[] 1. Cover 2. Table of contents நமக்கான தமிழிலக்கியக் கொள்கை   ஞானி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/tamil_literature_policy மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : தாரா - thara.nakshatraa@gmail.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Thara - thara.nakshatraa@gmail.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை ‘நமக்கான இலக்கிய கோட்பாடு’ என்பது இந்த நூலில் என் கட்டுரைகளின் தொகுப்பு. நம் தமிழிலக்கிய மாணவர்களும் ஆய்வாளர்களும் நெடுங்காலத் தமிழிலக்கியத்தை - தற்காலத் தமிழிலக்கியத்தையும் தான் - ஆழமாகப் பயில்வதற்கும் நம் காலச் சூழலை ஒட்டி செறித்துக் கொள்வதற்கும் தேவையான கொள்கை அல்லது கோட்பாடு எதுவோ அதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன். கடந்த 50 ஆண்டுகளுக்கிடையில் மிகச்சிறந்த தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் வழியாக நான் தமிழிலக்கியம் கற்றேன் என்பதோடு வரலாறு, மெய்யியல், இலக்கியத் திறனாய்வு என்று நான் தேடித் தேடிக் கற்ற, என் நண்பர்களோடு விரிவாக விவாதித்தும் கற்ற எனக்குள், எனக்கான மார்க்சிய நெறியின் வழியே செறித்துக் கொண்ட தமிழிலக்கியக் கொள்கையை எனக்கானக் கொள்கை என்பதாகவே நான் கருதவில்லை. நம் கால வரலாறு மற்றும் தமிழிலக்கியச் சூழலில் எத்தனையோ அறிஞர்கள், நண்பர்கள், நூல்கள் மூலம் எனக்குள் செறித்துக் கொண்டேன் என்பதால் இக்கொள்கை எனக்கேயான கொள்கையாக இருக்க முடியாது. இதன் காரணமாகத்தான் நமக்கான கொள்கை எனக் குறிப்பிடுகிறேன். தமிழிலக்கியத்தை, என்னைப் பொறுத்தவரை வெறும் படிப்பறிவாக, பாடம் கேட்ட அறிவாக வைத்துக் கொள்ளவில்லை. என் வாழ்வில் நான் சந்தித்த எத்தனையோ வகையான சிக்கல்களை, கேள்விகளை முன்வைத்து, இவற்றின் தீர்வுக்கான விடைகளை எனக்குள்ளும் வெளியிலும் தேடி, இவை பற்றிப் பலரோடு விவாதித்து, நாளடைவில் எனக்குள் தெளிவு பெற்ற கொள்கை என்ற முறையில், இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பல அமைகின்றன. தமிழுக்கும் தமிழ் வாழ்வுக்கும் கடுமையான நெருக்கடிகள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் தமிழையும் தமிழ் வரலாற்றையும் எப்படிக் காப்பாற்றுவது என்ற நோக்கில் என் வாழ்வியல் அனுபவத்தோடு எனக்குள் செறித்துக் கொண்டதோடு, என் வாழ்வை எது மேம்படுத்தியதோ, எது என் வாழ்வுக்கு அர்த்தமாக விளங்குகிறதோ அதைத்தான் இக் கட்டுரைகள் மூலம் தந்துள்ளேன். எனக்காக என் சிந்தனையைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்காக நான் எழுதியவை இத்தொகுப்பிலுள்ள சில கட்டுரைகள். கருத்தரங்குகளுக்காக நான் எழுதிய கட்டுரைகள் சிலவும் இந்த நூலில் அடங்கியுள்ளன. அறிஞர் திருமுருகன் அவர்களைப் பற்றியும் கோவை வட்டாரத்தில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த முதுபெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் புது வெளிச்சம் என்ற கட்டுரை பற்றிய என் தொகுப்பையும் தமிழிலக்கிய போராளியான எஸ்.பொ. (எஸ்.பொன்னுத்துரை) அவர்கள் தன் வரலாறு பற்றி 2000 பக்க அளவில் எழுதிய, தமிழருக்கு வாய்த்த ஓர் அற்புத படைப்பாகிய ‘வரலாற்றில் வாழ்தல்’ என்னும் அவரது தன் வரலாறு பற்றிய நூலை முன்வைத்து, கொழும்பிலிருந்து பத்தாண்டுகளுக்கு மேலாக திங்கள் தோறும் தவறாமல் வெளிவருகிற அரிய தமிழிலக்கிய ஆய்வுகள் தாங்கிய ‘ஞானம்’ இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள் எஸ்.பொ . அவர்களோடு விரிவான ஒரு நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலின் தொகுப்பு, ‘தீதும் நன்றும்’ என்னும் பெயரில் சென்னை மித்ர பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். சிறப்பான இந்த நூலை வாசித்த நிலையில் நூலின் அரிய கருத்துகளைத் தொகுத்துத் தரும் முறையிலும் எஸ்.பொ . அவர்களின் கருத்துகளோடு நான் பெருமளவில் ஒத்துப் போகிறேன் என்றாலும் சில இடங்களில் அவரோடு மாறுபடும் முறையிலான (முரண்படும் நிலையில் அல்ல) என் கருத்துகளையும் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். இவ்வகையான அனைத்துக் கட்டுரைகளிலும், தமிழிலக்கியம் பற்றி எனது பார்வை கலந்தும் கரைந்தும் உள்ளன. என்னைப்பற்றி நண்பர் பழமலய் ஒரு முறை கூறினார் ‘எவரது நூலை நான் கற்றாலும் அந்த நூலின் ஆழமான கருத்துகளை எனக்குள் நான், எனக்கான முறையில் செறித்துக் கொள்கிறேன்’ என்ற கருத்தில் அவர் கூறிய வாசகம் இது. “ஒரு சிறிய செடி கிடைத்தாலும் அதன் நிழலில் துண்டை விரித்து நீ படுத்துக் கொள்கிறாய்” இதைவிட சிறப்பாக என்னைப்பற்றி யாரும் கூறிவிட முடியாது. இந்தத் தொகுப்பிலுள்ள இன்னொரு கட்டுரை பற்றி இங்கு சில விவரங்கள் தர வேண்டும். ‘மணற்கேணி’ என்ற இதழை மிகச் சிறப்பான முறையில் வெளியிட்டு வருபவரும் தமிழில் தலைசிறந்த அறிஞருமான திரு. இரவிக்குமார் அவர்கள் 2012 ஏப்ரல் இதழில் ஷெல்ட்டன் போலக் செம்மொழித் தமிழ்ப் பற்றி எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்றின் சாரமான கருத்துகளை விரிவாகத் தமிழில் தந்ததோடு அக்கட்டுரைக்கு எதிர்வினை என்ற முறையில் தன் கருத்துகளையும் தமிழறிஞர் திரு. இ. அண்ணாமலை அவர்களின் கருத்துகளையும் தந்திருந்தார். இந்த விரிவான கட்டுரை குறித்து என் கருத்துகளைத் தொகுத்து ஒரு கட்டுரையில் எழுதினேன். கட்டுரை எழுதிய போது எனக்குத் தெரியாத சில ஷெல்ட்டன் போலக் பற்றிய சில கருத்துகளைப் பிறகு நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஷெல்ட்டன் போலக் அமெரிக்காவில் ஒரு பேராசிரியர் கர்நாடக பல்கலைக்கழகத்திற்கு வருகை தரு பேராசிரியராக இருந்திருக்கிறார். தமிழ் முதலிய அனைத்துத் தென்னிந்திய மொழிகளும் பெருமளவில் சமஸ்கிருதத்தின் தாக்கம் உடையவை. தமிழின் சகோதர மொழியாகவோ செம்மொழியாகவோ கன்னட மொழியைக் கருத முடியாது. செம்மொழித் தகுதி கன்னடத்திற்கும் உண்டு. இத்தகைய கருத்துடையவர் போலக். கர்நாடகத்தில் இவர் கொண்டாடப்படுகிறார். செம்மொழிக்கான தகுதி இவை என வரையறுக்கும் தகுதி வேறு என்ற போதிலும் போலக் குறிப்பிட்ட கருத்துகளும் அதற்கு எதிர்வினை என்ற முறையில் நம்மவர் தரும் கருத்துகளும் நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. (கட்டுரை வெளியிட்ட திரு. இரவிக்குமார் பின்னர் புதுவையில் தமிழறிஞர் பலரை அழைத்து போலக் எழுப்பிய சில கருத்துகளையும் உள்ளடக்கி விரிவான கருத்தரங்கு ஒன்றை நடத்தி பிறகு இன்னோர் இதழில் வெளியிட்டார். இந்த நூலின் பின்னிணைப்பாக கோவையில் தமிழ் நேயத்தின் சார்பில் 23.7.2005 அன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றின் உரைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். அதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பாக கே.சி. லட்சுமி நாராயணனை ஆசிரியராகக் கொண்ட ‘’தமிழகத்தில் அந்தணர் வரலாறு" என்ற நூல் வெளிவந்தது. நெடுங்காலத் தமிழிலக்கியம் முழுவதிலும், சிற்சில விதிவிலக்குகளோடு மட்டும் இயற்றப்பட்ட பெரும்பாலான தமிழிலக்கிய படைப்புகளை எழுதியவர் பிராமணர் மட்டுமே ; சமஸ்கிருதத்தின் தாக்கம் இல்லாத நூல் எதுவும் தமிழிலக்கியத்தில் இல்லை. இப்படிப் பலரால் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்ட இரு தொகுப்புகள் குறித்து தமிழ்ப் பேராசிரியர்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ எவரும் எதிர்வினை தரவில்லை . இந்நிலையில் சென்னையிலிருந்து ’திராவிட சமயம்’ (தற்போது ‘தமிழர் சமயம்’) என்ற இதழைப் பல்லாண்டுகளாக வெளியிட்டு வருவதோடு சங்கராச்சாரியாரைத் தலைவராகக் கொண்ட பார்ப்பன சமயத்தோடு கடுமையாகப் போராடி வரும் அறிஞர் தெய்வநாயகம் அவர்கள் விடாப்பிடியாக இந்த நூல் குறித்து கடுமையான முறையிலும் விரிவான முறையிலும் விவாதித்தார். இலட்சுமி நாராயணன் அவர்களை அழைத்து நேருக்கு நேர் விவாதிக்கலாம் என்று பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. இந்த நூலை முன்வைத்து கோவையில் தமிழ் நேயம் சார்பில் நாங்கள் நடத்திய கருத்தரங்கிற்கு திரு. தெய்வநாயகம் வந்திருந்தார். கருத்தரங்கில் அவரோடு எனது நண்பர் மூவரும் உரையாற்றினர். இந்தக் கருத்தரங்கின் தொகுப்புதான் பின்னிணைப்பாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மானத்தைக் காக்கும் பொறுப்பு தமிழர் அனைவருக்கும் - குறிப்பாக - தமிழ் இலக்கியத் துறை மாணவர் முதலிய அனைவருக்கும் தேவை என்பதாலும் இந்தத் தொகுப்பில் இந்தக் கட்டுரையைச் சேர்த்துள்ளேன். தொடர்ந்து என் நூல்களை அன்போடு வெளியிட்டுவரும் திரு. காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் நன்றி. ஞானி ** 17.6.2013** பதிப்புரை கோவை ஞானி அவர்கள் தமிழ் மீதுள்ள ஆர்வம், அக்கறை மற்றும் தமிழ் இலக்கியத்தினால் ஏற்பட்ட வாழ்வியல் அனுபவம் வற்றாத அன்பு போன்றவற்றால், திறனாய்வுத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். வெளிநாட்டார் வீசியெறிந்த அளவுகோல்களை வைத்துக்கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்யவோ அவர்களே அழித்தெழுதிய கோட்பாடுகளைத் தூக்கிவைத்துக் கொண்டு சண்டித்தனம் செய்யவோ அல்ல என்பதை இந்நூலை வாசிப்பவர்கள் எவராலும் எளிதில் புரிந்து கொள்ளலாம். அவரே கூறுவது போன்று படிப்பறிவாக, பாடம் கேட்ட அறிவாக வைத்துக் கொள்ளாமல், தன் வாழ்வில் இவர் சந்தித்த எத்தனையோ சிக்கல்களை, கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான விடைகளைத் தனக்கு உள்ளும் வெளியிலும் தேடி இவை பற்றி பலரோடு விவாதித்து நமக்கான தமிழ் இலக்கியக் கொள்கைகளை உருவாக்கி தமிழ்த் திறனாய்வை உயர்த்த முனைகிறார். இவரது தமிழ்நேயம் தமிழர்களால் எளிதில் மறக்கவோ மறுக்கவோ இல்லாதது. இதனை அங்கீகரிப்பது போன்றே சென்னை எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தின் ‘தமிழ்ப் பேராயம்’ இவரை விருதினால் கெளரவப்படுத்தியிருக்கிறது. இதற்காக அப்பேராயத்தைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வெளியிட்டு வர தம் நூல்களைக் காவ்யா பதிப்பகத்திற்கு தந்துதவுகிறார் ஞானி அவர்கள். இதற்கான தனித்த தமிழ் மனம் இவருக்கு இருக்கிறது. இவரது முயற்சிகள் அரியவை; அத்துடன் பெரியவை. ஆகவே காவ்யா தொடர்ந்து இவரது நூல்களைத் தயங்காமல் வெளியிட்டு வருகிறது. எவ்வளவு தலைப்புகள்? எவ்வளவு கருத்துகள்? எவ்வளவு தேடல்கள்? இவர் எல்லோருக்குமானவர். எனினும் எமக்குமானவர். என்றென்றும் அன்புடன் காவ்யா சண்முகசுந்தரம் நமக்கான இலக்கியக் கோட்பாடு தமிழிலக்கியத்தை வெறும் ரசனையாக பண்பாட்டு மேன்மையாக, உவமைகளாக மெய்ப்பாடுகளாக மொழிச் சிறப்பாக, தனித்தனியே பிரித்துப் பார்ப்பது ஒருவகை . தமிழிலக்கியத்தின் வரலாற்றுச் சார்பில், வர்க்கப் போராட்டத்தை, சாதியச் சிக்கலை, பெண்ணியத்தை, தலித்தியத்தை முதன்மைப்படுத்திப் பார்ப்பது இன்னொரு பார்வை. தமிழிலக்கியத்தில் அறிவியல் என்றோ பகுத்தறிவென்றோ சமயமென்றோ வகைப்படுத்துவது மேலும் ஒரு வகை. தமிழிலக்கியத்தில் பெண்ணுக்கு என்ன இடம் என்று பார்ப்பதும் ஒரு பார்வை. தமிழிலக்கியத்தில் அறம், காதல், வீரம், அழகியல் என்றும் தனிப்படுத்திப் பார்க்கிற பார்வையும் உண்டு. ஒரு வகையில் தமிழிலக்கியத்தை இப்படிக் கூறு போட்டு பகுத்துப் பார்க்கிற பார்வைதான் இன்றைக்கும் பெரும்பான்மையாக இருக்கிறது. இதற்கு மாறாக எல்லாவற்றையும் கூடிய வரை ஒருங்கிணைத்து இலக்கியமாக அதன் குறை நிறைகளைப் பார்க்கிற பார்வைதான் நமக்குத் தேவை. ஒன்றாகக் காண்பதே காட்சி என்பது போன்ற பார்வை இது. பெரிய புராணத்தைச் சமயமாக மட்டுமே நம்மவர் புனிதப்படுத்திப் பார்க்கிறார்கள். அங்கங்கே பாடல்களுக்கிடையில் கவிதைக் கூறுகள் இடம் பெறுகின்றன. இந்த அளவில் அவர்களுக்குக் கவிதை கிடைத்தால் போதும். சமயத்திற்குள் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இவற்றை மக்களை நம்பச் செய்கிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையைத் தவற விடுகிறார்கள். வாழ்வியல் அமுங்கிப் போய் சமயம் முன் நிற்கிறது. இதைப்பற்றி சமயவாதிகள் கவலைப்படுவதில்லை . இவர்கள் சமயத்திற்காக இலக்கியத்தைப் பறி கொடுக்கிறார்கள். அல்லது புறக்கணிக்கிறார்கள். இலக்கியம் மனிதனுக்கான பார்வை. சிலப்பதிகாரத்தை பகுத்தறிவுப் பார்வையோடு பார்த்தால் சிலப்பதிகாரம் இலக்கியம் என்ற வகையில் குறைபடும். கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அரசனும் அவன் மனைவியும் உயிர் துறக்கிறார்கள். இத்தகைய காட்சி கவிஞனின் நீதி என்ற முறையில் இலக்கியத்திற்கு ஒத்த பார்வை. ‘தென்னவன் தீதிலன்’ என்று கண்ணகி கூறும் காட்சி மனித நேயத்தின் உச்சமெனப் பார்க்க முடியும். இலக்கியம் இப்படித்தான் மனிதனுக்குள் ஆழமாகச் செல்கிறது. மனிதனை வசப்படுத்துகிறது. இலக்கியத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு. ‘ஊழி பெயரினும்’ என்பது மனிதனுக்குள் உள்ள பேராற்றல் குறித்த இலக்கியக் காட்சி. ‘விற்றுக்கோள் தக்கது உடைத்து’ என்பதும் இது. இலக்கியம் இப்படித்தான் தனக்கெனத் தனித்தன்மையோடு மனிதனை வசப்படுத்துகிறது. இலக்கியப் பார்வையில் பெரிய புராணக் கதைகளை மறு பார்வைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் சமயத்தின் இடத்தை கவிதை எடுத்துக் கொள்ளுமென்று தாகூர் கூறியதை நாம் புரிந்து கொள்ள முடியும். இலக்கியத்தின் தனிக்கூறுகளை நாம் ரசிக்க முடியும். ரசனை மனிதனுக்குத் தேவை. ரசனை என்பது மனிதனை மலினப்படுத்தி விடக்கூடாது. வெற்றுக் கற்பனைகள், வீர சாகசங்கள் மனிதனுக்குள் வியப்புணர்வை ஏற்படுத்தி அவனை ரசிக்கச் செய்யும். புராணங்கள் முதலியவற்றைக் கூட மனிதன் இப்படித்தான் ரசிக்கிறான். சமயமும் மனிதனுக்குள் ரசனையாகத் தங்கியிருக்கிறது. இத்தகைய ரசனை வெற்று ஆரவாரமாக, சிலேடையாக, வெற்றுக் கற்பனையாக, ஆடம்பரமாக, வெற்று தோரணையாக மாறிவிடும். தமிழ் இப்படி நம் மனிதர்களைப் போதைக்குள் ஆழ்த்தியிருக்கிறது. இது பலருக்கு வணிகம் மற்றும் அரசியல். ஐயப்ப பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டைத் திராவிடர்களின் இலக்கியக் கோட்பாடெனக் கண்டறிந்தார். ஐயப்ப பணிக்கர் கருத்துப்படி உலகின் எந்த ஓர் இலக்கியத்தையும் திராவிடன் தனக்குரிய பாங்கில்தான் புரிந்து கொண்டு ரசிக்க முடியும் என்றார். தாமஸ் ஹார்டியின் நாவல்களைத் தமிழன் தனக்குரிய நாவலாக வாசிக்கிறான். டால்ஸ்டாய் தாஸ்தாவெஸ்கி, சொலக்கோவ், பெர்ல். எஸ். பர்க் நாவல்களையும் நாம் இப்படித்தான் வாசித்தோம். நம் காலச் சிக்கல் எதுவோ அதுதான் இந்த நாவல்களில் இடம் பெற்றிருந்தன. அன்னாகரினினா நம்மைப் பெரிதும் அசைத்த நாவல். சொலக்கோவ், பெர்ல் நாவல்களில் இடம் பெற்ற உழவர் குடும்பங்கள் நம் கால உழவர் குடும்பங்கள். நாம் மனித உறவுக்கு முதன்மை தருகிறோம். இயற்கையை நேசிக்கிறோம். இயற்கை நமக்குத் தாய். ஒரு வகையில் ஐயப்ப பணிக்கருடைய பார்வையின் படி நம் இலக்கியப் பார்வை நம் மரபுக்குள் வந்து நம்மோடு இன்றும் நம்முள் தங்கியிருக்கிற பார்வை. நம் பார்வையில் அறத்திற்கு முதன்மை இடம் உண்டு. மரபை மறுக்கும் பார்வை நம்மைப் பெரிதும் கவருவதில்லை . சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. இலக்கியப் பார்வையும் மாறத்தான் வேண்டும். இதற்கேற்றவாறு மரபை நாம் நெகிழ்வு செய்து கொள்ளவேண்டும். மரபைத் தகர்ப்பது நமக்கு இயலாது. புதுக்கவிதை வந்தபோது நம்மவர்க்கு அது உடன்பாடாக இல்லை. அதைப் போலத்தான் இப்பொழுது தலித்தியம் , பெண்ணியம், பின் - நவீனத்துவம் ஆகியவையும் நம்மவர்க்கு உடன்பாடாக இல்லை. மரபு இலக்கியத்தினுள்ளும் இவ்வகைக் கூறுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி நம்மவரை நெகிழ்விக்க வேண்டியிருக்கிறது. பழமை குறித்த ரசனையை மாற்றுவது கடினம்தான். சமயப்பார்வையை ஒதுக்குவதும் கடினம். இப்படி இலக்கியப் பார்வையில் நம் காலத்தில் முரண்பாடுகள் தொடர்கின்றன. 19, 20ஆம் நூற்றாண்டுகளில்தான் மனிதன் என்றால் என்ன? அவனை மனிதனாக்கிய சக்திகள் எவை? இந்த சக்திகளோடு என்ன உறவு என்பது பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டான். கடவுள், ஆன்மா பல பிறப்பு, மேலுலகம் என்பனவற்றுக்கு உண்மையில் என்ன பொருள் என்பதைக் கண்டு கொண்டான். இவனுக்கான விடுதலை இந்த மண்ணுலகில்தான். சமத்துவம் சமதர்மம்தான் வாழ்வின் உன்னதங்கள். இத்தகைய உலகியல் வாழ்க்கை பற்றிய விரிவான விளக்கம் தருவது நாவல் இலக்கியம்தான். காவியத்தில் இவ்வகை விளக்கம் இல்லை. சமயங்கள் இவ்வகை விளக்கம் தருவதில்லை . மனிதனின் துயரங்கள், வரலாறு, சமூகம் ஆகிய முரண்பாடுகளிலிருந்து எழுவது. உளவியலும் மனிதனுக்கு ஒருவகைச் சிக்கல். இவை குறித்த ஆய்வுக்கு நாவல்தான் சாதனம். மனிதன் முற்றிலும் நல்லவனோ, தீயவனோ இல்லை . அவனவனுக்கு ஒரு மறுபக்கமுண்டு. சமூக முரண்பாடு மற்றும் வளர்ப்புதான் குற்றவாளிகளை உற்பத்தி செய்கின்றன. ஆதிக்கம் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. அவன் தன்மானத்தை அழிக்கிறது. ஆதிக்கங்களும் பலவகை. இவற்றில் ஆணாதிக்கமும் ஒன்று. அதிகாரத்திற்கு ஆணும் அடிமைப்பட்டவன்தான். விடுதலை பிரிவு படாதது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆண்தான் சுதந்திரவானாக இருக்க முடியாது. நவீன கால வாழ்வை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். தொன்மை இலக்கியங்கள் வாழ்வின் உன்னதத்தை நமக்குக் கற்பிக்கின்றன. நவீன இலக்கியங்கள் வாழ்வின் முரண்களைக் கற்பிக்கின்றன. தொன்மை இலக்கியங்களில் அதாவது மரபிலக்கியத்தில் சமயம், மரபு சார்ந்த தொன்மை இலக்கியத்தில் மனம் பதிந்தவர்கள் நவீன வாழ்க்கைக்குள் வர இயல்வதில்லை. நாவல் இலக்கியம் அவர்களுக்குப் பிடிபடுவதில்லை . காலம் மாறியிருக்கிறது. நவீன இலக்கியங்கள் மூலமும் வாழ்வின் முரண்பாடுகளை, வாழ்க்கை பற்றிய சரியான பார்வையை அறிந்தவர்கள் தொன்மை இலக்கியத்தைச் சரியாகக் கற்க முடியும். இதனால் தொன்மை இலக்கியம் பழுது படுவதில்லை . மறுவாசிப்பு என்பதுதான் நம் காலத்திற்குப் பொருத்தமான வாசிப்பு முறை. ஒருவகையில் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவை இன்னும் நமக்கு நெருக்கமாக இருக்கின்றன. காரணம் அக்காலத்திய மனிதன் உலகியல் உணர்வோடு வாழ்ந்தவன். நமக்கும் அவனுக்கும் பொதுவான கூறு இது. இடைக்காலத்து மனிதன் இவ்வாறு இல்லை. கடவுள், வினை என்பதுதான் தன் வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று நம்பி மண்ணுலக வாழ்விலிருந்து அவன் விலகியிருந்தான். பிறப்பு அறுவதே வாழ்வின் பேறு என நம்பினான். மனித உறவு மண்ணுலகம் இவற்றை அவன் நம்பவில்லை. படித்தவர்தான் இப்படி வாழ்ந்தார்கள் என்பது மட்டுமல்ல. படித்தவர்கள் உழைக்கும் மக்களுக்கும் இதைத்தான் கற்பித்தார்கள். இந்தச் சூழலில் அரசதிகாரம், படையெடுப்பு எல்லாமே எளிதாகிவிட்டன. மனிதன் எப்பொழுதும் ஓர் அடிமை. மன்னனுக்கு அல்லது கடவுளுக்கு அடிமை. இன்றைக்கும் நாம் இந்த உணர்விலிருந்து விடுபடவில்லை . இவ்வகையிலும் நாவல் இலக்கியம் நமக்கு ஒரு கல்வி, படிப்பினை. வள்ளுவரைக் கொண்டாடுகிற நாம் அதேபோல் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் கொண்டாட முடியும். பெரியாரை நம்மவர் கொண்டாடுகின்றனர். வள்ளுவரைக் காட்டிலும் பெரியார் பலருக்கு நெருக்கமானவர். பெரியாரைப் போல மார்க்சும். இவ்வகைப் பார்வையை முரண்பாடாக நாம் பார்க்க வேண்டியதில்லை. சிந்தனை அளவில் மட்டுமிருந்த வள்ளுவரின் ஒப்புரவை இவர்கள்தான் மண்ணுலகில் மனிதர் உலகில் நிலைநிறுத்தப் போராடுகிறார்கள். தமிழில் நாவல் இலக்கியம் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு உடையது. ஒரு நூற்றாண்டுக்கால் அளவில் தமிழ் நாவல்களின் எண்ணிக்கை குறைந்த அளவுக்கு ஓர் ஆண்டுக்குப் பத்து என்று கணக்கிட்டால் கூட ஒரு பத்தாயிரம் என்ற அளவுக்கு வரும். இவற்றிலிருந்தும் நாம் தெரிவு செய்து கொள்ளலாம். எவ்வளவுதான் கறாராக, இறுக்கமாகத் தெரிவு செய்தாலும் குறைந்த அளவுக்கு இருநூற்று ஐம்பது நாவல்களையாவது நாம் தெரிவு செய்ய வேண்டியது வரும். இதேபோல சிறுகதைகளையும் நாம் தெரிவு செய்ய வேண்டியது வரும். சிறந்த சிறுகதைகளை சங்க இலக்கியத்தின் தனிப்பாடல்களுக்கு நிகராகச் சொல்ல முடியும். காவிய பரிமாணம் உடைய தமிழ் நாவல்களும் வெளிவந்துள்ளன. இவற்றினுள்ளும் தரத்தில் சிறந்த தமிழ் நாவல்கள் பலவற்றைச் சொல்லலாம். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘அலை ஓசை’ என்று தொடங்கி ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், பொன்னீலன், ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ் என்று பலரது காவியப் பரிமாணமுடைய நாவல்களைச் சொல்லலாம். அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, நகுலன், சா. கந்தசாமி, வண்ணநிலவன், டி. செல்வராஜ், சுஜாதா, தொடக்கத்தில் வ.ரா., க.சு. வெங்கடரமணி, சங்கரராம், பிறகு ராஜம் கிருஷ்ணன், இமயம், சங்கரநாராயணன், திலகவதி, காவேரி , பாமா - பட்டியலிடுவதில் தவறு நேரலாம். பெயர் குறிப்பிடாமலும் இருக்க முடியாது. இவர்களின் நாவல்கள் தமிழ் மக்களின் வாழ்வியலை மிகமிக விரிவாக ஆராய்கின்றன. நாவல் என்பது அடிப்படையில் மனிதனைப் பற்றிய ஆய்வு. இருபதாம் நூற்றாண்டுச் சூழலில் தமிழ் மக்களைப் பற்றிய ஆய்வுகள் இந்த நாவல்கள். குடும்பம், ஆண், பெண் உறவு, சமூகச் சூழலில் மனிதன் வர்க்கப் போராட்டத்தில் மனிதன். இப்படி நூற்றுக்கணக்கான சிக்கல் குறித்து இந்த நாவல்கள் மனிதனின் கதையைச் சொல்கின்றன. கதை சொல்லுவதில் எத்தனையோ வடிவங்கள், கோணங்கள், பார்வைகள் (கல்கியோடு அகிலன், நா. பார்த்தசாரதி, மு.வ., ஜெகசிற்பியன் என்றும் சிலரைக் குறிப்பிட வேண்டும்.) அரசியல் அரங்கில் மனிதனின் போராட்டம், நிலக்கிழாருக்கும் முதலாளிகளுக்கும் எதிரான போராட்டம், அரசுக்கெதிரான போராட்டம், (சு. சமுத்திரம்) காவல்துறைக்கு எதிரான போராட்டம், கட்சிக்குள்ளும் நடைபெறுகிற போராட்டம், அரசு அலுவலகங்களுக்குள் போராட்டம், உழவர்கள், மீனவர்கள் போராட்டம், மலைவாழ் போராட்டம், குழந்தைத் தொழிலாளர் நிலைமை, விடுதலைக்கான போராட்டம், நெசவாளர் போராட்டம், கலைஞன் தனக்குள்ளான போராட்டம் ** நாவல் - கோட்பாடு** கோட்பாடென்பது விரிந்த தளத்தில் பன்முகக் கூறுகளை உட்கொள்வது. ஓர் இலக்கியக் கோட்பாடென்பது வரலாற்றுச் சூழலில் மனித வாழ்வில் ஆக்கங்கள், அழிவுகள் பற்றி அழகியல் உணர்வோடு கூடியது. மனித வாழ்வின் ஆக்கங்கள், அழிவுகள், வரலாற்றுச் சூழலில் மனிதனின் செயல்பாடு, மனிதன் தனக்குள்ளும் புறத்திலும் எந்த அளவுக்கு விரிந்து இயங்குகிறான். வரலாற்றை, இயற்கையை, சமூகத்தை எந்த அளவுக்குத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறான். நாவல் என்பது நவீன கால இலக்கியம். முதலாளியத்தின் வருகையைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கல்வி, வளர்ச்சி, அச்சு வாகனம், இதழ் நூல் வெளியிடல் , விரிந்த சமூகப் பரப்போடு கல்வியறிவு பெற்ற வாசகனின் உறவு, விரிந்த உலகப் பார்வை புதிய உணர்வுகள் இவற்றோடு நாவல் இலக்கியம் தோன்றுகிறது. முதலாளியம் மனிதனுக்குள் அறிவு வளர்ச்சியைத் தூண்டுகிறது. புதிய உற்பத்திகள், புதிய ஆடை, புதிய பொருள்கள் இப்படி மனிதனைச் சூழ ஒரு புதிய உலகம் தோன்றுகிறது. வேறுபட்ட கலாச்சாரச் சூழல் கொண்ட நாடுகளோடு, மக்களோடு தொடர்பு நேர்கிறது. நீண்ட பயனாளிகள், நகர வாழ்க்கை , நிலக்கிழாரியத்திலிருந்து விடுதலை, இயந்திரங்களோடு தொடர்பு, இப்படியெல்லாம் வாழ்க்கைச் சூழல் மாறுகிறது. நமக்கு ஒரு தேசம் என்ற உணர்வு, நமக்கு ஒரு கலாச்சாரம் என்ற உணர்வு இத்தகைய புதிய சூழலில் மனிதன் வாழ்க்கையை நவீனப்படுத்திக் கொள்ள விரும்புகிறான். தன் மன உணர்வுகளை எழுதிப் பார்க்கிறான். உரைநடை இவனுக்குக் கை கொடுக்கிறது. தனக்குள் ஒரு வாசகன் மட்டுமல்ல படைப்பாளியும் இருப்பதைக் கண்டு கொள்கிறான். கவிதை புனைகிறான். சிறுகதை எழுதுகிறான். குறுகிய எல்லைக்குள் வாழ்க்கையில்லை. வாழ்க்கையினுள்ளும் புதிய சிக்கல்கள், பல அடிமைத் தளைகள் இனி வேண்டியதில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கும் வழியில்லை. பெண்ணுக்கும் கல்வி வேண்டும். உரிமையும் வேண்டும். மனிதர் மத்தியில் சமத்துவம் வேண்டும். பேருந்து, ரயில், திரைப்படம், தொலைபேசியென புதிய வாழ்க்கை வசதிகள், அரசுப் பணி, பத்திரிகைகள், புதிய பாடத் திட்டங்கள், இந்தப் புதிய உலகில் புதிய மனிதனாக வாழ வேண்டும். மரபு வழித் தொழில் கட்டுப்பாடுகள் இனி இல்லை. தனக்குள் புதிய உணர்வுகள், புதிய பார்வை, வரலாறு, பொருளாதாரம், அரசியல் பற்றிய புதிய பார்வை, தனக்கான அரசை அமைத்துக் கொள்ள முடியும். பலரோடு பேச முடியும். விவாதிக்க முடியும். நமக்கு சுதந்திரம் வேண்டும். புதிய சமூகம் வேண்டும். நாம் யாருக்கும் அடிமையில்லை . இந்தப் புதிய உலகில் இலக்கியமும் புதியதாக மாறுகிறது. இதை நாவல் இலக்கியம் வெளிப்படுத்துகிறது. படித்தவர் சிலர் கலைஞராகின்றனர். படைப்பாளியாகின்றனர். இந்தப் புதிய வாழ்க்கைக்குள் அனைவரும் நுழைய வேண்டும். இதற்காக எழுதுகின்றனர். இப்படித்தான் சிலர் எழுத்தாளராகின்றனர். நூல் வெளியிடுகின்றனர். பத்திரிக்கை நடத்துகின்றனர். இலக்கியம் என்பது ஒரு புதிய உணர்வு. நவீனகால உணர்வு. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கிற உணர்வு. இலக்கியம் என்பது ஒரு கலை. நவீனகாலக் கலை. கலை இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. எல்லா அனுபவங்களையும் மனிதன் கதையாக்குகிறான். புதிய அர்த்தங்களுடன் உணர்ச்சிகரமாகப் பலரோடு தன்னைப் பகிர்ந்து கொள்கிறான். தனக்குள் வந்த புதிய பார்வையை, அழகாக, நேர்த்தியாக ஏற்ற இறக்கங்களுடன் ஒரு மையத்தில் கோர்வைப்படுத்தி முதல், நடு, இறுதி என்ற கட்டமைப்போடு இடையில் உரையாடல் கலந்து, நாடகமயப்படுத்தி வெளிப்படுத்துகிறான். தனக்கான புதிய பார்வையோடு சொல்கிறான். எல்லாவற்றையும் அழகாக, அழகுபடுத்திச் சொல்லுகிறான். இந்தப் புதிய பார்வை அவனையும் அழகுபடுத்துகிறது. மொழிக்கு அழகு சேர்க்கிறது. பலரோடு இவனுக்குப் புதிய உறவுகள், புதிய அமைப்புகள், கட்சிகள், தொழிற்சங்கங்கள், இவையெல்லாம் அவனுக்குள் ஏற்படுத்தும் புதிய உணர்வுகளை அழகாகச் சொல்லுகிறான். இவனுக்குள் புதிய புனைவுகள். பழைய உலகிலிருந்து இவன் விடுபட்டு வருகிறான். புதிய சிக்கல்கள் இவற்றைப் புரிந்து கொள்வதில் ஒரு புதிய திறன், செயல்படுத்துவதில், போராடுவதில், புதிய உற்சாகம், காதல் செய்யக் கூடுதலான வாய்ப்பு , இப்படி புதிய அழகியல் இவனுக்குள் வந்திருக்கிறது. இவன் கதை சொல்கிறான். யதார்த்த உலகின் கதை. அரசியல் உணர்வையும் கலந்து கொள்கிறான். கூடவே கலையுணர்வும் வேண்டும். புதிய உத்திகள் வேண்டும். இலக்கிய மரபிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மரபைப் புதுமைப்படுத்த வேண்டும். யதார்த்தம் என்று சொல்லி வறட்டுத்தனமாகப் பேசக் கூடாது. வாழ்க்கையென்பது உணவு, உடை, இருப்பிடம், வேலைவாய்ப்பு என்பதோடு அடங்கி விடுவதில்லை. மன உளைச்சலுக்கு இவன் பதில் சொல்ல வேண்டும். மனத்தினுள் நுழைந்து தேட வேண்டும். மன உளைச்சல் எங்கிருந்து தொடங்கியது என்று ஆராய வேண்டும். பொருள் வசதியோடு இவன் நின்றிட முடியாது. மனத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். புதியது கற்கவேண்டும். அவனுக்குக் கலை வேண்டும். வாழ்க்கை என்பது ஒற்றைப் பரிமாணத்தில் இல்லை. வாழ்க்கைக்குப் பல பரிமாணங்கள். ஒன்றில் பயணம் செய்யும் போது அடுத்ததைக் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். அல்லது விட்டுவிட வேண்டும். அறிவியல் என்று தொடங்கினால் அது முழுமையாய் மனிதனை வசப்படுத்திக் கொள்கிறது. கலையும் இப்படித்தான். குடும்பம் கூட இப்படித்தான். வரலாறு பற்றி, வாழ்க்கை பற்றி மனிதனுக்குப் பார்வை வேண்டும். அதிக அளவுக்கு விரிந்த பார்வை. இப்படித்தான் அவன் உணர்வு, அதிலிருந்து சிந்தனை, எண்ணங்கள், அவற்றிலிருந்து ஓர் அமைப்பாக ஒரு கொள்கை, இன்னும் விரிவாகக் கோட்பாடு இப்படி இவன் வகுக்கும் கோட்பாடு வாழ்க்கையை அரசியலை வரலாற்றை, கூடவே இலக்கியத்தை மனிதனின் அகத்தை, புறத்தை சொல்லுவதாக அமைகிறது. கோட்பாடு இவனுக்கு ஒரு பார்வை, ஒரு கருவி, ஆயுதம், இலக்கு, ஆற்றல் மற்றும் அழகு. இவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு சக்தி, பிரபஞ்சம் வரை அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு பெரும் சக்தி. இலக்கியத்தின் மையமென்பது மக்கள் வாழ்வியல், குறிப்பாக நவீன இலக்கியத்தின் அடிப்படை மக்கள் வாழ்வியல்தான். தமிழில் சிற்றிலக்கியம் வரையிலான இலக்கியத்தை மரபு இலக்கியமென்றும் வள்ளலார், வேதநாயகம் காலம் தொடங்கி நவீன இலக்கியமென்றும் வகைப்படுத்தினால் மரபு இலக்கியத்தில் சங்க இலக்கியம் தவிர சங்க இலக்கியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் ஆகியவை தவிர பிற இலக்கியங்களில் மக்கள் வாழ்வியல் மையத்தில் இல்லை. காப்பியங்களில் மன்னர் வாழ்க்கையே மையம். பக்தி இலக்கியத்தில் கடவுள் மையம். சிற்றிலக்கியத்தில் பள்ளு இலக்கியம், குறவஞ்சி இலக்கியம் தவிர பிற இலக்கியங்களில் மக்கள் வாழ்க்கை மையத்திலில்லை. பெரிய புராணத்தில் மக்கள் சிலர் முகம் தெரிகிறதே ஒழிய சமயமே வாழ்வை அடைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் வாழ்வியலைப் பாதிக்கும் சக்திகளென அரசியலையும் பொருளியலையும் குறிப்பிடலாம். சங்ககாலத்தில் புற இலக்கியத்தில் முதன்மையாக மன்னனும் மன்னனுக்குச் சேவைச் செய்யும் மக்களும் பேசப்படுகின்றனர். இனக்குழு சமூகத்தின் முகம் வெளிப்படையாகவே தெரிகிறது. அகத்திணை இலக்கியத்தில் தலைவன் முகம் தெரிகிற அளவுக்கு மக்கள் முகம் தெரியவில்லை. மக்கள் தொழில் செய்கிறார்கள். தலைவன் தலைவியர் காதலிக்கின்றனர். பரத்தையர்கள் அவலத்தோடுதான் வாழ்கின்றனர். பொருள் தேடித் தலைவன் பிரிகிறான். திரும்பி வருகிறான். பாலை நிலத்தில் தலைவன் கொல்லப்படுகிறான். போர்க்களத்தில் அடிபட்ட வீரனை வீட்டில் வைத்துப் பெண்கள் காப்பாற்றுகின்றனர். மன்னனுக்காக சாவது மக்கள் கடமை. பெண்களுக்கும் இது கடமை. நடுகல்லில் நிறுத்தப்படும் வீரனும் தலைவன்தான். சங்கத்தை அடுத்த காலத்தில் மக்களின் வறுமைத்துயர், அநீதியான ஆட்சி முதலியவை தெரிகின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் இத்தகைய காட்சிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நவீன காலத்தில்தான் மக்கள் வாழ்வியல் வெளிப்படுகிறது. அதுவும் நம் காலத்தில் சமூகத்தின் பல பிரிவுகள் நாவல் இலக்கியத்தில் விரிவாக இடம் பெறுகின்றனர். மார்க்சியரின் படைப்புக்களில் தொழிலாளர் இடம் பெற்றனர். அதற்கு முன்னரும் பின்னரும் அடித்தள மக்கள் இடம் பெறுகின்றனர். இப்பொழுது தலித் மக்களும் பெண்களும் ஆதிவாசிகளும் இடம் பெறுகின்றனர். இலக்கியக் கோட்பாடு என்பதின் மையம், மக்கள் வாழ்வியல் என்றால் மக்கள் வாழ்வைப் பாதிக்கும் அல்லது உருவாக்கும் அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் பின்புலத்தில் இடம் பெறுகின்றன. மக்கள் வாழ்வியலுக்குள் இச்சக்திகள் நேரிடையாகவும் வெளிப் படலாம். சாதி, மதம் முதலிய சக்திகளும் ஓரளவுக்கேனும் இடம் பெறுகின்றன. மக்கள் வாழ்வியலை ஓரத்திற்கு ஒதுக்கிவிட்டு அரசியலுக்கும் பொருளியலுக்கும் அழுத்தம் தருகிறபோது இலக்கியத்தின் அழகியல் சிதைகிறது. வட்டார இலக்கியம், தலித் இலக்கியம் என்பனவற்றினுள்ளும் வாழ்வியலின் பகுதியாகவே இக்கூறுகள் இடம் பெற வேண்டும். வாழ்வியல் என்பதனுள் குடும்பம் அல்லது ஆண், பெண் உறவுக்கே அழுத்தம் தருகிற போதும் ரசனை அதிகரிக்கிறதே தவிர இலக்கியப் படைப்பென்பது பாதிப்புக்கு உள்ளாகிறது. இலக்கியத்தின் அழகியல் என்பது மிக முக்கியம். நாவலின் வடிவ நேர்த்தி இதில் முதல் கூறு. முரண்பாடுகளை முறையாகப் படிப்படியாகக் காட்சிப்படுத்த வேண்டும். தேவையான அளவுக்குக் காட்சிப்படுத்தல், இயற்கை வர்ணனை, மனிதனின் உயர் குணங்கள், அவலம், அளவான உரையாடல், நாடகத்தன்மை , கலை நேர்த்தி ஆகியன அரசியல் கூறுகள். காலனியாதிக்கத்தின் பாதிப்பு தமிழர் வாழ்வுக்குள்ளும் தமிழ் நாவல் இலக்கியத்திற்குள்ளும் குறைந்த அளவுக்குக்கூட திறனாய்விற்கு உட்படுத்தப்பட்டு இதுவரை வெளியேற்றப்பட வில்லை. காந்தியையும் காங்கிரசின் விடுதலை இயக்கத்தையும் பாராட்டும் நோக்கில் தமிழ் நாவல்கள் சில எழுதப்பட்டன. கல்கியின் பார்வையில் வன்முறையாளனாகிய மார்க்சியன் இறுதியில் காந்தியத்தை ஏற்கிறான். ர.சு.நல்லபெருமாளும் இதே போல நாவல் படைத்துள்ளார். இங்கெல்லாம் நாவலாசிரியர்கள் பரப்புரையாளராக இருக்கின்றனரேயொழிய மனிதனைப் பற்றிய பார்வையைச் சரியாக வெளிப்படுத்தும் படைப்பாளராக இல்லை. விடுதலைப் போராட்டத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் முறையில் நா. பார்த்தசாரதி ‘ஆத்மாவின் ராகங்கள்’ எழுதினார். இதற்குள்ளும் ஒரு மோசமான காதல் கதை. இது தமிழ் நாவலின் சாபக்கேடு. முற்போக்காளரெனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் மார்க்சியரும் இதே போலப் பரப்புரை நோக்கத்திற்காக நாவல் படைத்துள்ளனர். உதாரணம் சின்னப்ப பாரதியின் சங்கம். இந்தக் குறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பொன்னீலன். இதற்காக இவரது ‘புதிய தரிசனங்கள்’ நாவல் கட்சியினரால் பொருட்படுத்தப்படவில்லை. காலனியாதிக்க உணர்வு தமிழ் நாவல் இயக்கத்திற்குள் ஆழப் பதிந்திருக்க வேண்டும். ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் போல தமிழ் நாவலாசிரியர் இயங்கவில்லை. இன்றைக்கும் இதே நிலைதான் தொடர்கிறது. மார்க்சிய இயக்கமும் திராவிட இயக்கமும் தொடக்க காலத்தில் மனிதனின் ஆக்கத்திறனைத் தூண்டி வளர்த்தன. பின்னர் இதே இயக்கம் மனிதனை முடமாக்கியதை நாவலாசிரியர் எழுதவில்லை. விதிவிலக்காக இரண்டொரு படைப்புகள். எனது இலக்கியக் கோட்பாடும் வாழ்வியல் கோட் பாடும் ஒன்றுக்கொன்று அனுசரனையானவைதான். வாழ்க்கைக்குள்ளிருந்துதான் இலக்கியம் பிறக்கிறது என்ற உண்மை மனித வாழ்வின் சாரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதுதான். மனித வாழ்வுக்கு அர்த்தம் வேண்டும், அழகு வேண்டும், ஆற்றல் வேண்டும். இவை இலக்கியத்திற்கும் தேவை. மனிதனுக்கு விடுதலை வேண்டும். இலக்கியத்தின் இலக்கும் மனித விடுதலை நோக்கியதாகத்தான் இருக்க முடியும். மனித வாழ்க்கை என்பது நெடுங்கால வரலாற்றின் ஒரு கூறு. வரலாற்றின் நீரோட்டத்தை, உள்ளியக்கத்தை, விரிவை, மனித வாழ்க்கையை உட்கொண்டதாக இருக்க வேண்டும். இலக்கியத்தின் உள்ளடக்கமும் உள்ளியக்கமும் இதுதான். ஒரு தேசத்தில் குறிப்பிட்ட அரசியல் பொருளியல் சூழலில், குறிப்பிட்ட குடும்பச் சூழலில் நாம் வாழ்கிறோம். குடும்பம் முதலிய சூழலிலிருந்து நமக்கான உள்ளியக்கத்தைப் பார்வையைப் பெற்றுக் கொள்வதோடு குடும்பம் முதலியவற்றின் முரண்பாடுகளுக்கு எதிர்வினை தருவதன் மூலம் நம்மை நாமே படைத்துக் கொள்கிறோம். வரலாறு, இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றின் மூலம்தான் நமக்கான வாழ்வை, அழகைப் பெறுகிறோம். இவற்றில் அதிக அளவில் சொல்வது கவிதை. ஒரு நாவலும் கூட தன் உள்ளியக்கத்தில் ஒரு மாபெரும் கவித்துவத்தைக் கொண்டிருக்க முடியும். தமிழிலக்கியப் பெரும் பரப்பு நமக்குப் போதாது. இராமாயணம், மகாபாரதம் உள்ளடங்க உலக இலக்கியம் நமக்குத் தேவை. இதேபோல் வாழ்வும் நமக்குத் தேவை. தமிழிலக்கியப் பரப்பில் மாபெரும் கவிஞர்கள், படைப்பாளிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஓர் உழவனும் நெசவாளியும் தாயும் கூடப் படைப்பாளிகள்தான். குறுகிய எல்லைக்குள் நாம் வாழ முடியாது. நமக்கு விரிந்த வானம் தேவை. தமிழிலக்கியத்தின் கோட்பாட்டு உருவாக்கத்தை வெளியில் தேட வேண்டாம். உள்ளிருந்தே உருவாக்க முடியும் என்று க. நா. சு. பலமுறையும் சொன்னார். தமிழவன் முதலியவர்களும் இதேபோல் கருதினர். ஐயப்ப பணிக்கர் சுட்டிக் காட்டியபடி தொல்காப்பியரின் திணைக் கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி தமிழிலக்கியத்திற்குத் தேவையான, தொடர்ச்சியானக் கோட்பாடுகளை உருவாக்க முடியும் என்று நாம் நம்பினாலும் தமிழ் உணர்வோடு இதைச் செய்யவில்லை. முதல், கரு, உரி என்ற கொள்கையையும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு, புலனெறி வழக்கு என்பதையும் மேலும் சில தொல்காப்பிய வாய்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். உரையாசிரியர்கள் இம்முயற்சியைத் தொடரவில்லை . தொல்காப்பியர் அகத்தையும், புறத்தையும் பிரித்துப் பேசினார். இணைத்துப் பேசுவது நமக்கு முக்கியம். உரிப்பொருள் என்பதனை அறம், பக்தி என்றெல்லாம் பிரிக்க முடியும். நாடக வழக்கு என்பதனுள் புனைவு என்பதை அடக்க முடியும். உலக வழக்கு என்பது எதார்த்தம் என்று கொண்டால் இதற்குள் புனைவு என்பதனை இணைத்து புலனெறி வழக்கு என்று பொருள்படுத்தலாம். மேலும் போதாமையே பெரிதாகத் தெரிகிறது. வள்ளலார் வரையிலான மரபு இலக்கியத்தைக் கடந்தவுடன் நவீன இலக்கியம் புலமையாளர்களைத் தடுமாற வைக்கிறது. பின்னர் எதார்த்த வாதம், மார்க்சியம் என்பன இன்னும் ஒரு தடுமாற்றம். நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் என்பனவும் தடுமாற்றங்கள். புலமையாளர் நவீன காலத் தமிழ் இலக்கியத்திற்குள் இயல்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. மறைமலை அடிகள், வையாபுரியார் செய்தவை சிறு முயற்சிகள் . மு .வ . சிறப்பாகச் செய்தார் எனினும் மேலே செல்ல முடியவில்லை. நா. பார்த்தசாரதி அருமையான நாவல்களைப் படைத்தார். நம் காலத்தில்தான் விதிவிலக்காகச் சிலப் பேராசிரியர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்தினுள் தடங்கலின்றி பயணம் செய்கின்றனர். இவர்கள் மார்க்சியர்களாக இருப்பதால் தொன்மை மற்றும் நவீன இலக்கியத்தினுள் மனித வாழ்வின் பயணத்தைக் காண்கின்றனர். பின் நவீனத்துவம் என்பது மேலும் ஒரு பெரிய தடுமாற்றம். நிதானமாகப் பார்த்தால் எதார்த்தவாதம், மார்க்சியம், புனைவியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்பதற்கான பார்வையை நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தினுள் அங்கங்கே காண முடியும். வாலி வதை, சீதை தீக்குளிப்பு என்பனவற்றிற்கு அழுத்தம் கொடுத்து இராமாயணத்தை வாசித்தால் இராமர் கதையும் பின்நவீனத்துவக் கதையாக மாறிவிடும். இப்படியும் சில முயற்சிகளை நாம் செய்து தமிழிலக்கியப் பரப்பு முழுவதினுள்ளும் இயங்கும் கோட்பாடுகளைக் காணமுடியும். தொல்காப்பியர் காலத்தினுள் அவர் செய்த கோட்பாட்டு முயற்சியை மற்றவர் தொடரவில்லை என்பது உண்மைதான். எனினும் சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, சிந்தாமணி, கம்பர் காவியம், சேக்கிழார் புராணம் என மாபெரும் படைப்புகளை உருவாக்கியவர் தமக்குள்ளும் ஆழமான கோட்பாட்டுச் சிந்தனை இல்லாமல் அவற்றைச் செய்திருக்க முடியாது. சிந்தனை வடிவில் கோட்பாடு எழுத்தில் இடம் பெறவில்லை. ஆனால் உணர்வளவில் கோட்பாட்டு இயக்கம் நடைபெறாமல் இல்லை. நம்மவர்களும் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். தமிழ் இலக்கியத்தின் உள்ளிருந்தே தமிழிலக்கியத்திற்கான கோட்பாடுகளைக் கண்டறிந்து தொகுக்க வேண்டும் என்பது நம் எண்ணம். இயற்கையோடு மனிதனின் வாழ்வு என்றும் தொடர்வதாகத்தான் இருக்கிறது. அற உணர்வோடு அநீதிகளை எதிர்த்து தமிழனும் போராடித்தான் வந்திருக்கிறான். அன்பை இவன் கைவிடவில்லை . கடவுளையும் மனித முகத்தோடுதான் கண்டான். அழகியல் உணர்வை வாழ்வின் அனைத்து களங்களினுள்ளும் இவன் கொண்டிருந்தான். காதல், வீரம் என்பனவற்றை சற்றுக் கூடுதலாகவே கடைப்பிடித்தான். வாழ்வை இவன் தொடர்ந்து விரிவு செய்து கொண்டிருந்தான். இவ்வுணர்வு எல்லாம் நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தினுள் தொடர்ந்து பதிவாகியுள்ளன. கொடுங்கோன்மைக்கு எதிரான போரை இராமன் செய்தான். கந்த புராணத்திலும் இதே கதை. இப் போராட்டத்தினுள் அக்கால் அரசியலை நாம் காண முடியும். புனைவுகள் கூடுதலாக இருந்தன என்பது உண்மைதான். ஆனால் எதார்த்த வாழ்வை எல்லா நிலைகளிலும் மனிதன் இழந்துவிட முடியாது. இதற்கான பதிவுகளை எல்லா இலக்கியங்களிலும் காண முடியும். திறனாய்வு உணர்வோடு கற்க இயலுமானால் பெரிய புராணம், சிற்றிலக்கியம் போன்றவற்றினுள் மனித வாழ்வின் எதார்த்தத்தையோ, திரிபையோ நாம் காண முடியும். தமிழ் இலக்கியத்தை நாம் நேசத்தோடு கற்கிறோம். இலக்கியத்தின் எந்தப் பகுதியையும் நாம் குறைத்துப் பேசுவதில்லை. தமிழிலக்கியத்திலிருந்து சமதர்மம், சமத்துவம் என்பதற்கான மெய்யியலை அழுத்தமாக எடுத்துக்கொள்ள இயலும். இதனடிப் படையில் தமிழ் நாவல்களில் மார்க்சிய சார்பைக் காண முடியும். அதைப் போலவே இருத்தலியல் என்ற சிந்தனை மேற்கிலிருந்து வந்ததென்று கூறப்பட்டாலும் தமிழிலக்கியத்தினுள் இதன் ஆழ்ந்த பதிவை திருமூலர், திருவள்ளுவர் தொடங்கி தமிழ் நாவல்களில் அசோகமித்திரன், தி. ஜானகிராமன், நகுலன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியவர்களுக்குள்ளும் காண முடியும். ‘நாளென இன்று போல் காட்டி’ என்ற வள்ளுவரின் சிந்தனை, இருத்தலியல் சிந்தனை. சாவு, அபத்தம், இருண்மை என்பனவும் இவ்வகைச் சிந்தனை. நாவல் என்பது வாழ்வின் வலியைச் சொல்வது என்பதனால் சாவு, அபத்தம், இருத்தலியல் பற்றிப் பேசியாக வேண்டும். நகுலன் குறித்து இங்கு அவசியம் சொல்ல வேண்டும். கூடவே சா. கந்தசாமி பற்றியும் சொல்ல வேண்டும். ஃபிராய்டின் சிந்தனை நமக்கு எந்த வகையிலும் அந்நியமானதில்லை. அந்நியமாதல் என்ற சிந்தனை கூட பக்தி இலக்கியத்துள் அழுத்தம் பெற்ற சிந்தனை. தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘மோகமுள்’ முதலிய நாவல்களில் ஃபிராய்ட் சொல்லும் காமம் ஒரு மையக் கூறு. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ தமிழ் வாழ்வைப் பிளந்து போடுகிறது. ஹென்றி தன்னிலிருந்து விடுபட்டவன், ஒரு சித்தன். தமிழ் நாவல்களில் சித்தர்களைத் தொடர்ந்து காண்கிறோம். க.நா.சு., தி. ஜானகிராமன், அசோகமித்திரன் நாவல்கள் இதற்கு நல்ல சான்றுகள். கதை என்பதை நாவலின் இன்றியமையாத கூறு எனக் கருதுகிறோம். கதைக்கு மையம் வேண்டுமென்கிறோம். மையம் அழிந்த கதைகள் தமிழிலக்கியத்தில் இல்லை என்று கூட சொல்லத் தோன்றும். ஆனால் இது உண்மையல்ல. வாழ்க்கை என்பது ஒரு புள்ளியில் தொடங்கி இன்னொரு புள்ளியில் முற்று பெறுகிறது என்று சொல்ல முடியாது. எந்த ஒருவர் வாழ்விலும் ஒரே மையம் என்பதுமில்லை . மனிதனுக்குள்ளும் பிளவுகள் இருக்கின்றன. மனிதன் தன்னோடு போராடுகிறான் என்பது இந்தப் பிளவு பற்றிய கதைதான். வாழ்வுக்கு அர்த்தம் வேண்டும், பிளவு கூடாது என்றெல்லாம் மனிதன் கூச்சலிடுவதைத்தான் பக்தி இலக்கியங்களில் காண்கிறோம். இக் கோணத்தில் தமிழிலக்கியத்தை விரிவாக ஆராய முடியும். யாருடைய வாழ்வில்தான் இருண்மை இல்லாமல் இல்லை. அபத்தம் இல்லாமல் இல்லை. வெறுமையில்லாமல் இல்லை. இந்த வெறுமையோடுதான் கபிலர் அலைந்தார். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தான். சா. கந்தசாமி நாவலுக்குள் கதை தேவையில்லை என்ற விவாதத்தை முன் வைக்கிறார். நிகழ்வுகள் போதும். நிகழ்வுகளை வரிசையாக அடுக்கி வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாது. கந்தசாமி சொல்வதன் மூலம் தமிழிலக்கிய ஆய்வுக்குள்ளும் நாம் நெடுந்தொலைவு செல்ல முடியும். மேலும் ஒன்று தமிழ் நாவல்கள் மூலம் தமிழ் வாழ்வுக்குக் கிடைத்த அழுத்தம் திருத்தமான படிமங்கள் பற்றி அவசியம் சொல்ல வேண்டும். ஜெயகாந்தனின் கங்கா - கல்யாணி - ஹென்றி - ராஜாராமன், க.நா.சு.வின் சோமு பண்டாரம், சு.ரா.வின் தாமோதர ஆசான் - ஜே. ஜே . இப்படி ஓர் ஐம்பது பேர்களையாவது தமிழ் வாழ்வின் வெளிச்சங்களாக, வெளிப்பாடுகளாக, அழிவில்லாத பதிவுகளாக நாம் சொல்ல முடியும். தமிழ் நாவல்களிலிருந்து தமிழ் வாழ்வைப் பிரிக்க முடியாது. தமிழிலக்கியத்திலிருந்தும் பிரிக்க முடியாது. நா.பா.வின் பூரணி, பொன்னீலனின் சுகுமாரன் - புஷ்பாபாய் இவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ் இலக்கியத்தின் கோட்பாட்டு ஆய்வுகள் குறித்துப் பேசும் பொழுது இறுதியாக இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும். இலக்கியம் நமக்கு அலங்காரமன்று. ஆய்வுக்கான பொருளும்கூட அன்று. இலக்கியம் வாழ்வாக வேண்டும். யதார்த்தம் முதலியவை கூட புனைவுகள்தான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றையும் சிந்தனைக்குள் உணர்வுக்குள் வைத்து விளையாட்டாக மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம். ஆதிக்கங்களைத் தகர்த்து நாம் விடுதலைப் பெற்றாக வேண்டும். உழவர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் வாழ்வு தேவை. அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் அமுக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களோடு படிப்பாளர்களும் கைகோர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு மேலேயும், வழியாகவும் வகைவகையான ஆதிக்கங்கள். இவற்றைத் தகர்ப்பதற்கான பார்வையும் ஆற்றலும் வேண்டும். இவற்றை இலக்கியங்கள் வழி திரட்டிக் கொள்ள முடியுமா? திரட்டிக் கொள்வதற்கு வழி இருக்கிறது என்ற நோக்கில்தான் நாம் ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வுகள் தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பொருந்த வேண்டும். இங்குதான் மக்களோடு இணைவது பற்றிப் பேச வேண்டும். காலனியாதிக்கம் படிப்பாளிகள், கட்சிக்காரர்கள் வழியே இவர்களை இன்னும் தகர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. காடுகளை இன்னும் அழிக்கிறார்கள். புதிய பாதைகள் போடுகிறார்கள். ஊர்திகளைப் பெருக்குகிறார்கள். கணினி நிறுவனங்கள் ஏராளம். பசுமைப் புரட்சியைத் தீவிரப்படுத்துகிறார்கள். புதிய பல்கலைக்கழகங்கள் ஆய்வுக் கூடங்கள் தொடங்குகின்றனர். இறுதியில் எல்லாமே மக்களை வசப்படுத்தி அவர்களின் சுய அறிவை அழித்து நிலம், நீர்நிலைகளை நாசமாக்கி, பெண்களைச் சீரழித்து குழந்தைகளைக் கொல்வதாக முடிகிறது. பின்னைக் காலனித்துவம் (அ) காலனித்துவத்திற்கு எதிரான செயல் என்று பேசும் போது நாட்டார் கலைகள், கதைகள் என்றெல்லாம் பேசிப் பயனில்லை. செல்லப்பாவையும் க. நா. சுவையும், அதேபோல பெரியாரையும் அம்பேத்கரையும் இழந்துவிட முடியாது. காந்தியைப் போற்றத்தான் வேண்டும். காலனியாதிக்கத்தோடு அதிக அளவு ஒத்துழைத்தவர்கள் பார்ப்பனர்கள். மேற்கத்திய தொழில்நுட்பம் முதலியவற்றை பெரிதாக வரவேற்றவர் மார்க்சியர். ரஷ்யாவை இங்கு இறக்குமதி செய்யக்கூட இவர்கள் முயன்றனர். ரஷ்ய அதிகாரத்தில் இந்தியா என்னவாகியிருக்கும்? இந்தியா எனும் கட்டமைப்புகூட காலனியாதிக்கத்தின் முதற்பெரும் விளைவு. தேசிய இனங்களின் விடுதலை என்று நாம் இன்று பேசுகிறோம். இன்னும் இப்படி எத்தனையோ விவரங்களோடு இலக்கியம் பற்றியும் பேச வேண்டும். புனைவுகள் என்றவுடன் யதார்த்தம் முற்றாக அழிந்துவிடவில்லை. படிப்பாளிகளுக்குப் புனைவுகள் போதும். மக்களுக்கு யதார்த்தம் தேவை. தமிழ் இலக்கியக் கோட்பாடுகளில் சித்தர் இலக்கியக் கோட்பாடு இன்றும் நமக்குப் பெரிதும் பயன்படும். இவர்கள் வழியில்தான் நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தை நமக்குள் கொண்டு வர முடியும். தமிழ் இலக்கியப் பரப்பில் இயல்பான போக்கு எனத் தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் கொள்வது கடினம் என்றாலும் தமிழ் இலக்கியத்திற்குள் இவர்களுக்கு இடம் செய்தாக வேண்டும். என் கவித்துவம் கவித்துவம்தான் என் திறனாய்வுக் கொள்கையின் ஆதார நிலைப்பாடு என்று கருதுகிறேன். இலக்கியக் கொள்கை, வாழ்வியல் கொள்கை முதலியனவற்றுக்கும் கவித்துவம்தான் ஆதாரம் எனக் கருதுகிறேன். ஒன்றாகக் காண்பதே காட்சி என்பது அவ்வையாரின் வாக்கு. சமத்துவம், சமதர்மம் என்பதுதான் தனிமனித வாழ்வுக்கும் ஆதாரமான சக்திகள். இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிற உயிர்களிடமிருந்தும் நாம் வேறுபட்டவர்களாக இல்லை . எல்லாவற்றோடும் நாம் இணைந்திருக்கிறோம். இவைதான் நம் வாழ்வுக்கும் ஆதாரம். வானம், பூமி, நிலம், நீர், காற்று - இவைதான் இயற்கையின் மாபெரும் சக்திகள். இவற்றின் மூலம்தான் நமக்கான உயிர்ப்பை உணவு முதலிய எல்லாவற்றையும் பெறுகிறோம். ஒட்டுமொத்தமான சமுதாயத்தின் கூட்டு உழைப்பின் மூலம்தான் நமக்கான வாழ்வையும் பெறுகிறோம். இயற்கை என்று சொல்லும் பொழுதே பிரபஞ்சம் தழுவியதாக இயற்கையையும் குறிப்பிடுகிறோம். வரலாற்றில்தான் நாம் மனிதரானோம். வரலாற்று இயக்கத்தின் தற்கால ஆக்கங்கள் / அழிவுகளோடும் நாம் இருக்கிறோம் / இயங்குகிறோம். இவையனைத்துமே தனி மனிதர் படைத்தவையல்ல. இவற்றில் எந்தப் பகுதியையும் தனி மனிதர் தனக்கென உரிமை கொண்டாட முடியாது. இயற்கை, வரலாறு, சமூகம் என எல்லாவற்றின் வழியிலும் நாம் உருவானோம் / வாழ்கிறோம். இவை நமக்குள்ளும் இருக்கின்றன / இயங்குகின்றன. இயற்கை எந்த நொடியிலும் ஓயாத இயக்கத்திலிருக்கிறது. வரலாற்றினுள்ளும் சமூகத்தினுள்ளும் உள்ள ஓயாத இயக்கத்தையும் இயற்கை என்ற பேரியக்கத்தின் - அதாவது பிரபஞ் சம் என்ற பேரியக்கத்தின் தொடர்ச்சியாகவே நாம் காண முடியும். தனி மனிதர் என்ற முறையில் நமக்குள்ளும் இந்த இயக்கம் தொடர்கிறது. உயிரியக்கம் மட்டுமல்லாமல் நம் வாழ்வில் அனைத்துவகை இயக்கங்களும் இவற்றின் தொடர்ச்சியோடுதான் உள்ளன. ஒருவகையில் பிரபஞ்சம்தான் இயற்கை, வரலாறு, சமூகம் ஆகிய அனைத்தினுள்ளும், அதேபோல் நமக்குள்ளும் இயங்குகிறது. இயக்கமில்லாமல் எவ்வகை உயிர்ப்புமில்லை. இந்த இயக்கம் நமக்குப் புறத்தில் மட்டுமல்லாமல் அகத்தினுள்ளும் செயல்படுகிறது. இயற்கையைப் போலவே நாமும் படைக்கிறோம். இயற்கை எல்லாவற்றையும் ஓய்வில்லாமல் படைக்கிறது. காப்பாற்றுகிறது. பின்னர் அவற்றை அழிக்கவும் செய்கிறது. அழிவு என்பது முற்றானதாக இல்லை. மீண்டும் ஆக்கத்திற்கான இயற்கையின் ஒரு செயல்பாடு. நமக்குள்ளும் இத்தகைய படைப்பியக்கம் தொடர்கிறது. படைப்பியக்கம் இல்லாமல் உயிரியக்கமில்லை. எந்த உயிரும் தனக்கான வாழ்வை, தனக்கான வாழ்வின் தேவைகளைப் படைத்துக் கொள்கிறது. உயிர் வகைகளில் மனிதன்தான் தன் உணர்வோடு தனக்கான வாழ்வைப் படைத்துக் கொள்கிறான். பிற வகை உயிர்களைப் பொறுத்தவரை தன் உணர்வின்றி அதில் செயல்படுவதாகத்தான் பொதுவாக நாம் கருதுகிறோம். குறைந்த அளவுக்கேனும் தன் உணர்வோடு செயல்படும் உயிரினங்களையும் நாம் பார்க்கிறோம். இது விரிவான ஆய்வுக்கு உரியது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. குழந்தைகளைப் பொறுத்தவரை தொடக்கத்தில் தன் உணர்வின்றிதான் விளையாட்டு முதலியவற்றில் ஈடுபடுகின்றனர். நாளடைவில் தன்ணுணர்வைப் பெறுகின்றனர். தன் தேவைகளைத் தன் உணர்வோடு நிறைவு செய்து கொள்கின்றனர். ஓர் உழவன் அல்லது ஒரு வேடன் தன் உணர்வோடுதான் இயற்கையின் மீது செயல்பட்டு தன் வாழ்வுக்கானத் தேவைகளைப் பெறுகிறான். இப்படித்தான் மனித வாழ்வு தொடங்குகிறது என்றே வைத்துக் கொண்டாலும் நாளடைவில் மனிதன் சமுதாயத்தின் மூலம் வரலாற்றின் மூலம் இயற்கையின் மூலம் தான் தன்னைப் படைத்துக் கொள்கிறான் என்ற புரிதல் ஏற்பட்டு நிலைபெற்ற போது தனக்காக என்றில்லாமல் ஒட்டுமொத்தமான மனித சமூகத்திற்காகவும் வாழ்கிறான், படைக்கிறான். கூர்ந்து பார்த்தால் அனேகமாக எல்லா மனிதர்களும் தனக்காக மட்டுமே வாழ்வது இல்லை / படைப்பதில்லை. குழந்தைகளுக்காக, குடும்பத்திற்காக மேலும் விரிந்த நிலையில் சமூகத்திற்காக வாழ்கிறான் / படைக்கிறான். இயற்கை ஓயாமல் படைக்கிறது. அந்த இயற்கை மூலம்தான் மனிதன் தன்னையும் படைத்துக் கொள்கிறான். இயற்கையைப் போலவே வரலாறும் சமூகமும் படைக்கப்படுகின்றன. இந்த படைப்பின் மூலம்தான் வாழ்கிறான். தன்னையும் படைத்துக் கொள்கிறான். படைப்பியக்கம் இவன் வாழ்வுக்கு மூலமாகிறது. ஆதாரகிறது. படைப்பின் மூலம்தான் பிரபஞ்சம் இயற்கை, வரலாறு, சமூகம் முதலிய எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்கிறான். இவையனைத்தின் இயக்கத்தோடும் தானும் இயங்குகிறான். படைப்பியக்கம் இவனுக்கு இயல்பாகிறது. இயற்கை, வரலாறு, சமூகம் பற்றிய உள் உணர்வோடு ஓயாத படைப்பியக்கத்தில் உள்ளவன் என்ற முறையில் மனிதனை நம்மால் புரிந்து கொள்ள இயலுமானால் ஒரு மெய்யியலாளனை, ஒரு கவிஞனை ஓர் அறிவியலாளனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு தாயை வேறு எப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு தலைவனை வேறு எவ்வகையில் புரிந்து கொள்வது. வள்ளுவன், இளங்கோ, சாக்ரடீஸ், மார்க்ஸ், லெனின், ஐன்ஸ்டீன் போன்றவர்களை வேறு எந்த வகையில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். புத்தன், இயேசு முதலியவர்களும் இவ்வகையில்தான் தம்மைத் தாமே படைத்துக் கொண்டார்கள். எந்த வகையான படைப்பும் இம்முறையில்தான் உருவாகியிருக்க முடியும். புத்தர், சாக்ரடீஸ், வள்ளுவர் முதலியவர்கள், அவ்வையார் கூறியபடி பிரபஞ்சம் முதலிய அனைத்தையும் தனக்குள்ளும் புறத்திலும் ஒன்றெனக் கண்டவர்கள். வரலாற்றுச் சூழலுக்கு ஒத்தபடி தமக்கான பார்வையை வரித்துக் கொண்டவர்கள் இவர்கள். வரலாற்றின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தான் மனித வாழ்வின் முழுக் கோளமும் தெளிவாகத் தெரிய வருகிறது. மனிதர் படைத்த பல்வேறு சமயங்கள், சாத்திரங்கள், கலைகள், இலக்கியங்கள் முதலிய அனைத்துமே வரலாற்றுச் சூழலை உட்கொண்டவைதான். குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் வைத்துத்தான் இவற்றை அக்காலத்திற்கான வரையறைகளோடு புரிந்து கொள்கிறோம். வரலாற்றின் திரிபுகளோடு தான் மனிதன் வளர்ந்து வந்திருக்கிறான். திரிபுகள் முற்றாக என்று தீரும் என்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திற்கான திரிபுகளோடுதான் மனிதன் வாழ்கிறான் என்றாலும் அவனுக்குள்ளும் வரலாற்று இயக்கத்தை, அவன் காலவரையிலான வரலாற்றின் ஆக்கத்தை இயற்கையின் உள் வாங்கலை, சமூகச் சார்பை கலை உணர்வை நம்மால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஒரு காலத்தில் மனிதன் இயற்கையோடு ஒன்றி இருந்தான் என்கிறோம். அப்போது சமூகத்தோடும் ஒன்றியிருந்தான். வரலாற்றுச் சூழலுக்குள் வந்த நிலையில்தான் மனிதர் தமக்குள்ளும் முரண்படுகின்றனர். தனியுடைமை அரசதிகாரம் இவற்றில் எல்லாம் தோன்றி வளர்ந்த நிலையில் மனிதன் முரண்பாடுகளுக்கிடையில் மாட்டிக் கொண்ட போதிலும் தன் தொடக்கக் காலத்து பொதுமை உணர்வை அவன் முற்றாக இழக்காமலிருந்தான். வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள், முரண்பாடுகள், தெரிவுகள், மாயைகள் இவற்றுக்கிடையிலும் தனக்குள்ளிருந்த பொதுமை உணர்விலிருந்து முற்றாக விலகிவிடவில்லை. அந்தப் பொதுமை உணர்வின் போதுதான் தன்னை அவன் மனிதனாக இனங்கண்டுகொண்டவனாகவும் இருந்தான். இடையில் எத்தனையோ போர்கள், தேசப் பிரிவினைகள், மொழிகள், நாகரிகங்கள் இவையனைத்துமே அவன் தனக்கு எனத் தரித்துக் கொண்ட மேலாடைகள், வடிவங்கள், கோலங்கள் இவற்றோடுதான் மனிதன் வாழ்ந்தான், வளர்கிறான் என்ற போதிலும் இந்த ஆதிப் பொதுமை உணர்வை மீண்டும் மீண்டும் தனக்குள்ளேனும் நினைவுப் படுத்திக் கொண்டான். முரண்பாடுகள் இல்லாமல் மனிதன் வாழ முடியும். பகையின்றி போட்டி பொறாமைகளின்றி, போர்களின்றி எல்லோரும் கூடி உழைத்து பகிர்ந்து உண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து வாழ முடியும். இத்தகைய வாழ்வுதான் நிறைவான வாழ்வாக இருக்க முடியும். புத்தர், இயேசு, வள்ளுவர் முதலியவர் மனிதனைப் பற்றிக் கண்ட கனவும் இதுவாகத்தான் இருக்க முடியும். சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றின் நிறைவில்தான் மனிதன், நிறை மனிதனாகவும் இருக்க முடியும். வாழ்க்கை , வரலாறு, இயற்கை, சமூகம், பிரபஞ்சம் ஆகிய அனைத்தினோடும் நிறைவாக மனிதனால் வாழ முடியும். இவன்தான் படைப்பியக்கத்தின் முழு ஆற்றலையும் தாங்கியவன். இந்தப் படைப்பியக்கம்தான் மனிதனுக்குள் ஓயாமல் இயங்கும் கவித்துவம் படைப்பியக்கமும் கவித்துவமும் வேறானவையல்ல. வாழ்வின் உள்ளியக்கம் என்று கவித்துவத்தைத்தான் சொல்ல முடியும் எல்லோருக்குள்ளும் கவித்துவம் இருக்கிறது என்றாலும் தனக்குள் இருக்கிற கவிதையை கவித்துவத்தைக் கண்டு கொள்பவன் தான் மனிதன். இவன்தான் மெய்யியலாளன். தனக்குள்ளிருக்கிற கவித்துவத்தை அழித்துக் கொண்ட நிலையில் ஒருவர் கொடியவனாக, கொள்ளைக்காரனாக, அதிகாரியாக, வணிகனாக வாழ முடியும். இவர்கள் வாழ்க்கை அரைகுறை வாழ்க்கை. தரமான மனித வாழ்க்கையன்று. பக்தி இலக்கியம் தமிழின் பக்தி இலக்கியத்தை இன்றைய நோக்கிலிருந்து படித்து அறிவது என்பது பற்றிச் சில சொல்லலாம். இன்றைய நோக்கு அறிவியல் நோக்கு அல்லது அறிவு நோக்கு என்று கொள்ள வேண்டும். நம் காலத்தில் நமக்கு அறிமுகமான பகுத்தறிவு நோக்கு என்ற போக்கைச் சொல்ல முடியும். இதிலிருந்து மார்க்சிய நோக்கு வேறுபட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். இவை பற்றிப் பிறகு பார்க்கலாம். மனிதனைக் கட்டமைக்கிற பலவகைத் திறன்களில் ஒன்றை அறிவு அல்லது தர்க்கம் என்று சொல்ல முடியுமானால் இன்னொன்றை உணர்வு அல்லது அதர்க்கம் என்று குறிப்பிடலாம். அதர்க்கம் என்ற பிரதேசத்தின் பல கூறுகள் தொடர்ந்து அறிவியலின் எல்லைக்குள் வருகின்றன. அறிவு எல்லைக்குள் வராத உணர்வுப் பிரதேசம் இன்னும் பெரிய அளவில் இருக்கத்தான் செய்கிறது. உளவியல் ஆய்வுகள் இந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றி தன்னுடையது என ஆக்கிக் கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மெய்யியல் என்ற அணுகுமுறைக்கு அறிவியல் ஆய்வு எந்த அளவில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. மனிதனை விட்டு உணர்வைப் பிரிக்க முடியாது. உணர்வின் ஒரு முக்கிய கூறு பக்தி. பக்தி என்பது சமயத்தின் எல்லைக்குள் திரட்டப்பட்டதாக இருந்த போதிலும் சமூகத் தளத்தினுள் பக்தி என்ற இயக்கத்திற்கு நிறைய இடம் இருக்கிறது. கட்சி, தலைவர், குடும்ப எல்லைக்குள் பெற்றோர், முந்தையோர் என்ற முறையில் பக்தி உணர்வுகள் இன்றும் செயல்படுகின்றன. கூடியவரை இந்த உணர்வுகள் அறிவார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு மேல் நாம் எதையும் சொல்ல முடியாது. இங்கு அறிவார்ந்தது என்பதை அறிவியல் வரையறைகள் சார்ந்தது என்று பொருள்படுத்தவும் முடியாது. அப்புறம் உணர்வற்ற அறிவு என்பது இல்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள முடியும். பக்தி இயக்கம் என்று சொல்லும்போது கடவுள் என்றும் கோயில் என்றும் உருவம் என்றும் சடங்குகள் என்றும் கொண்டாட்டம் என்றும் பலவற்றை உள்ளடக்கிப் பேசுகிறோம். சமுதாயத்தில் எத்தனையோ வடிவங்களில் சடங்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை போலவே உருவங்களும் வழிபாடுகளும், கோயிலுக்குப் பதிலாக மண்டபங்களும், நினைவுச் சின்னங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கடவுள் நம்பிக்கை என்பது, தலைவர் மீது கட்சியின் மீது நம்பிக்கை, தத்துவத்தின் மீது நம்பிக்கை என்ற வகைகளிலும் நிலைபெறுகின்றன. கடவுள் இல்லை என்பது இன்று ஒப்புக்கொள்ளப்படுகிற கருத்து என்றே வைத்துக் கொண்டாலும், கடவுள் என்ற கருத்தின் உள்ளடக்கம் என்ன என்ற ஆய்வுக்கும் நாம் இடம் கொடுக்கிறோம். கடவுள் என்பது பொய் என்றும் சமூகத்தில் ஒரு பிரிவினரின் தேவைக்காக அக்கருத்து ஏற்படுத்தப்பட்டது என்றும் சொல்வதன் மூலம் கடவுள் பற்றிய ஆய்வை முடித்துக்கொள்ள முடியாது. வரலாற்றில் பழங்காலச் சூழலில் கடவுள் கருத்து ஏற்பட்டது என்பது உண்மைதான். நவீன காலச் சூழலிலும் கடவுள் கருத்தின் நிலைபேற்றுக்கும் புத்தாக்கத்திற்கும் சில தேவைகள் இருக்கத்தான் செய்கின்றன. கடவுள் இன்றும் சாகவில்லை. தமிழகச் சூழலிலும் இத்தகைய அனுபவத்தைப் பார்க்கிறோம். பக்தி இலக்கியம் என்று பேசுகிறபோது, இவ்வகைச் சிந்தனைகளோடுதான் பக்தி இலக்கியத்தை நாம் அணுகுகிறோம். பக்தி, ஒருவர்க்குள் தீவிர இயக்கம் கொள்ளுகிற நிலையில் அவனுக்குள் பிறழ் உணர்வுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறுக்கவில்லை. கண்ணப்ப நாயனார் போன்றவர்களை இந்நோக்கில்தான் புரிந்து கொள்ள முடியும். மாணிக்க வாசகர் வரலாற்றில் நிறைய கற்பிதங்கள் இடம் பெறுகின்றன. சேக்கிழார் பக்தி என்ற பெயரில் நிறைய கற்பிதங்களை திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு அதிகாரத்தோடு இணையும் பொழுது உண்மையாகிவிடுகின்றன. இவை உண்மைதான் என்று சொல்வதற்கான ஆதாரங்களும் உருவாக்கப்படுகின்றன. சமயம் நிறுவனப்படுத்தப்பட்ட சூழலில் இவை மனிதர்களை தம் ஆதிக்கத்தில் செயல்படுத்துகின்றன. இத்தகைய போக்கை நாம் இன்று மறுத்துவிடுகிறோம். பக்தி இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு மத நிறுவனங்கள் வழியிலான அணுகுமுறை நமக்கு சிறிதளவும் பயன்படாது. அதிலும் குறிப்பாக இலக்கியம் என்ற முறையில் பக்தி இலக்கிய ஆய்வுக்கு நிறுவன அணுகுமுறை பயன்படாது. நிறுவன அணுகுமுறைக்கு எதிரியக்கமாகத் தோன்றியதுதான் பகுத்தறிவு இயக்கம். கடவுள் பொய் என்றும், சடங்குகள், மூடநம்பிக்கை சார்ந்தவை என்றும் மத நிறுவனங்கள் ஆதிக்க நிறுவனங்கள் என்றும் புராணங்கள் பொய் என்றும் பகுத்தறிவுப் பார்வை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் இவ்விரு பார்வைகளும் இன்று பக்தி இலக்கிய ஆய்வுக்கு பொருந்தாதவை. மனிதனைக் கட்டமைக்கிற கூறுகளில் அதர்க்கம் என்பது ஒரு முக்கியமான கூறு. மனிதனுக்குள் மரபு செயல்படுகிறது. தன் குடும்பத்தினர்களோடும் நண்பர்களோடும் மனிதன் கலந்து / கரைந்து வாழ்கிறான். இயற்கையின் மத்தியில் தனக்குள் நெகிழ்வு அடைகிறான். காதலில் கரைகிறான். சமூக அளவில் தன்னை விரித்துக் கொள்கிறான். அரிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். நாடு என்றும், மொழி என்றும், விடுதலை என்றும் பேசுகிறான். பொருளுக்கும் அதிகாரத்திற்கும் மனிதன் இரையாகக் கூடாது என்கிறான். அறிவும் உணர்வும் கலந்து இயங்கும் பிரதேசம் என்று இவற்றைக் குறிப்பிடலாம். மனிதன் தன்னை, நான் என்ற அளவில் சுருக்கிக் கொள்ள முடியாது. தனக்குள் வரலாறு, சமூகம், இயற்கை முதலியவற்றைக் கண்டு தன் ஆளுமையை மனிதன் விரித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதனிடம்தான் படைப்பு உணர்வு மேம்படும். இத்தகைய மனிதனுக்கு கடவுள், கோயில், சடங்குகள் என்பவை புரியும். கடவுள் என்பவர், தன்னிலிருந்து தோன்றியவர்தான் என்பது இவனுக்குத் தெரியும். வரலாற்றுக் காலம் முழுவதும் மனிதனை ஆளுகை செய்த சக்திகள் பல. இவ்வகைச் சக்திகளில் கடவுளும் ஒன்று. அரசும் இன்னொரு சக்தி. உடைமை, உறவு என்பனவும் இவ்வகைச் சக்திகள். எப்பொழுதெல்லாம் இவற்றுக்கு முற்றாக மனிதன் ஆட்படுகிறானோ, அப்பொழுதெல்லாம் இவை கடவுளாகி விடுகின்றன. இவற்றைக் களையும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றில் இவ்வகை இயக்கம் மிக முக்கியமானது. வரலாற்றுக் காலம் முழுவதும் இவ்வகை இயக்கங்கள் வழியே மனிதன் தன்னைத்தானே கடந்து வந்திருக்கிறான். கடத்தலின் போது முன்னைய வரலாற்றுக் காலத்தின் ஆற்றல்களை தனக்குள் செரித்துக் கொள்கிறான். இன்று மனிதனுக்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் என்ற வடிவத்திற்குள் எவையெல்லாம் திரண்டிருந்தன என்பதை இன்று மனிதன் பார்த்துக் கொள்கிறான். வானம் முதலிய ஐந்து பூதங்களை மனிதன் கடவுள் என்றான். ஐம்பூதங்களின் குணங்களைக் கடவுள் தன்மை என்றான். தன் பிறப்பையும் வாழ்வையும் அப்புறம் சாவையும் கூட கடவுளோடு தொடர்புபடுத்தினான். இயற்கையில் உள்ள தாவரங்கள், சந்திரன், சூரியன், மழை, வெயில், காற்று ஆகியவற்றையெல்லாம் கடவுள் என்றும், கடவுளோடு தொடர்புபடுத்தியும் கூறினான். எல்லாவற்றையும் கடந்தும் தனக்குள்ளும் இருப்பவர் கடவுள் என்றான். புலன்களின் வழியே தனக்குள் வரும் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் சக்தியைக் கடவுள் என்றான். புலனறிவுக்கு அகப்படாமல் தனக்குள் இயங்கும் உள்ளுணர்வை கடவுள் என்றான் அல்லது ஆன்மா என்றான். கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று சிந்தித்தான். கடவுளும் ஆன்மாவும் ஒன்றுதானா, அருகிலிருப்பவையா, தொலைவில் இருப்பவையா என்றெல்லாம் சிந்தித்தான். நன்மை, தீமை, பாவம், புண்ணியங்கள் என்பனவற்றுக்கும் கடவுளுக்கும் என்ன உறவு என்று சிந்தித்தான். விடை தேடி தனக்குள்ளும், வெளியிலும் அலைந்தான். கண்டுபிடித்த விடைகளை அழித்து வேறு விடைகளைக் கண்டான். ஒன்றுக்கொன்று முரண்பட்ட விடைகளையும் கண்டான். கடவுள் உண்டு என்றான். கடவுளுக்கு உருவம் இல்லை என்றான். தொலைவிருக்கும் கடவுள் தனக்குள்ளும் இருக்கிறார் என்றான். கடவுள் என்பது மாயை என்றான். சூன்யமே உண்மை என்றான். கடவுளும் சூன்யமும் ஒன்றுதான் என்று சொன்னான். கடவுளைக் காட்டிலும் அறம் பெரிது என்றான். விதி பெரிது என்றான். அரசனும் கடவுள்தான் என்றான். அன்னையும், பிதாவும், குருவும், தெய்வம் என்றான். கோயில்களில் தேடி, அங்கு கடவுள் இல்லை என்றான். இவ்வாறெல்லாம் கடவுளைப் பற்றிய மனிதனின் அனுபவங்கள் வகைவகையானவை. பக்தி இலக்கியத்தினுள் இவை அவ்வளவையும் நாம் காண்கிறோம். கடவுள் அரியவனாகவும் இருக்கிறான். எளியவனாகவும் இருக்கிறான். கடவுள் மனிதனை இன்புறுத்துகிறான். துன்புறுத்தவும் செய்கிறான். கடவுள் என்பது மனிதன் படைத்த மிகப் பெரும் நாடகம். மிகப் பெரிய கலை. மிகப் பெரிய இலக்கியம். கடவுளைப் பெரியதாக மனிதன் படைத்துக் கொள்கிற பொழுதே அந்தக் கடவுளுக்கு மனிதன் தன்னை இழந்து விடுகிறான். தான் படைத்துக் கொண்ட கடவுள், தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று அதன் காலடியில் விழுந்து புலம்புகிறான். தனக்கே அது புலப்படாத பொழுது தேடியலைகிறான். கிடைப்பது போல தோன்றி அந்தக் கடவுள் தன்னை விட்டு மறைந்து போகிறது. இப்படி தான் படைத்துக் கொண்ட நாடகத்தினுள் மனிதன் இன்புறுகிறான். துன்புறவும் செய்கிறான். உண்மையில் கடவுளுக்குள் அகப்பட்டிருக்கும் வரலாறு, பொருளியல் சக்திகள் இவனுக்குத் தெரியவில்லை. எவ்வகைச் சக்திகள் தனக்குள் கடவுள் என்ற உணர்வை / உருவத்தைத் தோற்றுவித்தது என்று புரியாத கிடையில் தனக்குள் குழம்பித் தவிக்கிறான். ஒரு வகையில் மனிதன் தன்னைத்தானே கண்டறிந்து கொள்ளும் முயற்சி என்றும் இதனைக் கூறலாம். இதற்காக மனிதன் தவங்கள் செய்தான். சாத்திரங்கள் செய்தான். தத்துவங்கள் படைத்தான். எல்லாவற்றினுள்ளும் மனிதன் கடவுளைத் தேடுகிற சாக்கில் தன்னையே தேடிக் கொண்டிருந்தான். வரலாற்றிலிருந்தும், பொருள் வகைச் சக்திகளிலிருந்தும் தான் தனியானவன் என்ற கருத்து இவனை நெடுங்காலம் அலைக் கழித்தது. அண்மைக் காலத்தில் தான் இந்த உண்மை இவனுக்கு புரியத் தொடங்கியது. பகுத்தறிவுவாதி இந்த உண்மையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மனிதனுக்குள் அறிவு அல்லது மடமை என்பது ஒரு தனியான சக்தி என ஒரு பகுத்தறிவுவாதி கருதுகிறான். வரலாற்றோடும் பொருளோடும் தொடர்பற்ற தனியான சக்தியென அவற்றைக் கருதுகிறான். மனிதனின் மடமைதான் கடவுளைக் கண்டுபிடித்தது என்கிறான். அறிவுள்ள மனிதன் கடவுளைக் களைந்து கொள்ள வேண்டும் என்கிறான். அறிவே முழு முதல் சக்தி என்றான். மார்க்சியவாதி, பொருளுக்கு முதன்மை தந்து கடவுள் இல்லை என்கிறான். பொருளுக்கும் மனிதனுக்கும் இடையில் தோன்றியதுதான் கடவுள், தனக்குள் கடவுளும், கடவுளுக்குள் தானும் இருந்ததை, மார்க்சியவாதி கண்டு கொள்ள வேண்டும். தமிழின் செவ்வியல் இலக்கியம் - சில ஆய்வுகள் திரு. இரவிக்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட மணற்கேணி 2012 ஏப்ரல் இதழில் தமிழின் செவ்வியல் இலக்கியம் குறித்து ஷெல்டன் பொல்லாக் என்பவர் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையின் முக்கியமான கருத்துரைகளைத் தொகுத்துத் தருவதோடு இடையிடையே தன் கருத்துகளையும் தருகிறார். ஷெல்டன் போலக் அவர்களின் கட்டுரையைப் பற்றி இ. அண்ணாமலை அவர்களிடமிருந்தும் ஒரு கட்டுரை பெற்று வெளியிட்டிருக்கிறார். தமிழின் செவ்வியல் இலக்கியம் பற்றி இம்மூவரின் கருத்துகளும் நமக்குள் நிறைய எதிர்வினைகளை எழுப்புகின்றன. இதன் தொடர்பாக என் குறிப்புகள் சிலவற்றை நண்பர்களின் மேலாய்வுக்காகக் கீழே தருகிறேன். 1. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை இந்திய அரசு வழங்கியது ஓர் அரசியல் நிர்பந்தம்தான் என்பது போலக் குறிப்பிடுவதை நாம் ஏற்கிறோம். இதே போலத்தான் கன்னடத்திற்கும் தெலுங்கிற்கும் செம்மொழித் தகுதி கிடைத்ததும் அம்மொழி சார்ந்தவர் செய்த அரசியல் நிர்பந்தம்தான். இதே முறையில்தான் மலையாள மொழி சார்ந்தவரும் தம் மொழிக்குச் செம்மொழித் தகுதியை வற்புறுத்துகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன் வைக்கத்தான் செய்கின்றனர். செம்மொழித் தகுதி காலங்கடந்துதான் தமிழுக்கு கிடைத்தது. கிரேக்கம், இலத்தீன் முதலிய உலகளவிலான செம்மொழிகளை ஒப்பவைத்துப் பார்க்கும் பொழுது அம் மொழிகளுக்கு நிகராக தமிழைச் செம்மொழிதான் என மெய்ப்பிப்பதில் எவ்வகை சிக்கலுமில்லை. கிரேக்கம் முதலியவற்றின் செம்மொழித் தகுதிக்கான வரையறைகள் தமிழுக்குப் பொருந்துகிற அதே முறையில் / தரத்தில் கன்னடம் முதலிய மொழிகளுக்கும் பொருந்தும் எனத் தோன்றவில்லை. தமிழைச் செம்மொழியென இந்திய அரசு ஏற்பதற்கு அரசியல் நிர்பந்தம் தேவைப்பட்டதற்கான நியாயத்திற்கு நிகரான நியாயத்தைக் கன்னடம் முதலிய மொழியாளர் வைக்க முடியாது. மேலும் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். கிரேக்கம் முதலிய மொழிகளுக்கான செம்மொழித் தகுதியை எந்த அரசும் வழங்கவில்லை. இயல்பாகவே அம் மொழிகளுக்கான தகுதியை உலகளவில் மொழியியல் / இலக்கியம் சார்ந்த அறிஞர் தீர்மானித்தனர். அதேபோலத்தான் தமிழையும் அவர்கள் செம்மொழியென ஒப்புக் கொண்டனர். இந்தியாவின் அரசியல் மட்டத்தில் மைய அரசு இத்தகுதியை வழங்க வேண்டுமென்று நாம் போராட வேண்டியிருந்தது. சமஸ்கிருதம் முதலிய மொழிகளுக்கு நிகரான தகுதியை, பல காலம் வழங்கத் தவறிய மைய அரசை நாம் நிர்பந்திக்க வேண்டியிருந்தது. தமிழுக்குக் கிடைத்த தகுதி கன்னடம் முதலிய மொழி சார்ந்தவர்களை, பொறாமையுடனும் ஆத்திரத்துடனும் கிளர்ந்தெழச் செய்தது. எங்கள் மொழிகளை விடவா தமிழ் உயர்ந்தது / தொன்மையானது என்று அவர்கள் உரத்துக் குரல் எழுப்பினார்கள். எல்லாமே அரசியல் அநாகரிகத்தின் சிலவகை செயல்பாடுகள். நிர்பந்தம் செய்துதான் நமக்கு இந்தப் பெருமை கிடைத்தது என்பதற்காக நாமும் தாம் தலைகுனிய வேண்டியிருக்கிறது. இந்திய அரசில் நாம் மாட்டிக் கொண்டதான் ஒரு விளைவு இது. 2. போலக் முதலியவர்கள் கட்டுரைகளில் செவ்விலக்கியம் / செம்மொழி இலக்கியம் என்பதற்கான வரையறைகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு மொழியின் தொன்மை, அம்மொழியின் வளம், மொழியின் உள்ளடக்கம், குறிப்பிட்ட ஒரு மொழி பிற மொழிகளின் மீது செலுத்தும் தாக்கம். இப்படி ஒரு பொதுக் கருத்து. இம்முறையில் தமிழின் தொன்மை 150 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் மொழியின் முற்றான தனித்தன்மை, வேறு எந்த மொழிக்கும் கடன் படாத தன்மை உயர்தரமான இலக்கிய மேன்மையோடு பண்பாட்டு மேன்மை. குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரும் தோன்றிய இலக்கியத்தின் மீது அது செலுத்தி வரும் தாக்கம் ஒரு மொழிக் குடும்பத்தினுள் முதன்மைத் தன்மை இப்படித் தமிழின் தகுதியைத் தொகுத்துக் கொள்ளலாம். இந்திய அரசு இந்த வரையறைகளை முன்வைத்ததோடு நாமும் ஏற்றுக் கொண்டோம் / ஏற்றுக் கொண்டது எந்த அளவிற்கு சரியென்று நமக்கிடையில் கேள்வி உண்டு. உடனடியாக ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்புகிறார். கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட 41 நூல்கள் மட்டும்தான் செவ்விலக்கியமா? அடுத்துத் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் ஆகியவற்றுக்கு செவ்விலக்கிய தகுதி இல்லையா? என்று கேட்கிறார். பெருங்கதை, சிந்தாமணி முதலியனவும் செவ்விலக்கியம் இல்லையா? என்றும் அவர் கேட்டிருக்கலாம். சங்க இலக்கிய தொகுப்பினுள் உலகியல் சார்ந்த மனித வாழ்வின் விழுமியங்கள் மேம்பட்டிருக்கின்றன. இத்தகைய விழுமியங்களைத்தான் இன்றைக்கும் நாம் கொண்டாடுகிறோம். கிரேக்கம் முதலிய மொழி இலக்கியங்களிலும் இத்தகைய மனித விழுமியங்களுக்கே முதன்மை உண்டு என நாம் கருதுகிறோம். ரவிக்குமார் குறிப்பிடும் பக்தி இலக்கியம் முதலியவற்றில் மனிதவியல் சார்ந்த விழுமியங்களை விடவும், சமயம் சார்ந்த விழுமியங்கள் மேலுக்கு வந்திருக்கின்றன; மனித விழுமியங்களைக் கீழேத் தள்ளிவிட்டு இறைவன் ஆன்மா சார்ந்த விழுமியங்கள் ஆதிக்கத்திற்கு வந்திருக்கின்றன. மொழி வளத்தைப் பொறுத்தவரைக் குறை சொல்வதற்கு எதுவுமில்லை. தமிழின் வளம் இவற்றில் கூடியிருக்கின்றன. இன்னும் ஒன்றைச் சொல்லலாம். இலக்கியம் என்ற முறையில் தொன்மை இலக்கியத்தின் தாக்கத்தை இவற்றினுள்ளும் காண முடியும் என்றாலும் எந்த அளவிற்கு என்பதில் மாறுபட்ட கருத்திற்கு இடமுண்டு. இருந்தபோதிலும் இரவிக்குமார் அவர்களின் கருத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இவ்வகை கருத்தோடு இ. அண்ணாமலையும் உடன்படுவதாகவே நான் கருதுகிறேன். போலக் அவர்களின் கருத்து முற்றிலும் மாறுபட்டது. செவ்விலக்கியம் என்பதற்கு அவர் தரும் பொருள் அர்த்தச் செறிவுடையது. மனித வாழ்வின் அர்த்தத்தைத் தாங்கியிருக்கும் இலக்கியம் - மனிதனை, மனித வாழ்வை முன் நகர்த்திச் செல்லும் இலக்கியம் - தொடர்ந்து பல தலைமுறைகளை இயக்கும் இலக்கியம் - போலக்கின் கருத்தை இப்படி நான் புரிந்து கொள்கிறேன். தொன்மைப்பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஓர் இலக்கியம் அல்லது ஒரு தொகை இலக்கியத்தின் வாழ்வின் அர்த்தச் செறிவுடைய உள்ளடக்கம். அத்துடன் அந்த இலக்கிய மொழியின் வளம், மனித வாழ்வைப் பல தலைமுறைக்கு முன் நகர்த்தும் இலக்கியம் என்பதாகப் போலக் பொருள் கூறுகிறார். மனித வாழ்வின் செம்மையை, செழுமையை, மேன்மையை இலக்கியம் தனக்குள் கொண்டிருக்க வேண்டும் என்பதாக போலக் அவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளலாம். இப்படி எடுத்துக் கொண்டால் எந்த ஒரு மொழியினுள்ளும் பற்பல இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியம் என நாம் இனங்காண முடியும். 18ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கியங்கள் செவ்விலக்கியங்கள் என்பது போலப் பேசுகிறார் இ. அண்ணாமலை அவர்கள். இவர் கருத்துக்கு முரண்படுவார் போலத் தெரிகிறது. ஆங்கில இலக்கியம், மேன்மையானதாக இருந்த போதிலும் அதைச் செவ்விலக்கியம் என அண்ணாமலை கூறவில்லை . கிரேக்கம், இலத்தீன் ஆகிய செவ்விலக்கியத்தின் தாக்கத்தையே ஆங்கிலம், பிரெஞ்ச், செர்மன் ஆகிய மொழிகளில் காண்கிறார். தமிழும் இவ்வகையில் செவ்வியல் மொழி. தமிழின் தாக்கம் மலையாளத்தின் மேலும் உண்டு. ஆகவே மலையாளம் செவ்வியல் மொழி ஆக முடியாது என்கிறார். இவையனைத்தும் ஆய்வுக்குரிய கருத்து. சென்னையில் உள்ள செம்மொழி நிறுவனம் பற்றியும் ரவிக்குமார் கேள்வி எழுப்புகிறார். 41 இலக்கியங்களை மட்டுமே செவ்வியல் இலக்கியம் என நிறுவனம் ஏற்றுக் கொண்டதில் எவ்வகை தர்க்கமுமில்லை என்கிறார். 41 இலக்கியங்களினுள்ளும் எவை அசலான செவ்விலக்கியங்கள், எவ்வகை அரசியல் காரணமாக இவை பட்டியலில் இடம் பெற்றன என்றும் நாம் கேட்க முடியும். கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்ற வரையறையைக்கூட வைத்துக் கொண்டாலும் அதற்குள் இன்னும் எவை அடங்கும், எவை அடங்காது என்றெல்லாம் கேட்க முடியும். ஒருவகையில் தேன்கூட்டை கலைப்பது போல் விவாதம் எழக்கூடும். இப்பொழுது உள்ள சூழலில் கலைக்காமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. 3. போலக், அண்ணாமலை ஆகியவரது கட்டுரைகளில் செவ்விலக்கியம் என்பதற்கான ஆழமான சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருப்பதை நோக்கி நம் கவனத்தைக் குவிக்க வேண்டும். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்குச் செவ்விலக்கியம் ஒரு கட்டாயப் பாடம் என்கிறார் அண்ணாமலை. செவ்விலிக்கிய கல்வி மூலம்தான் மனித வாழ்விற்கான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. செறிவான அர்த்தத்தை உள்ளடக்கிய கலாச்சாரம் கற்பிக்கப்படுகிறது. இக்கலாச்சாரத்தை தளடுருவி உள்ள சிந்தனை வளம், தத்துவம், சமய இலக்கியம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இவ்வகை செவ்விலக்கியம் கற்காமல் எந்த மாணவனும் கல்லூரியை விட்டு வெளியேற முடியாது. அமெரிக்காவில் இத்தகைய செவ்வியல் கல்வி கற்கும் மாணவனுக்கு இவ்வகை கலாச்சாரத்தின் மூலங்களும் கற்பிக்கப்படுகின்றன. கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளின் உன்னத இலக்கியங்கள், இவற்றின் தொடர்ச்சியில் வரும் ஆங்கில இலக்கியம் இறுதியாக அமெரிக்க இலக்கியம் இவையெல்லாம் கற்பிக்கப்படுகின்றன. கலாச்சார வரலாறு, தத்துவ வரலாறு, சிந்தனை வரலாறு, இலக்கிய வரலாறு முதலியவை இக் கல்வியில் ஒருங்கிணைகின்றன. இத்தகைய கல்விதான் மனித வாழ்வின் அர்த்தச் செறிவை மாணவனுக்குள் புகுத்தும். இது எத்துணையளவு விரிந்த பார்வை என்று நமக்குள் வியப்பெழுகிறது. சங்க இலக்கியம் என்பதும் இத்தகைய மனித வாழ்வின் அர்த்தச் செறிவை நமக்கு கற்பிக்கிற இலக்கியம் தானே? சங்க இலக்கியத்திற்குள் நாம் பயணம் செய்கிற பொழுது எத்துணையளவிற்கு விரிந்த கலாச்சாரம், வரலாறு, சிந்தனை வளம், மொழி வளம் என்றெல்லாம் கண்டு வியப்படைகிறோம். அண்ணாமலை அவர்களும் செவ்விலக்கியம் என்பதனை இப்படித் தான் பொருள்படுத்துகிறார். போலக் அவர்களின் கருத்தும் இது போலத்தான் இருக்க முடியும். நெடுங்கால வரலாற்றின் தொடர்ச்சியிலிருந்தும் கலாச்சார தொடர்ச்சியிலிருந்தும் நம்மை வெட்டிக் கொள்ள முடியாது. கிரேக்க இலக்கியத்தை மேற்கத்தியர் மீண்டும் மீண்டும் பயில்கின்றார். அதே போல் சீனாவின் தொன்மை இலக்கியத்தை அம்மாணவர்கள் கற்கின்றார். நெடுங்கால மனித சமூகத்தோடு நம்மை தொடர்புறுத்திக் கொள்கிறோம். நம் இனத்திற்கான அடையாளத்தை இதுதான் தருகிறது. தமிழன் என்று நாம் அழுத்தமாகச் சொல்லிக் கொள்வதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும். 4. போலக் அவர்களும் அண்ணாமலை அவர்களும் நம் காலச் சூழல் பற்றி விரிவாகப் பேசுகின்றனர். செவ்வியல் இலக்கியம் ஏன் நம் மாணவர்களுக்கு முதன்மையாக, அழுத்தமாக கற்பிக்கப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கும் இதில் ஏன் அக்கறை இல்லை என்ற கேள்விக்கு விடை தருகின்றனர். தமிழகத்தில் மட்டுமா இந்த நிலை? இந்தியாவிலும் இதே நிலை. அமெரிக்காவிலும் தான் இந்த நிலை. வரலாற்றில் என்ன நேர்ந்தது? இன்றைய உலகச் சூழலில் மாபெரும் மாற்றங்கள் வந்துவிட்டன. வல்லரசு கெடுபிடிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பயங்கரவாதம், நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் என்று எவ்வளவோ வந்துவிட்டன. இவற்றின் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம். இவற்றை நம்மால் தவிர்க்க இயலாது. பதவி, பணம், வேலை வாய்ப்பு, வன்முறை, நுகர்வு வெறி என்பவை மனித வாழ்வை அடைத்துக் கொண்டிருக்கின்றன. வேலைவாய்ப்பிற்கு கல்வி வேண்டும். தொழிற்கல்வி தேவை. பண்பாட்டுக் கல்விக்கு இடம் தர முடியாது. ஆகவே செவ்விலக்கியம் பாடத்திட்டத்தில் முதன்மை பெற முடியவில்லை. இலக்கியம் மட்டுமல்ல மனிதவியல் கல்வியே புறக்கணிக்கப்படுகிறது. சமூகவியல், வரலாறு, கலைகள் முதலியவை பாடத் திட்டத்தில் முக்கியத்துவம் பெறுவதில்லை. இந்தியாவிலும் இதே நிலைதான். இந்தியாவிற்கு வந்த காலனியாதிக்கம் கொண்டுவந்த கல்வி முறை செவ்விலக்கிய கல்வியை முதன்மைப்படுத்தவில்லை. விடுதலைக்குப் பிறகும் அறிவியல் தொழில் நுட்பம் என்பவைதான் முதன்மை பெற்றன. இந்தியாவிற்கு எனச் சில தனித்தன்மைகளும் இருந்தன. தமிழ்ச் சூழலில் பிராமணருக்கு எதிர்ப்பு, சமஸ்கிருத மொழிக்கு எதிர்ப்பு இயல்பாக எழுந்தது. ஒரு காலத்தில் சட்டக் கல்விக்கு இருந்த முதன்மை விடுதலைக்குப் பின் மாறியது. சங்க இலக்கியம் தற்கால அரசியல் நோக்கத்திற்கு ஏற்ற முறையில் பொருள்படுத்தப்பட்டது, கற்பிக்கப்பட்டது. தமிழ் உணர்வுக்கு அழுத்தம் தரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய அரசியல் முன்னிலைக்கு வந்தது. சமஸ்கிருதம் வேண்டாம் தமிழ் மட்டுமே போதும் என்ற குறுகிய பார்வையும் தமிழ்ச் சூழலில் எழுந்தது. 70க்கு முன் தமிழ்க் கல்வியில் செவ்விலக்கியத்திற்கு இருந்த முதன்மை பிறகு மாறியது. தமிழ்க் கல்வியின் பகுதியாக இதழியல், நாட்டார் வழக்காற்றியல் முதலியவை இடம் பெற்று தமிழ்க்கல்வி, தமிழியல் கல்வியாக மாறியது. தமிழ்க் கல்வி இப்படித் தனக்குள் முரண்பட்டது. செம்மைக் கல்வி ஒரு புறம் நவீன இலக்கியக் கல்வி ஒருபுறம். நவீன இலக்கிய கல்வியையே மாணவர் விரும்பினர். தமிழ்ப் படைப்பாளிகளும், செவ்வியல் இலக்கியத்தின் பக்கம் செல்லவில்லை. தமிழ்ச் சூழல் பற்றி இப்படி இ. அண்ணாமலை அவர்கள் விரிவாக விவாதிக்கிறார். 5. பொருளுக்கு, பணத்திற்கு, அதிகாரத்திற்கு, நுகர்வதற்கு, ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் தொழிற் கல்வி முதலியவற்றை இன்றைய சூழலில் புறக்கணிக்க முடியாது. இந்தச் சூழலில் வைத்து செவ்வியல் இலக்கியம் பற்றி நாம் பேசுகிறோம். நமக்குள்ளும் நிறைய கேள்விகள் எழுகின்றன. உலக அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றின் ஆதிக்கத்தோடு அரசுகள் ஒத்துழைக்கின்றன. முதலாளிகள் ஒத்துழைக்கிறார்கள். பல்கலைக் கழகங்கள் ஒத்துழைக்கின்றன. அரசியல்வாதிகள் ஒத்துழைக்கின்றனர். இத்தகைய கடுமையான சூழலில்தான் நெடுங்காலமாக நாம் போற்றி வந்த வாழ்வின் செம்மைகள் தகர்கின்றன. இலக்கியங்கள், மனிதவியல் கல்வி முதலியவை ஓரத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழனைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் தமிழ்த் தேசிய உணர்வு முதன்மைக்கு வந்திருக்கிறது. இந்தியச் சூழலில் தமிழன் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். தமிழுக்குக் கிடைத்துள்ள செம்மொழித் தகுதி இதற்கான ஒரு நல்வாய்ப்பு. சங்க இலக்கியத்தை, தமிழின் செவ்வியல் இலக்கியத்தை நாம் கைவிட முடியாது. தமிழன் தன் வரலாற்றை அழித்துக்கொள்ள முடியாது. உலகச் சூழலை மாற்ற வேண்டும் என்பதில் நமக்கும் பங்குண்டு. நம்மை நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசியல் ஆதிக்கத்தை பொருளியல் ஆதிக்கத்தை, ஆங்கில ஆதிக்கத்தை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. இவற்றிற்கு எதிரான போராட்டத்தின் மூலம் தான் தமிழன் தன்னை, தன் வாழ்வை , வரலாற்றை, தேசத்தை மீட்டுக் கொள்ள முடியும். செவ்வியல் இலக்கிய கல்வி இத்தகைய போராட்டத்திற்குத் தேவையான விழுமியங்களைத் தர முடியும். ஒரு வகையில் தமிழைக் காப்பது ஓர் அரசியல் செயல்பாடு. செவ்வியல் இலக்கியத்தைக் காப்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதான் என்பதில் ஐயமில்லை . தமிழோடு, தமிழ் இலக்கியத்தோடு, வரலாற்றோடு இந்த அரசியலையும் கற்பித்தாக வேண்டும். வள்ளுவருக்குள் இளங்கோவுக்குள், சாத்தனாருக்குள், கபிலருக்குள், அவ்வையாருக்குள் இயங்கியது இத்தகைய அரசியல். கம்பருக்குள் இந்த அரசியல் இல்லையா? வள்ளலாருக்குள் இந்த அரசியல் இல்லையா? இத்தகைய அரசியலோடுதான் தமிழ்க் கல்வியை நாம் செயல்படுத்த வேண்டும். அண்ணாமலை முதலியவர்கள் செவ்வியல் இலக்கிய கல்வியை மேம்படுத்த எத்தனையோ கருத்துரைகளை முன்னிறுத்தியுள்ளனர். சங்க இலக்கியத்திற்கு செம்பதிப்புகள் தேவை. இலக்கியத்தை பொருள்படுத்த போலக் சில புதிய பார்வைகளை முன் வைக்கிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் முதலிய அணுகுமுறைகள் மூலம் செவ்வியல் இலக்கியத்தைப் பொருள்படுத்த வேண்டும். இவை பகுதிப் பார்வையாக சுருங்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார். இலக்கியம் பற்றிய முழுப் பார்வை தேவை என்கிறார். வரலாறு, பொருளியல் முதலியவற்றின் ஊடாட்டத்தோடு இலக்கியம் கற்க வேண்டும் என்கிறார். தமிழைத் தவிர இன்னொரு செம்மொழியைக் கற்க வேண்டும் என்கிறார். ஆங்கிலம் இல்லாமல் முடியாது என்கிறார். ஆங்கிலம் மூலமே பிற செம்மொழிகளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார். செம்மொழி இலக்கியத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் இடையில் உறவு தேவை என்கிறார். படைப்பாளிகள் செம்மொழி இலக்கியத்தின்பால் தம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறார். சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்கிறார். சமஸ்கிருதம் தமிழுக்குத் தந்த நன்கொடைகளைப் போல சமஸ்கிருதத்திற்கும் தமிழ் வழங்கிய நன்கொடைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கிறார். என் கட்டுரை பல வரையறைகளைக் கொண்டது என்பதை ரவிக்குமார் மணற்கேணியில் தொகுத்துத் தந்துள்ள கட்டுரைகளைப் படிக்கும் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள். ரவிக்குமார் அவர்களின் கட்டுரைகளை மிகுந்த அக்கறையோடு இப்பொழுது நாம் படித்து நமக்குள் பேசி ஆகவேண்டும். செவ்வியல் இலக்கியம் பற்றிய உரையாடல் நமக்குள் வலுப்பெற வேண்டும். சரியான உண்மைகளைத் தேடி நாம் செல்வதற்கு என் குறிப்புரைகளும் நண்பர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைய முடியும். 6. போலக் முதலிய மூவரின் கட்டுரைகளிலிருந்து மேலும் சில விவரங்கள் நம் கவனத்திற்குரியவை. மேற்குலகில் பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் ஆய்வுகள் முன்பிருந்த அளவிற்கு தற்போது இல்லை. இந்தியவியல் ஆய்வில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவினுள்ளும் வட இந்திய பல்கலைக் கழகங்களில் தமிழியல் ஆய்வுக்கான இருக்கைகளுக்குத் தற்பொழுது செல்வாக்கு இல்லை. தமிழகத்தினுள்ளும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், புதுவையில் மொழியியல் பண்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிலிருந்தும் நாம் எதிர்பார்த்த அளவிற்கு தமிழியல் ஆய்வுகள் வெளிவரவில்லை. முன்பு வெளிவந்த ஆய்விதழ்கள் தற்பொழுது வெளிவருவதாகவுமில்லை. செம்மொழி நிறுவனத்திலிருந்தும் இதுவரை ஆய்வியல் எதுவும் வரவில்லை. செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய தரமான பதிப்புகளும் நமக்கில்லை. தொகுத்துப் பார்க்கும் பொழுது உலகளவில் தொன்மை இலக்கியம் குறித்த ஆய்வுகள் / தொன்மைக் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள் தற்போதைய சூழலில் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. தமிழுக்கும் தான் இக்கதி நேர்ந்துள்ளது. போலக் அவர்களைப் பொறுத்தவரை மேலும் தன் அனுபவங்களிலிருந்து சில விவரங்களைத் தருகிறார். டி.டி. கோசாம்பி பற்றிய ஓர் ஆய்வுக் கருத்தரங்கிற்கு அவரளவிற்குத் தரமான இந்தியவியல் அறிஞர்களைத் தேடிய போது ஒரு சிலரே கிடைத்தனர் என்கிறார். தென்கிழக்காசிய பண்பாட்டியல் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களின் தொகையும் குறைவுதான் என்கிறார் இந்தியாவில் டி.டி.கோசாம்பிக்கு நிகரான பேரறிஞர்கள் பலர் குறித்த பட்டியலைத் தருகிறார். இவர்களின் தரத்தில் எழுபதுக்குப் பிறகு குறிப்பிடத்தக்கவர் எவருமில்லை என்கிறார். தமிழகச் சூழலிலும் உ. வே. சாமிநாதய்யர், வையாபுரியார், தெ. பொ. மீ. முதலிய பேரறிஞர்களின் தரத்தில் அடுத்து வந்த தலைமுறைகளில் காண்பது அரிதாகவே இருக்கிறது. கோசாம்பியைப் போன்றவர்கள் ஒரு துறையில் மட்டுமல்ல வரலாறு, பொருளியல், கலாச்சாரம், மொழியியல், மானுடவியல் என்று பல துறைகளிலும் விரிவான ஒருங்கிணைந்த பார்வையைக் கொண்டவர்கள். இவர்கள்தான் அறிஞர் என்ற பெயருக்குத் தகுதியுடையவர்கள். தமிழகத்திலும் இப்படிச் சில அறிஞர்களை முன்பு காண முடியும். தமிழிலக்கிய ஆய்வு என்பதும் இப்படி பலதுறை சார்ந்த அறிவுத்திறன் மிக்கவர்க்கே சாத்தியம். போலக் குறிப்பிடுகிறபடி பலதுறை சார்ந்த அறிஞர்கள் தேவைதான் என்ற போதிலும் குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்த அறிவுடையவர்களும் தேவைதான் என்பதில் ஐயமில்லை. பொதுப்படையாக இப்படி பேசுவது பொருந்தாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாமே கூட மேலும் நினைத்துப் பார்த்து உலகளவிலும் இந்தியாவிலும் இன்றும் உள்ள சில பேரறிஞர்களைக் குறிப்பிட முடியும் என்றாலும் போலக் அவர்களும் பிறரும் விவாதிக்கிறபடி உலகளாவிலான இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றோடு கூடிய நவீன காலம் என்பது, எல்லாவற்றையும் பல துண்டுகளாக உடைத்துத் தகர்த்து, இவற்றைத் தன் ஆதிக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் பலதுறை சார்ந்த பேரறிஞர்களுக்கு இன்று தேவையில்லை. எல்லாவகை அறிவுத் துறைகளையும் கலைத் துறைகளையும் சரக்காக, வணிகப் பொருளாக, மூலப் பொருளாக மாற்றுவதிலேயே முழு ஈடுபாடு கொண்ட நவீன கால நாகரிகம் குறிப்பிட்ட துறையில் நுண்ணறிவாளர்களைத்தான் வளர்க்கிறது. வரலாற்றுச் சூழலில் இப்போக்கு எப்படி, எப்பொழுது முன்னிலைக்கு வந்தது என்பது பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 80க்கு முன்னர் இருந்த உலகம் இன்று இல்லை. 80க்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத் தகர்வை அடுத்து உலக அளவிலான முதலாளியம் தன் நெடுங்காலக் கனவை இனி முற்றிலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நம்பியது உலகளவிலான முதலாளியம் தன்னை ஒழுங்குபடுத்தி ஒன்றிணைத்துக் கொண்டது. இனி எல்லாவற்றையும் சரக்காக்கி கொண்டுவிட முடியும். நுகர்வு வெறிக்குள் எல்லா மக்களையும் திணித்துவிட முடியும். கல்வி, பண்பாடு, கலை, மருத்துவம், சூழல், இயற்கை என்றெல்லாவற்றையும் வணிகப் பொருளாக்கி விட முடியும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தியாக வேண்டும். இப்படித்தான் நவீன உலகம் உருவாகியது. இந்த வரலாற்றுக்குள் தான் தமிழியல் ஆய்வுகள் முதலிய அனைத்துமே மாட்டிக் கொண்டன. பண்பாட்டு கல்வி இனித் தேவையில்லை. இலக்கிய கல்வியும் வணிகப் பொருள்தான். போலக், இ. அண்ணாமலை, ரவிக்குமார் முதலிய அறிஞர்கள் ளுக்கு இவ்வகை சிந்தனை இல்லை என்று நாம் கருதுவதற்கில்லை. நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு - அதிலும் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் ஆதரவில் உள்ள ஆய்வியல் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இத்தகைய சிந்தனைகளை முன் வைப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அன்றியும் போலக், அண்ணாமலை அவர்கள் அரசியல் களத்திற்குள் இல்லை. இத்தகைய சிந்தனை ரவிக்குமார் அவர்களுக்குச் சாத்தியம் என்பதில் ஐயமில்லை. உலக அளவிலான இந்தப் போக்கை மாற்றுவதன் ஒரு பகுதியாகவே செவ்வியல் இலக்கிய கல்வியை நாம் பயிலவும் பயிற்றவும் வேண்டும். 7. பொதுவாக தமிழியல் ஆய்வில், குறிப்பாக செவ்வியல் இலக்கிய ஆய்வில் தமிழகச் சூழலில் இன்று நாம் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் குறித்து இனிக் காணலாம். தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்த பிறகு தமிழ்ப் பல்கலைக் கழகங்களில், கல்லூரித் தமிழ்த் துறைகளில் சங்க இலக்கிய ஆய்வுகள் ஆய்வு மாணவர்களைப் பெரிதும் ஈர்த்து வருவதாக ரவிக்குமார் குறிப்பிடுகிறார். செம்மொழி நிறுவனத்தின் ஆதரவுடன் செவ்வியல் இலக்கியம் குறித்த ஆய்வுக் கருத்தரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுகின்றன என்பதும் உண்மைதான். செம்மொழித் தகுதியைக் காத்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்ற பெரு வேட்கையோடு செம்மொழி நிறுவனம் இத்தகைய கருத்தரங்குகளை ஊக்குவிக்கிறது என்பதும் உண்மைதான். தமிழ்த்துறைக்கு வெளியிலும் கூட இத்தகைய ஆர்வங்கள் மேலோங்கி வருகின்றன என்பதில் ஐயமில்லை. ரவிக்குமார் குறிப்பிடுகிறபடி இந்தக் கருத்தரங்குகளில் பதினைந்து தரமான பேராசிரியர்கள் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்த உண்மை. பெரும்பாலான பேராசிரியர்களுக்கு இவ்வகை கருத்தரங்குகளில் பெரும் ஈடுபாடில்லை என்பதையும் ரவிக்குமார் சுட்டிக் காட்டுகிறார். முதுகலை தமிழிலக்கிய கல்வி பயிற்சி என்பது, இளங்கலை வகுப்புகளில் தமிழ்க்கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்குடன்தான் நடைபெறுகிறது. அன்றியும் தமிழகம் முழுவதிலும் உள்ள பல ஆயிரம் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை உற்பத்தி செய்வதற்காகவும் இத்தகைய கல்விப் பயிற்சி நடைபெறுகிறது. ஆங்கிலத்திற்கே மரியாதை மிகுந்து வரும் சூழலில் தமிழ்க்கல்வி ஏனோதானோ என்ற முறையில்தான் கற்பிக்கப்படுகிறது. அண்ணாமலை சரியாகவே குறிப்பிடுகிறார். பட்டிமன்ற பேச்சாளர்களையும் மேடை சொற்பொழிவாளர்களையும் இவ்வகை கல்விப் பயிற்சி உற்பத்தி செய்கிறது. இவை பற்றியெல்லாம் இங்கு விரிவாக பேச வேண்டியதில்லை. பேராசிரியர் பலருக்கு பதவி முக்கியம், பணம் முக்கியம், அதிகாரம் முக்கியம், ஆய்வில் அக்கறையில்லை. என்றோ படித்தப் படிப்பே போதும். பட்டங்கள், ஆய்வுகள் எல்லாமே பதவிக்காகவும் பணத்திற்காகவும் தான் நடைபெறுகின்றன. பெயரளவுக்கு ஏதோ செய்து ஆய்வுப் பட்டங்களையும் பெற்றுவிட முடியும். தேவையானதைக் கொடுத்து வேலைவாய்ப்பு அவரவர்க்குப் பதவி உயர்வு முதலியவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். தமிழ் எக்கேடு கெட்டால் என்ன? தமிழ் வரலாற்றைக் காப்பது நமது கடமையில்லை. மாணவர்களுக்குக் கட்டுரைப் பயிற்சியில்லை. எழுத்துப் பிழையோடுதான் எழுதுவார்கள். கண்டு கொள்ள வேண்டியதில்லை. தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை என்பது இதுதான். இதுதான் உண்மை என்றால் தமிழியல் ஆய்வு நிறுவனங்கள், தமிழ்த் துறைகள் சிறப்பாக நடைபெறும் என்று நம் எதிர்பார்ப்பதற்கில்லை. வாழ்வுக்குக் கொஞ்சம் படிக்க வேண்டும், பட்டம் பெற வேண்டும். பதவியும் தேவை. பணம் கிடைக்கிறது. பணத்தைப் பெருக்கவும் வழியிருக்கிறது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தலைவர்களுக்குத் துதி பாடினால் போதும். அரசதிகாரத்தோடு ஒத்துழைப்பது மிக முக்கியம். மேடைப் பேச்சுக்கு ஒரு நூறு திருக்குறள் போதும். கம்பர் காவியத்தை முழுவதும் கற்றாக வேண்டும் என்பதில்லை. சிலப்பதிகாரம் பற்றிச் சிறப்பாக பேச முடியும். சங்க இலக்கியத்திலிருந்து ஒரு 50 பாடல் போதும், நகைச்சுவை கலந்து கொள்ள வேண்டும். வகுப்பறையில் மட்டுமல்லாமல் வெளியிலும் பெரும் சொற்பொழிவாளராக பவனி வரமுடியும். இப்படித்தான் வாழ்க்கை நடைபெறுகிறது. இவர்களுக்கு வாழ்க்கையும் வளமாகத்தான் இருக்கிறது. ஊரும் உலகமும் கெட்டு வருவதை நாமும்தான் பார்க்கிறோம். நம்மால் என்ன செய்ய முடியும்? ஈராக்கில் என்னவெல்லாமோ நடைபெற்றது. ஈழத்திலும் ஒரு லட்சம் தமிழர்கள் செத்தனர். நமக்குள்ளும் ஈரமில்லாமல் இல்லை. அமெரிக்காவை எதிர்க்க முடியாது. இந்திய அரசுக்கு நாம் கட்டுபட்டுத்தான் தீர வேண்டும். காவிரியில் தண்ணீர் இல்லை. காலியாகத்தான் இருக்கிறது. ஊர்வலத்தில் நாம் கலந்து கொள்ளலாம். ஊர்வலத்தில் நம் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தமிழன் என்ற பெயரில் நாம் என்ன செய்ய முடியும்? வேறு என்ன செய்ய முடியும்? இதுதான் இன்றைய நிலவரம் என்றால் - செவ்வியல் நோக்கிலான சங்க இலக்கியத்திற்குத்தான் . என்ன வாய்ப்பு இருக்க முடியும்? இ. அண்ணாமலை தன் கட்டுரையில் சிறப்பாக ஓர் உண்மையைக் குறிப்பிடுகிறார். வாழ்வுக்கு அர்த்தம் தருகிற கல்வி தேவை. வாழ்வுக்கு செறிவான அர்த்தம் தருகிற தமிழ் இலக்கிய கல்வி | தமிழ் செவ்வியல் கல்வி தேவை. செவ்வியல் இலக்கியம் மனித வாழ்வின் அர்த்தச் செறிவு பற்றிப் பேசுகிறது. சங்க இலக்கியம் மனித வாழ்வின் மேன்மை பற்றிச் சொல்கிறது. உலகம் இரண்டு பட்டது பற்றி பக்குடுக்கை நன்கணியார் கவலைப்படுகிறார். உண்பது நாழி; உடுப்பவை இரண்டே என்று சொல்லும் நக்கீரர் அரசனுக்கும் வேடனுக்கும் இவ்விரு தேவைகளைத் தவிர பிற தேவைகளில் வேறுபாடு இல்லை என்கிறார். செல்வத்துப் பயன் ஈதல் என்கிறார். செல்வத்தைச் சேர்த்து வைத்து நாம் மட்டுமே துய்ப்போம் என்று கருதினால் வாழ்வில் பலவற்றை இழந்து விடுவோம் என்கிறார். சங்க இலக்கியத்தில் இப்படி எத்தனை வகைவகையான வாழ்வியல் மேன்மைகள். கணியன் பூங்குன்றனை நாம் ஏன் போற்றுகிறோம். கோப்பெருஞ்சோழனை நாம் வெறுத்தோமா? இளங்குமணனைப் பாராட்ட முடியுமா? பாரியை நாம் நினைக்காத நாளுண்டா? சங்கத் தமிழ்ச் சான்றோர் நெறியில் தானே வள்ளுவரையும் இளங்கோவையும் நாம் வைத்துப் பார்க்கிறோம். பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியை நாம் மதிக்கிறோமா? சேரலாதனுக்கு எதிராக கரிகாலனை வெண்ணிகுயத்தியார் எங்கே வைத்தார்? எப்படி மதித்தார்? இவ்வகை நூறு கேள்விகள் மூலம்தான் சங்க இலக்கியத்தை நமக்குள் பதித்துக் கொண்டோம். ‘எத்திசை செல்லினும் அத்திசை சோறே’ என்ற அவ்வையாரை நம்மால் இகழ முடியுமா? ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழியர்’ என்று கூறியவன் கிள்ளிவளவன். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக வழக்குரைத்து வென்ற கண்ணகியின் அற உணர்வை நாம் நினைத்து எத்துணை பெருமிதம் கொள்கிறோம். உதயகுமரன் சாவுக்கு நம்மால் இறங்காமல் இருக்க முடியுமா? மணிமேகலை எத்துணை பெரிய அறச்செல்வி. இப்படித்தானே செவ்வியல் இலக்கியம் நமக்குள் பதிய வேண்டும். இவர்கள் அனைவரும் நமக்குக் காட்சிப் பொருளா? இவர்கள் தானே நம் தமிழ் வாழ்வுக்கு ஆதாரம். தமிழ் கற்பதென்றால் இவர்கள் நெறியில் தானே தமிழ்க் கற்க வேண்டும். வள்ளுவர் நமக்குள் என்னவாகப் பதிகிறார். சிலப்பதிகாரத்தை வைத்து வணிகம் செய்ய முடியுமா? மாதவிக்கு நேர்ந்த கொடுமையை நாம் மறக்க முடியுமா? குற்றவாளிகளை மணிமேகலை எப்படித் திருத்தினாள்? அரசதிகாரத்திற்கு தமிழ்ச் சான்றோர் அடிபணிந்தனரா? பணமா பெரிது? பதவியா பெரிது? சுருக்கமாகச் சொன்னால் தமிழிலக்கியம் கற்பதென்பது வாழ்வின் அர்த்தம் கற்பது. வாழ்வைச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொள்வது. நமக்கென வாழ்வது வாழ்க்கையில்லை. ஊருக்காக உலகுக்காக வாழ்வதில்தான் தமிழ் வாழ்வு நிறைவு பெறும் ஆதிக்கவாதிகளின் கைப்பொருளாக உலகம் இருக்க முடியாது. கம்பர் எப்படி வாழ்ந்தார்? வள்ளலாருக்கு வாய்த்த வாழ்க்கை என்ன? திருமூலரின் தவநெறியை எப்படிக் கற்கிறோம்? தமிழ் கற்பதென்றால் தமிழகம் கற்பது - என்று பொருள். ஒரு சாதிக்குத் தமிழன் தன்னை விட்டுக் கொடுக்க முடியாது. மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று என்றார் வள்ளுவர். ஊழையும் உப்பக்கம் காணமுடியும் என்றார் வள்ளுவர். தமிழ் கற்று, தமிழ் வாழ்வை விட்டொழித்து தமிழ் நெறிக்கு எதிராகச் செயல்படுபவனை நம்மால் போற்ற முடியாது. நம் காலத்தில் நம் தமிழ்ப் பெருமக்கள் என்ன செய்தார்கள். தமிழை இவர்கள் வாழ்வித்தார்களா? தமிழின் அழிவுக்குத் துணை போனார்களா? இப்படித்தான் நம் மாணவர்களுக்குத் தமிழ் கற்றுத் தர வேண்டும். வாழ்வைக் கற்றுத்தர வேண்டும். இலக்கியத்தைக் கற்றுத் தர வேண்டும். இந்த வாழ்வு இன்றைய உலகில் வெற்றி பெறுமா? பெறாதா? என்ற கேள்வி நம் முன் நிற்கத்தான் செய்கிறது. என்ன பதில் கூறப் போகிறோம். அவரவர் தீர்மானித்துக் கொள்ளட்டும். தமிழை இகழ்பவனைத் தாய் தடுத்தாலும் விடோம் என்றார் பாரதிதாசன். இது சரிதானா? உண்மைதானா? உலகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்பதற்குப் பொருள், உலகளவில் பெருகிவரும் ஆதிக்கத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றாகிவிடுமா? செம்மொழி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் சங்க இலக்கியக் கருத்தரங்கில் முன் வைக்கப்படும் கட்டுரைகளில் பெரும்பாலானவை மரபு முறையில் தமிழ்ப் பெருமை மற்றும் இலக்கிய ரசனை சார்ந்த கட்டுரைகளாகவே இருக்கின்றன. கூடுதலாக, தொல்காப்பியர் முன்வைத்த திணைத்துறைக் கூற்று மேலும் உள்ளுறை, உவமை பற்றி ஆய்வுக் கட்டுரைகளாக இருக்கின்றன. கூடுதலாக சங்க இலக்கிய காலத்து பெண் கவிஞர்கள் பற்றிய கட்டுரைகளும் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்த் துறைகளில் முனைவர் முதலிய பட்டங்களுக்காக செய்யப்படும் ஆய்வுகளும் இதே வகைப்பட்டவையாகவே இருக்கின்றன. இவை அனைத்துமே வெறும் படிப்பறிவு சார்ந்த, தகவல் தொகுக்கும் கட்டுரைகளாகவே அமைகின்றன. தமிழைச் செம்மொழி என அறிவிக்கப்பட்டதன் பின்னர் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகள் இன்னும் ஆழமாக அமைய வேண்டும் என்பது மட்டுமல்ல இதுவரையிலான மரபுமுறை ஆய்விலிருந்து முற்றிலும் வேறு நோக்கிலான ஆய்வுகளாக அமைய வேண்டும் என்பது பற்றி அக்கறை வெளிப்படவில்லை. ஆந்திர அகநானூறு என சொல்லப்படும் கதாசப்ததியில் இடம் பெற்ற சற்று விரிந்த பார்வையோடு சங்க இலக்கியத்தை ஒப்பிடும் முறையில் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும். சான்றோர் இலக்கியமெனச் சொல்லப்பட்ட சங்க இலக்கியத்தில் தொல்காப்பியர் வகுத்த வரையறைகளுக்கு அப்பால் வாழ்வியல் கண்ணோட்டம் சங்க இலக்கிய கவிதைகளில் இல்லை, கதாசப்தகதியில் இருக்கின்றன. தொல்காப்பியர்தந்த வரையறையைக் கடந்து இலக்கியம் என்ற முறையில் சங்க இலக்கியத்தைக் காண வேண்டும். அண்மையில் சீன மொழியிலே 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட , கூடியவரை நம் சங்க இலக்கியக் கவிதைப் போக்கை உள்ளடக்கிய கலித்தொகை என்னும் கவிதை மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. கலித்தொகையைச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது சங்க கால வாழ்வியலின் உள்ளும் எவையெல்லாம் விடுபட்டு உள்ளன என்பது பற்றிய நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைகிறது. அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டபடி சங்க இலக்கிய ஆய்வில் மார்க்சியம், தலித்தியம் , பெண்ணியம் என்ற நோக்கில் ஆய்வை மேற்கொள்வதன் மூலம் இலக்கியம் குறித்த பகுதிப் பார்வையே நமக்குக் கிடைக்கிறது. பகுதிப் பார்வைகளை உள்ளடக்கியும் கடந்தும் சங்க இலக்கியம் குறித்த முழுமைப் பார்வை நமக்குத் தேவை என்கிறார். முழுமைப் பார்வை என்ன என்பதைப் பற்றி அவர் விளக்கம் தரவில்லை. எனினும் நமக்கு இதுபற்றி ஒரு முயற்சி தேவை. தொல்காப்பியர் செய்யுள் என்பதற்கு 34 இலக்கணம் கூறுகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். இவற்றின் வழியே சங்க இலக்கிய கவிதை பற்றிய ஆய்வை முடித்து கொள்ள முடியாது என்றே நான் கருதுகிறேன். கவிதை என்பதற்கு வரையறைகள் சிலவோ பலவோ தேவை என்றே வைத்துக் கொண்டாலும் கவிதை பெரும்பாலும் முன்பு வகுத்த வரையறைகளைக் கடந்ததாகவே இயங்கும் ஆற்றல் உடையது. நாம் வகுக்கும் வரையறைகூட கவிதைக்கான உள்ளியக்கத் தைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அவர்களே குறிப்பிட்டபடி கவிதை தோன்றிய காலச் சூழலில் வரலாறு, அரசியல், பொருளியல் முதலியவற்றின் ஊடாட்டதோடு கவிதையைப் பொருள்படுத்த வேண்டும் என்கிறார். இவ்வகை ஆய்வு தேவைதான் என்ற போதிலும் கவிதை தோன்றிய குறிப்பிட்ட காலத்து அரசியல் பொருளியல் முதலியவற்றுக்குக் கவிஞர் தரும் எதிர்வினையாகவும் கவிதை அமைய முடியும். கவித்துவம் என்பது ஆழ்ந்த பொருளுடையது. இது பற்றி மிகச் சுருக்கமாக ஒன்றைக் குறிப்பிடலாம். சிறந்த கவிஞர் என்ற எவர் ஒருவரும் மனித வாழ்வை மிக விரிந்த நோக்கில் உள்வாங்கி கொண்டவராகவே இருக்க முடியும். சமூகம் வகுத்துள்ள உடைமை, அதிகாரம், சாதி முதலிய அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்ததாகவே கவிஞனின் பார்வை விரிந்து செல்லும். அனைத்து உயிர்களோடும் ஒத்த உணர்வுடையவர் கவிஞர். ஏற்றத்தாழ்வு, அதிகாரம் முதலியவற்றைத் தனக்குள் எந்த வகையிலும் அனுமதிக்காதவர் கவிஞர். ஒன்றாக காண்பதே காட்சி என்று கூறிய அவ்வையார் ஒரு கவிஞரின் அல்லது மெய்யியலாளனின் பார்வை எத்தகையதாக இருக்க முடியும் எனச் சுருக்கமாகத் தந்திருக்கிறார். வள்ளுவர் கவிதைக்குள் பயணம் செய்யும் போது ஒரு சான்றோரின் பண்புகள் எவையென்பதைத் திரட்டிக் கொள்ள முடியும். இந்தச் சான்றோர்தான் வள்ளுவர் என்ற மாபெரும் கவிஞனின் உள் இயக்கம் - எனக் கூறலாம். கணியன் பூங்குன்றன் என்று இன்னும் பலரையும் இவ்வகை பார்வையைத் தமக்குள் கொண்டவரென்று நாம் காண முடியும். மனித வாழ்க்கை என்பது இத்தகைய விரிவுடையதாக இருந்தாக வேண்டும் என்பது, நமது இலக்கு என்ற போதிலும் வரலாறு மற்றும் பொருளியல் சூழல் ஒரு கவிஞனைத் தனக்குள் கட்டுப்படுத்தும் பொழுது அக்கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி திணறி வெளியேற துடிக்கும் கவிஞனை அவனது கவிதைக்குள்ளிருந்து கண்டறிய முடியும். எத்திசை செல்லினும் அத்திசை சோறே என்று அவ்வைக்குள் ஏற்படும் கொதிப்பு ஒரு கவிஞனின் கொதிப்பு. சங்க இலக்கியத்தை மட்டுமல்லாமல் எவ்வகை இலக்கியத்தையும் இத்தகைய பார்வையோடுதான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள முடியும். மனித வாழ்வின் அர்த்தம் தேடி காலம்தோறும் அலையும் மனிதனுக்குள்தான் இத்தகைய கவிஞரை, மெய்யியலாளரை நாம் காண முடியும். கம்பர், இளங்கோ , சேக்கிழார் என்று எல்லோருக்குள்ளும் இத்தகைய கவிஞரைக் காண்பதுதான் கவிதை பற்றிய, இலக்கியம் பற்றிய ஆய்வாக இருக்க முடியும். செவ்வியல் நோக்கில் மனித வாழ்வை மதிப்பீடு செய்வது இத்தகைய பார்வையாக தான் இருக்க முடியும். செவ்வியல் இலக்கியம் கற்பதும், செவ்வியல் இலக்கியத்தை இன்று, நம் காலச் சூழலில் போற்றுவதற்கும், இதுதான் காரணமாகவும் இருக்க முடியும். தமிழ் நாகரிகம் அதன் தொன்மை, மேன்மை என்றெல்லாம் நாம் தொடர்ந்து பேசுகிறோம். இது வெற்றுப் பெருமிதமாக போய்விடக் கூடாது, என்பதில் நமக்கு அக்கறை இருக்கிறது. இன்றைக்கும் தமிழ் நாகரீகம் என்பதைத் தக்க வைப்பதற்கான ஒரு முயற்சி என்ற முறையில் செவ்வியல் இலக்கியம் குறித்த பார்வை நமக்குள்ளும் இருக்க வேண்டும் / இயங்க வேண்டும். சங்க இலக்கியத்தை முன்வைத்து இந்தியாவிலும் இன்றைய உலகிலும் நம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சி என்ற முறையில் இத்தகைய செவ்வியல் பார்வையை நம் மாணவர்க்குள்ளும் விதைக்க வேண்டும், விளைக்க வேண்டும். இதுவே பேராசிரியர்களுக்குரிய / ஆய்வாளர்களுக்குரிய கடமையாகவும் இருக்க வேண்டும். செவ்வியல் இலக்கியம் என்ற தகுதிக்கு நாம் பொருத்தமானவர்கள்தான் என்பதற்கான நிருபணமாகவும் இதுதான் இருக்க முடியும். இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். செவ்வியல் என்பதற்கும் செவ்வியல் இலக்கியம் என்பதற்கும் கிரேக்கம் முதலிய மொழி இலக்கியங்களை முன்வைத்து ஒருவகையான வரையறையை நாமும் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். தமிழுக்கும் 2000 ஆண்டுக்கு மேலான தொன்மை உண்டு எனினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக 1500 ஆண்டுகள் என்றும் ஏற்றுக் கொண்டோம். செவ்வியல் இலக்கியம் என்பதற்கு தொன்மை ஓர் இன்றியமையாத வரையறை என்பதும் நம் எண்ணமாக இருக்கிறது. தொன்மை சார்ந்த இந்த இறுக்கமான வரையறை ஷெல்டன் போலாக் ஏற்கவில்லை என்பது கூட நமக்கு ஒரு சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் பண்பாட்டு வகையில் செவ்வியல் என்பது பற்றிச் சிந்திக்கும் பொழுது மனித வாழ்வின் மேன்மை மனித வாழ்வு குறித்து ஒருங்கிணைந்த பார்வை இவற்றை உள்ளடக்கி செம்மையான, மேன்மையான வாழ்வு என்று செவ்வியல் என்பதற்கு அர்த்தம் காண முடியும். மனிதர் அனைவரும் சமத்துவமானவர் மனிதருக்கு இடையில் ஏற்றத்தாழ்வு தேவையில்லை. தனியுடைமை கொடுமைகள் இனியும் நமக்கு வேண்டாம். எவ்வகையிலான ஆதிக்கமும் மனித வாழ்வின் மேன்மையைச் சிதைக்கும். உலகம் அனைவருக்கும் பொது. கூடி உழைப்போம். பகிர்ந்து கொள்வோம். சமத்துவமான வாழ்வில் தான் தனி மனிதரும், தனித்திறனோடு வாழ முடியும். இன்றுள்ள மனித ஆற்றலும் அறிவுத்திறனும், கலைநுட்பமும், காலம் காலமாக கோடிக்கணக்கான மனிதர்களின் கூட்டுழைப்பின் விளைச்சல். வரலாற்றின் வழியே வளர்ந்த இந்த ஆற்றல்தான் நமக்குள்ளும் இருக்கிறது / இயங்குகிறது. என் அறிவுத்திறனை நானே தோற்றுவித்துக் கொள்ளவில்லை. பெருகிச் செல்லும் ஆற்று வெள்ளத்தில் ஒரு கையளவு நீரை எடுத்து நான் அருந்துவதைப் போலத்தான் வரலாற்றுக்குள்ளிருந்து எனக்கான வாழ்வை சேகரித்து கொள்கிறேன். மனித வாழ்வு என்பது இயற்கையோடு முற்றாக இணைந்தது. இயற்கை அழித்துவிட்டு மனித சமூகம் நலமாக இருக்க முடியாது. இத்தகைய உணர்வு / பண்பாடுதான் செவ்வியல் நோக்கும். இத்தகைய பார்வையும் சமதர்மம் குறித்த பார்வையும் வேறு வேறு அல்ல. எந்த ஒரு சிறந்த கலைஞனும் கவிஞனும் மெய்யியலாளனும் இத்தகைய பார்வையோடு தான் இயங்க முடியும். செல்டன் போலாக் செவ்வியல் என்பதை இப்படிதான் பொருள்படுத்துகிறார். வள்ளுவருக்குள் தான் செவ்வியல் பார்வை உண்டு என்று சொல்வதற்கில்லை. புதுமைப்பித்தனுக்குள்ளும் இருப்பது இப்பார்வைதான். செவ்வியல் இலக்கியம் என்பதற்கும் இத்தகைய வரையறையை விரிவுபடுத்திக் கொள்வதில் தவறு இருக்க முடியாது. இத்தகைய பார்வைக்குள் நெடுங்காலத் தமிழிலக்கியத்தை முன்வைத்து எவரெவரை இனம் காண முடியும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். 9. இ. அண்ணாமலை அவர்கள் தொன்மையான செவ்வியல் இலக்கியத்திற்கும் நவீன கலை இலக்கியத்திற்கும் இடையிலான உறவைக் கண்டறிய வேண்டும் என்கிறார். நவீன இலக்கியத்தைச் செவ்வியல் இலக்கியத்தின் தொடர்ச்சியாக நவீன இலக்கியத்திற்கு செவ்வியல் இலக்கியம் ஊற்றம் தருவதாக இருக்க வேண்டும் . என்னும் கருத்தில் பேசுகிறார். செவ்வியல் இலக்கியத்தில் ஈடுபாடு உடைய தலைமுறையினரும் நவீன இலக்கியத்திற்குள் இயல்பாகவே செல்பவராக இருப்பதற்கு என்ன வழி என்றும் அவர் நம்மைச் சிந்திக்க தூண்டுகிறார். இதற்கான விடையை நாம் கண்டாக வேண்டும். செவ்வியல் இலக்கியத்தினுள் தான் மனித வாழ்வின் மேன்மை, ஒருங்கிணைந்த தன்மை இயங்குகிறது என்பது கூட உண்மையில்லை. செவ்வியல் இலக்கிய காலத்தினுள் சமூக முரண்பாடுகள் இன்றிருப்பதைப் போல கடுமையானதாக இருந்திருக்க முடியாது. மனித சமூகத்தினுள் பிளவு இல்லாத இனக்குழுச் சமூகத்திலிருந்து தனியுடைமையோடும், அரசதிகாரத்தோடும் கூடிய ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகம் தோன்றிய காலத்தில் எழுந்த சமூக முரண்பாடுகளுக்கு எதிர்நிலை எனத் தோன்றிய இலக்கியம் சங்க இலக்கியம் என்று கூறலாம். அதாவது வர்க்க சமூகம் வளர தொடங்கிய அதே காலத்தில் இனச் சமூகத்தின் பொதுமை கூறுகள் தன்னை விட்டுக் கொடுக்காத காலத்தைச் சார்ந்தது சங்க இலக்கியம். மனித வாழ்வின் ஒருமை தகர்வதை ஏற்க முடியாது என்ற உணர்வை கொண்டவர்கள் சங்கத் தமிழ்ச் சான்றோர். ஏற்றத்தாழ்வான புதிய சமூகத்தை ஏற்க இயலாத நிலையில் சமூகத்தின் பொதுமை அறத்தைத் தாங்கி இருந்தவர்கள் அவர்கள். இக்கட்டுரையில் முன்பே விவரித்தபடி கணியன் பூங்குன்றனார் முதலியவர்கள் இத்தகைய பெரும் குணத்தை வெளிப்படுத்தியவர்கள். சங்க இலக்கியத்தின் மேன்மைக்கு இத்தகையவர்களின் பெரும் குணம்தான் காரணம். வடக்கு இருந்து உயிர் நீத்த கோப்பெருஞ்சோழனோடு எத்தனை பெரும் புலவர்கள் உயிர் துறந்தனர் என்பதை வைத்து இக்கூற்றை மெய்ப்பிக்கலாம். சங்க காலத்து இலக்கியத்தில் இடம்பெற்ற இத்தகைய மனித வாழ்வின் மேன்மை, ஒருமைப்பாடு ஆகியவைதான் பிற்கால தமிழ் இலக்கியத்தினுள்ளும் தொடர்கின்றது என்றும் நாம் பார்க்கிறோம். நம் கால இலக்கியத்தினுள்ளும் இது தொடர்வதாகவும் பார்க்க முடியும். அன்றியும் இலக்கியப் படைப்பின் உள்ளியக்கம் பற்றி முன்பே பார்த்தோம். சமூக முரண்பாடுகள், முற்றிவரும் காலத்தினுள்ளும் மனிதன் தனக்குள் பிளவுபட்டுவிடக் கூடாது. இயற்கையோடும், சமூகத்தோடும் ஒன்றியிருக்கிற மனித பொதுமையை மனிதன் இழந்துவிடக் கூடாது என்ற வாழ்வின் ஆதார இயல்பைத் தாங்கியவராக கவிஞர்கள் , எக்காலத்திலும் இயங்குகிறார்கள் என்றும் முன்பு பார்த்தோம். நம் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றின் தாக்கத்தோடு மனித வாழ்வு முற்றாக சிதைந்து வருகின்ற சூழலிலும், இத்தகைய சிதைவை முற்றானது என்றும் மாற்ற இயலாதது என்றும் சில சிந்தையாளர்கள் உரத்துப் பேசுகின்ற இன்றைய சூழலிலும் மனித ஒருமையை சமூக ஒருமையை வாழ்வின் ஒருமையை நாட்டின் ஒருமையை விட்டு தர முடியாது என்ற முறையில் அசலான படைப்பாளிகள் இயங்கித் தீர வேண்டும். முதலாளியம் முதலியவற்றுக்கு வசப்பட்டு படைப்பாளிகள் தம் கவித்துவத்தை அவர்களுக்கு அடகு வைத்துவிட முடியாது. இம்முறையில்தான் படைப்பிலக்கியவாதிகள் மெய்யியலாளர்கள் இன்றைய சூழலில் செயல்பட்டாக வேண்டும். சங்க இலக்கியத்தை நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தை நம் காலத்து நவீன படைப்பாளிகள் கற்பதன் மூலமும், நம் காலத்திலும் வாழ்வின் மேன்மையை / ஒருமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும். நம் காலத்துப் படைப்பாளிகளை இம்முறையில் வள்ளுவர், இளங்கோ, கம்பர் முதலியவர்களின் பாரதியார், பாரதிதாசன் முதலியவர்களின் வாரிசுகள் என்றும் மதிப்பிட முடியும். அதே போல புதுமைப்பித்தன் முதலிய நம் காலத்து சிறந்த படைப்பாளிகளை வள்ளுவர் முதலியவர்களுக்கும் நிகரானவர் என்று தான் நினைக்க முடியும். மனிதச் சிதைவை முன்னிருத்தும் படைப்புகளையும் இந்நோக்கில்தான் நாம் திறனாய்வு செய்யவும் வேண்டும். 1980க்குப் பிறகான உலகச் சூழலின் தாறுமாறான முதலாளிய வளர்ச்சியின் ஒரு பெரும் விளைவாக உலகப் பொருளாதாரத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் தம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த சூழலில்தான் மனித வாழ்வின் சிதைவு பெருமளவில் நேர்ந்துள்ளது. எண்பதுக்கு முன்னர் உலகம் இந்த அளவிற்கு துண்டுகளாகச் சிதைவுபடவில்லை . போலக் அவர்கள், டி.டி.கோசாம்பி முதலியவர்கள் காலத்தைச் சேர்ந்த பேரறிஞர் பலரைக் குறிப்பிடுகிறார். இதே கால அளவில் தமிழகத்தினுள்ளும் பேரறிஞர் வாழ்ந்தனர் என்பது நமக்குத் தெரியும். இந்தியாவில் எழுந்த விடுதலைப் போராட்டம் இந்திய மக்கள் மத்தியில் குறிப்பாக அறிஞர் மத்தியில் எழுப்பிய பேருணர்வில் இந்த அறிஞர் பெருமக்கள் இணைந்திருந்தார்கள். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தன்னைப் பழமையிலிருந்து புதுப்பித்துக் கொண்டது. தன் தொன்மை வரலாறு, அரசியல், தத்துவம், பண்பாடு, கலை இலக்கியங்கள் முதலிய பலவற்றைச் சமகால நோக்கில் திரட்டிக் கொண்டது. தமிழகத்தினுள்ளும் அறிஞர்கள் தம்மை இவ்வகையில் திரட்டிக் கொண்டனர். அதாவது, தேசிய உணர்வெழுச்சி என்பது இத்தகைய பன்முகப் பார்வைகளை ஒருங்கிணைத்தது. ஒருங்கிணைந்த பார்வையைக் கொண்ட அறிஞர் பலர் இக்காலத்தில் தோன்றினர். முதலாளியம் இந்தியாவைப் பொறுத்தவரை தன் வளர்ச்சியில் தொடக்க நிலையில்தான் இருந்தது. இதன் காரணமாகவும் மனித வாழ்க்கையில் முன்பிருந்த ஒருங்கிணைப்பு தொடர்ந்தது. விடுதலை நோக்கில் மக்கள் மத்தியில் எழுந்த பேரெழுச்சி 50/60களிலும் தொடர்ந்தது. தொன்மை நாகரிகத்தின் மேன்மையைத் தற்கால நோக்கில் புதுப்பித்து தொடர முடியும் என அறிஞர் பெருமக்கள் நம்பினர். 