[] 1. Cover 2. Table of contents தெய்வயானை   கல்கி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/deiva_yaanai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation அமர வாழ்வு முன்னுரை பர்மாவிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி வந்த பிறகு என் உள்ளம் அமைதி இழந்து அலைப்புண்டிருந்தது. ஓரிடத்தில் நிலையாக இருப்பது சாத்திய்மில்லாமல் போயிற்று. என் மனோநிலையை வியாஜ்யமாகக் கொண்டு தேச யாத்திரை செய்யத் தொடங்கினேன். அந்த தேச யாத்திரையைப் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே செய்யும்படி தூண்டிய காரணம் ஒன்று இருந்தது. வீர ராஜபுத்திரர்களின் நாட்டில் அதிசயமான வீரச் செயல்கள் நிகழ்ந்த புராதனமான கோட்டை கொத்தளங்களையும், பாழடைந்த பழைய ஊர்களையும் அழகு குடி கொண்ட புதிய பட்டணங்களையும் அந்தப் பட்டணங்களிலே லீலா விநோதங்களுக்குப் பெயர் போன சிருங்கார அரண்மனைகளையும் சுற்றிப் பார்த்துச் சலித்த பிறகு, கடைசியாக, அஜ்மீர் ஸ்டேஷனிலிருந்து பம்பாய்க்குப் போவதற்கு டிக்கட் வாங்கினேன். ஆஜ்மீரில் டிக்கட் கொடுத்த ஸ்டேஷன் குமாஸ்தா ஒரு எச்சரிக்கை செய்தார். “வழியில் ரட்லம் சமஸ்தானத்தில் ஏதோ கலாட்டா நடப்பதாகத் தெரிகிறது. கால திட்டப்படி ரயில் போய்ச் சேர்வது நிச்சயமில்லை. நீங்கள் வேறு மார்க்கமாய்ப் போவது நல்லது!” என்று அவர் சொன்னார். அதற்கு நான், “எத்தனையோ கலாட்டாக்களை நான் பார்த்திருக்கிறேன் ஐயா! பரவாயில்லை. டிக்கட் கொடுங்கள்” என்றேன். ஆஜ்மீர் ஸ்டேஷனில் ஜனங்கள் அங்கங்கே கும்பல் கூடிப் பரபரப்புடன் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னவென்பது மேற்படி டிக்கட் குமாஸ்தாவின் எச்சரிக்கையின் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ரயில் புறப்பட்டபோது அதில் வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் ரொம்பக் குறைவாக இருந்தது. ஏறியிருந்தவர்களில் போலீஸ்காரர்கள், இந்திய சிப்பாய்கள், இங்கிலீஷ் டாம்மிகள் ஆகியவர்கள் தான் அதிகமிருந்தார்கள். இத்தனை நாளும் ரயில் பிரயாணத்தில் கூட்டத்திலேயே கிடந்து அவஸ்தைப்பட்ட எனக்கு இது பெரிதும் உற்சாகத்திற்குக் காரணமாயிருந்தது. ஒருவருமே ஏறியிராத ஒரு இரண்டாம் வகுப்பு வண்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறிக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டேன். பிரயாணத்துக்கான உடையைக் களைந்து விட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஹாய்யாகக் காலை நீட்டிக் கொண்டு படுத்தேன். ரயிலும் கிளம்பிற்று. ரட்லம் ஜங்ஷன் நான் நிம்மதியான நினைவற்ற தூக்கம் தூங்கி எத்தனையோ காலம் ஆயிற்று. என்றாலும், ஓடும் ரயிலின் ஓசையும் சுழலும் சக்கரங்களின் சத்தமும் பெரும்பாலும் என்னைக் கண்ணயரச் செய்வது வழக்கம். எத்தனை நேரம் அன்று நான் தூங்கினேனோ தெரியாது. பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிய கனவு கொண்டு திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்தேன். ரயில் ஓடாமல் நிற்கிறது என்று தெரிந்தது. நிற்கிற இடம் ஸ்டேஷன் இல்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. ஸ்டேஷன் என்றால் அதற்கென்று தனி உரிமையுள்ள சில சப்தங்கள் கேட்கும். வண்டியில் இடம் பிடிக்க ஓடுகிறவர்களின் நடமாட்டம், ஏறி இறங்குகிறவர்களுடைய ஆர்ப்பாட்டம், ‘கரம் சா’ ‘கரம் தூத்’ கூப்பாடு, போர்ட்டர்களின் ஆரவாரம் - இவற்றிலிருந்து ரயில் பெரிய ஜங்ஷனிலோ சிறிய ஸ்டேஷனிலோ நிற்கிறதென்பதைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இங்கே அம்மாதிரி சப்தங்கள் இல்லை. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து இனந்தெரியாத சப்தங்கள் கேட்டன. வண்டியின் பலகணி ஒன்றைத் திறந்து உள்ளே குப் என்று புகுந்த குளிர்ந்த பனிக் காற்றைப் பொருட்படுத்தாமல் வெளியே தலையை நீட்டினேன். என்னைப் போலவே பல தலைகள் வண்டிக்கு வெளியே நீட்டப்பட்டிருந்தன. ஒரு சிலர் கீழே இறங்கி ரயிலோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு பட்டணம் இருப்பது தெரிந்தது. எப்படித் தெரிந்தது என்றால், அந்தப் பட்டணத்தில் ஆங்காங்கே சில வீடுகள் தீப்பிடித்து எரிய, மேற்படி தீயின் வெளிச்சத்தில் பட்டணம் தெரிந்தது! பட்டணம் தெரிந்த திசையிலிருந்து படார், படார் என்று துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது. அடுத்த வண்டியிலிருந்து தலையை நீட்டியவரைப் பார்த்து, “என்ன ஸார், விசேஷம்! ரயில் எங்கே வந்திருக்கிறது?” என்று கேட்டேன். “ரட்லம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்திருக்கிறது; டவுனில் ஏதோ கலாட்டா நடப்பது போல் காண்கிறது!” என்றார். ஆஜ்மீர் ஸ்டேஷனில் டிக்கட் குமாஸ்தா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். சில நிமிஷத்துக்கெல்லாம் ரயில் கார்டின் விஸில் சப்தம் கேட்டது; ரயிலும் புறப்பட்டது. மெதுவாக நகர்ந்து சென்று கை காட்டி மரத்தைத் தாண்டி ரட்லம் ஸ்டேஷனுக்குள் போய் நின்றது. வண்டியிலிருந்த சிப்பாய்கள் முதலியோர் மளமளவென்று கீழே இறங்கினார்கள். பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் ஜனங்கள் கும்பல் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் போன ஸ்டேஷன் அதிகாரி ஒருவரை நிறுத்தி, “என்ன ஐயா விசேஷம்? வண்டி இதற்கு மேல் போகுமா? போகாதா?” என்று கேட்டேன். அவர் தமது வாயிலிருந்த சிகரெட்டை எனக்குப் பதில் சொல்வதற்காக எடுக்கலாமா, வேண்டாமா என்று சிறிது யோசனை செய்துவிட்டுப் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய், “கொஞ்ச தூரத்துக்கப்பால் ரயில் பாதை சேதமாயிருக்கிறது. செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் பொழுது விடிந்தபிறகுதான் ரயில் புறப்படும்” என்றார். உடனே நான் படுக்கையை சுற்றிக் கட்டினேன். களைந்து வைத்த உடுப்பைப் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு போர்ட்டரைக் கண்டுபிடித்துப் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொள்ளச் செய்தேன். மேற்பாலத்தில் ஏறி இறங்கி முதல் நம்பர் பிளாட்பாரத்தில் இருந்த வெயிட்டிங் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன். வெயிட்டிங் ரூமில் விளக்கு எரியவில்லை. வெளியில் பிளாட்பாரத்து விளக்கிலேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்தது. அறை அடியோடு காலி என்று முதலில் தோன்றியது. அப்புறம் சுற்றும் முற்றும் நன்றாய்ப் பார்த்ததில் அந்த எண்ணம் தவறு என்று தெரிந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தாழ்ந்த பிரம்புக் கட்டிலில் ஒரு மனிதர் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பியிருந்தபடியால் அவர் யார், இன்ன மாதிரி மனிதர் என்று இனம் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வட்ட மேஜையும், அதன் இரண்டு பக்கங்களில் இரண்டு நாற்காலிகளும் கிடந்தன. சாமான்களைக் கீழே வைக்கச் சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். போர்ட்டரிடம் மறுபடியும் ரயில் கிளம்பும் போது வந்து கூப்பிடும்படி சொன்னேன். போர்ட்டர் போன பிறகு சிறிது நேரம் வட்ட மேஜை மீது கைகளை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் பிறப்பு வளர்ப்பைப் பற்றியும், வாழ்க்கையில் நான் அடைந்த அனுபவங்களைப் பற்றியும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி முன் பின் தெரியாத ஒரு வடநாட்டு ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நள்ளிரவில், நான் தன்னந் தனியாக உட்கார்ந்திருப்பேன் என்று நாலைந்து வருஷங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், சொல்லியவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் சூட்டியிருப்பேன். என்ன அர்த்தமற்ற காரியம் இது? என் வாழ்க்கையையே இப்படி அர்த்தமற்றதாகத்தான் போய் விடுமோ? ‘டப் டப் டப்பார்’ என்று துப்பாக்கி வெடிச் சத்தம் மறுபடியும் கேட்டது. சுவருக்கருகில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதர் ஒரு தடவை புரண்டு படுத்தார். மறுபடியும் ஒரு நொடிப் பொழுதில் அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பி விட்டது. ஜே ஹிந்த்! என்னுடைய கண்ணிமைகளும் லேசாக வளைந்து கொடுக்கத் தொடங்கின. படுக்கையைத் தரையில் விரித்துக் கொண்டு படுக்கலாமென்று எண்ணி நாற்காலியிலிருந்தபடியே குனிந்து படுக்கையைப் பிரித்தேன். அப்போது யாரோ ஒருவர் அந்த அறைக்குள்ளே வருவது தெரிந்தது. குனிந்தபடியே கடைக்கண்ணால் வருவது யார் என்று கவனித்தேன். அவ்வளவுதான்; என் கைகள் வெட வெட என்று நடுங்கத் தொடங்கின. படுக்கையைக் கட்டியிருந்த தோல் வாரைக் கழற்ற முடியவில்லை. வெளியே எங்கேயோ தூரத்தில் கேட்ட துப்பாக்கி வெடியின் சத்தம் இப்போது என் நெஞ்சுக்குள்ளே வெடிப்பது போல் கேட்டது. சட்டென்று ஒரு பெரு முயற்சி செய்து மனதை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உள்ளே வந்த மனிதர் சுவர் ஓரமாகப் பெட்டி படுக்கையை வைத்து விட்டு வந்து எனக்கெதிரே வட்ட மேஜைக் கருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். முதலில் அவர் என்னைப் பார்க்கவில்லை. வெயிட்டிங் ரூமில் வாசல் வழியாகப் பிளாட்பாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு, நான் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்ததினால் தானோ என்னமோ, என் பக்கமாகப் பார்த்தார். முதலில் அசட்டையாகப் பார்த்தார்; பிறகு உற்றுப் பார்த்தார். “ஜே ஹிந்த்!” என்றார். அந்தக் குரலும் வார்த்தைகளும் என் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த எத்தனையோ உணர்ச்சிகளைப் பொங்கும்படிச் செய்தன. மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளையும் கண்களிலே துளிக்கப் பார்த்த கண்ணீரையும் அடக்கிக் கொண்டு கம்மிய குரலில் நானும் “ஜே ஹிந்த்!” என்று வாழ்த்தினேன். “தமிழர் போலிருக்கிறது” என்றார். “ஆமாம்!” என்றேன். “நாம் எங்கேயாவது சந்தித்திருக்கிறோமா? உமது முகம் பார்த்த முகமாய்த் தோன்றுகிறது; ஆனால் எங்கே பார்த்தோமென்று ஞாபகம் வரவில்லை” என்றார். அவருக்கு ஞாபகம் வராததற்கு மங்கலான வெளிச்சத்தைத் தவிர வேறு காரணமும் உண்டு என்பதை நான் அறிந்திருந்தேன். பேச்சைத் திருப்ப விரும்பினேன். “பர்மா அல்லது மலாயில் பார்த்திருக்கலாம். அந்த குழப்பமான காலத்தில் பார்த்த பதினாயிரம் முகங்களில் எதையென்று ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்?” என்று சொல்லி, மேலே அவர் பேச இடங்கொடாமல், “இந்த இருளடைந்த ஸ்டேஷனிலிருந்து ரயில் எப்போது கிளம்பும், ஏதாவது தெரியுமா?” என்று கேட்டேன். “அதுதானே தெரியவில்லை. நீங்கள் எந்தப் பக்கம் போக வேண்டுமோ?” “பம்பாய்ப் பக்கம் போகிறேன்.” “நான் டில்லிக்குப் போக வேண்டும்.” “டில்லிக்கா? நீங்கள் டில்லி செங்கோட்டையில் நடந்த விசாரணையில்…” என்று தயங்கினேன். “இல்லை; நான் செங்கோட்டைக் கைதியில்லை. பர்மாவிலிருந்து நேரே வந்தவன், செங்கோட்டையிலிருந்து விடுதலையான ஒரு மனிதரைத் தேடிக் கொண்டு பம்பாய்க்குப் போனேன். அதற்குள்ளே அவர் பம்பாயிலிருந்து கிளம்பிப் போய்விட்டதாகத் தெரிந்தது… உங்களுக்கு மேஜர் ஜெனரல் குமரப்பாவைத் தெரியுமா!” என்று அவர் திடீரெனக் கேட்டார். “குமரப்பாவைத் தெரியாமலிருக்க முடியுமா? நேதாஜிக்கு அடுத்தபடியாக ஐ.என்.ஏ. வீரர்களின் பக்தியைக் கவர்ந்த மகாபுருஷர் அல்லவா?” “ஆமாம்; அந்த மகா புருஷரைத் தேடிக் கொண்டுதான் போகிறேன். எதற்காகத் தெரியுமா?” “தெரியவில்லையே?” என்று தயங்கிக் கூறினேன். அவர் தம்முடைய கால் சட்டையின் பைக்குள்ளே கையை விட்டு ஒரு ரிவால்வரை எடுத்து என் முகத்துக்கு நேரே அதைப் பிடித்தார். “இதிலே ஆறு குண்டுகள் இருக்கின்றன. ஆறில் ஐந்து குண்டுகளையாவது குமரப்பாவின் மார்பில் செலுத்துவதற்காகத்தான். ஒன்று, இரண்டு, மூன்று…” என்னுடைய உள்ளத்தில் அப்போது குமுறி எழுந்த அலைகளை அடக்கிக் கொண்டு, “இது என்ன பேச்சு பேசுகிறீர்கள்? தயவுசெய்து ரிவால்வரைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்!” என்றேன். அவர் அப்படியே செய்தார். பிறகு இரண்டு கைகளாலும் சிறிது நேரம் முகத்தை மூடிக் கொண்டிருந்தார். “ஏதோ ரொம்பவும் மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!” என்றேன். அவர் தமது முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு, “இந்தப் பிரயாணம் தடைப்பட்டதினால் ரொம்பவும் மனத்தளர்ச்சியடைந்து விட்டேன். தயவு செய்து மன்னியுங்கள்” என்றார். “ரயில் இன்று இரவு கிளம்பப் போவதில்லை. நம் இருவருக்கும் தூக்கம் வரவும் இல்லை. நீங்கள் உங்கள் அநுபவங்களைச் சொன்னால், நானும் பிற்பாடு என் கதையைச் சொல்கிறேன். இராத்திரி பொழுது போகும்” என்றேன். “நீரும் ஐ.என்.ஏ. சகோதரர்; அதிலும் தமிழ் நாட்டாராயிருக்கிறீர். உம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது? ஆனால் கதையை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்று தான் யோசிக்கிறேன்!” “சுதந்திரப் படையில் தாங்கள் சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கலாமே?” என்றேன். “இல்லை, இல்லை; கதையைச் சொல்வதாயிருந்தால் முதலிலிருந்தே தொடங்குவதுதான் சரி!” என்று சொல்லிவிட்டு, சுவர் ஓரமாகக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதரைத் திரும்பிப் பார்த்தார். “அவர் அசந்து தூங்குகிறார். மேலும் யாரோ வடக்கத்தி மனுஷர் என்று தோன்றுகிறது. நாம் தமிழில் பேசினால் அவருக்கு என்ன தெரியப் போகிறது?” என்றேன். இன்னும் கொஞ்சம் தாஜா பண்ணிய பிறகு அவர் தமது கதையைச் சொல்ல ஆரம்பித்தார். கர்னல் குமரப்பா கதாநாயகனுடைய பெயர் டாக்டர் ராகவன். செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய தகப்பனார் ஒரு பிரபல டாக்டர். தமது புதல்வனும் தம்மைப் போல் வைத்தியத் தொழிலில் பிரபலமாக வேண்டுமென்று அவர் விரும்பினார். தந்தையின் விருப்பத்தைப் புதல்வன் வெகு நன்றாக நிறைவேற்றி வைப்பான் என்று தோன்றியது. வைத்தியக் கல்லூரியில் படித்து மிகச் சிறப்பாகத் தேறினான். பிறகு அவன் தமக்கு உதவியாகப் ‘பிராக்டிஸ்’ செய்ய வேண்டுமென்று தந்தை விரும்பினார். ஆனால் பையனுக்கு வைத்திய சாஸ்திரத்தில் ஏற்பட்டிருந்த அபார மோகமானது அதற்கு குறுக்கே நின்றது. “நமது மெடிகல் காலேஜில் இப்போது சொல்லிக் கொடுப்பதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாலிருந்த வைத்திய சாஸ்திரம். சென்ற பத்து வருஷத்தில் எத்தனையோ அதிசயங்களை மேனாட்டு வைத்திய நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்குப் போய் அவற்றைக் கற்றுக் கொண்டு வருகிறேன்” என்றான். பிள்ளையின் பிடிவாதமான கோரிக்கைக்குத் தகப்பனாரும் சம்மதிக்க வேண்டியிருந்தது. ராகவன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகும் அவன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கக் கூடவில்லை; பெரிய கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சம்பளமில்லாத உதவி ஸர்ஜனாகச் சேர்ந்தான். அவ்விதம் ஆஸ்பத்திரியில் வேலை செய்தால் தான் தன்னுடைய வைத்திய சாஸ்திர அறிவு விசாலித்துப் பரிபூரணம் அடையும் என்று சொன்னான். மகனுடைய நோக்கத்தை அறிந்து தகப்பனார் பெருமையடைந்தார். இவன் வெறுமே பணம் சம்பாதிப்பதற்காக வைத்தியம் செய்யப் பிறந்தவன் அல்ல. வைத்திய சாஸ்திரத்தையே விரிவுபடுத்தி மனித வர்க்கத்துக்கு நன்மை செய்யப் பிறந்தவன் என்று தீர்மானித்து அப்படியே செய்ய அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்துச் சில காலத்துக்கெல்லாம் அவர் வைத்தியம் என்பதே தேவையில்லாத மேல் உலகத்துக்குச் சென்றார். தந்தையினுடைய சரமக்கிரியைகளைச் சரிவரச் செய்வதற்குக் கூட டாக்டர் ராகவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவ்வளவுதூரம் அவன் வைத்தியக்கலை அறிவின் வளர்ச்சியில் முழுகிப் போயிருந்தான். அவன் வேலை செய்த பெரிய ஆஸ்பத்திரியில் அவனுடைய இலாகாவுக்குத் தலைவராயிருந்தவர் கர்னல் குமரப்பா என்பவர். அவர் ஐ.எம்.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்தவர். சென்ற யுத்தத்தின் போது, போர்க்களத்துக்குப் போய் வந்தவர். பிற்பாடு ஐரோப்பாவுக்குச் சென்று வியன்னா நகரிலும் பெர்லின் நகரிலும் இருந்த பிரபலமான வைத்திய சாலைகளில் கொஞ்ச காலம் இருந்து தமது வைத்தியக் கலை ஞானத்தை வளர்த்துக் கொண்டு திரும்பியிருந்தார். எனவே வைத்திய உலகத்தில் அவருக்கு மிகவும் பிரசித்தமான பெயர் ஏற்பட்டிருந்தது. “யமதர்ம ராஜனுக்கு ஏதாவது ஆப்ரேஷன் பண்ணிக் கொள்ள நேர்ந்தால் அவன் கூடக் கர்னல் குமரப்பாவிடம் வந்துதான் ஆக வேண்டும்” என்று சொல்வார்கள். அத்தகையவர்களின் கீழே வேலை செய்வதால் தன்னுடைய வைத்திய ஞானத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ளலாம் என்று டாக்டர் ராகவன் எண்ணியிருந்தான். ஆனால் இது விஷயத்திலும் சீக்கிரத்திலே ஏமாற்றம் அடைந்தான். கர்னல் குமரப்பா இரண சிகிச்சையில் பெரிய நிபுணராயிருக்கலாம்; ஆனால் அவருக்கு வைத்தியக் கலையில் அவ்வளவு சிரத்தையில்லை என்று தோன்றியது. பல முக்கியமான ரண சிகிச்சை கேஸுகளை அவர் தமக்கு உதவியாக அமர்ந்த டாக்டர்களிடம் விட்டு வந்தார். ஏதாவது சந்தேகம் கேட்டால் சரியாகப் பதில் சொல்வதில்லை. கேள்வியை மனதில் சரியாக வாங்கிக் கொள்ளாமலே எதையோ கேட்பதற்கு எதையோ பதில் சொல்வது வழக்கமாயிருந்தது. கரனல் குமரப்பா இப்படி மெய்ம்மறந்து எதிலும் சிரத்தையில்லாமல் ஏனோதானோ என்றிருப்பதற்கு ஒரு கெடுதலான காரணத்தைச் சிலர் கற்பித்துச் சமிக்ஞையாகப் பேசினார்கள். முதலில் அதை டாக்டர் ராகவன் கொஞ்சங் கூட நம்பாததோடு அப்படிப் பேசினவர்களைக் கடுமையாகக் கண்டித்தான். அந்த விஷயம் பின்வருமாறு: மெடிகல் காலேஜில் படித்துத் தேறியிருந்த டாக்டர் ரேவதி என்ற பெண் சென்ற வருஷத்தில் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருஷப் பயிற்சி பெரும் பொருட்டு, ‘ஹவுஸ் ஸர்ஜனாக’ வந்திருந்தாள். அவள் தேசத் தொண்டில் பிரசித்தி பெற்றிருந்த காலமான ஒரு தேச பக்தரின் மகள். கர்னல் குமரப்பா அந்தப் பெண்ணிடம் அளவுக்கு அதிகமான அபிமானம் காட்டுகிறார் என்று பொறாமைக்காரர்கள் சிலர் புகார் செய்தார்கள். இதைக் குறித்து ஆஸ்பத்திரிக்குள்ளேயும் வெளியேயும் சிலர் ஜாடைமாடையாகப் பேசினார்கள். இந்த மாதிரிப் பேச்சு காதில் விழுந்தபோதெல்லாம் டாக்டர் ராகவன் பளிச்சென்று, "இந்த தேசத்தில் மனதில் அசுத்தம் உள்ளவர்கள் யாரைப் பற்றியாவது ஏதேனும் அவதூறு சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தங்களுடைய மனதிலுள்ள அசிங்கத்தைப் பிறர் மேல் ஏற்றி வைத்துப் பேசுவார்கள்" என்று வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடுவான். காதல் யாத்திரை எனினும் டாக்டர் ரேவதியின் மேல் கர்னல் குமரப்பாவின் விசேஷ அபிமானத்தைப் பற்றிக் கேட்ட பிறகு அவனுடைய கவனம் டாக்டர் ரேவதியின் மீது அதிகமாகச் செல்ல ஆரம்பித்தது. இது ரேவதியின் கவனத்தையும் கவர்ந்தது. முதல் தடவை பேசின உடனேயே ரேவதிக்கும் ராகவனுக்கும் சிநேகப் பான்மை ஏற்பட்டுவிட்டது. இதைக் ‘காதல்’ என்று யாராவது சொல்லியிருந்தால் சுத்த பைத்தியக்காரத்தனம் என்றுதான் டாக்டர் ராகவன் சொல்லியிருப்பான். ஆயினும் வரவர, காவியங்களிலே காதல் என்பதற்கு என்னென்ன இலட்சணங்கள் கூறப்பட்டிருக்கின்றனவோ, அவையெல்லாம் ராகவன் - ரேவதியினுடைய நடவடிக்கைகளில் காணப்படலாயின. ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் அடிக்கடி சந்திக்கப் பிரயத்தனப் பட்டார்கள். ஒருவருடைய பேச்சு இன்னொருவருடைய காதுக்கு மிகவும் இனிமையளித்தது. தங்களை அறியாமலேயே ஒருவருடைய கண்கள் இன்னொருவருடைய கண்களை நாடிச் சென்றன். அதோடு நின்றுவிடவில்லை. சில நாளைக்கெல்லாம் டாக்டர் ராகவனுடைய மனதில் பொறாமை என்னும் தீ பற்றி எரியத் தொடங்கியது. டாக்டர் ரேவதி வேறு எந்த ஆண் டாக்டரோடாவது நெருங்கிப் பேசுவதைப் பார்த்தால் ராகவனுக்குக் கோபம் வந்தது. எந்த ஆண் நோயாளியிடமாவது ரேவதி சிரத்தை எடுத்துக் கவனித்தாலும் கூட ராகவனுக்குப் பொறுக்க முடியவில்லை. இந்த நிலையில் டாக்டர் குமரப்பாவையும், ரேவதியையும் பற்றிய வம்புகள் பேச்சுக்கள் ராகவனுடைய நினைவுக்கு அடிக்கடி வந்து உறுத்தத் தொடங்கின. அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாமென்று அவன் மனம் யோசனை செய்யத் தொடங்கியது. டாக்டர் குமரப்பாவைத் தனிமையாக அவருடைய அறையில் பார்த்துவிட்டு ரேவதி திரும்பும் போது, ராகவன் அவளைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கினான். அப்போதெல்லாம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக படபடப்புடன் அவள் வருவதையும் சில சமயம் அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்திருப்பதையும் பார்த்த போது அவனுடைய உள்ளம் கொதித்தது. ரேவதியை இதைப் பற்றிக் கேட்டே விடுவது என்று அவன் முடிவாகத் தீர்மானித்திருந்த சமயத்தில் ஒரு நாள் அவனிடம் வந்து, "டாக்டர், நான் பெரிய அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுடைய யோசனையும் உதவியும் எனக்கு வேண்டும்" என்று பரபரப்புடன் கூறினாள். அன்று மாலை ஆஸ்பத்திரி வேலை முடிந்தவுடன் தன்னுடைய வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி சொன்னான் ராகவன். அப்படியே அன்றிரவு ரேவதி ராகவனுடைய வீட்டுக்குச் சென்று தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறினாள். வாழ்நாளெல்லாம் தேசத் தொண்டு செய்த தன் தந்தை எப்படி பூர்வீக பிதிரார்ஜித சொத்தையெல்லாம் செலவழித்து விட்டுக் குடும்பத்தை நிராதரவாய் விட்டு விட்டுக் காலமானார் என்பதையும், தன்னைத் தக்க இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்கத் தன் தாயார் செய்த பிரயத்தனங்கள் எப்படிப் பலனளிக்காமல் போயின என்பதையும், தன்னுடைய சொந்த முயற்சியால் அநாதைப் பெண்கள் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து தேறி மெடிகல் காலேஜிலும் சேர்ந்து படித்து டாக்டர் ஆனதையும் பற்றித் தெரிவித்தாள். கர்னல் குமரப்பா முதலில் தன்னிடம் காட்டிய அன்பைக் குறித்துப் பெருமையடைந்து வந்ததையும், மற்றவர்களின் அவதூறான ஜாடைமாடைப் பேச்சுக்களை அலட்சியம் செய்து வந்தது பற்றியும் குறிப்பிட்டாள். கடைசியாக ரேவதி சொன்னாள்: "டாக்டர் ராகவன்! கொஞ்ச நாளாக எனக்கே இது விஷயத்தில் சந்தேகம் உண்டாயிருந்தது. கர்னலின் நடை உடை பாவனைகள் அவ்வளவு நன்றாயில்லை. அவரை நான் தனியாக அவருடைய அறையில் சந்திக்க நேரும் போதெல்லாம் என் முதுகில் தட்டிக் கொடுத்தும் கன்னங்களைத் தொட்டும் முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டும் “ரேவதி! உன்னைத் தான் நான் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறேன். ஒரு சமயம் வரும்; அப்போது என்னை நீ நம்பி நான் சொன்னபடி கேட்க வேண்டும்; கேட்பாயல்லவா?” என்று இவ்விதமெல்லாம் சொல்கிறார். இன்றைக்கு அவர், ‘ரேவதி நான் மறுபடியும் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன், என்னோடு நீ கிளம்பி வருகிறாயா?’ என்று கேட்டபோது எனக்கு ஆத்திரம் உண்டாகி என் கண்களில் கண்ணீரும் வந்துவிட்டது. அதைப் பார்த்த கர்னல், ‘ஆ! நீ ரொம்ப நல்ல பெண்ணாயிருந்தாய்! உன்னிடம் நான் எவ்வளவோ எதிர்பார்த்தேன். என்னுடைய காரியத்துக்குக் கைகொடுப்பாய் என்று நம்பியிருந்தேன்; அந்த மூடன் ராகவன் உன் மனதைக் கெடுத்து விட்டான்!’ என்றார். பிறகு அங்கே நிற்க முடியாமல் விரைந்து வந்துவிட்டேன்!" இவ்விதம் ரேவதி கூறியதைக் கேட்டு கொண்டிருந்த ராகவன் சிறிதுநேரம் மௌனமாக ஆலோசனையில் இருந்தான். பிறகு, "என் அருமை ரேவதி! ஒரு விஷயம் கேட்கிறேன். அதற்குச் சங்கோசப்படாமல் பதில் சொல்ல வேண்டும். கர்னல் குமரப்பா மனைவியை இழந்தவர் என்பது உனக்குத் தெரியும். ஒரு வேளை உன்னை இரண்டாந்தாரமாக கல்யாணம் செய்துகொள்ள அவர் விரும்பலாம் அல்லவா?" என்றேன். “அந்தச் சந்தேகம் என் மனதிலும் சில சமயம் தோன்றியதுண்டு” என்று ரேவதி சொன்னாள். “அப்படியானால் அதைப்பற்றி உனக்கு என்ன ஆட்சேபம்? கர்னல் குமரப்பாவை மணந்து கொள்ளும் பாக்கியம் தள்ளக்கூடியதல்லவே?” என்ற கூறி, ரேவதியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான் ராகவன். “ஒருவேளை மூன்று மாதத்துக்கு முன்னால் அவர் கேட்டிருந்தால் அதில் எனக்கு ஆட்சேபமிருந்திராது. இப்போது ஆட்சேபமிருக்கிறது” என்றாள் ரேவதி. “அது ஏன்? மூன்று மாதத்திற்குள் அதற்கு விரோதமாக என்ன காரணம் ஏற்பட்டிருக்கிறது?” “தங்களுடன் சிநேகம் செய்து கொண்டது தான்!” என்று ரேவதி கூறியபோது, என்னதான் அவள் கல்வியும் நாகரிகமும் படைத்த நவயுகப் பெண் ஆனாலும் கொஞ்சம் தலை குனியத்தான் செய்தாள். ரேவதி இவ்விதம் தன் மனோநிலையை ஒருவாறு குறிப்பிட்ட பிறகு, பரஸ்பரம் இருவரும் தத்தம் இருதயத்தை நன்றாய்த் திறந்து காட்டுவதற்கு வழி ஏற்பட்டது. ராகவனுடையை வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளவும், அவனுக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யவும் ரேவதி சித்தமாயிருந்தாள் என்று ஏற்பட்டது. ராகவனோ ரேவதியின் கடைக்கண் பார்வைக்காக, பாரதியார் வாக்கின் பிரகாரம் நூற்றிரண்டு மலைகளைப் பொடிப் பொடியாக்கவும் காற்றிலேறி விண்ணைப் பிளக்கவும் தயாராயிருந்தான். கடைசியில் ராகவன் சொன்னான்:-“என் கண்ணே! பொறாமையும், பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த தேசமே எனக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் வழியில் நான் மலாய் நாட்டில் இறங்கிச் சில நாள் தங்கியிருந்தேன். பூலோகத்தில் சொர்க்கம் உண்டு என்று சொன்னால் அது மலாய் நாடுதான். அந்த நாட்டுக்கு நாம் போய் விடலாம், வருகிறாயா?” மேற்படி யோசனையை மறு பேச்சின்றி ரேவதி ஒப்புக் கொண்டாள். தீர்மானம் செய்த ஒரு மாதத்துக்கெல்லாம் இருவரும் கப்பலேறி மலாய் நாட்டை அடைந்தார்கள். கோலாலம்பூரில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றரை வருஷ காலம் அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் சொர்க்க வாழ்க்கையாகவே இருந்து வந்தது. நேதாஜி விஜயம் நிர்மலமான நீல வானத்திலிருந்து திடீரென்று இடி விழுந்தது போல், ஒரு நாள் ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கி யுத்தம் தொடங்கிய செய்தி வந்தது. அதன் பலனாகப் பிரிட்டன் ஜப்பான் மீது போர் தொடங்கியது. சிங்கப்பூரில் இரண்டு பிரமாண்டமான பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் ஜப்பான் ஆகாச விமானிகளால் தாக்குண்டு கடலுக்கடியில் சென்றன. சில நாளைக்கெல்லாம் மலாய் நாட்டின் மீது ஜப்பானின் படையெடுப்புத் தொடர்ந்தது. சரித்திரத்திலேயே இல்லாத மிகவும் சொற்ப காலத்தில் மலாய் நாடு ஜப்பானுடைய வசமாயிற்று. அப்போதெல்லாம் ராகவனும் ரேவதியும் ஒரே பீதியிலும், கவலையிலும் ஆழ்ந்திருந்தார்கள். ஜப்பானியக் கொலைகாரர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் பயங்கர விபரீதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைவெட்டி ராஜாங்கத்தில் எந்த நிமிஷம் யாருடைய தலைக்கு ஆபத்துவருமோ, யார் கண்டது? சாக நேர்ந்தால் இருவரும் கை கோர்த்துக் கொண்டு சாக வேண்டுமென்று அவர்கள் திட சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். இப்படிச் சில மாத காலம் சென்றது. பிறகு அந்த மகத்தான சம்பவம் உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கூடிய சம்பவம் ஏற்பட்டது. ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் மலாய் நாட்டுக்கு வந்து சுதந்திர இந்திய அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அவருடைய அரசாங்கம் ஆட்சி புரிவதற்கு அப்போது ஒரு சாண் அகல பூமி இல்லாவிட்டாலும், மலாய் நாட்டிலுள்ள இந்தியர்கள் எல்லோரும் தாங்கள் சுதந்திர இந்திய அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம் என்ற உணர்ச்சி பெற்றார்கள். அவர்களுடைய தோள்கள் பூரித்து உயர்ந்தன. அவர்கள் மார்புகள் விசாலித்து நிமிர்ந்தன. இதற்கு முன் எக்காலத்திலும் அறிந்திராத பெருமித உற்சாகமும் குதூகலமும் அவர்களுடைய உள்ளத்தில் பொங்கித் ததும்பின. நேதாஜியின் சுதந்திர இந்திய அரசாங்கத்தைப் பல தேசத்து அரசாங்கங்கள் அங்கீகரித்தன. அதற்கு முன்னால் இந்தியர்களைப் புழுக்களைப் போல் மதித்து நடத்திய ஜப்பானியர், நேதாஜியின் வருகைக்குப் பிறகு இந்தியரிடம் மிக்க மரியாதை காட்டத் தொடங்கினார்கள். இந்தியரின் உயிருக்கும், சொத்து சுதந்திரங்களுக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பட்டது. நேதாஜியின் நோக்கம் என்னவென்பது சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. இந்திய சுதந்திர சைன்யம் ஒன்றை அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்று பிரிட்டிஷாரைத் துரத்தி விட்டு புது தில்லியில் பூரண சுதந்திரக் கொடியை உயர்த்துவது தான் அவருடைய உத்தேசம் என்று தெரிந்தது. இந்த எண்ணத்துடன் நேதாஜி இந்திய சுதந்திரப் படை திரட்டத் தொடங்கினார். அதுவரையில் எச்சிற் கையினால் காக்கை ஓட்டாத லோபிகளாயிருந்தவர்கள் உள்பட மலாயிலும் பர்மாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். கனவிலே கூடப் போர்க்களம் செல்வது பற்றி எண்ணி அறியாதவர்கள் நேதாஜியின் சுதந்திரப் படையில் சேரத் தொடங்கினார்கள். அப்படி சுதந்திரப் படையில் முதன் முதலில் சேர்ந்தவர்களில் டாக்டர் ராகவனும், டாக்டர் ரேவதியும் இருந்தனர். தங்கள் மூலமாகப் பாரதத் தாயின் விடுதலை நடைபெற வேண்டியிருக்கிறதென்றும், அதனாலேதான் தங்களைக் கடவுள் மலாய் நாட்டில் கொண்டு வந்து சேர்த்தார் என்றும் இப்போது அந்தத் தம்பதிகள் பூரணமாக நம்பினார்கள். மலாயிலிருந்து பர்மாவுக்குப் போன முதல் கோஷ்டியோடு புறப்பட்டுச் சென்றார்கள். சில தினங்களுக்கெல்லாம் ரங்கூனிலிருந்து இந்திய சுதந்திரப் படையானது ‘ஜே ஹிந்த்!’ ‘டில்லி சலோ!’ என்று வானளாவக் கோஷமிட்டுக் கொண்டும், “கதம் கதம் படாயே ஜா குஷீகே கீத காயே ஜா” என்னும் சுதந்திரப் போர் கீதத்துடனும் அஸ்ஸாம் எல்லைப் புறத்தை நோக்கிக் கிளம்பியது. கிளம்பிய போது அந்தப் படையைச் சேர்ந்தவர்களின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. நேதாஜி நேரில் வந்திருந்து அவர்கள் புறப்படும் போது பேசிய பேச்சு மரக்கட்டைக்குக் கூடச் சுதந்திர வீர உணர்ச்சியை ஊட்டக் கூடியதாயிருந்தது. அப்படியிருக்க, ஏற்கனவே தாய் நாட்டின் விடுதலைக்காக உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்யச் சித்தமாயிருந்தவர்களைப் பற்றிக் கேட்பானேன்? புது டில்லியில் சுதந்திரக் கொடியை உயர்த்தி நேதாஜியை இந்தியக் குடியரசின் முதல் அக்கிராசனராகச் செய்யும் வகையில் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லையென்று பிரக்ஞை செய்து கொண்டு அவ்வீரர்கள் கிளம்பினார்கள். அத்தகைய சுதந்திர ஆவேச வெறி டாக்டர் ராகவனையும் கொள்ளை கொண்டிருந்தது. ஆயினும் அவனுடைய உற்சாகத்தை ஓரளவு குறைப்பதற்குரிய இரு காரணங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ரேவதியைப் பிரிந்து போக வேண்டியிருக்கிறதே என்பது. ஏனெனில் ரேவதி சேர்ந்திருந்த பெண்கள் படை போர் முனைக்கு உடனே அனுப்பப்படவில்லை. இவ்விதம் ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது அவர்கள் இருவருக்குமே மனவேதனையை அளித்தது. என்றாலும், அவர்கள் ஈடுபட்டிருந்த மகத்தான இலட்சியத்தை முன்னிட்டு ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு பிரியத் தயார் ஆனார்கள். மறுபடியும் சந்தித்தால் சுதந்திரப் பாரத தேசத்தில் சந்திப்பது, இல்லாவிடில் வீர சொர்க்கத்தில் சந்திப்பது என்று ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பிரிந்தார்கள். ரேவதியின் பிரிவினால் ஏற்பட்ட மனச் சோர்வை ஒருவாறு ராகவன் சமாளித்துக் கொண்டான். ஆனால் வேறொரு காரணத்தினால் மனதில் ஏற்பட்ட சங்கடம் அவ்வளவு சுலபமாக சமாளிக்கக் கூடியதாயில்லை. அந்தக் காரணம் ராகவன் சேர்ந்திருந்த சுதந்திரப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் குமரப்பா என்பதுதான்! முதலில் இந்த உண்மை தெரிந்ததும் ராகவன் ஆச்சரியத்தினால் திகைத்துப் போனான். விசாரித்து அவர் எப்படி இந்திய சுதந்திரப் படையில் மேஜர் ஜெனரல் ஆனார் என்பதைத் தெரிந்து கொண்டான். பர்மாவை ஜப்பானியரிடமிருந்து பாதுகாப்பதற்காக முதன் முதலில் ரங்கூனுக்கு வந்த மதராஸிப் படையில் ஐ.எம்.எஸ்.டாக்டர் என்ற முறையில் அவர் வந்து சேர்ந்த சில நாளைக்குள்ளே ஜப்பானியரால் நாற்புறமும் சூழப்பட்டு சரணாகதி அடைய நேர்ந்தது. சரணாகதி அடைந்தவர்கள் எல்லோரும் முதலில் சிறையில் வைக்கப் பட்டிருந்தார்கள். பிறகு, அவர்களிலே நேதாஜியின் சுதந்திரப் படையில் சேர இசைந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி விடுதலையானவர்களில் கர்னல் குமரப்பாவும் ஒருவர். நேதாஜியின், விசேஷ அபிமானத்துக்கு அவர் சீக்கிரத்தில் பாத்திரராகி சைன்யத்தின் டாக்டராக இருப்பதற்குப் பதிலாக மேஜர் ஜெனரல் என்ற பட்டத்துடனே ஒரு பெரிய சைன்யப் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையெல்லாம் அறிந்த பிறகு ராகவனுடைய ஆச்சரியம் நீங்கிற்று. ஆனால் மனதில் ஒருவித திகில் மட்டும் இருந்து கொண்டிருந்தது. மேலும் ஜெனரல் குமரப்பா நமது கதாநாயகன் ராகவனை ஏற்கனவே தெரிந்தவர் என்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ராகவனுடைய மன அமைதி குலைவதற்கு பெரிதும் காரணமாயிருந்தது. கிராதகன் உள்ளம் வழிப் பிரயாணத்தில் நேர்ந்த சகிக்க முடியாத கஷ்டங்களையெல்லாம் உள்ளத்தின் உறுதியினால் சகித்துக் கொண்டு ராகவனுடைய படை காட்டுப் பாதைகளிலும், மலை வழிகளிலும் பல நூறு மைல் தூரம் பிரயாணம் செய்து கிட்டத்தட்ட அஸ்ஸாமின் எல்லைப் புறத்தை அடைந்தது. அந்த வீர சுதந்திரப் படைக்கு அங்கே ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அந்தப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அதற்குள்ளாக புது டில்லியை அடையப் போகிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டான். இந்தியாவின் எல்லைக்குள்ளே அடியெடுத்து வைத்து இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் நேதாஜிக்காகவும் ஒரு துப்பாக்கி வேட்டாவது தீர்த்து விட்டு சாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது கூட முடியாத காரியம் என்று தெரிய வந்தது. அவர்களுக்கு முன்னால் வந்திருந்த இந்திய சுதந்திர சேனையின் வீரர்கள் ஏற்கெனவே இந்தியாவின் எல்லைக்குள்ளே பிரவேசித்து இம்பால் போர் முனையில் மகத்தான வீரப் போர் புரிந்தார்கள். அவர்களுக்குள்ளே எத்தனையோ அரவான்களும் அபிமன்யுக்களும் இணையில்லாத தீரத்தைக் காட்டினார்கள். உயிரைத் திரணமாக எண்ணிப் பத்து பிரிட்டிஷ் வீரருக்கு ஒரு சுதந்திர வீரர் வீதம் சில இடங்களில் நின்று சண்டையிட்டார்கள். ஆனாலும் என்ன பிரயோஜனம்? காந்தி மகானின் அஹிம்ஸா மார்க்கத்திலேயே பாரததேசம் சாத்வீக சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று இருக்கும் போது, அவர்களுடைய முயற்சி எவ்விதம் பலிதமடையும்? பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணையாக அமெரிக்க ஆகாச விமானங்கள் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்தன. இந்திய சுதந்திர வீரர்களுக்கும், ஜப்பானிய வீரர்களுக்கும் துணையாகப் போதிய ஜப்பானிய ஆகாச விமானங்கள் வந்து சேரவில்லை. சின்னஞ்சிறு ஜப்பான் தன்னுடைய சக்திக்கு மேலே காலை அகட்டி வைத்துவிட்டது! நாலாபுறமும் சூழ்ந்து தாக்கிய எதிரிகளுக்கு ஈடு கொடுக்க அதனால் முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் பிரவேசித்த ஜப்பானிய வீரர்களும் சுதந்திர இந்திய வீரர்களும் பெரும்பாலும் அங்கேயே உயிர் துறக்க நேர்ந்தது. ஒரு சிலர் இந்தியாவின் எல்லையை மறுபடியும் பின்புறமாகக் கடந்து பர்மாவில் பிரவேசிக்க வேண்டியதாயிற்று. இப்படியாக முன்னணியில் சென்றிருந்த படையில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் பின் வாங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் காப்டன் ராகவனுடைய படை இந்தியாவின் எல்லைக்குச் சமீபத்தில் வந்து தங்கியது. சைனியம் தங்கிய இடம் காட்டுப் பிரதேசம்; கையோடு கொண்டு வந்திருந்த உணவுப் பொருள் வெகு சீக்கிரம் கரைந்து போய்க் கொண்டிருந்தது. அந்தச் சைனியத்திலிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் முன்னால் போகப் போகிறோமா, பின்னால் போகப் போகிறோமோ என்று தெரியாமல் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். டாக்டர் ராகவனும் அதே மனோநிலையிலேதான் இருந்தான். ரங்கூன் வீதிகளில் இந்திய சுதந்திரப் படை அணிவகுத்துச் சென்ற போது இரு புறமும் சமுத்திரம் போல் நின்ற ஜனங்கள் - பர்மியர்களும் இந்தியர்களும் - எவ்வளவு உற்சாகம் காட்டினார்கள்! எப்படி பூமாரி பொழிந்து வாழ்த்துக் கூறி வழி அனுப்பினார்கள்! புது டில்லிக்குப் போய்க் கொடி ஏற்றுவதற்குப் பதிலாகத் திரும்பவும் ரங்கூனுக்கே போய்ச் சேர்ந்தால், அந்த ஜனங்கள் எப்படி நம்மை வரவேற்பார்கள்? நல்லது; ரேவதிதான் என்ன சொல்வாள்?… ஆகா! சுதந்திர முழக்கத்துடன் கிளம்பிய இந்திய சுதந்திர படை இத்தகைய முடிவுக்கு ஆளானதைக் கேட்டால் அவள் மனம் எப்படித் துடிக்கும்? அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ? நேற்றுப் புதிதாக வந்திருப்பதாகச் சொன்னார்களே, அந்தப் பெண்கள் படையில் ஒருவேளை அவள் இருப்பாளோ? அவளையாவது சந்திக்க முடிந்தால் இந்த மனோ வேதனைக்கு ஒரு மாற்றாக இருக்கும். இப்படிப்பட்ட சிந்தனைகளில் காப்டன் ராகவன் ஆழ்ந்திருந்த சமயம், மேஜர் ஜெனரல் அவனைக் கூப்பிடுவதாகச் செய்தி வந்தது. “எதற்காகக் கூப்பிடுகிறார்?” என்ற அதிசயத்துடன் ராகவன் குமரப்பாவிடம் சென்றான். காப்டன் ராகவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, “காப்டன்! உம்மிடம் மிக முக்கியமான ஒரு வேலையை ஒப்புவிக்கப் போகிறேன்” என்றார். ராகவன் கம்பீரமாக “மிக்க வந்தனம், ஜெனரல்! என் உயிரைக் கொடுத்தாவது கட்டளையை நிறைவேற்றுவேன்!” என்று சொன்னான். ஆனால், அவன் மனதிற்குள் ஏனோ திக்திக் என்றது. “உயிரைக் கொடுக்கிறேன் என்று சொல்வதில் பயனில்லை. இந்தியாவின் வருங்காலத்தையே உம்மிடம் ஒப்புவிக்கப் போகிறேன். ஒரு கடிதம் கொடுப்பேன். அதைக் கொண்டு போய் பத்திரமாய்ச் சேர்க்க வேண்டும். வழியில் உயிருக்கு அபாயத்தைத் தேடிக் கொள்வது துரோகம் செய்வதாகும்.” “கடிதம் யாருக்கு?” என்று ராகவன் கேட்டபோது அவனுடைய குரல் தழதழத்தது. "வேறு யாருக்கு? நமது மகோந்நத தலைவருக்குத்தான். தற்சமயம் நேதாஜி அந்தமான் தீவில் இருக்கிறார். ஆகாச விமானத்தில் போய்க் கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பதிலும் வாங்கிவரவேண்டும். சற்று முன்னால் ராகவன் மனதில் குடிகொண்டிருந்த பயமெல்லாம் பறந்தது. குமரப்பாவிடம் சொல்ல முடியாத நன்றி அவனுடைய உள்ளத்தில் ததும்பியது. “ரொம்ப வந்தனம்! இதோ புறப்படத் தயார்!” என்று எக்களிப்புடன் சொன்னான். “ஆனால் இந்த முக்கியமான கடிதத்தை அவ்வளவு சுலபமாக உம்மிடம் ஒப்புவிக்க முடியாது. அதற்கு முன்னால் உமக்கு ஒரு சோதனை இருக்கிறது. அதில் நீர் தேறியாக வேண்டும்.” சிறிது நேரம் ராகவனுடைய மனதைவிட்டு அகன்றிருந்த சந்தேகங்கள், பயங்கள் எல்லாம் திரும்பவும் அதி விரைவாக வந்து புகுந்தன. “என்ன சோதனை?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டான். “நாலு நாளைக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்த படையில் ஒருவர் மீது பிரிட்டிஷ் ஒற்றர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்ததில் அது நிச்சயமாயிற்று. நமக்குள்ளேயிருந்து கொண்டு ஒற்று வேலை பார்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா?” “தெரியும்! மரணதண்டனை!” “அந்த தண்டனையை நீர் நிறைவேற்ற வேண்டும்.” ராகவன் மனதில் பெரும் திகில் உண்டாயிற்று. மேலே எதுவும் பேச முடியாமல் நின்றான். “ஒற்று வேலை பார்த்தது ஒரு பெண்; அவள் உமக்கு அறிமுகமுள்ள பெண்தான்!” ராகவனுக்கு இப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவள் ரேவதியாகத்தான் இருக்க வேண்டும்; சந்தேகமில்லை. ஆ! இந்தக் கொடிய கிராதகன் இந்த முறையில் இருவர் மேலும் பழி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறான். இத்தனை நாள் ஒன்றுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேஷம் போட்டதெல்லாம் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத்தான். ராகவன் ஒரு நிமிஷ நேரம் யோசனை செய்தான். படைத் தலைவர்களின் கட்டளைகளை மறுவார்த்தை பேசாமல் நிறைவேற்றுவதாகச் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஞாபகப் படுத்திக் கொண்டான். அதை நிறைவேற்றிவிட்டு, நேதாஜியையும் கடைசி முறையாகத் தரிசித்துவிட்டுப் பிறகு தன் சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தான். “என்ன யோசனை செய்கிறீர்? ஒப்புக் கொள்கிறீரா இல்லையா?” என்று அதிகாரக் குரலில் கேள்வி வந்தது. “கட்டளையை நிறைவேற்றுகிறேன்!” என்று ராகவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான். “ரொம்ப சரி! இதோ துப்பாக்கி! இதில் ஐந்து குண்டு இருக்கிறது; ஐந்தையும் தீர்த்து விட வேண்டும்; ஒரு வேளை கை நடுக்கத்தினால் குறி தவற இடமிருக்கக் கூடாதல்லவா?” இவ்விதம் சொல்லிக் கொண்டே குமரப்பா மேஜை மேல் கிடந்த துப்பாக்கியை எடுத்து நீட்டினார். ராகவன் அதற்குள் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தான். சிறிதும் கை நடுக்கமின்றித் துப்பாக்கியை வாங்கிக் கொண்டான். காப்டன் ரேவதியின் கண்ணைக் கட்டி ஒரு பாறையின் பக்கத்தில் நிறுத்தியிருந்தார்கள். ராகவனும் அவளுக்கு எதிரில் முப்பது அடி தூரத்தில் நின்று கொண்டான். துப்பாக்கியை குறி பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டான். விசையை இழுத்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து! ஐந்து வெடியும் ராகவனுடைய தலையின் உச்சியில் ஐந்து இடி விழுந்தது போல் வெடித்தன. அவனுடைய தலை சுழன்றது. மறுபடியும் ஒரு பெரு முயற்சி செய்து சமாளித்துக் கொண்டான். கண்ணைத் திறந்து பார்த்த போது ஏற்கெனவே ரேவதி நின்ற பாறை ஓரத்தில் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டான். அந்தப் புகையினிடையே தரையில் ஓர் உருவம் கிடந்தது! அங்கிருந்து காப்டன் ராகவனை மிக அவசரமாக விமானக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகு அவன் குமரப்பாவைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடிதம் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. விமானம் தயாராய் நின்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அதில் ஏறுவதற்கு யத்தனித்த சமயத்தில் ராகவனுடைய நண்பன் ஒருவன் வந்து அவன் காதோடு ஒரு செய்தியைச் சொன்னான். அதை அவனால் நம்ப முடியவில்லை. “ஆஹா! ஏன் பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? ஏன் புண்பட்ட நெஞ்சில் வேலை எடுத்துக் குத்துகிறாய்?” என்று கேட்டான். “இல்லை, ராகவன்! நான் உன்னை ஏமாற்றவில்லை. நான் சொன்னது சத்தியம்” என்றான் நண்பன். மேலே பேசுவதற்கு அவகாசம் இல்லை. விமானத்தின் காற்றாடிச் சிறகுகள் சுழலத் தொடங்கின. விமானம் மறைந்தது அந்தமான் தீவில் சென்று விமானம் இறங்கியதும் நேதாஜியைத் தேடிக் கொண்டு ராகவன் அதிக தூரம் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் இறங்கிய விமானகூடத்தின் பக்கத்திலேயே நேதாஜியும் இருந்தார். அவரைச் சுற்றி இந்திய சுதந்திர சர்க்காரின் மந்திரிகள் சிலரும், மற்றவர்களும் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் ஏதோ ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தவர்களைப் போலத் தோன்றியது. எல்லோருடைய முகத்திலும் சோகக் குறி காணப்பட்டது. சில மாதத்துக்கு முன்பு வீரலக்ஷ்மி தாண்டவமாடிய நேதாஜியின் பூரண சந்திரனையொத்த முகத்தை சோகக் கிரகணம் பிடித்திருந்தது. காப்டன் ராகவன் தான் கொண்டு வந்த கடிதத்தை நேதாஜியிடம் கொடுத்தான். நேதாஜி அதைப் படித்தபோது அவருடைய சோகச் சாயை படர்ந்த சௌந்தர்ய வதனத்தில் புன்சிரிப்பின் ரேகை காணப்பட்டது. படித்து முடித்ததும் அவர் சொன்னார்…“ஆகா! எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். ‘நாங்கள் உயிரை விட்டு விடுகிறோம்; நீ மட்டும் எப்படியாவது தப்பிப் பிழைத்து உயிரோடிருக்க வேண்டும்’ என்கிறார்கள். ‘பாரதத் தாயின் விடுதலைக்காக’ என்று சேர்த்துக் கொண்டு சொல்கிறார்கள்… காப்டன் ராகவன்! நீ திரும்பிப் போக வேண்டிய அவசியமில்லை. உன்னுடைய ஜெனரலுக்கு முன்னமே நான் கடிதம் அனுப்பி விட்டேன். உன்னைப் பற்றி குமரப்பா ரொம்பப் பாராட்டியிருக்கிறார். அவருடைய சிபாரிசின் படி உனக்கு லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கிறேன், ஜே ஹிந்த்!” என்றார். அங்கிருந்தவர்கள் அனைவரும் “ஜே ஹிந்த்!” என்று முழங்கினார்கள். “நண்பர்களே! சுதந்திர இந்தியாவின் சேனாதிபதி பதவியிலிருந்து நான் செய்த கடைசி காரியம் இதுவாக இருக்கலாம்.” என்று நேதாஜி சொன்னபோது சுற்றி இருந்தவர்களில் ஒருவர் குறுக்கிட்டு, “இல்லை, நேதாஜி இல்லை; ஒரு நாளும் இல்லை, பாரத பூமியில் புது டில்லியில் தாங்கள் சுதந்திர இந்திய சைதன்யத்தின் மாபெரும் சேனாதிபதியாக விளங்கும் காலம் கட்டாயம் வரும்!” என்றார். "உங்களுடைய வாக்கு பலிக்கட்டும்! நண்பர்களே! இப்போதைக்கு நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் உங்களையெல்லாம் மறக்க மாட்டேன். “வருங்கால வேலையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்ததும் ரேடியோ மூலம் தெரிவிப்பேன். பாங்காங்கிலிருந்தோ, டோ க்கியோவிலிருந்தோ, வேறிடத்திலிருந்தோ பேசுவேன். எல்லோரும் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள், அதன்படி செய்யுங்கள்.” “அப்படியே செய்வோம் நேதாஜி! ரேடியோவில் தங்களுடைய வீர கர்ஜனைக் குரல் எப்போது கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.” நேதாஜி கம்பீரமாக நடந்து சென்று தயாராய்க் காத்திருந்த ஆகாச விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானத்தின் இறகுகள் சடசடவென்று சுழன்றன. விமானம் முதலில் விர்ரென்று ஏறத் தொடங்கியது. சுற்றிச் சுற்றி வந்து மேலே மேலே மேலே சென்றது. விமானம் வானத்தில் ஒரு சிறிய கரும்புள்ளியைப் போல் ஆகும் வரையில் எல்லோரும் மேலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கர்னல் ராகவனும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். கடிதத்தை நேதாஜியிடம் ஒப்புவித்ததும் தன்னுடைய சொந்த விஷயத்தை அவரிடம் சொல்லி மேஜர் ஜெனரல் குமரப்பாவைப் பழிவாங்க அனுமதி கேட்க வேண்டுமென்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை என்பதைக் கண்டான். நேதாஜியும் அவருடைய துணைவர்களும் கண்ட ஒரு மகத்தான கனவு - பாரத சுதந்திரக் கனவு - துகள் துகளாகப் போய்க் கொண்டிருந்த சமயம் அது. எல்லோரும் அவ்வளவு மகத்தான விஷயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய சொந்த விஷயம் அற்பத்திலும் அற்பமானதாக அவனுக்குத் தோன்றியது. ஏற்கனவே அவன் நேதாஜியைப் பார்த்திருந்த போதிலும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை. எடுத்த காரியத்தில் அத்தகைய பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருந்த சமயத்தில் அவருடைய தீரமும் கம்பீரமும் அவனுடைய உள்ளத்தை முழுக்க முழுக்கக் கவர்ந்து ஜன்ம ஜன்மங்களிலேயும் அப்பேர்ப்பட்ட தலைவரின் கீழ் அடிமைத் தொண்டு செய்யலாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. அவர் ஏறிய ஆகாச விமானம் உயரக் கிளம்பிய போது அவனுடைய உயிரானது உடலை மட்டும் இந்த பூமியில் விட்டு விட்டு மேலேறிச் செல்வது போலத் தோன்றியது. விமானத்தின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சின்னதாகி, சிறிய கரும்புள்ளியாகி, கடைசியில் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்தபோது, கர்னல் ராகவன் சற்று நேரம் ஸ்ம்ரனையற்று ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தான். எல்லாரையும் போல் ‘ஜேய் ஹிந்த்’ கோஷம் செய்வதற்குக் கூட அவனுடைய நா எழவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள கையை உபயோகிக்கும் சக்தியைக் கூட அவன் இழந்து விட்டிருந்தான். நங்கூரம் இல்லாமல், சுக்கான் இல்லாமல், மாலுமிகளும் இல்லாமல் நடுக் கடலில் அலைகளால் மோதப் பட்டு காற்று அடித்த திசையில் அங்கு மிங்கும் அலைந்து மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப் போல் சில காலம் லெப்டினென்ட் கர்னல் ராகவன் பர்மாவில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். மேஜர் ஜெனரல் குமரப்பாவும் அவர் தலைமையிலிருந்த சுதந்திர சேனையின் வீரர்களும் பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. கேப்டன் ரேவதியைப் பற்றி யாதொரு தகவலும் தெரியவில்லை. பாறை ஓரத்துப் பயங்கர சம்பவத்துக்குப் பிறகு ஆகாய விமானத்தில் ஏறும் சமயத்தில் அவனுடைய நண்பன் ஒருவன் வந்து காதோடு சொன்ன செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. குழப்பமும் ஏமாற்றமும் துயரமும் குடி கொண்டு அலைப்புண்ட உள்ளத்தோடு லெப்டினென்ட் கர்னல் ராகவன் தாய் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். ஒருவித நோக்கமும் இலட்சியமும் இன்றி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, டில்லி செங்கோட்டையிலிருந்து மேஜர் ஜெனரல் குமரப்பா விடுதலையானார் என்று ஒரு நாள் பத்திரிகையில் படித்தான். பின்னர் அவரைத் தேடிக் கொண்டு அலைந்தான். அந்தத் தேடல் முற்றுப் பெறாத நிலையிலேதான் ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவைக் கழிக்கும்படி நேர்ந்தது. வேஷம் கலைந்தது லெப்டினென்ட் கர்னல் ராகவன் சொன்ன கதையை முழுதுமே கேட்டுக் கொண்டிருந்தபிறகு, “தாங்கள் கூறிய வரலாறு மிகவும் பரிதாபகரமாயிருக்கிறது; மேலே என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டேன். “தற்சமயம் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். மேஜர் ஜெனரல் குமரப்பாவை நான் சந்தித்தாக வேண்டும். அதற்குப் பிற்பாடுதான் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் என்னால் யோசிக்க முடியும்” என்றார் கர்னல் ராகவன். “குமரப்பாவை நீங்கள் சந்திக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுவதே நல்லது” என்று சொன்னேன். “அது மட்டும் முடியாது. குமரப்பா யமனுலகத்துக்கே போயிருந்தாலும் அங்கேயும் போய் அவரைக் கண்டுபிடித்தே தீருவேன்!” என்றார் ராகவன். “கண்டுபிடித்து என்ன செய்வீர்கள்?” “கண்டுபிடித்து, ‘அட பாதகா! என் ரேவதி எங்கே? அவளை என்ன செய்தாய்?’ என்று கேட்பேன். சரியான பதில் சொன்னால் விட்டு விடுவேன். இல்லாவிடில் இதோ இந்தக் கைத்துப்பாக்கியிலுள்ள ஆறு குண்டுகளையும் ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து என்று எண்ணி அவர் மார்பில் செலுத்துவேன்!” “கர்னல் இது என்ன பைத்தியக்காரத்தனம்!” “ஆம்; இங்கே உட்கார்ந்து நான் உம்மிடம் பேசிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனந்தான். இத்தனை நேரம் உம்மிடம் பேசி வியர்த்தமாக்கினேனே?” என்று சொல்லிக் கொண்டே கர்னல் ராகவன் எழுந்தார். அவரை நான் “அவசரப்பட வேண்டாம்; உட்காருங்கள்” என்று சொல்ல வாயெடுத்தேன். ஆனால் நெஞ்சில் எண்ணியது வாயில் வரவில்லை; அப்படி என்னைப் பேச முடியாமல் செய்த சம்பவம் ஒன்று அப்போது நேர்ந்தது. சுவர் ஓரத்தில் இத்தனை நேரமும் படுத்திருந்த மனிதர் சட்டென்று எழுந்தார். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தார். வெளியிலேயிருந்து வந்த மங்கிய விளக்கின் ஒளி அவர் முகத்தில் பட்ட போது, என்னைத் தூக்கிவாரிப் போட்டுத் திகைப்படையச் செய்தது. ஏனெனில், அந்த மனிதரை எனக்கு நன்றாய்த் தெரியும்; அவர் மேஜர் ஜெனரல் குமரப்பாதான்! ‘என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை’ என்று சாதாரணமாய் கதைகளில் எழுதுகிறார்களே அது இப்போது என் விஷயத்தில் முற்றிலும் உண்மையாயிற்று. நிஜமாக அவர் குமரப்பாதானா? இத்தனை நேரமும் அந்த மூலையில் படுத்திருந்தவர் அவர்தானா? குமரப்பாவின் குரல் எப்போதுமே கனமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். இப்போது வழக்கத்தை விட அதிக கனமும் கம்பீரமும் பொருந்திய குரலில் அவர் “கர்னல் ராகவன், உம்முடைய நண்பர் கூறியது தவறு, இதோ நானே, சாஷாத் மேஜர் ஜெனரல் குமரப்பாவே ஆஜராயிருக்கிறேன். உம்மை மிகக் கடுமையான சோதனைக்கு நான் உட்படுத்தியது வாஸ்தவம்தான். அதற்கு பரிகாரம் செய்யவே இதோ வந்திருக்கிறேன். உம்முடைய கைத்துப்பாக்கியிலுள்ள குண்டுகளை என் மார்பிலே செலுத்த நீர் விரும்பினால் அப்படியே செய்யலாம். அவை நிஜக்குண்டுகள்தானே? புகைக் குண்டுகள் அல்லவே?” என்று கூறிவிட்டு நகைத்தார். அந்த நகைப்பு ஏனோ எனக்குப் பயங்கரத்தை உண்டாக்கிற்று. ராகவனுடைய முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் குரோதமும், அசூயையும், ஆங்காரமும் கோர தாண்டவம் ஆடின. கண்கள் நெருப்புத் தணலைப் போல் ஜொலித்தன. ஏதோ பேசுவதற்கு முயன்றார். ஆனால் உதடுகள் துடித்தனவே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை. துப்பாக்கியை எடுத்துக் குமரப்பாவின் மார்பிற்கு எதிரே நீட்டிய போது அவர் கைகள் சிறிது நடுங்கின. சட்டென்று நான் குதித்து எழுந்து, “ராகவன்! ஒரு நிமிஷம் பொறுங்கள்!” என்று கூவிய வண்ணம் அவர் கையைப் பிடித்துக் கொண்டேன். என் கை பட்டதும் ராகவனுக்கு ரோமாஞ்சனம் உண்டானதை உணர்ந்தேன். எனக்கும் அதேவிதமான அநுபவம் ஏற்பட்டது. குமரப்பா ராகவனைப் பார்த்து, “ரேவதி எங்கே என்று என்னைக் கேட்கிறீரே? உம்முடைய சிநேகிதரைக் கேட்பது தானே?” என்றார். நான் பதட்டத்துடன், “ஆம்! நான் சொல்கிறேன். கர்னல் ராகவன் ஒரு நிமிஷம் பொறுப்பதாக வாக்களித்தால் சொல்கிறேன்” என்றேன். பிறகு என் முகத்தை ஒரு நிமிஷம் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, (சொல்வதற்குக் கூச்சமாயிருக்கிறது) அது வரையில் என் மேலுதட்டில் மேற்புறத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த ‘ஹிட்லர்’ மீசையை எடுத்து எறிந்தேன். தலையை நன்றாக மூடியிருந்த ’மப்ளரை’யும் கையில் எடுத்துக் கொண்டேன். (எங்கும் குழப்பமாயிருந்த அந்த நாட்களில் தொந்தரவுக்குள்ளாகாமல் பிரயாணம் செய்வதற்காகச் சில சமயம் நான் அப்படி வேஷம் தரிப்பது வழக்கம்) வேஷம் நீங்கிய என் முகத்தைப் பார்த்ததும் “ஆஹா! ரேவதியா?” என்று ராகவன் கூச்சலிட்டார். “ஆம்! ரேவதிதான்!” என்றேன். “இத்தனை நேரம் என்னை ஏமாற்றி என் வாயைப் பிடுங்கி என் மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டும்படி செய்தாயல்லவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!” “இருந்தாலும் இந்தப் புருஷர்களுக்குக் கொஞ்சமாவது கூச்சம், சங்கோசம் என்பது கிடையாது! எனக்குந்தான் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வம் இருந்தது. அதையெல்லாம் நான் கட்டுப்படுத்திக் கொண்டு இத்தனை நேரம் சும்மா இருக்கவில்லையா?” ஆனால் புருஷர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லக்கூடாது. சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து ரஸக் குறைவு ஏற்படாமல் நடந்து கொள்கிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் குமரப்பா அப்படித்தான் நடந்து கொண்டார். ஒரு நிமிஷங்கூட அங்கே நிற்காமல் சுவர் அருகே சென்று சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். அவர் வாசற்படியைக் கடக்கும் போது தான் இவருக்குச் சுய அறிவு வந்தது! நானும் என்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன். “ஜெனரல்! ஜெனரல்! எங்களை மன்னிக்க வேண்டும்!” என்று ராகவன் அலறினார். மேஜர் ஜெனரல் திரும்பிப் பார்த்து, “உங்களை நான் மன்னிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? நீங்கள்தான், என்னை மன்னிக்க வேண்டும்!” என்றார். “ஜெனரல்! ஒரு விஷயம் தயவு செய்து சொல்ல வேண்டும். நம் அருமைத் தலைவர் நேதாஜி மரணமடைந்தது உண்மையா?” என்று ராகவன் பரபரப்போடு கேட்டார். குமரப்பாவின் முகத்தில் அப்போது அதி விசித்திரமான ஒரு புன்னகை தவழ்ந்தது. “ராகவன்! நீரா இப்படிப்பட்ட கேள்வி கேட்பது? இந்திய சுதந்திரப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மரணம் என்பது உண்டா? அமர வாழ்வு பெற்றவர்கள் அல்லவா நாம்? அதிலும் நம் நேதாஜிக்கு மரணம் ஏது?” இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் ஜெனரல் குமரப்பா வெயிட்டிங் ரூமின் வாசற்படியைக் கடந்து சென்றார். அவரைப் பின் தொடர்வதற்காக அடி எடுத்து வைத்த ராகவனை நான் கையைப் பற்றி நிறுத்தினேன். பிறகு என் முகத்தை ஒரு நிமிஷம் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, (சொல்வதற்குக் கூச்சமாயிருக்கிறது) அது வரையில் என் மேலுதட்டில் மேற்புறத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த ‘ஹிட்லர்’ மீசையை எடுத்து எறிந்தேன். தலையை நன்றாக மூடியிருந்த ’மப்ளரை’யும் கையில் எடுத்துக் கொண்டேன். (எங்கும் குழப்பமாயிருந்த அந்த நாட்களில் தொந்தரவுக்குள்ளாகாமல் பிரயாணம் செய்வதற்காகச் சில சமயம் நான் அப்படி வேஷம் தரிப்பது வழக்கம்) வேஷம் நீங்கிய என் முகத்தைப் பார்த்ததும் “ஆஹா! ரேவதியா?” என்று ராகவன் கூச்சலிட்டார். “ஆம்! ரேவதிதான்!” என்றேன். “இத்தனை நேரம் என்னை ஏமாற்றி என் வாயைப் பிடுங்கி என் மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டும்படி செய்தாயல்லவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!” “இருந்தாலும் இந்தப் புருஷர்களுக்குக் கொஞ்சமாவது கூச்சம், சங்கோசம் என்பது கிடையாது! எனக்குந்தான் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வம் இருந்தது. அதையெல்லாம் நான் கட்டுப்படுத்திக் கொண்டு இத்தனை நேரம் சும்மா இருக்கவில்லையா?” ஆனால் புருஷர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லக்கூடாது. சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து ரஸக் குறைவு ஏற்படாமல் நடந்து கொள்கிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் குமரப்பா அப்படித்தான் நடந்து கொண்டார். ஒரு நிமிஷங்கூட அங்கே நிற்காமல் சுவர் அருகே சென்று சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். அவர் வாசற்படியைக் கடக்கும் போது தான் இவருக்குச் சுய அறிவு வந்தது! நானும் என்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன். “ஜெனரல்! ஜெனரல்! எங்களை மன்னிக்க வேண்டும்!” என்று ராகவன் அலறினார். மேஜர் ஜெனரல் திரும்பிப் பார்த்து, “உங்களை நான் மன்னிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? நீங்கள்தான், என்னை மன்னிக்க வேண்டும்!” என்றார். “ஜெனரல்! ஒரு விஷயம் தயவு செய்து சொல்ல வேண்டும். நம் அருமைத் தலைவர் நேதாஜி மரணமடைந்தது உண்மையா?” என்று ராகவன் பரபரப்போடு கேட்டார். குமரப்பாவின் முகத்தில் அப்போது அதி விசித்திரமான ஒரு புன்னகை தவழ்ந்தது. “ராகவன்! நீரா இப்படிப்பட்ட கேள்வி கேட்பது? இந்திய சுதந்திரப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மரணம் என்பது உண்டா? அமர வாழ்வு பெற்றவர்கள் அல்லவா நாம்? அதிலும் நம் நேதாஜிக்கு மரணம் ஏது?” இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் ஜெனரல் குமரப்பா வெயிட்டிங் ரூமின் வாசற்படியைக் கடந்து சென்றார். அவரைப் பின் தொடர்வதற்காக அடி எடுத்து வைத்த ராகவனை நான் கையைப் பற்றி நிறுத்தினேன். முடிவுரை லெப்டினென்ட் கர்னல் ராகவனும், நானும் மதராஸ் மெயில் வண்டியில் சென்னையை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது குமரப்பாவைப் பற்றியே நாங்கள் அதிகமாகப் பேசும்படி இருந்தது. சென்னை ஆஸ்பத்திரியில் அவர் கீழ் வேலை பார்த்தபோது அவரைப் பற்றி நான் எண்ணியது பெருந்தவறு என்று பின்னால் தெரிந்து கொண்டேன். குமரப்பா ஐரோப்பாவுக்குப் போயிருந்த போது வியன்னாவில் ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து அவரிடம் பக்தி கொண்டாராம். சுபாஷ் பாபு இந்தியாவிலிருந்து மறைந்த பிறகும் அவருடைய காரியங்களைப் பற்றிக் குமரப்பாவுக்குச் செய்தி வந்து கொண்டிருந்ததாம். நான் ஒரு பெரிய தேசபக்தருடைய மகளாதலால் என்னையும் நேதாஜியின் சேவைக்குப் பயன்படுத்தலாம் என்று குமரப்பா நினைத்தாராம். அதைத்தான் நான் தவறாக அர்த்தம் செய்து கொண்டு அவஸ்தைப் பட்டேன். என்னைப் பாறையடியில் நிறுத்தி ராகவனைச் சுடும்படிச் செய்தது உண்மையில் ஒரு சோதனைதான். அந்த துப்பாக்கியில் வெடி குண்டு கிடையாது; புகைக் குண்டுகள் இருந்தது. இதைப் பற்றியெல்லாம் திரும்பத் திரும்ப அலுப்பில்லாத அதிசயத்துடன் நாங்கள் பேசிக் கொண்டு போனோம். “நமது வாழ்க்கையின் அதிசய சம்பவங்களுக்குள்ளே மிகவும் அதிசயமானது, ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவு நாம் குமரப்பாவைச் சந்தித்ததுதான்” என்று ஒருமுறை நான் சொன்னேன். “அதே இடத்தில் நாம் இருவரும் சந்தித்ததைக் காட்டிலுமா?” என்றார் என் அருமைக் காதலர். “ஆமாம்; அதைவிடக் கூட அதிசயந்தான்!” கர்னல் ராகவன் சிறிது கோபத்தோடு, “அது எப்படி?” என்று கேட்டார். என்னுடைய பெட்டிக்குள்ளே சில நாளாகப் பத்திரப் படுத்தி வைத்திருந்த ஒரு தினசரிப் பத்திரிகையை எடுத்துக் கொடுத்தேன். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டினேன். அதைப் படித்ததும் ராகவனுக்கு எல்லையற்ற வியப்பு ஏற்பட்டதென்பதை அவருடைய முகக்குறி உணர்த்திற்று. மேற்படி பத்திரிகைச் செய்தி வருமாறு… “இந்திய சுதந்திரப் படையில் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆப்தருமான மேஜர் ஜெனரல் குமரப்பா சென்னை… ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டார். சிகிச்சை எதுவும் பயன்படாமல் இன்று மாலை அவர் மரணமடைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்…” லெப்டினென்ட் கர்னல் ராகவன் திரும்பத் திரும்பத் திரும்ப மேற்படி செய்தியைப் படித்துப் பெருமூச்சு விட்டார். “தேதியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். “ஆம்; ரட்லம் ஜங்ஷனில் நாம் சந்தித்ததற்கு மூன்று தினங்களுக்கு முன்னால்!” என்றார் ராகவன். “அன்றிரவு அவரைப் பார்த்தபோதே எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது!” என்று நான் சொன்னேன். “அமர வாழ்வைப் பற்றி ஜெனரல் குமரப்பா கூறியதின் உண்மைப் பொருள் இப்போதுதான் எனக்கு நன்றாய் விளங்குகிறது!” என்றார் என் உயிர்த்துணைவர். அருணாசலத்தின் அலுவல் இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை என்றோ, பிரசங்கம் என்றோ நினைத்துக் கொள்வீர்கள். மற்றோர் அபாயமும் உண்டு. இதில் வரும் சம்பவம் உண்மையாகவே நடந்தது என்று எண்ணிவிடலாம். அவ்வளவு நிஜம் போல் இருக்கும். பிறகு ஆஸாமி யார் என்று தேடப் புறப்படுவீர்கள். தன்னுடைய விஷயம் அவ்வளவு விளம்பரமாவதை என் நண்பன் அருணாசலம் ஒருவேளை விரும்ப மாட்டான். இந்தப் பரந்த பூமண்டலத்திலே தற்போது தனி மனிதர்கள் முதல் அரசாங்கங்கள் வரையில் எல்லாரையும் திக்குமுக்காடச் செய்துவரும் பெரிய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம் அல்லவா? நமது தேசத்திலும் இதுதான் பெரிய திண்டாட்டமாக இருக்கிறது. காந்தி மகான் முதல் நவ நாகரிகத்திற் சிறந்த ஸர். எம். விஸ்வேஸ்வரையா வரையில் இந்தியப் பிரமுகர்கள் அநேகர் இந்தப் பிரச்னையைப் பற்றிச் சிந்தித்து இதைத் தீர்த்து வைக்க வழி தேடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்திலும், மத்திய வகுப்பார் அதாவது படித்த ஜனங்களுடைய திண்டாட்டந்தான் மிகக் கொடியது. ஏழைக் குடியானவர்கள், தொழிலாளிகள் முதலியவர்களின் திண்டாட்டம் அவ்வளவு பெரிதல்ல; ஏனென்றால் அவர்களுக்கு பட்டினி கிடக்கும் வித்தை நன்றாய்த் தெரியவரும். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ அல்லவா? பட்டினியும், வயிற்றுப் பழக்கந்தான். ஒரு நாளைக்கு ஒரேவேளை அரை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டுச் சந்தோஷமாய்க் காலங்கழிக்கக் கிராமத்துக் குடியானவர்களுக்குத் தெரியும். இத்தகைய மனப்பான்மைதான் தேச முன்னேற்றத்திற்கே தடையாயிருக்கிறதென்பது சிலர் கொள்கை. பட்டணங்களில் உள்ள படித்த ஜனங்களின் விஷயம் இப்படியல்ல. ஒரு வேளைக் காப்பி கிடைக்காவிட்டால் போதும்; அவர்களுடைய வாழ்க்கை சோகமயமாகி விடுகிறது. இந்த வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடுதலையடைய அநேகர் அநேக வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இவைகளில் சர்வ சாதாரணமாக 100-க்கு 90 பேர் முயன்று பார்க்கும் வழி ஒன்று இருக்கிறது. அதுதான் பத்திரிகைக்கு எழுதுவது. தினசரிப் பத்திரிகையில் ஒரு விசேஷக் கட்டுரையைப் படிப்பார்கள் அல்லது மாதப் பத்திரிகையில் ஒரு சிறுகதையை வாசிப்பார்கள். “என்ன பிரமாதம்? இதைப் போல் நாம் ஒன்று எழுதக் கூடாதா?” என்று தோன்றும். உடனே பத்திரிகைத் தொழிலில் பெர்னார்ட்ஷாவையும் செஸ்டர்ட்டனையும் போல் பணம் சம்பாதிப்பதாகப் பகற் கனவுகள்! “என்ன எழுதுவது?” என்பது அவர்கள் மனத்தில் தோன்றும் அடுத்த கேள்வி. “என்ன எழுதுவது?” என்பதையே தலைப்பாகப் போட்டுக் கொண்டு சிலர் எழுதத் தொடங்குவார்கள். “ஒன்றுமில்லை” என்ற தலைப்புடன் ஒரு வெள்ளைக்காரர் பெரிய புத்தகம் ஒன்று எழுதிவிடவில்லையா? வேறு சிலர் வேலையில்லாத் திண்டாட்டத்தையே விஷயமாகக் கொண்டு, “உத்தியோக வேட்டை” என்பது போன்ற தலைப்புக்களுடன் கட்டுரையோ, கதையோ எழுதுவார்கள். தங்களுடைய சொந்த அனுபவங்களுடன் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்ந்தால் நல்ல கதையாகி விடுமென்று நம்பிக்கை. இத்தகைய கதை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, ஒரு நாள் அருணாசலம் என்னிடம் வந்தான். அவன் என்னுடைய பாலிய நண்பன். ஆனால் இடையில் பல வருஷங்களாக நாங்கள் சந்திக்கவில்லை. அவனுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டேன். மூன்று வருஷங்களாக முயன்று பி.ஏ. பரிக்ஷையில் தேறியவரையில் க்ஷேமந்தான் என்றும், அதனால் லாபந்தான் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினான். வயது இருபத்தைந்து ஆகிவிட்டபடியால் சர்க்கார் உத்தியோகம் பெறும் ஆசையை விட்டு விட்டானாம். மற்றபடி தன்னுடைய அனுபவங்களை என் கையில் கொடுத்த கட்டுரையில் காணலாம் என்று தெரிவித்தான். அதை வாசித்துப் பார்த்தேன். சில அனுபவங்கள் மிகவும் ருசிகரமாகவே இருந்தன. உதாரணமாக ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன். ஒரு முறை அருணாசலம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பின்வருமாறு ஒரு விளம்பரஞ் செய்தான். தேவை பி.ஏ. பட்டதாரிக்கு ரூ.100 சம்பளத்தில் ஓர் உத்தியோகம் தேவை. ரூ.1000 ரொக்க ஜாமீன் கட்டக்கூடும். பெட்டி நெம்பர் 7032 விளம்பரம் வெளியான மூன்றாம் நாள் கடிதங்கள் வரத் தொடங்கின. அக்கடிதங்களில் பல, பெட்டி நம்பர் 7032-ஐ வாயார மனமார வாழ்த்திவிட்டு ரூ.1000 தந்தி மணியார்டரில் அனுப்பத் தயாராயிருப்பதாகவும் எப்பொழுது வந்து உத்தியோகம் ஏற்றுக் கொள்ளலாமென்றும் விசாரித்திருந்தன. இப்படி எழுதியவர்கள் வெறும் பி.ஏ.க்கள் மட்டுமல்ல. அவர்களில் சிலர் ‘லிடரேசர் ஆனர்ஸ்’ பட்டம் பெற்றவர்கள். வேறு சிலர் டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்டு, புக் கீபிங் முதலியவைகளும் கற்றுத் தேர்ந்தவர்கள். உண்மையென்னவென்றால் இங்கிலீஷ் என்னமோ சுலபந்தான். ஆனால் விளம்பரத்தைக் கண்டதும் அவர்களுக்கேற்பட்ட பரபரப்பினால் விஷயத்தை நன்கு கிரஹிக்க முடியாமல் போயிற்று. அவர்களுடைய கண்கள் விளம்பரம் முழுவதையும் பார்த்தன. அவர்களுடைய வாய்கள் விளம்பரம் முழுவதையும் படித்தன; ஆனால் அவர்களுடைய மனத்தில் மட்டும் பின்வரும் வார்த்தைகள்தான் பதிந்தன! “பி.ஏ.ரூ.100 சம்பளம்; ரூ.1000 ரொக்க ஜாமீன் - பெட்டி நெம்பர் 7032.” இன்னும் சிலர், விளம்பரத்தைச் சரியாக அர்த்தம் செய்து கொண்டு பதில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரைத் தவிர, மற்ற எவரும் மாதம் 30 ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கத் தயாராயில்லை. அந்த விலக்கான ஒருவர் மட்டும் கேட்டதற்கு மேலேயே, அதாவது மாதம் ரூ.125 சம்பளம் கொடுப்பதாக எழுதியிருந்தார். இந்த தவறுதலினால், அவருக்கு ரூ.1000 நஷ்டமாயிற்று. மாதம் 80 ரூபாய் அல்லது 90 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக அவர் எழுதியிருந்தால், அருணாசலம் வலையில் விழுந்திருப்பான். கேட்டதற்குமேல், கொடுப்பதாகச் சொன்னபடியால் சந்தேகம் தோன்றி நேரில் போய் விசாரிக்கப் போனான். வால்டாக்ஸ் சாலையில் கரிமூட்டைகள் அடுக்கியிருந்த ஓர் அறைக்குப் பக்கத்து அறையில் மேற்படி கனவானைச் சந்தித்தான். தமது “கர்ரி பவுடர் ஏற்றுமதிக் கம்பெனி”யின் மானேஜர் உத்தியோகத்தை அவர் அருணாசலத்துக்குத் தருவதாகக் கூறினார். கர்ரி பவுடர் எனப்படும் இந்தியக் குழம்புப் பொடியை வாங்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய தேசங்களிலுள்ள துரைசானிமார், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களென்றும், இப்போதுதான் கம்பெனி ஆரம்ப நிலையில் இருக்கிறதென்றும், போகப் போகச் சம்பளம் அதிகம் தருவதாகவும், ஆனால் ரூ.2000 ரொக்க ஜாமீன் கட்டினால் இப்போதே ரூ.250 சம்பளம் தருவதாகவும் சொன்னார். “யோசித்துக் கொண்டு வருகிறேன்” என்று திரும்பி வந்துவிட்டான். “கதை எப்படியிருக்கிறது?” என்று அருணாசலம் கேட்டான். “நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் கதை முடிவு சுகமில்லை” என்றேன். “அதில் என்ன குற்றம்?” என்று கேட்டேன். "மங்களகரமாக முடியும் கதைகள் எப்போதும் இரண்டாந்தரந்தான். இங்கிலீஷ் கதைகள் படித்திருக்கும் உனக்கு இது தெரிந்திருக்க வேண்டும். ‘கலியாணம் செய்து கொண்டு சுகமாக இருந்தார்கள்’ என்று முடிப்பது நம்முடைய தேசத்துக் கர்நாடக முறை. புதிய முறைக் கதைகளில் கதாநாயகனோ, நாயகியோ அகால மரணமடைய வேண்டியது மரபு. எதிரியைக் கொண்டு கொல்விக்க முடியாவிட்டால், விஷம் குடித்தோ, தூக்குப் போட்டுக் கொண்டோ தற்கொலை செய்விக்க வேண்டும். அல்லது கதாபாத்திரங்களை உயிரோடு விட்டாலும் அவர்களைத் தீராத துக்கத்திலாவது ஆழ்த்திவிட்டுக் கதையை முடிக்க வேண்டும்" என்று பிரசங்கம் செய்தேன். “வாழ்க்கையில்தான் வேண்டிய துக்கம் இருக்கிறதே! கதைகளாவது சந்தோஷமாய் முடியக்கூடாதா?” என்று கேட்டான் அருணாசலம். “வாழ்க்கையில் வேண்டிய துக்கம் அதிகமாயிருப்பதால் தான் கதைக்கும் துக்கமாய் முடிவுவேண்டும். அப்போதுதானே உண்மைக்குப் பொருத்தமாயிருக்கும்!” “சரிதான், ஆனால் இந்தக் கதையைப் பொருத்த வரையில் அது பொருத்தமில்லை. ஏனென்றால் இதில் வரும் கதாநாயகன் நானே. விஷங் குடித்தோ, தூக்குப் போட்டுக் கொண்டோ உயிர் விட எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. படிப்பிலும், அழகிலும், குணத்திலும் சிறந்த மனைவியை விட்டுவிட்டு, உயிரைவிட யாருக்குத்தான் மனது வரும்?” ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் பெருமையுண்டு. அருணாசலத்துக்கு அவன் மனைவி விஷயத்தில் பெருமை. இப்போது ஸ்ரீமதி சம்பங்கி எல்.டி பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள். “அப்படிக் கதையைச் சந்தோஷமாய் முடிப்பதாயிருந்தாலும், நீ முடித்திருக்கும் முறை சரியல்ல. ஒரு வேலையும் கிடைக்காமல் கடைசியில் தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கதை எழுதத் தொடங்குகிறானென்றும், வெகு சீக்கிரத்தில் பிரசித்த பத்திரிகாசிரியனாகவும், நூலாசிரியனாகவும் ஆகி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலானானென்றும் முடித்திருக்கிறாய். இது உண்மைக்கு நேர் மாறு பாடாயிருக்கிறது. நல்ல கதையின் இலட்சணம், அது நிஜம்போல் தோன்ற வேண்டும்.” “கதை இருக்கட்டும். நான் பத்திரிகைகளுக்கு எழுதிப் பணம் சம்பாதிப்பதைப் பற்றி என்ன சொல்கிறாய்?” “பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சோப்பு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம். மூக்குப் பொடி வியாபாரம் செய்து லட்சாதிபதியாகலாம். காமகேசரி லேகியம் விற்றுக் குபேரனாகலாம்; வெற்றிலை பாக்குக் கடை லாபத்தில் மோட்டார் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பத்திரிகைக்கு எழுதிப் பிழைக்கும் ஆசையிருந்தால் பட்டினி கிடப்பதில் காந்தி மகானுடன் போட்டி போடத் தயாராயிருக்க வேண்டும்.” “வேண்டாம், என்னிடம் ரூ. 2000 இருக்கிறது. அதைக் கொண்டு நானே ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்தினாலென்ன?” என்று வினவி, தமிழ்நாட்டில் வெற்றியடைந்த இரண்டு, மூன்று பத்திரிகைகளின் பெயரையும் கூறினான். சென்ற பத்து வருஷத்துக்குள் தமிழ் நாட்டில் பிறந்து இறந்த தமிழ்ப் பத்திரிகைகளின் ஜாபிதா ஒன்று வைத்திருந்தேன். அதை அவனுக்குப் படித்துக் காட்டி, “இதில் 99 பெயர்கள் இருக்கின்றன. சதம் பூர்த்தியாவதற்கு இன்னும் ஒன்று பாக்கி, வேண்டுமானால் நீ ஆரம்பி” என்றேன். ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், அருணாச்சலம் மறுபடியும் வந்தான். அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு சோகமயமாயிருந்தது. “உன்னிடம் ஏதாவது வைரம் இருக்கிறதா?” என்று கேட்டான். “வைரமா? என்னிடம் ஏது? விதேசிப் பொருள்களில் எனக்குச் சிரத்தை கிடையாது என்று தெரியாதா?” என்றேன். “வேண்டாம்! சுதேசிக் கயிறாவது, நீளமான கயிறாக ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான். எனக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. “கயிறு எதற்காக?” என்றேன். “இன்றைய தினம் என் உயிரை விட்டு விட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறேன்” என்றான். அவனைச் சமாதானப்படுத்தி விசாரித்ததில் விஷயம் என்னவென்று தெரிய வந்தது. அவன் துணைவி ஸ்ரீமதி சம்பங்கி அம்மாள் எல்.டி. பரீட்சையில் தேறி, உபாத்தியாயினி வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தாளாம். திருச்சிராப்பள்ளியிலுள்ள பெண்களின் ஹைஸ்கூல் ஒன்றில் மாதம் ரூ.120 சம்பளத்தில் உபாத்தியாயினியாக நியமிக்கப் பட்டிருப்பதாய் அன்றைய தினம் உத்தரவு வந்ததாம். ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று பெரியோர் சொல்லியிருக்க, மனைவிக்கு உத்தியோகம் ஆன பிறகு, தான் உத்தியோகம் இல்லாமல் எப்படியிருப்பது என்று அருணாசலம் கவலைப்பட்டான். மனைவி சம்பாதித்துப் போட்டுத் தான் சாப்பிட்டுக் கொண்டு மானங்கெட்ட வாழ்வு வாழ்வதை விட ஏன் இப்போதே பிராணத் தியாகம் செய்துவிடக் கூடாது என்பதற்கு நான் ஏதேனும் தக்க காரணம் எடுத்துக் காட்ட முடியுமா என்று வினவினான். ‘உயிர் உள்ளவரை நம்பிக்கைக்கு இடமுண்டு’ என்ற மொழியை அவனுக்கு எடுத்துக்காட்டி ஆறுதல் கூறினேன். அவன் இவ்வளவு வைராக்கிய புருஷன் என்பது எனக்குத் தெரியாதென்றும், இனிமேல் கண்ணுங்கருத்துமாயிருந்து ஏதாவது ஒரு வேலை அவனுக்குத் தேடிக் கொடுப்பதாகவும் உறுதி கூறினேன். இப்போதைக்கு நீ உன் மனைவியுடன் திருச்சிக்குப் போ. என்ன படித்திருந்தாலும் ஸ்திரீதானே? அங்கே திக்குத்திசை தெரியாமல் தவிப்பாள். கொஞ்ச நாளைக்கு நீ அவளுடன் இருக்க வேண்டியது அவசியம்" என்றேன். “அப்படியே செய்கிறேன். ஆனால் நீ உன்னுடைய வாக்குறுதியை மறந்து விடக்கூடாது. 30 ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் போதும். ஆனால் உத்தியோகமின்றி இனி அதிக காலம் நான் உயிர் வாழ மாட்டேன்” என்று சொல்லி விட்டுப் போனான். ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு எனக்குத் தெரிந்த முதலாளி ஒருவர் ஒரு தமிழ் வாரப் பத்திரிகை ஆரம்பிப்பதாகச் சொன்னார். உதவி ஆசிரியர் ஒருவர் வேண்டுமென்று தெரிவித்தார். உடனே அருணாசலத்துக்குக் கடிதம் எழுதினேன். அவனுடைய பதில் எனக்கு ஆச்சரியம் உண்டு பண்ணிற்று. மாதம் 65 ரூபாய் சம்பளத்தில் தனக்கு முன்பே உத்தியோகம் ஆகிவிட்டதாகவும், சம்பள உயர்வுக்கு இடமுண்டு என்றும் தெரிவித்திருந்தான். என்னுடைய முயற்சிக்காக நன்றி செலுத்திவிட்டு, திருச்சிக்கு வந்தால் தன் வீட்டுக்கு வராமல் போகக் கூடாதென்று வற்புறுத்தியிருந்தான். அலுவல் என்ன என்று மட்டும் சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு காரியமாக நான் திருச்சிக்குப் போக நேர்ந்தபோது, அருணாசலத்தை அவசியம் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். அவனைப் பார்ப்பதில் இருந்த ஆவலைவிட, அவனுடைய அலுவல் என்னவென்பதை அறிவதில் அதிக ஆவல் இருந்தது. அவனுடைய கடிதங்களில் அதைப் பற்றி அவ்வளவு மூடுமந்திரம் செய்திருந்தான். மாலை ஆறரை மணிக்குமேல் வீட்டில் வந்து பார்க்கும்படி எழுதியிருந்தான். அன்று மாலை எனக்கு வேலையொன்றும் இல்லாமையால் நாலு மணிக்கே புறப்பட்டு அவன் வீட்டைத் தேடிக்கொண்டு போனேன். வெளிச்சத்திலேயே வீட்டை அடையாளங் கண்டுபிடித்து விட்டால், பிறகு இரவில் சுலபமாகப் போகலாம் என்று எண்ணம். ஐந்து மணிக்கு அவன் வீட்டைக் கண்டுபிடித்தேன். கதவு உட்புறம் தாளிட்டிருந்தது. தட்டினேன். உள்ளிருந்து, “யார் அது?” என்ற சத்தம் கேட்டது. அது அருணாசலத்தின் குரலாய் இருக்கவே, ‘நல்லவேளை, மறுபடியும் போய்விட்டு வரவேண்டியதில்லை’ என்று எண்ணி, “நான் தான் அருணாசலம், கதவைத் திற!” என்றேன். அருணாசலம் உள்ளிருந்து, “ஊ! ஊ!” என்று ஒரு விநோதமான சத்தம் இட்டான். அடுத்த நிமிஷம் வந்து கதவைத் திறந்தான். அவனுடைய கோலத்தைக் கண்டதும் திகைத்துப் போனேன். கலாசாலையில், “டம்பாச்சாரி” என்று பெயர் பெற்ற அருணாசலம் இடுப்பில் ஒரு முழத் துண்டை மூலக்கச்சம் கட்டிக் கொண்டு வந்து எதிரில் நின்றால் திகைக்காமல் என் செய்வது? போதாததற்கு அவனுடைய ஒரு கை ஏதோ மாவில் அளைந்த அடையாளத்துடன் இருந்தது. அச்சமயம் அவன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தான் என்பதைக் கண்டு பிடிப்பதற்குப் புத்திக்கூர்மை அதிகம் வேண்டியதில்லை. என்னை மளமளவென்று அழைத்துச் சென்று கூடத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, “சற்று உட்கார்ந்திரு. இதோ குக்கரை இறக்கிக் குழம்புக்குத் தாளித்துக் கொட்டிவிட்டு வந்துவிடுகிறேன்” என்றான். அப்போது அங்கே தொங்கிய தொட்டிலில் கிடந்த ஒரு குழந்தை ‘வீல்’ என்று கத்தியது. “இந்தப் பயல் அழுதால் கொஞ்சம் தொட்டிலை ஆட்டு, ரொம்ப துஷ்டன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான். தலையெழுத்தை நினைத்துக் கொண்டு தொட்டிலை ஆட்டினேன். அப்போது என்னவெல்லாமோ எண்ணம் தோன்றிற்று. அருணாசலத்தின் மேல் அளவில்லாத இரக்கம் உண்டாயிற்று. படித்த பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் இந்தக் கதிதான். அவளுந்தான் உத்தியோகம் பார்க்கிறாள். இவனுந்தான் உத்தியோகம் செய்கிறான். ஆனால் அவளுக்குச் சம்பளம் அதிகமாயிருப்பதால், வீட்டு வேலைகளையெல்லாம் இவன் செய்ய வேண்டியிருக்கிறது போலும்! அருணாசலத்தின் ரோஷமெல்லாம் எங்கே போயிற்று? சற்று நேரத்திற்கெல்லாம் சம்பங்கி அம்மாள் வந்தாள். என்னைப் பார்த்ததும், “ஓ! நீங்கள் ஆறரை மணிக்கல்லவா வருவீர்களென்று நினைத்தேன்?” என்றாள். அவள் முகத்தில் ஒரு சிறிது அதிருப்தி தோன்றியது. ஆனால் அதை உடனே மறைத்துப் புன்னகையுடன், “முன்னால் வந்ததற்குத் தண்டனை தொட்டில் ஆட்டும் வேலை கிடைத்ததாக்கும்” என்று கூறினாள். அப்போது எனக்கேற்பட்ட மனக்குழப்பத்தில் இன்ன பதில் சொன்னேன் என்பதே எனக்கே இப்போது ஞாபகம் இல்லை. ஏதோ உளறியிருக்க வேண்டும். இதற்குள் அருணாசலம் சமையலை முடித்து விட்டு, வேஷ்டி சொக்காய் முதலியவை போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான். பேச்சினிடையில், “இவர் இப்போது உயிரோடிருப்பதற்காக உங்களுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும் அல்லவா? தூக்குப் போட்டுக் கொள்ளக் கயிறு கொடுக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டீர்களாமே!” என்று சம்பங்கி சொன்னாள். “ஆமாம். வைரங்கூட கிடையாது என்று சொல்லி விட்டேன்” என்று நானும் சிரித்துக் கொண்டே கூறினேன். “இங்கு வந்த பிறகு கூடக் கொஞ்ச நாள் அப்படித்தான் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நான் பதிலுக்கு ஒன்று சொல்லிப் பயமுறுத்திய பிறகுதான் அந்தப் பேச்சு நின்றது. சொல்லி விடட்டுமா?” என்று சம்பங்கி அருணாசலத்தைப் பார்த்தாள்: “தாராளமாகச் சொல். எனக்கு ஆட்சேபணையில்லை” என்றான் அருணாசலம். “இவர் அப்படி ஏதாவது தற்கொலை செய்துகொண்டு இறந்தால், நான் மறுநாளே, பத்திரிகைகளில், ‘படித்து உத்தியோகம் பார்க்கும் இளம் விதவைக்குப் புருஷன் தேவை’ என்று விளம்பரம் செய்து கொள்வேனென்று கூறினேன். அது முதல் செத்துப் போவதைப் பற்றி வாய் திறப்பதில்லை.” “ஒரு வேளை உத்தியோகம் கிடைத்ததும் அந்தப் பேச்சை மறந்ததற்கு ஒரு காரணமாயிருக்கலாம் அல்லவா?” என்றேன். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின் மேல் கண் என்பது போல், அவனுடைய அலுவல் என்னவென்று தெரிந்து கொள்வதிலேயே என் நோக்கம் இருந்தது. “அதுவும் ஒரு காரணந்தான்” என்றான் அருணாசலம். “எந்த ஆபிசில் அப்பா, உனக்கு வேலை? அதை நீ சொல்லவேயில்லையே” என்றேன். அருணாசலம் சிரித்துக் கொண்டே, “ஆமாம், நேரில் தான் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். என்னுடைய ஆபீஸ் இந்த வீடுதான். நீ வந்த போது செய்து கொண்டிருந்தேனே அதுதான் என்னுடைய வேலை” என்றான். முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் நன்றாக விசாரித்ததில் பின்வரும் ஆச்சரியமான விவரங்கள் தெரியவந்தன. சம்பங்கி அம்மாளுக்குக் கிடைத்த ரூ.120 சம்பளத்தில், அருணாசலத்துக்கு மாதம் ரூ.65 சம்பளம் கொடுப்பாளாம். வீட்டுச் செலவுகளுக்குத் தலைக்குச் சரிபாதி போட்ட பின்னர், பாக்கி மிகுந்ததை அவரவர்கள் இஷ்டம்போல் செலவு செய்வார்களாம்; அல்லது சேர்த்து வைத்துக் கொள்வார்களாம்; மேற்படி சம்பளம் வாங்குவதற்காக அருணாசலம் சமையல், குழந்தையைப் பார்த்துக் கொள்வது உட்பட எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியது. ஒருவர் வேலையில் மற்றவர் உதவி செய்வது அவரவர்களுடைய இஷ்டத்தைப் பொறுத்தது. “ஆமாம் ஸார்! இவர் மாதம் 30, 40 சம்பளத்துக்கு எங்கேயாவது போய் உழைப்பதில் என்ன சாதகம்? இவர் இல்லாமற்போனால் நான் சமையற்காரியும் குழந்தைக்கு நர்ஸும் வைத்தாக வேண்டும். இவரும் வேறெங்கேயோ போய்ச் சேவகம் செய்து, நானும் இங்கே பணம் செலவழிப்பதில் என்ன நன்மை? இப்போது நாங்கள் சேர்ந்து இருப்பதற்கும் வசதியிருக்கிறதல்லவா?” எனச் சம்பங்கியம்மாள் கூறினாள். நான் எங்கு ஏதாவது அநுசிதமாய்ப் பேசி அருணாசலத்தின் மனத்தை மாற்றி, அவர்களுடைய குடும்ப வாழ்க்கைக்குச் சனியனாய் விடப் போகிறேனோ என்று அந்த அம்மாள் பயந்ததாகத் தோன்றியது. ஆனால் அந்தப் பயம் அநாவசியமேயாகும். ஏனெனில், அருணாசலம் தன்னுடைய நிலைமையில் முற்றும் திருப்தியுள்ளவனாயிருந்தான். அவனுடைய மனத்தை மாற்றுவதற்கு யாராலும் முடியாது. “ஆனால் ஒரு தகராறு இருக்கிறது, அப்பா! அதை நீதான் பஞ்சாயத்துச் செய்து தீர்த்து வைத்துவிட்டுப் போகவேண்டும்” என்றான். “முடியுமானால் செய்கிறேன். அது என்ன?” என்று கேட்டேன். “நான் வேலை ஒப்புக்கொண்டு ஒரு வருஷம் ஆகிறது. அவ்வப்போது சம்பளம் உயர்த்த வேண்டுமென்று அப்போது பேச்சு. இந்த வருஷம் பள்ளிக்கூடத்தில் இவளுக்குச் சம்பளம் உயர்த்தாதபடியால் எனக்கும் சம்பளம் உயர்வு கிடையாது என்கிறாள். இது நியாயமா? இவளுடைய சம்பளத்துக்கும் என்னுடைய சம்பளத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்றான். “ஆமாம், ஸார்! உலகமெல்லாம் 100க்கு 10 சம்பளம் குறைத்திருக்கிறார்கள். இவருக்கு எப்படி ஸார் உயர்த்த முடியும்?” என்றாள் சம்பங்கி. நான் யோசித்தேன். என்னுடைய அநுதாபமெல்லாம் அருணாசலத்தின் பக்கந்தான் இருந்தது. ஆனால் அவன் பக்கம் பேசுவதில் ஓர் அபாயம் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய வீட்டில் என் மனைவி குடும்ப வேலை பார்ப்பதற்கு இந்த மாதிரி சம்பளம் கேட்கத் தொடங்கினால் நான் தாராளமாய் இருக்க முடியுமா? நீங்கள்தான் இருக்க முடியுமா? ஆகவே இப்போது அருணாசலம் பக்கம் பேசினால் ஆண் குலம் முழுவதற்கும் ஒரு பிரதிகூலத்தைச் செய்தவர்களாவோம் என்று தோன்றியது. தீர ஆலோசித்துப் பின்வருமாறு தீர்ப்புக் கூறினேன். “அம்மாளுடைய சம்பளத்துக்கும் உன் சம்பளத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதைக் காரணமாய்க் காட்டி உனக்குச் சம்பள உயர்வு இல்லையென்று சொல்வது தவறுதான். ஆனால் நீயும் காரணமின்றிச் சம்பள உயர்வு கேட்கக் கூடாது. உன் உத்தியோகத்துக்கு வருஷா வருஷம் சம்பள உயர்வு சரியன்று. ஒரு குழந்தை அதிகமானால் ஓர் ஐந்து ரூபாய் சம்பளம் அதிகமென்று ஏற்படுத்திக் கொள்வது நியாயமாயிருக்கும்.” இந்தத் தீர்ப்பு சம்பங்கி அம்மாளுக்கு மிகவும் திருப்தியளித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏனெனில், அவள் எங்கள் இருவரையும் உட்கார வைத்துச் சாப்பாடு பரிமாறினாள். அருணாசலத்தின் வேலையில் உதவி செய்யத் தனக்கு அன்று இஷ்டம் என்று தெரிவித்தாள். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வாசற்படியைத் தாண்டும் போது, ‘இந்த ஏற்பாட்டின் கீழ் அந்தத் தம்பதிகள் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்த முடியுமா? அவர்களிடையில் அன்பு இருக்குமா?’ என்ற எண்ணம் மனத்தில் தோன்றியது. அப்போது என்னையறியாமல் நான் விட்டுப் பிரிந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். வெட்கங் கெட்டவர்கள்! நான் அப்பால் போகிற வரையில் தாமதிக்கக் கூடாதா? இது என்ன சொர்க்கம் ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. ‘தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா’ என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. “அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது? - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம்?” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா? முடியாது! அழத்தான் முடியுமா? அதுவும் முடியாது! இதற்குப் பெயர் சொர்க்கமாம். சிவ!சிவ! ராம! ராம! இல்லை. பிசகு! வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும் பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே! போதாதா? சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம்? சனீசுவரனைப் பிரார்த்தித்துப் பார்க்கலாமா? “சனிசுவர! சனீசுவர! சனீசுவர! சனீசுவர!” “யார் சாஸ்திரிகள்வாளா?” என்று பழகிய குரல் காதில் விழுந்தது. சாஸ்திரிகள் மூன்று துள்ளி துள்ளி ஒரே குதியாய்க் குதித்தார். பார்த்தால் சாக்ஷாத் திவான்பகதூர் கச்சபேசுவர முதலியார் எதிரே வந்து கொண்டிருக்கிறார். “அடாடா!, முதலியார்வாளா? வாருங்கோ வாருங்கோ வாருங்கோ! பார்த்துப் பதினைந்து வருஷத்துக்கு மேலாச்சே! எப்போது வந்தீர்கள்? என்ன சேதி? என்ன சமாச்சாரம்?” என்று உற்சாகமாகக் கேட்டு சாஸ்திரிகள் முதலியாரின் கையைப் பிடித்துக் குலுக்க முயன்றார். ஆனால் கையில் ஒன்றும் அகப்படாமற் போகவே, முகத்தில் ஏமாற்றம் தோன்றியது. “என்ன சாஸ்திரிகள் வாள்! இது சொர்க்கம் என்கிறதே மறந்து போய்விட்டாற் போலிருக்கிறது! பூலோகத்தில் இருப்பதாகவே ஞாபகமோ?” என்றார் கச்சபேசுவர முதலியார். “அப்படித்தான்னா அப்படித்தான்! உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் இது சொர்க்கம் என்கிறதே மறந்துதான் போச்சு! பூலோகமென்றே நினைச்சுட்டேன்!” என்று சாஸ்திரிகள் கூறி ‘ஹிஹ்ஹிஹ்ஹி’ என்று சிரித்தார். அப்போது அந்தப் பக்கமாகப் போன தேவர்களும் தேவிகளும் அவரை நோக்கி ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள். “இந்த மாதிரி சிரிப்பைக் கேட்டுப் பத்து வருஷத்துக்கு மேலாகி விட்டது?” என்றார் முதலியார். “ஆமான்னா! அதை நினைத்தால் துக்கம் துக்கமாய் வருகிறது. ஊம் ஊம்!” என்று சாஸ்திரிகள் பலமாக அழுதார். “வேண்டான்னா, அழாதேங்கோ!” என்று முதலியார் கூறி, “இப்படி அழுகைக் குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ஊம் ஊம்” என்று தாமும் அழத் தொடங்கினார். இரண்டு பேரும் ஒருவருடைய கண்ணை ஒருவர் துடைக்க முயன்று, அதில் பிரயோஜனமில்லையென்று கண்டபோது, அதனுடைய ஹாஸ்ய ரசத்தை அநுபவித்துப் பலமாகச் சிரித்தார்கள். “அப்படின்னா, உங்களுக்கும் சொர்க்கம் பிடிக்கவில்லையென்று சொல்லுங்கோ?” என்றார் முதலியார். “பிடிக்கவில்லையா? அழகுதான். பிடிக்கவில்லையான்னா கேட்கிறீர்கள்? சொர்க்கம் என்கிறது இந்த மாதிரி இருக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு தானம் தர்மம் தலையிலே குட்டிக்கிறது, மூக்கைப் பிடிக்கிறது, கோவிலுக்குப் போகிறது - ஒன்றுமே பண்ணியிருக்க மாட்டேனே? இந்த அழகான சொர்க்கத்துக்காகப் பூலோகத்தை நன்றாக அனுபவிக்காமல் போனது என்ன முட்டாள்தனம் என்பதை எண்ணும் போது…” “என் மனத்திலிருக்கிறதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். சாஸ்திரிகள்வாள்! எங்கேயாவது ஓரிடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேச வேணும். இருக்கட்டும் இப்போ எங்கே கிளம்பிப் போய்க் கொண்டிருந்தீர்கள்” என்று முதலியார் கேட்டார். “எங்கே கிளம்பினேனா? ஓரிடத்துக்கும் இல்லை. இந்த அழகான சொர்க்கத்திலே எங்கே போனால் தான் என்ன? எல்லாம் ஒரே லட்சணந்தான்!” என்று சாஸ்திரிகள் அலுப்புடன் கூறினார். “அப்படியானால் வாருங்கள்! அதோ அந்த மந்தார மரத்தடியில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம்” என்றார் முதலியார். இரண்டு பேரும் சமீபத்தில் தென்பட்ட மந்தார மரத்தடிக்குப் போய் உட்கார்ந்தார்கள். மந்தார விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்த மலர்களிலிருந்து கிளம்பிய திவ்ய பரிமள வாசனை நாலாபுறமும் சூழ்ந்திருந்தது. மரக்கிளையில் குயில்கள் உட்கார்ந்து ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று இனிய குரலில் பாடின. மரத்தினடியில் பச்சை ஜமக்காளம் விரித்தாற் போல் பசும் புல் படர்ந்திருந்தது. ஒரு தூசி தும்பு கிடையாது. சாஸ்திரிகள் ஒரு புல்லைப் பிடுங்கி வாயில் வைத்துக் கடித்தார். “என்ன, வியாக்ரபாத சாஸ்திரிகளே! புல்லைத் தின்கிறீர்களோ? புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்னும் பழமொழி என்ன கதி ஆயிற்று?” என்று முதலியார் சொல்லி, ‘ஹிஹ்ஹிஹ்ஹி’ என்று சிரித்தார். “அதெல்லாம் பூலோகத்துப் பழமொழி! இந்தத் தரித்திரம் பிடித்த சொர்க்கத்திலே புலிக்கு பசியே தான் கிடையாதே?” என்று சாஸ்திரிகள் சொல்லி, ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரித்தார். “பின்னே என்னத்திற்காகப் புல்லைத் தின்கிறீர்கள்?” “என்ன இருக்கிறது இங்கே தின்கிறதுக்கு? அமிர்தத்தைத் தவிர - வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது!” “அமிர்தம் அலுத்துப் போய்விட்டதா? அது தான் கேட்டேன், ஏன் சாஸ்திரிகள்வாள்! பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் ‘அமிர்தமாயிருக்கு’ என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ? இனிமேல் சொல்ல மாட்டீரே.” “என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்! இட்லி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் இந்த சொர்க்கத்தில் கிடையாது என்று மட்டும் தெரிந்திருந்தால்…அமிர்தமாம்! அமிர்தம்!” “பிச்சுவய்யர் ஹோடலிலே வெங்காய கொத்ஸு பண்ணுவார்களே, அதன் காலிலே கட்டி அடிக்கவேணும் இந்த அமிர்தத்தை!” “அடடா! நாம் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது, சங்கரய்யர் ஹோட்டலிலே ரவா தோசை சாப்பிடுவோமே, ஞாபகமிருக்கா?” “அதை நினைச்சுண்டா நாக்கிலே ஜலம் சொட்டுகிறது?” “வேறு எது வேணாலும் இல்லாமற் போகட்டும்! காப்பியைச் சொல்லும்! காப்பி இல்லாத சொர்க்கம் சொர்க்கமா என்று கேட்கிறேன்.” இந்தச் சமயத்தில் மந்தார மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று எட்டிப் பார்த்து ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று கத்திற்று. “முதலியார்வாள்! இந்தக் குயிலைக் கொஞ்சம் பேசாமலிருக்கச் செய்கிறீரா? இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா? கேட்கச் சகிக்கவில்லை.” “சாஸ்திரிகளே! பூலோகத்தில் நீர் எத்தனை தடவை நல்ல குரலைப் பற்றிப் பேசும் போது ‘குயில்தான்’ என்று சொல்லியிருக்கிறீர்? இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர்?” “அட சனியனே! அப்போதெல்லாம் நான் குயிலின் குரலையே கேட்டதில்லையே? அதனாலல்லவா அப்படிச் சொல்லித் தொலைத்தேன்.” “இந்தச் சொர்க்கத்திலே சங்கீதம் எவ்வளவு கேவலமாயிருக்கிறது பாருங்களேன்! மகாமட்டம்!” “அடடா, நாம் நடத்தினோமே பட்டணத்தில் கர்நாடக சங்கீத புனருத்தாரண சபை! எவ்வளவு ஜோராக நடத்தினோம்!” “இங்கே பாடுகிறார்களே, தலைக்குத் தலை ஒரு வீணையை மீட்டிக் கொண்டு, இது ஒரு பாட்டா? நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார்? நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும்? அது சங்கீதமா? இங்கே இவர்கள் அழுது வடிக்கிறார்களே, இது சங்கீதமா?” “ஆமான்னா, ஆமாம்! இங்கே நான் எத்தனையோ பேரைக் கேட்டுட்டேன். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமா என்று அந்த மாதிரி வாக்கியத்தையே இங்கே ஒருவரும் கேட்டதில்லையாம்.” "சரியாய்ப் போச்சு, போங்கள்! அது ஒன்று தான் இந்த சொர்க்கத்திலே நல்ல அம்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்டுப் பெண் ஸுலோசனா தினம் ஹார்மோனியத்தை எடுத்து வச்சுண்டு அழறதைக் கேட்கச் சகிக்காமல் தான், சீக்கிரமாகச் சொர்க்கத்துக்கு வந்து விடணும் என்று ஆசைப்பட்டேன். அம்மம்மா! அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு! நான் ரொம்பக் கர்நாடகமாம்! நான் பகவத் கீதைப் பிரசங்கம் பண்ணுகிறதை அவள் என்னவெல்லாம் கேலி செய்தாள் தெரியுமோ? அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம்! ஆனால் முதலியார் இதற்கு நேர் விரோதம், நம்ம பையன். உள்ளூரிலே பகவத் கீதை பிரசங்கம் நான் செய்தால் நம்ம பஞ்சாமிதான் கடைசிவரையில் உட்கார்ந்து சிரத்தையாய்க் கேட்டுக் கொண்டிருப்பான்." “சாஸ்திரிகளே! உம்முடைய மனத்தில் இருப்பதை நிஜமாகச் சொல்லி விடட்டுமா. உம்முடைய பகவத் கீதைப் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சொர்க்கத்தில் ஒருவரும் இல்லையென்பது தானே உம்முடைய மனக்குறை?” “வாஸ்தவந்தான்! இந்த சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் மகா மோசம். பகவத் கீதை உபநிஷத், பெரிய புராணம் ஒன்றிலுமே இவர்களுக்குச் சிரத்தை கிடையாது. சுத்த நாஸ்திகர்கள். எல்லாரும் ஆடல் பாடல்களிலேயே முழுகியிருக்கிறார்கள். ஏதடா! நாளைக்குப் போகும் கதிக்கு வழி தேடிக் கொள்ள வேண்டுமே என்று ஒருவருக்கும் கவலை கிடையாது.” “இருக்கட்டும், முதலியார்! இங்கே சாயங்கால வேளையில் உங்களுக்கு எப்படிப் பொழுது போகிறது! பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே! தினம் சாயங்காலம் வந்தால், பகவத் கீதையிலே நாலு நாலு சுலோகமாய்ச் சொல்லிண்டு வரேன்…” “சாஸ்திரிகளே! நிறுத்தும். பூலோகத்தில் உம்மிடம் பகவத் கீதை பிரசங்கம் கேட்டதெல்லாம் போதும். வேறு பேச்சு ஏதாவது பேசுவதாயிருந்தால் நான் இருக்கிறேன். இல்லாவிட்டால் இதோ நடையைக் கட்டுகிறேன்” என்று முதலியார் எழுந்திருக்க, சாஸ்திரிகள் அவரைக் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்று முடியாமற் போகவே, “வேண்டாம், நான் பகவத் கீதையைப் பற்றிப் பேசவில்லை. வேறு ஏதாவது பேசுவோம். தயவு செய்து உட்காருங்கள்” என்றார். “வேறு எதைப் பற்றி பேசலாம்?” என்று சாஸ்திரிகள் கேட்டார். “எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தச் சொர்க்கலோகத்திலுள்ள ஸ்திரீகளைப் பற்றி உம்முடைய நிஜமான அபிப்ராயம் என்ன?” “சுத்த மோசம் என்பதுதான்?” “எந்த விஷயத்தில் மோசம்?” “எல்லா விஷயத்திலுந்தான். முக்கியமாக, சொர்க்கத்தில் எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறாள். அதில் என்ன விசேஷம் இருக்கிறது? பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன?” “எப்படி?” “எது?” “யாரு?” “அவள்தான்னா மிஸ்ஸஸ் லோசனா தத்…” “அப்படிச் சொல்லுங்கோ சாஸ்திரிகளே.” இதற்குப் பிறகு சாஸ்திரிகளும் முதலியாரும் பேசிய விஷயங்கள் கொஞ்சம் விரஸமாயும் அப்படியே பிரசுரிப்பதற்கு லாயக்கற்றவையாயும் இருந்தன. கடைசியாக அந்த “லோசனா தத்தின் பெயர் பத்திரிகையிலே கூடக் கொஞ்ச நாள் அடிபட்டதில்லையா?” என்றார் முதலியார். “ஆமான்னா ஆமாம். பத்திரிகை என்ற உடனே ஞாபகம் வருகிறது. இந்தச் சொர்க்கத்திலே ஒரு நியூஸ் பேப்பர் கூடக் கிடையாது. பார்த்தீரா? மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க, நியூஸ் பேப்பர் இல்லை என்கிறதை நினைத்தால் தான், ‘இது என்ன தரித்திரம் பிடித்த சொர்க்கம்’ என்று தோன்றுகிறது.” “வாஸ்தவந்தான். நியூஸ் பேப்பர் இல்லாததுதான் பெரிய குறை. சாஸ்திரிகளே! சமாசாரம் தெரியுமா? பூலோகத்திலே இப்போது பெரிய யுத்தம் நடக்கிறதாமே? நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம்!” “நிஜமாகவா? அடாடாடா! இப்பேர்ப்பட்ட சமயத்திலா நாம் பூலோகத்தில் இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறோம்? ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார்!” “நாலு நாளைக்கு முன்னால் ஒரு பிள்ளையாண்டான் பூலோகத்திலிருந்து வந்தான். அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.” “நீர் அதிர்ஷ்டசாலி ஓய்! பூலோகத்திலிருந்து வந்தவனைப் பார்த்தீரா? அவன் இன்னும் என்னென்ன சொன்னான்?” “யுத்தம் என்றால் உங்க வீட்டு யுத்தம், எங்க வீட்டு யுத்தம் இல்லையாம். ஆகாச விமானங்களிலே கொண்டு வந்து குண்டு போடுகிறார்களாம். ஊர் ஊராய்ப் பற்றி எரிகிறதாம். ஆமாம் சாஸ்திரிகளே! பூலோகத்திலே நாமெல்லாம் புராணங்களிலே வாசித்துக் கொண்டிருந்தோமே, தேவர்களும் அசுரர்களும் பிரமாத யுத்தம் செய்தார்கள் என்று, இங்கே ஒரு மண்ணாங்கட்டியையும் காணோமே.” “அது தெரியாத உமக்கு? அசுரர்களையெல்லாம் கொன்றாகி விட்டதாம்! இனிமேல் இங்கே யுத்தம் என்பதே வராதாம்!” “சட்சட்! இவ்வளவுதானா?” “ஆமாம் முதலியார்வாள்! யாரோ பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தான் என்றீரே? அவனை எங்கே பார்த்தீர்? என் கண்ணிலே ஒருவனும் தட்டுப்படவில்லையே?” “எங்கே பார்த்தேன் என்றா கேட்கிறீர்?” “அதைத்தான் கேட்கிறேன்?” “சொல்லப் பயமாயிருக்கிறது.” “பயமா? என்னத்திற்குப் பயம்?” “இந்த சொர்க்கம் எங்கே தான் போய் முடிகிறது என்று பார்ப்பதற்காக நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெகு தூரம் போன பிறகு, பூலோகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே, மலைக் கணவாய் - அந்த மாதிரி ஒரு இடம் வந்தது. அந்தக் கணவாய் வழியாய்க் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை ஒரு புது மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.” “ஆமாம்; அந்தக் கணவாய்க்குள் புகுந்து அது எங்கே போகிறது என்று பார்த்தீரா?” “இல்லை, பயமாயிருந்தது.” “என்ன பயம்?” “சில பேர் அதற்குள் புகுந்து போனதைப் பார்த்தேன். அவர்கள் திரும்பி வரவேயில்லை.” “என்ன நிஜந்தானா?” “ஆமாம்.” “சபாஷ்!” என்றார் சாஸ்திரியார். “எதற்கு சபாஷ்!” “அந்தக் கணவாய்தான் பூலோகத்துக்குப் போகும் வழியாயிருக்க வேண்டும். முதலியார்வாள்! சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா?” “கட்டோடே பிடிக்கவில்லை.” “பூலோகத்துக்குப் போக வேண்டுமென்றிருக்கிறதல்லவா?” “இருக்கிறது!” “சரி, அப்படியானால் கிளம்பும்” என்று சாஸ்திரிகள் எழுந்தார். இரண்டு பேரும் காற்று வெளியில் மிதந்து வெகுதூரம் போனார்கள். “அதோ!” என்றார் முதலியார். "ஒரு நீண்ட மேக மலைத் தொடர் தெரிந்தது. அதன் நடுவில் ஒரு பிளவு தென்பட்டது. இருவரும் அந்தப் பிளவுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதும் சட்டென்று முடிந்து விட்டது. அப்புறம் ஒன்றுமே இல்லை. வெறும் வெளிதான். விளிம்பினருகில் போய்ப் பார்த்தால் கீழே அதல பாதாளம். “அம்மம்மா! எவ்வளவு பெரிய பள்ளம்! இதில் விழுந்தால்…” “பூலோகத்துக்குப் போகலாமே” என்று முதலியாரின் குரல் கேட்டது. அவ்வளவுதான்! சாஸ்திரியார் கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தார். காலவரம்பென்பதே இல்லாமல் அனந்தகாலம் கீழே போய்க் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்புறம் அவருடைய ஞாபகம் போய் விட்டது. சாஸ்திரியாருக்கு மறுபடியும் சுயப் பிரக்ஞை வந்த போது படார், படார் என்று வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குக் கீழேயும் பக்கங்களிலும் ஏதோ மிருதுவான வஸ்து இருப்பது போல் உணர்ச்சி உண்டாயிற்று. அடே! இதென்ன? சொர்க்கத்திலே ஸ்பரிச உணர்ச்சிதான் கிடையாதே! பார்க்கிறதோடு சரிதானே - ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது? - ஆமாம் கச்சபேசுவர முதலியார் எங்கே? ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. ஆனால் முதலியாரின் குரல் இல்லை. ஸ்திரீகள் குரல். யாரோ குனிந்து பார்ப்பது போல் இருந்தது. ஓஹோ நமது பாரியாள் சீதாலக்ஷ்மி அம்மாள் அல்லவா? ஆனால், இதென்ன மாறுதல்? முகத்தில் இவ்வளவு சுருக்கங்கள் - தலை மயிர் ஒரே வெள்ளை! சரிதான்; பன்னிரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறோமல்லவா? “தாத்தாவையே உரித்து வச்சிருக்கு!” என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள். இன்னொரு குரல் பக்கத்திலிருந்து, “அபசகுனம் மாதிரி அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. தாத்தாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என் வயிற்றிலே பிறந்திருக்க மாட்டார்” என்றது. அவருடைய மாட்டுப் பெண் ஸுலோசனாவின் குரல் அது என்று தெரிந்து கொண்டார். “அப்படிச் சொல்லாதேடி, மனத்துக்குள்ளே உன் மேலே அவருக்கு ரொம்ப வாஞ்சை. கடைசி வரையில் குழந்தை மாதிரி தீபாவளிக்குப் பட்டாசுச் சுட்டு விடுவாரோல்யோ? அதுதான் தீபாவளியன்றைக்குப் பிறந்திருக்கிறார்” என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள். அப்போது சாஸ்திரியார் மனப்பூர்வமாக வெறுத்த அவருடைய மாட்டுப் பெண்ணின் முகம் - முன்னே பார்த்ததைக் காட்டிலும் பெருத்து உப்பியிருந்த முகம் - பவுடர் வாசனை மூக்கைத் துளைத்த முகம் - அவருடைய முகத்தின் மிக அருகில் வந்தது. அதைத் தடுத்துத் தள்ளுவதற்காகச் சாஸ்திரியார் கையைத் தூக்கினார். என்ன வேடிக்கை! கை துளியுண்டு இருக்கிறதே! “என் கண்ணே! அதற்குள்ளே அம்மான்னு தெரிஞ்சு போச்சா!” என்றாள் ஸுலோசனா. அப்போதுதான் சாஸ்திரியாருக்கு விஷயம் தெரிந்தது. விதி தன்னை எவ்விதம் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி விட்டதென்று! தன்னுடைய சொந்த வீட்டில் தான் தொட்டிலில் படுத்திருப்பதையும், தன் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தையாய்ப் பிறந்திருப்பதையும் உணர்ந்தார். பிரமாதமான ஆத்திரமும், அழுகையும் வந்தது. கையையும் காலையும் உதைத்துக் கொண்டு ‘வீல்’ என்று அழுதார். “அம்மா நீங்கள் சொன்னது சரிதான். தொண்டையைப் பாருங்கோ! அசல் தாத்தாதான்” என்றாள் ஸுலோசனா. வெளியிலிருந்து சாஸ்திரிகளுடைய குமாரன் பஞ்சாமியின் குரல் சொல்லிற்று: “எத்தனை பகவத் கீதையைப் பிரசங்கம் பண்ணி, இருக்கிறவாள் பிராணனை எல்லாம் வாங்கப் போகிறாரோ.” இதைக் கேட்டதும் சாஸ்திரியார் மூர்ச்சையடைந்தார். மறுபடியும் பிரக்ஞை வந்தது; ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை. கடிதமும் கண்ணீரும் பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒரு நாள் மாலை வழக்கம் போல் வித்யாலயத்தைச் சுற்றியிருந்த பெரிய தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். வித்யாலயத்துக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு பங்களாவிலிருந்து வந்த நாதஸ்வரத்தின் கீதம் அவருக்கு ஏதேதோ பழைய நினைவுகளை உண்டாக்கின. எப்போதும் சாந்தம் குடி கொண்டிருக்கும் அவருடைய முகத்திலே ஒரு நிமிஷம் கிளர்ச்சியின் அறிகுறி தோன்றி அடுத்த கணம் மறைந்தது. அக்காட்சி, அமைதியான சமுத்திரத்தில் திடீரென்று ஒரு பேரலை கிளம்பிக் கரையோரமிருந்த பாறைமீது மோதி அதை ஒரு நிமிஷம் மூழ்க அடித்து விட்டு, மறு நிமிஷம் திரும்பிச் செல்ல, மீண்டும் அக் கடலில் அமைதி குடி கொள்வது போலிருந்தது. அலை அடித்தது என்பதற்கு ஞாபகார்த்தமாய் அந்தப் பாறையிலே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தங்கியிருப்பது போல, அன்னபூரணியின் கண்களிலும் ஜலம் ததும்பி நின்றது. அப்போது அந்தத் தோட்டப் பாதையில் எதிர்ப்புறமாக வித்யாலயத்தின் உதவி ஆசிரியை ஸ்ரீமதி சாவித்ரி, எம்.ஏ., எல்.டி. வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அன்னபூரணி தேவி கண்ணீரைச் சட்டென்று துடைத்துக் கொண்டு, புன்னகையுடன் சாவித்ரியை வரவேற்றார். இருவரும் சமீபத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த சிமெண்ட் மேடை மீது உட்கார்ந்தார்கள். பெண் குலத்தின் சேவையில் தலை நரைத்துப் போனவர் என்றால் அது சகோதரி அன்னபூரணிக்கு முற்றும் பொருத்தமாயிருக்கும். அவருடைய நெற்றியைக் கவிந்து கொண்டு அடர்த்தியாய் வளர்ந்திருந்த வெள்ளிய கேசத்தைப் பார்க்கும்போது, மலைச் சிகரங்களின் மேல் அடுக்கடுக்காகத் தங்கி நிற்கும் வெண்ணிற மேகங்களின் காட்சி ஞாபகத்துக்கு வரும். இவ்வாறு தலை நரைத்துப் போயிருந்தாலும், அவர் முகத்தைப் பார்க்கும்போது, அவர் ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாராலும் சொல்ல முடியாது. மாறாத இளமையின் இரகசியத்தைக் கண்டுபிடித்தவரோ அவர் என்று கூடத் தோன்றும். வெள்ளைக் கலையுடனும், வெண்மயிர் அடர்ந்த தலையுடனும், சாந்தம் குடிகொண்ட முகத்துடனும் தோன்றிய சகோதரி அன்னபூரணியைப் பார்ப்பவர்கள், அவரைச் சரஸ்வதி தேவியின் அவதாரமென்றே நினைப்பார்கள். அன்னபூரணியின் வாழ்க்கை வரலாறோ, எல்லாரும் பிரசித்தமாக அறிந்த விஷயம். ஒன்பதாவது வயதில் நினைவு தெரியுமுன்பே வைதவ்யக் கொடுமைக்கு ஆளாகும் துர்ப்பாக்கியத்தைப் பெற்றவர் அவர். அவருடைய அந்தத் துர்ப்பாக்கியமே பெண் குலத்தின் நற்பாக்கியம் ஆயிற்று. பிற்காலத்தில் அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து, முயற்சியுடன் படித்து, கடைசியாக பி.ஏ.,எல்.டி. பட்டமும் பெற்றார். அதுமுதல், இளம்பிராயத்தில் கணவனை இழந்தவர்கள், கணவன்மார்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அநாதைப் பெண்கள் முதலியோருக்குத் தொண்டு செய்வதிலேயே தமது வாணாளைச் செலவிட்டு வந்தார். அவருடைய இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதனமாக இந்தத் தேவி வித்யாலயத்தை ஸ்தாபித்துத் தமது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் அதற்கே அர்ப்பணம் செய்திருந்தார். உதவி ஆசிரியை ஸ்ரீமதி சாவித்ரி இளம் பிராயத்தவள். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். இன்னும் கலியாணம் ஆகவில்லை. மூன்று வருஷத்துக்கு முன் அவள் எம்.ஏ.,எல்.டி. பரீஷை தேறி, இந்த வித்யாலயத்தில் உதவி ஆசிரியையாக வந்தபோது, சம்பாத்யத்துக்காகவே வந்தாளென்றாலும், பின்னால் சகோதரி அன்னபூரணியின் சகவாசத்தினால் அவளுடைய மனோபாவமே மாறிப் போயிருந்தது. அன்னபூரணியைப் போல் தானும் பெண் குலத்தின் தொண்டுக்காகவே வாணாளை அர்ப்பணம் செய்தாலென்ன என்று கூடச் சில சமயம் அவள் எண்ண மிடுவதுண்டு. சிமெண்ட் மேடையின் மீது உட்கார்ந்ததும், சாவித்ரி, “அம்மா! இன்று கவிதைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போய்விட்டது. ‘அன்பினால் தான் உலகம் இயங்குகின்றது’ என்பதாக அதில் ஒரு வரி வருகிறது. ‘எந்த அன்பைச் சொல்கிறார் கவி?’ என்று பத்மா கேட்டாள். ரொம்பப் பொல்லாத பெண் பத்மா!…அதோ அவள் சிரிக்கிற சப்தத்தைக் கேளுங்கள்!” என்றாள் சாவித்ரி. தோட்டத்தின் இன்னொரு பகுதியில் சில பெண்கள் கையால் எறிந்து விளையாடும் பந்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிய கலகலவென்ற சிரிப்பின் ஒலி தென்றல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. “பத்மாவின் கேள்விக்குப் பதில் என்ன சொன்னாய்?” என்று அன்னபூரணி கேட்டாள். “பதில் சொல்லத் திணறிப் போய் விட்டேன். கவி இங்கே ‘அன்பு’ என்று சொல்லும்போது காதலைத்தான் குறிப்பிடுகிறார். ஆனால் இதை அந்தப் பெண்களுக்கு நான் எப்படிச் சொல்வது? சாதாரணப் பெண்களுக்கு முன்னால் சொல்வதே கஷ்டம். நான் ‘குவீன் மேரீஸ்’ காலேஜில் படித்தபோது, எங்கள் ஆசிரியைகள் பட்ட அவஸ்தை நன்றாய் ஞாபகமிருக்கிறது. இங்கே, விதவைப் பெண்கள், புருஷர்களால் தள்ளி வைக்கப்பட்டவர்கள் - இப்படிப் பட்டவர்கள் முன்னால் காதலைப் பற்றி என்னமாய்ப் பேசுவது?” இப்படிச் சொல்லி வந்த சாவித்ரி சட்டென்று நிறுத்தினாள். சகோதரி அன்னபூரணியும் பால்யத்தில் கணவனை இழந்தவர் என்பது சாவித்ரிக்கு அச்சமயம் ஞாபகம் வரவே, தான் விரஸமாய்ப் பேசிவிட்டதாக அவளுக்குப் பயம் உண்டாயிற்று. அந்தத் தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவள் மறுபடியும் கூறினாள்: “உண்மையாகப் பார்த்தால், அம்மா, இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றுகிறது. காதல், கீதல் என்று சொல்வதெல்லாம் வெறும் பிரமையேயல்லவா? வேலையில்லாத கவிகளின் வீண் மனோராஜ்யத்தைத் தவிர வேறொன்றுமில்லை…” அப்போது, அன்னபூரணி, “அப்படியா சமாசாரம்? எல்லாம் பிரமைதானா? ரொம்ப சரி, அந்தப்படி டாக்டர் சீனிவாசனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன்,” என்றார். சாவித்ரி டாக்டர் சீனிவாசனைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிற விஷயத்தையே அன்னபூரணி அவ்வாறு குறிப்பிட்டார். சாவித்ரி ஒரு மழுப்பல் சிரிப்புச் சிரித்துவிட்டு, "ஆமாம்; யார் கண்டார்கள்? இப்போது நிஜம் போல் இருக்கிறது, இரண்டு வருஷம் போனால் எப்படி இருக்குமோ? யாருக்குத் தெரியும்? அது போனால் போகட்டும் அம்மா! ‘உலகத்தில் சிறந்த காரியங்கள் எல்லாம் காதலினால்தான் நடக்கிறது’ என்று இந்தக் கவி சொல்வது அபத்தந்தானே? அது எப்படிச் சரியாகும்? “இருபத்தைந்து வருஷ காலமாக நடந்து வரும் இந்தத் தேவி வித்யாலத்தையே எடுத்துக் கொள்ளலாம். கன்யாகுமரியிலிருந்து ஹிமாலயம் வரையில் இந்த ஸ்தாபனத்தைப் புகழாதவர்கள் இல்லை. தங்களுடைய சேவையைப் பாராட்டாதவர்களும் இல்லை. இந்த ஸேவாலயத்தின் விஷயத்தில் கவி சொல்வது எப்படிப் பொருந்தும்?” என்றாள். “சாவித்ரி! உலகத்திலே நடக்கும் மற்றச் சிறந்த காரியங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. கவி சொல்வது அவற்றுக்கெல்லாம் பொருந்துமோ, என்னவோ, அறியேன். ஆனால், என்னுடைய சேவையை ஒரு பெரிய காரியமாய்க் கருதும் பட்சத்தில், கவி சொல்வது அதற்கு முற்றிலும் பொருந்தும். என்னுடைய முயற்சிகளுக்கெல்லாம் மூலகாரணம் அன்புதான்.” “இல்லையென்று யார் சொன்னார்கள்? அநாதைகளிடத்திலும் தீனர்களிடத்திலும் தங்களுடைய அன்பு பிரசித்தமானதல்லவா?” “அந்த அன்பைச் சொல்லவில்லை நான். கவி சொல்லும் காதலைத் தான் சொல்கிறேன். நான் ஏதாவது சேவை செய்திருந்தால், அது அவ்வளவும் காதல் என்னும் விதையிலிருந்து முளைத்து எழுந்ததுதான்” சாவித்ரி இதைக் கேட்டு அளவிலா வியப்பு அடைந்தாள். “அம்மா! நிஜமாகவா, அம்மா? ஐயோ! எனக்கு எல்லாம் சொல்லுங்கள்!” என்று பரபரப்புடன் கேட்டாள். அன்னபூரணி சொல்கிறார்: “அதோ அந்தக் கலியாண வீட்டிலிருந்து மேளச் சத்தம் காற்றில் மிதந்து வருகிறதே, கேட்கிறாயல்லவா? நாயனக்காரன் நாட்டைக்குறிஞ்சி ராகத்தை அற்புதமாய் வாசிக்கிறான். உன்னைப் பார்ப்பதற்கு ஒரு நிமிஷம் முன்னால் அது என் காதில் விழுந்தபோது பழைய காலத்து ஞாபகம் எனக்கு உண்டாயிற்று. ஒரு நாளும் இல்லாதபடி கண்ணில் ஜலம் கூட வந்துவிட்டது. பல வருஷங்களுக்கு முன்னால் ஒரு கல்யாணத்தின் போது இதே ராகத்தைச் செம்பொன்னார் கோவில் ராமசாமி வாசித்தான். அப்போதெல்லாம் நாயனக்காரர்களில் அவன் தான் பிரசித்தம்…” “அதெல்லாம் உங்களுக்கு இன்னுமா ஞாபகம் இருக்கிறது, அம்மா! ரொம்பவும் பால்யத்தில் உங்களுக்குக் கலியாணம் ஆயிற்று என்று கேள்விப்பட்டிருக்கிறேனே?” “என்னுடைய கலியாணத்தை நான் சொல்லவில்லை. ஆறு வயதிலே எனக்குக் கலியாணம் பண்ணினார்களாம். ஒன்பது வயதிலே கைம்பெண் ஆனேன். அதெல்லாம் எனக்குக் கனவு மாதிரி கூட ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு இளம் வயதில் விதவையானதில் ஒரு சௌகரியம் இருந்தது. உனக்குச் சிரிப்பு வருகிறதல்லவா? ஆனாலும் உண்மை அப்படித்தான். நாலைந்து வருஷத்துக்குப் பிறகு அப்படி நேர்ந்திருந்தால், எல்லாரையும் போல் என்னையும் அலங்கோலம் செய்திருப்பார்கள். ரொம்பச் சிறு வயதானபடியால் அப்படி ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தார்கள்.” அன்னபூரணி சற்று நேரம் சிந்தையில் ஆழ்ந்த வண்ணம் சும்மா இருந்துவிட்டு, மறுபடியும் கதையைத் தொடர்ந்தார்: “நான் குறிப்பிட்டது என்னுடைய சித்தி பெண்ணின் கலியாணத்தை. அம்புஜம் எனக்கு இரண்டு வயது சின்னவள். அவளுக்குக் கலியாணம் ஆனபோது எனக்குப் பதினாறு வயதிருக்கும் அம்புஜம் என்னிடம் உயிராயிருந்தாள். நான் கைம்பெண் ஆனதிலிருந்து என் சித்தியின் வீட்டிலேயே வளர்ந்து வந்தேன். என்னுடைய துர்க்கதியை எண்ணி அந்த வீட்டில் எல்லாரும் என்னிடம் மிகவும் பிரியமாயிருந்தார்கள். நான் வைத்ததே சட்டமாய் எல்லாம் நடந்து வந்தது.” “அம்புஜத்துக்குக் கல்யாணம் நிச்சயமானபோது, என் இஷ்டப்படிதான் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. மாப்பிள்ளைக்கு என்ன வேஷ்டி வாங்குவது, மேளக்காரன் யாரை அமர்த்துவது, நாலாம் நாள் விருந்துக்கு என்ன பட்சணம் போடுவது என்பது முதல் எல்லாம் நான் தான் தீர்மானித்தேன்.” "கலியாணத்துக்கு முதல் நாள் இராத்திரி மாப்பிள்ளை அழைத்த பிறகு நிச்சயதார்த்தம் நடந்தது. பெண் வீட்டு ஸ்திரீகளுடன் நானும் கூடத்தில் நின்று கொண்டிருந்தேன். மணையில் உட்கார்ந்திருந்த அம்புஜத்தின் தலையிலிருந்து கல்லிழைத்த திருகுப்பூ கழன்று விழுந்து விடும்போல் இருந்தது. “நான் அவளருகில் போய் அதைச் சரியாகத் திருகினேன். அப்படித் திருகிவிட்டுத் தலையை நிமிர்ந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞர் என்னை உற்று நோக்குவதைக் கண்டேன். அந்தக் கணத்தில் என் தேகமெல்லாம் பதறிற்று. தலை சுழன்றது; ஸ்மரணையிழந்து கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்து போனேன். பகவான் அருளால் அப்படி ஒன்றும் நேரவில்லை.” “அவருடைய முகத்தை மறுபடி பார்க்க வேண்டுமென்ற ஆவல் என் மனத்தில் பொங்கி எழுந்தது. அப்படி ஓர் ஆசை இருக்கக் கூடுமென்றே நான் கனவிலும் கருதியதில்லை. எவ்வளவோ மனத்தை அடக்கி அடக்கிப் பார்த்தேன். பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தேன். ஒன்றும் சாத்தியமில்லை. கடைசியில் அவர் இருந்த பக்கம் திரும்பியபோது அவர் அப்போதுதான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு முகத்தைத் திருப்புவதைக் கண்டேன்.” “அன்றிரவு நான் தூங்கவேயில்லை.” “மறுநாள் அம்புஜத்தின் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. வெளித்தோற்றத்திற்கு நான் எப்போதும் போல் காரியங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் என் மனம் என்னவோ வேறு தனி உலகம் ஒன்றில் சஞ்சரிக்கத் தொடங்கியது.” “கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகமும் கலியாணத்தன்று தீர்ந்து போயிற்று. அவர் என்னைப் பார்த்தது எல்லாம் தற்செயலாக அல்ல; வேண்டுமென்றுதான். என் மன நிலையும் எனக்கு நிச்சயமாயிற்று. ஏதோ ஒரு காந்த சக்தி அவர் பக்கம் என்னைக் கவர்ந்து இழுக்கிறது என்பதை அறிந்தேன்… அதோ பூரனச் சந்திரன் கிளம்புகிறதே, பார்த்தாயா?” என்று அன்னபூரணிதேவி கேட்க, சாவித்ரி அந்தப் பக்கம் நோக்கினாள். “பூரணச் சந்திரனை அதற்கு முன்னால் எவ்வளவோ தடவை நான் பார்த்துத்தானிருந்தேன். ஆனால் அம்புஜத்தின் கலியாணத்தன்று இரவு பூரணச் சந்திரனில் நான் கண்ட அழகை அதற்கு முன் கண்டதில்லை. நாதச்வரத்தின் இனிய நாதம் அதற்கு முன்னால் என்னை அப்படிப் பரவசப்படுத்தியது கிடையாது. சந்தனத்தின் வாசனையும், மல்லிகைப் பூவின் மணமும் எனக்கு அவ்வளவு இன்பத்தை அதற்கு முன் எப்போதும் அளித்ததில்லை.” "என் உள்ளத்தில் என்றைக்கும் தோன்றாத ஆசைகள் எல்லாம் தோன்றின. ‘எல்லாப் பெண்களையும் போல் நானும் ஏன் தலையை வாரிக்கொண்டு பூ வைத்துக் கொள்ளக் கூடாது? ஏன் குங்குமம் இட்டுக் கொள்ளக் கூடாது? ஏன் சந்தனம் பூசிக்கொள்ளக் கூடாது?’ என்றெல்லாம் எண்ணம் உண்டாயிற்று. கலியாணம் மூன்றாம் நாளன்று மத்தியானம் நான் அம்புஜத்தை அழைத்துக் கொண்டு சம்பந்திகளின் ஜாகைக்குப் போனேன். அம்புஜத்துக்கு அவளுடைய நாத்தனார் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்னென்ன நகை இப்போதிருக்கிறது, இன்னும் என்னென்ன நகை பண்ணிப் போடப் போகிறார்கள் என்பது போன்ற அருமையான விஷயங்களைப் பற்றி அம்புஜத்தை அவளுடைய நாத்தனார் கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு ஞாபகம் அந்தப் பேச்சில் இல்லை. காமரா உள்ளில் யாரோ பேசிக் கொண்டிருந்தது இங்கொரு வார்த்தையும் அங்கொரு வார்த்தையுமாக என் காதில் விழுந்தது. இவருடைய குரல் போலத் தோன்றவே, கவனமாய்க் கேட்கத் தொடங்கினேன். அந்தக் குரலில் தான் என்ன இனிமை! என்ன உருக்கம்! பால்யத்தில் கைம்பெண் ஆகிறவர்களின் கதியைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். அதன் கொடுமையைப் பற்றிச் சொல்லியிருக்கும் யாராரோ மகான்களுடைய வாக்கியங்களையெல்லாம் எடுத்துக் காட்டினார். பல புத்தகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். அவற்றில், ‘மாதவய்யா எழுதியிருக்கும் முத்துமீனாட்சி கதையை வாசியுங்கள்’ என்று அவன் சொன்னது மட்டும் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ‘சரிதானப்பா, பிரமாதமாகப் பேசுகிறாயே? அப்படியானால் நீதான் அன்னபூரணியைக் கலியாணம் செய்து கொள்ளேன்’ என்று ஒருவன் சொன்னான். அதற்கு இவர், ‘சீச்சீ! சுத்த முட்டாள்கள் நீங்கள்! உங்களுடன் பேசுவதைக் காட்டிலும் குட்டிச் சுவரோடு பேசலாம்’ என்று பதில் சொன்னார். உடனே அந்த அறையினின்றும் ஒருவர் எழுந்து போனதுபோல் சப்தம் கேட்டது. அது இவராய்த்தான் இருக்கவேண்டும். "அந்த இரண்டு மூன்று நாளைக்குள் அவரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் சம்பந்திகளின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டிருந்தேன். அந்த வருஷம் அவர் சென்னை இராஜதானியிலேயே பி.ஏ. பரீட்சையில் முதலாவதாகத் தேறியிருந்தாராம். ஐயாயிரம் ரூபாய் வரதட்சணையுடன் அவருக்கு வரன்கள் பல வந்து கொண்டிருந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். அப்படிப்பட்டவருடைய அன்புக்கா நான் பத்திரமானேன். என்னுடைய பாக்கியத்தை என்னால் நம்ப முடியவில்லை. "நாலாம் நாள் கலியாணத்தன்று காலையில் சம்பந்தி அம்மாளுக்கு உடம்பு சரியில்லையென்று தகவல் வந்தது. நான் பார்த்துவிட்டு வருகிறேனென்று சொல்லி, சம்பந்தி ஜாகைக்குப் போனேன். அங்கே ஒருவேளை இவர் இருப்பாரோ என்று எண்ணமிட்டுக் கொண்டே சென்றேன். "வாசற்படி தாண்டியதும் ரேழி ஹாலில் தனிமையாக உலாவிக் கொண்டிருந்த இவர், என்னைப் பார்த்ததும், ‘யார் வேண்டும்?’ என்று கேட்டுக் கொண்டே வந்தார். நான் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நிற்கையிலேயே சட்டென்று என் கையில் ஒரு கடிதத்தை வைத்து அது வெளியில் தெரியாதபடி என் விரல்களால் மூடினார். உடனே திரும்பிச் சென்றார். "புயற் காற்றிலே இலைகள் ஆடுவது போல் என் உடம்பு நடுங்கிற்று. ஆனாலும் நான் மிகுந்த மனோதிடத்துடன் அந்தக் கடிதத்தை என் இருதயத்தின் அருகில் பத்திரமாய் வைத்துக் கொண்டேன். பிறகு உள்ளே போனேன். சம்பந்தியம்மாளுடன் பேசும்போதெல்லாம் என் புத்தி என் வசம் இல்லை. அந்த அம்மாள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, ‘எனக்கு என்ன உடம்பு என்று கேட்கிறாயேடி? உனக்கு என்னடியம்மா உடம்பு? கண்ணும் முகமும் நன்றாயில்லையே?’ என்று கேட்டாள். ‘ஆமாம்; எனக்குக்கூடத் திடீரென்று தலையை வலிக்கிறது’ என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். உடனே உள் அறை ஒன்றில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டேன். கேட்பவர்களுக்கு உடம்பு சரியில்லை யென்று சொல்லிவிட்டு, விம்மி, விம்மி அழுது கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு அவரை - என் உள்ளத்தைக் கவர்ந்த தெய்வத்தை - நான் பார்க்கவேயில்லை…" “ஐயோ! ஏன் அம்மா அப்படி? அந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருந்தது?” "கடிதத்திலா? என்னிடத்தில் அவருக்கிருந்த ஆசை அவ்வளவையும் அதில் கொட்டியிருந்தார். எனக்காக எந்தவிதத் தியாகமும் செய்யத் தயாராயிருப்பதாயும், உலகம் முழுவதையும் எதிர்த்து நிற்கத் துணிந்திருப்பதாயும், எழுதியிருந்தார். ஆனால் என்னை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ விரும்பவில்லையென்றும், அவரிடம் எனக்கும் அன்பிருந்து, சமூகத்தின் ஏளனத்துக்கெல்லாம் துணிவதற்குத் தைரியமிருந்தால், அன்று சாயங்காலம் நலங்கின் போதாவது ஊர்வலத்தின் போதாவது நான் கையில் ஒரு மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அந்த அடையாளத்தைக் கண்டதும் தாம் வேண்டிய ஏற்பாடு செய்வதாகவும் எழுதியிருந்தார்…" “அப்படியானால் நீங்கள் ஏன் அழுது கொண்டிருந்தீர்கள், அம்மா? அவர் சொன்னபடி செய்தீர்கள் அல்லவா?” “பாவி, நான் அப்படிச் செய்யவில்லை. போதாததற்கு, உள்ளே போய்ப் படுத்து அழுது கொண்டிருக்கவே, தம் பேரில் எனக்கு இஷ்டமில்லையென்றும், என்னுடைய மனத்தைத் தாம் புண்படுத்தி விட்டதாகவும் அவர் எண்ணியிருக்க வேண்டும். இவ்வாறு, என் வாழ்க்கையின் நாலு நாள் இன்பக் கனவு முடிவு பெற்றது…” “ஆமாம், அம்மா! ஆனால் நீங்கள் ஏன் அவர் சொன்னபடி செய்யவில்லை? எனக்குப் புரியவில்லையே?” "அந்தக் காரணத்தை இப்போது சொல்லவும் எனக்கு வெட்கமாயிருக்கிறது, சாவித்ரி! அவருடைய கடிதத்தை அன்றைய தினம் நான் படிக்கவில்லை. ஒரு வருஷத்திற்குப் பிற்பாடுதான் அதை நான் படித்தேன். அப்படிப் படிப்பதற்குள் எத்தனையோ நாள் அதைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினேன். கடைசியில், அதை நான் படித்தபோது அதில் பாதிக்கு மேல் கண்ணீரால் மறைந்து போயிருந்தது. “அம்மா, என்ன சொல்கிறீர்கள்? தங்களுக்கு அப்போது…” “ஆமாம், சாவித்ரி. அவர் கடிதத்தைப் பெற்ற அன்று எனக்கு ஏற்பட்ட அவமானமும் மனவேதனையுந்தான் என்னை மேலும் மேலும் படிக்கும்படி தூண்டி, பி.ஏ., எல்.டி., பட்டமும் அளித்து, பெண் குலத்துக்கு நான் செய்யும் இவ்வளவு தொண்டுக்கும் காரணமாயிற்று. அவர் என் கரத்தைத் தொட்டுக் கடிதத்தைக் கொடுத்த அந்நாள், எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை!” சாவித்திரியின் கண்களிலிருந்து கலகலவென்று உதிர்ந்த கண்ணீர்த் துளிகள் வெண்ணிலவின் ஒளியில் முத்துக்கள் போல் பிரகாசித்தன. அந்த நாதஸ்வரக்காரன் கேதாரகௌள ராகந்தான் வாசிக்கிறானா? அல்லது உலக மகா காவியங்களிலுள்ள சோக ரஸத்தையெல்லாம் பிழிந்து நாதஸ்வரக் குழாய் வழியாகப் பொழிகின்றானா? கமலாவின் கல்யாணம் “ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்துவை!” என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள்! ஆனால் ஜுனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம். நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீந்து வரும்படி செய்வதற்குள் வாய்ப் பிராணன் தலைக்கு வந்து விடுகிறது. ஆயிரம் பொய் சொல்லுவதாம்! கல்யாணம் செய்து வைப்பதாம்? அந்த நிபந்தனையின் பேரில்தான் கல்யாணம் நடக்கும் என்றால் உலகத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாரும் விநாயகர்களாயிருக்க வேண்டியதுதான். நல்ல வேளையாக, அப்படியாவது பொய் சொல்லி யாருக்கும் கல்யாணம் செய்துவைக்கும்படியான அவசிய்ம் எனக்கு இதுவரையில் ஏற்படவில்லை. கல்யாணமுயற்சி எதிலுமே நான் தலையிட்டது கிடையாது. ஒரு கல்யாணத்தைத் தடைப்படுத்தும் முயற்சியில் தான் சமீபத்தில் கலந்துகொண்டேன். அந்தக் கதை தான் இது. ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர் என்று எல்லாரும் கேள்விப்பட்டிருக்கலாம். பிரசித்திபெற்ற வக்கீல். அவரிடம் தான் இரண்டு வருஷமாக நான் ஜுனியராக இருக்கிறேன். மாதம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாத வருமானம். இப்படியே இருபது வருஷமாய் இருந்து வருகிறது. டாக்டர் பெஸண்டு அம்மையின் காலத்தில் இவர் ஹோம் ‘ரூல்’ கிளர்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால் தான் ‘ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர்’ என்று பெயர் வந்தது. வீட்டில் அகத்துக்காரியின் ஆட்சி கொஞ்சம் அதிகமாதலால், இந்தப் பெயர் அவருக்கு நிலைத்து விட்டது என்று சில பொறாமைக்காரர்கள் சொல்வதுமுண்டு. மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு முன்னணியில் நிற்பார். கதர் தான் அணிவார். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேச இயக்கத்தில் வெகுபாடுபட்டு உழைத்தவர் அவர். இருபது வருஷங்களுக்கு முன்பு ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர். இன்னமும் வஞ்சனையில்லாமல் ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று வருகிறார். தேர்தல்களில் எல்லாம் அவருடைய ஆதரவு காங்கிரஸுக்குத்தான். சென்னையிலிருந்தோ, வெளிமாகாணங்களிலிருந்தோ, தேசீயத் தலைவர்கள் வந்தால், அவருடைய வீட்டில்தான் இறங்கவேண்டும். இன்னும் சமூக சீர்திருத்தத் திட்டங்களில் எல்லாம் அவருக்கு அதிகப் பற்று உண்டு. சாரதா சட்டத்துக்கு விரோதமான கிளர்ச்சி நடந்தபோது, சாரதா சட்டத்துக்குச் சாதகமாய்ப் பொதுக் கூட்டங்கள் போட்டதுடன் கையெழுத்துக்களும் வாங்கி அனுப்பினார். ருதுமதி விவாகம் விதவா விவாகம் முதலியவை சமீபத்திலுள்ள ஊர்களில் எங்கே நடந்தாலும், இவர் போய் இருந்து நடத்தி வைப்பார். சில கல்யாணங்களில் புரோகிதம் கூடச் செய்து வைத்ததுண்டு. ஸ்ரீ கோபாலகிருஷ்ண ஐயருக்கு நாலு பெண்கள். ஒரே அருமைப் பிள்ளை. பெண்களுக்கெல்லாம் நல்ல இடங்களில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். ஒரு மாப்பிள்ளை ஐ.சி.எஸ். இன்னொரு மாப்பிள்ளை அக்கவுண்டண்ட் ஜெனரல். இப்படி பிள்ளைக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பையன் சென்ற வருஷந்தான் பி.எல். பாஸ் செய்துவிட்டு வந்து எங்களைப் போல் தானும் தகப்பனாரிடம் ஜுனியராக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். கோபாலகிருஷ்ண ஐயர் நல்ல பணக்காரர் ஆனதால் எவ்வளவோ பெரிய பெரிய இடங்களிலிருந்து கல்யாண சுந்தரத்துக்குப் பெண் கொடுப்பதாக வந்தார்கள். பல காரணங்களால் கல்யாணம் தடைப்பட்டு வந்தது. அப்பாவுக்குப் பிடித்தால் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. அம்மாவுக்குப் பிடித்தால் பிள்ளைக்கு பிடிப்பதில்லை. இவர்கள் மூன்று பேருக்கும் பிடித்திருந்தால் பெண் வீட்டுக்காரர்கள், ‘இவர்களுடைய அனாசாரம் பிடிக்கவில்லை’ என்று போய் விடுவார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான், ஒரு நாள் திருவளர்ச்சோலைக் கோவிலில் நடக்கப்போகும் ஒரு கல்யாணத்தைப் பற்றி எங்களுக்குச் செய்தி வந்தது. ஐம்பத்தைந்து வயதான ஒரு கிழவருக்கும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதாக வதந்தி உலாவிற்று. மாமண்டூரில் யாரோ ஒரு உபாத்தியாயராம்; சம்சாரியாம். அவருடைய மூத்த பெண் கமலாவைத்தான் இப்படி ஒரு கிழவருக்குப் பலிகொடுக்க ஏற்பாடாகியிருந்ததாம். மாமண்டூரிலிருந்து வந்த ஒரு கட்சிக்காரர் மேற்கூறிய விவரம் தெரிவித்தார். ‘கிழ மாப்பிள்ளை’ யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த அநியாயத்தைப்பற்றி ஒருநாள் ஜுனியர்களாகிய நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, பெரியவர் வந்துவிட்டார். ‘என்ன சமாசாரம்’ என்று அவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் தலைக்குத் தலை வெகு ஆத்திரத்துடன் மேற்படி கல்யாணக் கொடுமையைப் பற்றிச் சொன்னோம். பெரியவர் அப்போது, “நீங்கள் எல்லோரும் இவ்வளவு ஆத்திரமாய்ப் பேசுகிறீர்களே? பேசி என்ன பிரயோசனம்? உங்கள் ஆத்திரத்தைக் காரியத்தில் காட்ட எத்தனை பேர் தயாராயிருக்கிறீர்கள்? இந்தக் கல்யாணத்தை ஏன் நாம் நிறுத்தி விடக் கூடாது” என்றார். “நீங்கள் வந்தால் நாங்களும் தயார்” என்று எல்லோரும் ஒரு முகமாகக் கூறினோம். அந்த மாமண்டூர்க் கட்சிகாரனைக் கூப்பிட்டு மறுபடியும் விசாரித்தோம். “நாளை ஞாயிற்றுக் கிழமை கல்யாணமாம்” என்று அவன் சொன்னான். கிழமை ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது நல்லதாய் போயிற்று. கோர்ட்டு உள்ள தினமாயிருந்தால், ஒரு வேளை எங்களுடைய உற்சாகம் மழுங்கிப்போயிருக்கலாம். விடுமுறை நாளாயிருந்தபடியால் எங்களுடைய சமூகச் சீர்த்திருத்த வேகம் பன்மடங்கு அதிகரித்தது. ஆகவே ஞாயிற்றுக்கிழமையன்று எல்லாரும் திருவளர்ச்சோலைக்குக் கும்பலாகச் சென்று, மேற்படி கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்துவிடுவது என்று தீர்மானம் செய்தோம். நடுவில் ஒரே நாள் தான் இருந்தது என்றாலும் ஊரெல்லாம் செய்தி பரவிவிட்டது. திருவளர்ச் சோலையில் நடக்கும் அக்கிரமமான பால்ய விவாகத்தைப்பற்றிப் பலர் பலமாகக் கண்டித்தார்கள். வேறு சிலர் “யார் எப்படிப் போனால் இவர்களுக்கென்ன? உலகத்தை இவர்கள் தான் உத்தாரணம் செய்யப் போகிறார்களாக்கும்” என்று எங்களைக் கண்டித்தார்கள். இதனாலெல்லாம் எங்களுடைய உறுதி குன்றவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருபது பேர் ஏறக்கூடிய ஒரு பெரிய பஸ் வந்து, கோபாலகிருஷ்ண ஐயர் வீட்டு வாசலில் நின்றது. பெரியவர் எல்லாருக்கும் முன்னால் தயாராக வந்து நின்றார். நாங்கள் நாலு ஜுனியர்களும், இரண்டு குமாஸ்தாக்களும் அவ்விதமே தயாராயிருந்தோம் கல்யாணசுந்தரமும் பிரயாணத்துக்குத் தயாராய் வருவதைப் பார்த்து, பெரியவர், “நீ என்னத்திற்காக வருகிறாய்?” என்று கேட்டார். “நானும் வரத்தான் வருவேன்” என்று அவன் முன்னதாக வண்டியில் ஏறிக் கொண்டான். உள்ளூர் காங்கிரஸ் காரியதரிசியும் நாலு தொண்டர்களும், கையில் கொடி பிடித்துக் கொண்டும் “வந்தே மாதரம்”, “மகாத்மா காந்திக்கு ஜே”, “பால்யவிவாகம் ஒழிக”, “காதல் மணம் வாழ்க” என்று கோஷித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்படி இப்படியென்று, பஸ் நிறைய ஆள் சேர்ந்துவிட்டது. பஸ் கிளம்பி ஐந்து நிமிஷம் இருக்கும். இன்னும் நகர எல்லையைத் தாண்டவில்லை. முதல் நாள் சாயங்காலமே நாங்கள் திருவளர்ச்சோலைக்கு அனுப்பியிருந்த பையன் சைக்கிளில் பறந்து வருவதைக் கண்டோ ம். அவன் கையைக் காட்டுவதற்கு முன்னாலேயே பஸ் நின்று விட்டது. எங்களுக்கு அங்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்காகவும் கல்யாணம் நடக்கும் இடம் முதலியவற்றைக் கவனித்து வைப்பதற்காகவும் அவனை முதல்நாள் அனுப்பியிருந்தோம். அவன் இப்படித் தலை தெறிக்க ஓடி வந்ததைப் பார்த்ததும், எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஏக காலத்தில் எல்லாரும், “என்ன? என்ன?” என்றோம். பையன் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான். “அவர்களுக்கு எப்படியோ சமாசாரம் தெரிந்துவிட்டது. திருவளர்ச்சோலையில் கல்யாணம் நடக்கவில்லை. குலசேகரபுரத்தில் நடக்கப் போகிறதாம்!” என்றான். பலே பேஷ்! நல்ல வேலை செய்தார்கள்! திருவளர்ச்சோலை எங்கள் நகரிலிருந்து பன்னிரண்டு மைல். குலசேகரபுரம் நாற்பது மைல். அவ்வளவுதூரம் எங்களுடைய சீர்திருத்த வேகம் எட்டாது என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்! கிழ மாப்பிள்ளை யாராயிருந்த போதிலும் பலே கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் கெட்டிக்காரத்தனத்தில் குறைந்தவர்களா? “விடு பஸ்ஸைக் குலசேகரபுரத்துக்கு” என்றோம். தாலி கட்டியாவதற்குள் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டுமென்பது எங்கள் ஆசை. பஸ் டிரைவருக்கும் இந்த கலாட்டாவில் ருசி ஏற்பட்டுவிட்டது. பஸ் பறந்தது. அன்றைக்கு முதல் முகூர்த்தம் ஒன்பது மணிக்கு மேல் பத்தரை மணிக்குத்தான் என்பது எங்களுக்குத் தெரியும். பஸ் எட்டரை மணிக்கு குலசேகரபுரத்தை அடைந்துவிட்டது. கொட்டு மேளம் கொட்டுகிற சத்தத்தைக் கொண்டு, கல்யாண வீட்டைக் கண்டு பிடித்தோம். அங்கே நாங்கள் போன சமயம், மாப்பிள்ளை பரதேசக் கோலம் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்! மாப்பிள்ளை எங்கள் ஊர்ப்பேர்வழி; அதோடு வக்கீல் தொழில் செய்பவர்; பெயர் கணபதிராம சாஸ்திரிகள். வயது ஐம்பத்திரண்டு ஆயிற்று. ஆனால் பார்ப்பதற்கு நாற்பத்தைந்து வயது தான் சொல்லலாம். சிவப்பு நிறம், முகத்தில் நல்ல களை. இப்போது மாப்பிள்ளைக் கோலத்தில் அப்படியொன்றும் மோசமாக இல்லை; ஜோராகத்தான் இருந்தார். பரதேசக் கோலத்தில் சாஸ்திரிகளைப் பார்த்ததும் என்னுடைய சீர்திருத்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிற்று. ஏனெனில், அவருடைய நிலைமையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ரொம்ப நல்ல மனுஷர்; பரமசாது; ஒருவருக்கு ஒரு தீங்குஞ் செய்யாதவர். வக்கீல் வேலையில் அவ்வளவு வருமானம் கிடையாது. கையிலிருந்த பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் பெருக்கியிருந்தார். இப்போது ஐம்பதினாயிரம் ரூபாய் சொத்துக்குக் குறைவில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாதவர். ஒரு மனைவி, பிள்ளையில்லாமலே இறந்து போனாள். துர்பாக்கியவசமாக, அந்தப் பெண் குழந்தையையும் மூன்றாவது வயதில் இழந்தார். மாமாங்கக் கூட்டத்தில் குழந்தை காணாமல் போனதாக வதந்தி, அப்புறம் வெகு காலம் அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. விதந்துவாய் போன அவர் தங்கை இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அந்தக் குழந்தைகளை வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்தார். பையன் உத்தியோகமாகி வெளியூர் போய்விட்டான். பெண்ணுக்குக் கல்யாணமாகிப் புக்ககம் போய்விட்டான். அவளுக்குத் துணையாகத் தாயாரும் வந்திருக்க வேண்டுமென்று மாப்பிள்ளை வற்புறுத்திய படியால், அவருடைய சகோதரியும் போய்விட்டாள். தற்சமயம் சாஸ்திரிகள் ஒரு சமையற்காரப் பையனை வைத்துக் கொண்டு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வந்தார். இந்தத் தனிமையின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் தான் அவர் இந்த முதிர்ந்த வயதில் கல்யாணம் செய்து கொள்ளத் துணிந்திருக்க வேண்டும். இவ்வாறெண்ணி அவரிடம் நான் கொஞ்சம் அனுதாபங்கொண்டேன். ஆனால், மற்றவர்கள் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் கிளம்பி வந்த போது, “முன்பின் தெரியாத முரட்டுக் கிழவன் யாராவது மாப்பிள்ளையாயிருந்தால் என்ன செய்கிறது?” என்ற பயம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் இருந்தது. “உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்!” என்று முரட்டடியாய் அடித்தால், உண்மையில் நாங்கள் என்ன செய்யமுடியும்? ஆனால், சாது கணபதிராம சாஸ்திரிகள் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், எங்கள் கோஷ்டியில் அனேகருக்கு உற்சாகம் தலைக்கேறி விட்டது. “வந்தே மாதரம்!” “பால்ய விவாகம் ஒழிக!” என்று கோஷித்துக் கொண்டு நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கியதைப் பார்த்ததுமே கணபதிராம சாஸ்திரிகள் திகைத்துப் போய் நின்று விட்டார். எல்லோருமாகப் போய் அவரைச் சூழ்ந்து கொண்டோ ம். வைதிகர்கள், பெண் வீட்டார், முதலியோர் மிரண்டு போய் விலகி கொண்டார்கள். “சாஸ்திரிகளே! நல்ல வேளை செய்தீர் ஐயா!” என்றான் எங்களில் ஒருவன். “ராத்திரிக்கு ராத்திரியே, எப்படி ஐயா, பிளானை மாற்றினீர்? ஹிட்லரால் கூட இவ்வளவு துரிதமாய்க் காரியம் செய்ய முடியாதே!” என்றான் இன்னொருவன். “கண்ணில் மை இட்டிருக்கிறது ரொம்ப அழகாயிருக்கிறது. கண்ணாடியில் பார்த்துக் கொண்டீரா?” என்றான் மற்றொருவன். “தலையில் பூச்சூட்டிக் கொண்டிருக்கிறது அதை விட இலட்சணம்!” என்றான் இன்னொருவன். பெரியவர் எல்லாரையும் கையமர்த்திச் சும்மா இருக்கச் செய்துவிட்டு, “சாஸ்திரிகளே! யாரோ பட்டிக் காட்டுக் கிழவனாக்கும் என்று பார்த்தேன். படிப்பும் பகுத்தறிவும் உள்ள நீங்களே இப்படியெல்லாம் செய்தால் நமது தேசம் எப்படி முன்னுக்கு வரும்? ஒரு சின்னப் பெண் குழந்தையை இந்த வயதில் நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால், அந்தப் பெண் சந்தோஷமாக இருக்க முடியுமா? உங்களுக்குத் தான் அதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்? சுத்தமாய் நன்றாயில்லை. அப்படி உங்களுக்கு வேண்டுமென்றால் சம வயதுள்ள ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்வது தானே? நாங்களே கிட்ட இருந்து நடத்தி வைக்கிறோம்” என்று சரமாரியாகப் பொழிந்தார். சாது கணபதிராம சாஸ்திரிகள் இந்த ‘பிளிட்ஸ்கிரிக்’ தாக்குதலினால் அப்படியே அசந்து போனார். முகத்தில் ஈயாடவில்லை. மென்று விழுங்கிய வண்ணம். “எனக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதில் சம்மதந்தான். நேற்றே நான் சொன்னேன். பெண் வீட்டார் தான் ரொம்பவும் ஆட்சேபிக்கிறார்கள். அவர்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்” என்றார். இவ்வளவு சுலபத்தில் காரியம் முடிந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எனவே, எங்களுடைய உற்சாகம் பொங்கிற்று. பரதேசக் கோலம் பூண்ட மாப்பிள்ளை திரும்பி வீட்டுக்குள் வர முடியாதபடி அவரைச் சிலர் வளைத்துக் கொண்டு நின்றார்கள். மற்றவர்கள், கல்யாண வீட்டுப் பக்கம் போனார்கள். இதற்குள் ஏதோ கலாட்டா நடக்கிறதென்று தெரிந்து பெண் வீட்டார், ஆண் பெண் அடங்கலும், வீட்டு வாசலுக்கு வந்திருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாயிருந்தது. தலைக்குத் தலை பேசத் தொடங்கினார்கள். “பெண்ணின் தகப்பனார் யார்?” என்று கோபாலகிருஷ்ண ஐயர் கேட்டார். “இவர் தான்” என்று ஒருவரை எல்லாருக்கும் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “ஐயர் வாள்! உள்ளே போவோம் வாருங்கள்; உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேசலாம்” என்றார் கோபாலகிருஷ்ண ஐயர். அவர் பெரிய மனுஷர், அந்தஸ்துள்ளவர் என்று எல்லாருக்கும் தெரியுமாதலால், சிலர், “அப்படியே செய்கிறது! வாருங்கள் உள்ளே!” என்று அழைத்துப் போனார்கள். நாங்களும் உள்ளே போனோம். எங்களைத் தொடர்ந்து எல்லாரும் உள்ளே வந்துவிட்டார்கள். தாழ்வாரத்தில் போட்டிருந்த பாயில் கோபாலகிருஷ்ண ஐயரும் சம்பந்திப் பிராமணரும் வேறு சில பெரியவர்களும் உட்கார்ந்தார்கள். நாங்களும் சூழ்ந்து உட்கார்ந்தோம். இம்மாதிரிச் சமயங்களில் காரியத்தை மேற் போட்டுக் கொண்டு செய்கிற மனிதர்கள் சிலர் உண்டு அல்லவா? அப்படிப்பட்ட மனிதர் ஒருவர், “ஸத்து, ஸத்து” என்றார். ஒரு நிமிஷம் மௌனம் குடி கொண்டது. அந்த மௌனத்தைப் பிளந்துகொண்டு விம்மி அழும் குரல் ஒன்று கேட்டது. எல்லோரும் அழுகைச் சத்தம் வந்த பக்கம் பார்த்தோம். அழுதது வேறு யாருமில்லை மணக்கோலத்திலிருந்து மணப்பெண் தான். என் அருகில் இருந்த கல்யாணசுந்தரம், “ராகவன்! இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்கவில்லை! வெளியே போகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனான். வாசற்படியைக் கடக்கும் போது, அவன் ஒரு தடவை திரும்பி, மணப்பெண் இருந்த திசையை நோக்கியதைப் பார்த்தேன். அவன் கண்களில் அப்போது தோன்றிய இரக்கமும் கனிவும் எனக்கு ஒருவாறு நகைப்பை உண்டாக்கி, பெண்ணின் அழுகைக் குரலினால் ஏற்பட்ட வேதனையைப் போக்கிற்று. "பிள்ளையாண்டானுக்கு அசடு தட்டி விட்டது என்று மனதில் எண்ணிக் கொண்டேன். அதற்குத் தகுந்தாற்போல் அவனும் வெளியே போகாமல் நின்ற இடத்திலேயே நின்றான். ஒரு ஸ்திரீ - மணப் பெண்ணின் தாயாராய்த்தான் இருக்க வேண்டும் - பெண்ணிடம் வந்து அவள் கையைப் பிடித்து, “அசடே! என்னத்திற்காக அழுகிறாய்? தலையெழுத்துப் போல் நடந்து விட்டுப் போகிறது!” என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள். இதையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் இளகிய கோபாலகிருஷ்ண ஐயர், பெண்ணின் தகப்பனாரைப் பார்த்து, “என்ன சுவாமிகளே! உங்களைப் பார்த்தால் படித்த மனுசர் மாதிரி தோன்றுகிறது. நீங்களெல்லாம் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யலாமா? அந்தப் பெண்ணை இப்படி அழவிட்டுக் கல்யாணம் செய்து கொடுக்காமற் போனால் என்ன?” என்றார். அப்போது அந்த பிராமணனுக்குத் திடீரென்று வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்க்கவேண்டுமே! “நான் வேண்டாம்; வேண்டாம் என்று தான் முட்டிக் கொண்டேன்; பொம்மனாட்டி சொன்னதைக் கேட்டு இப்படியாச்சு! ஸ்திரீ புத்திப் பிரளயாந்தகா!” என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டார். உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீயின் குரல், “ஆமாம், எல்லாப் பழிக்குந்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே?” என்று சொல்வது கேட்டது. அப்போது கோபாலகிருஷ்ண ஐயர், “இன்னும் ஒன்றும் முழுகிப் போகவில்லையே! சாஸ்திரிகள் இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடச் சம்மதம் என்று சொல்லி விட்டார். நீங்கள் சம்மதிக்க வேண்டியதுதான் பாக்கி” என்றார். “இருநூறு ரூபாய் வரையில் பணம் செலவாகியிருக்கிறதே. அதற்கு யார் வழி செய்கிறது!” என்று பெண்ணின் தகப்பனார் ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்டார். “இவ்வளவு தானே?” என்றார் கோபாலகிருஷ்ண ஐயர், சட்டைப் பையிலிருந்து பணப் பையை எடுத்து, அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வீசினார். “இந்தாருங்கள் இதை இப்போது வைத்துக் கொள்ளுங்கள் பாக்கி நூறு ரூபாய்க்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். எப்படியாவது அந்தக் குழந்தையை நீங்கள் படுகுழியில் தள்ளாமல் காப்பாற்றினால் போதும்” என்றார். கோபாலகிருஷ்ண ஐயரின் தாராள குணத்தைப் பார்த்து அங்கே எல்லோரும் பிரமித்துப் போனார்கள். “ஐயர்வாளுடைய தர்ம குணந்தான் உலகப் பிரசித்தியாச்சே? கேட்கவா வேணும்?” என்றார் ஒரு வைதிகர். “நாங்களெல்லாம் ஏழெட்டு மைல் நடந்து வந்திருக்கிறோம். எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேணும். வெறுங்கையோடு போகச் சொல்லக் கூடாது” என்றார் இன்னொரு வைதிகர். “பிராமணச் சாபம் உதவாது; தலைக்கு நாலணாவாவது கொடுத்தனுப்புங்கோ” என்று ஒருவர் மத்தியஸ்தமாய்ச் சொன்னார். பெரியவர், இன்னொரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து வைதீகர்களில் முதன்மையாயிருந்தவரிடம் கொடுத்து, “எல்லாருக்கும் சரியாய்க் கொடுத்துடுங்கோ” என்றார். “கர்ணன் என்றால் கர்ணன்! இந்தக் கலியுகத்திலே இப்படிப்பட்ட தர்மப்பிரபு யார் இருக்கா?” என்று இம்மாதிரிப் பேச்சுக்கள் எழுந்தன. எல்லாரும் வெளியே வந்தோம். கணபதிராம சாஸ்திரிகளை மறுபடி கல்யாண வீட்டுக்குள் போகவிடவில்லை. அப்படியே பஸ்ஸிலே கொண்டுபோய் ஏற்றி, அவருடைய சாமான்களை யெல்லாம் கொண்டுவரச் சொன்னோம். அவரைச் சேர்ந்த மனுஷர்கள் - பந்துக்களோ, சிநேகிதர்களோ… யாரும் வந்திருக்கவில்லை. ஒரு குமாஸ்தா பையன் மட்டுந்தான் வந்திருந்தான். பாக்கிச் சாமான் வகையராக்களைப் பார்த்து எடுத்துக் கொண்டு வரும்படி அவனிடம் சொல்லி விட்டு, பஸ்ஸை விட்டுக் கொண்டு கிளம்பினோம். எல்லோருக்கும் வெகு உற்சாகம். உத்தேசித்து வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதல்லவா? ஏதோ பெரிய கோட்டையைப் பிடித்து ஜயக்கொடி நாட்டிய சைனியத்தைப் போல் கர்வத்துடன் நகருக்குத் திரும்பி வந்தோம். கணபதிராம சாஸ்திரிகள் அப்புறம் ஒரு வாரம் வரையில் வெளியில் தலை காட்டவில்லை. கோர்ட்டுக்கும் வரவில்லை. ஆனால் வம்புப் பிரியர்களும் அதிகப் பிரசங்கிகளும் அவரைத் தேடிப்போய், “என்ன சாஸ்திரிகளே? எங்களுக்கெல்லாம் தெரியாமல் கல்யாணத்தை முடிச்சுட்டீர்கள் போலிருக்கே? விருந்து கிருந்து ஏதாவது உண்டா இல்லையா? சம்சாரத்தை அழைச்சுண்டு வந்தாச்சோ இல்லையோ? சீமந்தக் கல்யானத்துக்காவது எங்களைக் கூப்பிடுங்கள்” என்று இப்படியெல்லாம் பரிகாசம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். எனவே இரண்டு நாளைக்கு ஒரு தடவை நான் போய் கொஞ்சம் அனுதாபத்துடன் பேசி அவரைத்தைரியப் படுத்திவிட்டு வந்தேன். அவரும் மனம் விட்டுத் தமது குறைகளைச் சொன்னார். “என் தங்கைக்கு நான் எவ்வளவோ செய்தேன். அவளுடைய குழந்தைகளை என் குழந்தைகளைப் போல் வளர்த்தேன். ஆயிரம் ஆயிரமாய்ச் செலவழித்தேன்; கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். கடைசியில் என்ன ஆயிற்று? போய் விட்டார்கள். என்னைத் தனியாய் விட்டு விட்டார்கள். இந்த மாதிரி மனது உடைந்திருந்த போது, அந்தப் பாவி பிராமணன் கலியாணத் தரகன் வந்து சேர்ந்தான். அவனுடைய போதனையில் மயங்கிப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரி அசட்டுத்தனத்திற்கு ஆளாவேனா?” என்று இவ்வாறெல்லாம் சொன்னார். நானும் அவருக்கு அனுசரணையாகப் பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். இதற்கிடையில் கல்யாண சுந்தரம் என்னுடைய காதைக் கடிக்க ஆரம்பித்திருந்தான். பையனுக்குக் கல்யாணத்தன்றே கொஞ்சம் அசடு தட்டிப் போயிருந்தது என்பதைத் தான் கவனித்திருந்தேனே! ஆனால், பைத்தியம் இவ்வளவு முற்றிப் போய் விடுமென்று எதிர்பார்க்கவில்லை; “ராகவன்! எல்லாருமாய்ச் சேர்ந்து ரகளை பண்ணிக் கல்யாணத்தை நிறுத்தி வந்துவிட்டோ மே! அந்தப் பெண்ணினுடைய கதி என்ன ஆகிறது?” என்று அடிக்கடி என்னைக் கேட்கத் தொடங்கினான். ஒரு தடவை அவனுடைய தொந்தரவைப் பொறுக்காமல் நான் “என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? எனக்கோ கல்யாணம் ஆகிவிட்டது. நீ தான் பிரம்மசாரி; வேணுமானால் கல்யாணம் செய்து கொள்ளேன்!” என்றேன். “எனக்குப் பூரண சம்மதம்” என்றான் கல்யாண சுந்தரம். “அப்படியானால் என்ன தயக்கம்” என்று கேட்டேன். “என்ன தயக்கமா? எனக்குச் சம்மதமாயிருந்தால் சரியாய்ப் போய் விட்டதா? அப்பா அம்மா அல்லவா சம்மதிக்க வேணும். ராகவன் இந்த உபகாரம் நீதான் செய்ய வேண்டும். அப்பாவிடம் சொல்லேன்” என்றான். “சரியாய்ப் போச்சு போ! ஏதோ உங்கப்பாவிடம் ஜுனியராயிருந்து, பத்து ஐம்பது சம்பாதிப்பது உனக்குப் பிடிக்கவில்லையாக்கும். என்னால் முடியாதப்பா! உன் அம்மாவின் காதில் விழுந்தால் அப்புறம் நான் இந்த வாசற்படி ஏற வழியில்லாமல் போய் விடும்” என்றேன் நான். கல்யாணசுந்தரத்தின் பேச்சை விளையாட்டாகவே பாவித்துத் தள்ளி விடப் பார்த்தேன். அதற்கு அவன் இடங்கொடுக்கவில்லை. வேலை ஒன்றும் ஓடாமல் அவன் தவிப்பதையும், அடிக்கடி பெருமூச்சு விடுவதையும், ராத்திரி தூங்காதவனைப் போல் முகம் வெளிறிக் கிடப்பதையும், அதையும் இதையும் பார்த்த பின், “ஏதேது பெரியவர் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்து விட்டதே!” என்று எனக்குப் பெருங் கவலையாய் போய்விட்டது! பையனோ, “நீ வேணாப் பார்த்துக் கொண்டே இரு ராகவன், ஒரு நாளைக்கு நான் என் அறையில் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து வைக்கப் போகிறேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அப்புறம் சந்தோஷமாயிருக்கட்டும். சஷ்டியப்பூர்த்தி கல்யாணம் கூடத்தான் வரப்போகிறது. பிள்ளை செத்துப் போனால் அவர்களுக்கென்ன?” என்று இம்மாதிரியெல்லாம் தத்துப்பித்தென்று பேச ஆரம்பித்துவிட்டான். “அப்பாவிடம் நீயே சொல்லேன்” என்றால், அதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை. நாங்கள் எல்லோரும் குலசேகரபுரத்துக்குப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்து ஒரு வாரம் இருக்கும் ஒரு நாள் காலையில் கணபதிராம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு ஆள் பெரியவருக்குக் கடிதம் கொண்டு வந்தான். அப்போது பெரியவரின் அறையில் நான் இருந்தேன். அவர் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு, “கேட்டாயா, ராகவன் சமாசாரத்தை! மாமண்டூர்க்காரர்கள் கணபதிராம சாஸ்திரிகள் வீட்டுக்கு வந்திருக்கிறார்களாம். என்னை அவசரமாய் வந்துவிட்டுப் போக வேணும் என்று எழுதியிருக்கிறார்” என்றார். இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கல்யாணசுந்தரத்தைப் பார்த்து, “வண்டியை எடுக்கச் சொல்லு” என்று அவர் கூறவே கல்யாணம் வெளியேறினான். “ஏதேது? அந்த மாமண்டூர்க்காரர்கள் பலே பேர் வழிகள் போலிருக்கிறது. சாஸ்திரிகளை விடமாட்டேன்னென்கிறார்கள். கலியாணத்துக்குச் செலவான பாக்கிப் பணத்தையும் கேட்க வந்திருக்கிறார்களோ, என்னமோ தெரிய வில்லை!” என்று சொல்லிக் கொண்டே பெரியவர் எழுந்து, “நீயும் வா! அந்தத் தமாஷையும் பார்த்து விட்டு வரலாமே” என்றார். அவர் கூப்பிடாமலே நான் போகத் தயாராயிருந்தேன். வீட்டு வாசலுக்கு வந்ததும், நான் எண்ணியபடியே கல்யாணசுந்தரம் டிரைவரின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். பெரியவர் வண்டிக்குள் உட்கார்ந்த பிறகுதான் அதைக் கவனித்தார். “நீ என்னத்திற்கு வருகிறாய் கல்யாணம்?” என்றார். “டிரைவரைக் காணோம்” என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான் கல்யாணம். ஆனால் டிரைவர் ஷெட்டுக்குள்ளே தான் இருந்திருக்க வேண்டுமென்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டிற்குள் நுழைந்ததும் முன்புறத்து ஹாலில் சாஸ்திரிகளும் மாமண்டூர் வைத்தீசுவர ஐயரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தோம். நாங்களும் போய் உட்கார்ந்தோம். ஹாலினுடைய மற்றப் புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதற்கப்பால் இருந்த காமிரா உள்ளில் இரண்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். ஹாலுக்குள் நுழையும் போதே அவர்கள் இன்னார் என்று நான் தெரிந்து கொண்டேன். வைதீஸ்வர ஐயரின் சம்சாரமும் பெண்ணுந்தான். எதற்காக இவர்கள் சாஸ்திரிகளின் வீடு தேடி வந்திருக்கிறார்கள்? கல்யாணப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்களே. இதென்ன வேடிக்கை? சாஸ்திரிகள் பேச ஆரம்பித்ததும் ஒருவாறு விஷயம் புரிந்தது. “ஐயர் வாள்! இவர்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் விட்டிருக்கிறார்கள். பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து ‘கல்யாணம் செய்து கொண்டால்தான் ஆச்சு’ என்கிறார்கள். நான் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. நீங்கள்தான் இவர்களுக்குப் புத்தி சொல்லி திருப்ப வேண்டும்” என்றார். உடனே வைதீசுவர ஐயர் ஆரம்பித்தார். “பணக்கரரகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரிகிறதில்லை என் கையில் காலணாக் கிடையாது; வேலை போய் மூன்று வருஷத்துக்கு மேல் ஆச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். பெண்ணுக்கோ, வயதாகிவிட்டது; இந்தக் காலத்திலே சாதாரணமாய் வரம் கிடைப்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஒரு தடவை நிச்சயமாகித் தட்டிப் போச்சு என்றால், அப்புறம் எவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வருவான்? நீங்கள் பட்டுக்குத் தடபுடலாய் வந்து கல்யாணத்தை நிறுத்தி விட்டு வந்துவிட்டீர்கள். பொறுப்பு என் தலையில் தானே விழுந்திருக்கிறது? நீங்களா வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறீர்கள்…?” இந்தச் சமயத்தில் உள்ளே கதவோரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாள் ஒரு அடி முன்னால் வந்து “ஏன்? இவாளாத்திலே கூட ஒரு பிள்ளை கல்யாணமாகாமல் இருக்காமே! வேணுமானால் பண்ணிக்கொள்ளட்டுமே!” என்றாள். பலே! ஸ்திரீகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? கல்யாணசுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சட்டென்று எழுந்து வெளியே போனான். இதுவரையில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண ஐயருக்கு, கல்யாணம் வெளியில் போனதும் கொஞ்சம் தைரியம் வந்தது. “சரிதான் ஐயா! உங்களுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கலாம். இந்தக் காலத்திலே வீட்டுக்கு வீடுதான் வாசற்படியாயிருக்கிறது. யாருக்குத்தான் சிரமம் இல்லை? அதற்காக ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் படு குழியில் தள்ளி விடுகிறதா?” என்றார். அதற்குள் உள்ளேயிருந்த அம்மாள், “குழியிலே தள்ளுவானேன்? பெத்து வளர்த்தவாளுக்கு இல்லாத அக்கறை அசல் மனுஷாளுக்கு எப்படி வந்துவிடும்? நாங்கள் அப்படி ஒன்றும் காட்டுமிராண்டிகள் அல்ல. பெண்ணின் சம்மதங் கேட்டுக் கொண்டு தான் தீர்மானித்தோம். அவ்வளவு சந்தேகமாயிருந்தால், நீங்களே அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ!” என்றாள். “கமலா இப்படி இங்கே வா! மாமா கேட்கிறதுக்குப் பதில் சொல்லு!” என்றார் வைத்தீசுவர ஐயர். அவருடைய சம்சாரம், “போடி, அம்மா, போ. வெட்கப்படாமல் உன் மனதிலிருக்கிறதைச் சொல்லு! அப்புறம் எங்களைப் போட்டுத் தொளைக்காதே!” என்றாள். வைத்தீசுவர ஐயர் மறுபடியும், “உங்களுக்கு வாஸ்தவத்தைச் சொல்லுகிறேன். ஒரு தடவை தட்டிப் போன பிறகு மறுபடியும் இங்கே வர எங்களுக்கும் இஷ்டமில்லை தான். இந்தப் பெண் தான் பிடிவாதம் பிடிச்சு, இவரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று அடம் பண்ணி எங்களை இழுத்துக் கொண்டு வந்திருக்காள். உண்டா இல்லையா என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். இதற்குள், கமலா நாங்கள் இருந்த இடத்துக்குச் சமீபம் வந்தாள். கோபாலகிருஷ்ண ஐயரை நேருக்கு நேர் பார்த்தாள். “எங்க அப்பா சொன்னது அவ்வளவும் நிஜம். எனக்கு இவாளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத் தான் இஷ்டம், என் சம்மதத்தின் மேலே தான் எங்க அப்பாவும் அம்மாவும் என்னை அழைச்சுண்டு வந்தா. என்னை ஒருவரும் பலவந்தம் பண்ணவில்லை” என்று கணீரென்று சொன்னாள். கோபாலகிருஷ்ண ஐயர் திகைத்துப் போய் விட்டார். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, “அப்படியானால் கல்யாணத்தன்றைக்கு அப்படி ஏன் அம்மா விம்மி விம்மி அழுதாய்?” என்று கேட்டார். எப்படியும் பெரிய வக்கீல் பெரிய வக்கீல் தான், என்று நான் மனத்திற்குள் எண்ணினேன். ஆனால், கமலா, அந்தப் பெரிய வக்கீலையும் முதுகுக்கு மண் காட்டி விட்டாள். “கல்யாணத்தில் இஷ்டம் இல்லாததற்காக நான் ஒன்றும் அழவில்லை. நீங்கள் எல்லாம் திடீரென்று வந்து அமர்க்களம் பண்ணியதைப் பார்த்துத் தான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் அழுகை வந்தது!” “பேஷ் அம்மா, பேஷ்! ரொம்பக் கெட்டிக்காரி நீ? உனக்கே சம்மதமானால் எங்களுக்கு என்ன ஆட்சேபம். சாஸ்திரிகளும் நானும் ரொம்ப நாள் சிநேகிதர்கள். அவருக்கு உன்னைப் போன்ற சமத்துப் பெண் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிவிட்டுக் கோபாலகிருஷ்ண ஐயர் எழுந்திருந்தார். “அப்பா, அவாள் கொடுத்த பணத்தை அவாளிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்றாள் கமலா. வைத்தீசுவர ஐயர் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். “வேண்டாம் வேண்டாம், என்னால் நேர்ந்த நஷ்டத்துக்கு ஈடாயிருக்கட்டும்” என்று மறுதளித்து விட்டுப் பெரியவர் வெளிக் கிளம்பினார். வண்டி கிளம்பி கொஞ்ச தூரம் போனதும், கோபாலகிருஷ்ண ஐயர், “எல்லாம் அந்தப் பொம்மனாட்டியின் வேலை. பலே கைகாரி அவள். புருஷனைக் கண்ணில் விரல் கொடுத்து ஆட்டி வைக்கிறாள். அவன் சுத்த ‘ஹென்பெக்டு’. சுயபுத்தியே கிடையாது. தாயாருக்குத் தகுந்த பெண். வெகு சமத்து. அம்மா சொல்லிக் கொடுத்த பாடத்தை நன்றாய் ஒப்பிக்கிறது. என்னமோ பாவம்! அதன் தலையெழுத்து அந்தக் கிழவனைக் கட்டிக்கொண்டு காலங் கழிக்கணும்னு இருக்கு” என்றார். கல்யாணசுந்தரம் என்னமோ சொன்னான். சரியாய்க் காதில் விழவில்லை. நான் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சற்று முன் கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டில் நடந்த நாடகத்தில் ஏதோ ஒரு மறைபொருள் இருப்பதாக எனக்குத் தோன்றிற்று. அது என்னவாயிருக்கும்? நடந்ததெல்லாம் சரிதான். எல்லாரும் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டுப் பேசியது போல் தான் காணப்பட்டது. ஆனாலும் இன்னதென்று விளங்காத ஒரு வேதனை என்னைப் பிடுங்கித் தின்றது. ஏதோ ஒரு இரகசியம் - புலப்படாத மர்மம் - கட்டாயம் இருக்கிறது. அது என்னவாயிருக்கும்? வழியிலே என்னுடைய சொந்த வீடு இருந்தது. “நான் இறங்கிக் கொள்கிறேன்; சாப்பிட்டுவிட்டு மத்தியானம் வருகிறேன்” என்றேன். அன்று கோர்ட் இல்லை. என்னை வீட்டில் இறக்கிவிட்டு, வண்டி போய் விட்டது. பிற்பகல் மூன்று மணிக்கு, நான் பெரியவர் வீட்டுக்குப் போனவுடனே, வேலைக்காரன், “நீங்க வந்தாச்சா என்று ஐயா கேட்டாங்க; வந்தவுடனே மேலே வரச் சொன்னாங்க” என்றான். மாடியில் பெரியவர் ஏதோ கோபமாகப் பேசும் சப்தமும் அதற்குக் கல்யாணம் படபடவென்று பதில் சொல்லும் சப்தமும் கேட்டது. “சரி பையன் வாயைத் திறந்து பேசி விட்டான். பெரியவர் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சங்கடத்தில் நாம் அகப்பட்டு விழிக்கப் போகிறோமே” என்று எண்ணிக் கொண்டே மேலே போனேன். சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த பெரியவர் என்னைக் கண்டதும் நிமிர்ந்து உட்கார்ந்து “கேட்டாயா ராகவன்! இந்தப் பையனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. ‘எனக்குக் கல்யாணம் பண்ணி வை’ என்று வெட்கமில்லாமல் கேட்க ஆரம்பித்து விட்டான். அதோடு இல்லை. அந்த அதிகப் பிரசங்கிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானாம்?” என்று கூச்சல் போட்டார். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த கல்யாணம் எழுந்து நின்று கொண்டான். “யார் அதிகப் பிரசங்கி? அந்தப்பெண் அப்படி என்ன அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி விட்டது? அதிகப்பிரசங்கித்தனம் நாம் தான் செய்தோம். நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்திலே போய்த் தலையிட்டு ஒரு கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்தது அதிகப் பிரசங்கித்தனம் இல்லையாக்கும்?” “கேட்டாயா, ராகவன்? கேட்டுண்டாயா என்கிறேன். எல்லாத்தையும் நன்னாக் கேட்டுக்கோ!” என்றார் பெரியவர். கல்யாணம் மறுபடியும் சீறினான். “என்னத்தைக் கேட்கிறது? அந்த அம்மாள் கேட்டாளே ஒரு கேள்வி, அதற்கு என்ன பதில் சொல்றேள்? ‘உங்காத்திலேயும் ஒரு பிள்ளை இருக்காமே, அதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறதுதானே’ என்று கேட்டாளோ, இல்லையோ? அதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வாயில்லையே? கல்யாணத்தை மாத்திரம் போய் என்னத்துக்காகத் தடை செய்தேள்?” “பிசகுடாப்பா, பிசகுதான், என் பேரிலே பிசகுதான். அந்தப் பெண் தொண்ணூறு வயதுக் கிழவனை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும். அந்த அதிகப்பிரசங்கி எனக்கு நாட்டுப் பெண்ணாக வரவேண்டாம். அந்த வாயாடிப் பொம்மனாட்டியும், அந்த ‘ஹென்பெக்டு ஹஸ்பெண்டும்’ எனக்குச் சம்பந்திகளாக வரவும் வேண்டாம்” என்றார் பெரியவர். “உங்களுக்கு வேண்டாமென்றால் சரியாகப் போய்விட்டதா? உலகமெல்லாம் உங்கள் சௌகரியத்துக்காகவே தானா ஏற்பட்டது? தேசத் தொண்டு, சமூகத் தொண்டு என்று பேசுகிறதெல்லாம் இந்த லட்சணந்தான்! சொந்தக்காரியம் என்று வந்தால் பறந்து விடுகிறது. இந்த மாதிரி எல்லோரும் பிறத்தியாருக்கு வாத்தியாராயிருக்கும் வரையில் நம்முடைய தேசம் எங்கே உருப்படப் போகிறது?” என்றான் கல்யாணம். “கேட்டுண்டாயா ராகவன். கேட்டுண்டாயான்னேன்! இவன் எப்போ இப்படியெல்லாம் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சுட்டானோ, அப்புறம் நான் இவனோடு பேசறத்துக்கே தயாராயில்லை! எங்கேயாவது போகச் சொல்லு, என்னவாவது பண்ணச் சொல்லு” என்றார் பெரியவர். “பேசாமற் போனால் ரொம்ப மோசமாய்ப் போச்சாக்கும்” என்று கல்யாணம் முணு முணுத்தான். இதுவரையில் நான் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தேன். இப்போது அப்பா பிள்ளை பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டு விட்டபடியால், நான் தலையிட வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டது. “கல்யாணம்! இவ்வளவு கோபமும் தாபமும் என்னத்திற்காக? உன் மனதிலிருக்கிறதை நிதானமாகச் சொல்லேன்” என்றேன். “நிதானமாவது மண்ணாங்கட்டியாவது? எல்லாம் நிதானமாய்ச் சொல்லி அழுதாயிடுத்து. நான் அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அப்பா சம்மதித்தாலாச்சு; இல்லாவிட்டால்…” “அடப்பாவி! நான் சம்மதிச்சாலும் உங்க அம்மா சம்மதிக்க மாட்டாளேடா! ஊரை இரண்டு பண்ணி விடுவாளே! நல்ல வேளையா அவள் இப்போது பெண்ணாத்துக்குப் போயிருக்காள். இங்கேயிருந்திருந்தால், இதற்குள்ளே ரகளையாயிருக்குமே?” என்றார் பெரியவர். “நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா? அம்மா பண்ணிக்கப் போறாளா? சற்று முன்னாலே மாமண்டூர்க்காரரை ‘ஹென்பெக்டு’ என்று சொன்னீர்களே? நீங்கள் மாத்திரம் என்னவாம்?” என்று கல்யாணம் பளிச்சென்று கேட்டான். இப்படிக் கேட்கிறானே பாவி, பெரியவருக்கு நிஜமாகவே கோபம் வந்து விடப் போகிறதே என்று ஒரு கணம் பயந்து போனேன். நல்ல வேளை, நான் பயந்ததற்கு நேர்மாறாக காரியம் நடந்தது. கோபாலகிருஷ்ண ஐயர் குபீரென்று சிரித்துவிட்டார். பெரியவருக்கு, எப்போதுமே நகைச்சுவையுள்ளவர் என்று பெயர் உண்டு. எதிராளி மடக்கிவிட்டால், அவர் கோபங் கொள்ள மாட்டார். கோபப்பட்டால் கட்சி அடியோடு போய் விடுமென்று அவருக்குத் தெரியும்; ஆகையால் சிரித்து மழுப்புவார். இப்போதும் அப்படித்தான் பண்ணினார். சிரித்துக் கொண்டே, “ஆமாண்டாப்பா, ஆமாம்! நான் ’ஹென்பெக்டு’தான். என்னைப் பார்த்தாவது நீ எச்சரிக்கையாயிரு. அசட்டுப் பிசட்டுக் காரியம் பண்ணிவிட்டு அப்புறம் அகப்பட்டுண்டு முழிக்காதே!” என்றார். அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு ஒத்தாசையாகப் பேச்சைத் திருப்ப எண்ணி, நானும், “பையனுக்கும் வயதாகி விட்டதோ, இல்லையோ? நீங்கள் பாட்டுக்கு வந்த பெண்ணையெல்லாம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுகிறது? இப்படித்தான் ஏதாவது விபரீதமாய் வந்து சேரும்” என்றேன். “என் மேலே என்ன தப்பு, ராகவன்? அவன் அம்மாதான் அப்படிப் பண்ணின்டிருக்கா. இப்போதுக் கூட கையிலே மூன்று ஜாதகம் இருக்கு. ஒரு ஜில்லா ஜட்ஜின் பெண், ஒரு ஐ.சி.எஸ்.ஸின் பெண், ஒரு முந்நூறு காணிப் பண்ணையாரின் பெண். அடுத்த வாரத்திற்குள்ளே ஏதாவது ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணிக் கல்யாணம் செய்து வைக்கிறேன். இவனை மட்டும் அம்மா பேச்சைக் கேட்காமல் சம்மதிக்கச் சொல்லு” என்றார். “அதெல்லாம் முடியவே முடியாது. நான் இந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்” என்றான் பிள்ளையாண்டான். இதற்குள் வாசலில் வண்டிச் சத்தம் கேட்கவே, யார் என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். கணபதிராம சாஸ்திரிகள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். “இதென்ன கூத்து, சாஸ்திரிகள் வருகிறாரே? நம்மை விடமாட்டார் போலிருக்கிறதே!” என்றேன். “வரட்டும் வரட்டும்; என்ன வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான். எந்த வேளையிலே அந்தக் கல்யாணத்தை நிறுத்துகிறதற்காகக் கிளம்பினோமோ, தெரியவில்லை” என்றார் பெரியவர். கணபதி ராம சாஸ்திரிகள் மேல் மாடிக்கு வந்து சேர்ந்தார். ஆனால், காலையில் பார்த்த மாதிரி அமைதியான தோற்றமுடையவராயில்லை. முகமே மாறு பட்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்திருந்தது. நடக்கும் போது கால் தடுமாறிற்று. சுருங்கச் சொன்னால் திடீரென்று பத்து வருஷம் அதிக வயதானவரைப் போல் காணப்பட்டார். என் மாதிரியே, கல்யாணமும் அவனுடைய தகப்பனாரும் அதிசயத்துடன் அவரை நோக்கினார்கள். பெரியவர், “என்ன சாஸ்திரிகளே? விஷயம் என்ன? உடம்பிலே ஏன் இவ்வளவு படபடப்பு? உட்காருங்கள். உட்கார்ந்து நிதானமாய்ச் சொல்லுங்கள்” என்றார். கணபதிராம சாஸ்திரிகள் சாய்வு நாற்காலியில் தொப்பென்று விழுந்தார். தொண்டை அடைக்க, தழுதழுத்த குரலில், “நீங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை மகா பாபத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்றார். உடனே முகத்தைத் துணியினால் மூடிக் கொண்டார். விம்மல் சத்தம் கேட்டது. அவரை ரொம்பவும் ஆசுவாசப் படுத்தினோம். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மனதில் மட்டும், ‘ஏதோ மர்மம் இருக்கிறது என்று நாம் எண்ணியது சரி; அது இப்போது வெளியாகப் போகிறது’ என்று தோன்றிற்று. “அன்று குலசேகரபுரத்துக்கு நீங்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால் எப்பேர்ப்பட்ட விபத்து நேர்ந்திருக்கும். அதை நினைத்தாலே எனக்குப் பயங்கரமாயிருக்கிறது. இதோ பாருங்கள் என் உடம்பில் மயிர் சிலிர்த்திருக்கிறது” என்றார் சாஸ்திரிகள். நாங்கள் பார்த்தோம். அவர் உடம்பிலே ரோமங்கள் குத்திக் கொண்டுதான் நின்றன. “என் கை நடுங்குகிறதைப் பாருங்கள்” என்றார். பார்த்தோம்; கை நடுங்கிக் கொண்டிருந்தது. “சமாசாரம் என்ன, சாஸ்திரிகளே? ஏதாவது நடவடிக்கை எடுத்து கொள்வது அவசியமாயிருந்தால் சீக்கிரம் சொன்னால் தானே தேவலை?” என்றார் பெரியவர். அந்த மாமண்டூர்க்காரர்கள், ஒரு வேளை, சாஸ்திரிகளைக் கொலை கிலை செய்ய முயற்சித்தார்களோ என்ற சந்தேகம் பெரியவருக்கும் உதித்திருக்க வேண்டும். அதனால்தான் நடவடிக்கையைப் பற்றி அவர் பிரஸ்தாபித்தார். கணபதிராம சாஸ்திரிகள் கொஞ்சம் தயங்கி யோசனை செய்துவிட்டு, “அடியே பிடித்துத்தான் சொல்லியாக வேண்டும்” என்றார். “பேஷாய்ச் சொல்லுங்கள். நிதானப்படுத்திக் கொண்டு சொல்லுங்கள்” என்றார் பெரியவர். எங்களுக்கெல்லாம் வியப்பையும் பரபரப்பையும் பயங்கரத்தையும் மகிழ்ச்சியையும் மாறி மாறி உண்டாக்கி வந்த பின்னவரும் அதிசயமான விவரத்தைக் கணபதிராம சாஸ்திரிகள் கூறினார்:- கமலாவின் வரலாறு "நீங்கள் காலையில் என் வீட்டிலிருந்து கிளம்பிப்போன பிறகு, எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் இஷ்டம் கிடையாது. துர்போதனையில் மயங்கிப் போய்ச் சம்மதித்து விட்டேன். குலசேகரபுரத்தில் கல்யாணத்தன்றைக்குக் கூட எனக்கு மன நிம்மதியேயில்லை. நீங்கள் வந்து தடுத்ததும், நல்லதாய்ப் போயிற்று என்று நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். இன்றைக்கு இவர்கள் மறுபடியும் வந்து சேர்ந்ததும் உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். நீங்கள் வந்தால் எப்படியும் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவீர்களென்று நினைத்தேன். நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள். நீங்கள் வந்த பிறகு அவர்கள் இன்னும் நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தார்கள். நான் யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். உங்கள் பெண்ணின் இஷ்டத்தினால்தான் வந்திருப்பதாய்ச் சொல்கிறீர்கள். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவளிடம் தனியாய்ச் சற்று நேரம் பேச வேண்டும். பேசி உங்கள் நிர்ப்பந்தத்தினால் அவள் வரவில்லை என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவாகப் பதில் சொல்வேன் என்றேன். அவர்கள் கொஞ்சங்கூட ஆட்சேபிக்காமல் அதற்குச் சம்மதித்தார்கள். பெண்ணை அந்த ஹாலிலேயே விட்டு விட்டு உள்ளே சென்றார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘கமலா, உன் அப்பாவிடம் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? உன்னை இவர்கள் நிர்ப்பந்தப் படுத்தவில்லையென்பது நிஜந்தானா?’ என்று கேட்டேன். “நிஜந்தான். அவர்கள், என்னை நிர்ப்பந்தப்படுத்தவேயில்லை. நான் தான் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வந்தேன்” என்றாள்! “அப்படியானால் நிஜத்தைச் சொல்லு, என்னத்திற்காக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்கிறாய்? அப்பா அம்மாவைப் பிடிக்கவில்லையா? அவர்களுடன் இருப்பது கஷ்டமாயிருக்கிறதா?” என்று கேட்டேன். “கஷ்டம் ஒன்றுமில்லை; ஆனால், அவர்களுடன் இனிமேல் இருக்க எனக்கு இஷ்டமில்லை!” என்று அந்தப் பெண் சொன்னாள். “ஏன்?” என்று கேட்டேன். அவள் பதில் சொல்லத் தயங்கினாள். “நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் உன்னோடு காலங்கழிக்க வேண்டுமே? உன்னிடம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தால்தானே அது முடியும்? இப்பொழுது நீ நிஜத்தைச் சொல்லாவிட்டால், உன்னிடம் எப்படி எனக்கு நம்பிக்கை ஏற்படும்?” என்று கேட்டேன். “நான் நிஜத்தைச் சொல்கிறேன். ஆனால் அதற்காக என்னை நீங்கள் நிராகரிக்கக் கூடாது. அப்பா, அம்மாவிடம் நான் சொல்வதைச் சொல்லவுங் கூடாது” என்று கெஞ்சுகிற குரலில் சொன்னாள். “அதெல்லாம் நான் ஒன்றும் வாக்களிக்க முடியாது. முதலில் நீ நிஜத்தைச் சொல்லு. உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டானால், அதற்குப் பிறகு முடிவு சொல்கிறேன்” என்றேன். “அப்பாவும் அம்மாவும் ரொம்ப தரித்திரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவுக்கு வேலை போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. எனக்கு ஐந்து பேர் தம்பி தங்கைகள். வீட்டிலே சில நாளைக்குச் சாப்பாடு கூடக் கிடைக்கிறதில்லை. நீங்கள் பணக்காரர் என்று எனக்குத் தெரியும். உங்களைக் கல்யாணம் செய்து கொண்டால், அவர்களுக்கெல்லம் ஒத்தாசை செய்யலாம் என்ற ஆசைதான். நிஜத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் நீங்கள் விட்டவழி விடுங்கள்” என்றாள். என் மனது இரங்கிவிட்டது. ஆனாலும், ஒருவாறு மனதைக் கடினப்படுத்திக் கொண்டு, “அப்படியானால் உங்கள், அப்பா அம்மாவின் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதித்தாய் என்று சொல்லு; அவர்களுக்கு ஒன்றும் ஒத்தாசை செய்ய முடியாது என்று நான் சொல்லி விட்டால் என்ன பண்ணுவாய்?” என்றேன். “கல்யாணச் செலவு, எதிர் ஜாமீனாவது இல்லாமல் போய் விடுமோ, இல்லையோ? என்னை இத்தனை நாள் வளர்க்கிறதற்கே அவர்களுக்கு எத்தனையோ பணச் செலவு ஆகியிருக்கிறது.” “ரொம்ப அழகாயிருக்கே நீ சொல்கிறது? பெண்ணை வளர்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறது பெற்றவர்களுடைய கடமை. இதற்காக நீ என்னத்திற்குக் கவலைப்பட வேண்டும்?” “பெற்றவாளாயிருந்தல் நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால், அவாள் என்னைப் பெற்றவாள் இல்லை. என்னுடைய சொந்த அப்பா, அம்மா இல்லை.” எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன சொல்லுகிறாய், நிஜமாகவா?” என்று கேட்டேன். "உங்களுக்குப் புண்ணியம் உண்டு. கொஞ்சம் மெதுவாய்ப் பேசுங்கள். நான் இதையெல்லாம் உங்களிடம் சொன்னதாய் அவர்களுக்குத் தெரியக்கூடாது. ஒரு மாதத்துக்கு முன்னாலே தான் எனக்கே இது தெரிஞ்சுது. ஒரு நாளைக்கு அப்பாவும் அம்மாவும் தனியாகக் கதவைச் சாத்திண்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என் கலியாண விஷயமாய்த்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு நான் ஒட்டுக்கேட்டேன். ‘அதுக்காகக் கமலாவைப் பலி கொடுக்கணும் என்கிறாயா?’ என்று அப்பா சொன்னார். அதற்கு அம்மா, ‘பலி கொடுக்கிறது என்ன? நல்ல பணக்கார இடத்திலே தானே கொடுக்கப் போகிறோம்? நடுச்சாலையிலே அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்துப் பதின்மூன்று வருஷமாக வளர்க்கலையா? அவளுக்கும் நம்ம சொந்தக் குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசம் பாராட்டினோமா? அவள் வந்த முகூர்த்தம் நமக்கு நாலைந்து குஞ்சு குழந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. தரித்திரமோ பிடுங்கித் தின்கிறது. இத்தனை வருஷமாய் அவளை வளர்த்ததற்கு அவளாலே தான் நமக்கு ஏதாவது உபகாரம் ஏற்படட்டுமே! அதிலே என்ன பிசகு?’ என்று சொன்னாள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அப்படிப் பதின்மூன்று வருஷம் என்னை வளர்த்தவாளுக்கு நான் பதிலுக்கு உபகாரம் கட்டாயம் செய்யணும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அதனால் தான் உடனே உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். உங்களுடைய நல்ல குணத்தைப் பார்த்த பிறகு அந்த உறுதி அதிகமாயிற்று. நிஜத்தைச் சொல்லிவிட்டேன். நீங்கள் என்னைக் கைவிட்டால், திரும்பி அவர்கள் வீட்டுக்கு நான் போகப் போவதில்லை. வழியில் எங்கேயாவது ரயிலிலேயிருந்து குதித்தாவது உயிரை விட்டு விடுவேன்" என்றாள். இந்த அதிசயமான விவரத்தைக் கேட்டுக் கொண்டு நான் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தேன். என் நெஞ்சு மட்டும் எதனாலோ, படீர், படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய சந்தேகம் - பயங்கரமும் ஆனந்தமும் கலந்த சந்தேகம் - என் மனத்தில் உதித்து விட்டது. “இப்போது உனக்கு என்ன வயது அம்மா” என்று கேட்டேன். “பதினாறு” என்றாள். “உன் சொந்த அப்பா அம்மாவைப் பற்றி ஏதாவது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன். “ஒன்றுமே ஞாபகமில்லை” என்றாள். “உன்னை எங்கே கண்டெடுத்தார்களாம். அதாவது தெரியுமா?” என்று கேட்டேன். “கும்பகோணம் மகாமகத்தின் போது அகப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள்” என்று அவள் சொன்னதும், என்னுடைய பரபரப்பு அளவு கடந்துவிட்டது. “இங்கே வா, அம்மா! கொஞ்சம் வலது காதை மடித்துக் காட்டு” என்றேன். அவள் தயங்கியதைப் பார்த்துவிட்டு, “பயப்படாதே அம்மா! இப்படி வா! ஒரு அடையாளத்துக்காகக் கேட்கிறேன்” என்றேன். அவள் அருகில் வந்ததும் அவளுடைய வலது காதை மடித்து விட்டுப் பார்த்தேன். அதன் பின்னால் மூன்று கறுப்பு மச்சங்கள் பளிச்சென்று தெரிந்தன. “என் கண்ணே! நீ என் சொந்தப் பெண்ணடி!” என்று கத்திக் கொண்டே அவளைக் கட்டிக் கொள்ளப் போனேன். திடீரென்று கண் இருண்டு வந்தது. கீழே விழுந்து விட்டேன். இப்படிச் சொல்லிவிட்டு கணபதிராம சாஸ்திரி நிறுத்தினார். என் மனதில் காலையிலிருந்து உறுத்திக் கொண்டிருந்த மர்மமான விஷயம் இன்னதென்று இப்போது விளங்கிவிட்டது. அது கணப்திராம சாஸ்திரிக்கும் கமலாவுக்கும் முகபாவத்தில் காணப்பட்ட ஒற்றுமை தான். நாங்கள் மூன்று பேரும் எங்கள் அதிசயத்தைப் பல விதத்திலும் தெரிவித்தோம். “நீங்கள் ரொம்பப் புண்ணியம் செய்தவர். அதனால் தான் உங்களைப் பகவான் அப்பேர்ப்பட்ட பாவத்திலிருந்து காப்பாற்றினார். பெண்ணையும் கொண்டு வந்து சேர்த்தார்” என்று அவரைப் பாராட்டினோம். “பகவான் உங்கள் மூலமாக என்னைத் தடுத்தாட்கொண்டார். அதனால் பாக்கிக் காரியத்தையும் நீங்கள் தான் செய்து கொடுக்க வேணும். குழந்தைக்குக் கல்யாணம் பண்ணி வைத்த பிறகுதான் என் மனதில் ஏற்பட்டுள்ள பயங்கரம் நீங்கும்; நிம்மதி ஏற்படும் ஐயர்வாள்! வேறு எது எப்படியிருந்தாலும் வித்தியாசம பார்க்காமல் உங்கள் பிள்ளைக்கே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் ஆகி விடவேண்டும்” என்றார் கணபதிராம சாஸ்திரிகள். இவ்வாறு கல்யாணசுந்தரத்தின் கட்சியில் பகவானே இருந்து, அவன் மனோரதத்தை நடத்தி வைத்தார். பெரியவரின் சம்மதம் உடனே கிடைத்து விட்டது. அம்மாளின் சம்மதம் பெறுவது அவ்வளவு சுலபமாயில்லை. ஆனால் கணபதிராம சாஸ்திரிகள் கமலாவின் பேருக்குத் தம் முக்கால் லட்சம் சொத்தையும் எழுதி வைத்து உயிலையும் கொண்டு வந்து கொடுத்த பிறகு, அம்மாளின் சம்மதமும் கிடைத்து விட்டது. அடுத்த முகூர்த்த தினத்தில் கமலாவின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்த விஷயத்தில் கல்யாணசுந்தரம் காட்டிய பிடிவாதமும் உறுதியும் அவனிடம் எனக்கு ரொம்ப மதிப்பை உண்டாக்கிவிட்டது என்பதைச் சொல்ல வேண்டும். அவனும் என்னிடம் மிகவும் நன்றியுடனிருக்கிறான். இதை எழுதிய பிறகு, இந்தக் கதைக்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் பார்த்தேன். இரண்டு விதத்திலும் அது பொருத்தமாயிருப்பது தெரிய வந்தது. பிள்ளையாண்டான் இப்போது ’கமலாவின் கல்யாண’மாகத்தான் விளங்குகிறான். அப்பாவுக்குப் பிள்ளைதானே? கவர்னர் விஜயம் ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், “பொய்கையாற்றுத் தேக்கம்” “கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்” என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். செட்டியாருக்கு மயிர் கூச்சல் உண்டாயிற்று. மார்பு சிறிது நேரம் ‘பட்’ ‘பட்’ என்று அடித்துக் கொண்டது. சற்று சமாளித்துக் கொண்டு அத்தலைப்புகளின் கீழ் இருந்த செய்தியை முற்றும் படித்தார். அம்மாதம் 20ம் நாள் காலை 7 மணிக்கு கவர்னர் துரை …. ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பொய்கையற்றுத் தேக்கத்துக்கு மோட்டாரில் செல்வாரென்பதும், மற்றும் பலவிவரங்களும் இருந்தன. செட்டியார் உடனே தமது பிரதம காரியஸ்தர் ஜெயராமையரைக் கூப்பிட்டனுப்பினார். காரியஸ்தர் வந்து சேர்ந்ததும், “ஐயரே, சங்கதி தெரியுமா?” என்றார். “தெரியாதே! என்ன விசேஷம்?” “உமக்கேனையா தெரியும்? இதற்குத்தான் பத்திரிகை படியுமென்று உமக்குப் படித்துப் படித்துச் சொல்கிறேன். வருஷத்தில் ரூ.250 செலவழித்து இவ்வளவு பத்திரிகைகள் தருவிக்கிறோமோ, பின் எதற்காக? நான் மட்டும் ஜாக்கிரதையாகப் படித்துக் கொண்டு வராவிட்டால் இப்போது என்ன ஆகியிருக்கும்?” “விஷயம் என்னவென்று எஜமான் சொல்லவில்லையே?” “நம்மூருக்கு 20-ந்தேதி கவர்னர் வருகிறார்!” காரியஸ்தர் இடி விழுந்தது போல் வாயைப் பெரிதாகத் திறந்தார். “ஓ ஓ…” என்ற சத்தத்தைத் தவிர வேறு வார்த்தை அவர் வாயினின்றும் வரவில்லை. “சரி, மேலே என்ன செய்கிறது?” என்று செட்டியார் கேட்டார். “எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட வேண்டியது தான்.” “20-ந்தேதி காலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். நமது மோட்டார் வண்டியில் ஒரு தூசு இல்லாமல் பளபளவென்று தேய்த்து வைக்கச் சொல்லும்.” “பார்த்தீர்களா? நான் பிடிவாதமாக மோட்டார் வண்டி வாங்கத்தான் வேண்டுமென்றது இப்போது எவ்வளவு பயன்படுகிறது?” “இந்த முன்யோசனைக்காகத்தானே ஐயரே உம்மிடத்தில் எனக்கு இவ்வளவு பிரியம்? இருக்கட்டும். நமது வீட்டு வாசலை அலங்கரிக்க வேண்டாமா?” “நமது வீதி வழியாகக் கவர்னர் போகிறாரா?” “நிச்சயமில்லை. ஒரு வேளை ஸ்டேஷனில் இறங்கி நேரே போய்விடலாம். கலெக்டர் துரையிடம் சொல்லி நமது வீதி வழியாய்ப் போக ஏற்பாடு செய்ய வேண்டும்.” “முடியாவிட்டாலும் பாதகமில்லை. எப்படியும் நமது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிடுமல்லவா?” “அதுவும் உண்மைதான். இருக்கட்டும். கூர்மாவதாரம் ஐயங்காருக்கு இச்செய்தி தெரியாமலிருக்க வேண்டுமே? அவர் தினம் பத்திரிகை என்னைப்போல் கவனமாகப் படிக்கிறாரா?” “அவருக்குத் தெரிந்தாலும் பாதகமில்லை. தாங்கள் யோசனை செய்ய வேண்டாம். முதலில் அவரிடம் மோட்டார் கிடையாது. பழைய கர்நாடக கோச்சு வண்டியில்தான் அவர் வரவேண்டும். மேலும் தங்களுக்கு நினைவில்லையா? கலெக்டர் தர்பாரிலே அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டபோது, அவருடைய வேஷத்தையும், அவர் திரும்பத் திரும்பச் சலாம் போட்டதையும் பார்த்து எல்லாரும் ‘கொல்’ என்று சிரிக்கவில்லையா? அந்த மாதிரிதான் இப்போதும் ஆகும்” என்றார் காரியஸ்தர். அச்சம்பவத்தை நினைத்துச் செட்டியார் இப்போதும் சற்று நகைத்தார். “இருந்தாலும், நாம் வீடு அலங்காரம் செய்யும் விஷயம் அவருக்குத் தெரியக்கூடாது. எல்லா ஏற்பாடும் செய்து தயாராய் வைத்துக் கொண்டு, 19-ந்தேதி இரவு பத்து மணிக்கு அலங்காரஞ் செய்துவிடுவோம். ஐயங்காரைக் காலையில் எழுந்து விழிக்கும்படிச் செய்யலாம்” என்றார். இன்னும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதைப் பற்றிச் செட்டியாரும் காரியஸ்தரும் நீண்ட நேரம் யோசித்தார்கள். மறுநாள் நடக்கும் நகரசபை கூட்டத்தில் கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தைத் தாம் கொண்டு வரப்போவதாகச் செட்டியார் எழுதி நகர சபையின் தலைவருக்கனுப்பினார். பின்னர், காரியஸ்தர் தமது காரியத்தைப் பார்க்கச் சென்றார். ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் பெரிய வியாபாரி. அவர் வசித்த சிறு பட்டணத்தில் மூன்று மாடி வைத்த மாளிகை அவர் ஒருவருக்கே உண்டு. இளமையில் அவர் ஒரு ஏழையாகவே இருந்தார். முதலில் ஓர் இரும்புக் கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். லக்ஷ்மிதேவியின் கடைக் கண் பார்வை அவர் மீது விழுந்தது. தனிக்கடை வைத்து வியாபாரம் நடத்தவே, செல்வம் நாளுக்கு நாள் பெருகிற்று. மகாயுத்தத்திற்குச் சற்று முன்பு ஏராளமான இரும்புச் சரக்குகள் அவருடைய கடையில் தங்கியிருந்தன. யுத்தம் ஆரம்பித்த பின்னர், இரும்புச் சாமான்களின் விலை இருமடங்கு, மும்மடங்காயிற்று. செட்டியார் ஒரேயடியாக லட்சாதிபதியாகிவிட்டார். பின்னர், கௌரவங்களில் ஆசை விழுந்தது. அடுத்த வீட்டு வக்கீல் ராவ்பகதூர் கூர்மாவதாரம் ஐயங்காரைத் தமது வாழ்க்கை உதாரணமாகக் கொண்டார். நடை, உடை, பாவனைகளில் அவரைப் பின்பற்றினார். ஆங்கில ஆசான் ஒருவரை அமர்த்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். நாகரிகவாழ்க்கைக்குரிய ஆடம்பரங்களனைத்தையும் ஒவ்வொன்றாகக் கைக்கொண்டார். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி விருந்து நடத்தினார். பெருந்தொகை செலவு செய்து நகரசபை அங்கத்தினராகவும் ஆனார். இப்போது அவருடைய மனம் முழுவதும் ‘ராவ்பகதூர்’ பட்டத்தைப் பற்றி நின்றது. இதனோடு, தாம் ராவ் பகதூர் பட்டம் பெறுவதற்குள், ஐயங்கார், மேல்வகுப்புக்கு, அதாவது திவான் பகதூர் பட்டத்துக்குப் போய்விடாமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் அவருக்குண்டு. எனவே, கவர்னர் தமது ஊருக்கு விஜயம் செய்யும்போது ஐயங்காரை எந்த விஷயத்திலாவது முந்திக் கொண்டு கவர்னரின் கவனத்தைக் கவர்ந்து பட்டம் பெற்றுவிட வேண்டுமென்பது அவருடைய நோக்கம். மேலே குறிப்பிட்ட சம்பாஷணையில் கூர்மாவதாரம் ஐயங்காரின் பெயர் அடிக்கடி அடி பட்டதற்கு இதுதான் காரணமாகும். மறுநாள், ஸ்ரீமான் செட்டியார், மகிழ்ச்சி ததும்பிய முகத்துடனே நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார். கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானத்தைப் பிரேரணை செய்து பேசுவதற்கு ஒரு பிரசங்கத்தைத் தயாரித்துத் தமது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருந்தார். அப்பிரசங்கத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதல் பகுதியிலே, இந்தியாவுக்கு ஆங்கில ஆட்சியின் பயனாக ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி வருணித்திருந்தார். இரண்டாவது பகுதியில் கவர்னர் துரையின் பூர்வோத்தரங்கள், குலப்பெருமை, குணச்சிறப்பு மற்றும் கல்யாண குணங்கள் எல்லாவற்றையும் பற்றி விரித்துக் கூறியிருந்தார். மூன்றாம் பகுதியில் கவர்னர் துரை இம்மாகாணத்தில் வந்து பதவியில் அமர்ந்த பின்னர் செய்த செய்யாத எல்லா நன்மைகளையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் மேலான கவனத்துக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது தமது வருந்தத்தக்க கடமையாயிருக்கிறதென்றும், அவருடைய ஆதிக்கத்தில் இராஜ விசுவாசிகளுக்கு ஆதரவு போதாதென்றும், பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் ஆசாமிகளின் யோக்கியதாம்சங்களைச் சற்றுக் கவனித்து கருணை புரியவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இந்தப் பிரசங்கத்திற்கு நகல்கள் எடுத்துத் தமது காரியஸ்தர் மூலம் எல்லாப் பத்திரிகை நிருபர்களுக்கும் அனுப்பி, பிரசங்கம் முழுவதையும் பத்திரிகைகளுக்கு தந்தியில் அனுப்பும் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், கவர்னர் விஜயத்துக்கு மறுநாள் தமது வீட்டுக்கு வந்து தம்மைக் கண்டுபோகும்படியும் சொல்லியனுப்பினார். ஆனால், அந்தோ! அவர் நகரசபைக் கட்டிடத்தை அடைந்து ஆசனத்திலமர்ந்ததும், அவர் மகிழ்ச்சி அவ்வளவும் துயரமாகவும், கோபமாகவும் மாறிற்று. ஏனெனில், ராவ்பகதூர் ஐயங்கார் தம்மை முந்திக்கொண்டு கவர்னர் வரவேற்புத் தீர்மானம் கொண்டு வருவதாக முன்னாடியே அறிவித்துவிட்டாரென்றும், ஆதலால் அவருடைய தீர்மானந்தான் முதலில் வருமென்றும் தெரிய வந்தன. ஆனாலும் செட்டியார் தோல்வியைக் கண்டு அஞ்சி விடுபவரல்லர். முயற்சி திருவினையாக்குவதை அவர் தமது வாழ்க்கையில் கண்டறிந்தவர். எனவே ஐயங்காருக்கு அடுத்தாற்போல் தாமே தீர்மானம் அனுப்பியிருந்ததால் ஐயங்காரின் தீர்மானத்தை ஆமோதிக்கும் உரிமையாவது தமக்கு அளிக்க வேண்டுமெனப் போராடி அவர் வெற்றியடைந்தார். அதன்பின் தீர்மானத்தை ஆமோதிக்கும் வாயிலாக, தாம் எழுதி வைத்திருந்த பிரசங்கம் முழுவதையும் படித்துவிட்டார். செட்டியார் மறுநாள் தபாலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து வந்ததும் பத்திரிகைகளை உடைத்துப் பிரித்தும் பார்த்தார். அந்தோ! அவர் ஏமாற்றத்தை என்னவென்று சொல்வது? ஒரு பத்திரிகையிலாவது இவருடைய பிரசங்கம் வெளியாகவில்லை. “ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் தீர்மானத்தை ஆமோதித்தார்” என்ற பாடமே எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்பட்டது. செட்டியாரின் பிரசங்கத்தைப் பத்திரிகைகளுக்கு அனுப்பாமலிருப்பதற்கு வேண்டிய வேலை முன்னமேயே ஐயங்கார் செய்துவிட்டது, பாவம் அவருக்குத் தெரியாது. அவர் உலகிலுள்ள எல்லாரையும், கடவுளையுங்கூடச் சேர்த்துத் திட்டிக்கொண்டிருக்கையில், காரியஸ்தர் வந்து சேர்ந்தார். அவர் கொண்டு வந்த செய்தி செட்டியாருக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது. "சங்கதி கேட்டீர்களா? கவர்னர் துரை காலை ஏழு மணிக்குத்தான் ஸ்டேஷனுக்கு வரப்போகிறாராம். ஒன்பது மணிக்குப் பொய்கையாற்றுத் தேக்கத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்குத் திட்டம் செய்யப் பட்டிருக்கிறதாம். சுமார் ஐம்பது மைல் இதற்கிடையில் பிரயாணஞ் செய்தாக வேண்டும். ஆதலால் நகரசபை உபசாரப் பத்திரத்தை, நகரமண்டபத்துக்கு வந்தோ அல்லது ரயில்வே ஸ்டேஷனிலேயோ பெற்றுக் கொள்ளுவதற்கு நேரமில்லையாம். இச்செய்தி இப்போதுதான் கவர்னரின் அந்தரங்க காரியதரிசியிடமிருந்து வந்ததாம். தாங்கள் அத்தீர்மானத்தைப் பிரேரணை செய்யாததே நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இப்போது எவ்வளவு அவமானம் பாருங்கள்" என்றார் காரியஸ்தர். “ஆ! கூர்மாவதாரம் ஐயங்காருக்கு நன்றாய் வேண்டும். முந்திக் கொள்ளப் பார்த்தாரல்லவா” என்று கூறிச் செட்டியார் உவகையடைந்தார். “ஆனாலும், 20-ந்தேதி காலையில் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமல்லவா?” என்று காரியஸ்தர் கேட்டார். “சந்தேகமில்லாமல், மற்ற எல்லா ஏற்பாடுகளும் முன்னரே திட்டம் செய்துள்ளபடி நடத்த வேண்டியதே.” கடைசியில், குறிப்பிட்ட தினம் வந்தது. சிவகுருநாதஞ் செட்டியார் அதிகாலையிலேயே எழுந்திருந்து ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டார். பின்னர், நிலைக் கண்ணாடியின் முன்பு நின்று அரைமணி நேரம் உடை தரித்துக் கொண்டார். அவருடைய அருமை மனையாள், அருகிலிருந்து துணிகளைத் தட்டிக் கொடுத்தும், நகைகளைத் துடைத்துக் கொடுத்தும் உதவி புரிந்தாள். அலங்காரம் செய்து கொண்டு முடிந்ததும், காரியஸ்தரை விட்டு மோட்டாரைக் கொட்டகையிலிருந்து கொண்டு வரச் சொன்னார். செட்டியாரின் மனைவி வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். நல்ல சகுனமான தருணத்தில் நல்ல நேரத்தில் செட்டியார் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு மோட்டாரில் அமர்ந்தார். மோட்டார் வண்டியின் முனையில் பெரியதொரு யூனியன் ஜாக் கொடி அழகாக ஆடிக்கொண்டிருந்தது. அடுத்த ஐயங்கார் வீட்டைப் பார்த்ததும், செட்டியாருக்குக் கொஞ்சம் ‘சொரேல்’ என்றது. தம்மைப் போலவே ஐயங்காரும், முதல் நாள் மாலை வரை பேசாமலிருந்துவிட்டு, இரவுக்கிரவே வீட்டு வாசலைத் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரித்திருப்பதைக் கண்டார். இதற்குள் மோட்டார் வண்டி புறப்பட்டு விட்டபடியால், அதிகமாகச் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் வண்டி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. தமக்கு முன்னால் ஐயங்கார் அங்கு வந்து தயாராகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உள்ளுக்குள் அவர்களிடையே இவ்வளவு போட்டி நடந்து கொண்டு வந்ததாயினும் வெளிக்கு அவர்கள் அத்தியந்த நண்பர்கள். எனவே செட்டியார் “என்ன ஐயங்கார்வாள்! ஏது இவ்வளவு அதிகாலையில் விஜயம் செய்தது?” என்று கேட்டார். "இங்கு ஒரு சிறு காரியமாக வந்தேன். தாங்கள் சென்னைப் பட்டணம் போவதாகக் கேள்விப்பட்டேன். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்கு வந்தீர்களோ?" என்று கேலி செய்யும் பாவனையாக ஐயங்கார் வினவினார். “அதிருக்கட்டும். தாங்கள் வீட்டு வாசலை இரவுக்கிரவே அலங்காரம் செய்திருப்பதாகக் காண்கிறதே! என்ன விசேஷம்?” என்றார் செட்டியார். “தாங்கள் வீட்டு வாசலிலும் இன்று காலையில் தோரணங்களைப் பார்த்தேன். தங்களுக்கு இன்று சஷ்டியப்த பூர்த்தி விவாகம் என்று சொன்னார்கள். அப்படித்தானோ” என்று கிருதக்காய்க் கேட்டார் ஐயங்கார். செட்டியார் இதற்கு கடுமையாகப் பதில் சொல்ல எண்ணினார். ஆனால் அதற்குள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கூட்டம் வந்து நின்றுவிட்டது. நகரசபை அங்கத்தினர்களும், சில வக்கீல்மார்களும், உத்தியோகஸ்தர்களும், பந்தோபஸ்துக்காக வந்த போலீஸ்காரர்களும், பகிஷ்காரப் பிரசாரம் செய்ய வந்து ஏதோ இந்தத் தமாஷையும் கொஞ்சம் பார்க்கலாமே என்று உள் நுழைந்த தொண்டர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த இரகசியப் போலீசாரும், புகைவண்டி நிலைய மேடையில் எள்ளுப் போட்டால் கீழே விழாத வண்ணம் நெருங்கிக் கூடினார்கள். எல்லாரும் கண் பூத்துப் போகும்படி ரயில் பாதையை நோக்கிய வண்ணமாய் நின்றார்கள். கடைசியாக, கவர்னர் துரையின் ஸ்பெஷல் வண்டி வந்து சேர்ந்தது. போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்கும் அலைந்து அமைதியை நிலைநாட்டினார்கள். கவர்னர் பிரபு வண்டியை விட்டுக் கீழிறங்கினார். அவர் போவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது. என்னென்னவோ மனோராஜ்யம் செய்துகொண்டு அங்கு வந்திருந்தவர் அனைவரும், அந்த வினாடியில் கெட்டியாக மூச்சுக்கூட விடாமல், மார்பு படபடவென்று அடித்துக்கொள்ள மிக்க ஆவலுடன் அவரை நோக்கி நின்றனர். எங்கே துரை முகமெடுத்துக்கூடப் பாராமல் போய்விடுவாரோ என்று எண்ணி அவர்கள் நடுநடுங்கினார்கள். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவர் உணர்ச்சி மேலீட்டினால் மூர்ச்சையாகி விட்டாரென்றும், ஆயினும் மூர்ச்சை நிலையிலும் அவருடைய தீவிர இராஜபக்தியின் காரணமாக, கீழே விழுந்து குழப்பம் விளைவியாமல் தூணைப் பிடித்துக் கொண்டு மறைவில் நின்று கொண்டிருந்தாரென்றும், பின்னால் தெரியவந்தன. நிற்க, துரை கீழிறங்கியதும், தொப்பியை மரியாதைக் குறியாகக் கையில் எடுத்துக்கொண்டு, ஒரு மூலையிலிருந்து வரிசையாக எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்தார். அங்கிருந்தோர் அனைவரும், தங்கள் வாழ்வின் இலட்சியம் நிறைவேறி விட்டதென்னும் எண்ணங் கொண்டனர். அவருடைய பார்வை தம்மீது விழக்கூடிய கணத்திலும் குறைந்த நேரத்தில் தாம் சலாம் செய்யத் தவறி விட்டால் என்ன செய்வதென்று எல்லாருக்கும் பயம். எனவே, முதலில் அவர் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து, அவர் கண்கள் கடைசி வரை சென்று முடித்துப் பிறகு அவர் நடக்கத் தொடங்கிய வரையில், அங்கிருந்தோர் அனைவரும் சலாம் செய்து கொண்டேயிருந்தனர். மேலக் காற்று, வீசி அடிக்கும்போது மரங்கள் நிறைந்த தோப்பில் எவ்வாறு கிளைகள் இடையீடின்றி ஆடி அசைந்து கொண்டிருக்குமோ அவ்வாறு ஐந்து நிமிஷ நேரத்திற்கு அங்கிருந்தோர் அனைவருடைய கரங்களும் நெற்றிக்குச் சென்று கீழே வந்த வண்ணமாயிருந்தன. இவ்விதம் ஒரு முறை இராஜ பார்வை பார்த்து விட்டுக் கவர்னர் துரை வேகமாக நடந்து போய் வெளியில் தயாராய் நின்ற மோட்டாரில் ஏறிச் சென்றார். அவரைத் தரிசிக்க வந்து கூடியிருந்தோர் எல்லோரும் தங்கள் தங்கள் இல்லங்களுக்கு ஏகினர். ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியாரும் சௌக்கியமாக வீடு போய்ச் சேர்ந்தார். உடனே அவருடைய மனைவி, குழந்தைகள், காரியஸ்தர், வேலைக்காரர்கள் எல்லாரும் சூழ்ந்து கொண்டு “என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்கள். செட்டியார் சற்று இளகிய மனம் கொண்டவர். இவ்வளவு பேருடைய உள்ளங்களையும் அவர் வீணில் புண்படுத்த விரும்பவில்லை. எனவே அவர், “இன்றைய விசேஷம் இவ்வளவு நன்றாக நடந்தேறியதற்காகக் குருக்களைக் கூப்பிட்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும்” என்றார். செட்டியாரின் மனைவி முதலியோர், இன்னும் மிகுந்த ஆவலுடன், “கவர்னர் தங்களுடன் பேசினாரா? தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? விசேஷம் என்ன நடந்தது?” என்று ஒரே மூச்சாகக் கேட்டனர். செட்டியார் சொன்னதாவது:- "கவர்னர் வண்டியை விட்டுக் கீழே இறங்கியதும், ஜில்லா கலெக்டர் முதலிய ஒருவர் இவருடன் சற்றுப் பேசிவிட்டு, நேரே என்னிடம் வந்தார். நான் கொஞ்சமாவது பயப்பட்டேன் என்கிறீர்களோ? இல்லவே இல்லை. என்னருகில் வந்ததும் துரை என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு ‘செட்டியார்வாள்! தங்களைப் பற்றி நிரம்பவும் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களும் தாங்கள் பந்து மித்திரர்களும் சுகந்தானே?’ என்று கேட்டார். உங்களுக்குத்தான் தெரியுமே? நான் பேச ஆரம்பித்தால் இலேசில் விடுகிற பேர்வழியா? துரையவர்களே! தங்கள் ஆட்சியிலே எவ்வித குறைவுமின்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஒரு விஷயத்தில்தான் தங்கள் அரசாங்கத்தின் மீது குறை சொல்ல வேண்டியதாயிருக்கிறது. பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் மட்டும் தாங்கள் தராதரங்களைக் கவனித்து வழங்குவதில்லை என்று நான்…" “ஐயையோ! இவ்வளவு கடுமையாய் பேசி விட்டீர்களே? துரை கோபித்துக் கொள்ளவில்லையா?” என்று காரியஸ்தர் பரிந்து வினவினார். “ஹும் கோபித்துக் கொள்ளவா? உனக்கு என்ன தெரியும்? நான் இவ்வாறு சொன்னவுடன் கவர்னர் துரை என் கையை மீண்டும் பிடித்துக் கொண்டு ‘செட்டியார்வாள், இந்த விஷயத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக நிரம்ப வந்தனம். உடனே கவனித்துத் தக்கது செய்கிறேன்’ என்று சொன்னார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் கரகோஷம் செய்தார்கள். ஆனால் நமது ராவ்பகதூர் ஐயங்காரைப் பார்க்க வேண்டுமே? அவர் முகத்தில் ஈயாடவில்லை. அவரை ஒருவரும் கவனிக்கவில்லை. ஒரு மூலையில் பேசாமல் நின்று கொண்டிருந்தார்” என்று செட்டியார் சரமாரியாகப் பொழிந்தார். அதே சமயத்தில் ராவபகதூர் கூர்மாவதாரம் ஐயங்கார் வீட்டு அந்தப்புரத்துக்கு யாராவது சென்று ஒட்டுக் கேட்டிருந்தால், ஸ்ரீமான் ஐயங்கார் தமது அருமைக் காதலியிடம், “ஆனால் சிவகுருநாதஞ் செட்டியாரைக் கவர்னர் முகமெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பாவம்! சிவனே என்று இவர் மூலையில் நின்று கொண்டிருந்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்” என்று கூறி முடித்ததும் காதில் விழுந்திருக்கும். காந்திமதியின் காதலன் “ஸ்வாமி! இந்தக் கட்டை கேட்கிறதேயென்று வித்தியாசமாய் நினைக்க வேண்டாம்; ஸ்வாமியின் மனத்தில் சாந்தி ஏற்படவில்லையென்று இந்த ஜடத்துக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இது தவறாயிருந்தாலும் இருக்கலாம். அப்படி ஏதாவது ஸ்வாமி மனத்தில் இருந்தால் இந்தக் கட்டையிடம் சொல்ல யோசிக்க வேண்டாம்” என்று பெரிய ஸ்வாமியார் சின்ன ஸ்வாமியாரிடம் சொன்னார். “ஸ்வாமி சொல்வது நிஜம்; இந்தக் கட்டைக்கு இன்னும் மனச் சாந்தி ஏற்படவில்லை. இதன் மனத்திலே ஒரு பந்தம் இருக்கிறது; ஒரு தாபம் இருக்கிறது. அது இந்தக் கட்டையுடனேதான் தீருமோ, என்னவோ தெரியாது” என்றார் சின்ன ஸ்வாமியார். தன்னுடைய எல்லைக்குள்ளே உயிரை விடுவோர் அவ்வளவு பேரையும் மோக்ஷத்துக்கு அனுப்பக்கூடிய மகிமை வாய்ந்த ஸ்ரீகாசி க்ஷேத்திரத்தில் தமிழ்நாட்டுப் பெரிய மடங்களுக்குச் சொந்தமான கிளை மடங்கள் பல இருக்கின்றன. அந்த மடங்களில் ஒன்றிலேதான், மேலே கூறியவாறு இரு ஸ்வாமியார்களுக்குள் சம்பாஷணை ஆரம்பித்தது. அவர்களில் ஒருவர் கொஞ்சம் வயதானவர்; ஐம்பது ஐம்பத்தைந்து இருக்கலாம். அவருடைய திரு மார்பை நீண்டு வளர்ந்த தாடி மறைத்திருந்தது. முகத்தில் ரோமத்தினால் மறைக்கப்படாதிருந்த பாகமெல்லாம் அம்மைத் தழும்பு நிறைந்து கோரமாய்க் காணப்பட்டது. ஆனாலும் அவர் முகம் பார்ப்பதற்கு அருவருப்பு அளிக்கவில்லை. அந்த கோரத்திலும் ஒரு திவ்ய களை இருந்தது. அவரது ஆழ்ந்த கண்களில் சாந்தி குடிகொண்டு விளங்கிற்று. இந்தப் பெரிய ஸ்வாமியார் பல வருஷ காலமாக மேற்படி கிளை மடத்தில் தலைவராயிருந்து வருபவர். தென்னாட்டிலிருந்து காசிக்கு வரும் தமிழர்களில் அநேகர் இந்த மடத்தில் வந்து தங்குவதுண்டு. அவர்களுக்கெல்லாம் வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுப்பார். இதனாலெல்லாம், ஸ்வாமி பிரணவானந்தரின் புகழ் விஸ்தாரமாய்ப் பரவியிருந்தது. இந்த மடத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஸ்ரீகுமாரானந்தர் என்னும் மற்றொரு தமிழ் ஸ்வாமி வந்து சேர்ந்தார். இவருக்குப் பிராயம் சுமார் 35க்கு மேல் 40க்குள் இருக்கலாம். இவர் ஜடை, தாடி முதலியவை வளர்க்காமல் நன்றாய்த் தலையை மொட்டையடித்து முக க்ஷவரமும் செய்து கொண்டிருந்தார். பெரிய ஸ்வாமியார் இவரை அன்புடன் வரவேற்று, வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுத்தார். குமாரானந்தரிடம் ஒரு விசேஷத்தைப் பெரிய ஸ்வாமியார் கண்டார். குடும்பஸ்தன் ஒருவனைவிட அதிகமாக அவருக்கு உலக விவகாரங்களில் சம்பந்தம் இருந்தது. கடிதப் போக்கு வரவு அவருக்கு அசாத்தியம். முக்கியமாய், தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுடன் அவருக்கு அதிக உறவு இருந்தது. ஓயாமல், ஏதாவது கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். பத்திரிகைக்காரர்களிடமிருந்து அவருக்கு ஐந்து ரூபாய், மூன்று ரூபாய், ஒன்றேகால் ரூபாய் இப்படிச் சின்னத் தொகைகளாக மணியார்டர்கள் வரும். அத்தொகைகளை அவர் வாங்கிக் கொண்டு தாம் ஒரு விலாசத்துக்கு 15 அல்லது 20 ரூபாய் மணியார்டர் செய்வார். ஒரு மாதத்தில் சரியானபடி மணியார்டர்கள் வராவிட்டால், கோபம் வந்துவிடும். தமிழ்ப் பத்திரிகை நடத்துவோர்களைக் கண்டபடி திட்டுவார். இவற்றையெல்லாம் கவனித்துத்தான் பெரிய ஸ்வாமியார், தலைப்பில் கண்டவாறு சம்பாஷணை துவக்கினார். அவர் மேலும் கூறியதாவது: “எத்தனையோ பேர் தங்களுடைய மனக் கவலைகளை இந்த ஜடத்திடம் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கட்டை அவர்களுக்குத் தக்க உபதேசம் செய்து, மனச் சாந்தி உண்டாக்கியிருக்கிறது. ஸ்வாமியும் மனத்திலிருப்பதைச் சொன்னால், அதை நிவர்த்திக்க முடியுமா என்று பார்க்கலாம்.” குமரானந்தர் மோன வெளியில் கலந்திருந்தார். எனவே பிரணவானந்தர் மறுபடியும் கூறியதாவது: “ஒரு வேளை ஸ்வாமிக்குப் பூர்வாசிரமத்திலே குழந்தைகள் இருந்து எங்கேயாவது விட்டு வந்திருக்கிறதோ? அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்குத் தக்க ஏற்பாடு செய்து விடலாமே!” குமாரானந்தர் இப்போது வாய் திறந்தார். அவர் சொன்னதாவது: “ஸ்வாமி ஊகித்தது பாதி வாஸ்தவம். ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அது இந்த ஜடத்தின் குழந்தையல்ல. வேறொருவரின் குழந்தை. இந்த ஜடத்தின் கழுத்தில் அதை கட்டியிருக்கிறது. அதனால் தான் துளிக்கூட இந்தக் கட்டைக்கு மனச் சாந்தி இல்லாமல் போகிறது. தலைவிதி! தலைவிதி!” என்று படீர் படீரென்று மொட்டைத் தலையில் போட்டுக் கொண்டார். பெரிய ஸ்வாமியார் அவரைச் சாந்தப்படுத்தி ஆதியோடந்தமாய் அவருடைய வரலாற்றை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே குமாரானந்தர் அவ்வாறே கூறத் தொடங்கினார். அவர் கூறியபடியே ஸ்வாமியார்களின் பரிபாஷையை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே எழுதுகிறேன்: பூர்வாசிரமத்தில் எனக்கு விருத்தாசலம் என்று பெயர். என் பெற்றோர்களுக்கு நான் ஒரே பிள்ளை. என் தகப்பனார் சர்க்கார் உத்தியோகஸ்தர். அவர் இருந்த வரையில் பணக் கஷ்டம் என்றால் இன்னதென்று தெரியாதவனாயிருந்தேன். திடீரென்று ஒருநாள் அவர் இறந்துபோனபோது நானும் என் தாயாரும் தரித்திரத்தின் கொடுமையை உணரத் தொடங்கினோம். அப்போது நான் பட்டணத்தில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தபடியால், என் தாயார், என் அம்மான் ஊரில் அவர் வீட்டிலேயே வசித்து வந்தாள். நல்ல வேளையாய் என் தகப்பனார் இன்ஷியூர் செய்திருந்தார். இன்ஷியூரன்ஸ் கம்பெனியார் கொடுத்த பணந்தான் என் படிப்புச் செலவுக்கு உதவிற்று. மற்றபடி எங்களுக்கு வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் ஒன்றுமேயில்லை. விடுமுறை நாட்களில் என் அம்மான் ஊருக்கு நான் போவதுண்டு. அந்தப் பட்டிக்காட்டில் யாருடனும் அதிகமாய்ப் பேசுவதற்கு எனக்குப் பிடிக்காது. சாயங்கால வேளைகளில் குளத்தங்கரை அல்லது ஆற்றங்கரையில் தனிமையான இடத்தைத் தேடிச் சென்று ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் வருங்காலத்தைப் பற்றி எனக்குச் சிந்தனையே கிடையாது. பி.ஏ. பாஸ் செய்து விட்டு ஏதேனும் உத்தியோகத்துக்குப் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தேன். ஒருநாள் வழக்கம் போல் சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு நான் குளக்கரைக்குச் சென்றேன். அங்கே புதிதாய்த் தளிர்விட்டு மாலைச் சூரிய கிரணங்களால் தகதகவென்று பொன்மயமாய்த் திகழ்ந்து கொண்டிருந்த அரச மரத்தடியில் உட்கார்ந்து, நான் சாவகாசமாய்ப் புத்தகம் படிப்பது வழக்கம். அன்றும் அந்த அரசமரத்தடிக்குச் சென்றேன். அங்கே உட்கார்ந்து படிக்கத் தொடங்கியதும் ‘களுக்’ என்ற சிரிப்பின் ஒலி கேட்டு, குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். குளத்தில் ஒரு விநோதமான காட்சி புலப்பட்டது. இளம் பெண் ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தேகமெல்லாம் நீரில் மூழ்கி இருந்தது. முகம்மட்டும் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்து பார்த்த வண்ணம் வெளியில் தெரிந்தது. பெண்களின் முகங்களைத் தாமரை மலருக்கு ஒப்பிடுகிறார்களே, அதன் பொருத்தம் அப்போதுதான் எனக்கு நன்றாய்த் தெரியவந்தது. அந்தப் பெண் ஒருவித விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து ஜலத்தை ஆகாயத்தை நோக்கிக் கொப்புளிப்பாள். அது திரும்பி வருவதற்குள் சடக்கென்று தண்ணீரில் முழுகிவிடுவாள். சில சமயம் கொப்புளித்த ஜலம் அவள் முழுகுவதற்குள் அவள் முகத்திலே விழுந்துவிடும். அப்படி விழும் போதெல்லாம் அவள் ‘களுக்’ என்று சிரிப்பாள். இந்த அசட்டு விளையாட்டு அப்போது என் மனத்தை ஏன் அவ்வளவு தூரம் கவர்ந்தது என்பதைச் சொல்ல முடியாது. குளத்தில் இறங்கி அம்மாதிரி நானும் விளையாட வேண்டுமென்று ஆசையுண்டாயிற்று. ஆனால் இதற்குள் அவ்வளவு தூரம் நான் புத்தி இழந்துவிடவில்லை. அந்தப் பெண் விளையாடும் காட்சியைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை தற்செயலாய் அவள் கரைப் பக்கம் திரும்பியபோது என்னைப் பார்த்து விட்டாள். நான் அவள் விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருந்ததையும் அவள் அறிந்திருக்க வேண்டும். வெட்கம் தாங்க முடியாமல் தண்ணீரில் முழுகியவள் வெகுநேரம் எழுந்திருக்கவேயில்லை. “இதென்ன? இந்தப் பெண்ணுக்கு மூச்சுப் போய்விடப் போகிறதே?” என்றுகூட எனக்குக் கவலையாய்ப் போயிற்று. அவள் வெளியே தலையை எடுத்ததும், இனிமேல் அங்கு நிற்பது உசிதமாயிராதென்று நினைத்து விரைந்து சென்றேன். இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணை வீதியிலும் குளக்கரையிலும் இரண்டு மூன்று தடவை சந்தித்தேன். என்னைப் பார்த்தபோதெல்லாம் அவள் வெட்கத்தினால் தலை குனிந்து கொள்வாள். அவள் முகத்தில் புன்சிரிப்பு உண்டாகும். உடனே யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயத்தினால் நாலு புறமும் மிரண்டு நோக்குவாள். ஐயோ! இந்தப் பெண் ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறாள்! நல்லவேளை நாம் சீக்கிரமாக இந்த ஊரைவிட்டுப் போகிறோம்" என்று எண்ணிக் கொண்டேன். காலேஜ் திறக்கும் நாள் சமீபித்துவிட்டபடியால் சீக்கிரத்தில் கிளம்பிச் சென்னைக்குச் சென்றேன். ஆனால் என்ன பிரயோசனம்? அவளுடைய முகமும் என்னைப் பின் தொடர்ந்து வந்தது. ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த முகம் - தண்ணீரில் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அவ்வழகிய முகம் - என் மனக்கண்ணில் தோன்றும். மாலை வேளையில் கடற்கரைக்குச் சென்று நீலக்கடலைப் பார்த்தேனாயின், திடீரென்று அங்கே அலைகளுக்கு மத்தியில் அந்த முகம் மிதப்பது போல் பிரமையுண்டாகும். வானத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கும்போது ஆகாயத்தை நோக்கினால் அங்கேயும் அந்த முகந்தான் தோன்றும். பளிச்சென்று நிலவு வீசிக்கொண்டிருக்கும் இரவில் சந்திரனைத் தற்செயலாக நோக்கினால், நீலவானமே குளம் என்றும், சந்திரனே அவளுடைய வதனம் என்றும் பிரமை உண்டாகும். வீதியில் என்னைக் கண்டதும் வெட்கத்தினால் குனிந்து புன்சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருக்கும் அவள் முகமும் சில சமயம் இடையிடையே என் மனக்கண்முன் தோன்றும். எப்படியோ ஒரு வருஷம் சென்றது. அவ்வருஷ முடிவில் நான் பி.ஏ. பரீட்சை எழுதினேன். பின்னர் கிராமத்திற்குச் சென்றேன். கிராமத்தைச் சேர்ந்த அன்றைய சாயங்காலம் வழக்கம் போல் கையில் புத்தகத்துடன் குளத்தங்கரைக்குப் போனேன். ஆனால் என் மனம் என்னவோ, புத்தகத்தில் இல்லை. அந்தப் பெண்ணைச் சந்திப்போமா என்னும் எண்ணமே மேலோங்கியிருந்தது. அவ்வெண்ணத்திலே மகிழ்ச்சியும் வேதனையும் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தன. நான் குளத்தங்கரை சென்றபோது அவள் ஸ்நானம் செய்துவிட்டு இடுப்பில் குடத்துடன் கரையேறி வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தாள். ஆனால் இம்முறை அவள் தலைகுனியவுமில்லை; புன்சிரிப்புக் கொள்ளவுமில்லை. இரண்டாவது தடவை என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. விர்ரென்று போய்விட்டாள். ஆனால் அவளுடைய அந்த ஒரு பார்வையே என் இருதயத்தில் ஊடுருவிப் பாய்ந்து விட்டது. அதன் பொருள் முழுதும் நான் அப்போது அறிந்து கொள்ளவில்லையானாலும், அதில் நிந்தையும் கோபமும் நிறைந்திருந்தது மட்டும் என் உணர்வுக்குத் தெரிந்தது. சொல்ல முடியாத மனவேதனை கொண்டேன். அப்போதுதான் ‘கலியாணம்’ என்னும் யோசனை, முதல் முதலில் என் உள்ளத்தில் உதித்தது. ஆனால் என்ன பைத்தியக்காரத்தனம்! எனக்கு வீடு இல்லை, வாசலில்லை. சொத்து நிலம் ஒன்றும் கிடையாது. பரீட்சை பாஸ் ஆனால், ஏதாவது உத்தியோகம் தேடிச் சம்பாதித்துக் காலட்சேபம் நடத்தலாம். அதற்குள்ளாக இப்போது கலியாணம் எப்படிச் செய்து கொள்வது? இவ்வாறு குழம்பிய உள்ளத்துடன் வீடு திரும்பினேன். அந்தப் பெண்ணைப் பற்றி - என்னுடைய மனோநிலையைக் காட்டிக் கொள்ளாமல் - மெதுவாக விசாரித்தேன். கிராமாந்தரத்தில் இத்தகைய விஷயங்கள் சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாமல்லவா? அவள் பெயர் காந்திமதி என்றும், ஏழைப் பெண் என்றும், அவளுடைய தாயார் வாயு ரோகத்தினால் கஷ்டப்படுகிறவள் என்றும், எப்படியாவது தான் கண் மூடுவதற்குள் தன் பெண்ணுக்குக் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவள் பெரிதும் கவலைப்படுகிறாள் என்றும் தெரிந்து கொண்டேன். இவ்வளவு அழகும் புத்திசாலித்தனமும் வாய்ந்த பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கொள்ள நான் முந்தி, நீ முந்தி என்று போட்டியிட்டுக் கொண்டு வாலிபர்கள் முன் வரவில்லையென்னும் விஷயம் எனக்கு மிகவும் வியப்பளித்தது. இது நம்முடைய அதிர்ஷ்டத்தினால்தான் என்று எண்ணிக் கொண்டேன். ஆனாலும் இப்போது கலியாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்க எனக்கு மிகவும் வெட்கமாயிருந்தது. கலியாணம் செய்து கொண்டால் பெண்ணை உடனே அழைத்துப் போக வேண்டுமல்லவா? எங்கே அழைத்துப் போவது? இவ்வருஷம் பரீட்சையில் தேறாவிட்டால், இன்னும் ஒரு வருஷம் படிக்க வேண்டிவரும். அப்போது அவளை எங்கே விடுவது? என் தாயாரையே வைத்துக் காப்பாற்ற முடியாமல், மாமன் வீட்டில் விட்டு வைத்திருக்கும் நான், கலியாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றால் கேட்டவர்கள் எல்லாரும் சிரிக்க மாட்டார்களா? என்னவெல்லாமோ யோசித்து, கடைசியில் உடனே பட்டணத்துக்குத் திரும்புவதென்றும், பரீட்சை தேறியிருந்தாலும் தேறியிராவிட்டாலும் ஏதாவது உத்தியோகத்துக்கு முயற்சி செய்வதென்றும், உத்தியோகம் கிடைத்ததும் ஊருக்குத் திரும்பி வந்து காந்திமதியைக் கலியாணம் செய்து கொள்வதென்றும் முடிவுக்கு வந்தேன். அவ்வாறே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன். என்னுடைய தகப்பனாருடைய சிநேகிதர் ஒருவர் அப்போது சைதாப்பேட்டையில் டிபுடி கலெக்டராயிருந்தார். தம்முடைய ஆபீஸில் ஓர் ஆக்டிங் குமாஸ்தா வேலை காலியிருப்பதாகவும், இப்போதைக்கு அந்த வேலையில் என்னை நியமிப்பதாகவும், பிறகு சென்னை ஸெக்ரடேரியட் ஆபீஸில் உத்தியோகத்துக்குச் சிபாரிசு செய்வதாகவும் சொன்னார். சாதாரணமாய் உத்தியோகம் கிடைப்பதனால் ஏற்படக்கூடிய சந்தோஷத்தைக் காட்டிலும் எனக்குப் பத்து மடங்கு அதிக சந்தோஷம் உண்டாயிற்று. இதற்குள் பரீட்சையில் நான் முதல் வகுப்பில் தேறிய செய்தியும் கிடைத்தது. மறுபடியும் ஊருக்குத் திரும்பிப் போனேன். தாயாரிடம் மேற்கூரிய விவரங்களைச் சொல்லிவிட்டுக் காந்திமதியைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அவள் ’ஐயோ பைத்தியக்காரா! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? அந்தப் பெண்ணின் தாயார் கூட ‘உன் பிள்ளைக்குக் காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்கிறாயா?’ என்று கேட்டாளே? நான் தானே ‘இவனெல்லாம் இங்கிலீஷ் படித்துவிட்டானல்லவா? பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டான்’ என்று சொல்லிவிட்டேன். இப்போது காரியம் மிஞ்சி விட்டதே. யாரோ பெரிய உத்தியோகஸ்தன் வந்து பெண்ணைக் கொண்டுபோய் விட்டானே! நகைகளாகச் செய்து இழைத்திருக்கிறான். காந்திமதியின் அதிர்ஷ்டத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறார்களே!" என்றாள். இதைக் கேட்டதும் என்னுடைய ஆகாசக் கோட்டை அப்படியே பொலபொலவென்று உதிர்ந்து விழுந்துவிட்டது. வாழ்க்கையிலேயே ருசியின்றிப் போயிற்று. இந்தச் சோக சாகரத்திலிருந்து தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டென்று நினைத்தேன். அது, ஏதாவது தீவிரமான வேலையில் மனத்தை ஈடுபடுத்துதல்தான். எனவே, சீக்கிரமாகவே சைதாப்பேட்டைக்குத் திரும்பிச் சென்று உத்தியோகத்தை ஒப்புக் கொண்டேன். இவ்வாறு இரண்டு வருஷங்கள் சென்றன. ஸெக்ரடேரியட் ஆபீஸில் எனக்கு உத்தியோகமும் கிடைத்தது. இதற்குள் ஒருவாறு காந்திமதியை மறந்திருந்தேன். வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட யோசிக்கலானேன். ஸெக்ரடேரியட்டில் என்னுடைய ஸெக்ஷனுக்கு ஒரு தலைமை உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் பெயர் காமாட்சிநாதன். அவருக்குச் சுமார் 40 வயதிருக்கலாம். ஆரம்ப முதலே எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போயிற்று. பரம யோக்கியர். வேதாந்தத்தில் அதிகப் பற்றுள்ளவர். அவரைப் பார்த்தவுடன், “சம்சாரத்தில் தாமரை இலையில் தண்ணீர் போல் வாழவேண்டும்” என்பார்களே, அதற்கு உதாரண புருஷர் இவர்தான் என்று தோன்றும். எனக்கும் இளம் பிராயம் முதலே வேதாந்த விஷயங்களில் பற்று உண்டு; அடிக்கடி நாங்கள் பாரமார்த்திக தத்துவங்களைப் பற்றிப் பேசுவோம். ஒரு சமயம் அவர், “என் வீட்டில் அருமையான வேதாந்த புத்தகங்கள் பல வைத்திருக்கிறேன். நீ ஒரு நாள் வந்தால் பார்க்கலாம்” என்றார். அவ்வாறே அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன். நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய மனைவி எங்களுக்குச் சிற்றுண்டி கொண்டு வந்தாள். அவளும் நானும் ஏக காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். என்னுடைய நெஞ்சு ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டது. உடம்பிலிருந்த ரோமங்களெல்லாம் குத்திட நின்றன. தேகமெல்லாம் வியர்வை துளித்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அன்றியும் கொண்டு வந்த தட்டுக்களை வைத்துவிட்டு விரைந்து உள்ளே சென்றாள். டம்ளர்களில் ஜலம் எடுத்துக்கொண்டு அவள் திரும்பி வருவதற்கு ஐந்து நிமிஷம் பிடித்தது. அதற்குள் என் மனத்தை ஒருவாறு சாந்தப்படுத்திக் கொண்டேன். மறுபடி அவள் வந்ததும், “இவள்தான் என் மனைவி” என்று காமாட்சிநாதன் தெரிவித்து என்னையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவள் விஷயத்தில் இவருக்கு ரொம்பவும் பெருமை என்பது நன்றாக வெளியாயிற்று. எனக்கு அவர் மனைவியை முன்னமேயே தெரியும் என்று நான் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? உண்மையிலேயே நாங்கள் பேசிப் பழகியிருந்தோமானால் சொல்லலாம். “குளக்கரையிலும், வீதியிலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்திருக்கிறோம்; கண்களினால் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று சொல்லமுடியுமா? ஆகையாலேயே அதைப்பற்றி நான் பிரஸ்தாபிக்கவில்லை. ஒருவேளை அப்போதே அதைச் சொல்லியிருந்தால், பின்னால் அவ்வளவு துன்பங்களுக்காளாகியிருக்க வேண்டாமோ, என்னவோ? ’உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?’ என்ற கவியின் வாக்கு என் விஷயத்தில் உண்மையாயிற்று. அதன் பிறகு அவருடைய வீட்டுக்கு நான் அடிக்கடி போகத் தொடங்கினேன். என் மனத்திலோ ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. “அவர் வீட்டுக்குப் போகாதே; போவதனால் கஷ்டந்தான் ஏற்படும்” என்று ஒரு புத்தி சொல்லிற்று. ஆனால் அதை மீறிக்கொண்டு, “அங்கே போகவேண்டும்; போக வேண்டும்” என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. “போகவேண்டாம்” என்ற கட்சி நாளடைவில் மங்கி மறைந்தது. அடிக்கடி போகத் தொடங்கினேன். அதனால் காமாட்சிநாதனும் அதிக சந்தோஷமடைந்ததாகத் தெரிந்தது. முதன்முதலில் நானும் அவர் மனைவியும் சந்தித்தபோது, எங்களுக்கு ஏற்பட்ட மனக்கலக்கத்தை அவர் கவனித்தாரா என்றாவது, பின்னால் என்னை அவர் வீட்டுக்கு அடிக்கடி கவர்ந்திழுத்த காரணம் இன்னதென்று அவர் ஊகித்தாரா என்றாவது இன்றுவரை நான் அறியேன். இதெல்லாம் தெரிந்தவராக அவர் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனபோது, இவர் வெளியில் போயிருந்தார். “உட்காருங்கள், வந்துவிடுவார்” என்று காந்திமதி சொன்னாள். சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தோம். ஏதாவது பேசாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் தோன்றிற்று. “என்னைப் போல் துர்ப்பாக்கியசாலி இந்த உலகத்திலே கிடையாது” என்றேன். நான் யோசித்துப் பேசினேன் என்று சொல்ல முடியாது. அந்த வார்த்தைகள் தாமே வெளிவந்தன என்றே சொல்லலாம். “நீங்கள் இங்கே வரவேண்டாமென்று சொல்வதற்கிருந்தேன். பாழும் மனம் கேட்கமாட்டேனென்கிறது” என்றாள் காந்திமதி. அப்போது எனக்கு மயிர் சிலிர்த்தது. உடம்பு முழுதும் படபடவென்று அடித்துக் கொண்டது. இவ்வாறு நாங்கள் தனிமையில் பேசத் தொடங்கினோம். குளக்கரையில் என்னைச் சந்தித்ததிலிருந்து அவளுக்கு என்னுடைய ஞாபகமாகவே இருந்ததாகவும், சீக்கிரம் வந்து தன்னைக் கலியாணம் செய்துகொள்வேனென்று ஆசை வைத்திருந்ததாகவும் ஒரு வருஷம் வரையில் பேச்சுமூச்சு இல்லாமலிருக்கவே மனம் வெறுத்துப் போனதாகவும், அந்த நிலைமையில் காமாட்சிநாதன் வந்து கலியாணம் பண்ணிக் கொள்வதாகச் சொல்லவே அவருடைய நல்ல குணத்தைக் கண்டு, வயதாகியிருந்தாலும் பரவாயில்லையென்று சம்மதித்ததாகவும் கூறினாள். ஒரு மாதம் அவள் பொறுத்திருந்தால் நான் வந்து கலியாணம் செய்து கொண்டிருப்பேனே என்று தெரிவித்தேன். “ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தால் ஒரு மாதமல்ல, ஒரு யுகம் வேண்டுமானாலும் காத்திருந்திருப்பேனே” என்று அவள் கூறினாள். “தலைவிதி இப்படிப் பண்ணிவிட்டது” என்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவுக்கு வந்தோம். அதன் பிறகு, எப்போது காந்திமதியிடம் பேசலாம் என்றே சிந்தனை செய்யலானேன். காமாட்சிநாதன் வீட்டில் இல்லாத சமயங்களை ஆராய்ந்து பார்த்துப் போகத் தொடங்கினேன். இது பிசகு என்று நன்கு தெரிந்திருந்தது. ஆயினும் என்ன பயன்? ஒருவனுக்குச் செங்குத்தான மலைப் பாறையில் கால் நழுவிவிடுகிறது. கீழே விழத் தொடங்குகிறான். அப்படியே போனால் இன்னும் சில நிமிஷத்தில் கீழே அதலபாதாளத்தைச் சேரவேண்டியதுதான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவன் தன்னைத் தடுத்து நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. மலைச்சரிவில் விழுந்து கொண்டேயிருக்கிறான் - என்னுடைய நிலையும் அதுபோல் தான் இருந்தது. கடைசியாக, இத்தகைய வாழ்க்கையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்ற தீர்மானத்துக்கு வந்தோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவராகவே படைக்கப் பட்டவர்களென்றும், கடவுள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்ட சதிபதிகளேயென்றும் முடிவு செய்தோம். ஆனால் இந்த முட்டாள் உலகம் - கொடிய ஜன சமூகம் - அதை ஒத்துக் கொள்ளாது. ஆகவே, இந்தச் சமூகத்தை விட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போய்ச் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதுதான் சரி; பணத்தைப் பற்றியாவது, மற்ற உலக சௌகரியங்களைப் பற்றியாவது நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை. எங்களுடைய காதல் ஒன்றே எங்களுக்கு அரிய செல்வம். மற்றவையெல்லாம் யாருக்கு வேண்டும்? காமாட்சிநாதன் சமீபத்தில் அவருடைய கிராமத்துக்கு ஒரு காரியமாகப் போக உத்தேசித்திருந்தார். அச்சமயம் காந்திமதி அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு என்னுடன் கிளம்பி வந்துவிடுவதென்றும், நாங்கள் கல்கத்தா சென்று அங்கே கப்பலேறிப் பர்மாவுக்குப் போய்விடுவதென்றும் தீர்மானம் செய்து கொண்டோம். [இடையில் குறுக்கிடாமல் பெரிய ஸ்வாமியார் கதையைக் கேட்டுக் கொண்டு வந்தார். அவருடைய கண்கள் பாதி மூடியிருந்தன. ஆனால் அவர் தூங்கவுமில்லை; யோகத்தில் ஆழ்ந்து விடவுமில்லை சின்ன ஸ்வாமி நிறுத்தும் போதெல்லாம் அவர் கண்களைக் கொஞ்சம் அதிகம் திறந்து, “அப்புறம்?” என்பார். குமாரானந்தர் மேலே சொல்கிறார்:] காமாட்சிநாதன் ஊருக்குப் போகவேண்டிய நாள் நெருங்கிற்று. ஒரு நாள் அவர் அதைப்பற்றிப் பேசுகையில், தமது மனைவியையும் அழைத்துக் கொண்டு போக உத்தேசித்திருப்பதாகச் சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் அவ்வாறு செய்தால், நாங்கள் பேசித் தீர்மானித்திருந்தபடி செய்ய முடியாது. என்னுடைய மனக்கலக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “போனால் எப்போது திரும்பி வருவீர்களோ?” என்று கேட்டேன். “காரியம் ஆனதும் திரும்ப வேண்டியதுதான். மூன்று நாளைக்கு மேல் ஆகாது” என்றார். அதற்குள் காந்திமதி, “இரண்டு மூன்று நாளைக்காக நான் ஏன் வரவேண்டும்? வீண் அலைச்சல் தானே? இங்கேயே இருந்து விடுகிறேனே?” என்றாள். “எனக்கு ஆட்சேபணையில்லை. உனக்குத் தனியாயிருக்கப் பயமில்லையென்றால் பேஷாக இரு” என்றார். இப்படி லவலேசமும் சந்தேகமில்லாத சாதுவை நாம் ஏமாற்றப் போகிறோமே என்று ஒரு நிமிஷம் எனக்குப் பச்சாத்தாபம் உண்டாயிற்று. ஆனால் அடுத்த நிமிஷத்தில், “நான் என்ன இவரை ஏமாற்றுவது? இவரல்லவா என்னை மோசம் செய்தவர்? இவரை யார் வந்து காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்ளச் சொன்னது? தெய்வீகமான காதலினால் இருதய ஒற்றுமை பெற்ற எங்களுக்கு நடுவே இவரல்லவா சாபக்கேடாக வந்து சேர்ந்தார்?” என்று எண்ணி நெஞ்சை உறுதி செய்து கொண்டேன். குறிப்பிட்ட தினம் இரவு காமாட்சிநாதன் ஊருக்குப் போனார். மறுநாள் காலையில் நான் காந்திமதியின் வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்தேன். எங்களுடைய பயணத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்தோம். அதன்படி அன்று சாயங்காலம் காந்திமதி வீட்டிலிருந்து புறப்பட்டு நான் வசித்த அறைக்கு வந்துவிட வேண்டியது. அங்கிருந்து சேர்ந்தாற்போல் நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் கல்கத்தாவுக்கு ரயில் ஏறவேண்டியது. காமாட்சிநாதன் செய்துபோட்ட நகைகள் ஒன்றையும் அவள் எடுத்து வரக்கூடாது. அவற்றை இரும்புப் பெட்டியில் வைத்து, அத்துடன் ஒரு கடிதம் எழுதி வைக்க வேண்டியது. இரும்புப் பெட்டிச் சாவி ஒன்று காமாட்சிநாதனிடம் இருப்பதால் அவர் வந்ததும் திறந்து பார்த்துக் கொள்வார். வீட்டில் ஒரு சமையற்காரியும், ஒரு வேலைக்காரப் பையனும் இருந்தார்கள். அவர்களிடம் காந்திமதி புரசவாக்கத்தில் உள்ள ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போவதாகவும், திரும்புவதற்கு இரண்டு மூன்று நாள் ஆகலாம் என்றும் சொல்லிவிட்டு வரவேண்டியது. இந்த ஏற்பாடுகள் பேசி முடிந்ததும், காந்திமதி ஒரு கடிதம் எழுதிக் காட்டினாள். அதில், அவள் தன்னிடம் காட்டிய விசுவாசத்திற்கும் தனக்குச் செய்த நன்மைகளுக்கும் மிகவும் நன்றியுடையவளாயிருப்பதாகவும், ஆனால் அதற்கெல்லாம் தான் பாத்திரமானவள் அல்லவென்றும், கலியாணத்திற்கு முன்பே தன்னுடைய இருதயத்தை ஒருவருக்குப் பறி கொடுத்துவிட்டதாகவும், விதிவசத்தால் அவரை மறுபடி சந்தித்தாகவும், அவரைப் பிரிந்து தன்னால் உயிர் வாழ முடியாதென்று அறிந்து அவருடன் போவதாகவும், தன்னை மன்னித்து மறந்து விட வேண்டுமென்றும் எழுதியிருந்தாள். அன்று சாயங்காலம் நான் பிரயாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு, காந்திமதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். நேரம் ஆக ஆக என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாயிற்று. ‘ஒருவேளை வராமல் இருந்துவிடுவாளோ?’ என்று எண்ணிய போது இருதயத்தில் சம்மட்டியால் அடித்தது போன்ற வேதனை ஏற்பட்டது - ஸ்வாமி! தங்களிடம் உள்ளது உள்ளபடி சொல்வதாகச் சங்கல்பம் செய்துகொண்டேனல்லவா? அந்த இருதய வேதனையில் ஒரு சந்தோஷம் இருந்ததென்பதையும் சொல்லிவிடுகிறேன். உண்மையென்னவென்றால், நான் கோழையாகி விட்டேன். அபாயங்கள் நிறைந்த கரைகாணாத சமுத்திரத்தில் பிரயாணம் செய்வதற்காக ஒருவன் தயாராகிறான். ஆனால் பிரயாணம் புறப்பட வேண்டிய சமயத்தில் ஏதாவது ஒரு தடை வந்து குறுக்கிடாதா, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு கிளம்பாமல் இருந்து விடலாமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. என்னுடைய மனோநிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் அதை நானே அப்போது தெளிவாக உணரவில்லை. வாசலில் வண்டி வந்து நின்று, காந்திமதி மாடிப்படியேறி என்னுடைய அறைக்குள் வந்தபோது என்னுடைய இருதயநிலை எப்படியிருந்ததென்பதை என்னாலேயே விவரிக்க முடியாது. அதில் அதிகமாயிருந்தது இன்பமா துன்பமா என்று எனக்கே தெரியவில்லை. அவள் வந்ததும், இன்னின்ன சொல்லி, இவ்விதமாக வரவேற்க வேண்டுமென்றெல்லாம் மனத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் அதெல்லாம் இப்போது அடியோடு மறந்து போயிற்று. ஒரு வார்த்தை கூட வரவில்லை. அவளுடைய கரங்களைப் பிடித்து உட்கார வைத்தேன். அப்போது அவளுடைய தேகமெல்லாம் நடுங்குவதை அறிந்தேன். என் மனத்தில் மற்ற உணர்ச்சியெல்லாம் போய்ப் பரிதாப உணர்ச்சி பொங்கி எழுந்தது. “இதோ பார், காந்தி! உன் உடம்பு நடுங்குகிறது. உன் மனத்தில் கொஞ்சமாவது தயக்கம் இருந்தால் நாம் இந்தக் காரியம் செய்ய வேண்டாம்” என்றேன். “தயக்கமிருந்தால் வருவேனா? நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தினீர்களா? என் மனப்பூர்வமான விருப்பத்தினாலேயே வருகிறேன்” என்றாள் காந்தி. “அது வாஸ்தவந்தான். ஆனாலும் என்னுடைய சுயநலத்துக்காக உன்னைத் துன்பத்துக்குள்ளாக்குகிறேனோ என்று தான் என் மனம் தவிக்கிறது. உனக்கு, வீடு, வாசல், செல்வம், சௌக்கியம் எல்லாம் அவர் அளித்திருக்கிறார். நானோ இவையொன்றும் உனக்குத் தர முடியாது…” “அதனாலேயேதான் நான் அவரை விட்டுச் செல்வது அவசியம். அவர் எனக்கு எல்லாம் அளித்திருக்கிறர்; நானோ அவருக்கு என் வெறும் இருதயத்தைக் கூட அளிக்க முடியவில்லை. அதைத் தாங்கள் ஏற்கனவே கவர்ந்து விட்டீர்கள். நான் என்ன செய்யலாம்?” “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பாக்கியம் எனக்குக் கிடைக்குமென்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய காதலுக்கும் நீ என்னிடம் வைக்கும் நம்பிக்கைக்கும் நான் தகுதியுள்ளவனா என்று தான் சந்தேகமாயிருக்கிறது.” “இந்த யோசனையெல்லாம் அன்று அரசமரத்தடியிலேயே உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்” என்றாள் காந்தி. “சரி, சரி; நம்முடைய பேச்சிலே ரயிலை மறந்து விடப் போகிறோம். இனிமேல் தான் தினம் 24 மணி நேரமும் பேசப் போகிறோமே. இப்போது கிளம்பலாம்” என்றேன். “கிளம்புவதற்கு முன் இன்னும் ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்லி விட வேண்டும். அது அவருக்குக் கூடத் தெரியாது” என்றாள் காந்தி. அப்போது அவள் முகத்திலே சிறிது வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. இதழ்களில் சிறுநகை உண்டாயிற்று. அவள் சொல்லப் போவது என்னவாயிருக்கலாமென்று சற்று யோசித்தேன். ஒன்றும் தெரியாமல் “என்ன சொன்னாலும் கேட்கத் தயாராயிருக்கிறேன்” என்றேன். “மூன்று மாதமாய் எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. மாதஸ்நானம் செய்யவில்லை. நாம் போகுமிடத்தில் இது ஒரு சிரமம் இருக்கிறது” என்றாள். இதன் பொருள் எனக்கு நன்றாக விளங்க ஒரு நிமிஷம் பிடித்தது. அது விளங்கியதும் ஒரு பெரிய ஆறுதல் உண்டாயிற்று. அபாயம் நிறைந்த கடற்பிரயாணம் தொடங்குவதற்கு அசட்டுத் தைரியத்துடன் தீர்மானித்துவிட்டு அதற்கு ஏதாவது இடையூறு நேராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, உண்மையிலேயே ஓர் இடையூறு இப்போது தென்பட்டது. சற்று நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். “என்ன இவ்வளவு ஆழ்ந்த யோசனை?” என்று காந்திமதி கேட்டாள். “காந்தி! இந்த ஜன்மத்தில் நம்முடைய காதல் நிறைவேறுவது பகவானுக்கு இஷ்டமில்லை. கடவுள் சித்தமிருந்தால் நீ இன்னும் ஒரு மாதம் கலியாணம் ஆகாமல் இருந்திருக்கமாட்டாயா?” என்றேன். “இதுதானா உங்கள் காதல்? இவ்வளவு தானா உங்கள் தைரியம்?” என்றாள் காந்தி. “ஆமாம்; உன் வாழ்க்கையைப் பாழாக்குவதற்கு எனக்குத் தைரியமில்லைதான். அவர் உனக்களிக்கும் வாழ்க்கைச் சௌகரியங்களுக்குப் பதில் நீ அவருக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லையென்று கூறினாய். அது தவறு. அவற்றுக்கெல்லாம் மேலானதை - சந்தான பாக்கியத்தை - அவருக்கு நீ அளிக்க முடியும். இந்த ஜன்மத்தில் நீ அவரைச் சேர்ந்தவள். அடுத்த ஜன்மத்திலாவது நம்மை ஒன்று சேர்க்கும்படி பகவானைப் பிரார்த்திப்போம்” என்றேன். “அவர் தான் வேதாந்தி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நீங்களும் ஒரு குட்டி வேதாந்தி என்பது தெரியாமல் போயிற்று” என்றாள் காந்தி. அடுத்த நிமிஷம் வேறு வார்த்தை பேசாமல் எழுந்து சென்றாள். கீழே காத்திருந்த ஜட்கா வண்டி கடகடவென்று சென்றது. அந்த வண்டியின் சக்கரங்கள் என் இதயத்தின் மேல் ஓடுவது போல் இருந்தது. காந்திமதி இறங்குவதற்கிருந்த பெரிய துன்பக் குழியிலிருந்து அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்ததாக நினைத்தேன். ஆனால் என்னுடைய வாழ்க்கை என்னவோ பாழாயிற்று. இனிமேல் அது வெறும் பாலைவனந்தான். அன்றிரவு ஒரு கண நேரமும் நான் தூங்கவில்லை. இன்னும் சில நாள் அப்படியே இருந்தால் சித்தம் பேதலித்து விடும் என்று தோன்றிற்று. எனவே, மறுநாள் அதிகாலையில் திருக்கோவிலூரை நோக்கிப் பிரயாணமானேன். திருக்கோவிலூர் மடத்தைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அப்போது அம்மடத்தின் தலைவராயிருந்த ஸ்வாமியை எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் சிறந்த கல்விப் பயிற்சியும், ஒழுக்கமும் விசால புத்தியும், கருணையும் உள்ளவர். அவரிடம் சென்று நான் சந்நியாசியாக விரும்புவதாகவும், அவருடைய சீடனாக என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தேன். ஸ்வாமிகளும் அருள் புரிந்து என்னை ஏற்றுக் கொண்டார். ஐந்து வருஷங்களுக்குப் பிறகு, என்னுடைய குருநாதரைச் சென்னையிலிருந்த ஒரு பக்தர் அழைத்தார். அவருடன் நானும் சென்றேன். ஒரு நாள் கோவிலில் உபந்நியாசம் நடந்தது. ஸ்வாமிகள் வழக்கம் போல் அரிய பெரிய சமய தத்துவங்களைச் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய மனம் என்னவோ, அன்று உபந்நியாசத்தில் ஈடுபடவில்லை. உண்மையில், சென்னைக்கு வந்ததிலிருந்தே என் உள்ளம் சரியான நிலைமையில் இல்லை. தியானத்தில் மனம் குவிதல் மிகவும் கடினமாயிற்று. அடிக்கடி காந்திமதியின் நினைவு வந்தது. “புலன்களை அடக்கி வெற்றி பெற்ற நாம் இப்போது காந்திமதியைப் பார்த்தாலென்ன?” என்று தோன்றிற்று. “அவளை நம் சிஷ்யையாய்க் கொள்ளலாம்” என்ற ஆசை கூட உண்டாயிற்று. கோவிலில் ஸ்வாமிகள் உபந்நியாசம் செய்து கொண்டிருந்தபோது, மனம் அதில் ஈடுபடாமல் பெரிதும் சலித்துக் கொண்டிருக்கவே, நான் கோவிலைச் சுற்றி வரலாமென்று எண்ணி எழுந்து சென்றேன். ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு அம்மன் சந்நிதிக்குச் சென்றேன். அங்கே கர்ப்பக்கிருஹத்தில் அர்ச்சகர் பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். வெளி மண்டபத்தில் ஒரு சிறு பெண் கை கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அங்கு வேறு யாரும் இல்லை. அந்தக் குழந்தைக்கு வயது ஐந்துக்குள் தான் இருக்கும். அவள் வாய்க்குள்ளே ஏதோ முணுமுணுத்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அவள் என்ன பிரார்த்திக்கிறாள் என்று தெரிந்துகொள்ள ஆவள் உண்டாகவே அருகில் நெருங்கி உற்றுக் கேட்டேன். “அம்பிகே! தாயே! என் அம்மாவைக் காப்பாற்று. நாங்கள் திக்கற்றவர்கள்; உன்னைத் தவிர எங்களுக்குக் கதி கிடையாது…” என் உடம்பெல்லாம் ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்தப் பரிதாபமான குரலையும், பிரார்த்தனையையும் என்னால் சகிக்க முடியவில்லை. இன்னும் அருகில் சென்று “குழந்தாய்! நீ யாரம்மா? உன் தாயாருக்கு என்ன அம்மா?” என்று கேட்டேன். குழந்தை முதலில் கொஞ்சம் வெகுண்ட கண்களுடன் என்னைப் பார்த்தாள். அப்புறம் அவள் முகம் சற்று மலர்ந்தது. “அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. வீட்டிலே அரிசி வாங்கப் பணம் கிடையாது…!” என்றாள். “உனக்கு அப்பா இல்லையா, அம்மா?” “அப்பா நான் பிறப்பதற்கு முன்னமே போய் விட்டார். எங்களுக்கு வேறு திக்கில்லை. தெய்வந்தான் எங்களுக்குத் துணை.” இந்தக் குழந்தையின் மழலைச் சொற்கள் எல்லாம் அவளுடைய தாயார் அடிக்கடி சொல்லிக் கேட்டவை என்று ஊகித்துக் கொண்டேன். என் உள்ளம் உருகிற்று. “உன் பெயர் என்ன அம்மா?” என்று கேட்டேன். “என் பெயர் ஸௌபாக்கியம்.” “உன் அம்மாவின் பெயர்?” “காந்திமதி.” என்னைத் தொடர்ந்து அவர்களுடைய வீட்டுக்கு வருவதற்கு அந்தக் குழந்தை ஓடவேண்டியிருந்தது. அவ்வளவு விரைவில் என் கால்கள் என்னை அங்கே கொண்டு சேர்த்தன. ஒரு பழைய வீட்டின் சின்ன அறை ஒன்றில் வெறுந்தரையில் எலும்புந் தோலுமாய்ப் படுத்துக் கொண்டிருந்த காந்திமதியைக் கண்டேன். அவள் முகத்திலே மட்டும் நான் முன்னே பார்த்தைவிட அதிகமான தேஜஸ் இருந்தது. வெகு நேரம் நாங்கள் ஒன்றும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தோம். அவளுக்கு உடம்பு சரிப்படாததற்குக் காரணம் பட்டினிதான் என்று பார்த்த உடனேயே எனக்குத் தெரிந்து போயிற்று. பக்கத்துக் கடையிலிருந்து கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து இருவரையும் சாப்பிடச் செய்தேன். "நான் சாவதற்குள் உங்களை மறுபடி பார்ப்பேன் என்று மட்டும் ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். ஒரு வாய்க்காலுக்கு அந்தக் கரையில் நீங்கள் நிற்கிறீர்கள். அங்கிருந்து கையை நீட்டி என்னையும் அந்தக் கரையில் சேர்க்க முயல்கிறீர்கள். அப்போது நான் வாய்க்காலில் விழுந்து விடுகிறேன். வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. அப்புறம் வெகு நேரம் நினைவே இல்லாமல் இருக்கிறது. பிறகு, சமுத்திரத்தில் ஒரு படகில் இருப்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் படகு ஓட்டுகிறீர்கள். ‘இது நம்முடைய மறு ஜன்மம்’ என்று சொல்லுகிறீர்கள். ’விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு - முன்னே விட்ட குறை வந்து தொட்டாச்சு’ என்ற நந்தன் சரித்திரக் கும்மி நான் பாடுகிறேன். அப்போது திடீரென்று ஒரு புயற் காற்று வந்து படகைக் கவிழ்த்து விடுகிறது. இப்படியெல்லாம் ஏதேதோ சொப்பனம் கண்டு கொண்டிருந்தேன்" என்று காந்திமதி கூறினாள். எங்களுடைய சம்பாஷணை ஒரு தொடர்ச்சியில்லாமல் ஒரே குழப்பமாயிருந்தபடியால், அதை அப்படியே என்னால் இப்போது சொல்ல முடியாது. என்னை விட்டுப் பிரிந்த பின் அவளுக்கு நேர்ந்ததைப் பற்றி நான் கேட்டுத் தெரிந்து கொண்டதை மட்டும் சொல்கிறேன். காந்திமதி வீடு சேர்ந்ததும், அங்கே வேலைக்காரப் பையன் மட்டும் பெரிதும் மனக் குழப்பத்துடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அன்று சாயங்காலம் அவள் வீட்டை விட்டுச் சென்றபின் ஊருக்குப் போயிருந்ததாக நினைத்த எஜமான் வந்ததாகவும், அம்மாள் வெளியில் போயிருக்கிறாள் என்று அறிந்ததும் அவர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டதாகவும் அவன் தெரிவித்தான். அன்றியும் எஜமான் வந்து சென்றபின் சமையற்காரி இரும்புப் பெட்டி இருந்த அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஏதோ குடைந்து கொண்டிருந்ததாகவும், பிறகு அவளும் ஒன்றும் சொல்லாமல் வெளியே போய்விட்டதாகவும் கூறினான். காந்திமதி பதைபதைப்புடன் இரும்புப்பெட்டியைப் போய்ப் பார்த்தாள். பெட்டி திறந்திருந்தது. சாவிக் கொத்து கீழே கிடந்தது. பெட்டிக்குள் நகைகள் இல்லை. தான் எழுதி வைத்திருந்த கடிதம் மட்டும் இருந்தது. அதை எடுத்துக் கிழித்துத் தீயில் போட்டு எரித்தாள். நகைகளைச் சமையற்காரி எடுத்துப் போயிருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றிற்று. காமாட்சிநாதன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து மறுபடி போனதைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்குக் கவலையாயிருந்தது. அவர் இரும்புப் பெட்டி இருந்த அறைக்குள் போகவில்லையென்பதைப் பையனை நன்றாய் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். ஆகையால் கடிதத்தைப் பார்த்திருக்கமாட்டார். எனவே, எப்படியும் அவர் சீக்கிரம் வருவாரென்று எதிர்பார்த்தாள். நகைகள் எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் வைத்ததைப்பற்றி அவருக்கு என்ன காரணம் சொல்வதென்று கலக்கத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அத்தகைய காரணம் சொல்வதற்கு வேண்டிய பிரமேயம் அவளுக்கு ஏற்படவேயில்லை. ஏனென்றால், காமாட்சிநாதன் திரும்பி வரவேயில்லை! ஒரு வாரம், இரண்டு வாரம் ஆகியும் அவர் வரவில்லை. அவருக்கு சமையற்காரிக்கும் வெகு நாளாக காதல் உண்டென்றும், அவளை அழைத்துக் கொண்டு அவர் ஓடிவிட்டாரென்றும் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொன்னார்கள். காந்திமதியிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். ஆனால் ஒருவராவது எவ்வித ஒத்தாசையும் செய்ய முன்வரவில்லை. காந்திமதியின் தாயார் முன்னமே காலஞ்சென்றுவிட்டாள். வேறு உற்றார் உறவினர் யாருமில்லை. சொந்தக் கிராமத்துக்குப் போக அவளுக்கு இஷ்டமும் இல்லை. நல்ல வேளையாய்ப் பாங்கியில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை வைத்துக் கொண்டு பட்டணத்திலேயே வசிக்கத் தீர்மானித்தாள். அதே தெருவில் சமீபத்திலிருந்த ஒரு வீட்டில் இரண்டு அறைகள் மட்டும் வாடகைக்கு வாங்கிக் கொண்டு வசிக்கலானாள். அந்த வீட்டில் மற்றொரு குடித்தனம் இருந்த தம்பதிகள் மிகவும் நல்ல மாதிரி. குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகவே அவர்கள் பட்டணத்துக்கு வந்தவர்கள். எப்படியும் காமாட்சிநாதன் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் காந்திமதி காலங் கழிக்கலானாள். உரிய காலத்தில் இந்தப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்ப்பதில் அவள் பொழுதில் பெரும் பகுதி போயிற்று. செட்டாகக் குடித்தனம் செய்து எப்படியோ இத்தனை நாள் கழித்தாள். கடைசியாக, பாங்கியிலிருந்த பணம் முழுதும் தீர்ந்து பரம தரித்திரம் நேரிட்டது. உணவுப் பொருள் வாங்கவும் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதையெல்லாம் அவள் சொல்லக் கேட்கக் கேட்க எனக்கு என் மீதிலேயே வந்த கோபத்துக்கு அளவில்லாமல் போயிற்று. “பாவி என்னாலல்லவா உனக்கு இந்தத் துயரமெல்லாம் நேரிட்டது? சமயத்தில் நான் கோழையாகி உன்னைத் திரும்பிப் போகச் சொன்னேனே?” என்று கதறினேன். “நான் திரும்பிப் போனதற்குக் காரணம் நீங்கள் மட்டுந்தான் என்று நினைக்கிறீர்களா? இல்லை. இல்லை. உண்மையில் என்னுடைய தைரியக் குறைவுதான் உங்களையும் பாதித்தது. என் தேகம் நடுங்கியதை அப்போது நீங்கள் அறியவில்லையா? நான் போய் விட்டேனென்று தெரிந்ததும் அவருடைய மனம் என்ன பாடுபடுமென்று எண்ணிப் பார்த்த போது என்னுடைய உறுதியெல்லாம் போய்விட்டது. அதனால் தான் நீங்கள் கொஞ்சம் தயக்கம் காட்டியதும் நான் திரும்பி விட்டேன்” என்றாள். “அதை நினைத்தால்தான் வயிற்றெரிச்சல் அதிகமாகிறது. பிரமாதமான வேதாந்தம் விசாரம் செய்து விட்டுக் கடைசியில் ஒரு சமையற்காரியை இழுத்துக் கொண்டு போன மனுஷ்யனுக்காக நம்முடைய வாழ்க்கை இன்பத்தையெல்லாம் தியாகம் செய்தோமே! நீ இப்படிப் பட்டினி கிடந்து எலும்புந் தோலுமாகும்படி ஆயிற்றே! இந்தக் கண்கள் என்ன பாவம் செய்தன?” என்று சொல்லி முகத்தில் அடித்துக் கொண்டேன். “தாங்கள் அந்த அவதூறை நம்புகிறீர்களா, என்ன? ஊரார் சொன்னார்களென்றால், அது நிஜமா? அவரிடம் நான் காதல் கொள்ள முடியவில்லை என்பது உண்மையே; ஆனால் அவருடைய குணத்தை நான் நன்றாய் அறிவேன். ஒரு நாளும் அப்படி நேர்ந்திராது” என்றாள் காந்திமதி. “பின் ஏன் அந்த மனுஷர் திரும்பி வரவில்லை? உன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு அவர் ஏன் போக வேண்டும்?” “அதென்னவோ, நான் அறியேன். சந்தர்ப்பங்கள் எல்லாம் ஊரார் சொல்வதற்குப் பொருத்தமாய்த்தான் இருந்தன. ஆனால் என் அந்தரங்கத்தில் நான் அதை நம்ப முடியவில்லை; இனியும் நம்பமாட்டேன்” என்றாள். அவளுடைய உத்தம குணத்தை நினைக்க நினைக்க எனக்கு என் பேரிலும், அவள் புருஷன் பேரிலும் பதின் மடங்கு கோபம் பொங்கிற்று. இன்னொரு ஸ்திரீக்கு இத்தகைய கஷ்டம் நேர்ந்திருந்தால், எவ்வளவு மனம் கசந்து போயிருப்பாள்? எப்படி எல்லாரையும் துவேஷிக்கத் தொடங்கியிருப்பாள்? மறுபடியும் நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு என் குருநாதர் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பினேன். “எங்கே போயிருந்தாய்?” என்று அவர் கேட்டதற்கு, “பழைய சிநேகிதர் ஒருவரைச் சந்தித்தேன்; அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்” என்றேன். இனி என்ன செய்வதென்பதைப்பற்றித் திடமான முடிவு செய்து கொண்டு அவரிடம் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தேன். உண்மையில், சந்நியாஸாசிரமத்திலிருந்து விடுதலை கோரும்படியாகவே நேருமோ என்று கூட என் உள்ளம் நினைத்தது. ஆனால் அத்தகைய தர்ம சங்கடத்துக்கு என்னைக் காந்திமதி ஆளாக்கவில்லை. மறுநாள் காலையில் நான் அவள் வீடு சென்றபோது காந்திமதி குழந்தையை அணைத்துக் கொண்டு, ‘ஸௌபா! உன்னை நான் பிரியுங்காலம் வந்து விட்டது. ஆனால் நீ வருத்தப் படாதே. பகவான் என்னை அடியோடு கைவிட்டு விடவில்லை. நேற்று உன்னோடு வந்த ஸ்வாமியார் உன்னைக் காப்பாற்றுவார்’ என்று மெலிந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் என்னையும் அந்தக் குழந்தையையும் கோவென்று கதற விட்டுவிட்டுக் காந்திமதி பரலோகம் சென்றாள். முடிவுரை இப்படிச் செல்லி வந்த குமாரானந்தரின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. ஆனால் பெரிய ஸ்வாமியாரோ சாந்தஸ்வரூபியாய் உட்கார்ந்திருந்தார். கடைசியில், குழந்தையைப் பற்றிச் சொன்னபோது மட்டும் அவருடைய மூச்சு வழக்கத்தைவிடச் சிறிது பெரிதாக வந்தது. “இப்போது ஸ்வாமி அடிக்கடி பணம் அனுப்பி வருவதெல்லாம் அந்தக் குழந்தைக்குத்தானோ?” என்று கேட்டார். "ஆமாம்; அன்றைய தினமே நான் என் குருநாதரிடம் சென்று, உண்மை முழுவதையும் சொல்லி, இனிக் கொஞ்ச காலம் என் மனத்தில் சாந்தி இராதென்றும், ஒரே இடத்தில் இருக்க முடியாதென்றும் தெரிவித்து க்ஷேத்திர யாத்திரை செய்ய அநுமதி பெற்றேன். சில நாள் வரை நான் போகுமிடமெல்லாம் ஸௌபாவையும் அழைத்துக் கொண்டு போனேன். கொஞ்சம் அவளுக்கு வயதானதும் சென்னையில் இளம் பெண்களுக்கு உணவு வசதியுடன் கல்வியும் அளிக்கும் ஒரு ஸ்தாபனத்தில் சேர்த்தேன். இப்போது அவளுக்கு பதினைந்து வயதாகிறது. அவளிடம் எனக்கு இருப்பது துவேஷமா வாத்ஸல்யமா என்றே சில சமயம் தெரிவதில்லை. ‘இந்தப் பெண்ணால் அல்லவா இன்னும் நான் விடுதலை பெறாமல் உலக பந்தத்தில் ஆழ்ந்திருக்கிறேன்?’ என்று நினைக்கும்போது அவளிடம் கோபம் உண்டாகிறது. அடுத்த நிமிஷம், ‘அந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக மோட்சத்தை இழந்து நகரத்துக்கும் போகலாம்’ என்று தோன்றுகிறது…" “ஸ்வாமிக்குப் பந்தத்திலிருந்து விடுதலை வேண்டுமானால் இப்போது அடையலாம். ஸௌபாக்கியத்தைக் காப்பாற்றும் பொறுப்பை இந்தக் கட்டை ஏற்றுக் கொள்ளும்” என்றார் பிராணவானந்தர். “ஓ! அதெப்படி முடியும்? காந்திமதி அளித்த பொறுப்பை நான் எப்படி இன்னொருவரிடம் கொடுப்பேன்? ஸ்வாமி! சொல்லுங்கள்! இந்த உலகத்தில் துன்பமும் தீமையும் ஏன் இருக்கின்றன? சமையற்காரியை இழுத்துச் சென்ற ஒரு தூர்த்தனுக்காக எங்கள் வாழ்க்கை பாழானது ஏன்? காந்திமதி பட்டினியால் உயிர் துறக்கும்படி நேர்ந்தது ஏன்? இதையெல்லாம் நினைக்கும் போது எனக்குக் கடவுளிடத்திலேயே அவநம்பிக்கை உண்டாகிவிடுகிறது. அப்போதெல்லாம் என் சந்நியாசக் கோலத்தைப் பார்த்து நானே சிரித்துக் கொள்கிறேன்.” “ஸ்வாமி! பகவானுடைய சிருஷ்டியில் ஏன் தீமையும் துன்பமும் இருக்கின்றன என்று ஆதிகாலத்திலிருந்து நம் பெரியோர்கள் ஆராய்ச்சி செய்தார்கள்…” “அந்த ஆராய்ச்சியில் அவர்கள் கண்டுபிடித்தது என்ன?” “அதுதான் நமக்குத் தெரியாது. ஏனெனில், அந்த இரகசியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யாரும் அதை வெளியிடவில்லை. கடவுளின் சாந்நித்யத்தைப் போலவே அவருடைய திருவிளையாடலின் இரகசியமும் விவரிக்க முடியாதது என்றார்கள். அதனால் தான் ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்னும் வாக்கியம் எழுந்தது.” “பின், மனிதன் சாந்தி பெறுவதுதான் எப்படி?” “மனச்சாட்சிக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்வதும், பலன்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்வதுந்தான் சாந்தி அடையும் உபாயம். உதாரணமாக காந்திமதியின் கணவன், அவள் வேறொருவனைக் காதலித்திருக்கையில் தான் அவளை மணம் புரிந்தது பிசகு என்று அறிந்தபோது, அவளை விட்டுச் செல்வதே சரியென்று எண்ணி அவ்வாறு செய்தான். கடமையென்று கருதியதைச் செய்தபடியால், அதன் விளைவுகள் விபரீதமாய்ப் போய்விட்டதை இப்போது அறிந்து கொண்ட போதிலும் அவன் சற்றும் மனங் கலங்கவில்லை.” சின்ன ஸ்வாமியாருக்குத் துணுக்கென்றது. “ஸ்வாமி! என்ன சொல்கிறீர்கள்? காமாட்சிநாதனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்றார். “ஆமாம்; அவனைப்பற்றி இந்தக் கட்டைக்கு நன்றாய்த் தெரியும். ஸ்வாமி கருதியதுபோல் அவன் சமையற்காரியுடன் போகவில்லை. காந்திமதியும் அவள் காதலனும் சந்தோஷமாயிருக்கட்டும் என்றுதான் போனான். அதைப் பற்றி நிச்சயமாய்த் தெரிந்து கொள்வதற்காகவே அவன் ஊரிலிருந்து மறுநாளே திரும்பி வந்தது. காந்திமதி வீட்டில் இல்லாமல், அவளுடைய காதலன் அறையில் இருக்கக் கண்டதும் நிச்சயம் பெற்றுச் சந்நியாசியாகி வடநாட்டுக்குச் சென்றான். அவன் வீட்டிலே விட்டுச் சென்ற சாவிக்கொத்தைக் கொண்டு சமையற்காரி பெட்டியைத் திறந்து நகைகளைத் திருடிச் சென்றிருக்க வேண்டும்.” “ஸ்வாமி! ஸ்வாமி! இதெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரியும்? தாங்கள் யார்?” “பூர்வாசிரமத்தில் இந்தக் கட்டையைக் காமாட்சிநாதன் என்று சொல்வார்கள்!” கேதாரியின் தாயார் முன்னுரை சமீபத்தில் பத்திரிகைகளில் ‘அம்மாமி அப்பளாம்’ என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணிய போது உடம்பை என்னவோ செய்தது. கேதாரிக்கு இந்தக் கதி நேருமென்று யார் நினைத்தார்கள்? இது போன்ற சம்பவங்களை எண்ணும்போது தான் மனித யத்தனத்தில் நமக்கு நம்பிக்கை குன்றி, விதியின் வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது. கேதாரி நோய்ப்பட்டு கிடந்தபோது அவனை வந்து பரிசோதனை செய்யாத பெரிய டாக்டர்கள் சென்னையில் யாரும் இல்லை. ஆயினும் அவர்களில் யாரும் அவனுடைய நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏதேதோ வியாதியென்றும், காம்ளிகேஷன் என்றும் சொல்லி வைத்தியம் செய்தார்கள். கேதாரி பிழைக்கவுமில்லை. அவனுடைய சிநேகிதர்களையும் உறவினர்களையும் பரிதவிக்க விட்டு இறந்துதான் போனான். இதுபற்றி அச்சமயம் டாக்டர்களுக்கே ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. “என்ன வைத்திய சாஸ்திரம்? என்ன டாக்டர்கள்? எல்லாம் வெறும் படாடோ பந்தான்” என்று ஜனங்கள் சொன்னார்கள். கேதாரியின் விஷயத்தில் டாக்டர்கள் பேரிலாவது வைத்திய சாஸ்திரத்தின் மேலாவது யாதொரு தவறுமில்லை யென்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். அவனுடைய உடல் நோயின் வேர் அவனுடைய மனோ வியாதியில் இருந்தது என்பதும், அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக் கொண்டதென்பதும் டாக்டர்களுக்கு எப்படித் தெரியும்? அவனுடைய அருமைத் தாயாருக்கும், இளம் மனைவிக்கும் கூட அது தெரியாத விஷயமே. அவனுடைய அத்தியந்த நண்பனான நான் ஒருவனே அந்த இரகசியத்தை அறிந்தவன். கேதாரி மரணமடைந்த புதிதில் அதைப்பற்றிப் பேசவோ எழுதவோ முடியாதபடி துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். இப்போது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது. என்னுடைய ஆத்ம சிநேகிதனுக்கு நான் செய்யவேண்டிய கடமையாகக் கருதி அவனுடைய கதையை வெளியிடுகிறேன். ஆமாம்; ரொம்பவும் துயரமான கதைதான். நம்முன் சிலர் சோக ரசத்தை அநுபவிப்பதற்காக நாடகங்களுக்குப் போவோம்; ஆனால் வாழ்க்கையில் நம் கண் முன் நிகழும் சோக சம்பவங்களைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக் கொள்வோம். அத்தகையவர்கள் கேதாரியின் கதையைப் படிக்காமல் விடுவதே நல்லது! கேதாரிக்கு அவனுடைய தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது. அவன் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த போது அவனுடைய தந்தை வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார். ஒரு நாடகக்காரியின் மையலில் அகப்பட்டு அவர் தம்முடைய இளம் மனைவியையும், மூன்று வயதுப் பிள்ளையையும் அநாதையாக விட்டுவிட்டுப் போனார். இந்த விவரமெல்லாம் எங்களுக்கு வெகு நாள் வரையில் தெரியாது. கேதாரிக்குக் கலியாணப் பேச்சு நடந்த போதுதான் அவனுடைய தாயார் சொல்லித் தெரிந்து கொண்டோம். பெண்ணைப் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி பாகீரதி அம்மாமி சொன்னபோது, “நீ பார்த்து நிச்சயம் செய்தால் சரிதான், அம்மா! ஒரு மூளிப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொன்னாலும் பண்ணிக் கொள்கிறேன்” என்றான் கேதாரி. “பின், என்ன, அம்மாமி உங்களுக்கு? இந்தக் கலியுகத்தில் இந்த மாதிரி பிள்ளை இன்னொருவனைக் காணவே முடியாது. நீங்களே முடிவு செய்து விடுங்களேன்” என்றேன் நான். ஆனால் பாகீரதி அம்மாமி கேட்கவில்லை. “கேதாரி போய்ப் பெண்ணைப் பார்த்துப் பிடித்திருக்கிறது” என்று சொன்னால்தான் கலியாணம் நிச்சயம் பண்ணுவேன் என்று சொன்னாள். அப்போதுதான் கேதாரியின் தகப்பனாரின் பேச்சை அவள் எடுத்து நான் கேட்டது. "இப்படியெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம் கேட்காமல் கலியாணம் பண்ணிப் பண்ணித்தான் குடும்பங்களில் கஷ்டம் ஏற்படுகிறது. இவனுடைய (கேதாரியினுடைய) தகப்பனார் எங்களை விட்டுவிட்டுப் போனதற்காக ஊரெல்லாம் அவரைத் திட்டினார்கள். எனக்கும் அப்போது கோபமும் ஆத்திரமும் அடைத்துக் கொண்டு தான் வந்தது. நாற்பது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தேன். ஆனால், பின்னால் ஆற அமர யோசித்துப் பார்த்ததில் அவர் மேல் ஒரு குற்றமும் இல்லையென்று தோன்றிற்று. என்னைக் கலியாணம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமே இல்லையாம். அப்படிச் சொல்லவும் சொன்னாராம். ஆனால் பெரியவர்கள் பலவந்தப்படுத்திக் கலியாணம் செய்து வைத்தார்களாம். ஏதோ ஐந்தாறு வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் அந்தக் கூத்தாடிச்சி வந்து சேர்ந்தாள்; போய்விட்டார்." இப்படி பாகீரதி அம்மாமியே அந்தப் பேச்சை எடுத்த போது, நானும் பக்குவமாகச் சிற்சில கேள்விகளைப் போட்டு மற்ற விவரங்களையும் அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாய் ஆள் நன்றாயிருப்பாராம். ரொம்ப நன்றாய்ப் பாடுவாராம். அப்போது திருமங்கலத்தில் தபாலாபீஸில் அவருக்குக் குமாஸ்தா உத்தியோகம். ரங்கமணி என்னும் பெயர் பெற்ற நாடகக்காரி அவ்வூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அயன் ராஜபார்ட் போடுகிறவனுக்கு ரொம்ப உடம்பு சரிப்படவில்லையென்றும், அன்று அநேகமாய் நாடகம் நடைபெறாதென்றும் செய்தி வந்தது. கேதாரியின் தகப்பனாருக்கு நாடகம் என்றால் பித்து. நாடகம் பார்த்துப் பார்த்து எல்லா நாடகங்களும் நெட்டுரு; பாட்டுக்கள் தலைகீழ்ப் பாடம். ஆகவே இவர் போய் “நான் ராஜபார்ட் போட்டுக் கொள்கிறேன்” என்றார். சில பாட்டுக்களும் பாடிக் காட்டினார். ரங்கமணி சம்மதித்தாள். நாடகம் நடந்தது. எல்லாரும் அதிசயிக்கும்படி கேதாரியின் தகப்பனார் நடித்தார். அம்மாமிக்குக் கூட அது பெருமையாயிருந்தது. அப்புறம் திருமங்கலத்தில் அந்தக் கம்பெனி இருந்தவரையில் அவர்களுடனேயே இருந்தார். வேலையை ராஜீனாமாக் கொடுத்து விட்டாரென்றும், தன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போகிறாளென்றும் ஊரிலே பேசிக் கொண்டார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி அதையெல்லாம் நம்பவில்லை. கடைசியில், நாடகக் கம்பெனி ஊரைவிட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள் சுந்தரராமையரையும் காணவில்லை. நாடகக் கம்பெனி இலங்கைக்குப் போயிற்றென்றும், அங்கே போய் இவரும் சேர்ந்து கொண்டாரென்றும் பின்னால் தகவல் தெரிய வந்தது. அதற்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. மேற்படி நாடகக் கம்பெனியார் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளி நாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டொரு தடவை சென்னை நகருக்கும் வந்திருந்தனராம். ஆனால் பாகீரதி அம்மாமி அதற்குள் அவரைப் பற்றி எண்ணுவதையே விட்டு விட்டாள். இப்போது அவளுடைய ஆசை முழுவதையும் கேதாரியின் மேல் வைத்திருந்தாள். சுந்தரராமையர் ஓடிப் போன செய்தியறிந்து, பாகீரதி அம்மாமியின் தாய் தந்தையர்கள் திருமங்கலத்துக்கு வந்து அவளைத் தங்களுடன் கிராமத்துக்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் சொற்பக் குடித்தனக்காரர்கள். பாகீரதியைத் தவிர அவர்களுக்கு வேறு பிள்ளைக் குட்டி கிடையாது. கிராமத்தில் ஐந்தாறு வருஷம் இருந்தார்கள். அப்புறம் கேதாரியைப் படிக்க வைப்பதற்காகத் திருச்சிராப்பள்ளிக்குக் குடி வந்தார்கள். நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. அப்போது திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதம் ஸ்டோ ரில் நானும் என் பெற்றோர்களும் குடியிருந்தோம். நான் முதலாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஸ்டோ ரில் எங்களுக்கு எதிர் வீடு சில நாளாகப் பூட்டிக் கிடந்தது. அன்றைக்கு யாரோ புதிதாகக் குடி வரப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஆவலுடன் அவர்களுடைய வரவை எதிர்பார்த்தேன். ஒரு தாத்தா, ஒரு பாட்டி, ஒரு அம்மாமி, ஒரு பையன் - இவர்கள் பழைய தகரப் பெட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் வந்து சேர்ந்தார்கள். அந்தப் பையன் கையில் தங்கக் காப்புப் போட்டுக் கொண்டும், தலை பின்னிக் கொண்டும், குல்லா வைத்துக் கொண்டும் இருந்ததை நான் வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றது நன்றாய் ஞாபகம் இருக்கிறது. அந்தப் பையன் தான் கேதாரி. அவனுடன் முதல் தடவை பேசின உடனேயே எனக்குப் பிடித்துப் போயிற்று. பட்டிக்காட்டிலிருந்து வந்தவனாதலால் எதைப் பார்த்தாலும் அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவதைக் கண்டு இடியிடியென்று சிரித்தான். காலையில் தாயுமான ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் கொண்டு வருவதற்காகப் போன யானையை அவன் பார்த்த பார்வையில் விழி பிதுங்கிவிடும் போல் இருந்தது. ஓயாமல் அது என்ன, இது என்ன என்று கேட்டுக் கொண்டேயிருப்பான். நானும் சலிக்காமல் பதில் சொல்லி வந்தேன். நான் படித்த அதே பள்ளிக்கூடத்தில் அதே வகுப்பில் கேதாரியைச் சேர்த்தார்கள். நாங்கள் இணைபிரியாத சிநேகிதர்கள் ஆனோம். நிஜத்தைச் சொல்லிவிடுகிறேனே; படிப்பிலே நான் கொஞ்சம் சுமார் தான். மற்றபடி விளையாட்டு, வம்பு முதலியவற்றில் நான் தான் முதல். அவனோ படிப்பில் முதல்; மற்றவற்றில் ரொம்ப சுமார். எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இந்த மாதிரி படிப்பில் கெட்டிக்காரனாயுள்ள பையனைப் பரிகாசம் பண்ணி உபத்திரவப்படுத்துவதற்குச் சில போக்கிரிப் பையன்கள் இருப்பார்கள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பயந்து கேதாரியின் வழிக்கு ஒருவரும் போவதில்லை. அவர்கள் திருச்சிக்கு வந்து மூன்று வருஷத்துக்கெல்லாம், தாத்தா காலமானார். அதற்குள் அவர் கையிலிருந்த பணமும் அநேகமாகச் செலவழிந்து போயிற்று. கேதாரிக்கு உபகாரச் சம்பளம் கிடைத்திருந்தபடியால், பள்ளிக்கூடச் செலவு கிடையாது. ஊரில் விளைந்து வரும் நெல் சாப்பாட்டுக்குப் போதும். ஆனால் வீட்டு வாடகைக்கும் மேல் செலவுக்கும் என்ன செய்வது? அம்மாமியும் பாட்டியும் அப்பளம் இட்டு விற்க ஆரம்பித்தார்கள். அதென்னவோ, சில சமயம் முன்பின் தெரியாதவர்களிடம் கூட நமக்குப் பிரியம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை முதன் முதல் நாம் பார்க்கும் வேளையைப் பொருத்ததோ என்னவோ தெரியவில்லை. பாகீரதி அம்மாமியிடம் என் சொந்தத் தாயாரைவிட அதிகப் பிரியம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தார்கள் அவளை ‘வாழா வெட்டி’ என்று அவமதிப்பாய்ப் பேசுவதுண்டு. இதெல்லாம் அவளிடம் எனக்கிருந்த அபிமானத்தை அதிகமேயாக்கிற்று. என் பள்ளிக்கூடத்துச் சிநேகிதர்களுக்கெல்லாம் சொல்லி, பாகீரதி அம்மாமியின் அப்பளங்களை நானே ஏராளமாய் விற்றுக் கொடுத்திருக்கிறேன். பாட்டியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு இறந்து போய்விட்டாள். தாயும் பிள்ளையும் அதே வீட்டில் இருந்து வந்தார்கள். கேதாரி அவனுடைய தாயார் அவன் விஷயத்தில் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பாத்திரமாய் நடந்து கொண்டான். ஒவ்வொரு வகுப்பிலும் பரீட்சையில் முதன்மையாகத் தேறி வந்து கடைசியில் பி.ஏ. பரீட்சையில் சென்னை இராஜதானியிலேயே முதலாவதாகத் தேறினான். அந்தச் சந்தோஷத்தில், நான் அவ்வருஷம் ‘கோட்’ அடித்த வெட்கத்தைக் கூட அதிகமாய் உணரவில்லை. கேதாரி காலேஜ் வகுப்புக்குப் போனதிலிருந்தே பெண்ணைப் பெற்றவர்கள் அவனுடைய தாயாரைப் பிய்த்து எடுத்த வண்ணமாயிருந்தார்கள். அந்த நிலைமையில் வேறு யாராயிருந்தாலும் “அப்பளம் இடும் தொல்லை ஒழிந்தது” என்று எண்ணி, ஏதாவது ஒரு பெண்ணைப் பிடித்துக் கேதாரியின் கழுத்தில் கட்டியிருப்பார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி, வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் மிகவும் கடினமான பாடங்களைப் படித்து அறிவு பெற்றவள். “பி.ஏ. முடிகிற வரையில் கல்யாணப் பேச்சே கூடாது” என்று பிடிவாதமாய்ச் சொல்லி வந்தாள். ஆகவே, இப்போது கேதாரி, பி.ஏ. தேறியதும் கலியாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று. மணிபுரம் பண்ணையார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் அப்போது எங்கள் காலேஜ் பழைய மாணாக்கர் சங்கத்தின் அக்கிராசனராயிருந்தார். ஒவ்வொரு வருஷமும், கேதாரி வகுப்பில் முதலாவதாகத் தேறி முதற்பரிசுகள் பெற்று வருவதைக் கவனித்திருந்தார். பையனுடைய முகவெட்டு, நடை உடை பாவனை எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன. ஆகவே தம்முடைய பெண்ணை அவனுக்குக் கொடுப்பதென்று பேசத் தொடங்கினார். பையனைக் கேட்டதில் அம்மாவைக் கேட்க வேண்டுமென்று சொல்லிவிட்டான். பாகீரதி அம்மாமி இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்கப் போகிறதை எண்ணியபோது பிரமித்துப் போய்விட்டாள். ஆனாலும் காரியத்தில் கண்ணாயிருந்தாள். இன்னொரு ஸ்திரீயாயிருந்தால், “ஐயாயிரம் வேணும்; பத்தாயிரம் வேணும்” என்று கேட்டிருப்பார்கள். பாகீரதி அம்மாமியோ, “பணங்காசு ஒன்றும் வேண்டாம்; கலியாணம் சீர்வகையரா எல்லாம் உங்கள் இஷ்டம். பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ். படிக்க வைப்பதற்கு மட்டும் ஒப்புக் கொண்டால் போதும்” என்றாள். இந்த மாதிரி எண்ணம் அம்மாமிக்கு உண்டென்று எனக்கு முன்னாலேயே தெரியும். ஏனென்றால், ஐ.ஸி.எஸ்.ஸுக்குப் போவது பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு நாள் என்னை அவள் கேட்டது உண்டு. அக்கம் பக்கத்தில் எல்லாரும் அதிசயப்பட்டார்கள்; சிலர் அம்மாமியை வையக்கூட வைதார்கள். “பார்! என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு? ஒரு பிள்ளை; அதைச் சீமைக்கு அனுப்புகிறாளே?” என்றார்கள். பண்ணையார் நரசிம்மய்யர் வைதிகப்பற்று உள்ளவர். ஆகையால் முதலில் தயங்கினார். கடைசியில், பெரிய சாஸ்திரிகள் தீக்ஷிதர்கள் எல்லாருடனும் யோசித்து, “சாஸ்திரங்களில் சமுத்திரப் பிரயாணத்துக்குப் பிராயச்சித்தம் இருக்கிறது” என்று உறுதிப்படுத்திக் கொண்டு சம்மதித்தார். எனக்கென்னவோ, “ஒரு ஸ்திரீக்குள்ள மனோதிடம் நமக்கு வேண்டாமா?” என்ற எண்ணத்தினாலேதான் அவர் சம்மதித்தார் என்று தோன்றிற்று. இதற்குப் பிறகுதான் கேதாரியைப் போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும்படி அம்மாமி சொன்னது. நானும் கூடப் போயிருந்தேன். கேதாரி தன் தாயிடம் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு நியாயமானது என்று விளங்கிற்று. கிளி என்றால் கிளி, பெண் அவ்வளவு அழகாயிருந்தாள். பதின்மூன்று, பதினாலு வயது இருக்கலாம். அந்தக் கதையையெல்லாம் இப்போது வளர்ப்பதில் பயன் என்ன? கல்யாணம் சிறப்பாக நடந்தது. அடுத்த வருஷம் கேதாரி இங்கிலாந்துக்குப் பிரயாணமானான். பம்பாய் வரையில் நான் சென்று கப்பல் ஏற்றிவிட்டு வந்தேன். பாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்திருக்க வேண்டும் என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்தி அழைத்தார்கள். அம்மாமி கேட்கவில்லை. அவளுடைய சித்தி ஒருத்தி இரண்டு குழந்தைகளை அநாதையாய் விட்டு விட்டு, இறந்து போய்விட்டாள். அவர்களைக் கிராமத்திலிருந்து தருவித்துத் தனியாக ஒரு வீட்டில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் பராமரித்து வந்தாள். ஆனால் சம்பந்திகளின் கௌரவத்தையும் மற்ற விஷயங்களையும் உத்தேசித்து அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்தி விட்டாள். கேதாரி சீமைக்குப் போய் எழெட்டு மாதங்களுக்குப் பிறகு, மணிபுரம் மிராசுதார் வீட்டிலிருந்து ஆள் வந்து என்னைக் கூப்பிட்டான். அவ்வாறே போயிருந்தேன். நரசிம்மய்யர் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது இரங்கூனிலிருந்து சுந்தரராமய்யர் என்பவரால் எழுதப்பட்டது. தம்முடைய புதல்வனுக்கு இவர்கள் பெண்ணைக் கொடுத்திருப்பதாக அறிந்து சந்தோஷப்படுவதாகவும், திருச்சியிலிருந்து சமீபத்தில் இரங்கூனுக்கு வந்து ஒருவர் மூலம் சகல விவரமும் தெரிந்து கொண்டதாகவும், தாம் இப்போது திரும்பவும் ஜன்மதேசம் வந்து எல்லாரையும் பார்க்க விரும்புகிறபடியால் அதற்குப் பிரயாணச் செலவுக்காகப் பணம் அனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தது. “என்ன, சங்கரா! இது நிஜமாயிருக்குமா?” என்று நரசிம்மய்யர் கேட்டார். “நிஜமாயிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் அம்மாமியைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்றேன். அம்மாமியிடம் கடிதத்தைக் கொடுத்தேன். அவள் ஒருவேளை அழுது கண்ணீர் விட்டுத் தடபுடல் செய்வாளோ என்று நான் பயந்ததெல்லாம் வீண் எண்ணம் என்று தெரிந்தது. தன்னுடைய ஏக புதல்வனைச் சீமைக்கு அனுப்பி வைக்கும்படி நெஞ்சைக் கல்லாகச் செய்து கொண்டவள் அல்லவா? கடிதத்தைப் படித்து விட்டு “இது அவருடைய கையெழுத்துத்தான்” என்றாள். பிறகு மௌனமாய் யோசனையில் ஆழ்ந்தவள் போல் இருந்தாள். இரண்டொரு தடவை பெருமூச்சு மட்டும் வந்தது. ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. “அம்மாமி! நரசிம்மய்யர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்” என்றேன். அம்மாமி அவசரமாய் உள்ளே எழுந்து போய் பெட்டியிலிருந்த பண நோட்டுகளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். எண்பது ரூபாய் இருந்தது. “சங்கரா! நான் அப்பளம் இட்டுச் சேர்த்த பணத்தில் மீதி இது. அவருக்கு என் பேரால் இதை அனுப்பு. இந்த வீட்டு விலாசம் கொடுத்து இங்கேயே நேரே வந்து சேரும்படி எழுது” என்றாள். அம்மாமியின் குரல் கொஞ்சம் கம்மியிருந்தது; அவ்வளவுதான். எனக்கோ கண்ணில் ஜலம் வந்தது. மேல் சம்பவங்களைப் பற்றி நினைத்தாலே எனக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது; கைகூட நடுங்குகிறது. பத்து நாளைக்கெல்லாம் மணியார்டர் திரும்பி வந்துவிட்டது. மணியார்டரை எந்த விலாசத்துக்கு அனுப்பினோமோ, அந்த வீட்டிலிருந்து ஒருவர் மணியார்டர் வருவதற்கு முன் சுந்தரராமைய்யர் காலஞ்சென்று விட்டதாகவும், அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதாகவும் கடிதம் எழுதியிருந்தார். பதினெட்டு வருஷமாய்க் கண்ணால் பாராத புருஷனுக்காகப் பாகீரதி அம்மாள் துக்கம் காத்தாள். பத்தாம் நாள், பிராமண சாதியில் வழக்கமான அலங்கோலங்கள் அம்மாமிக்கும் செய்யப்பட்டது. கேதாரிக்கு இதைப்பற்றி ஒன்றும் எழுதக்கூடாதென்றும், திரும்பி ஊருக்கு வந்த பிறகு தெரிவித்தால் போதுமென்றும், அம்மாமி கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். காலம் எப்படியோ சென்றது. நானும் மலையைக் கல்லி எலியைப் பிடித்தது போல பி.ஏ. பாஸ் செய்து, நான் படித்த பள்ளிக்கூடத்திலேயே உபாத்தியாயர் ஆனேன். கேதாரி சீமையிலிருந்து திரும்பி வரும் காலம் சமீபித்தது. எதிர்பார்த்தது போலவே அவன் மிகச் சிறப்புடன் ஐ.ஸி.எஸ். தேறினான். அவனுடைய தகப்பனாருடைய மரணத்தைப் பற்றியும், மற்ற விவரங்களைப் பற்றியும் அவனைத் திடுக்கிடச் செய்யாத விதத்தில் கடிதம் எழுதி, அது பம்பாயில் அவன் கையில் கிடைக்கும்படி அனுப்பியிருந்தோம். ஆனால் அவனுக்கிருந்த அவசரத்தில், கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்து விட்டானாதலால், மேற்படி கடிதம் அவன் கையில் சேரவில்லையென்று பின்னால் தெரிய வந்தது. அவன் வரும் விவரம் தந்தியில் தெரிவித்திருந்தானாதலால் வீட்டு வாசலில் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தேன். என் கழுத்தைக் கட்டியவண்ணமாய் இழுத்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போனான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின் மேல் அவன் பார்வை விழவில்லையோ, அல்லது விழுந்தும் அடையாளம் தெரியவில்லையோ, நான் அறியேன். அவன் பாட்டுக்கு "அம்மா! அம்மா!’ என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே சென்றான். அம்மாமியின் கண்களில் கண்ணீர் வந்ததை முதன் முதலாக அப்போதுதான் நான் பார்த்தேன். “அடே கேதாரி! என்னடா இது? அம்மா இதோ இருக்கிறாள்; எங்கேயோ தேடிக் கொண்டு போகிறாயே!” என்றேன். கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப்புடவை அணிந்து மொட்டைத் தலையை முக்காடால் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான். “ஐயோ! அம்மா!…” என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டுவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்தான். தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டான். கேதாரிக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. திருச்சிராப்பள்ளியில் அவனை வந்து பார்க்காத டாக்டர் இல்லை; அவனுக்குச் செய்யாத சிகிச்சை பாக்கி கிடையாது. ஒன்றும் பயன்படவில்லை. அவனுடைய உடம்பு கொதித்துக் கொண்டிருந்ததைப் போல் உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரே நினைவு, ஒரே ஞாபகந்தான். நான் தனியாய் அவனுடன் இருக்க நேர்ந்து விட்டால் போதும்; உடனே ஆரம்பித்து விடுவான். “சங்கரா! அது என்ன சாஸ்திரமடா அது? அநாதையாய் விட்டுப் போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்! அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்!” என்பான். “இதோ பார், சங்கர்! என் தாயார் ரொம்ப புத்திசாலி, இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு நாளும் உட்பட்டிருக்க மாட்டாள். எல்லாம் என்னால் வந்ததுதான். நான் பெரிய இடத்தில் - வைதிகக் குடுக்கைகளின் வீட்டில் - கலியாணம் செய்து கொண்டேன் அல்லவா? அவர்களுடைய ஏச்சுக்குப் பயந்துதான் அம்மா இதர்குச் சம்மதித்திருக்க வேண்டும்” என்பான். ஒரு நாள் வாசலில் இரண்டு கூலி வேலைக்காரர்கள் பேசிக் கொண்டு போனார்கள். ஒருவன், “அண்ணே! இன்று காலை புறப்படும் போது ஒரு மொட்டைப் பாப்பாத்தி எதிரில் வந்தாள். அது தான் வேலை அகப்படவில்லை” என்று சொன்னது கேதாரியின் காதில் விழுந்துவிட்டது. “சங்கர்! கேட்டாயா? என் தாயாரின் முகத்தில் விழித்தால் சகல பீடைகளும் நீங்குமென்று சொல்வார்களடா! இப்போது அவளும் அபசகுனந்தானே?” என்று புலம்பினான். எவ்வளவோ சமாதானம் சொல்லித் தேற்றினேன். ஆனாலும் அவன் அந்தப் பேச்சை மட்டும் விடுவதில்லை. “இதைக் கேள், சங்கர்! உத்தியோகமும் ஆயிற்று. மண்ணும் ஆயிற்று. நான் மட்டும் பிழைத்து எழுந்தேனானால் ஒரே ஒரு காரியந்தான் செய்யப் போகிறேன். பிராமண ஸ்திரீகள், புருஷனை இழந்தால் தலையை மொட்டையடிக்கும் வழக்கத்தையொழிக்க ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம் நம்முடைய சாதிக்கு மட்டும் வேண்டாம்” என்றான். ஆனால் ஐ.ஸி.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் இந்த மாதிரி அற்பமான காரியங்களில் இறங்குவது யமதர்மனுக்கே விருப்பமில்லை போலிருக்கிறது. கேதாரி உடல் குணமடையாமலே, சீமையிலிருந்து வந்த இருபத்தோராம் நாள் காலஞ் சென்றான். இந்த பரிதாப வரலாற்றில் சொல்ல வேண்டியது இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார் அவனுடைய புகைப்படம் ஒன்று இருந்தால் கொண்டு தரும்படி எனக்குச் சொல்லியிருந்தார். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் ஒன்று என்னிடம் இருந்தது. அதிலிருந்து அவனுடைய படத்தை மட்டும் தனியாக எடுக்கச் செய்து சட்டம் போட்டு எடுத்துக் கொண்டு போனேன். அப்போது அவர்களுடைய வீட்டில் தற்செயலாய்க் கேதாரியின் மனைவியைக் காண நேரிட்டது. அவளைப் பார்த்ததும் என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. அவளைக் “கிளி” என்று சொன்னேனல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்! கைலாசமய்யர் காபரா எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள் “அச்சமில்லை; அச்சமில்லை” என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டுக் கைலாசமய்யர் பயந்து கட்டிலிருந்து கிழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்! மற்றொரு சமயம், அவர் தமது மேஜையில் உட்கார்ந்து எழுதப் போனவர், திடீரென்று ‘பாம்பு’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்தார். எல்லாரும் கம்பும் கையுமாய் ஓடி வந்து ‘எங்கே பாம்பு?’ என்று கேட்டார்கள். “அதோ! மேஜை மேலே!” என்றார். மேஜைமேல் பாம்பைக் காணோம். அப்புறம் கிட்ட நெருங்கிப் பார்த்த போது, மேஜை மேல் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் ‘பாம்பு’ என்று எழுதி இருந்தது தெரிந்தது. இந்த வேலை செய்தது யார் என்று விசாரித்ததில் கைலாசமய்யருடைய ஏழு வயதுப் பையன் மணி விஷமத்துக்காக அப்படி எழுதி வைத்திருந்தான் என்று வெளியாயிற்று. பாம்பை அடிக்க வேலைக்காரன் கொண்டு வந்த தடியைக் கைலாசமய்யர் பிடுங்கிக் கொண்டு பையனை அடிக்கப் போனார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் ஜோஷனாரா பிகம் வந்து குறுக்கிட்டதால் பையன் பிழைத்தான்! ஜோஷனாரா பீகம் என்றதும், சில பேருக்குச் சுவாரஸ்யம் தட்டலாம். ஏதோ இந்தக் கதையில் நவாபுகளும் அவர்களுடைய அந்தப்புரத்து அழகிகளும் வரப் போகிறார்கள் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கைலாசமய்யருக்கு வடக்கத்தி ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அதிகப் பிரியம். “பயமில்லாமல் கேட்கக் கூடியது ஹிந்துஸ்தானி சங்கீதந்தான்” என்பார். ரேடியோவில் அவர் அடிக்கடி லக்னௌ ஜோஷனாரா பீகத்தின் சங்கீதத்தைக் கேட்பதுண்டு. ஆனால், வீட்டிலே மற்றவர்களுக்கு - முக்கியமாக அவருடைய மனைவிக்கு - ஜோஷனாரா பீகமும், அவளுடைய சங்கீதமும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. எனவே, அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு கறுப்புப் பூனைக்கு ‘ஜோஷனாரா பீகம்’ என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த ஜோஷனாரா பீகத்தைக் கண்டால் கைலாசமய்யருக்குக் குலை நடுக்கம்! அச்சமயம் அந்தப் பூனை வந்ததினால் தான் அவருடைய பையன் மண்டை உடையாமல் தப்பிப் பிழைத்தான். பட்ட காலிலே படும் என்பது போல், அவ்வளவு பயந்தவரான கைலாசமய்யருக்கு, அந்த மகா பயங்கரமான அநுபவம் ஏற்பட்டது. ஏற்கனவே தும்பைப் பூவைப் போல் நரைத்திருந்த அவருடைய தலை மயிர், அந்த ஒரு நாள் இரவில் ‘ஜாப்கோ’ மசியைப் போல் கறுத்து விட்டதென்றால், அந்த அநுபவம் எவ்வளவு பயங்கரமாயிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்! அவருடைய தலைமயிரைச் சுட்டிக் காட்டி “இது எப்படி நேர்ந்தது?” என்று நான் கேட்ட போது கைலாசமய்யர் முதலில் சிறிது நேரம் தலை முதல் கால் வரையில் நடுங்கினார். பிறகு கொஞ்ச நேரம் கால் முதல் தலை வரை நடுங்கினார். அவருக்கு நான் தைரியம் கூறிச் சமாதானப்படுத்தி ஒருவாறு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு தான் இது. கைலாசமய்யருடைய மனைவி, தம் தம்பியின் தலை தீபாவளிக்காக குடும்பத்துடன் ஊருக்குப் போக விரும்பினாள். கைலாசமய்யர், “உன் தம்பிக்கு தலை தீபாவளி என்றால் அவன் தலை எழுத்து; நமக்கு என்ன வந்தது?” என்று எவ்வளவோ சொல்லியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. இப்போதெல்லாம் சொர்க்கத்தில் இடம் கிடைத்தாலும் ரயிலில் கிடைக்காது என்பதைக் கைலாசமய்யர் நன்கு அறிந்தவராதலால் ஐந்தாறு நாள் முன்னாலேயே டிக்கெட் வாங்கி இடம் ரிஸர்வ் செய்திருந்தார். கிளம்ப வேண்டிய அன்றைக்குக் கொட்டு கொட்டு என்று மழை கொட்டியது. கைலாசமய்யர் “இன்றைக்குப் புறப்படுவது அவ்வளவு உசிதமல்ல, ரயில் பாதைகள் எப்படி இருக்குமோ, என்னமோ! மொத்தத்தில் கொஞ்ச காலமாகவே ரயில் பாதைகளுக்கு ஏழரை நாட்டுச் சனியன் பிடித்திருக்கிறது” என்றார். அவர் மனையாள், அதைக் கேட்காமல் “கட்டாயம் போகத்தான் வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தாள். கடைசியாகச் சாயங்காலம் அவர்கள் குழந்தை குட்டிகளுடன் காரில் ஏறிக் கொண்டு கிளம்பினார்கள். வழியில் மவுண்ட் ரோட்டில் கார் தண்ணீரில் நீந்த வேண்டியதாயிருந்தது. அப்போதெல்லாம் கைலாசமய்யர் “போனால் உயிர் தானே போகும்! அதற்கு மேலே போவதற்கு ஒன்றுமில்லையே?” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “அழகாயிருக்கிறது அபசகுனம் மாதிரிப் பேசறது” என்று முணுமுணுத்துக் கொண்டேயிருந்தாள் மிஸ்ஸஸ் கைலாசமய்யர். கடைசியில் எப்படியோ உயிரோடு எழும்பூர் போய்ச் சேர்ந்தார்கள். எழும்பூரிலே நல்ல சந்தோஷமான சமாசாரம் தெரிய வந்தது. அதாவது பல்லாவரத்து மலை, மழைக்குப் பயந்து இடம் பெயர்ந்து வந்து பல்லாவரம் ஸ்டேஷனுக்குள் தண்டாவளத்தில் உட்கார்ந்து கொண்டதென்றும், டி.டி.எஸ். முதலிய பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாம் வந்து எவ்வளவோ பிரார்த்தனை செய்தும் அது நகரவில்லை என்றும் தெரிய வந்தது. இன்னும் சிலர், மேற்படி தகவல் ஆதாரமற்றதென்றும் கோடம்பாக்கத்துக்கும் மாம்பலத்துக்கும் நடுவில் ஒரு ஐம்பதடி தண்டவாளத்தை மழை ஜலம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்றும் சொன்னார்கள். காரணம் எதுவானாலும் ரயில்கள் எழும்பூரிலிருந்து அன்று கிளம்பாதென்று நிச்சயம் தெரிந்தது. அதோடு எல்லா ரயில்களும் தாம்பரத்திலிருந்து கிளம்புகின்றன என்றும் தெரியவந்தது. அப்போதுதான் கைலாசமய்யரை அன்று தைரியப் பிசாசு பிடித்திருந்தது என்பது வெளியாயிற்று! “விடு காரை தாம்பரத்துக்கு!” என்றார் கைலாசமய்யர். அவருடைய சம்சாரம். “வேண்டாமே! பேசாமல் வீட்டுக்குப் போய்ச் சேர்வோமே” என்று ஆன மட்டும் முணுமுணுத்துப் பார்த்தாள். கைலாசமய்யரிடம் ஒன்றும் பயன்படவில்லை. அவர் “உயிர் தானே போகும்? அதற்கு மேல் ஒன்றுமில்லையே?” என்றும் “அந்த ராஸ்கல் ஜப்பான்காரன் வந்து குண்டு போட மாட்டேன் என்கிறானே?” என்றும், “குண்டு விழாவிட்டால் இடி விழுந்தாலும் போதும்” என்றும், “விழுகிற இடி இந்தக் காரின் தலையில் நேரே விழ வேண்டும்; அப்போது தெரியும் தம்பி தலை தீபாவளிக்குப் போகிற இலட்சணம்!” என்றும் - இம்மாதிரியெல்லாம் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனார். குழந்தைகள் “இன்றைக்கு அப்பாவுக்கு ஆவேசம் வந்திருக்கிறது” என்று அறிந்து, வாயை மூடிக் கொண்டு வந்தார்கள். மழை ஜலத்தை கிழித்துக் கொண்டு கார் தாம்பரத்தை நோக்கிப் போயிற்று. தாம்பரம் ஸ்டேஷனும் வந்தது. அதிக மழையினால் மின்சாரக் கோளாறு ஏற்பட்டிருந்தபடியால் ஸ்டேஷனில் விளக்குகள் இல்லை. ஒரே கும்மிருட்டு ஆனாலும் கைலாசமய்யர் பின் வாங்கவில்லை. அவருடைய கைநாடி மட்டும் நிமிஷத்துக்கு 350 தடவை வீதம் அடித்துக் கொண்டதே தவிர, மற்றபடி வெகு தைரியமாய்க் காரிலிருந்து இறங்கி மச்சுப்படி ஏறிப் போனார். பின்னால் மனைவி மக்கள் வருகிறார்களா, சாமான்கள் என்ன ஆகின்றன என்று கூடக் கவனிக்கவில்லை. எப்படியோ பிளாட்பாரத்தில் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். ரயிலும் தயாராக நின்று கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டிகள் காலியாகத்தான் இருந்தன. ஒரு வண்டியில் கைலாசமய்யரும் அவருடைய குடும்பத்தாரும் ஏறிக் கொண்டார்கள். வண்டிக்குள் ஒரே மௌனம்; வண்டிக்கு வெளியே கும்மிருட்டு. சற்று நேரத்துக்கெல்லாம் அவருடைய மனையாள் “இன்றைக்கு ரயிலே காலி போலிருக்கே! கூட்டமே இல்லையே” என்று சொல்லி மௌனத்தைக் கலைத்தாள். கைலாசமய்யர் உடனே “ஆமாம், ஆமாம்; அதனாலென்ன? வண்டியிலே தனியாய்ப் போனால் கொலைகாரனா வந்து விடப் போகிறான்! யாரையோ, எப்பவோ ஒரு நாளைக்கு ரயிலுக்குள்ளே கொலை செய்து விட்டால், அதற்காக எப்போதும் அதே ஞாபகமா?” என்று ‘டோ ஸ்’ கொடுக்க ஆரம்பித்தார். “போதுமே, பேசாம இருங்களேன். குழந்தைகள் பயப்படப் போகிறது!” என்றாள் மிஸ்ஸஸ் கைலாசமய்யர். அப்பாவுக்குக் கோபம் என்று தெரிந்த குழந்தைகள் ரயில் ஓரமாய்ப் போய் வாயைத் திறக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தன. வண்டி நகரத் தொடங்கியது. அதே சமயத்தில் அந்தத் தடுக்க முடியாத சம்பவம் நடந்து விட்டது. அலங்கோலமாக ஒரு மனிதர் அவர்களுடைய வண்டியருகில் வந்து, “கதவைத் திறவுங்கள்! அவசரம்!” என்று கதறிக் கொண்டே ரயிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். ரயிலின் வேகமோ அதிகமாயிற்று. கைலாசமய்யருக்கு மனத்தில், “நல்லவேளை. ஒரு துணை கிடைத்தது” என்ற எண்ணம் பளிச்சென்று எழுந்தது. தட்டுத் தடுமாறிக் கதவைத் திறந்தார். வந்த மனுஷர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து உள்ளே வந்து கைலாசமய்யருக்கு எதிர் ஆசனத்தில் தொப்பென்று விழுந்தார். அதே பெஞ்சின் ஓரத்தில் இருந்த மிஸ்ஸஸ் கைலாசமய்யர், சற்று அவசரமாகவே எழுந்திருந்து இன்னொரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஆம்; அந்தப் புதிய மனிதரின் தோற்றம் யாரையும் அவசரமாக எழுந்திருக்கச் செய்வதாகத்தானிருந்தது. ரயில் அச்சமயம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க் கொண்டிராவிட்டால், கைலாசமய்யர் மூட்டை முடிச்சுகள், மனைவி, மக்களுடன் அந்த வண்டியிலிருந்தே கிழே குதித்திருப்பார். அந்த மனிதரின் கிராப்புத் தலை எண்ணெய் கண்டு ஒரு யுகம் ஆகியிருக்கும். அந்த மாதிரி ரோமங்கள் குத்திட்டு நின்றன. கண்கள் செக்கச் செவேலென்று சிவந்து திறுதிறுவென்று விழித்தன. மேல் கோட்டு நனைந்திருந்தது. உள் ஷர்ட் கிழிந்திருந்தது. இரண்டிலும் பொத்தானகள் கழன்று போயிருந்தன. மூக்குக் கண்ணாடி ஒரு காதில் மட்டும் மாட்டிக் கொண்டு தொங்கிற்று. இத்தனை அலங்கோலத்திலும் அந்த மனுஷருடைய வாய் மட்டும் வெற்றிலை பாக்குப் புகையிலையை விடாமல் அரைத்துக் கொண்டிருந்தது. அந்த அவசரக்காரர் தம்முடைய நனைந்த கோட்டைக் கழற்றினார். கழற்றும் போது அதிலிருந்து சாமான்கள் பொலபொலவென்று விழுந்தன. அப்படி விழுந்த சாமான்களில் ஒரு பெரிய பேனா கத்தியும் கிடந்தது. “அட சனியனே!” என்று அந்த மனிதர் கிழே குனிந்து அந்தச் சாமான்களைத் திரட்டி எடுத்தார். மணிப்பர்ஸ், பேனா முதலியவைகளைப் பெஞ்சில் வைத்து விடுக் கத்தியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார். கைலாசமய்யரைப் பார்த்துக் கேட்டார். “ஏன் ஸார்! இந்த மாதிரி சின்னப் பேனாக் கத்தியினாலேயே ஒரு மனுஷனைக் கொன்று விடலாம் என்று சொல்கிறார்களே? அது முடியுமா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்றார். கைலாசமய்யருக்கு அப்போது தாம் ஓர் ஆகாச விமானத்திலிருப்பது போலவும், அந்த விமானம் தலைகீழாகக் கீழே அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போலவும் தோன்றிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக, அவருடைய பத்தினி அந்தப் பிரமையைக் கலைத்தாள். “ஏன்னா? அடுத்த ரயில்வே ஸ்டேஷன் எப்போது வரும்?” என்றாள். அதற்குக் கைலாசமய்யர், “சற்று வாயை மூடிண்டு இருக்க மாட்டாயா?” என்று வள்ளென்று விழுந்தார். பிறகு எதிரில் உள்ள மனுஷரைப் பார்க்க இஷ்டமில்லாமல் தாம் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு முயற்சி செய்தாரே தவிர, படிக்க முடியவில்லை. பத்திரிகை இங்கிலீஷ் பத்திரிகைதான். ஆனால் அச்சமயம் அதிலிருந்த எழுத்துக்கள் கிரீக் பாஷையோ லாடின் பாஷையோ என்று தெரியாதபடி கைலாசமய்யர் கண்ணுக்கு ஒரே குழப்பமாயிருந்தன. ஆனால், எதிரிலிருந்த மனுஷரின் கண்கள் மட்டும் வெகு துல்லியமாயிருந்தது போல் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தபடியே கைலாசமய்யர் கையிலிருந்த பத்திரிகையின் பின்புறத்தைப் படிக்கத் தொடங்கினார். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் “ஹா!” என்று சொல்லி பத்திரிகையைத் தாமும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு படித்தார். இலேசாகக் கைலாசமய்யர் கையிலிருந்து எடுத்துக் கொண்டு உற்றுப் பார்த்துப் படித்தார். “ஹா!ஹா!ஹா!” என்றார். கைலாசமய்யரால் வாயைத் திறந்து ஒரு ‘ஹா!’ கூட சொல்ல முடியவில்லை. வந்த மனுஷர், “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது” என்று பளிச்சென்று கைலாசமய்யர் பதில் சொன்னார். “தெரியாதா? என் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்றார் அந்த மனிதர். “சத்தியமாய் இல்லை” என்று கைலாசமய்யர் அழுத்தமாய்க் கூறினார். “ரொம்ப வந்தனம். இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?” என்று வந்த மனிதர் பத்திரிகையில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். கைலாசமய்யர் அந்த இடத்தைப் பார்த்தார். அது மரணச் செய்திகள் போடும் இடம். பின்வரும் செய்தி அங்கே காணப்பட்டது. “ஒரு நிருபர் எழுதுகிறார்: பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளரும், ‘பிரகஸ்பதி சுப்பன்’ என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவருமான ஸ்ரீ பிரணதார்த்தி ஹரன் இன்று காலை மரணமடைந்த செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூரில் அவருடைய சொந்த ஜாகையில் திடீரென்று உயிர் போன காரணத்தினால் அவருடைய வருந்தத்தக்க மரணம் நேரிட்டது. அவருடைய அந்திம ஊர்வலத்துக்குக் கணக்கற்ற ஜனங்கள் - சுமார் ஒன்பது பேர் இருக்கலாம் - வந்து கௌரவித்ததிலிருந்து, இந்த எழுத்தாளர் தமிழ் வாசகர்களின் உள்ளத்தில் எவ்வளவு மகத்தான இடத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஊகிக்கலாம். அவருடைய அருமையான ஆத்மா சாந்தி அடைவதாக!” கைலாசமய்யருக்குப் ‘பிரகஸ்பதிச் சுப்பன்’ என்று எங்கேயோ, எப்போதோ, கேட்டிருப்பதுபோல ஞாபகம் வந்தது. நல்ல வேளையாகப் பேசுவதற்கு வாகாய் ஒரு விஷயம் அகப்பட்டதென்று உற்சாகமடைந்தவராய், “அடடா! நம்ம பிரஹஸ்பதிச் சுப்பனா இறந்து போனார்? எனக்குத் தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் நான் கூட மழையைப் பார்க்காமல் அவருடைய ஊர்வலத்துக்குப் போயிருப்பேனே?” என்றார். அவசரக்காரர் இன்னும் சில தடவை ‘ஹா, ஹா’ காரம் செய்துவிட்டு, மேற்படி பத்திரிகைச் செய்தியை மீண்டும் சுட்டிக் காட்டி, “இது சாதாரணச் சாவு இல்லை ஸார்! சாதாரணச் சாவில்லை. இது கொலை!” என்றார். “என்ன?” என்று கைலாசமய்யர் கத்திய போது ரயிலையே தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது. “ஆமாம்; நான் சொல்கிறதை நம்புங்கள், இது கொலை!” கைலாசமய்யர் அப்போது தாம் பயப்படுவதாகக் காட்டிக் கொண்டால் காரியம் மிஞ்சிவிடும் என்பதை அறிந்தார். எனவே, தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “கொலையாவது, கொத்தவரங்காயாவது? உமக்கு எப்படி ஐயா தெரியும்?” என்று கேட்டார். “ஆகா! அப்படிக் கேளுங்கள்; கேட்டால்தானே சொல்லலாம்? இது கொலைதான். சாதாரண மரணமில்லை என்பதை நிரூபிக்கிறேன். ரொம்ப ரொம்ப ஆச்சரியமான கதை. தூங்காமல் மட்டும் கேட்க வேண்டும்” என்றார். அந்தச் சமயம் கைலாசமய்யர் குழந்தைகள் இருவரும் அவரிடம் வந்து “கதை சொல்லுங்கள் மாமா! நாங்கள் கேட்கிறோம்” என்றன. கைலாசமய்யர் கண் விழி பெயரும்படியாக அக்குழந்தைகளை உற்றுப் பார்த்தார். ஆனால் குழந்தைகள் அவரைப் பார்க்கவேயில்லை. அவசரக்காரர் குழந்தைகளை விழித்துப் பார்த்து “பயங்கரமான கதை; நீங்கள் பயப்படுவீர்கள்!” என்றார். “நாங்கள் பயப்பட மாட்டோம், மாமா! எங்களுக்குப் பயமே கிடையாது. அப்பாதான் பயப்படுவா!” என்றான் போக்கிரி மணி. “அடே என் கண்மணிகளா! அப்படியானால் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த மனிதர் கதையை ஆரம்பித்தார். "ஆயிரம், பதினாயிரம், லட்சம், முந்நூறு லட்சம் வருஷங்களுக்கு முன்னால் போங்கள். அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. உலகமெல்லாம் காடும், மலையும், தண்ணீருமாய் இருந்தன. பெரிய பெரிய மிருகங்கள், விநோதமான மிருகங்கள் அக்காடுகளில் ஊர்ந்து திரிந்தன. அந்த மிருகங்களுக்கு நீண்ட வாலும், குட்டைச் சிறகுகளும் உண்டு. அவை வாலினால் பறக்கும்; சிறகுகளினால் நடக்கும். இந்த மிருகங்களில் ஒன்றுக்கு ரொமாண்ட மல்லன் என்று பெயர். இன்னொன்றுக்கு பிரமாண்டமல்லன் என்று பெயர். ஒரு நாளைக்கு ரொமாண்டமல்லன், பிரம்மாண்டமல்லனைப் பார்த்து, ‘உன் வாலைக் காட்டிலும் என் வால் தான் நீளம்’ என்றது. ‘இல்லை உன் வால் தான் குட்டை!’ என்றது பிரம்மாண்டமல்லன். உடனே இரண்டுக்கும் பயங்கரமான போர் மூண்டது. வாலினால் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு, முந்நூறு வருஷம் அவை சண்டை போட்டன. போட்டும் ஜயம் தோல்வி ஏற்படவில்லை. அப்போது ரொமாண்டமல்லன், இனிமேல் என்னால் சாப்பிடாமல் சண்டை போட முடியாது; “இதோ பிராணனை விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பிராணனை விட்டது. பிரமாண்டமல்லன், “நானும் இதோ பிராணனை விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு பிராணனை விடப் பார்த்த போது, தன்னுடைய பிராணன் ஏற்கனவே போய்விட்டதென்பதைப் பார்த்து அதிசயித்தது. தெரிந்ததா, குழந்தைகளே! அப்புறம் இரண்டு லட்சம் வருஷத்தைத் தள்ளுங்கள்!" “தள்ளிவிட்டோம்!” என்றான் போக்கிரி மணி. “எங்களுக்குப் பயமாகவே இல்லை!” என்றாள் ஸரோஜா. அவசரக்காரர் மேலும் சொன்ன கதை விசித்திரமாயும் பயங்கரமாயும் இருந்தது. அந்த இரண்டு பழங்கால மிருகங்களும் வெகு காலத்துக்குப் பிறகு ஒன்று கிஷ்கிந்தா புரியில் வானரமாகவும், இன்னொன்று இலங்கையில் ராட்சதனாகவும் பிறந்தனவாம். இராவண சம்ஹாரம் ஆகி, சீதையை இராமன் சேர்த்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் எல்லாரும் கிளம்பும் வரையில் மேற்படி வானரமும் ராட்சதனும் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். இதைப் பார்த்த அனுமார் இரண்டு பேரையும் பிடித்துத் தலைக்கு நாலு குட்டுக் குட்ட வானரமும் ராட்சதனும் அவமானப்பட்டு ஓடி, அனுமான் கொண்டு வந்திருந்த சஞ்சீவி மலையில் தடுக்கி விழுந்து செத்துப் போனார்களாம். அப்புறம் பல்லாயிரம் வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் மகாபாரதக் காலத்தில் பூமியிலே பிறந்தார்கள். குருக்ஷேத்திரத்தில் ஒருவன் பாண்டவர் சைன்னியத்தில் இருந்தான். இன்னொருவன் துரியோதனன் கட்சியில் இருந்தான். அவர்கள் அந்தப் பெரும் போரில் மாண்ட விதம் மகா விசித்திரமானது. தென்னாட்டிலிருந்து மதுரைப் பாண்டியன் சாப்பாடு கொண்டு வந்து குருக்ஷேத்திர யுத்த களத்தில் இரண்டு கட்சி வீரர்களுக்கும் சோறு போட்டானல்லவா? அந்தச் சாப்பாட்டைப் போட்டி போட்டுக் கொண்டு அளவுக்கு மீறிச் சாப்பிட்டு வயிறு வெடித்து அவர்கள் இறந்து போனார்களாம்! பிறகு, அந்த மகாவீரர்கள் நாநூறு வருஷத்துக்கு முன்பு வீர இராஜபுத்திர நாட்டில் பிறந்தார்களாம். பிறந்து பேசத் தெரிந்ததும் முதல் காரியமாக அவர்கள் ஒருவரையொருவர் கொன்று விடுவதாகச் சபதம் செய்து கொண்டார்களாம்! சபதத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சீக்கிரத்திலே சமயம் கிடைத்தது. ஓர் இராஜபுத்திரப் பெண் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் ஒரு செய்தி சொல்லியனுப்பினாள். தன்னை ஒரு பாதுஷா பலாத்காரமாய் அபகரித்துச் சென்று அந்தப்புரத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்து அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாள். உடனே மேற்படி இரண்டு ராஜகுமாரர்களும் அந்த இராஜகுமாரியை யார் காப்பாற்றுவது என்று தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். அந்தச் சண்டையில் ஒருவன் தன்னுடைய தலை முண்டாசில் கத்தி பாய்ந்ததின் பலனாக இறந்து போனான். இன்னொருவன் மேற்படி இராஜகுமாரியைப் பாதுஷாவின் அந்தப் புரத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து, அன்றிரவே அவள் கொடுத்த விஷத்தைக் குடித்து விட்டு இறந்து போனான். இன்னும் மேற்கண்ட விதமாகப் பல ஜன்மங்களில் போராடிய பிறகு, அவர்கள் கடைசியாக இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அவதரித்தார்கள். இவர்கள் குழந்தைகளாயிருந்த போதே மசியைக் கொட்டி மெழுகுவதும், பேனாவை விழுங்குவதுமாயிருந்ததைப் பார்த்தவர்கள் எல்லாம், “வருங்காலத்தில் இவர்கள் சிறந்த எழுத்தாளர் ஆகி, உலகத்தையே ஒரு கலக்கு கலக்கப் போகிறார்கள்” என்று சொல்லி விட்டுக் கண்ணீர் விடுவதுண்டு! அவர்கள் பயந்தபடியே வாஸ்தவத்தில் நடந்தது. ‘பிரகஸ்பதி சுப்பன்’, ‘அதிர்வெடிக் குப்பன்’ என்னும் புனைப் பெயர்கள் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உலகப் பிரசித்தி அடைந்து வந்தன! இவர்கள் பத்திரிகை நடத்தாத போது புத்தகம் எழுதுவார்கள். புத்தகம் எழுதாதபோது பத்திரிகை நடத்துவார்கள். ‘பிரகஸ்பதி சுப்பன்’ பத்திரிகை நடத்தும் போது ‘அதிர்வெடிக் குப்பன்’ எழுதிய புத்தகங்களையெல்லாம் எழுத்தெழுத்தாகப் பிய்த்து எறிந்து விடுவார். ‘அதிர்வெடிக் குப்பன்’ பத்திரிகை நடத்தும் சமயத்தில் ’பிரகஸ்பதி சுப்ப’னின் புத்தகங்களையெல்லாம் கடித்துத் தின்று உமிழ்ந்து விடுவார். இவ்விதமாக அவர்களுடைய ஆங்காரம் முற்றிக் கொண்டே வந்தது. கடைசியாக நேற்றைய தினம் ’பிரகஸ்பதி சுப்ப’னுக்கு ’அதிர்வெடிக் குப்ப’னிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்து “ஜாக்கிரதை! நாளைய தினம் உன்னை நான் உன்னுடைய ஆயுதத்தினாலேயே கொல்லப் போகிறேன். ஓடித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் விடமாட்டேன்” என்று எழுதியிருந்தது. அவசரக்கார மனிதர் மேற்படி கட்டத்திற்கு வருவதற்குள், அவர் கூறிய கதையின் பயங்கர சுவாரஸ்யத்தில் மதிமயங்கிக் கைலாசமய்யரின் குழந்தைகளும் மனைவியும் தூங்கிப் போய்விட்டார்கள். கைலாசமய்யர் மட்டும் தூங்காமல் அடங்காத ஆவலுடன் சொல்ல முடியாத பயத்துடனும் கதையைக் கேட்டு வந்தார். “அப்புறம் என்ன ஆச்சு? கடிதப்படி நடந்ததா!” என்று கேட்டார். “ஆமாம், நடந்தது. கடிதத்தைப் பெற்றவர் தப்பித்து ஓடிவிடலாமென்று பார்த்தார்; முடியவில்லை. கடைசியில், கடிதம் எழுதியவர் அவரைக் கொன்றே தீர்த்தார்.” “ஐயோ, அப்படியானால்….?” என்று கைலாசமய்யர் பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக் காட்டினார். “ஆம்? ‘பிரகஸ்பதி சுப்பன்’ என்னும் பிரணதார்த்தி ஹரன் தான் கொல்லப்பட்டு இறந்தவர்.” “ஆ!” என்றார் கைலாசமய்யர். அவருக்கு எல்லா விஷயமும் புரிந்து விட்டது. இந்த மனுஷன் தான் பிரணதார்த்தி ஹரனைக் கொன்று விட்டு வந்திருப்பவன். இவனுடைய அவசரத்துக்கும் படபடப்புக்கும் காரணம் அதுதான். இவனுடைய மூளை குழம்பிப் போய் ஏதேதோ பயங்கரமான கதை சொல்வதின் காரணமும் அதுதான். கைலாசமய்யருக்குத் திடீரென்று ஒரு அசட்டுத் தைரியம் பிறந்தது. இந்தக் கொலைகாரனைப் பிடித்து ஏன் போலீஸாரிடம் ஒப்புவிக்கக் கூடாது? - நல்லவேளை; செங்கற்பட்டு ஸ்டேஷன் இதோ வரப் போகிறது. வண்டி நின்றதும் போலீஸ்காரனைக் கூப்பிட வேண்டியதுதான். அது வரையில் இவனுடன் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டு வரவேண்டும். “இவ்வளவெல்லாம் சொல்கிறீரே! உமக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது?” என்று கைலாசமய்யர் கேட்டார். “எப்படித் தெரிந்ததா? ஹாஹாஹா எனக்குத் தெரியாமல் வேற யாருக்குத் தெரியும்? நான் தானே…!” “நீர்தானே…?” “நான் யார் என்று இன்னுமா தெரியவில்லை?” “தெரியாமலென்ன? பேஷாத் தெரியும். நீதான் அதிர்வெடிக் குப்பன். நீதான் கொலைகாரன். உன்னை இதோ…” “இல்லை ஐயா! இல்லை. நான் கொலைகாரன் இல்லை!” என்று அவன் கூறிக் கொண்டே மேற்படி பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக் காட்டினான். “இதோ போட்டிருக்கிறதே, ‘பிரகஸ்பதிச் சுப்பன்’ என்னும் பிரணதார்த்தி ஹரன் காலமானார் என்று - அந்த சாக்ஷாத் பிரணதார்த்தி ஹரன் நான் தான்!” என்றான். கைலாசமய்யரைத் தூக்கிப் போட்ட போட்டில் மேலே எழும்பிய மனுஷர் கீழே வருவதற்குள் வண்டி செங்கற்பட்டு ஸ்டேஷனில் வந்து நின்றது. வண்டி நின்றதும் நிற்காததுமாய்க் கதவைத் திறந்து கொண்டு, அந்த மனுஷன் பளிச்சென்று கீழே குதித்தான். அடுத்த கணத்தில் அவன் மாயமாய் மறைந்து போனான். கைலாசமய்யர் படக்கென்று கதவைச் சாத்தி இறுக்கித் தாழ்ப்பாள் போட்டார். அந்தச் சத்தத்தில் அவர் மனையாள் விழித்தெழுந்து, “என்ன? என்ன?” என்று கேட்டாள். “ஒன்றுமில்லை; பிரகஸ்பதி சுப்பன் என்ற பிரணதார்த்தி ஹரனின் பிசாசு!” என்றார் கைலாசமய்யர். மேற்கூறிய வரலாற்றையெல்லாம் சொல்லிவிட்டு கைலாசமய்யர், “ஏற்கனவே நான் பயந்த மனுஷன் என்று தான் உமக்குத் தெரியுமே? இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேட்க வேண்டுமா? அன்று முதல் எனக்கு இராத் தூக்கம் கிடையாது. கண்ணை மூடினால் ரயில் பிரயாணம் செய்வது போலும், பிசாசு வருவது போலும் கதை சொல்வது போலும் சொப்பணம், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்டார். “எதைப் பற்றி?” என்றேன். “பிரணதார்த்தி ஹரன் சாதாரண மரணமடைந்தாரா? கொலையுண்டு செத்தாரா?” “நீர் அப்புறம் பத்திரிகை படிக்கவில்லையா, என்ன?” “பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது. தொடவே இல்லை” என்றார் கைலாசமய்யர். “மறுநாள் பத்திரிகையிலேயே ‘பிரணதார்த்தி ஹரன் மரணமடையவில்லை; ஆகையால் பிரேத ஊர்வலமும் நடக்கவில்லை!’ என்று திருத்தம் வெளியாகியிருந்ததே!” “அப்படியா? ஓ ஹோ ஹோ! நானல்லவா ஏமாந்து போயிருக்கிறேன்? - அப்படியானால் அன்று என்னைக் காபராப்படுத்திய மனுஷன் தான் யார்?” “சாஷாத் பிரணதார்த்தி ஹரன் தான்!” “அடே அப்பா! ஒரே புளுகாய்ப் புளுகினானே? எழுத்தாளி என்றாலே எல்லாரும் இப்படித்தான் புளுகுவார்களோ?” “அவர் சொன்னதில் கொஞ்சம் நிஜமும் உண்டு. அவருடைய எதிரி அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்திக் கடிதம் எழுதியது உண்மை. அதை அவன் நிறைவேற்றியும் விட்டான்!” “நிறைவேற்றி விட்டானா? அதெப்படி ஐயா! மூளை குழம்புகிறதே!” “பிரணதார்த்தியின் ஆயுதத்தினாலேயே அவரைக் கொல்வதாக அவனுடைய எதிரி சொன்னானல்லவா? பிரணதார்த்தியின் ஆயுதம் என்ன? பேனா! அந்தப் பேனாவைக் கொண்டுதான் அவனைக் கொன்றான்!” “கொன்றானா?” “ஆமாம்; பிரணதார்த்தி ஹரன் காலமானதாகப் பத்திரிகைகளுக்கு எழுதி விட்டானல்லவா? இது பேனாவினால் கொன்றதுதானே?” கைலாசமய்யருக்கு அவரையறியாமல் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. விழுந்து விழுந்து சிரித்தார். இடையிடையே ‘அதிர்வேட்டுச் சுப்பன் நல்ல அதிர்வெடி போட்டானையா?’ என்று சொல்லிக் கொண்டு சிரித்தார். “அந்தப் பிரகஸ்பதிக்கு நன்றாய் வேண்டும்! என்னை காபராப் படுத்தினானோ, இல்லையோ?” என்றும் இடையிடையே சொல்லிக் கொண்டார். கைலாசமய்யர் அவ்விதம் சிரித்த போது, அவர் தலைக்கு மேலே ஓர் அதிசயம் நடந்து கொண்டிருந்தது. பயங்கரப் பிரயாண இரவில், ‘ஜாப்கே’ மசியைப் போல் கறுத்த அவருடைய தலைமயிரானது என் கண்ணெதிரே மளமளவென்று ‘ரோம வர்த்தினி’ தடவிய கூந்தலைப் போல வெளுத்து வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டது! “கைலாசமய்யர்வாள்! இந்த வருஷம் நடந்தது உங்கள் மைத்துனன் தலை தீபாவளி அல்ல; உங்களுடைய தலை தீபாவளிதான்!” என்றேன். சுபத்திரையின் சகோதரன் முன்னுரை ஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறோம். வேறெது எப்படியானாலென்ன? பாவம் சுபத்திரை அனாதை. எனக்கும் தற்போது அவளைத் தவிர யாருமில்லை. அவளைக் கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனது உற்றார் உறவினர் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். என் தந்தைக்கு என்னிடமுள்ள அன்பு மாறவில்லையென்பது உண்மையே. அடிக்கடி கடிதங்களும் எழுதி வருகிறார். ஆனால் நானும் சுபத்திரையும் அவர் வீட்டுக்கு வருவது மட்டும் கூடாதாம். ஒரு காலத்தில் ஆசார சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து உபந்யாசங்களும் செய்து வந்த அவர் இம்மாதிரி நடந்து கொள்வது, முதலில் எனக்கு வினோதமாகவேயிருந்தது. ஆனால், இப்போது அவர் மீது நான் குறை கூறவில்லை, அவரென்ன செய்வார்? விவாகமாகாத தங்கைகள் இருவர் எனக்கிருக்கின்றனர். மேலும் வீட்டில் இப்போது எஜமாட்டி அவரது இரண்டாவது மனைவி. என் தாயார் காலஞ் சென்று பல வருஷங்களாகின்றன. நானும் சுபத்திரையும் அன்பு மயமான வாழ்க்கை நடத்துகிறோம். இப்புவியில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. உலகமெல்லாம் எங்களைப் பகைத்தாலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் இப்போது வசிப்பது ஆந்திர நாட்டின் நடுவிலுள்ள ஒரு பட்டணம். இங்கே தமிழர்கள் மிகச் சிலரே வசிக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் வரலாறு தெரியாது. என் மனைவியைச் சுட்டிக்காட்டிப் பேசுவோர் யாரும் இங்கில்லை. எனவே எங்கள் வாழ்க்கையின் இன்பத்துக்கு இடையூறு எதுவுமில்லையல்லவா? ஆனால், நீங்கள் பொறாமைப்படவேண்டாம். எத்துணை கொடிய துன்பங்களுக்குப் பின்னர், நாங்கள் இந்த இன்ப வாழ்வை எய்தியிருக்கிறோமென்பதை அறிந்தால் நீங்கள் நடுநடுங்கிப் போவீர்கள். பெரும் புயலினால் பயங்கரமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலானது புயல் நின்றதும் அமைதியடைந்திருக்கும் நிலையை உங்கள் மனோபாவத்தினால் உருவகப் படுத்த முடியுமா? ஆம் எங்கள் வாழ்வில் இப்போது அத்தகைய அமைதியே ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வாழ்க்கை இன்பமயமாயிருக்கிறது என்று மேலே சொன்னேனல்லவா? அது முற்றிலும் சரியன்று. இடையிடையே பழைய நினைவுகள் தோன்றும் போது - அப்பப்பா! எங்கள் உணர்ச்சிகளை விவரித்தல் இயலாத காரியம். அத்தகைய சமயங்களில் நாங்கள் அலமாரியில் வைத்துப் பூசை செய்யும் இராஜகோபாலன் படத்துக்கருகில் சென்று மௌனமாய்க் கண்ணீர் விடுகிறோம். இராஜகோபாலன் மனித உடலில் தங்கியிருந்தபோது, சுபத்திரையின் சகோதரனாயும், என் அரிய நண்பனாயும் இருந்தான். இப்போது எங்கள் குலதெய்வமாய் விளங்குகிறான். என் மனைவிக்கீடான பெண் இவ்வுலகில் ஒருத்தியுமில்லை என்பது என் எண்ணம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பற்றி அப்படித்தான் சொல்வான் எனக் கூறுவீர்கள். உண்மையே. ஆனால், அவளைப் போல் இவ் இளம் வயதில் இவ்வளவு துக்கங்களுக்கு ஆளானவர்கள் யாருமிரார் என்பது திண்ணம். அவள் குணத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இவ்வரலாற்றை எழுதி முடித்ததும் அவளிடம் கொடுத்து ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் செய்வதற்கு உரிமையளித்தேன். அவள் என்ன திருத்தங்கள் செய்தாள் என்று நினைக்கிறீர்கள்? அவளுடைய அழகைப் பற்றியோ குணாதிசயங்களைப் பற்றியோ கூறியிருந்த அந்தப் பகுதிகளையெல்லாம் அடித்து விட்டாள். பின்னர் கதைக்கு இன்றியமையாத சில இடங்களிலேனும் அவற்றை விட்டு வைக்கும்படி நான் அவளைக் கெஞ்ச வேண்டியதாயிற்று. ஆனால் சுபத்திரையைப் பற்றியாவது, என்னைப் பற்றியாவது, எங்கள் இல்வாழ்க்கையைப் பற்றியாவது நான் இங்கு விவரிக்கப் புகுந்தேனில்லை. வீர புருஷனும் என் ஆருயிர்த் தோழனுமான சுபத்திரையின் சகோதரனுடைய சரித்திரத்தைக் கூறவே வந்தேன். ஸ்ரீராம சரிதம் பாண்டவ சரிதம் அரிச்சந்திரன் கதை முதலியவற்றைப் போல் இராஜ கோபாலனின் சரித்திரமும் போற்றப்பட வேண்டுமென்பது என் எண்ணம். இதென்ன அநீதி? ஒரு கொலைஞனுடைய வரலாற்றை இராம சரித்திரத்துடனும் அரிச்சந்திரன் கதையுடனும் ஒப்பிடுவதா என்று நீங்கள் திடுக்கிட்டு வினவலாம். நியாயந்தான். ஆனால் என் நண்பன் செய்த கொலையினால் அவனைப் பாவம் ஏதேனும் சார்ந்ததாயின் அதற்கு தகுந்த பிராயச் சித்தம் அவன் செய்து கொண்டுவிட்டான் என்பதே என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் மாறுபடலாம்; ஆனால் அவனுடைய வரலாற்றைப் படிக்கும் உங்களில் எவரும் மனம் உருகாமலிருக்க மாட்டீர்கள் என்பதில் எள்ளலவும் எனக்கு ஐயமில்லை. கதையின் ஆரம்பமே நன்றாயில்லையே? முடிவு முன்னுரையிலேயே வந்துவிடுகிறது. “இதற்குள் முன்னுக்குப் பின் முரண் வேறு” என்று நீங்கள் எண்ணலாம். ஆம், வினை கதைக்கு உண்மை வரலாற்றுக்கும் உள்ள வேற்றுமை அதுதான். கதையென்றால் அமைப்பு ஒழுங்காகவே இருக்கும் நிகழ்ச்சிகள் முன்னுக்குப் பின் முரண் இன்றி ஒன்றன்பின் ஒன்றாய் வரும், ஆனால் வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியுமா? மேலும் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தாலே என் மனம் குழம்பி விடுகிறது. எனவே இச் சரித்திரத்திலுள்ள குறைகளுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல குறைகள் நிகழ்வதாயினும் சரியே. இவ்வரலாற்றை எழுதி வெளியிடுவது என் ஆருயிர் நண்பனுக்கும் இவ்வுலகுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை என்னும் உறுதியினாலேயே இதை எழுதலானேன். கடற்கரைப் பேச்சு இக்கதையின் முக்கியமான நிகழ்ச்சிகள் 1924-ம் ஆண்டில் ஆரம்பமாகின்றன. ஆனால், அவற்றைத் தொடங்குவதற்கு முன் என் குடும்ப நிலைமையைப் பற்றியும், எனக்கு இராஜகோபாலனுடன் நட்பு ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறிவிட வேண்டுவது அவசியம். என் தந்தை ஸ்ரீமான் சுந்தரமையர் மைலாப்பூரில் ஒரு வக்கீல். இப்போதுகூட அவருக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வருமானங் கிடைத்து வருமென நினைக்கிறேன். அப்போது இன்னும் அதிகமாகவே கிடைத்து வந்தது. 1917-18 வரை அவர் அரசியல் துறையில் ஆசார சீர்த்திருத்த இயக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அரசியல் கிளர்ச்சி கொஞ்சம் ஆபத்துக்கிடமான விஷயமாகப் போய்விடவே, அவர் சிறிது சிறிதாக பொது வாழ்விலிருந்து விலகி விட்டார். மேலும், அவரது இரண்டாம் மனைவியின் மூலமாகக் குடும்பம் பெருத்துவிட்டது. எனக்கு இப்போது நான்கு தம்பிகளும், இரண்டு தங்கைகளும் இருக்கிறார்களென்றால் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. இத்தனைக்கும் என் தாயார் இறந்து 12 வருஷங்கள்தான் ஆகின்றன. இப்போது எனக்குத் தெரிந்த வரை, பணஞ் சேர்ப்பது, குடும்ப நலத்தைக் கவனிப்பது இவற்றைத் தவிர, என் தந்தைக்கு வேறெவ்விஷயத்திலும் சிரத்தையிருப்பதாகத் தெரியவில்லை. இனி, இராஜகோபாலனைப் பற்றிச் சொல்கிறேன். அவனுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட விதம் மிக வினோதமானது. இன்றைக்கு ஐந்நுறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டு மாடியின் முகப்பில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் அப்போது ஹோட்டல் இருந்தது. அதன் மாடியின் மீதிருந்த அறைகளில் மாணாக்கர் சிலர் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் அந்த மாடியின் முகப்புக்கு வந்து பாடத் தொடங்கினார். அவருடைய இனிய குரல் என் மனதைக் கவர்ந்தது. அதிலும் அவர் பாடியது பாரதியின் பாட்டு. பாரதி பாட்டென்றால் எனக்கு ஏற்கெனவே பித்து உண்டு; ஆதலின், அவர் பாடி முடிந்ததும், ‘தயவு செய்து இன்னொன்று பாடுங்கள்’ என்று ஆங்கிலத்தில் மரியாதையுடனும் சங்கோசத்துடனும் கேட்டுக் கொண்டேன். அவர் புன்னகை செய்து, “ஓ! ஆகட்டும்” என்றார். உடனே ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா’ என்ற கண்ணன் பாட்டை பாடத் தொடங்கினார். அவர் பாட்டுக்கு நான் அடிமையானேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமாயிற்று. அந்தோ! அந்நட்பின் பயன் இவ்வாறு முடியும் என்று அப்போது நான் கனவிலேனும் கருதியதுண்டா? அவ்வாறு பாரதியின் பாட்டினால் என் சிந்தையைக் கவர்ந்த இளைஞர் வைத்தியகலாசாலையில் முதல் ஆண்டு மாணாக்கரென்றும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரென்றும் அறிந்து கொண்டேன். நாள் ஆக ஆக எங்கள் நட்பும் வளருவதாயிற்று. அப்போது நான், இண்டர் மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் கலாசாலை விட்டதும், இருவரும் நேரே கடற்கரைக்கு வந்து சந்திப்பது என்று ஏற்படுத்திக் கொண்டோம். நாங்களிருவரும் கடற்கரையோரத்தில் மணலின் மேல் துணியை விரித்துப் படுத்துக் கொண்டு, உலக நினைவுகளை அடியோடு மறந்தவர்களாய் அளவாளாவிப் பேசிக் கொண்டும், பாரதியின் கவிச்சுவை சொட்டும் காதல் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும், ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டும், ஆனந்தமாகக் கழிந்த மாலை நேரங்களை நினைக்கும் போதெல்லாம், என் உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை விவரிக்க வல்லேனல்லன். நாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருஷங்களாயின. எங்கள் நட்பும் வளர்ந்தது. தினந்தோறும் புதிய புதிய சுவைகலையும், புதிய புதிய இன்பங்களையும் தந்து கொண்டு வந்தது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 1924-ஆம் ஆண்டு பிறந்தது. நான் பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில், தேறிவிட்டேன். சட்டக் கலாசாலையில் சேருவதாக உத்தேசித்திருந்தேன். இராஜகோபாலன் எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குக் கடைசி வருஷம் படிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் மாலை வழக்கம்போல் கடற்கரைக்குச் சென்று, இராணி மேரி கலாசாலைக் கெதிரில் அலைகள் வந்து மோதும் இடத்துக்கருகில் உட்கார்ந்து, இராஜகோபாலன் வரவை எதிர் நோக்கியிருந்தேன். அன்று அவன் கொஞ்சம் தாமதமாக வந்தான். அன்றியும் அவன் முகமும் வாட்டமுற்றிருந்தது. எப்போதும் கடற்கரைக்கு வந்ததும். மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன் மூலைக்கடலையவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் என்றாவது, மாலை இளவெயிலின் மாட்சி - அன்னை கண்ணெரி காட்டுகின்ற காட்சி என்று சிறிதளவு பாரதியின் பாட்டை மாற்றியாவது பாட ஆரம்பித்துவிடுவான். இன்றோ, பாட்டுமில்லை, கூத்துமில்லை. அவன் முகக் குறியைக் கண்டு என் மனதிலும் சிறிது கவலை தோன்றியதாயினும், விளையாட்டுத்தனமாக “என்ன ராஜு? இன்றைக்கேன் ‘குஷி’ இல்லை? உபவாச விரதம் ஏதேனும் உண்டோ ?” என்று கேட்டேன். “சாப்பாடு இல்லாதது ஒன்றே உற்சாகக் குறைவுக்குக் காரணமாகக் கூடும் என்று நினைக்கிறாயா?” என்று அவன் வினவினான். “எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.” “அப்படியானால் நீ பாக்கியசாலிதான்.” அப்பொழுது, அவன் கண்களில் நீர் ததும்பியதைக் கண்டேன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “அது போகட்டும், விஷயம் என்னவென்று சொல்லமாட்டாயா?” என்றேன். இராஜகோபாலன் பதில் சொல்லாமல், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அது அவன் தகப்பனார் அவனுக்கு எழுதியிருந்த கடிதம். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது. உள்ளே, இராஜகோபாலன் தங்கை சுபத்திரையை அவ்வூர் வேம்பு ஐயர் குமாரர் கணபதி ஐயருக்கு மணஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், முகூர்த்தம் அடுத்த புதன்கிழமை நடப்பதால் உடனே புறப்பட்டு வரும்படியும் எழுதியிருந்தது. அதைப் படித்தபோது, என் ஹிருதயம் படக்கென்று வெடித்து விடும்போல் தோன்றிற்று. முன் பின் தெரியாத கணபதி ஐயர் மீது ஏனோ கோபமும் பொறாமையும் ஏற்பட்டன. “காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான்” என்னும் அசட்டுப் பழமொழி என்னையறியாமல் என் வாயினின்றும் புறப்பட்டுவிட்டது. “சை, எப்போதும் விளையாட்டுப் பேச்சுத்தானா, தியாகு?” என்று நண்பன் கூறினான். அவன் கண்களினின்றும் கலகலவென்று நீர் பொழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை! கணபதி ஐயர் யாராயிருப்பினும் அவர் மீது நான் பொறாமை கொள்வதும் நியாயம். ஆனால், தங்கையின் கல்யாணச் செய்தியைக் கேட்டு அவன் கண்ணீர் விடுவதன் கருத்தென்ன? அவன் கண்ணீரை என் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் துடைத்து, “ராஜு, என் பிதற்றலை மன்னித்துவிடு. ஆனால் நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றேன். அவன் சற்றுநேரம் மௌனமாயிருந்துவிட்டு, பின்னர் “என் அருமைச் சகோதரியைப் பாழுங்கிணற்றில் தள்ளப் போகிறார்கள். நான் கண்ணீர் விடாமல் என்ன செய்வேன்?” என்றான். நான் பல முறையும் வற்புறுத்திக் கேட்டதன்மேல் அவன் பின்னுஞ் சொல்வான்:- "எங்கள் கிராமத்துப் பெரிய குடித்தனக்காரர்களில் வேம்பு ஐயரும் ஒருவர். அவருக்கு இருபது வேலி நன்செய் நிலமும் ரூ.30,000 ரொக்கமும் உண்டு. கணபதி ஐயர் அவருடைய ஏகப் புதல்வர். அவருக்கு இப்போது 45 வயதுக்கு மேலிருக்கும். ஏற்கனவே அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் இல்லை. ஒருத்திக்குக் குழந்தையே பிறக்கவில்லை. மற்றொருத்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போய்விட்டது. அப்புறம் வேறு பிறக்கவில்லை. வம்சத்துக்குச் சந்ததியில்லாமல் சொத்து வீணாகப் போகக்கூடாதென்ற எண்ணத்தினால் பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று கிழவர் உத்தேசித்திருப்பதாக முன்னமே பிரஸ்தாபமுண்டு. நாங்கள் எல்லாரும் கேலி செய்துகொண்டிருந்தோம். ஆனால், இந்தக் கதி என் தங்கைக்கே நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. கணபதி ஐயர் பார்வைக்கு மிக அவலட்சணமாயிருப்பார். வயிறு பெறுத்தவர். ஆதலால் சாதாரணமாகத் ‘தொந்திக்கணபதி’ என்று அவரை எல்லாரும் கூப்பிடுவார்கள். ‘குள்ளநரி’ என்ற பட்டப்பெயரொன்றும் அவருக்குண்டு. ஒரு சமயம் அவர், புதர் ஒன்றில் ஒளிந்திருந்து குடியானவன் களத்திலிருந்து நெற்கதிர் திருடிக் கொண்டு போனதைக் கண்டு பிடித்து விட்டாராம். அது முதல் குடியானவர்கள் ‘குள்ளநரி ஐயர்’ என்று அவரை அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெயர் நிலைத்து விட்டது. அவ்வளவு ஏன்? போன வருஷங்கூடக் கணபதி ஐயர் வயலில் போகும் போது ‘தொந்திக்கணபதி’ ‘குள்ளநரி’ என்று சுபத்திரை கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி ஒளிந்து கொண்டாள். ஐயையோ! அவளுக்கா இந்த விதி வரவேண்டும்?" என்று நண்பன் கதறினான். நான் உள்ளமுருகி விட்டேன் என்று கூறவும் வேண்டுமா? “உன் தந்தை என்ன, அவ்வளவு மோசமானவரா? தந்தைதான் இப்படிச் செய்தாரென்றால், உன் தாயார் எப்படிச் சம்மதித்தாள்?” என்று நான் கேட்டேன். "என் அன்னை இந்தக் கல்யாணத்துக்கு ஒரு காலும் சம்மதித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். அந்தோ! அவள் என்னென்ன எண்ணியிருந்தாள்? என் தந்தை மீது தான் குற்றம் சொல்வதில் என்ன பயன்? இரண்டு வருஷமாக அவர் அலையாத இடமில்லை. ஒன்று பொருந்தியிருந்தால் மற்றொன்று பொருந்துவதில்லை. வரன் பிடித்திருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், வரதட்சனை 2000, 3000 என்று கேட்கிறார்கள். அவர் என்ன செய்வார். பார்க்கப் போனால் நான் தான் ஒரு வழியில் இந்தப் பாதகத்துக்குக் காரணமாகிறேன். எங்கள் ஏழைக் குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் மீதியாவதை என்னுடைய படிப்புக்காக அவர் தொலைத்து வந்தார். இல்லாவிடில் இப்பொழுது பணச் செலவுக்காகப் பயப்பட வேண்டியிராது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கடன் இருக்கையில், இன்னும் 2000, 3000 எப்படி கடன் வாங்குவது, யார் கொடுப்பார்கள்? பாவி, நானாவது அவர் சொற்படி கேட்டு வரதட்சனை வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ள இசைந்தேனா? அவர் என்னையேயன்றோ நம்பியிருந்தார்?" இராஜகோபாலன் கூறினான். இது முழு உண்மையன்றென்பது எனக்குத் தெரியும். இராஜகோபாலன் வரதட்சனை வாங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தானாயினும், தகப்பனார் முடிவாக வற்புறுத்தும் போது மறுத்திருக்க மாட்டான். மற்ற அம்சங்களில் எத்தகைய சிறந்த குணங்கள் உடையவனாயினும், தந்தையை எதிர்ப்பதற்கு வேண்டிய தைரியம் அவனுக்கு உள்ளபடியே இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் நாள் கலாசாலைப் பகிஷ்காரம் செய்ததும், பின்னர் தந்தையின் வார்த்தையைத் தட்ட மாட்டாமல் திரும்பப் போய்ச் சேர்ந்ததும், சிலநாள் வரை அவமானத்தில் மனமுடைந்து நின்றதும், நான் நேரில் அறிந்த விஷயங்கள். உண்மையென்னவெனில், இராஜகோபாலன் தந்தை 3000, 4000 என்று அவனை ஏலங் கூறி வந்தார். இன்னும் ஏலத்தொகை உயருமென்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குப் படித்த இராஜகோபாலன் இன்னும் பிரமச்சாரியாயிருந்த பேரதிசயத்துக்குக் காரணம் இதுதான். இவை எனக்குத் தெரிந்திருந்தும், நான் அப்பொழுது இராஜகோபாலனை மறுத்துக் கூறவில்லை. அற்ப விஷயங்களைப் பற்றி வாதிப்பதற்கு அது தருணமன்றல்லவா? என் நண்பன் மீண்டும், “தியாகு, நீ என் உயிர்த் தோழனாதலால் என் மனத்தைத் திறந்து சொல்கிறேன். ஒரு வேளை என் தந்தை பணத்தாசையால் பீடிக்கப்பட்டிருக்கலாமோவென்று எனக்குத் சந்தேக முண்டாகிறது. சுபத்திரைக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், இரண்டு லட்ச ரூபாய் சொத்தும் அடையுமன்றோ? சை, சை! இப்பாழும் பணத்தாசையால் விளையுங் கேடுகள் எத்தனை! உலகில் பணக்காரன், ஏழை என்ற வேற்றுமை அற்றுப் போகக் கூடாதா?” என்று இரங்கினான். “ராஜு, நான் சொல்வதைக் கேள். இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு. என் கருத்து உனக்கு விளங்குகிறதா?” என்று நான் கேட்டேன். அவன் சற்று நேரம் சிந்தனையுடனிருந்து பின்னர் கூறினான்:- “உன் கருத்து விளங்குகிறது. ஆனால் அது இயலாத காரியம். முகூர்த்தம் புதன்கிழமை. நானெப்படி அதை நிறுத்த முடியும்? பிரம்மதேவன் எங்களுக்குத் துக்கத்தை விதித்துவிட்டான். நீ இப்போது இவ்வாறு தெரிவிப்பது என் துக்கத்தை மிகுதிப் படுத்துகிறதேயன்றி வேறில்லை. சுபத்திரையின் அதிர்ஷ்டம் எப்படியிருந்திருக்க கூடுமென்பதை நினைத்தால்! - தியாகு, நீ உண்மையிலேயே இந்நோக்கங் கொண்டிருந்தால், உன் உயிர் நண்பனாகிய என்னிடம் கூட ஏன் முன்னமே சொல்லவில்லை?” "அது பெருங்குற்றந்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், இதுவரை என் மனமே திடப்படவில்லை. சென்ற வருஷம் கோடை விடுமுறையில் நீ என்னை உன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, உன் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் எனக்குப் பிரியம் உண்டாயிற்று. அவளுடைய மோகன வடிவமும் இன்ப மொழிகளும் என் மனத்தைக் கவர்ந்தன. போதாதற்கு நீ அவளைப் பாடும்படியும் சொன்னாய். குயிலுனுமினிய குரலில் அவள் பாடியது, என் ஆன்மாவைப் பரவசப் படுத்தியது. ஆனால் சுபத்திரையிடம் எனக்குண்டான ஆசை எத்தகையது என்று எனக்கே விளங்கவில்லை. பன்னிரண்டு வயதுக் குழந்தையுடன் காதல் என்னும் பதத்தைச் சம்பந்தப்படுத்துவதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிற்று. வேறு யாரேனுமாயிருந்தால், உன்னிடம் யோசனை கேட்டிருப்பேன். ஆனால் சுபத்திரையின் சகோதரனான உன்னிடம் இதைப்பற்றி எப்படிச் சொல்வேன்? நீ என்ன எண்ணி கொள்வாயோவென்று அஞ்சினேன். ஆனால், இவ்விஷயமாகத் தனிமையில் அடிக்கடிச் சிந்தித்து வந்தேன். நமது சமூக வாழ்வு உள்ள நிலைமையில் பரஸ்பரம் காதல்கொண்டு கல்யாணம் செய்து கொள்வதென்பது இயலாத காரியமாதலின், சுபத்திரையின் மீது எனக்குண்டான பிரியம் எத்தகையதாயினும், அவளை மணம் புரிந்து கொண்டால் இன்ப வாழ்க்கை நடத்தலாமெனத் தோன்றிற்று. ஆனால், ராஜு நான் ஒரு கோழை என்பது உனக்குத் தெரியுமே! என் தந்தையின் எதிர்ப்புக்கும், என் சிற்றன்னையின் சீற்றத்துக்கும் அஞ்சினேன். ஆயினும், அவர்கள் பேசிமுடித்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். சுபத்திரைக்கு வரன் தேட வேண்டுமென்று நீ சொல்லிய போதெல்லாம் என் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும் உன்னிடம் என் கருத்தை தெரிவிப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் நான் மோசம் போவேனென்று எதிர்பார்த்தேனில்லையே?" இராஜகோபாலன் பெருமூச்சுவிட்டான். “தலைவிதி தலைவிதி” என்று முணுமுணுத்தான். “நீ கொடுத்த கல்யாணக் கடிதத்தைப் பார்த்தபோதுதான் என் மனோ நிலையை நான் நன்கு கண்டறிந்தேன். முதலில் அந்தக் கணபதி ஐயர் மீது எனக்குப் பொறாமையுண்டாயிற்று. ஆனால் நீ கூறிய விவரங்களைக் கேட்ட பின்னர், அவர் மீது கடுங்கோபம் உண்டாகிறது. அவ்வாறே உன் தந்தை மீதும் உன் மீதும் கூட எனக்கு கோபம் வருகிறாது. சுபத்திரையை வேறொருவன் கல்யாணம் செய்து கொள்வது என்னும் எண்ணமே என்னால் சகிக்கக் கூடாததாயிருக்கிறது. அவளில்லாமல் இவ்வுலகில் நான் வாழ்க்கை நடத்த முடியாதெனத் தோன்றுகிறது. என் வாழ்க்கையை இன்பமயமாக்குவதும் துன்பமயமாக்குவதும் இப்போது உன் கையிலிருக்கின்றன” என்று கூறி முடித்தேன். "இவ்விஷயம் மட்டும் என் அன்னைக்குத் தெரிந்தால் அவள் இருதயம் பிளந்தே போய்விடும் தியாகு. அவள் என்னிடம் ஒரு நாள் என்ன கூறினாள் தெரியுமா? ‘குழந்தாய், சுபத்திரைக்கு உன் நண்பனைப் போல் ஒரு கணவனைத் தேடிவர மாட்டாயா?’ என்றாள் அப்போது அருகிலிருந்த சுபத்திரை புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்ததும், பின்னர் நான் தாயாரிடம் சுபத்திரை அருகிலிருக்கும்போது கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டாமென்று தனிமையில் கேட்டுக் கொண்டதும் நன்கு நினைவில் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு மட்டும் இதைச் சொல்லியிருந்தாயானால் என் அன்னை எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள்! இப்போது அவளுக்குத் துக்கமே அதிகமாகும்" என்று இராஜகோபாலன் கூறியபோது, எனக்கு மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. மனங் கசிந்து கண்ணீர் பெருகிற்று. “ஏன் இப்படிப் பேசுகிறாய் ராஜு? இன்னும் முழுகிப் போகவில்லையே? இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு.” காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடாக்கண் பணியிலே என்றும், நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே என்றும் பாடுவாயே? அதற்குத் தருணம் வந்திருக்கும் இப்போது ஏன் தயங்குகிறாய்?" என்று வினவினேன். “வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேசுவதால் கவலை அதிகமாகுமேயன்றி வேறில்லை. சுபத்திரையைப் பாழுங் கிணற்றில் தள்ளுவது முடிந்து போன விஷயம்” என்றான் இராஜகோபாலன். “உன் தந்தை உன்னை வளர்த்துப் படிக்க வைத்ததனால்தான் என்ன? அவருக்கு அடிமையாகிவிட வேண்டுமா? உனக்கு மனச்சான்று என்பது தனியாக இல்லையா? உன் சகோதரிக்கும் எனக்கும் உன் தாய்க்கும் துரோகம் செய்யப் போகிறாயா?” “தலைவிதி தலைவிதி!” சந்திரமண்டலப் பிரயாணம் அன்றிரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் இராஜகோபாலன் ஊருக்குப் பிரயாணமானான். அவனை ரயில் ஏற்றிவிட்டு வருவதற்காக நானும் எழும்பூர் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றேன். வண்டி புறம்படுந்தறுவாயில் கடைசியாக அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு "தியாகு, மனிதர்கள் விதியை எதிர்த்துப் போராட நினைத்தல் மதியீனம். இது எனது கொள்கை. நீ மணஞ் செய்து கொள்வதற்கு இதுவரை இருந்த தடை இப்போது நீங்கிவிட்டப்படியால், நான் திரும்பி வந்ததும் இங்கே இன்னொரு கல்யாணச் சாப்பாடு கிடைக்குமென நம்புகிறேன்" என்று கூறிப் புன்னகை புரிந்தான். இயற்கையான மகிழ்ச்சியினின்றெழாமல் முயன்று வருவித்துக் கொண்ட அந்தப் புன்னகையிலே எல்லையற்ற துக்கம் குடி கொண்டிருந்தது. இதற்குமுன் எப்போதும் குதூகலமும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்த என் நண்பனின் சுந்தரவதனத்தில், அன்றைக்குப் பிறகு நகை யென்பதையே காணமாட்டேன் என்று பாவியேன் அப்போது அறிந்தேனில்லையே! புகை வண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பியதும் உணவும் அருந்தாமல் படுக்கச் சென்றேன். நீண்ட நேரம் வரை தூக்கம் வரவில்லை. இராஜ கோபாலன் கூறிய விவரங்கள் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தன. அவனுடைய துயரத்தைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினேன். என்னுடைய ஆசை நிராசையாய்ப் போனது குறித்துப் பெருமூச்சு விட்டேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையை முடிவற்ற ஒரு பாலைவனம் போல் உருவகப் படுத்திப் பார்த்தேன். இடையிடையே, சுபத்திரையின், அமுதூற்றினை யொத்த இதழ்களும் - அறி வூறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப் பொன்னொத்த (நின்) மேனியும் என் மனக் கண்ணின் முன்பு தோன்றிக் கொண்டிருந்தன. அப்பாட்டை அவள் பாடியதும் இன்றுதான் பாடியது போல் என் செவிகளில் வந்து ஒலித்தது. நெடு நேரத்துக்குப் பின்னர் என் கண்ணிமைகள் சோர்வுற்று மூடிக் கொண்டன. எண்ணங்கள் பொருத்தமின்றிக் குழப்பமுற்றன. இதென்ன அதிசயம்? நான் எங்கே இருக்கிறேன். வீட்டில் படுத்துக்கொண்டிருந்தவன் இங்கெப்படி வந்தேன்? ஆச்சரியம்! ஆச்சரியம்! மேலும் கீழும் சுற்று முற்றும் பார்த்தேன். அழகிய சிறு படகு ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். அதன் ஒரு மூலையில் ஏதேதோ வை஢சைகள் வேலை செய்து கொண்டிருந்தன. அப்படகு தரையில் கிடந்ததோ? நீரில் மிதந்ததோ? இல்லை, இல்லை ஆகாய வெளியில் அதிவேகமாகப் பறந்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது! சந்திரன், அது சந்திரன் தானா? ஆயின், அதற்கு அவ்வளவு பிரமாண்டமான வடிவம் எங்கிருந்து வந்தது! சாதாரண சந்திரனைவிடச் சுமார் நூறு மடங்கு பெரிய ஒரு கோளம் வானத்தில் ஒளிமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி, பௌர்ணமியின் நிலவைவிடப் பன்மடங்கு பிரகாசமாயிருந்ததாயினும், வெயிலைப் போல் வெறுப்பளிப்பதாயில்லை. எல்லையற்ற இனிமையும் குளிர்ச்சியும் அவ்வொளியில் குடிகொண்டு, உடம்புக்கும் உயிருக்கும் உற்சாகமளித்தன. கீழே அதல பாதாள மென்னக்கூடிய தூரத்தில் பூமியின் மலைச்சிகரங்களும், நீர்ப் பரப்புகளும் காணப்பட்டன. கண்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். அந்தோ! அந்த விசைகளுக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை முடுக்கிக் கொண்டிருப்பவன் யார்? அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார்? வேறு யாருமில்லை! அவர்கள் என் ஆருயிர் நண்பன் இராஜகோபாலனும் என்னுயிரைக் கொள்ளை கொண்ட இன்பச் சிறுமி சுபத்திரையுமே. படகு செல்லும் வேகம் ஒருபுறம்; இவர்களைக் கண்ட ஆச்சரியம் ஒருபுறம் என் தலை கிறுகிறுவென்று சுழல ஆரம்பித்தது. சிறிது முயன்று சமாளித்துக் கொண்டேன். இராஜகோபாலன் பேசினான்:- “நண்பா, உறக்கம் தெளிந்து எழுந்தாயா?” என்றான். “ஆம். ராஜு, நாம் எங்கே போகிறோம்?” “இன்னும் தெரியவில்லை? சந்திரமண்டலத்துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். ஜெர்மனிய ஆசிரியர் கொடார்ட் கண்டுபிடித்துள்ள புதிய விமானம் இது.” சமீபத்தில் இதைப்பற்றிப் பத்திரிகைகளில் படித்தது எனக்கு நினைவு வந்தது. ஆனால், படித்த விவரத்துக்கும் இந்தப் பறக்கும் படகுக்கும் அவ்வளவு பொருத்தமிருப்பதாகத் தோன்றவில்லை. “சரிதான், ஆனால் சந்திர மண்டலத்துக்கு நாம் ஏன் போகிறோம்?” என்று வினவினேன். “அதென்ன புதிதாகக் கேட்கிறாய், ராஜு, நேற்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேனே? இதோ இருக்கும் உன் இன்னுயிர் காதலியைக் குள்ளநரி கொண்டு போகாமல் காப்பாற்றும் பொருட்டுதான்.” அப்போது, அந்த நள்ளிரவிலே, ஆகாய வெளியிலே சோதிமயமான நிலவொளியிலே, வானம்பாடியின் இனிய கீதத்தினும் பன்மடங்கு இனியதாய், கல்லையும் மரத்தையும் கனியச் செய்யும் குரலில், பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் என்ற பாட்டு எழுந்தது. பாடியவள் சுபத்திரை. நான் புளகாங்கிதமடைந்தேன். திடீரென்று பயங்கரமான புயற்காற்று தோன்றிற்று. படகு மேலும் போகாமல் கீழும் போகாமல், அந்தரத்தில் அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டு நின்றது. பிரமாண்ட கழுகு போன்ற ஒரு பறவை நெடுந்தூரத்திலிருந்து எங்கள் படகை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டேன். சில நிமிஷங்களில் அது எங்கள் படகை அணுகி விட்டது. அப்போது அதை உற்றுப் பார்த்தேன். அதன் முகம் மட்டும் குள்ளநரியின் முகம் போலிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அப்போது இராஜகோபாலன் சுபத்திரையை அவசரமாக அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய ஒரு கையை என் கையில் வைத்து, “நண்பா, இதோ என் தங்கையை உன்னடைக்கலமாக ஒப்புவிக்கின்றேன். அவளைப் பாதுகாப்பாய்!” இதற்குள், நரி முகங்கொண்ட அந்தப் பயங்கரப் பறவை படகுக்கு வந்து விட்டது. இராஜகோபாலன் அது படகில் வராமல் தடுக்கத் தொடங்கினான். பறவை, இராஜகோபாலனை லட்சியஞ் செய்யாமல் சுபத்திரையை அணுகமுயன்றது. அவன் அதை ஒரு தடியினால் அடித்து உள்ளே வரவொட்டாமல் செய்து கொண்டிருந்தான். சில நிமிஷங்கள் ஆனதும், அவன் திடீரென்று திரும்பி, "தியாகு இந்த விமானத்தின் விசை கெட்டுப் போய் விட்டது. இனிப் பயன்படாது. உடனே சுபத்திரையை அழைத்துக் கொண்டு இறங்கிவிடு" என்றான். சுபத்திரை நடுநடுங்கியவளாய்த் தன் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அப்படியே இருவரும் படகை விட்டிறங்கி, ஆகாய வெளியில் எவ்வகை ஆதரவுமின்றி நின்று கொண்டு இராஜ கோபாலனையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவன் சிறிது நேரம் அந்தப் பறவையுடன் சண்டையிட்ட பிறகு, கையிலிருந்த தடியால் ஓங்கி ஒருமுறை அடித்தான். அது பயங்கரமாக ஒருமுறை கூவி விட்டுக் கிழே அதிவேகமாய் விழத் தொடங்கியது. என்ன ஆச்சரியம்! இராஜகோபாலன், அப்போது புதியதோர் ஒளி வடிவமும் விசாலமான சிறகுகளும் பெற்றவனாய், அப்படகிலிருந்து மேலே கிளம்பிச் செல்லத் தொடங்கினான். “குழந்தைகளே, நான் சந்திர மண்டலத்துக்குச் செல்கிறேன். நீங்கள் நெடுங்காலம் பூமியில் வாழ்ந்துவிட்டு வந்து சேர்வீர்கள்” என்று கூறிவிட்டு அவன் மேலே மேலே பறந்து சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்து போனான். ஆகாய வெளியில் அந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்த என் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றாள் சுபத்திரை. அவள் முகம் என் மார்புக்கு நேராக இருந்தது. இப்போதுதான் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய அழகிய கண்களும் என்னை நோக்கின. ஓ! அந்தக் கண்கள்! “சுபத்திரா! நஞ்சு தடவிய அம்புகள் போல் உன் கண்கள் என் இதயத்தில் பாய்கின்றனவே! என் செய்வேன்!” என்றேன். சுபத்திரை தன் பவழச் செவ்வாய் திறந்து, முத்தன்ன பற்கள் சிறிது வெளித்தோன்ற, தேனினுமினிய குரலில் “நாதா! தாங்கள் ஏன் கவலையுறவேண்டும்? அவற்றிற் கருகிலேயே அமுதூற்றிருக்கின்றதே?” என்று கூறிப் புன்னகை செய்தாள். நான் பரவசமடைந்தேன். பின்னர் - சொல்ல வெட்கமாயிருக்கிறது - அமுதூற்றென்று அவள் வருணித்த இதழ்களில் முத்தமிட்டேன். அந்தக் கணத்தில் என் தலை சுழல ஆரம்பித்தது. மயக்கங் கொண்டேன். கீழே இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. வரவரக் கீழிறங்கும் வேகம் அதிகப்பட்டது. அளவிடப்படாத நெடுந்தூரத்துக்கு, மனதினாலும் எண்ணமுடியாத வேகத்துடன், கீழே கீழே கீழே போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. கடைசியாகத் தொப்பென்று பூமியில் வீழ்ந்தேன். திடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். கட்டிலிருந்து புரண்டு கீழே தரையில் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். விழுந்த அதிர்ச்சியினால், முதுகு வலித்துக் கொண்டிருந்தது. எழுந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன். நான் கண்ட அதிசயக் கனவை நினைத்தபோது என் உடல் நடுங்கிற்று. அன்றிரவு நான் தூங்கவேயில்லை. மண வீட்டில் மரணம் ஒரு வாரம் சென்றது. சுபத்திரைக்கு மணம் நடந்திருக்க வேண்டிய தினத்துக்கு இரண்டு நாளைக்குப் பின்னர் எனக்கு ஒரு கடிதம் வந்தது. உறையின் மீது விலாசம் இராஜகோபாலனுடைய கையெழுத்திலிருப்பதைக் கண்டேன். அதை ஆவலுடன் பிரித்துப் படித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா? ஆனால் அதனுள்ளே அவ்வளவு ஆச்சரியமும் துயரமும் எனக்குக் காத்திருக்கின்றனவென ஒரு கணமும் நினைத்தேனில்லை. அக்கடிதம் வருமாறு:- என் ஆருயிர் நண்பனே! என் சிந்தை கலங்கியிருக்கிறது. தலை சுழல்கிறது. மதிமயங்குகிறாது. கரைகாணாத துயரக்கடலில் மூழ்கியிருக்கிறேன். உன்னிடம் கூறி ஆறுதல் பெறலாமென்றால் நீயும் இங்கில்லை. என் செய்வேன்! கடிதத்தில் எழுதியாவது ஓரளவு மனச்சாந்தி பெறலாமென்று இதை எழுதத் தொடங்கினேன். நண்ப, இங்கே நான் கல்யாண தடபுடலில் களித்திருப்பேனென நீ எண்ணியிருப்பாய். இங்கே நேர்ந்தவைகளையும், என் மனம் படும் பாட்டையும் அறிந்தாயானால்! - அன்று நாம் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த போது, இப்படியெல்லாம் நேரிடுமென்று எண்ணினோமா, தியாகு? ‘இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு’ என்று கூறினாய். தெய்வம் உன் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது. ஆனால், அதே சமயத்தில் என் தலையில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுவிட்டது. அந்தோ! என் தாய்! பாவிக் கைகளால் அவள் உடலுக்குத் தீ மூட்டிவிட்டேன். இன்று அவள் எலும்புகளைப் பொறுக்கியும் புதைத்துவிட்டு வந்தேன். ஐயோ! அன்பு கனிந்த அவள் திருமுக மண்டலத்தை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு ஏன் இப்படித் துடிக்கிறது? உயிர்விடப் போகுந்தறுவாயில், அவள் என்னைப் பார்த்த பார்வை என் மனக் கண்ணின் முன்பு எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. மறவேன் மறவேன்! அன்பும் இரக்கமும் கருணையும் கனிவும் நிறைந்த அப்பார்வையை என் உயிருள்ளளவும் மறவேன். துயரக் கடலில் மூழ்கியிருக்கிறேன் என்று சொன்னேன்? தவறு. என்னை மன்னித்துவிடு. ஆனந்த சாகரத்திலன்றோ மிதக்கிறேன். நான்! என் கண்களினின்றும் அருவிபோல் பெருகி, இதோ இந்தக் கடிதத்தையும் நனைத்து எழுத்துக்களை நாசமாக்குகிறதே. அது துயரக் கண்ணீர் அன்று அது ஆனந்தக் கண்ணீர். ஆம் நான் பெருமை கொள்கிறேன். “என் தாயார் வீரத் தாயார்” என்றெண்ணி இறுமாப்படைகிறேன். வீரத் தாய்மார்களைப் பற்றி நாம் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என் அன்னைக்கு முன்னால் அவர்கள் எல்லாரும் எம்மாத்திரம்? அவள் வயிற்றிலே இந்தப் பாவி, இந்தக் கோழை எப்படிப் பிறந்தேன்? அதுதான் தெரியவில்லை. நண்ப! அளவு கடந்த துக்கத்தினால் நான் தான் பைத்தியம் பிடித்தவன் போலாகி விட்டேனென்றால், பொருத்தமில்லாமல் பிதற்றி உன்னையும் ஏன் பைத்தியமாக்க வேண்டும்? தயவு செய்து மன்னித்துவிடு. நடந்த விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கூற முயல்கிறேன். பின்னர், உன்னால் கூடுமானால், உனக்குத் தைரியமிருந்தால், எனக்கு ஆறுதல் சொல்லு. சனிக்கிழமை இரவு சென்னையை விட்டுப் புறப்பட்டேனல்லவா? மறுநாள் மாலை இங்கு வந்து சேர்ந்தேன். ஊருக்குள் அடி வைத்ததும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து, “மாமா மாமா, தொந்திக் கணபதிக்கும் சுபத்திரைக்கும் கல்யாணம், தெரியுமா உனக்கு?” என்று கூவின. எனக்கோ வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. வீடு சென்றதும் என் அருமைத் தங்கை வழக்கம்போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஆனால் அவள் வாயினின்றும் ஒரு வார்த்தையேனும் கிளம்பவில்லை. அவள் வதனத்தில் எப்போதும் குடி கொண்டிருந்த முல்லைச் சிரிப்பையும் காணோம். முன்னெல்லாம் நான் போனதும் எவ்வளவு கேள்விகள் கேட்பாள்? எப்படியெல்லாம் கொஞ்சுவாள்? எனக்கும் அவளுடன் பேசுவதற்கு நாவெழவில்லை. தாயார் நான் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தாள். “ராஜு, வா அப்பா” என்றாள். அவள் கண்களில் நீர் ததும்புவதையும் மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்ணீரை அடக்கிக் கொள்வதையும் கண்டேன். பின்னர், சற்று நேரத்துக்கெல்லாம் என் தாயார் தனியாகச் சமையலறையில் இருக்கும் சமயம் பார்த்து அங்கே போனேன். இப்போது அவள் தங்கு தடையின்றித் தாராளமாகக் கண்ணீர் பெருக்கினாள். “அம்மா, இதென்ன அநியாயம்? அப்பாவுக்கு ஏன் இப்படிப் புத்திப் போயிற்று?” என்றேன். “குழந்தாய் அதைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன?” என்று பெருமூச்சு விட்டாள். நான் வற்புறுத்திக் கேட்டதின் மேல், இந்தக் கல்யாணம் ஏற்பாடானதைப் பற்றி அவள் ஆதியோடந்தமாகக் கூறினாள். நண்ப! நீயல்லாமல் வேறு யாராவதாயிருப்பின் எனக்கு அவ்விவரங்களைக் கூறவும் வெட்கமாக இருக்கும். நான் எதிர்பார்த்ததுபோல் பண ஆசையே முதன்மையான காரணம் என்று அன்னை தெரிவித்தாள். வேறு தகுந்த வரன்களும் அமையவில்லை. இவ்வருஷம் கல்யாணம் கட்டாயம் செய்துவிடவேண்டும் என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லி விட்டார்களாம். இந்த அநியாயம் வேறெங்கேனும் உண்டா தியாகு? அம்மா மட்டும் கூடாதென்று சொல்லி வந்தாளாம். ஆனால் வீட்டிலுள்ள கிழவிகள் - அத்தையும் பாட்டியும் அப்பாவும் அனுசரணையாம். இரண்டு மூன்று முறை வீட்டில் சண்டை ஏற்பட்டு அம்மா அப்பாவின் கையில் அடிபட்டாளாம். ஆனால், என் தாயார் கூறிய விவரங்களுள் எல்லாவற்றையும் விட ஒன்று என் உள்ளத்தை உருக்கிவிட்டது. இந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் சுபத்திரை அடுத்த வீட்டில் இந்த விவரத்தை கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, “அம்மா குள்ளநரிக்கு என்னைக் கொடுக்கப் போகிறீர்களாமே! நிஜந்தானா?” என்று கதறினாளாம். “குழந்தாய் நான் உயிரோடிருக்கும்வரை அப்படி ஒன்றும் நேராது” என்று அன்னை பதில் சொன்னாளாம். இதைக் கேட்டதும் நான் சலசலவென்று கண்ணீர் பெருக்கிக் கோவென்று அழுது விட்டேன். “குழந்தைக்கு அப்படி வாக்குறுதி கொடுத்தேனே ராஜு இப்போது என்ன செய்வேன்?” என்று அம்மா என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வேன்? ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய வாக்குறுதியை இப்படி நிறைவேற்றி வைக்கப் போகிறாள் என்று நினைத்தேனோ? “அம்மா கல்யாணத்தை நிறுத்திவிடத்தான் வேண்டுமென்று சண்டைபிடித்துப் பார்க்கட்டுமா?’ என்று கேட்டேன்.”ஐயோ! வேண்டாம். அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது. நான் ஒருத்தி கேட்டுக் கொண்ட வசவுகள் போதும், அப்பா" என்றாள். மறுநாள் நான் என் கைப்பெட்டியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா அங்கு வந்து “எப்போதும் மருந்துகள் கொண்டு வருவாயே, ராஜு இம்முறை கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். பெண்களின் உள்ளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு உண்மை! என் அன்னைதான்; ஆனால் அவள் என்ன கருத்துடன் கேட்கிறாள் என்பதை அப்போது அணுவளவும் அறிந்தேனில்லையே! நான் ஊருக்குப் போனால் ‘டாக்டர் வந்துவிட்டார்’ என்று எல்லோரும் வைத்தியத்துக்கு வந்துவிடுவார்களென்பதும், அதற்காக நான் எப்போதும் சிற்சில மருந்துகள் எடுத்துப் போவது வழக்கமென்பதும் உனக்குத் தெரியுமே! அவ்வாறே இம்முறை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை இன்னின்ன மருந்து என்றும், இந்த இந்த நோய்க்கு உபயோகமென்றும் அம்மாவுக்குக் காட்டினேன். அப்போது, விஷமருந்து இருந்த ஒரு புட்டியையும் பாவி ஏன் அவளுக்குக் காட்டி விட்டேன். மறுநாள் அதாவது கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் என்னுடைய பெட்டிச் சாவியைக் கேட்டாள். “ஜாக்கிரதையாகச் சில நகைகள் உன் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ராஜு! அந்தச் சாவி என்னிடமே இருக்கட்டும்” என்றாள். நான் நம்பிக் கொடுத்தேன். நம்பிய பிள்ளையைத் தாயே மோசம் செய்து விட்டாளே! அன்றிரவுதான், தியாகு, மகா பயங்கரமான பேரிடி என் தலையில் விழுந்தது. நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளையை ஊர்வலத்துடன் அழைத்து வருவதற்காக எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருந்தோம். வெற்றிலை பாக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வேகமாக வந்து என் காதோடு அம்மா அவசரமாகக் கூப்பிடுவதாகத் தெரிவித்தார். என் அன்னை மற்ற பெண்களுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லையென்பதை அப்போதுதான் கவனித்தேன். ஏதோ முக்கிய விஷயமாகவே இருக்குமென்று எண்ணி உடனே வீட்டுக்கு விரைவாகச் சென்றேன். வீட்டில் சமையற்காரனையும் சுபத்திரையையும் தவிர வேறு யாருமில்லை. “அம்மா சாமான் அறையில் இருக்கிறாள் அண்ணா! உன்னை உடனே கூப்பிடுகிறாள்” என்றாள் சுபத்திரை. சாமான் அறையில் நான் கண்ட காட்சியை என்னவென்று சொல்வேன்? அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் என் பெட்டியின் மேலிருந்த விஷமருந்துப் புட்டியில் பாதி காலியாய் இருந்தது. எனக்கு வயிற்றைப் பகீர் என்றது. அம்மா அருகில் ஓடிப் போய் பார்த்தேன். அவள் புன்னகை புரிந்தாள். ஆனால் விஷம் நன்கேறி விட்டதென்றும் இனி உயிர் பிழைக்க வழியில்லையென்றும் அறிந்தேன். அப்போது ஒரே எண்ணந்தான் தோன்றிற்று. அந்த விஷப் புட்டியைத் தாவி எடுக்கப் போனேன். அப்போது அன்னை சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். “என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்?” என்று ஈனசுரத்தில் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை. “விஷத்துக்கு மாற்று மருந்து எடுக்கவா, இப்போது எழுந்தாய்?” "இல்லை மாற்று மருந்து இனிப் பயன்படாது. அந்தப் புட்டியில் பாக்கியுள்ளதை நான் குடிக்கப் போகிறேன். “அது தெரிந்தே கையைப் பிடித்துக் கொண்டேன். நல்லது, ராஜு, நீ உயிரை விட விரும்பினால் நான் குறுக்கே நிற்கவில்லை. துன்பம் நிறைந்த இந்தப் பாழும் உலகில் இருந்து ஆவதென்ன? ஆனால் குழந்தாய் அவசரப்படாதே. நான் இன்னும் சற்று நேரந்தானே உயிரோடிருப்பேன்? அதற்குள் நான் சொல்ல விரும்புவதைக் கேட்டுவிட மாட்டாயா?” “சரி, சொல்லு; கேட்கிறேன்.” “என் கண்மணி சுபத்திரைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். நான் உயிரோடிருக்கும்போது இந்தக் கல்யாணம் நடைபெறாது. நீ என்ன செய்யப் போகிறாய் உன் தங்கைக்காக?” “நீ செய்ததையே நானும் செய்கிறேன்.” “குழந்தாய் நீ சொல்வது நன்றாயில்லை. நான் பெண். உயிர் விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நீ ஆண் பிள்ளையாயிற்றே?” “இனிச் செய்ய என்னவிருக்கிறது அம்மா?” “நான் உயிர் துறந்தது வீண் போக வேண்டுமென்றா சொல்கிறாய்? இன்னமும் என் குழந்தையைப் பாழுங்கிணற்றிலேயா தள்ளப் போகிறீர்கள்?” “அம்மா நான் என்ன செய்யவேண்டுமென்று சொல். செய்து முடிப்பதாக இதோ ஆணையிடுகிறேன்.” “குழந்தாய், ஆணை வேண்டாம் நீ சொன்னால் போதாதா? நான் இறந்தால் நாளை முகூர்த்தம் நின்றுவிடும். அபசகுனம் என்று சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டையே மாற்றிவிடுவார்கள் அல்லது நீ கொஞ்சம் பிடிவாதம் செய்தால் முடிந்துவிடும். பின்னர், சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு. ராஜு பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிரம்மசாரி பையன் ஒருவன் உனக்குக் கிடையாமலா போகிறான்? யாருக்கு வேண்டுமானாலும் கொடு. என் கண்மணியை இந்தக் கொடுமைக்கு மட்டும் ஆளாக்காதே. ஆகால மரணமடைந்தவர்களின் ஆவி பூமியின் மீதே சுற்றிக் கொண்டிருக்கும் என்பார்கள். மீண்டும் இந்த மாப்பிள்ளைக்கே சுபத்திரையைக் கொடுக்கும் பட்சத்தில், இவ்வுடலை நீத்த பிறகும் என் உயிர் ஒருக்காலும் அமைதியடையாது” “அம்மா சத்தியமாகச் சொல்கிறேன். நான் உயிர் விடுவதாயிருந்தால் சுபத்திரைக்குத் தகுந்த கணவனை நிச்சயம் செய்துவிட்டே உயிர்விடுவேன். அதுவரை என் உயிர் நீங்காது” என்றேன். அப்போது அம்மாவின் முகம் மலர்ந்தது. பின்னர், நண்ப, அவளுக்கு இவ்விஷயமாக உன்னுடைய விருப்பத்தைப் பற்றியும் சொன்னேன். அவள் இணையற்ற மகிழ்ச்சியடைந்தாள் என்பதை அவள் முகக் குறியால் அறிந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் என் ஆருயிர் அன்னை இப்பாவ உலக வாழ்வை நீத்துப் பரகதிக்குச் சென்றாள். அதுவரை கண்ணீர் ஒரு துளியும் பெருக்காமல் பிரமை கொண்டவன் போல் பேசி வந்த நான், கோவென்று கதறிப் புரண்டழுதேன். அப்போதும் ஆண்டவன் அருளால் கொஞ்சம் சுயபுத்தியிருந்தது. புட்டியைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். பின்னர் என் வீட்டில் நேர்ந்த அலங்கோலத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நண்ப, கடைசியாக ஒன்று கூறி, உனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக் கவலையை நீக்கிவிட விரும்புகிறேன். சுபத்திரையைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி உன் விருப்பத்தை என் அன்னையிடம் கூறியதனால் அவள் மன நிம்மதியுடன் மரணமடைந்தாள். ஆனால், இது சம்பந்தமாக உன்னை நான் வற்புறுத்துவேனென்று நீ பயப்பட வேண்டாம். எனக்கு நேர்ந்த துயரத்தைக் கேட்டு மனங்கசிந்திருந்த போது கூறிய மொழியை ஆதாரமாகக் கொண்டு உன் வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கமாட்டேன். ஆனால் சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் உதவி செய்ய வேண்டுமென்று கேட்க எனக்குரிமை யுண்டென எண்ணுகிறேன். ஏனெனில் நண்ப, அம்மா இறந்தாலும், வேறு என்ன துயரம் நேர்ந்தாலும் சுபத்திரையின் கல்யாணத்தை என்னவோ இவ்வருஷமே நடத்தியாக வேண்டும். நமது சமூகக் கட்டுப்பாடுகளின் கொடுமையை என்னவென்பேன்? இங்ஙனம், அபாக்கியனான நின் நண்பன் இராஜகோபாலன். மேற்கண்ட கடிதத்தைப் படித்து வரும்போது என் மனதிலெழுந்த பலவகை உணர்ச்சிகளை இங்கே எழுதி வாசகர்களின் காலத்தை வீண்போக்க நான் விரும்பவில்லை. கல்யாணம் நின்று போயிற்றென்பதைப் படித்ததும், அளவு கடந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. இராஜகோபாலன் அன்னை மரணமடைந்த செய்தியை படித்ததும், இடி விழுந்தது போல் திடுக்கிட்டேன். கடிதத்தின் பிற்பகுதியை அழுதுகொண்டே படித்தேன். கடைசிப் பகுதி, இராஜகோபாலன் மீது ஓரளவு கோபத்தை உண்டாக்கிற்று. நீண்ட பதில் எழுதினேன். அதில் முதலில் ஏதேதோ ஆறுதல் கூறியிருந்தேன். கடைசியில், சுபத்திரையும் நானும் மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது ஆண்டவன் விருப்பமென்று குறிப்பிட்டு என் உறுதியைச் சந்தேகித்தது குறித்த அவனைச் சிறிது கடிந்து கொண்டேன். கல்யாணம் அவ்வாண்டில் கடைசி முகூர்த்த நாளாகிய ஆனி மாதம் 30 ஆம் நாளன்று எனக்கும் சுபத்திரைக்கும் மணம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இராஜகோபாலன் அன்னையின் பிரிவை ஓரளவு மறந்திருந்தான். இறுதிச் சடங்குகள் செய்து விட்டுச் சென்னைக்கு வந்து விட்டான். நானும் அவனும் சேர்ந்தே கல்யாணத்துக்கு முதல் நாள் ஊருக்குப் போவதென்று தீர்மானித்திருந்தோம். என் வீட்டில் யாருக்கும் இந்த விவாகம் சம்மதமில்லை. எதிர்ப்பு பலமாக இருந்தது. தந்தையும் இளைய தாயாரும் எவ்வளவோ சொன்னார்கள். அத்தனைப் பிடிவாதமும் மன உறுதியும், எனக்கு அப்போது எங்கிருந்து வந்தன என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. கடைசியாக, ‘எப்படியாவது கெட்டலையட்டும்’ என்று விட்டு விட்டார்கள். ஆனி மாதம் 28ஆம் நாள் இரவு வண்டியில் புறப்பட்டோ ம். தந்தையும் தாயும் கல்யாணத்துக்கு வரவில்லை. தந்தை வேலை அதிகமென்று சொல்லிவிட்டார். இளைய தாயார் உடம்பு அசௌக்கியமென்றாள். என் சொந்தத் தாயின் சகோதரர் மட்டும் குடும்பத்துடன் வந்தார். என் தம்பிமார் இருவரும் இரண்டொரு நண்பர்களும் கூட வந்தார்கள். ஆனால் அப்போது எனக்கிருந்த மனமகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் தாய் தந்தையர் வராததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. எல்லாரும் எழும்பூரில் ரயில் ஏறினோம். வண்டி புறப்பட்டதும், நண்பர்களில் ஒருவர் வாங்கிக் கொண்டு வந்திருந்த பத்திரிகையைப் பிரித்து புரட்டினேன். ‘தென்னாட்டில் வெள்ளம்’ ‘கொள்ளிடம் பாலத்துக்கு அபாயம்’ என்ற தலைப்புகளைப் பார்த்ததும், ‘சொரேல்’ என்றது. கீழே படித்துப் பார்த்தேன். காவேரியிலும் கொள்ளிடத்திலும் பெருவெள்ளம் வந்து பலவிடங்களில் உடைப்பெடுத்திருப்பதாகவும், ரயில் பாதை சிலவிடங்களில் உடைந்து போனதாய்த் தெரிவதாகவும், கொள்ளிடத்தின் ரயில் பாலத்தில் ஓரிடத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், அன்றிரவு வண்டிகள் பாலத்தைத் தாண்டிவிடப்படுமா என்பது ஐயத்துக்கிடமான விஷயமென்றும் செய்திகள் காணப்பட்டன. உடனே இராஜகோபாலனிடம் காட்டினேன். அவன் படித்துவிட்டு பெருமூச்சு விட்டான். “ஆண்டவனே நமக்கு விரோதமாயிருக்கிறானா என்ன தியாகு?” என்றான். இதற்குள் மற்றவர்களும் அச்செய்திகளைப் படித்தனர். எங்கள் உற்சாகம் அடியோடு போயிற்று. எல்லோரும் மனக்குழப்பமுற்றனர். நானும் இராஜகோபாலனும் தனியாக யோசனை செய்தோம். என்ன இடையூறு நேர்ந்தாலும் நாங்கள் இருவருமாவது போய்ச் சேர்ந்து விடுவதென்று தீர்மானித்தோம். காலை 3 மணிக்கு வண்டி சிதம்பரத்தை அடைந்தது. அதற்குமேல் போகாதென்று பிரயாணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஒருவாறு இதை எதிர்பார்த்தோமாயினும் எங்கள் ஏமாற்றம் அளவிடற்பாலதாயில்லை. ரயிலிலிருந்து இறங்கி விசாரித்தோம். கொள்ளிடம் பாலத்தில் ஓரிடத்திலே பிளவு ஏற்பட்டிருப்பதோடல்லாமல், சீர்காழிக்கும் மாயவரத்துக்குமிடையே பயங்கரமான வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறதென்றும், பல மைல் நீளம் ரயில்பாதை அடித்துக் கொண்டு போகப்பட்டதென்றும், ரயில் போவது அசாத்தியம் என்பது மட்டும் அன்றி, மனிதர்கள் அப்பிரவாகத்தைக் கடந்து செல்வது இயலாத காரியம் என்றும் தெரிய வந்தன. இந்த விவரங்களை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படியிருக்குமென்பதை வாசகர்கள் கற்பனா சக்தியினால் பாவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், என்னால் விவரிக்க இயலாது. எல்லாரும் கலந்து ஆலோசனை செய்தோம். நானும் இராஜகோபாலனும் மட்டும் கால் நடையாகப் புறப்பட்டு மாயவரம் வரையில் போய், அங்கு மீண்டும் ரயிலேறிச் செல்வதென்றும், மற்றவர்கள் அங்கேயே தங்கியிருந்து இரண்டொரு தினங்களில் ரயில் விட்டால் வருவதென்றும், இல்லாவிடில் சென்னைக்குத் திரும்ப வேண்டுவதேயென்றும் தீர்மானித்தோம். இவ்வாறு, என் கல்யாணத்துக்கு வந்த சிலரையும் விட்டுப் பிரிந்து, கவலை நிறைந்த உள்ளத்துடன் காலை நாலு மணிக்கு ரயில் பாதையோடு நடக்கலானோம். ராஜகோபாலனோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களில் யார் எவருக்குத் தேறுதலோ தைரியமோ கூறமுடியும்? பொழுது விடிந்தால் யாரேனும் தடை செய்யப் போகிறார்களோ என அஞ்சி உதயத்துக்கு முன்பாகவே கொள்ளிடம் பாலத்தைக் கடக்கலானோம். ‘ஹோ’ வென்ற கோஷத்துடனும், பயங்கரமான அலைகளுடனும், முட்டி மோதிக் கொண்டு ஓடிய அப்பெருவெள்ளம், என் உள்ளத்தின் நிலைமையை அப்போது நன்கு பிரதிபலிப்பதாயிற்று. பாலத்தைத் தாண்டியாயிற்று. பொழுதும் விடிந்தது. வழி நெடுக விசாரித்துக் கொண்டே விரைவாக நடந்தோம். விசாரித்ததில் தெரிந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவனவாயில்லை. கடைசியில் சீர்காழியைத் தாண்டி அப்பால் இரண்டொரு மைல் தூரம் போனதும், மகா சமுத்திரம் போல் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒரே பிரவாகமாக வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது கண்டு திக்பிரமை கொண்டவர்கள் போல் உட்கார்ந்து விட்டோம். ஆனால், இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்துவிடவில்லை. என் காதலும், இராஜகோபாலன் அன்பும், எங்களை மேலும் முயன்று பார்க்கச் செய்தன. சீர்காழிக்குத் திரும்பி வந்து கொஞ்சம் உணவு அருந்தி விட்டுப் படகுக்காக விசாரித்தோம். பிரவாகத்தில் அகப்பட்ட கிராமங்களின் ஜனங்களை மீட்பதற்கென்று இரண்டொரு படகுகள் வந்தனவென்றும், ஆனால் வெள்ளத்தை மேற்பார்வை பார்ப்பதற்காக வந்த பெரிய துரையும் அவரது சகாக்களும் வெள்ளக் காட்சிகளைப் புகைப்படம் பிடிப்பதற்காக அப் படகுகளில் சென்றிருக்கின்றனர் என்றும், இன்னும் திரும்பி வரவில்லையென்றும், தெரிய வந்தது. எப்படியாவது இந்த வெள்ளத்தைத் தாண்டி எங்களைக் கொண்டு போய் விடுவோர்க்குக் கேட்ட பணம் தருவதாக அறிவித்தோம். அதன் மீது ஒரு சிலர் மரக்கட்டைகளைக் கட்டித் தெப்பமாக்கி அதில் எங்களை ஏற்றிக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக முன் வந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் பிரவாகத்தை அடைந்தபோது, எங்கேயோ பிரவாகத்தின் வேகத்தால் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்ட படகு ஒன்று வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அம் மனிதர்கள் அதைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்தார்கள். மாலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் அப்படகில் ஏறியபோது உயிருடன் பிரவாகத்தைக் கடந்து அக்கரை செல்வோம் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. எவ்வளவோ இடத்தில் படகு தலை கீழாய்க் கவிழ்ந்துவிடும் போல் இருந்தது. சிலவிடங்களில் கோலுக்கு அண்டாத ஆழம். கரையென்பதே கிடையாது. சற்று நேரத்துக்கெல்லாம் இருளும் வந்து சூழ்ந்தது. கடைசியாக எப்படியோ தட்டுத் தடுமாறி இரவு எட்டு மணிக்கு அக்கரை போய்ச் சேர்ந்தோம். பின்னர் மீண்டும் நடந்து மாயவரம் ஸ்டேஷனையடைந்த போது இரவு பத்து மணியிருக்கும். அங்கிருந்து கடைசி வண்டி போய் ஒரு மணி நேரம் ஆயிற்று என்கிறார்கள். அன்றிரவு ஸ்டேஷனில் படுத்திருந்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் மாயவரத்திலிருந்து புறப்படும் வண்டியில் ஏறி சுமார் பதினொரு மணிக்கு மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து இராஜகோபாலன் கிராமம் ஆறு மைல் தூரம். ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு 2 மணி சுமாருக்கு ஊரையணுகினோம். முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது 10.30 மணிக்கு. ஊரினருகில் சென்றபோது மேளச் சத்தம் கேட்டது. அப்போது என் இருதயம் அடித்துக் கொண்ட சத்தம் பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் நன்றாகக் கேட்டிருக்கும். இராஜகோபாலன் முகத்தை நான் பார்க்கவேயில்லை. நேரே வீட்டுக்குச் செல்லாமல், தெருவின் கோடியிலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். கண்ணில் அகப்பட்ட முதல் பேர்வழியை விசாரித்தோம். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சுபத்திரைக்கும், கணபதி ஐயருக்கும் கல்யாணம் நடந்து விட்டதென்றும் திருமாங்கல்யதாரணம் ஆகி அரைமணி நேரம் ஆயிற்றென்றும், அவர் அறிவித்தார்; அப்படியே ஸ்தம்பித்து மரம் போலானோம். கொலை “ராஜு, நீ தலைவிதி தலைவிதி என்ற போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். நீ கூறியதே சரி என்று இப்போது எனக்குப் புலனாகிறது. நாம் எவ்வளவோ முயற்சி செய்தோம். பயனென்ன? தலைவிதி வேறு விதமாயிருக்கிறது” என்றேன். ஊருக்குப் பக்கத்திலிருந்த ஆற்றங் கரையில் ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருந்தோம். மேற்குப் புறத்தில் சற்று தூரத்திலிருந்த அடர்த்தியான தென்னந் தோப்புகளுக்கு பின்னால் செம்பொற் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். ஆற்றில் அப்போதுதான் புதிய வெள்ளம் வந்திருந்தது. நீரில் எங்கே பார்த்தாலும் நுரையும், இலையும், பூவும் மிதந்தன. புள்ளினங்களின் இன்னிசையையன்றி வேறு சத்தம் எதுவுமில்லை. இராஜகோபாலன் கலகலவென்று சிரித்தான்; அந்தச் சிரிப்பு எனக்கு அச்சத்தை விளைவித்தது. அது மனிதர்களுடைய மகிழ்ச்சிச் சிரிப்பாயில்லை. ஏதோ பேயின் சிரிப்பாகத் தோன்றிற்று. “நல்லது தலைவிதியை ஏற்றுக் கொண்டாய், நானோ உன் பழைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தலைவிதி என்பது இல்லை. எல்லாம் மனிதப் பிரயத்தனமே” என்றான் இராஜகோபாலன். பாவம்! மனம் கசிந்துபோய் இப்படிப் பேசுகிறான் என்று நினைத்தேன். அவன் தலையை என் மடி மீது வைத்துப் படுக்கச் செய்தேன். “சுபத்திரையுடன் பேசினாயா?” என்று வினவினேன். “இல்லை, இல்லை, அவள் முகத்தைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. உன்னை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் சென்றேனல்லவா? நான் உள்ளே நுழைந்தபோது எல்லாம் முடிந்து ஆலாத்தி சுற்றிக் கொண்டிருந்தார்கள். என் வருகையை உள்ளுணர்வால் அறிந்து கொண்டாளோ என்னவோ, சுபத்திரை நிமிர்ந்து பார்த்தாள், என்னைக் கண்டுவிட்டாள். கலகலவென்று அவள் கண்களினின்றும் நீர் பொழிந்தது, ஆலாத்தியைச் சட்டென்று முடித்து, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை” என்றான் என் நண்பன். மறுபடியும் முன் போல் சிரித்தான். அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இன்னதென்று தெரியாத ஒருவகை அச்சம் எனக்கு உண்டாயிற்று. “உனக்கு யாரும் சமாதானம் சொல்ல வில்லையா?” என்று கேட்டேன். “அதற்குக் குறைவில்லை. ஒவ்வொருவராக என்னிடம் துக்கம் கேட்க வந்தார்கள் -”பிராப்தம் இப்படி இருக்கும் போது வேறு விதமாய் நடக்குமா?" என்றார் ஒருவர். “ஒருவர் மனைவியை இன்னொருவர் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?” என்றார் இன்னொருவர். நேற்றிரவு முழுதும் உறக்கமில்லாமல் நமக்காகக் காத்துக் கொண்டிருந்தார்களாம். இன்று காலை எட்டு மணிக்குத்தான் வெள்ளத்தினால் ரயில் போக்குவரவு நின்றுவிட்டதென்று தெரியவந்ததாம். இனிமேல் வரமாட்டோம் என்று நிச்சயம் செய்து கொண்டார்களாம். அதற்கு மேல் ஊரிலுள்ள பிரமுகர்கள் எல்லாம் கூடியோசித்து, இந்த வருஷத்தில் இதுவே கடைசி முகூர்த்த நாள் ஆனபடியால், குறித்த முகூர்த்தத்தில் கணபதி ஐயருக்கே மணம் செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்களாம்." திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்தான். என் தோள்களைப் பிடித்துக் கொண்டு கண்களுக்கு நேரே உற்றுப் பார்த்து, “இதோ பார், தியாகு! ஆண்டவன் ஆணையாகச் சொல். இத்தகைய கொடுமைகளை இந்நாட்டிலிருந்து ஒழிக்க ஏதேனும் செய்யப் போகிறாயா, இல்லையா?” என்றான். “தலைவிதி தலைவிதி என்றிருப்பது பேதமை. என் அன்னையின் மரணத்துக்குப் பின்னர் அவ்வெண்ணம் எனக்கு அடியோடு மாறிவிட்டது” என்று தொடர்ந்து கூறினான். “உன் அன்னை உயிர் விட்டதால் என்ன பயன் விளைந்தது ராஜு? கடவுளுடைய சித்தம்…” “வேண்டாம், இந்தக் கொலை பாதகத்துக்குக் கடவுளுடைய பெயரை ஏன் இழுக்கிறாய்? இது கடவுளுடைய சித்தமானால் உலகில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுடைய சித்தமே. பொய்யும் புலையும், கொலையும் களவும், விபசாரமும் இன்னும் மகாபாதகங்களும் கடவுளுடைய சித்தமே. பின்னர், அவற்றையெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும்?” “நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?” “நமது சமூகத்தில் இரண்டு கொலை பாதகங்கள் இருக்கின்றன. கன்னி வயதில் கட்டாயமாகக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்பது ஒன்று; இளம் வயதில், குழந்தைப் பருவம் நீங்கா முன்னர் கணவனையிழந்த பெண்களுங்கூடத் தங்கள் வாழ்நாள் முழுதும் கைம்பெண்ணாயிருந்து, வாழ்க்கையில் எவ்வித இன்பமுமின்றி, இடிபட்டுக் காலத்தைத் தள்ள வேண்டுமென்பது மற்றொன்று. பேச்சில் பயனில்லை. பருவமடைந்த மங்கையோ, இளம் கைம் பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதாக நீ பிரதிக்ஞை செய்வாயா?” சற்று யோசனை செய்தேன். பின்னர், "ராஜு இந்த வாழ்க்கையில் இனிக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. சுபத்திரையை நினைத்த மனம் வேறு பெண்ணைக் கருதுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என் மனம் எப்போதேனும் மாறுதலடைந்து கல்யாணம் செய்துகொள்ளத் தீர்மானித்தால், பருவமடைந்த மங்கையையாவது, கன்னி வயதிலேயே கைம்பெண்ணானவளையாவது மணம் செய்து கொள்வதாகப் பிரதிக்ஞை செய்கிறேன்" என்று பதிலளித்தேன். மாலை வேளைப் பூசைக்காகக் கோயிலில் ஆலாட்சிமணி அடிக்கும் சத்தம் “ஓம் ஓம் ஓம்” என்று ஒலித்துக் கொண்டு மேலக் காற்றில் வந்தது. அன்றிரவு இராஜகோபாலனுடைய நண்பர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திவிட்டு அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டுவிட உத்தேசித்தேன். உறக்கம் பிடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேனென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா? வீதி வழியாகப் போவோர் வருவோர் எல்லாம், என்னைச் சுட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. கண்ணீர் ததும்பி ஓடும் சுபத்திரையின் வதனமும் அச்சத்தை ஊட்டும் இராஜகோபாலனின் சிரிப்பும் என் மனக்கண் முன்பு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சென்னையில் இராஜகோபாலனை விட்டுப் பிரிந்த அன்று கண்ட கனவு அப்போது நினைவிற்கு வந்தது. என் உடம்பு நடுங்கிற்று. அந்தக் கனவு பொய்யாகிவிட்டதே என்று எண்ணினேன். ஆனால் அடுத்த கணத்தில்…ஓ! எத்தகைய பயங்கரமான உண்மையாயிற்று? கலகலவென்ற சிரிப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன். இராஜகோபாலன் திண்ணையின் ஓரமாக நின்று கொண்டிருந்தான். “தியாகு, செய்தி கேட்டாயா?” என்றான். அவன் குரலில் ஏன் அந்த மாறுதல்? “என்ன செய்தி?” என்று கேட்டேன். “என் தாயார் வந்து என்னைக் கூப்பிடுகிறாள், அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பாதியளவே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும், பாக்கிப் பாதியையும் நிறைவேற்றிவிட்டுச் சரியாக இன்னும் ஒரு வருஷத்தில் வருகிறேன் என்றும் பதில் சொல்லுகிறேன். நீ கொஞ்சம் சிபார்சு செய்யேன்” என்றான். மறுபடியும் அந்த அச்சம் தரும் சிரிப்பு. மங்கலான நிலவின் ஒளியில், அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்கள் “திரு திரு”வென்று விழித்தன. அப்போது சட்டென்று உண்மை புலனாயிற்று. கொடிய நாகப்பாம்பு ஒன்று என் நெஞ்சைத் துளைத்து ஊடுருவிச் செல்வது போல் இருந்தது. என் ஆருயிர் நண்பன் ‘அருமைத் தோழன்’ பித்தனாகிவிட்டான்! அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின் ஆணைகாட்டில் அனலை விழுங்குவோம் என்று அவன் உரக்கப் பாடினான். பின்னர் சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “தியாகு, உன் நண்பனுக்கு நீ அளித்த பிரதிக்ஞையை நிறைவேற்றி வைப்பாயல்லவா?” என்றான். நான் பதில் சொல்வதற்குள் மீண்டும் “குள்ளநரியைப் பலி கொடுத்தாய்விட்டது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான். இவ்வளவுடன் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழலானான். நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கையில் சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்தாறு பேர் நாங்களிருந்த திண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து கல்யாண மாப்பிள்ளை கணபதிஐயர் மரணாவஸ்தையிலிருப்பதாகவும், டாக்டர்களையும் போலீஸ்காரர்களையும் அழைத்து வருவதற்கு மன்னார்குடிக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். அன்றிரவு, மாப்பிள்ளை சாப்பிட்டானது கொஞ்சம் தலைவலிக்கிறது என்று சொல்ல, இராஜகோபாலன் உடனே ஏதோ மருந்து கொண்டு வந்து கொடுத்தானென்றும் அதை மாப்பிள்ளை சாப்பிட்டதும் இராஜகோபாலன் பித்தன் போல் கூறிய மொழிகளிலிருந்து அருகிலிருந்தவர்களுக்குச் சந்தேக முண்டாயிற்றென்றும், சில நிமிஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைக்கு உடம்பு அதிகமாகிவிட்டதென்றும் அறிந்தேன். இப்போது எனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டன. சாயங்காலம் என் நண்பன் “தலைவிதி கிடையாது” என்று சொன்னபோது இத்தகைய தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருக்க வேண்டும். அன்னை உட்கொண்டு பாக்கியிருந்த விஷத்தை இப்போது இராஜகோபாலன் உபயோகப்படுத்திவிட்டான். அன்னையைப் போலவே அவனும் தன் உயிரைக் கொடுத்திருப்பான். ஆனால், திருமாங்கல்ய தாரணம் எப்போது ஆகி விட்டதோ, ’இனி, அவன் உயிரை விடுவதால் என்ன நடக்கும்? எனவே, பின்னால் சுபத்திரையின் கதி எப்படியானாலும், இப்போது அவளை விடுதலை செய்து விட வேண்டுமென்று தீர்மானித்தான் போலும்! என்னிடம் அவன் வாங்கிக் கொண்ட வாக்குறுதியின் கருத்தும் இப்போது எனக்குத் தெளிவாயிற்று. அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கனவில் கண்டன போலவே எனக்கு இன்னமும் தோன்றுகின்றன. அப்போது நான் திக்பிரமை கொண்டவன் போல் காணப்பட்டேனென்றும், எனக்கும் எங்கே பித்துப் பிடித்துவிடப் போகிறதோ என்று என் தந்தை பயந்தாரென்றும் பின்னால் தெரியவந்தன. ஆகவே அந் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரமாக என்னால் கூற முடியாது. அன்றிரவு போலீஸ்காரன் வந்ததும் என்னையும் இராஜகோபாலனையும் கைது செய்து மன்னார்குடிக்கும், பிறகு தஞ்சாவூருக்கும் கொண்டு போனதும், என் தந்தைக்கு தந்தி அடித்து வரவழைத்ததும், கணபதி ஐயரை விஷங் கொடுத்துக் கொலை செய்த குற்றத்திற்காக இராஜகோபாலன் மீதும், அவனுக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக என்மீதும், வழக்குத் தொடர்ந்து, விசாரணை சுமார் ஒரு மாதம் நடந்ததும், கடைசியில் இராஜகோபாலன் பித்தன் என்ற காரணத்தால் அவனுக்குத் தூக்குத் தண்டனையில்லாமல் ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதித்ததும், நான் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டதும், எல்லாம் முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளோவென்று சந்தேகிக்கும் வண்ணம் என் உள்ளத்தில் தெளிவின்றித் தோன்றுகின்றன. எனவே அவற்றைப் பற்றி விரிவாகக் கூறாமல் விட்டுப் போவது குறித்து மன்னிப்பீர்களாக. சந்திப்பு ஓராண்டு சென்றது. ஆந்திர நாட்டுக் கலாசாலையொன்றில் நான் ஆசிரியனாக அமர்ந்திருந்தேன். இந்த ஒரு வருஷத்திய எனது வாழ்க்கை விவரத்தைச் சில மொழிகளில் கூறிவிடலாம். வழக்கு முடிந்ததும், நான் சென்னைக்குச் செல்ல விரும்பவில்லை. சட்டக் கலாசாலையில் தொடர்ந்து படிக்கும் நினைவையும் விட்டுவிட்டேன். சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களை மறந்திருக்க ஸ்தலயாத்திரை செய்வதே நல்ல உபாயம் என்று தீர்மானித்தேன். என் தந்தை என் மீது இரக்கங் கொண்டிருந்தார். எனவே, வேண்டிய போதெல்லாம் பணம் தவறாது அனுப்பி வந்தார். தமிழ்நாடு முழுதும் சுற்றி விட்டுப் பின்னர் வடநாட்டுக்குச் சென்றேன். இதற்கிடையில், உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தேன். யாத்திரை தொடங்கி எட்டு ஒன்பது மாதம் ஆனபோது மேற்சொன்ன கலாசாலையில் மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் சரித்திராசிரியர் வேலை கிடைத்தது. என் அதிர்ஷ்டத்தை வியந்தவனாய் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டேன். இராஜகோபான் என்றும், சுபத்திரையென்றும் இருவர் இருந்தனர் என்பதை அடியோடு மறந்துவிடப் பிரயத்தனம் செய்து வந்தேன். ஆம், அவர்களைப் பற்றி இந்த ஓராண்டில் நான் எதுவும் கேள்விப்படவில்லை. கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கணபதி ஐயர் மரணமடைந்த அன்றிரவே சுபத்திரைக்குச் சுரம் கண்டதாகவும், ஒவ்வொரு சமயம் பிழைப்பது அரிது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சுபத்திரையின் தந்தை நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, அந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். பின்னர், அவர்களைப் பற்றி எனக்கு எத்தகைய விவரமும் தெரியவில்லை. ஆனால், எவ்வளவோ முயன்றும் சுபத்திரையும் இராஜகோபாலனையும் மறத்தல் எனக்கு இயலாத காரியமாயிருந்தது. இரவில் என் அறையில் தன்னந்தனியே உட்கார்ந்து அவர்களை நினைத்துக் கண்ணீர் பெருக்குவேன். முன்னமே சொன்னதுபோல் இவ்வாறு ஒரு வருஷம் சென்றது. ஒரு நாள் கலாசாலியில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கையில், தந்திச் செய்தியொன்று எனக்கு வந்தது. யார் தந்தியனுப்பியிருக்கக் கூடுமென்று ஆச்சரியத்துடன் பிரித்துப் பார்த்தேன். “இராஜகோபாலன் மரணத் தருவாயிலிருக்கிறார். உம்மைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படவும்” என்று எழுதியிருந்தது. திருச்சிராப்பள்ளி பெரிய சிறைக்கூடத் தலைவர் அச்செய்தியை அனுப்பியிருந்தார். அதைப் படித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது. உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று, விடுமுறை பெற்றுக் கொண்டேன். அடுத்த வண்டியில் புறப்பட்டேன். திருச்சிராப்பள்ளி சேர்ந்ததும், நேரே சிறைக்கூடத்துக்குச் சென்று, சிறைக்கூடத் தலைவரைப் பார்த்தேன். “நல்ல வேளை! இன்னும் ஒரு மணி நேரங்கழித்து வந்திருந்தால் அவரை உயிருடன் பார்த்திருக்க மாட்டீர்கள்” என்றார். அவர் ஓர் ஐரிஷ்காரர். நிரம்ப அனுதாபத்துடன் பேசினார். இராஜகோபாலனைப் பற்றிய விவரங்கள் அறிந்து நிரம்பப் பரிதாபப்பட்டதாகவும், ஒரு மாதமாக அவன் சிறைக்கூட வைத்தியசாலையில் படுத்த படுக்கையாயிருக்கிறானென்றும், ஒரு வாரத்துக்கு முன்புதான் அவன் அறிவு தெளிவடைந்து எனக்குத் தந்திச் செய்தியனுப்பச் சொன்னதாகவும், முதலில் விலாசம் தெரிந்து கொண்டு எனக்கு தந்தியடித்ததாகவும் கூறினார். உடனே என்னை இராஜகோபாலனிடம் அழைத்துப் போகும்படி சிறைக் காவலன் ஒருவனை அனுப்பினார். அங்கே எனக்கு இன்னும் ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கையில் இராஜகோபாலனருகில் உட்கார்ந்திருந்தவர் யார் என நினைக்கிறீர்கள்? சுபத்திரையும், அவள் தந்தையுமே. ஆனால், இந்த வியப்பு ஒரு கணங்கூட என் மனதில் நிலைத்திருக்கவில்லை. எலும்புந் தோலுமாய் அப்படுக்கையில் கிடந்த இராஜகோபாலனைக் கட்டிக் கொண்டு ‘கோ’ வென்று கதறி அழுதேன். ஐயோ! கட்டழகனாய்ச் சுந்தரவடிவனாய்க் காண்போர் கண்களைக் கவர்ந்து உலாவிய இராஜகோபாலன் இவன் தானோ? “தியாகு அழாதே” என்று ஈன சுரத்தில் அவன் கூறியது யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசியது போல் கேட்டது. அருவிபோல் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். “எங்கு நீ வருவதற்குள் போய்விடுவேனோவென்று இவ்வளவு நேரம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! பகவான் இந்தப் பாவியை முற்றிலும் கைவிட்டுவிடவில்லை…” அப்போது மீண்டும் எனக்கு அழுகை வந்து விட்டது. சுபத்திரையும் அவள் தந்தையும் விம்மி அழலானார்கள். “வேண்டாம், ஏன் அழுகிறீர்கள்? அதற்குப் பதிலாக இந்தப் பாவியை மன்னிக்கும்படி ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்ளுங்கள். கொலைஞன் என்று பகவான் என்னை அருவருக்கமாட்டாரா?” நான் ஏதோ பதில் சொல்லப் போனேன். அவன் கையமர்த்தி மீண்டும் சொன்னான்:- “என் உயிரையும் விட மேலாக என் அன்னையை நேசித்தேன். அவள் காலஞ்சென்றாள். மரணத்தறுவாயில், அவளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை இன்னமும் முற்றும் நிறைவேற்றி வைக்கவில்லை. இந்நிலைமையில் நான் இறந்தால் என் ஆன்மா சாந்தியுறுமா? இப்போது இவ்வுலகில் என் அன்புக்குரியவர்கள் நீங்கள் மூவருமே. நான் நிம்மதியாக உயிர்விடுவதற்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்களா? அப்பா, உங்கள் மனம் இப்போதேனும் இரங்குமா?” அப்போதுதான், இராஜகோபாலனுடைய தந்தையையும் சுபத்திரையையும் நான் கவனித்தேன். அவர், இளைத்து மெலிந்து பாதி உடம்பாயிருந்தார். சுபத்திரை துக்கமே உருவெடுத்ததுபோல் உட்கார்ந்திருந்தாள். விதவைக்குரிய கொடுமைகள் அவளுக்குச் செய்யப்படவில்லையென்பதையும் கண்டேன். “குழந்தாய், இன்னமும் எனக்குப் புத்தி வரவேண்டுமா? உன் விருப்பத்தின்படியே செய்கிறேன். கவலைப்படாதே” என்று தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே சொன்னார். பின்னர் இராஜகோபாலன் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நான் எல்லாம் அறிந்து கொண்டேன். “உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நானும் மறக்கவில்லை ராஜு! ஆனால், வாக்குறுதி மட்டுமன்று. இவ்விஷயத்தில் நம்மிருவர் விருப்பமும் ஒத்தே இருக்கிறது. சுபத்திரையில்லாத வாழ்வு பாலைவனம்போல் எனக்குக் காணப்படுகிறது” என்றேன். அப்போது இராஜகோபாலனின் முகம் எவ்வாறு மலர்ச்சியுற்றது? அந்த ஒரு கணத்தில் அவன் பழைய இராஜகோபாலனாகக் காணப்பட்டான். மெலிந்து சுருண்ட தனது கையால் சுபத்திரையின் தாமரைக் கரங்களைப் பிடித்து என்னுடைய கையில் வைத்தான். அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்ப்பதைக் கண்டேன். என்னுடைய உணர்ச்சியைப் பற்றியோ யென்றால் - துன்ப சாகரத்தில் முழுகிப் போகும் தருவாயிலிருந்த என்னைத் திடீரென்று சுவர்க்க போகங்களுக்கிடையே போட்டுவிட்டது போலிருந்தது; மன்னியுங்கள். அப்போது என் மனோநிலையை வருணிக்கப் புகுதல் வீண் முயற்சியேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் இராஜகோபாலன் நிம்மதியாக ஸ்ரீராம நாமத்தை உச்சரித்த வண்ணம் இப்பூவுலக வாழ்வை நீத்துச் சென்றான். “நேயர்களே! உங்களில் பலருக்கு இராஜகோபாலன் சரித்திரம் ஏமாற்றமளித்திருக்கலாம். முன்னுரையில் அவனைப்பற்றிக் காணப்பட்ட புகழுரைகளுக்கு அவன் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதலாம், கொலைஞன் என்று நீங்கள் அவனை வெறுக்கலாம். எப்படியும் அவன் என் ஆருயிர் நண்பன்; என் அருமைச் சுபத்திரையின் சகோதரன். ஈ எறும்பு முதலிய ஜந்துக்களும் துன்பப்படச் சகியாத இளகிய மனம் படைத்த என் நண்பன், சுபத்திரையின் சுகவாழ்வை முன்னிட்டன்றோ கொலை செய்யத் துணிந்தான்? அவன் பாவத்தை மன்னித்தருளும்படி ஆண்டவனிடம் மன்றாடுங்கள்.” சுயநலம் கள்ளுக்கடை மூடுவதா? கூடவே கூடாது. ஏழு கள்ளுக்கடை குத்தகை எடுத்திருக்கிறேன். வருஷத்தில் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. சர்க்காருக்கு அதைப்போல் மூன்று பங்கு கந்தாயம் கட்டுகிறேன். கள்ளுக்கடை ஏன் மூடவேண்டும்? நான் எப்படி சிறைக்கு வந்து சேர்ந்தேன் என்றா கேட்கிறீர்கள்? கள்ளுக்கடை வழியாகத்தான். சிறைச்சாலையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு கள்ளுக்கடையைப்போல் குறுக்கு வழி வேறு கிடையாது. முன்னோர் அரும்பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கள் இறக்கப் பயனாகி நாசமாய்ப் போகின்றன. ஆனால் கைமேல் வரும் ரொக்கப் பணத்தை வேண்டாமென்று சொல்ல முடியுமா? கள்ளுக்கடை போய்விட்டால் நமக்குப் பிழைப்புப் போய்விடுமே! பாவம், பழியென்று பார்த்தால் இந்தக் காலத்தில் முடியாது. என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுகிறார்கள். முட்டாள் ஜனங்கள். பைத்தியத்தின் ஆனந்தம் அவர்களுக்கு என்ன தெரியும்? அந்த ஆனந்தத்தை அநுபவிக்க வேண்டுமானால் முதலில் கள்ளுக் குடித்துப் பயிலுங்கள். அதன் மூலம் கொஞ்சங்கொஞ்சமாகப் புத்தியைக் கடந்து நின்று பழகி வந்தால், கடைசியில் என்னைப் போன்ற நிரந்தர ஆனந்த நிலைக்கு வந்து சேரலாம். பிரிட்டிஷ் சர்க்காரின் பெருமையே பெருமை! அந்த சர்க்கரைத் தாங்கி நிற்கும் இந்தக் கள்ளுப் பீப்பாயின் மகிமையே மகிமை! சென்னை சர்க்காரின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கள்ளுக்கடை கொடுக்கிறது. இதில் பெரும் பகுதியை ஏழை எளியவர்கள், அன்றையக் கஞ்சிக்கில்லாதவர்களிடமிருந்து வசூல் செய்கிறோம்! வேறு எந்த இலாகாவேனும் இவ்வளவு அரிய ஊழியம் செய்கிறதா? கள்ளுக்கடையை மூடினால் இவ்வளவு பணமும் அல்லவா நஷ்டமாகும்? அத்துடன் எங்களுடைய உத்தியோகமும் போய்விடும். கூடவே கூடாது. என் புருஷன் இன்னும் கள்ளுக் கடையிலிருந்து வரவில்லை. குழந்தைகள் பசி தாங்காமல் அழுகின்றன. ஏதாவது மீத்துக்கொண்டு வருவானோ, வெறுங்கையுடன் வருவானோ, தெரியாது. கள்ளுக்கடைகளில் இடி விழாதா? கள்ளுக்கடை மூடிவிட்டால் என்னைப் போன்ற போலீஸாருக்கு பாதிவேலை மீதியாகும். ஆனால் ஒருவேளை உத்தியோகமே போய்விட்டால்? ஆமாம்! போதிய வேலையில்லையென்று பாதிப் பேரைத் தள்ளி விடுவார்கள். கூடாது, கூடாது. கள்ளுக்கடை மூடக்கூடாது. நான் சாக்கடையில் விழுந்து கிடக்கிறேனென்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நல்லது; உங்கள் பிள்ளைகள் அல்லது பேரர்களுக்கு இந்தக் கதி நேரிடாதென்று யார் கண்டது? கடவுள் புண்ணியத்தில் கள்ளுக் கடைகளை மட்டும் மூடாதிருக்க வேண்டும்! தந்தையும் மகனும் தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. ‘புலி நகம் படைத்த ஓர் எலி’ என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். நம்மைப் பொறுத்தவரையில், ஓர் எலியாவது புலியாவது எந்தக் காலத்திலும் ஒரு மகா சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்ததாக நாம் கேள்விப்பட்டிராதபடியால், சிவாஜியை ஒரு வீர சிம்மமென்றே கொள்கின்றோம். [கடைசியில் நாமும் அவரை ஒரு வனசரமாகவே குறிப்பிட வேண்டியிருக்கிறது.] அந்த மகாராஷ்டிர சிம்மம் பூனாவில் கர்ஜனை புரியத் தொடங்கியிருந்த காலத்தில் - அதாவது, சுமார் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் - செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலைக்குச் சமீபமான ஒரு கிராமத்தில் கேசவன் என்ற பெயருடைய ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடு மாடுகளும், வயல் காடுகளும் வேண்டிய அளவு இருந்தன. அழகிற் சிறந்த மனைவியும் வாய்த்திருந்தாள். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் திருவேங்கடம் என்று பெயர் வைத்துச் சீராட்டித் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். “ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டங்களில், மனைவி அழகியாய் வாய்ப்பதைப் போல் வேறொன்றுமில்லை” என்று யாரோ அநுபவ ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். கேசவன் விஷயத்தில் அது உண்மையாயிற்று. அறுவடைக் காலத்தில் ஒரு நாள், அப்போது பன்னிரண்டு வயதுப் பையனாயிருந்த தன் பிள்ளையுடன் கேசவன் வயல் வெளிக்குச் சென்றிருந்தான். அவன் சாயங்காலம் திரும்பி வந்தபோது வீடு அல்லோல கல்லோலமாய்க் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன் வாழ்க்கைத் துணைவியைக் காணாமல் பதறினான். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், அன்று ஆற்காட்டு நவாப் அந்தக் கிராமத்தின் வழியாகச் செஞ்சிக் கோட்டைக்குப் போனதாகவும், அந்தக் காட்சியைக் காண ஊர் ஸ்திரீகள் எல்லாம் வந்து சாலையின் இரு புறமும் நிற்க, அவர்களில் கேசவன் மனைவி மேல் நவாபின் ‘தயவு’ விழுந்துவிட்டதாகவும், அவளை உடனே பல்லக்கில் ஏற்றிக் கொண்டு போனதாகவும், தகவல் தெரிய வந்தது. அன்றிரவு கேசவன், பித்துப் பிடித்தவன் போல் ஊரெல்லாம் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். மறுநாள் காலையில், தன் மனைவியைப் பற்றி நல்ல செய்தி வந்த பிறகு தான் அவன் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது. செஞ்சிக் கோட்டையின் மேல் செங்குத்தான ஓரிடத்தில் பல்லக்கு ஏறிக் கொண்டிருந்தபோது கேசவன் மனைவி திடீரென்று பல்லக்கிலிருந்து கீழேயுள்ள அகழியில் குதித்துப் பிராணத்தியாகம் செய்து நவாபின் ’தயவி’லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். ஊரார் சென்று அவள் உடலை எடுத்துக் கொண்டு வந்தனர். கேசவன், சிதையில் வைத்திருந்த தன் மனைவியின் உயிரற்ற உடல் முன்னிலையில் ஒரு பிரக்ஞை செய்து கொண்டான்: “ஸ்திரீகளின் கற்புக்குக் காவலில்லாத நாட்டில் என்னுடைய சந்ததிகளை விட்டுச் செல்லேன். இனி நான் மறுமணம் புரியமாட்டேன். என் மகனுக்கும் கலியாணம் செய்து வைக்க மாட்டேன்” என்று அவன் சபதம் செய்தான். மேற்கண்ட சம்பவம் நடந்து எழெட்டு வருஷங்களுக்கு அப்பால், வடக்கே பண்டரிபுரத்திலிருந்து ஒரு பெரியவர் திருப்பதி மலைக்கு வந்திருந்தார். அவருக்குச் ‘சமர்த்த ராமதாஸ்’ என்ற பெயர் வழங்கிற்று. அவர் ஆஞ்சநேயருடைய அவதாரம் என்றும், பகவானை நேருக்கு நேர் தரிசித்தவர் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். ஆறு மாத காலம் அவர் மரக்கிளைகளிலேயே “ராம், ராம்” என்று ஜபித்துக் கொண்டு காலம் கழித்தாராம். அந்த மகானிடம் உபதேசம் பெறுவதற்காகத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்தார்கள். ஆனால் அவர்களில் அநேகர் இவருடைய உபதேசம் பிடிக்காமல் திரும்பிப் போய்விட்டனர். அப்படிப்பட்டவரிடம் ஒரு நாள் கேசவனும், அவனுடைய மகன் திருவேங்கடமும் வந்து சேர்ந்தனர். திருவேங்கடம் இப்போது இருபது வயதைக் கடந்த திடகாத்திர வாலிபனாக இருந்தான். கேசவன், ராமதாஸரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி! இந்த ஏழைகள் இருவரையும் தேவரீரின் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினான். அப்போது திருவேங்கடத்தின் கண்களில் கண்ணீர் துளிப்பதை ராமதாஸர் பார்த்தார். அவனுடைய மார்பில் கையை வைத்துச் சற்று நேரம் அவன் முகத்தை உற்று நோக்கினார். பிறகு, கேசவனைப் பார்த்து, “அப்பா! இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய்?” என்று கேட்டார். அப்போது கேசவன் கண்ணீர்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தான். அம்மகானுடைய தேர்தல் மொழியால் கொஞ்சம் ஆறுதல் பெற்றதும், தன் மனைவியின் கதியையும், தான் செய்த பிரதிக்ஞையையும் விவரித்தான். பிறகு, “ஸ்வாமி! அந்த விரதத்தை இந்தப் பையன் கெடுத்து விடுவான் போல் இருக்கிறது. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ரங்கம் என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்படியோ சொக்குப் பொடி போட்டு இவனை மயக்கி விட்டாள். ‘ரங்கத்தைக் கலியாணம் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் உயிரை விடுவேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிறான். ஸ்வாமிகள் இவன் மனத்தை மாற்றி அருள் புரிய வேண்டும்” என்றான். சமர்த்த ராமதாஸர் சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார்: "அப்பா! உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்" என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?) ஆனால் கேசவனும் திருவேங்கடமும் அவ்வுபதேசத்தைச் சிரமேற்கொண்டனர். அவர்கள் உடனே புறப்பட்டு இரவு பகலாகப் பிரயாணம் செய்து, பிரதாபக் கோட்டையை அடைந்து, ராமதாஸர் கொடுத்த அடையாளத்தைக் காட்டி, ஸம்ராட் சிவாஜியின் வீர சைன்யத்தில் சேர்ந்தார்கள். இந்தப் பொல்லாத உலகத்தின் இயல்பை நாம் அறிந்திருக்கிறோம். அது ஒரு கணங்கூடச் சும்மா இராமல் சுற்றிச் சுற்றிச் சுழன்று வருவது. இதன் காரணமாக நாட்கள் அதி வேகமாக மாதங்களாகி, மாதங்கள் வருஷங்களாகி வந்தன. ஆறு வருஷங்கள் இவ்வாறு அதி சீக்கிரத்தில் சென்றுவிட்டன. இதற்குள் கேசவனும் திருவேங்கடமும் அநேக சண்டைகளில் ஈடுபட்டு, தீரச்செயல்கள் பல புரிந்து, உடம்பெல்லாம் காயங்களடைந்து, பெயரும் புகழும் பெற்றுவிட்டனர். ஒரு நாள் சிவாஜி கேசவனைக் கூப்பிட்டு, திராவிட தேசத்தில் அவன் பிறந்து வளர்ந்தது எந்த இடம் என்று கேட்டார். கேசவன், “திருவண்ணாமலைக்கு அருகில்” என்று சொன்னான். “செஞ்சிக்கோட்டை பார்த்திருக்கிறாயா?” என்று அவர் வினவ, “செஞ்சிக்கோட்டையில் ஒவ்வொரு கல்லும் புல்லும், ஒவ்வொரு மூலையும் முடுக்கும் எனக்குத் தெரியும்” என்று பெருமையுடன் கூறினான் கேசவன். “சரி, அப்படியானால் நீயும் உன் மகனும் என்னுடன் வாருங்கள்” என்றார் சத்ரபதி. பொறுக்கி எடுத்த சில போர் வீரர்களுடன் அவர் மறுநாளே தென் திசை நோக்கிப் புறப்பட்டார். அடுத்த மாதத்தில் ஒரு நாள் சிவாஜியின் வீரர்கள் செஞ்சிக்கோட்டையின் மேல் எதிர்பாராத சமயத்தில் இடி விழுவது போல் விழுந்தார்கள். நவாபின் வீரர்களைச் சின்னாபின்னமாக ஓடச் செய்து கோட்டையைக் கைப்பற்றினார்கள். கோட்டை வசப்பட்ட அன்று சிவாஜி, கேசவனை அழைத்து அவனுடைய உதவியினால் தான் அவ்வளவு சுலபமாக அந்தப் பிரசித்தி பெற்ற கோட்டையைப் பிடிக்க முடிந்தது என்று சொல்லித் தமது நன்றியைத் தெரிவித்தார். பிறகு, "ஆனால் நமது ஜயம் இன்னும் நிலைப்பட்டு விடவில்லை. கோட்டையைக் கைவிட்ட நவாபின் வீரர்கள் இப்போது கோட்டைக்கு வெளியே பலம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆற்காட்டிலிருந்து புது சைன்யங்களும் வந்து நம்மை முற்றுகையிடக்கூடும். ஆகையால் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இங்கே நம்முடைய பலம் இவ்வளவுதான் என்று நம் எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. ஆகவே கோட்டையிலிருந்து யாரும் வெளியே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கோட்டையின் இரகசிய வழிகள் நம் வீரர்களுக்குள்ளே உனக்கு மட்டுந்தான் தெரியும். ஆகையால், நீதான் கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். யாராவது வெளியில் போக எத்தனித்தால் தாட்சிண்யம் பாராமல் உடனே சுட்டுக் கொன்றுவிடு" என்று கட்டளையிட்டார். கேசவன் தன் வாழ்நாளில் எக்காலத்திலும் இல்லாத இறும்பூதுடன், “மகாராஜ்! அப்படியே!” என்று கூறிச் சென்றான். கோட்டை மதிலுக்கு மேற்புறத்தில் சூரியன் அஸ்தமித்தான். அதிவிரைவாக நாலாபக்கங்களிலும் இருள் கவிந்து கொண்டு வந்தது. கேசவனுடைய கவலை அதிகமாயிற்று. பகலை விட இரவில் மூன்று மடங்கு அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டிய அவசியத்தை அவன் உணர்ந்திருந்தான். சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். ஆ! அதென்ன அந்தப் பாறைகளினிடையே! ஒரு மனித உருவமல்லவா ஒளிந்து கொள்வது போல் தோன்றுகிறது? அந்த உடை - அது நவாப் சைன்யத்தின் உடையல்லவா? ஓஹோ! எதிரியின் ஒற்றன் உளவறிந்து கொண்டு செல்கிறான்! ஒரு மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் கேசவன் மனத்தில் மேற்படி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. இரண்டே பாய்ச்சலில் அந்த உருவம் ஒளிந்து கொண்ட இடத்தை அடைந்தான். அவன் கழுத்தைப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி, “அடே! நீ யார்?” என்று கர்ஜித்தான். பதில் வராமல் போகவே, முகத்தை திருப்பிப் பிடித்து உற்று நோக்கினான்; நோக்கியது நோக்கியபடியே அசையாமல் நின்றான். அவன் கண்களிலிருந்து விழிகள் வெளியே வந்து விடும் போல் இருந்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் வாயிலிருந்து வரவில்லை. அந்த முகம், அவனுடைய மகன் திருவேங்கடத்தின் முகந்தான்! திருவேங்கடத்தின் முகத்தை யாரும் திருடியிருக்க முடியாததலால், அவன் தான் ஒரு முஸ்லிம் வீரனின் உடையைத் திருடி அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறான். அவன் எங்கே கிளம்பியிருக்கக்கூடும்? பகைவர்களுக்கு உளவு சொல்லத்தான். “அட பாவி! துரோகி! சண்டாளா! என் பிள்ளைதானா நீ? இதற்காகவா உன்னைப் பெற்றெடுத்து இத்தனை காலமும் வளர்த்தேன்? இதெல்லாம் நிஜந்தானா? அல்லது ஒரு வேளை சொப்பனம் காண்கிறேனா?” “அப்பா! என்னை விடுங்கள். ரொம்ப அவசர காரியமாய்ப் போகிறேன். தயவு செய்யுங்கள்” என்று திருவேங்கடம் சொன்னபோது, கேசவன் தான் கனவு காணவில்லையென்பதை உணர்ந்தான். “என்ன, அவசரமாய்ப் போகிறாயா? ஆமான்டா! அவசரமாய் யமலோகத்துக்குப் போகப் போகிறாய்” என்று கூறிக் கொண்டே கேசவன் கோபச் சிரிப்புச் சிரித்தான். “இல்லை, அப்பா! யமலோகத்துக்கு இல்லை. நான் யமலோகத்துக்குப் போய்விட்டால் தங்களுக்கு யார் கர்மம் செய்வார்கள்?” “அட பாவி! நிஜத்தைச் சொல்லிவிடு. எங்கே கிளம்பினாய்? ’என்ன துரோகம் செய்வதற்காக இந்த வேஷத்தில் புறப்பட்டாய்? கோட்டையை விட்டு யாரும் வெளிக் கிளம்பக் கூடாது என்று சத்ரபதி உத்தரவிட்டிருப்பது தெரியாதா?” “அப்பா என்னை நம்பமாட்டீர்களா? பிசகான காரியம் ஒன்றுக்காகவும் நான் போகவில்லை. மிகவும் முக்கியமான அவசரமான வேலைக்காகவே போகிறேன். தயவு பண்ணி என்னை நம்புங்கள்.” “முடியாது, முடியாது. நிஜத்தைச் சொல்லிவிடு. மகாராஜாவிடம் உன்னை அழைத்துச் சென்று காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். இல்லாவிட்டால் உன்னை எடுத்து வளர்த்த இதே கையினால், இந்த இடத்திலேயே உன்னைக் கொன்று விடுவேன்.” திருவேங்கடம் சற்று யோசித்தான். “அப்பா! நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். மன்னியுங்கள் - என்னுடைய ரங்கத்தைப் பார்க்கத்தான் போகிறேன். பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடுகிறேன்…” என்பதற்குள், கேசவன், “பொய், பொய், பொய்! ரங்கத்தைப் பார்க்கப் போவதற்கு இவ்வளவு அவசரம் என்ன? ராத்திரியில் கிளம்புவானேன்?” என்றான். “அப்பா! ரங்கத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம். சாகக் கிடக்கிறாளாம். நாளை வரையில் உயிரோடிருப்பாளோ, என்னவோ தெரியாது.” “அடே! நேற்றுப் பையன் நீ, என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? ரங்கம் சாகக் கிடப்பதெல்லாம் உனக்கு எவ்வாறடா தெரியும்? யார் வந்து சொன்னார்கள்? - வேண்டாம்; நிஜத்தைச் சொல்லிவிடு, திருவேங்கடம்! - உன்னைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? ‘என்னுடைய சபதம் தீர்ந்து விட்டது; அதற்கு இனிமேல் அவசியமுமில்லை; தர்ம ராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டபடியால் நம் குழந்தை இனி மேல் கலியாணம் செய்து கொள்ளலாம். நாமே மகாராஜாவிடம் உத்தரவு பெற்றுப் போய் அந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வரவேணும்’ என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், நீயோ… அட பாதகா! துரோகிப் பயலே! எங்கேடா ஓடுகிறாய்!…” விஷயம் என்னவென்றால், கேசவன் அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திருவேங்கடம் திடீரென்று அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டு ஒரு துள்ளுத் துள்ளி ஓட்டம் பிடித்தான். அடுத்த க்ஷணத்தில் புதர்கள், பாறைகளிடையில் அவன் மறைந்து விட்டான். கேசவன் முதலில் ஓடித் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு திருவேங்கடத்தைத் தேடினான். எவ்வளவு தேடியும் பயனில்லை. இதற்குள் நன்றாய் இருட்டியும் போய்விட்டது. இவ்விருவருடைய சம்பாஷணையையும் அதன் முடிவையும் மூன்றாவது மனிதர் ஒருவர் மறைவாக இருந்து கவனித்து விட்டுச் சென்றது அவர்கள் இருவருக்கும் தெரியாது. மறுநாள் பொழுது விடிந்து கொஞ்ச நேரம் ஆனதும் கேசவன் மகாராஜாவிடம் வந்தான். இரவெல்லாம் கண்விழித்ததனால் அவனுடைய கண்கள் கோவைப் பழம் போல் சிவந்திருந்தன. அவன் பேயடித்தவன் போல் காணப்பட்டான். கீழே சாஷ்டாங்கமாய் விழுந்து தண்டனிட்டு, “மகாராஜ்! கடமையில் தவறிவிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்” என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, “என்ன சமாசாரம்?” என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம்; அவன் பிள்ளை திருவேங்கடந்தான்! கேசவன் அவனைப் பார்த்ததும் பரபரப்புடன் தன் பிச்சுவாவை உருவிக் கொண்டு, “அடே! துரோகி” என்று கூறியவண்ணம் குத்தப் போனான். சிவாஜி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார். “கொஞ்சம் பொறு; முதலில் அவன் போன சங்கதி காயா, பழமா என்று சொல்லட்டும்” என்றார். “பழந்தான் மகாராஜ்!” என்றான் திருவேங்கடம். தன்னுடைய இடுப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த மகாராஜாவின் முத்திரை மோதிரத்தை அவிழ்த்து அவரிடம் கொடுத்தான். கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “மகாராஜா அதென்ன? தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா?” என்று கேட்டான். “ஆமாம்; செங்கற்பட்டு ஏரியில் நம்முடைய சேனாதிபதி சில சைன்யங்களுடன் காத்திருக்கிறார். அவரை அங்கிருந்து நேரே வேலூருக்குச் சென்று தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. அதற்காகத் தான் இவனை அனுப்பினேன். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன். இந்த முக்கியமான வேலையைச் செய்து முடித்ததற்காகத் திருவேங்கடத்துக்கு ஜமேதார் பட்டம் அளிக்கிறேன்” என்றார் சத்ரபதி. அதைக் கேட்டுக் கேசவன் வெறுப்புடன் ‘ஹும்’ என்னவும், சிவாஜி நிமிர்ந்து பார்த்தார். “மகாராஜ்! தாங்கள் இவனுக்குப் பட்டம் அளிக்கிறீர்கள். நானாயிருந்தால் நாலு அறை கொடுத்துப் புத்தி கற்பித்திருப்பேன். இந்த முட்டாளிடம் அவ்வளவு முக்கியமான வேலையைக் கொடுத்தீர்களே! எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன? கையிலே கத்தி இல்லையா? அப்படியா பேசிக் கொண்டு, பொய்ச் சாக்குச் சொல்லிக் கொண்டு நிற்பார்கள்? நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? காரியம் கெட்டுப் போயிருக்குமே?” என்றான் கேசவன். “ஆமாம், அந்தக் குற்றத்திற்காக இவனைத் தண்டிக்கவும் போகிறேன்! ஆறு மாதத்திற்கு இவனை நமது வீர சைன்யத்திலிருந்து தள்ளியிருக்கிறேன்” என்றார் சிவாஜி. “ஐயோ! மகாராஜா; நிஜமாகவா?” என்று திருவேங்கடம் கதறினான். “ஆமாம் நிஜமாகத்தான், கேசவா! சீக்கிரம் அந்த ரங்கம்மாளை அழைத்துக் கொண்டு வா! நமது முன்னிலையிலேயே கலியாணம் நடக்க வேண்டும். அவன் ஆறு மாதம் இல்லறம் நடத்திவிட்டு அப்புறம் நம்முடன் வந்து சேரட்டும்” என்றார் சிவாஜி. திருடன் மகன் திருடன் பழைய தகரப் பெட்டிக்குள் வைத்திருந்த பட்டாசுக் கட்டுகளையும் மத்தாப்புப் பெட்டிகளையும் பாலன் எண்ணி வைத்து ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த மாதிரி அவன் எண்ணி வைத்து ஒழுங்கு படுத்தியது, இது முப்பத்திரண்டாவது முறை. பட்டாசு, மத்தாப்பு முதலியவற்றை தொடுவதிலேயே அவனுக்கு ஓர் ஆனந்தம். பெட்டிக்குள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் நகர்த்தி வைத்து ஒழுங்குபடுத்துவதிலே அளவில்லாத சந்தோஷம். தம்பி சீனுவுக்கும், தங்கை அம்புலுவுக்கும் எது எதைக் கொடுக்கலாம் என்பது பற்றிப் பிரமாதமான யோசனை. “சீனுவுக்குப் படபடா, அம்புலுவுக்குப் புஸ்வானம்!” என்று அவனுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டது. “பெரிய மாமா வந்துவிட்டார்!” என்று சொல்லிக் கொண்டே, பாலன் தகரப் பெட்டியை அவசர அவசரமாகப் பூட்டிக் கொண்டு விழுந்தடித்து வாசற் பக்கம் ஓடினான். குதிரை வண்டியிலிருந்து கறுப்புக் கோட்டும், சரிகைத் தலைப்பாகையும், கையில் ஓர் அட்டைப் பெட்டியுமாகப் பெரிய மாமா இறங்கிக் கொண்டிருந்தார். பெரிய மாமா கல்யாணசுந்தரம், அந்த ஊரில் பிரபல வக்கீல், கோர்ட்டுக்குப் போய் விட்டு அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். பாலனுடைய கவனமெல்லாம் பெரிய மாமாவின் கையில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்தது. அவர் வண்டியிலிருந்து இறங்கியதும், இறங்காததுமாகப் பாலன், “மாமா! ஏரோபிளேன் வாணம் வாங்கிக் கொண்டு வந்தேளா?” என்று கேட்டான். பெரிய மாமா புன்னகையுடன் வீட்டு வாசற்படிகளில் ஏறினார். பெரிய மாமாவின் பிள்ளைகளான துரையும், சங்கரனும் வீட்டுக்குள்ளேயிருந்து அச்சமயம் வெளியே வந்தார்கள். பாலனுடைய கேள்வி அவர்களுடைய காதில் விழுந்தது. துரை சங்கரனிடம் மெல்லிய குரலில், “பையனுக்கு என்ன பரபரப்பு?” என்றான். அதுவும் பாலனுடைய காதில் விழுந்தது. இதனால் பாலன் உற்சாகம் குன்றாமல் பெரிய மாமாவைப் பார்த்துக் கையை நீட்டினான். “அவசரப்படாதே, உள்ளே வா! தருகிறேன்!” என்றார் மாமா. பிறகு, “உன் அம்மாவும் சின்ன மாமாவும் வந்து விட்டார்களா?” என்று கேட்டார். “இல்லை!” என்றான் பாலன். கல்யாணசுந்தரம் ஆபீஸ் அறைக்குச் சென்று மேஜை மீது அட்டைப் பெட்டியை வைத்தார். அதற்குள்ளே இருந்த ஏரோபிளேன் வாணங்களை எடுத்துப் பாலனுடைய கையில் இரண்டு கொடுத்தார். மற்றவற்றைத் துரையிடம் கொடுத்து, ‘எடுத்துக் கொண்டு போங்கள்!’ என்றார். பாலன் ஏரோபிளேன் வாணங்களை வாங்கிக் கொண்டதும் அங்கிருந்து குதித்தோடினான். துரையும், சங்கரனும் அப்பாவின் ஆபீஸ் அறையிலேயே நின்றார்கள். பாலனை விட அவர்கள் வயசில் மூத்தவர்கள். துரை சங்கரனைப் பார்த்தான். சங்கரன் தகப்பனாரைப் பார்த்து “அப்பா, பாலன் திருடுகிறான் என்று தோன்றுகிறது!” என்றான். அட்வகேட் கல்யாணசுந்தரம் அவனைக் கோபமாகப் பார்த்தார். அப்போது துரை, “ஆமாம், அப்பா! நேற்றைக்கு அவன் தகரப் பெட்டியைத் திறந்தபோது தற்செயலாகப் பார்த்தேன், நிறையப் பணம் வைத்திருக்கிறான்!” என்றான். சங்கரன், “அவனுக்கு அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்திருக்கும்? திருடித்தானே இருக்க வேண்டும்? அம்மா கூட அடிக்கடி ‘நாலணாவைக் காணோம். எட்டணாவைக் காணோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் தான் எடுத்திருக்க வேண்டும்” என்றான். துரை, “அப்பாவின் திருட்டுக் குணம், பையனுக்கும் உண்டு போலிருக்கிறது!” என்றான். “சீ! பேசாதிரு!” என்று அதட்டினார் கல்யாணசுந்தரம். அவருடைய மனம் புண்ணாயிற்று என்று முகத்திலிருந்து தெரிந்தது. பிறகு கொஞ்சம் சாவதானமான குரலில் "துரை! சங்கர்! நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது. பாலனுடைய அப்பா, அம்மாவுக்கு இப்போது கஷ்ட காலம். ஏற்கனவே அந்தப் பையன் மனம் நொந்திருக்கிறான். அவனைப் பற்றி நீங்கள் இப்படி பேசுவது காதில் விழுந்தால், அவன் மனசு என்ன பாடுபடும்? யாரைப் பற்றியும் அநாவசியமாகச் சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டுப் பழி சொல்வது பாவம்! மாதம் மாதம் உங்களுக்குக் கொடுக்கிறது போல அவனுக்கும் பாக்கெட் மணி கொடுக்கிறேன் அல்லவா? அதில் அவன் மிச்சம் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம். எதற்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் சூட்டுகிறீர்கள்?" என்றார். இந்தப் பேச்செல்லாம் பாலனுடைய காதில் விழத்தான் செய்தது. அவன் வாங்கிக் கொண்டு போன ஏரோபிளேன் வாணங்களில் ஒன்றில் தீ வைக்கும் திரி இல்லை. அதைப் பெரிய மாமாவிடம் கொடுத்து வேறொன்று வாங்கிக் கொள்வதற்காக அவன் வந்து கொண்டிருந்தான். மாமா சொன்னது காதில் விழவே, ஆபீஸ் அறைக்குள் நுழையாமல் திரும்பிப் போனான். போய்த் தன்னுடைய பழைய தகரப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தலையைப் பெட்டியின் மேல் வைத்துக் கொண்டு விம்மினான். “ஏண்டா குழந்தை, என்னடா செய்கிறாய்? உட்கார்ந்து கொண்டே தூங்குகிறாயா என்ன? ராத்திரியில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கிறாய் போலிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே பாலனின் தாய் அவன் அருகில் வந்தாள். பாலன் தலை நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். “ஏண்டா, அழுகிறாயா என்ன?” என்று பதைபதைப்புடன் ஜானகி அருகில் வந்து உட்கார்ந்தாள்! “இல்லை, அம்மா, அழவும் இல்லை, ஒன்றும் இல்லை!” என்றான் பாலன். “சீ! பொய் சொல்லாதே! அழுது, அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கிறதேடா!” என்றாள் ஜானகி. “வீங்கவும் இல்லை, ஒன்றுமில்லை” என்றான் பாலன். “ஏண்டா அழுதாய்? யாராவது ஏதாவது சொன்னார்களா?” என்று கேட்டாள் ஜானகி. “ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தான் தீபாவளிக்கு ஊருக்கு வர வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. அம்புலுவையும் சீனுவையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நானும் உன்னுடன் வரட்டுமா?” என்று கேட்டான். “வேண்டாம், வேண்டாம்! அசடு மாதிரி பேசாதே. நம்ம வீட்டில் இந்த வருஷம் தீபாவளி கிடையாது! இங்கே இருந்தால் மாமா உனக்குப் புது வேஷ்டி, புதுச் சொக்காய் எல்லாம் வாங்கித் தருவார்!” என்றாள் ஜானகி. “அம்புலுவுக்கும் சீனுவுக்கும்?” என்று பாலன் கேட்டான். “அவர்களுக்கு என்ன? பச்சைக் குழந்தைகள்! அப்பா அடுத்த வருஷம் வெளியில் வந்தால் வாங்கிக் கொடுக்கட்டும்” என்றாள் ஜானகி. பாலன் சற்று நேரம் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். “அப்பா எப்படி அம்மா இருக்கிறார்? எப்போது வெளியில் வருவார்?” “நன்றாய்த்தான் இருக்கிறார், அவருக்கு என்ன? ‘பி’ கிளாஸில் வைத்திருக்கிறார்களாம்! மூன்று மாத காலந்தானே ஆயிற்று! விடுதலைக்கு இன்னும் ஒன்பது மாதம் இருக்கிறது!” என்றாள் ஜானகி. “உன் பேரில் ரொம்பக் கோபமாய் இருக்கிறாரா?” என்று கேட்டான் பாலன். “என் பேரில் எதற்காகக் கோபமாயிருக்கிறார்? நானா இப்படியெல்லாம் கெட்டலையச் சொன்னேன்?” என்றாள் ஜானகி. பிறகு, “நான் ரெயிலுக்குக் கிளம்ப வேண்டும். நீ சமர்த்தாய் இருக்கிறாயா? யாராவது ஏதாவது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தெரியுமா? பட்டாசுக் கட்டு, மத்தாப்பு எல்லாம் நிறைய இருக்கிறது என்று சொன்னாயே! சீனுவுக்கும் அம்புலுவுக்கும் கொஞ்சம் கொடேன்” என்றாள். “ஆகட்டும், அம்மா தருகிறேன்” என்றான் பாலன். பிறகு நீண்ட யோசனை செய்து தயங்கித் தயங்கிப் பெட்டியிலிருந்து ஒரு பட்டாசுக் கட்டை எடுத்தான். எடுத்ததை வைத்துவிட்டு, இன்னொன்றை எடுத்தான். கடைசியில் இரண்டு பட்டாசுக் கட்டும், இரண்டு படபடாவும், இரண்டு மத்தாப்புப் பெட்டியும் எடுத்து அம்மாவிடம் கொடுத்தான். “ஏண்டா பெட்டி நிறைய வைத்திருக்கிறாய், இரண்டே இரண்டு கொடுக்கிறாயே?” என்றாள் ஜானகி. “இந்த வீட்டில் துரை, சங்கரன் எல்லாரும் நிறைய வாணம் விடுவார்கள். அம்மா! அவர்களைப் போல் நானும் வாணம் விட வேண்டும் அல்லவா?” என்றான் பாலன். “அதுவும் சரிதான். நீயே இவற்றையும் வைத்துக் கொள். சீனுவுக்கும் அம்புலுவுக்கும் பட்டாசுக் கட்டு சுடக் கூடத் தெரியாது!” என்றாள் ஜானகி. “எல்லாம் தெரியும், அம்மா! கட்டாயம் எடுத்துக் கொண்டு போ. நான் கொடுத்தேன் என்று சொல்லு!” என்று பாலன் கூறி, இன்னொரு மத்தாப்புப் பெட்டி அதிகமாகவே எடுத்துக் கொடுத்தான். ஜானகியின் புருஷன் ஜோக்கர் ராமுடுவின் பெயர் போக்கிரிகளின் உலகத்தில் நீண்ட காலமாகப் பிரசித்தி பெற்றிருந்தது. ராமுடுவைப் பிடித்துக் கையில் விலங்கு மாட்டி, இரும்புக் கதவுக்குள் தள்ளி, இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போலீஸார் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ராமுடு எப்படியோ போலீஸார் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவனுடைய அருமை மனைவி, பதி பக்தியுள்ள பெண்மணி, ஸ்ரீமதி ஜானகியின் மூலமாக அவன் போலீஸ் கையில் சிக்கிக் கொள்ளும்படி நேர்ந்து விட்டது. ராமுடு பார்த்து வந்த உத்தியோகம் போனதிலிருந்து, அவன் அதிகமாகக் குடும்பத்தைக் கவனிப்பது கிடையாது. மாதத்தில் சில நாள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனைவி மக்களிடம் வெகு பிரியமாய் இருப்பான். அவர்களுக்கு அதைப் பண்ண வேணும், இதைப் பண்ண வேணும் என்றெல்லாம் ஆசையுடன் பேசுவான். பெரிய ‘பிரைஸ்’ அடிக்கப் போவதாகவும், அதற்குப் பிறகு வீடு உண்டு தான் உண்டு என்று இருக்கப் போவதாகவும் சொல்லுவான். ஆனால் இந்தப் பேச்சிலேயெல்லாம் ஜானகி அதிகமாக நம்பிக்கை வைக்கவில்லை. இரண்டு எருமை மாடு வைத்துக் கொண்டு, தமையன் தம்பிமாரிடமிருந்து கிடைத்த உதவியைக் கொண்டு காலட்சேபம் செய்துவந்தாள். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு அளவில்லாத பொறுமையையும் கஷ்டத்தைச் சகிக்கும் தன்மையையும் அளித்து வந்தது. பாலனை அவனுடைய மாமா படிக்க வைப்பதாகச் சொல்லி அழைத்துப் போனதிலிருந்து ஜானகிக்குத் தெம்பு அதிகமாயிற்று. அம்புலுவின் கல்யாணத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. எருமைமாட்டுத் தயிரும், நெய்யும் விற்றுக் கிடைத்த பணத்தில் மிச்சம் பிடிக்கத் தொடங்கினாள். அந்தப் பணத்தைப் பதுக்கி வைக்கவும் தொடங்கினாள். ராமுடுவின் கண்ணில் பட்டால் அவன் எப்படியாவது நையப் பாட்டுப் பாடி வாங்கிக் கொண்டு போய்விடுவான் என்று அவளுக்குப் பயம். இம்மாதிரி பல சமயம் அவளிடம் இருந்த ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அவன் கடனாக வாங்கிக் கொண்டு போனதுண்டு. ஒரு முறையாவது திரும்பக் கொடுத்தது கிடையாது. மிச்சம் பிடித்த பணத்தை ஜானகி, தான் தினந்தோறும் இரவில் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளும் தலையணைக்குள்ளே செருகி வைத்து வந்தாள். ஒரு நாள் ராமுடு அந்தத் தலையணையை வைத்துக் கொண்டபோது, ‘தலைகாணி என்ன இப்படிக் கனக்கிறதே!’ என்றான். ஜானகிக்குப் பயமாய்ப் போய்விட்டது. மறுநாளே பணத்தை எடுத்து ஒரு பழந்துணியில் முடிந்து அரிசிப் பானைக்குள் வைத்தாள். அதுவும் மனச்சாந்தியை அளிக்கவில்லை. அண்ணன் வீட்டுக்குப் போகும் போது அதை அங்கே கொண்டு போய்ப் பாங்கியிலே போட்டு விட்டு வர வேண்டும் என்று எண்ணினாள். ஒரு நாள் சில்லறையாயிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் மளிகைக் கடையில் கொடுத்து நோட்டாக மாற்றிக் கொண்டு வந்தாள். கிருஷ்ண பகவானுடைய படத்துக்குப் பின்னால் ஒளித்து வைத்தாள். அதிலும் பயம் வந்துவிட்டது. ஒரு தகர டப்பாவில் நோட்டும், ரூபாயுமாக நூற்றெட்டு ரூபாய் போட்டு மூடிப் பழந்துணி ஒன்றைச் சுற்றிக் கட்டி ஒரு நாள் நடுநிசியில் வீட்டுக் கூடத்தில் ஒரு மூலையைத் தோண்டிப் புதைத்து விட்டாள். புதைத்த இடத்தின் மேலே சுவர் ஓரமாகத் தவிட்டு மூட்டையைப் போட்டு வைத்தாள். ஒரு தடவை ராமுடு வந்து வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்தான். “ஜானகி உன்னிடம் பணம் இருந்தால் இருபது ரூபாய் கொடு, ஒரு மாதத்தில் கொடுத்து விடுகிறேன்” என்றான். ஜானகி தலையை ஒரே ஆட்டாக ஆட்டி, “இல்லை” என்று சொன்னாள். பெட்டியில் சட்டியில் எல்லாம் ராமுடு கையை விட்டுத் தேடினான். ஒன்றும் கிடைக்கவில்லை. ஜானகி தன் மனதிற்குள் பணத்தைப் பூமியில் புதைத்து வைத்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணிக் கொண்டாள். ராமுடு போனதற்கு மறுநாள் ஜானகி மாட்டுக்குத் தவிடு எடுக்கும் போது கீழே சிந்தியதையும் எடுத்துக் கொள்வதற்காக மூட்டையைப் புரட்டினாள். அவளுடைய வயிறு பகீர் என்றது! தலை சுழன்றது. ஏனென்றால் சுவர் மூலையில் தரையில் ஒரு துவாரம் காணப்பட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு கையை விட்டுத் தோண்டிப் பார்த்தாள். பணம் வைத்திருந்த டப்பாவைக் காணவில்லை. அவள் அப்போது போட்ட கூச்சலில் அண்டை அயலார் எல்லோரும் வந்து கூடி விட்டார்கள். ஜானகி விஷயத்தைச் சொன்னதும் அவர்களில் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப் போய்ச் சொன்னார். போலீஸ்காரர்களும் வந்தார்கள். ஜானகியிடம் என்ன விஷயம் என்று கேட்டார்கள். போன பணத்தைக் கண்டுபிடித்துப் போலீஸார் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் ஜானகி தான் பணத்தைப் புதைத்து வைத்திருந்த விவரத்தைக் கூறினாள். யாரோ திருடியிருக்கிறார்கள் என்றும் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும் கதறினாள். பாவம்! ஜானகியுடைய பிரலாபம் போலீஸாரின் மனத்தைக் கூட இளகச் செய்துவிட்டது. வந்திருந்த ஹெட் கான்ஸ்டபிள் “எப்படியும் திருட்டைக் கண்டுபிடித்து விடுகிறோம், நீ சும்மா இரு!” என்று ஆறுதல் சொன்னார். அன்று மாலையே போலீஸார் திரும்பி வந்து ஜானகியிடம் அவள் புருஷனுடைய போக்கு வரவைப் பற்றி விசாரித்தார்கள். ஜானகிக்கு ‘சொரேல்’ என்றது. ஏற்கனவே அவள் மனத்தில் ராமுடுவைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் ஜனித்ததுண்டு. உடனே, ‘அப்படி இராது!’ என்று தீர்மானித்துக் கொண்டாள். ஆயினும் இப்போது போலீஸார் விசாரித்ததும் மறுபடியும் பீதி உண்டாகிவிட்டது. தன் புருஷன் வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆயிற்று என்று பொய் சொன்னாள். ‘இரண்டு நாளைக்கு முன்பு வந்திருந்தானாமே?’ என்று கேட்டதற்கு, “இல்லவே இல்லை!” என்று சொல்லி விட்டாள் ஜானகி. “இல்லை” என்று சொல்லி விட்டால் புருஷனைக் காப்பாற்றியதாகி விடுமா? அதனால் போலீஸாரின் சந்தேகம் அதிகமே ஆயிற்று. எப்பேர்ப்பட்ட சிக்கலான மர்மமான குற்றங்களையெல்லாம் கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தத் திருட்டு ஒரு பிரமாதமா? கடைசியில் அவர்கள் ராமுடுவையும் அவனுடைய கூட்டாளிகளில் மூன்று பேரையும் கைது செய்து விட்டார்கள். அந்த நாலு பேர் மீதும், பணம் வைத்துச் சீட்டு விளையாடியதாக வழக்குத் தொடர்ந்தார்கள். ராமுடுவின் பேரில் அதிகப்படியாகத் திருட்டு வழக்கும் தொடர்ந்தார்கள். ஜானகி தன்னுடைய ஆத்திரத்தினால் நேர்ந்த விபரீதத்தைப் பார்த்ததும், முட்டி மோதிக் கொண்டு அழுதாள். தமையன், வக்கீல் கல்யாணசுந்தரத்தின் யோசனைப்படி கோர்ட் விசாரணையில், பணம் திருட்டுப் போனதே உண்மை இல்லை என்று சாதித்தாள். மளிகைக் கடைப் பாக்கி கொடுக்க முடியாதபடியால் மளிகை வியாபாரிக்குச் சால்ஜாப்புச் சொல்வதற்காக அப்படி ஒரு கற்பனை செய்ததாகக் கூறினாள். அதெல்லாம் ஒன்றும் பயன்படவில்லை. அவளுடைய முதல் வாக்குமூலத்தையே கோர்ட்டில் ஆதாரமாகக் கொண்டார்கள். அத்துடன் மற்றச் சாட்சியங்களும் சேரவே, ராமுடுவை ஒரு வருஷம் தண்டித்துவிட்டார்கள். மேற்படி வழக்கு விசாரணையின் போது ராமுடு அவளிடம் நடந்து கொண்ட முறை கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அவன் ஜானகியின் பேரில் கோபம் காட்டவே இல்லை. அவனுடைய மனப்போக்கே மாறிப் போய் இருந்தது. “நீ என்ன செய்வாய் ஜானகி? வேண்டுமென்றே என்னைச் சிறைக்கு அனுப்புவதற்காகவா சொன்னாய்? என் தலையெழுத்து அப்படி. உன் வாய்மூலம் இந்தக் கஷ்டம் எனக்கு சேர்ந்தது. நீ வீணாக வருத்தப்படாதே!” என்று தேறுதல் கூறினான். இதெல்லாம் ஜானகியின் காதில் ஏறுமா? அவள் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை. எனினும், எந்த மாதிரித் துயரமும் நாளடைவில் காய்ச்சித்தான் போகிறது. அதனுடைய வேகம் தணிந்து விடுகிறது. கடவுள் மனிதர்களுக்கு அத்தகைய ஒரு சக்தியைக் கொடுத்திருக்கிறார். ராமுடு சிறைக்குப் போய் மூன்று மாதத்துக்குப் பிறகு ஜானகி அவனைச் சிறையில் ‘இண்டர்வியூ’ பார்ப்பதற்காகச் சென்றாள். அவளுடைய அண்ணன் தம்பிமார் வசித்த நகரத்தில் சிறை இருந்தது. ஜானகியின் தம்பி கைலாசம் அவளைச் சிறைக்கு அழைத்துப் போனான். இரும்புக் கம்பிக் கூண்டுக்குள்ளே தன் கணவனைப் பார்த்ததும், ஜானகிக்கு வயிறு பற்றி எரிந்தது; உள்ளம் வெதும்பிற்று. ஆயினும் சற்று நேரம் அவனுடன் பேசி, அவன் சிறையில் சௌக்கியமாகவே இருக்கிறான் என்று தெரிந்ததால் கொஞ்சம் மன நிம்மதி ஏற்பட்டது. “ஜானகி, எத்தனையோ பெரிய மனிதர்கள் எல்லாம் காந்திக் கட்சியில் சேர்ந்து சிறைக்கு வரவில்லையா? அந்த மாதிரி நானும் சிறைப்பட்டதாக நினைத்துக் கொள். விடுதலையாகி வெளியே வந்ததும் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியிருக்கும் பார்” என்று ராமுடு சொன்னான். தான் கஷ்டப்பட்டுச் சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தைத் திருடியவன் ராமுடு என்பதில் ஜானகிக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. தன் புருஷன் யோக்கியதை தெரிந்திருந்தும், தான் பதற்றப்பட்டுப் போலீஸுக்குச் சொன்னதைப் பற்றி அவள் வருந்தினாள். எனினும் இந்தச் சிறைவாசத்தின் பயனாக அவனுடைய நடவடிக்கை அடியோடு மாறிவிடலாம் என்ற எண்ணம் “எல்லாம் ஒரு நன்மைக்குத்தான்” என்ற முதுமொழியில் அவளுடைய நம்பிக்கையை வலுப்படுத்திற்று. இதைப் பற்றி நினைத்து ஒரு வகையாக மனத்தை தேற்றிக் கொண்டே ஜானகி ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனாள். ஜானகியின் தம்பி கைலாசம் அவளை ரெயில் ஏற்றி அனுப்புவதற்காக வந்தான். “பாலன் இங்கே சமர்த்தாயிருக்கிறான் அக்கா! நன்றாகப் படித்து வருகிறான்! அவனைப் பற்றி நீ கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறினான். “அந்த குழந்தையைத்தான் நான் நம்பியிருக்கிறேன்; அவன் தலை எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தால்தான் எனக்கு விடியும்!” என்றாள் ஜானகி. குப் குப் என்ற சத்தத்துடன் தூரத்தில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அம்மாவும் சின்ன மாமாவும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்படும் வரையில் பாலன் காத்துக் கொண்டிருந்தான். ஒற்றை மாட்டு வண்டி வீட்டு வாசலிலிருந்து நகர்ந்ததும், சட்டென்று உள்ளே ஓடினான். தகரப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைத்திருந்த பணத்தை எடுத்துத் தன்னுடைய டிராயர் (கால் சட்டை) பைக்குள் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டான். பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் ஒரு துணியில் கட்டிக் கொண்டான். வீட்டின் வலது பக்கத்திலிருந்த வாசற்படி வழியாக யாரும் கவனியாத போது வெளியே கிளம்பினான். ஓட்டமும் நடையுமாகச் சென்று, பட்டாசு மத்தாப்பு மார்க்கெட்டை அடைந்தான். “தம்பி! என்ன வேணும்” என்று கடைக்காரன் கேட்டான். “எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னிடம் உள்ள பட்டாசுகளையும், மத்தாப்பு வாணங்களையும் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க முடியுமா?” என்று பாலன் கேட்டான். கடைக்காரனுக்கு கொஞ்சம் அதிசயமாய் இருந்தது. ஆயினும் தீபாவளிக்கு முதல் நாளாகையால் பட்டாசும் மத்தாப்பும் அசாத்திய கிராக்கியான விலைக்கு விற்றது. ஆகையால் பேரம் பேசி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தான் கடைக்காரன். பணத்தைப் பெற்றுக் கொண்டானோ இல்லையோ பாலன் ஒரே ஓட்டமாக ஸ்டேஷனை நோக்கி ஓடினான். பத்து நிமிஷத்தில் ஸ்டேஷனை அடைந்தான். ரெயில் வண்டி பிளாட்பாரத்தில் வந்து நின்று கொண்டிருந்தது. திறந்திருந்த ‘கேட்’ வழியாகப் பாலன் பாய்ந்தோடினான். டிக்கெட் கலெக்டரால் அவனைத் தடுக்க முடியவில்லை. ரெயில் புறப்படுகிற சமயம். ஊதியும் ஆயிற்று. ஜானகி அம்மாள் வண்டிக்குள்ளிருந்து தலையை வெளியில் நீட்டித் தன் தம்பியிடம் “குழந்தையைக் கவனித்துக் கொள்!” என்று சொல்லிக் கொண்டிருந்தது, பாலன் காதில் விழுந்தது. பாலன் ஒரே ஓட்டமாக அந்த வண்டியை நோக்கி ஓடினான். நல்ல வேளையாக வண்டிக் கதவு திறந்திருந்தது. பாய்ந்து உள்ளே ஏறித் தடால் என்று கீழே விழுந்தான். விழுந்ததைச் சிறிதும் பொருட்படுத்தாமல் “அம்மா! நான் வந்துவிட்டேன்!” என்றான். “அடே! என் கண்ணே!” என்று ஜானகி அவனை அலறி எடுத்தாள். பாலன் அவளைத் திமிறிக் கொண்டு ஜன்னல் ஓரம் வந்து சின்ன மாமா கைலாசத்தைப் பார்த்து, “நான் தீபாவளிக்கு ஊருக்குப் போகிறேன் மாமா, எல்லோரிடமும் சொல்லி விடுங்கள்” என்றான். கைலாசம் அதிசயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரெயில் நகர்ந்தது. “ஏண்டா பாலு! ‘மாமா வீட்டில் சமர்த்தாயிருக்கிறேன்’ என்று சொன்னாயே! ஏண்டா இப்படி ஓடி வந்தாய்?” என்று கேட்டாள் ஜானகி. அவன் வந்ததில் அவளுக்குச் சந்தோஷந்தான் என்று குரலிலிருந்தே தெரிந்தது. “தீபாவளியில் உங்களோடயெல்லாம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதனால் தான் வந்துவிட்டேன்.” பிறகு எதையோ நினைத்துக் கொண்டவன் போல், “ஐயையோ! அடடா!” என்று கூச்சல் போட்டான். “என்னடா பாலு!” என்று கேட்டாள் ஜானகி. “அவசரத்தில் மறந்து போய் மாமா வாங்கித் தந்த பட்டாசு மத்தாப்பு ஒன்றையும் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டேன். ரெயில்காரனைக் கொஞ்சம் திரும்பிப் போகச் சொல்லு அம்மா! எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்றான். ஜானகி புன்னகையுடன் “நல்ல வேடிக்கை! ரெயில் திரும்புமா?” என்றாள். “திரும்பாதா? போனால் போகட்டும்! நான் சீனுவுக்கும், அம்புலுவுக்கும் கொடுத்த வாணங்களைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அதுவே போதும்!” என்றான் பாலன். தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி ஒரே கொண்டாட்டமாயிருந்தது. பாலனும், சீனுவும், அம்புலுவும் வீட்டுக்குள்ளே வளைய வளைய வந்து கூத்தாடினார்கள். அம்மாவுக்குக் காரியம் செய்ய முடியாமல் அடித்தார்கள். பட்டாசுக் கட்டையும், மத்தாப்பு பெட்டியையும் சுட்டு விடாமல் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். ஜானகி செய்த பணியாரங்களைக் கூடக் கொஞ்சம் ருசி பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்! தீபாவளிப் பட்சணங்களைத் தீபாவளியன்று காலையிலேதானே சாப்பிட வேண்டும். குழந்தைகள் படுத்துக் கொள்ளும் போது மணிபத்து அடித்து விட்டது. அதற்கு அரை மணிக்குப் பிறகு ஜானகியும் வந்து படுத்துக் கொண்டாள். தூங்கும் குழந்தைகளின் பால்வடியும் முகங்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, விளக்கைச் சிறிதாக்கி ஒரு மூலையில் மறைத்து வைத்தாள். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பதற்காக இப்போது சீக்கிரமாக தூங்க விரும்பினாள். ஆனால் தூக்கம் என்னவோ வரவில்லை. இவ்வளவு சமர்த்தான குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சீர்கெட்டுப் போய்ச் சிறையில் இருப்பதை நினைத்து மனம் உடைந்தாள். பாலன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். மனவேதனையில் ஆழ்ந்திருந்த ஜானகிக்கு அவனிடம் ‘என்ன!’ என்று கேட்கச் சட்டென்று நா எழவில்லை. பாலன் இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்து விட்டு எழுந்து நின்றான். கூடத்து மூலையில் சுவரில் சாத்தியிருந்த ஏணியைச் சத்தம் செய்யாமல் எடுத்துக் கொஞ்ச தூரம் தள்ளி வைத்தான். பிறகு அதன் மேல் மெள்ள மெள்ள ஏறினான். பாலனுடைய செயலை ஜானகி அதிசயத்துடன் அரைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் ஏதாவது கேட்டாலும், குழந்தை திடுக்கிட்டு ஏணியிலிருந்து விழுந்துவிடப் போகிறானே என்ற பயத்தினால் பேசாமலிருந்தாள். மூச்சுகூட மெதுவாக விட முயன்றாள். ஏணி உச்சியில் ஏறிய பாலன் அங்கே சுவரில் பொருத்தியிருந்த உத்திரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்குமிங்கும் கையை வைத்துத் தடவினான். பிறகு அவன் அணிந்திருந்த முழங்கால் சட்டைப் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான். அதைச் சுவரிலோ உத்திரத்திலோ வைத்தான். பிறகு சத்தம் செய்யாமல் கீழே இறங்கிப் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான். ஜானகிக்கு என்னவெல்லாமோ தோன்றியது. தகப்பனைப்போல் பிள்ளையும் ஏதேனும் திருட்டுக் காரியம் செய்கிறானோ என்று எண்ணியபோது அவளுக்குச் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. மாமா வீட்டிலிருந்து எதையாவது திருடிக் கொண்டு வந்திருப்பானோ என்று நினைத்தாள். அப்படியெல்லாம் இராது. அம்புலுவுக்கும் சீனுவுக்கும் தெரியாமல் பட்டாசுக் கட்டை ஒளித்து வைக்கிறான் போலிருக்கிறது என்று ஆறுதல் செய்து கொண்டாள். அசட்டுப் பிள்ளை! ஒன்று கிடக்க ஒன்று ஆகப் போகிறதே! பட்டாசு வெடிக்கும் சாமான் ஆயிற்றே. இந்த ஓட்டை வீட்டிலும் நம் அதிர்ஷ்டம் தீப்பிடித்துக் கொண்டால்? இதைப் பற்றிப் பாலனிடம் இப்போதே கேட்டு விட வேண்டியதுதான். ஆனால் என்னவென்று கேட்பது? எப்படி ஆரம்பிப்பது? ஜானகி இவ்விதம் யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் மறுபடியும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இது என்ன? குழந்தை விம்மி அழுகிறான் போலிருக்கிறது! விம்மலுக்கிடையில் ‘அம்மா!’ என்று கூப்பிடுகிறானே? கூரைமேட்டில் கைவைத்த போது, அவனைத் தேள் கீள் கொட்டி விட்டதோ என்று பீதியுடன் ஜானகி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, “பாலு, என்னடா? ஏண்டா அழுகிறாய்?” என்றாள். “சொப்பனம் கண்டேன் அம்மா!” என்றான் பாலன். “அது என்ன சொப்பனம்?” என்று அம்மா வற்புறுத்திக் கேட்டதன் பேரில், பாலன் சொன்னான்: “ஏதோ ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அந்த தேவதை என்னைப் பார்த்து”பாலு! உங்கப்பா பேரிலே எல்லோரும் பொய்க் குற்றம் சாட்டினார்கள். அவர் பேரிலே ஒரு குற்றமும் இல்லை, உங்கள் அம்மா வைத்திருந்த பணம் உச்சி மேட்டில் உத்தரத்துப் பொந்தில் இருக்கிறது! என்று சொல்லிற்று. நான் அதை நம்பவில்லை அந்தத் தேவதை என்னைக் கையைப் பிடித்து ஏணியில் ஏற்றி அழைத்துக் கொண்டு போய் காட்டிற்று. உத்தரத்துப் பொந்தில் நிஜமாப் பணம் இருந்தது அம்மா!" என்று பாலன் சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதான். ஜானகிக்கு எல்லாம் இப்போது விளங்கி விட்டது. பாலனுடைய தகப்பனாரைப் பற்றி அவன் மாமா வீட்டில் பேசிக் கொண்டிருந்தது குழந்தையின் காதில் விழுந்திருக்க வேண்டும். அப்பாவைக் காட்டிக் கொடுத்தது அம்மா என்கிற செய்தியும் தெரிந்திருக்க வேண்டும். அப்பா திருடவில்லை என்று ருசுப்படுத்துவதற்காக குழந்தை இப்படியெல்லாம் செய்திருக்கிறான்! ஜானகிக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று. குழந்தைக்குப் பதில் சொல்ல அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுடன் பேசுவதற்கு வெட்கமாகக் கூட இருந்தது. ஆனால் பாலன் விடவில்லை. “அம்மா! நீ ஏணி வைத்து ஏறிப் பார்க்கிறாயா?” என்றான். “ஆகட்டும் பாலு! காலையில் பார்க்கிறேன்!” என்றாள் ஜானகி. “இல்லை அம்மா! இப்போதே பார்! இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது!” என்றான் பாலன். குழந்தையைத் திருப்தி செய்வதற்காக ஜானகி எழுந்து ஹரிகேன் லாந்தர் விளக்கைப் பெரிது செய்தாள். பாலனை ஏணியின் அடிப்புறத்தைப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டு, அதன் மேல் ஏறினாள். உச்சியை அடைந்ததும் உத்தரத்தின் பொந்தில் கையை விட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு சிறிய பணப்பை இருந்தது. அதைத்தான் பாலன் அந்த உத்தரத்துப் பொந்துக்குள் வைத்திருக்கிறான். பணப்பையை எடுத்தபோது அதன் கீழ் வேறு ஏதோ கையில் மெதுவாகத் தட்டுப்பட்டது. துணி மாதிரி இருந்தது. இன்னும் ஏதேனும் வைத்திருக்கிறானோ என்று பார்க்க மறுபடி கையை விட்டுத் துழாவினாள். ஒரு சிறு துணி மூட்டை அகப்பட்டது. அதை எடுத்துப் பார்த்ததும் ஜானகி திக்பிரமை அடைந்தாள்! ஏணியிலிருந்து அப்படியே விழுந்துவிடாமல் அவள் கீழே இறங்கி வந்ததே ஓர் ஆச்சரியமான விஷயந்தான்! பொந்திலிருந்து அகப்பட்ட இரண்டு பொருள்களையும் ஹரிகேன் லாந்தர் வெளிச்சத்தில் வைத்துக் கொண்டு ஜானகி பிரித்துப் பார்த்தாள். பாலனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பாலனுடைய பணப் பையைப் பிரித்த போது, ஒரு நூறு ரூபாய் நோட்டும், எட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. எலி கடித்து கொஞ்சம் பொத்தலாகி இருந்த சிறிய துணி மூட்டைக்குள்ளே தகர டப்பா இருப்பது தெரிந்தது. ஜானகி ஆவலுடன் துணியை எடுத்து எறிந்து விட்டு தகர டப்பாவை திறந்து பார்த்தாள். அதற்குள் ஜானகி சேமித்து வைத்திருந்த பத்து பத்து ரூபாய் நோட்டுகளும், எட்டு ரூபாய் வெள்ளிப் பணமும் அப்படியே இருந்தன! ஜானகி அந்த நோட்டுகளையும் வெள்ளி ரூபாய்களையும் கையினால் துழாவிக் கொண்டு பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். தீப்பிடித்த குடிசைகள் 1929-ம் வருஷத்தில் சட்டசபைத் தேர்தல்கள் இல்லை என்று இர்வின் மகாப் பிரபு தீர்மானித்து விட்டதில் என்னைப்போல் வருத்தமடைந்தவர்கல் யாரும் இருக்கமுடியாதென்று நினைக்கிறேன். என் துக்கத்தின் காரணங்களைச் சொல்கிறேன், கேளுங்கள். (1) இந்த வருஷத்தில் தேர்தல் நடந்து நான் இந்திய சட்டசபைப் பதவிக்கு நின்றிருக்கும் பட்சத்தில், என் எதிரி யாராயிருப்பினும் அவர் தேர்தலுக்கு முதல் நாள் யமலோகத்துக்கு வோட்டு கேட்கப் போய்விடுவாரென்றும், நான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவேனென்றும், ஜோசியர் சொல்லியிருந்தார். அது இல்லாமற்போயிற்று. (2) தேர்தல் விநோதங்களைப் பற்றிச் சிற்சில கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அதற்கும் இடமில்லை. புதுத் தேர்தலைப்பற்றி எழுத இடமில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பழைய தேர்தலில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பல்லில்லாத கிழவன் பாலிய பருவத்தில் வெல்லச் சீடை தின்றதை எண்ணிச் சந்தோஷப் படுவதுபோல், அந்தப் பழைய தேர்தல் சம்பவத்தைப்பற்றியாவது எழுதலாமென்று தீர்மானித்தேன். 1626-ம் வருஷத்தில், சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் பல அதிசயமான முடிவுகள் ஏற்பட்டன. வெற்றி நிச்சயமென்று எண்ணியிருந்தவர்கள் பலர் தோல்வி அடைந்தார்கள். நம்பிக்கையெல்லாம் இழந்து சர்வ நாடியும் ஒடுங்கிப் போயிருந்த பலர், பெரும் வெற்றியடைந்தார்கள். இந்த அதிசயமான முடிவுகளுக்குள்ளே மிகவும் அதிசயமானது ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளையின் வெற்றியேயாகும். இவர் தமது ஜில்லாவில் முதன்மையாக வெற்றி பெறுவார் என்று அரசியல் ஜோதிடத்தில் வல்ல பத்திரிக்கை நிருபர்கள் கூட எதிர் பார்க்கவில்லையென்றால், நீங்களும் நானும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியமடைந்ததில் வியப்பில்லையன்றோ? ஆம், இப்போது நினைத்தாலும் அந்தக் காட்சி என் கண் முன்னே நிற்கின்றது. தேர்தல் முடிவுகள் பெருவாரியாக வெளியாகிக்கொண்டிருந்த அன்று, சென்னையில் தினசரிப் பத்திரிகாலயங்களின் வாயில்களில் கும்பல் கும்பலாய் ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிப் பெற்றவர்களின் பெயர்கள் வர வர, வாசலில் ஒரு கருப்புப் பலகையில் எழுதப்பட்டு வந்தன. பிரபல ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் தோற்றுப்போனார் என்று தெரிந்ததும், காங்கிரஸ் அபிமானி ஒருவர் அவசரமாகப் பக்கத்துக் கடைக்குச் சென்று ஒரு டஜன் சுருட்டுக் கட்டுகள் வாங்கி வந்து, எல்லாருக்கும் வழங்கினார். (யாராவது இறந்துபோனால் புகையிலை வழங்குவது சென்னையில் வழக்கம்) இந்த வினோதத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கையில்….ஜில்லாத் தேர்தல் முடிவுகள் கருப்புப் பலகையில் எழுதப்பட்டன. வெற்றி பெற்ற மூவரில் ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளை முதன்மையாக நின்றார். அவருக்கடுத்தபடியாக வந்தவருக்கும் அவருக்கும் 5000 வாக்கு வித்தியாசம்! ஒரு துள்ளுத் துள்ளி மூன்று முழ உயரம் மேலெழும்பிக் குதித்தேன். உடனே எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. சுற்று முற்றும் பார்த்தேன். மற்றவர்கள் என்னைவிட மோசம் என்று தெரிந்த பிறகுதான் கொஞ்சம் சமாதனமாயிற்று. என்னைப் போலவே ஆகாயத்தில் கிளம்பிய பலர் அப்போதுதான் தரையிலிறங்கினார்கள். அவர்களிலொருவர் கீழே கிடந்த சுருட்டு நெருப்பில் காலை வைத்துவிட்டு மறுபடியும் மேலெழும்புவதையும் கண்டேன். வேறு சிலரோ, ஆச்சரியத்தினால் திகைத்துப் போய்ப் பிளந்த வாய் மூடாமல் நின்றார்கள். ஆனால், இப்படி ஆச்சரியப்பட்டவர்களில் எவரும் துக்கமோ மகிழ்ச்சியோ காட்டவில்லை. ஏனெனில், ஸ்ரீமான் காவடிப்பிள்ளை காங்கிரஸ் கட்சியையோ, ஜஸ்டிஸ் கட்சியையோ சேர்ந்தவரல்லர். அவர் சுயேச்சைவாதி. அதுதான், சுவாமிகளே! இதில் பெரிய அதிசயம். ஸ்ரீமான் காவடி கோவிந்தப்பிள்ளை எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்லர். அவரை ஆதரிக்கப் பத்திரிக்கைகள் இல்லை. பிரசாரகர்கள் இல்லை. அவர் பெரிய வக்கீல் அல்ல; ஜில்லா போர்டு தலைவர் அல்ல; பெரும் பணக்காரருமல்ல. அந்த ஜில்லாவுக்கு வெளியே அவர் பெயரை யாரும் கேட்டது கிடையாது. பின் எப்படி அவர் இம்மாதிரி ஒரேயடியாகத் தாண்டிக் குதித்தார்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடியவர் சென்னைப் பட்டணத்தில் யாரும் இல்லை. கூளிப்பட்டி ஜமீந்தாரைப் பிடித்தால் ஒருவேளை இந்த மர்மம் விளங்கலாமென்று நினைத்தேன். கூளிப்பட்டி ஜமீந்தாரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் எனது பழைய நண்பர். இது குறித்து நீங்கள் என் மீது பொறாமைப்படவேண்டாம். மேலும், அது என்னுடைய தப்புமன்று; ரயில்காரனுடைய தவறு. நாங்களிருவரும் ஒரு தடவை ஒரே ரயில்வே ஸ்டேஷனில் ரயிலேறும்படி நேர்ந்தது. இல்லை ரயிலேறாதிருக்க நேர்ந்தது. நாங்கள் கையில் மூட்டையை வைத்துக் கொண்டு தயாராய்க் காத்துக்கொண்டுதானிருந்தோம். நான் நின்ற இடத்துக்கு நேரே இரண்டாம் வகுப்பு வண்டி வந்து நின்றது. அந்த மனிதருக்கு நேரே மூன்றாம் வகுப்பு ஸ்திரீகளின் வண்டி நின்றது. நான் மூன்றாம் வகுப்பையும் அவர் இரண்டாம் வகுப்பையும் தேடிக் கொண்டு போனோம். நான் என் வண்டியை விரைவில் கண்டு பிடித்து விட்டேன். “ஸார்! ஸார்!! ஸார்!!! கதவைக் கொஞ்சம் திறவுங்கள்” என்றேன். “ஸார்! ஸார்!! ஸார்!!! தயவு செய்து கொஞ்சம் அடுத்த வண்டிக்குப் போங்கள்” என்று உள்ளிருந்து பதில் வந்தது. மீறி ஏறுவதற்கு முயன்றேன். உடனே என்னை நோக்கி ஒரு டஜன் கைகள் முன் வந்தன. எனவே, நான் பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்த மாதிரி இரண்டு வண்டி பரிசோதிப்பதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. கொஞ்சம் தூரம் ரயிலுடன் நானும் ஓடினேன். பின்னர், “சை! சை! இந்த ரயிலுக்கு நம்முடன் கூட ஓடும் சக்தி உண்டா?” என்று தீர்மானித்து நின்று விட்டேன். திரும்பிப் பார்த்தபோது கூளிப்பட்டி ஜமீன்தாரும் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பில் தம்பதி சமேதராய் எழுந்தருளியிருந்த ஒரு வெள்ளைக்காரன் அவரை “நரகத்துக்குப் போகும்படி” ஆக்ஞாபித்ததாய் எனக்குப் பின்னால் தெரியவந்தது. ரயில் போனதும் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “இந்த ரயில் நாசமாய்ப் போனாலென்ன?” என்று நான் கேட்டேன். “ரயில் கம்பெனி பாதாள லோகத்துக்குப் போனாலென்ன?” என்று ஜமீன்தார் திருப்பிக் கேட்டார். “கொஞ்சமும் ஆட்சேபமில்லை” என்றேன். இவ்வாறுதான் நாங்கள் நண்பர்களானோம். கூளிப்பட்டி ஜமீன்தார் மிக்க செல்வாக்குள்ளவர். அந்த ஜில்லாவில் 4000 வாக்குகள் அவர் கைக்குள் அடக்கம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏழை எளியவர்களிடம் அவர் மிக்க கருணையுள்ளவர் என்பதும் பிரசித்தியான விஷயம்….ஆனால், அவர் அரசியல் விஷயங்களில் மட்டும் தலையிட்டுக்கொள்வது கிடையாது. தலையை மட்டுமன்று; கால், கை, காது முதலிய எந்த அவயத்தையுமே அவர் அரசியலில் இடுவது கிடையாது. சட்டசபை அபேக்ஷகர்களாக நின்ற ஒவ்வொருவரும் ஜமீன்தாரின் ஆதரவைப் பெறப் பிரயத்தனம் செய்தார்கள். எல்லோருக்கும் “ஆகட்டும், பார்ப்போம்” என்ற பதிலே அவர் சொல்லி வந்தார். ஆகவே, இப்பொழுது காவடி கோவிந்தப்பிள்ளையின் மகத்தான வெற்றியைப் பற்றி தெரிய வந்ததும், ஒருக்கால் நமது நண்பரின் கைவேலை இதில் இருக்குமோவென்று நான் சந்தேகித்தது இயல்பேயல்லவா? கூளிப்பட்டிக்குப் போனேன். ஆனால் ஏமாற்றமடைந்தேன். ஜமீன்தார், “எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று ஒரேயடியாகச் சாதித்துவிட்டார். எவ்வளவோ சாமர்த்தியமாகவெல்லாம் கேட்டும் பயன்படவில்லை. ஆனால், கூளிப்பட்டிக்குப் போனதில், லாபமில்லாமலும் போகவில்லை. தேர்தலுக்கு நாலு தினங்களுக்கு முன்பு அங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன். அதை இங்கே சொல்லிவிடுகிறேன். அதற்கும் கோவிந்தப் பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டாவென்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். தேர்தலுக்கு நாலு நாளைக்கு முன்பு, கூளிப்பட்டிக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்திலுள்ள கிராமத்தில் பெரிய சமூக மாநாடு ஒன்று நடந்ததாம். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அங்கே கூடுவதை முன்னிட்டுச் சட்டசபை அபேட்சகர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் மகா நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். ஜமீன்தாரும் போயிருந்தார். திரும்பிப் போகும்போது அபேட்சகர்கள் எல்லாரும் கூளிப்பட்டி வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. மாலை ஐந்து மணிக்கு மாநாடு “பலமான கரகோஷங்களுக்கிடையே இனிது நிறைவேறிய” பின்னர், அபேட்சகர்களின் மோட்டார் வண்டிகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டன. இப்பொழுது வாசகர்கள் என்னுடன் கிளம்பி மோட்டார் வண்டிகளைவிட வேகமாய்ப் பிரயாணம் செய்து, கூளிப்பட்டிக்கு வடக்கே ஒரு மைல் தூரத்திலிருந்த ’சேரி’க்கு வந்துவிட வேண்டும். ஆஹா! என்ன பயங்கரமான காட்சி! சேரியிலுள்ள குடிசைகளில் சில தீப்பற்றி எரிகின்றன. தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. காற்று பலமாக அடிக்கிறது. ஐயோ! குடிசையிலிருந்து பக்கத்திலுள்ள வைக்கோற் போரிலும் தீப்பிடித்துக் கொண்டது. “வானை நோக்கிக் கைகள் தூக்கி வளரும் தீயின் காட்சி” என்ன பயங்கரம்! தீயை அணைப்பதற்கு எவ்வித முயற்சியும் காணப்படவில்லை. மக்களையே அதிகமாய் அங்கே காணோம். ஸ்திரிகளும் குழந்தைகளுந்தான் சுற்றிச் சுற்றி வந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் ஆண் மக்கள் அந்த ஸ்திரீகளையும் தீ விபத்துக்காளாகமல் தப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். எரியும் குடிசைகளுக்கருகே அவர்கள் போகாவண்ணம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜில்லா போர்டு பெரியசாலை இந்தச் சேரியைப் பிளந்துகொண்டு போகிறது. சாலைக்கு இடது புறத்திலிருந்த குடிசைகள் எல்லாம் ஏறக்குறைய எரிந்து போயின. வலது புறத்திலுள்ள குடிசைகளுக்கு இன்னும் நெருப்பு வரவில்லை. ஐயோ! காற்று இப்படிச் சுழன்றடிக்கின்றதே! ஒரு ஜுவாலை பறந்து சென்று வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றின்மீது விழுகின்றது! ஆகா! சட்டென்று சென்று, அந்த ஒரு கீற்றை இழுத்தெறிந்து ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினால் நெருப்பு பரவாமல் தடுக்கலாம். யாரேனும் அப்படிச் செய்யப் போகிறார்களா? ஒருவரையும் காணோம். பெண்களும், சிறுவர் சிறுமிகளும் சுற்றிச் சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள். அங்கிருந்த இரண்டோ ர் பெரிய ஆட்களுக்கு இவர்களை வெளியே பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்ப்பதே பெரிய காரியமாயிருக்கிறது. அது வரையில் புத்திசாலிகள்தான். அப்படியும் ஒரு சிறுவன்மீது நெருப்புப்பட்டு முதுகு வெந்து போயிற்று. அவனைச் சாலையில் கொண்டுவந்து போட்டார்கள். பூம்! பூம்! பூம்! ஒரு மோட்டார் வண்டி அதிவேகமாய் வருகிறது. சமூக மகாநாட்டுக்குச் சென்றிருந்த திவான் பகதூர் வீரண்ணப்பிள்ளையும் திருவாளர் பெரியசாமித் தேவரும் அதிலே வருகிறார்கள். தீப்பிடித்த குடிசைகளுக்கருகே மோட்டார் வண்டி நிற்குமா? ஏழை ஆதித்திராவிடர் மீது இப்பெரிய மனிதர்கள் கண்ணோட்டம் செலுத்துவார்களா? இல்லை; இல்லை; கண்மூடித்திறக்கும் நேரத்தில் மோட்டார் பறந்து போகிறது. அன்றிரவு ஜில்லா கலெக்டர் விருந்துக் கச்சேரி. அவர்களெப்படி இங்கே நிற்க முடியும்? ஒரு நிமிஷத்திற்கெல்லாம் மீண்டும் பூம், பூம் என்ற சத்தம், ராவ்பகதூர் சடையப்ப முதலியாரின் மோட்டார் அதிவேகமாய் வருகிறது; இதுவும் இங்கு நில்லாமலே போய்விடுகின்றது; அடுத்தாற்போல் ஸ்ரீமான் வராகவதாரமையங்காரின் வண்டி. ஆகா இவரல்லவோ புண்ணியவான்! ஏழைகளின் நண்பர்! வண்டி மெதுவாக நிற்கிறது. உடனே பலர் ஓடிவந்து, மோட்டாரைச் சூழ்கிறார்கள். ஐயங்கார்:- தீ எப்படிப் பிடித்தது? கூட்டத்தில் பலர்:- சாமி! தெரியவில்லை. (கூச்சலும் அழுகையும்). ஐயங்கார்:- அட, சனியனே! சும்மாயிருங்கள். வெறும் மூடத்தனம், தீப்பிடித்தவுடன் ஏன் அணைக்கக் கூடாது? இப்படி வெறுங்கூச்சல் போட்டால் என்ன பிரயோசனம்? ஒருவன்:- ஐயா, சாமி! இந்தப் பையன் முதுகு எரிந்து போய்விட்டது. ஐயங்கார்:- டிரைவர்! பலமான காயமா, பார். டிரைவர்:- அதெல்லாம் இல்லை. சொற்பக் காயந்தான். ஐயங்கார்:- சரி, தேங்காய் எண்ணெய் தடவு, தெரிகிறதா? சீக்கிரம் வண்டியை விடு. அடுத்த கணத்தில் மோட்டார் மாயமாய்ப் பறந்து போகிறது. மேற்கூறியவையெல்லாம் ஐந்து நிமிஷத்திற்குள் நடந்தனவென்பதை நேயர்கள் நினைவில் வைக்க வேண்டும். கடைசியாகக் காவடி கோவிந்தப்பிள்ளையின் மோட்டார் வந்து குடிசைகளுக்கருகில் நின்றது. பிள்ளை சட்டென்று மோட்டாரிலிருந்து வெளியே குதித்தார். வலது புறத்துக் குடிசைகளில் ஒன்றில் இப்பொழுதுதான் தீப்பிடித்துக் கொண்டிருப்பதை அவர் உடனே கவனித்தார். “டிரைவர்! ஓடி வா! ஓடி வா!” என்று கூவிக் கொண்டே அவர் அந்தக் குடிசையை நோக்கி ஓடினார். டிரைவரும் பின்னால் சென்றான். இருவரும் அக்குடிசையின் கூரையில் தீப்பிடித்திருந்த கீற்றை இழுத்துக் கீழே போட்டார்கள். “குடம்! குடம்!” என்று காவடிப்பிள்ளை கத்தினார், சில பெண்கள் மண்குடம் கொண்டு வந்தார்கள்! அவற்றுள் ஒன்றைப் பிள்ளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போய்ப் பக்கத்திலிருந்த வாய்க்காலிலிருந்து ஜலம் கொண்டு வந்தார். அவரைப் பின் தொடர்ந்து இன்னும் பலரும் ஜலங்கொண்டு வந்து கொட்டினார்கள். தீ அணைந்தது. சாலைக்கு வலது புறத்திலிருந்த இருபது குடிசைகள் தப்பிப் பிழைத்தன. காவடிப் பிள்ளையும், டிரைவரும் திரும்பி வந்து மோட்டாரில் உட்கார்ந்தார்கள். டிரைவர்: சுத்த மூட ஜனங்கள்! சுலபமாய்த் தீயை அணைத்திருக்கலாம். பக்கத்திலே வாய்க்கால். காவடிப் பிள்ளை: பாவம்! அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? அவர்களை மூடர்களாய் வைத்திருப்பது யார்? மேலும் ஆண்பிள்ளைகளெல்லாம் வயல்வெளிக்குப் போய்விட்டார்கள். குழந்தைகளும் ஸ்திரீகளும் என்ன செய்வார்கள்? டிரைவர்: சுமார் ஐம்பது குடிசை போயிருக்கும். காவடிப் பிள்ளை: பட்ட காலிலே படும். எல்லாம் ஏழைகளுக்குத்தான் வருகிறது. இரவு தங்க என்ன செய்வார்களோ? கூட்டத்தில் ஒருவன்: சாமி! இந்தப் பையன் முதுகு வெந்து போய் விட்டது. காவடிப் பிள்ளை: எங்கே? எங்கே? கொண்டு வா! பையனைக் கொண்டு வந்தார்கள். பிள்ளையை பார்த்துவிட்டு உடனே அவனை மோட்டாரில் தூக்கிப் போடச் செய்தார். பின்னர் வண்டி கிளம்பிற்று. மறுநாள் காவடிப் பிள்ளையிடமிருந்து கூளிப்பட்டி ஜமீன்தாருக்கு ஒரு கடிதமும், 50 ரூபாய் பணமும் கிடைத்தன. “இந்த சிறு தொகையைப் புதிய குடிசைகள் போட்டுத்தர உபயோகப்படுத்துங்கள். பையன் வைத்தியசாலையில் குணமடைந்து வருகிறான் என்று அவன் பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்துங்கள்” என்று பிள்ளை எழுதியிருந்தார். மேற்கண்ட சம்பவத்துக்கும் காவடிப் பிள்ளையின் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா வென்று நான் ஜமீன்தாரை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தேன். அவர் வாயிலிருந்து பதில் வருவிக்க முடியவில்லை. ஆயினும் பின்வரும் விஷயங்களைக் கோவை செய்து நேயர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்:- (1) அந்த நேரத்தில் அந்த ஏழைகளின் குடிசைகள் தீப்பிடிக்கக் காரணமே இல்லை. ஒரு வீட்டிலும் அப்போது அடுப்புக் கூட மூட்டவில்லையென்றும் எல்லாரும் சத்தியம் செய்கிறார்கள். (2) ஒருவர் இருவரைத் தவிர பெரிய ஆட்கள் யாருமில்லாமல் அச்சமயம் மாயமாய்ப் போனார்கள். தெய்வயானை என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. “இருக்கட்டும்; நீங்கள் ஒரு காலத்தில் சாராயக் கடை குத்தகை எடுத்திருந்தீர்களாமே. அதை எப்படி விட்டீர்கள்? உத்தரமேரூரை விட்டுச் சென்னைப் பட்டணத்திற்கு ஏன் வந்தீர்கள்?” என்று நண்பரைக் கேட்டேன். “அது பெரிய கதை!” என்றார் முதலியார். “பாதகமில்லை, சொல்லுங்கள்” என்றேன். ஓமக்குட்டி முதலியார் சொல்லத் தொடங்கினார்: நாங்கள் ஜாதியில் நெசவுக்காரர்கள்; ஆனாலும் எங்கள் குடும்பத்தில் மட்டும் இரண்டு தலைமுறையாய் நெசவுத் தொழில் செய்வது கிடையாது. எங்களுடைய பாட்டனார் எங்கள் ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்தார். ஆனால் என் தகப்பனார் காலத்தில் எங்கள் சொத்தெல்லாம் பல வழியில் அழிந்துவிட்டது. என்னையும் என் தாயாரையும் ஏழைகளாய்விட்டுத் தந்தை இறந்துபோனார். அப்பொழுது எனக்கு மூன்றே வயது; கடன்காரர்கள் எங்கள் சொத்தெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டார்களாம். என் தாயைப் பெற்ற பாட்டனார் ஒருவர் இருந்தார். அவர் அப்போது எங்களுடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவர் கிழவர்; வேலை செய்யத் தள்ளாதவர். ஆனால் நல்ல கெட்டிக்காரர். எங்களுக்கு மிஞ்சிய சொற்ப நிலத்தின் சாகுபடிக்கு வேண்டிய ஏற்பாடு செய்து குடும்ப காரியங்களைச் சீராக நடத்தி வந்தார். நான் தினந்தோறும் பகலில் எங்கள் மாடுகளை ஓட்டிச்சென்று வருவேன். மாலையில் விட்டுக்கு வந்து மாடுகளைக் கட்டிவிட்டுப் பாட்டன் பக்கத்தில் உட்காருவேன். அவர் இராமாயண, பாரதக் கதைகள் சொல்லுவார். விக்கிரமாதித்தியன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியனவும் சொல்லுவார். இவைகளையெல்லாம் நான் மிகவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஒருநாள் அவர் நளன் கதை சொல்லிக்கொண்டிருந்தார். தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் என்பதாக நளனுக்குச் செய்தி வந்த இடத்தில் கதையை நிறுத்தி, ‘உடம்பு சரியில்லை, அப்பா! ஏதோ ஒரு மாதிரியாயிருக்கிறது. பாக்கிக் கதையை நாளைக்குச் சொல்லுகிறேன்’ என்றார். கதையை அவர் முடிக்கவேயில்லை. மறுநாள் அவருக்கு உடம்பு அதிகமாய்விட்டது. ஊரார் அவர் செத்துப்போய் விடுவாரென்று பேசுவதைக் கேட்டேன். செத்துப் போவதென்றால் அது என்ன வென்று எனக்கு அப்போது முழுதும் புலப்பட வில்லை. எலி, பெருச்சாளி, பூச்சியின் சாவுதான் தெரியும். ஆனாலும் எல்லாரும் பேசிக் கொள்வதைக் கேட்டு ஒருவிதத் துக்கம் உண்டாயிற்று. அதைவிடக் கதை பாக்கியாய் நின்று விட்டதே என்ற துக்கம்தான் அதிகமாயிருந்தது. எனக்கு இப்போது நன்றாய் ஞாபகமிருக்கிறது; அவர் அருகில் சென்று “தாத்தா! நீ செத்துப் போகிறாயா? வேண்டாம்! கதையை முடிக்காமல் செத்துப் போக வேண்டாம்” என்று சொல்லி அழுதேன். அப்போது அவர் புன்சிரிப்புச் சிரித்து “குழந்தாய்! இதற்காக நீ வருத்தப்படாதே; நீ புத்தகம் படிப்பதற்குக் கற்றுக்கொள். நான் உனக்குச் சொன்ன கதைகளை விட இன்னும் எவ்வளவோ நல்ல கதைகள் புத்தகங்களில் இருக்கின்றன. நீ படிக்கக் கற்றுக் கொண்டால், ஆயிரங்கதைகள் படிக்கலாம். மற்றவர்களுக்கும் சொல்லலாம்” என்றார். மறுநாள் அவர் இறந்து போனார். பாட்டன் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவேயில்லை. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தாயிடம் உத்தரவு பெற்று அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் வரையில் நான் அங்கே இருந்தேன். வீட்டு வேலை, வயல் வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆனால் படிப்பதை மட்டும் விடவில்லை. எங்கே, யாரிடத்தில் கதைப் புத்தகம் இருந்தாலும் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன். விளங்கினாலும், விளங்காவிட்டாலும் தட்டுத் தடுமாறி வாசித்து முடிப்பேன். ஒரு கந்தல் ஏடு அகப்பட்டால்கூட விடுவதில்லை. இவ்வாறு இராமாயணம், பாரதம், கந்தபுராணம், நளமகாராஜன் கதை, அரிச்சந்திர மகாராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை, அல்லி அரசாணி மாலை முதலிய பல நூல்களைப் படித்து முடித்தேன். இப்படி பல வருஷம் சென்றன. ஒருநாள் எனக்கு ஒரு “நாவல்” கிடைத்தது. ஆஹா! அதைப் படித்தபோது நான் அடைந்த சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. அது முதல், நாவல் பைத்தியம் என்னை நன்றாய்ப் பிடித்துக் கொண்டது. ஒரு முறை ஊரிலிருந்து சிலர் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்கப் பட்டணத்திற்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து வந்தேன். அவர்களெல்லாம் ஏதேதோ சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? மூர்மார்க்கட்டில் பழைய கிழிந்த நாவல்களில் ஒரு கட்டு வாங்கிக்கொண்டு போய்ச்சேர்ந்தேன். இரவு பகல் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். இப்பொழுது நினைத்தால் மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. குப்பைத் தொட்டியில் போடுவதற்கே தகுந்தவை என்று இப்போது நான் கருதும் நாவல்களை அப்போது எத்தனை ஆவலுடன் படித்தேன், தெரியுமா? [“இருக்கட்டும். நீங்கள் என்னைக் கேலி செய்வதில்லை என்று உறுதி கூறினால்தான் இனி மேல் கதை சொல்லுவேன்” என்றார் ஓமக்குட்டி முதலியார். “ஒரு நாளும் கேலி செய்யமாட்டேன். சொல்லுங்கள்” என்றேன்.] சாதாரணமாய் நாவல்கள் என்றால் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியுமே? எல்லாம் காதல் மயம். நமது வாழ்வுக்குச் சற்றும் பொருந்தாதவை. ஆனால் நான் அப்போது பதினெட்டு வயது வாலிபன். இவ்வளவு தூரம் பகுத்தறியும் சக்தி எனக்கில்லை. ஆகவே மேற்படி நாவல்களைப் படித்ததன் பயனாகக் காதலைப் பற்றியும், விவாகத்தைப் பற்றியும், வருங்கால வாழ்வைப் பற்றியும் ஏதேதோ மனோராஜ்யம் செய்யத் தொடங்கினேன். எங்கள் கிராமத்தில் அப்பொழுது பெரிய பணக்காரர் அப்புக் குட்டி முதலியார். அவர் தான் கிராம முன்சீப்புக்கூட. அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் தெய்வயானை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அவள் ஒரு சர்வ சாதாரணமான பெண் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்போது “நாவல்” கண்ணுடன் பார்த்த எனக்கு அவள் ஓர் அப்ஸர ஸ்திரீயைப் போல் காணப்பட்டாள். பூலோகத்திலும் சரி, தேவலோகத்திலும் சரி, அவளைப் போன்ற அழகி வேறொருத்தியில்லை என்று நிச்சயமடைந்தேன். புத்தகத்தில் படித்த கதாநாயகர்களைப் போலவே நானும் அவளைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் உயிர் பிழைத்திருக்க முடியாதென்று உறுதி கொண்டேன். இது வரையில் நாவல் படிப்பு பயன்பட்டது. இதற்குமேல் என்ன செய்வதென்பதற்கு நாவல்களின் உதவி கிடைக்கவில்லை. நானோ தன்னந் தனியனான வாலிபன்; தகப்பனற்றவன்; ஏழை. அப்புக்குட்டி முதலியாரோ பெரும் பணக்காரர்; ஊருக்கு எஜமானர். அவரிடம் போய் “உன் பெண்ணைக் கொடு” என்று கேட்டால் கட்டி வைத்து அடிப்பார். நாவல்களில் படித்ததைப்போல் பெண்ணை நேரே பார்த்து என் காதலை வெளியிடுவதற்கு வேண்டிய தைரியம் இல்லை. அதெல்லாம் நாவல்களில் நடக்கும். வாழ்க்கையில் நடைபெறாது. ஆதலால் ஓயாமல் சிந்தித்த வண்ணம் இருந்தேன். கடைசியாக ஒரு யுக்தி தோன்றியது. அந்த ஊரில் சமீபத்தில் கள்ளு சாராயக்கடைகள் ஏலம் போட இருந்தார்கள். அந்தக் கடைகளை ஏலம் எடுப்பதென்று தீர்மானித்தேன். விரைவில் பணம் சம்பாதித்து அப்புக்குட்டி முதலியாருக்குச் சமமாவதற்கு இது ஒன்றுதான் வழி என்று எண்ணினேன். தன் நகைகளை விற்றும், பத்துப் பன்னிரண்டு வருஷங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தும் என் தாயார் இருநூறு ரூபாய் வரையில் பணம் வைத்திருந்தாள். ஏலப்பணத்தைக் கட்டுவதற்கு அத்தொகையைக் கொடுக்கும்படி கேட்டேன். தாயார் முதலில் ஆட்சேபித்தாள். “அந்தப் பாவத் தொழில் நமக்கு வேண்டாமப்பா; ஏதோ உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தி அடைவோம்” என்றாள். நான் பிடிவாதம் பிடித்ததன் மேல் அவள் “குழந்தாய்! நம்முடைய குடும்ப சொத்தெல்லாம் எப்படி அழிந்தது தெரியுமா?” என்று கேட்டாள். “தெரியாதே! எப்படி?” என்றேன். “எல்லாம் உன் தகப்பன் குடித்தே ஒழித்துப் போட்டான். அந்தப் பாவம் என்னத்திற்கு?” என்றாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதுவரையில் அந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஆனால் தெய்வயானையை நினைத்துக் கொண்டேன். தாயார் சொன்ன செய்தியிலிருந்து என்னுடைய தீர்மானம் இன்னும் உறுதிபட்டது. “அம்மா! கள்ளுக் கடையில் போன சொத்தை கள்ளுக்கடை மூலமாகவே சம்பாதித்துத் தீருவேன். அதுதான் தெய்வத்தின் சித்தம். இல்லாவிட்டால் எனக்கேன் இந்த யோசனை தோன்ற வேண்டும்?” என்றேன். கள்ளுக்கடைக்குப் போட்டி அதிகம். எடுக்க முடியவில்லை. சாராயக்கடை மட்டும் எடுத்தேன். வியாபாரம் நன்றாய் நடந்தது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தேன். ஆனால் என் கையிலும் பணம் அதிவேகமாகச் சேர்ந்து கொண்டு வந்தது. அடுத்த வருஷம் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண்டையும் எடுத்தேன். அப்புக்குட்டி முதலியாருடைய பெண்ணுக்காக நான் செய்த காரியங்களெல்லாம் அவர் மனதில் பொறாமையைத்தான் உண்டாக்கின. ஏனெனில் அப்போது அவருடைய கை இறங்கி வந்தது. கடன் அதிகமாயிற்று. “கள்ளுக்கடைக்காரப் பயல்” என்று என்னைப் பற்றி அவர் அவமதிப்பாய்ப் பேசியதாய்க் கேள்விப் பட்டேன். அவருடைய அகம்பாவத்தை அடக்குவது எப்படி என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டு வந்தேன். என் எண்ணம் நிறைவேறுவதற்கான ஒரு சம்பவம் விரைவிலேயே நடந்தது. கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்று தோன்றிற்று! ஒரு சமயம் அப்புக்குட்டி முதலியார் தம் குடும்பத்துடன் ஏதோ வியாதியைச் சொஸ்தப்படுத்திக் கொள்ளப் பட்டணத்துக்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்தார். இங்கே அவர்களுக்கு பந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அவர் திரும்ப ஊருக்கு வந்த அன்று அவருடைய ஆள் ஒருவன் சாராயக்கடைக்கு வந்து ஒரு புட்டி சரக்கு வாங்கிக்கொண்டு போனான். எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் பந்துக்கள் வீட்டில் கற்றுக்கொண்டார் போலும் என்று எண்ணினேன். மூன்று நாள் கழித்து மறுபடியும் அந்த ஆள் வந்து இன்னொரு புட்டி வாங்கிக் கொண்டு போனான். அப்போது எனக்குண்டான சந்தோஷத்தை அளவிட முடியாது. “சரி, முதலியார் நமது வலையில் வீழ்ந்தார். அவர் கர்வம் ஒழிந்தது; இந்த ஊரில் நம்மைத் தவிரக் கடன் கொடுப்பார் யாருமில்லை. தெய்வயானை நம்மைத் தப்பி எங்கே போகிறாள்?” என்று இவ்வாறெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினேன். எல்லாம் நான் எண்ணியபடியே நடந்து வந்தது. ஒரு வருஷத்திற்குள் அப்புக்குட்டி முதலியார் ஊரறிந்த பெருங் குடிகாரர் ஆனார். கடன் விஷம் போல ஏறி வந்தது. ஏராளமான பூமி அவருக்கு இருந்தாலும் வட்டி கொடுப்பது எளிதன்று. நிலத்தை விற்றுக் கடனைத் தீர்ப்பதற்கும் நிலத்தை வாங்குவார் யாருமில்லை. இந்த நிலைமையில் ஒரு கோர்ட்டு வாரண்டு அவர்மீது பிறந்தது. வாரண்டில் தப்புவதற்காகக் கையிலிருந்த சர்க்கார் கிஸ்திப் பணத்தைக் கொடுத்துவிட்டார். இவர் குடிகாரரென்றும், கடன்காரரென்றும் மொட்டை விண்ணப்பத்தின் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிந்து சோதனைக்கு வந்துவிட்டார்கள். முதலியார் தம் கர்வத்தை எல்லாம் விட்டு என்னிடம் ஓடிவந்தார். என் காலில் விழுந்து கெஞ்சினார். எண்ணூறு ரூபாய் கடன் கொடுத்து அவர் தலைக்கு வந்த விபத்திலிருந்து அவரைத் தப்புவித்தேன். நான் கொஞ்சம் குறிப்புக் காட்டியதுதான் தாமதம், முதலியார் தெய்வயானையை எனக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார். விவாகத்திற்கு நாள் குறிப்பிடுவது தான் பாக்கி. இந்தச் சமயத்தில் அப்புக்குட்டி முதலியார் ஒருநாள் திடீரென்று மரணமடைந்தார். நல்ல திடதேகியாயிருந்த அவர் இப்படி அகால மரணமடைந்ததற்கு மிதமிஞ்சிய குடிதான் காரணமாயிருக்கவேண்டும். இந்தத் துக்க சம்பவத்தினால் என்னுடைய உத்தேசங்களைப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நான் தெய்வயானையை விவாகம் செய்து கொண்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் அவர்கள் வீட்டில் வயது வந்த ஆண் மக்கள் யாருமில்லை. அப்புக்குட்டி முதலியாருடைய இரண்டாந்தாரம் சிறு பெண். அவளும், அவளுடைய கைக்குழந்தையும், தெய்வயானையும்தான் வீட்டிலுள்ளவர்கள். இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், குடும்பத்தின் கடனைத் தீர்த்துச் சீர்ப்படுத்தும் பொறுப்பையும் நானே வகிக்க வேண்டியவனாவேன். இப்படி எல்லாம் மனதில் சந்தேகங்கள் உண்டாயின. ஆனாலும் முடிவில் தெய்வயானையை மணந்துதான் தீர வேண்டும் என்று தீர்மானித்தேன். இப்போதெல்லாம் கள்ளு, சாராயக் கடைகளுக்கு நானே நேரில் போவதில்லை. சம்பள ஆள்கள் வைத்துவிட்டேன். அன்றாடம் சாயங்காலத்தில் மட்டும் சென்று கூடுமுதல் தொகையை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு நாள் அவ்வாறு சென்றபோது, கிராம முன்சீப்பு வீட்டு வேலைக்காரன் அப்பொழுதுதான் கையில் புட்டியுடன் கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் அவன் சாலையோரமாய்ப் பதுங்கிக் கொண்டு சென்றான். “இவன் இப்போது யாருக்குச் சாராயம் வாங்கிப் போகிறான்?” என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு குருட்டு எண்ணத்தினால் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தோன்றிற்று. ஆகவே அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் ஊர்த் தெருவின் புறமாய்ச் சென்று அப்புக்குட்டி முதலியாரின் வாயிற்படி வழியாய் நுழைந்தான். இதை முற்றும் ஆராய வேண்டுமென்று எண்ணி, தெருவீதிக்குச் சென்று முதலியார் வீட்டுக்குள் நுழைந்தேன். நடைக்குச் சென்றதும் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது நான் கண்ட காட்சி இடிவிழுந்தாற்போல் என்னைத் திகைக்கச் செய்து விட்டது. தெய்வயானையும் அவளுடைய சிறிய தாயாரும் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். முதலியாருடைய மனைவியின் கையில் சாராயபுட்டி. இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தெய்வயானையிடம் கொடுத்து மற்றொன்றைத் தான் அருந்த ஆரம்பித்தாள். பலவருஷ காலமாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்த காதல் அத்தனையும் அந்த ஒரு கண நேரத்தில் விஷமாகிவிட்டது. சொல்ல முடியாத அருவருப்பு எனக்குண்டாயிற்று. சத்தம் செய்யாமல் வெளியே வந்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன். என் மனோரதத்தில் இடி விழுந்தது. என் ஆசை எல்லாம் நிராசையாயிற்று. முதலில் அப்புக் குட்டி முதலியார் வீட்டில் சாராயபுட்டி புகுந்ததைப் பார்த்தபோது, நான் ஆசைப்பட்ட பழம் கிட்டிவிட்டது என்று சந்தோஷப்பட்டேன். வீட்டிற்குள் சென்ற அந்த சாராயபுட்டி, பின்னால் செய்த வேலையைப் பார்த்ததும், அந்தப் பழம் விஷமாய்ப் போவதற்கு காரணமாயிற்று. அளவில்லாத துக்கத்துடன் அன்று படுத்தேன். பாட்டன் சொன்ன பழங்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. நாவல்கள் எல்லாம் ஆபாசமாய்த் தோன்றின. அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கள்ளு, சாராயக் கடைகளைத் தொலைத்துத் தலை முழுகினேன். அக்கடைகளில் சம்பாதித்த சொத்தை எல்லாம் அந்த ஊர்க் கோவிலுக்கும், பஜனை மடத்திற்கும், பள்ளிக்கூடத்திற்குமாகப் பகிர்ந்து எழுதி வைத்தேன். இந்த தர்மங்கள் சரிவர நடப்பதற்கும் ஏற்பாடு செய்தேன். கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தாயாரும் நானும் இந்தச் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம்" என்று கூறி நண்பர் கதையை முடித்தார். நம்பர் 888 இங்கு மூன்று சித்தாந்தங்களை ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் வீண் போகாது; (2) சோதிடம் கட்டாயம் பலிக்கும். (3) கலியுகத்தில் - மற்ற யுகங்களைப் பற்றி எனக்குத் தெரியாது - நல்லவன் நன்மை அடைவதும் கெட்டவன் தீமையடைவதும் நிச்சயமில்லை. இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் நிச்சயமில்லை. இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமென்ன வென்று கேட்டீர்களானால் - நல்லது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்; முத்தலை நகரின் மத்திய சிறைச்சாலையில் 9-வது பிளாக்கில் 12-வது அறையில் இருந்த நம்பர் 888-ஐப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? இல்லையென்றால் நான் சொல்லுகிறேன். கேளுங்கள். “உமக்கெப்படித் தெரியும்?” என்று கேட்பீர்களோ? சரி அந்த விவரத்தை முதலில் கூறுகிறேன். மேற்படி சிறைச்சாலையில் அதே பிளாக்கில் 11-வது அறையில் நான் சில காலம் வாசம் செய்ய நேரிட்டது. ஐயையோ! இப்போது இதற்குக் காரணம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கதையை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். என்னைச் சிறைக்கனுப்பியது யாதெனில், ஒரு கேள்விக்கு உண்மையாகப் பதில் சொன்னதுதான். நம்ப மாட்டீர்களா? ஐயன்மீர்! இது கலியுகம் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்துகிறேன். கேள்வி கேட்டவர், ஒரு வெள்ளைக்கார துரை. அவர் உன்னத ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நானோ, கைதியின் கூண்டில் நின்று கொண்டிருந்தேன். என்னைவிட வயதில் அவர் இரண்டொரு வருஷமே பெரியவராயிருப்பார். இந்நிலையில் எனக்கு ரோசமாயிராதா? ஆம் பாரத நாட்டின் கௌரவத்தைக் காக்கும் பொறுப்பு முழுவதும் அப்போது என் தலைமீது சுமந்திருந்ததாக எனக்கெண்ணம். “ஷெடிஷன் (அரசாங்கத்துவேஷம்) என்பதற்கு உமக்குப் பொருள் தெரியுமா?” என்று துரை கேட்டார். “ஓ நன்றாகத் தெரியும், துரையே! சென்ற ஒரு வருஷகாலமாக அந்த வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்” என்றேன். நுணலும் தன் வாயால் கெடும்! அதுதான்! “தெரியாது” என்று சொல்லியிருந்தால், ஒருக்கால், துரை ‘பாவம் ஒன்றுந்தெரியாத சிறுவன்’ என்றெண்ணி என்னை விட்டிருக்கலாம். உண்மை கூறியதின் பயன், “ஒரு வருஷம் கடுங்காவல்”. என் மீது குற்றமில்லை, ஐயா! எல்லாம் காலத்தின் கூற்று. 1922-ம் வருஷ ஆரம்பம், பர்தோலி முடிவுக்கு முன்னால். மேலும், என் ஜாதகத்தில் காராகிரகப் பிரவேசம் என்று நன்றாய்ப் போட்டிருப்பதாக வெளியே வந்த பிறகு ஜோதிடர்கள் சொன்னார்கள். நல்லது; முத்தலைநகரின் மத்திய சிறைச் சாலையில் 9-வது பிளாக்கில் 11-வது அறைக்கு நான் வந்தது எப்படி என்பது இப்போது விளங்கி விட்டதல்லவா? இனி முதலில் விட்ட இடத்தில் தொடங்கி, அடுத்த 12-வது அறையிலிருந்த நம்பர் 888-ஐப் பற்றிக் கூறுகிறேன். 888-க்குப் பூர்வாசிரமத்தில் கேசவலு நாயுடு என்று பெயர். அவரைப் பற்றி அச்சிறைச்சாலை வார்டர்களும் மற்றக் கைதிகளும் என்னவெல்லாமோ சொன்னார்கள். அவர் பெரிய வேஷதாரியென்றும், ஏராளமான பணத்தை எங்கேயோ புதைத்து வைத்து விட்டு இங்கே ஏழை போல் நடிக்கிறாரென்றும் கூறினார்கள். விடுதலையாகப் போகும் கைதிகளில் பலர் அவரிடம் வந்து பணம் புதைத்து வைத்திருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கெஞ்சிக் கூத்தாடுவதுண்டு. அவர் “இல்லை” என்றால் யாரும் நம்புவது கிடையாது. இவையெல்லாம் என்னுடைய ஆவலை நிரம்பக் கிளப்பிவிட்டன. எனவே, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, தாழ்வாரத்தில் நாங்கள் இருவரும் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய வரலாற்றை விசாரித்தேன். என் வரையில், அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி என்று எண்ணியிருந்தேன். பொய் சொல்லக் கூடியவரல்லர் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் தமது வரலாற்றைக் கூறிய பான்மையும் அப்படியேயிருந்தது. எனவே அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நம்பினேன். ஆனால், அவர் கூறிய வண்ணமே இங்கே கதை சொல்லுந்திறமை எனக்கில்லை; நான் ஏகசந்தக்கிராகியல்லன். மேலும் சில விஷயங்களை எழுதுதலும் நன்றாயிராது. முக்கியமாக, சிங்கப்பூர் நாயுடுவுக்கு அவர் கொடுத்த சாபங்கள் பத்திரிகையில் எழுதுவதற்குத் தகுதியானவையல்ல. எனவே என்னுடைய சொந்த நடையில் கேசவலு நாயுடு வரலாற்றைச் சுருக்கித் தருகிறேன். மேல்குடி கிராமத்தில் நாயுடுமார் வீதிதான் முக்கியமானது. ஊரில் பெரிய பணக்காரர்களும் மிராசுதாரர்களும் நாயுடுமார்களே. சிலர் பரம்பரைச் செல்வர்கள். சிலர் முயற்சியினால் பணக்காரரானவர்கள். ஒருவர் மளிகைக் கடை வைத்துப் பைசாவுக்குப் பைசா லாபம் சேர்த்து விற்றுப் பணக்காரர் ஆனார். மற்றொருவர், லேவாதேவி செய்து 1.50 வட்டிக்குக் குறையாமல் வாங்கிப் பெரிய முதலாளி ஆனார். இன்னொருவர், மலாய் நாட்டுக்குச் சென்று பெரும் பொருள் ஈட்டி வந்தார். இப்படிக் கண்ணெதிரில் எல்லாரும் பணக்காரர் ஆவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கேசவலு நாயுடு மட்டும், அன்றிருந்த நிலைக்கு அழிவின்றி இருந்தார். பாவம்! அவர் மீது தவறில்லை. பணம் சேர்ப்பதற்கு அவர் கைக்கொண்ட முறை அத்தகையது. அதுதான் விவசாயம். விவசாயத்தொழில் நடத்திப் பணக்காரன் ஆனவன் எங்கேயாவது உண்டா? கொஞ்ச காலம் குத்தகை எடுத்துச் சாகுபடி செய்து பார்த்தார். சொந்த நிலத்தின் வருமானமும் அதில் அடித்துக் கொண்டு போவதாயிருந்தது. பின்னர் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, தாமுண்டு தமது நிலமுண்டு என்று இருந்து வந்தார். அவருக்குப் பணக்காரராக ஆசையில்லாமலில்லை. அடுத்த வீட்டுக்காரர் எல்லாரும் பணக்காரர் ஆகி வருகையில், தாம் மட்டும் ஆசைப்படாமலிருக்க அவர் என்ன, சந்நியாசியா? நேற்றுக் கஞ்சிக்கு இல்லாதிருந்தவர்கள் இன்று மூன்று கட்டு வீடு கட்டிவிட்டார்கள் என்னும் விஷயத்தை அவர் மனைவி, அடிக்கடி நினைவூட்டி வந்தாள். “பேசாமலிரு, அதிர்ஷ்டம் வரும்போது, தானே வரும்” என்று சமாதானம் சொல்லி வருவார். இப்படிச் சொல்லிச் சொல்லி ஏதேனும் ஒரு வழியில் தமக்கு அதிர்ஷ்டம் வந்தே தீரவேண்டுமென்று அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அதிர்ஷ்டம் வரக்கூடிய வழிகள் பற்றி அவர் ஓயாது சிந்திப்பார். கடைசியாக அவருடைய யோசனை “புதையல்” என்பதில் வந்து முற்றுப்புள்ளிப் போட்டு நின்றது. அதற்குமேல் ஓடக் கண்டிப்பாக மறுத்துவிட்டது. அதிர்ஷ்டம் தம்மிடம் வந்துசேர வேறு வழி எதுவும் இருப்பதாகப் புலப்படவில்லை. நதிப்படுகையிலும், நாணற்காட்டிலும், வீதியில் வழி நடக்கையிலும், வயல் வரப்பிலும், கொல்லை அவரைக் குழியிலும், வீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு நேர் கீழேயும், தோண்டியிலும், குடத்திலும், தவலையிலும், பெட்டியிலும் அவர் புதையல் கண்டெடுத்துக் கலகலவென்று சிரித்துத் தூக்கத்திலிருந்து விழித்த இரவுகள் அனேகம்… இங்ஙனமிருக்கையில், சிங்கப்பூர் நாயுடு என்ற ஒருவர் மேல்குடிக்கு வந்து சேர்ந்தார். நாயுடுமார் தெருவின் ஒரு கோடியிலிருந்த பெரிய தனி வீடு ஒன்றை வாடகைக்கு வாங்கிக் கொண்டு அவர் வாசம் செய்யத் தொடங்கினார். அவருடன் வீட்டில் சமையற்காரனைத் தவிர வேறு யாருமில்லை. மனிதர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவமுடையவரல்லர். எனவே அவர் ஏன் அங்கு வந்து தனியாக இருக்கிறார் என்பது குறித்துப் பலர் பல காரணங்கள் சொன்னார்களாயினும், ஒருவருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் நாயுடு சோதிட சாஸ்திரத்தில் மிக வல்லவர் என்று கேள்விப்பட்ட பின்னர், கேசவலு நாயுடுவின் மனம் எப்படியேனும் அவருடன் நட்புக் கொள்ள வேண்டுமென்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் கடைத் தெருவில் சிங்கப்பூர் நாயுடு, “இந்த ஊரில் கறிகாய்கள் ஒன்றும் அகப்படுவதில்லையே” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேசவலு நாயுடு வீட்டுக் கொல்லைக் கறிகாய்கள் அந்த ஊரில் பிரசித்தி பெற்றவை. எனவே அருகிலிருந்த அவர், மறுநாள் காலையில் கறிகாய்கள் கொண்டு வருவதாக வாக்களித்தார். இதன் மூலம் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது; பின்னர் அறிமுகம் நட்பாக முதிர்ந்தது. ஒரு நாள் சோதிடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கேசவலு நாயுடு, “ஒருவனுக்குப் புதையல் கிடைக்குமா கிடைக்காதா என்று சோதிடத்தில் பார்க்க முடியுமா” என்று கேட்டார். “கண்டிப்பாக முடியும்” என்று பதிலளித்தார் சிங்கப்பூர் நாயுடு. இதற்குச் சில தினங்களுக்குப்பிறகு ஒருநாள் சிங்கப்பூர் நாயுடு கேசவலு நாயுடு வீட்டுக்கு வந்திருந்தபோது பின்னவர் தமது ஜாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். சிங்கப்பூர் நாயுடு வெகு நேரம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுக் கூறலுற்றார்:- “இந்த ஜாதகனுக்கு வாய்த்த மனையாள் நல்ல உத்தமி. பெண் குழந்தைகள் நாலு; ஆண் பிள்ளைகள் இரண்டு. தொழில் விவசாயம். அவ்வளவு லாபகரமில்லை. ஆனால், சுக ஜீவனம். குழந்தைகளில் ஒன்று இறந்து போயிருக்க வேண்டும். இவையெல்லாம் உண்மைதானா?” “உண்மை, உண்மை. அவ்வளவும் உண்மை.” “நல்லது! அப்படியானால் தைரியமாகச் சொல்லுகிறேன், இந்த ஜாதகத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது.” கேசவலு நாயுடுவின் ஹிருதயம் ‘பட்பட்’ என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. “அது என்னவோ?” என்றார். “இல்லை, அதைச் சொல்லாமலிருப்பதே நல்லது. சொன்னால் நீர் நம்பப் போவதில்லை. சொல்லிப் பயனென்ன?” “அப்படிச் சொல்லக்கூடாது. தயவு செய்து தெரிவிக்க வேண்டும்! சோதிடத்தில் எப்போதுமே எனக்கு நம்பிக்கையுண்டு. அதுவும் இப்போது முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.” “நல்லது; நீர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லிவிடுகிறேன். இந்த ஜாதகனுக்குப் புதையல் ஒன்று அகப்பட்டே தீரவேண்டும். வேண்டாமென்று சொன்னாலும் விடாது.” கேசவலு நாயுடுவின் நெஞ்சம் ஒரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. “இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள், ஐயா! எங்கே எப்போது அகப்படும்? அவ்வளவு தூரம் சொல்ல முடியுமா?” என்று அவர் கேட்டார். இந்தச் சோதிடம் மட்டும் பலித்தால் கொல்லையில் இளங்கத்திரிப் பிஞ்சாக ஒரு கூடை பறித்துச் சிங்கப்பூர் நாயுடுவுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு சிறு நினைவு, அலை வீசிக் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்தில் இடையே தோன்றிற்று. “கொஞ்சம் சொல்லலாம். புதையல் கிடைக்க வேண்டிய காலம் 42-வது வயது. அதாவது இந்த வருஷந்தான். அனேகமாகச் சொந்த வீட்டிலேயே கிடைக்கலாம். ஜலசம்பந்தமாகக் காணப்படுகிறது. அதன் பொருள் எனக்கு நன்றாக விளங்கவில்லை.” (மேற்சொன்ன சம்பாஷணையெல்லாம் தெலுங்கு மொழியில் நடந்தவை. எனக்கு கேசவலு நாயுடு கூறிய போது பாதி தெலுங்கும் பாதி தமிழுமாகக் கலந்து சொன்னார். நேயர்களின் நன்மைக்காக நான் முற்றும் தமிழ்ப்படுத்தி எழுதியிருக்கிறேன்.) அன்றிரவு கேசவலு நாயுடு வழக்கம்போல் எட்டரை மணிக்குப் படுத்துக் கொண்டார். படுத்தவுடன் தூங்கிப் போகும் வழக்கமுடைய அவருக்கு இன்று தூக்கமே வரவில்லை. சிங்கப்பூர் நாயுடு சோதிடம், ஜாதகம், புதையல், 42-ஆம் வயது, வீட்டுக்கொல்லை, மண்வெட்டு, குழிதோண்டுதல் ஆகிய இவை அவர் உள்ளத்தில் மாறி மாறி இடம் பெற்று வந்தன. கடைசியில், சுமார் பதினொரு மணிக்கு அவர் உறுதியோடு எழுந்தார். அவர் மனைவி குழந்தைகள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மண் வெட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றார். கொல்லையில் கிளி கொஞ்சிற்று. பெரும் பகுதியில், கத்திரி, கொத்தவரை, வெண்டை, அவரை, புடல் முதலியவை செழித்து வளர்ந்திருந்தன. பயிர் எதுவும் செய்யப்படாமல் ஒரு மூலை மட்டும் கிடந்தது. கேசவலு நாயுடு அந்த இடத்துக்குச் சென்று, மண் வெட்டிப் பிரயோகம் செய்யலானார். "முயற்சியின் பயனாகக் கிடைப்பதானால் பிரயாசைப்படவேண்டும். புதையல் அதிர்ஷ்டவசத்தினால் கிடைப்பதல்லவா? எனவே, தொட்ட இடத்தில் கட்டாயம் அகப்பட்டே தீர வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே, தரிசாகக் கிடந்த பகுதி முழுவதையும் ஒரு முறை கொத்தினார். பின்னர் சோதிடர் “ஜல சம்பந்தம்” இருப்பதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எனவே, அம்மூலையை இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொண்டு ஒரு பகுதியை ஆழமாகத் தோண்ட ஆரம்பித்தார். இடுப்பு ஆழம் தோண்டிவிட்டார். புதையலுக்கு அறிகுறி எதையும் காணோம். இதற்குள் பொழுது விடியும் தருணம் ஆகிவிட்டது. அப்படியே குழியை விட்டுப் போனால், காலையில் அடுத்த வீட்டுக்காரன் ஏதேனும் நினைத்துக் கொள்வானென்ற பயம் உண்டாயிற்று. வெட்டிய மண்ணைத் திருப்பிக் குழியில் தள்ளி மூடினார். சுமார் ஐந்து மணிக்கு உள்ளே போய்ப்படுத்துக் கொண்டார். என்றுமில்லாத வண்ணம் காலை எட்டு மணிவரை கேசவலு நாயுடு தூங்குவதைக் கண்டு அவர் மனையாள் பேராச்சரியத்துடன் அவரைத் தட்டி எழுப்பினாள். அவர் எழுந்து கொல்லைப்புறம் போனாரோ, இல்லையோ அடுத்த வீட்டுக் கொல்லையில், தயாராய்க் காத்துக் கொண்டிருந்த பெருமாள் நாயுடு, “என்ன நாயுடுகாரு? அந்த மூலையை எப்போது கொத்தினீர்? நேற்று சாயங்காலம் வரை கொத்தியிருக்கக் காணோமே?” என்று கேட்டார். கேசவலு நாயுடுவுக்கு அவர் மீது அநியாயக் கோபம் வந்தது. முகத்தை வேறு புறமாய்த் திருப்பிக் கொண்டு “இரவில் தூக்கம் வரவில்லை. நல்ல நிலவாயிருந்தபடியால் சிறிது நேரம் வேலை செய்தேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளே வந்தார். அமாவாசை அடுத்த நாள் என்பது அப்போது நினைவு வந்தது! ‘என்ன அநியாயம்! அவனவன் தன் காரியத்தை பார்த்துக் கொண்டு போனாலென்ன?’ என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார். அன்றிரவு எட்டரை மணிக்கு வழக்கம்போல் கேசவலு நாயுடு பாயில் படுத்தார். முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்திருந்தபடியால், நிரம்பக் களைப்பாயிருந்தது. நாளைக்குத்தான் பார்த்துக் கொள்ளலாமே என்று எண்ணினார். அப்போது இன்னொரு நினைவு குறுக்கே வந்தது. ‘சிங்கப்பூர் நாயுடு நல்லவர்தான், இருந்தாலும், இந்தக் காலத்தில் யாரை நம்புவது? அவருக்கு நன்றாய்த் தெரியும்… நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது… ஆனால், ஜாதகத்தின்படி புதையல் நமக்குத்தானே…’ இப்படி எண்ணமிட்டுக் கொண்டே அவர் கண்ணை மூடி நிம்மதியிலாழ்ந்தார். சிங்கப்பூர் நாயுடு தோளில் மண் வெட்டியுடன் கொல்லையில் நிற்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார். உடனே சென்று, கொல்லைக் கதவைத் திறந்தார். என்ன அதிசயம்! கிணற்றங்கரையின் அருகிலிருந்து யாரோ ஒரு மனிதன் ஓடினான். கேசவலுநாயுடு பிரமித்து நின்ற ஒரு கணத்துக்குள் அவன் மறைந்து விட்டான். அமாவாசை இருளாதலின் ஆசாமி நன்றாகப் புலனாகவில்லை? தெரிந்த அளவுக்கு, சிங்கப்பூர் நாயுடுவாகவே தொன்றிற்று. மனத்திற்குள் அவரைச் சபித்துக்கொண்டு உள்ளே வந்து மண் வெட்டியை எடுத்துக் கொண்டு போனார். கேசவலு நாயுடு தரிசாகக் கிடந்த மூலையில், தோண்டாமல் விட்ட பகுதியை இப்போது தோண்டத் தொடங்கினார். அர்த்த ராத்திரியாயிற்று. எங்கோ தூரத்தில் நரி ஊளையிட்டது. முறை வைப்பதுபோல் வாயிலில் நாய் குரைத்தது. அடுத்தாற்போல், பக்கத்து விட்டுப் பெருமாள் நாயுடுவின் இருமல் சத்தம் கேட்டது. அடுத்டு ‘கடகடா கடகடா’ என்று சத்தம் கேட்டது. சரி, அந்தப் பாவி கொல்லைக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டிருக்கிறான். அடுத்த நிமிஷத்தில் கதவைத் திறந்து கொண்டு வருவான். குழி தோண்டுவதைப் பார்த்தானோ, புதையல் அகப்பட்டாலும் உபயோகமில்லை. கேசவலு நாயுடுவுக்கு அந்தக் கணத்தில் அடிவயிற்றில் புளியைக் கரைத்தாற் போலிருந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கிணற்றண்டை சென்று அதனுள்ளே இறங்கத் தொடங்கினார். பாதிக்கிணறு இறங்கினதும், “யாரங்கே” என்று சத்தம் கேட்டது. பீதி அதிகமாயிற்று. இன்னும் விரைவாக இறங்கித் தண்ணீரில் மெதுவாக அமிழ்ந்தார். கிணற்றில் மார்பளவு தண்ணீர் இருந்தது. சுமார் பதினைந்து நிமிஷத்துக்குப் பின்னர், பெருமாள் நாயுடு திரும்பக் கதவைத் தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டது. கிணற்றின் மத்தியில் நின்ற கேசவலு நாயுடு கரை ஏறுவதற்காகச் சுவர் ஓரமாய் அடிஎடுத்து வைத்தார். காலில் ஏதோ தட்டுப்பட்டது. பித்தளைத் தவளையின் விளிம்புபோல் காணப்பட்டது. அந்தக் கணத்தில் அவருடைய மூளை கறகறவென்று சுழன்றது. ஆ! ஜல சம்பந்தம்! இப்போதல்லவா விளங்குகிறது! நாயுடுகாரு அதிக வேகமாக மேலேறினார். பரபரப்பினால் கால்கள் நடுங்கின. தட்டுத்தடுமாறி ஏறினார். ஜலம் இழுக்கும் தாம்புக் கயிற்றின் ஒரு முனையை ஒரு கட்டையில் கட்டி விட்டு இன்னொரு முனையுடன் மறுபடியும் கிணற்றிலிறங்கித் தவலை விளிம்பில் கட்டினார். சில நிமிஷங்களுக்கெல்லாம் தவலை வெளியே வந்தது. அவ்வளவு கனமாக இல்லை. ஆயினும் நாயுடுகாரும் பரபரப்புடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று கொல்லைக் கதவைப் போய்ப் சாத்திவிட்டு வந்தார். மனைவி மக்கள் நன்கு தூங்குகிறார்களா என்று பார்த்து விட்டு தவலையின் வாய் மூடியைப் பெயர்த்தெறிந்தார். உள்ளே கையை விட்டார். காகிதங்கள்! வயிறு, பகீர் என்றது. ஒரு பிடி வெளியே எடுத்தார். ஓ! ஒரு நிமிஷம் அவருக்கு மூச்சு நின்று போயிற்று. அவ்வளவும் நோட்டுகள்! ரூபாய் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள்! மொத்தம் எண்ணாயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபாய்க்கு நோட்டுகள் இருந்தன. தவலையில் திரும்பப் போட்டுப் பெரிய மரப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். பின்னர் படுத்துக் கொண்டார். தூங்கவில்லையென்று சொல்ல வேண்டுமா? அவருடைய எண்ணங்கள் பின்வருமாறு ஓடிக் கொண்டிருந்தன:- "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும். வேளை வரும்போது அதிர்ஷ்டம் தானே வரும்:- அடுத்த வீட்டுக்காரன் வந்தல்லவா கிணற்றில் இறங்கும்படி செய்தான்? - காலம் வரவேண்டுமென்று இத்தனை நாளாகக் கிணற்றில் காத்துக் கொண்டிருந்தது. நாலு நாளைக்கு முன் கும்பி எடுத்தபடியால், விளிம்பு மண்ணுக்கு மேலே வந்திருக்க வேண்டும். நல்ல வேளை, ஆட்களுக்கு தெரியாமற் போயிற்று. சிங்கப்பூர் நாயுடு கிணற்றங்கரையில் நின்றதன் காரணம் விளங்குகின்றது. நாளையே நேரில் கொண்டு போய்ப் பணங் கொடுத்துவிட்டு வரவேண்டும்?" கேசவலு நாயுடுவின் மூத்த புதல்வன் வேணு சமீபத்தில் இருந்த பட்டணத்தில் ஐந்தாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தான். நாயுடுகாருக்குப் புதையல் அகப்பட்ட நான்காம் நாள் வேணு நாலைந்து போலீஸ் ஜவான்கள் புடைசூழ, மேல்குடிக்கு வந்ததைக் கண்டு அவ்வூர் ஜனங்கள் அதிக ஆச்சரியப்பட்டார்கள். கேசவலு நாயுடு கள்ளநோட்டு தயாரித்து வெளியிட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். வீட்டைப் பரிசோதித்ததில் எண்ணாயிரத்து எழுநூறு ரூபாய்க்குக் கள்ள நோட்டுகள் கிடைத்தன. கிணற்றில் கள்ள நோட்டுத் தயாரிக்கும் சில இயந்திரங்கள் அகப்பட்டன. சிங்கப்பூர் நாயுடுவும் அவருடைய பரிசாரகனும் இதற்கு முதல் நாளே ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் பிறகு அகப்படவேயில்லை. கேசவலு நாயுடுவுக்கு கண்கள் திறந்தன. ‘பொன் வெள்ளிப் புதையல் அகப்பட்டதாகக் கேள்விப்பட்டதுண்டு. எங்கேயாவது நோட்டுப் புதையல் கிடைக்குமா? ஆசையினால் குருடாகிப்போனோம்’ என இப்போது உணர்ந்தார். தப்புவதற்கு வழியில்லையென்று அவருக்குத் திட்டமாகத் தெரிந்தது. ‘இனி மதி மோசம் போகக்கூடாது. நாம் சிறைக்குப் போவதென்னவோ நிச்சயம். மனைவி மக்களாவது உள்ளதை வைத்துக்கொண்டு இருக்கட்டும்’ எனத் தீர்மானித்தார். எனவே வக்கீல் வைத்து வாதாடவில்லை. தமக்குத் தெரிந்த அளவு உண்மையைக் கூறிவிட்டு, ‘சாட்சியில்லை, வக்கீல் இல்லை’ என்று சொல்லிவிட்டார். மேல்குடி ஸ்ரீமான் கேசவலு நாயுடு, முத்தலை நகரின் மத்திய சிறைக்கூடத்தில் 9-வது பிளாக்கில் 12-வது அறையில் நம்பர் 888 ஆகா எழுந்தருளிய வரலாறு இதுதான். ஆனால், நான் தலைப்பில் கூறிய மூன்று சிந்தாந்தங்களும் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதுகிறீர்களா? பவானி, பி.ஏ., பி.எல். கூனூர் பங்களா “பொய்களில் எல்லாம் பெரிய பொய்யை சிருஷ்டித்தவனுக்கு ஒரு பரிசு கொடுப்பதாயிருந்தால், அந்தப் பரிசு நிராட்சேபணையாக ஈசுவரனைத்தான் சேரும். அது விஷயத்தில் பகவானுடன் போட்டி போடுவதற்கு யாராலும் முடியாது” - இம்மாதிரி சொல்லுகிறார்கள் வேதாந்திகள். இந்த உலகத்தைவிடப் பெரிய பொய் வேறு ஒன்றும் இல்லையென்பது அவர்களுடைய கொள்கை. இந்த உலகத்தின் இன்ப துன்பகளெல்லாம் பொய்; தேகம் பொய்; மனம் பொய்; விருப்பு வெறுப்பு, ஆசை பகைமை, கோபம் தாபம் எல்லாம் பொய் என்று சொல்லுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்கள், இதை நம்புவது இலேசான காரியமல்ல. இவ்வுலகின் சுக துக்கங்களெல்லாம் நமக்கு ரொம்பவும் வாஸ்தவமாயிருக்கின்றன. அந்தந்தச் சமயத்தில் அததை விட நிஜமானது வேறு ஒன்றுமில்லையென்று தோன்றுகிறது. ஆனால் வேறொரு விதத்தில் இந்த உலகம் பொய்யுலகம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். உலக வாழ்க்கையில் நாம் அநேக சம்பவங்களைக் கண்ணால் பார்க்கிறோம்; காதால் கேட்கிறோம். அவற்றை நாம் உண்மையென்றும் நம்பி விடுகிறோம். நம் கண்களும் காதுகளும் நம்மை அநேக முறைகளில் ஏமாற்றி விடுகின்றன. “கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்தறிவதே மெய்” என்னும் பழமொழி மிகவும் உண்மையானது. சாதாரணமாய் வாழ்க்கையின் வெளிப்படையான நிகழ்ச்சிகள்தான் நமது கவனத்தைக் கவருகின்றன. நாம் பார்க்கும் வெளி உலகத்துக்குப் பின்னால் மனோலோகம் ஒன்றிருக்கிறதென்பதை மறந்து விடுகிறோம். ஆற்று வெள்ளத்தில் மேலே மிதந்து வரும் நுரைத்திரள்களும், உதிர்ந்த இலைகள், மலர்களும், குப்பை கூளங்களும் நம் கண்ணில் படுகின்றன. ஆனால் ஜலப் பரப்பின் அடியில் உள்ள சுழிகளையும் சுழல்களையும் நாம் அறிவதில்லை. தினந்தோறும் நாம் பார்த்துப் பழகிவரும் மனிதர்களைப் பற்றி நமக்கு எல்லாந் தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமற்ற வெளிப்படையான அம்சந்தான் நமக்குத் தெரிந்தது. அவர்களுடைய உள்ளத்தில் பொங்கிக் குமுறும் ஆசாபாசங்கள், விரோத வைஷம்யங்கள், இன்ப துன்பங்கள் இவை ஒன்றும் நமக்குத் தெரியாது. சில சமயம் வாழ்க்கையின் வெளிப்படையான சம்பவங்களைப்பற்றிக் கூட நாம் பொய்யை மெய்யாக நினைத்து ஏமாறுவதுமுண்டு. உதாரணமாக, ஸ்ரீமதி பவானியைப் பற்றி உலகினர் அறிந்திருந்ததைக் குறிப்பிடலாம். அவளுக்கும் பாரிஸ்டர் சேஷாத்ரிக்கும் ஏற்பட்ட நேசத்தைக் குறித்து அறியாத வக்கீல் இருக்க முடியாது. மூன்று நான்கு வருஷத்துக்கு முன்னால், இரண்டு வக்கீல்கள் சேருமிடமெல்லாம் இதைப் பற்றியே பேசினார்கள். கிளப்புகளிலும் ஹோட்டல்களிலும், கடற்கரைகளிலும், டிராம்வண்டியிலும் வேறு வம்பு கிடையாது. கடைசியாக, பவானியும் சேஷாத்ரியும் கப்பலேறி உலக யாத்திரை சென்றார்கள் என்று அறிந்த பின்னர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பேச்சு ஓய்ந்தது. அவர்களைப் பற்றித் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை யென்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். ஆனாலும் ஜனங்கள் நினைத்ததற்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம்? அகஸ்மாத்தாக, நான் சற்றும் எதிர்பாராத முறையில், எனக்கு அவர்களைப்பற்றிய உண்மை தெரியவந்தது. சென்றவருஷம் கோடைக்காலத்தில், நான் ஒரு பிசகு செய்தேன். ஒரு வார காலம் காரியாலயத்தில் விடுமுறை பெற்றுக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் வீட்டிலே இருந்து விட்டேன். இதனால் உடம்பு கெட்டுப் போய் விட்டது. டாக்டரிடம் காட்டியதில், அவர், "அடடா! உங்களுக்கு அவ்வளவு பெரிய வியாதி எப்படி வந்தது? இது ரொம்ப ரொம்ப பெரிய மனுஷர்களுக்கு அல்லவா வரும்? இதற்கு ‘வேலையில்லாத வியாதி’ என்று பெயர். பூரண ஓய்வு எடுத்துக் கொள்வதுதான் இதற்குச் சிகிச்சை! அதுவும் குளிர்ந்த இடத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். போங்கள்; நீலகிரிக்கு உடனே போங்கள்" என்று ஆக்ஞாபித்தார். அப்படியே நான் போய் நீலகிரியில் சில காலம் தங்கியிருந்தேன். அப்போது, ஒரு நாள் கூனூரில் மாஜி புரொபஸர் பிரணதார்த்தி அவர்களின் பங்களாவுக்குப் போக நேர்ந்தது. சென்னையிலே இவரிடம் எனக்குச் சொற்பப் பழக்கமுண்டு. நீலகிரிக்கு வந்தால் தம்மை வந்து கட்டாயம் பார்க்க வேண்டுமென்று அவர் வற்புறுத்திச் சொல்லியிருந்தபடியால் போனேன். அவருடைய பங்களா கூனூரில் மிகவும் அழகான, ஏகாந்தமான ஓரிடத்தில் அமைந்திருக்கிறது. அந்தப் பங்களாவுக்கு அவர், ‘சாந்தி நிலையம்’ என்று பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார். “வெயிலின் அருமை குளிரில் தெரியும்” என்ற பழமொழியின் உண்மையை நீலகிரியில் நன்கு தெரிந்து கொள்ளலாம். நான் போயிருந்த அன்று மாலை நாலு மணிக்கு நானும் புரொபஸரும் பங்களாவின் வாசல் புறத்தில் இளம் வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம். அங்கிருந்து பார்த்தால், சுற்றிலும் வெகு தூரத்துக்கு வரிசை வரிசையான மலைத் தொடர்களும், பசுமையான காடுகளும், பள்ளத்தாக்குகளும், மலை வீழருவிகளுமே காட்சியளித்தன. யூகலிப்டஸ் மரங்களின் கிளைகளில் ஜிலு ஜிலுவென்று இளங்காற்று வீசியபோது ஏற்பட்ட ‘ஙொய்’ என்ற மனோகரமான சப்தத்தைத் தவிர வேறு சப்தமே கிடையாது. இதைச் சற்று நேரம் கவனித்து விட்டு, “அடாடா! இந்த இடந்தான் எவ்வளவு அமைதியாயிருக்கிறது!” என்று நான் என்னையறியாத உற்சாகத்துடன் சொன்னேன். அப்போது புரொபஸர் பிரணதார்த்தி “ஆமாம்; இந்த இடம் இப்போது அமைதியாய்த்தான் இருக்கிறது. ஆனால் மூன்று வருஷத்துக்கு முன்னால் இங்கே ஒரு சமயம் பெரும் புயல் அடித்தது; பூகம்பம் நிகழ்ந்தது; எரிமலை நெருப்புக் கக்கிற்று; ஆமாம், இதெல்லாம் மனோலோகத்திலேதான் நடந்தது” என்றார். உடனே, எனக்கு பவானி சேஷாத்ரி இவர்களின் ஞாபகம் வந்தது. ஸ்ரீமதி பவானியினுடைய சித்தப்பாதான் பேராசிரியர் பிரணதார்த்தி என்பது நினைவுக்கு வந்தது. மூன்று வருஷத்துக்கு முன்பு பவானியும் சேஷாத்ரியும் கூனூரில் இந்தப் பங்களாவில் இருந்தபோதுதான் இங்கே தப்பியோடிய கைதி ஒருவன், பிடிபட்டான். அச்சமயம் பத்திரிகைகளில் இதைப்பற்றிச் சில விவரங்கள் வெளியாயின. ஆனால் வெளியாகாத விஷயங்கள் சில கட்டாயம் இருந்திருக்க வேண்டும் என்று மட்டும் எனக்கு அப்போதே தோன்றிற்று. அந்தச் சம்பவத்தையடுத்து உலக யாத்திரை சென்ற பவானியும் சேஷாத்ரியும் இன்னும் திரும்பி வந்து சேரவில்லை. இன்றைய தினம் ஏனோ புரொபஸர் பிரணதார்த்திக்குத் தமது மனக்கதவைத் திறக்க வேண்டுமென்று தோன்றியது. எல்லாவற்றையும் விண்டுவிண்டு அவர் சொல்லவில்லையென்றாலும், உண்மையை நான் தெரிந்து கொள்ளும் அளவுக்கு விஷயங்களை வெளியிட்டார். அது தான் எப்படிப்பட்ட உண்மை! எவ்வளவு பயங்கரமானது! எவ்வளவு ஆச்சரியமானது! ஏற்கனவே எனக்குத் தெரிந்த விஷயங்களையும், ஆசிரியர் பிரணதார்த்தி அன்று சொன்னவற்றையும் வைத்துக் கொண்டு, பெயர்களை மட்டும் மாற்றி, இந்தக் கதையை எழுதுகிறேன்! - என்ன, கதையென்றா சொன்னேன்? ஆமாம்; கதைதான்! நிஜமென்றால் யார் நம்புவார்கள்? புன்னகையும் புது நிலவும் ஸ்ரீமதி பவானி, பி.ஏ.,பி.எல். என்றைய தினம் ஹைகோர்ட்டில் அட்வகேட்டாகப் பதிவு செய்யப்பட்டாளோ, அன்றுமுதல் ஹைகோர்ட்டு கட்டிடமே ஒரு புதிய களையுடன் விளங்கிற்று. பிரம்மஹத்தி கூத்தாடிய வேலையற்ற வக்கீல்களின் முகத்திலே கூட ஒரு புதிய தேஜஸ் பிறந்தது. ஊமைக் கோட்டான் போல் இருந்த ஜட்ஜுகள் எல்லாம் கொஞ்சம் கலகலப்பாய்ப் பேச ஆரம்பித்தார்கள். தஸ்தாவேஜிக் கட்டுகளைப் பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கோர்ட் குமாஸ்தாக்களின் கண்கள் ஒரு புதிய பிரகாசம் பெற்று அங்குமிங்கும் நோக்கி விழித்தன. அந்தக் கண்கள், குறுக்கே நெடுக்கே எங்கேயாவது ஸ்ரீமதி பவானி போகிறாளா என்றுதான் அப்படித் திருதிருவென்று விழித்தன என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்கு முன்னாலும், ஐந்தாறு ஸ்திரீகள் ஹைகோர்ட்டில் அட்வகேட்டுகளாகப் பதிவானதுண்டு. அவர்களால் எல்லாம் இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டதில்லை. அவர்கள் தங்களுடைய மேனியின் சௌந்தரியத்தையும், முகவசீகரத்தையும் பரீட்சையென்னும் பலிபீடத்தில் பலி கொடுத்துவிட்டு வந்தார்கள். அவர்களில் சிலரை பார்க்கும்போது, சோளக் கொல்லைகளிலே காக்காய்களைப் பயமுறுத்துவதற்காக வைத்திருப்பார்களே, அந்த உருவங்கள் ஞாபகத்திற்கு வரும். ஆனால், பவானியோ இந்தச் சம்பிரதாயத்துக்கு முற்றும் மாறுபட்டவளாயிருந்தாள். அவள் ஹைகோர்ட் தாழ்வாரத்தில் நடந்து வருவதைப் பார்த்தால், யாரோ, தேவ கன்னிகை தேவேந்திரனுடைய சபைக்குப் போக வேண்டியவள் வழி தவறி இங்கே வந்து விட்டதாகவே தோன்றும். அஸ்தமன சூரியனது பொன்னிறக் கிரணங்களின் நிறம் அவளுடைய மேனி நிறம் தேவலோகச் சிற்பியினால் ஆக்கபட்ட ஸ்வர்ண விக்கிரகம் உயிர் பெற்று நடமாடுகிறதோ என்று ஒரு நிமிஷம் பிரமித்துப் போவார்கள். பவானியைத் திடீரென்று சந்திப்பவர்கள். அவள் தன்னுடைய முத்தான அழகிய பற்கள் சிறிது தோன்றும்படி புன்னகை புரிந்தால், அந்த இருளடைந்த ஹைகோர்ட்டு அறைகளில் பளிச்சென்று நிலவு வீசுவதுபோல் இருக்கும். அவளுடைய கண்களில் கூரிய வாள்கள் ஒளி வீசும்; வயிர நெஞ்சு பெற்ற பெரிய பெரிய ஸீனியர் வக்கில்களின் இருதயங்களைக் கூட அந்த வாள் வீச்சுப் பிளந்துவிடும். ஸ்ரீமதி பவானி கோர்ட்டுக்கு வர ஆரம்பித்ததிலிருந்து, பிரபல அட்வகேட்டுகளின் நடை உடை பாவனைகளில் எல்லாம் வித்தியாசம் ஏற்படத் தொடங்கியது. அட்வகேட் நீலமேகமய்யங்கார் தம்முடைய தலைப்பாகையின் சரிகைக் கரையை அரை அங்குலத்திலிருந்து முக்கால் அங்குலமாக மாற்றத் தீர்மானித்து விட்டார். வக்கீல் மதனகோபால சாஸ்திரி இதற்கு முன்னால் அரை மணி நேரம் நிலைக் கண்ணாடியின் முன் நின்று நெற்றியில் கடுகளவு சாந்துப் பொட்டு இட்டுக் கொள்வது வழக்கம். இப்போது அவர் முக்கால் மணி நேரம் செலவழித்து அரையேயரைக்கால் கடுகளவு சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டு வரத் தொடங்கினார். மொத்தத்தில் ஹைகோர்ட் வக்கீல்களில் பாதிப் பேர் பவானியினால் அரைப் பைத்தியமானார்கள்; பாக்கிப் பாதிப் பேரோ முழுப் பைத்தியமாயினர். அவள் கோர்ட்டுக்கு வரும் வரையில் வக்கீல்கள் அநேகர் கோர்ட் தாழ்வாரத்தில் ஏதோ பிரமாதமான காரியம் உள்ளவர்களைப் போல் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருப்பார்கள். அவள் வந்துவிட்ட பிறகோ, அவள் எந்தக் கோர்ட்டில் ஆஜராகிறாளோ, அங்கே போய்க் கூட்டம் போடுவார்கள். இது விஷயமாக ஒருவரையொருவர் அவர்கள் பரிகாசம் செய்து கொள்வதுமுண்டு. “ஸீனியர் வக்கீல் நரசிம்மாச்சாரி ஜுனியர் வக்கீல் வராகாச்சாரியாரைப் பார்த்து,”ஏண்டா, வராகம்! எதற்காகடா இங்கே நிற்கிறாய்?" என்பார். “உங்களுக்காகத்தான் ஸார் நிற்கிறேன்” என்பார் வராகாச்சாரி. “அடே போக்கிரி! எனக்குத் தெரியாதா? இருக்கட்டும், இதைக் கேளு. சாகுந்தலத்தில் காளிதாஸன் சகுந்தலையின் கண்களை வர்ணிக்கும் போது, ‘இளம் மாந்தளிரின் நிறத்தை ஒத்திருந்தது அவளுடைய கண்ணின் நிறம்’ என்கிறான்; இத்தனை நாளாய் எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. பவானியின் கண்களைப் பார்த்த பிறகுதான் புரிந்தது” என்பார் நரசிம்மாச்சாரி. இப்படியெல்லாம் நான் சொல்லும் போது சென்னையிலுள்ள ஹைகோர்ட்டு வக்கீல்கள் எல்லாருமே ‘விடபுருஷர்கள்’ என்று தோஷாரோபணம் செய்வதாய் யாரும் எண்ணக்கூடாது. உண்மையில் சென்னையில் வக்கீல்களில் முக்கால்வாசிப்பேர் பரம யோக்யர்கள்; பாக்கிப் பேரோ தங்கள் சம்சாரங்களுக்குப் பயந்தவர்கள். அப்படியிருந்தும், அவர்கள் எல்லாரும் ஸ்ரீமதி பவானியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள் என்றால், நமது தற்போதைய சமூக வாழ்க்கையின் நிலைமையில் இது சகஜமாக எதிர்பார்க்கக் கூடியதேயாகும். நம் நாட்டில் ஸ்திரீகளின் வாழ்க்கைக்கும் புருஷர்களுடைய வாழ்க்கைக்கும் ஒரு பெரிய பிளவு வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இந்நிலைமையில் யாராவது ஒரு ஸ்திரீ அந்தப் பிளவைத் தைரியமாகக் கடந்து வந்து புருஷர்களுக்கு மத்தியில் சரிசமானமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால், புருஷர்கள் பிரமித்துவிடுவது சகஜமேயல்லவா? புருஷர்களின் மத்தியில் ஒரு ஸ்திரீ பேசி விட்டாலே அவர்களுக்கு ஆச்சரியம்; அவள் புத்திசாலித்தனமாகவும் பேசிவிட்டால் மகா ஆச்சரியம்; அப்படிப் புத்திசாலித்தனமாகப் பேசக்கூடிய ஒரு ஸ்திரீ சௌந்தரியவதியாயும் இருந்துவிட்டால் எந்தப் புருஷன் தான் கொஞ்சம் அரைகுறையாகவாவது புத்தியை இழக்காமல் இருக்க முடியும்? சேஷாத்ரியின் வீழ்ச்சி இந்தப் பிரமையெல்லாம் கொஞ்ச காலந்தான் நீடித்திருந்தது. பவானிக்கும் சேஷாத்ரிக்கும் சிநேகம் முற்றி வருகிறதென்றும் அவர்கள் கலியாணம் செய்து கொள்ளக் கூடுமென்றும் பிரஸ்தாபம் ஏற்பட்டபோது பவானியை பற்றிய வியப்புப் பேச்செல்லாம் வம்புப் பேச்சாக மாறியது; புகழ்ச்சியெல்லாம் இகழ்ச்சியாயிற்று. பாரிஸ்டர் சேஷாத்ரியின் வாழ்க்கை அத்தகைய வம்புப் பேச்சுக்கு இடங் கொடுக்கக்கூடியதாகவே இருந்தது. சேஷாத்ரி நாற்பத்தைந்து வயதுக்கு மேலானவர். ஆனாலும் அவர் ‘பிரம்மச்சாரி’. அவர் பிரம்மச்சாரியோ இல்லையோ அவருக்கு மனைவி கிடையாது. மனைவி உண்டோ என்னவோ, சென்னையில் அவருடைய பங்களாவில் அவள் இல்லையென்பது நிச்சயம். நாற்பத்தைந்து வயதுக்கு மேலாயிற்று என்று சொன்னேனல்லவா? ஆனால் அவரைப் பார்த்தால் அவ்வளவு தோன்றாது. பத்து வயது குறைவாகத்தான் தோன்றும். ‘அவருக்கு ஸ்திரீ முகம்; அதனால் தான் வயதானது தெரியவில்லை’ என்று சிலர் சொல்லுவார்கள். இது எப்போதாவது அவர் காதில் பட்டதனால் தானோ என்னவோ, சேஷாத்ரி மீசை வளர்க்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் முகம் வசீகரமான ஸ்திரீ முகமாய்த்தான் காணப்பட்டது. அதிக இளமைத் தோற்றமே குடிகொண்டிருந்தது. அவருடைய பிரம்மச்சரியத்தைப் பற்றியும் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவருடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருப்பதாக அநேகர் நம்பினார்கள். அவருக்கு இளம் வயதிலேயே கலியாணமாகியிருந்ததாகவும், மனைவியைக் கொலை செய்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அயல்நாட்டுக்கு ஓடிப் போய் வெகுநாள் இருந்துவிட்டு வந்ததாகவும் சிலர் சொன்னார்கள். வேறு சிலர் அது சுத்தத் தப்பென்றும், அவருக்கு ஜப்பானில் ஒரு மனைவி இருப்பதாகவும் இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஜப்பானுக்கு அவர் போய்ச் சில மாதம் இருந்து விட்டு வருவதாகவும் கூறினார்கள். இன்னும் சிலர் ‘கிடையவே கிடையாது! அவருடைய தர்மபத்தினி இங்கிலாந்தில் தான் இருக்கிறாள். வாரத்துக்கொரு தடவை அவருக்குச் சீமைத் தபால் வருகிறதே, தெரியாதா?’ என்றார்கள். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் அடிக்கடி அவர் கப்பல் பிரயாணம் செய்வதை ஆதாரமாக எடுத்துக் காட்டினார்கள். “இல்லாவிட்டால் பப்ளிக் பிராஸிகியூடர் வேலையை ஒருவன் விடுவானோ, ஸார்! ஒவ்வொருத்தன் அந்த வேலை கிடைக்காதா என்று தபஸ் செய்து கொண்டிருக்கிறான். இந்த மனுஷர் இரண்டு வருஷம் வேலை பார்த்துவிட்டு, ‘எனக்கு வெளிதேசப் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது’ என்று விட்டுவிட்டாரே! சம்சாரம் சீமையிலிருந்து சவுக்கடி கொடுக்கக் கொண்டுதானே வேலையை விட்டார்? இல்லாவிட்டால் விட்டிருக்க முடியுமா?” என்றார்கள். இதெல்லாம் சுத்த அபத்தம் என்று நன்றாய்த் தெரிந்திருந்த ஒருவர் இருந்தார். அவர் பாரிஸ்டர் சேஷாத்ரி தான். பாரிஸ்டர் சேஷாத்ரி உண்மையிலேயே பிரம்மசாரி. அவர் இதுகாறும் கலியாணம் செய்து கொள்ளாததற்குத் தகுந்த காரணங்கள் இருந்தன. சேஷாத்ரியின் இருபதாவது வயதில் அவருடைய தந்தை காலமானார். அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்திருந்த சேஷாத்ரி தம்முடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி என்னவெல்லாமோ கனவு கண்டுகொண்டிருந்தார். அவருடைய தந்தையின் எதிர்பாராத மரணத்தினால் அந்தக் கனவுகள் நிறைவேறுவது அசாத்தியமாயிற்று. இதனால் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவர், மனத்தை வேறு விஷயங்களில் செலுத்தும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யப் புறப்பட்டார். ஜப்பான், அமெரிக்காவெல்லாம் சுற்றிவிட்டுக் கடைசியில் இங்கிலாந்துக்கு வந்தார். அங்கே பாரிஸ்டர் பரீட்சை கொடுத்துவிட்டு, சென்னைக்குத் திரும்பி வந்து ‘பிராக்டிஸ்’ செய்யத் தொடங்கினார். சேஷாத்ரிக்குப் பெற்றோர்கள் இல்லாதபடியால் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவோர் யாருமில்லை. சிநேகிதர்கள் யாராவது அந்தப் பேச்சை எடுத்தால் வாலிழந்த நரியின் கதையைச் சொல்லிப் பரிகாசம் செய்வார். கலியாணம் செய்து கொண்ட தம்முடைய சிநேகிதர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது “மனிதர்கள் ஏன் இவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள்!” என்று ஆச்சரியப்படுவார். “இப்படி யாராவது வலிந்து சென்று நுகத்தடியில் கழுத்தைக் கொடுப்பார்களா? ஒரு ஸ்திரீயைக் கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் எதற்காக மாரடிக்க வேண்டும்?” என்பார். சேஷாத்ரி நிறையப் பணம் சம்பாதித்தார்; நிறையச் செலவும் செய்தார். சம்சார பந்தங்கள் எதுவுமில்லாமல் கவலையின்றிக் காலம் கழித்தார். வாழ்க்கையில் அவருக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது பிரயாணந்தான். குறைந்து இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வெளிநாட்டு யாத்திரை செய்யாமல் இருக்கமாட்டார். இப்படி இருபது வருஷம் சுதந்திரமாகவும் சுகமாகவும் காலம் கழித்த பிறகு, அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை அடியோடு மாற்றும்படியான இந்தச் சம்பவம் நேரிட்டது. அவருடைய சிநேகிதர் புரொபஸர் பிரணதார்த்தி ஒரு நாள் பவானியை அழைத்துக் கொண்டு சேஷாத்ரியின் வீட்டுக்கு வந்தார். அவளை அறிமுகப்படுத்தி வைத்து, அவள் பி.எல். பரீட்சை கொடுத்திருக்கிறாளென்றும், சேஷாத்ரியின் ஆபீஸில் ஜுனியராக வைத்துக் கொண்டு வேலை பழக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இவ்வளவையும் கேட்ட பின்னர், சேஷாத்ரி தலை நிமிர்ந்து பவானியை பார்த்தார். அந்த க்ஷணத்திலேயே அவளுடைய சௌந்தரியமாகிற மதுவில் தலை குப்புற விழுந்துவிட்டார். இத்தனை நாளும் எவ்வளவுக்கெவ்வளவு வைராக்கிய புருஷராக இருந்தாரோ, அவ்வளவுக்கு இப்போது அவருடைய வீழ்ச்சியின் வேகமும் அதிகமாயிருந்தது. பவானி, சேஷாத்ரியிடம் ஜுனியராக அமர்ந்தாள். நாளாக ஆக, சேஷாத்ரியின் பிரேமையும் வளர்ந்து வந்தது. பவானி இல்லாத உலகம் பாலைவனமாகவும் அவள் இல்லாத வாழ்க்கை வெறும் சூனியமாகவும் அவருக்குத் தோன்றத் தொடங்கியது. என்றாவது ஒரு நாள் அவள் நேரங் கழித்து வந்தால் அவருடைய மனம் அமைதியை இழந்து தவிக்கும். அவள், வேறு இளம் வக்கீல் யாருடனாவது பேசக் கண்டால் அவருக்கு எரிச்சல் உண்டாகும். சமூக விஷயங்களில் அவருடைய கொள்கைகள் வெகு விரைவாகப் பிற்போக்கு அடைந்து வந்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் சமமாகப் பழக வேண்டுமென்னும் கொள்கைகளெல்லாம் சுத்த அபத்தமென்றும், அதிலும் பவானியைப் போன்ற பெண்கள் புருஷர்கள் மத்தியில் பழகுவது ரொம்ப அபாயகரமென்றும் அவர் கருதினார். இப்படி இரண்டு வருஷங்கள் சென்றன. சேஷாத்ரிக்குத் தமது இருதயத்தின் நிலைமையைப் பற்றி இப்போது எவ்விதச் சந்தேகமும் இருக்கவில்லை. பவானி இல்லாமல் ஒரு கணமேனும் தாம் உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று அவர் நிச்சயம் செய்து கொண்டார். முடிவாக, தம்மைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அவளைக் கூடிய சீக்கிரம் கேட்பது என்று தீர்மானித்தார். ஆனாலும் அந்தக் ‘கூடிய சீக்கிரம்’ சீக்கிரத்தில் வருவதாக இல்லை. நாட்கள் சென்று கொண்டே யிருந்தன. பவானியை இது விஷயமாகக் கேட்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இன்னதென்று சொல்ல முடியாத மானஸீகத் தடையொன்று குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தது. ‘நாளைக்குக் கேட்கலாம்’ ‘இன்னொரு நாள் சொல்லலாம்’ என்பதாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் சேஷாத்ரி. கடைசியாக, இந்த வருஷம் கோடைக்காலத்தில் கூனூருக்குப் போகும்போது, புரொபஸர் பிரணதார்த்தியின் முன்னிலையிலேயே இது விஷயமாகப் பேசித் தீர்மானித்து விடுவதென்று அவர் உறுதி கொண்டார். கூனூரிலேயே கலியாணத்தை நடத்திவிட்டு, உடனே பவானியுடன் ஐரோப்பாவுக்குச் சென்று வருவதென்றும் தீர்மானித்தார். இதற்காக, பாஸ்போர்ட், கப்பல் டிக்கெட் எல்லாங்கூட வாங்கித் தயார் செய்துவிட்டார். தாம் பவானியைக் கேட்காமல் இருப்பது ஒன்றுதான் தடையேதவிர, தமது மனோரதம் நிறைவேறுவதற்கு வேறு இடையூறு எதுவும் ஏற்படக் கூடுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. .பிரணதார்த்தியின் சபதம் பவானியின் தகப்பனார் தாசில்தார் உத்தியோகம் பார்த்தவர். ஆரம்ப நாட்களில் அவர், வைதிக ஆசாரத்தில் அதிகப் பற்று உள்ளவராயிருந்தார். ஏதாவது புறம்போக்கு ஆக்கிரமிப்புச் சம்பந்தமாய் ஒரு பட்டாதார் பத்து ரூபாய் நோட்டாகக் கொண்டு வந்து கொடுத்தால் அதை அவர் வாங்கிக் கொள்ள மாட்டார்; போ போ என்று திருப்பி அடிப்பார். அந்த மிராசுதார் போய் இன்னும் ஐந்து ரூபாய் போட்டு ஒரு தங்கப் பவுனாக வாங்கிக் கொண்டு வந்தால் தான், “ஸ்வர்ணம் பவித்திரமானது; அதற்குத் தோஷமில்லை” என்று சொல்லி வாங்கிக் கொள்வார். யாராவது ஒரு கிராம முன்சீப் அவருக்கு ஒரு கூடை ஒட்டு மாம்பழம் அனுப்பி, அதை அவருடைய சேவகன் அப்படியே வாங்கி வைத்துவிடும் பட்சத்தில், அவனைத் திட்டு திட்டு என்று திட்டுவார். “எந்தப் பறையன் தொட்டுப் பறித்ததோ அதை அப்படியே வாங்கி வைக்கிறாயேடா? கிணற்று ஜலத்தைவிட்டு அலம்பி எடுத்து வையடா!” என்பார். இவ்வளவு ஆசார சீலமுள்ளவர் தம்முடைய மூத்த பெண்ணுக்கு சாஸ்திர ரீதியாகப் பன்னிரண்டு வயதிலேயே கலியாணம் செய்து வைக்க விரும்பியதில் ஆச்சரியமில்லையல்லவா? அதிலும் அந்தச் சமயம் அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் தாசில்தாராய் இருந்தபடியால் கடப்பை முதலிய காட்டுப் பிரதேசங்களுக்கு மாற்றலாவதற்கு முன் கலியாணம் பண்ணிவிடத் தீர்மானித்தார். தஞ்சாவூர் ஜில்லாவில் கலியாணம் என்றால் வைதிகர்கள் ஏராளமாய் வருவார்கள்; தாராளமாய் தட்சிணை கொடுத்துச் சாஸ்திரோக்தமாய்க் கலியாணம் செய்யலாம். அதோடு, தட்சிணைச் செலவும் தம்முடைய சொந்தப் பொறுப்பில்லாமல் போய்விடும்! யாராவது ஒரு பெரிய மனுஷன் அந்தச் செலவை ஒப்புக் கொள்வான். உண்மையில் கலியாணச் செலவு எதுவுமே அவர் கைப் பொறுப்பாகாது. கடப்பை ஜில்லாவில் காலணா யார் கொடுக்கிறார்கள்? இவ்வாறு தீர்மானித்து, அவர் பவானியின் தமக்கைக்குப் பன்னிரண்டு வயதிலேயே கலியாணம் பண்ணினார். ஆனால் சாஸ்திரத்தின் தலையெழுத்து சரியாயில்லை! அவருக்குச் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாமல் போவதற்கு அந்தக் கலியாணமே காரணமாயிற்று. பவானியின் தமக்கை புக்ககத்தில் படாதபாடு பட்டாள். பதினேழு வயதுக்குள் இரண்டு பிரசவமும், மூன்று கர்ப்பச் சிதைவும் ஏற்பட்டு, இதனாலெல்லாம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து கடைசியில் இறந்தே போனாள். அந்தப் பெண்ணின் அகால மரணத்தினால் பவானியின் தகப்பனாரின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் அடியோடு மாறி விட்டது. சாஸ்திரத்தில் நம்பிக்கை போனதுபோல், பணங் காசிலும் அவருக்கு நம்பிக்கை போயிற்று. அதற்குப் பிறகு, புத்தம் புதிய பவுனைக் காவேரி ஜலத்தைவிட்டு அலம்பி யாராவது கொண்டு வந்தால் கூட அவர் வாங்கிக் கொள்வதில்லை. “அடே! எனக்கு லஞ்சம் கொடுக்க வருகிறாயாடா! உன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்” என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார். இத்தகைய மூர்க்க குணம் உத்தியோக விஷயத்துடன் நில்லாமல் சமூக ஆசார விஷயங்களிலும் வெளிப்பட்டது. சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் அவர் அடியோடு நிராகரிக்கலானார். முன்னர் எவ்வளவுக்கெவ்வளவு வைதிகப் பற்றுள்ளவராயிருந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது நவநாகரிகப் பற்று உடையவரானார். அவருடைய இரண்டாவது பெண் பவானியின் தலையிலே அதன் பலன் விடிந்தது. அவளை அவர் இளம் வயதில் விவாகம் செய்து கொடுப்பதில்லையென்றும், இங்கிலீஷ் படிக்க வைப்பதென்றும் தீர்மானித்தார். இந்தச் சாஸ்திர விரோதமான காரியம் தாம் தலைசாய்வதுடன் நின்று போவதுகூட அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு அந்திய காலம் நெருங்கியிருந்தபோது, புரொபஸர் பிரணதார்த்தியை அருகில் அழைத்து, “தம்பி! பவானிக்கு உன்னைத்தான் கார்டியனாக நியமித்திருக்கிறேன். எனக்கு நீ ஒரு சபதம் செய்து கொடுக்க வேண்டும். அவளுடைய படிப்பை நிறுத்தக் கூடாது. கலியாணம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது. அவளுக்குத் தக்க வயது ஆன பிறகு அவளாக இஷ்டப்பட்டு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால் கொள்ளட்டும்” என்றார். பிரணதார்த்தி அவருக்கு அவ்வாறே பிரதிக்ஞை செய்து கொடுத்தார். மரணத்தறுவாயில் தம் தமையனுடைய விருப்பத்தை மறுக்க மனோதிடமின்றிப் பிரணதார்த்தி பிரதிக்ஞை செய்து கொடுத்தாரே தவிர, அவருடைய மனம் அது விஷயத்தில் நிம்மதி அடையவில்லை. நாளாக ஆக, அவருடைய கவலை அதிகமாயிற்று. பவானியைத் தம் தலையில் கட்டிவிட்டுத் தமையனார் போய்விட்டாரே என்ற கவலையன்று அது; பிரணதார்த்திக்கு புதல்வர்கள் பலர் உண்டு; ஆனால் பெண் கிடையாது. ஆகவே, பவானியிடம் தம் சொந்தப் பெண்ணுக்கு மேலாகவே அதிகப் பிரியம் வைத்திருந்தார். அவளுடைய பிற்கால வாழ்க்கை சந்தோஷமாயிருக்க வேண்டுமே என்ற கவலைதான் அவரை வாட்டிற்று. படித்துப் பட்டம் பெற்றுச் சுதந்திர வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பெண்கள் சிலரைப் பற்றி அவருக்குத் தெரியும். பரீட்சை முடியும் வரையில் அவர்களுடைய கவனமெல்லாம் படிப்பிலேயே இருக்கிறது. ஆண்பிள்ளைகளை விட அதிக ஊக்கத்துடனும் ரோஸத்துடனும் படிக்கிறார்கள். முதலில் கொஞ்ச காலம் உத்தியோகமும் உற்சாகமாய்த்தான் பார்க்கிறார்கள். பிறகு அவர்களுக்கு அதிலெல்லாம் ரஸம் குறைந்து, கலியாணம் செய்து கொள்ளலாமென்று தோன்றும்போது, அது சாத்தியமில்லை யென்பதைக் காண்கிறார்கள். அவர்களுக்குத் தக்க பிராயமுடைய புருஷர்கள் எல்லாரும் ஏற்கனவே கலியாணமானவர்களாயிருக்கின்றனர். அப்படி யாராவது தப்பித் தவறி இருந்தால், அவர்களுக்கு இந்தப் பெண்களை மணம் செய்து கொள்ளத் தக்க படிப்போ, அந்தஸ்தோ, வேறு யோக்கியதையோ இருப்பதில்லை. எனவே, அத்தகைய பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும் துக்ககரமாய் முடிகிறது. இதையெல்லாம் அறிந்துதான் ஆசிரியர் பிரணதார்த்தி பெரிதும் கவலைக்குள்ளாகியிருந்தார். பவானி பி.