[] 1. Cover 2. Table of contents மரச் சிற்பம்   ஷோபாசக்தி   shobasakthi@hotmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/mara_sirppam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation மரச் சிற்பம் 1 பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு இப்போது வாழ்வதற்கு அபாயகரமான நிலமாகிவிட்டது. குற்றக் குழுக்களதும் கலகக்காரர்களதும் கரிய பாதங்களுக்குக் கீழே இந்தத் தூய நிலம் அழுந்திகொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கற்றதன்மையிலிருந்து மீள்வதற்கு நமக்கு ஒரேயொரு வழியே உள்ளது. பிரான்ஸின் தனித்த பெருமைக்குரிய, மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் சின்னமான மரச் சிற்பத்தை மீண்டும் நாங்கள் பொது முற்றங்களில் நிறுவ வேண்டும்.” பிரெஞ்சு மொழியில் உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பலவற்றுக்கும் செல்லப் பெயர்கள் அன்றாடப் பேச்சுகளில் சரளமாகப் புழக்கத்திலுண்டு. பொலிஸ்காரனுக்கு ‘கோழி’ என்பதும் பெண்ணுக்கு ‘தெள்ளுப்பூச்சி’ என்பதும் ஆண்குறிக்கு ‘சேவல்’ என்பதும் செல்லப் பெயர்கள். ‘மரச் சிற்பம்’ என்ற செல்லப் பெயரால் குறிப்பிடப்படுவது கில்லட்டின். ‘லே மிஸரபிள்’ நாவலில் விக்டர் ஹியூகோ “ஒருவர் தனது சொந்தக் கண்களால் கில்லட்டினைப் பார்க்காத வரை, மரணதண்டனை குறித்து அவருக்கு அலட்சியம் இருக்கலாம். ஆனால், அதைப் பார்த்ததும் அதிர்ச்சியால் அவரது மூளை கலங்கிவிடும்” என்று சொல்கிறார். விக்டர் ஹியூகோவை நான் முழுமையாகவே விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய கண்களால் அந்த மரச் சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன். அது தற்செயலாக நிகழ்ந்ததுதான். பாரிஸ் நகரத்திலுள்ள ‘ஓர்ஸே’ அருங்காட்சியகத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற தலைப்பைக் கடனாகப் பெற்று ‘குற்றமும் தண்டனையும்’ என்றொரு கண்காட்சி நடந்தது. அந்தத் தலைப்பால் கவரப்பட்டுத்தான் நான் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கேதான் பிரான்ஸிலிருக்கும் கட்டக் கடைசி கில்லட்டினைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த மரச் சிற்பம் பதினான்கு அடி உயரமானது. அந்தச் சிற்பத்தின் பீடம் ஏழடி நீளமும் இரண்டடி அகலமுமானது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மனிதரை அந்தப் பீடத்தில் குப்புறப் படுக்க வைப்பார்கள். கைகளும் கால்களும் உடலோடு சேர்த்துத் தடித்த கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். மரச் சிற்பத்தின் ஆசனவாய் போன்று தோற்றமளிக்கும் துளையில் அந்த மனிதரின் கழுத்துப் பகுதி செருகப்படும். துளைக்கு இந்தப் பக்கம் அவரின் உடலும் அந்தப் பக்கம் தலையும் இருக்கும். அவரது ஆன்மா அப்போது எங்கிருந்திருக்கும்? மரச் சிற்பத்தின் கிரீடம் போல உச்சியில் தொங்கிக்கொண்டிருக்கும் கனமான, கூர்மையான கத்தி விசையுடன் இறக்கப்பட்டதும் தலை முண்டத்திலிருந்து எகிறி விழும். அதை ஏந்துவதற்குக் கீழேயொரு அழுக்குப் பிரம்புக் கூடை வைக்கப்பட்டிருக்கும். பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட எல்லா கில்லட்டின்களும் இந்த வடிவத்திலேயே இருந்ததாகச் சொல்ல முடியாது. புரட்சி நடுவர் மன்றம் நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மரணதண்டனை விதித்துக்கொண்டேயிருந்ததால், சுலபமாகக் கையிலேயே எடுத்துச் சென்று காரியத்தை முடித்துவிட குட்டியான நடமாடும் கில்லட்டின்கள் கூட அப்போது நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டன. ஓர்ஸே அருங்காட்சியகத்திலிருந்து ஏதேதோ குழப்பமான எண்ணங்களுடன் சித்தம் கலங்கியவனாகத்தான் நான் வெளியே வந்தேன். அந்த அருவருக்கத்தக்க இரத்த மரச் சிற்பம் அன்று முழுவதும் என்னுடைய மூளையை விட்டு அகல மறுத்தது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் அந்த மரச் சிற்பத்தால் தலை கொய்யப்பட்டவர்கள் எனது தலைக்குள் அரூபப் படிமங்களாக, ஒலி எழுப்பாமல் பேசிக்கொண்டே அலைந்தார்கள். பாரிஸ் நகரத்தின் புரட்சிச் சதுக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த மரச் சிற்பங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் அவர்கள் எதைப் பேசியிருப்பார்கள்? என்ன நினைத்திருப்பார்கள்? பேரரசர் பதினாறாம் லூயி மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் தனது தலையை நுழைக்கும்போது, “நான் எனது எதிரிகளை மன்னிக்கிறேன்” என்று கூறியது உண்மைதானா? மகாராணி மரி அந்துவானெட் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு; கழுத்தில் கத்தி பிசிறில்லாமல் இறங்குவதற்காக அவரது நீளமான தலைமுடி பிடரிக்கு மேலாகச் சிரைக்கப்பட்டபோது, அவர் எதை நினைத்திருப்பார்? மகாராணி தனது எட்டு வயது மகன் லூயி -சார்ள்ஸைக் கட்டாயப்படுத்தி அவனோடு செக்ஸ் வைத்துக்கொண்டார் என்று புரட்சி நடுவர் மன்றம் குற்றம் சாட்டியபோது “உங்களுக்கல்ல! இங்கிருக்கும் தாய்மார்களுக்கு நான் சொல்கிறேன்…ஒரு தாய்மீது சுமத்தப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க இயற்கை என்னைத் தடுக்கிறது” என்று சொல்லியிருந்தாரே… அந்த இயற்கையைத்தான் அந்தக் கடைசி நிமிடத்தில் அவர் நினைத்திருப்பாரா? புரட்சியின் முக்கிய தலைவர்களான தாந்தோனும்,ரொபஸ்பியரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்த வருடமே புரட்சிச் சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டபோது, அவர்கள் எதை நினைத்திருக்கக் கூடும்? அவர்களது தாரக மந்திரமான சுதந்திரம் -சமத்துவம் – சகோதரத்துவம் என்பதைக் கடைசி விநாடியில் அவர்கள் உச்சரித்திருப்பார்களா? புரட்சிச் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் “துரோகிகளைக் கொல்லுங்கள்!” என்று ஆர்ப்பரித்த வார்த்தைகள்தான் அவர்களது காதுகளில் விழுந்த கடைசி வார்த்தைகளா? கில்லட்டின் படுகொலைகளைத் தூண்டிய புரட்சி நாயகர்களில் அதிமுக்கியமானவரான ‘மக்கள் தோழன்’ மாராவின் இருதயத்தில் சமையல் கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற இருபத்துநான்கு வயது யுவதி சர்லோத் கோர்தே இந்த மரச் சிற்பத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் என்ன நினைத்திருப்பார்? “நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்! இந்த மனிதரின் உத்தரவால் இலட்சக்கணக்கானவர்கள் கில்லட்டினில் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் இவரைக் கொன்றேன்” என்று மாராவின் பிணத்தின் முன்னே நின்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருடன் கடைசிவரை இருந்து அந்த அழுக்குப் பிரம்புக் கூடையில் தெறித்து விழுந்திருக்குமா? நான் பத்திரிகையை மேசையில் வீசிவிட்டு, நொறுங்கிவிழும் நிலையிலிருந்த ஜன்னலை மெதுவாகத் திறந்து கடல் காற்றை உள்ளே வரவழைத்தேன். மார்ஸேய் நகரத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்தப் பழைமையான தங்கு விடுதியில்தான் கடந்த ஒரு வாரமாக நான் தங்கியிருக்கிறேன். பாரிஸில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் ஏற்படும்போது, கொஞ்சம் வெப்பத்தையும் கடலையும் தேடிக்கொண்டு தெற்குப் பிரான்ஸிலுள்ள ஏதாவதொரு கடற்கரை நகரத்திற்கு நான் வந்துவிடுவேன். பழைமையைக் காப்பாற்றுவதில் இந்த விடுதி நிர்வாகம் கடும் கவனத்தைச் செலுத்துகிறது. விடுதியில் தங்குபவர்களுக்கு தினப் பத்திரிகையை இலவசமாக வழங்கும் கலாசாரத்தை நிறுத்தாத பிரான்ஸின் மிகச் சில தங்கு விடுதிகளில் இதுவுமொன்று. உளுத்துப்போயிருக்கும் அறைக் கதவின் கீழால் இன்று காலையில் அவர்கள் மடித்துத் தள்ளிவிட்ட சனியன் இப்போது என்னில் தொற்றிக்கொண்டு என்னை மூச்சுத் திணற வைக்கிறது. அறைக்குள் நுழைந்த காற்று என்னை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் சோர்வுக்குள்ளேயே தள்ளிவிட்டது. எழுதும் மேசையின் முன்னால் அமர்ந்து ஏதாவது எழுதுவதற்கு முயற்சித்தேன். ஓர் எழுத்தைக் கூட என்னால் எழுத முடியவில்லை. நேரம் காலை பத்தரை மணியாகிவிட்டது. கோப்பி ஒன்று குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே காலணிகளை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன். மறக்காமல் அந்தப் பத்திரிகைச் சனியனைச் சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டேன். அந்தப் பத்திரிகைக்காக அனபெல் அம்மையார் காத்திருப்பார். அனபெல் அம்மையாரை இந்த நகரத்திற்கு வந்த முதல் நாளே நான் சந்தித்திருந்தேன். நான் இந்த நகரத்திற்கு இரயிலில் வந்திறங்கும்போது, காலை ஒன்பது மணியிருக்கும். மதியம் பன்னிரண்டு மணிக்குத்தான் அறை கொடுப்போம் என்று விடுதி நிர்வாகி சொன்னார். அதுவரை நேரத்தைப் போக்குவதற்காக விடுதிக்கு எதிரேயிருந்த கஃபேக்குச் சென்றேன். தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த வட்டமான சிறிய மேசையொன்றைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துகொண்டேன். அதுதான் புகை பிடிப்பதற்கு வசதி. எக்ஸ்பிரஸோ கோப்பி ஒன்றுக்குச் சொல்லிவிட்டு, தெருவை வேடிக்கை பார்ப்பதும் சிகரெட் புகைப்பதுமாக நான் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோதுதான், அந்த கஃபேயை நோக்கி அனபெல் அம்மையார் மெது மெதுவாக நடந்து வந்தார். அவருக்குக் கிட்டத்தட்ட எழுபது வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது வெண்ணிறக் கால்களிலும் கைகளிலும் தாடையிலும் பொன்னிறத்தில் பூனை ரோமங்கள் மினுங்கின. முற்றாக நரைத்திருந்த தலையில் அங்கங்கே திட்டுத் திட்டாக முடிகள் உதிர்ந்திருந்தன. அவற்றை மறைப்பதற்காகவோ என்னவோ சிறுமிகள் கட்டும் வண்ண ரிப்பன்கள் சிலவற்றைத் தலையில் குறுக்குமறுக்காகக் கட்டியிருந்தார். அவரது சிறிய சாம்பல் நிறக் கண்களின் கீழே சதை திரண்டு அழுகிய தோடம்பழச் சுளைகளைப் போலத் தொங்கின. அனபெல் சராசரிக்கும் குறைவான உயரமுள்ளவர். ஆனால், கனத்த உடல்வாகு. கழுத்தும் கைகளும் கால்களும் பெருத்துக் கிடந்தன. உண்மையில் அவை வீக்கங்களாகத்தான் இருக்க வேண்டும். முழங்கால் வரைக்குமான கவுன் அணிந்திருந்தார். காலுறைகளைச் சுருட்டி விட்டிருந்தார். புடைத்திருந்த ஒரு துணிப் பையைக் கையில் சுமக்க முடியாமல் சுமந்துவந்தார். அவர் ஒரு குடி நோயாளி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுவதுபோல, அவரது முகம் காற்று நிரப்பப்பட்ட ரோஜா நிற பலூன் போல ஊதியிருந்தது. அனபெல் எனக்கு அருகிலிருந்த மேசையில் உட்கார்ந்துகொண்டார். அவர் மூச்சிரைக்கும் சத்தம் பெரிய புறாவொன்று குனுகுவதைப் போல எனக்குக் கேட்டது. பரிசாரகர் வந்து “நல்ல நாளாகட்டும் மேடம் அனபெல்! இன்று எப்படியிருக்கிறீர்கள்? நலம்தானே? நான் உங்களுக்கான கோப்பையை எடுத்து வந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மது நிரம்பிய சிறிய கண்ணாடிக் கோப்பையை அனபெலின் மேசையில் வைத்தார். அனபெல் கோப்பையை என் முகத்திற்கு நேரே தூக்கிக் காட்டிவிட்டு, ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்து, வெற்றுக் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்தார். பின்பு, தனது துணிப் பைக்குள்ளிருந்து கற்றையாகப் பத்திரிகைளை எடுத்து மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினார். எனக்குப் பொழுது போகாமல், அவர் என்ன வாசிக்கிறார் எனக் கண்களை எறிந்து பார்த்தேன். அவர் வாசித்தது எல்லாமே முந்தைய தின, முந்தைய வாரப் பத்திரிகைகளே. நான் அவரைக் கவனிப்பதை அனபெல் எப்படி உணர்ந்தார் என்று தெரியவில்லை… திடீரெனத் தலையை என் பக்கம் திருப்பி “நண்பரே! உங்களை முன்பு இங்கே பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லையே. எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய குரலில் இரண்டு விஷயங்களை நான் கவனித்தேன். அனபெலின் குரலில் ஆண்தன்மை மிகுந்திருந்தது. அந்தக் குரல் எந்தவித உணர்ச்சியோ பாவமோ இல்லாமல் ‘Votre attention, s’il vous plaît’ என இரயில் நிலையங்களில் தினமும் ஒலிக்கவிடப்படும் தட்டையான அறிவிப்புப் போலவே ஒலித்தது. அவர் எப்போதுமே இப்படித்தான் பேசினார். எல்லா உணர்ச்சிகளும் -அப்படி ஏதாவது அவரிடமிருந்தால் -ஒரே தொனியில்தான் அவரிடமிருந்து வெளிவந்தன. அடுத்தடுத்த நாட்களில் நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அனபெல் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்கு அந்த கஃபேக்கு வந்துவிடுகிறார். மாலை ஆறு மணிவரை அங்கேயே ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு கோப்பை மது வரவழைத்துக் குடித்துவிட்டுப் பத்திரிகைகளைப் படித்தவாறிருக்கிறார். அந்தப் பத்திரிகைகளைக் குப்பைத் தொட்டிகளிலும் தெருக்களிலும் அவர் சேகரிக்கிறார். எனக்கு தங்கு விடுதியில் தள்ளிவிடப்படும் பத்திரிகையை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, அனபெலிடம் கொடுப்பதை நான் வழக்கமாக்கிக்கொண்டேன். நான் விடுதியின் மாடிப்படிகளில் இறங்கி வரும்போது, மனம் ஆற்றாமல் மாடிப்படியிலேயே உட்கார்ந்து மீண்டும் ஒருமுறை அந்த மரச் சிற்பச் செய்தியைப் படித்தேன். எத்தனை தடவைகள் படித்தாலும் ஒரே செய்திதான் இருக்கும் என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாத அளவுக்கு அந்தச் செய்திச் சனியன் என்னுடைய மூளையை மழுங்கடித்துவிட்டது. நான் கஃபேக்குச் சென்றபோது, தாழ்வாரத்தின் இடது பக்க மூலையிலிருந்த மேசையின் முன்னே அனபெல் பத்திரிகையொன்றை வாசித்தவாறே அமர்ந்திருந்தார். “பொன்ஜூர் மேடம் அனபெல்” எனக் கூறிக்கொண்டே, கையில் எடுத்துச் சென்ற பத்திரிகையை அந்த மேசையில் வைத்துவிட்டு, அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டேன். இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஒரே மேசையில் அமர்ந்து குடிக்குமளவுக்கு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. என்னிடம் வந்த பரிசாரகர் “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? உடல்நலம் சரியாக இருக்கிறதல்லவா? இந்த உப்புக் காற்று சிலருக்கு ஒத்துவருவதில்லை. உங்களுக்கு கோப்பி எடுத்துவருகிறேன்” எனச் சொல்லிவிட்டுப் போனார். அப்போது அனபெல் வெடிப்புற்றிருந்த தனது மெல்லிய உதடுகளைக் குவித்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பத்திரிகையிலிருந்த மரச் சிற்பச் செய்தியை நான் அனபெலிடம் தொட்டுக் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்போது, அவருக்கான அடுத்த கோப்பை மது வந்துசேர்ந்தது. ஒரே மடக்கில் குடித்துவிட்டு, வாயைக் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டிருந்தார். நான் பொறுக்க முடியாமல் “நூற்றாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இரத்த மரச் சிற்பங்களை மீண்டும் தோண்டி எடுத்து இந்தக் காட்டுமிராண்டிகள் பொது முற்றங்களில் நிறுவப் போகிறார்களாம். அதையும் இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை வெளியிட்டிருக்கிறது” என்றேன். அனபெல் ஏதாவது இரண்டு வார்த்தைகளை -எப்போதும் போல உணர்ச்சியற்ற குரலில் – சொன்னால் கூட என்னுடைய மனது சற்று ஆறுதலடையும் போலிருந்தது. அனபெல் கைக்குட்டையை மடித்துக்கொண்டே சொன்னர்: “நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்புவரை மரச் சிற்பம் இயங்கிக்கொண்டேயிருந்தது. அது வெட்டிய கடைசித் தலை இந்த நகரத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது.” அனபெலுக்கு காலையிலேயே போதை ஏறிவிட்டது, அதனால்தான் உளறுகிறார் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால், நான் இதுவரை பழகிப் பார்த்ததில் அனபெல் ஒருபோதுமே போதையால் உளறியது கிடையாது. அவர் எப்போதுமே திருத்தமாகவும் திட்டவட்டமாகவும்தான் பேசுகிறார்… இரயில் நிலைய அறிவிப்புப் போல. “என்ன சொல்கிறீர்கள்…நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்பாகவா?” என்று நான் கேட்டேன். “10-ம் தேதி, செப்டம்பர் 1977, அதிகாலை 4.40 மணி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. இதை வாசிக்கும் உங்களால் நம்ப முடிகிறதா என்ன? ஜோன் போல் சார்த், சீமோன் து புவா, மிஷல் ஃபூக்கோ, ரோலோன்ட் பாத், பிரான்சுவா த்ரூபோ, கொடார்ட் என மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் அப்போது இங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1977-ல் பிரான்ஸின் அதிபராகயிருந்த கிஸ்கார்ட் தன்னுடைய இளம் வயதில், ஹிட்லரின் நாஸிப் படைகளை எதிர்த்துத் தீரமாகப் போராடியவர். இந்த மாமனிதர்கள் எல்லாம் வாழ்ந்த காலத்தில் இரத்த மரச் சிற்பம் எப்படி இயங்கியிருக்க முடியும்? எனவே, அனபெல் அம்மையார் ஏதோ நினைவுத் தடுமாற்றத்தில் பேசுகிறார் என்றே நான் முடிவெடுத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ள, அனபெல் அம்மையாரிடம் “யாரின் தலை வெட்டப்பட்டது?” என்றொரு குறுக்குக் கேள்வியைக் கேட்டேன். இப்போது அவரது நினைவுத் தடுமாற்றம் தெளிந்துவிடும். “ஹமிடா என்ற இருபத்தேழு வயது மனிதனைத்தான் கொன்றார்கள். அவனது குடும்பப் பெயர் ஜோண்டூபி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார். அனபெல் சொல்வதை இப்போது என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்! கொல்லப்பட்டவரின் குடும்பப் பெயர் முதற்கொண்டு தேதி, நேரத்துடன் சொல்கிறாரே. ஆனாலும், எனது சந்தேகம் முழுவதுமாகத் தீர்ந்ததாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிரெஞ்சு வரலாறு, பிரெஞ்சுப் பண்பாடு போன்றவற்றின் மீதான எனது தீவிர வாசிப்பில் எனக்கு இன்னும் நம்பிக்கையிருந்தது. எனவே நான் அனபெல்லிடம் “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டேன். சற்று நேரம் மவுனமாக இருந்த அனபெல் பரிசாரகரை அழைத்து இன்னொரு கோப்பை மது கேட்டார். மது வந்ததும் ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். அவர் பேசப் பேச நான் அவரை முழுமையாக நம்பத் தொடங்கினேன். நான் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன். அதே உணர்ச்சியற்ற குரலில் மிகத் தட்டையான பாவங்களோடு அனபெல் சொன்னார்: "ஹமிடா எங்களது வீட்டு மாடியறையில் சில காலம் தங்கியிருந்தான். எனக்கு அப்போது பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். அவன் துனிஷியன். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் வேலை தேடி இந்த நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கியவன். அவனுக்கு மரங்கள் வெட்டும் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. செபஸ்டியனும் அதே தொழிற்சாலையில்தான் வேலை செய்துகொண்டிருந்தார் -செபஸ்டியன் என்பது எனது அப்பா. சிறுவயதிலிருந்தே பெயர் சொல்லித்தான் நான் அவரை அழைப்பேன்- செபஸ்டியனுக்கு ஹமிடாவைப் பிடித்திருந்தது. ‘ஹமிடா புத்திசாலிப் பையன், கடுமையான உழைப்பாளி’ என்றெல்லாம் அடிக்கடி சொல்வார். இந்தப் பழக்கத்தில்தான் அவன் எங்களது மாடியறையில் வாடகைக்குக் குடியேறினான். அந்தக் காலத்தில் இந்த நகரத்திலிருந்த இளைஞர்களிலெல்லாம் பேரழகன் ஹமிடாவே என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கன்னங்கரேலென்ற சுருட்டை முடி. அகலமான நெற்றி. புன்னகைக்கும் ப்ரவுண் நிறக் கண்கள். கற்சிற்பம் போலக் கடைந்தெடுத்த உடல்வாகு. மென்மையாகவும் இனிமையாகவும் பேசி யாரை வேண்டுமானாலும் வசியம் செய்யக்கூடியவன். அவன் எங்கள் வீட்டில் தங்கியிருந்த காலத்தில்தான், அந்த மோசமான விபத்து நடந்தது. தொழிற்சாலையில் வண்டியொன்றின் சக்கரத்திற்கு அடியில் ஹமிடாவின் வலது கால் சிக்கிக்கொண்டது. அவனது வலது கால் தொடைக்குக் கீழே முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று செபஸ்டியன் என்னிடம் சொன்னபோது, நான் நாள் முழுவதும் அழுதவாறேயிருந்தேன். ஹமிடா நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்தான். அங்கே சந்தித்த ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளுடனேயே வசிக்கச் சென்றுவிட்டான். அந்தப் பெண்ணைக் கொலை செய்ததற்காகத்தான் அவனைக் கைது செய்தார்கள். அவன் கைதாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவனை வீதியில் தற்செயலாகப் பார்த்தேன். செயற்கைக் கால் அணிந்திருந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் நடந்தான். ‘அதே முகவரியில்தானே வசிக்கிறாய் அனபெல்?’ என்று கேட்டான். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நாளன்று செபஸ்டியன் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார். வீட்டுக்குத் திரும்பி வந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் குடிக்கத் தொடங்கினார். நாள் முழுவதும் குடித்துக்கொண்டேயிருந்தார்…" நான் பொறுமையிழந்து குறுக்கிட்டேன். “ஆனால், அந்த மனிதனை கில்லட்டினில்தான் வெட்டினார்களா அனபெல்?” ‘ஆம்’ என்பது போல அனபெல் தலையசைத்தார். நான் கண்களை மூடி அந்த மனிதன் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு வெட்டப்படும் காட்சியைக் கற்பனை செய்ய முயற்சித்தேன். அவனுடைய செயற்கைக் காலை என்ன செய்திருப்பார்கள்? அந்த மனிதனுடைய கடைசி நிமிடம் எதுவாக இருந்தது? ‘என்ன யோசிக்கிறாய்?’ என்பது போல அனபெல் என்னைப் பார்த்தார். மனதில் இருந்ததைச் சொன்னேன். பின்பு இருவரும் மவுனமாக இருந்தோம். அடுத்த கோப்பை மது வந்ததும், அனபெல் ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்துவிட்டு “நான் அதை உனக்குச் சொல்கிறேன்” என்றார். உணர்ச்சியற்ற அதே வறட்டுக் குரல்! 2 1977 செம்டம்பர் 9-ம் தேதியன்று, மரணதண்டனைக் குற்றவாளியின் கருணை மனுவை பிரான்ஸின் அதிபர் கிஸ்கார்ட் நிராகரித்தார். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு விசாரணை நீதிபதியான திருமதி. மொனிக் மாபெலிக்குச் சிறைச்சாலைத் தலைவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அடுத்த நாள் விடிகாலையில் திருமதி. மாபெலியின் முன்னிலையில் குற்றவாளியின் தலை மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் திணிக்கப்படவுள்ளது. மாபெலியைச் சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக வண்டியொன்று அதிகாலை நான்கு மணிக்கு மாபெலியின் வீட்டுக்கு வரும். இந்தத் தகவலைக் கேட்டதும் திருமதி. மாபெலி இலேசாகச் சஞ்சலமடைந்தார். குற்றவாளியின் முகம் அவரது மனதில் தோன்றி அவருக்கு ஒருவிதப் பதற்றத்தைக் கொடுத்தது. தனது மகன் ரெமியை விடக் குற்றவாளி ஒரு வயது மட்டுமே இளையவன் என்ற ஞாபகம் அவரது மூளையில் சிரங்கு போல பரவிக்கொண்டிருந்தது. வழக்கு விசாரணைகள் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கும் நேரம் வந்தபோது, குற்றவாளியின் வழக்கறிஞரான ஜோன் குடாரோ “மோசமான விபத்தில் தன்னுடைய காலை இழந்ததிலிருந்து ஹமிடா ஜோண்டூபி அதிர்ச்சியால் மனச் சமநிலை குழம்பிப் போய்விட்டார். எனவே மாண்புமிகு நீதிபதி கருணையுடன் இந்த அங்கவீனரை அணுகிக் குறைந்தபட்சத் தண்டனையே வழங்க வேண்டும்” எனக் கோரியது மீண்டும் இப்போது நீதிபதி மாபெலியின் காதுகளில் ஒலிக்கிறது. ஆனால், நடக்கவிருக்கும் இரத்தச் சடங்கிலிருந்து மாபெலியால் தப்பிக்கவே முடியாது. நாளை விடிந்ததும் நடைபெறப் போகும் நிகழ்வில் சட்டப்படி அவர் இருந்தே ஆகவேண்டும். மாலை ஏழுமணிக்கு திருமதி. மாபெலி தனது தோழி பஸ்ரியானாவுடன் திரையரங்குக்குச் சென்று திரைப்படமொன்றைப் பார்த்தார். திரைப்படம் முடிந்ததும் பஸ்ரியானாவின் வீட்டுக்குச் சென்றார். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்வதை நினைத்தாலே அவருக்குப் பதற்றமாகியது. அதிகாலை நான்கு மணிக்கு அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வாகனம் வரவிருக்கிறது. எனவே “நாங்கள் இன்னொரு திரைப்படம் பார்க்கலாமா?” என்று பஸ்ரியானாவிடம் மாபெலி கேட்டார். தோழிகள் இருவரும் நொறுக்குத் தீனிகளைத் தின்றவாறே தொலைக்காட்சியில் ஒரு படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் முடியும்போது, அதிகாலை ஒரு மணியாகிவிட்டது. மாபெலி சேர்வாகத் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணியாகிவிட்டது. அவரால் உறங்கவே முடியவில்லை. மூன்றரை மணிக்குக் கட்டிலை விட்டு எழுந்து தயாராகி, உத்தியோக உடைகளை அணிந்துகொண்டார். அன்றைக்குக் கடிகார முள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். சரியாக அதிகாலை நான்கு மணிக்கு அவரது வீட்டுக்குக் கார் வந்தது. மாபெலி காரில் ஏறி அமர்ந்துகொண்டார். காருக்குள் சாரதியோடு ஓர் அதிகாரி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். யாரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த வாகனம் ‘பூமெற்ஸ்’ சிறைச்சாலையை நோக்கி விரைந்தது. மாபெலி சிறைச்சாலையைச் சென்றடைந்தபோது, அவரை எதிர்பார்த்து எல்லோரும் தயாராக நின்றிருந்தார்கள். அங்கே ஓர் அணி உருவானது. அந்த அணியில் மாபெலி, அட்டர்னி ஜெனரல், குற்றவாளியின் வழக்கறிஞர், சிறையதிகாரிகள், காவலர்கள், மரச் சிற்பத்தை இயக்குபவர்கள், மதக் கடமையை நிறைவேற்றி வைக்கும் இமாம் என முப்பது பேர் இருந்தார்கள். அவர்கள் மரச் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி ஊர்வலமாக நடந்துபோனார்கள். இந்தச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் காலடிகள் தரையில் பதியாமலிருக்க பழுப்பு நிறக் கம்பளங்கள் பாதையில் விரிக்கப்பட்டிருந்தன. வழியில் ஒரு மூலையில் நாற்காலியொன்று இருந்தது. அங்கே மாபெலியும் இன்னும் சிலரும் நின்றுவிட, மற்றவர்கள் குற்றவாளியை அழைத்துவரச் சென்றார்கள். அவர்களோடு இமாமும் போனார். “குற்றவாளி படுத்திருக்கிறார்… ஆனால், தூங்கவில்லை” என்று ஓர் அதிகாரி மாபெலியிடம் தெரிவித்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து “குற்றவாளி இப்போது மரத்தாலான தனது செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்” என்று இன்னொரு அதிகாரி சொன்னார். அந்தப் பழுப்பு நிறத் கம்பளங்களில் கால்களை மெதுவாக வைத்துக் குற்றவாளி நடந்துவந்தார். அவரது கைகளில் முன்புறமாக விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. மாபெலியைக் கண்டதும் குற்றவாளி மெல்லிய புன்னகையுடன் மாபெலியின் கண்களைப் பார்த்தார். மாபெலி தனது கையிலிருந்த ஆவணங்களைச் சரி பார்ப்பது போல பாவனை செய்து கண்களைத் தாழ்த்திக்கொண்டார். மாபெலிக்கு அருகிலிருந்த நாற்காலியில் குற்றவாளி உட்காரவைக்கப்பட்டார். குற்றவாளி நிதானமான குரலில் “எனக்கு ஒரு சிகரெட் வேண்டும்” என்றார். ஒரு காவலர் குற்றவாளியின் உதடுகளில் சிகரெட்டைப் பொருத்திப் பற்ற வைத்தார். குற்றவாளி நிதானமாகப் புகையை ஓர் இழுப்பு இழுத்துவிட்டு, விலங்கிடப்பட்ட தனது கையை உயர்த்தி வாயிலிருந்த சிகரெட்டை எடுத்துக்கொண்டே “இந்தக் கைவிலங்கு மிகவும் இறுக்கமாக இருக்கிறது” என்றார். கைவிலங்கைத் தளர்த்திப் பூட்டுவதற்கு ஒரு காவலர் முயற்சித்தார். மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரான இளைஞரும் அப்போது குற்றவாளிக்கு வலதுபுறத்தில் நின்றிருந்தார்கள். கை விலங்கைத் தளர்த்தும் காவலரின் முயற்சி வெற்றியளிக்காததால், விலங்கை அகற்றிவிட்டுக் குற்றவாளியின் கைகளைக் கயிற்றால் பிணைப்பதற்குத் தீர்மானித்தார்கள். குற்றவாளியின் கைவிலங்கு அகற்றப்பட்டதும் சார்ல் செவாலியர் குற்றவாளியின் தோளைத் தட்டிக்கொடுத்து “பார் தம்பி… இப்போது நீ சுதந்திரமாக இருக்கிறாய்” என்று சொன்னபோது, மாவெலி திடுக்குற்றுப் போனார். அவர் ஓரக் கண்ணால் குற்றவாளியைப் பார்த்தார். குற்றவாளி எதையோ யோசித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஒருவேளை அவர் பிறந்து வளர்ந்த துனிஷியா நாட்டை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னுடைய பால்ய வயது ஞாபகங்களை மீட்டிப் பார்த்திருக்கக் கூடும். தான் கடந்துவந்த மெடிட்டரேனியன் கடலை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னால் கொல்லப்பட்ட தனது முன்னாள் காதலியைக் கூட அவர் நினைத்திருக்கலாம். குற்றவாளியின் கைகள் சில நிமிடங்களுக்குப் பிணைக்கப்படாமல் இருந்தன. அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் முற்றாக எரிந்து முடிந்துவிட்டது. குற்றவாளி இன்னொரு சிகரெட் கேட்டபோது, அவருக்கு அது வழங்கப்பட்டது. அவர் இப்போது முடிந்தளவுக்கு மெதுவாகப் புகையை இழுத்தார். இனித் தப்பிக்க முடியாது. அந்த சிகரெட் முடியும்போது, அவரது வாழ்க்கையும் முடியவிருக்கிறது. நிலமையின் தீவிரத்தை இப்போதுதான் உணர்ந்தது போல குற்றவாளியின் முகம் இறுகிக்கொண்டே வந்தது. இந்த சிகரெட் எவ்வளவு நேரத்திற்குத்தான் எரியும் என்று மாபெலி நினைத்துக்கொண்டார். குற்றவாளி தனது வழக்கறிஞரைத் தனக்கருகே அழைத்துப் பேசினார். கிசுகிசுப்பான குரல்களிலேயே குற்றவாளியும் வழக்கறிஞரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசி முடித்தபோது, குற்றவாளியின் இரண்டாவது சிகரெட்டும் முழுவதுமாக முடிந்திருந்தது. குற்றவாளி அந்த நாற்காலியில் அமர்ந்து கால் மணி நேரம் ஆகிவிட்டது. அப்போது இளைஞரான ஒரு காவலர் தனது கைகளில் ஒரு குடுவையோடும் அழகிய கண்ணாடிக் கோப்பையுடனும் வந்து “நீ சிறிது ரம் அருந்த விரும்புகிறாயா?” என்று குற்றவாளியிடம் கேட்டார். ‘ஆம்’ என்பதுபோலக் குற்றவாளி மெதுவாகத் தலையசைத்தார். அந்தக் காவலர் கண்ணாடிக் கோப்பையில் பாதியளவுக்கு மதுவை ஊற்றிக் குற்றவாளியிடம் கொடுத்தார். குற்றவாளி மிக மிக மெதுவாக மதுவை உறிஞ்சி மிடறு மிடறாகக் குடித்தார். அவர் மதுவை அனுபவித்துக் குடிப்பது போன்று பாவனை செய்கிறார் என்பது மாபெலிக்குப் புரிந்தது. உண்மையில், குற்றவாளி தான் உயிருடன் இருக்கும் நேரத்தை நீடிக்கவே விரும்புகிறார். உயிரோடு இருப்பதற்கு மேலதிகமாக ஒரேயொரு விநாடி கிடைத்தால் கூட அந்த விநாடியையும் அவர் வாழ்ந்துவிட ஆசைப்படுகிறார் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெளிவாகவே புரிந்தது. நேரத்தை நீட்டிக்கும் முயற்சியில் குற்றவாளி என்னவெல்லாமோ செய்தார். தனது வழக்கறிஞரிடம் மீண்டும் பேசினார். வழக்கறிஞரிடமிருந்து ஒரு தாளை வாங்கிப் படித்துவிட்டு, அதைச் சுக்குநூறாகக் கிழித்து ஒரு சிறையதிகாரியிடம் கொடுத்து “தயவு செய்து குப்பையில் போடுங்கள்” என்றார். அந்த அதிகாரி குப்பையை வாங்கித் தனது காற்சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டார். அந்த அதிகாரியிடம் “சிறையறையில் இருக்கும் என்னுடைய புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று குற்றவாளி கேட்டார். “சட்டப்படி நடந்துகொள்வோம்” என்றார் அந்த அதிகாரி. அப்போது, குற்றவாளி இமாமைத் தனக்கருகில் அழைத்தார். இமாம் அரபு மொழியில் ஏதோ சொல்ல, குற்றவாளியும் ஏதோ சொன்னார். அப்போது மாபெலிக்கு அருகில் நின்றிருந்த அதிகாரி ஒருவர் “தன்னை ஹலால் முறையில் வெட்டுமாறு கேட்கிறானா அவன்” என்று எரிச்சலோடு முணுமுணுத்தது மாபெலிக்குத் தெளிவாகவே கேட்டது. மாபெலி சடாரெனத் திரும்பி அந்த அதிகாரியைப் பார்க்க, அந்த அதிகாரி அசட்டுத்தனமான இளிப்புடன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார். கண்ணாடிக் கோப்பையில் இப்போது ஒரு மிடறு மதுதான் எஞ்சியிருக்கிறது. அதைக் குடித்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்பது குற்றவாளிக்கும் தெரியும். எனவே, குற்றவாளி தனது கடைசி முயற்சியைச் செய்தார். தனக்கு இன்னொரு சிகரெட் கொடுக்குமாறு மிகவும் பணிவாகவும் நிதானமாகவும் கேட்டார். ஒரு காவலர் இன்னொரு சிகரெட்டைக் குற்றவாளிக்கு வழங்க எத்தனித்தபோது, மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியர் குறுக்கிட்டார். அவர் தனது பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தார். “இந்த மனிதனிடம் நாங்கள் ஏற்கனவே மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அளவுக்கு மிஞ்சிய மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்டிருக்கிறோம். இப்போது அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் சொன்னதும், அட்டர்னி ஜெனரல் தலையிட்டு சிகரெட் வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்திவிட்டார். குற்றவாளி பணிவான குரலில் மறுபடியும் கேட்டார்: “எனது கடைசிச் சிகரெட்டைத் தாருங்கள்” அந்தக் குரல் மாபெலியின் இருதயத்தை நன்னியது. குற்றவாளி தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்பதில் மாபெலிக்கு எந்தச் சந்தேகமுமில்லை. இன்னொரு சிகரெட் புகைப்பதன் மூலம் மரச் சிற்பத்தில் படுப்பதை இரண்டு நிமிடங்கள் தாமதப்படுத்துவதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்துவிட முடியாது என்பது குற்றவாளிக்குத் தெளிவாகப் புரிந்திருக்கிறது. உண்மையில், படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளையும் பயன்படுத்தும் குழந்தையைப் போலத்தான் குற்றவாளியும் கில்லட்டின் படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றார். குற்றவாளி நாற்காலியில் அமர்ந்து இருபது நிமிடங்களாகிவிட்டன. இனியும் தாமதிக்க முடியாது என்பது போல குற்றவாளியைத் தவிர மற்ற எல்லோருமே ஆளை ஆள் பார்த்துக்கொண்டார்கள். கண்ணாடிக் கோப்பையிலிருந்த கடைசி மிடறு மதுவைக் குடிக்குமாறு ஓர் அதிகாரி குற்றவாளியை ஊக்கப்படுத்தினார். குற்றவாளி அதிகாரியின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, கண்ணாடிக் கோப்பையைக் கவிழ்த்து, கடைசி மிடறு மதுவை நிலத்தில் ஊற்றினார். ஒரு நிமிடம் அங்கே உண்மையான அமைதி நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை. குற்றவாளிக்கு இடது புறம் நின்றிருந்த மாபெலிதான் மவுனத்தைக் கலைத்தார். “நேரமாகிறது” என்று சிறையதிகாரியிடம் சொன்னார். நாற்காலியில் அமர்ந்திருந்த குற்றவாளியின் தோள்களை இரண்டு காவலர்கள் தங்களது வலுவான கைகளால் பற்றிப்பிடித்து, குற்றவாளியின் உடலைச் சற்றே இடது பக்கமாக மாபெலி நின்றிருந்த திசைக்குத் திருப்பினார்கள். உடனேயே வலது பக்கத்திலிருந்த சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரும் குற்றவாளியின் கைகளை ஆளுக்கொன்றாகப் பற்றிக் குற்றவாளியின் முதுகுக்குப் பின்புறமாக இழுத்துவைத்துக் கயிற்றால் கட்டத் தொடங்கினார்கள். அப்போது குற்றவாளியின் கண்கள் மாபெலியின் கண்களின் மீதிருந்தன. குற்றவாளியின் கண்களில் தெரிந்தது வேதனையா, இறைஞ்சுதலா, வெறுப்பா, ஆத்திரமா, குற்றவுணர்ச்சியா அல்லது இவை எல்லாமே அந்த ப்ரவுண் நிறக் கண்களில் இருந்தனவா என்பதை மாபெலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. கைகளைக் கட்டுவதற்குப் பதிலாகக் குற்றவாளியின் கண்களைக் கட்டிவிட்டால், தான் தப்பித்துக்கொள்ளலாம் எனக் குழந்தைத்தனமாக திருமதி. மாபெலி நினைத்துக்கொண்டார். குற்றவாளியின் கைகள் கட்டப்பட்டதும், சார்ல் செவாலியரின் உதவியாளர் ஒரு கத்தரிக்கோலை எடுத்து, குற்றவாளி அணிந்திருந்த சிறைச் சீருடையின் கழுத்துப் பகுதியை வெட்டத் தொடங்கினார். ஆனால், அவர் கோணல்மாணலாக அந்த நீலநிறச் சீருடையை வெட்டும்போது, கத்தரிக்கோலின் நுனி குற்றவாளியின் கழுத்துப் பகுதியில் குத்தி ஒரு சொட்டு இரத்தம் சிகப்பு மாணிக்கக் கல் போன்று குற்றவாளியின் பின்கழுத்தில் முகிழ்த்தது. அதைக் கண்டதும் குற்றவாளியைத் தவிர அங்கிருந்த எல்லோருமே பதறிப்போனார்கள். மாபெலி ‘அய்யோ’ என்று தன்னையறியாமலேயே சத்தம் போட்டுவிட்டார். சார்ல் செவாலியர் பாய்ந்து சென்று உதவியாளரிடமிருந்து கத்தரிக்கோலைப் பிடுங்கிக்கொண்டு “பன்றியே! உன்னால் ஒரு வேலையையும் சரிவரச் செய்ய முடியாதா? என்னுடைய வேலைக்கு உலை வைக்கவா பார்க்கிறாய் பைத்தியகாரப் பயலே” என அடங்கிய குரலில் உதவியாளரைத் திட்டினார். குற்றவாளி அப்போது அசையாமல் இருந்தார். சார்ல் செவாலியர் நீலநிறச் சீருடையின் கழுத்துப் பகுதியை இலாவகமாக வெட்டி எடுத்தார். இப்போது குற்றவாளியை எழுந்து நிற்குமாறு உத்தரவு பிறந்தது. குற்றவாளி மெதுவாக எழுந்து நின்று தலையைக் கவிழ்ந்து பூமியைப் பார்க்கிறார். அவர் இந்தப் பூமியில் எதை விட்டுச் செல்கிறார்? ஒரு மிடறு மதுவா? நாற்காலிக்கு அருகிலிருந்த ஒற்றைக் கதவு திறக்கப்பட்டது. குற்றவாளியை அழைத்துக்கொண்டு இந்த ஊர்வலம் மரச் சிற்பத்தை நோக்கிச் சென்றது. சிறையின் உள் முற்றத்தில் மரச் சிற்பம் நிமிர்ந்து நிற்கிறது. குற்றவாளி அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தனது கடைசிக் காட்சி ஆகாயமாக இருக்க வேண்டும் என்றுகூட அவர் விரும்பியிருக்கலாம். ஆனால், அந்தச் சிறை முற்றத்தில் கறுப்புத் திரை கட்டி ஆகாயம் மறைக்கப்பட்டிருந்தது. ஹெலிகொப்டரிலிருந்து யாராவது மரணதண்டனைக் காட்சியைப் படம் பிடிக்கலாம் என்பதால் ஆகாயத்தை மறைத்துவிட்டார்கள். சிறை முற்றத்தில் நிகழவிருப்பதை ஒரு சிறு பறவையால் கூடக் காண முடியாது. சார்ல் செவாலியர் ஒரு சிறிய செங்கம்பளத்தை எடுத்துவந்து திருமதி. மாபெலிக்கு முன்னால் தரையில் விரித்தார். குற்றவாளியின் செயற்கைக் காலை சார்ல் செவாலியரின் உதவியாளர் கழற்றி எடுத்தார். இப்போது குற்றவாளி நகரத் தொடங்கினார். கைகள் பின்புறமாக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த நிலையில், அவர் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிச் சென்று மரச் சிற்பப் பீடத்தில் தட்டுத் தடுமாறி ஏறிக் குப்புறப் படுத்துக்கொண்டார். அவர் இன்னொரு சிகரெட்டோ, குடி தண்ணீரோ கேட்டுவிடக் கூடாது என்று மாபெலி கடவுளை வேண்டிக்கொண்டார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து அகன்றுவிடவே மாபெலி விரும்பினார். மரச் சிற்பம் உயிர்த்து அசைந்தபோது, அதன் ஆசனவாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தது. வேறு வழியில்லை… இப்போது திருமதி. மாபெலி அந்த அழுக்குக் கூடையைப் பார்வையிட்டு அதனுள்ளே ஒரு தலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சார்ல் செவாலியர் அந்தக் கூடையைத் தூக்கிக்கொண்டு வந்து மாபெலியிடமும், அட்டர்னி ஜெனரலிடமும் காண்பித்தார். பின்பு, கூடையிலிருந்து தலையை எடுத்துச் சென்று, செங்கம்பளத்தில் மெதுவாக வைத்தார். அவரின் உதவியாளர் குற்றவாளியின் செயற்கைக் காலை எடுத்துவந்து அந்தத் தலையின் அருகே வைத்தார். ஒரு மனித முகம் காலில் முளைத்திருப்பது போல அது இருந்தது. 3 இதைப் படிக்கும் உங்களாலேயே அனபெல் அம்மையாரின் கடைசி வார்த்தைகளிலிருந்து மீள முடியவில்லையென்றால், இதையெல்லாம் நேரிலே கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய மனம் என்ன நிலையில் இருந்திருக்கும் என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதேவேளையில், இந்தக் கதையெல்லாம் அனபெல் அம்மையாருக்கு எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது என்ற குழப்பமும் என்னுள் எழுந்தது. இதுவொரு கற்பனைக் கதையாக இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்று என்னுடைய மனது தவிக்காமலில்லை. நான் அனபெல்லிடம் அதைக் கேட்டேவிட்டேன். “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” அனபெல் அதே உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்: "நீதிபதி மாபெலி அன்று அதிகாலை 5.10 மணிக்குத் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார். எழுதும் மேசையின் முன்னே உடனேயே உட்கார்ந்து, இரண்டு வெள்ளைத் தாள்களில் இதையெல்லாம் எழுதினார். எழுதிய தாள்களை எடுத்து மடித்து ஒரு கடித உறையினுள் வைத்து மூடி ஒட்டினார். அந்தக் கடித உறையைத் தனது மகன் ரெமியிடம் கொடுத்து, தன்னுடைய மரணத்தின் பின்பாக அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுமாறு சொன்னார். திருமதி. மாபெலி இறந்ததற்குப் பின்பாக அந்தக் கடித உறை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பு, எப்படியோ அந்த இரண்டு தாள்களும் ஒரு பத்திரிகையில் பிரசுரமாகின. கலங்கரைவிளக்கத்திற்குப் பக்கத்திலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து அந்தப் பத்திரிகையை நான் கண்டெடுத்தேன். அப்போது திடீரென ஒரு கேள்வி என்னுடைய மனதில் எழுந்தது. உடனடியாகவே அந்தக் கேள்வியை அனபெல்லிடம் கேட்டேன்: “தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவற்காக நீதிபதி. மாபெலி எழுதியது போலவே, தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?” அப்போது பரிசாரகர் மதுக் கோப்பையைக் கொண்டுவந்து அனபெல் முன்னால் வைத்தார். அனபெல் எதுவும் பேசாமல் அந்தக் கோப்பையை எடுத்துப் பொறுமையாக அருந்திக்கொண்டிருந்தார். அவர் அருந்தும் விதத்தைப் பார்த்தால், இந்த ஒரு கோப்பை மதுவை தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர் மிடறு மிடறாகக் குடித்துக்கொண்டேயிருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. சித்திரப்பேழை 1 ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி யசோதாவிடம் முனகினார்: “யசோ… என்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை” இவையே உண்மையில் அமரேசனின் இறுதி வார்த்தைகளாக இருந்தன. யசோதா தன்னுடைய சுட்டுவிரலை மென்மையாகக் கணவரின் மெல்லிய உதடுகளின் மீது வைத்து மூடியவாறே, கணவரின் கண்களைப் பார்த்தார். அப்போது, அமரேசன் சிரமப்பட்டுத் தனது உதடுகளைப் பிரித்துப் புன்னகைத்தார். அந்த வரண்ட உதடுகள் யசோதாவின் விரலை முத்தமிட்டு மூடிக்கொண்டன. இரண்டு நாட்கள் கழித்து அமரேசன் இறந்துபோனார். மின் மயானத்தில் அமரேசனின் சிறிய உடலை எரியூட்டிய பின்பாக, ஒரு சித்திரப்பேழைக்குள் பிடி சாம்பலை வைத்து யசோதாவிடம் கொடுத்தார்கள். தீக்கோழி முட்டையின் அளவிலும் வடிவத்திலுமிருந்த அந்தச் சித்திரப்பேழை கருப்பு நிறத்திலிருந்தது. அதன் தலையிலும் அடிப்பாகத்திலும் வெள்ளிப் பூச்சால் சித்திர வேலைப்பாடுகளிருந்தன. இடைப்பட்ட பகுதியில் வெண்ணிறத்தில் பொட்டுப் பொட்டாகச் சின்னஞ்சிறிய பெகோனியாப் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறிக்கப்பட்டிருந்தன. இப்போது யசோதா அந்தச் சித்திரப்பேழையுடன் வீட்டில் தனித்தே இருக்கிறார். இரண்டு அறைகளும் சிறிய கூடமுள்ள அந்த வீடு ஊரிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது. அந்த ஊரும்கூட பாரிஸ் நகரத்திலிருந்து தெற்குத் திசையாக அறுபது கிலோமீற்றர்கள் தொலைவில் தனித்துத்தான் இருக்கிறது. பாரிய தொழிற்சாலைகளுக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்குமாகவே அந்த ஊர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சலவைத் தொழிற்சாலையில் வேலை முடிந்து பிற்பகலில் யசோதா வீட்டுக்குத் திரும்பிவிட்டால், இந்தச் சித்திரப்பேழையே அவருக்குத் துணை. அமரேசனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்த மேசையிலிருக்கும் பிடி சாம்பல் சித்திரப்பேழையை எடுத்துத் தனது மடியில் வைத்தவாறே மணிக்கணக்காக யசோதா சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். முதுகில் வலியெடுக்கும் போது, சித்திரப்பேழையை ஏந்தியவாறே எழுந்து இரண்டு நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்துவிட்டு, மறுபடியும் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். சற்றே உடல் பெருந்திருந்த அவரது எடையால் சாய்மனை நாற்காலி தாழ்ந்து போகும். அய்ம்பத்தெட்டு வயதில் இயல்பாகவே ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் யசோதாவுக்கு இருந்தாலும், குறைந்தது இன்னும் ஆறு வருடங்களாவது அவர் சலவைத் தொழிற்சாலையில் இயந்திரங்களோடு இயந்திரமாக உழைக்கத்தான் வேண்டியிருந்தது. இந்த வீட்டை வாங்குவதற்காக வங்கியில் பெற்றிருந்த கடன்தொகையில் எஞ்சியிருக்கும் எழுபது மாதங்களுக்கான தவணைத் தொகையை இப்போது அவர் தனித்தே செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுடைய ஒரேயொரு மகள் மேதினி தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, பாரிஸ் நகரத்தில் நண்பர்களுடன் வசிக்கச் சென்றுவிட்டாள். அவள் ஏதோவொரு பிரச்சினையான இசைக் குழுவில் இருக்கிறாள் என்பது மட்டுமே யசோதாவுக்குத் தெரியும். அந்தக் குழுவில் இருக்கும் எல்லோரும் எப்போதுமே கருப்பு ஆடைகளையே அணிவார்கள். கால்களில் தடித்த பூட்ஸ்கள் போட்டிருப்பார்கள். உடலில் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் சித்திரப் பச்சை குத்துவார்கள். பச்சை குத்தியிருக்காத இடங்களில் உலோக வளையங்களை அணிந்திருப்பார்கள். மேதினியும் அப்படித்தானிருந்தாள். நடு நாக்கில் கூட அலகு குத்துவதுபோல ஓர் ஆணியைக் குத்தியிருந்தாள். அவள் எப்படி அந்த ஆணி நாக்கால் பாடுகிறாள் என்பது யசோதாவுக்குப் புரியவேயில்லை. மேதினி திடீரென ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் பெற்றோரைப் பார்க்க வருவாள். அவளிடமும் வீட்டுச் சாவி ஒன்றிருந்தது. வீட்டுக்கு வந்தால் ஒருநாளுக்கு மேல் தங்கும் வழக்கம் மேதினிக்குக் கிடையாது. இப்போது, தனிமையை எதிர்கொள்ள முடியாமல் யசோதாவின் உடல் புகைந்து, அது மேதினி மீதான எரிச்சலாக வீட்டுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது. அமரேசன் இறந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் மேதினி மறுபடியும் ஆடிப்பாடி வீட்டுக்கு வந்தாள். அவளுடைய முதல் கேள்வி “அம்மா! எதற்காகச் சாம்பல் பேழையை வீட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள்?” என்பதாகயிருந்தது. “நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் மேதினி… தன்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டுமென்று உன்னுடைய அப்பா இறப்பதற்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கிறார்…” தன்னுடையை உருண்டைக் கண்களை இன்னும் பெரிதாக விரித்து, ஒல்லி உடம்பைக் குலுக்கிக்கொண்டே யசோதாவை விநோதமாகப் பார்த்த மேதினி “அம்மா… கொம்யூனிஸ நாடு என்று எதுவும் இப்போது உலகத்தில் இல்லை” என்றவள் சற்று நிறுத்தி “எப்போதுமே இருந்ததில்லை” என்றாள். மேதினி பேசிய தோரணை யசோதாவுக்கு எரிச்சலூட்டியது. மேதினி எப்போதுமே தன்னைப் பற்றிச் சிந்திக்கிறாளே தவிர பெற்றோரைக் குறித்தோ அவர்களது விருப்பங்களைக் குறித்தோ அவள் என்றுமே அக்கறைப்பட்டதில்லை. யசோதா சற்று ஆத்திரத்துடன் “இல்லாத ஒன்றை உன்னுடைய அப்பா சொல்லியிருக்க மாட்டார் மேதினி” என்றார். “அப்பா தன்னுடைய கடைசி நாட்களில் எப்படியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா அம்மா? அவர் எல்லா விஷயங்களையும் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மூளை அவருக்கு முன்பே செத்துக்கொண்டிருந்தது…” “வாயை மூடு மேதினி! நீ அடுத்தமுறை வீட்டுக்கு வரும்போது இந்தச் சித்திரப்பேழை இங்கிருக்காது” என்று யசோதா சொல்லிவிட்டுச் சாய்மனை நாற்காலியிலிருந்து எழுந்து, சித்திரப்பேழையுடன் படுக்கையறைக்குள் சென்றுவிட்டார். 