70க்குப் பின்னர் இந்திய அரசியலில் நேர்ந்த பின்னடவை இங்கு விவரிக்க வேண்டியதில்லை. மனித வாழ்வு சிதைவுக்குள்ளாகியது. பணம், பதவி, சாதி, மதம் முதலியவை மனித வாழ்வைச் சீரழித்தன. தமிழிலக்கிய சூழலினுள்ளும் இந்தப் போக்கின் விளைவுகளை நாம் பார்க்கிறோம். போலக் கூறுகிறபடி இத்தகைய சிதைந்த சூழலில் கோசாம்பி போன்ற பேரறிஞர்களுக்குத் தேவையில்லை. தமிழகத்தினுள் நேர்ந்த இதே பின்னடைவுதான் இந்தியாவினுள்ளும் காண்கிறோம். உலகச் சூழலினுள்ளும் இந்தப் போக்கைத்தான் போலக் தொகுத்துரைக்கிறார். இந்த வரலாற்றுப் போக்கை மாற்றத்தான் முடியாது என்பது போல், போலக் போன்றவர்கள் கருதுவதாகத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய வரலாற்றுப் போக்கை மாற்ற முடியாது என்ற முடிவுக்கு நாம் வரத்தான் வேண்டுமென்றால் அதன் பின்னர் மனித வாழ்வையும் இலக்கியத்தையும் இனியும் காப்பாற்றுவது பற்றிய கவலையை நாம் விட்டுவிடத்தான் வேண்டும். அப்புறம் செவ்வியல் முதலிய ஆய்வு நமக்குத் தேவையுமில்லை. இப்படி இருந்து விடலாமா? தமிழின் செவ்வியல் இலக்கியம் குறித்த ஆய்வு தொடர்பான போலக், இ. அண்ணாமலை, ரவிக்குமார் ஆகிவர்களின் கருத்துகளை இதுவரை ஆய்வு செய்தோம். தமிழ் செவ்வியல் இலக்கியம் குறித்து மிகுந்த அக்கறையோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக நானும் எழுதி வருகிறேன். செவ்வியல் இலக்கியம் குறித்து என் ஆய்வுக் கருத்துகள் சிலவற்றையும் இந்த விவாதத்தில் முன்வைக்க விரும்புகிறேன். தமிழுக்கு செவ்வியல் மொழிக்கானத் தகுதி கிடைத்திருக்கிறது என்பது இன்றைய இந்தியச் சூழலில் தமிழராகிய நமக்குக் கிடைத்திருக்கிற ஒரு மாபெரும் வாய்ப்பு மட்டுமல்ல இறுதி வாய்ப்பு எனவும் நான் கருதுகிறேன். சிந்துவெளி நாகரிகம் முதலியவற்றை முன்வைத்துப் பார்க்கிறபோது இந்திய நாகரிகம் என அறியப்பட்ட பெருந்தொகுப்பினுள் தமிழர் நாகரிகம்தான் தொன்மை நாகரிகம் என்பது மட்டுமல்ல, இந்திய நாகரிகம் என்ற தொகுப்பினுள் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று சொல்லப்பட்டாலும் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகம்தான். இந்தியாவில் வேளாண்மை , தொழில், கணிதம், மெய்யியல், கட்டிடக்கலை, நீர்ப்பாசனம், கால்நடை வளர்ச்சி, சிற்பக்கலை, இசை, மருத்துவம், மெய்யியல் முதலிய அனைத்தின் ஆக்கமும் தமிழ் நாகரிகத்தின் ஆக்கமேயன்றி இவ்வகை வளர்ச்சியில் ஆரியத்தின் பங்களிப்பு என்று எதுவுமில்லை. சமஸ்கிருத மொழியும் கிரேக்கம், பாரசீகம், தமிழ் முதலியவற்றை வைத்துத் தன்னைத் திருத்தம் செய்து கொண்ட மொழிதான்/ வட இந்திய மொழிகள் அனைத்தின் தொடரமைப்பு முழுவதும் தமிழின் தொடரமைப்புதான். தமிழ் நாகரிகம் குறித்து இப்படி எவ்வளவோ சொல்ல முடியும். இவ்வாறு சொல்வதற்கு ஆதாரமாக ஏ. எல். பாஷ்யம் தொடங்கி, சிலேட்டர், குருவிக்கரம்பை வேலு, அப்பாத்துரையார் முதலிய அனைவரையும் காட்ட முடியும். தமிழ் நாகரிகத்தின் பெருமிதம் பற்றியும் பேச்சாகவும் இதை எடுத்துக்கொள்ள வேண்டியதுமில்லை. இந்திய அரசியலில் இன்று தமிழனுக்கு மரியாதையில்லை. இந்திய அரசியலுக்குத் தமிழக அரசியல் பொருளியல் முதலிய அனைத்தையும் விட்டுக் கொடுத்தவர்கள் தமிழகத்து அரசியல்வாதிகள். தமிழின் செவ்வியல் வளத்தை மெய்ப்பிப்பது என்பது இந்திய நாகரிகத்தில் தமிழர் நாகரிகத்தின் இடத்தைத் தொடர்ந்து ஆதாரங்கள் தேடி மெய்ப்பிப்பதன் மூலமே சாத்தியம். செம்மொழித் தகுதியை இப்படி நம்மால் நிறைவேற்றிக் கொள்ள இயலுமானால் மீண்டும் இந்திய அரசியலில் நமக்கான இடத்தை மீட்டுக் கொள்ள முடியும். இதற்கான விரிந்த ஆய்வில் தமிழறிஞர்கள் ஈடுபட வேண்டும். இது ஆய்வுத் தொடர்பான செயல்பாடு மட்டுமல்ல. இது முற்றிலும் ஓர் அரசியல் செயல்பாடு. பாவாணர் முதலியவர் மேற்கொண்ட முயற்சியின் தொடர்ச்சி இது. குமரிக்கண்ட ஆய்வும் இம்முயற்சியில் ஒரு பகுதி. அரசியலாரின் ஆதரவோடு செயல்படும் ஆய்வு நிறுவனங்களின் முயற்சி இதற்குப் போதுமானதல்ல. இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும். சங்க இலக்கியம் பற்றிய என் ஆய்வில் நான் தொடர்ந்து முன்வைத்த ஒரு கருத்து, சங்கத் தமிழ்ச் சான்றோர் பலரினுள்ளும் அழுத்தமாக இடம் பெற்றது அற உணர்வு. இதை நான் தமிழறம் எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தமிழறம்தான் இன்று வரையிலான தமிழ் இலக்கியத்தினுள் ஓர் ஆழ்ந்த நீரோட்டமாக தொடர்கிறது என்பதையும் அறிஞர்கள் உணர முடியும். நம் காலத்தில் தமிழறம் என்பதை சமத்துவம் என்றும் சமதர்மம் என்றும் பொருள்படுத்தலாம். இந்தத் தமிழறம் என்பதை நமக்குள் செறித்துக் கொள்வதற்காகத்தான் சங்க இலக்கியத்தை நாம் ஆழ்ந்து பயில வேண்டும் என்பதையும் நான் வற்புறுத்துகிறேன். ஒரு மார்க்சியன் என்ற முறையில் சங்க இலக்கியத்தை இப்படித்தான் நான் பொருள் படுத்துகிறேன் (இதுபற்றி என் கட்டுரைகள் பலவற்றில் விரிவாக எழுதியுள்ளேன்) இன்றைய தமிழ்ச் சூழலில் / உலகச் சூழலில் சமத்துவம் என்பதையும் சமதர்மம் என்பதையும் மனித வாழ்வுக்கு நாம் ஆதாரமாக கொண்டாக வேண்டும். ஒரு வகையில் சமத்துவம் என்பதையும் சமதர்மம் என்பதையும் வேறு வேறாக கொள்ள வேண்டியதுமில்லை. இத்தகைய தமிழறம் மட்டுமே தமிழ் வாழ்வுக்குத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாக அமைய முடியும். சங்க இலக்கியத்தைப் பயில்வது என்பது தமிழறத்தை நமக்குள் செறித்துக் கொள்வதற்காகத்தான் இன்றைய தமிழக அரசியல், இந்திய அரசியல், உலகளவிலான அரசியல் என்ற சூழலில் சமதர்மம் என்பதைச் செயல்படுத்துவதைத் தவிர மனித நாகரிகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு வேறு வழியுமில்லை. சங்க இலக்கியத்தை உள்ளடக்கிய செவ்வியல் இலக்கியத்தைக் கற்பவர்களுக்கு முன் இருக்கிற இன்னொரு மாபெரும் கடமை பற்றியும் இங்குக் குறிப்பிட வேண்டும். இன்று நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் மனித நாகரிகத்தை, நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்கு, தொன்மையான நாகரிகத்தைச் சார்ந்தவர்களாகிய நம்மவர்க்கு இத்தகைய கடமை முன்னிற்கிறது. கிரேக்கம் முதலிய தொன்மையான செவ்வியல் நாகரிகங்கள், உண்மையில் உலக அளவில் எழுச்சி பெற்ற முதல் நாகரிகம் - மனித நாகரிகம் இந்தத் தொன்மை நாகரிகத்தினுள் தான் மனித வாழ்வின் மேன்மை, ஒருங்கிணைந்த தன்மை அடங்கியுள்ளது. உலகளவிலான பல்வேறு நாகரிகங்களுக்கும் முன் தோன்றியது தமிழ் நாகரிகம் என்று சொல்லிக் கொள்ளும் நம்மவர்க்கு இன்றைய நெருக்கடியிலிருந்து உலகைக் காப்பது கடமையாகிறது. இதற்காகவும் தமிழின் செவ்வியல் இலக்கியத்தை உலகளவில் நாம் கொண்டு செல்லவும் வேண்டும். இவ்வாறெல்லாம் நமக்குள்ள பொறுப்புகள் பற்றிச் சிந்திப்பதற்கும் தமிழின் செவ்வியல் ஆய்வுகள் நம்மைத் தூண்ட வேண்டும். இலக்கிய ஆய்வு என்பது வெற்று நயங்களை, விவரங்களை, தொகுக்கும் ஆய்வாக அமைய முடியாது. வரலாறு, பொருளியல் முதலியவற்றோடு இலக்கியத்தையும் இணைத்துக் கற்பதற்கான ஆய்வாகவும் அமைய வேண்டும். வெறும் பதவி, புகழ், பணம் முதலியவற்றையே வாழ்வின் இலக்குகளாக வைத்திருப்பவர்கள் தமிழியல் ஆய்வின் தரத்தைக் குறைப்பதோடு தம் வாழ்வின் தரத்தையும் குறைத்துக் கொள்கின்றனர். இத்தகைய விபத்திற்குள் நாம் மாட்டிக் கொள்ள வேண்டாம். தமிழ்க் கலாச்சாரம் சங்ககாலம் தொடங்கி இன்றுவரை… உலக வரலாற்றில் எத்தனையோ பேரனுபவங்களுக்குப் பிறகு இறுதியாக இருபதாம் நூற்றாண்டில் மனித சமூகம் கண்டறிந்த அற்புதமான நாகரிகம் என்று சமதர்மத்தைத்தான் குறிப்பிட முடியும். தமிழ்க் கலாச்சாரம் என்று நாம் உயர்த்தியும் உணர்ச்சியோடும் பேசுகிற நம் நாகரிகத்தின் தொடக்க நிலையில் சமதர்மச் சமூகம் என்று இன்று நாம் அறிய வந்த நாகரிகத்திற்கான அடிப்படைக் கூறுகள் பல காணக் கிடைக்கின்றன. இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்களைச் சங்ககால இலக்கியத்திலிருந்து இன்று நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். சங்க காலத்திற்கு முன்னர் நிலவியது இனக்குழுச் சமுதாயம். இனக்குழுச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. உழைப்பிலும் பகிர்விலும் அனைவரும் பங்கு பெற்றனர். போட்டி, பொறாமை, வம்பு வழக்குகளுக்கு அங்கு இடமில்லை. தனியுடைமையும் அரசதிகாரமும் ஏற்பட்ட அடுத்த காலச் சமூகத்தில்தான் ஏற்றத்தாழ்வுகள், போர்கள், போட்டி, பொறாமை முதலியவை நேர்ந்தன. சமூகம் இங்குப் பிளவுபட்டது. முன்னைய சமூகத்தில் இல்லாத சீரழிவு பலவற்றிற்கு இந்தச் சமூகம் இடம் தந்தது. ஆதிக்கம் ஒரு புறமும் அடிமைத்தனம் மறுபுறமுமாகப் பிளவுபட்ட இந்தச் சமூகத்தில்தான் இன்றுவரை நாம் காணுகின்ற பல்வேறு கொடுமைகள் தொடங்கின. இவ்வாறு தீமைக்கும் கொடுமைக்கும் தொடக்க நிலையிலிருந்த தன் உடைமை / அரசதிகாரச் சமூகத்தை, இனக்குழுச் சமூகத்தின் பண்பாட்டை உள்வாங்கிக் கொண்ட சங்ககாலத்துத் தமிழ்ச் சான்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. பிளவுபட்ட இந்தச் சமூகத்தில்தான் ஓர் ஊரில் ஒரே தெருவில் ஓர் இல்லத்தில் மணப்பறையும் இன்னோர் இல்லத்தில் சாப்பறையும் முழங்கின. பக்குடுக்கை நன்கண்ணியார் என்னும் புலவருக்கு இது இன்னாத உலகமாகத் தோன்றியது. கொடுமையானது இந்த உலகம் என்றார் அவர். தனியுடைமையும் அரசதிகாரமும் பெருகி வந்த இந்தச் சமூகத்தில் கோப்பெருஞ்சோழன் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சேர்ந்த செல்வம் அனைவருக்கும் பொது என்ற முறையில் வாழ்ந்த கோப்பெருஞ் சோழனை அவன் மக்களே படைதிரட்டி எதிர்த்தனர். மனம் வெதும்பிய கோப்பெருஞ்சோழன், புலவர் சொல் கேட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். அவனோடு புலவர் பலரும் உயிர் துறந்தனர். தனியுடைமையோடும் அரசதிகாரத்தோடும் வந்த சமூகச் சூழலை இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பேரிடியோடு பெருமழை பொழிந்து வெள்ளம் பெருகிய பேராற்றில் சிக்கிய புணைபோல மக்கள் சமூகம் அலைக்கழிப்பிற்குள்ளாயிற்று. திடீரென சிலர் பெரியவராயினர். பலர் சிறியவராயினர். பெரியோர் புகழ்ச்சிக்கும் சிறியவர் இகழ்ச்சிக்கும் உள்ளாயினர். இந்நிலையைக் கணியன் பூங்குன்றன் ஏற்கவில்லை. இந்த உலகம் பொது. அனைத்து மக்களும் இங்கு கேளிர். இந்த நிலை எப்படி மாறுபடலாம் என்பது அவருக்குள் எழுந்த கேள்வி. இந்தச் சமூகத்திற்குள் படைதிரட்டி எழுந்த மன்னன் உலகத்தை ஒரு குடைக்கீழ் ஒடுக்க முற்பட்டான். இரவு பகல் எனப் பாராமல் தன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினான் ஒரு வேடன். இருவர்கிடையில் உண்பதிலும் உடுத்துவதிலும் வேறுபாடு இல்லை. இருவரும் உண்பது நாழி (நாழியளவு உணவு), உடுப்பவை இரண்டு ஆடைகள், பிறவகையில் இவர்களுக்குள் வேறுபாடுகள் இல்லை. செல்வம் சிலரிடம் சேரும் பொழுது அவர்கள் தமக்குள் சுருங்கி எத்தனையோ இன்பங்களை இழந்து விடுகின்றனர். சேர்ந்த செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பலரும் நலமாக வாழ முடியும். செல்வம் ஓரிடத்தில் குவியும் போது சமூகத்திற்கு தீங்காகிறது. இப்படிக் காண்கிறார் நக்கீரர். இவர்கள் தமிழ்ச் சான்றோர் முன்னைய இனக்குழுச் சமூகத்தின் மேன்மைகள் உடைமைச் சமூகத்தில் அழிவதை இவர்கள் ஏற்கவில்லை. இவர்கள் சங்க காலத்துச் சான்றோர். சங்க இலக்கியம் இவர்களின் மேன்மையான கருத்துக்களைத் தாங்கியுள்ள இலக்கியம். சங்க காலத்தை அடுத்து வந்த வள்ளுவரும் உடைமைச் சமூகத்தை மதிக்கவில்லை. உலகம் இருவேறு துண்டுகளாக பிளவு படுவதை ஏற்காதவர் வள்ளுவர். ஒரு பக்கம் செல்வம், மறுபக்கம் அறிவும் பண்பாடும். இப்படித் துண்டுபடும் உலகம் இன்னாத உலகம். இளங்கோவடிகளும் இக்கொள்கையுடையவர். வேறு நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி வரும் ஒருவன் கையில் விலையுயர்ந்த சிலம்பிருந்தால் அவன் கள்வனாகத்தான் இருக்க முடியும். கள்வனைக் கொல்வது கடுங்கோல் ஆகாது. கோவலனைப் பாண்டியன் கொன்றான். சான்றோர் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். தெய்வங்களும் தலையிடவில்லை. இத்தகைய சமூகம் எரிக்கப்பட வேண்டிய சமூகம். கண்ணகி எரித்தாள் என்று புனைந்துரைக்கிறார் இளங்கோவடிகள். தமிழிலக்கியம் முழுவதிலும் இத்தகைய அறச் சீற்றத்தைக் காணமுடியும். சங்க இலக்கியத்தினுள்ளும் வள்ளுவர், இளங்கோ, சாத்தனார் முதலிய தமிழ்ச் சான்றோர் வடித்த இலக்கியத்தினுள்ளும் நாம் காணும் தமிழறம் - தமிழ்ப் பண்பாடு என்பது, உலக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு கண்டெடுத்த சமதர்மச் சமூகம் என்று அறியத்தக்க பண்பாட்டை ஒத்து இருப்பதை நாம் காண முடியும். தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பற்றி இன்று நாம் அக்கறை படுகிறோம். சமதர்மம் என்ற பண்பாட்டை இன்றைய சமூக நெருக்கடிச் சூழலிலும் நம்மால் காப்பாற்றுவது பற்றித்தான் பேசியாக வேண்டும். தமிழ்க் கலாச்சாரம் / தமிழ்ப் பண்பாடு என்பதற்கு வேறு வகையான வரையறைகள் / விளக்கங்கள் பற்றிப் பேசுவதற்கே இடம் உண்டு என்றே வைத்துக் கொண்டாலும் மனித வரலாறு தோற்றுவித்த உயரிய பண்பாடு என்ற முறையில் தமிழ்ப் பண்பாடு என்றும் தொகுப்பினுள் அடங்கியுள்ள சமதர்மம் என்பதுதான் பண்பாட்டின் ஆணிவேராகத் திகழ்கிறது. இனக்குழுச் சமூகத்தின் அற்புதமான பண்பாட்டு இயல்பை குறைந்த அளவுக்கே கொண்டிருந்த சங்க காலச் சமூகம் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் பெருமளவு மாறுதலுக்கு உள்ளாயிற்று. சாதியும் மதமும் தமிழ்ச் சமூகத்தில் நுழைந்தன.வடக்கிலிருந்து வந்த ஆரியத்திற்கும் தமிழ்ச் சமூகம் இடங் கொடுத்தது. சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய கள்ளும் சூதும் பரத்தமையும் தமிழ்ச் சமூகத்தில் பெருகின. போர்க் கொடுமைகளும் கூடின. இந்நிலையை மாற்றும் நோக்கில் புத்தமும் சமணமும் தமிழ்ச் சமூகத்தில் ஆக்கம் பெற்றன. இவற்றில் தமிழ்ச் சமூகம் மீண்டும் முன்னைய நிலைக்கு மாறியதா? மாறவில்லை. முன்னைய சமூகத்தில் இல்லறம்தான் முதன்மையறம் ஆனால் இப்பொழுது துறவுக்கு மரியாதை ஏற்பட்டது. போலித் துறவிகளும் தமிழ்ச் சமூகத்தில் பெருகியிருக்க வேண்டும். போர்க் கொடுமைகள் வறுமை, கொலை, கொள்ளை முதலிய நிலவரங்கள் கூடிவரும் சமூகச் சூழலில்தான் மனித வாழ்வே துயரங்களின் கொள்கலம் என்று பேசப்பட்டது. மனிதப் பிறவியே வேண்டாம். பிறப்பு அற வேண்டுமானால் ஆசைகளை ஒழிக்க வேண்டும். பெண்ணின்பத்தைத் துறக்க வேண்டும். புலனடக்கம் இல்லாமல் முடியாது. இத்தகைய போக்குத் தொடர்ந்து அதிகரித்த நிலையில் தமிழ்ச் சமூகம் தனக்குள் தடுமாறியிருக்க வேண்டும். திணறியிருக்க வேண்டும். இந்நிலை தொடரும் என்றால் தமிழ்ச் சமூகம் பூண்டற்றுப் போயிருக்கக் கூடும். இந்நிலையில் புத்தமும் சமணமும் அகற்றப்பட வேண்டும். இச்சூழலில் சைவமும் வைணவமும் மேலுக்கு வந்தன. தமிழக வரலாற்றில் இக்காலத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்ற விவரங்களில் நாம் ஆழ்ந்துவிட முடியாது. சமதர்ம சமூகப் பண்பாடுதான் வரலாறு கண்டறிந்த உயரிய பண்பாடு என்ற அணுகுமுறையிலிருந்து நம்மால் விலக முடியாது. தமிழ்ச் சமூகத்தினுள்ளும் இடம் பெற்ற சாதி, மதம் முதலியவை தமிழ்க் கலாச்சாரத்தின் கூறுகள் என ஒரு பெரும் பகுதியினரால் கருதப்படுகிறது என்பதால் சமதர்ம நோக்கில் இவை பற்றிய ஒரு மதிப்பீட்டை இங்கு முன்வைக்க வேண்டியிருக்கிறது. சாதி இல்லாமல் மனிதன் வாழ முடியும். சாதியக் கூறுகள் சமூக வாழ்வுக்குள் நுழைந்து மனித வாழ்வின் தரத்தை நாசமாக்க வேண்டியதில்லை. புத்தமும் சமணமும் அவை தோன்றிய வரலாற்றுச் சூழலில் வைதீகத்திற்கு எதிராக மனித வாழ்வைக் காத்து நின்றன என்பது உண்மை என்றாலும் அடுத்து வந்த வரலாற்றுக் காலத்தில் இவை சமூக வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கவில்லை. மனித வாழ்வே துயரத்தின் கொள்கலம். ஆசையே துயரங்களுக்குக் காரணம். புலனடக்கம் இல்லாமல் முடியாது. பிறவிகள் தொடரும். பிறப்பு முற்றாக அறவேண்டும். இவ்வகையான கூற்றுகளில் உண்மையில்லை. சமூக வளர்ச்சிக்கு இத்தகைய கருத்தினங்கள் தடையென்பதில் ஐயமில்லை. தனி உடைமையும் அரசதிகாரமும் வரலாற்றில் தவிர்க்க முடியாதவை என்ற போதிலும் சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் இவை உழைக்கும் மக்கள் மீது திணித்தன என்பதன் காரணமாகத்தான் மனித வாழ்வில் துயரங்கள் ஏற்படுகின்றன. புலனடக்கம் தேவைதான் என்ற போதிலும் ஆசைகளை அறவே துறப்பதென்பது அறிவுடைமை ஆகாது. அதைப்போலவே சைவமும் வைணவமும் இறைவனை முற்றாக நம்பி கதி செய்தாலே துயரங்கள் தீரும் என்பதிலும் உண்மையில்லை. மனித சமூகத்திலிருந்து இன்றைய நிலையிலும் மதத்தை அறவே ஒழிக்க முடியாது என்பது உண்மை தான். புரோகிதம், வெற்றுச் சடங்குகள், பொய்மைக் கதைகள் முதலியவற்றை மதம் போற்றுகிறது என்பது நமக்கு உடன்பாடில்லை. மதத்தினுள்ளும் ஆழத்தில் இருக்கும் மக்கட் சார்வை நாம் மறுக்க முடியாது. இறைவன் அன்புமயமானவன். அவன் எங்குமிருக்கிறான். எல்லோருக்குள்ளும் இருக்கிறான். மனிதர் அனைவரும் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கிடையில் வேற்றுமையில்லை. இறைவன் முன்னிலையில் இவர்கள் அனைவரும் சகோதரர்கள். இறைவன் படைத்த உலகம் இவர்கள் அனைவருக்கும் உரியது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கு உரியது இவ்வுலகம். இறைவனைப் பற்றி மதங்கள் முன்வைக்கும் இவ்வகை கருத்தினங்கள் சமதர்மம் என்ற பேருணர்வுக்கும் ஒத்த கருத்தினங்கள். இனக்குழுச் சமூகத்தின் உயரிய பண்பாடு இவ்வகை கருத்தினங்களுக்குள் தங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை . மதம் முன்வைக்கிற புரோகிதம் முதலியவற்றை ஒதுக்கும் பொழுதே இவ்வகைக் கருத்தினங்கள் வழியே மறைமுகமாகத் தொடரும் சமதர்ம உணர்வை மதங்களுக்குள்ளிருந்தே நம்மால் வளர்த்தெடுக்க முடியும். தமிழ்ச் சமூக வரலாற்றின் இடைக்காலத்தில் சாதி, மதம் முதலியவை மனித சமூகத்தைத் தடம் புரட்டின என்ற முறையில் இவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம் காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் உள்ளார்ந்த கூறுகளாக இவற்றை நாம் கருத வேண்டியதில்லை. தமிழ்க் கலாச்சாரம் என்பதனுள் ஆழமாகத் தங்கிவிட்ட இன்னொரு கூறு வைதீகம். தமிழகத்தில் நடைபெறும் குடும்பச் சடங்குகள் பலவற்றுள் பார்ப்பனர் இடம் பெறுகின்றனர். யாகம் முக்கிய இடம் பெறுகிறது. சங்கச் சகத்தினுள் இடம்பெற்ற பார்ப்பனரின் யாகம் முதலியவற்றை தமிழ்ச் சமூகத்தினுள் கொண்டு வந்தவர்கள் எனத் தமிழ் மன்னர்களைத்தான் குறிப்பிட முடியும்.யாகம் செய்தால் போரில் வெற்றி கிட்டும். மன்னரின் ஆயுள் நீளும், மக்கள் பேறு கிட்டும். நாட்டில் தீய நிகழ்வுகள் நடைபெறா. இவ்வாறெல்லாம் வேதியர் கூறியதை ஆசை காரணமாக மன்னர்கள் நம்பினர். அரசனைத் திருமாலின் அவதாரம் என்றனர். இறைவன் மக்களைக் காப்பதைப் போல் மன்னனும் காப்பாற்றுகிறான் என்பதால் இறைவன் என்றனர். போர் வெற்றிகளின் போது வேதியரைக் கொண்டு மன்னர் யாகம் நடத்தினர். நகரங்கள், குளங்கள், பயிறு வகைகள், மனித உயிர்கள் பேரளவில் அழிவதற்கு மன்னன் காரணம் என்பதால் யாகம் செய்வதன் மூலம் மன்னன் அந்தப் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். மன்னன் செயல்களை மக்கள் நம்ப வேண்டும். மக்களை நம்ப வைக்க வேண்டும். வேதியர்கள் இப்பணியைச் செய்வதற்கு உதவினர். இடைக்காலத்தில் பெரு மன்னர்களுக்கு வேதியர் மிக நெருக்கமாகினர். சோழ மன்னர்கள் வேதியர்களுக்கு விளைநிலங்களைப் பேரளவில் தந்தனர். மாபெரும் கோவில்களை எழுப்பினர். தமிழ்ச் சமூக வாழ்வில் வேதியர்களுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டது. வேத மதமும் சைவமும் நெருக்கமாயின. ஆரியரின் வருணமுறை தமிழ் சமூகத்தினுள்ளும் நுழைந்தது. இராசராசன் முதலிய பெரு வேந்தர்கள் மாபெரும் படை நடத்தி பல நாடுகளை வென்றனர். நகரங்களை நாசமாக்கினர். கொள்ளையடித்த செல்வங்களோடு தோற்ற படை வீரர்களையும் அடிமைப்படுத்திக் கொண்டு வந்தனர். இவர்களை வைத்து அணைக்கட்டுகள் முதலியவற்றை உருவாக்கினர். சாதி முறையை நிரந்தரப்படுத்தினர். மன்னர்களின் அரசதிகார பெருக்கத்திற்கு மக்கள் உழைத்தாக வேண்டும். ஒடுக்குமுறைகளுக்குள்ளாக வேண்டும். இறை நம்பிக்கை இதற்கு உதவியாக இருந்தது. சிவனடியார்கள், ஆழ்வார்கள் பற்றிய புனைகதைகள் உருவாக்கப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் எழுதினார். சைவ மடங்களும் சித்தாந்தமும் உருவாகின. தமிழ்ச் சமூக வாழ்வில் இவையெல்லாம் இன்றியமையாத கூறுகளாயின. வேதியரும் வருண முறையும் பெற்ற வெற்றிக்கு அளவில்லை. இவை பற்றி மறுபார்வை என்ற முறையில் சிலவற்றை நாம் சொல்ல முடியும். தொல்காப்பியரின் கருத்தியலில் முதற் பொருளாக தெய்வமில்லை. கருப்பொருள்களில் ஒன்று எனத்தான் தெய்வம் இடம் பெற்றது. பொருளையும் காலத்தையும் படைத்தவன் இறைவனில்லை. முழுமுதற் பொருள் என வள்ளுவர் இறைவனைச் சொல்லவில்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்தினுள் இடம் பெறுவர். குடியை உயர்த்தப் பாடுபடுபவனுக்குத் தெய்வம் தானே ஓடிவந்து உதவி செய்யும். சிலம்பில் கற்புத் தெய்வமெனக் கண்ணகிப் போற்றப்பட்டாள். மனிதரின் வாழ்வுக்குள்ளிருந்தே தெய்வக் கருத்து உண்டாயிற்று. உலகியல் வாழ்க்கை மனிதனின் கைகளில் இருந்தபொழுது தெய்வத்திற்கு முதன்மை இடம் இல்லை. மன்னர்கள், செல்வங்கள், மதவாதிகள் முதலியவர்களின் ஆதிக்கத்திற்குள் உழைக்கும் மக்கள் அகப்பட்ட பொழுது மனித வாழ்வைக் கட்டுப்படுத்தவல்ல தெய்வக் கருத்து உருவாயிற்று. போர்க் கொடுமைகள், வறுமை முதலியவை அதிகரித்த நிலையில் எல்லாம் வல்ல தெய்வக் கருத்து முதன்மை பெற்றது. யாகங்கள், வழிபாடுகள், சாத்திரங்கள், புராண கதைகள் திரண்டன். மனிதன் தனக்கான விடுதலையடைய மோட்சத்தை இனி இறைவனால்தான் தரமுடியும். இறைவனின் அதிகாரத்தை வேதியர் பெற்றனர். சிவனடியார்களுக்கும் இறைவன் நெருக்கமானான். தமிழ்ச் சமூகம் முற்றிலும் இறை நம்பிக்கைக்கு வேதியர் ஆதிக்கத்திற்கு மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு முற்றிலும் வசப்பட்டதெனக் கூறவும் முடியாது. சங்க காலச் சமூகத்தில் இறை நம்பிக்கை இருந்ததெனினும் இறைவனே எல்லாம் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. தமிழ்ச் சமூகத்தில் மதம் ஆதிக்கம் பெறவில்லை. புத்தமும் சமணமும் கடவுளைக் கேள்விக்குள்ளாக்கியே வைத்திருந்தன. அன்புதான் சிவம் என்றார் திருமூலர். தமிழ்ச் சமூகத்தில் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தவர்கள் சித்தர்கள். சாதி, மதம், சடங்கு, பார்ப்பனியம் முதலிய எல்லாவற்றையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்கினர். சித்தர் பரம்பரையில் இறுதியாக வந்தவர்களில் ஒருவர் வள்ளலார். புராணக் கதைகள் முதலியவற்றைத் தமிழ் நெறியில் ஒதுக்கினார். வள்ளலார் நெறியில் மேலும் தொடரும்பொழுது நமக்கு வாய்த்தவர் பெரியார். தொகுத்துப் பார்த்தால் தமிழ்க் கலாச்சாரம் என்ற தொகுப்பிலிருந்து இறை நம்பிக்கை, பார்ப்பனியம், சாதி முதலிய பலவற்றையும் ஒதுக்கி வைக்க முடியும். தமிழ்க் கலாச்சாரம் என்ற தொகுப்பினுள் இவற்றுக்கு இடம் வேண்டியதில்லை. இப்படி நாம் விவாதிக்கும் பொழுது தமிழ்க் கலாச்சாரம் என்ற தொகுப்பினுள் தமிழ்நாட்டு கோவில்கள், சிற்பங்கள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள், பெரிய புராணம் முதலிய இலக்கியங்கள் முதலியவற்றை ஒதுக்கித் தள்ள முடியுமா? உண்மையில் தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் கூறுகள் அல்லது அடையாளங்கள் என்று போற்றத்தக்க முறையில் விளங்குபவை மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில் முதலியவை. தமிழிசை, தேவாரம், பெரிய புராணம் முதலியவை. கோவில்கள் மாபெரும் கலைக்கூடங்கள். உலகம் வியக்கத்தக்க கட்டிடக்கலை, சிற்பக்கலை மாண்புகளை இவை வெளிப்படுத்துகின்றன. சங்க காலம் முதற்கொண்டே வளர்ந்த தமிழிசையின் உச்சத்தைத் தேவாரப் பாடல்கள் கொண்டுள்ளன. இவற்றைப் படைத்தவர்கள் தமிழ்க் கலைஞர்கள் . தஞ்சை பெரிய கோவில் முதலியவற்றை உருவாக்கியவர்கள் தமிழ் சிற்பிகள் இராசராசன் தஞ்சைப் பெருங்கோயிலை எழுப்புவதற்கு காரணமாக இருந்தான் என்று கூறலாமே ஒழிய கோவில், சிற்பங்கள் முதலியவற்றை தம் மனத்தினாலும் கைகளின் நுட்பத்தோடு படைத்தவர்கள் தமிழ் சிற்பிகள். சிற்பங்களும் புராணக் கதைகளும் கடவுளின் அற்புதத் தோற்றங்கள், அருளியச் செய்திகள் பற்றிப் புனைந்துரையாக வெளிப்படுத்தின என்ற அளவில் மட்டும் நம் பார்வையை நாம் முடக்கிக் கொள்ள முடியாது. இவை அனைத்துமே மனிதனின் கதையைத்தான் சொல்கின்றன. மதம் என்ற புனைவை நீக்கி இவற்றை நம்மால் இன்று வாசிக்க முடியும் / புரிந்து கொள்ள முடியும். வறட்டு நாத்திகப் பார்வையை முன்னிறுத்தி இவற்றைத் தமிழ் பாட வரலாற்றிலிருந்து ஒதுக்க முடியாது. இந்தச் சிற்பங்கள் கதைகள் முதலியவற்றை வாசிக்கும் பொழுதே நம்மையும் கலைஞராக்குகின்றன. கோவில் கட்டிடக் கலை முதலியவை தமிழரின் பொறியியல், கணிதவியல் முதலிய ஆற்றல்களையும் அழகியல் நுட்பங்களையும் தமிழில் பதிவு செய்துள்ளன. தமிழிசைக் கலையை யாரால் ஒதுக்க முடியும்? இராசராசன் முதலிய பெரும் மன்னர்கள் அயல் நாடுகளிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்தார்கள். மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் திணித்தார்கள். மாபெரும் கோவில்களையும் நீர்பாசன திட்டங்களையும் நிறைவேற்றினார்கள். இவற்றைச் செய்த மன்னர்கள் ஆதிக்கவாதிகள். இப்படி நாம் விமர்சனம் செய்வதிலுள்ள நியாயத்தை மறுக்க வேண்டியதில்லை. மாபெரும் கட்டிடங்கள் முதலியவற்றை உருவாக்கும் பொழுதே ஆயிரக்கணக்கானவர் தம் உயிரை இழக்க நேர்ந்திருக்கும். வேலையில் சுணக்கம், தவறு காரணமாக கடும் தண்டனைகளுக்கு உள்ளாகியிருப்பர். இவற்றையும் நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வகைச் செயல்பாட்டிற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்த உழைப்பாளிகளும் கலைஞர்களும் தம் உயிரைக் கொடுத்து மாபெரும் கட்டிடங்களையும் அழகிய சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவற்றைப் படைக்கும் பொழுதே இவர்களின் வேலை திறனும் கலைத் திறனும் பேரளவில் மேம்பட்டிருக்கும். உழைப்பு இவர்களை மேம்பட்ட மனிதர் ஆக்கியிருக்கும். வரலாற்றில் இவர்களின் பெயர்கள் பதிவு பெறவில்லை. என்றாலும் தமிழின் இலக்கிய கலை ஆக்கத்தில் வள்ளுவரும் இளங்கோவும் பெற்றிருக்கும் மரியாதையைப் பெயர் பதிவு பெறாத இந்த மாபெரும் கலைஞர்களுக்கும் நாம் தரமுடியும். புராணக் கதைகள் முதலியவற்றை இருபதாம் நூற்றாண்டுச் சூழலில் புதிய அணுகுமுறை கொண்டு நம்மால் வாசிக்க முடியும். இக்கதைகளின் உள்ளும் தமிழ் வரலாறு அடங்கி இருக்கிறது. தமிழறிஞர்கள், தமிழ்க் கலைஞர்கள் வரலாறு அடங்கியிருக்கிறது. கதைகளின் அடியில் இயங்கும் தமிழ்ச் சிந்தனையை நாம் தொகுத்துப் பார்க்க முடியும். சான்றுக்கு ஒன்றுச் சொல்லலாம். பெரிய புராணத்தில் இடம் பெறும் கண்ணப்ப நாயனார் கதையைக் குறிப்பிடலாம். சிவகோசாரியார் சடங்கில் மன நிறைவு அடைபவர். சிவபெருமானுக்கு முறையாக வழிபாடு செய்வதே அவருக்குப் போதும். கண்ணப்பனுக்குத் தான் படைத்த உணவை / இறைச்சியை இறைவன் உண்ண வேண்டும். இறைவன் கண்ணிலிருந்து இரத்தம் வடிந்தால் தன் கண்ணைத் தோண்டி இறைவனுக்குத் தரமுடியும். இறைவனைத் தன் கண்ணால் இவன் பார்க்க வேண்டும். புனைந்துரை வடிவில் உள்ள இந்தக் கதையின் ஆழத்தில் என்ன இருக்கிறது? சடங்குகள், விதிமுறைகள், சட்டங்களுக்குள் மனிதன் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ள முடியாது. மனிதனுக்கு அசலான வாழ்வு வேண்டும், இயற்கை வேண்டும். எத்தகைய இடரைக் கடந்தும் உண்மை காண வேண்டும். இது நம் காலத்துக்கான புரிதல் புரோகிதர்கள் உண்மைக்குத் திரை போடுபவர்கள். மாயத் திரைகள் நம் வாழ்வையும் அடைத்துள்ளன. திரை நீக்கி உண்மையைப் பார்க்க வேண்டும். கடவுளும் ஒரு மாயத்திரை. வள்ளலாருக்குள்ளும் மாயத்திரை இருந்தது. வரட்டு நாத்திகமும் ஓர் இரும்புத் திரை. திரைகளை நீக்க முடிந்தால் விடுதலைக் கிட்டும். சமதர்மம்தான் மனித விடுதலைக்கு ஒரே நெறி. தமிழ்க் கலாச்சாரத்தினுள் இருக்கிறது இந்த நெறி. தமிழ் வரலாற்றில் கடந்த நான்கைந்து நூற்றாண்டுகள் தமிழர் மீது கடுமையான நெருக்கடிகள் பாதித்த காலம் என்று சொல்லலாம். மாலிக்காபூர் படையெடுப்பு அவன் செய்த கொள்ளைகள் ஏற்படுத்திய நாசங்கள் மிகக் கடுமையானவை. அடுத்து வந்தது மராத்தியர் படையெடுப்பு. பின்னர் விசயநகரத்து மன்னர்களின் படையெடுப்பும் கடுமையான தாக்கங்களும். தமிழ் நிலம் பல அந்நியர்களின் வசமாயிற்று. நகரங்கள் கிராமங்கள் நாசமாகின. தமிழர் தம் நிலத்தில் வாழ முடியவில்லை. குடிபெயர்ந்து அங்கும் இங்கும் அலைந்தனர். இதன் பின்னர் மேற்கத்தியரின் நுழைவு. மன்னர்கள் காணாமல் போயினர். நில உடைமை முறையில் பெருத்த மாற்றங்கள். தமிழர்களின் ஊராட்சி முறைமை உருக்குலைந்தது. ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சி முதலிய தேவைகளுக்காகத் தமிழ் மக்களின் தொழில் வளங்கள் சூறையாடப்பட்டன. தமிழன் தன் முகம் அழிந்து போனான். அந்நியர்களுக்கு எதிரான கலவரங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. பிழைப்புத் தேடி தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். நாடு நாடாக இல்லை. கலாச்சாரங்களுக்கிடையில் நல்லுறவுகள் நாகரிக எழுச்சிக்குக் காரணமாகலாம். ஆனால் இங்கு நடைபெற்றது, நாகரிகங்களுக்கிடையில் கடுமையான மோதல். முன்னைய நாகரிகம் பெருமளவில் நாசமாயிற்று. அயல் நாகரிகம் இங்கு தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் எழுச்சிப் பெற்ற விடுதலைப் போராட்டம் வேறுபட்ட கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட மக்களைக் குறைந்தளவுக்கேனும் ஒருங்கிணைக்க காரணமாக இருந்தது. தமிழர்களும் இந்த இணைப்பின் வழியே இந்தியர் என உணரத் தொடங்கினர். விடுதலை இயக்கம் தனக்குள்ளிருந்த முரண்பாடுகளைச் சரியான முறையில் கையாண்டு வளர்த்திருக்குமானால் இந்த ஒருங்கிணைப்பு வலிமையடைந்திருக்கும். இந்துக்களுக்கும் இசுலாமியருக்கு மிடையில் உரசல்கள் தொடர்ந்தன. ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் கடுமையாக நடைபெற்ற காலங்களில் இந்து முஸ்லீம்களுக்கிடையில் செறிவான ஒற்றுமை நிகழ்ந்தது. போராட்டத்தில் தளர்ச்சி ஏற்பட்ட காலங்களில் வேற்றுமைகள் மிகுந்தன. இயக்கத்தினுள்ளும் தலைமைக்கான சதிகளும் குறுங்குழு விவாதங்களும் தொடர்ந்தன. எல்லாக் காலங்களிலும் வடக்கத்தியரே தலைமையிலிருந்தனர். தமிழர் தலைமையிடத்திற்கு வர இயலவில்லை. இந்த இயக்கத்திற்குள் கடுமையான சிக்கல் எழுந்தது. பிராமணர்களுக்கு முதன்மை தாழ்த்தப்பட்டவர்களுக்கு இறுதியிடம். தக்க மரியாதை அவர்களுக்கு இல்லை. பெரியார் இந்தச் சிக்கலை எழுப்பினார். விடுதலை இயக்கம் அனைத்துச் சாதியினரையும் இணைத்துச் செல்ல முடியாது என்பது புலனாயிற்று. இந்தியா விடுதலை பெற்ற பிறகும் வருண முறையே இந்தியாவில் நிலை பெறும் என்ற உண்மை தெளிவாயிற்று. தமிழினம் இந்த நிலையை ஏற்க முடியாது. சாதி தமிழ்ச் சமுதாயத்தைப் பிளவுப்படுத்தி நாசமாக்கும். இந்த உண்மை இன்று வரை நீடிக்கிறது. ** தமிழ்க் கலாச்சார பாதுகாப்பு** தமிழ்க் கலாச்சாரம் தமிழ் வரலாறு, தமிழ் வாழ்வு பற்றி இன்றைய நிலையில் நாம் பெருமிதத்தோடு பேசுகிறோம். வரலாற்றில் நமக்கு இன்று நேர்ந்திருக்கிற நெருக்கடிகளுக்கிடையில் நம்மை, நம் வாழ்வை, நம் வரலாற்றை மீட்டுக் கொள்ள வேண்டிய இன்றியமையாத கடமை என்ற முறையில் இவை குறித்துப் பேசுகிறோம். இவற்றுக்குள்ளிருக்கும் ஆற்றலை மீட்டுக் கொள்ளும் முறையில் பேசுகிறோம். இருபதாம் நூற்றாண்டுச் சூழலில்தான் நம்மைத் தமிழர் என்றும் நமக்கு நெடுங்கால வரலாறும் மேன்மையும் உண்டு என்றும் நாம் பேச வேண்டி நேர்ந்தது. இந்திய நாகரிகம் என்பது இந்து நாகரிகம் தான், வேத நாகரிகம்தான் என்று பலர் அடித்துப் பேசிய நிலையில் இவற்றை மறுத்ததோடு வேத நாகரிகத்திற்கு முன்பே மேன்மையோடு இருந்தது தமிழ் நாகரிகம் என்றும் இப்படிச் சொல்வதற்கான ஆதாரம் சிந்துவெளி நாகரிகம் என்றும் நாம் பேச வேண்டியிருந்தது. இந்திய மொழிகளுக்கெல்லாம் மூலமொழி சமஸ்கிருதம் என்று பலர் பேசியதை மறுத்ததோடு திராவிட மொழிகளின் - குறிப்பாக தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் மேன்மை குறித்தும் நாம் பேசினோம். இந்திய நாகரிகம் என்பதன் ஒரு கூற்றுதான் வேத நாகரிகம் என்றதோடு வைதீகத்தைத் தொன்மைக் காலம் முதலே மறுத்த சமணம், பவுத்தம், சாங்கியம், ஆசிவகம், சார்வாகம் பற்றியெல்லாம் நாம் பேசினோம். இந்தியாவின் ஆதிக்குடிகளின் நாகரிகம் பற்றியும் பேசினோம். அவைதீகம் என்று சொல்லப்பட்ட நாகரிகங்களோடுதான் தமிழ் நாகரிகத்தையும் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது என்றோம். இந்தியாவை இராணுவ பலம் கொண்டு ஒருங்கிணைத்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்த பிராமணர்கள் செய்த தந்திரங்கள் பற்றிப் பேச வேண்டியிருந்தது. இந்திய வரலாறு என்பது வடக்கிலிருந்து அல்ல, தெற்கிலிருந்துதான் தொடங்குகிறது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. வேத நாகரிகம் அல்லது ஆரிய நாகரிகம் மேலுலகம், யாகங்கள், சடங்குகள் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டது என்றும் தமிழர் நாகரிகம் மண்ணுலகம், இயற்கை மனித வாழ்வு முதலியவற்றை உள்ளடக்கிய உலகியல் சார்ந்தது என்றும் பேசினோம். சங்க இலக்கியத்தைச் சான்றாக்கினோம். இப்படித்தான் இருபதாம் நூற்றாண்டுச் சூழலில் நாம் தமிழர் என்ற உணர்வெழுச்சியைப் பெற்றோம். முன்னைய நூற்றாண்டுகளில் நாம் ஒரு தேசிய இனம் என்ற முறையிலான கருத்தியல் எழவில்லை. இடைக்காலத்தில் சமயம் மேலாதிக்கம் பெற்ற நிலையில் நம் மக்கள் தம்மை சைவர் என்றோ, வைணவர் என்றோ சொல்லிக் கொண்டனரே அன்றி நாங்கள் தமிழர் என்ற இன உணர்வோடு பேசியதாகத் தெரியவில்லை. சமயம் மனித வாழ்வைத் திரையிட்டு மறைத்தது. மனிதர் தன்னை மனிதர் என்று மதிப்பிட்டுக் கொள்வதற்கே இருபதாம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது. மன்னர்கள், மதவாதிகள், சாதிகள், சடங்குகள் போன்ற கட்டுப்பாடுகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டுச் சூழலில்தான் தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட நிலையில் மனிதன் தன்னை மனிதனாக உணர்ந்தான். கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. பிரபஞ்சம் என்பது தன்னளவில் பேரியக்கம் கொண்டது. இவ்வகை இயக்கத்தின் ஒரு கட்டத்தில் உலகம், இயற்கை உயிர் வகைகள், இறுதியாக மனிதன் என்ற பரிணாமம் நிகழ்ந்தது. மனிதன், மன்னர்கள் மதவாதிகள் கட்டுப்பாடுகளைக் கடந்து தனக்கான வாழ்வை வரலாற்றைப் படைத்துக் கொள்ள முடியும். அறிவியல் தொழில் நுட்பம் முதலியவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் மனிதன் தனக்கான அரசியலைப், பொருளியலை வாழ்வியலைப் படைத்துக் கொள்ள முடியும் என்ற புரிதல் ஏற்பட்டது. இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய பார்வையை மனிதன் பெற்றான். ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றான். மேற்குலகில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேசிய இனம் என்ற கருத்தியல் தோன்றியது. ஒரு மொழிக்கொரு தேசம் என்பதுதான் இயல்பென ஆயிற்று. வரலாற்றில் இத்தகைய பின்புலத்திலிருந்துதான் மனிதனைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. இத்தகைய பின்புலத்தோடு கூடிய இருபதாம் நூற்றாண்டுச் சூழல் இங்குள்ள மனிதனைத் தான் தமிழன் என உணரத் தூண்டியது. வரலாற்றுக்குள் தான் வந்த வகையை இவன் புரிந்து கொண்டான். தமிழனுக்கான தனி வரலாறு, தனி நாகரிகம் பற்றியெல்லாம் இனி இவனால் பேச முடியும். இப்படி எழுந்த உணர்வெழுச்சியின் விளைவாகத்தான் நாம் தமிழர், தமிழ் நாகரிகம், தமிழ்க் கலாச்சாரம் என்றெல்லாம் பேசுகிறோம். இந்தியாவினுள்ளும் தமிழன் தன்னைப் பிற ஆதிக்கங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். விடுதலை என்ற தேவை கருதித்தான் தமிழ்க் கலாச்சாரம் பற்றி இன்று நாம் பேசுகிறோம். தமிழன் தனக்கான தேசத்தைப் பெற்றால் மட்டுமே தனக்கான அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம் முதலியவற்றைப் படைத்துக் கொள்ள முடியும். இந்திய விடுதலைக்கானப் போராட்டத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தேசிய இனங்கள் ஒன்றிணைந்தபோது விடுதலைக்குப் பிறகு தனியாட்சி பெற முடியும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது. 46க்குப் பிறகு இந்திய அரசியல் அமைப்பு பற்றிய விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற போது தொடக்கத்தில் ஒரு தேசிய இனத்திற்கு ஒரு நாடு என்றிருந்த நிலை பிறகு மாறி இந்தியா ஒரு தேசம் என்ற முடிவு ஏற்பட்டது. உண்மையில் இந்தியா ஒரு துணைக் கண்டம். இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் பலவற்றுக்கும் தனி மொழி, வரலாறு, பண்பாடு முதலியவை தனித்தனியே உண்டு. பிரிட்டிஷ் அரசு இராணுவத்தைக் கொண்டு தேசிய இனங்களின் தனித்தன்மையைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறைக்குள் தேசிய இனங்கள் பலவற்றையும் அடைத்து வைத்து ஒடுக்கியது. விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட இந்திய அரசும் இந்த நிலையையே தொடர்ந்தது. உண்மையில் தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்கிற ஒரு சரியான கூட்டாட்சி என்ற அடிப்படையில் இந்தியா என்ற துணைக் கண்டத்திற்குள் ஒரு தேசிய இனத்திற்கு ஓர் அரசு என்ற முறையில் ஒருங்கிணைந்து வாழ முடியும். இந்த வாய்ப்பு தமிழினத்திற்கு கிட்டவில்லை. இந்தியா ஒரு தேசம் என்ற முறையில் மைய அரசுக்கு கூடுதலான அதிகாரங்கள் அன்றியும் மைய அரசுக்கு இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழி. மாநில அரசுகளுக்குத் தனி அதிகாரங்கள் இருந்த போதிலும் மைய அரசிற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் அமைப்பில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் தக்க பாதுகாப்பு உண்டு. இவற்றை ஒழிக்க வாய்ப்பில்லை. இந்தியா ஓர் அரசு என்ற முறையில் இந்துத்துவத்திற்கு கூடுதலான மரியாதை. இந்தியாவுக்கு வந்து சேர்ந்த பிரிட்டானிய அரசு தொடக்கம் முதலே ஒன்றைச் செய்தது. ஆங்கில அரசு தான் இந்தியா என்ற பெயரை இந்த மாபெரும் நிலப்பரப்புக்கு வைத்தது. ஆங்கில அரசின் ஆதிக்கத்தினுள்ளும் இந்தியா ஒரு தேசமாக என்றைக்கும் ஒருங்கிணைக்கப்படவில்லை. என்ன முரண்பாடுகளோடும் அரசு தன் ஆதிக்கத்தைச் செயல்படுத்த முற்பட்டது. இந்தியா என்ற பெயர் வைப்புடன் ஆங்கில அரசு செய்த இன்னொரு மாபெரும் தவறு பற்றிக் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருந்தன. இந்திய அரசு சைவம், வைணவம், வேத மதம் முதலிய பலவற்றையும் உள்ளடக்கி இந்து மதம் என்று பெயர் வைக்கிறது. பெரும்பாலான சமயப் போக்குகள் இந்து மதம் என்ற கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்டன. வருண முறையை உறுதிப்படுத்துவதற்கு இத்தகைய அமைப்பு பயன்பட்டது. பிராமணர்கள் மகிழ்ச்சியடைந்தனர். புத்தம், சமணம், சீக்கியம் தவிர பிற அனைத்து தரிசனங்களும் இந்து மதம் என்பதற்குள் ஒடுங்கின. சாங்கியம், சார்வாகம் முதலியனவும் இந்து மதம் என்ற கட்டமைப்புக்குள் வந்தன. தமிழ்க் கலாச்சாரம் தன் தனித்தன்மையை இழப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இனித் தமிழ்க் கலாச்சாரம் தன்னை இந்து மதம் என்ற எல்லைக்குள்ளிருந்து விடுதலை பெறுவதற்கு வாய்ப்பு மிக குறைவு. தமிழக வரலாற்றின் தொடக்கக் காலம் என நமக்குத் தெரிந்த அளவில் சங்க காலத்தைக் குறிப்பிடுகிறோம் என்ற போதிலும் சங்க காலத்திற்கு முற்பட்டதான இனக்குழுச் சமூகத்தின் இருப்பிற்கான தடயங்களையும் சங்க இலக்கியத்தின் மூலம் நாம் அறிய வருகிறோம். தனக்குள் முரண்பாடு இல்லாதது அந்த இனக்குழுச் சமூகம். உழைப்பையும் பகிர்வையும் தனக்குள் பகிர்ந்து கொண்டது அந்தச் சமூகம். இனக்குழுச் சமூகத்திற்கும் ஒரு தலைமை உண்டெனினும் அந்த சமூகத்திற்கிடையில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் இடமில்லை. சங்க இலக்கியத்தினுள் மூவேந்தர்களின் தாக்குதலுக்குள்ளாகி அழிந்தவர்கள் என்று அறியப்படுகிற பாரி, அதியன் முதலிய வேளிர்கள் அந்த இனக்குழுச் சமூகத்தின் அற்புதமான தலைவர்கள். கோப்பெருஞ்சோழனோடு முரண்பட்டு அவர்களிடமிருந்து ஆளுகையைப் பறித்துக் கொள்ள தமக்கென ஒரு படைத் திரட்டிக் கொண்டு போரிட முற்பட்ட சோழனின் மக்கள், புதிதாகத் தோன்றிய தனியுடைமை மற்றும் அரசதிகாரத்தின் முதல் பிரதிநிதிகள். குமணனுக்கு எதிராக நின்ற இளங்குமணனும் புதியதான அரசின் தோற்றத்திற்கான ஒரு சின்னம். பக்குடுக்கை நன்கண்ணியார் பாடிய இன்னாத உலகம் என்பது இந்த புதிய சமுதாயம். கணியன் பூங்குன்றன் முதலிய தமிழ்ச் சான்றோர் பலரும் போற்றி முன்வைத்த பண்பாடு என்பது இனக்குழுச் சமூகத்தின் ஆக்கத்திலிருந்து தமக்குள் தொகுத்துக் கொண்ட பண்பாடு. பேராற்று வெள்ளம் எனப் பேராற்றலுடன் வந்து கொண்டிருக்கிற புதியதான சமூகத்தின் எதிர் நின்று ‘பெரியோரை வியத்தலும் இலம், சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்’ என்று பாடியவர் இவர். தொன்மை இனக்குழுச் சமூகத்தின் பண்பாட்டுச் செழுமையைத் தான் வள்ளுவர் தனக்குள் அறமென வடித்திருக்கிறார். தனியுடைமையும் அரசதிகாரமும் புதிய சமூகத்தின் ஆதாரங்களாக மூவேந்தர்கள், இவர்களுக்கிடையிலான போர்கள், போர்க் கொடுமைகள், நால்வகைப் படைகள், நகர அழிவுகள் என்றெல்லாம் கிளம்பியது இந்தப் புதிய சமூகம். நகர நாகரிகம், தொழில் வளர்ச்சி என்றெல்லாம் தொடங்கியது, வரலாற்றின் முதல் எழுச்சி தமிழிலக்கியத்தில் பெரிதாகப் போற்றி சொல்லப்படுகின்றது மருத நில நாகரிகம் என்பதுதான். நாளடைவில் நகரம், தொழில் வளர்ச்சி, வணிகம் என்பவை சார்ந்த இந்தப் புதிய நாகரிகம் தான் குறிஞ்சி, முல்லை , நெய்தல் முதலிய பிற நாகரிகங்களைத் தனக்குள் உள்வாங்கி ஒடுக்கிக் கொண்டதன் பயனாக வளர்ச்சிப் பெற்றது. முன்னைய நாகரிகத்தின் பேரழிவோடு வளர்ந்த இந்தப் புதிய நாகரிகத்தின் ஒரு விளைவு என வறுமைக் கொடுமையைக் குறிப்பிடலாம். கள்ளும் சூதும் பரத்தமையும் வேறு சில கொடுமைகள். சமூகம் இரண்டுபட்டதன் இன்னொரு விளைவு துறவு. பிழைப்புக்காக அயல் நிலத்திலிருந்து வந்த ஒருவன் கையில் விலையுயர்ந்த சிலம்பு இருக்க முடியுமென்றால் அவன் கள்வனாகத்தான் இருக்க முடியும். இப்படி அவனை பொற்கொல்லன் குற்றப்படுத்தினான், மன்னன் அவன் உயிரை வாங்கினான். கண்ணுக்கு முன் நடக்கும் தீமையைத் தட்டிக்கேட்க சான்றோர் இல்லை, தெய்வங்கள் இல்லை. அநீதியே ஆளுகை புரிந்த இந்த நகரை இனி எரித்தாக வேண்டும். மணிமேகலைக்கு இனி இல்லற வாழ்வில்லை. இளவரசன் இப்படி ஒருத்தியை துரத்தி கற்பழிக்க முயற்சி செய்யலாம். அரசனையும் மீறி அரசி மணிமேகலையைக் கவர்ந்து அவளைக் கொடுமைக்குள்ளாக்கலாம். வறுமைக் கொடுமை காரணமாக திருட்டு, கொலை முதலிய குற்றங்களைச் செய்தவர் சிறைபட நேர்ந்திருக்கிறது. வறுமைக் கொடுமை நாடெல்லாம் பற்றி எரிகிறது. சங்க காலத்தையடுத்த சமூக வாழ்க்கை இத்தகைய அவலம் நிறைந்தது. வரலாற்றின் வளர்ச்சிக்குத் தனி உடைமை இல்லாமல் முடியாது. அரசதிகாரம் இல்லாமலும் முடியாது. தொழில் வளர்ச்சி வணிக பெருக்கம் நகர நாகரிகம் ஆகியனவும் மனித வரலாற்று வளர்ச்சிக்கு ஆதாரங்கள். இவைதான் வரலாற்றில் ஏற்றத்தாழ்வையும், சமூக முரண்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. வறுமை, கள், சூது, பரத்தமை, திருட்டு, கொலை, கற்பழிப்பு, அநீதி முதலியனவும் இதன் கூறுகள். பரத்தமை, பெண்ணடிமைத்தனம் முதலியனவும் இதன் விளைவுகள். இத்தகைய சிறுமைகளில் பாதிப்புக்குள்ளாகுபவர் சமூகத்தின் கீழ்த்தட்டில் உள்ளவர்கள். மேல்தட்டில் உள்ளவர்கள் ஆட்சியில் உள்ளவர்களோடு நெருக்கமாக இருப்பதோடு பாதுகாப்பாகவும் இருக்க முடியும். வறுமை முதலிய அனைத்துக் கொடுமைகளுக்கும் இவர்கள் காரணம் என்ற போதிலும் ஈகை முதலியன செய்து இவர்கள் வாழ்ந்துவிட முடியும். இவர்களுக்குத்தான் அரசதிகாரம் தேவை. இவர்களின் ஏவலுக்கும் அதிகாரத்திற்கும் இடங்கொடுத்து இவர்களுக்குத் துதிபாடும் ஒரு கூட்டத்தையும் இவர்கள் தயாரித்துக் கொள்வர். இத்தகைய சமூக சீர்கேடுகளுக்கு எதிராகத்தான் வள்ளுவர், இளங்கோ, சாத்தனார் முதலிய சான்றோர்கள் இருந்தனர். இவர்கள் அறம் என்றும் சான்றாண்மை என்றும் எவ்வளவோ பேசினர் என்றாலும் தனியுடைமையை இவர்கள் மாற்ற முடியாது. அரசதிகார கொடுமைக்கு எதிராக இவர்கள் பேசினாலும் அரசதிகாரத்தை இவர்கள் ஒழிக்க முடியாது. இவர்கள் தொடர்ந்து வற்புறுத்திய அறம் என்பது மனித வாழ்வுக்கு மனித மேன்மைக்கு ஓர் ஆதாரம். சங்க இலக்கியத்தின் வழியே நாம் அறிய வரும் தமிழ்ச் சமுதாயத்தில் இன்னொரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. சங்க காலத்திலேயே வடக்கிலிருந்து வந்த ஆரியருக்கு மன்னர் இடங்கொடுத்தனர் என்றாலும் தமிழ்ச் சான்றோர் பலருக்கும் இருந்த மரியாதை இவர்களுக்கு ஏற்படவில்லை. கள், சூது, பரத்தமை முதலியவை மலிந்துவரும் நிலையில் தமிழ்ச் சமூகத்திற்குள் சமணமும் பவுத்தமும் இடம் பெற்றன என்பதில் வியப்பில்லை. முன்னைய தமிழ்ச் சமூக வாழ்வில் இல்லறத்திற்கே முதன்மை இடம் - முற்றான இடம் இப்பொழுது தமிழ்ச் சமூகத்தினுள் துறவிகளுக்கு மரியாதை ஏற்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற போர்களின் விளைவாக தமிழ்ச் சமூகத்தினுள் அமைதிக்குத் தேவை ஏற்பட்டது. புத்தரும் சமணமும் இன்னா செய்யாமை பற்றி வற்புறுத்தினர். வன்முறை கொலை முதலியவற்றை மறுத்தனர். பரத்தமையைக் கடிந்துரைத்தனர். கற்பை மேம்படுத்தினர். மனித வாழ்வுக்குப் பொருள் என்ன என்பது பற்றி இவர்கள் உரத்துப் பேசினர். மனித வாழ்வே பெரும் துன்பம் என்றனர். வாழ்க்கை நிலையில்லாதது என்றனர். செல்வம் மட்டுமல்ல இளமையும் நிலையில்லாதது என்றனர். பிறப்பு வேண்டாம் என்றனர். எவ்வகை ஆசையும் கூடாது என்றனர். புலனடக்கம் தேவை. பிறப்பு அறுவதற்கு தவம் தேவை. இளமையிலேயே துறவு தேவை. புத்தரும் சமணரும் வற்புறுத்திய சில அறங்கள் வள்ளுவ நெறிக்கு உடன்பாடானவை. வள்ளுவர் துறவை முதன்மைப்படுத்தவில்லை. போலித் துறவைக் கடுமையாகச் சாடியவர் வள்ளுவர். இளங்கோ துறவி என்றாலும் அரச அநீதியைச் சாடியவர். சாத்தனாரும் இத்தகையவர் என்ற போதிலும் பிறவியே பெருந்துன்பம். ஆசைகள் முற்றாக அறுபடுவதே பேரின்பம். பெண்ணின்பமே பெருந்தவறு. இவை உண்மையில்லை. இவர்களுக்கு உலகியல் முதன்மையில்லை. இந்த உலகம் என்பது கூட பொய்மை உலகம். மனிதப் பிறவி தவிர வேறு பிறவிகளும் பல உள்ளன. வேறு உலகங்களும் உள்ளன. இவையெல்லாம் இவர்கள் முன்வைத்த மாயைகள். பொய்மைகள் சிக்கலான வரலாற்றுச் சூழலில் சிக்கல் எவை எனத் தெரியாமையால் இவர்களும் இத்தகைய மாயைகளுக்கு இடம் தந்தனர். மனித வரலாற்றில் ஏற்பட்ட இந்த தடுமாற்றமும் தவறும் நெறி பிறழ்வும் கடுமையானவை. புத்தமும் சமணமும் செய்த சில தவறுகள் காரணமாக மனித வரலாற்றில் இன்னொரு பெருந்திருப்பம் ஏற்பட்டது. இந்த இரண்டு சமயங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தவை சைவமும் வைணவமும். இவை பெருந் தெய்வங்கள் புலன்களை ஒறுக்க வேண்டியதில்லை. பெண்ணை ஒதுக்க வேண்டியதில்லை. இல்லறம் தீமையானதில்லை. இறைவனை நம்பி வழிபட்டால் துயரங்கள் முற்றாக ஒழியும். இத்தகைய கொள்கை அறிவிப்போடு கிளம்பிய சைவமும் வைணவமும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன. சமணர்களும் பவுத்தர்களும் முறியடிக்கப்பட்டனர். அரசதிகாரத்தைச் சைவம் கைப்பற்றியது அல்லது அரசதிகாரத்திற்கு நெருக்கமாக சைவம் விளங்கியது. இறைவனை நம்பினால் எல்லாமே இனி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைச் சைவர்கள் முழு அளவில் கொண்டதோடு பெரும்பாலான மக்களையும் நம்ப வைத்தனர். வரலாற்றில் எதுவும் முற்றாக அழிவதில்லை என்பதோடு இன்னொன்றுக்கு இடங்கொடுத்து அதன்மூலம் தான் வாழவே செய்கிறது என்பது ஒரு பேருண்மை. இம்முறையில் தான் சமணம் சைவத்தினுள்ளும் பவுத்தம் வைணவத்தினுள்ளும் தம்மை இழந்து அவற்றின் வழியே வாழ்கிறது என்பதும் வரலாறு. சங்க காலத்திலேயே வடக்கிலிருந்து வந்த ஆரியர் தமிழ் மன்னர்களுக்கு நெருக்கமாகினர். படையெடுப்பில் மன்னர் வெற்றி பெற யாகங்கள் செய்ய வேண்டும் என்றனர். செல்வ பெருக்கம் முழு அளவில் வாழ்நாள், மகப்பேறு முதலியவற்றிற்கும் யாகங்கள் - தேவை என்றனர். படையெடுப்புகள் என்ற முறையில் நகரங்கள் குளங்கள் பயிர் விளைச்சல், ஆகிய பேரழிவுக்குப் பரிகாரம் செய்யும் முறையில் யாகங்கள் பயன்படும் என்றும் அவர்கள் கூறினர். மன்னர்கள் இவற்றையெல்லாம் நம்பியிருக்க வேண்டும். மக்கள் மீதும் மன்னனின் அதிகாரம் செல்லுபடியாக வேண்டும். மன்னன்தான் மக்களின் வாழ்வுக்கும் ஆதாரமாகி வருகிறான். கள்வர்கள் முதலியவர்களை மன்னன் அடக்கி வைக்கிறான். மக்களைப் பொறுத்தவரை மன்னனும் கடவுளுக்கு நிகராகிறான். நாளடைவில் ஆரியர் குறிப்பாகப் பார்ப்பனர் செல்வாக்கு அதிகரிக்கிறது. வடக்கிலிருந்து வந்த ஆரியர் மூலம் தான் வருண முறையும் தமிழகத்தில் நிலைபெறுகிறது. சமூக நிர்வாகத்திற்கு வருணமுறை தேவையாகிவிட்டது. ஆரியரின் வருணமுறை சாதி, கடவுள் நம்பிக்கை முதலியவற்றை மறுக்கும் முறையில் பேசி வந்த பவுத்தர்களும் சமணர்களும் நாளடைவில் செல்வாக்கு இழந்தனர். புத்தர், சமணர் நெறியில் பிறவி அறுவதற்கு மிகக் கடுமையான முறையில் புலனடக்கம் / தவம் செய்வதைக் காட்டிலும் இறைவனை நம்பி கோவில் வழிபாடு சடங்குகள் முதலியவற்றை ஓரளவுக்கேனும் செய்து வந்தால் பிறவித் துயர் ஒழிந்து மேலுலகம் எளிதாகக் கிட்டும் என்பது அந்தணர் அறிவுரைசைவத்திற்கும் இக்கொள்கை உடன்பாடு. அரசதிகாரத்தினுள் உயர்சாதி வேளாளருக்கும் இடம் கிடைத்தது. சமணமும் பவுத்தமும் முன்வைத்த துறவு நெறியை நாளடைவில் சைவரும் ஏற்றனர். சிவனடியார்கள் சிவனுக்கு நிகரானவர்கள். கோவில்கள் பேரளவில் எழுந்தன. புராணக் கதைகள் செல்வாக்குப் பெற்றன. மன்னர் இல்லாமல் தெய்வங்கள் இல்லாமல் வருணம், சாதி, சடங்குகள் இல்லாமல் மனிதனுக்கு உய்வில்லை என்ற கருத்தை இவர்கள் அனைவரும் அவரவர் போக்கில் வற்புறுத்தி மக்களை நம்ப வைத்ததன் விளைவாக மனித வாழ்க்கையை மாயைகளும் பிரம்மைகளும் மறைத்தன. பக்தியே பேரின்பம் ஆயிற்று. இயற்கையினுள்ளும் எல்லா அருஞ் செயல்களினுள்ளும் இறைவனே இயங்குகிறான். இறைவன் இல்லாமல் மனிதன் இல்லை. மனித வாழ்க்கை என்பது மனிதனைப் பொருட்படுத்தாத வாழ்க்கை ஆயிற்று. தமிழ் வரலாற்றில் இப்படி கழிந்தவை பல நூற்றாண்டுகள். இராசராச சோழன் முதற் கொண்டு மன்னர்கள் பலரும் பல போர்களை நடத்தினர். நாடுகள் பலவற்றை வெற்றி கொண்டனர். கோவில்களை எழுப்பினர். கட்டிடக்கலையும், சிற்பகலையும், இசைக்கலையும் தம் உச்சங்களைத் தொட்டன. கல்லணை எழுந்தது. நூற்றுக்கணக்கான குளங்கள் அமைக்கப்பட்டன. நீர்பாசனத் திட்டங்கள் பேரளவில் செயல்பட்டன. மக்களின் பேருழைப்பில்லாமல் இவை நடைபெறவில்லை. வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் அடிமைகளாக கொண்டு வரப்பட்டு மாபெரும் ஆக்க வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தகைய மாபெரும் செயல்கள் மக்களிடமிருந்து பேரழிவிலான சுரண்டல் இல்லாமல் செயல்பட முடியாது. ஒடுக்குமுறை இல்லாமல் இவை இயல்பாக நடைபெறாது. வரலாற்றில் மாபெரும் வளர்ச்சி என்ற முறையில் இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே காலத்தில் சமூக அடித்தளத்தில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் படும் துயரங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கக் கூடும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள் முதலியவற்றில் மக்களின் வேதனைகள், ஓலங்கள் ஓயாமல் இடம் பெறுவதை இன்று நாம் கேட்க முடியும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைத் தேடி ஓயாமல் அலைந்து கொண்டிருந்தனர். இறைவனை நேரடியாக அவர்கள் கண்டார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை. இறைவனைக் காண வேண்டும் என்று தவித்த நேரங்கள் அதிகம். இதனை விட வாழ்வில் ஒவ்வொரு நாளும் அவர்கள் அனுபவித்த வேதனைகள் பற்றி கூடுதலாகவே வருந்தி உரைக்கின்றார். கடவுளோடு ஐக்கியமானால் துயரங்கள் முற்றாக ஒழியும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். அவர்களைப் பற்றி புராணக் கதைகள் எழுதியவர்கள் உயிர் வாழ்வின் போது அல்லது அவர்கள் இறந்த பின்னர் கடவுளோடு ஐக்கியப்பட்டனர் என்று கதை புனைந்தனர். இறை உணர்வோடு வானம், பூமி, உயிர்கள் அனைத்தையும் அவர்கள் கண்டு மகிழ்ந்ததை அற்புதமாகப் பாடியிருக்கின்றனர். இயற்கை முதலியவற்றின் ஊடே இறைவனது அருளும் பேரொளியும் துலங்குவதை அவர்கள் வியந்து பாடினர். பிரபஞ்சம், இயற்கை, உயிர்கள் ஆகிய அனைத்தினுள்ளும் இயங்கும் பேரியக்கம் உண்மை என்பதில் ஐயமில்லை. இந்தப் பேரியக்கத்திற்கு அப்பால் தனி ஒரு பேரியக்கம் உண்டு என்பதோ இயற்கையாகிய பேரியக்கத்தை இன்னொரு பேரியக்கம் அப்பாலிருந்து இயக்குகிறது என்று நம்புவதிலோ உண்மையில்லை. ஆனால் அடியவர்கள் என்பவர்கள் இப்படி ஒரு மாயையைத் தமக்குள் படைத்துக் கொண்டு வியப்பிலும் வேதனையிலும் ஆழ்ந்திருந்தனர். இறைவன் பெயரில் கோவில்கள், விக்கிரகங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், சடங்குகள், புராணங்கள், யாத்திரைகள் என்பனவற்றிலெல்லாம் நம்பிக்கை வைத்து மக்கள் வாழ்ந்தனர். இதற்காக ஏராளமான பொருள் காலம் முதலியவற்றைச் செலவிட்டனர். இவ்வாறு செய்வதில் இருக்கும் மாய பேரின்பத்தில் திளைத்தனர். இவற்றையெல்லாம் ஐயுற்று அறிவியல் ஆய்வில் அவர்கள் ஈடுபடவில்லை. பூதவாதிகள் முதலியவர்கள் கடவுள் முதலிய மாயைகளை ஓயாமல் மறுத்துரைத்ததை இவர்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறெல்லாம் மாயைக்குள் இவர்கள் வாழ்ந்தது, அரசதிகாரத்தின் பெருக்கத்திற்கும் அந்தணர் முதலிய மதவாதிகளின் வளர்ச்சிக்கும் பேராதரவாக இருந்தது. ஓயாமல் உழைப்பில் ஈடுபட்ட இவர்கள் உழைப்பின் பயனைப் பெருமளவில் அரசுக்கும் மதவாதிகளுக்கும் ஓயாமல் கொடுத்தனர். இவ்வாறுதான் அன்றைய மக்களின் கலாச்சார வாழ்வு அமைந்திருந்தது. வரலாற்று இயக்கம் என்பது இப்படி ஒருபடித்தாகவே, ஒரு சார்பாகவே இயங்கியது என்றும் சொல்ல முடியவில்லை. மதவாதிகளின் மாயைகளிலிருந்து பெருமளவு விடுபட்ட சித்தர்கள் பலரும் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்தனர். மருத்துவ பணி செய்தனர். சாதி, மதம், சடங்குகள், பார்ப்பனர் முதலியவர்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றனர். தெய்வங்களுக்கு உருவமில்லை என்றனர். கடவுளை முற்றாக மறுக்கும் நாத்திகரும் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்தனர். சில சமயம் அரசதிகாரத்திற்கு எதிரான கலவரங்களையும் மக்கள் செய்தனர். வரிக் கொடுமை தாளாத நிலையில் கோவில்களை இடித்தனர். கோவில் கோபுரங்களிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். அரசின் முற்றான அதிகாரத்திற்கு முழு அளவில் உட்படாமல் கிராம சபைகள் காலந்தோறும் செயல்பட்டன. கிராம சபைகளில் சில சமயம் பிராமணரும் தண்டிக்கப்பட்டனர். கிராம சபைகள் ஓரளவுக்கேனும் மக்கள் குடியரசுகளாக மக்கள் நீதிமன்றங்களாகவும் செயல்பட்டன. தமிழக வரலாற்றில் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இடங்கை வலங்கையினருக்கு இடையில் ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. அரசதிகாரத்தோடு ஒத்துழைத்தவர்கள் வலங்கை சாதியினர். வலங்கை சாதியினரின் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் இடங்கை சாதியினர். கலைஞர்கள், கவிஞர்கள், உழைப்பாளிகள் இல்லாமல் எந்த ஒரு சமூகமும் வாழவில்லை. புராணங்கள், சடங்குகள் இல்லாமல் எந்தச் சமூகமும் வாழ்ந்ததாகவும் வரலாறு இல்லை. கலாச்சாரம் என்பது இவற்றிலிருந்து எல்லாம் தனித்ததான இயக்கம் கொண்டதாகவுமில்லை. மாயைகளோடும் மாயைகளுக்கு இடையிலும் மக்கள் வாழ்ந்தனர். உழைப்பும் உற்பத்தியும் பகிர்வும் இல்லாமல் சமூக வாழ்க்கை சாத்தியமும் இல்லை . ஆதிக்கமும் சுரண்டலும் நடைபெறுகிற அதே களத்தில் இவற்றுக்கிடையிலும் இவற்றோடும் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருந்தனர். அரசனுக்காகவோ மதவாதிகளுக்காகவோ கோவில் கட்டும் பொழுதும் சிற்பங்கள் செதுக்கும் பொழுதும் மக்கள் தனக்கான அறிவுத் திறனையும் காலத் திறனையும் தமக்குள் வளர்த்துக் கொண்ட போது மனிதத் தன்மையிலும் மேம்பட்டனர். வரலாற்றின் வளர்ச்சியில் தமக்கும் பங்கு இல்லாமல் இல்லை. அரசதிகாரம் முதலியவற்றுக்காக மக்கள் தம்மை எத்தனையோ வகைகளில் இழந்த நிலையிலும் இவர்களின் பங்களிப்பில்லாமல் எதுவும் நடைபெற்றதில்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கிறபோது தஞ்சை பெரிய கோவில், கல்லணை, நெடும் வயல்கள், மாபெரும் குளங்கள், அற்புதமான பயிர் வகைகள், ஆடுமாடு வளர்ப்பு, கால வளர்ச்சி முதலிய நூறு வகைகளில் மக்கள் அற்புத சாதனைகளை, ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளதையறிகிறோம். இவையனைத்தும் நமக்கு அவர்கள் விட்டுச் சென்றுள்ள மாபெரும் செல்வங்கள். இவை இல்லாமல் இன்றைக்கும் நமக்கும் வாழ்க்கையில்லை. வளர்ச்சி இல்லை. இன்றைக்கும் நமக்கான வரலாற்றையும் வாழ்வையும் இவர்கள்தான் விட்டுச் சென்றுள்ளனர். 14, 15ஆம் நூற்றாண்டுகளை உள்ளடக்கியதாக இன்று வரையிலும் செயல்பட்டுவரும் தமிழக வரலாற்றுச் சூழல் நம் காலத்துக்கும் நாம் இன்றும் அனுபவிக்கும் பல்வேறு சிக்கல்களுக்கும் நெருக்கமானதாகவும் காரணமாகவும் கூட அமைந்திருக்கிறது. தமிழ் நிலம் ஒன்று நாம் இன்று மனத்தில் வரைந்துள்ள நிலப்பரப்பின் மீது தொடர்ச்சியான படையெடுப்புகள் தாக்குதல்கள் ஊடுறுவல்கள் நேர்ந்ததன் விளைவாக தமிழ் நிலம் தன் முன்னைய அடையாளங்களிலிருந்தும் பெரிதும் வேறுபட்டதான புதிய கலப்படமான அடையாளங்களைப் பெற்றது. பாண்டியர்களுக் கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக வடக்கிலிருந்து மாலிக்காபூர் படையெடுத்து வந்து தமிழகத்து கோவில்களில் ஏராளமாக குவிந்திருந்த செல்வங்களைக் கவர்ந்து சென்றான். விசய நகரத்து மன்னன் சார்பில் தமிழகத்திற்குள் நுழைந்த நாயக்கர் மன்னர்கள் மதுரையில் நிரந்தரமாக தங்கியதோடு அவர்களின் துணைப் படையினர் என்று சொல்லத்தக்க பாளையக்காரர்கள் தென்பகுதியில் படைவீடுகள் அமைத்து நிலங்கள், நிர்வாகம் முதலியவற்றை வசப்படுத்திக் கொண்டனர். ஆந்திராவிலிருந்து பல்வகை ஆற்றலோடு தெலுங்கு மொழி பேசும் கலைஞர்களும் மற்றவர்களும் தமிழ் நிலங்களில் பரவலாகக் குடியேறினர். அடுத்த நூற்றாண்டுகளில் மகாராட்டிரத்திலிருந்து படையெடுப்புகள் நேர்ந்தன. தமிழகத்தில் இசுலாமியர் நிரந்தரமாக ஆளுகையில் அமர்ந்தனர். பின்னர் மேற்கிலிருந்து போர்ச்சுகீசியர் பிரெஞ்சுக்காரர் அதன்பிறகு ஆங்கிலேயர் தமிழகத்திற்குள் நுழைந்து நாளடைவில் தமிழ் மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கினர். தமிழ் நிலம் மாபெரும் சீரழிவுகளுக்கு உள்ளாயிற்று. தமிழ் நாகரிகம் என்பது முற்றிலும் அடையாளம் இழப்பதற்கான சூழல் ஏற்பட்டது. நாயக்கர் ஆட்சியின் போது முன்னைய சமூகத்தில் நிலக்கிழாராகவும் ஊர்த்தலைவர்களாகவும் ஆற்றலோடு விளங்கிய மள்ளர்கள் அவர்கள் வாழ்ந்த நிலங்களிலிருந்து வெளியேறி சமூகத்தரத்தில் தாழ்வுக்குள்ளாகி பள்ளர்கள் ஆகினர். புதிய தொழில்கள், புதிய கலைகள், புதிய வாழ்வியல் முறை தமிழ் மக்களுக்குப் பழக்கமாயிற்று. தெலுங்கு இனத்தவர்களால் தமிழகச் செல்வங்கள் - தமிழ் நிலத்தை விட்டு வெளியேறவில்லை. ஆனால் போர்ச்சுக்கீசியர் பிரெஞ்சுக்காரர் ஆங்கிலேயரின் ஆளுகையிலும் ஆதிக்கத்திலும் தமிழ் மக்கள் மாபெரும் சுரண்டலுக்கும் சீரழிவுகளுக்கும் உள்ளாயினர். கடுமையான பஞ்சங்களின் விளைவாக தமிழகத்திலிருந்து பத்தாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் பிழைப்புக்காக இலங்கை மலேசியா முதலிய நாடுகளுக்குச் சென்றனர். அந்நியர்களின் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக போராடிய மன்னர்களும் மக்களும் மிகக் கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டனர் அல்லது ஒழிக்கப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் காலங்காலமாக நிலவிய கிராம சபைகள் பெருமளவில் தம் ஆற்றலை இழந்தன. நில உரிமையின் மீது முன்னர் நிலவிய பொது உரிமை முறை தகர்க்கப்பட்டு இரயத்துவாரி என்னும் பெயர் முறையில் நிலத்தில் தனி உரிமை என்னும் சொத்துரிமை புகுத்தப்பட்டது. அந்நியர் ஆதிக்கத்துக்கு எதிரான கலவரங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. தமிழகத்துச் செல்வம் ஐரோப்பிய தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாயிற்று. தமிழகம் தன் சுய ஆளுமையை இழந்தது. ஆங்கிலேயர் தன் இராணுவ வலிமையினாலும் இந்திய மன்னர்கள், மக்களுக்கிடையில் நிலவிய முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவாகவும் இந்தியாவைச் சுரண்டி கொள்ளையடித்த பின்னர் இந்தியாவில் பரவலாக தன் ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டனர். தம் ஆதிக்கத் தேவைகளக்கு ஒத்த முறையிலும் இந்திய மக்களை நிர்வாகம் செய்யும் முறையிலும் மாற்றங்கள் பலவற்றைச் செய்தனர். ஆங்கிலக் கல்வி இரயில்வே கட்டமைப்பு அஞ்சல் முறை தொழில் முறை ஆகியவற்றைப் புகுத்தினர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான 1857க் கலவரங்களுக்குப் பிறகு புதிய நிர்வாக முறைகள் புகுத்தப்பட்டன. மேற்கத்திய கல்வி நாகரிக ஊடுறுவல் காரணமாக இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்திய மக்கள் தமக்கும் நெடுங்கால வரலாறு ஆட்சி முறை, மருத்துவ முறை, தொழில் முறை, மேன்மையான நாகரிகம் உண்டு என்பதை அறியத் தொடங்கினர். தம்மைத்தாமே நிர்வாகம் செய்து கொள்ள முடியுமென்று நம்பினர். விடுதலைப் போராட்டம் என்னும் முறையில் கூடியவரை தமக்குள் ஒன்றுபட்டனர். தமிழக மக்கள் மத்தியிலும் இத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழ் மக்கள், தம் நெடுங்கால வரலாறு, மொழியின் தனித்தன்மை, இலக்கிய மேன்மை, பண்பாட்டு வளம், அறிவுத்திறம் முதலிய வற்றை அறிந்து கொண்டனர். ஆங்கிலேயருக்கு எதிரான விடு தலைப் போராட்டத்தில் தாமும் இணைந்து கொண்டனர். தமக்கான தனி ஆட்சி பற்றியும் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர். இந்தியா விடுதலை பெற்ற நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழ் கலாச்சார பாதுகாப்பு என்பது கருத்தரங்கின் பொது தலைப்பு. இந்தத் தலைப்பின் கீழ் சங்க காலம் முதற் கொண்டு 1950 வரையிலான தமிழ் கலாச்சார வரலாற்றில் ஏற்ற இறக்கங்கள் பிற கலாச்சாரங்களோடு தமிழ் கலாச்சாரம் கொண்ட உறவு, இவற்றுக்கிடையில் மோதல், கலாச்சாரம் பற்றிய குறைந்த அளவுக்கான ஒரு வரையறை ஆகியவற்றை உள்ளடக்கி அந்நியர்களிடமிருந்து பெற்றதாகச் சொல்லப்படும் இந்திய விடுதலை வரையிலான வரலாறு குறித்து நான் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஒரு பாட நூல் கட்டுரை போல என் கட்டுரை அமைவதற்கில்லை. அன்றியும் கலாச்சாரம் என்பதை சாதிக் கலாச்சாரம் மத அடிப்படையிலான கலாச்சாரம், தொழிற்சங்க கலாச்சாரம், கிராமம் அல்லது நகரம் சார்ந்த கலாச்சாரம், கல்வி சார்ந்த கலாச்சாரம், பெண்கள் சார்ந்த கலாச்சாரம் - இப்படி வகைபிரித்து விவரங்கள் தொகுத்து ஒரு கட்டுரை எழுதவும் இப்பொழுதைக்கு தேவையில்லை. எவ்வகை கலாச்சாரமும் தனித்த இயக்கம் உடையதாகவும் இருப்பதற்கில்லை. குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அரசியல், பொருளியல் முதலியவற்றின் தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டதாகத்தான் கலாச்சாரத்தின் உள்ளியக்கம் இருக்க முடியும். காலங்கள் தோறும் கலாச்சாரம் என்ற பாரிய களத்தினுள் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. இப்படி பன்முக நோக்கில் ஆய்வுக்கு உள்ளாக்க கூடியதாக கலாச்சாரம் அமையும் நிலையில் பொதுவாக பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியதான கலாச்சாரம் - குறிப்பாக தமிழ்க் கலாச்சாரம் என்பதன் இன்றைய சமுதாய வரலாற்றுச் சூழலுக்கு ஒத்ததும் தேவையானதுமான எத்தகைய கலாச்சாரம் இருந்தாக வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவான கருத்தை முன்வைக்கும் முறையில் இக்கட்டுரையைத் தொடர்கிறேன். கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பதன் அடிப்படையாக என்ன இருக்க முடியும். பல்வேறு சமூக பிரிவுகளாக, பல்வேறு கலாச்சார கூறுகளை உள்ளடக்கியதாக அமைகிற ஒரு சமுதாயத்தில் பொருளியல் வகைப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கிற காலம் முழுவதிலும் பல்வேறு சகப் பிரிவுகளுக்கிடையில் முரண்பாடுகளும் மோதல்களும் கலாச்சார சீர்குலைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. சாதி, மதம், உணவு, உடை, இருப்பிடம், வேலைப் பிரிவினை முதலியவற்றால் வேறுபடும் அல்லது முரண்படும் சமூகப் பிரிவுகளுக்கிடையில் மோதல் முதலியவை அறவே இருக்கக் கூடாது என்பது நம் விருப்பம் என்றால் இத்தகைய வேறுபாடுகளுக்கு அடியில் அமைவதாகிய பொருளியல் வகைப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு அறவே இடம் இருக்க முடியாது. நெடுங்கால வரலாற்றில் பல்வேறு வகைப்பட்ட சூழல்களைக் கடந்து இருபதாம் நூற்றாண்டுக்குள் வரும்பொழுது மனிதர்களுக்கு மத்தியில் அனைவரும் சமத்துவமாக சமதர்மம் என்ற முறையில் வாழ முடியும், வாழ்ந்ததாக வேண்டும் என்ற அற்புதமான புரிதலுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். வரலாற்றின் மையமாக இருப்பவன் மனிதன். மன்னர்கள், மத பீடங்கள், சாதிய முறை நிலக்கிழாரியம், முதலாளியம் ஆகியவற்றைக் கடந்து மனிதர்கள் தமக்கிடையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாமல் வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு நம் முன் திறந்து வைத்துள்ளது. வரலாற்றின் பேரனுபவம் என்ற முறையில் சமதர்மச் சமுதாயம் என்பதை நாம் கண்ட பிறகும் அனைத்து மக்களுக்குமான வளமான ஒரு சமூகத்தைப் படைத்துக் கொள்ளும் வாய்ப்புகளை முற்றாக தடுக்கும் முறையில் உலகளவில் பல்வேறு வகையான ஆதிக்கங்கள் இன்றும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவற்றிற்கு இடங்கொடுத்து இவர்களோடு ஒத்துழைப்பவர்களின் தன்னல வெறித்தனங்களுக்கு நாம் பலியாவோமென்றால், இன்று வரையிலான மனித வரலாற்று வளர்ச்சியை அழித்துக் கொள்வதோடு மீண்டும் வரலாற்றுக்கு முற்பட்ட காட்டுமிராண்டி காலத்திற்கு நாம் போய்ச் சேர வேண்டி வரும் அல்லது இயற்கை முதலியவற்றின் பேரழிவோடு மனித வரலாற்றின் இறுதிக்கு நாம் போய்ச் சேர வேண்டியிருக்கும். ஆகவே நெடுங்கால வரலாற்றின் பேரானுபவங்களை உள்வாங்கிக் கொண்டவர்களாக நாம் எவ்வகை சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் இடந்தராத கலாச்சார வாழ்வைக் கண்டறிந்து கடைப்பிடித்தாக வேண்டும். சாதி மத வேற்றுமைக்கு இடந்தராமல் நாம் வாழ முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நமக்குத் தேவை இல்லை. உழைப்பும் பகிர்வும் உன்னதமான வாழ்வுக்கு இடம் தரும். இயற்கையை, உயிரினங்களை முழு அளவில் பாதுகாத்தால் அன்றி மனிதனும் பத்திரமாக வாழ்வதற்கில்லை. மனிதன் இன்று உலகளவிலான வளமான வரலாற்றை தனக்குள் அனுபவிக்க முடியும். பிரபஞ்ச அளவிலான பேரியக்கத்தைத் தனக்குள்ளும் உணர முடியும். தன்னலத்தை முழு அளவில் துறந்த நிலையில் மனித வாழ்வு பேரின்ப வாழ்வாக அமைய முடியும். வள்ளுவர், புத்தர், இயேசு முதலியவர்கள் காண விரும்பிய பெருவாழ்வு மனிதன் கைகளுக்கு வசப்படும். கலாச்சாரம் என்பதன் முழு நிறைவை மனிதன் தனக்குள் காண முடியும். நம் கல்விக் கொள்கையின் அகமும் புறமும் பகுதி 1 இந்தியாவிலும் தமிழகத்திலும் பல்வேறு தரப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி பற்றி 50 ஆண்டுகளுக்கு மேலாக கோத்தாரி ஆணைக்குழு தொடங்கி பல்வேறு ஆணைக் குழுக்களும் நீண்ட நெடிய விவாதங்களும் பல்வேறு மட்டங்களில் ஓயாமல் நடைபெற்று வந்திருக்கின்றன. கல்வியாளர்கள் இத்தகைய சிறந்த திட்டத்தை முன்வைத்த போதிலும் ஆட்சியாளர்கள் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களின் ஒத்துழைப்புடன் தமக்கு வசதியான திட்டங்களையே அரைகுறையாகச் செயல்படுத்தி வருகின்றனர். கல்வித்துறைக்குச் செலவிடும் தொகை என்பது உண்மையில் தேசத்தின் சமூகத்தின் வளர்ச்சிக்கான மூலதனம் என்பது எல்லோருக் கும் தெரிந்த உண்மை . இங்கு அரசியல்வாதிகளின் முதலாளிய சார்பு காரணமாகச் செயல்படுவதில்லை. மேற்கத்திய சமூகங்களின் கல்வி வளர்ச்சிக்கு, அந்த அரசுகள் தரும் முக்கியத்துவம் இங்கு முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறது. மேல்நிலைக் கல்வி பெருமளவில் ஊக்குவிக்கப்படுகிறதே ஒழிய தரமான மேல்நிலைக் கல்விக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய தொடக்க நிலைக்கல்வி, இடைநிலைக்கல்வி முதலியவை அரசின் கவனத்திற்கு உரியதாக இல்லை. இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு முதன்மை தருவதாகப் பேசிக் கொள்ளும் அரசு வேளாண்மைத் துறையைப் புறக்கணிப்பதைப் போலவே கல்வித்துறையையும் புறக்கணிப்பதோடு கல்வி வளர்ச்சிக்கான தன் தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, கல்வியைத் தனியார் மயப்படுத்தி வருகிறது. தனியார் எனப்படும் முதலாளிகளைப் பொறுத்தவரை கல்வித் துறையை நிர்வாகம் செய்யும் அளவுக்குக் குறைந்த அளவுக்கேனும் கல்வியாளர்களாக இல்லை. இந்தியாவுக்குத் தமிழகத்திற்குத் தேவையான கல்வி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய சிந்தனை இவர்களுக்கு இல்லை. பெரும்பாலான முதலாளிகள் சமூக வளர்ச்சிக்கான கல்வி வளர்ச்சியில் அக்கறையற்று இருப்பதோடு கல்வி என்பதை ஒரு தொழில் என்ற முறையிலும் தொழில் என்பதைக் காட்டிலும் இலாப நோக்கிலான வணிகம் என்ற முறையிலும் செயல்படுத்தி வருகின்றனர். இவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியர்கள் தன்மானம் அற்றவர்களாகத் தான் இருந்தாக வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து கல்வி வளர்ச்சி, கட்டடம் என்ற முறையில் அன்பளிப்பு என்னும் பெயரில் பெறும் தொகை முழுவதும் இறுதியில் இவர்களுக்குத் தனிச்சொத்தாகவே போய்ச் சேருகிறது. இவர்களில் எவரும் வசூலிக்கும் தொகைக்குக் கணக்கு வைத்துக் கொண்டு அரசுக்கு வருமான வரி செலுத்தும் நியாயவான்களாக இல்லை. இவர்களோடு முழு அளவில் ஒத்துழைக்கும் தணிக்கையாளருக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாணவர் மீதோ, மக்கள் மீதோ, தேசத்தின் மீதோ பற்று இல்லை. கல்வி என்னும் பெயரில் நடைபெறுவது வன்முறை சார்ந்த ஒரு திணிப்பே அன்றி மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியாக அமையவில்லை. ஆசிரியர்கள் தமக்கெனத் தொழிற்சங்கங்கள் வைத்திருக்கின்றார்கள். தொழிற்சங்க நிர்வாகிகளைப் பொறுத்தவரை, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களில் அக்கறையில்லாதவர்களாக இருப்பதோடு அரசுத்துறை சார்ந்த கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்து ஆசிரியப் பெருமக்களின் பணிவாய்ப்பு, பணி உயர்வு முதலியவற்றைப் பெற்றுத் தருவதற்கான தரகர்களாக செயல் படுகின்றனர். அரசு முன்வைக்கும் கல்வித் திட்டம் எத்தகையதாக இருந்த போதிலும் அவை பற்றிய ஆய்வையோ, சமூக நலத்திற்கு எதிரான கல்வித் திட்டமென அறிந்த நிலையிலும் ஆசிரிய சமூகம் என்ற முறையில் தம் கருத்தை முன் வைத்து அரசோடு போராடும் சிந்தனையோ துணிவோ அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். இப்படி இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கல்வி வளர்ச்சி தொடர்பாக எத்தனையோ குறைபாடுகளைப் பலகாலமாக சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் தனிமனிதர்களும் முன் வைக்கிறார்கள். சமச்சீர்கல்வி, தமிழகச் சூழலில் எம்முறையில் எல்லாம் அணுகப்பட்டது என்பது பற்றியது நம் அண்மைக்கால அனுபவம். இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஆரம்ப இலவசக் கல்வி தொடர்பாக முன்வைத்த வாக்குறுதிகள் நெடுங்காலம் நிறைவேற்றப்படவில்லை. மிக அண்மைக்காலத்தில்தான் 14 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்விக்கான உரிமை என்பது உறுதிபடுத்தப்பட்டு, அதையும் குறைந்த அளவுக்கே அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை சட்டப்படியான ஊதியத்திற்கோ, ஊதிய உயர்வுக்கோ உள்ள வாய்ப்பு, தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் பெரும்பகுதி அடைக்கப்படுவதில்லை. தனியார் பள்ளி, நிருவாகத்தின் கருணையோடு தரும் ஊதியத்திற்காகவே அவர்களின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு எவ்வகையான சுதந்திர உணர்வுமின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் கல்வித்துறை கண்டு கொள்வதே இல்லை. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கல்விக் கட்டணம் என்ற முறையில் அன்பளிப்புத் தொகையோடு சேர்த்து வசூலிக்கப்படும் தொகை குறித்து அரசால் எத்தகைய கட்டுப்பாட்டையும் இதுவரை செயல்படுத்த இயலவில்லை. தமிழகம் முழுவதும் பெற்றோர் கடுமையாகப் போராடியதற்கும் பயனில்லை. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டுவதை ஒரு வேடிக்கை போலவே தனியார் எடுத்துக் கொள்கின்றனர். தன் ஆணையைச் செயல்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்பது உண்மையில்லை. முதலாளிமார்களோடு அரசு முற்றாக ஒத்துழைக்கிறது என்பதைத் தவிர வேறு சொல்வதற்கில்லை. காமராசின் கல்வித்திட்டம் எக்காலத்திலும் தமிழக மக்களின் நன்றிக்குரியது. ஆனால் தமிழகத்தில் இன்று தரப்படும் தொடக்க நிலைக் கல்வியோ, இடைநிலைக் கல்வியோ பாடத் திட்ட அளவில் தரமாக இருந்த போதிலும் செயல்முறையில் தரமற்றதாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்குத் தரப்படும் ஊதியத்திற்கு ஒத்த முறையில் ஆசிரிய பெருமக்களின் உழைப்பு பாராட்டும் முறையில் இல்லை. கை நிறைய காசு வந்தவுடன் ஆசிரியரின் பண்பாட்டுத்தரம் எப்படியோ தாழ்ந்து விடுகிறது. நம் சமூக நிலவரங்களையே இதற்கு காரணமாகச் சொல்ல முடியும் என்ற போதிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைப் புறக்கணிக்கிற ஆசிரியர்களின் பொறுப்பின்மையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தேசத்தின் வாழ்வுக்கான விதை வித்துகளைப் போன்ற நம் மாணவச் செல்வங்களை நாசப்படுத்துவதை நம்மால் ஏற்க முடியாது. காமராசு, பெரியார் என்று நாம் ஓயாமல் பேசுகிறோம். அறிஞர் அண்ணா பற்றியும் பெருமை கொள்கிறோம். பகுத்தறிவு, பண்பாடு, தன்மானம் என்றெல்லாம் ஓயாமல் எடுத்துரைக்கிறோம். எல்லாமே ‘விழலுக்கு இறைத்த நீராவது’ பற்றி நாம் கவலைப்பட நேர்ந்திருக்கிறது. கல்வித்தரம் பெரும்பகுதி குறைந்துவிட்டது என்று நாம் கவலைப்படும் அதே சமயம் தமிழ்க் கல்வியின் சீரழிவு குறித்து நமக்குள் ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நெடுங்காலத் தமிழ் வரலாறு இலக்கியம் பண்பாட்டு மேன்மை என்றெல்லாம் பெருமை பேசி, வளர்ந்தவர்கள் நாம். ஆனால் இன்றைய சூழலில் ஆங்கிலத்திற்கே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி தமிழ் ஓரத்திற்கு ஒதுக்கப்படுவது பற்றி நமக்கு ஏற்படும் வேதனைக்கு அளவேயில்லை. சங்கத்தமிழ் சான்றோர்களும் வள்ளுவரும் இளங்கோவும் கம்பரும் சேக்கிழாரும் வாழ்ந்த நாடு என்ற பெருமையை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். அரசு புறக்கணித்தாலும் தமிழாசிரிய பெருமக்களால் தமிழைக் காப்பாற்றி வைத்திருக்க முடியும். ஒட்டுமொத்தமான சமூக சீர்கேடுகளுக்கு ஆடம்பரம், ஆதிக்கம், பணவெறி, நுகர்வு வெறி, தன்னலம் முதலியவற்றுக்குத் தாமும் இடந்தந்து தமிழை, தமிழ் வாழ்வை, தமிழ் வரலாற்றை அறவே ஒழிக்கிற நெருக்கடிக்கு தமிழாசிரியர்களும் இடந்தருகின்றனர். தமிழியல் ஆய்வுத் துறையைப் பொறுத்தவரை நாம் மரியாதையோடு சொல்வதற்கில்லை. தமிழ் ஆய்வுகள் என்ற பெயரில் நடைபெறும் 100க்கு 95 விழுக்காட்டு ஆய்வுகள் சத்தான ஆய்வுகளாக இல்லை. தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் இவை ஆதாரமாக இல்லை. தமிழ் ஆய்வாளர்களில் பெரும்பகுதியினருக்கு வரலாற்று பின்புலம் பற்றிய அறிவோ, நவீன கால இலக்கியவியல் ஆய்வுகளைப் பற்றிய அறிவோ, திறனாய்வுணர்வோ அறவே இல்லை. இவர்களை வைத்து எந்த மொழியையும் சமூகத்தையும் காப்பாற்ற முடியாது. தமிழ்ச்சமூகத்தை அழிக்கும் புல்லுருவிகளென இவர்களைச் சொல்வதில் தவறில்லை. தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த ஆய்வுணர்வு உள்ள எவரும் தமிழினத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் துணிவுள்ளவர்களாக மாறியாக வேண்டும். தமிழகச் சூழலில் நடைபெறும் அரசின் அக்கிரமம் எதையும் இவர்களில் எவரும் தட்டிக் கேட்பவராக இல்லை. செம்மொழி என்ற வாய்ப்பைக் கூட இவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்றே தோன்றுகிறது. செம்மொழியைப் புறக்கணிக்கும் அரசோடு போராடும் துணிவு இவர்களுக்கில்லை. பகுதி - 2 இந்திய தமிழகச் சூழலில் கல்வித்துறையின் அவலங்கள் குறித்து மேலும் விரிவாகப் பேசுவதற்கு விவரங்கள் உண்டு எனினும், இது பற்றிய விவரங்களை நாம் பட்டியலிட்டும் பயனில்லை. இத்தகைய நிலவரங்களுக்கு என்னதான் காரணம் இருக்க முடியும் என்பதை முதன்மைப்படுத்தி நாம் சிலவற்றைச் சொல்ல முடியும். இத்தகைய அவலமான நிலவங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள் நம் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கல்வித்துறை அரசு அலுவலர்களும் என்பதைத்தான் நாம் சொல்லியாக வேண்டும். இவர்கள் இரங்கத்தக்கவர்கள். ஒரு மோசமான சூழலுக்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள். இந்தச் சூழலுக்குள் எப்படி அகப்பட்டுக் கொண்டோம் என்பது பற்றிக் கூட அறியாதவர்கள் இயேசு இறைவனிடம் மன்றாடியதைப் போலவே நாமும் ஒன்றைச் சொல்ல முடியும். ‘தேவனே இவர்கள் தாம் செய்யும் பிழை இன்னதென அறியாதவர்கள்’ இப்படிச் சொன்ன இயேசு மேலும் ‘இவர்கள் பிழையை மன்னியும்’ என்று இறைவனைக் கேட்டுக் கொண்டது போல நம்மால் முடியாது. தாம் செய்யும் பிழை இன்னதென இவர்கள் அறிந்திருக்க வேண்டும். இவர்கள் படிப்பாளிகள். இந்தியாவின் வரலறும் பொருளியலும் இவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அரசு என்ன நோக்கத்தோடு முதலாளிகளை, அந்நிய நிறுவனங்களை ஆதரிக்கிறது என்பது பற்றி இவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. தம் வாழ்வின் சீர்கேடுகள் அனைத்தும் அரசின் பொருளியல் முதலிய நோக்கங்களிலிருந்துதான் பிறக்கின்றன என்பது பற்றி இவர்கள் அறிந்திருக்க வேண்டும். தம் வாழ்வின் பண்பாட்டு சீர்குலைவுகளுக்கு இவர்கள் உடன்பட்டிருக்கக் கூடாது. தேசத்தின் நல்வாழ்வோடு தங்களுக்கு இருக்க வேண்டிய இணக்கத்தை, பிணைப்பை யார் துண்டித்தார்கள் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏதுமறியாத அப்பாவிகளைப் போல, கிடைத்த வாழ்வியல் வசதிகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளிலேயே தொடர்ந்து கவனம் வைத்துத் தம் மாணவர்கள் மக்களின் நல்வாழ்விற்கு, நாசத்திற்குத் தாமே காரணமாக இருக்க முடியாது எனத் தீர்மானித்திருக்க வேண்டும். அரசின் வெற்று அதிகாரத்திற்கும் முதலாளிகளின் பேராசைக்கும் இடம் கொடுத்து இவர்கள் தம் தன்மானத்தை இழந்திருக்கக் கூடாது. இது பற்றிச் சில விளக்கங்களை நாம் காண முடியும். இங்கிலாந்தில் இருபதாம் நூற்றாண்டில் புகழ்பட வாழ்ந்த தத்துவப் பேரறிஞர் பெர்ட்ரண்டுரசல் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கக் கூடும். ஒரு சமயம் இவரிடம் வந்து கல்வியாளர் சிலர் தம் தேசத்திற்கு எத்தகைய கல்வித் திட்டத்தை ரசல் அவர்கள் வகுத்துத் தர முடியும் என்று கேட்டார்களாம். ரசல் அவர்களைப் பார்த்துக் கேட்ட ஒரு கேள்வி “உங்கள் தேசத்திற்கு எத்தகைய சமூக அமைப்புத் தேவை? முதலாளிய அமைப்பா? சோசலிச அமைப்பா? எது தேவை?” என்று கேட்டாராம். கேட்பவர் சற்று நேரத்தில் வியப்படைந்திருக்கக் கூடும். உண்மையில் ரசல் அவர்களின் கருத்துப்படி முதலாளியச் சமூகம் தேவை என்றால் அதற்கென ஒரு கல்வித் திட்டம். சமதர்ம சமூகம் தேவை என்றால் அதற்கென ஒரு கல்வித்திட்டம் இரண்டு கல்வித்திட்டங்களும் ஒன்றாக இருக்க முடியாது. இப்பொழுது நமக்கும் ஓரளவுக்கு உண்மை தெளிவாகிவிட்டது போலத் தோன்றுகிறது. பெயரளவுக்கு இந்திய தேசம் வரித்துக் கொண்டது சோசலிசம் என்றாலும் நேரு அவர்கள் செய்த சில முயற்சிகளுக்கு பின்பு, இந்திய அரசியல்வாதிகளால், இந்திய தேசத்திற்கென வரையறுத்துக் கொண்ட திட்டம் முதலாளியம் தான். இந்தியாவை விட்டு அந்நியர் விரட்டப்பட்டனர் என்பது உண்மையில்லை. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் சென்ற போதிலும் ஆங்கிலேயருடைய அரசதிகாரம், பொருளியல் திட்டம் முதலியவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டன. அண்மைக் காலத்தில் அந்நியர்களின் அரசியல் மற்றும் பொருளியல் திட்டங்களை இந்திய அரசு தானும் உள்வாங்கிக் கொண்டு நம் மீது திணிக்கிறது என்பது பற்றி நாம் தெளிவாக அறியத் தொடங்குகின்றோம். நம் இந்திய அரசு முதலாளிகளுக்கே சார்பான அரசு. இந்திய அரசு தான் அதிகார நிறுவனங்களைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டே வருகிறது. மாநில அரசுகள் என்பது மைய அரசின் உறுப்புகளேயன்றி இவற்றுக்கெனத் தனி இறையாண்மை இல்லை. இந்தியாவில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் சனநாயகம் நாளுக்கு நாள் பணநாயகமாகவே மாறிவருகிறது. மக்களின் விடுதலைக்காகத் தான் தாங்கள் பாடுபடுகிறோம் என்று சொல்லிக் கொண்டுத் தொடங்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் நாளடைவில் அரசதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான, நோக்கத்தை முன்வைத்தே செயல்படுகின்றன. ஊழல் என்பது சமூக வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு கூறு ஆகிவிட்டது. அதிகாரத்தில் இருக்கும் கட்சியும் சரி, எதிர் கட்சிகள் எனச் சொல்லிக் கொள்ளும் கட்சிகளும் சரி இவை இரண்டுமே ஆளும் வர்க்கக் கட்சிகள் தான். பன்னாட்டு வணிக நிறுவனங்களின் தேவைகளை முழு அளவில் இந்திய அரசு நிறைவேற்றுகிறது. கடைசியாக அணு மின் நிலைய திட்டமும் இத்தகைய ஒன்று என்பது புரிகிறது. அமெரிக்காவோடு அனைத்து வகையிலும் இந்திய அரசு கைகோர்த்துக் கொள்கிறது. இத்தகைய விவரிப்புகளையும் மேலும் தொடர்வதற்கில்லை. இந்தப் பின்னணியில் அரசின் கல்விக் கொள்கைப் பற்றி இனிப் பேசலாம். நம் மாணவர்களுக்கு நம் கல்வி நிறுவனங்கள் தரும் கல்வி என்பது, மாணவர்களின் விருப்பத்திற்கு உகந்த கல்வியாக இல்லை. மாணவர்களுக்குத் தருவதற்கென முன் வைக்கப்படும் கல்வித்திட்டம், கல்வியாளர்கள் முன்வைத்த திட்டத்திலிருந்து அரசு வகுத்துக் கொண்ட ஒரு திட்டம். அரசு தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான தன் கல்வித்திட்டத்தைக் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு விதிக்கிறது. அரசின் கல்வி திட்டத்தை ஆராய்வதற்குத் தேவையான புரிதல் பெற்றோர்களுக்கு இல்லை. தம் குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரியின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, ஆசிரியர்களுக்கு அடங்கி தாம் தெரிவு செய்து கொண்ட பாடத்தில் முற்றாகத் தேர்ச்சி பெற வேண்டும். கல்வி நிறுவனமோ, ஆசிரியர்களோ, கூடுதலான கட்டுப்பாட்டை விதித்தாலும் அது மாணவர் நலனுக்கு ஒத்ததே என்றும் அதை ஏற்று தம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பது பெற்றோர் கருத்து. கட்டணம் எதுவென்றாலும் பெற்றோர் சிரமத்தோடு தம் செலவையும் குறைத்துக்கொண்டு விருப்பத்தோடு வழங்கத்தான் செய்கின்றனர். அரசுப் பள்ளியைவிட தனியார் பள்ளிகளே சிறந்த பள்ளிகள் என்ற நம்பிக்கையோடு பெற்றோர் தம் குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களில் தான் சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகள் தரமான கல்வித் தருவதில்லை அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தம் குழந்தைகளைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்கின்றனர். மருத்துவம், பொறியியல் படிப்பில் தம் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். காரணம் இந்தத் துறைகளில் தான் கூடுதலான சம்பாத்தியம் கிடைக்கிறது. தகவல் தொழில் நுட்பக்கல்வி மேலும் கூடுதலான வாய்ப்புகளைத் தரக்கூடிய துறை. எத்தகைய சிரமம் இருந்த போதிலும் இவற்றில்தான் தம் குழந்தைகள் பயில வேண்டும். இவற்றுக்கு அடுத்தத் துறை என்பது அறிவியல் துறையாக இருக்கலாம். இவற்றின் மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்திய அரசுப் பணி வாய்ப்பைப் பெறலாம். மேலாண்மைத் துறைக்கான கல்வி முக்கியத்துவம் கூடி வருகிறது. வரலாறு, இலக்கியம், பொருளியல், சமூகவியல் ஆகிய துறைகளுக்குக் குறைந்த அளவுக்கே மரியாதை. சமூகத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் தனியார் நிறுவனங்களில் சேர்ந்து மேலே செல்ல முடியும். சமூகத்தில் வசதி வாய்ப்பற்றவர்கள் பெயரளவுக்கு ஒரு பட்டம் பெறுவது என்ற நோக்கத்தோடு வரலாறு, இலக்கியம் என்ற துறைக்குச் செல்ல முடியும். பெற்றோரைப் பொறுத்தவரைத் தம் குழந்தைகள் கல்வி கற்று முடிந்த பிறகு பெரிய பதவியில் சேர வேண்டும். உயர்ந்த ஊதியம் பெற வேண்டும். இயலுமானால் அமெரிக்கா செல்ல வேண்டும். உலகளவில் இவர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும். இறுதிக்காலத்தில் தம் குழந்தைகளே தம்மைப் புறக்கணித்தாலும் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை. இத்தகைய கல்வித் திட்டத்தின் மூலம் என்னதான் நடை பெறுகிறது என்பது பற்றிச் சற்றுக் கூர்மையாக நாம் பார்க்க வேண்டும். முதலாளிகளின் தேவைக்கென அரசு முன்வைக்கிற ஒரு கல்வித் திட்டத்தை, கல்வி நிறுவனங்கள் திறம்பட செயல்படுத்தி, தமக்கென அதிகாரத்தையும் பணத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும். அரசின் முதலாளியக் கொள்கை கல்வி நிறுவனங்கள் மூலம், அதுவே இயல்பான கல்விக்கான கொள்கை என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் நம்பி, அரசு நமக்காகத்தானே எல்லாவற்றையும் செய்கிறது என்று அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் பரப்பும் கருத்தை உண்மைதான் என நம்பி ஏற்றுக் கொண்டு, இத்தகைய கல்வியைத் திறம்பட கற்பிப்பதும் மாணவர்கள் கற்பதுமே தம் வாழ்வுக்கான கதிமோட்சம் என்று எல்லோருமே நம்பி ஏற்றுக்கொள்வதன் மூலம் அரசின் முதலாளியக் கல்வித்திட்டம் திறம்பட நிறைவேற்றப்படுகிறது. மாணவர்கள் திறம்பட கற்பதன் மூலமே பெரும் பதவி, பணம் பெறமுடியும் என்று பெற்றோருக்குள்ளும் இயல்பாக எழும் பேராசை மேலும் மேலும் தூண்டப்படுகிறது. அரசும் கல்வியாளரும் பெற்றோருமாகக் கைகோர்த்துக் கொண்டு மாணவர்கள் மூளையில் கல்வித் திட்டம் திறம்படத் திணிக்கப்படுகிறது. மாணவனுக்குச் சுய விருப்பம் தேவையில்லை. இசை, விளையாட்டு முதலியவற்றை ஒதுக்கிவிட்டு மாணவனுக்குப் படிப்பே முதன்மை நோக்கமாக வேண்டும். மனித ஆளுமை வளர்ச்சி இங்கு முக்கியமில்லை. தாய்மொழிப் பற்று கலையில் ஈடுபாடு என்ற முறையில் மாணவன் தன் பார்வையைச் சிதறடித்துக் கொள்ளக்கூடாது. படிப்பே முதன்மை பெற்றோர் விருப்பத்திற்கே முதலிடம் என்ற முறையில் மாணவன் தன்னைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இறுதியில் என்ன ஆகிறது? முதலாளியம் எல்லோருக்குள்ளும் தூண்டப்படுவதோடு முதலாளியத்திற்கான கருவியாக மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். கல்வி நிறுவனங்கள் மூலம் அரசு ஓயாமல் சொல்லுகிற தேசபக்தி என்பது இறுதியில் அரசதிகாரத்தை முதலாளியத்தை ஆதரித்து வளர்க்கும் திட்டமாகிறது. தேச பக்தி என்னும் பெயரில் இந்திய வரலாறு, பண்பாடு முதலியவை சுருக்கப்படுகின்றன. மேலும் ஒன்று இந்திய அரசும் இந்தியா ஆதரிக்கும் முதலாளியமும் இறுதியில் அந்நிய ஆதிக்கத்தை உள்வாங்கிக் கொள்வதுமாகிறது. இந்திய அரசின் முதலாளிய நோக்கத்தோடு ஒத்துச் செயல்படாத ஆசிரியரோ, மாணவரோ, பெற்றோரோ அரசின் பார்வையில் தேச விரோதிகள், பயங்கரவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். பெர்ட்ரண்டு ரசலை இங்கு மீண்டும் நினைவு கூர்வோம். இந்திய அரசோ, தமிழக அரசோ முன்வைத்து நடத்தும் கல்விக் கொள்கை என்பது மாணவர்களின் மனித ஆளுமைக்கான, மனித விடுதலைக்கான கல்விக் கொள்கையாக இல்லை. ரசல் கூறியபடி இது முதலாளியக் கொள்கை. முதலாளிய சமூகத்தை உருவாக்கி வலுப்படுத்துவதற்கான கொள்கை. முதலாளிய உணர்வை, முதலாளிய அதிகாரத்தை, முதலாளிய தன்னலத்தை, முதலாளிய திமிரை மாணவர்களுக்குள்ளும் மக்களுக்குள்ளும் திணிக்கும் கொள்கை. முதலாளியத்தின் கைக் கருவி ஆக்கும் கொள்கை. சமதர்ம உணர்வுக்கு எதிரான கொள்கை. நேரு, காந்தி முதலியவர்கள் விரும்பிக் கடைபிடித்த கொள்கைக்கு எதிரான கொள்கை. இந்திய இராணுவம் வலுப்பெற வேண்டும், இந்தியாவுக்கான அணுமின் நிலையங்கள் தேவை, இந்தியா வல்லரசாக வேண்டும். தேசிய இன விடுதலை என்று இந்தியாவில் எந்த தேசத்தினர் போராடினாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அவர்களை ஒழித்தாக வேண்டும். இந்தியாவுக்குத் தொழில் வளர்ச்சி தேவை என்னும் பெயரில் அந்நிய முதலாளிகளுக்கு இந்தியாவின் கனிமவளங்களை ஒப்படைக்க வேண்டும். அந்த அந்நியர்களிடம்தான் மூலதனமும் நிபுணத்துவமும் இருக்கின்றன. இந்தியாவின் கனிமவளங்களை அவர்களால்தான் தோண்டி எடுத்துப் பக்குவப்படுத்த முடியும். அவர்கள் மூலம் தான் அவர்களின் தொழில்நுட்பங்களை இந்தியர் கற்றுக் கொள்ள முடியும். வலுவான மைய அரசு இல்லாமல் முடியாது. அரசு அதிகாரத்தை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது. இத்தகைய உணர்வுதான் தேசப்பற்று. இதைத்தான் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் விடுதலை நாள் விழா, குடியரசு நாள் விழாவில் கொண்டாடுவது, இந்த நோக்கத்தை முன்வைத்துத்தான் மாணவர்களுக்குத் தேசிய மாணவர் படை என்ற முறையில் மாணவர்களைப் பயிற்றுவிப்பதும் இதற்காகத்தான். எல்லா விழாக்களிலும் ‘ஜன கன மன’ பாடப்பட வேண்டும். இதுவரை ஓரளவுக்கேனும் நாம் விளக்கி வந்ததிலிருந்து இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி மாணவர்களுக்காக முன்வைக்கும் கல்வித்திட்டம் என்ன என்பதையும் எத்தகைய நோக்கத்தோடு எத்தகையவர்களால் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் ஓரளவுக்கேனும் உணரமுடியும். ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இத்திட்டம் எப்படிச் சீர்குலைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். கல்வி நிர்வாகிகள் என்ற முறையில் முதலாளிகளும் கல்வித்துறை அதிகாரிகளும் ஏன் மூர்க்கத்தனமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். தமிழ், தமிழ்க்கல்வி ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தியப் பண்பாடு என்று பேசிக்கொள்கிற மதவாதிகள் முதலியவர்களும் தமக்கான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவதன் மூலம் தம்மை எப்படி எல்லாம் வலுப்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இந்திய வரலாறு, இந்தியப் பண்பாடு என்பனவெல்லாம் இந்திய அரசின் தேவைக்கு ஒத்த முறையிலேயே குறுக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். நேருவுக்கோ, காந்திக்கோ, அறிஞர் இராதாகிருஷ்ணனுக்கோ இந்திய விடுதலைக்காகப் போராடிய இயக்கங்களுக்கோ ஏன் மரியாதையில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இந்திய அரசின் முதலாளிய கொள்கைக்கோ, கல்விக் கொள்கைக்கோ முழுவதும் ஒத்துழைக்க முடியாமல், இவர்களால்தான் இந்திய மக்கள் இன்னும் அடிமைத்தனத்திலே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அரசு மற்றும் முதலாளிய ஆதிக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கவேண்டுமென்ற பேருணர்வோடு இந்தியாவில் விடுதலை இயக்கங்கள் ஏன் செயல்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடியும். கல்வி நிறுவனங்கள் மனித ஆளுமையின் வளர்ச்சிக்காக இருக்க முடியும். வரலாற்றோடும் சமூகத்தோடும் இயற்கையோடும் கலை இலக்கியப் பண்பாடுகளோடும் மாணவர்களை, மக்களை இணைப்பதாகவும் இத்தகைய இணைப்பின் மூலம் மனித ஆளுமையை விரிவு செய்வதன் மூலம் இறுதியில் உலக அளவிலான மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு தம்மை இணைப்பதாக இருந்தாக வேண்டும். இந்தியாவில் தரப்படும் கல்வி என்பது எத்தகைய சீர்குலைவோடு இருந்த போதிலும் இந்தச் சீர்குலைவுக்கு அப்பாலும் வரலாறு பொருளியல் பற்றிய உணர்வுகளை இந்தக் கல்வியின் உள்ளிருந்தே கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. அறிவும் ஆற்றலும் உள்ள ஆசிரியப் பெருமக்கள் இத்தகைய பேருணர்வுகளைத் தம் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கான குறைந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அரசும் கல்வியாளரும் தரும் கல்விக்குள்ளிருந்தே அவர்களின் ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அவர்களின் உணர்வுகளையும் கற்றுக்கொள்ள, கற்பிக்க முடியும். வரலாற்றில் இன்னும் வள்ளுவரோ, சாக்ரடீசோ, புத்தரோ சாகவில்லை. எத்தகைய ஆதிக்கவாதியும் இவர்களைச் சாகடிக்கவும் முடியாது. இவர்கள் வரலாற்றுக்குள்ளிருந்து மீண்டும் மீண்டும் தம்மை உயிர்ப்பித்துக் கொள்வார்கள். கல்வி என்னும் களம் இவர்களின் உயிர் கருக்களை இன்னும் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கல்வி இறுதியில் மக்களின் விடுதலைக்கானதாக இருக்க வேண்டும் என்று நாம் கூறியதை இன்னும் சற்று ஆழமாகப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களும் முதலாளிகளும் அரசு ஊழியர்கள் படிப்பாளிகள் ஆகியவர்களை உள்ளடக்கிய நடுத்தர வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கு அதிகமான உழைக்கும் மக்களில் மாபெரும் கூட்டத்தினரின் வாழ்வுக்கு ஆதாரமான இயற்கை வளங்கள் முதலியவற்றோடு கூடிய தேசத்தை அவர்களிடமிருந்து அபகரித்துக் கொள்வதோடு தங்கள் நலத்திற்கே முதன்மையானது இந்தத் தேசம் என்ற முறையில் கல்விக் கொள்கை முதலிய அனைத்தையும் உருவாக்கி வைத்துள்ளனர். பல்லாயிரமாண்டு வரலாறு கொண்ட இந்திய தேசத்தின் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில்கள், அறிவியல், கட்டிடக் கலைகள் முதலிய அனைத்தையும் உருவாக்கியதன் மூலம் இந்திய நாகரிகம் பண்பாட்டு மேன்மை முதலியவற்றைப் படைத்தவர்கள் உழைக்கும் மக்கள். இவர்களிடமிருந்து தேசம், நாகரீகம், பண்பாடு முதலிய அனைத்தையும் பறித்துக் கொள்வதன் மூலம் அவர்களைக் கூலிகளாக, அடிமைகளாக, கோழைகளாக, பொய்யர்களாக, வேசிகளாக செய்தவர்கள் இவர்களிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தினர் இவர்கள் தான் மக்களுக்கு தேசபக்தியை நவீன நாகரிகத்தைக் கற்பிக்கிறார்கள். மேற்கத்திய நாகரிகத்தை, மேற்குலகின் முதலாளியத்தைச் சுரண்டலுக்குத் தேவையான நவீன அறிவியல் தொழில் நுட்பங்களை , அலோபதி மருத்துவத்தை, கிரிக்கெட் முதலிய பொழுது போக்குகளை இங்கு இறக்குமதி செய்து இவற்றின் மூலம் நடுத்தர வர்க்கத்து மக்களை மயக்கி தம் ஆளுமைக்கும் அதிகாரத்திற்கும் தேவையானவர்களாக அவர்களை மாற்றி இந்த நடுத்தர வர்க்கத்தின் மூலம் உழைக்கும் மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் ஓயாமல் திணித்து அவர்களை ஓட்டாண்டியாக்கி அவர்களுக்கான தேசத்தைத் தம் தேசமாக மாற்றிக் கொண்டவர்கள் இந்த மேட்டுக்குடி வர்க்கத்தினர். அந்நியர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தம் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள். இவர்களிடமிருந்து தேசத்தை, இயற்கையை, வாழ்வை விடுவித்துக் கொள்வதற்கான கொள்கை எதுவோ அதுவே இறுதியில் நம் மக்களுக்குத் தேவையான கல்விக் கொள்கையாகவும் இருக்க முடியும். அந்நியர்களிடமிருந்து பெற்றதாக சொல்லிக் கொள்ளும் விடுதலை இனிதான் முழுமையானதாக மாறவேண்டும். இதுவே விடுதலைக்கான கல்விக் கொள்கை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் சமதர்ம கொள்கை இன்னும் இடம் பெற்றுத்தான் இருக்கிறது. இன்று இந்திய அரசு இதை இன்னும் அகற்ற முடியவில்லை. ஒருவேளை சமதர்ம கொள்கையை இந்திய அரசு உறுதியுடன் செயல்படுத்தியிருக்க முடியுமானால் நேரு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கும் அந்நியர்களுக்கும் தாரைவார்க்கும் திட்டத்தை இந்திய அரசு கைவிட்டிருக்க வேண்டும். தண்டியில் காந்தியார் கடலில் உப்பெடுத்த போது காந்தியார் என்ன சொன்னார், ‘இது எங்கள் கடல், எங்கள் உழைப்பில் உப்பெடுக்கிறோம். எங்கள் உழைப்பின் விளைவு எங்களுக்குச் சொந்தம். அந்நியருக்கு நான் ஏன் வரி கொடுக்க வேண்டும். அந்நியருக்கு நாங்கள் ஏன் கட்டுப்பட வேண்டும்’. காந்தியின் தேசப்பற்று இன்னும் இந்திய தலைவர்களின் நெஞ்சில் இருக்கும் என்றால் அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு இந்தியாவின் இயற்கை வளங்களை விட்டுத் தந்திருக்க முடியாது. அமெரிக்க ஆதிக்கத்தை நம் மீது திணித்திருக்க முடியாது. அந்நிய நலன்களுக்கான கல்விக் கொள்கையை இங்குச் செயல்படுத்தியிருக்க முடியாது. இப்படியெல்லாம் செய்பவர்கள், தேசப்பற்று அற்றவர்கள். இந்திய விடுதலையில், மக்கள் வாழ்வில் அக்கறையற்றவர்கள். இவர்களை நம் தலைவர்கள் என நம் கல்வியாளர்களும் பெற்றோர்களும் கொண்டாடுவதன் மூலம் நமக்கு நாமே துரோகம் செய்து கொள்கிறோம். எதிரியின் நலன்களை வளர்ப்பதற்காக நம்மை , நம் மக்களை நம் மாணவர்களை அழிக்கிறோம். இன்றைய கல்விக் கொள்கையில் உண்மை முகம் இதுதான் என்பதைத் தேசப்பற்று உள்ளவர்கள் புரிந்துகொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் இரஷ்யாவும் மக்கள் சீனமுமே சமதர்மம் என்ற கோட்பாட்டைக் கைவிட்ட நிலை யில் நேரு, காந்தி முதலியவர்களை இந்திய அரசியல்வாதிகள் ஒதுக்கியது தானே அறிவுடைமை என்று சிலர் கேள்வி எழுப்பலாம். அவர்கள் ஏன் சமதர்மத்தினைக் கைவிட்டார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும், அந்நிய நிறுவனங்களை மீண்டும் இந்தியாவில் முழு அளவில் குடியேற்றுவதற்கு என்ன தேவை இங்கு நேர்ந்துவிட்டது. அமெரிக்க ஆதிக்கத்திற்கு இந்தியாவை அடகு வைக்கத்தான் வேண்டுமா? கிராமப் புறங்களில் கோடிக்கணக்கான விவசாயிகளை அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான நிலங்களிலிருந்து வெளியேற்றத்தான் வேண்டுமா? மேற்குலகின் தேவைக்காக அறிவுத்தரத்தில் முதல் தரமான மாணவர்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்யத்தான் வேண்டுமா? பண நாகரிகத்திற்கு மக்களை முற்றாக பலியிடத்தான் வேண்டுமா? இறுதியாக இந்திய மக்களை மீண்டும் அந்நிய மக்களுக்கு அடிமைப்படுத்தி மக்களின் வாழ்வை நாசமாக்கத்தான் வேண்டுமா? இதற்காக ஒரு கல்விக் கொள்கை தேவைதானா? இயல் விருது - ஏற்புரை நான் கிராமத்தில் பிறந்தேன். எளிய குடும்பம். உடன் பிறந்தவர் பலர். கோவையில் கற்றேன். மேற்படிப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராக 28 ஆண்டுகள் மார்க்சியத்தோடு உறவு. முனைவர் பட்டம் பெறவில்லை. பேராசிரியராகப் பணிபுரியவில்லை எனினும் நிறைய புத்தகம் படித்தேன். எனக்கு வாய்த்த பேராசிரியர்கள் நண்பர்கள் அற்புதமானவர்கள். தேடித்தேடிக் கற்றேன். நிறைய எழுதினேன். தமிழோடும் மார்க்சியத்தோடும் நான் வாழ்ந்தேன். இந்த வாழ்க்கை எனக்கு நிறைவானது. தமிழும் மார்க்சியமும் எனக்குள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. தமிழின் தொன்மையான இலக்கியம், தற்கால இலக்கியம் இரண்டையும் எனக்குள் செறித்துக் கொண்டேன். வரலாறு, பொருளியல், மெய்யியல் எனப் பலவற்றையும் நான் தொடக்கம் முதலே ஆழ்ந்து கற்றேன். இவற்றோடு எனக்குள் தொடக்கம் முதலே சில தேடல்கள். இந்த தேடல்தான் என்னை வரலாற்றோடும் மார்க்சியத்தோடும் இணைத்தது. சமகால வரலாறு, நம் அரசியல், பொருளியல், சூழல் என்னைக் கடுமையாகப் பாதித்தது. இவற்றிற்கு எதிர்வினை என்ற முறையில் நண்பர்களோடு இணைந்து கற்றேன் விவாதித்தேன். இதழ் நடத்தினேன். மார்க்சியம் மட்டுமல்லாமல் பெரியாரியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் எனப் பலவற்றையும் இயன்ற அளவில் எனக்குள் செறித்துக் கொண்டேன். மார்க்சியம்தான் இவை அனைத்தையும் தனக்குள் வாங்கிக் கொள்கிற ஆதாரம். எனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை இப்படித்தான் நான் பெற்றேன். மனித வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டியது சமத்துவமும் சமதர்மமும் என்பது என் கொள்கை. இந்த அடிப்படையில்தான் தமிழியல் ஆய்வை நான் செய்தேன். இனக் குழுச் சமூகத்தின் உள்ளார்ந்த பண்புகள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்கின்றன. வள்ளுவரின் அறமும் இளங்கோவின் புரட்சியும் சாத்தானார் கொள்கையும் கம்பரின் அரசியலும் சித்தர்களின் கொள்கைகளும் தமிழறத்தின் இடையறாத தொடர்ச்சி என்றே கருதுகிறேன். இலக்கியம் என்பதன் உள்ளியக்கம் இதுவாகத்தான் இருக்கிறது. கடவுள் என்ற கருத்தாக்கத்தின் உள்ளீடும் இதுவாகத்தான் இருக்க முடியும். மனித வாழ்வின் இந்த, ஆதாரத்தை எத்தகைய ஆதிக்கமும் அழிக்க முடியாது. திரும்பத் திரும்ப மனிதன் தன்னை இப்படித்தான் புதுப்பித்துக் கொள்கிறான். காலந்தோறும் நடைபெறும் வர்க்கப் போராட்டம் என்பதன் உள்ளடக்கமும் இதுவாகத்தான் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் வழியே வர்க்கங்களைக் கடந்து செல்வதுதான் மார்க்சியம் என்பது நான் கண்ட உண்மை. முதலாளியம் / மத அதிகாரம் முதலியவை இன்றைக்கும் மனித வாழ்வை சீரழிவுக்கு உள்ளாக்குபவை. ஆதிக்கங்கள் எந்த வகையிலும் மனிதனுக்கு விடுதலை தரமுடியாது. சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், ஆணாதிக்கம் என்பனவெல்லாம் மனித வாழ்வைச் சீர்குலைப்பவை. ஆதிக்கத்தை உள்வாங்கிக் கொண்ட மதமோ, மார்க்சியமோ, பெரியாரியமோ, மனித வாழ்வுக்கு விடுதலை தரமுடியாது. இலக்கியம், மெய்யியல், அரசியல், பொருளியல், உளவியல் என்பனவற்றினுள்ளும் செயல்படும் ஆதிக்கத்தை வெளியேற்றுவதன் மூலம்தான் மனித வாழ்வு சீரடையும். இலக்கிய ஆய்வு முதலிய எவ்வகை ஆய்வையும் இந்த நோக்கில்தான் செய்தாக வேண்டும். நான் ஒரு தமிழாசிரியனாக மட்டுமே இருந்திருப்பேன் என்றால் என் வாழ்க்கை சம காலத்தோடு இணைந்ததாக இருக்க முடியாது. சமகாலத்தோடு இணையும் முறையில்தான் நான் மார்க்சியத்தோடு உறவு கொண்டேன். நவீனகாலத் தமிழிலக்கியத்தோடும் நான் உறவு கொண்டேன். மார்க்சியம் சார்ந்த கட்சியோடு என் உறவு நீடிக்கவில்லை என்றாலும் இன்றுவரை நான் விலகவில்லை. மார்க்சியம் என்பது சோவியத் ரஷ்யாவோடு மக்கள் சீனத்தோடு முடிந்ததாகவும் இல்லை. மேற்கிலும் மார்க்சியம் பல பரிமாணங்களில் வளர்ந்திருக்கிறது. இந்தியாவுக்கு மார்க்சியர் இல்லாமல் முடியாது. தமிழுக்கும் மார்க்சியம் தேவை. தமிழ்ச் சூழலுக்கு தமிழ் வரலாற்றுக்கு ஒத்த மார்க்சியம் தேவை. தமிழ் மரபிலிருந்து வளர்த்தெடுக்கும் மார்க்சியம்தான் தமிழ் மார்க்சியமாகவும் இருக்க முடியும். இப்படி ஒரு மார்க்சியத்தைத் தமிழக சூழலில் கடந்த சில 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் பேசி வருகிறேன். கட்சி மார்க்சியர் இப்படி உறுதியாகப் பேசுவதில்லை. அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்தித்து பேசியபோதே சிவத்தம்பி அவர்கள் சொன்ன ஒரு வாசகம் எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. "ஞானி நானும் இப்பொழுது தமிழ் மார்க்சியம் என்று பேசுகிறேன்’’ என்று அவர் கூறியதோடு மேலும் விவரித்தார். இரஷ்ய சூழலுக்கு ஏற்ற மார்க்சியத்தை லெனின் உருவாக்கினார். சீன சூழலுக்கான மார்க்சியத்தை மாவோ உருவாக்கினார். நம் சூழலுக்குள் இருந்து நம் மரபிலிருந்து மார்க்சியத்தை உருவாக்க வேண்டும் என்றார். இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியம் என்று நாம் பேச முடியும். இந்திய தேசியத்தோடு மார்க்சியம் எந்த அளவுக்கு இணையும் என்பது கேள்வி. இந்துத்துவத்திற்கும் மார்க்சியத்திற்கும் எந்த வகையிலும் ஒத்து வராது. இலங்கையிலும் சிங்கள தேசியம் என்றும் தமிழ்த் தேசியம் என்றும் தான் பேச வேண்டும். இப்படி எங்களுக்குள் உரையாடல் நடைபெற்றது. இன்னொன்று நான் இப்பொழுது சொல்ல வேண்டும். தமிழாசிரியனாக இருந்து கொண்டே தமிழகத்தில் சி. சு. செல்லப்பா காலம் தொடங்கி சிற்றிதழ் இயக்கத்தோடு எனக்கு நெருக்கமான உறவு கொண்டவனாக இருந்திருக்கிறேன். சிற்றிதழோடு உறவு கொண்ட நிலையில்தான் நான் திறனாய்வாளன் ஆனேன். தற்கால தமிழிலக்கியத்தில் தமிழ்க் கவிதைகள் தமிழ் நாவல்கள் என்பது பற்றி நான் நிறைய விவாதித்து இருக்கிறேன். தமிழோடு உறவு கொண்ட எவரும் திறனாய்வுணர்வு இல்லாமல் தமிழிலக்கியத்தை மேம்படுத்த இயலாது இதற்கு சிற்றிதழ் இயக்கம் தான் ஆதாரம் அன்றியும் மார்க்சியம் இல்லாமலும் தமிழிலக்கிய ஆய்வைத் தொடரவும் முடியாது. இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம்தான் தமிழைச் சமகாலத்திற்குள் வைத்து வாசிக்க முடியும். வளர்க்க முடியும். இதற்குத்தான் பின் நவீனத்துவம் வரையிலான அனைத்து புதிய அணுகுமுறைகளும் தேவைப்படுகின்றன. தமிழிலக்கியத்திற்கு பக்தி இலக்கியம் / சமய இலக்கியம் மூன்றில் ஒரு பகுதி என்ற அளவிற்கு மிகுதியாக இருக்கிறது. பெரியாரியம் மேலோங்கிய நம் காலச் சூழலில் தமிழின் பக்தி இலக்கியம் குறைத்தே மதிக்கப்படுகிறது. இவ்வகையில் தமிழ் தன் மரியாதையை இழக்கிறது. சமயம் பற்றி நமக்கு வரலாற்று அடிப்படையிலான பார்வையில்லை. எந்த ஒரு சமூகமும் சமயம் இல்லாமல் இல்லை. சமயத்திற்கு அடியில் உள்ள மெய்யியல் பார்வை நமக்குத் தேவை. சமயத்திற்கு அடியில் உள்ள மெய்யியலைக் கண்டறிந்து சமயம் பற்றி நாம் விளக்க வேண்டும். சமயம் பற்றிய என் அனுபவம் நாளடைவில் மெய்யியல் பார்வை நோக்கி என்னைச் செலுத்தியது. என் மார்க்சிய புரிதலும் இதற்கு உதவியாக இருந்தது. மார்க்சியத்தையும் வெறும் அரசியலாக பொருளியலாகக் குறைத்த பொழுது மார்க்சியத்தினுள் இயங்கும் மெய்யியலைத் தவறவிட்டோம். நம் காலத்தில் மெய்யியலை மீட்டாக வேண்டுமென்ற கட்டாயம் நமக்கிருக்கிறது. பணம், அதிகாரம் என்ற அடிப்படையில் மனித வாழ்வை மதிப்பிடுவது வாழ்வுக்குப் பெரும் தீங்காக முடியும். இன்றைய சூழலில் பொருளியல் ஆதிக்கம் மேலோங்கி நம் வாழ்க்கைச் சீரழிகிறது. இதன் காரணமாக மார்க்சியத்திற்குள்ளிருந்தும் தமிழின் பக்தி இலக்கியத்திற்குள்ளிருந்தும் மெய்யியல் பார்வையை மீட்க வேண்டும். இதை நான் பேரளவில் செய்திருக்கின்றேன் என்ற மனநிறைவும் எனக்கு உண்டு. இப்படிச் செய்வதனால் தமிழிலக்கியத்தின் வளமும் மார்க்சியத்தின் ஆற்றலும் மேம்படும் என்பது என் நம்பிக்கை. தமிழுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிற செம்மொழித் தகுதி நமக்குக் கிடைத்திருக்கிற மாபெரும் இறுதி வாய்ப்பு எனக் கருதுகிறேன். இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தமிழ் வாழ்வை, தமிழ் வரலாற்றை இந்திய சூழலில் நம்மால் மீட்க முடியும். இதை சரிவரச் செய்ய தமிழறிஞர்களுக்கு உரிய தகுதி தேவை. உலக வரலாறு முதலியவை பற்றிய தெளிவும் தேவை. தமிழ்தான் எனக்கு வாழ்வு என்ற உறுதியும் தேவை. ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற பாரதிதாசன் வாக்கு நம்மளவில் உண்மை என்பதை நம்மால் மெய்பிக்க முடியுமானால் தமிழை, தமிழ் வரலாற்றைக் காக்க முடியும். ஆரவாரத்தோடு கூடிய உலகத் தமிழ் மாநாடு இதற்கு எந்த முறையில் பயன்படும் என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். தமிழ் ஈழத்துக்கு நேர்ந்த கதி நமக்கும் என்றும் நேரலாம். அல்லது என்றைக்காவது நேரலாம். இது பற்றிய எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவை. பெண்ணியமும் தமிழ் இலக்கிய கல்வியும் நாம் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலுக்குள் வாழ்கிறோம். பொருளியல் சூழலுக்குள் வாழ்கிறோம். இந்த வரலாற்றுச் சூழலில் உள்ள அரசியல், பொருளாதாரம், சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள், முதலாளியம் முதலியவை நம்மை சிறிய அளவிலோ பெரிய அளவிலோ பாதிக்கின்றன. தமிழகச் சூழல் என்பது இந்தியச் சூழலில் ஒரு பகுதி இவையும் உலக அளவிலான வரலாறு மற்றும் பொருளியல் சூழலின் பகுதிகள். உலகில் இன்று எவ்வளவோ நடைபெறுகின்றன. ஈராக் போர் பற்றி நாம் அறிவோம். ஈழத்தின் விடுதலைப் போர் ஒடுக்கப்பட்டது பற்றியும் அறிவோம். நம் அரசியல்வாதிகள் நமக்கு என்ன வகையான எதிர்காலத்தை வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி நமக்குத் தெரியாது. நமக்குள்ளும் நாம் கடுமையான சிக்கலோடு நெருக்கடிகளோடுதான் வாழ்கிறோம். தமிழுக்கு இன்று மரியாதை இல்லை. ஆங்கில ஆதிக்கமே மேலோங்கி வருகிறது. குடும்ப உறவுகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகங்கள் நேர்மையான முறையில் செயல்படுவதில்லை. ஆதிக்கங்கள் நம்மைக் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகின்றன. நாம் நிம்மதியாக வாழ்வதற்கில்லை. தமிழுக்கு மரியாதை குறைந்த நிலையில் தமிழிலக்கியத்திற்கு மட்டும் என்ன மரியாதை கிடைக்கும். வள்ளுவமும் இளங்கோவும் நம் சமூகத்தில் என்ன மரியாதை பெறுவார்கள்? பட்டி மன்றங்கள் நமக்கு அவ்வப்போது மலினமான உற்சாகங்களைத் தரலாம். இப்படி நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் தமிழக அளவில் இந்திய அளவில் உலகளவில் எத்தனையோ நெருக்கடிகள். இவை குறித்து நாம் தெரிந்து கொள்ளாமல் இவை பற்றிய சரியான அறிவைப்பெறாமல், இவற்றுக்கெல்லாம் நம் எதிர்வினைகள் என்னவாக இருக்க வேண்டுமென்ற புரிதல் இல்லாமல் நாம் வெறுமனே நிகழ் கணங்களில் வாழ்ந்து விட முடியாது. சிக்கல் கடுமையானது தான். இவற்றில் நமக்குத் தெளிவு தேவை. 2. இத்தகைய கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் நமக்கு விரிவான பார்வைத் தேவைப்படும் சூழலில் பெண்கள் என்ற ஒரு கோணத்திலிருந்து இவற்றில் எதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆதிக்கம் என்பது ஆணாதிக்கம் மட்டும்தானா? ஆண்கள் எல்லோரும் சுதந்திரவான்களாகத்தான் இருக்கிறார்களா? தம் சிக்கல்களை இவர்களால் தாமே தீர்த்துக்கொள்ள முடியுமா? மின்சாரம் இல்லை. விலைவாசிகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கின்றன. இயற்கை அழிகிறது. எங்கும் மாசுகள் பெருகி வருகின்றன. எங்கும் ஊழல் மயம். எந்தச் சமயத்திலும் போர் நெருக்கடி வரலாம். அதிகாரிகள் எதனையும் செய்வார்கள். மதவாதிகள் பத்திரமாக இருக்கவா முடியும்? தலைவர்களை அல்லது கடவுளர்களை நம்பி நாம் வாழ்ந்துவிட முடியுமா? பெண் என்ற ஒரு புள்ளியிலிருந்து நமக்கான வாழ்வைப் பெற முடியுமா? பெண்ணியம் என்பது நமக்குள் விரிந்த பார்வையைத் தர வேண்டாமா? பெண்ணியத்திலும் பலவகைகள் சொல்லப்படுகின்றன. மிதவாதப் பெண்ணியம், தீவிரவாதப் பெண்ணியம், சோசலிசப் பெண்ணியம் இப்படி மேலும் சில வகைகள். பெண்ணியத்திற்கும் உலகளவில் வரலாறு உண்டு. இந்தியாவின் உள்ளும் பெண்ணியம் குறித்துப் பார்வைக்கு என்ன இடம் உண்டு. இந்தியப் பெண்ணியம் என்றோ? தமிழ்ப் பெண்ணியம் என்றோ நாம் பேச முடியும். இவ்வாறு அனைத்து வகைப் பெண்ணிய பார்வையினுள்ளும் சில விளக்கங்களை நாம் பெற முடியும் என்றாலும் இவை போதுமா? உலகளவிலான நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நம் தேசமும் நெருக்கடிக்குள் இருக்கிறது. இந்த நிலையில்தான் பெண்ணியம் என்பதை ஒற்றைப் பார்வையாய் சுருக்கிக் கொள்ள வேண்டாம். பெண்களும் மனிதர் என்ற முறையில் விரிந்த பார்வையைப் பெற வேண்டும். அணுமின் நிலையமா? காஷ்மீர் சிக்கலா? சீனாவோடு போரா? இப்படி எந்த சிக்கல் என்றாலும் இந்தியாவில், தமிழகத்தில் ஒரு மனிதன் என்ற முறையில் நமக்குப் பார்வை தேவை. நம் அரசியல் பற்றி, பத்திரிகை பற்றி, தொலைக்காட்சி பற்றி நமக்குப் பார்வை தேவை. எந்த, இடத்திலாவது நம்மைச் சுருக்கிக் கொள்ள முடியாது. இருப்பதே போதும் என்று இருந்துவிட முடியாது. கண்களைத் திறந்து வைத்து காதுகளைத் திறந்து வைத்து அறிவை விரிவு செய்து கொள்ளத்தான் வேண்டும். பெண்ணியப் பார்வையை ஒதுக்கிவிட தேவையும் இல்லை. பெண்ணியம் பற்றி சரியான புரிதல் தேவை. இப்படி ஒரு பெண்ணியம் பற்றியும் அறிஞர்கள் பேசியிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஜூலியன் கிறிஸ்த்வா . பெண் இயற்கையின் ஒரு முக்கியமான கூறு. பெண் படைப்பவள்; காப்பவள். படைப்பியக்கம் என்பது பெண்ணின் முதன்மையானக் கூறு. பெண்ணுக்குத் தாய்மை உள்ளம் இயல்பானது. தாய்மையோடு அனைத்தையும் பார்க்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை மாசுபடக் கூடாது, அழியக் கூடாது. போர்கள் தேவையில்லை. இராணுவம் தேவையில்லை. ஆதிக்கம் இல்லாமல் வாழ்ந்து விட முடியும். உழைப்பின் விளைவை அனைவரும் பகிர்ந்து கொள்ள முடியும். இதுதான் மனிதத் தரமான வாழ்வு சமதர்மம் வாழ்வின் இயல்பாகிவிட வேண்டும். இது பெண்ணியம். அசலான பெண்ணியம். துண்டுபடாத பெண்ணியம். 3. தமிழிலக்கியத்தோடு நமக்கு என்ன உறவு. தமிழ்க் கல்வியை நாம் எப்படி பயில்கிறோம். தமிழோடு , தமிழ் மக்களோடு தமிழ் மரபோடு தமிழ் வரலாற்றோடு, நமக்கு என்ன உறவு? வள்ளுவர், இளங்கோ, சாத்தனார் முதலியவர்களோடு நமக்கு என்ன உறவு? எத்தகைய உறவு நமக்குத் தேவை? தமிழிலக்கியத்தை நாம் எப்படி பயில்கிறோம்? தேர்வுக்காக மட்டுமே நாம் பயில்கிறோமா? வேலைவாய்ப்பு கிட்டும் என்று பயில்கிறோமா? தமிழ் நமக்குத் தரும் ஆளுமை எத்தகையது? தமிழ் நமக்குள் எந்த அளவுக்கு ஊறுகிறது. தமிழை நாம் வெறும் ஒரு பாடமாகத்தான் கற்கிறோமா? திறனாய்வு உணர்வின்றி தமிழைக் கற்க முடியுமா? கம்பன், பாரதி, பாரதிதாசன், புதுமைபித்தன், ஜெயகாந்தன், சுந்தர இராமசாமி, ஜெயமோகன் இவர்களையெல்லாம் நமக்குள் எந்த இடத்தில் வைக்கிறோம். நவீன இலக்கியத்தோடும் நமக்குத் தொடர்பு தேவைதானா? தமிழில் எத்தனை குறட்பாக்கள் தெரியும்? பாரதியாரில் எத்தனைப் பாடல். தொல்காப்பியரை நம்மால் நேசிக்க முடியுமா? தமிழ் வரலாற்றில் நாம் யாரை எல்லாம் சந்திக்கிறோம்? தமிழியக்கங்கள் என்று இருப்பனவற்றோடு நமக்கு உறவு உண்டா? மறைமலை அடிகள், பாவாணர் என்று நாம் படிக்கிறோமா? நமக்குள் கவிதை உண்டா? கவிதை எழுதுகிறோமா? ஆய்வு செய்கிறோமா? தமிழை முழுமையாகக் கற்க வேண்டுமென்ற வெறி நமக்குள் இருக்கிறதா? இதனால் பயன் உண்டா? இப்படி எத்தனையோ கேள்விகள் நமக்குள் எழ வேண்டும். தமிழிலக்கியத்தினுள்ளும் அவ்வையார், கண்ணகி, மாதவி, மணிமேகலை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் என்று இத்தனை பேர்களை நாம் பார்க்கிறோம். இவர்களோடு நமக்கு என்ன உறவு? இவர்கள் தம் காலத்தில் எத்தகைய சிக்கலைச் சந்தித்தார்கள். எப்படி தீர்த்துக் கொண்டார்கள். இலக்கியத்தில் மட்டுமே இவர்கள் இருக்கிறார்களா? இவர்கள் நமக்குள் இல்லையா? இவர்களை நமக்குள் அனுமதிக்கிறோமா? இவர்களோடு நாம் உரையாடுகிறோமா? விவாதிக்கிறோமா? இவர்கள் தம் வாழ்வை வேறு வகையில் வாழ்ந்திருக்க முடியுமா? கண்ணகி போராடியது சரிதானா? மாதவி ஏன் துறவு மேற்கொள்ள வேண்டும்? அட்சயப் பாத்திரத்தோடு மணிமேகலை ஏன் அலைய வேண்டும். இப்படி எல்லாம் நாம் கேட்கிறோமா? பிறகு எப்படி இவர்களைப் புரிந்து கொள்ள முடியும்? இப்படியெல்லாம் நாம் கேட்கும் போது நம்மை நோக்கியும் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொள்ளத்தானே வேண்டும். அவ்வையாரின் அவலம் நம் பெண்களுக்கு நேராத அவலமா? கண்ணகி, மாதவி இன்றும் போராடத்தானே வேண்டும். சமூகத்தில் நிலவும் வறுமையைத் தீர்க்க மணிமேகலை மாதிரி ஏதாவது செய்ய வேண்டாமா? மாதவியின் துறவு இன்றும் இல்லாததுதானா? இப்படி எவ்வளவோ கேள்விகள் நமக்குள் எழத்தான் வேண்டும். தமிழிலக்கியத்தைக் கற்பதென்பது இறுதியில் நம்மை நாமே கற்றுக் கொள்வதாகத்தானே இருக்க முடியும். பெண்ணியம் என்ற விரிந்த பார்வையிலிருந்து இத்தகைய கேள்விகளை எழுப்பித் தமிழிலக்கியத்தை நாம் கற்க முடியும். மிதவாதப் பெண்ணியம் தீவிரவாதப் பெண்ணியம் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் பெண்ணியம் பற்றிய பார்வை நமக்குப் போதாது. தமிழிலக்கியம் என்ற பெரும் பரப்பிற்குள் இத்தகைய பார்வையோடு நுழைய முடியாது. (குறிப்பு: பழனி - அருள்திரு பழனியாண்டவர் கல்லூரிக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கட்டுரை) அறிஞர் திருமுருகனார் அவர்களின் நினைவாக… தமிழிசை அறிஞரும் தமிழ்ப் போராளியாக நம்மிடையே விளங்கிய முனைவர் திருமுருகனார் அவர்கள் மறைந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவருடைய நினைவைப் போற்றும் முறையில் திருமுருகனாரின் அறக்கட்டளையும் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் என்னை அன்போடு அழைத்த நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்த நண்பர் தமிழ்மணி அவர்கள் என்னை அழைத்தபோது புதுவை நண்பர் பலரையும் சந்திக்க வேண்டுமென்ற என் ஆர்வம் காரணமாகவும் என் இசைவைத் தெரிவித்தேன். எனினும் என் உடல்நிலை காரணமாக நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வதில் உள்ள இடர்கருதி என் இயலாமையைத் தமிழ்மணி அவர்களுக்கு நான் தெரிவித்ததை அவரும் ஏற்றுக் கொண்டார். எனினும் என் இயலாமைக்கு நண்பர்கள் பெரியவர் அனைவரிடத்தும் மன்னிப்பை வேண்டுகிறேன். ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி திருமுருகனார் அவர்கள் குறித்து என் உணர்வுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் முறையில் இந்தக் கட்டுரையை அனுப்புகிறேன். பெருமதிப்புக்குரிய திருமுருகனார் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்ட அன்று நான் பெருந்துயருக்கு ஆளானேன். 81 அகவையில் அவர் காலமானார் என்பது இயல்பான ஒரு நிகழ்வுதான் என்ற போதிலும் தமிழுக்கு நெருக்கடிகள் தொடர்ந்து அடர்ந்து வரும் இக்காலச் சூழலில் மிகச் சிறந்த ஒரு தமிழ்ப் போராளியை இழக்கிறோம் என்பதுதான் என் துயருக்குக் காரணம். எத்தனையோ தமிழறிஞர்களை இன்றும் நாம் பெற்றள்ள போதிலும் இவர்களில் பலருள்ளும் ஒரு போராளியை உடனடியாக நம்மால் குறிப்பிடுவதற்கில்லை. பேரா. இலக்குவனார், புலவரேறு பெருஞ் சித்திரனார், பேரா. சாலை இளந்திரையனார் ஆகியவர்களை நாம் இழந்த நிலையில் தமிழுக்காக அரசோடும் நிறுவனங்களோடும் போராடக் கூடியவராக திருமுருகனார் அவர்கள் மட்டுமே இருந்தார். பெயரளவுக்குத் தமிழ்ப் பேராசிரியர்களாக இருப்பவர்களை ஒதுக்கி விடுவோம். ஆற்றல்மிக்க தமிழறிஞராக இருக்கும் ஒரு சிலரும் தம் பதவிக் காலத்தில் அரசோடு ஒத்துச் செல்வதும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் அரசுக்கு எதிராக ஒரு சில கருத்துக்களை மட்டும் உதிர்ப்பதுமாக இருக்கும் தமிழறிஞர்கள் குறித்து நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இன்னும் ஒன்றை நண்பர்களோடு நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு தமிழுக்கு இடர் செய்யும் அரசை உறுதியாக கண்டிப்பதில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் தமிழ் ஆய்வு நிறுவனங்களும் உறுதியாக இருக்க முடியுமானால் தமிழுக்கு இத்தனை பேரழிவு நம் காலத்தில் நேர்ந்திராது என்பதை வெளிப்படையாகப் பேச இயலாதவர்களும் தம் மனத்திலேனும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வர். தமிழை இழந்த பிறகு நம் வாழ்வுக்கு என்ன ஆதாரம் இருக்க முடியும்? தமிழை அரசுதான் காப்பாற்றியாக வேண்டும் என்று நாம் எதற்காக ஓய்ந்திருக்க வேண்டும்? இது மக்கள் நாயகம் என்று எல்லோரும் பேசுகிறோம். அரசின் பணி என்று ஏற்றுக் கொண்ட அளவிலேயே நம் சிந்தனைகள் உணர்வுகள் இறுதியாக நம் ஆளுமை முதலிய அனைத்தையும் அரசதிகாரத்திற்கு நாம் விட்டுக் கொடுத்த பிறகு மக்கள் நாயகம் என்று நாமும் பேசுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? திருமுருகனார் அவர்கள் புதுவை அரசோடு போராடினார். அரசின் பணி தனக்கு வாய்த்த சமயத்தில் ஒரு சிலரால் தமக்கு நேர்ந்த இடையூறுகளால் மனம் தளராமல் உறுதியாக இருந்து தாம் மேற்கொண்ட பணியைத் திறம்படச் செய்தார். அமைச்சர் என்ற போதிலும் தமிழை இகழ்ந்துரைத்தவரைக் காய்வதில் அவர் தயங்கவில்லை. தமிழுக்கு இழிவு செய்யும் துணைவேந்தரோடு, தமிழறிஞர் சிலரோடு அவர் எதிர் நின்று தெளிவாக தம் கருத்துக்களை எழுதினார். தமிழ்ச் சான்றோர் என்று தம்மைத்தாமே நியமித்துக் கொண்ட ஒரு சிலர் தன்னைப் பொருட்படுத்தாத போது அவருக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். விடாப்பிடியாக தமிழுக்கு அழிவு செய்யும் இதழ்களுக்கு எழுதினார். இப்படி தமிழ்க் காப்புக்காக அவர் உறுதியாகச் செயல்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு நூறு இருக்கலாம். திருமுருகனார் அவர்களின் நினைவைப் போற்றும் முறையில் இன்று நாம் கூடியிருக்கிறோம். நம் மனச்சான்றை நாமே கொஞ் சம் உலுக்கிக் கொள்ளத்தான் வேண்டும். தமிழைக் காப்பதற்கும் வளர்ப்பதற்கும் நாம் பணிசெய்யும் இடங்களிலும் நம்மைச் சூழ உள்ள பல்வேறு வகையான ஊடகங்களோடும் நாம் நடத்திய போராட்டங்கள் என்று சிலவற்றையேனும் நம்மால் நினைவு கூற இயலுமா? என்னளவில் சிலவற்றைச் செய்திருக்கிறேன் என்றாலும் திருமுருகனார் அவர்களோடு ஒப்பிட்டுச் சொல்ல எனக்கு இயலாது. அரசைப் பல காரணங்களுக்காக நாம் காய்கிறோம். காயத்தான் வேண்டும். அரசு என்பது அப்படி ஒன்றும் நம்மைவிட மேன்மையானது என்று நாம் நம்ப வேண்டியதில்லை. அரசு எப்படி இன்று அமைகிறது? அரசு அதிகாரம் எப்படியெல்லாம் நடைபெறுகின்றன? என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் அறிவோம். இது நம் அரசுதான் என்று பெருமையோடு பேசுவதற்கில்லை. அரசோடு சேர்ந்து நாமும்தான் சிறுமைப்பட்டுப் போகிறோம். அரசு தன் செயல்முறைகளால் நம் அனைவரையும் எவ்வாறெல்லாம் அறிவோ, ஆளுமையோ, தன்மானமோ அற்றவர்களாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு நாளும் உணர்ந்து நொந்து சீரழிந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு அழிவை அரசோடு சேர்ந்து நாமும்தான் செய்து கொண்டிருக்கிறோம். தமிழை மட்டுமல்ல தமிழ் வரலாற்றையும் நம் கைகளால் நாமே சிதைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் தமிழர் என எப்படி தலை நிமிர்ந்து நம்மால் நிற்க முடியும்? திருமுருகனார் அவர்கள் நிமிர்ந்து நின்றார், போராடினார். நிறைவாழ்வு வாழ்ந்தார். அவரை நாம் நெஞ்சார வணங்குகிறோம். அவரைப் பற்றிய நினைவு நம்மைத் தன்மானமிக்க தலைவர்களாக மாற்றுமானால் நல்லது. அவர் முதல் தரமான தமிழறிஞர் என்ற உண்மை நம் அனைவருக்கும் தெரியும். நம்மில் பலருக்கு இல்லாத சில தனித்திறமைகளை அவர் பெற்றிருந்தார். தமிழிசைமீது நம்மில் பலருக்கு ஆர்வம் உண்டு என்றாலும் இசையோடு தமிழ் பாட நாம் பழகவில்லை. தமிழிலக்கியம் கற்றபோது இசைத்தமிழை நாம் கற்கவில்லை . நமக்கு யாரும் கற்றுத் தரவில்லை. நாடகம் என்றால் ஓரளவுக்கு நமக்குத் தெரியும். நாடகத்தமிழ் என்பது கூத்து முறைதான் என்பது நமக்குத் தெரியாது. திருமுருகனார் இவை பற்றி நமக்குச் சொன்னார். தமிழிசைக்கும் இசைத்தமிழுக்கும் என்ன வேறுபாடு என்று நமக்குச் சொன்னார். நாடகத்திற்கும் நாடகத் தமிழுக்கும் என்ன வேறுபாடு என்பதையும் கற்பித்தார். தமிழ்க் கல்வியில் இவற்றை உள்ளடக்க வேண்டுமென்ற முயற்சி நம் காலத்தில் இல்லை. தமிழின் ஆற்றலை நாம் எவ்வளவோ இழந்திருக்கிறோம். இசையும் கூத்தும் நம் உடல் இயக்கத்தில் இல்லை. உலகளவில் நாம் பார்க்கும் பொழுது எத்தனையோ சமூகங்களில் இன்றுவரை சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை இசையும் கூத்துமாய் இணைந்திருக்கின்றனர். மேடைத் தமிழ் நம்மை எவ்வளவோ சீரழித்துவிட்டது. மேடைத் தோரணைகள் நம் தமிழைக் கெடுத்தன. பட்டிமன்றங்கள் என்ற வடிவில் தமிழை தமிழ் மக்களை நாம் மலினப்படுத்தி வருகிறோம். சிரிக்க வைத்து நம் மக்களை நாம் மலினப்படுத்தி வருகிறோம். சிரிக்க வைத்து நம் மக்களைச் சிறுமைப்படுத்துகிறோம். சங்க காலத்தில் நாம் இசையோடும் கூத்தோடும் இணைந்திருந்தோம் என்பதற்கு இப்பொழுது நாம் பரிபாடல் முதலியவற்றிலிருந்து ஆதாரங்கள் காட்ட வேண்டியதில்லை. இயங்கு திறனை நாம் எப்படி இழந்தோம்? மனத்தளவில் மட்டும் உயர்ந்த சிந்தனைகளோடு கற்பனைகளோடு நாம் வாழ்ந்து வருகிறோம். சிந்தனைகளைச் செயல்படுத்தும் திறனை நம்மில் பெரும்பாலோனோர் முற்றாக இழந்து விட்டோம். நம் கண்முன் எத்தனை அழிவுகள் நடந்தாலும் தட்டிக்கேட்கும் திறன் நமக்கு இல்லை. கடைத்தெருவிலோ இரயில் நிலையங்களிலோ வேறு எத்தனையோ இடங்களில் நம் தன்மானத்திற்கு இழுக்கு நேரும் முறையில் எவர் பேசினால் கூட உணர்வு அற்றவராக இருக்கப் பழகிக் கொண்டோம். நாளுக்கு நாள் நம் சூழலும் நாறிக் கிடக்கின்றது. போராடிப் பயன் இல்லை என்ற முடிவு செய்து கொண்டோம். நிர்வாகத்திற்கு எதிராக நாம் போராட முடியாது. அரசோடு போராடினால் வாழ்வே கேள்விக்குறியாகி விடும். வரலாற்றில் தமிழன் தன்னை இப்படித்தான் இழந்தான். இதற்குச் சான்றாக நாமும்தான் இருக்கிறோம். என்று இந்த இழிவிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ளப் போகிறோம்? தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து பலர் உரையாடும் பொழுது கூட நாம் இதைச் சுட்டிக் காட்டத் தவறுகிறோம். சிறிதளவாவது தன்மான உணர்வை நாம் மிச்சம் வைத்திருக்கத்தான் வேண்டும். இசைத்தமிழை நாம் சுவைக்கிறோம் என்பதில் ஐயமில்லை. தமிழிசை வளர்ச்சியில் நமக்கும் பங்கு உண்டு. தமிழ் அறிந்தவர் என்ற முறையில் நம் பங்கைச் செலுத்தத்தான் வேண்டும். தமிழ் இலக்கணம் குறித்து திருமுருகனார் அவர்களின் விரிந்த நுட்பமான அறிவு கண்டு வியப்படைகிறோம். நன்னூலுக்கு நிகராக இக்காலத் தமிழுக்கு இலக்கணம் எழுதும் அறிவும் உணர்வும் அவருக்கு இருந்த போதிலும் அவர் செய்யவில்லை என்பது குறித்து நாம் அவரைக் குறை சொல்ல முடியாது. தமிழை எத்தனையோ வழுக்களோடு இன்று மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரிய பெருமக்களும் எழுதுகின்றனர். ஊடகங்கள் செய்யும் இலக்கண வழுக்களுக்கு அளவுதான் இல்லை. மக்கள் தொலைக்காட்சியில் பேரா. நன்னன் அவர்கள் ஓயாமல் சாடுகிறார், கதறுகிறார். இவர்களது உணர்வில் நாமும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். நம் காலத்தில் தமிழின் அழிவு கண்டு நொந்து பயனில்லை. தமிழைக் காக்க நம்மளவில் சிலவற்றையேனும் திட்டமிட்டுச் செய்ய முடியும். திருமுருகனார் அவர்கள் தமிழுக்கு, தமிழிசைக்கு, தமிழ் இலக்கணத்திற்குச் செய்த மாபெரும் பணி என்பது அவர் சிந்துப்பாவுக்கு இலக்கண வரையறை செய்து தந்தார் என்பதிலிருந்து நாம் அனைவரும் அறிவோம். தமிழிசையிலும் இலக்கண புலமையிலும் அவருக்கு இருந்த தன்னிகரற்ற அறிவின் ஆற்றல் மிக்க விளைவு என்று இதைக் குறிப்பிடலாம். கோவைக்கு அவர் ஒருமுறை வந்த போது தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் இசைவு பெற்று தமிழ்க் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்ற ஏற்பாடு செய்தேன். தமிழிசையின் இலக்கணம் குறித்து அவர் பேசியதோடு பழந்தமிழிசை, தற்காலத் திரைப்பட இசை ஆகியவற்றில் எல்லாம் தமிழிசை இலக்கணம் எவ்வாறு பொருந்தியிருக்கிறது என்று விளக்கியபோது தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்லாது எனக்கும் ஏற்பட்ட வியப்புக்கு அளவில்லை. தமிழிசை இலக்கணம் பற்றி எனக்குத் தெரியாது. இசைத்தமிழில் ஈடுபாடு பெருமளவு எனக்கு உண்டு என்றாலும் இனி என்னால் இலக்கணம் கற்றுக் கொள்ளவும் இயலாது. தமிழ்க் கல்லூரி பாடத் திட்டத்தில் தமிழிசை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அதற்கான பாடத் திட்டம் ஒன்றைத் திருமுருகனார் தரவேண்டும் என்றும் அடிகளார் கேட்டுக் கொண்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. தமிழ்க் கல்லூரிகளிலும் தமிழ் என்பது இப்படித்தான் இருக்கிறது. தேவாரப் பாடல் தொகுதிகள் பல வெளிவந்திருப்பதும் திருமடங்கள் அவற்றை வெளியிட்டிருப்பதும் நாம் அறிவோம். தேவாரப் பாடல்கள் யாப்பிலக்கண அடிப்படையில் சீர்பிரித்து அச்சிட்டிருப்பது தவறு என்பதைத் திருமுருகனார் எடுத்துரைத்தார். பண் இசைக்குரிய முறையில் பாடல்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்றார். இத்தகைய ஒரு பதிப்பை அவர்தான் செய்திருக்க முடியும். இதுவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. திருமுருகனார் அவர்களைக் கொண்டு நாம் எவ்வளவோ செய்திருக்க முடியும். நமக்கு நேர்ந்திருக்கும் இழப்புக்கு அளவில்லை. எத்தனையோ தமிழறிஞர்களை, தமிழ்ச் செல்வங்களை நாம் இழந்திருக்கிறோம். இதன் தொடர்பாக நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். ‘முனைவன் செய்தது முதல் நூல்’ என்பது இலக்கணம். ஒரு குறிப்பிட்ட துறையில் முழு அளவில் முதல் நூல் எழுதியவர்க்கே முனைவர் என்ற தகுதி பொருந்தும். முதல் நூல் என்பது அசலான நூல். அப்பாத்துரையார், வ.