , கவலயுடன் , தன்  வேலைகளை  பார்க்கச்  சென்றாள்  ராசி. ” அவருக்கு BP  செக் செய்து நாளாகி விட்டதே.டாக்டரிடம், செக் அப்பிற்கு போக வேண்டுமோ ?” சின்ன வருத்தம் எட்டிப் பார்த்தது ராசி மனதில். ” சிறிது நேரத்திற்கெல்லாம்  ஆபிஸ் கிளம்பினார்  விஷ்ணு. போகும் போது ,” இன்று மாலை  நான்  சீக்கிரம்  வந்து விடுகிறேன்.  மாலை வடபழனி  போய் வருவோம். ” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். “சரி , என்ன திடீர் கரிசனம் இவருக்கு. ? எவ்வளவு நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  இன்றைக்குப் போகலாம் என்கிறாரே!” எப்படியோ  இன்றைக்காவது  போகலாம் என்கிறாரே. முருகன் தரிசனம் கிட்டப் போகிறது  நமக்கு என்று மகிழ்ந்து  கொண்டாள் ராசி. மத்தியானம்  ஒரு மணியிருக்கும். போன்  அலறி ,ராசியின் மதியத் தூக்கத்தைக்  கெடுத்தது. போனை   காதருகில் கொண்டு போனதும்  ”ஹலோ” என்றார் விஷ்ணு. ” இவர் ஏன்  இந்த நேரத்தில் பொன் செய்கிறார்.நானே போன்  செய்தால் கூட  ஆபீஸ் நேரத்தில்  ஏன்  தொல்லை செய்கிறாய்  ” என்று தானே எரிந்து விழுவார். என்று சற்றே  ஆச்சர்யபட்டாள்  ராசி. ” இன்றைக்கு ஏதாவது உனக்குப் பிடித்த ஸ்வீட் செய்யேன் ” என்று விஷ்ணு கேட்க , நன்றாகவே குழம்பினாள்  ராசி. “என்ன ஆச்சு  இவருக்கு? சென்ற வாரம்  நான்   டாக்டரிடம் ” ஹெல்த் செக் ” செய்தேனே.அதில் ஏதாவது வில்லங்கமோ? எனக்கு ஏதாவது  வியாதி  வந்து முற்றி விட்டதோ? அது தான்  என் மேல் கரிசனமாய் பேசுகிறாரோ?.  எனக்குப் பிடித்த ஸ்வீட் செய் என்கிறாரே. எல்லாமே நார்மல் என்று  டாக்டர் சொன்னதாய் தான் நினைவு. என்னையே தானே ஸ்வீட் செய்ய சொல்கிறார். நாம் நினைப்பது போலெல்லாம் இருக்காது” என்று சமாதானபடுத்திக் கொண்டாலும், தன்  மேல் சுய பச்சாதாபம் , மேலோங்கியது ராசிக்கு.திரும்பவும் எல்லா மெடிக்கல் ரிபோர்ட்ஸ்  எல்லாம்  எடுத்துப் பார்த்ததில் ,  எல்லாமே  நார்மல் என்று தான் சொல்லியது  ரிப்போர்ட் . மாலை  ஆறு மனிக்கு ,. ” கோவிலுக்கு  போக  ஏன்  கிளம்பவில்லை ?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் விஷ்ணு. பதிலே சொல்லாமல்  உட்கார்ந்திருந்தாள்  ராசி. “என்ன யோசனை? கிளம்பி வாயேன் . எத்தனை நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். போய்  முருகனிடம்  நீ வேண்டுமென்கிற நேரம் , பேரம்  பேசி, வேண்டி ,விண்ணப்பித்து விட்டு வா.  நான் உன்னை அவசரப்படுத்தவே  மாட்டேன் .ஆமாம். உன்னை ஸ்வீட் செய்ய சொன்னேனே ? என்ன ஆச்சு ? “என்று விஷ்ணு கேட்க. (விஷ்ணுவிற்கு மனதில் நம் ‘டேமேஜ்’ ஆன   பெயர் இன்று  ’ரிப்பேர்’ செய்யப்பட்டு விட்டது  என்கிற பெருமிதம் தோன்றியது.) “இல்லை ஒன்றும் செய்ய வில்லை.  