2 அமரேசனோடு வாழ்ந்த முப்பது வருடங்களின் ஒவ்வொரு பகலும் இரவும் ஈரச் சுண்ணாம்புச் சாந்துமீது இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரம் போன்று யசோதாவின் மனதில் பதிந்திருக்கிறது. வருத்தப்படக் கூடிய ஒரேயொரு தருணம் கூட அவற்றில் இருந்ததில்லை. அமரேசன் பொய் பேசியோ, கோபப்பட்டோ யசோதா பார்த்ததில்லை. தங்கள் இரண்டு பேருக்குமிடையில் எப்போதாவது அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று இப்போது யசோதா மீண்டும் மீண்டும் தனது மூளையைத் திருகி யோசித்துப் பார்த்தாலும், அப்படி எதுவுமே நிகழ்ந்ததில்லை என்பது அவரது மனதை ஆற்றுப்படுத்துகிறது. யசோதாவை முதன்முதலாகச் சந்தித்தபோது அமரேசன் எவ்வாறு மலர்ந்து சிரித்தாரோ, அதே புன்னகை அவர் இறந்துகிடக்கும் போதுகூட அவரது முகத்தில் இருந்ததை யசோதா பார்த்திருக்கிறார். சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த அமரேசனுக்கு அறுபத்து நான்கு வயதென்று யாராலும் சொல்லிவிட முடியாதென்றே யசோதா நினைத்துக்கொண்டார். யசோதா முதன்முதலில் அமரேசனைப் பார்த்தபோது, அமரேசன் என்ன தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்திலேயே சாகும் போதும் அமரேசன் இருந்தார். அவரது விஷயத்தில் காலம் உறைந்திருந்தது என்று கூடச் சொல்லலாம். அவர்களிடையேயான முதல் சந்திப்பு 1993-ம் வருடத்தின் கோடைகாலத்தில் நிகழ்ந்தது. அப்போது, இந்த ஊரிலுள்ள தொழிலாளர் விடுதியொன்றில் யசோதா தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் இரயிலைப் பிடித்து பாரிஸிலுள்ள தமிழ்க் கடைத்தெருவுக்குப் போய் ஒரு வாரத்திற்குத் தேவையான சமையல் பொருட்களையும் காய்கறிகளையும் வாங்கி வருவார். வீடியோக் கடையில் தவறாமல் ஏழு தமிழ்த் திரைப்பட வீடியோ கஸெட்டுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வார். ஒருநாளைக்கு ஒரு தமிழ்ப்படம். வேலை, சமையல், வீடியோப் படம், தூக்கம், எஞ்சிய வேளைகளில் கண்ணீர் இவற்றைத் தவிர அவருடைய வாழ்க்கையில் வேறெதுவுமே அப்போது இருந்ததில்லை. யாழ்ப்பாணத்திலிருக்கும் குடும்பத்தாருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுவதைக் கூட அவர் விரும்புவதில்லை. அவர்களோடு பேசுவது யசோதாவுக்குச் சித்திரவதையாகவும் பெரும் துக்கமாகவுமிருந்தது. தமிழ்க் கடைத்தெருவில் சினிமா விளம்பரங்களும், கோயில் விளம்பரங்களும், புலிகள் இயக்கத்தின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையும் நின்று நிதானித்துப் படித்துச் செல்வது யசோதாவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தமிழ்ச் சமூகத்திற்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும் போதுதான், அமரேசனின் ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை யசோதா பார்த்தார். அந்த விளம்பரம் உள்ளங்கையளவு வெள்ளைக் காகிதத்தில் பேனாவால் எழுதப்பட்டுக் கடைத் தெருவிலிருந்த எல்லா விளக்குக் கம்பங்களிலும் நன்றாகப் பசை போட்டு ஒட்டப்பட்டிருந்தது. பல விளக்குக் கம்பங்களிலிருந்து அந்த விளம்பரக் காகிதத்தை யாரோ சுரண்டிக் கிழிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு விளக்குக் கம்பத்தின் மீது வெற்றிலைச் சாறு உமிழப்பட்டிருந்தது. ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்ற விளம்பரத்தைப் படித்தபோது, உண்மையிலேயே யசோதா ‘மாவோயிஸ்ட்" என்பது ’பார்மஸிஸ்ட்’, ‘ரிசப்ஷனிஸ்ட்’ போன்றதொரு வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றே எண்ணிக்கொண்டார். மணமகன் ‘தமிழீழத்தை ஆதரிப்பவர்’ என்று தன்னை அறிவித்திருந்ததும் யசோதாவைக் கவர்ந்திருந்தது. துணிச்சலும் நேர்மையுமுள்ளவராகத்தான் இந்த மணமகன் இருக்கவேண்டும் என்று யசோதா நினைத்துக்கொண்டார். அவர் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, விளக்குக் கம்பத்தில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தின் இடது மூலையை மட்டும் பிய்த்தெடுத்துத் தனது கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார். அந்தத் துண்டில்தான் தொடர்புகொள்ள வேண்டிய மணமகனின் தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டிருந்தது. யசோதா நான்கு சகோதரிகளுடன் ஒரு தம்பியுடனும் பிறந்தவர். அவர்களோடு ஆடியோடி வளர்ந்த யசோதாவை பிரான்ஸில் தனிமை எரித்து அவரது உடலைப் புகைய வைத்தது. வாரம் தவறாமல் யாழ்ப்பாணத்திலிருந்து அவரது தந்தையார் அனுப்பிவைக்கும் கடிதங்களில், யசோதாவை உடனேயே கல்யாணம் செய்யுமாறும் அல்லது இலங்கைக்கே திரும்பி வந்துவிடுமாறும் எழுதப்பட்டிருக்கும். ‘எனக்கு விரைவிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது’ என்றுதான் யசோதாவும் பதில் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால், யாரைத் திருமணம் செய்வது, எப்படிச் செய்வது என்பதெல்லாம் யசோதாவுக்குத் தெரியவில்லை. அவருக்கு உற்றார் உறவினரென்று ஒருவர்கூட பிரான்ஸில் இருக்கவில்லை. அவர் வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலையில் ஒன்றிரண்டு காதல் கோரிக்கைகள் வரத்தான் செய்தன. ஆனால், அவை காதலுக்கான கோரிக்கைகள் மட்டுமே. யசோதாவைக் கல்யாணம் செய்யக் கோரிக்கையாளர்கள் தயாரில்லை. யசோதாவுக்கோ காதலைவிடக் கல்யாணமே முக்கியமானதாகயிருந்தது. அதை வைராக்கியம் என்றே சொல்லலாம். சில வருடங்களாகவே அவரது மனிதில் பழுக்கக் காய்ச்சிய ஆணியால் அந்த வைராக்கியம் ஆழமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. யசோதா நிச்சயமாகவே ஓர் அவசரக் குடுக்கை கிடையாது. தீர ஆலோசித்துத்தான் ஒரு முடிவெடுப்பார். முக்கியமாக, தீர ஆலோசிப்பது போலப் பாவனை செய்து மண்டையைக் குழப்பிக்கொண்டு பிரச்சினைகளை ஆறப்போடும் வழக்கம் அவரிடம் கிடையாது. அய்ந்து நிமிடங்களுக்குள் அவரால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். யசோதா கடைத்தெருவிலிருந்து தன்னுடைய அறைக்குத் திரும்பியதும் அய்ந்து நிமிடங்கள் கண்களை மூடி யோசித்தார். ஆறாவது நிமிடத்தில் ‘மணமகள் தேவை’ விளம்பரத்திலிருந்த இலக்கத்திற்குத் தொலைபேசி வளையத்தைச் சுழற்றினார். மறுமுனையில் “ஹலோ” என்ற குரல் ஒலிக்கும் தருணத்திற்காக யசோதாவின் காது குவிந்திருந்தபோது “அமரேசன்” என்ற சாந்தமான குரல் கேட்டது. “வணக்கம், என்னுடைய பெயர் யசோதா இராசையா… நீங்கள் ஒட்டியிருந்த மணமகள் தேவை விளம்பரத்தைப் பார்த்தேன்…” அய்ந்து நிமிடங்கள் மட்டுமே அவர்கள் உரையாடினார்கள். யசோதா வசிக்கும் ஊரிலுள்ள கோப்பிக் கடையொன்றில் வரும் சனிக்கிழமையன்று இருவரும் சந்தித்து நேரில் பேசுவதாக முடிவானது. சந்திப்பு நடந்த அன்று அமரேசன் கருப்பு நிறத்தில் காற்சட்டையும், கருநீல நிறத்தில் முழுக்கைச் சட்டையும் அணிந்து வந்திருந்தது யசோதாவுக்கு இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. அமரேசன் அய்ந்து அடிகள் உயரமேயுள்ள குள்ளமான மனிதர். அவரது உடலும் குழந்தையின் உடல்போல சிறிதாகவேயிருந்தது. யசோதாவின் வாட்டசாட்டமான உடல்வாகுக்குச் சுலபமாக அமேரசனைத் தூக்கித் தன்னுடைய இடுப்பில் வைத்துக்கொள்ள முடியும். அமரேசனுக்கு உருண்டைக் கண்கள். தலைமுடி சரியாக வாரப்படாமல் கலைந்து கிடந்தது. அடர்த்தியான மீசை வைத்திருந்தார். அமரேசன் அண்ணாந்து யசோதாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே யசோதாவுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டது யசோதாவுக்குப் பிடித்திருந்தது. கைகுலுக்கும் போது கண்களைப் பார்ப்பவர்களை யசோதா அரிதாகவே சந்தித்திருக்கிறார். அமரேசன் மிக மென்மையாகவும் சரளமாகவும் உரையாடலை ஆரம்பித்தார். அந்தச் சரளம் யசோதாவையும் தொற்றிக்கொண்டது. “யசோதா… நான் பிரான்ஸில் பத்து வருடகாலமாக இருக்கிறேன். மெக்கானிக்காக வேலை செய்கிறேன்” “நான் இங்கே வந்து இரண்டு வருடங்கள்தான்… பத்து வருட விசா இருக்கிறது” “நான் எண்பத்து மூன்றாமாண்டு கலவரத்தோடு இலங்கையிலிருந்து கிளம்பி வந்தவன்” “நான் கல்யாணம் செய்வதற்காக இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டவள்” என்றார் யசோதா. அமரேசனிடம் எதையுமே மறைத்துப் பேசக்கூடாது என அவர் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார். 3 யசோதாவுக்குப் பின்னாலும் வயதுக்கு வந்த நான்கு பெண் பிள்ளைகள் இருந்ததால், யசோதாவின் தகப்பனார் ‘மரம்’ இராசையா யசோதாவுக்குச் சீக்கிரமே மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார். அவர் மிகவும் பிடிவாத குணமுள்ள மனிதர். அதனால்தான் அவருக்கு ஊருக்குள் ‘மரம்’ என்ற பட்டம் கிடைத்திருந்தது. தகப்பனாரை எதிர்த்துப் பெண் பிள்ளைகள் பேசுவது என்ற பேச்சுக்கே அந்தக் குடும்பத்தில் இடமில்லை. சொல்லப்போனால் அவர்கள் தகப்பனாருடன் பேசுவதேயில்லை. அதுதான் அங்கே வழக்கம். இரண்டு மூன்று வருடங்களாகப் பலர் யசோதாவைப் பெண் பார்க்க வந்தும் எதுவுமே சரிவரவில்லை. இவ்வளவுக்கும் ‘மரம்’ இராசையாவிடம் காசுபணத்திற்கும் சொத்துப்பத்திற்கும் குறைவில்லை. மாப்பிள்ளைக்குப் பார்த்துப் பாராமல் சீதனம் கொடுப்பதற்கு அவர் தயாராகவேயிருந்தார். ஆனால், அதைத்தாண்டியும் யசோதாவின் தோற்றமே எல்லாவற்றுக்கும் குறுக்கே தடையாக நின்றது. காசுபணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைத்திருந்த ‘மரம்’ இராசையா கூடச் சற்றே தளர்ந்து போனார். யசோதாவைப் பெண் பார்த்தவர்களில் சிலர் ‘நோயாளிப் பெண்’ என்று யசோதாவின் காதுபடவே பேசியிருக்கிறார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு யசோதாவின் காதுகள் அவிந்துபோயிருந்தன. அப்போதெல்லாம் யசோதா அழுதுகொண்டிருந்தார். திமிங்கலத்தின் வாந்தி திரண்டு மீனாம்பல் ஆவது போன்று யசோதாவின் கண்ணீர் திரண்டு வைராக்கியமாகியது. ‘நான் கல்யாணம் பண்ணிக் குழந்தை பெற்று உங்களுக்கு முன்னே வாழ்ந்து காட்டுவேன்’ என்ற அந்த வைராக்கியத்தை நினைத்துக்கொண்டேதான் மேதினியைப் பெற்றெடுக்கும்போது யசோதா பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டார். இவ்வளவு மனத்திடமுள்ள பெண்ணைத் தாங்கள் பார்த்ததேயில்லை எனப் பிரசவம் பார்த்த தாதிகள் கூடச் சொன்னார்கள். யசோதா பருவமடைந்த பின்பாகத்தான் அவரது உடல் மாறத் தொடங்கியது. முன்தலையிலிருந்து முடிகள் உதிர்ந்து நெற்றி மேலேறியது. பின் கழுத்துத் தோலில் முதலில் விழுந்த சுருக்கம் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவிவிட்டது. அவரது சருமம் வரண்டுபோய் மீன் செதில் போல சிறிய சிறிய வெள்ளைப் புள்ளிகள் உடலில் பெருகத் தொடங்கின. இந்தக் குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்று யாழ்ப்பாணத்திலுள்ள எல்லா வைத்தியர்களும் கைவிரித்து விட்டார்கள். கொழும்புக்குப் போயும் பார்த்தார்கள். அங்கேயும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், அங்கே ஓர் ஆலோசனை கிடைத்தது. குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் காலப்போக்கில் இந்தக் குறைபாடு மறைந்துவிடும் எனச் சொன்னார்கள். இந்திரா காந்திக்கு இதேபோன்று குறைபாடு ஏற்பட்டபோது, நேரு புத்திசாலித்தனமாக மகளை சுவிற்ஸர்லாந்துக்கு அனுப்பி வைத்தார் என்றொரு தகவலைக் கூட ஒரு மருத்துவர் சொன்னார். இதற்குப் பின்பாகத்தான் யசோதாவின் தகப்பனார் வெளிநாட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். அவ்வாறாகத் தேடிய முதலாவது சம்பந்தமே கைகூடிவிட்டது. மாப்பிள்ளையின் பெயர் சந்திரன். பிரான்ஸில் ஒரு நிறுவனத்தில் மனேஜராக வேலை பார்க்கிறானாம். வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதால், சம்பந்தி வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே சீதனப் பணம் கேட்டார்கள். யசோதாவின் தகப்பனார் அதற்கும் சம்மதித்தார். தன்னுடைய மகளின் சருமப் பிரச்சினை குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள் என்று சம்பந்தி வீட்டாரிடம் விளக்கிச் சொல்லும்போது, ஆதாரத்திற்கு இந்திரா காந்தியின் கதையையும் சேர்த்தே சொன்னார். ‘மகளின் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பிவிட்டீர்கள்தானே’ என்று ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சம்பந்தியிடம் கேட்டார். யசோதாவின் உடல் தோற்றத்தைக் குறித்துச் சம்பந்தி வீட்டார் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாப்பிள்ளையின் சாதகக் குறிப்போடு யசோதாவின் சாதகக் குறிப்பு கச்சிதமாகப் பொருந்திப் போனதே அவர்களுக்குப் பெரும் திருப்தியளிப்பதாகச் சொன்னார்கள். நாடு இருக்கும் நிலையில் மாப்பிள்ளை இலங்கைக்கு வருவது சாத்தியமில்லை என்பதால், யசோதாவைப் பயண முகவர் மூலமாக பிரான்ஸுக்கு அனுப்பும் செலவையும் ‘மரம்’ இராசையாவே ஏற்றுக்கொண்டார். கடுமையாகப் பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் இத்தாலியிலிருந்து இரயிலில் எல்லையைக் கடந்து யசோதா பிரான்ஸுக்குள் நுழைந்தார். பாரிஸ் இரயில் நிலையத்தில் காத்திருந்த சந்திரன் கம்பளி ஆடைகளால் மூடப்பட்டுக் குளிரில் நடுங்கியவாறு இரயிலில் இருந்து இறங்கிய யசோதாவைப் பார்த்ததும் முகத்தில் ஒரு வரண்ட புன்னகையை மட்டுமே காட்டினான். மாப்பிள்ளை கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர் என்றுதான் மாப்பிள்ளையின் தகப்பனார் சொல்லியிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே சந்திரனின் தோற்றம் யசோதாவைக் கவர்ந்துவிட்டது. மிக நாகரிகமாக அவன் உடையணிந்திருந்தான். அவனுடைய நெற்றியில் இடைவிடாது நெளிந்துகொண்டிருந்த யோசனை ரேகைகள் அவனை அறிவாளி போலக் காண்பித்தன. யசோதாவைக் காரில் ஏற்றிக்கொண்டு சந்திரன் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வீடு வந்து சேரும்வரை இருவரும் மிகச் சில சம்பிரதாய வார்த்தைகளையே பேசிக்கொண்டார்கள்: “நீங்கள் எங்கே படித்தீர்கள்?” என்று சந்திரன் கேட்டான். “ஹொலி ஃபமிலி கொன்வென்ட்” “இங்கே உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்கிறார்களா?” எனச் சந்திரன் முகத்தைத் திருப்பாமலேயே கேட்டான். யசோதாவின் குடும்ப விபரங்களையெல்லாம் சம்பந்தி வீட்டாருக்கு ‘மரம்’ இராசையா தெளிவாகவே சொல்லியிருந்தார். சம்பந்தி வீட்டார் தங்களது மகனுக்கு அவற்றைச் சரிவரத் தெரிவிக்கவில்லைப் போலிருக்கிறது என்று யசோதா நினைத்துக்கொண்டார். “எனக்கு ஒரேயொரு தம்பி இருந்தான். அவன் இயக்கத்தில் இருந்தவன். கோட்டைச் சண்டையில் வீரச்சாவு” என்று யசோதா சொன்னபோது ‘அய்யோ’ என்றொரு மெல்லிய சத்தத்தை மட்டுமே எழுப்பிவிட்டுச் சந்திரன் முகத்தைப் பத்துத் தடவைகள் குறுக்குமறுக்காக வேகமாக அசைத்துக்கொண்டான். சந்திரன் பேசும் வார்த்தைகளை விட அவனது முகம் கோணல்மாணலாகிச் சொல்லும் செய்திகளே அதிகமாகயிருந்ததை யசோதா கவனித்தார். அவனால் முகத்தை ஒரு விநாடி கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை. சந்திரன் தன்னைத் தொட்டுப் பேசுவான் என யசோதா எதிர்பார்த்திருந்தார். அவன் தொடும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பல நாட்களாக மனதிற்குள் ஒத்திகையும் செய்திருந்தார். ஆனால், சந்திரன் வீதியிலிருந்த தனது பார்வையை யசோதாவின் பக்கம் திருப்பவேயில்லை. சந்திரனின் வீட்டுக்குள் நுழைந்ததும் யசோதா கம்பளி மேலங்கிகளைக் களைந்தபோது, யசோதாவின் கைகளையும் கழுத்தையும் நெற்றியையும் பாதங்களையும் சந்திரன் உற்றுப்பார்த்தான். “நீங்கள் கை கால் முகத்தைக் கழுவிக்கொண்டு வாருங்கள். அதற்குள் நான் என்னுடைய அப்பாவுக்குத் தொலைபேசி செய்து நீங்கள் வந்து சேர்ந்த செய்தியைத் தெரிவித்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே சந்திரன் குளியலறைக் கதவைத் திறந்துவிட்டான். குளியலறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டு, அந்தப் புதினமான குளியலறையை எப்படி உபயோகிப்பது, தண்ணீர் குழாயின் குழிழை எந்தப் பக்கம் திருப்புவது என்றெல்லாம் யசோதா யோசித்துகொண்டிருந்தபோது, சந்திரன் குரலை அடக்கிப் பேசும் மெல்லிய சத்தத்தை அவர் கவனித்தார். ஒரு கட்டத்தில் திடீரென சந்திரன் குரலை உயர்த்திக் கத்தினான்: “நீங்கள் கொழுத்த சீதனம் வாங்குவதற்காக ஒரு கொழுத்த எருமைமாட்டையா என்னிடம் அனுப்பி வைப்பீர்கள். இத்தனை வருடங்களாகக் குளிருக்குள் கிடந்து இரவு பகலாக நான் உழைத்து அனுப்பிய பணம் உங்களுக்குப் போதாதா? உடனேயே சீதனப் பணத்தை இந்தப் பெண்ணின் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுங்கள். அதுவரை என்னைத் தொலைபேசியில் அழைக்காதீர்கள். இவளைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. இவளுடைய தோல் பாம்புத் தோல் போலிருக்கிறது. அந்தச் செத்த தோலிலிருந்து ஒரு கெட்ட நாற்றம் வருவதை காரில் வரும்போதே நான் கவனித்தேன். இப்போது அந்தத் துர்நாற்றம் என்னுடைய வீடு முழுவதும் பரவியிருக்கிறது. இவளுடன் ஒரு விநாடி கூட என்னால் இருக்க முடியாது.” யசோதா தன்னுடைய உதடுகளைக் குவித்து உள்ளங்கையில் ஊதி, உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். அவருடைய உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. சட்டெனக் குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து கூடத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். அவருக்கு மயக்கம் வருவது போலிருந்தது. “போகலாம்” என்றவாறு சந்திரன் யசோதாவின் பயணப்பையைத் தூக்கிக்கொண்டான். யசோதாவின் இருதயம் மரத்துப் போயிருந்தது. மூளை மட்டும் அவ்வப்போது விழித்துப் பார்த்தது. இவன் தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகிறான் என்று அவரது மூளை சொன்னபோது, அவர் சட்டென நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உட்கார்ந்துகொண்டார். இலங்கைக்குத் திரும்பிப் போவதைப் பற்றி நினைக்கும்போதே யசோதாவின் கண்கள் மங்கலடைந்து மேலே செருகிக்கொண்டன. கல்யாணம் செய்வதற்காகத் தூரதேசம் சென்ற பெண் சில நாட்கள் கழித்துத் தனியாகத் திரும்பி வந்தால், அந்த அவமானத்தைக் குடும்பம் எப்படி எதிர்கொள்ளும்? அயலவரின் முகத்தில் எப்படி யசோதாவால் விழிக்க முடியும்? அவருக்கு இனி எப்போதுமே கல்யாணம் நடக்காது. “போகலாம்” என்று சந்திரன் மறுபடியும் சொன்னான். மெதுவாகத் தலையை நிமிர்த்திய யசோதா சந்திரனைப் பார்த்து “எங்கே?” என்று கேட்டார். “நீங்கள் தங்கப் போகும் இடத்திற்கு” என்று சந்திரன் மெல்லிய குரலில் சொன்னான். சற்று நேரம் கழித்து, அகதிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமொன்றின் வாசலில் யசோதாவை இறக்கிவிட்டுச் சந்திரன் புறப்பட்டான். அப்போதும் அவன் வரட்சியாகப் புன்னகைத்தது போல யசோதாவுக்குத் தெரிந்தது. எனவே யசோதாவும் உதடுகளைப் பிரித்துப் பற்களைக் காட்டினார். அதுவொரு வைராக்கியப் புன்னகை போலிருந்தது. 4 “அந்தக் கொழும்பு மருத்துவர் சொன்னது உண்மையில்லை. குளிர்ப் பிரதேசத்திற்கு வந்தும் என்னுடைய உடல்நிலையில் மாற்றமில்லை” என்று யசோதா சொன்னபோது, அமரேசன் தனது வலது கையை நீட்டி யசோதாவின் இடது கையைப் பற்றினார். சரியாக ஆறு வாரங்கள் கழித்து அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். யசோதா வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலை மிகப் பெரியது. மருத்துவமனைகள், ஆய்வுகூடங்கள், நட்சத்திரத் தங்குவிடுதிகள் போன்றவற்றுக்கான துணிகளை இங்கே வெளுத்து அனுப்பிவைப்பார்கள். சலவை செய்யும் பிரிவில் யசோதாவுக்கு வேலை. நூறு பேர்களுக்கு மேல் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலையில் இயந்திரப் பராமரிப்பாளராக அமரேசனுக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டது. தொழிற்சாலைக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறினார்கள். அமரேசனின் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களே வீட்டின் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. அந்த வீட்டில்தான் மேதினியை யசோதா கருத்தரித்தார். ஒரு சனிக்கிழமையன்று, பாரிஸ் நகரத்திற்குச் சென்றிருந்த அமரேசன் திரும்பி வரும்போது, முகத்தில் இரத்தக் காயங்களுடன் வந்தார். அவரது இடது கண் வீங்கிப் பொங்கியிருக்க, கீழுதடு கிழிந்திருந்து. “என்ன நடந்தது?” எனப் பதறிப் போய் யசோதா கேட்டபோது “அரைப் பாஸிஸ்டுகள் என்னைத் தாக்கிவிட்டார்கள்” என்று அமரேசன் முணுமுணுத்தார். அவர் மிகவும் பயந்து போயிருந்தார். அவரது உடல் நடுக்கம் நிற்பதாகயில்லை. இரவு முழுவதும் தூக்கத்திலேயே ஆங்கிலத்தில் புலம்பிக்கொண்டிருந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாரிஸ் நகரத்திற்குப் போவதென்றாலே அமரேசன் அஞ்சி நடுங்கினார். எப்போதாவது செல்ல நேரிட்டாலும் யசோதாவுடனேயே போவார். யசோதாவின் உடல் மறைவில் நிழல்போல யசோதாவைப் பின்தொடர்வார். யசோதாவோடு ஒரு கோப்பிக் கடையில் உட்கார்ந்து கோப்பி குடிக்கும்போதும் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தவாறேயிருப்பார். 5 படுக்கையறைக்குள் சித்திரப்பேழையுடன் உட்கார்ந்திருந்த யசோதாவுக்கு வீட்டுக் கதவு அறைந்து மூடப்படும் சத்தம் கேட்டது. ‘என்னிடமுள்ள வைராக்கியக் குணத்தில் பாதியாவது மகளிடம் இல்லாமல் போய்விடுமா’ என நினைத்துக்கொண்டே கூடத்திற்கு வந்தவர் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, மேதினி தெருவில் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. யசோதா மீண்டும் சித்திரப்பேழையுடன் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். திடீரென ஓர் உந்துதல் ஏற்படக் கைத்தொலைபேசியை எடுத்து, கூகுளில் ‘communist countries today’ என்று தட்டிப் பார்த்தார். சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் என்று கூகுள் பதிலளித்தது. ‘மேதினி வாயைத் திறந்தாலே பொய்’ என்று முணுமுணுத்தவாறே, அந்த நான்கு நாடுகளின் பெயர்களையும் கண் வெட்டாமல் யசோதா பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு, அவர் உலக வரைபடத்தை ஆராய்ந்தார். எல்லா நாடுகளுமே பிரான்ஸிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன. லாவோஸில் கடல் இல்லை. மற்றைய மூன்று நாடுகளின் பெயர்களையும் யசோதா மனதில் பதிய வைத்துக்கொண்டார். இவற்றில் ஏதாவதொரு நாட்டின் கடலில் அமரேசனின் சாம்பலைக் கரைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு தூரத்திலுள்ள முன்பின் தெரியாத நாடொன்றுக்கு எப்படித் தனியாகப் போவது என்று யசோதா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, மேதினியிடம் உதவி கேட்பதில்லை என்ற வைராக்கியம் அவரது மனதில் உருவாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் வைராக்கியம் கொள்ளும் இந்தக் குணம் நல்லதா கெட்டதா என்பது யசோதாவுக்குத் தெரியாது. ஆனால், கசங்கிப் போன மனதோடு தத்தளிப்பதைவிட, வைராக்கியத்தோடு வாழ்வதுதான் அவருக்கு இயல்பாகியிருந்தது. தன்னுடைய அப்பாவோடு மேதினி நீளநீளமாகப் பல விஷயங்களைப் பற்றியும் உரையாடுகையில் யசோதா அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். அந்த உரையாடல்களில் ‘வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தற்செயல்களே’ என்று அடிக்கடி மேதினி சொல்வாள். அவ்வாறானதொரு தற்செயல் விரைவிலேயே யசோதாவுக்கும் நிகழ்ந்தது. அன்றைக்கு யசோதா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும்போது, வழியிலுள்ள சிறிய பலசரக்குக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையைத் தனியொருவராக நடத்திவரும் வெள்ளைக்காரப் பெண்மணியான கரோலினுக்கு அறுபது வயதிருக்கும். யசோதாவுக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட முப்பது வருடப் பழக்கம். கரோலினுக்குப் பூனைகளோடுதான் சிநேகம் அதிகம். அவரது கடையில் எப்போதும் குறைந்தது பத்துப் பூனைகளாவது தூங்கிக்கொண்டிருக்கும். கரோலின் அணியும் ஆடைகளிலும் பூனைப் படம் இருக்கும். அவர் அணியும் தொப்பியில் பூனைப்படம் பொறிக்கப்பட்டிருக்கும். அன்றைக்குக் கடையின் கதவில் பூனை வடிவத்தில் கத்திரிக்கப்பட்டிருந்த ஒரு துண்டு வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தத் துண்டில் ‘வரும் முதலாம் தேதியிலிருந்து பத்து நாட்களுக்குக் கடை மூடப்பட்டிருக்கும்’ என எழுதப்பட்டிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டவாறே “கரோலின் ஏன் கடையை மூடுகிறாய்?” என்று யசோதா கேட்டார். “எனக்கும் ஓய்வும் மகிழ்ச்சியும் வேண்டாமா யசோ… பத்து நாட்கள் விடுமுறையில் போகிறேன். இந்தப் பூனைகளைக் கொண்டுபோய் எனது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு கியூபாவுக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியதுதான்.” “எங்கே கியூபாவுக்கா?” என்று படபடப்புடன் கேட்டார் யசோதா. ‘ஆம்’ என்று தலையசைத்த கரோலின் நின்ற நிலையிலேயே இடுப்பை நெளித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டார். யசோதா அய்ந்து நிமிடங்கள் கடைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தார். ஆறாவது நிமிடத்தில் கரோலினிடம் “நானும் உன்னுடன் வரட்டுமா கரோலின்?” என்று கேட்டார். இடுங்கியிருந்த தனது நீலக் கண்களை விரித்து யசோதாவை ஆச்சரியத்துடன் பார்த்த கரோலின் “அருமையடி பெண்ணே அருமை! என்னுடன் எலின் டீச்சரும் வரயிருக்கிறார். நீ இதுவரை அங்கே போனதில்லை இல்லையா… எங்களுடன் வா! நாங்கள் உனக்கு அற்புதங்களைக் காட்டித் தருகிறோம்” என்று துள்ளிக் குதிக்காத குறையாகச் சொன்னார். எலின் டீச்சரையும் யசோதாவுக்குத் தெரியும். எலினுக்கும் யசோதாவின் வயதுதான் இருக்கும். ‘கோட் டிவார்’ நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கருப்புப் பெண்மணி. மேதினி சிறுமியாக இருந்தபோது வீட்டுக்கே வந்து மேதினிக்குப் பிரெஞ்சு மொழி கற்பித்தவர். யசோதா சமைக்கும் குத்தரிசிச் சோற்றுக்கும் மீன் குழம்புக்கும் எலின் டீச்சர் பெரும் ரசிகை. “நீங்கள் கியூபாவில் கடற்கரைக்குப் போவீர்களா கரோலின்?” என்று யசோதா கேட்டபோது, “கியூபாவின் நான்கு பக்கமும் கடல்” எனக் கரோலின் மிகையான உற்சாகத்துடன் கைகளை அகல விரித்தார். யசோதா வீட்டுக்குத் திரும்பியதும், கரோலின் கொடுத்திருந்த பயண முகவரின் இலக்கத்திற்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். விமானச் சீட்டு, ஏழு பகலும் ஆறு இரவும் கடற்கரை நட்சத்திர விடுதிக்கான கட்டணம், மூன்று வேளை உணவு உட்பட ஆயிரத்து இருநூறு ஈரோக்கள் கட்டணம் என்று பயண முகவர் சொன்னார். கட்டணத்தைப் பத்து மாதத் தவணைகளில் செலுத்துவது என ஏற்பாடானது. யசோதா மேசையிலிருந்த சித்திரப்பேழையை எடுத்து இரண்டு கைகளிலும் ஏந்தித் தனது கண்களுக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு சித்திரப்பேழையை அதற்கான அட்டைப்பெட்டியில் வைத்து மூடினார். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. “Bonjour அம்மா” எனச் சொல்லிக்கொண்டே மேதினி உள்ளே நுழைந்தாள். 6 பாரிஸிலிருந்து புறப்படயிருந்த அந்த விமானம் வடக்கு அத்திலாந்து சமுத்திரத்திற்கு மேலாகப் பறந்து, சாத்தானின் முக்கோணம் எனப்படும் பெர்முடா முக்கோணத்தையும் கடந்து பத்து மணிநேரத்தில் கியூபாவின் ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் தரையிறங்கும். விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே யசோதாவும், கரோலினும், எலினும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். சற்று நேரம் கழித்து, மேதினி அரக்கப்பரக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தாள். அவளது தோளில் ஒரு சிறிய பயணப்பை மாட்டப்பட்டிருந்தது. மேதினி தாயாரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவ்வாறே கரோலினையும் எலினையும் முத்தமிட்டாள். பின்பு, தோளிலிருந்து பயணப்பையைக் கழற்றி எடுத்துத் தாயாரிடம் கொடுத்துவிட்டு, அதை கியூபாவுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். “இந்தப் பைக்குள் என்னயிருக்கிறது மேதினி?” “சிறுவர்களுக்கான சில ஆடைகள், பேனாக்கள், வண்ணப் பென்ஸில்கள் உள்ளன. அங்கேயுள்ள குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுங்கள் அம்மா” என்று சொல்லிவிட்டு உடனேயே மேதினி கிளம்பிவிட்டாள். கொஞ்ச நேரம் காத்திருந்து தாயாரை வழியனுப்பி வைக்க அவளுக்குப் பொறுமையில்லை. விமானத்தில் மூவருக்குமே அருகருகே இருக்கைகள். கரோலின் தன்னுடைய ஜன்னலோர இருக்கையை யசோதாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். யசோதா ஓர் அட்டைப்பெட்டியை இரண்டு கைகளாலும் பற்றிப் பிடித்து மடியில் பத்திரமாக வைத்திருப்பதைக் கவனித்த கரோலின் ‘அது என்ன?’ என்று யசோதாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தத்தளித்துக்கொண்டிருப்பது போல யசோதாவுக்குத் தோன்றியது. அவர் கரோலினிடம் “இது எனது கணவரின் சாம்பல். இதைக் கடலில் கரைப்பதற்காகத்தான் நான் கியூபாவுக்கு வருகிறேன்” என்றார். புன்னகைத்த கரோலின் “நானும் எலினும் எங்களது சாம்பலைக் கரைப்பதற்காகவே வருகிறோம்” என்றார். 7 ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது மாலை ஆறு மணியாகிவிட்டது. வெப்பத்தைத் தணிக்கும் ஆடைகளும், ஓலைத் தொப்பிகளும், இரப்பர் செருப்புகளும் அணிந்திருந்த உல்லாசப் பயணிகளால் அந்தச் சிறிய விமான நிலையம் நிரம்பி வழிந்தது. பயண முகவர் ஏற்பாடு செய்திருந்த சொகுசுப் பேருந்து விமான நிலையத்தின் வாசலில் தயாராகக் காத்திருந்தது. அதனுள்ளே ஏறிக்கொண்ட கரோலினும் எலினும் அருகருகாக உட்கார்ந்துகொள்ள, யசோதா இங்கேயும் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் அழகிய கைத்தடி வைத்திருந்த பிரெஞ்சுக் கிழவர் ஒருவர் உட்கார்ந்துகொண்டார். விமான நிலையத்தின் முற்றத்தில் சே குவேராவின் சிலை கம்பீரமாக நின்றிருந்தது. அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத் தூரத்திலிருந்த ‘வரடேரோ’ தீவிலுள்ள நட்சத்திர விடுதியிலேயே இவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. பேருந்து சென்ற பாதையில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். பாதையோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பலகை வீடுகள் தென்பட்டன. வழி முழுவதும் சிவப்புப் பதாதைகள் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பதாகைகளில் நட்சத்திரங்களின் கீழே சே குவேராவும், பிடல் கஸ்ட்ரோவும், ராவுல் கஸ்ட்ரோவும் நடந்துகொண்டிருந்தார்கள். தூரத்தே மலைகளும் சமவெளிகளும் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தன. பாலத்தைக் கடந்து வரடேரோ தீவுக்குள் பேருந்து நுழைந்தபோது, அந்த இடம் வழியில் பார்த்த காட்சிகளிலிருந்து வேறுபட்டிருந்தது. தெருவெங்கும் பல வண்ண மின்குழிழ் சரங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. உயரமான நட்சத்திர விடுதிகள் வரிசையாக இருந்தன. தெருவெங்குமிருந்த மதுச்சாலைகளில் அமர்ந்து உல்லாசப் பயணிகள் குடித்துக்கொண்டிருந்தார்கள். யசோதா பேருந்திலிருந்து இறங்கியபோது, நான்கு புறங்களிலுமிருந்த நடன விடுதிகளிலிருந்து மிதந்து வந்த ஸ்பானியத் துள்ளல் பாடல்கள் அவரது செவிகளை அதிரப் பண்ணின. நட்சத்திர விடுதியில் யசோதாவுக்கு ஒதுக்கப்பட்ட அறை இரண்டாவது மாடியில் கடலைப் பார்த்தவாறிருந்தது. அறையின் பல்கனிக்கு வந்து யசோதா கடலைப் பார்த்தார். மெக்ஸிக்கோ குடாவின் தணிந்த அலைகள் விடுதியை மெல்லத் தழுவுவது போல நளினமாக வந்து திரும்பிச் சென்றன. அப்போது அறையின் அழைப்பு மணி ஒலித்தது. யசோதா அறைக்குள் சென்று கைப்பையைத் துழாவி மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். வாசற் கதவிலிருந்த கண்ணாடித் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தார். கரோலினும் எலினும் தங்களை அலங்கரித்துக்கொண்டும், மினுங்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் வெளியே நின்றிருந்தார்கள். 8 காலையில் அய்ந்து மணிக்கே யசோதாவுக்கு விழிப்புத் தட்டிவிட்டது. குளித்துவிட்டு வந்தவர் சேலை கட்டிக்கொள்ளத் தொடங்கினார். அவர் கடைசியாகச் சேலை கட்டியது அவர்களுடைய பதிவுத் திருமணத்தின் போதுதான். கியூபா வருவதென்று முடிவானவுடனேயே இந்தச் சேலையைப் பாரிஸ் தமிழ்க் கடைத்தெருவுக்குச் சென்று யசோதா புதிதாக வாங்கியிருந்தார். கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் கரையுள்ள அந்தச் சேலையைக் கட்டி முடித்ததும், அட்டைப்பெட்டியிலிருந்து சித்திரப்பேழையை வெளியே எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அய்ந்து நிமிடங்கள் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். ஆறாவது நிமிடத்தில் அறையிலிருந்து வெளியே வந்து வெற்றுப் பாதங்களுடன் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினார். கடற்கரையில் சீருடையணிந்திருந்த விடுதிக் காவலாளிகள் இருவர் மட்டுமே நின்றிருந்தார்கள். மற்றப்படிக்குக் கடலும் கரையும் வெறுமையாகயிருந்தன. அந்தக் கடல் சலனமின்றிக் கிடந்தது. யசோதா கடல் நீருக்குள் இறங்கி அவரது முழங்கால்கள் வரையான ஆழம்வரை சென்றார். சித்திரப்பேழையின் மூடியைத் திறந்து பேழையைக் கீழே சரித்தார். வெளிர் நீலக் கண்ணாடி போன்றிருந்த நீரில் அமரேசனின் சாம்பல் பூவாகப் பரவிச் சென்றது. யசோதா சட்டெனக் கண்களை மூடிக்கொண்டார். வெற்றுச் சித்திரப்பேழையை இறுக மூடிவிட்டு அதையும் கடல் நீரில் விட்டார். பின்பு, கரைக்கு வந்து கடலுக்கு முதுகு காட்டி மணலில் உட்கார்ந்துகொண்டு அந்த நட்சத்திர விடுதியைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் கடற்கரையில் சந்திக்கலாம் என்று நேற்றிரவே கரோலினும் எலினும் அவரிடம் சொல்லியிருந்தார்கள். அந்த விடுதி கடற்காகத்தின் வடிவத்தில் கட்டப்பட்டிருந்தது. மையக் கட்டடத்திற்கு இருபுறங்களிலும் பெருஞ்சிறகுகள் போன்று வரிசையாக மூன்றடுக்குகளில் ஆடம்பர அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கச் சிறகின் நுனியில் யசோதாவின் அறை இருந்தது. அவரது அறைக்கு எதிரேயே கரோலின், எலின் இருவரின் அறைகளுமிருந்தன. கடற்கரையில் இரண்டு மதுச்சாலைக் குடில்கள் இருந்தன. ஒரு சாய்ப்புச் சாமான் கடையுமிருந்தது. அவற்றுக்கு நடுவே நீலப் பாம்பு போல ஒரு நீச்சல்குளம் வளைந்து சென்றது. விடுதிச் சிறகுகளுக்குள் உறங்கிக் கிடந்தவர்கள் நீச்சலுடைகளுடன் கடலை நோக்கி வரத் தொடங்கினார்கள். கிழக்குப் பக்கச் சிறகிலிருந்து வெளிவந்த ஒரு கூட்டம் இளம் பெண்கள் இடுப்பில் மட்டுமே கச்சையணிந்து திறந்த முலைகளுடன் யசோதாவை நோக்கி ஓடிவந்தார்கள். யசோதா மெதுவாகக் கடலை நோக்கித் திரும்பிக்கொண்டார். கடலுக்குள் இப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். இந்த மக்கள் எப்படி, எப்போது கடலுக்குள் தோன்றினார்கள் என்று யசோதாவுக்குத் தெரியவில்லை. அந்த மக்களில் முதியவர்களிலிருந்து குழந்தைகளை வரை இருந்தார்கள். அவர்கள் கருப்பு, மஞ்சள், வெள்ளை என எல்லா நிறங்களிலுமிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் கரையேறவில்லை. கடலுக்குள் நின்றுகொண்டேயிருந்தார்கள். உல்லாசப் பயணிகள் கடலுக்குள் இறங்கியபோது அவர்களை நோக்கிக் கூட்டமாகச் சென்றார்கள். அப்போது, இடுப்பில் நிர்வாணக் குழந்தையைச் சுமந்திருந்த ஒரு கருப்புப் பெண் கடலுக்குள் நின்று யசோதாவை நோக்கிக் கையசைத்தார். யசோதாவும் அந்தப் பெண்ணை நோக்கிக் கையசைத்தார். அந்தப் பெண் கடலுக்குள் வருமாறு யசோதாவை நோக்கித் திரும்பத் திரும்பச் சைகை காட்டிப் புன்னகைத்தார். யசோதா எழுந்து நடந்து கடலின் விளிம்புக்குச் சென்றார். அந்தக் கருப்புப் பெண் ஆங்கிலத்தில் “எங்களது நாட்டுக்கு வந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு அம்மா. நீங்கள் அணிந்திருக்கும் உடை மிக அழகாகவுள்ளது. எனது குழந்தைக்கு ஒரு சட்டை வாங்கத் தயவு செய்து பணம் கொடுங்கள். இவளிடம் ஒரு சட்டை கூடக் கிடையாது” என்றார். அந்தப் பெண்ணைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். மேதினி கொடுத்து அனுப்பிய பயணப்பை அங்கே இருக்கிறது. யசோதா அந்தப் பயணப்பையை எடுத்துக்கொண்டு வந்து கரையில் வைத்துவிட்டு, கடலுக்குள் நின்றிருந்த அந்தக் கருப்புப் பெண்ணிடம் கரைக்கு வந்து பையை எடுக்குமாறு சைகை செய்தார். அந்தப் பெண்ணோ பையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் வருமாறு பதில் சைகை செய்தார். யசோதா பையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் கால் நனைத்தபோது, அந்தப் பெண் விரைந்து வந்து பையைப் பெற்றுக்கொண்டு “அம்மா… நாங்கள் கரைக்கு வரக் கூடாது” என்றார். “ஏன் வரக் கூடாது?” என்று யசோதா ஆச்சரியத்துடன் கேட்டார். “அது சட்ட விரோதம். அங்கே பாருங்கள்! அந்தக் காவலாளிகள் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கால் நகம் கரையில் பட்டால் கூட அவர்கள் எங்களைத் துரத்தியடிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பையைத் தலையில் வைத்து ஒருகையால் பிடித்துக்கொண்டே மறுகையில் குழந்தையுடன் கடலுக்குள் சென்றார். உண்மையிலேயே யசோதாவுக்கு எதுவும் புரியவில்லை. கரோலினையும் எலினையும் கடற்கரையில் காணவும் முடியவில்லை. எனவே, யசோதா விடுதியறைக்குச் சென்று மறுபடியும் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டார். விடுதியின் உணவகப் பகுதிக்குச் சென்று காலையுணவைச் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கடற்கரையில் போய் உட்கார்ந்துகொண்டார். வெயில் ஏற ஏறக் கரையிலும் கடலிலும் மக்கள் தீர்த்தத் திருவிழா போலத் திரண்டிருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்திடையே கலந்திருக்க யசோதாவுக்குப் பிடித்திருந்தது. அப்போது, கரோலினும் எலினும் யசோதாவை நோக்கிக் கைகளை அசைத்தவாறே மணலில் நடந்து வந்தார்கள். இருவருமே நீச்சலுடையில் இருந்தார்கள். அவர்களுடன் இரண்டு இளைஞர்களும் வந்தார்கள். அவர்களும் நீச்சலுடையில் இருந்தார்கள். ஒருவன் கருப்பு நிறத்தவன். மற்றவன் வெளிர் மஞ்சள் நிறத்தவன். அந்த இளைஞர்கள் சாய்ப்புச் சாமான் கடையை நோக்கிச் செல்ல, கரோலினும் எலினும் மணலில் யசோதாவுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். “இரவு நன்றாகத் தூங்கினாயா யசோ?” என்று எலின் விசாரித்தார். ‘ஆம்’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு “இன்னும் உங்கள் இருவருக்கும் தூக்கம் கலையவில்லைப் போலிருக்கிறதே…எப்போது அறைகளுக்குத் திரும்பினீர்கள்?” என்று யசோதா கேட்டார். “நாங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. இந்த அருமையான இளைஞர்களை வைத்துக்கொண்டு தூங்கவா முடியும்? தூங்குவதற்கா நாங்கள் இத்தனை தூரம் வந்திருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு கரோலின் தோளிலிருந்த நீளமான துவாயை எடுத்து மணலில் விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். எலினும் துண்டை விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். அப்போது அந்த இளைஞர்கள் இவர்களை நோக்கி ஆளுக்கொரு தைலக் குப்பியுடன் வந்தார்கள். கருப்பு நிறத்தவன் குதிரை ஏறுவது போன்று கால்களை விரித்து கரோலினின் முதுகில் ஏறிப் பட்டும்படாமலும் உட்கார்ந்துகொண்டான். மற்றவன் எலினின் முதுகில் ஏறி வாகாக உட்கார்ந்துகொண்டான். அவர்கள் அந்தப் பெண்களின் முதுகுகளில் தைலத்தைத் தேய்த்து உருவிவிடத் தொடங்கினார்கள். எலினின் முதுகில் இருந்தவன் யசோதாவைப் பார்த்தவாறே ஸ்பானிய மொழியில் எலினிடம் ஏதோ சொன்னான். எலின் சிரமப்பட்டுக் கழுத்தைத் திருப்பி யசோதாவைப் பார்த்து “உனது தோழிக்கும் ஒரு காதலன் தேவையா என்று இவன் கேட்கிறான்” என்றார். யசோதா உண்மையிலேயே பதறித்தான் போய்விட்டார். எலின் தனது கையை நீட்டி யசோதாவின் கையைப் பற்றிக்கொண்டார். “யசோ! இவர்களை நாங்கள் நேற்றிரவு நடன விடுதியில் கண்டுபிடித்தோம். இவர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல, இனிமையான குணமும் கொண்டவர்கள். அது இந்தத் தேசத்து ஆண்களுக்கென்றே கடவுள் வழங்கிய கொடை. ஒவ்வொருவரும் கடற்குதிரை போன்றிருக்கிறார்கள்.” “இவர்கள் கியூபர்களா? இவர்கள் இங்கே வருவது சட்ட விரோதம் என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாரே?” “ஆம்… இது கொஞ்சம் குழப்பமான விஷயம்தான். இந்தக் கடற்கரை இங்கே நட்சத்திர விடுதிகளை நடத்துபவர்களுக்கு உரிமையானது. கியூபர்களை இங்கே அனுமதிப்பதில்லை. ஆனால், விடுதியில் தங்கியிருக்கும் ஓர் உல்லாசப் பயணி கியூபா நாட்டவர் ஒருவரைத் தனது பொறுப்பில் இங்கே அழைத்துவரத் தடையில்லை…” யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். நடப்பதெல்லாம் புதிதாகவும் கனவு போலவும் அவருக்கிருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் சாப்பிடுவதற்கு மட்டுமே அவர் அறையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குப் பதற்றம் தணிவதாகயில்லை. பிரான்ஸுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்காக அவர் ஏங்கினார் என்றும் சொல்ல முடியாது. அங்கிருக்கும் தனது வீடு இருபத்துநான்கு மணிநேரமும் நிசப்தமாகவே இருப்பதை நினைக்கும்போதே, அவரது உடல் புகையத் தொடங்கிவிடுகிறது. 