சுப. மாணிக்கனார் போன்றோர் செய்த சில அசலான தமிழாய்வுகளை நாம் இங்கு நினைவு கூறலாம். சிந்துப்பாவிற்கு இலக்கணம் வரையறை செய்த திருமுருகனார் அவர்களின் ஆய்வு ஓர் அசலான ஆய்வு. இவரது நூல் தமிழுக்கு முதல் நூல். முனைவர் என்ற தகுதி இவருக்கே பொருந்தும். முனை மழுங்கியவர்கள் 10, 20 நூல்களைப் பார்த்து அவற்றிலிருந்து அங்கங்கே களவாடித் தொகுத்துக் கொள்வது ஆய்வு என்ற நெறிக்கு அறவே பொருந்தாது. இவர்கள் முனை மழுங்கியவர்கள். இத்தகைய களவாணிகளைத் தமிழ்த் துறைகள் நிறையவே உற்பத்திச் செய்கின்றன. இவர்கள் அனைவரும் தமிழைத் திட்டமிட்டு அழிப்பவர்கள். ஏதோ ஒரு முனைவர் பட்டம் வாங்கிப் பிழைத்துக் கொள்ளட்டும் என்ற பெருந்தன்மையோடு அனுமதிக்கிறார்களாம். இத்தகைய பேராசிரியர்களும் அசலான ஆய்வு என்ற ஒன்றைச் செய்திருப்பார்களானால் களவாணிகளை எப்படி இவர்கள் ஊக்குவிப்பார்கள்? திருமுருகனார் ஆன்று அவிந்த கொள்கைச் சான்றோர். இவரால் கள்ளர்களைச் சாடத்தான் முடியாது என்றாலும் இத்தகையவர்களைக் கண்டு எவ்வளவு உள்ளம் நைந்திருப்பார். திருமுருகனார் அவர்கள் பள்ளியில் தமிழாசிரியராகத்தான் பணி ஓய்வு பெறும் வரை பணியாற்றினார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன் என்றாலும் ஓர் அசலான தமிழ்ப் பேராசிரியராக இருந்து அவர் தமிழ்ப் பணியாற்றினார். அவர் மிகச் சிறந்த நூலாசிரியராகவும் இதழாசிரியராகவும் ம.இலெ. தங்கப்பா அவர்களோடு இணைந்து செயல்பட்டார். மாணவர்களுக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைக் கற்றுத்தரும் முறையில் அவர் வகுப்புகள் நடத்தினார். தமிழின் யாப்பு வகைகள் அனைத்திலும் மற்றவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்ற முறையில் பேரார்வத்தோடு செயல்பட்டார். ‘தெளிதமிழ்’ இதழில் பல்வகை யாப்புகளை வெளியிட்டார். மரபுக் கவிதையில்தான் அவர் உள்ளம் ஈடுபட்டிருந்த போதிலும் புதுக்கவிதையை அவர் ஒதுக்கவில்லை. புதுக்கவிதைக்குள்ளும் யாப்பின் சில கூறுகள் தொடர்வதை அவர் எடுத்துக்காட்டினார். குறட்பாக்களை நம் காலத்துக்கு ஒத்த முறையில் பொருள்படுத்தும் நோக்கில் சிலர் எழுதியபோது அவர்களின் முயற்சியை அவர் நெறிப்படுத்தவே முற்பட்டார். அவரும் புதிய நோக்கில் கவிதைகள் எழுதினார். தமிழாசிரியராக இருந்த ஒருவர் இத்தகைய பன்முகப் பரிமாணங்களோடு தன் காலம் முழுவதும் எழுதிச் செயல்பட்டார். உண்மையில் தமிழ் ஒருவரது நெஞ்சில் ஆழப் பதிந்திருக்கும் பொழுது இவ்வாறெல்லாம் பன்முக நோக்கில் எழுதாமலும் செயல்படாமலும் இருக்க முடியாது. தமிழின் ஆற்றல் இது என நம்மால் புரிந்து கொள்ள முடியும். நமக்கு முந்திய தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள், இவ்வாறெல்லாம் உண்மையாகவும் உறுதியாகவும் செயல்பட்டதன் விளைவாகவே தமிழக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நேர்ந்தன என்பது வரலாறு. ஆனால் இன்றோ நம் தமிழாசிரிய பெருமக்கள் தமிழுணர்வை இழந்து வருமானம், வாழ்க்கை என்பதையே முதன்மையாகக் கருதி தமக்குள் சுருங்கி தமிழர் என்ற அடையாளத்தையும் இழந்து வருவதைத்தான் இன்று நாம் காண்கிறோம். இவர்களுக்குள் தமிழ் எப்படி தன் சாரத்தை, சத்தை இழந்தது என்பது ஒரு கொடுமை. இதன் காரணமாகவே வாழ்வின் அர்த்தங்களைத் தொலைத்து யார் யாருக்கோ காவடி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்தான் தங்களுக்குச் சோறு போட்டது என்பதைக் கூட மறந்தவர்களாய், நன்றி கெட்டவர்களாய் இவர்கள் வாழ்கிறார்கள். திருமுருகனார் அவர்களை நெஞ்சில் வைத்து நினைக்கும்பொழுது இப்படியெல்லாம் உணர்வுகள் எனக்குள் கொந்தளிக்கின்றன. நானும் ஒரு தமிழாசிரியனாகத்தான் வாழ்ந்தேன். கோவையிலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் நம் காலத்தில் தலைசிறந்த அறிஞர்களிடம் நான் தமிழ்க் கற்றேன். 50, 60களில் தமிழுணர்வில் தமிழகமே தழைத்திருந்தது. திரு.வி.க., தெ.பொ.மீ., சேதுப்பிள்ளை, பாவாணர், தண்டபாணி தேசிகர், அப்பாத்துரையார், அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம் இப்படி எத்தனையோ தமிழ்ச் சான்றோர், தமிழை, தமிழ் அரசியலை, தமிழாய்வை வளம் பெருக்கிய சூழலில் எனக்குள்ளும் தமிழுணர்வு உறுதியாய்த் தங்கியது. தமிழ் என் வாழ்வை வசப்படுத்திக் கொண்டது. தமிழோடு வாழ்வதுதான் எனக்கு வாய்த்த பெரும் பேறு. வள்ளுவரையும் இளங்கோவையும் சங்கத் தமிழ்ச் சான்றோரையும் கம்பனையும் வள்ளலாரையும் கொண்ட தமிழ்ச் சமூகம் எப்படித் தன்னை அழித்துக் கொள்ள முடியும்? பாரதி அற்புதமாய்ப் பாடினார். வள்ளுவரின் குறளறமும் இளங்கோவின் அரசியல் நெறியும் கம்பனின் மெய்ப்பொருள் தேடலும் ஆழப் பதிந்திருக்கும் தமிழ்ச்சாதி அமரத்துவம் உடையது என்றார். இப்படிப் பாடிய பாரதிதாசன் தன் கால நிலவரங்களை எண்ணிப்பார்க்கும் பொழுது, ‘’விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்’’ என்று கதறினார். இன்று நாமும் இப்படித்தான் கதறுகிறோம். திருமுருகனாரைப் பற்றிய நினைவு நம்மை இப்படிக் கதற வைக்கிறது. திருமுருகனார் அவர்களை நெஞ்சில் வைத்துப் போற்றுகிற நான் சில கூறுகளில் அவரிடமிருந்து வேறுபடவும் செய்கிறேன். இப்படி நான் வேறுபடுவதால் திருமுருகனார் அவர்களை எவ்வகையிலும் நான் குறைத்து சொல்ல மாட்டேன். புலமைத் தமிழையும் நான் போற்றத்தான் செய்கிறேன். கோபாலய்யர் என்று தொடங்கிப் பல தமிழ்ப் பெரியார்களை நாம் இங்கு நினைத்துக் கொள்ளலாம். பழந்தமிழின் பேராற்றலை இவர்கள்தான் தமக்குள் நிறைவாகக் கொண்டிருந்தார்கள். பழந்தமிழை இவர்கள்தான் நம் காலம் வரை காப்பாற்றினர். பழந்தமிழ் இல்லாமல் புதிய தமிழும் இல்லை. தமிழிலக்கியத்தோடு மார்க்சியம் முதலியவற்றை ஆழமாக பயின்றதன் விளைவாக தமிழை நான் பெரிதும் நேசிக்கிறேன். மார்க்சியம் பயின்றதனாலும் தமிழின் ஆற்றலை நான் கூடுதலாக அறிந்திருக்கிறேன். தமிழ் இல்லாமல் தமிழனுக்கு வாழ்வில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்ந்திருக்கிறேன். புதுக் கவிதையைப் போற்றும் பொழுதே மரபுக் கவிதையை என்னால் குறைத்துப் பேசவே முடியாது. ஆற்றல் மிக்கது தமிழறம். இந்த அறத்தைச் சமத்துவம் என்றும் சமதர்மம் என்றும் நம் காலத்துக்கு ஒத்த முறையில் பொருள்படுத்துகிறேன். திறனாய்வுத் துறையில் நான் கொண்ட ஈடுபாட்டின் விளைவாக வள்ளுவர், இளங்கோ, கம்பர் முதலியவர்களுக்குள் இயங்கிய திறனாய்வுப் பார்வையைப் புரிந்து கொள்கிறேன். வள்ளுவரோ இளங்கோவோ தம் கால அரசியலைப் பொருளியலை சமூகத்தை இலக்கிய மரபைத் திறனாய்வுக்கு உட்படுத்தாமல் ஆற்றல் மிக்கத் தம் படைப்புகளை உருவாக்கியிருக்க முடியாது என்பது என் துணிபு. திருமுருகனார் அவர்களின் பன்முகப் பார்வையை இவ்வகையில்தான் போற்றுகிறேன். ஒரு தமிழாசிரியர் பழங்காலத்தோடு, பழந்தமிழ் இலக்கியத்தோடு மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ள முடியாது. இலக்கியம் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. தமிழ் மரபும் காலத்திற்கேற்ப தன்னைப் புதுமை செய்து கொள்கிறது. வள்ளுவர் என்று தொடங்கினால் வள்ளலாருக்குள், பெரியாருக்குள், பாரதியாருக்குள் பாரதிதாசனுக்குள் வந்து சேர்ந்தாக வேண்டும். தமிழிலக்கியம் முழுவதும் இயங்குவது இத்தகைய நீரோட்டம். ஈழத் தமிழகம் நமக்கு கற்றுத் தந்த பாடத்தை நாம் மறக்கவே முடியாது. வரலாறு என்பது இன்று உலகளவில் ஊடுருவியதாக இருக்கிறது. உலகளவில் பரவியுள்ள பொருளியல் மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு ஈழத் தமிழகம் பலியாகியது. இது மட்டுமல்ல, உலகளவிலான அரசியல், பொருளியல் முதலிய ஆதிக்கங்களுக்கு இடங்கொடுத்து நாமும்தான் அழிந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய வரலாற்றுப் போக்கைப் புரிந்து கொள்ளாமல் எதிர்வினை தராமல், தமிழை, தமிழ் வரலாற்றை நம்மால் காப்பாற்ற முடியாது. இறுதியாக, திருமுருகனார் அவர்களை நெஞ்சில் வைத்துப் போற்றுவதில் நண்பர்கள் அனைவரோடும் நானும் இணைந்து கொள்கிறேன். திருமுருகனார் அவர்களின் குடும்பத்தினர்க்கும் எனது பணிவான வணக்கங்கள். நன்றி ! ** *** திருமுருகனார் அவர்கள் தம் காலந்தோறும் செய்த பணிகள் சிலவற்றை, அவரை நம் நெஞ்சில் நிறுத்தி நம்மால் இயன்றவரை நாமும் தொடரத்தான் வேண்டும். அவரைப்போல நம் இலக்கணப் புலமையைத் தமிழ் இசை பற்றிய அறிவை நாமும் பெறுவதோடு நம் மாணவர்க்குள்ளும் நம் மக்களுக்குள்ளும் கொண்டு செல்ல வேண்டும். நெடுங்காலத் தமிழ் யாப்பியல் மரபை நாம் இழந்துவிட முடியாது. இதில் நம் பயிற்சியை இயன்றவரைத் தொடர வேண்டும். புதுக்கவிதை என்பது நம் காலத்திற்கு உரியதாய் வளர்ந்துவிட்ட நிலையிலும் மரபு முறையிலான யாப்பை, யாப்பின் நுட்பங்களை, யாப்பின் பேரழகை நம்மால் இழந்துவிட முடியாது. பழந்தமிழ்க் கவிதையையும் யாப்பையும் போற்றும் அதேசமயம், கவி என்றால் என்ன? கவித்திறனை நமக்குள் எப்படி வளர்த்துக் கொள்ள முடியும்? வள்ளுவர் முதலியவருக்குள் செயல்பட்ட கவித்திறன் குறித்த நுட்பங்கள் யாவை என்பனவற்றை நாம் ஆய்ந்து கற்க வேண்டும். தமிழ் அறிந்தவன் கவிதை எழுதாமல் வாழ முடியாது. காலந்தோறும் தமிழ்க் கவிதை தன் காலத்திற்குரியதாய் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு இருந்ததைப் போலவே நம் காலத்திற்குரிய கவிதையும் நம் காலத்திற்குரியதாய், நம் காலத்துச் சிக்கல்களுக்கு எதிர்வினை தருவதாய் அமையத்தான் வேண்டும். தமிழறம் என்பதை தமிழ்க் கவிதை என்றும் இழக்கவில்லை. சமத்துவம், சமதர்மம் என்பதுதான் தமிழறம் என்ற உணர்வை நாம் இழக்க முடியாது. திருமுருகன் அவர்கள் நம் காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் போராளியாய் விளங்கினார். தமிழுக்கு நம் காலத்தில் நெருக்கடிகளும் கூடுதலாகி வருகின்றன. இந்நிலையில் அரசோடும் நிறுவனங்களோடும் போராடாமல் தமிழைக் காக்கவும் முடியாது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மேன்மையை அழிப்பதில் முனைந்து செயல்படுவதை நாம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது. தமிழியக்கங்கள் இவ்வகையில் தமிழ் உணர்வாளர்களைத் திரட்டி தமிழ்க் காப்பில் முனைந்து நிற்கத்தான் வேண்டும். இவற்றோடு அண்மையில் நமக்கு வாய்த்திருக்கிற செம்மொழி என்ற வாய்ப்பைச் செயல்படுத்தும் முறையில் நாம் முனைந்து செயல்பட வேண்டிய இன்னொரு பணியும் நமக்கென இருக்கிறது. இது பற்றி இங்கு சற்று விரிவாக என் கருத்துக்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருமுருகனார் அவர்களின் நெஞ்சுக்கு இதம் தருவதாகவும் இப்பணி அமையுமென்றே நம்புகிறேன். தமிழைச் செம்மொழியென உலகளவில் அறிஞர் ஏற்றுக் கொண்ட பிறகும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நாம் போராடித்தான் தமிழைச் செம்மொழியென இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு ஏன் தமிழுக்கான இந்த தகுதியை இவ்வளவு காலம் மறுத்து வந்தது என்பது பற்றிய உண்மையை நாம் அறியாமலும் இல்லை. இந்திய நாகரிகம் என்று அறியப்படும் பெரும் தொகுப்பின் மேலடுக்கு என்பது ஆரிய நாகரிகம்தான் என்பதை நாமும் அறிவோம். ஆனால் இந்திய நாகரிகம் என்பதன் அடித்தளம் முழுவதும் திராவிடர் / தமிழர் நாகரிகம்தான் என்பதை அறிஞர் பலரும் ஏற்கெனவே அறிந்துள்ளனர். இந்தியா என்று சொல்லப்படும் இந்தத் துணைக் கண்டத்தின் தொன்மை நாகரிகம், திராவிடர் நாகரிகம்தான். இந்தியாவின் வேளாண்மை நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, கட்டிடம், சிற்பம், இசை, மருத்துவம் - இவற்றோடு அறிவியல் - கணிதம் - தர்க்கம் - மெய்யியல் - முதலிய அனைத்தினுள்ளும் திராவிடரின் பங்களிப்பைத் தான் காணமுடியும். தமிழைப் பார்த்து தன்னைத் திருத்திக் கொண்ட மொழிதான் சமற்கிருதம். வேதம், உபநிடதம், இதிகாசங்கள் என உள்ளனவற்றுள்ளும் தமிழர் பங்களிப்பைத் தெளிவாகவே காண முடியும். சாங்கியம், ஆசிவகம் முதலியனவும் தமிழர் தந்தவை. வட இந்திய மொழிகள் அனைத்தின் தொடரமைப்பு என்பதைத் தமிழின் தொடரமைப்போடு தான் வைத்துக் காண முடியும். ஆரியரது வேதம் முதலியவை மக்களின் உலகியல் வாழ்வை மறுக்கக் கூடியவை. தமிழர் வாழ்வும் மெய்யியலும் மண்ணுலக வாழ்வுக்கு, அறத்திற்கு உழைப்புக்கு பகிர்வுக்கு அழுத்தம் தருபவை. இன்று பெரிதாகப் பேசப்படும் இந்துத்துவம் என்பதை தமிழ்ச் சமூகம் மறுத்தே வந்திருக்கிறது. மன்னருக்கோ, மேட்டுக் குடிகளுக்கோ வருணமுறை, சில காலங்களில், மக்களை ஒடுக்குவதற்கு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு வருண முறை என்றும் தேவைப்படவில்லை. சங்க காலச் சான்றோர் முதற்கொண்டு வள்ளலார்வரை வருண முறைக்கு எதிரானவர்கள். சித்தர் இலக்கியம் தான் தமிழிலக்கியத்தின் மையம். சித்தர்களின் சிந்தனையின் தொடர்ச்சியில்தான் பெரியாரை நாம் வைக்கிறோம். தமிழ் மக்களின் இத்தகைய வரலாற்றை இந்துத்துவ வாதிகள் ஏற்பதில்லை. மதிப்பதில்லை. இந்தியாவைத் தமிழ் இந்தியா என்று கந்தையா பிள்ளை குறிப்பிட்டார். அப்பாத்துரையார் அவர்களின் ஆய்வும் இதனை ஒத்ததே. இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் தமிழன் ஒதுக்கப்படுகிறான். சமற்கிருதத்திற்கு இந்திய அரசு தரும் மரியாதையைத் தமிழுக்குத் தருவதில் இன்னும் தயக்கம் இருக்கிறது. இத்தகைய சூழலில்தான் செம்மொழித் தகுதி நமக்கு வாய்த்திருக்கிறது. இந்திய வரலாற்றில் தமிழன் தன் வரலாற்று இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கு இஃது ஒரு பெரும் வாய்ப்பு. இந்திய அரசியலிலும் பொருளியலிலும் தமிழன் தனக்கான இடத்தை மீட்டுக் கொள்வதற்கும் இஃது ஒரு வாய்ப்பு. இத்தகைய பேருணர்வு நம்மை ஆட்கொள்ள வேண்டும். நாம் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை . இந்திய அரசுக்கு தமிழன் தன் அரசியலைப் பொருளியலை அடகு வைக்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடங்கொடுத்து தமிழர் தம் வாழ்வின் ஆதாரங்களை இழக்க முடியாது. செம்மொழி என்று பேசி நாம் தருக்கு கொள்வதற்கும் இடமில்லை. தமிழ்ச் செம்மொழி என்பதற்கான தகுதியை நாம் பெறவேண்டும். வரலாற்றில் நம்மை மீட்டுக் கொள்வதற்கு இஃது ஒரு பெரும் வாய்ப்பு. திருமுருகனார் அவர்களின் நினைவை நாம் போற்றுகிறோம் என்பதற்கு உண்மையான உரைகல் என்பது இத்தகைய உணர்வை நாம் பெறுவதாகத்தான் இருக்க முடியும். நன்றி! (குறிப்பு: புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு மையம் திருமுருகன் அவர்களின் நினைவாக நடத்திய கருத்தரங்கில் முன் வைக்கப்பட்ட சிறப்புரை) புது வெளிச்சம் கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் உபநிடதங்களைப் பற்றிய இந்த ஆய்வு நூல் உபநிடதங்கள் பற்றி ஒரு புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய ஆய்வு தமிழுக்கு முற்றிலும் புதியது. பொதுவாக சமயவாதிகளுக்கோ குறிப்பாக இந்துத்துவவாதிகளுக்கோ இவருடைய ஆய்வு ஏற்கத்தக்கதாக இருக்க முடியாது. வேதங்களை இவர் மதிக்கவில்லை. பகவத் கீதையை அவர் ஏற்கவில்லை. சங்கரரைச் சாடுகிறார். வருண தர்மத்தைச் சாடுகிறார். சங்கரரோடு, இராமானுசர், மத்துவர் ஆகியோரையும் சாடுகிறார். நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. இவரது மதிப்பீட்டில் திருக்குறள் உபநிடதம் ஆகிறது. திருமந்திரமும் ஓர் உபநிடதம். சிவவாக்கியரைக் கொண்டாடுகிறார். இவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் ஏன் அறியாமை இருளில் மூடிக்கிடக்க வேண்டும் என்று சாடுகிறார். உபநிடதங்களின் உண்மைப் பொருளைச் சங்கரர் மட்டுமல்லாமல் இராதாகிருஷ்ணன் முதலியவர்களும் ஏன் மறைக்க வேண்டும் என்று கேட்கிறார். இந்திய நாட்டை அறியாமை என்ற பேரிருளில் ஆரியர் / பிராமணர்கள் ஆழ்த்தி விட்டார்கள் என்கிறார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டது இதனால்தான் என்கிறார். ஆரியர் திராவிடர் போராட்டம் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் தேவாசுரப் போர் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடைபெற்ற போர் என்கிறார். (ஆரியர்கள் தேவர்கள். திராவிடர்கள் அசுரர்கள்). இப்படித்தான் கவிஞர் கருதுகிறார். சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லாத இடத்தில் எனக்கு ஏது சுதந்திரம் என்று கேட்கிறார். நான் கூலிக்காரன், நான் அடிமை எனக்கு எப்படி சுதந்திரம் வாய்க்கும் என்கிறார். என்மேல் எனக்கு சுயாதீனம் இல்லை என்கிறார். என்மேல் எத்தனையோ ஆதிக்கங்கள் அழுத்துகின்றன. நான் பாராதீனப்பட்டவன். நான் மட்டுமல்ல. என்னைப்போல் இந்தியாவில், தமிழகத்தில், எத்தனை கோடி மக்கள் இப்படி வாழ வைக்கப்பட்டுள்ளனர் என்று கேட்கிறார். நாம் இருளில் வாழ்கிறோம். நமக்குத் தெய்வங்கள் எது என்று தெரியாது. கல் உருவங்களைத் தெய்வங்கள் என நாம் நம்பி வழிபடுகிறோம். கல்லில் தெய்வம் இல்லை. தெய்வம் வெளியிலில்லை. தெய்வம் நமக்குள்ளிருக்கிறது. எனக்குள் இருப்பது தெய்வம். நான் தெய்வம். நான் பிரம்மம். நான் ஒளிமயமானவன். நான் யாருக்கும் அடிமையில்லை. என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. நான் சுதந்திரமானவன். நான் மட்டுமல்ல. அனைத்து மனிதரும் சுதந்திரமானவர்கள். பிரம்மத்தை உணர்ந்தவன் பிறருக்கு அடிமையாக மாட்டான். சங்கரர், உண்மையை மறைத்தார். ஞானம் எதுவென்பதை நமக்குச் சொல்லாமல் மறைத்தார். ‘ஓம் தத் சத்’, ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற உபநிடதம் வாக்கியங்களுக்கு என்ன பொருள்? நான் பிரம்மமாயிருக்கிறேன். நான் மட்டுமா பிரம்மம். நீயும் பிரம்மம் எல்லாமும் பிரம்மம். திருமூலர் சொல்வது மாதிரி தேனும் சுவையும் வேறாக முடியாது. சிவனும் சிவமும் ஒன்றுதான். பிரம்மத்தையறிந்தவர்தான் பிராமணன். பிராமணன் என்பது ஒரு ஜாதிப் பெயரா? இல்லை இருக்க முடியாது. சத்திய காமன் ஜபாலாவுக்குப் பிறந்தவன். சத்திய காமனுக்குத் தன் தந்தை பெயர் தெரியாது. தாயைக் கேட்கிறான். இள வயதில் ஆசிரமத்தில் நான் பணிபுரிந்தேன். யாருக்கு நீ பிறந்தாய் என்பது எனக்குத் தெரியாது என்கிறாள் தாய். சத்தியகாமன் வேதம் கற்க கவுதமனிடம் செல்கிறான். கவுதமர் உன் கோத்திரம் என்ன? என்று கேட்கிறார். சத்தியகாமன் உண்மையைச் சொல்கிறான். உண்மையை நீ சொன்னதால் நீதான் பிராமணன். உனக்கு நான் வேதம் கற்பிக்கிறேன் என்கிறார் கவுதமர். பிராமணன் என்பது சாதிப் பெயரில்லை. உண்மை சொல்பவன், அறநெறியில் நடப்பவன் பிராமணன். சங்கரர் உண்மையை மறைத்தார், நம்மை இருளில் ஆழ்த்தினார். உபநிடதங்களில் ஓயாமல் இடம் பெறும் ரிதம் என்ற கருத்து கவிஞர் வெள்ளியங்காட்டானைப் பெரிதும் ஈர்க்கிறது. ரிதம் என்பது ஒழுங்கு, நெறி, சத்தியம், வாய்மை எனப் பல பொருள்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறார். பிரபஞ்சம் முதல் எல்லா உயிர்களினுள்ளும் மனித வாழ்வினுள்ளும் இருப்பது இந்த சத்தியம். இயங்குவது இந்த நெறி / நியதி. இதுவே பிரம்மம். இது பிரம்மார்த்திகம். இதை அறியாதவர் தெய்வத்தை அறியாதவர். கவிஞர் மேலும் சிலவற்றைக் கூறுகிறார். குருமார்கள் இந்தப் பேருண்மையை எடுத்துரைப்பதில்லை. குருபக்தி என்ற பெயரில் 12 ஆண்டுகள் இந்தப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இறுதியில் ஏதோ காதில் ஓதுகிறார்கள். காலில் விழுந்து வணங்கு என்கிறார்கள். இப்படி இவர்கள் உண்மையை மறைக்கிறார்கள். பிரம்மம் எது என்பதை மறைக்கிறார்கள். இப்படிக் கூறிய பிறகு வள்ளுவரை மேற்கோள் காட்டுகிறார். வள்ளுவர் ‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு’ என்னும் குறளை மேற்கோள் காட்டுகிறார். மேல், கீழ், இருள், வெளிச்சம், பகல், இரவு, இனிப்பு, கசப்பு, ஆண், பெண் என்று உலக இயற்கையினுள் உள்ள இருமைகள் பற்றிப் பேசுகிறார். இது உலக நியதி என்கிறார். வாழ்க்கை நியதி என்கிறார். வாழ்வின் இயங்கு சக்தி என்கிறார். உபநிடதக் கருத்தும் வள்ளுவர் கருத்தும் ஒன்று என்கிறார். சத்யமேவ ஜயதே என்னும் உபநிடதக் கருத்தைக் கவிஞர் சிறப்பாக விளக்குகிறார். சத்தியமே பிரம்மம். சத்தியமே தெய்வம். சத்தியமே அழகு. சத்தியத்தைப் பின்பற்றுவதே தவம் என்றும் உபநிடதம் கூறுகிறது. இது காடுகளுக்குச் சென்று சடைமுடி தரித்து இல்லறம் துறந்து வாழ்வதை தவம் என்று உபநிடதம் கூறவில்லை என்கிறார். உடனடியாக தவம் குறித்து வள்ளுவரின் கருத்துகளை விரிவாக எடுத்துரைக்கிறார். உபநிடதங்களில் உருவ வணக்கம் சொல்லப்படவில்லை. கோவில்கள் பற்றி உபநிடதம் பேசவில்லை என்கிறார் கவிஞர். கோவில்கள், உருவ வணக்கம் முதலியவற்றைக் கொண்டு வந்தவர் பிராமணர் என்று சொல்லி கோவில்கள், கடவுளுக்கு மகிமை கற்பித்தல் அரசுக்கு வருமானம் சேகரித்தல் பற்றியெல்லாம் அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் சொல்லும் கருத்துகளை மேற்கோள் காட்டுகிறார். நடுகல் வணக்கம் தவிர தமிழனுக்கு வேறு தெய்வமில்லை என்று புறநானூறு பாடல் வரியை மேற்கோள் காட்டுகிறார். சீவனே சிவலிங்கம் என்று திருமூலர் மேற்கோள் காட்டுகிறார். சுட்டச் சட்டுவம் கறிச்சுவை யறியுமோ என்று சிவவாக்கியரை மேற்கோள் காட்டுகிறார். இத்தகைய கருத்துகள் - மூலம் பிராமணர் செய்த சதியைக் கவிஞர் அம்பலப்படுத்துகிறார். இதன் பிறகு தியானம் என்று பிராமணர்கள் ஓயாமல் சொல்லும் கருத்தின் உண்மை எது என்பதை கவிஞர் விளக்குகிறார். தியானம் என்பது அனுட்டானம் என்கிறார். உபநிடதக் கருத்தின்படி சங்கற்பம் - அதாவது குறிக்கோள். சித்தம் - வைராக்கியம் இதன்பிறகு தியானம் என்ற உபநிடதக் கருத்தை எடுத்துரைக்கிறார். கண்களை மூடி புலன்களை அடக்கி ஏதாவது நெஞ்சில் உருப்போடுவது அல்ல என்கிறார் கவிஞர். ஐன்ஸ்டீ னும், எடிசனும் சோதனைகள் செய்து ஒரே குறிக்கோளோடு வைராக்கியத்தோடு நினைவை ஒருநிலைப்படுத்தி உண்மைகளைக் கண்டறிவது தியானமன்றி வேறில்லை என்கிறார் கவிஞர். இதைத் தொடர்ந்து உபநிடதம் கூறும் தியாகம் என்பதைக் கவிஞர் விளக்குகிறார். தன்னலம் துறந்து பிறர் நலத்திற்காக செயல்படுவது தியானம். உபநிடதம் இத்தகைய செயல்பாட்டைத்தான் பாராட்டுகிறது என்கிறார். உடனடியாக காந்தி, திருப்பூர் குமரன் முதலியவர்களைக் கவிஞர் நினைவுப்படுத்திக் கொள்கிறார். இவ்வாறெல்லாம் உபநிடதக் கருத்துக்கள் சிலவற்றை விளக்கி வந்த கவிஞர் பிராமணர்களோ மற்றவர்களோ சொல்வது போல புனர் ஜென்மம் அதாவது மறுபிறப்பு என்பதற்கு உபநிடதங்களில் இடமில்லை என்கிறார். செடி காய்கிறது விதைகளை மீண்டும் நிலத்தில் இடுகிறோம். விதை முளைக்கிறது. இதுவே விதையின் மறுபிறப்பு. இதே போலத்தான் மனிதர்களுக்கும் மறுபிறப்பு. பிறப்பு, மறுபிறப்பு என்ற பொய்களை நம் மக்கள் நெஞ்சில் பதிய வைத்ததில் சமணர்கள் முதலியவர்களுக்குப் பங்குண்டு என்பதில் அவர்களையும் சாடுகின்றார். இப்படி விவாதித்து வரும் கவிஞர் தானும் ஓர் இந்து என்பவர் இந்து மதத்திற்குள் இத்தகைய பொய்களை விதைத்தவர்களை ஆவேசமாகச் சாடுகிறார். பிரம்மம் என்று பேசிய சங்கரர் விஷ்ணு, சிவன், அம்பிகை, கணநாதர் என்று 5 சமன்களை உருவாக்கி உருவ வணக்கம் தேவை என்று கூறியதைச் சாடுகிறார். உண்மையில் நீர், நெருப்பு, நிலம் முதலியவை தான் நம் வாழ்வுக்கு ஆதாரமான சக்திகள். இவைதான் பூதங்கள் என்றும் சொல்லப்பட்டவை. இந்த உண்மையை மறுத்துவிட்டு விஷ்ணுவை சிவனை அம்பிகையை வணங்க வேண்டும் என்றார் சங்கரர். நீர், நெருப்பு, வாயு ஆகிய அருவங்களை உருவங்கள் ஆக்குகிறார். வேறு ஓர் உபநிடத்தில் பிராமணர்களுக்குத் தெய்வம் நெருப்பு (அக்னி) என்றும் பாமரர்களுக்குத் தெய்வம் உருவம் என்று சமதர்மிகளுக்குத் தெய்வம் எங்கும் எல்லாமும் என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைக்கிறார். எங்கும் உள்ளது தெய்வம் என்றால் இத்தெய்வத்தை உருவங்களில் அடைக்க முடியாது. அக்கினிக்குள் அடைக்க முடியாது இப்படி விவாதிக்கிறார். நல்வினை தீவினை - முற்பிறப்பில் செய்த தீவினை இப் பிறப்பில் நம்மைப் பாதிக்கும் என இவைபோன்ற வினைக் கோட்பாட்டிற்கு உபநிடதங்களில் ஆதாரம் இல்லை என்கிறார். நல்லது செய்தால் நல்லது நடக்கும். தீயது செய்தால் தீமை விளையும் என்ற கருத்து மட்டுமே உபநிடதங்களில் இடம் பெறுகிறது. திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலும் இத்தகைய அறிவு சார்ந்த கருத்துக்கே இடம் உண்டு என்கிறார். தீயவை தீய பயத்தலால் என்பது வள்ளுவர் குறள். இவ்வாறு அறிவு சார்ந்த கருத்துகள் திருக்குறள், திருமந்திரம் முதலிய நூல்களில் விரிவாக இடம் பெற்றிருப்பதைத் தமிழ்நாட்டில் ஏன் சிறப்பாக கற்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களோடு அதிதி (விருந்தினரும்) தெய்வங்கள் என்று உபநிடதம் சொல்லும் கருத்தைக் கவிஞர் ஏற்கிறார். இவர்கள்தான் உண்மை தெய்வங்கள். இவர்களைத் தவிர வேறு தெய்வமில்லை. பிராமணர்கள் நம் சமுதாயத்தில் திணித்துள்ள தெய்வங்களுக்கு அளவில்லை. எப்படி இவற்றை நம் மக்கள் ஏற்றார்கள் என்று கேட்கிறார் கவிஞர். உபநிடதங்கள் மூன்று வகையான அக்னிகளைக் குறிப்பிடுகின்றன. ஜீராணாக்கினி, ஞானாக்கினி, பிராணாக்கினி என்பவை இவை. ஆனால் பிராமணர்கள் வகைவகையான யாகங்களைக் கற்பித்து மன்னர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் பொருள் திரட்டும் நோக்கில் ஏராளமான உணவு முதலிய பொருட்களை அக்னியிலிட்டு சாம்பலாக்கியதற்கு உபநிடதங்களின் சான்று இல்லை என்கிறார் கவிஞர். சிலவகை யாகங்கள் பற்றி விரிவான வருணனைகளையும் கவிஞர் தருகிறார். தன் 82 ஆவது வயதில் கர்நாடகத்தில் இருந்தபோது உபநிடதங்கள் பற்றி இந்த உண்மையை சில கன்னட நூலிலிருந்தும் கஸ்தூரி என்ற இதழிலிருந்தும் கற்றுக் கொண்டதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தெய்வம் முதலியவை பற்றிய கேள்விகளுக்குத்தான் விடை காண முயன்றதையும் குறிப்பிடுகிறார். கர்நாடக மக்கள், தமிழ் மக்களைக் காட்டிலும் உறுதி குறைந்தவர்கள் என்றும் தமிழ் மக்களைக் காட்டிலும் பண்பில் சிறந்தவர் என்றும் குறிப்பிடும் கவிஞர் கல்வி அறிவு இல்லாத இளைஞன் ஒருவன் பாடிக் கொண்டிருந்த பாடல் பற்றிக் குறிப்பிடுகிறார். உபநிடதம் குறிப்பிடும் தர்மம், சத்தியம் பற்றிய எளிய உண்மைகள் அப்பாடலில் இருந்ததை வியப்புடன் சொல்லுகிறார். இளமை முதற்கொண்டே பகுத்தறிவுப் பார்வை கொண்டிருந்தவர் கவிஞர். சமதர்ம உணர்வும் தன் காலச் சூழலில் இவருக்குள் இடம் பெற்றிருந்தது. விடுதலை பெற்ற நாட்டில் ஏன் இன்னும் இத்தனை வறுமை, அறியாமை என்ற கேள்வி இவரைத் துளைத்துக் கொண்டுதானிருந்தது. திருக்குறள், திருமந்திரம், புறநானூறு ஆகிய நூல்களை அவர் எந்த அளவிற்குப் போற்றினார், கற்றார் என்பதை இன்னும் நினைத்துப் பார்த்து வியப்படைகிறோம். தமிழ் மக்களுக்கு இந்த நூல்கள் கருத்துக் களஞ்சியங்கள். இவ்வளவு நல்ல நூல்களை வைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஏன் வேதங்களுக்கும் பார்ப்பனர் பரப்பிய பொய்களுக்கும் இடம் தந்து அழிந்தார்கள் என்று ஆவேசமாகக் கேட்கிறார். இத்தகைய அறிவு நூல்களைத் தமிழ் மக்களுக்குக் கற்றுத்தராத அரசையும் ஆசிரியரையும் கடுமையாகச் சாடுகிறார். உபநிடதங்களின் உண்மைப் பொருளை மறைத்து பொய்மையைக் கற்பித்த குருமார்களைக் கடுமையாகச் சாடுகிறார். தமிழாய நம் நெஞ்சில் என்றும் வாழ்பவர் - பேராசிரியர் ப.சு.மணியம் அவர்கள் அருட்கலை ஆசான் என்று கோவை வட்டாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சீடர்களால் இன்றும் வணக்கத்திற்குரியவராக போற்றப்படுபவரும் அருட்கலை இயக்கத்தைத் தோற்றுவித்து பழனிக்கு தன் அன்புக்குரிய மாணவர்களோடு ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் வழிநடைப் பயணம் மேற்கொண்டவரும் வேறு எந்த தமிழறிஞரைக் காட்டிலும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தை உருக்கமாக ஓதி உணர்ந்தவரும் கொங்கு வட்டாரத்தில் பல ஊர்களில் தமிழ்முறைத் திருமணங்களை நடத்துவித்தவரும், திருக்குறள் - வகுப்புக்களை ஓயாமல் நடத்தியவரும் ஆகிய , என்றும் அவரது சீடர்களாலும், மாணவர்களாலும் மறத்தற்கு இயலாதவருமாகிய பேராசிரியர் ப. சு. மணியம் அவர்களின் பேரன்புக்குரிய மாணவன் என்ற முறையில் என் நினைவுகள் சிலவற்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். 1953 - 55 ஆண்டுவாக்கில் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் இண்டர் - டி வகுப்பில் தமிழ் இலக்கிய மாணவனாக பயின்றக் காலத்தில் எங்களுக்கு ‘நம்பி அகப்பொருள்’ பாடம் எடுத்தார். தமிழ்த்துறையில் அப்பொழுது பணி ஆற்றிய பேராசிரியர் பலருள் கல்லூரி மாணவர் மற்றும் ஆசிரியர்கள் அனைவராலும் மதிக்கத்தக்கவராக பேராசிரியர் ப. சு. மணியம் அவர்கள் திகழ்ந்தார். அவரிடம் பயின்றது எங்களுக்கு ஒரு பெரும் பேறு என்ற உணர்வு இன்று வரை எங்கள் நெஞ்சில் இருந்து மறையவில்லை. கற்பிக்கும் போது இடையிடையே திருக்குறள் பாக்களுக்குப் பரிமேலழகரின் உரை நுட்பத்தை மிகுந்த ஈடுபாட்டோடு எடுத்துச் சொல்வார். அக்காலச் சூழலில் தமிழகத்தில் பரிமேலழகரை, அவரது வடமொழிச் சார்பு காரணமாக மிகக் கடுமையாக பகுத்தறிவு இயக்கத்தினர் மட்டுமல்லாமல் தமிழ் பேராசிரியர்கள் பலரும் கடுமையாகச் சாடி வந்தனர். திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையின் சிறப்பைப் பெரிதும் மதித்து பேசும் பொழுதே திருக்குறளுக்கு வடமொழிச் சார்பில் அவர் பொருள் கூறியதற்காக பலரும் சாடி வந்தனர். திருக்குறளை மட்டும் அல்லாமல் பரிமேலழகர் உரையையும் ஓய்வில்லாமல் ஓதியவர். பேராசிரியர் ப.சு.மணியம் அவர்கள். எங்கள் வகுப்பில் பயின்ற நண்பர் திரு. இலட்சுமி நாராயணன் பேராசிரியரோடு வகுப்பறையில் இது பற்றி விவாதம் செய்வார். பரிமேலழகரிடம் ஓரிடத்தில் குறைகண்டாலும் அதற்கான பதிலைப் பரிமேலழகர் வேறு இடத்தில் வைத்திருப்பதாகக் கூறி அதை விளக்குவார். அன்றியும் குறளின் கருத்து வளத்தைப் பரிமேலழகரைப் போல் காண்பித்தவர் வேறு எவரும் இல்லை என்ற முறையிலும் எடுத்து உரைப்பார். என்னைப் பொறுத்தவரை பரிமேலழகரைப் பகுத்தறிவாளரைப் போல மரியாதைக் குறைவாக நான் என்றைக்கும் பேசியது இல்லை. அவரது வடமொழிச் சார்பு எனக்கும் உடன்பாடு இல்லை. எனினும் குறளின் நுட்பத்தை அவரைப்போல எடுத்து உரைத்தவர் அவர் காலம் வரை வேறு எவரும் இல்லை. இம்முறையிலும் பேராசிரியர் அவர்களை இதற்காகவும் நான் பெரிதும் மதிக்கிறேன். ஒருவேளை அவருக்கு நான் மாணவன் இல்லை என்றால் நானும் தடம் மாறி இருப்பேனா என்பது தெரியவில்லை. ‘நம்பி அகப்பொருள்’ இலக்கண நூலைப் பழுதற எங்களுக்குக் கற்பித்ததோடு இடையிடையே வரும் உதாரணச் செய்யுள்கள் (தஞ்சை வாணன் கோவை, பாடல்கள் உட்பட) அனைத்தையும் ஒன்று விடாமல் நுணுக்கமாக பொருள் சொல்லி விளக்குவார். ஒரு செய்யுளுக்கு எவ்வாறு பதவுரை விரிப்பது என்பதன் அழகை அவர் மூலம்தான் நான் அறிந்தேன். அகப்பொருள் இலக்கணம் கற்பிக்கும் போதே அவர் நாவிலிருந்து திருக்கோவையார் பாடல்கள் இசையோடு வெளிப்படும். தமிழின் பேரழகுக்குத் திருவாசகம் மட்டு மல்லாமல் திருக்கோவையாரும் அற்புதமான சான்றுகள் என்பதைப் பேராசிரியர் மூலமே எங்கள் நெஞ்சில் ஏற்றோம். கோவை அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டாண்டுகள் மட்டுமே பயின்ற பிறகு மேலும் கற்பதற்காக அண்ணாமலை பல்கலைக் கழகம் சென்றேன். பின்னர், கோவைக்கு வந்த பிறகு நண்பர் சின்னச்சாமி அவர்களோடு சிலமுறை அவரது இல்லத்திற்கு சென்றேன். எப்பொழுதும் அவரைச் சூழ ஒரு மாணவர் கூட்டம் - இருக்கும் புலவர் தேர்வுக்காக. அவரிடம் கற்றுக்கொள்ள சிலர் வந்திருப்பார்கள். அருட்கலை இயக்கத்தைச் சார்ந்தவர் எனவும் அங்கு வருவர். அம்மையார் அனைவரையும் அன்போடு உபசரிப்பார். பேராசிரியரும் தமிழிலக்கியம், தமிழிலக்கணம் எனப் பலவற்றிலிருந்தும் மேற்கோள்களோடு விளக்குவார். ஒரு சமயம் அவர் கூறிய கூற்று ஒன்று என் நெஞ்சில் இன்றுவரை ஓயாமல் சுழல்கிறது. அவர் சமயப் பற்று மிகுந்தவர் என்பதில் ஐயமில்லை. தமிழிலக்கியம் முழுவதும் அவர் நெஞ்சில் பதிந்து இருந்தது என்பதிலும் ஐயமில்லை. இலக்கியத்தையும் சமயத்தையும் அவரிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எனினும் அவர் கூறினார். "திருவாசகம், தேவாரத்தின் ஒரு வரிக்குக் கூட இணையாக சங்க இலக்கியத்தின் எந்தப் பாடலையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.’’ (அவரது கூற்றில் சில சொற்கள் வேறுபட்டு இருக்கலாம். எனினும் அவரது உணர்வு இதுவாகத்தான் இருந்தது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவரது வாழ்வைச் சமயம் எந்த அளவுக்கு வசப்படுத்திக் கொண்டது என்பதாகத்தான் உணர்கிறேன். இடைக்காலத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட இழப்புக்கள் முதலியவை கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். உண்மையில் இலக்கிய உணர்வு என்பதைக் காட்டிலும் சமய உணர்வின் வன்மை அதிகம் தான் என்பதை எவரும் மறுப்பதற்கும் இல்லை . சங்க இலக்கியம் அதிக அளவில் அகத்திணையும், புறத்திணையுமாக அமைவது. வாழ்வை இவை முற்றாக வசப்படுத்தும் வல்லமை உடையவை என்றும் கூறுவதற்கு இல்லை. அன்றியும் சமயத்திற்குள் ஆழ்ந்து பயணம் செய்பவர்க்கு பிறகு அகத்திணையும், புறத்திணையும் எப்படித் தேவைப்படும்.) சமயம் என்பதை ஒரு பெரும் மாயை என்றே வைத்துக் கொண்டாலும் அந்த மாயை தனக்குள் சென்றவர் மீது தனக்குள்ள பிடிப்பை என்றேனும் குறைத்துக் கொள்ளுமா என்ன? பேராசிரியரோடு அவரது சீடர்களைப் போல நான் நெருக்கமாக இருந்து பழகவில்லை. இதன் காரணத்தைப் பிறகு சொல்கிறேன். அவருக்கு நான் சீடனில்லை. அவரது உண்மையான மாணவர்களில் ஒருவன் என்று தான் என்னை நினைத்துக் கொள்கிறேன். அவரோடு பல்லாண்டு நெருக்கமாக இருந்து இலக்கணம், இலக்கியம், சமயம் எனக் கற்ற பலரிடம் எனக்கு ஒரு மனக்குறை உண்டு. அவரது நினைவுகளை மட்டுமல்லாமல் அவர் இலக்கியம் முதலியவை குறித்து சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அன்றன்று தன் ஏடுகளில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். நெஞ்சில் பதிவு செய்தது போதாது. ஏட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒலிப்பேழைகளில் பதிவு செய்திருக்க வேண்டும். பேராசிரியர் அவர்கள் தாமே எழுதியது மிகவும் குறைவு. அவர்தன் வாழ்வு, படிப்பு, அனுபவம் குறித்து நிறையச் சொல்லி இருப்பார். அவை குறித்து எல்லாம் அவ்வப்போது எழுதியிருக்க வேண்டும். அம்மையாரும் பலவற்றைச் சொல்லியிருப்பார். இத்தகைய பதிவுகள் தமிழ் வாழ்வுக்குப் பெரும் களஞ்சியமாக அமைந்து இருக்கும். குறைந்த அளவுக்கேனும் கடந்த சில ஆண்டுகளாக, அவரது இறப்புக்குப் பிறகு ஆண்டுதோறும் கூடி சிலவற்றைச் செய்து வருகிறார்கள். அவரைப் பெருமளவு உள்வாங்கிக் கொண்ட மாணவர்களும், சீடர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் செய்ய முடியும். அவருக்கு நெருக்கமாக நான் இருக்க முடியவில்லை. பேராசிரியர் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து உடல் நலம் பெற்று வெளிவந்த பிறகு புரந்தரதாசர் வித்தியாலயத்தில் நடந்த ஒரு சந்திப்பில் பலரும் அவரைப் பற்றிய நினைவுகள் முதலியவற்றை வெளிப்படுத்தினார்கள். இடையில் நானும் பேசுமாறு அழைக்கப்பட்டேன். வேறு வழியில்லாமல் சிலவற்றைப் பேசினேன். இரண்டு சந்தர்ப்பங்களில் அவரை நான் புண்படுத்தியதாக நான் கருதிக் கொண்டதைச் சொன்னேன். அது என் நெஞ்சை வருத்துகிறது என்றும் சொன்னேன். அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு என் வருத்தத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ளவும் நான் விரும்பவில்லை என்றும் சொன்னேன். அந்த வருத்தமே எனக்குத் தண்டனைப் போல் அமையட்டும் என்றும் சொல்லி வைத்தேன். பின்னரும் நண்பர்கள் அந்த இரண்டு நிகழ்ச்சிகள் என்ன என்று நான் சொல்லுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் இப்பொழுதேனும் அவைக் குறித்து சொல்ல விரும்புகிறேன். அவர் இல்லாத போது ஏன் சொல்ல வேண்டும் என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தாலும் என்னை தெளிவுபடுத்திக் கொள்ள சொல்லத்தான் வேண்டும். இதற்கும் என்ன காரணம் என்றும் சொல்ல விரும்புகிறேன். அரசுக் கலைக் கல்லூரியில் அவர் எங்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த கேள்வியை அவரிடம் கேட்டு வைத்தேன். ஆழ்ந்த பக்தி உணர்வோடு அவர் என்றும் பேசுவார். பாடம் நடத்தும்போது திருவாசகத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார். சிறு வயது முதற்கொண்டே எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கத்தான் செய்தது. கடவுள் குறித்து எனக்குள் நிறைய கேள்விகள் இருந்தன. அந்தக் கேள்விகளை மீறி கடவுளைக் குறித்த பக்தியில் என்னை நான் இனி ஆழ்த்திக் கொள்ளவில்லை. ஆழ்த்திக் கொள்ளவும் விரும்பவில்லை. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிவபெருமான் முதலியவர் கற்பனை தானே என்று கேட்டு வைத்தேன். உணர்ச்சி பெருக்கோடு பதில் சொல்லத் தொடங்கினார். மாணிக்கவாசகர் முதலிய எத்தனையோ கற்றறிந்த சான்றோர்கள், உணர்ந்தது, சொன்னது எல்லாம் பொய்தானா? என்று அவர் பொருமினார். அவரால் என் கேள்வியைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு பதில் தேவையே ஒழிய அவரது சினம் எனக்கு புரியவில்லை. அவரது வருத்தம் எனக்குப் புரியவில்லை. அதே வருத்தத்தோடு வகுப்பறையை விட்டுச் சென்றார். அடுத்த வகுப்புக்கு வந்த சில நாட்கள் அவரை என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. என் வகுப்பறை நண்பர்களோடும் இது பற்றி என்னால் பேச முடியவில்லை. ஒரு வாரம் கழித்து அவராக என் பெயர் சொல்லி இன்னும் வருத்தமா? என்றார். நான் கண்ணீர் விட்டேன். அவர் சான்றோர். அவரது சினம் ஒரு கணத்தில் அல்லது சில நாட்களில் கழிந்துவிட்டது. என் மன வருத்தம் இன்றளவும் தீர்வதாக இல்லை. நான் கேட்டதில் தவறில்லை. ஒரு மாணவன் என்ற முறையில் நான் கேட்கத்தான் வேண்டும். அவர்தான் என்ன செய்வார்? இடையில் இன்னொரு நினைவையும் இங்குச் சொல்ல விரும்புகிறேன். அறிஞர் மு.வ. அவர்களின் ‘நெருஞ்சி முள்’ வெளிவந்திருந்த சமயம். என் நண்பர் லட்சுமி நாராயணன் படித்துவிட்டு எனக்கும் தந்தார். கற்பு குறித்து ஒரு வித்தியாசமான பார்வையை மு.வ. அவர்கள் தன் நாவலில் முன் வைத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் ஒரு கணவனைத் தவிர இன்னொருவனை நினைக்கக் கூடாது என்ற முறையில் கற்புக்கு பொருள் சொல்ல முடியாது. கணவன் இருக்கும் பொழுதே கூட மனம் வேறுபடலாம். இப்படி அந்த நாவலில் கருத்துக்கள் சில கூறப்பட்டு இருந்தன. (சரியாக என்னால் நினைவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. எனினும் கற்பு பற்றி வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டுள்ளது இந்த நாவல்). கற்பு குறித்து மு. வ. விரிவாக விவரிக்கிறார். அக்காலத்தில் மு. வ. உட்பட தமிழறிஞர்கள் பலதிசைப் பார்வையோடு இருந்தார்கள். நிறைய எழுதினார்கள். உலக அளவிலான பார்வைகள் தமிழனுக்கும் வேண்டும் என்ற முறையில் பகுத்தறிவாளர் முதற்கொண்டு பலரும் எழுதினார்கள், பேசினார்கள். தமிழ் மாணவர்களாகிய நாங்களும் படித்தோம். பேசினோம். இம்முறையில் தான் ‘நெருஞ்சி முள்’ நாவல் குறித்தும் பேசினோம். நண்பர் லட்சுமி நாராயணன் வெளிப்படையான மனிதர். உள் ஒன்று வைத்து பேச அறியாதவர். ப. சு. மணியம் அவர்கள் இந்த நாவல் குறித்து என்ன சொல்வார். கேட்க வேண்டும் என்ற கருத்தோடு இந்நாவலை என் நண்பர் பேராசிரியருக்குத் தந்தார். சில நாட்கள் கழிந்தன. ஆவேசத்தோடு பேராசிரியர் மு.வ. அவர்களின் கருத்தை மறுத்துப் பேசினார். மு.வ. அவர்களைச் சாடவும் செய்தார். எங்களுக்கு நிறைவு ஏற்படவில்லை. வேண்டும் என்று நண்பர் இப்படிச் செய்யவில்லை. இன்னொரு நினைவை இப்பொழுது சொல்கிறேன். தமிழாசிரியராக நான் என் பணியைத் தொடங்கிய காலத்தில் பேரூர் இல்லத்தில் அவரை ஒருமுறை சந்தித்தேன். நான் திட்டமிட்டு இருந்த என் திருமணம் பற்றி அவரிடம் சொல்ல வேண்டும். என் திருமணத்திற்கு பெண்ணின் உறவினர் உடன்படவில்லை. எனினும் திருமணம் செய்து கொள்ள நாங்கள் உடன்பட்டு இருந்தோம். இதுபற்றி அவரிடம் சொன்னேன். ஏற்கனவே சிலர் மூலம் இச் செய்தி அவருக்கு எட்டி இருக்க வேண்டும். பெண்ணும், நானும் ஓராண்டு பிரிந்து இருக்க வேண்டும். இடையில் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. கடிதத் தொடர்பும் கூடாது. ஓராண்டுக்குப் பிறகு இருவர் மனமும் மாறவில்லை என்றால் நீங்களாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இப்படி எனக்கு அறிவுரை கூறினார். அவரை என்னால் மறுத்துப் பேச முடியவில்லை. என்ன கருதி இப்படி அறிவுரை வழங்கினார் என்பதும் எனக்குப் புரியவில்லை. பின்னர் நாங்கள் திட்டமிட்டபடி திருமணம் செய்து கொண்டோம். பேராசிரியர் முகத்தில் எப்படி விழிப்பது என்ற முறையில் நான் சில காலம் அவரைச் சந்திக்கவில்லை. என் கருத்திலும் நான் தவறு காணவில்லை. விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதில் என் உறுதி தளர காரணமும் இல்லை. பேராசிரியர் கருத்தில் நியாயம் இருக்கலாம். அது பற்றி எனக்கு இனி சிந்திக்க முடியாது. எது நேர்ந்தாலும் சரி என் திட்டத்தை செயல்படுத்துவது என்பதுதான் என் உறுதியான கருத்தாக இருந்தது. பேராசிரியருக்குச் சொல்லாமல் தவிர்த்து இருக்கலாம் என்றும் அக்காலம் நான் எண்ணவில்லை. எனக்குத் தேவையான அறிவுரையை ஏன் சொல்ல வேண்டும் என்பது என் கேள்வியும் இல்லை. பின்னர் என் திருமணச் செய்திக் கேட்ட போது அவர் என்ன நினைத்திருப்பார் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகள் குறித்து இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். நான் தவறு செய்யவில்லை என்றாலும் அவருக்கு வருத்தம் ஏற்படுமாறு நடந்து கொண்டேன். அவரது வருத்தம் தீர்க்கும் வாய்ப்பு எனக்கில்லை. காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கும் கால மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. காலத்தை எவரும் கட்டுப்படுத்த இயலாது. மாறுவதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நான் மாணவன். மாறிக் கொண்டு இருந்தேன். பேராசிரியரின் பிடிக்குள் நான் இல்லை . ஒரு தந்தையாரின் பிடிக்குள் மகனாலும் இருக்க முடியாது. விட்டுப் பிடிக்க வேண்டும் என்பதும் உண்மைதான். பிடிப்பதற்கும் நியாயம் இருக்க வேண்டும். பேராசிரியர் என்று அறியப்பட்ட போதிலும் புலவர். ப.சு.மணியம் அவர்கள் அரசுக் கலைக்கல்லூரியில் விரிவுரையாளராகத்தான் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் அக்காலத்தில் ராகவையங்கார் உட்பட மிகச்சிறந்த பேராசிரியர்களிடம் தமிழ் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். இன்று பெரிதாகச் சொல்லப்படும் முனைவர் பட்டம் போல் அவர் எதுவும் பெறவில்லை. எனினும் பல பேராசிரியர்கள் அவரிடம் அமர்ந்து தமிழிலக்கியம், இலக்கணம் கற்றார்கள். பலர் புலவர் பட்டம் பெறுவதற்கு அவர் காரணமாக இருந்தார். அவரிடம் பயின்றவர்கள் வெறும் பட்டத்திற்காக பயின்றவர்கள் இல்லை. இன்று உள்ள பல பேராசிரியர்களைப் போல ஆசிரியப் பணியை ஒரு பதவி என்று, உத்தியோகம் என்று அவர் கருதவில்லை. தன் காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தமிழிலக்கியத்தை, அவரே அடிக்கடி சொல்வது போல எழுத்தெண்ணிக் கற்றார். தன் கல்லூரிப் பணி, குடும்பம் என்று அளவில் அவர் தன் வாழ்வைக் குறுக்கிக் கொள்ளவில்லை. தமிழோடு அவர் வாழ்ந்தார். தமிழ்ச் சமயத்தோடு அவர் வாழ்ந்தார். தமிழ் முறைத் திருமணத்தை நூற்றுக்கணக்கில் அவர் நடத்தி வைத்தார். பல ஊர்களில் திருக்குறள் வகுப்பு நடத்தினார். கேரளாவில் உள்ள ஐயப்பனை நோக்கிச் செல்பவர்களைத் தடுத்து ஆட்கொண்டு பழனி தமிழ் முருகனை நோக்கி நடத்தினார். ஊதியம் கருதி அவர் எதையும் செய்யவில்லை. தமிழை உணர்ச்சிப் பொங்க பேசினார். ஒரு தமிழ் அறிஞர் என்ற முறையில் தமிழ் வாழ்வுக்குள் நூற்றுக்கணக்கானவர்களை ஈர்த்தார். ஒரு தமிழறிஞரின் வாழ்வு எத்தகைய விரிந்த தளங்களில் தமிழ்ச் சமூக மேன்மைக்கான வாழ்வாக அமைய வேண்டும் என்பதற்காக இயக்கம் பல கண்டு, ஊதியம் கருதாது ஓயாது உழைத்து, தமிழ் சமூகத்தை முழுமையாக தழுவிக் கொள்ளும் முறையில் அவர் வாழ்ந்தார். குறுகிய தன்னலத்தோடுதான் கற்றது போதும் என்ற முறையில் இன்று வாழும் தமிழ்ப் புலவர்கள் என்று பெருமைக்காக அலைபவர்களுக்கு அவரது பெருந்தன்மை தமிழ்ப்புலமை சமயப்பற்று என்று எதுவும் தெரியாது. வணக்கத்திற்குரிய மறைமலை அடிகளைத் தன் நெஞ்சில் தாங்கி நம்மோடு அவர் வாழ்ந்தார். அவரது வாழ்வு அசலான தமிழ் வாழ்வு. இன்று தமிழ் கற்பது என்றால் எதைக் கற்பது, எவ்வளவு கற்பது? எதற்காக கற்பது? என்ற அளவில் மட்டுமே தமிழ் கற்கும் புலவர்களுக்கு ப.சு.மணியம் அவர்களின் தமிழ் வளம், தமிழ் வாழ்வு புரியாது. தமிழ் கற்பது என்பது மெல்ல மெல்ல விரிந்து, ஆழப்பட்டு வாழ்வின் எல்லா உணர்வுகளுக்குள்ளும் ஊடுருவி, தன் வாழ்வு தமிழ் சமூகத்தின் வாழ்வு என்று வேறுபாடற்று, பல்லாயிரமாண்டு தமிழ் மரபைத் தற்காலச் சூழலிலும் தற்காலச் சூழலுக்கு ஏற்றவாறு, தனக்குள் பொருள்படுத்தி தமிழ் வாழ்வு என்பதற்கு இத்தனை அர்த்தச் செறிவு உண்டு என்பதைப் புலப்படுத்தி தமிழின் ஆற்றலை எவராலும் அழிக்க முடியாது, தமிழின் அறத்தை எவராலும் அழிக்க முடியாது என்பதற்கு உறுதியான சான்றாக தமிழ் அறிஞர் விளங்க முடியும் என்பதற்கான சான்றாக ப.சு.மணியம் அவர்கள் திகழ்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்று வந்த தமிழைத் தமக்கு வாழ்வாக கொண்டு வாழ்ந்த தமிழறிஞர்கள் மனோன்மணியம் சுந்தரனார், மறைமலை அடிகள், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், வ.சுப. மாணிக்கம், அவ்வை சு. துரைசாமிபிள்ளை முதலியவர்களின் வரிசையில் தன்னை நிறுவிக் கொண்டவர் ப. சு. மணியம் அவர்கள். தமிழை அவர் ஒரு தவம் போல பயின்றார், வாழ்ந்தார். பேராசிரியர் பட்டியப்பனார் ஒருமுறைக் கூறியது போல், திருமூலரிடமிருந்து கிளைவிரியும் மரபுகள் இரண்டில், முதல் பிரிவாகிய யோகம், சாத்திரம், சித்தாந்தம், துறவு, மத பீடம் என்பதை மறுத்து இரண்டாம் பிரிவாகிய திருவள்ளுவர், சித்தர்கள், தாயுமானவர், வள்ளலார் எனத் தொடரும் அன்பு, அருள், அறிவு, மரபில் தன்னை இணைத்துக் கொண்டவர் ப.சு.மணியம் அவர்கள். இறுதியாக ஒன்றை என்னால் சொல்ல முடியும். இவரின் தவ வாழ்வை இவருக்கு நெருக்கமாக இருந்து கற்ற எவரும் தமிழுக்காக இன்றும் வாழ முடியும். நெருக்கடிகள் மிகுந்த இன்றைய சூழலில் தமிழும், தமிழ் வாழ்வும் பெயர் தெரியாமல் அழிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் தமிழையும், தமிழ் மரபையும் தமக்கு உயிர் எனக் கொண்டு தமிழ் அறிந்தவர் வாழ்ந்தாக வேண்டும். ப.சு.மணியம் அவர்களோடு சில சந்தர்ப்பங்களில் நான் மாறுபட்ட போதிலும் எனக்குள் அவர் தமிழாய் வாழ்கிறார். அவரது பேரன்புக்கு உரிய மாணவன் என்ற முறையில் வாழ்வது எனக்கு வாய்த்த ஒரு பேறு. தமிழ்த் தேசியம் – தோழர் கருணா மனோகரன் அவர்களுக்கு ஓர் எதிர்வினை தோழர் கருணா மனோகரன் மார்க்சிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு அனுபவங்கள் பல பெற்ற இயக்கத்திலிருந்து விடுபட்டார் எனினும் மார்க்சிய உணர்விலிருந்து விடுபடவில்லை. அவரால் விடுபடவும் இயலாது. அவர் பெற்ற அனுபவங்களில் என்பது அவர் கருத்து. திராவிட ஒன்று தமிழகச் சூழலில் சாதியம் பற்றிய அழுத்தமான உணர்வு. இதற்காகவே கூட அம்பேத்கர் அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். தலித்தியம் பற்றி உரையாடல்களை நடத்தினார். பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியார் போராடினாரே ஒழிய சாதி இயக்கத்தால் பயனடைந்தவர்கள் நடுத்தர சாதியினரே அன்றி தாழ்த்தப்பட்டவர்களில்லை என்பது அவரது அழுத்தமான நம்பிக்கை. தமிழ்த் தேசியம் பற்றி தற்பொழுது பெரும் ஈடுபாட்டுடன் பேசுகின்ற தோழர் கருணா அவர்கள் சாதி ஒழிந்தால் ஒழிய தமிழ்த் தேசிய உணர்வின் எழுச்சிக்கு வாய்ப்பில்லை என்கிறார், தமிழ்த் தேசியம் பற்றித் தற்பொழுது அக்கறையோடு பேசுபவர்களும் நடுத்தர மக்களாகவே நடுநிலைச் சாதியினராகவே இருக்கின்றனர் என்கிறார். தோழர் திருமாவளவனைப் போன்றவர்கள் தமிழ்த் தேசிய உணர்வுடன்தான் பேசுகின்றனர் எனினும் அவரோடு இன்று தமிழ்த் தேசியம் பேசும் தலைவர்களுக்கு இணக்கமில்லை என்கிறார். தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தமிழ்த் தேசியம் தரும் இடம் என்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார். சாதியை ஒழிக்க, சாதி மறுப்பு திருமணங்களைச் சட்டரீதியாக செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைக்கிறார். இப்படி ஒரு சட்டத்தை ஒழிப்புக்காக பாடுபடவில்லை இந்திய அரசியலமைப்புக்குள்ளிருந்து யாரால் செய்ய முடியும். என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இன்றைய சூழலில் நமக்குத் தேவையான திருத்தங்கள் செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. தோழர் கருணா அவர்கள் இந்தச் சிறிய நூலில் இப்படித் தொடங்கி நிறைய விவாதங்களை எழுப்புகிறார். தமிழ்த் தேசியம் என்பது நமக்குத் தேவையான ஒன்று என்பதில் ஐயமில்லை. தமிழ்த் தேசியம் என்றால் என்ன? இதன் அரசியல் வரையறைகள் என்ன, பொருளியல் வரையறைகள் என்ன, என்றெல்லாம் நமக்குள் கேள்வி எழும்போது தெளிவான பதில் நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் என்பது நமக்கு விருப்பமான ஓர் உணர்வு / பேருணர்வு. தமிழ்த் தேசியம் என்பதற்கான ஒரு செயல் திட்டம் வகுத்து செயல்படுகிறோமா என்றால் அப்படி எதுவும் நம்மிடமில்லை. ஒருவகையில் தமிழ்த் தேசியம் என்ற உணர்வுடன் ஆய்வை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களில் இறையாண்மையை ஒப்புக் கொள்கிற ஒரு சரியான கூட்டாட்சியாக இல்லை என்பது நமக்குப் புரிகிறது. 1946க்கு முன்பு மாநிலங்கள் பிரிந்து செல்வதற்கான உரிமை பற்றிய உணர்வு சில வட்டாரங்களிலிருந்த போதிலும் பின்னர் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் இந்த உணர்வு மறுக்கப்பட்டது. இதன் காரணமாகவே விடுதலைக்குப் பின்னரான வரலாற்றுச் சூழலில் எத்தனையோ பிரிவினைக்கான போராட்டங்கள் விடாப்பிடியாக எழுந்தன என்றாலும் அவையெல்லாம் மத்திய அரசினால் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இன்றுவரை இந்தச் சிக்கல் தீர்வதாகவும் இல்லை. மைய அரசுக்கும் மாநிலங்களுக்கும் கடுமையான போராட்டங்கள் பல வகைகளில் இன்றுவரை நடைபெறுகின்றன. மாநிலங்களுக்கிடையிலும் தீராத மோதல்கள். மாநிலங்களுக்குள்ளும் பல சிக்கல்கள். இந்தியாவை ஒரு தேசமென நிலை நிறுத்துவதற்கு மத்திய அரசு வகை வகையான அக்கிரமங்களை, அநீதிகளை, கொலைகளை, கொடுமைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மத்திய அரசில் ஒரு கட்சி ஆட்சி ஒழிந்து பல காலம் ஆன நிலையிலும் கூட்டணியாட்சியிலும் அநீதிகள் தொடர்கின்றன. இந்திய அரசியமைப்புச் சட்டத்தைத் திருத்துவதில் பயனில்லை. மாற்றியாக வேண்டும், என்பதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை ஒரு தேசமென்ற வகையில் எத்தனை காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு எவரும் உறுதி சொல்ல முடியாது. சற்று கூர்ந்து பார்த்தால் தேசிய ஒருமைப்பாடு என்ற பேச்சுக்கு இன்று அர்த்தமே இல்லை. இந்தியா கலகலத்துக் கொண்டிருக்கிறது. தகர்வதற்கான வாய்ப்புகள் கூடிவருகின்றன. இறுக்கி பிடிப்பதன் காரணமாகவே எத்தனையோ சேதங்களும் அழிவுகளும் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. தமிழ்த் தேசியம் பற்றி இன்று நாம் அக்கறையோடு பேசுவதற்கு இதுவும் ஒரு காரணம். தேசிய இனங்களின் இறையாண்மையோடு கூடிய கூட்டாட்சி என்ற அடிப்படையில் இந்தியாவின் அரசியலமைப்பை மாற்றியமைக்க முடியுமானால் இந்தியா ஒருவேளை நிலைக்கலாம். எத்தனையோ நெருக்கடிகளும் நேரலாம். இந்திய மக்கள் மத்தியில் வளமான வாழ்வுக்கும் நிதிக்கு வழி பிறக்கலாம். தோழர் கருணா அவர்களும் இத்தகைய உணர்வைக் கொண்டிருக்கிறார். இந்தியாவை உடைக்க வேண்டும் / தகர்க்க வேண்டும் என்ற பேச்சு அவரிடமில்லை. அதே சமயம் இந்திய அரசியலமைப்பை ஒரு சரியான கூட்டாட்சி என்ற முறையில் மாற்றியமைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்தச் சிறு நூலில் அவர் எதுவும் பேசவில்லை . இந்தியாவை பிரிட்டிஷார் தன் தேவைக்காக ஒரு தேசம் என இராணுவ வளமையைக் கொண்டு உருவாக்க முனைந்தார் என்பதையும் பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை வாரிசு உரிமை போல எடுத்துக்கொண்ட அரசியல் சக்திகள், துணைக் கண்டமென இயல்பாக அமைந்திருக்க வேண்டிய ஒன்றை ஒரு தேசமென உருவாக்க இன்னும் முனைந்துள்ளனர் என்பதையும் இந்த அமைப்பினுள் தமிழ்த் தேசமும் விடுதலைக்கு வழியில்லாமல் மாட்டிக்கொண்டு இன்றளவும் திணறுகிறது என்பதையும் கருணா அவர்கள் கட்டுரையின் இடையில் சொல்லத்தான் செய்கிறார். இக்கருத்தோடு நம்மில் எவருக்கும் முரண்பாடில்லை. தமிழ்த் தேசியம் என்ற உணர்வு தமிழக வரலாற்றில் என்று தோன்றியது எத்தகைய காரணங்களோடு தோன்றின என்பது பற்றியெல்லாம் இந்தச் சிறு நூலில் கருணா விவாதிக்கவில்லை. அன்றியும் இத்தகைய ஆய்வுக்கான உடனடித் தேவையுமில்லை என்றாலும் தமிழ் மக்களின் தொன்மையான வரலாறு சங்க இலக்கிய மேன்மை பற்றி அவர் குறிப்பிடாமல் இல்லை. தமிழக வரலாற்றில் இடைக்காலம் பற்றி, சாதி, மதம் முதலியவை வலுப்பெற்ற இடைக்காலம் பற்றிப் பேசத்தான் வேண்டும் என்றாலும் இத்தகைய புரிதல் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுபவர் பலருக்குள்ளும் இருக்கும் பொதுவான புரிதல் என்பதாலும் இது பற்றியும் இந்தக் கட்டுரையில் பேச வேண்டியதில்லை. இருபதாம் நூற்றாண்டு சூழலில்தான் தமிழ்த் தேசிய உணர்வின் தீவிரமான எழுச்சி பற்றி தோழர் கருணா விரிவாகப் பேசுகிறார். மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலிய தனித்தமிழ் உணர்வாளர்கள் வழியே வீரியத்தோடு வெளிப்பட்ட தமிழ்த் தேசிய உணர்வைக் குறிப்பிடுகிறார். தமிழ் உணர்வாளர்கள் பலர் நெஞ்சிலும் பரவி இன்றுவரையிலும் அழுத்தம் பெற்றிருக்கும் பேருணர்வு இது என்பதில் ஐயமில்லை. இந்த உணர்வின் வயப்பட்ட ஒரு பகுதியாளர் நெஞ்சில் தனித்தமிழ்நாடு என்ற உணர்வும் இடம் பெறுகிறது. தொன்மையான தமிழ் வரலாறு தமிழின் தனித்தன்மை குமரிக் கண்டம் தொடங்கி தமிழன் பெற்றிருந்த தனி ஆட்சி என்றெல்லாம் இவர்கள் இன்றும் அக்கறையோடு பேசுகின்றனர். இவர்களைத் தவிர பெரியார் காலம் தொடங்கி திராவிட இயக்கத்தார் மத்தியில் நிலவுகிற தமிழ்த் தேசிய உணர்வு இன்னொரு வகை. திராவிட முன்னேற்ற கழகத்தின் வழியிலும் தொடர்கிற தமிழ்த் தேசிய உணர்வு, சைவ சமயம் சார்ந்த அறிஞர்கள் ஆர்வலர்கள் நெஞ்சில் நிலவுகிற இன்னொரு வகையான தமிழ்த் தேசிய உணர்வு பற்றியும் குறிப்பிடுகிறார். தமிழ்த் தேசிய உணர்வைத் தமிழகச் சூழலில் இப்படி பல வகையினரும் தாங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. இவர்களின் ஒவ்வொரு வகையினரின் தமிழ்த் தேசிய உணர்வின் வன்மை மென்மை குறித்துப் பேசுவதற்கு இடமுண்டு. இவர்களில் பலரும் சாதி உணர்விலிருந்து விடுபட்டவர்கள் இல்லை. பார்ப்பனியத்திற்கு இவர்கள் சேவை செய்யாமலும் இல்லை. இவர்கள் இடையில் ஒருங்கிணைப்பும் இல்லை. தலித் மக்களிடம் இவர்களுக்கு நெருக்கமும் இல்லை. இன்றைய நிலையில் தமிழ்த் தேசியம் பேசும் சக்திகள் என இவர்கள் முன்னிற்கின்றனர். தமிழ்த் தேசியம் என்பதன் அரசியல் சார்ந்த உணர்வு இவர்கள் அனைவரின் பொது உணர்வு. காவிரி, முல்லைப் பெரியாறு முதலியவற்றில் தமிழ் மக்களுக்கான உரிமையை மீட்க வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பிற மாநிலங்களுக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு பிரச்சனை கூடங்குளம் அணுமின் நிலையம். இவை தொடர்பாக இந்திய அரசு பற்றிய விமர்சனங்கள். தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒருவகை கவலை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. கோவில் மொழியாக இல்லை என்பன பற்றியும் ஒரு பொது உணர்வு. தமிழர் வரலாற்று மேன்மை பற்றி, தமிழிலக்கிய மேன்மை பற்றி தீவிரமான பேச்சு மேடை முழக்கங்கள் இம்முறையில் இன்று தமிழ்த் தேசியம் பேசும் பலரது அக்கறைகளையும் தொகுத்துக் கொள்ளலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் இவர்களுக்கு திறனாய்வு உண்டு. இவர்களின் அக்கறைகள் இதற்கு மேல் விரிந்திருப்பதாக சொல்வதற்கில்லை. இந்த இடத்தில்தான் ஈழத் தமிழக விடுதலை பற்றி இவர்கள் அனைவரின் நெஞ்சிலும் எழுந்த பேருணர்வுகள் பற்றியும் கொந்தளிப்புகள் பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இது பற்றித் தோழர் கருணா தமது கட்டுரையில் மிக விரிவாகவும் அழுத்தமாகவும் பலவற்றைச் சொல்கிறார். குறிப்பாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பிரபாகரன் பற்றி இவரது விரிவான விமர்சனங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். விடுதலைப் போரில் ஏன் தோல்வி ஏற்பட்டது என்பது பற்றியெல்லாம் கருணா தன் கருத்துக்களை விரிவாகச் சொல்லுகிறார். இந்திய சூழலில் தமிழ்த் தேசியம் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கும் பலருக்கும் ஈழத் தமிழர் விடுதலையில் மிகுந்த அக்கறையும் நம்பிக்கையும் இருந்தன என்பது உண்மைதான். ஈழத் தமிழகத்தில் எழுந்த பேரெழுச்சி ஒருவகையில் இந்திய தமிழகத்திலும் தமிழ்த் தேசியம் பற்றி எழுந்த பேருணர்வுக்கும் காரணமாக இருந்தது. ஈழத் தமிழன் மூலம்தான் இந்தியத் தமிழனுக்கும் உலகளாவிய மரியாதை கிடைத்தது. அல்லது ஈழத் தமிழனின் பெயரைத் தான் உலகம் மரியாதையோடு கருதியது. ஈழத் தமிழனுக்கு இருந்த இந்த மரியாதையில் இந்தியத் தமிழனும் பங்கெடுத்துக் கொண்டான். உலகில் 10 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இவ்வளவு பெருந் தொகையில் தமிழர்கள் இருந்தாலும், நெடுங்கால வரலாற்று மேன்மைகள் பலவற்றை தமிழர்கள் கொண்டிருந்தாலும் தமிழனுக்கு எனச் சொல்லிக் கொள்வதற்கு ஒரு தனி நாடில்லை என்ற குறையை ஈழத் தமிழகம் நிறைவு செய்யும் என்று இந்திய தமிழர் நம்பினோம். சிங்களத்தைப் பொறுத்தவரை ஈழத் தமிழருக்கு இடமில்லை என்ற ஆக்கிவிட வேண்டுமென்பது சிங்களர்களின் நெடுங்கால கனவு. கடந்த 50/60 ஆண்டுகளுக்கிடையில் ஈழத்தமிழரை ஒடுக்கியாக வேண்டும். இயலுமானால் அழித்தாக வேண்டும் என்பது சிங்கள அரசியல்வாதிகளுக்கு இருந்த ஒரு வெறி. இலங்கையில் தமிழர்கள் தனக்கான தாயகத்தில் தனி உரிமையோடு வாழ விரும்பி எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத் தமிழர்களின் உரிமையை ஏற்கவில்லை. இதன் பின்னர் தான் தமக்கென ஒரு தனி நாடு இல்லாமல் முடியாது என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடையில் எவ்வளவோ நடைபெற்றன. இவை பற்றி ஏராளமான விபரங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் பிரபாகரன் பற்றிய பேருணர்வு, பாராட்டுகள் முதலியவை எழுகின்றன. இந்த இடத்தில் ஒன்றை வெளிப்படையாக குறிப்பிடுவதில் தவறில்லை. ஈழத் தமிழர் விடுதலையைத் தமிழ் உணர்வாளர் / தமிழ்த் தேசிய உணர்வியலார் என்ற முறையில் நாம் வரவேற்றோம். பிரபாகரன் வெற்றியடைவார் என்று நம்பினோம். உறுதியான முறையில் விட்டுக் கொடுக்காதவர் என்று போராடிய நிலையில் பிரபாகரனை உலகத் தமிழ் இனத்தின் தலைவர் எனப் போற்றினோம். பிரபாகரன் அவர்களின் செயல் பற்றிய பல மாறுபட்ட கருத்துக்கள் செய்திகள் வெளிவந்த போதிலும் நாம் புறக்கணித்தோம். கடுமையான போர்ச்சூழலில் சிலவற்றைத் தவிர்க்க இயலாது என்றும் கருதினோம். ஈழத் தமிழகத்தின் விடுதலை இந்திய தமிழர்களாகிய நமக்கும் வழி திறக்கும் என நம்பினோம். வரலாற்றில் தம் கொள்கையில் வெற்றி பெற வாய்ப்பு நேரும் என்றால் வெற்றி பெறுவதற்காக அவர்கள் செய்த தவறுகள் முதலியவை மறைக்கப்படும் அல்லது மறைந்துவிடும் என்ற பொது உண்மை நமக்கும் தான் பொருந்தும். இந்தியச் சூழலில் நாம் பெரிதும் விரும்பினாலும் நமக்கான ஒரு தேசத்தை வெல்ல முடியவில்லை என்ற குறையை ஈழ விடுதலை மூலம் நாம் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் ஆழ்மனத்தில் நினைத்திருந்தோம். இந்தியச் சூழலில் தமிழ்த்தேசியம் என்ற நோக்கில் அரசியல் பொருளியல் போன்ற பல துறைகளில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் / பொறுப்புகள் முதலியவற்றை வெறும் பேச்சளவில் மட்டும் வைத்துக்கொண்டு ஈழ விடுதலை என்ற ஓர் இலக்கையே வேண்டி நின்றோம். ஈழ விடுதலை தவறிப் போயிற்று. இதற்கு எத்தனையோ காரணங்கள். ஈழத் தமிழர்கள் விடுதலையை ஒழித்துக் கட்டியதில் இந்தியாவுக்கும் பெரும் பங்குண்டு. பயங்கரவாதம் என்ற பெயர் சொல்லி உலக அளவில் அமெரிக்கா தொடங்கி வைத்த ஆதிக்க வெறியை இந்திய அரசும் சிங்கள அரசும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. இப்படி விரிவான விவாதங்களுக்கு இடமுண்டு. உலகச் சூழலை ஈழத் தமிழர் புரிந்து கொள்ளவில்லை என்றெல்லாம் பேசுவதற்கும் இடமுண்டு. புவிசார் அரசியலில் சிங்களத்தோடு இந்தியா நெருங்கி இருக்க வேண்டிய இன்றியமையாத தேவை குறித்தும் பேச முடியும். இந்தியாவினுள்ளும் தமிழர் மீது இந்துத்துவ உணர்வோடு இந்திய அரசு செய்து வரும் ஒடுக்குமுறையின் இன்னொரு பகுதியாக ஈழத் தமிழரின் விடுதலையை ஒழிப்பதில் இந்திய அரசுக்குள் அக்கறை பற்றியும் பேசமுடியும். தோழர் கருணா மனோகரன் ஈழத் தமிழக விடுதலை, பிரபாகரனின் போர்முறை, அரசியல் பற்றியெல்லாம் ஓர் எதிரிடையான நோக்கில்தான் பேசுகிறார் என்று நாம் கருதுவதற்கு இடமுண்டு. அவரது கருத்துக்களை, அவர்தரும் விவரங்களை மறுக்கவும் இடமுண்டு. இத்தகைய விவாதம் முன்னரே எழுந்தது எனினும் இன்னும் நெடுங்காலத்திற்கு தொடரத்தான் செய்யும். பிரபாகரன் பற்றிய பிரம்மையில் மூழ்கியிருந்த எத்தனையோ தமிழ் உணர்வாளர்களில் நானும் ஒருவன். இங்கு ஒப்புக்கொள்வதில் நான் தயங்கவில்லை. ஈழத்தமிழக விடுதலைப் போர் பெரும் தோல்வி கண்டது. மாபெரும் பேரழிவுகள் ஈழத்தமிழருக்கு நேர்ந்தன. வெறித்தனமான முறையில் இராஜபட்சே முதலியவர்கள் ஈழத்தமிழ் மக்களை ஒடுக்குவதில் இன்னும் தீவிரம் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்திய அரசுக்கும் இது நன்கு தெரியும். தெரிந்தேதான் சிங்கள அரசோடு ஒத்துழைக்கிறது. எஞ்சியிருக்கும் தமிழ் மக்களுக்கு குறைந்த அளவுக்கேனும் உயிர் வாழ்வதற்கான சில வாய்ப்புகள் இப்பொழுது உறுதி செய்யப்பட வேண்டும். விடுதலைப் போர் தொடர்வதற்கான வாய்ப்பு அங்கு இப்பொழுது அறவே இல்லை. இந்தச் சூழலில்தான் தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் திரு. சம்பந்தம் அக்கறையோடு சிலவற்றைச் செய்கிறார், பேசுகிறார். திரு. சம்பந்தம் அவர்களின் அண்மைக்கால உரையை விரிவாகக் குறிப்பிடும் கருணா சம்பந்தம் அவர்களைப் பாராட்டுகிறார். இன்றைய சூழலில் இதைத்தான் செய்ய முடியும். தமிழகத்திலிருந்து சிலர் பேசும் ஆவேச உரைகளுக்கு அர்த்தமில்லை. ஈழத் தமிழகம் இன்னொரு விடுதலைக்காகக் காத்திருக்கிறது என்று சொல்லி அதன் விடுதலைக்காக, தேவையான சமயத்தில் உருப்படியாக எதையும் செய்யாமல் வெற்று உரைகளிலே காலம் கழித்த நம்மவர் இன்றேனும் நாணி குனியத்தான் வேண்டும். இந்தியாவிலிருந்து கொண்டு தமிழ்த் தேசியம் பற்றி அக்கறையோடு பேசும் நமக்கு ஈழத் தமிழக விடுதலை என்பது ஒரு மாற்றாக இருக்க முடியாது. தூண்டுதலாக உதவியாக இருந்திருக்கலாமேயன்றி ஈழத் தமிழக விடுதலை நமக்கான விடுதலையாக இருக்க முடியாது. தோழர் கருணா அவர்களின் முடிவை இப்படிப் புரிந்து கொள்வதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். தோழர் கருணா பற்றி எத்தகைய மாற்று கருத்து நமக்கு இருந்தபோதிலும் கருணா அவர்களின் இத்தகைய உணர்வைப் புரிந்து கொள்ள நம்மவர் தவறிவிடக் கூடாது. தோழர் கருணாகரன் அவர்களோடு இப்பொழுது கடுமையான விவாதத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அவர் கருத்தின்படி முன்பெல்லாம் அரசியல், ஆதிக்கத்திலிருந்தது இன்றைய உலகில் பொருளியல் சக்திகள் ஆதிக்கத்திலிருக்கின்றன. முழு அளவிலான ஆதிக்கம் பொருளியல் சக்தி உடையது. அதாவது பொருளியல், அரசியல், கலை, கல்வி முதலிய அனைத்தையும் விட்டுத்தர வேண்டும் அல்லது அரசியல், கலை, கல்வி, பண்பாடு முதலிய அனைத்தையும் பொருளியல்தான் இன்று தீர்மானிக்கிறது. அறிவியல் தொழில் நுட்பங்களை இன்று நாம் மறுக்க முடியாது. மின் உற்பத்திக்காக அணுமின் நிலையங்கள் தேவைதான். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று உலக அளவில் ஆதிக்கத்தில் உள்ளன. இவற்றை இனி மறுக்க முடியாது. முன்பெல்லாம் தமிழ்ப் பண்பாடு என்று பேசினோம். இன்று இப்படி பேசுவதில் பொருளில்லை. பொருளியல் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில் நுட்பங்கள் இல்லாமல் முடியாது என்பது போலவே ஆங்கிலம் இல்லாமலும் முடியாது. அறிவியல் வளர்ச்சியின் போது என்னதான் பெருமைக்குரியதாக இருந்தாலும் தமிழ் அழிந்துதான் தீரும். காவிரி, முல்லைப்பெரியாறு என்று இனி அரசியல் நடத்திக் கொண்டிருக்க முடியாது. கர்நாடகத்திற்கு காவிரி தண்ணீர் தேவைதான். புதிய நிலங்களைச் சாகுபடிக்கு அவர்கள் கொண்டு வருவதை நாம் மறுப்பதில் பயனில்லை . பெங்களூர் குடிநீர்த் தேவைக்குக் காவிரி நீரை அவர்கள் கொண்டு செல்வதை நாம் எப்படித் தடுக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் பயன்படுகின்றன. புதிய அறிவுத்திறன் நம் இளைஞர்கள் கற்று அந்நிய நிறுவனங்களில் அதிக ஊதியத்திற்கு வேலை பார்க்கிறார்கள். தங்கள் அறிவுத் திறனை விற்பதில் என்ன தவறு? விளை நிலங்களில் பெரிய நிறுவனங்களை எழுப்புகிறார்கள் என்று நாம் புலம்புவதில் பயனில்லை. நாம் உற்பத்திச் செய்தவற்றை தேவையானவர்களுக்கு வெளியில் விற்று அங்கிருந்து நமக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதே அறிவுடைமை. பொருளியல் சக்திகள் வலுமிக்கவை. அரசியல்வாதிகள் இச்சக்திகளுக்கு இடம் கொடுத்துதான் தீர வேண்டும். சிறு வணிகம் அழியத்தான் செய்யும். நம் உடைகளை, உணவு முறையை, வீடுகளை நவீன முறையில் மாற்றியமைத்துக் கொள்கிறோம். இதில் தவறு காண முடியாது. தமிழ்ப் பண்பாடு, தமிழ்ப் பெருமை, தமிழ் வாழ்வியல் என்றெல்லாம் பேசுவதற்கு அர்த்தமில்லை. தொழில் வளர்ச்சியின் விளைவாக மாசு முதலியவை ஏற்படத்தான் செய்யும். இவற்றை மாற்றுவதற்கும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களைச் சீனா அனுமதித்தது. அவர்களைத் தன் ஆதிக்கத்திற்குள் அனுமதித்தது. தேவையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது அரசியல் என்பதை கருணா ஏற்க மாட்டார். எந்த ஒரு காலத்திலும் பொருளியலிலிருந்து அரசியலைப் பிரிக்க முடியாது என்ற நிலையில்தான் அரசியல் செயல்பட்டது. அரசியல் என்று தனியே ஒன்றை குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. சோசலிசம் என்று சில வரையறைகளை வைத்துக்கொண்டு பொருளியலை அதற்குள் கட்டுப்படுத்த முடியாது. ஆறுகள் நாசமாகின்றன என்று நாம் வீணே புலம்புகிறோம். இப்பொழுது பெய்யும் மழை நீரில் பெரும்பகுதி கடலில் வீணே கலக்கிறது. அங்கங்கே தடுப்பணைகள் அமைக்க முடியும். குளங்கள் வெட்டி நீரைச் சேகரிக்க முடியும். இதேபோலத்தான் வீரிய வித்துக்கள் முதலியவற்றைப் பயன்படுத்த முடியும். இயற்கை வேளாண்மை எல்லோருக்கும் உணவு தராது. இந்த முறையில்தான் கருணா அவர்கள் விவாதிப்பதாகத் தோன்றுகிறது. தொழில் வளர்ச்சியில் நாமும் முன்னேறி அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகளுக்கு நிகராக நிற்க முடியும். முதலாளியம்தான் உலகை ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் சக்தி என்று மார்க்ஸ் சொன்னது இப்பொழுது உண்மையாகிவிடுகிறது. முதலாளியத்தின் வளர்ச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் மார்க்சியம் என்று கருணா கருதுகிறார். நம் சிந்தனைகள் பழமையானவை என்கிறார். கருணா சொல்வது உண்மை என்றால் தமிழ்த் தேசியத்திற்குக் கூட இங்கு என்ன தேவை என்று கேட்கத் தோன்றுகிறது. தேசங்களுக்கிடையில் பிரிவினை வரையறைகள் கூட தேவையில்லை என்றுதான் அவர் கருதுவதாகத் தோன்றுகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் ஆயிரக்கணக்கான விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டோம். நம் முன்னைய மரபோடு இவை முரண்படுகின்றன என்று தெரிந்தும் ஏற்றுக் கொண்டோம். இவற்றை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது என்பதும் நமக்குப் புரிகிறது. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், பழம் பண்பாடு என்றும் பேசுகிறோம். சிலர் விடாப்பிடியாக இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் இன்று சமூகத்தின் மையத்திலில்லை. ஓரத்திற்கு இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். விளிம்பிலிருந்து கொண்டு மையத்தைக் கைப்பற்றுவது பற்றி நாம் எண்ணுகிறோம். முடியாது என்பது தெரிந்து நாம் இப்படி எண்ணுகிறோம். மாபெரும் தொழில் வளர்ச்சியின் விளைவாக இயற்கை பேரழிவுக்குள்ளாகும் என்பதன் காரணமாகவும் நாம் திகைக்கிறோம். பொருளியல் சார்ந்த ஆதிக்கச் சக்திகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று பேசுகிறோம். கருணா அவர்கள் தன் சிந்தனையில் உறுதியாகத்தான் இருக்கிறார். அவரிடம் தடுமாற்றம் எதுவுமில்லை . அவரது சிந்தனை இயக்கத்தினுள் தமிழ்த் தேசியம் எப்படி இணைகிறது என்பது புலப்படவில்லை . கட்டுரையின் ஒரு பகுதியில் மதம் தேவை என்பது போல் பேசுகிறார். இந்து மதம் - என்பதோடு அவர் முற்றாகவே முரண்படுகிறார். திருவள்ளுவர் கொள்கையை மையத்தில் வைத்து தமிழ் மாதம், வள்ளுவர் கோவில் என்றெல்லாம் நாம் படைத்திருக்க வேண்டும் என்கிறார். இப்படித் தொடங்கினால் தமிழ்ப் புரோகிதர்கள் உள்ளே வந்து விடுவார்கள். இப்படி ஒரு சிந்தனை கருணா அவர்களுக்குள் எப்படி வந்தது என்று புரியவில்லை. கட்டுரையின் இன்னொரு பகுதியினுள் தமிழீழம் தேவை என்றும் பேசுகிறார். இதுவும் ஒரு புதிராகத்தான் தோன்றுகிறது. ஒரு மார்க்சியர் என்ற முறையில் கருணா அவர்கள் இன்னும் சமதர்மம் என்ற கொள்கையைக் கைவிட்டிருக்க மாட்டார் என்றால் தம் சிந்தனை தொகுப்பினுள் சமதர்மத்திற்கு என்ன இடம் என்பது பற்றி அவர் விளக்கம் தர வேண்டும். தமிழ்த் தேசியம் என்று சிந்திப்பவர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பில்லை என்பது ஒரு முக்கியமான உண்மை. தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து இவர்கள் தமக்குள் விரிவாக விவாதிக்கத்தான் வேண்டும். தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் என்ன, பொருளியல் என்ன, கலாச்சாரம் என்ன, கல்வி என்ன, அயல் நாடுகளோடு என்ன உறவு பன்னாட்டு நிறுவனங்களோடு என்ன உறவு, இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல் பற்றிய கருத்துக்கள் என்ன? இப்படி நிறைய விவாதிக்க வேண்டும். இதன் தொடர்பாக அணுமின் நிலையம் பற்றியும் பேச வேண்டும். வரலாறு, பொருளியல், உளவியல் என்றெல்லாம் பேச வேண்டும். சாதி, மதம், பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் பேச வேண்டும். கருணா அவர்களோடும் உரையாடல் தேவை. " எஸ்.பொ. ஞானத்தின் நேர்காணல் (குறிப்பு : எஸ்.பொ . அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் - வரலாற்றில் வாழ்தலை முன்வைத்து கொழும்பிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எஸ்.பொ. விரிவான பதில் கூறுகிறார். எஸ். பொ. - ஞானம் நூல் ’தீதும் நன்றும் தொகுப்பை மித்ர பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் இடையிடையே - ஞானியின் கருத்துரைகளும் இடம் பெறுகின்றன.) 1. எடுத்த எடுப்பிலேயே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் பாடலும் தன் வாழ்வும் ஒன்றியிருப்பதை எஸ்.பொ. குறிப்பிடுகிறார். இது வியப்பாகத்தான் இருக்கிறது. பூங்குன்றனாரின் பாடலுக்குள் பதிந்திருக்கிற வாழ்வியல் அனுபவம், தமிழ்ச் சமூகம் முழுவதும் தனக்குள் வாழ்ந்த ஒருவரின் பேரனுபவம். உண்மையில் எஸ். பொவும் இத்தகைய அனுபவத்தைத் தானும் பெற்றிருப்பதைத் தன்னுணர்வோடு குறிப்பிடுகிறார். இப்படி யாரால் சொல்ல முடியும் என்பது என் வியப்பு. 2. ஞானம் அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும் போதே ‘வரலாற்றில் வாழ்தலை’ நான் ஏன் எழுதினேன் என்று சொல்லி வரும்போது, உண்மைகளை / சத்தியத்தைத் தேடும் நோக்கில் தான் எழுதியது பற்றிச் சொல்லுகிறார். ஏற்கனவே தெரிந்த உண்மை இது. வாழ்வனுபவங்களை மட்டும் பதிவு செய்வதற்காக இதை எழுதவில்லை என்று எழுதும் போதே தான் வாழ்ந்த வரலாற்றுக்குள்ளிருந்து மேலும் புதிய சத்தியத்தைத் தேடும் நோக்கிலும் எழுதுவதாகச் சொல்லுகிறார். இதை இன்னும் சரியாக நாம் சொல்ல முடியும். அதாவது எஸ். பொவைப் போன்ற செறிவான வாழ்வியல் அனுபவங்கள் நிறைந்த ஒருவர், தனக்குள் தேடும் பொழுது எத்தகைய வரலாறு - தன் கால், தன் தேச வரலாறு - சமூக வரலாறு - இலக்கிய வரலாறு - உலக வரலாறு தனக்குள் வந்துள்ளது. மேலும் சரியாகச் சொல்வதென்றால் இவ்வகையான வரலாற்றின் வழியே தன் வாழ்வை, தன் வாழ்வியல் அனுபவங்களைப் புரிந்து கொள்வதன் மூலமே ஒருவர் தன்னைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். தன் வாழ்வு என்பது தனக்குள் வந்த வாழ்வு. புற உலகத்திலிருந்து தன் தேடலின் போது தனக்குள் உணர்வோடு தானும் திரட்டிக் கொண்ட வாழ்வு. வரலாறு நமக்குள் கரைவது போல வரலாற்றுக்குள் நாமும் கரைவதைப் பொறுத்து நமக்கும் பாரிய வாழ்வு வாய்க்கிறது. இவ்வகையில்தான் நெடுங்காலத் தமிழிலக்கியம் எஸ்.பொ . அவர்களுக்குள் செறிவு பெற்றிருக்கிறது. தன் தேசத்தின், தன்கால் வரலாற்று முரண்கள் அவரைத் தாக்கி, அவருக்குள்ளிருந்து வலுவான எதிர்வினையைத் தான் உருவாக்கக் காரணமாயிருக்கிறது. எங்கிருந்தோ தோன்றி, எல்லாத் தேசங்களையும் அதிர்வுக்குள்ளாக்கிய கம்யூனிச சிந்தனை அவரது வாழ்வுக்குள் வந்திருக்கிறது. இப்படி வாழ்வதன் மூலம் அவரது வாழ்வை நிறைவு செய்திருக்கிறது. தமிழிலக்கியத்தையும் மார்க்சியத்தையும் தனக்குள் அவர் செரித்துக் கொள்ளவில்லை என்றால் இன்று எஸ். பொவை நம்மால் கொண்டாட முடியாது. அரைகுறையாக இவற்றைச் செரித்துக் கொண்டிருந்தால் அவர் அநேகமாகக் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரராக மட்டுமே - அரைகுறை வேக்காட்டுக் கம்யூனிஸ்ட்டாகவே அவர் வளர்ந்திருக்க முடியும் / வாழ்ந்திருக்க முடியும். தொடக்க நிலையிலேயே எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வதும் சாத்தியமில்லை. பல்லாண்டு வாழ்ந்து அங்குமிங்கும் அடிபட்டு, வாழ்வுக்குள் வந்த எத்தனையோ நஞ்சுகளைத் தின்று செரித்துக்கொண்டு, அவற்றிலிருந்து விடுபட்டுத் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்வதன் மூலமே ஒரு கம்யூனிஸ்ட் வளமான ஆளுமையைப் பெற முடியும். எஸ். பொ. அவர்களுக்குள் இன்னும் கசப்பும் சினமும் எஞ்சியிருக்கின்றன. இவற்றிலிருந்து எஸ்.பொ. விடுபடத்தான் வேண்டும். நஞ்சைச் செரித்துக் கொண்ட சிவனைப் போல அவர் மாறத்தான் வேண்டும். 3. மு. கார்த்திகேசு அவர்களின் தலைமையில் தானும், என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, டேனியல் முதலியவர்களும் மார்க்சிய இலக்கியக் குழுவில் 1950 வாக்கில் செயல்பட்டதைச் சொல்லி வரும் எஸ்.பொ. 56க்குப் பிறகு பண்டார நாயக்க காலத்தில் சிங்கள தேசியம் உருவான சூழலில் கம்யூனிஸ்ட்டு முற்போக்கு இலக்கிய இயக்கத்துள் கைலாசபதி, சிவத்தம்பி முதலியவர்களுக்குக் கிடைத்த ஏற்றம் பற்றி விரிவாகப் பேசுகிறார். இலங்கையில் சாகித்திய மண்டலம் தந்த பரிசு பற்றியும் எஸ்.பொ . சொல்லுகிறார். கைலாசபதி பட்டதாரி, ஆங்கில இலக்கியம் கற்றவர். தொடக்கத்தில் சிறுகதை எழுதிப் பிறகு, விமர்சகராக வெளிப்பட்டவர். யாழ்ப்பாணத்தில் வேளாளர் சாதியைச் சார்ந்தவர். கட்சிக்குள் வேளாளர் செல்வாக்கோடு - வைத்தியலிங்கத்தின் மூலம் வந்தவர். முற்போக்கு இலக்கிய அமைப்பினுள் படைப்பாளிகளுக்குத்தான் முதன்மைத் தேவை. விமர்சகர்கள் தலைமையில் இயக்கம் இருக்கக்கூடாது என்பது எஸ்.பொ. வின் வாதம். அன்றியும் தமிழிலக்கியவாதிகள் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும் பற்றும் பெற்றிருக்க வேண்டும். எஸ். பொ. சாதியில் தாழ்ந்தவர். டேனியல் முதலியவர்களுக்குப் படைப்பில் பயிற்சி தந்தவர். இந்த விவரங்களை எல்லாம் ஞானம் அவர்களின் கேள்விக்கு எஸ்.பொ. விரிவாகத் தருகிறார். பேராசிரியர்கள் கணபதிபிள்ளை, வித்தியானந்தன் ஆகியவர்களின் அடிப்பொடியாகக் கைலாசபதி செயல்பட்டவர் என்றும் குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் 1948லேயே வந்தவர் எஸ்.பொ. 56 காலத்தில் வந்தவர் கைலாசபதி என்றாலும் முற்போக்கு இயக்கத்தில் என். கே. ரகுநாதன், மு. கார்த்திகேசு, எஸ்.பொ. முதலியவர்களுக்குப் பதிவு இல்லை. இத்தகைய விவரங்களிலிருந்து நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் உயர்சாதி வேளாளருக்கு முதன்மை இடம் இருந்தது. சாதியின் காரணமாகத்தான் இந்த இடம் என்பதை மறுப்பதற்கில்லை. சாதியுணர்விலிருந்து மார்க்சியவாதி இயக்கத்தினுள் வந்த பிறகேனும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்திலும் இதற்கு ஒத்த அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு. இன்று வரையில் இது உண்மை. உயர் சாதியினரைக் காட்டிலும் சாதியில் தாழ்ந்தவர் சாதியுணர்விலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது சாத்தியம். எஸ். பொவைப் பொறுத்தவரை தன் தந்தையின் பேராண்மையும் பெருமிதவுணர்வும் தனக்குள்ளும் பதிந்து இருந்ததால் என்றைக்கும் எவரிடத்தும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதில்லை. நிமிர்ந்தே நிற்கிறார். யாருக்கும் அவர் அடிப்பொடியாகவுமிருந்ததில்லை. தமிழிலக்கியத்தை இளமை முதற்கொண்டே தனக்குள் வைத்து ஆழ்ந்து பயின்றவர். தமிழிலக்கியத்தின் மேன்மைக்கு முழு அளவில் வசப்பட்டவராகவும் இருக்கிறார். எஸ். பொ. இத்தகையவர். மார்க்சியம் கற்றதனால் இத்தகையவரிடம் தமிழ்ப்பற்று குறைந்துவிடாது. அன்றியும் தமிழும் மார்க்சியமும் தமக்குள் கரைந்து விடவும் முடியும். மார்க்சியம் தெரிந்தவர் தமிழிலக்கியத்தைத் தாழ்வாக நினைக்க வேண்டியதில்லை. முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் விமர்சகர் தலைமையிலிருப்பதை எஸ்.பொ. விமர்சனம் - செய்வதை நாம் புரிந்து கொள்ள முடியும். படைப்பிலக்கிய அனுபவம் தனக்குள் கொண்டவர்தான் படைப்பாளிகளைப் புரிந்து கொள்ள முடியும். படைப்பிலக்கிய அனுபவமில்லாதவர் சிறந்த விமர்சகராகவுமிருக்க முடியாது. படைப்பிலக்கிய அனுபவமும் திறனாய்வுத் திறனும் முரண்பட வேண்டியதுமில்லை. முற்போக்கிலக்கிய இயக்கம் இலங்கையிலும் சரி இங்கும் சரி கட்சி அரசியலியக்கத்தின் ஓர் உறுப்பாகத்தான் செயல்படுகிறது. கட்சிக்காக இலக்கியவாதிகளைத் தயாரிக்கும் நோக்கமும் இலக்கிய இயக்கத்திற்கு உண்டு. இலக்கிய இயக்கத்தில் தலைமையிலுள்ளவர், கட்சிக்கு அடிப்பொடியாக இருப்பவர்களுக்குத் தான் பரிசும் பாராட்டும் வழங்குவார். தொழிற்சங்கவாதத்தின் உடன்பிறந்த நோயிது. டொமினிக் ஜீவா எஸ்.பொ.விடமிருந்து படைப்பிலக்கியம் கற்றவர்தான். பின்னர் கைலாசபதியின் பாராட்டைப் பெற்ற நிலையில் அவரடிப்பொடியாகவும் இருந்தவர்தான். பின்னர் ஒரு கட்டத்தில் விடுபட்டிருக்கிறார். ஓர் அசலான மார்க்சியர் இப்படி யாருக்கும் அடிப்பொடியாக இருக்க முடியாது. சிங்கள தேசியத்தை ஒப்புக்கொண்டு அரசின் ஆதரவில் பதவியும் மரியாதையும் பெற்றவர் கைலாசபதி. விரிவுரையாளர் திடீரென்று பேராசிரியராகிறார். பின்னர் துணைவேந்தருமாகிறார். 4. ஞானம் அவர்களின் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லும் பொழுது தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் பதவியிலிருந்து கைலாசபதி விலகும் சமயத்தில் 190 தினகரன் பத்திரிகை ஆசிரியர் பதவிக்கு எஸ்.பொ.வைக் கைலாசபதி பரிந்துரை செய்திருக்கிறார் என்பதைச் சொல்லுகிறார். அதுவரை எஸ். பொவுக்கும் கைலாசபதிக்கும் முரண்பாடு இல்லை. 1961இல் தான் கைலாசபதி முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்குள் இடம் பெறுகிறார். தலைமைக்கும் வருகிறார். படைப்பிலக்கியவாதியாகிய எஸ்.பொ. தலைமைக்கு வந்துவிடக்கூடாது என்பதனால்தான் கைலாசபதி இவருக்கு எதிர்நிலை எடுத்தார். மற்றபடி யாழ்ப்பாணக் கட்சியில் உறுப்பினராக எஸ்.பொ. இருக்கவில்லை. மட்டக்களப்பு கட்சிக்கிளையில் கிருஷ்ணமணிக்கு அடுத்த நிலையிலிருந்து கலை இலக்கியத் துறையில் சிறந்த பணியாற்றினார் என்பதையும் சொல்லுகிறார். யாழ்ப்பாணக் கட்சியிலிருந்து கைலாசபதியால் எஸ்.பொ. வெளியேற்றப்பட்டார் என்று மு.தளையசிங்கம் எழுதியதை எஸ்.பொ. மறுக்கிறார். தலையசிங்கத்தை, அவசரக்காரர் என்கிறார். இப்படி இலக்கிய / கட்சி வரலாற்றைத் திருத்தும் முறையில் எத்தனையோ விபரங்களைத் தொடர்ந்து தருகிறார் எஸ்.பொ. கம்யூனிஸ்ட்க ளின் கட்சி / இயக்க வரலாறு என்பது, இப்படித்தான் தன்னோடு முரண்பட்டு வெளியேறுபவர்களின் பங்கை முற்றாக ஒதுக்கிவிட்டு எழுதப்படுகிறது. 5. ஸாகிரா மகாநாட்டிற்குப் பிறகு எஸ்.பொ. முற்போக்கு இலக்கியத்தவரோடு தொடர்பின்றி இருந்ததோடு நற்போக்கு இலக்கியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து மார்க்சியத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்ற கருத்தை மறுக்கும் முறையில் ஞானம் அவர்களின் கேள்விக்கு எஸ்.பொ. பதில் தருகிறார். தொடக்கத்தில் எஸ்.பொ.வை உள்ளடக்கத்திற்கு அல்லாமல் உருவத்திற்கே - நடைக்கே அழுத்தம் தருகிறவர் என்று முற்போக்கு இலக்கியக்காரர் விமர்சனம் செய்தனர். எஸ். பொ. நடைக்கு அழுத்தம் தருகிறவர்தான். அதேசமயம் தமிழ்நடை மரபுக்கும் எஸ்.பொ. அழுத்தம் தருகிறவர். மரபை முற்போக்கு இலக்கியக்காரர் மறுத்தனர். மரபை உள்ளடக்கிய முறையில் நற்போக்கு இலக்கியம் என்ற தொடர் எழுந்தது. ஒரு வசதிக்கான தொடர் என்பதுதான் இது என்பது எஸ்.பொ. கருத்து. பேரா. FX.C. நடராசா மூலம் தமிழ் இலக்கணம் கற்றபோது மரபின் ஆதாரமில்லாமல் படைப்பிலக்கியம் இல்லை என்பதை எஸ்.பொ. புரிந்து கொண்டார். நாளடைவில் தமிழ் மரபின் உரம் என்பதைத்தான் தமிழ்த்துவம் என்று பெயரிட்டு எஸ்.பொ. பேசுகிறார். உடனடியாக இல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இத்தகைய தெளிவு தனக்கு ஏற்பட்டதென்று எஸ்.பொ. கூறுகிறார். ஏற்கனவே நான் கூறியபடி கட்சி மார்க்சியர் பலருக்குத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த படிப்பும் பயிற்சியுமில்லை. இதன் காரணமாக அவர்களுக்குத் தமிழ் நேயமில்லை. வர்க்கப் போராட்டம் என்ற வாய்பாட்டைப் பழந்தமிழிலக்கிய ஆய்வில் எதிர்நிலையாகவே பயன்படுத்தினார்கள். தமிழ்ப்பற்றாளர் சங்க இலக்கியத்தை மேன்மைப்படுத்திக் கூறுவது அவர்களுக்கு உடன் பாடில்லை. வள்ளுவர் வணிக வர்க்கச் சார்பாளர் என்றுதான் ஓயாமல் எழுதினர். சங்க காலம் பொற்காலமில்லை என்று அவர்களுக் கொத்தவாறு ஆதாரங்களை எடுத்து விவாதித்தனர். வையாபுரி அவர்களோடு சேர்ந்து சங்க இலக்கியக் காலத்தைக் கி.பி. 4/5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தள்ளினர். வடமொழிச் சார்பில்லாமல் தமிழ்ச் சிந்தனை இல்லை என்றனர். தமிழ்த்தேசியம் என்ற உணர்வு அவர்களுக்குக் கசப்பான உணர்வு. எஸ்.பொ. கூறுவது போல மிக அண்மைக்காலத்தில் தான் இவர்களிடம் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஜீவாவை இவர்கள் கேலி பேசியதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். மார்க்சு வந்த பிறகுதான் வரலாற்றில் வெளிச்சம் வந்தது என்பது இவர்களின் நம்பிக்கை. பழங்காலம் என்பது இருண்ட காலமாகத்தான் இருக்க முடியும். இப்படித்தான் இவர்கள் தமிழுக்கும் தமிழ் மரபுக்கும் எதிராகச் செயல்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சில் இடம் பெறமுடியவில்லை. தமிழ்ப் பற்றோடு மார்க்சியத்தை அறிமுகப்படுத்தியிருந்தால் தமிழ் மக்கள் வாழ்வில் சிந்தனையில் எவ்வளவோ மேன்மை கூடியிருக்க முடியும். 6. எஸ்.பொ. குறிப்பிடும் தமிழ்த்துவத்திற்கும் கைலாசபதி எழுதிய Tamil Heroic Poetry - க்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று ஞானம் அவர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பொ. விரிவாக விடை தருகிறார். கலாநிதி கைலாசபதி பிரிட்டனில் ஜார்ஜ் தாம்சன் என்ற பேராசிரியரிடம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவராக இருந்து சங்கக் கவிதைகளை வீரயுகக் கவிதைகள் என்று முடிவு செய்து நூல் வெளியிட்டார். எஸ். பொ. குறிப்பிடுவது போல கிரேக்கத்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய சமூகத்தில் தோன்றிய வீரநிலைப் பாடல்கள் குறித்து சி. எம். பவுரா செய்த ஆய்வை அப்படியே கைலாசபதி தமிழ்ச் சூழலுக்கும் பொருத்திப் பார்த்திருக்கிறார். கைலாசபதி அவர்களின் தவறான ஆய்வு குறித்து இங்கு விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. பேராசிரியர் நா. ஜெயராமன், தெ. பொ. மீ. முதலியவர்கள் கைலாசபதியின் கருத்தை அழுத்தமாக மறுத்திருக்கிறார்கள். இது பற்றி எழுதினால் இது பல பக்கங்களுக்கு நீளும் நான் தவிர்த்துக் கொள்கிறேன். சங்க காலத்தில் பாணர், பாடினி, விறலியர், கூத்தர் செய்த பாடல்களில் சில வரிகள் திரும்பத் திரும்ப வந்திருப்பதை வைத்து, சங்க இலக்கியம் முழுவதும் சி. எம். பவுரா குறிப்பிடுகிற மாதிரி வாய்மொழிப் பாடல்கள் என்று குறிப்பிடுவதற்கும் போதுமான சான்றாகாது. எஸ்.பொ. சரியாகத்தான் கைலாசபதியை மறுத்திருக்கிறார். மறுக்கும் பொழுது சில கடுமையான சொற்களை எஸ்.பொ. பயன்படுத்துவதைத் தவிர்த்திருக்கத்தான் வேண்டும். எஸ்.பொ. மேலும் பலவற்றை இங்குச் சொல்கிறார். பாணன், பாடினி முதலியவர்கள் தொடக்கத்தில் படைப்பாளிகளாகவும் இன்னொரு சமயத்தில் புரவலர்களை மகிழ்விக்கும் கலைஞர்களாகவும் இருந்தனர் என்பது போல சொல்கிறார். சங்க காலத்தில் தொடக்க நிலையிலும் சங்க காலத்திற்கு முற்பட்ட இனக்குழுச் சமூகத்திலும் பாணர், பாடினி, கூத்தர் முதலியவர் சமுதாயத்தின் அங்கமாக இருந்திருக்கின்றனர். இடைக்காலத்தில் அதாவது இனக்குழுச்சமூகம் அழிந்து, தனியுடைமை அரசாதிக்கம் வலுப்பெற்ற, சங்க பிற்காலத்தில் மன்னர்களிடத்து பாடிப் பரிசு பெறுபவர்களாக மாறினர். சங்க காலத்தின் இறுதிக் கட்டத்தில் தம்மை ஆதரிக்கும் வேளிர் முதலியவர்கள் அழிந்த நிலையில் பழு மரம் தேடும் பறவைகளைப் போலத் தம்மை ஆதரிக்கும் மன்னர்களைத் தேடி அலைந்து, நாளடைவில் அகத்திணைப்பாடல்களில் இடம்பெறும் தலைவர் தலைவிக்கு இடையில் ஆதரவுக்கு அலைந்தவராய் வாழ்ந்தனர். தொடக்கத்தில் இவர்கள் படைப்பாளிகளாகவும் இருந்தனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவ்வையும் தன்னைப் பாடினி என்றே சொல்லிக் கொள்கிறாள். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் அனைத்துப் பெருந்தொகையான பாடல்களை இயற்றியவர்கள் புலமை மிக்கவர்கள். அதாவது புலவர்கள் - தமிழ்ச் சான்றோர் மன்னர்களுக்கு அறம் கூறித்திருத்துபவர்களாகவும் இவர்கள் இருந்திருக்கின்றனர். மன்னர்களும் பாடல்கள் இயற்றினர். பெருந்தொகையான இப்புலமையாளர்களில் பாணர் என்பவர் சிலராகவே இருக்கக்கூடும். பாணர் மரபும் புலமை மரபும் இடையில் உறவுடையவை எனினும் பெரிதும் வேறுபட்டவை. சங்க காலப் பாடல்கள் இயற்றிய அனைவரும் பாணர் பாடினியர் என்பது போல எஸ்.பொ. அழுத்திக் கூறுவதை ஆய்வாளர்களால் ஏற்பதற்கில்லை. ஆனால் பாணர், பாடினியர், கூத்தர், விறலியர், பொருநர் என்ற கலைஞர்களின் மரபு, வரலாற்றுக் காலநிலைக்கு ஒத்தவாறு ஏற்றத்தாழ்வுகளோடு இருந்தது என்றாலும் இந்தக் கலைஞர்களின் மரபு நம் காலம் வரையிலும் அறுபட்டுவிடவில்லை என்பதை எஸ்.பொ. அழுத்தமாகக் கூறுவது உண்மைதான் என்பது மட்டுமல்ல. இந்த உண்மையை எஸ்.பொ. தன் ஆற்றல்மிக்க உய்த்துணர்வின் மூலம் கூறுவது வியப்பிற்குரியது. இந்த மரபினர்தான் பக்தி இலக்கியக் காலத்தில் தமிழிசை வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்திருக்கக் கூடும். இராஜராஜன் காலத்தில் இவர்கள்தான் கோவில்களில் இடம்பெற்ற கூத்தர்கள். தேவரடியார்கள் என்பவர்களும் பெரும்பாலும் இவர்கள்தான். சதுர் ஆட்டத்தைத் தமக்குள் தாங்கி வளர்த்தவர்களும் இவர்கள்தான். இன்று பெருமளவு பாராட்டப்படும் பரத நாட்டியத்திற்கும் தமிழிசைக்கும் இவர்கள்தான் மூலவர்கள். வகைவகையான இசைக் கருவிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு வியக்கத்தக்கது. ஞானம் அவர்கள் கேள்விக்குரிய எஸ்.பொ.வின் தமிழ்த்துவம் பற்றி இங்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். எஸ். பொ. கூறும் தமிழ்த்துவத்திற்கும் கைலாசபதியின் ஆய்வுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எஸ். பொ. தமிழ்த்துவம் என்று சொல்வதை இன்று நாம் தமிழியம் என்று குறிப்பிடுகிறோம். தமிழ்த்துவம் என்பதைத் தமிழ் + தத்துவம் - தமிழாகிய தத்துவம் (அ) தமிழின் தத்துவம் என்று பொருள்படுத்திப் பார்க்கலாம். (தத்துவம் என்ற வடசொல்லைத் தற்போது மெய்யியல் என்கிறோம்) எஸ்.பொ.வைப் போல வடச்சொற் பயன்பாட்டில் நமக்கு ஆர்வமில்லை . இது ஒருபுறம் இருக்கட்டும் தமிழின் தத்துவம் (அ) தமிழின் மெய்யியல் என்பது தமிழ்த் தேசியம் என்ற உணர்வோடு ஒன்றியது. தமிழின் தொன்மை மரபை நவீன காலத்திலும் ஒதுக்கிவிட முடியாது. முற்போக்கு இலக்கியகாரர்கள் இப்படி இல்லை . தமிழ் மரபு என்பதை ஒருவேளை எஸ்.பொ. விரிவாகக் கூறுவது போலக் காலந்தோறும் தொடரும் பாணன், பாடினி ஆகியவர்களை உள்ளடக்கிய கலைஞர் மரபாகப் பொருள்படுத்தலாம். இவர்கள் என்றைக்கும் மக்கள் சார்புடையவர். இவர்கள் மேட்டுக்குடியினர் அல்லர். உழைக்கும் வர்க்கத்தினர் என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எஸ்.பொ. அவர்களின் மனநிலை. தமிழ் மரபு என்பதை இன்னொரு வகையில் பொருள்படுத்தலாம். சங்க காலச் சமூகத்தில் தனியுடைமையும் அரசதிகாரமும் தொடர்ந்து அழுத்தம் பெற்றதை நாம் காண்கிறோம். சங்கத்திற்கு முற்பட்ட காலத்தில் நிலவிய இனக்குழுச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. உழைப்பை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு இங்கு அறவே இல்லை. இனக்குழுச் சமூகம், தனியுடைமை அரசதிகாரத்தோடு கூடிய உடைமை சமூகத்திற்கு இடம் கொடுத்துதான் மறைந்தது என்றாலும் இனக்குழுச் சமூகத்தின் உயரிய பண்பாட்டை மக்கள் குறிப்பாகச் சான்றோர் தமக்குள் மறக்காமல் போற்றினர். தனியுடைமையும் அரசதிகாரமும் அழுத்தம் பெறும் சமூகம், மனித பண்பாட்டுக்கு மதிப்பளிக்காத சமூகம் ஒரு பக்கத்தில் செல்வம் பெருகும் பொழுதே இன்னொரு பக்கத்தில் வறுமை பெருகும் சமூகம். உடைமையும் அதிகாரமும் எப்பொழுதும் தம்மை நிறுவிக் கொள்கிற போது போட்டி பொறாமை வம்பு வழக்குகள் பெருமை சிறுமை முதலியவை மனிதர் மத்தியில் முன்னர் நிலவிய சமத்துவ வாழ்வைச் சீர்குலைக்கும். சங்கத் தமிழ்ச் சான்றோர் இதை ஒப்புக்கொள்ளவில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்நீத்த போது அவனோடு புலவர் பலர் உயிர் நீத்தது இதற்கு சான்று. இந்நிகழ்வின் பின்புலம் நம் அனைவருக்கும் தெரியும். வள்ளுவர் கூறுவது போல் ஊருணியில் நிறைந்த நீரைத் தேவைப்படுவோர் எடுத்துப் பயன்படுத்தும் நிலை வேண்டும். ஊர் நடுவே பழுத்த பழமரத்திலிருந்து பழத்தை எடுத்து ஊரில் எவரும் பயன்படுத்தலாம். இத்தகைய சமூகம் உயரிய சமூகம். இனக்குழுச் சமூகம் இத்தகையது. உடைமைச் சமூகம் இதற்கு மாறானது. தமிழ் மரபென்பது இத்தகைய சமத்துவத்தை, சமதர்மத்தைச் சாரமாகக் கொண்டது. சாதி ஏற்றத்தாழ்வு தமிழருக்கு உடன்பாடில்லை. மதம் மனிதனைப் பிளவுபடுத்த வேண்டியதில்லை. இத்தகைய மரபு தமிழ் மரபு. இந்த மரபு தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கம். இதைத்தான் தமிழியம், தமிழ்த்துவம் என்று பொருள்படுத்த முடியும். எஸ். பொ. அவர்களின் தமிழ்த்துவத்தை இப்படித்தான் நான் பொருள்படுத்துகிறேன். தமிழ் மரபு என்பதை இவ்வாறு பொருள்படுத்துவது மரபிலக்கியகாரர்களுக்கு ஒவ்வாது. சான்றோர் மட்டுமல்லாது புலவர்கள் கலைஞர்களுக்கும் இத்தகைய மரபு தான் வேண்டுவது. (தமிழ் மரபை இப்படிப் பொருள்படுத்தும் முறையில் என் கட்டுரைகள் பல அமைந்துள்ளன). 7. தன் எழுத்து ஊழியத்தின் போது நண்பர்களைக் கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டு அப்புறம் எஸ்.பொ.தூக்கியெறிந்து விடுகிறார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மைதானா என்று ஞானம் ஒரு கேள்வியை எழுப்புகிறார். சற்று நம்மை அசரவைக்கும் கேள்வி என்றாலும் எஸ்.பொ. இதற்குக் கூறும் பதிலிலிருந்து ஒரு பகுதியை இங்கு முழுமையாகப் பதிவு செய்கிறேன். ‘’என் எழுத்து ஊழியத்திலே நான் எப்பொழுதும் சகாக்களையே நாடித் திரிகின்றேன். ஏனென்றால் எழுத்து ஊழியம் என்பது எனக்குத் தெய்வீகமாக அருளப்பட்டது என என்னை ஏமாற்றி கொண்டதில்லை. அது பரம்பரையாக சங்க காலத்தில் தோன்றிய இலக்கியத்திலிருந்து தொடர்ச்சியாக வந்த ஒரு முதுசொத்து. இந்த முது சொத்தை நம் நூற்றாண்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்குச் சகாயத்து வந்தவர்கள் அனைவருமே எனக்குச் சகாக்கள். இதனால் எனக்கு இளங்கோ அடிகளும், வள்ளுவனும், கம்பனும் பாரதியும், புதுமைப்பித்தனும் இன்றளவும் சகாக்களாகச் சகாயித்துக் கொண்டிருக்கிறார்கள். சகாக்கள் என்பவர்கள் ஒத்த கருத்தை உடையவர்களாக ஓர் இயக்கத்தினை இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய தோழர்களே "நான் இலக்கியத்தைப் புனிதம் என்றுதான் கருதுகிறேன்’’. (பக்கம் 21) எஸ்.பொ. அவர்களின் மேதமை, பேராண்மை இந்த வரிகளில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. நாம் சற்று அதிர்ந்து போகிறோம். நமக்குள் கேட்டுக் கொள்கிறோம். எஸ். பொ. வோடு நாமும் உறவு கொண்டிருக்கிறோம். எஸ். பொ. நம்மைத் தமக்கு நண்பராகக் கருதுகிறரா? (அ) சகாவாகக் கருதுகிறாரா? பதிலுக்குக் காத்திருக்கத்தான் வேண்டும். மாபெரும் தமிழ் மரபைத் தனக்குள் முழு அளவில் செரித்துக்கொண்ட ஒருவர்தான் இப்படி உறுதியாகக் கூறமுடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஆற்றல் மிக்கத் தமிழ் மரபு நம் வழியாகவும் மேலும் பாய்ந்து செல்ல வேண்டும் என்றிவர் சொல்கிறார் என்றால் எத்தகைய ஆளுமை இவருக்குள் பதிந்திருக்க முடியும்! யார் இவர் மீது கல்லெறிய முடியும். இவரளவுக்குத் தமிழ் ஆளுமை உடைய ஒருவர்தான் இவரைத் தட்டிப்பார்க்க முடியும். சகா என்கிறார் தோழர் என்பது தமிழ்ச் சொல். அற்புதமான சொல். கட்சிக்காரர்கள் இந்தச் சொல்லை மலினப்படுத்தினார்கள் என்பதற்காக நாம் இந்தச் சொல்லை விட்டுவிட வேண்டியதில்லை. எஸ்.பொ. சொல்லுவது போல இந்தச் சொல் புனிதமானது. (கம்பரும் இந்தச் சொல்லை எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.) எஸ்.பொ.வின் இந்தப் பதிலை நூறுமுறை படித்து ஓதலாம். இத்தகைய ஆளுமை நமக்குள் எந்த அளவுக்கு பதிந்துள்ளது என்று கேட்டுக் கொள்ளலாம். தமிழ் வீறு இத்தகையது. நமக்கும் வாய்த்துள்ள நண்பர்களையும் தோழர்களையும் வேறுபடுத்திப் பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். 8. ஞானம் அவர்களின் கேள்விக்குப் பதில் கூறும் முறையில் 1965இல் சாகித்திய மண்டலப் பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட ‘வீ’ சிறுகதைத் தொகுப்பு பௌத்த மதத்தைக் கேவலப்படுத்தியதாகப் பொய் கூறவைத்து அவருக்குச் செல்ல வேண்டிய பரிசைத் தடுத்த முற்போக்கு இலக்கியவாதிகள் பற்றி விவரமாக எஸ்.பொ. சொல்லுகிறார். அதேபோல ‘அத்த’ இதழில் பிரசுரத்திற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட எஸ்.பொ.வின் யோகம் நாவல் திரும்பவும் பௌத்த சமயத்தை அவமதிக்கிறது என்று பொய் சொல்லி இடையில் நிறுத்த ஏற்பாடு செய்த முற்போக்கு இலக்கியக்காரர்கள் பற்றியும் எஸ்.பொ. சொல்லுகிறார். எஸ். பொ. தரும் விரிவான விவரங்கள் இன்றும் நமக்கு அதிர்ச்சி தருகின்றன. பெளத்த சமயத்தை எஸ்.பொ. இகழவில்லை என்று எஸ்.பொ. அழுத்தமாகச் சொல்வதை நாம் ஏற்கத்தான் வேண்டும். எஸ்.பொ.வை விமர்சன ரீதியில் சந்திக்கத் திறனற்ற கோழைகளாக முற்போக்கு இலக்கியகாரர்கள் நடந்து கொண்டார்கள் என்று எஸ்.பொ. கூறி முடிக்கிறார். பத்து அத்தியாயம் கொண்ட யோகம் நாவலை எஸ்.பொ.வைப் போல் நாமும்தான் தவறவிட்டோம். இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்ட பெரிய மனிதர்களின் சிறுமைத்தனங்கள் நமக்கும் எரிச்சல் தருகின்றன. இலக்கிய உலகிலும் இத்தகைய சிறுமைகள் காலந்தோறும் நடக்கின்றன. இவர்களால் இலக்கியத்திற்கு மட்டுமல்ல தமிழுக்கும் நேர்வது அழிவு என்று புரிந்து கொள்கிறோம். எஸ். பொ.வை இன்றும் காய்ந்து கொண்டிருக்கும் மார்க்சியர் இதற்கு எல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்.? எஸ்.பொ.வின் ‘சடங்கு’ நாவலைப் பச்சை - மஞ்சள் நாவல் என்று இக்பால் என்ற விமர்சகர் எழுதியதை மறுத்து எஸ்.பொ. நிறையச் சொல்லுகிறார். பலரது மதிப்பீட்டில் அது ஒரு சமூக ஆவணம் என்கிறார். உண்மை தான் நாமும் ஏற்கிறோம். இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் சடங்கு நாவல் 3/4 முறை மறுபதிப்பு செய்யப்பட்டது பற்றியும் ஒன்றரை இலட்சம் பிரதிகள் செலவாகின என்பது பற்றியும் யாழ்ப்பாணத் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழகத்து வாசகர்களும் விரும்பிப் படித்தனர் என்பது பற்றியும் எஸ்.பொ. சொல்லுகிறார். எஸ்.பொ. சற்று ஆதங்கத்துடன் தான் இவற்றைச் சொல்லுகிறார் என்று புரிந்து கொள்கிறோம். 9. 1955க்குப் பிறகான எஸ்.பொ.வின் மட்டக்களப்பு வாழ்வின் போது அவரது கலைப்பணிகள் குறித்துச் சில வினாக்கள் ஞானம் அவர்கள் எழுப்புகிறார். இந்த வினாக்களுக்கு விரிவாக எஸ்.பொ. பதில் தருகிறார். நவீன இலக்கிய ஆக்கத்தோடு ஆழ்ந்த உறவுடைய விபுலானந்தர் வாழ்ந்த மட்டக்களப்பு 1994 ஆம் ஆண்டில் கூட கல்கியைக் கடந்து நவீன இலக்கியத்தோடு தொடர்பு கொண்டதாக இல்லை. நண்பர்களோடு இணைந்து இலக்கிய இயக்கம் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டுமென்று எஸ்.பொ. விரும்பினார். முயற்சிகள் வேகம் பெறவில்லை. கல்முனை இலக்கியச் சங்கத்தோடு தொடர்பு கொண்டு சிலவற்றைச் செய்தார். முற்போக்கு இலக்கியக்காரர்களின் இலக்கிய இயக்கம் என்பது தொழிற்சங்கம் போன்றது. கிழக்கு வட்டாரத்தில் இலங்கை முற்போக்கு இலக்கியச் சங்கத்தின் சில முக்கியக் கிளைகள் இருந்தன. தலைவர்கள் கட்சியால் திணிக்கப்பட்டவர்கள். இவ்வகை இலக்கிய அமைப்பினுள் எழுத்தாளர்களுக்குச் சுதந்திரமில்லை. கட்சி உறுப்பினராக எஸ்.பொ. இருந்து பணியாற்றிய போதிலும் இலக்கியச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதை அறவே விரும்பவில்லை. 1962 ஸாகிரா மாநாட்டுக்குப் பிறகு இலங்கையின் பல்வேறு வட்டாரங்களிலும் உள்ள இலக்கியவாதிகளைக் கூட்டி மட்டக்களப்பில் ஒரு தமிழ் விழா நடத்துவது என்று நண்பர்களோடு கூடி முடிவு செய்தார். இதற்கான அமைப்பின் தலைவர் மகாவித்வான் FX.C. நடராசா. இந்த அமைப்பினுள் எந்தப் பதவியையும் எஸ்.பொ. ஏற்க விரும்பவில்லை. 1963இல் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் விழா அதுவரையில் இலங்கையில் நடைபெற்ற எந்த விழாவைக்காட்டிலும் சிறப்பாக அமைந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் இலங்கை முழுவதிலுமிருந்து முந்நூறு பேராளர்கள் கலைஞர்கள் கலந்து கொண்டனர். முன்பே சிறுகதைப் போட்டியும் நடைபெற்றது. மட்டக்களப்பு அதுவரை கண்டிராத வகையில் மாநாடு தொடங்கியது. நாள் முழுவதும் கருத்தரங்குகளோடு கலைநிகழ்ச்சிகளும் வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இவ்வாறு விரிவான விவரங்களை எஸ்.பொ. தொகுத்துத் தருகிறார். கட்சி சார்பற்ற கலைவிழா இது. சிங்களக்கலைஞர்களும் விழாவில் பங்கெடுத்தனர். தமிழுக்கு விழா எடுப்பதன் மூலம் எஸ்.பொ. தன் ஆளுமையை மட்டக்களப்பில் பதிவு செய்து கொள்கிறார். 10. மட்டக்களப்பு வாழ்வின் போது எஸ்.பொ.வின் நாடக அனுபவங்களை எடுத்துரைக்குமாறு ஞானம் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதில் கூறுகிறார் எஸ்.பொ. 1953இல் சென்னையில் மாணவராகப் படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி ஆண்டு விழாவிற்காகச் ‘சாவு’ என்ற நாடகத்தை எழுதியதோடு இயக்கிய அனுபவம் பற்றிக் கூறுகிறார். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் நடைபெற்ற போரின் போது போர்க்களத்தில் காயம்பட்ட தென் கொரிய வீரர்களுக்குப் பணிபுரிவதற்காக மருத்துவக் குழு ஒன்றை நேரு அனுப்பி வைத்தார். வடகொரிய வீரர் காயம் பட்ட நிலையில் அவன் தாயார் வருந்திக் கேட்டுக் கொண்ட போதும் இந்திய மருத்துவக் குழு அவனுக்கு உதவி செய்யவில்லை என்பது சாவு நாடகத்தின் கரு. நாடகத்திற்குத் தலைமை தாங்கிய எம். ஜி. இராமச்சந்திரன் நாடகத்தைப் பெரிதும் பாராட்டியதாகக் கூறுகிறார். இலங்கையில் இருந்து வந்த மாணவர் ஒருவர் நேரு குறித்த அரசியல் விமர்சனத்தை முன்வைத்தது, அவரின் மன உறுதியையும் அரசியல் தெளிவையும் புலப்படுத்துகிறது. மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது நண்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆண்டு விழாவில் நடிப்பதற்காக ‘அந்த நாள்’ நாடகம் எஸ்.பொ.வால் எழுதப்பட்டது. இலங்கை வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்கிறார். இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன். இலங்கையின் ஆதிக்குடியிலிருந்து அவன் திருமணம் செய்து கொண்ட குவேனியை அவள் அரசவம்சத்தைச் சேர்ந்தவள் இல்லை என்பதற்காக ஒதுக்கி வைத்துவிட்டு, பாண்டியனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட கதையை நாடகத்தின் கருவாக்கினார். விஜயனை அம்பலப்படுத்தும் நாடகமிது. மட்டக்களப்பு வட்டாரத்தில் தமிழரசுக் கழகத்தைச் சார்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. பாணியில் மேடைப் பேச்சாளருமான இராசதுரை எழுதிய ‘சங்கிலியன்’ நாடகம் மேடை ஏற்றப்பட்டது. நாடக ஆக்கத்திலிருந்த பிழைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்த தாறுமாறான பிழைகளையும் எஸ்.பொ. கூர்மையாகச் சுட்டிக்காட்டிய பொழுது உன்னால் வரலாற்று நாடகம் ஒன்றைத் தயாரிக்க முடியுமா? என்று இராசதுரை அறைகூவல் இட்ட போது, எஸ்.பொ. தயாரித்து மேடையேற்றிய நாடகம் ‘முதல் முழக்கம்’. தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்டகாமினிக்கும் நடைபெற்ற போரில், எல்லாளனின் படைத்தலைவனை புத்தத் துறவிகளின் தலைமையில் வந்த துட்டகாமினியின் தாயார் விகாரமகாதேவி தன் உடைகளைக் களைந்து அவனை மயக்கிக் கொன்றதன் மூலம் துட்டகாமினி பெற்ற வெற்றியைச் சொல்கிறது இந்த நாடகம். இலங்கையில் சமகாலத்தில் நடைபெற்ற தமிழர் சிங்களர் முரண்பாட்டை உள்ளடக்கியிருந்தது இந்த நாடகம். புத்த துறவி தொடக்கக் காலம் முதலே அரசியலில் கொண்ட ஈடுபாட்டையும் சிங்கள அரசனின் சதிச் செயலையும் தமிழரசன் எல்லாளனின் நேர்மைத் திறத்தையும் இந்நாடகம் பதிவு செய்திருக்கிறது. எஸ்.பொ.வின் மிகச் சிறந்த சாதனை இந்த நாடகம். இதுவரை பார்த்த எஸ்.பொ.வின் நாடகத்துறை அனுபவங்கள் வழியே எஸ்.பொ. பற்றி ஒரு சுருக்கமான மதிப்பீட்டை இங்குமுன் வைக்கலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் சென்னையிலும் வரலாற்றுக் கல்வி பயின்றவர் எஸ்.பொ. வரலாற்று மாணவர்க்குப் போர்க்குணம் தேவைதான். இந்தப் போர்க்குணம் காரணமாகவே அண்ணாமலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். சமாதான சகவாழ்வு குறித்து உலக அளவில் பெரிதாகப் பேசியவர் நேரு. அவரது சமாதான சகவாழ்வு என்பது தென்கொரியாவிற்கு மட்டுமல்லாமல் தென்கொரியாவிற்குச் சாதகமாக இருந்த அமெரிக்காவுக்கும் சாதகமாகத்தான் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் நேரு பற்றி இப்படிக் கூறும் விமர்சனத்தை முன்வைத்தவர் எஸ். பொ. தி.மு.க. இயக்கத்தையும் அவர்களின் மேடைத் தமிழையும் எஸ்.பொ. கடுமையாகவே சாடியவர். மாணவப்பருவத்திலேயே தன்னிகரற்ற ஆளுமையை வெளிப்படுத்தியவர் எஸ்.பொ. சிங்கள அரசியல் வரலாற்றிலும் பெரும் படிப்பறிவு மட்டுமல்லாமல் ஆய்வும் மேற்கொண்டிருக்கிறார். புத்தத் துறவிகளின் போலித்தனத்தை அவர் எப்பொழுதும் சாடி வந்திருக்கிறார். தமிழரசுக் கட்சியையும் சாடத்தான் செய்தார். வரலாற்றில் சிங்களவர் அக்கிரமத்தையும் சாடினார். இவற்றையெல்லாம் மார்க்சியர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். ஞானம் அவர்களின் மேலும் சில கேள்விகளுக்கு எஸ்.பொ. தன் அனுபவங்கள் சிலவற்றைக் கூறுகிறார். நாடக ஆக்கத்தில் அவர் தொடர்ந்து ஈடுபடவில்லை எனினும் இலங்கை வானொலியின் தேவைக்காக ‘வலை’ நாடகம் எழுதியது பற்றிச் சொல்லுகிறார். சானாவின் வேண்டுகோளை ஏற்று அதை மேடை நாடகமாக உருவாக்கி யாழ்ப்பாணம் முதலிய பல இடங்களிலும் கல்லூரிகளில் ‘வலை’ நாடகம் மேடையேற்றப்பட்டது பற்றிக் கூறுகிறார். இதன் பிறகு ‘முறுவல்’ நாடகம் எழுதினார். கொழும்பில் சுஹைர் ஹமீட் மூலம் மேலை நாடுகளில் உருவான புதிய நாடகங்களைத் தானும் தெரிந்து கொண்டது பற்றியும் கொழும்பிலிருந்த சிறந்த முஸ்லீம் கலைஞர்களைக் கொண்டு ‘முறுவல்’ நாடகத்தை எழுதி சுஹைர் ஹமீட் அவருடன் இணைந்து மேடையேற்றியது பற்றியும் சொல்லுகிறார். மேலை நாடக உத்திகளுடன் இலங்கை நாடக முறையையும் இணைத்து நாடகத்துறை வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பணியைச் செய்து தந்த சுஹைர் ஹமீட் இறந்த பொழுது அவர் நினைவைப் பதிவு செய்யும் முறையில் ‘முறுவல்’ நாடகத்தை நூல் வடிவில் வெளியிட்டதாக எஸ்.பொ. கூறுகிறார். இலங்கை சாகித்திய மண்டலத்தில் தமிழ் நாடகக் கலைக் குழுவில் தான் பணியாற்றியது பற்றிக் கூறுகிறார். கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலசுந்தரம் கூறியபடி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையோடு தமிழ் நாடகக் கலைக்குழுவில் எஸ்.பொ. இடம் பெற்றார். நாடகத்துறையின் வளர்ச்சிக்குப் பணிபுரிய இது ஒரு வாய்ப்பு என்று கருதினார். இவரது திறமையைக் கண்ட நாடகக் கலைக்குழுவினர் இவரை அதன் செயலாளராகவும் தெரிவு செய்தனர். ஆனால், நாடகக் கலைக் குழுவின் தலைவர் கந்தையா இவரிடம் கொண்ட பொறாமை காரணமாக இவர் மீது வேண்டாத பழிசுமத்தி இவர் வெளியேறக் காரணமானார். அரசமைப்புகளில் இணைந்து பணிபுரிவதன்பால் இவர் கொண்டிருந்த வெறுப்பு இப்பொழுது மீண்டும் உண்மையாயிற்று. இங்கும் அவருக்கு எதிராகச் செயல்பட்டவர் இக்பால். 11. எஸ்.பொ.வின் தொழிற்சங்க அனுபவங்கள் பற்றிய ஞானத்தின் கேள்விக்குப் பதில் தரும் முறையில் தன் அனுபவங்களை விரிவாகத் தருகிறார். மட்டக்களப்பில் கிருஷ்ணன் குட்டியோடு இணைந்து தச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி இறுதியில் கொழும்பில் உள்ள தச்சுத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெறும் வகையில் போராட்டம் வெற்றி பெற்றது பற்றிக் கூறுகிறார். கம்யூனிஸ்ட் தொழிற்சங்க டீ மெல்லின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மோட்டார் தொழிற்சங்கத்திலிருந்து பணியாற்றியதைச் சொல்லுகிறார். மட்டக்களப்பிலிருந்த பல கல்லூரி ஆசிரியர்களோடு கூடிய ஆசிரியர் சங்கத்தில் பணியாற்றியது பற்றியும் பள்ளிகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்ட போது தொழிற்சங்கத்தில் ஆசிரியர் சேரக்கூடாது என்ற அரசக்கட்டளைக்கிணங்க ஆசிரியர் இனித் தொழிற்சங்கத்தில் பணியாற்ற இயலாது என்ற நிலையில் எஸ்.பொ. கிருஷ்ணன் குட்டி வற்புறுத்தலுக்கு மாறாகக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியது பற்றியும் கூறுகிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எழுத்தாளர் என்ற முறையில் இடம் பெறுவதை அறவே வெறுத்த எஸ்.பொ. கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததோடு பல்வேறு தொழிற்சங்கப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டவராக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு வேளை தன்மானத்திற்கு இழுக்கு என்ற முறையில் ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாகக் கட்சியிலிருந்தும் விலகினார். அரசின் உறுப்பாகிய நாடகக் கலைக்குழுவிலிருந்தும் இதே போன்ற அனுபவத்தோடு எஸ்.பொ. வெளியேறினார். எஸ்.பொ.வின் தன்மான உணர்வையும் சுதந்திர உணர்வையும் இந்த நிகழ்வுகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. எத்துறையிலும் இவரது ஆளுமைத்திறம் என்பது இதுதான். அரசமைப்போடு முற்போக்கு எழுத்தாளர்கள் ஒத்துழைப்பது போல எஸ்.பொ.வால் செயல்பட முடியாது. 12. மட்டக்களப்பில் நடத்திய தமிழ் விழாவுக்குப் பிறகும் வேறு தமிழ் விழாக்களை எஸ்.பொ. நடத்தினாரா? என்ற கேள்விக்கு எஸ்.பொ. பதில் தருகிறார். 1964இல் வந்தாறுமூலை மகாவித்தியாலயத்தில் தமிழாசிரியராகப் பதவியேற்றுப் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து தமிழ் கற்ற மாணவர்களுக்குச் சங்க இலக்கியம் உட்பட தமிழிலக்கியத்தில் தேவையான அளவுக்கு அறிவில்லை என்பதையறிந்து, தமிழில் பத்துப் பெருங்காப்பியங்கள் குறித்து வந்தாறுமூலையில் இரண்டு நாள் காப்பியப் பெருவிழா நடத்தியது பற்றிக் கூறுகிறார். இந்தப் பெருவிழாவின் போது கனக. செந்திநாதனுக்குத் தக்க முறையில் ‘இரசிகமணி’ பட்டம் தந்ததை நினைவு கூர்கிறார். எஸ்.பொ.வினால் கவரப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் விருப்பத்திற்கிணங்க விரிவுரையாளர் கலா பரமேஸ்வரன் எஸ்.பொ.வுடன் இணைந்து தொகுத்த காலத்தின் குரல் என்ற சிறுகதைத் தொகுதிக்கு எஸ்.பொ. முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.பொ.வால் வெளியிடப்பட்டது. புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தமிழறிஞர்கள் பலர். இவர்களோடு எஸ்.பொ. நெருக்கமான உறவு கொண்டார். அக்காலத்தில் கைலாசபதியின் செல்வாக்கு குறைந்திருந்தது என்றும் எஸ்.பொ. குறிப்பிடுகிறார். கைலாசபதி போன்ற முற்போக்கு இலக்கிய வட்டாரத்துப் பேராசிரியர்கள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் முறையிலான காப்பியப் பெருவிழாக்களை நடத்துவது பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள். காப்பியங்கள் நிலப்பிரபுத்துவ காலத்து மன்னர்களின் போர்ச் செயல்கள் திருமண ஆடம்பரங்கள் முதலியவை பற்றிக் கூறுபவை. இவை பாட்டாளி வர்க்கப் பண்புக்கு எதிரானவை. முற்போக்குவாதிகள் இவற்றை விரும்ப முடியாது. ஆனால் எஸ்.பொ.வுக்கு முதன்மையாகத் தமிழ் வேண்டும். பெருமைக்குரிய தமிழிலக்கியங்கள் வேண்டும் இவரது தமிழ்த் தேசியம் இத்தகையது. தமிழ் நேயத்தை வளர்ப்பது என்பது மார்க்சியத்திற்கு எதிரானதாகவும் இருக்க முடியாது. எஸ்.பொ. திட்டமிட்டவாறு மட்டக்களப்பில் சங்க இலக்கிய விழாக்களை ஏன் நடத்தவில்லை என்று ஞானம் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பொ . பதில் கூறுகிறார். 1964இல் சிறிமாவோ பண்டார நாயக்கர் ஆட்சிக்கு வந்த போது தேசிய நோக்கில் எல்லாவற்றையும் திருத்தியமைக்கும் ஒரு முயற்சி என்ற வகையில் அமைச்சர் என். எம். பெரேரா பாடப்புத்தக நிறுவனம் ஒன்றை அரசுப் பொறுப்பில் புதியதாக ஏற்படுத்த விரும்பினார். அதுவரையில் பாடப்புத்தகங்களைத் தனியார் பதிப்பகங்கள் வெளியிட்டு பெரும் பொருள் திரட்டினார்கள். முதலாளிகளிடமிருந்து இந்தப் பொறுப்பை அரசு ஏற்க விரும்பியது. அதில் ஒரு முயற்சியாக வரலாற்றுப் பாடநூல்களைத் தேசிய நோக்கில் எழுத வேண்டும் என்ற முறையில் அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட பாடப்புத்தக குழுவில் (9 பேர் சிங்களவர், 6 பேர் தமிழர்) முதலாவதாக எஸ்.பொ. தெரிவு செய்யப்பட்டார். மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இலங்கை வரலாற்று நூலை எழுதும் நோக்கு எதுவாக இருக்க வேண்டுமென்று விவாதம் எழுந்த போது, சிங்களவர் நோக்கில் தான் வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதில் சிங்களவர் உறுதியாக இருந்தனர். இந்தியாவிலிருந்து வந்த இரண்டு பண்பாட்டுக் கிளைகளில் ஒன்று இந்து மதம். இன்னொன்று பௌத்த மதம் என்று எஸ்.பொ. கூறியதை மறுத்த அவர்கள், பெளத்தம் நேபாளத்திலிருந்துதான் வந்தது என்று விவாதித்தனர். இந்தியாவிலிருந்து வந்தது என்பதை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் இருந்த காலத்தில் நேபாளம் என ஒன்று இல்லை என்றும், நேபாளம் இன்றைக்கும் இந்துமத நாடாகத்தான் இருக்கிறது என்றும் கூறினார். எஸ். பொ. இத்தகைய கருத்து வேறுபாடுகளோடு கூடிய குழுவின் விவாதங்களைக் கடந்து தலைவர் குருகேவின் பார்வைக்குச் சென்ற போது இலங்கை வரலாறு தான் எழுதப்பட வேண்டும் என்ற எஸ்.பொ.வின் கருத்தை அவர் ஏற்றார். ஆனால் இந்தச் சமயத்தில் அரசு கலைந்து யு.என்.பி. ஆட்சிக்கு வந்தது. அதுவரையில் பாடப்புத்தகப் பதிப்பாளர்களுக்குக் கொண்டாட்டம். இக்காலம் முழுவதும் எஸ்.பொ. கொழும்பில் தங்கியிருந்தார். பல்கலைக்கழகப் பேராசிரியரோடு உறவை வளர்த்துக் கொண்டிருந்தார். இதுபற்றி மு. தளையசிங்கம் எழுதும்போது கொழும்புப் பேராசிரியர்களின் சிந்தனைகளை எஸ். பொ. தான் தீர்மானித்துக் கொண்டிருந்தார் என்று எழுதியதை எஸ்.பொ. ஏற்கிறார். இத்தகைய சூழலில்தான் சங்க இலக்கிய விழாக்கள் தவறிப் போயின என்கிறார் எஸ்.பொ. வரலாற்று ஆய்வில் எஸ்.பொ.வின் ஆளுமைத்திறம் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. சிங்களவர் நோக்கமும் புலப்படுகிறது. எஸ். பொ. இந்தச் சூழலிலும் தன்னை நிறுவிக் கொண்டுதான் இருந்தார். பேராதனைப் பல்கலைக் கழகத்தைப் போலவே கொழும்பிலும் கைலாசபதியின் செல்வாக்கு அக்காலத்தில் எடுபடவில்லை என்கிறார் எஸ்.பொ. கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் இளங்கீரனோடும் பின்னர் எம். ஏ. நுஹ்மானுடனும் இணைந்து செய்த பணிகள் பற்றி எஸ்.பொ. குறிப்பிடுகிறார் கிழக்கிலங்கை எழுத்தாளர்கள் சாகித்திய மண்டல பரிசுக்கான தேர்வில் அதுவரை புறக்கணிக்கப்பட்டு இருந்ததை மாற்றும் முறையில் எஸ்.பொ. செயல்பட்டதாகவும் F.X.C. நடராசா அவர்களின் நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது பற்றியும் எஸ்.பொ. சொல்லுகிறார். எஸ். பொ. வின் இத்தகைய எழுச்சி முற்போக்கு இலக்கியகாரர்களுக்குப் பிடிக்கவில்லை . சிறிமாவோ மீண்டும் பதவிக்கு வந்த (1960) நிலையில் எஸ்.பொ. மீது முட்டையடி விழா நடத்தியது . பற்றியும் எஸ்.பொ. கூறுகிறார். இந்த இடைக்காலத்தில் 1963 இல் முற்போக்கு எழுத்தாளர் செல்வாக்கு இழந்திருந்தனர். 70க்குப் பிறகு அரசின் ஆதரவோடு சாகித்திய மண்டலப் பரிசுகளை இவர்களே பறித்துக் கொண்டார்கள். டானியல், ஜீவா, கைலாசபதி, சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, ஈழத்து சோமு, நீர்வை பொன்னையன், இளங்கீரன் ஆகியவர்கள் தான் முற்போக்கு இலக்கிய அமைப்பின் மூலம் செல்வாக்குப் பெற்றனர். இலக்கியச் சங்கத்தின் நிரந்தரச் செயலாளர் பிரேம்ஜி என்ற ஞானசுந்தரன். இரஷ்யத் தூதரகத்திலும் நிரந்தர மொழி பெயர்ப்பாளராக இருந்து செல்வம் குவித்துக் கொண்டவர் இவர். எஸ்.பொ.வின் இலக்கியச் செயல்பாடுகளை முற்றாக இருட்டடிப்புச் செய்தவர்கள் இவர்கள் இப்படித்தான் முற்போக்கு இலக்கிய வரலாற்றை இவர்கள் எழுதிக் கொண்டனர் என்கிறார் எஸ்.பொ. 13. கைலாசபதி, சிவத்தம்பி குறித்துத் தொடர்ந்து காட்டமான விமர்சனங்களை எஸ்.பொ. முன் வைப்பதாகவும் இது அவரது முயற்சிக்கும் ஊழியத்திற்கும் பொருந்தாது என்று கூறும் பலரது கருத்துக்களை ஞானம் அவர்கள் நினைவுபடுத்தி ஏன் என்ற முறையில் கேட்கிறார்? கைலாசபதியும் சிவத்தம்பியும் இலக்கியம் குறித்த தரமதிப்பீடுகளை, அளவீடுகளைக் குழப்பியிருப்பதற்காகவும் அவருடைய சீடகோஷ்டிகள் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிகளிலிருந்து இந்த அளவீடுகளையே தொடர்ந்து உண்மையெனச் சாதித்து வருவதாகவும் இதற்காகவே இவர்களைத் தொடர்ந்து சாடுகிறேன் என்கிறார் எஸ். பொ. சிவத்தம்பி மாறியிருப்பதாகக் கூறும் எஸ்.பொ . நுஃமான் செய்த சுயவிமர்சனத்தையும் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையோடு கைலாச பதியும், சிவத்தம்பியும் பெற்ற செல்வாக்கையும் குறிப்பிடுகிறார். அவர்கள் முன்வைத்தக் கோட்பாடுகள் இன்று சிதிலமடைந்துவிட்டன. தத்துவார்த்தமாகவும் அறிவுரீதியாகவும் இலக்கியத்தின் மீது கொண்ட பக்தியின் காரணமாகவும் கைலாசபதியும் சிவத்தம்பியும் செய்த அறிவு மோசடியைச் சாடுகிறேன் என்கிறார். எல்லாக் காலத்திலும் மீளாய்வுக்குத் தேவை உண்டு என்று குறிப்பிடும் எஸ்.பொ. எதையும் பூரணத்துவம் உடையது என்று ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறார். கைலாசபதியும் சிவத்தம்பியும் தாம் முன்வைத்த தரமதிப்பீடும் இதற்கான அளவுகோல்களும் மார்க்சிய நோக்கில் சரி என்றே சொல்லிக் கொண்டார்கள். இவர்களுக்கு அப்பால் இவர்களது சீடர்கள் செல்லவில்லை. தமிழகத்திலும் இவர்களுக்குச் சீடர்கள் உண்டு. இன்றைக்கும் சிலர் இருக்கிறார்கள். கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழ் இலக்கிய ஆய்வில் எத்தனையோ சாதனை படைத்தவர்கள். தமிழிலக்கிய ஆய்வுக்கு மார்க்சியத்தைப் பயன்படுத்துவதில் இன்றளவுக்கும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். தமிழகச் சூழலில் மரபு முறையில் தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபட்டவர்கள் வர்க்கப் போராட்டம், வரலாறு, பொருளியல் சமகாலத்திற்குத் தேவையான சமூக மாற்றம் என்பனவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தமிழின் தொன்மை, மேன்மை சொல்லும் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். இவர்களின் ஆய்வு முறையைக் கூர்மையான கேள்விகளுக்கு மார்க்சியர் உட்படுத்தினார்கள். தமிழக மார்க்சியவாதிகளும் இத்தகைய பணியில் ஈடுபட்டிருந்தார்கள். நவீன கால இலக்கியம் குறித்தும் கைலாசபதி, சிவத்தம்பியைப் போலவே தமிழக மார்க்சியர்களும் கூடுதலான திறனாய்வைச் செய்தார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துடையவர்களை இழிவு செய்யவும் இவர்கள் தயங்கவில்லை. கைலாசபதியும் க. நா. சு. முதலியவர்களைத் தரத்திலிருந்தே தாழ்ந்தே விமர்சனம் செய்தார். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு வைத்துக் கொண்டவர்கள். படைப்பிலக்கியம், திறனாய்வு என்பதன் மூலமும் சமகால அரசியலுக்குத் தேவையான கட்சிப் பணியைச் செய்வதாகவே இவர்களும் நம்பினர். இவர்கள் கற்ற மார்க்சியமே இவர்களுக்குப் போதும். இரஷ்யா சீனாவிலிருந்து மட்டும் மார்க்சியம் வரவில்லை. மேற்கு நாடுகளிலிருந்தும் மார்க்சியத்தின் மாறுபட்ட பார்வைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. மார்க்சு, ஏங்கெல்ஸ், லெனின், மாவோ முதலிய மூலவர்கள் நூலினுள்ளும் கைலாசபதி மற்றவர்களும் முன்வைத்த பார்வைகளிலிருந்து வேறுபட்ட பார்வைகளும் இருந்தன. மார்க்சியம் பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் புதிய புதிய அர்த்தங்களோடு தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதாகவும் இருந்தது. கட்சி மார்க்சியர் முன்வைத்த அரசியலில் மையங்கொண்ட பார்வையும் குறைபாடுகளைக் கொண்டதாகவே இருந்தது. கலையியல், அறிவியல், மெய்யியல் முதலியவற்றில் மாறுபட்ட பார்வை உடையவர்களோடு விரிவான முறையில் விவாதித்துக் கற்றுக் கொள்வதற்கும் தேவையிருந்தது. இளமையில் கற்ற கோட்பாடுகளில் கட்சி மார்க்சியர் பலர் இறுக்கத்தோடு இருந்தார்கள். இவர்கள் தமக்குள்ளும் பண்பற்றவர்களாக நட்புணர்வை மதிக்காதவர்களாகத் தமக்குத் தாமே அறிவு மிக்கவர் என்ற நம்பிக்கையுடையவர்களாக, ஆணவக்காரர்களாக இருந்தார்கள். மக்களிடமிருந்து இதன் காரணமாகத் தொடர்ந்து விலகிக் கொண்டிருந்தார்கள். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும். கைலாசபதி முதலியவர்கள் இலக்கிய அமைப்புக்களில் தலைவராக இருந்து தமக்கு வேண்டியவர்களுக்கே பரிசு வழங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை மறுக்கவே முடியாது. இவர்களுக்கு முன்பே மார்க்சியத்திற்குள் வந்தவர் எஸ். பொ. அவரது படைப்பு திறன் இவர்களிடம் அறவே இல்லை. எஸ். பொ. கூறுவது போல கைலாசபதி முதலிய மார்க்சியரிடம் தமிழ்த் தேசியவுணர்வு அறவே இல்லை. தமிழ் மரபின் மீது இவர்களுக்குச் சிறிதளவும் மரியாதை இல்லை. படைப்பாளுமையை மதிப்பிடுவது என்பது கட்சி அரசியல் முன்வைக்கும் அளவுகோலை முன்வைத்துச் செய்வதாய் இருக்கவே முடியாது. இப்படிச் செய்வதன் மூலம் தமிழிலக்கியத்திற்கும் இவர்கள் எதிராகவே செயல்பட்டார்கள். உண்மையில் இது மார்க்சியத்தின் குறையா என்றால் இப்படிச் சொல்வதற்கு மார்க்ஸ் முதலியவரிடமிருந்து சான்று காட்டமுடியாது. மார்க்சியத்தைவிட எப்படி இவர்கள் மதியாதைக்குரியவர்களாக மாறினார்கள். இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் கட்சி மார்க்சியர் முன்வைத்த அளவுகோல் என்பது ஸ்டாலினிடமிருந்து கைமாற்றிக் கொண்டது. ஸ்டாலின் செய்த எத்தனையோ செயல்பாடுகளை இவர்களும் முற்றாக ஏற்றுக் கொண்டுதானிருந்தார்கள். இவர்களுக்குள்ளும் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டிருந்தார். கைலாசபதி போன்றவர் தமக்கு முன்னவர் மூத்தவர் என்ற முறையில் எஸ்.