அலுப்பாக இருந்தது . அதனால் தான் செய்யவில்லை.” ராசி.சொல்ல. ” சரி வா, முருகனை  நீ பேட்டி கண்டு விட்டு  வா. நாம் அப்படியே சரவண பவனில்  சாப்பிட்டு விட்டு  வருவோம்.” என்று ராசியை கிளப் பி அழைத்துக் கொண்டு போனார். காரில்  ,எப்பொழுதும்  வீணை  காயத்ரியின்   ” raga waves ‘  அலை அடித்துக் கொண்டிருக்கும்.இன்றோ  ராசிக்கு மிகவும் பிடித்தமான  சூலமங்கல  சகோதரிகள்  ” காக்க காக்க  ” என்று பாடிக் கொண்டிருக்க , ராசிக்கு தன்  ஆரோக்கியத்தின் மேல்  சந்தேகம் வலுத்தது.கோவிலுக்குப் போய்  அர்ச்சனைத்   தட்டு வாங்கிக் கொண்டு , இருவரும் உள்ளே சென்றனர். . “இன்றைக்கு அர்ச்சனை உன் பேரில் தான் ” இது விஷ்ணு. ” ஏன் ? என் பெயருக்கு? ” குரல் நடுங்கக் ராசி கேட்கவும்,  விஷ்ணு  , “நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.எப்பவும் போலவேயில்லையே நீ. என் மேல் கோபமோ? உன் பிறந்தநாளை மறந்து விட்டேன் என்று தானே! உனக்கு சஸ்பென்சாக  இருக்கட்டுமே என்று தான்  காலையிலிருந்து வாழ்த்த்து சொல்லவில்லை.. இப்பொழுது சொல்கிறேன்,” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று சொன்னவுடன், தன்னுடைய  பயம் பொய்யான திருப்தியில், ‘கலகல’வென்று  சில்லறையைக் கொட்டியது போல் சிரித்தாள் ராசி. ” பார்த்தியா  இந்த வருடம்  கரெக்டாக நினைவில் வைத்து உன்னை வாழ்த்திவிட்டேனே . அது மட்டுமில்லை. உனக்குப் பிடித்த புடைவை வேண்டுமானாலும்  வாங்கிக் கொள் ,இன்று” என்று சொல்லவும். தெரு என்பதையும் மறந்து ,சிரிப்பை அடக்க மாட்டாமல்,  ராசி சிரிக்க  விஷ்ணு குழம்பினார். “என்ன ஆச்சு சொல்?  எதற்கு சிரிக்கிறாய்?” விஷ்ணு கேட்க, “சிரிக்காமல்  என்ன செய்ய?  மனைவியின் பிறந்த நாளை கரெக்டாக ஒரு மாதம் கழித்துக்  கொண்டாடுகிற கணவர் நீங்களாகத் தான் இருக்க முடியும் . என் பிறந்த நாள் ,போன மாதம் இதே தேதி.. .(என் அர்த்தமற்ற பயம் பொய்  ஆனது ஒரு பெரிய சந்தோசம் என்று  மனதில் நினைத்துக் கொண்டு),  நீங்கள்  இன்று தான் என் பிறந்தநாள் என்று சொல்வதும் எனக்கு சந்தோஷமே! ஏன்  சொல்லுங்கள் பார்க்கலாம்?” ராசி வினவ  , விஷ்ணு முகத்தில் லிட்டர் கணக்கில்  அசடு வழிய, தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்க,  ராசியே சொன்னாள் , ” இன்று கணித மேதை  ராமானுஜம் பிறந்த  நாள்.  அவருடையதைப்போல் என் பிறந்த நாளும் இன்றே   என்று சொன்னதற்காகத் தான் ” என்று சொல்லிக் கொண்டே  , ராஜ அலங்காரத்தில்  கம்பீரமாய்  வேலுடன் நின்ற வடிவேலனை  பார்த்து ,இனம் புரியாத நிம்மதியுடன் ,கன்னத்தில் போட்டுக் கொண்டாள் ராசி. ஆக ,விஷ்ணுவின் கணக்கு  இந்த வருடமும் தப்பு தான். ராசிக்கோ, தன்  கணக்கு தப்பானதில்   பெரு மகிழ்ச்சியே! சரி, ராசிக்கு “Belated Wishes” சொல்லி விட்டு  அந்தத் தம்பதியை , தனிமையில் விட்டு விட்டு  நாமும் நகர்வோம். image courtesy–google. 