எல். பாஸ் செய்ததும், இனி நாள் கடத்தினால் அவளுக்குக் கலியாணமே ஆகாமல் போய்விடலாமென்று அவர் பயந்தார். இப்போது கூட அவளுக்குத் தக்க கணவனாகக் கூடியவர் ரொம்பப் பேரில்லை. பிரணதார்த்திக்குத் தெரிந்தவரையில் பாரிஸ்டர் சேஷாத்ரி ஒருவர்தான் அத்தகைய யோக்கியதையுடையவராயிருந்தார். எனவே, பவானியை சேஷாத்ரியிடம் ஜுனியராக வேலை செய்ய அமர்த்தியபோது, பிரணதார்த்தியின் நோக்கம் என்னவாயிருக்கக் கூடுமென்று நாம் எளிதில் ஊகிக்கலாம் அல்லவா? ஆரம்பத்தில், ஸ்ரீமான் பிரணதார்த்தி தம்முடைய நோக்கம் விரைவில் நிறைவேறிவிடும் என்பதற்கு அறிகுறிகளைக் கண்டு சந்தோஷமடைந்தார். பவானி பாரிஸ்டர் சேஷாத்ரியின் உயர்குணங்களைப் புகழ்ந்து பேசப் பேச, அவருடைய நம்பிக்கை உறுதிப்பட்டு வந்தது. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சீக்கிரமாகக் கலியாணப் பிரஸ்தாபம் ஏற்படவில்லை. வருஷம் இரண்டு சென்ற போது அவருடைய கவலை முன்போல் அதிகமாயிற்று. “சுத்த அசடுகளாயிருக்கிறார்களே! இதில் நாம் தலையிட்டுத்தான் காரியத்தை ஒப்பேற்ற வேண்டும்போல் இருக்கிறதே!” என்று கருதலானார். இத்தகைய நிலைமையிலேதான், சேஷாத்ரி தாமும் இவ்வருஷம் கோடைக்குக் கூனூர் வர உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால்தான் கொண்டது என்று தீர்மானித்த புரொபஸர், தம்முடைய பங்களாவிலேயே அவர் வந்து இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். இதை முன்னிட்டே வழக்கமாகக் கூனூருக்கு வரும் தமது குடும்பத்தினரையெல்லாம் அவர் பங்களூருக்குப் போகச் சொல்லிவிட்டு, பவானியை மட்டும் கூனூருக்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தார். “இந்த வருஷம் மட்டும் இந்தக் கலியாணத்தை நான் பண்ணிவைக்காவிட்டால் என் பெயர் பிரணதார்த்தி அல்ல” என்று அவர் தமக்குள் சபதம் செய்து கொண்டார். பவானியின் கலவரம் “உலகத்திலேயே நீலகிரியைப் போன்ற சுகமான இடம் கிடையாது; நானும் எவ்வளவோ நாடுகளில் எத்தனையோ இடங்கள் பார்த்திருக்கிறேன்” என்றார் சேஷாத்ரி. “நீலகிரியிலும் கூனூருக்கு அப்புறந்தான் மற்ற இடங்கள் எல்லாம்” என்றார் புரொபஸர். “கூனூரிலும் எங்கள் சித்தப்பாவின் பங்களாவைப் போன்ற சுகமான இடம் வேறில்லை; ஸ்வர்க்கத்தில் கூட இராது” என்றாள் பவானி. அந்த மூன்று பேரும் இப்படிச் சொன்ன வார்த்தைகளில் அவர்களுடைய அப்போதைய மனநிலை பிரதிபளித்தது. தங்களுடைய வாழ்க்கையில் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு சந்தோஷமாயிருந்ததில்லையென்று அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணினார்கள். அவர்கள் மூவரும் அங்கு வந்து ஒன்றரை மாதத்துக்கு மேலாகிவிட்டது. மலைப் பிரதேசத்தில் சுற்றி அலைவதிலும், பேசுவதிலும், படிப்பதிலும், சூடான தேத் தண்ணீர் அருந்துவதிலுமாகப் பொழுது சென்று வந்தது. ஆயினும் சேஷாத்ரி தம்முடைய மனோரதத்தை வெளியிடுவதற்கு இன்னும் தைரியம் பெறவில்லை. நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியாக, இன்னும் இரண்டு வாரந்தான் கூனூர் வாசம் பாக்கியிருந்தபோது, இனிமேல் தாமதிப்பதில் பிரயோஜனமில்லை யென்று தீர்மானித்து முதலில் பிரணதார்த்தியிடம் கலந்து கொள்ள எண்ணினார். “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டுமென்றிருக்கிறேன்…” என்று சேஷாத்ரி ஆரம்பித்தபோது, “இன்றைக்கு மட்டும் நீங்கள் அந்த முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசாவிட்டால் நானே ஆரம்பித்துவிடுவதென்று இருந்தேன்” என்றார் பிரணதார்த்தி. அப்போது மாலை நாலு மணி. தினசரி வழக்கம் போல் பவானி, உயர்ந்த காஷ்மீர் கம்பளிச் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு, வெளியே உலாவச் செல்வதற்குத் தயாராக வந்தாள். “ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியில் வரவில்லையா, என்ன?” என்று கேட்டாள். “ஆமாம்! நாங்கள் இன்றைக்கு வரவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறோம்.” “ரொம்ப முக்கியமான விஷயந்தான். இராத்திரிக்குச் சமையல் திட்டம் போடப் போகிறீர்களாக்கும்; வாருங்கள் சித்தப்பா; போகலாம்.” “இல்லை, அம்மா! உண்மையாகவே முக்கியமான விஷயம்; ரொம்ப அழகான விஷயங்கூட” என்று சொல்லி, பிறகு மெதுவான குரலில், “அது, மேலே காஷ்மீர் கம்பளிச் சட்டை போட்டுக் கொண்டு மலைப் பிரதேசத்தில் உலாவச் செல்லும்” என்றார். இப்படிக் கூறிப் புன்னகையுடன் சேஷாத்ரியைப் பார்த்தார். பவானி, பங்களாவின் முகப்பில் கொழுகொழுவென்று வளர்ந்திருந்த ரோஜாச் செடியிலிருந்து அப்போதுதான் இதழ் விரியத் தொடங்கியிருந்த ஒரு ரோஜா மொட்டைப் பறித்துத் தலையில் செருகிக் கொண்டாள். பிறகு, அவர்களைக் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து, “மலைவாசத்திற்கு வந்தால் இந்த மாதிரி இரண்டு கிழங்களைக் கூட்டிக் கொண்டு தான் வரவேணும்” என்று மெதுவான குரலில் கூறிவிட்டு ஒயிலாக நடந்து சென்றாள். அவள் கூறியது அவர்களுடைய காதில் அரைகுறையாய் விழுந்தது. பிரணதார்த்தி அப்போது பவானி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாராதலால், சேஷாத்ரியின் முகத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த முகத்தில் ஒரு கணம் தோன்றி மறைந்த வேதனையைக் கண்டு பயந்தே போயிருப்பார். சேஷாத்ரியின் மனச் சோர்வும் தயக்கமும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாயிருந்தன. உண்மையில், அவர் இந்தச் சமயம் தம்முடைய சொந்தக் ‘கேஸை’ எடுத்துச் சொல்வதில் பட்ட சிரமம், வேறு எந்தக் கேஸ் விஷயத்திலும் பட்டதில்லை. பிரணதார்த்தி மட்டும் ரொம்பவும் குறுக்குக் கேள்விகள் போட்டிராவிட்டால் அன்றைய தினமும் அவருடைய கேஸ் தள்ளிப் போடப்பட்டிருக்கலாம். எப்படியோ அவர் கடைசியாக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பவானியைக் கலியாணம் செய்து கொள்ளத் தமக்கு விருப்பமென்றும், அதைப் பற்றிப் பிரணதார்த்தியின் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டுவிட்டார்! அதற்குப் பிரணதார்த்தி அதைவிடத் தமக்குச் சந்தோஷம் அளிக்கக் கூடியது உலகத்திலே வேறொன்றுமிராது என்று பதில் சொன்னார். பவானிக்கு அது விருப்பமாயிருக்குமா என்று சேஷாத்ரி கேட்டதற்கு, “நல்ல கேள்வி கேட்டீர்கள்! உங்களை விட நல்ல கணவன் அவளுக்கு எங்கே கிடைக்கப் போகிறான்? பூர்வ ஜன்ம புண்ணியம் என்று எண்ணி அவள் சந்தோஷப்பட வேண்டாமா?” என்றார் பிரணதார்த்தி. அப்புறம் அவர்கள் மேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச ஆரம்பித்துச் சுமார் ஒரு மணி நேரம் இருக்கும். திடீரென்று, “சித்தப்பா! சித்தப்பா! இங்கே உடனே வாருங்கள்!” என்று பவானியின் குரல் கேட்டது. அந்தக் குரலில் தொனித்த கலவரமும், இரக்கமும் அவர்களை மயிர்க் கூச்செறியச் செய்தன. பவானிக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி அவர்கள் பதறிப் போய் விரைந்து வாசலில் ஓடி வந்தார்கள். தவறி விழுந்து விட்டாளோ அல்லது ஏதாவது காட்டு மிருகம் வந்து விட்டதோ என்று ஒரு கணத்தில் நூறு எண்ணம் எண்ணினார்கள். பங்களா வாசற் புறத்தின் முகப்பில் நின்று குரல் வந்த திசையை நோக்கிக் கீழே பார்த்தார்கள். கிழே பங்களாவுக்கு வரும் பாதையில் பவானி நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. பவானி அவர்களைப் பார்த்ததும், "சீக்கிரம் வாருங்கள்! என்று சொல்லிக் கையாலும் சமிக்ஞை செய்தாள். மலைப்பாதையில் அவர்கள் விரைந்து இறங்கிச் சென்றார்கள். சிரிப்பும் நெருப்பும் பவானி அன்று வெகு குதூகலத்துடனே வெளியே கிளம்பினாள். பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் வரவில்லை யாதலால், தான் இன்று வழக்கத்தைவிட அதிக தூரம் நடந்துவிட்டு வரலாமென அவள் எண்ணினாள். மலைப் பிரதேசங்களுக்குச் சென்றிருப்பவர்களுக்கு மலைப் பாதைகளில் நடப்பதன் சுகமும் கஷ்டமும் தெரிந்திருக்கும். அநேகமாய் இரு புறமும் புதர்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதைகளிலேயே நடக்க வேண்டும். அந்தப் பாதைகளும் ஓயாமல் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கும். சம தரை என்பது அநேகமாய் கிடையாது. உஷ்ணப் பிரதேசங்களில் என்றால் அம்மாதிரி ஏறி இறங்கும் பாதைகளில் ஐந்து நிமிஷம் நடந்தாலும் களைத்துப் போய் விடுவோம். ஆனால் குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் எவ்வளவு நேரம் நடந்தாலும் சிரமம் தோன்றுவதில்லை. பவானி சுமார் பத்து நிமிஷம் நடந்திருப்பாள். பக்கத்திலேயே எங்கேயோ இருந்து, “ஓ தெய்வமே!” என்று ஒரு துயரம் நிறைந்த தீனமான குரல் கேட்டது போல் இருந்தது. பவானியின் இருதயம் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து விட்டது. உடம்பெல்லாம் வியர்த்தது. அங்கேயே நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றையும் காணவில்லை. உண்மையில், அங்கே ஒன்றையுங் காணவும் முடியாது. பாதையின் இருபுறமும் அடர்த்தியான புதர்கள் மண்டியிருந்தன. எங்கே என்னத்தைப் பார்க்கிறது? தான் அந்தக் குரலை உண்மையில் கேட்கவில்லை. ஏதோ சித்தப்பிரமை என்ற முடிவுக்கு வந்தாள். அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தலையை விரைவாக நாலு தடவை குலுக்கிவிட்டு மேலே நடக்கலானாள். ஆனாலும் அவளுடைய குதூகலம் போய்விட்டது. என்னவோ சொல்ல முடியாத பாரம் ஒன்று அவளுடைய இருதயத்தை அமுக்குவது போல் இருந்தது. ஏதேதோ பழைய ஞாபகங்கள், சோகத்துடன் கலந்து, தெளிவில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. இத்தனை நாளும் தோன்றாத எண்னங்களெல்லாம் தோன்றின. “இந்த வாழ்க்கையின் பொருள்தான் என்ன? எதற்காக பிறக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்?” என்று இப்படியெல்லாம் சிந்தனை சென்றது. ரொம்ப நேரம் சுற்ற வேண்டும் என்ற நினைப்புடன் கிளம்பிய பவானி, வழக்கத்தை விட முன்னதாக வீடு திரும்பலானாள். திரும்பி வருகையில், மேற் சொன்ன குரல் கேட்ட இடத்தில் சற்று நின்று கவனித்தாள். ஒன்றும் தெரியவில்லை. அந்த இடத்தைத் தாண்டி வந்தாள். கிட்டத்தட்டப் பங்களாவுக்குச் சமீபம் வந்ததும் அங்கே கிடந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்தாள். அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால், அவர்களுடைய பங்களாவின் முகப்பும், அதன் முன் வாசல் பூந்தோட்டமும் தெரிந்தன. பவானிக்குச் சங்கீத ஞானமும் சங்கீதத்தில் அபிமானமும் உண்டு. பாறையின் மேல் உட்கார்ந்தவள், ஊமைக் குரலில் பாடத் தொடங்கினாள். “சித்தமிரங்கவில்லையோ?” என்ற பாட்டு அவளையறியாமல் வந்தது. “தீவினையின் பயனோ, தெய்வக் குற்றமோ இது?” என்ற அடியைப் பாடியபோது, என்றுமில்லாதபடி அவளுடைய இருதயம் உருகிற்று. அதையே பலமுறை திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருந்தாள். ஆ! அது என்ன சப்தம்! சிரிப்பா அது? ஐயா! சிரிப்பிலே அவ்வளவு துயரமும் இருக்க முடியுமா? - பவானி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தாள். சத்தம் வந்த திசையை நோக்கினாள். அவளுக்குப் பத்து அடி தூரத்தில் புதர்களுக்கு மத்தியில் கொஞ்சம் இடைவெளியிருந்தது. அங்கிருந்த பாறையில் ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். பவானி அந்தப் பக்கம் திரும்பியதும் அவளை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வை அவளுடைய நெஞ்சைப் பிளந்தது. “ஆமாம் அம்மா! நீ கேட்டாயே, ஒரு கேள்வி. தீவினையின் பயனா தெய்வ குற்றமா என்று, அதைத் தான் நானும் மூன்று வருஷமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் சொல்பவரைத்தான் காணோம்” என்றான். அவன் வாலிபப் பிராயம் உடையவன். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். நீலகிரித் தோடர்களைப் போல் ஒரு பெரிய துப்பட்டியைப் போர்த்திக் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து களைத்துப் போய்க் காணப்பட்டான். அவன் க்ஷவரம் செய்து கொண்டு பத்துப் பதினைந்து தினங்கள் ஆகியிருக்க வேண்டும். ஆனாலும் அவன் முகத்தில் ஒரு வசீகரம். அவன் கண்கள் பிரகாசம் பொருந்தி இருந்தன. அவன் முகத்தின் பளபளப்பைப் பார்த்த பவானி, “ஆகா! என்ன தேஜஸ்!” என்று எண்ணமிட்டாள். ஒரு வேளை பக்தர்களுடைய சரிதங்களில் வருவது போல், பகவான் தான் இந்த உருவத்தில் வந்துவிட்டாரோ என்று கூட ஒரு கணம் நினைத்தாள். அந்த முக தேஜஸ் சுரத்தின் வேகத்தினால் ஏற்பட்டது என்பதை அச்சமயம் அவள் அறியவில்லை. “உன்னை எப்போதோ நான் பார்த்திருக்கிறேன். இல்லையா?” என்று அவன் கேட்டான். பவானிக்கும் அவனை எங்கேயோ எப்போதோ பார்த்தது போன்ற ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே எந்தச் சந்தர்ப்பத்தில் என்று நினைவுக்கு வரவில்லை. “நீங்கள் ரொம்பக் களைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது” என்றாள் பவானி. “ஆமாம்; காலையிலிருந்து சாப்பிடாமல் மலை ஏறினால் களைப்பாயிராதா? பசிகூட இல்லை; தாகந்தான் நாக்கை உலர்த்துகிறது.” “இதோ எங்கள் பங்களா ரொம்ப சமீபத்தில் தான் இருக்கிறது. வருகிறீர்களா?” அந்த வாலிபன் எழுந்திருக்கத் தயங்கினான். அதற்குக் காரணம், அவனுடைய பலவீனம் என்பதை அறியாத பவானி “ஏன் தயக்கம்? என்னைப் பார்த்தால் தாகத்துக்குத் தண்ணீர் கொடாதவள் என்று தோன்றுகிறதா?” என்றாள். அதைக் கேட்டதும் அந்த வாலிபன் மெதுவாகத் தள்ளாடிக் கொண்டு எழுந்திருந்தான். ஓர் அடி எடுத்து வைக்க முயன்றான்; திடீரென்று கீழே விழுந்தான். அப்போது பவானி பதறிக் கூவியதைக் கேட்டுத்தான், பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் ஓடி வந்தார்கள். பவானி இருந்த இடத்துக்கு அவர்கள் வந்ததும் சற்றும் எதிர்பாராத காட்சி ஒன்றைக் கண்டார்கள். பாறையின் மேல் ஒரு வாலிபன் ஸ்மரணையற்றுக் கிடந்தான். அவனுடைய தலையின் அடியில், பவானியின் கம்பளிச் சட்டை மடித்து வைக்கப்பட்டிருந்தது. பவானி தன்னுடைய புடவையின் தலைப்பினால் அவன் முகத்தின் மேல் விசிறிக் கொண்டிருந்தாள். பிரணதார்த்தி அவனுடைய மார்பையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தார். “உயிர் இருக்கிறது; ஆனால் 105 டிகிரிக்கு குறையாத சுரம்” என்றார். பவானி சுருக்கமாக அவனைத் தான் சந்தித்த விதத்தைச் சொன்னாள். “சரிதான்! விஷயம் என்னவென்று அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். இப்போது இவனைப் பங்களாவுக்குத் தூக்கிக் கொண்டு போவோம்” என்றார் பிரணதார்த்தி. இப்படிச் சொல்லி அவர் அவனுடைய தலைப்புறத்தைப் பிடித்துத் தூக்கினார். சேஷாத்ரி கால்புறத்தண்டை சென்று, கால்களின் கீழாகக் கையைக் கொடுத்தார். கொடுத்தவர், நெருப்பைத் தொட்டவர் போல், சட்டென்று கையை எடுத்தார். அதனால் அந்த மனிதனின் கால் சடக்கென்று பாறையில் விழவும், ‘டங்’ என்று இரும்பின் சப்தம் கேட்டது. வேஷ்டி சிறிது விலக, அவன் காலில் இருந்த இரும்புக் காப்பு தெரிய வந்தது. ஏககாலத்தில் மூன்று பேருடைய கண்களும் அந்த இரும்புக் காப்பின் மேல் சென்றன. “அது என்ன?” என்று கலவரத்துடன் கேட்டார் பிரணதார்த்தி. சேஷாத்ரி வியப்பும் வேதனையும் பொருந்திய குரலில் “இவன் கைதி. கைதிகளுக்குத் தான் காலில் இந்த மாதிரி இரும்புக் காப்பு இருக்கும். கோயமுத்தூர் சிறையிலிருந்து சமீபத்தில் தப்பியோடிய கைதிகளில் இவன் ஒருவனாயிருக்க வேண்டும்” என்றார். சில நிமிஷ நேரம் அவ்விடத்தில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு, பிரணதார்த்தி பவானியின் முகத்தை நோக்கினார். அவளுடைய முகத்தில் அவர் என்ன கண்டாரோ தெரியாது. “எது எப்படியாவது இருக்கட்டும். பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இவனை இப்படி அனாதையாய்ச் சாகவிடுதல் மகாபாவம். பிடியுங்கள், சேஷாத்ரி!” என்றார். இரண்டு பேருமாக அவனைத் தூக்கிக் கொண்டு போனார்கள். பவானியும் பின்னோடு சென்றாள். தேவர்களின் பூமாரி ஆசிரியர் பிரணதார்த்தி விசால மனம் படைத்தவர். அபிப்பிராய பேதங்களுக்கு, சாதாரணமாக மதிப்புக் கொடுக்ககூடியவர். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் பிடிவாதமான அபிப்ராயம் கொண்டிருந்தார். இங்கிலீஷ் டாக்டர்களாயிருந்தாலும் சரி, சுதேசி வைத்தியர்களாயிருந்தாலும் சரி, அவ்வளவு பேரும் அவ்வளவு எமதூதர்கள் என்பது அவருடைய கருத்து. வைத்தியங்களுக்குள்ளே இயற்கை வைத்தியம் ஒன்றிலே தான் அவருக்கு நம்பிக்கை. அந்த வைத்திய முறையைப் பரிசோதிப்பதிலே அளவில்லாத ஆர்வம். உண்மையில், இயற்கை வைத்தியத்தைக் கையாளுவதற்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால், அதைவிட அவருக்கு மகிழ்ச்சியளிப்பது வேறொன்றுமேயில்லை. அதற்குச் சமமான சந்தோஷம் அவருக்கு அளிப்பது ஒன்றே ஒன்றுதான்; இங்கிலீஷ் டாக்டரிடம் வைத்தியம் செய்து கொண்டவன் பிழைக்காமல் செத்துப் போவது தான்! அவருக்குத் தெரிந்தவர்களில் - அவருடைய யோசனையைக் கேட்கக்கூடியவர்களில் - யாருக்காவது உடம்பு சரிப்படவில்லையென்று கேட்டால், அவருக்கு வெகு உற்சாகம். அதிலும், தலைவலி கால்வலி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால் அவருக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. குறைந்த பட்சம் ஒருவனுக்கு ’டபிள் நிமோனியா’வாவது வரவேண்டும்; அப்போது பார்க்க வேண்டும் அவருடைய குதூகலத்தை. ஆனால் அம்மாதிரி பெரிய பெரிய வியாதிகளை வரவழைத்துக் கொள்ளும் மனிதர்கள் சாதாரணமாய்ப் பரம முட்டாள்களாயிருக்கிறார்கள்; அவர்கள் பெரிய டாக்டர்களைத் தேடிச் சென்று நிறைய பணத்தையும் கொடுத்துவிட்டுச் சீரழிந்து சாகப் பிரியப்படுகிறார்களே தவிர, பிரணதார்த்தியிடம் போய் நல்லபடியாய்ப் பைசா செலவு இல்லாமல் சாவோமென்று ஒருவனுக்காவது புத்தி இருப்பதில்லை. இது விஷயத்தில் அவருக்குத் தம் இஷ்டமித்ரர்கள் எல்லாரிடத்திலும் மனம் கசந்து போயிருந்தது. "என்னிடம் எத்தனை பசங்கள் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருக்கிறார்கள்? எவ்வளவு பேர் எவ்வளவு விதமான உதவி என்னிடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்? யாருக்காவது நன்றி விசுவாசம் இருக்கிறதா? ஏதோ ஒரு டைபாய்டு, ஒரு டயபிடீஸ், ஒரு அப்பெண்டிஸைடீஸ், ஒரு ட்யூபர்குலோஸிஸ் என்று என்னிடம் சிகிச்சைக்கு வருகிறானா?" என்பதாக அவர் யாரிடமும் வெளிப்படையாகச் சொன்னதில்லை யாயினும், அவருடைய இருதய அந்தரங்கத்தில் இத்தகைய குறை குடிகொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்டவருக்கு 105 டிகிரி சுரத்துடன் ஒருவன் வழியிலே கிடந்து கிடைத்தானென்றால் உற்சாகம் எப்படியிருக்குமென்று சொல்லவேண்டுமா? அதிலும் தமக்கே தமக்கல்லவா கிடைத்திருக்கிறான்! தாம் கொடுத்தால் உயிர்; இல்லாவிட்டால் இல்லை. எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம்! ஆகவே, அவனைப் பிழைக்கவைத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிகிச்சை ஆரம்பித்தார் பிரணதார்த்தி. இரவெல்லாம் கண்விழித்துச் சிகிச்சை செய்தார். தலையிலே ஈரக் களிமண்ணை வைத்துக் கட்டினார். முதலிலே குளுகோஸ், அப்புறம் பார்லிகஞ்சி, அப்புறம் பழரசம் - இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரம் கொடுத்து வந்தார். பவானியும் கண்விழித்துக் கூட இருந்து அவருக்கு ஒத்தாசை செய்து வந்தாள். சிறிது சிறிதாக சுரம் இறங்கிற்று. இரண்டு மூன்று நாளில் நோயாளி நன்றாய்க் குணம் அடைந்தான். அவனுடைய உடம்பில் ஏற்பட்டிருந்த கோளாறு முக்கியமாகப் பசி, தாகம், களைப்பு இவற்றினால் உண்டானதே. ஆதலின் நல்ல உணவும், ஓய்வும் குளிரில் அடிபடாமல் தங்க இடமும் கிடைக்கவே, அவன் உடம்பு தானே குணமாகி வந்தது. ஆனால் புரொபஸர் பிரணதார்த்தி தம்முடைய இயற்கை வைத்திய முறையினாலேயே யமபாசத்திலிருந்து அவன் உயிரை மீட்டுவிட்டதாகக் கருதினார். ஸ்ரீமான் சேஷாத்ரி அப்படி நினைக்கவில்லை. “ஏதோ அவனுடைய ஆயுள் கெட்டியாயிருந்தபடியால், பிரணதார்த்தி வைத்தியம் செய்துகூடப் பிழைத்துக் கொண்டான்” என்று அபிப்பிராயப்பட்டதோடு, அதைச் சொல்லியும் விட்டார். இதனால், பிரணதார்த்தியின் சிநேகத்தை முக்கால்வாசியும் இழந்து விட்டாரென்றே கூறலாம். பவானியோ, வெளிப்படையாக, சித்தப்பாவின் வைத்தியத்தினாலேயே போன உயிர் திரும்பி வந்தது என்று சொல்லி அவரை மகிழ்வித்த போதிலும், தான் தன்னுடைய இருதய அந்தரங்கத்தில் பகவானைப் பிரார்த்தித்ததன் பயனாகவே அவன் பிழைத்தெழுந்ததாக மனதிற்குள் கருதினாள். அந்த இளைஞனுடைய முகம் எங்கேயோ பார்த்த முகம் போல் பவானிக்குத் தோன்றியதல்லவா? “எங்கே பார்த்திருக்கிறோம்?” என்று அவள் மனம் இடைவிடாமல் தேடிக் கொண்டே இருந்தது. முதல் நாள் இரவே அது அவளுக்குத் தெரிந்து போயிற்று. சுரவேகத்தில் அவன் பிதற்றியபோது கூறிய சில வார்த்தைகளினால், அது அவள் ஞாபகத்திற்கு வந்தது. ’கத்தி யின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது!’ என்று அவன் பாடினான். பிறகு, “அடியுங்கள், ஐயா! அடியுங்கள்! வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கதறினான். உடனே பவானிக்கு அவனைத் தான் பார்த்தது எங்கே என்று பளீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அந்தச் சம்பவம் முழுவதும் நேற்றுத்தான் நடந்தது போல அவள் இருதயத்தில் பதிந்திருந்தது அன்றோ? அப்போது, பவானி காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். பெண்கள் கலாசாலையின் ஹாஸ்டலில் வசிந்து வந்தாள். கலாசாலையின் ஆசிரியைகள் எல்லாரும் இங்கிலீஷ் நாகரிகத்தில் மூழ்கினவர்கள். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் எந்தவிதமான குறையும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆகவே தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த சத்தியாக்கிரஹ இயக்கத்தைச் சுத்தப் பைத்தியக்காரத் தனமென்று கருதினார்கள். ஹாஸ்டலில் வசித்த மாணவிகளில் முக்கால்வாசிப் பேரைப் போல், பவானியும் அத்தகைய கொள்கையுடையவளாகவே யிருந்தாள். ஒருநாள் அவள் துணி வாங்குவதற்காக, தான் வழக்கமாய் வாங்கும் பெயர்பெற்ற கரம்சந்த் பயான்சந்த் சீமை ஜவுளிக் கடைக்குப் போனாள். அப்போது சீமை ஜவுளிக் கடைகளில் தொண்டர்கள் மறியல் செய்கிறார்களென்றும், போலீஸ்காரர்கள் வந்து தொண்டர்களை அடித்து இழுத்துச் செல்கிறார்களென்றும் அவள் அறிந்திருந்தாள். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் பயான்சந்த் கடைக்குச் சென்றாள். கடை வாசலில் காந்தி குல்லா அணிந்த தொண்டன் ஒருவன் கைகூப்பிக் கொண்டு நின்றான். ‘பால் வடியும் முகம்’ என்றால் அவன் முகத்தைத்தான் சொல்ல வேண்டும். அவன் இரக்கமும் கனிவுங் கொண்ட பார்வையுடன் பவானியைப் பார்த்தான். எத்தகைய கல் நெஞ்சையும் இளகச் செய்யும் சோகம் ததும்பிய புன்னகை ஒன்று புரிந்தான். “அம்மணி! கல்வியறிவு படைத்த தாங்கள் இப்படிச் செய்யலாமா? தயவு செய்து திரும்பிப் போங்கள்” என்றான். அவனுடைய குரல், பார்வை, பணிவான பேச்சு எல்லாம் சேர்ந்து பவானியின் இருதயத்தைக் கலங்க வைத்துவிட்டன. அதனால் அவளுடைய கோபம் அதிகரித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று அவள் தன்னுடைய இங்கிலீஷ் ஆசிரியை சொல்லிக் கேள்விப்பட்டிருந்தாள். எனவே, “இந்த வேலைக்கு உங்களுக்கெல்லாம் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்?” என்று குரலை ரொம்பவும் கடுமைப்படுத்திக் கொண்டு கேட்டாள். “சம்பளமா? இன்னும் ஐந்து நிமிடத்தில் நீங்களே பார்ப்பீர்கள். கையில் குண்டாந் தடியுடன் சம்பளம் கொடுப்பதற்கு வருவார்கள்” என்றான் தொண்டன். “இம்மாதிரி முட்டாள் காரியம் செய்பவர்களை அடிக்காமல் என்ன செய்வது? எனக்குக் கூட இப்போது உம்மை இரண்டு அறை அறைய வேண்டுமென்று தோன்றுகிறது” என்றாள் பவானி. “அப்படியெல்லாம் செய்யாதீர்கள், காரியம் விபரீதமாய்ப் போய்விடும். உங்கள் கையால் அடிபடலாமென்று தெரிந்தால் ஊரிலுள்ள வாலிபர்கள் எல்லாம் மறியல் செய்ய வந்துவிடுவார்கள்!” இப்படிச் சொல்லிவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான். பவானியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே அவள் “ஆமாம்; சீமைத்துணி வாங்கக் கூடாதென்று ஏன் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள். “நம் நாட்டில் ஏழைகள் எத்தனையோ பேர் தொழிலின்றிக் கஷ்டப்படுகிறார்கள்…” “ஏழைகளில் நம் நாட்டு ஏழைகளாயிருந்தாலென்ன அயல் நாட்டு ஏழைகளாயிருந்தாலென்ன? என்னுடைய பணத்தைச் சீமையிலுள்ள ஏழைகளுக்கே அனுப்புகிறேன். உங்களைப்போல் குறுகிய மனோபாவம் எனக்குக் கிடையாது.” இவ்வாறு சொல்லி பவானி மேலே நடக்கத் தொடங்கினாள். தொண்டன் அப்போது அவளைப் பார்த்த பார்வை அவளுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றது. ஆனாலும், பின் வாங்கினால் அவனிடம் தொல்வியடைந்ததாகுமென்று அவள் கருதினாள். அம்மாதிரி தோல்வியை அவள் விரும்பவில்லை. ஆகவே அவனை இலட்சியம் செய்யாமல் நேரே பார்த்துக்கொண்டு விரைவாக நடந்தாள். கடையின் முன் வாசற்படியை அடைந்ததும், அவளுக்கு ஏனோ திரும்பிப் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அவன் முகம் இப்போது எப்படி இருக்கும்? அதில் கோபம் அதிகமா இருக்குமா? ஏமாற்றம் அதிகமாயிருக்குமா? திரும்பிப் பார்த்தாள். அதே சமயத்தில் கடைத்தெருவில் ஒரு மோட்டார் லாரி வந்து நின்றது; அதிலிருந்து திடுதிடுவென்று ஒரு கூட்டம் போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். அவர்களில் நாலுபேர் கையில் குண்டாந்தடியுடன் இவளுடன் பேசிய தொண்டனை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிஷம் பவானியின் இருதயம் ஸ்தம்பித்து நின்றது; அடுத்த நிமிஷமே கணத்துக்கு நூறு தடவை வீதம் அடித்துக் கொண்டது. பட்! பட்! பட்! பவானி கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால் மூடிக் கொண்டிருக்கவும் முடியவில்லை. “வந்தே மாதரம்!” “வந்தே மாதரம்!” என்று அத்தொண்டன் கதறும் குரல் கேட்டது. பட்! பட்! பட்! அவள் கண்ணைத் திறந்த போது, தொண்டன் கீழே விழுந்து கொண்டிருந்தான். அவன் நெற்றியிலிருந்து இரத்தம் பீறிட்டது. கீழே விழுந்த பிறகும் அவன் “வந்தே மாதரம்!” என்று கோஷித்தான். கரகரவென்று அவன் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். போலீஸ் லாரியில் தூக்கிப் போட்டார்கள். பவானி கடைக்குள் நுழையவில்லை. கடை வாசற்படியில் நின்றவள் சட்டென்று நெருப்பை மிதித்து விட்டவளைப் போல் அங்கிருந்து விரைந்து சாலைப் பக்கம் வந்தாள். தன்னுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து அளவுக்கடங்காத தாபத்துடன் பகவானிடம் ஒரு பிரார்த்தனை செலுத்தினாள்; ‘போலீஸ் லாரி அங்கிருந்து கிளம்புவதற்குள் அந்த இளைஞன் தன் பக்கம் ஒரு தடவை திரும்பிப் பார்க்க வேண்டும்’ என்பது தான் அந்தப் பிரார்த்தனை. ‘அந்தப் பாழும் சீமை ஜவுளிக் கடைக்குள் தான் போகாமல் திரும்பி விட்டதை அவன் பார்க்க வேண்டுமே’ என்று அவள் பரிதபித்தாள். சாதாரணமாய் ஓர் ஆயுள் காலத்தில் அநுபவிக்கக் கூடிய வேதனை அவ்வளவையும் பவானி அந்தச் சில நிமிஷ நேரத்தில் அநுபவித்து விட்டாள். மோட்டார் கிளம்பிற்று. ஐயோ! அவன் தன்னைப் பார்க்காமலே போய்விடுவானோ? ஆகா! இதோ பார்க்கிறான்; பார்த்து, அவள் அந்தக் கடைக்குள் போகாமல் திரும்பியதைக் கவனித்ததற்கு அறிகுறியாகப் புன்னகையும் புரிகிறான்! பவானியின் தலை ஒரு கணநேரம் கரகரவென்று சுழன்றது. அப்போது அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று ஆகாய வெளியில் தேவர்களும் தேவிகளும் கூட்டங்கூடி நின்று, ’வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்’ என்று பாடிக்கொண்டு, அந்தப் போலீஸ் லாரியின் மேல் புஷ்பமாரி சொரிவது போலும், அவர்கள் சொரிந்த புஷ்பங்கள் லாரியின் மேற்கூரையை எப்படியோ கடந்து உள்ளே வந்து அந்தத் தொண்டன் மேல் சொரிந்து கிடப்பது போலும் அவளுக்குத் தோன்றியது! அடுத்த நிமிஷம் பிரமை தெளிந்தது. கண்ணைத் திறந்து பார்த்த போது போலீஸ் லாரியைக் காணோம். அன்றைக்குப் பார்த்த அம்முகத்தை அப்புறம் வெகு காலம் பவானி ஓயாமல் தேடிக் கொண்டிருந்தாள். வீதியில் வண்டியில் போகும்போதும், கடற்கரையில் காற்று வாங்க உலாவும் போதும், ரயில் பிரயாணம் செய்யும் போதும், நாடகம் பார்க்கும்போதும், அவளுடைய கண்கள் சுழன்று சுழன்று அந்த முகத்தைத் தேடிக் கொண்டேயிருந்தன. நாளாக ஆக, பவானி நிராசையடைந்தாள். கனிவு ததும்பிய கண்களும், சோகம் பொருந்திய புன்னகையும் கொண்ட அத்தொண்டனின் திவ்ய முகத்தை இந்த ஜன்மத்தில் தான் இனி பார்க்கப் போவதில்லையென்றே தீர்மானித்தாள். வேறு காரியங்களில் கவனம் செலுத்தி அந்த முகத்தை மறப்பதற்குப் பெரிதும் முயன்றாள். ஏறக்குறைய அந்த முயற்சியில் அவள் வெற்றியடையும் தறுவாயில் இருந்தபோது இந்த ஆச்சரியமான சம்பவம் நேர்ந்தது. சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவளுடைய மனோரதம் கைக்கூடிற்று. அதனால் பவானி எத்தகைய உள்ளக் கிளர்ச்சி அடைந்திருப்பாள் என்று சொல்லவும் வேண்டுமோ? உமாகாந்தன் கொலை கேஸ் பவானி இப்போது ஒரு தனி உலகத்தில் வசித்து வந்தாள். அவ்வுலகில் அளவிலாத ஆனந்தமும், சொல்ல முடியாத துக்கமும், பிரிக்க முடியாதபடி கலந்திருந்தன. ஆகாயத்தை அளாவி வளர்ந்திருந்த கற்பூர மரங்களின் மீது மலைக்காற்று அடிக்கையில் ஏற்பட்ட சப்தம் ஒரு சமயம் குதூகலமான சிரிப்பைப் போல் அவள் காதில் பட்டது. இன்னொரு சமயம் யாரோ விம்மி விம்மி அழுவது போல் காதில் விழுந்தது. காலை நேரத்தில் மரம் செடிகளிலிருந்து பனித்துளிகள் கலகலவென்று உதிரும் போது, ஒரு சமயம் அவை ஆனந்த பாஷ்பமாகவும் இன்னொரு சமயம் துக்கக் கண்ணீராகவும் தோன்றின. பட்சிகளின் கானம் ஒரு சமயம் அவளுக்குச் சங்கராபரண ராகத்தைப் போல் உற்சாகத்தை உண்டாக்கித் துள்ளிக் குதிக்கலாமா என்று தோன்றச் செய்தது; மற்றொரு சமயம் அதே பறவைகளின் கீதம் சோகரசம் பொருந்திய யதுகுல காம்போதியாக மாறி, அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்க்கச் செய்தது. சேஷாத்ரியின் விஷயத்தில் ஏற்பட்ட மனமாறுதல் அவளுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. அவரைப் பார்ப்பதற்கோ பேசுவதற்கோ அவளுக்கு திடீரென்று பிடிக்காமல் போயிற்று. சேஷாத்ரியின் நடத்தையிலும் ஒரு மாறுதல் காணப்பட்டது. அவருடைய உற்சாகமும் சந்தோஷமும் எங்கேயோ போய்விட்டன. சதா கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கலானார். அந்த நோயாளியைக் குணப்படுத்துவதற்குப் பிரணதார்த்தியும் பவானியும் எடுத்துக் கொண்ட முயற்சி ஒன்றும் அவருக்குப் பிடிக்கவில்லையென்பதைத் தெளிவாய்க் காட்டிக் கொண்டார். உண்மையில் அவன் படுத்துக் கொண்டிருந்த அறைக்கு அவர் அதிகம் வருவது கூட இல்லை. எப்போதாவது அருமையாக வந்தால், அவன் தூங்கும்போது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார். அவருடைய இந்த நடத்தை பிரணதார்த்திக்குக் கூட அவர்மேல் வெறுப்பு உண்டு பண்ணிற்று. நாலாம் நாள் நோயாளி படுத்திருந்த அறைக்குள் சேஷாத்ரி வந்திருந்த சமயம் தூங்கிக் கொண்டிருந்தவன் தற்செயலாகக் கண்ணை விழித்தான். எதிரே நின்ற சேஷாத்ரியைக் கண்டதும், ‘நிஜந்தானா’ என்று சந்தேகப்படுபவன் போல் கண்ணை மூடிமூடித் திறந்து பார்த்தான். கடைசியாக, “நீங்கள் தானா? நிஜமாகப் பாரிஸ்டர் சேஷாத்ரியா?” என்று கேட்டான். “ஆமாம்; மிஸ்டர் உமாகாந்தன்! நிஜமாக நான் தான்” என்றார் சேஷாத்ரி. உமாகாந்தன் பலமிழந்திருந்த தன்னுடைய கைகளினால் தலையிலே இரண்டு மூன்று தடவை அடித்துக் கொண்டான். “விதிவசம் என்பதில் இப்போதுதான் எனக்கு நம்பிக்கை வருகிறது. இந்த இடத்தில், எல்லாரையும் விட்டு, நீங்களா வந்திருக்கவேண்டும்?” என்றான். அப்போது பவானியின் உடம்பில் ஒவ்வோர் அணுவும் துடிதுடித்தது. பிரணதார்த்திக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. “முன்னாலேயே உங்களுக்கு இவரைத் தெரியுமா, சேஷாத்ரி? எப்படித் தெரியும்?” என்று பிரணதார்த்தி கேட்டார். “ஹைகோர்ட்டுக்கு இவனுடைய கொலைக் கேஸ் அப்பீல் வந்த போது தெரியும். அப்போது நான் பப்ளிக் பிராசிகியூடர்; சர்க்கார் தரப்பிலே அப்பீல் நடந்தது” என்றார் சேஷாத்ரி. கொலைக்கேஸ் என்றதும் பவானி தலையிலே பெரிய பாறாங்கல் விழுந்தது போல் திடுக்கிட்டாள்; இதுவரை அவள் மனத்தில் இவன் ஏதோ ராஜீயக் குற்றத்துக்காகத் தான் கைதியாயிருக்க வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்து வந்தது. பிரணதார்த்திக்கோ திக்குத் திசை ஒன்றும் புரியவில்லை. ஸுகுமாரனான இந்த இளைஞன் கொலைக் குற்றத்துக்குத் தண்டனையடைந்த கைதி என்பதை அவரால் நம்பமுடியவேயில்லை. சேஷாத்ரியை விவரமாய்ச் சொல்லும்படி கேட்டார். “கேஸ் கட்டில் படித்தது மட்டுந்தானே எனக்குத் தெரியும்? அவனே பூரா விவரமும் சொல்லட்டுமே” என்றார் சேஷாத்ரி. உமாகாந்தன் முதலில் தன் கேஸைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அதில் சில சம்பவங்கள் கேட்பவர்களுக்கு விளங்காமல் போகவே, அடியிலிருந்து தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் முழுவதையுமே சுருக்கமாகக் கூறினான். அவன் கூறிய வரலாறு பின் வருமாறு: கைதி சொன்ன கதை உமாகாந்தனுடைய தாயாருக்குப் பாக்கியக்ஷ்மி என்று பெயர். ஆனால், பெயரில் உள்ள பாக்கியத்தைத் தவிர அவள் வாழ்க்கையில் எவ்விதப் பாக்கியத்தையும் அடையவில்லை. உமாகாந்தனுடைய தந்தைக்கு அவள் இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டாள். இல்வாழ்க்கையின் இன்பத்தை அவள் ஆறு வருஷத்துக்கு மேல் அநுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. உமாவினுடைய தந்தைக்கு அவருடைய மூத்த தாரத்தின் மூலம் ஒரு பிள்ளை இருந்தான். அவர் மரணமடைந்த போது அவன் பி.ஏ. பாஸ் செய்துவிட்டு, சீமைக்கு ஐ.ஸி.எஸ். படிக்கப் போக வேணுமென்று தந்தையிடம் உத்தரவு கேட்டுக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் திடீரென்று ஏற்பட்ட நோய் காரணமாகத் தந்தையின் மரணம் சமீபிக்கவே, அவர் தம் மூத்த புதல்வனை அருகில் அழைத்து, "குழந்தாய்! உனக்கு என்னால் ஆனதையெல்லாம் செய்து விட்டேன். பி.ஏ. படிக்க வைத்திருக்கிறேன். இனிமேல் நீ சம்பாதித்து உன் வாழ்க்கையை நடத்த வேண்டியதுதான். உன் சிறிய தாயாரையும் உன் தம்பியையுந்தான் அநாதையாக விட்டுப் போகிறேன். அவர்களுக்காக இதுவரையில் நான் ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய உயிரை நாலாயிரம் ரூபாய்க்கு இன்ஷியூர் செய்திருக்கிறேன். உன் சிறிய தாயாரைக் கலியாணம் செய்து கொண்டதற்கு முன்பே இன்ஷியூர் செய்ததாகையால் என் மரணத்திற்குப் பின் உனக்குத் தொகை சேரவேண்டுமென்று அதில் கண்டிருக்கிறது. நீ அந்தத் தொகையை வாங்கி உன் சிறிய தாயாருக்குக் கொடுத்துவிடு" என்று கூறி விட்டு இறந்து போனார். உமாவின் தமையனுக்கு, அவனுடைய சிறிய தாயாரை எப்போதுமே பிடிப்பதில்லை; தனக்கு விரோதியாகத் தன் தகப்பனாரின் அன்பைக் கவர வந்தவள் என்று அவளை வெறுத்து வந்தான். ஆனாலும், அவன் இப்படி மோசம் செய்வான், தகப்பனார் சாகும்போது சொன்ன வார்த்தைக்கு இப்படித் துரோகம் பண்ணுவான் என்று பாக்கியலக்ஷ்மி எதிர்ப்பார்க்கவில்லை. உத்தரக் கிரியைகள் ஆனதும், இன்ஷியூரன்ஸ் பாலிஸியை எடுத்துக் கொண்டு பணம் வாங்கி வருவதாகச் சென்னைக்குப் போனவன் போனவன் தான். திரும்பி வரவும் இல்லை; எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஐந்து வயதுக் குழந்தையுடன் நிர்க்கதியாய் விடப்பட்ட பாக்கியலக்ஷ்மி எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளானாள். முதலில் கொஞ்சநாள் ஒரு பணக்கார வீட்டில் சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு, ஒரு புண்ணியவானின் சிபார்சினால் சென்னையில் தர்மப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ந்து படித்து உபாத்தியாயினி வேலைக்கு பயிற்சி பெற்றாள். பிறகு ஜில்லா போர்டு பெண்கள் பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயினியாக வேலை பார்க்கலானாள். அதில் கிடைத்த சொற்பச் சம்பளத்தில் செட்டாக ஜீவனம் செய்து, மிகுந்த பணத்தைக் கொண்டு உமாகாந்தனைப் படிக்க வைத்தாள். உமாவும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கி, உபகாரச் சம்பளங்கள் பெற்று, தாயார் அனுப்பும் சொற்பப் பணத்தில் மற்றச் செலவுகளை நடத்திக் கொண்டு படித்து வந்தான். அவன் சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த போது, மகாத்மாவின் உப்புச் சத்தியாக்கிரஹ இயக்கம் தீவிரமாக நடந்துவந்தது. உமாவின் மனம் அந்த இயக்கத்தில் ஈடுபட்டது. தேசத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பேரியக்கத்தில் சிறை சென்றும் அடிபட்டும் வரும் செய்திகளைப் படிக்கப் படிக்க அவன் ஹிருதயத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. படிப்பிலே புத்தி செல்லவில்லை. கடைசியாகச் சென்னைக் கடை வீதிகளில் தொண்டர்கள் மறியல் செய்வதையும், அவர்கள் அடிக்கப் படுவதையும் நேருக்கு நேர் பார்த்த போது அவன் மனம் பூராவும் மாறிவிட்டது. அப்படிப்பட்ட மகத்தான இயக்கத்தில் ஈடுபடாத வாழ்க்கையினால் என்னதான் பிரயோஜனம்? எனவே, அந்நியத்துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு மறியலுக்குச் சென்றான். பல தினங்கள் அவனை அடித்து இழுத்துச் சென்று எங்கேயாவது தூரமான இடத்தில் கொண்டு போய் விட்டு வந்த போதிலும் அவன் மறுபடியும் மறுபடியும் மறியலுக்கு வருவதைக் கண்ட போலீஸார் கடைசியில் அவனைக் கைது செய்துகொண்டு போனார்கள். விசாரணை நடந்தது. ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. உமா தன்னுடைய எண்ணத்தை முன்னமே தாயாருக்கு எழுதித் தெரிவித்திருந்தான். அவளுக்கு ஒரு பக்கத்தில் பெருமையாயிருந்தது. மற்றொரு பக்கம் அளவில்லாத துக்கமும் உண்டாயிற்று. ஆனால், அவள் அவனுக்கு எழுதிய பதிலில், “அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட வேண்டாம்” என்று தான் எழுதினாள். அவள் விடுமுறை பெற்றுச் சென்னைக்கு வருவதற்குள் உமா சிறைக்குப் போய் விட்டான். பிறகு பாக்கியலக்ஷ்மி மகனுக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சங்கூடத் தன் துக்கத்தைக் காட்டாமல், சந்தோஷமாய் ஒரு வருஷமும் சிறைச்சாலையில் இருந்து விட்டு வரும்படி தைரியம் சொல்லி எழுதினாள். முதலில் இரண்டு மூன்று கடிதங்கள் இப்படி உற்சாகமூட்டுவனவாக இருந்தன. அப்புறம் வந்த கடிதங்களில் சோர்வு அதிகம் காணப்பட்டது. ‘தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே விடுதலை பெற்று வந்துவிட வழிகிடையாதா?’ என்று கூட ஒரு கடிதத்தில் கேட்டிருந்தாள். இதனால் உமாவின் இருதயமும் கலங்கிற்று; ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான். உண்மையாகவே பாக்கியலக்ஷ்மிக்கு அப்போது பெரியதொரு துர்ப்பாக்கியம் நேர்ந்திருந்தது. அச்சமயம் அவள் எந்த ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தாளோ, அந்த ஜில்லா போர்டானது ‘ரங்க சமுத்திரம் ராவணன்’ என்று பெயர் பெற்ற ஒரு மகா பாபியிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தது. அவனிடம் இல்லாத துர்க்குணத்தை உலகத்தில் வேறெங்கும் காண இயலாது. லஞ்சத்தினாலும், தடியடி ஆட்கள் பலரைத் தன்கீழ் வைத்துக் கொண்டிருந்ததனாலும் அவன் அப்படிச் செல்வாக்குப் பெற்றான். அதே முறைகளினால் அந்தச் செல்வாக்கை நாட்டிக் கொண்டும் இருந்தான். அவனுடைய கோர கிருத்தியங்களில் ஒன்று ஜில்லா போர்டுகளுக்குட்பட்ட பெண் பள்ளிக்கூடங்களின் உபாத்தியாயினிகளை உபத்திரவிப்பதாகும். அவனுடைய பொல்லாத கொடுங்கண், பாக்கியலக்ஷ்மியின் மீதும் விழுந்தது. அவள் அவனுடைய துராசைக்கு இணங்க மறுக்கவே, பள்ளிக்கூடத்துக்குப் பள்ளிக்கூடம் அவளை மாற்றிக் கொண்டும் இன்னும் பலவிதங்களில் உபத்திரவித்துக் கொண்டும் இருந்தான். பாக்கியலக்ஷ்மி இதைப் பற்றிச் சென்னையிலுள்ள பத்திரிகைகளுக்கும், அப்போது அதிகாரத்தில் இருந்த சர்க்கார் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதினாள். மந்திரிகளில் ஒருவர் அந்தக் கடிதத்தை மேற்படி ஜில்லா போர்டு பிரஸிடெண்டுக்கே அனுப்பி, “இப்படிப்பட்ட பொல்லாத பெண்பிள்ளையை ஏன் வேலையில் வைத்திருக்கிறாய்” என்று கேட்டிருந்தார். அதற்கு ஐந்தாறு தினங்களுக்குப் பிறகு ஒருநாள், பாக்கியலக்ஷ்மியைத் துர்நடத்தை காரணமாக வேலையிலிருந்து நீக்கிவிட்டதாய் உத்தரவு வந்தது. அன்றிரவு அவள் குடியிருந்த வீட்டில் நாலைந்து தடியர்கள் புகுந்து அவளை அடித்து இம்ஸித்துக் குற்றுயிரும் குலை உயிருமாய் விட்டுச் சென்றார்கள். உமாகாந்தன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தபோது தன் தாயாரை இத்தகைய கோலத்தில் கண்டான். அவனுடைய இரத்தம் கொதித்தது; நெஞ்சு தீய்ந்தது. விவரம் தெரிந்த போது, “அம்மா! அந்தப் பாவியைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை வந்து பார்க்கிறேன்” என்று அலறிக் கொண்டே பித்துப் பிடித்தவன் போல் ஓடினான். ‘ரங்க சமுத்திரம் ராவணன்’ அப்போது தங்கியிருந்த இடத்தை அவன் விசாரித்துக் கொண்டு அங்கே போய்ச் சேர்ந்தான். பங்களாவில் அவன் நுழையும் போது துப்பாக்கியின் சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான். சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினான். அங்கே தான் கொல்வதற்காக வந்த மனிதன் ஏற்கனவே சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்தான்! உமாகாந்தனைப் போலவே பழி தீர்க்க வன்மங் கொண்ட வேறொருவன் இவனை முந்திக் கொண்டிருக்க வேண்டும். உமா அந்தக் கோரக் காட்சியைப் பார்த்துத் திகைத்து நிற்கையிலேயே ஜனங்கள் பலர் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். விசாரணையில் உமாகாந்தன் ஒன்றையும் ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னான். ஜில்லா கோர்ட் ஜட்ஜு மகா நீதிமான். அத்துடன் அவர் ’ரங்க சமுத்திரம் ராவண’னின் கோரக் கிருத்தியங்களையெல்லாம் நன்கறிந்தவர். ஆகவே, அவர் குற்றம் ருசுவாகவில்லையென்று சொல்லி எதிரியை விடுதலை செய்துவிட்டார். சர்க்கார் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அப்போது சென்னை ஹைகோர்ட்டில் பாரிஸ்டர் சேஷாத்ரி பப்ளிக் பிராஸிக்யூடராயிருந்தார். உமாகாந்தன் தன்னுடைய கேஸைத் தானே நடத்துவதாகச் சொல்லி, கீழ்க்கோர்ட்டில் சொன்னதுபோலவே நடந்தது நடந்தபடி உண்மையே உரைத்தான். ஆனால் பாரிஸ்டர் சேஷாத்ரி தஸ்தாவேஜிகளையும் சாட்சியங்களையும் கொண்டு உமாகாந்தன் தான் கொலை செய்திருக்க வேண்டுமென்று திண்ணமாய் ருசுப்படுத்தினார். நீதிபதிகளும் அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு எதிரிதான் கொலை செய்தது என்று தீர்மானித்தனர். ஆனால் அதற்குத் தூண்டுதலாயிருந்த காரணத்தை உத்தேசித்துக் கைதிக்குத் தூக்குத்தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதித்தனர். அப்போது, கோர்ட்டில் எதிரி நடந்துகொண்ட விதம் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அவன் நீதிபதிகளுக்கும், முக்கியமாய் பப்ளிக் பிராஸிகியூடருக்கும், தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தான். “என் கையால் அந்தப் பாதகனைக் கொல்லவில்லையேயென்று எனக்கு ரொம்பவும் மனஸ்தாபமாயிருந்தது. இப்போது நான் தான் கொன்றேன் என்று சட்டம் தீர்த்துவிட்டதல்லவா? ரொம்ப சந்தோஷம்!” என்று அவன் கூவிக்கொண்டிருக்கையிலேயே போலீஸார் பிடித்து இழுத்துச் சென்றனர். நாலு வருஷம் சிறையிலிருந்த பிறகு உமாகாந்தனுக்கு இம்மாதிரி ஆயுள் முழுவதும் சிறையில் காலங்கழிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தோன்றிற்று. சமயம் நேர்ந்த போது தப்பிச் செல்ல முயல்வதென்றும், அம்முயற்சியிலே உயிர் போனால் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று என்றும் தீர்மானித்தான். சென்ற வாரத்தில் அது மாதிரி சந்தர்ப்பம் நேரவே அவனும் இன்னும் ஐந்து கைதிகளுமாகச் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தனர். அவர்களில் இரண்டு பேர் பிடிபட்டார்கள்; மூன்று பேர் சுடப்பட்டு இறந்தார்கள். உமாகாந்தன் மட்டும் எப்படியோ தப்பித்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் புகுந்து அலைந்து கடைசியாக இங்கு வந்து சேர்ந்தான். கைதி சொன்ன இந்தக் கதையை கேட்டு வருகையில் பிரணதார்த்தி பலமுறை கண்களைத் துடைத்துக் கொண்டார். பவானி அழுதே விட்டாள். ஆனால் சேஷாத்ரி மட்டும் துளிக்கூட மனங்கலங்காமல் உட்கார்ந்திருந்தார். அவருடைய கடின சித்தத்தைக் கண்டு பிரணதார்த்தியும் பவானியும் பெரிதும் அதிசயித்தார்கள். ‘ஒட்டும் இரண்டு உளம்’ நீலகிரியில் அவ்வருஷம் வழக்கத்திற்கு முன்னதாகவே மேற்கத்தி மழை தொடங்கிவிடக் கூடுமென்று அநுபவமுள்ளவர்கள் சொன்னார்கள். காற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வந்தது. மரங்களும் செடிகொடிகளும் அசைந்தாடும்போது வரப்போகும் பெரு மழையை நினைத்து இவை நடுங்குவது போல காணப்பட்டது. மேற்குத் திக்கில் இருண்ட மேகங்கள் சூழத் தொடங்கின. திக்குத் திகந்தங்கள் எல்லாம் நடுங்கும்படி இடி முழக்கங்கள் கேட்டன. வேனிற் காலத்தில் இரை தேடி மலைக்கு வந்த பட்சிகள் கூட்டங் கூட்டமாகக் கீழ்த் திசையை நோக்கிச் செல்லலாயின. சுகவாசத்துக்காக மலைக்கு வந்திருந்த சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் அவசர அவசரமாக மூட்டை கட்டினார்கள். கூனூரில் புரொபஸர் பிரணதார்த்தியின் பங்களாவில் வசித்தவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பெரும் புயல் அடித்துக் கொண்டிருந்தது. புயலின் உத்வேகம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. “சட்டமாவது கோர்ட்டாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் சுத்த மோசம்! உமாகாந்தனைப் போன்ற ஒரு நிரபராதியைச் சிறையிலிடும் சட்டம் என்ன சட்டம்? அதை அநுமதிக்கும் ராஜாங்கம் என்ன ராஜாங்கம்?…” என்று பிரணதார்த்தி பொங்கினார். “குற்றமற்றவன் என்கிறீர்களே? உங்களுக்கு எப்படித் தெரியும்? குற்றம் சாட்டப்பட்டவன் சொல்வதுதானே?” என்றார் சேஷாத்ரி. “ஆமாம்; அவன் சொல்லுவதுதான். ஆனால் அவன் சொல்வதே எனக்குப் போதும். அதற்கு விரோதமாய் நூறு பேர் சொன்னாலும் நம்பமாட்டேன். அப்படியே அவன் கொலை செய்ததாக இருக்கட்டும்; அப்போதும் அவன் குற்றவாளியில்லை. ஒரு பெரிய ரண பாதகனை இந்த உலகை விட்டு நீக்கியதற்காக அவனுக்குச் சமூகம் நன்றி செலுத்த வேண்டும். நானாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன். என்னுடைய தாயாரை ஒரு பாதகன் அப்படி துன்புறுத்தியிருந்தால் அவனைக் கட்டாயம் கொன்றிருப்பேன்” என்று ஆத்திரத்துடன் கூறினார் பிரணதார்த்தி. “கட்டாயம் நீங்களும் தண்டனை அடைந்திருப்பீர்கள். சட்டத்திற்கு உயர்வு, தாழ்வு கிடையாது. குற்றம் செய்தவனைத் தண்டிக்கச் சட்டங்களும், கோர்ட்டுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தானே தண்டனை விதிப்பதென்று கிளம்பினால், அதற்கு முடிவு எங்கே? அராஜகந்தான் ஏற்படும்” என்று சேஷாத்ரி வாதம் செய்தார். “மிஸ்டர் சேஷாத்ரி! நான் சொல்கிறேன்; இந்தச் சட்டத் தொழில் உங்களை அடியோடு கெடுத்து விட்டது. நீங்கள் இவ்வளவு மோசமான மனிதர் என்று எனக்கு இதுவரையில் தெரியாது” என்றார் பிரணதார்த்தி. இம்மாதிரியாக இந்த அத்தியந்த சிநேகிதர்களுக்குள்ளே விரோத பாவம் மூண்டது. ஒவ்வொரு நாளும் அது அதிகமாகி வந்தது. அந்த வீட்டில் சேஷாத்ரி இப்போது ஒரு தனி மனிதரானார். பவானி அவருடன் அதிகமாய்ப் பேசுவது கூடக் கிடையாது. அவருடைய குணம் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்பதை மறைத்து வைக்கப் பிரணதார்த்தியாவது பவானியாவது சிரமப்படவில்லை. அப்போது சேஷாத்ரி தாம் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருந்தால், அவர்கள் நிச்சயமாய் ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் சேஷாத்ரி போவதற்கு விருப்பமுள்ளவராய்க் காணப்படவில்லை. பவானி இப்போது மெய்மறந்த பரவச நிலையிலிருந்தாள். தன்னை மறந்ததுடன் உலகத்தையே மறந்துவிட்டாள். அவளுடைய உள்ளத்தில் உமாகாந்தன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் இடமே இல்லாமல் போயிற்று. உமாகாந்தனுக்குக் கொஞ்சம் தேக திடம் ஏற்பட்டபோது, அவனுடன் பவானியும் பிரணதார்த்தியும் மலையில் உலாவச் செல்வார்கள். கொஞ்சம் தூரம் சென்றதும் உமாகாந்தன் மேலே நடக்க முடியாமல் உட்கார்ந்துவிடுவான். பவானியும் அவனுடன் நின்றுவிடுவாள். பிரணதார்த்தி மட்டும் அதிக தூரம் போய்விட்டு வருவார். பவானியும் உமாகாந்தனும் தனியாயிருக்கையில் பவானி அதிகம் பேசுவதாயில்லை; உமாவைப் பேசவிட்டுத் தான் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பாள். அவன் தன்னைப் பற்றியே தான் அதிகம் பேசுவான். தான் வருங்காலத்தைப் பற்றி என்னென்ன ஆசை வைத்திருந்தானென்றும், அவையெல்லாம் எப்படி நிராசையாயின என்றும் சொல்வான். தன்னை வளர்த்துப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவதற்காகத் தன் தாயார் பட்ட கஷ்டங்களைக் கண்ணில் ஜலம் ததும்பக் கூறுவான். தேச சேவையில் தன்னுடைய அநுபவங்களை எடுத்துரைப்பான். சுதந்திரப் போர் நடந்த காலத்தில், மேலும் மேலும் விழுந்த அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அசையாமல் நிற்பதற்குத் தன்னையறியாமல் ஏற்பட்ட அபூர்வ தைரியத்தைப் பற்றி வியப்புடன் கூறுவான். தன்னுடைய தாயார் அடிபட்டுக் கிடந்த காட்சியை விவரிக்க முயன்று, முடியாமல் அழுதுவிடுவான். சிறைச் சாலையில் தான் பட்ட கஷ்டங்களை விவரிப்பான். ‘தூக்குத் தண்டனை விதித்திருக்கக் கூடாதா?’ என்று எண்ணி எண்ணித் தான் ஏங்கியதைச் சொல்வான். திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொன்னாலும் பவானி சலியாமல் கேட்பாள். இம்மாதிரி ஒரு வாரப் பழக்கத்தில், உமாகாந்தனுடன் பிறந்தது முதல் பழகி அவனுடைய சுகதுக்கங்களையெல்லாம் பகிர்ந்து அநுபவித்தவள் போல் அவ்வளவு இருதய ஒற்றுமை அடைந்தாள். உமாகாந்தனை எந்தச் சந்தர்ப்பத்தில் முன்னே பார்க்க நேர்ந்தது என்பது தனக்கு ஞாபகம் வந்தது போலவே, அவனுக்கும் அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது என்று பவானி தெரிந்து கொண்டாள். முதல் தடவை அவன் சத்யாக்கிரஹக் கைதியாகச் சிறைச்சாலையில் இருந்த போதெல்லாம், அவளை மறுபடியும் பார்க்கலாம் என்ற ஆசையும் நம்பிக்கையும் அவனுக்கு இருந்தன. இரண்டாந் தடவை கொலைக் குற்றத்துக்காகச் சிறைக்குப் போனபிறகு அந்த ஆசையை விட்டுவிட்டான். ஆனால், அவளுடைய எழில் முகத்தையும், துடுக்கான பேச்சையும், சீமை ஜவுளிக் கடையிலிருந்து அவள் அவசரமாகத் திரும்பிக் கருணை ததும்பும் கண்களால் தன்னைப் பார்த்த பார்வையையும் அவன் மறக்கவேயில்லை. “கனவிலே நினைக்காத காரியம் நடந்துவிட்டது. எதிர்பாராத பேறு எனக்குக் கிடைத்து விட்டது. உன்னை மறுபடி பார்த்துவிட்டேன். நீ என்னை நினைவு வைத்திருக்கிறாய் என்பதையும் அறிந்து கொண்டேன். இனிமேல்…” என்று தயங்கி நின்றான் உமாகாந்தன். “இனிமேல் என்ன?” என்று பவானி கேட்க, “இனி மேல் இந்த உயிரின் மேல் எனக்கு இச்சை இல்லை, நிம்மதியாய்ப் பிராணத்தியாகம் செய்து கொள்வேன்” என்றான். பவானியை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. கொஞ்ச நேரம் கழித்து அவள், “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்த பிறகு இந்த உயிர் வாழ்க்கை வேண்டாமென்று தோன்றுகிறதா? அவ்வளவு கசப்பு உண்டாக்க நான் என்ன செய்தேன்?” என்றாள். “பகவானே! அப்படியா அர்த்தம் செய்து கொள்கிறாய்? ஆனால் அது உண்மையல்லவென்று உன் மனமே சொல்லும்.” “அப்படியானால் ஏன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” உமாகாந்தன் சற்று மௌனமாயிருந்தான். “நான் இறப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. என் வாழ்க்கையில் இதற்குமுன் நான் இவ்வளவு சந்தோஷமாய் எப்போதும் இருந்ததில்லை. இந்த நிலைமையிலேயே என் வாழ்க்கை முடிவது நல்லதல்லவா? மறுபடி சிறைக்குப் போக என்னால் முடியாது; முடியவே முடியாது! அதுவும் இந்தப் பத்து நாள் உன்னுடன் இருந்து பழகிய பிறகு, இனிமேல் சிறைவாசத்தை என்னால் நினைக்கக் கூட முடியாது” என்றான். பவானியின் இருதய அந்தரங்கத்தில், தான் தற்சமயம் அநுபவிக்கும் சந்தோஷம் நீடித்திருப்பதற்குப் பெரிய இடையூறு ஒன்று காத்திருக்கிறது என்பது தெரிந்துதானிருந்தது. ஆனாலும் அந்த எண்ணத்துக்குத் தன் மனத்தில் இடங்கொடாமல் இருக்க முயன்றாள். வருங்காலத்தைப் பற்றி நினைக்கவே அவள் விரும்பவில்லை. நிகழ்காலத்தின் பேரின்பத்திலேயே முழுகியிருந்து, வருங்காலத்தை மறந்துவிட விரும்பினாள். ஆனால் இப்போது உமாவே அந்தப் பேச்சை எடுத்ததும், அவள் அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தது. “அந்த இரண்டு வழியைத் தவிர மூன்றாவது வழி எதுவும் இல்லையா?” என்று பவானி கேட்டாள். “என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஏதாவது இருந்தாலும் பாரிஸ்டர் சேஷாத்ரியைப் போன்ற பப்ளிக் பிராஸிகியூடர்கள் இருக்கும் வரையில், அந்த வழி எனக்கில்லை. ஒன்று ஆயுள் பரியந்தம் சிறை; அல்லது மரணம், என் வரையில் நான் தீர்மானித்துவிட்டேன்.” “எனக்கு அப்படித் தோன்றவில்லை. யோசனை செய்து ஏதாவது வழி கண்டுபிடிப்போம். இல்லை, மரணம் ஒன்றுதான் வழி என்றால், இருவரும் சேர்ந்தே உயிர்விடுவோம்” என்றாள் பவானி. பிறகு, உமாவுடன் வெகு நேரம் வாக்குவதம் செய்து, தன்னைக் கேளாமல் ஒன்றும் செய்வதில்லையென்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். சண்டமாருதம் ஒரு நாள் சேஷாத்ரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கலவரமடைந்த குரலில், “இதைப் படித்தீர்களா?” என்று பிரணதார்த்தியைப் பார்த்துக் கேட்டார். பிரணதார்த்தி, பத்திரிகையை அவரிடமிருந்து வாங்கிக் குறிப்பிட்ட செய்தியைப் படித்தார். அதில், கோயமுத்தூர் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் ஒருவன் இன்னும் பிடிபடவில்லையென்றும், அவன் நீலகிரி மலையில் எங்கேயோ ஒளிந்து திரிவதாகப் போலீஸார் ஊகித்துச் சுறுசுறுப்பாகத் தேடி வருகிறார்களென்றும், இது சம்பந்தமாகச் சில தடையங்கள் அவர்களுக்கு அகப்பட்டிருக்கின்றனவென்றும் கண்டிருந்தது. இதைப் படித்துப் பிரணதார்த்தியும் அதிக கலவரமடைந்தார். “நாம் மூன்று பேரும் இப்போது சட்டப்படி பெரிய குற்றம் செய்து கொண்டிருக்கிறோம். சிறைக் கைதிக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறோம். இதற்குத் தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியுமல்லவா?” என்று சேஷாத்ரி கேட்டார். “என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்; எனக்குக் கவலையில்லை. உமாகாந்தனை நான் கைவிடப் போவதில்லையென்பது நிச்சயம்.” “கைவிடாமல் நீங்கள் என்னதான் செய்யமுடியும்? எத்தனை நாள் தெரியாமலிருக்கும்? கட்டாயம் ஒரு நாள் பிடித்துவிடுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்?” “மிஸ்டர் சேஷாத்ரி! உங்களுக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால், நீங்களே போலீஸுக்கு எழுதிப் போட்டு விடுவீர்கள் போல் இருக்கிறதே?” என்றார் பிரணதார்த்தி. சேஷாத்ரி சட்டென்று குனிந்து பத்திரிகையை படிக்கத் தொடங்கினார். அதனால் அவர் முகம் அப்போது விகாரமாய்க் கறுத்ததைப் பிரணதார்த்தி கவனிக்கவில்லை. அன்றைய தினம் பவானியும் உமாகாந்தனும் மட்டும் உலாவுவதற்கு வெளியே சென்றிருந்தார்கள். வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிக தூரம் இவர்கள் போனார்கள். கூனூரில் பிரணதார்த்தியின் பங்களா மிகவும் தனிமையான ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருந்தது. அதற்குச் சமீபத்தில் அரை மைலுக்கு வேறு பங்களா கிடையாது. ஆகையால், அந்தப் பங்களாவைச் சுற்றியுள்ள மலை வழிகளில் சாதாரணமாய் யாரும் எதிர்ப்படுவது வழக்கமில்லை. ஆனால், இன்று தாங்கள் செல்லும் வழியில் எதிர்முகமாய் இருவர் வருவதைக் கண்டதும் பவானியின் மனம் தயக்கமுற்றது. வேறு வழி திரும்புவதற்கும் அங்கு இடம் இல்லை. எதிரே வந்தவர்கள் சமீபித்தபோது, அவர்களில் ஒருவர் பவானிக்குத் தெரிந்த மனிதராயிருந்தார். அவர் சென்னையின் பிரபல வக்கீல்களில் ஒருவர். பக்கத்துப் பங்களாவுக்கு அவர் வந்திருப்பதாகப் பவானி கேள்விப் பட்டிருந்தாள். பவானியைத் தூரத்தில் பார்த்தவுடனேயே அவர் புன்னகை புரிந்து ஒரு கும்பிடு போட்டார். அருகில் நெருங்கியதும், உமாகாந்தனை அவர் ஒரு கணம் உற்று நோக்கிவிட்டு, “என்ன மிஸ்டர் சேஷாத்ரி! இது என்ன தமாஷ்! எப்போது நீங்கள் மீசையை எடுத்தீர்கள்?” என்று கேட்டார். உமாகாந்தன் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தான். பவானிக்கும் அவருடைய கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ஆயினும் அவள் சமாளித்துக் கொண்டு, “இவர் சேஷாத்ரியல்ல; சென்னையிலிருந்து வந்திருக்கும் என்னுடைய சிநேகிதர்” என்றாள். அதற்கு அந்த மனிதர், “நிஜமாகவா? என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட தவறு நான் எப்போதும் பண்ணியதில்லை. மன்னிக்கவேண்டும். ஒருவேளை சேஷாத்ரிக்கு ஏதாவது உறவோ?” என்று கேட்டார். “அதுவும் இல்லை” என்றாள் பவானி. அதற்குள் வக்கீலுடன் வந்த இன்னொரு மனிதர், “இவரை நான் கூட எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறது. உங்கள் பேர் என்ன ஸார்” என்று கேட்டார். உமாகாந்தன் குழப்பத்துடன், “உங்களைப் பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லையே?” என்றான். “சரி, போய் வருகிறோம்” என்று பவானி விரைந்து கூறிவிட்டு மேலே நடக்கலானாள். பிறகு அவர்கள் சற்றுத் துரிதமாகவே நடந்து சீக்கிரத்தில் பங்களாவை அடைந்தார்கள். நடக்கும்போதெல்லாம் பவானியின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. உமாகாந்தன் பேசிக் கொண்டு வந்ததொன்றும் அவள் காதில் ஏறவேயில்லை. அன்றிரவு மலையில் பிரமாதமான காற்று அடித்தது. மரங்கள் தடார் படார் என்று முறிந்து விழுந்தன. பங்களாவின் மீது காற்று வேகமாய் மோதியபோது அது அஸ்திவாரத்திலிருந்து ஆடுவதுபோல் தோன்றியது. அந்தப் பங்களாவில் வசித்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதைவிடப் பெரிய சண்டமாருதம் அடித்துக் கொண்டிருந்தது. மறுநாள் பொழுது விடிய, காற்றின் வேகம் சற்று அடங்கிற்று. இன்றைக்கோ நாளைக்கோ மழை தொடங்கிவிடும். “இனிமேல் தாமதிக்காது” என்றார் மலை அநுபவமுள்ள பிரணதார்த்தி. காலையில் வீட்டு வேலைக்காரன் மார்க்கெட்டுக்குப் போயிருந்தான். அங்கே யாரோ ஒருவன் அவனிடம் பேச்சுக் கொடுத்து, பிரணதார்த்தியின் பங்களாவில் புது ஆள் யாராவது வந்திருக்கிறார்களா என்று கேட்டதாகவும், தனக்குத் தெரியாது என்று பதில் சொன்னதாகவும் அவன் திரும்பி வந்து தெரிவித்தான். அன்று பங்களாவுக்கு வ்ந்த தபால்காரன், “ஏன் ஸார்! யாரோ புதுசா இந்தப் பங்களாவுக்கு வந்திருக்கிறார்களாமே? அவர் பெயரென்ன? ஏதோ ரிஜிஸ்டர் தபால் வந்திருக்காம். போஸ்ட் மாஸ்டர் விசாரிச்சுண்டு வரச் சொன்னார்” என்றான். “இங்கே ஒருத்தரும் புதுசா வரவில்லை. எல்லாரும் பழைய மனிதர்கள் தான்” என்று பிரணதார்த்தி கோபமாய்ப் பதில் சொன்னார். சேஷாத்ரி அன்றெல்லாம் தம் அறையிலேயே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது கூட அவர் அதிகமாய் ஒன்றும் பேசவில்லை. தபால்காரன் விசாரித்ததைப் பற்றிப் பிரணதார்த்தி சொன்னார். “ஆமாம்; என் காதிலும் விழுந்தது” என்றார் சேஷாத்ரி. அதற்குமேல் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவருடைய நடத்தை பிரணதார்த்திக்கு அர்த்தமாகவேயில்லை. அவர் மேல் அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. ஆனால் அவரை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. அன்று மத்தியானம் இவர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, எல்லோருடைய மனத்திலும் குமுறிக் கொண்டிருந்த விஷயத்தை உமாகாந்தனே பிரஸ்தாபித்தான். “உங்களுடைய மனம் எனக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரயோஜனமில்லை. என்னை உங்களால் காப்பாற்ற முடியாது. நான் போகிறேன்; விடை கொடுங்கள்” என்றான். “போகிறாயா? எங்கே போவாய்? இன்றிரவோ, நாளையோ மழை பிடித்துக் கொள்ளப் போகிறது. மழை வந்துவிட்டால், மலைப்பிரதேசத்தில் திறந்த வெளியில் அரை மணி கூட ஜீவித்திருக்க முடியாது” என்றார் பிரணதார்த்தி. “ஜீவித்திருப்பதற்குப் போனால் அல்லவா அந்தக் கவலை…” “என்ன, என்ன சொன்னாய்?” என்று பிரணதார்த்தி பதறிக் கொண்டு கேட்டார். “இன்னொரு தடவை சிறைக்குப் போய் என்னால் வாழ முடியாது. எப்படியும் ஒரு நாள் உயிரை விடுவேன். இங்கே போலீஸ் வந்து என்னைக் கைது செய்து உங்களுக்கெல்லாம் மனக்கஷ்டமும் அவமானமும் ஏற்பட நான் ஏன் காரணமாயிருக்கவேண்டும்? நீங்கள் எனக்குச் செய்த உபகாரத்துக்கு அப்படியா கைம்மாறு செய்வது?” என்றான் உமா. “எங்களிடம் உனக்கு நன்றியிருப்பது உண்மையானால், இப்போது நான் சொல்வதைக் கேட்க வேண்டும். உயிர்விடும் பேச்சை மறந்துவிடு. போலீஸார் வந்தால் பேசாமல் அவர்களுடன் போ. நான் ஆயிற்று உன்னை விடுதலை செய்வதற்கு” என்று பிரணதார்த்தி ஆவேசத்துடன் கூறினார். “முடியாத காரியத்தைத் தாங்கள் சொல்கிறீர்கள். தலைவிதியை மாற்ற முடியுமா? விதியில் முன்னெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்போது அப்படியில்லை. இந்தப் பங்களாவில் எப்போது சேஷாத்ரியைப் பார்த்தேனோ அப்போதே விதியின் பலத்தை நான் உணர்ந்து கொண்டேன்.” "அதெல்லாம் சுத்தத் தப்பு ஆயிரம் விதிகளிலிருந்தும், நூறாயிரம் சேஷாத்ரிகளிடமிருந்தும் நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நேரே ஹைகோர்ட் ஜட்ஜுகளிடம் போகிறேன். கவர்னரைப் பார்க்கிறேன். இந்தியா மந்திரி வரையில் போய்ப் பார்த்தேனும் உன்னை விடுதலை செய்கிறேன். நீ மட்டும் பொறுமையாய் இருக்கவேண்டும். இத்தனை நாள் கஷ்டப்பட்டு விட்டாய்; இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்." இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணி நாலு இருக்கும். சேஷாத்ரி வாசற் பக்கம் போவதைப் பவானி பார்த்தாள். அவள் எழுந்து, “சித்தப்பா! நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போனாள். பிராயச்சித்தம் பவானி வாசலில் போய்ப் பார்த்ததும், கீழே சேஷாத்ரி போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. அவரை அவள் தொடர்ந்து சென்றாள். சுமார் அரை மைல் நடந்த பிறகு, சேஷாத்ரி ஒரு பாறையின் மீது உட்கார்ந்தார். மலைப்பாதைகள் வளைந்து வளைந்து செல்லுமல்லவா? சேஷாத்ரி உட்கார்ந்த இடம் ஒரு வளைவின் முனை. அங்கிருந்து பார்த்தால் மேலே பங்களாவுக்குப் போகும் பாதையும் கீழே கூனூர் ரயில் ஸ்டேஷனுக்குப் போகும் பாதையும் வெகு தூரத்துக்கு தெரிந்தன. சேஷாத்ரி கீழே நோக்கிக் கொண்டிருந்தவர். காலடிச் சத்தம் கேட்டு மேலே நிமிர்ந்து பார்த்தார். பவானி வருவதைக் கண்டார். அவர் முகத்திலே அப்போது தோன்றியது கலக்கமா அல்லது மகிழ்ச்சியா? கலக்கம் என்றே பவானிக்குத் தோன்றியது. “என்ன, தனியாய்ப் புறப்பட்டு வந்தீர்கள்?” என்று பவானி கேட்டாள். “அது உனக்கு வியப்பாயிருக்கிறதா, என்ன? நான் தான் இப்போது தனியாகிவிட்டேனே?” என்று கூறிச் சேஷாத்ரி புன்னகை புரிந்தார். அவருடைய கண்களிலே ஜலம் தளும்பிற்று. பவானிக்கு அவர் மீது லவலேசமும் இரக்கம் ஏற்படவில்லை. “சேஷாத்ரி! நீர் மகா வஞ்சகர். விஷப்பாம்பு. விஷப்பாம்பிலும் கொடிய வீரியன் பாம்பு…” என்று அவள் கூறி வந்த போது அவளே படமெடுத்தாடும் ஒரு நாக ஸர்ப்பத்தைப் போல் தோன்றினாள். அவள் கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் நஞ்சு தோய்ந்ததாயிருந்தது. சேஷாத்ரியின் முகம் கறுத்து அளவிலாத வேதனையைக் காட்டிற்று. “உமது வேஷத்தை நான் கண்டறிந்தேன். நீர் மாத்ரு துரோகி, பித்ரு துரோகி, சகோதர துரோகி. உமாகாந்தனுடைய தமையன் நீர்தான். இல்லையென்று சாதிப்பீரா?” என்று கேட்டாள். சேஷாத்ரி ஒரு நிமிஷம் இடிவிழுந்தது போல் பிரமித்துப் போனார். “என்னுடைய கடிதத்தை…” என்று தடுமாறினார். “கடிதமா? என்ன கடிதம்?” “வேலைக்காரனிடம் கொடுத்து வந்தேன்.” “எனக்குத் தெரியாது. உம்முடைய கடிதத்தை நான் படிக்கவில்லை; படிக்க இஷ்டமுமில்லை. நீர் எனக்கு மட்டுந்தானா எழுதினீர்? சத்தியமாய்ச் சொல்லும்; போலீஸுக்கு எழுதவில்லையா? உம்முடைய தம்பியை இரண்டு தடவையும் கெடுத்தீர். இப்போது மூன்றாம் தடவையும் அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறீர். உம்மைப் போன்ற துரோகியை இந்த உலகத்திலே பார்க்க முடியாது.” சேஷாத்ரி முகத்திலே ஒரு மாறுதல் உண்டாயிற்று. அவர் ஆத்திரம் ததும்பக் கூறினார்: "பவானி! நானா துரோகி? அவன் தான் துரோகி. என் வாழ்க்கையைப் பாழாக்குவதற்கே அவன் பிறந்தான். நான் ஐ.ஸி.எஸ். பரீட்சைக்குப் போகமுடியாமல் கெடுத்தான். அப்புறம் எப்படியோ நான் முன்னுக்கு வந்து ‘பப்ளிக் பிராஸிகியூடர்’ உத்தியோகத்தில் இருந்தபோது, அவன் கொலைக் கேஸில் வந்து சேர்ந்தான். “தீர்ப்புக் கூறிய தினத்திலேதான் அவன் என்னைக் கெடுக்கப் பிறந்த என் தம்பி என்று எனக்குத் தெரிந்தது. அந்த வேதனையினாலேயே நான் ‘பப்ளிக் பிராஸிகியூடர்’ வேலையை விட்டுத் தொலைத்தேன். இப்போது மறுபடியும் அவன் என் வாழ்க்கையில் வந்து குறுக்கிட்டிருக்கிறான். பவானி! சத்தியமாய்ச் சொல்; அவன் வந்திருக்காவிட்டால் நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டிருக்க மாட்டாயா?” என்று கேட்டார். பவானி சிரித்தாள். அந்தச் சிரிப்பிலே இருந்த வெறுப்பும் ஏளனமும் அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டன. ஆனாலும் பவானி அத்துடன் நிறுத்தவில்லை. “உம்மைக் கலியாணம் செய்து கொள்வதைக் காட்டிலும் ஒரு பிசாசைக் கலியாணம் செய்து கொள்வேன்” என்றாள். சேஷாத்ரியின் முகத் தோற்றம் மறுபடியும் மாறியது. அதில் அளவில்லாத சோகம் குடிகொண்டது. “பவானி! ரொம்ப சந்தோஷம். போலீஸுக்குப் புலன் தெரிவித்தது நான் தான். நீ சீக்கிரம் போய் உன்னுடைய காதலனைக் காப்பாற்ற முடியுமானால் காப்பாற்று” என்றார். பவானி, அவர் காட்டிய திசையில் கீழே நோக்கினாள். பத்துப் பதினைந்து போலீஸ்காரர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் சேஷாத்ரியைப் பார்த்துப் பயங்கரமான குரலில் கூறினாள்: “சேஷாத்ரி! உம்முடைய பாபத்துக்குப் பிராயச் சித்தமே கிடையாது. இந்தப் பூமி எப்படி உம்மைச் சுமக்கிறது என்றே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இந்த மலை பிளந்து உம்மை விழுங்கி விடாதது எனக்கு வியப்பாயிருக்கிறது. நான் சொல்வதைக் கேளும். இந்த நீலகிரியில் எவ்வளவோ மலையுச்சிகள் இருக்கின்றன. எவ்வளவோ அதல பாதாளமான பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. அவற்றில் எதிலாவது ஒன்றில் நீர் விழுந்து செத்தீர் என்று கேள்விப்பட்டேனானால் என் மனம் குளிரும்.” இப்படிச் சொல்லிவிட்டுப் பவானி விரைந்து பங்களாவை நோக்கிச் சென்றாள். பவானி அப்பால் சென்றதும் சேஷாத்ரி ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார். சட்டென்று தமது சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு முகம் பார்க்கும் கண்ணாடியையும் ஒரு ஷவரக் கத்தியையும் எடுத்தார். ஒரு விநாடிப் பொழுதில் தமது முகத்திலிருந்த அழகான மீசையை அகற்றினார். மீசையை எடுத்ததும் அவர் முகத்துக்கும் உமாகாந்தன் முகத்துக்கும் துளிக்கூட வித்தியாசம் இல்லாமல் போயிற்று, கண்ணாடியால் ஒரு தடவை முகத்தைப் பார்த்துக் கொண்டு கத்தி, கண்ணாடி எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் எறிந்தார். உடனே போலீஸ்காரர்கள் வந்த திசையை நோக்கி விரைந்து சென்றார். அவர்கள் அருகில் நெருங்கியதும், “நான் வந்துவிட்டேன். உங்களுக்கு அதிகச் சிரமம் வைக்கவில்லை” என்று சொல்லி விலங்கு மாட்டுவதற்குக் கையை நீட்டினார். பங்களாவுக்கு விரைந்து சென்ற பவானி, “சித்தப்பா சித்தப்பா!” என்று கூவிக்கொண்டே உள்ளே சென்றாள். பிரணதார்த்தியின் முகத் தோற்றத்தைப் பார்த்ததும், தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல், “என்ன விசேஷம்?” என்று கேட்டாள். பிரணதார்த்தி ஒரு கடிதத்தை நீட்டினார். அது, சேஷாத்ரி உமாகாந்தனுக்கு எழுதிய கடிதம். “தயவு செய்து சாயங்காலம் ஐந்து மணிக்கு முன்னால் இதைத் திறக்க வேண்டாம். சரியாக ஐந்து மணிக்குப் பிரித்துப் பார்க்கவும்” என்று அதன் மேல் உறையில் எழுதியிருந்தது. பவானி வியப்புடனும் பரபரப்புடனும் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள். ‘தம்பி! உனக்கு நான் செய்திருக்கும் அபகாரங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். கட்டாயம் நான் சொல்கிறபடி நீ கேட்கவேண்டும்’ என்று அக்கடிதம் ஆரம்பமாயிற்று. உமாகாந்தனுக்குப் பதில் தான் கைதியாகப் போவதாகவும் அவன் தப்புவதற்கு இது ஒன்றுதான் வழியென்றும், அன்றிரவே அவர்கள் பிரணதார்த்தியின் மோட்டாரில் சென்னைக்குக் கிளம்பிச் செல்லவேண்டுமென்றும், மறுநாள் தமக்குப் பதிலாக உமாகாந்தன் கப்பல் ஏறிவிட வேண்டு மென்றும் அதில் கண்டிருந்தது. தமக்கு ஒன்றும் ஆபத்து விளையாதென்றும், பத்து நாளைக்குள் போலீஸாருக்கு அசட்டுப் பட்டம் கட்டிவிட்டுத் தாம் வெளியேறிவிட முடியுமென்றும் எழுதியிருந்தது. “கப்பலுக்கு இரண்டு டிக்கட் வாங்கியிருக்கிறேன்; இன்னும் யாராவது உன்னோடு போவதாயிருந்தால் போகலாம்” என்று குறிப்பிட்டு, “இந்தக் கடிதம் வேறு யார் கண்ணிலும் படாதபடி நெருப்பில் போட்டுக் கொளுத்தி விடவும்” என்ற வேண்டுகோளுடன் கடிதம் முடிந்தது. மூன்று பேரும் கலந்து யோசித்து, அந்தக் கடிதத்தில் கண்டபடி செய்வதே உசிதமென்று தீர்மானித்தார்கள். அஸ்தமிக்கும் சமயம் அவர்கள் மோட்டாரில் கிளம்பினார்கள். பிரணதார்த்திதான் வண்டி ஓட்டினார். மறுநாள் கப்பல் புறப்படும் சமயம் அவர்கள் சரியாகச் சென்னைத் துறைமுகம் சேர்ந்தார்கள். அமுதவாக்கு பிரணதார்த்தி கதையை மேற்கண்ட இடத்தில் முடித்து விட்டார். சற்று நேரம் பொறுத்து நான், “அப்புறம் என்ன ஆயிற்று? போலீஸாரின் தவறு எப்போது வெளிப்பட்டது?” என்று கேட்டேன். “அது வெளிப்படவெயில்லை.” “என்ன? அது எப்படி வெளிப்படாதிருக்க முடியும்? ஜெயிலுக்குக் கொண்டு போனதுமே கைரேகை அடையாளங்களிலிருந்து கண்டுபிடித்திருப்பார்களே!” இந்தக் கேள்வியினால் எனக்குச் சிறையநுபவம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொண்டேன். பிரணதார்த்தி சொன்னார்: "வாஸ்தவந்தான். ஜெயிலுக்குக் கொண்டு போயிருந்தால் உடனே கண்டு பிடித்திருப்பார்கள். ஆனால் சேஷாத்ரி ஜெயிலுக்குப் போகவேயில்லை. நீங்களே உண்மையை ஊகித்திருப்பீர்களென்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்? பத்திரிகையில் எங்கேயோ மூலையில் வந்த செய்தியை எங்கே படித்திருக்கப் போகிறீர்கள்? படித்திருந்தாலும் ஞாபகம் இருக்காது. ஆனால் அந்த வருஷத்தில் பிரமாதமான மழையும் புயலும் நீலகிரியில் அடித்து ரொம்பவும் சேதமான விவரம் உங்களுக்குக் கட்டாயம் ஞாபகமிருக்குமே. நாங்கள் புறப்பட்ட அன்று இரவிலே தான் அப்படி ஊழிகாலத்து மழை போல் பெய்யத் தொடங்கியது. மறுநாள் கூனூரிலிருந்து மேட்டுப் பாளையத்திற்குப் புறப்பட்டுச் சென்ற ரயில், வழியில் பாதையை விட்டு விலகி விழுந்து விட்டது. ரயிலில் போனவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்களெல்லாம் உயிர் தப்பினார்கள். ஒரே ஒருவன் தான் மரணம் அடைந்தான். அவன் தப்பியோடிப் பிடிபட்ட கைதி…" “ஆஹா!” என்று என்னையறியாமல் ஒரு பலமான கூச்சல் போட்டேன். சேஷாத்ரியைப் பார்த்துப் பவானி சொன்ன கொடும் மொழிகள் அப்போது எனக்கு ஞாபகம் வரவே, என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. அவள் சாபம் பலித்துவிட்டது! ஆனால் எப்பேர்ப்பட்ட தப்பெண்ணத்தின் பேரில் அவள் அவரைச் சபித்தாள்? அந்தச் சாபம் இப்படிப் பலித்து விட்டதை அறிந்தால் அவள் உள்ளம் என்ன பாடுபடும்? சற்றுப் பொறுத்து, “மரணம் தற்செயலாக நேர்ந்ததா? அல்லது தற்கொலையா? எப்படியென்று தீர்மானித்தார்கள்?” என்று கேட்டேன். “யாருக்குத் தெரியும்? ரயில் விழுந்த இடத்துக்குப் பக்கத்திலே அதல பாதாளமான கிடுகிடு பள்ளம் ஒன்றிருந்தது. அதில் அவன் விழுந்துவிட்டான். உருத் தெரியாமல் போன அவனது தேகத்தைப் போலீஸார் கண்டெடுத்துத் தகனம் செய்தார்கள்.”தப்பியோடிய கைதி கூனூரில் பிடிபட்டுக் கொண்டுவரப்படுகையில் தெய்வாதீனமாக ரயில் விபத்தில் மரணமடைந்தான்" என்று பத்திரிகைகளில் ஒரு சிறு செய்தி வெளியாயிற்று. அத்துடன் கதை முடிந்தது," என்று கூறிப் பிரணதார்த்தி பெருமூச்சு விட்டார். சேஷாத்ரி இறந்த காரணத்தைப் பற்றி ஆசிரியர் பிரணதார்த்தி தம்முடைய அபிப்பிராயம் என்னவென்று சொல்ல மறுத்து விட்டார். என் வரையில், சேஷாத்ரியின் மரணம் தெய்வாதீனமென்று நான் நினைக்கவில்லை. அவர் ஆத்மத் தியாகம் செய்து கொண்டார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் ஒரு விதத்தில் தற்கொலையும் தெய்வாதீனந்தான் அல்லவா? “இந்த உலகம் பொய், வாழ்வு பொய்” என்று நம் பெரியோர்கள் சொன்னது அமுத வாக்கு என்பதில் சந்தேகமில்லை. உலகத்தைப் பொய்யென்று கொண்டால்தான் ஏதோ ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு ஜீவ யாத்திரையை நடத்திக் கொண்டு போக முடியும். இந்த உலகம் நிஜமாக மட்டுமிருந்தால் இவ்வளவு தவறுகளுக்கும் துயரங்களுக்குமிடையில் உயிர் வாழ்வது சாத்தியமா? பால ஜோசியர் பிரசித்தி பெற்ற பால ஜோசியம் பட்டாபிராமன் பி.ஏ.யைப் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுடைய ஜோசிய விளம்பரங்களையும் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். பட்டாபிராமன் நல்ல புத்திசாலி; குணவான்; யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் கெடுதல் நினைக்காதவன்; எல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று நினைக்கப் பட்டவன். இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிவதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் அந்தப் பிரசித்தி பெற்ற பாலஜோசியம் பட்டாபிராமன் என்பது அடியேன் தான்! இந்தக் காலத்தில் சில பேர் “ஜோசியர்” என்று பெயர் வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிப் பிழைக்கிறார்களே, அந்த மாதிரி மோசக்காரர் கூட்டத்தில் சேர்ந்தவன் நானல்ல. உண்மையாகவே ஜோதிட சாஸ்திரத்தில் அறிவைச் செலுத்தி வெகுவாக ஆராய்ச்சி செய்தேன். அந்த சாஸ்திரத்தில் உண்மைத் தத்துவம் இருக்கிறது என்பதை ஐயமின்றி உணர்ந்தேன். என்னுடைய ஆராய்ச்சி அறிவை நன்கு பயன் படுத்தி, ஜாதகம் முதலியவை நன்கு பார்த்துத்தான் மற்றவர்களுக்குப் பலன் சொல்லி வந்தேன். “ஆமாம் இதெல்லாம் ஏன் இறந்த காலத்தில் சொல்கிறாய்?” என்று நீங்கள் கேட்கக்கூடும். வாஸ்தவம்; இறந்த காலத்தில் தான் சொல்கிறேன். ஏனெனில் ஜோசியத் தொழிலை நான் விட்டு விட்டேன். என் ஜோசிய விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளில் இனிமேல் பார்க்கமாட்டீர்கள். என் சொந்த விஷயத்தில் நான் நம்பிக்கை இழந்த ஒரு சாஸ்திரத்தை மற்றவர்கள் விஷயத்தில் உபயோகப்படுத்தவும், அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. என் மனச்சாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஜோசியத்தில் நான் நம்பிக்கை இழந்தது எப்படி? அதைச் சொல்வதற்குத்தான் முன் வந்திருக்கிறேன். ஆனால், ஜோசியத்தில் நான் ஏன் நம்பிக்கை இழந்தேன் என்று சொல்வதற்கு முன்னால், அதில் எனக்கு நம்பிக்கை வந்தது எப்படி என்பதைச் சொல்ல வேண்டும். பள்ளிக் கூடத்திலும் சரி கலாசாலையிலும் சரி, படிப்பில் நான் முதன்மையாகவே இருந்து வந்தேன். எல்லாப் பரீட்சைகளிலும் நல்ல மார்க்குகள் வாங்கி வந்தேன். பி.ஏ. வகுப்பில் படித்த போது எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய துக்கம் நேர்ந்தது. என் தகப்பனார் திடீரென்று காலஞ் சென்றார். அவர் தாலுகா குமாஸ்தா உத்தியோகத்திலிருந்தவர். தமது சொற்ப சம்பளத்தில் பணம் மீத்து என்னைப் படிக்க வைத்து வந்தார். சிறு பிராயத்திலேயே தாயாரை இழந்த துரதிர்ஷ்டசாலி நான். ஆகவே, தகப்பனார் தான் எனக்கு தாயாகவுமிருந்து என்னைக் காப்பாற்றி வந்தார். அவருடைய மரணம் என்னைக் கலங்கச் செய்துவிட்டது. பரீட்சைக்கு ஒரு மாதம் இருக்கும் போது அவர் இறந்தபடியால், அந்த வருடம் நான் பரீட்சைக்குப் போக முடியவில்லை. அடுத்த செப்டம்பரில் பரீட்சைக்குப் போனேன். அது வரைக்கும் எல்லாப் பரீட்சைகளிலும் முதல் வகுப்பிலேயே தேறி வந்த நான், பி.ஏ. பரீட்சையில் மூன்றாம் வகுப்பில் தான் தேறினேன். அதற்குப் பிறகு என்ன செய்வதென்று கவலை உண்டாயிற்று. சட்ட கலாசாலையில் படிக்கலாமென்று முன்னால் எண்ணமிருந்தது. இப்போது அது முடியாத காரியமாயிற்று. பணத்துக்கு எங்கே போவது? ஏதாவது உத்தியோகம் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்னைப் பட்டணத்துக்கு வந்து உத்தியோகம் தேடத் தொடங்கினேன். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எனக்கு வேலை கிடைக்க வில்லை. முப்பது ரூபாய் சம்பளந்தான் நான் தேடியது. அது கூடக் கிடைக்கவில்லை. என்னைவிடக் குறைந்த படிப்புள்ளவர்களுக்கெல்லாம் கிடைத்தது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. “அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள், நமக்கு அதிர்ஷ்டமில்லை” என்று எண்ணத் தொடங்கினேன். அப்போது நான் அறிந்த இன்னொரு செய்தி அதிர்ஷ்டத்தின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உண்டாக்கிற்று. என்னுடன் ஹை ஸ்கூலில் நாலாவது பாரம் முதல் கோபாலகிருஷ்ணன் என்ற பையன் படித்து வந்தான். மார்க்கு வாங்குவதில் அவனுக்கும் எனக்குந்தான் முக்கியமான போட்டி. ஆனாலும், அநேகமாக நான் தான் அவனைவிட அதிக மார்க்கு வாங்குவேன். என் தகப்பனாரின் மரணத்தினால் நான் பரீட்சைக்குப் போக முடியாத வருஷத்தில் அவன் பி.ஏ. முதல் வகுப்பில் தேறினான். அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் கண்ட மயிலாப்பூர் வக்கீல் ஒருவர், தம் பெண்ணை அவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பெரில், அவனை ஐ.சி.எஸ். பரீட்சைக்குப் படிக்க அனுப்பியிருக்கிறார் என்று அறிந்தேன். இதைப் பற்றி அவனுடைய சிநேகிதர்கள் சிலர் பரிகாசம் செய்தார்கள். “ஐ.சி.எஸ். உத்தியோகத்துக்காக அடிமை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள். ஆனால், இது பொறாமையால் எழுந்த பேச்சு என்பதை நான் அறிவேன். இன்று இப்படி பரிகாசம் செய்கிறவர்கள், நாளைக்கு அவன் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஸப் கலெக்டராக வந்ததும், அவனிடம் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்கள். அதுவரை எனக்கு வேலை கிடைக்காவிட்டால் நானும் அவனிடம் போனாலும் போவேன். ஒருவேளை, அவன், “இப்போது பார்க்கமுடியாது” என்று டவாலிச் சேவகனிடம் சொல்லி அனுப்பிவிடுவான். என்னைப் பார்ப்பதற்கு அவன் மனமுவந்து சம்மதித்தாலும், உத்தியோகம் என்று சொன்னதும், “உத்தியோகத்துக்கு நான் எங்கே அப்பா போவேன்? முன் காலத்திலே போல இப்போது கலெக்டர்களுக்கு அதிகாரம் ஏது? பப்ளிக் ஸர்விஸ் கமிஷன் அல்லவா நியமனம் செய்கிறது? ‘கம்யூனல் ரொடேஷன்’ வேறு இருக்கிறது” என்பான். இதை நினைக்க நினைக்க, வாழ்க்கையின் விசித்திரத்தைப் பற்றி எனக்கு மேலும் மேலும் வியப்புண்டாயிற்று. கோபாலகிருஷணன் என்னைவிட எந்த விதத்திலும் புத்திசாலி அல்ல; ஆனாலும், அவன் ஏன் கலெக்டராக வேண்டும்? நான் ஏன் இப்படி வேலைக்குத் திண்டாட வேண்டும்? இதற்கு அதிர்ஷ்டம் காரணமில்லாது வேறு என்ன இருக்க முடியும்? இன்னும், உலகத்தை நான் சுற்று முற்றும் பார்த்து, வாழ்க்கை விசித்திரங்களைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்சமும் லாயக்கில்லாதவர்கள் எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். புத்திசாலிகளும் குணசாலிகளும் ஜீவனோபாயத்துக்கே திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத விதத்தில் சிலர் திடீரென்று பணக்காரர்கள் ஆனார்கள்; அதே மாதிரி எதிர்பாராத விதங்களில் சிலர் திடீரென்று ஏழைகளானார்கள். நான் உத்தியோகம் தேடி அலைந்த போது, இம்மாதிரி விசித்திரங்கள் பலவற்றை அறிந்தேன். இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க, “நம்முடைய சாமர்த்தியத்தினாலும் முயற்சியினாலும் மட்டும் ஒன்றும் நடப்பதில்லை. மனுஷ்யனுடைய காரியங்களை நடத்தும் வேறு சக்திகள் இருக்கின்றன” என்ற உறுதி பலப்பட்டு வந்தது. இந்த உலக வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் எல்லாரும் தங்கள் சாமர்த்தியத்தினாலேயே வெற்றியடைந்து விடவில்லை; சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றன. தோல்வியடைந்தவர்கள் எல்லாரும், தங்கள் முட்டாள்தனத்தினாலேயே தோல்வியடைந்து விடவில்லை. சந்தர்ப்பங்கள் உதவி செய்யாதபடியினாலேயே தோல்வியடைந்தார்கள். இவ்வாறு ஒரு மனுஷனுக்குச் சந்தர்ப்பங்கள் உதவி செய்வதும் செய்யாததும், குருட்டுத்தனமாக நடக்கும் காரியமா? அல்லது, ஏதாவது ஒரு நியதியின்படி நடக்கிறதா? அதாவது அதிர்ஷ்டம் என்பதெல்லாம் குருட்டு அதிர்ஷ்டந்தானா? அல்லது காரண காரியக்கிரமம் உண்டா? ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அவ்வப்போது தற்செயலாகவே உண்டாகின்றனவா? அல்லது, பிறக்கும்போதே, இந்த ஜீவனுக்கு இந்திந்தக் காலத்தில் இன்னின்ன மாதிரி நடக்குமென்று ஏற்பட்டு விடுகின்றதா? இத்தகைய சிந்தனைகளில் என் மனம் அடிக்கடி ஈடுபடத் தொடங்கியது. அதன் பயனாக, “மனித வாழ்க்கையில், எல்லாம் முன்னால் நியமித்தபடிதான் நடக்கிறது” என்ற ஒரு நம்பிக்கை என் உள்ளத்தில் பலமாக வேரூன்றிவிட்டது. எல்லாம் முன்னால் நியமித்தபடியே நடக்கின்றனவென்றால், அப்படி நடக்கப் போவதை முன்னதாகவே அறிந்து கொள்வது சாத்தியமா? “இது சாத்தியம்” என்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அதில் உண்மை இருக்குமோ? ஒரு மனிதனுடைய பிறந்த வேளையை வைத்துக் கொண்டு அவனுடைய வருங்காலத்தையெல்லாம் நிர்ணயிப்பது சாத்தியமாயிருக்குமோ? கிரகசஞ்சாரத்தைக் கொண்டு மனிதனுடைய வாழ்வை நிர்ணயிக்க முடியுமோ? இவ்வாறு ஜோசியத்தில் என்னுடைய புத்தி பிரவர்த்தித்தது. உடனே ஜோசிய புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். ஆஹா! எப்பேர்ப்பட்ட சாஸ்திரம்! எவ்வளவு நுட்பமான ஆராய்ச்சிகள்! எத்தகைய கணக்குத் திறமை! ஆகா! நமது பெரியோர்களுடைய அறிவுதான் எவ்வளவு ஆச்சரியமான் சக்தி வாய்ந்தது! கொஞ்சம் ஜோதிட சாஸ்திரத்தில் பயிற்சி ஏற்பட்டதும், என்னுடைய ஜாதகத்தையே பார்த்து ஆராய்ந்தேன். சீக்கிரத்தில் எனக்கு ‘நல்ல காலம்’ பிறக்குமென்று அதில் காணப்பட்டது. ஆனால், அந்த ‘நல்ல காலம்’ எப்படிப் பிறக்கப்போகிறது என்று மட்டும் தெரியவில்லை. ஏனெனில், ஜோசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதிலிருந்து உத்தியோகம் தேடுவதைக் கூட விட்டு விட்டேன். ஒரு நாள் திடீரென்று ஒரு யோசனை தோன்றிற்று. அன்றைய தினமே, எழும்பூரில் ஒரு வீட்டு மாடியை வாடகைக்குப் பேசி எடுத்துக் கொண்டேன். மறுநாள், அங்கே “பால ஜோசியர் பட்டாபிராமன் பி.ஏ.” என்ற போர்டு தொங்கவிட்டேன். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தேன். “பால ஜோசியம்; விருத்த வைத்தியம்” என்பதாக நமது தேசத்தில் ஒரு முதுமொழி வழங்கி வருகிறது. வைத்தியர்களுக்கு வயதாகியிருந்தால் நல்லது; ஏனெனில், வயதாக ஆக அவர்களுடைய அநுபவமும் அதிகமாயிருக்கும். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் அல்லவா? ஜோசியத்துக்கு மட்டும் பால்ய வயது சிலாக்கியம் என்று ஒரு நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. இது எதனால் என்று எனக்கு நன்றாய்த் தெரியா விட்டாலும் அந்த நம்பிக்கையை நான் உபயோகித்துக் கொண்டேன். இவ்வாறு, ஜோசியத்தின் மூலமாகவே எனக்கு நல்ல காலம் பிறந்தது. கடிதங்கள் வந்து குவியத் தொடங்கின. நேரிலும் பலர் வந்தார்கள். அவர்களுடன் பணமும் வரத் தொடங்கியது. ஐந்தாறு மாதத்துக்குள் எனக்கு ஒரு நிச்சயம் ஏற்பட்டது. அதாவது, இந்த உலகத்திலுள்ள மக்களையெல்லாம் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடலாமென்று தோன்றிற்று. ஒரு பிரிவினர், ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னொரு பிரிவினர் ஜோசியத்தில் நம்பிக்கையில்லாதவர்கள். நம்பிக்கை கொண்டவர்கள், அந்த நம்பிக்கை காரணமாக ஜோசியம் பார்த்தார்கள்; நம்பிக்கையில்லாதவர்கள், “அதையும் பரீட்சித்துப் பார்த்து விடலாமே?” என்று ஜோசியம் பார்த்தார்கள்! ஆகவே, ஜோசியம் பார்க்காதவர்கள் யாருமில்லையென்று ஏற்பட்டது. அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்பதற்காக ஜோசியம் கேட்டார்கள். தேர்தலில் ஜெயிக்கும், ஜெயிக்காது என்று முன்னால் தெரிந்துவிட்டால், எவ்வளவு நல்லது பாருங்கள்! எவ்வளவு பணம் மீதியாகும்? உத்தியோகஸ்தர்கள் ‘பிரமோஷன்’ ஆகுமா என்று ஜோசியம் பார்த்தார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் வருமா என்று கேட்டார்கள். குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர்கள் கூடத் தங்களுடைய ஜாதகப் பலன் சரியாயிருக்கிறதா, பணம் கட்டலாமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள். ஒரு பிரபல காங்கிரஸ்வாதி, தமக்கு இந்த வருஷம் சிறைக்குப் போக ஜாதகத்தில் இடமிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார். இவர் தம்முடைய ஜாதக பலனைக் கொண்டு, தேசீய இயக்கத்தின் போக்கையே நிர்ணயிக்க முயன்றார்! தம்முடைய ஜாதக பலனில் சிறைவாசம் போட்டிருந்தால், மகாத்மா சத்தியாக்கிரஹம் ஆரம்பிப்பார், இல்லாவிட்டால் மாட்டார் என்று அவர் எண்ணினார். ஒரு பிரபல வக்கீல் தம்முடைய ஜாதக ரீதியின்படி தமக்கு ஒரு மனைவிதானா, இரண்டு பேர் உண்டா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் காட்டினார். இப்படி, எத்தனையோ விநோதமான அநுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அந்த அநுபவங்களில் என்னுடைய வாழ்க்கையையே மாற்றியமைத்து, என்னை ஜோசியத் தொழிலையும் விடும்படி செய்த அநுபவத்தைத்தான் இப்போது சொல்லப்போகிறேன். ஒரு நாள் மாலை ஐந்து மணி இருக்கும். என்னுடைய அறைக்குள் ஒரு சிறு பையன் வந்தான். அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். முகம் குறுகுறுவென்று களை வடிந்து கொண்டிருந்தது. அவன் வாழ்க்கையில் மிக மேலான நிலைக்கு வரப் போகிறான் என்று ஜோசியம் சொல்வதற்கு ஜாதகம் பார்க்க வேண்டியதில்லை; முகத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம். “ஸார்! ஜோசியர் நீங்கள் தானா, ஸார்?” என்று கேட்டான். அவன் குரலில் ஒரு கனிவு இருந்தது. “ஆமாம், அப்பா! உனக்கு என்ன வேணும்?” என்றேன். “அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை; உங்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னாள்” என்றான். அவனுடைய முகத்தில் தோன்றிய சோகக் குறிக்கும், குரலில் தொனித்த கனிவுக்கும் எனக்குக் காரணம் தெரிந்தது. ஆனாலும், அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததற்காக நான் போய் என்ன பிரயோஜனம்? “நான் வைத்தியனில்லையே, அப்பா!” என்றேன். “வைத்தியத்துக்காக இல்லை, ஸார்! ஏதோ ஜாதகம் பார்க்க வேணுமாம்; அதற்காகத்தான். உங்களை அவசியம் வந்துவிட்டுப் போகச் சொன்னாள், ஸார்!” என்றான். உடனே நான் அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்தப் பையனுடன் கிளம்பினேன். “வீடு எங்கே இருக்கிறது, தம்பி!” என்றேன். “கிட்டத்தான் ஸார், இருக்கிறது. நான் அழைத்துக் கொண்டு போகிறேன்” என்றான் பையன். சாலையில் நடந்து கொண்டே “வீட்டில் அப்பா இல்லையா, தம்பி?” என்று கேட்டேன். “எங்க அப்பா செத்துப் போய்ட்டார், ஸார்! ஆறு வருஷம் ஆச்சு” என்றான். சற்றுப் பொறுத்து, “உனக்கு அண்ணா இருக்கிறாரா?” என்று கேட்டேன். “இரண்டு அண்ணா இருக்கா, ஸார்! ஒருத்தன் தான், ஆகாசப் படையிலே சேர்ந்திருக்கான். உங்களுக்குத் தெரியாதா, ஸார்?” என்றான். அவனுடைய குரலில் பயத்தோடு பெருமையும் கலந்திருந்தது. எழும்பூரிலிருந்து ஒரு பையன் ‘ஏர் பைலட்டாகச் சேர்ந்திருக்கிறான் என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். பிற்பாடு அவன் சீமைக்கு ’ராயல் ஏர் போர்ஸில்’ சேர்வதற்குப் போயிருக்கிறானென்றும் சொன்னார்கள். அவனுடைய தம்பி தான் இவன். அவன் தாயாரைத்தான் பார்க்கப் போகிறோமென்றதும் எனக்கு ஒருவிதப் பெருமை உண்டாயிற்று. ஜன நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமான சாலையில் அவர்கள் வீடு இருந்தது. வாசலில் மதிள் சுவர் தாண்டியதும் ஒரு சின்னஞ்சிறு தோட்டம், அதற்குப் பின்னால் வீடு. வீட்டு வாசலில் சின்னத் தாழ்வாரம் இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும், பையன், “இதோ நான் போய் அம்மாவிடம் சொல்கிறேன், ஸார்!” என்று கூறிவிட்டு உள்ளே போனான். வெளித் தாழ்வாரத்தில் கிடந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். அடுத்த நிமிஷம் உள்ளிருந்து யாரோ வந்த சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இளம் பெண் என் முன்னால் நின்றாள். முக ஜாடையிலிருந்து, அவள் பையனுடைய தங்கையென்று ஊகித்துக் கொண்டேன். ஆச்சரியம் நிறைந்த தன் பெரிய கண்களை அகல விரித்து அவள் என்னை நோக்கினாள். என்னுடைய நெஞ்சை என்னமோ செய்தது. இப்படி ஓர் இளம் பெண்ணுடன் நேருக்கு நேர் பார்த்துப் பேசி எனக்கு வழக்கம் கிடையாது. எனவே, கலக்கத்துடன் எழுந்து நின்றேன். “நீங்கள் தான் பால ஜோசியரா?” என்று அந்தப் பெண் கேட்டாள். உடனே, கொஞ்சம் தைரியம் வந்து, “ஆமாம்” என்றேன். அவளுடைய இதழ்களில் ஒரு விஷமச் சிரிப்பின் ரேகை காணப்பட்டது. “பால ஜோசியர் என்றால், பச்சைக் குழந்தையாயிருப்பீர்களாக்கும் என்று நினைத்தேன்!” நான் கொல்லென்று சிரித்துவிட்டேன். அவள் சட்டென்று தன் வாயைப் பொத்திக் கொண்டதும் என் சிரிப்பு நின்றது. அவள் இரகசியம் பேசும் குரலில், “எங்க அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. அவளுக்கு மன வருத்தம் உண்டாகும்படியாக நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. உங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்” என்றாள். என்னைக் கூப்பிட்ட காரணம் ஒருவாறு எனக்குப் புலப்படத் தொடங்கியது. மறுபடியும் அவள், “எங்கள் அண்ணா ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறான், தெரியுமோ, இல்லையோ? அவன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்வாள். ஒன்றும் ஆபத்து இல்லை என்று நீங்கள் சொல்லிவிட வேணும் தெரிகிறதா?” என்று மன்றாடும் குரலில் சொல்லி, என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் துளித்திருப்பதைக் கண்டேன். அந்தக் கண்ணீர்த் துளிகள் என் நெஞ்சைப் பிளந்தன. பையன் உள்ளேயிருந்து ஓடி வந்து, “அம்மா வரச் சொல்கிறாள், ஸார்!” என்றான். உள்ளே போனேன். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டபடியால் வெளிச்சம் வெகுவாக மங்கியிருந்தது. அது பழைய நாள் முறையில் கட்டி வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம் இப்படியிருந்தது. கூடத்தில், ஒரு நாடாக் கட்டில் போட்டிருந்தது. அதில் ஒரு அம்மாள், படுத்திருந்தவர், என்னைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். அவருக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒருவித பயபக்தி உண்டாயிற்று. (அடிக்கடி “ஒருவித” என்று சொல்கிறேனில்லையா? இந்த உணர்ச்சிகளெல்லாம் எனக்கு முற்றும் புதியவையானபடியால் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.) நான் அருகில் சென்றதும், “நீங்கள் ஏன் அம்மா எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள்” என்றேன். “பாதகமில்லை; நீங்கள் உட்காருங்கள்” என்று அந்த அம்மாள் கூறினார். கீழே விரித்திருந்த பாயில் நான் உட்கார்ந்ததும், அந்த அம்மாள், “ஒரு ஜாதகம் பார்ப்பதற்காக உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். எனக்கு உடம்பு சரியாயில்லை. இல்லாவிட்டால் நானே வந்திருப்பேன்” என்றார். “அதற்கென்ன, மாமி! எனக்கு வருவதற்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை” என்றேன். அந்த அம்மாள் தன் தலைமாட்டிலிருந்து ஒரு சிறு கைப்பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த ஒரு ஜாதகத்தை எடுத்தார். “பாலா! உள்ளே போய் ஹரிகேன் லாந்தர் ஏற்றி வாங்கிக் கொண்டு வா!” என்றார். அந்த வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். “வீட்டுக்காரனிடம் நாங்கள் எவ்வளவோ சண்டைபிடிக்கிறோம், இன்னமும் லைட் போட மாட்டேனென்கிறான்” என்றார் அந்த அம்மாள். “அதனாலென்ன, மாமி! ஹரிகேன் வெளிச்சமே போதும்” என்றேன். லாந்தர் வந்ததும், ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். வாசலில் எனக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நன்றாய் ஞாபகத்திலிருந்தது. ஜாதகம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றும் கெடுதலாய்ச் சொல்வதில்லையென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த ஜாதகத்தில் கெடுதலாக ஒன்றுமேயில்லை! எவ்வளவோ கவனமாக ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்த்தேன். அது ஒரு சாதாரண ஜாதகம். நன்மையோ, கெடுதலோ, பிரமாதமாக ஒன்றுமில்லை. முக்கியமாக, இந்த வருஷத்தில் விசேஷ சம்பவம் எதுவும் ஜாதக ரீதிப்படி நேர்வதற்கில்லை. எனக்கு இன்னது சொல்வதென்று தெரியவில்லை. உள்ளது உள்ளபடி “ஒன்றுமேயில்லை” என்றால், அந்த மாமிக்கு நம்பிக்கை உண்டாகாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்துப் போகச் சொல்லி விடலாமல்லவா? அவர் என்னைப் பற்றி அம்மாதிரி அபிப்பிராயங் கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, கொஞ்சம் யோசனை செய்து ’ரொம்ப உயர்ந்த ஜாதகம் அம்மா! இந்த மாதிரி ஜாதகம் சாதாரணமாய்ப் பார்க்க முடியாது. இந்த வருஷத்திலே ஒரு கண்டம் இருக்கிறது. ஆனால் ஆபத்து ஒன்றும் வராது, நிச்சயம். சுபகிரஹங்களின் சக்தி பலமாய் இருக்கிறது" என்றேன். என்னுடைய பேச்சின் பாதியிலேயே அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை ஏற்பட்டதைப் பார்த்தேன். நான் பேசி முடித்ததும் அது சிரிப்பாக மாறிற்று. பலவீனத்தினால், சிரிப்பு இருமலில் முடிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ தப்புப் பண்ணி விட்டோ ம் என்று மட்டும் உணர்ந்தேன். “இப்படித்தான் நீங்கள் எல்லாருடைய ஜாதகமும் பார்த்துச் சொல்கிறதா?” என்று அந்த மாமி கேட்டபோது, நான் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து மழுப்பப் பார்த்தேன். அவர் விடவில்லை “வாசலில் வந்து பத்மா உங்களிடம் என்ன சொன்னாள்? ஒன்றும் ஆபத்தில்லையென்று சொல்லச் சொன்னாளா? அவள் அங்கு அவசரமாய் ஓடி வந்தபோதே எனக்குத் தெரியும்” என்றார். நான் மௌனமாயிருந்தேன். “பத்மா! இங்கே வா!” என்று மாமி கூப்பிட்டாள். பத்மா, வெண்ணெய் திருடிய கிருஷ்ணன் முகத்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு வந்தாள். “ஏன் அம்மா” என்று பரிவாகக் கேட்டாள். “உனக்கு எத்தனை வயது இப்போது?” “புருஷர்களிருக்கும் போது ஸ்திரீகள் வயதைச் சொல்லலாமா அம்மா?” என்றாள் பத்மா குறும்புச் சிரிப்புடன். “பாதகமில்லை, சொல்லு!” “பதினேழு வயது.” “எனக்கெத்தனை வயது?” “ஐம்பத்திரண்டு வயது.” “உன்னை விட எனக்கு முப்பத்தைந்து வயது அதிகமாயிற்றே! என்னைக் காட்டிலும் சமத்து நீயென்று நினைத்துக் கொண்டு காரியம் செய்யலாமா?” என்றார். பத்மா என்னைக் கோபமாய்ப் பார்த்தாள். “அவர் பேரில் குற்றமில்லை, பத்மா! சாமர்த்தியமாய்த்தான் பொய் சொல்லப் பார்த்தார். ஆனால் ஜாதகமே வேறேயாயிருந்தால், அவர் என்ன செய்வார்? உன் அண்ணா ஜாதகத்தைப் பார்க்க இவரைக் கூப்பிடவில்லை, பத்மா! அதைப் பார்த்து இப்போது என்ன ஆகப் போகிறது? உன் கல்யாணத்துக்காக வந்திருக்கும் வரன் ஜாதகம் இது” என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பத்மாவைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். மாமி மறுபடியும், “நீ போ, பத்மா!” என்றார். பத்மா மாடிப் படிகளின் மேல் குதித்துக் கொண்டு ஏறினாள். அவள் போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மாடித் திருப்பத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். கண்களை ஒரு தடவை சிமிட்டு, தலையை நாலு தடவை இப்படியும் அப்படியும் அசைத்தாள். பிறகு ஓடிப் போனாள். அந்த தலையசைத்தலுக்கு என்ன அர்த்தம்? “ஜாதகப் பொருத்தம் சரியாயில்லை” யென்று சொல்லச் சொல்கிறாளா? பிறகு நான் பத்மாவின் அம்மாவைப் பார்த்து, “நான் ஏமாந்துதான் போனேன். உங்களையும் ஏமாற்றப் பார்த்தேன். தயவு செய்து மன்னிக்க வேண்டும்” என்றேன். “இப்போது சரியாய்ப் பார்த்துச் சொல்லுங்கள்” என்றார் பத்மாவின் தாயார். இதில் ஒன்றும் எனக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. முன்னமே நான் சொன்னதுபோல, அந்த ஜாதகம் ரொம்ப சாதாரண ஜாதகம் விசேஷம் ஒன்றுமே கிடையாது. பத்மாவை நான் பார்த்து அரை மணிக்கு மேல் ஆகவில்லையெனாலும், “அவளுக்குத் தகுந்த வரனில்லை” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்படிப் பட்டவர்த்தனமாய் அவள் தாயாரிடம் சொல்லவில்லை. குறிப்பாகத் தெரியப்படுத்தினேன். மேலும், “இந்த ஜாதகத்திற்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகுமென்று தோன்றவில்லையே” என்றும் சொல்லி வைத்தேன். இந்த ஆராய்ச்சியின் போது, பத்மாவின் தாயாருக்கு ஜோசியம், ஜாதகம் பார்த்தல் முதலியவைகளைப் பற்றி நல்ல பரிச்சயமுண்டென்று தெரிந்தது. இன்னும், அவர் உயர்ந்த படிப்பும், உலக ஞானமும் உள்ளவரென்றும் தெரிந்து கொண்டேன். “என் தலையில் இந்தப் பெரிய பொறுப்பைச் சுமத்திவிட்டு அவர் போய் விட்டார். இவளுடைய தமையன்கள் தலைக்கு ஒரு போக்காயிருக்கிறார்கள். எனக்கோ நாளுக்கு நாள் உடம்பு நன்றாயில்லை. இந்தப் பெண்ணுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டால், என் மனம் நிம்மதியடையும். தகுந்த வரன் கிடைக்கமாட்டேனென்கிறது. ஒன்று சரியாயிருந்தால், இன்னொன்று சரியாயில்லை” என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்டார். “உங்களுடைய பெண்ணுக்கு தகுந்த வரனாய்க் கிடைப்பது கஷ்டந்தான்” என்று நான் சொன்னேன். சொன்னவுடனே, ஏதாவது பிசகாய்ச் சொல்லி விட்டோ மோ என்று சந்தேகம் வந்துவிட்டது. “இன்னும் ஏதாவது பார்க்க வேணுமா, நான் போகலாமா, மாமி!” என்று கேட்டேன். “இன்றைக்கு நாழிகையாகிவிட்டது. இன்னொரு நாள் வருகிறீர்களா? என் பிள்ளைகளின் ஜாதகத்தையும் காட்டுகிறேன்” என்றார். “கட்டாயம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, நான் எழுந்து சென்றேன். நான் வாசல் பக்கம் போய், மதில் சுவரைத் தாண்டியதும், பின்னால், “ஸார், ஸார்” என்று சத்தம் கேட்டது. பாலன் நின்று கொண்டிருந்தான். “கொஞ்சம் இருக்கச் சொல்கிறா, ஸார்!” என்றான். திரும்பிப் போனேன். அதற்குள் பத்மா வந்து தன் கையிலிருந்த ஏதோ ஒன்றைப் பாலனிடம் கொடுத்து, என்னிடம் கொடுக்கச் சொன்னாள். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. நான் அதை வாங்கி மறுபடியும் பாலனுடைய சட்டைப் பையில் போட்டுவிட்டு, “இன்னொரு நாளைக்கு வரப்போகிறேன். அப்போது வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனேன். மறுபடியும் மதில் வாசலைத் தாண்டும் போது திரும்பிப் பார்த்தேன். பத்மா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் நான் திரும்பிப் பார்க்காமலே சென்றேன். ஆனால், பத்மாவின் கண்களும், முகமும் என் மனத்தை விட்டகலவில்லை. இது எனக்கு ஒரு புதிய அநுபவமாயிருந்தது. ஒரு பெண்ணின் கண்களுக்கு அவ்வளவு சக்தி உண்டென்று அதற்கு முன் நான் நினைத்ததேயில்லை. மறுநாள் அந்தக் குடும்பத்தைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். பத்மாவின் தகப்பனார் பெரிய உத்தியோகத்தில் இருந்தாரென்றும், ஐந்து வருஷத்துக்கு முன்னால் இறந்து போனாரென்றும் அறிந்தேன். அதற்குப் பிறகு பாகீரதி அம்மாள் எழும்பூரில் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செட்டாகக் குடித்தனம் பண்ணி, குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தாள். பையன்கள் இரண்டு பேரும் பி.ஏ.பரீட்சை தேறினார்கள். ஒருவன் ஆகாச விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டு சில மாதங்களுக்கு முன்புதான் 800 ரூபாய் சம்பளத்தில் ‘பைலட்’ வேலையில் அமர்ந்தான். அப்போது ஊரெல்லாம் அவனுடைய சாமர்த்தியத்தையும் அதிர்ஷ்டத்தையும் புகழ்ந்து கொண்டார்கள். பிறகு யுத்தம் வந்தது. கே. ராமஸ்வாமி பிரிட்டிஷ் ஆகாசப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாயும், சீக்கிரம் சீமைக்குப் போகிறதாயும் பத்திரிகைகளில் கொஞ்ச நாளைக்கு முன் பிரசுரமாகியிருந்தது. அவனுடைய சகோதரன் கிருஷ்ணசாமி ஏதோ ஒரு அமெரிக்க வியாபாரக் கம்பெனியில் ‘டிராவலிங் ஏஜெண்ட்’ என்று தெரிந்தது. இந்தியர்களுக்குள் ஆகாசப் படையில் சேர்ந்தவர்கள் அப்போது வெகு சிலரேயாதலால், மேற்சொன்ன விவரங்கள் எல்லாம் அநேகம் பேருக்குத் தெரிந்திருந்தன. இப்படியாகப் பிரசித்தி பெற்றிருந்த குடும்பத்திலேதான் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் சாயங்காலம் மறுபடியும் அவர்கள் வீட்டுக்குப் போனேன். வாசற்படியில் வழி பார்த்து நின்றவள் போல் பத்மா நின்றாள். “எங்கள் அம்மாவுக்கு என்னமோ உங்களை ரொம்பப் பிடித்துப் போயிருக்கிறது. முந்தா நாளும் நேற்றும் நீங்கள் ஏன் வரவில்லையென்று கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று மறுபடியும் பாலனை அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்” என்றாள். உள்ளே சென்றேன். பாகீரதி மாமி முன் போலவே நாடாக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து உட்கார முயன்றார். “ஏன், மாமி நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லையா? யாராவது டாக்டர் வந்து பார்க்கிறாரா?” என்று கேட்டேன். “என் வியாதி மனோ வியாதிதான். அதை எந்த டாக்டராலும் தீர்க்க முடியாது. இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிட்டேனானால், மனது கொஞ்சம் நிம்மதியடையும்” என்றார். அப்போது பத்மா, “போ, அம்மா! உனக்கு எப்போதும் இதுதான் வேலை. இந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவேயில்லை” என்றாள். “உன்னை யார் இங்கே கூப்பிட்டார்கள்? நீ போ மாடிக்கு” என்றார் பாகீரதி மாமி. “பாலா, வாடா நாம் மாடிக்குப் போகலாம். அம்மா ஏதாவது உளறிண்டு கிடக்கட்டும்” என்று பத்மா சொல்லிவிட்டு, பாலனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள். மாமியைப் பார்த்து, “அன்றைக்கு உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தைக் காட்டுவதாய்ச் சொன்னீர்கள் அல்லவா?” என்றேன். அவர் கைப்பெட்டியை திறந்து ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார். அதைக் கவனமாக ஆராயத் தொடங்கினேன். ஆரம்பத்திலேயே என் நெஞ்சு துணுக்கென்றது. அது ஒரு விசேஷ ஜாதகந்தான். இருபது வயதில் பளிச்சென்று ஒரு பிரகாசம் உண்டாயிற்று. இருபத்திரண்டாவது வயதில் அது திடீரென்று மங்கி அடியோடு மறைந்தது. பாகீரதி மாமியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவரைப் பார்த்து, “ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறானே, அந்தப் பையனின் ஜாதகந்தானே இது?” என்றேன். “ஆமாம்.” நான் மிகுந்த தயக்கத்துடன், “கண்டம் பலமாய்த் தானிருக்கிறது. ஆனாலும் பயமில்லை. ஆயுள்காரகன் நல்ல இடத்தில் இருக்கிறானல்லவா?” என்றேன். “அது எப்படி?” என்று கேட்டார். நான் ஏதேதோ சொல்லிப் பார்த்தேன். அதற்கெல்லாம் அவர் ஆட்சேபணை சொல்லி வந்தார். கடைசியில், நான், “இதிலெல்லாம் என்ன அம்மா இருக்கிறது? யார் அவ்வளவு சரியாக ஜாதகம் கணித்து வைத்திருக்கிறார்கள்? சாஸ்திரத்தைத் தான் நாம் என்ன பூராவும் கண்டு விட்டோ மோ? ஜோதிடம் பெரிய சமுத்திரம். ஒரு விநாடியை ஒன்பது அம்சமாகப் பிரித்தால், ஒவ்வொரு அம்சத்தில் பிறந்ததற்கும் தனித் தனிப் பலன் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படியெல்லாம் பிறந்த வேளையை நிர்ணயித்து யார் ஜாதகம் கணிக்கிறார்கள்?” என்றேன். பிறகு அவர் கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பலாமென்று “ஆமாம், உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்கிறார் அல்லவா? அவருடைய ஜாதகம் இருக்கிறதா?” என்று கேட்டேன். “அவனுக்கும் இதே ஜாதகந்தான்” என்றார். ஒரு நிமிஷம் எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்புறம், ஒரு எண்ணம் தோன்றவே, “என்ன சொல்கிறீர்கள்? இரண்டு பேரும்…” என்று தயங்கினேன். “ஆமாம், ராமுவும் கிருஷ்ணனும் இரட்டைப் பிள்ளைகள். இரண்டு நிமிஷம் முன் பின்னாகப் பிறந்தார்கள்” என்றாள் பாகீரதி மாமி. எனக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம் உண்டாயிற்று. ஏதோ ஒரு ஆறுதலும் ஏற்பட்டது. அந்த விஷயத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க, பழைய மனச்சோர்வு மாறி, உற்சாகம் வளர்ந்தது. "பார்த்தீர்களா அம்மா! இதிலிருந்தே தெரியவில்லையா நம்முடைய ஜோசிய ஆராய்ச்சியெல்லாம் எவ்வளவு அரை குறையானதென்று? இரண்டு பேருக்கும் ஒரே ஜாதகம். ஆனாலும் இரண்டு பேருடைய போக்கும் முழுதும் வித்தியாசமாயிருக்கிறதல்லவா? ஒருவன் யுத்த களத்துக்குப் போக, இன்னொருவன் இங்கே சௌக்யமாயிருப்பானேன்? இவன் எப்போது இங்கே சௌக்கியமாயிருக்கிறானோ, அவனும் சௌக்யமாகத் திரும்பி வந்து சேருவான். ஜாதகத்தைக் கொண்டு வீணாக மனத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். பகவான் அப்படியெல்லாம் உங்களைச் சோதிக்க மாட்டார்" என்றேன். என்னுடைய அனுதாபம் நான் எதிர்பார்த்ததற்கு நேர் எதிர்விதமான பலனை அளித்தது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பிற்று. நல்ல வேளையாக, இச்சமயத்தில் மாடியிலிருந்து பாலன், “அம்மா! அண்ணா வருகிறான்” என்று கூவிக் கொண்டு கீழே ஓடி வந்தான். மாமி சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பாலன் வாசற்புறம் ஓடிச் சற்று நேரத்துக்கெல்லாம் அண்ணாவின் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்தான். “கிருஷ்ணா! வா!” என்றார் மாமி. கிருஷ்ணசாமி ஸுட்டு தரித்து, தொப்பியணிந்து கொண்டிருந்தான். தொப்பியை எடுத்துச் சுவரிலிருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்தான். “ஏனம்மா, உடம்பு இன்னும் சரியாகவில்லையா? டாக்டரை அழைத்துக் காட்டலாமென்றால், கேட்கிறதில்லை. தனக்காகவும் தெரியாது. சொன்னாலும் கேட்பதில்லையென்றால், அப்படிப்பட்டவர்களுடன் என்ன செய்கிறது” என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, சட்டென்று என்னைப் பார்த்து, “இந்தப் பேர்வழி யார்? யாராவது புது ஜோசியரோ?” என்று கேட்டான். அதற்கு மாமி “ஆமாம், கிருஷ்ணா! இவர் ஜோசியர் தான். பால ஜோசியர் பட்டாபிராமன் பி.ஏ. என்று பத்திரிகையில் விளம்பரம் வந்தது. நாம் கூட ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தோமல்லவா?” என்றார். கிருஷ்ணசாமி என்னை அருவருப்புடன் பார்த்தான். “ஏன் சார்! உங்களுக்கு வேறு வேலை ஒன்றும் கிடைக்கவில்லையோ? ஜோசியத்தில் புகுந்தீர்கள்?” என்றான். எனக்குக் கோபமாய் வந்தது. ஆனாலும், மாமியின் நல்ல குணத்தை நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொண்டேன். வேடிக்கையாகப் பதில் சொல்ல எண்ணி, “பேஷ்! என்னை விடப் பெரிய ஜோசியராயிருக்கிறீரே நீர்? வேறு வேலை ஒன்றும் கிடைக்காதபடியால்தான் உண்மையில் நான் ஜோசியத் தொழில் ஆரம்பித்தேன். இப்போது வேலை நிறைய இருக்கிறது” என்றேன். கிருஷ்ணசாமி சிரித்துக் கொண்டு, “நிஜம் சொல்கிற ஜோசியரை நான் இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்” என்றான். பிறகு, “போட்டும்! இந்த யுத்தம் எப்படி முடியும். சொல்லும் பார்க்கலாம். உமது ஜோசியத்தில் அது வருகிறதா?” என்று கேட்டான். “இங்கிலீஷ்காரன் தான் ஜயிப்பான்” என்றேன் நான். “எப்படிச் சொல்கிறீர்? இங்கிலாந்தின் ஜாதகம் உம்மிடம் இருக்கிறதோ?” “எனக்கு மனுஷ்யர்களுடைய ஜாதகந்தான் பார்க்கத் தெரியும். தேசங்களின் ஜாதகம் பார்க்கும் வித்தை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்துத்தான் சொல்கிறேன்.” “ரொம்ப அழகுதான். பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் வேதவாக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் போலிருக்கிறது” என்று சொல்லி விட்டு, மாமியைப் பார்த்து, “ராமு சீமைக்குப் போய்விட்டானே, தெரியுமோ இல்லையோ, அம்மா!” என்று கேட்டான். “தெரியும். தந்தி வந்தது. பத்திரிகையிலும் பார்த்தேன்” என்றார் மாமி. “உளுத்துப் போன இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இவன் போய்த்தான் காப்பாற்றப் போகிறான்!” என்றான் கிருஷ்ணசாமி. இதற்குள், பத்மாவும் மாடியிலிருந்து கீழே வந்து சேர்ந்தாள். அவள் ராமுவின் கட்சி பேசத் தொடங்கினாள். இங்கிலீஷ்காரர்கள் தான் நல்லவர்கள் என்றும் அவர்கள் தான் ஜயிக்கவேண்டுமென்றும் சொன்னாள். இதனால் கிருஷ்ணசாமியின் கோபம் அதிகமாயிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலும் அதற்கு சேவை செய்யப் போயிருக்கும் ராமுவின் மேலும் தனக்குள்ள கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தான். இடையில், “நீர் என்ன கதர் கட்டியிருக்கிறீரே, காங்கிரஸ் வாதியோ?” என்று கேட்டான். நான் “இல்லை” யென்று மறுத்ததும், காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் “டோ ஸ்” கொடுக்க ஆரம்பித்தான். சுத்தக் கோழைகள், பயங்காளிகள், உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டு ஜான் புல்லின் காலில் விழுகிறவர்கள் என்றெல்லாம் திட்டினான். இந்தியா தேசத்துக்கு மோக்ஷம் இந்தக் கையாலாகாத காங்கிரஸ் தலைவர்களால் வரப் போகிறதில்லையென்றும், அதற்கு வேலை செய்கிறவர்கள் வேறே இருக்கிறார்களென்றும், அவர்கள் தக்க சமயத்தில் வெளிக் கிளம்பிப் புரட்சியை நிலை நாட்டுவார்களென்றும், ’மார்க்ஸீய’த்தினால் தான் உலகத்துக்கே விமோசனம் வரப்போகிறது என்றும் சரமாரியாகப் பொழிந்தான். அன்றிரவு எனக்கு நன்றாய்த் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த அதிசயமான குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் பற்றி மாறி மாறி எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்களுக்குள்ளெல்லாம் பத்மாவின் குதூகலமும் குறும்பும் நிறைந்த முகந்தான் அதிகமாக என் மனக் கண் முன் வந்து கொண்டிருந்தது. அந்த அழகிய முகத்தில் கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகும் காலம் அவ்வளவு சீக்கிரத்தில் வரப்போகிறதென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. இன்னொரு நாள் சாயங்காலம் பாலன் வந்து என்னை அம்மா அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். உடனே நான் கிளம்பினேன். அப்போது நன்றாய் அஸ்தமித்துவிட்டது. வானத்தில் பூரண சந்திரனைக் கண்ட கடலைப் போல் என் உள்ளமும் கொந்தளித்தது. பத்மாவைப் பார்க்கப் போகிறோமென்ற எண்ணந்தான் அதற்கு காரணமென்று சொல்ல வேண்டியதில்லையல்ல்வா? அன்று மாமி கட்டிலில் படுத்திருக்கவில்லை. கீழே தரையில் உட்கார்ந்திருந்தார். “உடம்பு கொஞ்சம் தேவலை போலிருக்கிறதே!” என்றேன். “கொஞ்சம் சுமாராயிருக்கிறது” என்றார் மாமி. “இந்த வீட்டில் இன்னும் ஏதாவது மாறுதல் இருக்கிறதா, பாருங்கள்” என்றாள் பத்மா. சுற்றுமுற்றும் பார்த்தேன். புதிதாக மின்சார விளக்கு போட்டிருந்தது சட்டென்று தெரிந்தது. “ஓகோ! விளக்குப் போட்டிருக்கிறதே!” என்றேன். பத்மாவும் பாலனும், கூச்சல் போட்டுக் கொண்டு, விளக்குகளை ஏற்றியும் அணைத்தும் விளையாடத் தொடங்கினார்கள். “நீங்கள் என்ன பச்சைக் குழந்தைகளா? சும்மா இருங்கள்” என்றார், அவர்களுடைய தாயார். பிறகு என்னைப் பார்த்து, “உங்களை ஒரு காரியத்துக்காக அழைத்து வரச் சொன்னேன். ஒரு ரேடியோ வேண்டும். பார்த்து நல்ல ஸெட்டாக வாங்கித் தர வேண்டும். லண்டன் செய்திகள் நன்றாய்க் கேட்கும் ஸெட்டாய் இருக்க வேண்டும்” என்றார். மாமி அடிக்கடி வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லையே என்று குறைப்பட்டதன் காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ரேடியோ வைக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. அந்த ஆசையின் காரணமும் எனக்குப் புலப்படாமல் இல்லை. பிள்ளை சீமைக்குப் போயிருக்கிறபடியால், அவ்விடத்துச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். “அதற்கென்ன? பேஷாகப் பார்த்து நல்ல ஸெட்டாய் வாங்கிக் கொண்டு வருகிறேன். நான் கூட அடிக்கடி வந்து கேட்கலாமல்லவா?” என்றேன். “கூடவே கூடாது” என்றாள், தூரத்திலிருந்து பத்மா. “நீங்களே எல்லாவற்றையும் கேட்டுவிட்டால், பிறகு நாங்கள் என்னத்தைக் கேட்கிறது?” என்று விஷமமாகச் சொன்னாள். “அவள் கிடக்கிறாள். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். தினந் தினம் வந்து, யுத்தச் செய்திகளைக் கேட்டு எனக்குத் தமிழில் சொல்ல வேண்டும்” என்றார் மாமி. பிறகு எல்லாரும் மாடிக்குப் போய், வெண்ணிலாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பாகீரதி மாமி தம்முடைய பிள்ளைகளைப் பற்றியே பேசினார். பேச்சு வேறு எந்தப் பக்கம் போனாலும், மறுபடியும் தமது பிள்ளைகளிடமே அவர் கொண்டு வந்து விட்டார். குழந்தை வயதில் அவர்கள் எவ்வளவு சமத்தாயிருந்தார்கள் என்று சொன்னார். இரட்டைப் பிள்ளை பெற்றது பற்றி ஊரார் தம்மைப் பரிகாசம் செய்ததையும், தாம் வெட்கப்பட்டதையும், ஆனால் குழந்தைகளைச் சேர்ந்தாற்போல் பார்க்கும்போதெல்லாம் தம் மனத்திற்குள் உண்டான சந்தோஷத்தையும் சொன்னார். சின்ன வகுப்புகளில் அவர்கள் ஒரே பள்ளிக் கூடத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தார்களாம். கொஞ்சம் வயதான பிறகு அவர்களுக்கு வெட்கம் உண்டாகி வெவ்வேறு பள்ளிக் கூடங்களுக்குப் போய் விட்டார்களாம். படிப்பில் கெட்டிக்காரர்களாயிருந்தது போலவே, எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர்களாம். வாயைப் போல் கையாம். “ஆனால் பிடிவாதம் மட்டும் ரொம்ப அதிகம். அவரவர்கள் பிடித்ததையே சாதிப்பார்கள். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அன்று மாதிரிதான் இன்றும் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்” என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்ட போது, எனக்கு அந்தப் பிள்ளைகள் மீது வெகு கோபம் வந்தது. “எத்தகைய மூர்க்கர்கள்! இப்படிப்பட்ட தாயாரை சந்தோஷமாய் வைத்திருக்க அவர்கள் கொடுத்து வைக்கவில்லையே! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்னும் பழமொழி எவ்வளவு சரியாயிருக்கிறது!” என்று எண்ணினேன். மறுநாளே நல்ல ரேடியோ ஸெட்டு ஒன்று வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தேன். ரேடியோக் கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து, ‘ஏரியல்’ முதலியவை அமைத்து விட்டுப் போனார்கள். “ராமு மட்டும் இருந்தால், இதெல்லாம் அவனே செய்து விடுவான். ஆளையே கூப்பிட மாட்டான்” என்றார் மாமி. அப்படிச் சொல்லும் போதே அவருடைய தொண்டையை அடைத்துக் கொண்டது. தாயின் அன்பு என்பது எவ்வளவு மகத்தானது என்பது எனக்கு மேலும் மேலும் நன்றாய்த் தெரிந்தது. தாயின் அன்பை அறியாத என்னுடைய வாழ்க்கை எவ்வளவு சூன்யமானது என்றும் உணர்ந்தேன். ரேடியோ வைத்தது முதல், நான் தினந்தோறும் மாலை நேரத்தில் அவர்கள் வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். பாதி நாள் அங்கேயே சாப்பிட்டு விடுவேன். இராத்திரி 9.30க்கு லண்டன் ரேடியோச் செய்திகள் கேட்டு மாமிக்குச் சொல்லிவிட்டுப் பிறகுதான் திரும்புவேன். இப்படி மூன்று, நாலு மாதங்கள் சென்றன. நாள் போவதே தெரியவில்லை. என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக இதற்கு முன் நான் இருந்தது கிடையாது. உலகமே மோகனம் பெற்று விளங்கியது. சந்திரன் புதிய ஒளியுடன் பிரகாசித்தான். தென்றல் புதிய இனிமையுடன் வீசிற்று. அந்தி வானம் முன்னெப்போதுமில்லாத அழகு பெற்று விளங்கிற்று. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் என்னைக் கண் சிமிட்டிக் கூப்பிட்டுத் தங்கள் காதல் கதைகளை என்னிடம் அந்தரங்கமாகக் கூறின. புஷ்பங்களின் ஸுகந்தம் என்னைப் பரவசப்படுத்திற்று. பட்சிகளின் கானம் அமுதகீதமாக என் செவியில் பாய்ந்தது. மனுஷர்கள் யாரைப் பார்த்தாலும், நல்லவர்களாகவும் சிநேகத்துக்கு உரியவர்களாகவும் தோன்றினார்கள். ஆனாலும், இத்தகைய ஆனந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்ற பயம் மட்டும் எனக்கு அடிக்கடி தோன்றும். ஏதோ ஒரு பெரிய விபத்து வரப்போகிறதென்று திகிலுடன் கூடிய உணர்ச்சி உள்ளத்தின் அடிவாரத்தில் இருந்து கொண்டேயிருந்தது. ரேடியோவில் தினம் லண்டன் செய்திகள் தொடங்கும்போது, மாமியின் முகத்தில் ஆவல் ததும்பிக் கொண்டிருக்கும். செய்திகள் முடிந்ததும் அந்த முகத்தில் ஏமாற்றம் காணப்படும். மாமி என்ன எதிர்பார்த்தார்! ரேடியோவில் பிள்ளையைப் பற்றியச் செய்தி வருமென்றா? இது என்ன பைத்தியக்கார ஆசை! இப்படி எண்ணிய நான் சீக்கிரத்திலேயே என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஒரு நாள் லண்டன் பி.பி.ஸி. செய்தி அறிவிப்பின் கடைசியில், “நாளைய தினம் ஒரு விசேஷ சம்பவம். வழக்கம் போல் செய்திகள் முடிந்ததும், ராயல் ஆகாசப் படையைச் சேர்ந்த இந்திய விமானி ஒருவர் தமது அநுபவங்களைச் சொல்வார்” என்று அறிவிக்கப்பட்டது. இது எனக்கே ஒருவிதப் பரபரப்பை அளித்தது. மாமிக்குக் கேட்கவா வேண்டும்? இரவில், அவர் தூங்கவேயில்லையென்றும், பத்மாவை அடிக்கடி எழுப்பி, “ஒருவேளை ராமு பேசுவானோ?” என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் மறுநாள் அறிந்தேன். அன்று மாலை மாமி ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாகக் கழிக்கிறார் என்று நன்கு தெரிந்தது. கடைசியாக, 9.30 அடித்தது. லண்டன் செய்தியும் ஆரம்பமாயிற்று. பத்து நிமிஷம் செய்திகள் படித்தானதும், “இப்போது இந்திய ஆகாச விமானி பேசுவார்” என்று அறிவிக்கப்பட்டது. உடனே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ஓர் இந்திய இளைஞனின் குரல் பேசத் தொடங்கியது. ஆகா! அப்போது மாமியின் முகத்தைப் பார்க்கணுமே! ‘கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசுப்போல’ என்ற பாட்டின் அர்த்தம் அதற்கு முன்னால் எனக்கு விளங்கியதேயில்லை. அப்போதுதான் விளங்கிற்று. பேச்சு முடியும் வரையில் மாமி கண் கொட்டாமல் ரேடியோவையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உயிரற்ற கருவியில், பிள்ளையின் முகத்தையே அவர் பார்த்தது போலிருந்தது. பேச்சு முடிந்ததும், கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தழதழத்த குரலில், “குழந்தை என்ன சொன்னான்?” என்று கேட்டார். நான் சொன்னேன். முதலில் லண்டன் நகர் மீது ஜெர்மன் விமானங்கள் வந்து கண்ட இடத்தில் குண்டு போடும் அக்கிரமத்தை அவன் விவரித்தான். பிறகு, லண்டன் ஜனங்கள் ஸ்திரீகளும் குழந்தைகளும் உள்பட எவ்வளவு தீரத்துடன் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினான். மகாபாரத யுத்தத்தைப் போல் இதுவும் தர்ம யுத்தம் தானென்றும் சொல்லி, இப்பேர்ப்பட்ட யுத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத் தனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பாராட்டினான். கூடிய சீக்கிரத்தில் பகைவர்களுடைய நாட்டுக்குச் சென்று பழிக்குப் பழி வாங்கும் விருப்பம் தனக்கு அபரிமிதமாக இருப்பதாகவும், அதை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான். கடைசியாக, இந்திய மக்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த சண்டை சச்சரவுகளையெல்லாம் மறந்து விட்டு மனித நாகரிகத்தைக் காப்பதற்காகப் போராடும் பிரிட்டனுக்குப் பூரண ஒத்தாசை செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்டு பேச்சை முடித்தான். இதையெல்லாம் நான் தெரிவித்தபோது, மாமி, பத்மா, பாலன் எல்லாரும் ராமுவையே நேரில் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, சற்று நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது. பத்மா, திடீரென்று, “ஏனம்மா, இந்தப் பேச்சைக் கிருஷ்ணசாமி கேட்டிருப்பானா, அம்மா!” என்றாள். மாமி பதில் சொல்லவில்லை. “கேட்டிருந்தால் கிருஷ்ணசாமிக்குக்கூட மனமும் மாறிப் போயிருக்கும்” என்றாள் பத்மா. மறுநாள் தான் அவர்கள் வீட்டுக்குப் போன போது, மாமி நாடாக் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டேன். பழையபடி அவருக்கு உடம்பு அசௌகர்யம் என்று தெரிந்தது. “அண்ணாவிடமிருந்து வந்த கடிதத்தை வாசித்துக் காட்டு” என்று பத்மாவிடம் சொன்னார். “எந்த அண்ணா?” என்று கேட்டேன். “ராமு அண்ணாவிடமிருந்துதான். இன்றையத் தபாலில் வந்தது. ஆனால் போஸ்டு பண்ணி ஒரு மாதத்துக்கு மேலாச்சு” என்றாள் பத்மா. பிறகு, கடிதத்தை வாசித்தாள். கிட்டத்தட்ட ரேடியோவில் பேசியது போலவே கடிதத்தின் முற்பகுதி இருந்தது. கடைசியில், பின்வருமாறு உருக்கமாக எழுதியிருந்தான். "அம்மா! கூடிய சீக்கிரத்தில் நான் பகைவர்களுடைய தேசங்களுக்கு விமானத்தில் செல்வேன். ஒரு நாளைக்குத் திரும்பி வராமல் போனாலும் போவேன். சர்க்கார் உனக்கு சமாசாரம் தெரிவிப்பார்கள். தாயாருக்குப் பிள்ளை செய்யவேண்டிய கடமை ஒன்றும் நான் செய்யவில்லை. இருந்தாலும், உலகத்தில் தர்மத்தையும் நாகரிகத்தையும் காப்பாற்றுவதற்காக உன் பிள்ளை உயிரை விட்டான் என்றால், அது உனக்குப் பெருமை இல்லையா, அம்மா? தெரிந்தோ, தெரியாமலோ உன மனதுக்கு வருத்தமுண்டாகும்படியான காரியங்கள் எவ்வளவோ நான் செய்திருப்பேன். அதற்காகவெல்லாம் என்னை நீ மன்னித்து விட வேண்டும். சிறு பிராயத்தில் என்னுடைய பிடிவாதங்களையெல்லாம் நீ பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றி வளர்த்தாய். இன்னமும் நான் உனக்குக் குழந்தைதானே? இப்போதும் என்னுடைய பிடிவாதத்தை மன்னித்து விடு. கிருஷ்ணசாமி, பத்மா, பாலன் எல்லாருக்கும் என்னுடைய அன்பைத் தெரியப்படுத்து, நான் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறேன். அவர்களுக்கு நான் கொடுத்த தொந்தரவுகளையெல்லாம் மறந்து மன்னித்துவிடும்படி சொல்லு. இப்படிக்கு உன் பிடிவாதக்காரப் பிள்ளை ராமு. பத்மா இப்படி வாசித்து முடித்தபோது, அவர்கள் மூன்று பேர்களுடைய கண்ணிலும் ஜலம் தளும்பிற்று. “பின் குறிப்பையும் வாசி!” என்று மாமி சொன்னார். “நான் மாட்டேன்” என்று பத்மா நாணத்துடன் கூறினாள். “அப்படியானால் கடிதத்தை அவரிடம் கொடு” என்றார் மாமி. பத்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் கையெழுத்துக்குப் பிறகு பின்வருமாறு எழுதியிருந்தது. “பத்மாவுக்குக் கல்யாணமாகிக் குழந்தை பிறக்கும் போது, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு என் பெயரை வைக்கச் சொல்லு - ராமு” பத்மா கடிதத்தை என்னிடம் கொடுத்தவுடனேயே பாலனுடன் மாடிக்குப் போய் விட்டாள். அவள் வெட்கப்பட்டது இயற்கையேயல்லவா? பிறகு, மாமி என்னைப் பார்த்து, “உங்களை முதலில் அழைத்து வரச் சொன்னது எதற்கு என்று ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டார். “ஞாபகமிருக்கிறது. பத்மாவுக்கு வரன் ஜாதகம் பார்க்க” என்றேன். “அப்போது ஒரு ஜாதகத்தோடு நிறுத்தி விட்டோ ம். இன்னும் சில வரன்களின் ஜாதகம் இன்று பார்க்கலாமா? பத்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டால், என் மனதிலிருந்து பெரிய பாரம் நீங்கும். எது எப்படியிருக்குமோ?” என்றார். நான் சற்று யோசித்து, “அம்மா, நான் ஒரு சமாசாரம் சொல்லட்டுமா?” என்றேன். மாமி பேசாமல் என் முகத்தைப் பார்த்தார். “வேறு ஜாதகங்கள் என்னத்திற்காகப் பார்க்க வேண்டும்? நானே பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் சம்மதமாயிருந்தால்” என்றேன். மாமியின் முகத்தில் அப்போதுதான் கொஞ்சம் மலர்ச்சியைப் பார்த்தேன். அவர் சற்று நிதானித்து, “எனக்குப் பூரண சம்மதம். ஆனால், உங்களைச் சேர்ந்த பந்துக்கள் - பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?” என்றார். “எனக்கு ஒருவருமேயில்லை. நீங்கள் தான்” என்றேன். “அப்படியானால், பத்மாவை மட்டுந்தான் கேட்கவேண்டும். அவளை நீங்களே கேட்டு விடுங்கள். இந்தக் காலத்திலேயெல்லாம் அப்படித்தான் வழக்கமாயிருக்கிறது” என்றார். “நான் அவ்வளவு நாகரிகக்காரன் இல்லை, மாமி! நீங்கள் தான் கேட்டுச் சொல்ல வேண்டும்” என்றேன் நான். இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையிலேயே பாலன் வந்து கூப்பிட்டான். கிருஷ்ணசாமி அண்ணா வந்திருப்பதாய்ச் சொன்னான். நான் வீட்டுக்குள் நுழையும் போதே, “வாருங்கள், மாப்பிள்ளை!” என்று கிருஷ்ணசாமி அழைத்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் போய் உட்கார்ந்ததும் மாமி, “கிருஷ்ணசாமியிடம் சமாசாரத்தைச் சொன்னேன். அவனுக்குப் பூரண சம்மதமென்கிறான்” என்றார். அப்போது, கிருஷ்ணசாமி, “பத்மாவுக்குத் தகுந்த வரனா என்று அம்மா கேட்டாள். ‘நம்ம பத்மாவுக்கு தகுந்த வரன் ஒரு நாளும் கிடைக்கப் போவதில்லை. யார் பண்ணிக்கிறேன்னு வரானோ அவன் கழுத்திலே கட்டி விடு’ என்று சொல்லிண்டிருந்தேன். அதற்குள் நீரே வந்துவிட்டீர்” என்றான். “ஒன்றுமில்லை - அவருக்குத் தகுந்த பெண் கிடைக்கிறதுதான் கஷ்டம்” என்றாள் பத்மா. இப்படிப் பத்மா எனக்குப் பரிந்து பேசியது எவ்வளவோ எனக்கு சந்தோஷமளித்தது. ஆனால், கிருஷ்ணசாமிக்கு என் பேரிலிருந்த அருவருப்பு நீங்கி அவன் கல்யாணத்துக்குச் சம்மதித்தது அதைவிட மகிழ்ச்சியளித்தது. “பத்மாவுக்குத் தகுந்த வரன் கிடைப்பது கஷ்டந்தான். நீங்கள் தமையன்மார்கள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். செய்யாதது உங்கள் தவறுதானே?” என்றேன். “ஆமாம், மாப்பிள்ளை, ஆமாம்! எங்கள் தப்புத்தான். ஆனால் எங்களுக்கு இதற்கெல்லாம் சாவகாசம் ஏது? நான் தேசத்தைக் காப்பாற்றப் போகிறேன். ராமு உலகத்தையே காப்பாற்றுவதற்குப் போயிருக்கிறான்!” என்றான் கிருஷ்ணசாமி. பிறகு, ராமுவின் ரேடியோப் பேச்சைப் பற்றி திட்டு திட்டென்று திட்டத் தொடங்கினான். கடைசியில், “இன்று ராத்திரி நான் மறுபடியும் கோயமுத்தூர், மலையாளம் பக்கம் போகிறேன். வருவதற்கு ஒரு மாதம் ஆகும். அதற்குள் கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைத்தால், எனக்குத் தந்தி அடியுங்கள். எங்கள் ஆபீஸில் கேட்டால், விலாசம் சொல்வார்கள். ஒருவேளை நான் வராமற் போனாலும், கல்யாணத்தை நடத்திவிடுங்கள். என்னுடைய ஸ்தூல சரீரம் வராவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தில் அன்று உங்களுடன் இருப்பேன்” என்றான் கிருஷ்ணசாமி. எங்கள் கல்யாணம் நிச்சயமாகி, முகூர்த்தத் தேதியும் வைக்கப்பட்டது. திருவான்மியூர் கோவிலில் கல்யாணத்தை நடத்துவதென்று தீர்மானமாயிற்று. இதற்குப் பிறகு நாலைந்து நாள் பாகீரதி மாமி வெகு உற்சாகமாக இருந்தார். கல்யாணத்தை அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டுமென்று, திட்டம் போடவும் சாமக்கிரியைகள் வாங்கிச் சேர்க்கவும் ஆரம்பித்தார். ஒரு நாள் பாலன் திடுதிடுவென்று என் அறைக்கு ஓடி வந்தான். அவன் விம்மிக் கொண்டே, “அம்மாவுக்கு உடம்பு ஜாஸ்தியாயிருக்கிறது; பேச மாட்டேனென்கிறாள்” என்றான். நான் அவனைப் பின்னால் விட்டு விட்டு அதி வேகமாகச் சென்று அவர்கள் வீட்டை அடைந்தேன். மாமி மூர்ச்சையடைந்து கிடந்தார். பக்கத்தில் பத்மா நின்று ஹோவென்று அழுது கொண்டிருந்தாள். சமையற்கார அம்மாள் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். அந்த மாதிரி அரை மணி நேரமாய்க் கிடப்பதாகச் சொன்னாள். நான் நடுக்கத்துடன் மாமியின் கையைப் பிடித்துப் பார்த்தேன். நாடி அடித்துக் கொண்டிருந்தது. மூக்கில் மூச்சும் வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தைரியமடைந்து, முகத்தில் இலேசாக ஜலத்தை தெளித்தேன். விசிறி கொண்டு வந்து விசிறினேன். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மரணை அடைந்தார். “எனக்கு ஒன்றுமில்லை; ஏன் அழுகிறீர்கள்?” என்று பத்மாவையும் பாலனையும் தேற்றினார். நான் கேட்டதற்கு, “என்னமோ திடீரென்று உடம்பில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. மார்பை அடைத்தாற் போலிருந்தது. அப்புறம் ஒன்றும் தெரியவில்லை” என்றார். அன்று முதல், மாமியின் உற்சாகமெல்லாம் போய்விட்டது. கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிக் கூட அவர் பேசவில்லை. பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருந்தார். கேட்டால், “உடம்பை என்னவோ செய்கிறது. மார்பு படபடவென்று அடித்துக் கொள்கிறது” என்றார். ஆகாரமும் ரொம்பக் குறைந்துவிட்டது. நான் பிடிவாதம் பிடித்து ஒரு டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தேன். அவர் பார்த்துவிட்டு, “தேகம் பலவீனமாயிருக்கிறது. வேறொன்றுமில்லை” என்று சொல்லி, டானிக் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார். மாமிக்கு தேகத்தின் உபாதையை விட மனோ வேதனை அதிகமாயிருந்ததாகத் தெரிந்தது. தினந்தினம் “இன்றைக்குத் தபால் ஒன்றும் வரவில்லையா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில், தபால் வந்தது. வெறுந் தபாலாக வரவில்லை. தலையில் விழும் இடியாக வந்தது. அது சென்னை அரசாங்கத்தின் முத்திரையிட்ட தபால். கவர்னரின் அந்தரங்கக் காரியதரிசி எழுதியிருந்தார். ‘பைலட்’ ராமஸ்வாமி அரும் பெரும் தீரச் செயல்கள் பல புரிந்த பிறகு, விமானப் போர் ஒன்றில் உயிர் நீத்ததாகவும், அவருடைய வீர மரணம் இந்தியா தேசத்துக்கே புகழ் தரக் கூடியதென்றும் அதில் எழுதியிருந்தது. அந்த வீரப் புதல்வரின் தாயாருக்குக் கவர்னர் பெருமானின் மனமார்ந்த அநுதாபமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தபால் வந்தபோது நான் இருந்தேன். நான் தான் முதலில் கடிதத்தைப் படித்தேன். படித்துவிட்டு, “ஐயோ, அம்மா! இப்படி இடி போல செய்தி வந்திருக்கிறதே!” என்று கதறினேன். மாமி, “ராமு!” என்று ஒரு பெரிய சப்தம் போட்டார். உடனே மூர்ச்சையாகி விழுந்தார். முன் தடவையில் போலவே, அரை மணி நேரம் கழித்து அவருக்கு மூர்ச்சை தெளிந்தது. கடிதத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். நான், தட்டுத் தடுமாறி, “அம்மா! கிருஷ்ணசாமிக்குத் தந்தியடித்துவிட்டு வரட்டுமா?” என்றேன். மாமி பதிலே சொல்லவில்லை. “இந்தச் செய்தியை அவனுக்குத் தெரியப்படுத்தவில்லை. உடனே வரச்சொல்லி மட்டும் தந்தியடிக்கிறேன்” என்றேன். மாமி இதற்கும் பேசாமலிருந்தார். அவருக்குச் சம்மதந்தான் என்றெண்ணி உடனே கிளம்பிச் சென்றேன். கிருஷ்ணசாமியின் அப்போதைய விலாசம் தெரிந்து கொள்வதற்காக அவன் வேலை செய்த கம்பெனியை டெலிபோனில் கூப்பிட்டுக் கேட்டேன். அங்கிருந்து பேசியவர் முதலில் “இதோ விசாரித்துச் சொல்கிறேன்” என்றார். சற்று நேரங் கழித்து வந்து, “ஸார், நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான் அவர்களுடைய குடும்ப சிநேகிதன்” என்றதும், “ஏதோ முக்கியமான சமாசாரம் இருக்கிறதாம், உங்களை மானேஜர் நேரில் வரச் சொல்கிறார்” என்றார். என் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது. அந்தக் கம்பெனியின் காரியாலயத்துக்குப் போனேன். மானேஜர் என்னைப் பார்த்ததுமே, “ரொம்ப துக்ககரமான சமாசாரம், ஸார்” என்றார். பிறகு, அவருக்கு கள்ளிக் கோட்டையிலிருந்து வந்த கடிதத்தை எடுத்துக் காட்டினார். கதையை வளர்த்துவானேன்? மேற்குக் கடற்கரை ஜில்லாக்களில், அதிகாரிகளின் உத்தரவை மீறி ஒரு நாள் பல இடங்களில் கூட்டங்கள் நடந்தனவல்லவா? அந்த யுத்த கண்டனக் கூட்டங்களில் ஒன்றில் கிருஷ்ணசாமியும் இருந்தான். அன்று போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டு போனவர்களில் கிருஷ்ணசாமியும் ஒருவன். இந்தச் செய்தியினால் என் உள்ளம் என்ன நிலைமை அடைந்ததென்று விவரிக்க நான் முயலவில்லை. அதைக் காட்டிலும், மாமியிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்னும் எண்ணமே எனக்கு அதிக வேதனையையும் பீதியையும் அளித்தது. போகும் போதெல்லாம், செய்தியை மறைத்துவிடலாமா, கொஞ்ச நாள் கழித்துச் சொல்லலாமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போனேன். வீட்டுக்குள் நான் நுழைந்ததும், மாமி என்னை வெறித்து நோக்கி, “எங்கே கிருஷ்ணசாமி! இன்னும் வரவில்லையா?” என்று கேட்டார். உடனே என்னுடைய முன் யோசனையெல்லாம் பறந்து போய்விட்டது. “ஐயோ! அம்மா! ஜாதகம் இப்படிப் பலித்துப் போய்விட்டதே!” என்று கதறினேன். பத்து தினங்கள் ஆயின. இந்தப் பத்து நாளும் எப்படிச் சென்றதென்று எனக்கே தெரியாது. பத்மாவும் பாலனும் ஓயாத கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இருந்தார்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுதான் எனக்கு வேலையாயிருந்தது. ஆனால் மாமி அழவில்லை. அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. பிரமை பிடித்தவரைப் போல் உட்கார்ந்திருந்தார். ஆகாரமும் கிடையாது தூக்கமும் கிடையாது. முதலில் அவர் மூர்ச்சையாகி விழுந்த அன்று தான், ராமு, கிருஷ்ணசாமி இரண்டு பேருக்கும் மரணம் சம்பவித்தது. அதற்கு முன்னாடி மாமியைப் பார்த்தவர்கள் இந்தப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு பார்த்தால் அடையாளமே கண்டுபிடிக்க முடியாது. அப்போது அவருடைய தலைமயிர் பழுப்பு வர்ணமாயிருந்தது. இரண்டொரு நரைதான் காணப்பட்டது! இந்தப் பதினைந்து நாட்களில் தலை தும்பைப் பூப்போல வெளுத்துவிட்டது. முன்னே அவரை 45 வயதுதான் சொல்லத் தோன்றும். இப்போது பார்த்தாலோ, 65 வயது. அவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இதிலெல்லாம் எனக்கு ஆச்சரியமே கிடையாது. அவர் எப்படி உயிரை வைத்துக் கொண்டிருந்தார் என்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியமளித்தது. “பத்மாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை; அவளை இப்படி அநாதியாய் விட்டுவிட்டுப் போகக் கூடாது” என்ற எண்ணமே அவருடைய உயிருக்கு அவ்வளவு பலம் அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டும். முன்னால் நிச்சயித்த முகூர்த்தத் தேதியிலேயே திருவான்மியூர் கோவிலில், எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அந்த மாதிரி அதிசயமான கல்யாணத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மணப்பெண் அன்றைக்கெல்லாம் அழுது கொண்டேயிருந்தாள். “அழாதே, பத்மா! கிருஷ்ணசாமிதான் வாக்குறுதி கொடுத்திருந்தானே, சூக்ஷ்ம சரீரத்திலாவது வந்து சேருவேனென்று? அவன் வந்திருப்பான்” என்று நான் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். கலியாணம் ஆகி பட்டணத்துக்குத் திரும்பி வந்து மாமிக்கு நமஸ்காரம் பண்ணினோம். மாமி, என்னுடைய தலையை தம் கரத்தினால் தொட்டு, கனிவு நிறைந்த குரலில், “ஸ்வாமி என்னுடைய இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டார்; ஒரு பிள்ளையைப் புதிதாய்க் கொடுத்தார்” என்றார். பிறகு, பத்மாவைக் கட்டிக் கொண்டு உச்சிமோந்தார். அவருடைய கண்களில் ஜலம் ததும்பி வழிந்தது. பிள்ளைகள் இறந்த செய்தி வந்த பிறகு அவர் இன்றுதான் முதல் முதல் கண்ணீர் விட்டார். அதைப் பார்க்க எனக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது. அவ்வளவுதான் எங்கள் கதை. இன்னும் ஒரே ஒரு விஷயம் தான் சொல்வதற்கு பாக்கியிருக்கிறது. “ஜோசியத்தில் நம்பிக்கை போய்விட்டதாகச் சொன்னீரே அது எப்படி? ஜோசியத்தில் நம்பிக்கை உண்டாகும்படியான காரியமல்லவா நடந்திருக்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம். இது உண்மையே. ஆனால் எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை போய் விட்டதும் உண்மைதான். ஜோசியத்தில் ஒருவருக்கு நம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில், எந்தக் காரியத்தில் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்த வேண்டும்? ஒரு மனிதனுடைய வாழ்வில் கல்யாணத்தைக் காட்டிலும் முக்கியமான சம்பவம் என்ன இருக்கிறது? அதற்கல்லவா அவசியமாக ஜோசியம் பார்க்க வேண்டும். எங்கள் கல்யானத்துக்கு நான் ஜோசியத்தின் உதவியை நாடவில்லை. ஜாதகமே பார்க்கவில்லை. மாமியும் “ஜாதகம்” என்ற பேச்சையே எடுக்கவில்லை. ஆம். ஜோசியத்திலும் ஜாதகத்திலும் எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. இப்போது எங்களுடைய நம்பிக்கை பகவானிடத்திலேதான். அவருடைய சித்தத்தின் படி எல்லாம் நடக்கிறதென்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கைப் பெரும் துன்பங்களைக் கடக்க அந்த நம்பிக்கையையே துணையாகக் கொண்டிருக்கிறோம். மாடத்தேவன் சுனை முன்னுரை ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும் தண்டவாளம் நகர்ந்து ரயில் வண்டி கவிழ்ந்தது பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த காலம். எனினும் நான் ஏறிய அதே ரயிலில் ஒரு கனம் மந்திரியும் ஏறியிருக்கிறார் என்ற தைரியத்தின் பேரில் கவலையற்றிருந்தேன். ’தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு.’ என்னும் திருவள்ளுவரின் திருவாக்கைக் கடைப்பிடித்து நம் மந்திரிமார்கள் உறக்கமின்றி, தேச நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எந்த அரக்கன் வந்து தண்டவாளத்தைத் தொட்டு விட முடியும்? யமன் தான் அணுகி வந்து விடுவானா? இரண்டு பக்கமும் காடாயிருந்த பிரதேசத்தில் ரயில் நின்றது. காட்டுப்பாக்கம் ஸ்டேஷனுக்கு அப்பால் சிறிது தூரத்தில் நிற்பதாக அறிந்தேன். காரணம் எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வண்டி தண்டவாளத்திலிருந்து நழுவி விட்டதுதானாம். நல்ல வேளையாய்ப் போச்சு. எல்லாம் கடவுளுடைய செயல்தான்! எதிர் பக்கம் வந்த ரயிலுக்கு நேர்ந்தது இந்த ரயிலுக்கு நேர்ந்திருந்தால்?.. இவ்வுலகில் நம்மால் ஏதோ பெரிய காரியங்கள் நிறைவேற வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பம் போலும்! அன்றைக்கு ‘லார்ட் கிளைவ்’ என்னும் மகா வீரன் தன்னைத்தானே துப்பாக்கிக் குண்டால் சுட்டுக் கொள்ள முயன்றபோது அவனைச் சாகாமல் காப்பாற்றிய கடவுள்தான் நம்மையும் காப்பாற்றி இருக்க வேண்டும்! உலகில் எந்தப் பாகத்தில் எந்த சாம்ராஜ்யத்தை நாம் ஸ்தாபிக்க வேண்டுமோ, அல்லது அழித்தாக வேண்டுமோ, யார் கண்டது? காட்டுப்பாக்கத்துக்கு அருகில் நாலரை மணி நேரம் காத்திருந்த பிறகு எங்கள் ரயில் கிளம்பிற்று. அப்புறமும் கொஞ்சம் சாவகாசமாகவே சென்றது. அதன் பலன் என்னவென்றால், காலை எட்டு மணிக்கு மதுரைக்குப் போக வேண்டிய ரயில் மத்தியானம் 12-30க்கு போய்ச் சேர்ந்தது. (அங்கு இறங்கி விசாரித்தபோது, கனம் மந்திரி அவர்கள், எழும்பூர் ஸ்டேஷனில் தூங்க ஆரம்பித்தவர், திண்டுக்கல்லில்தான் விழித்துக் கொண்டார் என்று அறிந்தேன்! நல்ல வேளை, மந்திரியை மட்டும் நம்பியிராமல் கடவுளையும் நம்பியது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!) குறிப்பிட்ட ஆண்டு விழாவுக்குப் போய்ச் சேர வேண்டுமானால், பாக்கிப் பிரயா`ணத்துக்கு ரயிலை நம்பிப் பயனில்லை என்று ஏற்பட்டது. எனவே மதுரையில் ஒரு மோட்டார் கார் பிடித்துக் கொண்டு புறப்பட்டோ ம். வழியில் காரின் இன்ஜின் கொஞ்சம் தொந்தரவு கொடுத்தது. முன் பக்கத்துத் துவாரம் வழியாகவும், பின் பக்கத்து ஓட்டை வழியாகவும் பிரமாதமான புகை கிளம்பியது. “வேறொன்றுமில்லை; வண்டியின் என்ஜின் கொஞ்சம் தண்ணீர் கேட்கிறது” என்றார் டிரைவர். “இந்த வறண்ட ஜில்லாவில் மனிதர்களுக்கும் பிராணிகளுக்குமே தண்ணீர் கிடைப்பது அரிதாயிற்றே! மோட்டார் என்ஜின் வேறு தண்ணீர் கேட்டால், தண்ணீர் எங்கே கிடைக்கப் போகிறது?” என்று நான் என் கவலையைத் தெரிவித்துக் கொண்டேன். “சீக்கிரத்தில் மாடத்தேவன் சுனை வரும். அதில் எப்படியும் தண்ணீர் இருக்கும்” என்றார், கூட வந்த பாண்டிய நாட்டு நண்பர். மாடத்தேவன் சுனை வந்தது. அது சாலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையான, கறுப்பான, பச்சை நிறமே காணாத பாறையின் உச்சியில் இருந்தது. அந்தப் பாறையின் அடிவாரத்தில் ஒரு பழைய கோட்டை ஒரு காலத்தில் இருந்து, பின்னால் இடிந்து தகர்ந்து போயிருக்க வேண்டும் என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன. கோட்டைச் சுவரில் ஒரு சிறு பகுதி கூட உருப்படியாக இல்லை. கோட்டையின் அஸ்திவாரங்கள், தகர்ந்து உருண்டு கிடந்த சிற்சில பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. அத்தகைய கரிய பாறையின் உச்சியில் சுற்று வட்டாரத்தில் வெகு தூரத்துக்கு வறண்டு கிடக்கும் பிரதேசத்தில், அந்த இனிய தெளிந்த நீர்ச்சுனை எப்படி ஏற்பட்டது என்பது ஒரு பெரிய மர்மமாகவே தோன்றியது. இங்கேதான் இயற்கையின் அதிசயமான சக்தியைக் காண்கிறோம். சுனையைப் பார்த்து அதிசயித்த பிறகு, அதன் கரையில் செங்குத்தாக நிறுத்தியிருந்த ஒரு கருங்கல்லின் மீது என் கவனம் சென்றது. கல்லுக்கு அருகில் ஒரு சிறிய வேல் நாட்டப்பட்டிருந்தது. கல்லுக்கும் வேலுக்கும் பூஜை நடப்பதுண்டு என்று, சந்தனம், குங்குமம், புஷ்பம், வழிந்தோடியிருந்த எண்ணெய் இவற்றிலிருந்து தெரிந்து கொண்டேன். “மாடத்தேவன் சுனை”யைப் பற்றி ஏதேனும் ஒரு கதை இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுனையின் கதையைப் பற்றி விசாரிக்க அப்போது அவகாசம் ஏது? ஆண்டு விழா அகோரமான குரலில் எங்களை அழைத்துக் கொண்டிருந்தது. மோட்டார் வாகனத்தின் தாகம் தீர்ந்ததும் புறப்பட்டுச் சென்றோம். பிறிதொரு சமயம் அவ்விடத்துக்குச் சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்துத் தெரிந்து கொண்ட கதையைக் கீழே எழுதியிருக்கிறேன். கொஞ்சம் காது, மூக்கு வைத்திருக்கிறேன்; அவ்வளவுதான். காது மூக்கு உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கதை பிடித்திருந்தால் சரிதான். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இனிய சுனையைப் பெற்றுள்ள அர்ச்சுனன் குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறிய கோட்டை இருந்தது. ஒரு சமயம் அர்ச்சுனன் தென்னிந்தியாவில் தீர்த்த யாத்திரை செய்தபோது இந்தக் குன்றின் மேல் ஏறி நின்று தவம் செய்தானாம். அப்போது அவனுக்குத் தாகம் எடுத்து விட்டதாம். அர்ச்சுனனின் தந்தையான இந்திரன் தன் மகனுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காகத் தேவலோகத்திலிருந்து ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினானாம். அதில் அர்ச்சுனன் குடித்தது போக மிச்சமிருந்த தண்ணீர் சுனையாக நின்று விட்டதாம். ஆகையினாலேயே அதற்கு அர்ச்சுனன் குன்று என்று பெயர் வந்ததாம். இது பழைய கதை; குன்றுக்குப் பெயர் வந்த கதை. ‘மாடத்தேவன் சுனை’ என்னும் பெயர் எவ்விதம் ஏற்பட்டது என்பதையல்லவா இப்போது நாம் பார்க்க வேண்டும்? அர்ச்சுனன் தவம் செய்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் குன்றின் சாரலில் பாண்டிய மன்னன் ஒருவன் ஒரு கோட்டை கட்டினான். அந்தக் கோட்டை நாளடைவில் பழுதுபட்டு நமது கதை நடந்த காலத்தில் இடிந்து தகர்ந்த நிலையிலேதான் இருந்தது. ஆகையால் அந்தக் கோட்டையைப் பற்றி யாவரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. பாஞ்சாலம்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட போது, பாண்டிய நாட்டிலுள்ள பாளையக்காரர்களின் கோட்டைகளையெல்லாம் தகர்த்துவிட வேண்டுமென்று கும்பினிக்கார வெள்ளையர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் இந்தக் கோட்டையை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை. ஏற்கனவே அக்கோட்டை வேண்டிய மட்டும் இடிந்து தகர்ந்து இருந்தது. எந்தவிதமான சண்டைக்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது. அதிகம் பேர் அதில் தங்கியிருப்பது அசாத்தியமான காரியம். அச்சமயம் அக்கோட்டையில் கருப்பையா சேர்வை என்ற கிழவனும், அவனுடைய செல்லப் புதல்வி வேலம்மாள் என்பவளும் வாழ்ந்து வந்தார்கள். வெகு காலத்துக்கு முன்பு அந்தப் பாறைக்குப் பக்கத்தில் கள்ளர் பயம் அதிகமாயிருந்த காலத்தில் வழிப்போக்கர்களுக்குப் பாதுகாப்பாக அக்கோட்டை கட்டப்பட்டது. சிவகங்கைப் பாளையக்காரர் அங்கே கருப்பையாவைக் குடும்பத்துடன் குடியேற்றி வைத்தார். அதற்காக அவருக்கு மானியமும் கிடைத்து வந்தது. இளம் வயதில் கருப்பையா பெரிய வீர தீரனாயிருந்தான். கையில் தடியை எடுத்துக் கொண்டு கிளம்பினால் பத்துக் கள்ளர்களை அவன் ஒருவனாகவே சமாளித்து விடுவான். பிரயாணிகள் இரவு நேரங்களில் அந்தக் கோட்டையில் தங்குவதுண்டு. அப்படித் தங்கியதற்காகவும், கருப்பையா தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்காகவும் பிரயாணிகள் அவனுக்குத் தக்க சன்மானம் கொடுத்துவிட்டுப் போவார்கள். அதெல்லாம் பழைய காலம். கும்பினிக்காரர்கள் வந்து ஆர்க்காட்டு நவாப்புக்காக வரி வசூலிக்கத் தொடங்கியதிலிருந்து எல்லாம் ஏறுமாறாகப் போய்விட்டது. கருப்பையாவுக்குக் கிடைத்து வந்த மானியம் நின்றுவிட்டது. அவனுடைய அருமை மனைவி அவனையும் சின்னஞ்சிறு வேலம்மாளையும் அநாதையாக விட்டு விட்டுக் காலமாகி விட்டாள். இப்போதெல்லாம் அந்தப் பக்கத்தில் கள்ளர் பயமும் அதிகம் கிடையாது. கும்பினிக்காரர்களின் படைகளே பட்டப் பகலில் எல்லாக் கொள்ளையையும் நடத்தி வந்தபடியால், கள்ளர்கள் யாரைக் கொள்ளை அடிப்பார்கள்? அவனும் அவனுடைய மகளும் வாழ்க்கை நடத்துவதுதான் எப்படி? இத்தகைய நிலைமையில் அர்ச்சுனன் குன்றின் உச்சியிலிருந்த சுனை நீர் தகப்பனும் மகளும் ஜீவித்திருப்பதற்கு கொஞ்சம் உதவியாயிருந்து வந்தது. அந்தச் சுனையில் சாதாரணமாக மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் தண்ணீர் ததும்பிக் கொண்டிருக்கும். அதிலிருந்து ஒரு சிறிய அருவி கோட்டைக்குள்ளே புகுந்து ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக ஓடிச் சென்று வெளியில் வந்து கீழே அடிவாரத்துக்குச் செல்லும். அவ்விதம் குன்றின் அடிவாரத்துக்கு வரும் சுனை அருவி நீரை உபயோகித்து ஒரு வாலிபன் பயிர்த் தொழில் செய்து கொண்டிருந்தான். அவன் பெயர் மாடத்தேவன். சில சமயம் அவன் கேழ்வரகு பயிர் செய்வான். சில சமயம் வெள்ளரிக்காய் போடுவான். நல்ல உழைப்பாளி. ஆகையால் அவனுடைய தோட்டம் எப்போதும் குளுகுளுவென்றிருக்கும். அந்தப் பக்கமாகச் சாலையில் பிரயாணம் செய்கிறவர்கள் சற்று நின்று அந்தத் தோட்டத்தைப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். அவர்களில் சிலர் மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள்; சிலர் பொறாமையுடனும் பார்ப்பார்கள். அவ்வாறு பொறாமையுடன் பார்த்தவர்களில் கருப்பையா சேர்வையும் ஒருவன். மாடத்தேவனுடைய உழைப்பினால் அவனுடைய காணி நிலம் நாளுக்கு நாள் செழிப்படைந்து வந்தது கண்டு கிழவன் மனம் புழுங்கினான். அம்மாதிரி தானும் செய்யலாமென்றால் கைகளில் போதிய வலிமை இல்லை. மூப்பும், வறுமையும், மதுவும் சேர்ந்து இரும்பு போன்ற உடம்பைப் பலவீனப்படுத்தியிருந்தன. தனக்கும் தன் மகளுக்கும் அன்றாடம் பசி தீருவதே பெரும் பாடாயிருக்கும்போது அவனுடைய கண்ணெதிரே, புதிதாக வந்து குடியேறியவன் ஒருவன் நாளுக்கு நாள் செழிப்பாயிருந்தால் மனம் கஷ்டப்படத்தானே செய்யும்? எனவே சுனைத் தண்ணீர் சம்பந்தமாகக் கிழவன் தகராறு செய்ய ஆரம்பித்தான். தன்னுடைய கோட்டையின் வழியாகச் செல்லும் சுனை அருவித் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி விடுவதாகச் சொன்னான். இதற்கு மாடத்தேவன் பயப்படவில்லை. “சுனை நீர் உன்னுடையதா? அல்லது கோட்டைதான் உன்னுடையதா? சுனை நீர் கடவுள் அளித்தது; இந்தப் பாழடைந்த கோட்டையோ சிவகங்கைப் பாளையக்காரருடையது. நீ மட்டும் சுனை நீரைத் தடுத்து நிறுத்து பார்க்கலாம். நான் பாளையக்காரரிடம் போய் உத்தரவு வாங்கி வருகிறேனா, இல்லையா பார்!” என்றான் அந்த வாலிபன். “பாளையக்காரனுக்கு இங்கே என்ன அதிகாரம்? அவன் எனக்குப் படி அளக்கிறானா? அந்தக் காலம் மலையேறிவிட்டது. ஆனானப்பட்ட வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கும்பினிக்கார வெள்ளையர்கள் புளிய மரத்திலே தொங்கவிட்டு விட்டார்கள் இந்தப் பாளையக்காரன் என்னை என்ன செய்துவிட முடியும்? கோட்டை என்னுடையது. நான் இஷ்டப்பட்டால் அருவியைத் தடுப்பேன்!” என்று கிழவன் கருவினான். இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவனுடைய மகள் வேலம்மாள். அன்று மாலை மாடத்தேவனுடைய தோட்டத்திற்குப் போனாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார்கள். பேச்சு எளிதில் வருவதாயில்லை; வேலம்மாளின் நெஞ்சை அடைத்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அப்போது பூரண சந்திரன் கீழ்த் திசையில் உதயமானான். சந்திர கிரணங்கள் வேலம்மாளின் கண்ணீர்த் துளிகளைச் சுடர்விடும் முத்துக்கள் ஆக்கின. அதைப் பார்த்த நிமிடத்திலேயே மாடத்தேவன் வேலம்மாளின் கொத்தடிமையானான். “பெண்ணே! இந்த நேரத்தில் இங்கே தனியாக ஏன் வந்தாய்? உன் அப்பன் பார்த்தால் என்ன சொல்வான்?” என்றான். ஏற்கனவே அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதுண்டு. எட்ட நின்று பேசியதும் உண்டு. ஆனால், மாடத்தேவனின் தோட்டத்துக்குள் வேலம்மாள் பிரவேசித்ததில்லை. மாடத்தேவன் இப்போது கேட்டதற்கு “உன்னிடம் ஒன்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காக வந்தேன்!” என்றாள் வேலம்மாள். “கெஞ்ச வேண்டாம்; உத்தரவு போடு!” என்று கூறினான் மாடத்தேவன். “என் தகப்பனாருக்கு வயதாகி விட்டது. தள்ளாமை வந்துவிட்டது. இன்னும் சில காலந்தான் உயிரோடிருப்பார். அவர் இருக்கிறவரையில் இந்த இடிந்த கோட்டையும் மலை மேலுள்ள சுனையும் அவருடைய உடைமைகளாகவே இருக்கட்டும். அவர் போகும் போது இதையெல்லாம் கொண்டு போகப் போவதில்லை. அவருக்குப் பிறகு நான் இங்கே தனியாக இருக்க மாட்டேன். அப்புறம் நீயே இதையெல்லாம் வைத்துக் கொள். நான் போட்டிக்கு வரவில்லை. கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரு!” என்றாள். “பெண்ணே! கோட்டை, சுனை, இந்தத் தோட்டம், குடிசை எல்லாம் உன்னுடைய உடைமை; நான் உன்னுடைய அடிமை. நீ என்னை இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். இல்லாவிட்டால் மறுபடியும் போய்க் கும்பினிக்காரன் பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறேன்” என்றான் மாடத்தேவன். “கும்பினிக்காரன் பட்டாளத்தில் சேர்வதா? பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியனை தூக்கிலே போட்ட சண்டாளர்களுடைய படையிலே சேர்வதா? அந்தப் பேச்சை இன்னொரு தடவை சொல்லாதே! இங்கேயே இரு. உண்மையில் அப்பாவுக்கு உன் பேரில் ரொம்பப் பிரியம். கொஞ்சம் நல்லபடியாக அவருடன் பேசிப் பார்த்தால், இரண்டு பேரும் அன்யோன்யமாகி விடுவீர்கள்!” என்றாள் வேலம்மாள். வேலம்மாளுடைய யோசனையை மறுநாளே மாடத்தேவன் கையாண்டு பார்த்தான். கருப்பையா சேர்வையிடம் சென்று "மாமா! அப்புறம் நான் யோசித்துப் பார்த்தேன். உங்களுடன் சண்டைப் பிடித்தது தப்பு என்று தெரிந்தது. நானோ அனாதை; உற்றார் உறவினர் யாருமில்லாதவன். இந்த அக்கம் பக்கத்திலும் நம்மைத் தவிர யாரும் கிடையாது. உங்களுக்கு நான் துணை; எனக்கு நீங்கள் தான் துணை. நாம் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்? எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்கள் கோட்டை வழியாக வரும் அருவித் தண்ணீரை நான் வெள்ளாமைக்கு உபயோகிக்கிறேன் அல்லவா? அதற்குப் பதிலாக, என்னுடைய நிலத்தில் விளைவதில் நாளில் ஒரு பாகம் கொடுத்து விடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?" என்றான். “தம்பி! அப்படி வா வழிக்கு! இந்த அறிவு உனக்கு முன்னாலேயே ஏன் இல்லாமல் போயிற்று?” என்று கருப்பையா சேர்வை பெருமிதத்துடன் கூறினான். “போனது போகட்டும், மாமா! இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். ஒரு நாள் என்னுடைய தோட்டத்துக்கு வந்து தான் பாருங்களேன்!” என்று மாடத்தேவன் ஆவலோடு கூறினான். “அதற்கென்ன, வருகிறேன். எப்போதாவது உனக்கு கூடமாட ஒத்தாசை செய்ய வேண்டுமானாலும் சொல்லு; நானும் வேலம்மாளும் எங்களால் முடிந்த ஒத்தாசை செய்கிறோம். என் மகள் எப்பேர்ப்பட்டவள் என்று உனக்குத் தெரியாது. அவள் கண் பார்த்ததை அவள் கை செய்யும்” என்றான் கிழவன். “நன்றாயிருக்கிறாது, மாமா! தள்ளாத கிழவராகிய உங்களையும் உங்கள் மகளையும் நான் என் தோட்டத்தில் வேலை செய்யச் சொலவேனா? நீங்கள் எப்போதாவது வந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். நான் தான் ஏகாங்கி என்று சொன்னேனே? நீங்கள் என்னுடன் சிநேகமாயிருந்தால் அதுவே எனக்குப் பெரிய உதவி!” என்றான் மாடத்தேவன். கிழவனும் மகளும் அன்றைக்கே மாடத்தேவனுடைய தோட்டத்துக்கும் போனார்கள். அதில் நாலில் ஒரு பங்கு வெள்ளாமை தனக்கு என்று ஏற்பட்டதிலிருந்து கிழவனுக்குப் பொறாமையெல்லாம் போய்விட்டது. தோட்டம் நன்றாயிருப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். தோட்டத்தை இன்னும் நல்ல செழிப்பாகச் செய்வதற்கு யோசனைகளும் சொன்னான். "நீ என்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். என்னை இன்னும் கைகாலை முடக்கிப் போட்டு விடவில்லை. தண்ணீர் பாய்ச்சுகிறது, களை பிடுங்குகிறது எல்லாம் செய்வேன். வேலம்மாளுக்குத்தான் என்ன? “கொஞ்சம் பழகி விட்டால் எல்லா வேலைகளையும் செய்வாள். என்னுடைய குலத்தில் பெண் பிள்ளைகள் வெளியேறி வேலை செய்து வழக்கமில்லைதான். ஆனால் அப்படியெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? காலம் மாறிவிட்டது. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் பிழைக்க வேண்டும் அல்லவா? கைப்பாடு படுவதில் கேவலம் ஒன்றும் இல்லை…!” மாடத்தேவன் இப்போது குறுக்கிட்டு, “மாமா! உங்கள் மகள் தோட்ட வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் இரண்டு வேளையும் கையினால் பொங்கித் தின்ன வேண்டியிருக்கிறது. அந்த வேலையை மிச்சம் செய்தாலே எவ்வளவோ எனக்கு உதவியாயிருக்கும்!” என்று சொன்னான். கிழவனுடைய மனம் பூரித்தது. அநேகம் தடவை இந்த மாதிரி கருப்பையா சேர்வை எண்ணமிட்டதுண்டு. வேலம்மாளை இந்தப் பையனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால், எல்லாக் கவலையும் தீர்ந்துவிடும். வேலம்மாளை வெளியூருக்கு அனுப்ப வேண்டியதில்லை. தான் சாகும் வரையில் அவளோடேயே இருந்து விடலாம். மாடத்தேவனின் வெள்ளாமையில் நாலில் ஒரு பங்குக்குப் பதில் நிலம் முழுவதுமே தனக்கு உரிமையாகப் போய்விடும்! அப்புறம் தான் வைத்தது தானே சட்டம்? - இம்மாதிரி எண்ணினான் அந்தப் பேராசைக்காரக் கிழவன். ஆனால் வெளியில் கொஞ்சம் பிகுவாகவே பேசினான். “அதெல்லாம் அவ்வளவு சீக்கிரமாய் முடிவு செய்யக் கூடிய காரியமா, தம்பி! அது விஷயத்தில் வேலம்மாளின் இஷ்டந்தான் முக்கியம். அவள் இஷ்டத்துக்கு விரோதமாக நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றான். வேலம்மாள் அவர்களுடைய பேச்சின் வெளிப்படையான பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு, “இது என்ன அப்பா, பிரமாதம்? இரண்டு பேருக்குச் சமைப்பதற்குப் பதில் மூன்று பேருக்குச் சமைப்பதில் என்ன கஷ்டம்? இவர் வேண்டுமானால் தினம் நம் வீட்டுக்கு வந்து உன்னோடு சாப்பிடட்டுமே? இவருக்கும் சேர்த்துச் சமைப்பதில் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை” என்றாள். “உனக்குக் கஷ்டம் இல்லையென்றால் எனக்கு என்ன ஆட்சேபணை?” என்றான் கிழவன் கருப்பையா சேர்வை. பிறகு சில தினங்கள் கழித்து அந்த மூன்று பேருடைய வாழ்க்கையும் மிக உற்சாகமாக நடந்து வந்தது. வேலம்மாளை எத்தனை நேரம், எந்தெந்த விதமாகப் பார்த்தாலும் மாடத்தேவனுடைய கண்களில் தாகம் தணிவதில்லை. வேலம்மாளுக்கும் அப்படியேதான். அவளுடைய கண்களுக்கு வானமும், பூமியும் புதிய வர்ணங்களைப் பூசிக் கொண்டு புதிய புதிய அழகுகளுடன் விளங்கின. அவள் காற்றிலே மிதந்தாள்; வானவெளியில் பறந்தாள்; நிலாக் கதிர்களை அருந்தி, நட்சத்திரங்களுடன் உறவாடினாள். இடிந்த பாழுங்கோட்டை, மன்னர்கள் வசிக்கும் மணி மாட அரண்மனையாயிற்று. மலைச் சுனை பொற்றாமரைக் குளமாகத் திகழ்ந்தது. அதன் கரையிலுள்ள வெள்வேல மரம் கற்பக விருட்சமாக மாறிவிட்டது. இந்திரனும் சந்திரனும் அவளுடைய அடிபணிந்து அவளுக்கு ஆடை புனைந்து அலங்காரங்கள் செய்து விட்டார்கள். காட்டு மல்லிகைப் பூ தேவலோகத்து மந்தார புஷ்பம் ஆயிற்று. கேழ்வரகுக் கூழ் தேவாமுதமாக ருசித்தது. இப்படி நாட்கள் ஆனந்தமயமாகப் போய்க் கொண்டிருக்கையில் அவர்களுடைய வாழ்க்கையில் சங்கடமான சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு நாள் கும்பினிக்காரர்களின் படை அந்த வழியே போயிற்று. படையின் முன்னணியில் குதிரை மேல் ஏறி ஒரு வெள்ளைக்கார மேஜர் வந்தான். மாடத்தேவனுடைய வெள்ளரிக்காய்த் தோட்டத்தின் மீது அவனுடைய கொடிய ஆசைப் பார்வை விழுந்தது. அச்சமயம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாடத்தேவனைக் கையால் சமிக்ஞை செய்து “கம் ஹியர் மேன், கம் ஹியர்!” என்று அழைத்தான். மாடத்தேவன் அதன் கருத்தைத் தெரிந்து கொண்டு மேஜர் துரையின் பக்கத்தில் வந்தான். “வெள்ளரிக்காய் இருக்கிறதா, மேன்? காஸுக்கு எத்தனை?” என்று கேட்டான். “வெள்ளரிக்காய் இல்லை, துரையே!” என்றான் மாடத்தேவன். மேஜர் எட்டிப் பார்த்து, “இருக்கிறது, மேன்! ஏன் பொய் சொல்லுகிறாய்?” என்றான். “நிஜமாக இல்லை, எஜமான்! எல்லாம் பிஞ்சுகள்; முற்றுவதற்கு ஒரு வாரம் பிடிக்கும்!” “பிஞ்சாய் இருந்தால் மெத்த நல்லது, மேன்! காயைவிடப் பிஞ்சு நல்லாயிருக்கும்! பத்து டஜன் பறித்துக் கொண்டு வா! ஜல்தி!” “பிஞ்சைப் பறிக்கக் கூடாது, எஜமான்! பறிப்பது பாவம். செய்த வேலையெல்லாம் வீண் போனதாகும்!” “யூ டாம்! நான் ஆர்டர் போடுகிறேன். நீ மாட்டேன் என்றா சொல்கிறாய்… ஜமேதார்! கம் ஹியர்!” ஜமேதார் மேஜர் துரையின் அருகில் வந்தான். அவனிடம் மேஜர் ஏதோ சொன்னான். உடனே ஜமேதார் பதினைந்து சிப்பாய்களை அழைத்துக் கொண்டு வெள்ளரிக்காய் தோட்டத்தில் புகுந்தான். பூப்பிஞ்சு உள்பட எல்லா வெள்ளரிக் காய்களையும் அவர்கள் பறித்தார்கள். அதோடு கூட வெள்ளரிப் பாத்திகளையும் கொடிகளையும் கன்னா பின்னாவென்று மிதித்துத் துவைத்தார்கள். அவர்களைத் தடுக்கலாமா என்று முதலில் மாடத்தேவன் நினைத்தான். அதில் பயன் ஒன்றுமில்லையென்று பிறகு நிதானித்துக் கொண்டான். அவர்களுடைய அட்டூழியங்களைப் பார்த்து வயிறெரிந்து நின்றான். தோட்டத்தைத் துவம்சம் செய்துவிட்டுச் சிப்பாய்கள் வெளியேறியபோது மாடத்தேவன், மேஜர் துரையின் அருகில் சென்று, “எஜமானே! இது தர்மமா? இந்த அநியாயம் கடவுளுக்குப் பொறுக்குமா?” என்றான். “டாம் யுவர் கடவுள், மேன்! நீ இந்த வெள்ளரித் தோட்டம் போட்டிருக்கிறாயே, இதற்காகக் கும்பினிக்கு வரி கொடுத்திருக்கிறாயா?” “வரியா? வரி யாரும் என்னைக் கேட்கவும் இல்லை; நான் கொடுக்கவும் இல்லை.” “கேட்கவில்லை யென்பது பொய் சால்சாப்பு. போனால் போகட்டும். நாங்கள் இப்போது பறித்துக் கொண்ட வெள்ளரிக்காயின் விலையை நீ கொடுக்க வேண்டிய வரிக்காக வரவு வைத்துக் கொள்கிறேன்!” இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் துரை சிரித்தான். மற்றும் பல சிப்பாய்களும் சிரித்தார்கள். சிரித்துக் கொண்டே மேலே நகர்ந்தார்கள். இடிந்த கோட்டைக்கு அருகில் வந்ததும் மேஜர் “இந்தக் கோட்டையை ஏன் இன்னும் தரைமட்டமாக்க வில்லை? பீரங்கியை இதன்மேல் திருப்பலாமா?” என்று கேட்டான். பக்கத்திலே வந்த ஜமேதார், “இந்தக் கோட்டையில் ஒன்றுமே இல்லை. பாழும் குட்டிச்சுவர்கள் தான் இருக்கின்றன. பீரங்கி மருந்து வீணாவது தான் லாபம்!” என்றான். “இதில் யாரும் குடியில்லயா?” “ஒரு கிழவனும் அவன் மகளும் இருக்கிறார்கள். அவனிடம் வேட்டையாடுவதற்கு ஒரு பழைய துப்பாக்கியும், ஈட்டியும், வாளும் இருந்தன. அவற்றையெல்லாம் முன்னமே பிடுங்கிக் கொண்டு விட்டோம்.” “அந்த ஓல்டு மேன் அதோ நின்று பார்க்கிறானே, அவன் தானே! அவனுடைய மகள் எப்படி இருப்பாள்? அழகாயிருப்பாளா?” என்று மேஜர் கேட்டான். “இருப்பாள்; அவுராங் அவுடாங்கைப் போல் அழகாயிருப்பாள்!” என்று ஜமேதார் சொன்னதும் துரை கடகடவென்று சிரித்தான். சில நிமிஷத்துக்கெல்லாம் மேஜரும் ஜமேதாரும் மற்றச் சிப்பாய்களும் அர்ச்சுனன் குன்றைத் தாண்டி அப்பால் சென்று மறைந்தார்கள். அன்றெல்லாம் கருப்பையா சேர்வை, வேலம்மாள், மாடத்தேவன் ஆகிய மூவரும் கும்பினிக்காரரின் அக்கிரமங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். “நானும் இரண்டு வருஷம் கும்பினியாரிடம் வேலை பார்த்தேன். அவர்கள் செய்யும் அக்கிரமம் சகியாமல் தான் திரும்பி வந்துவிட்டேன்” என்றான் மாடத்தேவன். “நீ வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்படிப்பட்ட பாவிகளிடம் யாராவது சேவகம் செய்வார்களா?” “இவர்களுடைய அதி அக்கிரமத்தை ஒழிக்கும் காலம் வந்துவிட்டது. நேற்றுத்தான் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்று பாளையங்கோட்டைச் சிறையை உடைத்து விட்டு ஊமைத்துரையையும் அவருடன் இருந்த வீராதி வீரர்களையும் விடுதலை செய்து விட்டார்களாம். ஊமைத்துரையும் ஒரு பெரும் படை திரட்டி வருகிறாராம். கும்பினிக்காரர் இடித்துத் தரைமட்டமாக்கிய பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை ஒரே வாரத்தில் மறுபடி கட்டி விட்டார்களாம். நீங்கள் இரண்டு பேரும் உத்தரவு கொடுத்தால் நான் கூடப் போய் ஊமைத்துரையின் படையில் சேரலாம் என்று பார்க்கிறேன்” என்றான் அந்த வாலிபன். இதைக்கேட்ட கிழவன் கருப்பையா சேர்வை பயந்து போனான். “அதெல்லாம் வேண்டாம், தம்பி! ஊமைத்துரையின் காரியம் எப்படி நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம். இந்த வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்களே இவர்கள் பாதாள உலகத்திலிருந்து வந்த ராட்சதர்கள். இவர்களை ஒழித்துக் கட்டுவதற்கு சூரபத்மனைக் கொன்ற முருகன் மறுபடியும் அவதாரம் எடுத்தாக வேண்டும். எல்லாவற்றுக்கும் கொஞ்ச நாள் பொறுத்திரு. மேலே என்ன நடக்கிறதென்று பார்த்துத் தீர்மானிக்கலாம்” என்றான். வேலம்மாள் அன்று மாடத்தேவனைத் தனியாகச் சந்தித்தபோது, ’அப்பா சொன்னதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அன்னிய வெள்ளைக்கார கும்பினியை எதிர்த்துச் சண்டை போட வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயந்தான் கவலையாயிருக்கிறது. என் தகப்பனார் சபல புத்தியுள்ளவர். நீ வெளியில் போனதும், யாராவது ஒருவனுடைய கழுத்தில் என்னைப் பலவந்தமாகப் பிடித்துக் கட்டி விட்டால் என்ன செய்கிறதென்று பயமாயிருக்கிறது. நமக்குள் ஒரு கலியாண பந்தம் ஏற்பட்ட பிறகு நீ போனால் பாதகமில்லை" என்றாள். “நீ சொல்வது உண்மைதான். தை மாதம் பிறந்ததும் ஒரு தேதி பார்த்துக் கலியாணத்தை முடித்து விடுவோம். பிறகு அப்போதுள்ள நிலைமைக்குத் தகுந்தாற்போல் யோசித்துச் செய்து கொள்ளலாம்!” என்றான் மாடத்தேவன். அன்னியர்களாகிய கும்பினிக்காரர்களை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியந்தான்; ஆனாலும் வேலம்மாளைப் பிரிந்து செல்வது இலேசான காரியம் அல்ல. வேலம்மாள் இன்னொருவனைக் கலியாணம் செய்து கொள்வது என்பதை நினைத்தபோது மாடத்தேவனுடைய உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. வெள்ளரிக்காய், பூவும் பிஞ்சுமாகப் பறிபோனபோதுகூட அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் உண்டாகவில்லை. எனவே ஊமைத்துரையின் படையில் சேரும் யோசனையைத் தள்ளிப் போட்டான். சில நாளைக்கெல்லாம் முன்னைக் காட்டிலும் மிக்க துயரகரமான செய்தி வந்தது. ஊமைத்துரையின் படைக்கும் கும்பினியின் படைக்கும் கோரமான யுத்தம் நடந்தது என்றும், பாஞ்சாலங்குறிச்சிப் படை கூண்டோ டு கைலாசமாகப் போர்க்களத்தில் மாண்டு மடிந்து விட்டதென்றும் ஜனங்கள் சேரும் இடங்களில் எல்லாம் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட வேலம்மாள் கண்ணீர்விட்டு அழுதாள். மாடத்தேவன் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்திருந்தான். கருப்பையா சேர்வை அவர்களுக்கு ஆறுதல் சொன்னான். ஆயினும் அதிகமாக அவன் ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யௌவனப் பிராயத்தில் எல்லாவிதத் துயரங்களும் சீக்கிரத்தில் பறந்து போய் விடுகின்றன. அதிலும் புதிது புதிதாகக் காதலில் மூழ்கியிருப்பவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மாடத்தேவனும் வேலம்மாளும் தங்களுடைய வருங்கால வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளில் வெளி உலகத்து நிகழ்ச்சிகளை மறந்து விட்டார்கள். கலியாணத்துக்குத் தேதி வைப்பது பற்றி மாடத்தேவன் கருப்பையா சேர்வையிடம் இரண்டு மூன்று தடவை பிரஸ்தாபித்தான். கிழவனும், “ஆகட்டும்; குலதெய்வத்துக்குப் பூசை போட்டுவிட்டுத் தேதி வைத்து விடுவோம்” என்று சொன்னான். இந்த நிலையில் ஒரு நாள் மாடத்தேவனுடைய ஆகாசக் கோட்டைகள் எல்லாம், கும்பினியாரின் பீரங்கிகளால் தகர்க்கப்பட்ட பாளையக்காரர் கோட்டைகளைப் போல், தகர்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாய்ப் போகும்படி நேர்ந்தது. ஒரு நாள் அவன் சிவகங்கைக்குப் போயிருந்தான். அங்கே தனக்கு வேண்டிய சில சாமான்களை வாங்கிக் கொண்டான். பிறகு நகைக் கடைக்குப் போனான். வேலம்மாளுக்குக் கலியாணத்தின் போது போடுவதற்காகக் கைக்குத் தங்கக் காப்பு, கழுத்துக்குத் தங்கக் கொடி இவைபற்றி விசாரித்தான். எதை வாங்கலாம் என்று நிச்சயிக்க அவனால் முடியவில்லை. வேலம்மாளையே ஒரு நாள் அழைத்து வந்து வாங்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு திரும்பி வந்தான். இதைப் பற்றிச் சொல்லலாமென்று உற்சாகத்துடன் அவன் கோட்டைக்கு வந்த போது, அங்கே கிழவனையும் அவனுடைய மகளையும் தவிர மூன்றாவது ஆள் ஒருவன் இருப்பதைக் கண்டான். அந்தப் புது மனிதன் ஒரு தூணில் சாய்ந்திருக்க, வேலம்மாள் ஒரு அடுக்குப் பானையில் வெந்நீர் வைத்துக் கொண்டு அவன் காலில் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தாள். கருப்பையா சேர்வை பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். இந்தக் காட்சியை வாசற்படியில் நின்றபடியே சிறிது நேரம் மாடத்தேவன் பார்த்தான். அவன் வந்து நின்றதை அந்த மூவரில் ஒருவரும் கவனிக்கவில்லை. சத்தப்படுத்தாமல் திரும்பிப் போய்விட்டான். வெள்ளரிக்காய்த் தோட்டத்தில் அன்று மாடத்தேவனுக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. உடம்பெல்லாம் வெலவெலத்திருந்தது. அடிக்கடி இடிந்த கோட்டையையும் மலைமேல் இருக்கும் சுனையையும் பார்த்துக் கொண்டிருந்தான். வேலம்மாள் கையில் குடத்துடன் சுனைக்குப் போவது ஒரு தடவை தெரிந்தது. உடனே குன்றின் மீது பாய்ந்தேறிச் சென்றான். அவன் குன்றின் உச்சியை அடைந்தபோது வேலம்மாள் இடுப்பில் குடத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். மாடத்தேவன் அவள் எதிரில் போய் வழி மறிப்பது போல் நின்று முறைத்துப் பார்த்தான். “என்னங்கறேன்? ஏன் இப்படி வித்தியாசமாய்ப் பார்க்கிறாய்?” என்று வேலம்மாள் கேட்டாள். “ஆமாம்; என்னைப் பார்த்தால் இனிமேல் உனக்கு வித்தியாசமாய்த்தானிருக்கும்!” என்றான் மாடத்தேவன். “நீ சொல்லுகிறது ஒன்றும் எனக்கு புரியவில்லை” என்றாள் வேலம்மாள். “அது எப்படிப் புரியும்?” என்றான் மாடத்தேவன். “சரி, புரியாது போனால் போகட்டும். வழியைவிடு எனக்கு வேலை இருக்கிறது” என்றாள் வேலம்மாள். "தாராளமாய்ப் போ! நானா வேண்டாம் என்று வழி மறிக்கிறேன்?’ என்று கூறி மாடத்தேவன் வழியை விட்டு விலகிக் கொண்டான். வேலம்மாள் மேலே சென்றவள் இரண்டொரு தடவை தயங்கித் தயங்கி நின்றாள். மாடத்தேவன் அவளை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றான். வேலம்மாள் ஆத்திரத்துடன் முணு முணுத்துக் கொண்டு விடு விடு என்று நடந்து போய்விட்டாள். அன்று மத்தியானம் மாடத்தேவன் வழக்கம்போல் அவர்கள் வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை. தோட்டத்தில் வேலை செய்யவும் அவனால் முடியவில்லை. அங்குமிங்கும் அகாரணமாய் அலைகிறதும் தனக்குத்தானே பேசிக் கொள்கிறதுமாயிருந்தான். சாயங்காலம் பொழுது சாய்கிற சமயத்தில் வேலம்மாள் ஒரு பாத்திரத்தில் சோறு எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தாள். அவள் வருவது தெரிந்ததும், மாடத்தேவன் அவளை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிச் சுறுசுறுப்பாகச் செடிகளுக்கு களை கொத்திக் கொண்டிருந்தான். வேலம்மாள் அவன் எதிராக வந்து நின்று, “மத்தியானம் ஏன் சாப்பிட வரவில்லை?” என்று கேட்டாள். “இஷ்டமில்லை, வரவில்லை! நீ எதற்கு இங்கே வந்தாய்?” என்றான் மாடத்தேவன். “உனக்குச் சோறு கொண்டு வந்தேன். அப்பா கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்.” “எனக்குச் சோறு வேண்டாம். உங்கள் வீட்டுக்குப் புது விருந்தாளி வந்திருக்கானே, அவனுக்கே, எல்லாச் சோற்றையும் படையுங்கள்.” வேலம்மாள் சற்றுத் திகைத்தவள் போல் நின்றுவிட்டு, “விருந்தாளி வந்திருப்பது உனக்குத் தெரியுமா?” என்றாள். “ஏன் தெரியாது! உங்களுக்குத்தான் - அப்பனுக்கும் மகளுக்கும் - புது விருந்தாளி வந்திருக்கும் மவுஸில் கண் தெரியாமல் போய்விட்டது. எனக்குக் கூட கண் தெரியவில்லை என்று நினைத்தாயா?” “ஓகோ! உனக்குக் கண்கூடத் தெரியுமா? நீ குருடு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்?” “நான் குருடு தான். இல்லாவிட்டால் கழுதையைக் குதிரை என்று எண்ணியிருப்பேனா? மூதேவியை லட்சுமி என்று கொண்டாடியிருப்பேனா?” “என்ன சொன்னாய்? யாரைக் கழுதை என்றும் மூதேவி என்று சொன்னாய்? உனக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. சோற்றை இதோ வைத்துவிட்டுப் போகிறேன். வேண்டுமென்றால் சாப்பிடு. இல்லாவிட்டால் பட்டினி கிடந்து செத்துப் போ!” என்று சொல்லிவிட்டு வேலம்மாள் சோற்றுப் பாத்திரத்தைக் கீழே வைத்தாள். “உன் சோறும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்! இங்கே வைக்காதே! எடுத்துக் கொண்டு போய் எந்த நாய்க்காவது போடு!” என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் சோற்றுப் பாத்திரத்தைக் காலால் உதைத்தான். பாத்திரமும் உருண்டு, சோறும் சிதறி விழுந்தது. வேலம்மாள், “இனி இந்தப் பக்கம் நான் வருகிறேனா பார்!” என்று சொல்லிவிட்டு விம்மிக் கொண்டே அங்கிருந்து போனாள். அன்றிரவே மாடத்தேவனுடைய தோட்டக் குடிசையில் அடுப்புப் புகை கிளம்ப ஆரம்பித்து விட்டது. பழையபடி சுயம்பாகம் செய்து சாப்பிடத் தொடங்கினான். மறுநாள் கருப்பையா சேர்வை மாடத்தேவனைத் தேடிக் கொண்டு வந்தான். “தம்பி நேற்றெல்லாம் உன்னைக் காணோமே? எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டான். “நான் எங்கும் போகவில்லை, உங்களுக்குத்தான் கண் தெரியவில்லை. புது விருந்தாளி வந்திருக்கிறான் அல்லவா? அந்த மவுஸில் முழுகியிருந்தீர்கள்!” “அது உண்மைதான், வீட்டுக்கு புது விருந்தாளி வந்தால் உபசரிக்க வேண்டியது நியாயந்தானே! அவனோ உடம்பெல்லாம் புண்ணுடன் வந்திருக்கிறான். அவன் யார் என்று தெரியுமா? வேலம்மாள் சொன்னாளா?” “அவளோடு இங்கே யார் பேசினார்கள்?” “நேற்றுச் சாயங்காலம் உனக்குச் சோறு கொண்டு வந்தாளே? சொல்லவில்லையா?” “கொண்டு வந்தாள். நான் சோறு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்…” “நான் தான் அவளை இன்னும் ஐந்தாறு நாளைக்கு உனக்குச் சோறு கொண்டு வந்து இங்கேயே கொடுத்து விடும்படி சொன்னேன். புது ஆள் வந்திருக்கிறானே, அவன் என் அக்காவின் மகன். உன்னைப் பார்த்தால், நீ யார் இன்னார் என்று கேட்பான். எதற்காக வீணாய் இந்த வம்பு?” “இத்தனை நாளும் இல்லாமல் இப்பொழுது அக்கா மகன் திடீரென்று வந்து குதித்து விட்டானா?” “அதில் என்ன அதிசயம்? இந்தக் காலத்தில் அங்கங்கே படை திரட்டுகிறார்கள்; படையைக் கலைக்கிறார்கள். இன்றைக்கு ஒரு பாளையக்காரன் ராஜாங்கம் செலுத்துகிறான். நாளைக்கு அவன் புளியமரத்தில் தொங்குகிறான். நீ கூட இரண்டு வருஷத்துக்கு முன்னால் திடீரென்றுதானே இங்கே வந்து குதித்தாய்?” “அதைப்பற்றி இப்போது என்ன? எனக்கு வேலை இருக்கிறது. வீண் பேச்சு பேச நேரம் இல்லை. நீங்கள் போய் உங்கள் விருந்தாளியைப் பாருங்கள்.” “அவ்வளவு பதட்டப்படாதே, தம்பி! வந்திருப்பவன் நல்ல சொத்துக்காரன். அதிக நாள் உயிரோடிருக்க மாட்டான். இருக்கிறவரையில் அவனைக் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் அவனுடைய சொத்து நமக்கு வரும். அப்புறம் உனக்கும் வேலம்மாளுக்கும் ஒருவிதமான கவலையுமில்லை! ஆயுள் முழுவதும் நீங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்.” “அப்படிப்பட்ட சொத்து எனக்கு வேண்டாம். நீங்களும் உங்கள் மகளுமே வைத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கைப்பாடு பட்டுப் பிழைக்கத் தெரியும்!” என்று சொல்லி மாடத்தேவன் விர்ரென்று நடந்து தோட்ட வேலையைப் பார்க்கப் போனான். கிழவன், “இந்த பிள்ளைக்கு வந்த கிறுக்கைப் பார்!” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான். பிறகு நாலைந்து நாட்கள் விசேஷம் ஒன்றுமில்லாமல் கழிந்தன. மாடத்தேவனுடைய உள்ளத்தில் மட்டும் எரிமலை ஜுவாலை விட்டுக் கொண்டிருந்தது. வெளியே தீக்குழம்பைக் கக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பமும் வந்தது. ஒரு நாள் மாலை தற்செயலாக மாடத்தேவன் மலை உச்சியில் சுனை இருக்கும் இடத்தை நோக்கினான். அந்தச் சுனைக்கரையில் தானும் வேலம்மாளும் எத்தனையோ நாள் மாலை நேரங்களில் உல்லாசமாகப் பொழுது போக்கியதெல்லாம் நினைவு வந்தது. இருவருமாகச் சேர்ந்து கட்டிய ஆகாசக் கோட்டைகளை நினைத்துக் கொண்டு நெடிய பெருமூச்சு விட்டான். அதைப் பற்றி நினைத்த போதெல்லாம் அவனுடைய நெஞ்சை வலித்தது. அந்தச் சுனையருகில் போனால் ஒருவேளை தன் மனத்தின் தாபம் தீருமோ என்று எண்ணி ஆர்வத்துடன் நோக்கினான். அப்போது மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த அஸ்தமன சூரியனின் மஞ்சள் வெயில் பட்டு ஒரு மனிதனின் உருவம் கரிய நெடிய சிலைபோல அங்கே நின்றது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண் உருவம் வந்து அந்த நெடிதுயர்ந்த மனிதனின் பக்கத்தில் நின்றது. இருவரும் சுனைக்கரையில் இருந்த வெள்வேல மரத்தடியில் உட்கார்ந்ததும் தெரிந்தது. இதைப் பார்த்ததும் மாடத்தேவனுடைய உள்ளம் குமுறியது. அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் கொதித்து வெளிவந்தது. மிக்க ஆக்ரோஷத்துடன் குன்றின் மீது பாய்ந்து ஏறினான். அவன் அங்கே போய்ச் சேர்ந்தபோது அந்தப் பெண் உருவத்தைக் காணோம். இடிந்த கோட்டைக்குள் வேலம்மாளின் பணிவிடைக்கும் உரியவனாயிருந்த மனிதன் மட்டும் அந்த வெள்வேல மரத்தில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். மேற்குத் திசையை நோக்கி அவன் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபடியால் மாடத்தேவன் வந்ததையே அவன் கவனிக்கவில்லை. மாடத்தேவன் குன்றில் ஏறத் தொடங்கிய போது தோட்டத்துக்கு வேலி எடுத்துக் கொண்டிருந்தான். ஆகையால் அவனுடைய கையில் கொஞ்சம் நார்க் கயிறு இருந்தது. மடியில் செருகியிருந்த கத்தியும் இருந்தது. தனியாக உட்கார்ந்திருந்த ஆளைக் கண்டதும் அவனுடைய மூளையில் சட்டென்று ஒரு யோசனை உதயமாயிற்று. பின்புறமாகச் சென்றான். கயிற்றை வீசி எறிந்து அந்த மனிதனைச் சுற்றி மரத்தோடு சேர்த்துக் கட்டினான். கட்டி முடிச்சுப் போட்டுவிட்டு எதிர்ப்பக்கத்தில் வந்தான். மடியில் வைத்திருந்த கத்தியை எடுத்துப் பிடித்துக் கொண்டான், “அடபாவி! சண்டாளா! நீ யார், எதற்காக இங்கே வந்தாய் என்று சொல்லிவிடு. எனக்கும் வேலம்மாளுக்கும் குறுக்கே எப்படி நீ வரலாம்? அவளுக்கும் எனக்கும் கலியாணம் நடப்பது ஒன்றுதான் பாக்கியாயிருந்தது. அப்படி இரண்டு உடலும் ஒருயிருமாயிருந்தோம். எங்கள் வாழ்க்கையைப் பாழாக்க நீ வந்தாய். எதற்காக வந்தாய்? உன்னுடைய மனதில் என்ன எண்ணியிருக்கிறாய்? உண்மையைச் சொல்லிவிடு. திரும்பவும் அவளைப் பார்க்காமல் இப்படியே ஓடிப் போவதாகச் சத்தியம் செய்து கொடு; சத்தியம் செய்து கொடுத்தால் உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் இந்தக் கத்தியால் குத்திக் கொன்று போடுவேன். இது நிச்சயம் நான் சொன்னபடி சத்தியம் செய்யப் போகிறாயா, இல்லையா?” என்று மாடத்தேவன் சரமாரியாகப் பொழிந்தான். அந்தக் கட்டுண்ட மனிதனோ இத்தனைக்கும் அதிசயம் ததும்பிய கண்களால் மாடத்தேவனை உற்று பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை ஏதோ சொல்லப் போகிறவன் போல் அவனுடைய உதடுகள் ஒரு தடவை அசைந்தன… ஆனால் வார்த்தை ஒன்றும் வெளி வரவில்லை. "அடே! ஏன் ஆடு திருடின கள்ளனைப் போல் விழித்துக் கொண்டிருக்கிறாய்? பதில் சொல்வதற்கு என்ன? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? உன்னை இப்படியே கட்டிப் போட்டுக் கொலை செய்வேன் என்று நினைக்காதே! “நீ என்னோடு கத்தி எடுத்துச் சண்டை செய்வதாயிருந்தால் சொல்லு! அவிழ்த்து விட்டுவிடுகிறேன். ஆனால் தப்பித்து ஓடி விடலாம் என்று மட்டும் நினைக்காதே! கோட்டையில் ஒளிந்து கொள்ளலாம் என்று மனப்பால் குடிக்காதே! அந்தப் பாழுங் கோட்டையின் மர்ம வழிகள், மூலை முடுக்குகள் எல்லாம் எனக்குத் தெரியும். நீ எங்கே ஒளிந்து கொண்டாலும் விடமாட்டேன்” என்று மாடத்தேவன் கர்ஜித்தான். அதற்கும் கட்டுண்ட மனிதன் சும்மா இருந்தான். மாடத்தேவனுக்கு வந்த எரிச்சலைச் சொல்ல முடியாது. “நான் எவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ ஏண்டா சும்மாயிருக்கிறாய்? உனக்குப் பேசத் தெரியாதா? நீ ஊமையா?” என்றான். அத்தனை நேரமும் வியப்பு மட்டும் தோன்றிய முகத்தில் இப்போது ஒரு புன்னகை தோன்றிப் பரவியது. அந்தப் புன்னகை மிக விசித்திரமாயிருந்தது. ஆனால் அதன் பொருள் மாடத்தேவனுக்கு விளங்கவில்லை. எரிச்சல் அதிகமாயிற்று. “என்னடா சிரிக்கிறாய்? நான் சொல்வதெல்லாம் உனக்கு கேலியாக இருக்கிறதா? பரிகாசமா செய்கிறாய்? இதோ பார்! உன்னை ஒரே குத்தாய் குத்திவிடுகிறேன். என் ஆசைக் காதலியை என்னிடமிருந்து பறித்தவனுக்கு இதுதான் தண்டனை!” என்று கத்தியை ஓங்கினான். அச்சமயம் கட்டுண்ட மனிதனுடைய பார்வை மாடத்தேவனுக்குப் பின்புறம் சென்றது. அதே கணத்தில் யாரோ வேகமாக ஓடிவரும் காலடிச் சத்தம் கேட்டது. “அடப்பாவி! நில்லு! நில்லு! என்ன காரியம் செய்யப் போகிறாய்?” என்ற வேலம்மாளின் பதறிய குரல் ஒலி கேட்டது. மாடத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய உள்ளக் கொதிப்பு இப்போது அனல் ஜுவாலை ஆயிற்று. “அடி பாதகி! நானா பாவி? கையடித்துக் கொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்து எனக்குத் துரோகம் செய்யத் துணிந்த நீ என்னவாம்? முதலில் உன்னைக் கொன்றுவிட்டு அப்புறம் உன் ஆசை நாயகனைக் கொல்கிறேன்!” என்று மாடத்தேவன் கத்திக்கொண்டே வேலம்மாளை நோக்கிக் கத்தியை ஓங்கினான். “ஐயோ!” என்று வேலம்மாள் வீரிட்டாள். அதே சமயத்தில் மாடத்தேவனுக்குப் பின்னால் படபடவென்று சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவனுடைய கத்தி பிடித்த கையை இன்னொருவனுடைய கை பிடித்துக் கொண்டது. மறுகணம் மற்றொரு கையும் அவ்விதம் கெட்டியாகப் பற்றப்பட்டது. அது சாதாரணப் பிடியா? இரும்புப் பிடி! அவனைப் பிடித்த கைகள் வஜ்ரத்தினாலான கைகளாகவே இருக்க வேண்டும். மாடத்தேவனுடைய உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரையில் அந்தப் பிடியின் வேகத்தினால் நரம்புகள் புடைத்துக் கொண்டன; அவனுடைய உடம்பு வெட வெடவென்று நடுங்கிற்று. மாடத்தேவன் சற்றுத் திரும்பிப் பார்த்தான். மரத்தில் சேர்த்துக் கட்டியிருந்த கயிறுகள் சுக்குச்சுக்காக அறுபட்டிருந்தன. கட்டை அறுத்துக் கொண்ட அம் மனிதனுடைய முகத்தில் முன் போலவே ஒரு அதிசயமான புன்னகை தவழ்ந்தது. அவன் உதடுகள் துடித்தன. “அட பாவி! அவர் யார் என்று தெரியவில்லையா? உன் மண்டையில் மூலை இல்லையா? உன் முகத்தில் கண் இல்லையா?” என்று வேலம்மாள் அலறினாள். உடனே, மாடத்தேவனுடைய மூளையில் ஒரு நரம்பு அசைந்தது. அந்த நரம்பு வானவெளியிலிருந்து ஒரு செய்தியை ஏற்று அவன் மூளையில் நிரப்பிற்று. அவனுடைய உடம்பு முழுவதும் புளகாங்கிதமடைந்து புல்லரித்தது. கோபத்தினால் புடைத்திருந்த நரம்புகள் தளர்ந்தன. கையில் இருந்த கத்தியும் சரிந்து கிழே விழுந்தது. உடனே, அந்த இரும்புக் கைகளும் பிடியை விட்டன. “வேலம்மா! இவர்தான் ஊமைதுரையா?” என்று கேட்டான் மாடத்தேவன். “அது உனக்கு இத்தனை நேரம் தெரியவில்லையா? உன் புத்திக் கூர்மையை என்னவென்று சொல்ல!” என்றாள் வேலம்மாள். “சாமி! துரையே!” என்று மாடத்தேவன் பாறையில் நெடுஞ்சாண் கடையாக விழுந்து ஊமைத்துரையின் கால்களை பிடித்துக் கொண்டான். “தெரியாமல் நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்கள். நான் கும்பிடப் புறப்படுவதற்கு முன்னாலேயே என் தெய்வம் என்னைத் தேடி வந்து விட்டது. துரையே! இந்த சண்டாளப் பாவி வேலம்மாள் இருக்கிறாளே, இவளிடம் நான் கொண்ட மோகந்தான் என் கண்களுக்குத் திரை போட்டு மறைத்து விட்டது. இவளாவது முன்னாலேயே எனக்கு சொல்லக்கூடாதா? சொல்லாமல் துரோகம் செய்து விட்டாளே!” என்றான். ஊமைத்துரை மறுபடியும் புன்னகை செய்தான். கொன்னிக் கொன்னி இந்த வார்த்தைகளைச் சொன்னான். “த-த-தம்பி! இந்தச் சு-சு-சுருள் வாளைப் பார்! இதை ஒ-ஒ-ஒரு தடவை வீசி…ஏ-ஏ-ஏழு தலைகளை வெட்டியிருக்கிறேன். உன்னுடன் ச-ச-சண்டை போடச் சொல்கிறாயா!” இவ்விதம் சொல்லி ஊமைத்துரை தன் மடியிலிருந்து கீழே விழுந்து கிடந்த சுருள்வாளை எடுத்து ஒரு வீச்சு வீசினான். இருபுறமும் கூருடைய அந்தச் சுருள்வாள் சுமார் பதினாறு அடி தூரம் மின் வெட்டைப் போல் பாயந்து திரும்பி வந்து சுருண்டு கொண்டது. அதை அவ்விதம் விசிறிய போது நாகப் பாம்பு சீறுவது போன்ற சீறல் சத்தம் கேட்டது. மாடத்தேவன் அதைப் பார்த்துவிட்டு "சாமி! நான் இந்தச் சுருள் வாளுக்குப் பயப்படவில்லை. இதே சுருள் வாள் உங்கள் விரோதியிடம் இருந்தால் என் சிறிய மடக்குக் கத்தியை வைத்துக் கொண்டே ஒரு கை பார்ப்பேன். ஆனால் உங்களுடன் நான் சண்டை இடுவேனா? உங்களை இந்த ஜன்மத்தில் பார்க்கப் போகிறேனா என்று தவம் கிடந்தேன். நீங்கள் போர்க்களத்தில் இறந்து வீரசொர்க்கம் சென்றீர்கள் என்று கேள்விப்பட்டு மனமுடைந்து போயிருந்தேன். இப்போது தான் எனக்குப் புதிய உயிர் வந்தது. நீங்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். உங்கள் காலடியில் என் உடல் பொருள் உயிரை அர்ப்பணம் செய்யத் தயார். எனக்குக் கட்டளை இடுங்கள்!" என்றான். ஊமைத்துரையின் கண்ணில் அப்போது கண்ணீர் துளித்தது. இதையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த வேலம்மாளும் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவர்கள் மூன்று பேருமாகச் சுனைக் கரையிலிருந்து புறப்பட்டு இடிந்த கோட்டைக்குத் திரும்பிப் போனார்கள். கோட்டைக்குள் ஒரு தனி அறையை மாடத்தேவன் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அதில் தன்னுடைய தட்டு முட்டுச் சாமான்களையும் பெட்டி பேழைகளையும் போட்டு வைத்திருப்பதாகக் கருப்பையா சேர்வையிடம் சொல்லியிருந்தான். ஊமைத்துரையை அந்த அறைக்கு அழைத்துப் போய்ப் பூட்டைத் திறந்து காட்டினான். அறைக்குள்ளே சில பெட்டிகளும் சாக்கு மூட்டைகளும் இருந்தன. அவை எல்லாவற்றிலும் கன்னங்கரிய வெடி மருந்து இருந்தது. பக்கத்தில் சில துப்பாக்கிகளும் ஈட்டிகளும் கத்திகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. “சாமி! இந்த ஆயுதங்களையெல்லாம் உங்களுக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன். இவற்றை உபயோகப்படுத்த மட்டும் வழி சொல்லுங்கள்!” என்றான் மாடத்தேவன். பின்னர், ஏழெட்டுத் தினங்கள் மாடத்தேவன் மிகச் சுறுசுறுப்பாயிருந்தான். ஊமைத்துரை சொன்னபடி பல இடங்களுக்கும் போய்ப் பலரைப் பார்த்துச் சங்கேதமாகச் செய்தி சொல்லிவிட்டு வந்தான். கடைசியாக ஊமைத்துரை மிக முக்கியமான வேலை ஒன்றை அந்த வாலிபனிடம் ஒப்புவித்தான். சிவகங்கைக்கு அவன் சென்று, சிவகங்கைப் பாளையக்காரரின் தம்பியான சின்னமருது சேர்வை எங்கே இருக்கிறார் என்று விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டியது; சின்னமருதுவைக் கண்டு, ஊமைத்துரை இருக்குமிடத்தைத் தெரிவிக்காமல் அவர் உயிரோடிருக்கிறார் என்று மட்டும் சொல்ல வேண்டியது. மருதுவின் மனதை அறிந்து கொண்டு, “ஊமைத்துரையுடன் சேர்ந்து வெள்ளைப் பூண்டை இந்த நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கும் முயற்சிக்கு உதவி செய்யத் தயாரா?” என்று கேட்டு வரவேண்டியது - இந்த முக்கிய விஷயத்தை ஊமைத்துரை இரண்டு மூன்று தடவை படித்துப் படித்துச் சொன்னான். மாடத்தேவனும் நன்றாய் கேட்டுக் கொண்டு உற்சாகமாகக் கிளம்பினான். சிவகங்கைக்குப் போய் விசாரித்தான். சின்னமருது சேர்வை சிறுவயல் என்ற ஊரில் தனி அரண்மனை கட்டிக் கொண்டு வசிப்பதாகத் தெரிய வந்தது. பிறகு சிறு வயலுக்குப் போய்ச் சின்ன மருதுவைப் பேட்டிக் கண்டான். ஊமைத்துரை உயிரோடிருப்பது அறிந்து அவர் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். உடனே தன்னுடைய அரண்மனைக்கு வந்து சேரும்படியும், பதினைந்து நாளில் இருபதினாயிரம் படை வரையில் திரட்டி விடத் தம்மால் முடியும் என்றும், வீராதி வீரரான ஊமைத்துரை தலை வகித்து நடத்தினால் வெள்ளைப் பூண்டை அடியோடு இந்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விடலாம் என்றும் சொல்லி அனுப்பினார். இந்த உற்சாகம் செய்தியுடன் மாடத்தேவன் இடிந்த கோட்டைக்கு விரைந்து வரத் தொடங்கினான். ஆனால் வரும் வழியில் ஒரு இடையூறு ஏற்பட்டது. ஒரு சிறிய கும்பினிப் படை அங்கே திரண்டு இறங்கியிருப்பதைப் பார்த்து, மாடத்தேவன் ஒதுங்கிப் போக நினைத்தான். அது பலிக்கவில்லை. நாலைந்து சிப்பாய்கள் அவனைப் பிடித்துக் கட்டிப் பாசறையின் நடுவில் இருந்த கூடாரத்துக்குக் கொண்டு போனார்கள். கூடாரத்தில் அவனைத் தூணோடு ஒன்றாகச் சேர்த்துக் கட்டினார்கள். இந்த நிலைமையில் பக்கத்துக் கூடாரத்தில் நடந்த சம்பாஷ்ணையில் கொஞ்சம் அவன் காதில் விழுந்தது. ஒரு கிழக் குரல், ‘ஊமைத்துரை இருக்குமிடம் எனக்குத் தெரியும். காட்டிக் கொடுக்கிறேன்’ என்று சொல்லியது. அதற்காகக் கும்பினித் துரைத்தனத்தார் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுக்கும்படி அதே குரல் கேட்டது. “ஆகட்டும்! ஊமையன் பிடிபட்டதும் பரிசுத் தொகை கொடுக்கப்படும்!” என்றார் மேஜர் துரை. “ஜமேதார்! இப்போதைக்கு இந்தக் கிழவனுக்கு நல்ல பழைய புட்டிச் சாராயம் ஒரு கிளாஸ் கொடு!” என்றும் அந்த மேஜரின் குரல் சொல்லிற்று. “அதிகம் பேர் வேண்டாம். கூட்டமாக வந்தால் அவன் தப்பித்து ஓடிப் போய் விடுவான். நாலைந்து பேரை மட்டும் - தைரியசாலிகளாக - என்னுடன் அனுப்புங்கள். பிடித்துக் கொடுக்காவிட்டால் என் பெயர்… அல்ல மாற்றி வைத்துக் கொள்கிறேன்” என்றது கிழக் குரல். இதையெல்லாம் கேட்டு மாடத்தேவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். கட்டுக்களைப் பலாத்காரமாக அறுத்தெறியும் சக்தி தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டான். இதற்குள் மேஜர் துரை அவனைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்கு வந்தார். “ஓ! இந்தப் பையனை நான் பார்த்திருக்கிறேனே! இவனுடைய தோட்டத்தில்தானே நிறைய வெள்ளரிக்காய் கிடைத்தது!” என்றார் மேஜர். “ஆம், எஜமானே! என்னை எதற்காக இவர்கள் பிடித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றான் மாடத்தேவன். “என்னமேன்! கும்பினியின் படையில் நீ சேர்ந்து விடுவதுதானே? நல்ல சம்பளம் கிடைக்கும்!” என்றார் மேஜர் துரை. “எஜமானே! நான் ஒரு சமயம் ஆர்க்காட்டு நவாபின் படையில் இருந்தேன். என்னைப் போருக்கு உபயோகமில்லை யென்று போகச் சொல்லி விட்டார்கள். இப்போது சேர்ந்து மட்டும் என்ன பிரயோஜனம்? நல்ல வெள்ளரிக்காய் பயிர் சேமித்து வைக்கிறேன். நீங்கள் அந்த பக்கம் வரும்போது கொடுப்பேன். கும்பினிப் படையில் சம்பளத்துக்கு ஆசைப்பட்டுச் சேர லட்சம் பேர் வருவார்கள். ஆனால் வெள்ளரிக்காய் பயிர் செய்ய எல்லாராலும் முடியுமா?” என்றான் மாடத்தேவன். இந்தப் பதில் மேஜருக்கு மிகவும் பிடித்திருந்தது. “நீ சொல்கிறது ரொம்பச் சரி. வெள்ளரித் தோட்டம் நன்றாய்ப் போட்டு வை! மறுமுறை வரும்போது கிஸ்திக்காக வரவு வைத்துக் கொள்ள மாட்டேன். காசுக்கு நாலுவீதம் கொடுத்து வாங்கிக் கொள்வேன்!” என்றான். மேஜர் துரையின் உத்தரவுப்படி மாடத்தேவன் கட்டை அவிழ்த்து விட்டார்கள். “வந்தனம், துரைகளே!” என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் அங்கிருந்து விரைந்து சென்றான். ஓட்டமும் நடையுமாகப் போய் அதிசீக்கிரத்தில் இடிந்த கோட்டையை அடைந்தான். மாடத்தேவன் அர்ச்சுனன் குன்றை அடைந்த போது ஊமைத்துரையும் வேலம்மாளும் கோட்டைச் சுவர் மீது உட்கார்ந்து கொண்டு ஆவலோடு வழி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் கேட்பதற்காகக் கூட இவன் காத்திருக்கவில்லை. “சாமி! நான் போன காரியம் பழந்தான். உங்களை உடனே புறப்பட்டு வரச் சொன்னார். கிளம்புங்கள்! ஒரு விநாடிக் கூடத் தாமதிக்கக் கூடாது! வேலம்மா! சாமியைத் தனியாக அனுப்பக் கூடாது! நீ சிறுவயல் வரையில் கொண்டு விட்டுவிட்டு வா!” என்றான். அவசரத்தின் காரணத்தை அறியாத வேலம்மாள் ஊமைத்துரையைப் பார்த்தாள். ஊமைத்துரையின் முகத்தில் மறுபடியும் ஒரு புன்னகை தவழ்ந்தது, அவன் குதித்து எழுந்து புறப்படுவதற்கு ஆயத்தமானான். “இ-இ-இவள் வரவேண்டாம்! நா-நா-நான் போகிறேன்; வ-வ-வழி தெரியும்” என்று சொன்னான். “இல்லை, துரையே! உங்களைக் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கட்டாயம் இவளை அழைத்துப் போகவேண்டும். வேலம்மா! ஏன் தயங்குகிறாய்? உனக்கு விஷயம் புரியவில்லை போலிருக்கிறது. வழியில் கும்பினிப் படையைப் பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து விடுவார்கள். குறுக்கு வழியில் சீக்கிரமாகச் சாமியைக் கொண்டு போய்ச் சிறு வயலில் விட்டுவிட்டு வா!” என்றான். இதைக் கேட்டதும் வேலம்மாளுக்கு அவனுடைய பரபரப்பின் காரணம் தெரிந்துவிட்டது. ஆனாலும் சிறிது தயங்கினாள். “நீயும் - அப்பாவும்… என்ன செய்வீர்கள்?” என்றாள். “என்னை நான் காப்பாற்றிக் கொள்வேன். உன் அப்பனைக் கடவுள் கவனித்துக் கொள்வார். முருகன் மேல் ஆணை! உடனே புறப்படு!” என்றான். இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள். “சாமி! சற்றுப் பொறுங்கள்!” என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் கோட்டைக்குள் ஓடினான். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து, “இதை எடுத்துப் போங்கள்!” என்றான். ஊமைத்துரை உதட்டைப் பிதுக்கி “ஹும்” என்றான். தன் மடியில் வைத்திருந்த சுருள் கத்தியை எடுத்து ஒரு விசிறு வீசினான். “எனக்கு இ-இ-இது போதும்! அ-அ-அதை நீயே வைத்துக் கொள்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். ஊமைத்துரையும் வேலம்மாளும் கொஞ்ச தூரம் சென்றார்கள். குன்றுக்குப் பின்னால் அவர்கள் மறைய வேண்டிய சமயம் வந்தது. வேலம்மாள் ஒரே ஓட்டமாய்த் திரும்பி ஓடி வந்தாள். மாடத்தேவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள். “என் பேரில் சந்தேகப்பட்டாயே? இப்போது சாமியுடன் என்னை அனுப்புகிறாயே?” என்றாள். “பெண்ணே! சந்தேகத்தைப் பற்றிப் பேச இது தானா சமயம்?” என்று மழுப்பினான் மாடத்தேவன். “ஆனால் உன் பேரில் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது?” என்றாள் வேலம்மாள். “இது என்ன பைத்தியம்?” என்றான் மாடத்தேவன். “நீ என் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்போது போகச் சொல்கிறாய், இல்லையா?” “அப்படித்தான் வைத்துக் கொள்ளேன், உன் உயிர் எனக்குப் பாத்தியதைப் பட்டதில்லையா?” “ஈரேழு ஜன்மத்துக்கும் பாத்தியதைப் பட்டது. ஆகையால் நான் திரும்பி வரும்வரையில் நீ உயிரோடிருப்பதாகச் சத்தியம் செய்து கொடு! அப்படிச் சத்தியம் செய்தால்தான் போவேன்!” “பெண்ணே! அப்படியே சத்தியம் செய்கிறேன். அதை நிறைவேற்றுவது முருகனுடைய பொறுப்பு!” “முருகனை நான் வேண்டிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே!” என்று வேலம்மாள் சொல்லி, தன் இரு கரிய விழிகளாலும் ஒரு தடவை மாடத்தேவன் முகத்தைப் பருகி விடுபவள் போலப் பார்த்தாள். பிறகு அவனுடைய கழுத்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தாள். மாடத்தேவன் தன்னுடைய குடிசைக்குப் போனான் அதிலிருந்த சில ஆயுதங்களையும் தட்டு முட்டுச் சாமான்களையும் எடுத்துக் கொண்டான். பிறகு நெருப்புக் குச்சியைக் கிழித்துக் குடிசையின் கூரையில் பற்ற வைத்தான். தீப்பிடித்துக் கொண்டு குடிசை எரிய ஆரம்பித்ததும் கோட்டையை நோக்கிச் சென்றான். கோட்டைச் சுவர் மேல் ஏறி ஒரு வசதியான இடத்தில் கையில் துப்பாக்கியுடன் உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் குடிசை எரிந்த தீயின் வெளிச்சத்தில் ஏழெட்டுப் பேர் சாலையோடு வருவது தெரிந்தது. அவர்கள், எரியும் குடிசையின் அருகில் நின்று சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றார்கள். பின்னர், அவர்களில் நாலு பேர் பிரிந்து முன்னால் வந்தார்கள். மாடத்தேவன் துப்பாக்கியின் விசையை இழுத்தான். குபீர் என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்தது. வந்தவர்களில் நாலு பேரும் துள்ளி நகர்ந்து கொண்டார்கள். ஒருவர் மேலும் குண்டு பாயவில்லை. மாடத்தேவன் பிறகு இரண்டு மூன்று தடவை சுட்டதும் வியர்த்தமாகவே போயிற்று. பிறகு அந்த மனிதர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி ஆலோசித்தார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் வந்த வழியே திரும்பிச் சென்றான். மற்றவர்கள் சாலையில் துப்பாக்கி எல்லைக்கு வெளியே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். திடீரென்று அவர்களில் ஒருவன், “வேலம்மா! மகளே வேலம்மா!” என்று கூவிக்கொண்டு கோட்டையை நோக்கி ஓடி வந்தான். அவன் கருப்பையா சேர்வை என்பது மாடத்தேவனுக்குத் தெரிந்தது. கூடாரத்தில் கட்டப்பட்டிருந்தபோது பக்கத்துக் கூடாரத்திலிருந்த வந்த கிழவனின் குரல் கருப்பையா சேர்வையின் குரல்தான். ஆனால் அவன் எதற்காக இப்போது அப்படி அலறிக் கொண்டு ஓடி வருகிறான்? இதுவும் ஒரு சூழ்ச்சியோ? துப்பாக்கியில் பாக்கியிருந்த ஒரு குண்டை அந்தத் துரோகியின் மீது செலுத்தலாமா என்று மாடத்தேவன் ஒரு கணம் யோசித்தான். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் பின்னால் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் அந்த வேலையைச் செய்து விட்டான். கிழவன் ‘வீல்’ என்று சத்தமிட்டுக்கொண்டே கீழே விழுந்தான். ‘கிழவனுடைய துரோகத்துக்குப் பலன் கிடைத்துவிட்டது’ என்று எண்ணி மாடத்தேவன் மகிழ்ந்தான். ஆனால் இப்படி அவன் செய்த துரோகத்தைப்பற்றி வேலம்மாள் தெரிந்து கொள்ளாதது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? தெரிந்திருந்தால் வேலம்மாள் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள்! கிழவனுடைய துரோகச் செயலினால் ஊமைத்துரைக்கு ஆபத்து ஏற்படாமல் அவரை எச்சரித்து அனுப்பியது கூட அவ்வளவு பெரிய காரியம் இல்லை. அவருக்கு வழி காட்டுவது என்ற காரணத்தின் பேரில் வேலம்மாளை அனுப்பியது எவ்வளவு நல்ல யோசனை? அதுவரையில் மாடத்தேவனுடைய யோசனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இனி என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை. வந்தவர்கள் துணிந்து கோட்டைக்குள் வருவார்கள். ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால், அவர்கள் அருகில் நெருங்குகிற வழியாயில்லை. ஊமைத்துரை இங்கிருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவரையில் நல்லதுதான். நேரம் ஆக ஆக, ஊமைத்துரை சிறுவயல் போய்ச் சேர்வதற்கு வசதி ஏற்படும். இந்தப் படு முட்டாள்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கட்டும்! ஊமைத்துரையின் சுருள் வாளை நினைத்துப் பயந்து சாகட்டும்!… இவ்வாறு இரு தரப்பிலும் காத்திருக்கும் போட்டி நடந்தது. நள்ளிரவு வரையில் அந்தப் போட்டி நடந்தது. மாடத்தேவனுக்குத் தூக்கம் கூட வர ஆரம்பித்துவிட்டது. இளம் பிராயம் அல்லவா? கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. அந்தச் சமயத்தில், வடக்கேயிருந்து வந்த சாலை வழியாக ஒரு கரிய கட்டெறும்புக் கூட்டம் சாரி வைத்து வருவதைக் கண்டான். இல்லை, இல்லை! அவை கட்டெறும்புகள் அல்ல. கும்பினிப் பட்டாளம்தான் வருகிறது. அப்பப்பா! எத்தனை பேர்? இருநூறு, ஐந்நூறு, ஆயிரம் பேர் இருக்கும் போல் தோன்றுகிறதே? அத்தனை பெரிய படைக்கு முன்னால் தான் ஒருவன் என்ன செய்ய முடியும்? ஆனாலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் கும்பினிப் பட்டாள சிப்பாய்கள் புகுந்தபோது, கோட்டைக்குள்ளே இருந்த ஒவ்வொரு வீரனும் எத்தனைப் பேரைக் கொன்றுத்தீர்த்தான்? அதைப் போல் தானும் செய்துவிட்டு, வீர சொர்க்கம் அடைய வேண்டியதுதான். ஆனால், பாவம், வேலம்மாள். அவளுக்குச் செய்து கொடுத்தச் சத்தியம் என்ன ஆகிறது? அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? அவள் தான் முருகன் பேரில் பாரத்தைப் போட்டிருக்கிறாளே? முருகனே சத்தியத்தை நிறைவேற்றட்டும்! நமக்கு என்ன கவலை? இப்படிச் சாஹஸச் செயல்கள் புரிவதுபற்றி மாடத்தேவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் கும்பினிப் படைநெருங்கி வந்துவிட்டது. அது என்ன? படைக்கு நடுவில் நீளமாக வண்டி ஒன்று வருகிறதே! அந்த வண்டியில் என்ன வருகிறது. பட்டாள வரிசை, முன்னால் வந்த வீரர்கள் நின்ற இடத்திலேயே நின்றது. ஏதோ ஆலோசனைகள் நடந்தன. பிறகு, அந்தக் கரிய நீண்ட வண்டியருகில் நின்று கொண்டு சில வீரர்கள் என்னமோ செய்தார்கள். ஓகோ! அது பீரங்கி வண்டிபோல் அல்லவா இருக்கிறது? பீரங்கியில் மருந்து போட்டுக் கொட்டியிருக்கிறார்களா? மாடத்தேவன் சிறிது திடுக்கிடத்தான் செய்தான். பீரங்கி வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பீரங்கியிலிருந்து குண்டு போட்டுக் கோட்டையை அடியோடு நாசமாக்கப் பார்க்கிறார்கள் போலும்! ஆனால் அதிகமாகக் குண்டு போடுதல் தேவையாயிராது. பீரங்கியின் வேலை மிகவும் எளிதாய் போய்விடும். மூட்டை மூட்டையாக வெடி மருந்தைத் திருடிக் கொண்டு வந்து மாடத்தேவன் கோட்டையின் அறை ஒன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தான் அல்லவா? அந்த அறையில் குண்டுவிழ வேண்டியதுதான்! தீர்ந்தது கோட்டை! தீர்ந்தது தன் உயிரும்! வேலம்மா! நன்றாக முருகன் பேரில் பாரத்தைப் போட்டாய்! கும்பினிப் பட்டாளத்தின் பீரங்கியின் முன்னால் முருகன் என்ன செய்வான்? ஓகோ!