9 மூன்றாவது நாள் மாலையில் யசோதாவுக்கு உடலெல்லாம் தகித்து வியர்த்து வடிந்தது. அந்த விசாலமான விடுதியறைக்குள்கூட மூச்சு முட்டுவதைப் போன்று உணர்ந்தார். தான் சாகப் போகிறேனோ என்றுகூட ஒரு கணம் அவர் சந்தேகப்பட்டார். மெல்ல அறையிலிருந்து வெளியேறி அவர் கடலை நோக்கி நடந்து சென்றபோது, கடலுக்குள் யாருமில்லை. மேற்கே பரிதி கடலுக்குள் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தது. கடற்கரையில் சில உல்லாசப் பயணிகள் கூச்சலும் கும்மாளமுமாகப் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து விலகி, கடற்கரையோரமாக மேற்குத் திசையில் யசோதா நடந்து போனார். சற்றுத் தூரத்தில் மிகக் குட்டையாக ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. அதன் தலை முழுவதும் மஞ்சளாகப் பூத்திருந்தது. யசோதா கடலைப் பார்த்தவாறே அந்த மரத்தின் கீழே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கால்களை நீட்டிக்கொண்டார். அப்போதுதான் தன்னுடைய கணுக்கால்களில் புதிதாக ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை யசோதா கவனித்தார். கணுக்கால்களில் காலுறைகள் போன்று வெள்ளை படர்ந்திருந்தது. அவர் தனது கால்களைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தார். கடலுக்குள் ஓர் இளைஞன் நின்றிருந்து “ஹாய் லேடி பொஸ்” என்று பற்கள் தெரியச் சிரித்தான். அந்த இளைஞனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். இடுப்பில் அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தான். ஒல்லியான ஆனால், நேர்த்தியான உடல்வாகு. ஆறடிக்கு மேல் உயரமாகயிருந்தான். ப்ரவுண் நிறச் சருமம். அடர்த்தியான சுருட்டைமுடி. முகம் சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது. யசோதாவும் அவனைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தார். இப்போது அந்த இளைஞன் உற்சாகமாக ஓரடி முன்னே எடுத்து வைத்தவாறே “லேடி பொஸ்… நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் சிரித்த வாயாகக் கேட்டான். “பிரான்ஸ்” என்று சற்றுச் சத்தமாகவே யசோதா சொன்னார். உடனேயே அவன் பிரெஞ்சு மொழியில் யசோதாவிடம் பேசினான். “தனியாகவா வந்திருக்கிறீர்கள் லேடி பொஸ்?” யசோதா கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தார். அந்த இளைஞன் இன்னொரு அடி எடுத்து முன்னே வைத்துவிட்டு “இந்தக் கடற்கரையில் புழங்கினால் எல்லா மொழிகளையும் கற்றுவிடலாம். நான் ஏழெட்டு மொழிகள் பேசுவேன் லேடி பொஸ்” என்றான். “நான் லேடி பொஸ் அல்ல. என்னுடைய பெயர் யசோதா அமரேசன்.” “இது அருமையான பெயர் லேடி பொஸ். ஆனால், சற்று நீளமாகயிருக்கிறது. எனக்கு உச்சரிக்கக் கஷ்டம். என்னுடைய பெயர் எட்மண்டோ. கடலுக்குள்ளால் நீண்ட தூரம் வந்திருக்கிறேன். என்னைக் கரைக்கு அழைத்தீர்கள் என்றால் உங்கள் அருகே வந்து பேசுவேன். கடல் குளிர ஆரம்பித்துவிட்டது…” இப்போது அவன் கடலின் விளிம்புக்கே வந்துவிட்டான். அவனது அடுத்த காலடியைக் கரையில்தான் வைக்க வேண்டும். யசோதா அவசர அவசரமாக எழுந்து விடுதியறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். “லேடி பொஸ்… நடன விடுதிக்குப் போக வேண்டுமென்றால் என்னோடு வாருங்கள். இந்தத் தீவின் மிகச் சிறந்த நடன விடுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நான் தனியாகச் சென்றால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். உங்களோடு வந்தால் இன்றிரவு நானும் சல்ஸா நடனம் ஆடுவேன்” அந்தக் குரலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே யசோதா அறைக்குத் திரும்பிவிட்டார். அன்று இரவுணவு சாப்பிடக் கூட அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. மறுநாளும் உணவை அறைக்கே வரவழைத்துச் சாப்பிட்டார். மாலை வேளையாகி இருள் கவிந்துகொண்டிந்தபோது, அவரது மனிதில் திடீரென ஓர் எண்ணம் தோன்ற பல்கனிக்குச் சென்று கடலைப் பார்த்தார். குட்டைத் தென்னை மரம் மங்கலாகத் தெரிந்தது. சற்றுத் தொலைவில் ஓர் உயரமான உருவம் கடலுக்குள் நடந்து போய் மறைந்தது. அடுத்த நாள் காலையில் யசோதா வெள்ளை நிறக் கவுனை அணிந்துகொண்டார். வெள்ளைநிற மணிமாலையொன்றைக் கழுத்தில் போட்டுக்கொண்டார். காலணிகளும் வெண்நிறத்திலேயே இருந்தன. காலை உணவுக்காக அவர் விடுதியின் உணவகத்திற்குச் சென்றபோது, அங்கே கரோலினையும் அவரது கருப்புக் காதலனையும் கண்டார். அவர்கள் ஒரு வாய் சாப்பிடுவதாகவும் மறுவாய் முத்தமிடுவதாகவும் காலையிலேயே மயக்கத்திலிருந்தார்கள். யசோதா அவர்களது மயக்கத்தைக் கலைப்பது போல அருகில் சென்று காலை வணக்கம் சொன்னார். போதை கலையாத கண்களால் யசோதாவைப் பார்த்த கரோலின் தங்களுடன் அமர்ந்து உணவருந்துமாறு யசோதாவைக் கேட்டுக்கொண்டார். “நாளைக்கு அதிகாலையிலேயே நாங்கள் விமான நிலையத்திற்குக் கிளம்ப வேண்டியிருக்கும் யசோ… எல்லா இடமும் சுற்றிப் பார்த்தாயா? எப்படியிருக்கிறது கியூபா? இது எல்லாமே சொர்க்கம் அல்லவா…” “நான் எங்கேயும் வெளியே போகவில்லை” என்று யசோதா கொஞ்சம் வெட்கத்துடனேயே சொன்னார். “இங்கே வரடேரோவில் உல்லாசப் பயணிகள் மட்டுமே மொய்த்திருக்கிறார்கள். யசோ… நீ கொஞ்சம் வெளியே சென்று மக்களைப் பார்க்க வேண்டாமா? சாந்தா மார்த்தாவுக்குப் போ. இங்கிருந்து பக்கம்தான். அங்கே நீ உண்மையான கியூபாவைப் பார்க்க முடியும்.” ‘வரடேரோ’ ஒட்டகச் சிவிங்கியின் கழுத்துப் போன்ற ஒடுக்கமான தீவு. அந்தத் தீவு உல்லாசப் பயணிகளுக்காக நேர்ந்துவிடப்பட்டிருந்தது. அந்தத் தீவையும் கியூபா பெருநிலத்தையும் ஒரு பாலம் இணைக்கிறது. அந்தப் பாலத்தைக் கடந்ததும் சாந்தா மார்த்தா நகரம் வந்துவிடும். விடுதியில் சொல்லி யசோதா ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்துகொண்டார். இதுவரை கியூபாவில் செப்புச் சல்லியைக் கூட யசோதா செலவு செய்திருக்கவில்லை. கொஞ்ச ஈரோக்களை விடுதியில் கொடுத்து பெஸோக்களாக மாற்றிக்கொண்டார். சாலையில் வாகனங்களேயில்லை. வாடகைக் கார் சாலையில் வேகமாக வழுக்கிச் சென்றது. பாலத்தைக் கடந்ததும் காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன. சாலைகள் குண்டுங் குழியுமாக வளைந்து நெளிந்து சென்றன. அந்தச் சாலைகளில் நோஞ்சான் குதிரைகள் வண்டிகளை இழுத்துச் சென்றன. இருபத்தைந்து நிமிடப் பயணத்திற்குப் பின்பு வாடகைக் கார் ‘சாந்தா மார்த்தா’ நகரத்திற்குள் நுழைந்தது. நகர மையத்திலிருந்த சதுக்கத்தில் சே குவேரா சிலை கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அங்கேயே யசோதா இறங்கிக்கொண்டார். மதியம் பன்னிரண்டு மணிக்கு அதே இடத்திற்கு வந்து தன்னை ஏற்றிக்கொள்ளுமாறு சாரதியிடம் சொல்லிவிட்டு, யசோதா தெருவோரமாக நடந்து சென்றார். அதுவொரு சிறிய நகரம்தான். ஆனால், ஏதோ போரால் பாதிக்கப்பட்ட நகரம் போன்று உடைந்து கிடந்தது. நகரமே புழுதிக் காடாகக் காட்சியளித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சிறிய கடைகளுக்கு முன்பு மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றுகொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்ட குறுக்குத் தெருவொன்றுக்குள் புகுந்து யசோதா வேடிக்கை பார்த்தவாறே நடந்தார். அந்தத் தெருவில் குடியிருப்புகள் நெருக்கமாகயிருந்தன. வந்த வழியை மனதில் ஞாபகம் வைத்துக்கொண்டே அடுத்த குறுக்குத் தெருவுக்குள் யசோதா நுழைந்தபோது, எதிரே அந்த உயரமான இளைஞன் எட்மண்டோ வந்துகொண்டிருந்தான். அவன் யசோதாவைக் கண்டதும் கண்களை அகல விரித்துத் தனது வலது கையை உதறிக்கொண்டான். பின்பு “லேடி பொஸ்” என்று கூவியபடியே யசோதாவை நோக்கி ஓடிவந்தான். இடுப்பில் அதே அரைக் காற்சட்டைதான் இருந்தது. ஆனால், இன்று அவன் அழகானதொரு தொப்பி அணிந்து தொப்பியின் நாடாக்களைத் தாடையின் கீழே பூப்போன்று முடிந்திருந்தான். “லேடி பொஸ்…நீங்கள் சம்மனசு போலத் திடீரென என் முன்னே காட்சியளிக்கிறீர்கள். என்னுடைய வீடு இங்கேதான் இருக்கிறது. தயவு செய்து வீட்டுக்கு வந்து ஒரு கோப்பை தேநீர் பருகி எங்களை மகிழ்வியுங்கள்” என்று எட்மண்டோ சொல்லிவிட்டு யசோதாவின் கையைப் பிடித்துக்கொண்டு தெருவில் நடந்தான். யசோதா தன்னுடைய கையை அவனிடமிருந்து விடுவிக்க முயற்சிக்கவில்லை. உண்மையில் அந்த அழைப்பு அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. அழுக்குப் படிந்துகிடந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றின் முன்னால் எட்மண்டோ நின்று “லேடி பொஸ்… இங்கேதான் முதலாவது மாடியில் எனது வீடிருக்கிறது. மாடிப்படிகளில் வெளிச்சம் கிடையாது. என்னுடைய கையை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்றவாறே யசோதாவின் கையை மேலும் அழுத்தமாகப் பற்றினான். யசோதா தட்டுத் தடுமாறித்தான் படியேறிச் சென்றார். ஒவ்வொரு படியிலும் இருளுக்குள் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சிறிய அறை மட்டுமே எட்மண்டோவின் வீடாக இருந்தது. உண்மையில் அதுவொரு இருள் பொந்துதான். அந்தப் பகல் பொழுதிலும் அறை இருண்டு கிடந்தது. அறையின் நடுவே தொங்கிகொண்டிருந்த மங்கலான சிறிய மின்குமிழின் கீழே சாய்மனை நாற்காலியில் ஒரு பெண்மணி படுத்துக்கிடந்து பைபிள் படித்துக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த யசோதாவை ஒரு விநாடி பார்த்துவிட்டு அவர் மறுபடியும் பைபிளில் மூழ்கிப் போனார். அறையின் மூலையிலிருந்த அடுப்பில் எட்மண்டோ கருப்புத் தேநீர் தயாரித்து யசோதாவுக்குக் கொடுத்தான். யசோதா தேநீரைக் குடித்தவாறே அந்தப் பெண்மணியையே பார்த்துக்கொண்டிருந்தார். தேநீரைக் குடித்து முடித்ததும் யசோதா புறப்படத் தயாரானபோது, அந்தப் பெண்மணி ஸ்பானிய மொழியில் ஏதோ சொன்னார். “லேடி பொஸ்… உங்களது கழுத்திலிருக்கும் மணிமாலை அழகாக இருக்கிறதாம். அதைத் தனக்குக் கொடுக்க முடியுமா என்று அம்மா கேட்கிறார்” என்று எட்மண்டோ தயங்கத்துடன் யசோதாவிடம் சொன்னான். யசோதா கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றியவாறே எட்மண்டோவின் அம்மாவின் அருகில் சென்று அதை அவருக்கு அணிவித்தார். சே குவேரா சிலையை நோக்கி இருவரும் நடந்துகொண்டிருந்தபோது “லேடி பொஸ்… நேற்று மாலை நீங்கள் கடற்கரைக்கு வரவில்லையே” என்று யசோதாவின் காதருகே எட்மண்டோ கிசுகிசுத்தான். யசோதா எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார். சே குவேரா சிலையருகே வாடகைக் கார் காத்திருந்தது. அன்று மாலையில் விடுதியறையின் பல்கனியில் நின்று யசோதா கடலைப் பார்த்தபோது, பரிதி கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது. அவர் அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார். இருள் முற்றாகக் கவிந்து கடல் அவரது கண் பார்வையிலிருந்து மறைந்தபோது, குளியலறைக்குச் சென்று குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு நெடுநேரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். குளித்து முடித்துவிட்டுத் தொட்டியிலிருந்து அவர் கீழே இறங்கியபோது, எதிரேயிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் முழு நிர்வாணமாக அவரது உடல் தெரிந்தது. கண்ணாடியில் தோன்றிய அந்தப் பிம்பத்திலிருந்து புகை கசிந்தது. முற்றாக நரைத்திருந்த தலைமுடி மின்விளக்குகளின் வெளிச்சத்தில் வெள்ளியாக மின்னியது. அவரது தலை சிறிதாகவும் கழுத்து நீளமாகவுமிருந்தது. கழுத்துக்குக் கீழே உடல் அகன்று சென்று வயிற்றுப் பகுதி உப்பியிருந்தது. முழங்கால்களுக்குக் கீழே கால்கள் குச்சிகளாக ஒடுங்கிச் சென்றன. கணுக்காலில் படந்திருந்த வெள்ளைத் திட்டுகள் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. உடலில் இருந்த வெண்ணிறப் புள்ளிகள் அவரது கருமையான சருமத்தில் பெகோனியாப் பூக்கள் போலத் தெரிந்தன. தீக்கோழி முட்டை வடிவச் சித்திரப்பேழையைப் போலவே தன்னுடைய உடல் ஆகிவிட்டது என யசோதாவுக்குத் தோன்றியது. 10 ஜோசே மார்த்தி விமான நிலையத்திலிருந்து பாரிஸுக்குக் கிளம்பவிருந்த விமானத்தில், கரோலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அடுத்ததாக எலின் அமர்ந்திருந்தார். அவரது முகம் வாடியிருந்தது. எலினுக்கு அடுத்ததாக யசோதா உட்கார்ந்திருந்தார். விமானம் மேலேறிப் பறந்தபோது, திடீரென கரோலின் விசும்பி அழத் தொடங்கினார். எலினின் கண்களிலும் நீர் துளிர்த்தது. யசோதா தனது கையை எலினின் தோள்மீது வைத்தார். எலின் சற்றே சாய்ந்து யசோதாவின் காதுக்குள் அரைகுறையாக முணுமுணுத்தார்: “ஒரு வாரக் காதலோ, ஒரு நாள் காதலோ பிரிந்து செல்லும்போது இந்தப் பாழாய் போன கண்ணீர் வந்துவிடுகிறது யசோ…” யசோதா தன்னுடைய முகத்தை அண்ணாந்து விமானத்தின் கூரையைப் பார்த்தார். அழக் கூடாது என்ற வைராக்கியம் நேற்றிரவே அவரது மனதில் உண்டாகிவிட்டது. ஆறாங்குழி இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் பெரிய மீன்பிடிக் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பலோடு சமுத்திரத்திற்குள் இறங்கினால், ஒரு வாரம் முழுவதும் சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து, தொன் கணக்கில் மீன்களை வாரிக்கொண்டுதான் கரைக்குத் திரும்புவோம். கடுமையான உடலுழைப்பு என்பதால், அறுபதாவது வயதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் என்னுடைய தேகம் கட்டுக்குலையாமல் இன்னும் இரும்பாகவேயிருக்கிறது. கடலில் இருந்து கரையேறிய உடனேயே நேராக சாராயக் கடைக்கும், பின்பு தாசி விடுதிக்கும் போய்விடுகிறேன். கண்பார்வையில் ஒரு குறையுமில்லை. ஒரு சிப்பம் வரிச்சூரைக் கருவாட்டைப் பச்சையாகவே சப்பித் தின்னுமளவுக்குப் பற்களும் வலுவாகவேயுள்ளன. கடலில் இருந்தால் சுறாக்களுக்கு நடுவாக நீந்துகிறேன். கரையில் இருக்கும் நாட்களில் இப்போதும் பத்துக் கிலோமீற்றர்கள் தூரம் ஓடுகிறேன். எங்களது கப்பலின் தலைமை மாலுமி “குரங்குக்கு நூறு வயதானாலும் நிலத்தில் நடந்து போகாதாம்” என்பார். இப்போது கூட, இவற்றையெல்லாம் நான் உங்களிடம் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி என்னுள் எழாமலில்லை. இன்றைய காலை வரையிலும் நான் வாயைத் திறப்பதாகவேயில்லை. ஆனால், என்னுடைய முன்னாள் சகாவான லான்ஸ் கோப்ரல் வீரசிங்க தன்னுடைய வாயால் என்னுடைய வாயை அவிழ்த்துவிட்டிருக்கிறான். உண்மையில் நான் இப்போது தெளிவற்ற மனநிலையில் இருக்கிறேன். என்னுடைய மனம் ஆற்றாமையாலும், ஆத்திரத்தாலும் கொந்தளிக்கிறது. முப்பத்து மூன்று வருடங்களுக்கு முந்தைய இரவின் மீது, இப்போது சிறு வெளிச்சத்தைக் கொளுத்திக் காட்டத்தான் வேண்டியிருக்கிறது. அன்றைய இரவு, கொழும்பு நகரத்தின் வடபகுதியிலிருந்த முகத்துவாரம் ‘ரொக் ஹவுஸ்’ இராணுவ முகாமில் நான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்புதான், நான் இரண்டாவது நிலை லெப்டினன்டாகத் தரம் உயர்த்தப்பட்டு, ரொக் ஹவுஸ் முகாம் கட்டளை அதிகாரியின் நம்பிக்கைக்குரிய வீரனாக மாறியிருந்தேன். இடப்பட்ட கட்டளையை சிறு எச்சமோ, தடயமோ வைக்காமல் கச்சிதமாகச் செய்து முடிப்பவன் என்ற கீர்த்தி எனக்கு இராணுவ வட்டாரங்களிலிருந்தது. உயர் அதிகாரிகளுக்கு என்மீது துளியளவும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால், நான் உத்தரவுகளை முழுமையாக நிறைவேற்றுபவனாகவும், ஈவு இரக்கமற்றவனாகவும் கடூழியம் செய்தேன். என்னுடைய முரட்டுக் குணம் அதிகாரிக்குப் பிடித்திருந்தது. ‘முட்டும் மாடுதான் உழவுக்கு நல்லது’ என்பது அவரது கொள்கையாக இருக்க வேண்டும். என்னுடைய மனதிலோ வேறாரு எண்ணம் கொஞ்ச நாட்களாகவே ஓடிக்கொண்டிருந்தது. உறக்கத்திலிருந்த என்னுடைய காதுக்குள் “யக்கடயா… யக்கடயா” என்றழைக்கும் குரல் கேட்டது. கண்களை விழித்துப் பார்த்தபோது “உடனடியாகத் தன்னை வந்து பார்க்குமாறு கட்டளை அதிகாரி அழைக்கிறார்” என்று என்னை எழுப்பிய சிப்பாய் துமிந்த சொன்னான். நான் அவசர அவசரமாக எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு, சீருடையை அணிந்தேன். உத்தரவு கிடைத்த இரண்டாவது நிமிடத்தில் கட்டளை அதிகாரியின் முன்னே நின்றிருந்தேன். அலுவலகத்திற்குள் கட்டளை அதிகாரி புகை பிடித்தவாறே நின்றுகொண்டிருந்தார். உள்ளே நுழைந்த என்னைப் புதிதாகப் பார்ப்பது போல, மேலும் கீழுமாகப் பார்த்தார். மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்த அவரது கண்கள் என்னுடைய முகத்தையே சில விநாடிகள் உற்றுப் பார்த்தன. ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது அல்லது நிகழப்போகிறது என்று எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. “யக்கடயா! உன்னுடைய ரிவோல்வரை எடுத்து இங்கே வை” எனச் சொல்லிக்கொண்டே மேசையின் இழுப்பறையை அதிகாரி திறந்தார். விபரீதம் உறுதி என்றே என்னுடைய மனம் சொல்லிற்று. யோசிப்பதற்கு அவகாசம் இல்லை. சுழற் துப்பாக்கியை இடுப்புப்பட்டியில் பிணைக்கப்பட்டிருந்த கோல்ஸரிலிருந்து உருவியெடுத்து இழுப்பறைக்குள் வைத்தேன். அதிகாரி இழுப்பறையை மூடிப் பூட்டி, சாவியை எடுத்துத் தனது காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டே “என்னுடன் வா!” எனச் சொல்லிவிட்டு, முன்னே நடந்தார். நான் அவரைத் தொடர்ந்தேன். முகாமின் முன்னால் நின்றிருந்த பச்சை வண்ண பஜீரோ ஜீப் வண்டியில் ஏறிய அதிகாரி சாரதி இருக்கையில் உட்கார்ந்துகொண்டே, என்னை அவரருகே உட்காரச் சொன்னார். இப்படி ஒருபோதும் நடந்ததேயில்லை. நான் கட்டளை அதிகாரியோடு பயணிக்கும் போதெல்லாம், இந்த வண்டியை இராணுவச் சாரதியான பெர்னாண்டோ ஓட்ட, அதிகாரி முன்னிருக்கையில் அமர்ந்திருப்பார். நான் அவருக்குப் நேர் பின்னே உட்கார்ந்திருப்பேன். பஜீரோ வண்டி மாதம்பிட்டிய சந்திவரை சென்று, அங்கிருந்து தெற்கு நோக்கித் திரும்பி வேகமாக ஓடத் தொடங்கியது. மாதம்பிட்டியிலிருந்து எங்களைப் பின்தொடர்ந்து இன்னொரு இராணுவ வண்டி வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அப்போது நேரம் அதிகாலை ஒரு மணியை நெருங்கியிருந்தது. தெருவில் வேறெந்த வாகனங்களும் கிடையாது. வண்டியைச் செலுத்தியவாறே, ஒற்றைக் கையால் இலாவகமாக சிகரெட்டைக் கொளுத்திக்கொண்ட அதிகாரி என்னிடம் கேட்டார்: “யக்கடயா… உனக்கு கேர்ள் ஃபிரண்ட் உண்டா?” இதைக் கேட்டதும் நான் இருக்கையிலிருந்து நழுவி விழாதது ஆச்சரியம்தான். என்ன தான் இரும்பு உடம்பும், அடங்காத முரட்டுக் குணமும் கொண்டவர்களாகயிருந்தாலும், உயிர்ப் பயம் ஏற்பட்டால் செத்த சவமாகிவிடுகிறார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். சென்ற வாரத்தில், மட்டக்குழி பாதாளக் குழுவின் தலைவனான மெவினய்யாவை இராணுவம் கடத்திவந்த போது, அவனைச் சித்திரவதை செய்யும் பொறுப்பைக் கட்டளை அதிகாரி என்னிடமே கொடுத்திருந்தார். என்னுடைய நுணுக்கமான சித்திரவதைக் கலையில் அவருக்கு முழு நம்பிக்கையிருந்தது. நூற்றைம்பது கிலோ எடையுள்ள மெவினய்யா முதலில் உயிருக்குப் பயமில்லாதவன் போலத்தான் பாவனை செய்தான். போலியான வீரத்தைத் தன்னுடைய உருளை முகத்தில் ஒட்டி வைத்திருந்தான். நான் என்னுடைய கைகளால் அதை முகத் தோலோடு சேர்த்து உரித்தெடுத்தேன். நான் அவனது தூண் போன்ற வலது கையைப் பிடித்து, என்னுடைய காலை மடக்கி உயர்த்தி, அவனுடைய மணிக்கட்டு எலும்பை என்னுடைய தொடையில் அடித்து முறித்த போது, அவன் இடது கையால் என்னுடைய காலைப் பற்றிக்கொண்டு, நாய் போல ஊளையிட்டுக் கதறத் தொடங்கிவிட்டான். “எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லை சேர்” என்றேன். அதிகாரி என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, வண்டியைக் கண்மண் தெரியாத வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தார். நான் சொன்னதை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதை அவரது முகத்திலிருந்து என்னால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. அக்காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் இலங்கை அரசுக்கு எதிராகத் தன்னுடைய இரண்டாவது ஆயுதப் புரட்சியைத் தீவிரமாக நடத்திக்கொண்டிருந்தது. இராணுவத்திலிருந்த என்னைப் போன்ற பல இளைஞர்களும் அந்த இயக்கத்தால் கவரப்பட்டிருந்தோம். ஏனெனில், அந்த இயக்கம் சொல்வதிலும் பல உண்மைகள் இருக்கத்தானே செய்தன. உதாரணமாக, ஜனாதிபதி ரணசிங்கே பிரேமதாஸ அப்போது தமிழ்ப் புலிகளுடன் தேன்நிலவு அனுபவித்துக்கொண்டிருந்தார். புலிப் பிரதிநிதிகளை அழைத்து வந்து, கொழும்பின் உயர்ரக நட்சத்திர விடுதிகளில் தங்கவைத்துப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். இந்தியப் படைகளை எதிர்த்து வன்னிக் காட்டுக்குள் யுத்தம் செய்துகொண்டிருந்த தமிழ்ப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும், சீமெந்தையும் ஜனாதிபதி அனுப்பிக்கொண்டிருந்தார். முன்பாக, பத்து வருடங்களாக நாங்கள் புலிகளுடன் நடத்திய யுத்தத்தில், இராணுவம் நூற்றுக்கணக்கான வீரர்களையும் அதிகாரிகளையும் இழந்திருந்தது. அதையெல்லாம் மறந்துவிட்டு ஜனாதிபதி புலிகளுடன் உறவாடிக்கொண்டிருந்தது இராணுவத்திற்குள் மிகப் பெரிய அதிருப்தியையும் குழப்பத்தையும் உருவாக்கியிருந்தது. இந்த விஷயத்தைக் கையிலெடுத்த ஜே.வி.பி. இயக்கம் இராணுவத்திற்குள் தீவிரப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. உண்மையிலேயே ஜே.வி.பி. இயக்கம் இராணுவத்திற்குள் ஆழமாக ஊடுருவிவிட்டது. இராணுவத்திற்குள் ஒருபகுதியினர் ஜே.வி.பிக்கு ஆதரவான மனநிலையில் இரகசியமாக உறைந்திருந்தார்கள். புரட்சி அதனுடைய உச்சத்தைத் தொடும் போது, இராணுவத்தின் ஒரு பகுதி வெளிப்படையாகவே ஜே.வி.பியுடன் இணைந்துவிடும். பல்வேறு நாட்டுப் புரட்சிகளின் போதும் இதுவே நடந்தது என்றுதான் சார்ஜன்ட் அத்தநாயக்க என்னிடம் சொல்லியிருந்தான். அவன் மூலமாகத் தான் நானும் ஜே.வி.பி. அனுதாபியாக மாறத் தொடங்கியிருந்தேன். தலைமறைவாக இருந்தவாறே புரட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை, நான் என்னுடைய மாணவப் பருவத்தில் நேரிலேயே பார்த்திருக்கிறேன். 1982-ல் எங்களுடைய மலைநகரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசினார். எப்போதும் போலவே அன்றைக்கும் எங்களது மலையில் மழை தூற்றிக்கொண்டிருந்தது. நடு மேடையில் நின்று, மழையில் நனைந்தபடியே ரோஹண விஜேவீர பேசினார். அவருடைய குரல் அவரது அடி வயிற்றிலிருந்து எழுந்து வந்தது. பொப் மார்லி என்றொரு பாட்டுக்காரன் உண்டல்லவா! கிட்டத்தட்ட அவனையொத்த வசீகரமான முகவெட்டு ரோஹண விஜேவீரவுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், மிக மெலிந்த தோற்றமுள்ளவர். அவர் தலையில் அணிந்திருந்த சிறு நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருந்த சிவப்புநிறக் குல்லாவுக்கு கீழாக, நீளமான அடர்சுருள் தலைமுடி மழையில் கலைந்து அவரது தோள்களில் வழிந்தது. கவர்ச்சிகரமான தாடி வைத்திருந்தார். தடித்த மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் ஒளியை உமிழ்ந்தன. அவருடைய கொந்தளிப்பான பேச்சில் மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது உண்மையே. அழுத்தம் திருத்தமான சொற்களுக்கு நடுவே மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளிளுத்து, அடுத்த சொல்லை நீண்ட மூச்சோடு வெளியேற்றினார். கையில் எந்தக் குறிப்புகளுமில்லாமலேயே மூன்று – நான்கு மணிநேரங்கள் கூட அவர் தொடர்ச்சியாக உரையாற்றுவார் எனச் சொல்வார்கள். மக்களுக்கு உணவின்மை, வேலையின்மை, விலைவாசி, அமைச்சர்களின் ஊழல், இந்தியப் பெரு முதலாளிகளின் ஆக்கிரமிப்பு, அரசு அதிகாரிகளின் ஆணவம், காவல்துறையின் அடக்குமுறை இவற்றைக் குறித்துத்தான் அவர் பேசினார். தனக்கு வாக்களிக்குமாறு ஒரு தடவை கூட அவர் கேட்கவில்லை. அந்தத் தேர்தலில் அவருக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது. ஒருவேளை அவர் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருந்தால், நான் இராணுவத்திற்கு வராமல் கூடப் போயிருக்கலாம் அல்லவா! பீட்ரூட் விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு மலையிலேயே இருந்திருப்பேன். இப்போது எங்களது பஜீரோ வண்டி ‘தெமட்டக்கொட’ புகையிரத நிலையத்தைக் கடந்து முன்னேறிக்கொண்டிருந்தது. கட்டளை அதிகாரி விடாமல் சிகரெட்டுகளைப் புகைத்தவாறே வண்டியை விரட்டிக்கொண்டிருந்தார். இவர் இந்த நள்ளிரவில் என்னை எங்கே அழைத்துப் போகிறார்? என்னுடைய துப்பாக்கியை எதற்காக என்னிடமிருந்து வாங்கி வைத்துக்கொண்டார்? நான் கடத்தப்படுகிறேனா? சார்ஜன்ட் அத்தநாயக்க காணாமற்போன நாளிலிருந்தே என்னிடம் ஓர் அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. சார்ஜன்ட் அத்தநாயக்கவுக்கும் ஜே.வி.பி அமைப்புக்கும் தொடர்பிருப்பதை இராணுவ உயர் அதிகாரிகள் எப்படியோ மோப்பம் பிடித்திருக்க வேண்டும். சார்ஜன்ட் அத்தநாயக்கவைப் போலவே இராணுவத்திலிருந்து இன்னும் சிலர் காணாமற்போயிருந்தார்கள். அவர்கள் இராணுவத்தை விட்டு ஓடித் தலைமறைவாகிவிட்டார்கள் என்றொரு கதையை அரசாங்கம் கிளப்பிவிட்டிருந்தது. ஓடியவர்கள் ஜே.வி.பியில் இணைந்திருக்கலாம் எனச் சிலர் சொன்னார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. எங்களது ரொக் ஹவுஸ் முகாமிலேயே என்னைத் தவிர இன்னும் சில இராணுவ வீரர்கள் ஜே.வி.பி. அனுதாபிகளாக இருந்தார்கள். காணாமற்போனவர்கள் ஜே.வி.பியில் இணைந்திருந்தால் எங்களுக்குத் தகவல் கசிந்திருக்கும். தவிரவும் ரோஹண விஜேவீர தன்னுடைய ஆதரவாளர்களை இராணுவத்திலிருந்து வெளியேறச் சொல்லவில்லை. தகுந்த தருணத்திற்காகக் காத்திருக்குமாறே சொல்லியிருந்தார். அந்தச் சந்தர்ப்பம் சீக்கிரமே வந்துவிடும் என்றுதான் நான் நம்பியிருந்தேன். அதற்குள் நான் கட்டளை அதிகாரியிடம் மாட்டிக்கொண்டேனா? சார்ஜன்ட் அத்தநாயக்க என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டானா? நிச்சயமாகவே ஜே.வி.பி. தனது இலக்கை அதிவிரைவாகவே அடைந்துவிடும். இப்போதே தென்னிலங்கையிலும், வடமத்திய மாகாணத்திலும், மலைநாட்டிலும் பல கிராமங்கள் அவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் ஜே.வி.பியில் இணைந்தவாறேயிருக்கிறார்கள். கொழும்பில் ஜே.வி.பி. பெரியளவு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தாலும், அவர்களது சொற்கள் நகரத்தின் மீது தீயாகப் படர்ந்திருக்கிறது. இந்தியப் பொருட்களைக் கடைகளில் விற்கக்கூடாது, இந்தியத் திரைப்படங்களைத் தியேட்டர்களில் காண்பிக்கக்கூடாது என்ற அவர்களது ஒரேயொரு எச்சரிக்கைத் துண்டுபிரசுரத்திற்குத் தலைநகரமே பணிந்து கிடக்கிறது. ஜே.வி.பியை ஒருபுறத்திலும், தமிழ்ப் புலிகளை மறுபுறத்திலும் சமாளிக்க முடியாமல் தான் அரசாங்கம் புலிகளுடன் ஒரு தேன்நிலவை அமைத்துக்கொண்டு, ஜே.வி.பியை வேட்டையாடுவதில் முழுக் கவனத்தையும் குவித்துள்ளது. இதைக் கட்டளை அதிகாரியே ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். இப்போது கூட ஒரே தாவலில் இந்த அதிகாரியை மடக்கி, அவரது துப்பாக்கியாலேயே அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, என்னால் தப்பித்துச் செல்ல முடியும். ஆனாலும், நான் சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவேளை இவருக்கு என்மீது சந்தேகம் இல்லாமல் கூட இருக்கலாம். எதற்கும் பரிசீலித்துப் பார்த்துவிடுவதே நல்லது எனத் துணிந்துவிட்டேன். “சேர்…எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாளா என்று கேட்டீர்களே…?” “இருக்கிறாளா என்ன?” “உண்மையாகவே இல்லை சேர்..” “கேர்ள் ஃபிரண்ட் வைத்திருக்கும் இந்தக் கால இளைஞர்களால் இரகசியத்தைக் காப்பாற்ற முடிவதில்லை யக்கடயா!” நான் சற்றுத் தளர்வாக உட்கார்ந்தேன். இவருக்கு என்மீது சந்தேகமில்லை. ஒரே விநாடியில் நான் உற்சாகமாகிவிட்டேன். ஏதோ முக்கியமான வேலையாகத்தான் இவர் என்னை அழைத்துப் போகிறார். இவர் எதிர்பார்ப்பதை விடவும் கச்சிதமாக நான் அந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும். இவரிடம் அளவுக்கு அதிகமான விசுவாசத்தைக் கொட்ட வேண்டும். புரட்சி வெற்றியடையும் தறுவாயில் நானே இவரைக் கொல்லக்கூடும். எனக்குத்தான் அந்த உரிமையுண்டு. அதுவரை பொறுத்திருப்பதே புத்தி. பஜீரோ வண்டி பொரளை நகரத்திற்குள் நுழைந்த போது, நாங்கள் வெலிகடைச் சிறைச்சாலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைத்துக்கொண்டேன். அங்கே ஏராளமான தமிழ்க் கைதிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவனின் கையையோ காலையோ நான் உடைக்க வேண்டியிருக்கலாம். கழுத்தைத் திருகி முறிக்கச் சொன்னாலும் கச்சிதமாகச் செய்துவிட வேண்டியதுதான். ஆனால், எங்களது வண்டி வெலிகடைச் சிறையையும் கடந்து சென்றது. பின்னால் வந்த இராணுவ வண்டியோ திடீரென இருளுக்குள் மறைந்துவிட்டது. கட்டளை அதிகாரி எங்களது வண்டியின் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். சில நிமிடங்களிலேயே ரோயல் கோல்ஃப் மைதானத்திற்குள் வண்டி நுழைந்தது. இப்போது எனக்கு மறுபடியும் சந்தேகம் வரக் காரணமிருந்தது. அந்த மைதானத்தின் முகப்பு வாசலில் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, கைகளில் டோர்ச் லைட்டுகளுடன் சில இராணுவ வீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்களைக் கடந்து சென்ற பஜீரோ வண்டி மைதானத்தின் ஓரமாக ஓடிச் சென்று, ஒரு சிறிய குழியின் முன்னால் நின்றது. இந்த கோல்ஃப் மைதானத்தில் பந்து விழும் பதினெட்டுக் குழிகள் உள்ளன. இது ஆறாவது குழி. என்னைக் கீழே இறங்குமாறு கட்டளை அதிகாரி சொல்லிவிட்டு, அவர் வாகனத்தின் உள்ளேயே இருந்துகொண்டார். வாகனத்தின் விளக்குகள் அணைந்ததும் ஆளையாள் தெரியாத கச இருள் எங்களைச் சூழ்ந்தது. என்னைச் சுட்டுக் கொல்லப்போகிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. கிளைக்குக் கிளை தாவும் பறவை நனைந்துதான் சாகும். இப்படியே ஓடித் தப்பிவிடலாமா என்று நான் இருளுக்குள் அங்குமிங்கும் பார்த்த போது, என்னை நோக்கி டோர்ச் லைட் வெளிச்சம் வந்து, என்னுடைய முகத்தில் வட்டம் போட்டது. கையில் டோர்ச் லைட்டை வைத்திருந்த கட்டளை அதிகாரி “யக்கடயா இப்படி வா!” என்று கூப்பிட, நான் வாகனத்தைச் சுற்றிக்கொண்டு அவரருகே சென்றேன். அதிகாரி குரலைத் தாழ்த்தியவாறே என்னிடம் சொன்னார்: “இப்போது ஒருவனை இங்கே கொண்டுவருவார்கள். அவனுடைய உயிர் போகாமல், நீ அவனுடைய ஒவ்வொரு எலும்பையும் சிதைக்க வேண்டும். அவன் வேதனையைப் பூரணமாக அனுபவிக்க வேண்டும். நீ அவனுக்கு இந்த மைதானத்திலேயே நரகத்தைக் காட்டிவிடு!” “அவனைப் பேச வைத்து உண்மையைக் கறக்க வேண்டுமா சேர்?” “வேண்டியதில்லை. நீ அவனது பற்களைப் பிடுங்கிவிடு. இந்த மைதானத்திற்குள் அவன் எவ்வளவு சத்தம் போட்டாலும் யாருக்கும் கேட்கப் போவதில்லை. உன்னுடைய கையில் அவனைப் பதினைந்து நிமிடங்களுக்கு ஒப்படைக்கிறோம். அவனை எண்ணெய் அடிக்கப்பட்ட ஓணானைப் போல அடக்கி எங்களிடம் திருப்பிக்கொடு!” டோர்ச் லைட்டை என்னுடைய கையில் கொடுத்துவிட்டு, பஜீரோ வண்டியைக் கிளப்பிக்கொண்டு கட்டளை அதிகாரி புறப்படும் போதே, வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இன்னொரு வண்டி மைதானத்திற்குள் நுழைந்தது. இரண்டு வண்டிகளும் அருகருகாகச் சந்தித்துக்கொண்ட போது, ஒரேயொரு நிமிடம் இரண்டு வண்டிகளும் நிறுத்தப்பட்டுப் புறப்பட்டன. என்னருகே வந்து நின்றதும் ஒரு பச்சை வண்ண பஜீரோ வண்டி தான். உள்ளேயிருந்து துப்பாக்கிகளுடன் குதித்த ஆறு அதிரடிப்படை வீரர்கள் ஆறாங்குழியைச் சுற்றிப் பெரிய வட்டமாக நின்றுகொண்டார்கள். இப்போது நான் அந்த வட்டத்திற்குள் இருந்தேன். வண்டியின் விளக்குகள் அணைக்கப்பட்டதும், அதற்குள்ளிருந்து இன்னும் மூன்று இராணுவ வீரர்கள் இறங்கினார்கள். இவர்களையும் நான் முன்பின் பார்த்ததில்லை. எல்லோருமே இளைஞர்கள்தான். எல்லோருடைய கைகளிலும் ஆளுக்கொரு டோர்ச் லைட் இருந்தது. அவற்றின் வெளிச்சத்தில், அவர்கள் வண்டியின் பின்னிருக்கையிலிருந்து ஒரு மனிதனைக் கீழே இறக்கினார்கள். அந்த மனிதனின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருந்தன. அந்த மனிதனுக்கு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயதிற்குள் இருக்கலாம். சதைப்பிடிப்பான உடல்வாகு. தலைமுடியை இராணுவத்தினர் போல ஒட்ட வெட்டியிருந்தான். முகம் முழுமையாகச் சவரம் செய்யப்பட்டிருந்தது. அந்த முகம் ஒரு நாட்டுப்புறச் சிங்கள முகம் எனப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. கறுப்பு நிறத்தில் நீளக் காற்சட்டையும், தூய வெள்ளையில் முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கால்களிலே கறுப்புச் சப்பாத்துகளிருந்தன. கண்டிப்பாக இவனொரு சிறைவாசியாக இருக்க முடியாது. ஒன்றில் இராணுவத்திற்குள் இருந்த உளவாளியாக இருக்க வேண்டும் அல்லது பாதாளக் குழுவைச் சேர்ந்த மாஃபியாவாக இருக்க வேண்டும். அவனைக் கொண்டுவந்த மூன்று இராணுவ வீரர்களும் அவனை என்முன்னே விட்டுவிட்டுச் சற்று ஒதுங்கியே நின்றார்கள். மூவரும் அவர்களுக்குள் கூடப் பேசிக்கொள்ளவில்லை. என்னைப் போலவே இவர்களும் வெவ்வேறு முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அந்த மூன்று பேரையும் என்னோடு வைத்துப் பார்த்தால் எருமையோடு சேர்ந்த பசுமாடுகள் போலயிருந்தார்கள். எக்கேடும் கெட்டுப் போகட்டும்! என்னுடைய கட்டளை அதிகாரி எனக்குப் பதினைந்து நிமிடங்களே கொடுத்திருக்கிறார். நான் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க முடியாது. நான் அந்த மனிதனுக்கு அருகே சென்று, அவனது உள்ளங்கையைப் பிடித்து, அதில் டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சி, ஆயுதப் பயிற்சி பெற்றதற்கான அடையாளங்கள் உள்ளனவா என்று சோதனை செய்தேன். அப்போது அந்த மனிதன் கேட்டான்: “என்னுடைய உள்ளங்கையில் மரணத்தைக் குறிக்கும் ரேகைகள் தெரிகின்றனவா?” அவனுடைய குரல் மிக மென்மையாகவும் நிதானமாகவுமிருந்தது. என்னவொரு அவமரியாதையான கேலிப் பேச்சு! எல்லாப் பாதாளக் குழுச் சண்டியர்களைப் போலவும் இவனும் உயிர்ப் பயம் அற்றவன் போலக் காட்டிக்கொள்ள எத்தனிக்கிறான் என்று நினைத்துக்கொண்டே, இரும்பு உலக்கை போன்ற என்னுடைய கையால் அவனுடைய வாயில் ஓங்கிக் குத்தினேன். நான் கையைத் திருப்பி எடுத்த போது, அந்த முகத்தில் வாய் இருந்த இடத்தில் ஓர் இரத்தக் குழாய்தான் இருந்தது. அதிலிருந்து பீறிட்ட இரத்தம் என்னுடைய முழங்கைவரை பாய்ந்திருந்தது. எப்படியும் பத்துப் பற்களாவது கழன்றிருக்கும். அவன் ஏதோ சொல்ல முயன்றான். ஆனால், முனகலைத் தவிர வேறெதுவும் வெளியே வரவில்லை. அவனுடைய பற்கள் பதிந்து, அவனது நாக்கு பாம்பு நாக்குப் போல இரண்டாகப் பிளந்திருக்கும். இரத்த வாசனையை உணர்ந்ததும் எனக்கு வெறி அதிகரித்துவிட்டது. மற்றைய மூன்று இராணு வீரர்களையும் பார்த்து “வாருங்கள்! நொறுக்குங்கள் இவனை” என்று சத்தமிட்டேன். என்னுடைய வெறி, காய்ச்சலைப் போல அவர்களையும் தொற்றியிருக்க வேண்டும். அவர்களும் அந்த மனிதனைத் தாக்கத் தொடங்கினார்கள். “குண்டியால் கொழுப்பு வடியும் இந்த முதலை யார்?” என்று நான் என்னுடைய சகாக்களிடம் கேட்டேன். “தெரியவில்லை… அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை” என்று ஒருவன் பதிலளித்தான். நாங்கள் அந்த மனிதனை அவ்வளவு அடித்தும் அவன் மயங்காதது என்னுடைய வெறியை எக்கச்சக்கமாக் கூட்டியது. அவனிடமிருந்து வரும் முனகல் சத்தம் கடைசிவரை நிற்கவேயில்லை. நண்டின் கிண்ணிகளை முறிப்பதைப் போல, நாங்கள் அவனுடைய இருபது விரல்களையும் முறித்துப் போட்டோம். அவனுடைய உடம்பிலிருந்த அத்தனை எலும்புகளையும் சுள்ளிகளை உடைப்பது போல உடைத்தோம். அவனுடைய கைவிரல் நகங்களை நான் என்னுடைய விரல்களாலேயே பிய்த்துப் போட்டேன். என்மீது இரத்தம் தெறிக்கத் தெறிக்க என்னுடைய வெறியும் கூடிக்கொண்டே போனது. நான் அவனுடைய காற்சட்டையை உள்ளாடையோடு சேர்த்துக் கீழிறக்கிவிட்டு, அவனுடைய இரண்டு விதைகளையும் என்னுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்து நசுக்கினேன். அவை அழுகிய ரம்புட்டான் பழங்களைப் போல கூழாகிப் போயின. ஆனால், அவனுடைய முனகல் மட்டும் நிற்பதாகயில்லை. அவன் தன்னுடைய உயிரோடு சேர்த்துக் குரலையும் பிடித்து வைத்திருக்கிறான். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் முடிந்தபோது, இரண்டு வாகனங்கள் வெளிச்சத்தைக் கக்கியவாறே உள்ளே வந்தன. வாகனங்களின் வெளிச்சத்தில் அந்த மனிதன் மல்லாக்கப் படுத்திருந்தான். பச்சை இரத்தத்தில் தோய்ந்து அவனது உடைகள் மினுங்கிக்கொண்டிருந்தன. வாகனங்களிலிருந்து மேஜர் தரத்திலுள்ள ஓர் அதிகாரியோடு இன்னும் பல அதிகாரிகள் இறங்கினார்கள். அந்த மனிதனை நிற்க வைக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. என்னுடன் இருந்த இராணுவ வீர்கள் இருவரும் அந்த மனிதனின் கமுக்கட்டுகளுக்குக் கீழாகத் தங்களது கைகளைக் கொடுத்து, அவனது தோளோடு சேர்த்துப் பற்றிப்பிடித்து அவனைத் தூக்கி நிறுத்தி வைத்திருந்தார்கள். அவனது கால்கள் இடுப்போடு ஒடிந்து பூமியிலிருந்து ஓரங்குல உயரத்தில் தொங்கின. அப்போது அந்த மனிதனின் வலது கை அசைந்து, முழங்கால்கள் வரை இறங்கியிருந்த அவனது காற்சட்டையை மேலிழுக்க முயன்றது. ஆனால், அவனால் முடியவில்லை. பத்து வெளிச்ச வட்டங்கள் அந்த மனிதனின் மீதிருந்தன. அவனின் கண்கட்டை அவிழ்க்குமாறு மேஜர் உத்தரவிட்டார். நான்தான் அவனது கண்களின் மீது கட்டப்பட்டிருந்த கறுப்புத் துணியை விலக்கினேன். அந்த மனிதனின் மூடிக் கிடந்த கண்கள் மெதுவாகத் திறந்துகொண்டன. மேஜர் தன்னுடைய கையிலிருந்த டோர்ச் லைட்டைத் தனது முகத்தை நோக்கித் திருப்பினார். மேஜரின் முகம் அந்த மனிதனது முகத்திற்கு நேரே இருந்தது. அது எப்படி நிகழ்ந்தது என எனக்கு இன்னும் புரியவேயில்லை. அந்த மனிதனது பிளந்த நாவு எப்படி ஒட்டிக்கொண்டது? அவன் ஒரு குழந்தை பேசுவதைப் போல, நிதானமாக மேஜரிடம் சொன்னான்: “கடைசியாக நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துவிட்டோம்.” “அய்யோ… இந்த மனிதன் பேசுவதை நிறுத்தவே மாட்டானா” என்று புலம்பியபடியே மேஜர் தனக்கு அருகிலிருந்த ஒல்லியான இராணுவ அதிகாரியைப் பார்த்தார். அந்த ஒல்லியானவன் நொடிப்பொழுதில் தன்னுடைய இடுப்புப் பட்டியிலிருந்து கத்தியை உருவினான். அப்போது மேஜரின் கையிலிருந்த வெளிச்ச வட்டம் இரத்தில் தோய்ந்திருந்த மனிதனின் இடுப்புக்குக் கீழே இறங்கியது. ஒரே நொடியில் அந்த மனிதனின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, இரத்தத்தில் ஊறியிருந்த அவனது வாய்க்குள் அது திணிக்கப்பட்டது. மேஜர் தன்னுடைய பிஸ்டலை அவனுடைய வலதுபுற மார்பில் வைத்து நிதானமாகச் சுட்டார். அந்த மனிதனின் உடல் ஒருதடவை உலுங்கிப் போய் நின்றது. அவனது முனகல் அலைந்துபோய் ஆறாங்குழியை நிரப்பிற்று. ஆறாங்குழியைச் சுற்றியுள்ள தடயங்களை அகற்றவும் சுத்திகரிக்கவுமான பொறுப்பு இரண்டு இராணுவ வீரர்களிடம் மேஜரால் கொடுக்கப்பட்டதும், நாங்கள் அந்த மனிதனது உடலை பஜீரோ வண்டியின் பின்புறத்தில் திணித்துக்கொண்டு புறப்பட்டோம். சில நிமிடங்களிலேயே எங்களுடைய வாகனத் தொடரணி பொரளை மயானத்திற்குள் நுழைந்து சென்றது. என்னை முகாமிலிருந்து அழைத்து வந்திருந்த கட்டளை அதிகாரியின் வாகனம் ஏற்கனவே மயானத்தில் நின்றிருந்தது. கூரை மட்டுமேயிருந்த தகன மண்டபத்தின் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதும், நாங்கள் அந்த மனிதனது உடலை வண்டியிலிருந்து இறக்கி சீமெந்து நிலத்தில் கிடத்தினோம். அந்த நிலத்தில் அவனைச் சுற்றி இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. அவனது வாயில் திணிக்கப்பட்டிருந்த ஆண்குறியிலிருந்து கருமையாக இரத்தம் வெளியாகி அவனது கடைவாய்களில் கோடாக வழிந்தது. உணர்கொம்பும் சிவப்பு நிற இறக்கைகளும் கொண்ட வண்ணத்துப்பூச்சி போன்று அந்த மனிதன் கிடந்தான். தகன மண்டபத்தின் எல்லா விளக்குகளும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஆனால், எரிவாயு உலையின் வாசல் இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இருபது பேர்வரை நின்றிருந்தோம். அங்கே லான்ஸ் கோப்ரல் வீரசிங்கவைப் பார்த்தேன். அவனது தோளில் எப்போதுமிருக்கும் பெட்டி இப்போதும் தொங்கியது. உள்ளே வீடியோப் படப்பிடிப்புக் கருவிகளை வைத்திருப்பான். அவனும் என்னைப் போலவே ஜே.வி.பி. அனுதாபி என்று சொல்வதைவிட, அவனை ஜே.வி.பியின் தீவிர விசுவாசி எனச் சொல்வதே சரியானது. சார்ஜன்ட் அத்தநாயக்கவுடன் சில தடவைகள் எங்களது முகாமுக்கு வந்து போயிருக்கிறான். தகன மண்டபத்தில் பணியாற்றும் கிழவனை அப்போதுதான் எங்கிருந்தோ பிடித்துவந்தார்கள். இத்தனை இராணுவ வீரர்களைக் கண்டதுமே அவனது தூக்கம் ஓடிப் போயிருக்கும். வந்த கிழவன் தரையில் கிடந்த உடலைக் கண்டதும், கீழே குனிந்து அந்த உடலை உற்றுப் பார்த்தான். பின்பு நிமிர்ந்து நின்று சொன்னான்: “இந்தத் தகனமேடை என்னுடைய பொறுப்பில் இருக்கிறது. என்னுடைய கடமையை நான் சரிவரச் செய்ய வேண்டும். குப்பையை எரிப்பது போல ஒரு மனிதனை எரித்துவிட முடியாது.” “அடே… புழுத்த கிழட்டுக் குரங்கே! நீயுமா பேசுகிறாய்” என்றவாறே ஓர் அதிகாரி தன்னுடைய பிஸ்டலைக் கிழவனின் தலையில் வைத்தார். அதற்குப் பின்பு அந்தக் கிழவன் எதுவுமே பேசவில்லை. இடுப்பிலிருந்த சாவியை எடுத்து அதிகாரியின் கையில் கொடுத்தான். எரிவாயு உலையை எப்படி இயக்குவது என்பதையும் விளக்கிச் சொல்லிவிட்டுத் தரையில் உட்கார்ந்துகொண்டான். அவனது கண்கள் அந்த எரிவாயு உலையின் மீதேயிருந்தன. உத்தரவு கிடைத்தும், நானும் இன்னொருவனுமாக வண்ணத்துப்பூச்சி போலக் கிடந்த உடலின் கால்களைப் பிடித்துக் கொறகொறவென எரிவாயு உலை வரைக்கும் இழுத்துச் சென்றோம். பின்பு அந்த உடலைத் தூக்கி, பாண் சுடும் போறணையின் வாயைப் போலவேயிருந்த எரிவாயு உலையின் வாசலுக்குள் வீசினோம். என்னுடன் கூட இருந்த நடுக்கம் பிடித்தவன் நோண்டி வேலை செய்துவிட்டான். உடல் இலக்குத் தப்பி வாசற் சுவரில் மோதி வெளியே விழுந்தது. அதனது வாயிலிருந்த ஆண்குறி மட்டும் தெறித்து உலை வாய்க்குள் போய்விட்டது. “நாய்களே! உங்களால் ஒரு வேலையையும் சரியாகச் செய்ய முடியாதா?” என்றொரு சத்தம் எழுந்தது. அது என்னுடைய கட்டளை அதிகாரியின் குரல். நான் ரோஷம் தலைக்கேற என்னருகில் நின்றவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, என்னுடைய இரண்டு கைகளாலும் அந்த உடலை வாரித் தூக்கினேன். அப்போது என் கைகளிலிருந்த அந்த மனிதனின் வாயிலிருந்து சத்தமான முணுமுணுப்பு எழுந்தது. அந்த இரவில் அங்கிருந்த அனைவருக்குமே அந்தச் சத்தம் கேட்டது. எனக்கு அருகே வந்து, அந்த மனிதனின் முகத்தை உற்றுப் பார்த்த தலைமைத் தளபதி “இவன் பேசுவதை நிறுத்தவே போவதில்லை” என்று கிட்டத்தட்டப் புலம்பினார். நான் அந்த மனிதனை உலையின் வாய்க்குள் நிதானமாகத் திணித்தேன். உடல் முழுவதுமாக எரிந்து, கைப்பிடி சாம்பலாகும் வரை நாங்கள் சிலர் அங்கேயே நின்றிருந்தோம். எனக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. லான்ஸ் கோப்ரல் வீரசிங்கவிடம் சென்று ‘சிகரெட் இருக்கிறதா’ எனக் கேட்டுச் சைகை செய்தேன். அவன் முன்னே செல்ல, நான் அவனைத் தொடர்ந்தேன். சற்றுத் தூரத்தில் நின்றிருந்த பெரிய மரத்தின் மறைவில் நாங்கள் ஒதுங்கியதும், தன்னுடைய தோளில் தொங்கிய வீடியோப் பெட்டியின் பக்கவாட்டிலிருந்த சிறிய பைக்குள்ளிருந்து வீரசிங்க சிகரெட்டுகளையும் லைட்டரையும் எடுத்தான். இருவரும் அமைதியாகப் புகைத்துக்கொண்டிருக்கும் போது, வீரசிங்க தலையை உயர்த்தி மேலே பார்த்தவாறே மெதுவாக என்னிடம் கிசுகிசுத்தான்: “தோழர் ரோஹணவுக்கு இப்படி நிகழும் என நான் எதிர்பார்க்கவேயில்லை…” “என்ன சொன்னாய் வீரசிங்க… யார்?” “இப்போது நீ நெருப்புக்குள் திணித்த தோழர் ரோஹண விஜேவீரவைப் பற்றித்தான் சொல்கிறேன்.” நான் மரத்திலிருந்து விலகி, தகன மண்டபத்தைப் பார்த்தேன். கூரையிலிருந்து அடர் புகை எழுந்துகொண்டிருந்தது. “நீ உண்மையைத்தான் பேசுகிறாயா வீரசிங்க?” “யக்கடயா… இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, திம்பிரிகஸ்ஸயா இராணுவக் கூட்டுச் செயற்பாடு மையத்தில் வைத்துத் தோழர் ரோஹணவின் இறுதியுரையை நான்தான் வீடியோவில் பதிவு செய்தேன்.” அப்போது, என்னுடைய மூளையில் சுரந்த உணர்ச்சிகளை என்னவென்று என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒரு கனத்த முனகலொன்று என்னிடமிருந்து வெளிப்பட்டதோடு எல்லாம் முடிந்து போயிற்று. வீரசிங்க இன்னும் இரண்டு சிகரெட்டுகளை எடுத்து, ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டுச் சொன்னான்: "நான் அந்த மையத்தின் மாடியிலிருந்த, மூன்று கதவுகளுள்ள பெரியதொரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட போது, நாற்காலியில் நிமிர்ந்தும், இலேசான திகைப்போடும் உட்கார்ந்திருந்த மனிதரைச் சூழவரப் பதினைந்து இராணுவ அதிகாரிகள் நின்றிருந்தார்கள். அப்போதுதான் இராணுவப் பொலிஸின் புகைப்படப் பிடிப்பாளர் இந்திரானந்த டி சில்வா தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் மெதுவாக ‘யாரிந்த மனிதர்?’ என்று கேட்டேன். அதற்கு இந்திரானந்த இப்படிச் சொன்னார்: ‘இங்கே கீழ்த்தளத்திலுள்ள அறையொன்றில் எச்.பி. ஹேரத் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவரையும் நான் புகைப்படங்கள் எடுத்தேன். அப்போது ஹேரத் என்னிடம் முணுமுணுப்பாக, இவர்கள் உண்மையிலேயே தோழர் ரோஹணவைப் பிடித்துவிட்டார்களா? என்று கேட்டார். ஹேரத் பாதி இறந்துவிட்டார். அவரது முகம் வீங்கி, உடல் நீலம் பாரித்துள்ளது.’ யக்கடயா! சத்தியமாகச் சொல்கிறேன்… இந்திரானந்த இதைச் சொல்லும் போது, நான் முதலில் நம்பவேயில்லை. என்னுடைய அதிகாரி நாற்காலியில் உட்கார்ந்திருந்த மனிதரிடம் சென்று ‘விஜேவீர…இன்னும் சில நிமிடங்களில் வீடியோக் கமெரா தயாராகிவிடும்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார். அப்போது ரோஹண விஜேவீர அமைதியாக, சிங்களத்திலேயே அந்த அதிகாரியிடம் கேட்டார்: ‘உங்களுக்கு ரஷ்ய மொழி தெரியுமா?’ அதிகாரி இல்லையெனத் தலையசைத்துக் கோணலாக இளிக்கவே ‘என்னுடைய இரண்டாவது மொழி ரஷ்யன்’ எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய ரஷ்யா வாழ்க்கை, அங்கே லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தது என்றெல்லாம் ரோஹண பேசிக்கொண்டே போனார். நான் படப்பிடிப்புக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தாலும், காதுகளை அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த உரையாடல்களின் மீதே குவித்திருந்தேன். உண்மையில் ரோஹண மட்டும்தான் அங்கே பேசிக்கொண்டிருந்தார். தன்னுடைய கொம்யூனிஸ்ட் கட்சி அனுபவம், ஜே.வி.பியை ஆரம்பித்த சூழல், முதலாவது புரட்சியின் போது கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணக் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தது என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார். அப்போது அறைக்குள் நுழைந்த பொலிஸ் ஜெனரல் வாத்துப் போல நடந்து வந்து ரோஹணவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, திடீரென ரோஹணவின் பிடரியைப் பற்றிப் பின்னோக்கி இழுத்தார். தன்னுடைய முகத்தை அண்ணாந்து பொலிஸ் ஜெனரலின் முகத்தைப் பார்த்த ரோஹண விஜேவீர ‘இப்படி அற்பமாக நடந்துகொள்ளக் கூடியவர் உங்களைப் போன்ற ஒருவராகத்தான் இருப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்’ என்றார். பொலிஸ் ஜெனரலின் முகம் நாய் மூஞ்சியாகிவிட்டது. நாயை அரசனாக்கினாலும் அது குரைக்காமல் இருக்காது யக்கடயா… இதற்குள் நான் ரோஹணவின் தலைக்குப் பின்னால் திரையைக் கட்டியும், அவருக்கு முன்னாலொரு சிறிய மேசையை வைத்தும், விளக்குகளைப் பொருத்தியும் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துத் தயாராகிவிட்டேன். நான் தோழர் ரோஹணவுக்கு முன்னால் கமெராவோடு வந்தபோது, அவர் ‘நான் குறைந்தது இரண்டு மணிநேரங்கள் பேச வேண்டியிருக்கும். தொடர்ச்சியாகப் பதிவு செய்ய முடியுமல்லவா?’ என்று என்னிடம் கேட்டார். ஆனால், அது அப்படி நடக்கவில்லை. பொலிஸ் ஜெனரல் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத் துண்டை எடுத்து ரோஹணவின் முன்னால் மேசையில் வைத்துவிட்டு, அதில் எழுதப்பட்டிருப்பதை மட்டுமே வீடியோக் கமெராவின் முன்னால் பேச வேண்டும் என்றார். ரோஹண அந்தத் தாளைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், கசப்பான புன்னகையுடன் அமைதியாக இருந்தார். அவரருகே சென்ற இராணுவத் தலைமைத் தளபதி ‘விஜேவீர! உங்களது மனைவியும், அய்ந்து குழந்தைகளும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இந்தத் துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஆறு வரிகளையும் பேசப் போவதில்லை என்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களது மனைவி சித்திராங்கனியின் வயிற்றிலிருக்கும் ஆறாவது குழந்தையும் சேர்த்தே சுட்டுக் கொல்லப்படும்’ என்றார். அப்போது ரோஹண என்னை மட்டுமே பார்த்தார். அவர் தன்னுடைய வாழ்நாளில் ஆற்றிய உரைகளில் மிகச் சிறியது அதுதான். எல்லாவிதத்திலும்!" நான் தகன மேடையை நோக்கி நடந்தபோது, எரிவாயு உலை தணிந்திருந்தது. என்னால் எதையும் சிந்திக்க முடியாதவாறு எனது மண்டை தகித்துப் புகைந்துகொண்டிருந்தது. அதிகாலையில் முகாம் திரும்பி, குளித்துவிட்டுப் படுத்தவன் பிற்பகலில் தான் கண்விழித்தேன். படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் ஏவாமல், மாலை நான்கு மணிவரை கட்டிலிலேயே படுத்திருந்தேன். தலைநகரத்திலிருந்து வெளிவரும் தினப் பத்திரிகைகள் மாலையில் சிறப்புத் தாள்களை வெளியிட்டிருந்தன. என்னுடைய கைக்குக் கிடைத்த ‘திவயின’ பத்திரிகையில் அரைப் பக்கத்திற்கு ரோஹண விஜேவீரவின் புகைப்படம் இருந்தது. கீழே இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை இவ்வாறு வெளியாகியிருந்தது: நேற்று, 12.11.1989 பிற்பகலில், கண்டி மாவட்டத்தில், உலப்பெனே தேயிலைத் தோட்டத்து வீட்டில் மறைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர விஷேட பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, உடனடியாகவே மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைகளுக்கு ரோஹண விஜேவீர முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார். அவராகவே முன்வந்து வீடியோ மூலமாக ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, படையினரிடம் சரணடையுமாறு ஜே.வி.பி. உறுப்பினர்களை ரோஹண விஜேவீர கேட்டுக்கொண்டார். பின்பு, கொழும்பிலுள்ள ஜே.வி.பியின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுப்பதற்காக அவர் படையினரை அழைத்துச் சென்றார். அந்த மறைவிடத்தில் ஒளிந்திருந்த ஜே.வி.பியின் பொலிட்பீரோ உறுப்பினர் எச்.பி. ஹேரத் படையினரிடம் சரணடைவது போன்று நாடகமாடியபடியே, திடீரெனத் துப்பாக்கியை எடுத்து ரோஹண விஜேவீரவைச் சுட்டுக் கொன்றார். படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது, எச்.பி. ஹேரத் கொல்லப்பட்டார். அவசரநிலைச் சட்ட விதிகளின்படி இரு உடல்களும் உடனடியாகவே படையினரால் உரிய முறையில் தகனம் செய்யப்பட்டன. அந்தப் பத்திரிகைத் தாளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். இப்போது என் முன்னால் இரு அபாயங்கள் இருப்பதை நான் உணர்ந்தேன். நான் ஜே.வி.பிக்கு அனுதாபியாக இருந்தது இராணுவத்தில் சிலருக்காவது தெரியும். அவர்களில் யாராவது ஒருவர் கொடுக்கும் தகவலின் மூலம் நான் கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்படலாம். எரிவாயு உலைகளை எப்படி இயக்குவது என்பதை இப்போது அதிகாரிகள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். இன்னொருபுறத்திலும் எனது உயிருக்கு ஆபத்து உண்டு. நான் ரோஹண விஜேவீரவை அரைகுறை உயிரோடு உலைக்குள் திணித்ததை, ஜே.வி.பி. விசுவாசியான லான்ஸ் கோப்ரல் வீரசிங்க பார்த்திருக்கிறான். அவன் மூலமாக இந்தச் செய்தி ஜே.வி.பிக்குச் சென்றால், அவர்கள் நிச்சயமாக என்னைப் பழிதீர்ப்பார்கள். ஜே.வி.பியின் சாதாரண உறுப்பினரான மனம்பேரி கொலைக்குப் பழிதீர்ப்பதற்காகப் பதினேழு வருடங்கள் காத்திருந்து, இராணுவத் தொண்டர் படையைச் சேர்ந்த ரத்நாயக்கவைக் கொன்றவர்கள் அவர்கள். பள்ளத்தை நோக்கித்தான் தண்ணீர் ஓடிவரும். பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகள் கடைசியில் சிறிய மனிதர்கள் மீதே சுமத்தப்படும். நான் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தேன். எல்லா வித்தைகளிலும் பெரிய வித்தை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதுதான். எனது அடையாளங்களை அழித்துக்கொண்டு வாழும் இந்த முப்பத்து மூன்று வருடங்களில், அப்படியொன்றும் பெரிய துன்பத்தையெல்லாம் நான் அனுபவித்துவிடவில்லை. இந்த வாழ்க்கை முறைக்கு இணக்கமாகிவிட்டேன். இலங்கையிலிருக்கும் என்னுடைய இளைய சகோதரியிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆரம்பத்தில் சில தடவைகள் என்னைத் தேடி யார் யாரோ வீட்டுக்கு வந்தார்களாம். இப்போது அப்படி எதுவுமில்லை. எல்லோருமே என்னை மறந்துவிட்டார்கள். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு மறுபடியும் ஞாபகமூட்ட லான்ஸ் கோப்ரல் வீரசிங்க முயற்சிக்கிறான் போலிருக்கிறது. அன்றைய இரவின் இரகசியம், அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இருவராலேயே நீண்ட பல வருடங்கள் கழித்து வெளியே கசியவிடப்பட்டது. முதலில் அரைகுறையாக வாயைத் திறந்தவர் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கே. அவர் எழுதிய ‘ஒரு படைவீரனின் கதை’ என்ற நூலில் அன்றைய இரவைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, தனக்கும் ரோஹண விஜேவீரவின் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நழுவிவிடுகிறார். தன்னுடைய சேவைக்காக ரண விக்ரம பதக்கம், ரண சூர பதக்கம், உத்தம சேவா பதக்கம் எனப் பல விருதுகளை வாங்கித்தான் சரத் முனசிங்கே இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராகி, துணைச் சபாநாயகர் பதவிவரை உயர்ந்தார். இரண்டாவதாக வாயைத் திறந்தது இராணுவப் பொலிஸ் பிரிவிலிருந்த இந்திரானந்த டி சில்வா. அவரும் தனக்கு ஒருபகுதி உண்மைதான் தெரியும் எனச் சொல்லி நல்லபிள்ளைக்கு நடித்திருக்கிறார். அவருக்கு ஜே.வி.பி. சார்பாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போது லான்ஸ் கோப்ரல் வீரசிங்க ஓர் இணையத்தளத்திற்கு வழங்கியிருக்கும் நேர்காணலில், ரோஹண விஜேவீரவின் கொலைக்குத் தான் நேரடிச் சாட்சியமென்றும், அந்தப் படுகொலையில் பங்குபற்றிய அனைவரின் பெயர்களையும் தான் விரைவிலேயே முழுமையாக வெளியிடப் போவதாகவும் சொல்லியுள்ளான். முப்பத்து மூன்று வருடங்களாக மூடி வைத்திருந்த அவனுடைய வாயை இப்போது அகலத் திறப்பதால் என்ன நன்மை விளையப் போகிறது என நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்! ஒருவேளை அவனுக்கும் ஏதாவது ஒரு கட்சியில் பதவி கிடைக்கலாம். எப்படியோ தொலையட்டும்! ஆனால், லான்ஸ் கோப்ரல் வீரசிங்கவிடம் நான் சொன்னதாக ஒரு தகவலைத் தெரிவித்துவிடுங்கள். என்னுடைய பெயர் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை, ‘யக்கடயா’ எனச் சொன்னால் வீரசிங்க புரிந்துகொள்வான். அது என்னவென்றால், அவன் என்னுடைய பெயரை எங்காவது வெளிப்படுத்தினால், நான் இலங்கைக்குச் சென்று, அவனது தலையைத் திருகி, அவனை நிச்சயமாகவே கொன்றுவிடுவேன். எனக்கு இப்போது நேரமாகிறது. நான் கடலுக்குள் செல்ல வேண்டும். பூமிக்குத் திரும்ப நாட்களாகும். கருங்குயில் தன்னுடைய வீட்டின் மதிற்சுவரில், ஏன் சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரிகள் விழுந்து புரண்டு முத்தமிடுகிறார்கள் என்பது ரவிசங்கருக்குப் புரியவேயில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்த மதிற்சுவரில், இப்போது எண்ணிப் பார்த்தால் குறைந்தது நூறு லிப்ஸ்டிக் அடையாளங்களாவது இருக்கும். ஒரே நிறத்தில் அந்த அடையாளங்கள் பதிந்திருந்தால் கூட ஒருவேளை அதுவொரு அழகாக இருந்திருக்கக் கூடும். ஆனால், சிவப்பு, ஊதா, பச்சை, கருப்பு என எல்லா வண்ணங்களிலும் அந்தச் சுவரில் உதட்டு அடையாளங்கள் பதிந்து, குரங்கு அம்மைநோய் வந்தவனின் முகம் போல அந்தச் சுவர் அசிங்கமாகயிருந்தது. போதாததற்கு சிலர் சிறிய அட்டைகளிலோ, தாள்களிலோ துண்டுச் சீட்டுகளை எழுதி மதிற்சுவரின் மீது வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி ரவிசங்கர் தனது எண்பது வயதான தந்தையாரிடம் கேட்டபோது “நான் என்ன செய்வது மகன்? நானும் வரும் வெள்ளைக்காரர்களை முடிந்தவரை துரத்தத்தான் பார்க்கிறேன்… ஆனால், நான் சற்றே கண்ணயரும் நேரத்தில் வந்து அசிங்கப்படுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். சிலர் வீட்டுக்குள் உள்ளிடவே முயற்சித்தார்கள். நானும் உன்னுடைய அம்மாவும் கதவை மூடிவிட்டு உள்ளே இருந்துகொள்வோம். எதற்கும் நீ வரட்டும் என்றுதான் காத்திருந்தோம்… கண்டறியாத கொழும்பு” என்று கொஞ்சம் அலட்சியமாகத்தான் கிழவர் பதில் சொன்னார். மகன் இந்த வீட்டுக்குச் சம்பளம் இல்லாத காவல்காரர்களாகத் தன்னையும் கிழவியையும் வைத்திருக்கிறான் என்ற கடுப்பும் அவரது குரலிலிருந்தது. இலண்டனில் ஏழெட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கும் முதலாளியான ரவிசங்கர் இணையத்தளமொன்றில், கொழும்பு நகரத்தின் வெள்ளவத்தைப் பகுதியில் 42-வது ஒழுங்கையில், 56-வது இலக்க வீடு விற்பனைக்குண்டு என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டுத்தான், இந்த வீட்டை ஆறு மாதங்களுக்கு முன்பு சகாய விலையில் வாங்கினான். அப்போது இந்த வீடு சிதைந்து பாழடைந்துதான் கிடந்தது. இலண்டன் பவுண்ட்ஸுகளாகக் கொட்டியிழைத்து, ரவிசங்கர் இந்த வீட்டைத் திருத்திப் பளிங்கு மாளிகையாக்கிவிட்டான். முன்பக்கத்து மதிற்சுவரையும் செப்பனிட்டு, வெள்ளையடித்து அதில் ஒரு துண்டு சலவைக் கல்லைப் பதித்து ‘ரவிவில்லா’ என்று பொன்னெழுத்துகளில் பொறித்தான். புளியங்கூடல் கிராமத்தில் கோயில் குளமென நிம்மதியாகயிருந்த பெற்றோரை வற்புறுத்தி அழைத்துவந்து, கொழும்பு வீட்டில் குடிவைத்துவிட்டு இலண்டன் சென்றவன், மூன்று மாதங்கள் கழித்து வீட்டைப் பார்க்கத் திரும்பிவந்தால், அது இந்த நிலையிலிருக்கிறது. இப்போது ‘ரவிவில்லா’ என்ற பெயர் பதிக்கப்பட்டிருக்கும் மதிற்சுவரில் தொண்ணூற்றுச் சொச்ச ஆண்டுகளுக்கு முன்பாக, பறக்கும் கருங்குயில் வடிவத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய பலகைத் துண்டில் மஞ்சள் வர்ணத்தால் பொறிக்கப்பட்டிருந்த பெயருக்கே இத்தனை முத்தங்களும் துண்டுச் சீட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது ரவிசங்கருக்குத் தெரிய வந்தால், அவனுடைய அற்புதமான வியாபார மூளை வேகமாக இயங்கி, வாங்கிய விலையிலும் பத்து மடங்கு விலைக்கு இந்த வீட்டை விற்றுவிடும். இது மகாகவி ஒருவன் 1929-ல் வாடகைக்குக் குடியேறி, இரண்டு வருடங்கள் தங்கியிருந்த வீடு. தன்னுடைய இருபதாவது வயதிலேயே ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு கையறு பாடலும்’ என்ற நூலை வெளியிட்டு உலகத்தை மயக்கிய அந்த இளங்கவிஞன் இந்த வீட்டுக்குக் குடி வரும்போது, அவனுக்கு இருபத்தைந்து வயது. கொழும்பிலிருந்த கொன்ஸலேட் அலுவலகத்தில் பிரதிநிதியாக அவனுக்குப் பணி கிடைத்திருந்தது. அவனுடைய மிகப் புகழ்பெற்ற ‘Residencia en la tierra’ கவிதை நூலின் பெரும்பாலான பகுதிகளை, இந்த வீட்டின் மேற்கு அறையில் இலட்சத்தீவுக் கடலை நோக்கியிருக்கும் சாளரங்களுக்கு முன்னே அமர்ந்திருந்துதான் எழுதினான். தொங்கும் கருங்குயில் பலகையை அடையாளம் வைத்துத்தான் சம்பங்கி அந்த வீட்டை முதலில் அடையாளம் கண்டுபிடித்தாள். தந்தையார் முத்தான் அவளுக்கு வீட்டு அடையாளத்தை மட்டுமல்லாமல், எல்லாவற்றையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுத்தார். காலையில் முதல் சூரிய வெளிச்சம் வரும்போதே அவள் அங்கே போய்விட வேண்டும். எப்படி அந்த வளவுக்குள் நுழைய வேண்டும்? பறக்கும் கருங்குயிலுக்கு அருகிலிருக்கும் ஒற்றை இரும்புக் கிறாதிப் படலையை ஓசைப்படாமல் திறந்து வளவுக்குள் நுழைந்தால், குரோட்டன் செடிகளுக்கு நடுவாக, வீட்டுக்கு இடதுபுறத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையிருக்கும். அந்தப் பாதையில் நடந்தால் வீட்டுக்குப் பின்புறத்தில், வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்தில் மரப்பலகைகளால் கட்டப்பட்ட கழிவறை தனியாக இருக்கும். அங்கு மலம் கழிக்கும் வட்டத் துளையின் கீழே பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு வாளியை எடுத்துச் சென்று, நாலெட்டுத் தூரத்திலுள்ள கடலில் மலத்தைக் கொட்ட வேண்டும். கடலிலேயே வாளியைச் சுத்தமாக அலம்பிவிட்டு, மறுபடியும் அந்த வளவுக்குச் சென்று, கழிவறைத் துளையின் கீழே இரும்பு வாளியைச் சரியாகப் பொருத்தி வைத்துவிட வேண்டும். இதையெல்லாம் வேகமாகச் செய்ய வேண்டும். கழிவறைக் கதவருவே ஒரு சிறிய வெற்றுப் பால் டப்பா வைக்கப்பட்டிருக்கும். அதற்குள் எப்போதாவது சில சில்லறைக் காசுகள் கூலியாகப் போடப்பட்டிருக்கும். அந்த நாணயங்களைச் சம்பங்கி தொலைத்துவிடாமல், கவனமாகச் சேலைத் தலைப்பில் முடிந்து எடுத்துவர வேண்டும். இவ்வளவுக்கும், சம்பங்கி சிறுமியாக இருந்தபோது, தாயார் கந்தம்மாவோடு உதவிக்காக வேலைக்குச் சென்று வந்தவள்தான். ஆனாலும், முத்தான் திரும்பத் திரும்ப அவளுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்: “இவற்றில் எதையொன்றையும் நீ மறக்கக் கூடாது! முக்கியமாக அந்த வீட்டிலுள்ள வெள்ளைக்காரத் துரையைக் காண நேர்ந்தால் ‘குட் மார்னிங்’ என்று சொல்ல வேண்டும். சம்பங்கி எங்கே சொல்லு பார்ப்போம்! குட்….மார்னிங்…” என்று முத்தான் கேட்டபோது ‘எனக்குத் தெரியும்’ என்பது போல சம்பங்கி தலையை மெதுவாக ஆட்டினாளே தவிர வாயைத் திறந்து பேசினாளில்லை. அவள் வாயை அரிதிலும் அரிதாகத்தான் திறந்து பேசுவாள். சம்பங்கி பிறக்கும் போதே, மந்த புத்திக் குறைபாடோடு பிறந்தவள் என்பதைப் பெற்றோர் காலப்போக்கில் தெரிந்துகொண்டாலும், அது ஏதோ தெய்வ சாபமென்று அவர்கள் நினைத்திருந்தார்கள். அவளது புத்தியை ஒருநாள் தெய்வம் திருத்திவிடும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். கந்தம்மா தெய்வங்களை நோக்கி அரற்றிக்கொண்டேயிருந்தார். சம்பங்கிக்குப் பின்பாகப் பிறந்த மூன்று குழந்தைகளையும் பால் குடி மறக்க முன்பே வாந்திபேதி கொண்டுபோய்விட்டது. தங்கியிருக்கும் தன்னுடைய ஒரே குழந்தைக்குப் புத்தி நேரானால் பொன்னியம்மன் கோயிலில் உப்பு, மிளகு எறிவதாகக் கந்தம்மா நேர்த்தி வைத்தார். கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்குச் சென்று, குட்டி வெள்ளி நாக்கு வாங்கி வாசற்படியில் காணிக்கை வைத்தார். டச்சுக் கால்வாயில் இறங்கி அவரே கொய்த வெண்தாமரை மலர்களை மஹாபோதி விகாரையின் முன்னே வைத்தார். இந்தப் பதினேழு வயதுவரை சம்பங்கியின் குறைபாடு நீங்கவில்லை. போதாததற்கு அவள் வளர வளர அவளோடு சேர்ந்து மறதியும் வளர்ந்துகொண்டிருந்தது. முக்கியமான விஷயங்களைக் கூடச் சடுதியில் மறந்துவிடுகிறாள். அக்கம்பக்கத்தில் அவளை ‘அரணை’ என்று கேலி செய்வார்கள். இந்த குறைபாடுகளாலேயே அவளுக்கு மாப்பிள்ளை அமைவதும் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. முத்தானின் கூட்டாளியான கேசவய்யா, தான் சம்பங்கியை மணம் செய்ய விரும்புவதாகச் சாடைமாடையாக முத்தானிடம் பேச்சுக் கொடுக்காமலில்லை. மனைவியை இழந்தவரும் முடாக் குடிகாரருமான அந்தக் கிழவருக்குச் சம்பங்கியைக் கட்டிக்கொடுக்க முத்தான் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மகளைக் குணமாக்குமாறு தெய்வங்களிடம் கெஞ்சியும் அரற்றியும் பேசிக்கொண்டிருந்த தாயார் இப்போது தெய்வங்களைக் கேளாக் கேள்வி கேட்டுத் திட்டத் தொடங்கிவிட்டாரர். அந்தக் குடிசைக்குள் ஏதாவது பேச்சுச் சத்தம் கேட்டால், அது கந்தம்மா தெய்வத்திடம் ஏசிப் பேசுவதாக மட்டுமேயிருக்கும். சம்பங்கிக்கு யாரோடும் பேசப் பிடிக்காது. அவள் எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்பினாள். அவளுக்கு மாப்பிள்ளை அமையாததைப் பற்றி அவளுக்குத் துளியும் கவலையில்லை. அவளுக்கு இந்த உலகத்திலேயே கடலைத் தான் மிகவும் பிடித்திருந்தது. அவளது அம்மாயி “சிலோனுக்குக் கப்பல் ஏறும் போதுதான் நான் முதன் முதலில் கடலைக் கண்டேன்” எனச் சொல்வதை, சம்பங்கி சிறுவயதில் கேட்டபோது, கடலில்லாமல் எப்படியொரு ஊர் இருக்கக் கூடும் என்றெல்லாம் கவலையோடு யோசித்திருக்கிறாள். அவளுடைய பெரும்பாலான பொழுதுகள் கடற்கரையிலேயே ஒற்றையில் கழியும். கடலில் ஒரு மிகப் பெரிய கப்பல் தரைதட்டி ஒதுங்கிக் கிடக்கிறது. அதை நூறாண்டுகளுக்கு முந்தைய டச்சுக்காரர்களின் போர்க் கப்பல் எனச் சொல்கிறார்கள். அந்தக் கப்பலின் மீது சுருள்வளையமாகவும், கோபுர அமைப்பிலும், சிலவேளைகளில் விரிந்த மலர் இதழ்களின் வடிவிலும் பறவைக் கூட்டம் இறங்கும். அக்கூட்டம் மறுபடியும் மேலேறிப் பறக்கும் போது, இன்னொரு சித்திர வடிவமாகிப் பறக்கும். கரிய பறவைக் கூட்டமொன்று யானை வடிவில் எழுந்து பறந்ததைக் கூட சம்பங்கி பார்த்திருக்கிறாள். இந்தப் பறவை மாயத்தை அவள் கண்கள் விரியச் சலிப்பில்லாமல் பார்த்துக்கொண்டேயிருப்பாள். சம்பங்கி மெல்லத்தான் நடப்பாள். சாப்பிட உட்கார்ந்தால் ஒரு சிரட்டைக் கஞ்சியை ஒரு மணிநேரமாக ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருப்பாள். எந்த வேலையையும் மெதுவான அசைவுகளுடன் தான் செய்வாள். அவளிடம் கட்டுவதற்கு ஒரேயொரு சேலைதான் இருந்தது. பொன்னிறக் கரையுடன் கூடிய அந்த நைந்துபோன சிவப்புச் சேலையைக் கந்தம்மாவுக்கு யாரோ கூலியாகக் கொடுத்திருந்தார்கள். அந்தச் சேலையைச் சம்பங்கி வேப்பங்கொட்டைத் தூளிட்டு ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் துவைப்பாள். சேலையை விரித்து மணலில் காய வைத்துவிட்டு, அதைச் சுற்றி சுற்றி வந்து சரியாகத் துவைத்திருக்கிறாளா எனப் பார்த்துக்கொண்டிருப்பாள். பாத்திரம் கழுவுவதானாலும் சாம்பலைப் போட்டுப் பொன் போலத் துலக்குவாள். அதைக் கையிலெடுத்துக் கண்களுக்கு நேராக வைத்துப் பார்த்து இரசிப்பாள். மெதுவாகச் செய்தாலும் அவளது வேலை சுத்தமாகவும் திருத்தமாகவுமிருக்கும். அவர்களது கடற்கரையோரக் குடியிருப்பு அமைந்திருந்த பம்பலவத்தயில் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மட்டுமே அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்தார்கள். கடலிலே கலக்கும் பழைய டச்சுக் கால்வாய்க் கரையில் இருபது குடிசைகள் வரை அமைக்கப்பட்டிருந்தன. தகரக் கூரையால் குடிசையின் மேற்பகுதி அனலாகத் தகித்தால், கீழே தரை சேறும் சகதியுமாக இருக்கும். மழைக்காலமானால் டச்சுக் கால்வாய் நிறைந்து, குடிசைகளுக்குள் வெள்ளம் ஏறிவிடும். இந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள்தான் அய்ந்து மைல்கள் சுற்றளவு தூரத்திலிருந்த வீடுகளில் மலம் அள்ளினார்கள். தெருக்களைப் பெருக்கினார்கள். வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இறந்தால் அவற்றை அகற்றுவதும் இவர்களது வேலையே. ஆண்களும் திருமணமான பெண்களும்தான் இந்த வேலைகளுக்குப் போவார்கள். பருவமடைந்த பெண்களை அனுப்புவதில்லை. ஆனாலும், சம்பங்கி கருங்குயில் வீட்டுக்கு வரவேண்டியிருந்தது. கொம்பனித் தெருவில், கேசவய்யாவின் வற்புறுத்தலால் அதிகமாகக் குடித்த மதியமன்றே முத்தான் நோயில் விழுந்துவிட்டார். கேசவய்யாவும் நோயில் விழுந்தார். ‘கட்டுக்கம்பி’ என்று சொல்லப்படும் அந்த வடிசாராயம் வெறுமனே மதுசாரம்தான். அதற்குள் எலுமிச்சம் பழச் சாறைப் பிழிந்து குடிக்கும் வழக்கம் கேசவய்யாவுக்கு உண்டு. குடித்த வடிசாராயத்தில் ஏதோ கோளாறு இருந்திருக்க வேண்டும். முத்தான் மணலில் சாய்ந்துபோனார். அவரது இரத்தம் எல்லாம் சோற்றுக் கஞ்சிபோல வாயாலும் வயிற்றாலும் வெளியேறிக்கொண்டிருந்தது. அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை. காலையில், அவர் ஆறு வீடுகளில் மல வாளிகளைச் சுத்தம் செய்து, தலையில் காவிச் செல்லும் தகரவாளியில் மலத்தைச் சேகரித்துக் கடலில் கொட்ட வேண்டும். ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டாலும் வீட்டுக்காரர்கள் சகிக்கமாட்டார்கள். புதிய ஆளை வேலைக்கு அமர்த்திவிடுவார்கள். இந்த நிலையில் தான், கொள்ளுப்பிட்டியில் முத்தான் வேலை செய்த அய்ந்து வீடுகளிலும் கந்தம்மா வேலைக்குப் போவதாக ஏற்பாடானது. கந்தம்மா அந்த வேலைகளை முடித்துக்கொண்டு, அவர் வேலை செய்யும் கறுவாத் தோட்ட வீடுகளுக்கு ஓட வேண்டும். எதிர்த் திசையில் வெள்ளவத்தையில் எஞ்சியிருக்கும் ஒரே வீட்டுக்குச் சம்பங்கி போக வேண்டும். கூலியாகக் கிடைக்கும் சல்லிக் காசுகளில் அரைக் காசு குறைந்தால் கூட அந்தக் குடும்பத்தால் சமாளிக்க முடியாது என்பதுதான் உண்மை. சம்பங்கி வேலைக்குப் போவதைக் குடியிருப்பில் முடிந்தவரை ஒளிவுமறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அந்தக் குடும்பம் முடிவெடுத்தது. கன்னியை வேலைக்கு அனுப்புவதை அறிந்தால் அக்கம்பக்கத்திலிருந்து நொட்டைச் சொற்கள் விழும். அவளுக்கு மாப்பிள்ளை அமைவது இன்னும் சிரமமாகிவிடும். தந்தையார் சொல்லிக்கொடுத்த எந்த அடையாளத்தையும் மறந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில், அன்றிரவு சம்பங்கிக்குத் தூக்கமே வரவில்லை. அதிகாலையில், வெளிச்சம் வரமுன்பே குடியிருப்பிலிருந்து மெல்ல நழுவிய சம்பங்கி அடையாளங்களை நோக்கிக் கடற்கரையோரமாக மெதுவாக நடந்து சென்றாள். நடக்கும் போது, ஈர மணலில் முடிந்தவரை பாதங்களை ஆழப் பதித்து, மணலை அளைந்து செல்லும் பழக்கம் அவளிடமுண்டு. சம்பங்கி நல்ல உயரமும் மெலிந்த தோற்றமுமுள்ளவள். தேவைக்கு அதிகமாக ஓர் அவுன்ஸ் சதைகூட அவளுடலில் கிடையாது. அவள் தன்னுடைய நீளமான தலைமுடியை உச்சியில் பெரிய கொண்டையாகப் போட்டிருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தாள். இரண்டு கைகளிலும் செப்பு வளையங்களைப் போட்டிருந்தாள். வாயின் இருபுறங்களிலுமிருந்த அழகிய தெற்றுப் பற்களை மூடியிருந்த தடித்த உதடுகளுக்கு மேலே, மூக்கின் இருபுறங்களிலும் அணிந்திருந்த கண்ணாடிக் கற்களாலான சிவப்பு மூக்குத்திகள் அவளின் முகத்தில் சிறு சுடர்களைப் போல ஒளிர்ந்துகொண்டிருக்கும். அந்தக் குடியிருப்பிலேயே சம்பங்கிதான் சிவந்த சருமமும் அழகும் கொண்டவள் என்று கந்தம்மா சொல்லாத நாளில்லை. “அவள் நாவற்பழத்தைத் தின்னும் போது, தொண்டையில் கருஞ்சாறு இறங்குவது உங்களது கண்களுக்குத் தெரியும்” என்பார். சம்பங்கியின் குடியிருப்பிலிருந்து கருங்குயில் வீடு அதிக தூரத்திலில்லை. பம்பலவத்தயிலிருந்து கடற்கரையோரமாகவே தெற்காக நடந்து வந்தால், பதினைந்து நிமிடங்களுக்குள் வந்துவிடலாம். ஆனால், சம்பங்கியின் மெதுவான நடைக்கு அரை மணிநேரம் தேவைப்படும். அவள் தயங்கித்தான் நடந்து வந்துகொண்டிருந்தாள். “அந்த வீட்டில் ஒரு சோம்பேறி நாய் இருக்கிறது சம்பங்கி. ஆனால், நீ பூனையைப் பார்த்தே பயப்படுவாய். அந்த நாய் உன்னை முகர்ந்துகூடப் பார்க்காது. அதுபாட்டுக்கு வீட்டு முகப்பில் படுத்துக் கிடக்கும்” என்றுதான் முத்தான் சொல்லியிருந்தார். ஆனாலும், சம்பங்கியின் மனதில் அச்சம் ஓரமாக ஒட்டித்தான் கிடக்கிறது. முத்தான் சொன்ன அடையாளக் குறிப்புகளை வாயில் திரும்பத் திரும்ப முணுமுணுத்தவாறே சம்பங்கி மெதுவாக நடந்து சென்றாள். தர்மசாந்தி விகாரையைக் கடந்ததும் கடல் தேங்காய் மரமிருந்தது. அந்த மரத்திற்கு எதிராகக் கிழக்கே செல்லும் மண்பாதையில் சம்பங்கி திரும்பி நடக்கும்போது முற்றாக விடிந்திருந்தது. காடு போல செடிகொடிகளும், புதர்களும் மண்டிக்கிடத்த நிலத்தின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டிருந்த, உயரமான வெண்ணிற வீடு நின்றிருந்தது. மதிற்சுவரில் இரும்புக் கிறாதிப் படலைக்கு வலதுபுறத்தில் கருங்குயில் தொங்கிக்கொண்டிருந்தது. சம்பங்கி அந்தக் கருங்குயிலையே பார்த்தவாறு சில நிமிடங்கள் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். அந்த வீடு எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கிடந்தது. இரும்புக் கிறாதிப் படலைக்குள்ளால் உள்ளே பார்த்தாள். முத்தான் சொன்னது போலவே சோம்பேறி நாய் வீட்டு முகப்பில் சுருண்டு கிடந்தது. சம்பங்கி மெதுவாக இரும்புக் கிறாதிப் படலையைத் தள்ள அது ஓசையில்லாமல் திறந்துகொண்டது. முத்தான் சொன்ன குறிப்பு இடது பக்கமா வலது பக்கமா என அவளுக்கு இப்போது மறந்துவிட்டது. படலையைத் தாண்டி வளவுக்குள் அவள் மெதுவாகக் காலடி வைத்தபோது, சுருண்டு கிடந்த நாய் தலையைத் தூக்கிப் பார்க்கவும் இவள் தனது தலையைத் திருப்பிக்கொண்டாள். இடது புறத்தில் புதிதாக நாட்டப்பட்டு வளர்ந்துகொண்டிருந்த குரோட்டன் செடிகளிடையே பாதை தெரிந்தது. இவள் அந்தப் பாதையால் நடந்து சென்றாள். வீட்டைச் சுற்றிக்கொண்டு, கழிவறையை நோக்கி ஓசையில்லாமல் சென்றாள். கழிவறையின் கதவு திறந்து கிடந்தது. யௌவன வெள்ளைப் பெண் ஒருத்தி முழு நிர்வாணமாக மலக் குழியின் மீது குந்தியிருந்தாள். அதைப் பார்த்ததும் சம்பங்கி உறைந்து அங்கேயே நின்றுகொண்டாள். இப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. தனது கண்களைத் தாழ்த்திக்கொள்வதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவளது கால்கள் கட்டைக் கால்கள் போலாகி அசைய மறுத்தன. அந்த வெள்ளைக்காரி நீலக் கண்களால் சம்பங்கியைப் பார்த்தவாறே குந்தியிருந்தாள். அவளது ஒரு கை பின்னால் அசைந்துகொண்டிருந்தது. அவள் திடீரெனத் துள்ளிப் பாய்ந்து ஓவெனக் கூச்சலிட்டபடியே நிர்வாணமாகவே வீட்டை நோக்கி ஓடினாள். சம்பங்கிக்கு உண்மையிலேயே மயக்கம் வரும் போலிருந்தது. அந்த வெள்ளைக்காரியின் சிறுநீர் மலக்குழியைச் சுற்றி நுரைத்துக் கிடந்தது. மல வாளியோ மலத்தாலும் சலத்தாலும் கந்தைத் துணித்துண்டுகளாலும் நிறைந்திருந்தது. முத்தான் சொன்ன இடமான கழிவறைப் புறச்சுவரில் மல வாளியின் மூடி தொங்கிக்கொண்டிருந்தது. சம்பங்கி மல வாளியை இறுக மூடிவிட்டு, அதைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறிக் கடற்கரையை நோக்கி நடந்தாள். வழியில் கிடந்த குரும்பட்டியொன்றைக் கால் விரல்களால் பற்றியெடுத்து, காலை இடது கை வரைக்கும் உயர்த்திக் கையில் குரும்பட்டியை எடுத்துக்கொண்டாள். கரையில் இருந்தவாறே, மலத்தோடு சேர்த்து வாளியைக் கடலில் கவிழ்த்தாள். அங்கிருந்து சற்று விலகி முழங்காலளவு தண்ணீர்வரை நடந்துசென்று, வாளியைக் குரும்பட்டியால் தேய்த்துத் தேய்த்து, நீரால் அலசிச் சுத்தம் செய்தாள். மறுபடியும் அந்த வீட்டுக்குப் போகவே அவளுக்கு அச்சமாகயிருந்தது. அந்த நிர்வாண வெள்ளைக்காரியை ஒரு மோகினிப் பேய் போலத்தான் அவள் கற்பனை செய்தாள். கண்களைத் தாழ்த்திக்கொண்டு மறுபடியும் கருங்குயில் வீட்டை நோக்கிச் சென்று, வாளியை மலக்குழியின் கீழே பொருத்தினாள். அப்போது கழிவறையின் கதவருகேயிருந்த சிறிய டப்பாவைக் கவனித்தாள். இதுவரை அவளுக்கு இது மறந்தே போயிருந்தது. அந்த டப்பாவைத் தூக்கி பார்த்தாள். அது வெறுமையாகவேயிருந்தது. சம்பங்கி பம்பலவத்தவுக்குத் திரும்பி, ஆறச்சோரக் கடலில் குளித்துவிட்டு, ஈரச் சேலையுடன் குடிசைக்குத் திரும்பும்போது, எதிரே வேலை முடிந்து கையில் ஒரு மரவள்ளிக்கிழங்குடன் கந்தம்மாவும் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர்களது குடிசையில் காலையுணவு சமைக்கும் வழக்கமில்லை. மதியம் தாய்க்கும் மகளுக்கும் அந்த மரவள்ளிதான் உணவு. நோயாளியான முத்தானுக்கு மட்டும் கொஞ்சம் உப்பிட்ட அரிசிக் கஞ்சி. “அந்த டப்பாவுக்குள் சில்லறை இருந்ததா?” என்று கந்தம்மா கேட்ட போது ‘இல்லை’ என்பது போல சம்பங்கி மெல்லத் தலையை அசைத்தாள். “நன்றாக ஞாபகப்படுத்திச் சொல்! காசு இருந்ததா?” என்று மறுபடியும் கந்தம்மா கேட்டபோது, மறுபடியும் சம்பங்கி தலையசைத்தாள். சம்பங்கி மூன்றாவது நாள் கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டுப் படிக்கட்டில் சீன முகமுடைய ஓர் இளம்பெண் சுருட்டுப் பிடித்தபடியே அமைதியாக உட்கார்ந்திருந்து சம்பங்கியையே உற்றுக் கவனிப்பதைப் பார்த்தாள். அந்தப் பெண் வெண்ணிற முழுக்கைச் சட்டைபோட்டு, இடுப்பில் வானவில் போன்றதொரு லுங்கியைக் கட்டியிருந்தாள். சம்பங்கி கண்களைத் தாழ்த்தியவாறே வீட்டுக்குப் பின்புறம் சென்றபோது, சருகுகளை மிதித்துக்கொண்டு அந்தப் பெண்ணும் பின்னாலேயே வருவது தெரிந்தது. சம்பங்கி திரும்பிப் பார்க்காமலேயே கழிவறையை நோக்கிச் சென்றபோது, சருகுகள் மிதிபடும் சத்தம் நின்றுவிட்டது. சம்பங்கி மல வாளியை மூடும்போது, அந்தப் பெண் ஒரு செப்பு நாணயத்தை எடுத்துச் சம்பங்கியின் முன்னால் தரையில் சுண்டிவிட்டாள். சம்பங்கி அதை எடுத்துச் சேலைத் தலைப்பில் முடிந்துவிட்டு, மல வாளியைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்தாள். அடுத்த நாள் சம்பங்கி கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஆனால், அடுத்ததடுத்த நாட்களில் விதவிதமான பெண்களை சம்பங்கி கருங்குயில் வீட்டில் கண்டாள். ஒருநாள் சம்பங்கி உள்ளே நுழையும் போது, வெள்ளைக்காரியும் மலாய்காரியும் சிலோன்காரியுமாக மூவர் சிரித்துப் பேசியபடியே, மதுவால் கிறங்கிய கண்களோடு வெளியேறிக் கடற்கரையை நோக்கி நடந்து சென்றார்கள். சம்பங்கி மல வாளியோடு கடற்கரைக்குச் சென்ற போது, அவர்கள் கொக்குகளைப் போல ஒற்றைக்கால்களில் நின்று கிழக்கு முகம் பார்த்துக் கைகளை உயர்த்திக் கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒன்பதாவது நாள், கருங்குயில் வீட்டுக்குச் சம்பங்கி சென்றபோது, வீட்டின் முகப்புச் சாளரம் திறந்திருந்தது. உள்ளேயிருந்து வெள்ளைக்கார இளைஞனொருவன் விரிந்த கண்களால் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சம்பங்கி கண்களைத் தாழ்த்தியவாறே கழிப்பறையை நோக்கிச் சென்றாள். அவள் தலையில் மல வாளியுடன் திரும்பிவரும் போது, அவன் வீட்டு வாசற்படியில் கையிலொரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தான். கட்டுடலுடன் வாட்டசாட்டமாகயிருந்தவனின் உடம்பில் ஓர் அரைக் காற்சட்டை மட்டுமேயிருந்தது. சம்பங்கி வெற்று வாளியுடன் திரும்பி வரும்போது, அவன் இரும்புக் கிறாதிப் படலையைப் பிடித்துக்கொண்டு வெளியே நின்றவாறே, சம்பங்கியையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சம்பங்கி அருகில் வந்தும், தனது வலது கைச் சுட்டுவிரலால் கருங்குயில் பலகையைத் தொட்டுத் தொட்டுக் காட்டி ஏதோ சொன்னான். சம்பங்கியோ செய்வதறியாமல் திகைப்பேறி அசையாமல் நின்றுவிட்டாள். “அந்த வீட்டுத் துரையைப் பார்த்தால் குட் மார்னிங் சொல்ல வேண்டும்” என முத்தான் திரும்பச் திரும்பச் சொல்லிக் கொடுத்திருந்ததை சம்பங்கி முற்றாக மறந்துவிட்டாள். வெள்ளைக்காரன் அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்து, உரக்கப் பாடியவாறே கடலை நோக்கி நடந்துபோனான். அடுத்தநாள், சம்பங்கி கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, அந்த வெள்ளைக்காரன் வீட்டின் பின்புற வாசலில் அரையிருளில் நின்றுகொண்டிருந்தான். அவனது உடலில் முழங்கால் வரைக்கும் தொங்கும் மெல்லிய அங்கியும், முகத்தில் குறும்புப் புன்னகையுமிருந்தன. அந்த அங்கிக்குள்ளிருந்து ஏதோவொரு விநோதமான சத்தம் எழுந்துகொண்டிருந்தது. இதுவரை அப்படியொரு சத்தத்தைச் சம்பங்கி கேட்டதேயில்லை. சம்பங்கி கழிவறையை நெருங்கியபோது, கதவுக்கு அருகிலிருந்த டப்பா சில்லறை நாணயங்களால் நிரம்பியிருந்ததைப் பார்த்தாள். தன்னுடைய சிவப்புச் சேலைத் தலைப்பில் அந்த நாணயங்களைக் கொட்டி முடிந்துகொண்டாள். அவள் மல வாளியோடு வெளியேறும் வரை, அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். சம்பங்கி அந்த நாணயங்களை முத்தானின் முன்னே பாயில் வைத்தபோது “வெள்ளைக்கார்கள் இப்படித்தான்… அவர்களுக்கு நமது வேலை பிடித்துப் போனால் அள்ளித் தருவார்கள்” என்றார் முத்தான். அடுத்தநாள், சம்பங்கி கருங்குயில் வீட்டுக்குச் சென்ற போதும் அவன் அந்த இடத்திலேயே நின்றிருந்தான். சம்பங்கி கழிவறைக் கதவருகே சென்றபோது, டப்பாவுக்குள் சில கண்ணாடி வளையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டாள். உடனேயே முழந்தாள்களில் கழிப்பறைக்கு முன்னால் உட்கார்ந்திருந்து, தன்னுடைய இரண்டு கைகளிலும் அந்த வளையல்களை அணிந்துகொண்டாள். பின்பு மல வாளியைத் தூக்கிக்கொண்டு, கண்களைத் தாழ்த்தியவாறே வெளியேறினாள். மறுநாளும் அவன் வீட்டின் பின்புறக் கதவு அருகேயே நின்றிருந்தான். அவள் கழிவறையை நோக்கிச் சென்றபோது “ஹே..ஹே” என்று மெதுவாகச் சத்தமெழுப்பினான். சம்பங்கி கண்களை நிமிர்த்தி அவனைப் பார்த்த போது, அவன் தன்னுடைய வலது கையை முன்னால் நீட்டினான். அந்தக் கையில் பச்சை நிறத்தில் புதிய சேலையொன்று இருந்தது. அவன் புன்னகைத்தவாறே சேலையை ஆட்டிக்காட்டி, அருகில் வருமாறு சம்பங்கிக்குச் சைகை செய்தான். சம்பங்கியின் கால்கள் அசைய மறுத்தன. அவன் வாசற்படியில் சேலையை வைத்துவிட்டு, திறந்திருந்த கதவு வழியாக வீட்டுக்குள்ளே போய்விட்டான். சம்பங்கி கண்களைத் தாழ்த்தியவாறே மெதுவாக நடந்துசென்று அந்தச் சேலையை எடுத்துக்கொண்டாள். அவள் சேலையைத் தாயாரிடம் காட்டியபோது “பத்திரமாக வைத்துக்கொள், உன்னுடைய கல்யாணத்திற்குக் கட்டிக்கொள்ளலாம்” என்றார் கந்தம்மா. அடுத்தநாள், கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, சம்பங்கியின் மனம் நன்றியுணர்வால் ததும்பிக்கொண்டிருந்தது. இவள் கழிவறையை நோக்கிச் சென்ற போது, பின்னால் சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். இவளுக்கு நெருக்கமாக அந்த வெள்ளைக்கார இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சம்பங்கியின் கண்களைப் பார்த்தவாறே, அவளது வலதுகை மணிக்கட்டை மெல்லப் பற்றினான். சம்பங்கிக்கு உடலில் இரத்தம் வற்றித் தண்ணீராகிவிட்டது. அவள் தனது கையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள். இப்போது அவனின் பிடி முரட்டுத்தனமாக அழுத்த, சம்பங்கியின் கண்களில் பொட்டென நீர் துளிர்த்து அவளது கன்னங்களில் விழுந்தன. அவன் திறந்திருந்த பின் வாசல் வழியாக அவளை வீட்டுக்குள் இழுத்துப் போனான். சம்பங்கியின் கால்கள் மரக் கட்டைகளாகிவிட்டன. ஒரு பொம்மையை நகர்த்திச் செல்வதுபோல அவன் சம்பங்கியைக் கொண்டு சென்றான். சம்பங்கி வாயைக் கோணிக்கொண்டு விசும்பினாள். இப்போது அவன் தன்னுடைய வலிமையான கைகளால் சம்பங்கியைத் தூக்கி வீட்டின் நடுவாகயிருந்த அகலமான கயிற்றுக் கட்டிலில் கிடத்தினான். அவன் தன்னைக் கொல்லப் போகிறான் என்றுதான் சம்பங்கி நினைத்தாள். சாவைப் பார்க்கப் பயந்து அவள் தனது கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்போது அவளது பொன்னிறக் கரையிடப்பட்ட சிவப்பு நிறச் சேலை அவளிடமிருந்து உருவப்படுவதை அவள் உணர்ந்தாள். அவளது இரண்டு கைகளும் கீழேயிறங்கி அவளது நிர்வாணத்தைப் பொத்திக்கொண்டன. அவன், தன்னுடைய கைளால் முரட்டுத்தனமாகச் சம்பங்கியின் கைகளை விலக்கிப் போட்டான். சம்பங்கியின் மீது அவன் கவிழ்ந்த போது, சாவுதான் தன்மீது இறங்குகிறது என்றே சம்பங்கி நம்பினாள். இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த முதல் நாளன்று கண்ட மோகினிப் பேய் அவளது ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பேய்தான் இப்போது ஆணுருவில் இருக்கிறதோ என்ற கொடுமையான அச்சம் அவளுக்குள் பரவியது. அவளால் மூச்சுவிட முடியாதவாறு அவனுடைய கனத்த உடலின் பாரம் அழுத்தியது. அவனிலிருந்து சீறிக்கொண்டு வெளியேறிய மூச்சுக்காற்று அவளது மார்பில் சுட்டது. பேய் கொள்ளிக் கண்களைத் திறந்துள்ளது என அவள் நடுங்கினாள். அவனுடைய ஒரு கை அவளது உச்சிக் கொண்டையைப் பற்றியிழுக்க, அடுத்த கை அவளது மூடியிருந்த கண் இமைகளை வலுகட்டாயமாகத் திறக்க முயன்றது. அவளோ எக்காரணத்தாலும் மரணத்தை பார்ப்பதில்லை என்ற முடிவோடு மறுபடியும் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள். அவன் அவளிலிருந்து எழுந்து மெதுவாக மிக மெதுவாகச் சீட்டியொலி எழுப்பினான். பதிலுக்கு இன்னொரு சத்தம் எழுந்தது. அவளது வயிற்றிலிருந்து ஏதோவொன்று சத்தமெழுப்பியவாறே நகர்ந்து கண்களை நோக்கி வந்தது. தன்னுடைய உயிர் கண்களின் வழியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக சம்பங்கி நினைக்கும் போதே, அவளது கண்கள் தாமாகத் திறந்துகொண்டன. அவளது முகத்தை ஒரு பிராணி முகர்ந்துகொண்டிருந்தது. அவன் “கிரியா…கிரியா” என்றழைத்து உத்தரவிட, அந்தக் கீரிப்பிள்ளை அவன் காட்டிய பக்கமெல்லாம் சம்பங்கியின் உடலில் தாவிப் போயிற்று. சம்பங்கி அச்சத்தால் செத்து, பிணம் போல அசையாமல் கிடந்தாள். அதன் பின்பு அவளது கண்கள் மூடவேயில்லை. கந்தம்மா வேலை முடிந்து வரும்போது, குடிசைக்கு வெளியே முத்தான் உட்கார்ந்திருந்தார். அவர் கந்தம்மாவைப் பார்த்ததும், தனது முகத்தை உள்ளே அடுப்படியை நோக்கித் திருப்பினார். அங்கே சாம்பலுக்குள் தலைவைத்துச் சம்பங்கி சுருண்டு கிடந்தாள். திகைத்துப் போன கந்தம்மா ஓடிப்போய் மண்டியிட்டு உட்கார்ந்து சம்பங்கியின் முகத்தைக் கையால் திருப்பிப் பார்த்த போது, சம்பங்கியின் கண்கள் அகலத் திறந்தே கிடந்தன. தாயாரைப் பார்த்ததும் சம்பங்கி வாயைத் திறந்து “வலிக்கிறது ஆயி” என்று முனகினாள். “எங்கே வலிக்கிறது?” என்று கந்தம்மா கேட்டபோது, சம்பங்கி அடிவயிற்றைத் தொட்டுக் காட்டினாள். கந்தம்மா நடுங்கும் கைகளால் சம்பங்கியின் சேலையை விலக்கிப் பார்த்த போது, சம்பங்கியின் பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டார். மறுநாள் மதியப் பொழுதில் “முத்தான்…முத்தான்” என்று அழைக்கும் சத்தம் கேட்டு, முத்தான் குடிசையிலிருந்து மெதுவாக வெளியே வந்தார். நீண்ட கைகளும், கால்களும், கரிய தோற்றமும் உள்ளதால் ‘களு மஹாத்தயா’ எனச் சொல்லப்படும் புராம்பி வெளியே நின்றிருந்தான். அவன் கருங்குயில் வீட்டுக்கு மதிய வேளையில் வந்து, சமையலும் வீட்டு வேலைகளும் செய்துவிட்டு மாலையில் திரும்பிச் செல்பவன். அவன் தான் பம்பலவத்தவுக்கு வந்து முத்தானிடம் பேசி, அவரைக் கருங்குயில் வீட்டில் வேலைக்கு அமர்த்தியவன். “முத்தான் காலையில் ஏன் கக்கூஸ் வாளி எடுக்க வரவில்லை? நானா அதை எடுக்க முடியும்?” “எனக்கு உடம்பு சுகமில்லை களு மஹாத்தயா… நேற்றுத்தான் பாயிலிருந்து எழுந்து கொஞ்சம் நடக்கிறேன்…” “கொஞ்ச நாளாக வேலைக்கு ஒரு குட்டி வருவதாகத் தானே துரை சொன்னார்…” “அவளுக்கு நாளை கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது களு மஹாத்தயா. புத்தி குறைவான அந்தப் பிள்ளையை நம்முடைய கேசவய்யா தான் மனமிரங்கிக் கல்யாணம் செய்யப் போகிறார்.” புராம்பி திரும்பிச் சென்ற பின்பாக, குடிசைக்கு வெளியே வந்த கந்தம்மா மணலில் உட்கார்ந்துகொள்ள, எதிரே முத்தானும் உட்கார்ந்தார். அவரருகே முகத்தை நெருக்கமாகக் கொண்டுவந்து, மெல்லிய குரலில் கந்தம்மா பேசினார்: “கல்யாணத்திற்கு கேசவய்யா கோடித் துணி வாங்கிக் கொடுப்பாரல்லவா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை… சம்பங்கியிடம் புதிய சேலையிருக்கிறது.” “அந்தப் பறங்கி கொடுத்ததா? அதைக் கொளுத்திப் போடு. அந்தச் சேலையைப் பார்க்கும் போதெல்லாம் அவளது மனம் என்ன பாடுபடும்!” கந்தம்மா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்பு தலையை இடதுபுறம் திருப்பிக் குடிசையை ஒருகணம் பார்த்தார். பின்னர் தலையை வலது பக்கம் திருப்பிக் கடலைப் பார்த்தவாறே சொன்னார்: “கருணையுள்ள கடவுள் என் பெண்ணுக்கு மறதியைக் கொடுத்திருக்கிறான். அவள் சீக்கிரமே எல்லாவற்றையும் மறந்துவிடுவாள். காலப்போக்கில் எல்லோருமே எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.” ஆனால், கருங்குயில் வீட்டிலிருந்த வெள்ளைக் கவிஞன் அதை மறக்கவில்லை. அவன் இலங்கையை விட்டு, தன்னுடைய செல்லப் பிராணியான கிரியாவுடனும் வெளியேறியதிலிருந்து, சரியாக நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்னால் வெளியிடப்பட்ட ‘பப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள்’ என்ற நானூறு பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலில் ஒரு பக்கத்தைச் சம்பங்கிக்காக ஒதுக்கியிருக்கிறான். ONE WAY அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி, அப்பாவின் மரணச் செய்தியை எனக்குச் சொல்லிற்று. என்னுடைய அப்பா கொஞ்சம் கோணல் புத்திக்காரர். அப்பாவித்தனத்தால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள என்னுடைய அம்மா, ஒரு கிறுக்குத் தீவிரவாதியிடம் சிக்கிக்கொண்ட பணயக் கைதியைப் போலத்தான் அப்பாவிடம் சிக்கியிருந்தார். ஆனால், நான் அப்பாவை இலேசாக முறைத்தாலோ, வார்த்தையைச் சிதற விட்டாலோ அப்பாவுக்கு ஏவம் கேட்டு அம்மா என்னுடன் சண்டைக்கே வந்துவிடுவார். தன்னுடைய கணவர் ஓர் அருமையான புத்திசாலி, சுத்த வீரர் என்றெல்லாம் சொல்லி அம்மா என்னை எச்சரிப்பார். அவர்களுக்குக் கல்யாணமான புதிதில், அம்மாவை ‘அன்பே வா’ திரைப்படம் பார்ப்பதற்காக அப்பா அழைத்துப் போயிருக்கிறார். இடைவேளையின் போது, திரையரங்கில் இருந்த ஒரு வாலிபன் அம்மாவைப் பார்த்துச் சிரித்திருக்கிறான். அவன் தன்னுடன் பள்ளிக்கூடத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை – அம்மா அவ்வளவுதான் படித்திருக்கிறார் – ஒன்றாகக் கற்றவன் என்பதால் அம்மாவும் பதிலுக்குப் புன்னகைத்திருக்கிறார். இதைக் கவனித்த அப்பா உடனேயே அம்மாவைத் திரையரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்று, நடுவீதியில் வைத்து அம்மாவின் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு “யாரடி அவன்?” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு முடிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், எண்பத்தொரு வயதில் அப்பா இறந்துபோவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகக் கூட, அம்மாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு “யாரடி அவன் உன்னைத் தியேட்டரில் பார்த்து இளித்தவன்?” என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து அய்ம்பது வருடங்களாக தோன்றும் போதெல்லாம் அப்பா இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார். கோணல் புத்தியிருந்தாலும் அப்பா காரியக்காரர் என்பதில் மறுப்பில்லை. புகையிலைத் தரகு வியாபாரத்தில் அவர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமாக அலைந்து திரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைத் தூக்கி நிறுத்தினார். அவர் தரகு வியாபாரத்தில் சில மோசடிகளையும் செய்வார் எனப் பேச்சுண்டு. சில வழக்குகள் எங்களது வீடு தேடியே வந்துள்ளன. ஊருக்கு நடுவில் ஒரு பென்னம் பெரிய வெறுங் காணியை வாங்கி, அதைத் தென்னஞ்சோலையாக்கி, ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். முதலில் பிறந்தது நான்குமே பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காகக் கட்டுச்செட்டாகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்தார். அப்பாவின் முயற்சியோடு, எனது நான்கு அக்காமாருக்கும் அம்மாவின் அழகும் இயற்கையாகவே கிடைத்திருந்ததால், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அக்காக்களைக் கொத்திக்கொண்டு போய்விட்டனர். முதலாவது அக்காவான திலகா பிரான்ஸுக்குப் போனதும், அவரது ஏற்பாட்டில் இரண்டாவது அக்காவான ரோகிணிக்கு மாப்பிள்ளை அமைந்தது. அக்காவை வழியனுப்பும் கொண்டாட்டத்தில் வீடே திளைத்திருந்தபோது தான், நான் சொல்லாமற்கொள்ளாமல் இயக்கத்திற்கு ஓடிப்போய், கொண்டாட்ட வீட்டை இழவு வீடு போல மாற்றிவிட்டேன். என்னுடைய அந்தச் செயலை அப்பா ஒருபோதும் மன்னிக்கவேயில்லை. கடைசி அக்காவான வேணி கல்யாணத்திற்காக பிரான்ஸுக்குக் கிளம்பியபோது, நான் சிறையில் இருந்தேன். வேணி அக்கா விமானம் ஏறுவதற்கு முன்பாக, அம்மாவோடு மகசீன் சிறைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டே போனார். அப்போதெல்லாம் என்றாவது ஒருநாள் நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன் என்று நானே நம்பவில்லை. எனக்கு எப்படியும் முப்பது வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். அதுதான் அப்பா கோணல் புத்திக்காரரென்று சொன்னேனே… அவர் ஒரு தடவை கூட என்னைச் சிறையில் வந்து பார்க்கவில்லை. அம்மா தான் ஊரிலிருந்து யாராவது ஓர் உறவினரைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு, அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார். அம்மா தன்னை வருத்திப் பிடித்த விரதங்களாலோ, கோயில் கோயிலாக வைத்த நேர்த்தியாலோ என்னவோ நான் சிறையிலிருந்து ஏழு வருடங்களிலேயே விடுதலையாகிவிட்டேன். வெளியே வந்ததும், பிரான்ஸிலிருந்த நான்கு அக்காமார்களும் ஆளுக்கொரு பங்கு பணம் போட்டு, பயண முகவர் மூலம் என்னைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்கள். நான் இங்கே வந்ததும், அவர்கள் ஒரே குரலில் எனக்கு ஒன்றைச் சொன்னார்கள்: “தம்பி! நாங்கள் உன்னுடைய வழக்குக்காக ஏழு வருடங்களாகப் பணம் செலவு செய்திருக்கிறோம். உன்னை இப்போது வெளிநாட்டுக்கும் அழைத்துவிட்டோம். அந்தப் பணத்தையெல்லாம் நாங்கள் உன்னிடம் திருப்பிக் கேட்கப் போவதில்லை. ஆனால், இனி அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு.” நான் இயக்கமும் போராட்டமும் கசந்து போய்த்தான், என்னுடைய இருபத்தேழாவது வயதில் பிரான்ஸுக்கு வந்தேன். நான் சிறையிலிருந்த காலத்தில் இயக்கம் என்னை முழுமையாகக் கைவிட்டிருந்தது. என்னுடைய குடும்பமே என்னைக் காப்பாற்றிச் சிறையிலிருந்து மீட்டது. என்னுடைய மிகுதிக் காலத்தைக் குடும்பத்தின் நன்மைக்காகச் செலவழிப்பது என்ற எண்ணத்தோடு, நான் கடுமையாக உழைத்தேன். நான் பிரான்ஸுக்கு வந்து அய்ந்து வருடங்களான போது, பயண முகவர் மூலம் அம்மாவையும் அப்பாவையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளுமளவுக்கு என்னிடம் பணம் சேர்ந்திருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அழைப்பதில் என்னுடைய அக்காமார்களும் ஆர்வமாகயிருந்தார்கள். ஆனால், கோணல் புத்திக்காரரான என்னுடைய அப்பா வெளிநாட்டுக்கு வர மறுத்துவிட்டார். “என்னால் உங்களைப் போல அகதியாக மானம் கெட்டு வாழ முடியாது. வேண்டுமானால் அம்மாவைக் கூப்பிட்டுக்கொள்ளுங்கள்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்பாவைத் தனியே விட்டுவிட்டு அம்மா வரமாட்டார் என்பதை விளக்கத் தேவையில்லை. அவர்களை அழைப்பதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில்தான், என்னுடைய மச்சாள் முறையான செவ்வந்தியை இலங்கையிலிருந்து பயண முகவர் மூலம் பிரான்ஸுக்கு வரவழைத்துத் திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் செய்த ஒரேயொரு புத்திசாலித்தனமான செயல் அதுதான். கல்யாணங்களின் போது ‘இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒருவரையொருவர் பிரியோம்’ எனச் சாட்டுக்கு உறுதிமொழி எடுப்பார்கள். ஆனால், செவ்வந்தி மச்சாள் அந்த உறுதிமொழியை இப்போதுவரை தீவிரமாகக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள். அப்பா இறந்த போது, தூரத்து உறவினர் தான் அப்பாவுக்குக் கொள்ளி வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. கொள்ளியிட உரித்துள்ள நானும், அக்காக்களும் பிரான்ஸில் அகதி நிலையில் வசிப்பதால் எங்களிடம் இலங்கைக் கடவுச்சீட்டுக் கிடையாது. எங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கியிருக்கும் அகதிகளுக்கான கடவுச்சீட்டில் < இலங்கைக்குப் பயணம் செய்ய அனுமதியில்லை> என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றும் அப்பா பிள்ளைகுட்டி இல்லாதவரைப் போல அநாதையாக இறந்துவிட்டார். அம்மாவுக்கு இப்போது எண்பது வயதாகிவிட்டது. முதுமையின் கனியாகிய நோய்கள் அவரில் பூரணமாகப் படர்ந்திருந்தன. அப்பாவுக்கு ஏற்பட்ட கதிதான் அம்மாவுக்கும் ஏற்படும் என்ற பதற்றத்திலேயே நான் இரவுகளில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், பகலிலும் எனக்கொரு கெட்ட சேதி வந்தது. சமையலறைப் பானைக்குள் மறைந்திருந்த பாம்பு அம்மாவைத் தீண்டியதால், அவர் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று பெரியக்கா எனக்கு அலைபேசியில் சொன்னதும், நான் உடனேயே அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தேன். அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து என்னிடம் பேசிய முதல் விஷயமே, தன்னை உடனடியாகப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகயிருந்தது. அப்பா தவறிப் போன சில நாட்களிலேயே, பிள்ளைகள் நாங்களும் இதுபற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது அம்மா அவராகவே வாய்விட்டுக் கேட்டுவிட்டார். அந்த நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சொன்னால் உங்களாலேயே சரிவரப் புரிந்துகொள்ள முடியாத போது, படிப்பறிவற்ற, உலகமறியாத என்னுடைய அம்மா எப்படிப் புரிந்துகொள்வார் சொல்லுங்கள்! அகதிகளான நாங்கள் ‘ஸ்பொன்ஸர்’ செய்து அம்மாவை அழைக்க முடியாது. பயண முகவர் மூலம் அம்மாவைச் சட்டவிரோதமான வழிகளில் தான் பிரான்ஸுக்கு வரழைக்க முடியும். அதைத் தவிர வேறெந்த வழியும் எங்கள் முன் கிடையவே கிடையாது. ஆனால், இந்த வயதில் அம்மாவை எப்படி ஒரு சட்டவிரோதப் பயணத்திற்குள் நாங்கள் தள்ளிவிட முடியும். அந்தப் பயணத்தில் பல பனிப்பாலைகளையும் குளிராறுகளையும் கால்நடையாகவே கடக்க வேண்டியிருக்கும் அல்லது ஏதாவது ஒரு திருட்டுக் கடவுச்சீட்டிலோ, போலி விசாவிலோ அம்மா ஆகாய மார்க்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். வழியில் ஏதாவது ஒரு விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் சிறையில் போட்டுவிடுவார்கள். பெரியக்காவின் கணவர் ஒரு யோசனையைச் சொன்னார். ஒருமுறை சுற்றுலா விசாவுக்கு முயற்சித்துப் பார்க்கலாம். கிடைத்துவிட்டால், அம்மா பிரான்ஸுக்கு வந்ததும் இங்கே அகதியாகப் பதிவு செய்துவிடலாம். அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதுமாக என்னிடமே கொடுக்கப்பட்டிருந்ததால், நான்தான் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அம்மா ஒரளவு உடல்நலம் தேறியதும், அவருக்குத் தெரிந்த ஒருவரின் உதவியோடு கொழும்புக்குச் சென்று, பிரஞ்சுத் தூதரகத்தில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தார். நேர்முக விசாரணையில் தூதரக அதிகாரி ஒரேயொரு கேள்விதான் கேட்டாராம்: “நீங்கள் முதியவராக இருக்கிறீர்கள். உங்களை அலையவைக்க நான் விரும்பவில்லை. உங்களுக்கு மூன்று மாதங்கள் விசா வழங்கிவிடலாம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்ததும் நீங்கள் மறுபடியும் இலங்கைக்குத் திரும்பி வருவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” நான் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தேன். எனவே நேர்முக விசாரணைக்கு முன்பாகவே, நான் அம்மாவை இது விஷயமாக எச்சரித்திருந்தேன். எனவே அம்மா தூதரக அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக “ஊரில் நிலமும் வீடும் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு நான் பிரான்ஸிலேயே தங்கிவிடமாட்டேன்” என்றிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏராளமான நிலங்களும், வீடுகளும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் அய்ரோப்பாவுக்கும் கனடாவுக்கும் சென்றுவிட்டுத் திரும்பி வரவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, அம்மாவின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். அந்த நிராகரிப்பு எனக்கு அம்மா மீதுதான் கோபத்தைக் கிளப்பிவிட்டது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே, நான் அழைத்தபோது அம்மாவும் அப்பாவும் கிளம்பி இங்கே வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சட்டவிரோதப் பயண முகவர் மூலம் பயணம் செய்யுமளவுக்கு அப்போது அம்மாவுக்குத் தெம்பிருந்தது. இங்கே வரும் வழிகளும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. நிறையச் சனங்கள் பயண முகவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்த போலி விசாக்களோடு கொழும்பில் விமானம் ஏறி, பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி அகதித் தஞ்சம் கேட்டார்கள். அது இலங்கையில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால், இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பெரிய கெடுபிடிகளில்லாமல் பிரான்ஸ் ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போதோ அங்கே போரும் முடிந்துவிட்டது. அம்மாவும் பழுத்து முதுமையடைந்து நோயாளியாகிவிட்டார். ஒருநாளைக்குப் பன்னிரண்டு மாத்திரைகளைச் சாப்பிடுகிறார். பிரான்ஸின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் இன்னும் எத்தனை வருடம்தான் அவர் சீவித்துவிடுவார்? வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரத்தைக் கொண்டுவந்து நட்டால் கூட அது இந்தக் காலநிலையில் செத்துவிடுகிறதே. இலங்கையின் வெயிலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் அம்மாவுக்கு அதிக ஆயுளைக் கொடுக்கக்கூடும். இயலாமையால் என்னுள் எழுந்த தாழ்வுணர்ச்சியை விரட்டுவதற்காக, நான் இப்படிக் காரணங்களை வலிந்து தேடிக் கோபப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், பிரான்ஸுக்கு வந்தே தீருவது என்பதில் அம்மா மிக உறுதியாகயிருந்தார். அதற்காக அவர் சொன்ன காரணங்களில் ஏதொன்றையும் என்னால் மறுத்துப் பேசிவிடவே முடியாது. “கவனமாகக் கேள் தம்பி! இந்த ஊர் காடாகி வருடங்களாகிவிட்டன. பாம்பும், பூரானும், விசர் நாய்களும்தான் இங்கே நாட்டாமை. ஊரில் பத்து வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றன. யுத்தத்தின் போது, இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரவேயில்லை. எங்களுடைய வீட்டைச் சுற்றி அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு யாருமேயில்லை. மின்சாரம் இரவில் வராமல் பகலில் மட்டுமே எப்போதாவது வருகிறது. இந்த வீட்டில் நோயாளிக் கிழவியான நான் எப்படித் தனித்திருக்க முடியும்? கிழக்குத் தெருவில் என்னைப் போலவே தனியாக வசித்துவந்த கிழவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். செய்தது கொள்ளையர்களா? ஆவா குறூப்பா? ஆர்மியா? நேவியா? என்று யாருக்குமே தெரியாது. கிழக்குத் தெருவுக்கும் மேற்குத் தெருவுக்கும் பெரிய தூரமா என்ன? எப்போது வேண்டுமானாலும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” “அம்மா…நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு சொந்தக்காரர்கள் யாருடைய வீட்டிலாவது போய் இருக்கலாமே?” "யார் வீட்டுக்குப் போவது? உன்னுடைய அப்பா எல்லோருடனும் பகையைத் தேடி வைத்துவிட்டுத்தானே போயிருக்கிறார். ஆனால் ஒன்று… அவராகச் சண்டையை ஒருபோதும் தொடக்கியதில்லை. சரி… இப்போது நான் போய் யாராவது சொந்தக்காரர்களோடு இருந்தாலும், அவர்கள் என்னை நன்றாக வைத்துப் பார்ப்பார்களா? என்னிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். தம்பி! இது நீயிருந்த இலங்கையில்லை. எல்லோருமே வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். “இப்போது இங்கே வருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அம்மா. சட்டங்களை இறுக்கிவிட்டார்கள்… உங்களுக்கும் வயதாகிவிட்டது.” “அதெல்லாம் ஒன்றுமில்லை. சென்ற மாதம்தானே செல்லையாவின் பெண்சாதியைப் பிள்ளைகள் கனடாவுக்குக் கூப்பிட்டார்கள். அவள் எனக்கு இரண்டு வயது மூப்பு. மனுசி சக்கர நாற்காலியில்தான் உலாவியது. எனக்கு இன்னும் இரண்டு கால்களிலும் தெம்புள்ளது. நான்தான் தனியாகக் கிணற்றில் தண்ணீர் அள்ளுகிறேன், வளவில் தேங்காய் பொறுக்கி வைக்கிறேன், மழை வெள்ளம் வீட்டுக்குள் ஏறும்போது, நான்தான் தனியாகவே சிரட்டையால் அள்ளி அள்ளித் தண்ணீரை வெளியேற்றுகிறேன். பஸ் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து பெரியாஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு என்னால் இப்படித் தனியாக இருக்க முடியும் தம்பி? எனக்குப் பதினைந்து பேரப் பிள்ளைகள்! ஒருவரது முகத்தைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் நான் செத்துப்போனால், என்னுடைய உடம்பு தான் வேகுமா? எனக்குக் கொள்ளி வைக்க நீ தான் வருவாயா?” அக்காமார்கள் முழுவதுமாக அம்மாவின் பக்கமே நின்றார்கள்: “தம்பி! அம்மா இதுவரை எங்களிடம் பணம் அனுப்பு என்று ஒரு ஈரோ கூடக் கேட்டதில்லையே. நாங்களாக அனுப்பும் பணத்தைக்கூட அவர் தாராளமாகச் செலவு செய்து அனுபவிக்காமல், சிக்கனமாகச் சேர்த்துத்தான் வைத்திருக்கிறார். அவருடைய கடைசிக்கால விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் அவருக்குப் பிள்ளைகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தம்பி… உன்னிடம் பணம் போதாமலிருக்கிறது என்றால் நாங்களும் தருகிறோம். அம்மா வந்ததும் நீ தான் அவரை வைத்துப் பராமரிக்க நேரிடும் என்று தயங்காதே. நாங்கள் நான்கு பெண் பிள்ளைகள் இருக்க, மருமகளின் பொறுப்பில் அவரை விட்டுவிட மாட்டோம்.” அம்மாவை வரவழைப்பதற்கு நான்தான் ஏதோ முட்டுக்கட்டை போடுகிறேன் என்பது போலவே அக்காமார்கள் பேசியது எனக்கு இன்னும் கோபத்தைக் கூட்டியது. அந்த ஆத்திரத்தில் அன்றைக்கே ஒரு பயண முகவரைத் தேட ஆரம்பித்தேன். என்னுடன் இயற்கை உணவு அங்காடியில் வேலை செய்யும் கைலாசநாதன் உதவிக்கு வந்தார். அவரது நண்பரொருவர் கொழும்பில் பயண முகவராகயிருக்கிறார் என்று சொல்லித் தொலைபேசியில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஏஜெண்ட் கேட்ட தொகை மிக அதிகம் என்றாலும், நான் ஒப்புக்கொண்டேன். விமானப் பயணம்தான். ஏஜெண்டுக்கு முதலில் பாதிப் பணத்தைச் செலுத்துவதென்றும், அம்மா பிரான்ஸ் வந்து இறங்கியதும் மீதிப் பணத்தைக் கொடுப்பதென்றும் பேசிக்கொண்டோம். அக்காமார்களிடம் செப்புச் சல்லி வாங்கவும் நான் விரும்பவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையெல்லாம் வழித்துத் துடைத்துப் பாதித் தொகையை ஏஜெண்டுக்குச் செலுத்தினேன். மீதித் தொகையைக் கட்டுவதற்கு செவ்வந்தியின் நகைகள் இருக்கின்றன. பணம் கிடைத்ததும், ஒரே வாரத்தில், அம்மாவை டெல்லிக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் அங்கிருந்து அம்மாவைப் பாரிஸுக்கு அனுப்ப ஓர் இந்தியக் கடவுச்சீட்டைத் தயார் செய்தான். டெல்லியிலிருந்து பிரான்ஸுக்கு வரும் முதியவர்களால் நிரம்பப்பெற்ற சுற்றுலாக் குழுவுக்கு நடுவில் அம்மாவைத் தந்திரமாகக் கலந்துவிட்டான். இந்தத் தந்திரத்தை மிகப் பழமையானதும் எளிமையானதுமான மறு தந்திரத்தால் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உடைத்துவிட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் ஒன்று…இரண்டு…மூன்று எனப் பத்துவரை விரல்விட்டு எண்ணிக் காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணிக் காட்டியிருக்கிறார். இந்தியர்கள் இப்படி எண்ணும் போது, எங்களைப் போல விரல்களை ஒவ்வொன்றாக மடக்காமல், விரல்களை ஒவ்வொன்றாக விரித்தே எண்ணுவார்களாம். எனவே அம்மா இந்தியரல்ல என்பதை அதிகாரிகள் சுளுவாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். அம்மாவை டெல்லியிலுள்ள குடிவரவுச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற தகவலை ஏஜெண்ட் தயக்கத்தோடு தொலைபேசியில் என்னிடம் சொன்னபோது, நான் படு தூஷணத்தால் அவனைத் திட்டித் தீர்த்தேன். எண்பது வயது மூதாட்டியொருவர் மொழி தெரியாத நாட்டில், சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு என்னைவிட அதிக ஆத்திரம் ஏற்படுகிறதா இல்லையா! அம்மா சிறையிலிருக்கும் செய்தியை நான் அக்காமார்களிடம் மறைத்துவிட்டேன். அவர்களால் இந்தச் செய்தியைத் தாங்கவே முடியாது. அவர்களது துக்கமெல்லாம், நான்தான் பயண ஏற்பாட்டில் கவனமின்றித் தவறிழைத்துவிட்டேன் என்பது போல என்மீதே கோபமாகத் திரும்பும். என்னுடைய மொத்தக் கோபமும் அந்த முட்டாள் ஏஜெண்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கைலாசநாதன் மீது திரும்பியது. அவர் எனக்கு உதவி செய்ய முன்வந்ததால், என்னிடம் தும்பு பறக்க ஏச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் இனிமையான குணமுள்ள அந்த மனிதர் என்னுடைய கவலையையும் கோபத்தையும் புரிந்துகொண்டு, முட்டாள் ஏஜெண்டைப் பாடாகப் படுத்தி, அம்மாவை அய்ந்தே நாட்களில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டார். அம்மா சிறையிலிருந்து வெளியே வந்து, தொலைபேசி வழியாக என்னிடம் பேசும் போது, நான் உண்மையிலேயே குழறி அழுதுவிட்டேன். முட்டாள் ஏஜெண்ட் மறுபடியும் ஒரு முயற்சியை மும்பை விமான நிலையம் வழியாக எடுப்பதாகச் சொன்னான். “ஒரு மயிரும் வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்” என்றேன். அப்படியானால் தனக்குக் கொடுத்த பாதிப் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றான். “வேண்டாம்… அது எனக்கு வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் சென்றால் போதும்” எனச் சொல்லிவிட்டேன். அடுத்த வாரம், அம்மா இலங்கையிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசினார்: “தம்பி! இந்தியா வழியாக வருவது கொஞ்சம் கஷ்டம் போலல்லவா இருக்கிறது… இப்போது உக்ரேன் வழியாகத் தான் சனங்கள் பிரான்ஸுக்கு வருவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்…” “அம்மா… அங்கே கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்கிறது” என்றேன். “அது பரவாயில்லைத் தம்பி… நான் பார்க்காத சண்டையா! நீ வீணாகப் பயப்படாதே! நாளைக்கே சாகப்போகிற கிழவியான என்னை அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றார் அம்மா. அம்மா ஒவ்வொரு நாளுமே எங்கள் எல்லோரையும் வாட்ஸப்பில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தார். தன்னால் ஒரு நிமிடம் கூட இலங்கையில் இருக்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “காசு பணம் இருந்து என்ன பலன்? சாப்பாட்டுச் சாமான்கள் எதுவும் கிடைப்பதில்லையே! சனங்கள் இங்கே பஞ்சத்தில் சாகப் போகிறார்கள். சீனாக்காரன் கொடுக்கும் அரிசிப் பசையையும், குப்பையில் விளையும் கீரையையும் சாப்பிட்டே இங்கே வாழ வேண்டியிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட பின்பும் நிம்மதியாக ஒருபிடி சோறு தின்பதற்குப் பிள்ளைகளான எங்களுக்கு எப்படி மனம் வரும்! எனக்கு அங்காடியில் வேலை ஓடவேயில்லை. அம்மாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நிராசையால் ஏங்கியே என்னுடைய அம்மா அநாதையாகச் செத்துவிடுவாரா என்றெல்லாம் யோசித்து எனது தலை கொதித்துக்கொண்டிருந்தது. நான் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதை யூதரான முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். என்னைக் கூப்பிட்டு, ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி, அம்மையார் கேட்டிருக்கும் இயற்கை உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று, அவரது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். நான் பட்டியலிலுள்ள பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிவாறே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டை நோக்கி நடந்தேன். அங்கே போவதென்றாலே என்னிடம் ஓர் உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். இப்போது உற்சாகம் ஏற்படவில்லை என்றாலும் மனதிற்குச் சற்று ஆறுதலாகவேயிருந்தது. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த யூதரின் அங்காடியில் வேலைக்குச் சேர்ந்த போது, என்னுடைய முதல் வேலையே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குப் பொருட்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வதாகவே இருந்தது. அவரது வீடு அதிக தூரத்திலில்லை. நான் வேலைக்கு வந்து இறங்கும் ட்ராம் தரிப்பிடத்திற்கு, எதிரேயிருந்த சிறிய காணித் துண்டிலேயே அவரது பழமை வாய்ந்த வீடு இருந்தது. பிரஞ்சு – கோர்ஸிகா பெற்றோருக்குப் பிறந்த ஒலிம்ப் அம்மையாருக்குக் கிட்டத்தட்ட என்னுடைய அம்மாவின் வயதுதான் இருக்கும். அம்மாவைப் போலவே இவரும் தனிமையிலேயே வசிக்கிறார். சராசரி உயரம் உள்ளவர் என்றாலும், அவரது முதுகில் பெரிதாகக் கூன் விழுந்திருப்பதால், சிறிது குள்ளமாகத் தோற்றமளிப்பார். முகத்தில் இலேசாகத் தாடி மீசை அரும்பியிருக்கும். உச்சந்தலையில் சிறிதளவு வழுக்கையுமுண்டு. ஒலிம்ப் அம்மையார் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. உளவியலில் பட்டப் படிப்புப் படித்தவராம். அவரது வீடு முழுவதும் கருப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்கள் எல்லா இடங்களிலுமே அடுக்கப்பட்டிருக்கும். நான் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்ற முதல் நாளிலேயே, அம்மையார் தன்னுடைய சாம்பல் நிறச் சிறிய கண்கள் ஒளிர என்னைப் பார்த்துவிட்டு, வீட்டினுள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசினார். “அழகிய இளைய மனிதனே! நீ ஸ்ரீலங்கனா?” “ஆம்… அம்மா” என்றேன். அதன் பின்பு, நான் அங்கே பொருட்களை விநியோகிக்கப் போய்வரும் போதெல்லாம் ஒலிம்ப் அம்மையார் என்னிடம் சிறுகச் சிறுகச் சொல்லியது இவைதான்: "அதுதான் மகனே! அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்களே ஆகியிருந்தன. பிரான்ஸ் நாசிப் படையிடமிருந்து விடுதலை பெற்றுச் செழிக்கத் தொடங்கிய காலம். அப்போதும் எங்களது குடும்பம் இந்த வீட்டில்தான் வசித்தது. என்னுடைய அப்பா போரில் இறந்துபோயிருந்தார். அம்மா முரடனான ஒரு கிரேக்கனைச் சிநேகிதம் செய்துகொண்டார். அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாத ஓர் இலங்கைக் குடும்பம் இந்த ஊரில் குடியேறியது. அந்தக் குடும்பம் சிங்களக் குடும்பமா? தமிழ்க் குடும்பமா? அல்லது கலப்புக் குடும்பமா? என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தக் குடும்பத்தில் என்னுடைய வயதையொத்த ஒரு பையன் இருந்தான். அவன் எங்களுடைய பாடசாலையில்தான் சேர்க்கப்பட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரஞ்சு வார்த்தை கூடத் தெரியாது. ஆனால், போர்த்துக்கேய மொழியை ஓரளவு பேசுவான். நானும் அதை ஓரளவு புரிந்துகொள்வேன். அவனுடைய பெயர் தோமஸ். நான் சீக்கிரமே வெட்க சுபாவமுள்ள அந்தக் கறுப்பு அழகனிடம் காதல் வயப்பட்டேன். அப்போது இந்த ஊர் ஒரு சிறு கிராமம். காடு பூத்துக் கிடக்கும். இப்போது போல் அல்லாமல் அப்போது நதியில் ஏராளமாக நீர் வரும். புல்வெளிகளில் குதிரைகள் நிதானமாக மேய்ந்துகொண்டிருக்கும். நானும் தோமஸும் காடுகளுக்குள்ளும் நதியிலும் விளையாடித் திரிந்தோம். ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லட்டுமா? தோமஸுக்கு முத்தமிடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. நான்தான் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன். எங்களுடைய உறவு அம்மாவுக்குத் தெரிய வந்தபோது, அவர் என்னைக் கடுமையாகக் கண்டித்தார். அவரது காதலனான கிரேக்கன் என்னை முரட்டுத்தனமாக அடித்தான். அப்போதும் நான் தோமஸைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அந்த இலங்கைக் குடும்பமே இந்த ஊரிலிருந்து திடீரெனக் காணாமற் போய்விட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த உறவை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் செல்வேன் என்ற முட்டாள்தனமான எண்ணமொன்று இந்தக் கிழவியின் மனதிற்குள் ஒளிந்து கிடப்பதை நான் உன்னிடம் மறைக்கத் தேவையில்லைத்தானே மகனே!" ஒலிம்ப் அம்மையாரின் வீடடில் இலங்கை சம்பந்தமான நூல்கள், படங்கள், சிலைகள், முகமூடிகள், வரைபடங்கள் எல்லாமே இருந்தன. இலங்கையைக் குறித்துப் புத்தகங்கள் வழியாக அவர் ஏராளமாகப் படித்திருந்தார். என்னிடம் பேசுவதால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை அவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், நான் வேலைக்குத் திரும்பாமல் ஒலிம்ப் அம்மையாரது வீட்டில் மெனக்கெடுவது என்னுடைய முதலாளிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. நான் ஒலிம்ப் அம்மையாரை ஒருநாள் எனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வகைவகையான இலங்கை உணவுகளைப் பரிமாறினேன். காரத்தால் அவருக்குக் கண்களில் நீர் கசிந்த போதும், தட்டில் வைத்த எதையும் மீதம் வைக்காமல் இரசித்துச் சாப்பிட்டு முடித்தார். அது பிரஞ்சுக்காரர்களின் வழக்கம். “அம்மா… நான் ஒருநாள் உங்களை நிச்சயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வேன்” என்று நான் ஒலிம்ப் அம்மையாரிடம் அடிக்கடி சொல்வேன். அவர் சிறு குழந்தையைப் போலப் புன்னகைப்பார். எனக்கே இலங்கைக்குப் போக வழியில்லை என்பது ஒலிம்ப் அம்மையாருக்குத் தெரியாது. நான் தள்ளுவண்டியோடு ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அவர் கேட்ட முதல் கேள்வி “ஸ்ரீலங்காவில் உன்னுடைய அம்மா நலமாகயிருக்கிறாரா? கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றி விட்டார்களாமே. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், அடிதடி என்று பத்திரிகையில் படித்தேன். உன்னுடைய கிராமத்தில் பிரச்சினை ஏதும் இல்லையல்லவா?” நான் உங்களிடம் உண்மையை மட்டுமே சொல்கிறேன்! ஒலிம்ப் அம்மையார் ‘பிரச்சினை’ என்று சொன்ன அந்த விநாடியில்தான் என்னுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் திடீரெனப் பளிச்சிட்டு ஓடியது. அதை ஒலிம்ப் அம்மையாரிடம் சொல்லலாமா வேண்டாமா எனக் கடுமையான மனப் போராட்டம் எனக்குள் நடந்துகொண்டிருந்த போதே, என்னுடைய பரிதாபத்திற்குரிய நாவு பேசிற்று: “அம்மா உங்களால் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” “சொல்லு மகனே! நிச்சயம் செய்வேன்!” “இப்போது இலங்கையில் நிலைமை அவ்வளவு சரியில்லை. பஞ்சம் பரவிக்கொண்டு வருகிறது. மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடு. நோயாளியான என்னுடைய அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்து, கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் வைத்திருக்க விரும்புகிறேன் அம்மா…” “ஆம்… அதை நீ நிச்சயம் செய்தாக வேண்டும் மகனே. நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?” “நீங்கள் ஒரு ஸ்பொன்ஸர் கடிதம் கொடுத்தால், என்னுடைய அம்மாவுக்கு விசா வழங்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்…” “அவ்வளவு தானா! உன்னுடைய அம்மா பிரான்ஸுக்கு வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்! அவரைப் பயணத்திற்குத் தயாராகச் சொல். நான் இப்போதே நகரசபை அலுவலகத்திற்குப் போய்த் தேவையான படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ஸ்பொன்ஸருக்கான பத்திரத்தைப் பெற்று வந்துவிடுகிறேன். நீ வேலை முடிந்ததும் மாலையில் என்னை வந்து பார்!” நன்றியுணர்வால் எனக்குப் பேச்சு எழவில்லை. என்னுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்ததும், குழந்தைச் சிரிப்புடன் எழுந்துவந்து ஒலிம்ப் அம்மையார் என்னைக் கட்டியணைத்துக்கொண்டார். நான் வேலையில் இருந்த போது, அங்காடிக்குத் தொலைபேசியில் அழைத்த ஒலிம்ப் அம்மையார் என்னுடைய அம்மாவின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விபரங்களை என்னிடம் கேட்டார். அப்போது ஒலிம்ப் அம்மையார் நகரசபை அலுவலகத்தில் இருந்தார். ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் குத்திமுறிய, நான் மாலையில் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை அவரது படிப்பு மேசையின் முன்னே உட்காரவைத்துவிட்டு, அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்து அய்ந்து பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். “கேள் மகனே! முதலாவது பத்திரம் உன்னுடையை அம்மாவை நான் விருந்தினர் விசாவில் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்க வைப்பதற்கான நகரசபையின் ஒப்புதல் பத்திரம். இரண்டாவது என்னுடைய வங்கிக் கணக்கு விபரம். மூன்றாவது என்னுடைய பிரஞ்சுத் தேசிய அடையாள அட்டையின் பிரதி. நான்காவது உன்னுடைய அம்மாவை என்னுடைய விருந்தினராக வருமாறு கேட்டு நான் அவருக்கு அனுப்பும் கடிதம். அய்ந்தாவது பத்திரம் உண்மையிலேயே அவசியமற்றது… ஆனால், அதுவே மிக முக்கியமானது என்று நகரசபையில் சொன்னார்கள். மூன்று மாதங்களுக்குள் விருந்தினர் பிரான்ஸிலிருந்து வெளியேறாவிட்டால், உள்துறை அமைச்சு என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் ஒப்புதல் தெரிவிக்கும் பத்திரம். இவற்றை எடுத்துக்கொண்டு போய் உன்னுடைய அம்மா கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்தால், நிச்சயமாக விசா கொடுத்துவிடுவார்கள். உன்னுடைய அம்மாவைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நானே அவரிடம் வருவேன்!” ஒலிம்ப் அம்மையார் என்னிடம் கொடுத்த ஒவ்வெரு பத்திரத்தின் அடியிலும் நடுங்கும் கையால் ஒலிம்ப் அம்மையார் இட்ட கையெழுத்து இருந்தது. கிறுக்கலான கையெழுத்து என்றாலும், பிரஞ்சுக் கையெழுத்துக்கு ஒரு மதிப்பிருக்கத்தான் செய்கிறது இல்லையா! கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்த பத்து நாட்களுக்குள்ளேயே, அம்மாவுக்கு மூன்று மாதங்களுக்கான விருந்தினர் விசாவைக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் செய்தியை அறிந்ததும் என்னுடைய அக்காமார்கள் பூரித்துப்போய், என்னை அலைபேசி வழியே கொஞ்சித் தள்ளிவிட்டார்கள். அதன் பின்பு, அம்மாவை என்னுடைய வீட்டில் நான்தான் வைத்துக்கொள்வேன், நான்தான் வைத்துக்கொள்வேன் என்று அவர்களிடையே கடும் போட்டி தொடங்கிவிட்டது. எப்போதும் போலவே இந்தப் போட்டியிலும் தன்னுடைய விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தால் என்னுடைய மூன்றாவது அக்காவான மலரே வெற்றிபெற்றார். அவர்கள் மகிழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, என்னுடைய உள்ளம் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பிரான்ஸுக்கு வரும் அம்மா நிச்சயமாக மூன்று மாதங்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். தன்னுடைய அய்ந்து பிள்ளைகளையும், பதினைந்து பேரக் குழந்தைகளையும் விட்டு, மறுபடியும் அவர் தனிமையை நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், நான் அம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை. அது பிரான்ஸுக்கு வரும் அவரது மகிழ்ச்சியில் நிச்சயமாகவே மண்ணையள்ளி எறிந்துவிடும். பிரான்ஸுக்கு வந்ததும், அதைப் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி, அவரைத் தேற்றித் திருப்பி அனுப்பிவிடலாம் என்றே நினைத்தேன். இன்னொன்றும் நடக்கக் கூடும். சீக்கிரமே வரவிருக்கும் கடுங்குளிர் காலத்தாலும், இங்குள்ள அடைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும், சமைத்த உணவைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரம் வரை உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் அம்மாவே சலிப்புற்று இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பலாம். இருபது வருடங்களாக இங்கேயிருக்கும் எனக்கே இலங்கைக்கு எப்போது போகலாம் என மனம் தவித்துக்கொண்டிருக்கிறதே! அம்மா அவ்வாறாக விருப்பப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் எல்லாமே மகிழ்ச்சியாக முடிந்துவிடும். பேரக் குழந்தைகளைப் பார்த்த திருப்தியில் ஊர்ச் சுடலையிலேயே அவர் நிம்மதியாக நீறாவார். அம்மா பிரான்ஸுக்கு வந்த மூன்றாவது நாளே, நான் ஒலிம்ப் அம்மையாரை அழைத்துக்கொண்டு, மலர் அக்காவின் வீட்டுக்குச் சென்றேன். ஒரு ‘மிமோஸா’ பூங்கொத்தோடு வந்த ஒலிம்ப் அம்மையார் அங்கிருந்து கிளம்பும்வரை, என்னுடைய அம்மாவின் கையைப் பற்றிப் பிடித்தபடியே இருந்தார். அப்போது, என்னுடைய நான்கு அக்காக்களுமே அங்கிருந்தனர். அவர்கள் ஆரவாரமாக ஒலிம்ப் அம்மையாரை வரவேற்றாலும், அம்மையார் இந்த நேரத்தில் ஒரு வேண்டப்படாத விருந்தாளி என்பதைப் போலவே தங்களுக்குள் சாடை பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொருநாள் அம்மா என்னிடம் சொன்னார்: “தம்பி! ஊரில் காணியையும் வீட்டையும் கவனித்துப் பார்க்க ஆட்களில்லை. யாராவது அயலவர்கள் கள்ள உறுதி முடித்துக் காணியையும் வீட்டையும் கைப்பற்ற முன்பாக நாங்கள் வீட்டை விற்றுவிட வேண்டும். அதொன்றும் பெரிய பணம் இல்லைத் தான். கைவிடப்பட்டுக் காடாகியிருக்கும் அந்த ஊரில் ஒரு பரப்புக் காணி ஓர் இலட்சத்திற்குக் கூட விலை போகாது. காணியையும் வீட்டையும் ஒரு பாதிரிமார் சபை விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை விற்று முடிப்பதற்கான வேலையை நாங்கள் சீக்கிரமே செய்ய வேண்டும்.” “அம்மா… அது நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு. எங்களது குடும்பத்திற்கு இலங்கையில் இருக்கும் ஒரே அடையாளம் அந்தக் காணிதான். அது அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே…” “இருந்து? நாங்கள் யாருமே அங்கே திரும்பிப் போகப் போவதில்லை. கள்ளர் அனுபவிக்கவா அந்தக் காணியை உன்னுடைய அப்பா தேடி வைத்தார்? விற்கிற வேலையைப் பார் தம்பி.” அம்மாவுக்கு பிரான்ஸ் இவ்வளவு பிடித்துப் போகும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. பனியையும் குளிரையும் ஒரு குழந்தையைப் போலல்லவா அவர் அனுபவிக்கிறார். ஒருநாள், நான் மலர் அக்காவின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அம்மா தரைக் கம்பளத்தின் மீது அமர்ந்திருந்து பேத்தியிடம் பிரஞ்சு மொழிப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். “அம்மா! தரையில் உட்காராதீர்கள்…குளிர் ஏறிவிடப் போகிறது” என்றேன். “சீச்சி… குளிர்தான் என்னுடைய நோய்க்கு நல்ல மருந்தென்று நினைக்கிறேன். இங்கே வந்ததிலிருந்து எனக்குக் காய்ச்சல், தடிமன் கூட வந்ததில்லையே… வாழப் போகும் நாட்டின் பாஷையில் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே தம்பி. அதுதான் கொஞ்சம் பிரஞ்ச் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். உன்னுடைய அப்பாவுக்குச் சிங்களம் தெரிந்திருந்ததால் தானே கொழும்பு வரைக்கும் போய்க் கெட்டித்தனமாக வியாபாரம் செய்தார்” என்றார் அம்மா. அம்மா பிரான்ஸுக்கு வந்து இரண்டரை மாதங்கள் கழிந்துவிட்டன. மலர் அக்காவின் வீட்டில் அம்மா தங்கியிருந்தாலும், மற்றைய பிள்ளைகளின் வீடுகளிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு நாட்கள் தங்கி அம்மா எப்போதுமே ரவுண்ட்ஸில் இருந்தார். நடுவில் அம்மாவை அழைத்துக்கொண்டு பெரியக்கா குடும்பம் லூட்ஸ் மாதா கோயிலுக்கும் சென்று வந்தது. பாரிஸையும் அதன் புறநகரங்களையும் அம்மா சுற்றியடித்து, எல்லாச் சைவக் கோயில்களுக்கும் போய்விட்டு வந்துவிட்டார். பேரப் பிள்ளைகளோடு நதிக்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு வந்து “ச்சா… என்னவொரு சோக்கான நாடு! ஒரு பூச்சியிருக்கா பூரானிருக்கா பாம்பிருக்கா?” என்று வியந்துகொண்டிருந்தார். நடுநடுவே, ஊரிலிருக்கும் காணியையும் வீட்டையும் விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்லியவாறேயிருந்தார். அம்மாவின் விசா முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நான் பெரியக்காவைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: “பெரியக்கா… நீங்கள்தான் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா முப்பதாம் தேதி இலங்கைக்குத் திரும்ப வேண்டும்.” “தம்பி… என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? படாத பாடுபட்டு அம்மாவை இங்கே கூப்பிட்டுவிட்டு, திருப்பி அனுப்புவதா? அந்த மனுசி இலங்கைக்குப் போய் என்ன செய்யும்? அம்மா உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒன்றோ இரண்டோ வருடங்கள்தான். அவர் இங்கேயே இருக்கட்டும். இனி நீ கஷ்டப்பட வேண்டாம். நானே அம்மாவுக்குத் தேவையானவற்றைச் செய்கிறேன். விசா முடிந்த அடுத்த நாளே, அம்மாவைக் கூட்டிப்போய் பொலிஸில் அகதியாகப் பதிவு செய்து விடுகிறேன்.” “அக்கா…நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அப்படிச் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகாவிட்டால் ஸ்பொன்ஸர் செய்து வரவழைத்த ஒலிம்ப் அம்மையார் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.” “நல்ல ஒலிம்பும் பிளிம்பும்! அந்தக் கிழவி ஏதாவது பணம் கேட்டால் கொடுத்துவிடலாம். ஆனால், அம்மாவைத் திருப்பி அனுப்ப முடியாது.” “இங்கே பெரியக்கா.. இது ஒலிம்ப் அம்மையார் பணத்திற்காகச் செய்த காரியமில்லை. எங்கள் மீதுள்ள அன்பால் செய்தது. நம்பிக்கையால் செய்தது. அவருக்கு எங்களது அம்மாவை விட வயது அதிகம். இந்த வயதில் அவரை நீதிமன்றத்திற்கு அலைய வைக்க முடியுமா? ஒருவேளை அவர் சிறைக்குக் கூடச் செல்ல வேண்டியிருக்கலாம்…” “பேய்க்கதை கதைக்காதே தம்பி. இங்கே எவ்வளவு சனங்கள் ஸ்பொன்ஸரில் வந்துவிட்டு இங்கேயே அகதித் தஞ்சம் கேட்டுத் தங்கிவிடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை நடந்ததா? நீ பயப்படுவது போல எதுவும் நடக்காது.” “இல்லை பெரியக்கா… என்னால் ஒலிம்ப் அம்மையாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகத்தான் வேண்டும்!” நான் மூன்றாவது அக்காவான மலரைத் தொலைபேசியில் அழைத்தேன். அதற்குள் பெரியக்கா மலர் அக்காவை அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். மலர் அக்கா தன்னுடைய இயல்புப்படியே எடுத்ததும் என்மீது சீறி விழுந்தார்: “ஆமோ! அப்படியோ!! என்னுடைய அம்மாவை நீ எப்படித் திருப்பி அனுப்புகிறாய் என்று நானும் பார்க்கிறேன். இப்போதே அம்மாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கிழித்து அடுப்பில் போட்டுவிடுகிறேன்” என்று மலரக்கா ராங்கி காட்டினார். “அது முடியாது மலரக்கா… அம்மாவின் பாஸ்போர்ட் என்னிடம்தான் இருக்கிறது.” “உன்னுடைய இயக்கத்துக் குறுக்கு மூளையைக் காட்டிவிட்டாய் தம்பி. உனக்கு அம்மாவை விட அந்த வெள்ளைக்காரக் கிழவி முக்கியமாகப் போய்விட்டாள் தானே! அம்மாவிடம் மட்டும் ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும் என்று தயவுசெய்து சொல்லிவிடாதே! ஏங்கி இப்போதே செத்துவிடுவார். பழியைச் சுமக்காதே!” ஆனாலும், நான் கடைசியில் பழியைச் சுமக்கவே நேரிட்டது. ஒரு வாரமாகவே ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து எங்களது அங்காடிக்கு அழைப்பு ஏதும் வரவேயில்லை. ஒருமுறை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கவும் எனக்கு மனம் ஏவவில்லை. அம்மாவின் விசா பிரச்சினை என்னைக் கடுமையாகக் குழப்பிக்கொண்டேயிருந்தது. மாலையில் வேலை முடிந்து செல்லும் போது, ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைக் கவனித்தேன். வெளியே பூட்டுப் போடப்பட்டிருந்தது. கதவின் இடுக்குகளில் விளம்பரப் பத்திரிகைகள் குப்பையாகச் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் நான் இந்த ட்ராம் தரிப்பிடத்திலிருந்து ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைப் பார்க்கிறேன். இதை எப்படிக் கவனிக்கத் தவறினேன்? என்னையறியாமலேயே ஏதோவொரு கள்ள எண்ணம் என்னுடைய உள்ளத்தில் புகுந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதும், வாயில் ஊத்தை எச்சில் ஊறி வந்தது. அதை வீதியில் உமிழ்ந்தேன். வீதியைக் கடந்து சென்று, ஒலிம்ப் அம்மையாரின் பக்கத்து வீட்டுக்காரரின் அழைப்பு மணியை அழுத்தினேன். அந்த இத்தாலியரிடம் எனக்கு ஓரளவு பழக்கமுண்டு. அவருக்கும் நான் தான் பொருட்களை எடுத்து வருபவன். ஒலிம்ப் அம்மையார் மூச்சுத் திணறல் பிரச்சினையால் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று இத்தாலியர் சொன்னார். நான் ட்ராம் தரிப்பிடத்திற்குத் திரும்பவும் சென்று, எனது வீட்டுக்குச் செல்வதற்கான ட்ராம் வண்டிக்காகக் காத்திருக்கலானேன். என்னுடைய சின்ன மூளைக்குள் கட்டெறும்புகளைப் போல ஆயிரம் எண்ணங்கள் புற்றெடுத்துச் சுற்றிக்கொண்டிருந்தன. வீட்டுக்குச் செல்லும் வழியில், மத்திய மருத்துமனைத் தரிப்பிடத்தில் ட்ராம் நின்றபோது, என்னுடைய கால்கள் என்னை அறியாமலேயே ட்ராம் வண்டியிலிருந்து கீழே இறங்கின. ஏதோ ஒரு கிலோ போதை மருந்தைத் தின்றவனைப் போலத்தான் நான் நடந்து சென்றேன். மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்ணுக்கு முன்னால் நான் தளர்ந்து போய் நின்றிருந்தபோது, நான் ஆஸ்பத்திரியில் சேர வந்த நோயாளி என்று கூட அந்தப் பெண் நினைத்திருக்கக் கூடும். அவளிடம் ஒலிம்ப் அம்மையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண்ணை விசாரித்துத் தெரிந்துகொண்டு உள்ளே சென்றேன். லிஃப்டில் கூட ஏறாமல், மாடிப் படிகளில் நடந்தே ஏறிச் சென்றேன். ஒலிம்ப் அம்மையாரின் கண்களைச் சந்திக்கும் தருணத்தை நான் கூடியவரை ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. படுக்கையில் கிடந்த ஒலிம்ப் அம்மையாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மூடியிட்டு பிராணவாயு செலுத்தப்பட்டுக்கொண்டிந்தது. முழங்கால்கள் வரையிருந்த நீல ஆடைக்குள் ஒரு பொம்மை போல ஒலிம்ப் அம்மையார் அசைவற்றுக் கிடந்தார். நான் அங்கிருந்த தலைமைத் தாதியிடம் விசாரித்த போது “இந்த அம்மையாரின் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது… இவரது உடல் நிலை குறித்து எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று அவள் இயந்திரம் போல என்னிடம் சொன்னாள். அதுவரை அலைவுற்றுக்கொண்டிருந்த என்னுடைய ஆன்மா மெதுவே தணிவதை உணர்ந்தேன். என்னுடைய நாவில் ஊத்தை எச்சில் கொத்தாகச் சுரந்தது. அதை வாய்க்குள் அடக்கியபடியேதான் நான் வீடுவரை வந்தேன். நான் வீட்டுப் படியில் கால் வைக்க முன்பே, என்னுடைய கடைசி அக்கா வேணியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் வாய்க்குள் எச்சிலை வைத்துக்கொண்டே பேசினேன். “என்னடா தம்பி… நீ உண்மையில் அம்மாவைத் திருப்பி அனுப்பத்தான் போகிறாயா?” என்று வேணி அக்கா கேட்டார். “எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றேன். நான் சொன்னது வேணி அக்காவுக்குப் புரிந்ததோ தெரியாது. அடுத்து வந்த நான்கு நாட்களும், நான் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று ஒலிம்ப் அம்மையாரின் படுக்கையைக் கவனித்தேன். அவர் கண்களை மூடி அசைவற்றுக் கட்டையாகக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் நான் அங்கே செல்வதால், அந்தத் தாதி எனக்குப் பழக்கமாகிவிட்டாள். என்னைத் தவிர வேறு யாருமே ஒலிம்ப் அம்மையாரைப் பார்க்க வருவதில்லை என்று அந்தத் தாதி சொன்னபோது, நான் என்னுடைய அம்மாவை நினைத்துக்கொண்டேன். என்னுடைய அம்மா இலங்கைக்குத் திரும்பிப் போகவேயில்லை. வர்ணகலா 1 இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டேன். பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய காலை மற்றுமொரு கொடூரமான கொலைச் செய்தியுடன் விடிந்தது. அவள் படுக்கையிலிருந்து நகராமல், அலைபேசியின் தொடுதிரையை உருட்டி உருட்டிப் பார்த்தவாறேயிருந்தாள். காலையில் எட்டு மணிக்கு வகுப்பு இருக்கிறது என்பது அவளது ஞாபகத்திலேயே இல்லை. மிதுனாவுக்கு ஆறு வயதாகியிருந்த போதுதான், அவளை இலங்கையில் விடுமுறையை கழிப்பதற்காக முதலும் கடைசியுமாக பெற்றோர் அழைத்துச் சென்றிருந்தார்கள். ஏழாலைக் கிராமத்திலுள்ள அவர்களது பாரம்பரிய, பெரிய நாற்சார் வீட்டில் மிதுனா கழித்த அந்த விடுமுறையை ஒரு குஞ்சுத் தேவதை போன்றே அவள் அனுபவித்தாள். தரையில் அவளது கால்களைத் தீண்டவிடாமல் சொந்தபந்தங்கள் எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தனர். பிரான்ஸில் கண்டேயிராத விதவிதமான மரங்கள், கனிகள், வீட்டுக்குள் உல்லாசமாக நுழைந்து படுத்துக்கிடக்கும் வெள்ளாடுகள், தலையைத் தட்டிப் பறக்கும் கோழிகள், குங்கும நிறமூட்டிய கோழிக் குஞ்சுகள், வீட்டின் பின்னே தொழுவத்தை நிறைத்திருக்கும் பசுமாடுகள், வீட்டைச் சுற்றிப் பறந்தபடியே இருக்கும் வண்ணப் பறவைகள், தோள்களில் வந்தமர்ந்து விளையாட்டுக் காட்டும் பட்டாம்பூச்சிகள், இரவில் தேவதைகளைப் பற்றி மட்டுமே கதைசொல்லும் பாட்டியும் தாத்தாவும் என்றிருந்த சூழலின் ஒவ்வொரு வண்ணப் படிமமும் இப்போதும் அவளது நெஞ்சில் படிந்துள்ளது. அவர்கள் இலங்கையை விட்டுத் திரும்பவும் பிரான்ஸுக்குப் புறப்பட்ட அன்றுதான் மாவிலாறில் மறுபடியும் யுத்தம் வெடித்தது. மறுபடியும் அவளைப் பெற்றோர் இலங்கைக்கு அழைத்துச் செல்லவில்லை. மிதுனா கேட்ட போதெல்லாம் “ஆமிக்காரங்கள் நிக்கிற முத்தத்த நான் இனி மிதிக்க மாட்டன்” என்று தந்தை பாலப்பா சொல்லிவிட்டார். ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் மிதுனாவை இலண்டன், நோர்வே, கிரேக்கம், துருக்கி, துனிஷியா என வெவ்வேறு நாடுகளுக்குப் பெற்றோர் கூட்டிச் சென்றனர். ஆனால், மிதுனாவின் கனவுகள் இலங்கையைச் சுற்றியேயிருந்தன. பெரியவளானதும் தனியாகவே அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வாள். வன்னியில் இறுதி யுத்தம் நடந்த காலங்களில், பாரிஸ் நகர வீதிகளிலே ஈழத் தமிழர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு பாலப்பா செல்லும் போது, சிறுமி மிதுனாவையும் அழைத்துப் போயிருக்கிறார். அங்கேயிருந்த தட்டிகளிலும், பதாதைகளிலும் மிதுனா பார்த்த இலங்கை வேறுமாதிரியாக இருந்தது. தலையற்ற உடல்கள், எரிந்துகொண்டிருக்கும் வீடுகள், வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தைப் பிரேதங்கள் என்பவற்றைத் தான் அவள் அங்கே பார்த்தாள். பல மாதங்களுக்கு அந்தப் படங்கள் அவளது மனதை வதைத்துக்கொண்டேயிருந்தன. அப்போதிலிருந்தே இலங்கை குறித்த செய்திகளை அவள் கவனமாகப் பின்தொடர்ந்தாள். பல்கலைக்கழகத்தத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் இலங்கைப் போரைக் குறித்தும், இனப் படுகொலை குறித்தும் மிதுனா சில தடவைகள் உரையாற்றியிருக்கிறாள். இலங்கை இனமுரண்கள் குறித்தே அவளது அரசறிவியல் பட்டத்திற்கான ஆய்வேட்டை எழுதுவதற்குத் தீர்மானித்து வேலை செய்கிறாள். இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அவள் உன்னிப்பாக அவதானித்துக் குறிப்புகளைச் சேகரித்து வைத்தாள். நீண்டகாலம் சிறைகளிலிருக்கும் அரசியல் கைதிகள், யுத்தத்தில் காணமற்போனவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்படும் தொடர் ‘அரகலய’ போராட்டம் எல்லாலற்றையும் அவள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். இலங்கையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு முக்கிய செய்தியையும் அவள் தவறவிடுவது கிடையாது. இந்தக் காலையில், அவள் யாழ்ப்பாண இணையமொன்றை உருட்டிக்கொண்டிருந்த போது, இந்தக் கொலைச் செய்தியைப் பார்த்தாள். ஆனால், அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சர்தானா என்று அவளுக்கு உறுதிப்படத் தெரியவில்லை. வர்ணகலா டீச்சருக்கு எத்தனை வயதிருக்கும் எனக் கணக்குப்போட்டுப் பார்த்தாள். இவளுக்கும் வர்ணகலாவுக்கும் இடையே வயதால் பதினேழு வருடங்கள் வித்தியாசங்கள் என்பது மிதுனாவுக்குத் தெரியும். அப்படியானால் இப்போது வர்ணகலாவுக்கு முப்பத்தொன்பது வயது. கொலையுண்டவர் நாற்பது வயதுப் பெண் என்றும் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தவர் என்றும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது, அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சராக இருக்கலாமோ என்ற அவளது சந்தேகம் வளர்ந்துகொண்டே போனது. அந்த இணையத்தில் கொலையுண்டவரின் வண்ண ஒளிப்படத்துடன், சில வரிகள்தான் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன: வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி, வட்டுக்கோட்டைப் பகுதியில் அவர் புதிதாக வாங்கியிருந்த வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தபோது, நேற்று இரவு, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் காணியையும், வீட்டையும் அவர் வாங்கியதில் எழுந்த தகராறுகள் காரணமாகவே அவர் ஒரு கும்பலால் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வர்ணகலாவின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தச் செய்தியின் நடுவில் பிரசுரிக்கப்பட்டிருந்த படத்தில், ஒளிப்பான சருமமுள்ள பெண் கொலையுண்டு கிடந்தார். அவரது முகம் இருந்த இடத்தில் ஓர் இரத்தக் கோளமேயிருந்தது. முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு, எந்தவொரு அடையாளமும் இல்லாமலிருந்தது. அந்தப் படத்தைப் பெரிதாக்கி, அது வர்ணகலா டீச்சர்தானா எனக் கண்டுபிடிக்க மிதுனா முயற்சி செய்தாள். கணினியில் இருந்த பல தொழில்நுட்பச் சாத்தியங்களையும் அதற்காக உபயோகப்படுத்தினாள். ஆனால், அந்தச் சடலத்தின் கழுத்துக்கு மேலே சிவப்புக் குழம்பைத் தவிர அவளால் ஓர் உறுப்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாரிஸ் புறநகரொன்றில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு மிதுனா தொலைபேசியில் அழைத்து, தனது பெற்றோரிடம் இந்தக் கொலைச் செய்தியைப் பதற்றத்துடன் சொன்னாள். “ஸே வ்ரே? லங்காஸ்ரீ நியூஸில அப்பிடியொரு செய்தியையும் காணேல்லையே” என்றார் தகப்பன் பாலப்பா. “ஆரு… அந்தத் தமிழ் டீச்சரோ?” என்று கேட்டார் தாயார் இந்திரா. 2 மிதுனாவுக்கு பத்து வயதான போது, வீட்டுக்கு அருகிலிருந்த தமிழ்ச்சோலையில் ஞாயிறு காலைகளில் நடத்தப்பட்ட தமிழ் வகுப்பில் அவளைப் பாலப்பா வலுகட்டாயமாகச் சேர்த்துவிட்டார். மிதுனாவுக்கு அது பிடிக்கவேயில்லை. அங்கே சொல்லிக்கொடுக்கும் பாடங்களும் அவளுக்கு வேதனையாகவேயிருந்தன. ஆனா, ஆவன்னா சொல்லிக்கொடுக்கும் முன்பே பத்துத் திருக்குறள்களைக் கொடுத்து மனனம் செய்து வருமாறு சொல்லிவிட்டார்கள். பாலப்பா பொறுமையாக திருக்குறளை மகளுக்குக் கற்றுக்கொடுத்தார். “எங்கிட தாய் மொழியை நாங்கள் மறக்கவே கூடாது” என்பது அவரது அன்றாடப் போதனையாக மிதுனாவின் குட்டித் தலையில் விழுந்தது. வார நாட்கள் முழுக்க ‘அலெக்ஸாந்தர் துமா’ தொடக்கப் பள்ளியில் படித்த மிதுனாவுக்கு, அந்தப் பிரஞ்சுப் பள்ளிக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மிதுனாவுடன் தோழர்களைப் போலவே பழகி, அவர்களுக்குச் சரிசமமாகவே அவளை நடத்தினார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இந்தத் தமிழ்ப் பாடசாலைஆசிரியையோ எரிச்சலும் கூச்சலுமாகத்தான் பாடங்களை நடத்தினார். இந்தத் தமிழ்ச் சித்திரவதையெல்லாம், அடுத்த வருடம் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்கு மிதுனா போகும் வரைதான் இருந்தது. வர்ணகலா டீச்சரின் வகுப்போ, கடவுளும் குட்டித் தேவதைகளும் போல கனவுலகமாக இருந்தது. வர்ணகலா வார நாட்களில் ஓர் அச்சகத்தில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றுபவர். ஞாயிறு தினங்களில் தொண்டு அடிப்படையில் தமிழ்ச்சோலையில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர் சங்கப்பாடல் விளக்கவுரை, தலைவர் மாமாவின் சிந்தனையிலிருந்து சில துளிகள் என்றெல்லாம் பொட்டலங்களைக் குழந்தைகளின் குரும்பைத் தலையில் சுமத்தி வைக்கவில்லை. அவரது முதல் வகுப்பையே இப்படித்தான் ஆரம்பித்தார்: தாளந்தான் போடுகிறேனே தமிழ் பாட அறியேனே தாதிமிதா தாதிமிதா தத்திமிதா தத்திமிதா வர்ணகலா டீச்சருக்கு சிரிக்காமல் பேசவே தெரியாது. காலையில் வரும்போது, வீட்டிலிருந்து முறுக்கு, பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை எடுத்துவந்து இடைவேளையில் குழந்தைகளுடன் பகிர்ந்து சாப்பிடுவார். அவரது வகுப்பு பாடலாலும், நடனத்தாலும், சிரிப்பாலும் நிறைந்திருந்தது. இப்படியாகத்தான் மிதுனா ஆர்வத்துடன் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கிய கட்டமொன்று நிறைவேறிற்று. மிதுனாவின் தமிழ்ப் படிப்புத் தீவிரம் பாலப்பாவையே திகைக்க வைத்தது. ஞாயிறு காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்காக, எட்டு மணிக்கே மிதுனா தயாராகிவிடுவாள். பாடசாலைக்குக் காரில் அழைத்துவரும் பாலப்பாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவுடன் பழக்கமானார். இந்தப் பழக்கம் ஒருவருடைய வீட்டுக்கு இன்னொருவர் வந்து போவதுவரை வளர்ந்தது. வர்ணகலாவின் கணவர் வெள்ளையினத்தவர். அவரும் சிறிதளவு தமிழ் பேசக் கற்றிருந்தார். தீபாவளி விருந்துக்கு மிதுனாவின் வீட்டுக்கு வர்ணகலா குடும்பமும், புதுவருட விருந்துக்கு வர்ணகலாவின் வீட்டுக்குப் பாலப்பா குடும்பமும் பரிசுகளோடு போய்வந்து உறவு கொண்டாடினார்கள். ஒரு கொடுமையான பனிக்காலத்தில், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மிதுனா பருவமடைந்தாள். ஒரு வாரம் வீட்டிலேயே வைத்திருந்து, சோறும் நல்லெண்ணெய் ஊற்றிய கத்தரிக்காய் பால்கறியும், பச்சை முட்டைகளும், உளுத்தம்மாக் களியுமாகக் கொடுத்து உடலைத் தேற்றி, அடுத்த வாரமே அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டார்கள். பருவமடைந்த காரணத்தைச் சொல்லியெல்லொம் பிரஞ்சுப் பள்ளிக்குப் போகாமலிருக்க முடியாது. ஆனால், தமிழ்சோலைக்கு ஒரு மாதகாலம் அவள் அனுப்பப்படவில்லை. முப்பத்தோராவது நாள் அய்யரை வீட்டுக்கே கூப்பிட்டு, புண்ணியவாசம் செய்து தீட்டைக் கழித்த பின்புதான் மிதுனாவைத் தமிழ் வகுப்புக்கு அனுப்பிவைத்தார்கள். ஏழு மாதங்கள் கழித்து வரும் கோடைகாலத்தில், மஞ்சள் நீராட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதாக பாலப்பாவும் இந்திராவும் முடிவெடுத்தார்கள். பிரான்ஸில் கோடை காலம்தான் விழாக்களை நடத்துவதற்கு ஏற்ற காலம். அற்புதமான காலநிலையுள்ள அந்த நாட்களில்தான் நண்பர்களும் உறவினர்களும் வெளிநாடுகளிலிருந்தும் விழாவுக்கு வருவார்கள். ஆனால், மிதுனாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவது சரியற்றது என்பது பாலப்பாவின் தம்பியான பாலரஞ்சனின் எண்ணம். அவன், பாலப்பா வீட்டுக்கு வந்தபோது தனது மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான்: “பெரியண்ணே… இது காலத்துக்கு ஒவ்வாத வழக்கம் கண்டியே. நீ இதைச் செய்யாத!” பாலப்பா சற்றும் மனம் சளைக்காமல் உடனடியாகவே பாலரஞ்சனுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தார். “மடக் கதை கதைக்காத… வெளிநாட்டுக்கு வந்தா வெள்ளைக்காரனுக்கு நடிக்க ஏலுமே? எங்கிட கலாச்சாரத்தப் பண்பாட விட்டுக் கொடுக்க ஏலுமே… இஞ்ச எல்லாரும் தானே சடங்கு செய்யினம்.” “இது சீரழிவுக் கலாச்சாரம் கண்டியே… ஊருக்கெல்லாம் சொல்லி பெரிய எடுப்பில சாமத்தியச் சடங்கு எதுக்கு நடத்துறது சொல்லு பார்ப்பம்?” “என்னத்துக்கோ? எங்கிட பிள்ளை பெரிய பிள்ளையான சந்தோசத்தை நாலு இனசனத்தைக் கூப்பிட்டுக் கொண்டாடடத்தான்…” “இல்லவேயில்லை… கலியாணத்துக்கு ரெடியா எங்கிட வீட்டில ஒரு பொம்புள இருக்கெண்டு ஊருக்குப் பறைதட்டிச் சொல்லத்தான் இந்தச் சடங்கு வந்தது.” “இஞ்சே… நாலு பேப்பர் புத்தகத்த அரைகுறையாப் படிச்சுப் போட்டு லூசு மாதிரிக் கதைக்காத ரஞ்சன். எங்கிட கலாச்சாரத்தில ஒவ்வொண்டுக்கும் அர்த்தமிருக்கு…” “இது எங்கிட கலாச்சாரமே இல்ல… இது தேவதாசிக் கலாச்சாரம் கண்டியே… எங்களட்ட ஒரு பொம்பிள தொழிலுக்கு ரெடியா நிக்கிறாள் எண்டு… உன்னட்ட எல்லாத்தையும் உடைச்சுச் சொல்லோணும் பெரியண்ணே…” “பொத்தடா வாயை… உனக்கு விருப்பமில்லாட்டி நீ வர வேணாம்… முறை மயிரொண்டும் செய்ய வேணாம்… நான் யானையில என்ர மகளை ஊர்வலம் கொண்டு போறனா இல்லையா எண்டு இருந்து பாரு!” உரத்த சத்தத்தைக் கேட்டு, சமையலறைக்குள்ளிருந்து மிதுனாவின் தாயார் இந்திரா எட்டிப் பார்த்தார். “இஞ்சேரும் இந்திரா இதைக் கேட்டீரே… சாமத்திய வீடு செய்ய வேணாமெண்டு இந்த விடுபேயன் சொல்லுறான்… ஸெ பா விறே பித்தான்..” “பெரியண்ணே! முதலில பிரஞ்சப் பிழையாக் கதைக்கிறத நிப்பாட்டு.” மிதுனாவின் தாயார் சொன்னார்: “இருக்கிறது ஒரு பிள்ளை. அதுக்குச் சடங்கு செய்ய வேணாமே… சனம் என்ன சொல்லும்! ஊரில இருக்கிற உங்கிட அம்மா அப்பா ஒத்துக்கொள்ளுவினமே? நாங்கள் பிரான்சுக்கு வந்து இருபது வருசத்தில் எத்தின கொண்டாட்டங்களுக்குப் போய்க் காசு போட்டிருப்பம்… எப்படியும் ஒரு லட்சம் ஈரோவாவது இருக்கும். திருப்பி வாங்கத்தானே வேணும்… எங்கிட இவர் வீடு வாங்கி வித்த தமிழ்ச்சனமே அய்நூறு இருக்கும். அவயளும் வருவினம்…” பாலரஞ்சன் மெல்லிய சிரிப்போடு கேட்டான்: “ஏன் அண்ணி உங்களிட்ட இருக்கிற காசு காணாதே?” எதுவும் பேசாமல் இந்திரா மாடிக்குச் சென்றார். ஒவ்வொரு படியிலும் ஏற அவருக்குப் பாலரஞ்சன் மீது கொதிப்பும் படிப்படியாக ஏறிக்கொண்டே வந்தது. ‘எல்லாம் இவர் குடுக்கிற இடம்’ என்று நினைத்துக்கொண்டார். ‘நாங்கள் கயிட்டப்பட்டு உண்ணாமத் தின்னாம, சுடுதண்ணீ பாவிக்காம குளிர் தண்ணியில தோய்ஞ்சு முழுகி ஒவ்வொரு சென்ரிமாச் சேர்த்துப் பெருக்கின காசு இவற்றை கண்ண உறுத்துதாமோ? சோம்பேறி நாய்… இதெல்லாம் புதுசாப் பெந்தக்கோஸ்தில சேர்ந்ததால கதைக்கிற கதை… அதுகள் தான் உதெல்லாம் செய்யாம புரியன் உயிரோட இருக்கேக்கையே வெள்ளைச் சீலை கட்டுறதுகள்’ என்று மனதிற்குள் கோபமும் கொந்தளிப்புமாகப் போய், மிதுனாவின் அறைக்குள் நுழைந்தார். படித்துக்கொண்டிருந்த மிதுனா என்ன என்பது போலப் பார்க்க “உன்ர சித்தப்பருக்கு உனக்குச் சாமத்தியச் சடங்கு செய்யிறது பிடிக்கேல்லையாம். சடங்கில உனக்கு ஏதாவது சங்கிலி காப்புப் போட்டு முறை செய்யோணுமே… அதுதான் அந்தக் கசவாரம் தேவையில்லாக் கதை கதைக்கிது.” இதைக் கேட்டதும் மிதுனாவுக்குப் பெரும் கவலை பிடித்துக்கொண்டது. வரப் போகும் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக அவள் ஆவலுடனும், மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் பாரிஸில் நிகழ்ந்த எத்தனையோ மஞ்சள் நீராட்டு விழாக்களுக்குப் பெற்றோருடன் போயிருக்கிறாள். விழாவின் நாயகியான பெண்ணை எவ்வளவு சோபனமாக அலங்கரித்திருப்பார்கள். அந்த நாளின் உச்ச நட்சத்திரம் அவள்தானே! தேவதைக் கதைகளில் நிகழ்வதுபோல எவ்வளவு அற்புதப் பரிசுகள் அவளுக்குக் கிடைக்கும். அவளது தோழிகள் சூழ்ந்து மலர்களைத் தூவ நடுவில் ராஜகுமாரி போலல்லவா அவள் அமர்ந்திருப்பாள். எத்தனை எத்தனை புகைப்படங்கள்! மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோப் பிரதி ஒரு பொலிவூட் படம் போல எவ்வளவு குதூகலமாகயிருக்கும்! கோடை நெருங்கிக்கொண்டிருந்த போது, மிதுனாவின் பெற்றோர் வர்ணகலா டீச்சர் வீட்டுக்குப் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, வெற்றிலை, பழங்கள் சகிதமாகச் சென்று, மஞ்சள் நீராட்டு விழாவுக்குப் பத்திரிகை வைத்தார்கள். மிதுனாவின் அம்மா “டீச்சர் நீங்கள் வேளைக்கே வந்து உங்கிட வீட்டுக் கொண்டாட்டமா நினைச்சு முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்யோணும். மிதுனா உங்கிட பிள்ளை” என்றார். 3 பாரிஸ் நகரத்தின் ஆகாயம் நீல வெளிச்சமாக மின்னிக்கொண்டிருந்தது. சரியாகப் பகல் பன்னிரண்டு மணிக்கு, அந்த வெளிச்சத்தைப் பிளந்துகொண்டு, ஒரு ஹெலிகொப்டர் கீழே இறங்கத் தொடங்கியது. மைதானத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். வெள்ளைக்கார விமானியால் மிக இலாவகமாக ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட போது, நாதஸ்வரங்களும் தவில்களும் மங்கல இசையை முழங்கத் தொடங்கின. ஹெலிகொப்டரின் கதவு திறக்கப்பட்டபோது, பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும், தோளில் தங்கச் சரிகை அங்கவஸ்திரமும், கண்களிலே கறுப்புக் கண்ணாடியுமாகக் கைகளைத் தலைக்கு மேலே தூக்கிச் சனங்களைப் பார்த்துக் கும்பிட்டவாறு, கறுப்பு எம்.ஜி.ஆர். போலவே பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து கீழே இறங்கினார். அவருக்குப் பின்னால் கும்பிட்டவாறே, திருவிழா காலத்து முத்து மாரியம்மன் போன்று மிதுனாவின் தாயார் இறங்கினார். அவர்களின் பின்னே தேவதையாக அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வர்ணகலா இறங்கினார். மைதானத்தில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பலகீனமான யானை இலண்டனிலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையின் முதுகில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக் கம்பீரமாக இருந்த அம்பாரி மாடத்துள் மிதுனாவை உட்கார வைத்து, விழா மண்டபம் வரை அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். யானையிலிருந்து இறங்கியதும், எட்டுப் பேர்கள் சுமந்த அலங்காரப் பல்லக்கில் மிதுனாவை உட்காரவைத்து மேடைவரை தூக்கிச் சென்றார்கள். பல்லக்கின் இருபுறத்திலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் இருபது சிறுமிகள் மிதுனா மீது மலர்மாரி பொழிந்தவாறே நடந்தார்கள். மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று சூளுரைத்திருந்த பாலரஞ்சன் மண்டபத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மதுபானச்சாலையில் நின்று விஸ்கி அருந்தியவாறே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். மதுச்சாலையை மெல்ல மெல்ல ஆண்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. பெண்கள் வட்டமான மேசைகளைச் சூழ உட்கார்ந்துகொண்டார்கள். ஒவ்வொரு மேசையும் வெண்ணிறப் பட்டுத் துணி விரிக்கப்பட்டு, சுற்றிவர எட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலிகளும் வெண்ணிற மஸ்லின் துணிகளால் போர்த்தப்பட்டிருந்தன. மேசைகளை நிரப்பி வகைவகையான சிற்றுண்டிகளும், குளிர்பானப் போத்தல்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தங்கத்தாலும் பட்டாலும் போர்த்தப்பட்டிருந்த மக்கள் கூட்டம் நாசூக்காக சிற்றுண்டிகளைக் கொறித்துக்கொண்டிருந்தது. விழாவுக்கு நாயகி மிதுனா என்றால், புகைப்படக்காரரும் வீடியோ படப்பிடிப்பாளரும்தான் எப்போதும் போலவே இந்த விழாவிலும் நாயகர்கள். கல்யாணங்களின் போது தாலி கட்டுவது சரியாக வீடியோவில் பதிவாகவிட்டால், கழுத்தில் ஏறிய தாலியைக் கழற்றவைத்து மறுபடியும் கட்டவைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இந்த ஒளி ஓவியர்கள். அதிலொரு ஒளி ஓவியர் பறக்கும் குட்டிக் கமெரா ஒன்றை மண்டபத்தில் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் வேகமாக இறக்கியும், சட்டெனத் திசைமாற்றி ஏற்றியும் மொத்த வித்தையையும் காட்டிக்கொண்டிருந்தார். மண்டபத்தின் எல்லாப்புறங்களிலும் ஒலியைப் பெருக்கும் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால், பெரும் சத்தத்தால் மண்டபமே அதிர்ந்துகொண்டிருந்தது. இசைத்தட்டைச் சுழலவிடும் நிபுணரை ஜெர்மனியிலிருந்து அழைத்திருந்தார்கள். அந்தப் பையன் தன்னுடைய சேவல் கொண்டையைச் சிலுப்பிச் சன்னதம் ஆடியவாறே, ஒரு பாட்டைக் கூட முழுதாகக் கேட்க முடியாமல் பாடல்களைக் கொத்துரொட்டி போட்டுக்கொண்டிருந்தான். உணவு வகைகளில் இலங்கை, இந்திய, சீன வகைகளோடு கொஞ்சம் பிரஞ்சு அயிட்டங்களும் இருந்தன. பாலப்பாவுடைய ‘வீடு விற்பனை முகவர்’ நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு வெள்ளையர்களும் விழாவுக்கு வந்திருந்து வாய்களை அகலப் பிளந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மண்டபத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னும் தமிழ்க் கலாசாரம் இருக்கிறதென்றே அவர்கள் நம்பியிருக்கக்கூடும். “பிரஞ்சுக்காரன் கலாச்சாரம் எண்டு எதைச் சொன்னாலும் த்ரில்லாகி நம்புவான்” என்று பாலரஞ்சன் அடிக்கடி சொல்வதுண்டு. மேடையில் வைத்து மிதுனாவுக்கு பாற்சோறு, அரிசிமாவுக் களி, பிட்டு, பால்ரொட்டி ஆகியவை வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டுகளால் ஆரத்தி சுற்றினார்கள். வர்ணகலாவும் இந்திராவின் தங்கையான சித்ராவுமே அவற்றைச் செய்தார்கள். ஆரத்தி சுற்றி முடித்ததும், ஏதோ மலையையே தூக்கிச் சுற்றிய பாவனையோடு சித்ரா முகத்தைச் சுழித்தவாறே, ஒற்றைக் கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார். இவை எல்லாவற்றையும் மேடையில் நின்று கண்களில் நீர் கண்ணாடித் திரையிடப் பெருமிதத்துடன் பாலப்பாவும் இந்திராவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாலரஞ்சன் தள்ளாடியபடியே திடீரென மேடையிலேறி, மிதுனாவைக் கன்னங்களில் முத்தமிட்டுப் பத்துப் பவுண் சங்கிலியை அவளது கழுத்தில் அணிவித்துச் சிற்றப்பன் கடமையை முடித்தான். மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊஞ்சலில் மிதுனாவை உட்கார வைத்துத் தாயும் தகப்பனுமாக ஆட்டினார்கள். யாழ்ப்பாணத்தில் ஊஞ்சல் ஆடியதற்குப் பிறகு, இப்போதுதான் மிதுனா ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறாள். அங்கே அப்போது ஒலித்த பாடலுக்கு அவளையறியாமலேயே அவளது கால் விரல்கள் அசைந்து தாளம் போட்டன. விழாவில் பாடுவதற்கு ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஆணும் பெண்ணுமாக இருவர் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் பொருத்தமானதொரு பாடலை அப்போது பாடினார்கள். கொலுசுங்க சத்தமிட கல் உடைய மண் உடைய குதியாட்டம் போட்ட புள்ள குமரி புள்ள ஆனாளே… அவர்கள் அருமையாக இசைக்க, பாலப்பாவும் சளைத்தவரில்லையே… அவர் ஒரு கையால் ஊஞ்சலை ஆட்டியாவாறே அந்தப் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டே மற்றக் கையால் பலவித அபிநயங்களைச் செய்தார். இந்திராதான் வெட்கப்பட்டுக்கொண்டே நடனத்திலிருந்து ஒதுங்க, வர்ணகலா டீச்சர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் பாலப்பாவுடன் சேர்ந்து நளினமாகச் சில நடன அசைவுகளைப் போட்டார். காலையில் மிதுனாவைப் படுக்கையிலிருந்து எழுப்பி, அவளது கைகளில் பாக்குகளும், ஈரோ நாணயங்களும் வைத்துச் சுருட்டப்பட்ட வெற்றிலைச் சுருளைக் கொடுத்துத் தலையில் பால் வார்ப்பதிலிருந்து மிதுனாவை விட்டு அசையாமல் கூடவேயிருந்தவர்கள் வர்ணகலா டீச்சரும், புகைப்படக்காரரும், வீடியோக்காரருமே. வர்ணகலா தன்னுடைய வீட்டு விஷேசம் போலவே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு ஓடியாடி வேலை செய்தார். நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்த சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு வர்ணகலா மண்டபத்தில் எந்த இடத்தில் நின்றாலும், அவர் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டேயிருந்தார். மஞ்சள் நீராட்டு விழா நிறைவடையும் வரை வர்ணகலா சாப்பிடக் கூடயில்லை. பிற்பகலில் விழா நிறைவுற்று விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பிய பின்பாக, தனியாக உட்கார்ந்து நான்கு சோற்று உருண்டையை உருட்டி வாயில் திணித்துக்கொண்டிருந்த வர்ணகலாவைப் பார்த்தபோது, பாலப்பாவுக்கு கண்கள் கலங்கியதற்கு நன்றியுணர்ச்சி அடிப்படைக் காரணமாகயிருந்தாலும், கொஞ்சமாக அருந்தியிருந்த விஸ்கியும் ஒரு துணைக் காரணம் என்றே சொல்லலாம். அன்று மிதுனா தேவதை! அவளது சிறகுகள் வர்ணகலா! 4 மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தாலும், மிதுனாவின் தாய்மாமனும், இந்திராவின் தம்பியுமாகிய சுரேந்திரன் விழாவுக்கு வராதது ஒரு குறையாகவேயிருந்தது. விழாவுக்கு வரமுடியாதவாறு வேலைப்பளுக்களில் சிக்கியிருந்த சுரேந்திரன், கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவுஸ்ரேலியாவிலிருந்து குடும்பத்தோடு மருகளுக்கு முறை செய்ய வந்திருந்தான். சுரேந்திரனின் மனைவி நந்தினி பிரான்ஸ் குளிரைப் பார்த்து அரண்டு போய்விட்டாள். அன்றைக்கு காலநிலை மைனஸ் ஆறைத் தொட்டிருந்தது. மிதுனாவின் வீட்டைச் சுற்றி ஓரடி உயரத்திற்குப் பனி சொரிந்து கிடந்தது. வீட்டின் பெரிய வரவேற்பறையிலிருந்த கணப்பில் விறகுகளைச் செருகி பாலப்பா எரியவிட்டார். மதிய உணவுக்குப் பின்னாக, எல்லோரும் உட்கார்ந்து மிகப் பெரிய தொலைக்காட்சித் திரையில் மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மிதுனா இந்த வீடியோவைப் பத்தோ பன்னிரண்டாவதோ தடவையாகப் பார்க்கிறாள். அவளுக்கு இது ஒருபோதுமே சலிப்பை ஏற்படுத்தியதில்லை. பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து இறங்கும் காட்சி ஸ்லோமோஷனில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் பாலப்பாவே கொஞ்சம் நாணமுறுவார். சுரேந்திரன் பெரிதாகக் கெக்கடமிட்டுச் சிரித்து “அத்தார் அந்தமாதிரி க்ளாஸ்” என்றான். இப்படிச் சிரிப்பும் கனைப்புமாக அந்த வரவேற்பு அறை அமளிப்பட்டுக்கொண்டிருக்க, சுரேந்திரனின் மனைவி நந்தினி மட்டும் அமைதியாக வீடியோவைக் கவனித்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டாள்: “நீலச் சாரியோட ஆரத்தி எடுக்கிற பொம்பிள ஆர் ?” “அது மிதுனாவின்ர தமிழ் டீச்சர்… நல்ல குணமான பிள்ள. சாமத்திய வீட்டில அரைவாசி வேலை அதுதான் செய்தது” என்றார் இந்திரா. “வர்ணகலாவே பேர்?” என்று கேட்டாள் நந்தினி. “ஓமோம்… வர்ணகலா டீச்சரை உமக்குத் தெரியுமே நந்தினி?” “தெரியாமலென்ன! இவள் என்ர ஊர்தான். முசலிக்குளம் கணவதி நளவன்ர மகள்…” என்று சொன்ன நந்தினி மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டு பாலப்பாவைப் பார்த்து “என்ன அத்தார் நீங்கள்? வெளிநாட்டுக்கு வந்தா இதெல்லாம் பார்க்கேலாது தான்… ஆனால், அதுக்காக உள்வீட்டுக்கேயே அடுக்கிறது? அங்கபாரு எங்கிட பிள்ளைய அந்த நளத்தி ஆலாத்தி ஆலாத்தி எடுக்கிறாள்…” என்று சொன்ன நந்தினியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பாலப்பாவும் இந்திராவும் ஏங்கிப் போய் அரைச் சவமாகிவிட்டார்கள். பாலப்பா மெதுவாக எழுந்து போய் ஓடிக்கொண்டிருந்த வீடியோவை நிறுத்திவிட்டு, கம்மிய குரலில் நந்தினியிடம் கேட்டார்: “நீ சரியாத்தான் சொல்லுறியோ நந்தினி! அவளைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே…” “இதென்ன அத்தார்… எங்கிட அடிமை குடிமையள எனக்குத் தெரியாதே? எங்கிட பின்வளவுப் பனையெல்லாம் கணவதி தானே இப்பவும் சீவிறவன்…போன வருச ஹொலிடேக்கு ஊருக்குப் போகக்கயும் அவன வளவுக்குள்ள கண்டனான்… மோள்காரி பிரான்ஸில இருக்கிறாள் எண்டும், தன்னை மரம் ஏறுறத நிப்பாட்டச் சொல்லியிருக்கிறாள் எண்டும் பெரிய நடப்பா என்னட்டச் சொன்னானே… மரம் ஏறுறதுகள நீங்கள் இப்ப மேடையில எல்லோ ஏத்தியிருக்கிறீயள். ஆர் என்னெண்டு விசாரிச்சு நடக்கிறதில்லேயே அத்தார்?” பாலப்பா கொஞ்ச நேரம் பல்லை நெறுமிக்கொண்டு, கையைக் கட்டியவாறே உட்கார்ந்திருந்தார். பிறகு அவக்கென எழுந்து போய் சி.டி. பிளேயரிலிருந்த குறுந்தகட்டை வெளியே வரச் செய்து, தனது பெருவிரலாலும் சுண்டுவிரலாலும் எலியின் வாலைப் பிடிப்பது போல குறுந்தகட்டின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு கணப்பை நோக்கி நடந்து சென்று, முளாசி எரிந்துகொண்டிருந்த நெருப்பினுள் அதனைச் சுழற்றி வீசினார். நடப்பது எல்லாவற்றையும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் பார்த்துக்கொண்டிருந்த மிதுனாவுக்கு குறுந்தகடு எரிக்கப்பட்டது பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. மஞ்சள் நீராட்டு விழாவில் ஒரு தேவதையைப் போல இருந்த அவளையே நெருப்பில் தூக்கிப் போட்டது போலத்தான் அவள் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் எழுந்து சென்று, வெளியே பனி நடுவேயிருந்த மர இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். சொரிந்துகொண்டிருந்த வெண்பனி அவளை மூடிக்கொண்டிருந்தது. இதற்குப் பின்பு தமிழ்ச்சோலைப் பள்ளிக்குச் செல்லாமல் மிதுனாவைப் பாலப்பா தடுத்துவிட்டார். சில மாதங்களின் பின்பு, அவர்களது குடும்பம் இன்னொரு புறநகருக்குக் குடிபெயர்ந்தது. மிதுனாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவை மறந்துவிட்டாள். வர்ணகலாவும் மிதுனாவை மறந்திருப்பார். 5 வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி முகம் முற்றாகச் சிதைத்துக் கொல்லப்பட்டதற்குச் சில வாரங்கள் கழித்து, மிதுனா பாரிஸ் புறநகரிலிருந்த பெற்றோரின் வீட்டுக்குச் சென்றாள். இரவுணவு மேசையில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வர்ணகலா டீச்சர் குறித்துப் பேச்சு வந்தது. “அண்டைக்கு போனில ஒரு நியூஸ் சொன்னனானெல்லோ… அது தமிழ்ச்சோலை டீச்சரே அப்பா?” “தெரியேல்லையே பிள்ள. நாங்கள் இஞ்சால வீடு வாங்கி வந்தாப் பிறகு நான் அந்தப் பக்கம் போகவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, பாலப்பா சாப்பாட்டில் கவனம் செலுத்தினார். “நீ சாப்பிடு பிள்ள… ஆராராக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ அதுதானே நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே, தட்டில் இடியப்பங்களை வைத்து மேலாக இறால் சொதியை ஊற்றினார் இந்திரா. நீண்ட நாட்களுக்குப் பின்பாகத் தமிழ்ச் சாப்பாடு சாப்பிட்டதில் மிதுனாவுக்குக் கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது. தந்தையையும் தாயையும் முத்தமிட்டுவிட்டுத் தனது அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டு, அலைபேசியின் தொடுதிரையை உருட்டத் தொடங்கினாள். கட்டிலுக்கு எதிரே சுவரில், மஞ்சள் நீராட்டு விழாவில் எடுக்கப்பட்டிருந்த மிதுனாவின் மார்பளவு ஒளிப்படம் மூன்றடிக்கு இரண்டடி அளவில் தொங்கிக்கொண்டிருந்தது. தற்செயலாக அந்தப் படத்தின் மீது மிதுனாவின் பார்வை படவும், அவள் கட்டிலிலிருந்து எழுந்து, அந்தப் படத்தை நெருங்கிச் சென்றாள். அப்படத்தில் தேவதை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் இடது தோளைச் சில விரல்கள் பற்றியிருந்தன. அந்த விரல்கள் வர்ணகலாவின் விரல்களாக இருக்குமோ என்று திடீரென அவளுக்குத் தோன்றவே, அவள் கடகடவென மாடிப்படிகளில் இறங்கிக் கீழே சென்றாள். “அம்மா… என்னைக் குழந்தைப் பிள்ளையில எடுத்த போட்டோ அல்பங்கள் எங்கயிருக்கு?” “என்ன பிள்ள திடீரெண்டு அதைத் தேடுறாய்?” “சின்னப்பிள்ளையில எடுத்த ஒரு நல்ல போட்டோ தேவைப்படுது… யூனிவர்ஸிட்டி புத்தகமொண்டில போடுறதுக்கு” “ஸ்டோர் ரூமுக்குள்ள ஒரு சிவப்பு சூட்கேஸ் இருக்கும் பார். அதுக்குள்ளதான் பழைய அல்பங்கள் கிடக்கு” என்றார் இந்திரா. ஸ்டோர் ரூமுக்குள் சென்ற மிதுனா அங்கே தாறுமாறாகத் தூசி தும்பு படிந்துகிடந்த பலசரக்குகளிடையே அந்தச் சிவப்பு பெட்டியைக் கண்டுபிடித்து, அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று, படுக்கையில் வைத்துப் பெட்டியைத் திறந்தாள். அதற்குள் பாலப்பா – இந்திரா கல்யாண அல்பம் முதற்கொண்டு பத்துப் பன்னிரெண்டு அல்பங்கள் கிடந்தன. அவற்றுக்கு நடுவேயிருந்த தன்னுடைய மஞ்சள் நீராட்டு விழா அல்பத்தை மிதுனா கண்டுபிடித்து, கொஞ்சம் பதற்றத்துடனேயே பக்கங்களைப் புரட்டினாள். பெரியளவிலான அந்த அல்பத்தில் பக்கத்திற்கு ஆறு ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லாப் படங்களிலும் அவள் இருந்தாள். சில படங்களில் அவளோடு அவளது பெற்றோர் இருந்தனர். வேறு பலரும் இருந்தனர். ஆனால், அந்தப் படங்களில் வர்ணகலா டீச்சர் இல்லை. அவள் சோர்வுடன் அந்தப் பெட்டியைக் கிளறியபோது, உள்ளேயொரு தடித்த கடிதவுறையைக் கண்டாள். அதைத் திறந்தபோது, அதற்குள்ளிருந்த பல ஒளிப்படங்களுக்குள், மஞ்சள் நீராட்டு விழாவில் மிதுனாவுக்கு ஆரத்தி சுற்றும்போது எடுத்த படம் ஒன்றுமிருந்தது. மிதுனாவுக்கு வலது புறத்தில் ஒளிப்பான சருமத்தோடு, நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் மின்ன வர்ணகலா டீச்சர் ஆரத்தி சுற்றிக்கொண்டிருந்தார். அவரது முகமிருந்த பகுதி மட்டும் அந்தப் படத்தில் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்டு, கழுத்துக்கு மேலே மொட்டையாக இருந்தது. இதற்கு மேலே மிதுனா பாலப்பா சொல்லிய கதையின் போக்கையும் முடிவையும் தேர்ந்த வாசகரான நீங்கள் நிச்சயமாகவே ஊகித்திருப்பீர்கள் என்பதால், நான் இந்த இடத்தில் நிறுத்திக்கொள்கிறேன். மெய்யெழுத்து 1 2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது பதினாறு. அங்கேதான், பார்த்திபன் என்ற பெயரோடு எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த திலீபனை அவர் முதன்முதலாகச் சந்தித்தார். கல்லூரியில் நடக்கவிருக்கும் விஞ்ஞானக் கண்காட்சியில், ராகுலனின் வகுப்பு மாணவர்கள் ஏதாவது ஒரு புதுமையை வைக்க வேண்டும் என்று விஞ்ஞான ஆசிரியர் வரதராஜ சர்மா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இவர்களாலோ குறுகிய காலத்திற்குள் ஏதொன்றையும் உருவாக்க முடியாமலிருந்தது. வெறுத்துப் போன ஆசிரியர் கடுங்கோபத்துடன் ராகுலனைப் பார்த்து “எயிட் ஏ வகுப்பிலயிருக்கிற பார்த்திபன் எண்ட ஸ்டுடண்டைக் கூட்டிக்கொண்டு வாரும். அப்பயாவது சோத்து மாடான உங்களுக்கெல்லாம் புத்தி வருதா எண்டு பார்ப்பம்” எனச் சொல்லி, திலீபனை அழைத்துவருமாறு ராகுலனை அனுப்பிவிட்டார். சோற்று மாடு என ஆசிரியர் தன்னைத்தான் குத்திக்காட்டியிருக்க வேண்டும் என்று நினைத்து ராகுலன் தனக்குள்ளே துக்கித்தவாறேதான் திலீபனைத் தேடிப் போனார். ‘ஏன் இந்தப் பொடியன் சோறு தின்னமாட்டானோ?’ என்று அதுவரை பார்த்திராத திலீபனை மனதிற்குள் கரித்துக்கொட்டியவாறு தான் போனார். ராகுலன் கொழும்பில் பாற்கட்டிகளும், நெய்ச்சோறுமாகச் சாப்பிட்டுச் சொகுசாக வளர்ந்த பிள்ளை. அதனால் மினுமினுப்பாகக் கொழுத்த கன்றுக்குட்டி போலிருப்பார். சற்றுக் குள்ளமானவர் என்பதால் அவருடைய குண்டுத் தோற்றம் இன்னும் தூக்கலாகவே தெரியும். இந்த உடல்வாகு அவருடன் எப்போதுமிருந்தது. ராகுலன் தேடிச் சென்ற அந்த மாணவர் மிக ஒல்லியாக, பொது நிறத்திலிருந்தார். அவருடைய முன்வாய்ப் பற்கள் சற்றுத் துருத்திக்கொண்டிருந்தன. அடர்த்தியான தலைமுடி கலைந்து விழுந்திருந்த நெற்றிக்குக் கீழே மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் சற்றே கிறங்கியிருந்தன. இந்தக் கிறக்கம் கடைசிவரை திலீபனோடு இருந்ததை, ராகுலன் எப்போதுமே ஞாபகம் கொள்வார். திலீபனை அழைத்து வரும்போது “நீர் எங்கயிருந்து வாறனீர்?” என்று ராகுலன் கேட்க “ஊரெழு” என மிக மென்மையான குரலில் திலீபன் பதில் சொன்னார். “நீர் படிப்பில பெரிய கெட்டிக்காரனோ?” என்று ராகுலன் எகத்தாளமாகக் கேட்டபோது “ஓம்” என்று ஒற்றை வார்த்தையில் திலீபன் அதே மென்மையான குரலில் பதில் சொன்னார். ஒருவிதமான விலகியிருக்கும் சுபாவம் அந்த மாணவனிடம் ஒட்டியிருப்பதை ராகுலன் கவனித்தார். வகுப்பறையில் ஆசிரியர் வரதராஜ சர்மா முன்பு நின்றபோதும், அதே விலகல் தன்மையோடுதான் திலீபன் நிலைகொள்ளாமல் கால்மாறி கால்மாறி நின்றார். இப்படி ஏதாவது சேட்டைகளைச் செய்தால் “என்ன உனக்குப் பிரச்சினை… மாதவிலக்கே? நேரா நிமிந்து நிக்கேலாதே?” என வெடுக்கெனக் கேட்பவர் வரதராஜ சர்மா. ஆனால், திலீபன் மிகப் புத்திசாலியான மாணவன் என்று அவர் கருதியிருந்ததால், திலீபன் மீது அவருக்குத் தனி அன்புண்டு. திலீபனின் தந்தையாரான இராசையா வாத்தியாரோடு ஒரு காலத்தில் பணியாற்றியதால் திலீபனின் குடும்பச் சூழலையும் அவர் அறிவார். திலீபன் பத்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்தவர் என்பதால், திலீபன் மீது கூடுதல் பரிவும் வரதராஜ சர்மாவுக்கு இருந்தது. திலீபனின் விலகியிருக்கும் சுபாவத்திற்குத் தாயாரின் இழப்புக்கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனப் பிற்காலத்தில் ராகுலன் யோசித்ததுண்டு. “பார்த்திபன்… வாற எக்ஸிபிசனில புதுமையா நாங்கள் என்ன செய்யலாம் எண்டு நீ இந்த பத்தாம் வகுப்பு எருமைகளுக்குச் சொல்லிக்குடு!” எனச் சொல்லிவிட்டு, ஆசிரியர் வெளியே போய்விட்டார். "ஒரு மயிலின்ர எலும்புக்கூட்டை நாங்கள் விளக்கங்களுடன் கண்காட்சியில வைக்கலாம்’ என்று திலீபன் மாணவர்களுக்குச் சொன்னார். அதுவொரு புதுமையான யோசனையாகவே மற்றைய மாணவர்களுக்கும் தெரிந்தது. யாழ்ப்பாணத்தாருக்கு மயில் பறவை அதிசயம்தான். யாராவது வன்னியிலிருந்து கொண்டுவந்து வளர்த்தால் தான் உண்டு. ஆனாலும், யாழ்ப்பாணத்தின் அனல் பறக்கும் காலநிலையாலோ அல்லது வனச்சூழல் இல்லாததாலோ அந்த மயில்களும் சீக்கிரமே இறந்து போகும். “மயில் எலும்புக் கூட்டுக்கு எங்க போறது?” என்று ராகுலன் கேட்டார். “அது ஒரு இடத்தில இருக்கு… ஆராவது ஒராள் மட்டும் என்னோட வந்தால் போதும். எடுத்துத் தருவன்” என்றார் திலீபன். மாலையில் பாடசாலை விட்டதும், ராகுலனே திலீபனோடு சென்று, அந்த மயில் எலும்புக்கூடைப் பெற்றுவருவதென்று தீர்மானம் ஆயிற்று. பாடசாலை விட்டு ராகுலன் வெளியே வந்தபோது, சொன்னது போலவே திலீபன் வெளிவாசலில் நின்றிருந்தார். “போகலாம்” என்று ராகுலன் சொன்ன போது “இப்ப போய் சாமானை எடுக்க ஏலாது, நீர் இரவு பத்து மணிக்கு ஊரெழு கணக்கன் சந்திக்கு வாரும்! நான் அங்க நிப்பன்” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திராமல், திலீபன் வெளியேறிக்கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்து மறைந்துவிட்டார். ராகுலன் குழம்பிப் போனார். முதலில் அவருக்கு ‘ஊரெழு கணக்கன் சந்தி’ எங்கேயிருக்கிறது என்பதே சரியாகத் தெரியாது. அதுவும் இரவு பத்துமணிக்கு அங்கே போவதென்றால் எப்படிப் போவது? போகாவிட்டாலோ வரதராஜா சர்மாவைச் சமாளிக்க முடியாது. தனது வீடு இருக்கும் உரும்பிராய் தெற்குக்கு, பக்கத்துக் கிராமமே ஊரெழு என்பதால், குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று மனதைத் தேற்றியவாறே ராகுலன் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போனார். இரவு ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, ஊரெழுவை நோக்கி நடந்தார். அன்று நிலவு வெளிச்சம் அவருக்கு வழி காட்டிற்று. வழியில் தென்பட்ட ஒரேயொரு சைக்கிள்காரரிடம் விசாரித்ததில், அதே தெருவால் நேராக நடந்து போனாலே ஊரெழு கணக்கன் சந்தி வந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்டார். பத்து மணிக்கு முன்பே குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டவர் அங்கே திலீபனுக்காகக் காத்திருந்தார். இரவு பத்து மணிக்கு அப்படியென்ன மயிலைப் பிடிக்கிற மயிர் வேலை என்ற குழப்பம் அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது. சரியாகப் பத்து மணிக்கு ராகுலனுக்குப் பின்னால் திலீபன் தோன்றினார். “வாரும்” என்று முணுமுணுத்துவிட்டு திலீபன் முன்னே விரைந்து நடக்க, ராகுலன் செம்மறி ஆடு போலப் பின்தொடர்ந்தார். அய்ந்து நிமிட நடைதூரத்தில், வண்ண மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஊரெழு முருகன் கோயில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. கோயில் புறமதிலைச் சுற்றிப் பின்புறமாக திலீபன் ராகுலனை அழைத்துப் போனார். அங்கே முழத்துக்கொரு உயரிப் பனையாக அடர்ந்த பனங்கூடல் இருந்தது. ஓரிடத்தில் நின்று, வடலி மறைவிலிருந்து ஆறு மின்கலங்கள் போடக்கூடிய டோர்ச் லைட்டையும், ஒரு மண்வெட்டியையும், ஒரு பெரிய சாக்குப் பையையும் திலீபன் எடுத்தார். “இது ஆற்ற சாமான்கள்?” என்று ராகுலன் கொஞ்சம் திகிலுடன்தான் கேட்டார். “நான் பொழுதுபட முன்னமே கொண்டுவந்து வைச்சிட்டன்” என்று சொன்னவாறே திலீபன் இன்னும் சற்றுத் தூரம் பனங்கூடலுக்குள் நடந்து சென்று, ஓரிடத்தில் நின்றவாறே மெதுவாகச் சொன்னார்: “கோயில்ல நிண்ட மயில்தான். இஞ்சதான் தாட்டிருக்கு!” “நாமள் தோண்டினால் பிரச்சினை ஏதும் வராதே?” “தோண்டின தடயமே இல்லாமல் செய்துபோட்டுப் போகவேணும் ஐஸே!” ராகுலனின் கையில் டோர்ச் லைட்டைக் கொடுத்துவிட்டு, திலீபன் மண்வெட்டியால் மெதுவாகச் சாறிச் சாறி மணலைக் கவனமாக விலக்கிக்கொண்டே போனார். ராகுலனுக்கு உண்மையிலேயே நடுக்கமாக இருந்தது. அவரது கையிலிருந்த விளக்கு வெளிச்சம் அங்குமிங்குமாகத் தளம்பியது. “நேராப் பிடியும் ஐஸே…” என்று திலீபன் எரிச்சலுடன் சொன்னார். மதியம் பாடசாலையில் விலகல் சுபாவத்துடன் குரல் எழாமல் பேசிக்கொண்டிருந்த சிறுவன், இப்போது கட்டளை அதிகாரி போல மாறிவிட்டிருந்ததை ராகுலன் வாயைப் பிளந்துகொண்டே கவனித்தார். மயில் எலும்புக்கூடு பெரிய சேதங்களில்லாமல் கிடைத்தது. அதைச் சாக்குப் பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, திலீபன் அந்தக் குழியை இருந்தது போலவே மூடிவிட்டு, அதன் மீது இரண்டு காவோலைகளை இழுத்துப் போட்டார். வந்த திசைக்கு எதிர்த் திசையால் திலீபன் நடக்க, ராகுலன் சாக்குப் பையுடன் பின்னாலேயே போனார். பனங்கூடலால் வெளியேறிதும் எதிர்ப்பட்ட ஊரி ஒழுங்கையின் ஓரமாக ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. “நீர் சைக்கிள எடும்” என்று சொன்னவாறே தீலீபன் சாக்குப் பையை வாங்கிக் கரியரில் கட்டினார். தனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதைச் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டே “நீர் ஓடும்… நான் பெடல் போட்டுத் தருவன்” என்று ராகுலன் சமாளித்தார். “எலும்புக் கூடு எங்கயிருந்தது எண்டு ஆராவது கேட்டால், என்ர வீட்டில இருந்தது எண்டுதான் சொல்லவேணும்…சரியா” என்று கொஞ்சம் கடுமையான தொனியில் திலீபன் சொல்ல “சரி மச்சான்” என்றார் ராகுலன். இப்படித்தான் திலீபனுக்கும் ராகுலனுக்குமான நட்பு ஆரம்பித்தது. அதன் பின்பாக, ராகுலன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிக்கும்வரை ‘லவ்வர்ஸ்’ என்று மாணவர்கள் கேலி செய்யக்கூடியளவுக்கு இருவரும் மயிலும் வேலும் போல ஒட்டிக்கொண்டார்கள். ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனும் அதே மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானார். அந்தச் செய்தியைச் சொல்வதற்காக ராகுலனைத் தேடி உரும்பிராய் வீட்டுக்குச் சென்றிருந்த திலீபன், சில நாட்களுக்குப் பின்பு ராகுலனுக்குச் சொல்லாமலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். 2 1987 -வது வருடம், செப்டம்பர் மாதத்தில்; திலீபன் நீரையும் உணவையும் முற்றாக மறுத்து, நல்லூர் முருகன் கோயிலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இரண்டாவது நாளில், ராகுலன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, மேடையிலிருந்த திலீபனைப் பார்த்துக்கொண்டிருந்தார். உண்மையிலேயே இதுவொரு தேவையில்லாத அரசியல் சாகசம் என்றுதான் ராகுலன் நினைத்தார். இரண்டு, மூன்று நாட்கள் உண்ணாவிரதமிருந்து நாடகமாடிவிட்டு, ஏதாவதொரு சாக்குப்போக்கைச் சொல்லி உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வார்கள் என்றுதான் அவர் நம்பினார். அதற்குக் காரணமுமிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான், இலங்கை அரசுக்குக் கோரிக்கை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதமிருந்து அறப்போராட்டம் நடத்திய மதிவதனி, படிகலிங்கம், வனஜா உள்ளிட்ட ஒன்பது மாணவர்களும் பட்டினி மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்காக புலிகள் வலுகட்டாயமாக துப்பாக்கிமுனையில் அந்த மாணவர்களைக் கடத்திச் சென்றிருந்தார்கள். அந்த நடவடிக்கையை முன்னின்று செய்தவர்களில் திலீபனும் ஒருவர். அவர் அப்போது ஒரு சிறிய ஏரியாவுக்குப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராகயிருந்தார். ராகுலனுக்கோ அரசியலில் துளி ஆர்வமும் கிடையாது. எல்லா ஆயுத இயக்கங்களின் மீதும் அவருக்கு அவநம்பிக்கையே இருந்தது. எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் தீர்வாகாது என்பதுதான் ராகுலனின் எண்ணம். அப்போதெல்லாம் திலீபன் அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வருவார். ராகுலனைக் கண்டால் அவரோடு சேர்ந்து ஒரு தேநீராவது அருந்தாமல் போகமாட்டார். இந்த நல்லூர் உண்ணாவிரதத்தைப் புலிகள் சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் என ராகுலன் நம்புவதற்கு இன்னொரு வலுவான காரணமுமிருந்தது. போர்முனைகளில் படுகாயப்பட்ட திலீபனுக்கு இதுவரை மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த அறுவைச் சிகிச்சையில், திலீபனது குடலில் பதினான்கு அங்குலங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவர் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதமிருப்பது மிக மிக ஆபத்தானது. மேடையில் திலீபனைச் சுற்றி நான்கைந்து புலிகள் இயக்க இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ‘ஆக்களப் பாரு… ஒவ்வொருத்தனும் ஒரு கொட்டுப்பனை போல உருண்டு திரண்டு நிக்கிறான். உவங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே… எப்பிடியும் ஒரு மாசம் தாக்குப் பிடிப்பாங்கள்… அதை விட்டுப்போட்டு எதுக்கு ஒரு ஏலாவாளியான நோயாளியை மேடையில இழுத்துவிட்டிருக்கிறாங்கள்’ என்று மனதிற்குள் ராகுலன் மருகிக்கொண்டிருந்தார். மேடையில் திலீபன் உரையாற்றிக்கொண்டிருந்தார். “நான் இறந்தால் என்னுடைய உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைத்துவிடுமாறு தலைவர் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். எம் மண்ணின் மாணவர்களது கல்விப்புல ஆய்வுக்காக எனது உடல் பயன்பட வேண்டும். நான் மலரப் போகும் தமிழீழத்தை வானத்திலிருந்து பார்ப்பேன்” என்று உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே, திலீபனின் கிறங்கிய கண்கள் மேடையின் கீழே கூட்டத்தில் நின்றிருந்த ராகுலனின் முகத்தைக் கண்டுவிட்டன. பேசி முடித்ததும், மேடையிலிருந்த கட்டிலில் தளர்வாக உட்கார்ந்துகொண்டவர், ராகுலனுக்குச் சைகை செய்து தன்னிடம் வருமாறு அழைத்தார். ராகுலனுக்குக் கொஞ்சம் பதற்றமாகயிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க இப்போது மேடையில் இருப்பவர் இவரோடு இந்துக் கல்லூரியில் படித்த விலகல் சுபாவியான பார்த்திபன் இல்லை. நேற்றைய தினம் சர்வதேசப் பத்திரிகைகளில் நாயகனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் புலிகளின் அரசியல்துறைத் தலைவரே அங்கிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் கவனம் மட்டுமல்லாமல், இலங்கை – இந்திய அரசுகளின் மொத்தக் கவனமும் அந்த மேடையில்தான் குவிந்திருக்கிறது. திலீபன் தன்னை அழைத்தது ராகுலனுக்குக் கொஞ்சம் பெருமையாகவுமிருந்தது. தன்னுடைய கனத்த உடலை மேடையை நோக்கி நகர்த்திச் சென்றவரால், உயரமான மேடையில் ஏற முடியாமலிருந்தது. மேடையிலிருந்த ஒருவன் ராகுலனைக் கைகொடுத்துத் தூக்கிவிட்டான். திலீபனின் சோர்ந்திருந்த முகத்தில் அற்புதமானவொரு புன்னகை வந்து அமர்ந்துகொண்டது. “வாடா தடியா…” என்று திலீபன் வரவேற்றவாறே, ராகுலனுடைய கையைப் பற்றிக் கட்டிலில் தன்னருகே உட்கார வைத்துக்கொண்டார். திலீபனின் உடல் எவ்வளவு தளர்ந்திருக்கிறது என்பதை அந்தத் தொடுகையிலேயே ராகுலன் தெரிந்துகொண்டார். அவர் திலீபனின் கையைப் பற்றிப் பிடித்து, நாடித் துடிப்பைப் பரிசீலிக்க முயன்றபோது. திலீபன் வெடுக்கெனக் கையைப் பின்னே இழுத்துக்கொண்டார். “தடியா…என்ர பிரேதம் யூனிவர்ஸிட்டிக்குத் தானே வரும். அங்க நீ என்ர உடம்ப செக் செய்யலாம், இப்ப சும்மாயிரு” என்று சிரித்தார் திலீபன். அவரது குரல் மிகவும் பலவீனப்பட்டிருந்தது. “சீக்… இதென்ன கதை பார்த்தீ? அப்பிடியெல்லாம் ஒண்டும் நடவாது. உன்ர கோலமும் குறியும் என்ன? பத்தாயிரம் சனம் உன்னத்தானே பார்த்துக்கொண்டிருக்கு… குளிச்சு உடுப்ப மாத்திப்போட்டு மேடையில இருக்கலாம்தானே…” “விடுறா தடியா…அழியப் போறவனுக்கு கோடித் துணிதான் கேடு” தான் இறக்கப் போகிறேன் என்று திலீபனுக்கு மிக உறுதியாகவே தெரிந்திருக்கிறது என்பது போலவே அவரது பேச்சுகள் அமைந்திருந்தன. அதை ராகுலனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்கு அருகே அமர்ந்திருப்பது அவர் பதினான்கு வயதுச் சிறுவனாகக் கண்ட பார்த்திபன் தான். அந்தச் சிறுவன் தலைமுதல் பாதம்வரைக்கும் வெண்துணி சுற்றி இறந்து கிடக்கும் காட்சி அவரையறியாமலேயே அவரது மனதில் விரியலாயிற்று “இஞ்சே பார்த்தீ… தண்ணியாவது கொஞ்சம் குடியன். மகாத்மா காந்தி கூட மிளகு போட்டுத் தண்ணி குடிச்சுக்கொண்டுதான் உண்ணாவிரதம் இருந்தவர்…” “அப்பிடியே டொக்டர்… அவர் கூடுத்தி ஒரு நாட்டுக்காரனை எதிர்த்துத்தான் போராடினவர். நாங்கள் உலகத்தையே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கு. தண்ணியக் குடி சுண்ணியக் குடியெண்டு சொல்லி என்னை அவமானப்படுத்தாத!” “உனக்கு நான் புத்திமதி சொல்ல ஏலாது பார்த்தீ… உனக்கு எல்லாமே தெரியும். ஆண்டு அனுபவிச்சு பிள்ள குட்டியப் பெத்துப்போட்டுத்தான் காந்தி உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் எண்டு கிழட்டு வயசில வெளிக்கிட்டவர். அழிய வேண்டிய வயசே உனக்கு? நீ இருந்து செய்ய வேண்டிய போராட்ட வேலையள் இன்னும் கனக்கக் கிடக்கெல்லே…” “மச்சான்… போராடுறது என்ர வேலையில்ல… அது என்ர குணம்!” இந்த உரையாடல் நிகழ்ந்ததிலிருந்து ஒன்பதாவது நாள் காலை 10 மணி 48 நிமிடத்திற்கு, மருத்துவர் சிவகுமார் உண்ணாவிரத மேடையில் அசையாமல் கிடந்த திலீபனின் நாடித்துடிப்பைப் பரிசீலித்துவிட்டு, திலீபனின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அப்போதும் ராகுலன் அந்த மேடையில் இருந்தார். அவரது கண்களிலிருந்து ஒரு சொட்டு நீரும் திலீபனின் உடலத்தின் மீது விழவில்லை. அந்தக் கணத்தில் அவர் கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். ‘எல்லோருமாகச் சேர்ந்து ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்’ என்று மனதிற்குள் கறுவியவாறே மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். பூரணமாக இராணுவ உடைகள் அணிவிக்கப்பட்டு, லெப்டினன்ட் கேர்ணல் என்ற பட்டத்தோடு திலீபனின் உடல் யாழ்ப்பாணத்தின் கிராமங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பார்த்திபனுக்காக ராகுலன் காத்திருந்தார். 3 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் துறையில் விரிவுரையாளராகப் பணியை ஏற்கும் போது, ராகுலனுக்கு வயது முப்பத்துநான்கு. அப்போது, திலீபனின் உடல் அங்கே வைக்கப்பட்டு முழுதாக எட்டு வருடங்களாகியிருந்தன. பணியை ஏற்றவுடன் அவர் நேராக திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குத்தான் சென்றார். மேற்படிப்புக்காக இலண்டனில் இருந்த அய்ந்து வருடங்களில், பலமுறை திலீபனின் உடலைப் பற்றி அவர் சிந்தித்திருக்கிறார். அதன் காரணமாகவே உடலத்தைப் பாதுகாத்து வைப்பதற்குரிய அதிநவீன தொழில்நுட்பங்களை அவர் ஆராய்ந்தார். இலண்டனுக்குக் கிளம்பவதற்கு முன்பும் இங்கே வந்து திலீபனின் உடலைப் பார்த்து, அவருடைய நேசத்துக்குரிய பையனிடம் விடைபெற்றுத்தான் சென்றார். கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உடலில், உண்மையில் பாரதூரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. உடல் மேலும் கருமையேறி இருந்தது. உதடுகளின் ஓரங்கள் மெலிதாகக் கரைந்து பற்கள் கடல் சோழிகளைப் போன்றிருந்தன. உடலைப் பதப்படுத்தும் இரசாயனங்களால் உடல் சற்றே ஊதியிருந்தது. கைகளிலும் தொடைகளிலும் மட்டும் தசையை சில அங்குலங்களுக்குக் கீறியிருந்தார்கள். நீண்ட நேரமாகத் தனியராகவே நின்று அந்த உடலைப் பார்த்துக்கொண்டிருந்த ராகுலன் சற்றுச் சத்தமாகவே முணுமுணுத்தார்: “நீ இப்ப என்ர பொறுப்பில பார்த்தீ…” அன்று மாலையில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி ஜனனி அவரைப் பார்த்தும் பார்க்காதது போலவே புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ சென்று அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்ற ஆசை ஜனனிக்கு இருந்தது. ஆனால், ராகுலனுக்கோ வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் விருப்பமில்லாமலிருந்தது. “என்ன உம்மிட லவ்வரப் பார்த்தாச்சோ?” என்று ஜனனியிடமிருந்து குரல் வந்தது. “ம்” என்று சொல்லிவிட்டு ராகுலன் குளிக்கப் போய்விட்டார். திலீபனுடனான தன்னுடைய அனுபவங்களை ஆங்கிலத்தில் சிறு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ராகுலனுக்கு இருந்தது. அந்த முயற்சியை அவர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். குளித்துவிட்டு வந்ததும், தேநீர் கோப்பையோடு மேசையின் முன்னால் அமர்ந்து, திலீபனைப் பற்றி ஏற்கனவே எழுதி வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பரிசீலிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னாலிருந்து ஜனனியின் குரல் கேட்டது: “கல்வெட்டு எழுதத் தொடங்கியாச்சே?” ஜனனி எப்படிச் சீண்டினாலும், இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் ராகுலனுக்குக் கோபமே வருவதில்லை. ஜனனி எரிச்சலுறுவதில் நியாயம் இருக்கிறதென்றே அவர் நம்பினார். யுத்தம் நாலாபுறத்தாலும் நகரத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தது. விமானக் குண்டுவீச்சுகள் நகரத்தில் நிகழாத நாட்களேயில்லை. யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் மருத்துவராகக் கடமையிலிருந்த ஜனனி ஒரு நாளைக்கு அய்ம்பது நூறெனக் கோராமாகச் சிதைந்த உடல்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இதனால் ஜனனி உளச்சோர்வுக்கு ஆளாகி, சில சமயங்களில் பிரமை பிடித்தது போலவே கடமையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். இப்போது கர்ப்பகால விடுப்பில் இருப்பதால், அவரது கவலையெல்லாம் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றியே இருந்தது. “என்ர குஞ்சையும் நான் சிதறின உடம்பாக பார்க்க வேண்டி வருமோ?” என்று ஒவ்வொரு நாளுமே ராகுலனிடம் கேட்டு அச்சத்தில் உறைந்திருந்தார். யாழ்ப்பாண நகரத்தை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் நகரத்தைப் பிடித்துவிடுவார்கள் என்றும் கதைகள் பரவிக்கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறாதவாறு புலிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கணிசமான மக்கள் புலிகளையே ஏய்த்துவிட்டுத் திருட்டுப் பாதைகள் வழியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தாங்களும் கொஞ்ச நாட்களுக்கு எங்கேயாவது போய்விடலாம் என்று ஜனனி சொல்லும் போதெல்லாம், புலிகள் ஒருபோதும் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்று ராகுலன் சொல்லி, அதற்கான காரணங்களையும் ஜனனிக்கு விளக்குவார். அது ஜனனியின் அழுகையில் முடிவுறும். ஆனால், ராகுலன் சொல்லிய காரணங்கள் எல்லாமே சத்தற்றவை என்பது சீக்கிரமே தெரிந்தது. 1995 -வது வருட அய்ப்பசி மாதத்தின் கடைசி நாட்களில், இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாண நகரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வெளியேறுவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் அங்கிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் செல்லுமாறு புலிகள் கட்டளையிட்டார்கள். மேலே விமானங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருக்க, கீழே புலிகளின் வாகனங்கள் இந்தக் கட்டளையை ஒலிபெருக்கிகளில் இடைவிடாது அறிவித்தவாறே சுற்றிக்கொண்டிருந்தன. இந்த அறிவித்தலைக் கேட்டபோது, ராகுலன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திலீபனோடு இருந்தார். சில நாட்களாகவே பல்கலைக்கழகம் மூடப்படிட்டிருக்கிறது. ராகுலன் மட்டும் திலீபனின் உடலைக் கவனிப்பதற்காக அங்கே வந்து போய்க்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் வெளியேற்றுவது புலிகளின் நோக்கமல்ல என்றே ராகுலன் நினைத்தார். அது எப்படிச் சாத்தியம்? மருத்துவர்கள், மருத்துவனைப் பணியாளர்களாவது இங்கே இருக்க வேண்டுமல்லவா. படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகளையும், போரில் காயமடைபவர்களையும் பாதுகாப்பது அவசியமல்லவா. ஆனால், அன்று மதியம் புலிகளின் இரண்டு வாகனங்கள் மருத்துவ பீடத்திற்கு வந்த போதுதான், முழு யாழ்ப்பாணத்தையும் வன்னிக்கு நகர்த்தப் புலிகள் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது ராகுலனுக்குப் புரிந்தது. வந்திருந்த புலிப் போராளிகளில் அவர்களது மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் ராகுலனுக்கு ஏற்கனவே அறிமுகமுள்ளவர்கள் தான். ராகுலன் திலீபனின் இளமைக்கால நண்பர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். வந்தவர்களது திட்டம் திலீபனின் உடலைத் தங்களோடு வன்னிக்கு எடுத்துச் செல்வதே என்று ராகுலன் அறிந்தபோது, அவர் அதிர்ந்து போனார். ஆத்திரத்தால் அவரது நாக்குத் துடித்தது. “தம்பியவை… பார்த்தீ தன்ர உடம்ப யூனிவர்ஸிட்டிக்குத்தான் தந்தவன். அது மாணவர்களின்ர சொத்து. நீங்கள் உங்கிட எண்ணத்துக்கு எடுக்கேலாது!” “டொக்டர்… தயவு செய்து விளங்கிக்கொள்ளுங்கோ! நாளைக்கு இஞ்ச ஆமி வந்திருவான். அவன்ர கையில திலீபன் அண்ணையின்ர உடலம் சிக்கக் கூடாது எண்டு தலைவர் சொல்லிப் போட்டார்.” “அத நான் பாத்துக்கொள்ளுறன் தம்பியவை. நான் கொழும்புக்கு கதைக்கிறன். யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி உள்ளிடாது.” “அப்பிடி இல்ல டொக்டர்… வந்தாறுமூலை யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி பாய்ஞ்சு இருநூறு பேரைச் சுடயில்லையே…” “இந்த உடம்பு இப்பயே எட்டு வருஷமாயிற்று. நீங்கள் வன்னிக்குக் கொண்டு போறதுக்கிடையில டீகொம்போஸ் ஆகிரும்…” “அதுக்கான ஏற்பாடுகளோட தான் வந்திருக்கிறம் டொக்டர்… எங்கிட மருத்துவப் போராளிகள் திலீபன் அண்ணையின்ர உடலத்தைப் பத்திரமா வன்னிக்குக் கொண்டு வந்திருவினம்… நாங்கள் கெதியில யாழ்ப்பாணத்தைத் திரும்பிப் பிடிப்பம். அப்ப திலீபன் அண்ணையின்ர உடலத்த இஞ்ச கொண்டுவந்து உங்கிட கையில பத்திரமா ஒப்படைக்கிறது எங்கிட பொறுப்பு.” ‘கிழிச்சியள்’ என்று ராகுலன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடுவில் கர்ப்பவதியான ஜனனி வேறு அவரது நினைவுக்கு வந்துகொண்டிருந்தார். எல்லோருமே வன்னிக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் தெரிந்துவிட்டது. அவரது ஞாபகத்தில் மயில் எலும்புக்கூடை எடுக்கத் தன்னைக் கூட்டிக்கொண்டு போன அந்தச் சிறுவன் வந்துகொண்டேயிருந்தான். அவன் முன்னே நிலவொளியில் நடக்க, பின்னே மயிலின் எலும்புக்கூடைச் சுமந்தவாறே அவர் நடந்துகொண்டிருந்தார். ராகுலன் அறைக்குள்ளே போய், மூடியிருந்த திலீபனின் இமையைத் திறந்து பார்த்தார். குழியாயிருந்த இடத்தில் சிறுவனின் கிறங்கிய கண் தெரிந்தது. அப்போதுதான் ராகுலன் அந்த முடிவை எடுத்தார். அவர் வெளியே வந்து புலிப் போராளிகளிடம் சொன்னார்: “நானும் கூட வருவன். ஓமெண்டால் பார்த்தீயின்ர உடம்ப நீங்கள் எடுக்கலாம்.” இதை உறுதியான குரலில் அறிவித்துவிட்டு, ராகுலன் அறைக்குள் நுழைந்து திலீபனின் உடலுக்கு அருகிலேயே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஜனனியின் ஞாபகம் அவரைக் குழப்பிக்கொண்டிருந்தது. ஜனனியின் பெற்றோரும் வீட்டிலிருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று தன்னைத்தானே அவர் சமாதானப்படுத்திக்கொண்டார். புலிப் போராளிகள் வெளியே தொலைத் தொடர்புக் கருவிகளில் பேசிக்கொண்டிருப்பது தெளிவற்றுக் கேட்டது. சற்று நேரத்தில் ஒருவன் உள்ளே நுழைந்து ராகுலனிடம் சொன்னான்: “நீங்களும் வரலாம் டொக்டர். அது எங்களுக்கும் நல்லதுதான். ஆனால், இதுவொரு இரகசிய நடவடிக்கை. நீங்கள் இரகசியத்தைப் பாதுகாப்பீங்கள் எண்டு நம்புறம். உங்கிட குடும்பத்துக்குக் கூடச் சொல்லக்கூடாது. நாங்கள் உடனேயே வெளிக்கிடோணும்.” அங்கே ஆலோசிக்க நேரமிருக்கவில்லை. உடலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோதும், அதை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பதற்கான இரசாயனங்களை எடுத்துப் போராளிகளிடம் கொடுத்தபோதும், ஜனனியைக் குறித்த சிந்தனையே ராகுலனை வதைத்துக்கொண்டிருந்தது. நான் புலிகளோடு சேர்ந்து வன்னிக்குப் போவதை ஜனனி ஒருபோதும் விரும்பமாட்டார். நான் எதற்காகப் போகிறேன் என்பதையும் அவரிடம் சொல்ல முடியாது. எதற்கும் நான் இப்போது உடலத்தோடு வன்னிக்குப் போய்விடலாம். இவர்களை நம்பி இதை ஒப்படைக்கவே முடியாது. புலிகளின் கற்றுக்குட்டி மருத்துவக் குழுவுக்கு உடலை அழியாமல் காப்பாற்றும் வல்லமை இல்லை. களத்தில் காயமடைந்த தோழனைக் கொன்றுவிட்டுப் பின்வாங்கும் வழக்கமுள்ளவர்கள், இந்த உடலையா பத்திரமாக வைத்திருக்கப்போகிறார்கள் என்றெல்லாம் குறுக்குமறுக்காக ராகுலனின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அவர் திலீபனின் உடலோடு கடலைக் கடக்கப் புலிகளின் படகில் ஏறியபோது, கரையில் நின்றிருந்த அவருக்குத் தெரிந்த போராளியொருவனிடம் ஒரு தகவலைச் சொன்னார்: “தம்பி உங்களுக்கு என்ர வீடு தெரியுமெல்லே… பிரவுண் ரோட்டில போய் பெரியாஸ்பத்திரி டொக்டர் ஜனனியின்ர வீடெண்டு கேட்டாலே காட்டுவினம். நான் வன்னிக்குப் போயிட்டன் எண்டும், அவவையும் வன்னிக்கு வரச் சொல்லியும் சொல்லிவிடுங்க. அவ கர்ப்பவதி தம்பி… உடனேயே தகவல் சொல்லுறியளா?” “நீங்கள் கவலைப்படாதீங்க டொக்டர். நான் இப்பயே யாழ்ப்பாணத்தில நிக்கிற போராளியளுக்கு வோக்கியில தகவல் சொல்லுறன். நீங்கள் முன்னால போங்கோ…பின்னாலேயே ஜனனி டொக்டர அனுப்பிவிடுறம்.” பேய்மழை பெய்த அன்றைய இரவில்தான், அந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இலட்சக்கணக்கான யாழ்ப்பாண மக்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும், முதியவர்களையும் கைவிட்டு, உப்புநீரைக் கடந்து வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் பிறகு எப்போதும் அந்நிலத்தை விட்டு நீங்கவேயில்லை. 4 திலீபனின் உடல் மிக இரகசியமாக வன்னிக்குக் கொண்டுவரப்பட்டதைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர்களைத் தவிர அறிந்த ஒரேயொரு நபர் மருத்துவர் ராகுலன்தான். எனவே தன்மீது புலிகள் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருப்பார்கள் என்பது ராகுலனுக்கும் தெரியும். அவர் எங்கு சென்றாலும் புலி நிழல் தன்னைத் தொடர்ந்துவருவதை அவர் உணர்ந்திருக்கிறார். இதனால் அவர் ஆத்திரமேதும் அடையவில்லை. அது அவர்களின் கடமை, அவர்களின் குணம் என்பதை ராகுலன் தெரிந்தே வைத்திருக்கிறார். வன்னிக்குக் கொண்டுவரப்பட உடலை கிளிநொச்சியிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமில்தான் இரகசியமாக மறைத்து வைத்தார்கள். அந்த முகாமுக்குப் பக்கத்திலேயே ராகுலன் தங்குவதற்கு ஒரு சிறிய வீட்டையும் புலிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ராகுலன் மருத்துவ முகாமுக்குச் சென்று, திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். வேறு எவரும் அந்த உடலத்தைத் தொடுவதற்கு ராகுலன் அனுமதிக்கவேயில்லை. ஜனனி வன்னிக்கு வரவேயில்லை. அவரும் பெற்றோரும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளியேறி, தென்மராட்சியில் எங்கேயோ தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலும், பின்னர் அவர்கள் எப்படியோ கொழும்புக்குச் சென்றுவிட்டார்கள் என்ற தகவலுமே தென்மராட்சியிலிருந்து வன்னிக்கு வந்தவர்கள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தன. அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும் என்று ராகுலன் நினைத்துக்கொண்டார். ஜனனி கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அங்கே அவருக்கு ஏராளமான நண்பர்களும் உறவினர்களுமிருக்கிறார்கள். ஜனனியின் நண்பியான தர்ஷினியின் முகவரி ராகுலனது ஞாபகத்திலிருந்தது. ஒரு கடிதத்தை எழுதி, அந்த முகவரிக்கு ராகுலன் அனுப்பிவைத்தார். ஒரு முக்கியமான மருத்துவக் கடமையில் தான் ஈடுபட்டிருப்பதாக மட்டுமே அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்குப் பதில் ஏதும் வராததால், தனக்கு ஞாபகத்திலுள்ள கொழும்பு விலாசங்களுக்கு எல்லாம் ராகுலன் கடிதம் எழுதிப் போட்டார். அவற்றுக்கும் பதில்கள் கிடைக்கவில்லை. அவர் அனுப்பிய எல்லாக் கடிதங்களும், அவருக்கு அனுப்பப்பட்ட எல்லாக் கடிதங்களும் புலிகளின் உளவுத்துறையால் கைப்பற்றி அழிக்கப்பட்டன என்று பல வருடங்கள் கழித்துத்தான் ராகுலன் அறிந்துகொண்டார். வன்னிக்கு வரும்போது, அவரது மனைவிக்குப் போராளி ஒருவன் மூலம் அனுப்பிவைத்த தகவல் கூட மனைவியிடம் சென்று சேர்ந்திருக்காது என்று அவர் ஊகித்தார். இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. நீண்ட காலங்களிற்குப் பின்பு விசுவமடுவில் ராகுலனைச் சந்தித்த நோர்வே நாட்டைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஒருவர் சொன்னார்: “டொக்டர்… காணாமற்போனவர்களது பட்டியலில் மருத்துவர் சேக்கிழார் ராகுலன் என்ற உங்களது பெயரும் இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட முகம் எரியுண்ட உடல் உங்களுடையது என்றே எல்லோராலும் நம்பப்படுகிறது”. இதற்குச் சில நாட்கள் கழித்து ஜனனியும் குழந்தையும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி புலிகள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தது. அதையிட்டும் ராகுலன் மகிழ்ச்சியடையவே செய்தார். போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. இவையெல்லாம் முடியும் நாளில், நான் அவர்களைச் சந்திப்பேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். திலீபனின் உடலைக் கிளிநொச்சியில் பாதுகாத்துவைத்த அடுத்த வருடமே, அந்த நகரமும் இராணுவத்திடம் வீழ்ந்தது. ராகுலன் திலீபனின் உடலோடு, முத்தையன்கட்டிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமுக்குச் சென்று, அங்கே உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தார். புலிகளுக்கு ராகுலனின் பணியில் முழுத் திருப்தியேயிருந்தது. தலைவரின் நேரடி உத்தரவு எனச் சொல்லி, மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை ராகுலனுக்குச் சம்பளமாகக் கொடுத்தார்கள். ராகுலன் அந்தத் தொகையில் கால்வாசியைக் கூடச் செலவு செய்ய மாட்டார். எஞ்சியிருக்கும் பணத்திற்கு மருந்துகளை வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார். புலிகளின் மருத்துவக் கட்டமைப்பைத் தான் மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகக் கூடப் பல தடவைகள் ராகுலன் நினைக்க வேண்டியிருந்தது. திறமையான பல மருத்துவர்கள் புலிகளின் அணியிலிருந்தார்கள். மருத்துவ முகாம் கிட்டத்தட்ட ஒரு வெளிநாட்டு மருத்துவமனைக்குரிய உபகரண வசதிகளுடனிருந்தது. திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்காக ராகுலன் கேட்ட இரசாயனங்களையும், மருந்துகளையும் புலிகள் எந்தக் குழப்பமுமின்றி வழங்கினார்கள். இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனின் நினைவு நாளன்று ‘ஓயாத அலைகள்-2’ என்ற தாக்குதல் நடவடிக்கையைப் புலிகள் ஆரம்பித்து, மூன்றே நாட்களில் கிளிநொச்சியைத் திரும்பவும் கைப்பற்றினார்கள். திலீபனின் உடலோடு ராகுலன் மறுபடியும் கிளிநொச்சி மருத்துவ முகாமுக்கு வந்து சேர்ந்தார். சில வருட வன்னி வாழ்க்கையில் ராகுலனே மோசமான உடல் உபாதைகளில் சிக்கிக்கொண்டார். ஆனாலும், அவர் ஒருபோதும் மனம் சோர்ந்தாரில்லை. திலீபனின் உடலை ஓர் அற்புதச் செடியைப் போன்று கவனித்தார். ஒவ்வொருநாள் காலையிலும் அதை மலர வைத்தார். மற்றைய வேளைகளில் மருத்துவமனைகளுக்குச் சென்று, நோயாளிகளைப் பராமரித்தார். சமாதான காலம் வந்தபோது, புலிகள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்கள். வன்னிக்கான பாதைகள் திறக்கப்பட்டன. அப்போது கூட வன்னியிலிருந்து வெளியேற ராகுலன் யோசிக்கவில்லை. அவருக்கு அங்கேதான் கடமையிருந்தது. கிளிநொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பி, அங்கே மருத்துவ பீடத்தில் திலீபனின் உடலைப் பாதுகாத்து வைப்பதற்குப் புலிகளின் தலைமை திட்டமிட்டிருப்பதாக மருத்துவக்குழுப் போராளிகள் மூலமாக ராகுலன் அறிந்தார். இந்தச் சமாதான காலத்தில் அதற்கான சாத்தியமும் நிறையவே இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், அங்கே திலீபனின் உடலைப் பாதுகாத்துவைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மனைவியிடமும் குழந்தையிடமும் போய்விடலாம் என்று ராகுலனுக்கு மனதிற்குள் ஓர் எண்ணமிருக்கவும் செய்தது. சமாதான காலத்தில் மனைவியிடமும் குழந்தையிடமும் தொலைபேசியில் பேசவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கே பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகச் சொல்லி, அதை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். ஒரு சொல் கூட அவர் திலீபனைப் பற்றிச் சொன்னாரில்லை. ‘நீங்கள் பொறுப்பற்றவர், வெற்றுப் பகட்டுக்காரர்’ என்று ஜனனி சொல்லவும் தவறவில்லை. ராகுலன் முடிந்தவரை ஜனனியைச் சமாதானப்படுத்தி, நம்பிக்கையூட்டினார். இனித்தான் மிகத் துன்பமான, பேரழிவான, ஊழியான காலத்தை எல்லோருமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ராகுலன் அப்போது உணரவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டு, மீண்டும் உக்கிரமாகப் போர் ஆரம்பித்த போது, புலிகளின் தளங்கள், முகாம்கள் குறித்து எல்லாத் தகவல்களும் துல்லியமாக இலங்கை விமானப்படையினரிடம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் குறிவைத்து இலக்குகளின் மீது வெற்றிகரமாகத் தொன் கணக்கில் குண்டுகளை இறக்கினார்கள். அப்படியான ஒரு தாக்குதலில்தான் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனும் கொல்லப்பட்டார். காலையில், திலீபனின் உடலை மீள் பதப்படுத்துவதற்கான வேலைகளை முடித்துவிட்டு, மருத்துவ முகாமை விட்டு ராகுலன் வெளியேறிய இரண்டாவது நிமிடத்தில், மருத்துவ முகாம் மீது இரண்டு போர் விமானங்கள் குத்தி இறங்கி ஏறின. முகாமிலிருந்து சிதறிய எச்சங்கள் பறந்து வந்து ராகுலனைச் சுற்றி வீழ்ந்தன. ராகுலனும் தன்னையறியாமலேயே நிலத்தில் வீழ்ந்துவிட்டார். எனினும் சுதாகரித்துக்கொண்டு எழுந்து, மருத்துவ முகாமை நோக்கி ஓடினார். அந்த முகாமிலிருந்த அத்தனை பேரும் சிதறிக் கிடந்தார்கள். வலுவாகக் கட்டி எழும்பப்பட்டிருந்த நான்கு நெருக்கமான இரகசியச் சுவர்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சிதறுண்டு, வெளிறிய நட்சத்திரங்களைப் போன்ற துகள்கள் திலீபனின் உடலை மூடியிருந்தன. கிளிநொச்சி மறுபடியும் இராணுவத்தினரிடம் வீழ்ந்தபோது, திலீபனின் உடலையும் எடுத்துக்கொண்டு ராகுலன் கிளம்பினார். அவர் புலிகளின் மருத்துவ அணியுடன் ஒவ்வொரு ஊராக நகர நகர அந்த ஊர்களும் இராணுவத்திடம் வீழ்ந்துகொண்டேயிருந்தன. அவை மிகக் கடுமையான காலங்களாகின. பஞ்சமும், தீயும், வெடி முழக்கமும், அழுகுரல்களும், இரத்தமும், சாவும் எல்லோரையுமே பைத்தியங்களாக்கிக்கொண்டிருந்தன. என்றாலும் அந்த மக்கள் கூட்டம் கிழக்குக் கடல் நோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தது. அவர்களுடன் திலீபனின் உடலும் நகர்ந்தவாறேயிருந்தது. இனியும் திலீபனின் உடலைப் பாதுகாக்க முடியாது என்ற நிலை தோன்றிவிட்டது. அதற்குத் தேவையான இரசாயனங்களும் மருந்துகளும் கிடைப்பதாகயில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கே மருந்தில்லாத போது, உயிரற்ற உடலுக்காக மருந்துகளைச் செலவழிப்பது நீதியற்றது என்றே ராகுலனுக்குத் தோன்றிற்று. எல்லாமே கையை விட்டுப் போய்விட்டன. திலீபனின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டிய தருணம் இதுவென்றே அவர் நினைத்தார். அதை இப்போதுகூடச் செய்யாவிட்டால், ஓடும் வழியில் துர்நாற்றமடிக்கும் அழுகிய மூட்டையாக அதைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். இந்துக் கல்லூரியில் அவர் முதன் முதலாகப் பார்த்த கிறங்கிய கண்களும் அடக்கத்தையே கேட்டுக்கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றிற்று. புலிகளின் மருத்துவ அணிக்கும் நிலைமை தெளிவாகப் புரிந்தது. அவர்களும் திலீபனின் உடலை அடக்கம் செய்வதே நல்லது என்று நினைத்தார்கள். ஆனால், தலைமையிடமிருந்து அதற்குக் கண்டிப்பான மறுப்புக் கிடைத்தது. எப்பாடு பட்டாவது திலீபனின் உடலைப் பாதுகாக்க வேண்டுமெனத் தலைமையிடமிருந்து உத்தரவு வந்தது. நல்லூர் முருகன் கோயிலில், திலீபன் ஆற்றிய கடைசி உரையை ராகுலன் நினைத்துக்கொண்டார். பேசுவதற்கான சக்தியை முழுமையாக இழந்திருந்த திலீபன் மெல்லிய குரலில் முனகினார்: “நேற்றுத் தலைவர் என்னை வந்து பார்க்கும் போது ஒன்றைச் சொன்னார்… திலீபன் நீ முன்னாலே போ, நான் பின்னாலே வருகிறேன் !” கிடைக்கும் இரசாயனங்களையும், மருந்துகளையும் பயன்படுத்தி, திலீபனின் உடலைப் பாதுகாக்க ராகுலன் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அது சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. உயிரை வதைத்து மரணமுற்றவனின் உடலும் இப்படி வதைபட்டு, நாற்றம் பெருகித் தன் கண்முன்னே காய்ந்த இறைச்சியாகப் புழுத்துக்கொண்டிருப்பதை அவரால் தாங்கவே முடியவில்லை. ஆனாலும், திலீபனின் உடல் நகர்ந்துகொண்டேயிருந்தது. உடலை அடக்கம் செய்துவிடுவதே நல்லது எனச் சொல்லியவாறே ராகுலனும் கூடவே போய்க்கொண்டிருந்தார். இறுதியாக, 2009-வது வருடத்தின் சித்திரை மாதத்தில், திலீபனின் உடலை அடக்கம் செய்வதற்குத் தலைமையிடமிருந்து உத்தரவு கிடைத்தது. மிக இரகசியமான முறையில், இரகசியமான இடத்தில், இராணுவ மரியாதைகளோடு திலீபன் புதைக்கப்பட்டார். ஓர் எலும்புக்கூட்டுக்கு இராணுவச் சீருடை போர்த்தப்பட்டிருந்ததை ராகுலன் பார்த்தவாறே நின்றிருந்தார். அவரது கண்களிலிருந்து இப்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை. அவரது ஆன்மா உணர்ச்சியற்றுக் கடினமாகியிருந்தது. ‘யுத்தம் முடிந்தது’ என்று அவர் உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டார். இதற்கு ஒரு மாதம் கழித்து, நந்திக்கடலைக் கடந்த மக்களோடு ராகுலனும் கலந்து சென்று இராணுவத்திடம் சரணடைந்தார். சில நாட்கள் கழித்து, அவரை வவுனியா தடுப்பு முகாமில் எதேச்சையாகப் பார்த்த ஒரு நடுத்தர வயது இராணுவ அதிகாரி “உன்னைப் பார்த்தால் பிரபாகரன் மாதிரி இருக்கிறதே…அந்த ஆளைத்தான் நாங்கள் முடித்துவிட்டோமே…இங்கே எப்படி?” என்று நக்கலாகப் பேசியபடியே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றான். தானொரு மருத்துவர் என்று ராகுலன் சொன்னதும், அதிகாரியின் விசாரணைக் கோணமே மாறிவிட்டது. ஓரளவு மரியாதையுடன் ஆனால், துருவித் துருவி ராகுலனிடம் அவன் விசாரணை செய்தான். ராகுலன் இத்தகைய விசாரணைகளுக்குப் பழக்கப்படாதவர். அவர் திலீபனின் உடல் குறித்த உண்மையை எக்காரணத்தாலும் வெளிப்படுத்தக்கூடாது என்ற உறுதியோடுதான் இருந்தார். ஆனாலும், அந்த அதிகாரி குறுக்கு விசாரணையில் நிபுணனாக இருந்தான். “டொக்டர்… நீங்கள் இலண்டனில் மருத்துவம் கற்றது போலவே, நானும் இலண்டனில் தான் புலனாய்வுத் துறையில் உயர்ந்த பயிற்சியைப் பெற்றிருக்கிறேன்” என்று சொல்லியவாறே, சுத்தமான கண்ணாடிக் கோப்பையில் குளிர்ந்த நீரை நிரப்பி ராகுலனிடம் கொடுத்தான். கடைசியில் ராகுலன் சிலந்திவலை போன்று பின்னப்பட்டிருந்த விசாரணை வளையத்திற்கு நடுவே திலீபனின் உடலத்தை எடுத்து வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. ராகுலன் சொன்னதைக் கேட்டதும், அந்த அதிகாரியே ஆடிப்போய்விட்டான். “திலீபனின் உடல் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது டொக்டர்?” என்று இராணுவ அதிகாரி கேட்கவும், “முள்ளிவாய்க்கால்” என்று ராகுலன் சொல்லிவிட்டார். அது அவர் எதிர்பாராமலேயே அவரது வாயிலிருந்து உருண்ட வார்த்தை. அதைக் கேட்டதும் அந்த அதிகாரி ஒரேயடியாக உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டான். திலீபனின் உடல் இருக்கிறதா இல்லையா என்பது கூட இதுவரை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயேயிருந்தது. அந்த உடல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், அந்த உடலைக் கைப்பற்றிவிட அதிகாரி துடித்துக்கொண்டிருந்தான். திலீபனது ஒவ்வொரு எலும்பும் அவர்களது வெற்றிக் கேடயத்தில் பொறிக்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரம். உடனடியாகவே அதிகாரி ஓர் இராணுவ அணியை ராகுலனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பிவைத்தான். அது ராகுலன் எதிர்பாராதது. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு மனிதனின் உடலை, பதினான்கு வருடங்கள் வன்னியின் வனாந்தரம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஓர் உடலை இவர்கள் மீளத் தோண்டி எடுப்பார்கள் என்றெல்லாம் அவர் நினைத்திருக்கவில்லை. செல்லும் வழியெல்லாம் ஒன்றை மட்டுமே ராகுலன் திரும்பத் திரும்ப மனதிற்குள் உறுதியாகச் சொல்லியவாறே சென்றார். நான் ஒருபோதும் இவர்களிடம் பார்த்திபனின் உடலைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. இத்தனை வருட அலைச்சலுக்குப் பிறகு பூமிக்குள் அமைதியடைந்திருக்கும் அவனை மீண்டும் ஒருபோதும் வெளியே கொண்டுவரக்கூடாது. ராகுலனது மூளையில் வேறொரு திட்டம் உருவாகியது. வயலில் எள்ளை விதைத்தது போலவே முள்ளிவாய்க்காலில் எல்லா இடங்களிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே ஏதாவதொரு இடத்தைக் காட்டி, அங்கேதான் திலீபனைப் புதைத்தார்கள் எனச் சொல்லிவிட வேண்டியதுதான். நிச்சயமாக ஏதாவதொரு உடல் கிடைக்கும். ஏதாவது பிசகு நேர்ந்தால், நினைவுத் தடுமாற்றம் எனச் சாக்குபோக்குச் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தைக் காட்ட வேண்டியதுதான். அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேரும்போது மாலை நேரமாகிவிட்டது. அந்த நிலத்தில் இராணுவத்தினர் மட்டுமே நின்றிருந்தார்கள். அலைகள் பேரிரைச்சலோடு கரைக்கு ஏறிக்கொண்டிருந்தன. அங்கே ஓர் இடத்தைக் காட்டி “இங்கேதான்” என்றார் ராகுலன். இராணுவத்தினர் மிகுந்த உற்சாகத்தோடு அந்த இடத்தை மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்கள். உள்ளே என்ன இருக்கப் போகிறது என்ற பதற்றத்தோடு ராகுலன் காத்திருந்தார். அதிக தூரம் தோண்ட வேண்டியிருக்கவில்லை. இரண்டடி தோண்டியதுமே சில எலும்புகள் கிடைத்தன. இராணுவத்தினர் ஆளுக்கொரு எலும்பை மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தார்கள். ராகுலனும் கண்களை விரித்து அந்த எலும்புகளைக் கூர்ந்து கவனித்தார். அவரது கண்களிலிருந்து நீர் உருண்டு கொழுத்த கன்னங்களில் இறங்கியது. அதைக் கவனித்தவாறே, ஓர் இளநிலை அதிகாரி தொலைத்தொடர்புக் கருவியில் வவுனியா இராணுவ மையத்திற்குப் பேசினான்: “நாங்கள் இப்போது சில எலும்புகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், மிகச் சிறிய எலும்புகளாகயிருக்கின்றன. அவன் பட்டினி கிடந்து செத்ததாலும், நீண்ட நாட்களாகிவிட்டதாலும் அவனுடைய எலும்புகள் சிறுத்துவிட்டன என்றே நினைக்கிறேன்.” அப்போதுதான் மருத்துவர் ராகுலன் தனது கனத்த சரீரத்தை அந்தக் கடற்கரையில் உட்கார்த்திக்கொண்டு, மணலை அள்ளித் தலையில் போட்டவாறே குழறி அழத் தொடங்கினார். இராணுவத்தினரின் கைகளிலிருந்தவை மயில் பறவையொன்றின் சிதைந்த பாகங்கள் என்பதை அவர் கண்டுபிடித்திருந்தார். பல்லிராஜா 1 நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட உபவாசங்களாலும், மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிறது. இலங்கையரின் சராசரி உயரத்தை காட்டிலும் குறைந்தது ஓரடி அளவுக்காவது தேரரது சரீரம் உயரமாகயிருப்பதால்; சீவர துறவாடை தரித்து, மிதியடிகள் தீண்டா வெற்றுப் பாதங்களால் அவர் நடந்து வரும்போது, ஒரு மஞ்சள் பல்லியைப் போலத்தான் தோற்றமளிக்கிறார். ஆனாலும், அவரது உடல்வலு நம்ப முடியாதளவுக்கு அபரிதமானது என்பதற்கு, அவர் தனது வலப்புறத் தோளில் சுமந்துவரும் சம்புத்தரின் மூன்றடி உயரமான வெண்ணிறக் கற்சிலையே பூரண சாட்சியமாகும். கொத்திமலையை நோக்கி, சம்புத்தரின் சிலையைச் சுமந்தவாறே, சீவலி தேரர் தன்னந்தனியாகவே நடந்து வந்துகொண்டிருந்தார். காலையில் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டவர், உச்சி வெயிலில் குளித்து வந்தாலும் சிறிதும் களைப்பு இல்லாதவராகவே காணப்பட்டார். தாகம் அவரை வாட்டியது தான். அவரது இடப்புறத் தோளில் தொங்கும் காவிநிறத் துணிப் பையில் தண்ணீர்க் குடுவையும் வடிகட்டியும் உள்ளன. ஆனாலும், கொத்திமலையை அடையும்வரை ஆகாரம், நீர் எதுவுமே உட்கொள்ளக் கூடாது என்றொரு விரதத்தை சீவலி தேரர் வரித்திருந்தார். தேரரின் பயணப் பாதையில் எதிர்ப்பட்ட இராணுவ அதிகாரிகளும், சிப்பாய்களும் தேரரை வணங்கி “ஹாமத்துருவெனே! எங்களது வண்டியில் ஏறி அமருங்கள்” என்று மன்றாட்டமாக அழைத்தபோதும், உணர்ச்சியற்றதும் உதடுகள் பிரியாததுமான புன்னகையுடன் அவர்களது வேண்டுதல்களை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பித்தவெடிப்பேறிய பாதங்களை எட்டிப்போட்டு சீவலி தேரர் நடந்தே சென்றார். அப்போது நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது. தூரத்தே கொத்திமலை உச்சியிலிருக்கும் கைக்கல்லும் சீவலி தேரரின் கண்களுக்குத் தெரியலாயிற்று. சூரியன் படுவதற்குள் தோளிலிருக்கும் சம்புத்தரின் சிலையை இறங்கி வைத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேரர் இருந்ததால், எலும்பு துருத்திக்கொண்டிருக்கும் தன்னுடைய கொக்குப் பாதங்களை இன்னும் வேகமாக முடுக்கிவிட்டார். பெயர் தான் மலையே தவிர, உண்மையிலேயே கொத்திமலை ஒரு மொட்டைப் பாறை தான். அங்கே செங்குத்தாக ஆறடி உயரத்திற்கு எழுந்து நிற்கும் கல்லையே கிராமத்தினர் கைக்கல் என்றழைக்கிறார்கள். இந்த மொட்டைப் பாறைக்குக் கீழேயிருக்கும் பசுமையான சமவெளியில் ஒருகாலத்தில் முந்நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் வசித்தார்கள். இப்போது நாற்பது குடும்பங்கள்தான் இங்கே எஞ்சியுள்ளன. போர்க் காலத்தில் பெருமளவு கிராமவாசிகள் படகுகளில் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள். இராமேஸ்வரத்தையொட்டியுள்ள மண்டபம் அகதி முகாமில் ‘கொத்தி செட்’ என்றொரு தனிப்பகுதியே உள்ளது. கொத்திமலைக் கிராமத்தின் எல்லையில் நுழைந்து, ஒற்றையாளாக சம்புத்தர் சிலையோடு வந்துகொண்டிருந்த தேரரை முதலில் ஒரு மூதாட்டிதான் பார்த்தார். சில நிமிடங்கள் கழித்து, ஆதிவைரவர் கோயிலின் சிறிய மணி ஒலித்தது. அதற்கடுத்த நிமிடத்தில் வேறெங்கிருந்தோ காண்டா மணியொலிக்கத் தொடங்கியது. இரண்டு மணிகளும் இடையறாது ஒலித்துக்கொண்டிருக்க, சீவலி தேரர் கொத்திமலையை நோக்கி இப்போது மெதுவாக ஓடவே ஆரம்பித்துவிட்டார். வயல்களிலும், தோட்டங்களிலும் வேலையாகயிருந்த கிராமத்து மக்கள் மொட்டைப் பாறையை நெருங்குவதற்கு முன்பாகவே, சீவலி பால தேரர் அங்கே ஏறிச் சென்று; நிமிர்ந்து நின்ற கைக்கல்லின் தட்டையான உச்சியைப் பீடமாக்கி, அங்கே சம்புத்தரின் சிலையை வைத்துவிட்டார். அந்தப் பீடத்திற்குக் கீழாக, கைக்கல்லில் ஆழமாகப் பதிந்து குழிந்துபோன அய்ந்து கைவிரல்களின் தடங்களிருந்தன. ஒவ்வொரு விரலும் ஒரு முழுப் பனங்கிழங்கின் நீளத்திலிருந்தது. சீவலி தேரரின் தவறாத கணக்குப்படி, இது அவர் நிறுவியிருக்கும் இருபத்தியிரண்டாவது சம்புத்த சிலையாகும். கொத்திமலையைக் குறித்து ஸ்ரீ சுபூதி தேரரிடமிருந்து அறிந்த கணத்திலேயே, இருபத்தியிரண்டாவது சிலையை அங்கேதான் நிறுவுவது என்று சீவலி தேரர் முடிவெடுத்திருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் சீவலி தேரரின் வழிமுறை ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறையிலிருந்து வேறானது. ஸ்ரீ சுபூதி தேரரின் முரட்டுத்தனத்தையும், அடாவடிப் பேச்சையும் சீவலி தேரர் உண்மையில் வெறுக்கவே செய்தார். ஸ்ரீ சுபூதி தேரரால் அன்புநெறிக்கும் தம்மத்துக்கும் இகழ் நேர்கிறது என்பதுவே சீவலி தேரின் எண்ணமாகயிருக்கிறது. கைக்கல்லின் மீது திடீரெனத் தோன்றிய சம்புத்தர் சிலையை நோக்கிக் கிராமத்துச் சனங்கள் ஓரிருவராகக் கூட ஆரம்பித்து, பத்து நிமிடங்களிலேயே முழுக் கிராமமும் மொட்டைப் பாறைக்கு வந்து சேர்ந்துவிட்டது. சம்புத்தரின் சிலைக்குக் கீழே, மொட்டைப் பாறையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த சீவலி தேரர் கிராம மக்களைத் தன்னுடைய சாந்தமானதும் அடக்கமானதுமான கண்களால் நோக்கினார். அவருடைய வாயில் எஞ்சியிருந்த ஒருசில பற்களால் முறுவலித்தவாறே, அவர் கிராமவாசிகளிடம் பேசத் தொடங்கினார்: “நம்முடைய சகோதர சகோதரிகளுக்குப் புத்த பெருமானின் அருளால் நிறைவான ஆசிகளைத் தருகிறேன். இந்தப் புனிதமான கல்லில் சம்புத்தரை ஏற்றி வைத்திருப்பதால், இப்போதிலிருந்து நற்காரியங்களும், அதிர்ஷ்டங்களும், அமைதியும், சமாதானமும் மட்டுமே மஹா புத்தரின் பெருங்கருணையால் உங்களைச் சூழ்ந்திருக்கும்…” சீவலி தேரரை இடைமறித்து ஒரு கிராமவாசி தமிழில் ஏதோ சொன்னார். தேரருக்குத் தமிழ் மொழியில் ஒரேயொரு வார்த்தைதான் தெரியும். ஆனால், அந்த வார்த்தைக்குக் கூட என்ன பொருளென்று அவர் அறியமாட்டார். அந்த வார்த்தையைக் கடந்த முப்பது வருடங்களாக அவர் நினைக்காத நாளில்லை. ஆனால், அந்த வார்த்தையின் பொருளை அறிந்துகொள்ள அவர் ஒருபோதும் விரும்பினாரில்லை. அந்த வார்த்தையை நினைவுறும் போதெல்லாம் தேரர் அளவற்ற துக்கத்தால் பீடிக்கப்படுவதுண்டு. கொத்திமலைச் சனங்களிடம் சீவலி தேரர் புன்னகை மாறாமலேயே கேட்டார்: “சகோதரர்களே! உங்களில் யாருக்காவது சிங்கள மொழி தெரியுமா?” கூட்டத்திலிருந்து முன்னே வந்த, முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணைத் தேரர் கனிந்த விழிகளால் நோக்கினார். குரூபி என்றே சொல்லக் கூடிய அந்தப் பெண்ணில் மூக்கு, காது, உதடு என்ற எந்த அடையாளத்தையும் குறிப்பாகக் காண முடியாதவாறு, அவளது முகம் தீயில் வெந்திருந்ததால், அம்முகம் முறுகக் காய்ச்சிய இரப்பர் போன்றிருந்தது. அந்தப் பெண் சீவலி தேரரை வணங்கிவிட்டு நின்றாள். “சகோதரிக்கு நன்மையே விளையட்டும்! உங்களுக்குச் சிங்களம் பேசத் தெரியுமா?” “ஹாமத்துருவெனே!” அந்தப் பெண்ணின் இரப்பர் முகம் சற்றே அசைந்தது. இப்போது விட்ட இடத்திலிருந்து