9 ராசியின் ஆசை ” [] பேப்பரிலிருந்து  தலையை வெளியே எடுத்த  என் கணவர்,” இங்கே பார்…எல்லோரும் புது வருடத் தீர்மானம் எடுக்கிறார்களாம் . நாமும்  சில புது வருடத் தீர்மானம்  எடுத்துக் கொள்வோம் ” என்று சொல்ல , நான் முந்திக் கொண்டு ,” இந்த வருடமாவது  டாக்டரிடம் செக்கப்  செய்து  கொள்ள  மறுப்பு சொல்லாமல்  வர வேண்டும் சரியா ?”  என்று அவருக்கு ஆணையிட்டேன். அவரோ  என் முன் ஒரு பெரிய லிஸ்ட்  வைத்தார். ” சரி .நீ சொல்வதை  நான் செய்கிறேன். நான் சொல்வதை  நீ கேட்டால் ” என்று அவர் ஆரம்பிக்க  ” இவர்   என்ன பெரிதாக  சொல்லி விடப் போகிறார் ” என்ற அலட்சியத்தோடு  கவனிக்க  ஆரம்பித்தேன். ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போனார். ” முதலில் , புடவைக் கடைக்குப்  போனால் ஒரே மணி நேரத்தில்  செலக்ஷன்  முடித்து விட வேண்டும் ” ( முடிகிற காரியமா அது?…) அப்புறம்…. என்றேன்….. ” இனிமேல் லேப்டாப்பை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது  நான் மெயில் செக் செய்ய  என் வசம் வேண்டும்  ” ( யோசிப்போம்) பிறகு…… ” இனிமேல் சினிமா, சீரியல்  பார்க்கும் போது  உணர்ச்சி வசப்பட்டு அழுவதை நிறுத்த வேண்டும் ” என்று அவர் தொடர   நான் பிரேக் போட்டேன். “ஸ்டாப்……ஸ்டாப் …. மீதி  தீர்மானங்களை  2015 இல்  பார்த்துக் கொள்ளலாம் “என்று  சொல்லிவிட்டு டைனிங்  டேபிளிற்கு சென்று  சாப்பிட உட்கார்ந்தோம். ” இன்றைக்கு நன்றாகவே சமைத்திருக்கிறாய் ” என்று சர்டிபிகேட் கொடுக்க , அவருக்குப் பிடித்த  முருங்கைக்காய் சாம்பாரும், வெண்டைக்காய் கறியும் . அதனால் தான் எனக்குப் புகழாரம்  என்று நினைத்துக் கொண்டேன். சாப்பிட்டு முடித்தவுடன்  நேராக லேப்டாப் பக்கம் வந்தேன். ” பார்த்தியா…..இப்ப தானே சொன்னேன். நான் எப்பொழுது மெயில் செக்  செய்வது? ” என்று அவர்  பிடிவாதம்  பிடிக்க, ‘ கொஞ்ச நேரம் தான்… ‘ என்று அவரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு , பிரவுசரைத் திறந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் , ” டிங்..டாங் ” கதவைத் திறந்தேன். அரக்குக் கலரில் பச்சை நிற பார்டர்  போட்ட மைசூர் சில்க் சாரியில். ஒரு பெண்மணி, கையில்  ஹேண்ட்பாக்,  காதுகளில்  வைரத்தோடு  மின்ன, கைகளில் பவுன் வளையல்கள்  அடுக்காய்  குலுங்க நின்றிருந்தார். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும்  பணத்தின் ‘ பள  பள ‘ ” யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? ” என்றேன். ” இங்கே ராஜலக்ஷ்மி பரமசிவம் என்பது………”என்று இழுத்தார் ” ஏன்? நான் தான் …..” என்றேன். ” ஓ …….நீங்கள் தான் அரட்டை அடிப்பவரா?” ” நீங்கள்  யார்?  நான் என்ன அரட்டை அடிக்கிறேன்………ஒன்றும் புரியவில்லையே  ” என்று குழப்பத்தோடு ,” உள்ளே வாங்க …உட்காருங்கள் ” வரவேற்றேன். ” நான் ராசி. என் கணவர் பேர் விஷ்ணு  ” என்று அந்தப் பெண்மணி சொல்லவும் மொத்தமாய்  அதிர்ச்சியில் உறைந்தேன். ” இதென்ன கலாட்டா? நான் கற்பனையில் உருவாக்கிய  கதாபாத்திரங்கள் பெயரில்  நிஜமாகவே ஒரு  தம்பதியா?  என் போதாத காலம்  ,என் பதிவை வேறு படித்து விட்டு  சண்டைக்கு வந்தார் போல் தெரிகிறார். கேஸ் போட்டு விடுவாரோ ? ஓய்வு  காலத்தில் கோர்ட் படியேற வேண்டுமோ?என் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்  அவரிடம்,” ரொம்பவும் சூடாக இருக்கிறீர்கள். ஏதாவது ஜூஸ் குடிக்கிறீர்களா?  என்று ஐஸ் வைக்க முயற்சித்தேன். அந்தப் பெண்மணியோ  , முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ,” எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்  . உட்காருங்கள் .” என்று சொல்லவும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. வக்கீலுக்குக் கொடுக்கும் ஃ பீஸ், மான  நஷ்ட ஈடு  , எல்லாம்  கன ஜோராய் என் முன்னே நாட்டியமாட, என்ன சொல்லப் போகிறாரோ? கவலையுடன் அமர்ந்தேன். ” ஆமாம். உங்களுக்கு எழுத ஒன்றுமே கிடைக்கவில்லையா? நானும் என் கணவரும் தான் மாட்டினோமா ?” என்று ஆரம்பித்தார். ” இல்லையே நான் ராசி–விஷ்ணு பற்றி அவ்வப்போது தானே எழுதுகிறேன். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் என் கற்பனையே! உங்கள் பெயர்  ராசி என்பது, நீங்கள் இப்ப சொல்லித் தான் எனக்குத் தெரியும் ” என்று என் நிலைமையை பக்குவமாக சொல்ல  ஆரம்பித்தேன். பெண்மணியோ இடை மறித்து, ” நான் நம்ப மாட்டேன். எங்கள் வீட்டிற்கு வந்து நடப்பதைப்  பார்த்து எழுதுவது போல் தெரிகிறது . ” என்று உஷ்ணமானார். ” நான் ஒரு நாள் ஜுரத்தில் படுத்தது கூடத் தெரிந்திருக்கிறதே! அன்று என் கணவர் அதான் விஷ்ணு  அவரே அதிசயமாய் தான் அடுக்களைக்குள் நுழைவார். அவரே என் மேல் பரிதாபப்பட்டு  காபி போட முயற்சித்தால் அதைக் கிண்டல் செய்வது போல் ஒரு பதிவு.” ” பள்ளி படிக்கும் வயதில் சரித்திரத்தில் நான் வீக் என்று தெரிந்து கொண்டு  நக்கலடிக்கிறீர்கள்.” “நான் ஸ்மார்ட் போன் வாங்கி  அதை உபயோகிக்கத தெரியாமல் விழி பிதுங்கியது  எப்படித் தான் உங்களுக்கு எட்டியதோ……உடனே ஒரு பதிவு. அவரும் நானும் சின்ன செல்ல சண்டை போட்டால் அதை  படம் போட்டுக் கதை சொல்லாதது தான் பாக்கி. ” ” இதெல்லாம் கூட  