…கிழவன் அலறி ஓடி வந்ததன் காரணமும் இப்போது தெரிந்தது. பீரங்கி கொண்டு வந்து கோட்டை மேல் சுடப் போகிறார்கள் என்று அறிந்ததும் கிழவனுக்கு மகளைப் பற்றிய கவலை வந்து விட்டதாக்கும்!… குடிசைத் தீ முன்னமே அணைந்து விட்டது. நாலா பக்கமும் காரிருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளைப் பிளந்துகொண்டு பீரங்கி முகப்பில் ஒரு மின்னல் ஜோதி தென்பட்டது. அடுத்த கணம் பயங்கரமான பீரங்கியின் குரைப்புச் சத்தம் கேட்டது. பீரங்கி சத்தத்திலேயே அந்தப் பயங்கரத்திலேயே அந்தப் பழைய கோட்டைச் சுவர்கள் அதிர்ந்தன. மறு விநாடி குண்டு வந்து கோட்டைக்குள் விழுந்தது. ஆயிரம் பேரிடி ஏக காலத்தில் இடித்தாற் போல ஒரு பயங்கர வெடிச் சத்தம்; ஒரு பெரிய அகண்டமான நெருப்பு ஜுவாலை; பிறகு சட சட, பட படவென்று வானம் இடிந்து விழுந்தது. குன்றும் கோட்டைச் சுவர்களும் தகர்ந்து விழுந்தன. மாடத்தேவனும் உருண்டு விழுந்தான். விழுந்த கணத்திலேயே நினைவை இழந்தான். மாடத்தேவனுக்கு மறுபடி நினைவு வந்தபோது, காலில் சகிக்க முடியாத கொடிய வலி தெரிந்தது. மூச்சு விடத் திணறியதும் தெரிந்தது. உடம்பெல்லாம் சொட்ட வியர்த்து நனைந்திருந்தது. ஒரே இருட்டாயும் இருந்தது. அந்த இருட்டைப் போன்ற இருட்டை அவன் அதற்கு முன் கண்டதேயில்லை. ஒருவேளை தன் கண் பொட்டையாயிற்றோ என்று நினைத்தான். இல்லை; கண்ணில் ஒரு கோளாறும் இல்லை. கையினால் தடவிப் பார்த்தேன். மேலே சில்லிட்ட பாறை; பக்கத்திலும் சில்லிட்ட பாறை. கீழே மட்டும் கல்லும் மண்ணுமான தரை, அப்பால் இப்பால் நகருவதற்கு இடம் இல்லை. இடமிருந்தாலும் நகர முடியாதபடி காலில் ஏதோ பெரும் பாரம் அமுக்கியது. பொறுக்க முடியாத வலியும் சேர்ந்திருந்தது. யாரோ சிலர் பேசிக் கொண்ட குரல்கள் பாதாளத்திலிருந்து கேட்பது போலக் கேட்டன. “பார்த்தாயா? ஊமையன் மறுபடியும் டிமிக்கி கொடுத்து விட்டான்!” “நன்றாகத் தேடிப் பார்த்தாகி விட்டது. இனித் தேடுவதற்கு இடமில்லை.” “பீரங்கி வருவதற்கு முன்னாலேயே அவன் கம்பி நீட்டியிருக்க வேண்டும்.” “ஊமைத்துரையை ஊர் ஜனங்கள் இந்திரஜித்தன் என்று சொல்வது சரிதான்.” “எப்படியும் அகப்படாமலா போகிறான்? நாலாபுறமும் ஆட்களைப் பிரித்து அனுப்பித் தேடச் செய்யலாம்!” “சிவகங்கைக்குப் போயிருப்பான்.” “இல்லை, கமுதிக் கோட்டைக்குச் சென்றிருப்பான்.” “காட்டிலே ஒளிந்து கொண்டிருந்தாலும் இருப்பான்.” “அந்தக் குடிகாரக் கிழவன் நம்மை வேண்டுமென்று ஏமாற்றினானா? அல்லது தானே ஏமாந்து போனானா?” “முட்டாள்களே! அவனைச் சுட்டுக் கொன்று விட்டீர்களே! மற்றவர்களுக்கு உதாரணமாகத் தூக்கில் அல்லவா தொங்கவிட்டிருக்க வேண்டும்?” கிழவன் மரத்தில் தொங்கும் காட்சியை மாடத்தேவன் மனக் கண்ணால் பார்த்து மகிழ்ந்தான். அந்தச் சண்டாளத் துரோகியை அப்படிச் செய்திருந்தாலும் தகும். ஆனால் வேலம்மாள் பார்த்தால் எவ்வளவுக் கஷ்டப்படுவாள்? வேலம்மா! வேலம்மா! உன்னை இனி நான் காணப் போவதில்லை. இதோ மறுபடியும் எனக்கு மயக்கம் வருகிறது. என்னுடைய உயிர் இதோ பிரிந்து போகிறது… மாடத்தேவனுடைய உயிர் வெகு கெட்டியாக அவனுடைய உடலைப் பற்றிக்கொண்டிருந்தது. மறுபடியும் அவனுக்கு நினைவு வந்தபோது அதை உணர்ந்தான். இப்போது சிறிது மங்கலாக வெளிச்சம் கூடத் தெரிந்தது. மேலேயும் பக்கத்திலேயும் உற்றுப் பார்த்தான். கோட்டைச் சுவரின் ஒரு பெரும் பாளம் எக்கச்சக்கமாக தன் பேரில் விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்தான். தன் தலையிலும் உடம்பிலும் படாமல் சாய்வாக அந்தப் பாளம் வேறொரு கல்லினால் முட்டுக் கொடுக்கப்பட்டு நிற்கிறது. ஆனால் காலின் மேல் மட்டும் ஒரு பெரிய குண்டு பாறை விழுந்திருக்க வேண்டும். கால் எலும்பே முறிந்து போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு பொறுக்க முடியாமல் வலிக்குமா? நேரம் ஆக ஆகப் பக்கத்துப் பாறைகள் சுட ஆரம்பித்தன. சூரியனுடைய வெயில் அடித்துச் சூடாகி வருகின்றன போலும். வரவரச் சூடு அதிகமாயிற்று; தாகம் தொண்டையை வாட்டியது; பசியும் எடுத்தது. தான் இப்படியே கிடந்து பசியினாலும் தாகத்தினாலும் பரிதவித்துச் சாக வேண்டியதுதானா? கோட்டைச் சுவர் தலையில் விழுந்து ஒரேயடியாகக் கொன்றிருக்கக் கூடாதா? முருகா! வேலம்மாள் பிரார்த்தனையின் பயனா இது? எங்கேயோ வெகு தூரத்திலிருந்து அதல பாதாளத்திலிருந்து, ஆழமான குகையிலிருந்து, “முருகா, முருகா” என்று ஒரு தீனக்குரல் கேட்டது. “முருகா! என் கணவன் எங்கே? நான் ஆசை வைத்த புருஷன் எங்கே? உன்னிடம் ஒப்புவித்துப் போன என் ராஜா எங்கே?” என்று புலம்பிய குரல் வெகு வெகு தீனஸ்வரத்தில், ஆனால் தெளிவாகக் கேட்டது. அதற்குப் பதில் சொல்ல மாடத்தேவன் முயன்றான். “வேலம்மா!” என்று அவன் அழைத்த குரல் அவனுக்கே கேட்கவில்லை; அவளுக்கு எப்படிக் கேட்கும்? ஐயோ முருகா! கும்பினிச் சிப்பாய்கள் என்னைப் பார்க்காமல் போனதுபோல் வேலம்மாளும் போய் விடுவாளோ? இல்லை; முருகன் அவ்வளவு கருணையற்றவனல்லன். வேலம்மாள் இதோ நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய குரல் மேலும் மேலும் தெளிவாகக் கேட்கிறது! மாடத்தேவன் தன்னுடைய சக்தியையெல்லாம் பிரயோகித்து, “வேலம்மா, வேலம்மா! இதோ இருக்கிறேன்!” என்று கத்தினான்! “என் ராஜா!” என்று கதறிக் கொண்டு வேலம்மாள் ஓடி வந்தாள். அவன் காலில் மேல் கிடந்த குண்டு பாறையை முக்கி முனகி அப்புறப்படுத்தினாள். அதனால் அவளுக்கு ஏற்பட்ட இரைப்பு நீங்குவதற்குள் மாடத்தேவனின் காலைப் பிடித்து அவனை வெளியில் இழுத்தாள். “அடி பாவி! கால் முறிந்திருக்கிறதடி! வலி கொல்லுகிறது! என்னைத் தொடாதே! இப்படி இழுக்காதே…” மாடத்தேவன் பாறைக்குள்ளிருந்து வெளிப்பட்டதும் வேலம்மாள் அவன் மீது விழுந்து கட்டிக் கொண்டு அழுதாள். மாடத்தேவன் பலாத்காரமாக அவளுடைய முகத்தைத் தள்ளிப் பிடித்துக் கொண்டு தான் தாகத்தினால் தவிப்பதை ஜாடையினால் தெரிவித்தான். அவனை உடனே வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டு சுனைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். நாலு கை தண்ணீர் எடுத்து அவன் வாயில் விட்டதும் மாடத்தேவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. “வேலம்மா! உனக்குக் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினேன் பார்த்தாயா? ஆனால் கால் மட்டும் போய்விட்டது!” என்றான். வேலம்மாள் அவனுடைய காலைப் பார்த்துப் பார்த்து விம்மி அழுதாள். “எனக்காக அழாதே, வேலம்மா! உன் அப்பனுக்காக அழு! நான் கால் இழந்தாலும் உயிரோடு இருக்கிறேன். அவன் செத்தே போய்விட்டான். ஆனால் அவனுக்காகத் தான் ஏன் அழவேண்டும்? வீரச் சாவு அடைந்தவனுக்காக அழக்கூடாது. நேற்று இராத்திரி உன் அப்பன் என்னோடு நின்று கும்பினிக்காரர்களோடு சண்டையிட்டதைப் பார்த்திருந்தாயானால்… ஆகா! வீரபாண்டியனும் ஊமைத்துரையும் கூட அதிசயப்பட்டிருப்பார்கள்!” வேலம்மாள் அழுகையை நிறுத்திவிட்டு, “அப்பன் உண்மையில் அப்படி உன்னோடு நின்றானா? வேறு விதமாக நான் சந்தேகப்பட்டேனே!” என்றாள். “சந்தேகப்பட்டாயா? நான் சந்தேகப்பட்டதற்கு மட்டும் அவ்வளவு பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே? சந்தேகம் பொல்லாதது வேலம்மா!” “ஆமாம் சந்தேகப்படக்கூடாதுதான். சற்று முன்னால் நான் முருகன் பேரில் கூடச் சந்தேகப்பட்டேன். ஆனால் முருகன் உன்னை எனக்குக் காப்பாற்றிக் கொடுத்தார்!” என்றாள் வேலம்மாள். முருகன் கருணையினாலும் வேலம்மாளின் பணிவிடையினாலும் மாடத்தேவன் பிழைத்து எழுந்தான். ஆனால் கால் போனது போனதுதான். கால் இல்லா முடவனாகவே அவன் வாழ்ந்து வந்தான். முடவனைக் கட்டிக் கொண்டதற்காக வேலம்மாள் சிறிதும் வருத்தப்படவில்லை. அதைப் பற்றிப் பெருமையே கொண்டாள். அவளே வெள்ளரித் தோட்டம் போட்டு வெள்ளரிக்காய் விற்று வந்த காசைக் கொண்டு குடும்பம் நடத்தினாள். கணவனையும் காப்பாற்றினாள். ஏழு வருஷம் அவர்கள் இன்ப வாழ்க்கை நடத்தினார்கள். பிறகு மாடத்தேவன் இறந்து போனான். இறக்கும் வரையில் வேலம்மாளின் தகப்பன் செய்த துரோகச் செயலைப் பற்றி மாடத்தேவன் அவளிடம் சொல்லவில்லை. கும்பினிப் படையுடன் வீரப்போர் புரிந்து அவன் உயிர் விட்டதாகச் சொல்லி வந்தான். வேலம்மாளும் ஒரு இரகசியத்தை இறுதிவரையில் மனதிற்குள்ளேயே வைத்திருந்து இறந்தாள். ஊமைத்துரைக்கு வழிகாட்ட அவளை மாடத்தேவன் போகச் சொன்ன இரவில், கொஞ்ச நேரத்திலேயே ஊமைத்துரையிடம் விடைபெற்றுக் கொண்டு அவள் திரும்பி விட்டாள். சுனைக்கரையில் மரத்தின் பின்னாலிருந்து அங்கே நடந்தது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் தகப்பன் செய்த சதிச் செயலையும் அறிந்து கொண்டிருந்தாள். ஆனால் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. ‘உனக்கு எப்படித் தெரிந்தது?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ‘ஊமைத்துரையை நடுவில் விட்டு விட்டு வந்தேன்’ என்று தானே சொல்லவேண்டும்? இந்த அதிசயத் தம்பதிகளுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பக்கத்துக் கிராமவாசிகள் வீரன் மாடத்தேவனுடைய நினைவுக்காகச் சுனைக்கரையில் ஒரு கல் நாட்டினார்கள். அவனைக் காப்பாற்றிய முருகனுக்காக ஒரு வேலையும் நட்டார்கள். அந்தச் சுனைக்கு நாளடைவில் ‘மாடத்தேவன் சுனை’ என்று பெயர் வந்தது. இப்போதும் அந்தப் பக்கமாய்ப் போகிற கிராமத்து ஜனங்கள் மாடத்தேவன் கல் மீதும் அருகில் உள்ள வேல் மீதும் சுனை ஓரத்து அரளிச் செடியிலிருந்து பூப்பறித்துப் போட்டு வணங்கிவிட்டுப் போகிறார்கள். மாஸ்டர் மெதுவடை அவருடைய உண்மைப் பெயர் அப்பாசாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம், “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…” என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் தான் காணப்பட்டது. ஒரு விளம்பரம் “மெதுவடை சுடப்படுகிறது!” என்று மணிபிரவாள சிலேடையில் ஆரம்பமாயிற்று. இந்த சிலேடைக்கு வியாக்யானம் தேவை என்று தோன்றுகிறது. சாதாரணமாய், இங்கிலீஷில் டாக்கி படம் பிடிப்பதைக் குறிப்பிடும்போது, ‘ஷுட் ஆகிறது’, ‘ஷாட் எடுக்கிறார்கள்’ என்று குறிப்பிடுவது உண்டு. ‘ஷுட்’ என்பதற்கு ‘சுடு’ என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறதல்லவா? அந்தத் துப்பாக்கி சுடுகையை வடைசுடுவதற்கு உபயோகப்படுத்தி மேற்படி சிலேடையைப் போட்டவர், அந்த டாக்கி கம்பெனியார் மாதம் 371/2 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தியிருந்த கலியுகக் காளமேகக் கவிச் சக்கரவர்த்தி, பழனி பிரஸாதராவ். (அந்தப் பழைய காளமேகன் திரேதாயுகத்தைச் சேர்ந்தவனென்பது அவர் எண்ணம்.) மாஸ்டர் மெதுவடை நெடுங்காலமாகத் தென்னிந்திய நாடக மேடைகளில் தமது விகட சக்ராதிபத்தியத்தை நிலைநிறுத்தி வந்தவர். பச்சை சிருங்காரப் பேச்சினால்தான் அவர் அவ்வளவு பிரசித்தியடைந்தது. மேடையில் வந்து நிற்பார்; இரண்டு தடவை கண்ணைச் சிமிட்டுவார். சபையில் கிளுகிளு வென்று சிரிப்பு அலை பரவும். “மாடி மேல் மாடி!” என்பார். பின்னால் வரப் போவதை அறிந்து சபையோர், ‘கலீர்’ என்று சிரிக்கத் தொடங்குவார்கள். “அதன் மேலே ஒரு லேடி!” என்பார். பிறகு, சபையோரின் குதூகலத்தை யாரால் கட்டிப் பிடிக்க முடியும்? “அவளும் நானும் ஜோடி!” என்றாரோ இல்லையோ, கொட்டகைச் சொந்தக்காரன் வயிற்றில் நெருப்புத்தான். கொட்டகை இடிந்து விழும் படியான சிரிப்பும் ஆரவாரமும் ஏற்படும். அவருடைய ஹாஸ்யத்தில் நான் ஒரு கோடிதான் காண்பித்திருக்கிறேன். இன்னும் வாடி, மோடி, கூடி என்று மேலே மேலே போய்க் கொண்டிருப்பார். அவருடன் தொடர்ந்து போவது என்னால் முடியாத காரியமாகையால், அவருக்கு “மெதுவடை” என்று பெயர்வந்த காரணத்தைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். ஒரு தடவை அவர் நாடக மேடையில், முழுசு முழுசாக இருபத்தெட்டு மெதுவடைகளை வாயசைக்காமல் விழுங்கினாராம்! அப்புறம் ஆறு மாத காலம் அவர் ஒவ்வொரு நாடகத்திலும் இருபத்தேழுவடைகள் தின்னவேண்டியிருந்ததாம். அந்தக் காட்சியை நடத்திக் காட்டினாலொழிய, ஜனங்கள் கலவரம் செய்யவும், டிக்கெட் பணத்தை வாபஸ் கேட்கவும் ஆரம்பித்து விட்டார்களாம். இதிலிருந்து அவருக்கு “மாஸ்டர் மெதுவடை” என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது. இப்பேர்ப்பட்ட ஹாஸ்ய நடிக சக்கரவர்த்தி இந்தியாவின் சார்லி சாப்ளின் - தமிழ் நாட்டு ஹாரல்ட்லாயிட் தமிழ் டாக்கி முதலாளிகளின் வலையில் விழாமல் வெகு காலம் தப்ப முடியுமா? ஒரு நாள் தலை குப்புற விழுந்தார்; விழுந்ததோடில்லாமல் கழுத்தையும் முறித்துக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது. சென்னைப் பட்டணத்திலுள்ள ஜாலிவுட் ஸ்டூடியோவைப் பற்றித் தெரியாதவர்கள் டாக்கி உலகத்தில் யாரும் இருக்க முடியாது. அந்த ஜாலிவுட் ஸ்டூடியோவில் பிடிக்கும் படங்களுக்கு ஹாலிவுட் டிம்பன் என்பவர் பிரபல டைரக்டராக இருந்தார். ஹாலிவுட்டைப் பற்றியும் அங்குள்ள நடிகர்கள் டைரக்டர்கள் பற்றியும் மிஸ்டர் டிம்பன் அநேக அபூர்வமான விவரங்களைச் சொல்வார். இந்த விவரங்கள் எல்லாம் மேற்படி நடிகர்களுக்கும் டைரக்டர்களுக்குமே தெரியாதன வென்றால், அவை எவ்வளவு அபூர்வமாயிருக்க வேண்டுமென்று நான் சொல்ல வேண்டியதில்லை. மிஸ்டர் டிம்பனுக்குத் தமிழ் டாக்கி உலகத்தில் ரொம்பவும் பிரசித்தி ஏற்பட்டிருந்தது. அவருக்குத் தமிழ் தெரியாது; சங்கீதம் தெரியாது; கண்பார்வை கொஞ்சம் கம்மி; காது சிறிது மந்தம் - ஆகவே, தமிழ் டாக்கி டைரக்டராவதற்கு வேண்டிய எல்லா அம்சங்களும் அவரிடம் பொருந்தியிருந்தன வென்று சொல்ல வேண்டாமல்லவா? அப்பேர்ப்பட்டவரின் மேற்பார்வையில் இப்போது ஜாலிவுட் ஸ்டூடியோவில் இரண்டு படங்கள் ‘ஷுட்’ செய்யப்பட்டு வந்தன. அவற்றில் ஒன்று சமூகப் படம். இன்னொன்று புராணப் படம். இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் பாக்கியம் வாய்ந்த ஒரு ‘நட்சத்திரம்’ அங்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் பெயர் மிஸ் டி.கே.ஹம்ஸா. புராணக் கதையில் ஹம்ஸாவுக்கு அருந்ததி வேஷம்; சமூகக் கதையில் தாஸி வேஷம். தாஸி வேஷத்தில் மிஸ் ஹம்ஸா நடிக்கும் அதே காட்சியில் அப்பாஸாமியும் நடித்தான். சந்தர்ப்பம் என்ன வென்பதை நேயர்கள் ஊகித்து அறிந்திருக்கலாம். வேறென்ன தான் இருக்கப் போகிறது? ஹம்ஸாவின் வீட்டுக்கு வழக்கமாக வருகிற கிழ ஜமீந்தார் ஒருவன் இருக்கிறான். அவளுக்குக் கள்ளக் காதலன் ஒருவனும் இருக்கிறான். ஒரு சமயம் இரண்டு பேரும் சேர்ந்தார்ப்போல் வந்து விடுகிறார்கள். கள்ளக் காதலனை ஒளித்து வைக்க ஹம்ஸா முயல்கிறாள். முடியவில்லை. இருவரும் சந்திக்கிறார்கள்; குஸ்தி போடுகிறார்கள். இவன் ஒரு தடவையும் அவன் ஒரு தடவையுமாக ஹம்ஸாவின் மேல் விழுகிறார்கள்… திரும்பித் திரும்பி இந்த ஆபாஸந்தானா என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இதெல்லாம் ஜனங்களுக்கு நீதி கற்பிக்கத்தானே யன்றி வேறில்லை. “தாஸிகளை நம்பக் கூடாது” என்பது நீதி. இந்த நீதியை ஜனங்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்வதற்காக நடிகர்கள் மூவர், டைரக்டர் ஒருவர், போட்டோ பிடிப்பவர் ஒருவர், சில்லறைச் சிப்பந்திகள் ஐந்து பேர், பட முதலாளிகள் மூன்று பேர், அவர்களுடைய சிநேகிதர்கள் பதினைந்து பேர் - ஆக இவ்வளவு பேரும் வெகு பாடுபட்டார்கள். பாமரஜனங்களிடமிருந்து பணம் வருவதற்கு இந்தக் காட்சியைத்தான் நம்பியிருந்தார்களாதலால் அவ்வளவு விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. இதே காட்சி ஐந்தாறு நாள் திருப்பித் திருப்பி எடுக்கப்பட்டது. இப்படி இந்த ‘ஷுட்டிங்’ வளர்த்தப்படுவதை விரும்பாத பிராணி ஒருவன் இருந்தான். அவன் தான் அந்தக் காட்சியில் கிழ ஜமீந்தாராக நடித்தவன். அவனுக்கு அதில் அவ்வளவு வெறுப்பு ஏற்படக் காரணமாக இருந்தவன் அப்பாஸாமி தான். அந்த ஹாஸ்ய நடிகனுக்கு அவனுடைய வாழ்நாளில் இதுவரையில் கனவிலும் அறியாத அனுபவம் ஏற்பட்டிருந்தது. அவன் உண்மையிலேயே ஹம்ஸாவுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான். சென்ற ஒரு மாதமாக அவன் மாறி மாறி சொர்க்கத்திலும் நரகத்திலுமாக வாழ்ந்து வந்தான். ஹம்ஸா தன்னைப் பார்த்துப் புன்னகை புரியும் போதெல்லாம் அவன் ஏழாவது சொர்க்கத்துக்கே போய் விடுவான்; அவள் வேறு யாரையாவது பார்த்துப் புன்னகை புரியும் போது கொதிக்கும் எண்ணெயில் போட்டது போல் துடிதுடித்தான். கடைசி காதல் காட்சியின் ‘ஷுட்டிங்’ நடக்கும் போது முதலில் அவனுக்கு இன்பக் கடலில் மிதப்பது போலிருந்தது; பிறகு வரவரச் சுற்றி நின்று பார்ப்பவர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது. “இந்தச் சனியன்கள் எல்லாம் ஏன் இங்கே சுற்றி நிற்கின்றன?” என்று எண்ணிக் கொதித்தான். தன்னுடைய கோபத்தை யெல்லாம் பாவம், அந்தக் கிழஜமீந்தார் வேஷம் போட்டவன் மேல் காட்டினான். அவன் மேல் விழுந்த அடி உதைகளெல்லாம் வெறும் போலியாயிராமல் நிஜமான அடி உதைகளாகவே விழுந்தன; இந்தக் காட்சி வளர்த்தப்படுவதை அவன் விரும்பாததில் ஆச்சரியமில்லை யல்லவா? “இன்றோடு முடியா விட்டால், நாளை தினம் நான் நிச்சயமாய் வரமாட்டேன்; ஓடியே போய்விடுவேன்” என்று அந்த ஜமீந்தார் வேஷக்காரன் அன்று காலையே டைரக்டரிடம் சொல்லியிருந்தான். ‘ஷுட்டிங்’ முடிந்ததும், “தீர்ந்ததா, இல்லையா?” என்று கேட்டான். “டன்” என்றார் டைரக்டர் டிம்பன். ஜமீந்தார் வேஷக்காரன் அப்பாஸாமியைப் பார்த்து “ஒருநாள் உன் முதுகுத் தோலை உரிக்கிறேனா, இல்லையா, பார்” என்று சொல்லி விட்டு விரைவாக நகர்ந்தான். அப்பாஸாமி “தூ” என்று காரித்துப்பினான். மாஸ்டர் மெதுவடை சொப்பன லோகத்திலிருந்து பூமியில் இறங்கினான். “டன்!” எல்லாம் முடிந்தது. மிஸ் ஹம்ஸா நாளை முதல் அருந்ததியாகி விடுகிறாள்; அவளருகில் இனிமேல் நெருங்க முடியாது. ’ஸ்டூடியோ’வுக்குள் இது விஷயமாக வெகு கண்டிப்பான சட்டம் இருந்தது! காட்சிகள் நடிக்கப் படுகையில் தவிர மற்ற வேளைகளில் ஸ்திரீபுருஷர்கள் நெருங்கிப் பேசக்கூடாது. இத்தகைய சட்டம் இருந்தால் தான், அந்தந்த நட்சத்திரங்களுக்குரிய முதலாளி செட்டியார்கள், அவர்கள் டாக்கியில் நடிப்பதற்குச் சம்மதிப்பார்கள். ஒரு மாதத்திற்கு முன்னால் ‘ஸ்டூடியோ’வில் ஒரு சம்பவம் நடந்தது. ராமனும் சூர்ப்பனகையும் காமராவுக்கு முன் ஒரு தினுசாகக் காதல் ஸீனை நடித்த பிறகு, தூண்மறைவில் அதை மாற்றி நடித்து ’பிராக்டீஸ்’ செய்து கொண்டார்கள். அதாவது, ராமபிரான் சூர்ப்பனகை மேல் காதல் செய்யத் தொடங்கவே அவள் “சீ! போ!” என்று புறக்கணித்தாள். இந்தத் தூண் மறைவுக் காட்சியை வேறு சிலர் பார்த்து விடவே, அவர்கள் இரண்டு பேருக்கும் தலைக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள். அப்பாசாமிக்கு இது தெரிந்ததுதான். ஸ்டூடியோவுக்கு வெளியில் ஹம்ஸாவைச் சந்திக்கலா மென்றாலோ, அதற்கும் ஒரு இடையூறு இருந்தது. மிஸ் ஹம்ஸா மற்ற நடிகைகளைப் போல், ஸ்டூடியோவிலேயே ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஜாகையில் வசிப்பவள் அல்ல; தினம் வேலை முடிந்ததும் அவள் தன் வீட்டுக்குப் போய்விடுவாள். அவளுடைய புருஷனைப் பற்றிச் சிலர் ஒரு விதமாய்ச் சொன்னார்கள். ஆனால் எல்லாரும் ‘புருஷன்’ ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அவன் எப்படிப்பட்டவனோ, என்னமோ? மேலும் அவளை அப்படிப் பின் தொடர்வதற்கும் அவள் சம்மதிக்க வேண்டாமா? அவளுடைய மனோபாவத்தையோ சிறிதும் கண்டறிய முடியவில்லை. சில சமயம் அப்பாசாமியுடன் காதல் காட்சியில் நடிக்கும் பொழுது ‘இது நடிப்பன்று, உண்மைக்காதல்’ என்றே தோன்றும். அவள் ஒரு மோகனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு இவனுடைய கன்னங்களைப் பரிகாசமாகக் கிள்ளும் போது ‘ஒரு நாளும் இது பொய்க் காதலாக - வேஷக்காதலாக - இருக்க முடியாது’ என்று நமது விதூஷக சக்ரவர்த்தி நினைத்ததுண்டு. ஆனால் அந்தக் கிழ ஜமீந்தாருடன் அவள் காதல் செய்யும் போதும் அவ்வளவு உண்மையாகத் தானே தோன்றுகிறது! அப்பாசாமி ‘ஷுட்டிங்’ நடந்த இடத்திலிருந்து, வேஷத்தைக் கலைக்கும் இடத்துக்கு மிக்க மனச் சோர்வுடன் போய்க் கொண்டிருந்தான். வழியில் ராமர், லக்ஷ்மணர், விசுவாமித்திரர், ஜனகர், சீதை முதலியவர்களை அவன் பார்த்தான். இராமர் சிகரெட் புகை விட்டுக் கொண்டிருந்தார்; சீதை பீங்கான் கிண்ணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தாள்; லக்ஷ்மணன் ஒரு பெரிய கொட்டாவி விட்டு தன்னை மீறி வந்த தூக்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு சிமிட்டா பொடி உறிஞ்சினான். விசுவாமித்திரர் காதிலே பூணூலை மாட்டிக் கொண்டு அவசரமாய் எங்கேயோ போனார். இதையெல்லாம் பார்த்த அப்பாசாமிக்கு “இந்த வேஷமெல்லாம் எப்படிப் பொய்யோ, அதுபோல் உலக வாழ்க்கையே பொய்” என்ற எண்ணம் உதித்தது. இந்த உயிர் வாழ்விலே தான் என்ன ரஸம் இருக்கிறது? எதற்காக இந்த ஜீவனை வைத்துக் கொண்டு வாழவேண்டும்?… சாயங்காலம் ஆறரை மணிக்கு ஜார்ஜ் டவுன் துங்கப்ப நாய்க்கன் வீதியில் அப்பாசாமி போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு துணியிலே சுற்றப்பெற்ற ஒரு சிறு மூட்டை இருந்தது. அதற்குள் ஒரு டார்ச் லைட்டும், சுமார் பத்து அடி நீளம் மணிக்கயிறும் இருந்தனவென்பதை உங்களுக்கு நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது - மேலே கதையில் சுவாரஸ்யம் உண்டு பண்ணும் பொருட்டு. மேற்படி துங்கப்ப நாய்க்கன் வீதியிலிருந்து கேவல்தாஸ் சந்து பிரியும் இடத்தில் ‘ஐரீஸ் மாளிகை’ என்று ஒரு பிரம்மாண்டமான கட்டடம் கட்டப் பெற்று வந்தது. இரண்டு மச்சு ஏற்கெனவே கட்டியாகிவிட்டது. இன்னும் நாலைந்து மச்சுக்களாவது கட்டுவார்களென்று அங்கே வானுறவோங்கி நின்ற விட்டங்கள், சாரங்களிலிருந்து தெரிய வந்தது. இந்தக் கட்டடத்திற்குள், அப்புறம் இப்புறம் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையா என்று பார்த்துக் கொண்டு அப்பாசாமி சரேலென்று நுழைந்தான். சில அடி தூரம் சென்றதும், நல்ல இருள் சூழ்ந்திருந்தது. காலால் தடவித் தடவி நடந்து நாலைந்து வாசற்படியைத் தாண்டி வெகு தூரம் உள்ளே சென்ற பிறகு மூட்டையை அவிழ்த்து உள்ளேயிருந்த டார்ச்லைட்டை எடுத்துப் பொத்தானை அமுக்கினான். வெளிச்சம் எதிரே பளிச்சென்று அடித்தது. அந்த வெளிச்சத்தில், அவன் என்ன பார்த்தான் என்று நினைக்கிறீர்கள்? பயங்கரம்! பயங்கரம்!! கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு மனித தேகம் தெரிந்தது. எந்தக் கணத்தில் வெளிச்சம் அந்தத் தேகத்தின் மேல்பட்டதோ, அதே கணத்தில் அதன் தொண்டையிலிருந்து ஒரு உறுமல் சத்தம் வந்தது. இத்தகைய நிலைமையில் நீங்களும் நானுமாயிருந்தால், விழுந்தடித்து ஓடி, இருட்டில் எங்கேயாவது முட்டிக்கொண்டு திண்டாடுவோம். ஆனால் அப்பாசாமி சாமான்ய மனிதன் அல்ல; நாடக மேடையில் இது மாதிரி சந்தர்ப்பங்களை எத்தனைமுறை பார்த்திருப்பவன்! அவன் ஒரு நொடியில் சட்டைப்பையிலிருந்த கத்தியை எடுத்துத் திறந்து கொண்டு அந்த மனிதன் உபயோகித்த அதே ஏணியில் ஏறி சட்டென்று கயிற்றை அறுத்து எறிந்தான். கீழே விழுந்த தேகம் சிறிது நேரம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது. டார்ச் லைட்டை முகத்துக்கு நேரே பிடித்துப் பதை பதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது ஹாஸ்ய நடிகன்! மெதுவாக மூச்சு வரத் தொடங்கியது. பிதுங்கிய விழிகள் உள் அமுங்கின. இன்னும் சில நிமிஷத்துக்கெல்லாம் அந்தத் தேகம் எழுந்து உட்கார்ந்து கம்மிய குரலுடன் “மாச்சுப் பெட்டி இருக்கிறதா?” என்று கேட்டது. “மாச்சுப் பெட்டி எதற்கு? டார்ச்லைட் இருக்கிறதே?” “டார்ச் லைட் என்ன பிரயோசனம் பீடி பத்தவைப்பதற்கு?” அப்பாசாமிக்கு வெகு கோபம் வந்தது, “அடே முட்டாள், இத்தனை பெரிய காரியம் செய்து விட்டு, சாவதானமாய் பீடி பத்த வைக்க வேண்டுமென்கிறாயே, என்ன துணிச்சல் உனக்கு” என்றான். “அதற்காக என்ன பண்ணவேண்டுமென்கிறாய்?” “என்ன பண்ணுகிறதா! என் காலிலே விழுந்து கெஞ்சு, மன்னிப்புக் கேட்டுக் கொள். இல்லாவிடில் போலீஸ்காரனிடம் ஒப்புவித்து விடுவேன்.” “அப்படியா? உன் சமாசாரம் என்ன? நீ எதற்காக இங்கே வந்தாய்? கையிலே வைத்திருக்கும் கயிறு எதற்காகவோ?” அப்பாசாமிக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு “இதோ பார். நாம் இருவரும் ஒரே இடத்திற்கு, ஒரே காரியத்திற்காக வந்தது நல்லதுதான். நீ, எதற்காக இந்தக் காரியம் செய்யத் துணிந்தாய் என்று சொல்லு. அது சரியான காரியமாக இருந்தால், இந்தப் புதுக் கயிற்றை உனக்கே கொடுத்து விடுகிறேன். நான் வேறு கயிறு வாங்கிக் கொள்கிறேன்” என்றான். “அதெல்லாம் முடியாது” “என்ன முடியாது?” “இன்னொரு தடவை நான் தூக்குப் போட்டுக் கொள்வது முடியாத காரியம். நீ போட்டு விட்டுப் போவதாயிருந்தால் சொல்கிறேன்.” “அந்தப் பாவத்தையும் நான் சுமக்க வேண்டுமா? சரி சொல்லித் தொலை!” கயிற்றில் தொங்கிய மனிதன் சொல்லுகிறான்:- “ஐந்து வருஷத்துக்கு முன்னால் வரையில் நான் சந்தோஷமாயிருந்தேன். வன்னியத் தேனாம்பேட்டையில் எனக்குச் சொந்த வீடு இருக்கிறது. மௌண்ட் ரோடில் பழக்கடை வைத்திருந்தேன். மாதம் 30, 40 ரூபாய் வரும். வீட்டில் ஒரு பாதியை வாடகைக்கு விட்டிருந்ததிலும் பத்து ரூபாய் வந்தது. கவலை, கஷ்டம் இன்னதென்றே தெரியாமல் குஷியாக இருந்தேன்.” "ஒரு நாள் இரவு நான் கடையை மூடிக்கொண்டு வீடு நோக்கிப் போன போது, எங்கள் வீதி மூலையில் ஓர் இளம் பெண் நின்று அழுது கொண்டிருந்தாள். அவளிடம் நெருங்கி, ‘ஏனம்மா அழுகிறாய்?’ என்று கேட்டேன். அவள், தானும் இன்னும் நாலைந்து ஸ்திரீகளும் ஒரு தனி வீட்டில் குடியிருந்ததாகவும் போலீஸ்காரர்கள் எல்லோரையும் அன்று விரட்டி விட்டதாகவும், அந்த ஸ்திரீகளைத் தனக்குப் பிடிக்காதபடியால் அவர்களோடு போகாமல் பின் தங்கியதாகவும் சொன்னாள். பத்திரிகையில் இது சம்பந்தமான சில விவரங்களை நான் படித்திருந்தேன். “புதிய போலீஸ் சட்டம் அமுலுக்கு வந்திருப்பதாயும், அதன்படி சென்னைப் பட்டணத்தில் துன்மார்க்கத்தைத் தொழிலாகக் கொண்ட ஸ்திரீகள் எல்லோரும் அந்தந்த விடுதிகளிலிருந்து விரட்டி விடப்படுவதாகவும் பத்திரிகையில் போட்டிருந்தார்கள். இந்தச் சட்டத்தினால் எத்தனையோ பெண்கள் அநாதைகளாகத் தெருவில் நிற்க நேரிடுமென்றும், அவர்களை ஆதரிக்கப் பண உதவி செய்ய வேண்டுமென்றும், சில புண்யவதிகளும், புண்யவான்களும் பத்திரிகையில் விண்ணப்பம் செய்திருந்ததையும் படித்திருந்தேன். இதனாலெல்லாம் ஏற்கனவே கலக்க முற்றிருந்த எனக்குத் திக்கற்றுத் தெருவில் நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ‘இவளை ஏன் நாம் ஆதரிக்கக்கூடாது?’ என்று தோன்றிற்று. அதன் பலன் தான் இப்போது என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டிற்று…” “சரி, வீட்டுக்கு அழைத்துப் போனாய்; அப்புறம் என்ன நடந்தது.” “அப்புறம் என்ன? இரண்டு நாளைக்குள் வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். பிறகு யாரும் குடி வரவேயில்லை. பழக்கடையும் நஷ்டமாகி வந்தது. தினம் ஒரு ரூபாய் பழம் - ஆரஞ்சும் ஆப்பிளும் அவளே தின்று விடுவாள்! வியாபாரத்தில் லாபம் எப்படி வரும்? இருந்த போதிலும் ஒரு மாதிரி சந்தோஷமாய்த் தானே இரண்டு மூன்று வருஷம் வாழ்க்கை நடத்தி வந்தோம். அவள் டாக்கியில் சேரும் வரையில்…” “என்ன, டாக்கியில் சேர்ந்தாளா?” “ஆமாம், டாக்கியில் சேர்ந்த பிறகு…” “பெயர் என்ன? அவள் பெயர் என்ன?” “குப்பம்மாள்…” “நல்ல வேளை. மேலே சொல்லு.” “டாக்கியில் அவள் சேர்ந்த பிறகு என்னுடைய வாழ்க்கை நரகமாயிற்று. அவளை தினம் நான் ஸ்டூடியோவுக்குக் கொண்டு போய் விடவேண்டும்; திருப்பி சாயங்காலம் அழைத்து வரவேண்டும். வீட்டில் சமையல் செய்து தயாராய் வைத்திருக்க வேண்டும். வெந்நீர் போட்டுக் கூட வைக்க வேண்டும். இதெல்லாமாவது போகட்டும். டாக்கி நடிப்புக்கு வீட்டில் ஒத்திகை பார்க்கத் தொடங்கி விடுவாள். நான் கோபித்துக் கொண்டால் இடி, இடியென்று சிரிப்பாள். இதெல்லாமிருக்கட்டும். நேற்றைக்கு என்ன செய்தாள் தெரியுமா? ஸ்டூடியோவில் ஒரு காட்சியில் தேள்கள் வரவேண்டியிருந்ததாம். இவள் அந்தத் தேள்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து என் படுக்கையில் வேண்டு மென்றுவிட்டு விட்டாள். நான் உளறி அடித்துக் கொண்டு எழுந்தோடியதைப் பார்த்துச் சிரிக்கிறாள்…” “அடி பாவி!” என்றான் அப்பாசாமி. அவனுக்கு அந்த மனிதன் மேல் உண்மையாகவே இரக்கம் உண்டாயிற்று. “நீ உயிரை விடத் துணிந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் எங்கேயாவது ஓடிப் போய் விடுவதுதானே, பினாங்கு, சிங்கப்பூரைப் பார்க்க?” என்றான். “பணமிருந்தால் அப்படிச் செய்யலாம். என் கையில் தம்படி இல்லை. அவள் சம்பாதிப்பதையெல்லாம் தன் பேரிலேயே பாங்கியில் போட்டிருக்கிறாள். பணமில்லாமல் எப்படிக் கப்பல் ஏறுவது? நீ வாக்குக் கொடுத்தபடி என்னை மாட்டுவிட்டுத் தான் போக வேண்டும். இருக்கட்டும்; ஆனால் நீ எதற்காக வந்தாய்? என் மாதிரி காரணந்தானோ?” “இல்லவே, இல்லை!” என்று அப்பாசாமி அழுத்தமாய்ச் சொன்னான். “அதற்கு நேர் விரோதமான காரணம். ஒரு பெண்ணின் மீது நான் காதல் கொண்டேன். அவளைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவள் இணங்கமாட்டாள் என்றுதான் உயிர் மேல் வெறுப்பு வந்தது.” “அந்தப் பெண் யாரோ?” “அவளும் ஒரு டாக்கி ஸ்டார்தான், ஆனால்…” “அவள் பெயர் என்னவோ?” “நாம் தான் இருவரும் சாகப் போகிறோமே? சொன்னால் மோசம் என்ன? அவள் பெயர் மிஸ் ஹம்ஸா.” உட்கார்ந்திருந்த மனிதன் எழுந்து ஒரு குதி குதித்தான். “பேஷ்! பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவள்தான் நம்பபேர்வழி” என்றான். “என்ன உளறுகிறாய்?” “உளறல் இல்லை; அவளே அவள்தான்.” “வேறு பெயரல்லவா சொன்னாய்?” “ஆமாம், குப்பம்மாள் என்று சொன்னேன். அந்தப் பெயர் டாக்கிக்கு சுகப்படாது என்று மிஸ் ஹம்ஸா என்று வைத்துக் கொண்டாள்.” “என்ன” என்று சத்தம் போட்டுக் கொண்டு அப்பாஸாமி எழுந்திருந்தான். டார்ச் லைட்டையும் கயிற்றையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மற்றவன் “ஆமாம்; ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. அவளுடன் வாழ முடியாமல் நான் தூக்குப் போட்டுக் கொள்ள வந்தேன். அவள் கிட்டவில்லையே என்று நீ சாக நினைத்தாய். இரண்டு பேரும் சாக வேண்டாம். எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடு. நாளையே நான் கப்பலேறிக் கண் காணாத சீமைக்குப் போய் விடுகிறேன்.” “எவ்வளவு? ஆயிரம் ரூபாயா?” “ஆமாம்; ஆயிரம் ரூபாய்தான். பிரமாதமில்லை. இருக்கட்டும், உன் பெயர் என்ன? ஒரு வேளை மாஸ்டர் மெதுவடை என்பது நீதானோ?” “ஆமாம், நான் தான். உனக்கு எப்படித் தெரிந்தது?” “அடாடா! நான் என்னத்தைச் சொல்ல? உன் பேரில் அவளுக்கு இருக்கும் அபிமானத்துக்கு அளவில்லை. இதோ பார்! (கன்னத்தைக் காட்டி) கிள்ளுக் காயம் தெரிகிறதா? நேற்று அவள் கிள்ளியதுதான். நான் அழுதேன். அப்போது அவள் ‘சீ! இந்த ஒரு கிள்ளுக்கு அழுகிறாயே? மெதுவடையை மொத்தம் 27 தடவை கிள்ளியிருக்கிறேன். இன்னும் அவருக்கு அலுக்கவில்லை. உனக்குப் பதில் அவர் இந்த வீட்டில் இருந்தால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்?’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். ஐயையோ! அட பாவி! துரோகி! எங்கே ஓடுகிறாய்? ஐயோ கயிற்றைக் கூடக் கொடுக்காமல் போகிறாயே? என் கயிற்றையும் அறுத்து விட்டாயே! என்ன செய்வேன்! ஏ, மெதுவடை! நில்லு! நில்லு!…” இதற்குள் ஒரே ஓட்டமாய் ஓடி வெளி வாசற்படி வரையில் சென்று விட்ட மாஸ்டர் மெதுவடை அங்கே நின்று திரும்பிப் பார்த்து, “அதெல்லாம் பலிக்காது அப்பனே! நேரே வீட்டுக்குப் போய்ச் சேர். இதோ போலீஸ் ஸ்டேஷனில் உன்னைப்பற்றி எழுதி வைக்கப் போகிறேன். நீ பாட்டுக்குச் செத்துப் போய் விட்டால், அப்புறம் என் கதி என்ன ஆவது? மெதுவாக அவளை என் கழுத்தில் கட்டிவிடலாமென்று பார்க்கிறாயோ?” என்று சொல்லிவிட்டு இரண்டே தாண்டலில் வீதியை அடைந்து ஓடினான். கதை முடிந்தது. இந்தக் கதையை படமெடுத்து விடலாமென்று நினைக்கும் டாக்கி முதலாளிகளுக்கு மட்டும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன். என்னுடைய அனுமதியில்லாமல் இதைப் படம் பிடிப்பவர்கள் கட்டாயம் கஷ்டத்திற்குள்ளாவார்கள். அவர்களில் யாராவது “மாஸ்டர் மெதுவடை” என்ற சமூகப் படம் பிடிக்கத் தொடங்குவார்களானால், அவர்கள் அதை முடிப்பதற்குள் “மிஸ்டர் ஆமைவடை” என்ற படம் வெளிவந்து விடுவது நிச்சயம். விஷ மந்திரம் “பக்திமான்” என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர் மாலைகளால் அலங்கரித்துத் திருவிளக்கேற்றி வைப்பாள். போஸ்டுமாஸ்டர் தம்புராவில் சுருதி கூட்டிக் கொண்டு ராமஜெபம் செய்வார். சனிக்கிழமை ஏகாதசி தினங்களில் பஜனை நடைபெறும். சுண்டல், வடை, பாயசம் - குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! நாராயண ஐயருக்கு சொந்தத்தில் குழந்தைகள் இல்லை. ஆனால் ஊரிலுள்ள குழந்தைகள் எல்லாம் அவருடைய குழந்தைகள் போல்தான். இத்தனைக்கும் உபாத்தியார்! ‘ஸார்’ என்றால் பிள்ளைகளெல்லாம் உயிரை விடுவார்கள். பயத்தினாலன்று; பிரியத்தினால். அவருடைய மாணாக்கர்களுக்கு இராமாயணம், மகாபாரதம், பாகவதம் இவற்றிலுள்ள கதைகள் ஒன்று விடாமல் தெரியும். தாயுமானவர் பாடலில் மூன்று பாடல் நெட்டுருவாய் ஒப்புவிக்கும் மாணாக்கனுக்குக் கற்கண்டு வாங்கித் தருவதாகச் சொல்வார். ஒருவரும் ஒப்புவியாவிட்டால் கற்கண்டை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவார்! மார்கழி மாதம் வரப்போகிறதென்று நாராயண ஐயர் மனைவி புரட்டாசி மாதத்திலிருந்தே சாமான்கள் சேகரித்து வைப்பாள். அம்மாதத்தில் தினந்தோறும் வைகறையில் சிறுவர்கள் பஜனை செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். ஊர்வலம் போஸ்ட்மாஸ்டர் வீட்டில் வந்து முடியும். பின்னர் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கள் வகையறாக்கள் குழந்தைகள் உண்டு ஆனந்திப்பதைக் கண்டு கணவனும் மனைவியும் பெருமகிழ்ச்சி எய்துவார்கள். நான் அவருடைய பழைய மாணாக்கனாதலால், அவரைப் பற்றி மிகைப்படப் புகழ்ந்து கூறுகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். எங்கள் ஊருக்குச் சுற்றுப்புறம் ஐந்நூறு மைல் தூரத்திற்குச் சென்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் ஒரு முகமாய் என்னை ஆதரித்துச் சாட்சி சொல்லுவார்கள். அப்பக்கத்தில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு, மரியாதை. அவருடைய செல்வாக்குக் காரணம் செல்வமன்று. அவருக்குப் பொருட் செல்வம் அவ்வளவு இல்லை. மற்று, அவருடைய தூய ஒழுக்கமும், தெய்வபக்தியுமே முக்கிய காரணங்களாகும். இத்துடன் அவருக்கு விஷக்கடி மந்திரத்தில் விசேஷ தேர்ச்சியுண்டு. அவரிடம் ஜனங்கள் விசுவாசம் கொண்டிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். பகலிலும், இரவிலும், எந்த நிமிஷத்திலும், பாம்புக்கடி என்று வந்தால் அவர் சிறிதும் தயங்குவதில்லை. தலைவலியையும், மலைச்சுரத்தையும் பொருட்படுத்தாமல் அவர் உடனே தலை முழுகி ஈரத்துணியுடன் மந்திரஞ் செய்யத் தொடங்குவார். மூர்ச்சையாகி வந்தவர்கள் விஷம் இறங்கப் பெற்று தெளிவடைந்து ‘தபால் ஐயரை’ வாழ்த்திக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஐயரோ இரண்டு மூன்று தினங்கள் பொறுக்க முடியாத தலையிடி உபத்திரவத்தினால் வருந்திக் கொண்டிருப்பார். நாராயண ஐயருக்குக் காந்தியடிகளிடம் பக்தி அதிகம் உண்டு. அவர் தேச பக்தருங்கூட. வங்காளப் பிரிவினைக் காலத்திலிருந்து சுதேசி விரதம் அனுஷ்டித்து வருபவர். ஆனால், மகாத்மா காந்தியின் திட்டங்களுள் ‘தீண்டாமை விலக்கு’ மட்டும் அவருக்கு விலக்கு. எனக்கும் போஸ்டு மாஸ்டருக்கும் இது சம்பந்தமாய் நடந்த விவாதங்களுக்கு எல்லையில்லை. அவற்றை இங்கு எழுதுவதனால், கந்தபுராணமாக - முருகனடியார் மன்னிக்க - விரிந்து விடும். அவருடைய அம்பறாத் தூணியில் எல்லா பாணங்களும் விட்டான பிறகு கடைசியாக அவர் பிரயோகிக்கும் பாணம் இதுவே:- “எல்லாம் சரி! நான் உனக்குப் பிரத்தியக்ஷமாகக் காட்டுகிறேன். கொடிய விஷ சர்ப்பம் தீண்டியவன் ஒருவன் இங்கு வரட்டும். மூன்றாவது மூர்ச்சை போட்டவனாகவே இருக்கட்டும். இதோ மந்திரம் செய்து விஷம் இறங்கச் செய்கிறேன் பார்! நீயே பலமுறை இந்த மந்திர சக்தியைப் பார்த்திருக்கிறாய். ஆனால், ஸ்நானம் செய்த பின்னர் ஒரு பறையனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டுவிடட்டும், அப்போது மந்திரம் பலிப்பதில்லையே! விஷம் இறங்குவதில்லையே! இதற்கென்ன சொல்கிறாய்?” அவருடைய இந்தப் பாசுபதாஸ்தரத்தை வெல்வதற்குத் தகுந்த அஸ்திரம் என்னிடம் வேறு எதுவும் இல்லை. ஆகவே, எங்களுடைய வாதங்களை எவரேனும் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் பக்கமே முடிவாகத் தீர்ப்புச் சொல்லி விடுவது வழக்கமாயிருந்தது. தபால் ஆபீஸ் சோதனைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார் என்று ஒருநாள் கேள்விப்பட்டேன். சற்று நேரம் வம்பு வளர்த்துவிட்டு வரலாமென்று சென்றேன். தபால் இன்ஸ்பெக்டர் பெத்த பெருமாள் பிள்ளை சரசமாகப் பேசும் சுபாவமுடையவர். சிடுமூஞ்சித்தனம் அவரிடம் இல்லை. போதாததற்குக் கதர்த் துணியால் உட்சட்டை அணிந்து கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அவரிடம் காதல் கொண்டு விட்டேன். “இவர் ஒரு நாள் - கோ - ஆபரேட்டர்” என்று போஸ்ட் மாஸ்டர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பொது அரசாங்கக் காரியங்களில் உத்தியோகஸ்தர்கள் நடந்து கொள்ளும் பான்மையைப் பற்றி எப்படியோ பேச்சு வந்தது. "நமது அடிமை வாழ்க்கையின் பயன் என்றே சொல்ல வேண்டும். முப்பது ரூபாய் சம்பளம் பெறும் ஒரு குமாஸ்தா, தன்னிடம் யாரேனும் ஒரு சிறு காரியத்துக்காக வந்துவிட்டால், என்ன பாடுபடுத்துகிறான். எத்துணைக் கர்வம்? இந்தத் தமிழ் நாட்டிலே எந்தத் தபால் சாவடிக்காவது, ரயில்வே ஸ்டேஷனுக்காவது போய் அங்குள்ள சிப்பந்திகளிடம் ஒரு சமாசாரம் தெரிந்து கொண்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம். ஒரு நிமிஷத்திற்குள் ‘போ வா’ என்று நூறுமுறைக் கூறிச் ‘சள்’ என்று விழுகிறார்கள். தாங்கள் பொது ஜன ஊழியர்கள், பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதச் சம்பளம் பெறுகிறவர்கள், என்பதைக் கனவிலும் நினைப்பதில்லை. மனிதருக்கு மனிதர் காட்ட வேண்டிய மரியாதையும் கிடையாது. மறந்தும் இவர்களிடமிருந்து ஓர் இன்சொல் வராது. மற்றவர் நம்மிடம் சிறு உதவி நாடி வந்தால் அதை ஒரு பாக்கியமாகக் கருதும் சுபாவம் நம்மவரிடம் எப்போது ஏற்படுமோ தெரியவில்லை!" என்று இவ்வாறு சீர்திருத்தக்காரரின் உற்சாகத்துடன் சரமாரியாக பொழிந்தேன். “நீங்கள் சொல்வதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆனால், அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அவர்கள் சிடுமூஞ்சிகளாவதற்கு வேலை மிகுதியே பெரும்பாலும் காரணம். இவ்வளவு வேலைத் தொந்தரவிலும் இனிய சுபாவமுடையவர் சிலர் இல்லாமற் போகவில்லை” என்றார் இன்ஸ்பெக்டர். “சந்தேகமில்லாமல்! இவ்வாறு பொது விதிக்கு விலக்காயுள்ளவர்களில் நமது போஸ்டுமாஸ்டரும் ஒருவர்” என்றேன். “இன்னும் எத்தனையோ தீமைகளை இந்நாட்டில் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பரிகாரம் சுயராஜ்யம் தான்” என்று போஸ்டு மாஸ்டர் இடையில் புகுந்து கூறினார். சுயராஜ்யம், மகாத்மா காந்தி, ஒத்துழையாமைத் திட்டம் - என்று இவ்வாறு பேச்சு வளர்ந்து கொண்டே போய்க் கடைசியில், தீண்டாமையில் வந்து நின்றது. “தீண்டாமைச் சாபம் தொலையாத வரையில் இந்நாட்டிற்கு விடுதலை கிடையாது” என்று ஒரேயடியாகக் கூறினேன். “அப்போது நமது வேத சாஸ்திரங்கள் மந்திரங்கள் எல்லாவற்றையும் ஆற்றில் கட்டிவிட வேண்டியதுதான். அத்தகைய விடுதலை எனக்கு வேண்டாம்!” என்றார் நாராயணய்யர். இன்ஸ்பெக்டர் பெத்தபெருமாள் பிள்ளை எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்வதற்காக நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவருடைய முகம் இருண்ட மேகத்தால் மறைக்கப்பட்டது போல ஒரு கண நேரம் கருத்தது. மறுகணத்தில் அவர் எப்போதும் போல் புன்னகை புரிந்து கொண்டு ஒரு பக்கத்து மீசையைத் தடவிக் கொண்டே, “போஸ்டு மாஸ்டர் வைதீகத்தில் மிகுந்த பற்றுள்ளவர் போலிருக்கிறது” என்றார். “பறையனிடம் தீட்டு இருக்கிறது என்று தங்கள் கண்முன் நிரூபித்துக் காட்டுகிறேன்” என்றார் போஸ்ட் மாஸ்டர். எனக்கு உள்ளுக்குள் பயம் தோன்றிற்று. இன்ஸ்பெக்டரையாவது நமது கட்சிக்கு இழுத்துக் கொள்வோமென்று, “தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டேன். “எனக்கு இவ்விஷயத்தில் அபிப்பிராயம் ஒன்றுமேயில்லை” என்று அவர் கையை விரித்துவிட்டார். தோல்வி நிச்சயம் என்று எண்ணினேன். அப்போது என் முகம் மிகவும் சிறுத்து போயிருக்க வேண்டும். ஆனால் கையில் கண்ணாடி இல்லாமையால் நிச்சயமாக சொல்வதற்கில்லை. “இருக்கட்டும். பறையனிடம் உள்ளத் தீட்டைப் பிரத்தியட்சமாய்க் காட்டுவதாக சொன்னீர்களே அதென்ன?” என்று பெத்தபெருமாள் பிள்ளை கேட்டார். நான் போஸ்டு மாஸ்டரை முந்திக் கொண்டு அவருடைய விஷ மந்திரத்தின் வலிமையைப் பற்றிச் சொல்லிவிட்டு தீண்டாதவர் அருகில் வந்து விட்டால், மந்திரம் பலிப்பதில்லையென்று அவர் கூறுவதைக் கேட்பவர் அவநம்பிக்கை கொள்ளும்படியாக எப்படிச் சொல்லலாமோ அம்மாதிரி சொன்னேன். ஆனால், அந்தோ! தெய்வமும் போஸ்டுமாஸ்டர் கட்சியையே ஆதரிக்கிறதா என்ன? நான் சொல்லி முடித்தேனோ இல்லையோ, போஸ்டுமாஸ்டருக்கு துணை செய்யவே வந்ததுபோல, பாம்பு கடித்தவன் ஒருவனை நாலைந்து பேர் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்கள். "ஐயா! காப்பாற்ற வேண்டும். இப்போது இரண்டாவது மூர்ச்சை போட்டிருக்கிறது. பெரிய சர்ப்பம், இரண்டு பற்கள் நன்கு பதிந்திருக்கின்றன" என்று அவர்களில் ஒருவன் கூவினான். அப்போது நாராயணையரைப் பார்க்க வேண்டும்! ஐம்பது வயதுக்கு மேற்பட்டவரும், மலைச்சுரத்தில் அடிபட்டுப் பலங்குன்றித் தள்ளாடி நடப்பவருமாகிய அவரிடம் அப்போது இருபது வயது இளைஞனுடைய சுறுசுறுப்புக் காணப்பட்டது. vகடைக்கு ஓர் ஆளை அனுப்பிக் கற்பூரமும் மஞ்சளும் வாங்கிக் கொண்டு வரச் செய்தார். மற்றொருவனைச் சிறு கூழாங்கற்கள் இருபத்தியொன்று பொறுக்கிக் கொண்டு வரச் சொன்னார். தான் இன்ஸ்பெக்டரிடம் உத்தரவு பெற்று எதிரிலிருந்த குளத்திற்குச் சென்று தலைமூழ்கி வந்தார். அவர் ஸ்நானம் செய்துவிட்டு வருகையில் அந்தப் பக்கத்திலேயே தீண்டாதவர் யாரும் வராதபடி பார்த்துக் கொள்ளச் செய்திருந்தார். மிக விரைவாகத் தபால் ஆபீஸ் கட்டிடத்துக்குள்ளே வந்து, ஈரத் துணியுடன் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார். தபால் இன்ஸ்பெக்டரும் அருகில் உட்கார்ந்து ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். தம்முடைய உத்தரீயத்தின் ஓரத்தில் ஒரு துண்டு கிழித்து மஞ்சளில் நனைத்தார். இருபத்தொரு கூழாங்கற்களையும் அதில் வரிசையாகவும், தனித்தனியாகவும் முடிந்தார். இவ்வாறு முடிகையில் மந்திரமும் ஜபித்துக் கொண்டேயிருந்தார். சுமார் பதினைந்து நிமிஷம் இவ்வாறு ஜபம் நடந்தது. இத்தனை நேரமும் எதிரில் ஒரு தாம்பாளத்தில் பரப்பப்பட்டிருந்த விபூதியின் மத்தியில் கற்பூரம் இடைவிடாமல் எரிந்து கொண்டிருந்தது. ஜபம் முடிந்ததும், நாராயணையர் எழுந்து கூழாங்கற்கள் முடிந்த துணியை விஷந் தீண்டியவன் கழுத்தில் மாலையாகப் போட்டு முடிந்துவிட்டு, மந்திரித்த விபூதியை மேலே முழுவதும் பூசச் செய்தார். மூர்ச்சையுற்றுக் கிடந்தவனுக்குச் சில நிமிஷத்தில் பிரக்ஞை வந்தது. அரைமணி நேரத்திற்குள் அவன் பழைய நிலையை அடைந்து வீட்டுக்குச் சென்றான். போஸ்டுமாஸ்டர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்: “ஏதோ இறைவன் அருளால் இந்த மந்திரம் எனக்குச் சித்தியாயிருக்கிறது. இதனால் வேறு எந்த வகையிலும் பரோபகாரம் செய்ய இயல்பு இல்லாத நானும் பிறருக்கு உபகாரமாயிருக்கிறேன். நான் தீண்டாமை விலக்குக்கு விரோதமாயிருக்கிறேனென்று இந்த வாலிப நண்பர் என் மேல் கோபம் கொள்கிறார்…” இப்போது இன்ஸ்பெக்டர் புன்னகை செய்தார். எனக்கு பெரிதும் அவமானமாயிருந்தது. காந்தியைத் திட்டலாமாவென்றுத் தோன்றியது. “ஆனால், நானோ ஒரு ஜீவிய காலத்தின் அனுபவத்தின் மீது சொல்கிறேன். இதோ வைகுண்டத்தை எட்டிப் பார்த்தவனை இந்த மந்திரம் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால் ஒரு பஞ்சமனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டிருந்தால், தூரத்திலுள்ள பறையன் ஒருவனைப் பார்த்தால் எப்போதும் மந்திரம் பலிப்பதில்லை. மறுபடியும் தலைமுழுகி விட்டு மந்திரிக்க வேண்டும். ஆகவே பறையனிடம் தீட்டு இல்லையென்று நான் எவ்வாறு ஒப்புக் கொள்ளமுடியும்?” தபால் இன்ஸ்பெக்டர் பெத்த பெருமாள் பிள்ளைக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படி இடி இடி என்று சிரிக்கிறார்? என்னுடைய தோல்வியைக் கண்டு ஆனந்தமா? அல்லது திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டதா? இவை ஒன்றுமில்லையென்று அடுத்த நிமிஷத்தில் தெரிய வந்தது. உண்மைக் காரணத்தை அவர் வெளியிட்டார். இடி விழுந்தது போல் நான் திகைத்துப் போய் விட்டேன். “நாராயணையர்! தாங்கள் பெரிதும் ஏமாந்து போனீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் ஒரு பறையன்!” என்றார். நாங்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. "நான் பறையன் என்று சொல்லிக் கொண்டு வெகு நாளாயிற்று. ஒருவருக்குமே தெரியாது. நான் பிறந்தது சிங்கப்பூரில். இளமையில் என் பெற்றோர் இறந்து விட்டனர். அதிர்ஷ்டவசமாகக் கொஞ்சம் பொருள் சேகரித்து வைத்திருந்தனர். அங்கேயே கொஞ்சம் கல்வியும் அளித்திருந்தனர். அவர்கள் காலஞ்சென்ற பிறகு, இந்த நாட்டுக்கு வந்து கலாசாலையில் படித்துத் தேறி உத்தியோகமும் பெற்றேன். பின்னர் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்று கல்யாணமும் செய்து கொண்டு வந்தேன். “வேறு இந்நாட்டில் எனக்கு உற்றார் உறவினர் இல்லை. இதுவரை பறையன் என்று நான் யாரிடமும் தெரிவித்தது கிடையாது. தெரிவிக்கச் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை” என்று இன்ஸ்பெக்டர் சவிஸ்தாரமாகக் கூறினார். போஸ்டுமாஸ்டர் சிறிது நேரம் திக்பிரமை கொண்டவர் போல இருந்தார். பின்னர், "நல்லது, மிகவும் சந்தோஷம். ஆகவே தீண்டாதவரிடம் தீட்டு இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. என்னுடைய குரு கூறியதை நான் தப்பாக அர்த்தம் செய்து கொண்டிருக்க வேண்டும். "சரிதான் நினைவு வருகிறது. மாதவிடாயாகும் பெண்களின் தீட்டைப் பற்றியே அவர் முக்கியமாய் எச்சரிக்கை செய்தார். ஆனால் தீண்டாத வகுப்பினர் இந்தத் தீட்டை அனுசரிப்பதில்லையாதலால், அவர்களுடைய நெருக்கமுங்கூடாதென்று சொன்னதாக ஞாபகம். “தாங்கள் நீண்ட காலமாகத் தூய வாழ்க்கை நடத்தி வருவதால் தாங்கள் அருகில் இருந்தும் மந்திரம் கெடவில்லை. எங்ஙனமாயினும் பிறப்பில் தீட்டில்லை என்பது எனக்கு நிச்சயமாகிவிட்டது. என் கண்களும் திறந்தன!” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொள்பவர் போல் உரைத்தார். அப்போது இன்ஸ்பெக்டர் சொன்னார்:- “என் கண்களும் இன்று தான் திறந்தன. இதுவரையில் என்னுடைய பிறப்பில் ஏதோ தாழ்வு இருப்பதாகவே எண்ணியிருந்தேன். நான் பறையன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டேன். ஆனால் இறைவன் எல்லா மனிதர்களையும் ஒரு தரமாகவே படைத்துள்ளார் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். இனிமேல் என்னுடைய பிறப்பை மறைக்க அவசியமில்லை.” “பறையருக்கும், தீயருக்கும், புலையருக்கும் விடுதலை!” என்று நான் பாடினேன். வீணை பவானி இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி போட்ட வீதி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தைப் பார்க்கும்போது வானம் ஏதோ சொல்ல முடியாத துயரத்துடன் கண்ணீர் விடுவது போல் தோன்றியது. இந்தக் காட்சியைப் பார்க்கச் சகியாமல் வீட்டுக்குள்ளே வந்தேன். என் உள்ளமும் சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்தது. இருட்டடிப்பு உபத்திரவத்தை முன்னிட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்தி விட்டுப் பிரகாசமாக விளக்கைப் போட்டுக் கொண்டேன். மனத்திலுள்ள சோர்வை மாற்றுவதற்காகக் கதைப் புத்தகம் படிக்கலாமென்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். சோர்வு, சோர்வு என்று சொல்லுகிறேன். அப்படி என்ன சோர்வு வந்தது என்று நேயர்கள் அறிய விரும்பலாம். சோர்வுக்குக் காரணங்களா இல்லை? உலக நிலைமையிலும் தேச நிலைமையிலும் மனச்சோர்வுக்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. போதாதற்கு அன்று சாயங்காலம் தினசரி பத்திரிகையில் வந்த ஒரு செய்தி மனத்தில் கொஞ்சம் நஞ்சம் இருந்த உற்சாகத்தையும் போக்கடித்து விட்டது. அது கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் இடையில் நேர்ந்த ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான். நேற்று ராத்திரி எழும்பூரிலிருந்து கிளம்பிய போட்மெயில் அங்கே பெரும் விபத்துக்கு உள்ளாயிற்று. காரணம் நன்றாகத் தெரியவில்லை. நகரில் பலவித வதந்திகள் உலவின. திடீரென்று பெருகிய மழை வெள்ளத்தினால் தண்டவாளம் பெயர்ந்து விட்டதாக உத்தியோக முறையில் செய்தி. அந்த ரயிலில் பெரிய உத்தியோகஸ்தர் யாரோ போவதாகத் தெரிந்து தண்டவாளத்தை யாரோ வேண்டுமென்று பிடுங்கிப் போட்டதாக ஒரு வதந்தி. விபத்தில் செத்துப் போனவர்களின் கணக்கைப் பற்றி உலவிய வதந்திகளுக்கு அளவே இல்லை. “நூறு பேர் செத்துப் போனார்கள். இருநூறு பேர் செத்துப் போனார்கள்” என்றெல்லாம் கேள்விப்பட்டபோது கூட என்மனம் அவ்வளவு கலங்கிவிடவில்லை. ஆனால், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர்களை வரிசை வரிசையாகப் படித்து வந்த போது அதிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் வந்ததும் - ரயில் வண்டி கவிழ்ந்து என் மேலேயே விழுந்தது போலிருந்தது. வாசகர்களில் பலருக்கு ஐயம்பேட்டை கந்தப்பன் பெயர் ஞாபகமிருக்கலாம். “திருவழுந்தூர் சிவக்கொழுந்து” கதையை எனக்குச் சொன்ன தவுல் வித்வான் கந்தப்பன் தான். ரயில் விபத்தில் இறந்து போனவர்களின் ஜாபிதாவில் கந்தப்பப் பிள்ளையின் பெயரைப் பார்த்தவுடனேதான் எனக்கு அவ்வளவு மன வேதனை உண்டாயிற்று. அதென்னமோ பகவான் நம்மை அவ்விதம் படைத்து விட்டிருக்கிறார். அமெரிக்காவில் எரிமலை விபத்தில் இருபதினாயிரம் பேர் செத்துப் போனார்கள் என்று அறிந்தால், நமக்கு ஒரு உணர்ச்சியும் உண்டாவதில்லை. நமக்குத் தெரிந்த மனிதர்களில் ஒருவர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டால் நம்மை என்னமோ செய்கிறது. “ஆஹா! ஐயம்பேட்டை கந்தப்பனுக்கு இந்த முடிவா ஏற்படவேண்டும்? எப்பேர்ப்பட்ட மனுஷன்? என்ன தேசபக்தி? எத்தகைய நல்லொழுக்கம்? பழகியவர்களிடத்தில் தான் எவ்வளவு அபிமானம்? என்ன ரஸிகத்தனம்?” என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “இந்த நேரத்தில் யார் வருகிறது?” என்று சிறிது வெறுப்புடன் எண்ணினேன். என் உள்ளம் அப்போதிருந்த நிலைமையில், யாரையாவது பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ பிடிக்கவில்லை. ஒரு நிமிஷத்துக்கெல்லாம் வாசற் கதவு திறந்தது. அடால்ப் ஹிட்லரோ, ஜெனரல் டோஜோவோ வாசற்படியில் வந்து நின்றிருந்தால் கூட, எனக்கு அவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்காது. அங்கு நின்றவர் வேறு யாருமில்லை; ஐயம்பேட்டை கந்தப்பன் தான். “பயப்பட வேண்டாம்! நான் தான் வந்திருக்கிறேன். என்னுடைய ஆவி இல்லை” என்று கந்தப்பனுடைய குரலைக் கேட்டதும், என்னுடைய திகைப்பு மாறி அளவிறந்த சந்தோஷம் உண்டாயிற்று. “வாருங்கள்! வாருங்கள்!” என்று அவருடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்து கொண்டு போய் உட்கார வைத்தேன். “என்ன சேதி? என்ன சமாசாரம்? ரயில் விபத்திலிருந்து எப்படிப் பிழைத்து வந்தீர்கள்? இப்போதுதான் பத்திரிகையில் உங்கள் பெயரைப் படித்து விட்டுக் கதிதலங்கிப் போனேன். அதெப்படி தப்புச் செய்தி அனுப்பினார்கள்? வெட்கக் கேடாக அல்லவா இருக்கிறது?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். “நல்லவேளை, நான் போகவே இல்லை; நேற்று இரவு வண்டியில் எனக்கு ஸீட் ரிசர்வ் செய்திருந்தேன். தவுல் முதலிய சாமான்களையும் முன்னால் கொண்டு போய் ஏற்றியாகி விட்டது. நான் ஸ்டேஷனுக்கு வருவதில் தான் இரண்டு நிமிஷம் தாமதமாயிற்று. நல்ல காலந்தான்.” “ரயிலில் உங்கள் பெயர் கட்டித் தொங்கியதாக்கும். அதையும் தவுலையும் பார்த்துவிட்டுப் பத்திரிகை நிருபர்கள் உங்களையும் சேர்த்து வைகுண்டத்துக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.” “அப்படித்தான் இருக்க வேண்டும்.” “உங்கள் வீட்டில் எல்லோரும் கவலைப்பட மாட்டார்களா? இன்றைக்கு ஏன் ஊருக்குப் போகவில்லை” என்று கேட்டேன். “ஊருக்குத் தந்தி கொடுத்து விட்டேன். உங்களைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்.” “என்னையா பயமுறுத்தப் பார்த்தீர்கள்?” “ஆமாம்; மகுடபதி கதையில் வெறுமனேயாவது பெரியண்ணனுடைய ஆவி வந்து நின்றதாகச் சொல்லி எங்களையெல்லாம் பயமுறுத்தினீர்களல்லவா? அதற்குப் பழிக்குப் பழியாக…” “அதெல்லாம் கதையிலே நடக்கும். நிஜத்தில் நடக்குமா?” என்றேன். “நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு” என்றார் ஐயம்பேட்டை கந்தப்பன். “என்ன? அவ்வளவு கண்டிப்பாகச் சாப்புக் கொடுக்கிறீர்களே?” “ஆமாம்; வாழ்க்கையில் அந்த மாதிரி நடந்திருக்கிறது.” “எந்த மாதிரி?” “செத்துப் போனதாக நினைத்திருந்த மனுஷர் திடீரென்று தோன்றியதனால் ஆபத்து நேர்ந்திருக்கிறது.” “என்ன ஆபத்து?” “உயிருக்கே ஆபத்து!” ஏதோ ஒரு ரஸமான சம்பவத்தைச் சொல்லத்தான் ஐயம்பேட்டை கந்தப்பன் வந்திருக்கிறார் என்று அப்போது தெரிந்து கொண்டேன். “சொல்லுங்கள், கேட்கிறேன்; என் மனது இன்றைக்கெல்லாம் சரியாகவேயில்லை. ரொம்பவும் உற்சாகக் குறைவாயிருக்கிறது. உங்களுடைய கதையைக் கேட்டாலாவது.” “என்னுடைய கதை உற்சாகந் தருவதல்ல; ரொம்பவும் சோகமானது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால்…” “கூடவே கூடாது. மனத்தில் உற்சாகமில்லாத போது தான் சோகக் கதை கேட்க வேணும். சொல்லுங்கள்” என்றேன். ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளை எப்போதும் ஒரு கேள்வியுடனே தான் கதையை ஆரம்பிப்பது வழக்கம். அவ்விதமே இப்போதும், தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, “பூந்தோட்டம் பவானி என்று கேள்விப்பட்டதாக ஞாபகம் இருக்கிறதா?” என்றார். அந்த மாதிரி ஒரு பெயர் ஏதோ பூர்வ ஜன்மத்தில் கேள்விப்பட்டது மாதிரி எனக்கு இலேசாக ஞாபகம் வந்தது. கிராமபோன் பிளேட் கூட ஒன்றிரண்டு கேட்டிருக்கும் நினைவு வந்தது. ஆனால் நான் ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் சொல்லும் வரையில் கந்தப்பப் பிள்ளை காத்திருக்கவில்லை. மேலும் சொல்லத் தொடங்கினார். ------------------------------------------------------------------------ "முப்பது வருஷத்துக்கு முன்னால் ‘பூந்தோட்டம் பவானி’ என்னும் பெயர் மிகவும் பிரசித்தமாயிருந்தது. ‘வீணை பவானி’ என்றும் சொல்வதுண்டு. வீணையை வைத்துக் கொண்டு பாடினாளானால், ஸரஸ்வதி தேவியே அவதாரம் எடுத்து வந்திருப்பது போல் தான் தோன்றும். அவளுடைய குரலுக்கு உபமானம் சொல்ல வேண்டுமானால், வீணைத் தந்தியை அவள் மீட்டும் போது உண்டாகும் ரீங்கார நாதத்தைத்தான் சொல்லலாம். அந்த வீணைத் தந்தியின் ரீங்காரத்துகோ அவளுடைய குரலைத் தவிர வேறு உபமானம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியுள்ள சபைகளில் அவளுடைய கச்சேரிகள் நடப்பதுண்டு. நிசப்தமாய் இருந்து கேட்பார்கள்; பரவசப்படுவார்கள்; கோவில்களிலே முக்கியமாகத் திருவாரூர்க் கோவில் - உற்சவ சமயங்களில் அவளுடைய கச்சேரி அடிக்கடி நடக்கும். இந்தக் காலத்தில் வரவர நாதஸ்திகம் அதிகமாகி வருகிறது. சுயமரியாதை இயக்கம், அது இது என்று உலகமே கெட்டுப் போய் வருகிறது. போதாதற்கு சினிமா வேறு வந்து சேர்ந்து விட்டது. உற்சவங்களைச் சிரத்தையாக நடத்துவோரும் இல்லை. அந்தக் காலத்தில் ஜனங்களுக்கெல்லாம் கோவில் திருவிழா - இம்மாதிரி காரியங்களிலே தான் கொண்டாட்டம். ஒரு கோவிலில் உற்சவம் என்றால் சுற்று வட்டாரத்தில் இருபது மைல் தூரத்திலுள்ள ஜனங்கள் எல்லாம் திரண்டு வந்து விடுவார்கள். இப்படிப்பட்ட திருவிழாக் கூட்டத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். ஒவ்வொரு கச்சேரிக்கும் அபரிதமான கூட்டம் சேரும். அதிலும் பூந்தோட்டம் பவானியின் கச்சேரி என்றால் கேட்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் பெரிய கூட்டத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ‘பூந்தோட்டம் பவானியின் கச்சேரிக்குக் கூடுகிறார் போல் கூடியிருக்கிறதே!’ என்பார்கள். அப்படி ஜனக் கூட்டம் கூடியிருக்கும் இடத்தில் கசகசவென்று எவ்வளவு சந்தடியிருக்கும்? ஆனால் பவானியின் விரல்கள் வீணையின் தந்திகளைத் தொட வேண்டியதுதான்; முகத்தைச் சிறிது நிமிர்த்திக் கொண்டு அவளுடைய இனிய குரலைக் காட்டிச் சுருதி கூட்ட வேண்டியது தான்; அவ்வளவு இரைச்சலும் ஒரு நொடியில் ‘கப்’ என்று அடங்கிவிடும்! இரைச்சல் ஓடுவதும், பவானியின் இனிய குரல் ஒலியும் வீணைத் தந்தியின் நாதமும் சேர்ந்து கிளம்புவதும், ஒரு இந்திரஜாலம் போல் தோன்றும். பவானியின் கச்சேரி கேட்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், நான் அதை விடுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு அடிக்கடி கிடைப்பதும் உண்டு. கல்யாணங்களிலோ, கோவில் உற்சவங்களிலோ, பவானியின் கச்சேரிகள் நடக்குமிடங்களில், நானும் என்னுடைய தொழிலுக்காகப் போய்ச் சேரும்படி அடிக்கடி நேரும். பவானியின் கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி கண்ணில் ஜலம் வந்து விடும். பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து பரிகசிக்கப் போகிறார்களே என்று ஏதோ தலை வலிக்கிற பாவனையாகத் தரையை நோக்கிக் குனிந்து கொள்வேன். கண்ணீருக்குக் காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அது தான் எனக்குத் தெரியாது. ஆனந்தக் கண்ணீர் தானா அல்லது இவ்வளவு அற்புதமான சங்கீதம் நீடித்து நிற்க வேண்டுமே என்ற அநுதாபத்தில் பெருகிய கண்ணீரா? ஜனங்கள் பேசிக் கொண்டு போவார்கள். “இது எங்கேடா நிலைத்து நிற்கப் போகிறது? இப்படிப் பாடினால் உலகம் தாங்குமா!” என்று கவலைப்படுவார்கள். கச்சேரி முடிந்த பிறகு நான் பவானியைப் போய்ப் பார்ப்பேன். “தங்கச்சி! அம்மாவை திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லு!” என்பேன். பவானியின் தாயாரும் பெண்ணை எத்தனையோ கண்ணும் கருத்துமாய்த்தான் காப்பாற்றி வந்தாள். ஆனாலும், கடைசியில் திருஷ்டி பட்டே விட்டது. பவானியின் தாயாருக்குப் பூந்தோட்டம் பிரஹதாம்பாள் என்று பெயர். அவள் பரம்பரையான பணக்காரி. அதோடு அவளுடைய குணத்திலும் பிரசித்தி பெற்றவள். ஒரு பெரிய மனிதரோடு மட்டும் சிநேகம் வைத்துக் கொண்டுடிருந்து, அவருக்கு உண்மையான தர்மபத்தினியாக நடந்து கொண்டிருந்தாள். அவன் காலஞ்சென்ற பிறகு அவள் பகவானுடைய பக்தியில் சிந்தையைச் செலுத்தி வந்தாள். தாயாருடைய சுபாவம் பெண்ணிடமும் இருந்தது. நெற்றியில் திவ்வியமாக விபூதியைப் பூசிக் கொண்டு தான் கச்சேரிக்கு வந்து உட்காருவாள். பக்திரஸமுள்ள பாட்டுக்களைத்தான் பாடுவாள். வீட்டிலே தினம் ஸ்நானம், பூஜை எல்லாம் பிரமாதமாக நடக்கும். இதனாலெல்லாம் பவானிக்கு ஞானப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலர் பேசினார்கள். பிரஹதாம்பாளுக்குத் தன் பெண்ணை ஒரு யோக்கிமான நல்ல பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று விருப்பம். ஆனால் பவானியோ தான் ஆண்டாளைப் போல் கன்னியாகவே இருந்து கடவுளின் பாதத்தை அடையப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். இவர்கள் இரண்டு பேருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. எல்லாம் ஒரு மனுஷன் பராபரியாய் யாரிடமோ சொல்லிக் கொண்டு போன ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போய்விட்டது. ஒரு தடவை திருவாரூர்க் கோவிலில் கச்சேரி செய்து விட்டுப் பவானி வெளியே வந்து வண்டியில் ஏறிக் கொள்ளப் போகும் சமயத்தில், ஒரு மனுஷன் தன் சிநேகிதனுடன் பேசிக்கொண்டு போன ஒரு வார்த்தை அவள் காதில் தற்செயலாக விழுந்தது. “பாட்டு, பாட்டு என்கிறாயே, பிரமாதமாய் பாட்டு இருக்கட்டும், அப்பா! அவள் முகத்திலே சொட்டுகிற களையைச் சொல்லு!” என்றான், அந்த மனிதன. இதைக் கேட்டதும் பவானிக்குச் சிரிப்பு வந்தது. கலீரென்று சிரித்துவிட்டாள். யார் சிரிக்கிறதென்று அந்த மனுஷன் திரும்பிப் பார்க்கவே பக்கத்தில் பவானி நிற்பதைக் கண்டு வெட்கிப் போனான். பவானியும் சட்டென்று வண்டியில் ஏறிக் கொண்டாள். விதி என்று சொல்லுகிறார்களே! இது தான் விதி! அவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலே, இருட்டிலே அந்த மனுஷன் அந்த வார்த்தையைப் பவானி வண்டி ஏறுகிற இடத்திலே வந்து சொல்வானேன்? அது இவள் காதில் விழுவானேன்? பவானி வீட்டுக்குப் போனதும், அவள் தாயாரிடம் “அம்மா! நீ ஏன் இன்றைக்கு நான் கச்சேரிக்குப் போன போது கைக்குட்டை வைக்கவில்லை?” என்று கேட்டாளாம். அவள் தாயார் “இதென்ன கேள்வி?” என்று சும்மாயிருக்கவே, “மண்டபத்திலே இறுக்கம் அசாத்தியம், ஓயாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது” என்றாளாம். அதோடு விடவில்லை. “கேட்டுக்கோ, அம்மா! என் முகத்திலே வியர்வை கொட்டிக் கொண்டே இருந்ததா? அதைப் பார்த்து விட்டு ஒரு மனுஷர், ‘களை சொட்டுகிறது’ என்று சொல்லிக் கொண்டு போனார் அம்மா” என்று கூறி இடி இடி என்று சிரித்தாளாம். இதையெல்லாம் பவானியும், அவள் தாயாரும் எனக்கு அடிக்கடிச் சொல்வார்கள். இப்படி வேடிக்கையும் சிரிப்புமாக ஆரம்பித்த காரியம்தான் பிற்பாடு பெரிய வினையாக முடிந்தது. அந்த மனுஷரும் எனக்குத் தெரிந்தவர்தான். மன்னார்குடிக்குப் பக்கத்தில் தும்பை வனம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் அவர் மிராசுதார்; கோபாலசாமி என்று பெயர். இளம் வயது தான். அவருடைய கல்யாணத்துக்குக் கூட நான் தவுல் வாசித்திருக்கிறேன். கல்யாணம் நடந்து அப்போது ஐந்தாறு வருஷத்துக்கு மேல் இருக்கும். அவருக்குக் குழந்தைகளும் உண்டு. இந்த மனுஷருக்கும் பவானிக்குந்தான் விதி வசத்தினால் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் மறுபடியும் எப்படிச் சந்தித்தார்கள், சிநேகம் எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விதி இருக்கும் போது எப்படியாவது வழியும் ஏற்பட்டு விடுகிறது. பவானியின் ஞானப் பைத்தியம் நீங்கி விட்டது என்ற பிரஸ்தாபம் மட்டும் எங்கும் பரவியது. அதோடு தும்பைவனம் கோபாலசாமி முதலியாரின் பெயரும் தஞ்சாவூர் ஜில்லாவெங்கும் அடிபட்டது. இந்தச் செய்தியெல்லாம் எனக்கு அவ்வளவு நிம்மதி அளிக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயந்தான் உங்களுக்குத் தெரியுமே? இம்மாதிரி ஒரு ஜாதியும், இந்த மாதிரி ஒரு தொழிலும் கூடவே கூடாது என்பதுதான். ‘கடைசியில் இப்படித்தானா ஆக வேண்டும்? யாரையாவது ஒழுங்காகக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாதா?’ என்று எண்ணினேன். கோபாலசாமி முதலியாரின் மனைவி, மக்களை நினைத்தும் வருத்தப்பட்டேன். இதையெல்லாவற்றையும் விட இந்த சிநேகத்தினால் பவானியின் தெய்வீக சங்கீதத்துக்குக் கேடு வராமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் உண்டாயிற்று. நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நேரவில்லை - கோபாலசாமி முதலியார் நல்ல சங்கீத ரஸிகர். அதோடு பவானியின் பாட்டைக் குறித்து அவருக்கு ரொம்பப் பெருமையும் இருந்தது. என்னிடம் ஒரு சமயம் அவர் சொன்னது நன்றாய் ஞாபகமிருக்கிறது. “பவானியை மற்ற மனிதர்களைப் படைத்தது போல் பிரம்மா படைக்கவில்லை; கல்யாணியையும், மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார்! நீர் வேண்டுமானால், பாரும்! பவானி செத்துப் போகும் போது, அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகப் போய்விடும்!” என்று கோபாலசாமி முதலியார் சொன்னபோது, “இருக்கலாம்; ஆனால் அதை நீங்களும் நானும் பார்க்க மாட்டோ ம். நமக்குப் பிறகு பவானி ரொம்ப காலம் பாடிக் கொண்டிருக்கும்” என்றேன். ஆனால் வருங்காலத்தையறியும் சக்தியைப் பகவான் நமக்குக் கொடுக்கவில்லையே? கொடுத்திருந்தால் உலகத்திலே துன்பம் ஏது? இன்பந்தான் ஏது? ஆமாம் பவானியின் சங்கீதத்தைப் பற்றியல்லவா சொல்லிக் கொண்டு வந்தேன்? அவளுடைய சங்கீதம் மேலும் மேலும் பிரமாதமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்னுடைய பழகிய காதுக்கு அதில் என்னவெல்லாமோ, அதிசயமான மாறுதல்கள் தோன்றின. ஒரு கச்சேரியைப் போல் இன்னொரு கச்சேரி இராது. ஒருநாள் அவளுடைய பாட்டில் குதூகலம் பொங்கித் ததும்பும். காலை வேளையில் உதய சூரியனை வரவேற்கும் புள்ளினங்களின் குரலிலுள்ள ஆனந்தமும், பௌர்ணமியன்று வெண்ணிலவைக் கண்டு பொங்கும் கடலின் ஆரவார உற்சாகமும் தொனிக்கும். இன்னொரு நாள் கச்சேரியிலோ, அவளுடைய பாட்டைக் கேட்கும் போது உள்ளமானது காரணந் தெரியாத சோகத்தை அடையும். தாயைப் பிரிந்த குழந்தையின் தீனக்குரலையும், பகவானைப் பிரிந்த பக்தனின் தாபக் கதறலையும் அவளுடைய பாட்டிலே கேட்பது போல் இருக்கும். அவள் வீணை வாசிக்கும்போது கையிலுள்ள வாத்தியத்தின் கம்பிகளைத்தான் மீட்டுகிறாளா, அல்லது கேட்பவர்களின் இருதய வீணையின் கம்பியைத்தான் மீட்டுகிறாளா? என்ற சந்தேகம் தோன்றும். முதலில், இதெல்லாம் எனக்கு விந்தையாயிருந்தது; விளங்காத மர்மமாயிருந்தது. அப்புறம் அப்புறம், ஒருவாறு விஷயம் புரிந்தது. அன்பு, காதல் என்று சொல்கிறார்களே, ஸ்வாமி, ரொம்ப அதிசயமான காரியம். காதலில் மனிதர்கள் அடைவது என்ன? துன்பமா? இன்பமா? சொல்ல முடியாத துயரமா? அளவிட முடியாத ஆனந்தமா? பவானியையும் தும்பை வனம் முதலியாரையும் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் இம்மாதிரி சந்தேகங்களையெல்லாம் உண்டாக்கின. அவர்கள் சந்தோஷமாயிருந்த காலம் அதிகமா, சண்டை போட்டுக் கொண்டு வேதனையில் முழுகியிருந்த நாட்கள் அதிகமா என்று சொல்ல முடியாமலிருந்தது. ‘இந்தப் பெண்ணுக்கு ஏதோ பிடித்திருக்கிறது தம்பி!’ என்று அவள் தாயார் சொன்னாள். சில சமயம் பவானி எல்லார் மேலும் எரிந்து எரிந்து விழுவாளாம். சின்னச் சின்னக் காரியத்துக்கெல்லாம் ரகளை செய்வாளாம். கூச்சல் போடுவாளாம். முகத்தைக் கூட அலம்பிக் கொள்ளாமல் பிரமஹத்தி பிடித்தது போல் உட்கார்ந்திருப்பாளாம். இன்னும் சில சமயம் இதற்கு நேர்மாறாக இருக்குமாம். பிரமாதமாக அலங்காரம் செய்து கொள்வாளாம். ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருப்பாளாம். இதையெல்லாம் அறிந்த போது, பவானியின் சங்கீதத்தில் தொனித்த மாறுதல்களின் காரணத்தை ஒருவாறு அறிந்தேன். ‘யாராவது மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்லலாமா’ என்று பவானியின் தாயார் கேட்டதற்கு ‘மந்திரமும் வேண்டாம் மாயமும் வேண்டாம், நாளடைவில் எல்லாம் தானே சரியாய்ப் போய்விடும்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். இரண்டு மூன்று வருஷங்கள் சென்றன. இந்தக் காலத்தில் தும்பை வனம் முதலியாருடைய சொந்தக் காரியங்கள் ரொம்பவும் சீர்கெட்டு வந்தன. அவருக்கு விரோதிகள் அதிகமாகி வந்தார்கள். பவானி விஷயத்தில் எத்தனையோ பணக்காரப் பிரபுக்களுக்கு அபிப்பிராயம் இருந்திருக்குமென்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே? அவர்களெல்லாம் கோபாலசாமி முதலியாரைத் தீர்த்துக் கட்டி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள். முதலில் ஒரு கோவில் பஞ்சாயத்து சம்பந்தமாகக் கேஸ் ஏற்பட்டது. அந்தக் கோவில் தர்மகர்த்தாக்கள் மூன்று பேரில் கோபாலசாமி முதலியார் ஒருவர். மற்ற இரண்டு பேரும் இவரைத் தள்ளிவிட்டு காரியங்களை நடத்தியதுடன், கோவில் உற்சவத்தின் போது இவரை அவமரியாதையாக நடத்தி விட்டார்கள். கோபாலசாமிக்குக் கோபம் வந்து கேஸ் போட்டார். இதிலிருந்து சிவில் கேஸுகளும் கிரிமினல் கேஸுகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. அக்கம் பக்கத்து மிராசுதார்கள், பிரபுக்கள் எல்லாரும் கோபாலசாமியைத் தொலைத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பிடிவாதமாக வேலை செய்தார்கள். கோபாலசாமிக்கு நாளுக்கு நாள் கடன் முற்றிக் கொண்டு வந்தது. வருஷா வருஷம் நிலத்தை விற்றுக் கொண்டு வந்தார். ஒரு தடவை தும்பைவனம் கோவில் உற்சவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், முதலியார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் சம்சாரம் ஐயம்பேட்டைக்குப் பக்கத்து ஊர்ப் பெண்தான். அந்த அம்மாளை எனக்கு நன்றாகத் தெரியும். பாவம்! அவள் ஒரே துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். “கந்தப்பா! இவ்வளவும் அந்தப் பூந்தோட்டத்து மூதேவியால் தான் வந்தது!” என்று சொல்லி அழுதாள். எனக்கு மனது ரொம்பவும் கஷ்டப்பட்டது. இந்த மாதிரி ஒரு ஜாதியை நம் தேசத்தில் எதற்காக ஏற்படுத்தினார்கள் என்று எண்ணி மனம் நொந்தேன். அடுத்த தடவை திருவாரூருக்குப் போகும் போது என் கோபத்தை பவானியின் மேல் காட்டி விடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், அங்கே போய்ப் பவானியின் நிலையைப் பார்த்தபோது, என் கோபமெல்லாம் பறந்து போய் விட்டது. சோகமே உருவெடுத்தவள் போலிருந்தாள். “என்னால் இப்படியெல்லாம் கஷ்டம் அவருக்கு வந்து விட்டதே!” என்று சொல்லிச் சொல்லி உருகினாள். அவளுக்கு சமாதானமாக நான், “நீ என்ன அம்மா செய்வாய்? உன் பேரில் என்ன தப்பு?” என்று திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. “அண்ணே! அவரை அவ்விடத்து நிலம் வீடு வாசல் எல்லாவற்றுக்கும் தலை முழுகி விட்டு இங்கேயே வந்து விடும்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேட்க மாட்டேனென்கிறார். நீயாவது சொல்லேன்; தினம் பொழுது விடிந்தால் கோர்ட்டுக்குப் போவதே வேலையாகி விட்டதே, என்னத்திற்காக இந்த மாதிரி வம்புக்கும் தும்புக்கும் போக வேண்டும்? நாலு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய சொத்து இங்கே இருக்கிறதே? இதையெல்லாம் யார் கட்டிக் கொண்டு போகப் போகிறார்கள்?” என்றாள். “அது நடக்கிற காரியமா தங்கச்சி! அவர் ஆண் பிள்ளை இல்லையா? ரோஸம் இராதா? வீண் வம்புக்கு இழுக்கிறவர்களுக்குப் பயந்து கொண்டு ஊரை விட்டு வந்து விடுவாரா? அதுவும் இங்கே? அவர் சம்மதித்தாலும் சம்சாரம் குழந்தைகள் இருக்கிறார்களே?” என்றேன். பிறகு பவானி, அவருடைய சம்சாரத்தையும் குழந்தைகளையும் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தாள். பவானியின் தாயாரிடம் பேசினேன். “ஏன் அக்கா என்னத்துக்காக நமக்கு இந்தக் கெட்டப் பெயர். பவானியினாலே ஒரு பெரிய குடும்பம் அழிந்து போகிறது என்று இந்த ஜில்லா முழுவதும் பேசிக் கொள்கிறார்களே?” என்றேன். “யார் என்னத்தையாவது சொல்லட்டும் தம்பி; அவர்கள் இரண்டு பேரையும் பிரிப்பது மகாபாவம். பிரித்தால் என் மகள் உயிரை வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்” என்றாள். “இப்படி எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள் அக்கா! நாம் பார்த்ததில்லையா!” என்றேன் நான். “பவானியின் சமாச்சாரம் உனக்குத் தெரியாது தம்பி” என்றாள். பிறகு, “இப்பொழுது அவர்களுக்குள் எப்படியிருக்கிறது? முன்னேயெல்லாம் போல் கோபதாபம் உண்டா?” என்று கேட்டேன். பவானியின் குணமே அடியோடு மாறிவிட்டதென்றும் அவள் சாந்தமே உருக் கொண்டவளாகி விட்டாள் என்றும் தெரிந்தது. இதற்கு நேர்மாறாகக் கோபாலசாமி முதலியாருக்குக் கோபதாபங்கள் அதிகமாகி வந்தனவாம். அதோடு, அடிக்கடி இல்லாத பொல்லாத சந்தேகங்கள் அவருக்குத் தோன்றி வந்தனவாம். “இது என்ன மனித சுபாவம்?” என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பவானி எதற்காக அவரிடம் அன்பு வைக்க வேண்டும்? நிர்ப்பந்தம், கட்டாயம் ஏதாவது உண்டா? தன் மனமொப்பி அவரையே தெய்வம் என்று எண்ணி இருப்பவள் மேல் ஒரு மனிதன் சந்தேகப்படுவதென்றால்? எனக்கு ரொம்பக் கோபமாயும் வெறுப்பாயுமிருந்தது. நமக்கென்னவென்று பேசாமல் போய் விட்டேன். இதற்கப்புறம் ஏறக்குறைய ஒரு வருஷ காலம் ஏதேதோ அசௌகரியங்களினால் நான் திருவாரூர்ப் பக்கம் போகவில்லை. பவானியின் தாயார் இறந்து போனாள் என்று தெரிந்ததும், துக்கம் விசாரிப்பதற்குப் போயிருந்தேன். அதற்கப்புறம் அங்கே போவதையே நிறுத்தி விட்டேன். “நமக்கு என்னத்திற்கு வம்பு?” என்ற எண்ணந்தான் காரணம். தும்பைவனம் முதலியாரின் காரியங்கள் வரவரச் சீர்கெட்டு வருகின்றன என்று மட்டும் அடிக்கடி காதில் விழுந்து கொண்டிருந்தது. சென்னைப் பட்டிணத்தில் ஹைகோர்ட்டில் அவருக்கு ஒரு பெரிய கேஸ் நடந்து வந்தது. அதில் தோற்றுப் போனால், ஆள் திவால்தான் என்று சொன்னார்கள். இப்படியிருக்கும் போது தான் ஒருநாள் அந்தப் பயங்கரமான ரயில் விபத்தைப் பற்றி செய்தி வந்தது. விழுப்புரத்துக்கும், கூடலூருக்கும் நடுவில் ரயில் கவிழ்ந்துவிட்டது. மூன்று வண்டிகள் அடியோடு நாசமாயின. நாற்பது ஐம்பது பேருக்கு மேல் செத்துப் போனார்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆசை உண்டு. அதுவும் இந்தப் பயங்கர ரயில் விபத்து நடந்த சமயத்தில் அதைப் பற்றிய விவரங்களைப் படிப்பதற்காக, வெகு ஆவலுடன் சுதேச மித்திரன் பத்திரிகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த மறுநாள், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர் விவர ஜாபிதா வந்திருந்தது. அதில் தும்பைவனம் முதலியாரின் பெயரைப் பார்த்ததும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். உடனே எனக்குப் பூந்தோட்டம் பவானியின் கதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோ, அந்தப் பெண் ஒரு வருஷத்திற்குள்ளே தாயாரையும் இழந்து, ஆசை நாயகனையும் இழந்து, அநாதையாய்ப் போய் விட்டாளே? இனிமேல், அவளுடைய வாழ்க்கை எப்படியாகுமோ? கோபாலசாமி முதலியாரின் சம்சாரம், குழந்தைகளின் ஞாபகமும் வந்தது. ஐயோ பாவம்! அவர்களுடைய சொத்தெல்லாம் கோர்ட்டு விவகாரங்களில் தொலைந்து போயிருக்கும். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்படியான நிலைமை வந்து விடுமோ என்னமோ? ஒரு வாரத்துக்கெல்லாம் மன்னார்குடிக்குப் போக வேண்டியிருந்தது. அங்கிருந்து அப்படியே தும்பை வனத்துக்குப் போனேன். முதலியாரின் மனைவி பட்டத் துக்கத்தையும் அழுத அழுகையையும் பார்க்கச் சகிக்கவில்லை. தகப்பனாரை இழந்த குழந்தைகளைப் பார்க்கவும் பரிதாபமாய்த்தானிருந்தது. நல்ல வேளையாக ஊரிலிருந்து அவர்களுடைய தாத்தாவும் பாட்டியும் வந்திருந்தார்கள்! குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொண்டதுடன், பெண்ணுக்கும் தேறுதல் கூறினார்கள். “என்ன செய்வதடி, அம்மா? உன் தலையெழுத்து அப்படியிருந்தது. குழந்தைகளுக்காக நீ உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமோ, இல்லையோ?” என்று சொல்லித் தேற்றி, பட்டினி கிடக்காமல் அரை வயிறாவது சாப்பிடும்படியும் பலவந்தப்படுத்தினார்கள். நானும் எனக்குத் தெரிந்தவரையில் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். இவர்களைப் பார்த்த பிறகு பவானியையும் அவசியம் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவல் உண்டாயிற்று. நேரே திருவாரூருக்குப் போனேன். அவளுடைய வீட்டுக்குப் போகும்போது, என் மனம் ரொம்பவும் வேதனைப்பட்டது. ஒரே துக்கசாகரத்தில் மூழ்கியிருப்பாளே, எப்படி அவளைப் பார்த்துப் பேசுகிறது, எப்படி ஆறுதல் சொல்கிறது என்று என் மனம் தவித்தது. ஆனால் வீட்டுக்குள் போய் பவானியைப் பார்த்ததும், ஒருவாறு கவலை நீங்கிற்று. ஏனெனில், நான் பயத்துடன் எதிர்பார்த்தபடி அவள் கண்ணீருங் கம்பலையுமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லை. என்னைக் கண்டதும் அலறி அழவில்லை. சாதாரணமாய்த்தான் இருந்தாள். “வாருங்க அண்ணே!” என்று ஆர்வத்துடன் என்னை அழைத்தாள். கவலை நீங்கிற்று என்றா சொன்னேன்? ஆமாம்; கவலை நீங்கிற்று என்பது தான் உண்மை. ஆனால் மனத்திற்குள் பெரும் ஏமாற்றமும் உண்டாயிற்று. கடைசியில் ‘சாதிக்குணம்’ என்று உலகம் சொல்வது சரியாய்ப் போய் விட்டதல்லவா? தாலி கட்டிய மனைவி அங்கே படுகிற துக்கத்துக்கும், இங்கே இவள் சாதாரணமாய் வந்தவர்களை ‘வா’ என்று அழைத்துக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்? அதையெல்லாம் நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னுடைய பொறுப்பைக் கழித்துக் கொள்வதற்காக, ஏதோ ஆறுதல் வார்த்தை கூறிவிட்டுக் கிளம்பினேன். கிளம்பும் போது பவானி “அண்ணே! நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று, அம்மன் சந்நிதியில் கச்சேரி செய்யப் போகிறேன், நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்றாள். எனக்குச் சுருக்கென்று தைத்தது. கச்சேரியா இதற்குள்ளேயா? “இந்த வருஷம் கச்சேரி செய்ய வேண்டியதுதானா, தங்கச்சி! அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளக்கூடாதா?” என்றேன். “இல்லே அண்ணே! கச்சேரி செய்வதாக முன்னமே ஒப்புக் கொண்டு விட்டேன். உற்சவப் பத்திரிகையிலே கூடப் போட்டு விட்டார்கள். அதைமாற்ற இஷ்டமில்லை” என்றாள். எனக்கு அப்போது அவள் மீதும், கோவில் தர்மகர்த்தாக்கள் மீதும் கூடக் கோபம் வந்தது. “சௌகரியப்பட்டால் வருகிறேன், தங்கச்சி” என்றேன். “அப்படிச் சொல்லக் கூடாது அண்ணே! ஒரு வேளை இது தான் நான் செய்கிற கடைசிக் கச்சேரியாயிருக்கும். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்” என்றாள். இதைக் கேட்டதும் என் மனம் உருகிவிட்டது. “ஏனம்மா! அப்படிச் சொல்கிறாய்? எது எப்படியானாலும் உன் சங்கீதம் மட்டும் வளர வேண்டும்” என்றேன். பிறகு நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு அவசியம் வருவதாகச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு சென்றேன். பவானிக்கு வாக்குக் கொடுத்தபடியே நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று திருவாரூருக்குப் போனேன். அவள் வீட்டுக்கு நான் போனபோது கச்சேரிக்கு அவள் கிளம்புகிற சமயமாயிருந்தது. பவானியைப் பார்த்ததும் நான் பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பிரமாதமாக ஆடை ஆபரண அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தாள். கல்யாண மண்டபத்துக்குப் போகும் பெண் மாதிரி தோன்றினாள். இயற்கையிலேயே நல்ல ரூபவதி. இப்போது பார்த்தால், தேவலோகத்திலிருந்து ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியவர்களில் ஒருத்தி இறங்கிப் பூலோகத்துக்கு வந்து விட்ட மாதிரியே இருந்தது. மனதிற்குள் எனக்கு ஏற்பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. என்னைப் பார்த்ததும் பவானி புன்னகையுடன், “அண்ணே! வந்து விட்டீர்களா” என்றாள். எனக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் “ஆமாம்; வந்துவிட்டேன் தங்கச்சி!” என்று சாவதானமாகப் பதில் சொன்னேன். “அண்ணே! இன்று காலையிலிருந்தே உங்களை நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். போனால் போகட்டும். கச்சேரி முடிந்ததும் நீங்கள் நேரே இங்கு வரவேணும், ரொம்ப முக்கியமான காரியம்; தவறக் கூடாது” என்றாள். “ஆகட்டும் தங்கச்சி!” என்றேன். “உங்கள் தலைமேல் ஆணை! கட்டாயம் வரவேணும்” என்று சொல்லிவிட்டுப் பவானி வண்டியில் போய் ஏறிக் கொண்டாள். பவானி இந்த மாதிரிப் பேசி நான் கேட்டதில்லை. ‘என்னமோ விஷயம் இருக்கிறது. எல்லாம் இராத்திரி தெரிந்து போகிறது’ என்று எண்ணிக் கொண்டு கோவிலுக்குப் போனேன். என் வாழ்நாளில் நானும் எத்தனையோ சங்கீதக் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். பிரபல வித்துவான்கள், பாடகிகள் எல்லாருடைய பாட்டையும் கேட்டிருக்கிறேன். ஆனால், அந்த நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று பவானி செய்த கச்சேரியைப் போல் கேட்டதும் கிடையாது, கேள்விப்பட்டதும் இல்லை. பவானியின் குரல் அன்று தேனாக இருந்தது. விரல் வீணையின் தந்தியை மீட்டிய போது அமுதவாரி பெருகிற்று. இதையெல்லாம் விட அன்று அவளுடைய பாட்டில் இன்னும் ஏதோ ஒன்று இருந்தது! அது கேட்பவர்களின் இருதயத்தில் ஒரு அதிசயமான இன்ப வேதனையை உண்டு பண்ணிற்று. சபையில் அன்று ஒரே நிசப்தம். மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்கவில்லை. ‘ஆஹா’, ‘பேஷ்’, ‘சபாஷ்’ முதலிய குரல்களும் இல்லை. எல்லாரும் மந்திரத்தால் கண்டுண்டது போல், அந்தத் தெய்வீக சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பவானி ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற திருவாசகத்தைக் காம்போதி ராகத்தில் பாடியபோது நான் கர்ப்பக்கிரஹத்துக் குள்ளிருந்த அம்மன் விக்ரஹத்தை நோக்கினேன். இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு, அந்தக் கல் விக்ரஹம் உருகிக் கரைந்து போகவில்லையே என்று எனக்கு ஆச்சரியமளித்தது. ஆனால் ஒரு தடவை விக்ரஹத்தின் கண்களில் நீர்த்துளிகள் நின்றது போல் தோன்றியது. இது என்ன பிரமை என்று என் கண்களைத் துடைத்துக் கொண்டு, சுற்றுமுற்றும் ஜனங்களைப் பார்த்தேன். சபை ஓரமாக நாலாபுரத்திலும் ஜனங்கள் சுவர் வைத்தாற் போல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பலின் பின் வரிசையில் ஒரு மூலையில் நின்ற ஒரு முகத்தின் மேல் தற்செயலாக என் பார்வை விழுந்தது. அந்த மனுஷர் தலையில் பாதி நெற்றியை மறைத்த பெரிய முண்டாசுக் கட்டிக் கொண்டிருந்தார். கண்வலி வந்தவர்கள் போட்டுக் கொள்வது போன்ற பெரிய பச்சைக் கண்ணாடி அவர் கண்களை மறைத்தது. எதனாலேயோ திரும்பத் திரும்ப அந்த முகத்தின் மீது என் பார்வையும் கவனமும் சென்றன. அதற்குப் பிறகு பாட்டில் கவனம் குன்றியது. “பார்த்த முகம் மாதிரியிருக்கிறதே, யாராயிருக்கும்?” என்று அடிக்கடி மனது யோசித்தது. சட்டென்று உண்மை தெரிந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஏதோ விபரீதம் நேரிடப் போகிறது என்று மனதிற்குள் ஏதோ சொல்லிற்று. நானும் கூட்டத்தின் ஓரத்தில் தான் இருந்தேனாதலால், மெதுவாக எழுந்திருந்து நின்று கொண்டிருந்த ஜனங்களின் பின்புறமாக சென்று, அந்தப் பச்சைக் கண்ணாடிக்காரரின் சமீபத்தில் போய் நின்றேன். கச்சேரி முடிந்தது! எல்லோருக்கும் முன்னால் அந்த மனுஷர் விரைவாக அவ்விடமிருந்து கிளம்பிச் சென்றார். நானும் பின்னோடு போனேன். கோவிலுக்கு வெளியில் கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்துக்கு வந்ததும், நான் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, “என்ன தம்பி! இது என்ன வேஷம்?” என்று கேட்டேன். கையை உதறிய கோபாலசாமி முதலியார் என்னைப் பார்த்ததும், “யார், கந்தப்பனா?” என்றார். பிறகு அவர் “ஆமாம் கந்தப்பா! ஆமாம் வேஷந்தான். இந்த உலகமே வேஷந்தான். பார்த்தாயல்லவா உன் தங்கச்சி போட்ட வேஷத்தை? முன்னே போட்டது ஒரு வேஷம்” என்று மனங் கசந்து பேசிக் கொண்டே போனார். “இல்லை தம்பி! நீங்கள் எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளவில்லை! பவானி இன்றைக்குச் செய்த கச்சேரிதான் கடைசிக் கச்சேரி என்று சொல்லிற்று. அதனால் தான் இவ்வளவு ஆவேசமாய்ப் பாடிற்று” என்று சமாதானம் சொன்னேன். “கந்தப்பா யாரிடம் காது குத்துகிறாய். என்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டாயா? பாட்டாம் பாட்டு! கச்சேரியாம் கச்சேரி! மனது வந்ததே! கடவுள் என்னுடைய கண்ணைத் திறப்பதற்காகவே, இந்த ரயில் விபத்தை உண்டு பண்ணினார்!” பேச்சை மாற்றுவதற்காக, நான் “ஆமாம் தம்பி! கடவுள்தான் உங்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். அந்த அதிசயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? பத்திரிகையில் ஏன் அப்படித் தவறாகச் செய்தி வந்தது? நீங்கள் எப்படித் தப்பிப் பிழைத்தீர்கள்? இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்!” என்று கேள்விகளை அடுக்கினேன். "அதையெல்லாம் அப்புறம் விவரமாகச் சொல்கிறேன் கந்தப்பா! பெரிய கதை எழுதலாம். ஏதோ செத்துப் போனவன் தான், கடவுள் அருளால் பிழைத்தேன். பத்து நாள் சுய நினைவு இல்லாமல் ஆஸ்பத்திரியில் கிடந்தேனாம். அப்புறம் பழைய பத்திரிகைகளைப் பார்த்துச் செத்துப் போனவர்களின் ஜாபிதாவில் என் பெயரும் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யாருடைய நிலைமை எப்படியெப்படி, என்னோடு உடன் கட்டை ஏறுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அதற்காக, இந்த வேஷத்துடன் வந்தேன். இப்போது பார்த்தாகிவிட்டது!" என்று மிகவும் வெறுப்புடன் சொன்னார். பேசிக் கொண்டே நாங்கள் தெருவோடு போய்க் கொண்டிருந்தோம். “அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! இப்போது எங்கே போகிற உத்தேசம்” என்று கேட்டேன். “அங்கேதான் போகிறேன். அவளை அடித்து விடுவேன், கொன்றுவிடுவேன் என்று நினைக்காதே! கச்சேரி பேஷாயிருந்தது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போய்விடுவேன்; அவ்வளவுதான். நீயும் வேணுமானால் பின்னோடு வந்து பார்” என்றார் கோபாலசாமி முதலியார். இரண்டு பேருமாகவே போய்ச் சேர்ந்தோம். பவானி குதிரை வண்டியில் முன்னாலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். அவளைத் தனியாக முதலில் பார்த்துத் தயார் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். அதற்கு கோபாலசாமி முதலியார் இடங்கொடுக்கவில்லை. என்னைப் பின்னால் தள்ளிக் கொண்டு, அறைக்குள் அவர் முதலில் போனார்! நாங்கள் போகும் போது பவானி ஜலமோ, பாலோ ஒரு கிண்ணத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பச்சைக் கண்ணாடியும் பெரிய முண்டாசுமாக உள்ளே வந்தவரைப் பார்த்துவிட்டுப் பவானி ஒரு நிமிஷம் திகைத்து நின்றாள். முதலியார் கண்ணாடியையும் முண்டாசையும் எடுத்ததும் அவளுடைய முகத்தில் ஏற்பட்ட பயங்கர மாறுதலைப் பார்த்தேன். என் இருதயம் அப்படியே நின்று விட்டது. எத்தனை நேரம் இப்படி மூன்று பேரும் ஸ்தம்பித்துப் போயிருந்தோம் என்று தெரியாது. பவானி திடீரென்று சுருண்டு போய்க் கீழே விழுந்த போதுதான், எனக்குப் பிரக்ஞை வந்தது. எனக்கு முன்னாலேயே கோபாலசாமி ஓடி அவளைத் தூக்கித் தமது மடியில் வைத்துக் கொண்டார். சற்று நேரம் நான் அங்குமிங்கும் பார்த்து விழித்துக் கொண்டு நின்றேன். பிறகு டாக்டரை அழைத்து வருவதற்காக ஓடினேன். டாக்டருடன் நான் திரும்பி வந்தபோது சந்தேகத்துக்கே இடமிருக்கவில்லை. பவானியின் உயிர் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகி விட்டது. கந்தப்பப் பிள்ளை மேற்கண்ட விதம் கூறி கதையை நிறுத்தினார். அப்பொழுதுதான் ஒவ்வொரு சம்பவமும் நடப்பது போல் அவ்வளவு தெளிவாகவும் உணர்ச்சியுடனும் அவர் சொல்லிக் கொண்டு வந்தபடியால், என் உள்ளம் முன்னைக் காட்டிலும் இளகிக் கனிந்து போயிருந்தது. சற்று நேரம் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மௌனமாயிருந்தேன். எங்கள் சம்பாஷணை எப்படி ஆரம்பமாயிற்று என்பது ஞாபகம் வந்தது. “திடீரென்று தோன்றிய கோபாலசாமி முதலியாரை அவருடைய ஆவி என்பதாக நினைத்து பவானி பயந்து போய் விட்டாளாக்கும். அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்” என்று கேட்டேன். “அப்புறம் செய்வதற்கு என்ன இருக்கிறது? டாக்டரிடம் ‘எதிர்பாராத ஷாக்கினால் மரணம்’ என்று சர்டிபிகேட் எழுதி வாங்கிக் கொண்டேன். கோபாலசாமி முதலியாரும் நானுமாகச் செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து முடித்தோம். பாவம்! அந்த மனுஷர் பட்ட துக்கத்துக்கு அளவே இல்லை.” “பவானியின் மனம் களங்கமற்றது என்று அப்புறமாவது முதலியாருக்கு தெரிந்ததா? அவரிடம் அவள் வைத்திருந்த அன்பின் பெருமையை அறிந்து கொண்டாரா?” என்று கேட்டேன். “அது எப்படித் தெரியும்? அவருக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பவானி தன்னுடைய துரோகம் தெரிந்து போய் விட்டதே என்ற பயங்கரத்தினால் செத்துப் போய் விட்டாள் என்று எண்ணினார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து வெளியான விஷயம் அவருக்குப் பவானியின் மேல் இருந்த அவநம்பிக்கையை ஒருவாறு போக்கிற்று. பவானி தன்னுடைய சொத்தையெல்லாம் கோபாலசாமி முதலியாரின் குழந்தைகளுக்கு எழுதி வைத்திருந்தாள். உயில் வக்கீலிடமிருந்தது.” வியப்புடன் “ஓஹோ! அப்படியா” என்றேன். இன்னமும் சொல்வதற்கு விஷயம் பாக்கியிருக்கிறது என்று கந்தப்பப் பிள்ளை முகபாவத்திலிருந்து தெரிந்தது. “எல்லாம் சரிதான். டாக்டரிடம் எதற்காகச் சர்டிபிகேட் எழுதி வாங்கினீர்கள்?” என்று கேட்டேன். “இந்த மாதிரித் திடீர் மரணங்களில் போலீஸ் தொந்திரவு ஏற்படுமல்லவா? அதற்காகத்தான். கோபாலசாமி முதலியாருக்கே நான் உண்மையைச் சொல்லவில்லை. டாக்டருக்கும், எனக்கும் மட்டுந்தான் தெரியும்!” என்றார். ஏதோ விஷயம் பாக்கி இருக்கிறதென்று நினைத்தேன். “உண்மைக் காரணந்தான் என்ன?” என்று கேட்டேன். “நடந்து இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இனிமேல் சொன்னால் என்ன? - பவானி மயங்கி விழுந்ததும் முதலியாருக்குப் பின்னால் நானும் ஓடினேனல்லவா? பக்கத்தில் இருந்த சிறு முக்காலிப் பலகையின் மேல் பவானி, பால் குடித்த கிண்ணத்துக்குப் பக்கத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதன் மேல் என் பெயர் எழுதியிருக்கவே, சட்டென்று எடுத்து, முதலியாருக்குத் தெரியாமல் மடித்து வைத்துக் கொண்டேன். டாக்டரைக் கூப்பிடப் போனபோது தெரு லாந்தர் வெளிச்சத்தில் படித்தேன். அந்தக் கடிதம் இதுதான்” என்று கூறி, கந்தப்பப் பிள்ளை மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார். அது வெகுநாட்பட்ட பழுதடைந்த காகிதம். அதில் மங்கிப் போன முத்தான எழுத்தில் பின் வருமாறு எழுதியிருந்தது. ’அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்கு தங்கச்சி பவானி எழுதிக் கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான் உயிர் வாழ விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக் கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர மோதிரத்திலிருந்த வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து வந்ததும் சாப்பிட்டு விடுவேன். என் சொத்தில் பாதியைக் கோவிலுக்கும், பாதியை அவருடைய குழந்தைகளுக்கும் எழுதி வைத்திருக்கிறேன். உயில் வக்கீல் … ஐயரிடம் இருக்கிறது. நான் செய்வது பிசகாயிருந்தால் என்னை மன்னிக்கவும். அவரைப் பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது. இப்படிக்கு பவானி’ இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு, “இதை ஏன் கோபாலசாமி முதலியாரிடம் நீர் சொல்லவில்லை?” என்று கேட்டேன். "சொன்னால் என்ன லாபம்? ஏற்கனவே ரொம்பத் துக்கப்பட்டார். இது தெரிந்தால் அவரும் உயிரை விட்டாலும் விட்டிருப்பார். அல்லது அவருடைய மனைவி மக்கள் மேல் பாசமில்லாமல் போயிருக்கலாம். ஒரு குடும்பத்தை அநியாயமாகக் கெடுப்பானேன் என்று தான் சொல்லவில்லை. சற்றுப் பொறுத்து “நான் போய் வருகிறேன், ஸ்வாமி!” என்று கந்தப்பப் பிள்ளை எழுந்திருந்தார். கடிதத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். வாசற் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியே சென்றார். ஜில்லென்று காற்று அடித்தது. இருண்ட வானத்திலிருந்து சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. ஸினிமாக் கதை “தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு. “மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம். கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது. “அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு. “இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம். “சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ?” என்று ராமு தத்துவம் பேசினான். “மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ?” என்றாள் தங்கம். “கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ” என்றான் ராமு. தடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது. “நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்” என்றாள் தங்கம். “நானுந்தான்” என்றான் ராமு. இந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது. கீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், “சனியன்களா? எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா? கதவைத் திறந்து தொலையுங்கோ!” என்று கத்தினார். உடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் “வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்?” என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள். “சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது” என்று ராமு சொன்னான். “எப்போ முடியப் போகிறதோ?” என்றாள் தங்கம். “அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ?” என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள். மேற்படி தம்பதிகளின் சச்சரவுகள் எனக்கு மிகவும் உபத்திரவமாயிருந்ததற்கு ஒரு விசேஷ காரணம் இருந்தது. அப்போது நான் அற்புதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று. “ஆஹா! ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை” என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா? எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா? என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா? எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது? கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும்? பார்க்கலாமே ஒரு கை! இம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். ‘ஸினேரியோ’ முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். என்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன். இன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது! அப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், “இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு?” என்று கேட்டார். “உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு” என்றாள் ஜானகி அம்மாள். “உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது” என்றார் அப்பாதுரை ஐயர். “நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்…” என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள். “பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே?” என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார். “நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்?” “நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ? இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும்?” “எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும்! வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது?” “நான் வருகிறபோது நீ தயாராயிருந்தால்தானே எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகலாம்.” “இப்போ சொல்லுங்கோ ஸினிமாவுக்குப் போகலாம்னு அரை நிமிஷத்திலே எல்லாம் பண்ணிண்டு தயாராய் வந்துடறேனா, இல்லையா, பாருங்கோ!” “அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்.” “அடே ராமு! தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா!” என்று ஜானகி அம்மாள் கூவினாள். “நல்ல காலந்தான்” என்று எண்ணி நானும் குதூகலித்தேன். அவர்கள் போய் விட்டால் கதையில் இன்னும் நாலு காட்சிகளாவது இன்றைக்கு எழுதி முடிக்கலாமென்று சந்தோஷப்பட்டேன். மேலும் நான் ஸினிமாக் கதை எழுதுவது பற்றி எனக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று. எப்பேர்ப்பட்ட குடும்பத்துச் சண்டை சச்சரவுகளையெல்லாம் ஸினிமா தீர்த்து வைக்கிறது? எரிச்சலும் விரஸமும் நிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது? சில பேர் எல்லாம் ஏதோ ஸினிமா என்றால் ஒரு மாதிரி முகத்தைச் சுளித்துக் கொண்டு பேசுகிறார்களே, அவர்கள் எவ்வளவு அறியாதவர்கள்? இம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:- “ஸினிமாவாம் ஸினிமா! போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே! சவரணைதான்! யாரோ கட்டேலே போறவனும், கட்டேலே போறவளும் நின்னுண்டு வாயிலே வந்ததைக் கன்னாபின்னான்னு பேசுறதாம். அதை எல்லாரும் பார்த்துண்டு வாயைப் பிளந்துண்டு உட்கார்ந்திருக்கிறதாம். உங்களுக்குந்தான் புத்தி போச்சே!” “சீ! வாயை மூடு! ஸினிமாவுக்குப் போகணும் என்று என் பிராணனை வாங்கினதில் குறைச்சல் இல்லை; இப்போது என் மேல் குற்றம் சொல்கிறாயே?” “உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன்? புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா?” “ஏ கழுதை! வாயை இப்போ மூடுகிறாயா இல்லையா?” “நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ!” “பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன்? ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு! நான் கண்டேனா!” “இதைப் போய் ஒரு கதை என்று எழுதினானே ஒரு கட்டையில போறவன், அவனைச் சொல்லுங்கோ!” “கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்!” “டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்?” “உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்?” “நான் ஒண்ணும் இளிச்சவாய்ச் சுப்பி இல்லை, உங்கம்மா இளிச்சவாய்ச் சுப்பி, உங்க பாட்டி இளிச்சவாய்ச் சுப்பி.” இதற்குள் மளமளவென்று மாடிப்படி ஏறுகிற சத்தம் கேட்டது. ராமுவும் தங்கமும் ஏறி வந்து தங்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்தார்கள். “சண்டைன்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் வச்சிருக்கோ?” என்றான் ராமு. “ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ?” என்றாள் தங்கம். மறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன். ஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லை! கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account