சீவலி தேரர் பேசலானார்: “இப் புனித நிலத்தில் வாழும் ஜனங்களான நீங்கள், கலிங்கத்து அரசன் குஹசிவவைக் காட்டிலும் பேறுடையோர். அவனிடமிருந்த சம்புத்தரின் புனிதப் பல்லைக் கொள்ளையிடுவதற்காக, பெரும் சேனையைத் திரட்டி கீரதர நரேந்திர வம்சத்தார் போர் தொடுத்தபோது, மன்னன் குஹசிவ தன்னுடைய புத்திரியான இளவரசி ஹேமமாலியிடம் ததாகதரின் புனிதப் பல்லைக் கொடுத்து, இரகசியமாக இலங்கைத் துவீபத்துக்கு அனுப்பிவைத்தான். இளவரசி தன்னுடைய கூந்தலுக்குள் புனிதப் பல்லை மறைத்து வைத்துக்கொண்டு, இந்த முல்லைக் கடற்கரையிலேயே தரையிறங்கி, தலைநகர் அனுராதபுரத்திற்குச் சென்று, அரசனான ஸ்ரீ மேகவண்ணவிடம் புனிதப் பல்லைக் கையளித்தாள். அவன் மேஹகிரி விகாரையில் புனிதப் பல்லை அறுக்கை செய்துவைத்து வழிபட்டான். அவனது வம்சத்தினரின் தலைநகரங்கள் மாற மாற புனிதப் பல்லும் அவர்களுடனேயே எடுத்துச் செல்லப்பட்டது.” சீவலி தேரர் பேச்சை இடைநிறுத்தி, இரப்பர் முகப் பெண்ணை நோக்கினார். அவள் தேரர் சொல்லியதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கிராமவாசிகளிடம் சொல்லலானாள். முழுக் கிராமமும் கவனமாக அந்தக் கதையைக் கேட்டது. சிலர் மொட்டைப் பாறையில் தளர்வாக உட்கார்ந்துகொண்டது, தேரர் சொல்லவிருக்கும் சுவையான மிகுதிக் கதைக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது போலவேயிருந்தது. சீவலி தேரர் முகத்திலும் இப்போது நிம்மதி ரேகை தோன்றி மறைந்தது. அன்புவழியைத் தேர்ந்தெடுத்தவர்களை சம்புத்தர் கைவிடார் என்று அரத்த தம்மசக்கரம் அவர் இருதயத்தில் மெல்லச் சுழலலாயிற்று. தேரர் தொடர்ந்தார்: “இளவரசி ஹேமமாலி முல்லைக் கடற்கரையில் இறங்கி, இந்தக் கொத்திமலை வழியாகவே சென்றாள். இரவைக் கழிப்பதற்காக, இங்கே படுக்கையைப் போன்றிருந்த ஒற்றைக்கல்லின் மீது சயனித்தாள். விடியல் கருக்கலில் அவள் எழுந்தபோது, அந்தக் கல்லும் கூடவே எழுந்து நிரந்தரமாக இதோ நிற்கிறது! அவளது வலது கை இந்தக் கல்லில் விட்டுச் சென்ற அடையாளம் குழிந்து இது கைக்கல்லுமாயிற்று…” “இது கொத்தியம்மாவின் கை” என்று தன்னையறியாமலேயே தமிழில் உரக்கச் சொன்ன இரப்பர் முகப் பெண், தேரர் சொன்னதைக் கிராமவாசிகளிடம் சொல்லத் தொடங்கினாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த சனங்கள் மெல்ல எழுந்தார்கள். அவர்கள் சலசலத்துப் பேச ஆரம்பித்தார்கள். “அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று அந்தப் பெண்ணிடம் சாந்தம் நுரைக்கும் குரலால் சீவலி தேரர் கேட்டார். “இந்தக் கை எங்களது தாயார் கொத்தி அம்மாவுடையது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.” அடக்கத்துடன் புன்னகைத்த சீவலி தேரர் வானத்தை நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டுச் சொன்னார்: “கொத்தி தெய்வமல்ல! அது அலைவுறும் ஆவி. அதனால் அடையாளத் தடங்களை நீரிலோ நிலத்திலோ கல்லிலோ காற்றிலோ மேகத்திலோ ஒருபோதுமே பதிக்க முடியாது!” “தெரியும் ஹாமத்துருவெனே” என்று தலையசைத்த அந்தப் பெண் தொடர்ந்தாள்: “கொத்தி ஆவியாக இருக்கும் அதே வேளையில், அவள் காவல் தெய்வமாகவும் இருப்பாள். எங்களது குழந்தைகள் பிறக்கும் போது கொத்தி தெய்வமாக மாறி மருத்துவிச்சியை இயக்குவாள். குழந்தை பிறந்ததும் ஆவியாகிவிடுவாள். அவளுக்காக நாங்கள் ‘கொத்தி கழிப்பு’ செய்வோம்.” இப்போது, சீவலி தேரர் தனது வலது கையால் இடது கையைப் பற்றிக்கொண்டார். இன்னொரு கதையைச் சொல்வதற்கு அவர் தயாராகிறார் எனக் கிராம மக்கள் தெரிந்துகொண்டனர். "தலதாவம்சம் புனித நூலில் இருக்கும் செய்தியை உங்களுக்கு அறிவிப்பது என்னுடைய கடமையாகிறது சகோதரர்களே! தனது கடமையை நிறைவேற்றிய இளவரசி ஹேமமாலி கலிங்க தேசத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டிப் பயணித்தபோது, இரவான போழுதில் இந்தக் கைக்கல்லின் மீது தலையைச் சாய்த்து நின்றபடியே துயின்றாள். அவ்வேளையில் யட்சர்களின் நாகம் இரத்தின ஒளியை உமிழ்ந்தவாறே பறந்து வந்து அவளைத் தீண்டியதால், அந்தப் புனிதவதி இங்கேயே முகம் கருகி உயிர்விட்டாள். ஆகவேதான் அவள் கருணைத் தெய்வமாகவும், அதேவேளையில் தந்தை குஹசிவவிடம் சென்று சேர முடியாத துக்கத்தால் ஆவியாக அலைபவளுமாக இருக்கிறாள். இப் புனித இடத்தில் சம்புத்தரை இப்போது நிறுவியுள்ளதால், இனி ஹேமமாலி அமைதியுறுவாள். அவள் அமைதியுற்றால், இந்த நிலமெங்கும் அது பரவிச்செல்லும். இரப்பர் முகப் பெண் சீவலி தேரருக்கு முதுகைக் காட்டியவாறே உடலைத் திருப்பி, கூடியிருந்த கிராமவாசிகளைப் பார்த்து, தேரர் சொன்ன மிகுதிக் கதையைச் சொன்னாள். அதைக் கேட்டதும் சனங்களிடமிருந்து கேலியாக எழுந்த முனகல்கள் அப்படியே கூச்சல்களாக மாறத் தொடங்கின. அவள் சீவலி தேரரிடம் உடலைத் திருப்பிச் சொன்னாள்: “ஹாமத்துருவெனே! கொத்தி எங்கிருந்தோ இங்கு வந்தவளல்ல! முல்லைக் கடலோரக் குறுமணிலில் உதித்த கன்னி. சூலன் பரியாரியின் இளைய மகள். அவளைப் பற்றி எங்களிடம் நூறு கதைகளும் ஆயிரம் பாடல்களுமுள்ளன. மேலதிகமாக உங்களிடமிருந்து கதையும் சிலையும் எங்களுக்குத் தேவைப்படாது என்கிறார்கள் சனங்கள்.” சீவலி தேரர் மொட்டைப் பாறையில் கூடியிருந்தவர்களை ஊடுருவிப் பார்த்தார். ஏழ்மையும் நோயும் பரவிக் கிடந்த சனங்களாக அவர்களிருந்தார்கள். இளந்தாரிப் பருவ ஆண்கள் அதிகமாகயில்லை. சட்டையற்ற ஆண்களின் தேகங்கள் தழும்புகளாலும் காய்ந்து சொரசொரத்த தோலாலும் போர்த்தப்பட்டிருந்தன. அநேகமான பெண்களோ உதடுகளும் நகங்களும் அசிங்கமாக வெடிப்புற்று இரத்தச் சோகை பூத்திருந்தார்கள். குழந்தைகளோ வயிறுகள் வீங்கிக் கிடக்க, ஈர்க்குக் கால்களால் தள்ளாடி ஓடித்திரிந்தார்கள். தேரர் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து பேசலானார்: “என் சகோதர்களான உங்களது நம்பிக்கைகளில் தலையிடவோ மறுத்து நிற்கவோ நான் தகுதியற்றவன். எனினும், இந்த நாட்டின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையின்படி, இது புனிதப் பல்லைக் கொண்டுவந்த இளவரசி மரணித்த புனிதத் தலம். அவளது சரீரம் பட்டெழுந்த கல்லில் மஹா புத்தர் வீற்றிருந்து பாலிக்கும் கருணை உங்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் நித்திய சமாதானத்தைக் கொண்டுவரும்!” அந்தப் பெண் தேரரிடம் சொன்னாள்: “இது கொத்தியம்மா காலமாக உறைந்திருக்கும் மனை! நன்மையோ புன்மையோ அது கொத்தியம்மாவோடேயே எங்களுக்கு இருக்கட்டும். ஹாமத்துருவெனே! இந்தச் சிலையையும் தூக்கிக்கொண்டு இங்கிருந்து புறப்படுமாறு உங்களைத் தயவாக வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்.” இப்போது தேரரது சரீரம் நடுங்கத் தொடங்கியது. பொழுதும் செக்கலாகி இருள் கீழே கவியலானது. கடற்காற்று கூவென மொட்டைப் பாறையில் மோதித் திரும்பிற்று. சீவலி தேரர் பூமியை நோக்கிக் கண்களைத் தாழ்த்தியவாறே துயரோடு சொன்னார்: இந்தப் புத்தர் சிலையை அகற்றுமாறு நீங்கள் சொல்வது, நானும் நீங்களும் துக்கத்தைப் பெருக்குவதாகும். இந்த நாட்டில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் – ஏன் தலைநகரத்தில் கூட – எத்தனையோ முருகன் கோயில்களும், இயேசு மாடங்களும், மசூதிகளுமிருக்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு தமிழ் கிராமத்திலோ, முஸ்லீம் கிராமத்திலோ கருணையையும் சமத்துவத்தையும் போதிக்கும் புத்த பெருமானின் சிலையோ, பன்சாலையோ இருக்கக்கூடாது எனச் சொன்னால் அது தர்மமாகுமா?" அந்தப் பெண் கூடியிருந்த சனங்களிடம் பேசி விட்டுச் சொன்னாள்: “இந்தக் கைவிடப்பட்ட சனங்கள் சொல்வதைக் கேளுங்கள் துறவியானவரே! அங்கெல்லாம் பிற ஆலயங்கள் உண்டெனில், அங்கே வாழ்ந்தவர்களும் குடியேறியவர்களும் அவற்றை உண்டாக்கவும் வழிபடவும் செய்தார்கள். இந்தக் கிராமத்தில் ஒரேயொரு பவுத்தர் கூட வசிக்கவில்லையே. எங்கிருந்தோ வரும் நீங்கள் திடீரென இங்கேயொரு சிலையை நாட்டுவது எங்களது நிலத்தைக் களவாடும் சூதென்றே இந்த ஏழைச் சனங்கள் கருதுகிறார்கள்.” சீவலி தேரர் இப்போதும் சாந்தமாகவும் ஆனால், குரலில் உறுதி தொனிக்கவும் சொன்னார்: "சம்புத்தர் போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில், பூஸ பவுர்ணமியன்று இந்தத் தீவில் இறங்கி, தன்னுடைய அற்புதங்களால் இங்கிருந்த தீயர் யட்சர்களை அகற்றிவிட்டு, இந்த அழகிய நிலத்தை நமக்குத் தத்தம் செய்தார். அந்தத் தூயரின் திருவுருவை இங்கிருந்து அகற்றுவதே உங்களது முடிவான விருப்பமானால், என்னைக் கொன்றுவிட்டு, தாராளமாக நீங்கள் அதைச் செய்துகொள்ளுங்கள். கிராமத்துச் சனங்கள் இந்த நாளை மட்டுமல்லாமல், தேரரின் இந்தப் பதிலையும் எதிர்பார்த்தேயிருந்தார்கள். இங்கிருந்து நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கும் ஈச்சங்குடா கிராமத்தில், முதலில் இவ்விதமே ஒரு புத்தர் சிலை இரவோடு இரவாக ஸ்ரீ சுபூதி தேரரால் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நிலம் பண்டைய சகாப்தத்தில் புத்த விகாரையாகயிருந்தது என்ற கதையைப் பவுத்த மடாலயங்களும், அரசியல்வாதிகளும் கிளப்பிவிட்டார்கள். புத்தர் சிலையை அகற்றக் கோரிய வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, விசாரணையை நடத்தவிருக்கும் நீதிபதி ஒரு தமிழர் என்பதையறிந்த ஸ்ரீ சுபூதி தேரர் தீக்குளிக்கப் போவதாக அறிவித்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். தடுத்த இரண்டு பொலிஸ்காரர்களுக்கும் மண்ணெண்ணெய் நாற்றமடித்த கையால் கன்னத்தைப் பொத்தி ஆளுக்கொரு அறைவிட்டார். அந்த நீதிபதி கூட ‘நாட்டில் திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஸ்ரீ சுபூதி தேரரும் ஒரு காரணம்’ என்று தனிப்படக் குறைப்பட்டுக்கொண்டாராம். இப்போது ஈச்சங்குடாவில் பெரிய புத்த விகாரையே கட்டி எழுப்பப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுத்திருந்த முகிலன், மரியநேசன் என்ற இரண்டு இளைஞர்களும் ஈச்சங்குடா கிராமத்திற்குள்ளேயே நுழையக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக, ஸ்ரீ சுபூதி தேரருடன் சில துறவிகள் வந்து மொட்டைப் பாறையில் வழிபாடு செய்துவிட்டுப் போனதிலிருந்தே, இங்கேயும் இரவோடு இரவாகப் புத்தர் சிலை தோன்றக்கூடும் எனக் கிராம மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால், அதை எப்படித் தடுப்பது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியில் கொத்தியம்மனில் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, அவளையே நம்பியிருந்தார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் கைக்கல்லைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள். இப்போது சீவலி தேரர் பகலிலேயே புத்தர் சிலையை வைத்துவிட்டார். இப்போதும் சனங்கள் செய்வதறியாமல் தங்களுக்குள்ளேயே விவாதித்துப் பேசியும், ஒருவரையொருவர் குற்றம் சொல்லியும் தளர்ந்து போனார்கள். தாங்கள் கையாலாகாதவர்கள் என ஒருவரையொருவர் பழித்துக்கொண்டார்கள். இவர்களால் இந்தப் புத்தர் சிலையின் நகத்தைக் கூடத் தொட முடியாது. மீறித் தொட்டால், அது நாட்டு அதிபருக்கோ, இராணுவ ஜெனரலுக்கோ ஊனம் விளைவிப்பதற்குச் சமமான குற்றமாகும். சீவலி தேரர் எழுந்து நின்று, தனது இடது தோளில் மாட்டியிருந்த துணிப் பைக்குள்ளிருந்து அகல் விளக்கையும், நெய் குப்பியையும், தீப்பெட்டியையும் எடுத்தார். சூத்திரங்களை உச்சாடனம் செய்தபடியே, புத்தர் சிலையின் முன்னே அகல் விளக்கைத் தேரர் ஏற்றிவைக்கும்போது, சல்லடை இருளைப் பிளந்துகொண்டு காவல்துறையினரின் ஜீப் வண்டி கொத்திமலையை நோக்கி வந்தது. பொலிஸ் அதிகாரி மூச்சிரைப்போடு மொட்டைப் பாறையில் ஏறிவந்து, சீவலி தேரரைப் பணிந்து வணங்கினான். அவனோடு வந்திருந்த பொலிஸார் மொட்டைப் பாறையில் மண்டியிட்டுத் தேரரை வணங்கினார்கள். தேரரிடமிருந்து மீண்டும் ஓர் உணர்ச்சியற்ற வெற்றுப் புன்னகையே மொட்டைப் பாறையில் வீழ்ந்தது. இரப்பர் முகப் பெண் அங்கிருந்து காணாமற்போயிருப்பதைத் தேரர் அறிந்துகொண்டார். பொலிஸ் அதிகாரிக்குக் கொச்சைத் தமிழ் பேசத் தெரிந்திருந்தது. அவனது வாயிலிருந்து முதல் வசனமாக “எல்லோரும் இங்கிருந்து கலைந்து வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்ற உத்தரவே கொத்திமலைச் சனங்களுக்குக் கிடைத்தது. “புத்தர் சிலையை இங்கே வைக்க அனுமதிக்கக் கூடாது” என்று தைரியமாக ஒரு முதியவர் சொன்னபோது “பெரியவரே… இந்த இடம் உன்னுடையதா? நீ அதற்கான காணி உறுதிப் பத்திரம் வைத்திருக்கிறாயா? எங்கே காட்டு! வேறு யாரிடமாவது இந்த மொட்டைப் பாறைக்கான உரிமைப் பத்திரம் இருக்கிறதா?” எனக் கேட்டுப் பொலிஸ் அதிகாரி சீறிச் சினந்தான். பின்பு சற்றுத் தணிந்து “எதுவாகயிருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்! இப்போது கலகம் செய்யாமல் இங்கிருந்து கலைந்து போங்கள்!!” என்றான். நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த சீவலி தேரர் தனது குரலை உயர்த்திப் பொலிஸ் அதிகாரியிடம் சொன்னார்: “நீங்கள் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள். நான் இந்த மக்களிடம் பேசிக்கொள்கிறேன். எளியவர்களிடம் அதிகாரம் செய்வது பவுத்த நெறியல்ல. தயவுசெய்து இங்கிருந்து இறங்கிச் செல்லுங்கள்!” பொலிஸ் அதிகாரி தலையைத் தாழ்த்தி, வலது கையால் தனது நரைத்த மீசையை மறைத்துக்கொண்டு கிசுகிசுப்பாகத் தேரரிடம் சொன்னான்: “ஹாமத்துருவெனே! உங்களைச் சுற்றி நின்றிருப்பவர்கள் காட்டுச் சனங்கள். எந்தத் தர்மத்துக்கும் கட்டுப்படாத சண்டைக்காரர்கள். தருணம் பார்த்து சம்புத்தரின் சிலையைச் சல்லியாக உடைத்துக் கற்குவியலில் கரைத்துவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் சங்கைக்குரிய ஸ்ரீ சுபூதி தேரர் நிறுவிய சிலையொன்று ஏற்கனவே உடைக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் உங்களுடனேயே இருக்கத் தயவு செய்து நீங்கள் அனுமதிக்க வேண்டும்.” “ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறை வேறானது. அவர் போதிசத்துவரைப் பரப்புவதற்கு உங்களைப் போன்ற காவல் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியிருக்கிறார். நானோ முழுவதுமாகத் தம்மத்தையும் ததாகதரையும் இந்த மக்களின் இருதயங்களையுமே நம்பி நடந்துவருகிறேன். நான் நிறுவிய சிலைகளில் ஒன்றுகூட இதுவரை சேதப்பட்டதில்லை! அகற்றப்பட்டதில்லை!!” கடைசியில் சீவலி தேரரின் பிடிவாதமே வென்றது. அதிருப்தியுடன் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். போவதற்கு முன்பாக, அங்கே கூடிநின்ற சனங்களின் முகங்களில் பொலிஸார் வெளிச்சத்தைப் பாய்ச்சி, கைத்தொலைபேசியில் அவர்களைப் படம் பிடித்துக்கொண்டார்கள். அதன் பின்பு, மொட்டைப் பாறையிலிருந்த சனங்களும் தமக்குள் பேசியவாறே மெதுமெதுவாக அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அப்போது அங்கே இரப்பர் முகப் பெண்ணை தேரர் மறுபடியும் கண்டார். அவளை நோக்கி “இங்கே சம்புத்தரின் சிலை இருப்பதற்கு கிராமத்துச் சனங்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டார்களா சகோதரி?” என்று கேட்டார். அப்போது அந்த இரப்பர் முகப் பெண் தமிழில் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு நிதானமாக இருளுக்குள் நடந்து சென்றாள். அந்த வார்த்தை முப்பது வருடங்களுக்கு முன்பு சீவலி தேரர் கேட்ட அதே வார்த்தையாகயிருந்தது. அந்தக் கணத்தில் அதீத துக்கம் அவரை மூழ்கடித்துக் கீழே தள்ளிற்று. யாருமற்ற மொட்டைப் பாறையில் கால்களை நீட்டியவாறே, கைக்கல்லில் தளர்வாக முதுகைச் சாய்த்துக்கொண்டார். துக்கம் ஒரு பாறையாக அவரை அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. தன்முன்னே விரிந்திருக்கும் இருளைக் கண்களை விரித்துப் பார்த்தவாறே, சம்புத்தரைத் தியானித்து இரு உள்ளங்கைகளையும் மார்பில் வைத்துக்கொண்டார். அவரது மெல்லிய உதடுகள் “துக்கங் அரியசச்சங்” என்று முணுமுணுத்துக்கொண்டன. துக்கம் இவ்வுலகின் மாற்றமுறா நித்திய உண்மை என்பதுவே கவுதம புத்தருக்கு முதன் முதலாகச் சித்தித்த ஞானமாகும். 2 முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக, கண்டியிலுள்ள குண்டசாலை பவுத்த துறவு மடத்தில் இருந்தபோது, சீவலி தேரருக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகியிருந்தது. துறவின் உச்சநிலையை எட்டுவதைத் தவிர வேறு சிந்தனைகளே இல்லாத இளம் துறவியாகவே அவரிருந்தார். தம்மத்தின் நாற்பேருண்மைகளான துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திக்கான மார்க்கம் ஆகியவற்றைக் குறித்து இடையறாது சிந்திப்பது, மூத்த துறவிகளிடம் பாலி கானான் பாடம் கேட்பது, விமானவத்து, பீடவத்து போன்ற சுத்த பிடக குத்தக நிகாயகங்களை ஆராய்வது, சக்க சம்யுக்த சூத்திரத்தைக் கசடறப் புரிந்துகொள்ள முயல்வது போன்றவற்றில் அவர் மூழ்க்கியிருந்தபோது தான்; அவரைத் தேடி நெருங்கிய உறவினனும், பால்ய தோழனுமான மனோஹர சேனக வந்திருந்தான். சேனக அவரிடம், தான் ‘தேசப்பிரேமி ஜனதா வியபரயா’ இயக்கத்தைச் சேர்ந்தவன் எனச் சொன்னதை சீவலி தேரரால் முதலில் நம்பவே முடியவில்லை. சேனகவின் குடும்பம் கடுமையான வறுமையில் தத்தளிக்கிறது. சேனக பூனைக்குட்டியைப் போல அமைதியானவன். தவளையைப் போல மந்தமானவன். நாளொன்றுக்கு நான்கு வார்த்தைகளுக்கு மேலாகப் பேசிப் பழக்கப்படாதவன். அப்படியானவன் ஓர் ஆயுத இயக்கத்தின் முக்கிய உறுப்பினரென்றால் யாரால்தான் நம்ப முடியும். சேனக உறுப்பினராக இருந்த ‘தேசப்பிரேமி’ என்ற தலைமறைவு இயக்கம் அப்போது நாட்டையே கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை அந்த இயக்கம் தேடித் தேடிக் கொன்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய அமைதிப் படையின் இலங்கை வருகையையும் ஓர்மத்துடன் எதிர்த்து நின்ற அந்த இயக்கம் அம்பாறையிலும், திருகோணமலையிலும் இந்திய அமைதிப் படையின் மீது கண்ணிவெடித் தாக்குதல்களைச் செய்திருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு குண்டுத் தாக்குதலையும் நிகழ்த்தியது. தேசப்பிரேமி இயக்கத்தின் எந்தவொரு செயலையும் அணுவளவு கூட ஆதரிக்க இயலாதவர் சீவலி தேரர். அவரது இருதயத்திலே ஓயாமல் சுழன்றுகொண்டிருப்பதாக, அவர் நம்பும் அரத்த தம்மசக்கரமும் ததாகதரின் நெறிகளும் வன்முறையை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதவை. ஆனால், சேனக தன்னுடைய பேச்சால் சீவலி தேரரை வளைக்க முயன்றான். தேசப்பிரேமி இயக்கம் சேனகவின் நாவில் வசிய சூத்திரத்தைப் பொறித்திருந்தது: “ஹாமத்துருவெனே! கவனமாகவும் பொறுமையாகவும் கேட்க வேண்டும். நமது சிங்கள மக்களுக்காக அமைந்த ஒரேயொரு நிலம் இந்தச் சிறிய நாடே. இந்தத் தீவைக் கடல் நீர் மட்டும் சூழ்ந்திருக்கவில்லை. தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வரும் தமிழர்களால் ஆயிரம் வருடங்களாகவே அபாயமும் சூழ்ந்திருக்கிறது. சோழர்கள் படைகொண்டு வந்து எங்களுடைய குடிகளையும், தலைநகரத்தையும்,விகாரைகளையும், புராதனப் புத்தர் சிலைகளையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் அழித்தும் கொளுத்தியும் போட்டார்கள். அதே போன்றுதான் இப்போது இங்கே இந்திய இராணுவமும் நுழைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கமும் ஒத்துப் போய் இந்த நாட்டையே விற்றுவிட்டது. இந்தத் தேசத்துரோகத்தைத் தேசப்பிரேமிகள் எப்படி அனுமதிக்க முடியும்?” உண்மையிலேயே சீவலி தேரர் தனது நண்பன் சேனகவை மறுத்துப் பேச முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார். நாட்டின் அரசியல் நிலைமைகளைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதும் உண்மையே. தன்னுடைய புலன்கள் முழுவதையும் துறவையும் தம்மத்தையும் நோக்கி ஒருமுகப்படுத்தியே இந்தனை காலங்களாக அவர் வாழ்ந்திருக்கிறார். புத்தரின் தம்மத்தையும் அஹிம்சையையும் சேனகவுக்குப் புரியப்பண்ண சீவலி தேரர் எத்தனித்தபோது, சேனக மிக இலகுவாக தேரரை நிலைகுலையச் செய்தான்: “இறைமையுள்ள பவுத்த நாடொன்று இருந்தால்தான் தம்மத்தை காப்பாற்ற முடியும்! அதற்காகவே இலங்கையைக் கவுதமர் தேர்வு செய்தாரென்பதை சீவலி தேரருக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.” தேசப்பிரேமி இயக்கம் செய்யவிருக்கும் அடுத்த நடவடிக்கைக்கு சீவலி தேரர் உதவாவிட்டால், நாட்டைப் பெரும் ஆபத்து அழித்துப்போடும் என்ற பீடிகையுடன் சேனக திட்டத்தை விளக்கினான். “பெப்ரவரி, எட்டாம் தேதியன்று கண்டி புனிதத் தந்த தாது விகாரைக்குள் நுழைவதற்குத் தேசப்பிரேமி இயக்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் புனித விகாரைக்கோ, பவுத்த துறவிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு ஆபத்தும் நிகழாது என்று முன்கூட்டியே உத்தரவாதம் கொடுத்துவிடுகிறேன். எங்களுடைய திட்டம் மிக இலகுவானதும் வெற்றியளிக்கக் கூடியதுமாகும். தேசப்பிரேமியின் பெண் தோழர்கள் இருவர் வெள்ளை ஆடைகளை அணிந்து, மலர்களால் நிறைந்த தட்டுகளுடன் வழிபாட்டுக்குச் செல்வதுபோல விகாரைக்குள் நுழைவார்கள். மகர தோரண முகப்பில் காவல் கடமையில் இருக்கும் பொலிஸார் புனிதருக்காக எடுத்துச் செல்லப்படும் மலர்களைத் தொடவோ சோதனையிடவோ போவதில்லை. ஏற்கனவே விகாரைக்குள் பக்தர்களுடன் கலந்து நின்றிருக்கும் எங்களுடைய இரண்டு ஆண் தோழர்களின் அருகே இந்த மலர்த் தட்டுகள் சென்றவுடன், மலர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைத்துப்பாக்கிகளை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சம்புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டிருக்கும் பேழையை எங்களது தோழர்கள் கவர்ந்து வந்துவிடுவார்கள்.” சேனக சொன்னதைக் கேட்டதும் சீவலி தேரரின் உடல் குளிர்ந்து நடுங்கிவிட்டது. “என்னவொரு கீழ்மையான முட்டாள் திட்டம்” என்று அவரது மெல்லிய உதடுகள் முணுமுணுத்தன. “கிடையாது ஹாமத்துருவெனே! இதுவொரு புத்திசாலித்தமான உயர்ந்த அரசியல் திட்டம். ஆட்சியாளர்கள் சம்புத்தரின் புனிதப் பல்லைப் பாதுகாக்கும்வரை தான் மக்கள் அவர்களை நம்புவார்கள். இந்தத் தீவின் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகால அரசியல் வரலாறே இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கும் வரலாறுதான். இந்தத் தேசத்தில் மன்னர்களிடையே நிகழ்ந்த ஒவ்வொரு போரும் இந்தப் புனிதப் பல்லுக்காக நடத்தப்பட்டதுதான். வெள்ளையர்களுக்கு எதிராகக் கண்டி மன்னன் கடைசிவரை போரிட்டு நின்றதற்கும், ரதல பிரபுக்களின் சதியால் அவன் வீழ்த்தப்பட்டதற்கும் காரணம் இந்தப் புனிதப் பல்லே. இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கத் துப்பில்லாதவர்களை இந்நாட்டு மக்கள் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்நாட்டு மக்கள் கூடிக் கலகம் செய்யும் தருணத்திற்காக ஏங்கிக் கிடப்பவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகத்தில் கண்டிப்பாக இறங்குவார்கள். புனிதப் பல்லை வைத்திருக்கும் தேசப்பிரேமி இயக்கமே ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கும். அதுவே மாற்றமுறாத நியதி எனும் ஆரிய சத்தியம்!” புனிதப் பல்லை ‘தேசப்பிரேமி’ இயக்கம் எடுத்துச் செல்லப்போகிறது என்ற விஷயத்தை சீவலி தேரரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவர்கள் அதை என்ன செய்வார்கள்? பேழையின் புனிதத்தன்மையை இவர்களால் காப்பாற்ற முடியுமா? குப்பைமேட்டில் புதைத்து வைப்பார்களா? பேழையுடன் கடலில் விடுவார்களா? அசிரத்தையாக எங்காவது தொலைத்து இந்நாட்டுக்கும் தம்மத்துக்கும் அபகீர்த்தியைக் கொண்டுவருவார்களா? சீவலி தேரர் இதையெல்லாம் சேனகவிடம் கேட்டேவிட்டார். “இங்கேதான் சங்கைக்குரிய சீவலி தேரரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. புனிதப் பல்லை கெரில்லாக் குழுவான நாங்கள் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. புனிதப் பல்லை வைத்திருக்கும் எங்களது அணியொன்று முற்றாக அழிக்கப்பட்டால், புனிதப் பல்லுக்கு என்ன நிகழும் என்பதும் நமக்குத் தெரியாது. என் நண்பனும், நம்பிக்கைக்குரியவனும், தம்மத்தின்மீது அளவற்ற பற்றுள்ளவனுமான சீவலி தேரர் தான் தகுந்த காலம் வரும்வரை புனிதப் பல்லைப் பூஜித்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.” இதைக் கேட்ட சீவலி தேரர் மனக் குழப்பத்துடன், ஆழ்ந்த யோசனைக்குள் செல்லலானார். ஆனால், சேனகவோ “சிந்திக்கவெல்லாம் நேரமில்லை. சீவலி தேரரின் சம்மதத்தைப் பெற்றாகிவிட்டது என்ற நற்செய்தியுடன் எங்களது தலைமைத் தோழரை இன்றிரவே சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இப்போதே தாமதமாகிவிட்டது. தன்னுடைய புனிதக் கடமையை ஏற்றுக்கொள்வதற்கு வணக்கத்திற்குரிய சீவலி தேரர் மறுத்துவிட்டார் என்ற அவச் செய்தியுடன் நான் இங்கிருந்து செல்ல முடியாது!” என்றான். மனோஹர சேனகவுடைய, வசியச் சூத்திரம் பொறிக்கப்பட்டிருந்த நாவு தங்கத் தகடுபோல சீவலி தேரரின் முன்னே ஒளியாகத் துடித்தது. 3 தேசப்பிரேமி ஜனதா வியபரயாவின் திட்டப்படி, சரியாகப் பிற்பகல் 02:30 மணிக்கு, கண்டி புனிதத் தந்த தாது ஆலயத்தில் நடவடிக்கை தொடக்கப்படும். அங்கிருந்து எடுத்துவரப்படும் புனிதப் பல் மகாவலிகங்கைக் கரையில் சேனகவிடம் ஒப்படைக்கப்படும். கங்கைப் பாலத்தை சேனக மோட்டார் சைக்கிளில் கடந்து, பிற்பகல் மூன்று மணிக்கு நரப்பிட்டிய சந்தியை அடைந்துவிடுவான். அங்கே சீவலி தேரர் காத்திருக்க வேண்டும். புனிதப் பேழை தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதும், பேழையை அவர் தரித்திருக்கும் சீவர ஆடைக்குள் மறைத்துவைத்து, குண்டசாலை பவுத்த மடாலாயத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைக்க வேண்டும். நரப்பிட்டிய சந்திக்கு பிற்பகல் 02:55 மணிக்கு சீவலி தேரர் வந்துவிட்டர். அவர் தங்கியிருக்கும் மடாலயத்திலிருந்து அய்ந்து நிமிட நடை தூரத்திலேயே அந்தச் சந்தி இருந்தது. அங்கிருக்கும் சிறிய படிப்பகத்திற்குள் வைத்துத்தான் புனிதப் பேழை கைமாற்றப்படும். சேனக துல்லியமாகக் கணித்தவாறே அந்த நேரத்தில் படிப்பகத்தில் ஒருவருமில்லை. அங்கே தனியாக உட்கார்ந்திருந்து செய்தித்தாள்களைப் புரட்டிய சீவலி தேரர் உள்ளூறப் பதற்றமுற்றிருந்தாலும், தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றுக் கடமையைச் சுமப்பதால் அவரது உள்ளத்தில் அபரிதமான கிளர்ச்சியுமிருந்தது. சேனகவின் தங்க நாவுக்குத் தான் கட்டுப்பட்டிருப்பதை அவரால் இன்னும்தான் நம்ப முடியவில்லை. புனிதப் பேழையைப் பாதுகாக்க சீவலி தேரரிடம் தெளிவான திட்டமிருந்தது. தங்கத்தால் பூஜை மணி வடிவத்தில் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கவசக் கூட்டுக்குள்ளே வைக்கப்பட்டிருக்கும் புனிதப் பல்லிருக்கும் சிறு பேழை உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதே. சீவலி தேரரின் அறைச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் இரும்புக் கதவுள்ள புத்தக அலுமாரிக்குள் பேழையைப் பத்திரமாக வைத்துவிடலாம். அலுமாரியின் சாவியை சீவர ஆடையில் முடிச்சிட்டு எப்போதும் கூடவே வைத்துக்கொள்ளலாம். மணி மூன்றைக் கடந்த போது, தேரரின் இருதயத்திலிருந்த அரத்த தம்மசக்கரம் நின்று போயிற்று. பதற்றம் மெல்ல மெல்ல அச்சமாகி, அது கனத்த துக்கமாகித் தேரரை மூடிற்று. புனிதப் பல்லுடன் சேனக வரவேயில்லை. ஆனால், நரப்பிட்டிய சந்தியில் தேரரைச் சூழவர ஒரு செய்தி வேகமாகவும் கோபமாகவும் பரவிற்று: ‘புனிதத் தந்த தாது விகாரையை, மாறுவேடத்தில் வந்த தமிழ்ப் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். முதலில் அவர்கள் காவல்துறையினரில் இருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால், காவல்துறையினர் துரிதமாகச் செயற்பட்டு, எதிர்த் தாக்குதலை நிகழ்த்திப் பயங்கரவாதிகளில் ஓர் ஆணையும் பெண்ணையும் கொன்றுவிட்டார்கள். இன்னொரு ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் காயங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புனிதப் பல் பாதுகாப்பாகவேயுள்ளது.’ முதலில், அந்தச் செய்தி உண்மையாகவே இருக்கட்டும் என்றுதான் சீவலி தேரரின் மனம் விரும்பியது. இந்தத் தாக்குதலை தேசப்பிரேமியினர் செய்யாமல் தமிழர்கள் செய்திருந்தால், தன்மீதிருக்கும் மலைபோன்ற பாரம் காற்றாக வீழ்ந்துவிடும் என்பது போலத் தேரர் கற்பனை செய்தார். ஆனாலும், அவரது அறிவு முற்றாக மழுங்கிவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாகத் தேசப்பிரேமிகளே இந்தத் தாக்குதலைச் செய்திருப்பார்கள் என்றே அவரது அறிவு சொன்னது. மறுநாள் அதிகாலையில் சீவலி தேரர் விழித்தபோது; இன்று யாராவது, ஏதாவதொரு சேதியைத் தன்னிடம் கொண்டுவரக் கூடும் என்றொரு உள்ளுணர்வு அவரை அருட்டிப் போட்டது. செய்தித்தாளை வாங்கிப் படித்தால், நேற்றைய தாக்குதல் குறித்து ஏதாவது விபரம் தெரியும் என்று நினைத்துக்கொண்டே, ஆட்கள் நடமாட்டமற்ற அந்தப் பொழுதில் அவர் தனியராக நரப்பிட்டிய சந்திக்கு வீதியோரமாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ புறப்பட்டு வந்த சிறிய கறுப்புநிற வண்டியின் பின்புறக் கதவு திறந்துகொள்ள, சீவலி தேரர் உள்ளே இழுத்துப் போடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டார். தன்னைக் கடத்தியிருப்பது தேசப்பிரேமி இயக்கமே என்றுதான் முதலில் சீவலி தேரர் நினைத்தார். ஆனால், வாகனத்தினுள்ளே ஒலித்துக்கொண்டிருந்த தொலைத்தொடர்புக் கருவிகளின் பேச்சுச் சத்தம், அவர் அரச புலனாய்வுத்துறையினராலேயே கடத்தப்பட்டிருக்கிறார் என்பதை அவருக்கு மெல்ல மெல்லத் தெளிவுபடுத்திற்று. அக்கணத்திலேயே, புலனாய்வுத்துறையினரிடம் எதையும் மறைத்துவைத்துப் பேசக்கூடாது எனத் தேரர் மனதில் உறுதியெடுத்துக்கொண்டார். புனிதப் பல்லை மறைத்துவைக்க நினைத்ததற்கு இதுவே தகுந்த பிராயச்சித்தம் என்று அவரது மனதின் அரத்த தம்மசக்கரம் உரைத்தது. ஒருநாள் தம்மத்திலிருந்து வழுவியதற்காக, தன்னுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பிராயச்சித்தம் செய்துகொண்டேயிருக்கப் போவதாகவும் அவர் பிரதிக்ஞை கொண்டார். ஆனால், புலனாய்வாளர்களுக்கு சீவலி தேரரிடமிருந்து எந்த உண்மையுமே தேவைப்படவில்லை. ஏற்கனவே மனோஹர சேனக தன்னுடைய தங்க நாக்கால் எல்லாவற்றையும் புலனாய்வுத்துறையினரிடம் வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தான். புலனாய்வுத்துறையினர் தன்னை எங்கே கடத்திச் சென்றார்கள் என்பது இப்போதுவரை சீவலி தேரருக்குத் தெரியாது. சீவலி தேரரின் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட போது, போறணை போன்றிருந்த ஓர் அறைக்குள் அவரிருந்தார். பாழடைந்து கிடந்த அந்த அறைக்குச் சாளரங்கள் ஏதும் கிடையாது. அறையின் மூலையில் ஒரு கோணலான மலக்குழி திறந்து கிடந்தது. அதிலிருந்து கிளம்பிய பிணநாற்றம் அறையை நிறைத்திருந்தது. கீழிருந்து வரும் வேதனைக் கூக்குரல்களை வைத்துப் பார்க்கையில், இதுவொரு மாடி அறையாகத்தான் இருக்கவேண்டும். அறையில் ஊசலாடும் மின்விளக்குக்குரிய பொத்தான் அறைக்கு உள்ளேயில்லை. அறையிலிருந்த ஒரேயொரு துருப்பிடித்த நாற்காலியில் தேரரை அமர வைத்துவிட்டுப் புலனாய்வுப் பொலிஸார் வெளியேறினார்கள். இரும்பாலான அறைக்கதவை மூடியதும், வெளியே தாழிடும் சத்தம் தேரருக்குக் கேட்டது. அடுத்த விநாடியே மின்விளக்கும் அணைந்துபோக, தேரர் மை இருளுக்குள் தோய்ந்தார். குத்தக நிகாயகமான பீடவத்துவை அவரது மனம் நினைக்கலாயிற்று. மானுடப் பிறவியில் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக, நித்திய இருளாகயிருக்கும் பேய்களது உலகில் வாழ விதிக்கப்பட்டவர்களது கதைகளைச் சொல்வது பீடவத்து. துக்கத்தைத் தவிர வேறு உணர்வுகள் சீவலி தேரரிடம் இருக்கவில்லை. துக்கம் அவரை மலைப்பாம்பு போலச் சுற்றிப்பிடித்து நொறுக்கியது. அப்போது அந்த அறையில் ஒரு பல்லி சொல்வதைத் தேரர் கேட்டார். அந்தச் சத்தம் அவரது இடதுபுறமிருந்தே வந்தது. ஆனால், அது எத்திசை என்பதைத் தேரரால் அறிய முடியாது. இன்னொரு முறை பல்லி சொன்னால் கேட்பதற்காகத் தேரர் தன்னுடைய முகத்தை இடதுபுறம் திருப்பிக் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டார். அப்போது அறைக்குள் ஒளி பிரகாசித்தது. பல்லி சுவரில் குத்தென இறங்கி, சுவரிலேயே மறைந்தும் போனது. அறைக்கதவு திறக்கப்பட்டு மறுபடியும் மூடப்பட்டபோது, கைக்குட்டையால் தனது மூக்கைப் பொத்தியவாறே புலனாய்வுத்துறை உயரதிகாரி அமரக்கூன் உள்ளே நின்றிருந்தான். கட்டான இளந்தாரியான அவனுக்கு வயது முப்பதிற்கும் குறைவாகவேயிருக்கும். சிவந்த தேகமும், இடுங்கிய கண்களும், அடர்த்தியான கம்பித் தலைமுடியும் கொண்டிருந்த அமரக்கூனில் சீன முகச் சாயலிருந்தது. தன்னெதிரே அமைதியாக நின்றுகொண்டு, தன்னுடைய கண்களையே உற்றுப் பார்க்கும் அமரக்கூனின் கண்களை நாற்காலியில் அமர்ந்தவாறே சீவலி தேரர் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். தேரரது பார்வை அவர் எத்தகைய பிராயச்சித்தத்திற்கும் தயாராகவேயிருக்கிறார் என்பது போலிருந்தது. அமரக்கூன் தன்னுடைய ஒரேயொரு கேள்வியைக் கேட்டான்: “ஹாமத்துருவெனே! உமக்கு சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்ற மனிதனைத் தெரியுமா?” அந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போலத்தான் சீவலி தேரருக்குத் தோன்றியது. அந்தப் பெயரைச் சேனக தன்னிடம் சொல்லியிருப்பானோ என்று தேரர் யோசிக்கும் போதே, அமரக்கூன் சொன்னான்: “சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்னுடைய இரத்தவழி மூதாதை. கண்டி புனிதத் தந்த தாது விகாரையை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தன்னுடைய வலது காலைத் தூக்கி, சீவலி தேரரின் மார்பில் அமரக்கூன் ஓங்கி மிதித்தான். நாற்காலியோடு சாய்ந்து பின்புறமாகத் தரையில் வீழ்ந்த சீவலி தேரரின் மழிக்கப்பட்ட தலை பந்து போலத் தரையில் மோதித் துள்ளியது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ் தேரரின் இடது மார்பில் அச்சாகப் பதிந்து போயிற்று. தன்னிடம் புலன் விசாரணை செய்வதல்ல அமரக்கூனின் நோக்கம், மாறாகத் தன்னைச் சிறுகச் சிறுகப் பழி தீர்ப்பதே அவனது நோக்கம் எனச் சில நாட்களிலேயே சீவலி தேரர் புரிந்துகொண்டார். தன்னை ஒரு சாட்சியாக அல்ல, குற்றவாளியாகக் கூட நீதிமன்றத்தில் அவன் நிறுத்தப் போவதில்லை என்பது அவருக்குத் தெளிவாகிவிட்டது. தேரர் கடத்தப்பட்டதும் எவருக்குமே தெரியாது. தேரர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அமரக்கூனைத் தவிர வேறு யாருமே வரவும் முடியாது. சீவலி தேரருக்கு எப்போதாவது கிடைக்கும் உணவையும் நீரையும் கூட அமரக்கூனே கொண்டுவருவான். அவன் வராத நாட்களில் உபவாசம் இருப்பதைத் தவிர தேரருக்கு வேறு வழியில்லை. அமரக்கூன் எதையாவது விசாரித்துத் தொலைத்தால் கூட சீவலி தேரருக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தன்னுடைய பாவத்தை அவன் முன்னே இறக்கி வைத்துவிடுவார். ஆனால், முதல் சந்திப்பில் பேசியதை விடுத்து, வேறெப்போதும் தேரரிடம் அமரக்கூன் பேசியதேயில்லை. ஆனால், ஓயாமல் உத்தரவுகளைப் பிறப்பிப்பான். ஒவ்வொரு உத்தரவும் தேரருக்குச் சிறுமையையும் வலியையும் கொண்டுவரும். அவர் அந்த அறையில் அமரக்கூனோடு வருடங்களைக் கழிக்க வேண்டியிருந்தது. அமரக்கூனின் கையால் சீவலி தேரர் வதைபட்ட இரத்தம் தெறித்துத் தெறித்து அந்த அறையின் அழுக்குச் சுவர்கள் மினுங்கும் செந்நிறமாக மாறிக்கொண்டிருந்தன. அமரக்கூனின் தடித்த தோல் இடுப்புப் பட்டியும், முள்ளுத் தடிகளும் விளாறி விளாறித் தேரரின் உடலெங்கும் ஏற்பட்ட பச்சைப் புண்களிலிருந்து வடியும் ஊனாலும் சீழாலும் தரை செம்மஞ்சள் நிறமேறிற்று. தேரர் குளிக்கவோ, மழிக்கவோ அனுமதிக்கப்படவேயில்லை. சிக்கேறிய கத்தை முடிகள் தேரரின் தோளைத் தொட்டன. முகத்தில் வளர்ந்திருந்த முடியால் முகத்தின் அரைப் பகுதி மறைந்துபோனது. முன்வாயில் சில பற்கள் தெறித்து விழுந்துவிட்டன. ஒவ்வொரு பல்லையும் அமரக்கூன் கைக்குட்டையில் சுற்றி தன்னோடு எடுத்துச் சென்றான். தேரரும் சளைத்தவரல்ல. எந்த வேளையிலும் அவர் அமரக்கூன் முன்னே கண்ணீர் விடவோ, ஓலமிடவோ செய்ததில்லை. சகிப்புத்தன்மையின் உச்சமாகயிருப்பதே அரஹந்தப் பாதை. பொளியப்படும் கருங்கல் போன்று தேரரின் துறவு மனம் சீராகச் செதுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள், சீவலி தேரர் பேசிய வார்த்தைகள் தான் அவரது நித்திய துக்கத்திற்குத் திறவுகோலாகியது. அந்த நாளுக்குப் பின்பு, துயரற்ற ஒரேயொரு விநாடிகூட சீவலி தேரருக்கு இருந்ததில்லை. அன்றைய இரவில்தான் அமரக்கூன் “இது உமக்குப் பொருத்தமற்றது” என்றவாறே முதன்முறையாக தேரரின் சீவர ஆடையைக் களையத் தொடங்கினான். அப்போதும் சலனமற்று நின்றிருந்த சீவலி தேரர் உண்மையிலேயே அமரக்கூனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “புனிதத் தந்த தாது ஆலயத்தில் இரண்டு பொலிஸ்காரர்களைச் சுட்டுக்கொன்ற மாவீரர் கூட்டத்தைச் சேர்ந்த நீர் என்முன்னே பட்ட மரம்போல நிற்கலாமா?” எனக் கேட்டவாறே, அமரக்கூன் சீவலி தேரரை முழு அம்மணமாக்கியபோது, தேரர் அமரக்கூனின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னார்: “தசசீலத்தைக் கடைப்பிடிக்கும் துறவி இழப்பதற்குத் தம்மத்தைத் தவிர ஏதுமற்றவன்.” இந்த வார்த்தைகள்தான் அமரக்கூனைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அவன் உடனேயே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான். அறைக்கதவைக் கூடத் தாழிடாமல், அவன் குதித்து மாடிப்படிகளில் ஓடிச் சென்றான். தேரர் தரையில் கிடந்த சீவர ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். இப்போது மாடிப்படிகளில் காலடியோசைகள் கேட்டன. மறுபடியும் அறைக்குள் நுழைந்த அமரக்கூன், கைகளில் விலங்கிடப்பட்ட ஒரு பெண்ணைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான். அந்தப் பெண்ணுக்கு இருபது வயதிருக்கும். மார்பிலிருந்து தொடைகள் வரை, நாற்றமடிக்கும் அழுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாள். அவள் இயல்பிலேயே குண்டான உடல்வாகு உள்ளவளாக இருக்க வேண்டும். கைகளிலும் கால்களிலும் தசை வழிந்தது. தாடையிலும் தசை இலேசாகத் தொங்கியது. அவளது புழுத்துக்கிடந்த தலைமுடியிலிருந்து இரத்தவாடை கசிந்தது. அவளின் தடித்த உதடுகள் புண்ணாகி, அயறு படர்ந்திருந்தது. அவளது கண்கள் வியப்புடன் தேரரை நோக்கியிருந்தன. அமரக்கூன் அந்தப் பெண்ணிடம் சில வார்த்தைகளைச் சொன்னான். அவற்றில் ஒரு வார்த்தை கூட சீவலி தேரருக்குப் புரியாது. ஆனால், அமரக்கூன் தமிழில் பேசுகிறான் என்பது மட்டும் தேரருக்குத் தெரிந்தது. அந்தப் பெண் பாவாடையை அவிழ்த்துத் தரையில் நழுவவிட்டாள். சீவலி தேரர் தன்னுடைய கண்களை இறுக மூடிக்கொண்டார். இந்தக் கண்களில் அமரக்கூன் காய்ச்சிய எண்ணெயை ஊற்றினால்கூட இவை திறக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். அறைக்கதவை உள்ளிருந்து மூடும் சத்தம் கேட்டது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ்கள் தன்னை நெருங்கி வருவதையும் சீவலி தேரர் உணர்ந்தார். தனது மார்பில் உள்ளங்கைகளைப் பதித்தவாறே அவர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். தேரரை நெருங்கிய அமரக்கூன் அவரது இடதுபுறச் செவிமடலைப் பற்றியிழுத்து, தேரரின் காதுக்குள் கிசுகிசுத்தான்: "தசசீலரான துறவி சீவலி பால தேரர் இந்தப் பெட்டை நாயைத் தனது ஆண்மையால் அடக்க வேண்டும்! அந்தக் கணத்தில் சீவலி தேரரின் உள்ளத்தில் அச்சம், கோபம், பச்சாதாபம் என எந்த உணர்வும் எழவில்லை. முழுவதுமாக அவர் துக்கத்தால் மட்டுமே போர்த்தப்பட்டிருந்தார். அவர் தனது உடலை மரத்துப்போகச் செய்வதற்கு முயன்றார். தன்னையொரு காய்ந்த விறகாகக் கற்பனை செய்துகொண்டார். அப்போது அந்தப் பெண் தன்னுடைய விலங்கிடப்பட்ட கைகளைச் சீவலி தேரரின் இடது முழங்காலில் வைத்து, தமிழில் ஒரு வார்த்தையைச் சொன்னாள். தன்னுடைய முழுப் புலன்களையும் அடக்கி மரக்கட்டையாவதற்கு முயன்றுகொண்டிருந்த தேரரின் செவியில் அந்த வார்த்தை தைத்து அங்கேயே நிலைத்தது. அமரக்கூன் மறுபடியும் தேரரின் ஆடையைக் களைந்தபோது கூட, தேரர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. அவரது உடல் மரத்துக்கொண்டே வந்தது. நிர்வாணியான தேரரை இழுத்து அமரக்கூன் குப்புறப் படுக்க வைத்தபோதும் தேரர் கண்களைத் திறந்தாரில்லை. அவர் துக்கத்தின் உன்மத்தத்துள் ஆழ்ந்துகொண்டிருந்தார். சீவலி தேரர் அந்தப் பெண்ணின் மீதே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவள் உடல் வலியால் முனகுவது தேரருக்குக் கேட்டது. அவளது முலைக் கும்பங்கள் தேரரின் ஒட்டிய வயிற்றின் கீழே சப்பளிந்து கிடந்தன. தேரர் மூளையில் தீயின் வாசனையை உணர்ந்தார். அமரக்கூனின் கண்முன்னே இரண்டு அழுக்குப் பிண்டங்கள் அசைவற்றுக் கிடந்தன. அமரக்கூன் தமிழில் ஏதோ கத்தியபோது, அந்தப் பெண் தனது சதைப்பிடிப்பான கால்களால் தேரரின் கால்களைப் பின்னிக்கொண்டாள். அவளது விலங்கிடப்பட்ட கைகள் தேரரின் நிர்வாணத்தைப் பற்றின. தேரர் சம்புத்தரைத் தியானித்து தனது மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்தார். அப்போது, அமரக்கூனின் கையிலிருந்த தடித்த தோல் இடுப்புப் பட்டி தேரரின் புட்டத்தில் சடசடவென விளாறத் தொடங்கியது. தேரர் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டே, வலியைச் சத்தமேயில்லாமல் தாங்கிக்கொண்டார். புட்டத்தில் முதல் துளி இரத்தம் துளிர்த்தபோது, சீவலி பால தேரருக்கு விந்தும் வெளியாகியது. அந்தக் கணத்திற்குப் பின்பு அமரக்கூன் அந்த அறைக்குள் வருவதில்லை. உணவையும் நீரையும் யார் யாரோ எடுத்து வருகிறார்கள். சீவலி தேரரைக் குளிக்க வைத்து, புதிய வேட்டியும் சட்டையும் கொடுத்தார்கள். தேசப்பிரேமி இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், சீவலி தேரர் சீக்கிரமே விடுதலை செய்யப்படலாம் என்றும் அவர்களில் ஒருவன் தேரருக்கு இரகசியமாகச் சொன்னான். அவற்றைப் பற்றியெல்லாம் சீவலி தேரர் அக்கறை கொள்வதில்லை. தன்னுடைய சிந்தனை முழுவதையும் அவர் சம்புத்தரிடமே வைத்திருந்தார். மாளாத துக்கத்தால் அவர் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும், துறவு நிலையிலிருந்து தான் விலகியதாக அவர் ஒருபோதுமே கருதவில்லை. அந்தப் பெண் குறித்து இந்த முப்பது வருடங்களில் அவர் யாருடனும் பேசியதுமில்லை. அந்தப் பெண் சொன்ன வார்த்தை மட்டும் அவருடன் எப்போதுமிருந்தது. 4 மொட்டைப் பாறையில் படுத்திருந்த சீவலி தேரர் விண்மீன்களை வைத்து நேரத்தைக் கணக்கிட முயன்றார். நடுநிசி தாண்டியிருக்கலாம். கடற்காற்று அவ்வப்போது கைக்கல்லில் இருந்த அகல் விளைக்கை அணைப்பதாகவும், தேரர் திரும்பவும் விளக்கை ஏற்றுவதுமாகத் தூக்கமற்றிருந்தார். அவரது எண்ணங்கள் கட்டற்றுப் பெருகி இருளில் சிதறிக்கொண்டிருந்தன: ‘புனிதப் பல் இந்தத் தீவில் இருக்கும் வரைதான் நாட்டுக்குத் தீங்கு நேராது. நாட்டை மீண்டும் அபாயம் சூழாதவாறு, ஒவ்வொரு கடற்கரையிலும், மலையிலும், கல்லிலும், மரத்திலும், தெருவிலும் சம்புத்தரை வைக்க வேண்டும். நான் இங்கு இருக்கும்வரை, இதோ இந்தச் சம்புத்தர் சிலையில் கை வைக்க யாருக்கும் துணிவு வராது. சீக்கிரமே இங்கேயொரு சிறிய பன்சாலையைக் கட்டி எழுப்பிவிட வேண்டும். அதற்கான வழியை இப்போது நான் அறியமாட்டேன்…’ கூவென வந்த காற்று இன்னொருமுறை விளக்கை அணைத்துத் திரும்பியது. சீவலி தேரர் இருளில் தடுமாறி நடந்து சென்று, திரும்பவும் அகல் விளக்கை ஏற்றிய போது, கைக்கல்லில் பதிந்துள்ள விரல் குழியில் ஒரு பல்லி ஒட்டியிருப்பதைப் பார்த்தார். பல்லி இருப்பது தென்மேற்குத் திசையென தேரர் கணித்தார். அவர் கையில் விளக்கோடு பல்லியை நோக்கி மெல்லக் குனிந்தார். தென்மேற்குத் திசையிலிருந்து பல்லி சொன்னால், எடுத்த கருமம் நிறைவேறும் என்று பலன் என்பதைத் தேரர் அறிவார். அவர் பல்லி சொல்வதற்காகக் காதுகளைக் குவித்துக் காத்திருந்தார். அந்தப் பல்லியோ ஒன்றும் சொல்லாமலும், அசையாமலும் அங்கேயே சித்திரம் போல ஒட்டிக்கொண்டிருந்தது. சீவலி பால தேரர் பல்லிக்கு நெருக்கமாக விளக்கை எடுத்துச்சென்று “ஒரேயொரு சத்தமெழுப்பு! இலங்கைத் தீவு முழுவதற்கும் உனக்கு அரசுரிமை அளிக்கிறேன்” என்றார். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account