போகட்டும். எனக்குப் பாட்டுப் பாட ஆசை, சந்தர்ப்பம் தான் வாய்க்கவில்லை  என்று அவரிடம் நான்  அங்கலாய்த்துக்  கொண்டிருந்ததை சூப்பர் சிங்கராகிறேன் என்ற பெயரில்  தாறுமாறாய்  என்னைப்பற்றி எழுதி எதற்கு அவமானப் படுத்துகிறீர்கள் ? “என்று கண் நிறைய நீருடன் கலங்க , எனக்குப்  பார்க்க பாவமாயிருந்தது. “தீபாவளிக்கு மைசூர்பாக் செய்தால் ஒரு கிண்டல், விஷ்ணு  என் பிறந்தநாளை  மறந்தது   உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆயிற்று. அதையும் காமெடியாக்கி எழுதிவிட்டீர்களே!” “அதோடு மட்டுமல்லாமல் எல்லாப் பதிவுகளிலும்  விஷ்ணு பாவமாய் என்னிடம்  மாட்டிக் கொண்டாற்  போல் ஒரு தோற்றம் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்.” ” நீங்கள் இப்படி எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்கள் வட்டம் இருக்கிறார்களே  அவர்கள் ஒரு படி மேலே போய் விடுகிறார்கள்.” விஷ்ணு பாவம்….விஷ்ணு பாவம்…… என்று எழுதி அவருக்கு ஒரு அனுதாபமன்றமே  ஆரம்பித்து விட்டார்கள்.அது போதாதென்று, ஒருவர் தன்  வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்ட .நான் செய்த மைசூர்பாக் ஒரு லோடு  வேண்டும்  என்று சொல்கிறார். இன்னொருவரோ “பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள் விஷ்ணு ” என்று கருத்திடுகிறார். என்ன தான் நீங்களும் உங்கள் வாசகர் வட்டமும் என்னைப்பற்றி  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்  என்று புரியவில்லை. ” என்று” படபட 1000வாலா “ பட்டாசாக  வெடித்து முடித்தவுடன் எனக்கு ராசியின் விருப்பம் என்ன என்று புரிந்து விட்டது. ” ராசி…. கவலையே படாதீர்கள். உங்கள் வருத்தம் எனக்கு விளங்கி விட்டது. இந்தப் புது வருடத்தில்  உங்களைப்பற்றி நான் எழுதப்போவதைப்  படிப்பவர்கள்., உங்களுக்கு ரசிகர் மன்றம்  ஆரம்பிப்பது உறுதி. கவலையை விடுங்கள்….. “என்று சொல்லும் போதே…… ” காபி போடுகிறாயா? ” குரல் கேட்டது. என் கணவர் போலிருக்கிறதே. இவ்வளவு நேரம் எங்கே போனார் என்று யோசிக்கும் போதே யாரோ என்னை அசைப்பதை உணர முடிந்தது. ஓ …..விரலை லேப்டாப்பில் வைத்ததுக் கொண்டே  சோபாவில் கண்ணசந்திருக்கிறேன். அதில் ராசி கனவு வேறு.  என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது. ‘என்ன சிரிக்கிறாய்? பகலிலேயே தூக்கமா? ” என்றவரின் கேள்விக்கு பதிலாக  ” ஒன்றுமில்லை “சொல்லிக் கொண்டே   காபி போடப் போனேன் . (ராசிக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும்  ராசி கனவில் வந்தது புத்தாண்டு பதிவுக்கு ஆச்சே ) உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!  image courtesy—–google.