பொ.வை மட்டுமல்ல அவர் குறிப்பிடும் எத்தனையோ முன்னவர்களைக் கைலாசபதி போன்றவர்கள் எப்படிப் பொருட்படுத்தாமலிருந்தார்கள். அரசாதரவு கிடைத்தவுடன் அதைக் கைலாசபதி இறுகப் பற்றிக் கொண்டார். குறுக்கு வழியில் பெரும் பதவிகளைப் பெற்றார். எஸ். பொ. இதுபற்றி விரிவாகவே சொல்லுகிறார். ஓர் உண்மையான மார்க்சியர் இப்படி நடந்து கொள்ள முடியுமா? இப்படி நடந்து கொள்வாரென்றால் இவருக்குள் எந்த அளவு மார்க்சியம் செறிவு பெற்றது. எதிலும் பூரணத்துவம் என்பது சாத்தியமில்லை என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் தன்னை முதன்மைப்படுத்தி, தனக்குள் அதிகாரத்தைச் சேர்த்துக் கொள்கிறபோது தன்னைவிட உயரிய பதவிகளில் இருப்பவர்களோடு, ஒத்துழைக்கத் தயங்காத போது தனக்குள் இருக்கிற மனச்சான்றை முடக்கினால் ஒழிய இவற்றையெல்லாம் செய்ய முடியாது. தன் நெஞ்சறிந்தே பொய் சொல்லத்தான் வேண்டுமா? இன்னும் ஒன்றை இங்குச் சொல்ல வேண்டும். 50/60களில் நாம் கற்ற மார்க்சியம் எழுபது எண்பதுகளுக்கு வருகிறபோது போதுமானதாக இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம். தொடக்கத்தில் கற்ற மார்க்சியமே முற்றான உண்மையென நம்பிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் பெருமளவுக்கு ஏமாற்றங்களுக்கு உள்ளானார்கள். இரஷ்ய மார்க்சியமே ஒரே மார்க்சியம் என்று நம்பியவர்கள் சீன மார்க்சியத்தை மார்க்சியம் என்றே ஒப்புக் கொள்ளவில்லை. இப்படி எவ்வளவோ தவறுகள், தவறான மதிப்பீடுகள். எஸ்.பொ.வின் மார்க்சியமும் தன் இளமைக் காலத்தில் கட்சிக்குள் தான் வந்த தொடக்க காலத்தில் கற்ற மார்க்சியம். படைப்பாளுமையில் தான் கொண்ட முழு ஈடுபாடு காரணமாகத் தான்கற்ற மார்க்சியத்தை மேலும் புதுப்பித்துக் கொள்ளும் தேவையை அவர் உணரத்தானில்லை. கைலாசபதி முதலியவர்கள் எஸ்.பொ. வின் மாபெரும் ஆளுமையை மறுத்ததோடு அவருக்கெதிராகப் பெரும் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு அவரைக் கேவலப்படுத்தித் தொடர்ந்து காயப்படுத்திய போது அவர் கொண்ட கோபத்தைச் சீற்றத்தை இன்றளவுக்கும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். கட்சி மார்க்சியர் தொடர்ந்து இலக்கியம், வரலாறு முதலியவற்றையும் தமக்கு ஒத்தவாறு திருத்தியும் மாற்றிக் கொண்டும்தான் இருப்பார்கள். வரலாற்றுக்குள் ஆற்றலோடு செயல்பட்ட இயக்கங்கள், ஆளுமைகள் முதலியவற்றையும் இருட்டடிப்பு செய்வதை மார்க்சியத்துக்கும் வரலாற்றுக்கும் தான் செய்யும் சேவையென நம்புவார். கைலாசபதி முதலிய எவரைக்காட்டிலும் உழைக்கும் மக்களோடு அறிவாளிகளோடு, கலைஞர்களோடு, வட்டாரங்களோடு மரபுகளோடு மிக மிக நெருக்கமாக இருந்தவர் எஸ்.பொ. எஸ். பொ. அவர்களின் நடை வேறுபாடுகளை எவரும் மறுக்கவில்லை. முற்போக்கு வட்டாரமும் அவரது உருவ அழகை நடையழகை மறுக்கவில்லை. முற்போக்கு வட்டாரமும் அவரது உருவ அழகை நடையழகை மறுக்கவில்லை. ஆனால் எஸ்.பொ. வின் தமிழ் நடையென்பது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு முதலிய பல்வேறு மாறுபட்ட வட்டார மக்களோடிருந்து தனக்குள் வரித்துக் கொண்ட நடை என்பதாக மட்டும் இல்லை. பல்வேறு வட்டாரத்து மக்களை, அவர்கள் வாழ்ந்த மண்ணோடும், மரபோடும், மரபு முதலியவற்றின் ஆழங்களோடும், முழு அளவில் தனக்குள் எஸ்.பொ. வரித்துக் கொண்டிருந்தார். எஸ்.பொ.வின் நெஞ்சம் இத்தனை விரிவுடையது. கைலாசபதி போன்ற மேட்டுக்குடியினர், வேளாளர், அடித்தட்டு மக்களோடு இத்தனை நெருக்கமாக இருந்திருக்கவே முடியாது. கொஞ்சம் இப்பொழுது ஜீவாவை நினைவுபடுத்திக் கொள்வோம். அவரது பேராண்மை எங்கிருந்து விளைந்தது என்று நமக்குள் கேட்டுக் கொள்வோம். குழந்தையின் மலசலங்களோடு மழலை மொழியோடு ஆரவாரங்களோடு ஈரத்தோடு இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும் தாய்க்கு நிகராகத் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல முடியுமா? ஜீவாவும் தாய்க்கு நிகரானவர். எஸ்.பொ.வும் இத்தகையவர். எஸ். பொ. தமிழ் விழா கொண்டாடினாரென்றால் இதன் மூலம் அவரது விரிந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய பேராளுமையை மதிக்க, இவரிடமிருந்து கற்றுக்கொள்ள கைலாசபதிக்குத் தெரியவில்லை. இதற்காகக் கைலாசபதியைக் கோபிக்க முடியுமா? ஒரு தாயை, தந்தையைப் புரிந்து கொள்ளாத மகன் எட்டி உதைக்கிறான். கைலாசபதியையும் எஸ்.பொ.வையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன். கைலாசபதி செய்த தவறு, அவர் காலத்தில் உலகளவில் கட்சி மார்க்சியர் செய்த தவறு. மேட்டுக்குடியில் வளர்ந்து வாழ்வின் வசதிகளை விட்டுக் கொடுக்க முடியாதவர் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று சொல்லும் அடிபட்ட மக்களோடு என்ன உறவு கொள்ள முடியும்? வர்க்க வேறுபாடு என்று வாயால் சொன்னால் போதாது. நடுத்தர மக்கள் தான் கட்சிக்குள் மரியாதை பெறுகின்றனர். இவர்கள் சொல்வதுதான் மார்க்சியம் என்றும் ஆகிறது. இந்த மார்க்சியம் யாருடைய தேவைக்கான மார்க்சியம்? எஸ்.பொ . அவர்களோடு மார்க்சியம் குறித்து விவாதங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். ஈடுபட்டிருந்தால் எஸ்.பொ.விடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் எஸ்.பொ.வும் கற்றுக் கொண்டிருப்பார். 14. ஆறுமுக நாவலரை முதல் தமிழ்த் தேசியவாதி என்று கைலாசபதி எழுதியதைக் காட்டமாக மறுத்து எஸ்.பொ. எழுதியது பற்றி ஞானம் அவர்களின் கேள்விக்கு ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியவாதி அல்லர் என்பதை மெய்ப்பிக்கும் முறையில் அடுக்கடுக்கான விவரங்களை எஸ். பொ. தருகிறார். ஆறுமுக நாவலர் தமிழ்வசன நடைக்குச் செய்த சேவையை எஸ்.பொ. சிறப்பாகப் பாராட்டுகிறார். தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தியதையும் பாராட்டுகிறார். தன்னுடைய தமிழ் நடைக்கு ஆறுமுக நாவலர்தான் ஆதர்சம் என்றும் சொல்லுகிறார். கிறித்துவச் சமயத்தை நாவலர் கடுமையாக எதிர்த்து நின்றார். அதே சமயம் சைவத்தை வளர்ப்பதற்காகத் தமிழையும் வளர்த்தார் என்று சொல்வதை எஸ்.பொ. மறுக்கிறார். சிங்கள இனவாதத்தைப் பெருமளவுக்கு வளர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு எதிராக தமிழ்த் தேசியத்தை வளர்த்தவர் ஆறுமுக நாவர் என்று கைலாசபதி எழுதியதைக் கடுமையாக மறுக்கிறார். நாவலர்சைவத்தை வளர்த்தார் என்பது யாழ்ப்பாணத்து வேளாளருக்கு உவப்பாக இருக்க முடியும். அதேசமயம் வேளாளர் சாதியைத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக வளர்த்தார் என்பதையும் சேர்த்துக் காணவேண்டும். தமிழ்த் தேசியத்தை வளர்த்தவர் என்பது உண்மையானால் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முறையில் சாதிக்கு எதிராகச் செயல்பட வேண்டும். ஆறுமுக நாவலர் இவ்வாறு எல்லாம் செயல்படவேயில்லை. தமிழ்த் தேசியவாதி தமிழ் மக்களின் தன்னுரிமைக்காகப் போராட வேண்டும். ஆங்கிலத்துக்கு எதிராகத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவதற்காகப் போராட வேண்டும். இத்தகைய நோக்கம் எதுவும் ஆறுமுக நாவலருக்கு இல்லை. ஆறுமுக நாவர் செய்த சேவையின் பயனாகத்தான் சேர் பொன்னம்பலம் முதலியவர்கள் தமிழ்த் தேசிய நெறியில் ஈடுபட்டார்கள் என்று கைலாசபதி எழுதியதையும் எஸ்.பொ. மறுக்கிறார். ஆங்கிலத்தின் மூலம் தேச அரசியலில் தமிழ் மக்களுக்கானச் சில உரிமைகளைக் கேட்டவர்கள் அவர்கள். சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்காக அவர்கள் போராடவில்லை என்கிறார் எஸ்.பொ. பிரபந்தத் திரட்டில் பறையர், கரையார் என்ற சாதிப் பெயர்களை அழுத்திச் சொல்கிறார் நாவலர். வட இலங்கையில் இந்துக்கல்லூரி ஆக்கம் பெற்றதற்கு ஆறுமுக நாவலரும் காரணம் என்ற கூற்றையும் மறுக்கிறார். ஆங்கிலத்துக்கு வாழ்த்துப் பாடியவர் நாவலர். இந்துக்கல்லூரிகள் இந்து மதத்தையும் ஆங்கிலத்தையும் வளர்த்தன என்ற நோக்கில் எஸ்.பொ. நாவலரை மறுக்கிறார். வள்ளலாரின் அருட்பாவை மருட்பா என்று ஆறுமுக நாவலர் சாடியதையும் எஸ்.பொ. குறிப்பிடுகிறார். வள்ளலாரின் சமய மறுப்பு நாவலருக்கு உடன்பாடில்லை. ஆறுமுகத்திற்கு நாவலர் பட்டம் தந்தவர்கள் தமிழகத்தில் சைவ மத பீடங்கள். இவ்வாறு அடுக்கடுக்கான விவரங்களை எஸ். பொ. தந்து கைலாசபதியை மறுக்கிறார். ஆறுமுக நாவலரைப் பாராட்டுவதற்காக அவரைத் தமிழ்த் தேசியத்தின் மூலவர் என்றோ முதல்வர் என்றோ சொல்வதற்குத் தேவையில்லை. எஸ். பொ. விரிவாக விவாதிப்பதைப் பார்க்கும் பொழுது உண்மையில் ஈழத்தில் தமிழ்த் தேசிய உணர்வின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவர் ஆறுமுக நாவலர் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பொன்னம்பலம் முதலியவர்களையும் எஸ். பொ. தமிழ்த் தேசியவாதிகள் அல்லர் என்றும் கூறுவதையும், அவர்கள் தமிழ்த் தேசத்தின் தன் உரிமைக்காகப் போராடவில்லை என்பதையும் நம்மால் ஏற்கமுடியும். ஆறுமுக நாவலரை இவ்வாறு மகிமைப்படுத்த வேண்டியதன் தேவை கைலாசபதிக்கு ஏன் ஏற்பட்டது என்றும் கேட்க வேண்டியிருக்கிறது. கைலாசபதிக்குள்ளும் சாதி உணர்வு இருந்தது என்று சிலர் குறிப்பிடுவதை இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். தமிழ்த் தேசியம் என்பது குறித்து எஸ்.பொ.வின் சிந்தனை எத்திசையிலியங்குகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். தமிழருக்குத் தன்னுரிமைத் தேவை. தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். சமயமும் சாதியும் தமிழ் இன் உணர்வின் வளர்ச்சிக்குத் தடை. வெறும் தமிழ்ப்பற்று போதாது. அரசதிகாரத்தில் பங்கு பெறுவதோடு பகிர்வு தேவை என்பதோ தமிழ்த் தேசியம் ஆக முடியாது. இவை தமிழ்த் தேசியம் குறித்த எஸ்.பொ.வின் தெளிவான சிந்தனைகள். ** தலித் இலக்கியம்** 15. எஸ்.பொ. தலித்தாக இருந்த போதிலும் தான் தலித் இலக்கியம் படைக்கவில்லை என்று கூறுவதை விளக்க வேண்டுமென்ற ஞானம் அவர்களின் கேள்விக்கு எஸ்.பொ. பதில் கூறுகிறார். எஸ்.பொ. எந்த ஒரு சமயத்திலும் தான் சாதி உணர்வு கொண்டவராக இருந்ததில்லை என்பதை நாமும் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் மார்க்சியனாக இருக்க முடியும் (அ) தலித்தாக இருக்க முடியும். ஒருவர் இரண்டாகவுமிருக்க முடியாது என்று அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். மார்க்சியம் தற்காலத்தில் தலித்தியம் , பெண்ணியம் என்பன குறித்து அக்கறை கொள்ள வேண்டுமென்று நுஃமான் கூறுவதையும் எஸ்.பொ. மறுக்கிறார். டேனியல் மார்க்சியராக இருந்து சாதி ஒழிப்புக்காகப் போராடியவர். முதன்மையாகவும் இறுதியாகவும் டேனியல் மார்க்சியர். டேனியல் தலித் இலக்கியம் எழுதினார் என்றும் அவர்தான் முதல் தலித் இலக்கியவாதி என்றும் சொல்வதை டேனியலே ஒப்புக் கொள்ளமாட்டார் என்பது எஸ்.பொ.வின் கருத்து. தலித் இயக்கம் என்று ஒன்று தனியே செயல்படலாம். தலித் மக்களின் இருப்பு குறித்தும் தலித் மொழியிலேயே இலக்கியம் படைக்க வேண்டுமென்றும் அவர்கள் கருதலாம். இப்போக்கை மறுக்க வேண்டியதில்லை. இப்படி எஸ்.பொ . விவாதிக்கிறார். எஸ்.பொ.வை தலித் இலக்கியவாதிகள் சாடுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். சாதியம் என்பது சமுதாயத்திலிருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்பதை எஸ்.பொ. மறுக்கமாட்டார். சாதி ஒழிப்புக்காக தனி இயக்கம் தேவை என்று செயல்படுபவர்களையும் எஸ்.பொ. மறுக்கமாட்டார். சாதி ஒழிப்புக்கு மார்க்சியர் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்தால் சமூக மாற்றத்தில் மார்க்சியர் முற்றாக ஈடுபடுவதில் முதன்மையான கவனம் கொண்டிருந்தால் போதும். இதன் வழியே சாதி ஒழிந்து விடுமென்று எஸ்.பொ. கூறக்கூடும். மார்க்சிய நோக்கில் சாதியம் குறித்து எத்தகைய வரையரையை வைக்க முடியும் என்ற கேள்வி கூட எஸ்.பொ.வுக்கு ஒரு முக்கியமான கேள்வியாக இருக்குமென்று தோன்றவில்லை. இது குறித்து எஸ்.பொ.வுடன் தொடர்ந்து உரையாடல் தேவை. ** முற்போக்கு - தமிழ் மரபு - தமிழ்த்துவம்** 16. முற்போக்குக்கும் மரபுக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் உறவு குறித்து ஈழத் தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட விவாதங்கள் முதலியவை குறித்த ஞானம் அவர்களின் கேள்விக்கு எஸ்.பொ. விரிவானப் பதில் கூறுகிறார். எஸ்.பொ. தன் பதிலில் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு கல்லூரி வட்டாரத்தில் கூட சரியாக எழுதப்படவில்லை என்பதை விளக்கும் முறையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் விபுலானந்தர் மட்டுமல்ல அவரையடுத்து நாடகத்துறையில் பணிபுரிந்த பேராசிரியர் கணபதிபிள்ளையும் வித்தியானந்தனும் கூட சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை. இவர்கள் மரபுவாதிகள் என்பதனால் முற்போக்குவாதிகளால் புறக்கணிக்கப்பட்டார்கள். அன்றியும் 1956க்குப் பிறகு கைலாசபதி சிவத்தம்பி நுழைவையடுத்துத்தான் தமிழிலக்கியம் புத்துயர் பெற்றது போல் எழுதுகிறார்கள். மரபு பற்றியச் சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி இவர்கள் எதிரிடையாகவே எழுதுகிறார்கள். சாகித்திய மண்டலத்தில் பண்டிதரும் பேராசிரியருமாகிய சதாசிவம் இடம் பெற்ற பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது என்கிறார் எஸ்.பொ. சதாசிவமும் பண்டிதர் என்பதால் பண்டிதர்களின் வட்டாரம் கிளர்ச்சியடைந்தது. வடசொற்களை அறவே தவிர்த்து எழுதும் செந்தமிழில் தான் இலக்கியம் படைக்க வேண்டுமென்றனர். பேச்சு மொழிச் சொற்கள் இலக்கியத்தில் கலக்கக்கூடாது. இப்படிக் கலப்பவர்கள் முற்போக்குவாதிகள். இவர்கள் தமிழிலக்கியத்தைச் சீரழிக்கின்றனர் என்றனர். பண்டிதர்கள் இத்தகைய கருத்துக்களின் வன்மை மென்மை பற்றி ஆய்வில்லாமல் மரபு குறித்து சதாசிவம் வீரகேசரியில் எழுதிய கட்டுரையை வரவேற்றும் விமர்சனம் செய்தும் தான் எழுதியதாக எஸ்.பொ. குறிப்பிடுகிறார். தமிழிலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றிய அக்கறையைச் சதாசிவம் வெளிப்படுத்தியிருந்ததை எஸ்.பொ. பாராட்டுகிறார். ஆனால் சதாசிவத்தை ஆக்க இலக்கியங்கள் பற்றி தெரியாத மரபுவாதி மற்றும் பிற்போக்குவாதி என்று முற்போக்குவாதிகள் சாடினர். EX.C. நடராசா, கனக. செந்தில்நாதன் முதலிய பேராசிரியர்களுடன் கலந்த பிறகு, எஸ்.பொ. தான் எழுதிய கட்டுரையில், மரபு என்பது சுழலும் சக்கரத்தில் மையமாக இருக்கும் அசையாப்புள்ளி என்றும் எந்த ஒரு மொழியும் பிற மொழிகளின் தாக்கத்தால் அழிவுறாதபடி காப்பது இந்த மரபுதான் என்றும் எழுதியதாக கூறுகிறார். இத்தகைய மரபு சிலரது நிர்பந்தங்களுக்கு உட்பட்டு அழிந்து விடக்கூடாது பேணப்பட வேண்டும் என்றும் எழுதினார். இதன் பிறகு நற்போக்கு இலக்கியம் என்று எஸ்.பொ. பேசத் தொடங்கினார். முட்டையடி முதலியனவும் இதன்பின்தான் நேர்ந்தன என்கிறார். நற்போக்கு இலக்கியம் பற்றி தொடர்ந்து எழுந்த விவாதங்களின் விளைவாக எஸ்.பொ. தான் பெற்ற தெளிவைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இருபத்தியோராம் நூற்றாண்டிலே இந்த நற்போக்கு இலக்கியத்தின் பிரதான அம்சம் என்பது தமிழ்த்துவம் என்று விளங்கப்படுத்தினேன். இந்தத் தமிழ்த்துவம் என்பது மரபு ரீதியான தமிழ் இலக்கியங்களினுடைய வேரிலிருந்து உறிஞ்சப்பட்டு, புதிய இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தமிழ் மொழியும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களும் பேணப்பட வேண்டுமென்றால், தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த்தேசியத்தை வளப்படுத்துவதற்கான சுதந்திர சுயாதீனமுள்ள தமிழ் மண்ணும் இருக்க வேண்டும் என்பதை விளக்கப்படுத்தினேன்”(பக். 89). “இருபத்தியோராம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இலக்கிய ஆவேசங்கள், ஆதங்கங்கள் முழுவதையும் உள்வாங்கி, ஈழத்தின் பரம்பரைமிக்க தமிழ் இலக்கிய மரபு முன்னெடுக்கப்படுவதற்கு தமிழ்த்துவமே ஒரு கொள்கையாகப் பயிலப்படும் என்பதை நியாயப்பூர்வமாக நிறுவியுள்ளேன்” (பக். 90). இத்தனை தெளிவோடு குறிப்பிடும் எஸ்.பொ. தமிழர்க்கென ஒரு தனிநாடு தேவை என தமிழ்த் தேசியச் சிந்தனை உருவான கால நிலையில் பண்டிதர்கள் வாய்மூடி மெளனிகர்களாக ஆனார்கள். இந்தப் புதியப் போக்குக்கு எதிர்வினை தரும் சிந்தனைத் திறத்தை முற்போக்குவாதிகளும் இழந்துவிட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். சிங்கள அரசோடு ஒத்துழைக்கும் முறையில் வழக்குரைஞர்களாகவும் அதே சமயம் அரசியல்வாதிகளாகவும் செயல்பட்டப் பொன்னம்பலம், முதலியவர்கள் (அமிர்தலிங்கம் வரையிலானவர்கள்) தேர்தல் காலத்தில் மட்டும் தமிழில் பேசிய நிலவரமும் மாறியது. தமிழ்த்துவத்தோடு இணைகிற தமிழ்த் தேசியம் தான் புத்திலக்கிய ஆக்கத்திற்கான கொள்கை ஆக இருக்க முடியும். இக்கொள்கையில்லாதவர்கள் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்கள், எஸ்.பொ.வின் கருத்தை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ** கீதை - ஆன்மிகம் - மார்க்சியம்** 17. எஸ்.பொ. எழுதிய கீதை நிழலிலே நூல் பற்றி கேள்வி எழுப்பும் ஞானம் அவர்கள் மார்க்சியம் பற்றிப் பேசும் நீங்கள் இக்கீதையில் இடம் பெறும் ஆன்மிகத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார். கீதையின் ஆன்மிகம் பற்றி நான் எழுதவில்லை என்றும், கீதையின் நிழலில் தனது சில குளிர்ந்த அனுபவங்கள் பற்றித்தான். எழுதியிருக்கிறேன். ஆன்மிகம் என்பது வெறுக்கத்தக்கதல்ல. மார்க்சியத்தினுள்ளும் ஆன்மிகத்திற்கு இடமுண்டு. மனிதநேயம் குறித்து பேசும் பொழுது ஆன்மிக உணர்வோடு பேசுகிறோம். மனிதனுக்குள் கடவுளும், கடவுளுக்குள் மனிதனும் இருப்பது உண்மைதானே என்கிறார் எஸ்.பொ. பாரதியிடமிருந்து கண்ணன் பாட்டு மற்றும் கண்ணன் பற்றிய மேலும் சில பாடல்களை நீக்கிவிட்டால் பாரதியை மகாகவி என்று பேசமுடியாது என்கிறார். பாரதி மொழி பெயர்த்த கீதையை எஸ்.பொ. படித்தபோதும் அதன்பிறகு புலவர் மணி பெரியதம்பி பிள்ளையின் கீதை வெண்பா நூலைப் பார்த்த போதும் தன் அனுபவங்களை உள்ளடக்கி எழுத நேர்ந்தது என்கிறார். கீதை குறித்து மறுவிசாரணை என்ற முறையிலும் தான் எழுதியிருந்ததாகவும் கல்கி இதழ் அதைப் பிரசுரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். நூல் வெளியிடும் போது நீதியரசர் இஸ்மாயில் ஒப்புக் கொண்டபடி முன்னுரை தரவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். மார்க்சியத்தோடு மனிதநேயம் என்ற முறையிலான ஆன்மிகத்துக்கு இடமுண்டு என்பதில் ஐயமில்லை. கீதை (அ) சமயம் சொல்லும் ஆன்மிகம் எஸ்.பொ.வுக்கு உடன்பாடாக இருக்க முடியாது. கீதையின் தரிசனம் என்று, தான் எழுதவில்லை என்று குறிப்பிடுவதை நாம் ஏற்கிறோம். ஒரு படைப்பாளருக்குள் ஆன்மிக உணர்வு இல்லாமலும் முடியாது. முற்போக்குவாதிகள் ஆன்மிகம் என்று ஒருவர் பேசினால் அவரைக் கடைந்தெடுத்தப் பிற்போக்குவாதி என்றே சாடுவர். இந்திய சமூகத்தை இதன் காரணமாகவும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மார்க்சியம் என்பது வரட்டு நாத்திகம் இல்லை. இவை குறித்து நாம் இன்னும் கூடுதலாகப் பேசும் தேவை இருக்கிறது. ** இலக்கிய இயக்கம்** 18. எஸ்.பொ. தன் அனுபவங்களிலிருந்து இலக்கியம் குறித்த தன் பார்வைகளை, எவ்வாறு தனக்குள் கண்டறிந்தார் என்பது பற்றி இங்குச் சிலவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம். ஸாகிரா மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் ஓர் இலக்கிய அமைப்பு குறித்து தன் பார்வை என்னவாக இருக்க முடியும் என்று முடிவு செய்கிறார். இலங்கை முழுவதிலும் உள்ள படைப்பாளிகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மார்க்சியர் தலைமை தாங்கக்கூடியதாகவும் கட்சி சார்பற்ற முறையில் இலக்கிய ஆய்வை முன்னெடுத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டுமென்பது எஸ்.பொ.வின் கருத்து. தமிழிலக்கியமும் படைப்பியக்கமும் தம் வாழ்வின் இயக்கமாகத் தமக்குள் கொண்டவர்களை மார்க்சிய நோக்கில் வளர்த்தெடுக்க முடியும். இதன் காரணமாகப் படைப்பிலக்கியம் மேம்பட வேண்டும். வரலாற்றுச் சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த சிந்தனைகளில் படைப்பாளி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போது அத்தகைய புரிதல் படைப்பு இலக்கியத்தை மட்டுமல்லாமல் வாழ்வையும் முன் நகர்த்துவதாக இருக்க முடியும். இலக்கியத்தின் நோக்கம் மார்க்சியத்தோடு இங்கு இயல்பாகவே இணைவு கொள்ளமுடியும். இத்தகைய சிந்தனையை எஸ்.பொ. கொண்டிருந்தார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஸாகிரா மாநட்டு அனுபவம் இதற்கு முற்றிலும் எதிராக இருந்தது. இத்தகைய அனுபவத்திற்குப் பின்னர்தான் மட்டக்களப்பில் தமிழ் விழா நடத்தினார். தமிழ் மரபை நிகழ்கால இலக்கிய ஆக்கத்திற்கு உரமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழுக்கு விழா எடுக்கிறார். படைப்பியக்கத்தினுள் முழு அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவர் இயல்பாகவே முற்போக்குவாதியாகத்தான் இருந்தாக வேண்டும். இத்தகைய நம்பிக்கை ஒரு மார்க்சியனுக்குத் தேவை. சமூகத்திலும் வரலாற்றிலும் வேர் கொண்ட ஒரு படைப்பாளி மக்களிடமிருந்து விலகியிருக்கவே முடியாது. இவனுக்குள் சாதியுணர்வுக்கு இடமில்லை. பெண்ணை அடிமைப்படுத்தும் மனநிலை இவனுக்கு இருக்க முடியாது. எத்தகைய ஆதிக்கத்தையும் இவனால் ஆதரிக்க முடியாது. இலக்கிய இயக்கத்தினுள்ளும் கட்சிக்காரர் அதிகாரம் செய்வதை ஏற்க முடியாது. வெற்று ஆரவாரத்தோடு மேடையில் அலங்காரமாய் தமிழை முழங்க முடியாது. சமூக அனுபவத்தை தனக்குள் ஆழமாய் செரித்துக் கொண்டவரது தமிழ் ஆற்றல் மிக்கத் தமிழ், இத்தகைய உணர்வுகளோடுதான் ஒரு படைப்பாளிமார்க்சியத்தோடு நெருக்கமான உறவு கொள்ள முடியும். எஸ்.பொ. இத்தகையவர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால் இவரைப் பொறுத்தவரை தலித்தியம், பெண்ணியம் என்று பிரித்து பேச வேண்டிய தேவையில்லை. கட்சி மார்க்சியன் தனக்குள் சாதியுணர்வைக் கடந்தவனாக இல்லாதபோது, தனக்குள்ளும் இருக்கும் ஆணாதிக்க உணர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாத போது, கட்சி மார்க்சியம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வருகிறபோது, இனி மார்க்சியர் தலித்தியம் குறித்தும் பெண்ணியம் குறித்தும் அக்கறை கொள்ள வேண்டுமென்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேச நேரும் என்பதை புரிந்து கொள்கிறோம். இத்தகைய தேவை எஸ்.பொ.வுக்கு இல்லை. டேனியல் முதல் தலித் எழுத்தாளர் என்று சிலர் பெருமைபடுத்தியதை இப்படித்தான் நாம் புரிந்து கொள்கிறோம். மார்க்சியத்திற்குள் தலித் மக்களின் சிக்கல் இயல்பாக இடம் பெற முடியும். தலித்தியம் என்ற பெயர் கூடத் தனியாக தேவையில்லை. மார்க்சியத்தை ஏற்காதவர் (அ) புரிந்து கொள்ளாதவருக்குத் தலித்தியம் என்ற பெயரில் தனி இயக்கம் தேவை. மார்க்சியம் உலகளவில் பல நூறு வரலாற்று அனுபவங்களோடு தனக்குள் எத்தனையோ விரிவுகளை கண்டுள்ளது. இத்தனை விரிவுகளும் எஸ்.பொ.வுக்குள் இருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லை. தன் காலத்தோடும் வரலாற்றோடும் மக்கள் விடுதலையோடும் தன்னை இணைத்துக் கொண்டவர் என்ற முறையில் அவருக்குள் இயங்கும் மார்க்சியத்தை நாம் ஏற்க முடியும். 19. ‘இனியொரு விதி செய்வோம்’ என்ற எஸ்.பொ.வின் கட்டுரைத் தொகுப்பு இரண்டாயிரத்தில் வெளியிடப்பட்டது. 1960 முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலக்கியம் குறித்து தனக்குள் எழுந்த, தனக்குள்ளேயே மாறிவரும் சிந்தனைகளைக் கட்டுரைகளாக, அறிக்கைகளாக, நேர்காணலாக எஸ்.பொ. வெளியிட்டு வந்திருக்கிறார். காலத்திற்கு காலம் எவருடைய சிந்தனையும் மாறுபடாமல் இருக்க முடியாது. தப்பபிப்பிராயங்களாக இருந்த போதிலும் எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்துகளைத் தான் பிரகடனம் செய்து வந்ததாகவும் எஸ்.பொ. கூறுகிறார். இம்முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிட்டக் கட்டுரைகள் முதலியவற்றை ‘இனியொரு விதி செய்வோம்’ தொகுப்பில் எஸ். பொ. வெளியிட்டதை முன்னிட்டு ஞானம் அவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்புகிறார். கனடாவில் இந்த நூலை வெளியிட்டது ஏன்? புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தான் புத்தாயிரத்தில் மிகச் சிறந்த இலக்கியங்களைப் படைக்க முடியுமா? தமிழ் நாட்டார் படைக்கமாட்டார்களா? என்று வகைவகையான கேள்விகளை எழுப்புகிறார். இவற்றுக்கெல்லாம் எஸ்.பொ. விரிவான பதில் கூறுகிறார். 1999இல் சிங்கப்பூரில் எழுத்தாளர் பலர் கூடியிருந்த சபையில் புலம் பெயர்ந்த தமிழர் தான் புத்தாயிரத்தில் புதிய தமிழிலக்கியம் படைப்பார்கள் என்று தான் வெளியிட்டக் கருத்தைத் தமிழகத்திலிருந்து வந்த அம்பையும், பிரபஞ்சனும் மறுத்ததைக் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் முற்றிலும் வணிக மயமாகியதோடு திரைப்படத்தில் வாய்ப்பு தேடி அலைபவராகவும் இருக்கும் நிலையில் இவர்களால் சிறந்த படைப்புகளைப் படைக்க இயலாது என்கிறார். அன்றியும் திராவிட இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வை அழித்ததன் விளைவாக ஆற்றல் மிக்கத் தமிழிலக்கியங்கள் தமிழகத்தில் தோன்றுவதற்கான வாய்ப்பைத் தமிழர் இழந்துவிட்டனர் என்கிறார். ஆங்கிலமே பாட மொழியாக தமிழகத்தில் மாறிவிட்டச் சூழலில் தமிழுணர்வு அற்றதோடு தமிழர்தம்மை இந்தியர் என்று சொல்லிக் கொள்வது பற்றியும் எஸ்.பொ. குறிப்பிடுகிறார். தமிழகத்தைவிட்டு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தொழில் தேடிச் சென்று வாழும் தமிழர்கள் இந்தியர்கள் என்று தான் நம்மை அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அகதிகளாகவும் பரதேசிகளாகவும் வாழும் ஈழத்தமிழர்கள், தமிழர்கள் என்றே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். தமிழை அவர்கள் விட்டுவிட முடியாது. புதிய சூழலில் முற்றிலும் புதிய அனுபவங்களைத் தமக்குள் பெறுகிறார்கள். புதிய மொழிகள் கற்கிறார்கள். ஈழத்தில் போர்ச் சூழலில் பெற்ற அனுபவங்களோடு வெளி உலகிலும் புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். தமிழ்த் தேசியவுணர்வு இவர்களுக்குள் தங்கியிருக்கிறது. இச்சூழலில் புதிய பின்னணியில் புதிய கருப்பொருளோடு இவர்களால் இலக்கியம் படைக்க முடியும். தாம் கற்கும் புதிய மொழிகளின் மூலம் புதிய உத்திகள் கற்கிறார்கள். இந்தச் சூழலில் ஈழத் தமிழர்தான், தம் தனித்துவத்தை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு புத்தாயிரத்தில் ஈழத் தமிழரால் தான் புதிய தமிழிலக்கியம் படைக்க முடியும் என்று எஸ்.பொ. கூறுகிறார். ஈழத்தில் கடுமையான போர்ச்சூழலில் வாழ்பவர்களுக்கு இலக்கியம் படைப்பதைக் காட்டிலும் முன்னுரிமை பெறும் பிரச்சனைகள் பல உள்ளன. கொழும்பில் வாழும் தமிழரைப் பொறுத்தவரை அரசின் மிரட்டலுக்கஞ்சி இரண்டு கெட்டான்களாகத் தான் வாழ முடியும். பத்திரிகைகளும் உண்மை அனுபவங்களோடு இலக்கியப் படைப்புக்களைத் தர முடியாது. மட்டக்களப்பைப் பொறுத்தவரை தமிழிலக்கியவாதிகள் விபுலானந்தரின் நவீன இலக்கியத் தடத்தைப் புதுப்பிக்கவில்லை. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகமும் நாட்டார் பாடல்கள், கூத்துக்களைப் பற்றிய ஆய்வுகளிலே மூழ்கியிருக்கிறது. பெயர் சொல்ல தகுந்த ஒரு படைப்பாளி நீலவாணன். முஸ்லீம் எழுத்தாளர்கள் சிங்கள தேசிய இதழ்களில் தம் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களை ஸ்ரீலங்கா எழுத்தாளர் என்று வகைப்படுத்துவதா? தமிழ் எழுத்தாளர் என்று வகைப்படுத்துவதா என்று சிக்கல் உள்ளது என்கிறார். அதே சமயம் மிகச் சிறந்த இஸ்லாமிய எழுத்தாளர்களையும் குறிப்பிடுகிறார். ‘இனியொரு விதி செய்வோம்’ கட்டுரைத் தொகுப்பில் முப்பதாண்டுகளுக்கு மேற்பட்ட எஸ்.பொ.வின் இத்தகைய சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய ஒரு மதிப்பீட்டை இங்கு முன் வைப்பது பொருந்தும். ‘இனியொரு விதி செய்வோம்’ என்ற தொகுப்பில் இடம் பெற்ற எஸ்.பொ. அறிக்கை வெளியிட்டச் சூழலை முன்பே எஸ்.பொ. கூறியிருக்கிறார். தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ் சிகைகளைத் தடை செய்வதன் மூலம் இலங்கையில் தேசிய இலக்கியத்தை வளர்க்க முடியும் என்ற குரல் இலங்கையில் எழுந்த சூழலில் கைலாசபதி முதலியவர்களும் குரல் எழுப்பியதை எஸ்.பொ. குறிப்பிடுகிறார். எஸ்.பொ.வுக்கு இக்கருத்து உடன்பாடில்லை. சிறிமாவோவின் அமைச்சரவையில் இடம்பெற்ற குமார சூரியரை எஸ். பொ. சந்திக்கவும் மறுத்துவிட்டார். ஆனால் தமிழ் சஞ்சிகைகளை ஊக்குவிக்கும் முறையில் அரசு ஒரு திட்டத்தை முன்வைத்த நிலையில் குமாரசூரியர் அழைத்தக் கூட்டத்தில் இளம்பிறை இதழ் சார்பாக எஸ்.பொ. கலந்து கொண்டார். இதழ் எதையும் நடத்தாத கைலாசபதியும் சிவத்தம்பியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதோடு இறுதியில் அமைக்கப்பட்ட சஞ்சிகைகளின் கூட்டமைப்பிலும் இவர்கள் இடம் பெற்றதை எஸ்.பொ. குறிப்பிடுகிறார். உண்மையில் தேசிய இலக்கியத்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தான் அச்சமயம் வெளியிட்ட எஸ்.பொ. அறிக்கைப் போல வேறு எவரும் தம் இலக்கியக் கொள்கை பற்றி அறிக்கை வெளியிடவில்லை என்று எஸ்.பொ. கூறுகிறார். தன்னைக் குமாரசூரியர் அழைத்த போது எஸ்.பொ. சந்திக்கவில்லை. ஆனால் குமாரசூரியரைக் கைலாசபதியும், சிவத்தம்பியும் தாமே வலிந்து சென்று சந்தித்ததைக் குறிப்பிடுகிறார் சிறிமாவோவின் முற்போக்கு அரசோடு மிகுந்த ஆர்வத்துடன் கைலாசபதி முதலியவர்கள் இவ்வாறு ஒத்துழைத்ததை எஸ்.பொ. அம்பலப்படுத்துகிறார். நைஜீரியாவில் தான் வாழ்ந்த காலத்தில், ஆப்பிரிக்க இலக்கியங்களைக் கற்றதன் / கற்பித்ததன் வாயிலாக, மேற்கத்திய வரின் இலக்கியப் படைப்புகளை முன்மாதிரியாக வைத்து காலனி ஆதிக்க மனப்பான்மையைத் தமக்குள்ளிருந்து களைந்து கொள்ளாமல் கீழைத்தேய படைப்பாளிகள் இலக்கியம் இனி படைக்க முடியாது என்றும், தம் சொந்த வரலாற்று மரபுகளை உயிர்பிக்கும் முறையிலும் மேற்கத்திய ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முறையிலும் படைக்கும் இலக்கியம் தான் உண்மை இலக்கியமாக இருக்க முடியும் என்ற தெளிவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். இனி இதுவரையிலான எஸ்.பொ. வின் கருத்துகள் குறித்த மதிப்பீட்டுக்குச் செல்லலாம். ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கெனப் படைப்புகளை உருவாக்கிக் கொள்வதுதான் உண்மை இலக்கியப் படைப்பாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய இனம் சார்ந்த படைப்பாளிகள், தாம் இந்தியர் என்ற மாயையிலிருந்து விடுபட்டு, தம் நெடுங்கால வரலாற்றையும் வரலாற்று வழியே தமக்குள் வந்திருக்கும் எதிரும் புதிருமான அனுபவங்களையும் தம் காலத்திற்கு ஒத்த முறையிலும் தம் தேசத்தையும் மரபையும் உயிர்ப்பித்துக் கொள்ளும் முறையில் புதிய படைப்புக்களை உருவாக்கத்தான் வேண்டும் ‘இந்திய’ தமிழர், அதே போலவே திராவிடத் தமிழர் இத்தகைய முறையில் தமக்குள் பதிந்திருக்கும் மாயைகளைக் களைந்து கொள்ளாதது பற்றி எஸ்.பொ. குறிப்பிடுவதை நன்றியோடு நாம் ஏற்கிறோம். எனினும் தமிழ்ச் சூழலில் இத்தகைய தமிழ்த் தேசிய உணர்வோடு படைப்பில் ஈடுபட்டிருக்கும் சில அசலான படைப்பாளிகளையும் நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. அம்பையும் பிரபஞ்சனும் எழுப்பிய கேள்விகளும் விரிவான விவாதத்திற்குரியவை. திராவிட இயக்க வட்டாரத்தில் அசலான தமிழ்ப் படைப்பு என்று தற்காலத்தில் ஒன்று கூட இல்லை என்பதை ஏற்கத்தான் வேண்டும். இந்துத்துவம் என்ற உணர்வை உள்வாங்கிக் கொண்டவர்களைத்தான் இந்தியர் என்று குறிப்பதாக வைத்துக் கொண்டால் இந்துத்துவ உணர்வோடு எழுதும் எழுத்தாளர் எவரும் நமக்குத் தெரிந்த வரை சிறந்த படைப்புகளைத் தரவில்லை என்பதையும் ஏற்கலாம். இடதுசாரி எழுத்தாளர் என்பவர்கள் தம்மை இந்தியர் என்று உணர்ந்த போதிலும் இந்துத்துவத்தின் எடுபிடிகளாக இல்லை. இவர்களைப் பொறுத்தவரை ஸ்டாலினிய வரையறைகளை முற்போக்கு இலக்கியத்திற்கான வரையறைகள் என்று வைத்துக்கொண்ட முறையில் இவரது படைப்புகள் விமர்சனத்துக்கு உரியவையே அன்றி இவரது படைப்புகளின் தனித்தன்மையை நாம் மறுக்க முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை தமிழின் மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை நாம் ஏற்கிறோம். புலம் பெயருவதற்கு முன்பும் ஈழத்து இலக்கியத்தின் தனித்தன்மைகளை நாம் என்றும் மதிக்கத்தான் செய்கிறோம். அயல் நாடுகளின் புதிய அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதோடு தம் மரபின் ஆற்றலை உயிர்ப்பிக்கும் முறையில் இவர்கள் எழுதும் புதிய படைப்புகளின் தனித்தன்மையையும் நாம் மதிக்கிறோம். ஆனால் இதற்கு மேலும் சில கருத்துகளை எஸ்.பொ. வெளியிடுவது நம்மை உசுப்பிவிடுவதற்காக என்ற முறையில் நாம் வரவேற்கிறோம். ** இலக்கியவாதியா? விமர்சகரா?** 20. எஸ்.பொ. ஒரு படைப்பிலக்கியவாதி மட்டும் தானா? கூடவே விமர்சகரா? என்ற முறையில் இலங்கைச் சூழலில் எழுந்த கேள்வியை முன்னிறுத்தி ஞானம் அவர்கள் கேட்க, இதற்குப் பதில் சொல்லும் முறையில் எஸ்.பொ. விரிவாகச் சொல்லுகிறார். இரசிகமணி கனக. செந்திநாதன் ‘ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி’ குறித்து எழுதிய நூலில் சில பகுதிகளை எஸ். பொ. தான் எழுதினார் என்ற ஒரு குற்றச்சாட்டை முற்போக்கு வாதிகளும் பிறரும் முன்வைத்தது பற்றி எஸ்.பொ. கூறுகிறார். பண்டிதர் பரம்பரையில் கனக. செந்திநாதன் வந்தவர் எனினும் பழந்தமிழ் இலக்கியமும் நவீனத்தமிழ் இலக்கியமும் சந்திக்கும் யுகத்தைப் பிரதிபலிப்பவர் கனக. செந்திநாதன் என்று எஸ்.பொ. சிறப்பாகக் குறிப்பிடுகிறார். மேற்கத்திய இலக்கிய விமர்சனங்களை அவர் அறியாதவர் எனினும் நவீன காலத்திற்குரிய இலக்கியப் பார்வையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை எஸ்.பொ. குறிப்பிடுகிறார். இத்தகைய பார்வை தான் கனக. செந்திநாதன் நூலில் எஸ்.பொ. புகுத்தியது என்று மற்றவர் தவறாகப் புரிந்து கொண்டனர். கனக. செந்திநாதன் தினகரனில் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியபோது சில விமர்சனங்களை எஸ்.பொ. முன் வைத்திருக்கிறார். அவ்வளவுதான். எஸ்.பொ.வை உள்வாங்கிக் கொண்டு நூல் வெளியிடும் பொழுது நவீனகாலப் பார்வையைக் கனக. செந்திநாதன் உள்ளடக்கி எழுதியிருக்கலாம். இவ்வாறு தன் மீது சொல்லப்பட்ட பழிக்குப் பதில் சொல்லுகிறார் எஸ்.பொ. தேவையில்லாத இடங்களிலும் முற்போக்கு இலக்கியக்காரர்கள் நுழைந்து பழி பேசுவது அவர்களுக்கு இயல்பாகிவிட்டது என்று எம்மால் புரிந்து கொள்ள முடியும். இதை இலக்கியச் சேவை என்று எவராலும் கருத முடியாது. இவர்களின் மனிதத் தரம் பற்றித்தான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். எஸ்.பொ. படைப்பிலக்கியக்காரர்தான். விமர்சகர் அல்லர் என்ற கருத்தை மறுக்கும் முறையில் ஒரு புத்தகத்திற்கு எழுதும் முன்னுரை விமர்சனம் அல்ல. பத்திரிகையில் எழுதப்படும் மதிப்புரை விமர்சனம் அல்ல என்றெல்லாம் விளக்கிவிட்டு டி.எஸ். எலியட் படைப்பிலக்கியவாதியாகவும் அதே சமயம் விமர்சகராகவும் இருந்தார் என்பதைச் சரியாகவே குறிப்பிடுகிறார். இத்தகைய மரியாதையைத் தமிழில் புதுமைப்பித்தனுக்கும் சிதம்பர ரகுநாதனுக்கும் தருகிறார். சிவபாத சுந்தரத்தையும் இவ்விடத்தில் குறிப்பிடுகிறார். கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் படைப்பிலக்கியத்தில் ஈடுபடாமலேயே விமர்சகராகத் தம்மை நியமித்துக் கொண்டவர்கள். பல்கலைக்கழகத்தில் பதவிக்காக ஏதேதோ எழுதியவர்கள் என்றும் எஸ்.பொ. குறிப்பிட்டுச் செல்கிறார். கணேசலிங்கத்தின் ‘செவ்வானம்’ நூலுக்கும் இளங்கீரனின் ‘நீதியே நீ கேள்’ நூலுக்கும் கைலாசபதி எழுதியவை முன்னுரைகளே அன்றி விமர்சனங்கள் அல்ல என்றும் சொல்லுகிறார். கைலாசபதியை விமர்சகர் என்று கொண்டாடும் முற்போக்குகாரர்களுக்கு எஸ்.பொ . ஒரு விமர்சகர் என்று தோன்றாத்தில் வியப்பில்லை தான். கைலாசபதி போல அக்காடமிக் தனமாக எஸ்.பொ. எழுதவில்லை. அங்குமிங்கும் எடுத்த மேற்க்கோள்களை ஆர்ப்பாட்டத்தோடு இடையில் வைத்து கைலாசபதி போல் எஸ்.பொ. எழுதவில்லை. பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு பெற கைலாசபதிக்கு இம்முறை தேவைப்படலாம். எஸ்.பொ.வால் இப்படி சிந்திக்கவே முடியாது என்பது உண்மைதான். ** இலக்கியத்தின் நோக்கம்** இலக்கியத்திற்கு நோக்கம் எதுவாக இருக்க முடியும்? என்று எஸ்.பொ. கேட்டுக்கொள்கிறார். சங்க இலக்கியம், அடுத்து வந்த சிலப்பதிகாரம், திருக்குறள் பின்னர் பக்தி இலக்கியம் முதலிய ஆக்கங்களுக்கு நோக்கம் எதுவாக இருந்தது என்று கூறுகிறார். சிலப்பதிகாரம் வாழ்வியலைக் கூறும் இலக்கியம். திருக்குறள், வாழ்வியலைக் கூறியதோடு அறத்திற்கு அழுத்தம் தந்த இலக்கியம். பக்தி இலக்கியம் வாழ்வியலை விட்டு விலகிய இலக்கியம். இவ்விலக்கியங்கள் கால மாறுபாட்டுக்கு ஒத்த நோக்கங்களை முதன்மையாகக் கொண்டவை. இலக்கிய நோக்கமும் எல்லாக் காலத்திற்கும் ஒன்றாக இருக்க முடியாது. இலக்கியம் மகிழ்ச்சி ஊட்டுவது, நம்பிக்கை தருவது. அன்றியும் கிளர்ச்சி ஊட்டுவது. இவற்றைவிட - மனித வாழ்வுக்கு ஆதாரமான, ஒன்றைக் கூற வேண்டும். இதனை பாசிட்டிவ் அணுகுமுறை என்கிறார் எஸ்.பொ. மாறிவரும் வரலாற்றுச் சூழலை உள்வாங்கிக் கொள்வதோடு வாழ்வின் தேவையை விழுமியத்தை இலக்கியம் முன் நிறுத்துவது குறித்து எஸ்.பொ. பேசுகிறார். விமர்சகனின் செயல்பாடு இது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முற்போக்குக்காரர்களைப் பொறுத்தவரை தொழிலாளி வர்க்கத்தை முன்னிறுத்தி எழுத வேண்டும் முதலாளியைத் தாழ்த்தி எழுத வேண்டும். இவ்வகையில் பிரசார நோக்கம் முன்வருகிறது. இலக்கியத்தின் நுண் உணர்வு, நோக்கம் பாழ்படுகிறது. கட்சிப் பிரசாரத்திற்காக எழுதப்படுவது சிறந்த இலக்கியப் படைப்பாகாது. எஸ். பொ. இத்தகைய கைங்கரியத்தைச் செய்ய முடியாது. தொழிலாளர்களும் மனிதர் என்ற முறையில் தான் இவரால் எழுத முடியும். பதவி உயர்வுக்காக, பாராட்டுக்காக சமரசம் செய்து கொள்ளும் முறையில் ஒரு கலைஞன் இலக்கியம் இலக்கியத்தின் தரம் பற்றிப் பேசமுடியாது. சமரசத்திற்கும், சந்தர்ப்பவாதத்திற்கும் இலக்கிய மதிப்பீட்டில் இடமில்லை. விமர்சனப் பார்வையும் காலத்திற்குக் காலம் மாறி வரத்தான் செய்யும். விமர்சகர்கள் தீர்க்க தரிசியல்ல. இவ்வளவும் சொல்லும் எஸ்.பொ. தேவைப்படும் பொழுதெல்லாம் விமர்சனம் செய்யத் தவறியதில்லை. அன்றைய சூழ்நிலையின் தேவைகளுக்கொத்தவாறு மாறிவரும் தரவுகளோடு தானும் விமர்சனம் செய்திருப்பது குறித்து எஸ்.பொ. குறிப்பிடுகிறார். எஸ்.பொ. தன் காலம் முழுவதும் முற்போக்கு இலக்கியவாதிகளோடு, முற்போக்கு இலக்கிய விமர்சகர்களோடு போராடி வருகிறார். இலக்கியம் குறித்துத் தொடர்ந்து பேசுகிறார். தன் இலக்கியப் பார்வையும் மாறியும் வளர்ந்தும் வருவது பற்றிச் சொல்கிறார். தன் வாழ்வின் வழியே சத்தியம் தேடிப் பயணம் செய்வது பற்றிப் பேசுகிறார். பதவிக்காகப் பாராட்டுக்காக எழுதவில்லை என்கிறார். வெற்று அலங்காரங்கள் இவருக்கு அறவே உடன்பாடில்லை. தன்னையும் காலத்திற்கு முன் நிறுத்திக் கொள்கிறார். தன் வாழ்வை இலக்கியத்திற்கான ஊழியம் என்கிறார். உண்மைக்கான தேடல் என்கிறார். யாருக்கும் இவர் வளைந்து கொடுக்கவில்லை. என்றைக்கும் தன் பெருமிதத்திலிருந்து இவர் தளரவில்லை. தன்னை இவர் என்றைக்கும் முன் நிறுத்தியதில்லை. ஈழத்து இலக்கியவாதிகளை வரலாற்றில் நிலைநிறுத்தும் நோக்கில், அவரது படைப்புகளை விரிவாக வெளியிடுகிறார். தனக்குத் தேவை நண்பர்கள் அல்ல சகாக்கள் என்கிறார். நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றோடு தன்னை இணைத்துக் கொள்கிறார். எஸ்.பொ. படைப்பாளியா? விமர்சகரா? என்ற கேள்விக்கு உறுதியாக இப்படிக் கூறலாம். புதுமைப்பித்தன் எப்படியோ? அதே போல எஸ்.பொ. ** படைப்பு - பேரானந்தம்** 21. தீதும் நன்றும் தொகுப்பில் ஞானம் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதில் சொல்லி வரும் எஸ்.பொ. அவர்களின் இலக்கிய ஆளுமையை நாம் புரிந்து கொண்ட முறையில் நூலின் இறுதியில் இடம் பெறும் அவரது வாசகங்கள் சிலவற்றைக் கீழே தொகுத்துக் கொள்ளலாம். தான் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் படைப்பியக்கத்தோடு தான் எவ்வளவு கரைந்திருக்கிறார் என்பது பற்றி எஸ்.பொ. கீழ்வருமாறு சொல்கிறார். ‘’ஓர் எழுத்தாளரிடம் நல்லதொரு படைப்பு அவனுடைய உள்ளத்திலே நீண்ட பல காலமாக உறங்கி, கருவுற்று கனிந்து பிறக்கும். உண்மையான சிறந்த படைப்புகள் அந்தப் படைப்புகள் நியமித்த வேளைகளிலே தான் பிரசவமாகும் என்பது என் அனுபவம். எவ்வாறு குழந்தை கருவுற்றது. மாதக்கணக்கில் கர்ப்பப்பையில் வளர்ந்து இனியும் தாங்க முடியாது என்கிற அவஸ்தையிலே பிறக்கிறதோ, அது போல. இந்த உவமையை serious-ஆன படைப்புக்குப் பொருத்தலாம். அந்தப் படைப்பு நிகழ்வதற்கு ஊக்குவிப்புத் தொகைகள் ஒரு பொருட்டு அல்ல. உண்மையான படைப்பாளியினுடைய சிறந்த சன்மானம் என்னவென்றால், அந்த இலக்கியப் படைப்பைப் படைத்த பின்னர் கிடைக்கக்கூடிய திருப்தி. அந்த திருப்தி ஆனந்தம் அன்றேல் பரம பரவசம்! The Bliss - Supreme Bliss என்று சொல்லலாம். இன்னொரு வழியிலே சொல்வதானால் சொர்க்க அனுபவம்! இந்த அனுபவம் வார்த்தைகளின் பிடிமானத்திற்குள் சிக்குப்பட மாட்டாது. இந்த ஆனந்தத்தை - சிலிர்ப்பைச் சன்மானமாகக் கொண்டு எழுத்து ஊழியம் பயில்பவன் நிச்சயமாக serious writer ஆக உயர்வான்’’ (பக். 149). ** படைப்பு அனுபவம்** 23. பாரதி, புதுமைபித்தன், தி. ஜானகிராமன், ஜேம்ஸ் சாய்ஸ் போன்ற தனக்கு ஆதர்சமான பலரது எழுத்தாக்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டு வரும் எஸ்.பொ. தன் எழுத்து அனுபவம் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். ’’சில படைப்புகளில் ஈடுபட்டிருந்த பொழுது, இரவும் பகலும், சில சமயம் தூக்கத்திலும் கூட அந்தப் படைப்பைப் பற்றிய நினைவுகள் சடைத்துக் கிடைக்கும். காலையில் எழும்பும் பொழுது அந்தப் படைப்பில், கல்லி எடுக்கப்படக் கூடிய கூறுகளைப் பற்றிய நினைவுகளுடன் எழும்பி மீள எழுதியிருக்கிறேன். அது தியானம். அது ஒரு பக்தி கூறற்ற பக்தி. வேறெந்தப் பராக்குகளும் அவருடைய அந்த படைப்பு ஒர்மத்தையும் உந்துதலையும் சிதைக்க முடியாது. அப்படிப்பட்ட பக்குவங்கள் தோன்றுதல் வேண்டும். எழுத்தில் அதே பக்குவத்தை வசப்படுத்தாதவர்களைப் பண்டிதமணி கணபதி பிள்ளை சொல்வார் அபக்குவர் என்று, இந்த அபக்குவர்கள் எத்தகைய விண்ணங்கள் செய்தாலும் காலத்தை எதிர்த்து நிற்கமாட்டார்கள்" (பக். 152). 23. எஸ்.பொ. ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவராக இருந்த போதிலும் தமிழகத்தில் சென்னையில் மித்ர பதிப்பகத்தை ஏற்படுத்தி நூல்களை வெளியிட்டு வருவதன் காரணமென்ன? என்று ஞானம் அவர்களின் கேள்விக்கு எஸ்.பொ. பதில் கூறுகிறார். திராவிட இயக்கத்தின் ஆளுமையால் தமிழ்த்தேசிய உணர்வை நகரத்தில் வாழும் தமிழர் பலர் இழந்த நிலையிலும் ஆங்கில ஆதிக்கத்திற்கு இரையாகாமல் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழர்கள் இன்னும் தமிழுணர்வோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள். அன்றியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆற்றல் மிக்கத் தமிழைத் தமிழகம் எத்தகைய சூழலிலும் காப்பாற்றும் என்பதில் ஐயமில்லை. தமிழ்ப் படைப்பாளிகளில் ஒரு பகுதியினரேனும் இன்னும் தமிழ் மரபைப் பேணும் முறையில்தான் படைக்கின்றனர். புத்தாயிரத்தில் தமிழிலக்கியத் தலைமையை ஏற்கும் தகுதி புலம் பெயர்ந்த தமிழருக்கே உண்டு என்று தான் நம்பினாலும் உலகளவிலான தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தான் மையமாக இருக்க முடியும். இருநூறுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை அழைத்து நூல் வெளியிட்டு விழாக்களைச் சிறப்பாக நடத்தியதன் விளைவாக முன்பு தன்னைவிட்டு விலகியிருந்த தமிழ் எழுத்தாளர் பலர் நெருங்கி வந்து தன்னை நேசிக்கின்றனர். இத்தகைய சூழலில் தமிழ் வாழும் என்ற நம்பிக்கையோடு சென்னையில் தன் பணியைப் பத்தாண்டுகளுக்கு மேலாக மகிழ்ச்சியோடு செய்து வருவதாக எஸ்.பொ. கூறுவதோடு தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். ’’என் இருத்தல் என்பது எஸ்.பொ.வின் இருத்தல் அல்ல. எஸ்.பொ. என்கிற ஓர் ஈழத்தமிழன் தமிழ் நேசிப்பு உள்ளவனாக வாழ்கிறான். இந்த இருத்தலை உணர்த்துதல் (எழுத்தின் மூலம்) எனக்குப் பெரிதாகப்படுகிறது. நீ யார்? என்ற கேள்விக்கு நான் அகதியல்லன் ஒரு தமிழன் என்று அடையாளப்படுத்துதல் பெருமையாக இருக்கிறது. நான் தமிழனாய் வாழ்கிறேன் என்பதை உறுதிப்படுத்த என்னுடைய இலக்கிய ஊழியம் உதவுகிறது." எனவே, மொழி சார்ந்ததாக மட்டும் அல்லாமல், அந்த மொழி பேசிய மண்ணிலே வாழ்ந்த மைந்தர்களுடைய உணர்வுகளையும் அவர்கள் காலம் காலமாகக் கட்டிக்காத்த சில விழுமியங்கள் சேர்ந்த கலைகளையும் இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான ஊடகமாகவே நான் கலை இலக்கியப் படைப்புகளைத் தரிசிக்கின்றேன். தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயது என்று நிர்ணயிக்கப்படும் பொழுது, அந்த வயது நிர்ணயம் எது சார்ந்து நிகழ்கிறது? தமிழ் மூலம் செய்யப்பட்ட கலை - இலக்கியப் படைப்புகளுக்குக் கொடுக்கப்படும் வரலாற்று ரீதியான வயது தான் அது. அந்த வயதின் நீட்சியிலே எனக்கு பங்குண்டு என்கிற உணர்வு எத்தகைய ஆனந்தம். (பக். 175). ‘’எனவே என்னுடைய இனத்தினுடைய பெருமைகளை நான் பறைசாற்றுதல் வேண்டுமென்றால், என்னுடைய கலை - இலக்கிய உணர்வுகள் தக்க வைக்கப்படுதல் வேண்டும். தக்க வைத்தல் என்பதற்கு தேங்கவிடாது அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் ஊழியத்தையும் குறிக்கும்.’’ (பக். 176) ’‘…….. என்னை விளிம்பு நிலைப் படைப்பாளி என்று மற்றவர்கள் அடையாளப்படுத்தினாலும் அற்புத குபேர வாழ்வினை என் இலக்கிய ஊழியத்தினால் அனுபவிக்கிறேன்’’. (பக்கம் 176) தமிழின் மீதும் தமிழிலக்கிய வரலாற்றின் மீதும் தமிழினத்தின் மீதும் இத்தனை நேசம் கொண்ட ஒரு மாபெரும் படைப்பாளியை எஸ்.பொ.வுக்குள் அன்றி நம்மோடு வாழும் எந்த தமிழ் படைப்பாளிக்குள் நம்மால் தரிசிக்க முடியும்? பாரதியோடும் புதுமைப்பித்தனோடும் அன்றி எஸ்.பொ . அவர்களை வேறு யாரோடு நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். எஸ். பொ. அவர்களோடு கரைவதன் மூலம் தமிழ் வாழ்வுக்குள், வரலாற்றுக்குள் நாமும் கரைகிறோம். இப்படிக் கரைவதன் மூலம் நமக்குள்ளும் ஏற்படுவது பேரானந்தம், பரவசம். வரலாற்றுக்குள்ளிருந்து தன் ஆளுமையைப் பெற்றவர் எஸ்.பொ. வரலாற்றைத் தனக்குள் வாழ்பவர் எஸ். பொ. வரலாற்றை நமக்குள்ளும் உணர்வது ஒரு தரிசனம். எஸ். பொ. திரும்பத் திரும்பச் சொல்வது போல் ஒரு தவம். தமிழ் இலக்கியத்தின் வழியே வரலாற்றுக்குள் நம்மாலும் வாழ முடியும். எஸ்.பொ.வின் வழியே நாம் இத்தகைய உணர்வைப் பெறுகிறோம். பின்னிணைப்பு தமிழகத்தில் அந்தணர் வரலாறு கருத்தரங்கு - தொகுப்பு ** முன்னுரை** சங்கர மடத்தின் ஆசியோடு தமிழகத்தில் பிராமண சங்கத்தார் அண்மையில் வெளியிட்டுள்ள ‘தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்னும் ஆயிரம் பக்க அளவில் இரண்டு நூல் அடங்கிய தொகுதியை வெளியிட்டு உள்ளார்கள். 2001இல் மைய அரசில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அது நாள் வரையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்தைக் கலைத்துவிட்டு, இந்துத்துவ நோக்கில் இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவதற்காக ஒரு புதிய இந்திய வரலாற்றுக் கழகத்தை உருவாக்கினார்கள். மார்க்சியரும் மற்றவரும் அப்பொழுது எழுப்பிய எதிர்ப்புக் குரலை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் பார்வையில் புதிய பாட நூல்களும் வெளியிடப்பட்டன. தமிழ் உணர்வும் திராவிட இயக்கமும் செழித்து இருக்கிற தமிழ்நாட்டில் தான் பிராமணர்களுக்கு எதிரான இயக்கங்கள் ஆற்றலோடு இயங்குகின்றன. சங்கர மடம் தான் பிராமணர்களுக்கான தலைமைப் பீடம். இவர்களுக்குச் சாதகமான ஆட்சியும் இங்கு தான் நடைபெறுகிறது. இங்கு வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும். இந்த நோக்கத்தோடு தான் சங்கர மடத்தின் ஒத்துழைப்போடு பிராமண சங்கத்தார் தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்ற நூலை வெளியிட்டனர். திராவிட இயக்கங்களும் தமிழ் இயக்கங்களும் இந்திய வரலாற்றைத் திரித்துச் சொல்லுகிற இந்த நூலைக் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். இவர்கள் கண்டுகொள்ளாத நிலையில், சென்னையில் இருந்து வெளிவரும் ‘திராவிட சமயம்’ என்ற இதழின் ஆசிரியர் அறிஞர் மு. தெய்வநாயகம் அவர்கள், சங்கர மடமும் பிராமண சங்கத்தாரும் செய்துள்ள வரலாற்றுத் திரிபுகளைக் கடுமையாக எதிர்த்ததோடு அவர்களை ஒரு நீண்ட விவாதத்திற்கு அழைக்கும் முறையில் நூலின் பிரதம ஆசிரியர் கே.சி.இலட்சுமி நாராயணனுக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு இலட்சுமி நாராயணன் எழுதிய பதிலையும் திராவிட சமயம் சூன் இதழில் வெளியிட்டார். தமிழ் உணர்வுமிக்க கோவை நண்பர்கள் மத்தியில் இந்த விவாதத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அறிஞர் தெய்வநாயகம் அவர்களைக் கோவை வருமாறு அழைத்தேன். அன்போடு அவரும் இசைவு தெரிவித்தார். 23.7.2005 அன்று தமிழ்க் களம் சார்பில் கோவையில் சிபி ஐஏஎஸ் அகாதமியில் நடைபெற்ற கருத்தரங்கில் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். முனைவர் ம.நடராசன் தலைமையில் நண்பர்கள் திரு. இரணியன், முனைவர் வே. சுகுமாரன் ஆகியவர்கள் ஆய்வுரை வழங்கினர். அறிஞர் மு. தெய்வ நாயகம் விரிவுரை நிகழ்த்தினார். இவை இங்கு தொகுத்து தரப்படுகின்றன. ** ஞானி - தொடக்க உரை** ‘தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்ற இந்த நூல் இதுவரை நாம் நம்பி வந்த உண்மைகள் பலவற்றை அடியோடு மாற்றுகிறது. சிந்துசமவெளி நாகரீகம், திராவிட நாகரீகம் இல்லை என்கிறது. ஆரியர் - திராவிடர் என்று பேசுவதற்கு அர்த்தமில்லை என்று கூறுகிறது. ஆரியர்கள் வெளியில் இருந்து வரவில்லை. இவர்கள் இந்தியாவின் ஆதிப் பழங்குடிகள். கி.மு. 8,000 வாக்கில் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சரசுவதி நதிக் கரையில் வாழ்ந்த பிராமணர்கள் வேத நாகரீகத்தைத் தோற்றுவித்தனர். வேத நாகரீகம் தான் இந்தியாவின் ஒரே நாகரீகம். இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. திராவிட மொழிக் குடும்பம் என ஒன்று இல்லை. சமஸ்கிருதம் தான் இந்தியாவின் தொன்மையான மொழி. இந்தியாவிலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் ஊற்று என இருப்பது சமஸ்கிருதம் ஒன்று தான். தமிழகத்தில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக பிராமணர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தொல்காப்பியரும் ஒரு பிராமணர்தான். கணியன் பூங்குன்றனும் ஒரு பிராமணர். திருமூலரும் ஒரு பிராமணர்தான். இப்படி இவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. ம.பொ.சிவஞானம், திரு.வி.க., ஜீவா முதலியவர்கள் இவர்களுக்குச் சான்று தருகிறார்கள். அம்பேத்கர் இவர்களுக்கு ஆதாரமாகிறார். விவேகானந்தரை இவர்கள் தம் அணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். நம்மை இவர்கள் முட்டாள் ஆக்குகிறார்கள். இந்தியாவில் இவர்களைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் தமிழ் மக்களாகிய நாம் மட்டுமே. நம்மை மழுங்கடித்துவிட்டால் இந்தியாவில் இந்துத்துவம் என்றைக்கும் நிலைபெறும். இவர்களின் பொய்களை, திட்டத்தை நாம் முறியடிக்கத்தான் வேண்டும். தமிழ் உணர்வாளர்களும் திராவிட இயக்கத்தவரும் ஓய்ந்திருக்க முடியாது. சைவ சமயத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்துத்துவவாதிகள் இந்தியாவுக்குச் சொந்தம் கொண்டாட, இறுதியாக களம் இறங்கிவிட இருக்கிறார்கள். இந்தியா திராவிடர்களின் தேசம். தமிழர்களின் தேசம். இந்த வரலாற்றை நாம் மெய்ப்பித்தாக வேண்டும். அறிஞர் தெய்வநாயகம் இந்தப் போரைத் தொடங்கி இருக்கிறார். நாம் இவரோடு கைகோத்துக் கொள்கிறோம். ** திரு. மா. நடராசன்** இதுநாள்வரை அடங்கி இருந்தவர்கள் இப்பொழுது கிளம்பி இருக்கிறார்கள். திருவள்ளுவரிடம் இருந்து அந்தணர் என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறார்கள். சாதுரியமாக, தந்திரமாக இவர்கள் செயல்படுகிறார்கள். நஞ்சை மருந்து போல இவர்கள் நமக்குத் தருகிறார்கள். நாம் ஏமாந்து போகமாட்டோம். இந்திய வரலாற்றை இதுவரை எழுதியவர்கள் ஐரோப்பிய கண்ணோட்டத்தோடு கிறித்தவ மதம் பரப்பும் நோக்கத்தோடு எழுதி இருக்கிறார்களாம். கால்டுவெல் இங்கு வந்து தமிழைப் படித்து ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இவரைக் கொச்சைப் படுத்துகிறார்கள். இவர் மோசடிப் பேர்வழியாம். திராவிட மொழிகளை எல்லாம் படித்து, தமிழின் தனித்தன்மையை நிலைநிறுத்தும் முறையில் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை எழுதியவரை மோசடிப் பேர்வழி என்று இலட்சுமி நாராயணன் கூறுகிறார். ‘தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்ற நூலுக்கு இவர் பிரதம ஆசிரியர். 2001 இல் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனே திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதுவதை இவர்கள் தொடங்கி விட்டார்கள். ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வரவில்லை. இவர்கள் இந்தியாவின் ஆதிக் குடிகள். இப்படி இவர்கள் எழுதுகிறார்கள். முன்பு எல்லாம் இவர்கள் வேறு வகையாகச் சொன்னார்கள். ‘நாங்கள் வெள்ளை நிறத்தவர். எங்கள் மூக்கு கூர்மையானது. நாங்கள் அறிவுக் கூர்மை உடையவர்கள். நீங்கள் கருப்பு நிறத்தவர். உங்கள் மூக்கு சப்பையாக இருக்கிறது. நாங்கள் இங்கு வந்த பிறகுதான் நாகரீகத்தைத் தோற்றுவித்தோம்’ இப்படி அவர்கள் முன்பு சொன்னார்கள். இலட்சுமி நாராயணனோ இந்த நூலில் சொல்கிறார். ‘மேற்கத்தியர் இங்கு வந்து அஜந்தா, எல்லோரா ஆகிய குகைகளை எல்லாம் கண்டுபிடித்து நமக்குச் சொன்னார்கள். நம்முடைய வரலாறு பண்பாடு ஆகியவற்றை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இப்படிச் செய்த மேற்கத்தியர் நம் வரலாற்றை திரித்து எழுதி இருக்கிறார்கள்,’ என்றும் கூறுகிறார். நாங்கள் தான் இங்கு கல்வியைக் கற்றுக் கொடுத்தோம். ஆட்சி செய்வது என்பதைக் கற்றுக் கொடுத்தோம். இந்த வரலாற்றை ஐரோப்பியர் மறைத்து விட்டார்கள். இப்படிச் சொல்லும் இலட்சுமி நாராயணன், இந்திய வரலாற்றை வேதத்தில் இருந்து தொடங்கிப் புதியதாக எழுத வேண்டும் என்று சொல்கிறார். மாக்ஸ்முல்லர் முதலியவர்கள் மேற்கத்திய பாவனையோடு எழுதியதை மாற்றி எழுத வேண்டும் என்கிறார். தவறான கருதுகோளின் அடிப்படையில் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்கிறார். 2001 முதலே தொடங்கி விட்டார்கள். நூலின் உள்ளே சங்கராச்சாரியாரின் படத்தைப் போட்டிருக்கிறார்கள். இன்றுள்ள பெரியவர், சிறியவர் என இரண்டு சங்கராச்சாரியார்கள். இவர்கள் ஆசியோடு தான் நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலில் முரசொலி மாறனையும் அண்ணாதுரையையும் நெடுஞ்செழியனையும் சாடுகிறார்கள். இவர்களைக் கொச்சைப்படுத்தி எழுதுகிறார்கள். நூலின் உள்ளே கட்டுரைகள் எழுதியவர்கள் எல்லோரும் பிராமணர்கள். கோபால் ஐயர் முதற்கொண்டு எத்தனையோ ஐயர்கள். நாமும் வெளிப்படையாகத்தான் பேசிவிட வேண்டும். வ. உ. சிதம்பரனார், திரு.வி.க., ம. பொ. சிவஞானம், ந. மகாலிங்கம் - இப்படி இவர்களை எல்லாம் மேற்கோள் காட்டுகிறார்கள். இவர்கள் எந்தப் பின்னணியில் ஏன் சொன்னார்கள் என்று இல்லாமல் இவர்களை மேற்கோள் காட்டுகிறார்கள். மேலும் ஒன்று வேதத்தின் சொற்களை எல்லாம் இதுவரை தவறாக பொருள்படுத்தி வரலாறு எழுதி இருக்கிறார்களாம். இதையும் மாற்றி ஆக வேண்டும் என்கிறார் எம்.ஜி. எஸ். நாராயணன். ஆரியர் என்பது இனச் சொல் இல்லை என்கிறார்கள். அது பண்பாட்டைக் குறிக்கும் சொல் என்கிறார்கள். ஆரியர்கள் பண்பாடு மிகுந்தவர்களாம். எங்கள் பண்பாடு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இந்தியாவிற்குச் சொந்தக்காரர்கள் என்று ஏற்க மாட்டோம். இந்த நாட்டின் மண்ணோடு தன்னை எவன் கரைத்துக் கொள்கிறானோ, உழைத்து இந்த நாட்டை எவன் உருவாக்குகிறானோ அவன்தான் இந்த நாட்டின் சொந்தக்காரன். பிரம்மதானம், உத்தமதானபுரம் இவற்றையெல்லாம் உருவாக்கியவன் யார்? இதை அனுபவித்தவன் யார்? இந்த வரலாறு எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டியதில்லை. நாங்களும் ஆராய்ச்சி செய்திருக்கிறோம். அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறோம். கல்வெட்டுகளை ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்கு ஆபத்தாக இருக்கிறது. ஆகவே நீ மாற்றி எழுத வேண்டும் என்கிறாய். உன்னை நாங்கள் நம்ப முடியாது. நீ வெளியில் இருந்து வந்தவன் ஆனாலும் உன்னை நாங்கள் துரத்த மாட்டோம். நீயும் இங்கே இருக்கலாம். எங்கள் உணவை நீயும் பகிர்ந்து கொள்ளலாம். காணிக்கை என்று சொல்லி இனியும் எங்களை ஏமாற்ற முடியாது. கால்டுவெல் முதலியவர்களை நீ இழிவுபடுத்துவதை எங்களால் எற்க முடியாது. இதை ஒரு பிரகடனம் போலச் சொல்கிறோம். மகாலிங்கம் இன்றைக்கு ஒன்றைச் சொல்வார். நாளைக்கு அதை மாற்றிச் சொல்வார். இவரை எல்லாம் நீங்கள் ஆதாரம் காட்டுவதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த ஆராய்ச்சியின் நோக்கங்கள் ஐந்து என்று சொல்லி இருக்கிறார்கள். உலகில் தொன்மையானது வேதங்கள். அவற்றின் ஆதாரத்தில் இருந்து தான் இந்திய வரலாற்றை எழுத வேண்டும். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்தார்கள் என்பது தவறு. திராவிடரைப் போரிட்டுத் தெற்கே துரத்தினார்கள் என்பது பொய். பிராமணர்கள் தான் இந்தியாவின் ஆதிக் குடிகள். வேத நாகரீகம் தான் இந்தியாவின் ஒரே நாகரீகம். இந்த நோக்கங்களை முன் வைக்கிற இவர்களின் ஆய்வு அகநிலைச் சார்பு உடையதுதான். இவர்கள் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஏதோ புறநிலைச் சார்பாக வரலாறு எழுதுவதாக சொல்லிக் கொண்டு எழுதுகிறார்கள். நம் நிலை மிகத் தெளிவானது. உறுதியானது. உழைப்பவனுக்குத்தான் இந்த மண் சொந்தம். நாடு சொந்தம். வரலாற்றை இவன்தான் படைக்கிறான். பூசை செய்பவனுக்கு இந்த நாடு சொந்தமாக முடியாது. அவனை நாம் இங்கு விட்டு வைத்திருக்கிறோம். இந்த நூல் அடிப்படையிலேயே ஒரு மோசடி. இதை அம்பலப்படுத்த வேண்டும். இந்திய வரலாற்றை நம் பார்வையில் எழுத வேண்டும். இது கல்வியாளர்களுக்கு முதன்மையான கடமை. வரலாற்றுப் பேராசிரியர்களைப் பொய்யர்கள் என்று இவர்கள் பழி பேசுகிறார்கள். இந்தப் பழியை நாம் துடைக்க வேண்டும். நாம் முன்பு போல் ஏமாந்து இருக்க முடியாது. தலையில் பிறந்தவன் பார்ப்பனன் என்று முன்பு போல் இன்றும் கயிறு திரிப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ‘தொல்காப்பியப் பூங்கா’ எழுதியவர்கள் இப்பொழுது அமைதியாக இருக்கக்கூடாது. அண்ணாவை, முரசொலி மாறனை இவர்கள் ஏளனம் செய்து இருக்கிறார்கள். எங்களை விட நீங்கள்தான் பிராமணரின் வரலாற்று மோசடியைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தணர் என்று இவர்களை நம்மால் சொல்ல முடியாது. திருவள்ளுவரிடம் இருந்து அவர்கள் களவாடுவதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. ** அறிஞர் மு. தெய்வநாயகம் - அறிமுகவுரை** தமிழ்நாட்டிலே வாழ்ந்து கொண்டு, தமிழ் மொழியைப் பேசிக் கொண்டு தமிழை நீச மொழி என்றும், தமிழர்களை நீசர்கள் என்றும் ஒரு சாரார் இங்கு சொல்வதைப் போல் உலகில் எந்த தேசத்திலும் இப்படி சொல்வதை ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில்தான் இவர்கள் இப்படிச் சொல்ல முடியும். நாமும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். பெரியார் வாழ்ந்த நாட்டில் நாம் இன்று தன்மானம் அற்றவர்களாய், பதவிக்காக இன்னொருவர் காலடியில் வீழ்பவர்களாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வரலாற்றில் இன்று போல் நாம் என்றும் இப்படி இருந்ததே இல்லை. ‘தமிழக அந்தணர் வரலாறு’ என்ற நூலை 2003இல் வெளியிட்டிருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியார் முன்னிலையில் இந்த நூலை உருவாக்குவதற்காக ‘அந்தணர் ஆராய்ச்சி மையத்தை’ தொடங்கினார்கள். சங்கராச்சாரியாரின் ஆசியோடு தான் சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்டது. சங்கர மடமும் தமிழ்நாடு பிராமணர் சங்கமும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். இந்த நூலுக்கு முன்னோடியாக நாலாயிரம் பக்க அளவுள்ள ‘அருந் தொண்டாற்றிய அந்தணர் வரலாறு’ எனும் நூலை எழுதி வெளியிட்டார்கள். தமிழ் அறிஞர்களோ திராவிட இயக்கத்தவரோ கண்டு கொண்டார்களா என்றால் அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரு. இரா. செழியன், சங்கொலி என்ற இதழில் ‘வாழ்க அந்தணர்’ என்ற தலைப்பில் பாராட்டி இந்த நூல் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். வேறு யாரும் எழுதவில்லை . நம் தன்மானம் பறிபோவதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை . துடிப்போடு பேசுகிறோம். தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற அடிப்படையிலாவது நமக்குள் ஒற்றுமை இருக்கிறதா என்றால் அப்படி எதுவும் இல்லை . ‘துக்ளக்’ சோ சொல்லி, கே. சி. இலட்சுமி நாராயணன் என்பவரை பிராமண சங்கத்தார் கண்டுபிடித்து அவரை பிரதம ஆசிரியராக நியமனம் செய்தார்கள். கருப்பையா என்ற பெயரில் காமராசருக்கு நெருக்கமாக இருந்து தமிழ் மக்களை ஏமாற்றியவர் தான் இவர். கருப்பையா தான் இவர் என்று தெரிந்து கொண்டவர்கள் வியப்படைகிறார்கள், அதிர்ச்சி அடைகிறார்கள். நூலை வெளியிட்ட பிறகு அவர்களே சென்று நம் தலைவர்களைப் பார்த்து நூல்களைக் கொடுத்து வந்தார்கள். நம்மவர்களுக்குப் பணம், பதவிதான் முக்கியம். தமிழ் மக்களைப் பற்றி கவலை இல்லை. இந்த துணிச்சலில்தான் இரண்டாவது நூலை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்த நிலையில் தான் இரண்டாவது நூல் வெளிவந்திருக்கிறது. இந்த நூலை எழுதியபோது மத்தியிலும் அவர்கள் ஆட்சி. மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி. எதையும் செய்ய முடியும் என்பதனால் தான் அவர்கள் துணிந்து நூலை வெளியிட்டார்கள். ‘ஆட்சியில் அமர்ந்து இருப்போர் படைத்ததே வரலாறு ஆகிறது.’ அந்த வரலாற்றுக்கும் உண்மைக்கும் எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ‘அதிகாரம் பேசுகிறது. அதைக் கேட்டே தீர வேண்டும்’ இப்படி இவர்கள் தெளிவாக எழுதியிருக்கிறார். ‘ஒரு அப்பட்டமான பொய்யை நூறு பேர் முன்னிலையில், நூறு முறை சொன்னால் அது உண்மை ஆகி விடும்’ இவர்கள் வெளிப்படையாக எழுதுகிறார்கள். ‘அதிகாரம் எங்களிடத்தில் இருக்கிறது. ஊடகங்கள் எங்கள் வசத்தில் இருக்கின்றன. நாங்கள் சொல்வது பொய்தான். நீங்கள் இதை நம்பித்தான் தீர வேண்டும்’ இப்படியும் எழுதுகிறார்கள். ‘பிராமணர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது சுத்தப் பொய்’. அந்தணர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சரசுவதி நதிக்கரையில் உருவாகியது இந்த சரசுவதி நாகரிகம். ‘ஆரியர் - திராவிடர் வேற்றுமை என்பது வெறும் கற்பனை’. இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த பெரும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ’ தமிழ்நாட்டில் இவ்வளவு வெளிப்படையாக சொன்ன பிறகும் எதிர்த்துக் கேட்பதற்கு நாதியில்லை . இதுதான் நம் உண்மை நிலவரம். இந்த இரண்டு புத்தகங்களையும் நாங்களே வாங்கிக் கொண்டு போய் தலைவர்களிடம் கொடுத்தோம். எந்த பிரதிபலிப்பும் அவர்களிடம் இல்லை . காரணம் என்னவா இருக்க முடியும். இவர்களும் அவர்களும் இணைந்தே தான் இருக்கிறார்கள். ஒரு பெரிய சதி - எல்லோரும் இணைந்து செயல்படுகிறார்கள். ‘இது ஒரு அழகான ஆராய்ச்சிப் படைப்பு’ என்று அச்சிட்டிருக்கிறார்கள். ‘ஆரியர் படையெடுத்து வந்தவர்கள் என்பது சுத்தப் பொய் என்று இந்நூல் நிறுவுகிறது’ அட்டையில் அச்சிட்டிருக்கிறார்கள். ஒரு கற்பனைக் காலத்தை இவர்கள் காண்பிக்கிறார்கள். வரலாறு நமக்குத் தெளிவாக இருக்கிறது. இவர்கள் எதை நிரூபித்திருக்கிறார்கள். பிராமணர்கள் இந்தியாவின் ஆதிக் குடியினர்கள் என்று இந்த நூல் நிரூபிக்கிறது என்று எழுதுகிறார்கள். விவாதிக்கலாம் வா என்று கேட்டால் வர மறுக்கிறார்கள். ஓடி ஒளிகிறார்கள். ‘திராவிட இனம் குரங்கு இனம்’. தாழ்த்தப்பட்டவர்கள், கயவர்கள் என்று எழுதுகிறார்கள். இதைக் கேட்டுக்கொண்டு நாம் என்ன செய்கிறோம். நாம் உணர்வாளர்கள் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? நம் பதில் என்னவாக இருக்க வேண்டும்? இதுதான் நம் முன் எழும் கேள்வி. இந்த நூல் வெளிவந்தவுடன் எங்களை அமைப்பை கூட்டி விவாதித்தோம். நூலை தீயிட்டு எரிக்கலாம் என்கிறார்கள். எரிப்பதற்கு முன்னர் கே. சி. இலட்சுமி நாராயணனுக்குக் கடிதம் எழுதினோம். நிறுவியிருப்பதாக எழுதினீர்கள். அறிஞர்கள் முன்னிலையில் விவாதிக்கலாம் என அழைத்தோம். வரவில்லை. நம் இனத்தை, நம் தலைவர்களை, நம் இயக்கங்களை, இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்கள். கலைஞர் பெயரை, வீரமணியின் பெயரைப் போட்டு இழிவுபடுத்தி இருக்கிறார்கள். கலைஞருக்குப் புத்தகங் களைக் கொடுத்தனுப்பினேன். பதில் இல்லை. அங்கே என்னதான் நடக்கிறது? நாம் எல்லோரும் வாக்கு வங்கிகள் தானா? நாம் விட்டுவிட வேண்டுமா? என்ன செய்யலாம்? என்பதற்குத்தான் இந்தச் சந்திப்பு. ‘தமிழர்’ என்னும் தமிழ்ப் பெயர் சமஸ்கிருதத்தில் ‘திராவிடர்’ என்று குறிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டு வந்தது என்று அம்பேத்கார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். 1. இன்று தமிழ்மொழியைப் பேசும் தமிழர்கள் என்னும் திராவிடர்கள் தமிழ்நாட்டில் வாழுகின்றார்கள். 2. தமிழிலிருந்து பிரிந்த , மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய திராவிட மொழிகளைப் பேசும் திராவிடர்கள் தென் இந்தியாவில் வாழுகின்றார்கள். 3. திராவிட மொழிகளை மறந்த திராவிடர்கள் வட இந்தியாவில் வாழுகின்றார்கள். 4. இன்று இந்திய மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் திராவிட இனமக்கள். இவர்கள் சூத்திரர், பஞ்சமர் என்று ஆரியப் பிராமணர்களால் முத்திரைக் குத்தப்பட்டு, ஆரியப் பிராமணர்களிடம் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கி. மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் மீது படையெடுத்து வந்த, பாரசீகர், கிரேக்கர், சகர், குஷானர், ஹணர் ஆகிய அந்நியர்கள் ‘ஆரியர்’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ராஜஸ்தானிலுள்ள மவுண்ட் அபுவில் ஆரியக் கூட்டணியை அழைத்தார்கள். ஆரியக் கூட்டணி வட இந்தியாவில் பெரும் பகுதியைப் பிடித்து ‘ஆரியவர்த்தம்’ என்ற பெயரால் அதை கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது. அப்பொழுது பிராமணர், சத்திரியர், வைசியர் என்று ஆரியர்கள் தங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு திராவிடர்களை நசுக்கி ஆட்சி செய்தார்கள். திராவிடர்களில், ஆரியருக்கு அடிபணிந்த பொதுமக்கள் ‘அடிமைகள்’ என்னும் பொருளில் ‘சூத்திரர்’ என்று முத்திரை கத்தப்பட்டு, ஆரிய ஆட்சியில் குடியுரிமை பெற்றார்கள். ஆகவே ஆரிய வர்த்தத்தில் குடியுரிமையுடைய பிராமணர், சத்திரியர், வைசரியர், சூத்திரர் ஆகிய நான்கு பிரிவினரும் சதுர்வர்ணத்தார் என்று பெயர் பெற்றார்கள். ஆரியர்களை எதிர்த்த திராவிடத் தலைவர்கள், திராவிட ஞானிகள், உடைமைகள் பறிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே துரத்தப்பட்டார்கள். ஆரிய வர்த்தத்தில் இவர்களுக்குக் குடியுரிமை கிடையாது. யார் வேண்டுமானாலும் இவர்களைக் கொடுமைப்படுத்தலாம். தட்டிக் கேட்க ஆள் கிடையாது. இவர்கள் ‘ஐந்தாவது பிரிவினர்’ என்னும் பொருளில் ‘பஞ்சமர்’ என்று அழைக்கப்பட்டனர். 12ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களும் ஐரோப்பியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்களாய் இருந்தபடியால் அந்நியர்களாகிய ஆரியர்கள், இவர்களோடு சேர்ந்து கொண்டு திராவிடர்களை நசுக்கினார்கள். ஆரியர்கள் அந்நியர் ஆட்சியில் பங்கு கொண்டனர். கடைசியாக இந்தியாவை ஆட்சி செய்த அந்நியர்களாகிய ஐரோப்பியர்களை1947இல் இந்தியாவை விட்டு வெளியேற்றி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்நியர்களாகிய ஐரோப்பியர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களுக்கு ‘இந்திய ஐரோப்பியர்கள்’ என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டு ஐரோப்பியர்களாகிய ஆங்கிலேயர் ஆட்சியில் பங்கு கொண்டிருந்த ஆரியப் பிராமணர்களுக்கு ஆங்கிலேயர் வெளியேற்றப்பட்ட பின்னர் உள்ளத்தில் அச்சம் வந்தது. என்ன அச்சம்? மக்களாட்சி மலர்ந்துள்ள இந்தியாவில் திராவிட இனமக்கள் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களை உணர்ந்து ஒன்று சேர்ந்துவிட்டால், பிராமணர்களாகிய தங்களையும் இந்தியாவை விட்டு விரட்டி விடுவார்களோ? என்ற அச்சம் பிராமணர்கள் உள்ளத்தில் உருவாயிற்று. ஏனென்றால் பிராமணர் இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 4 விழுக்காடு மட்டுமே இருக்கின்றார்கள் மிக மிகச் சிறுபான்மையினப் பிராமணர்கள். ஆரியப் பிராமணர்கள் இந்தியாவின் ஆதிக் குடிமக்கள் என்று இந்திய மக்களாகிய திராவிடர்களைக் கபடமாக ஏமாற்றி நம்ப வைத்து விட்டால், நாங்கள் இந்தியாவில் நிம்மதியாக இந்திய ஆட்சியின் தலைமை இடத்தில் இருக்கலாம் என்று சதித் திட்டம் போட்டார்கள். அந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்ற பிராமணர்களால் உருவாக்கப்பட்ட பா.ஜ.க. இந்திய ஆட்சியைப் பிடித்து ஆளும் நேரமே தகுந்த நேரம் என்று முடிவு செய்தார்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய வரலாற்றை மாற்றி எழுதி அதைக் கல்வி நிலையங்களில் இந்திய மாணவர் உள்ளங்களில் திணித்தார்கள். இந்திய மக்களில் 90 விழுக்காடு இருக்கும் திராவிட இன மக்களின் தலைமை இடம் தமிழ்நாடு. இங்குதான் ‘திராவிடர்’ என்ற பெயருக்கு அடிப்படை காரணமான தமிழ் மொழி பேசப்பட்டு வருகிறது. இன்று இந்தியாவில் பேச்சு வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தியத் திராவிடர்களின் வரலாறு இருக்கிறது. தமிழ் இனம் என்னும் திராவிட இனத்தின் சிறப்பு தமிழ் மொழியில் மட்டுமே இருக்கிறது. இதனால் ஆரியப் பிராமணர்களுக்கு ‘தமிழ் மொழி’ என்றாலே அது ஆரியப் பகைவரின் மொழி என்ற உணர்வு அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களை நடுங்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆரியப் பிராமணர்களை மிகவும் அதிகமாக நடுங்க வைக்கும் பெயர் ‘திராவிடர் என்பது ஆகும். ’திராவிடர்’ என்ற பெயரைக் கேட்டவுடன், ஆரிய - திராவிடப் போர் நினைவு அவர்கள் உள்ளத்தில் வந்து, அவர்களை மிக அதிகமாக நடுங்க வைத்து விடுகிறது. அதனால் இந்திய மொழிகளில் ‘திராவிடர்’ என்னும் பெயர் எங்குமே இல்லாதபடி ஆரியப் பிராமணர்கள் திட்டமிட்டு நீக்கி வந்துள்ளதை இந்திய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. ‘தமிழர்’ என்று வேண்டுமானால் கூறிக்கொள். ‘திராவிடர்’ என்று கூறிவிடாதே என்பதே ஆரியப் பிராமணர்கள் தங்களுக்கு நெருக்கமான தமிழர்களிடம் கொடுக்கும் அறிவுரை ஆகும். ‘தமிழர்கள் யார்?’ என்றால் ‘தமிழ்மொழி பேசுகின்றவர்கள் எல்லோரும் தமிழர்களே’ என்ற விளக்கத்தைக் கொடுத்து தமிழ்நாட்டுப் பிராமணர்களும் தமிழ் மொழியைப் பேசி வருகின்ற காரணத்தால், பிராமணர்களும் தமிழர்களே’ என்று கூற வைத்து விடலாம் என்பது பிராமணர்களின் தந்திரம். ‘பிராமணர்களும் தமிழர்களே’ என்று தமிழ் மக்களை நம்ப வைத்துவிட்டால், பிராமணர்களாகிய ஆரியர்களை எதிர்க்கும் திராவிட இன உணர்வு மறைந்து, ஆரியப் பிராமணர்களிடம் திராவிட இன மக்கள் என்றென்றும் அடிமைகளாக வாழ்வார்கள் என்பது ஆரியப் பிராமணர்களின் சதித்திட்டம். பிராமணர்கள் தங்களை ஆரிய இனத்தினர் என்று உரிமை பாராட்டினால், கேட்பவர்களுக்கு ‘ஆரியர்’ என்பதற்கு எதிரான ‘திராவிடர்’ என்னும் இன உணர்வு வந்து விடும் என்று எண்ணினர். அதனால் ஆரியர், திராவிடர் என்று இரண்டு இனங்கள் இல்லை என்று நம்ப வைத்துவிட்டால், பிராமணர்களுடைய தலைமைப் பதவிக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் தமிழ்நாட்டில் நீடிக்கலாம். பிராமணர்களே தமிழகத்தின் இந்தியாவின் ஆதிக்குடி மக்கள் என்று நம்ப வைத்துவிடலாம் என்னும் தமிழ்நாட்டுப் பிராமணர்களின் திட்டத்தை நிறைவேற்ற, மத்தியில் பா.ஜ.க.வும் மாநிலத்தில் செல்வி. ஜெயலலிதாவும் ஆளும் நேரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். பிராமணர்களின் ஜாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குத் தமிழ்நாட்டிலுள்ள தலைமை இடம் காஞ்சி சங்கர மடம், தமிழ்நாட்டுப் பிராமண ஜாதியினரின் ஜாதிச் சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் இந்த இரண்டு பிராமண அமைப்புகளும் சேர்ந்து, தங்கள் திட்டத்தை நிறைவேற்ற திரு. கே.சி. இலட்சுமி நாராயணன் என்பவரை பிரதம ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து, 1. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் 2. தமிழக அந்தணர் வரலாறு என்னும் இரண்டு நூல்களை , சதி முறையில் திராவிட இனத்திற்கு எதிராக எழுதியுள்ளனர். தமிழ் அந்தணர்கள் பிராமணர்களே என இந்த நூல்கள் சாதிக்க முயலுகின்றன. பிராமணர்களின் ஜாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை எதிர்க்கும் கொள்கையுடையவர்கள் இந்தியாவில் மூன்று பிரிவினர். அவர்கள் 1. இஸ்லாமியர்கள் 2. கிறிஸ்தவர்கள் 3. கம்யூனிஸ்டுகள் இந்த மூன்று பிரிவினரும் ‘தமிழக அந்தணர் வரலாறு’ என்னும் நூல் முழுவதும் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று பிரிவுகளில் அதிகம் கண்டிக்கப்பட்டிருப்பதுடன் இழிவுபடுத்தப்பட்டுமிருப்பவர்கள் கிறித்தவர்கள். கிறித்தவத் திருச்சபையும் கிறித்தவ நற்செய்தியாளரும் இழிவுபடுத்தப் பட்டிருப்பதுடன், இயேசு கிறித்து பயங்கரமான முறையில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றார். அதுவும் சாதி முறையில் இந்தப் பகுதியை (பக்கம் 650) வாசிக்கும் கிறித்தவர்களின் உள்ளம் துன்பத்தால் துடிக்கும் நிலையில் இப்பகுதி சதிமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் கிறித்தவ நற்செய்தியாளரையும் கிறித்தவ திருச் சபையையும் இயேசு கிறித்துவையும் இந்த அளவுக்கு இழிவு படுத்தக் காரணம் என்ன? என்னும் கேள்வியைக் கேட்டால் இக்கேள்விக்கு தமிழக அந்தணர் வரலாறு என்னும் நூல் காரணங்களைச் சதிமுறையில் அடுக்குகிறது. கிறித்தவப் பாதிரியார்கள் தமிழகத்தில் பணி ஆற்றுவதற்கு முன்னர், தமிழ் மொழியும் தமிழ் இனம் என்னும் திராவிட இனமும் ஆரியப் பிராமணர்களிடம் முழு அளவில் அடிமைப்பட்டுக் கிடந்தன. ஆனால் கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழகத்தில் கால் வைத்த பின்னர் நிலைமை மாறிவிட்டது. 1967 முதல் இன்றுவரை 38 ஆண்டுகள் திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்ந்து ஆரிய பிராமண எதிர்ப்பை இந்தியா முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் கிறித்தவப் பாதிரியார்களே. எவ்வாறு? இந்தியாவில் தோன்றிய அறிஞர்கள் அத்தனை பேரிலும் புகழால் மட்டுமல்லாமல் சிலையாலும் உயர்ந்து நிற்பவர் திருவள்ளுவர். 133 அடி உயரத்தில் இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியில் இந்தியச் சிலைகள் அத்தனையிலும் உயரமான சிலை வடிவில் நின்று கொண்டிருக்கின்றார் திருவள்ளுவர். இந்தியாவில் தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று திருக்குறள் 80க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பெருமையை உலகம் முழுவதும் அறிந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் கிறித்தவப் பாதிரியார்களே. இருபதாம் நூற்றாண்டில் கூட திருக்குறளை ‘தீக்குறள்’ என்று இகழ்ந்து கூறியவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார். காரணம் பிராமணர்களின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கையுடைய தமிழராகிய திராவிடர், திருவள்ளுவர். திருவள்ளுவருடைய கொள்கை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்னும் நோக்கில், அப்பொழுது உலகம் முழுவதும் கிறித்தவர்களின் வழிபாட்டு மொழியாக இருந்த, இலத்தீன் மொழியில் திருக்குறளை முதன்முதலாக தமிழ் அல்லாத மொழிக்கு மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர் என்று தமிழர்களால் அறியப்பட்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்க்கி என்னும் கிறித்தவப் பாதிரியார் ஆவார். இது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் ஓர் உயர்வை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், ஆங்கிலம் உலகம் முழுவதும் பொது மொழியாகப் பரவிக் கொண்டிருந்தது. திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன், திருவாசகம், திருவருட்பயன் முதலிய தமிழர் சமய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் ஆன்மிகம் இவற்றின் சிறப்பை உலகம் அறியுமாறு செய்ததுடன் தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று அறிவித்தவர் ஜி.யு.போப் என்னும் கிறித்தவப் பாதிரியார். தமிழ் மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றிய மொழி என்று தமிழர்களும் நம்பிக் கொண்டிருந்த காலத்தில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தலைப்பில் ஓர் ஆராய்ச்சி நூலை எழுதி, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி இல்லை என்றும், தமிழ் தனித்து இயங்கக்கூடிய மிகப் பழமையான செம்மொழி என்றும், தமிழ் மொழியிலிருந்து பிரிந்தவையே மற்ற திராவிட மொழிகள் என்றும் நிரூபித்துக் காட்டியவர் கால்டுவெல் என்னும் கிறித்தவப் பாதிரியார். கால்டுவெல்லின் ஆய்வின் பயனாகவே தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் தோன்றி வளர்ந்துள்ளன என்பது வரலாறு. 1921க்குப் பின்னர் ஹரப்பா, மொஹஞ்சோதரா முதலிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் பயனாக சிந்துவெளி நாகரிகம் வெளிப்பட்டது. சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று காட்ட ஆரிய பிராமணர்கள் இன்று வரை கடும் முயற்சி, சதி முறையில் எடுத்து வருகின்றனர். சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை நேர்மையான ஆராய்ச்சியாளர் எவரும் மறுக்க இயலாவண்ணம் தக்க ஆராய்ச்சியின் வழி நிலைநாட்டியவர் ஹீராஸ் என்னும் கிறித்தவப் பாதிரியார் ஆவார். சிந்துவெளி திராவிடர்களின் நாகரிகத்திலிருந்தே, சுமேரிய எகிப்திய நாகரிகங்கள் பிறந்தன என்பதை ஹீராஸ் பாதிரியார் தகுந்த காரணங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், திராவிட மொழிகள், திராவிட நாகரிகம், திராவிட இனம் இவற்றின் சிறப்புகள் கிறித்தவப் பாதிரியார்களால் வெளிக்கொண்டு வரப்பட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திராவிடர்களின் ஆன்மிகக் கொள்கைகளிலிருந்து உருவானவைகளே உலக சமயங்கள் என்றும், உலக சமயங்கள் அனைத்திற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுத்தால் அது ‘திராவிடர் சமயம்’ என்ற பெயரில் அடங்கி விடுகிறது என்றும், தக்க வரலாற்று ஆய்வுகளின் வழி திராவிட ஆன்மிக இயக்கம் நிறுவியுள்ளது. உலக ஆத்திக சமயங்கள் அனைத்தையும் இணைத்தால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னும் மாணிக்கவாசகரின் திருவாக்கு நிறைவேறுகிறது. ‘சிவம்’ என்பது ‘அன்பு’ என்பதைக் குறிக்கிறது. ‘அன்பும் சிவமும் இரண்டடென்பார் அறிவிலார்’ என்று திருமூலர் கூறுகின்றார். ** திரு. இரணியன்** ‘தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்ற இரண்டு தொகுதிகளையும் படிக்கிறபோது ஒன்று புரிகிறது. அவர்களுக்கு இப்போது ஏற்பட்டு இருப்பது அடையாளச் சிக்கல். இன்று இந்தியா முழுவதும் ஒரு பெரும் கருத்துப் போர் நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்துப் போரில் தமிழ் மக்கள் ஆகிய நாம் இன்று சிலவற்றை முடிவு செய்தாக வேண்டும். பெரியாரைப் பொறுத்தவரை, பிராமணர் என்றச் சொல்லை நாம் பயன்படுத்தக் கூடாது. பார்ப்பனர் என்று தான் சொல்ல வேண்டும் என்பார். பாவாணரைப் பொறுத்தவரை, பார்ப்பனர் என்பது உயர்ந்த சொல். பிராமணர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பார். இதுவரை தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் இப்பொழுது அந்தணர் என்று சொல்லுகிறார்கள். இந்த நூல் தொடர்பாக ‘இந்திய குடிசை’ என்ற இன்னொரு நூலை நான் குறிப்பிட வேண்டும். அதை எழுதியவர் வெர்டி நான் சேவியர் என்ற பிரெஞ்சுக்காரர். வரலாற்றின் மீது அக்கறை உடைய ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. இந்த நூலை நல்ல தமிழில் வடிவேல் இராவணன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலின் மையமான ஒரு செய்தி, இந்தியாவில் அறிவாளி என்பவன் பார்ப்பனனா? பறையனா? பறையன் தான் என்பதை நிலைநாட்டுகிறது இந்த நூல். ஞானங்களுக்கு எல்லாம் அவன் தான் காரணம். அவன் இந்த மண்ணோடு வாழ்பவன். இவன்தான் இந்த நாட்டின் ஆதிக்குடி. இப்பொழுது ‘அந்தணர்’ என்ற சொல் பற்றிப் பார்க்கலாம். தூய சமணத் துறவிகளைத் தான் இந்தச் சொல் குறிக்கிறது. ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்று திருக்குறள் கூறுகிறது. வடமொழி நூல்களில் சொல்லப்படும் குருமார்கள், கொடியவர்கள். தமிழில் ரிஷி என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ரிஷி மாதிரிப் பாய்கிறான் என்று கிராமத்தில் சொல்வார்கள். ரிஷி என்பவன் கொடூரமானவன் - சமஸ்கிருதத்தில் ரிஷி என்பவன் சான்றோன் . நம்மைப் பொறுத்தவரை பார்ப்பான் என்பதும் பிராமணர் என்பதும் அந்தணர் என்பதும் வேறு வேறு சொற்கள். இந்த நூலில் இவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாங்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள். தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறோம். ஆரியர் என்ற சொல் சான்றோர் என்ற உயர்ந்த மக்களைத்தான் குறிக்கும். திராவிடர் என்ற சொல் அந்நிய ஆட்சியாளர்களால், மக்களைப் பிளவுபடுத்த கற்பிக்கப்பட்ட ஒரு சொல். ஆரியம், திராவிடம் என்பதில் உண்மை இல்லை . ஒரு தூண்டல் இல்லாமல் துலங்கல் நடக்காது என்பது உளவியல் சொல்லும் உண்மை . திராவிடர் - திராவிட இயக்கம் - என்ற அனாரிய இயக்கம் எப்படி வந்தது? பிராமணர்தான் கல்வி அறிவு உடையவர்கள். அவர்கள் தான் கற்க வேண்டும். மற்றவர்கள் கற்கக் கூடாது என்ற நிலவரம் இருந்த போது, பிராமணர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இயக்கம் திராவிடர் இயக்கம். பிராமணிய மேலாண்மை, ஆதிக்கம் ஆகியவற்றின் எதிர்விளைவு தான் திராவிட இயக்கம். முத்துசாமி அய்யர் என்பவர் எழுதினார் ‘ஐரோப்பிய ஆரியரும் இந்திய ஆரியர்களுமாகிய நாங்களும் இணைந்துதான் இந்திய சமூகத்தில் ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தினோம்’ பெங்களூரிலிருந்து வெளிவரும் ஒரு தலித் இதழின் ஆசிரியர் திரு. ராஜசேகர் - ஹிட்லரைப் பற்றி அவர் ஒரு நூல் எழுதி இருக்கிறார். இட்லரியம் என்பது எங்கே இருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி பதில் சொல்கிறார். மாக்ஸ்முல்லர் ஜெர்மனியில் எழுதிய நூலைப் படித்துவிட்டுத் தான் இட்லர் தன்னை ஆரியன் என்று கண்டு கொண்டானாம். இந்தியாவுக்கு நாகரீகத்தை கற்று கொடுத்தவர் ஆரியர். ஆரியன் மட்டும்தான் ஆளப் பிறந்தவன். உலகத்தை ஆரியன் வெற்றி கொள்ள வேண்டும். வல்லவன் தான் நிலை நிற்பான். ஆரியன் மட்டுமே வல்லவன். ஜெர்மானியன் தான் தூய ஆரியன் இப்படி இட்லர் கருதினான். இந்த இனவெறி கருத்துக்கு மூலமாக இருந்தவன் இந்திய பிராமணன் தான் என்பதை தெளிவுபடுத்துகிறார் திரு. ராஜசேகர். இட்லருடைய கொடியில் இருந்த சுவஸ்திக் சின்னம் ரிக் வேதத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்று இவர் கூறுகிறார். இப்படி உலகம் முழுவதும் மக்களைப் பிளவுபடுத்தி உழைப்பவன் தாழ்ந்தவன் என்ற கருத்தை விதைத்தவன் பிராமணன். பிராமணனுக்குச் செத்த பிணத்தைப் புதைக்கத் தெரியாது. ஒரு கல்லைச் சிற்பமாகச் செதுக்கத் தெரியாது. பிராமணனுக்கு எதுவும் தெரியாது. இவன் எப்படி உயர்ந்தவன் ஆக முடியும்? தமிழகத்தில் செருப்புத் தைப்பவன், மரவேலை செய்பவன், கட்டிடம் கட்டுபவன் - இவர்கள் எல்லோரும் சாதியில் தாழ்ந்தவர்கள். இவற்றில் எதுவும் தெரியாதவன் உயர்ந்தவன். இந்தச் சிந்தனையை நமக்குள் திணித்தவன் பிராமணன். இந்திய மக்களைக் கூறு போட்டு, இழிவுபடுத்தி, இந்திய மக்களின் விடுதலைக்கு வழிவிடாத பிராமணியம் தான் இந்திய மக்களுக்கு நாங்கள்தான் நாகரீகத்தைக் கற்பித்தோம் என்று கூறுகிறது. இப்படி நம் வரலாற்றை இவர்கள் இந்த நூலின் மூலம் மறைக்கிறார்கள். தம் முந்தைய தலைமுறையில் கால்டுவெல், பாவாணர், ந.சி. கந்தையாபிள்ளை ஆகியவர்கள் நம் வரலாற்றை ஆராய்ந்து எடுத்துரைத்தார்கள். இன்றைக்கும் வரலாற்று ஆய்வு நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால் நாம் எதுவுமே செய்யவில்லை . தீண்டாமை இங்கு எப்படி ஏற்பட்டது என்று ஓர் அறிஞர் ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார்? நெடுங்காலத்திற்கு முன்பு வெளியில் இருந்து வெள்ளை இனத்தவர் தங்கள் வீட்டு விலங்குகள் முதலியவற்றோடு இங்கு படைபடையாக வந்தனர். புதிய நோய்கள் பலவற்றை அவர்கள் இங்கு கொண்டு வந்தார்கள். ஆகவே அவர்களையோ அவர்கள் கொண்டு வந்த பொருட்களைத் தீண்டக்கூடாது என்று இங்கு உள்ளவர்கள் கருதினர். இப்படித்தான் தீண்டாமை ஏற்பட்டது. அதன்பிறகு நமக்குள்ளேயே ஒரு பிரிவினரை மற்றவர் தீண்டக்கூடாது என்ற கருத்து ஏற்பட்டது. இப்படி சொல்லுகிறார் இந்த அறிஞர். மேலும் சில ஆய்வுகள் இப்போது வந்து கொண்டிருக்கின்றன. ரிக்வேதத்தில் சொல்லப்படுகிற செடி, கொடி வகைகள் எல்லாம் இங்கு இருந்தவை அல்ல. ஐரோப்பாவின் வடபகுதியில் நார்வே முதலிய நாடுகளில் இருப்பவை அவை. இதைப்போலவே ரிக் வேதத்தில் ஒரு வர்ணனை : சூரியன் உச்சி வானத்தில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பான். இப்படி ஒரு காட்சியை நார்வேயில் தான் காணமுடியும். ரிக் வேதத்தில் உள்ள அகச்சான்றுகளை இவர்கள் இப்பொழுது மறுக்க முடியாது. இவர்கள் வார்த்தை என்கிறார்கள். ஆங்கிலத்தில் Word . இங்கு நாமம் என்பது ஆங்கிலத்தில் Name. இப்படிப் பார்த்தால் ஆரிய மொழியும் ஐரோப்பியர்களின் மொழியும் ஒன்று எனத் தோன்றுகிறது. நான்கு யுகம் என்று கூறுகிறார்கள். கிருத யுகம் என்பது பிரகாசமான காலம். துருவப்பகுதியின் பனி படர்ந்த பிரதேசத்தின் நினைவாக இந்தச் சொல். ஒன்றை அடுத்து வந்த யுகங்கள் என்பவை இவர்கள் கடந்து வந்த காலங்கள் / இடங்களைக் குறிக்கின்றன. அவர்கள் இங்கு வந்தபோது கரிய நிற மனிதர்களைக் கண்டார்கள். ‘கலியுகம்’ கலி என்றால் கருப்பு. ‘இந்தக் கருப்புப் பிசாசுகள் கோடுகளினால் பேசிக் கொள்கிறார்கள்’ என்று வேதத்தில் ஒரு வர்ணனை. இங்கு உள்ளவர்கள் எழுதத் தெரிந்தவர்கள். அவன் உள்ளே நுழைந்த காலத்தில் நமக்கு எழுத்து மொழி இருந்தது. கோட்டைகளும் கொத்தளங்களும் நமக்கு இருந்தன. அவன் நாடோடி. அவனுக்கு இப்படி எதுவும் இல்லை. இது கலியுகம். இங்கு வாழ்பவர்கள் மிலேச்சர்கள். இப்படி அவன் கருதினான். நமது நாகரீகம் அவனுக்கு இல்லை. இப்படி ஆராய்ந்து உண்மைகளை நாம் காண வேண்டும். வரலாற்று ஆய்வு இல்லாமல் அவனை முறியடிக்க முடியாது. கர்நாடகத்தின் ஒரு மலைப்பகுதி. முற்றிலும் கருமை நிறத்தவர் அங்கு வாழ்கின்றனர். உடல்வாகைப் பொருத்தவரை அவர்கள் ஆப்பிரிக்க நீக்ரோக்கள். பேசும் தாய் மொழி கன்னடம். திசுலர் என்ற ஒரு குடி. அவர்கள் பேசுவது தமிழ். அவர்கள் எழுத்து இன்றைக்கும் வட்டெழுத்து. உலகில் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்வது இயற்கை. வாழும் போது மொழிகளும் மாறிவிடுகின்றன. இவ்வாறு இடம் பெயர்ந்து வந்தவர்கள் மண்ணை நேசிக்கிறார்கள். ஆரியனால் இந்த மண்ணை நேசிக்க முடியவில்லை . நீ இந்த மண்ணுக்கு உரியவன் என்றால் தமிழ் மண்ணை , தமிழ் மொழியை, இந்த மக்களின் தொழில்களை, உழைப்பை நேசிக்க வேண்டும். எங்கிருந்து வந்தாய் என்பது முக்கியமில்லை. வந்த இடத்தில் மக்களோடு மக்களாய் வாழ்கிறாயா? இல்லையா என்பதுதான் வரையறை. நீ மண்ணை நேசிக்கவில்லை. ஆனால் உயர்ந்தவன் என்று சொல்கிறாய். மக்களைக் கூறு போடுகிறாய். உன்னை நாங்கள் எப்படி நேசிக்க முடியும். பிராமணியத்தை தூக்கி எறி. பூணூலைக் கழற்றி எறி. சமஸ்கிருதத்தை ஒதுக்கி வை. இவ்வாறு நீ வந்தால் உன்னை ஏற்கிறோம். நாங்கள் மனிதர்கள். மண்ணை நேசிப்பவர்கள். மக்களை நேசிப்பவர்கள். உழைப்பை மதிப்பவர்கள். வெறுப்பை நாங்கள் வளர்க்க விரும்பவில்லை . தமிழன் என்றும் திராவிடன் என்றும் நாங்கள் பேசுவதற்கு இதுதான் பொருள். நாங்கள் சமத்துவத்தை நேசிக்கிறோம். நாங்கள் அபேதவாதிகள். நீங்கள் வேதவாதிகள். நீங்கள் வேதத்தை, பேதத்தை நேசிப்பவர்கள். உங்கள் அடையாளச் சிக்கல் இதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். ஆகவே இந்த நூலை எழுதி இருக்கிறீர்கள். நாங்கள் ஓய்ந்து இருக்கக்கூடாது. புதிய வரலாறு எங்களுக்குத் தேவை. வரலாற்றைப் படைக்கப் புறப்பட்டிருக்கிறோம். உங்களால் எங்களைத் தடுக்க முடியாது. உங்களைத் திருத்திக் கொண்டால் எங்களோடு இணைந்து வரலாம். இதுகாறும் வரை எங்களை நீங்கள் அடிமைப்படுத்தியதை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். நீங்களும் மனிதர்களாக வேண்டும். ** முனைவர் வே. சுகுமாரன்** ‘தமிழகத்தில் அந்தணர் வரலாறு’ என்ற இந்த நூல் தொகுப்பு அண்மையில் கொண்டு வரப்பட்டது. இந் நூல் தொகுப்பு இந்திய வரலாறு பற்றிப் பல்வேறு விடையங்களை முன்வைத்துள்ளது. வரலாறு பற்றி எழுதப்பட்டுள்ள பகுதிகளில் சிலரின் கட்டுரை மட்டுமே வாசிக்கத் தக்கனவாக உள்ளன. மற்றவை அலுப்புத் தரக்கூடிய ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் சொல்லுபவையாக உள்ளன. வரலாற்றுப் பகுதியில் இந் நூல் தொகுப்பு கீழ்க்காணும் விடயங்களைப் பற்றி பெரிதும் பேச முயன்றுள்ளது. அவை : 1. ஆரியப் படையெடுப்பு என்று ஒன்று நிகழவில்லை . 2. ஆரியர்கள் பூர்வகுடி மக்களே. 3. சரஸ்வதி நதி ஒன்று இருந்தது. அதன் கரையில் ஒரு சிறந்த நாகரிகம் இருந்தது. 4. வேதகாலம் மிகப் பழமையானது. 5. திராவிடன் என்று ஒரு இனம் இல்லை . ஆங்கிலேயரின் * பிரித்தாளும் சூழ்ச்சி.’ 6. வர்ணாசிரம தர்ம முறை இல்லை என்பனவாம். இவ்விடயங்களைப் பற்றிப் பேச நாம் உள்ளே செல்வதற்கு முன் க. சி. இலட்சுமி நாராயணன் - இத்தொகுப்பின் ஆசிரியர் - கூறியுள்ள விடயங்களுக்கு விடை கூறி விடுவது நல்லது. வரலாற்றை எப்படி எழுதுவது என்பது பற்றிக் கூறவந்த இவர் வரலாற்றைப் புறநிலை நோக்கில் அணுகவேண்டும் என்பது வரலாற்றை எழுதுவது குறித்த அடிப்படையான வரையறை (பக். 77) என்று கூறுகிறார். ஆனால் தான் சொன்னதற்கு மாறாக இந் நூல் தொகுப்பில் பல இடங்களில் அகநிலை நோக்கோடு எழுதப்பட்டிருப்பதை திட்டமிட்டே காண மறுக்கிறார். இது உண்மையான வரலாற்றைப் புறந்தள்ளி அவர் கூறுவது போல் ‘குப்பைக்கூளங்களை’ எழுதப் பயன்படுமே அன்றி வரலாறு எழுதப் பயன்படாது. உள்ளதை உள்ளபடி நமக்குக் கிடைத்திருக்கிற ஆதாரங்களை வைத்து வரலாற்றை எழுத முற்பட வேண்டும். “பாசிசம், மார்க்சியம் இரண்டில் ஒன்றை நான் ஏற்கும்படி வற்புறுத்தப்பட்டால் நான் மார்க்சியத்தையே ஏற்பேன். ஏனெனில், அதுதான் வரலாற்றை நமக்கு விஞ்ஞான ரீதியாக போதிக்கிறது” என்றார் ஜவஹர்லால் நேரு. இத்தகையதோர் உண்மை கூறும் முயற்சி இந்நூல் தொகுப்பில் காணப்படுகிறதா? என்பதை இனி நோக்குவோம். 1. ஆரியப் படையெடுப்பு என்று ஒன்று நிகழவில்லை நல்லதொரு நாகரிகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சிந்துவெளி மக்களின் நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்தது. இப்படி ஒரு கருத்த 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. இக்கருத்தை முன்வைத்தவர் சர். ஜான் மார்ஷல். இக்கருத்தின் தொடர்ச்சியாக சிந்துவெளி நாகரிகம் அழிக்கப்பட்ட பிறகு, அம்மக்கள் தெற்குப் பகுதிக்கு வந்து தங்கி வாழத் தொடங்கினர். இவர்கள் திராவிட மொழிக் கூட்டத்தைச் சார்ந்த சில மொழிகள் இங்கு பேசப்பட்டதால் இவர்கள் திராவிடர்கள் என அழைக்கப்பட்டனர். ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. இப்போது இவர்கள் இரத்தத்தில் அந்நிய இரத்தம் ஓடாமல் இருக்கலாம். எனினும் இவர்கள் மூதாதையர் மேற்கத்தியர் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ராமர் சங்கர் திரிபாதி (Page 27, History of ancient India - Rama Shankar Tripathi). தொடர்ந்து செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியின் விளைவாக ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி பல உண்மைகள் வெளிப்போந்தன. சிந்துவெளி நாகரீகம் ஆரியப் படையெடுப்பால் அழியவில்லை. அது வெள்ளப் பெருக்காலோ, இதர இயற்கை சீற்றத்தாலோ அழிந்திருக்கலாம் என்று இப்போது நம்பப்படுகிறது. ஆரியர்கள் குடியேற்றம் என்ற பெயரில் சிறுசிறு கூட்டமாக வந்து இம்மக்களுடன் தங்கியிருக்கலாம். அவ்வாறு தங்கியபோது அவர்கள் தங்கள் மொழியைப் பரப்பியிருக்கலாம். அம்மொழியைக் கற்றுக் கொள்வதால் நன்மையிருப்பதாக எண்ணி (இப்போது தமிழர்கள் ஆங்கிலம் கற்றால் வேலை கிடைக்கும் என்று எண்ணுவது போல) அம்மொழியைக் கற்றிருக்கலாம் என்று ரோமிலோ தாப்பர் போன்ற வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். (P.P. - 96, Recent perspective of early Indian history - Romila Thapar). ஆரியர் படையெடுப்பு நிகழவில்லை என்பதாக டாக்டர் அம்பேத்கார் கூறியதையும் இந்நூல் தொகுப்பு எடுத்துக்காட்டுகின்றது. படையெடுப்பு நிகழ்ந்திருக்குமானால் சிந்துவெளியில் இருந்த அத்தனை மக்களும் எப்படி ஒரே சமயத்தில் போக்குவரத்து இல்லாத அந்த காலகட்டத்தில் தென்பகுதிக்கு வந்திருக்க முடியும் என்றும் தமிழகத்தில் அப்போது யாரும் இருந்திருக்கவில்லையா என்றும், தமிழகத்தில் அப்போதிருந்தவர்கள் எப்படி இத்தனை பேரை வரவேற்றார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்நூல் தொகுப்பின் கட்டுரையாளர்களில் ஒருவரான திரு. டி. என். இராமச்சந்திரன். இப்படி ஆரியப் படையெடுப்பு நிகழவில்லை என்று கூறப்பட்ட போதிலும் ஆரியர் என்பவர் யார்? என்ற கேள்வி விடையளிக்கப்பட வேண்டிய முக்கியக் கேள்வியாக இருக்கிறது. 2. ஆரியர்கள் பூர்வகுடி மக்களே ஆரியன் என்ற சொல் இனத்தைக் குறிக்கவில்லை என்றும், அது சமூகத்தில் ஒழுக்கம் மிக்கவர், மதிப்பு மிக்கவர் என்று கருதப்படுபவரைக் குறிக்கும் சொல் என்றும் கூறப்படுகிறது. ரிக் வேதத்தில் இச்சொல் உயர்ந்தவரையும், சரியான கடவுளை வணங்குபவரையும் குறிப்பதாக ரோமிலா தாபரும் குறிப்பிடுகிறார். ஆனால் ஆரியர் இந்நாட்டவர்தான் அல்லது இந்நாட்டில் பிறந்த பூர்வகுடி மக்கள் தான் என்பதற்கான திட்டவட்டமான சான்று எதுவும் இந்நூல் தொகுப்பாளர் கூறுவது போல் கிடைத்ததாக தெரியவில்லை . எனவே ஆரியர்கள் இந்நாட்டவர் என்பது இப்போதைய சான்றுகளின் படி ஏற்பதற்கில்லை. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், அவெஸ்தம் போன்ற மொழிகள் இந்தோ - ஆரிய மொழிகள் என்று கூறப்பட்டிருப்பதால் ஆரியன் என்பது இனத்தைக் குறிக்காது என்ற நிலையில் இவர்களை இந்தோ ஆரிய மொழி பேசும் மக்கள் என்று குறிப்பதே சரியாக இருக்கும் என்று ரோமிலோ தாபர் மேலும் கருதுகிறார். 3. சரஸ்வதி நதி ஒன்று இருந்தது; அதன் கரையில் ஒரு சிறந்த நாகரிகம் இருந்தது இந்நூல் தொகுப்பாளர்கள் வலுவாக நம்புவது சரஸ்வதி நதி என்று ஒன்று ஓடியது. அந்நதிக்கரையில் ஒரு சிறந்த நாகரீகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்பதுதான். அக்கால் கட்டத்தில் சரசுவதி நதியோடு சதத்ரு (சட்லெஜ்,) வீரபாசா (வீஸ/ பியாஸ்), அக்னி (செனாய்/சீனாய்), பரோஸ்நி (வீ), விதஸ்தா (ஜீலம்), சிந்து ஆகிய ஆறு நதிகளும் இணைந்து ‘சப்தசிந்து’ என்று அழைக்கப்பட்டன. இந்நதிக் கரையிலும் ஒரு நாகரிகம் இருந்தது. பின்னர் நதி ராஜஸ்தான் பாலைவனத்தில் சென்று வரண்டுவிட யமுனை நதியும் சட்லெஜ் நதியும் திசைமாற, சரஸ்வதி நதிக்கரை மக்கள் வேறு இடம் தேடிச் செல்ல வேண்டியதாயிற்று. இது அண்மைக்கால கண்டுபிடிப்புகளால் அறியவரும் செய்திகள். 4. ரிக்வேத காலம் மிகப் பழமையானது ஆயின், இதன் காலம் பற்றி இந்நூல் தொகுப்பாளர் கூறுவது சரிதானா? என்ற கேள்வி இப்போது நிற்கிறது. கிறித்துவ மதத்தையும், மேற்கத்திய நாகரீகத்தையும் உயர்த்திப் பிடிக்க மாக்ஸ் முல்லர், சர். ஜான் மார்ஷல் போன்றோர் ரிக் வேதகாலத்தை கி.மு. 3000லிருந்து கி.மு. 1500 என்றும் அதற்குக் குறைவானது என்றும் கூறினர். உண்மையில் இது 8000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்று இந்நூல் தொகுப்பாளர்கள் கருதுகின்றனர். எனினும் இதற்கு ஆணித்தரமான சான்று எதுவும் இவர்களால் காட்ட இயலவில்லை. மனம் போன போக்கில் ஒரு பெருங்கொண்ட கணக்கை இவர்கள் காட்டுகிறார்கள். ’’தற்போது நடைபெறும் அகழ்வாராய்ச்சி இந்தக் காலத்தை கி.மு. 7000 வரையில் எடுத்துச் செல்கிறது" என்பது இவர்கள் கூற்று. (பக்கம் 747). ஆனால் உண்மையான நிலையை ஆதாரத்துடன் ரோமிலா தாபர் இப்படிக் கூறுகிறார். ஸ்வாட் சமவெளிகள் செய்யப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த வர்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் தோவப் பகுதிகளில் கிடைத்த மட்பாண்டங்களோடு ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ கி.மு. 150 - கி.மு. 400 வரையிலான காலத்திற்கு உரியன எனக் கருதப்படுகிறது. (பக்கம் 89, ரோமிலா தாபர்). ஆக புறநிலை நோக்கில் நமக்கு விருப்பமான காலத்திற்கு வரலாற்றைக் கொண்டு செல்ல இயலாது என்பதில் தெளிவு வேண்டும். 5. திராவிடன் என்று ஓர் இனம் இல்லை ; இது ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி பெரிய பூசணிக்காயைச்சட்டைப்பைக்குள் மறைக்க முடியுமா? முயன்றால் முடியும் என்று எண்ணி முயன்று பார்த்திருக்கிறார்கள். திராவிடம் என்று ஒரு தனி இனம் இல்லை . ஆரிய - திராவிட மோதல்கள் என்பது கட்டுக்கதை. ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்தாள செய்த சூழ்ச்சி என்று கூறும் முனைவர் த.ந. கணபதி தன் கருத்துக்கு ஆதாரமாக டேவிட் ப்ராலி நூலிலிருந்து சில பகுதிகளை எடுத்துக் காட்டுகிறார். The Myth of the Aryan Invasion என்னும் நூலில் ’’திராவிடர்கள் இந்தியாவின் முக்கியமான குடிமக்களாக வெகு காலமாக இருக்கிறார்கள். இதில் ஒரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்கள் தாம் வேத நாகரிகத்தை நன்கு காப்பாற்றியவர்கள். தென்னிந்தியாவில் தான் வேதகால சமஸ்கிருதம், சடங்குகள், பாரம்பரியம் காணக்கிடக்கின்றன. தென்னிந்தியா இப்படி (வேதகால நாகரீகத்தைப்) பாதுகாத்து வருவதிலிருந்து வேத நாகரீகத்தின் பழமைக்கு இந்தப் பிரதேசம் கொடுத்துள்ள முக்கியத்துவம் தெரிகிறது" என்று கூறுகிறார். ஆரியரும் திராவிடரும் வேறு வேறல்ல என்று கூற வந்த வேகத்தில் இமயத்திற்கும் நர்மதை நதிக்கு நடுவே பஞ்ச திராவிடம் இருப்பதாகக் கூட கூறுகிறார். கிறித்துவ பாதிரிமார்கள் உருவாக்கிய திராவிட மொழிக் கொள்கையை வைத்துக் கொண்டு ஆரிய திராவிட பேதம் பற்றிப் பேசப்படுவதாக கணபதி சாடுகிறார். இத்தகையதொரு நிலை இருந்ததில்லை என்று அடித்துக் கூறுகிறார். இதுகாறும் கிடைத்துள்ள அகழ்வாய்வு ஆதாரம் எதுவும் ஆரியனும் திராவிடனும் ஒன்றே என்று காட்டவில்லை. சரசுவதி நதிக்கரையில் பழங்குடி மக்களிடையே நிகழ்ந்த பூசல்களை வெளிப்படுத்தும் ஆர்.எஸ். பாரி ஆரிய திராவிட இனத்தின் வேறு பிரித்துக் காட்டும் பகுதியை அவர் மொழியிலேயே காண்போம். “……… The Aryans were tall and fair and the ‘Dasyus’ were dark - skinned and of short stature. Their features were uncouth, being flat-nosed (anasah). They did not beleive in Vedic gos (a - devays), indeed reviled them (deva-piya), never performed sacrifices (a-yajkan) or any rites (a-karman), but worshipped the phallus embleme. (Sisna-devah) and followed strange laws (anyavate). Their speech was unintelligible (mridravak). These characteristics indicate that the ‘Dasyus’ probably belonged to the Dravidian stock, then occupying the parts over which the aryans were seeking to establish their domination. The ‘Dasyus’ fought valintly in defence of their homes and herds of castle, and they yielded to the superior might of the Aryans only when the distruction of their puras and durgas, towns and crude fortifications, made further resistances futile. Many of the ‘Dasar’ became slaves (dasa - slave) of the conguerons, having been admitted in society as Sudras, but other retired into the jungles and mountain fastnesses, where we still find their descendants living in primitive conditions.” (PP. 30, History of Ancient India, R.S. Tripahti, 1992) உயரமான, அழகாக நிறங்கொண்ட ஆரியர்கள் அழகற்ற, தட்டையான மூக்கினையுடைய, எளிதில் புரிந்து கொள்ள இயலாத வண்ணம் பேசுகிற , ஆரியக் கடவுள்களை, வழிபாட்டு சமய, சம்பிரதாயங்கள் எதையும் கடைபிடிக்காத ஆனால் சிவலிங்கத்தை வழிபட்ட தஸ்யூக்கள் திராவிட இனத்தவராக இருந்திருக்கலாம். இவர்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாக்க கடுமையாகப் போராடிய போதிலும் இறுதியில் இவர்களை ஆரியர்கள் வென்று உடைமைகளைக் கைப்பற்றி இவர்களை அடிமையாக்கினர். தப்பியோடி காடுகளுக்குள் ஒளிந்தவர்கள் இன்றுவரை புராதன நிலையில் வாழ்கிறார்கள். இது மேலே தரப்பட்ட ஆங்கிலப் பகுதியின் சுருக்கம். நிலைமை இவ்வாறு இருக்க ஆரியரும், திராவிடரும் ஒன்றே என்கிற வாதம் எப்படிப் பொருந்தும். மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பகுதியில் தஸ்யூக்களை ‘Dravidian Stock’ என்று குறிப்பிடுகிறார். இது தஸ்யூக்கள் திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என்பதை அவர் வலியுறுத்திச் சொல்ல கையாளும் சொல்லாகும். 6. வர்ணாசிரம தர்மமுறை இல்லை வர்ணாசிரம தர்மம் என்பது ஜாதி நோக்கில் ஆனது அல்ல. அது ஒரு சமூகப் பகுப்பு முறை என்று கூறப்படுகிறது. இது பற்றி இந்நூலில் முனைவர் க.ந. கணபதி கூறுவதைப் பார்ப்போம். “…. ஆகவே வர்ண தர்மம் என்பது ஜாதி தர்மம் அன்று. அது ஒரு சமுதாயப் பிரிவு. இந்தப் பண்புடைய மக்கள் குழு தனிப்பட்ட மனிதர்கள், தகுதி பெற்றதும், தாங்கள் சார்ந்த குழுவை மாற்றிக் கொள்ளவும் அதேபோல் ஒத்த பண்புடைய குழுக்கள் தங்கள் உறுப்பினர்களை மாற்றிக் கொள்ளவும் வகை செய்யப்பட்ட ஒரு கொள்கையே அன்றி அது ஜாதிப் பிரிவினை அல்ல. இதே கருத்தைத்தான் யுதிஷ்டிரா, ஒருவன் பிராமணனாக இருப்பது பிறப்பாலோ அல்லது வேறு வெளித் தோற்றங்களினாலோ அல்ல என்று மகாபாரதத்தில் கூறுகிறார்.” (பக்கம் 187, தமிழக அந்தணர் வரலாறு) மேலும் தன் கருத்திற்கு ஆதரவாக அம்பேத்காரையும், இழுத்துக் கொள்ளும் இக்கட்டுரையாளர் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைய தன் முடிவான கருத்தை முத்தாய்ப்பாய் கொடுத்திருக்கிறார் பாருங்கள். "ஒரு வர்க்கமில்லாச் சமுதாயத்திற்கு Classless - Society - க்கு உண்மையாக அடிகோலிய கொள்கை வர்ணாசிரமக் கொள்கை என்பது என்னுடைய முடிவு. எந்த ஒரு விடையமும் தொடக்கத்தில் சொல்லப்படும்போது அல்லது தொடங்கும் போது அது சரியாக இருக்கலாம். ஆனால் முடிவு வரை அது அப்படியே இருக்குமென்று கூறிவிட முடியாது. தொடக்கம் சரியாகத்தான் இருந்தது. எனவே எப்படியாயினும் தான் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று பிறர் நம்மை வற்புறுத்த இயலாது. ரிக் வேத காலத்தில் இரண்டு வர்ணங்கள்தான் இருந்தன. ஆனால் பிந்திய வேத காலத்தில் அவை நான்கு வர்ணங்களாய் மாறிவிட்டன. இதை ரோமிலா தாபரின் மொழியிலேயே இங்கே எடுத்துக் காட்டுகிறேன். “There was also a broader division of society initially into two varnas; the arya varna and the dasa varna as referred to in the Reg Veda, Both these words arya and dasa have in the past been intepreted as referring to race as well as to social differentiation. The racial identification may need correction. Whereas the term dasa did sometimes have an association with physical characteristics, the term arya is fenerall a reference to someone who is to be respected and does not carry a specific racial meaning. It is even likely that sometimes arya and dasa were used symbolically. The later vedic texts refer to the more familiar four varnas - bralonan, ksatriya, vaisya and sudra.” (PP. 103, Romila Thapar, 1998) எனவே வர்ணாசிரம தர்மம் சமூகத்தைக் காக்க வந்தது என்றும், சமூகத்தில் ஒற்றுமையை நிலைப்படுத்த இது உருவாக்கப்பட்டது என்பதும் உண்மையான கூற்று அல்ல. வர்ணம் என்ற சொல் தொடக்கத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் எனினும், வர்ணாசிரம தர்மமே இல்லை என்று கூறி வரலாற்றைத் திசை திருப்பி விட முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர் தமிழகத்தில் வர்ணாசிரம முறையில் ஒரு குருகுலப் பள்ளி நடத்திய போது அது சரிதானா? என்று ஜீவா காந்தியடிகளிடம் கேட்டார். அது சரிதான் என்று காந்தியடிகள் சொன்ன பதில் தான் ஜீவா காங்கிரசை விட்டு விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வைத்தது. எனவே சமூகத்தில் பேதமில்லை என்பது புரட்டல் வாதம். இந்நூலில் தரப்பட்டுள்ள பல்வேறு விடையங்களை இங்கு விவாதிக்க நேரமின்மையால் அவற்றில் சிலவற்றை வினாக்களாகத் தொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன். 1. சிவலிங்க வடிவம் என்று அரப்பா அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டவை தராசு எடைக்கற்கள் என்றும், அவற்றைச் சிவலிங்கம் என்று கூறியதன் மூலம் சைவ மதத்திற்கு அவமதிப்பு நேர்ந்துவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் இன்று கோவில்களில் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டிருப்பது ஏன்? 2. ஆரியனும் - திராவிடனும் வேறு வேறு அல்ல என்றால், திராவிடக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, இட ஒதுக்கீடு போன்ற விடையங்களில் உண்மையான நிலையை ஏற்று திராவிடர்களோடு இணைந்துவிட பிராமணர்கள் தயார்தானா? 3. சாதியம் என்று ஒன்று இல்லை என்றால் கோவில் கருவறைகளில் பிராமணர் அல்லாதோர் அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்? மக்கள் விழிப்படையாத வரை பிராமணர்கள் நந்தனைத் தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டு குற்ற உணர்ச்சியாலும், தாழ்வு மனப்பான்மையாலும் நந்தன் தீக்குள் இறங்கிவிட்டான் என்றும் தோல்வி மனப்பான்மையால் மதுரையில் சமணர்கள் தாமே சென்று கழுவில் அமர்ந்து கொண்டார்கள் என்றும் தொடர்ச்சியாக பொய்களைக் கூறிக் கொண்டேயிருக்கலாம். இந்நூல் தொகுப்பில் கோயபல்ஸ் பற்றியும் கூறப்பட்டுள்ளது. நாமும் அதையே திரும்பச் சொல்வோம். ஒரே பொய்யை நூறு முறை கூறுவதால் உண்மையாகிவிடாது. ** அறிஞர் மு. தெய்வநாயகம் - நிறைவுரை** சரசுவதி நாகரிகம் என்று பிராமணர்கள் கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை . வானில் இருந்து படம் எடுத்ததாகவும் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ஒரு நதி ஓடியதாகவும் சொல்கிறார்கள். இந்த நதிக்கு சரசுவதி என்று யார் பெயர் கொடுத்தார்கள்? இந்தப் பெயர் ரிக் வேதத்தில் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். ரிக் வேதத்தை எழுதியவர் யார்? எந்த காலத்தில் ரிக் வேதம் எழுதப்பட்டது? மாக்ஸ்முல்லர் கி.பி. 1500இல் எழுதப்பட்டது என்கிறார். அவரே மேலும் சொல்கிறபோது ரிக் வேதத்தின் காலத்தை அளவிட முடியாது என்கிறார். எந்த அடிப்படையை வைத்து காலத்தை நிர்ணயம் செய்வது? அவர்கள் எதுவும் சொல்லலாம். 3000 என்றோ , 5000 என்றோ, 5 லட்சம் என்றோ சொல்லிக் கொள்ளலாம். இதற்கு எல்லாம் ஆதாரம் இல்லை . ரிக் வேதத்தைத் தொகுத்தவர் வேதவியாசர், அவர் வேதாந்தக் கொள்கை உடையவர். திராவிடர். செம்படவப் பெண்ணுக்குப் பிறந்தவர். ஆரியர்களின் நாடோடி வழிபாட்டுப் பாடல்களைத் தொகுத்து வேதம் என்று இவர் தான் பெயர் கொடுத்தார். முன்பு வேதம் என்ற பெயர் இல்லை. குளிர் நாட்டில் இருந்த நாடோடிகள் குளிருக்காக நெருப்பை மூட்டி ஆடு, மாட்டுக்கறியை அதில் சுட்டு, சோமபானம், சுராபானம் என்று அருந்தியவர்களின் பாடல்கள் அவை. திராவிடர் ஆகிய வேதவியாசர் ஆன்மிக கொள்கை உடையவர். நாடோடிகளின் பாடல்களில் ஆன்மிகக் கொள்கை என்று எதுவும் இல்லை . புத்தமும் சமணமும் நாத்திகம் பேசின என்றாலும் அவை ஆன்மிகச் சமயங்கள் ; திராவிடரின் சமயங்கள். வியாசர் வேத கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வேதாந்தக் கொள்கையை உடையவர். சைவமும் வைணவமும் வேதாந்தக் கொள்கை உடையவை. பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, மகாபாரதம் ஆகியவற்றை எழுதியவர் வியாசர். உபநிடதங்களைத் தொகுத்தவரும் அவரே. வியாசர் என்பவர் ஒரு தனி மனிதரில்லை . தொகுப்பாளர் பரம்பரை. வேதாந்த கொள்கையை இந்தியா முழுவதும் பரப்புவதற்காகத் தான் சமஸ்கிருதத்தைத் திராவிடர் உருவாக்கினர். சமஸ்கிருதத்தில் கிரேக்க மொழியையும் லத்தீன் மொழியையும் பார்த்த ஆங்கிலேயர் கிரேக்கத்திற்கும் இலத்தீனுக்கும் முற்பட்ட மொழி சமஸ்கிருதம் என்று தவறாகக் கருதினர். முதன் முதலில் மனுநீதி நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் சர். வில்லியம்ஸ் ஜோன்ஸ். இவர் கிரேக்கத்தையும் லத்தீனையும் பழுதற கற்ற அறிஞர் சமஸ்கிருத மொழியில் கிரேக்கமும் இலத்தீனும் இருப்பதைப் பார்த்த இவர் உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் மூலம். சமஸ்கிருதம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். 1794 இல் இவர் இப்படி எழுதியதை ஐரோப்பாவில் இருந்த பலரும் நம்பினார்கள். சமஸ்கிருத மொழி வழங்கியவர் இந்தோ - ஐரோப்பியர் என்ற தவறான முடிவுக்கு வந்தனர். ஐரோப்பியர் அனைவருக்கும் மூல மொழி சமஸ்கிருதம் என்று கருதினர். சமஸ்கிருதம் கி.பி. இல் உருவாக்கப்பட்ட மொழி. திராவிட ஆன்மிகத்தை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக திராவிடர் உருவாக்கிய மொழி . ரிக் வேதத்தில் 500 தமிழ் சொற்கள் இருப்பதை இந்த நூலிலேயே குறிப்பிடுகின்றனர். குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகள் தமிழ் இலக்கண அடிப்படையைக் கொண்டவை என்று இவர்களே எழுதி உள்ளனர். காஞ்சிபுரத்தில் தான் முதன்முதலில் சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது. காஞ்சியில்தான் பெளத்தரின் மகாயாணம் உருவானது. காஞ்சியில் பெரிய கல்லூரி இருந்தது. இங்கு தான் தமிழ் மக்களின் தமிழ், பெளத்தரின் பாலி, சமணர்களின் அர்த்தமாகதி ஆகிய மொழிகளில் இருந்து சமஸ்கிருதம் உருவானது. வணிகத்திற்காக இந்தியாவுக்குக் கிரேக்கர்கள் வந்தார்கள். ரோமர்கள் வந்தார்கள். சமஸ்கிருத உருவாக்கத்தில் இந்த மொழிகளுக்கும் இடம் உண்டு. சமஸ்கிருதம் என்றால் நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பது பொருள். அது இயல்பாக தோன்றிய மொழி இல்லை. இப்படி சொல்வதற்கு முதன்மையான ஆதாரம் ஒன்று இருக்கிறது. அசோகன் தன் நாட்டில் பலியிடக்கூடாது என்று சட்டம் செய்தான். தன் சட்டத்தை நாடு முழுவதும் கற்பாறைகளிலும் தூண்களிலும் செதுக்கச் செய்தான். பாலி அர்த்த மாகதி, கிரேக்கம், அறமேயம் ஆகிய மொழிகளில் தன் சட்டத்தை எழுதி வைத்தான். சமஸ்கிருதத்தில் எழுதி வைக்கவில்லை . காரணம் அவன் காலத்தில் சமஸ்கிருதம் இல்லை. பலி இடுவதில் ஆரியர் முறை வேறு. திராவிடர் முறை வேறு. தீ வளர்த்து அதில் ஆடு, மாட்டு இறைச்சியை ஆரியர்கள் சுட்டு உண்பார்கள். திராவிடர் ஆட்டை அறுத்து இரத்தத்தை மட்டும் கோவிலில் சிந்தி இறைச்சியை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்து உண்பார்கள். ஆரியர்கள் நாடோடிகள் திராவிடர்கள் சமைத்து உண்பவர். நிலையான நாகரிகம் உடையவர். திராவிட நாகரிகம் நிலையான நாகரிகம். பக்குவப்பட்ட நாகரிகம். ஆரியரின் யாக முறையைப் புஸ்யமித்திரனின் காலத்திலிருந்து தான் நாம் பார்க்கிறோம். அதற்கு முன்னால் இதற்குச் சான்று இல்லை. கி.மு.186இல் அசோகனுடைய பேரன் பிரகதத்தனை அவனது படைத் தலைவனாக இருந்த புஸ்யமித்திரன் கொன்றான். புஸ்யமித்திரன் பிராமணன். சதி செய்து மன்னனைக் கொன்று ஆட்சிக்கு வந்தான். அசோகன் யாகத்தைத் தடை செய்து கல்வெட்டு அமைத்தான். அதில் சமஸ்கிருதம் இல்லை . கி. பி. முதல் நூற்றாண்டுக்கு பின்புதான் சமஸ்கிருதம் செய்யப்பட்டது. சமஸ்கிருதம் செய்யப்பட்ட பின்புதான் வேதம் இயற்றப்பட்டது. ரிக் என்றால் செய்யுள் என்று பொருள். யஜுர் என்றால் யாகம் செய்யும் முறை. சாமம் என்றால் கீதம். அதர்வண என்றால் மந்திரங்கள். ஆரியர் மத்தியில் வழங்கிய செய்யுள்களைத் தொகுத்து வகைப்படுத்தியவர் வியாசர். சிந்து நாகரிகம் இருந்தக் காலத்தில் ஆரியர்கள் வரவே இல்லை . கி.மு. 518இல் பாரசீகரின் முதல் படையெடுப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் அவர்கள் ஈரான், பாபிலோன் ஆகியவற்றைக் கைப்பற்றினர். கி.மு. 1200க்கு முன்னர் அவர்கள் ஈரானுக்குள் வந்தனர். ஈரானில் அப்போது ஆட்சி செய்தவர்கள் திராவிடர்கள். அங்கிருந்தவர்கள் ஏழமியர். அவர்கள் பேசிய மொழி ஏழமி. அது திராவிட மொழி. ஆரிய திராவிடப் போர் என்பது ஈரானில் தான் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறவில்லை. தஸ்யூக்கள் என்பவர்கள் தமிழர்கள். கி.மு. 518இல் பாரசீகர் இந்தியாவின் மீது படையெடுத்தனர் என்பதற்கு ஆதாரம் இங்கு இல்லை. அது வெளியில் தான் கிடைக்கிறது. ஆரியர் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் மாக்ஸ்முல்லர் தான். அதற்கு முன்னர் ஆரியர் என்ற சொல் இல்லை. இந்தியாவுக்கு வெளியிலும் இப்படி ஒரு சொல் இல்லை. கி. மு. ஆறாம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தவர் பாரசீகர்கள். கி.மு. நான்காம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தவர்கள் கிரேக்கர்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சாகர். கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் வந்தவர் குசாணர்கள். கி.பி. 4/5ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தவர் ஹீணர்கள். இவர்களோடு கி. மு. 6 நூற்றாண்டில் வணிகத்திற்காக வந்தவர் உரோமர். இந்த ஆறு குழுவினரும் சேர்ந்து தான் ஆரியர் என்ற இனம். கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒருவருக்குப் பின் ஒருவர் மற்றவர் மீது படையெடுத்து வந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹர்சரின் ஆட்சிக் காலத்தில் முன்பு வந்த எல்லோருடைய ஆட்சியும் ஒழிந்தது. ஆகவே வெளியிலிருந்து வந்த எல்லாரும் சேர்ந்து கூட்டணியை அமைத்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இராஜஸ்தானில் மெளண்ட் அபு என்ற இடத்தில் கூடிக் கூட்டணியை அமைத்தனர். வெளியில் இருந்து வந்தவர்கள் வெள்ளை இனத்தவர்கள். இங்கு இருந்தவர்கள் கருப்பர்கள். கூட்டணியில் படை வீரர்களாய் அமைந்தவர்கள் சத்திரியர். இவர்களில் பாரசீகர்கள், பிராமணர்கள். கி.மு. 518இல் படையெடுத்து வந்த பாரசீகர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள் அலெக்சாண்டர் படையெடுத்து வந்த போது இங்கு ஆட்சி செய்த ஹம்பி என்பவன் பாரசீகன் புஸ்யமித்திரன் ஒரு பாரசீகன். இவன் உருவாக்கிய சுங்க வம்சத்தினர் கி.மு. 185லிருந்து 128 வரை ஆட்சி செய்தனர். ஆட்சி செய்த பிராமணர் பின்னர் ஆட்சியை இழந்த போது அரசனை ஆள்பவராக மாறினார்கள். அரசனாக இருப்பதை விட அரசனை ஆள்பவராக நிரந்தரமாக இருக்க முடியும். பிராமணன் ஆட்சி செய்வான். ஆட்சியாளரை நியமனமும் செய்வான். இதுதான் பிராமண தருமம். பிராமணர்கள் அரசின் ஆதரவோடு சதி செய்கிறார்கள். நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். தூங்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது தூங்கிக் கொண்டு இருப்பது மாதிரி நடிக்கிறோம். அடிமையாக இருப்பவனைத் தட்டி எழுப்ப முடியும். அடிமையாய் இருப்பதில் சுகம் காண்பவனைத் தட்டி எழுப்ப முடியாது. நம்மை அடிமைப்படுத்துபவன் இன்று ஆர். எஸ். எஸ். காரன் மட்டும் அல்ல, காங்கிரஸ்காரனுக்குள்ளும் இந்த ஆர். எஸ். எஸ். தான் இருக்கிறான். பாபர் மசூதியை இடித்த பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்காரன் தான். நமக்கு இன விடுதலை என்பது எளிதான செயல் இல்லை. நிதானமாக ஆனால் உறுதியாக நாம் முன் செல்ல வேண்டும். பிராமணர்கள் சதிகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். பிராமண சங்கத்தைத் தடை செய் என்று அரசை வற்புறுத்த வேண்டும். இனவாதத்தைப் போலவே சாதியமும் ஒருவகையான இனவாதம் தான் என்று நாம் மெய்ப்பித்து இருக்கிறோம். மனுநூல்தான் சாதிய வாதத்திற்கு அடிப்படையான நூல். இந்த நூலைத் தடை செய்ய வேண்டும். இனவாதத்தின் வளர்ச்சி தான் சாதியம். இந்த உண்மையை ஐக்கிய நாடுகளின் அவையும் ஒப்புக் கொண்டுள்ளது. இங்குள்ள பிராமணர்களும் ஐரோப்பியர்களும் இணைந்து உலகமயமாதலை நம் மீது திணிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். இங்குள்ள பிராமணர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்கும் அத்வைதத்தைப் பரப்புகிறார்கள். திராவிடன் தான் உண்மையில் பண்பாட்டில் சிறந்தவன். ஆசியாவில் தான் உண்மையான ஆன்மிகம் வளர்ந்திருக்கிறது. ஆன்மிகத்தை வளர்த்தவன் திராவிடன் - தமிழ் மட்டும் தான் எல்லா வகையான சமயங்களையும் ஏற்று கொண்டிருக்கிறது. தமிழனுக்குத் தான் உண்மையான ஆன்மிகம் தெரியும். பிராமணனுக்கு ஆன்மிகம் தெரியாது. சங்கர மடத்திற்கு என்ன ஆன்மிகம் தெரியும்? யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தமிழனின் ஆன்மிகம். கடவுள் தான் உன்னை இப்படி படைத்தான் என்று பிராமணன் சொன்னதை நம்பி நாம் சகதியில் வாழ்ந்து வந்திருக்கிறோம். நம் ஆன்மிகத்தைப் பயன்படுத்தி நம்மைச் சகதியில் தள்ளியவன் பிராமணன். பிராமணன் இதுவரை மறைந்திருந்து தான் நம்மை தாக்கினான். தமிழகத்தில் அந்தணர் வரலாறு என்ற நூலை வெளியிட்டதன் மூலம் அவன் வெளியில் வந்திருக்கிறான். இதற்காக நாம் அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நம் உண்மையான வரலாறு என்ன என்பதை இனிமேலும் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை விடுதலை செய்து கொள்ள வேண்டும். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இவர்களைப் பாரசீகர், கிரேக்கர் என்றெல்லாம் பிரிக்க முடியும். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு இவர்கள் இணைந்து பிராமணர், சத்திரியர், வைசியர் என வகுத்துக் கொண்டு ஆரியவர்த்தம் என்பதை அமைத்து 500 ஆண்டுகள் நம்மை ஆண்டனர். அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த வரலாறு வேறு; பிறகு ஏற்பட்ட வரலாறு வேறு. கி.பி. 8/9 நூற்றாண்டுகளிலும் வெளியில் இருந்து வந்தவர்கள் இவர்களோடு எப்படியெல்லாம் உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம். இதை நிரூபணம் செய்வதற்கு எந்த திராவிடனாவது ஈடுபட்டானா? தேவநேயப் பாவாணரின் மாணவர் மதிவாணன் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தார். இப்பொழுது பூரண சந்திர ஜீவா இந்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நாம் அடிமையாக இருந்தோம். ஆராய்ச்சிக்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. நம்மவர்களில் படிப்பாளிகளாக இருப்பவர்கள், பிராமணர்களை எதிர்க்க அஞ்சி தம் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். பிராமணர்களை எதிர்த்தால் துணைவேந்தர் பதவி கிடைக்காது. நமக்குத் துணிவு இல்லை. தமிழ் வாழ்க என்று சொல்வோம். ஆனால் தமிழன் வாழ்க என்று சொல்ல மாட்டோம். தமிழன் வாழ்க என்றால் தானும் கீழ்ச்சாதிக்காரனும் ஒன்றா என்று கேட்பார்கள். சாதி ஒழியட்டும் என்று மேடையில் கத்துவோம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவர் என் சாதி என்று கட்டிக் கொள்வோம். பிராமணன் நம்மைக் கொள்ளை அடிக்கிறான். கொள்ளையில் 50 விழுக்காட்டை அவன் வைத்துக்கொண்டு, மீதியை நமக்குப் பங்கீட்டுக் கொடுக்கிறான். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.